Tuesday, June 30, 2026
முகப்பு பதிவு பக்கம் 303

“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !

1

ந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றிக்கொண்டிருக்கும் பாஜக அரசு, அரசமைப்பின் எல்லா பிரிவுகளையும் தன்னுடைய ஊதுகுழல்களாக மாற்றிவருகிறது. இராணுவத் தளபதி, தனது பதவிக்குரிய ‘மாண்பையும்’, அதிகார எல்லையையும் மீறி நடந்துவரும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசால் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆரிஃப் முகமதுகானும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான்.

அண்மையில் கேரள மாநிலத்தில் உள்ள, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த ‘இந்திய வரலாறு கூட்டமைப்பின்’ 80-வது நிகழ்வில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்று துறை பேராசிரியர் இர்பான் ஹபீப், எம்.பியும் பல்கலை சிண்டிகேட் உறுப்பினருமான பிஜு கண்டக்காய், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கே.கே. ராகேஷ் போன்றோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பிஜு கண்டக்காய், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடந்துவரும் போராட்டங்கள் குறித்து பேசினார். கே.கே. ராகேஷும் இதுகுறித்து பேசினார். ஆனால், இவர் ஆங்கிலத்தில் பேசியதால், உடனடியாக கவனம் பெற்ற ஆளுநர், ராகேஷின் பேச்சை குறிப்பெடுத்துக்கொண்டார்.

இந்திய வரலாற்று கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர். அமியா பாக்சி பேசி முடித்த பின்னர் ஆளுநர் பேசத்தொடங்கினார். முதலில் தனக்கு முன் பேசியவர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் ராகேஷுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுவதாக கூறினார்.

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசத் தொடங்கினார். அதற்கு கூட்டத்தில் இருந்த சில பங்கேற்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். இது குறித்து விவாதிக்க ஆளுநர் அழைத்தபோது, பதாகைகள் மூலம் இரு பெண்கள் அழைப்பை நிராகரிப்பதாக தெரிவித்தனர். ஜனநாயகப்படி போராடுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என ஆளுநர் சொன்னபோது, கேரள போலீசு அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பார்த்தது.

படிக்க :
வீதி தோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் !
♦ இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

அதோடு, ஜே.என்.யூ., அலிகர், டெல்லி, ஜாமியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பலர் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அலிகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த பேராசிரியர் ஒருவரையும் வெளியேற்ற முயற்சித்தது போலீசு.

இந்த நிலையில் ஆளுநர் தனது உரையில் மவுலானா ஆசாத் மேற்கோளை சுட்டிக்காட்டி பேசிய போது அரங்கில் எதிர்ப்பு குரல்கள் வலுவாக எழுந்தன.

“பிரிவினை சில அழுக்குகளை எடுத்துச் சென்றது. அதில் சில குழிகள் அப்படியே விடப்பட்டன. அதில் இப்போது தண்ணீர் சேகரமாகி, துர்நாற்றம் வீசுகிறது.” என்ற ஆளுநர், போராட்டக்காரர்களைப் பார்த்து “நீங்கள் துர்நாற்றம் வீசுகிறீர்கள். மவுலானா ஆசாத் உங்களுக்காகத்தான் இதைச் சொன்னார்” என்றார்.

மேடையில் தடுத்து நிறுத்தப்படும் வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப்.

அதுவரை ஆளுநரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் இர்பான் ஹபீப் எழுந்து நின்று,“மவுலானா ஆசாத் அல்லது காந்தியை விட நாதுராம் கோட்சேவை மேற்கோள் காட்டுங்கள்” எனக் கூறினார்.

ஆளுநர் மவுலானா ஆசாத்தை மேற்கோள் காட்டிய உடனேயே மேடையில் என்ன நடந்தது என்பதை அலிகார் வரலாறு மற்றும் தொல்லியல் சமூகம் தனது செய்திக்குறிப்பில் இப்படி கூறுகிறது:

“ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியவுடன், இந்திய வரலாற்று கூட்டமைப்பின் தலைவராக உள்ள பேராசிரியர் இர்பான் ஹபீப் தனது இருக்கையில் இருந்து எழுந்து கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரனிடம் சென்று, ‘வரலாற்று கூட்டமைப்பின் அரங்கத்தை ஆளுநர் தனது அரசியல் அரங்கமாக மாற்றுவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்’. பேராசிரியர் ஹபீப் அங்கு சென்றவுடன், கூடுதல் துணை ஆட்சியரும் ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியும் அவரைத் தள்ளி அவரைத் தடுக்க முயன்றனர். ஆளுநரும் தான் பேசுவதை ஹபீப் தடுக்க முயன்றதாக குற்றம் சாட்டத் தொடங்கினார்.”

உலகளவில் புகழ்பெற்ற மூத்த வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீபை மரியாதைக்குறைவான முறையில் பாதுகாப்பு அதிகாரிகள் கையாண்ட நிலையில், தன் பேச்சை ஹபீப் தடுக்க முயன்றதாக தனது ட்விட்டர் மூலம் பரப்பத் தொடங்கினார் கேரள ஆளுநர்.

அப்போது மேடையில் இருந்த கந்தக்காய், “பேராசிரியர் ஹபீப் ஆளுநர் உரை நிகழ்த்துவதை தடுக்கவில்லை; உடல் ரீதியாகவும் தடுக்கவில்லை, ஆனால் அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்” என கூறுகிறார்.

ஆளுநரேகூட உரையை குறுக்கிட்டார் என்றுதான் கூறினார். ஆனால், வட இந்திய ஊடகங்கள் ஹபீப், ஆளுநருக்கு சவால் விடுத்ததாக இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டன.

பின்னர் ஊடகங்களிடம் நடந்ததை தெளிவுபடுத்திய வரலாற்றாசிரியர், “ஆரிஃப் முகமது கான் சொல்வதைப் பொருட்படுத்தவில்லை. அலிகரில் இருந்த நாட்களில் இருந்தே நான் அவரை அறிந்திருக்கிறேன். ஆனால், காவல்துறையின் நடவடிக்கைதான் எனக்கு கவலையளிக்கிறது, அதுவும் ஒரு கம்யூனிச அரசாங்கத்தின் கீழ் இப்படியா..” என்று அவர் கூறினார். மேலும், எதிர்ப்பாளர்கள் அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டு பேசினார் அவர்.

நாடே பாசிசமயமாகிவரும் நிலையில், கம்யூனிஸ்ட் அரசாங்கம் என சொல்லிக் கொண்டாலும் அதன் கீழ் இயங்கும் போலீசும்கூட காவி அரசுக்கு கட்டுப்பட்டதே. ஆளுநர் முசுலீம் பெயரில் உள்ள ஒரு காவி என்பதும் அவர் நியமனத்தின்போதே தெரியவந்த விசயம். கர்நாடகத்தில் வீதிக்கு வந்து போராடிய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவை மிக மோசமாக நடத்தியது கர்நாடக போலீசு.

இப்போது மதிப்பிற்குரிய வரலாற்றாசிரியரான இர்பான் ஹபீப் மோசமாக நடத்தப்பட்டுள்ளார். இந்திய வரலாற்றில் மிக மோசமான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.


கலைமதி
செய்தி ஆதாரம் :  தி வயர். 

குடியுரிமை சட்டம் : புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

  • NRC – CAA – NRP-க்கு எதிரான நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல் ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் கைது !
  • கைது செய்யப்பட்ட தோழர் செழியன் அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் !

ன்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்.-க்கு எதிராக வீடுகளில் கோலமிடவேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிராக புத்தாண்டு தினத்தில் இந்தியா முழுவதும் மக்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

போலிசால் கைது செய்யப்பட்ட தோழர் செழியன்.

இந்நிலையில் திருச்சியில் மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில்; என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்-க்கு எதிரான நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல் ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் இன்று காலை 10 மணிக்கு அவரது வீட்டில் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த புத்தாண்டு கொண்டாட்டம் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிரான எரிமலையாகவே இருக்கும். அடக்குமுறைகளால் போராட்டங்களை தடுக்க முடியாது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

பின்குறிப்பு: புதுப்பிக்கப்பட்ட நேரம் காலை 6 மணி, 1.1.20

பொது அமைதியை கெடுத்தது CAA – NRC – NPR போன்றவையா?
மக்கள் அதிகாரம் அமைப்பா?

CAA – NRC – NPR க்கு எதிராக புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததற்காக கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் விடுவிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தோழர் செழியனை பல இடங்களில் அலைக்கழித்து கண்டோன்மெண்ட் போலீசு நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவரிடம் சொந்த ஊர், மனைவி பேர், மாமனார் பெயர் என்றெல்லாம் விசாரித்து விட்டு கிரிமினல் போல விசாரிக்க வேண்டிய நிலைவரும் என்று கண்டோன்மெண்ட் ஏ.சி மிரட்டியுள்ளார்.

டாஸ்மாக் சரக்கை சைடில் விற்பவர்களுக்கும் மணற்கொள்ளையர்களுக்கும் ஆதரவாக இருக்கும் போலீசு, மக்களை பிளக்காதே என்பவர்களை கிரிமினல் போல டீல் செய்யுமாம்.

போலீசின் அச்சுறுதல்களுக்கு உறுதியாக எதிர்வினையாற்றிய செழியன் இன்று மாலை 4.30 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடன் வேண்டுமென்றே நிந்தித்தல், பொது அழிம்புக்கு ஏதுவாகிற உரைகள் ஆகிய குற்றங்கள் செய்ததாக கூறி 504, 505(i)(ii)(iii) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்

ங்கிலம், ஜெர்மன், இத்தாலியம், பிரெஞ்சு, ஸ்பானியம், போர்ச்சுகீசியம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள மார்செல்லோ முஸ்ட்டோ (1972-இல் இத்தாலியில் பிறந்தவர்), தற்போது கனடாவின் டொரோன்டோ நகரிலுள்ள யோர்க் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் தத்துவம் கற்பித்து வருகிறார். கார்ல் மார்க்ஸின் சிந்தனையையும் அதன் இன்றைய பொருத்தப்பாட்டையும் மையப்படுத்தி எழுதிவரும் அவரது நூல்களும், கட்டுரைகளும், நேர்காணல்களும் உலகம் முழுவதிலும் இதுவரை 20 மொழிகளில் வெளிவந்துள்ளன.

The Last marx (1881-1883) : An Intellecutal Biography என்னும் அவரது நூல் 2016-இல் முதன் முதலில் இத்தாலிய மொழியில் வெளியிடப் பட்டு, அண்மையில் மூன்றாவது பதிப்பைக் கண்டுள்ளது. மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளையொட்டி தமிழ், சீன, ஜப்பானிய, கொரிய, ஜெர்மன், போர்ச்சுகீசிய மொழிகளில் வெளிவரும் இந்த நூல், சற்று விரிவுபடுத்தப்பட்ட வடிவத்தில் அடுத்த சில மாதங்களில் ஆங்கில, பிரெஞ்சு மொழிகளிலும் வெளியிடப்படும். (நூலாசிரியர் பற்றிய குறிப்பிலிருந்து …)

2008-இல் முதலாளியம் மிக அண்மைய நெருக்கடியைச் சந்தித்ததிலிருந்து, கார்ல் மார்க்ஸ் புதுப் பொலிவுடன் திரும்பி வந்துள்ளார். பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதற்குப் பிறகு இடைவிடாமல் பறக்கணிக்கப்பட்டு வந்தார். அந்தத் தகர்வுக்குப் பிறகு சொல்லப் பட்டு வந்த ஆரூடங்களுக்கு நேர்மாறாக, மார்க்ஸின் கருத்துகள் மீண்டும் பகுப்பாய்வுக்கும் வளர்த்தெடுத்தலுக்கும் விவாதத்துக்குமான பொருளாகியுள்ளது. ‘நடைமுறையில் நிலவிக் கொண்டிருக்கின்ற சோசலிசத்துடன் அடிக்கடித் தவறாக அடையாளப்படுத்தப்பட்டு வந்தவரும் 1989-க்குப் பிறகு உதறியெறியப்பட்டவருமான ஒரு சிந்தனையாளரைப் பற்றிப் பலரும் புதிய கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

பரந்து விரிந்த வாசகர்களைக் கொண்டுள்ள செல்வாக்கு மிக்க செய்திப் பத்திரிகைகளும் ஏடுகளும் இக்காலத்துக்கு மிகவும் பொருத்தப்பாடுடைய, தொலை நோக்குடைய கோட்பாட்டாளர் என்று அவரைச் சித்திரித்துள்ளன. கிட்டத்தட்ட உலகின் எல்லா இடங்களிலுமே அவர் இப்போது பல்கலைக்கழகப் பாடங்களில் கற்பிக்கப்படுகிறார்; சர்வதேச மாநாடுகளில் விவாதிக்கப்படுகிறார்; மறு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ள அல்லது புதிய பதிப்புகளில் கொண்டு வரப் பட்டுள்ள அவரது எழுத்துகள் புத்தக விற்பனை நிலைய அலமாரிகளில் மீண்டும் காட்சியளிக்கின்றன; அவரது படைப்புகளைப் பற்றிய ஆய்வு, இருபது அல்லது அதற்கும் கூடுதலான ஆண்டுகளாகப் புறக்கணிக்கப் பட்டு வந்த நிலை மாறி, இப்போது அது மிகப் பெருமளவுக்கு வலுப் பெற்று வருவதுடன், பிற ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைகின்ற முக்கியமான விளைவுகளைச் சில சமயம் உருவாக்கி வருகின்றது.

