Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 210

இந்தியா முழுவதும் அதிகரிக்கும் போலீசின் கொட்டடிக் கொலைகள் : தீர்வு என்ன ?

போலீசு உங்கள் நண்பன்” என்பது ஏட்டளவிலும் சாலையோரத் தட்டிகள் அளவிலும் மட்டுமே நிற்கும் வாசகமாகும். நடைமுறையில் போலீசு சாதாரண மக்களுக்கு விரோதியாகத்தான் செயல்பட்டு வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையான சம்பவங்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டும் அம்பலமாகிக் கொண்டும் இருக்கின்றன.
கடந்த ஜனவரி 14 அன்று நள்ளிரவில் மருந்தகத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவன் அப்துல் ரஹீமை முகக்கவசம் சரியாக அணியவில்லை என்று கொடுங்கையூர் போலீஸ் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக தரதரவென போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று உள்ளாடையோடு நிற்கவைத்து கடுமையாக பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியுள்ளனர்.
வலி தாங்காமல் கீழே விழுந்த ரஹீமை செருப்புக் காலால் உதைத்துள்ளனர். ரஹீம் சட்டம் படித்த மாணவன் என்பதால் சில சட்டங்களை பேசியுள்ளார். நான் முறையாக முகக்கவசம் அணிந்து இருக்கிறேன், சமூக இடைவெளியை கடைபிடித்து தான் நிற்கிறேன் என்னை ஏன் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “எங்களிடமே சட்டம் பேசுறியா, சட்டம் படித்தால் பெரிய மயிரா?” என்று போலீசு திமிரை காட்டியுள்ளனர்.
படிக்க :
மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு || மக்கள் அதிகாரம் கண்டனம்
மணிகண்டன் படுகொலை : போலீசுக்கு கொல்லும் அதிகாரத்தை வழங்கியது யார் ?
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ரஹீமை மதத்தின் பெயரைச் சொல்லி மிகவும் இழிவான முறையில் நடத்தியுள்ளனர். பூட்ஸ் காலால் உதைத்ததில் கண்ணின் ஓரத்தில் இருந்து கொட்டிய இரத்தத்தை ரஹீமின் சட்டையை கழட்டி அழுத்தித்துடை என்று சித்திரவதை செய்துள்ளனர். தன்னை இவர்கள் கொலைசெய்ய போகிறார்கள் என்று பயந்த ரஹீம் செல்போனில் தனக்கு நடந்த போலீஸ் வெறியாட்டங்களை வீடியோ பதிவு செய்து வெளியிட்டார்.
சமூக வலைதளங்களில் வெளிவந்து போலீசின் உண்மை முகத்தை கிழித்து தொங்கவிட்ட வீடியோவைப் பார்த்து பயந்துபோன போலீசோ, ரஹீமிடம் போலீசு என்னை அடிக்கவில்லை கீழே விழுந்து காயம் ஏற்பட்டு விட்டதென வீடியோ பதிவு செய்துவிட்டு வெளியே அனுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது போலீசுத்துறை பெயரளவில் மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதேபோல, கடந்த ஜனவரி 8-ம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்ற மாற்றுத்திறனாளியை திருடன் என்று கைது செய்து, போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் அருகிலுள்ள போலீசு குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று காணாமல்போன 140 பவுன் நகையைத் திருடியதாக வலுக்கட்டயமாக ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரின் மனைவியின் முன்பு மாற்றுத்திறனாளி என்று கூடப் பாராமல் கடுமையாக அடித்துள்ளனர். அவரின் ஆணுறுப்பில் அடித்ததில் வலிதாங்காமல் அழுதுள்ளார். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக போலீசு தாக்கியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் முருகேசன். அவரின் மனைவியையும் இரண்டு நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 4, 2021 அன்று நள்ளிரவில் நண்பர்களுடன் வண்டியில் வந்து கொண்டிருந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவன் போலீசு நிற்கச் சொல்லியும் நிற்காமல் சென்றதால் மணிகண்டனை விரட்டிச்சென்று பிடித்து போலீசு நிலையத்திற்கு அடித்து தரதரவென வழிநெடுகில் இழுத்து வந்துள்ளனர் போலீசு அதிகாரிகள். போலீசு நிலையத்திலும் வைத்து அடித்துள்ளனர்.
மணிகண்டனின் உடல்நிலை மோசமாகவே மாணவனின் வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகனை உடனே அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். போலீசு நிலையத்திற்கு வந்த மணிகண்டனின் உறவினர்கள் அவரின் உடல்நிலை கண்டு அதிர்ச்சியடைந்தனர் வெளிகாயம் தெரியாமல் மாணவனைத் தாக்கியுள்ளனர்.
வீட்டிற்கு சென்று ஐந்து மணிநேரத்தில் படுக்கையில் இறந்த நிலையில் மணிகண்டன் பிணமாகக் கிடந்துள்ளார். போலீசு தாக்கியதால்தான் என் அண்ணன் இறந்தான் என்று வழக்குப்பதிவு செய்துள்ளார் மணிகண்டன் தம்பி.
சேலம் மாவட்டத்தில் கருந்துறை அருகே பாப்பநாயக்கன் பட்டியில் ஏத்தாப்பூர் தற்காலிக போலீசு நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த எஸ்.ஐ. பெரியசாமி அந்த வழியில் குடிபோதையில் வந்த முருகேசனை ரோட்டில் வைத்து வெறித்தனமாக அடித்துள்ளார். அடிதாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் முருகேசன்.
***
மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பொதுவெளியில் அம்பலமான கொட்டடிக் கொலை / சித்திரவதை சம்பவங்கள். அம்பலமாகாத கொட்டடி சித்திரவதைகள் இன்னும் பன்மடங்கு இருக்கும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள நிலைமைதான்.
கடந்த ஜீலை 19, 2020-ம் தேதியன்ன்று இரவு கடையை திறந்து வைத்திருந்ததால் போலீசு அடித்து இழுத்துச் சென்று ஆசன வாயில் லத்தியை செருகி கொல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் (ஜெயராஜ், பென்னிஸ்) கொலைச் சம்பவம் நாடு தழுவிய அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசின் அதிகாரத்தையும் திமிர்த்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனால், இன்றுவரை அந்தக் குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்கப்படவில்லை.
தமக்கு அளிக்கப்பட்டுள்ள வானளவு அதிகாரத்தைக் கொண்டுதான் அப்பாவி மக்களை விசாரணை என்று அழைத்துச் சென்று அவர்களுக்கு தோன்றியபடி வழக்குப் பதிவு செய்வது மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தி கொலைசெய்து கொண்டிருக்கிறது போலீசு.
மனித உரிமை ஆணையத்தின் கூற்றுப்படி, கடந்த 2021-ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் இந்தியாவில் 1,067 நபர்கள் போலீஸ் சித்திரவதையால் கொல்லப்பட்டுள்ளனர். இதில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் தினசரி ஐந்து நபர்கள் நீதிமன்றக் காவலிலும் தடுப்புக் காவலிலும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்.
சித்திரவதைகளுக்கெதிரான தேசிய பரப்புரை [NATIONAL COMPAIGN AGAINST TORTURE (NCAT)] 2021 அறிக்கையின்படி, 62 சதவீத மரணங்கள் போலீசால் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நடைபெறுகின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2018 முதல் 2019 வரை நீதிமன்றக் காவலில் 1,797 மரணங்களும், தடுப்புக் காவலில் 126 மரணங்களும், 2019 முதல் 2020 வரை நீதிமன்றக் காவலில் 1,584 மரணங்களும், தடுப்புக் காவலில் 112 மரணங்களும், 2020 முதல் 2021 வரை நீதிமன்றக் காவலில் 1,840 மரணங்களும் தடுப்புக் காவலில் 100 மரணங்களும் பதிவாகியுள்ளன. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் நீதிமன்றக் காவலில் 5,221 மரணங்களும் தடுப்புக் காவலில் 248 மரணங்களும் நடந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
சிறைச்சாலையின் தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள மூன்றில் இரண்டு கைதிகள் விசாரணை கைதிகளாவர். 2019 சித்திரவதைகளுக்கெதிரான தேசிய பரப்புரை (NCAT)-இன் தரவு, தடுப்புக் காவலில் இறந்த 125 நபர்களில் 60 சதவீதம் பேர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டச் சமூகத்தைச் சார்ந்தவர்கள். விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அழைத்துச் சென்று நீதிபதிகள் முன் பெயரளவில் மட்டும் ஆஜர்படுத்தி போலீசு அதிகாரத்தைக் கொண்டு வலுக்கட்டாயமாக சிறையில் தள்ளிவிடுகின்றனர் என்று கூறுகிறது.
குற்றம் செய்யும் போலீசு அதிகாரிகளை விசாரிப்பதற்கு பெயரளவில் அமைக்கப்படும் விசாரணை ஆணையமும் போலீசு அதிகாரிகளைக் கொண்டே அமைக்கப்படுகிறது. இப்படி அமைக்கப்பட்ட ஆணையம் மூலம் பெரும்பாலும் யாரும் தண்டிக்கப்படுவது கிடையது. கொட்டடிக் கொலைகளுக்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்ட குணத்தை குறைப்பதற்காக நடத்தப்படும் நாடகம்தான் இது.
திருடனைப் பிடிக்கத் திருடனை நியமிக்கும் கதைதான். அவர்களை தண்டிப்பதற்கு சட்டங்கள் இந்தக் கட்டமைப்பில் கிடையாது, சஸ்பெண்ட் செய்துவிட்டால் வீட்டில் இருந்து வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கத்தான் போகிறார்கள்.
படிக்க :
தலோஜா சிறை : ஸ்டான் சுவாமி மரணம் குறித்து உடனிருந்த கைதி ஒருவரின் கடிதம்
லாக்-அப் கொலைகள்: கேட்பாரற்ற போலீசு ராஜ்ஜியம்!
இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், “பணிச்சுமை காரணமாகத்தான் போலீசார் இப்படி தவறு செய்கிறார்கள்” என்றும் “ஒருசில போலீசு கரும்புள்ளிகள் செய்யும் தவறுகளால் போலீசு துறையையே குற்றம் சொல்லக் கூடாது” என்றும் “அவர்களுக்கு மனநல கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும்” என்றும் புளித்துப் போன வாதங்கள் மீண்டும் மீண்டும் வைக்கப்படுகின்றன.
ஆனால், ஜெயராஜ், பென்னிக்ஸை கொன்றவர்களுக்கும் ரஹீமைத் தாக்கியவர்களுக்கும் மனநிலை ஒன்றுதான். “தன்னை எதிர்த்து யாரும் கேள்விக் கேட்கக் கூடாது தன்முன் யாரும் பேசக் கூடாது” என்ற அதிகார திமிர்தான் அந்த மனநிலை. தன்னை யாரும் கேள்வி கேட்கவும் தண்டிக்கவும் முடியாது என்ற ஆணவம்தான் அந்த மனநிலை.
மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக இத்தகைய ஆணவத்தை உடையவர்களாகவே ஆளும்வர்க்கங்களால் வார்க்கப்பட்டு, அரசியல்சாசனத்தால் பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப்படும் போலீசை தண்டிக்க இந்த அரசமைப்பில் சாத்தியம் இல்லை என்பதே நடைமுறை அனுபவங்கள் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லும் பாடம். தனிப்பட்ட போலீசின் மனநிலைக்கான சிகிச்சையல்ல, ஒட்டுமொத்த அரசமைப்புக்குமான அறுவை சிகிச்சையே இன்றைய தேவை.

அகிலன்

தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கும் பா.ஜ.க – விருதையில் ஆர்ப்பாட்டம் !

தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பல் !
தொடரும் நீட்! ; கர்நாடகத்தில் ஹிஜாப்-க்குத் தடை!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகத்தைக் கட்டியமைப்போம்!!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!!!
என்ற முழக்கங்களை முன்வைத்து பிப்ரவரி 14 அன்று விருத்தாசலம் பாலக்கரையில் அனைத்து இடதுசாரி கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதற்கு மக்கள் அதிகாரம் வட்டார செயலாளர் தோழர் அசோக் தலைமை தாங்கினார்.

This slideshow requires JavaScript.

சி.பி.ஐ. எம்.எல். லிபரேசன் கட்சியின் தோழர் ராஜசேகர், சி.பி.ஐ. எம்.எல். மக்கள் விடுதலை கட்சியின் தோழர் ராமர், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் (RMPI) தோழர் கோகுல்கிருஷ்டிபன், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ராமலிங்கம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தோழர் ராஜந்திரன், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தகவல் :

மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்,
9791286994.

இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள், போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம்!!

