Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 135

புதிய ஜனநாயகம் – ஜூலை 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜூலை – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – ஜூலை 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!
♦ ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!
♦ லுலு ஹைப்பர் மார்க்கெட்: எல்லா மாடலும் கார்ப்பரேட் சேவைக்கே! கார்ப்பரேட் சேவையில் ‘எம்மதமும் சம்மதமே’!
♦ அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!
♦ கழண்டது முகமூடி: பாசிசக் கும்பலின் தோல்வி முகமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்க போராட்டமும்!
♦ தோழர் லிங்கன் – ஒரு லட்சிய மீனவன் நம்மை விட்டுப் பிரிந்தார்!
♦ துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!
♦ தெலுங்கானா: பாசிச எதிர்ப்பு அறிவுத்துறையினர் – செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வேட்டை!
♦ ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜியின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!
♦ மதுரை வழக்கறிஞர்கள் கைது: வெறியாட்டம் போடும் என்.ஐ.ஏ!
♦ புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!
♦ படக்கட்டுரை: அமெரிக்காவிலும் கிழிந்தது மோடியின் முகமூடி!
♦ ஒரு அடியாளின் அமெரிக்கப் பயணம்!

இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!

0

ஜூன் 25, 1975 அன்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசர நிலையை (எமர்ஜென்சியை) பிரகடனப்படுத்தினார். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு தற்போது 48 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 2014-ஆம் ஆண்டில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பதற்கு முன்புவரை, இந்திரா ஆட்சியின் எமர்ஜென்சி காலம் தான் ‘சுதந்திர’ இந்தியா வரலாற்றில் மிக மோசமான அத்தியாயமாகக் கருதப்பட்டது.

ஆண்டுதோறும் ஜூன் 25 அன்று எமர்ஜென்சி காலத்தில் தாங்கள் தான் இந்தியாவைக் காப்பாற்றியதாக பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-உம் முகநூலில் பதிவுகளை வெளியிட்டு தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர். அடல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் மற்றும் பிற தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக ஜூன் 26, 1975 அன்று வெளியான செய்தித்தாள்களின் முதல் பக்கங்களைப் படங்களாக வெளியிடுவர்.

கம்யூனிஸ்டுகளும் நக்சல்பாரி புரட்சியாளர்களும் தான் ஜன சங்கத் தலைவர்களை விட பெரும் அடக்குமுறைக்கு ஆளாகினர் என்று உளவுத்துறை அறிக்கைகளும் மத்திய உள்துறை அமைச்சக தரவுகளும் சுட்டிக்காட்டுகின்றன. அப்படியானால் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் பெயர் இடம்பெற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாரா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.

ஆம்; அவசரநிலை அமலில் இருந்த 20 மாதங்களின் பெரும்பகுதியைப் பரோலில் தனது வீட்டிலே கழித்தார் வாஜ்பாய். தன்னை பரோலில் விடுவித்தால் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டேன் என உறுதிமொழி அளித்துள்ளார்.


படிக்க: துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?


இந்த உண்மைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமிதான். ஜூன் 13, 2000 அன்று “தி இந்து”வில் வெளியான “எமர்ஜென்சியின் கற்றுக்கொள்ளப்படாத பாடங்கள்” (The Unlearnt Lessons of Emergency) என்ற கட்டுரையில், பல ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கத் தலைவர்கள் இந்திரா காந்தியுடன் எவ்வாறு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதை சுப்பிரமணியன் சுவாமி விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதே கட்டுரையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் டிசம்பர் 1976 வாக்கில் இந்திரா காந்தியின் எமர்ஜென்சிக்கு வெளிப்படையான ஆதரவை அறிவிக்கும் ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கான முடிவை எவ்வாறு எடுத்தனர் என்பதையும் சுவாமி விவரிக்கிறார்.

அதேபோல, உளவுத்துறையின் அப்போதைய தலைவர் டி.வி.ராஜேஸ்வர் தனது “இந்தியா – முக்கியமான ஆண்டுகள்” (India – The Crucial Years) என்ற‌ புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் சரணடைவு முடிவை விவரித்துள்ளார். இந்திரா காந்தியின் அப்போதைய தகவல் ஆலோசகர் எச்.ஒய்.சாரதா பிரசாத்தின் மகன் ரவி விஸ்வேஸ்வரய்யாவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் சரணடைவை ஆவணப்படுத்தியுள்ளார்.


படிக்க: சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !


பாலாசாகேப் தியோராஸ் (Balasaheb Deoras) என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் அப்போதைய சர்சங்சாலக்கான மதுகர் தியோராஸ் (Madhukar Deoras) எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் முக்கியமானவை. (ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவரை சர்சங்சாலக் – Sarsanghchalak – என்று கூறுவார்கள்). வினோபா பாவேவுக்குக் கடிதம் எழுதிய தியோராஸ், தன்னை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க இந்திராவை வற்புறுத்துமாறு கேட்டுக் கொண்டார். எமர்ஜென்சியின் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கம் ஆற்றிய பங்கின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள இந்த கடிதங்கள் நமக்கு உதவுகின்றன.

தியோராஸ் இந்தியில் எழுதிய “இந்து சங்கதன் அவுர் சட்டவாடி ராஜ்நீதி” (Hindu Sangathan aur Sattavadi Rajneeti) என்ற புத்தகத்தின் முடிவில் இந்த கடிதங்கள் இணைப்புகளாக இடம்பெற்றுள்ளன. இந்த கடிதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை பிரம்ம தத் எழுதிய “ஐந்து தலை பூதம்: ஜனதா கட்சியின் தோற்றத்தின் ஒரு உண்மை விவரிப்பு” (Five Headed Monster: A Factual Narrative of the Genesis of Janata Party) என்ற புத்தகத்தில் காணலாம். அதேபோல பிரதினவ் அனில் மற்றும் கிறிஸ்டோப் ஜாஃப்ரெலோட் எழுதிய “இந்தியாவின் முதல் சர்வாதிகாரம்” (India’s First Dictatorship) என்ற புத்தகத்திலும் இக்கடிதங்களைக் காணலாம்.

முதல் கடிதம் (ஆகஸ்ட் 22, 1975)

ஜூன் 25, 1975-இல் இந்திரா காந்தி எமர்ஜென்சியை பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் அவர் ஆற்றிய சுதந்திர தின உரையின்போது தனது நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமானது என்றும், அதை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என்றும் அனைத்து சர்வாதிகாரிகளையும் போலவே அவரும் கூறினார். அவரது பேச்சையும் சர்வாதிகாரத்தையும் நாடு முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகள் கண்டித்தனர்.

இருப்பினும், தியோராஸ் ஆகஸ்ட் 22, 1975 அன்று இந்திரா காந்திக்கு எழுதிய முதல் கடிதத்தில் இந்திராவின் ஆகஸ்ட் 15 உரையை வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார். இன்னும் ஒருபடி மேலே சென்று, உரையின் நேர்த்தியைப் பாராட்டுகிறார். ஆர்.எஸ்.எஸ் பற்றிய தவறான கருத்துக்களை அகற்றுவதற்காக இந்திராவுக்கு கடிதம் எழுதுவதாகவும், ஆர்.எஸ்.எஸ் இந்துக்களுக்கான அமைப்பை உருவாக்க முயற்சிப்பதாகவும் ஒருபோதும் இந்திரா அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இறுதியில், “இதை மனதில் கொண்டு ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குப் பொருத்தமாகத் தோன்றினால் உங்களை நேரில் சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்” என்று எழுதினார்.

எனவே, முதல் கடிதத்தில் எமர்ஜென்சியை அமல்படுத்துவதில் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்க வலியுறுத்துகிறாரே தவிர எமர்ஜென்சியை நீக்குவதற்கு அல்ல.

இரண்டாவது கடிதம் (நவம்பர் 10, 1975)

தியோரஸின் முதல் கடிதத்தை இந்திரா காந்தி கண்டு கொள்ளவில்லை.

ஊடகங்களும் உச்ச நீதிமன்றமும் இந்திரா காந்திக்கு அடிபணிந்து நடந்தன. இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தை இந்த பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியதற்காக இந்திராவை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டித்தனர்.

அந்த சமயத்தில் தான், நவம்பர் 10, 1975 அன்று தியோரஸ் இந்திராவுக்கு தனது இரண்டாவது கடிதத்தை எழுதுகிறார்.

அதில் அவர் “உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு உங்கள் தேர்தல் வெற்றி செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்துள்ளதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்” என்று எழுதுகிறார்.

கடிதம் முழுவதும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது அரசாங்கத்திற்கோ அவசரநிலைக்கோ எதிரானது அல்ல என்று இந்திரா காந்தியை நம்பவைக்க முயல்கிறார். இறுதியில், “லட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் தன்னலமற்ற முயற்சிகளை அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல பயன்படுத்தலாம்” என்று கூறிவிட்டு ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்குமாறு அவர் மீண்டும் கேட்டுக் கொள்கிறார்.

மூன்றாவது கடிதம் (பிப்ரவரி 24, 1976)

தியோரஸின் இரண்டாவது கடிதத்தையும் இந்திரா காந்தி கண்டு கொள்ளவில்லை.

1976-ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் இந்திரா காந்தி வினோபா பாவேவின் ஆசிரமத்திற்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தபோது தியோராஸ் மூன்றாவது கடிதத்தை எழுதுகிறார் (வினோபா பாவே ஆர்.எஸ்.எஸ்-க்கும் இந்திரா காந்திக்கும் நெருக்கமானவர்). அதில் அவர், ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாக தலையிடுமாறும், தடையை நீக்க இந்திராவை வற்புறுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

இதன் நீட்சியாக, ஜூன் 25, 1976 (எமர்ஜென்சியின் ஓராண்டு நிறைவு நாள்) அன்று உத்தரப்பிரதேச ஜனசங்கம் இந்திரா காந்தி அரசாங்கத்திற்குத் தனது முழு ஆதரவை அறிவித்தது. மேலும் எந்தவொரு அரசாங்க விரோத நடவடிக்கைகளிலும் பங்கேற்க மாட்டோம் என்றும் உறுதியளித்தது. உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஜனசங்கத்தை சேர்ந்த 34 தலைவர்கள் காங்கிரசில் இணைந்தனர்.

