பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுக்கவும், பேருந்துநிலையம் புதுப்பிப்பது என்ற பெயரில் பேருந்து நிலையத்தை கழிவுநீர்க் குட்டையாக மாற்றிய அவலத்தைக் கண்டித்தும், மோசமான நிலையில் உள்ள பென்னாகரம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் 16.10.2021 இன்று பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள், மாணவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் வெயில், மழை காலங்களில் நிற்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், சிறுநீர், மலம் கழிக்க இடமில்லாமல் இருப்பதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொடர்ச்சியாக மக்கள் கோரிக்கை வைத்தும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையத்தை இடித்தது முதல் இன்றுவரை பேருந்து நிலையத்தை கட்டி முடிப்பதற்கான எந்த வேலையும் செய்யாமல், குழியை மட்டும் தோண்டி வைத்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி நோய் பரவுகிற அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது.
பேருந்து நிலத்தை கட்டி முடிப்பதற்காக டென்டர் என்கிற பெயரில் கோடி கோடியாக கொள்ளை அடிப்பது மட்டும்தான் ஓட்டுக் கட்சிகளின் தொடர்கதையாக இருக்கிறது. முந்தைய ஆட்சியில் அதிமுக மாவட்ட நிர்வாகி ஒருவர் இந்த டெண்டரை எடுத்துள்ளார். ஒன்னறரை ஆண்டு காலங்களில் குழியை மட்டுமே தோண்டிவிட்டு எந்த வேலையும் செய்யாமல் இழுத்தடித்து வருகிறார், ஆனால் அரசு அதிகாரிகளோ இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விடுவதும், பேருந்து நிலையம் கட்டும் வேலையை தள்ளிபோடுவதும் தொடர்கிறது.
இதனால் நகரத்திலுள்ள வணிகர்கள், சிறு வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள், என பலதரப்பட்ட மக்களும் வாழ்விழந்து நிற்கின்றனர். எனவே இந்த அவல நிலையை போக்க போர்க்கால அடிப்படையில் பேருந்து நிலையத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது.
1 of 6
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலக் குழு உறுப்பினர் தோழர். அருண் தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன், CPI(ML) (விடுதலை)-யின் மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் தோழர் லட்சுமணன், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் தோழர் பெரியண்ணன், தமிழ் புலிகள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் முனுசாமி, தர்மபுரி மாவட்ட முடி திருத்துவோர் நலச்சங்கத்தின் நிர்வாகிகளான, தோழர் மகேஸ்வரன், தோழர் கருணாகரன், தோழர் லட்சுமிகாந்தன், தோழர் சிவாஜிஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக முடி திருத்துவோர் நலச்சங்கத்தின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தோழர் சத்தியமூர்த்தி நன்றியுரையாற்றினார். இதில் பெருந்திரளாக வணிகர்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனர்.
தகவல் மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம் 97901 38614
‘Dying for an iphone’ APPLE, FOXCONN AND THE LIVES OF CHINA’S WORKERS
உலகின் பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களுக்கு எந்தப் பாதகமும் வராது. உலகச் சந்தைக்காக அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று கூறி “மேக் இன் இந்தியா” திட்டத்தை மோடி முன்வைத்தார்.
தன்னுடைய கார்ப்பரேட் சேவைக்காக தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றும் பொருட்டு, இந்தியாவில் நடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை இயற்றி, அவற்றைச் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மோடி அரசு.
மறுபுறம் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவாக, சீனாவிலிருந்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்கப் போகின்றன என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மோடியின் துதிபாடிகள்..
சீனாவில் உள்ள பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி சீனத் தொழிலாளர்களை சுரண்டுகின்றன? இந்நிறுவனங்கள் இந்தியாவிற்கு நுழைந்தால் அச்சுரண்டல் எப்படி நம் நாட்டு தொழிலாளர்கள் மீது தீவிரமடையும் என்பதை எந்த நிறுவனமயமாக்கப்பட்ட பத்திரிக்கைகளும் தொழிலாளர்களுக்கு கூறுவதில்லை.
சீனாவில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்களின் நிலைமைகளையும், அவர்கள் மீதான சுரண்டல்களையும் படம் பிடித்து காட்டுகிறது இப்புத்தகம்.
சீனாவில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் நடந்த தொடர் தற்கொலைகளை மையமாக வைத்து ‘Dying for an iphone’ APPLE ,FOXCONN AND THE LIVES OF CHINA’S WORKERS என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் நிலைமைகள் ஏதோ இங்கிலாந்தில் தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் நடந்தது அல்ல. இது நடப்பது நாம் வாழும் காலத்தில்தான்.
இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கிராமப்புறத்திலிருந்து வந்து நகர்ப்புறத்தில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். நெரிசலான தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். இதற்காக அவர்களின் சம்பளத்திலிருந்து வாடகை பணம் கழிக்கப்படுகிறது . அமெரிக்காவிற்காக 24 மணி நேரமும் உற்பத்தி நடக்கிறது.
தொழிலாளர்கள் தங்கள் மீதான துஷ்பிரயோகம், குறைந்த ஊதியம், அலுமினியத் தூசுகள் போன்ற இராசயன நச்சு கழிவுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
சீனாவின் பல தொழிற்துறை நகரங்களில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
பாக்ஸ்கான் நிறுவனம் முதன்மையாக ஆப்பிள் நிறுவனத்திற்காக உற்பத்தி செய்கிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமில்லாமல் ஆல்பபெட், பிளாக்பெர்ரி, சிஸ்கோ, டெல், புஜிட்சு, க்யூ ஹப், ஜபம், இன்டெல், லஃப், மைக்ரோசாப்ட், நிண்டெண்டோ, பானோசோனிக், பிலிப்ஸ், சாம்சங், சோனி மற்றும் தோஷிபா போன்ற நிறுவனங்களுக்கும் மேலும் சீன நிறுவனங்களான லெனோவா, ஹவாய், ZTE போன்றவைகளுக்கும் உற்பத்தி செய்கிறது. பாக்ஸ்கான் iPhones, iPads, iPods, Macs, TVs, Xboxes, PlayStations, Wii U’s, Kindle, printer போன்றவற்றை அசெம்பிள் செய்கிறது. இந்நிறுவனம் 2018-ம் ஆண்டில் சீனாவின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் 4.1% பங்கை கொண்டுள்ளதோடு 175 பில்லியன் டாலரை வருவாயாக பெற்றுள்ளது.
’Dying for an iphone என்ற புத்தகத்தின் ஆசிரியர்களான ஜென்னி சான், மார்க் செல்டன் மற்றும் புன் ங்காய், சீன நகரங்களான ஷெஞ்ஜன், ஷாங்காய், குன்ஷான், ஹாங்சோ, நாஞ்சிங், தியான்ஜின், லாங்ஃபாங், தையுவான் மற்றும் வுஹான் ஆகிய நகரங்களில் உள்ள ஃபாக்ஸ்கானின் முக்கிய உற்பத்தித் தளங்களில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பல வருடங்களாக ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையிலேயே இப்புத்தகத்தை எழுதியுள்ளனர்.
தொழிலாளர்கள் எப்போதும் கண்காணிப்பிலேயே வாழ்கின்றனர். அவர்கள் அந்நிறுவனத்தின் பாதுகாப்பு படைப்பிரிவால் காவல் காக்கப்படுகிறார்கள். அடுக்கு மாடியிருப்பிலான தங்கும் விடுதிகளில் ஒரே அறையில் எட்டு முதல் பத்து தொழிலாளர்கள் தூங்குகிறார்கள். முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்பு விடுதிகளில் ஏற்பட்ட தற்கொலை நிகழ்வுகளை தடுப்பதற்காக தற்போது வலைகள் மற்றும் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன.
ஒரேபகுதியில் இருந்து வரும் தொழிலாளர்களோ அல்லது ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களோ ஒரே அறையில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றனர். திருமணமான ஆணும் பெண்ணும் பணியாற்றினால் அவர்களை ஒரே அறையில் தங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை. பிற தொழிலாளர்களை அறைக்குள் கூட்டி வருவதற்கே பல கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்திருக்கிறது.
தங்குமிடமும், பணியிடமும் அருகருகே இருப்பது நிறுவனத்திற்கு 24 மணிநேர அதிவேக உற்பத்திக்கு வழிவகுக்கிறது. பிற மனிதர்களின் அன்பு இல்லாமை, ஒரு திரைச்சீலை, பங்க் வடிவிலான படுக்கை, சிறிய அறை இது தான் தொழிலாளர்கள் வாழ்விடம் என்று தொழிலாளர்களின் வாழ்நிலையை குறிப்பிடுகிறார்கள் இந்த நூலின் ஆசிரியர்கள்.
ஒரு மணி நேரத்திற்கு இரண்டு டாலர்கள் அல்லது மாதத்திற்கு சராசரியாக 390 டாலர்கள் வழங்கப்படுகிறது. நிறுவன வளாகத்திலேயே ஏ.டி.எம் இயந்திரம் மூலம் இதை பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் 10-12 மணி நேரம் வேலை. மேலாளர்கள், லைன் லீடர்கள், போர்மேன் போன்றோர்கள், தொழிலாளர்களை வேலை நேரத்தின் போது பேச விடாமல் கண்காணிக்கின்றனர். அசெம்பிளி லைனில் மெதுவாக வேலை செய்தால் இவர்கள் கண்டிப்பார்கள். குறைபாடுள்ள பொருட்களை உற்பத்தி செய்தால் தொழிலாளர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
ஒரு தொழிலாளர் ஆலையின் விதிகளை மீறினால், சக தொழிலாளர்கள் மத்தியில் சுய விமர்சனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தகுதி மதிப்பீட்டில் ‘D’ grade பெறும் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை கிடையாது. ஒவ்வொரு இரண்டாவது வாரத்தில் ஒரு விடுமுறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை விடுமுறை எடுக்கலாம். அவ்வளவுதான். இது போக தொழிலாளர்கள் பகலிலிருந்து இரவு ஷிப்டிற்கு மாற வேண்டியது இருக்கும்.
காலை ஏழுமணிக்கு வேலைக்கு போகும் தொழிலாளர்களின் அன்றாட நிலைமைகளை இந்நூலின் ஆசிரியர்கள் விளக்குகின்றனர். “அங்க அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தொழிற்சாலையின் உள்ளே செல்ல தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலை வாயிலில் நுழைந்தவுடன் அடுத்தடுத்த கண்காணிப்பு கருவிகளால் கண்காணிக்கப்படுகின்றனர். ஒரு நாட்டிற்குப் பாதுகாப்பு படை இருப்பது போல, பாக்ஸ்கானுக்கு ஒரு தனி படை இருக்கிறது” என்று குறிப்பிடுகின்றனர்.
ஆலையின் உள்ளே நுழைந்தவுடன், தொழிலாளர்கள் சந்திக்கும் (சகித்துக் கொள்ளும்) வழக்கமான சடங்கைப் பற்றி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
“ஷிப்ட் தொடங்கும் போது, ஆரம்பக் கூட்டத்தில் மேலாளர் தொழிலாளர்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் (How are you?) என்று கேட்பார். இதற்கு தொழிலாளர்கள் Good! Very good! Very very good! என்று சத்தமாக கத்த வேண்டும். இது தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக நடக்கும் பயிற்சி என்று கூறப்படுகிறது.
ஷிப்ட் ஆரம்பிக்கும் முன்பு மூன்று முறை விசில் ஒலிக்கும். முதல் விசில் ஒலிக்கும் போது தொழிலாளர்கள் தங்கள் இருக்கைகளை சரிசெய்ய வேண்டும். இரண்டாவது விசிலின் போது தொழிலாளர்கள் தங்கள் கையுறைகள் மற்றும் உபகரணகங்களை அணிய வேண்டும். மூன்றாவது விசிலில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும்.” என்று இந்நூலில் குறிப்பிடுகின்றனர்.
“வேலை நேரத்தின் போது நாங்கள் பேசக்கூடாது, சிரிக்க கூடாது, தூங்க கூடாது, சாப்பிடகூடாது. இது தொழிற்சாலையின் முதல் விதி” என்கிறார் லேசர் சால்டிரிங் தொழிலாளி.
ஒரு லைன் லீடர் கூறும் போது “பத்து நிமிடங்களுக்கு மேல் கழிவறைக்கு சென்று வந்தால் அத்தொழிலாளி வாய்மொழி எச்சரிக்கைக்கு உள்ளாக்குப்படுவார். வேலை நேரத்தில் பேசினால் எழுத்துப்பூர்வ எச்சரிக்கை விடப்படும்“ என்கிறார்.
“இந்நிறுவனத்தில் கையில் நகம் வளர்த்து இருந்ததற்காக நான் என்னுடைய மதிப்பெண்களை இழந்தேன். இவ்வாறு மதிப்பெண்களை இழப்பது என்னுடைய போனசு இழப்புக்கு வழிவகுக்கும்” என்கிறார் இங்குள்ள பெண் தொழிலாளி. எப்படியெல்லாம் நூதனமாக தொழிலாளர்களின் காசைத் திருடித் தின்றிருக்கிறது இந்தக் கும்பல் ?
“என் நண்பன் ஒரு தடவை மொபைல் போனில் ஒரு திருகாணியை அசெம்பிள் செய்யாமல் விட்டதற்காக, பாக்ஸ்கான் சேர்மனின் பொன்மொழி ஒன்றை முந்நூறு தடவை எழுத நிர்ப்பந்திக்கப்பட்டான்” என்கிறார் அப்பெண் தொழிலாளி.
பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை என்பது சோர்வாகவும், திரும்ப திரும்ப அதே வேலையே செய்வதாகவும், மன அழுத்தத்தை தருவதாக உள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஒரு ஐ போனில் நூற்றுக்கு மேற்பட்ட பாகங்கள் உள்ளன. ஒவ்வொரு தொழிலாளியும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்காக வேலை செய்ய வேண்டும். .இவர்கள் இந்த செயலை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தினசரி பத்து மணிக் கணக்கில், மாதக் கணக்கிலும் இந்த இயக்கத்தை தொடர வேண்டும்.
இந்தப் புத்தகத்தில் அசெம்பிளி லைனில் விஷுவல் இன்ஸ்பெக்டராக வேலைபார்க்கும் பெண் தொழிலாளி, தனது நேர்காணலில், “மதர்போர்டு ஓவனில் இருந்து என் கைகள் மதர்போர்டை எடுக்க நீளும். என் தலை இடமிருந்து வலது பக்கமாக இயங்கும். கண்கள் இடமிருந்து வலது பக்கமாகவும், மேலிருந்து கீழாகவும் குறுக்கீடு இல்லாமல் அசையும். நான் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான தடவை இதை செய்கிறேன். என் மூளை துருப்பிடிக்கிறது” என்கிறார்.
அமெரிக்காவின் டெய்லரிசம், முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளிகளின் மூளைகளில் இது போன்ற இரசாயன மாற்றத்தை தான் ஏற்படுத்துகின்றன போலும் !
தான் பார்க்கும் வேலை நிலைமைகளை பற்றி விளக்கும் போது , “இந்நிறுவனத்தில் ஒவ்வொரு விநாடியும் இலாபத்தை நோக்கியே எண்ணப்படுகின்றன. 1. மதர்போர்டை நான் எடுக்க வேண்டும்; 2. அதன் லோகோவை ஸ்கேன் செய்ய வேண்டும்; 3. அதை ஒரு பையில் இட வேண்டும்; 4. அதன் மீது லேபிளை ஒட்ட வேண்டும்; 5. அதை அசெம்பிளி கன்வேயரில் வைக்க வேண்டும். இதை நான் பத்து விநாடிக்குள் செய்ய வேண்டும். ஒவ்வொன்றையும் இரண்டு விநாடிக்குள் செய்து முடிக்க வேண்டும்” என்கிறார் ஒரு தொழிலாளி.
“தொழிற்சாலை எஞ்சினியர்கள் ஸ்டாப் வாட்ச்களோடு அசெம்பிளி லைனுக்கு வரும் போது நாங்கள் மெதுவாக வேலை பார்க்க ஆரம்பிப்போம். நான் 7விநாடிகளில் 8 ஸ்குருக்களை ஒரு ஸ்மார்ட் போனில் அசெம்பிள் செய்வேன். அவர்கள் வரும் போது நாங்கள் வேகமாக வேலை செய்தால் நாங்கள் இதை மாதக்கணக்கில் தொடர வேண்டும். அதற்காக நாங்கள் அவர்கள் வரும் நேரம் பார்த்து மெதுவாக வேலை பார்போம் என்கிறார் ஒரு தொழிலாளி. இந்த எஞ்சினியர்களுக்கு எங்களுடைய வலது கையோ அல்லது இடது கையோ ஒரு விநாடி கூட சும்மா இருந்து விடக்கூடாது. வலது கை எலக்ட்ரானிக் ஸ்குரு டிரைவரை இயக்கும் போது இடது கை ஸ்குருக்களை எடுக்க வேண்டும்” என்று அங்குள்ள உற்பத்தி திறனுக்காக வடிவமைக்கப்பட்ட டெய்லரிசத்தை விவரிக்கிறார் ஒரு தொழிலாளி.
லைன் லீடர்களின் வேலை நிலைமைகள் பற்றியும் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன்ர.
“நாங்கள் ஒரு ஷிப்ட் உற்பத்தியில் 99.65% உற்பத்தி பொருட்களை தரத்தோடு உற்பத்தி செய்ய வேண்டும். இது ஒரு ஷிப்டில் 4 தரமற்ற பொருட்களாக இருக்கலாம். மாணவப் பயிற்சியாளர்கள் அதிகமாக வந்ததால் நாங்கள் இந்த சதவீதத்தை சாத்தியமாக்குவதற்கு மிகவும் திணறுகிறோம்.”
“எங்கள் மேலதிகாரிகள் அவர்களின் கோபத்தை எங்கள் மீது காட்டுகிறார்கள்; நாங்கள் தொழிலாளிகள் மீது காட்டுகிறோம். தொழிலாளிகள் தங்கள் கோபத்தை யார் மீது காட்டுவார்கள்? இதுதான் அவர்களை கட்டத்தின் மீதிலிருந்து குதிக்கத் தூண்டுகிறதோ?” என்கிறார் ஒரு லைன் லீடர்.
“வேலை முடிந்த பிறகு உங்கள் கண்கள் உற்சாகமிழந்து, உணர்ச்சியிழந்து, உயிரற்று போய், உங்கள் முகமும் தலையும் அழுக்கோடு இருந்தால் நீங்கள் ஒரு பாக்ஸ்கான் தொழிலாளி” என்கிறார் ஒரு தொழிலாளி.
“அங்குள்ள வேலை சுற்றுப்புறமும் மோசமானதாக இருக்கிறது. பாலிசிங் இயந்திரம் அலுமினிய தூசுகளை உமிழ்கிறது. இந்த தூசு கண்ணில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு கண்ணீரை வரவைக்கிறது. நுண்ணிய அலுமினிய தூசு தொழிலாளர்களின் முகங்களிலும் ஆடைகளிலும் பூசுகிறது” என்கிறார்கள் ஆசிரியர்கள். ஒரு தொழிலாளி, “நான் பாக்ஸ்கானில் அலுமினிய தூசுகளை ஒரு vacuum cleaner போல சுவாசிக்கிறேன்” என்கிறார். ஆலையின் சன்னல்கள் மூடப்பட்டிருப்பதால் தொழிலாளர்களுக்கு சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
செங்குடு பகுதியில் உள்ள ஆலையில் மே20, 2011 அன்று தீப்பிடிக்க இந்த அலுமினியத் தூசு வழிவகுத்தது. எலெக்டிரிக் சுவிட்ச் போடும் போது அலுமினிய தூசுகள் மூலம் தீப்பிடித்து நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இது நடந்த ஏழு மாதங்களுக்கு பின்பு ஷாங்காயில் உள்ள ஐ போன் உற்பத்தி ஆலையில் அலுமினியத் தூசு மூலம் தீப்பிடித்து 61 தொழிலாளிகள் கடுமையாக தீக்காயத்திற்கு உள்ளாகினர். பலர் நிரந்தர ஊனமுற்றனர் என்று சுட்டிக் காட்டுகின்றனர், இந்நூலின் ஆசிரியர்கள்.
ஒரு ஷிப்ட்டுக்கு ஆயிரக்கணக்கான தொடுதிரைகளை தொழிலாளிகள் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு தொழிற்சாலை ஆல்கஹாலை விட வேகமாக ஆவியாகும் என்–ஹெக்சேன் என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதை ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தும் போது இந்த வேதிப் பொருளால் கண் எரிச்சல், தசைப் பிடிப்பு, தலை வலி, நடுக்கம், மங்கலான பார்வை போன்ற உடல்ரீதியிலான பிரச்சினைகள் தொழிலாளிகளுக்கு ஏற்படுகிறது. சுவாசக் கருவிகள் அணிந்து நல்ல காற்றோட்டமான இடத்தில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். இந்த வசதி இல்லாமல் தொழிலாளர்கள் நோய் வாய்ப்பட்டுள்ளனர். இது குறித்து பலரும் குரல் எழுப்பவே இந்த வேதிப் பொருள் ஆலை வளாகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த பாக்ஸ்கான் ஆலைகள் அதிகளவு உலோகங்கள் மற்றும் கழிவு நீரை ஆறுகள் மற்றும் நிலத்தடி நீரில் கலக்கச் செய்கின்றன. ஆலைகளுக்கு அருகில் உள்ள ஆறுகள், கருப்பு நிறத்தில் ஓடுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிகின்றன. குடிநீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
முன்பு அசெம்பிளி லைனின் நவீன ரோபாக்கள் தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றியது. அவர்கள் ஏற்கெனவே பார்த்த சால்டிரிங், வெல்டிங், ஸ்பிரே, தர பரிசோதனை, PCB அசெம்பிளி போன்ற வேலைகள் ரோபோக்கள் மூலம் செய்யப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிரந்தர தொழிலாளர்கள் ரோபோக்கள் மூலம் வேலை இழப்பதில்லை.
அத்தொழிலாளர்கள் பெருகி வரும் மாணவப்பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவன் மூலம் வெளியேற்றப்படுகிறார்கள். பாக்ஸ்கானில் ஆயிரக்கணக்கான தொழிற்பயிற்சி மாணவர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் நன்னடத்தை காலத்தை கடந்தாலும் 400 யுவாங் கூட வழங்கப்படுவதில்லை.
தொழிலாளர்களின் போராட்டங்கள் பாக்ஸ்கானில் நடந்து வருவதை பற்றி ஆசிரியர்கள் கூறும் போது ஆப்டிக்ஸ் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் ஹூபேயின் கிழக்கு ஏரியின் உயர் தொழில்நுட்ப மேம்பாட்டு மண்டலத்தில், ஜனவரி 3, 2012 அன்று 150 பாக்ஸ்கான் தொழிலாளர்கள் தங்களுடைய ஊதிய பிரச்சினை மற்றும் கட்டாய இடமாற்றங்களை எதிர்த்துப் போராடியுள்ளனர். தங்கள் கோரிக்கைகளை மேலாளர் ஏற்காவிட்டால் தாங்கள் கட்டத்தின் மேலிருந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளனர்.
வேலை நிறுத்தங்கள் , போராட்டங்கள் பற்றி சீன அரசு இரகசியம் காத்தாலும் அவை இப்போது அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன என்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். வேலை நிறுத்தங்கள் விரைவாகவும் கொடூரமாகவும் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகளாலும், காவல் துறையினராலும் ஒடுக்கப்படுகின்றன. வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தும் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
தொழிற்புரட்சியின் காலக்கட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் நிலைமைகளை விட தற்போதைய தொழிலாளி வர்க்கம் உரிமைகளை இழந்து நிற்கிறது.
தொழிற்சங்களுக்குத் தடை, அதிக வேலை நேரம், வேலைப் பறிப்பு, தொடர் கண்காணிப்பு, விதிமீறல்களுக்கு தண்டனை, பல நோய்களின் உருவாக்கம், வயது முதிர்ந்த தொழிலாளிகள் நசுக்கப்படுதல் இன்னும் பிற சுரண்டல்கள் தீவிரமாயிருக்கிறது.
உலகில் நடக்கும் வர்த்தக உடன்படிக்கை அனைத்தும் தொழிலாளர்கள் சுரண்டலின் தீவிரத்தை அதிகமாக்குவதையே முனைப்பாக்குகிறது.. இலட்சக்கணக்கான வேலைகள் வளரும் நாடுகளிலிருந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் மீதான தீவிர சுரண்டல் சீனாவில் மட்டும் இல்லை; உலகம் முழுவதும் தீவிரமாயிருக்கிறது. இந்த வர்க்க சுரண்டலில் அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பா பனிப்போர் எல்லாம் இல்லை. உலக முதலாளிகள், முதலாளித்துவ வர்க்க உணர்வோடு ஓரணியில் நிற்கிறார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்நாடுகளிலிருந்து உற்பத்தி தளங்களை இடம் மாற்ற செய்யும் போது தன் நாட்டு தொழிலாளர்களை கைவிடும். அதே சமயத்தில் மற்ற நாடுகளின் தொழிலாளர்களை சுரண்டுவதில் கூட்டுச் சேர்கின்றன. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களும், சீன உற்பத்தி நிறுவனங்களும் தொழிலாளர்களை நெருக்கமான தங்கும் விடுதிகளில் உலக பெருந்தொற்று காலகட்டத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர்.
