சிபிஎம் கருத்துக்கு மறுப்பு : பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் ! | மக்கள் அதிகாரம்
திருவண்ணாமலை பாலியப்பட்டு உழைக்கும் மக்களின்
திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : பாசிசத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது, எச்சரிக்கை !
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூட்டணி பெற்ற வெற்றியை கொண்டாடி மகிழ்ந்ததைவிட உள்ளாட்சித் தேர்தல் வெற்றி கூடுதல் மகிழ்ச்சியை தி.மு.க ஆதரவு தரப்பினருக்கு வழங்கியுள்ளது. இது தி.மு.க அரசின் ஒன்பது மாத நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பேசி வருகின்றனர். “பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் இடமில்லை” என்றும் “அ.தி.மு.க-விற்கு இனி எதிர்காலம் இல்லை” என்றும் சிலர் ஆரூடம் சொல்லி வருகின்றனர்.
மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும், 138 நகராட்சிகளில் 132 இடங்களையும் 489 பேரூராட்சிகளில் 80 சதவிகித இடங்களையும் தி.மு.க கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க மிக பலவீனமாக இருந்த மேற்கு மண்டலத்தில், தற்போது அபார வெற்றியை சாதித்திருப்பது தி.மு.க.வினரின் அளவிடா மகிழ்ச்சிக்கு சிறப்புக் காரணம்.
தனித்து களம் கண்ட பா.ஜ.க தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளதாக அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேசிய அளவில் உள்ள ஆளுங்கட்சி ஆதரவு ஊடகங்களும் இதற்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து வருகின்றன. மற்றொரு பக்கம் இதை தி.மு.க ஆதரவாளர்கள், பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் அனைவரும் நக்கலடித்து பேசி வருகின்றனர்.
படிக்க :
♦ எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
♦ உள்ளாட்சித் தேர்தல்கள் : ஜனநாயக விரோதிகளால் நடத்தப்படும் ‘ஜனநாயக’ நாடகம் !
பத்தாண்டுகளுக்கு பிறகு நடைபெற்று முடிந்திருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் எந்தவகையில் உழைக்கும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை; தங்கள் கட்சி அதிவிரைவாக வளர்ந்துவருவதாக பாசிச பா.ஜ.க.வினர் கூறிவருவதை நக்கலடித்து கடந்து செல்வதா போன்ற கேள்விகளுக்கு விடைகாண நாமும் இத்தேர்தல் குறித்து பேச வேண்டியிருக்கிறது.
‘தேர்தலும்’ ‘ஜனநாயகமும்’ கொள்ளையர்களுக்காக…
சாலை, குடிநீர் வசதி, குடியிருப்பு வசதி என மக்கள் தங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதையும் தேர்தலைப் புறக்கணிப்பதையும் ஒவ்வொரு சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலின்போதும் நாம் பரவலாக காண முடியும். ஆனால், இந்தமுறை ஒன்றிரண்டு பகுதிகளைத் தவிர பரவலாக அத்தகைய கோரிக்கையுடன் கூடிய போராட்டங்களை பார்க்க முடியவில்லை.
மேலும், தற்போது முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் நகர்ப்புறத்திற்கானவை. இந்த நகரங்களில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்படுகிறது. மதுரை, நெல்லை, தஞ்சை போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாட்களுக்கு முன்னர்தான் சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் பெரும்பாலானவற்றை இடிக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களுக்குள் வீடுகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 25,000 வீடுகள் வரை ஒரே நேரத்தில் இடிக்கப்படுவதாக அறிவித்ததால், அடுத்து நம்முடைய வாழ்க்கை எண்ணாகுமோ என்ற பயத்தில் புலம்பிக் கொண்டிருந்தனர் மக்கள். இங்கெல்லாம் எந்த சலனமும் இல்லாமல் வாக்களிப்பு நடந்துள்ளது.
தங்கள் விளைநிலத்தை அழித்து நாசகார சிப்காட் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் திருவண்ணாமலை பாலியப்பட்டு கிராம மக்களின் போராட்டம் கண்டுகொள்ள நாதியற்று போனது. கொஞ்சமும் மன உறுத்தலின்றி வாக்களித்துள்ளனர் சுற்றுவட்டார கிராமத்தினர்.
தங்களது வாழ்வாதாரமும் உரிமைகளும் நேரடியாகப் பறிக்கப்படும் நிலையிலும் அதற்கும் இந்த தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; தேர்தல் வந்தால் ஓட்டுப் போட வேண்டும் என்ற சுரணையற்ற மனநிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டிகிறார்கள். “தேர்தல் வேறு, ஜனநாயக உரிமைகள் வேறு” என்ற கருத்தாக்கத்தை இத்தனை ஆண்டுகளில் ஆளும் வர்க்கமும் உழைக்கும் மக்களிடம் புகுத்தி பழக்கிவிட்டுள்ளது.

பிறகு யாருக்குத்தான் இந்த ‘வேர்மட்ட ஜனநாயகம்’; ஒவ்வொரு கட்சியிலும் வேர்மட்டத்திலுள்ள ‘குட்டி அலிபாபாக்கள்’ கொள்ளையடிப்பதற்கான ‘ஜனநாயக’ ஏற்பாடுதான் உள்ளாட்சித் தேர்தல். ஒவ்வொரு வார்டிலும் 10 இலட்சம் முதல் 40 இலட்சம் வரை வாரியிறைத்து செலவு செய்ய தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கட்சிகளில் சீட் வழங்கப்பட்டது. இத்தகையவர்களின் மக்கள் சேவை எப்படி இருக்கும்!
இந்த கூத்தெல்லாம் தெரிந்தபோதும்கூட தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு விதித்த செலவு வரம்பு என்ன தெரியுமா? பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் அதிகபட்சமாக ரூ.17,000, நகராட்சி வார்டு உறுப்பினர் என்றால் அதிகபட்சமாக ரூ.34,000, மாநகராட்சி பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.85,000 வரை செலவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்தது.
உள்ளாட்சியில் சந்தி சிரித்த ‘சமூகநீதி’!
தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லையென்று கூறி, அதி.மு.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாக தேர்தலை சந்தித்தது பா.ஜ.க; நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தத்தமது பணபலத்திற்கு ஏற்ப வேட்பாளர்களை நிறுத்தின.
கடந்த சட்ட மன்றத்தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்று தி.மு.க அறிவித்தாலும் கூட்டணிக் கட்சியினருக்கான பங்கீட்டை அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் மல்லுக்கட்டி, அவமானமடைந்தும் சோர்வடைந்தும் போயின தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள்.
கும்பகோணம் நகராட்சியில் ஒரே ஒரு வார்டு மட்டுமே சி.பி.எம்-க்கு ஒதுக்கப்பட்டது. அந்த வார்டிலும் தி.மு.க.வின் வட்டச்செயலாளர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். இது பற்றி பலமுறை முறையிட்டும் பலன் இல்லாததால் சி.பி.ஐ கட்சி சார்பில் போட்டியிட்ட பாரதி என்ற வேட்பாளர் வேட்புமனுவை திரும்பப்பெற்றார்.
கோவையில் வி.சி.க.விற்கு ஒரு வார்டு கூட அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அம்மாவட்டத்தில் எங்கும் திருமாவளவனின் பெயரோ, படமோ தி.மு.க.வினரால் பயன்படுத்தப்படவில்லை. கோவையைப் போலவே பல பகுதிகளிலும் திருமாவளவனின் படம் பயன்படுத்தப்படவில்லை. இது குறித்து வெளிப்படையாக அக்கட்சியினர் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டு தொண்டர்களை சமாதானப்படுத்த வேண்டிய சோகமும் நடந்தது.
ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் தி.மு.க.வினர் சுயேச்சையாக நின்றனர். தங்களது கட்சியினருக்கு சீட்டுகள் வழங்கப்படாததால், காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் சில பகுதிகளில் கூட்டணியை முறித்துக்கொண்டு தனியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டன.
கூட்டணிக் கட்சியினருக்கு சீட் ஒதுக்கியதால் (ஆங்காங்கு சில வார்டுகள்தான் என்ற போதிலும்) ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.வினர்; ஆளுங்கட்சியான தி.மு.க தங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை வழங்காததால் ஆர்ப்பாட்டம் செய்த கூட்டணிக் கட்சியினர் என ‘சமூக நீதி’ உள்ளாட்சியில் சந்தி சிரித்துவிட்டது.
இதுபோக ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தங்களுக்கு சீட் வழங்கவில்லை என்று உட்கட்சி பூசல் வேறு. காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் பி.வி. தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலேயே தர்ணா போராட்டம் நடத்தினார். முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், கூட்டணி தர்மத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என கட்சியினருக்கு வேண்டுகோள் வைத்தார்.

‘கூட்டணி தர்மம்’ குடைசாய்வது பற்றி பொதுவெளியில் நாறுவதைத் தடுப்பதற்காக தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலின், “கூட்டணிக் கட்சியினருக்கு எதிராக தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் தி.மு.க.வினர் உடனே மனுக்களை வாபஸ் பெற வேண்டும்; இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 56 பேரைத் தற்காலிக நீக்கம் செய்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக அமைந்தது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல். கட்சித் தலைமையால் கூட்டணிக் கட்சியினருக்காக ஒதுக்கப்பட்ட பல பேரூராட்சி, நகராட்சி தலைவர் பொறுப்புகளை ரவுடித்தனம் செய்து தி.மு.க.வினரே அராஜகமாக கைப்பற்றிக் கொண்டார்கள். மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை கடத்திய சம்பவங்களும் அரங்கேறின.
