Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 290

ரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு ! நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 05

பொலபொலவென்று விடிவதற்கு முன்னே விமானிகள் எழுப்பப்பட்டார்கள். சோவியத் டாங்கிகள் பிளந்து உட்புகுந்த இடத்திற்கு அருகே பெரிய ஜெர்மன் விமான அணி ஒன்று முந்திய நாள் இறங்கியது என்று தகவல் வேவு வீரர்களிடமிருந்து சேனைத் தலைமை அலுவலகத்துக்கு கிடைத்திருந்தது. கூர்ஸ்க் பிரதேசத்தில் சோவியத் டாங்கிகள் பிளந்து உட்புகுந்து விட்டதனால் எதிர்ப்பட்டுள்ள அபாயத்தைப் பெரிதென மதித்து ஜெர்மன் படைத் தலைமையினர் ஜெர்மனியின் சிறந்த விமானிகளால் செலுத்தப்பட்ட “ரிஹ்த்கோபென்” விமான டிவிஷனை இங்கே தருவித்திருப்பதாக முடிவு செய்யத் தரை அவதானிக்கை விவரங்கள் இடமளித்தன. உளவு வீரர்களின் தகவல்கள் இவற்றை உறுதிப்படுத்தின. இந்த டிவிஷன் கடைசி முறையாக ஸ்தாலின்கிராதுக்கு அருகே தகர்த்து நொறுக்கப்பட்டிருந்தது. பின்பு ஜெர்மன் பின்புலத்தின் உள்ளே எங்கோ வெகு தொலைவில் மறுபடி அமைக்கப்பட்டது. இந்தப் பகை டிவிஷன் தொகையில் பெரியது, புத்தம் புதிய “போக்கே-வுல்ப்-190” ரக விமானங்களைக் கொண்டது, மிகவும் அனுபவம் உள்ளது என்று அலெக்ஸேயின் ரெஜிமென்ட் எச்சரிக்கப்பட்டது. விழிப்புடன் இருக்கும் படியும் பிளந்து உட்புகுந்த டாங்கிகளைத் தொடர்ந்து முன் செல்லத் தொடங்கியிருந்த மோட்டார்ப் படைப் பிரிவுகளுக்குத் திண்ணமான காப்பு அளிக்கும் படியும் உத்தரவிடப்பட்டிருந்தது.

“ரிஹ்த்கோபென்!” ஜெர்மன் கோயெரிங்கின் தனிப்பட்ட அரவணைப்பில் இருந்த இந்த டிவிஷனின் பெயரை அனுபவம் உள்ள விமானிகள் நன்றாக அறிந்திருந்தார்கள். நெருக்கடியான நிலைமை எதிர்பட்ட எல்லா இடங்களிலும் ஜெர்மானியர் இந்த டிவிஷனை அனுப்பி வந்தார்கள். இந்த டிவிஷன் விமானிகளில் சிலர் ஸ்பானியக் குடியரசுக்கு மேல் கொள்ளைத் தாக்கு நடத்தியவர்கள். டிவிஷன் விமானிகள் அனைவருமே திறமையுடன், உக்கிரமாகப் போரிட்டார்கள், மிகமிக அபாயகரமான பகைவர்கள் எனப் புகழ்பெற்றிருந்தார்கள்.

“ஏதோ ‘ரிஹ்த்கோபென்’ விமானங்கள் நம்முடன் சண்டைபோட வந்திருக்கின்றனவாமே. அவற்றை எதிர்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ஆகா, இந்த ‘ரிஹ்த்கோபென்’களுக்குச் சரியான சூடு கொடுத்தோமானால் அற்புதமாயிருக்குமே!” என்றுச் சாப்பாட்டு அறையில் பொரிந்து கொட்டினான் பெத்ரோவ். மெரேஸ்யெவுக்கோ, செயல் பற்றிய சர்ச்சையில் கேலிகளும் வெட்டிப் பேச்சுக்களும் பிடிக்கவில்லை. அவன் சொன்னான்:

” ’ரிஹ்த்கோபென்’ என்றால் ஏதோ சாமானியமாக எண்ணாதே. ‘ரிஹ்த்கோபென்’ எதிர்ப்படும் போது, களைச் செடிகளுக்கிடையே எரிந்து சாம்பலாக நீ விரும்பாவிட்டால், உன்னிப்பாக விழிப்புடன் இரு. காதுகளை கூராக வைத்துக் கொள், தொடர்பை இழந்துவிடாதே. ‘ரிஹ்த்கோபென்’ இருக்கிறதே, தம்பி, இது பயங்கர விலங்கு. நீ வாயைத் திறப்பதற்குள் அதன் பற்களுக்கிடையே நொறுங்கிக் கொண்டிருப்பாய், தெரிந்ததா…… ”

பொழுது புலர்ந்ததுமே முதல் ஸ்குவாட்ரன் புறப்பட்டு விட்டது. கர்னல் தாமே இதற்குத் தலைமை வகித்தார். அது போரிட்டுக் கொண்டிருக்கையிலேயே பன்னிரு விமானங்கள் கொண்ட இரண்டாவது அணி பறக்கத் தயாராக நின்றது. அதற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லவிருந்தார் சோவியத் யூனியனின் வீரர் என்ற பட்டம் பெற்ற மேஜர் பெதோத்தவ். ரெஜிமெண்டிலேயே கமாண்டருக்கு அடுத்தபடி யாவரிலும் தேர்ந்த அனுபவமுள்ள விமானி இவர். விமானங்கள் ஆயத்தமாக இருந்தன, விமானிகள் அறைகளில் அமர்ந்திருந்தார்கள். எஞ்சின்கள் குறைந்த வேகத்துடன் முடுக்கிவிடப்பட்டிருந்தன. இதனால் காட்டுத் திறப்பு வெளியில் குப்குப்பென்று காற்று வீசத் தொடங்கியது. இடிப் புயலுக்கு முன், தாகமுற்ற தரை மீது, பெரிய, கனத்த முதல் மழைத் துளிகள் சடசடக்கையில், தரையைப் பெருக்கி, மரங்கள் அலைத்தாட்டும் இளங்காற்றை ஒத்திருந்தது அது.

முதல் அணியைச் சேர்ந்த விமானங்கள் வானத்தில் வழுகுவது போன்று நேர்குத்ததாக கீழே இறங்குவதைத் தன் விமானி அறையில் உட்கார்ந்து கவனித்தான் அலெக்ஸேய். தன் வசமின்றியே விமானங்களை எண்ணினான். தரையில் இறங்கிய இரண்டு விமானங்களுக்கு நடுவே இடைவெளி இருப்பதைக் கண்டதும் அவனுக்கு பதைப்பு உண்டாயிற்று. இதோ கடைசி விமானம் தரை சேர்ந்துவிட்டது. அப்பாடா! அலெக்ஸேயின் நெஞ்சச் சுமை இறங்கியது போலிருந்தது.

கடைசி விமானம் ஒரு பக்கம் ஒதுங்கியதும் ஒதுங்காததுமாக மேஜர் பெதோத்தவின் விமானம் மேலே கிளம்பியது. சண்டை விமானங்கள் இணை இணையாக வானில் பறந்தன. இதோ அவை காட்டுக்கு அப்பால் அணி வகுத்துக் கொண்டன. இறக்கைகளை அசைத்துவிட்டு, பெதோத்தவ் தனது விமானத்தை நேரே செலுத்தலானார். நேற்று பிளந்து ஊடுருவப்பட்ட இடத்தை ஒட்டியவாறு ஜாக்கிரதையாகத் தாழப் பறந்தன விமானங்கள். மிக உயரத்திலிருந்து தூரக்காட்சியாகக் காண்கையில் எல்லாம் பொம்மைகள் போன்று தோற்றம் அளிக்கும். இப்போதோ, அவ்வாறின்றி, அலெக்ஸேயின் விமானத்துக்கு அடியே தரை அருகே பாய்ந்து சென்றது. முந்தின நாள் அவனுக்கு மேலிருந்து பார்ப்பதற்கு ஏதோ விளையாட்டு போலக் காணப்பட்டது இன்று பிரம்மாண்டமான, எல்லை காண இயலாத போர்க்களமாக அவன் முன்னே விரிந்தது.

பீரங்கிக் குண்டுகளாலும் வெடி குண்டுகளாலும் குழிபறிக்கப்பட்டிருந்த வயல்களும் புல்தரைகளும் சோலைகளும் விமான இறக்கைகளுக்கு அடியே தலை தெளிக்கும் வேகத்துடன் விரைந்தன. போர்க்களத்தில் இறைந்து கிடந்த பிணங்களும் படையினரால் விட்டுவிடப்பட்டுத் தனியாக நின்ற பீரங்கிகளும் முழு முழு பீரங்கிப் படைப்பிரிவுகளும் தோன்றித்தோன்றி மறைந்தன. அடிபட்ட டாங்கிகளும் உடைந்து தகர்ந்த இரும்புச் சட்டங்கள், கட்டைகளின் நீண்ட குவியல்களும் தென்பட்டன. பீரங்கிக் குண்டு மாரியால் அறவே மொட்டையாக்கப்பட்ட பெருங்காடு கீழே பெருகியோடிற்று. மேலிருந்து பார்க்கையில் அது பிரம்மாண்டமான குதிரை மந்தையால் மிதித்துத் துவைக்கப்பட்ட வயல்போலக் காட்சி அளித்தது. இவை எல்லாம் திரைப்பட பிலிம் போன்ற விரைவுடன் பாய்ந்தோடியது. இந்த பிலிமுக்கு முடிவே கிடையாது எனத் தோன்றியது. இங்கு எவ்வளவு பிடிவாதமான, இரத்தப் போக்குள்ள போர் நிகழ்ந்தது, எவ்வளவு பெருத்த இழப்புகள் ஏற்பட்டன, இங்கே அடையப்பட்ட வெற்றி – எவ்வளவு மகத்தானது என்பவற்றை இவை பறை சாற்றின.

விசாலமான திடல் முழுவதிலும் குறுக்கும் நெடுக்குமாக இரட்டைத் தடங்கள் பதிந்திருந்தன டாங்கிகளின் சங்கிலிப் பட்டைகள். அவை மேலும் மேலும் முன்னே, ஜெர்மன் அணியிடங்களுக்கு உள்ளே இட்டுச் சென்றன. இந்தத் தடங்கள் ஏராளமாக இருந்தன. நாற்புறமும் தொடுவானம் வரை இந்தத் தடங்களைக் காண முடிந்தது. இன்னவை என்று தெரியாத விலங்குகளின் பிரம்மாண்டமான கூட்டம் வழி தெரியாமல் வயல்களின் ஊடாகத் தெற்கு நோக்கிப் பாய்ந்தோடியது போலத் தோன்றியது. முன் சென்றுவிட்ட டாங்கிகளைத் தொடர்ந்து சென்றன மோட்டார் பீரங்கிகளும், பெட்ரோல் லாரிகளும் டிராக்டர்களால் இழுக்கப்பட்ட பிரம்மாண்டமான செப்பனிடும் தொழிற் கூட வண்டிகளும் கித்தானால் மூடப்பட்ட சரக்கு லாரிகளும். மேலிருந்து பார்க்கும் போது அவை மெதுவாகப் போவது போல் தெரிந்தது இளநீலப் புழுதிப்படலம். சண்டை விமானங்கள் உயரே எழும்பிய பிறகோ இவை எல்லாம் வசந்த கால எறும்புப் பாதைகளில் சாரிசாரியாக எறும்புகள் ஊர்வது போன்று தோற்றம் அளித்தன.

காற்று வீசாமல் அசைவற்றிருந்த வானில் வெகு உயரே எழுந்த புழுதி வால்களுக்குள் மேகங்களில் போல மூழ்கியவாறு சண்டை விமானங்கள் படை வரிசைகளுக்கு மேலாகப் பறந்து முன்வரிசை ஜீப்புகள் வரை சென்றன. டாங்கிப் படைத் தலைமை அதிகாரிகள் அந்த ஜீப்புகளில் இருந்தார்கள் போலும் டாங்கிப் படை வரிசைகளுக்கு உயரே வானம் தூய்மையாக இருந்தது. ஆனால் தொலைதூரத் தொடுவானத்தின் மங்கிய விளிம்பின் அருகே சண்டை நடப்பதற்கு அறிகுறியாக ஒழுங்கற்ற புகைப்படலங்கள் தென்பட்டன. விமான அணி திரும்பிப் பாம்பு போல வானில் நெளிந்து போய்விட்டது. அதே சமயத்தில் தொடுவானக் கோட்டின் அருகே தரையை ஒட்டினாற் போலத் தொங்கிய ஒரு வரையுருவை முதலிலும் பின்பு வரையுருக்களின் முழுத் திரளையும் அலெக்ஸேய் கண்ணுற்றான். ஜெர்மன் விமானங்கள்! அவையும் தரையை அடுத்தாற் போல் பறந்தன. களைகள் மண்டிய செம்மைபடர்ந்த வயல்களுக்கு உயரே வெகு தூரம் தென்பட்ட புழுதி வால்களையே நோக்கி அவை முன்னேறின. அலெக்ஸேய் இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டுத் திரும்பிப் பார்த்தான். அவனுடைய பின்னோடி மிகக் குறுகிய இடைவெளிவிட்டு அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.

படிக்க:
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

அலெக்ஸேய் உற்றுக் கேட்டான். எங்கோ தொலைவிலிருந்து ஒலித்தது குரல்:

“நான் – கடற்பறவை இரண்டு, பெதோத்தவ்; நான் கடற் பறவை இரண்டு, பெதோத்தவ். கவனியுங்கள்! என் பின்னே வாருங்கள்!”

வானத்தில் ஒழுங்குக் கட்டுப்பாடு மிகக் கடுமையானது. விமானியின் நரம்புகள் தாங்கும் எல்லைவரை இறுக்கம் அடைந்திருக்கும். எனவே, சில வேளைகளில் கமாண்டர் உத்தரவின் கடைசிச் சொல்லை உச்சரிப்பதற்கு முன்பே கூட விமானி அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி விடுகிறான். கண கணப்புக்கும் சீழ்கைக்கும் இடையே எங்கோ தொலைவில் ஒலித்தன புதிய கட்டளையின் சொற்கள். அதற்குள் அணி முழுவதும் இணை இணையாக, அதே சமயம் நெருக்கமான வரிசையை விடாமல், ஜெர்மானிய விமானங்களை குறுக்கிட்டுத் தாக்கத் திரும்பியது. பார்வையும் செவிப்புலனும் சிந்தனையும் எல்லாம் முடிந்தவரை கூராகி விட்டன. கண்களுக்கு எதிரே விரைவாகப் பெரியவையாகிய வேற்று விமானங்கள் தவிர எதையும் அலெக்ஸேய் காணவில்லை. தலைகாப்பின் காதுக் குழாயில் வந்த கணகணப்பையும் கிறீச்சொலிகளையும் தவிர எதையும் அவன் கேட்கவில்லை. இந்தக் குழாய் வழியே உத்தரவு இதோ ஒலிக்க வேண்டும். ஆனால் உத்தரவுக்குப் பதிலாக ஜெர்மன் மொழியில் கிளர்ச்சியுடன் ஒலித்த குரல் அவனுக்கு மிகத் தெளிவாகக் கேட்டது.

“பகை விமானங்கள்! பகை விமானங்கள்! ‘லா-5.’ பகை விமானங்கள்!” என்று கத்தினான் ஒருவன். அவன் ஜெர்மானியத் தரைக் குறி வைப்போனாக இருக்க வேண்டும். ஆபத்து பற்றித் தனது விமானங்களை அவன் இவ்வாறு எச்சரித்தான்.

புகழ் பெற்ற ஜெர்மன் விமான டிவிஷன் “ரிஹத்கோபென்” தனது வழக்கப்படி போர்க்களத்தில் குறிவைப்போரையும் தரை அவதானிக்கையாளர்களையும் வலைப்பின்னல் போல விரிவாக நியமித்திருந்தது. விமானச் சண்டைகள் நடக்கக்கூடிய இடங்களில் இவர்கள் வானொலிபரப்பு கருவிகளுடன் இரவில் போதிய நேரம் முன்பே பாராஷூட்டுக்களின் உதவியால் இறக்கப் பட்டிருந்தார்கள்.

கரகரப்பும் எரிச்சலும் கொண்ட இன்னொரு குரல் முன்னதை விடக் குறைந்த தெளிவுடன் ஜெர்மன் மொழியில் சொல்லிற்று:

“இடப்பக்கத்தில் ‘லா-5’! இடப்பக்கத்தில் ‘லா-5’! ” இந்தக் குரலில் கோபத்துடன் கூடவே நன்கு மறைக்கப்படாத கலவரமும் ஒலித்தது.

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் பகை விமானங்களைக் கூர்ந்து பார்த்தான். இவை “போக்கே-வூல்ப்-190″ ரகத் திடீர்த் தாக்குச் சண்டை விமானங்கள். விறலும் லாவகமும் உள்ளவை. அண்மையில் தான் இவை போர்ப்படைகளில் முழங்கத் தொடங்கியிருந்தன. சோவியத் விமானிகள் இவற்றுக்குப் “போக்கு”கள் என்று பெயரிட்டிருந்தார்கள்.

