Thursday, June 25, 2026
முகப்பு பதிவு பக்கம் 133

மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்! | பு.மா.இ.மு போஸ்டர்

தகுதி, திறமை, மோசடி – பா.ஜ.க!
மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்!

மாணவர்களே, இளைஞர்களே!

ம.பி-யில் வருவாய்த்துறை பணியாளர் தேர்வில் மோசடி!

மூன்றாமிடம் வந்த மாணவிக்கு, அவர் தேர்வு எழுதிய பாட புத்தகத்தின் பெயர் கூட தெரியவில்லை!

வெற்றி பெற்ற முதல் 10 மாணவர்களில் ஏழு பேர் பாஜக எம்.எல்.ஏ வின் கல்லூரியில் தேர்வு எழுதியவர்கள்!

மருத்துவத்துறை தேர்வில் நடந்த வியாபம் மோசடி ஆண்டுதோறும் தொடர்கிறது!

ஊழலும் அதிகார முறைகேடுகளும் மலிந்து கிடக்கும் இந்த பிஜேபி கும்பலின் உத்தமர் வேடத்தைத் திரை கிழிப்போம்!

புரோக்கர்களாக மாறிப்போன கோச்சிங் சென்டர்களையும் அதிகார வர்க்கத்தையும் வீழ்த்தாமல் தகுதி – திறமை என்பதெல்லாம் மோசடிதான்!

கல்வி – வேலை – ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை களத்தில் முன்னெடுப்பதன் மூலமே நமக்கான உரிமையைப் பெற முடியும்!


புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு – 9444836642

கொலைகார அனில் அகர்வாலை தமிழ்நாட்டில் நுழையவிடாதே! | மக்கள் அதிகாரம்

19.07.2023

தூத்துக்குடி தியாகிகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!

தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சிய
மார்வாடிகளுக்கு எச்சரிக்கை!

கொலைகார அனில் அகர்வாலுக்கு தமிழ்நாட்டில் நுழைய அனுமதி இல்லை!

கண்டன அறிக்கை

தூத்துக்குடி மண்ணையும் காற்றையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக போராடிய 15 பேரை சுட்டுக் கொன்ற அனில் அகர்வால் வருகின்ற ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னைக்கு வருகிறான். 2018-ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஸ்டெர்லைட் வேதாந்தாவின் உரிமையாளரான அனில் அகர்வால் தான் முழு பொறுப்பு. இப்படிப்பட்ட குற்றவாளி தமிழ்நாட்டுக்கு வருவது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விடப்பட்ட சவால்.

இதை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் தூத்துக்குடி மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிறுவனங்களை அமைத்து அந்த நாட்டின் மண்ணையும் காற்றையும் நஞ்சாக்கியவன். அதற்கு எதிராக போராடிய மக்களை சுட்டுக் கொண்ட கொலைகாரன். இன்று வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள், பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்காத போலீசு ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்ற கூலிப்படைகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. இந்த நிலையில் தான் சென்னையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள சுராணா ஹை டெக் இன்டர்நேஷனல் பள்ளியின் நிகழ்ச்சிக்கு  06.08.2023 அன்று இந்தக் கொலைகார கொள்ளைக்கார அனில் அகர்வால் வருகை தருகிறான்.


படிக்க: தமிழ்நாட்டைச் சேர்ந்த குறவர் இன மக்கள் மீது சித்திரவதை! பாலியல் வன்கொடுமை! | மக்கள் அதிகாரம் கண்டனம்


தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சி வாழுகின்ற இந்த மார்வாடி கும்பல் தமிழ்நாட்டு மக்களின் எதிரியான இந்த அனில் அகர்வாலை நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறது என்றால்,  இந்த மார்வாடி கும்பலின் கொழுப்பையும் திமிரையும் அடக்க வேண்டியது தமிழ்நாட்டின் பொறுப்பு.

தமிழ் மக்களின்,  உலக மக்களின் எதிரியான இந்த அனில் அகர்வால் கலந்து கொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர போலீசு தமிழ்நாடு அரசு அனுமதி தரக் கூடாது என்று மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் கேட்டுக்கொள்கிறது.

அதையும் மீறி அனில் அகர்வால் தமிழ்நாட்டுக்குள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நுழைந்தால் அதற்கான கடும் பதிலடி தமிழ்நாட்டு மக்களால் கொடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை.
9962366321

விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்

விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேலூர்: பிரியாணி – மாவீரன் – போலீசு | தோழர் வெற்றிவேல்செழியன்

வேலூர்: பிரியாணி மாவீரன் போலீசு | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பிஜேபியின் ஏவல்துறையே அமலாக்கத்துறை (ED)! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

பிஜேபியின் ஏவல்துறையே அமலாக்கத்துறை (ED)! | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பட்டினியால் வாடும் 78.3 கோடி மக்கள் – புழுத்து நாறும் முதலாளித்துவம்!

0

லகளாவிய பொருளாதார நெருக்கடியால் 2022-ஆம் ஆண்டில் 78.3 கோடி பேர், அதாவது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையை விட அதிகமானோர், பட்டினியால் வாடியதாக ”உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலவரம்” (State of the Food Security and Nutrition in the World – எஸ்.ஓ.எஃப்.ஐ) என்ற ஐ.நா ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (Food and Agriculture Organization – எஃப்.ஏ.ஓ), விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம் (International Fund for Agricultural Development – ஐ.எஃப்.ஏ.டி), ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund – யுனிசெஃப்), உலக சுகாதார அமைப்பு (World Health Organization – டபிள்யூ.எச்.ஓ) மற்றும் உலக உணவு திட்டம் (World Food Programme – டபிள்யூ.எஃப்.பி) ஆகிய ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த ஐந்து சிறப்பு முகமைகள் இணைந்து ஜூலை 12 அன்று இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டன.


படிக்க: உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!


ஏற்கனவே கடந்த ஜனவரியில் வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை உலகம் முழுவதிலும் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டியது. உலகெங்கிலும் 82 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக அவ்வறிக்கை கூறியது. தற்போது வெளியாகியுள்ள ஐ.நா ஆய்வறிக்கையும் இதை உறுதி செய்கிறது.

இந்த ஐ.நா அறிக்கையில், ”கடந்த ஆண்டு (2022) 240 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 29.6 சதவிகிதம் பேர், தங்களுக்கு தேவையான சரியான உணவைப் பெற முடியவில்லை. அதில் 90 கோடி பேர் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 78.3 கோடி பேர் பட்டினி கிடந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. பட்டினி கிடந்தோரின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டைவிட 2022-ஆம் ஆண்டில் 12.2 கோடி அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் 14.8 கோடி குழந்தைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட கோடிக் கணக்கான குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டில், ஐந்து வயதிற்குட்பட்ட 14.8 கோடி குழந்தைகள் (22.3 சதவீதம்) வளர்ச்சி குன்றியுள்ளனர் (stunted); 4.5 கோடி குழந்தைகள் (6.8 சதவீதம்) வயதுக்கேற்ற எடை அற்றவர்களாக உள்ளனர் (wasted); மேலும் 3.7 கோடி குழந்தைகள் (5.6 சதவீதம்) அதிக எடையுடன் (overweight) இருந்தனர்.