வி.சி.க.வினருக்கு ஒதுக்கப்பட்ட கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை தி.மு.க.வினரே கைப்பற்றிக் கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி மாவட்டம் அல்லிநகர் நகராட்சித் தலைவர் பதவியையும் கடைசி நேரத்தில் தி.மு.க உள்ளூர் கவுன்சிலரே கைப்பற்றிக் கொள்ள, அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது. சி.பி.ஐ-க்கு ஒதுக்கப்பட்ட கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியும் அதேபோல தி.மு.க கவுன்சிலரால் கைப்பற்றப்பட்டது.
சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சியில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சி.பி.எம் கட்சி வேட்பாளர் என். சிவராஜ் மீது தாக்குதல் நடத்தி தேர்தல் முடியும் வரை அவரை தனியொரு அறையில் அடைத்துள்ளனர். மேலும், உடன் வந்த கட்சித் தலைவர்களை தாக்கி விரட்டிவிட்டு அதிகாரிகள், போலீசுப் படை உதவியுடன் தலைவர் பதவியை தி.மு.க.வைச் சேர்ந்தவரே கைப்பற்றியுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளாளூர், மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் சொந்த கட்சியினரே கோஷ்டியாக பிரிந்து மோதிக்கொள்ளும் சூழல் உருவானதால், அப்பகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
தேர்தல் என்பதே ஒரு பிசினஸ் ஆகிவிட்ட பின், உள்ளாட்சி தேர்தல் போன்றவைதான் கீழ்மட்ட கட்சி ‘தலைவர்’களுக்கு முக்கிய பிழைப்பாதாரம். கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடக்காமல் ‘காய்ந்து போயிருந்த’ கீழ்மட்ட அணிகள் ‘கட்சிக் கட்டுப்பாட்டை’ மீறும் செயலை எந்தக் கட்சியால்தான் கட்டுப்படுத்த முடியும்; அதுவும் தனது கட்சி ஆட்சி நடக்கும்போது எளிதாக வென்றுவிட முடியும் எனத் தெரிந்தும் எந்த தொண்டன்தான் வேடிக்கை பார்ப்பான்.
இந்த இலட்சணத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதானது சமூகநீதி சாதனையாக பீற்றிக் கொள்ளப்பட்டது. நடைமுறையில், வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட பெண்கள் அனைவரும் உள்ளூர் தலைவர்களின் மனைவி, சகோதரி, மகள் ஆகியோரே. பிரச்சாரத்திலும் பேனரிலும் அத்தலைவர்களின் பெயரோடு இணைத்துதான் வேட்பாளர் பெயரையே பிரச்சாரம் செய்தார்கள். இதெல்லாம் ஊரறிந்த கூத்து!
இது திராவிடக் கொள்கையின் வெற்றியா?
ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் தி.மு.க.வின் தலைமைச் செயலாளராகவும் இருந்த கு.க. செல்வம் பா.ஜ.க.விற்குத் தாவி, தற்போது மீண்டும் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்பட்டதே அக்கட்சியின் ‘கொள்கை’ அரசியலுக்கு சரியான சான்று.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள கப்பியறையில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து வேட்பாளரை நியமிக்காமல் பா.ஜ.க.வை போட்டியின்றி வெற்றிபெற வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும், நாம் தமிழர் கட்சி மட்டுமே தனது வேட்பாளரை வாபஸ் பெறவில்லை.
நாகர்கோயில் மாநகராட்சி தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலின்போது, பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நான்கு தி.மு.க கவுன்சிலர்களே வாக்களித்த செய்தி (அ.தி.மு.க மற்றும் சுயேட்சைகள் ஆதரவையும் சேர்த்து பா.ஜ.க.விற்கு 20 ஒட்டுகளே இருந்த நிலையில், 24 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார் பா.ஜ.க வேட்பாளர்) வெளியாகி நாறுகிறது. இதுதான் தி.மு.க அணிகளிடம் உள்ள ‘கொள்கைப் பிடிப்பு’.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அ.தி.மு.க – பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மேற்கு மண்டலத்திலேயே தி.மு.க மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பது குறித்து பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றனர். எனில், தி.மு.க.வின் வெற்றியை பா.ஜ.க.வின் தோல்வியாக எடுத்துக் கொள்ளலாமா? இவ்வாறு நினைப்பதும், அதன் அடிப்படையில் தி.மு.க.வின் மேற்கு மண்டல வெற்றியைப் பார்ப்பதும் ஆபத்தான புரிதலாகும்.
மற்ற ஓட்டுக் கட்சிகளைப்போல அல்ல பா.ஜ.க, அது பார்ப்பன இந்துமதவெறி சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட பாசிஸ்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் தேர்தல் கட்சி. மற்ற ஓட்டுக் கட்சிகளைப்போல பெயரளவில் கொள்கையையும் வெறும் கவர்ச்சிவாத அரசியலையும் மட்டுமே வைத்து மக்களை ஈர்க்க கூடிய அமைப்பு அல்ல.
பல ஆண்டுகாலம் கோவை பகுதியில் அது உருவாக்கி வைத்த இந்து முனைவாக்க அடித்தளமெல்லாம் தி.மு.க.வின் வெற்றியால் ஒரு நொடியில் காணாமல் போய்விட்டதாக கருதுவது அடிப்படையிலேயே பகுத்தறிவற்ற சிந்தனை. அப்படியானால் மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வின் வெற்றியை எப்படி பார்ப்பது என்ற கேள்வி எழலாம்.
கே.என். நேரு, செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் போன்றவற்றைகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து பணத்தை வாரியிறைத்தும் இதுநாள்வரை தான் மேற்கொண்டுவந்த கவர்ச்சிவாத திட்டங்கள் – விளம்பரங்கள் மூலமும் பெற்ற வெற்றியே தி.மு.க.வின் தேர்தல் வெற்றி.
இதில், செந்தில் பாலாஜியும் தோப்பு வெங்கடாச்சலமும் முன்னாள் அ.தி.மு.க பெருச்சாளிகள் என்பதால், அ.தி.மு.க செல்வாக்காக உள்ள மேற்கு மண்டலத்தில் எப்படி காய் நகர்த்தி காரியத்தை முடிக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்கள்.
மேலும், எந்த கட்சி ஆளும் கட்சியோ, எந்த கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளதோ அவர்களுக்கு பார்த்து வாக்களிப்பதுதான் பெரும்பான்மை வாக்காளர்களின் பொதுப்புத்தி. இந்த அம்சமும் சேர்வதால்தான் பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறக் கூடிய சூழல் உள்ளது. கூடுதலாக, தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் அ.தி.மு.க.வின் ஊழல்களை அடுக்கடுக்காக அம்பலப்படுத்தியதும் அதன் தலைவர்கள் வீட்டில் தொடர்ச்சியாக ரெய்டுகளை நடத்தி பொதுவெளியில் அவர்களை நாறடித்ததும் சேர்ந்து வினையாற்றியிருக்கிறது.

பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தனித்து நின்றது கணிசமாக வாக்கு வங்கியை பிரித்துள்ளதும் இக்கட்சிகளின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அப்படி இருந்தும்கூட கோவை மாவட்டப் பகுதிகளின் பெரும்பான்மை வார்டுகளில் பா.ஜ.க இரண்டாம் இடம், மூன்றாம் இடம் வந்திருக்கிறது. இதிலிருந்துதான் பா.ஜ.க.வின் பலத்தை பரிசீலிக்க வேண்டுமே ஒழிய, வெற்றி பெற்றதை மட்டும் வைத்தல்ல.
சுருக்கமாக, தி.மு.க.வின் வெற்றி கொள்கை ரீதியானது அல்ல. கோவையை பார்த்து பேசுபவர்கள் கன்னியாகுமரியை விட்டுவிடுகிறார்கள். 9 மாத ஆட்சி சாதனை கன்னியாகுமரி மாவட்ட மக்களை ஏன் ஈர்க்கவில்லை என பரிசீலிப்பதில்லை. மேற்கில் பா.ஜ.க வெற்றி பெறுவது தற்காலிகமாக தள்ளிப் போயிருக்கிறது என இளைப்பாறுதல் பெற்றுக் கொள்ளலாமே ஒழிய, பா.ஜ.க.வை வீழ்த்திவிட்டதாக மகிழ்வது பகுத்தறிவுக்கு முரணானது. நம்மை செயலின்மைக்கு தள்ளும் அபாயமிக்கது.
பா.ஜ.க.வின் வளர்ச்சியை நக்கலடிப்பதற்கு பின்…
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டு 308 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்த முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் பார்வை என்ன?
பா.ஜ.க.விற்கென்று சுயேட்சை பலமே இல்லை; அ.தி.மு.க.வின் முதுகில் சவாரி செய்ததன் மூலமே சட்டமன்றத் தேர்தலில்கூட நான்கு தொகுதிகளை வென்றது என்பதே அவர்களின் மதிப்பீடு. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க அறிவித்தபோது, “நோட்டா பொத்தான் இல்லை என்ற துணிச்சலில் பா.ஜ.க களமிறங்கியுள்ளது” என்று பகடி செய்தார்கள்.
தேர்தல் முடிவு வந்த பிறகு, “தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது. நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி” என பேசினார் அண்ணாமலை. அதன் மிகைப்படுத்தலை ஒதுக்கிவிட்டு, பாசிச பா.ஜ.க.வின் மதவெறி அரசியலுக்கு தமிழகத்திலும்கூட குறிப்பிட்ட பகுதிகளில் அடித்தளம் இருக்கிறது; இது ஒரு அபாயம்; பாசிச எதிர்ப்பாளர்கள் மக்களிடம் தீவிரமாக வேலைசெய்ய வேண்டிய தேவை உள்ளது என்று நாம் பரிசீலிப்பதில்லை. மாறாக, பா.ஜ.க.வின் வெற்றியை பகடிசெய்து ஆறுதலடைந்து கொண்டிருக்கிறார்கள் முற்போக்காளர்கள்.
“கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் பா.ஜ.க அதிக தொகுதிகளை வென்றிருக்கிறது. சென்னை 134-வது வார்டு பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு மாம்பலம் தொகுதி. பா.ஜ.க கோவை மாவட்டத்திலேயே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. 2011 தேர்தலில் பா.ஜ.க தனித்து களம் கண்டபோது 226 வார்டுகள் பெற்றது. தற்போதைய தேர்தலில் 308 வார்டுகள் பெற்றுள்ளது. இரண்டையும் ஒப்பிட்டால் பா.ஜ.க வளர்ச்சி சதவிகிதம் 0.63 சதவிகிதம்தான்” – இவையெல்லாம் பா.ஜ.க.வின் வெற்றியெல்லாம் ஒன்றுமேயில்லை அல்லது பெரிதுபடுத்த தேவையில்லை என்பதற்காக சொல்லப்படும் வாதங்கள்.

இதிலிருந்தே நாம் கேள்வியை எழுப்புவோம். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் தானே உள்ளது. இல்லை, அது நீங்கலாகத்தான் பெரியார் மண்ணை கணக்கெடுக்க வேண்டுமா. மேலும் 2011 தேர்தலுடன் ஒப்பிட்டு 0.63 சதவிகிதம்தான் வளர்ச்சி என்கிறார்கள். 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகுதான் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்டு மோடி கொண்டுவந்த பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து நாடு முழுக்கவும் குறிப்பாக தமிழகத்திலும் பா.ஜ.க எதிர்ப்பு தீவிரமானது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி நீட் எதிர்ப்பு போராட்டம், காவிரி உரிமை போராட்டம், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என பல போராட்டங்கள் 2011-க்கு பின்னர் நடைபெற்றவைதான்.
இந்த அடிப்படையில் பார்த்தால், 2011 தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெற்றாலேகூட பா.ஜ.க குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ந்து வருகிறது என்றுதான் பரிசீலிக்க முடியும். ஆனால், கூடுதலாக 0.63 சதவிகிதம் வளர்ச்சி வேறு பெற்றிருக்கிறது. “தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை” என்று நாம் பெருமை பேசுவது மிகைப்படுத்தல் இல்லை என்றால் இதை எப்படி பரிசீலிப்பது?
ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய நாயகனான இராமனை கொளுத்திய மண்ணில், காந்தியை சுட்டது கோட்சே என்று பேசுவதற்கு போலீசு தடை விதிக்கிறது. ஆனால், “நான் கோட்சேவின் சித்தாந்தப் பேத்தி” என்று பேசிய ஒரு பயங்கரவாதி தேர்தலில் நின்று பிரச்சாரம் செய்ய முடிகிறது. இது உ.பி-ல் நடக்கவில்லை. தமிழகத்தில் நடக்கிறது.
“நோட்டாவுடன் போட்டிபோடும் பா.ஜ.க; ஒத்த ஓட்டு பா.ஜ.க.” என்று ஒருபுறம் நக்கலடிப்பதும்; இன்னொருபுறம் “ஒரு மாவட்டத்தில் பெற்றதெல்லாம் பெரிய வெற்றியா? 0.63 சதவிகிதமெல்லாம் ஒரு வளர்ச்சியா?” என்று பேசுவதும் ஒருவகை கலாச்சாரம்.
விவகாரத்தை உள்ளபடியே பரிசீலிக்காமல், ஒருவரை/ஒன்றை பகடி செய்வதற்காகவே விசயத்தை தங்களுக்கேற்ப முறுக்கி, தேவைப்படுவதை மட்டும் பொறுக்கி எடுத்து பிரச்சாரம் செய்யும் மீம்ஸ் கலாச்சாரம். மீம்ஸ்-களை பொறுத்தவரை அதில் பரிசீலிப்பதற்கெல்லாம் ஒன்றுமில்லை; நக்கலடிப்பது ஒன்றே நோக்கம். ஆபத்தான பல விசயங்களைகூட வெறும் நகைத்துவிட்டு கடந்துசெல்ல நம்மை பழக்கப்படுத்துவது மீம்ஸ்-களின் எதிர்மறையான அம்சம்.
பா.ஜ.க.வை நக்கலடிக்கும் முற்போக்காளர்களுக்கு இதை ஒத்த சிந்தனைதான் உள்ளதே ஒழிய பரிசீலனை உணர்ச்சி அறவேயில்லை. பாசிஸ்டு கட்சியைப் பற்றிய இத்தகைய சிந்தனை போக்கு பாசிச எதிர்பாளர்களை சிந்தனை அளவிலும் செயல்பாட்டளவிலும் நிராயுதபாணியாக்கி அதன் வளர்ச்சிக்கு வழிகோலக்கூடிய அபாயமிக்கது.
தேர்தலுக்கு அப்பால்…
தி.மு.க.வுடன் ஒப்பிட்டால் பா.ஜ.க பெற்றிருப்பது மிக சொற்ப இடங்கள்தான், இதனால் எதையும் சாதித்துவிட முடியாது என்று கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
மேலும், இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒதுக்கும் சொற்ப இடங்களுக்குள் அடங்காமல் பா.ஜ.க தனித்து நின்று போட்டியிட முடிவு செய்தது என்பது, போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதால் அல்ல. இத்தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பரவலாக தனது மதவெறி அரசியலை பிரச்சாரம் செய்வதும், அ.தி.மு.க.வை மொத்தமாக ஓரங்கட்டிவிட்டு தி.மு.க.வை எதிர்க்கக்கூடிய திராணியுள்ள ஒரே கட்சி பா.ஜ.க மட்டுமே என ஒரு அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதும்தான் நோக்கம்.
படிக்க :
♦ NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !
♦ நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !
“தி.மு.க. எண்ணற்ற கோயில்களை இடித்துவிட்டது, லாவண்யா விசயத்தில் மதமாற்ற கும்பலுக்கு துணை நிற்கிறது, பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவது உள்ளிட்டு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது, சட்ட ஒழுங்கை சீர்குலைத்துவிட்டது – எங்கள் கட்சி அலுவலகத்தில் ஆளை வைத்து குண்டு போட்டுவிட்டது” போன்றவைதான் இத்தேர்தலில் பா.ஜ.க.வின் பிரச்சாரங்களாக இருந்தன. தி.மு.க-வை இவை ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளினார்கள் காவிகள்.
இதுபோன்ற உத்திகள்தான், நாளை தி.மு.க.வின் மீது மக்கள் அதிருப்தி கொள்ளும்போது அக்கட்சிக்கு எதிரான ஒரே மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கு பா.ஜ.க.விற்கு முன்தயாரிப்பாக அமையும். பா.ஜ.க.வின் தேர்தல் பங்கேற்பை இந்த கோணத்திலும் அணுக வேண்டும்.
மற்றபடி, ஒரே தேர்தல் பிரச்சாரத்தில் கொடி கட்டி பறக்க வேண்டும் என்ற நப்பாசையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு கிடையாது. தமிழகத்தில் வேரூன்றுவதற்காக அவர்கள் செய்யும் நீண்ட நெடிய முயற்சியில், இது ஒரு படி அவ்வளவுதான். படிப்படியான முன்னேற்றம் என்பதுதான் அவர்களது இலக்கு. இது புரியாமல் “ஒத்த ஓட்டு பா.ஜ.க” என நாம் கலாய்த்துக் கொண்டிருந்தால் நமக்கு எதார்த்தம் புரியவில்லை என்று பொருள்.
சுருக்கமாகச் சொன்னால், இந்த தேர்தல் களம் என்பது பாசிஸ்டுகள் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற துணைசெய்வதுதானே தவிர, பாசிச எதிர்பாளர்களுக்கான கருவியாக ஒருபோதும் பயன்படுத்த முடியாத ஒன்று.
பாசிச எதிர்ப்புக்கான களம் “தேர்தல்களுக்கு அப்பால்” உள்ளது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, ஷாகீன்பாக், டெல்லிச் சலோ என மக்கள் போராட்டங்களில் மையம் கொண்டுள்ளது.

மருது
தீட்சதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய் ! – சென்னை ஆர்ப்பாட்டம் !
“தில்லை இருப்பது தமிழ்நாடா? அல்லது அதற்குள் ஒரு தனிநாடா?
தில்லை நடராஜர் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் கொண்டுவர சிறப்பு சட்டம் இயற்று!
இலட்சுமி என்ற பெண் சிவபக்தையை ஜாதி சொல்லி இழிபடுத்திய தீட்சதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்! சிறையில் அடை!”
என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 11.03.2022 அன்று காலை 11 மணிக்கு மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம், மாநிலப் பொருளாளர், தோழர் அமிர்தா தலைமை தாங்கினார். கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகளின் தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
படிக்க :
♦ தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை ! – திருவாரூர் ஆர்ப்பாட்டம் !
♦ தில்லையில் தமிழுக்குத் தடை : நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தோழர் அமிர்தா தனது தலைமை உரையில், “தில்லை சிதம்பரம் கோயில் மக்கள் சொத்து, ஆனால் தீட்சத கும்பல் ஆக்கிரமித்து கொண்டு அட்டூழியம் செய்து வருகிறது. சிதம்பரத்தில் உள்ள போலீசு நிலையத்தில் பல வழக்குகள் தீட்சத கும்பல் மீது இருக்கிறது. சைக்கிள் திருடிய தீட்சதர், கொலை வழக்கில் தீட்சதர், தட்டில் விழும் காசுக்கு சண்டை போட்டு கொண்டு அடித்தடி என ரவுடி கும்பலாக இவர்கள் இருக்கின்றனர். பக்தர்களை அடிப்பது, சமீபத்தில் இலட்சுமி என்ற சிவபக்தை சிற்றம்பல மேடையில் ஏறி வழிப்பட சென்றபோது ‘பரச்சி’ என்று சொல்லி இழுவுப்படுத்தி அடிக்க முற்பட்டனர். இதை இணையத்தில் வீடியோவாக அனைவரும் பார்த்தோம். ஆனால், இலட்சுமி மீது சொம்பை திருடினார் என பொய் வழக்கு பதிந்துள்ளனர் திட்சதர்கள். இவர்களின் யோக்கியதை இது தான்.