… மாறிய அரசியல் நிலைமைகளோடு சேர்ந்து ஆராய்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் மார்க்ஸின் சிந்தனையைப் பற்றிய விளக்கம் புதுப்பிக்கப்பட்டு வருவது தவிர்க்க முடியாதபடி தொடர்ந்து நீடிக்கத்தான் செய்யும். மார்க்ஸின் சிந்தனை மீதான இந்த அக்கறை அவரின் கடைசிக் காலத்தில் கோட்பாடுகள் தொடர்பாக அவர் மேற்கொண்ட விளக்கங்கள், விரிவாக்கங்கள் ஆகியன மீது குவியும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

மார்க்ஸின் அறிவு வளர்ச்சி பற்றிய ஆய்வாக எழுதப்பட்டுள்ள இந்த நூலை அடுத்தும் இதனை முழுமைப்படுத்தும் விதமாகவும் மார்க்ஸின் சிந்தனையைப் பற்றிய கோட்பாட்டு ஆய்வைப் பிரத்யேகமாகச் செய்யும் நூலொன்றும் வெளிவரவுள்ளது.

மார்க்ஸின் கடைசி ஆண்டுகளில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் ஓய்ந்து விட்டது என்றும், அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்றும் சொல்லும் கட்டுக்கதையை அந்த ஆண்டுகளில் அவர் எழுதிய கையெழுத்துப்படிகள் தகர்த்தெறிகின்றன. உண்மையில், அவர் தொடர்ந்து தமது ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்ததுடன் அதனை புதிய அறிவுத் துறைகளுக்கும் விரிவுபடுத்தியிருந்தார்.

மானுடவியலில் கிடைக்கப்பெற்ற புதிய கண்டு பிடிப்புகள், முதலாளியத்துக்கு முந்திய சமுதாயங்களில் இருந்த கூட்டு உடைமை வடிவங்கள், ரஷியாவில் பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகு அங்கு ஏற்பட்ட மாற்றங்கள், நவீன அரசின் பிறப்பு ஆகியன பற்றிய ஆழமான ஆய்வினை 1881, 1882 -ம் ஆண்டுகளில் மார்க்ஸ் செய்தார். அயர்லாந்து விடுதலைப் போராட்டத்துக்கான அவரது உறுதியான ஆதரவு, இந்தியா, எகிப்து, அல்ஜீரியா ஆகியவற்றில் இருந்த காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் காட்டிய உறுதியான எதிர்ப்பு ஆகியவற்றை அவரது கடிதங்களிலிருந்து அறிய முடிவதுடன் சர்வதேச அரசியலில் ஏற்பட்டு வந்த முக்கிய நிகழ்வுகளை அவர் உன்னிப்பாக அவதானித்து வந்தார் என்பதும் தெரிய வருகிறது. ஐரோப்பிய வரலாற்றுப் போக்குகளை மையப்படுத்தி மட்டும் அவர் பார்த்தார் என்றோ, பொருளாதார அடித்தளம்தான் அனைத்தையும் நிர்ணயிக்கிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார் என்றோ, வர்க்கப் போராட்டம் என்பதைக் குறித்து மட்டுமே அக்கறை கொண்டிருந்தார் என்றோ கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது கண்கூடு.

புதிய அரசியல் முரண்பாடுகள், புதிய விஷயங்கள், புதிய புவிப் பிரதேசங்கள் ஆகியன பற்றிய ஆய்வு முதலாளிய அமைப்பைப் பற்றி தாம் தொடர்ந்து மேற்கொண்டு வந்த விமர்சனப் பகுப்பாய்வுக்கு அடிப்படையானது என்று மார்க்ஸ் கருதினார். இது பல்வேறு நாடுகளிலும் அவற்றுக்கே உரிய தனித்தன்மையைப் பார்க்கவும், சோசலிசத்தை அடைவது பற்றி அவர் முன்பு வளர்த்தெடுத்திருந்த அணுகுமுறையிலிருந்து வேறுபட்ட அணுகுமுறைக்கான சாத்தியப் பாட்டைப் பரிசீலிக்கவும் உதவியது. (நூலிலிருந்து பக்.7-9)

தமது படைப்புகளில் மார்க்ஸ், உலகமனைத்திற்கும் பொருந்தக் கூடியது என்று சோசலிச சமுதாய முன்மாதிரி எதனையும் ஆலோசனை பார்க்க கூறக்கூடிய விதிமுறைகளைச் சொல்வதை எச்சரிக்கையுடன்  தவிர்த்தார். அவை பயனற்றவை என்றும், விரும்பக்கூடிய விளைவுக்கு நேர் எதிரானதை உருவாக்குபவை என்றும் கருதினார். அதனால்தான் மூலதனம் நூலின் இரண்டாவது ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய பின்னுரையில் ‘வருங்கால உணவகங்களுக்கு சமையல் குறிப்புகள் எழுதிவைப்பது தமது அக்கறைகளிலொன்றல்ல என்று கூறினார்.  ஜெர்மன் பொருளாதாரவாதி அடோல்ஃப் வேக்னர் (Adolph Wagner [1835-1917]) செய்த விமர்சனங்களுக்குப் பதில் கூறும் முகமாக ஆணித்தரமாகக் கூறினார்:  ‘சோசலிச அமைப்பு எதனையும் நான் ஒருபோதும் நிறுவியதில்லை ‘.

படிக்க :
மூலதனம் நூலின் அனைத்து பாகங்களும் – PDF வடிவில் !
CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !

சோசலிசம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லும் விருப்பத்தை அவர் ஒரு போதும் கொண்டிருக்காதது போலவே, முதலாளிய சமுதாயங்களைப் பற்றிய தமது சிந்தனை களில், மனித குலம் உலகின் எல்லா இடங்களிலும் ஒரே பாதையில்தான், ஒரேமாதிரியான வளர்ச்சிக் கட்டங்களூடேதான் சென்றாக வேண்டும் என்று அவர் அறுதியிட்டதும் இல்லை . இருப்பினும் அவர் தாம் கூறியதாகச் சொல்லப்பட்ட ஒரு கருத்துரையை எதிர்கொள்ள வேண்டியவரானார். அதாவது எல்லா இடங்களிலும் பூர்ஷ்வா பொருளுற்பத்தி முறை வரலாற்றுரீதியாகத் தவிர்க்கமுடியாதது ஆகும் என்னும் கருத்துரைதான் அது. ரஷியாவில் எதிர்காலத்தில் முதலாளியம் வளர்ச்சியடைவதற்கான சாத்தியப்பாடு பற்றிய விவாதம் மார்க்ஸின் நிலைப்பாட்டுக்கான தெளிவான சான்றை வழங்குகிறது. (நூலிலிருந்து பக்.103)

நூல் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-1883)
ஆசிரியர் : மார்செல்லோ முஸ்ட்டோ
தமிழில் : எஸ்.வி.ராஜதுரை

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 238
விலை: ரூ 210.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam | ncbh publisher | periyar books

வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை

வாகனங்களில் சுங்கச் சாவடிகளைக் கடப்பவர்கள் எல்லோரும், திடீரென யாரோ தங்களை உலுக்கியதைப் போல் ஒரு விழிப்புணர்வு நிலைக்கு உள்ளாவார்கள். தெருக்களில் கூவி விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப் போல் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் சிறு வியாபாரிகளின் ஓயாத குரல்கள் காதைத் துளைக்கும்.

பொருட்களைப் பார்த்தாலே போதும், அது பயணிகளின் மடியில் வந்து விழும். அது வேண்டும் என்று கேட்க வேண்டியதில்லை, மல்லுகட்டி பேரம் பேசவேண்டியதில்லை. அவித்த வேர்க்கடலை, பிஞ்சு வெள்ளரி, காரம், சிப்ஸ், நொறுக்குத் தீனிகள்; வெயிலுக்கு மோர், தர்ப்பூசணி…. அந்த லிஸ்டில் இப்போது பலவண்ணக் குடைகள். ரூபாய் 100, 150, 200 என்று அளவுக்கேற்ற விலைகள்.

சுங்கச்சாவடியை நாம் கடக்கும்போது, “சார் குடை வேணுமா? எடுத்துக்குங்கோ. பேபி குடை, பேமிலி குடை, லேடீஸ் குடை, தாத்தா குடை…. விதவிதமான கலர் சார். 3D கலர், ரெயின்போ கலர், செக்டு, பிளைன் சார்” என்று பின்னாலேயே ஓடிவந்தார்கள், வடநாட்டு இளம் தொழிலாளர்கள்.

திரும்பிப் பார்த்தால், நாலாபுறமும் குடைகளால் மூடியது போல் வடநாட்டு இளைஞர்கள். நிற்கும் எல்லா வாகனங்களையும் நோக்கி குடையுடன் ஓடிக்கொண்டிருந்தார்கள். அதில் இளம் பெண் தொழிலாளர்களும் உண்டு. அவர்களை அணுகி, அவர்கள் வாழ்க்கையைப் பற்றி வேறு வேறு கேள்விகளைக் கேட்டாலும் அதில் அவர்களுக்கு அக்கறையில்லை. குடையைப் பற்றி 10 வார்த்தைகள் மட்டும் உள்ளீடு செய்வது போல் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

படிக்க:
♦ சிலியின் வசந்தம் !
♦ ஜனவரி 8 – 2020 வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !

இந்த மொத்த வியாபாரக் காட்சிக்கும் உயிர், அதிகம் போனால் 3 நிமிடம் மட்டுமே. அடுத்தடுத்து பயணிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். சுங்கச்சாவடியில் டிராஃபிக் கிளியராகி வண்டிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். அதற்குள் வியாபாரம் முடித்து பண்ட பரிவர்த்தனை நடக்க வேண்டும். பணம் இவர்கள் கைக்கு, குடை அவர்கள் கைக்கு.

வியாபாரத்தை வெற்றிகரமாக முடிப்பது, சாலை விபத்தில் தப்பிப்பது மாதிரிதான். அது ஒரு மேஜிக்.

இவர்களை விட்டு விலகி அங்கேயே சாலையோரத்தில் குடைகளைச் சாத்தி வைத்துவிட்டு உட்கார்ந்தபடி வியாபாரம் செய்த தொழிலாளர்களை அனுகினோம்.

அய்லு, தெலுங்கு

சொந்த ஊரு ரேணிகுண்டா. இப்போ மெட்ராஸ் பெரம்பூர்லதான் தங்கியிருக்கேன். சாப்பாடு எல்லாம் இங்கேதான், பொட்டலம் சோறு. வீட்டுல செஞ்சி எடுத்துவர நேரமில்லை. கார்ல போரவங்க வர்றவங்க சில பேரு இந்த குடையை வாங்குவாங்க. இதுல செலவுக்கு 300 கெடச்சா போதும். சரக்கெல்லாம் பேரிசுக்கு போயி வாங்குவோம். மழை, வெயிலுன்னா இங்கேயே ஓரமா ஒதுங்கிக்குவோம். பசங்களும் அந்த டோல்கேட்டுல வியாபாரம் செய்யிது என்றார்.

அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, குடை விலையை விசாரித்தார், ஐயப்பன் மாலை போட்ட கேப் டிரைவர்.

300, 200 என்று விலையைச் சொல்ல அவர் தடலடியாக 75 ரூபாய் வருமா? 80 ரூபாய் வருமா? என்றார். என்ன கேட்கிறே சார்? என்று அய்லு அவரை பரிதாபமாகப் பார்க்க, விலை கேட்ட டிரைவரை நாம் கோபமாக, இப்படியா விலை கேட்பது என்றோம்.

அதற்கு அவர் ரெடிமேட் பதிலை தந்தார். அப்படி கேட்டாத்தான் 150 ரூபாய்க்கு கொடுப்பாங்க. கொஞ்சம் அசந்தாலும் நம்மல ஏமாத்திடுவாங்க என்று கூறியபடி நகர்ந்தார்.

***

ராஜி, ஆட்டோ டிரைவர்.

உடம்பு முடியாதபோது சீசன் வியாபாரம் இப்படி உட்கார்ந்தது மாதிரி செய்வேன். இப்போ குடை போட்டிருக்கேன். சுமாரா போகுது. சரியா போகலன்னா அத ஓரங்கட்டிட்டு ஆட்டோ ஓட்ட ஆரம்பிப்பேன். இதுக்கு முன்னே கார் டஸ்டர், மொபைல் ஸ்டேண்ட் போட்டு வித்தேன். அது கொஞ்சம் போச்சு.

காலத்துக்கு ஏத்த பிசினஸ் ஏதாவது பன்னணும். ஒரே தொழில் பண்ணினா பொழக்க முடியாது. எது போட்டாலும் பளிச் பளிச்சுனு பார்த்து வாங்கிப் போடுவேன். வாங்குறவங்களுக்கும் சரக்க உடனே புடிக்கணும். அப்பத்தான் போட்டியில நிக்க முடியும்.