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) நடத்திய தேர்வில், மோசடி நடைபெற்றதாக புகார் கூறி பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், தேர்வெழுதிய மாணவர்கள் போராட்டங்களில் ஈட்டுபட்டனர். கடந்த ஜனவரி 24 தொடங்கி ஆர்ப்பாட்டங்கள், இரயில் மறியல், தீவைப்புகள் என இவை மிகக் கொதிப்பானவையாக இருந்தன.
எல்லா அரசுத் துறைகளையும் போல, அரசுத் தேர்வுத் துறையும் ஊழல், மோசடி என்ற எண்ணெயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும் சகித்துக் கொண்டுதான் அரசுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் தேர்வெழுதுகிறார்கள். பணம் கட்டிக்கூட எப்படியாவது உள்ளே போய்விட வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். இவையெல்லாம் சமூகத்தில் இயல்புநிலையாக இருக்கின்றன.
ஆனால், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெடித்தெழுந்த இரயில்வே தேர்வெழுதிய மாணவர்களின் உக்கிரமான போராட்டங்கள், நாட்டில் ஒரு புதிய இயல்புநிலை உருவாகிக் கொண்டிருப்பதை நமக்கு காட்டுகிறது.
000
படிக்க :
TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !
ரயில்வே தனியார்மயம் : ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் ரயில் பயணம் !
இரயில்வே தேர்வு வாரியம் (RRB) சார்பில் ஜூனியர் கிளார்க், இரயில் உதவியாளர், கூட்ஸ் கார்டு, நேரக் காப்பாளர், ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற தொழில்நுட்பம் சாராத (NTPC – Non Technical Popular Categories) 35,281 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
மொத்தமுள்ள 35,281 பணியிடங்களில், 11,000 பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு கல்வித் தகுதியே போதுமானது. மீதமுள்ள பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு தகுதி போதும். எனினும் முதுநிலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் உட்பட சுமார் 1.25 கோடிக்கும் அதிகமானோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 60 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜனவரி 15-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதில் சுமார் 7 இலட்சம் (7,05,446) விண்ணப்பதாரர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருந்தனர். அவர்களுக்கு வரும் பிப்ரவரி 14 மற்றும் 18-ம் தேதிகளில் இரண்டாம் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், “2019-ம் ஆண்டில், தேர்வுக்கான விதிமுறைகளை அறிவித்தபோது இரண்டு நிலைகளாக தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. ஆகையால் தற்போது இரண்டாம் நிலைத்தேர்வு என்று சொல்வதே முறைகேடு” என்று குற்றஞ்சாட்டி மாணவர்கள் போராடுவதாக பெரும்பாலான பத்திரிகைகள் எழுதுகின்றன.
இரயில்வே தேர்வு வாரியம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, 2019 குறிப்பாணையை காட்டி இரண்டு நிலைத் தேர்வை முன்பே குறிப்பிட்டதாக கூறுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை, மாணவர்கள் போராடுவதற்கான காரணமாக வேறு ஒரு பிரச்சினையை குறிப்பிட்டு எழுதுகிறது. அதில் 2019-ம் ஆண்டில், தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்ட இரயில்வே தேர்வு வாரியம் அதில் ஒரு புதிய விதியை சேர்த்ததும் அதை அமல்படுத்தியதிலும்தான் பிரச்சினை என்று கூறுகிறது.
இரயில்வே தேர்வு வாரியம், தனது அந்த புதிய விதியில், போட்டியை அதிகரிக்கும் வகையில், காலி பணியிடங்களை விட 20 மடங்கு நபர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுக்கு (இறுதிநிலைத் தேர்வு) தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் 7,05,446 பேர் தேர்வுசெய்யப்பட்டது என்பது உண்மையில் 20 மடங்காக இல்லை.
விசயம் என்னவென்றால், 12-ம் வகுப்புவரை படித்தவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் என காலிப் பணியிடங்கள் இரண்டு வகைகளில் அமைந்துள்ளன. 12-ம் வகுப்பு கல்வித் தகுதியே போதும் என்ற பணியிடங்களுக்கு ஒரு பட்டதாரி மாணவரும் விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு பல மாணவர்கள் இரண்டு, மூன்று பணிகளுக்கு விண்ணப்பித்தும் உள்ளார்கள். விண்ணப்பங்களை விட்டுவிட்டு நபர்களின் அடிப்படையில் பார்த்தால், 3.84 இலட்சம் பேர் மட்டுமே இரண்டாம் நிலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இது அறிவிப்புக்கு முரணானதாகும்.
எனவே இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம், அதிக கல்வித் தகுதி கொண்டவர்கள் மட்டுமே அனைத்துக் காலிப் பணியிடங்களிலும் நிரப்பப்பட்டுவிடுவார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள் போராடும் மாணவர்கள். தங்களது வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் அவர்களை போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.
பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. குறிப்பாக, பீகாரில் போராட்டங்கள் வீச்சாக நடந்தன. சிதாமர்ஹி எனும் இடத்தில் இரயில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீசு.
அரா மற்றும் கயா ஆகிய நகரங்களில் இரயில் பெட்டியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தார்கள். தெற்கு பீகார் விரைவு இரயில், கயா – ஜம்லாப்பூர் பயணிகள் இரயில், கயா – ஹவுரா விரைவு இரயில் மற்றும் பாட்னா – வாரணாசி விரைவு இரயில் ஆகியவை போராட்டச் சூழல் காரணமாக இரத்து செய்யப்பட வேண்டியிருந்தது. ஜெகனாபாத்தில் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
தேர்வர்களின் போராட்டங்கள் காரணமாக பிப்ரவரி 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த இரண்டாம் நிலைத் தேர்வு காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது இரயில்வே தேர்வு வாரியம். அத்துடன், போராட்டங்களைத் தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட தேர்வர்கள் போட்டித் தேர்விலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் மிரட்டியுள்ளது.
மேலும் யூடியூப் சேனலில் வெளியிட்ட காணொலியின் மூலம் போராட்டத்தை தூண்டியதாக, பீகாரில் பிரபல பயிற்சி மையத்தை நடத்திவரும் ஆசிரியர் கான் சார் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், “குறுகிய காலத்தில் இரண்டாம் நிலைத் தேர்வு நடத்துவதனால் மாணவர்களால் தயாராக முடியாது. அரசு மாணவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது” என்ற பொருளில்தான் ஆசிரியர் கான் சார் அந்த காணொலியில் பேசியிருந்தார்.
இக்கைதுகளின் மூலம் அரசுத் தேர்வெழுதிய மாணவர்களின் போராட்டங்களை வதந்தியால் தூண்டிவிடப்பட்ட போராட்டங்களைப் போலவும் மாணவர்கள் புரிதல் இல்லாமல் போராடுவதைப் போலவும் சித்தரிக்க முயல்கின்றன பீகாரின் நிதிஷ்குமார் அரசும் மோடி அரசும்.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீசு தாக்குதலுக்கு எதிராக காங்கிரஸ், சாம்ஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராடி வருகின்றன. நடைபெறக்கூடிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், இதைவைத்து தங்களுக்கு சாதகமாக ஓட்டு அறுவடை செய்துகொள்ள அக்கட்சிகள் முயல்கின்றன.
000
சமூகத்தில் மற்ற பிரிவு மக்கள் போராட்டங்களில் பங்கெடுப்பதைப் போல அரசுத் தேர்வுக்கு படிப்போர் பொதுவாக பங்கெடுப்பதில்லை. தங்களது வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள வழிசெய்துகொள்ள வேண்டும்; அதற்காக கஷ்டப்பட்டு படித்து ஏதேனும் ஒரு அரசுப் பணிக்கு சென்றுவிட வேண்டும்; ஆகையால், எந்தப் ‘பிரச்சினையிலும்’ தலையை நுழைத்துவிடக் கூடாது என்று கருதுபவர்கள்.
படிப்புக்கேற்ற வேலையின்மை, தனியார் நிறுவனங்களில் உத்திரவாதமற்ற, நிலையற்ற வேலை மற்றும் தேவைக்கேற்ற ஊதியமின்மை ஆகியவற்றால் நாளுக்குநாள் அரசு வேலைவாய்ப்புகாக முயலும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எப்படியாவது அரசு வேலை பெற வேண்டும் என்பதற்காக அரசு தேர்வுகளுக்காக படிப்பதையே பலர் முழுநேரத் தொழிலாக செய்துவருகின்றனர்.
இப்படிப்பட்டவர்களை நூலகங்கள், கோயில்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற இடங்களில் பார்க்க முடியும். ஒரு தேர்வு இல்லையென்றால் இன்னொன்று என்று எழுதி வரும் இவர்கள் “எந்த தேர்விலாவது பணி வாய்ப்பு கிடைத்துவிடாதா” என்ற எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள்.
இன்று அந்த பிரிவினரே வீதியில் இறங்கி போராடுவது, பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் தீவிரத்தையே காட்டுகிறது. வெறும் 35,000 பணியிடங்களுக்காக 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருப்பதும் எங்கே தமக்குச் சேர வேண்டிய (12-ம் வகுப்பு கல்வித் தகுதிக்குரிய) காலி பணியிடங்களை பட்டதாரி மாணவர்கள் தட்டிப் பறித்துவிடுவார்களோ என்ற அச்சமுமே இதை நமக்கு துலக்கமாக காட்டுகின்றன.
1990-கள் தொடங்கி அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக விவசாயத்துறை திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டது. விவசாயம் இலாபகரமான தொழிலற்றதாக மாறிப் போனதால் தொழில் வளர்ச்சியடைந்த நகரங்களில் அத்துக் கூலிகளாக துரத்தியடிக்கப்பட்டார்கள் கிராமப்புற மக்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அவர்களைத்தான் அழைக்கிறோம். அவ்வாறு மொத்த இந்தியாவிலும் பரவியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுள் பீகாரிகளே அதிகம். இதன் பின்னணியில் தற்போது பீகாரில் நடைபெற்ற தேர்வர்களின் போராட்டத்தை பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஜனவரி 26, 2022-ன் கணக்கின்படி இந்தியாவில் சராசரி வேலையின்மை 6.8 சதவீகிதமாகும். வேலையின்மை வீதம் கிராமங்களில் 6.1 சதவீதமாகவும், நகரங்களில் 8.2 சதவீதமாகவும் இருக்கிறது. இந்திய மாநிலங்களில், வேலையில்லா திண்டாட்டத்தில் ராஜஸ்தான் (27.1%), ஜார்கண்ட் (17.3%) மற்றும் பீகார் (16%) ஆகியவைதான் முதன் மூன்று இடங்களில் இருக்கின்றன.
விவசாயமும், சுரங்கத் தொழிலும்தான் பீகாரின் முக்கியத் தொழில்களாகும். பீகாரில் 3-ல் 2 நபர்களுக்கு முறையான வேலையில்லை. 2020 கொரோனா ஊரடங்கின்போது நாடுதழுவியை வேலையின்மை சராசரியைவிட (24%) பீகாரில் இருமடங்கு (46%) அதிகமாக இருந்தது. இதனால் படிக்காத இளைஞர்கள் பிழைப்புக்காக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு வருகின்றனர். படித்த இளைஞர்களோ அரசு வேலையையே ஒரே வாய்ப்பாக கருதுகிறார்கள்.
படிக்க :
சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !
பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !
இதன் காரணமாகத்தான் கடந்த 2020-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பீகாரில் ஓட்டுக்கட்சிகளின் முக்கிய வாக்குறுதியாக “வேலைவாய்ப்பு” இருந்தது. இன்று பீகாரை ஆளும் ஐ.ஜ.த – பா.ஜ.க. கூட்டணி அரசு, அரசு வேலைவாய்ப்புகளை பெரிய அளவில் உயர்த்துவோம் என்றும் 19 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் வாய்சவடால் அடித்தது.
பீகார் மட்டுமல்ல. நாடு முழுக்க வேலைவாய்ப்பின்மை, வேலை உத்தரவாதமின்மை, வாழ்க்கைச் செலவினங்களுக்கு கூட போதிய வருவாயின்மை ஆகிய பிரச்சினைகள் மக்களை ஒரு கிளர்ச்சிகர சூழலின் தருவாயில் நிறுத்தியுள்ளது. அதில் ஒரு சிறு தீப்பொறியினைத்தான் பீகாரில் பார்க்கிறோம்.

வாகை சூடி

தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பின் (NHEQF) பரிந்துரைகளை கைவிடு! | CCCE

தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (National Higher Education Qualification Framework) பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை UGC கைவிட வேண்டும்.
ல்கலைக்கழக மானியக் குழு (UGC), பொது மக்களின் கருத்துக்கேட்பதற்காக பட்டப்படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்களுக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை ஒன்றை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைப் படி, கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த  இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளான (BA, BSc, MA, MSc BE/BTech, ME/MTech) படிப்புகளில் கொண்டுவரபோகும் மாற்றங்கள் குறித்த இந்த வரைவு அறிக்கை (தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (National Higher Education Qualification Framework-NHEQF)) மீதானக் கருத்தை பிப்ரவரி 13-ம் தேதிக்குள் அனுப்புமாறு UGC கூறியுள்ளது.
அதில், தற்போது நடப்பில் உள்ள பட்டப் படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்கள் குறித்து விளக்கியுள்ளது. உதாரணமாக தற்போது BSc படிப்பு மூன்று ஆண்டுகள் (ஆறு பருவங்கள்) கட்டாயம் படிக்க வேண்டும் என்று நடைமுறையில் உள்ளது. அதை
BSc – சர்டிபிகேட் (ஓராண்டு + வேலைக்கான 2 மாத பயிற்சி)
BSc – டிப்ளமோ (ஈரண்டாண்டுகள் + வேலைக்கான 2 மாத பயிற்சி)
BSc – (மூன்றாண்டுகள்)
BSc – ஹானர்ஸ் (நான்காண்டுகள்)
BSc – ஆராய்ச்சி (நான்காண்டுகள், அதில் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்) என்று பிரிக்கப் போவதாக வரைவு அறிக்கை கூறுகிறது.
படிக்க :
NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE
BSc என்ற ஒரு பட்டப் படிப்பு ஐந்து படிப்புகளாக, வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்பு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி BSc – வேதியியல் பட்டப்படிப்பில் சேரும் ஒரு மாணவர் வேலைக்கு செல்ல வேண்டுமென்று விரும்பினால் BSc சர்டிபிகேட் அல்லது BSC டிப்ளமோ முடித்துவிட்டு வேலைக்கு செல்லலாம். மேற்படிப்பு படிக்க வேண்டு விரும்பினால் BSc (ஹானர்ஸ்/ஆராய்ச்சி) நான்காண்டுகள் படிக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு படிப்பில் பயிலும் மாணவர் பெற்றிருக்க வேண்டிய கற்றல் பண்புகள் (Graduates attributes) குறித்தும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை Level 5-லிருந்து Level 10 வரை பிரித்துள்ளனர். உதாரணமாக, BSc சர்டிபிகேட் படிக்கும் மாணவருக்கு அவர் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட பாடப்பிரிவு சார்ந்து வேலை செய்வதற்கு தேவையான திறனை கற்றிருக்க வேண்டும். இது Level 5 என்று வரையறுத்துள்ளனர். அதேபோல, BSc (ஹானர்ஸ்/ஆராய்ச்சி) படிக்கும் மாவணர் தான் தேர்ந்தேடுத்த பாடப் பிரிவில் ஆராய்ச்சி செய்வதற்கான முழுத்திறமையை பெற்றிருக்க வேண்டும். இது Level 8 என்று வரையறுத்துள்ளனர். இதனொடு சேர்ந்து Constitutional, Humanistic, Ethical and moral values சார்ந்தவைகளும் பாடமாக படிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
இதன் விளைவுகள்
1. இந்த வரைவு அறிக்கை கலை – அறிவியல் படிப்புகளையும் பொறியியல் / தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளையும் ஒரே பார்வையில் அணுகுகிறது. உதாரணமாக BE/BTech மின்னனுப் பொறியியல் (Electrical Engineering) படிக்கும் மாணவர் இரண்டாண்டு படிப்பிற்கு பிறகு BE-டிப்ளமோ முடித்து வேலைக்கு செல்கிறார் என்றால் BA (தமிழ்/வரலாறு) படிக்கும் மாணவர் இரண்டாண்டு படிப்பான BA-டிப்ளமோ முடித்துவிட்டு என்ன வேலைக்கு செல்ல முடியும்?
பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி பயிலும் இளங்கலை மாணவர்கள் தங்கள் முதல் வருடத்திலோ அல்லது இரண்டாம் வருடத்திலோ தங்களின் படிப்பை துறந்து வேலைக்கு செல்வதாக இருந்தால் அவர்கள் என்ன படிப்பை தற்போது படித்துக் கொண்டிருந்தார்களோ அதே துறையில் பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்பு உண்டு..
உதாரணமாக, ஒரு இளங்கலை கட்டிட கலை தொழில் கல்வி (Civil Engineering) படிக்கும் மாணவன் தன்னுடைய படிப்பை நிறுத்தி வேலைக்கு செல்வதாக இருந்தால் தனக்கான கட்டிடக்கலையை தேர்ந்தெடுப்பார், இதுவரை தான் படித்த கல்வி அவருக்கு உதவக்கூடும், ஆனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் ஒரு மாணவன் தன் இளங்கலை படிப்பை முதல் அல்லது இரண்டாம் வருடத்தில் படிப்பை துறந்தால் அவர் எந்த வேலைக்கு செல்லவது?
இந்திய அளவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் விகிதம் 27.1 சதவிகிதம் உள்ளது. இது மற்ற வளரும் நாடுகளை விட (BRICS countries) மிகக் குறைவு. இந்தியாவிலுள்ள மொத்தக் கல்லூரிகளில் 60.1 சதவிகித கல்லூரிகள் கிராமப்புறங்களில் தான் உள்ளன.  இச்சூழலில் இளங்கலைப் படிக்கும் மாணவர்கள் முதல் இரண்டாண்குக்குள்ளாகவே சர்டிபிகெட்/டிப்ளமோ மூலம் வேலைக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவானால் இது கிராமப்புற மற்றும் சமுதாயப் பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய நிலைகளிலிருந்து வரக்கூடிய மாணவர்களை மேற்படிப்புகளை நோக்கி செல்வதற்கு பெரிய தடையாகவே அமையும்.
இவ்வழிகாட்டுதலானது கலை மற்றும் அறிவியல் கல்லூரி கற்கும் மாணவர்களை கூலி தொழிலாளர்களாகவும் சுமாடோ/பிக்பாஸ்கட் போன்றவற்றில் கிக் தொழிலாளியாகவே மாற்றுவதற்கான பரிந்துரையாகவே இது இருக்கும் எனக் கருதுகிறோம்.
2. தற்போதைய பாடத்திட்டங்கள் இளங்கலை/முதுகலைப் படிப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ளவை. உதாரணமாக BA/BSc பட்டப் படிப்பில் ஏதாவதொரு பாடப்பிரிவில் படிக்கும் மாணவரின் பாடத்தினை எடுத்துக் கொண்டால் முதல் வருடம் அப்பாடப்பிரிவின் அடிப்படை கல்வி குறித்த பாடங்களும் இரண்டாம் வருடத்தில் அப்பாடத்தின் வளர்ச்சி குறித்த பாடங்களும் மூன்றாம் வருடத்தில் அப்பாடப்பிரிவில் சமீபத்திய வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடங்கள் என பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் வரைவு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டுதல் படி ஒரு கல்லூரியில் உள்ள ஒரு துறைக்கான இளங்கலை படிப்பிற்கு (அது இயற்பியலோ/ வேதியியலலோ/ தமிழோ/ பொருளாதாரமோ/ கட்டிடப் பொறியிலோ) ஐந்து பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கும்.
இதுபோல ஒவ்வொரு துறைக்கும் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு துறையும் குறைந்த பட்சம் இரண்டு டிப்ளமோ படிப்புகளையாவது நடந்த வேண்டும். கூடவே ஆராய்ச்சிக்கு தகுதியான அளவிற்கு மாணவர்களையும் உருவாக்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த தகுதியான மற்றும் போதிய எண்ணிக்கையிலான பேராசிரியர்களும் கட்டமைப்பு வசதிகளும் நிதி ஒதுக்கீடும் தேவை.
AISHE அறிக்கையின் படி, இந்தியாவிலுள்ள கல்லூரிகளில் 80 சதவிகிதம் தனியார்களாலும் 20 சதவிகிதம் அரசினாலும் நிர்வகிக்கப்படுபவை. உயர்கல்விக்கென ஒதுக்கப்படும் மத்திய மாநில அரசின் நிதியும் படிப்படியாக குறைக்கப்பட்டு அதனிடத்தில் தனியார்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இதன் விளைவாக அரசு கல்லூரிகள் பேராசிரியர்கள் பற்றாக்குறையாலும் நிதி ஒதுக்கீடு குறைவாலும் ஊழல் முறைகேடுகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளோ இலாபத்தினை மட்டுமே இலக்காகக் கொண்டு அனைத்து விதிமீறல்களுடன் தான் இயங்குகின்றன.
உயர்கல்வியின் இந்த சீரழிந்த நிலையை கொரேனா ஊரடங்கு வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இச்சூழலில் UGC-ன் மேற்கண்ட வழிகாட்டுதல்களானது உயர்கல்வியை மேலும் சீரழிப்பதுடன் உயர்கல்வியில் தனியார்களை மேலும் வலுவடையவேச் செய்யும்.
3. வேலைவாய்ப்புக்கு தேவையான திறனுள்ள மாணவர்கள் இல்லை என்று கூறுகின்றனர். அதற்காக பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என வாதிடுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தேவையான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கவில்லை என்பது அரசின் தரவுகளிலிருந்தே அறிந்து கொள்ள முடியும்.
மேலும் உருவாக்கப்பட்ட வேலைகளும் படிப்புக்கேற்ற வேலைகளாக இல்லை (Under employment). CMIE அறிக்கையின் படி 2018-ல் 4.7 சதவிதமாக இருந்த வேலையின்மை விகிதம் (Unempolyement rate) 2021-ல் 7.9 சதவிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வேலையின்மையால் 18-30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் MGNREGA திட்டத்தில் கிராமப்புற வேலைகளுக்கு செல்லவது அதிகரித்துள்ளது (last five years average ~8% of total MGNREGA registration). இது அரசின் பொருளாதாரக் கொள்கையின் விளைவு.
கூடவே தற்பொது உயர்கல்வியில் பரவலாக்கப் பேசப்படும் கண்டுபிடுப்புகள் & ஸ்டாடப் என்பதெல்லாம் IIT & IIM-களில் மட்டுமே பிரதானமாக உள்ளது. எனவே மாணவர்கள் போதிய திறமைகள் இல்லாமல் இருப்பதினால்தான் வேலை கிடைக்கவில்லை என்பது வடிகட்டியப் பொய்.
படிக்க :
UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
எனவே தேசியக் கல்விக் கொள்கையோ, தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவு அறிக்கையோ அல்லது அதிகாரிகளோ மாணவர்களின் வேலைவாய்ப்பிற்காகவே பாடத்திட்டத்தினை மாற்றியமைக்கிறோம் என்று சொல்வது எதார்த்தத்திற்கு முரணாகவே உள்ளது.
4. Avademic Credit Bank, Blended learning பற்றி அறிக்கை குறிப்பிடுகிறது. இவற்றின் மூலம் வருங்காலங்களில் இணையவழிக் கல்வி முறையானது உயர்கல்வியின் ஒரு அங்கம் என UGC அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் இணையவழி கற்றல் – கற்பித்தல் முறையானது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து இணையவழி கற்றல் – கற்பித்தலை ஊக்குவித்து வருகின்றன. இது தனியார் edutech நிறுவனங்களை ஊக்குவிக்கவே பயன்படும் எனக் கருதுகிறோம்.
எனவே, மேற்சொன்ன காரணங்களினால், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு நேரெதிரான விளைவுகளையே இந்த தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (National Higher Education Qualification Framework-NHEQF) அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்படுத்தும் என்று பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு கருதுகிறது. எனவே இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை UGC கைவிட வேண்டும் என்று கோருகிறோம்.
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
ccce.eduall@gmail.com

மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெல்க! | தோழர் ஆ.கா.சிவா

ன்றைக்கு சோசலிசம் பற்றி கற்பான வாதத்திற்கு மாற்றாக சோசலிச சமூகத்திற்கு மாற வேண்டுமானால் அதற்குரிய அறிவியல் பூர்வமான வழிமுறைகளை மார்க்சிய ஆசான்கள் நிலைநாட்டினார்கள். அதைப்போல இன்றைக்கு மா.லெ-விற்கு எதிரான அனைத்து வகையான நடைமுறைகளை களைந்து பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட அமைப்பாக அறிவித்திருக்கும் மக்கள் அதிகாரம் சரியான வழியில் பயணிப்பதற்கான திசையை காட்டுவதாக இருக்கின்றது.
கலைப்புவாதிகளின் ஊளைச் சத்தம் நம் செவிகளில் மங்கிய ஒலியில் கேட்கிறது. நாங்கள் தான் பெருபான்மை, நாங்கள் தான் பெரும்பான்மை என சொல்லி கொள்ளட்டும். அந்த உரிமையை பறிக்க நமக்கு அதிகாரமில்லை.
மகத்தான நவம்பர் 7, 1917 சோசலிசப் புரட்சிக்கு சில மாதங்கள் வரை சோவியத்தின் மத்தியில் போல்ஷ்விக்களும் சிறுபான்மை தான். ஆனால் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்கு தான் புரட்சியை சாதித்தார்கள்.
அப்படிப்பட்ட போல்ஷ்விக் உணர்வும், அது கோரும் தியாக உணர்வும், அரசியல் சித்தாந்த தெளிவும் ஏற்படுத்திய முதலாவது மாநாடு வரலாற்று சிறப்புமிக்கதே!
விருதையில் நடைபெற்ற மக்கள் அதிகாரம் முதல் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆ.கா.சிவா ஆற்றிய உரையின் காணொலியை பதிவிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!