3000 பேர் கைலாயத்திலிருந்து வந்தோம் அதில் ஒருவரை காணவில்லை, தேடினால் அவர்தான் சிவன் அதனால் சிவன் வகையறா நாங்கள் என ஒரு புருடா கதையை சொல்லிதான் இவர்கள் இந்த கோயிலுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். நந்தன் நுழைந்த வாயிலை இடித்துதள்ள வேண்டிய கடமை முற்போக்காளர்களாகிய நம் தோள்களின்மேல் உள்ளது. தமிழக அரசு, சிதம்பரம் கோயிலை இந்துஅறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என்று பேசினார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தனது உரையில், “இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று ஹிஜாப் பிரச்சினை ; மற்றொன்று சிதம்பரம் தில்லை கோயில் பிரச்சினை.
தமிழ்நாட்டில் மட்டும்தான் தேர்தலில் ஈடுபடாத இயக்கங்கள் ஒரு முற்போக்கு செயல்திட்டத்தை முன்வைத்து மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி பார்க்க முடியாது. முற்போக்கு சிந்தனையுள்ள கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய இயக்கங்கள் இணைந்து இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது என்பதே தீட்சதர்களின் வாதம். இதை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது என்பதே அவர்களின் வலிமை. தமிழில் வழிபடும் உரிமையை தடுக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பானுமதி தீர்ப்பு கொடுத்தார். ஆனால், உச்சநீதிமன்றத்திற்கு சென்று சு.சாமி போன்றோர் தீட்சத கும்பலுக்கு ஆதரவான தீர்ப்பை வாங்கியுள்ளனர். இது தொடர்ச்சியான நீண்ட நெடிய போராட்டம். இன்றும் தொடர்கிறது.
இன்று தில்லையிலே பல அமைப்புகள் இதற்காக போராடுகிறார்கள். ஆனால் ஊடகங்கள் எதுவும் வெளியிடுவதில்லை. சமூக வலைதலங்களில்தான் செய்திகள் வருகிறது. மேலும் தில்லையில் தீண்டாமையை கடைப்பிடித்து சிவபக்தை இலட்சுமியை அடித்துள்ளனர். அதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தீட்சதர்கள்மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஏன் அவர்களை கைது செய்யவில்லை? காரணம் என்ன? உடனடியாக அவர்களை கைதுசெய்ய வேண்டும்” என்று பேசினார். மேலும், தில்லை கோயில் வரலாற்றை அம்பலப்படுத்தி பேசினார். தீட்சதர்களின் வரலாற்று புளுகுகளை அம்பலப்படுத்தி நீண்ட உரையாற்றினார்.
தமிழ்த் தேச மக்கள் முன்னணியை சேர்ந்த தோழர் செந்தில் அவர்கள் தனது உரையில், “எந்த ஆடை அணிய வேண்டும்? ஆடை அணிவது அவரவர் சொந்த உரிமை என்ற கருத்தைக் கொண்டவர்கள் நாங்கள் அதனால்தான் நாங்கள் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக நிற்கின்றோம். தில்லையிலே கனகசபையில் யார் ஏறி பாட வேண்டும் என்பதில்தான் தில்லை பிரச்சினை எழுகிறது. இந்திய அரசியலைப்பின் சட்டப்பிரிவு 25, 26 என்பது சாதியைப் பாதுகாக்கிறது. அதனால்தான் அதை நாங்கள் எறிக்கிறோம் என்று பெரியார் சிறை செல்லும் போராட்டத்தை நடத்தினார். கருவறை முதல் கல்லறை வரை எங்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போராடுவதை கொள்கையாகக் கொண்டவர்கள் நாங்கள். சாதியை சொல்லி இலட்சுமி பாட அனுமதிக்காததால் தீண்டாமைக்கு எதிரானப் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வோம்.” என்று பேசினார்.
தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் அவர்கள் தனது உறையில், “ஹிஜாப் அணியலாமா என்பது அந்தப் பெண்ணின் உரிமை. முஸ்லீம் பெண்களின் கல்வியை தடை செய்யவே ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் ஹிஜாப் அணிய கூடாது என்று தடை விதிக்கிறது. பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். இந்த ஆட்சியில் தீட்சிதர்களுக்கு முடிவு கட்டவில்லையென்றால் எந்த ஆட்சியில் முடிவு கட்ட முடியும்” என்று பேசினார்.
இ.க.கட்சி (மா-லெ) ரெட் ஸ்டார், அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர், தோழர் கார்க்கி வேலன் தனது உரையில், “தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதும் வணிக சிலிண்டரின் விலை ரூ.109 விலை உயர்த்தி உள்ளது ஒன்றிய அரசு. வாக்களித்த மக்களுக்கு கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பரிசாக வழங்கப்படும் சூழலில்தான் உள்ளோம். நாம் ஓட்டுபோட்டுதான் கட்சிகள் ஜெயிக்கிறது என நினைத்துக் கொள்கிறோம்.
முதலாளிகளுக்கு அடிவருடிகளாக யார் வேலை செய்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். முதலாளிகளின் அனைத்து திட்டங்களையும் பாஜக தங்குதடையின்றி அமல்படுத்தும் என்பதற்காகவே அவர்களுக்கு ஆட்சி வழங்கப்படுகிறது. தஞ்சாவூரில் லாவண்யா மரணத்தை மதக் கலவரமாக்க துடிக்கிறது பாஜக அரசு. தில்லை கோயில் 2008-ல் தீட்சிதர்களுக்கு சொந்தம் இல்லை என்று தீர்ப்பு வந்தது. அப்போது அங்கு உண்டியல் வைக்கப்பட்டபோது வருடத்திற்கு ஒன்றரை கோடி வருமானம் வந்தது.
பாஜகவிற்கும் பார்ப்பனியத்துக்கும் எதிராக தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில் எதிர்ப்பு வரும். நீண்ட நெடிய மக்கள் சொத்து தனி நபர்களால் சூரையாடப்படுவதை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடுவதன் மூலம் வெற்றி காண்போம்” என்று பேசினார்.
புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் சீராளன் அவர்கள் தனது உரையில், “பாபர் மசூதியை இடித்து பார்ப்பன கும்பல் தனது சொந்தம் மாற்றிக் கொண்டது. ஒரு காலத்தில் காளிக்கு சொந்தமானது நடராஜர் கோயில். நடனப் போட்டியில் காளியை தோற்கடித்து நடராஜன் வலதுகாலைத் தூக்கி காட்டியதால் காளி தலை குனிந்து தனது இடத்தை மாற்றிக் கொண்டு போய்விட்டார். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் விஷ்ணுவின் சிலையை அகற்றி நடராஜனை மட்டும் நிறுவினர்.
சட்டப்பிரிவு 26-ஐ வைத்துக்கொண்டு நாங்கள் தனித்த பிரிவினர் என்று கூறி தில்லையை தங்கள் சொத்தாக வைத்துக் கொண்டுள்ளனர் தீட்சதர்கள். சுப்ரமணியசுவாமி தில்லைக்கு யாரும் சொந்தம் கொண்டாடவரவில்லை இது தீட்சதர்கள் சொத்து என்கிறார். 8 கோடி மக்கள் கேட்கிறோம் இது எங்கள் சொத்து. நாங்கள் உரிமை கோருகிறோம். தில்லை தமிழகத்தின் 8 கோடி மக்களுக்கான சொத்து எனவே தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என்று பேசினார்.
தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தோழர் மகிழன் தில்லை கோயில் தமிழர்களின் சொத்து என்பதை வலியுறுத்தி பேசினார். மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் தோழர் சேல் முருகன் அவர்கள் தனது உரையில், “ஹிஜாப் அணியத் தடை தில்லையில் தமிழுக்கு தடை. ஒரு இடத்தில் மதத்தைப் பாதுகாக்கிறான்; மற்றொரு இடத்தில் மதத்தின் உரிமையை மறுக்கிறான். ஹிஜாப் வந்த பிறகுதான் முஸ்லீம் பெண்கள் கல்வி கற்க வருவதாக முதலாளித்துவ பத்திரிகைகளே கூறுகின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி இருக்கும்போது மக்களை தூண்டி மோதிக்கொள்ள செய்வதற்காகதான் ஹிஜாப் தடை என்ற பிரச்சினையை கிளப்புகிறார்கள்.
தீட்சதர்களுடைய சொத்து அவருடைய பயன்பாட்டிற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று சட்டம்போட்டு பாதுகாக்கப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி, கல்லூரிகள் வைத்து கார்ப்பரேட் இணையாக சம்பாதிக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் சேவைத்துறை நடத்தவில்லை. அரசமைப்புச் சட்டம் 25, 26 சிறுபான்மை மக்கள் உரிமைகளை முடக்குகிறது. ஹிஜாப்பில் இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சொன்ன நீதிமன்றம்தான் தில்லையில் தீட்சிதர்களை பாதுகாக்கிறது. ஆன்மீகத்தில் மொழி உரிமைக் காலங்காலமாக மறுக்கப்பட்டு வருகிறது. தமிழ் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம்தான் ஆதிக்கத்தில் உள்ளது. இதனை எதிர்த்துப் போராடி தமிழை அதிகாரத்திற்கு கொண்டுவர வேண்டும்” என்று பேசினார்.