படிக்க:
♦ உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?
♦ அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை

***

நாராயணன்

இளம் வயது, நொடிந்த தேகம். வாய்முழுக்க பான்பராக். மஞ்சள் காமாலை நோய் கண்டது போல் கண்கள். அரைமயக்கப் பார்வை. முதுகிலிருக்கும் பைதான் அவரது நடமாடும் கடை.

குழந்தைகள் விளையாடும் அட்டை வீடு, விளையாட்டு மேஜிக் போர்டுகள் என்று பல பொருட்களை வைத்திருந்தார். ஒன்று 50 ரூபாய். ஓடி ஓடி கார் கண்ணாடிகளில் காண்பித்து, ஃபிப்டி என்று கையால் சைகை காண்பிக்கிறார். ஒரு சிலர் கண்ணாடியை இறக்கி நோட்டமிடுகின்றனர். சிலர் வாங்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்தவாறே போய்விடுகின்றனர். நாங்கள் பார்த்தவரை யாரும் வாங்கவில்லை. கவலையுடன் சோர்ந்திருந்த நாராயணனிடம் பேச்சு கொடுத்தோம்.

குழந்தைகள் விளையாடும் அட்டை வீடு.

“எனக்கு ஆந்திரா. சின்ன வயசிலேயே தமிழ்நாட்டுக்கு வந்தோம். எங்க அப்பா குடை, பிளாஸ்டிக் வாலி ரிப்பேர் செய்வாரு. இப்ப இல்ல. எங்க ஃபேம்லில எல்லோரும் ஹான்டிகேப்டு. என் பொஞ்சாதிக்கு 2 காலிலும் பாதமில்லை, வெறும் குதிகால்தான். இழுத்திழுத்து நடக்கும். பொறந்த 2 பசங்களும் வளர்ச்சியில்லாம சூம்பி போய்ட்டாங்க. நிமிர்ந்து நடக்க மாட்டாங்க. நாங்க இடுப்புல வச்சிதான் தூக்கிகிட்டு போவணும். ஆஸ்பத்திரியில எல்லோருக்கும் ஹேன்டிகேப்டுன்னு சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. அத வச்சி ஏதாவது வேல கெடைக்குமான்னு அலைஞ்சோம். எந்த உதவியும் யாரும் பண்ணல. எங்க கவுன்சிலரும் எதுவும் செய்யல. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம். எனக்கு உடம்பு முடியல, கவல. அதான் அடிக்கடி பான்பராக் போடுவேன். அத உட முடியல. சோறு இல்லாமலே இப்படி நெறைய நாளு நிப்பேன். பசங்களுக்கு ஏதாவது வாங்கி போகணுமுன்னு ஆசையா இருக்கும், பணம் இருக்காது.

தினமும் 400 ரூபா கெடச்சா போதும், என் செலவுக்கு 100, வீட்டுக்கு 300ன்னு கொடுக்கலாம். காலையிலேர்ந்து 50 ரூபாய்க்கு ஒரு பீசுதான் வித்துச்சு. இங்கே வியாபாரம் இல்ல, அந்தப் பக்கம் போயி பார்க்கலாம்” என்று மெதுவாக விலகிப் போனார்.

நாராயணன் வாழ்க்கை நெடுகத் தொடரும் ஏழ்மையின் வலி நம் நெஞ்சையும் கனமாக்கியது.

***

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

வீதி தோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் !

2

த்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுமைக்கு விரிவுபடுத்தும் அதன் திட்டத்திற்கும் எதிராக நாடெங்கும் பரவலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. உத்திரபிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசு சுட்டுக் கொன்றுள்ளது; இசுலாமியர்களின் வீடுகளுக்குள் புகுந்த போலீசு கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளது. பல இடங்களில் பொதுமக்களின் சொத்துக்களும் கடைகளும் அரசு ஆதரவு பெற்ற சீருடை அணியாத மற்றும் சீருடை அணிந்த குண்டர்களால் சூறையாடப்பட்டு வருகின்றது.  குடியுரிமைச் சட்டத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக கோலம் போடும் போராட்டம் ஒன்றை மாணவிகள் சிலர் சேர்ந்து முன்னெடுத்தனர். நேற்று காலை காலை கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 5 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 7 பேர் பெசன்ட் நகர் பகுதியில் கூடி சாலையில் கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்கள் வரைந்த கோலங்களில்  குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக வாசகங்களை எழுதி இருந்தனர். NO NRC, NO CAA வசனங்களுடன் சில பா.ஜ.க எதிர்ப்பு வாகசங்களையும் எழுதி இருந்தனர்.

”தேஷ விரோதிகள்” கூடி கோலமிடும் அதிர்ச்சித் தகவலை கேள்விப்பட்ட தமிழக ஸ்காட்லாண்டு யார்டு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கோலமிடும் கொடூரமான பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட ”தீவிரவாதிகளை” வலைவீசிப் பிடிக்க துணை கமிஷ்னர், பெண் போலீசார் உள்ளிட்ட ஒரு படை வந்துள்ளது. வழக்கமாக ஆஜராகும் தண்ணீர் பீரங்கியும் சம்பவ இடத்திற்கு வந்ததா எனத் தெரியவில்லை. இறுதியில் கோலம் போடும் கொடுஞ் செயலில் ஈடுபட்ட மாணவிகள் உள்ளிட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

மாணவிகள் கைது செய்யப்பட்டதற்கு அவர்களின் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டார். மெல்ல மெல்ல தங்களுடைய அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் எழுவதை மோப்பம் பிடித்த ஸ்காட்லாந்து யார்டின் உயரதிகாரிகள் விசாரணைக்குப் பின் மாணவிகளை விடுவித்துள்ளனர். எனினும், அம்மாணவிகள் அனுமதி இன்றி போராட்டம் செய்தததாகவும், சாலையில் வண்ணம் வரைந்ததாகவும், அனுமதி இன்றி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் கூடியதாகவும் கூறியுள்ளனர்.

இப்போது நிலைமை என்னவென்றால், இரும்பு நகரத்தின் கரும்பு மனிதர் மான்புமிகு பழனிச்சாமி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக ஒரு புதிய போராட்ட வடிவம் உதயமாகி விட்டது. ஆம், தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் பரணில் பதுங்கிக் கிடந்த கோலமாவு டப்பாவை தேடி எடுத்து களத்தில் இறங்கி விட்டனர். ஆதிக்க எதிர்ப்பு அரசியலுக்கு கடந்த சில ஆண்டுகளாக பழக்கப்பட்டு விட்ட தமிழ்நாட்டு மக்கள், பொதுவாக எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளின் முன் கோலமிட்டு அதில் NO NRC, NO CAA போன்ற வாசகங்களை எழுதி அதைப் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் #KolamProtest மற்றும் #KolamAgainstCAA உள்ளிட்ட ஹேஷ்டேகுகளின் கீழ் அந்த பதிவுகளைக் காண முடியும். இந்த ஜோதியில் திமுகவும் ஐக்கியமாகியுள்ளது. மு.க ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்களின் வீடுகளின் முன்னும் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் வீட்டு முன்பும் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு வாசகங்களுடன் கோலம் வரையப்பட்டுள்ளது. அக்கட்சியினர் தங்கள் பங்கிற்கு #DMKkolamProtest எனும் ஹேஷ்டேகின் கீழ் தமிழகம் முழுக்க அதன் தொண்டர்களின் வீடுகளில் வரையப்பட்டுள்ள குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு கோலங்களின் படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேற்படி ஹேஷ்டாகுகளில் வந்துள்ள சில சுவாரசியமான குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு கோலங்கள் மற்றும் பதிவுகளை இறுதியில் தொகுத்துள்ளோம்.

ஒரு எதிர்ப்பியக்கம் அல்லது போராட்டம் மக்களைப் பற்றிக் கொள்ளும் போது அது  வெவ்வேறு வண்ணங்களையும் வடிவங்களை எடுக்கிறது. அதிகார வர்க்கத்தின் கற்பனைகளுக்கு எட்டாத படைப்பூக்கம் கிளர்ந்தெழுகின்றது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக மெரினாவில் மக்கள் கூடுவார்கள் என்று அதிகார வர்க்க மூளைகள் எதிர்பார்த்திருக்காது; அப்படிக் கூடியவர்கள் அந்த போராட்ட நிகழ்வையே ஒரு திருவிழாவாக கார்னிவெல்லாக முன்னெடுத்துச் செல்வார்கள் என்பது நிச்சயம் ஐ.பி.எஸ் – ஐ.ஏ.எஸ் மேனுவல்களிலோ SOP ஆவணங்களிலோ குறிப்பிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை.  மெரினாவுக்குப் பின் பாடம் கற்றுக் கொண்டதாக கருதிக் கொண்ட போலீசு மூளை அதன் பின் பல சந்தர்ப்பங்களில் கடற்கரைக்கு வேலியிட்டது.

இதோ பாசிச எதிர்ப்பு மக்களைப் பற்றிக் கொண்டு விட்டது… இனி என்ன, ரெய்டு நடத்தி கோல டப்பாக்களை கைப்பற்றுவார்களோ? மெரினாவுக்கு போலீசு போட்ட வேலியில் தொங்கும் பூட்டு கோலமாவைப் பார்த்து புன்னகை புரிகிறது.

♦ ♦ ♦

ந்த போராட்டத்தை ஒட்டி ஒரு அக்கிரகாரத்து அம்பிக்கும், ஒரு மனிதருக்கும் இடையே பேருந்தில் காட்டசாட்டமான உரையாடல் நடந்தது :

பூணூல் அம்பி : பாத்தேளா கடைசில கோபாலபுரத்துலயும் ஸ்டாலின் வீட்டு முன்னேயும் தாமரை கோலத்தில் மலர்ந்திருக்கு?

ஹோமோ சேப்பியன் : கவலைப் படாதீங்க அய்யிரே சாயந்திரத்துக்குள்ளே அந்தப் பக்கமா தெருவுல போற சொறி நாயி எதுனா உச்சா போயி தாமரை அழிஞ்சிடும்.

பூணூல் அம்பி : ஆனாலும் பாருங்கோ, கோலம் போடறது ஹிந்து சாஸ்த்திரத்தில் வருதாக்கும்.

ஹோமோ சேப்பியன் : அய்யிரே, கோலமெல்லாம் எங்க மரபு தான்.. அதுக்கு நடுவுல வைக்கிற சாணி தான் உங்க மரபு. வோணும்னா உங்க மரபை நீங்களே வழிச்சி எடுத்துட்டு போயிக்கங்க.

♦ ♦ ♦

சில தொகுப்புகள்… மேலும் பார்க்க : ட்விட்டர் மற்றும் முகநூலில் #KolamProtest #KolamAgainstCAA மற்றும் #DMKkolamProtest

 

 

காயத்ரி :
தமிழக ஆண்கள் பால்ரீதியிலான பாகுபாட்டு பழக்கவழக்கங்களை உடைத்து நமது கலாச்சாரத்தையும் அரசியல் சாசனத்தையும் #KolamAgainstCAA #KolamProtest மூலமாகக் காக்கிறார்கள்

Citizens Against CAA
பெசண்ட் நகரில் நடத்தப்பட்ட சிறிய போராட்டப் பொறி, தமிழகம் முழுவதும் CAA, NRCக்கு எதிரான மாற்றுக் கருத்து ஜுவாலைகளைப் பற்றியெரியச் செய்திருக்கிறது.  #kolamprotest #kolamagainstCAA_NRC

 

செய்யது வாசன் மைக்கேல் :
எனது விருப்பப் பட்டியலில் இதுவும் ஒன்று.
நான் மரணிப்பதற்கு முன்னர், ஆர்.எஸ்.எஸ்-ல் வெள்ளைகாரனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரரையாவது பார்க்க விரும்புகிறேன். அன்புள்ள @RSSorg தயவுசெய்து எனக்கு உதவுங்கள் !
#KolamProtest #KolamAgainstCAA #DMKKolamProtest

பழனிவேல்
#CAAProtest #KolamProtest #KolamAgainstCAA
No CAA No NRC
அனைத்தையும் ஒருங்கிணைந்த இந்தியா!

நடாஷா:
மார்கழி மாதத்தில் நான் கோலம் போட்டேன் என்பது அறிந்தால் எனது தாய் மிகவும் மகிழ்ச்சியடைவார்… நான் போட்ட கோலத்தை அவர் பார்க்கும் வரை ! புரட்சி ஓங்குக !

#KolamProtestAgainstCAA #KolamProtest #IndiaAgainstCAA_NPR_NRC
@naukarshah @deepsealioness @minicnair

நில். கே தத்
நாம் வெல்கிறோமா தோற்கிறோமா என்பது முக்கியமில்லை. நாம் போரிட வேண்டும். நாங்கள் எப்போதுமே #DMKkolamProtest ✊✊ உடனிருக்கிறோம்.

வீணா
என் அம்மா போட்ட கோலம். காலையில் நான் இதைப் பார்த்ததும் மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். நன்றி அம்மா !