இவை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக 1977-ஆம்‌ ஆண்டு ஜனவரி இறுதியில் சரணடைதல் ஆவணத்தில் கையெழுத்திட முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்திரா காந்தி எமர்ஜென்சியை விலக்கிக் கொண்டதால், சரணடைவு ஆவணத்தில் கையெழுத்திட வேண்டிய அவசியம் எழவில்லை.

எமர்ஜென்சி காலத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் உண்மை முகம் இதுதான். மக்களின் உரிமைகளை இந்திரா திட்டமிட்டு நசுக்கியபோது, ‘ஜனநாயகம்’ கொல்லப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கத்தினர் அந்த அடக்குமுறையில் மறைமுகமாக பங்கேற்பதாக உறுதியளித்து அதன்மூலம் தங்களை சிறையிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றனர்.

சங்கப் பரிவார கும்பல்கள் மன்னிப்பு கடித இழிபுகழ் சாவர்க்கரின் அடித்தோன்றல்கள் ஆயிற்றே. மன்னிப்பு கடிதங்கள் எழுதுவதென்பது அவர்கள் டி.என்.ஏ-விலேயே ஊறிப் போன ஒன்றுதான்.

நன்றி: தி நியூஸ் மினிட்


பொம்மி

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடி! | மக்கள் அதிகாரம்

29.06.2023

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர்!
ஆளுநர் மாளிகையைப் பூட்டு!
R.N.
ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடி!

பத்திரிகை செய்தி

ஆர். என் .ரவி  தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார்.கேரளாவின் கவர்னராக இருக்கக்கூடிய முகமது ஆரிப் கான் இதேபோன்று மாநில அமைச்சரவையின் கருத்து கேட்காமல் ஒரு அமைச்சரை நீக்கியதை எதிர்த்து கேரள அரசு கொடுத்த வழக்கில்,  ஆளுநர்  தவறு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

மாநில அரசின்  அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என்பதை  உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வழியாக நாம் அறிய முடியும். இந்திய அரசியலமைப்பை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று செயல்படக்கூடிய ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச கும்பலின் உளவாளியான ரவி,  அரசியல் சாசன எந்திரம் பழுதாகிவிடும் என்று கூறுவது நகைக்கத் தக்கது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அரசின் உறுப்புகள் அனைத்தும் பாசிச மயமாகிக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் பாசிச கும்பலின் நடவடிக்கைகளை மக்கள் திரள் போராட்டங்கள் இன்றி ஒருபோதும் எதிர் கொள்ள முடியாது.


படிக்க: செந்தில் பாலாஜி கைது! – மக்கள் அதிகாரம் கண்டனம்


தமிழ்நாட்டுக்கு எதிராகவும் தமிழுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படக்கூடிய இந்த ஆளுநர் ஆர் என் ரவியை இனியும் தமிழ்நாட்டில் வைத்திருக்கக் கூடாது.

ஆளுநர் மாளிகையை விட்டு ரவியை உடனடியாக வெளியேற்றக் கூடிய வேலைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது தமிழ்நாடு அரசின் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு எதிரான அரசியல் போராட்டத்தை தமிழ்நாடு முன்னெடுக்க வேண்டும்.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321

ஓஷன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தும், ஊடகங்களின் ஒப்பாரியும்!

ண்மையில் வட அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சென்ற ஐந்து கோடீஸ்வரர்கள் இறந்த சம்பவமானது, ஒரு வாரத்திற்கும் மேலாக மிகப்பெரும் பேசுபொருளாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஊடகங்களிலும் சமூக வலைதளச் சானல்களிலும் இதையே நம் கண்முன் நிறுத்திக் காட்டி நமது கவனத்தைப் பறித்தார்கள் என்றே சொல்லலாம்.

கடந்த ஜூன் 18 அன்று, மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்வையிட ஒஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானிய கோடீஸ்வரர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பால் ஹென்றி நர்கோலெட் ஆகியோரை ஏற்றிச் சென்ற ஒஷன்கேட் நிறுவனத்திற்குச் சொந்தமான “டைட்டன்” நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் காணாமல் போனது.

படிக்க : இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு 194 பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்பட்டுள்ளார்கள்!

நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற ஐந்து பேரையும் மீட்கப் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டு இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான ஆழ்கடல் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு நாடுகளின் கடலோரப் படைகள் இந்த மீட்புப்பணியில் இணைக்கப்பட்ட போதிலும் அவர்களை மீட்க முடியாமல் பின்னர் அவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் இப்படியொரு விபத்தைச் சந்தித்தற்கு காரணமான, ஓஷன்கேட் நிறுவனம் செய்த தவறுகள் என்ன என்பது குறித்துப் பேசிய மரைன் டெக்னாலஜி சொசைட்டியின் (Marine Technology Society – MTS) உறுப்பினர் ஓட்டோ ஸ்கோஃபீல்ட், “செல்வந்தர்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஐந்து கீழ்த்தட்டு மக்களைக் கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பும் மிக முக்கியமான கட்டத்தை நிறுவனம் சோதித்துப் பார்க்காமல் விட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

“ஓஷன்கேட், குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாதவர்களை அரசாங்க நலத்திட்டத்தின் மூலம் பயன்படுத்திச் சோதிக்காமல், கோடீஸ்வரர்களை ஏற்றி சோதித்துள்ளது” என்று மேட்டுக்குடி வர்க்கத்தின் உச்சபட்சத் திமிரோடு பேசியுள்ளார்.

மேலும், “சில வீடற்ற மக்களை வைத்து சோதனை நடத்தியிருந்தால் அதிக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்; பல செல்வந்தர்களின் மரணம் தடுக்கப்பட்டிருக்கும்” என்று கூறியதோடு “ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைப் பயன்படுத்துவது சிறந்ததாக இருந்திருக்கும்” என்று அரக்கத்தனமான ஆலோசனைகளையும் சொல்லியுள்ளார்.

படிக்க : பெரியார் பல்கலை: கருஞ்சட்டைக்கு விதித்த தடை நீக்கம்! இது தமிழ்நாடு! ஆர்.என்.ரவியே வெளியேறு! | பு.மா.இ.மு

இந்த ஓஷன்கேட் நீர்மூழ்கி விபத்து குறித்து ஊடகங்களில் பேசிக் கொண்டிருந்த அதேநேரத்தில்தான் துனிசியாவில் இருந்து 46 புலம்பெயர் தொழிலாளர்களுடன் இத்தாலிக்குப் புறப்பட்ட கப்பல் விபத்துக்குள்ளாகி 37 பேர் மாயமானார்கள். பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வேலையில்லா திண்டாட்டம், பசிக் கொடுமை முதலியவற்றிலிருந்து தப்பிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் ஐரோப்பா போன்ற கண்டங்களுக்குக் கடல்வழியாகப் பயணிக்கின்றனர். விபத்துக்குள்ளான துனிஷியக் கப்பலில் இருந்து பெரும்பாலானோர் தப்பித்துக் கரை சென்றுசேருவதே அரிதுதான்.

ஆனால், கோடீஸ்வர முதலாளிகள் தங்கள் ஆழ்கடல் இன்பச் சுற்றுலாவின்போது செத்துப்போன துயரத்தை நம் மீது திணிக்கும் இந்த ஊடகங்கள் ஏதும் துனிஷிய புலம்பெயர் தொழிலாளர்களின் சாவு குறித்து சீண்டுவதில்லை.

சாவின் துயரத்தைச் செய்தியாக்குவதிலும் வர்க்க பாசத்தை வெளிப்படுத்துகின்றன இந்த ஆளும் வரக்க ஊடகங்கள்!

துலிபா

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய கலெக்டர்!

ந்தியா முழுவதும் அரசு நிர்வாகத்தில் பணியாற்றக் கூடிய அரசு அதிகாரிகளை ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல் தன்வயப்படுத்தி கொண்டு தங்களுடைய இந்துராஷ்டிர நோக்கங்களுக்குப் பயன்படுத்தி வருகிறது. அதைபோல் பல அரசு உயர் அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பனிய சித்தாந்தங்களை உள்வாங்கியவர்களாகவும், அதை சுயமான முறையில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்பவர்களாகவும் உள்ளனர்.

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகிய இரு அரசு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய நடவடிக்கையானது எதிர்க்கட்சி தலைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்செயலைப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் தற்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது வருகிறது. இந்நிலையில் ஜூன் 11 அன்று சாட்னாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரான அனுராக் வர்மா மற்றும் நகராட்சி ஆணையரான ராஜேஷ் ஷாஹி ஆகியோர் அரசு அதிகாரிகளுக்குப் போடப்பட்டிருக்கும் உத்தரவுகளை மதிக்காமல் கலந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ்-சின் பகவத்துவஜம் எனப்படும் காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்தும் முறையைப் பின்பற்றியதோடு அதன் மேல் உறுதிமொழியும் ஏற்றுள்ளனர் அரசு அதிகாரிகள்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் பலரும், அரசு உயர் அதிகாரிகளின் செயல்களுக்குக் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு மதவெறி அமைப்பின் நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரியான மாவட்ட ஆட்சியரும், நகராட்சி ஆணையரும் எப்படிக் கலந்து கொள்ள முடியும் அதற்கான அதிகாரம் யார் வழங்கியது என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.


படிக்க: மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!


குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான கே.கே.மிஸ்ரா “இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நடத்தை அரசு ஊழியர்களிடம் இருந்தால் எந்த வகையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். இதுபோன்ற அதிகாரிகள் எவ்வாறு பாரபட்சமின்றி ஜனநாயக ரீதியாக பணியாற்றுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதைபோன்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தன்கா, “இதுபோன்ற அதிகாரிகளைத் தேர்தல் பணிகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும், ஒருபோதும் அவர்களைத் தேர்தல் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது” எனத் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், இந்த இருவர் மீதும் மாநிலத் தலைமைச் செயலாளர் இக்பால் சிங் பெயின்ஸ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு பல அரசியல் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் என்ன தவறு இருக்கிறது? என்கிறார் மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா. மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் பிரசாந்த் சிங்குடன்தான் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்குச் சென்றதாகவும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஒரு பொதுநிகழ்ச்சி என்பதால் நான் அதில் பங்கேற்றேன் என்றும் கூறியுள்ளார்.

பின் நகராட்சி ஆணையர் ராஜேஷ் ஷாஹி அளித்துள்ள விளக்கத்தில் “எல்லோரும் ஒன்றைச் செய்யும் போது நாம் மட்டும் செய்யாமல் இருக்க முடியாது என்பதால் கையை மடக்கி ‘துவஜ்’ செய்தோம். இதில் தவறு இருப்பதாக நாங்கள் உணரவில்லை” என்றார். இவர்கள் இருவரின் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவும் அம்மாநில அரசு முன்வரவில்லை.

ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் அரசு அதிகாரிகள் பங்கேற்பதற்கு 1981-ஆம் ஆண்டே அன்றைய காங்கிரஸ் அரசு தடை விதித்தது. “மத்தியப்பிரதேச மாநில சிவில் சர்வீஸ் சட்டம் 1965-இன் படி “ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் உட்பட எந்த மதம் சார்ந்த அமைப்புகளின் நிகழ்விலும் அரசு ஊழியர்கள் பங்கேற்பது பிரிவு 5(1) இன் கீழ் நடத்தை விதிகளை மீறுவதாகக் கருதப்படும்” எனச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


படிக்க: தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு போலீசு!


மேலும் “ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டவுடன், பணியிலிருந்து நீக்கலாம்” என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடைகளை 2006-ஆம் ஆண்டு பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றதும் நீக்கிவிட்டார். “ஆர்எஸ்எஸ் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது” என்று கூறிவிட்டார். இதனால் இந்த இரு அதிகாரிகள் மீதும் நிர்வாக ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையே இருக்கிறது.

இதுபோன்று மாநில அரசாங்கங்கள் சட்டங்களைத் திருத்தி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இவர்களைப் போன்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அரசு அதிகாரிகளை பணியில் நீட்டித்திருக்க வைப்பது ஏன் என எண்ணிப்பார்க்க வேண்டும். பாசிஸ்ட்டு-களுக்கு பார்ப்பனிய இந்துமதவெறி கருத்துக்களைக் கொண்டவர்கள் வெறும் அரசியல்வாதிகளாக இருந்தால் மட்டும் போதாது, மக்களை நேரடியாகக் கட்டுப்படுத்தக்கூடிய சித்தாந்த ரீதியான பயம் கொள்ளாத இதேபோல் ‘துணிச்சலாக’ செயல்படும் அரசு அதிகாரிகளும் தேவை. பா.ஜ.க கட்சியானது ஒருவேளை ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டால் இதுபோன்ற சித்தாந்த ரீதியான அரசு அதிகாரிகளின் உதவியோடே மீண்டும் தங்களுடைய ஆட்சியை நிறுவுவார்கள்.

அரசு அதிகாரிகள் எந்த ஒரு அரசியலும் சாராத நபர்கள் எனக் கூறிய நாட்கள் முடிந்து இன்று வெளிப்படையாக தங்களை ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களாகக் காட்டிக் கொள்வதோடு நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதென்பது மிக ஆபத்தானது. எனவே தேர்தலில் மட்டும் பாசிசத்தை வீழ்த்தினால் போதாது. அரசு கட்டமைப்பில் இருக்கும் இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்ட நபர்களைத் துடைத்தெறிய இக்கட்டமைப்புக்கு மாற்றானதை நோக்கி நாம் நகர வேண்டும்.

நன்றி: தீக்கதிர்


சித்திக்

ஜனநாயகத்தை மறுக்கும் தெற்காசிய பல்கலைக்கழகம்!

0

ஜூன் 16 அன்று, டெல்லியின் தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் (எஸ்.ஏ.யூ) முன்னறிவிப்பின்றி நடந்த உதவித்தொகை குறைப்புக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நான்கு பேராசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சக ஊழியர்களுக்கு எதிராகவும், நிர்வாகத்திற்கு எதிராகவும், பல்கலைக்கழகத்தின் நலனுக்கு எதிராகவும் மாணவர்களைத் தூண்டி விட்டதாக இந்த நால்வர் மீது பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

37 ஆண்டுகாலமாக இருக்கும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (சார்க்) ஒரே சாதனையாகக் கருதப்படும் தெற்காசியப் பல்கலைக்கழகம், தெற்காசியப் பிராந்தியத்தில் சர்வதேச சட்டக் கல்வி பயில முக்கிய இடமாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும், முதுகலை பட்டப்படிப்பிற்கு ஒவ்வொரு துறையிலும் 15 இந்திய மாணவர்கள் மற்றும் சார்க் கூட்டமைப்பின் மற்ற ஏழு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 15 மாணவர்கள் என மொத்தம் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில், முதுகலை மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ₹ 5,000-தில் இருந்து ₹ 3,000-மாகக் குறைக்கப் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அதை எதிர்த்து எஸ்.ஏ.யூ மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். உதவித்தொகையை ₹ 7,000 ஆக உயர்த்த வேண்டும் என்று மாணவர்கள் கோரினர். மேலும், பல்கலைக்கழகத்தில் சட்டரீதியாக அமைக்கப்படும் குழுக்களில், குறிப்பாகப் பாலின உணர்திறன் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குழுக்களில் போதுமான மாணவர் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதற்குப் பல்கலைக்கழகம் செவிசாய்க்க மறுத்ததால் போராட்டம் தொடர்ந்தது. அதே ஆண்டு அக்டோபர் 13 அன்று, பல்கலைக்கழகத்தின் தற்காலிக தலைவர் (Acting President) அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற மாணவர் போராட்டத்தைக் கலைக்க டெல்லி போலீசை வளாகத்திற்குள் வரவழைத்தது பல்கலைக்கழக நிர்வாகம். தலைவர் (பிரசிடென்ட்) என்பது துணை வேந்தருக்கு நிகரான பதவியாகும்.


படிக்க: நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!


பல்கலைக்கழக வளாகத்தினுள் போலீசை அழைக்கும் முடிவை எதிர்த்து 13 பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்குக் கடிதம் எழுதினர். மீண்டும், நவம்பர் 1 அன்று, பேராசிரியர்கள் குழு ஒன்று தற்காலிக தலைவர், தற்காலிக துணைத் தலைவர் மற்றும் தற்காலிக பதிவாளரைச் சந்தித்து நிலைமையைச் சரிசெய்யுமாறு வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக, நவம்பர் 4 அன்று, ஐந்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க (வெளியேற்றுதல் / இடைநீக்கம் செய்தல்) பல்கலைக்கழகம் முடிவு செய்தது. 15 ஆசிரிய உறுப்பினர்கள் இந்த முடிவைக் கடுமையாகக் கண்டித்து பல்கலைக்கழகம் தொடர்பான அனைவருக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினர்.

இதனிடையே, நவம்பர் 5 அன்று மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். நவம்பர் 7 முதல் அது காலவரையற்ற உண்ணாவிரதமாக மாறியது. உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பல மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. அவர்களில் பலருக்கு இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் மிகவும் குறையத் தொடங்கியது. சில மாணவர்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

நவம்பர் 22 அன்று உண்ணாவிரதத்தின் போது, பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்த ஐந்து மாணவர்களில் ஒருவரான அம்மார் அகமது (Ammar Ahmad) மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஜனவரி 17, 2023 வரை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பல்கலைக்கழக நிர்வாகம் அம்மார் அகமதுவின் மருத்துவச் செலவில் ஒரு பகுதியினை ஏற்றுக் கொண்டது. அவர் தற்போது வரை பேச்சாற்றல் பாதிக்கப்பட்டு, சுயமாக எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

மாணவர்கள் போராட்டம் 2022 டிசம்பரில் குளிர்கால விடுமுறை தொடங்கியதாலும் பல்கலைக்கழக வளாகத்தை சாணக்கியபுரியில் இருந்து மைதான்கரிக்கு மாற்றும் பணி தொடங்கியதாலும் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து ஆசிரிய உறுப்பினர்களுக்குக் காரணம் கேட்கும் குறிப்பாணைகள் (show-cause notice) வழங்கப்பட்டன. டிசம்பர் 30, 2022 தேதியிட்ட ஒரு காரணம் கேட்கும் குறிப்பாணையில், “பேராசிரியர்கள் தெற்காசியப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மார்க்சிய படிப்பு வட்டமான அய்ஜாஸ் அகமது படிப்பு வட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா?” என்று விளக்கம் கேட்கப்பட்டது.


படிக்க: மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் டெல்லி பல்கலை!


மே 19, 2023 அன்று, இந்த போராட்டத்தில் பேராசிரியர்களின் பங்கு குறித்து விசாரிக்கப் பல்கலைக்கழகம் ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது. அக்குழு அதே நாளில் 132 முதல் 246 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்குமாறு பேராசிரியர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்தியது. உண்மை கண்டறியும் குழுவின் முன்பாக அமர்ந்து பதிலளிக்க பேராசிரியர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கால அவகாசம் எதுவும் வழங்கப்படாமல், ஜூன் 16 அன்று நான்கு பேராசிரியர்கள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த இடைநீக்க உத்தரவில் எந்த குற்றச்சாட்டும் குறிப்பிடப்படவில்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட காலக்கெடு குறித்தும் அதில் குறிப்பிடப்படவில்லை.

“நான்கு பேரை மட்டும் குறிவைத்து பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்ததாகத் தெரிகிறது. பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பதற்காக நாங்கள் நிர்வாகத்திடம் பேச முயன்றோம்” என்று இடைநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களில் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-யிடம் கூறினார்.