படிக்க :
♦ கர்நாடகாவில் ஹிஜாப் தடை – தில்லை கோவிலில் தமிழுக்கு தடை || தர்மபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
♦ இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை! – தருமபுரி, கோவை, மதுரையில் ஆர்ப்பட்டம்!
மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் தனது உரையில், “தில்லை தீட்சிதர்களின் சொத்து என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று 2008-ல் உயர்நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. மன்னராட்சி காலத்தில் மக்களுடைய சொத்திலிருந்து கட்டப்பட்டதே தில்லைக் கோயில். இது அரசிற்கு சொந்தம். ஆர்.எஸ்.எஸ் – பாஜக கேட்கலாம் இந்து கோயில்கள் மட்டுமே ஏன் அரசுடமையாக்க வேண்டும் என்று? சர்ச், மசூதி போன்றவைகள் அவர்களே சொந்த செலவில் கட்டியது.
மன்னர் ஆட்சி முடிந்துவிட்டது. அந்த அடிப்படையில் அரசாங்கம்தான் இதனை நிர்வகிக்க வேண்டும். சிற்றம்பல மேடையில் பாடலாம் என சட்டம் போட்ட பின்பும் சிவனடியார் ஆறுமுகசாமி அங்கு பாடுவதற்கு தீட்சிதர்கள் தடையாக இருந்தனர். சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலையே பார்ப்பனர்களுக்கு உள்ளது. வக்கீல், வழக்கு தொடுத்தவர்கள், உழைக்கும் மக்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும்; ஆனால், பார்ப்பனர்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு கட்டுப்படமாட்டார்கள். அரசு கையில் எடுத்து நடத்த சட்டமியற்ற வேண்டும். அதனை மக்கள் நடைமுறைப்படுத்த நாம் துணை நிற்போம்” என்று பேசினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
9176801656
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
“எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள்; போராட்டமே எங்கள் வாழ்க்கையாகி விட்டது; ஜிண்டால் குழுமத்திற்கு எதிரான போராட்டம், எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், குப்பை கிடங்கிற்கு எதிரான போராட்டம் – எனத் தொடர்ந்து போராடியுள்ளோம். இப்போது எங்களது நிலங்களைப் பறித்து எங்களை ஊரைவிட்டே விரட்டிவிட்டு சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிராகப் போராடி வருகிறோம். நாங்கள் ஒருபோதும் எங்கள் நிலத்தை விட்டுகொடுக்க மாட்டோம். போராட்டத்தின்போது சாகவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்கிறார்கள் போராடும் மக்கள்.
திருவண்ணாமலையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட சின்ன பாலியப்பட்டு, பழைய காலனி, புதிய காலனி, செல்வபுரம், அண்ணா நகர், மாரியம்மன் நகர், சின்ன புனல்காடு, அருந்ததியர் காலனி, வாணியம்படி – என்று பாலியப்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில்தான் போராடும் மக்கள் குறிப்பிடும் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ளது. விளைநிலங்களையும், கவுத்தி – வேடியப்பன் மலையையும் அழித்து சுற்றுச்சூழலையும் அம்மக்களின் வாழ்வாதாரத்தையும் நாசமாக்கி சிப்காட் அமைக்கப்படவுள்ளது. 1,500 ஏக்கர் நிலத்தையும் 500 வீடுகளையும் அரசு கையகப்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக அமைக்கப்படவுள்ள இந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக 54 நாட்களுக்கும் மேலாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் 9 கிராம மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் வட்டாரமானது நெல், நிலக்கடலை, மலர்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான வேளாண் பொருட்கள் விளையும் பகுதியாகும். இங்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால், விளைநிலங்களும் பாரம்பரியமாக தாங்கள் வாழ்ந்துவந்த வீடுகளும் பறிக்கப்பட்டு சொந்த நாட்டில் அகதிகளாகத் திரியும் நிலைமை உருவாகும் என்பதை உணர்ந்த 9 கிராம மக்களும் உடனடியாக கிராமசபைக் கூட்டத்தை நடத்தி சிப்காட் தொழிற்பேட்டையை எதிர்க்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
படிக்க :
♦ திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
♦ வெள்ளாற்றை பாதுகாக்க திரள்கிறது மக்கள் படை
மேலும், பாலியப்பட்டு ஊராட்சியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சாதிய வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து “சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு போராட்ட அமைப்பையும் உருவாக்கினர். சிப்காட் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்தப்போவதாக பிரகடனப்படுத்தினர்.
தொடர் காத்திருப்புப் போராட்டத்தின் மூன்றாம் நாளன்று (24.12.2021) கிராமசபைக் கூட்டத்தைக் கூட்டி எங்கள் கிராமத்தின், கிராம மக்களின் நலனைக் காக்கும் விதத்தில் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படக் கூடாது என்று அரசை வலியுறுத்தி தீர்மானமும் இயற்றியுள்ளனர்.
சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கத்தின் சார்பில், காத்திருப்பு போராட்டம், வீடுகளில் கறுப்புக் கொடியேற்றும் போராட்டம், கஞ்சி காய்ச்சும் போராட்டம், பொங்கல் தினத்தைக் கறுப்பு தினமாக அறிவித்தது – என 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ, முதல்வரின் தனிப்பிரிவிற்குக் கூட மனுக்கள் அனுப்பியுள்ள இப்பகுதிவாழ் மக்களின் போராட்டத்தை கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் இப்போராட்டம் குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.
அதிகாரத் திமிரும்; அலட்சியப் போக்கும்
இது தொடர்பாக பி.பி.சி தமிழ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, பாலியப்பட்டு கிராமங்களைச் சுற்றி விவசாயம் சரியாக நடைபெறவில்லை; குடில்கள் அமைத்து வேறு விவகாரங்கள்தான் நடைபெறுகிறது; சிப்காட் தொழிற்பேட்டை வந்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கும், வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

போராட்டம் தொடங்கிய 5-ம் நாளன்று அமைச்சர் எ.வ. வேலு, செங்கம் கிழக்கு பகுதியில் “ஒரு சில போலி விவசாயிகள் பச்சை துண்டு போட்டுக் கொண்டு போலியான முறையில் காத்திருப்புப் போராட்டம் நடத்துகிறார்கள்; அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்; கண்டிப்பாக சிப்காட் தொழிற்பேட்டை அந்த பகுதியில் அமைந்தே தீரும்” என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
தொடர் போராட்டத்தின் 9-ம் நாளன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்புக் கூட்டத்திற்குச் சென்றிருந்த 250–க்கும் மேற்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்துகூடச் சந்திக்கவில்லை. 10 பேரை மட்டும் அவரின் பங்களாவுக்குத் தனியாக அழைத்து, அரசுக்கு எதிராக எதாவது செய்து கொண்டிருந்தால் உங்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூட தயங்க மாட்டோம் என்று அதிகார திமிரோடு பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைச் சொல்லி அதைப்போல ஆகிவிடும் என்றும் மக்களை மிரட்டியுள்ளார்.
36-ம் நாளன்று மீண்டும் கிராமசபைக் கூட்டத்தில் சிப்காட் தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றவிருந்த நிலையில், அக்கூட்டத்தை அரசு ரத்து செய்துவிட்டது. 45-ம் நாளன்று 500-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சிப்காட் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக 25 கேள்விகள் அடங்கிய 424 மனுக்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்துள்ளனர், மக்களின் மனுக்களைக் கூட ஆட்சியர் நேரடியாக வாங்காமல், அவரின் உதவியாளர் மூலம் வாங்கச் சொல்லி அலட்சியப்படுத்தியுள்ளார்.
மக்களின் போராட்ட வரலாறு
ஏற்கனவே, 2006-ம் ஆண்டு கவுத்தி – வேடியப்பன் மலையிலிருந்து 23 ஹெக்டேர் பரப்பளவில் 10 ஆண்டுகளுக்கு இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க தமிழக அரசின் டிம்கோ நிறுவனத்துடன் இணைந்து ஜிண்டால் என்ற கார்ப்பரேட் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இவ்வாறு மண்ணில் இருந்து இரும்புத் தாது எடுக்கப்படுவதால் கவுத்தி மலையின் அருகில் உள்ள 55 கிராமங்களின் வாழ்வாதாரமும் நீராதாரமும் விவசாய நிலங்களும் முழுமையாக அழிக்கப்படும் அபாயம் உருவானது.
கவுத்தி – வேடியப்பன் மலையை அழித்து இரும்பு தாதுவை வெட்டியெடுக்க ஜிண்டால் நிறுவனத்திற்கு வழங்கிய இத்திட்டத்தை எதிர்த்து 2008-ம் ஆண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கவுத்தி – வேடியப்பன் மலைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு தொடங்கப்பட்டு பாலியப்பட்டு பகுதி உட்பட 55 கிராம மக்களும் ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, அப்போதைக்கு அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது. பின்னர், 2014-ம் ஆண்டு ஜிண்டால் நிறுவனத்துடன் மீண்டுமொரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதை எதிர்த்தும் இக்கூட்டமைப்பு சார்பாக தொடர் பிரச்சாரமும் உறுதியான போராட்டமும் நடத்தியதன் விளைவாக அது தடுத்து நிறுத்தப்பட்டது.
2018-ம் ஆண்டு அ.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியமைத்து போராட்டம் நடத்தியதன் விளைவாக அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
2022 ஜனவரி மாதம் நகர்ப்புறக் குப்பைகளை பெரிய புனல்காடு பகுதியில் கொட்டுவதைக் கண்டித்து பாலியப்பட்டு பஞ்சாயத்தின் 500-க்கும் மேற்ப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் தொடர் போராட்டத்தால் பெரிய புனல்காடு பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது அரசு. இவ்வாறாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல்வேறு நாசகரத் திட்டங்களுக்கெதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர் இப்பகுதிவாழ் மக்கள்.