படிக்க: பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !


கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக உலகின் அனைத்து நாடுகளும் பல்வேறு வகையான உறுதியற்ற பொருளாதார தன்மையை எதிர்கொண்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்றால் விரைவுபடுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மேற்கு ஆசியா, கரீபியன், ஆப்பிரிக்காவின் பல நாடுகள் இன்னும் மீளவில்லை. மேலும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரினால் உணவு தானிய விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் காரணமாக, பல நாடுகளில் வானிலை சீரற்றதாகவும், சில நேரங்களில் எதிர்மாறாகவும் இருந்தது. இவற்றின் காரணமாக உழைக்கும் மக்கள் பட்டினிக்குள் தள்ளப்படுகின்றனர்.

இலாப வெறியால் உந்தித் தள்ளப்படும் முதலாளித்துவம் தொடர்ந்து நெருக்கடிக்குள் சிக்கி வருகிறது. அதன் விளைவாகத்தான் உழைக்கும் மக்கள் தாங்கள் வாழ்வதற்கான குறைந்தபட்ச உணவைக் கூடப் பெறமுடியாத அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடி என்பதெல்லாம் உழைக்கும் மக்களுக்கு மட்டும்தான். ஆனால், பெருமுதலாளிகளின் சொத்துகளின் மதிப்புகளோ, கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் கூட அதிகரித்துத்தான் உள்ளது. இதை ஆக்ஸ்ஃபாம் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. சுரண்டலால் உயிர்வாழும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பிற்கு முடிவு கட்டாமல் பட்டினியை ஒருபோதும் ஒழிக்க முடியாது.


பொம்மி

ஆப்கான்: பெண்களை பொதுவாழ்க்கையில் இருந்து அகற்றும் தாலிபான்கள்!

0

ப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அன்றிருந்து இன்று வரை தாலிபான்களின் ஆப்கானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மேலும் தீவிரமடைந்து கொண்டே வருகின்றன.

ஆகஸ்ட் 2021-இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, தாலிபான்கள் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை விதித்தனர். பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லவும் தடை விதித்தனர். அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிய பெண்களுக்குத் தடை விதித்தனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியவும் பெண்களுக்கு தடை விதித்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் அரசாங்க வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

பொது வெளியில் பெண்களை நடமாடவிடாமல் செய்து, பொருளாதார ரீதியாகவும் கல்வி அறிவு ரீதியாகவும் எவ்வித அறிவும் கிடைக்காமல் அவர்களை அடிமைப்படுத்துவதற்கே இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் தாலிபான்கள். தற்போது அழகு நிலையம் வைத்திருக்கும் பெண்கள் மீதும் ஒடுக்குமுறையை ஏவியிருக்கிறார்கள்.

2023 ஜூலை 4-ஆம் தேதியன்று, நாடு முழுவதும் உள்ள அழகு நிலையங்களை ஒரு மாதத்திற்குள் மூட வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இது பெண்களை பொது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவதற்கான சமீபத்திய நடவடிக்கையாகும்.


படிக்க: தலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டம்!


இந்த உத்தரவு பெண்களால் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான வணிகங்களை நிறுத்துவதற்கு கட்டாயப்படுத்தும். இதுதான் பெரும்பாலும் குடும்பங்களுக்கு ஒரே வருமான ஆதாரம். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கான சில வாய்ப்புகளில் ஒன்றை சட்டவிரோதமாக்கும்.

“இந்தச் சமூகத்தில் பெண்கள் இல்லாமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று காபூலில் இருந்த ஒரு அழகு நிலையத்தின் மேலாளர் கூறினார். “நாங்கள் ஆப்கானிஸ்தானில் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்போம் என்று எண்ணுகிறேன்” என்றார் அவர்.

காபூலில் வசிக்கும் சஹர், சில வாரங்களுக்கு ஒருமுறை தனது தலைமுடி மற்றும் நகங்களை வெட்டிக்கொள்வதற்காக ஒரு அழகு நிலையத்திற்குச் செல்வார். பொது வெளிக்குச் செல்லும் இறுதி வழியும் இப்போது துண்டிக்கப்பட்டதாக உணர்ந்ததாக அவர் கூறினார்.

“பெண்கள் பூங்காக்களில் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே நாங்கள் எங்கள் நண்பர்களைச் சந்திக்க ஒரு நல்ல இடமாக அழகு நிலையம் இருந்தது… ஒருவரையொருவர் பார்க்கவும், மற்ற பெண்களைச் சந்திக்கவும், மற்ற பெண்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், இதுதான் எங்களுக்கு கிடைத்த ஒரே இடம்” என்று அவர் கூறினார்.

“இப்போது அவர்களை எப்படி சந்திப்பது, அவர்களை எப்படிப் பார்ப்பது, ஒருவருக்கொருவர் எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. இது எங்களுக்கும் ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள பெண்களுக்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

புருவங்களை வடிவமைத்தல், ஒரு பெண்ணின் இயற்கையான கூந்தலை அதிகரிக்க மற்றவர்களின் தலைமுடியைப் பயன்படுத்துதல் மற்றும் மேக்-அப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இஸ்லாமுக்கு எதிரான நடைமுறைகள் என்று தாலிபான்கள் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: ‘ஒழுங்குநெறி போலீசு’ படை கலைப்பு: ஈரான் மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!


இந்தத் தடை குறைந்தது 60,000 பெண்களைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல பெண்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும். “இந்த நாட்டில் எங்களுக்கு நம்பிக்கையே இல்லை” என்று ஒரு அழகு நிலைய உரிமையாளர் கூறினார்.

தாலிபான்களின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தான் பெண்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் ஆச்சரியமில்லை.

ஆப்கான் பெண்கள் பொதுவெளிக்கு செல்ல பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. பதின்ம வயதுப் பெண்களிடையே மனச்சோர்வு விகிதம் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் 80% தற்கொலை முயற்சிகள் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் பெண்கள் மிக அதிக அளவிலான உளவியல் துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மனநல ஆலோசகர்கள் பெண்களை இன்னும் தடை செய்யப்படாத சில செயல்பாடுகளைத் தொடர ஊக்குவித்து வருகின்றனர். ஆனால் தடைகளின் வட்டம் பெரிதாகி வருவதால் பரிந்துரைகள் செய்யமுடியாத நிலையே தற்போது நிலவுகிறது.

ஒரு பயங்கரவாத மத அடிப்படைவாத அமைப்பு ஒருநாட்டைக் கைப்பற்றியிருப்பது என்பது ஒரு கொடூரமான நிகழ்வு. அந்த பங்கரவாத தாலிபான்களின் இரண்டாண்டுகால ஆட்சியில் பசி-பட்டினி-வறுமை ஆகியவற்றில் சிக்கித் தவிக்கிறார்கள் ஆப்கான் உழைக்கும் மக்கள். பெண்களை சமூகப் புறக்கணிப்பு செய்யும் பல்வேறு திட்டங்களை அரங்கேற்றி அவர்களை மனநல பாதிப்பிற்கும் தற்கொலைக்கும் தூண்டிவருகிறது ஆகக்கொடுரமான தாலிபான் அரசு. ஆப்கான் பெண்கள் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை.