மற்றொரு பேராசிரியர் “இடைநீக்க கடிதத்தில் நடவடிக்கைக்கான சரியான காரணத்தைப் பல்கலைக்கழகம் வழங்கவில்லை. தவறான நடத்தை என்ன என்பதை அவர்கள் எங்களிடம் சொல்லவில்லை. (இப்பிரச்சினை குறித்து) அக்டோபரில் 13 பேர் நிர்வாகத்திற்கு எழுதினார்கள்; நவம்பரில் 15 பேர் எழுதினார்கள். ஏன் நான்கு பேர் மீதுமட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார்.

பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் படிப்பு வட்டங்கள் செயல்படுவதென்பது ஒரு இயல்பான நிகழ்வாகும். இருப்பினும், தெற்காசியப் பல்கலைக்கழகம் இதை ‘சட்டவிரோதமானது’ என்று கருதி அதற்கு விளக்கம் கோருகிறது. பாசிச இருளால் சூழப்பட்டு ஜனநாயக வெளிகள் விழுங்கப்படுவதையே இந்நிகழ்வு நமக்குக் காட்டுகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (JNUTA), கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம், பொதுப் பள்ளி அமைப்புக்கான மாநிலத் தளம் – தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் என நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆசிரியா் குழுக்கள் இந்த இடைநீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். இந்த பாசிச நடவடிக்கையை எதிர்த்து அனைத்து ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளும் குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.


பொம்மி

கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்போகும் திராவிட மாடல் அரசாங்கம்!

ற்போது காவிரி டெல்டா உட்பட தமிழ்நாட்டின் ஆறு இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றது போல் இராட்சத அரவை ஆலைகளை நிறுவி, நேரடியாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து அதனை அரைத்து, அரிசி விநியோகம் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதற்காக வருகிற ஜூன் 27ம் தேதி 15 ஆண்டுகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையானது, நெல்லை சாகுபடி செய்யும் செலவுகளுடன் ஒப்பிடும்போது குறைவு தான். அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்யும்போதே நெல் விவசாயிகளின் நிலை மோசமாக இருக்கிறது.

குறிப்பாக டெல்டா பகுதிகளில் தான் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்தால், இதுவரை விவசாயிகளுக்கு கிடைத்து வந்த குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாமல் போய்விடும். இதனால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள். பின்னர் அந்த விவசாய  நிலங்களை எளிதாக மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அரசும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும்.


படிக்க: ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!


இந்த மாத தொடக்கத்தில் இருந்து பொன்னி, பச்சரிசி, பாஸ்மதி உள்ளிட்ட அனைத்து அரிசி ரகங்களும் விலை உயர்ந்துள்ளன. மூட்டை ஒன்றுக்கு 300 ரூபாய் விலை ஏற்றம் இருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். ஒரு கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளது.

வணிகத்திற்கு தேவையான அளவு தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி இல்லாமல் இருப்பதும் அரிசியை பதுக்கல் செய்வதும் தான் அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்று

அரசு கூறுகிறது. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களால் பல ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளை பதுக்கி அரிசி விலையை செயற்கையாகவே அதிகரிக்க செய்யவும் முடியும்.

மேலும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அரிசியை அதிக விலைக்கு அரசிடமே விற்பனை செய்யக்கூடிய நிலையும் உருவாகும். இதனால்

நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யும் இலவச அரிசியும் ரத்து செய்யப்படும்.

அரசே நெல் கொள்முதல் செய்யும்போதே இந்த நிலை எனில், கார்ப்பரேட் நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்து, அரிசியாக விற்பனை செய்யும் போது நிலமை மிகவும் மோசமாகும்.

ஒருபுறத்தில் அரசு நிர்ணயித்து வைத்துள்ள நெல்லுக்கான ஆதார விலையை விட குறைவான விலையே விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இன்னோரு புறத்தில் அரிசியின் விலை தற்போது உள்ளதை விட இன்னும் அதிகமான விலையில் தான் மக்களுக்கு கிடைக்கும்.


படிக்க: மாநிலங்களுக்கு அரிசி கோதுமையை வழங்க எப்.சி.ஐ-க்குத் தடை!


ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.

கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க- விற்கு சற்றும் சளைக்காமல் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது திராவிட மாடல் அரசாங்கம்.

டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் போராட்டத்தைப் போல, தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடக்கூடிய விவசாயிகளின் போராட்டத்தை கட்டி அமைக்காமல் இது போன்ற கார்ப்பரேட் திட்டங்களை முறியடிக்க முடியாது.

செய்தி ஆதாரம் – தி இந்து தமிழ்


ராஜன்

மாநிலங்களுக்கு அரிசி கோதுமையை வழங்க எப்.சி.ஐ-க்குத் தடை!

ந்தியாவின் தானிய சேமிப்பு கிடங்கிலிருந்து அரிசி கோதுமை போன்ற உணவு தானிய பொருட்களை இனி மாநில அரசாங்கங்களுக்கு விற்கக் கூடாது என இந்திய உணவு கழகத்திற்கு ஆணையிட்டுள்ளது பாசிச மோடி அரசு. இந்த உத்தரவு மாநிலங்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உணவு கழகமானது (எப்.சி.ஐ) விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்களைச் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைத்து, அவற்றை மாநிலங்களின் உணவுப் பொருட்களின் தேவைக்கேற்ப பிரித்து வழங்கும். இந்த நிலையில்தான் மாநிலங்களுக்கு நேரடியாக எந்த விற்பனையும் செய்யக்கூடாது என எப்.சி.ஐ-க்கு உத்தரவிட்டுள்ளது மோடி அரசாங்கம்.

கர்நாடக தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ இலவச அரசி நியாயவிலைக்கடை மூலம் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. தேர்தல் வெற்றிக்குப் பின் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் முதல் திட்டமாக வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கையெழுத்திட்டது.

அதைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசாங்கம் ஜீன் 9 அன்று இந்திய உணவு கழகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்க உள்ளதால் கூடுதலாக 2.28லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவை இருப்பதாகவும் விலை நிர்ணயம் செய்துள்ள படி குவிண்டாலுக்கு ₹ 3,400 கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும் கூறியிருந்தது.

படிக்க: உணவு தானியங்கள் குறைப்பு: காஷ்மீர் மக்களை பஞ்சத்திற்குள் தள்ளும் மோடி அரசு!

கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ஜீன் 12-ஆம்  தேதி இந்திய உணவு கழகம் பதில் கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் ஜீன் 13 ஆம் தேதி, ஒன்றிய மோடி அரசு மாநிலங்களுக்கு அரிசி கோதுமைகளை இந்திய உணவு கழகம் இனி விற்கக் கூடாது என உத்தரவிட்டது. காங்கிரஸ் அரசின் திட்டத்தைத் தடுக்கும் வகையில் அரிசி கோதுமை வழங்குவதை மறுப்பதாகக் கூறி மோடி அரசைக் கண்டித்து கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இது ஏதோ கர்நாடக அரசை மட்டும் பாதிக்கக்கூடிய விஷயம் அல்ல. இந்த அறிவிப்பால் அனைத்து மாநிலங்களின்  நியாயவிலைக்கடைகளுக்கு தேவையான  அரிசி கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் முறையாகக் கிடைப்பதில் பெரும் பிரச்சினை உருவாகும். ஆனால் இதற்கு விளக்கம் அளிக்கும் ஒன்றிய மோடி அரசோ உணவுப் பொருள்களின் தற்போதைய இருப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் உணவுப் பொருட்களின்  விலைவாசியைக் கட்டுப்படுத்தவுமே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்கிறது.

இவ்வாறு கூறும் மோடி அரசுதான் 15 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ள எப்.சி.ஐ-க்கு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தப் போகிறார்களாம். ஏற்கனவே தமிழ்நாட்டின் உணவு தானிய பற்றாக்குறை என்பது 50,000 டன் ஆக உள்ளது. இதுபோன்ற ஒன்றிய அரசின்  முடிவால் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தமிழ்நாடு அரசு உட்பட அனைத்து மாநிலங்களும் தள்ளப்பட்டுள்ளன.

படிக்க: மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!

ஆனால் உண்மையில் ஒன்றிய அரசிடம் உணவு தானிய இருப்பு பற்றாக்குறையா இருக்கிறதா எனப் பார்த்தால் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. அண்மையில்  நிதிஆயோக் அளித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆண்டுக்கு 30.9 லட்சம் டன் உணவு தானியங்கள் உபரியாக அரசிடம் உள்ளதாகவும், பெட்ரோல் போன்ற எரிபொருட்களில் 20% எதான் கலப்பதற்காக 2022-ஆம் ஆண்டில் மட்டும் 1.06 லட்சம் டன் அரிசி விற்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

மேலும் இவர்கள் முன்வைக்கும் மற்றொரு வாதம் “பருவநிலை மாற்றம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது; எனவே எதிர்வரும் காலங்களுக்காக உணவு தானியங்களைச் சேமிக்கிறோம்; இதில் என்ன தவறு இருக்கிறது” என்பதாகும். ஆனால், உண்மை என்ன என்பதை மத்திய விவசாயத்துறை அமைச்சகமே சொல்லியிருக்கிறது. 2022-2023 ஆம் ஆண்டின் மொத்த அரிசி உற்பத்தி 135 மில்லியன் டன். இது சென்ற ஆண்டு உற்பத்தியை விட 6 மில்லியன் டன் அதிக உற்பத்தியாகும். உற்பத்தி அதிகரித்த போதிலும் தங்களிடம் இருப்பு இல்லை என்று காரணம் கூறுகிறது மோடி அரசு.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் உணவு தானிய உற்பத்தி குறையவில்லை; மாறாக விவசாயிகளிடமிருந்து இந்திய உணவு கழகம் விவசாய பொருட்களைக் கொள்முதல் செய்வதுதான்  குறைந்திருக்கிறது. தனியார் நிறுவனங்களை நோக்கி விவசாயிகளை விசிறியடிக்கும் நோக்கத்திலும் விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேற வேண்டும் என்ற நோக்கத்திலும் இதுபோன்ற செயல்களை மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கிறது. மற்றொரு பக்கம் தனியார்மய தாராளமய உலகமய கார்ப்ரேட் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவு.