நேரடியாக இரும்புத் தாதுவை வெட்டியெடுப்பதற்கான கார்ப்பரேட்டுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதால், தற்போது சிப்காட், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு இந்நிலத்தையும் கவுத்தி – வேடியப்பன் மலையையும் தாரைவார்க்கும் சதித்தனமான வழிமுறையைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. சிப்காட் என்ற முகமூடியை அணிந்துகொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களை உள்ளே நுழைத்து, பாலியப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களைத் துரத்துயடித்துவிட்டு கவுத்தி மலையைக் கொள்ளையிடுவதற்குத் தந்திரமாக சேவை செய்து வருகிறது. இதை முழுவீச்சில் செயல்படுத்தப்போவதைத்தான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலுவின் பேச்சும் வெளிப்படுத்துகிறது.
கார்ப்பரேட் நிலக்கொள்ளைதான் வளர்ச்சியா?
பாலியப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் முறையான பேருந்து மற்றும் சாலை வசதி கிடையாது. சில ஆண்டுகள் வந்து கொண்டிருந்த தனியார் மினி பேருந்தும் இப்போது வருவதில்லை. செல்வபுரம், புனல்காடு, அருந்ததியர் நகர், மாரியம்மன் நகர் போன்ற இடங்களில் சாலை அமைப்பதற்குக் கொட்டப்பட்ட கற்கள் அப்படியே இருக்கிறது. கரடுமுரடான மண் சாலையில்தான் தினம்தோறும் மக்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர். மாணவர்கள் தினமும் 3 கீலோ மீட்டர் பள்ளிக்குச் நடந்து செல்கின்றனர்.
அவசர உதவிக்குக் கூட மருத்துவமனைகள் கிடையாது. தமிழ்நாட்டிலிருந்து பிரிந்த தனித்தீவு போல இப்பகுதி காட்சியளிக்கிறது. அடிப்படை வசதிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
“ஆடு, மாடு வைத்துத்தான் எங்கள் வயிறைக் கழுவி வருகிறோம்; சிப்காட் வந்தால் நிலம் முழுவதும் அழிக்கப்படும்; நிலத்தடி நீர் அனைத்தையும் அவர்கள் உறிஞ்சி கொள்வார்கள்; குடிநீருக்கு எங்கள் குடும்பம் அலைய வேண்டியிருக்கும்; இந்த இடத்தைவிட்டு எங்களை விரட்டினால் நாங்கள் எங்கு சென்று, எப்படி வாழ முடியும்?” என்கிறார் போராட்டத்தில் கலந்து கொண்ட புனல்காட்டை சேர்ந்த ஒரு பெண்மணி.
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்திற்காக இத்தகைய விவசாயக் குடும்பங்களை அடித்து விரட்டிவிட்டு, அவர்களின் நிலங்களைப் பறித்து அமைக்கும் சிப்காட் தொழிற்பேட்டையை ‘வளர்ச்சி’ என்று கூறுகிறது தமிழக அரசு. பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே, ஆளும் கட்சி உதவியுடன் அரசு அதிகாரிகள் மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியப்பட்டு தீர்மானத்திற்கு எதிராக சிப்காட் தொழிற்பேட்டை எங்களுக்கு வேண்டுமென 10 கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்ற வைத்துள்ளனர். பாலியப்பட்டு மக்களை இரவும் பகலும் கண்காணிப்பதற்குப் போலீசாரையும் உளவுத்துறையையும் அரசு ஏவிவிட்டுள்ளது.
இதுபோன்ற தொழிற்பேட்டைகளை திருவண்ணாமலை மட்டுமின்றி, இன்னும் புதிதாக பத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் தொடங்கப்போவதாக 2021 சட்டசபைக் கூட்டத்தொடர் விவாதத்தின்போது தெரிவித்துள்ளது தி.மு.க அரசு.
படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
♦ விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியக் கொள்கைக்கு எதிராக தாங்கள் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது சவடால் அடிப்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதையே “வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு’’ என்ற பெயரில் மூர்க்கமாகச் செயல்படுத்துவதையுமே எல்லா ஓட்டுக் கட்சிகளும் நடைமுறையாகக் கொண்டுள்ளன. தி.மு.க அரசின் நடவடிக்கைகளிலிருந்து நாம் பெறும் அனுபவமும் இதுதான்.
கவுத்தி – வேடியப்பன் மலையைக் கொள்ளையடிப்பது என்பது ஏதோ அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. எட்டுவழிச் சாலை, சாகர்மாலா, பாரத்மாலா, கூடங்குளம் அணுஉலை, அணுக்கழிவு மையம், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் உள்ளிட்டு நாட்டின் மீதும் கோடானுகோடி மக்கள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் பாசிசத் தாக்குதலின் ஓர் அங்கம்தான் இது.
நாசகார ஜிண்டாலை எதிர்த்து ஒடிசா மாநிலத்தின் திங்கியா மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கனிம வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பாலியப்பட்டு உழைக்கும் மக்கள் அத்தகைய போராட்டங்களுடன் இணைந்து நிற்பதும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களைத் தொடுப்பதும்தான் இன்றைய அவசர, அவசியக் கடமையாக முன்னே நிற்கிறது.

பு.ஜ. களச் செய்தியாளர்
மார்க்சியம் : புகழ் பாடுதல் மட்டுமே ஒரு சித்தாந்தத்தை நிலைநாட்டி விடாது || ராஜசங்கீதன்
Young Karl Marx படத்தில் ஒரு காட்சி வரும். மார்க்ஸ் எழுதிய கட்டுரையை பிரசுரிக்கும் பத்திரிகை அலுவலக வாசலில் காவல்துறை நிற்கும். அவர்களை மார்க்ஸ் கடந்து அலுவலகத்துக்குள் செல்வார். அவர் எழுதியிருந்த கட்டுரை அன்று பிரசுரிக்கப்படும் நாள். பதிவேற்றப்போகும் கட்டுரையை மார்க்ஸ்ஸின் ஒப்புதலுக்காக படித்து பார்க்க கொடுப்பார்கள். அவர் படித்து முடித்துவிட்டு, அவர்களை பார்த்து புன்னகைப்பார். அவர் எழுதிய கட்டுரையில் பல முக்கியமான விஷயங்கள் அரசுக்கு பயந்து நீக்கப்பட்டிருக்கும்.
மார்க்ஸ்ஸின் சூடான எழுத்துகளால்தான் அலுவலகம் வரை காவல்துறை வந்து நிற்கிறது என குற்றம் சாட்டுவார்கள். அரசு கொடுக்கும் நெருக்கடியில் பத்திரிகையை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்கள். அரசுக்கு பயந்து, சென்சார் செய்து கட்டுரை வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுத்தப்படலாம் என்பார் மார்க்ஸ். பத்திரிகையாளர்கள் வெகுண்டு எழுவார்கள். இத்தனைக்கும் அதுவும் ஒரு சோஷலிச பத்திரிகைதான். பத்திரிகையை குறை சொல்வதா என கேட்டு, மார்க்ஸ்ஸின் வீரிய எழுத்துகளை குறை சொல்வார்கள்.
படிக்க :
♦ ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
♦ மார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் !
பொறுமையாக நின்றிருந்த மார்க்ஸ் திரும்ப கத்துவார். இலக்கற்ற, தக்கையான சோஷலிச கட்டுரைகளையும் விரைவில் புரட்சி வர வேண்டும் என பிரார்த்திக்கும் கட்டுரைகளையும் பிரசுரிக்கும் பத்திரிகை வர வேண்டியதே இல்லை என்பார். அதற்கு பிறகு அவர் சொல்லும் வசனம் முக்கியமானது. No point in writing without ideas and concepts என்பார்.
Ideas and concepts!
எந்தவொரு சித்தாந்தமும் சிறக்கவும் நிகழ்தொடர்பில் இருக்கவும் அதற்கான ideas மற்றும் conceptsகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
காலமாற்றத்தை அவதானிக்கும் கருதுகோள்களும் அவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். இவை எதையும் செய்யாத சித்தாந்தம் எதுவும் நீடித்ததற்கான சரித்திரம் இல்லை. புகழ் பாடுதல் மட்டும் ஒரு சித்தாந்தத்தை இருத்தி வைத்திடாது. எது ஒன்று சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கும் என நம்புகிறோமோ அதுவே அதை வீழ்த்தும் வாய்ப்பையும் கொண்டது என்பதுதான் இயங்கியல். மார்க்ஸியம் என்பார்கள்.
தோழியிடம் ஒருமுறை பேசும்போது கூட, மார்க்ஸ்ஸுக்கும் முன்னமே கம்யூனிசத்துக்கான சிந்தனை இருந்தது என்றார். உண்மைதான். கற்பானாவாத சோஷலிசமாக இருந்தது. அதைத்தான் Utopian World என்றார்கள். எல்லாருக்கும் எல்லாமும் எந்த குறையுமின்றி இருக்க கூடிய உலகத்தை கற்பனையாக இலக்கியம் பேசிக் கொண்டே இருந்தது. மார்க்ஸ்ஸுக்கு முன்னமே கம்யூனிசத்துக்கான சிந்தனைகள் இருந்ததுதான். பின் ஏன் மார்க்ஸ் முக்கியமாகிறார்?
Ideas and concepts!
கற்பனாவாத சோஷலிசமாக இருந்த விஷயத்தை, ஓர் அற்புதமான பொன்னுலகம் என பேசப்பட்ட கம்யூனிச சமுதாயத்தை படைப்பது நிஜத்திலேயே சாத்தியம் என்றார் மார்க்ஸ். அதற்கான சாத்தியங்கள், கருதுகோள்கள், திட்ட வரைவுகள் என அறிவியல் பூர்வமாக விளக்கினார். அப்படிதான் மார்க்ஸ் முக்கியமாகிறார்.
