Saturday, June 27, 2026
முகப்பு பதிவு பக்கம் 172

பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!

ண்டை நாடான பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவு கனமழை பெய்து, வெள்ளம் புரண்டோடுகிறது. தெற்காசியாவிலேயே மிக மோசமான வெள்ளம் என்று கூறப்படுகிறது. மொத்த நிலப்பரப்பில் மூன்று ஒரு பங்கு நிலப்பகுதி நீரில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையானது, காண்போரின் மனதை உலுக்குகிறது. மூன்று வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல், தங்குவதற்கு வீடில்லாமல், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முறையான மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் படும் துன்பங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

பெருவெள்ளம் மற்றும் கனமழையில் 555 குழந்தைகள் உட்பட 1500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 12 ஆயிரத்து 860 பேர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக 5 லட்சத்து 46 ஆயிரத்து 288 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1.6 கோடி குழந்தைகள் உட்பட 3.3 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 98 ஆயிரத்து 407 கால்நடைகள் பலியாகியுள்ளது.

படிக்க : இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

மேலும் 17 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள், 22 ஆயிரம் பள்ளிகள், 240க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் 12 ஆயிரத்து 716 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ், “உலகம் முழுவதும் ஏற்பட்ட பல இயற்கைப் பேரிடர்களைப் பார்வையிட்டுள்ளேன். ஆனால் பாகிஸ்தானில் ஏற்பட்ட பாதிப்பைப் போன்று இதுவரை வேறு எங்கும் பார்த்ததில்லை” எனக் கூறியுள்ளார்.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள், திறந்தவெளிகளில் துணி மற்றும் பிளாஸ்டிக் பைகளால் குடில்களை அமைத்துக்கொண்டு வசிக்கின்றனர். உணவு, குடி தண்ணீர் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்காக காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை. கழிவறைகள் இல்லாத நிலையில் குடியிருப்புகளுக்கு அருகிலேயே மலம்-சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை. இதனால் தொற்று நோய்கள் வேகமாக பரவுகின்றன. சிந்துவில் மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் வயிற்றுப் போக்காலும், 44 ஆயிரம் பேர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளே இல்லை என்ற அவலநிலை நிலவுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறிய மருத்துவமனைகள் என 1,460 மருத்துவமனைகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்கும் மருத்துவமனைகளிலும் மருந்துகள் இல்லை.

கர்ப்பிணிகளின் நிலையோ நரக வேதனையானது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 73 ஆயிரம் கர்ப்பிணிகள் குழந்தை பேறுக்காக மருத்துவமனைகளை நாடுவார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிகள் பலரும் வெள்ளத்தால் மருத்துவமனைக்கு வரமுடியாமல் சாலைகளிலும், வாகனங்களிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் கொடுமையான சூழல்.

***

ஏற்கெனவே பணவீக்கம், விலைவாசி உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் விளைவாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த மக்களை, பெருவெள்ளமானது மிகக் கடுமையாக பாதித்துள்ளது. மக்கள் வாழவே வழியில்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்நாட்டு அரசு மக்களை முற்றிலுமாக கைகழுவி விட்டது. 14 மாவட்டங்களில், கடுமையான வெள்ளம் பாதித்த 38 இடங்களில் இருக்கும் மக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட அரசு செய்துதரவில்லை எனக் கூறுகின்றனர். வெள்ள பாதிப்பிற்கு முன் பொருளாதார நெருக்கடி, விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிராக போராடிய மக்கள், தற்போது வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் விளைவாக கடுமையான வெப்ப அலை, பணிப்பாறை உருகுதல், கனமழை, பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் இயல்புநிலையாகி வருகின்றன. காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி செப்டம்பர் மாத புதிய ஜனநாயகத்தில் எழுதியிருந்தோம்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !

சூழலியல் நெருக்கடி காலட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்பேரிடர்கள் அனைத்தும் லாபவெறிக்காக இயற்கையை வரன்முறையின்றி சுரண்டும் முதலாளித்துவ ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் விளைவே. ஏகாதிபத்தியத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடு தீவிரமடைந்ததன் விளைவாக, இன்று மொத்த மனிதகுலத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடு முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாகத்தான், பாகிஸ்தான் மக்கள் பெருவெள்ளத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மறுபக்கம், இழவு வீட்டில் பாட்டிசைப்பதைப் போல, பாகிஸ்தான் அரசு கிரிக்கெட் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. ஏகபோக மூலதனத்திற்கு சேவை செய்கிற பாகிஸ்தானின் அடிமை அரசு, நெருக்கடி மிகுந்த சூழலிலும் மக்களை கை கழுவுகிறது. இனியும் அதைச் சுமந்துகொண்டு பாகிஸ்தான் மக்கள் ஏன் வாழவேண்டும். உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை தம் கையிலெடுக்கப் போராடுவதே, விடிவை நோக்கிய பாதையாகும்.

சிவராமன்

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி | தோழர் அமிர்தா வீடியோ

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் கருத்துக்கள் வெறும் இந்துராஷ்டிரத்தை அமைப்பது மட்டுமல்ல… கார்ப்பரேட் நலன்களும் அதனுள் அடங்கி இருக்கிறது. தொழிலாளர் உரிமைக்காக போராடினால் அவர்களை ஒடுக்குகிறார்கள். குஜராத்தில் முதலாளிகள் தொழிற்சாலைகளை தொடங்கலாம் ஏன் என்றால் அங்கு தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை தொடங்க முடியாது என கட்டுப்பாடு போட்டுள்ளார்கள். தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்பட்டு 44 சட்டங்கள் 4 தொகுப்புகளாக குறைக்கப்படுகிறது. இந்த 44 சட்டங்கள் என்பது பல்வேறு ஆண்டுகளில் போராட்டம் நடத்தியதன் மூலமாக தொழிலாளர்கள் பெற்ற உரிமைகள் அது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் நோக்கம் மக்களுக்கு அறியப்பட்ட பிரபலமானவர்களை தனக்கானவர்கள் என்று மாற்ற முயற்சிக்கிறது. குறிப்பாக இளையராஜா போன்றவர்களை பதவி கொடுப்பதன் மூலமாகவோ, ஏதோ ஒரு வகையிலோ அவர்களை தன்வயப்படுத்தி கொள்வதன் மூலம் ஆட்சியதிகாரத்தை பிடிக்க முயல்கிறது சங் பரிவாரம்.

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யையும், கார்ப்பரேட் நல திமுக அரசையும் தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | இளங் கம்யூனிஸ்டுகள் சங்கம்

ளங் கம்யூனிஸ்டுகள் துணிவுமிக்க முன்னணி இளைஞர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் நலனுக்காக, ஆபத்து நிறைந்த வேலைக்கு அஞ்சா நெஞ்சர்களான மனிதர்களை அனுப்புவது கட்சிக்கு அவசியம் என்னும்போது முன்னே வருபவர்கள் யார்? எப்போதுமே இளங் கம்யூனிஸ்டுகள்தாம்.

புதிதாகச் சாலைகள் போட வேண்டும். இந்த அழைப்பை முதன் முதல் ஏற்பவர்கள் யார்? இளங்கம்யூனிஸ்டுகள். போர்முனை செல்லவும் இளங் கம்யூனிஸ்டுகள் தயங்குவது இல்லை.

உள்நாட்டுப் போரில் இளங் கம்யூனிஸ்டுகள் ஆயிரமாயிரம் அருஞ்செயல்கள் புரிந்தார்கள். சைபீரியாவிலும் உக்ரேய்னாவிலும் கிரைமியாவிலும் வோல்காப் பிரதேசத்திலும் கூர்ஸ்க் நகரின் அருகிலும் பெத்ரோகிராதின் நகர்ப்புறங்களிலும் புல்லும், பூச்செடிகளும் மண்டிய பல்லாயிரம் இளங் கம்யூனிஸ்ட் கல்லறைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான இளங் கம்யூனிஸ்ட் வீரர்களின் கல்லறைகள்….

லெனின் பென்சிலை வைத்தார். மேஜை மேலிருந்த காகிதம் நுண்ணிய வீச்சுள்ள வரிகளால் நிறைந்துவிட்டது. லெனின் தமது பேச்சின் திட்டத்தை அதில் குறித்திருந்தார்.

அன்று இளங் கம்யூனிஸ்டுகள் சங்கத்தின் மூன்றாவது காங்கிரஸில் அவர் பேசுவதாக இருந்தார். ருஷ்ய இளங் கம்யூனிஸ்டுகள் சங்கத்துக்கு இரண்டே வயதுதான் ஆகியிருந்தது. இளங் கம்யூனிஸ்டுகளைப் பற்றி எண்ண லெனினுக்கு இன்பம் உண்டாயிற்று. உற்சாகிகள், விடாப்பிடி உள்ளவர்கள்! தொழிலாளர்கள், ஏழைக் குடியானவர்களின் மக்கள். “நாங்கள் புரட்சி செய்தோம். ஆனால் கம்யூனிஸச் சமூகத்தைத் தேவையான விதத்தில் அமைத்து முடிக்க எங்களுக்கு வாய்ப்பது சந்தேகமே. இளந் தலைமுறையினர்தாம் அதைக் கட்டி முடிப்பார்கள்.” – இவ்வாறு எண்ணமிட்டார் லெனின்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர் ஸ்டாலின்

இதற்குள் இளங் கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் காங்கிரஸ் நடக்கும் இடத்தில் கூடினார்கள். தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டுவிட்டு நேரே அங்கே போனார்கள் அவர்கள். காலை முழுவதும் ரயில் நிலையங்களில் சரக்கு வண்டிகளிலிருந்து சாமான்களை இறக்கினார்கள், விறகைக் கிட்டங்கிகளில் அடுக்கி வைத்தார்கள், வீதிகளைத் துப்புரவு செய்தார்கள். மாஸ்கோ நகரை அழகு படுத்தினார்கள்.

1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி குளிராக இருந்தது. வானம் மப்புப் போட்டிருந்தது. திடீரென காற்று வீசிற்று. மஞ்சள் பழுப்புகள் கிளைகளிலிருந்து படலம் படலமாக உதிர்ந்து காற்றில் சுழன்று சலசலக்கும் மழைபோலத் தரையில் விழுந்தன.

காலையின் குளுமையும், சலசலக்கும் இலைகளும், கைகள் காய்த்துப் போகும்படி செய்த ஒருமித்த வேலையும் இளங் கம்யூனிஸ்டுகளுக்கு மகிழ்வு ஊட்டியது. எல்லாவற்றையும் விட, இப்போது காங்கிரஸில் லெனின் பேசுவார் என்பது அவர்களுக்கு உவகை அளித்தது.

மாலயா திமீத்ரவ்கா வீதியில் 6 ஆம் நம்பர் வீட்டில் காங்கிரஸ் நடப்பதாக இருந்தது. இளங் கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் ஓட்டமும் நடையுமாக அங்கே போய்ச் சேர்ந்தார்கள். இப்போது இந்தக் கட்டிடத்தில் லெனின் இளங் கம்யூனிஸ்டுகள் சங்க நாடக மன்றம் உள்ளது. அப்போது நாடக மன்றம் இருக்கவில்லை. அரங்கே இருக்கவில்லை. அரங்குக்குப் பதில் திரை அற்ற, வண்ணம் பூசாத மேடை மட்டுமே இருந்தது. மேடை மேல் நீண்ட மேஜையும் பேச்சாளர் பீடமும் அமைந்திருந்தன. சிவப்புத் துணிகளில் போஸ்டர்களும் கோஷங்களும் எழுதப்பட்டிருந்தன.

ஒரு போஸ்டரில் செம்படைவீரன் ஒருவன் விரலால் சுட்டியவாறு, ”நீ தன்னார்வத் தொண்டனாகப் படையில் சேர்ந்து விட்டாயா?” என்று கேட்பதுபோலப் படம் தீட்டப்பட்டிருந்தது.

பல இளங் கம்யூனிஸ்டுகள் போர்முனையிலிருந்து நேரே வந்திருந்தார்கள். பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலுமிருந்து வந்திருந்த இந்த இளங் கம்யூனிஸ்டுகள் பள்ளி மாணவர்கள் அல்ல. சிலருக்கு எழுதப் படிக்கத் தெரியும், சிலருக்குத் தெரியாது. சிலரோ புத்தகத்தைத் தொட்டுக்கூடப் பார்த்தது கிடையாது. ஆனால் போர்முனைகளில் புரட்சி விரோதிகளின் கும்பல்களை இவர்கள் தயவு தாட்சணியம் இன்றித் தாக்கி நொறுக்கினார்கள். குலாக்குகள் பதுக்கி வைத்திருந்த தானியத்தை அஞ்சாமல் ஜப்தி செய்தார்கள் சோவியத் ஆட்சிக்காக எந்த ஆபத்தையும் மேற்கொள்ளத் தயாராய் இருந்தார்கள்.

இளங் கம்யூனிஸ்டுகளின் இதயங்கள் கிளர்ச்சிப் பெருக்கால் அடித்துக் கொண்டன. இதோ லெனின் வருவார். அவர் பேசசை கேட்கலாம்!