காளி

மகாராஷ்டிரா: சங்கிகளின் பேச்சைக்கேட்டு நமாஸ் செய்வதைத் தடை செய்த கலெக்டர்!

0

காராஷ்டிரா மாநிலம் ஜல்கானின் எரண்டோல் தாலுகாவில் உள்ள ஜும்மா மசூதியின் உள்ளே முஸ்லீம் ஆண்கள் கூடி தினமும் ஐந்து முறை தொழுகை நடத்தி வந்தனர். வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இம்மசூதி, 800 ஆண்டுகள் பழமையானது. வடக்கு மகாராஷ்டிராவில் ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது.

இம்மசூதி ஒரு இந்து வழிபாட்டுத் தலத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்று சங்கப் பரிவார அமைப்பு ஒன்று அளித்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் அமன் மிட்டல் இந்த மசூதியில் வழிபாடு நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இம்மசூதி திடீரென முஸ்லீம்கள் அணுக முடியாததாக மாறிவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ், மசூதி வளாகத்தில் தொழுகை நடத்த உடனடியாக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அப்பகுதியில் போலீசைக் குவிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இம்மசூதியை ”சர்ச்சைக்குரியது” என்று கூறிய மாவட்ட ஆட்சியர், அதை நிர்வகிக்கும் பொறுப்பை வட்டாட்சியரிடம் ஒப்படைத்துவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் இடைக்காலத் தடை உத்தரவு மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான அவரது அதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளையால் மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளை குழுவின் தற்காலிக உறுப்பினர்களில் ஒருவரான அஸ்லம், “முன்னெப்போதும் இல்லாத விதத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, மாநிலத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான இம்மசூதியை வகுப்புவாதமயமாக்குவதற்கான தொடக்கத்தைக் குறிக்கிறது” என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாண்டவ்வாடா சங்கர்ஷ் சமிதி (Pandavwada Sangharsh Samiti) என்ற பதிவு செய்யப்படாத அமைப்பு அளித்த புகாரின் பேரில் பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மசூதி திடீரென சர்ச்சைக்குரிய இடமாக மாற்றப்பட்டுள்ளது. புகார்தாரர் பிரசாத் மதுசூதன் தண்டவாடே, கடந்த மே மாதத்தில் ஜல்கான் மாவட்ட ஆட்சியர் அமன் மிட்டலிடம் புகார் மனுவை அளித்தார். தண்டவாடே (அவரின் பேஸ்புக் சுயவிவரத்தின்படி) ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) மற்றும் பஜ்ரங் தள் ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளார். தண்டவத்தே தனது புகாரில், இம்மசூதி ஒரு இந்து வழிபாட்டுத் தலத்தின் மீது கட்டப்பட்டது என்றும், இது சட்டவிரோதமானது என்றும், இதை மாநில அதிகாரிகள் கையகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளை இந்த இடத்தை ’சட்டவிரோதமாக’ ஆக்கிரமித்துள்ளதாகவும் புகார்தாரர் கூறியுள்ளார்.


படிக்க: மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!


ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளை உறுப்பினர்கள் தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஜூன் மாத இறுதியில் நோட்டீஸ் வரும் வரை இந்தக் கூற்றுகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர். அறக்கட்டளை குழுவின் தற்காலிக உறுப்பினரான அஸ்லம் ”குறுகிய காலத்தில், எங்கள் வழக்கை வாதாடுமாறு எங்களிடம் கோரப்பட்டது. இந்நிலையில் திடீரென, ஜூலை 11 அன்று, மாவட்ட ஆட்சியர் ஒரு தடை உத்தரவை பிறப்பித்து விட்டார்” என்று கூறினார்.

மசூதியின் அறக்கட்டளை குழுவுக்கு மட்டுமல்லாமல் வக்பு வாரியம் மற்றும் இந்தியத் தொல்லியல் துறைக்கும் (ஏ.எஸ்.ஐ) மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது ஒரு பழங்கால அமைப்பு என்ற அறக்கட்டளையின் கூற்றுகளை ஏ.எஸ்.ஐ-யும் அங்கீகரித்துள்ளது. 1986-ஆம் ஆண்டில் தொல்லியல் துறை ஆராய்ச்சியில் ஈடுபட்ட காலத்திலிருந்து, மசூதி வளாகத்திற்குள் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மசூதி காலங்காலமாக முஸ்லீம்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இடம்தான் என்பதைத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

வக்பு சட்டத்தை மேற்கோள் காட்டி, புகாரை விசாரிக்கும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தை எதிர்த்து வக்பு வாரியம் வழக்குத் தொடர்ந்ததுள்ளது.

வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் சொத்து பிரச்சினைகள் தொடர்பாக எழும் சர்ச்சைகளை வக்பு வாரியத்தைத் தவிர வேறு எந்தத் துறையும் விசாரிக்க முடியாது என வாரியத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ஜுனைத் சையத் இப்பிரச்சினை குறித்துப் பதிலளிக்கையில் கூறியுள்ளார்.

வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மொயின் தாசில்தார் தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ”தடை உத்தரவு பிறப்பிக்கும் மாவட்ட ஆட்சியரின் முடிவு அவரது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும், இது வக்பு தீர்ப்பாயத்தின் சட்ட அதிகார வரம்பை மீறுவதாகும் என்றும் கூறினார். இங்குச் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வதில் மாவட்ட ஆட்சியர் தலையிடலாம்; மற்றவை அனைத்தும் வக்பு வாரியத்தின் பொறுப்பு. இந்த மசூதி 2009-ஆம் ஆண்டு முதல் வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்தாக உள்ளது, அதில் எந்த குழப்பமும் இல்லை” என்று மொயின் தாசில்தார் தெளிவுபடுத்தினார். மேலும், வாரியம் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த பதிலில், சட்ட ரீதியான நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் போது வக்பு கூறியதை மாவட்ட ஆட்சியர் புறக்கணித்து விட்டதாக மொயின் தாசில்தார் குற்றம்சாட்டினார்.


படிக்க: மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!


”இடைக்கால உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்துள்ளோம்” என்று மொயின் தாசில்தார் மேலும் கூறினார். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அதை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இடைக்காலத் தடை உத்தரவு அடுத்த விசாரணை வரை தொடரும்.

இதற்கிடையில், மஸ்ஜித் அறக்கட்டளை பிரிட்டிஷ் இந்திய அரசாங்க காலங்களிலிருந்து அவ்வப்போது வழங்கப்பட்ட உத்தரவுகள் அடங்கிய ஆவணங்களுடன் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ”நியாயமான விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் முன்வரவில்லை. மனுதாரரிடம் இருந்து எதையும் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை. மனுதாரருக்கு வாய்ப்பளிக்காமல் 11.07.2023 அன்று ஜல்கான் மாவட்ட ஆட்சியர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 மற்றும் 145-ன் கீழ் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்” என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மஸ்ஜித் அறக்கட்டளை குற்றம்சாட்டியுள்ளது.

கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று மதவெறியைத் தூண்டி அதன்மூலம் தனது செல்வாக்கை விரிவு படுத்திக்கொள்ளும் உத்தி காவி பாசிஸ்டுகளால் தொடர்ந்து கையாளப்பட்டுவரும் ஒன்றுதான். ஏற்கனவே, மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்துத்துவ கும்பல்கள் தொடர் பேரணிகளை நடத்தி வருகின்றன; அங்கு ‘பசுப் பாதுகாப்பு’ கொலைகள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் அரசு எந்திரத்தின் துணையுடன் நடந்தேறி வருகின்றன. அம்மாநிலத்தில் மத முனைவாக்கத்தை சங்கப் பரிவார கும்பல் துரிதப்படுத்துவதையே தற்போது நடைபெற்றுவரும் இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.


பொம்மி

தக்காளி விலை உயர்வு – மக்கள் நேர்காணல்

தக்காளி விலை உயர்வு – மக்கள் நேர்காணல்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டமும், RSS-BJP-யின் தொழிற்சங்கப் பிரிவான BMS-ன் எதிர்ப்பும்!

0

மிழ்நாட்டிலேயே முதன்முறையாக Public Private Partnership (PPP) என்ற பெயரில் தனியார் பங்களிப்போடு நீரேற்று மின் நிலையங்களை அமைக்கப்போவதாக  திமுக அரசு சென்ற ஆண்டு  அறிவித்திருந்தது.

இவ்வாண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில் மேற்கண்ட PPP திட்டத்தில் 15 நீரேற்று மின் நிலையங்களை அமைப்பதன் மூலம் 14500 MW அளவிலான மின்உற்பத்தியை உருவாக்க ரூ.77000 கோடி ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது.

மேற்கண்ட மின் நிலையங்கள் அமைக்கும் ஆணையை ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான BHEL-க்கு வழங்காமல் தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்து, RSS-BJP-யின் தொழிற்சங்க பிரிவான BMS (பாரதீய மஸ்தூர் சங்கம்) பல்வேறு கட்ட கவனஈர்ப்பு போராட்டங்களை திருச்சி பெல் ஆலைப் பகுதிகளில் நடத்தி வருகிறது.

படிக்க : தேவாலயங்களின் மீது அதிகரித்து வரும் காவிகளின் தாக்குதல்கள்!

தனியார்மயத்தை நாடு முழுவதிலும் அசுர வேகத்தில் அமல்படுத்தி வருகிறது பாஜக. அதன் தொழிற்சங்கமான BMS தனியார்மயத்தை எதிர்ப்பதாகவும், பொதுத்துறைகளை காக்கப் போராடுவதாகவும் சொல்வது “ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதை”யாக இருக்கிறது.

நாடு முழுவதும் சுமார் ரூ.25 லட்சம் கோடி மதிப்பிலான 1824 அரசு – தனியார் கூட்டு (PPP) திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக மோடி அரசே தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ரயில்வே, மின் உற்பத்தி, துறைமுகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் கொழிக்க அரசு – தனியார் கூட்டு (PPP) திட்டங்களையே கொண்டு வந்து மிக வேகமாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

“நாட்டின் மின்துறையை மேம்படுத்த அரசு தனியார் கூட்டு (PPP) திட்டங்கள் அவசியம்” என்று பிரதமர் மோடி வெளிப்படையாகவே பேசி வருகிறார். நாட்டின் மின்துறையை மொத்தமாகத் தனியார்மயமாக்கும் திட்டத்தோடு செயல்பட்டு வரும் மோடி அரசு, மாநில அரசுகளையும் நிர்பந்தித்து வருகிறது. அதற்காகவே “உதய் மின் திட்டம்”, “புதிய மின்சார திருத்தச் சட்டம்” போன்ற திட்டங்களை அடுத்தடுத்து ஏவி வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை மின் உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமான பெல் நிறுவனம் நலிவடைய அடிப்படைக் காரணங்களே மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகள் தான்.

உதாரணமாக, பாஜக அரசின் தனியார்மய நடவடிக்கைகளை உள்ளிருந்தே செயல்படுத்தவதற்கு, பெல் நிறுவனத்தின் இயக்குநர்களாக நேரடியாகவே பாஜக ஆட்களை நியமித்து வருகிறது.

மேலும் “ஆத்ம நிர்பார் பாரத்” (சுயசார்பு இந்தியா)என்ற கொள்கைகளால், பொதுத்துறை நிறுவனங்கள் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான சூழல் பாதகமாகவும் நட்டம் ஏற்படும் வகையிலும் மாறியுள்ளது.

இதனால் தனியார் நிறுவனங்களோடு கடுமையான போட்டி போட வேண்டிய சூழல் பெல் நிறுவனத்திற்கு உருவாகியுள்ளது. மேற்கண்ட குறிப்பிட்ட தனியார்மய ஆதரவு நடவடிக்கைகளையும், தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளையும் மிகத்தீவிரமாக மோடி அரசு அமல்படுத்தியது தான் பெல் நிறுவனம் நலிவடையக் காரணங்களாகும். BMS சங்கம் இதைப்பற்றியெல்லாம் இதுவரை வாய் திறந்ததில்லை.

மேலும், பொதுத்துறைகளை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதற்கென்று ஒரு தனித் துறையையே (Department of Investment and Public Asset Management (DIPAM) உருவாக்கி கார்ப்பரேட்டுகளுக்கு சேவைசெய்து வருகிறது மோடி அரசு. Strategic sale என்ற பெயரில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை கடந்த 9 ஆண்டு காலத்தில் மொத்தமாகவே தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் (National Monetisation Pipeline) “தேசிய பணமாக்கல் திட்டம்” என்ற பெயரில் பொதுத்துறை மற்றும் அரசின் சொத்துக்களை பல வருடங்களுக்கு தனியாருக்கு குத்தகை எனும் பெயரில் தாரைவார்க்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் “தொழில்களை நடத்துவது அரசின் வேலையல்ல; அது தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் வேலை” (“Government has ‘no business to be in business”) என்கிறார் மோடி.

ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்க்கும் பாஜகவை கண்டுகொள்ளாத BMS சங்கம், நீரேற்று மின்திட்ட விவகாரத்தில் திமுகவிற்கு எதிராக மட்டும் போர்க்கொடி பிடிக்கிறது. இங்கே திமுக அரசின் தனியார்மய ஆதரவு நடவடிக்கைகளை எதிர்ப்பதாக காட்டி பொதுத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிறுவிக்கொள்ள முயலும் BMS, ஒன்றிய RSS-BJP அரசின் மேற்கண்ட கார்ப்பரேட் ஆதரவு தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருபோதும் இதுபோல போராடியது கிடையாது.

மோடி ஆட்சிக்கு வந்தபிறகு ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்தும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டங்களில் கூட ஒருபோதும் BMS கலந்துகொண்டது கிடையாது.