இதன் வெளிப்பாடுதான் விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டு பற்றாக்குறை நிலவுவதாகக் கூறி நியாயவிலைக்கடைகளை ஒழித்துக் கட்டும் நடவடிக்கை.


சித்திக்

 

செந்தில் பாலாஜி கைது! THE UNCONDITIONAL SUPPORT அரசியல்!

மலாக்கத்துறை ரெய்டு –  அடிதடி –  செந்தில் பாலாஜி-  கைது  – நெஞ்சு வலி – பைபாஸ் அறுவை சிகிச்சை – உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் திமுகவும் அமலாக்கத்துறையும் மாறி மாறி வழக்குகள் எனத் தினமும் பரபரப்பூட்டும்  சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

செந்தில் பாலாஜி மீதான கைது,  அது தொடர்பான நடவடிக்கைகள் பாசிச நடவடிக்கைகள் என்றே நாம் கூறுகிறோம். ஏனெனில் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் திமுகவை மிரட்டிப் பணிய வைப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி அதன் வழியே தேர்தல் நடத்துவது திட்டம்  என்பதால் அவ்வாறு கூறுகிறோம் .அதனாலேயே செந்தில் பாலாஜி நல்லவர் என்றோ தூய்மையின், நேர்மையின் உரு என்றோ நாம்  கூறவில்லை. ஆனால் இப்போது உள்ள சூழலில் செந்தில் பாலாஜி மீதான தவறுகளையோ ஊழலைப் பற்றியோ யாரும் பேசக்கூடாது அப்படிப் பேசுபவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் அஜெண்டாவின் கீழ் வேலை செய்கிறார்கள்  என்கிறார்கள் கிரியா ஊக்கிகள்.

செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை என்பது திமுகவுக்கு பாசிச ஆர் .எஸ். எஸ் மற்றும் பாஜக வைத்திருக்கும் பலமான புதைகுழி. இந்த புதைகுழியில் இருந்து திமுக தப்பிக்க வழி இருக்கிறதா என்பது கேள்விக்குறியே.

ஏனென்றால் செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட புதைகுழியிலிருந்து தப்பிக்கும் பொழுது அருகில் இன்னொரு அமைச்சர் சிக்க வைக்கப்படுவார்.


படிக்க: செந்தில் பாலாஜி கைது! – மக்கள் அதிகாரம் கண்டனம்


எதிரியின் உடனான  மோதலின் போது எதிரியின் பலவீனமான கண்ணியின் மீது தான் முதலில் தாக்குதல் நடத்தப்படும். மேலும் அந்த கண்ணியானது மொத்த சங்கிலியை உடைப்பதாகவும்  இருக்கும்.

எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின்படி திமுக என்ற சங்கிலியைப் பலவீனப்படுத்தவும் உடைக்கவும் செந்தில்  பாலாஜி என்ற பலவீனமான கண்ணியைப் பிடித்திருக்கிறது பாஜக.

யார் இந்த செந்தில் பாலாஜி?

மதிமுக, அதிமுக, அமமுக என இறுதியில் தற்பொழுது திமுகவில் அமைச்சராக இருப்பவர். கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்தார். இந்த மோசடி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் பேசி வழக்கை முடிக்க முயன்றார் செந்தில் பாலாஜி. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் ஆனது இந்த வழக்கை 40 நாட்களுக்குள் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். இல்லை என்றால் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது.

அதற்குப் பிறகு அவசர அவசரமாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் திடீரென்று சோதனை செய்தது. சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் திமுக தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தத் தள்ளுமுள்ளை மிகப்பெரிய வீர தீரமிக்க நடவடிக்கையாகப் பலரும் புகழ்ந்து கூறினர். அதற்கு எதிர் நடவடிக்கையாக திடீரென்று அதிகாலையில் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறை ஒரு நாள் முழுவதும் சோதனை செய்து இறுதியில்  கைது செய்தது. செந்தில் பாலாஜியின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து இப்போதைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜியை  வைத்து கொங்கு மண்டலத்தைக்  கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது திமுகவின் திட்டம். கொங்கு மண்டலத்தில் தான் அதிமுகவும் பாஜகவும் வலுவாக இருக்கின்றன. அந்த இடத்தில் திமுகவின் அமைப்புகளை உருவாக்குவதும் திமுகவின் கட்டுப்பாட்டிற்குள் கொங்கு  மண்டலத்தைக் கொண்டு வருவதும் தங்களது இருப்புக்கு ஆபத்து என்பதைப் பாசிச பாஜக நன்கு அறியும்.

ஒரே கல்லிலேயே பல மாங்காய் என்பது போல செந்தில் பாலாஜியைக் கைது செய்ததன் மூலம் கொங்கு மண்டலத்திலிருந்து திமுகவை அகற்றுவதும் திமுகவுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையைக் கொடுப்பதுமாக  இந்த வேலையைச் செய்திருக்கிறது.

கொள்கைகளைத் தூக்கிப்போடு
‘திறமைக்கு’ இடம் கொடு!

செந்தில் பாலாஜிக்கு  எந்த திறமையின் அடிப்படையில் கொங்கு மண்டலத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலை கொடுக்கப்படுகிறது? செந்தில் பாலாஜி திராவிட கொள்கையில் ஊறித் திளைத்தவரா? சுயமரியாதை உணர்வில் ஊன்றி நிற்பவரா ?இல்லை. அதிமுக எந்தெந்த வகையில் எல்லாம் தன்னுடைய அமைப்புகளை உருவாக்கி இருக்கிறதோ அது போன்ற வகையில் ஓட்டு பெறுவதும் ஆட்களை வளைப்பதிலும் கில்லாடி அவர். பணபலம் மற்றும் அதிகார பலம்  மூலம் முறைகேடுகளை அவிழ்த்துவிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை திமுகவின் தலைமைக்குச் சமர்ப்பித்தவர். இது போன்ற செயல்களால் குறுகிய காலத்திலேயே தலைமைக்கு நெருக்கமான நபராகவும் திமுகவில் அசைக்க முடியாத நபராகவும் மாறிப் போனார். இனி கொள்கை, கோட்பாடு, சுயமரியாதை என்று பேசிக்கொண்டு இருப்போரை எல்லாம் மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு திமுகவெங்கும் செந்தில் பாலாஜிக்களை நிறைத்திருப்பதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும், நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல முடியும் என்று கணக்குப் போடுகிறது திமுக. செந்தில் பாலாஜிக்கள் நிறைந்திருக்கும் போது தான் திமுக அரசையும் கட்சியும் காப்பாற்ற முடியும் என்ற நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைத்து எதிர்க்கட்சிகளை அச்சத்தில் வைத்திருக்கும் போது தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ் –  பா.ஜ.கவின் தேவை. மோடியின் கடந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் மக்கள் பட்ட துயரங்கள் சொல்லி மாளாதவை. இந்து ராஷ்டித்தை அமைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஒருபுறம் மக்களின் மத்தியிலும் அரசு உறுப்புகளிலும் ஊடுருவி முன்னேறிக் கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் காவி பாசிச மற்றும் கார்ப்பரேட் பாசிச திட்டங்களினால் மக்கள் அடைந்துள்ள இன்னல்களும் ஏராளமானவை. அதன் விளைவைப் போராட்டக் களங்களிலும் தேர்தலிலும் பாசிச பாஜக – ஆர் எஸ் எஸ் கும்பல் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.


படிக்க: சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !


மொத்த நாட்டையும் அதானி, அம்பானி பாசிச கும்பலுக்குத் தாரை வார்த்த நடவடிக்கைகள் பெட்ரோல் –  டீசல்  – சிலிண்டர் விலை  உயர்வு, சிஏஏ, மணிப்பூர் கலவரம் எனச் சுற்றிச் சுற்றி சுழன்று திருப்பி அடிக்கிறது.

கர்நாடகத் தேர்தல் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தென்னிந்தியாவில் இந்து ராஷ்டிரத்தின் சோதனை சாலையாகக் கர்நாடகாவை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளான புர்கா தடை,  மத மாற்றத் தடை சட்டம் எனப் பல  கொண்டுவரப்பட்ட போதும் பாஜக கட்சியிலிருந்த உள்ளடி சண்டை, லிங்காயத்துகளின் எதிர்ப்பு, 40% கமிஷன், கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு, எழு கர்நாடகா என்ற பாசிச எதிர்ப்பு அமைப்புகளின் இயக்கம் ஆகியவை பாஜகவைத் தேர்தலில் தோற்கடிக்க வைத்திருந்தாலும் அவற்றின் அடித்தளத்தை இழக்கச் செய்யவில்லை. பாசிச கும்பல் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற இன்னும் பல்வேறு சித்து வேலைகளைக் கண்டிப்பாக மேற்கொள்வர்.

திமுகவைக் குழியில் தள்ளும் கண்ணி வெடிகள் !

தமிழ்நாட்டின் திமுகவின் செல்வாக்கைக் குறைத்து திமுக ஆட்சியின் மீது அதிருப்தியை உருவாக்கி படிப்படியாக எதிர்ப்பலையைத் தோற்றுவித்து அதன் இறுதியில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் திட்டம் .உடனடியாக ,அதிரடியாக திமுக அரசு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டால் அது பூமராங்காக திருப்பி மாறும் என்பதைப் பாசிச கும்பல் நன்கு அறியும்.