இராணுவ மேல்கோட்டுகளும் தோல் கோட்டுகளும் அணிந்து, தோளோடு தோள் இடிக்கும்படி நெருக்கமாகப் பெஞ்சுகளில் அமர்ந்து லெனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள். ஸ்வெர்திலோவ் அணிந்தது போன்ற கறுப்புத் தோல் கோட்டு அணிவது அந்தக் காலத்தில் இளங் கம்யூனிஸ்டுகளும் மிகவும் பிடித்திருந்தது. இராணுவ மேல்கோட்டும் – வியர்வையும் வெடி மருந்தும் கலந்த நெடி வீசும் மேல்கோட்டும் – செந்நட்சத்திரம் பொறித்த தொப்பியும்கூட நல்ல உடைதான்.

லெனின் என்ன சொல்லப் போகிறார் என்று ஊகித்தார்கள் பிரதிநிதிகள். போரைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தார்கள். போருக்கு, வீரச் செயல்களுக்கு, அருஞ்செயல்கள் ஆற்றுவதற்கு அழைப்பார் என்று நினைத்தார்கள். செஞ்சேனை புரட்சி விரோதி வெண்படையினரை விரட்டியடித்துவிட்டது, ஆயினும் உள்நாட்டுப் போர் இன்னும் முடியவில்லை.

”சோவியத் ஆட்சியைக் காத்திடவே”

என்ற பாட்டு அரங்கின் ஒரு மூலையிலிருந்து தொடங்கியது. பின்பு அரங்கமே பாட்டை எதிரொலித்தது.

”துணிவுடன் சென்றே போரிடுவோம்.
ஆவியும் உடலும் நல்கிடுவோம்
ஆட்சி இதை நிலைநாட்டிடவே!”

பின்பு அரங்கில் அமைதி நிலவியது. வழக்கமாகக் கூட்டங்களில் நடப்பது போலவே தலைமைக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைமைக் குழுவுக்கான மேஜைமேல் சிவப்புத் துணி விரிக்கப்பட்டிருந்தது. தோழர்கள் இடங்களில் அமர்ந்தார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருடைய படங்களும் சுவற்றில் தொங்கின. இரு பெரியோரும் இளங் கம்யூனிஸ்டுகளை நோக்கினார்கள்.

“லெனின்!” என்ற முழக்கம் திடீரென்று எழுந்தது.

இளங் கம்யூனிஸ்டுகள் துள்ளி எழுந்திருந்தார்கள், கைகளைத் தட்டினார்கள். லெனின் மேல் இளங் கம்யூனிஸ்டுகளுக்கு “அளவில்லாத அன்பு, தன்னலமற்ற ஈடுபாடு.

கறுப்பு வெல்வெட் காலர் வைத்த மேல்கோட்டைக் கழற்றி நாற்காலி மேல் ஒழுங்காக மடித்துப் போட்டார் லெனின். தலைமைக் குழு தோழர்களுடன் கை குலுக்கி முகமன் கூறினார். அவருடைய ஒவ்வொரு கைகையும் புன்னகையும், அவர் செய்தவையும், அவற்றைச் செய்த தோரணையும், அவருடைஅ நடத்தை முழுவதுமே இளங் கம்யூனிஸ்டுகளுக்குப் பிடித்திருந்தது. அவர்களுக்கு அவர் நல்லவராக, அருமையானவராக, இனியவராகத் தோன்றினார். உள்ளக் கிளர்ச்சியாலும் அடக்க முடியாத மகிழ்ச்சியாலும் உற்சாகம் ஊற்றெடுக்க இந்த இளங் கம்யூனிஸ்டுகள் பலருடைய விழிகளில் கண்ணீர் துளிர்த்தது.

லெனின் மேடை விளிம்புக்கு வந்து, உள்கோட்டுப் பையிலிருந்து பைக் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தார். கை தட்டலை நிறுத்துங்கள், வேலை தொடங்குவோம் என்று சொல்வது போல் இருந்தது அந்தச் செய்கை.

இதனால் இளங் கம்யூனிஸ்டுகளின் மதிப்பில் அவர் இன்னும் உயர்ந்துவிட்டார்.

”நண்பர்களே, ஒரு நிமிடங்கூடத் தாமதிக்காமல் ஒருவர் பாக்கியின்றி எல்லோரும் போர்முனைக்குப் போங்கள்!” என்று அவர் சொல்லியிருந்தால் அவர்கள் எல்லோருமே மறு பேச்சின்றிப் போர்முனைக்குப் போயிருப்பார்கள்.

லெனின் சொன்னதோ வேறு. அதைக் கேட்டு இளங் கம்யூனிஸ்டுகள் முதலில் திகைத்தார்கள். வியப்பும் குழப்பமும் அடைந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

லெனின் நிலைத்து நிற்காமல் மேடை ஓரமாக நடந்தவாறே பேசினார். தலைமைக் குழுவினரில் பெரியவர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். நாற்காலிகள் போதவில்லை. தலைமைக் குழுவைச் சேர்ந்த இளங் கம்யூனிஸ்டுகள் வெகு நேரம் யோசனை செய்யாமல் மேடைத் தரையிலேயே உட்கார்ந்து விட்டார்கள். லெனின் அவர்களுக்கு நடுவே ஜாக்கிரதையாக அடிவைத்து நடந்தார். நடந்தபடியே பேசினார்.

அவர் என்ன சொன்னார் தெரியுமா? தற்போது இளங் கம்யூனிஸ்டுகளின் கடமை கற்றுக் கொள்வதே என்றார்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் : பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவர் | அ.லுனச்சார்ஸ்க்கிய்

இளங் கம்யூனிஸ்டுகள் வியந்தார்கள். ஆர்வத்துடன் உற்றுக் கேட்கும் இளைஞர்களின் முகங்களில் ஆச்சரியமும் குழப்பமும் தென்பட்டதை லெனின் கவனித்தார். தமது கருத்தை முடிந்தவரை புரியும் விதத்தில் விளக்க அவர் முயன்றார். விரைவில் நாம் உள்நாட்டுப் போரை முடித்து விடுவோம். எதிரிகளை விரட்டி விடுவோம். அப்புறம்? கட்டுமானம் தொடங்க வேண்டும். தொழிற் சாலைகளும் ஆலைகளும், டிராக்டர்களும், விமானங்களும், இயந்திரங்களும் நிறுவ வேண்டும். நாட்டை மின்சார மயம் ஆக்க வேண்டும். மின்சாரம் என்பது என்ன, அறிவீர்களா, இளங் கம்யூனிஸ்ட் தோழர்களே?

அறிய வேண்டும். நிறைய அறிய வேண்டும்!

படிப்பறிவு இல்லாமல் கம்யூனிஸச் சமுதாயத்தைக் கட்டி அமைப்பது நடவாது என்று இளங் கம்யூனிஸ்டுகளுக்கு விவரமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார் லெனின்.

உழைக்க வேண்டும். அறிய வேண்டும். “தொழிலாளர்களுடனும், குடியானவர்களுடனும் சேர்ந்து உழைப்பதன் மூலமே ஒருவன் உண்மைக் கம்யூனிஸ்ட் ஆக முடியும்.” கம்யூனிஸத்தைக் கற்றுக் கொள்வது என்றால், பழைய சமூக அமைப்புக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டத்துடன் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் இணைத்துக் கொள்வதும் புதிய, கம்யூனிஸச் சமுதாயத்தைக் கட்டி அமைப்பதுமே என்றார் லெனின்.

(லெனினுக்கு மரணமில்லை எனும் நூலிலிருந்து….)

புதிய மோட்டார் வாகன சட்டம்: ‘சட்டப்படியான’ வழிப்பறி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

28.10.2022

புதிய மோட்டார் வாகன சட்டம்: ‘சட்டப்படியான’ வழிப்பறி!

பத்திரிகை செய்தி!

ன்றிய அரசின் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, புதிய அபராத கட்டணங்களை வசூலிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 19 ஆம் தேதி வெளியிட்டது.

அதில் முதல் சாலை விதிமீறலுக்கான அபராத கட்டணம், அதே விதிமீறலை மீண்டும் செய்தால் அதற்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.1000 அபராதம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு ரூ.10,000 அபராதம் என அறிவித்துள்ளது. லைசென்சு இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.500-லிருந்து ரூ.5000-ஆகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் ரூ.100-லிருந்து ரூ.500-ஆகவும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஆயிரம் அபராதமும், இரண்டாவது அதேபோல் ஈடுபடுவோருக்கும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். மேலும் ஹெல்மெட் மட்டும் சீருடை அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, இராண்டாவது முறை ரூ.1500, மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபடுவதற்கு இரண்டாவது முறை ரூ.10,000-யும், சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு இரண்டாவது முறை ரூ.1500-யும், மதுபோதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கும், பின்னால் அமர்ந்து செல்வோர்களுக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதிப்பு அமலுக்கு வந்ததுள்ளது.

படிக்க : கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் ரூ.1000 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லியில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த நபர் ஹெல்மெட் அணியவில்லை. அவரிடம் பணமில்லாத காரணத்தால் லிப்ட் கொடுத்த நபரிடம் ரூ.1000 வசூல் செய்துள்ளது போக்குவரத்து காவல்துறை. பின்னால் உட்கார்ந்து வரும் நபருக்கும் அபராதம் விதிப்பது அநியாயமானதாகும்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மூன்று நாட்களில் 708 கோடிக்கு டாஸ்மாக்கில் சாராயம் விற்பனை. ஆனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000 அபராதம். காலையில் 6 மணிக்கே பாரை திறந்து வைத்து சாராயம் விற்க அனுமதிக்கிறது அரசு. டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு தெருமுனையில் நின்று அபராதம் விதிப்பது கேலிக்கூத்தாகும்.

2019 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டவந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை அப்போது எதிர்த்த திமுக, இன்று புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த அரசாணை பிறப்பித்திருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்குமுன் மக்கள் நலனில் இருந்து பேசுவதும், ஆட்சிக்கு வந்தபின்பு மக்கள் நலனை அடகு வைப்பதும் அதிகாரத்தில் இருப்பவர்களின் வாடிக்கையாகிவிட்டது.

இப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள், மேலும் மேலும் போக்குவரத்து அதிகாரிகளின் கையில் அதிகாரத்தை குவித்து மக்களை கொள்ளை அடிக்கவே பயன்படும். ஏற்கனவே மக்களைவிட தங்களை மேலாக கருதி கொண்டு அதிகார திமிரோடு நடந்தும் கொள்ளும் அதிகாரிகளுக்கு இது ஒரு கூடுதல் வாய்ப்பாகவே அமையும்.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வேலை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறிவரும் தமிழக மக்களுக்கு பேரிடியாய் இந்த சட்டம் வந்திருக்கிறது. பொது மக்களை பாதிக்கும் அடக்குமுறையை ஏவும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு ;- 99623 66321.

கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!

27.10.2022

கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு!
தமிழ்நாடு அரசே! NIA பரிந்துரையை திரும்பப் பெறு!

அசம்பாவிதங்களை பயன்படுத்தி கோவையை மதக்கலவர பூமியாக்க துடிக்கும் அண்ணாமலை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யினரை கைது செய்!

கண்டன அறிக்கை!

கடந்த 23 ஆம் தேதி அதிகாலை கோவை – உக்கடம், கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்றில் எரிவாயு உருளை வெடித்ததில், அதில் பயணித்த ஜமேஷ் முபின் என்ற இளைஞர் பலியானார்.

இதுதொடர்பான ஜமேஷ் முபின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் இருந்ததாகவும், அதற்கு உதவிய அவருடைய நண்பர்கள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான முழுவிசாரணை முடியும் முன் எந்த ஒரு முழுமையான கருத்தையும் சொல்ல முடியாது என்ற சூழ்நிலை உள்ளது. ஏனெனில், உண்மை முழுவதும் தெரிவதற்கு முன் தெரிவிக்கப்படும் எந்த ஒரு கருத்தும் திட்டமிட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் குற்றவாளியாக்குவதற்கே பயன்படும்.

படிக்க : ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில், இச்சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் மதக் கலவரத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு இந்துமதவெறி பாசிச சக்திகள் தொடர்ச்சியாக –வழக்கம்போல- முயற்சி செய்கின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த பி.ஜே.பி.யின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு போலீசின் உளவுப் பிரிவில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பதால் இவ்வழக்கு சரியாக நடக்காது என்றும், தமிழ்நாடு அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் இவ்வழக்கு தொடர்பான புலன் விசாரணையில் போலீசுக்கு தெரியாத பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

பில்கிஸ் பானுவை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் முதல் பெட்ரோல், எரிபொருள் சிலிண்டர் விலை உயர்வு, கள்ளக்குறிச்சி விவகாரம் வரை வாயை மூடிக்கொண்டு இருந்த அண்ணாமலை தற்போது சாக்குக் கிடைத்துவிட்டது என்று தமிழ்நாட்டில் மதக்கலவரம் ஏற்படுத்துவதற்கு அனைத்து தகிடுதத்தங்களையும் செய்து வருகிறார்.