படிக்க :
♦ டெக்ஃபாக் : சங்க பரிவாரம் நடத்தும் கலவரங்களின் தொழில்நுட்ப ஊற்றுக்கண் !
♦ எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
மார்க்ஸ் கொடுத்த அணுகுமுறை முக்கியமானது. எந்தவொரு விஷயத்தையும் அதன் முரண்களை புரிந்து அணுகி பார்த்து எதிர்காலத்தையும் இயக்கத்தையும் அனுமானிப்பது. அந்த அணுகுமுறை எந்த இயங்கியலுக்குமே பிரதானம். எந்த சித்தாந்தமாக இருந்தாலும் இயங்கியல் என ஒன்று அவசியம். இவை ஏதுமின்றி இருக்கும் வரலாறை வேறாக மாற்றி பொருளாதாரம், வரலாறு என்றேல்லாம் நாம் பேசலாம். ஆனால் யதார்த்தம் முற்றிலும் வேறாகத்தான் இருக்கும்.
இன்று உலகை பாருங்கள். உலக மூலதனம் இயங்கும் பாணியை கவனியுங்கள். அது கொள்ளும் கலாசாரத்தையும் உற்பத்தி மாற்றங்களையும் நுட்பமாக்குங்கள். அங்கிருந்து தொடங்குவது மட்டும்தான் உங்களின் விடிவாக இருக்கும். அந்த விடிவில் நிச்ச்சயம் மார்க்ஸ் இருப்பார்.
– மீள்
முகநூலில் : ராஜசங்கீதன்
புதிய ஜனநாயகம் – மார்ச் 2022 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகத்தின் மார்ச் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – மார்ச் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பாசிசத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது, எச்சரிக்கை!
- தமிழகத்தில் காலூன்ற எத்தனிக்கும் காவி பாசிஸ்ட்டுகள்
- டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு!
- தில்லையில் தொடரும் தீட்சிதர் ஆதிக்கம் : தன்மானத் தமிழன் இனியும் சகிக்க மாட்டான்!
- கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
- குழந்தைத் திருமணச் சட்டம் 2021 : சீர்திருத்தச் சட்டமல்ல, ஒடுக்குமுறை திட்டம்!
- வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி!
தவறாமல் வாங்கிப் படியுங்கள் !! சந்தா செலுத்துங்கள் !
![]()
தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை ! – திருவாரூர் ஆர்ப்பாட்டம் !
இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை!
தில்லையில் தமிழனுக்கும் தமிழுக்கும் தடை!
தில்லை இருப்பது தமிழ்நாடா?
அதற்குள் ஒரு தனி நாடா?
தமிழக அரசே!
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர சிறப்புச் சட்டம் இயற்று”
என்ற முழக்கங்களின் கீழ் மார்ச் 11 அன்று காலை 11 மணியளவில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் த. சண்முகசுந்தரம் தலைமையேற்றார்.
ஆரூர் சீனிவாசன், மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ப. மோகன், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர், அருண் காந்தி திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர், புரட்சி நெப்போலியன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஷேக் அப்துல்லா மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர், முரளி மாவட்ட பொருளாளர் மக்கள் அதிகாரம், கிருஷ்ணமூர்த்தி வேதாரண்யம் பகுதி செயலாளர் மக்கள் அதிகாரம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
![]()
மக்கள் அதிகாரம்
திருவாரூர் – 6374741279
அன்றே சொன்னது புதிய ஜனநாயகம் : ஆம் ஆத்மி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகள் !
புதிய ஜனநாயகத்தின் பார்வையில், பா.ஜ.க, ஆம் ஆத்மி-இன் தேர்தல் வெற்றிகள்!
உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. ஐந்து மாநிலங்களில் பஞ்சாப் நீங்கலான மற்ற நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. மிகப் பெரிய வெற்றியைபெற்றுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். இங்கு வெற்றி பெறுவதானது, 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதை தீர்மானிக்கும் முக்கிய காரணி. எனவே, அம்மாநிலத் தேர்தல் முடிவுகள் அனைவராலும் கவனிக்கப்பட்டன.
உ.பி.யை பொறுத்தவரை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் சரி, பிந்தையதும் சரி சீட்டுகளைக் கூடக் குறையப் பெற்றாலும் பா.ஜ.க.வே ஆட்சியமைக்கும் என்று அறுதியிட்டன. அதே நேரம், தொடர்ந்து வந்த கருத்துக்கணிப்புகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் அதிகரித்துச் சொல்லபட்டன.
எனவே, பா.ஜ.க.விற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் கடுமையான போட்டி இருக்குமென்று விவாதிக்கபட்டது. ஒருபடி மேலே போய், “இந்த முறை பா.ஜ.க. படுதோல்வியைச் சந்தித்து சமாஜ்வாதி கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்” என்ற அளவிற்கு பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள், ஜனநாயக சக்திகளில் ஒரு பிரிவினர் பேசிவந்தனர்.
படிக்க :
♦ உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
♦ கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ || குறுந் தொடர்
ஆனால், உ.பி. தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கி நடைபெற்று வந்தபோதே, கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த இதழில், “உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை” என்ற கட்டுரையில், இத்தேர்தலின் போக்கு பற்றி, பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்.க்கு “மாற்று கட்சி” என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை என்று விளக்கி எழுதியிருந்தோம். நாம் கணித்தவாறே தேர்தல் முடிவுகளும் வந்துள்ளன.
உத்தரப் பிரதேசம்: பா.ஜ.க.வை மீண்டும் வெல்ல வைத்தது எது?
“தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கட்சிகளைப் போலல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் எதுவும் அதன் காவிக் கொள்கையை எதிர்த்து மூச்சுகூட விடுவதில்லை.
இவர்கள் காவி அரசியலை எதிர்ப்பவர்களில்லை என்பது பழையநிலை; பா.ஜ.க.வை எதிர்ப்பதாகச் சொல்லி களம் காண்பவர்களே, அதன் ‘இந்து அரசியலை’ தன்வயப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தற்போது முதிர்ச்சிபெற்று வரும் புதிய எதார்த்தம். ஆம், அடுத்த ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றன – “உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை”.
உத்தரப் பிரதேசத்தில், பா.ஜ.க. எதிர்ப்பு தேர்தல் களம் இப்படித்தான் இருந்தது. இதுகுறித்து விரிவாக அக்கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.
“உண்மையான இந்துக்கள் நாங்கள்தான்” என்று பறைசாற்றிக்கொண்ட காங்கிரஸ் துடைத்தொழிக்கப்பட்டிருக்கிறது. “கிருஷ்ணரே என்னுடைய கனவில் வந்து, உன்னுடைய தலைமையில்தான் இராமராஜ்ஜியம் அமைக்கப்படும் என்று சொன்னார்” என்று பிரச்சாரம் செய்த அகிலேஷ் யாதவையும் உ.பி. மக்கள் வெல்லவைக்கவில்லை.
“முஸ்லீம்களுக்கு ஆதரவான கட்சி, பயங்கரவாத கட்சி” என்று சமாஜ்வாதி கட்சியை தாக்குதல் நிலையில் விமர்சித்து ஒதுக்கியது பா.ஜ.க. “இது 80 சதவிகிதத்தினருக்கும் 20 சதவிகிதத்தினருக்கும் இடையிலான போட்டி” என்று வெளிப்படையாக இந்து-முஸ்லீம் மோதலைத் தூண்டும் வகையில் பேசிய யோகியின் பிரச்சாரம் எடுபட்டிருக்கிறது.
எமது மேற்கூறிய கட்டுரையில் கூறியுள்ளதைப் போல, “பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. பிரச்சாரங்களின் உள்ளடக்கமோ பா.ஜ.க.வின் ‘இந்து’ அரசியல் VS பா.ஜ.க. எதிர்ப்பு ‘இந்து’ அரசியல் என்பதாக உள்ளது. ‘சாத்தியமான மாற்று’ என்று எவையும் நம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை புலப்படவில்லை” என்று எழுதியிருந்தோம்.
உண்மையான ‘இந்து அரசியலிடம்’, ‘போலியான இந்து அரசியல்’ தோற்றுப் போயிருக்கிறது. நமது மதத்தை, தேசத்தை பாதுகாக்கும் ‘ஒரிஜினல்’ பாதுகாவலர்கள் பா.ஜ.க.தான் எனக் கருதியதால், அக்கட்சியை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் உ.பி மக்கள். தேர்தல் பிரச்சாரமே ‘இந்து அரசியல்’ என்று போன பின்னர், பா.ஜ.க.வைத் தவிர வேறு யாரையும் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று அவர்களிடம் கேட்க முடியுமா?
30 ஆண்டுகால வரலாற்றில், உத்தரப் பிரதேசத்தில் இரண்டாவது முறையாக ஒரு கட்சி மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததில்லை என்ற நிலையை உடைத்திருக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள். 255 தொகுதிகளில் வென்றதோடு, சென்ற முறை பெற்ற 39.67 சதவிகிதம் வாக்குகளைவிட அதிகமாக, தற்போது 41.33 சதவிகிதம் வாக்கு பெற்றுள்ளார்கள்.
ஆம் ஆத்மி கட்சி வெற்றியை எப்படி பார்ப்பது?