படுமோசமான ஊழல் கட்சியும், கார்ப்பரேட் சேவையில் உலகில் நிகரற்ற பாசிச தன்மையும் கொண்ட பாஜக-வின் தொழிலாளர் அமைப்பு, தனியார்மயத்திற்கு எதிராக பொதுத்துறை பாதுகாப்பு என கூச்சல் போடுவது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாநில கட்சிகளை ஒழித்துக்கட்டவும், தொழிலாளர்களை ஏய்த்துப் பிழைக்கவும்  நடத்தும் நாடகமேயன்றி வேறொன்றுமில்லை.

BMS-ன் இந்த இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டி பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கிழக்கச் செய்ய வேண்டியது இன்று நாட்டில் நிலவும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான செயல் திட்டங்களில் ஒன்றாகும்.

படிக்க : கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

அதே நேரம் திமுக அரசின் தனியார்மய நடவடிக்கைகளை எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. 12 மணி நேர வேலைச் சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தபோது அதை தொமுச உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் எதிர்த்து முறியடித்ததுபோல, திமுக அரசின் தனியார்மய நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் போராட வேண்டும்.

பாசிச பாஜக-வை முறியடிப்பதுதான் இன்று நமது இலக்கு; அதனால் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளை விமர்சித்தால் பாஜக உள்ளே வந்துவிடும் என்று, திமுக அரசின் கார்ப்பரேட் நலத் திட்டங்களை எதிர்க்காமல் விட்டால் BMS போன்ற பாசிச சக்திகள்தான் வளர்ச்சியடையும்.

எனவே, திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்த தொழிற்சங்கங்கள், ஜனநாயக சக்திகளின் செயலொற்றுமை தான், பாசிச சக்திகளை தமிழக உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி ஒன்றிய பாசிச பாஜக அரசையும் கார்ப்பரேட் சூறையாடல்களையும் எதிர்த்து முறியடிக்க உதவும்.


பாரி

கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

0

மீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் இருந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். கட்சியின் 40 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், கட்சியின் கொடி, சின்னம் அனைத்தும் தங்களின் அணிக்கே சொந்தம் என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், பா.ஜ.க இது போன்ற கட்சித் தாவல்களை இருமுறை நடத்தியுள்ளது.

முன்னதாக, 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்தமுள்ள 55 சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சியைவிட்டு விலகினர். அதனையடுத்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி (Maharashtra Vikas Aghadi – MVA) அரசு ஆட்சியை இழந்தது. பின்னர், ஷிண்டே பா.ஜ.க-வோடு கூட்டணியமைத்து முதல்வராகப் பதவியேற்றார்.

கட்சித் தாவல்களின் வரலாறு

கட்சித் தாவல் என்பது பாசிச இருள் சூழ்ந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் நடைபெற்றுவரும் புதியதொரு நிகழ்வல்ல. அது ‘சுதந்திர’ இந்தியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும். ‘சுதந்திர’த்திற்குப் பின்பு, காங்கிரஸ் சோசலிச கட்சி மற்றும் ஜனா காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கட்சித் தாவலின் மையங்களாக விளங்கின. 1960-களில், குறிப்பாக 1967-ஆம் ஆண்டில், காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்தபோது கட்சித் தாவல் சம்பவங்கள் அதீத அளவில் நடைபெற்றன.

ஆரம்பத்தில் கட்சித் தாவல்களின் மையமாக இருந்த ஹரியானாவில் இருந்துதான் ”ஆயா ராம் கயா ராம்” என்ற பிரபலமான சொற்றொடர் தோன்றியது. கயா லால் என்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு வருடத்திற்குள் பல அரசாங்கங்களைக் கவிழ்க்க உதவினார். கயா லால் ஒரே நாளில் 3 மூன்று முறையும், 15 நாட்களில் 4 முறையும் கட்சி தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1980-களில் பஜன் லால் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஹரியானாவின் கயா லாலாக மாறினார். ’பண்ணைவீடு அரசியல்’ (farmhouse politics) என்ற சொல் கூட ஹரியானாவில் தோன்றியதுதான். ஏனெனில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற கட்சிகளுக்குத் தாவாமல் தடுப்பதற்காகப் பண்ணை வீட்டில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இது தற்போதைய ’ரிசார்ட்’ அரசியலின் முந்தைய வடிவமாகும்.

‘சுதந்திர’த்திற்குப் பிறகு, முதல் நான்கு தசாப்தங்களில் காங்கிரஸ் பல கட்சி தாவல்களை நடத்தியுள்ளது. மத்தியில் வலுவான காங்கிரஸ் அரசாங்கம் இருந்த போதெல்லாம், மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் காங்கிரசுக்குத் தாவினர். 1971-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி ஆட்சியில் இந்தியா முழுவதும் கட்சித் தாவலினால் அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டன. மேலும், 1980-ஆம் ஆண்டில் இந்திரா ஆட்சி மீண்டும்  அமைந்தபோது இம்மாதிரியான ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகள் மீண்டும் நடத்தப்பட்டன.

மொரார்ஜி தேசாய் அரசாங்கத்திலிருந்து 76 எம்.பி-க்கள் கட்சி தாவியதன் மூலம் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியமைத்தார். அதனையடுத்து, கம்யூனிஸ்ட் அல்லாத எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்து நாடு தழுவிய அளவில் பல மாநிலங்களில் அரசாங்கங்களை அமைக்க இந்திரா காந்திக்கு உதவினர். உதாரணமாக, இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் ஜனதா கட்சி காங்கிரசில் இணைந்தது; இதேபோல், ஹரியானாவில் 21 எம்.எல்.ஏ-க்களுடன் பஜன் லால் காங்கிரசுக்குத் தாவினார். அதேசமயம், 1980-களில் ஆட்சியில் நீடிப்பதற்காகக் காங்கிரஸை விட்டு வெளியேறவும் பஜன் லால் போன்றவர்கள் தயங்கவில்லை.


படிக்க: இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!


இந்த கட்சித் தாவல்களுக்கு அதிகார‌ ஆசை போன்ற காரணங்கள் இருந்தாலும் பல கட்சி அரசியல் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக காங்கிரஸின் தனித்துவமான இருப்பு என்பதுதான் முதன்மைக் காரணமாக அமைந்தது. இந்திய அரசியல் சக்திகள் காங்கிரஸ் ஆதரவு, காங்கிரஸ் எதிர்ப்பு என இரு பிரிவுகளாகப் பிரிந்தன.

காங்கிரஸில் கருத்தியல் அடித்தளம் இல்லாதது கட்சி தாவல்களுக்கு முக்கியக் காரணமாகும். எடுத்துக்காட்டாக, 1980-களில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாஜகவும் கட்சி தாவல்களில் இருந்து தப்பின. இதற்கு நேர்மாறாக, பிற சாதி அடிப்படையிலான, குடும்ப அடிப்படையிலான கட்சிகளால் இதிலிருந்து தப்ப முடியவில்லை.