எண்ணிக்கையில் அவை அலெக்ஸேயின் அணியைப் போல் இரு மடங்காக இருந்தன. “ரிஹ்த்கோபென்” டிவிஷனின் அணிகளுக்குரிய தனிச்சிறப்பான, கண்டிப்பான வரிசையில் அவை பறந்தன. பின் தொடரும் ஒவ்வொரு விமானமும் முன்னுள்ளதன் வாலைக் காக்கும் படியான அமைப்பில் படிவரிசை அணியாக இணை இணையாய்ச் சென்றன அவை. உயரத்தில் தமக்கு இருந்த மேம்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு பெதோத்தவ் தமது அணியைத் தாக்கில் ஈடுபடுத்தினார்.

அலெக்ஸேய் தனக்கென்று ஒரு பகை விமானத்தை மனதுக்குள் குறித்துக் கொண்டான். மற்ற விமானங்களைப் பார்வையிலிருந்து தப்ப விடாமல், அந்தப் பகை விமானத்தை இலக்குக் காட்டியின் மையத்துக்குக் கொண்டுவர முயன்றவாறு அதன் மேல் பாய்ந்தான். ஆனால் வேறொரு குழு பெதோத்தவை முந்திக் கொண்டுவிட்டது. “யாக்” விமானங்களைக் கொண்ட அந்தக் குழு வேறு புறமிருந்து வந்து ஜெர்மன் விமானங்களை மேலிருந்து இடைவிடாது தாக்கிற்று. ஜெர்மன் வரிசையைத் தகர்த்து சிதற அடிக்கும் அளவுக்கு வெற்றிகரமாக இருந்தது அந்தத் தாக்கு. வானில் ஒரே அமளி குமளி ஏற்பட்டது. இரு அணிகளும் தனித்தனியே சண்டையிடும் இணைகளாகவும் நால் விமானக் குழுக்களாகவும் பிரிந்தன. பீரங்கிக் குண்டுகளைப் பொழிந்து பகை விமானங்களை இடை மறிக்கவும் வாலில் தாக்கவும் விலாப்புறம் சுட்டுவீழ்த்தவும் முயன்றன சோவியத் சண்டை விமானங்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

எடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை !

0

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு பேரின் படுகொலையின் குற்றவாளிகளை “நன்னடத்தை” விதிகளின் படி விடுவித்துள்ளது தமிழக அரசு. மேலவளவு முருகேசன் படுகொலை என்பது ஒட்டு மொத்த தமிழகத்தின் முகத்தின் மீதும் சாதி வெறியர்கள் காறி உமிழ்ந்த நிகழ்வு. இந்திய வரலாற்றிலேயே குறிப்பிட்டு சொல்லத்தக்க சாதிய வன்கொடுமைப் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு கொடூரமான குற்றத்தை இழைத்தவர்களைத்தான் விடுதலை செய்துள்ளது தமிழக அரசு.

இணைய தலைமுறையினருக்கு மேலவளவு முருகேசனைத் தெரிந்திருக்காது – பழைய வரலாற்றை சுருக்கமாகவாவது அறிந்து கொண்டால்தான் இந்த விடுதலையின் பின் இருக்கும் தடித்தனத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

மேலவளவு : ஆதிக்க சாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டோர்கள். (கோப்புப் படம்)

1996-ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, தலித் மக்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுவரை சூத்திரசாதி கள்ளர்களே ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருந்து வந்த நிலையில், புதிதாக தலித் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர் சூத்திரசாதி வெறியர்கள். இதையடுத்து வட்டாட்சியர் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக சாதி வெறியர்கள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதிகாரத்தின் முன் மண்டியிட்ட சாதிவெறியர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தலித்துகளை மிரட்டியதை அடுத்து தலித்துகள் தரப்பில் இருந்து யாரும் மனுத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை, மீண்டும் தேர்தலுக்கான மாற்றுத் தேதி அறிவிப்பு என்கிற நாடகங்களின் ஊடே முருகேசன் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட முன்வந்தனர்.  தேர்தல் அன்று கலவரம்  செய்த சாதிவெறியர்கள்  வாக்குப் பெட்டிகளை களவாடிச் சென்றனர். இதனால், தேர்தல் தடைபெற்றது.

அதன் பின் மீண்டும் சில மாதங்கள் கழித்து கடுமையான போலீசு காவலோடு நடந்த தேர்தலில் முருகேசன் வென்றார். எனினும், ஊராட்சி மன்ற அலுவலகம் கள்ளர்கள் வசிக்கும் பகுதியில் இருந்ததால் அவரால் அங்கே செல்ல முடியாத நிலை தொடர்ந்து நீடித்தது.  ஒருபக்கம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தனது பணிகளை முருகேசன் மேற்கொண்டு வந்த நிலையில் சாதி வெறியர்கள் தலித் மக்களின் மேல் தொடர்ந்து வன்கொடுமைகளை கட்டவிழ்த்து வந்தனர்.

மேலவளவு முருகேசன்.

ஒரு சந்தர்பத்தில் மூன்று தலித் குடிசைகள் தீயிடப்பட்டன; இதற்கு நிவாரணம் பெற, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். இவர்களை பின் தொடர்ந்து சென்ற சாதி வெறியர்கள், அவர்கள் திரும்பும் பேருந்தைக் குறித்து ஊரில் தகவல் சொல்லி சென்னகரம்பட்டி ராமர் என்பவர் தலைமையில் ஆட்களை திரட்டி தயாராக இருந்தனர். பேருந்து  அக்ரகாரம் பழைய கள்ளுக்கடை மேடு அருகே வந்த  போது  துரைப்பாண்டி என்பவர், ஓட்டுநரை மிரட்டி வண்டியை நிறுத்தினார். அதே நேரம், ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் வண்டியை ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.

பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்), பூபதி, சௌந்திரராஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பிலிருந்து தனியாக வெட்டி எடுத்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.

♦ ♦ ♦

25.09.97 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு 85 நாட்கள் கழித்து 25.09.97 அன்று 41 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயராமன், பாம்பு கடித்து இறந்து விட்டார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர். அடுத்த ஆறே மாதத்தில் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் ஜாமீன் பெற்று ஊருக்கே திரும்பினர். அதன் பின் தலித்துகள் அச்சத்துடன் காலம் தள்ளி வந்தனர்.

நீண்ட விசாரணைகளுக்குப் பின் 26.07.2001 அன்று விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பில் குற்றத்தை நிறைவேற்ற சதி செய்தது நிரூபிக்கப்படவில்லை என சொல்லப்பட்டு இருந்தது. அதே போல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (1989) இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை.

படிக்க:
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட 17 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதே போல் தலித் மக்கள் தரப்பில் 23 பேர் விடுவிக்கப்பட்டதை சீராய்வு செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தமிழக அரசு வழக்கை மேல் முறையீடு செய்யாமல் விலகிக் கொண்டது. மேல் முறையீடுகளின் மீதான விசாரணைகள் நடந்து வந்த நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிணையில் வெளி வந்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணைகளை அடுத்து 17 பேரின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மற்ற 23 பேரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது துரதிர்ஷ்டவசமானது என்றும், அதனால் இவர்களின் விடுதலை உறுதி செய்யப்படுவதாகவும் 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளில் குற்றவாளிகளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதமே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 14 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ.-வான பெரியபுள்ளான் சட்டமன்றத்தில் பேசியிருந்தார். அப்போதே இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி குற்றவாளிகளில் 13 பேரை ”நன்னடத்தை” விதிகளின்படி விடுவித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி,  சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி ஆகியோர் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மிக கொடூரமான வன்கொடுமைகளையும் படுகொலைகளையும் செய்த இந்த மக்கள் விரோதிகள் விடுவிக்கப்பட்டிருப்பதை கடுமையாக விமர்சிக்கும் சமூக செயல்பாட்டாளர்கள், மற்ற குற்ற வழக்குகளைப் போல் தீண்டாமை வன்கொடுமையால் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி விடுவிக்க முடியாது என்கின்றனர். ஆனால், அரசு தரப்பில் ஆரம்பத்தில் வழக்கை நடத்திய போதே  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகளை தப்பவிட்டுள்ளனர்.

குற்றவாளிகளை இவ்வாறு விடுவிப்பது இனிமேல் தலித் மக்களின் மேல் எந்த குற்றத்தை இழைத்தாலும் தண்டனையில் இருந்து “நன்னடத்தையை” காரணம் காட்டி தப்பி விடலாம் என்கிற திமிரை சமூக விரோதிகளுக்கும், சாதி வெறியர்களும் ஏற்படுத்தும் என்பதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டுகின்றனர். ஜனநாயகத்தின் மீதும், சமூகத்தின் மீதும் கொஞ்சமேனும் அக்கறை உள்ளவர்கள் இந்த அயோக்கியத்தனத்த்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

சாக்கியன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் ! | காணொளி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வகையான கருத்துக்களைக் கூறுகின்றனர். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நீதிமன்றத் தீர்ப்பு மத நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், ராமர் கோவிலைக் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது சட்டப்படியானதா ? அல்லது கட்டப்பஞ்சாயத்துத் தனமானதா ?

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் அதை விமர்சிக்கக் கூடாதா ? அத்தீர்ப்பை எதிர்க்கக் கூடாதா ? விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் இராஜு.

 

பாருங்கள் ! பகிருங்கள் !

தமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் ? கருத்துக் கணிப்பு

தமிழக அரசியலில் ‘வெற்றிடம்’ – ரஜினி : கருத்துக் கணிப்பு

ழ்வார்பேட்டை ‘ஆண்டவரின்’ அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் சிலையை கமலோடு இணைந்து திறந்து வைத்தார் ரஜினி. இயக்குநர் பாலச்சந்தர் அறிமுகம் செய்தவர்கள் இன்று அரசியல் பேசுகிறார்கள், அக்கப்போர் நடத்துகிறார்கள் என்றால் அந்த பாவத்தின் பாவத்தில் பாலச்சந்தருக்கும் பங்கு இருக்கிறது. கலைத்துறையில் காசு பார்த்தவர்கள் சிலை திறந்ததோடு போயிருந்தால் பிரச்சினை இல்லை. சிலை திறந்த கையோடு போயஸ் கார்டன் திரும்பிய ரஜினியை பத்திரிகையாளர்கள் வழிமறித்து கேட்கிறார்கள். அப்போது தமிழக அரசியலில் ஆளுமைமிக்க தலைமைக்கு ‘வெற்றிடம்’ உள்ளது என்று போகிற போக்கில் ஒன்றைச் சொல்லிவிட்டுப் போனார் ரஜினி.

ஏன் வெற்றிடம், யார் வெற்றிடத்தை நிரப்புவார்கள், நிரப்புகிறவர்களின் தகுதி தராதரம் என்ன என்று கேட்டிருந்தால் ரஜினி குஜினியாக கும்மப்பட்டிருப்பார். “யார் சார் நீங்க” என்று தூத்துக்குடியில் ஒரு மாணவர் கேட்டு பிறகு சென்னை விமான நிலையத்தில் “ஸ்டெர்லைட் போராட்டத்தை தீவிரவாதிகள் நடத்தினார்கள்” என்று வெடித்தாரே அதுதான் ரஜினியின் உண்மையாக பாசிச முகம். ஒரு கருத்தையோ, ஒரு வாக்கியத்தையோ கோர்வையாகவோ, சில்லறையாகவோ பேசத்தெரியாத, தமிழகத்தின் தெற்கு வடக்கு எது என்றே தெரியாத இந்த அறிவாளி, ஏதாவது ரெண்டொரு வார்த்தை பேசினால் ஊடகங்களுக்கு டி.ஆர்.பி. போதை பிடித்து ஆட்டுகிறது.

உடன் தமிழகத்தின் அரசியல் வெற்றிடம் குறித்து ரஜினியை மையப்படுத்தி மாலை நேர விவாதத்தை இட்டு நிரப்புகிறார்கள். ரஜினியின் அரசியல் வெற்றிடம் குறித்து எட்டுவழிச்சாலை எடப்பாடிக்கும், திக்குத்தெரியாத பிரேமலதாவிற்கும் கோபம் வருகிறது என்றால் தி.மு.க.விற்கு சொல்லத் தேவையில்லை. ஆயினும் இவர்கள் எவரும் ரஜினியின் முட்டாள்தனத்தையும் இந்துத்துவ சார்பையும் வெளிப்படையாக கண்டிப்பவர்கள் அல்ல. ரஜினியை திட்டினால் நாலரை ஓட்டு வீணாகுமே என்று கவலைப்படுபவர்கள்.

படிக்க:
ரஜினி : வரமா – சாபமா ? அச்சுநூல்
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !

சரி, பேச்சுக்கு தமிழக அரசியலில் வெற்றிடமிருந்து அதை ரஜினி ஒரு பலூன் போல நிரப்பிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிரப்புதல் எப்படி இருக்கும்?

♦ வடிவேலு மீம்ஸோடு போட்டி இருக்கும்
♦ துக்ளக் தர்பாரை விஞ்சி விடும்
♦ பாஜக-விற்கு படுஜோராக இருக்கும்
♦ பிரஸ் மீட் தடை செய்யப்படும்
♦ அனைத்தும் நடக்கும்

கேள்வி :  தமிழக அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும்?

டிவிட்டரில் வாக்களிக்க :

யூடியூபில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! | விடுதலை ராஜேந்திரன்

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?”

திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் தோழர். விடுதலை ராஜேந்திரன் அறிக்கை :

யோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது.

இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

தோழர். விடுதலை ராஜேந்திரன்

இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்துவைத்த வாதங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், இந்துத்துவவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ராமர் கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன. அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

1949-ம் ஆண்டு வரை அங்கே தொழுகைகள் நடந்தன என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அந்த மசூதியில் தொழுகைகள் ஏதும் நடக்கவே இல்லை என்று சங்பரிவாரங்கள் முன்வைத்த வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. 450 ஆண்டு கால உரிமை முஸ்லிம்களுக்கு அந்த மசூதியில் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

450 ஆண்டுகாலம் ஒரு இடத்தில் மசூதி இஸ்லாமியர்களுக்கு இருந்தது அதை அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்று சொன்னதற்கு பிறகு அவர்கள் நிலத்திற்கான உரிமை கோருவதற்கு (இஸ்லாமியர்களுக்கு) உரிமை இல்லை என்ற தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. அது மட்டுமின்றி 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23 தேதிகளில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து சில விஷமிகள் ராமன் சீதை சிலைகளை போட்டது சட்டவிரோதம் என்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 1992-ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதும் குற்றத்திற்கு உரிய நடவடிக்கை என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவைகளெல்லாம் முஸ்லிம்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டவைகள். சங்பரிவாரங்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு எதிரான கருத்துக்கள்.

ஆனால் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் அந்த இடத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிமை இல்லை என்று கூறிவிட்டது. இந்துக்களுக்கு சொந்தமான இடம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா? இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவான விளக்கம் இல்லை. மௌனம்தான் சாதிக்கிறது.

ஒப்பீட்டளவில் அது இந்துக்களுக்கு சொந்தம் என்கிற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது என்று நீதிமன்றம் தீர்ப்பில் திரும்பத் திரும்ப கூறுகிறது. எப்படி இந்த முடிவுக்கு வந்திருக்கிறது என்பதற்கு தொல்லியல் துறை சமர்ப்பித்த அறிக்கை; அந்த அறிக்கை மசூதி இருந்த இடத்தில் பூமிக்கு கீழே நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கே இஸ்லாமிய கட்டுமானங்கள் ஏதும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்று கூறி இருப்பதை ஒரு காரணமாக காட்டுகிறது.

இரண்டாவதாக அங்கேதான் ராமன் பிறந்தான் என்கிற ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கையை காரணமாக காட்டுகிறது. ஒட்டுமொத்த இந்துக்கள் ராமன் அங்குதான் பிறந்தான் என்ற நம்பிக்கையை காரணம் காட்டி மசூதி இருந்த இடத்தில் கோயிலை கட்டிக் கொள்ளலாம் என்று நம்பிக்கையை இந்துக்களுக்கு சாதகமாக பயன்படுத்திய உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கிறது. அதாவது தொழுகையை நடத்துவதற்கு மசூதிதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. எனவே வேறு இடத்தில் மசூதி கட்டி அவர்கள் தொழுகை நடத்தலாம் என்று கூறுகிறது. ஆக இஸ்லாமியர்களுடைய நம்பிக்கையை அந்த இடத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றுவதற்கும் இந்துக்களின் நம்பிக்கை மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றம் இப்போது பயன்படுத்தி இருக்கிறது.

படிக்க:
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !
♦ நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்

யார் இந்த மசூதியை இடித்தார்களோ, அவர்களே ஒரு அறக்கட்டளையை நிறுவிக் கொண்டு ராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது பற்றி கோரிக்கை எதுவும் இந்த வழக்கில் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் ராமர் கோயில் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

ஒருவேளை மசூதி இடிக்கப்படாமல் மசூதி அங்கு இருந்திருக்கும் என்று சொன்னால் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்திருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. சட்டவிரோதமாக மசூதி இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட ஒரு மசூதி இன்றைக்கு ராமன் கோயில் கட்டுவதற்கு சட்டரீதியான ஒரு தீர்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது.

இது சட்டத்தின் முன் சரியான தீர்ப்புதானா என்ற கேள்வியை வரலாறு எதிர்காலத்தில் நிச்சயம் எழுப்பத்தான் செய்யும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் – திராவிடர் விடுதலைக் கழகம் – சென்னை

disclaimer

சதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் !