சரவணராஜா:
கோலம் எங்கள் பிறப்புரிமை. நாங்கள் அதை அடைந்தே தீருவோம்.

– மித்ரன்

போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

கிண்டிலில் வெளியாகியிருக்கும் ‘போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை: ஒரு உரையாடல்’ கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு நூல். நூலின் ஆசிரியர் டாக்டர் சட்வா, ஒரு மயக்க மருந்தியல் நிபுணர்.

இந்தப் புத்தகத்தின் நோக்கம், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பேசப்பட்டுவரும், பிரபலமாகிவரும் எந்த அறிவியல் அடிப்படைகளுமில்லாத மருத்துவ முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அம்பலப்படுத்துவது.

அதனை மிக எளிய நடையில், எல்லோருக்கும் புரியும் வகையில், ஏற்கும் வகையில் செய்திருக்கிறார் என்பதுதான் இந்த மின்னூலின் சிறப்பு.

நோய்கள் எப்படி உருவாகின்றன, தொற்று நோய்களின் வரலாறு, பரவாத நோய்களின் வரலாறு, பொதுச் சுகாதாரத் துறையின் தோற்றம், அதன் அவசியம் என முக்கியமான அடிப்படைகளில் இருந்து புத்தகம் துவங்குகிறது.

இந்தப் புத்தகத்தில் மிகச் சுவாரஸ்யமான பகுதி, நம் நாடுகளிலும் மேலை நாடுகளிலும் உள்ள மருத்துவம் சார்ந்த மூட நம்பிக்கைகளைப் பட்டியல் இட்டிருப்பது.

இந்தப் புத்தகம் திரும்பத் திரும்பச் சொல்லவருவது, ஒரு மருந்து ஒரு நோயைத் தீர்க்கிறதென்றால், எப்படித் தீர்க்கிறது, அந்த மருந்தின் எந்தக் கூறு இதைச் செய்கிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். ஆனால், அப்படி நிரூபித்துவிட்டால், உடனடியாக அந்த மருந்து நவீன மருத்துவத்தின் அங்கமாகிவிடும்.

தவிர, இந்த மாற்று மருத்துவ முறைகள் உலகம் முழுவதுமே ஏதோ ஒரு மதத்தோடு, மொழியோடு, இனத்தோடு இணைக்கப்பட்டிருப்பதையும் சட்வா சுட்டிக்காட்டுகிறார்.

இந்தப் புத்தகத்தின் பிற்பகுதி மிகவும் சுவாரஸ்யமானது. இந்தப் பகுதியில்தான் தடுப்பூசிகள் குறித்துப் பரப்பப்படும் புரளிகளால் ஏற்படும் விளைவுகளை விரிவாக விளக்குகிறார். தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டுவது ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட் என்பவரின் ஆய்வுக் கட்டுரையை. அந்த ஆய்வுக் கட்டுரைக்குப் பின்னால் உள்ள சதியை மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறது புத்தகம்.

அதேபோல, ஏ1, ஏ2 என பாலை பிரித்து விற்பதற்குப் பின்னால் இருக்கும் ஒரு பால் நிறுவனத்தின் திட்டம், சர்க்கரை நோய் குறித்த கட்டுக்கதைகள், ஆண்மைக் குறைவுக்கான பரம்பரை வைத்திய மோசடி, எர்வாமாட்டின் தைலத்தின் கதை என ஒரு பெரிய சதுரங்க வேட்டையையே இந்தப் பகுதி விவரிக்கிறது.

படிப்பவர்களுக்கு முழுமையாகப் புரிய வேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குள் முடித்துவிடலாம்.

படிக்க:
பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?
♦ பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !

இம்மாதிரியான விஷயங்களில் ஆர்வமில்லாவிட்டாலும்கூட, புத்தகத்தின் சுவாரஸ்யத்தன்மைக்காகவே படிக்கலாம். அறிவியல், பொருளாதாரம் குறித்து எழுதுவோர் கவனத்தில் வைக்க வேண்டிய மொழிநடை டாக்டர் சட்வாவினுடையது.

புத்தகத்தை வாங்குவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விலை 69 ரூபாய்தான்.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

சிலியின் வசந்தம் !

சிலியின் வசந்தம் !

சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையின் கட்டணத்தைக் கடந்த அக்டோபரில் 30 பெசோக்கள் (2.70 ரூபாய்) உயர்த்துவதாக அறிவித்தது, அந்நாட்டு அரசு. ஏற்கெனவே தமது மாதாந்திர வருமானத்தில் 13 முதல் 28 சதவீதத்தைப் போக்குவரத்துக்காக மட்டுமே செலவிட்டு வரும் குறைந்த வருமானமுள்ள நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் தலையில் பேரிடியாய் இறங்கியது இந்தக் கட்டண உயர்வு.

இக்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட அன்றே ரயில்களிலும் பேருந்துகளிலும் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்து, கட்டணக் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர் மாணவர்கள். “புறக்கணி! கட்டணத்தைச் செலுத்த மறு! இது போராட்டத்தின் இன்னொரு வடிவமே!” என்ற அவர்களது முழக்கம் வெகுவிரைவாகப் பல்லாயிரக்கணக்கான மக்களையும் பற்றிக் கொண்டது.

கட்டணம் செலுத்த மறுத்து ரயில் நிலையங்களை முற்றுகையிட்ட மாணவர்களைக் கடுமையாகத் தாக்கியது போலீசு. எதிர்த்தாக்குதலில் ஈடுபட்ட மக்களும், மாணவர்களும் மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்துகள், பெரும் ஷாப்பிங் மால்களை அடித்து நொறுக்கித் தீக்கிரையாக்கினர். “எப்போதும் மகிழ்ச்சியைக் காணாத தலைமுறையை”ச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும், கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாகத் தமது மக்களின் வாழ்க்கையைச் சூறையாடி வந்த புதிய பொருளாதாரக் கொள்கையின் அடையாளங்களாக விளங்கியவை, அநியாயச் சுரண்டலில் ஈடுபட்டவை என எவற்றையெல்லாம் வெறுத்தார்களோ, அவற்றை எல்லாம் தாக்கினார்கள். குறிப்பாக, ஏழைகளும், அடித்தட்டு நடுத்தர மக்களும் குவிந்து வசிக்கும் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்தது.

“அவர்கள் உங்களது குரலுக்குச் செவிசாய்க்காத போது, எல்லா இடங்களிலும் மலம் கழித்து வைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரேவழி என்ற வகையில்தான் மெட்ரோவுக்கு எதிராக மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தினர். ஆள்பவர்கள் வார்த்தைகளுக்குக் காது கொடுக்க மாட்டார்கள்” என்று போராட்டத்தின் நியாயத்தை மிகச்சரியாக எடுத்துரைக்கிறார் 70 வயது மூதாட்டி அமேலியா ரிவேரா.

அடுத்து வந்த நாட்களில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைவான ஊதியம் மற்றும் ஓய்வூதியம், கல்வி உரிமை இல்லாமை, மோசமான பொது சுகாதார அமைப்பு, தனியார்மயமாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் மற்றும் அதீத சமத்துவமின்மை ஆகியவற்றால் விரக்தியடைந்த சிலி மக்கள், தமது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.  பல்லாயிரக்கணக்கில் திரண்டு ஊர்வலங்கள் நடத்துவதும் கோரிக்கைகளை முழங்குவதும் நாடெங்கும் தினசரி நிகழ்வுகளாக மாறின.

போராட்டங்கள் தீவிரமடைந்தவுடன், “நாடும் மிகவும் சக்தி வாய்ந்த, மன்னிக்க முடியாத எதிரியுடனான போரை எதிர்கொண்டுள்ளது” எனச் சாடிய வலதுசாரி அதிபர் பினேரா, நாடு முழுவதும் அவசரநிலையை அறிவித்தார். 20,000 இராணுவப் படையினரை தெருக்களில் இறக்கிவிட்டுச் சொந்த மக்களுக்கு எதிராக உள்நாட்டுப் போரைத் தொடுத்தார்.

போராட்டத்தை, “வரலாறு காணாத வன்முறை” என்றும், போராடும் மக்களை ”எதிரிகள்”, “கிரிமினல்கள்” என்றும் இழிவுபடுத்திய ஆட்சியாளர்கள், அமைதியான முறையில் ஊர்வலம் சென்ற, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களைக்கூட வெறிகொண்டு தாக்கினர். இதுவரையிலும் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் பார்வையிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் குடிநீரும் உணவும் இல்லாமலும், பெற்றோரைச் சந்திக்க முடியாமலும் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். தடுப்புக் காவலில் அடைக்கப்பட்ட பெண்களைக் கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கியும், பாலியல் வன்முறைகளை ஏவியும் கொடூரமான சித்திரவதைகளை ஏவி வருகின்றன அரசுப் படைகள்.

இவ்வளவு அடக்குமுறைகளை எதிர்கொண்ட நிலையிலும் தமது உறுதியைத் தளரவிடாத மக்கள், அக்டோபர் 25-அன்று, சிலியின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 12 இலட்சம் பேர் கொண்ட மாபெரும் பேரணியையும், ஆர்ப்பாட்டத்தையும் சாண்டியாகோவில் நடத்திக் காட்டினர். நாளுக்கு நாள் மக்களின் உறுதியும், போராட்டமும் அதிகரித்துக் கொண்டே செல்வதைக் கண்டு நிலைகுலைந்த அதிபர் பினேரா அவசர நிலையைத் திரும்பப் பெற்றார். மெட்ரோ கட்டண உயர்வை நிறுத்தி வைத்ததுடன், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, அரசின் ஓய்வூதியம் அதிகரிப்பு மற்றும் மின்சாரக் கட்டணத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சலுகைகளையும் அறிவித்தார்.

ஆனால், போராடும் மக்கள் இந்தச் சில்லறை சலுகைகளையும் வார்த்தை ஜாலங்களையும் நிராகரித்து விட்டனர். “இது 30 பெசோக்கள் அல்ல, இது 30 ஆண்டுகள்” “அதிபரே பதவி விலகு” “புதியதோர் அரசியலமைப்பு தேவை” என அரசியல் முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. கட்டண உயர்வுக்கு எதிராக எழுந்த போராட்டம் சமூக, அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்ந்தது.

படிக்க:
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

“நான் மாற்றத்தை விரும்புகிறேன், அதுவும் இப்போதே செய்ய விரும்புகிறேன். வாழ்க்கைச் செலவு உயர்ந்து கொண்டே செல்கிறது, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்காக எங்களது உழைப்பும் சேமிப்பும் கொள்ளையிடப்படுகிறது. ஆயுதப் படைகளும், பாதிரியார்களும், அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் சலுகைகளை அனுபவிக்கிறார்கள். அதை மாற்றவதற்கு நீங்கள் அரசியலமைப்பை மாற்ற வேண்டும” என மக்களின் குரலை எதிரொலிக்கிறார் 60 வயது பள்ளியாசிரியர் ஜூவான் ஏஞ்செல்.

சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா.

வேறு வழியின்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஒப்புக் கொண்ட பினேரா, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடக்குமென்று அறிவித்திருக்கிறார். “இப்போதுள்ள அரசியல்வாதிகள், நாடாளுமன்றம் உள்ளிட்ட எவையும் தேவையில்லை, எங்களது பிரதிநிதிகளே, மக்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய புதிய அரசியலப்பை எழுத வேண்டும்” என்கின்றனர் மக்கள்.

“என் பாட்டி சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடினார்; என் அம்மா தன் காலத்தில் போராடினார்; இது, ஆறு வயது சிறுமியின் தாயான என்னுடைய போராட்டத் தருணம். நாங்கள் நீண்டகால மாற்றங்களை விரும்புகிறோம். அது எனது மகள் தனது இருபதாவது வயதில் மகிழ்ச்சியோடு இருக்க உதவும் என நம்புகிறேன்” என்கிறார் ஒப்பனைக் கலைஞர் மெலிஸ்ஸா மெடினா. ஆம், சிலி தனது எதிர்காலத்திற்காகப் போராடுகிறது.

எங்கு அடித்தால் எதிரிக்கு வலிக்குமோ அங்கு அடித்து, எப்படிச் சொன்னால் கேட்பார்களோ அப்படிச் சொல்லியிருப்பதன் மூலம் எதிரியைப் பணிய வைத்திருக்கிறார்கள் சிலியின் உழைக்கும் மக்கள். தனியார்மயம்-தாராளமயத்துக்கும், அதனைப் பாதுகாக்கும் பாசிச அடக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்களின் வழிகாட்டியாய்த் திகழ்கிறது “சிலியின் வசந்தம்”.

தமிழ்ச்சுடர்

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?

நான்கு சுவற்றுக்குள்ளும் பாதுகாப்பில்ல…!

‘உடைக்கப்பட்ட டி.வி.. சிதறடிக்கப்பட்ட பொம்மைகள்…’ கடந்த 19-ம் தேதி உ.பி போலீசால் தனது வீடு சூறையாடப்பட்டதை பயம், பீதி, சீற்றம் என ஒருசேர பிரதிபலிக்கிறார் ரசியா கத்தூன்.