கட்சித் தாவலை அதிகமாக அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சிதான் 1985-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி  ஆட்சியில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை இயற்றியது. ஆனால், அதன் பின்னரும் கட்சித் தாவல்கள் தடையின்றி நடைபெற்றன. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறினால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று ஆரம்பத்தில் இருந்தது. பின்னர், அது 2003-ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு என்று மாற்றப்பட்டது.

பாசிச பா.ஜ.க பெரும்பான்மை பெற்ற பின்பு

2014-ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன்பு, பா.ஜ.க ஒப்பீட்டளவில் பல மாநிலங்களில் வலுவாக இருந்தது. மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மற்றும் கோவாவில் அரசாங்கங்களைக் கொண்டிருந்தது; பீகார் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களின் அரசாங்கங்களில் ஒரு கூட்டாளியாக இருந்தது.

2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்ததும் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-விற்கு கட்சித் தாவல்கள் தொடங்கிவிட்டன. மக்களவையில் காங்கிரஸை 44 இடங்களாகக் குறைத்த ‘மோடி அலை’யில் சவாரி செய்ய பல தலைவர்கள் கட்சி மாறி பா.ஜ.க-வில் இணைந்தனர். ஹரியானா, அசாம், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெறுவதற்குக் காங்கிரஸில் நடந்தேறிய இந்த கட்சி விலகல்கள் முக்கியமானவை.

அதே நேரத்தில், தனது ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’(காங்கிரஸ்-முக்த் பாரத்) திட்டத்தைத் தொடங்கியபோது, எம்.எல்.ஏ-க்களை ஈர்க்க திருத்தப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் உதவியை நாடியது பா.ஜ.க. ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறினால் அது தகுதி நீக்கத்திற்கு வழிவகுக்காது என்பதால் அதைத் தனது இலக்காக பா.ஜ.க நிர்ணயித்துக் கொண்டது.

அருணாச்சல பிரதேசத்தில் 2014 தேர்தலில் காங்கிரஸ் 47 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் பெமா காண்டு மற்றும் பிற எம்.எல்.ஏ-க்கள் அருணாச்சல மக்கள் கட்சிக்கு (People’s Party of Arunachal) தாவினர். இதனால் காங்கிரஸின் பலம் ஒரு இடமாகக் குறைந்தது. பின்னர், காண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து முதல்வராகத் தொடர்ந்தார்.


படிக்க: டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!


மணிப்பூரில் 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வென்ற பின்னர் பா.ஜ.க இதேபோன்ற ஒன்றைச் செய்தது. நாகா மக்கள் முன்னணி (என்.ஜி.எஃப்) மற்றும் தேசிய மக்கள் கட்சி‌ (என்.பி.பி) ஆகிய பிராந்திய கட்சிகளுடனும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் ஆதரவுடனும் பா.ஜ.க அரசாங்கத்தை அமைத்தது. கட்சி மாறிய அந்த ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து விலகவில்லை. மாறாக அவர் புதிய அரசாங்கத்தில் அமைச்சரானார்.

கர்நாடகாவில் 2008-ஆம் ஆண்டில் பா.ஜ.க ‘ஆபரேஷன் லோட்டஸ்’-ஐ வெற்றிகரமாக மேற்கொண்டது. அந்த அனுபவத்தைக் கொண்டு 2019-ஆம் ஆண்டில் அங்கு காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசாங்கத்தைக் கவிழ்த்து, 2018-இல் இழந்த ஆட்சியை பா.ஜ.க மீண்டும் கைப்பற்றிக் கொண்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 13 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மூவர் மற்றும் கே.பி.ஜே.பி-யைச் (KPJP) சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ ஆகியோர் பா.ஜ.க-வுக்குத் தாவினர்.

2014-ஆம்‌ ஆண்டு முதல் 405 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் கட்சிகளிலிருந்து விலகியதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) 2020-ஆம் ஆண்டு அறிக்கை கண்டறிந்துள்ளது. அவர்களில் 182 பேர் (44.9%) பா.ஜ.க-வில் இணைந்தனர். இந்த 405 எம்.எல்.ஏ-க்களில் 170 பேர் (42%) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா பெருந்தொற்று இந்தியாவின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தபோது, பா.ஜ.க மற்றுமொரு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. மத்திய பிரதேசத்தில் 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தனர். இது கமல்நாத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. தேர்தலில் தோல்வியடைந்த மற்றுமொரு மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

பாசிச பா.ஜ.க-வும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

ஆரோக்கியமான ஜனநாயகத்தில் பெரும்பான்மை இருந்தால் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்க முடியும். மோடி ஆட்சியில் இந்த நிலைமை மாற்றப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தாலும் அதன் தலைவர்கள் மத்திய புலனாய்வு முகமைகளால் துன்புறுத்தப்படுகின்றனர். 2014-ஆம் ஆண்டு முதல், அமலாக்கத்துறை சுமார் 121 அரசியல் தலைவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. இவர்களில் 115 பேர் (95%) பா.ஜ.க அல்லாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பா.ஜ.க-வுக்குத் தாவ முடிவு செய்தால் மத்திய புலனாய்வு முகமைகளின் விசாரணைகள் வலுவிழந்து விடுகின்றன. காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி எனப் பலரின் மீதான வழக்குகள் பா.ஜ.க-வில் அவர்கள் இணைந்ததும் கிடப்பில் போடப்பட்டன; கைவிடப்பட்டன.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தடையின்றித் தொடர்ந்தது. சி.பி.ஐ-யும் (CBI) அமலாக்கத்துறையும் (EB) இணைந்து எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மீது பல வழக்குகளைப் பதிவு செய்கின்றன. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும், அவரது குடும்பத்தினரும் குறிவைக்கப்படுவது இதற்கு ஒரு உதாரணம். மற்றொரு உதாரணம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா. இதுபோன்ற பல வழக்குகளில் அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பதற்காக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கடுமையான விதிகளை அமலாக்கத் துறை பயன்படுத்துகிறது.

இந்த செயல்முறையை பா.ஜ.க வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறது. ஹிமந்த பிஸ்வா சர்மா, சுவேந்து அதிகாரி, நாராயண் ரானே போன்ற தலைவர்கள் பா.ஜ.க-வுக்குத் தாவிய நிலையில், கட்சி மாறாத மற்றவர்கள் விசாரணை மற்றும் தண்டனை செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி, 2022-ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) அரசாங்கத்தை பா.ஜ.க கவிழ்த்தது. யாமினி ஜாதவ், பாவனா கவாலி, பிரதாப் சர்நாயக் போன்ற சிவசேனா தலைவர்கள் ஷிண்டே முகாமில் சேருவதற்கு முன்பு அவர்கள் மீது அமலாக்கத் துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதேபோல், சமீபத்தில் கட்சி தாவிய தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்குகள் இருந்தன.


படிக்க: இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!


எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய ஒரு கட்சிக்கு வலுவான காரணம் இருந்தாலும், தகுதி நீக்க மனுக்கள் மீதான முடிவுகளைத் தாமதப்படுத்த சபாநாயகரின் அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது. ஷிண்டே அணி எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சிவசேனா தாக்கல் செய்த தகுதி நீக்க மனுக்கள் மீது மகாராஷ்டிரா சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்கவில்லை; எடுக்கவும் போவதில்லை.