3

மாணவர்களின் உரிமைக்காகவும் பொதுப் பிரச்சினைகளுக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பதற்காக முதுகலைப் படிப்பிற்கான அனுமதி மறுக்கப்பட்டு பழிவாங்கப்பட்ட கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் சுரேந்திரனை மீண்டும் கல்லூரியில் அனுமதிக்க உத்தரவிட்டிருக்கிறது, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

கரூர் பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளரான தோழர் சுரேந்திரன், கரூர் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறையில் இளங்கலை படிப்பை முடித்த மாணவர். இக்கல்லூரியில் பயின்ற மூன்றாண்டு காலத்தில் கல்லூரியில் அடிப்படை வசதிகளுக்காகவும் மாணவர்களின் உரிமைக்காகவும் மற்றும் பொதுவில் மக்களை பாதிக்கும் பொதுப்பிரச்சினைகளுக்காகவும் முன்னின்று பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

மாணவர் சுரேந்திரன்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் திணிப்புக்கெதிரான போராட்டம், பேருந்து கட்டண உயர்வுக்கெதிரான போராட்டம், ஆசிரியர்களின் உரிமைக்கான போராட்டம், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி நடைபெற்ற போராட்டம், இதே கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவந்த பேராசிரியர் இளங்கோவனை தண்டிக்கக்கோரி நடைபெற்ற போராட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மாணவர்களிடம் சமூக அக்கறையையும் கண்ணெதிரில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்க வேண்டுமென்ற உணர்வையும் ஏற்படுத்தி உரிமைக்கான போராட்டத்தில் அவர்களை பங்கெடுக்க செய்ததுதான் தோழர் சுரேந்திரன் செய்த குற்றம். இந்தக் குற்றத்திற்காகத்தான், வரலாற்றுத்துறையில் முதுகலை படிப்பில் சேர்க்க மறுத்து அவரை வெளியேற்றியது கல்லூரி நிர்வாகம்.

அதாவது, தோழர் சுரேந்திரன் 2018 – 2019 கல்வி ஆண்டில் இளங்கலை வரலாறு படிப்பை முடித்துவிட்டு, முதுகலை வரலாறு படிப்பதற்காக கடந்த  26-06-2019 அன்று சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 12-07-2019 அன்று நடைபெற்ற மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு அழைக்காமலேயே, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

முதலில் விண்ணப்பமே கல்லூரி நிர்வாகத்திற்கு வந்து சேரவில்லை என்று மழுப்பிய நிலையில், கல்லூரி முதல்வரிடம் சென்று முறையிட்டபோது, ”உன் மேல போலீஸ் கேஸ் நிறைய இருக்கு. கல்லூரியில நிறைய போராட்டங்களை நடத்தியிருக்கிற. உனக்கு சீட்டு கொடுக்கக்கூடாதுனு எஸ்.பி. ஆபீசில் இருந்து லெட்டர் வந்திருக்கு. உன் மேல கேஸ் இல்லைனு போலீசுகிட்ட இருந்து லெட்டர் வாங்கி வா, அதன் பிறகு சீட்டு கொடுக்கிறேன்” என்று போலீசின் கையாளாகவே பதிலுரைத்திருந்தார் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன்.

”கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு எதுவும் இல்லை. எல்லாமே பொதுப்பிரச்சினைக்காக, உரிமைக்காக போராடியதற்காக போடப்பட்ட பொய் வழக்குகள். அரசியல் ரீதியான காரணங்களுக்காக தொடுக்கப்பட்ட வழக்குகள்.” என்று சுரேந்திரன் நிராகரித்தார்.

மேலும், ”உன்னை மீண்டும் கல்லூரியில் சேர்க்கக்கூடாது என்பது, 09-07-2019 அன்று கல்லூரி நிர்வாகக்குழுவில் விவாதித்து எடுத்த முடிவு. நான் அக்குழுவின் தலைவர் என்றாலும், இம்முடிவை மாற்றும் அதிகாரம் எனக்கில்லை” என்றும் தெரிவிருந்தார் அவர். இம்முடிவை, எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு கேட்டபோதும், அவ்வாறு கொடுக்க மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக, ஜனநாயக சிந்தனை கொண்ட கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடம் பேசியதிலிருந்து, ”வகுப்பறைகளில் அம்மாணவன் எந்தவித ஒழுக்கக்கேடான செயலிலும் ஈடுபடுவனில்லை. அவனால் எந்த இடையூறும் இல்லை” என்று தனது கருத்தாக வரலாற்றுத்துறை தலைவர் தெரிவித்திருந்த நிலையிலும், ”எதற்கெடுத்தாலும் மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துறான். இவனால் கல்லூரிக்குத்தான் கெட்டப்பெயர்.” என்று  பேராசிரியர் ராதாகிருஷ்ணன் முன் வைத்தக் கருத்தை ஆதரித்தும், போலீசு எஸ்.பி. கொடுத்த அழுத்தம் காரணமாகவும்தான் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து, இவ்விவகாரத்தை ஊடகங்கள் வாயிலாக அம்பலப்படுத்தியதோடு, கடந்த 15-07-2019 அன்று கரூர் மாவட்ட ஆட்சியருக்கும் உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தமது தரப்பு நியாயத்தை புகாராக அனுப்பியிருந்தார் சுரேந்திரன். மனு கொடுத்து ஒரு மாத காலம் ஆகியும் எந்த பதிலும் வராத நிலையிl, மீண்டும் கடந்த 22-07-2019  அன்று தமிழக ஆளுநர், உயர்க்கல்வித்துறை செயலர், உயர் கல்வி கல்லூரி இயக்குனர், மண்டல கல்லூரி இணை இயக்குனர் உயர்கல்வித்துறை, பாராதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர், கல்லூரி இணை இயக்குனர், கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஆகியோருக்கும் கல்லூரியில் சேர்க்க ஆவண செய்யுமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார்.

சட்டப்பூர்வமான முறையில் உயர்கல்வித்துறையின் அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முறையிட்டும் பலன் எதும் கிடைக்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார், சுரேந்திரன்.

சுரேந்திரன் சார்பாக வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்து வாதிட்டார். சட்டத்திற்கு புறம்பான வழியில் வஞ்சகமான முறையில்தான் மாணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது நீதிமன்றத்தில் அம்பலமானது. சுரேந்திரன் தரப்பில் எழுப்பப்பட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல் திணறியது, கல்லூரி நிர்வாகம். இதனைத் தொடர்ந்துதான், மாணவர் சுரேந்திரனை கல்லூரியில் முதுகலைப் படிப்பில் சேர்க்க வேண்டும் என்று கடந்த 21-10-2019 அன்று உத்தரவிட்டது, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

நீதிமன்ற உத்தரவோடு, மூன்று வழக்குரைஞர்களை அழைத்துக்கொண்டு அரசு கலைக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரனை சந்தித்தார் சுரேந்திரன். நீதிமன்ற உத்தரவின்படி சுரேந்திரன் வரலாற்றுத்துறையில் முதுகலைப்படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டார். பல்வேறு தடைகளை உடைத்து மீண்டும் கல்லூரியில் இணைந்த செயலை பாராட்டி, ஜனநாயக சிந்தனைகொண்ட பேராசிரியர்கள் பலரும் கை  கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க:
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்

”தானுண்டு தன் வேலையுண்டு என ஒதுங்கிப் போவதால் பலன் ஏதுமில்லை. மாணவர்கள் சமூக பொறுப்புணர்வோடு பொதுப்பிரச்சினைகளுக்காக போராட முன் வர வேண்டும். கல்லூரி படிப்பைத் தாண்டி, தம்மை சுற்றி நிகழும் அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும்” என்று தொடர்ச்சியாக மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. மாணவர்களை அமைப்பாக அணிதிரட்டி அரசியல்படுத்தப்படுவதையும் அதன் காரணமாக, மாணவர்கள் தங்கள் உரிமைக்காக போராட முன்வருவதையும்தான் கல்லூரி நிர்வாகம் பிரச்சினையாக பார்க்கிறது.

கல்லூரி நிர்வாகம் என்றில்லை பொதுவிலேயே, ”மது போதைக்கும், டிக்டாக், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் போதைக்கும் வேண்டுமானால், மாணவர்கள் ஆட்படலாம்.” ஆனால், ”போராட்டம் அது இது என்று போய்விடக்கூடாது; பின்னர், போலீசு கேசாகி அரசு வேலை உள்ளிட்டு எதிர்கால வாழ்க்கையே இல்லாமல் போய்விடும்” என்று பூச்சாண்டி காட்டப்படுவதுண்டு.

இந்தப் பூச்சாண்டிகளுக்கு பலியாகாமல், தனிப்பட்ட இழப்புகளை எண்ணி பின்வாங்காமல், போராடும் உரிமைக்காக நீண்டதொரு போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், மாணவர் சுரேந்திரன். மாணவர்கள் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க வெற்றி இதுவென்றால், அது மிகையல்ல.


தகவல்;
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கரூர். 9629886351.

காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !

காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !

ந்து தேசியவாதிகளின் மொழியில் கூறுவதென்றால், “காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.” இந்த இரண்டு மாதங்களில் பா.ஜ.க.-வின் செய்தித் தொடர்பாளர்களும் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. அரசின் அமைச்சர்களும் காஷ்மீர் பற்றி விடுக்கும் செய்திகள் இவைதான். “ஜவஹர்லால் நேருவால்தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர்ந்தது, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய காஷ்மீரை உருவாக்கிவிடுவோம், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.”

ஆகஸ்டு 5 -க்கு முன்பு காஷ்மீரில் நிலவிய சூழ்நிலை குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஆகஸ்டு 5-க்குப்  பிறகு அங்கு பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அங்கு என்ன நடைபெற்று வருகிறது என்பதே பெரும் மர்மமாக உள்ளது. ஆனால், பா.ஜ.க. அரசும் அவ்வரசின் ஊதுகுழல்களும் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகத் தினந்தோறும் அறிக்கைவிட்டு வருகிறார்கள்.

தெருவில் நடமாடுவோரைக் கண்கானிக்கும் அரசுப்படையினர். பிறந்த மண்ணிலேயே அந்நியனைப் போல நடத்தப்படும் காஷ்மீரிகள்.

இயல்பு நிலை என்பது என்ன? மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை எவ்விதத் தடையுமின்றி நடத்துவதுதான் இயல்பு வாழ்க்கை. ஊரடங்கு உத்தரவுகளும், 144 தடையுத்தரவுகளும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தெருக்களில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டு, மக்களின் நடமாட்டமே கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தொலைத்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடைகளும் பள்ளிக்கூடங்களும் இயங்க முடியாத நிலையில் காஷ்மீர் மக்கள் எப்படி இயல்பாக வாழ முடியும்?

காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பீர்ஸதா ஆஷிக் 15.09.2019 தேதியிட்ட தி இந்து ஆங்கில நாளேட்டில், “பள்ளத்தாக்கில் ஒரு திருமணம், ஒரு இறுதிச் சடங்கு” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த மூன்று சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அம்மூன்றும் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை “நமக்கு” எடுத்துக் காட்டுகின்றன.

படிக்க :
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !
♦ கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து !

♦ ♦ ♦

ண்பது வயதைக் கடந்த மூதாட்டியான மைமுனா புகாரி, கடந்த ஆகஸ்டு மாத இறுதியில், மாலை நேரத்தில் மூப்பு காரணமாக மரணமடைந்து விடுகிறார். மைமுனா காஷ்மீரிகளுக்கே உரித்தான பழக்க வழக்கங்களில் ஊறிப் போனவர். குழந்தையோ, பெரியவர்களோ அனைவருக்கும் தனது கையால் ஊட்டிவிட வேண்டும் என்று விரும்பியவர். அதனால்தான் மைமுனாவை அவரது உறவினர்கள் அனைவரும் கடவுளின் கொடை எனப் பொருள் தரக்கூடிய உருதுச் சொல்லான மௌஜ் என அன்புடன் அழைத்து வந்தார்கள்.

மைமுனா, இறக்கும் தருவாயில் தான் பார்த்து வளர்ந்த அனைவரும் தனது அருகில் இருக்க வேண்டும் என விரும்பியிருக்கக் கூடும். தனது ஆசிகளை அவர்களுக்கு வழங்க வேண்டுமென விரும்பியிருக்கக் கூடும். இவை எதுவுமே நிறைவேறாமல் அவர் இறந்துபோனார்.

பத்திரிக்கையாளர் பீர்ஸதா ஆஷிக்கிற்கு, இறந்து போன மைமுனா இரத்த உறவுமுறை சார்ந்த பாட்டி. மைமுனாவால் சோறு ஊட்டப்பட்டு வளர்ந்தவர் பீர்ஸதா ஆஷிக். அவருக்கும் மைமுனா இறந்து போன தகவல் கிடைக்கவில்லை. ஆகஸ்டு அன்று உள்ளூர் பத்திரிக்கையொன்றில் மைமுனாவின் இறப்பு குறித்து வெளியாகியிருந்த இரங்கல் செய்தியைப் பார்த்துத்தான் தனது பாட்டி இறந்து போனதை அவர் தெரிந்துகொண்டார். இதன் பெயர் இயல்பு நிலையா, துர்பாக்கிய நிலையா?

முள்வேலியின் ஊடாகத் தெரிகிறது ஆளரவமற்ற லால் சவுக் கடை வீதி. ஆளில்லாத வீதியே காஷ்மீரின் புதிய இயல்பு நிலை.

அந்த இரங்கல் செய்தியில், காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை காரணமாக, மைமுனாவின் ஆன்மா சாந்தியடையும் பொருட்டு உறவினர்கள் அனைவரும் கூடிப் பிரார்த்தனை செய்யும் சடங்கை வீட்டில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுப் போன அவலமான நிலை குறிப்பிடப்பட்டிருந்தது. இறந்து போனவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தக்கூட முடியாத நிலையை, உங்களால் இயல்பு நிலை எனக் கூறமுடியுமா?

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால், மைமுனா இறந்துபோன துக்கச் செய்தியை நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிப்பதே பெரும் சவாலாக இருந்தது. ஒவ்வொரு உறவினர் வீட்டிற்கும் நேரில் சென்றுதான் சாவுச் செய்தியைச் சொல்ல முடியும் என்ற நிலையில் அன்று இரவு முழுவதும் முடிந்த மட்டிலும் உறவினர்கள் வீட்டைத் தேடிச் சென்றார்கள் பீர்ஸதா ஆஷிக்கின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அப்படிச் சொல்ல முடியாமல் விடுபட்டுப் போனவர்களுள் பீர்ஸதா ஆஷிக்கும் ஒருவர்.

மைமுனா இறந்த செய்தியை அறிந்தவர்களுள் யாருக்கெல்லாம் தெருவில் நடமாடும் இராணுவத்தின் அனுமதி கிடைத்ததோ, அவர்கள் மட்டும்தான் மைமுனாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த முடிந்தது, இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொள்ள முடிந்தது. மயானத்தில் சவக்குழியை வெட்டுபவருக்கும், மைமுனாவிற்கு இறுதிச் சடங்கை நடத்திவைக்கும் பெண் மதபோதகருக்கும்கூட சாவுச் செய்தியை உடனடியாகத் தெரிவிக்க முடியாமல் போனதால், மைமுனாவை அடக்கம் செய்வதற்கு மறுநாள் வரையிலும் காத்திருக்க நேர்ந்தது.

படிக்க :
♦ காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !
♦ காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !

மைமுனாவின் இறுதி ஊர்வலத்திலும், சவ அடக்கத்திலும் மிகக் குறைவான உறவினர்கள்தான் கலந்துகொள்ள முடிந்தது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடத்த வேண்டிய நான்காவது நாள் சடங்கிலும்கூட ஓரிரு உறவினர்கள்தான் கலந்துகொள்ள முடிந்தது. ஏனென்றால், அந்த மயானம் அமைந்துள்ள நோவாட்டா பகுதி ஆகஸ்டு -5க்குப் பிறகு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று, முட்கம்பிகளால் தடுப்புப் போடப்பட்டு, முன் அனுமதியின்றிப் பொதுமக்கள் நுழைய முடியாத பகுதியாக மாற்றப்பட்டிருந்தது.

♦ ♦ ♦

மைமுனா இறந்துபோன ஓரிரு நாட்களுக்குள்ளாகவே, ஆகஸ்டு மதிய நேரத்தில் குலாம் மொகைதீனுக்குத் தீவிரமான மாரடைப்பு ஏற்பட்டது. குலாம் மொகைதீன் வேறு யாருமல்ல; பீர்ஸதா ஆஷிக்கின் மனைவியின் மாமா. வீட்டில் இருந்தவர்கள் குலாம் மொகைதீனை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல முயன்றபோது, அவரோ சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்.

மிகக் கடுமையான வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலும், மரணம் காத்திருக்காது என்று தெரிந்திருந்த நிலையிலும் குலாம் மொகைதீன் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல விரும்பாததற்குக் காரணம், வெளியில் சென்றிருந்த தனது மகன் வீட்டிற்குப் பத்திரமாகத் திரும்பிவிட்டான் என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினார். அவனுக்குத் தகவல் சொல்ல வாய்ப்பில்லை என உறவினர்கள் எடுத்துச்சொன்ன பிறகும்கூட, குலாம் மொகைதீன் காத்திருக்க விரும்பினார், மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்.

வெளியில் செல்லும் இளைஞர்கள் வீட்டிற்குத் திரும்புவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் காஷ்மீரில் இன்று இயல்பு நிலை. அவர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக் கூடத்திற்கு அனுப்பப்படலாம் அல்லது வேறு விபரீதங்கள்கூட நேரிடலாம்.