“கடந்த 19-ம் தேதி மதிய நேரம், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துக் கொண்ட இரு நபர்கள், போலீசாரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க எங்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். அவர்களைப் பிடிக்க, பின்தொடர்ந்து வந்த போலீஸ்காரர்கள் அந்த நபர்களை கைது செய்யாமல், வீட்டில் இருந்த எங்களை வெறித்தனமாக தாக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் என் காலிலும் வயிற்றிலும் எட்டி உதைத்தார்கள்; தகாத வார்த்தைகளால் பேசினார்கள். ‘எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள்?‘ என்று கேட்ட பிறகு, முன்பைவிட மூர்க்கத்தனமாக தாக்க ஆரம்பித்தார்கள்” என்கிறார் லக்னோவின் தவுலத்கஞ்ச் பகுதியில் வசிக்கும் 65 வயதான பெண்மணி ரசியா கத்தூன்.

ரசியா கத்தூன். (நன்றி – படம் : தி பிரிண்ட்)

“அந்த இரு நபர்களை கைது செய்ய எங்கள் வீட்டில் யாரும் தடையாக இல்லை என்று பலமுறை போலீசாரிடம் கூறியபோதும், எதையும் காது கொடுத்துக் கேட்காமல் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கண்மூடித்தனமாக உடைத்தனர்” என்கிறார் கத்தூனின் இளைய மருமகள் இக்தரா.

“நான்கு சுவற்றுக்குள்ளும் எங்களுக்குப் பாதுகாப்பில்லை” என்பதுதான் லக்னோ மக்கள் பலரின் உளக் குமுறல்.

போராட்டக்காரர்களை தாக்கிய உ.பி போலீசார் மீது பலர் பொதுநல வழக்கும் தொடுத்துள்ளனர். 1,100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தும், 5,558 பேரை தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும் அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை கூறுகிறது. மேலும், போராட்டத்தின்போது உ.பி -யில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.

ரசியா கத்தூனின் பேரக் குழந்தை. (நன்றி – படம் : தி பிரிண்ட்)

என்னை கைது செய்யவில்லை; எனது உடைமையை சேதப்படுத்தியதன் நோக்கம் என்ன?

தவுலத்கஞ்ச் பகுதியில் நடந்த சம்பவத்தன்றே லக்னோ, உசைனாபாத்தில் உள்ள ஷீபா அலியின் வீட்டிற்குள்ளும் புகுந்த போலீஸ், அவரது கணவர் இம்தியாஸ் அலி (42), சகோதரர் இம்ரான் (45), 15 வயது மகன் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளது.

போலீசு அச்சுறுத்தலால் தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் ஷீபா. (நன்றி – படம் : தி பிரிண்ட்)

என் கணவர், மகன், சகோதரரை கைது செய்துவிட்டார்கள். இனி நான் தனி ஆளாக என்ன செய்ய முடியும்? என்று கவலையோடு கூறிய ஷீபா, போலீசார் மீண்டும் தனது வீட்டின் கதவைத் தட்டுவார்களோ என்ற பயத்தில், தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்.

வீட்டினுள் புகுந்து ஆண்களைக் கைது செய்வது மட்டுமல்லாமல்; வீட்டைச் சேதப்படுத்துவதோடு உடைமைகள் அனைத்தையும் சூறையாடி வருகிறது போலீசு.

நஜ்மா பேகம். (நன்றி – படம் : தி பிரிண்ட்)

தவுலத்கஞ்ச் பகுதியில் பல வருடங்களாக சிறுவர்களுக்கு அரபு மொழி கற்றுக்கொடுத்து வருகிறார் 65 வயதான நஜ்மா பேகம். “என் கண் முன்னே போலீசார் எனது காரை உடைத்தார்கள்; அதைப் பார்த்தும் தடுக்க முடியாதவளாய் நின்றிருந்தேன்” என்று கண்ணீரில் கலந்த பேகத்தின் வார்த்தைகள் மேலும் உதிர்ந்தது. “போலீசார் எங்கள் வீட்டில் இருந்து யாரையும் கைது செய்யவில்லை; ஏன் வீட்டினுள் கூட நுழையவில்லை. அப்படியிருக்கையில், ஏன் எனது காரை உடைத்தார்கள்? அதன் நோக்கம் என்ன? என்று இப்பொழுதுகூட என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை” என்கிறார்.

வீடுகள் சூறையாடப்படுவது குறித்து உ.பி போலீஸ், ‘விசாரணை நடத்தி வருகிறது’ என்றும், “போலீசார் என்ன செய்தாலும் அது கல்லடிக்கு பதிலடியாகத்தான் இருந்திருக்கும்; நாங்கள் விசாரிக்கிறோம்” என்கிறார் மேற்கு லக்னோ கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் விகாஸ் சந்திர திரிபாதி.

படிக்க :
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டம் துவங்கிய நாள் முதல் இதுவரை, லக்னோவில் மட்டும் 250 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், போலீசால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், முகமது வகீல்(32) உயிரிழந்துள்ளார்.

போலீசாரின் எச்சரிக்கை போஸ்டர்

லக்னோவை சுற்றி பல இடங்களில் ‘எச்சரிக்கை’ என்று போலீசாரால் வைக்கப்பட்ட போஸ்டரில், பல ஆண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

எச்சரிக்கை போஸ்டர் :பொதுமக்கள் சொத்துக்களை சூறையாடிய போலீசாரின் படங்கள் எந்த போஸ்டரில் வரும் ? (நன்றி – படம் : தி பிரிண்ட்)

‘‘எச்சரிக்கை போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆண்கள் அனைவரும் கலகக்காரர்கள் என்பதற்கு என்ன சான்று? அமைதியாக போராடியவர்கள் மட்டுமின்றி, போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுடைய புகைப்படங்களும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இந்த எச்சரிக்கை போஸ்டர் மூலம் பலரின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறும்” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத 23 வயது இளம்பெண்.

மேலும், “பொதுச் சொத்துக்களைச் சூறையாடிய போலீசாரின் புகைப்படங்கள் எந்த போஸ்டரிலும் இடம்பெறவில்லையே, அது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் மற்றொரு பெண்.


– ஷர்மி
செய்தி ஆதாரம் : தி பிரிண்ட்.

ஜனவரி 8 – 2020 வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !

மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து, 2020-ம் ஆண்டில் ஜனவரி – 08-ம் தேதியன்று, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ள அனைத்து துறை தொழிலாளர்களது வேலை நிறுத்தத்தில், தொழில் மற்றும் துறைவாரியான, பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் புதுச்சேரியில் கடந்த டிசம்பர் – 28 அன்று திருபுவனை தொழிற்பேட்டை – மதகடிப்பட்டு பகுதியில் உள்ள ஆனந்த செல்லம்மாள் திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஏற்கெனவே மோடி தலைமையிலான ஆறு ஆண்டு கால ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக் கட்டுவது, நீம், FTE திட்டங்களால் தொழிற்சங்க உரிமை, பணி நிரந்தர உரிமைகள் பறிக்கப்படுவது என தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைகளும், பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வறுமை, பொதுத்துறைகள் ஒழிப்பு என பரந்துபட்ட மக்களின் வாழ்வுரிமைகளைப் பறித்து வருகிறது மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

மறுபுறம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், ஊபா ஆள்தூக்கிச் சட்டம், ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை ஜனநாயக விரோதமான முறையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியும் வருகிறது. இந்த நிலையில் தற்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான நாடு தழுவிய அளவில் நடந்து வரும் போராட்டங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

இன்றைய நிலையில் அப்படிப்பட்ட போராட்டங்களை வலுப்படுத்துவதும், இப்போராட்டங்களை, ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கான அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டியதும், நம்மைப் போன்ற சமூக ஜனநாயக இயக்கங்கள், தொழிற்சங்கங்களின் கடமையாகும் என்ற அடிப்படையில் பிற தொழிற்சங்கங்களை ஒருங்கிணைப்பது என்ற அடிப்படையில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.சி.சி.டி.யூ. ஆகிய சங்க முன்னணியாளர்களின் பங்கேற்புடன் இந்த அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்டத்தில், பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கமான ரானே பிரேக் லைனிங் எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர். தினேஷ் பொன்னையா, சிஐடியூ சங்கத்தின் புதுச்சேரி பிரதேச பொருளாளர் தோழர். பிரபுராஜ் மற்றும் ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவரும், சேதுராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பாளருமான தோழர் மோதிலால் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர். மகேந்திரன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.

தோழர் சரவணன் தனது தலைமையுரையில் மோடி கும்பல், மாட்டுக்கறி பிரச்சினை முதல் குடியுரிமைச் சட்டத் திருத்தம் வரையில் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ செயல்திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய வெறி, தேசபக்தி என மக்களை மடைமாற்றி கார்ப்பரேட்டுக்களுக்கான பொருளாதார திட்டங்களையும்  செயல்படுத்தி வருகிறது. இது அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் பாதித்துள்ளது. இவற்றை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

ஏஐடியூசி மாவட்டத் தலைவர் தோழர் தினேஷ் பொன்னையா, நமது முயற்சியை வாழ்த்தியதோடு, நீம், FTE போன்ற திட்டங்களை விளக்கிப் பேசியும், நிதிமூலதனத்தை கார்ப்பரேட்டுக்கள் சூறையாடுவதற்கு தேர்ந்தெடுத்துள்ள வடிவமே பாசிசம். அந்தப் பாசிசத்தை ஒழித்து மக்களைப் பாதுகாப்பதற்கு இடதுசாரிகளைத் தவிர மாற்று இல்லை என்பதை விளக்கிப் பேசினார்.

சிஐடியூ புதுவை பிரதேச பொருளாளர் பிரபுராஜ், ஜனவரி-8 வேலைநிறுத்தம் தொடர்பான புஜதொமு-வின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் எனக் கூறியதுடன், இன்றைய நிலையில் தொழிலாளி வர்க்கம், அரசியல் மனமாச்சரியங்களைக் கடந்து ஒன்று சேர வேண்டும் என்பதையும், மோடி கொண்டுவரும் பல்வேறு ஒடுக்குமுறைகளைப் பேசி விளக்கினார். தொழிலாளி வர்க்கத்தையும், மக்களையும் காப்பாற்ற இடதுசாரிகள் தவிர யாரும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

ஏஐசிசிடியூ தலைவர் தோழர் மோதிலால், தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்தால் சாதிக்க முடியும் என்பதை சேதுராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு மூலமாக செய்த போராட்ட அனுபவங்களைக் கூறி நம்பிக்கை ஊட்டினார். தொழிலாளர்கள் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் தொழிற்சங்கத்தின் கடமைகள் பற்றியும் விமர்சன, சுயவிமர்சன ரீதியாக விளக்கிப் பேசி, ஜனவரி 8, வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது நம் அனைவரது கடமையாகும் என்றார்.

படிக்க :
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !

இறுதியாகப் பேசிய புஜதொமு புதுச்சேரி மாநில செயலாளர் மகேந்திரன், நமது அழைப்பை ஏற்று வந்த தொழிற்சங்கத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஜனவரி-8 வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடத்த வேண்டிய கடமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு என்பதை வலியுறுத்தும் விதமாக, மோடியின் பல்வேறு திட்டங்களை விளக்கியும், தொழிலாளர் மீதான சட்டத் திருத்தம் பற்றியும் அதன் ஒடுக்குமுறைகளையும் விளக்கிப் பேசினார். இந்தப் போராட்டத்திற்குப் பிறகும், கூட்டமைப்பை உருவாக்கும் வகையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் உரையை நிறைவு செய்தார்.

ஜனவரி 8, 2020 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டிய அவசியத்தை, தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்த்தும் வகையிலும், பல்வேறு மாற்றுக்கட்சி தொழிற்சங்கங்கள் கலந்து  கொண்டது  நம்பிக்கையூட்டுவதாக அமைந்திருந்தது.


தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு : 95977 89801.

பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !

இந்தியக் குடியுரிமைச் சட்டத்திருத்தம் மக்களுக்கான ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் மத சார்பின்மையையும் கால்களில் போட்டு மிதித்துள்ளது.

ண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தமக்கிருக்கும் பெரும்பான்மையைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் இந்தியக் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியிருக்கிறது. இச்சட்டமானது மக்களுக்கான ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் மதசார்பின்மையையும் கால்களில் போட்டு மிதித்துள்ளது.

மூன்று நாடுகளிலிருந்து ஆறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருப்பின் அவர்களுக்கு குடியுரிமை வழங்க மேற்படிச் சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டமானது முஸ்லிம் மக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போன்று இலங்கைத் தமிழ் மக்களையும் புறந்தள்ளியிருக்கிறது. அதேவேளை இந்தியாவின் முஸ்லிம் மக்களின் குடியுரிமைக்குரிய ஆதாரங்களையும் கேட்டு நிற்கிறது. இச்சட்டமானது இந்துத்துவா அடிப்படையில் இந்துத்துவ பாசிசச் சட்டமாகவே கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அதன் காரணமாக இந்திய மக்கள் நாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தலைநகர் புதுடில்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதி எதிர்ப்புப் போராட்டத்தை குண்டர்களும் பொலீசும் இணைந்து கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். இதற்கு எதிராக எல்லா மாநிலங்களிலும் மக்களும் மாணவர்களும் போராடி வருகிறார்கள். அவர்களது ஒரே கோரிக்கை, பாசிசச் சட்டமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற்று இரத்துச் செய்யவேண்டும் என்பதேயாகும்.