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் இவ்வழக்கை NIA-வுக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறிவந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம்(ஆக.26) போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தை கூட்டிய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரை செய்திருப்பதாகவும், இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் 3 போலீஸ் நிலையங்களை அமைக்கவும் தமிழ்நாட்டில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க தமிழ்நாடு போலீசில் சிறப்புப்படை அமைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்துமதவெறி பாசிஸ்டு அமித்ஷாவின் கூலிப்படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை, தான் விசாரணை செய்த பல்வேறு வழக்குகளின் மூலம் இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமிய சமூகத்துக்கும் எதிராக செயல்பட்டு இருப்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட ஒரு அமைப்பிடம் இந்த வழக்கை அளித்தால் நேர்மையான முறையில் எந்த வகையிலும் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.

படிக்க : கிருஷ்ணகிரி மாவட்டம் KATERRA  நிறுவனம் – தொழிலாளிகள் மீதான  கொடூரச் சுரண்டல் – தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்!

இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பகுதிகளில் மூன்று போலீசு நிலையங்களை அமைப்பது, சிறப்பு காவல் படை அமைப்பதன் மூலமாக மட்டுமே பயங்கரவாத செயல்களை ஒழித்துவிட முடியாது. மேற்கண்ட நடவடிக்கைகள் மேலும் சிறுபான்மை மக்களை குற்றவாளியாக சித்தரிப்பதிலேயே கொண்டுபோய் முடியும்.

ஆகவே, தமிழ்நாட்டு முதலமைச்சர் இவ்வழக்கு தொடர்பாக நேற்றைய தினம்(ஆக.26) அறிவித்த நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

மேலும் இவ்வழக்கை தமிழ்நாடு போலீஸ் விசாரிப்பதுடன் பிரச்சினையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மதக்கலவரம் நடத்திடவும் துணிந்துள்ள அண்ணாமலை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி பாசிஸ்டுகளை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் மேலும் பி.ஜே.பி அறிவித்துள்ள பந்த்-ஐ மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு ;- 99623 66321.

அழுகி நாறுது முதலாளித்துவம்! பிரிட்டன் இன்னொரு சாட்சி! | புஜதொமு

அழுகி நாறுது முதலாளித்துவம்! பிரிட்டன் இன்னொரு சாட்சி!

  • முதலாளித்துவம் கொழுத்து, “சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம்” என பீற்றப்பட்ட பிரிட்டன் நாறிக் கொண்டிருக்கிறது.!
  • பொருளாதார நெருக்கடியால் ஒரே ஆண்டில் 3 பிரதமர்கள் மாற்றம்!
  • தற்போதைய பிரதமர் ரிசி சுனக்-க்கு முந்தைய பிரதமர் லிஸ் ட்ரஸ் ஆறே வாரங்களில் பதவியை விட்டு ஓடிப்போனார்!
  • இனி வரும் நாட்களில் மேலும் அழுகி நாறும்!
    இந்தியாவும் தப்ப முடியாது.

நன்றி : புதிய தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் KATERRA  நிறுவனம் – தொழிலாளிகள் மீதான  கொடூரச் சுரண்டல் – தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்!

கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூர் செல்லும் வழியில் சில கிலோமீட்டர்கள் தொலைவில் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது குருபரபள்ளி எனும் பகுதி. இங்கு விநாயகபுரம் கிராமத்திற்கு அருகில்  குன்றுகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது KATERRA எனும் தொழிற்சாலை. ரெடிமேட் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனி இது. 600 க்கும் மேற்பட்டோர் இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இதன் அருகில் உள்ள இன்னொரு கிராமம் கக்கன்புரம்.

அக்.19, 20, 21, 22 ஆகிய நான்கு நாட்களும் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதமாக நிரந்தரத் தொழிலாளிகளுக்கு ஊதியம் தரப்படவில்லை. இதைத் தர வலியுறுத்தித்தான் தொழிலாளிகள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

நிரந்தரத் தொழிலாளிக்கே இந்தக் கதியென்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஏன் இந்த அளவுக்கு நிலைமை மோசமானது என்பதைப் பற்றிப் புரிந்து கொள்ள இத்தொழிற்சாலை மற்றும் கக்கன்புரம் கிராமப் பகுதியின் கடந்தகாலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணை கட்டப்பட்டபோது அணை இருக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட உழைக்கும் மக்கள் தலா 3 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்து தற்போது வசிக்கும் கக்கன்புரத்தில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது காமராசர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கன் இதனைத் தொடங்கி வைத்தார். அதனால் இப்பெயர் பெற்றது. அறுபது வருடங்களாக அந்நிலங்களில் விவசாயம் செய்தும், ஆடு மாடுகளை வளர்த்தும் அந்நிலத்தை நம்பி அப்பகுதி மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

படிக்க : ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

தனியார்மயக் கொள்கைகள் உழைக்கும் மக்கள் வாழ்க்கையை அன்றாடம் பிய்த்து எறிந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்களின் வறுமையை, நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டு ரியல் எஸ்டேட் மாபியாக்கள் உழைக்கும் மக்களின் நிலங்களை ஏமாற்றியும், அதிகார வர்க்கத்தின் துணையோடும் அபகரித்து வருகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்று.

அப்படித்தான் கக்கன்புரம் உழைக்கும்மக்களின் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் நிலங்களும் குறைவான விலைக்கு பறிக்கப்பட்டுள்ளது. அக்பர்பாய் எனும் ரியல்எஸ்டேட் புரோக்கர் ஏக்கர் ரூ.1.75 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலைகொடுத்து அப்பகுதி மக்களிடம் நிலம் வாங்கியுள்ளார். அதன்பிறகு ஃபைசல் என்னும் கேரள முதலாளியின் KEF INFRA எனும் கட்டுமானத் தொழில் நிறுவனத்திற்கு ஏக்கர் ரூ.36 லட்சம் என்று விற்றுள்ளார். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் முன்புறம் உள்ளவர்களின் நிலங்களை முதலில் வாங்கி, பின்புறம் உள்ளவர்களின் நிலங்களின் பாதையை மறித்துள்ளனர். வேறுவழியின்றி பின்புறம் உள்ளவர்களும் தரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நிலத்தை சார்ந்து சுயமரியாதையோடு வாழ்ந்த கக்கன்புரம் மக்களின் வாழ்க்கை முதலாளிகளின் கொடூர சுரண்டலுக்காக சூறையாடப்பட்டது.   2015 ல் இருந்து KEF INFRA நிறுவனம் இப்பகுதியில் செயல்பட்டு வந்துள்ளது.

நிலங்களை விற்ற மக்களுக்கு KEF INFRA நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவில் நிரந்தரப்பணி கொடுத்துள்ளனர். ஆனால் வாக்குறுதி அடிப்படையில் எல்லோருக்கும் நிரந்தரப் பணி கொடுக்கப்படவில்லை. காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு ஆரம்ப ஊதியம் ரூ.13,000, நிரந்தர தொழிலாளிக்கு ரூ.15,000, 6 மாதத்தில் இன்க்ரீமெண்ட் ரூ.750, போனஸ் ரூ.7000 என கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது 1500 பேர் வரை நிரந்தரமாக பணியாற்றியுள்ளனர். அதுபோக ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளிகள் பணியாற்றி வந்துள்ளனர்.

கக்கன்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கான ஆசிரியர் சம்பளம்,  பராமரிப்பு செலவை KEP INFRA நிறுவனம் ஏற்றுக் கொண்டு பராமரித்து வந்துள்ளது. KEP INFRA நிறுவனம் தங்களுக்கு ஓரளவு சலுகைகள் கொடுத்ததாகவும், பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை எனவும் தொழிலாளிகள் கூறுகின்றனர். தொழிலாளிகளின் உழைப்புதான் முதலாளிகளுக்கு பெருத்த இலாபத்தை உருவாக்குகிறது. ஆனால் கடும் வாழ்வாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு சிறிதளவு சலுகைகள் கொடுப்பதே பெரிய விசயமாக உள்ளது.

2019 ல் KEP INFRA நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டதால் அது KATERRA என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது. அதன்பிறகு மொத்த நிலைமையும் தலைகீழாக மாறியதாக தொழிலாளிகள் கூறுகின்றனர்.

இன்க்ரீமெண்ட் நிறுத்தம், போனஸ் நிறுத்தம், தரமில்லாத உணவு, ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தருவதில்லை என எல்லா சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்பு வெளிமாநிலத் தொழிலாளிகளுக்கு தங்குவதற்கு அறை வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை சம்பளத்தில் சேர்த்து கொடுத்துள்ளனர். தற்போது அறைவசதி ரத்து செய்யப்பட்டு, அதற்கான பணம் சம்பளத்தில் வெட்டப்பட்டு விட்டது. அதேபோல் ஓவர்டைம் வேலைக்கு ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஓவர்டைம் செய்ய கட்டாயப்படுத்துவது நடக்கிறது. பி.எஃப் பிடிப்பதில்லை, சம்பள பில் கொடுப்பதில்லை எனக் KATERRA நிறுவனத்தின் சட்டவிரோதமான செயற்பாடு கேட்பாரின்றி தொடர்ந்துள்ளது. நிரந்தரப்பணிக்கு வெறும் ரூ.17,000 மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

வேலையை விட்டு நின்றவர்களுக்கு ஒன்றரை வருடமாக செட்டில்மெண்ட் செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர். சம்பளம் கொடுக்காததால் பாதிப்பேர் வேலையை விட்டு நின்றுள்ளனர்.

அதுமட்டுமல்ல, புதிதாக ஒப்பந்த  வேலைக்கு எடுப்பவர்களுக்கு  எந்த சலுகையும் இல்லை. 90 நாட்களுக்கு சம்பளம் இல்லை, ESI, PF இல்லை, சாப்பாடு, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை, அலவன்ஸ் கிடையாது, சங்கம் சேரக்கூடாது என எவ்வளவு சுரண்டமுடியுமோ, ஒடுக்க முடியுமோ எல்லாவற்றையும் KATERRA நிறுவனம் செய்து வருவதாக கூறுகின்றனர்.

கேட்பதற்கே ஆத்திரம் வருகிற அளவுக்கு கொடுமைகள் நடந்தாலும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்ற அளவுக்கு உள்ள மக்களின் வாழ்க்கை நெருக்கடியை முதலாளித்துவ ஓநாய்கள் எந்தளவுக்கு கேடாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதற்கு இவையெல்லாம் கண்கூடான சான்று.

இதன் உச்சகட்டமாகத்தான் கடந்த 3 மாதங்களாக நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. ஏன் என்று தொழிலாளிகள் கேட்டதற்கு விற்பனையான உற்பத்திப் பொருளுக்கு பணம் வரவில்லை என்று பொறுப்பற்ற முறையிலும், சட்ட விதிகளை மீறியும் பதில் கூறியுள்ளனர். முதலாளிகள் செய்த வேலைக்கு கூலியைத்தான் கொடுக்கிறார்கள். தங்களது இலாபத்தில் பங்கைக் கொடுப்பதில்லை. ஆனாலும் இப்படியொரு பதிலை முதலாளிகள் கூற முடிகிறதென்றால் தொழிலாளி வர்க்கத்தின் அவலநிலையையும், அரசியல் விழிப்புணர்வு இன்மையையும் கேடுகெட்ட முறையில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். கேள்வி கேட்ட தொழிலாளிகளை தங்களது அகமதாபாத் பிரிவுக்கு மாற்றி விடுவோம் என்று நிர்வாகம் மிரட்டியுள்ளது.

இந்தச் சூழலில்தான் 3 மாத சம்பளத்தைத் தரக்கோரி உள்ளிருப்புப் போராட்டத்தை நிரந்தரத் தொழிலாளிகள் தொடங்கியுள்ளனர். தொழிலாளிகள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில், அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் STAFF களுக்கு மட்டும் சலுகை கொடுப்பது என்ற போக்கை நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது. மேலும் தொழிலாளிகள் இங்கே வாழ்க்கை நெருக்கடிக்கு போராடிக் கொண்டிருக்கும் சூழலில் ஈவிரக்கமே இல்லாமல் கம்பெனி STAFF களுக்கு மட்டும் பெங்களூரில் தீபாவளி பார்ட்டி வைத்து தனது குரூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது KATERRA நிர்வாகம்.

பத்துமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தொழிலாளிகள் கூறுகின்றனர். சம்பளம் வரும், போய் வேலை செய்ங்க என்று திமிராக நிர்வாகம் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.

படிக்க : ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!

மேலும் போராடும் தொழிலாளிகளை கலைக்கும் விதத்தில் ஒரு சிலருக்கு சலுகை காட்டி போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் வேலையையும் நிர்வாகம் செய்து வருகிறது. போராட்டம் நடக்கும்பொழுது குருபரபள்ளி போலீசு ஸ்டேசனில் இருந்து உதவி ஆய்வாளர் வந்துள்ளார். தீபாவளி முடிந்து புதன்கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்று பேசியுள்ளார். ஆனால் தொழிலாளிகள் ஒத்துக் கொள்ளவில்லை. உண்மையிலேயே தவறு செய்த முதலாளியின் மேல், KATERRA நிர்வாகத்தின் மேல் எக்காலத்திலும் போலீசு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. எடுக்கவும் முடியாது. சட்டம் ஒழுங்கு என்று காரணம் காட்டி தொழிலாளிகளின் மீதுதான் நடவடிக்கை பாயும்.