தொற்று நோய்க்காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் தன் தயாரிப்புகளை அதிகளவில் விற்று இலாபம் ஈட்டியுள்ளது. ஜனவரி 2021- மார்ச் 2021 வரையிலான காலாண்டில் மட்டும் இதன் இலாபம் இரட்டிப்பாகியுள்ளது. ( 23.6 பில்லியன் டாலர்). வருவாய் 54% உயர்ந்துள்ளது.
இது இன்று சீன தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் என்று நாம் ஒதுக்கி விட முடியாது. நாளை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இலாப வேட்கைக்காக குறைந்த கூலி பெறும் இந்தியா போன்ற நாடுகள் நோக்கி தங்கள் உற்பத்தி தளங்களை மாற்றலாம். அப்போது மோடி அரசும் கார்ப்பரேட் கூட்டுகளும் தொழிலாளர்களை சுரண்டுவதில் ஓரணியில் நிற்பார்கள்.
நாம் அவர்களை எதிர்க்க வேண்டுமானால் ஒப்பந்த தொழிலாளர்கள், அப்ரடிண்ஸ் பயிற்சியாளர்கள், மாணவப்பயிற்சியாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், என்று தனியே பிரிந்து நின்று காவி- கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க சாத்தியமில்லை. மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’! என்ற முழக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் போது தான் இந்த காவி- கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து முறியடிக்க முடியும்!
திராவிடம், சமூகநீதி போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படும் கட்சியாக தி.மு.க. தன்னைக் காட்டிக் கொண்டாலும், உண்மையில் கொள்கை கோட்பாடற்ற, கவர்ச்சிவாதத்தை முன்வைக்கின்ற கட்சியாவே இருக்கிறது என்றும், ஆவின் பால் விலைக்குறைப்பு, பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் கூட மக்கள் நலத் திட்டங்களைப் போலத் தோன்றினாலும் அவை ‘‘கவர்ச்சிவாத திட்டங்களே’’ என்றும் சென்ற புதிய ஜனநாயகத்தில் எழுதியிருந்தோம்.
அதைப் படித்துவிட்டு, சில வாசகத் தோழர்கள் தி.மு.க.வின் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’ குறித்து விளக்கி விரிவாக எழுதுமாறு கோரியிருந்தார்கள். அவர்களது கோரிக்கைக்காக மட்டுமல்லாமல், தி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான நடவடிக்கைகளும் அக்கட்சி தொடர்ச்சியாக அறிவித்துவரும் கவர்ச்சிவாதத் திட்டங்களும் சமூகநீதி வாய்சவாடல்களும் மக்களிடையே ஒருவித ‘‘மயக்க நிலை’’யைத் தோற்றுவித்திருக்கும் இத்தருணத்தில் உண்மை நிலையை புரியவைக்கும் நோக்கத்திலும் இத்தலைப்பிலான கட்டுரையை எழுதுகிறோம்.
– புதிய ஜனநாயகம்
கவர்ச்சிவாத அரசியல் : முதலாளித்துவ ஜனநாயகத்தின் இழிந்த இறுதிநிலை
முதலாளித்துவ ஜனநாயகத்தின் (தேர்தல் அரசியலின்) இழிந்த, இறுதிநிலை வடிவமே கவர்ச்சிவாத அரசியல். திராவிடம், தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், தலித்தியம், கம்யூனிசம் என தங்களுடைய அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தி, அதை பரந்துபட்ட மக்களிடம் பிரச்சாரம் செய்து அணிகளை − அமைப்புகளை கட்டுவது, இதன் மூலம் கிடைக்கும் மக்கள் ஆதரவிலிருந்து தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெறுவது என்ற முறைகளெல்லாம் எப்போதோ கேலிக்கூத்தாக்கப்பட்டு விட்டது.
பிற்போக்கு சித்தாந்தங்களை வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும்போது, பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், சுவைகளுக்கு ஏற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துவதே கவர்ச்சிவாதமாகும்.
சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிகமிக மோசமான கருத்துகளுக்கு ஏற்ப கவர்ச்சிவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது, கவர்ச்சிவாத ஒளிவெள்ளத்தில் மக்களின் கண்களைக் குருடாக்குவது, பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சியாக இருந்தாலும் சத்துணவு, சைக்கிள், மிக்சி, கிரைண்டர், சேலை, தண்ணீர் குடம் முதலான இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக பிரமையை உருவாக்குவது, போராடும் மக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்குவது என்பதே கவர்ச்சிவாத அரசியலாகும்.
நிலவுகின்ற அரசியல் கட்டமைப்புக்குள் தங்களது கொள்கைகளை நிறைவேற்ற முடியாமல் அம்பலப்பட்டு போய் பிழைப்புவாதத்தில் வீழ்ந்துவிட்ட அரசியல் கட்சிகள், கொள்கை − கோட்பாடுகள் என்ற ‘சுமைகளை’யெல்லாம் தூக்கியெறிந்து விட்டனர். பிற கட்சிகளிலிருந்து தங்களை தனித்துக் காட்டிக் கொள்ளவதற்கான ‘‘அடையாள அட்டை’’யாகவே கொள்கைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் ஆதரவைப் பெற்று தொடர்ந்து தங்கள் பிழைப்புவாதத்தை நடத்த அவர்கள் தேர்ந்தெடுத்த அஸ்திரம்தான் ‘‘கவர்ச்சிவாதம்’’, இதையே ஒரு ’அரசியலாக’ (தேர்தல் அரசியல்) செய்வதுதான் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’. சுருக்கமாக சொன்னால் பிழைப்புவாதம் என்னும் பித்தளை நாணயத்தை மினுமினுக்கச் செய்யும் தங்கமுலாம்தான் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’.
தங்கள் அரசியல் கொள்கைகளுக்கு பதிலாக தனிநபரை முன்னிறுத்தி ‘புரட்சித் தலைவர்களையும் தலைவிகளையும் தளபதிகளையும்’ உருவாக்குவது; ‘தலைவர்’ புகழ்பாடுவதையே கட்சித் தொண்டர்களின் ’கொள்கைப் விளக்கப் பிரச்சாரமா’க மாற்றுவது; விரிவாகவும் வீச்சாகவும் ஊடகங்களின் மூலம் துதிப் பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்றவை இக்கவர்ச்சிவாத அரசியலின் முக்கியமான கூறுகளாகும்.
இப்படி கட்டியமைக்கப்படும் தலைவர்களின் இமேஜை ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டுசேர்ப்பதற்காகவே தோன்றும் குட்டித் தலைவர்கள்தான் ‘‘ரத்தத்தின் ரத்தங்கள்’’, ‘‘உடன்பிறப்புகள்’’ ஆகிய கட்சிகளின் தூண்கள். இக்கவர்ச்சிவாத அரசியலின் மூலம்தான் உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் புரட்சிகர அமைப்புகளையும் ஒடுக்கி தமிழகத்தில் போலீசு ராஜ்ஜியத்தை நிறுவிய பாசிஸ்ட்டுகளான எம்.ஜி.ஆர். ‘‘பொன்மனச் செம்மலானதும்’’ ஜெயா ‘‘இதய தெய்வம் அம்மா’’−வாக ஆனதும் நடந்தது.
பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயங்கும், தரகு வேலை செய்யும் அரசியல் அமைப்புகளேயே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம். மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை பிழைப்புவாதத்தையே தொழிலாகக் கொண்ட கட்சி அமைப்புகள், தரகு வேலையை ஒரு தொழிலாக, அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்வது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, தேர்தல் காலங்களில் ஆள் பிடிப்பது, மற்ற காலங்களில் நலத் திட்டங்களில் அதிகாரிகளுடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளையடிப்பது என்கிற அமைப்பு முறையைக் கொண்டுள்ளதாக பிழைப்புவாதம் வேரூன்றியுள்ளது.
தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணம், ஆண்களுக்கு விநியோகிக்கப்படும் குவாட்டர் – கோழி பிரியாணி, இல்லத்தரசிகளுக்கு வீடு தேடி வரும் குத்துவிளக்கு, புடவைகள் உள்ளிட்ட ‘அன்பளிப்புகள்’ மற்றும் பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகளையும், குறிப்பாக, பெரும்பான்மையாக உள்ள அடித்தட்டு மக்களைக் கவர்வதற்காக அறிவிக்கப்படும் ‘கலைஞர்’ தொலைக்காட்சிப் பெட்டி, மிதிவண்டி, அம்மா மிக்ஸி−கிரைண்டர், லேப்டாப், ஆடு−மாடு திட்டம், பொங்கல் பரிசு போன்ற அற்பமான இலவசக் (விலையில்லா) கவர்ச்சித் திட்டங்கள் எல்லாம் பிழைப்புவாதிகளின் கவர்ச்சிவாத அரசியலில் தோன்றிய கலாச்சாரங்கள்தான்.
கார்ப்பரேட் சூறையாடலுக்கு அழைப்பு : “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” – விழா.
இத்திட்டங்கள் எதுவும் மக்களுடைய வாழ்வாதாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவந்ததில்லை. மாறாக, இத்திட்டங்களை முன்னிறுத்தி ‘‘பொற்கால ஆட்சி’’ நடப்பதாக பிரச்சாரங்களை செய்துகொண்டு மறைமுகமாக ஆளும் வர்க்கத்திடமும் அதிகார வர்க்கத்திடமும் கூட்டுவைத்துக் கொள்ளையடிப்பதற்குத்தான் இவை துணை புரிந்திருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் தி.மு.க. எந்த வகையிலும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால், தமிழகத்திலேயே இக்கவர்ச்சிவாத அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்குத்தான் உண்டு. ஆனால், அதை சிறிதும் ’கொள்கைக் கலப்பட’மில்லாமல் தூய்மையாக வளர்த்தெடுத்த பெருமை எம்.ஜி.ஆருக்கும் ஜெயாவுக்கும் உண்டு. இவர்களுக்கு பின்னர் வந்த மு.க.ஸ்டாலினோ கவர்ச்சிவாத அரசியலையே கார்ப்பரேட் பாணியில் திறம்பட மேற்கொள்கிறார்.
கார்ப்பரேட் பாணி கவர்ச்சிவாத அரசியலின் தோற்றம்
நம் நாட்டில் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’ என்பது இன்று நவீன தொழில் நுட்பங்களுடன் இணைந்து வீரியமான வடிவத்தை எடுத்துள்ளது. 1990−களில் தகவல் − தொழில்நுட்ப புரட்சி தோற்றுவித்த இணைய வசதியின் நீட்சியாக டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்−அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஆகியன உலக மக்களிடையே பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனோடு ‘‘தரவுப் பகுப்பாய்வு’’ (data analysis) எனும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது. நமது சமூக ஊடக செயல்பாடுகளையும் இணைய உலாவலையும் தரவுகளாக (datas) சேகரித்து வைத்து, அதிலிருந்து நமது சொந்த விருப்பு−வெறுப்புகள், எண்ணங்கள் போன்றவைகளையும் கூட அறிந்துகொள்ள முடியும் என்ற நிலைக்கு இது இட்டுச் சென்றுள்ளது.
இதே காலத்தில் இத்தகவல் பகுப்பாய்வைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளையும் அரசியல் விருப்பங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நேர்த்தியான வியூகங்களையும் கொள்கைகளையும் அரசியல் கட்சிகளுக்கு வகுத்துக் கொடுப்பதற்கென்றே தேர்தல் வியூக நிறுவனங்கள் பல தோன்றின. முதன் முதலில் இத்தகைய தேர்தல் வியூக நிறுவனங்கள் தோன்றியதும் தேர்தல் வெற்றிகளில் தாக்கம் செலுத்தியதும் அமெரிக்காவில்தான். படிப்படியாக இந்த முறை ஐரோப்பிய நாடுகளிலும் மற்ற நாடுகளிலும் அறிமுகத்துக்கு வந்தது.
இதேபோல, இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய நிறுவனம்தான் நமக்கெல்லாம் அறிமுகமான பிரஷாந்த் கிஷோரின் ஐ−பேக் (i−pac) நிறுவனம். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறி பாசிஸ்டான மோடியை ’வளர்ச்சியின் நாயகனாக’ உருமாற்றம் செய்து ‘‘மோடி அலையை’’ உருவாக்கியது பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான குழுதான். அந்த அளவிற்கு நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திய அதன் பிரச்சார உத்திகள் இருந்தன. 2015−ல் பீகாரில் நிதிஷ் குமாருக்காகவும், 2017−இல் பஞ்சாபில் அமரீந்தர் சிங்குக்காகவும், 2019−ல் ஆந்திராவில் ஜெகன்மோகன், மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரேவுக்காகவும் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்து வெற்றியடைச் செய்தது ஐ−பேக் நிறுவனம்.
மு.க.ஸ்டாலினின் கார்ப்பரேட் பாணி கவர்ச்சிவாத அரசியல்
நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் தி.மு.க.வுக்காகவும் மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்காகவும் ஐ−பேக் நிறுவனம் வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறந்த தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கும் பெரும்பான்மை இடங்களில் வென்றதற்கும் தமிழகத்தின் பா.ஜ.க. எதிர்ப்பு அலையோடு ஐ−பேக் நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட பங்கு உள்ளது. அவர்கள் வகுத்துக் கொடுத்த உத்திகள் தமிழக மக்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருந்தன.
ஐ−பேக் நிறுவனம் தி.மு.க.விற்கு செய்த சிறப்பு என்னவென்றால், தமிழகத்தின் அரசியல் சூழலுக்கு பொருத்தமாக தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார உத்திகளை வடிவமைத்துக் கொடுத்ததுதான். தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரிவு மக்களின் தேவைகள், விருப்பங்கள் மற்றும் அவர்களின் அரசியல் கருத்துகளை தரவுப் பகுப்பாய்வு (data analysis) செய்து மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டதுதான் தி.மு.க.வின் பிரச்சாரங்களும் தேர்தல் அறிக்கையும்.
தொடர்ச்சியாக மக்கள் விரோத காவி− கார்ப்பரேட் பாசிசத் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் மீதும், அதற்கு அடிமைச் சேவகம் புரிந்த அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியின் மீதும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பையும் ஆத்திரத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணமும், பா.ஜ.க.−அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராகவும் மாற்றாகவும் விளங்குவது தி.மு.க.வும் மு.க.ஸ்டாலினும்தான் என்றும் வீரியமான கார்ப்பரேட் பாணி பிரச்சாரங்களை மேற்கொண்டது தி.மு.க.
மு.க.ஸ்டாலின் தனது உரைகளிலெல்லாம் நீட், புதிய கல்விக் கொள்கை, எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை, ஸ்டெர்லைட் படுகொலை, ஏழுபேர் விடுதலை போன்ற பிரச்சனைகளைத் தவறாமல் பேசியது, இணைய வழியில் ‘‘ஆதிக்கவாதிகளும் வேண்டாம், அடிமைகளும் வேண்டாம்’’ என்ற பெயரில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், பாசிச ஹிட்லராக மோடியும் அவரை வீழ்த்தும் ஜோசப் ஸ்டாலினாக மு.க.ஸ்டாலினும் இருப்பது போன்ற கருத்துப் படங்கள் எல்லாம் மக்கள் மனவோட்டத்திற்கேற்ப தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள்.
மேலும் ‘‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து கிராமசபைகள் தோறும் மக்கள் கூட்டங்களை நடத்தியது; அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றப் பத்திரிக்கையை தயாரித்து கவர்னரிடம் வழங்கியது; ‘‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’’ என்ற பெயரில் தமிழகத்தின் மூலைமுடுக்குகள் எங்கும் பொதுக்கூட்டங்களை நடத்தியது; அதில் ஸ்டாலினது பேச்சுக்களை மக்களிடம் திரையிட்டுக் காட்டியது − போன்றவைகளெல்லாம் கார்ப்பரேட் பாணியில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களாகும்.
2014−ல் மோடி பிரதமர் வேட்பாளராக நின்றபோது தேநீர் கடையில் தேநீர் குடித்துக்கொண்டே மக்களுடன் உரையாடுவது போன்று நடத்திய நிகழ்ச்சியான ‘‘சாய் பே சர்ச்சா’’ என்ற நிகழ்ச்சி; 2017−இல் பஞ்சாபில் அம்ரீந்தர் சிங் முதல்வர் வேட்பாளராக நின்றபோது காஃபி குடித்துக் கொண்டே மாணவர்களுடன் அரசியல் உரையாடுவது போல அமைக்கப்பட்ட ‘‘காஃபி வித் கேப்டன்’’ என்ற நிகழ்ச்சி; 2019−ல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் வேட்பாளராக நின்றபோது அவர் மேற்கொண்ட மாநிலத்தில் 3,648 கிலோமீட்டர் பயணம் செய்து 2 கோடி மக்களை சந்தித்த ‘‘பாத யாத்திரை’’ என்ற நிகழ்ச்சி − போன்றவைகளெல்லாம் தேர்தல் வியூக நிறுவனங்களால் வகுக்கத்து கொடுக்கப்பட்ட கார்ப்பரேட் பாணி பிரச்சாரங்களே.
‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதியிலுமுள்ள மக்களின் கோரிக்கைகளையும் சேகரித்து, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றுவதாக தி.மு.க. கொடுத்த வாக்குறுதியெல்லாம் புத்தம் புதிய விஷயங்கள் அல்ல; அச்சு பிசகாமால் 2017 பஞ்சாப் தேர்தலில் ‘‘ஹல்கே விச் கேப்டன்’’ (சட்டமன்றத்தில் கேப்டன்) என்ற பெயரில் மேற்கொண்ட பிரச்சார வடிவம் தான். இன்னும் கூட பல சான்றுகளை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
விரிவான மக்கள் பகுதியை தன்னை நோக்கி ஈர்ப்பதற்காகவும் முன்னிறுத்தப்படும் வேட்பாளரின் மீது ஒரு கவர்ச்சியைத் தோற்றுவிப்பதற்காகவும் தேர்தல் வியூக வகுப்பாளர்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 68 வயதான மு.க.ஸ்டாலினை வயதானாலும் இளமை குன்றா நாயகன் போல முடியையும் முகத்தையும் அழகுபடுத்தியதற்கும் அதுதான் காரணம்.
எதிர்ப்புகளை நீர்த்துப்போகச் செய்து நிறுவனமயமாக்க முயற்சிக்கும் தி.மு.க :
தேர்தலுக்கு பின்னர், தான் உருவாக்கி வைத்துள்ள கவர்ச்சியான பிம்பங்கள் உடைந்துவிடாமல் மிகவும் கவனமாக தி.மு.க. பராமரிக்கிறது. தன் மீதான எதிர்கருத்துக்கள் அனைத்தையும் மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறது; அதை சரிகட்ட முனைகிறது. சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவு மக்களையும் தனது ஆதரவு சக்திகளாக மாற்றத் தொடர்ந்து முனைந்து வருகிறது. இந்த விசயங்களையெல்லாம் செய்வதற்காக, தனக்கு பின்னணியில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பப் பிரிவையே வைத்துள்ளது.
இந்துசமய அறநிலையத்துறை மூலம் கோயில் நிலங்களை மீட்பது என்ற நடவடிக்கையை மிகப் பெரிய விளம்பரத்தோடு செய்து வருகிறது தி.மு.க., பழைய − பராமரிப்பில்லாத கோயில்களைப் புனரமைப்பதற்காக பலகோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கியிருக்கிறது. சரிவர பூசைகள் நடக்காத கோயில்களில் ஆறுகால பூசைகள் நடப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்கிறது.
சமீபத்தில் அனைத்துக் கோயில்களிலும் பக்தர்களுக்கு ‘‘இலவச மொட்டை’’ திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது. சுருக்கமாக சொன்னால், தமிழகத்தில் ஒரு நவீன பக்தி இயக்கத்தை ‘‘பெரியாரின் வாரிசுகள்’’ என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க. தொடங்கி வைத்திருக்கிறது, இவையெல்லாம் எதற்காக? தி.மு.க.வை இந்து விரோத சக்தியாக காட்டும் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க. கும்பலுக்கு தானும் ‘‘இந்துக்களின் காவலன்’’தான் என்று காட்டும் வேலையே தவிர வேறல்ல.
இப்பேர்பட்ட தி.மு.க.தான் ‘‘சமூகநீதி, திராவிட பாரம்பரியம்’’ கொண்ட கட்சி என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இந்த அடிப்படையில் தன்னை ஆதரித்த சக்திகளின் நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக சில விசயங்களை செய்துவருகிறது. அதில் ஒன்றாக, பெரியாரின் பிறந்த நாளை ‘‘சமூகநீதி நாளா’’க அறிவித்திருக்கிறது. மேலும் வ.உ.சி., கட்டபொம்மன், அயோத்திதாசர் ஆகியோருக்கு சிலை வைப்பது உள்ளிட்ட திட்டங்களையும் அறிவித்துள்ளது,
இந்தத் தலைவர்களை முன்னிறுத்தி சாதி அரசியல் செய்யும் பிழைப்புவாத சாதிச் சங்கங்களையும் அதன் கீழுள்ள மக்களையும் அணிதிரட்டும் முயற்சியாகவும் கூட இதை பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அமைச்சரவையில் ‘‘எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுத்து கவுரவித்த முதல்வருக்கு நன்றி’’ என்று பல்வேறு சாதிச் சங்கங்கள் சுவரொட்டி ஒட்டியதும், தி.மு.க.வின் வெற்றியைத் தொடர்ந்து சாதிச் சங்கங்கள் நடத்தும் பாராட்டு விழாக்களில் தி.மு.க.வினர் வெளிப்படையாக கலந்துகொண்டு தங்கள் சாதியை முன்னிறுத்திக் கொண்டதெல்லாம் நாம் கண்ட காட்சிகள்தானே!
எதிர்கட்சியாக இருந்தபோது வன்னியர்களுக்கு கொடுத்த 10 சதவிகித இடஒதுக்கீட்டினை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் அறிவித்தது தவறு என கருத்து தெரிவித்ததுவிட்டு, ஆட்சியைப் பிடித்த பின்பு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அனுமதித்தது தி.மு.க. மேலும் 1987−ல் வன்னியர்கள் தங்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு கோரிய போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 21 பேருக்கு மணிமண்டபமும் அவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலையும் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற அறிவிப்புகளின் மூலம் அந்த பகுதியிலுள்ள ஆதிக்க சாதிகளிடம் தன்னுடைய ஆதரவு தளத்தை தி.மு.க. விரிவுபடுத்த முயற்சிக்கிறது. வாய்கிழியப் பேசும் ‘சமூகநீதி அரசியலின்’ யோக்கியதை இதுதான்.
அடிப்படைக் கோரிக்கையை மூடிமறைக்கும் கவர்ச்சிவாத அரசியல் :
அ.இ.அ.தி.மு.க.வும் தற்போது தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்த கடந்த 38 வருடங்களில் எந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளோ மிக மிக அடிப்படையான சமூக வசதிகளோ இன்றி முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கை அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் 115 முகாம்களில் 70,000 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 34,135 இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் முகாமில் இல்லாத அகதிகளாகத் தங்கியுள்ளனர்.
சாதிய அரசியலும் கவர்ச்சிவாத அரசியலும் கலந்த கலவை தி.மு.க.
சில அகதிகள், விடுதலைப் புலிகளுடனான உறவு தொடர்பாக இந்திய அரசாங்கத்தால் சந்தேகிக்கப்பட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருச்சி உட்பட பல இடங்களில் தனி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த ‘சிறப்பு முகாம்கள்’ உண்மையில், சிறைச்சாலைகளைப் போன்றது. அவர்களுக்கு வெளியில் சென்றுவர உரிமை இல்லை. இந்த முகாம்கள் மாவட்ட நகரங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீசு மற்றும் தமிழ்நாடு கியூ பிரிவு உளவு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. முகாமில் உள்ள உறவினர்களைப் பார்க்க வருவோர் போலீசு மற்றும் உளவுத்துறையால் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
2009−ல் இலங்கை அகதிகளால் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் மேல்விசாரணை 2021 ஆகஸ்டில் நடக்கையில், மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என வகைப்படுத்தியது. இது, இலங்கை அகதிகள் மத்தியில் இருந்துவந்த நீண்டகால எதிர்பார்ப்பை தகர்த்ததோடு, தொடர்ச்சியான போராட்டங்களையும் தூண்டிவிட்டுள்ளது.
திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை விடுவிக்கவும், தங்கள் குடும்பத்துடன் வாழவும் அனுமதி கோரி பல்வேறு உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், ‘சிறப்பு முகாமில்’ உண்ணாவிரதம் தொடர்பாக 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தூக்க மாத்திரைகளை உட்கொண்ட, தூக்கில் தொங்க அல்லது வயிற்றை கிழிக்க முயன்ற 16 பேரின் கூட்டு தற்கொலை முயற்சி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், ‘‘இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்’’ என்பதை இனி ‘‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’’ என அழைக்க வேண்டும் என ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், அதிகாரிகள், ஈழத்தமிழின ஆதரவு அமைப்புகள் ஆகியோரின் பாராட்டுக்களையும் பெற்றது. ‘‘ஈழத் தமிழர் படுகொலைக்கு காரணம் தி.மு.க.’’, ‘‘தமிழினத்தின் துரோகி தி.மு.க.’’ என்று சீமான் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் தி.மு.க. மீது தொடுக்கும் உணர்ச்சிகர போர்களை தவிடுபொடியாக்கி அவர்கள் வாயை அடைப்பதற்காகவே இலங்கைத் தமிழர்களின் நலத்திட்டங்களுக்காக 317 கோடியே 40 லட்சம் ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது தி.மு.க. அரசு. ஆனால், எந்த இடத்திலும் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை கோரிக்கையான இரட்டை வாக்குரிமை குறித்து வாய்திறக்கவில்லை!