இந்திய மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள மேற்படிக் கோரிக்கைகளையும் அதற்கான எழுச்சிப் போராட்டங்களையும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆதரித்து தனது ஒருமைப்பாட்டினைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேவேளை இப்போராட்டத்தில் ஈடுபட்ட தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது அரசும் பொலீசும் காவிப்படைக் குண்டர்களும் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் போராட்டங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரச பயங்கரவாதத்தினையும் எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

படிக்க:
♦ அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?
♦ இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி அறிக்கை

மேலும் நரேந்திர மோடி தலைமையிலான இந்துத்துவ அடிப்படைவாத நிலைப்பாடுடைய பாசிச பா.ஜ.க அரசு காஷ்மீரில் கைவைத்து, அதன்பின் பாபர் மசூதி நிலத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற்று, இப்போது ஜனநாயகத்திற்கும் மதசார்பின்மைக்கும் பெயர்பெற்றதாகக் கூறப்படும் இந்திய அரசியல் சாசனத்தின் மீதே கைவைத்திருக்கிறது.

இந்துத் தீவிரத் தேசியவாதம் பாசிசத்துக்கு இட்டுச்சென்றுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது. எனவே இவற்றுக்கெதிராகப் போராடிவரும் மக்களை எமது கட்சி ஆதரித்து நிற்கின்றது.

புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி, இலங்கை

disclaimer

பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம்

பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட முற்போக்கு ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்து ’பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம்’ கட்டமைக்கப்பட்டு அதன் தலைமையில் “குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ரத்து செய்!” என்ற தலைப்பில் 28.12.2019 அன்று காலை 11 மணிக்கு பென்னாகரம் அம்பேத்கர் சிலையிலிருந்து பேருந்து நிறுத்தம்வரை பேரணியும் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந்த பேரணியை வி.சி.க.-வின் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொறியாளர் கருப்பண்ணன் துவங்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துகுமார் தலைமைதாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் எழில், சிபிஎம் கட்சியின் பென்னாகரம் நகர செயலாளர் தோழர் வெள்ளியங்கிரி, விசிக தோழர் கருப்பண்ணன், மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜானகிராமன், திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் திரு முகமது அலி முதலியோர் இந்நிகழ்வில் கண்டன உரையாற்றினர்.

படிக்க :
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
♦ “என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !

இதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் என சுமார் 600 பேர் கலந்துகொண்டனர்.

முதலில் பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு போலிசு பாதுகாப்பு தரமுடியாது, 30(2) சட்டம் நடைமுறையில் உள்ளது என்ற காரணத்தை கூறி அனுமதி மறுத்தது. ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதை அறிந்ததும் போலிசு; பேரணியை கைவிட்டு ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்திக்கொள்ளுங்கள் அனுமதி தருகிறோம் என்று கேட்டுக்கொண்டது. எனினும் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கதினர் தடையை மீறி பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தருமபுரி மாவட்டதில் போராட்டங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒரு கூட்டியக்கத்தை ஏற்படுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியதும், இதில் திரளான அளவில் முஸ்லீம் சமூக மக்கள் கலந்துகொண்டதும் பென்னாகரம் மக்களை கவர்ந்துள்ளது. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் தொடரும் என்று கூட்டியக்கம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி.

ஒட்டுப்போட்டு மாளாது … இது நைந்து போன சங்கதி !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 04

க்காக்கியின் மேல்கோட்டும் சக எழுத்தர்களின் பரிகாசத்திற்கு இலக்காய் விளங்கியதென்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லி விட வேண்டும், மேல்கோட்டு என்ற மதிப்புயர்ந்த பெயரைக் கூட இழந்து, வீட்டிலணியும் கோட்டு எனப் பொருள்படும் “கப்போத்” என்ற அவப்பெயரைப் பெற்றிருந்தது அது. அதன் தையல் பாங்கு உண்மையிலேயே விசித்திரமானது தான்: அதன் கழுத்துப்பட்டை மற்ற இடங்களுக்கு ஒட்டுப் போடுவதற்காகக் கத்தரிக்கப்பட்டு வந்ததால் ஆண்டுக்கு ஆண்டு அளவில் சிறுத்துக்கொண்டே போனது. ஒட்டுக்களோ, தையல்காரனின் கலைத்திறனைக் காட்டவில்லை; விளைந்தது சாக்கு மூட்டை போன்ற, அழகற்ற பொருள். மேல்கோட்டில் என்ன கோளாறு என்பதைக் கண்டுகொண்ட அக்காக்கிய் அதைச் சீர்படுத்துவதற்காக பெத்ரோவிச் என்ற தையல்காரனிடம் எடுத்துச் செல்லத் தீர்மானித்தான். எங்கோ ஒரு வீட்டின் பின்கட்டில் நான்காவது மாடியில் குடியிருந்த இந்த பெத்ரோவிச், ஒற்றைக் கண்ணும், அம்மைத் தழும்பு முகமும் கொண்டவனாயினும் எழுத்தர்கள், மற்றவர்கள் ஆகியோரின் காற்சட்டைகளையும் கோட்டுகளையும் பழுது நீக்கும் தொழிலை வெற்றிகரமாக நடத்திவந்தான் – அதாவது அவன் குடிமயக்கமின்றி நிதானமாகவும், வேறு எதேனும் திட்டங்களைப் போட்டு மூளையைக் குழப்பிக் கொள்ளாமலும் இருக்கும் வேளைகளில்.

இந்தத் தையல்காரனைப் பற்றி விரிவாக வருணிப்பது தேவையில்லை தான், எனினும் கதையில் வரும் எல்லாவிதமான பாத்திரங்களையும் முழுமையாகச் சித்திரிப்பது இக்காலத்திய பாணியாகி விட்டபடியால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை; இதோ, பெத்ரோவிச்சைப் பற்றிப் பார்ப்போம். ஆரம்பத்தில் அவன் வெறுமே கிரிகோரிய் என்றே அழைக்கப்பட்டான், யாரோ நிலப்பிரபுவின் பண்ணையடிமையாயிருந்தான்; விடுதலை பெற்ற பின்பே அவன் தன்னைப் பெத்ரோவிச் என அழைக்கலானான், எல்லா விழா நாள்களிலும் அளவுமீறிக் குடிக்கத் தொடங்கினான்; முதலில் பெரிய திருநாள்களில் மட்டுமே குடித்தான், பிறகு சர்ச் விழாக்கள் ஒவ்வொன்றிலும், உண்மையில் நாள் காட்டியில் சிலுவைக்குறி இடப்பட்ட நாள்களில் எல்லாம் குடிக்க ஆரம்பித்தான். இந்த விஷயத்தில் அவன் பாட்டன் -முப்பாட்டன் காலத்திலிருந்து வழிவழி வந்த மரபையே கடைப்பிடித்தான்; மனைவியுடன் சச்சரவிடுகையில் அவளை மத விசுவாசம் அற்றவள், ஜெர்மன்காரி என்று பழித்துவந்தான். மனைவியைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டதால் அவளைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்லுவது அவசியம்; ஆயினும் வருந்தத்தக்க விஷயம், பெத்ரோவிச்சுக்கு மனைவியுண்டு, அவள் தலைக்குட்டை அணிவதில்லை, மூடுதொப்பியே போட்டுக்கொள்வாள் என்பது தவிர அவளைப் பற்றி நாம் அறிந்தது சொற்பமே. அழகைப் பொருத்தவரை பெருமை பாராட்டிக் கொள்ள அவளிடம் ஒன்றும் இல்லை. அது எப்படியாயினும், வீதியில் அவளைச் சந்தித்த போது மூடுதொப்பியின் அடிவழியே அவள் முகத்தை உற்றுப் பார்த்தவர்கள், மீசையை முறுக்கிய வண்ணம் விந்தைக் குரலில் உறுமும் சிப்பாய்கள் மட்டுமே.

பெத்ரோவிச் குடியிருந்த வீட்டின் மாடிப்படிகள் – அவற்றுக்கு உரிய நியாயத்தைச் செலுத்துவதானால் நீராலும், கழிவுநீராலும் சொதசொதவென்று நனைந்து ஊறி, கண்களைக் கரிக்க வைக்கும் சுள்ளென்ற ஸ்பிரிட் நெடியால் நிறைந்திருந்தன (இந்த நெடி பீட்டர்ஸ்பர்க் நகரின் பின்மாடிப் படிகளுக்கெல்லாம் பொதுவான சிறப்பியல்பு என்பதுதான் உலகறிந்த சேதியாயிற்றே). மாடிப்படி எறும் போதே அக்காக்கிய், மேல்கோட்டைச் செப்பஞ் செய்வதற்கு பெத்ரோவிச் என்ன கூலி கேட்பானோ என்று எண்ணியவனாக இரண்டு ரூபிள்களுக்கு மேல் கொடுக்கக் கூடாது என மனத்துக்குள் நிச்சயித்துக் கொண்டான். பெத்ரோவிச்சின் வீட்டுக் கதவு திறந்திருந்தது, ஏனென்றால் அவன் மனைவி எதோ மீனைப் பொரியல் செய்கையில் கிளப்பிய புகை சமையல் அறை முழுதும் மண்டி, கரப்பான் பூச்சிகள் கூடக் கண்ணில் படாதவாறு அடித்திருந்தது. அக்காக்கிய், வீட்டு எஜமானிக்குக் கூடத் தெரியாதபடி சமையலறையைக் கடந்துபோய், முடிவில் தையல்காரனின் அறையை அடைந்து, அங்கே வர்ணம் பூசப்படாத அகன்ற மர மேசை மீது துருக்கியப் பாதுஷா போல மண்டியிட்டு அமர்ந்திருந்த பெத்ரோவிச்சைக் கண்டான். வேலையில் ஈடுபட்டிருக்கும் தையல்காரர்களின் வழக்கம் போல அவன் வெறுங்கால்களுடன் உட்கார்ந்திருந்தான். அக்காக்கியின் பார்வையில் முதலில் பட்டது பெத்ரோவிச்சின் கால் கட்டை விரல்; ஆமையோடு போன்று தடித்து முடிடாய்க் கோணல் மாணலான நகங்கொண்ட அந்த விரல் அக்காக்கிய்க்கு நன்கு பரிச்சயமானது. பட்டு, பருத்தி நூல் கண்டு ஒன்று பெத்ரோவிச்சின் கழுத்திலிருந்து தொங்கியது; அவன் முழங்கால் மேல் கிடந்தது எதோ கந்தையுடை. கடந்த ஓரிரு நிமிடங்களாக நூலை ஊசியில் கோக்க முயன்று தோல்வியுற்ற பெத்ரோவிச் இருண்ட அறை மீதும், நூல் மேலுமே கோபங்கொண்டு, “போக மாட்டேங்குது சனியன்! என் உயிரை வாங்குது துப்புக்கெட்ட சனியனே!” என்று வாய்க்குள்ளாகவே கிசுகிசுத்தான். பெத்ரோவிச் எரிச்சலாக இருக்கும் நேரம் பார்த்து வந்தோமே என்று அக்காக்கிய் வருந்தினான். பெத்ரோவிச் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும் போது, அல்லது “மிடாக்கணக்கில் சாராயத்தைக் குடித்து விட்டு உட்கார்ந்திருக்கிறான், ஒற்றைக் கண் பிசாசு!” என அவன் மனைவி சொல்வது போன்ற நிலையிலிருக்கும் போது அவனிடம் வேலையை ஒப்படைப்பதுதான் அக்காக்கிய்க்குப் பிடிக்கும்.

அந்த மாதிரி நிலையிலிருக்கையில் பெத்ரோவிச் சாதாரணமாக மிகவும் விட்டுக்கொடுப்பான், எந்தக் கூலிக்கும் இணங்கி விடுவான்; அது மட்டுமன்று, தலைவணங்கி நன்றி வேறு தெரிவிப்பான். அப்புறம் அவன் மனைவி அக்காக்கியிடம் கண்ணீரும் கம்பலையுமாக வந்து கணவன் குடிமயக்கத்திலிருந்ததால் மிகக் குறைந்த கூலிக்கு ஒப்புக்கொண்டு விட்டதாக முறையிடுவாள் என்பது உண்மையே; என்றாலும் பத்து காசு கூடக் கொடுத்துவிட்டால் போதும், விஷயம் தீர்ந்துபோகும். இப்போதோ பெத்ரோவிச் மிகவும் நிதானத்தோடிருந்தான், இதனால் எரிச்சலும் புடைச்சலுமாக, எதற்கும் இணங்கிவராத மன நிலைமையில் விளங்கினான்; என்ன கூலி கேட்பானோ, சைத்தானுக்கே வெளிச்சம். இதைப் புரிந்து கொண்ட அக்காக்கிய், வழக்குமொழியில் சொல்வதுபோல, மெதுவாக நழுவப் பார்த்தான், ஆனால் அதற்குள் சுணங்கி விட்டது: பெத்ரோவிச் தனது ஒற்றைக் கண்ணை இடுக்கிக்கொண்டு அவனையே உறுத்து நோக்கினான். அக்காக்கிய் வேறு வழியின்றி, “வணக்கம், பெத்ரோவிச்!” என்று சொல்ல வேண்டியதாயிற்று. பெத்ரோவிச் அவன் என்ன கொணர்ந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ள அக்காக்கியின் கைகளையே குத்திட்டுப் பார்த்தவாறு, “வணக்கம், ஐயா, நலந்தானே?” என்று விசாரித்தான்

“ம்ம்… நான் வந்து… பெத்ரோவிச், உன்கிட்டே… ஒரு காரியமாக…” என்றான் அக்காக்கிய் அக்காக்கியெவிச்.