இந்நிலையில் தீபாவளி வந்ததால் தொழிலாளிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் தற்காலிகமாக போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டு மீண்டும் புதன்கிழமை (26.10.2022) தொடரலாம் என்று தொழிலாளிகள்  முடிவெடுத்தனர். அந்த வகையில் புதன்கிழமையும் போராட்டம் தொடர்கிறது. ஆனால் போராட்டத்தை நிறுத்துவதற்கு KATERRA நிர்வாகம் எல்லாவிதமான தடைகளையும் ஏற்படுத்தும். தொழிலாளர் நலத்துறையும், அதிகார வர்க்கமும் KATERRA நிர்வாகத்திற்கு நன்றி விசுவாசத்தோடு துணைசெய்யும்.

KATERRA நிறுவனத்தின் சகிக்கமுடியாத இவ்வளவு கொடுமைகளையும் மொத்த அதிகார வர்க்கமும் வேடிக்கை பார்த்து வருவதை விட பெரிய குற்றம் வேறு என்னவாக இருக்க முடியும்?

எந்த அளவுக்கு இப்போராட்டம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்பதை தொழிலாளிகளின் ஒற்றுமையும், அரசியல் விழிப்புணர்வும் மட்டுமே தீர்மானிக்கும்.

இது அந்த ஒரு நிறுவனத்தின் தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினை. தொழிலாளி வர்க்கத்தின் முதுகில் பாறை போல அழுத்திக்கொண்டு இருக்கும் முதலாளித்துவ தனியார்மய இலாபவெறிக் கொள்கையை உழைக்கும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி உணரவைப்பதும், அந்தப் புரிதலில் இருந்து தொழிலாளி வர்க்கம் தன்னை அமைப்பாக்கிக் கொள்வதன் மூலம்தான் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற முடியும்.

வினவு செய்தியாளர் – கிருஷ்ணகிரி

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் : பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவர் | அ.லுனச்சார்ஸ்க்கிய்

ரலாற்றை ஆக்குபவர்கள் மாபெரும் தனிநபர்களே, அதிலும் முதன்மையாக அதிகாரப் பதவியில் உள்ள அரசர்களும் மந்திரிகளுமே என்ற கருத்தை திரளான பாமரமக்கள் போலவே ஆதர்சவாத வரலாற்று அறிஞர்களும் ஆதரித்து வந்தார்கள். இன்றும் ஆதரித்து வருகிறார்கள். கீழிருந்து அதிகாரத்தின் உச்சத்துக்கு உயர்ந்துவிட்ட மாண்புமிக்க புரட்சி வீரர்கள் அவர்களுக்கு எதிர்ப் பட்டால், இந்தத் தலைவர்களின் மேதை, ஆற்றல், தந்திரம், திறமை இவையே புரட்சிக்குப் பெருமளவு காரணம் என்று கூறவும் அவர்கள் தயங்குவதில்லை.

மார்க்ஸிய வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு எவரது விருப்பாற்றலையும் சாராத மாபெரும் சமூக நிகழ்முறைகளையே காரணமாகக் காட்டுகிறார்கள். இந்த நிகழ்முறைகள் முடிவாகப் பார்க்கையில் வர்க்கங்களின் போராட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களையே பொருத்திருக்கின்றன என்றும் வர்க்கங்களின் ஒப்பு வலிமையும் அவை அடைய விரும்பும் குறிக்கோள்களும் எந்த குறித்த காலத்திலும் சமூக உற்பத்தியில் அவை ஆற்றும் பங்கினுள் நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் அவர்கள் விளக்குகிறார்கள்.

மார்க்ஸீயம் மாபெரும் தனிநபர்களுக்கு வரலாற்றில் எவ்விதப் பங்கையும் அளிக்க மறுக்கிறது மாபெரும் தனி நபர்கள் நிலவுவதையே அது ஏற்கவில்லை என்று இந்த விளக்கம் காரணமாகச் சிலர் முடிவு கட்டிவிடுகிறார்கள்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர் ஸ்டாலின்

மார்க்ஸியத்தின் பெயரே ஒரு மாபெரும் மனிதரின் பெயரிலிய தோன்றியுள்ளது. அப்படியிருக்க மார்க்சியம் மாபெரும் மனிதர்கள் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது விசித்திரமா இருக்கும் அல்லவா?

இல்லை, மார்க்ஸிய வரலாறும் இன்னும் சிறப்பாக மார்க்சிய நடைமுறையும் தனிநபர்பால் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. எந்த நபரையும் மிகச் சிறு பொறுப்புள்ள பதவியில் கூட அமர்த்துவதற்கு முன்னால் நமது கட்சியின் மத்தியக் கமிட்டி அவரது ஆற்றல், ஒழுங்கமைப்புத் திறனின் தன்மை ஆகியவற்றின் நோக்கிலிருந்து அவருடைய தனித்தன்மையை மிக ஆழ்ந்த கவனத்துடன் ஆராய்கிறது.

மார்க்சியவாதிகள் தற்செயல் நிகழ்ச்சிகளை நம்புபவர்கள் அல்ல. புரட்சியைச் செயற்கையாக உண்டாக்க முடியாது. அது தானாகவே தோன்ற வேண்டும் என்பதை நாம் அறிவோம். அதே சமயம், புரட்சி ஒழுங்கமைப்பு அற்றதாக, தாறுமாறானதாக இருக்க முடியும், அல்லது திட்டமிட்ட தடத்தில் பெருமளவுக்கு இயக்கப்படுவதாகவும், அதில் பங்கு கொள்வோர் எல்லாருடையவும் அறிவினால் இல்லாவிடினும் அதை ஒழுங்கமைக்கும் முன்னணியினரின் அறிவினால் ஒளியுறுத்தப்படுவதாகவும் இருக்க முடியும் என்பது நமக்குத் தெரியும். புரட்சிகர வர்க்கம் என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்தின் ஆற்றல், இதில்தான் அடங்கியுள்ளது.

அதாவது அது ஒழுங்மைப்புக்குச் சிறப்பாக இசைகிறது, தன் இடையிலிருந்து ஒழுங்கமைப்பாளர்களை அதிக எளிதாகத் தோற்று விக்கிறது. உதாரணமாகக் குடியானவர்களிலிருந்து பாட்டாளி வர்க்கத்தைத் தனியாகப்பிரித்துக் காட்டுவது இந்த ஆற்றல்தான்.

பாட்டாளிவர்க்கமே ஒழுங்கமைக்கும் வர்க்கம் ஆகும். முதலில் அது நாட்டை வென்று பெற வேண்டியிருந்தது, இப்போது அதைச் சீரமைக்க வேண்டியிருக்கிறது…. இத்தகைய வேலையை ஒரு தலைமை அலுவலகம் இன்றி அதனால் நிறைவேற்ற முடியாது. எல்லாப் புறங்களிலுமிருந்து வரும் விவரங்களைத் திரட்டி தொகுப்பதும் பரஸ்பரம் இசைவுள்ள உத்தரவுகளை எல்லாப் புறங்களுக்கும் அனுப்புவதும் இந்த அலுவலகத்தின் பணி. எல்லா மிக மதிப்புள்ள அனுபவங்களும் இங்கே திரட்டப்படும். செயல்படுத்தப்பட வேண்டிய திட்டம் இங்கே தெளிவாக வரையறுக்கப்படும். இன்னும் விவரமாகப் பார்த்தால், தவிர்க்க இயலாதவாறு பல பணியாளர்கள் கொண்ட இந்த அலுவலகத்தை முழுமையாக முறைப்படுத்துவதற்கு ஒன்றிணைக்கும்

அறிவும் ஒன்றிணைக்கும் உளத்திண்மையும் தேவை. இத்தகைய அறிவுக்குச் சட்டப்பூர்வமாக அதிகாரம் எதுவும், அரசன் அல்லது சர்வாதிகாரிக்கு உள்ளது போன்ற அதிகாரம் எதுவும் இராது. ஆனால் வளமான அனுபவம், தன்னடக்கம், ஊடுருவி நோக்கும் அறிவுக் கூர்மை ஆகியவை காரணமாகக் கிடைத்துள்ள மதிப்பு அதற்கு இருக்கும்.

மக்களது புரட்சி அதுவரை ஆட்சி அதிகாரத்திலிருந்து பிரித்து ஒதுக்கப்பட்டிருந்த ஜன சமுதாயத்தின் பெருத்த படிவுகளை மேல்மட்டத்துக்குக் கொண்டுவருகிறது. இந்த மக்களுக்கிடையே உயர் மேதை வாய்ந்த குறித்த தொகை நபர்கள் தேர்வு முறையில் மேல் வருவார்கள் என்று இயல்பாகவே எதிர்பார்க்கலாம்.

இத்துடன் புரட்சி இயக்கம் இன்னும் மறைமுகமாகவே இருக்கும்போது, அதற்குத் தலைமை வகிப்பவர்கள் மிகச் சிறந்த செயல்முறையான, வெல்லமுடியாத துணிவு வாய்ந்தவர்கள்; மறைமுக நடவடிக்கைகள், கடும் போராட்டம் என்னும் கண்டிப்பான பள்ளியில் பயின்று கீழிருந்து மேலே உயர்ந்தவர்கள் என்பதையும் சேர்த்துக்கொண்டீர்களானால் விரிவான புரட்சி பெருத்தத தலைவர்களைத் தோற்றுவிக்காமல் ஏன் இருக்க முடியாது என்பதற்கு உரிய விளக்கம் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தோழர் லெனினுடைய விடுமுறை குறிப்புகள் | தோழர் ஸ்டாலின்

ருஷ்யாவில் நடந்த சமூகப் புரட்சி போன்று அவ்வளவு விரிந்து பரந்த, அவ்வளவு நீண்ட காலப் போராட்டத்தின் மூலம் முன்னேற்பாடு செய்யப்பட்ட புரட்சி எதையும் உலகம் கண்டதில்லை. எனவே, இத்தகைய புரட்சிக்கு, உயர்ந்த அரசியல் மேதையும் அசாதாரண உறுதி வாய்ந்த இயல்பும் கொண்டவர்கள் தலைமை தாங்குவார்கள் என்பதை முன்னுரைக்க முடிந்திருக்கும்.

நமது கட்சியின் தலைவராக ஒரு மாண்புயர் மனிதர் விளங்குவது தற்செயல் அல்ல. இது இவ்வாறு நிகழ்ந்தே தீர வேண்டியிருந்தது. அவரது மேதைகளின் பெருமையும் அவரது விருப்பாற்றலின் அசையா உறுதியும் நமது புரட்சியின் விரிவையும் பேரளவையும், சிறப்பாக அதன் பிரதான இயக்கு சக்தியான தொழிலாளி வர்க்கத்தின் முன்கண்டறியாப் பண்புகளையுமே பிரதிபலிக்கின்றன.

அ. லுனச்சார்ஸ்க்கிய்

(குறிப்பு : அ.வ. லுனச்சார்ஸ்க்கிய் (1875 – 1933) – அகாதமிசியன், சோவியத் பண்பாட்டுத் துறையில் சிறந்த செயலாற்றியவர். தமது 17-வது வயதில் சோசல் – டெமாக்ரடிக் ஸ்தாபனத்தில் சேர்ந்தார். ‘வ்பெர்யோத்’ (மன்னே), ‘பரோலித்தாரிய்’ (பாட்டாளி) என்னும் போல்ஷ்விக் செய்தித் தாள்களில் வி.இ. லெனினது தலைமையில் உடன் உழைத்தார். அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின் ருசிய சோவியத் கூட்டாட்சி சோசலிஸக் குடியரசின் கல்வித்துறை மக்கள் கமிஸாராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தார்.

லுனச்சார்ஸ்க்கிய் தலைசிறந்த சொற்பொழிவாளர், கட்டுரையாளர். ருஷ்ய, மேற்கு ஐரோப்பிய இலக்கிய வரலாற்று ஆசிரியர். பல நாடக நூல்களும் சோவியத் இலக்கியம் பற்றிய சிறந்த விமர்சன நூல்களும் இயற்றியவர்.)

ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!

திய வெட்டு, வேலைச்சுமை அதிகரிப்பு உள்ளிட்டு ஸ்விக்கி நிறுவனத்தின் சுரண்டல் அட்டூழியங்களை எதிர்த்து, ஏற்கெனவே அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டு பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில், ஸ்விக்கி நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிகள் இதுவரை மேற்கொண்டு வந்த சுரண்டலுக்கு எல்லாம் உச்சமாக அமைந்துள்ளது.