மன்னர்கள் வாழ்க, பொற்கிழிகள் வாழ்க, பொற்கால ஆட்சி வாழ்க !
தமிழகத்தில் ஒரு ‘‘பொற்காலத்தை’’ உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ‘மன்னர்’ மு.க.ஸ்டாலின், தன் அரசை புகழ்ந்து பாடி பரிசில் பெறும் புலவர்களையும் உருவாக்கி வருகிறார். சாகித்ய அகாடாமி, ஞானபீட விருது மற்றும் மத்திய − மாநில அரசுகளால் மிக உயர்ந்த விருதுகள் பெரும் தமிழ் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு சார்பில், அவர்கள் விரும்பும் இடத்தில் ‘‘கனவு இல்லம்’’ கட்டித் தருதல்; தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு ஆண்டுக்கு மூன்று பேருக்கு ஐந்து இலட்ச ரூபாய் ரொக்கப் பணத்துடன் கூடிய ‘‘இலக்கிய மாமணி’’ விருது; தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘‘தகைசால் தமிழர்’’ என்ற புதிய விருது போன்ற அடுக்கடுக்கான அறிவிப்புகளின் மூலம் பொற்கிழிகளை தி.மு.க. அரசு தயாராக வைத்துள்ளது.
தேர்தல் வியூக வகுத்துக் கொடுத்த ஐ-பேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோருடன் (இடது) மு.க.ஸ்டாலின் மற்றும் சபரீசன்.
திரை உலகினருக்குப் பொதுவாக சலுகைகள் வழங்கியது மட்டுமல்ல, சில திரை உலக பிரபலங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளையும் தீர்த்துக் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதனால், விஜய்சேதுபதி, வடிவேலு, சத்தியராஜ், விஷால், பாக்கியராஜ் போன்ற திரை பிரபலங்கள் தி.மு.க. ஆட்சியையும் முதல்வர் ஸ்டாலினையும் பாராட்டி வருகின்றனர்.
சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்கள், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் முதல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி என ஒவ்வொருவரைப் பற்றியும் மணிக்கணக்கில் வரிசையாக வானளாவ புகழ்ந்து துதிபாடுவதை அமைதியாக ரசித்துவிட்டு, உரை முடிந்த பின்னர், ‘‘தனிப்பட்ட புகழ்ச்சிகளை செய்ய வேண்டாம்’’ என ‘பெருந்தன்மை’யாக ‘மறுத்தார்’ முதல்வர் ஸ்டாலின். கவர்ச்சிவாத துதிபாடும் அரசியலின் எடுப்பான சான்றுதான் இந்நிகழ்வுகள்.
தி.மு.க.வின் ஐ.டி. பிரிவு மற்றும் தினகரன், தமிழ் முரசு, குங்குமம் போன்ற தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் மட்டுமல்லாது தினமணி, தமிழ் இந்து உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகளும் தி.மு.க. அரசின் ஒவ்வொரு அறிவிப்புகளையும் புகழ்ந்து விளம்பரம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பாட நூல்களில் பதிப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரின் படங்களை அகற்றாமல் அப்படியே வினியோகிக்கலாம், இதன் மூலம் அரசு நிதி 13 கோடியை மிச்சப்படுத்தலாம் என மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த அறிவிப்பு பெரிய அளவில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க.வினரைப் போல ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் மக்களிடையே இழிசொற்களைத் தான் சம்பாதிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்த தி.மு.க. ‘‘விளம்பரம் வேண்டாம்’’ என்பதையே மிகப்பெரிய விளம்பரமாக்கிவிட்டது.
அரசின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்ததைப் போல நின்றுகொண்டே கடைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு நாற்காலி கொடுக்க வேண்டும் என்று மசோதா நிறைவேற்றி அவர்களின் ‘நெஞ்சை’த் தொட்டுவிட்டார் ஸ்டாலின். ஆனால், ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் தங்களது வேலைகள் பறிக்கப்பட்டதையும் காண்டிராக்ட் மயமாக்கப்பட்டதையும் கண்டித்துப் போராடும்போது, அதைக் கண்டுகொள்ள மறுக்கிறது, போலீசை வைத்து மிரட்டுகிறது, தி.மு.க. அரசு.
எச்சரிக்கை!
நீட், வேளாண் திருத்தச் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க. அரசு. இந்த காகித நடவடிக்கைகள் தான் கவர்ச்சி அரசியலின் உச்சபட்சவரம்பு. இதற்கு மேல் திமுக−வால் செல்ல இயலாது. இக்காகிதங்கள் காவி −கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்களிலிருந்து நம்மை எந்தவகையிலும் காப்பாற்றப் போவதில்லை.
’சட்டப்போராட்டங்களின்’ மூலம் நீட் தேர்வை தடுக்க முடியவில்லை என்ற அனுபவம் இருந்தபோதும், ‘‘அடுத்த ஆண்டிற்குள் சாதித்துக் காட்டுவோம்’’, ‘‘சட்டப் போராட்டம் தொடரும்’’ என்று தோற்றுப்போன பாதையையே மாற்றாக காட்டுகிறது தி.மு.க. அதைத் தாண்டி மோடி அரசை நிர்பந்திக்கும் வகையிலான எந்த களப் போராட்டங்களையும் தி.மு.க. மேற்கொள்ளத் தயாரில்லை. உண்மையில், அத்தகைய போராட்டங்களை தடுக்கும் வேலையைத்தான் தி.மு.க. செய்து வருகிறது.
தி.மு.க. அரசின் செயல்பாடுகளை இவ்வாறு விமர்சனப் பூர்வமாக பார்க்கும் போதுதான், நீட், புதிய கல்விக் கொள்கை, ஏழு தமிழர் விடுதலை, ஜி.எஸ்.டி. வரி நிலுவை, பெட்ரோல் − டீசல் − காஸ் விலையுயர்வு போன்ற பிரச்சினைகளுக்காகவும், மோடி அரசின் காவி − கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தி.மு.க.வின் வெற்று சவடால் ‘சட்டப் போராட்டங்களை’ நம்பி இருக்காமல் மக்கள்திரள் போராட்டங்களின் மூலம் வென்றுகாட்டும் துணிவு பிறக்கும்.
கவர்ச்சிவாத அரசியலுக்கு ஒரு எல்லை உண்டு. மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காமல் மேற்கொள்ளப்படும் மேற்கண்ட கவர்ச்சிவாத நடவடிக்கைகள் விரைவில் அம்பலப்பட்டு போவதை தி.மு.க.வால் தடுக்க இயலாது. இப்போது தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்து வருகின்ற கூட்டணி கட்சிகளும், பார்ப்பன ஊடகங்களும் ஒருசேர தி.மு.க.விற்கு எதிராகத் திரும்பி, ‘குடும்ப அரசியல்’, ‘ஊழல் ஆட்சி’, ‘துதிபாடிகளின் கட்சி’ என்று தூற்றும் நாள் வெகுவிரைவில் வந்துசேரும்.
அப்போது, மோடி அரசின் காவி − கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தமிழக மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களையும் 2021−இல் தி.மு.க. ஆட்சி அமைவதற்கு முன்பு நாம் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, பாசிச பா.ஜ.க. கூட்டணி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் காரிருளும் சூழ்ந்திருக்கும். எச்சரிக்கை!
இன்று மனிதன் சூரியனைச் சுற்றிவரும் கிரகத்தைச் சிருஷ்டித்திருக்கிறான். அணுவைப் பிளந்து அதன் ஆற்றலைப் பயன்படுத்துகிறான். ஜீவ அணுக்களை உருவாக்கும் முயற்சியில் முன்னேறி வருகிறான். உலகம் தோன்றிய காலத்திலிருந்து பாலைவனமாகக் கிடந்த நிலங்களை வளம் கொழிக்கும் விளைநிலங்களாக மாற்றியிருக்கிறான். பூமியைக் குடைந்து அதனடியில் ஒளிந்து கிடக்கும் அபூர்வமான உலோகங்களை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துகிறான். கண்ணுக்குத் தெரியாத சிற்றுயிர்களின் வாழ்க்கையைத் துணைக் கருவிகளின் மூலம் அறிந்து அவற்றின் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்திருக்கிறான். தரையைக் கடலாக்குகிறான்; கடலைத் தரையாக்குகிறான். ஒரு திசையில் வரும் பேராறுகளைத் தனக்கு வேண்டிய திசையில் திருப்புகிறான். வானவெளியில் பிறக்கும் கதிர்களைப் பூமியில் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்துகிறான். இருநூறு ஆண்டுகளுக்கு முன் நடக்க முடியாது எனக் கருதப்பட்ட பல ஆயிரம் அதிசயங்களை மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான்.
இவை எவ்வாறு சாத்தியமாயின? புராதன மனிதன் இயற்கையின் பேராற்றலை, வெள்ளத்திலும் மின்னலிலும் எரிமலையிலும் கடல் கொந்தளிப்பிலும் தொத்து நோய்களிலும் சூறைக்காற்றிலும் கண்டான். இயற்கை ஆற்றல்களின் அழிக்கும் தன்மையைக் கண்டு நடுங்கினான். இயற்கை அளித்த கிழங்கையும், கனியையும் மீனையும் விலங்குகளையும் உண்டு இயற்கையாக அமைந்த குகைகளிலே வாழ்ந்தான்.
காட்டுத் தீயைக் கண்டான்; நடுநடுங்கினான். மனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகளுக்குப்பின் தீயைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான். முதன் முதலில் கண்டதை எல்லாம் அழிக்கும் தீயை மூன்று கற்களிடையே சிறைப்படுத்தி மாமிசத்தை சமைக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் இயற்கைச் சக்திகளில் ஒன்றைக் கட்டுப்படுத்தினான். முதலில் தனது செயல் மூலம் இயற்கையின் ஒரு சக்தியை வசமாக்கினான். அச்செயல் தீயின் இயல்பு குறித்துச் சிந்தனையைத் தோற்றுவித்தது. சிந்தனையின் மூலம் தீயைப் பயன்படுத்திப் பலவகை மண்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தான். இச்செயல் மேலும் சிந்தனையை வளர்த்தது. இதன் மூலம் உலோகங்களைப் பற்றி ஆராய்ந்தான். உலோகங்களின் தன்மைகளை, தன் வாழ்வுக்குப் பயன்படுத்தினான். இச்சிந்தனை முதலில் நடைமுறை உபயோகங்களுக்கு மட்டும் பயன்படும் கருவியாக இருந்தது. பின்னர் உலகின் இயற்கையை, தன்மையை, மாறுபாடுகளின் இயல்பை ஆராய்ந்து அறியும் விஞ்ஞானமாக மாறிற்று.
மேலே சுட்டிக் காட்டியது மனிதன் இயற்கையின் ஆற்றலை அறிந்து பயன்படுத்திய ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் ஒரு உதாரணம் மட்டுமே. செயலின் மூலம் சிந்தனை வளர்ந்து, சிந்தனையின் மூலம் மனிதன் மேலும் திறமையான முறையில் செயல் புரிந்து, இயற்கையின் பல்வேறு மாறுபாடுகளின் தன்மைகளை உணர்ந்து அவற்றை வகைப்படுத்தியிருக்கிறான். அவைதான் விஞ்ஞானத்தின் பல்வேறு கிளைகள். இக்கிளைகள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கைக்குப் பயன்படுகின்றன. அவற்றைத் திறமையாகப் பயன்படுத்தத் தனித்தனியான விஞ்ஞானக் கிளைகள் உள்ளன.
உதாரணமாக, பூமியைக் குடைந்து நமக்குத் தேவையான பெட்ரோலியம், நிலக்கரி, இரும்பு, தங்கம், ஈயம் முதலியவற்றை வெளிக் கொண்டுவருவதற்கு முன், அவை எங்கே காணப்படும் என்று தெரிய வேண்டும். அதைத் தெரிந்து கொள்ள இந்தக் கனியங்களும், அவற்றின் மூலப் பொருள்களும். எப்பொருள்களோடு சேர்ந்து கிடைக்கும் என்று தெரிய வேண்டும். முன்கூட்டி இந்த அறிவு நமக்கு இல்லாவிட்டால் கண்ட கண்ட இடங்களில் வீண் செலவு செய்து, பயன் காண முடியாது போகும்.
ஆகவே சுரங்கம் தோண்டி, பயனுள்ள பொருள்களைப் பெற, பொருள்களின் தன்மையை ஆராயும் ரசாயனம், அழுத்தத்தின் தன்மையை ஆராயும் பௌதீகம், பூமியின் உள்ளமைப்பை ஆராயும் தரையியல் (geology), பூமியினுள்ளிருக்கும் பொருள்களில் ஏற்படும் மாறுதல்களை ஆராயும் தரையியல் இரசாயனம் (geochemistry) ஆகிய விஞ்ஞானக் கிளைகள் அனைத்தின் உதவியும் தேவை, இவை வளர்ச்சியுற்றிராவிட்டால், ஆயிரம் இடங்களில் தோன்டித் தோல்வியுற்று, ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் தேடும் பொருள்களைக் காணலாம். ஆகவே விஞ்ஞானக் கொள்கை அல்லது சிந்தனை பயனுள்ள நடைமுறை தொழில்களை நடத்த அவசியம்.
தீயை அடுப்பினுள் கட்டுப்படுத்தியது முதல் பல்வேறு இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்த, அவற்றின் இயல்புகளைக் கண்டறிந்து மனிதன் அவற்றைப் பயன்படுத்தி வருகிறான். அதன் விளைவே, இன்று பொருள் உற்பத்தியில் காணப்படும் இயந்திரங்களும், அவற்றை இயக்கும் சக்திகளும், இன்னும் நமது சுகவாழ்விற்கும், நாகரிக வாழ்க்கைக்கும் அவசியமான லட்சக்கணக்கான பொருள்களுமாயின.
விஞ்ஞான வளர்ச்சியின் விளைவுகள் யாவது?
நாகரிகத்திற்கு அவசியமான பொருள்கள் அனைத்தையும்செய்து கொள்ளும் வழிகளை, அது சமூகத்திற்கு அளித்துள்ளது. உதாரணங்கள் : புத்தகங்கள், உடை, கட்டிடங்கள், விவசாயக் கருவிகள், உற்பத்திக் கருவிகள் இவையாவும் விஞ்ஞான வளர்ச்சியின் பயன்களே.
இவ்வாறு நடைமுறைப் பயன்களை அளித்ததல்லாமல், உலகையும், பொருள்களையும், சக்திகளையும், உலகிற்கு அப்பாலுள்ள கோளங்களைப் பற்றியும் மனிதனது அறிவை விசாலப்படுத்தியுள்ளது.
இயற்கையை ஆராய மனிதனுக்கு ஒரு முறையை அது அளித்துள்ளது. மனிதன் இயற்கையின் இயக்கத்தை அறிய இயங்கியல் முறையே சிறந்தது. அம்முறையைப் பொருள் உலகத்தை அறியப் பயன்படுத்த வேண்டுமென்பதை விளக்குகிறது.
இப்பயன்களைத் தமிழ் மக்கள் அடைய வேண்டாமா? நம்மைச் சுற்றிலுமுள்ள இயற்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? நாம் பயன்படுத்தும் பொருள்கள் வேலை செய்யும் விதங்களை அறிந்து கொள்ள வேண்டாமா? ஸ்பூட்னிக்குகள் போன்ற செயற்கைக் கிரகங்கள் எப்படி உலகைச் சுற்றி வருகின்றன என்று தெரிந்து கொள்ள முடியுமா? வியாதிகள் வராமல் நம் உடலைப் போற்றி வளர்க்கும் வழிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா? இத்தனை அறிவையும் படைத்துக் தரும் மனிதனது மூளை வேலை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? உலகையும் நம்மையும் தொடர்புபடுத்தும் அறிவு வாயில்களான ஐம்பொறிகளின் வேலை முறைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாவிட்டால் நமக்கும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோருக்கும் அறிவு நிலையில் வேறுபாடு என்ன?
இவற்றைப் பற்றி அறிந்து கொள்ளத் தமிழில் நூல்கள் உள்ளனவா? அத்தகைய நூல்களுக்கு அவசியம் இல்லையா? தற்பொழுது தமிழ் நாட்டில் ஏராளமான இளைஞர்கள் உயர் நிலைப்பள்ளிகளில் படித்து வெளியேறுகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் உயர் நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகமாகியுள்ளது. இவர்களெல்லாம் தமிழில் விஞ்ஞான அறிவு பெற முடியும். முன்பைவிட இன்று நூல் நிலையங்கள் அதிகமாகியுள்ளன. அவை விஞ்ஞான நூல்களை வாங்கிக் கிளைகளுக்கு அளிக்கின்றன.
சமீபத்தில் வெளியான விஞ்ஞான நூல்கள் நன்றாக விலை போகின்றன. பாவ்லாவ் எழுதிய விஞ்ஞானக் கட்டுரைகளில் சில, ‘உடலும் உள்ளமும்‘ என்ற தலைப்பில் தமிழில் வெளியிடப்பட்டது. ஆயிரம் பிரதிகளில் 750 பிரதிகள் ஆறுமாதத்திற்குள் விலை போயிற்று. அது போலவே உயிரைப் பற்றிய விஞ்ஞான விளக்கத்தை வெளியிடும் ஒபாரின் எழுதிய ‘உயிரின் தோற்றம்‘ என்ற நூலின் தமிழாக்கம் நன்றாக விலை போயிற்று. டார்வின் தத்துவத்தைப் பற்றியும் அணுவைப் பற்றியும் எழுதிய நூல்களும் நன்றாக விலை ஆயின.
கதைகளை விட விஞ்ஞான நூல்கள் விரைவில் விலையாகின்றன. ஆனால், தமிழ்நாட்டு மக்களின் அறிவுத் தாகத்தைத் தணிக்கும் அளவுக்கு வேகமாக விஞ்ஞான நூல்கள் வெளியாகவில்லை. பத்திரிகைகளில் கட்டுரைகளும் வெளியாவதில்லை. பத்திரிகை ஆசிரியர்களும், எழுத்தாளர்களும் இந்தத் தேவையை உணராதது இதற்கு ஒரு முக்கிய காரணம்.
விஞ்ஞானக் கட்டுரைகளில் வெளியிடவென்றே வெளிவந்த ‘கலைக் கதிர்‘ இப்பொழுது கதைகளையும், வேறுபலவகைக் கட்டுரைகளையும் வெளியிடுகிறது. விஞ்ஞானக் கட்டுரைகள் போதுமான அளவு கிடைக்காதது இதற்குக் காரணமா அல்லது முழுதும் விஞ்ஞானக் கட்டுரைகள் அடங்கிய ஒரு மாத பத்திரிகை தமிழ்நாட்டுக்கு அவசியமில்லை என்பது நிர்வாகிகள் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. முன்னது காரணமாக இருந்தால் சிறிது முயன்றால் கட்டுரைகள் கிடைக்கும். இரண்டாவது காரணமாக இருந்தால் நிர்வாகிகள் தமிழ்நாட்டு மக்களின் அறிவுத் தரத்தைக் குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
உண்மையில் தமிழ்நாட்டில், எளிய முறையில் மக்களுக்கு விஞ்ஞான உண்மைகளையும், கருத்துக்களையும் பரப்ப, பல்வேறு விதமான பத்திரிகைகள் வேண்டும். அவை ‘அணுச் சிதைவின் வரலாறு‘, ‘மூலப்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டதன் கதை‘, ‘விஞ்ஞான அதிசயங்கள்‘ ‘பயனுள்ள பொருள்களைத் தயாரிக்கும் முறைகள்‘, விஞ்ஞானிகளின் சரித்திரங்கள்‘, ‘வியாதிகள்‘, ‘உடல் கூறு அதிசயங்கள்‘, ‘தரை இயல் விஞ்ஞானம்‘, வான இயல்‘ போன்ற பல தலைப்புகளில் தொடர்ச்சியான கட்டுரைகள் தாங்கி வெளிவர வேண்டும். இலக்கியக் கலாச்சாரப் பத்திரிகைகளும், விஞ்ஞானத்துக்குச் சிறிது இடம் ஒதுக்க வேண்டும்.
சிறு வயதிலேயே விஞ்ஞான ஆர்வம் ஏற்படுத்த, அமெரிக்காவிலும், சோவியத் நாட்டிலும் பல புதிய நூல்கள் வெளியிடுகிறார்கள். முன்பு காக்காய், குரங்கு, நாய்க் கதைகளும். ‘ராஜா ராணி‘க் கதைகளும், குழந்தைகளுக்காக அச்சிடப்படும். இப்பொழுது உயிர் நூல் உண்மைகளை ஆதாரமாகக் கொண்ட கதைகளும், விஞ்ஞானப் புதுமைகளை ஆதாரமாகக் கொண்ட அழகிய படங்கள் கொண்ட நூல்களும், சிறுவர்களுக்காக அச்சிடப்படுகின்றன. அத்தகைய நூல்கள் நமக்கும் தேவை. வருங்கால சந்ததியில் விஞ்ஞானிகள் தோன்ற வேண்டுமானால் சிறு வயதில் அவர்கள் மனத்தில் விஞ்ஞான ஆர்வம் தோன்ற வேண்டும். விஞ்ஞான கற்பனைக் கதைகள் இத்தகைய ஆர்வத்தைத் தோற்றுவிக்கும். தமிழில் விஞ்ஞானக் கற்பனைக்கதைகள் (Scientific Fantasies) மிகவும் அருமையாகவே உள்ளன. குழந்தைகளுக்கெனத் தனி நூல் நிலையங்கள் நிறுவப்படும் இக்காலத்தில், இத்தன்மையான நூல்கள் வெளிவருவது மிகவும் அவசியம்.
தொழிலாளிகள் தங்கள் திறமையை உயர்த்திக் கொள்ளவும், உழவர்கள் தங்கள் தொழிலைத் திறமையாகச் செய்யவும், தங்கள் தங்கள் தொழில்களின் விஞ்ஞான அடிப்படையைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்றே சிறு சிறு நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளிவர வேண்டும். முக்கியமாகக் களைகள், பூச்சி, புழுக்கள் உரமிடுதல் போன்றவற்றைப் பற்றி எளிய தமிழில் நூல்கள் வெளிவர வேண்டும்.
மேற்கூறிய பணியை யார் மேற்கொள்வது? தமிழ் நாட்டின் பண்பாட்டை உயர்த்துவதற்கு விஞ்ஞான அறிவைப் பரப்புவது மிகவும் அவசியம். தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் ஒவ்வொரு தமிழனுடைய கடமைதான். தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கும், சென்னை அரசாங்கத்துக்கும், இந்தக் கடமையை ஆற்றுவதில் முக்கிய பொறுப்பு உண்டு.
சென்னைப் பல்கலைக்கழகம் இப்பணியை எப்படி செய்து வருகிறது என்பதைக் குறித்துச் சில வார்த்தைகள். வருஷத்துக்கு ஒரு விஞ்ஞான நூலை மொழி பெயர்க்க அவர்கள் ரூ.1000 பரிசு கொடுக்கிறார்கள். சென்ற வருஷம் பெயர் தெரியாத ஆசிரியர் ஒருவரது நூலை மொழிபெயர்க்கச் செய்து ரூ.1000 பரிசும் ஒரு மொழி பெயர்ப்பாளருக்குப் போய் சேர்ந்து விட்டது. இப்பொழுது புத்தகம் வெளியிடத் தகுதியற்றது எனக்கருதி அதை வெளியிடவில்லையாம்.
முப்பது வருஷங்களுக்கு முன் ஜேம்ஸ் ஜீன்ஸ் எழுதிய வான் நூலைத் தமிழில் வெளியிட இவ்வருஷம் மொழி பெயர்ப்பாளருக்கு விளம்பரம் செய்திருக்கிறார்கள். இந்த நூலின் கருத்துக்கள் தவறு என்று நிரூபிக்கப்பட்டவை. விநாடிக்கு விநாடி விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. வான வெளியைப் பற்றிய நம்முடைய பழைய கருத்துக்களை ‘வான் கதிர்‘ ஆராய்ச்சிகளும், ஸ்பூட்னிக்குகளும், செயற்கைக் கிரகங்களும் புரட்சிகரமாக மாற்றிவிட்டன. ஜேம்ஸ் ஜீன்ஸின் கருத்துக்கள், பழங்கதையாகி விட்டதன் பின்னர் அதனை மொழிபெயர்க்கத் தோன்றியிருக்கிறது நமது பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு! நல்ல வேளை, இன்னும் இருபது வருஷங்கள் கழித்து இந்த நூலை மொழி பெயர்க்க வேண்டும் என்று சொல்லவில்லையே, என்று மகிழ்ச்சியடைய வேண்டியதுதான்.
இந்த பணிக்கு அவர்கள் இட்டுக் கொண்டிருக்கும் பெயர் (Promotion of Scientific Knowledge in regional language) பிராந்திய மொழிகளில் விஞ்ஞான அறிவைப் பரப்புதல் என்பது ஆகும். ஒரு நூல் தமிழன் கண்ணிலயே படவில்லை; மற்றொன்று 25 வருஷங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். பிராந்திய மொழிகளில் விஞ்ஞான அறிவை நமது பல்கலைக் கழகம் பரப்பும் விதம் இதுதான்.
சென்னை அரசாங்கக் கல்வி இலாகாவில் வயது வந்தவர் கல்விக்கென்று ஓர் இலாகா இருக்கிறது. புதிதாகப் படித்தவர்களுக்குச் சில நல்ல நூல்களையும் சில மோசமான நூல்களையும் இந்த இலாகா வெளியிட்டுள்ளது. தேசிய விஸ்தரிப்புத் திட்டத்துக்கென நூல்களுக்குப் பரிசளிக்க அது ஒரு திட்டம் வகுத்திருக்கிறது. அவை யாவும் விஸ்தரிப்புத் திட்டத்திற்கான பிரசாரமே. விஞ்ஞானம் வயது வந்தவர்களுக்கு அவசியமில்லை என்பது அந்த இலாகாவின் கருத்துப்போலும்! அது எந்த விஞ்ஞான நூலை வெளியிட்டிருக்கிற தென்பது யாருக்கும் தெரியாது.