அக்காக்கியின் பேச்சில் உருபிடைச் சொற்கள், வினையுரிச் சொற்கள், எவ்விதப் பொருளுமற்ற அசைகள் ஆகியவையே பெரும் பகுதி விரவிவரும் என்பதை இங்கே தெரிவித்து விடுவது அவசியம். விஷயம் கொஞ்சம் கடினமாயிருந்தால், வாக்கியங்களை முடிக்காமலே அந்தரத்தில் விட்டு விடுவது அவன் வழக்கம். “இது… வந்து… முக்கியமாக என்னவென்றால்…” என்று ஆரம்பித்து விட்டு, சொல்ல வேண்டியதைச் சொல்லியாகி விட்டது என்ற நினைப்பில் வாக்கியத்தை முடிக்க மறந்து, அப்படியே தொங்கலில் விட்டு விடுவான்.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !
தொல்.திருமாவளவன் | மதம் | ஸ்டெர்லைட் வழக்கு | அரபுலகம் | கேள்வி – பதில் !

“என்ன கொண்டு வந்திருக்கிங்க?” என வினவிய பெத்ரோவிச் அதே சமயம் அக்காக்கியின் உடுப்பைக் கழுத்துப்பட்டையிலிருந்து தொடங்கி, கைகள், முதுகு, பின் நுனி, பொத்தான் துவாரங்கள் என்று ஆதி முதல் அந்தம் வரை தனது ஒற்றைக் கண்ணால் நோட்டமிட்டான். அது அவன் கைப்படத் தயாரித்ததாகையால் இவையெல்லாம் அவனுக்கு மிக மிகப் பரிச்சயமானவையாயிருந்தன. உடையை இம்மாதிரிப் பார்வையிடுவது தையல்காரர்களின் தொன்று தொட்ட பழக்கந்தான்; வாடிக்கைக்காரர்களைக் கண்டதும் முதன் முதலாக அவர்கள் செய்வது இது தானே.

“நான் வந்து… பெத்ரோவிச்… இந்த இதை… மேல் கோட்டு இருக்கே… துணி கொஞ்சம் போல… வந்து… இதோ… மற்ற எல்லா இடத்திலேயும் அழுத்தமாத்தான் இருக்கு…. நல்ல அழுத்தமா… கொஞ்சம் தூசிபடிந்தாற்போல இருக்கு… பார்வைக்கு எதோ பழசாகி விட்டது போல… ஆனா புத்தம் புதிசு… எதோ ஓரிடத்தில் மட்டுந்தான் கொஞ்சம் போல… முதுகுப் பக்கம்… அப்புறம் தோள்பட்டையில் லேசாக விட்டுப் போயிருக்கு… அதோடு இந்தத் தோள்பட்டையிலும் கொஞ்சம் போல… இதோ… அவ்வளவுதான். வேலை ஒன்றும் பிரமாதமில்லை…” என்றான் அக்காக்கிய்.

பெத்ரோவிச் ‘கப்போத்’ என மற்ற எழுத்தர்கள் பெயரிட்டிருந்த மேல்கோட்டை வாங்கி, முதலில் மேசை மேல் பரப்பி, நீண்ட நேரம் பார்வையிட்டு விட்டுத் தலையை அசைத்துக் கொண்டே சன்னல் புறம் கையை நீட்டி, குறட்டில் இருந்த பொடி டப்பியை எடுத்தான். அதன் மேல் எதோ ஜெனரலின் உருவப்படம் பதிந்திருந்தது. ஆனால் யார் என்று தெரியாதபடி ஜெனரலின் முகமிருந்த இடம் விரலால் அழுத்தி உட்குழிக்கப்பட்டு அதன் மேல் சதுரக் காகிதத் துண்டு ஒட்டப்பட்டிருந்தது. ஒரு சிமிட்டாப் பொடி உறிஞ்சிய பின்பு பெத்ரோவிச் மேல் கோட்டைக் கையில் விரித்துப் பிடித்தவாறு வெளிச்சத்துக்கு நேரே காட்டி, மற்றொரு முறை பரிசீலனை செய்து விட்டு மீண்டும் தலையை அசைத்தான். அப்புறம் உள்பக்கத்தை வெளியே புரட்டி நோட்டமிட்டவன், மறுபடியும் தலையை அசைத்து, ஜெனரல் உருவத்தின் முகத்தில் காகிதம் ஒட்டிய பொடி டப்பி மூடியைத் திறந்து, பொடியை மூக்கில் திணித்துக் கொண்டபின் டப்பியை மூடி ஒரு புறமாக வைத்து விட்டு, “ஊஹும். ஒட்டுப்போட்டு மாளாது. நைந்து போன சங்கதி” என்று கடைசியில் வாய் மலர்ந்தான்.

இந்தச் சொற்களைக் கேட்டதுமே அக்காக்கியின் நாடி விழுந்துபோயிற்று. “ஏன் முடியாது, பெத்ரோவிச்?” என்று மன்றாடும் குழந்தை போன்ற குரலில் வினவினான். “அட தோள்பக்கம் மட்டுந்தானே கொஞ்சம் போல விட்டுப் போயிருக்கு! உங்கிட்ட ஏதாவது துண்டுத்துணி இருக்குமே…” என்று அழாக்குறையாய்ச் சொன்னான்.

“துண்டுத் துணிக்கென்ன, கிடைக்கும், எத்தனை வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனா ஒட்டுத் தைக்கத் தான் முடியாது. இது ஒரேயடியா இத்துப் போன சமாச்சாரம். ஊசி பட வேண்டியதுதான், தும்பு தும்பாய்ப் போயிரும்” என்றான் பெத்ரோவிச்.

“தும்பு தும்பாய்ப் போகட்டுமே. உடனே சேர்த்து ஒட்டுப் போட்டுவிடேன்.”

“அட என்ன சொல்றீங்க! ஒட்டை எதன் மேலே போடுறதாம்? கெட்டிப் படுத்துகிறதுதான் எப்படி? துணி என்று பெயர் தானே ஒழிய ஊதினாப் பறந்துபோகும்.”

“கிடக்கு, எப்படியாவது கெட்டிப்படுத்து. அப்படி ஒரேயடியாகச் சொன்னால் அப்புறம்!..”

பெத்ரோவிச் உறுதியாக ”முடியாது” என்றான். “ஒன்னுமே செய்ய முடியாது. சங்கதி படு பாடாவதி. நான் சொல்றதைக் கேளுங்க. குளிர்காலம் வந்ததும் இதை நீள நீளப் பட்டியாகக் கிழிச்சு காலிலே சுத்திக்கங்க. என்னா காலுறையாலே கதகதப்பு உண்டாக்க முடியாது. இந்தக் காலுறை விவகாரம் இருக்கிறதே, இது ஜெர்மன்காரன் குயுக்தி, பணம் பறிக்க வழி (சமயம் வாய்த்த போதெல்லாம் ஜெர்மானியர்களைத் தூற்றுவதில் பெத்ரோவிச்சுக்குப் பிரியம்); மேல்கோட்டு விஷயத்தைப் பொருத்த வரையில் நீங்க புதுசாத் தைத்துக் கொள்ள வேண்டியதுதான்” என்றான்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்

ந்தக் கல்வியாண்டு முதல் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தவுள்ளதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்னரே, அதில் அமல்படுத்தப்படவிருக்கும் ஏழை மக்கள் விரோத நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அடிமை அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

பிஞ்சு வயதில் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திப்பது அவர்களது வாழ்விலும், எதிர்காலத்திலும் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புகள் குறித்து மன நல ஆற்றுப்படுத்துனராக பள்ளி மாணவர்கள் மத்தியில் பணிபுரியும் வில்லவன் அவர்கள் வினவு இணையதளத்துக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

இந்த நேர்காணலில் இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார். மேலும் இதன் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகளையும் விளக்குகிறார் வில்லவன்.

பாருங்கள் ! நண்பர்களுக்கும் பகிருங்கள் !

 

 

பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !

1

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இராணுவ தளபதி பிபின் ராவத், மாணவர்கள் ‘தவறான திசையில்’ வழிநடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தலைமைத்துவம் என்பது முன்னணியில் நின்று வழிநடத்துவது. தலைமை வகிப்பதில் மிகவும் சிக்கலான விஷயம் என்னவெனில், நீங்கள் முன்னின்று செல்லும் போது, அனைவரும் உங்களை பின் தொடர்வார்கள். இது சாதாரணமானது அல்ல. மிகவும் எளிமையான விஷயம் போல இது தோன்றும்.

இராணுவ தளபதி பிபின் ராவத்

தேவையற்ற வழியில் நடத்தி செல்பவர்கள் தலைவர்கள் அல்ல. வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமைத்துவம் இல்லை. ஏனெனில், ஏராளமான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களைக் காண்கிறோம். நகரங்களிலும், சிறு நகரங்களிலும் தீ வைப்பு மற்றும் வன்முறைகளைச் செய்ய அவர்கள் ஏராளமான மக்களை வழிநடத்திச் செல்கிறார்கள்… இது தலைமை பண்பு அல்ல,” என்று தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகத்தான் தற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்களும் பொதுமக்களும் போராடி வருகின்றனர். தனது பேச்சில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து என குறிப்பிடாவிட்டாலும் இராணுவ தளபதி, மறைமுகமாக இச்சட்டத்தை எதிர்த்து போராடி வரும் மாணவர்களைத் தான் குறிப்பிடுகிறார்.

இராணுவத்துக்கு தொடர்பில்லாத, அரசியல் உணர்வுப் பூர்வமான விசயம் குறித்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் இராணுவ தலைவராக உள்ள ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார் என்று இச்சம்பவம் குறித்து எழுதியிருக்கிறது டெலிகிராப் இதழ்.

பொது மக்கள் தொடர்பான எந்தவொரு விசயத்திலும் இராணுவம் ஒருபோதும் தலையிடக்கூடாது என முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வலியுறுத்தியிருந்தார். தற்போதிருக்கும் ஆட்சியில் நிர்வாகத் தலைமைக்கும் இராணுவத்துக்குமான உறவு எப்படி மாறிவிட்டது என்பதை ராவத்தின் பேச்சு உணர்த்துவதாக அந்நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.

நேருவின் தொலைநோக்கு சிந்தனையின் காரணமாக அண்டை நாடுகளைப் போலல்லாமல், எந்தவொரு இராணுவ ஆட்சிக்குழுவும் இதுவரை இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்க துணியவில்லை.

படிக்க :
“என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !
♦ பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !

டிசம்பர் 31-ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிதாக உருவாகப்பட உள்ள பாதுகாப்புத் தளபதி பதவிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துகொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், தனக்கு தொடர்பில்லாத விசயத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ராவத்.

ராவத்தின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் கண்டனத்துக்குள்ளான நிலையில், இந்திய இராணுவம் அவருடைய பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளது. ராவத், குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், எதிர் போராட்டங்கள் குறித்தும் பேசவேயில்லை எனவும் பூசி மொழுகியுள்ளது.

பல முன்னாள் இராணுவ தலைமை பதவிகளில் இருந்தவர்கள், ராவத்தின் பேச்சு முழுமையான அரசியல் கருத்து எனவும் இனியும் அவர் இராணுவத் தளபதியாக தொடரும் தகுதி அவருக்கு இல்லை எனவும் கூறியுள்ளனர்.

ஓய்வு பெற்ற விமானப்படை துணை தலைவர் கபில் கக், “இந்தியாவின் ஆயுதப்படைகள் அரசியலற்றவை. இராணுவ தலைமை எந்தவொரு அரசியல் கருத்தையும் வெளியிடக்கூடாது. குடிமக்கள் ஆயுதப்படைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இராணுவ தலைமை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படை தலைவர் எல். ராம்தாஸ், “நாங்கள் நாட்டுக்கு சேவை செய்கிறோம். அரசியல்வாதிகளுக்கு அல்ல என்பது தெளிவான விதி. எந்தவொரு அரசியல் கருத்தையும் அவர் தலைவர் பதவியில் இருந்தாலும், கீழ் பதவிகளில் இருந்தாலும் கூறுவது தவறானதாகும். அது முறையானது அல்ல” என்கிறார்.