படிக்க :
♦ அறிவுத்துறையினரின் மௌனம் – பாசிசத்தின் பாய்ச்சல் !
♦ தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

நல்வாய்ப்பாக குலாம் மொகைதீனின் மகன் திரும்பி வந்துவிட, சாவின் விளிம்பில் நின்ற குலாம் மொகைதீனை ஒரு காரில் ஏற்றி – அவசர ஊர்தியில் அல்ல – மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள் உறவினர்கள். அங்கிருந்த இருதய நோய் மருத்துவரான இர்ஃபான், குலாம் மொகைதீனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, உயிர் பிழைப்பதற்குப் பத்து சதவீத வாய்ப்புக்கூட இல்லை என்ற அதிர்ச்சியான தகவலை உறவினர்களிடம் உணர்ச்சியின்றித் தெரிவித்தார்.

ஆனாலும், மருத்துவர் இர்ஃபான் நோயாளியைக் காப்பாற்ற அவசரமான அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளில் இறங்கினார். அதற்கு உதவக்கூடிய மருத்துவர்களும், உதவியாளர்களும் அச்சமயத்தில் மருத்துவமனையில் இல்லை. அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்கு அலைபேசி வசதியும் இல்லை. ஒருமைப்பாட்டைக் காப்பதற்காகத் தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டிருக்கும் கொடூரமான நிலையில், மருத்துவர் இர்ஃபான் மறுயோசனை எதுவுமின்றி, தனது காரிலேயே அந்த அறுவைச் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவர்கள், உதவியாளர்கள் வீடுகளுக்குச் சென்று, அவர்களை அழைத்து வந்து அறுவைச் சிகிச்சையை நடத்தி முடித்தார்.

♦ ♦ ♦

ஸிர் ஷா, காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க சுற்றுலா வழிகாட்டி. அவர், தன் மகன் யாஸிரின் திருமணத்தை ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று நடத்துவதற்கு முன்னரே திட்டமிட்டிருந்தார். தனது மகன் திருமண விருந்து திருப்திகரமாக இருக்க வேண்டுமென்பதற்கா 800 கிலோ அளவிற்கு இறைச்சி எடுத்துச் சமையல் செய்யவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ஆகஸ்டு, 5-க்குப் பிறகு காஷ்மீரில் திணிக்கப்பட்ட புதிய இயல்பு நிலையின் காரணமாக, அவரது ஆசையெல்லாம் நிராசையாகிப் போனது. உறவினர்கள் அனைவருக்கும் திருமணப் பத்திரிகை தருவதுகூட சிக்கலாகிப் போனதால், நெருங்கிய உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைப்பது என முடிவெடுத்தார் அவர். அலங்காரப் பந்தல் போடுவது, இசை நிகழ்ச்சி நடத்துவது என்பதெல்லாம் கைவிடப்பட்டன. 800 கிலோ இறைச்சிக்குப் பதிலாக, 200 கிலோ இறைச்சி எடுத்தால் போதும் எனத் திருமண விருந்தும் சுருக்கப்பட்டது.

திருமண ஆர்டர்கள் எல்லாம் நின்றுபோன நிலையில், கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களைக் கவலையுடன் பார்க்கும் சமையல் கலைஞர்கள்.

திருமண நிகழ்ச்சியை எந்த நேரத்திற்கு ஆரம்பித்து எவ்வளவு நேரத்திற்குள் முடிப்பது என்பதைக்கூட மணமகன், மணமகள் வீட்டார் கூடிப் பேசி முடிவெடுக்க முடியாத நிலை நிலவியதால், அங்கும் இங்குமாகத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதற்காக, மணமக்கள் வீடுகளுக்குச் சென்று திரும்பக்கூடிய வகையில் ஓர் உறவினரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மணமகள், கயாம் என்ற பகுதியில் வசித்து வந்தார். அந்தப் பகுதியோ அதிதீவிரமான இராணுவக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பின் கீழும் இருக்கிறது. அங்கு சென்று திரும்புவது என்பது அசாதாரணமான ஒன்று.

திருமண நாளன்று முகமூடி அணிந்த சிலர் மணமகன் வீட்டிற்கு வந்து, காஷ்மீரே துயர்மிக்க ஒன்றாக இருப்பதால், பாட்டுப் பாடியோ, இசை நிகழ்ச்சி நடத்தியோ விழாவை நடத்தாதீர்கள் எனக் கூறிவிட்டுச் சென்றார்கள்.

அதேநாளில் மணமகள் வீட்டிலிருந்து இன்னொரு செய்தி மணமகன் வீட்டிற்கு வந்தது. தமது பகுதியில் தினந்தோறும் இரவு ஒன்பது வரை இராணுவத்திற்கும் கல்லெறிபவர்களுக்கும் இடையே மோதல்கள் நடப்பது வாடிக்கையாக இருப்பதால், இரவு 10 மணிக்கு திருமண நிகழ்ச்சிக்காக மணமகள் வீட்டிற்கு வந்தால் போதும் எனத் தெரிவித்தது அச்செய்தி.

மணமகன் யாஸிரும் அச்செய்தியின்படி இரவு ஒன்பது மணிக்கு மணமகள் வீட்டிற்குச் செல்லத் தயாரானார். காஷ்மீர் முசுலீம் திருமண நிகழ்வுகளில் ஒரு சடங்கு கடைப்பிடிக்கப்படுவது உண்டு. மணமகன், மணமகள் வீட்டிற்குக் கிளம்பிச் செல்லும்போது, உறவினர்கள் மணமகனை வழிமறித்துத் தடுப்பார்கள். மணமகன் தன்னைத் தடுக்கும் உறவினர்களுக்குப் பணம் உள்ளிட்ட பரிசுகள் கொடுத்து வழி ஏற்படுத்திக் கொள்வார்.

அன்றும் யாஸிர் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால், உறவினர்களால் அல்ல. இந்திய இராணுவச் சிப்பாய்களால். தடுத்து நிறுத்திய இராணுவச் சிப்பாய்கள் யாஸிரிடம், “இந்த நேரத்தில் தேச விரோத சக்திகள் நடமாடுவதைத் தடுத்து நிறுத்துவதற்குத்தான் இந்தச் சோதனை” எனக் கூறினார்கள். அவர்களிடம் யாஸிர், தான் தீவிரவாதி அல்ல, மணமகன் என நிரூபிக்க வேண்டியிருந்தது.

துக்கத்திற்கு அழ முடியாத நிலையை, மகிழ்ச்சி நிறைந்த தருணங்களைக் கொண்டாட முடியாத நிலையை உங்களால் இயல்பு நிலை எனக் கூற முடியுமா? கூற முடியாதென்று நீங்கள் கருதினால், எச்சரிக்கை, உங்களை அவர்கள் ‘ஆண்டி இந்தியன்’ என முத்திரை குத்தவும் கூடும்.

மகேஷ்

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

MCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் !

MCC (Millennium Challenge Corporation) ஒப்பந்தம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், நாம் மடகஸ்கார் நாட்டிலிருந்து கற்க வேண்டியது என்ன ?

MCC-யிடமிருந்து நிபந்தனையுடனான உதவித்தொகையைப் பெற்ற முதலாவது நாடு மடகஸ்கார் ஆகும். இது 2005-ல் நிகழ்ந்தது.

“சொத்துரிமையை உறுதிப்படுத்துவதன் மூலமும் கடன் பெற வழிசெய்து கொடுப்பதன் மூலமும் விவசாய உற்பத்தி, முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் பயிற்சி பெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலமும் கிராமப்புற மக்களை அவர்களது சுயதேவைக்கான விவாசாயத்திலிருந்து விடுவித்து சந்தைப்பொருளாதாரத்துக்கு மாறுவதற்கு துணை செய்வதற்காக” 110 மில்லியன் டாலர்கள் உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

2008-ம் ஆண்டு 1.3 மில்லியன் ஹெக்டேர் நிலம் கொரிய நிறுவனமான Daewoo-விற்கு இலவசமாக 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கப்பட்டது. சோளம், உற்பத்தி செய்வதற்கும் எண்ணை ஏற்றுமதிக்காக செம்பனை (palm) பயிரிடுவதற்குமே இந்நிலம் வழங்கப்பட்டது. 1.3 மில்லியன் ஹெக்டேர்கள் என்பது மடகஸ்காரில் பயிர் விளைவிக்கக்கூடிய ஒட்டுமொத்த நிலத்தின் அரைப்பங்காகும். பெல்ஜியம் நாட்டின் மொத்தப் பரப்பளவுக்குச் சமமான பரப்பு இது.

2009-ல் இந்த நிலப்பறிப்பினாலும், வாழ்க்கைச்செலவு அதிகரிப்பினாலும் உந்தப்பட்ட பொதுமக்களின் எதிர்ப்பு இரும்புக்கரம் கொண்டு வன்முறையுடன் அடக்கப்பட்டது. ரொய்ட்டர்ஸ் செய்திகளின்படி, இவ்வடக்குமுறை 135 பேரின் உயிரைக் காவுகொண்டது.

படிக்க :
இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி அறிக்கை
♦ சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா !

மடகஸ்காரின் இராணுவம் இவ்வடக்குமுறையை ஏற்காமல் கலகம் செய்ததுடன், எதிர்க்கட்சியுடன் இணைந்துகொண்டு அரசாங்கத்தை வீழ்த்தியது. அரசியல் உறுதியின்மை தொடர்ந்த நிலையிலும், MCC உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்பட்டது.

இலங்கையைப் போலவே மடகஸ்காரும் இந்து சமுத்திரத்தில் உள்ள ஒரு நாடு. சீன முதலீட்டினை குறிப்பிடத்தக்களவு பெறும் நாடு. அத்துடன் அந்நாடும் “Belt and Road” திட்டத்தின் ஒரு பகுதியாயுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதாரக் கொள்கை என்பது அதன் இராணுவ வியூகத்துடன் கைகோர்த்துச் செல்வதாகத்தான் இருக்கும். இது, MCC-யினை Pivot to Asia எனும் அவர்களுடைய வியூகத்தின் பகுதியாக ஆக்குகிறது. ஆசியாவில் அமெரிக்க பொருளாதார, இராணுவ செல்வாக்கு குறைவாக இருக்கவேண்டுமேயன்றி கூடுதலாக இருக்கக்கூடாது என்பதைத்தான் வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது.

MCC அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னொரு நீட்சி. அது அபிவிருத்தியை இராணுவமயமாக்குவதுடன் தனியார்மயமாக்கலை வழக்கமானதாக்கி சட்டபூர்வமானதாக்குகின்றது.

விவசாய பொருளாதாரத்தை மீளப் புதுப்பித்தல், இலவசக் கல்வியையும் சுகாதாரத்தையும் வலிமையானதாக்குதல், வாழ்க்கைச் செலவுக்கு போதுமான சம்பளத்தை பெறக்கூடிய தொழிலை வழங்குதல், காணி நிலம், குடிநீர், சுத்தமான காற்று என்பனவற்றிற்கான உரிமையை உறுதிப்படுத்துதல் என்பனவே இலங்கையில் மிலேனியம் சவால்கள் ஆகும்.

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், இந்தியா ஆகியவற்றின் தலையீடுகளும் வற்புறுத்தல்களும் நமது இலக்குகளை அடைய விடாமல் தடுக்கும் பாரிய தடைக்கற்களாக உள்ளன.

அபிவிருத்தி என்பது நாகரிக மேலாடை அல்ல! அமெரிக்க அளவுகோல் எங்களுக்கு பொருந்தாது!

#MCCயே_வெளியேறு!

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை

disclaimer

கெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 43

புதிய விஞ்ஞானம்

அ.அனிக்கின்

ரு விவசாயி உரம் போட்டுப் பயிர் செய்கிறான்; பிறகு விளைந்த தானியத்தை அறுவடை செய்கிறான். தானியத்தில் ஒரு பகுதியை விதைக்காகவும் இன்னொரு பகுதியைத் தன்னுடைய குடும்பத் தேவைகளுக்காகவும் சேமித்து வைக்கிறான்; ஒரு பகுதியை விற்பனை செய்து நகரத்தில் கிடைக்கும் அவசியமான பொருள்களை வாங்குகிறான்; இத்தனைக்குப் பிறகும் அவனிடம் உபரி தானியம் இருப்பதைக் கண்டு அவன் மகிழ்ச்சியடைகிறான். இந்தக் கதை எவ்வளவு எளிமையானதாக இருக்கிறது. இதைப் போன்ற ஒரு கற்பனை தான் கெனேயின் பல்வேறு கருத்துக்களையும் தூண்டியது.

இந்த உபரியை விவசாயி என்ன செய்வான் என்பது கெனேக்கு நன்றாகத் தெரியும். விவசாயி உபரியை தானியமாகவோ பணமாகவோ தன்னுடைய நிலப்பிரபு, அரசர், திருச்சபை மதகுரு ஆகியோரிடம் கொடுப்பான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எந்த விகிதாச்சார அளவின்படி கொடுப்பான் என்பதைக் கூட அவர் கணக்கிட்டார்: நிலப்பிரபுவுக்கு ஏழில் நான்கு பாகம், அரசருக்கு ஏழில் இரண்டு பாகம், திருச்சபை மதகுருவுக்கு ஏழில் ஒரு பாகம் என்ற விகிதாச்சாரத்தின்படி கொடுப்பான். இங்கே இரண்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அந்த விவசாயியின் அறுவடையில் அல்லது வருமானத்தில் கணிசமான பகுதியைப் பிடுங்கிக் கொள்வதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இரண்டாவதாக, இந்த உபரி எங்கேயிருந்து வருகிறது?

முதல் கேள்விக்கு கெனே தருகின்ற பதிலை சுருக்கமாக இப்படிக் கூறலாம். அரசருக்கும் திருச்சபை மதகுருவுக்கும் கொடுப்பதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாது – அதாவது அது கடவுள் செயல். நிலப்பிரபுவைப் பொறுத்த வரையிலும் அவர் ஒரு சுவாரசியமான பொருளியல் விளக்கத்தைக் கண்டுபிடித்தார். அந்த நிலத்தை விவசாயத்துக்குத் தகுதியுடையதாகச் செய்வதற்காக அவர்கள் நெடுங்காலத்துக்கு முன்பு அதில் மூலதனத்தை முதலீடு செய்திருப்பதாக வைத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர்களுடைய ”நில முன்பணம்” என்று சொல்லப்படுகின்ற செலவுக்குத் தரப்படுகின்ற நியாயமான வட்டியே நில வாரம் என்று கருத வேண்டும். இதைக் கெனே உண்மையிலே நம்பினாரா என்பதைச் சொல்வது கடினம். எப்படி இருந்தாலும் நிலப்பிரபுக்கள் இல்லாத விவசாயத்தை அவரால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

இரண்டாவது கேள்விக்குப் பதில் இதைக் காட்டிலும் சுலபமாக அவருக்குத் தோன்றியது. இந்த உபரியைக் கொடுத்தது பூமி, இயற்கை. எனவே அதே இயற்கையான வழியில் அது நிலத்தின் உடைமையாளரைச் சேருகிறது.

மாதிரிப் படம்

உற்பத்திப் பொருளிலிருந்து உற்பத்தியின் எல்லாச் செலவுகளையும் கழித்த பிறகு கிடைக்கும் உபரியை கெனே நிகரப் பொருள் என்று குறிப்பிட்டார்; அதன் உற்பத்தி, வினியோகம், செலாவணி ஆகியவற்றை அவர் ஆராய்ந்தார். பிஸியோகிராட்டுகளின் நிகரப் பொருள் என்பது உபரிப் பொருளுக்கும் உபரி மதிப்புக்கும் அதிக நெருக்கமான மாதிரிப் படிவமாகும்; ஆனால் அவர்கள் அதை நிலக் குத்தகையோடு நிறுத்திக் கொண்டார்கள், அது பூமியிலிருந்து கிடைக்கும் இயற்கையான பலன் என்றும் கருதினார்கள். எனினும் அவர்கள் ”உபரி மதிப்பின் தோற்றுவாய் பற்றிய ஆராய்ச்சியை செலாவணியின் வட்டத்திலிருந்து நேரடியான உற்பத்தியின் வட்டத்துக்கு மாற்றினார்கள், அதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தியைப் பற்றிய ஆராய்ச்சிக்கு அடிப்படையைப் போட்டார்கள்”.(1) அவர்கள் செய்த மாபெரும் சேவை இது.

கெனேயும் பிஸியோகிராட்டுகளும் உபரி மதிப்பை விவசாயத்தில் மட்டுமே கண்டுபிடித்தது ஏன்?

அங்கே அதன் உற்பத்தி, ஒதுக்கீட்டின் நிகழ்வுப் போக்கு மிகவும் வெளிப்படையானதாகும். தொழில் துறையில் இதைக் கண்டுபிடிப்பது ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகக் கடினமாகும். ஒரு தொழிலாளி ஒரு குறிப்பிட்ட கால அளவில் தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு அவசியமானவற்றின் விலையைக் காட்டிலும் அதிகமான மதிப்பைப் படைக்கிறான் என்பது இங்கேயுள்ள முக்கியமான உண்மையாகும். ஆனால் ஒரு தொழிலாளி தன்னுடைய நுகர்வுக்குத் தேவையான பண்டங்களிலிருந்து அதிகமாக வேறுபட்ட பண்டங்களை உற்பத்தி செய்கிறான்.