முழுநேரமாக ஸ்விக்கியில் பணிபுரிபவர்களின் வேலைநேரம், புதிய விதிமுறைகளின்படி 12 மணிநேரத்திலிருந்து 18 மணிநேரமாக மாற்றப்பட்டிருக்கிறது. பழைய முறையின்படி, காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இருந்த வேலைநேரம் (ஓய்வு நேரம் 3 மணி நேரத்தோடு சேர்த்து), காலை 5:30 மணியிலிருந்து இரவு 11 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய வேலை நேரத்தில், முன்பு போல் செயலியை அணைத்து வைத்துவிட்டு ஓய்வெடுக்க முடியாது. எப்போதும் செயலியைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவு போடுகிறார்கள்.

“காலையிலிருந்து இரவு வரை இங்கேயே வேலை பார்த்தால், எங்கள் குடும்பத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாங்கள் எப்போது வாழ்வது” என கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள்.

சர்வதேச தொழிலாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை கழிப்பறைக் காகிதமாக ஆக்கப்பட்டு, கொத்தடிமைக்கு ஒப்பாக மாற்றப்படுகிறார்கள் ஸ்விக்கி தொழிலாளர்கள்.

படிக்க : ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! | துண்டறிக்கை

இதுவரை கொடுத்து வந்த வார ஊக்கத்தொகை ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதுவரை சராசரி வார ஊதியமாகப் பெற்றுவந்த 11,500 ரூபாயை பெறுவதற்கு, 180 முறை உணவு டெலிவரி செய்திருக்க வேண்டும் என்று புதிய விதி சொல்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 26 டெலிவரி செய்ய வேண்டும் என்கிறார்கள்.

110, 125, 140, 160 என டெலிவரி இலக்குகள் வகுக்கப்பட்டு, அதற்கேற்ப ஊதியமும் ரூ.7,000, ரூ.7,500, ரூ.8,500, ரூ.9,750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“ஒரு தொழிலாளி 180 டெலிவரி என்ற இலக்கை, ஒரு வாரத்தில் நிறைவேற்றுவது மிகச் சவாலான ஒன்று; சராசரி ஊதியமான ரூ.11,500-ஐ வெட்டி ரூ.7,000 ஆக குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டே இந்த இலக்கை திணித்துள்ளார்கள்” என்று குமுறுகிறார்கள் தொழிலாளர்கள்.

நாளொன்றுக்கு காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை 20 டெலிவரி செய்தால், அந்நாளின் ஊக்கத்தொகையாக ரூ.400 வழங்கப்பட்டது. ஆனால் புதிய விதிமுறையில், ஆர்டர்கள் அதிகமுள்ள இடங்களில், டெலிவரி எல்லைகள் சுருக்கப்பட்டு, தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. இதனால், ஒரு நாளைக்கு 20 டெலிவரி எடுப்பதே குதிரைக் கொம்பு ஆகியுள்ளது. எனவே இதுவரை பெற்றுவந்த நாள் ஊக்கத்தொகையையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

***

கடந்த 20 ஆம் தேதி, தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிகளுக்கு எதிராக சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஸ்விக்கியின் அடாவடியைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்யும்படி தன் சக தொழிலாளர்களுக்கு அறைகூவினர்.

22 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 23 ஆம் தேதி சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையிலிருந்து பெங்களூரில் அமைந்துள்ள ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு நடைபேரணியாக சென்றுள்ளார்கள்.

தொழிலாளர்களின் இந்த கிளர்ச்சியால், ஸ்விக்கி நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தனது விதிகளை ரத்துசெய்யவோ, தளர்த்திக் கொள்ளவோ அந்நிறுவனம் முன்வராது என்ற நிலையே உள்ளது. ஏனெனில், லாபவெறி பிடித்த ஸ்விக்கி, தான் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக தொழிலாளர் ஊதியத்தில் கை வைப்பது புதிதல்ல.

ஊதிய வெட்டு, வேலைச்சுமை அதிகரிப்பைக் கண்டித்து ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்திய ஸ்விக்கி ஊழியர்கள்.

2014 இல் ஸ்விக்கி நிறுவனம் தொடங்கப்பட்டபோது மாதம் 45 ஆயிரம் ரூபாய் வருமானம் எனக் கூவிக் கூவி அழைத்தார்கள். தொடக்கத்தில் ஒரு முறை உணவு விநியோகித்தால் (டெலிவரி) ரூ.60 வரை கிடைத்தது. ஆனால், அதன் பின்னர் ரூ.40, ரூ.35, ரூ.30, ரூ.25 எனக் குறைந்துகொண்டே வந்து தற்போது ரூ.20 ஆக நிற்கிறது.

இதேபோல ஆரம்ப காலகட்டங்களில் மாத ஊக்கத்தொகை, விற்பனை ஊக்கத்தொகை போன்ற சலுகைகளைக் கொடுத்து வந்தது. பிறகு அது வார ஊக்கத்தொகையாக மாற்றப்பட்டு, இன்று அதுவும் ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது. நாள் ஊக்கத்தொகையோ, பெற முடியாத ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

அமைப்பாக்கப்படாமல் இருந்தாலும்கூட, ஸ்விக்கி நிறுவனத்தின் தொடர்ச்சியான அடாவடிகளைக் கண்டித்து கொல்கத்தா, அசாம், பெங்களூர், டெல்லி என பல நகரங்களில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். எனவே தொழிலாளர்களின் இந்த கிளர்ச்சி, ஸ்விக்கி நிறுவனம் எதிர்பாராத ஒன்றல்ல.

தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதி என்பது சென்னையின் சில மண்டலங்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே அடியாக நாடு முழுக்க அமல்படுத்தினால் என்ன நேரிடும் என்பதை உணர்ந்து, படிப்படியாக தனது திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்தோடு சதித்தனமாக செயல்படுகிறது ஸ்விக்கி

***

ஸ்விக்கி நிறுவனம் தொடங்கப்பட்டபோது, ‘நாம் அனைவரும் நிறுவனத்தின் பங்குதாரர்கள்’ என்று தொழிலாளர்களைப் பார்த்து கூறியது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தீவிரமடைந்த காலத்தில், தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் எண்ணற்ற படித்த இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்தார்கள். வாரத்திற்கு சராசரியாக 15,000 அளவிற்கு சம்பாதிக்க முடியும் என்றாலும் கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது.

12 மணிநேரம் முழுநேர வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி, பல நேரங்களில் சாப்பிட தாமதமாகி அல்சரால் (குடல் புண்) அவதிப்பட வேண்டியிருந்தது. மேலும் இருசக்கர வாகனத்திலேயே நீண்டநேரம் அமரும் காரணத்தால் மூல நோயை (பைல்ஸ்) சந்தித்தவர்களும் உண்டு.

இப்படி கொத்தடிமை போல வேலைசெய்த தொழிலாளர்களின் உழைப்பிலேதான் ‘ஸ்விக்கி’ என்ற நிறுவனம் தனக்கென தனியொரு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இன்று தனக்கென்று குறிப்பிட்ட அளவு சந்தையைப் பிடித்த பிறகு, சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த புதிய விதிமுறையோடு இது நிற்காது. ஏனெனில் லாபவெறிக்கு ஒரு வரம்பு கிடையாது.

“பழைய ஊதிய முறை குறித்து பேசக் கூடாது; புதிய ஊதிய முறையில் ஏதேனும் கருத்து இருந்தால் தெரிவியுங்கள்” என பேச்சுவார்த்தைக்கு வந்த தொழிலாளர்களிடம் ஸ்விக்கி நிறுவன அதிகாரி பேசும் காணொளி வெளியாகியுள்ளது.

“விருப்பம் இருந்தால் வேலைசெய், இல்லாவிட்டால் வெளியேறு” என்று கூறுகிறார்கள். நாட்டில் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளம் குவிந்திருக்கிற சூழலில், சில பேர் போனால் பலர் போட்டிப்போட்டுக் கொண்டு வருவார்கள் என்ற நிலை ஸ்விக்கி நிறுவனத்திற்கு துணிச்சலைக் கொடுக்கிறது.

படிக்க : 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு தண்டனையை குறைத்த நீதிமன்றம்!

ஸ்விக்கி தொழிலாளர்கள் சந்தித்துவரும் பிரச்சினை தனித்த ஒன்றல்ல, கிக் தொழிலாளர்கள் (Gig Workers) என்றழைக்கப்படும் நவீன பாட்டாளி வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை. முறையான நிறுவனமோ, பணி நிரந்தமோ, பணிப் பாதுகாப்போ அற்ற ஒரு நிலையில், குறிப்பிட்ட வேலைக்கு, குறிப்பிட்ட மணிநேரம் வேலைசெய்யும் தொழிலாளர்களே ‘கிக் தொழிலாளர்கள்’ என்றழைக்கப்படுகின்றனர். இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில், ஏகபோக முதலாளி வர்க்கம் தன்னுடைய சுரண்டலை அதிநவீன முறையில் தீவிரப்படுத்தும் ஒரு வடிவமாக கிக் பொருளாதாரத்தைப் புகுத்திவருகிறது.

நிதி ஆயோக் அறிக்கைப் படி, இந்தியாவில் தற்போது 77 லட்சம் கிக் தொழிலாளர்கள் உள்ளனர். இது 2029-30க்குள் 2 கோடியே 35 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. (ஆதாரம்: தீக்கதிர்)

முதலாளி யாரென்றே கண்ணுக்குத் தெரியாத, ஆலை அல்லது நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளிகளைப் போல, திரளாக ஒன்றிணைந்து வேலைசெய்ய வாய்ப்பற்ற ‘கிக் தொழிலாளர்கள்’, பிற பிரிவு தொழிலாளிகளைவிட ஆகக் கொடூரமாகச் சுரண்டப்படுகிறார்கள். ஜூலை 21ஆம் தேதி பெங்களூரில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஸ்விக்கி தொழிலாளர்கள் “நாம் முகமில்லா நிர்வாகத்துடன் போராட வேண்டியுள்ளது” என்று கூறினர்.

“அவர்களால் ஒருங்கிணைந்து எதிர்ப்பைக் காட்டமுடியாது” என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கத்தை, அமைப்பாய் திரண்டு போராடுவதன் மூலம் மட்டுமே பணியவைக்க முடியும். நாடெங்கும் பரவலாக நடைபெற்றுவரும் ஸ்விக்கி தொழிலாளிகளின் தன்னெழுச்சிப் போராட்டங்களானது, அதற்கான முதல் அடியாகும்.

ரவி

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர் ஸ்டாலின்

சியப் புரட்சியின் ரதம் மின்னல் வேகத்தில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. புரட்சிகரப் போராளிகளின் படைப்பிரிவுகள் எல்லா இடங்களிலும் வளர்ந்து கொண்டும் பரவிக்கொண்டும் இருக்கின்றன. பழைய அதிகாரத்தின் தூண்கள் அவற்றின் அடித்தளங்களின் மீது அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருக்கின்றன, நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது, எப்போதும்போல, பெட்ரோகிராடு முன்னணியில் இருக்கிறது. அதற்குப் பின்னால் எண்ணற்ற மாகாணங்களைத் தட்டுத்தடுமாறி இழுத்துவந்துகொண்டிருக்கின்றன.

பழைய அதிகாரத்தின் சக்திகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவை இன்னும் அழிக்கப்படவில்லை. அவை தாழ்வாக இருக்கின்றன, தமது தலையை உயர்த்தி, சுதந்திர ரசியா மீது வேகமாக எழுந்து தாக்குவதற்குத் தருணம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. சுற்றிலும் பாருங்கள், இருண்ட சக்திகளின் தீய வேலை இடையீடின்றி நடந்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள்……..

வென்றெடுக்கப்பட்ட உரிமைகளை உயர்த்திப்பிடிக்க வேண்டும், அதன்மூலம் பழைய சக்திகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், மாகாணங்கள் தொடர்பில் ரசியப் புரட்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் – இதுதான் தலைநகரின் பாட்டாளி வர்க்கத்தின் அடுத்த உடனடிப் பணியாக இருக்க வேண்டும்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தோழர் லெனினுடைய விடுமுறை குறிப்புகள் | தோழர் ஸ்டாலின்

ஆனால் இதை எப்படிச் செய்வது?

இதைச் செய்து முடிக்க தேவையாக இருப்பது என்ன?

பழைய அதிகாரத்தைத் தூள் தூளாக்குவதற்கு கிளர்ச்சிக்காரத் தொழிலாளர்களுக்கும் மற்றும் படைவீரர்களுக்கும் இடையிலான ஒரு தற்காலிகக் கூட்டணி போதுமானது. ஏனென்றால் ரசியப் பலம் படை வீரர்களின் சீருடையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டணியில் இருக்கிறது என்பது தானாகவே தெளிவாகத் தெரியக் கூடியதாகும்.

ஆனால் அடையப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் புரட்சியை மேலும் வளர்த்தெடுக்கவும், தொழிலாளர்களுக்கும் படைவீரர்களுக்கும் இடையிலான ஒரு தற்காலிகக் கூட்டணி போதுமானதல்ல.