ட்சிப் பொறுப்பேற்றவுடன், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறுவது உறுதி” என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரியணை ஏறியவுடன், ‘எதார்தத்தை’ புரிந்துகொண்டு “முடிந்த அளவிற்கு முயற்சிப்போம், சட்டப் போராட்டத்தைத் தொடருவோம்” என்று மாற்றிப் பேசியது.
எப்படியும் தி.மு.க. நீட் தேர்வை இரத்துசெய்துவிடும் என்று தொடக்கத்தில், பலர் நம்பினார்கள். ஆனால் நீட் தேர்வும் சட்டப் போராட்டமும் ஒருசேர தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது முடிந்தபாடில்லை. அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு.க. சட்டப் போராட்டத்தை மூர்க்கமாக நடத்துகிறது என்பது உண்மைதான். ஆனால், அவற்றால் மட்டுமே ஒருக்காலமும் நீட்டை இரத்து செய்ய முடியாது. இதை நாம் சொல்லவில்லை  சட்டப் போராட்ட அனுபவமே போதிக்கிறது!
000
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று மோடி அரசு அறிவித்தது. “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம்போல நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கும்” என்று அறிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். நீட்டை இரத்துசெய்வோம் எனச் சொல்லிவிட்டு இப்படிப் பேசுகிறாரே என விமர்சனம் எழுந்தபோது, “நாங்கள் என்ன 24 மணிநேரத்தில் நீட்டை இரத்துசெய்வோம் என்றா வாக்கு கொடுத்தோம்” என்று பேசினார்.
படிக்க :
நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !
இது ஒருபுறமிருக்க, நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்பித்தது. நீட் தேர்வும் ஏ.கே.ராஜன் அறிக்கை வெளியாவதும் ஒரே காலத்தில் நடக்கிறது.
முந்தைய அ.தி.மு.க. அரசைப் போல சட்ட மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நீட் தேர்வை முறியடித்துவிட முடியாது என்ற அனுபவத்திலிருந்துதான் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் ஆய்வுக் குழுவை அமைத்தது தி.மு.க. அரசு.
பின்னர், நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பே தேர்வு அச்சம் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டார். நீட்டுக்கு எதிரான தமிழக மக்களின் கொந்தளிப்புக்கு முகம்கொடுக்கும் வகையில், அடுத்தநாளே சட்டமன்றத்தில் பா.ஜ.க. தவிர்த்த பிற கட்சிகளின் ஆதரவோடு நீட் விலக்கு தனிச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அக்டோபர் 1-ம் தேதி (2021) நீட் தேர்வின் மூலம் சமூகநீதி பறிபோகின்றது, எனவே நீட்டை இரத்துசெய்வதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மேற்குவங்கம், கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை இணைத்து கடிதம் எழுதினார் மு.க.ஸ்டாலின்.
இதற்கிடையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் மாதக்கணக்கில் நிலுவையில் வைத்துக் கொண்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிர்ப்புகள் எழத் தொடங்கியது.
4 மாதங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் இன்றுவரை மசோதா குடியரசுத் தலைவரின் அலுவலகத்தை சென்று சேரவில்லை தமிழக சட்டப்பேரவைக்கும் திருப்பி அனுப்பப்படவில்லை. கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஒருமுறையும் நவம்பர் 27-ம் தேதி மற்றொருமுறையும் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநரை நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார் மு.க.ஸ்டாலின். ஆனால் ஒன்றும் அசையவில்லை.
கடந்த ஆட்சியில் நடந்ததைப் போலவே தேர்வு நடந்த அன்றைய நாளும் அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து மாணவர்களின் தற்‘கொலை’ செய்திகளை நிரப்பியது. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின்போது போராட்டக்களமாக மாறும் தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நீட் தேர்வு எந்த பெரிய கள எதிர்ப்பும் இல்லாமல் நடந்து முடிந்தது.
எடப்பாடி ஆட்சிக் காலத்தில், நீட்டுக்கு எதிராகப் போராடிய பெரும்பாலான ஜனநாயக சக்திகள் தி.மு.க.வின் சட்டப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு தங்கள் கடமையை முடித்துக் கொண்டார்கள்.
அ.தி.மு.க.வின் “சடங்குத்தனமான சட்டப் போராட்டத்தை” ஒப்பிடும்போது தி.மு.க. நடத்துகின்ற “உணர்வுப்பூர்வமான சட்டப் போராட்டம்” நீட் தேர்வை இரத்துசெய்யப்  போதுமானது என்ற மயக்கம் நம்மவர்களை பீடித்திருந்தது. இதனால், அநீதியான நீட் தேர்வு இந்தமுறையும் நம் மாணவர்களின் குருதியைக் குடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
000
நீட் தேர்வு ‘இனிதே’ முடிந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றனர்.
டிசம்பர் 28-ம் தேதி குடியரசு தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு, ராஷ்டிரபதி பவனிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அவரின் இல்லத்தில் காத்திருந்தனர். கடைசி நேரத்தில் சந்திப்பை ரத்து செய்தார் அமித்ஷா. ஆனால் அவர்களை அலைக்கழித்த அமித்ஷா, கிட்டத்தட்ட 10 நாட்கள் காத்திருந்தும் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை; சந்திக்க முடியாதது குறித்து தெரிவிக்கப்படவும் இல்லை.
இதுகுறித்து டி.ஆர்.பாலு பேசும்போது, “அமித்ஷாவின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது” என்றார். “மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க மறுப்பது ஜனநாயக விரோதம்” என்றார் மு.க.ஸ்டாலின்.
நிலைமை இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் போதுதான், ஜனவரி 05-ம் தேதி நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் துவக்க நாளில், ஆர்.என்.ரவியை தங்களது கொள்கைப் பிரகடன அறிக்கையை “ஆளுநர் உரையாக” வாசிக்கவைத்தது தி.மு.க. அதில் “நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என அரசு உறுதியாக உள்ளது” என ஆர்.என்.ரவி முழங்கினார். தி.மு.க. ஆதரவு ஊடகங்களும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் “சம்பிரதாய” ஆளுநர் உரையை, ‘தமிழ்நாட்டு ஆளுநரை தி.மு.க. பணியச் செய்துவிட்டது போல’ மிகைப்படுத்திக் காட்டி, “பார்த்தீர்களா, தி.மு.க.வின் பராக்கிரமத்தை” என சிலாகித்தார்கள்.
அதே சட்டமன்றக் கூட்டத்தொடரில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்காமல் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் எனவும் ஆளுநரின் தமிழக விரோதப் போக்கைக் கண்டிப்பதாகவும் தெரிவித்து ஆளுநரின் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்கள் வி.சி.க.வினர்.
அதேநாளில், மூன்றாவது முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக 7 நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லியில் காத்திருந்தனர். அன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டி.ஆர்.பாலு, “அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர் பதவி விலக வேண்டும்” என்றார்.
அடுத்ததாக, ஆளுநருக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜனவரி 08-ம் தேதி மீண்டும் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது தி.மு.க. அதில் அமித்ஷா தமிழக எம்.பி.க்களை சந்திக்காமல் தொடர்ந்து புறக்கணிப்பதையும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத ஆளுநரையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீட்டை இரத்து செய்வது குறித்து பேசும்போது, “சட்டப்போராட்டம் தொடரும்” என்று சொல்லி தீர்மானத்தை முடித்துக் கொண்டார்கள்.
இங்கே நாம் ஒரு விசயத்தைப் பரிசீலிக்க வேண்டும். நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வுக்குழு அறிக்கை; சட்டமசோதா; அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்; ஆளுநர், குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தல் என பல வழிகளில் மூர்க்கமான சட்ட வழி போராட்டங்கள் நடத்தியாயிற்று. இனியும் சட்டப் போராட்டத் தொடர்கதையா?..
அமித்ஷாவை சந்திப்பதற்காக, டெல்லி சென்று நாட்கணக்கில் காதிருக்கும் தமிழக எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.
“சட்டப்போராட்ட வழிமுறைகள் குறித்து வல்லுநர்களை ஆலோசித்து அடுத்தகட்ட முடிவெடுப்போம்” என்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன். சட்டத்தைக் கழிப்பறைக் காகிதமாகக்கூட மதிக்காத பாசிஸ்டுகளிடம்போய் சட்டப்போராட்டம் நடத்துவதன் மூலம் நம்மால் எதை சாதித்துவிட முடியும். இதுவரை 13 மாணவர்களை பலிவாங்கியிருக்கிறது இந்த சட்டப்போராட்டப் பாதை. இன்னும் சட்டப் போராட்டப் பாதைக்கு எத்தனை பேரை பலி கொடுக்கப்போகிறோம்? இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? அனிதா இறந்தபோது துடித்துப் போர்க்கோலம் பூண்ட தமிழகம், இப்போது எங்கே?
சட்டவழியில் தி.மு.க. எடுக்கும் முயற்சிகளுக்கு அமித்ஷாவும், பாசிஸ்டு படையணியின் உளவாளி ஆர்.என்.ரவியும் முட்டுக்கட்டை போடுவதும் அவமதிப்பதும், தி.மு.க. என்ற ஒரு கட்சிக்கான அவமானம் அல்ல. தமிழ்நாட்டு மக்களை, தமிழ்நாட்டின் இறையாண்மையை இழிவுபடுத்துவதாகும். இனியும் சட்டப் போராட்டப் பாதையை மட்டுமே தொடருவோம் என்பதற்கு, இந்த இழிவுகளை மேலும் சுமப்போம் என்பதே பொருள்.
தற்போது நீட் விசயத்தில், தி.மு.க. கூட்டணியில் உள்ள சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க, த.வா.க. போன்ற கட்சிகளின் அழுத்தம், இன்றளவும் கருத்தியல்ரீதியாக தமிழக மக்கள் நீட்டை வெறுப்பது, தொடர்ச்சியாக தேர்வுகளின்போது மாணவர் தற்கொலைகள் நடைபெறுவது ஆகியவற்றின் காரணமாகத்தான் இந்த சட்டப்போராட்ட முயற்சிகளைக்கூட தி.மு.க. எடுத்திருக்கிறது.
படிக்க :
நீட் மரணங்கள் : தமிழ்நாடு அரசின் சட்டம் தீர்வைத் தருமா ?
நீட் : பாஜக கையாளப் போகும் உத்திக்கு பிள்ளையார் சுழி போட்ட கரு நாகராஜன் !!
ஆனால் இந்த நிலைகூட இப்படியே தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது. திமுக-வைப் பொறுத்தவரையில் தன்னுடைய ஆட்சியை பிரச்சினை இல்லாமல் ஓட்டுவதற்கு உட்பட்டதுதான் அனைத்தும்.
நீட்டைப் போலவே, “புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம்” என ஆரம்பத்தில் முழங்கியது தி.மு.க. பின்னர் “அதில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக் கொள்வோம்” என தாளம் மாறிப்பேசினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. “எட்டுவழிச் சாலையை நிராகரிப்போம்” என்று பேசினார்கள், “நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை” என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோபித்துக் கொண்டவுடன் “வாருங்கள் ஒத்துழைக்கிறோம்” என வரிந்துகட்டிக் கொண்டு பதில் வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு என்ற கிராமத்தில், மக்களை விரட்டியடித்துவிட்டு, சிப்காட்டின் மூலம் ‘வளர்ச்சியை’க் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.
எனவே தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு – ஜனநாயக சக்திகள் சட்டப்போராட்டப் பாதையில் தி.மு.க.வை நெட்டித் தள்ளிக் கொண்டிருப்பதை கைவிட்டுவிட்டு களப்போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி, டெல்லிச் சலோ பாதையில் போராட்டங்கள் முன்னேற வேண்டும். தமிழ்நாட்டிற்கே உரிய சிறப்பு அதுதான்!

துலிபா

ஆன்லைன் தேர்வு கேட்டு போராடும் மாணவர்களின் கோரிக்கை நியாயமற்றதா?