அவன் வாழ்க்கை முழுவதிலும் திருகாணிகளையும் பூட்டுகளையும் செய்யலாம்; ஆனால் அவன் பெரும்பாலும் ரொட்டியும் எப்பொழுதாவது இறைச்சியும் சாப்பிடுகிறான், ஒயின் அல்லது பீர் குடிப்பதும் உண்டு. இதிலடங்கியிருக்கின்ற உபரி மதிப்பைக் கண்டுபிடிப்பதற்குத் திருகாணிகளையும் பூட்டுகளையும் ரொட்டியையும் ஒயினையும் ஒரு பொதுவான தொகுதியில் வகைப்படுத்துவதற்குத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது பண்டங்களின் மதிப்பு பற்றிய கருதுகோளைப் பெற்றிருக்க வேண்டும். கெனேயிடம் இந்தக் கருதுகோள் இருக்கவில்லை. மேலும் அவருக்கு அதைப் பற்றி அக்கறையும் இல்லை.

படிக்க :
♦ அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து !
♦ அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !

விவசாயத்தில் உபரி மதிப்பு என்பது இயற்கை கொடுக்கும் அன்புப் பரிசாகத் தோன்றுகிறதே தவிர கூலி கொடுக்கப்படாத மனித உழைப்பின் பலனாகத் தோன்றவில்லை. அந்த உபரிப் பொருள் இயற்கை வடிவத்திலேயே நேரடியாக இருக்கிறது. குறிப்பாக தானியத்தில் இதை நன்றாகப் பார்க்கலாம். கெனே தன்னுடைய பொருளாதார மாதிரிக்கு ஏழைக் கூலி விவசாயியை எடுத்துக் கொள்ளவில்லை. உழவு மாடுகள், மிகச் சாதாரணமான உழவுக் கருவிகள் ஆகியவற்றைச் சொந்தமாக வைத்துக் கொண்டிருப்பதோடு கூலி உழைப்பையும் உபயோகிக்கின்ற அவருக்குப் பிரியமான குத்தகை விவசாயியை எடுத்துக் கொண்டார்.

இந்த வகையைச் சேர்ந்த விவசாயியின் பொருளாதாரத்தைப் பற்றிய சிந்தனைகள் கெனேயை மூலதனத்தைப் பற்றி ஒரு விதத்தில் ஆராய்வதற்கு இட்டுச் சென்றன; எனினும் அந்த வார்த்தையை அவருடைய எழுத்துக்களில் நாம் பார்க்க முடியாது. உதாரணமாக, வாய்க்கால், கட்டிடம், குதிரைகள், ஏர்க்கருவிகள், பரம்புக் கட்டை ஆகியவற்றுக்காகச் செய்யப்படும் செலவு ஒரு வகையான முன்பணம் என்றும் விதைகள், பண்ணையாளுக்குச் செய்யப்படும் செலவு வேறு வகையான முன்பணம் என்பதையும் அவர் புரிந்து கொண்டிருந்தார்.

முதல் வகையில் சில வருடங்களுக்கு ஒரு முறை மொத்தமாகச் செலவழிக்கப்படுகிறது, பிறகு படிப்படியாக அந்தச் செலவு ஈடு செய்யப்படுகிறது. இரண்டாம் வகையில் வருடத்துக்கு ஒரு தடவை அல்லது வருடமுழுவதும் செலவு செய்யப்படுகிறது, அந்தச் செலவு ஒவ்வொரு அறுவடையின் போதும் ஈடு செய்யப்பட வேண்டும். ஆகவே கெனே முதல் மூலதனம் (இன்று நிலையான மூலதனம் என்று நாம் சொல்கிறோம்), வருடாந்தர மூலதனம் (இன்று செலாவணி மூலதனம்) என்பவற்றைப் பற்றிப் பேசுகிறார். ஆடம் ஸ்மித் இந்தக் கருத்துக்களை வளர்த்துச் சென்றார். இன்று இவை பொருளாதாரத்தின் மூலக் கருத்துக்களாகும்; ஆனால் அந்தக் காலத்தில் இந்த ஆராய்ச்சி மாபெரும் சாதனையாகும். மார்க்ஸ் தம்முடைய உபரி மதிப்புத் தத்துவங்கள் என்ற புத்தகத்தில் பிஸியோகிராட்டு களைப் பற்றிய ஆராய்ச்சியைப் பின்வரும் வாக்கியத்தோடு ஆரம்பிக்கிறார். ”முதலாளித்துவ வான எல்லைக்குள் மூலதனத்தைப் பற்றிய ஆராய்ச்சி முழுவதுமே பிஸியோகிராட்டுகள் செய்த பணியாகும். இந்த சேவையினால் தான் அவர்கள் நவீன அரசியல் பொருளாதாரத்தின் உண்மையான தந்தையர் என்று கருதப்படுகிறார்கள்.”(2)

இந்தக் கருதுகோள்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் கெனே மூலதனத்தின் செலாவணி மற்றும் புனருற்பத்தியைப் பற்றிய, அதாவது பகுத்தறிவுக்கு ஏற்ற வகையில் பொருளாதாரத்தை நிர்வாகம் செய்வதில் மிகவும் அதிகமான முக்கியத்துவத்தைக் கொண்ட உற்பத்தி, விற்பனை ஆகிய நிகழ்வுப் போக்குகள் தொடர்ச்சியாகப் புத்துருவம் பெறுவதையும் திரும்பத் திரும்ப நடைபெறுவதையும் பற்றிய ஆராய்ச்சியின் அடிப்படைகளை உருவாக்கினார். மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்ற புனருற்பத்தி என்ற சொல்லை முதன் முதலில் உபயோகித்ததே கெனே தான்.

கெனே தன் காலத்திய சமூகத்தின் வர்க்க அமைப்பைப் பின்வருமாறு வர்ணித்தார் : “நாட்டில் மூன்று வகைகளைச் சேர்ந்த குடிமக்கள் தான் இருக்கிறார்கள்: உற்பத்தி செய்கின்ற வர்க்கம், உடைமையாளர்களின் வர்க்கம் மற்றும் மலட்டு வர்க்கம்”.(3)

முதல் பார்வையில் இது விசித்திரமான பிரிவினையைப் போலத் தோன்றுகிறது. ஆனால் இது கெனேயின் போதனையிலிருந்து தர்க்கரீதியாகவே ஏற்படுகிறது; அந்தப் போதனையின் சிறப்பான அம்சங்கள், அதிலிருக்கும் குறைகள் ஆகிய இரண்டையுமே பிரதிபலிக்கிறது. உற்பத்தி செய்கின்ற வர்க்கம் என்பது நிலத்தில் பாடுபடுகின்ற விவசாயிகளே; அவர்கள் தங்களுக்கு உணவைத் தேடிக் கொண்டு மூலதனச் செலவை ஈடு செய்வதோடு மட்டுமல்லாமல், நிகரப் பொருளையும் படைக்கிறார்கள். உடைமையாளர்களின் வர்க்கம் என்பது நிகரப் பொருளை அடைகின்ற வர்க்கமாகிய நில உடைமையாளர்கள், அரசவை, திருச்சபை ஆகியோர்; அவர்களுடைய பணியாட்களும் இதில் அடங்கு கிறார்கள். கடைசியாக மலட்டுத்தனமான வர்க்கம் என்பது மற்ற எல்லோருமே, அதாவது கெனேயின் வார்த்தைகளில் ”விவசாயத்தைத் தவிர மற்ற காரியங்களிலும் மற்ற சேவைகளிலும் ஈடுபட்டிருக்கின்ற” எல்லோருமேதான்.

படிக்க :
♦ இந்தியாவில் அமேசான் நம்பர் 1 ஆனது எப்படி ? ஐரோப்பிய தொழிலாளியைக் கேளுங்கள் !
♦ கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்

மலட்டுத்தனம் என்ற வார்த்தையைக் கெனே எத்தகைய பொருளில் உபயோகித்தார்? அவர் கைவினைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களை – நில உடைமையாளர்களுக்கு மாறான அர்த்தத்தில் மலட்டுத்தனமானவர்களென்று கருதினார். இவர்களும் உழைக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உழைப்பு நிலத்தோடு சம்பந்தமில்லாததாகும். அதன் மூலம் அவர்கள் எவ்வளவு நுகர்வு செய்கின்றார்களோ அவ்வளவு உற்பத்தி செய்கின்றார்கள்; அவர்களுடைய உற்பத்தி என்பது விவசாயத்தின் மூலம் படைக்கப்படுகின்ற பொருளின் இயற்கையான வடிவத்தை மாற்றிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கிறது. மற்ற இரண்டு வர்க்கங்களும் எப்படியோ ஒரு வழியில் இவர்களுக்குக் கூலி கொடுப்பதாக கெனே கருதினார். நில உடைமையாளர்கள் உழைப்பதில்லை; ஆனால் சமூகத்தின் செல்வத்தை அதிகரிக்கச் செய்யும் சக்தியுள்ளதாக கெனே கருதிய ஒரே உற்பத்திக் காரணியாகிய நிலத்தின் உடைமையாளர்களாக இருக்கிறார்கள். நிகரப் பொருளை ஒதுக்கிக் கொள்வதுதான் அவர்கள் செய்யும் சமூகக் கடமை.

கெனேயின் பகுப்பு முறையில் அதிகமான குறைகள் உள்ளன; அவர் தொழிற்சாலைகளிலும் விவசாயத்திலுமுள்ள தொழிலாளர்களையும் முதலாளிகளையும் ஒரே பிரிவிலே வைக்கிறார் என்பதை மட்டும் இங்கே குறிப்பிடுவதே போதும். இது மோசமான தவறாகும், டியுர்கோ ஓரளவுக்கு இதைத் திருத்தினார்; ஸ்மித் இதை முழுமையாகவே நிராகரித்தார்.

அல்லது முக்கியத்துவத்தில் சிறிதும் குறையாத ஒரு சிறு விவரத்தை எடுத்துக் கொள்வோம். முதலாளி என்பவர் ஏதோ ஒரு வகையில் கூலியை மட்டுமே பெறுகிறார் என்றால் அவரிடம் மூலதனத் திரட்சி எப்படிக் கிடைக்கிறது? எதிலிருந்து கிடைக்கிறது?

ஜோசப் ஷம்பீட்டர்

கெனே இந்தப் பிரச்சினையை இப்படிச் சமாளிக்கிறார். நிகரப் பொருளிலிருந்து, அதாவது நில உடைமையாளரின் வருமானத்திலிருந்து கிடைக்கப் பெறுவது மட்டும் தான் முறையான, பொருளாதார ரீதியில் “நியாயமான” திரட்சி எனக் கூறுகிறார். தொழிலதிபரும் வணிகரும் தங்களுடைய ”கூலியிலிருந்து” எதையாவது பிரித்துக் கொள்வதன் மூலமே திரட்சியைச் செய்ய முடியும், இது முழுவதும் ”நியாயமான” வழி என்று சொல்ல முடியாது என்கிறார். முதலாளித்துவத் தவிர்ப்பின் காரணமாகவே மூலதனத் திரட்சி ஏற்படுகிறது என்ற முதலாளித்துவத்துக்கு ஆதரவான வாதம் இங்கேயிருந்து தான் தோன்றுகிறது. பொதுவாகச் சொல்வதென்றால் முதலாவதாகவும் முதன்மையாகவும் கெனே சமுதாயத்தில் வர்க்க ஒத்துழைப்பையே பார்த்தார். அவர் ”வர்க்க நலன்களின் பரந்துபட்ட இணக்கத்தை வலியுறுத்தியது அவரை 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட இணக்கவாதத்தின் (ஸேய், கேரி, பஸ்தியா) முன்னோடியாக்குகிறது”(4) என்று ஷம்பீட்டர் அவரைப் பற்றி எழுதியிருப்பது தற்செயலானதல்ல.

ஆனால் கெனேயின் போதனையை இப்படி வகைப்படுத்தி விட முடியாது. அதிலிருந்து எத்தகைய செய்முறை முடிவுகள் ஏற்படுகின்றன என்பதைக் காண்போம். பெரிய அளவுத் தொகுதிகளில் விவசாயத்தை நடத்துவதை சாத்தியமான எல்லா வழிகளிலும் ஊக்குவிக்க வேண்டும் என்பது அவருடைய முதல் சிபாரிசாக இருந்தது இயற்கையே.

எனினும் இதற்கு அடுத்தபடியாக அவர் தெரிவித்த இரண்டு சிபாரிசுகள் அந்தக் காலத்தில் அவ்வளவு சாதாரணமாகத் தோன்றவில்லை. நிகரப் பொருள் மீது மட்டுமே வரி விதிக்க வேண்டும், ஏனென்றால் அது ஒன்று மட்டும் தான் உண்மையான பொருளாதார ”உபரி” என்று கெனே கூறினார். மற்ற எல்லா வரிகளுமே பொருளாதாரத்தில் சுமைகளை ஏற்படுத்துகின்றன என்றார். நடைமுறையில் இதன் அர்த்தம் என்ன?

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அவர் எந்தப் பிரபுக்களின் மீது சமூகத்தின் முக்கியமான, கௌரவமான கடமைகளைச் சுமத்தினாரோ, அவர்களே எல்லா வரிகளையும் கட்ட வேண்டுமென்பதே இதன் அர்த்தமாகும். அன்றைய பிரான்சில் நிலைமை இதிலிருந்து முற்றிலும் மாறான விதத்தில் இருந்தது: அவர்கள் எந்த விதமான வரியையும் கட்டவில்லை. மேலும், தொழில் துறையும் வர்த்தகமும் ”விவசாயத்தினால்” காப்பாற்றப்படுவதனால், இவற்றை சாத்தியமான அளவுக்குச் சிக்கனமாகச் செய்யவேண்டும் என்றார். உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் குறைக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமாகும். பிஸியோகிராட்டுகள் சுதந்திர உற்பத்திக்கு ஆதரவாகப் பேசினார்கள்.

படிக்க :
♦ பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?
♦ புதிய தொடர் : பொருளாதாரம் கற்போம்

கெனேயின் போதனையின் முக்கியமான அம்சங்கள் இவை. பிஸியோகிராட்டிய மரபின் முக்கிய அம்சங்களும் இவையே. இவற்றில் பலவீனங்களும் குறைகளும் எவ்வளவு இருந்தாலும் அது உலகத்தைப் பற்றி ஒன்றிணைக்கப்பட்ட பொருளாதார, சமூகப் பார்வையைக் கொண்டிருந்தது, தத்துவத்திலும் நடைமுறையிலும் அதன் காலத்துக்கு முற்போக்கானதாக இருந்தது.

கெனேயின் கருத்துக்கள் பல சிறிய பிரசுரங்களிலும் அவருடைய மாணவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் எழுதிய புத்தகங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. அவருடைய புத்தகங்கள், 1756-க்கும் 1768-க்கும் இடையில் பலவிதமான வடிவங்களில் பெரும்பாலும் ஆசிரியருடைய பெயர் இல்லாமல் வெளியிடப்பட்டன. சில புத்தகங்கள் வெளியிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்துவிட்டன; 20-ம் நூற்றாண்டில் தான் இவற்றைக் கண்டுபிடித்து வெளியிட்டார்கள், கெனேயின் எழுத்துக்களை நவீன வாசகர் படித்துப் புரிந்து கொள்வது சுலபமல்ல; அவருடைய முக்கியமான கருத்துக்கள் சுமாரான அளவுள்ள ஒரு புத்தகத்தில் அடங்கியிருந்த போதிலும், அவை திரும்பத் திரும்ப வெவ்வேறு விதமான அழுத்தங்களோடும் மாற்றங்களோடும் எடுத்துச் சொல்லப்படுகின்ற காரணத்தால் அவற்றைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கின்றது.

1768-ம் வருடத்தில் கெனேயின் மாணவரான டுபோன் டெ நெமூர் ஒரு புதிய விஞ்ஞானத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் பிஸியோகிராட்டிய மரபினரது வளர்ச்சியைத் தொகுத்துக் கூறியது. இன்று அதன் தலைப்புக்கு நாம் தருகின்ற பொருள் விளக்கத்தை அவர் ஒருவேளை உத்தேசித்திருக்க முடியாது; ஆனால் அவர் சரியான தலைப்பையே உபயோகித்தார் என்பதை வரலாறு காட்டிவிட்டது. கெனேயின் புத்தகங்கள் ஒரு புதிய விஞ்ஞானத்தை அரசியல் பொருளாதாரத்தை அதன் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு வடிவத்தில் படைத்தன.

 

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) K. Marx, Theories of Surplus-Value, Part I, p. 45.

(2) K. Marx, Theories of Surplus-Value, Part 1, p. 44.

(3) Francois Quesnay et la Physiocratie, Paris, 1958, t. II, p. 793.

(4) J. Schumpeter, History of Economic Analysis, p. 234. 

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து !

1

யோத்தியில் சர்ச்சையில் சிக்க வைக்கப்பட்ட நிலம் யாருக்குச் சொந்தமானது என்கிற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். “மகிழ்ச்சியில்லை.. ஆனால் பதவி விலகிவிட்டோம்” என்பதே அவர்களுடைய முதன்மையான கருத்தாக உள்ளது. நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் தங்களை வீழ்த்திவிட்டதாக அவர்கள் உணர்கிறார்கள்.

“உச்சநீதிமன்றம் என்பது உச்சநீதிமன்றமே. அது தகுதியின் அடிப்படையில் மட்டுமே விசயங்களைப் பார்க்கும் என எதிர்ப்பார்த்தோம்” என்கிறார் மும்பையில் உள்ள மர்காசுல் மாரிஃப் கல்வி மற்றும் ஆய்வு மையத்தைச் சேர்ந்த மவுலானா பர்ஹானூதின் காஷ்மி. மதரசாவில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பு தொழிற்நுட்பத்தைக் கற்றுத்தருகிறது இந்த மையம்.