தற்போது திமுகவின் தூண்களாக இருக்கக்கூடிய பலரும் அதிமுகவிலிருந்து வந்தவர்களாகவே உள்ளனர். அவர்கள் மீது பல ஊழல் புகார்களை ஏற்கனவே திமுக எழுப்பி இருக்கிறது. அவர்கள் திமுகவின் கொள்கையாலும் கோட்பாட்டு நடைமுறைகளாலும் முன்னேறி தங்களுடைய இடத்தை பிடித்தவர்கள் அல்ல. அதிமுகவில் இருக்கும் பொழுது என்னென்ன வேலைகளைச் சிறப்பாகச் செய்தார்களோ அதையே சிறப்பாகவும் சீராகவும் திமுக கட்சியிலும் அரசிலும் மேற் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்கள் தலைமைக்கு விசுவாசமாக இருப்பார்கள். அதற்காக எப்படிப்பட்ட தகிடு தத்தங்களை  மேற்கொண்டு கொடுக்கப்பட்ட வேலைகளை நிறைவேற்றுவர்.

இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் அல்ல. அவர்களின் ஊழல் காரணமாக மக்களிடம் நாறிப்போனவர்களாக இருப்பார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்களே திமுக கட்சியிலும் அரசிலும் முக்கிய தூண்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் இருப்பையும் செயல்பாட்டையும் முடக்குவதன் மூலம் பாஜக தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயல்வது மட்டுமின்றி திமுகவில் ஓட்டையைப் போட்டு அதன் மூலம் கட்சியில் உள்ள மேல்மட்ட தலைவர்களிடம் அச்சத்தையும் அரசியல் ஒரு ஆட்டத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று செயல்படுகிறது.

செந்தில் பாலாஜியின் மீது மக்களுக்கு எவ்விதமான நற்பெயர் இல்லை. தான் செய்த ஊழலை மறைக்க அவர் மேற்கொண்ட முயற்சியில் சிக்கிக்கொண்டார். இதிலிருந்து அவர் வெளியே வரவே முடியாது. செந்தில் பாலாஜி என்ன முயன்றாலும் திமுகவால் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் பாஜக இப்படிப்பட்ட முறைகேடுகளிலும் ஒட்டுமொத்த அரசை கைக்குள் வைத்திருப்பதிலும் பழம் தின்று கொட்டை போட்டது. வேறு வழியின்றி திமுக செந்தில் பாலாஜியைக் கழற்றி விட்டால் திமுகவில் உள்ள மேல்மட்டத் தலைவர்கள் ஆடிப் போய் விடுவார்கள். செந்தில் பாலாஜியைக் காப்பாற்றச் சென்றால் இப்படிப்பட்ட வழக்குப் புயல்களில் சிக்கிக் கொள்ள வேண்டும். செந்தில் பாலாஜி நல்லவர், வல்லவர் என்று திமுகவினர் செல்லும் பிரச்சாரங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் எவ்வித நற்மதிப்பையும் பெறப்போவதில்லை.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி டிசைனில் ஆப்புகள் தயார்!

பாசிசத்தின் தடையரண் என்று சொல்லப்பட்ட எதிர்க்கட்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டிசைனில் பாசிச ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க ஆப்பு வைத்திருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகப் பேசினால் மக்கள் சிரிப்பார்கள். எதிராகப் பேசினால் பாஜகவுக்குச் சாதகமாகப் போய்விடும் இன்று கிரியா ஊக்கிகளும் மிரட்டுகிறார்கள். செந்தில் பாலாஜி போல இன்னும் நான்கு அமைச்சர்களுக்கு பாஜக குறி வைத்து விட்டால் நிலைமை என்னவாகும் என்று யோசியுங்கள். ஒரு அமைச்சரைக் காப்பாற்றவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் திமுக நிலைமை என்னவாகும்?

செந்தில் பாலாஜிக்குப் பதில் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜன் மீது பாஜக ரைடு நடவடிக்கை ஏவி விட்டிருந்தால் தமிழ்நாடு தனக்கு எதிராக மாறும் என்பதை பாஜக நன்கு அறியும். அதனால் தான் ஊழல்வாதிகளையும் மக்களிடம் அவப்பெயர் உள்ளவர்களையும் முதலில் தூக்குவார்கள்.

இப்படி ஊழல்வாதிகளை பாஜக குறி வைத்து இயங்கும்போது நாம் ஊழல்வாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தான் பாஜக பாசிசத்தை ஒழிக்க முடியும் என்று சிலர் கனவு காண்கிறார்கள். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டால் கண்டிப்பாக நம்முடைய இருப்பையும் இழப்போம்.

ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க பாசிச கும்பலை வீழ்த்த வேண்டும் என்றால் நாம் ஆர்.எஸ்.எஸ்-  பா.ஜ.க-வைப் போன்று மக்கள் மத்தியில் கிளை வேர்களைப் பரப்பிச் செயல்படக்கூடிய  அமைப்புக்களை உருவாக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.கவின் காவி  – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான மாபெரும் இயக்கங்களைக் கட்டியமைப்பதே  தமிழ்நாட்டை பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பல் நெருங்குவதற்கான தடையரண்.

மதவெறியா? ஊழலா?

கோ பேக் மோடி என்ற இயக்கம் திட்டமிடாமல் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் விளைவு திட்டமிட்ட அளவில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் –  பா.ஜ.க – அ.தி.மு.க கும்பலைத் தோற்கடித்தது. கோ பேக் மோடி போன்ற இயக்கங்களை அமைப்புக்களாக உருவாக்கி பாசிஸ்டுகளுக்கு எதிரான களத்தில் நாம் நிற்க வேண்டும். அதை விட்டுவிட்டு செந்தில் பாலாஜிக்களை நியாயப்படுத்திக் கொண்டிருந்தால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. செந்தில் பாலாஜி போன்ற பலவீனமான கண்ணிகளை உற்பத்தி செய்வது முறைகேடுகளும் ஊழலும் என்றால் அதற்கெதிராகப்போராடுவதும் தானே பாசிச எதிர்ப்பின் கடமைகளுள் ஒன்றாக இருக்க முடியும்.

மதவெறியா? ஊழலா என்றால் நான் முதலில் மதவெறியைத்தான் ஒழிக்க வேண்டும் என்று கூறுவேன் என்று பலரும் தற்போது கூறிக்கொண்டு வருகிறார்கள். ஊழல் முக்கியமல்ல என்று கூறுவோர் கடந்த காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததில் ஊழலும் நிர்வாக சீர்கேடு தொடர்பான பிரச்சாரங்களும் என்பதையும்  அறிந்தேதான் இருக்கின்றனர்.

கர்நாடகத்தேர்தலில் பாஜக தோற்றதற்கு 40 % கமிசன் என்பது முக்கிய காரணமல்லவா? மக்களிடம் சென்று ஊழல் முக்கியமல்ல மதவெறியைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும் என்று கூறினால்  என்ன ஆகியிருக்கும்? ஒரு வேளை கூட்டணி அரசாங்கம் 2024 தேர்தல் மூலம் அமைந்தாலும் கூட அந்த அரசாங்கம் ஊழல் அற்றதாக இருந்தால் தானே பாசிச பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றாமல் இருக்க முடியும்?

ஊழலில் ஊற்றுக்கண்ணான பாசிசம் எதைப் பயன்படுத்திக்கொண்டு நுழைகிறது? அய்யோ ஊழல், அய்யோ ஊழல் என்று கத்திக்கதறிக்கொண்டு தான் தன்னுடைய மூக்கை நீட்டுகிறது. அப்படித்தான் அன்னா ஹசாரே, கிரண்பேடி, அர்விந்த் கெஜ்ரிவால், யோகேந்திர யாதவ் உள்ளிட்டவர்கள் கிளம்பினார்கள். அதன் பலனை பாஜகவே அறுவடை செய்தது என்பதுதான் உண்மை. பாசிச எதிர்ப்பு கூட்டணியில் ஊழல் எதிர்ப்பும் முக்கிய அம்சம்தான். நிபந்தனையின்றி பாசிசத்திடம் சரணடைவது ஒருபுறம் என்றால் நிபந்தனையின்றி பாசிச எதிர்ப்பில் ஆளும் வர்க்கக் கட்சிகளிடம் சரணடைய வேண்டும் என்றால் அக்கட்சிகளும் அடுத்து ஆட்சிக்கு வந்து பாசிச நடவடிக்கைகள் மேற்கொள்ளாது என்பதில் என்ன உத்தரவாதம் உள்ளது.

UNCONDITIONAL LOVE & UNCONDITIONAL SUPPORT

கணவன் அடித்தாலும் உதைத்தாலும் அவனோடுதான் வாழவேண்டும் . ஏனென்றால் ஒரு பெண் தனியாக வாழமுடியாது. குடும்பத்தை விட்டு வெளியே சென்றால் ரவுடிகளும் பெண் பித்தர்களும் இருக்கிறார்கள் அது மட்டுமல்ல; நீ வீட்டை விட்டு வெளியேறினால் எதிரிகள் உன் கணவனை நிர்மூலமாக்கிவிடுவார்கள் என்ற நிலையில் ஒரு பெண் எதைத் தெரிவு செய்ய வேண்டும்? உன்னோடு நான் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் எனக்குச் சுயமரியாதையான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கேட்பது சரியா?

அப்படியெல்லாம் கேட்கக்கூடாது. மொத்த வீடும் அழிந்து போனால் உன் குழந்தைகள் சாப்பாட்டுக்கு என்ன செய்வர் என்ற வாதத்தை முன்வைப்பது தவறல்லவா? சேர்ந்து வாழ்தல் என்பதில் பிரிந்து போவதற்கான உரிமையுமல்லவா இருக்க வேண்டும். இந்த உரிமைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பேசப்படுகின்ற வார்த்தை UNCONDITIONAL LOVE.

CONDITIONAL LOVE என்பது என்ன? என்னுடைய சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்காத வரை உன்னோடு வாழ்வேன் என்பது தானே.

அது போல UNCONDITIONAL SUPPORT  என்பதே தவறு. உன்னுடன் கூட்டுச் சேர வேண்டுமென்றால் நீ என்னுடைய குறைந்த பட்ச உரிமைகளைக்கூட அங்கீகரிக்க மாட்டாய் என்றால் என்ன பயன் என்ற கேள்வியைக் கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது.