முக்கியமான தேர்தல்களுக்கு முன்பு மத்திய புலனாய்வு முகமைகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது சோதனை நடத்துவதென்பது ஒரு பொதுவான போக்காக உருவெடுத்து உள்ளது. 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரைக்குச் சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது குடும்பத்தினரும் இதேபோன்றதொரு தாக்குதலை எதிர்கொண்டனர்.

கேரள தேர்தலுக்கு முன்பு, தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ் முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவு மற்றும் வற்புறுத்தலின் பேரில் அந்தக் குற்றத்தைச் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் சி.பி.ஐ சோதனை நடத்தியது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே காங்கிரஸில் அதிகார மோதல் ஏற்பட்டபோது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் கூட்டாளிகளின் வீடுகளில் பல சோதனைகள் நடத்தப்பட்டன.

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா மீது, 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, நிலம் கையகப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க உடனான கூட்டணியை விட்டு வெளியேறியபோது அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.

எம்.எல்.ஏ-க்களின் குதிரை பேரமும் கட்சித் தாவல் நடவடிக்கைகளும் முந்தைய அரசாங்கங்களின் போதும் நடைபெற்றுள்ளன. ஆனால் பாசிச பா.ஜ.க அரசு அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கும் துன்புறுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் தன்னிடம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட எத்தனிக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கட்சி மாற வைக்க பா.ஜ.க கையாளும் இழிவான வழிமுறைகளை ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்கள்’ என்று ஆளும் வர்க்க ஊடகங்கள் பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றன. எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் செய்யப்படுவது ‘சாணக்கிய தந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.

அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டதால், பாசிச பா.ஜ.க இந்த இழிவான உத்திகளைப் பயன்படுத்துவது மேலும் அதிகரிக்கும் என்பது திண்ணம்.

நாம்‌ இதில் இரண்டு விசயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஒன்று‌, கட்சித் தாவல் குறித்து; மற்றொன்று மத்திய புலனாய்வு முகமைகளின் அதிகாரம் குறித்து.

இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கத் தேவையில்லை. அவர்கள் கட்சித் தாவும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மக்களுக்கு அதிகாரம் இல்லை. இதனால் கட்சி தாவும் பேர்வழிகள் கலக்கமோ அச்சமோ இல்லாமல் தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்சி தாவுகிறார்கள்.

அதேபோல், இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மத்திய புலனாய்வு முகமைகளுக்கு சட்டத்தின் மூலம் வழங்குகிறது. இந்த மத்திய புலனாய்வு முகமைகளைக் கொண்டுதான் பாசிச பா.ஜ.க எதிர்க்கட்சிகளை வேட்டையாடுகிறது. சட்ட வழிமுறைகளின் மூலம் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுதான் பாசிசம் மேன்மேலும் செழித்து வளர்கிறது.

எனவே, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பினுள் தீர்வைத் தேடுவதை விடுத்து, ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதற்கான போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும்.


பொம்மி

மூடு டாஸ்மாக்கை! – மக்கள் நேர்காணல் | வீடியோ

மூடு டாஸ்மாக்கை! – மக்கள் நேர்காணல் | வீடியோ

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கஞ்சா விற்பனை கும்பலை தட்டிக்கேட்ட போராளிகள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள்!

கஞ்சா விற்பனை கும்பலை தட்டிக்கேட்ட போராளிகள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள்!

கிரிமினல் கும்பல்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

சட்டவிரோத லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையைக்  கண்டித்து இயக்கம் நடத்திய சேலம் DYFI மாவட்டச் செயலாளர் தோழர் பெரியசாமி, சமூக விரோதக் கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் இதே போல கஞ்சா விற்பனை கும்பலுக்கு எதிராக போராடிய DYFI தோழர் தவூபிக் தாக்கப்பட்டதை நாம் அறிவோம்.

போதை சீரழிவுக்கு எதிராக இயக்கம் நடத்தும் போராளிகள் தொடர்ச்சியாக தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும். தோழர் பெரியசாமியை தாக்கிய கிரிமினல் கும்பல்கள் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், சட்டவிரோத லாட்டரி, கஞ்சா விற்பனை ஆகியவற்றில் ஈடுபடும் கிரிமினல் கும்பல்கள் போலீசின் கள்ளக் கூட்டு இல்லாமல் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

லஞ்சம் வாங்கிக் கொண்டு போலீசே கிரிமினல் கும்பல்களை பாதுகாப்பதால்தான், சமூக விரோதச் செயல்களை எதிர்த்துப் போராடும் பெரியசாமி போன்ற செயற்பாட்டாளர்கள் கிரிமினல் கும்பல்களால் இப்படி துணிச்சலாக தாக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாடு போலீசின் “கஞ்சா வேட்டை 2.0” என்பதெல்லாம் வெறும் பம்மாத்து என்பதற்கான நிரூபணங்களே போராளிகள் மீதான தொடர் தாக்குதல்கள்.

சீரழியும் இளைஞர்களை கிரிமினல் கும்பல்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், பெரியசாமி, தவூபிக் போன்ற தோழர்களோடு மக்களும் இணைந்து போராடுவதே தீர்வு!

புதிய ஜனநாயகம்
13.07.2023

disclaimer

ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்

மீபத்தில் ஒடிசாவை சேர்ந்த தனியார் செய்தி நிறுவனமான ஒ.டி.வி (ஒடிசா டிவி), இந்தியாவின் முதல் பிராந்திய செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் லிசாவை அறிமுகப்படுத்தியது. பொதுவாக ஆங்கில செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை இரண்டு மூன்று நாட்கள் கழித்தே பதிவிடும் பாலிமர், புதியதலைமுறை, நியூஸ் தமிழ் போன்ற தமிழ் செய்தி தொலைக்காட்சிகளின் சமூக வலைத்தள பக்கங்களில் இந்த செய்தி உடனடியாகவே இடம்பெற்றது. ஒரு மாநிலத்தின் பிராந்திய தொலைக்காட்சி ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழியில் சரளமாக பேசும் ஏ.ஐ செய்தி வாசிப்பாளரை வடிவமைத்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

பத்திரிகைத் துறையில் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் என்பது புதியது இல்லை. கடந்த 2018 ஆம் ஆண்டே சீனாவை சேர்ந்த சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ஆண் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் பிறகு பல நாடுகளில் செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளர்கள் பயன்படுத்தப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா டுடே இந்தியாவின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர் சனாவை அறிமுகப்படுத்தியது. விகடன் டிவி-யின் “இம்பெர்பெக்ட் ஷோ” போன்ற யூடியூப் நிகழ்ச்சிகளில் கூட ஏ.ஐ செய்தி வாசிப்பாளர்கள் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் லிசாவிற்கு தனி கவனம் கொடுக்கப்பட்டது. லிசா அசலாக பெண்ணை போல் காட்சியளித்ததும் இந்திய முக ஜாடையில் பொட்டு வைத்துக்கொண்டு காட்டன் புடவையில் கொண்டையோடு ‘சர்வ லட்சணத்துடன்’ காட்சியளித்ததும் இதற்கு முக்கிய காரணம்.