இதற்கு அந்தக் கூட்டணி உணர்வுபூர்வமானதாகவும் உறுதியானதாகவும் செய்யப்பட வேண்டியதும், அது நீடித்து நிலைத்து நிற்க வேண்டியதும், எதிர்ப்புரட்சியாளர்களின் ஆத்திரமூட்டும் தாக்குதல்களைத் தாக்குப்பிடித்துப் போதுமான அளவுக்கு நிலைத்து நிற்க வேண்டியதும் அவசியமாகும். ஏனென்றால் ரசியப் புரட்சியின் இறுதி வெற்றியின் உத்தரவாதம் புரட்சிகரத் தொழிலாளர்கள் மற்றும் புரட்சிகரப் படைவீரர்களுக்கு இடையிலான கூட்டணியைப் பலப்படுத்துவதில் அடங்கியிருக்கிறது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்ததாகும்.

தொழிலாளர்களின் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்துகள் இந்தக் கூட்டணியின் அமைப்புகள் ஆகும்.

இந்தச் சோவியத்துகள் எந்த அளவுக்கு மிகவும் நெருக்கமாக இணைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு அவை மிகவும் பலமாக அமைப்பாக்கப்படுகின்றன, அவை வெளிப்படுத்தும் புரட்சிகர மக்களின் புரட்சிகர சக்தி அந்த அளவுக்கு மிகவும் செயலூக்கம் கொண்டதாக இருக்கும், மேலும் எதிர்ப்புரட்சிக்கு எதிரான உத்தரவாதங்கள் மிகவும் நம்பிக்கை வாய்ந்தவையாக இருக்கும்.

புரட்சிகர சமூக-ஜனநாயகவாதிகள் இந்தச் சோவியத்துகளைப் பலப்படுத்துவதற்குப் பாடுபட வேண்டும், எல்லா இடங்களிலும் அவற்றை அமைக்க வேண்டும், தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளின் மத்திய சோவியத் ஒன்றியத்தின் கீழ் அவற்றை ஒன்றாக இணைக்க வேண்டும்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்

தொழிலாளர்களே, உங்கள் அணிகளை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள், ரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியைச் சுற்றி அணிதிரட்டுங்கள்!

விவசாயிகளே, விவசாயிகள் சங்கங்களில் அமைப்பாகுங்கள், ரசியப் புரட்சியின் தலைவரான புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துடன் அணிதிரளுங்கள்!

படைவீரர்களே, உங்கள் சொந்தச் சங்கங்களில் அமைப்பாகுங்கள், ரசியப் புரட்சிகரப் படையின் ஒரே உண்மையான கூட்டாளியான ரசிய மக்களைச் சுற்றி அணிதிரளுங்கள்!

தொழிலாளர்களே, விவசாயிகளே, படைவீரர்களே, எல்லா இடங்களிலும் கூட்டணியின் அமைப்புகளாக, ரசியாவின் புரட்சிகர சக்திகளின் ஆற்றலாக தொழிலாளர்களின் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் ஒன்றிணையுங்கள்!

அதில்தான் பழைய ரசியாவின் இருண்ட சக்திகளின் மீதான முழுமையான வெற்றியின் உத்தரவாதம் அடங்கியிருக்கிறது.

அதில்தான் விவசாயிகளுக்கு நிலம், தொழிலாளர்களுக்கு உழைப்புப் பாதுகாப்பு, ரசியாவின் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரு ஜனநாயகக் குடியரசு ஆகிய ரசிய மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் மெய்யாக்கப்படும் என்ற உத்தரவாதம் அடங்கியிருக்கிறது.

பிராவ்தா, எண் 8,
மார்ச் 14, 1917

ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! | துண்டறிக்கை

நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!
டிசம்பர் 21: ஹிட்லர்-முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்!

சிறுதொழில்கள் நசிவு – வேலையின்மை – விலையேற்றம் – பாசிச அடக்குமுறைகள்:

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!
ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!

நவம்பர் – டிசம்பர் 2022

அரங்கக் கூட்டங்கள் | தெருமுனைக் கூட்டங்கள் | கலைநிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

1917 நவம்பர் 7 அன்று ரஷ்யாவில் நடந்த மகத்தான சோசலிசப் புரட்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த ஹிட்லர் – முசோலினி பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் நமது நாட்டை அச்சுறுத்திவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்கும் கடமையை நாம் சுமந்துள்ளோம்.

எட்டாண்டு கால பாசிசப் பேயாட்சி:

பணப் பரிவர்த்தனையில் கொள்ளையிட டிஜிட்டல் மயமாக்கம், சிறுதொழில்களை அழிக்கும் ஜி.எஸ்.டி., செஸ் வரி, பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி என 20 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டச் சுரண்டி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கிவரும் மோடி அரசு, மாநில அரசுகளை பேரரசனுக்குக் கப்பம் கட்டும் அடிமை பாளையங்களாக்கி விட்டது.

நமது சொந்த நாட்டில் சிறுதொழில்களைச் செய்வதையும், விவாசயம் செய்வதையும், பழங்குடி மக்கள் காடுகளைச் சார்ந்து வாழ்வதையும், நிலத்தடி நீரை பயன்படுத்துவதையும் தடுத்து, அம்பானி, அதானி, வேதாந்தா, மிட்டல் போன்ற கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கேற்ப சட்டத்திருத்தங்களைச் செய்துவருகிறது. மூன்று வேளாண் சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மசோதா, தொழிலாளர் நலச்சட்டத் திருத்தங்கள், புதிய கல்விக்கொள்கை, மின்சார மசோதா, பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் தேசியப் பணமயமாக்கல் திட்டம் போன்றவை மோடியின் பாசிசத் திட்டங்களில் சிலதுளிகள் மட்டுமே.

ஆம், நாட்டையே பேரழிவின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது மோடியின் ஆட்சி!

மோடி உருவாக்குவது சொர்க்கமா, சோமாலியாவா?

கடந்த எட்டாண்டுகளாக, பெருவாரியான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வந்த சிறுகுறுதொழில்கள், கைத்தொழில்கள் மீது, கார்ப்பரேட் கொள்ளை என்னும் சுருக்குக் கயிற்றை மாட்டி நெருக்கி வருகிறது. இதன் விளைவாக, வரலாறு காணாத வகையில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. சொர்க்கத்தைப் படைப்பதாக வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியில் பஞ்சமும், பட்டினிச்சாவுகளும் பெருகி, நம் நாடு சோமாலியாவாக மாறும் அபாயம் சூழ்ந்து வருகிறது. ஆகக் கொடூரமான ஆர்.எஸ்.எஸ். கும்பலே இந்த உண்மையை இனியும் மறைக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டது, அதனால்தான், 20 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமையில் வாடுவதாகவும், 4 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை எனவும் நீலிக்கண்ணீர் வடிக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் டாலரின் மதிப்பைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிக்கிறது. தனது பொருளாதார நெருக்கடியை உலக மக்களின் மீது சுமத்துகின்ற அமெரிக்காவின் இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டிக்கத் துணிவின்றி, உலகப் பொருளாதாரம் புதிய புயலின் கண்ணியில் சிக்கியிருக்கிறது என்கிறார் ரிசர்வங்கியின் கவர்னர். இதன் விளைவாக, இந்தியாவில் உணவுப் பஞ்சம் வரப்போகிறது என்று சொல்லி மக்களை கைகழுவுகிறது மோடி-நிர்மலா சீதாராமன் கும்பல்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியாவை மாற்றிவிட்டதாக பீற்றிக் கொள்கிறார் மோடி. ஆனால், இந்தியாவை இன்னொரு இலங்கையாக மாற்றியிருப்பதே உண்மை.

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம்

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், நம்மைப் போன்ற பின்தங்கிய, வளரும் நாடுகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் 1992-களில் இருந்தே இந்தியாவில் திணிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கொள்ளையில் மார்வாரி, பார்சி, பார்ப்பன, பனியா, சிந்தி பின்னணி கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி, வேதாந்தா, மிட்டல், டாடா-க்களுக்கு பங்கு பிரித்துக் கொடுப்பதில் முன்னணியில் நிற்கிறது பா.ஜ.க.வின் மோடி ஆட்சி.

ஏற்றத்தாழ்வு, ஜனநாயக மறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சாதிய வர்ணாசிரம – பார்ப்பன பயங்கரவாதமே ஆர்.எஸ்.எஸ்.இன் சித்தாந்தம். இதன் வெளிப்படாகிய இந்துராஷ்டிரக் கொள்கையே பா.ஜ.க.வின் கார்ப்பரேட் விசுவாசத்துக்கு அடிப்படை. எனவேதான், கார்ப்பரேட் கொள்ளையைக் காக்க, பார்ப்பன பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் பின்னிப் பிணைந்து சீறி வருகின்றன.

தனியுடைமையையும் சுரண்டலையும் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அரசு எந்திரம் மற்றும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். விஷக்கிருமிகள் ஊடுருவியுள்ளன. கார்ப்பரேட் சுரண்டலையும், இந்துராஷ்டிர நோக்கத்தையும் கேள்விக்கிடமற்ற முறையில் மேற்கொள்வதற்கு வசதியாக, ஏட்டளவிலான ஜனநாயகக் கூறுகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டி வருகின்றது பாசிசக் கும்பல்.

முசுலீம் மக்களை நாட்டின் எதிரிகளாகக் காட்டி மக்களைப் பிளவுபடுத்துவது, அவர்களுக்கு எதிராகக் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்துவது; சிறுபான்மை மதத்தினர், பழங்குடியினர், தலித்துகளை அடித்துக் கொல்வது; சிறுமிகள், பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொல்வது போன்றவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அன்றாட நிகழ்வாகி, ஒட்டுமொத்த சமூகத்தையும் பதட்டத்திலேயே வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல்.

பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர், பணக்கார மேட்டுக்குடியினருக்கு மட்டும்தான் இது நாடு. மற்ற உழைக்கும் மக்களுக்கோ உரிமைகள் ஏதுமற்ற சுடுகாடு. இதுதான் காவிகள் கட்டமைக்க விரும்பும் இந்துராஷ்ட்ரம்.

சோசலிச ரசியாவே நமது வழிகாட்டி!

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர். உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டினர். அதைபோல, நாஜி ஹிட்லர் – பாசிச முசோலினி தலைமையில் மீண்டுமொரு கொள்ளைக்கார போரை – இரண்டாம் உலகப்போரை ஏகாதிபத்தியங்கள் கட்டவிழ்த்து விட்டபோது, தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோசலிச ரசியாவின் 200 இலட்சம் பாட்டாளிகள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து பாசிசத்திடமிருந்து உலக மக்களைக் காத்தனர்.

இத்தகைய, உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களும் தியாகங்களுமே இந்தியாவைச் சூழ்ந்துவரும் பாசிசத்தையும் கிள்ளியெறியும்.

போராட்டங்கள் எழுச்சிகளாக உயரட்டும்!

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. தமிழகத்திலும் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, பரந்தூர், புதுச்சேரி, கோவை என பல பகுதிகளில் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மாணவர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.இன் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக பாசிச எதிர்ப்பு சக்திகள் போராடி வருகின்றனர். பாசிச ஆட்சியதிகாரத்திற்கு எதிராகப் போராடுகின்ற அனைவரும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்புகள், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை அமைத்துப் போராடுவது காலத்தின் கட்டாயமாகும். பாசிசத்தை முறியடிக்கும் இலக்கில் இந்தப் போராட்டங்களை மக்கள் எழுச்சிகளாக வளர்த்தெடுப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் தனது அடித்தளத்தை நிறுவத் தீவிரமாக சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல். தமிழகம் ஒருபோதும் மண்டியிடாது என்பதை மீண்டும் உணர்த்துவோம்! மக்கள் போராட்டங்களை மாபெரும் எழுச்சிகளாக வளர்த்தெடுப்போம்! ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம்!

  • காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
  • போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் மீதுள்ள மாயையை உதறியெறிவோம்!
  • பாசிச எதிர்ப்பு ஜனநாயக் குடியரசைக் கட்டியமைப்போம்!
  • ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!
  • பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாக ஒன்றிணைவோம்!
  • பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

தொடர்புக்கு :- 9791653200, 9444836642, 7397404242, 9962366321

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தோழர் லெனினுடைய விடுமுறை குறிப்புகள் | தோழர் ஸ்டாலின்

விடுமுறையோ முடியப் போகிறது. தோழர் லெனினோ, விரைவில் கடமையாற்ற மீண்டும் வரப்போகிறார். இந்த நேரத்தில் “தோழர் லெனினுடைய விடுமுறையைப் பற்றி” எழுத வேண்டுமா? இது பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. இதுமட்டுமல்ல; என்னுடைய மனப்பதிவுகளோ அநேகம்; அவையோ மதிப்பிடற்கரியவை. பிராவ்தாவின் ஆசிரியர் குழு கேட்பதைப்போல இவற்றை ஒரு சுருக்கமான குறிப்பாக எழுதுவது முற்றிலும் விவேகமானதல்ல. இருந்தாலும், நான் என்ன செய்வது? ஆசிரியர்கள் வலியுறுத்துவதால், நான் எழுதத்தான் வேண்டும்.