“முழுமையாக இந்தத் தீர்ப்பை படித்துவிட்டேன். நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்களுடைய முடிவு இருக்கிறது என்பது தெரிகிறது” என்கிற மவுலான, நீதிமன்றம் முசுலீம் தரப்பு அந்த நிலத்துக்கு சம உரிமையுள்ளது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது என கூறியதையும் நிர்மோகி அகோராவின் வழக்கையும் ஸ்ரீ ராம் பிறந்த இடம் என்ற சட்டக் கோரலையும் நிராகரித்துவிட்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“இப்படிப்பட்ட சூழலில், ராம் லல்லாவை அங்கீகரித்து கோயில் கட்ட அனுமதி வழங்குகிறது நீதிமன்றம். இது நீதி அல்ல. இது ஒருவகையான நாட்டாமைத்தனம். பெரும்பான்மையினரின் உணர்வுகளை அங்கீகரிப்பதன் மூலம் சூழ்நிலையை குளிர்விக்கும் முயற்சி. உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பது உண்மைதான். அதை அவர்கள் செய்துமுடித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு எளிய இந்திய குடிமகனாகவும் முசுலீம் அறிஞராகவும் நான் மகிழ்ச்சி கொள்ளவில்லை” என்கிறார் மவுலானா.

“எங்கள் உரிமைகோரல்களை மெய்பிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் இருந்தன, அவை இந்து தரப்பிடம் இல்லை. ஆனாலும், எங்களுடைய கோரல் நிராகரிக்கப்பட்டது. அப்படியெனில் எதிர்காலத்தில், ஆவணங்களின் மதிப்பு என்னவாக இருக்கும்?” எனக் கேட்கிறார் தர் அல் காஸா என்ற அமைப்பின் உறுப்பினரான மவுலானா சோயேப் கோடி. நிலம் தொடர்பான வழக்கில் ஆவணங்கள்தான் முக்கியமான ஆதாரங்கள் எனவும் அவர் கேட்கிறார்.

அயோத்தி வேறு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் மசூதி கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

படிக்க:
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
♦ அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்

இதுகுறித்து பேசும் அனைத்திந்திய தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர் மவுலானா சயது அதிர் அலி, “கடவுள் அருளால், இந்தியாவின் எந்த இடத்திலும் மசூதி கட்டிக்கொள்ள எங்களால் முடியும். எங்களுக்கு பாபர் மசூதி இருந்த இடம் முக்கியமானது. ஷரியத்தில், மசூதி என்பது எப்போதும் மசூதிதான். அது ஒரு கட்டிடம் அல்ல, அது நிற்கும் இடம் முக்கியமானது. ஏனெனில், மற்ற கட்டிடங்களைப் போல, நினைத்த இடத்தில் மசூதியைக் கட்டிவிட முடியாது. அதற்கென விதிமுறைகள் உள்ளன. ஒருமுறை அங்கே மசூதி கட்டிவிட்டால், அது காலம் கடந்தும் நிற்கிறது. எங்களுக்கும்கூட அதைத் தரும் உரிமை இல்லை”. என்கிறார் அவர்.

பாபர் மசூதி இருந்த அந்தக் குறிப்பிட்ட நிலத்துக்கு அடியில் கோயில் இல்லை என தெளிவாக உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது என சுட்டிக்காட்டுகிற மவுலானா சயது, ஆனபோதும் கோயில் கட்ட அந்த இடத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார்.

“கிராம பஞ்சாயத்துகளில்தான் நிலத்துக்குப் பதிலாக நிலம் வழங்குவது நடக்கும்; நாட்டின் உச்சநீதிமன்றத்தில் அல்ல. எந்த சூழ்நிலையிலும், வஃக்புக்கு சொந்தமான நிலத்தை மாற்றிக்கொள்ள முடியாது; கொடுக்கவும் இயலாது. எங்களிடமிருந்து யாராவது அதை பிடிங்கிக் கொள்வது வேறு விசயம். அயோத்தியில் எங்கோ ஒரு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தைப் பெற 68 ஆண்டுகளாக நாங்கள் போராடவில்லை. உச்சநீதிமன்றம் இந்த நில வழக்கை அறம், ஆதாரங்கள் மற்றும் அரசியலமைப்பு கொள்கையின் அடிப்படையில் முடிவு செய்திருக்க வேண்டும்” என்கிற அவர்,

“ஒரு சொத்து தொடர்பான வழக்கில் ஒருவருக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். மற்றவருக்கு எதிராக வரும். இயற்கையாக, யார் இழக்கிறார்களோ அவருக்கு வருத்தம் இருக்கும். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் ‘இது யாருடைய வெற்றியும் அல்லது, யாருடைய தோல்வியும் அல்ல’ என கூறிக்கொள்வார்கள்.” என மோடி உள்பட பாஜக தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை விமர்சித்தார் மவுலானா.

“ஆனால், நாங்கள் ஏற்கனவே தீர்ப்புக்கு முன்பே அறிவித்தபடி, அமைதியின் விருப்பத்தின்பேரில் இந்தத் தீர்ப்பை ஏற்கிறோம். மேலும், எங்குமே அசம்பாவிதங்கள் நடக்கவில்லை என்பதைப் பார்த்திருப்பீர்கள். இப்போது இந்த அமைதியைக் காப்பதில் அரசாங்கத்துக்கே பங்கிருக்கிறது” என்றார் அவர்.

அயோத்தி தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் மீது தங்களுக்கிருந்த நம்பிக்கையை தகர்த்திருப்பதை குறிப்பிடும் மவுலானா காசிம், “உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளும் தகுதியின் அடிப்படையில் அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? 1949 மற்றும் 1992 நடந்த குற்றங்கள் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் தண்டனை குறித்து பேசவில்லை. நாங்கள் முகத்தில் அறையப்போட்டோம் என்பதை ஏற்றுக்கொள்கிற நீங்கள், எங்களுடைய கோரலை கருத்தில் கொள்ளவில்லை. இதை நாங்கள் உச்சநீதிமன்றத்திடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை” என்கிறார்.

“2010-ஆம் ஆண்டும் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை பிரித்துக்கொள்ளலாம் என சொன்னபோதே, நீதிமன்றத்தின் மீதிருந்த எங்களுடைய நம்பிக்கை குலைந்துவிட்டது. இந்தத் தீர்ப்பு மூன்றில் ஒரு பங்கு நிலத்தைக்கூட எங்களுக்கு வழங்கவில்லை” என்கிறார் மவுலானா.

படிக்க:
சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா !
♦ ஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து !

“ஏற்கனவே ஜனநாயகத்தின் தூண்கள், ஊடகமானாலும் சரி, நிர்வாகம் ஆனாலும் சரி அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளன. நீதிமன்றம் மட்டுமே விட்டுவைக்கப்பட்டிருந்தது. இப்போது முக்கிய தலைவர்கள் தீர்ப்புக்கு முன்பே கொண்டாட வேண்டாம் என்றும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியதிலிருந்து இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது” என்கிற அவர்,

“சரிதான், நாங்கள் முன்பே சொன்னதுபோல எதிர்ப்பு இல்லாமல் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம். ஆனால், இந்த முழு உலகமும் முட்டாள்தனமானதா? சர்வதேச அளவில் இவர்கள் சொல்லியிருக்கும் செய்தி என்ன?” எனக் கேட்கிறார்.

“பெரும்பான்மையினர் தீர்ப்பு குறித்து மகிழ்கிறார்கள். இன்றைக்கு நாட்டில் உள்ள மனநிலை அது. இதுதான் நாடு சென்றுகொண்டிருக்கும் திசையாகும். இனி, நீண்ட காலம் இந்தப் பாதையில்தான் செல்லும்” என்கிறார் மவுலானா.

இந்துத்துவ கும்பல் தங்களுடைய வன்முறை வெறியாட்டங்கள் மூலம் முசுலீம்களை தீர்ப்பை ஏற்கும்படி ‘தயார்’ செய்து வைத்திருக்கிறது. சட்டம் இனி ஒருபோதும் இந்துவுக்கும் முஸ்லீமுக்கும் சமமாக இருக்கப்போவதில்லை என முசுலீம்கள் உணர்ந்திருக்கிறார்கள். அயோத்தி தீர்ப்பு அதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது.


கலைமதி
நன்றி : ஃபர்ஸ்ட் போஸ்ட்

கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்

கேள்வி: // சமீப காலங்களில் கம்யூனிசத்தை முன் நிறுத்துவதை காட்டிலும் இடதுசாரிகள் திராவிட சிந்தனையை தீவிரமாக முன்னிருத்துகின்றார்களோ? கம்யூனிசத்தில் சாதியை ஒழிப்பதற்கான வழிமுறை இல்லை என்ற முடிவுக்கு இடதுசாரிகள் வந்துவிட்டார்களா? CPI,CPI(M) யை கேட்கவில்லை. //

– அகிலன்

ன்புள்ள அகிலன்,

திராவிட சிந்தனை என்று நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? இட ஒதுக்கீடு, சமூகநீதி, நாத்திகப் பிரச்சாரம், மகளிர் விடுதலை, பார்ப்பனிய எதிர்ப்பு … இவற்றைத்தானே? இவற்றை திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகளை உள்ளிட்டு பொதுவில் முற்போக்கு அமைப்புகள் அனைவரும் ஆதரிக்கிறார்கள். அதே நேரம் இந்தக் கோரிக்கைகளில் எவை தற்காலிகமான தீர்வைத் தரும், இந்த பிரச்சினைகளுக்கு நீண்ட காலத் தீர்வு என்ன என்பதை வைத்து கம்யூனிஸ்டுகள் திராவிட சிந்தனைகளிலிருந்து வேறுபடுகிறார்கள் அல்லது ஒன்றுபடுகிறார்கள்.

சாதியை ஒழிப்பதற்கு இந்தியாவில் வர்க்க ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்படுவது ஒரு முன்னிபந்தனை. உழுபவனுக்கு நிலத்தை சொந்தமாக்காமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்த பொருளாதார வலிமையை கொடுக்காமல் தீண்டாமை, சாதி ஒழிப்பிற்கான போராட்டத்தை  தீவிரமாக நடத்த முடியாது. அதே போன்று ஆதிக்க சாதிகளில் வாழும் நிலமற்ற அல்லது சிறு விவசாயிகளின் ஏழ்மையும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஏழ்மையும் வேறு வேறு அல்ல. இரு பிரிவினரையும் பொருளாதாரப் போராட்டங்களில் இணைத்து அதன் வலிமை கொண்டு சாதி தீண்டாமை ஒழிப்பிற்கான போராட்டங்களை இணையாக முன்னெடுக்க வேண்டும். இதுவே கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு.

படிக்க:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?

திராவிட இயக்க சிந்தனைக்கோ, தலித் இயக்க சிந்தனைக்கோ இப்படி அறிவியல் பூர்வமான சாதி ஒழிப்புத் திட்டம் இல்லை. அவர்கள் பொதுவில் சாதி சமத்துவம், சாதி ஒழிப்பு என்று பேசுகிறார்கள். அதை வெறும் கருத்துப் பிரச்சாரம் செய்வதன் மூலம் அடைய முடியும் என்று கருதுகிறார்கள். மோடி அரசின் தலைமையில் பாசிச அரசு படர்ந்து வரும் நிலையில் இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இயங்க வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரம் சமூக மாற்றம் என்று வரும் போது கம்யூனிஸ்டுகள் தமது கொள்கைப்படியே அரசியல் இயக்கத்தை கொண்டு செல்ல விரும்புகிறார்கள். இப்படி இருக்கையில் சாதி ஒழிப்பதற்கான வழிமுறை கம்யூனிசத்தில் இல்லை என கம்யூனிஸ்டுகள் ஏன் நினைக்க வேண்டும்?

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : // ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் இருவரின் சொத்து மதிப்பை வெள்ளை அறிக்கைப் போன்று வெளியிட தங்களால் முடியுமா? உங்களது வினவு செய்தி தொகுப்பின் சொத்து மதிப்பை வெளியிட முடியுமா? வணிகம், சேவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? //

– ஜோஸ்

ன்புள்ள ஜோஸ்,

ஹீலர் பாஸ்கர்.

பொதுவில் வெள்ளை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை, திட்டம் பற்றி அரசு அமைப்புகளால் வெளியிடப்படும் ஒன்று. அதை தனியார் நிறுவனங்களோ நபர்களோ சட்டப்படி வெளியிடும்படி யாரும் கூற முடியாது. அவர்களால் வெளியிட்டால்தான் உண்டு. அல்லது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ஏதாவது பண மோசடி மூலம் கசிந்தால்தான் தெரிய வரும். ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் இருவரது சொத்து மதிப்பு குறித்து எங்களுக்குத் தெரியாது. ஹீலர் பாஸ்கரது வீடியோக்களைப் பார்க்கையில் அவரது நிறுவனங்கள், சிகிச்சை மையங்கள், அவற்றுக்கான கட்டணங்கள் எல்லாம் சேர்ந்து அவரை பெரும் பணக்காரராய் காட்டுகின்றன. பாரிசாலனும் அந்த அளவு இல்லை என்றாலும் சிறு அளவு தமிழ் பெயரில் பொருட்கள், நாய்கள், சேவைகளை விற்பனை செய்வதற்கு உதவுகிறார். இவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களே இவர்களது சொத்து மதிப்பினை கூற முடியும். நாங்கள் சொல்வது ஒரு பொதுவான மதிப்பீடு.

படிக்க:
நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? அச்சுநூல்
வினவை ஆதரிப்பது உங்கள் கடமை ! ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் !!

வினவு செய்தி தொகுப்பிற்கு சொத்து மதிப்பே கிடையாது. கிட்டத்தட்ட இலவச சேவை போன்றுதான் நடத்தப்படுகிறது. வாசகர்கள் சிலர் தரும் குறைந்தபட்ச சந்தா, நன்கொடை, தோழர்கள் தரும் உதவி நிதி கொண்டு வினவு குறைந்த பட்ச செலவுகளோடு நடத்தப்படுகிறது. உண்மையில் எங்களது நிதி நெருக்கடியால் எங்களது செயல்பாடுகளை பாரிய அளவில் விரிவுபடுத்த இயலவில்லை.

பாரி சாலன்.

வணிகம் என்பது இலாபத்தை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் தொழில். சேவை என்பது இலாப நட்டத்தை தவிர்த்து மக்களது நலனுக்காக நடத்தப்படும் சேவைத் தொழில். எந்த ரூட்டில் அதிக பணம் கிடைக்கும் என்பது ஆம்னி பேருந்து நிறுவனங்களின் குறிக்கோள். நட்டமே ஆனாலும் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் செய்ய வேண்டும் என்பது அரசு பேருந்து கழகத்தின் நிலை. தற்போது இந்த நிலைமை மாறி வருகிறது. அரசும் இலாப நட்டத்தை கணக்கிற்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை உலக வங்கி, பன்னாட்டு நிதி முனையம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவை உலக நாடுகளின் அரசுகளை ஏற்கச் செய்து வருகின்றன. அதனால்தான் தனியார் பள்ளிகளும், தனியார் கல்லூரிகளும், தனியார் மருத்துவமனைகளும் பெருகி வரும் நேரத்தில் அரசு நிறுவனங்கள் அருகி வருகின்றன.

நன்றி !

♦ ♦ ♦

கேள்வி : // இப்பொது இருக்கும் நிதி நெருக்கடி சரியாகுமா? //

பாலா p

ன்புள்ள பாலா,

நிதி நெருக்கடி என்ற பதத்தை விட பொருளாதார நெருக்கடி என்ற பதமே பொருத்தமானது. இந்தியாவில் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி இப்போதைக்கு சரியாகும் வாய்ப்பில்லை. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் உள்நாட்டு நுகர்வு குறைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக உற்பத்தி குறைந்து தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இன்னொரு புறம் விவசாயிகளின் வருமானமும் பாரிய அளவுக்கு குறைந்து கிராமப்புற நுகர்வு தேய்ந்து வருகிறது.