பல்கலைக் கழகங்களும், சென்னைக் கல்வி இலாகாவின் முதியோர் கல்விப் பிரிவும் உண்மையாகவே தமிழில் விஞ்ஞான அறிவைப் பரப்ப முயலவேண்டுமென ஒவ்வொரு தமிழனும் கோரவேண்டும். நூற்றுக்கணக்கான சிறு சிறு நூல்களை வெளிக்கொணர, விஞ்ஞானிகளது ஆதரவையும், விஞ்ஞான எழுத்தாளர்களின் ஆதரவையும் திரட்டப் பல்கலைக் கழகமும், கல்வி இலாகாவும் முயலவேண்டும். இப்பணியைச் செய்ய, விஞ்ஞான நூல் பதிப்பகம் ஒன்றைப் பல்கலைக் கழகமும், சென்னை அரசாங்கமும் சேர்ந்து துவக்க வேண்டும். அதில் என்ன நூல்கள் அச்சிட வேண்டும் என்பதை நிர்ணயிக்க எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மனத்தத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அரசாங்கம் நிறுவவேண்டும்.
சமீபத்தில் தமிழ்நாட்டிலுள்ள ஒரு வைத்தியக் கல்லூரியின் பேராசிரியர்கள் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் எனது கல்லூரி நண்பர்கள்; தமிழார்வம் உடையவர்கள். வைத்தியம் பற்றித் தமிழில் பத்தகம் எழுதியுள்ளார்கள். ஒவ்வொரு வியாதியைப் பற்றியும் சாதாரண மக்கள் புரிந்து கொண்டு தடுப்பு முறைகளைக் கையாளுவதற்குரிய அறிவைப் பரப்பும் வகையில் ஆண்டிற்கு ஐந்து நூல்கள் சுமார் 150 பக்கங்களில் வெளியிட ஆர்வம் கொண்டுள்ளார்கள். ஆனால் சர்க்கார் ஊழியர்களின் நடத்தை விதிகளின் படி அவர்கள் முன் அனுமதி பெறவேண்டும். எழுதிய புத்தகத்தின் மூலம் லாபம் பெறக்கூடாது. அவ்வாறே தங்களுக்கு லாபம் வேண்டாம் என்று சொல்லவும் அவர்கள் தயார். அனுமதி கேட்டாலேயே, தங்களுக்குரிய வேலைகளை விட்டு, வேறு வேலைகளில் நேரம் செலவழிக்கிறார்கள் என்று மேலதிகாரிகள் எண்ணுகிறார்களாம். இதனால் அவர்கள் அறிவும், திறமையும், தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன்பட வழியின்றிப் போகிறது.
இவ்விதிகள் தளர்த்தப்பட வேண்டும். கல்லூரி வேலைகளுக்குக் குந்தகம் இல்லாமல் தமிழில் விஞ்ஞான நூல்கள் எழுத விரும்பும் பேராசிரியர்கள், டாக்டர்கள், என்ஜீனியர்கள் முதலியோருக்குச் சர்க்கார் உற்சாகம் அளிக்க வேண்டும். நன்றாகப் படித்தவர்கள், விஞ்ஞானத்தில் உயரிய பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சர்க்கார் வேலைகளில் தான் இருக்கிறார்கள். அவர்கள் விஞ்ஞான நூல்கள் எழுதத் தடைகள் இருந்தால் அவற்றை அகற்றுவதுதானே தமிழ் மொழியில் அக்கறை கொண்ட சர்க்கார் செய்ய வேண்டிய காரியம்.
தமிழ் நாட்டுப் புத்தகம் வெளியிடுவோரும், தமிழ் மக்களின் அறிவுத் தாகத்தை மதித்து இந்தத் துறையில் சிறந்த நூல்களை வெளியிட்டு, தமிழுக்கும், தமிழகத்துக்கும் சேவை செய்வதோடு தங்களுக்கும் புகழ் தேடிக் கொள்வார்களாக.
கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை : நெருக்கடியைத் தீவிரமாக்கி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் !
அண்டை நாடான இலங்கையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, வெங்காயம் − என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. இலங்கை அரசு பொருளாதார அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் வினியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக இராணுவம் ஈடுபடுத்தப்படுகிறது. ரேஷனில் உணவுப் பொருட்களை வாங்க காய்கறி − மளிகைக் கடைகளில் மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். சிங்களவர், தமிழர், முஸ்லீம், கிறித்தவர் − என அனைத்து உழைக்கும் மக்களும் வரலாறு காணாத விலையேற்றத்தால் உணவுப் பொருட்களை வாங்க வழியின்றி, அரை வயிற்றுக் கஞ்சியோடு அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்றுமதி வீழ்ச்சி, அந்நிய செலாவணி பற்றாக்குறை, நாணய மதிப்பு சரிவு, கடன் நெருக்கடிகள் தீவிரமாதல் − என மாபெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் இலங்கைத் தீவு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட மந்த நிலைதான் காரணம் எனச் சித்தரிக்கின்றன, முதலாளித்துவ பத்திரிக்கைகள். ஆனால் இந்நெருக்கடிக்குப் பின்னே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஒளிந்திருக்கின்றன.
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, தேயிலை ஏற்றுமதி, சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றைச் சார்ந்துதான் இலங்கைப் பொருளாதாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்கு 52 சதவிகிதமாகவும், தேயிலை ஏற்றுமதி 17 சதவிகிதமாகவும் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் காரணமாக, இலங்கையின் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் குறைந்து பொருளாதாரம் படுத்துவிட்டது. 2019−ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 1.1 சதவிதமாக இருந்த நிலையில் 2020−ல் இது மேலும் சரிந்து −16.3 சதவிதம் (மைனஸ் 16.3 சதவிதம்) என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சுற்றுலாத்துறை முடக்கம் மற்றும் ஏற்றுமதி சரிவால் அந்நிய செலாவணி கையிருப்பு வற்றி விட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் மூலதனத்தை சுருட்டிக் கொண்டு வெளியேறி வருகின்றன.
இன்று, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நாடாக இலங்கை உள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறையின் விளைவாக, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மஞ்சள் இறக்குமதியை அரசு நிறுத்திவிட்டது. ஜூன் மாதம் முதல் உளுந்து இறக்குமதிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிகளும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி, வாகன தாயாரிப்புகளுக்கான உதிரி பாகங்கள், ஆயத்த ஆடைகளுக்கான மூலப்பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்யவதற்குப் போதிய நிதி இல்லாத காரணத்தால், உற்பத்தித் துறையே முடங்கும் அபாயத்தில் உள்ளது. மறுபுறம், இலங்கையின் நாணய மதிப்பும் கீழ் நோக்கிச் சரிந்துகொண்டே செல்கிறது. இதன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இதுவரை கண்டிராத உச்சத்திற்கு உயர்ந்து விட்டன.
செப்டம்பர் 19−க்கு முந்தைய நிலவரப்படி, ஒரு கிலோ சிவப்புப் பருப்பின் விலை கிலோ ரூ.250, சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 − என விற்கப்படுகிறது. அதிகபட்சமாக உளுந்து கிலோ ரூ.2,000 ஆகவும், மஞ்சளின் விலை ரூ.4,000−லிருந்து ரூ.5,000 வரையிலும் விற்கப்படுகிறது. ஆனால், உணவுப் பொருட்கள் பதுக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் களநிலவரம் இதைவிட மோசமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வருகின்றன.
‘‘அனைவருக்குமான உணவுப் பொருட்களை அரசே ஏற்பாடு செய்ய இயலாது; ஆகையால், வீட்டுத் தோட்ட முறைக்கு மக்கள் மாற வேண்டும்; முடிந்த அளவிற்கு வெளியிலிருந்து பொருட்கள் வாங்குவதை கைவிட்டு, உணவுத் தேவையை தாமாகவே நிறைவு செய்துகொள்ள வேண்டும்’’ என்று அரசு மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது.
இலங்கையின் மற்றொரு முக்கிய நெருக்கடி கடன். இது, நீண்டகாலமாகவே இருக்கும் பிரச்சினை. 2014−ம் ஆண்டிலிருந்தே இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பெரும் பாய்ச்சலுடன் உயரத் தொடங்கிவிட்டது. 2019−இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 42.9 சதவிகிதமாக இருந்த கடன் தொகை, இந்த ஆண்டு ஜூலையில் 101 சதவிகித்தைத் தொட்டுள்ளது.
இதே மாதத்தில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 270 கோடி அமெரிக்க டாலராக இருந்த நிலையில், வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகையோ 3,500 கோடி அமெரிக்க டாலருக்கு மேலாக இருந்தது. எந்த அளவுக்கு இந்த கடன் நெருக்கடி இருக்கிறதென்றால், இலங்கை அரசின் வருவாயில் சுமார் 80 சதவிகிதம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காகவே செலவிடப்படுகிறது. இதுவொருபுறமிருக்க, அந்நிய செலாவணி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மேலும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
அதிகாரத்தில் இருக்கும் கோத்தபய அரசு பெருமளவு கடன்களை சீனாவிடமிருந்து வாங்கி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் சீனாவிடம் 150 கோடி டாலர்களை கடனாகப் பெற்றதைத் தொடர்ந்து, சென்ற ஆகஸ்ட் மாதம் 17−ஆம் தேதி மேலும், 6,150 கோடி இலங்கை ரூபாய் மதிப்பிலான கடனுதவியைப் பெற்றுள்ளது. சீனாவிடமிருந்து கடன் பெறும் இந்த நடவடிக்கை, ‘‘இலங்கையை சீனாவினுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும்’’ என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகளும் பொருளாதாரவாதிகளும் கோத்தபய அரசைக் கடுமையாகச் சாடுகிறார்கள். சீனா கொடுக்கும் கடன்கள் ‘‘குறுகிய காலக் கடன்கள்’’ என்பதால், இக்கால இடைவெளிக்குள் அதைக் கொடுக்க முடியாவிட்டால், பின்னர் அதன் நிர்பந்தத்திற்கு அடிபணிய நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஏற்கெனவே, அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாட்டுக்காக சீனாவிடம் வாங்கிய கடன் தொகைக்கு ஈடாக, 99 ஆண்டுகளுக்கு அத்துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டுள்ளது இலங்கை அரசு. இது மட்டுமின்றி, அம்பாந்தோட்டை விமான நிலையம், தெற்கு விரைவுச் சாலை, நிலக்கரியால் இயங்கும் அனல்மின் நிலையம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலமும் இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், ‘‘பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை அணுகுமாறு’’ ஆளுங்கட்சிக்கு யோசனை கூறுகிறார், முன்னாள் பிரதமரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரம சிங்கே.
‘‘சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்க முடியும் ஆனால், சமூக மட்டத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெறும். நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது’’ என்று இதற்கு பதிலளித்திருக்கிறார் நிதி அமைச்சர் கப்ரால். ‘‘சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று அமைச்சர் குறிப்பிடுவது, அமெரிக்காவின் அரசியல் மேலாதிக்கத்தைத்தான் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.
ஆக, இலங்கையின் இன்றைய அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிக்க இருவேறு ஆளும் வர்க்க கட்சிகளும் இருவேறு தீர்வுகளை முன்வைக்கின்றன. சீனாவுக்கா, அமெரிக்காவுக்கா? யாருக்கு இலங்கையை அடகு வைப்பது என்பதுதான் இவர்களது ‘முட்டல்−மோதல்’−இன் சாராம்சமே ஒழிய, இவர்களொன்றும் நாட்டின் இறையாண்மைக்காக நிற்கக்கூடிய நாட்டுப் பற்றாளர்கள் அல்ல.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கும்பலின் தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன கட்சியானது, சீன விசுவாசப் பிரிவாகும். அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து இலங்கையை சீனாவின் மேலாதிக்க பசிக்கு படையல் வைக்கக் கூடிய பல்வேறு நடவடிக்கைகளை அக்கட்சியும் ஆட்சியும் செய்து வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகக் குத்தகை விவகாரம் ஒன்றே இதற்குச் சான்று கூறப் போதுமானது.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய மேலாதிக்கவாதிகளின் விசுவாசிகளான மைத்ரிபால சிறிசேனா − ரணில் விக்கிரமசிங்க அரசு கடந்த 2019−ம் ஆண்டு மே மாதம் இலங்கை − இந்தியா − ஜப்பான் ஆகிய முத்தரப்பு நாடுகள் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் ‘‘கிழக்கு சரக்குப் பெட்டக முனையம்’’ கட்டுவதற்காக திட்டத்தைப் போட்டுக் கொண்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் அத்திட்டத்தை கோத்தபய அரசு ரத்து செய்தது. 2020 ஜூலை மாதம், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக இந்திய அரசிடமிருந்து வாங்கிய 40 கோடி டாலர்களை (சுமார் ரூ.3,000 கோடி) அவகாச காலம் முடியும் முன்னரே திருப்பிக் கொடுத்துள்ளது, கோத்தபய அரசு.
இவை சில சான்றுகள்தாம். தமது உலக மேலாதிக்க போர்த்தந்திர திட்டத்துக்கு ஒத்துழைக்காத கோத்தபய அரசின் சீன ஆதரவு நடவடிக்கைகள், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளுக்கு எரிச்சலூட்டுகிறது. இதனால், கோத்தபய அரசை எச்சரித்து, மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கத்துடன், இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி. (பொது விருப்பத் தேர்வு ஒழுங்கமைப்பு − generalized system of preference) என்ற வரிச் சலுகையை நீக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது என்ற அடிப்படையில் 27 நிபந்தனைகளுடன் (மனித உரிமைகள், தொழிலாளர் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறந்த மேலாண்மை உள்ளிட்டவற்றைக் காப்பாற்றுவது என்ற அடிப்படையில்) இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 66 சதவிகிதம் வரிச்சலுகை அளித்து வருகிறது. இதைத்தான் தற்போது நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இலங்கை அரசு கொண்டுவந்துள்ள அடக்குமுறைச் சட்டமான ‘‘பயங்கரவாத தடைச் சட்ட’’த்தைக் காரணம் காட்டி, இலங்கையில் ‘‘மனித உரிமைகள் நசுக்கப்படுகிறது’’ என்று ஐரோப்பிய ஒன்றியம் தனது அடாவடித்தனத்துக்கு நியாயம் கற்பிக்கிறது. பிற நாடுகளில் மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்து ஏகாதிபத்தியங்களுக்கு ‘அக்கறை’ வருகின்றதென்று சொன்னால், அது அந்த நாட்டிற்கு நெருக்கடி கொடுப்பதற்கு கையாளப்படும் உத்தி என்பதுதான் வரலாறு.
இலங்கையின் இன்றைய நெருக்கடிக்கும் அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கும் முக்கிய காரணம் இலங்கை அரசு தீவிரமாகச் செயல்படுத்திவரும் தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கையும், இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்துக்கும் கொள்ளைக்கும் ஏற்றவாறு மாற்றியமைத்திருப்பதுதான் காரணம்.
உள்நாட்டு தற்சார்பு பொருளாதாரத்தை விடுத்து உலகச் சந்தைக்கான உற்பத்திப் பின்நிலமாக, ஏற்றுமதி அடிப்படையிலான உற்பத்தியாக இலங்கையின் பொருளாதாரம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதே இத்தகைய தீராத நெருக்கடிகளுக்கு அடிப்படை. கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார தேக்கநிலையானது, இலங்கையின் உலகச் சந்தையை மேலும் சுருக்கி நிரந்தரமான நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.
இந்த நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு, சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்து விடாமல் தடுக்கும் நோக்கத்துடன், இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், பொருளாதார நெருக்கடியைத் தீவிரமாக்கி கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை பட்டினியில் தள்ளி வருகின்றன.
அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், சீனா − ஆகியவற்றின் இரும்புப் பிடியிலிருந்து இலங்கைத் தீவை விடுவிக்க புரட்சிகர − ஜனநாயக சக்திகளின் தலைமையில் இலங்கை உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதும், தற்சார்பு பொருளாதாரத்தைக் கொண்ட, இறையாண்மையுள்ள அரசுக் கட்டமைப்புக்காக போராடுவதும்தான் இந்நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி.
இலங்கையின் அரசியல் − பொருளாதார விடுதலையானது, இந்தியா உள்ளிட்ட பிற தெற்காசிய பிராந்திய நாடுகளின் உழைக்கும் மக்களின் விடுதலையோடு பின்னிப் பிணைந்திருப்பதால், இலங்கை உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஆதரித்துக் குரல் கொடுப்பது நமது கடமையுமாகும். இந்நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்கள்தான் தெற்காசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியங்களை சவக்குழிக்கு அனுப்பும்!
போலீசு என்றாலே அது அரசின் வன்முறைக் கருவி என்பது செய்தித்தாள் வாசித்து சிந்திக்கும் பழக்கம் கொண்ட அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த அடக்குமுறைக் கருவியும் கூட சமூகத்தில் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள குறைந்தபட்ச அரிதாரமாவது பூசிக் கொள்ளும். ஆனால் பாசிஸ்ட்டுகளின் கீழ் இருக்கும் போலீசு தனது சுயரூபத்தை அப்படியே காண்பிக்கும் என்பதற்கு டெல்லி போலீசே சாட்சி.
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி புரிந்தாலும், நாடாளுமன்றம் அங்கு இருக்கும் ‘பாவத்திற்காக’ அம்மாநகரத்தின் போலீசு கட்டுப்பாடு முழுவதும் ஒன்றிய அரசின் கைகளில் இருக்கிறது.
கடந்த வாரத்தில் உத்தரப் பிரதேசத்தில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது ஒன்றிய இணை உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றி படுகொலை செய்தான். இதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதனைக் கண்டித்து படுகொலை செய்த கிரிமினலைக் கைது செய்யக் கோரி கடந்த அக்டோபர் 10-ம் தேதி டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டிற்கு முன்னாள் அனைத்திந்திய மாணவர் சங்கத்தைச் (AISA) சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தியாவில் இயங்கும் கட்சிகளில் கிரிமினல்களின் கூடாரமாக இருக்கும் கட்சி என்று பெயர்பெற்ற கட்சி பாஜக தான். அப்படி கிரிமினல்களின் கூடாரமாகவும், மதவாத கிரிமினல்தனத்தையே சித்தாந்தமாகக் கொண்ட அந்தக் கட்சியின் தலைவரும் இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் வீட்டு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சும்மா விடுமா, டெல்லி போலீசு ?
போராடிய மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது தடுப்புக் காவலில் வைத்தது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு பெண் மாணவர்களை போலீசு வாகனத்தில் ஏற்றி கடுமையான முறையில் தாக்கியிருக்கிறது டெல்லி போலீசு.
அது குறித்து மறுநாள் அந்த இரு பெண் மாணவர்களும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வக்கிரம் பிடித்த டெல்லி போலீசின் வெட்கங்கெட்ட முகத்தை அம்பலப்படுத்தியுள்ளனர் அந்த மாணவிகள்.
“15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைகளில் கண்டன பதாகைகளை ஏந்தி மதியம் 1 மணியளவில் போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்தனர். துவக்கத்தில் பெண் போலீசார் யாரும் இல்லாடஹ் நிலையில், ஆண் மாணவர்களை போலீசு கடுமையாகத் தாக்கி பேருந்தில் ஏற்றியது. AISA மாணவர் அமைப்பின் நிர்வாகி இந்த நிகழ்வுகளை தமது கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருக்கையில் அந்த கைபேசியை போலீசு பறித்தது.” என்று நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்டிருக்கிறார்.
மேலும், தாங்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட கைபேசியை போலீசிடமிருந்து திரும்பப் பெற போராடியதாகவும், அப்படிப் போராடுகையில் தங்களை சாலையின் மறு முனை வரை தரதரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
வாகனத்தில் ஏற்றிய பின்னர், அங்கு வந்த பெண் போலீசு கும்பல், இந்த இரண்டு மாணவிகளையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. வாகனத்தில் ஏற்றும் போது அந்த இரு பெண்களும் அணிந்துள்ள குர்தாவை அகற்றி அசிங்கப்படுத்த முயற்சித்திருக்கிறது அந்த கிரிமினல் போலீசு கும்பல். சுற்றி இருந்த ஆண் போலீசு அதே வக்கிரத்துடன் இந்த நிகழ்வுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றுள்ளது.
பெண்ணின் உடலை வைத்து அப்பெண்ணையோ, அவர் சார்ந்தவர்களையோ அவமானப்படச் செய்வது என்பதையே இந்திய ஆளும் வர்க்கங்கள் காலங்காலமாகச் செய்து வருகின்றன. சாதிய ஒடுக்குமுறை முதல், வர்க்க ஒடுக்குமுறை வரை அனைத்திலும் இது நடந்தேறுகிறது. இந்திய போலீசும், இராணுவமும் இதனையே தங்களது ஆயுதமாக பயன்படுத்திவருகின்றன.
இதற்கு காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களுமே சாட்சி.
பேருந்திற்குள் ஏற்றப்பட்ட இரு பெண்களின் அந்தரங்கப் பகுதிகளை குறிவைத்து மிதித்துள்ளனர், அந்த காக்கிச்சட்டை அணிந்த பெண் போலீசு மிருகங்கள். சுமார் 20 நிமிடம் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன. இரு பெண்களின் கால்களும் பிறப்புறுப்பும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதில் கடும் வலியின் காரணமாக அப்பெண்கள் இருவரும் அழுதுள்ளனர். தங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுள்ளனர். அதனை மறுத்து, இது தொடர்பாக வெளியே பேசினாலோ, புகார் அளித்தாலோ கடும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டியுள்ளன அந்த போலீசு மிருகங்கள்.
இதனைத் தொடர்ந்து தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அந்த பெண் மாணவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் போலீசின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்தியப் பெண்களின் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலர் அன்னி ராஜா, அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் சங்கத்தின் தலைவர் கவிதா கிருஷ்ணன் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் அடங்கிய குழுவினர், டெல்லி போலீசு அலுவலகத்தில் இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும், இத்தாக்குதலுக்கு உத்தரவிட்ட ப்ரக்யா ஆனந்த்–ஐ இடைநீக்கம் செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாக்குதலுக்கு உத்தரவிட்ட போலீசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசு இணை கமிசனர் தீபக் யாதவிடம் கூறியபோது, “நீங்கள் சில போலீசால் மட்டுமே தாக்கப்பட்டிருக்கிறீர்கள். எல்லாரும் மோசமானவர்கள் அல்ல. வெகு சிலரே பிரச்சினைக்குரியவர்கள்” என்று கூறியிருக்கிறார்.
மாணவர்கள் மீது ஏவப்பட்டுள்ள இந்த வன்முறை என்பது மாணவர்களை, குறிப்பாக பெண் மாணவர்களை பொதுப் பிரச்சினைகளில் தலையிடுவதை தடுக்கும் நோக்கத்தோடு அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டது எனும் பட்சத்தில் தாக்கிய போலீசு மட்டும்தான் பிரச்சினை என்று கூறுவது பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்ய போலீசு செய்யும் வழக்கமான உத்தி.
இந்தத் தாக்குதல் பற்றி, ‘தி வயர்’ இணையதளத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண் மாணவர் கூறுகையில், “எங்களது பாலின அடையாளத்தை ஆயுதமாக வைத்து எங்கள் மீது இந்த தாக்குதலைத் தொடுத்துள்ளது. எங்களது உடலை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறது, போலீசு” என்று கூறியிருக்கிறார்.
ஆளும் வர்க்கங்களின் அடியாட்படையாக வேலைபார்க்கும் பாசிச ஆட்சியாளர்களின் ஏவல் நாய்களிடம் தங்களது எஜமானர்களின் பண்புதானே நீடிக்கும். பெண்களை பாலியல் பண்டமாகப் பார்த்து, எதிர்க் கருத்துள்ள பெண்களை பொதுத் தளங்களில் இழிவுபடுத்தி, கொலை மிரட்டல், பாலியல் பலாத்கார மிரட்டல் விடுக்கும் பாஜக–விடம் ஏவல்நாயாக வேலை பார்க்கும் டெல்லி போலீசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?
அவதூறு ஸ்பெஷலிஸ்ட்டுகளான கிஷோர் மற்றும் சாட்டை துரை கைதுக்கு பின் தொடர்ச்சியாக கருத்துரிமையின் குரல் நசுக்கப்படுவதாக எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. உண்மையில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவது என்றால் என்னவென்று தெரியாமல் உளறுவதாகவே இதைப்பார்க்கிறேன் அல்லது ஏழு ஆண்டுகளாக இந்தியா முழுக்க பாஜக-வின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி தெரியாமல் பேசுகிறார்களோ!
உண்மையில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் தெரியுமா?
ஒன்றிய பாஜக ஆட்சியில் பத்திரிகையாளர்களின் கருத்துரிமை எப்படி இருக்கிறது என்பதன் மூலும் அதை புரிந்து கொள்ளலாம்.
இதைப்பற்றி என்னைப்போலவே சுதந்திர பத்திரிகையாளராக இயங்கும் கீதா சேஸு தன்னுடைய ‘Behind Bars: Arrest and Detention of Journalists in India 2010-20’ என்கிற கட்டுரையில் தொகுத்து இருக்கிறார். அவருக்கு நன்றி.