கொரோனா தொற்று – லாக்டவுன் காரணமாக 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ச்சியாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது. மாணவர்கள் ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரினர். இவற்றுக்கு தீர்வாக அரசு ஆன்லைன் மூலமாக வகுப்புகள், தேர்வுகள் நடத்த அனுமதி அளித்தது.
தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் இந்த அறிவிப்பை தங்களின் கட்டணக் கொள்ளைக்கான வாய்ப்பாக பயன்படுத்தின அல்லது அத்தனியார் நிறுவனங்களின் நலனில் இருந்து அரசு இந்த அறிவிப்பை விடுத்தது என்றுகூட சொல்லலாம்.
ஆன்லைன் வகுப்புகள் மட்டுமல்ல செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் வினாத்தாளை ஆன்லைனில் அனுப்பி, மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வு எழுத அனுமதித்தன. மாணவர்களும் மகிழ்ச்சியாக ஆன்லைனில் தேர்வுகளை எழுதினர்.
2021 லாக்டவுனிற்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக நடக்கவில்லை. ஆகவே ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்தன. ஓரளவுக்கு கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. அரசு அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் நேரடியாகத்தான் நடக்கும் (ஆஃப்லைனில்) என்பதை திட்டவட்டமாக அறிவித்தது.
படிக்க :
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !
NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE
மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, சென்னை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்களும் அரசின் அறிவிப்புக்கு எதிராக போராடத் தொடங்கினர். வகுப்புகள் ஆன்லைனில் நடத்தியது போல், செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில்தான் நடத்த வேண்டும் என போராட்டங்களை நடத்தினர்.
பல்வேறு கல்வியாளர்களும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி, தேர்வு எழுதினால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும், மாணவர்கள் படிக்காமல், புத்தகங்களை பார்த்தோ, அருகில் உட்கார்ந்துக் கொண்டு விவாதித்தோ எழுதுகின்றனர். ஆகவே நேரிடையாக மட்டும்தான் தேர்வு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எனினும் மாணவர் போராட்டாங்களின் விளைவு, அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டு, இந்த முறையும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த அறிவிப்பு கொடுத்தது.
மாணவர்கள் மகிழ்ச்சியாக வரவேற்று தேர்வுக்கு தயாராகின்றனர். பல மாணவர்கள் ஆன்லைன் தேர்வை புத்தகங்களை வைத்து பார்த்து எழுதுவது, ஒன்றாக உட்கார்ந்து விவாதித்து எழுதுவது, வாட்ஸ்ஆப்பில் பேசிக்கொண்டு பதில் எழுதுவது என்றெல்லாம் திட்டமிட்டுக் கொள்கின்றனர்.
கல்வியாளர்கள் சொல்வதுபோல் இத்தகைய ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வு முறை மாணவர்களின் கற்றல் திறனை குறைத்துவிடும், இந்நிலை தொடர்ந்தால் மாணவர்களின் எதிர்காலம் பெரியளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஒன்றிரண்டு தலைமுறையே கல்வியறிவற்றவர்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும் என்பதில் நமக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
அனைவருக்குமான கல்வி மறுப்பும், ஆளும் வர்க்கத்தின் நோக்கமும்:
இதற்கு பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் நலன், கல்வி என்பதை சரக்காக மாற்றி கொள்ளையடிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. முதலாளித்துவ சமூகத்தில் அனைவருக்கும் கல்வியை கொடுப்பது, சமூகத்தை முன்னேற்ற வேண்டுமென்பதற்கோ, ஏழை, உழைக்கும் வர்க்கங்களை சார்ந்த குழந்தைகளுக்கும் கல்வியறிவை கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
ஆளும் வர்க்கங்களின் உற்பத்திக்கு, பல்துறை அறிவு பெற்றவர்கள் தேவைப்படுவதற்கு ஏற்ப, அவர்கள் ஒட்டச் சுரண்டுவதற்கு, குறைந்த கூலிக் கொடுப்பதற்கு, சமூகத்தில் இருந்து அவர்களை பொறுக்கி எடுத்துக் கொள்வதற்கு கல்வி, பயிற்சி பெற்ற வேலையில்லா ரிசர்வ் பட்டாளம் தேவைப்படுகிறது.
அத்தகைய சூழல் எப்பொழுதும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மிகவும் அவசியமாகும். ஆனால் அவற்றின் தேவையைவிட, மிதமிஞ்சிய வகையில் சமூகத்தில் வேலையில்லா ரிசர்வ் பட்டாளம் அதிகரித்து வருகிறது. இவர்கள் இந்த உற்பத்தி முறைக்கு தேவையற்றவர்களாக, சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களாக, பெரும் சுமையாக ஆளும் வர்க்கங்கள் கருதுகின்றன.
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் உள்ள வாக்கியத்தை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். “ஏன் இப்படி? ஏனென்றால் நாகரிகம் மிதமிஞ்சிவிட்டது, வாழ்க்கைத் தேவைப் பொருட்கள் அளவு மீறிவிட்டன, தொழிலும் வாணிபமும் எல்லை கடந்துவிட்டன. சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சிக்கு இனி உதவுவதாய் இல்லை. மாறாக, அவை இந்த உறவுகளுக்குப் பொருந்தாத படி அளவுமீறி வலிமை மிக்கவையாகிவிட்டன. இந்த உறவுகள் அவற்றின் வளர்ச்சிக்கு தடையாகிவிட்டன. பொருளுற்பத்தி சக்திகள் இந்தத் தடைகளைக் கடக்க முற்பட்டதும் அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் உண்டாக்குகின்றன, முதலாளித்துவ சொத்துடைமை நிலவுவதற்கே அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அவை உற்பத்தி செய்யும் செல்வத்துக்குத் தம்முள் இடம் போதாதபடி முதலாளித்துவ சமூக உறவுகள் குறுகலாகியிருக்கின்றன. இந்த நெருக்கடிகளை முதலாளித்துவ வர்க்கம் எப்படிச் சமாளிக்கிறது? ஒரு புறத்தில், வலுக்கட்டாயமாய் உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும்…”
ஆகவே அனைவருக்கும் கல்வி என்ற அவசியம் கூட இன்றைய ஆளும் வர்க்கங்களுக்கு தேவையில்லாததாக மாறி வருகிறது. இவற்றின் விளைவு இலவச கல்வி, அனைவருக்கும் கல்வி போன்றவைக் கூட தேவையற்றதாகின்றன. ரிசர்வ் பட்டாளம் கூட மிதமிஞ்சி அவர்கள் வாழத்தகுதி இல்லாதவர்களாக்கப்பட்டு வருகிறார்கள். முறையான கல்வி இல்லை, வேலையின்மை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையின்மை, மனசோர்வு, தனிமை உணர்வு, சாராயம், கஞ்சா போதை (கஞ்சா மிக வேகமாக பரவி வருகின்றது.), செல்பேசியில் மூழ்குவது என்கிற நிலைக்கு குறிப்பிட்ட பிரிவு மாணவ – இளைஞர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். இவர்களை ‘வேண்டாத சதைப் பிண்டமாக, வெட்டியெறிய வேண்டியவர்களாக’ ஆளும் வர்க்கம் கருதுகிறது.
ஆன்லைன் தேர்வும், மாணவர்களின் மனநிலையும்:
ஆன்லைன் தேர்வுக்காக மாணவர்களின் போராட்டம், ஆளும் வர்க்கத்தின் நலனில் இருந்து இன்றைய சமூக சூழலில் இளைஞர்கள், மாணவர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தோம். இத்தகைய சூழலில் மாணவர்களின் மனநிலையை பரிசீலிப்போம்.
மாணவர்கள் ஆன்லைன் தேர்வை புத்தகங்களை பார்த்து எழுத வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர், திட்டமிடுகின்றனர். யாரும் கண்காணிக்கவில்லை என்றாலும், சுய ஒழுக்கத்துடன் படித்து தேர்வை எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. அதைவிட முக்கியமான விசயம், மாணவர்களிடம் எந்த ஓரு குற்றவுணர்வோ, தாம் செய்வது தவறு என்ற உணர்வோ கடுகளவுக்கூட இல்லை.
இது இன்று மட்டும் நடக்கவில்லை, ‘பிட்’ அடிப்பது, வினாத்தாளை மாற்றிக்கொண்டு எழுதுவது, புத்தகத்தை ரகசியமாக வைத்துக்கொண்டு எழுதுவது, காப்பி அடிப்பது போன்றவை நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் அப்பொழுதுக்கூட குற்றவுணர்வு, தவறானவைதான் என்கிற எண்ணங்கள் இருந்தன. அத்தகைய எந்த குற்றவுணர்வுமின்றி இன்றோ மகிழ்ச்சியாக, உற்சாகமாக திட்டமிட்டு புத்தகங்களை பார்த்து ஆன்லைனில் தேர்வு எழுதுகின்றனர்.
மாணவர்களிடம் சுய ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டதா, இத்தகைய மாணவர்கள் நாளை சமூகத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? சமூகம் சீரழிந்து விடாத? என்றெல்லாம் கேள்விகளும், ஆதகங்களும் வெளிப்படாமல் இல்லை. இத்தகைய கேள்விகளுக்கு மாணவர்கள் சார்பாக நாம் பதிலளிப்போம். ஒன்றும் குடி முழுகிப்போய்விடாது என்று.
இந்த சமூகம் மாணவர்களுக்கு எதை கற்றுத்தந்ததோ அதையே திருப்பி அளிக்கின்றனரே தவிர, வேறோன்றுமில்லை. இங்கு குற்றவாளி இந்த சமூகமும், இத்தகைய நிலைக்கு காரணமான ஆளும் வர்க்கமும்தான். மாணவர்களோ, இளைஞர்களோ அல்ல.
வேலையின்மை, நம்பிக்கையற்ற எதிர்காலம், போட்டி, பொறாமை, சீரழிவு, வறுமை இவற்றை தோற்றுவித்தது ஆளும் முதலாளித்துவ வர்க்கம். அதையே இச்சமூகத்திற்கு எதிர்வினையாற்றுகின்றனர்.
சுயநலமாக வாழ வேண்டும், தன்னுடைய நலனுக்காக எதையும் செய்யலாம், வேலை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், வாழ்கையில் வெற்றி பெற தமக்கு முன்னிற்பவரின் காலையும் வாரலாம், மற்றவர்களை சுரண்டலாம், அடக்கலாம், ஒடுக்கலாம் போன்றவற்றையே இந்த முதலாளித்துவ சமூகம் கற்றுத்தருகிறது.
போட்டி தேர்வுகளில் 1000 இடங்களுக்கு, 10 லட்சம் பேர் போட்டி. இதில் தான் 1000-த்தில் ஒரு இடத்தை பெற்றுவிட வேண்டும், வேலை கிடைக்காமல் போகிறவர்களைப் பற்றி எந்த கவலையும் தேவையில்லை. இதைதானே இளைஞர்களுக்கு இச்சமூகம் கற்றுத்தருகிறது.
இவைதான் இந்தச் சமூகத்தின் பண்பாடாக, ஒழுக்கமாக, விழுமியமாக இருக்கும்போது, மாணவர்கள், இளைஞர்கள் மட்டும் தேர்வுகளை சுய ஒழுக்கத்துடன் எழுத வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் சரியாக இருக்கும். அப்படியென்றால் இவற்றை ஆதரிக்கிறீர்களா என்று விதண்டாவாதமாக எதிர்வாதம் புரியக்கூடாது.
படிக்க :
பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !
காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !
இச்சமூகத்திலும் குறைந்தப்பட்சம் நியாய உணர்வோடு வாழ்பவர்களில் சாதாரண உழைக்கும் மக்கள்தான் பெரும்பான்மையினர். இவர்களுக்கு மற்றவர்களை சுரண்டுவதற்கு வாய்ப்பு இல்லையென்பதால் அல்ல, இவர்களின் யாதார்த்தமான வாழ்க்கை இதர ஒடுக்கும் மக்களுடன் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துவதால்.
கல்விமுறையும், சமூகமும் மாணவர்களுக்கு “சமூக நலன், மக்கள் நலன், தேச நலன்” போன்றவற்றை என்று பிரதானப்படுத்துகிறதோ, அத்தகைய பண்பாட்டில் வளர்ந்து வரும் சமூகத்தில் மாணவர்களை யாரும் வெளியிலிருந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.
அத்தகைய பண்பாடு, சுரண்டலை மையமாகக் கொண்டுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையில் கொஞ்சம் கூட இவை சாத்தியமில்லை. ஆகவே பாட்டாளி வர்க்கம் தன்னை ஆளும் வர்க்கமாக அமைத்துக்கொள்ளும் சமூகத்தில், சோசலிச உற்பத்தி முறையில் சமூக, தேசிய நலனை பிரதானப் படுத்தும் பண்பாடு தழைத்தோங்கும்.
ஆகவே, இத்தகைய சீரழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியது ஆளும் வர்க்கங்களே தவிர, மாணவர்களோ, இளைஞர்களோ அல்ல! இன்றைய சீரழிந்த சமூகத்தை மாற்றுவதற்கான போராட்டங்களின் ஊடாகத்தான் சமூக உணர்வையே மாணவர்கள் பெறுவார்கள். அத்தகைய பணியை முன்னெடுப்போம்.

கந்தசாமி

கும்பல் மனோபாவமே சங்கிகளின் பலம் || சம்சுதீன் ஹீரா

ந்தக் காணொளியை ஷாட் பை ஷாட்டாக மனதுக்குள் ஓட்டிப்பாருங்கள்.
கல்லூரிக்குள் அந்த மாணவி நுழையும்போதே அவளுக்கு உளவியல் நெருக்கடி கொடுத்து அச்சுறுத்த முடிவெடுத்து விடுகிறது மாணவர்கள் போர்வையில் ஒளிந்திருக்கும் சங்கிக் கும்பல்.

உள்ளே வரும்போதே இந்தக்கும்பலைக் கண்டுகொண்ட மாணவி இவர்களின் நோக்கத்தைத் தெரிந்துகொண்டு எதற்கும் தயாராகவே வருகிறாள்.
அவள் வண்டியை நிறுத்தும்போதே கும்பல் பெருந்தொண்டையில் கத்த ஆரம்பிக்கிறது.

வண்டியை நிறுத்தி இறங்கிவரும் அவள் நடையில் துளி தயக்கமில்லை, கண்களில் துளி அச்சமில்லை. அவர்களைக் கடந்து செல்லும் மாணவியை நோக்கி கும்பலாகக் கோசமிடுகிறார்கள். மிரட்டும் தொனியில் கூச்சலிடுகிறார்கள்.

படிக்க :

ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்

உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது

உங்கள் கும்பலால், உங்கள் கூச்சலால் என்னை ஒரு துளிகூட அச்சப்படுத்த முடியாது என்பதைப்போல நிதானமாக அந்தக்கும்பலை எதிர்கொண்டு நின்று எதிர்முழக்கமிடுகிறாள்.

பயந்து விடுவாள் அல்லது ஓடுங்கிப்போய்விடுவாள் எனக் கருதிய கும்பல் அவளின் ஆக்ரோஷமான எதிர்வினையைக் கண்டு தடுமாறுகிறது. அவள் எதைக்குறித்தும் கவலையின்றி போய்க்கொண்டே இருந்தாள்.

அவளது தைரியம் ஏற்படுத்திய சேதத்தை சரிக்கட்ட கும்பலில் முன்னால் நின்றிருந்த ஒருவன் காவித்துணியோடு அவளை நோக்கி ஓடுகிறான். அவனைத்தொடர்ந்து இன்னும் சிலர் ஓடுகிறார்கள். விரட்டினால் பயந்து ஓடுவாள் என்றுதான் அவன் கணக்குப்போட்டிருப்பான்.

பின்னால் இந்தக்கும்பல் விரட்டி வருகிறது என்ற பதட்டமோ படபடப்போ துளியுமின்றி அவள் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கிறாள். முதலில் ஓடிவந்தவன் அவளை மிக அருகில் பார்க்கிறான். துளியும் அச்சமில்லாத அந்த முகத்தைப் பார்த்து அஞ்சுகிறான். மற்றவர்கள் வந்து சேரும் வரை என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நிற்கிறான். கும்பல் சேர்ந்த பிறகுதான் அவனுக்கு தைரியம் வருகிறது. அதற்குப்பின்புதான் கோசம் போடுகிறான்.

பதிலுக்கு முழங்கிக்கொண்டே அவள் முன்னேறிச் செல்கிறாள். ஒரு கேமரா ஓடிவந்து அவளை ஓவரேக் செய்து முகத்தை நோக்கி நிற்கிறது. ‘புர்கா என் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது’ என்கிற பொருளில் நிதானமாக அதே நேரம் ஆணித்தரமாக சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தாள். என்ன செய்வதென்று புரியாத கும்பல் கூச்சலிட்டுக்கொண்டு அங்கேயே நின்றுபோகிறது. அவள் கல்லூரிக்குள் நுழைகிறாள்.

சங்கிக் கும்பலின் வீரத்தின் சூத்திரமே இதுதான். இந்த கும்பல் மனோபாவம் மட்டுமே அவர்களின் பலம். இதுவரை சங்கிகளால் வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்ட எல்லா கலவரங்களையும் பரிசீலித்துப் பாருங்கள். குறைந்தபட்சம் ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் பெரும் கும்பலாக இருக்கும். அல்லது அரசின்/ காவல்துறையின் பரிபூரண ஆசி இருக்கும்.