இதனால்தான் இந்தியாவில் புதிய தொழில் துவங்குவதோ, அன்னிய முதலீடுகளின் உதவியுடன் தொழில் துவங்குவதோ காகித அளவிலேயே இருக்கிறது. உற்பத்தி செய்த பொருட்களை வாங்குவதற்கு இல்லாமல் சந்தை சுருங்கி வருகிறது. இந்த இலட்சணத்தில் ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை கொண்டு வருவோம் என மோடி அரசு கேழ்வரகில் நெய் வடிவதாக அடித்து விடுகிறது. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. இரண்டும் சேர்ந்து சிறு – குறு தொழில்களை சுனாமி போல ஒழித்து விட்டன – ஒழித்தும் வருகின்றன. இந்தியா ஒரு பெரிய நாடு, பெரிய பொருளாதார அமைப்பைக் கொண்ட நாடு என்பதால் இந்த பாதிப்புகள் குவிந்து பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு துறை சார்ந்து பரிசீலித்து பார்த்தோமானால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை புரிந்து கொள்ளலாம்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : // இந்தப் பொருளாதார மந்தம் (தேக்கம்) உலகம் தழுவி உள்ளது. அப்படியிருக்கையில் இந்தியாவில் மோடியைப்பற்றி மட்டுமே பேசுவது என்பது எப்படி? பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. இரண்டும் இல்லையென்றால் இந்தியா வல்லரசு ஆகமுடியுமா? //

– உடுமலைப்பேட்டை சண்முகவேல்

ன்புள்ள சண்முகவேல்,

முன்னர் கண்ட பதிலின் தொடர்ச்சியாக உங்கள் கேள்வியை பரிசீலிக்கலாம். உலகு தழுவிய பொருளாதார மந்தம் என்று பேசப்படும் விசயம் உண்மையில் முதலாளித்து கட்டமைப்பு நெருக்கடியாக இருக்கிறது. இந்த நெருக்கடியின் பாதிப்பில் இருந்து எந்த நாடும் தப்பித்துக் கொள்ள முடியாது. உலகமே ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் வலைப்பின்னலில் சிக்கியிருப்பதால் இந்த நெருக்கடி எந்த ஒரு நாட்டையும் நகரத்தையும் கிராமத்தையும் விட்டு வைக்காது என்பது உண்மைதான். அமெரிக்க – சீன வர்த்தக போர், அமெரிக்க – ஐரோப்பிய ஒன்றிய முரண்பாடு, வளைகுடாவில் நடக்கும் போர்கள் – உள்நாட்டு சண்டைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் ஏகாதிபத்திய உலகமும் தனது நிதி மூலதனத்தைக் கொண்டு தொடர்ந்து உலகை சுரண்ட முடியாத அளவில் நெருக்கடியில் தத்தளிக்கிறது. உற்பத்தி அதிகரித்து நுகர்வு குறைந்து சந்தை சுருங்கி அதன் விளைவாக வேலையின்மை அதிகரித்து என ஒரு தொடர் விளைவாக இந்த நெருக்கடி பரவி வருகிறது.

படிக்க:
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! அச்சுநூல்

இந்தியாவிலும் இதன் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. ஏற்றுமதி குறைகிறது, இறக்குமதிக்கு வரி போடக்கூடாது என வல்லரசு நாடுகள் வற்புறுத்துகின்றன. மலிவான உழைப்பிற்காக ஆயத்த ஆடைத் தொழில் இந்தியாவில் இருந்து வங்க தேசத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சுதேசி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வண்ணம் இந்திய அரசு செயல்பட வேண்டும். ஆனால் மோடி அரசோ தனியார்மயம், தாராளமயம், உலக மயக் கொள்கைகளை முன்னிலும் மூர்க்கமாக அமல்படுத்தி சுதேசி பொருளாதாரத்தை சாகடித்து வருகிறது. கூடுதலாக பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. மூலம் சிறு குறு தொழில்கள், விவசாயம் அழிக்கப்பட்டு வேலையின்மையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோடி அரசு உருவாக்கி விட்டது. இந்த இலட்சணத்தில் வல்லரசு, சந்திராயன், அயோத்தி கோவில், கோமாதா என்று நடுத்தர வர்க்கத்தை திசை திருப்புகிறார்கள்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

நூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு

மானுட மரபணு வரலாறு இரண்டு பாதைகளில் பயணிக்கின்றது. ஒன்று மிட்டாகோன்ட்ரியா டி.என்.ஏ (mitochondria DNA mtDNA) அடிப்படையிலானது. மற்றது Y குரோமோசோம் அடிப்படையிலானது. இது நியூக்கிளியர் டி.என்.ஏ (Nuclear DNA – nDNA) எனவும் குறிப்பிடப்படுகின்றது. ஒரு கட்டிடத்திற்கு செங்கல் எப்படி அடிப்படைக் கட்டுப்பொருளோ அப்படி மானுட உடலுக்கும் ஏனைய உயிர்களின் உடலுக்கும் செல் அடிப்படைக் கட்டுப்பொருள். உயிர்களது உடலின் செல்கருக்களில் குரோமோசோம்கள் உள்ளன. மானுட உயிர்ச்செல்லில் 23 இணை (ஜோடி) குரோமோசோம்கள் உள்ளன. குரோமோசோம்கள் டி.என்.ஏக்களால் ஆனவை. டி.என். ஏ.வின் பகுதிகள் தாம் மரபணுக்கள். (மேற்கொண்டு விவரம் வேண்டுவோர் பார்க்க: அத்தியாயம் 18, புரட்சியில் பகுத்தறிவு ப.கு.ராஜன் : பாரதி புத்தகாலய வெளியீடு) மிட்டாகோன்ட்ரியா என்பது, மானுட செல்களில் செல்கருவிற்கு வெளியே இருக்கும் ஒரு தனிச்செல். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி உயிர். அநாதிகாலத்திற்கு முன்பு உயிர்ச்செல் உருவாகி வளர்ந்த காலத்தில் செல்லில் வந்து ஒட்டுண்ணிபோல குடியேறிய செல். அதற்கென்று தனித்த டி.என்.ஏ உள்ளது.

செல்கருவில் உள்ள குரோமோசோம்களின் ஒரு இணைதான் ஆண்பாலா பெண்பாலா என்பதைத் தீர்மானிக்கின்றது. இந்த இரு குரோமோசோம்களும் XX என இருந்தால் பெண்பால்; XY என இருந்தால் ஆண்பால். உடலின் எல்லா செல்களிலும் குரோமோசோம்கள் இப்படி 23 இணைகளாகத்தான் இருக்கின்றன. ஆனால் காமித்துகள் எனப்படும் ஆணின் விந்தணு மற்றும் பெண்ணின் கருமுட்டை இரண்டிலும் மாத்திரம் 23 இணைகள் இருப்பதில்லை. காமித்து செல் ஒவ்வொன்றிலும் 23 குரோமோசோம்கள் மட்டும் இருக்கும். 23 குரோமோசோம்கள் கொண்ட ஒரு விந்தணுவும் 23 குரோமோசோம்கள் கொண்ட ஒரு கருமுட்டையும் இணைந்து உருவாகும் கரு மறுபடி மற்ற எல்லா செல்களும்போல 23 இணை குரோமோசோம்கள் உள்ளதாக உருவாகின்றது. இந்தக் கருவிலும் ஒரு குறிப்பிட்ட இணை குரோமோசோம்கள் தாம் உருவாகும் கரு ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்கிறது. பெண் உடலின் செல்லில் Y குரோமோசோம் கிடையாது. பெண்ணின் பங்களிப்பு எப்போதும் X குரோமோசோம்தான். ஆணின் பங்களிப்பு X அல்லது Y குரோமோசோமாக இருக்கலாம். பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனத் தீர்மானிப்பதில் பெண்ணுக்குப் பங்கேதுமில்லை. இவன்தான் காரணம்; ஆனால் இந்த முறையும் பெண்ணா என அவளைப்போய் அடிப்பான். (நூலிலிருந்து பக்.7-8)

திராவிடர்களும் தமிழர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் ; ஆரியர்கள் மட்டும் தான் வந்தேறிகள் எனும் கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவீன ஹோமோசேப்பியன்கள் இருந்ததற்கான புதைபடிவச்சான்றுகள் ஏதுமில்லை. ஆனால் மரபணுச்சான்றுகள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மானுடக்கூட்டம் (M130) தெற்குப்பாதை எனக் குறிக்கப்படும் கடலோரமாகவே பயணித்து இந்தியாவிற்குள் வந்தது என்பதையும், இந்த மக்கட்கூட்டத்தின் வழித்தோன்றல்கள் இப்போதும் தென் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதையும் நிறுவியுள்ளது. இந்த முதல் அலைக்குப் பிறகு சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இரண்டாம் அலையும்(M20) மிக நீண்டகாலத்திற்குப் பிறகு சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் அலையும் இந்தியாவிற்குள் வந்துள்ளது. இன்றைக்கு ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா, ஈராக், ஈரான் நாடுகளில் விரிந்து அடங்கியிருக்கும் வளமிகு சந்திரப்பிறை (Fertile Crescent) பகுதியிலிருந்து வந்தது இந்த மூன்றாம் அலை.

படிக்க:
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் !

குறிப்பாக, இன்றைய ஈரானின் தென்மேற்கு கோடியிலுள்ள ஈளம் (Elam) இந்த மக்கள் நீண்டகாலம் தங்கி வாழ்ந்த பகுதி எனக் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகத்தின் வெளிவிளிம்பு என ஈளத்தைக் கூறலாம். சுமேரிய நாகரிகத்தின் சில அம்சங்கள் திராவிட நாகரிகத்தில் கலங்கலாகவேணும் தெரிவதைக் குறிப்பிட வேண்டும். சுமேரியர்களின் பெருநகரின் பெயரான ‘ஊர்’, அங்கிருந்த கோவிலின் அமைப்பு ஆகியவற்றின் சாயல் திராவிடப்பகுதியில் இருப்பது போன்றவற்றை தற்செயலான ஒற்றுமை எனத் தள்ளிவிடமுடியும் எனத் தோன்றவில்லை. ஈளமைட் மொழி திராவிடமொழிகளின் மூதாதை எனும் ஒருகருத்து இருந்தது. ஆனால் அது இப்போது இல்லையென ஆகிப்போனது.

ஆய்வும், ஆய்வுப்பரப்பும் அதிகம் ஆக ஆக சிந்து சமவெளி நாகரிகத்தின் மேற்கெல்லையும் அவற்றின் காலக்கணக்குகளும் சுமேரிய, மெசபடோமிய நாகரிகத்தினை நோக்கிச் செல்வதை அனுமானிக்க முடிகிறது. பாகிஸ்தானின் மெஹர்கர் (Mehrgarh) பகுதியில் நடந்த ஆய்வுகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தை ஹரப்பாவிலிருந்து மேற்கே சுமார் 1000 கி.மீ தொலைவுவரை நீட்டிக்கிறது. ஹரப்பா, மொகஞ்சதாரோ காலம் கி.மு.4500-1500 என்றால் மெஹர்கர் காலம் சுமார் கி.மு.7000. சுமேரிய மெசபடோமிய நாகரிக நீட்சியின் தளமும் காலமும் இதனை ஒட்டியதாகவே உள்ளது. மெஹர்கர் பகுதியை ஒட்டிய சமவெளிப்பகுதியில்தான் இன்றைக்கும் முற்றிலும் அழிந்துவிடாத வட திராவிடமொழியான பிருகு வழங்கி வருகிறது. இந்தச் சான்றுகளும் மரபணுரீதியான சான்றுகளும் பெரிதும் ஒத்துப்போகின்றன.

சுமார் 60 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தெற்குப்பாதை வழியே வந்தவர்களும் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள் முன்பும், 6 ஆயிரம் ஆண்டுகள் முன்பும் வடகிழக்கிலிருந்து வந்தவர்களும் இணைந்துதான் திராவிடமொழிகள் பேசும் மக்கட்பகுதிகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், திராவிடமொழிகள் பேசுவோரும் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் தாம் என்பது தெளிவு. ஆனால் ஆரியர்கள் வரவிற்கு பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே இந்தியாவில் குடியேறியவர்கள் என்பதும் தெளிவு. (நூலிலிருந்து பக்.10-12)

ஆரியப்படையெடுப்பு எனும் கோட்பாட்டை நிர்மூலமாக்கிவிட்டதாகக் கூறப்படும் முதலிரு மரபணுக் கட்டுரைகளுக்கு முன்பும் பின்பும் பல கட்டுரைகள் இந்திய சமூகக் கட்டமைப்பையும், சாதியின் தோற்றம் குறித்தும் மரபணு அடிப்படையில் ஆய்வு செய்துள்ளன. இவை இந்தியாவில் வர்க்கரீதியாகவும் சாதியரீதியாகவும் மேல்தட்டு ஆதிக்கத்திலுள்ள ஊடகங்களில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப்பட்டவைதான். ஆரிய திராவிடப் பிரிவினைக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகக் குடிமக்களாகவும் 120 கோடி இந்தியர்களையும் தம் சகோதரர்களாகவும் தமக்கு இணையானவர்களாகவும் கருதுவதுபோல பாவனை செய்யும் மேட்டுக் குடிகளாலும் கண்டும் காணாமல் விடப்பட்டவைதான். (நூலிலிருந்து பக்.18)

இந்தக் கட்டுரைகளும், ஆய்வுகளும் காட்டுவதுதான் என்ன? நம்முடைய தொல்பழங்காலம் குழப்பமானது. ஆய்வுகள் தொடர்கின்றன. ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட பல்துறை ஆய்வு மட்டுமே இந்த வினாவிற்கு நியாயம் செய்யும். இதுவரை தனித்தனியாய் நடந்துள்ள வெவ்வேறு துறை ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நோக்கினால், இடதுசாரி வரலாற்று அறிஞர்களான ரோமிலா தப்பார், டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா போன்றோர் கூறிவரும் கருத்துகளை நிராகரிக்க ஏதும் முகாந்திரம் இல்லை. உயர்சாதி உயர்தட்டு ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் ஆய்வுமுடிவுகளைத் திரித்தும், வடிகட்டியும் தங்கள் ஆதிக்க இருப்பினை மறைக்கவும் அதற்கெதிரான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தவும் முயற்சிக்கின்றன. அவர்களது சுயநலமான செயலை எதிர்ப்பது, வேறுபாடுகளை விரும்புவதுபோல தோற்றம் கொண்டுவிடும் அபாயமுள்ளது. மேலும் மரபணு அடிப்படை இருந்தால் அது மாற்றமுடியாத இயற்கை என்பதுபோன்ற ஒரு தவறான புரிதலுக்கு வந்துவிடும் அபாயமும் உள்ளது. ஆனாலும், இவற்றைக் கையாளாது விடுவது அநியாயத்திற்கு துணைபோவதாகவே அமையும். (நூலிலிருந்து பக்.36-37)

நூல் : சாதி வர்க்கம் மரபணு
ஆசிரியர் : ப.கு.ராஜன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2433 2924
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : periyarbooks | thamizhbooks | panuval

தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

தரம் தகுதி பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

“5-ம் வகுப்புக்கும், 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த வருடம் மட்டுமல்ல, எந்த வருடமும் கிடையாது” என்று 2019 பிப்ரவரியில் திட்டவட்டமாகச் சொன்னார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அதே நபர், அதே வாய், அதே பிரச்சினை. ஆனால், இப்போது 2019 செப்டம்பரில், “5 மற்றும் 8- வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு” என்கிறார்.

இந்த அறிவிப்பு வந்து இவ்வளவு நாட்களாகியும் இப்போது வரை, பள்ளிக்கூடங்களுக்கோ ஆசிரியர்களுக்கோ இது குறித்த அரசாணை, அறிவுறுத்தல் எதுவும் அளிக்கப்படவில்லை. அப்படியே வந்தாலும், “1 முதல் 8 வகுப்புகளுக்கு முப்பருவத் தேர்வுமுறையை வைத்துக்கொண்டு பொதுத் தேர்வை எப்படி நடத்துவது?” என்று எத்தனை யோசித்தாலும் ஆசிரியர்களுக்கு விளங்கவில்லை. மேலும், இந்தக் கல்வியாண்டில் முப்பருவத்தின் முதல் பருவத் தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. “அது பொதுத் தேர்வின் ஓர் அங்கமா? மீதமுள்ள இரு பருவத் தேர்வுகளும் பொதுத் தேர்வாகக் கருதப்படுமா?” என்பதும் ஆசிரியர்களுக்கு விளங்கவில்லை.

ஏற்கெனவே 10, 12- வகுப்புகளுக்கு நடைபெற்று வரும் பொதுத் தேர்வு; கடந்த கல்வியாண்டிலிருந்து இதனுடன் சேர்ந்துள்ள 11 வகுப்புக்கான பொதுத் தேர்வு. இரண்டுக்கும் கல்வியாண்டின் இரு மாதங்களை ஆசிரியர்கள் ஒதுக்க வேண்டியுள்ளது. இதில் புதிதாக 5, 8-ம் வகுப்புகளும் சேரும்போது, அதுவும் முப்பருவத் தேர்வு முறையே பொதுத் தேர்வு என்றானால், ஆண்டு முழுவதும் ஆசிரியர்கள் தேர்வு மட்டுமே நடத்திக் கொண்டிருக்க வேண்டிய சூழல் ஏற்படும். பாடம் நடத்த முடியாது. இவையெல்லாம் நிர்வாகம் சார்ந்த நடைமுறைச் சிக்கல்கள்.

இவற்றைக் கடந்த முதன்மையான சிக்கல் என்பது, அவ்வளவு இளம் வயதில் பொதுத் தேர்வு என்பது மிகப்பெரிய உளவியல் வன்முறை. கல்வியின் மீதும் படிப்பின் மீதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட கட்டமைப்புடன் இயங்கும் பின்லாந்து போன்ற முதலாளித்துவ நாடுகள் 7 வயதில்தான் குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வியைத் தொடங்குகின்றன. 10 வயது வரை தேர்வு என்பதே கிடையாது. ஆனால், இங்கு 4 வயதில் பள்ளிக்கு அனுப்பப்பட்டு, 5 வயதில் முறைப்படியான தேர்வுகள் தொடங்குகின்றன. அது போதாதென்று, 10 வயதில் பொதுத் தேர்வு என்பது நினைத்துப் பார்க்க முடியாத மன நடுக்கத்தைக் குழந்தைகளிடம் உருவாக்கும். தரமான கல்விமுறையில் தேர்வுகள் குறைவாக இருக்க வேண்டும். இவர்களோ தரம் என்ற பெயரில் மேலும், மேலும் தேர்வுகளை அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.