பொது எதிரிக்கு எதிராக நாம் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக இயக்கங்கள், அமைப்புகள், சிறிய கட்சிகள் எல்லாம் எவ்விதமான நிபந்தனையும் விதிக்கக்கூடாது என்பது தானே. அப்படி நிபந்தனை விதிப்பதே பாசிசத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள். மாநில சுயாட்சி உரிமை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தடை, அம்பானி- அதானி பாசிச கும்பல் மீது நடவடிக்கை ஆகிய எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட UN CONDITIONAL SUPPORT கும்பல்தான் இப்போது செந்தில்பாலாஜிக்களை நிபந்தனை இன்றி ஆதரிக்க வேண்டும் என்கிறது. அப்படி ஆதரிக்காதவர்கள் ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவில் செயல்படுவோர் அல்லது அடி முட்டாளாக மட்டுமே வரையறுக்கிறது. ஆனால் வரலாறு இந்த UN CONDITIONAL SUPPORT கும்பலைக் கைக்கூலிகளாக மட்டுமே பதிவு செய்திருக்கிறது என்பதுதான் உண்மை.


மருது

மாநிலக் கல்விக் கொள்கை: மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.!

மிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில உயர்நிலைக் கல்விக்குழுவில் இருந்து, அக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜவஹர் நேசன் பதவி விலகியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையின் மூலம், மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் தி.மு.க அரசின் உண்மை முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “இரகசியமாகவும் ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டதாலும், சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்களாலும், முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல் உயர்நிலைக் கல்விக்குழு தடுமாறிக் கொண்டிருக்கிறது.

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் கடும் சினத்துடன் தகாத வார்த்தைகளைக் கூறி என்னை அச்சுறுத்தி அவர் திணிக்கும் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்று செயல்பட வேண்டும் என அழுத்தம் தந்தார்.

தீர்வினை வேண்டி குழுவின் தலைவரிடம் செய்த முறையீடுகள் அனைத்தும் கேட்கவே படாமல் போனதால், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதல்வரிடமும் கடிதம் சமர்பித்தேன். எனது கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் “மாநிலக் கல்விக்கொள்கை” பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களைக் கொண்டிருக்கின்ற தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் மற்றொரு வடிவமாகவே இருக்கும்” என்று அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


படிக்க: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் மாறுபட்ட வடிவமே!


மாநில உயர்நிலைக் கல்விக் குழுத் தலைவர் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன், “தவறானது, அடிப்படை ஆதாரமற்றது” எனக் கூறி ஜவஹர் நேசன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஜவஹர் நேசன் மாநில உயர்நிலைக் கல்விக் குழுவிற்கான ஒருங்கிணைப்பாளர் கிடையாது, துணைக் குழுக்களுக்குதான் ஒருங்கிணைப்பாளர் எனப் பச்சையாகப் பொய்யுரைத்துள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையின் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் ஜவஹர் நேசன். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சினை பற்றி வாய்திறக்கவில்லை. பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ, இரண்டு உறுப்பினர்களை கல்விக்குழுவில் கூடுதாக நியமித்துவிட்டு, குழுவில் “அதிகாரிகளின் தலையீடு எதுவும் இல்லை” என்று விவாதத்தை தட்டிக்கழித்துவிட்டார். ஜவஹர் நேசன் முதல்வருக்கு எழுதியதாகக் கூறும் கடிதம் தங்களுக்கு கிடைத்ததா, அல்லது கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டது பற்றி அரசினது கருத்து என்ன என்று எவைபற்றியும் வாய்திறக்கவில்லை.

இவர்கள் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை; அவரது குற்றச்சாட்டுகளை மறுக்கவும் முடியாது. ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசினால், இன்னும் துல்லியமாக என்னென்ன முயற்சிகள் நடக்கின்றன என்று உண்மைகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், இதனை இப்படியே ஊற்றி மூடிவிட வேண்டும் என்பதுதான் ஆளும் தி.மு.க. அரசின் அணுகுமுறையாகும்.

தி.மு.க.வின் போலி வேடம்

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க., புதிய கல்விக் கொள்கையை மறுப்பதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. 13-08-2021 அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கென தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, 2022 ஏப்ரல் மாதத்தில் குழுவையும் அமைத்தது.

அக்குழுவில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர் நேசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமானுஜம், யுனிசெஃப் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டு 12 பேர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

தி.மு.க. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டாலும், இக்குழு அமைக்கப்படுவதற்கு முன்னரும் பின்னரும் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை கவர்ச்சிகரமான பெயர்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் வந்ததுள்ளது. “இல்லம் தேடிக் கல்வி”, “கலா உத்சவ்”, “நான் முதல்வன்”, “எண்ணும் எழுத்தும் திட்டம்”, “வானவில் மன்றம்”, “நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்” போன்ற அனைத்துத் திட்டங்களிலும் கார்ப்பரேட் மயமாக்கம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதே இதற்கான சான்றுகளாகும்.


படிக்க: நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம் | அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு அறிக்கை!


இவை மட்டுமின்றி, கல்வித்துறையில் புதுப்புது திட்டங்களாக வெளியில் தெரியாதபடி புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை 80 சதவிகிதம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக, அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உமா மகேஸ்வரி கடந்த டிசம்பர் மாதத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இன்று அவை மேலும் அதிகரித்திருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போதெல்லாம், கல்வியாளர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. ஆனால், நரகலில் நல்லரிசி தேடும் விதமாக, “புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்வோம்” என கல்வித்துறை அமைச்சர்கள் இருவரும் கூச்சமின்றி விளக்கமளித்தனர்.

இரண்டு ஆண்டுகளாக தி.மு.க. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறி போலி வேடம் போட்டு வந்துள்ளதை பேராசிரியர் ஜவஹர் நேசனின் பதவி விலகலானது இன்று திரைகிழித்துக் காட்டியுள்ளது.

கார்ப்பரேட்மயம் + காவிமயம் = புதிய கல்விக் கொள்கை

தி.மு.க அமல்படுத்த இருக்கும் மாநில கல்விக் கொள்கையில், கல்வித்துறையை நேரடியாக காவிமயமாக்கும் திட்டங்களான இந்தித் திணிப்பு, சாதி ஏற்றத்தாழ்வுகளை போதிக்கும் வர்ணாசிரம கோட்பாடுகளை புகுத்துதல், சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு போன்ற விஞ்ஞானப்பூர்வமான அறிவியல் பகுதிகளை நீக்குதல், வரலாற்றை ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சாதகமாக திருத்துதல், பாடத்திட்டங்களில் பகவத் கீதை போன்ற புராணக் குப்பைகளை சேர்த்தல் போன்ற காவி கும்பல்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை.

பேராசிரியர் ஜவஹர் நேசனின் கூற்றும் அதைத்தான் தெளிவுபடுத்துகிறது. “மும்மொழிக் கொள்கை, நீட் போன்ற போட்டித் தேர்வுகளை தவிர தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள எல்லா அம்சங்களையும் மாநிலக் கல்விக் கொள்கையில் கொண்டுவருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

ஆனால், புதிய கல்விக் கொள்கை, கல்வித்துறையை காவிமயமாக்குவதை மட்டும் உள்ளடக்கியது அல்ல. கார்ப்பரேட்மயமாக்கத்தையும் உள்ளடக்கியது. கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, தி.மு.க. அரசு. வானவில் மன்றம், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் அதற்கு துலக்கமான சான்றுகளாகும்.

கல்வித்துறையில் என்.ஜி.ஓ.க்களின் ஆதிக்கத்தை அதிகரிப்பது, கல்வி வழங்குவதில் இருந்து அரசு ஒதுங்கிக் கொள்வது, கல்வியை தனியார் – கார்ப்பரேட் கொள்ளைக்கானதாக மாற்றியமைப்பது என புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு கூறுகளைக் கொண்டு கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது தி.மு.க. அரசு.

கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது என்பது, மறுகாலனியாக்கக் கொள்கையான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் முன்னேறிய, அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும். கல்வித்துறையை பல துறைகளாகப் (தனிச்சிறப்புமயமாக்கல் – Specialization) பிரித்து, அவற்றை அயல்பணி (அவுட்சோர்சிங்) மூலம் செய்வது ஆகும்.

கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகள், மறைமுகமாக காவிமயமாக்கத்திற்கு தான் வழிவகுக்கும். சான்றாக, என்.ஜி.ஓ.க்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள், என்.ஜி.ஓ.க்கள் என்ற போர்வையில் காவிக் கும்பல் மாணவர்களை சென்றடைய சாதகமாக அமையும்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த சில மாதங்களில், ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட “அகஸ்தியா” என்ற தொண்டு நிறுவனத்திற்கு ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை இணையவழியில் நடத்த அனுமதி அளித்தது. கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அனுமதி ரத்து செய்யப்பட்டது.

“இல்லம் தேடிக் கல்வி” திட்டமும் தன்னார்வலர்களைக் கொண்டுதான் செயல்படுத்தப்பட்டது. தன்னார்வலர்கள் என்ற போர்வையில் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். எனவே, இதன் மூலமும் காவிக் கும்பல் மாணவர்களை சென்றடைந்து இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால், தமிழ்நாட்டில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்தத் துடிக்கும் காவிக் கும்பல், இதை தங்களுக்கு சாதகமான வாய்ப்பாகவே கருதி பயன்படுத்தி இருக்கும்.

மேற்கூறியவை சில சான்றுகள்தான். கல்வித்துறையில் என்.ஜி.ஓ.க்களின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க, காவிக் கும்பல் மாணவர்களை சென்றடைவதும் அதிகரிக்கும். அதன் மூலம் காவிக் கும்பலின் நச்சுக் கருத்துகள் மாணவர்களின் மனதில் விதைக்கப்படும். இது மறைமுகமாக கல்வித்துறையை காவிமயமாக்கும் நடவடிக்கை ஆகும்.

இதுதானா திராவிட மாடல் ஆட்சி?