கடந்த ஓராண்டில் மட்டுமே 154 பத்திரிகையாளர்கள் மத்திய அரசால் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது கடந்த பத்தாண்டுகளின் ஒட்டுமொத்த எண்ணிகையில் 40 சதவிகிதம்.
வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து பணியாற்றிய எட்டு பத்திரிக்கையாளர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறது அரசு. இதுபோக அவர்களை கைது செய்து, மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப முடியாத அளவுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் மீது அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைத்தார்கள் என்கிற அடிப்படையில் தீவிரவாத நோக்கம் கொண்டவர்கள் என்று வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஒரு பத்திரிகையாளருக்கு ஆயள்தண்டனை கூட வாங்கித்தரப்பட்டிருக்கிறது.
கருத்து சொன்னார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக Defamation வழக்குகள் தனிநபர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும், பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து பதியப்பட்டு வந்துள்ளன. இந்த எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
ஒரே ஆண்டில் மிக அதிகமான இன்டர்நெட் ஷட்டவுன்களை செய்த பெருமை பாஜக அரசுக்கே உண்டு. 64 முறை இணையத்தை முடக்கி கருத்துரிமையை தகவல்களை அறியும் உரிமையையும் பறித்திருக்கிறது பாஜக அரசு. காஷ்மீரில் 2019 ஆகஸ்டிலிருந்து இன்றுவரை இணையவசதி முழுமையாக கிடைக்காமல்தான் இருக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் பத்திரிகையாளர்கள் மீதான நேரடியான வன்முறை தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இந்த எண்ணிக்கை 198. இதில் வெறும் மூன்று வழக்குகள் மட்டும்தான் தீர்ப்பு வரை சென்றுள்ளது. மற்ற எல்லாமே இன்னமும் நிலுவையில்தான் உள்ளன.
56 பத்திரிகையாளர்கள் கடந்த பத்தாண்டுகளில் செய்தி வெளியிட்டமைக்காக சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறார்கள். பிரஷாந்த் கனோஜியா 80 நாட்கள் சிறையில் இருந்தார். காரணம் ராமர் கோயில் பற்றி ஒரு ட்விட் பண்ணினார் என்பதற்காக.
இவைபோக விவசாயிகள் போராட்டத்தை கவர் பண்ண சென்ற எட்டு பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இப்போதும் வழக்குள் நிலுவையில் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் (jan-2021) மட்டுமே 12 journos மத்திய அரசால் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் மூன்று பேர் மீது தேச துரோக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆறு பேர் தங்களுடைய சமூக வலைதளப் பதிவுகளுக்காக Non Bailable வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் கௌரி லங்கேஷ் உள்ளிட்ட 16 பத்திரிகையாளர்கள் தங்களுடைய செய்திகளுக்காக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2016-ல் Freedom of speech index-ல் 133-வது(180 நாடுகளில்) இடத்தில் இருந்த இந்தியா 2020-ல் 142 இடத்திற்கு பின்தங்கி இருக்கிறது. 2021-லும் அதே இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவின் கருத்துரிமை கடந்த ஐந்தாண்டுகளில் பெரிய சரிவை சந்தித்திருப்பதையே இது காட்டுகிறது.
Reporters Without borders (French: Reporters sans frontières – RSF) அமைப்பு பத்திரிகையாளர்களுக்கு அபாயகாரமான நாடு இந்தியா என்று குறிப்பிடுகிறது.
இதுதான் கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல். இதுதான் ஆபத்தான போக்கு. இதற்கு எதிராகத்தான் நம் குரல் ஒலிக்க வேண்டுமே தவிர… தனிநபர் தாக்குதல்களை மேடை போட்டு செய்கிறவன்களுக்கும், கொலை மிரட்டல் விடுகிறவன்களுக்கும், பொய்ப் பரப்பி மதவெறியை தூண்டிவிட்டு மக்களிடையே கலவரத்தை தூண்டுகிறவன்களுக்கும் அல்ல.
ஒன்றிய மோடி அரசால் கொண்டு வரப்பட்ட விவசாய விரோத கார்ப்பரேட் நலன் காக்கும் மூன்று வேளாண் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்கிற முழக்கத்தோடு டெல்லி எல்லையில் பத்து மாதங்களுக்கு மேலாக கடுமையான பனியிலும் குளிரிலும் வெயிலிலும் போராடிவருகின்றனர்.
700-க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்து, நடந்து வரும் போராட்டத்தை இந்திய அரசு துச்சமாக எண்ணி நீதிமன்றத்தின் மூலமாக மிரட்டலையும், பாஜக காலிகளின் மூலமாக தாக்குதலையும் தொடுத்து வருகிறது. இந்திய வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் தியாக மிக்கப் போராட்டத்தை கொச்சைப் படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் மோடி அரசின் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விவசாயிகள் போராட்டத்தை இரண்டு நாளைக்குள் முடிவுக்கு கொண்டு வருவேன் என்கிற கலவரத்தை தூண்டும் வகையிலான திமிர்தனமாக பேசுகிறார்.
அஜய் மிஸ்ரா-விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகளின் மீது அந்த மாவட்டத்திற்கு சென்ற மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் காரை ஏற்றிக் கொன்றுள்ளான். மேலும் இதனை படம் பிடித்த பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட கலவரத்தில் மொத்தம் ஒன்பது பேரை படுகொலை செய்த அஜய் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதற்கு பொறுப்பான உத்தரப்பிரதேச யோகி அரசையும் ஒன்றிய மோடி அரசையும் கண்டித்தும், படுகொலையான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பாக, 12/10/2021, மாலை திருவாரூர் நகராட்சியில் பேரணி தொடங்கி, திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில், நிறைவுபெற்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
This slideshow requires JavaScript.
இந்த நிகழ்வில் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பி.மாசிலாமணி, அவர்களின் தலைமையில் சிபிஎம், கட்சியின் விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் வி.எஸ்.கலியபெருமாள், மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆரூர் சீனிவாசன், திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் மோகன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்க.சண்முகசுந்தரம், உழவர் இயக்கத்தின் பொறுப்பாளர் ஜி.வரதராஜன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முஜிப் ரகுமான், சிஐடியு மாவட்ட பொறுப்பாளர் ஜி.பழனிவேல், ஏஐடியு மாவட்ட பொறுப்பாளர், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுர்ஜித், மே 17 இயக்கத்தின் ஜெய், மற்றும் சிபிஐ, சிபிஎம், கட்சிகளின் ஒன்றிய நகர செயலாளர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.
தொலைக்காட்சி மாடல் மற்றும் நடிகையான பத்மா லட்சுமி, கடந்த 2020-ம் ஆண்டு தனது யூ-டியூப் பக்கத்தில் சமையல் காணொலி ஒன்றில், பிரா எனப்படும் பிரெசியர் அணியாமல் மேலாடையோடு பதிவிட்டிருந்தார். இந்த காணொலியை மையமாக வைத்து அவர் பெரும் சர்ச்சையாக்குள் தள்ளப்பட்டார். பல்வேறு ஏச்சு-பேச்சுக்கள், ஆபாச நையாண்டிகள், கிண்டல்கள் என அவருக்கு கடுமையான தொல்லைகள் கொடுக்கப்பட்டன.
இப்படி ஒரு காணொலி வெளியிட்டது ஒழுக்கக்கேடான செயல் என சமூக வலைத் தளங்களில் ’நல்லவர்கள்’ பலர் பேசினர். இதனைத் தொடர்ந்து தனது அடுத்த காணொலியில் மேலாடைக்குள் இரண்டு உள்ளாடை அணிந்து அதற்கான பதிலையும் தந்தார் பத்மா. “Let’s not police women’s bodies in 2020 – OK “. அதாவது “2020-ம் ஆண்டில் பெண்களின் உடலை கண்காணிக்காமல் இருக்கலாமே” என்று கூறியிருந்தார்.
இதைப் போன்றே பாலிவுட் நடிகை சாமிரா ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதுகையில் பிரா, காண்டாக்ட் லென்ஸ் போன்றவை அழகின் குறியீடுயில்லை எனவும் அத்தகைய கண்ணோட்டத்திலிருந்து தான் வேறுபடுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். பலரும் அதனைப் பாராட்டினர். பலர் சாடினர்.
பெண்களின் ஆடையில் ஓரு அங்கமான பிரா, சமூகத்தின் மனப்போக்கில் எந்த மாதிரியாக இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள் ஒரு ஆதாரம்.
கடந்த ஆண்டு முதல் நிலவும் கோவிட் -19 நோய்த் தொற்று பிரச்சினை காரணமாக போடப்பட்டுள்ள லாக்-டவுன், வீட்டில் இருந்து அலுவலக வேலைகளை பார்க்கும் நிலைமையை ஏற்படுத்தியது. உண்மையில் இது பல பெண்களுக்கு ஒரு உடல்ரீதியான சுதந்திரத்தைக் கொடுத்தது எனலாம். அலுவலகத்திற்குச் செல்கையில் கண்டிப்பாக பிரா அணிந்து செல்வது அவசியம் என்ற சமூக நிர்பந்தம் இருக்கையில் வீட்டிலிருந்து வேலை பார்க்கையில் பெண்களுக்கு பிரா அணியும் கட்டாயத்திலிருந்து விடுதலை அளித்தது இந்த லாக்-டவுன் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆண்கள் வெளியே செல்கையில் பனியன் அணிந்து செல்வதோ, அணியாமல் செல்வதோ, சமூகத்தில் எவ்வித எதிர்ப்பையோ ஆதரவையோ பெறுவது இல்லை. ஆனால் ஒரு பெண் வெளியே செல்கையில் பிரா அணியாமல் சென்றால், அது இந்தச் சமூகத்தின் கண்களில், அவள் ஆபாசப் பண்டமாகவும், தவறான நடத்தை கொண்டவளாகவும் தெரிகிறாள். இதன் காரணம் என்ன ?
பலரும் பிரா அணிவது பெண்களுக்கு நலன் பயக்கக் கூடியது என்று கூறுகின்றனர். அதற்குப் பல மருத்துவக் காரணங்களைக் கூறுகின்றனர். பெண்கள் பிரா அணியாமல் இருந்தால், மார்பகப் புற்றுநோய் வரும் என்கின்றனர். மேலும் பிரா அணியாவிட்டால், கூப்பர் தசைநார்கள் (Cooper Ligaments) பாதிக்கப்படும். மார்பகங்கள் தளர்வுற்று தொய்வடையும் என்கின்றனர். இவற்றில் ஏதேனும் உண்மை உள்ளதா ?
கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 15 ஆண்டுகால ஆய்வு முடிவுகளில், பிரா அணிவதால் எந்த நன்மையும் இல்லை என்று கூறப்படுவதோடு கூடுதலாக, அவை மார்பகங்களை ஆதரிக்கும் தசைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளரும் விளையாட்டு அறிவியல் வல்லுநருமான ஜீன்-டெனிஸ் ரூலியன் பிரான்ஸ் இத்தகவலை பிரெஞ்சு வானொலி நெட்வொர்க்கிடம் நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், இளம் பெண்கள் பிரா அணிவதை நிறுத்தும்போது அவர்களின் மார்பகங்களின் தன்மை மோசமடையாது என்பதையும் ஆய்வு முடிவுகளில் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கிறார், ரூலியன்.
அதே போல, பிரா என்பது பெண்களின் ஆடையில் ஒரு பகுதியே அன்றி அது மருத்துவ சாதனம் அல்ல என்று “ஜீன் ஹெய்ல்ஸ்” மகளிர் சுகாதார அமைப்பின் மருத்துவர் அமண்டா நியூமன் கூறுகிறார்.
அடுத்ததாக, பிரா அணியாமல் இருப்பதால் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருப்பதாக சொல்லப்படுவதைப் பற்றி பார்க்கலாம். பிரா அணிவதால் புற்றுநோயை தடுக்க முடியும் என்று எந்த ஆய்வுகளும் இல்லை. இதற்கு எந்தவிதத்திலும் அறிவியலில் இன்றுவரை எந்தச் சான்றுகளும் இல்லை.
பிரா அணிவது அல்லது அணியாமல் இருப்பது மற்றும் மார்பக புற்றுநோயை வளர்ப்பது ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை நிரூபிக்கும் நம்பகமான ஆராய்ச்சி இல்லை. இதனை ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் கவுன்சில் தனது வலைத்தளத்தில் பதியப்பட்டுள்ளது.
பிரா அணிவது மார்பக தொய்வைக் குறைப்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்றால் அதற்கும் இல்லை என்பதே பதில். மார்பகங்கள் இயற்கையாக இருக்கின்ற விதம் அல்லது அதன் தளர்ச்சி போன்றவை மரபியல், ஹார்மோன்கள் மற்றும் எடையுடன் அதிக அளவில் தொடர்புடையதாக இருப்பதாகவும் மருத்துவர் அமண்டா நியூமன் கூறுகிறார். பிரா அணிந்தால் மார்பகங்களின் வளர்ச்சி குறைந்துவிடும் என்று நிலவும் சில கருத்துக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்கிறார் மருத்துவர் அமண்டா நியூமன்.
இந்த ஆய்வு முடிவுகள் இப்படி இருக்க, பின் ஏன் அசௌகரியமான இந்த ஆடையை பெண்கள் அணிகின்றனர் அல்லது அணிய நிர்பந்திக்கப்படுகின்றனர், என்ற கேள்வி எழுகிறது. கற்பு (ஒழுக்கம்) என்ற பெயரிலும், ஃபேஷன் என்ற பெயரிலும் பெண்கள் மீது இந்த உடை எவ்வாறு திணிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும் முன்னர், பிராவின் சுருக்கமான வரலாறு குறித்துப் பார்ப்போம்.
பிரா வரலாறு
பிரா என்றும் பிரெசியர்ஸ் என்றும் இன்னும் பலவிதமான பெயர்களில் பெண்களின் உடைகளில் ஒரு பிரிக்கமுடியாத ஒன்றாக நீடித்திருக்கிறது இந்த ஆடை.
வரலாறு நெடுகிலும், பெண்கள் தங்கள் மார்பகங்களின் தோற்றத்தை பராமரிக்கவும், மறைக்கவும், கட்டுப்படுத்தவும், வெளிப்படுத்தவும் அல்லது மாற்றவும் பல்வேறு ஆடைகளையும் சாதனங்களையும் பயன்படுத்தியுள்ளனர். வரலாற்று ரீதியாக, பிரா அல்லது பிகினி போன்ற ஆடைகள் மினோவான் நாகரிகத்தின் பெண் விளையாட்டு வீரர்களின் கலையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. கி.மு.14 ஆம் நூற்றாண்டுகளில்
கிரேக்க-ரோமன் நாகரிகங்களிலும் பெண்கள் மார்பகத்தை பராமரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிராவை ஒத்த சிறப்பு ஆடைகளை உருவாக்கியுள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
கிபி 14-ம் நூற்றாண்டில், பிராவின் முன்மாதிரி உடைகள் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்தன. அதன் பின் ஏறக்குறைய கிபி 16-ம் நூற்றாண்டு முதல், மேற்கத்திய நாடுகளின் பணக்காரப் பெண்களின் உள்ளாடைகளில் கோர்செட் (corset) எனும் உடை ஆதிக்கம் செலுத்தியது. இது மார்பகங்களின் எடையை தாங்கி நிற்க உதவும் என்று கருதப்பட்டது. மேலும் அவர்களின் அழகு சாதனங்களின் ஓரு பகுதியாக அவ்வுடை பார்க்கப்பட்டது.
உலகின் மிக பழமையான பிரா 1390 மற்றும் 1485 ஆண்டுகளுக்கு இடையில் ஆஸ்திரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் ஆஸ்திரிய லெம்பெர்க் கோட்டையின் தரைப் பலகைகளின் கீழ் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் சரிகைகளால் நெய்யப்பட்ட பிரா கண்டுபிடிக்கப்பட்டது.
கோர்செட்-டிலிருந்தே (corset) பிரா பிறந்தது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு மாற்றுகளைப் பரிசோதித்ததிலிருந்து தான் ப்ராவிற்கு வடிவம் கிடைத்தது. பின் காலப்போக்கில் இருவேறு பாகங்களாக பயன்படுத்தியதில் பிரா பெரும் வரவேற்பை பெற்றது.
20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், சமகால பிராக்களை ஒத்த உடைகள் தோன்றின, இருப்பினும் வணிக அளவிலான உற்பத்தி 1930-கள் வரை நடக்கவில்லை. அப்போதிருந்து ‘கோர்செட்’களின் காலம் முடிந்து பிராக்களின் காலம் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட உலோகப் பற்றாக்குறை கோர்செட்டின் முடிவை ஊக்குவித்தது. பிரா வடிவமைப்பு அதன் எளிமையான தன்மையால் பிரபலமடைந்தது.
போர் முடிவடைந்த நேரத்தில், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும், ஃபேஷன் ஆடை வடிவமைப்பு பரிணாமம் அடையத் துவங்கியது. மனிதர்களுக்கு வசதியான வகையில் உடைகளை வடிவமைக்கும் நோக்கம் கொண்டதாக நவீன ஆடை வடிவமைப்பு தோன்றினாலும், பெண்களை பாலியல் நுகர்வுப் பண்டமாக மாற்றும் வகையிலும் அது பரிணாமம் அடைந்ததும் அந்தக்காலத்தில் தான். ஃபேஷனின் இந்தப் பரிணாமம், பெண் உடலின் மீதான பார்வையை மாற்றியிருக்கிறது.
ஃபேஷன் என்ற பெயரில், பெண்களின் மார்பளவை அதிகப்படுத்திக் காட்டுவது, பெண்களின் மார்பை வெளிப்படுத்திக் காட்டுவது போன்ற வகையில் வடிவமைக்கப்பட்டு சந்தைக்குள் தள்ளப்பட்டது பிரா. பெண்களின் அழகை மார்பகங்களின் அளவிலிருந்தும், அதனை வெளிப்படுத்துவதிலிருந்தும் நிர்ணயித்தது முதலாளித்துவம். அழகிற்கான நியதியையும் வரையறையையும் உருவாக்கியது. அதனை நோக்கி தம்மை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தது முதலாளித்துவம்.
இதன் ஒரு அம்சமாக ‘ஃபேஷன் ஷோ’க்களும், அழகிப் போட்டிகளும் நடத்தப்பட்டன. பொருளாதார ரீதியான கட்டுப்பாடு ஆண்களின் கையில் இருக்கும் நிலையில், பெண்கள் தங்களை ‘அழகாக்கிக்’ கொண்டு ஆண்களை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட உடைகளை ஃபேஷனாக களமிறக்கினர்.
இதற்கு எதிராக அமெரிக்காவில் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினர்.
பெண்களை ஆபாசப் பண்டங்களாக மாற்றுவதற்கு எதிரான முதல் போர்:
1968-ம் ஆண்டில் அமெரிக்காவில் மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டிக்கு எதிரான முதல் போராட்டம் நடந்தது. அங்கு சுமார் 400 பெண்கள் வெளியே கூடி பிராக்கள், ஐ லேஷர்ஸ், ஹேர்ஸ்ப்ரே மற்றும் ஹை ஹீல்ஸ் செருப்புக்கள் என பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் பொருட்களை எல்லாம் ‘சுதந்திர குப்பைத் தொட்டியில்’ (Freedom Trash can ) இட்டனர். இது புகழ்பெற்ற “Burn the bra” இயக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. இது உலகெங்கிலும் இது குறித்த தலைப்புச் செய்திகளை உருவாக்கிய ஒரு நிகழ்வு.
1 of 4
“சுதந்திர குப்பைத் தொட்டி போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெண்களுக்கு சிவில் உரிமைகள் அல்லது வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கங்களில் முந்தைய அனுபவம் இருந்தபோதிலும், பெண்கள் உரிமைகளுக்காக அவர்கள் பங்கேற்ற முதல் போராட்டம் அது” என போராட்டத்தில் பங்கேற்ற மார்கேன் என்பவர் கூறுகிறார்.
அமெரிக்காவில் அழகு போட்டிபோட்டி பங்கேற்பாளர்கள் நல்ல உடல் தகுதி, உடல் அமைப்பு, வெள்ளை நிறம் போன்றவைகளை அத்தியாவசிய தேவைகள் காரணிகள் என வரையறைத்திருந்தது. வெள்ளை இனத்தின் அடுக்குமுறை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கைவிடப்பட்டிருந்தாலும், இந்த போட்டிகளில் வெள்ளை நிறத்தவர் அல்லாத வெற்றியாளர்கள் அதுவரை தேர்வு செய்யப்படவில்லை.
1921-ல் அழகிப் போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து, எந்தப் போட்டியிலும் ஒரு கருப்பின பெண் கூட இறுதிப் போட்டியாளராக இருந்தில்லை என்று அமெரிக்காவில் நடைபெற்ற “ஃப்ரீடம் ட்ராஷ் கேன்” போராட்டத்திற்கான செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
புவேர்ட்டோரிக்கன், அலாஸ்கன், ஹவாய், அமெரிக்க – மெக்சிகன், அமெரிக்க – இந்தியன் என வெள்ளை நிறத்தவரல்லாத எவரும் வெற்றியாளராக இருந்ததில்லை. அந்த அழகி போட்டிக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் சுட்டிக்காட்டிய 10 அம்சங்களில் இனவாதமும் ஒன்று. பெண்களின் எழுச்சியாக சுமார் 50 வருடம் கடந்து பேசப்படும் போராட்டமாக அமெரிக்காவில் தோன்றிய இப்போராட்டம் இருக்கிறது.
ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் மேலும் பல பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துவதும் தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அதை அணிய பிறரை நிர்பந்திப்பதும் இழிவானது.
கொடநாடு கொலை−கொள்ளை வழக்கு தற்போது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. ஊழல் ராணி ஜெயாவின் உல்லாச புரியாக இருந்த கொடநாடு எஸ்டேட்டில், அவர் மறைவுக்குப்பின் 2017−ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த கொலை−கொள்ளை சம்பவங்கள் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொன்றுவிட்டு, சில முக்கிய பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக ஊடகங்களில் அப்போது செய்திகள் வெளியாகின. கொள்ளைபோனது கரடி பொம்மையும், சில கைக்கடிகாரங்களும்தான் என இந்த வழக்கை முடிக்கப் பார்த்தது போலீசு.
அதே நேரத்தில், தேடப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமானவரான ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜ் கார் மோதி கொல்லப்படுகிறார். இன்னொரு குற்றவாளியான சயான் கேரளாவில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, அதேபோல கார் மோதி விபத்துக்குள்ளாகி சுயநினைவை இழக்கிறார். உடன்வந்த மனைவியும் இரு குழந்தைகளும் இறந்து விடுகின்றனர். மேலும், கொடநாடு பங்களாவின் கேமரா ஆப்பரேட்டராக இருந்தவரும் தற்கொலை செய்து கொள்கிறார். இப்படி சினிமா பாணியில் அடுத்தடுத்து திகிலூட்டும் மர்மமான சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. ‘‘இதெல்லாம் செய்வது ஜெயலலிதா ஆவியாக இருக்குமோ’’ என்ற பீதி கிளப்பிவிடப்பட்டு, சில சில்லறை பத்திரிக்கைகளுக்கும் யூ−டியூப் சானல்களுக்கும் அது கதைக்களமாக அமைந்தது.
ஆனால் சயானின் நினைவு மீண்ட பிறகு, அவரும் வாளையார் மனோஜும் தெஹல்கா பத்திரிக்கையின் ஆசிரியர் மேத்யூ சாமுவேலின் உதவியுடன் இந்த ‘மர்மங்களை’ ஊடகங்கள் முன் அம்பலப்படுத்தினர். ‘‘முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சில அ.தி.மு.க. அமைச்சர்களும் போட்டுக்கொடுத்த திட்டத்தின்படிதான் கனகராஜும் நாங்களும் கொள்ளையடிக்கச் சென்றோம். போலீசார் சொல்வதைப்போல வெறுமனே கரடி பொம்மையும் வாட்சும் மட்டும் திருடு போனாதாகச் சொன்னது பொய். ஜெயலலிதாவின் அறையில் வைத்திருந்த இரண்டாயிரம் கோடி ரூபாய் பணத்தையும், அங்கிருந்த பல்வேறு சொத்து ஆவணங்களையும் திருடி வருவதற்கான இலக்கோடுதான் கொள்ளை சம்பவம் நடந்தது’’ − என அனைத்தையும் புட்டுபுட்டு வைத்துவிட்டார்கள்.
பதறிப்போன எடப்பாடியோ, தனது பணபலத்தை வைத்து உச்ச நீதிமன்றம் வரை சென்று ‘‘எனக்கெதிராக போதிய ஆதாரமில்லாமல் அவதூறு சொல்கிறார்கள்’’ என்று சயானும் வாளையார் மனோஜும் ஊடகங்களில் பேசுவதற்குத் தடை உத்தரவு வாங்கினார். அதைத் தொடர்ந்து ஊற்றி மூடப்பட்ட வழக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர், ‘‘எங்களை மீண்டும் விசாரிக்க வேண்டும்’’ என சயானும் வாளையார் மனோஜும் கேட்டுக் கொண்டதையடுத்து தற்போது விசாரணைக்கு வந்திருக்கிறது. நீண்டகால இடைவேளைக்குப் பிறகு தமிழக மக்களிடையே கொடநாடு கொலை−கொள்ளைகள் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.