குஜராத்தில் ஐம்பது குடும்பங்கள் வாழும் மொஹல்லாவை நாசமாக்க ஐந்தாயிரம் பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. முன்னூறு குடும்பங்கள் வாழும் மொஹல்லாவுக்குள் பத்தாயிரம் சங்கிகள் நுழைந்தார்கள் என்பதெல்லாம் ஆவணமாக இருக்கிறது.

கோவை நவம்பர் கலவரத்தில் போலீசின் துணை மட்டும் இல்லையென்றால் சங்கிகள் உதை சாப்பிட்டுவிட்டு ஓடியிருப்பார்கள். எப்போதுமே சாதாரண இந்து மக்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் பார்ப்பனியர்களைப்போல, பெரும் கும்பலுக்குள் ஒளிந்துகொள்வது, காவல்துறைக்குப் பின்னால் ஒளிந்துகொள்வது இதுவே அவர்களின் சூத்திரம்.

படிக்க :

கர்நாடகா : மாணவர்கள் ஹிஜாப் அணிவதை அரசியலாக்கும் காவி அரசு!

தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!

இன்னும் வேறெங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்றா கேட்கிறீர்கள்?

‘இந்தச்சூழலில் அந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று கோசம் போடலாமா?’ என்று உங்கள் நட்புப் பட்டியலில் ஒளிந்திருக்கும் சில சைலண்ட் சங்கிகள் லேசாகப் பேசிக்கொண்டிருக்கும் பாருங்கள்.

அந்த இடத்தில் ஜெய் ஸ்ரீராம் என்பது தாக்குதல் கோஷம், அல்லாஹு அக்பர் என்பது தற்காப்புக் கோஷம். இருபது முப்பதுபேர் கொண்ட கும்பல் தாக்குதல் நிலையெடுத்து முழங்கிய கோசத்தையும் ஒற்றைப் பெண்ணாய் அதை எதிர்கொண்டு தற்காப்பு நிலையெடுத்த மாணவியின் கோசத்தையும் சமப்படுத்தி வெளிப்படும் மெல்லிய லிபரல் குரல்கள் அந்த கும்பலை விட ஆபத்தானது.

ஒரு வெறிக்கும்பலைத் தன்னந்தனியாய் எதிர்கொள்ளும் ஒரு இஸ்லாமிய மாணவியிடமிருந்து அவளுக்கு நம்பிக்கையூட்டுகிற, தைரியமூட்டுகிற அந்த ஒற்றை முழக்கத்தைப் பறித்துவிட்டு வேறெதை நாம் மாற்றாகக் கொடுக்கப்போகிறோம்

முகநூலில் : Samus Deen Heera

disclaimer

மதக் கலவரத்தைத் தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினரை கைது செய் || ஆர்ப்பாட்டம்

ஊடகச் செய்தி

08-02-2022

தமிழ்நாடு அரசே! மதக் கலவரத்தைத் தூண்ட முனைந்துவரும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்து கைது செய்!
தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றிடு!!

ஆர்ப்பாட்டம்

ணக்கம். அரியலூர் மாணவியின் தற்கொலையைத் தொடர்ந்து மத வன்முறையைத் தூண்ட முனைந்து வரும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாசக நிர்வாகிகள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யவும் தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றவும் வலியுறுத்தி பிப்ரவரி 8 செவ்வாய்க் கிழமை அன்று மதியம் 4:00 மணி அளவில் வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தை தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், பாப்புலர் ஃப்ரண்ட ஆப் இந்தியா, தமிழக மக்கள் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்தன.
இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினர் சதிஸ்குமார், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலப் பொதுச்செயலாளர் மொய்தீன் அப்துல் காதர், மக்கள் அதிகாரத்தின் மாநிலத் தலைவர் வெற்றிவேல் செழியன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்புச் செயலாளர் மகிழன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் பொழிலன் ஆகியோர் உரையாற்றினர்.

இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட விசயத்தில் பாசக, வி.எச்.பி, இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டில் மத வன்முறையைத் தூண்டி வருகின்றன.

படிக்க :

தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!

அண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் !

குறிப்பாக, அந்த மாணவியிடம் இருந்து பெறப்பட்டதாக சொல்லப்பட்ட 45 விநாடி காணொளி ஒன்றை சனவரி 20 அன்று மதியம் 3:47 மணிக்கு பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டார். பாசக தலைவர் அண்ணாமலை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தபோதும் இது போன்ற ஒரு முக்கிய காணொளியைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் அரசியல் பரப்புரைக்கான பொருளாக சமூக ஊடகங்களில் வெளியிட்டது உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

”மதமாற்றம் தமிழகத்திலே வேகமாகப் பரவுகின்ற விசச் செடி” என்று பாசக தலைவர் அண்ணாமலை செய்தியறிக்கை வெளியிட்டார். கிறித்தவ மிசனரிகளுக்கு எதிராக மாணவியின் தற்கொலையைத் திருப்பிவிடும் முயற்சியில் பாசக தலைவர் தொடங்கி அதன் முக்கியத் தலைவர்களான எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், மனோஜ், குஷ்பூ உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, சனவரி 23 ஆம் நாள் கோவை மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரத்தில் உள்ள டிரினிட்டி தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சேலத்திலும் ஒரு கிறித்தவ பள்ளி மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்றுள்ளனர்.

மதுரை தெற்கு வாசல் பகுதியில் கிறித்தவ வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது காவிக் கும்பல் அங்கு சென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் ஊடகங்களில் தெரிய வந்த நிகழ்வுகள். இன்னும் வெளியே அதிகம் அறியப்படாமல் கிறித்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல், மிரட்டல், தாக்குதல் ஆகியவை நடந்து வருகின்றது.

இந்நிலையில் சனவரி 27 அன்று மாணவியிடம் இருந்து பெறப்பட்ட முழுமையான காணொளியை தமிழக காவல்துறை வெளியிட்டது. அதில் அவர் தன்னை யாரும் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தவில்லை என்று தெளிவாகச் சொல்வது அனைத்துச் செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

மொத்தத்தில், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதைப் பயன்படுத்தி மதச்சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக கிறித்தவர்களுக்கு எதிரான வெறுப்புப் பரப்புரையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான வாய்ப்பாக பாசகவினர் இதைப் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது.

மாணவியின் அடையாளம், முகவரி, பெயர், அகவை வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் பெயர் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி செய்தி வெளியிடுவது சிறார் நீதிச்சட்டம், 2015 இன் பிரிவு 74(1) இன் கீழும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழும் கடுமையான குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருப்பவர் அந்தக் காணொளியின் உண்மைத் தன்மையை அறியாமலும் அறிய முற்படாமலும் அதைப் பொறுப்புடன் காவல் துறையிடம் ஒப்படைக்காமலும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு கலவர அரசியலுக்கு முனைந்தது பொறுப்பற்ற, உள்நோக்கம் நிறைந்த செயலாகும். பாசக தலைவர் அண்ணாமலை மீது பிரிவு 153, 505 (1) (b), பிரிவு (505) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் சமூக நீதி, பல்வேறு சமயத்தவரிடம் இருக்கும் நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேணிக் காக்கும் நோக்கில் பொய்ச் செய்தியைப் பரப்பி கலவரத்தை தூண்ட முயலும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாசக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்துள்ள அமைப்புகள் இணைந்து மாநில காவல் தலைமை இயக்குநரிடம் கடந்த 29-1-2022 அன்று புகார் மனுவைக் கொடுத்தனர். மேலும் திருச்சி, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களிலும் காவல் கண்காணிப்பாளரிடம் இதை ஒத்து புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்தே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

காவிப் பாசிஸ்டுகள் இந்தியாவின் தலைநகரில் இருந்தபடி இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவழிப்புக்கு அறைகூவல் விடுகின்றனர். மும்பை மாதிரி, குசராத் மாதிரி, முசாபர் நகர் மாதிரி, தில்லி மாதிரி என வகைவகையாக மதச்சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை சங் பரிவார அமைப்புகள் நிகழ்த்தி வந்துள்ளன. இப்போது கர்நாடகாவில் பரிசோதித்து பார்த்த , கிறித்தவர்களுக்கு எதிரான மங்களூர் மாதிரி என்ற ஒன்றை தமிழ்நாட்டில் செய்து பார்க்க துடிக்கின்றனர். அதன் பகுதியாக எல்லா முனையில் இருந்தும் மத மாற்றத் தடைச் சட்டம் என்ற பெயரில் வெறுப்பு பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

படிக்க :

மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !

மருத்துவ பணியாளர்கள் பணி நீக்கம் : நன்றி மறந்த திமுக அரசு | மக்கள் அதிகாரம்

வெறுப்பு பேச்சுகள் சிறுபான்மையினருக்கு எதிரான மிகப் பெரிய வன்முறைக்கு களத்தை தயார்ப்படுத்துகின்றன. மக்களின் மனங்களில் வன்முறை வெறியாட்டத்திற்கான ஏற்பை ஏற்படுத்துகின்றன. ஆனால, அவை பெரும்பாலும் கண்காணிப்புக்கும் கட்டுபடுத்தலுக்கும் உள்ளாவதில்லை. மேலும், அரசு இயந்திரம் குறிப்பாக நீதித்துறை, காவல் துறையிலும் பெரும்பான்மை வாதம், சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலை ஆழ வேரூன்றி உள்ளது. இந்த மெய்நிலையும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காமல் செய்து விடுகிறது.

காவிப் பாசிஸ்டுகளின் கையில் ஒன்றிய அரசின் அதிகாரம் இருக்கும் நிலையில், கடந்த ஏழரை ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு சிறிதும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைக் தடுக்கவும் பாதிக்கப்படு்வோருக்கு நீதி மற்றும் இழப்பீட்டை உறுதி செய்யவும் வழிவகுக்கும் சட்ட முன்வடிவு ஒன்று (( Prevention of Communal and Targetted Violence (Access to Justice and Reparations) Bil 2011 ) கடந்த 2011 இல் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படவே இல்லை.

இன்றைய அவசர, அபாயகரமான நிலையைக் கருத்தில் கொண்டு அத்தகைய சட்டம் ஒன்றை மாநில அளவில் இயற்ற வேண்டிய தேவை உள்ளது. அந்த அடிப்படையில், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என்று இவ்வார்ப்பாட்டத்தின் வாயிலாக கோருகிறோம்.

இப்படிக்கு,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி.

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

இந்தியக் ‘குடியரசில்’ இருந்து, இந்து ராஷ்டிரக் குடியரசை நோக்கி…

துநாள் வரை, ‘இந்தியக் குடியரசில்’ இருப்பதாக காட்டிக்கொண்ட பெயரளவிலான மதச் சார்பின்மை, மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை போன்ற கோட்பாடுகளெல்லாம் அறுத்தெறியப்பட்டுவிட்டது.
இனிமேல் இந்த அரசை ‘இந்தியக் குடியரசு’ என்று அழைக்கத் தேவையில்லை, இந்து ராஷ்டிரக் குடியரசு என்றே அழைக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு மொத்த அரசுக் கட்டமைப்பையும் காவிமயமாக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இதற்கு தற்போது நடைபெற்று முடிந்துள்ள ‘குடியரசு’ தின நிகழ்ச்சிகளே சாட்சியம்!
வழக்கமாக டெல்லியில் நடைபெறும் ‘குடியரசு’ தின அணிவகுப்பில், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார வாகனங்களும் பங்குபெறும். நாட்டின் பன்முக கலாச்சாரம், வரலாற்றை பிரதிபளிக்கச் செய்வதே இதன் நோக்கம்.
படிக்க :
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2022 || அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் வெளியீடுகள் : கொரோனா || காவி கார்ப்பரேட் பாசிசம்
மோடி ஆட்சியின் கீழ், இந்த ஆண்டு நடைபெற்ற 73-வது குடியரசு தின அணிவகுப்பிலோ மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெறும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார வாகனங்களே அனுமதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் பெரும்பாலனவை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களுடையது.
தென்னிந்தியாவில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் நுழைவாயிலாக உள்ள கர்நாடகத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்த்தியை, மத்திய அரசின் தேர்வர் குழு கீழ்த்தரமான பல காரணங்களைச் சொல்லி புறக்கணித்தது.
முதன்மையாக, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யை ஊர்தியின் முகப்பிலே வைத்த காரணத்தால்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது. “வ.உ.சி. ஒரு வணிகர்தானே. அவரை எப்படி விடுதலைப் போராளியாக கருதுவது?” என்று தேர்வர் குழு கருத்து தெரிவித்ததாம். ஆனால் பாரதி சிலையை ஏற்றுக் கொண்டார்களாம். பாரதி வெள்ளையனை எதிர்த்து ஆயுதமேந்திய கதை நமக்குத்தான் தெரியவில்லை.
மற்றபடி, “சுதேசியமே, சுயராஜ்ஜியத்தின் பாதை” என்று போராடிய வ.உ.சி.யை, நாட்டை அந்நியனுக்கு கூட்டிக் கொடுக்கும் மறுகாலனியாக்க எட்டப்பர்கள் வெறுப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்.
இதே போல கேரளாவில், பார்ப்பன மதத்தை நிறுவனமயப்படுத்திய ஆதி சங்கரனை சேர்க்காததால், சாதி எதிர்ப்பு சீர்த்திருத்தவாதி நாராயண குரு இடம்பெற்ற ஊர்த்தியை தேர்வர் குழு ஏற்கவில்லை.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதால் மட்டுல்ல. தங்களது காவி-கார்ப்பரேட் சித்தாந்தத்திற்கு எதிராக உள்ள காரணத்தால்தான் இவை முதன்மையாக நிராகரிக்கப்பட்டன. காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலமாக இருந்தாலும் “கோதான் நியாய் யோஜனா” என்ற பெயரில் கோமாதாவின் (பசு) பயன்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட சதீஷ்கர் ஊர்திக்கு அனுமதியளிக்கப்பட்டது, அதற்குச் சான்று.
உத்தரப் பிரதேச அரசின் ஊர்தியில் காசி விசுவநாதர் கோயிலும் கர்நாடக அரசின் ஊர்தியில் அனுமனும் இடம்பெற்றிருந்தது, ‘குடியரசு’ தின அணிவகுப்பை கோயில் திருவிழாவைப் போல காட்சிப்படுத்தியது. தங்களது சித்தாந்தத்திற்கு உகந்தவைகளை காட்சிப்படுத்தியதும் தொந்தரவானதை நிராகரித்ததும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் அராஜகச் செயல் என்று சுருக்கிப் பார்க்க முடியாது.
இது பல்தேசிய இனங்களின் தனித்த பண்பாடு, வரலாற்று அடையாளங்களை துடைத்தொழித்து இந்தியாவை “ஒரே நாடு, ஒரே பண்பாடு” என்ற அடிப்படையில், இந்து ராஷ்டிரமாக கட்டியமைக்க முயலுவதன் வெளிப்பாடு. தேசிய இனங்களுக்கு செலுத்தபட்ட அவமரியாதை!
புதிய ஜனநாயகம்

நடுநிலைவாதம் – லிபரல்வாதம் என்பது என்ன? || ராஜசங்கீதன்

றிவுஜீவித்தனம் என நம்பிக்கொள்ளும் முரட்டு முட்டாள்தனம்தான் லிபரல்வாதம். சமீபத்திய ஹிஜாப் பிரச்சினையில் ஒரு லிபரல் அறிவுஜீவி (வார்த்தை விரயம்) ‘ஹிஜாப்பும் தவறுதான் ஆனால்’ என ஒரு பதிவு எழுதி இருக்கிறார். இவர் சார்ந்த கூட்டத்துக்குக் குட்டையை குழப்பும் வேலை தவிர வேறு எதுவும் இருந்ததில்லை.