இன்ஸ்டாகிராமில் இந்த செய்திக்குக் கருத்து பதிவிட்டவர்களில் பலர் தமிழ் செய்தி வாசிப்பாளரை  “உனக்கு ஆப்பு வைக்க போறத நீயே வாசிக்கிற பாரு”, “நியூஸ் ரீடர்ஸ் ஃபுட் டெலிவரி வேலைக்கு தயாராகுங்கள்”, “இந்த செய்தியை வாசிக்கும் போது வெச்சான் பாரு ஆப்பு எனக்கு என்று செய்தி வாசிப்பவர் நினைத்திருப்பார்”, “நியூஸ் ரீடர்ஸ்க்கு வேல இல்லாம  போயிரும் போல இருக்கு”, “ரைட் டா அப்போ நியூஸ் ரீடர் வேலைய காலி பண்ண போறீங்க”, “செய்தி தொகுப்பாளர்களுக்கு பை” என்று தங்களது கருத்துகளை ’நகைச்சுவை’யுடனும் ஆதங்கத்துடனும் வெளிப்படுத்தியிருந்தனர்.


படிக்க: செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !


எப்படியிருப்பினும் அனைவரின் கருத்திலும் இந்த ஏ.ஐ செய்தி வாசிப்பாளர்கள் மூலம் செய்தி வாசிப்பாளர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்படவுள்ளது என்ற பொதுவான உண்மை மட்டும் வெளிப்பட்டது.

ஏனெனில் சமீப காலங்களாகவே செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் இதழியல் துறை பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி வருகிறது. தரவுகள் செய்திகள் சேகரிப்பது, ஆய்வு செய்வது, தரவுகள் சரிபார்ப்பது, கட்டுரை எழுதுவது போன்ற வேலைகளை தற்போது ஏ.ஐ-யே செய்கின்றது. சாட் ஜிபிடி-யின் வருகையானது இதில் ஒரு பாய்ச்சலாக அமைந்துள்ளது. குறிப்பாக  இதன் மூலம் சுதந்திர பத்திரிகையாளர்களின் (Independent Journalist) வேலை கேள்வி குறியாக்கியுள்ளது.

சான்றாக, கடந்த பிப்ரவரி மாதம் அசேல் ஸ்பிரிங்கர் என்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய பதிப்பகத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி மத்தியாஸ் டூப்ஃப்னர், “செயற்கை நுண்ணறிவு சுதந்திர பத்திரிகைத்துறையை முன்னெப்போதும் இருந்ததை விடச் சிறந்ததாக்கவும் அதை மாற்றுவதற்கும் ஆற்றல் கொண்டுள்ளது” என்று ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. மேலும் சாட் ஜிபிடி போன்ற ஏ.ஐ கருவிகள் தகவல் ஒருங்கிணைப்பில் ஒரு புரட்சியை செய்துள்ளது என்றும் சிறந்த அசல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மட்டுமே இனி தாக்குப்பிடிக்க முடியும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதன் மூலம் பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து லண்டனைச் சார்ந்த சுதந்திர பத்திரிகையாளரான ஹென்றி வில்லியம்ஸ், “ஏ.ஐ சாட் ஜிபிடி-யிடம் நான் எனது வேலையை இழக்கப் போகிறேன்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் எனது ஒரு மணிநேர வேலையை ஏ.ஐ சாட் ஜிபிடி நொடிகளில் செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


படிக்க: செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் நோக்கமும் வளர்ச்சியும்


ஹென்றி, மென்பொருளுக்கு ஒரு தலைப்பைக் கொடுத்து அதில் வரும் கட்டுரையைச் சோதித்துள்ளார். முதலில் அந்த கட்டுரையின் தொனி சற்று எந்திரகதியாகவும் இருப்பினும் முக்கியமான புள்ளிவிவரங்களை உள்ளடக்கியதாகவும் இருந்துள்ளது. ஆனால் அதில் சில மாற்றங்களை செய்த பிறகு மற்ற கட்டுரைகளை போல அதுவும் நன்றாக இருந்ததைக் கண்டு ஹென்றி அதிர்ச்சியடைந்தார். “நான் 500 பவுண்ட் வாங்கும் ஒரு கட்டுரையை சாட் ஜிபிடி 30 வினாடிகளில் இலவசமாக உருவாக்கியுள்ளது” என்றார். மனித தலையீடு இல்லாமல் ஏ.ஐ இயங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

இந்த நிலை பத்திரிகை துறையில் மட்டும் இல்லை. ஒட்டுமொத்த சமூகமும் இந்த படுபாதக நிலையைத் தான் எதிர்நோக்கியுள்ளது. உற்பத்தித்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டு அனைத்து துறைகளும் செயற்கை நுண்ணறிவின் வருகையால் கொத்து கொத்தான வேலையிழப்புகளைச் சந்தித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் 30 கோடி வேலைகளை அகற்றக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் என்ற பன்னாட்டு முதலீட்டு வங்கி அறிவித்துள்ளது. இது போன்ற எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்த வண்ணமே உள்ளன.

லிசா போன்ற ஏ.ஐ செய்தி வாசிப்பாளர்கள், ஏ.ஐ பேராசிரியர்கள், வீட்டு வேலைக்கான எந்திரங்கள் போன்றவை உருவாக்கப்படுவதை வளர்ச்சி என்று பார்க்க முடியாது. தொழிலாளர்களை தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் ஏ.ஐ இயந்திரங்களைப் பொறுத்த வேண்டும் என்ற லாபவெறியே முதலாளித்துவத்தின் நோக்கம். இதனை சாட் ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்டபோதே பலர் எச்சரித்தனர். தொழில்நுட்பங்களையும் அறிவியலையும் தனது கேடான லாபநோக்கிற்காக பயன்படுத்தும் முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி சோசலிச சமூகத்தைப் படைக்கும் வரை தொழிலாளர்கள் வேலையைவிட்டுத் தூக்கி எறியப்படுவதை தடுத்துநிறுத்த முடியாது.


சோபியா

மூடு டாஸ்மாக்கை! 500 கடைகளை மூடுவது தீர்வல்ல! | வீடியோ

மூடு டாஸ்மாக்கை! 500 கடைகளை மூடுவது தீர்வல்ல!
சமூகத்தை காவுவாங்கும் டாஸ்மாக்கை உடனே மூடு!

மிழ்நாட்டில் டாஸ்மாக் பிரச்சினை என்பது எப்போதும் பற்றி எரிந்து வரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தற்போது விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயத்தால் 26 பேர் பலியானதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று பேசத் தொடங்கியது. அதுதான் தமிழ்நாடு அரசை 500 மதுக்கடைகளை மூடுவதை நோக்கித் தள்ளியுள்ளது.

ஆனால் ஒட்டுமொத்த பிரச்சினையும் இதனால் தீர்ந்துவிடாது. டாஸ்மாக்கை மொத்தமாக மூடுவதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!