1991−ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது முதலாக ஜெயா−சசி கும்பல் தமிழகத்தையே சூறையாடிக் கொழுத்தது. தன்னுடைய முதல் ஆட்சிக் காலத்திலேயே (1991−96) தமிழகம் முழுக்க ஏகப்பட்ட பண்ணை நிலங்களையும், பங்களாக்களையும், தொழிற்சாலைகளையும் வாங்கிக் குவித்தது. இந்த ஆண்டுகளில் மட்டும் இக்கும்பலின் வருவாயைவிட செலவுக் கணக்கு பலமடங்கு கூடுதலாக இருந்த விவகாரம், விசாரணையின் மூலம் தெரிய வந்தது.
1996−இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, வண்ணத் தொலைக்காட்சி வழக்கில் போயஸ் கார்டனை சோதனையிட்ட இலஞ்ச ஒழிப்புத்துறையினர், அசையும் சொத்துக்களாக மட்டும் 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 ஜோடி காலணிகள், 10,500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் போன்றவற்றைக் கைப்பற்றிய விவகாரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த கொள்ளைகளையெல்லாம் ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் அமைந்தது 1995−ல் நடைபெற்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண நிகழ்ச்சி. 70,000 சதுர அடி பரப்பளவில் பந்தல், ஒரே சமயத்தில் 25,000 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவருந்தும் இடம், வெளியூர் விருந்தினர்கள் தங்குவதற்காக சென்னையில் மட்டும் ஹோட்டல்களில் 1,000 அறைகள், ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரி − என தடபுடலான ஏற்பாடுகள். ஊர்வல வண்டியில் ஜெயாவும் சசியும் உடல் முழுக்க தங்க நகைகள் தொங்க நின்றுகொண்டிருக்க, தேவாரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு கொடுத்தபடியே முன்னே சென்றனர். ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே இந்த திருமணத்திற்காக இறக்கிவிடப்பட்டது.
இவற்றுக்கு பிறகு, 2016 சட்டமன்றத் தேர்தலின்போது 570 கோடியுடன் பிடிபட்ட மூன்று கண்டெய்னர்கள் விவகாரமானது, கொள்ளைக்காரி ஜெயாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த சூறையாடலுக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்தது.
ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பி.யும், அமைச்சர்களும் தங்கள் தொகுதிக்கும் துறைக்கும் உட்பட்டு அடிக்கும் கொள்ளையில் குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷனை தனக்கு கப்பமாக கட்ட வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தி, ஊழலையே தொழில்முறையாக செய்தார் ஜெயா. அவர் கொள்ளையடித்த ஊழல் சொத்துக்களையெல்லாம் நிர்வகிக்கும் தலைமைச் செயலகமாக வைத்திருந்த இடம்தான் கொடநாடு எஸ்டேட் பங்களா.
ஜெயலலிதா மறைவுக்குப்பின், 2017−ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பின் அடிப்படையில் ஜெயா முதன்மை குற்றவாளியாகவும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியார் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களாகவும் உறுதி செய்யப்பட்டு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியதாயிற்று.
இந்த சூழலில், இனி நம்மைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை என்று தெரிந்த அ.தி.மு.க. கொள்ளையர்கள், தங்களிடமிருந்து ஜெயா பிடுங்கிவைத்துக் கொண்ட சொத்துப் பத்திரங்களை மீட்கவும், ஜெயாவின் கருவூலத்தைக் கொள்ளையடிக்கவும் நிகழ்த்திய சம்பவம்தான் கொடநாடு கொள்ளை.
தற்போது ஊடகங்கள் பேசுபொருளாக்கும் கொடநாடு விஷயம், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சர்கள் நடத்திய கொள்ளை என்ற கிளைக்கதையைப் பற்றித்தான். மாறாக, மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து சேர்த்த ஜெயாவின் கொடநாடு எஸ்டேட் சொத்துக்களை அரசே பறிமுதல் செய்ய வேண்டும் என்ற மையப்பொருள் குறித்து அவை பேசுவதில்லை. அவர்களது வணிக நோக்கத்திற்கு தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்குமிடையே நடக்கும் முட்டல் – மோதல்களைக் காட்சிப்படுத்தி பரபரப்பூட்டினாலே போதும் என்ற அடிப்படையில்தான் செய்திகளை வெளியிடுகின்றன.
கொடநாடு வழக்கை விசாரிக்கும் தி.மு.க.வின் நோக்கம் என்ன?
கொடநாடு வழக்கில் மறுவிசாரணை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்ததிலிருந்து எடப்பாடிக்கு உதறல் தாங்கவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை சட்டமன்றத்தில் கொடநாடு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருகிறார். கூட்டத்தில் இருந்த எடப்பாடி, ‘‘நீதிமன்றத்திலிருக்கும் வழக்கைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவது சட்ட விரோதம்’’ என்று அலறியவாறு தன் சகாக்களுடன் அவையை விட்டு வெளியே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார். ‘‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை என்பதை நிரூபித்துவிட்டு அவையை விட்டு வெளியேறியிருக்கிறார் எடப்பாடி’’ என்று ஏளனம் செய்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இவற்றை கவனிக்கும் நமக்கு, தி.மு.க. உண்மையிலேயே கொடநாடு குற்றவாளிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறது என்று தோன்றலாம். ஆனால், தி.மு.க.வின் நோக்கம் அதுவல்ல. தி.மு.க.அணுகும் முறை என்பது இத்தகைய மிரட்டல்களின் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதுதான்.
அரசுத் துறைகளில் டெண்டர் முறைகேடு, ஊழல், நிர்வாக சீர்கேடு − என கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குவதை தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்து அன்றாடம் நாம் செய்திகளில் பார்க்கிறோம். இந்த முறைகேடுகளால் அரசுக்கு இத்தனை கோடி நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதையும் பார்த்து வருகிறோம். முன்னாள் அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வேலுமணி, கே.சி.வீரமணி − என பல்வேறு பிரமுகர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். ஆனால், எந்த அ.தி.மு.க. அமைச்சர் மீதாவது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்களா என்றால், ஒருவரும் கிடையாது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க. அமைச்சர்கள் எந்தெந்தத் துறைகளிலெல்லாம் ஊழல் செய்தார்கள் என பட்டியல் தயாரித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி தமிழக ஆளுநரிடம் தி.மு.க. மனு கொடுத்தது. இப்போது தி.மு.க.தானே ஆட்சியதிகாரத்தில் இருக்கிறது. எத்தனை அமைச்சர்கள் மீது அந்த ஊழல் பட்டியலிலுள்ள ஆதாரத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தார்கள்?
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது அ.தி.மு.க.வில் இருந்த செந்தில் பாலாஜியை இலஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்க வைத்ததே தி.மு.க.வினர்தான். அதே செந்தில் பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்த பின்னர், அவர் உத்தமராகிவிட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது இலஞ்சம் வாங்கியதாக இருந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். இதுதான் தி.மு.க.வின் யோக்கியதை.
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையாக வென்றாலும், மேற்கு மண்டலங்களில் ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்களைப் பெற்று அ.தி.மு.க.தான் வெற்றியைக் குவித்தது. அப்பகுதியிலிருக்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள் தி.மு.க.விற்கு வந்தால் தி.மு.க.வின் செல்வாக்கு மண்டலம் விரிவடையும், கட்சி வலுப்படும் என தி.மு.க. கணக்கு போடுகிறது. அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இணைந்ததும் ‘‘ஈரோடு மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக்குவேன்’’ என சூளுரைத்ததை நாம் மறந்துவிட முடியாது. இதுதான் தி.மு.க.வின் நோக்கமே ஒழிய, உண்மையிலேயே கொடநாடு விவகாரம் உள்ளிட்ட எந்தவொரு ஊழல்−கொள்ளையிலும் அ.தி.மு.க.வினரை சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம் அல்ல.
கொடநாடு உள்ளிட்டு ஜெயா−சசி கும்பலின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்வோம்!
ஜெயா−சசி சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பில் முக்கியமான அம்சம் என்னவெனில், ஜெயா − சசியின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும் என்பதாகும். இத்தீர்ப்பு வழங்கப்பட்டு நான்காண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை இந்த கொள்ளை கும்பலின் எந்தவொரு சொத்தும் பறிமுதல் செய்யப்படவில்லை. இப்போது தி.மு.க. தானே ஆட்சியில் இருக்கிறது? ஏன் இச்சொத்துக்களைப் பறிமுதல் செய்யவில்லை?
போலீசார் அளவில் விசாரித்து முடிக்க வேண்டிய கொடநாடு கொலை−கொள்ளை வழக்கைப் பற்றி சட்டமன்றத்தில் விவாதப் பொருளாக்கும் தி.மு.க., தமிழக அரசு கொள்ளையடிக்கப்பட்ட அச்சொத்துக்களை பறிமுதல் செய்வது பற்றி பேச மறுப்பது ஏன்? தமிழ்நாடே திவால் என்று வெள்ளையறிக்கை வெளியிட்டு மக்கள் மீது வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்த எத்தனிக்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பலநூறு கோடி மதிப்புள்ள ஜெயா−சசி கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்து நெருக்கடியை தணிக்கலாமே !
ஓட்டு அரசியலில் எதிரெதிராக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இவ்விரு பிழைப்புவாதக் கட்சிகளும் ஊழலில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகிறார்கள் என்பதே உண்மை. அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை, நண்பர்களும் இல்லை என்று தமது பிழைப்புவாத – பொறுக்கி அரசியலுக்கு நியாயம் கற்பித்தவர்கள்தான் இவர்கள். ஏனெனில், நாளை புதிய செந்தில் பாலாஜிகளும் தோப்பு வெங்கடாச்சலங்களும் உருவாகலாமல்லவா?
தமிழக மக்களின் சொத்தைக் கொள்ளையடித்த ஜெயா−சசி கும்பலின் ஊழல் சொத்துக்களை தி.மு.க. அரசு பறிமுதல் செய்யாது; அது நம் சொத்து. உழைக்கும் மக்களாகிய நாம்தான் அதைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
தமிழகத்தையே சூறையாடி ஜெயா−சசி கும்பல் சொத்து சேர்த்த தொடக்க காலத்திலேயே, 1996−இல் ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ‘‘ஜெயா−சசி கும்பல் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்!’’ என்ற முழக்கத்தை முன்வைத்து, சசிகலாவிற்குச் சொந்தமான வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றி மக்களுடைமையாக்கும் போராட்டத்தை மேற்கொண்டன.
தமிழமெங்கும் அப்போராட்டம், மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்களை அணிதிரட்டி அத்தகைய போராட்டங்களைக் கட்டியெழுப்புவதுதான் நாம் இப்போது செய்யவேண்டிய பணி!
இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலையான உத்திரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மிகக் கொடூரமான முறையில் அரங்கேறி வருகின்றன. கடந்த 2020−ம் ஆண்டில் மட்டும் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தேசிய சராசரி அளவினைக் காட்டிலும் உ.பி.யில் அதிகம் நடைபெற்றதாக, தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
உ.பி.யின் மக்கள் தொகையில் 21 சதவீதமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 12,714 தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் இது 25.3 சதவிகிதமாகும். தேசிய அளவில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் (ஒரு லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களில்) 25.4 சதவிகிதமென்றால், உ.பி. மாநில அளவில் மட்டும் அது 30.7 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இது நான்கில் ஒரு பங்காகும்.
உ.பி−ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி/எஸ்.டி) எதிராக கடந்தாண்டு மட்டும் 10,138 குற்றங்கள் (இந்திய தண்டனைச் சட்டத்துக்கு (IPC) உட்பட்டவை) நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 45,959 குற்ற சம்பவங்களில் மொத்தம் 22.5 சதவிகிதமாகும். உ.பி.யின் 24.5 சதவிகிதமானது தேசிய அளவிலான 23.3 சதவிகிதத்தை விட அதிகம்.
எஸ்.சி/எஸ்.டி மக்களுக்கு எதிராக கடந்தாண்டு மட்டும் 2,576 குற்றங்கள் (IPC−க்கு உட்படாதவை) நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 4,232 குற்ற சம்பவங்களில் மொத்தம் 34 சதவிகிதமாகும். உ.பி.யின் 6.2 சதவிகிதமானது தேசிய அளவிலான 2.1 சதவிகிதத்தை விட மூன்று மடங்கு அதிகம்.
2020−ம் ஆண்டில், 214 தலித் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன, இது தேசியளவில் நடந்த 855 கொலை வழக்குகளில் 25 சதவிகிதமாகும். உ.பி.யின் 0.5 சதவிகிதமானது தேசிய அளவிலான 0.4 சதவிகிதத்தை விட அதிகம்.
எஸ்.சி/எஸ்.டி மக்கள் மீது கடந்தாண்டு மட்டும் 417 கடுமையான தாக்குதல்கள் (ஊனமாக்கப்பட்டோர்) நிகழ்ந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 1,587 குற்ற சம்பவங்களில் மொத்தம் 26 சதவிகிதமாகும். உ.பி.யின் 1.0 சதவிகிதமானது தேசிய அளவிலான 0.8 சதவிகிதத்தை விட அதிகம்.
தாழ்த்தப்பட்ட பெண்கள் கடத்தல் குற்றங்கள் கடந்தாண்டு மட்டும் 381 நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 853 குற்றங்களில் மொத்தம் 45 சதவிகிதமாகும். உ.பி.யின் 0.9 சதவிகிதமானது தேசிய அளவிலான 0.4 சதவிகிதத்தை விட இருமடங்கு அதிகம்.
கட்டாய திருமணத்திற்காக கடத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக 2020−ஆம் ஆண்டில் 269 குற்றங்கள் நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 394 குற்றங்களில் மொத்தம் 68 சதவிகிதமாகும். உ.பி.யின் 0.7 சதவிகிதமானது தேசியளவிலான 0.2 சதவிகிதத்தை விட மூன்று மடங்கு அதிகம்.
தாழ்த்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கடந்த ஆண்டு 604 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. இது, தேசியளவில் நடத்தபட்ட 3,368 வன்கொடுமைகளில் மொத்தம் 24 சதவிகிதமாகும். இது உ.பி.யில் 1.5 சதவிகிதமும் தேசிய அளவில் 1.7 சதவிகிதமும் பதிவாகியுள்ளது.
உ.பி.யில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு 324 கலவரங்கள் நடந்தப்பட்டன. இது தேசியளவில் நடத்தப்பட்ட 1,445 கலவரங்களில் 23 சதவிகிதமாகும். உ.பி.யின் 0.8 சதவிகிதமானது தேசிய அளவிலான 0.7 சதவிகிதத்தை விட அதிகம்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக 1,379 கொலை மிரட்டல்கள் (IPC பிரிவு 506) ஆதிக்க சாதியினரால் விடுக்கப்பட்டுள்ளன. இது தேசியளவிலான 3,786 மிரட்டல் வழக்குகளில் மொத்தம் 37 சதவிகிதமாகும். உ.பி.யின் 3.3 சதவிகிதமானது தேசிய அளவிலான 1.9 சதவிகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.
கடந்த ஆண்டு மட்டும் 1,642 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இதர தாக்குதல்கள் நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 2,312 தாக்குதல்களில் மொத்தம் 71 சதவிகிதமாகும். உ.பி.யின் 4.0 சதவிகிதமானது, தேசிய அளவிலான 1.2 சதவிகிதத்தை விட நான்கு மடங்கு அதிகம்.
தற்போது வெளியாகியிருக்கும் தேசிய குற்றவியல் அறிக்கையின் புள்ளி விவரங்கள், இந்துவெறி பாசிஸ்டுகள் ஆளும் உத்தரப்பிரதேச மாநிலமானது, தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடமாக மாறியுள்ளதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஆனால், இந்த விவரங்கள் கூட உ..பி. போலீசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டவைதான். இந்துவெறி கும்பலால் தாக்குதலுக்குள்ளான எண்ணற்ற தாழ்த்தப்பட்ட மக்கள் அச்சத்தால் புகார் அளிக்காமல் இருப்பதும், புகாரைப் பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசின் நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால், இவையெல்லாம் அற்பமானவை என்பதையும், தேசிய குற்றவியல் அறிக்கை உண்மை நிலையை வெளிக்கொணரவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
சர்வதேச அளவில் வெள்ளைத் தங்கம் என அழைக்கும் அளவிற்கு உப்பு ஓர் முக்கியமான வர்த்தகப்பொருள். உலக அளவில் அதிக உப்பு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக, உள்நாட்டில் குஜராத்திற்கு அடுத்து தமிழகம் தான் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்ற சொல்லாடல் நமது வாழ்வில் உப்பின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது. அவ்வளவு முக்கியமான உப்பு கடலில் இருந்து பூத்துக் குவிவதில்லை. கடல்நீரை பக்குவமாக பாத்திகளில் அமைத்து உப்பு பூக்கச் செய்யும் கடினமான பணியில், பல நூறு தொழிலாளர்களின் உயிரை உருக்கியே உருவாக்கப்படுகிறது.
இந்த உப்பளத் தொழிலாளர்கள் இன்னும் கூலி உயர்வுக்காகவும், பணி நிரந்தர கோரிக்கைக்காகவும் போராடி வருகின்றனர். அவர்களின் உடல்நலம் பற்றி கவலைக் கொள்ளாத அரசு, உப்பளத் தொழிலை தரகு முதலாளிகள் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து கொள்கை லாபம் ஈட்டச் செய்கிறது.
தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்களின் மீதான உழைப்புச் சுரண்டல், அவர்களது உடல்நல பாதிப்புகள், வாழ்நிலைமை, கொடும் வறுமை உள்ளிட்ட நம் உப்பிற்காக உறிந்தெடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகிறது “உப்பிட்டவரை…” – ம.க.இ.க-வின் ஆவணப்படம்.
பாருங்கள்! பகிருங்கள்!
உழைக்கும் மக்களின் துயரங்களை கலை வடிவில் கொண்டு வரும்
மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கு ஆதரவு தாரீர் !
கலை இலக்கியம் ஆர்வமுள்ளவர்கள் ம.க.இ.க-விற்கு தோள்கொடுக்க தொடர்பு கொள்ளுங்கள்!
இணைவீர் ம.க.இ.க || தொடர்புக்கு : 97916 53200
இதுபோன்ற ஆவணப் படங்களை தொடர்ந்து படைத்திட நன்கொடை தாரீர் !
வங்கி விவரம் :
Name: R MUTHIAIAH Bank Name : Canara Bank A/C.No: 1598101018208 Ifsc code: CNRB0001598 Branch Location : Pudur, Madurai Account Type : Savings
Mobile – (91) 97916 53200
Email – vinavu@gmail.com
ஆவணப்படம் தயாரிப்பு, ஆக்கம் : மக்கள் கலை இலக்கியக் கழகம்
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
தமிழ்நாடு – புதுவை.
தமிழ் மொழியுணர்ச்சியும் பிரதேசப் பற்றும் தமிழிலக்கியத்தில் எவ்வாறு உருவாகியுள்ளன என்று டாக்டர் தனிநாயக அடிகள் ‘தமிழ் கல்ச்சர்’ ஜனவரி-1 மார்ச்சு இதழில் ஆராய்ந்துள்ளார்கள். அக்கட்டுரையில் கடந்த 60 ஆண்டுகளில் இவ்வுணர்ச்சி வளர்ந்து வந்த வரலாற்றை விவரித்துள்ளார்.
“தமிழுணர்வும், தமிழ் நாட்டுப் பற்றும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர் காலத்திலிருந்து இன்றுவரை ஆழ்ந்து பரந்து வளர்ச்சி பெற்றுள்ளன. இதன் அடிப்படை வடமொழி ஆதிக்கம், வடமொழி தென் மொழிகளுக்கு உயர்ந்தது என்ற பிரசாரம் இவற்றின் எதிருணர்வேயாகும்.
இந்திய நாட்டுப் பற்றையும் ஒருமையுணர்வையும் தேசிய உணர்வு பரப்பியது. அதன் விளைவினால் தமிழ் நாட்டில் தமிழ் நாட்டுப் பற்றுக்கும் இந்திய நாட்டுப் பற்றுக்கும் முரண்பாடு எழுந்தது. இதன் குரல்களாக தேசீய இயக்கக் கவிகளான பாரதியும், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையும் ஒலித்தார்கள். உரை நடையில் இம்முரண் பாட்டைத் திரு.வி.க. வின் கட்டுரையில் காணலாம். சேதுப்பிள்ளை அவர்கள் இந்திய நாட்டின் கலாசார ஒருமையைப் பல கட்டுரைகளில் விளக்கியுள்ளார்கள்.
இராமலிங்க பிள்ளையும் சேதுப்பிள்ளையும், இந்தியால் தமிழுக்கு அழிவு நேராது என்று கருதுகின்றனர். தமிழின் உரமும் வலிமையும். எம்மொழித் தாக்குதலையும் எதிர்த்து நிற்க வல்லதென அவர்கள் கருதுகிறார்கள்.
தற்காலக் கவி பரம்பரை தி.மு.க. வினுடையது. பாரதிதாசன் அதன் மூலவர். கண்ண தாசனும், முடியரசனும் அவர் வழித் தோன்றல்கள். திராவிடநாடு என்னும் பிரதேச உணர்வை வளர்க்க முயலும் அவர்கள் தமிழுணர்வில் நின்றுதான் தங்கள் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். அவர்களது தமிழுணர்வு ஆழ்ந்தது. இதில் முரண்பாடு காணப்பட்டாலும் அவர்கள் தமிழுணர்வை ஒழிக்க முடியாது.”
தமிழுணர்வும், பிரதேச உணர்வும் வளர்ந்த வரலாற்றைப் பற்றித் தனிநாயக அடிகளின் முடிவுகள் இவை.
இவ்வுணர்வின் வளர்ச்சியை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இவ்வுணர்ச்சியின் தோற்றம் முதல் இன்றுவரை அதன் வரலாற்றைச் சுருக்கமாக அறிந்து கொள்ளுதல் அவசியம்.
சரித்திர காலத்தில் தமிழ்நாடு நான்கு வகை நிலங்களாக இயற்கையாகவே பிரிந்திருந்தது. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன. குறிஞ்சி மக்கள் வேட்டுவ வாழ்க்கை மூலமாகவும், முல்லைநில மக்கள் மாடு வளர்ப்பதின் மூலமாகவும், மருத நில மக்கள் உழவுப் பயன் மூலமாகவும், நெய்தல் நில மக்கள் மீன் பிடித்தல், உப்புக் காய்ச்சுதல் முதலிய தொழில்களின் மூலமாகவும், உணவும், உடையும், உறையுளும் பெற்று வாழ்ந்தனர்.
உழவுப் பயன் அதிகமாக அதிகமாக, மற்ற நிலப்பகுதிகளுக்குப் பண்டமாற்று வாணிபம் பரவிற்று. தமிழ் நிலப் பாகுபாடுகள் மறையத் தொடங்கின. இந்நிலையைத்தான் பத்துப் பாட்டும், புற நானூறும் சித்திரிக்கின்றன.
ஒவ்வொரு நிலப் பகுதியிலும் தோன்றிய கலைகள் நான்கு நிலப் பகுதிகளிலும் பரவின. இதனைப் பரப்பியவர்கள், பண்டைப் பாணர்களும், பொருநரும், விறலியரும் கூத்தரும், கூத்தியரும் ஆவார்கள். அவர்கள் நானிலங்களிலும் தோன்றி வளர்ந்த கலைகளைத் தமிழ்நாடு முழுவதும் பரப்பினர். கலை மரபுகளை அவர்கள் ஒருமுகப்படுத்தினர். இக்காலத்தில் தமிழகம் ஒன்றுபட்ட மரபின் நூற்றுக்கணக்கான குறுநில மன்னரும், முடியுடை மன்னர் மூவரும் சிறு சிறு நிலப் பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர். பண்ட மாற்றும் கலைப் பரிவர்த்தனையும் தமிழகத்தில் ஒற்றுமையுணர்வைத் தோற்றுவித்தன.
இக்கூற்றுக்குச் சில சான்றுகள் காட்டுவோம்.
1. பட்டங்கொற்றன் என்னும் குறுநில மன்னனது வள்ளன்மையை கருவூர் ககதப்பிள்ளை சாத்தனார் பாடுகிறார். அவன் குதிரை மலையின் சிறு குறவர் குடியொன்றின் தலைவன். அவனது ஆதிக்கவரம்பு மிகக் குறுகியதாயினும் அவனது புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. ஏனெனில் அவனிடம் பரிசில் பெற்ற புலவர் அவனது புகழைத் தமிழகம் முழுவதும் பரப்பிவிட்டார்கள். இதனைப் புலவர் பின் வருமாறு கூறுகிறார் :
‘ஊரார்க் குதிரைக் கிழவ, கூர் வேல்
நறை நார்த் தொடுத்த வேல்கையங் கண்ணி
வடி நவிலம்பின் வில்லோர் பெரும்,
கை வள்ளிகைக் கடுமான் கொற்ற,
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்தி,
பாடுப வென்ப பரிசிலர் நாளும்,
ஈயா மன்னர் நாண,
ஈயாது பரந்த நின் வசையில் வான் புகழே’
(புறம். 168)
2. இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பதிற்றுப் பத்து இரண்டாம் பத்தில் போற்றிப்பாடியுள்ளார். அவன் முடியுடை மன்னர் மூவரில் ஒருவனேயாயினும், அவன் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்தது என்று புலவர் கூறுகிறார்.
‘அமைவரல் வேலி இமயம் விற்பொறித்து
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன் கோல் நிற்க இ’
(பதிற்றுப் பத்துப் பதிகம்)
3. மதுரை நகரின் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்ததென பரிபாடல் (திரட்டு 9) கூறுகிறது.