ஓய்வு பெற்ற ஒரு இராணுவ வீரர் கூறினார்: “ஒரு இராணுவ தலைவர் தனது அரசியல் எஜமானர்களுடன் ஒத்துப்போய் இதுபோன்ற அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது தகுதியற்றது. இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்பதையும், ஆயுதப்படைகள் ஒரு ஜனநாயக அமைப்பின் கீழ் செயல்பட வேண்டும் என்பதையும் அவர் மறந்துவிடக் கூடாது. அவர் ஓய்வுக்குப் பின் பதவிக்காக காத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ”

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் கடந்த காலங்களில் எந்தவொரு இந்திய ராணுவத் தலைவரும் இதுபோன்ற அரசியல் கருத்துக்களை வெளியிட்டதில்லை என்கிறார். “இது பாகிஸ்தான் இராணுவத்தில் நடக்கிறது. நாம் இப்போது பாகிஸ்தானை நம் முன்மாதிரியாகக் கொண்டுள்ளோம் என்பது தெரிகிறது. பாரபட்சமான சட்டங்களை இயற்றுவதன் மூலம் நாடு இந்து பாகிஸ்தானாக மாறுவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

இவை நரேந்திர மோடி அரசாங்கம் ஆயுதப் படைகளை அரசியல்மயமாக்குவதன் ஒரு பகுதியாகும் என்றும், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவும் அரசாங்கமும் பாலகோட் வான்வழித் தாக்குதலை எவ்வாறு அரசியலுக்காகப் பயன்படுத்தினார்கள் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மூத்த வீரர் ஒருவர் “தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரசியலுக்காக இராணுவம் சுரண்டப்படுவதை நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம், அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இராணுவத் தலைவரே அதன் ஒரு பகுதியாகியிருக்கிறார்.” எனக் கூறினார்.

படிக்க :
தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !
♦ இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

உத்தரபிரதேச முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பிரகாஷ் சிங் கூறுகிறார்: “ஒரு இராணுவ தலைவரோ அல்லது காவல்துறை தலைவரோ எந்த அரசியல் கருத்தையும் வெளியிடக்கூடாது.”

அதுபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இராணுவ தளபதியின் அத்துமீறிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, “அவர் இந்திய இராணுவத்தின் தலைவர், எந்த அரசியலிலும் இல்லை. எல்லைகளைப்பாதுகாப்பதே அவருடைய பணி. அரசியல் கருத்துக்களை தெரிவிப்பது அல்ல. போராட்டத்தின் தலைமை குறித்து அவர் விமர்சித்துள்ளார், இது ஆளும் அரசின் பக்கம் அவர் சாய்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பாசிச பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பின்னணியில், ஒரு ஜனநாயக நாட்டின் இராணுவத் தலைமை செயல்படுகிறது என்பதையே இந்தச் சம்பவம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.  இது தற்போது நடக்கும் விசயம் மட்டுமல்ல. இதற்கு முந்தைய இராணுவத் தளபதி வி.கே.சிங் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் முழுநேர கரசேவகராகி பாஜக இணைந்து மந்திரியாகவும் பதவி பெற்றார். ஸ்பெக்ட்ரம் ஊழல் சமயத்தில் ராணுவம் டில்லியை முற்றுகையிட முயற்சித்து முன்னேறியதாகக் கூறப்பட்ட காலகட்டத்தில் வி.கே சிங் தான் இராணுவத் தளபதி என்பதோடு இதனைப் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது.

சங்க பரிவாரக் கும்பல் அனைத்து இராணுவம் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களையும் விழுங்கிவிட்டது என்ற உண்மையிலிருந்து நாம் எதிர்கொள்ளப் போகும்  அபாயத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் !


கலைமதி
நன்றி :  டெலிகிராப் இந்தியா. 

நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்

மார்க்சின் மூலதனம் எனும் நூலைப் பற்றி எங்கெல்ஸ் எழுதியுள்ளவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே இந்த வெளியீட்டில் இடம் பெறுகிறது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாகவே எங்கெல்சின் படைப்பாற்றல் பெரு முயற்சிகள், மார்க்சின் படைப்பாற்றல் பெருமுயற்சிகளுடன் நெருக்கமாகப் பின்னியபடி இணைந்து விளங்கின. மூலதனம் எனும் நூலின் மிகவும் முக்கியமான புதுக்கருத்துகளை உருவாக்குவதில் எங்கெல்ஸ் செயலூக்கமாகப் பங்கேற்றார் என்பதையும் தமது ஆலோசனைகள், மெய்த்தகவல்கள், விமர்சனக் குறிப்புரைகள் மூலம் மார்க்சுக்கு உதவி புரிந்தார் என்பதையும் மார்க்சியத்தின் மூலவர்களது கடிதப் போக்குவரத்து புலப்படுத்துகிறது. எங்கெல்சின் பல சிறந்த நூல்கள் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையான கருத்துகளை வளப்படுத்துவதிலும் ஆதாரப்படுத்திக் காட்டுவதிலும் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மார்க்ஸ் வாழ்ந்த காலத்துக்குள் அவருடன் எங்கெல்ஸ் பூண்டிருந்த பல ஆண்டு கால ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக மூலதனத்தின் இரண்டு கடைசித் தொகுதிகளை வெளியிடும் மாபெரும் சாதனை நிறைவேறியது. இவற்றை மார்க்ஸ் கையெழுத்துப் பிரதி வடிவில் விட்டுச் சென்றிருந்தார். இதோடு மூலதனத்தின் முதல் தொகுதியும் மார்க்சின் வேறு பல நூல்களும் புதிய பதிப்புகளில் எங்கெல்சின் முயற்சியால் வெளியிடப்பட்டன. எங்கெல்சால் பிரசுரிக்கப்பட்ட மார்க்சின் நூல்கள் பலவற்றுக்கு அவர் முகவுரைகள் எழுதினார். இம்முகவுரைகள் மார்க்சிய போதனையை அதன் எல்லா விரோதிகளிடமிருந்தும் பாதுகாக்கும் பணியில் அருந் தொண்டாற்றியுள்ளன.

இந்தத் திரட்டில் எங்கெல்சின் ஒரு சில சிறிய நூல்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டுள்ளன. இவை வடிவில் சுயேச்சையானவை. அதே சமயம் மார்க்சின் மூலதனத்துடன் நேரடியான தொடர்புடையவை.

இந்தத் திரட்டின் முதல் பாகம் மூலதனத்தின் முதல் தொகுதி குறித்த மூன்று மதிப்புரைகள் கொண்டதாகும். 1867-ல் மூலதனத்தின் முதல் தொகுதி வெளிவந்ததன் பின்னால் மார்க்சும் எங்கெல்சும் எதிர்கொள்ள நேர்ந்த கடமைகளில் ஒன்று, முதலாளித்துவ வர்க்கம் தான் பகைக்கும் இந்தத் தத்துவத்தை முளைப்பருவத்திலேயே நெரித்தழிக்கும் நோக்குடன் கையாண்ட அமுக்கி மறைக்கும் சதியை உடைத்தெறிவதாகும். 1859-ல் மார்க்சின் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்துக்குச் செலுத்தும் ஒரு பங்கு எனும் நூல் தோன்றியவுடன் ஒரு அமுக்கி மறைக்கும் சதியுடன் முதலாளித்துவ வர்க்கம் எதிரிட்டது. மூலதனத்தின் முதல் தொகுதியையும் இதை அச்சுறுத்தியது. மார்க்சின் சக போராட்டத் தோழர்களும் முதலாவதாக எங்கெல்சும் இந்தத் திட்டத்தைச் செயல் குலைக்கு பல முயற்சிகள் மேற்கொண்டனர். அந்தச் சமயத்தில் தொழிலாளர் பத்திரிகைகள் மிகவும் பலவீனமாக இருந்தன. இந்த நாலில் அடங்கியிருந்த கருத்துகளை மேலும் பரப்பும் ஆற்றலுடைய வாசகர்கள் மத்தியில் இந்த நூலின் மீது ஆர்வத்தை உண்டாக்குவது முதலாளிகளின் கைகளில் இருந்து வந்த பொதுவான பத்திரிகைகளின் மூலம், மறைமுகமான முறையில் மட்டுமே சாத்தியம். முதலாளித்துவப் பத்திரிகை ஆசிரியர்களின் அவநம்பிக்கையினை அகற்றும் பொருட்டு எங்கெல்ஸ் மாபெரும் நுண்திறனைக் கையாள வேண்டி இருந்தது. ஜாராட்சியின் தணிக்கைக்கு இலக்கான வெளியீடுகளில் ருஷ்யப் புரட்சியாளர்கள் பயன்படுத்திய மொழியினை ஒத்ததான, மெய்யாக ஈசாப் பாணி மொழியில் அவர் பல மதிப்புரைகளை எழுதின் முதலாளித்துவ பத்திரிகை ஆசிரியர்களின் வர்க்கத் தணிக்கையால் விளைவாக எங்கெல்சின் சில மதிப்புரைகள் பிரசுரிக்கப்பட சில மதிப்புரைகள் புரட்டப்பட்டன.  (நூலிலிருந்து பக்.3 – 4)

மதிப்பின் விதி மற்றும் லாபத்தின் விகிதம் பற்றிய எங்கெல்சின் கட்டுரை மூலதனத்தின் மூன்றாம் தொகுதிக்கு ஒரு முக்கியமான சேர்ப்பாகும். அதே சமயம் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்தைச் சரியாக முழுமையாகப் புரிந்து கொள்வதற்கும் இது மிகவும் முக்கியமானதாகும். மார்க்சை விமரிசனம் செய்த எண்ணற்ற பலர் மூலதனத்தின் முதல் தொகுதிக்கும் மூன்றாவது தொகுதிக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகக் குறை கூறி அதை நிரூபிப்பதற்கு என எழுதிக் குவித்து வீணாக்கிய காகித மலைகள் எத்தனையோ. தமது கட்டுரையில் எங்கெல்ஸ் அவர்களுக்கு உறுதியான பதிலடி கொடுத்தார்.

மார்க்சியத்தின் இந்தப் பகிரங்கமான விரோதிகளையும் மார்க்சியத்தின்  நண்பர்கள் போல வேஷமிடும் எதிராளிகளையும் ஒருங்கே முழுமையாக அம்பலப்படுத்தினார். இந்த நட்பு வேஷம் போட்டவர்கள் மதிப்பை ‘ஒரு தர்க்க மெய்யாகச்’ சுருக்கினார்கள் (சோம்பார்ட்) அல்லது ‘தத்துவார்த்த ரீதியில் அவசியமான ஒரு கற்பனை’ (ஸ்மித்) ஆக்கினார்கள். மதிப்பு என்பது தத்துவார்த்த வழியில் மட்டுமன்றி வரலாற்று வழியிலார் கூட உற்பத்தியின் விலைக்கு முன்னோடி எனும் மார்க்சின் புதுக்கருத்தை வைத்துத் தொடர்ந்து செயல்படும் எங்கெல்ஸ், பரிவர்த்தனை உதித்தெழுந்து வளர்ச்சியடைவதை ஒட்டி மதிப்பின் வரலாற்று வழித் தோற்றம் ஏற்படுவதையும், சாமான்ய பண்ட உற்பத்தி முதலாளித்துவத்தால் மாற்றீடு செய்யப்படும் போது மதிப்பில் இருந்து உற்பத்தியின் விலைக்கான வரலாற்று மாறுதல் ஏற்படுவதையும் புலப்படுத்துகிறார். எங்கெல்சின் கட்டுரை மதிப்புப் பற்றிய மார்க்சிய தத்துவத்தின் மெய்யான பொருள் முதல்வாத விளக்கத்திற்கான ஓர் அரிய உதாரணமாகும். மார்க்சியத்தை ஊறு செய்யும் எல்லாவகையான சித்தாந்தப் புரட்டுகளையும் எதிர்த்துப் போராடுவதற்குரிய ஈடும் எடுப்புமில்லாப் பேராயுதமாக இது இன்னும் விளங்குகிறது.

படிக்க :
தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !
“என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !

சாமானிய பண்ட உற்பத்தியின் இயல்பு, அதிலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறிச் செல்லும் நடைமுறை பற்றிய தெள்ளத் தெளிவான தன்மைக் குறிப்புகள் இக்கட்டுரையில் அடங்கியிருக்கின்றன என்ற மெய்விவரத்தில் தான் இதன் தனி முக்கியத்துவம் காணக் கிடக்கிறது. மதிப்பின் விதியை எங்கெல்ஸ் பண்ட உற்பத்தியின் இயக்க விதியாகக் காட்டுகிறார். மதிப்பின் விதி செயல்படும் சகாப்தத்தின் அதி தீர்க்கமான அளவை வலியுறுத்துகிறார். பல வரலாற்று உதாரணங்கள் மூலம் அவர் முதலாளித்துவ உறவுகளின் தோற்றத்தைத் தடம் கண்டு, இந்த உறவுகள் எவ்வாறு உற்பத்தித் துறையில் பரவின என்பதையும் காட்டுகிறார். (நூலிருந்து பக்.7-8)

நூல் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
ஆசிரியர் : பிரடெரிக் எங்கெல்ஸ்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2433 2924

பக்கங்கள்: 144
விலை: ரூ 70.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooks | panuval