இன்னொரு பக்கம், ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் தனக்கு ஏற்கெனவே இருந்த பலத்தையும் இழந்து, ஒரு “தேசியக் கட்சி” என்று சொல்வதற்கான தகுதியே கேள்விக்குறியாகியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதுவும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் இடையே ஒரு நம்பிக்கையின்மையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பஞ்சாபில் கூட மக்கள் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரசைப் பார்க்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியை பெரும்பான்மையாக வெற்றி பெறவைத்துள்ளார்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மியின் வெற்றியை அறுதியிட்டுச் சொன்னாலும் பலருக்கும் இது ஆச்சரியமாகவே இருந்தது.
இவ்வெற்றியை ஒரு ‘புரட்சி’ என்று சொல்கிறார் கெஜ்ரிவால், விரைவில் இது நாடு முழுக்க பரவும் என்றும் சொல்கிறார்.
குறுகிய காலத்தில் ஒரு கட்சி, ஒரு மாநிலத்தைத் தாண்டி இன்னொரு மாநிலத்தில் எப்படி பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. தேசிய அளவில் தன்னை ஒரு அடையாளமாக காட்சிப்படுத்திக்கொள்ள முடிகிறது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
இதுபற்றி எமது மேற்கூறிய கட்டுரையிலேயே, “ஆம் ஆத்மி: ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்த ஸ்டெப்னி; ஆர்.எஸ்.எஸ்.க்கு வாய்த்த மற்றொரு அரசியல் கருவி!” என்ற உட்தலைப்பில் விளக்கியுள்ளோம்.
“…. … தொகுப்பாக பார்க்கும்போது, மற்ற கட்சிகளைவிட ஆம் ஆத்மி பேசும் இந்துத்துவ அரசியல் நேரடியாக காவி பாசிசத்துடன் நெருக்கமுடையது.
… .. ஆம் ஆத்மியின் இந்தப் போக்கை விமர்சிக்கும் லிபரல்கள், அக்கட்சியை ‘பா.ஜ.க.வின் பி டீம்’ என்கின்றனர். ஆம் ஆத்மி பா.ஜ.க.வின் பி டீம் என்று சொல்வதைவிட ஆளும் வர்க்கங்களின் பி டீம் என்று சொல்வதுதான் பொருத்தமானது. மோடி அரசின் பொருளாதாரத் தாக்குதல்களால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள் நாளுக்குநாள் பா.ஜ.க.வின் மீது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதன் சித்தாந்தமான இந்துத்துவத்தின் மீதோ, தேசவெறியின் மீதோ அல்ல. இச்சூழலில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்தால் அதே ‘இந்துத்துவம் – தேசவெறியைப்’ பேசி வெகுமக்களைக் கவரக்கூடிய ஒரு கட்சியாக உருமாற வாய்ப்புள்ள ஆம் ஆத்மியை ஆளும் வர்க்கங்கள் தத்தெடுத்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொன்னால், பா.ஜ.க. என்ற டயர் பஞ்சரானால் வேறொன்றை மாற்றிக் கொள்வதற்கான ஸ்டெப்னியாக (Stepney) ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்திருக்கிறது ஆம் ஆத்மி.
மேலும் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே. பா.ஜ.க. அல்லாத வேறொரு கட்சியையும் கூட ஆர்.எஸ்.எஸ். தங்கள் அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும்” என்று எழுதியிருந்தோம்.
எனவே, ஆளும் வர்க்கங்களும் ஆர்.எஸ்.எஸ்-ம் தங்களுக்கான ஒரு மாற்றுக் கட்சியாக வைத்துள்ளதுதான் ஆம் ஆத்மி. பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்ற பின், “தேசிய அளவில் காங்கிரசுக்கு எதிரான இயல்பான மாற்றாக ஆம் ஆத்மி வளரும்” என்று அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ராகவ் சதா பேசியிருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் ‘பிறவிப் பயன்’ என்ன என்று ராகவ் சதா விளக்கியதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.
படிக்க :
♦ யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !
♦ உ.பி-யில் தொடரும் அவலம் : 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை !
எனவே, தொகுப்பாக ஐந்து மாநிலத் தேர்தல் முடிவைப் பொறுத்தவரை நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் ஐந்து மாநிலங்களிலும் (பஞ்சாபில் ஆம் ஆத்மியையும் சேர்த்து) ஆர்.எஸ்.எஸ். வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.
000
கொரோனா காலத்தில் ஏற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம், அரசு மருத்துவ மனையிலேயே ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் இறந்த குழந்தைகள், கங்கை கரையில் செத்து மிதந்த பிணங்கள், பெண்களுக்கு எதிரான வல்லுறவு குற்றங்கள், தலித்துகள்-முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள், காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்தது – என இவ்வளவு அநீதிகளுக்கு பிறகும் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று உ.பி. மக்களை நம்மவர்கள் கடிந்து பேசலாம்.
தங்களின் இழிநிலையையே சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு, உ.பி மக்களுக்கு மதவெறி போதை தலைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். எனினும் இத்தனை கொடுமைகளுக்கும் எதிராக, “இவைகளுக்கெல்லாம் காரணம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிசம்தான். இதை வீழ்த்தாவிட்டால் வாழ்வில்லை” என அம்மக்களை அணிதிரட்டி, பாசிசத்திற்கு எதிராக வர்க்க உணர்வூட்ட யார்/எந்த கட்சி இருக்கிறது அங்கே? “நானும் இந்துதான். நாங்கள் அமைக்கப் போவதும் இராமராஜ்ஜியம்தான்” என்று பாசிசத்திற்கு பலியாகிப் போன ஓட்டுக் கட்சிகளைத் தாண்டி அங்கு யாருமில்லை.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்த்து நிற்பது என்பது பாசிச எதிர்ப்பு அரசியல் பேசுவதுதான்; அதற்கெதிராக களப்போராட்டங்களை முன்னெடுப்பதுதான்; இந்துராஷ்டிரத்திற்கு எதிரான அணிசேர்க்கையே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு எதிரான “சாத்தியமான மாற்று”.

புதிய ஜனநாயகம்
ஆசிரியர் குழு.
தில்லையில் ஆதிக்கம் செலுத்தும் தீட்சிதர் கும்பல் || விடுதலை இராஜேந்திரன் உரை !
தில்லை கோவிலில் தமிழுக்கு அனுமதி மறுத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் மீது தாக்குதல் தொடுத்த பார்ப்பன தீட்சிதக் கும்பலை கைதுசெய்து, தில்லை கோவிலில் நந்தன் நுழைந்த வாயிலை அடைத்து எழுப்பப்பட்டிருக்கும் சுவரை இடிக்க வேண்டி வலியுறுத்தி, 11.03.2022 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக புரட்சிகர அமைப்புகள் கலந்துகொண்டன. திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள், தில்லை தீட்சிதர்களின் பொய்களையும் புரட்டுகளையும் அம்பலப்படுத்தி பேசினார்.
மத்திய அரசு அதிகாரிகளில் இருந்து, மாநில அரசு அதிகாரிகள் வரை அனைத்து மட்டத்திலும் அவர்கள் தமது செல்வாக்குக்குட்பட்ட நபர்களைக் கொண்டிருப்பதை விரித்துரைத்தார். அவரது உரையின் முழுமையான காணொலியை இங்கு காணலாம் !
பாருங்கள் ! பகிருங்கள் !
தில்லையில் தமிழுக்குத் தடை : நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
பத்திரிகை செய்தி
09.03.2022
இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை!
தில்லையில் இருப்பது தமிழ்நாடா? அதற்குள் ஒரு தனி நாடா?
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் சிறப்பு சட்டம் இயற்று !
என்ற தலைப்பின் கீழ் 09.03.2022 புதன்கிழமை மாலை 5.00 மணி அளவில் நெல்லை செய்துங்கநல்லூர், பெருமாள்புரம், பாளையங்கோட்டை காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. கடைசியாக வண்ணாரப்பேட்டையில் ஐனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் சார்பாக ஐனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு வரும்போது போலீசுத்துறை “மக்கள் அதிகாரம் ” தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதை மீறி ஆர்ப்பாட்ட இடத்தில் நின்றால் கூட கைது செய்வோம் என்று மிரட்டியுள்ளது போலீசு.
தமிழன் கட்டிய கோயிலில் தமிழனும், தமிழும் போக முடியவில்லை. அதை எதிர்த்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதனை தடுத்து மக்கள் அதிகாரம் தோழர்களையும் மற்றும் இதர ஜனநாயக அமைப்பு தோழர்களையும் கைது செய்தது.
தில்லை என்பது மக்கள் சொத்து !
தீட்சத பார்ப்பனக் கும்பலை கைது செய் ! கைது செய் !
ஆடை என்பது எங்கள் உரிமை !
பார்ப்பனியத்தை விரட்ட பெரியாரின் தடியை கையிலெடு! என தோழர்கள் முழங்கினர்.
தி..மு.க திராவிட மாடல் தான் இந்த அடக்குமுறை ! திமுக பெரியார் மண்! சமூக நீதி! என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது. ஆனால் தில்லைக் கோயிலில் தமிழர்கள் போனால் தீட்சித பார்ப்பன ரவுடி கும்பல் அடிக்கிறது.
தில்லைக் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் அடக்குமுறை செய்கிறது போலீசுத்துறை. நெல்லையில் BJP, RSS கும்பலுக்கு எதிராக பேசினால் தடை. இதுதான் அறிவிக்க படாத சட்டமாக இருக்கிறது . உழைக்கும் மக்களுக்கு எதிராக “காவி-கார்ப்பரேட்” பாசிச கும்பலுக்கு எதிராக ஐனநாயக அமைப்புகள், விவாசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து களத்தில் முறியடிப்போம்!
தோழமையுடன்
செ.செல்வம்
நெல்லை மண்டல செயலாளர்
மக்கள் அதிகாரம்
தொடர்பு : 9385353605




