தண் தமிழ் வேலித் தமிழ் நாட்டகம் எல்லாம்
நின்று நிலை இப்புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை-கொடித்தேரான்
குன்றம் உண்டாகும் அளவு?
மொழி, கலை, பண்பாடு இவற்றால் ஒன்றுபட்டு வந்த தமிழகம் ஆட்சிமுறையால் பிரிவுபட்டு நின்றது. அதுமட்டுமல்ல. சேரர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் இடையேயும், சேரருக்கும் பாண்டிய சோழர்களுக்கும் இடையேயும், இடைவிடாமற் போர்கள் நிகழ்ந்து வந்தன. ஆயினும் தமிழுணர்வும், தமிழக உணர்வும் நிலை பெற்றிருந்தன. மூவரசுகள் ஒன்றுபட்ட பொழுதெல்லாம் புலவர்கள் மன்னர்களின் ஒற்றுமையைத் தமிழக ஒற்றுமையாகப் போற்றி வரவேற்றனர்.
இவை யாவும் கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைக் குறிப்பிடுவன.
கி.பி. முதல் நூற்றாண்டு முதல் 4-ம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் சிற்றரசுகள் அழிந்தன. மூவரசுகளும் வலிமை பெற்றன. பெரிய அணைகள் கட்டப்பட்டன. தானிய விளைச்சல் மிகுதியாயிற்று. ஆற்றங்கரையோரங்களில் மக்கள் கூடினர். நகரங்கள் தோன்றின. வாணிபம் வளர்ச்சியுற்றது. முதல் நூற்றாண்டு முதலே அந்நிய நாட்டு வாணிபம் தொடங்கி வளர்ந்தது. இந்நிலையைப் பட்டினப் பாலையில் காணலாம். அதற்கும் மேலாக சிலப்பதிகாரத்தில் காணலாம்.
அக்காலத்தில் வணிக வர்க்கம் பெருஞ் செல்வாக்குப் பெற்றது மூவரசர்களது நாடுகளிலும் அதற்கு வெளியிலும், கடல் கடந்த கீழ் நாடுகளிலும் அவர்களது வியாபாரம் பெருகியது. மூவரசு நிலங்களிலும் தங்குதடையற்ற வாணிபம் செய்ய ஒன்றுபட்ட தமிழ்நாடு வேண்டுமென வணிகர்கள் விரும்பினர். வாணிபத்துக்கு இடையூறான பாண்டியன் ஆட்சியைக் கண்ணகி அழித்தாள். அக்காலம் தமிழுணர்வும், தமிழ்ப் பிரசேத உணர்வும் மிகத் தெளிவாகத் தோன்றின.
இவ்வுணர்வைச் சிலப்பதிகாரம் பலவகையில் புலப்படுத்துகிறது. கதையில் மூன்று காண்டங்களும் முடியரசர் மூவருடைய தலை நகரங்களில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. புகார்க் காண்டம் சோழ நாட்டில் நடைபெறும் கதையையும் மதுரை காண்டம் பாண்டிய நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், வஞ்சிக் காண்டம் சேர நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் விவரிக்கின்றன. ஒவ்வொரு காண்டமும் அந்தந்த நாட்டின் கலை வளர்ச்சியையும் பண்பாட்டையும் புலப்படுத்துகின்றன. வாழ்த்துக் காதையில் மூன்று மன்னர்களும் வாழ்த்தப் பெறுகிறார்கள்.
‘எல்லா நாம்’
காவிரி நாடனைப் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்’
ஒவ்வோர் காண்ட முடிவுக் கட்டுரையிலும், முறையே சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவரும் போற்றிப் பாடப்பட்டுள்ளனர்.
இனி நூல்கட்டுரையில், தமிழ்நாடு முழுவதற்கும் பொதுவான ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் மலையைக் கண்ணாடியிற் காட்டுவது போல இந்நூல் காட்டுகிறதென இளங்கோவடிகள் கூறுகிறார். தமிழ் நாட்டை ஒரு நாடாகக் குறிப்பிடும் அடிகள் வருமாறு:
இனி, 7- ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் இப்பிணைப்பு இறுகி வந்ததென்றே சொல்லலாம். ஆழ்வார், நாயன்மார்களது பக்திப்பாடல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவின. தமிழிசை வளமடைந்தது. கடவுளைத் தமிழாசானாக சமயக் குரவர்கள் பாடினர். பக்திப்பாடல்களில் தமிழுணர்வும் கலந்தன. பக்தி வெள்ளத்தோடு தமிழுணர்வும் வெள்ளமாகப் பாய்ந்தது. இக்கால முடிவில் கம்பன் தோன்றினான். வால்மீகியின் காவியத்தைத் தமிழ்க் காவியமாக்கினான். அவனும் தமிழுணர்வை வளர்த்தான். நாட்டுப் பற்றையும் வளர்த்தான். இராமனைத் ‘தென்மொழி கடந்தான். வடமொழிக் கெல்லை தீர்ந்தான்’ என்று அழைக்கிறான். ‘தமிழெனும் அளப்பரும் சலதி’ என்று தமிழைக் கடக்கமுடியாத கடலுக்கு ஒப்பிடுகிறான். தமிழ் நாட்டிற்கு தேவர் நாடு ஒப்பாகாது என்று காரணத்தோடு கூறுகிறான்.
‘அத்திருத்தகு நாட்டினை அண்டர் நாடு
ஒத்திருக்கு மென்றால் அது ஒக்குமோ
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்?’
கம்பனையடுத்துள்ள பிரபந்த காலத்திலும் தேவர்களையும், மன்னரையும் பாடிய கவிகள் தமிழுணர்வை மறக்கவில்லை. வேதங்கள் முறையிட தமிழின் பின் சென்றவன் திருமால் என்று குமரகுருபரர் கூறுகிறார்.
‘அருமறைகள் முறைவிட
பைந் தமிழ்ப் பின் சென்ற
பச்சைப் பசுங் கொண்டலே.’
நாயக்கர்கள் காலம் தொடங்கி அவர்கள் காலம் முடியும் வரை, சிறு பிரபந்தங்களில் தமிழுணர்வு மங்காமல் நிலவுவதைக் காண்கிறோம்.
பள்ளுப் பாடல்களும், குறவஞ்சிகளும், இக்காலக்கவிஞர்கள் படைப்புகளே. ஆங்கில ஆட்சிக் காலமே தமிழுணர்வு மங்கிய காலம். ஏன்? அடிமைக்கு மொழிப்பற்று ஏது? ஆங்கில மொழியும், பண்பாடும் மனிதப் போலிகளைப் படைத்தது. நாட்டிலேயே அயல் நாட்டு ஆன்மாவுடன் நடமாடிய மனிதரைச் சிருஷ்டித்தது. இதனால் இலக்கிய ஊற்று உள்கரந்தது. பண்பாடு உறங்கிப் போயிற்று.
விடுதலை நாதம் நாட்டில் பரவத் தொடங்கியது. நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு அன்னியர் ஆட்சி தடையென விடுதலை இயக்கத் தலைவர்கள் முழங்கினர். நாட்டுப் பற்று விழித்தெழுந்தது. புதியதோர் ஒற்றுமை தோன்றியது. ஆங்கில ஆட்சி வலிமையால் இணைத்துப் பிணைத்திருந்த இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் விடுதலையடைய அவர்களை எதிர்த்துப் போராட ஒன்று பட்டனர்.
பாவேந்தன் பாரதிதாசன்.
அவர்கள் பலாத்காரத்தால் இணைத்து வைத்திருந்த பொருளாதார வாழ்வு சிதறியது. மக்களுடைய ஒற்றுமையால் அந்நியச் சுரண்டல் நீங்கி முன்னேற மக்கள் ஆர்வம் கொண்டனர். இந்த ஆர்வம் மொழி மீதும் பண்பாட்டின் மீதும், பிரதேசத்தின் மீதும் தோன்றி, இவற்றைப் பாதுகாக்கவும், வளம் பெறச் செய்யவும், இதே நோக்குடைய பல பகுதியினரோடு ஒன்றுபட்டுப் போராடத் தூண்டியது. விடுதலை இயக்கத்தோடுதான் பண்பாட்டு ஆர்வமும், மொழி மறுமலர்ச்சியும் தோன்றின.
இம்மறுமலர்ச்சியின் குரல் பாரதி. அவனுடைய வழி வந்தோர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, திரு.வி.க. முதலியோர்.
ஒருகால கட்டத்தில் பாரதிதாசனும், பாரதி வழியில் நின்றார். நாட்டு விடுதலையில்லாமல், மொழி மறுமலர்ச்சியும், பண்பாட்டு மலர்ச்சியும் இல்லை.
நாட்டுக்கு, விடுதலைக்கு அவரவர் பண்பாட்டுப் பெருமையையும், இவை யாவிலும் ஒன்றி நிற்கும் இந்தியப் பண்பாட்டின் ஒருமையையும் உணர்தல் அவசியம் எனப் பாரதி கண்டார்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’
‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே,
இதைத் தொழுது படித்திடடி பாப்பா’
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.’
என்று தமிழுணர்வூட்டும் பாரதி இந்திய ஒருமைக்கு அது விரோதமல்ல என்றும் பாடுறார்.
‘முப்பது கோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்’
செப்பு மொழி பதினெட்டுடையாள்,
எனிற் சிந்தனை ஒன்றுடையாள்.’
இவையனைத்தையும் சுட்டிக்காட்டி இந்திய நாட்டுப்பற்றுடைய கவிகளுக்கு தமிழ் மொழி உணர்வு முரண்பட்டதோர் உணர்ச்சி யென்றும், இவையிரண்டிற்கும் பாலம் அமைக்க அவர்கள் முயலுவதாகவும் தனிநாயக அடிகள் கூறுகிறார்.
புதிய மறுமலர்ச்சி சுந்தரம் பிள்ளையின் தமிழ் வாழ்த்துப் பாடல் தோன்றிய காலத்திலிருந்து துவங்குவதாக அடிகள் கூறுகிறார். ‘கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய தென்னிந்திய மொழிகளுக்குத் தமிழ்தான் தாய். இத்தனை மொழிகளைப் பெற்றெடுத்தும், தமிழ் ஆரியம் போல் முதுமையடைந்து அழிந்தொழிந்து போகாமல் இளமையோடு நிலவுகிறது. இத்திறத்தை எண்ணித் தமிழை வாழ்த்துவோம்’ என்பது அப்பாடலின் கருத்து.
தமிழ் பிறமொழிகளிலும் சிறந்தது. பிற மொழிகளை இகழ்ந்து நமது மொழியைப் போற்றுவோம் என்ற தனிமையுணர்வையும், பிரிவினை யுணர்வே தமிழுணர்ச்சிக்கும், நாட்டுப் பற்றுக்கும் அவசியம் என்பது சுந்தரம் பிள்ளையின் கருத்து. மேலும், எல்லாப் பகுதி மக்களும், ஒன்றுபடும் முயற்சி துவங்கிய காலத்தில் இக்கருத்து தமிழரைத் தனிமைப்படுத்த உதவும் கருத்து.
‘வடமொழி உயர்ந்தது. அதனிடம் கடன் வாங்கியே தமிழ் பிழைக்கிறது.’ என்று பேசிய பிராமணர்களின் கருத்துக்கு இது எதிர்த் தாக்குதல் என்று கட்டுரையாசிரியர் கூறுகிறார். அது வடமொழி வெறியென்றால் சுந்தரம் பிள்ளையின் கருத்து தமிழ் வெறியாகாதா? ஓரு வெறியை மற்றொரு வெறியால் அடக்க முடியுமா? சிவன் உயர்ந்தவன், திருமால் உயர்ந்தவன் என்ற சண்டை தமிழ்நாட்டில் யாருக்காவது வெற்றியில் முடிந்ததா? சமரசவாதியான கம்பன்,
‘அரனதிகன், உலகளந்த அரியதிகன்
என்றுரைக்கும் அறிவிலார்.’
என்று தீர்ப்பு வழங்கினான்.
இக்காரணம் கூறி தமிழ் வெறியை நியாயம் என்று கூற முடியாது. இக்கருத்துக்களின் வளர்ச்சியை மறைமலையடிகளின் எழுத்துக்களில் காண்கிறோம்.
அவரைப் பற்றி தனிநாயக அடிகள் கூறுவதாவது: ‘மறைமலையடிகள் இந்திய விடுதலையின் மீது மோகம் கொண்டவரல்ல. மேல் சாதியினர் கீழ் சாதியினரை அடக்கி ஒடுக்குவதை அனுமதிக்கும் சுதேச அரசாங்கத்தைப் பார்க்கிலும், பிரிட்டிஷ் அரசாங்கம் நீதியாகவும், நேர்மையாகவும் ஆட்சி நடத்தும் என்று அவர் கருதினார். ஓய்வு பெற்று தனித்து வாழ்ந்த அறிவாளியாதலால், அவர் அரசியல் இயக்கங்களின் சுழலில் சிக்காமல் வாழ்ந்தார்.
இந்திய விடுதலை தேவையில்லை; வெள்ளைக்காரன் நியாயமானவன்; பிராமணன் மோசமானவன். நம் நாட்டவன் ஆட்சி வேண்டாம், என்று கருதிய மறைமலை அடிகளுக்குத் தமிழர் வாழ்வு பற்றி ஒரே ஒரு எண்ணம் தான் இருந்தது. அது வடமொழியிலிருந்து தமிழைப் பாதுகாப்பது.
பிராமணரிடமிருந்து தமிழைப் பாதுகாப்பது ஆங்கில மொழியாதிக்கத்தால் தமிழ் அழிவதைக் காணாத கண்கள் வடமொழிப் பூதத்தைக் கண்டன. பூதம் என்பது மனப்பிராந்திதானே? இல்லாத பூதத்தைக் கொல்ல அவர் வாளைச் சுழற்றினார். இதுதான் அவரது தமிழுணர்வு, இந்திய விடுதலை தேவையில்லை என்று எண்ணியவருக்கு இந்திய ஒருமையைப் பற்றி என்ன கவலை இருக்க முடியும்? தமிழ் வெறிக்கும், இந்திய விடுதலையார்வத்திற்கும் ஒட்டும் உறவும் ஏது? எனவே முரண்பாடில்லாத தமிழுணர்வு என்று தனிநாயக அடிகள் அழைப்பது பிற மொழிகளைப் பழிப்பது; பிறமொழி பேசுவோரைப் பழித்து, தமிழின் உயர்வை நிலைநாட்டுவது தான் என்று தோன்றுகிறது.
இனி தனிநாயக அடிகள் திராவிட இயக்கத்தினரின் தமிழுணர்வைப் போற்றிக் கூறுகிறார். அவருடைய கருத்தை அவர்களது சொற்களாலேயே கூறுவோம்.
‘தமிழ் நாட்டிற்கும், திராவிடஸ்தான் கருத்திற்கும் விசுவாசமுடைய முரண்பாட்டை நாம் ஒரு குறிப்பிட்ட கவிஞர் வரிசையில் காண்கிறோம். இந்திய நாட்டின் மீது விசுவாசம் இருத்தல் வேண்டுமென அவர்கள் சொல்லுவதில்லை. ஐக்கிய உலகத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இது பழந்தமிழரது கருத்துத்தான். இந்த வரிசையில் இருப்பவர் பாரதிதாசன். கண்ணதாசனும், முடியரசனும் அவரது வழித் தோன்றல்கள்.’
இதுமட்டுமல்ல; திராவிடஸ்தானுக்குப் பாரதிதாசன் எல்லைகூறி அதற்கப்பால் ஒரு காலத்தில் கடல்தான் இருந்தது என்று கூறுகிறார். பிற்காலத்தில் தோன்றிய ஆரிய நாட்டிற்கு எதிராக, அதனைச் சிறுமைப்படுத்தத் திராவிடத்தின் தொன்மையை நிலைநாட்ட பாரதிதாசன், முயலுகிறார்:
அடேடே, வடபெருங்குன்றமே இல்லை,
அவ்விடம் நீர்ப்பரப்பு – ஆழ்கடல் உள்ளதே,
அப்பெருங்கட அலை, அழகிய விந்தியல்
வெற்பின் வடபுறத்து விளையாடினவே!
மேற்கு- அரபிக் கடல் கிழக்கு வங்கக் கடல்
இல்லை, என்ன வியப்பிது?
தமிழுணர்வுக்கும் திராவிடஸ்தான் கருத்துக்கும் முரண்பாடு இருந்தபோதிலும் பாரதிதாசன் போன்றோரின் எழுத்துக்களில் ஆழ்ந்த தமிழுணர்வு இருக்கிறது என்று தனிநாயக அடிகள் எழுதுகிறார்.
‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்றும் ‘தமிழெங்கள் உயிருக்கு நேர்’ என்றும் பாடிய பாரதிதாசன் கவிதையில் தமிழுணர்வு இருக்கிறது. ஆனால் பிற மொழிகளை வெறுப்பதையும், பிற மக்களை இழிவுபடுத்துவதையும், தமிழின் உயர்வுக்கு ஆதாரமாக்கும் போது அவரது எழுத்துக்கள் தமிழ் வெறியாகத் தாழ்ந்துவிடுகின்றன.
‘ஆரியன் அல்லேன் எனும் போதில்
எத்தனை மகிழ்ச்சி, எத்தனை மகிழ்ச்சி!’
‘அயல் என்று கொட்டுக முரசே, உறவான
திராவிடர் அல்லார்.’
‘பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைசுருட்டும்
எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே.’
(பாரதி தாசன் கவிதைகள்)
முரண்பாடற்ற தமிழுணர்வு என்று தனிநாயக அடிகள் சுட்டிக் காட்டுவது சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகளின் எழுத்துக்களை, அவற்றில் சுதந்தர ஆர்வம் இல்லை. பிற மொழி வெறுப்பு உண்டு.
முரண்பாடுள்ள தமிழுணர்வு என்று அவர் காட்டுவது தேசியக் கவிகளின் படைப்புக்களையும், பாரதிதாசன் முதலிய திராவிட இயக்கத்தாரின் பாடல்களையும், இவற்றுள் தேசியக் கவிகள் தேசிய உணர்விற்கும். மொழியுணர்விற்கும் பாலம் அமைக்க முயுலுகிறார்கள் என்று அவர் சொல்லுகிறார். வெற்றி பெற்றதாகச் சொல்லவில்லை திராவிட இயக்கத்தினரின் பாடல்களில், திராவிடஸ்தான் பற்றுக்கும், தமிழுணர்வுக்கும் முரண்பாடு இருக்கிறது என்றாலும் அவர்களது தமிழுணர்வு ஒதுக்கிவிடக் கூடியதல்ல என்று தனிநாயக அடிகள் சொல்லுகிறார்.
ஆங்கில ஆட்சி ஓர் ஸ்தூலமான உண்மை . அதனை எதிர்த்து எழுந்த தேசிய உணர்வு மறைத்தற்கரிய உண்மை.
அதனோடு மறுமலர்ச்சியுற்றது மொழியுணர்ச்சி. இது தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி வழிப் பிரிவுகளுக்கும் பொருந்தும். இவை இரண்டிற்கும் முரண்பாடு எதுவுமில்லை. பாரதியே இவ்விரண்டு உணர்ச்சிகளின் ஒற்றுமைக்குத் தமிழ் நாட்டில் இலக்கிய வழிகாட்டி.
திராவிடஸ்தான், அடிகள் கூறுவது போல ஒரு கருத்துத்தான் (Concept). அது ஸ்தூலமான உண்மையல்ல. அதன் அடிப்படை ஆங்கில ஆட்சியின் எதிர்ப்பல்ல, நாட்டின் விடுதலைப் பற்றுமல்ல. தமிழுணர்ச்சி அக்கருத்தை வலிவுபடுத்துவதாகாது. ஏனெனில் கற்பனைத் திராவிடத்திற்கு எந்த மொழியும் அடிப்படையாகாது. அதுவும் தமிழ்வெறி, தெலுங்கையும், கன்னடத்தையும், மலையாளத்தையும் எவ்வாறு உறவாக்க உதவும்? இது தான் தீர்க்க முடியாத முரண்பாடு. பிரிவினை இயக்கத்தாரின் தமிழுணர்வு தமிழ் மரபின் வழிவந்ததல்ல.
ஏனெனில் தமிழனது பண்பாடு எல்லோருடனும் உறவுகொண்டு வளர்ந்தது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவினர்)’ என்று பாடியவன் சங்ககாலத் தமிழ்ப் புலவன்.
பல மொழிகள் பேசும் மக்களோடு தொடர்பு கொண்டு வாழ்ந்தவன் தமிழன். கிரேக்கர், ஆரியர், துருக்கர், தெலிங்கர், கன்னடர். மராட்டியர், மலையாளி முதலிய பல இனத்தவரின் பண்பாடுகளின் இணைப்பைத் தமிழ்ப் பண்பாடு பெற்றுள்ளது. நமது பண்பாட்டின் பல அம்சங்கள் இந்திய நாடு முழுவதும் பரவியுள்ளன.
காஷ்மீரத்தில் சைவத்தைப் பரப்ப திருநெல்வேலி சிவாச்சாரியார்கள் சென்றிருக்கின்றனர்.
ஆழ்வார்களது பாடல்கள் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு பாடப்படுகின்றன. வங்கத்து வைஷ்ணவர்கள் இராமானுஜரது பாஷ்யத்தைப் போற்றுகிறார்கள்.
ரிக் வேதத்தில் 500 தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று டாக்டர் கமில் ஸ்வலபில் கூறுகிறார்.
தமிழ் நாட்டுக் கோவில் அமைப்பில் கோபுரங்கள் சாளுக்கிய சிற்பக் கலையிலிருந்து தோன்றியவை. பூவினாலும் புகையினாலும் பூசை செய்யும் முறை தமிழ் நாட்டிலிருந்து வடநாட்டிற்குப் பரவியது.
மதுரையிலும், காஞ்சியிலும் படித்துப் புகழ் பெற்ற பௌத்த பிக்ஷுக்கள் நாளந்தாவிலும், பாடலிபுரத்திலும், ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.
இவ்வாறு இணைப்புப் பெற்ற இந்தியப் பண்பாட்டில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்பதில்லை. நாம் கலைச் செல்வங்களை வழங்கியுமிருக்கிறோம். உடன் பிறந்தாரர்களிடம் கலைச் செல்வத்தைப் பெற்றும் இருக்கிறோம்.
தமிழ் உணர்வு, தமிழ் பண்பாட்டு ஆர்வம் தமிழ் நாட்டுப் பற்று இவை தேசிய உணர்விற்கு முரண்பட்டன அல்ல. ஆனால் தமிழ் வெறி, தமிழர் மற்ற இனத்தாரினும் எல்லாவகையிலும் சிறந்தவர் Regional Chavinism என்ற கருத்து, தேசிய ஒற்றுமைக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் நேர் முரணானது.
உப்பு – நம் வாழ்வில் தவிர்க்கமுடியாதது.. சுயமரியாதையின் அடையாளமாகக் காட்டப்படும் உணவுப் பொருள் உப்பு. அந்த உப்பு எடுக்கும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது ? அவர்களின் வலிகள்தான் நமது உணவின் ருசியாகின்றது.
உப்பளத்தின் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி வெளிவருகிறது உப்பிட்டவரை … ஆவணப்படம்.
உப்பு சுமக்க வந்தோம் – வலிகளை சுமந்து நின்னோம்..
உப்பு கரிப்பது போல் .. எங்க வாழ்க்கை கரிக்கக் கண்டோம்..
அம்பரமா உப்பு குவிச்சோம், அந்த வானம் தொடும் வரைக்கும்..
405 கூலி கிடைக்கும், காஞ்ச வயிறு ஒட்டி நிக்கும்..
உறக்கம் தொலச்சி உப்பு எடுத்தோம் ருசியும் கூடிடவே ..
கருமணிக்கு பார்வையிழந்தோம் – இருளும் சூழ்ந்திடுதே
வாழ்வில் இருளும் சூழ்ந்திடுதே..
அள்ள அள்ள குறையாது வெள்ளைத் தங்கம்..
ஆனாலும் எங்க வாழ்க்கைய மெல்லத் தின்னும்.
இரும்பக் கூட உருக்குதிந்த உப்புக் காத்து..
எலும்புக்கூடா தேகம் ஆச்சு – இந்த உப்புப் பூத்து.
பாடல் : மக்கள் கலை இலக்கியக் கழகம்
வெளியீட்டு நாள் : 12.10.2021
பாருங்கள்! பகிருங்கள்!
ஆவணப்படம் தயாரிப்பு, ஆக்கம் :மக்கள் கலை இலக்கியக் கழகம் (மாநில ஒருங்கிணைப்புக் குழு)
தேசிய பணமாக்கல் திட்டம் : மறுகாலனியாக்கத்தின் உச்சகட்டச் சூறையாடலுக்கான ஏற்பாடு
நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் என்ற கொள்கையைத் திட்டமிட்டு அமல்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்ட ‘‘நிதி ஆயோக்’’கின் பரிந்துரைப்படி ஆகஸ்ட் 23−ம் தேதியன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் தேசிய பணமாக்கல் (National Monetisation Pipeline − நேசனல் மானிடைசேஷன் பைப்லைன்) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.
இத்திட்டத்தின் நோக்கம் பற்றிக் கூறுகையில் நாட்டு மக்களின் பொதுச்சொத்துக்களில் உயிராதாரமானவற்றை விற்பதன் மூலம் ஆறு இலட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்டுவதும், அந்தப் பணத்தை ‘தேசத்தின்’ உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகச் செலவிடுதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி நெட்டித் தள்ளப்போவதாகவும் பா.ஜ.க. அரசு குறிப்பிடுகிறது.