காவி கும்பல் நமது நாட்டிற்கு ஆபத்தானது என்றும், தாங்கள்தான் சமூக நீதிக் காவலர்கள் என்றும் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. ஆனால், இந்த சமூக நீதிக் காவலர்கள்தான் கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் அமல்படுத்தி வருகிறார்கள். கல்வித்துறையை காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலுக்கு திறந்துவிடுகிறார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்களின் பா.ஜ.க கும்பலுக்கு எதிரான வெறுப்புணர்வுதான் தி.மு.க வெற்றி அடைய முக்கியக் காரணமாகும். ஆனால், புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, இரண்டாண்டுகளாக புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவதும், மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையையே நடைமுறைப்படுத்த விழைவதும் தி.மு.க. அரசு மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.

திராவிட மாடல், சமூகநீதி ஆட்சியின் அவலம் இதுதான். இந்த கேடுகெட்ட நடவடிக்கைகளைக் கொண்டுள்ள தி.மு.க.தான் பாசிசக் கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறதாம். நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

பாசிசக் கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற தி.மு.க.வை விட்டால் வேறுவழியில்லை என்று தி.மு.க.விற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மற்றும் தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.வின் நடவடிக்கைகளுக்கு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.


பிரவீன்

சிறுவணிகத்தை அழிக்கும் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு எதிராக களமிறங்குவோம்! | தோழர் ரவி

சிறுவணிகம் வளர்ந்து வருவதைத் தடுத்து பெருவணிக நிறுவனங்கள் வளர பல சலுகைகள் அளிப்பதுதான் திராவிடமாடல் ஆட்சியா. 3500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு லு லு மால்களை அனுமதிக்கும் தமிழக அரசு எப்படி இங்குள்ள சிறு குறு வணிகர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும்.லு லு மால் கோயமுத்தூரில் அமைய இருப்பதைக் கண்டித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊடகங்களில் என்ன கூறினார். எங்கள் கட்சியை மீறி ஒரு செங்கற்களை கூட லு லு நிறுவனத்தால் வைக்க முடியாது என்றால் ஆனால் இன்று அந்நிறுவனம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இன்னும் மௌனம் காத்துக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை.

இப்படி அனைத்து அரசியல் கட்சிகளும் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வதன் பின்னணியில் இருப்பது தனியார்மய தாராளமய உலகமய பன்னாட்டு கார்ப்ரேட் கொள்கைகள் இதை முறியடிப்பதன் மூலமே சிறு குறு உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க முடியும். ஆகவே அதற்கெதிராக உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!

வேதனை அளிக்கும் இந்த வன்முறையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, ராணுவம், மத்திய அமைப்புகள் உட்பட அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக” ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மணிப்பூரின் அமைதியை பற்றி ஆர்.எஸ்.எஸ்க்கு திடீர் அக்கறை ஏன் வருகிறது. அக்கறையெல்லாம் ஒன்றுமில்லை, அது மோடி அரசுக்கு விடுக்கும் எச்சரிக்கை செய்தி!

எங்கள் மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, அது குறித்து மோடி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ரேடியோ பெட்டியை உடைத்து “மன்கி பாத்” நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் மணிப்பூர் மக்கள், தீப்பந்தம் ஏந்தி போராடினார்கள் பெண்கள். போராடுபவர்கள் எல்லாம் மேய்தி இன மக்கள் என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்கது.

நான் தொட்டதெல்லாம் எரிந்து சாம்பலாக வேண்டும் என்று வரம் கேட்டவன், தன் தலையிலேயே கை வைத்துக் கொண்டதுபோல் ஆகியிருக்கிறது காவிக் கும்பலின் நிலை.

எந்த மேய்தி இன மக்களை தங்களது இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு வளைத்துப் போட நினைத்தார்களோ, அம்மக்களே இன்று அமைதி வேண்டி வீதியில் திரள்கிறார்கள். மோடியை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.


படிக்க: எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!


டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டமாக  உருத்திரண்டு எழுந்தபோது, “அரசுக்கு எதிரான நீண்ட காலப் போராட்டம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களிடையே பிளவை அதிகரித்து விடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்றது ஆர்.எஸ்.எஸ். (இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளக் கட்டுரை 20.11.2021)

தற்போது மணிப்பூர் வன்முறை குறித்து ஆர்.எஸ்.எஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையையும் இதனோடு இணைத்துத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இரண்டுமே பீதியின் வெளிப்பாடுகள். தங்களது நிகழ்ச்சி நிரல் தங்களுக்கே எதிராய் மாறிப்போவதை எதிர்கொள்ள முடியாத அச்சத்தின் வெளிப்பாடுகள்!

மதவெறி பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம். ஆனால் உழைக்கும் மக்களோ அமைதியை விரும்புகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!

புதிய ஜனநாயகம் முகநூலிலிருந்து…

மோடியின் அமெரிக்கப் பயணம்: பெரியண்ணன் அமெரிக்காவின் சிவப்புக் கம்பளம் எதற்காக?

“கிழக்கில் உதித்த ஹிட்லர் மோடி”, “பைடன், மோடியின் பாசிசத்தை நிறுத்து” – இப்படிப்பட்ட முழக்கங்களால்தான் அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மோடியை வரவேற்கிறார்கள். வெள்ளை மாளிகைக்கு முன்பு போராட்ட ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ட்விட்டரில் “மோடியை வரவேற்கவில்லை” (#Modi_not_welcome) என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில், பைடன் மோடியை இதுபோல் ஒரு அதிகாரப்பூர்வமான சந்திப்பிற்கு அழைத்திருப்பது இதுதான் முதல் முறையாகும். பைடனின் இந்த அழைப்பும், ஐ.நா.வில் மோடி யோகா செய்து காட்டுகின்ற நிகழ்வும் உலக அரங்கில் மோடி இந்தியாவிற்கு பெருமிதம் சேர்த்திருப்பதாக சங்கிகளால் இணைய வெளியில் ஓதிவிடப்படுகிறது.

பைடன் மோடி இடையிலான இந்தச் சந்திப்பில் ஆயுத உற்பத்தித் துறையில் இந்தியாவும் அமெரிக்காவும் நெருக்கமான கூட்டுறவை ஏற்படுத்துவது பற்றி பேசப்படலாம் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.

படிக்க : மோடியின் மௌன ஆசனம் | கேலிச்சித்திரம்

உண்மையில், அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்திற்கு சீனாவும் ரஷ்யாவும் சவாலாக தோன்றியுள்ள இன்றைய உலகச் சூழ்நிலையில், சீனாவுக்கு எதிராக இந்தியாவை கொம்பு சீவி, தன்னுடைய ஆதிக்கக் கால்களை பசுபிக் கடல் பிராந்தியத்தில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக “தென்கிழக்கு ஆசியாவின் உக்ரைனாக” இந்தியாவை மாற்றும் சதி திட்டத்தின் ஒரு அங்கம்தான் பைடனின் அழைப்பு.

அமெரிக்கப் பெரியண்ணனின் அதிகாரத்துவ அழைப்பை சிரம்தாழ்ந்து ஏற்று ஓடோடிப் போகும் மோடியின் நடவடிக்கையை தேசப் பெருமிதமாக சங்கிகள் முன்னிறுத்திக் கொண்டிருக்க, அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் அமெரிக்க மனித உரிமை செயல்பாட்டாளர்கள்.

இஸ்லாமிய மக்களை நான்காம்தர குடிமக்களாக்கி இந்துத்துவ பாசிசத்தை திணித்துவரும் மோடி “கிழக்கின் ஹிட்லர்” மட்டுமல்ல, மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கையில் அதைப்பற்றி ஒரு வார்த்தை வாயைத் திறந்து பேசாமல், கண்டும் காணாமல் அமெரிக்காவுக்கு ஓடிப்போன மோடி “இந்தியாவின் நீரோவும்” கூட!

புதிய ஜனநாயகம் முகநூலிலிருந்து…

மோடியின் மௌன ஆசனம் | கேலிச்சித்திரம்

மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுவருகிறார். அதை இந்தியாவின் கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதி பெருக்கிவருகின்றன. மோடி அங்கு சர்வதேச யோகா தினத்தை ஜோ பைடனுடன் கொண்டாடி மகிழ்கிறார். ஆனால், உண்மை நிலைமை என்ன? அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், “கிழக்கில் உதித்த ஹிட்லர் மோடி”,  “பைடன், மோடியின் பாசிசத்தை நிறுத்து” என்று பதாகைகளை ஏந்தி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மோடி அமெரிக்கா சென்றுள்ள நேரமானது, நாடே கொந்தளித்து கொண்டிருக்கும் நேரம். பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் 50 நாட்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறைகளில் பல அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

மணிப்பூரைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும் காவி பயங்கரவாதிகளின் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் பிரதமரான மோடி இதைப் பற்றி எதுவும் வாயேத் திறக்காமல், தற்போது மௌன ஆசனத்தில் இருக்கிறார்.

மேனகா
கேலிச்சித்திரம் : நியூஸ் கிளிக்

எரிகிறது மணிப்பூர்: பற்ற வைத்தது காவி! | தோழர் அமிர்தா

ணிப்பூர் என்பது ராணுவ அடக்குமுறை சட்டங்களுக்கெதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக பல ஆண்டுகளாக போராடி வந்த மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்தை தற்போது பற்றி எரிய வைத்திருக்கிறது சங்பரிவார காவிக் கும்பல்.

அங்கு மெய்த்தி, குக்கி, நாகா போன்ற பழங்குடி இனக்குழுக்குள் 40 நாட்களுக்கு மேலாக கலவரம் மூண்டு கொண்டிருக்கிறது. வீடு, வாகனங்களுக்குத் தீ வைக்கப்படுகிறது. துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டுக் கொல்கிறார்கள். மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் குவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் பாஜக தலைமையிலான மோடி அரசு மணிப்பூர் பிரச்சனையை சுமூகமாக அணுகித் தீர்த்து வைப்பதற்கு பதில் இருவரையும் மோத வைத்து பகையாளியாக்கும் வேலையை செய்கிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!