‘தலித் தலைவர்கள் தொடங்கி இலங்கை விவகாரம் வரை இவர்களின் இணையக் குழப்பங்கள் கழகத்துக்குதான் கெட்ட பெயர் பெற்றுத் தருகிறது என முதல்வர் ஸ்டாலினே கடிந்து கொண்டிருப்பதால் இஸ்லாமியர் பக்கம் வந்து குதறி வைத்திருக்கின்றனர்.

இந்த ‘I love you but as a friend’ ரக நட்ட நடுத்தனம் சரியா?

‘யூனிபார்ம்கள் போடச் சொல்வதே எல்லாரும் ஒன்று போல் இருக்கத்தான். அப்படி இருக்க ஹிஜாப் என்ன நியாயம்’ என்கிற கேள்வி சரியாகவே தோன்றக் கூடிய கேள்வி. ஆனால் சரியான கேள்வி அல்ல.

படிக்க :

பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !

மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா

கடவுள் நம்பிக்கையைப் பெரியார் எதிர்த்தார். அதற்குக் காரணமாக மதம் இருந்தது. பார்ப்பனியம் இருந்தது. பெண்ணடிமைத்தனம் இருந்தது. ஆணாதிக்கம் இருந்தது. ஆனால் அவர்தான் ஆலய நுழைவுக்கும் போராடினார்.

இன்றும் பாஜக, ‘நாத்திகர்களுக்கு ஏன் கருவறை பற்றி கவலை’ எனக் கூவும். இதுவும் பார்ப்பதற்கு சரியாகவே தோன்றக் கூடிய கேள்விதான். ஆனால் சரியானது அல்ல.
இத்தகைய பைனரிக் கேள்விகளை பார்ப்பன ஆதிக்க வெறிக் கூட்டம்தான் செய்து வந்தது. ‘இஸ்லாமியர்களுக்கு நாடு உண்டு, இந்துக்களுக்கு வேண்டாமா?’, ‘சிறுபான்மையினருக்கு அதிகம் அக்கறை காட்டுவது மதச்சார்பின்மை அல்ல’ என்பதெல்லாம் பைனரி தன்மையுடன் உருவாக்கப்பட்ட, பார்த்ததும் சரியெனத் தோன்ற வைக்கக் கூடிய கருத்தாடல்கள். இவற்றைப் போல்தான் ‘ஹிஜாப்புக்கு ஆதரவானவர்கள் இல்லை. ஆனால்’ என்கிற பத்திகளும்.

சீருடை முறைக்கு வரலாற்றில் எந்த அரசும் காரணமாக இருக்கவில்லை. 1552-ம் ஆண்டில் பிரிட்டனில் க்ரைஸ்ட் ஹாஸ்பிட்டல் முதலிய தொண்டு நிறுவனப் பள்ளிகள்தாம் சீருடை வழக்கத்தை அறிமுகப்படுத்தின. பெரும்பாலும் அவை ஏழைகள், அநாதைகள் முதலிய குழந்தைகளையே பள்ளியில் சேர்த்தன. எனவே அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடக் கூடாது என்பதற்கும் தொண்டுக்கான அடையாளமாகவும்தான் சீருடை உருவானது.

சீருடையின் முக்கியத்துவத்துக்காக போராடி உயிரை விடத் தயாராக இருக்கும் சங்கிகள், அந்தச் சீருடை முறைக்கே கிறிஸ்துவத் தொண்டு நிறுவனம்தான் தொடக்கம் எனத் தெரிந்தால் யார் தொண்டையைக் கடிப்பார்களோ?

அடையாளமாக சீருடை மாறியதன் விளைவாகத்தான் கல்வித்தளங்கள் மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் அது வந்தது. காலவோட்டத்தில் மேலாண்மை பொறுப்புகளுக்கு சீருடை விலக்கு அளிக்கப்பட்டு, பிறகு அது பிற நிலைகளுக்கும் தொடர்ந்து, சீருடை என்கிற வழக்கம் இன்று நிறுவனங்களில் இல்லாமல் போய்விட்டது. எனினும் formals-தான் அணிய வேண்டும் என்பது போன்ற வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

அடையாளமாகத் தொடங்கிய சீருடை வழக்கம் அடுத்து ஒரு முக்கியமான இடத்தை அடைந்தது. Conformity! ஒரு இடத்தில் இருக்கும் விதிகளுக்கு அடிபணிந்து போகும் தன்மை. அதாவது விதி என்பதாலேயே அது எத்தகையதாக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம்! இந்த இடத்தில்தான் ஆதிக்கம்-அடக்குமுறை என்பதற்கான ஆரம்பப் புள்ளி உருவாக்கப்படுகிறது. அரசின் ஆதிக்கத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக கேள்வி எழுப்பாமல் அடங்கிப் போகும் தன்மை குடும்பத்தைத் தாண்டி உருவாக்கப்படுவது முதலில் பள்ளிகளில்தான்.

எனவேதான் பள்ளி மாணவர்கள் சீருடையை ‘Tuck In’ செய்யாமல் செல்வதையும் தலையைக் கலைத்துக் கொள்வதையும் பள்ளி நிர்வாகத்துக்கு எதிரான புரட்சி நடவடிக்கையாக மேற்கொள்ளும் உளநிலை மாணவர்களிடம் உருவாகிறது. எத்தகைய ஒடுக்குமுறை, ஆதிக்கம், நிர்பந்தம் இருந்தாலும் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கை இருந்தே தீரும்.

‘அனைவரும் ஒன்று என்பதற்கே சீருடை. பிறகு ஏன் ஹிஜாப்’ என்கின்றனர் சங்கிகள். ‘சரிதானே’ என லிபரல்கள் ஆமோதிக்கின்றனர். லிபரல்கள் பாவம், அறிவில்லாதவர்கள். சங்கிகளோ அறிவை நிராகரிப்பவர்கள். மேற்கண்ட அறிவுஜீவித்தனத்துக்கு இரையாகக் கூடிய வெகுமக்கள் இருக்கின்றனர். அவர்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்.

சாதிக் கயிறு பழக்கம் எங்கிருக்கிறது, கல்வித்தளத்தில்தானே? திருநீறு, குங்குமம் வைக்காத ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் உண்டா? பள்ளிப் பாடங்களில் எத்தனை இந்து மதக் கடவுளர் பாடல்களும் கலாசாரமும் இருக்கின்றன? திருவாசகம், கம்ப ராமாயணம், மகாபாரதம், தெனாலிராமன் கதைகள் என எத்தனை எத்தனை? சிறுபான்மையினருக்கு ஒப்புக்கென ஒரு ஒரு சீறாப்புராணம், ஒரு இயேசு காவியம் இருக்கும்.

படிக்க :

உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது

இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!

கடவுள் நம்பிக்கை மறுப்பு இருக்கலாம். ஆனால் எல்லா கடவுள் நம்பிக்கை மறுப்பும் ஒன்றல்ல. ஆதிக்கம் செலுத்தும் கடவுள் நம்பிக்கைக்கு, பிற கடவுளர் நம்பிக்கை எதிர்ப்பு ஆதரவாகவே நிற்கும்

எனவே எதுவும் பொதுவாக இருக்க முடியாது. நடுநிலையாகவும் யோசிக்க முடியாது. குறிப்பாக உரிமை என வரும்போது!

சமூகமே சமமற்று இருக்கும்போது நீதியில் சமத்துவம் எப்படி இருக்க முடியும்?
கல்வியே ஏற்றத்தாழ்வுடன் இருக்கும்போது கல்வித்தளத்தில் எப்படி நடுநிலை இருக்க முடியும்?

வழிபாட்டுத் தலமே தகர்க்கப்பட்ட நாட்டில் வழிபாட்டு உரிமை மட்டும் எப்படி நேர்கோட்டில் இருக்க முடியும்?

பார்ப்பனியம் ஆழமாக வேரூன்றியிருக்கும் நிலத்தில் பொதுத்தன்மை யாருக்கு ஆதரவாக சென்று முடியும்? பாசிசத்துக்கான பல்லக்கு தூக்கிகள்தான் மேலே சொன்ன பைனரித்தன்மையும் நடுநிலையும்.

எச்சரிக்கை.. எச்சரிக்கை!

முகநூலில் : ராஜசங்கீதன்

disclaimer

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2022 || அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் பிப்ரவரி – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்மாதம் புதிதாக சந்தா கொடுத்து வாசகர்களான அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
இந்த மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள் :
♣ பத்திரிகை செய்தி : மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
♣ தலையங்கம் : இந்தியக் குடியரசில் இருந்து இந்து ராஷ்டிரக் குடியரசை நோக்கி
♣ மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க-வும் காங்கிரசும் ஓரணி !
♣ ‘பாதுகாப்பு குறைபாடு’ கூச்சலுக்கு பின்னே பஞ்சாபை ஒடுக்கத் துடிக்கும் சதிகார நோக்கம் !
♣ “ட்ரேட்ஸ்” : காவி பாசிசத்தின் இணையப் படை !
♣ கர்நாடகா, திரிபுரா, அசாம்: பற்றிப் படந்து வரும் ‘இந்து ராஷ்டிர பேரபாயம்’! பாகம் 2
♣ காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !
♣ நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது !
♣ கேடி ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் : மோடியின் கிரிமினல் பிள்ளைகளை பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !
♣ ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும் ?
♣ பத்திரிகை செய்தி : பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை : தமிழ்நாட்டில் மதக்கலவர செய்ய முயலும் பாஜக குண்டர்களையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் கைது செய் ! பிஜேபி- ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை தடை செய் !
♣ ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு
♣ சங்கபரிவாரத்தின் அடுத்தகட்ட பாசிச நடவடிக்கை : ஆட்சிப் பணி விதிகள் திருத்தம்!
♣ இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள் போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம் !!
தவறாமல் வாங்கிப் படியுங்கள் !! சந்தா செலுத்துங்கள் !

தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது

டையில் மத அடையாளம் மட்டுமேதான் உள்ளதா? சாதி அடையாளம் இல்லையா? அடிப்படையில் உடை என்பது தனி மனிதர்களின் விருப்பம் சார்ந்தது. ஆண் ஆனாலும் பெண் ஆனாலும், அதைத் தாண்டி பேச வேண்டும் எனில், வாழும் பிரதேசம், தட்பவெப்பம், அதாவது குளிர் பிரதேசம், வெப்பப் பிரதேசம், இரண்டுக்கும் பொதுவான நிலையில் உள்ள பிரதேசங்கள் என இயற்கை சார்ந்து மனிதர்கள் தேர்வு செய்யும் அன்றாட வாழ்க்கை பயன்பாட்டு விசயங்களில் அடங்குபவைதான் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகள்.
இவை அடிப்படைத் தேவைகள் என்பதை தாண்டி காலப்போக்கில் மத அடையாளம் சார்ந்த விஷயங்களாகவும் மாறின. இந்தியாவில் இந்த அடிப்படை தேவைகள் சாதி அடையாளத்துடன் கூடிய பயன்பாட்டு விசயங்களாகவும் மாறி இருப்பதை மறுக்க முடியாது. இன்ன உணவு, இன்ன உடை, இன்ன இருப்பிடம் இன்ன மதத்துக்கு உரியது என்பதையும் தாண்டி இன்ன சாதிக்கு உரியது என்று அடையாள முத்திரை இடப்பட்டிருப்பது உண்மைதானே?
இதை விரிவாக பேச முடியும். முலைவரியில் இருந்து பேசலாம். அது வெறும் உடை சார்ந்த விசயமா? மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறி மதத்துடன் மட்டுமே அடையாளம் காணப்படுவது இல்லையே? அதற்குள் மத அடையாளத்தையும் தாண்டி சாதி அடையாளம் இல்லையா? மனிதர்கள் வசிக்கும் பகுதி எல்லாமே மனித வாழிடங்கள் என்ற பொதுவான வரையறைக்குள் வந்துவிடும் எனில் அக்ரஹராமும் சேரியும் மசூதி தெருவும் ஒன்றுதானா? வாழிடம் மட்டுமே எனில் சமத்துவபுரத்துக்கு அவசியம் வந்தது ஏன்? சாதி ஒழிப்பே நோக்கம் எனில் சமத்துவ புரங்களில் கணக்கெடுத்தால் உண்மை என்னவென்று தெரியும்.
படிக்க :
மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது
ஹிஜாப்?
ஹிஜாப் அணிகின்ற இசுலாமிய பெண்கள் இருக்கின்றார்கள், அணியாத இசுலாமிய பெண்களும் இருக்கின்றார்கள். இசுலாமிய குடும்பங்களில் இருந்து தொடங்குகிறது இந்த ஹிஜாப் அணிவதா வேண்டாமா என்பது.
உண்மையில் இது இஸ்லாமியப் பெண்களின் தனிப்பட்ட உரிமை மட்டுமேதானா? இஸ்லாமிய ஆண்களின் தலையீடோ கட்டாயமோ இதில் இல்லையா என்ற கேள்வி உள்ளது. விளக்கி சொல்லலாமா? ஒரு இஸ்லாமிய பெண் ஹிஜாப் அணிவது அவளது தனிப்பட்ட உரிமை அல்லது சவுகர்யம் சார்ந்தது மட்டுமேதானா? இதில் பெண்ணின் தந்தை அல்லது தாய், திருமணம் ஆன பின் கணவன் ஆகியோரின் தலையீடு இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது.
மத நம்பிக்கை உள்ள கணவன் மனைவியரிடையே கூட சரியான புரிதல் இருக்கும்பட்சத்தில் ஹிஜாப் அணிவது பெண்ணின் விருப்பத்திற்கு விட்டுவிடும் கணவர்களை என்னால் காட்ட முடியும். அணிவதும் அணியாமல் இருப்பதும் அவள் விருப்பம், அவள் சவுகர்யம் சார்ந்த தனிப்பட்ட விசயம் என்று அதில் தலையிடாமல் இருக்கும் கணவர்கள் உள்ளார்கள்.
அதிகம் பேசப்படாத உண்மை என்னவென்றால், வெயில் கொளுத்தும் ஊர்களில், குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் காற்றுப்புகாத புர்கா, ஹிஜாப் அணிவது பெண்ணுக்கு எத்தனை சவுகர்ய குறைச்சல் அல்லது அறிவார்ந்த செயலா என்பதுதான்.
இது ஒரு குறிப்பிட்ட மதத்தை அல்லது மத கலாச்சார எல்லையையும் தாண்டிய, பொதுவாக பெண்களின் மனநிலை அல்லது உரிமை சார்ந்த விடயம் எனில் உடையின் வடிவத்தையும் எந்த மாதிரி உடையை எங்கே அணிந்து கொள்வது என்று தேர்ந்தெடுக்கும் உரிமையும் மதங்களையும் சாதிகளையும் தாண்டி பொதுவான தளத்தில் பேச வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒரு பொருள்தான்.
சேலை என்பது பொதுவான உடை எனில் மடிசார் என்பது சாதியை அடையாளப்படுத்தும் உடை இல்லையா? ஹிஜாப் மதம் சார்ந்தது. கிறித்துவ மத அடையாளங்களுடன் கூடிய உடை இல்லையா? நீ இதை அணியாதே என்று யாருக்கு யார் உத்தரவு போட முடியும்?
உடை என்பதை பொது வெளியில் அணிகின்ற ஒரு கண்ணியமான ஆடை என்ற குறைந்தபட்ச புரிதலுடன்தான் என்னால் வரையறுக்க முடியும். இந்த குறைந்தபட்ச வரையறைக்குள்ளும் கூட பொருந்துகின்ற மத அடையாளங்களுடன் அல்லது எந்த ஒரு மத அடையாளமும் இல்லாமலும் இருக்கின்ற ஆடைகளை அணிந்துகொண்டுதான் இந்திய பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பொதுவெளியில் நடமாடிக்கொண்டு இருக்கின்றோம் என்பதையும் அதற்கான உரிமையை இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொருவருக்கும் வழங்கி இருக்கின்றது என்பதையும் வலுவாக சொல்ல வேண்டியுள்ளது.
மதசார்புள்ள நாடுகளிலும் கூட அங்கே வாழ்கின்ற மத சிறுபான்மை மக்களுக்கு அவர்களின் உடையை தேர்வு செய்யும் உரிமை வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவதில் நியாயம் இருக்கின்றது எனில் மதச்சார்பற்ற இந்திய சமூகத்தில் எந்த ஒரு மதத்தினரும் தமக்கான உடையை தான் சார்ந்துள்ள மத அடையாளத்துடன் தேர்வு செய்யும் உரிமை மட்டுமல்ல, எந்த அடையாளமும் இல்லாமலே தேர்வு செய்யும் உரிமையும் வேண்டும் என்பதே நியாயம்.
படிக்க :
குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
டெல்டாவில் துரிதப்படுத்தப்படும் சாதிய முனைவாக்கம்!
இப்போது கர்நாடகத்தில் நடப்பது இஸ்லாமிய பெண்களின் கலாச்சாரம் அல்லது இஸ்லாமிய மதத்தில் உள்ள நம்பிக்கைகளை ஆக்கப்பூர்வமான கேள்விக்கு அல்லது விவாதத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கை அல்ல. இது இந்திய வலதுசாரி இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து நடத்திவரும் மதவெறி அரசியலின் பகுதி.
காலங்காலமாக இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்தே வந்துள்ளார்கள், இதுவரை ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளது எனில், இப்போது கிளப்பிவிடப் பட்டுள்ள ஹிஜாப் விசயத்தை இஸ்லாமிய பெண்களின் உரிமை சார்ந்த விசயமாக பார்ப்பது அறிவுக்கு உகந்தது அல்ல, அப்படியான அணுகுமுறை இந்துத்துவா சக்திகளுக்கே உதவும். ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும் கூட, பிரச்சினை கிளப்பிவிடப் பட்டுள்ள இந்த இரண்டொரு நாட்களில் பிற சமூக மாணவர்கள் இதுவரை இல்லாத வழக்கமாக திடீரென காவித்துண்டு அணிந்து வந்தது அவரவர் விருப்பத்தின் பேரிலா அல்லது இந்துத்துவா வலதுசாரி இயக்கங்களின் தூண்டுதலின் பேரிலா என்ற கேள்வியை எழுப்பினால் உண்மையும் பின்னணியும் புரியும்.
நான் முதலில் குறிப்பிட்டது போல, உணவு உடை இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகள், இந்திய சமூகத்தில் மத சாதி அடையாளங்களுடன் உள்ளன என்பதிலும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதிலும் எனக்கு ஐயமில்லை. அது ஏதோ ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயம் அல்ல.

முகநூல் : மு இக்பால் அகமது
disclaimer

நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்

ழி பதிப்பகம் அரசியல் ரீதியாக தொடர்ந்து முக்கியமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா கமிஷனின் அறிக்கை, எல்லா இடங்களிலுமே காணாமல் போன நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் செழியனிடமிருந்த ஒரு பிரதியைப் பெற்று, அதனைப் பதிப்பித்தார் செந்தில்நாதன். தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே அந்தப் பதிப்பு மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.
இப்போது மீண்டும் ஒரு முக்கியமான பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறது ஆழி. இந்தியாவில் மாநில சுயாட்சி குறித்தும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் உள்ள உறவுகள் குறித்தும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் நிலவும் நிலைமையை மேம்படுத்துதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது பி.வி. ராஜமன்னார் குழு. அந்தக் குழு அளித்த பரிந்துரைகள், அது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதையொட்டி நடந்த விவாதங்கள் இந்தப் புத்தகத்தில் முழுமையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
1969ல் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தில்லிக்கு சென்ற மு. கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “மாநில சுயாட்சி குறித்து அறிந்து விரிவான அறிக்கையை வழங்கக்கூடிய அளவில் ஒரு குழுவை அமைக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
படிக்க :
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
நூல் அறிமுகம் : 1947 || ச. தமிழ்ச்செல்வன் || சு. கருப்பையா
இதற்குப் பிறகு, 1969ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி இது குறித்த அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.வி. ராஜமன்னார் தலைமையில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார், நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆய்வுகளை நடத்தி, பல்வேறு கட்சிகள், பல்வேறு தரப்பினரிடம் கேள்வித் தாளை அனுப்பி பதிலைப் பெற்று தனது அறிக்கையை தொகுத்தது. இந்த அறிக்கை 1971 மே 27ஆம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, இந்தப் பரிந்துரைகள் செழியன், முரசொலி மாறன் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த அறிக்கையில் சாத்தியமான விஷயங்கள் தொகுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இது தொடர்பான தீர்மானம் 1974 ஏப்ரலில் சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டது.
இதற்குப் பிறகு, முதலமைச்சர் மு. கருணாநிதி நீண்ட உரையை ஆற்றினார். இதற்குப் பிறகு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அவ்வப்போது குறுக்கிட்டு, முதலமைச்சர் பதிலளித்தார். இவையனைத்தும் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்திற்கு ஒரு அணிந்துரையை கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அந்த அணிந்துரையில், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் மாநில அதிகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக செய்யப்பட்ட முயற்சிகள் குறித்து ஒரு விரிவான பட்டியலைத் தந்திருக்கிறார். இது தொடர்பாக தமிழில் வெளியான புத்தகங்களின் பட்டியலையும் தந்திருக்கிறார். அந்த வகையில் மிக முக்கியமான கட்டுரை அது.
இதற்கான அறிமுகவுரையை ஆழி செந்தில்நாதன் எழுதியிருக்கிறார். இப்படி ஒரு விரிவான நூலின் சாரத்தை மிகக் கச்சிதமாகத் தொகுத்து அந்த அறிமுகவுரையில் தந்திருக்கிறார் செந்தில்நாதன்.
தமிழ்நாடு வரலாற்றில் ஆர்வமுடைய யாருக்கும் இது ஒரு முக்கியமான ஆய்வு நூல். இதுபோன்ற தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட பல ஆணையங்களின் பரிந்துரைகள் புத்தகமாகக் கிடைக்கும்போது, அரசியல் விவாதங்களின் தரம் மேம்படும். அரசியல் விவாதங்களில் ஆர்வமுடையோர், பத்திரிகையாளர்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய புத்தகம்.
1974 : மாநில சுயாட்சி
வெளியீடு: ஆழி பதிப்பகம், 5, கலைஞர் கருணாநிதி சாலை,
காவேரி ரங்கன் நகர், சாலி கிராமம், சென்னை – 93.
விலை: ரூ. 1000/-
நூல் வாங்க : 97150 89690
முகநூலில் அறிமுகம் : K.Muralidharan
disclaimer

நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!

03.02.2022
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின்,
பாசிச மோடி அரசின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
பத்திரிகை செய்தி
ட்டுக்கு தாடியும் மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையில்லாத ஒன்று என்றார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கும் நீட்டுக்கு எதிராக தமிழகமே ஓரணியில் திரள்கிறது. ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி, கிருஷ்ணசாமி போன்ற எதிரிகள் மற்றும் துரோகிகளை தவிர வேறு யாரும் வெளிப்படையாக நீட்டுக்கு ஆதரவாக பேச முடியாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் போராடி வந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா  நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
படிக்க :

‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !

அதன் மீது நீட் தேர்வு, மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு முடியும் வரை எந்த பதிலும் சொல்லாமல் இருந்த ஆளுநர் ரவி, தற்பொழுது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்ற ஒரு கருத்தை கூறி சட்ட மசோதாவை அனுப்பியுள்ளார்.
மக்களால், மக்களே தெரிவுசெய்யப்பட்டு நடத்தப்படும் ஆட்சி, மக்களாட்சி என்பதெல்லாம் பொய் என்பதை மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்களை ஆளுநர் மூலம் இணை ஆட்சி நடத்துவது தான் பாசிச மோடி அரசின் நோக்கம். அதையே இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி மாநில அரசுகளை செயல்படாமல் செய்தும் வருகின்றனர்.
நீட் தேர்வினால் தற்கொலை செய்து இறந்துபோனவர்கள் பலர், தங்கள் மருத்துவ கனவை கைவிட்டோர் ஏராளம். இப்படி மாணவர்களின் மருத்துவக் கனவை சூறையாடிய நீட்டுக்கு ஆதரவாக தான் ஒன்றிய அரசும் ஆளுநரும் செயல்படுகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களும் எதிர்க்கும் ஒன்றை, மாநில சட்டமன்றம் எதிர்க்கும் ஒன்றை ஆளுநரால் திணிக்க முடியும் என்றால் இதற்குப் பெயர்தான் மானங்கெட்ட மக்களாட்சியா?
தமிழ்நாட்டு மக்களின் உணர்வையும் உரிமையையும் மறுக்கும் ஒரு நபருக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் எதற்காக கொடுக்க வேண்டும்?
முன்னாள் போலீஸ் அதிகாரியான ரவி, ஆளுநராக இருந்து தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக காவல் கொட்டடியில் அடைக்கப் பார்க்கிறார். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தமிழகத்தில் அலைஅலையாய் எழ வேண்டும். அந்த நீட் எதிர்ப்பு அலையில் ஆளுநர் ரவி மட்டுமல்ல, பாசிச மோடி அரசின் கொட்டமும் ஒடுக்கப்பட வேண்டும்.
தோழமையுடன்,

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை
99623 66321.