ஓய்வுறக்கமில்லாமல், நாட்கணக்கில் தொடர்ந்து போர் முனைகளில் செயல்பட்ட பழம்பெரும் போராளிகளை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. போர்முனையிலிருந்து திரும்ப வரும் அவர்கள் நிழல்களைப் போன்ற தோற்றத்துடன் இருப்பார்கள்; மரம் சாய்ந்தது போல விழுவார்கள். அப்படியே நாள் முழுவதும் தூங்கி விடுவார்கள். புத்துணர்வு பெற்று, புதிய போர்களுக்கான ஆர்வத்துடன் எழுவார்கள். என்னசெய்வது? போரிடாமல் அவர்களால் “வாழ முடியாதே!” ஆறு வார காலமாகப் பார்க்காமல் இருந்துவிட்டு, ஜூலை மாதத்தில் லெனினைப் பார்க்கப்போனபோது, அவரைப் பற்றி எனது மனதில் எழுந்த எண்ணமே இதுதான். களைப்பூட்டும் இடையறாத போர்களுக்குப் பின்னர், ஏதோ கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு, அந்த இளைப்பாறலால் புத்துணர்வு பெற்ற பழம்பெரும் போராளியைப் போல அவர் தோன்றினார். அவர் புத்துணர்வோடும்

நோயிலிருந்து மீண்டவராகவும் காணப்பட்டார். ஆனால், மிதமிஞ்சிய உழைப்பாளனுடைய, அளவற்ற களைப்பினுடைய ரேகைகள் அவரது முகத்தில் காணப்பட்டன.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்

“பத்திரிகைகளைப் படிக்க எனக்கு அனுமதியில்லை. நான் அரசியல் பேசவே கூடாதாம். மேசை மீது ஒரு துண்டுக் காகிதம் இருந்தால்கூட, நான் அதைப் பார்க்காமல் எச்சரிக்கையுடன் தவிர்த்து விடுகிறேன். ஒருவேளை அது பத்திரிகையாக இருந்தால் என்னவாகும்? கட்டுப்பாட்டை மீறுவதற்கு அது வழிவகுத்து விடுமோ?” என்று தோழர் லெனின் வஞ்சகப் புகழ்ச்சியாகக் கூறினார்.

நானோ மனம்விட்டு சிரித்தேன். கட்டுப்பாட்டுக்கு அவர் கீழ் படிவதைப் பற்றி வானவளாவப் புகழ்ந்தேன். அரசியலையே தொழிலாகக் கொண்டவர்கள் சந்திக்கும்போது அரசியல் பேசாமல் இருப்பதாவது! இது ஆகிற காரியமா? இதைப் புரிந்து கொள்ள முடியாத டாக்டர்களைப் பற்றி நாங்கள் சிரித்துச் சிரித்துப் பேசினோம்.

தோழர் லெனினைப் பார்த்தவுடன் நமது மனதில் பட்டுத் தெறிக்கும் விசயம், செய்திகளை அறிவதற்கான அவரது தணியாத தாகம், கடமையாற்றுவதற்கான அடங்காத – அடக்கவே முடியாத அவரது துடிப்பு; இவற்றில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அவர் ஏதோ பட்டினி போடப்பட்டவர்போல காணப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. சோசலிஸ்டு புரட்சியாளர்கள் மீதான வழக்கு விசாரணை என்ன நிலையில் இருக்கிறது? ஜெனோவாவிலும் தி ஹேக்-இலும் என்ன நடக்கிறது? அறுவடைக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? தொழில்கள் எந்த நிலையில் உள்ளன? நிதி நிலைமை என்ன? – இந்தக் கேள்விகள் எல்லாம் மடைதிறந்த வெள்ளம்போல் வந்தன. தன்னுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு அவர் அவசரப்படவில்லை. நிகழ்ச்சிகளோடு தொடர்பிழந்து பின்தங்கி விட்டதாக அவர் அங்கலாய்க்கிறார், குறைப்பட்டுக் கொள்கிறார். உரையாடலில் பெருமளவு கேள்விகளையே அவர் அடுக்குகிறார். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கிறார். நல்ல அறுவடைக்கான வாய்ப்புகள் இருப்பதை அறிந்து மிகவும் உற்சாகமடைகிறார்.

ஒரு மாதம் கழித்து, அவரை மீண்டும் பார்த்தபோது, முற்றிலும் மாறுபட்டக் காட்சியை நான் கண்டேன். இம்முறை புத்தகக் கட்டுகளும் பத்திரிகைகளும் அவரைச் சுற்றி குவிந்திருந்தன. (ஆசை தீரப் படிக்கவும் அரசியல் பேசவும் அவருக்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.) சோர்வு, மிதமிஞ்சிய உழைப்பு ஆகியவற்றின்  அடையாளம் ஏதும் காணப்படவில்லை. வேலை செய்வதாக தணியாத தாகத்தின் காரணமாக எழும் பதற்றம் அவரிடம் இல்லை. இதற்கு முன்னர் இருந்ததுபோல ”பட்டினி” கிடப்பவராக அவர் தெரியவில்லை. அமைதியும் தன்னம்பிக்கையும் முழுமையாகத் திரும்பிவிட்டன. இவர்தான் நம்முடைய பழைய லெனின். தன்னுடன் பேசுபவரை ஊடுருவிப் பார்க்கிறார்; கருத்தூன்றி ஆராய்கிறார்…

இந்தமுறை எங்களுடைய உரையாடல் உற்சாகமாகவும் விறு விறுப்பாகவும் இருந்தது.

உள்நாட்டு விவகாரங்கள்… அறுவடை நிலைமை… தொழில்களின் நிலை…. அன்னிய நாணயங்களுடன் ரூபிளின் பறிமாற்ற மதிப்பு விகிதம்… வரவு செலவுத் திட்டம்… இப்படிப் பலவற்றையும் பற்றிப் பேசினோம்.

”சிரமமிக்க காலம்தான். ஆனால், படுமோசமான நிலைமை போய்விட்டது. நல்ல அறுவடை கிடைக்கும். நிலைமையில் அடிப்படையான மாற்றத்தை இது ஏற்படுத்திவிடும். இதையடுத்து, தொழில் துறையிலும் நிதிநிலைமையிலும் முன்னேற்றம் ஏற்பட்டே தீரும். இப்போது செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. அரசின் அனாவசிய செலவுகளைக் குறைத்து, அதன் மீதுள்ள பளுவை அகற்ற வேண்டும். இதற்காக நம்முடைய நிறுவனங்களிலும் தொழிலகங்களிலும் சிக்கனத்தை மேற்கொண்டு, அவற்றின் நிலையை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, இந்த விசயத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். கஷ்ட நிலையிலிருந்து நாம் மீளுவோம். ஆம், நிச்சயமாக நாம் மீண்டே தீருவோம். இது உறுதி” என்றார் லெனின்.

அயல்நாட்டு விவகாரங்கள்… ஏகாதிபத்தியங்களின் சோவியத் எதிர்ப்பு கூட்டணி…. பிரான்சின் நடத்தை… பிரிட்டனும் ஜெர்மனியும்…. அமெரிக்காவின் பங்கு பாத்திரம்…. இவற்றைப் பேசினோம்.

லெனின் சொன்னார். ”அவர்கள் (ஏகாதிபத்தியவாதிகள்) பேராசை பிடித்தவர்கள். அவர்களோ ஒருவரை ஒருவர் மனமார வெறுக்கின்றனர். அவர்கள் ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொள்வார்கள். நாம் அவசரப்படத் தேவையில்லை. நமது பாதை தெளிவானது, நிச்சயமானது; நாம் அமைதியையே வேண்டுகிறோம். இதற்கான ஒப்பந்தத்துக்காக நாம் வாதிடுகிறோம். ஆனால் நாம் அடிமைப்படுத்தலையும் அடிமைப்படுத்தும் ஒப்பந்தங்களின் நிபந்தனைகளையும் எதிர்க்கிறோம். நமது கப்பலின் சுக்கானை உறுதியாகப் பற்றி நின்று, நமது சொந்த வழியில் நாம் முன்னேறிச்செல்லு 20

வோம். நாம் முகத்துதிக்கு இரையாக மாட்டோம். அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம்.”

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !

சோசலிஸ்டு புரட்சியாளர்கள், மென்ஷ்விக்குகள் – சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான இவ்விரு தரப்பினரின் வெறி கொண்ட கிளர்ச்சி / எதிர்ப்பு….. இவை பற்றியும் நாங்கள் பேசினோம்.

”ஆம், சோவியத் ரஷ்யாவை இழிவுபடுத்துவதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். சோவியத் ரஷ்யாவுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவர்கள் துணை போகின்றனர், வழிசெய்கின்றனர். முதலாளித்துவப் அவர்கள் விழுந்துவிட்டனர்; படுபாதாளத்தில் வீழந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தடுமாறி தடுமாறி கெட்டொழியட்டும். தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்தவரையில், அவர்கள் எப்போதோ செத்தொழிந்து விட்டனர்…” என்றார் லெனின்.

வெண் காவலர்களின் பத்திரிகைகள்… நாட்டைவிட்டு ஓடிப் போனவர்கள்… லெனின் இறந்து விட்டார்; முழு விவரங்கள் இதோ என்று கூறி எண்ணற்ற இழிந்த கட்டுக்கதைகளைப் பரப்புகின்றனர்….

புன்னகைத்தபடியே லெனின் குறிப்பிட்டார்: ”புளுகுவதால், அவர்களுக்கு ஏதாவது ஆறுதல் கிடைக்குமென்றால் அவர்கள் புளுகித் திரியட்டும். சாகப் போகிறவர்களுக்கு கடைசி ஆறுதலாக உள்ளவற்றை நாம் பறித்து விட வேண்டாம்.”

செப்டம்பர் 15, 1922

தோழர் லெனினுடைய விடுமுறை
பிராவ்தாவுக்கான படத்துடன் கூடிய இணைப்பு
எண். 215, செப்டம்பர் 24,1922

ஸ்டாலின்படைப்புகள்,
ரஷ்யப்பதிப்பு ,
தொகுதி 5..

தூத்துக்குடியில் ஒலித்த குமுறல் சத்தம்.. வாயிலேயே சுட்டு வீழ்த்திய போலீசு! | மருது வீடியோ

தூத்துக்குடி மக்கள் போராடியது நியாயம் என்ற ஒரு உண்மை இப்போது இந்த அறிக்கையின் மூலமாக வெளிவந்திருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூட்டின் முதல் குற்றவாளி எடப்பாடி கே.பழனிசாமி. நாசிச ஹிட்லனின் சகாக்கலுக்கு எப்படிப்பட்ட விராசணையும் தண்டனையும் பகிரங்கமாக அளிக்கப்பட்டதோ, அப்படிப்பட்ட தூக்கு தண்டனையை தூத்துக்குடி மக்களை சுட்டுக்கொன்ற குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டும்.

ஆரிய பட்டியை சார்ந்த எங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ஜெயராமன் எப்படி இறந்தார் என்று கேட்கும்போது, எங்கள் தோழர்கள் சொல்கிறார்கள். துப்பாக்கிக் குண்டுகள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருகிறது என்று. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த தியாகிகளுக்கு இன்றுவரை அஞ்சலி செலுத்த மறுத்துவருகிறார்கள்.

தூத்துக்குடியில் மக்கள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, ரஜினி அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? என்ன நோக்கம்? முதலில் ரஜினி சென்று போலீசுக்காரர்களை சந்தித்தார். பல போலீசு படுகாயம் அடைந்துள்ளார்கள் என்றார். ஆனால் ஒரேஒரு போலீசுக்காரருக்குதான் உதடு கிழிந்திருந்தது என்று ஆணையம் சொல்கிறது. நாங்கள் இப்படி கொல்லுவோம், மக்கள் ரஜினி வந்தால் ஏமார்ந்து விடுவார்கள் என்ற இவை அனைத்துமே ஒரு முன் திட்டம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை பற்றி Galatta Voice யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விளக்கங்களை தருகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

பாகம் 1

பாகம் 2

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

உ.பி.யும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் பாலியல் வன்கொடுமைக் கூடாரங்கள்!

டந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதோதண்டா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த ஆதிக்க சாதிவெறியர்கள் இருவர் வீட்டிற்குள் நுழைந்து அச்சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மண்ணெண்ணையை ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். விவசாயப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய அச்சிறுமியின் தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது மகளைக் கண்டு, கதறியழுதபடி அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளார். அங்கிருந்து லக்னோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட, 80 சதவிகித தீக்காயங்களுடன் இருந்த அச்சிறுமி சிகிச்சை பலனின்றி 12 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.

செப்டம்பர் 14 ஆம் தேதி, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள தமோலிபுர்வா என்ற கிராமத்தில் 15 மற்றும் 17 வயதுடைய இரண்டு தலித் சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன. இதைப் பார்த்துக் கோபமடைந்த கிராம மக்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமிகளின் பிரேதப் பரிசோதனையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது அம்லபமாகியுள்ளது.