இதன்படி, 26,700 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகள், 90 பயணிகள் தொடர்வண்டிகள், 400 தொடர்வண்டி நிலையங்கள், 741 கி.மீ. நீளமுள்ள தொடர்வண்டி இருப்புப் பாதைகள், 28,608 கி.மீ. நீளமுள்ள மின்பகிர்மான வழித்தடங்கள், 6 ஜிகாவாட்ஸ் மின் உற்பத்தி நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 40 துறைமுகங்கள், 160 நிலக்கரிச் சுரங்கங்கள், 3,930 கி.மீ. நீளமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பைப் லைன்கள், தில்லி, பெங்களூருவில் உள்ள விளையாட்டரங்கங்கள், 14,197 பொதுத்துறை தொலைபேசி நிறுவன தொலைத்தொடர்புத் கோபுரங்கள், உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நான்காண்டுகளில் நான்கு கட்டமாக மொத்தம் 25 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் தேவைப்படும் ஆறு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்கிறது, பா.ஜ.க. அரசு.
ஆறு இலட்சம் கோடி ரூபாய் என மோடி அரசு மதிப்பிட்டிருக்கும் இந்த பொதுச் சொத்துக்களின் உண்மை மதிப்பு அதைவிட பல மடங்காகும். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொதுத்துறையின் ‘‘நவரத்தின’’ நிறுவனங்களின் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் என 4 ஆண்டுகளில் 6 இலட்சம் கோடி ரூபாயை ஈட்ட முடியும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் மோடி அரசின் வாதத்தில் உள்ள பித்தலாட்டத்தையும், திட்டமிட்டே இலாபகரமான பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்குத்தான் இந்தச் சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் என்பதைத்தான், ‘‘70 ஆண்டுகாலமாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் விற்கிறார் மோடி; மோடியின் இந்தத் திட்டம் அவரின் நண்பர்களுக்குத்தான் பயன்படப்போகிறது” என ராகுல் காந்தி குறிப்பிடுகிறார்.
மேலும், ‘‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போதே இது போன்ற தனியாமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், மோடி செய்யும் தனியார்மயமாக்கம் கோடிக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் துறைகளையும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்யும் துறைகளையும் தூக்கிக் கொடுக்கிறது” என்கிறார் அவர்.
‘‘தனியார்மயமாக்கத்திற்கு காங்கிரஸ் எதிரானதல்ல” என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் ராகுல், நாங்கள் செய்தது ‘சின்ன தனியார்மயம்’; மோடி செய்திருப்பது ‘பெரிய தனியார்மயம்’ என்ற ‘‘அளவு” வேறுபாட்டில் தேசிய பணமாக்கல் திட்டத்தை கொண்டுவந்து நிறுத்துகிறார். ராகுல் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும் எல்லா முதலாளித்துவ ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் தேசிய பணமாக்கல் திட்டத்தை இந்த அளவில்தான் விமர்சிக்கிறார்கள்.
ஆனால், தேசிய பணமாக்கல் என்பது மறுகாலனியாக்கத்தின் உச்சகட்டச் சூறையாடலுக்கான ஏற்பாடு. ஒட்டுமொத்த நாட்டையே கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கேற்ற வகையில் மறுகட்டமைப்பு செய்துவரும் நடவடிக்கையில் இதுவொரு பாய்ச்சலாகும்.
விவசாயிகளை ஒழித்துவிட்டு விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் புதிய வேளாண் சட்டங்கள், நாட்டின் கடற்கரைகள் அனைத்திலும் துறைமுகங்கள், பூங்காக்கள், சொகுசு விடுதிகள் கட்டிக் கொள்ளவும், மீனவர்களை விரட்டிவிட்டு கடல் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ள கடல் மீன்வள மசோதா உள்ளிட்ட சாகர்மாலா திட்டங்கள் ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய அரசு.
இந்தச் சட்டங்களோடு கூடுதலாக, கெயில், மீத்தேன் (ஹைட்ரோகார்பன்) உள்ளிட்ட இயற்கை வளங்களைச் சூறையாடும் கனிம வளக் கொள்ளை திட்டங்கள், சூறையாடப்படும் வளங்களை (சரக்குகளை) நாடு முழுவதும் தடையின்றி எடுத்துச் செல்வதற்காக அமைக்கப்படும் எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பாரத்மாலா திட்டங்கள், காண்டிராக்ட்மயத்தை சட்டப்பூர்வமாக்கி தொழிலாளர்களின் பெயரளவிலான உரிமைகளையும் பறித்து அவர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள் முதலானவற்றோடு ஒட்டுமொத்த நாட்டையே கார்ப்பரேட் கொள்ளைக்காக மாற்றியமைக்கும் மறுகாலனியாக்க திட்டங்களில் முக்கியமானதொரு மைல்கல்தான் தேசிய பணமாக்கல் திட்டம்.
தேசிய பணமாக்கல் திட்டம் என்றால் என்ன?
தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline) என்பது தேசிய உள்கட்டமைப்பு திட்டம் (National Infrastructure Pipeline) என்ற திட்டத்துடன் இணைந்த ஒரு திட்டமாகும். இதைப் பற்றி நிர்மலா சீத்தாராமன் 2021−22 நிதிநிலை அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தார். இவையிரண்டும் இருவேறு வகையான வேலையை மேற்கொள்கின்ற, ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ‘‘பைப்லைன்” நடவடிக்கைகள்.
‘‘பைப்லைன்” நடவடிக்கையைப் புரிந்துகொள்வதற்கு நாம் இதயத்தின் செயல்முறையை சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இதயம் வலது, இடது என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவ்விரண்டு பகுதிகளும் இருவேறு நடவடிக்கைகளைச் செய்கின்றன. இதயத்தின் வலப்பகுதி நம் உடலில் உள்ள ஆக்ஸிஜன் குறைந்துபோன பழைய இரத்தத்தை உள்வாங்கிக் கொண்டு நுரையீரலுக்கு அனுப்புகிறது. நுரையீரலில் இரத்தத்திற்கு ஆக்ஸிஜனேற்றப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை இடப்பகுதி உள்வாங்கிக்கொண்டு மீண்டும் உடலுக்குச் செலுத்துகிறது.
இந்த செயல்முறையில் இரண்டும் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஆனால், உடலில் உள்ள இரத்தத்தை ஆக்ஸிஜனேற்றி மீண்டும் உடலுக்கு செலுத்தும் ஒரு முழுமையான செயலின் இரு பகுதிகளைத்தான் தமக்குள் இவை பிரித்துக் கொள்கின்றன. இதேபோலத்தான் கார்ப்பரேட் சூறையாடலுக்காக இந்த நாட்டை மறுகட்டமைப்பு செய்யும் முழுமையான திட்டத்தில் தேசிய பணமாக்கல் திட்டமும் தேசிய உள்கட்டமைப்பு திட்டமும் இணைந்து செயல்படுகின்றன.
தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் பொதுச் சொத்துக்களை விற்றுத் திரட்டப்படும் பணம் தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்திற்காக செலவிடப்படவுள்ளது. தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்தின் மூலம் ஐந்தாண்டுகளில் மூலதனமிடப்பட இருக்கும் தொகை 111 இலட்சம் கோடி ரூபாய் (1,11,00,000 கோடி) ஆகும். இதன்படி பார்த்தால், தற்போது தொடங்கும் இந்த ஆறு இலட்சம் கோடி நிதித் திரட்டல் என்பது தொடக்கம்தான். அடுத்தடுத்த பணமாக்கல் திட்டங்களின் மூலம் முழுமையாக இந்த 111 இலட்சம் கோடியும் திரட்டுவதுதான் மோடி அரசின் திட்டம்.
இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து, எப்படித் திரட்டப் போகிறார்கள்? இதற்காக மூன்று அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக நிதிநிலை அறிக்கை 2021−22−ல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதில் முதலாவது அவசிய நடவடிக்கை, பணத்தை திரட்டுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதுதான். இதற்காக, தேசிய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி அளிப்பை விரைவுப்படுத்தும் வினையூக்கியாக செயல்படும் வகையில் ‘‘மேம்பாட்டு நிதி நிறுவனம்” (Development Finance Institution) ஒன்றை உருவாக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.
அந்தவகையில்தான், கடந்த மார்ச் மாதத்திலேயே ஒரு புதிய வங்கியை உருவாக்குவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த வங்கியின் பெயர், ”உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியளிப்புக்கான தேசிய வங்கி” (NBFID) ஆகும். இந்த வங்கி ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட இருக்கிறது என்று அறிவித்துள்ளது, மோடி அரசு.
இரண்டாவது அவசிய நடவடிக்கை, சொத்துக்களைப் பணமாக்குதலில் ஒரு உந்துதலை ஏற்படுத்துவது ஆகும். இதன் பொருள், முதலாவது பணமாக்கலின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பணமாக்கல் திட்டங்களை அறிவிப்பதுதான். இதை ‘‘நிதி ஆயோக்’’ தனது அறிக்கையில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது. மேலே சொன்ன ‘‘உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியளிப்புகான தேசிய வங்கி” (NBFID) தொடங்கத் தேவைப்படும் தொடக்க மூலதனமான ஒரு லட்சம் கோடி ரூபாய் இதன் மூலம்தான் திரட்டப்பட இருக்கிறது.
இவ்வாறு மிக பிரம்மாண்டமான திட்டத்தோடு திரட்டப்படும் பணத்தை வைத்து ‘தேச வளர்ச்சிக்காக’ உள்கட்டமைப்புகளை உருவாக்கப் போவதாகச் சொல்கிறார்கள். 70 ஆண்டுகாலமாக ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் உள்கட்டமைப்புகளை அழித்துவிட்டு, வேறெந்த உள்கட்டமைப்புகளுக்கு செலவு செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழலாம்.
சாகர்மாலா, பாரத்மாலா, ஸ்மார்ட் சிட்டி, கெயில், மீத்தேன் எடுப்பு, புதிய ஆலைகளைத் தொடங்குவதற்கு கார்ப்பரேட்டுகளுக்கு தரப்படும் தொழில் கடன் போன்றவைதான் அதற்கான பதில். அதாவது, கார்ப்பரேட் சூறையாடலுக்கான வசதிகளைச் செய்துதரும் வகையிலான உள்கட்டமைப்புகள்தான் ‘தேச வளர்ச்சிக்கான’ உள்கட்டமைப்புகள். இதுதான் மோடி சொல்லும் ‘‘புதிய இந்தியா”.
இறுதியாக சொல்லப்படும் மூன்றாவது அவசிய நடவடிக்கை என்னவெனில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வரவு−செலவுத் திட்டங்களில் மூலதனச் செலவின் பங்கை அதிகரித்தல். அதாவது, வரவு−செலவு திட்டத்தின் பெரும் பகுதி நிதியை ராட்சத கார்ப்பரேட் கம்பெனிகள் ‘தொழில்’ தொடங்க ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும். அந்தவகையில், இனி நிதிநிலை அறிக்கைகளின் பரிமாணம் முற்றிலுமாக மாற்றப்பட்டுவிடும்.
இனி, நிதிநிலை அறிக்கைகளில் மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசு செய்யவேண்டிய பணிகள் குறித்து எதுவும் இருக்காது. கார்ப்பரேட்டுகளுக்கான வரவு−செலவுத் திட்டங்களைப் பற்றிப் பேசுவதும், அவர்களுக்கு நாட்டின் சொத்தையும் மக்கள் பணத்தையும் வாரிக் கொடுப்பது மட்டுமே நிதிநிலை அறிக்கைகளின் சாரம்சமாகப் போகிறது. இதுதான் மோடியின் புதிய இந்தியாவிற்கான ‘‘ஆத்ம நிர்பார்” நிதிநிலை அறிக்கை.
இதுவொரு மறுகாலனியாக்கத்திற்கேற்ற மறுகட்டமைப்புக்கான தொடர் நடவடிக்கை. இந்தப் போக்கு நிறைவடையும்போது சாலைகள், பொதுப் போக்குவரத்து, மின்சாரம், விவசாயம், காடுகள், மலைகள், கடல் உள்ளிட்ட இயற்கை ஆதாரங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தில் சென்றிருக்கும். அரசின் கைகளில் போலீசையும் இராணுவத்தையும் தவிர வேறெதுவும் இருக்காது. இதைத்தான் மறுகாலனியாக்க சூறையாடலின் ஒரு மைல்கல் என்கிறோம்.
இச்சூறையாடலை எதிர்த்து எழும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை தொடக்கத்திலேயே ஒடுக்கவும், அடக்குமுறையை நிரந்தரமாக்கவும்தான் என்.ஐ.ஏ, ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம், குற்றவியல் திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், புதிய தொழிலாளர் சட்டங்கள் போன்ற சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.
வளர்ச்சியின் பின்னே மறைந்திருக்கும் கார்ப்பரேட் கொள்ளை:
இருப்பினும், இவற்றையெல்லாம் மூடிமறைத்து இதுவரை புதிய தாராளவாத ஆட்சியாளர்கள் அனைவரும் சொல்லி வந்த, ‘‘தேச வளர்ச்சி”, ‘‘வேலைவாய்ப்பு” போன்ற அதே புளித்துப்போன விசயங்களைத்தான் தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போதும் மோடி கும்பல் சொல்லிவருகிறது. இப்படி ‘தேசத்தின் நலன்’ என்று சொல்லி கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை முதல், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மோடி அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டை திவாலாக்கும் நிலைக்குத்தான் தள்ளியுள்ளது. வேலையின்மை பலமடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த மோசடிப் பிரச்சாரத்தை கோயபல்ஸ் பாணியில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, மோடி அரசு.
முதலில், இங்கே அரசின் பொதுச்சொத்துக்களை குத்தகைக்கு எடுப்பவர்களின் யோக்கியதை என்ன?, அவர்களை மோடி அரசு எப்படிக் கையாண்டது என்பதைப் பரிசீலிக்க வேண்டும். மல்லையா, நீரவ் மோடி முதல் வீடியோகான், கெய்ர்ன் உள்ளிட்ட பல வழக்குகளில் கார்ப்பரேட் முதலாளிகள் கடனைத் திருப்பிக் கட்டாமல் ஓடியது, வட்டியைக் கட்டாமல் ஏமாற்றியது, பொய்யான விவரங்களைக் கூறி மொத்த அரசுச் சொத்தையே சூறையாடியது, வங்கி அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து அரசை ஏமாற்றியது போன்றவைதான் கடந்தகால வரலாறு.
இது ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டாமல் இருக்கும் இரண்டு இலட்சம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்ய இருப்பதாக மோடி அரசு செப்டம்பர் மாத மத்தியில் அறிவித்துள்ளது. இதற்காகவே ஒரு வங்கியைத் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. அந்த வங்கியின் பெயர் தேசிய சொத்து மறுசீரமைப்பு கம்பெனி லிமிடெட் (National Asset Reconstruction Company Limited − NARCL). கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டாத வாராக்கடனை அரசாங்கம் கட்டுவதற்கான ஏற்பாடாக இந்த வங்கியின் செயல்பாடுகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன.
மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இவ்வாறு கார்ப்பரேட் முதலாளிகள் திருப்பிச் செலுத்தாத வாராக்கடன் 18.28 இலட்சம் கோடி ரூபாயாகும். இதில் திருப்பிச் செலுத்தப்படாத சுமார் ஆறு இலட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது, மோடி அரசு. தற்போது உருவாக்கியிருக்கும் இந்த வங்கியின் மூலம் அனைத்து முதலாளிகளும் இனி தப்பித்துக் கொள்வார்கள். இதைத்தான் மோடி வகையறா ‘‘தேச வளர்ச்சி” என்று சித்தரிக்கிறது.
என்ரான் கொள்ளை – வகைமாதிரிக்கு ஒரு உதாரணம் :
1992−இல் தபோல் பவர் கார்ப்பரேஷன் என்ற பெயரில், 300 கோடி டாலர் முதலீட்டில் மகாராஷ்டிராவில் மின்னுற்பத்தித் திட்டத்தைத் தொடங்கிய அமெரிக்க மின் உற்பத்தி நிறுவனமான என்ரான் ஊழல் நாடறிந்த ஒன்றாகும். தனியார்மயம் − தாராளமயம் − உலகமயத்தின் தொடக்கக் காலத்தில் நடந்த இந்த ஊழல் மிகவும் முக்கியமானது. ஒரு யூனிட் மின்சாரத்தைக்கூட உற்பத்தி செய்யாமல் திட்டச் செலவை வேண்டுமென்றே கூட்டிக் காட்டியது, நிலத்தை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியது, நீர் வளத்தைக் கடுமையாக சுரண்டியது, போலீசுடன் சேர்ந்து கொண்டு உள்ளூர் மக்களை தாக்கியது − என என்ரான் ஒரு பாசிச காட்டாட்சியை அரங்கேற்றியது.
மேலும், பலமடங்கு அதிக விலை கொடுத்து இந்த நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை மகாராஷ்டிரா மாநில அரசு வாங்கியதால், இலாபத்தில் இயங்கிய மகாராஷ்டிர மின்சார வாரியம் 1999, 2000 ஆகிய இரண்டே ஆண்டுகளில் ரூ.1,681 கோடி நட்டத்தைச் சந்தித்தது. இந்நிலையில், சில ஆண்டுகளில் என்ரான் திவாலானதாக அறிவிக்கப்பட்டபோது, அந்த நிறுவனம் தொடங்குவதற்கு மக்கள் பணம் கடனாக கொடுக்கப்பட்டிருப்பதும், அது உற்பத்தி செய்யாத மின்சாரத்திற்கும் மாநில அரசு தொகை செலுத்திய மோசடிகளும் அம்பலமானது.
என்ரான் விவகாரம் என்பது, தனியார்மயச் சூறையாடலின் ஒரு வகைமாதிரி ஆகும். இதே திசையில்தான் இதுவரையில் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் விளைவு, சுற்றுச்சூழல் பேரழிவு, மக்களின் வாழ்வாதாரம் பறிப்பு, விலையேற்றம், அடக்குமுறை அதிகரிப்பு முதலானவைதான்.
வேலைவாய்ப்பு பெருகுமா?
தேசிய பணமாக்கல் திட்டத்தால், வேலைவாய்ப்பு பெருகும் என்ற மோடி கும்பலின் வாதம் மோசடித்தனமானது. மோடி அரசின் இப்போதைய நடவடிக்கையானாலும், முந்தைய நடவடிக்கையானாலும் அவற்றின் முக்கிய இலக்கு வேலையின்மையை அதிகரித்து நவீன கொத்தடிமைத்தனத்தை உருவாக்குவதாகும்.
நாட்டில் 225 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. 1960−61 ஆண்டில் மட்டும் 70 லட்சம் பேர் பொதுத்துறைகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் மட்டுமின்றி, மறைமுகமாகவும் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணிகளாகவும் பல இலட்சம் தொழிலாளர்கள் வாழ்வைப் பெற்று வந்தனர். இவர்களின் எண்ணிக்கை 1997−இல் இரண்டு கோடி பேராக உயர்ந்திருந்தது. ஆனால், 31.03.2017 மத்திய அரசின் அறிவிப்பின்படி, இது 11.3 இலட்சம் பேராகக் குறைந்துள்ளது. இதேபோல, தனியார் துறையில் 1983−இல் 75.5 இலட்சமாக இருந்த வேலைவாய்ப்பு 1994−2000 ஆண்டுகளில் 16.4 இலட்சமாகச் சுருங்கிவிட்டது.
குறிப்பாக, தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் என்ற நாசகரக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர், அரசுத்துறைகளில் புதிய ஆளெடுக்கும் பணி முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டது. மேலும், பொதுத்துறை நட்டம், லே−ஆஃப் போன்ற காரணங்களாலும், தனியார்மயமாக்கத்தினாலும் பெருமளவு பொதுத்துறை வேலைவாய்ப்பு சரிந்துள்ளது. மறுபுறம், எந்தப் பாதுகாப்பும் வேலை உத்திரவாதமும் அற்ற ஒப்பந்தம் பணி முறை எனும் நவீன கொத்தடிமை முறையானது, ஒட்டுமொத்த வேலைவாய்ப்பையும் முற்றிலுமாக நரகமயமானதாக்கிவிட்டது.
தினக்கூலி முறை, காண்டராக்ட் வேலை, சுவிக்கி − ஜொமோட்டோ போன்றவற்றால் உருவாக்கப்பட்டுள்ள சிதறிய, சிறிய வேலைகளையும் வேலைவாய்ப்பு எனக் கணக்கிட்டு பித்தலாட்டம் செய்துள்ள போதிலும், செப்டம்பர் 21−ம் தேதி வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.46 சதவிகிதமாக (2.658 கோடி பேர்) உயர்ந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் என்ற இந்தத் திட்டம் முற்றிலுமாக நடைமுறைக்கு வரும்போது, தொழிலாளிகள் நவீனக் கொத்தடிமையாக மாற்றப்பட்டு மீளமுடியாத நரகத்தில் தள்ளப்பட்டிருப்பார்கள். மற்றொருபுறம், கோடிக்கணக்கான மக்கள் வேலையின்மை, பட்டினி, அடிப்படை வசதிகள் அற்ற நவீன சேரிகளுக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள்.
வேலையற்றவர்களை, ஏழை−எளிய மக்களை நவீன சேரிகளுக்கும், உயர் வருவாய் உள்ளவர்களை ஸ்மார்ட் சிட்டிகளுக்கும் அழைத்துச் செல்வதன் மூலம் தேசத்தை இரண்டு முகாம்களாக பிரித்து ஒடுக்குவதுதான் காவி − கார்ப்பரேட் பாசிசத்தின் நவீன இந்துராஷ்டிரம்.
தேசிய பணமாக்கல் திட்டம், தேசிய உள்கட்டமைப்பு திட்டம் ஆகியன நடைமுறைக்கு வரும்போது மக்களின் வாழ்வாதாரம் மேலும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். நாட்டின் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேவையற்றவர்களாகக் கருதப்படுவர். இவர்கள் வளர்ச்சியின் எதிரிகளாகவும், தேச முன்னேற்றத்தின் தடைகளாகவும் சித்தரிக்கப்படுவர்.
கொரானா பெருந்தொற்றின்போது இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடைபயணமாக சொந்த ஊருக்கு விரட்டப்பட்ட தேசியத் துயரமும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இலட்சக்கணக்கான விவசாயிகள் வீதியில் இறங்கி 9 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்ற நிலைமையும், விவசாயிகளும் தொழிலாளர்களும் நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்கள்தான் என்பதை ஏற்கெனவே காட்டிவிட்டது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்ந்திருந்தாலும், அதனை எதிர்த்துக் கேட்கமுடியாத நிர்கதியான நிலைக்கு மக்களின் வாழ்க்கை நிலைமை சென்றுவிட்டது. அன்றாடம் உழைத்தால் கூட வாழ்க்கையை நடத்துவது பெரும்பாடாகிவிட்டது. இந்த தரித்திர நிலைமையை மேலும் தீவிரமாக்குவதுதான் காவி − கார்ப்பரேட் பாசிச மோடி கும்பலின் நோக்கமாகும்.
‘‘அரசு என்பது மக்களின் சொத்துக்களுக்குப் பாதுகாவலனாக இருக்க வேண்டும். ஆனால், மோடி அரசோ பொதுச்சொத்துக்களை விற்று வருகிறது” என்கிறார், காங்கிரசு தலைவர் சச்சின் பைலட். ‘‘நாங்கள் நட்டமடைந்த பொதுத்துறை நிறுவனங்களைத்தான் விற்று வந்தோம். ஆனால், மோடி அரசோ இலாபத்தில் இயங்குகின்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருவதாக…” குற்றம் சாட்டுவதன் மூலம் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கிறார்.
நட்டத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனம் என்பதன் பின்னால், அந்தப் பொதுத்துறை நிறுவனங்களை நட்டமாக்கி முடக்கிய சதி வேலையில் ஈடுபட்டவர்கள்தான் காங்கிரசும் பா.ஜ.க.வும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் கொடுக்கும் முறை அவசியமானது − என தனியார்மய − தாராளமய −உலகமயக் கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட முப்பதாவது ஆண்டை ஒட்டி ப.சிதம்பரம் வாதிடுகிறார். அதேசமயம், காங்கிரசு கட்சியோ தேசிய பணமாக்கல் திட்டத்தை எதிர்ப்பதாக கூறி நாடகமாடுகிறது. இதற்காக காங்கிரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்திருப்பதுதான், இந்த கேலிக்கூத்தின் உச்சமாகும்.
எப்போதும் நாட்டுப்பற்று குறித்து வகுப்பெடுத்துவரும் தமிழ் இந்து, தினமணி உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகள் மோடி அரசின் இந்த தேசத்துரோகச் செயலை ஒரு சிறு பெட்டிச் செய்தியைப் போல வெளியிட்டு, மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இருட்டடிப்புச் செய்தன. மற்ற ஊடகங்களோ தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தாமல், அடக்கி வாசிக்கின்றன.
நம் கண்முன்னே ஒரு பெரும் சூறையாடல் நடந்து வருகிறது. பொருளாதாரத் திட்டமாக மட்டுமின்றி, எதிர்த்துப் போராடுபவர்களை கடுமையாக ஒடுக்கும் நவீன ஒடுக்குமுறைகளையும் கண்காணிப்பு முறைகளையும் கொண்டுள்ள காவி − கார்ப்பரேட் பாசிசத்தின் அரசியல் தாக்குதலாகவும் இது இருக்கிறது. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதும், மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரத்திற்காகவும் மக்களின் அதிகாரத்திற்காகவும் உழைக்கும் மக்களைத் தட்டியெழுப்புவதும் இன்று நம் முன்னுள்ள உடனடி கடமையாகும்.