***

இந்த இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள், மிகக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இக்கொடூரச் சம்பவங்கள் ஊடகங்களில் வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்க்காதவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

படிக்க : பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !

இந்துத்துவத்தின் சோதனைச் சாலையான உத்தரப்பிரதேசத்தில்தான் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. 2020-ஆம் ஆண்டில், ஹதராஸ் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயது பெண்ணை ஆதிக்கச் சாதி வெறியர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, கை கால்களை உடைத்து, நாக்கை அறுத்து, முதுகெலும்பை உடைத்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். ஆதிக்கச் சாதி வெறியர்களைக் காப்பாற்றுவதற்காகக் கொலை செய்யப்பட்ட பெண்ணை, போலீசே இரவோடு இரவாக எரித்து சாம்பலாக்கியது. இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. தற்போது லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த சம்பவமும் 2014-இல் நடந்த பதாவுன் மாவட்டத்தில் நடந்த தலித் சகோதரிகளின் மரணத்தைப் போன்றே உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட NCRB அறிக்கையில், 2021-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,28,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில்  பெண்களுக்கு எதிரான அதிகக் குற்றங்களுடன் 56,093 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த ஓராண்டில் மட்டும் 218 கூட்டுப் பாலியல் வன்முறைகள் நடந்துள்ளன. இதிலும் உ.பி. தான் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் நடைபெறும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் 26 சதவீதம் உத்தரப்பிரதேசத்தில்தான் நடக்கின்றன.

யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக முன்னிறுத்தப்படும் உ.பி.-இல், பெண்கள், தலித்துகள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண்களைக் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது, வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்வது, வீடு புகுந்து சிறுமிகளைத் தூக்கிச் செல்வது, அடித்துக் கொலை செய்து மரத்தில் தொங்கவிடுவது என சர்வசாதாரணமாக நடக்கின்றன.

பா.ஜ.க ஆளும் பிற மாநிலங்களிலும் இந்த நிலை வேகமாக வளர்ந்து வருகிறது. அண்மையில், உத்தரகாண்டில் பா.ஜ.க தலைவரின் மகன் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததற்காக இளம்பெண்ணைக் கொலை செய்தது அம்பலமாகியது ஒரு சான்றாகும். தென்னிந்தியாவின் இந்துராஷ்டிர சோதனைச் சாலையாக மாறிவரும் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தில் இரண்டு சிறுமிகள் (ஒரு தலித் சிறுமி) மூன்றாண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், அந்த மடத்திற்கு பா.ஜ.க ஆதரவு அளித்து பாதுகாத்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக இருக்கும் போதே, பெண்களுக்கு இதுதான் நிலைமை என்றால், இந்துராஷ்டிரம் நிறுவப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை இவை உணர்த்துகின்றன.


அறிவு

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்

புரட்சிக்காகப் பிறந்தவர் லெனின். உண்மையில் புரட்சிகர எழுச்சியின் மேதை அவர்; புரட்சிகரத் தலைமை என்ற கலையின் ஆகச்சிறந்த மேதை அவர். புரட்சிகர எழுச்சிக் காலத்தில் சுதந்திரமாகவும், மகிழ்வாகவும் உணர்வதுபோல வேறு எப்போதும் அவர் உணர்வதில்லை.

எல்லா புரட்சிகர எழுச்சிகளுக்கும் சமமான ஒப்புதல் என்று நான் கூற வரவில்லை; எல்லா நேரத்திலும், எல்லா சூழ்நிலையிலும் புரட்சிகர எழுச்சியை ஆதரித்தார் என்று நான் கூற வரவில்லை. இல்லவே இல்லை. புரட்சிகர எழுச்சிகளின்போது, அவரது உள்ளுணர்வின் மேதைமை முழுமையாகவும், தெளிவாகத் தெரியுமாறும் வெளிப்படுத்தப்பட்டவாறு, வேறு நேரங்களில் வெளிப்படவில்லை என்பதே எனது கூற்றிற்குப் பொருளாகும். புரட்சி நேரத்தில் மலர்ச்சியாக இருந்தார்;

முனிவராக மாறி வர்க்கங்களின் இயக்கத்தையும், புரட்சியின் ஏற்ற இறக்கங்களையும் தனது உள்ளங்கையில் அது கிடப்பதாகப் பார்த்தார். நமது கட்சி வட்டாரத்தில் வழக்கமாக கீழ்க்காணும்படி கூறப்படுவதற்கு நல்ல காரணம் இருக்கிறது: “நீரில் மீன் நீந்துவதுபோல, புரட்சி அலையில் லெனின் நீந்தினார்.”

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

எனவேதான், லெனின் அவர்களின் செயலுத்தி ரீதியான முழக்கங்களில் “பிரமிப்பான” தெளிவு இருந்தது; அவரது புரட்சிகர திட்டங்களில் ”திகைக்கவைக்கும்” துணிவு இருந்தது.

லெனின் அவர்களின் இந்த குணாம்சங்கள் தொடர்பாக உண்மைகளை நினைவுகூர விரும்புகிறேன்.

முதல் உண்மை: அக்டோபர் புரட்சிக்கு சற்று முந்தைய காலகட்டம் அது; பின்னணியிலும், முன்னணியிலும் நெருக்கடியால் உந்தப்பட்ட பல இலட்சக்கணக்கான தொழிலாளர்களும், விவாசாயிகளும், படையினரும் சமாதானத்தையும், விடுதலையையும் கோரி வந்தனர்; ”இறுதிவரை யுத்தம்” என்பதற்காக இராணுவ சர்வாதிகாரத்தைப் படைத்தளபதிகளும், முதலாளித்துவ வர்க்கமும் திட்ட மிட்ட நேரம் அது; “மக்கள் கருத்து” என்றழைக்கப்படுவதும், “சோசலிகக் கட்சிகள்” என்றழைக்கப்பட்டவர்களின் கருத்தும், போல்ஷ்விக்குகளுக்கு விரோதமாகவும், அவர்களை “ஜெர்மானிய ஒற்றர்கள்” என்று முத்திரைக் குத்துவதாகவும் இருந்த நேரம் அது.

போல்ஷ்விக் கட்சியை தலைமறைவிற்கு தள்ளுவதற்கு கெரன்ஸ்கி முயற்சித்த – ஏற்கெனவே அதில் ஓரளவிற்கு வெற்றி கண்டிருந்தார் – நேரம் அது; சோர்ந்து போன, நொறுங்கி நின்ற நமது படையை ஆஸ்திரிய – ஜெர்மானிய நாடுகளின் சக்திவாய்ந்த, கட்டுப்பாடான படைகள் எதிர்த்த நேரம் அது; மேற்கு – ஐரோப்பிய “சோசலிசவாதிகள்” “வெற்றியை நிறைவு செய்வதற்கான யுத்தம்” என்பதற்காகத் தங்களது அரசுடன் மகிழ்வாக கூட்டணி அமைத்திருந்த நேரம் அது…..

அத்தகைய நேரத்தில் ஒரு புரட்சி எழுச்சியைத் தொடங்குவதற்கு என்ன பொருள் இருக்கும்? அத்தகைய சூழ்நிலையில் தொடங்குவது என்பதற்கு எல்லாவற்றையும் பணயம் வைப்பது என்று பொருள் தருகிறது. அந்த அபாயத்தை எதிர்கொள்ள லெனின் அஞ்சவில்லை; அவரது தொலைநோக்குப் பார்வையில், புரட்சிகர எழுச்சி தவிர்க்க முடியாதது என்பதும், அது வெல்லும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்ததால் அவர் அஞ்சவில்லை; ரஷ்யாவில் ஒரு புரட்சி ஏற்பட்டால், அது ஏகாதிபத்திய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்று அவர் அறிந்திருந்ததால் அவர் அஞ்சவில்லை; யுத்தத்தால் சோர்வடைந்திருந்த மேலைநாட்டு மக்களை அது தட்டியெழுப்பும் என்று அறிந்திருந்ததால், அவர் அஞ்சவில்லை; அது ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றும் என்று அறிந்திருந்ததால், அவர் அஞ்சவில்லை ; புரட்சிகர எழுச்சி சோவியத் குடியரசை உருவாக்கும் என்றும், சோவியத் குடியரசு உலகெங்கும் உள்ள புரட்சிகர இயக்கங்களுக்கு அரணாக அமையும் என்றும் அறிந்திருந்ததால், அவர் அஞ்சவில்லை.

ஈடு இணையற்ற துல்லியத்தோடு லெனினின் புரட்சிகர தொலை நோக்கு அமைந்திருந்தது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்.

இரண்டாவது உண்மை. மக்கள் அரசுத் தலைவர்களின் (கமிசார்களின்) பேராயம், சண்டையை நிறுத்தி, ஜெர்மனியோடு இராணுவ ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தையைத் தொடங்குமாறு, கலகக்கார தலைமைத் தளபதியான ஜெனரல் டுக்கோனினை வற்புறுத்த முயற்சித்த அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்கள் அவை. லெனின், கிரைலென்கோ (வருங்கால தலைமைத்தளபதி) மற்றும் நான் பெட்ரோகிராடில் இருந்த இராணுவ தலைமையகத்துக்குச் சென்று, டுக்கோனினோடு நேரடியாகப் பேசுவதற்கு முயற்சித்தோம். அது பயங்கரமான தருணம். மக்கள் அரசுத் தலைவர்களின் கவுன்சிலின் ஆணையை ஏற்க டுக்கோனினும், கள தலைமையகமும் மறுத்தனர்.

கள தலைமையகத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இராணுவ அதிகாரிகள் இருந்தனர். சோவியத் அதிகாரத்துக்கு விரோதமாக இருந்த, இராணுவ அமைப்புகளுக்கு அடிபணிந்திருந்த, 140 லட்சம் பேர்களைக் கொண்ட இராணுவம் என்ன சொல்லும் என்று யாருக்கும் தெரியாது. பெட்ரோகிராடிலும் கூட இராணுவ வீரர்களின் கலகம் தொடங்கிவிட்டிருந்தது.

மேலும் கெரன்ஸ்கி பெட்ரோகிராடு மீது அணிவகுத்தார். நேரடி பேச்சுவார்த்தையில் சிறிய இடைவெளி ஏற்பட்ட பிறகு, லெனினின் முகத்தில் அசாதாரண வெளிச்சம் திடீரென தோன்றியதை நினைவு கூர்கிறேன். அவர் ஒரு முடிவுக்கு வந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. அவர் கூறினார்: ”கம்பியில்லாத ஒயர்லெஸ் நிலையத்திற்கு நாம் செல்வோம்; ஜெனரல் டுக்கோனினை பதவி நீக்கம் செய்வதற்கான சிறப்பு ஆணையை வெளியிடுவோம்; தோழர் கிரைலென்கோவை தலைமைத் தளபதியாக அவருக்குப் பதிலாக நியமிப்போம்; அதிகாரிகளைப் புறக்கணித்து, தளபதிகளைச் சுற்றி வளைக்குமாறும் சண்டையை நிறுத்துமாறும், ஆஸ்திரிய – ஜெர்மானிய இராணுவத் தினருடன் தொடர்பை ஏற்படுத்தி, சமாதானத்தை தங்களது கரத்தில் எடுத்துக் கொள்ளுமாறும் இராணுவ வீரர்களுக்கு வேண்டுகோள் விடுப்போம்.”

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !

இது “இருட்டில் ஒரு பாய்ச்சல்” ஆகும். இந்தப் பாய்ச்சலில் இருந்து லெனின் பின்வாங்கவில்லை. இராணுவம் அமைதியை விரும்பியது என்றும், தனது பாதையில் உள்ள ஒவ்வொரு தடைகளையும் தகர்த்து சமாதானத்தை அது வெல்லும் என்றும் அவர் அறிந்திருந்ததால், அந்தப் பாய்ச்சலை அவர் ஆர்வமாக எடுத்திருந்தார். சமாதானத்தை நிறுவுவதற்கான இந்த வழிமுறை ஆஸ்திரிய – ஜெர்மானிய படைவீரர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், விதி விலக்கின்றி ஒவ்வொரு முனையிலும் சமாதானத்திற்காக ஏங்கு பவர்களுக்கு கடிவாளம் வழங்கும் என்றும் அவர் அறிந்திருந்தார்.

உச்சபட்ச துல்லியத்தோடு இதிலும் கூட லெனினின் புரட்சிகர தீர்க்கதரிசனம் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது என்று நமக்குத் தெரியும்.

மேதைமையின் உள்ளுணர்வு, வரவுள்ள நிகழ்வுகளை விரைவாகக் கிரகிக்கும் திறன், அவற்றின் உள்அர்த்தத்தைக் கண்டுபிடிப்பது ஆகிய லெனினின் இந்தத் தன்மைகள்தான் சரியான மூலஉத்தியை வகுத்துத் தருவதற்கு வழிவகுத்தது; புரட்சிகர இயக்கத்தின் முக்கிய திருப்பங்களில் தெளிவான நடத்தை வழியை வகுத்துத் தருவதற்கு வழிவகுத்தது.

பிராவ்தா எண். 34, பிப்ரவரி 12, 1924