இந்தத் தேர்வு வன்முறைக்கு இலக்காகப் போகும் குழந்தைகள் யார் என்ற கேள்வி முக்கியமானது. கடந்த 30 ஆண்டுகளாக இங்கே ஊதி உருப்பெருக்கப்பட்டிருக்கும் தனியார் கல்வி மோகத்தின் விளைவாக, மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். அடகுவைக்க ஒரு குண்டுமணி தங்கம் இல்லாதவர்கள்தான் அரசுப் பள்ளிகளை நோக்கி வருகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட உதிரித் தொழிலாளிகள், வீட்டு வேலைக்குச் செல்லும் கைம்பெண்கள் –  இப்படிப்பட்ட வர்க்கப் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் கணிசமானோர் தாழ்த்தப்பட்ட குழந்தைகள். அரசுப் பள்ளிகளுக்கே உரிய அனைத்து வசதிக் குறைவுகளையும், தடைகளையும் எதிர்கொண்டு இவர்கள் கல்வியின் கரம் பற்றி மேலெழும்பி வந்தாக வேண்டும். இவர்களின் தலையில்தான் தரம் என்ற பெயரில் புதிய பொதுத் தேர்வுகளை சுமத்துகிறது அரசு.

படிக்க :
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்
♦ தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !

2009-ம் ஆண்டு, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தது. இதன்படி நாடு முழுவதும் 1 முதல் 8 வகுப்புகள் வரையிலும் யாரையும் “ஃபெயில்” ஆக்கக்கூடாது, அனைவரும் தேர்ச்சி என்பது நடைமுறைக்கு வந்தது. இந்த முறையானது, கல்வியின் தரத்தை அதிகரித்துள்ளதா, குறைத்துள்ளதா என்பது ஆய்வுக்குரியது. ஏனெனில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களால் உயிர் எழுத்துக்களைக்கூட வாசிக்க, எழுத முடியாத சூழல் நிலவுகிறது. நாம் படிக்காவிட்டாலும் “பாஸ் ஆகிவிடுவோம்” என்ற மனநிலை மாணவர்களிடமும், “பாடம் நடத்தினால் என்ன, நடத்தாவிட்டால் என்ன? எல்லோரையும் பாஸ் போடத்தானே போகிறோம்?” என்ற மனநிலை ஆசிரியர்களிடமும் கணிசமாக உருவாகியிருக்கிறது. இதை மாற்றிக் கல்வித் தரத்தின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்; தேர்வுகளற்ற முறையிலும் தரமான கல்வி சாத்தியம் என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஆனால், இதற்கான வழிமுறை புதிய பொதுத் தேர்வுகள் அல்ல. அதேநேரம், இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறையானது, பள்ளி இடைநிற்றலை மிகக் கணிசமாகக் குறைத்திருக்கிறது என்பதும் உண்மை. 2009-ல் இச்சட்டம் அமலுக்கு வந்தபோது 11.21 சதவீதமாக இருந்த தேசிய இடைநிற்றல் விகிதம், 2017-ம் கல்வி ஆண்டில் 3.61% ஆகக் குறைந்துள்ளது.

மரத்தடியில் பாடம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் அவலநிலை. இவர்களுக்குத் தேவை வகுப்பறையா, பொதுத்தேர்வா ?

2019 பிப்ரவரியில் கட்டாயத் தேர்ச்சி சட்டத்தில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டது மத்திய பா.ஜ.க. அரசு. அப்போதே இதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தாலும், அடுத்து வந்த தேர்தல் பரபரப்பில் அது அத்தோடு அமுங்கிப்போனது. பின்னர் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., தேசியக் கல்விக் கொள்கை 2019 அறிமுகப்படுத்தியது. அக்கொள்கையோ 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்துத் திட்டவட்டமாக எதையும் சொல்லாத தமிழக அரசு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. எட்டையும் ரெண்டையும் கூட்டினாலும், ரெண்டையும் எட்டையும் கூட்டினாலும் விடை என்னவோ பத்துதான். மொத்தத்தில் சின்னஞ்சிறு பிஞ்சுகளை பொதுத் தேர்வு என்னும் சித்திரவதைக் கூடத்துக்குள் அனுப்பி வைப்பதில் மோடி அரசும், எடப்பாடி அரசும் போட்டிப் போடுகின்றன.

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். ஆனால் முதல் மூன்று ஆண்டுகளுக்கு “ஃபெயில் இல்லை” என்பது தமிழக அரசின் அறிவிப்பு. அதாவது, முதலில் பொதுத் தேர்வு என்ற பழக்கத்துக்குப் பயிற்றுவிப்பது; பின்னர், இறுக்கிப் பிடிப்பது.

நமது கல்விமுறையில் அடிப்படையிலேயே உள்வாங்கும் தன்மை இல்லை. வடிகட்டுவதே இதன் பண்பு. 100 பேர் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தால் 10-ம் வகுப்பில் வெளிவரும்போது, அது 60 பேராகச் சுருங்கிவிடுகிறது. மீதமுள்ள 40 பேர் வெவ்வேறு காரணங்களால் கல்வியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

படிக்க :
♦ 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE
♦ திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !

ஒரு வறிய குடும்பத்தின் பெற்றோர், “நாம்தான் இப்படி லோல்படுகிறோம். பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்துவிடுவோம்” என்றெண்ணிப் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்றால், அவன் படிப்பில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பும் ஊக்கத்தை பெற்றோர் பெறுவர். மாறாக, 5-ம் வகுப்பில் பொதுத் தேர்வு வைத்து அவனை ஃபெயில் ஆக்கினால், “நீ படித்துக் கிழித்தது போதும், வேலைக்குப்போ” என்றுதான் யோசிப்பார்கள். இது ஒரு யதார்த்தம். பெண் குழந்தைகள் ஃபெயிலானால் சர்வ நிச்சயமாக அத்தோடு அவர்களின் கல்வி காலி.

மொத்தத்தில் இந்தப் புதிய பொதுத் தேர்வு அறிவிப்பானது, பெரும் தொகையிலான மாணவர்களைப் பள்ளியில் இருந்து வெளியேற்றும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. “அனைவருக்கும் கல்வி தேவையில்லை” என்பதே இந்த அரசின் மறைமுகச் செயல்திட்டம். அப்படிப் பள்ளியில் இருந்து வெளியே வருவோரை என்ன செய்வது?

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்து பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டால், குழந்தைகள் போய் விழும் இடம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

அதற்குத்தான் பள்ளிக்கூடத்திலேயே தொழிற்கல்வியைப் பரிந்துரைக்கிறது தேசியக் கல்விக் கொள்கை. 2015-ல் மத்திய அரசு கொண்டுவந்த திறன் இந்தியா (Skill India) திட்டத்துக்குத் தேவையான உடல் உழைப்புத் தொழிலாளர்களை அணிதிரட்டும் நோக்கமும் இந்தப் பொதுத் தேர்வின் பின்னே இருக்கக்கூடும். மேலும், இப்படி கீழ் மட்டத்திலேயே ஏழைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் கொஞ்சம், கொஞ்சமாக வடிகட்டுவதன் மூலம் உயர் கல்வி என்பதை உயர்சாதியினருக்கு மட்டும் பாத்தியப்பட்டதாக மாற்றிக்கொள்ள முடியும். இடமும் இருக்கும், ஒதுக்கீடும் இருக்கும், படிக்க ஒடுக்கப்பட்ட சாதி-யை சேர்ந்த மாணவர்கள்தான் இருக்க மாட்டார்கள். அப்படியொரு மீண்ட சொர்க்கத்தை சனாதன ராஜ்ஜியத்தை அரசியல் சாசனச் சட்டத்தின்படியே நம் கண் முன்னே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேநேரம், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கும் பெற்றோர், இந்தச் சுழலில் இருந்து தப்பித்துவிட முடியும் என்று கனவு காண முடியாது. 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது தனியார் பள்ளிகளையும் சேர்த்துதான். ஏற்கெனவே 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் அதிக தேர்ச்சி விகிதம் காட்டவேண்டும் என்பதற்காக 9-ம் வகுப்பிலும் 11-ம் வகுப்பிலும் சுமாராக படிக்கும் மாணவர்களை வெளியேற்றுகிறார்கள். இனிமேல் அதை 4-ம் வகுப்புக்கும் 7-ம் வகுப்புக்கும் நீட்டிப்பார்கள். தங்கள் பள்ளியின் ‘தரத்தை’க் காப்பாற்றிக்கொள்ள இதை நிச்சயமாக செய்வார்கள். இத்தகைய “மறைமுக இடைநிற்றலில்” இருந்து தமது பிள்ளைகள் தப்பிக்க நடுத்தர வர்க்கப் பெற்றோர் தனிப் பயிற்சியை நோக்கி ஓடுவது இன்னும் விரிவாகும், தவிர்க்க முடியாததாக மாறும். அந்த வகையில் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் இந்தப் புதிய பொதுத் தேர்வு அறிவிப்பு கூடுதல் தலைவலிதான்.

மொத்தத்தில் மைய அரசும், மாநில அரசும் அனைவரும் படித்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. ஏற்கெனவே பல தலைமுறையாகக் கல்வி பெற்ற உயர்வர்க்கப் பிரிவினர் மட்டும் படிக்கும் வகையில் கல்விமுறையை மாற்றி அமைப்பது, மற்றவர்களை வடிகட்டி வெவ்வேறு உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடுத்துவது, குலத்தொழில் நோக்கிச் செல்வதற்கு ஊக்குவிப்பது என்பதுதான் இந்த இந்துத்துவக் கும்பலின் சிலபஸ்.

 பி.டி.

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

சிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது ! திருத்துவதில்லை !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 05

பிப்ரவரி 20. தனிநபரும் பேனா மையின் நிறமும்

குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்களை எந்த மை நிரப்பிய பேனாவால் திருத்துவது என்பது பற்றி முன்னர் நான் யோசித்ததில்லை. சிவப்பு மையால் திருத்தினால் என்ன? சமீபத்தில் லேலா இந்த மையின் நிறத்தை ஒரு வளர்ப்புப் பிரச்சினையாகப் பார்க்கும்படி செய்தாள்: நான் திருப்பித் தந்த கணிதப்பாட நோட்டுப் புத்தகத்தைத் திறந்த அவள் அழத் துவங்கினாள்.

“என்ன விஷயம் லேலா?” நான் கவலையோடு கேட்டேன்.

பாடம் தடைப்பட்டது. லேலா அழுகிறாள், திறந்துகிடக்கும் நோட்டுப் புத்தகத்தின் மீது கண்ணீர் துளிகள் விழுகின்றன. அவள் செய்த தப்புகளைத் திருத்திய சிவப்பு மை அழுகிறது.

“என்னால் கணிதப் பாடத்தைப் படிக்க முடியாது!.. என்னால் கணக்குகளைப் போட முடியாது!.. நான் என்ன செய்வது? நான் எப்போதும் தப்பு செய்கிறேன்!.. என் நோட்டுப் புத்தகத்தில் வெறும் சிவப்பு மை மட்டுமே உள்ளது!..”

நான் சிறுமியை சாந்தப்படுத்தி, உற்சாகப்படுத்தினேன். ஆனால் என் முன், மையின் நிறத்திற்கும் குழந்தையின் மனநிலை வளர்ப்பிற்கும் இடையில் இருக்கக் கூடிய தொடர்பு பற்றிய பிரச்சினை தோன்றியது. அதாவது எழுதும் போது குழந்தை செய்யும் தப்புகளைச் சுட்டிக் காட்டித் திருத்த ஆசிரியர் சிவப்பு மையைப் பயன்படுத்துகிறார். நான் எனது பள்ளி நாட்களில் ஆசிரியர் திருப்பித் தரும் நோட்டுப் புத்தகத்தை எப்படிக் கவலையோடு திறந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன். அதிலிருந்த சிவப்புக் கோடுகள் என்றுமே எனக்கு சந்தோஷத்தை அளித்ததில்லை. “மோசம்! தப்பு! உனக்கு வெட்கமாயில்லையா!” என்றெல்லாம் என் ஆசிரியரின் குரலில் இவை என்னைப் பார்த்துக் கூறியதைப் போலிருக்கும். என் நோட்டுப் புத்தகத்தில் ஆசிரியர் சுட்டிக் காட்டிய தவறுகள் என்னை எப்போதுமே அச்சுறுத்தின, இந்த நோட்டுப் புத்தகத்தைத் தூக்கியெறிய அல்லது என்னை இழிவுபடுத்தியதாக எனக்குப்பட்ட அக்குறிகளடங்கிய பக்கத்தைக் கிழித்தெறியக் கூட நான் விரும்பினேன். சில சமயங்களில் நான் நோட்டுப் புத்தகத்தைத் திரும்பப் பெறும் போது அதில் சிவப்பு மையால் இடப்பட்ட குறிகளைத் தவிர ஒவ்வொரு வரியின் கீழும் வளைகோடுகளும் இடப்பட்டிருக்கும். இந்த வளைகோடுகள் கோபம் கொண்ட எனது ஆசிரியரின் நரம்புகளாக என் கண்களுக்குப் பட்டன.

ஆனால் நான் மாணவன் தானே, எல்லாவற்றையும் பிழையின்றி செய்ய என்னால் முடியாதே! “மோசம்! தப்பு! வெட்கமாயில்லையா!” என்ற இந்தப் பயங்கர சமிக்கைகளைக் கண்டு, என்னால் இந்தப் பிழைகளைத் தவிர்க்க இயலவில்லையே (அதுவும் எளியவற்றை) என்று என் மீது நானே கோபப்படுவேன். இந்த சிவப்பு மையை விரும்பும் ஆசிரியர் மீதும் எனக்குக் கோபம் வரும். “நில்! பிழைகளைத் திருத்தாவிடில் மேற்கொண்டு முன்னால் செல்ல முடியாது!” என்று இந்த சிவப்பு வளைகோடுகள் என்னிடம் கூறின. எனக்கோ முன்னால் செல்ல அவ்வளவு விருப்பம்! பிழைகள் இருக்கட்டுமே, என்னைத் தடுத்து நிறுத்தாதீர்கள்! ஓ, சிவப்பு மையே நீ இல்லாமலிருந்தால், இன்னும் நூறு ஆண்டுகள் விஞ்ஞானிகள் உன்னைக் கண்டுபிடிக்காமலிருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!

இந்த சிவப்புக் குறிகள் எப்படி என் மனநிலையைப் பாழ்படுத்தியிருக்கின்றன, பல சமயங்களில் எப்படிக் கண்ணீரை வரவழைத்துள்ளன! உலகில் உள்ள எல்லா ஆசிரியர்களும் மாணவர்களின் பிழைகளை வேட்டையாடிக் கண்டுபிடித்து அதில் மகிழ்ச்சியடைவதென சதித் திட்டம் தீட்டியுள்ளனர்! இப்படி இருந்தால், நாம் அவர்களுக்கு இவ்வளவு திருப்தி தந்திருக்கலாம்: அனேகமாக நாம் நமது நோட்டுப் புத்தகங்களில் எவ்வித கஷ்டமும் இன்றி ஒரு சில மில்லியன் பிழைகளைச் செய்திருக்கின்றோம்! நமது எழுத்து வேலைகளில் உடனடியாகப் பிழைகளைக் கண்டுபிடிப்பதைத் தவிர வேறு எதையும் பார்ப்பது ஆசிரியர்களின் வேலையில்லையோ என்று எனக்குத் தோன்றும். அதனால் தான் நோட்டுப் புத்தகங்களில் பிழைகளைத் “திருத்துவது” என்று கூறுகின்றார்களோ! “திருத்துவது” என்பது இந்தச் செயலின் சாரத்தை சரிவர வெளிப்படுத்தவில்லை; “பிழைகளைக் கண்டுபிடிப்பது” என்று கூறுவது தான் சரியாக இருக்கும். ஏனெனில் இவர்கள் எதையும் திருத்தவில்லை.

அப்போது இந்த சிவப்புக் குறிகளை நான், எனது எதிர்காலம் பற்றிய அக்கறையால் எனது ஆசிரியர் எனக்களிக்கும் “ஊக்கமாக” பார்த்தேன். ஆனால் அவருக்கு எத்தகைய நல்ல நோக்கங்கள் இருந்த போதிலும் இந்த சிவப்புக் குறிகள் என்னை வருத்தமடையச் செய்தன. ஏனெனில் ஒரு பிழை கூட விடாமல் வேலையை சரிவர நான் செய்யாததால் ஆசிரியருக்கு ஏற்பட்ட எரிச்சலை நோட்டுப் புத்தகத்தில் பார்க்க நான் விரும்பவில்லை, ஆசிரியருடைய அன்பு, மென்மை, பாசம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் அடையாளங்களையே நான் பார்க்க விரும்பினேன். சிவப்புக் குறிகள் என் தோல்விகளைச் சுட்டிக் காட்டின, நானோ எனது முன்னோக்கிய பாதையில் ஆசிரியருக்கு என்ன பிடித்துள்ளது என்றறியத் துடித்தேன்.

ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது, நான் ஒரு ஆசிரியராக இருக்கும் போது அதைப் பற்றியெல்லாம் மறந்து விட்டேன். நானும் மாணவனாயிருந்தேன், இந்த சிவப்பு மையை நினைத்து கஷ்டப்பட்டிருக்கிறேன் என்பதை மறந்து விட்டு அதே சிவப்பு மையால் என் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில் பிழைகளைக் கோடிட்டுக் காட்டுகிறேன். எழுத்து கோணலாக, சாய்வாக எழுதப்பட்டுள்ளதா -அதனடியில் சிவப்புக் கோடு, வாக்கியம் தவறா அதனடியில் சிவப்பு வளைகோடு. எவ்வளவு கவனக் குறைவு, விஷயம் தெரியாமை, திறமையின்மை என்று எண்ணிக் கோபப்படுகிறேன், பதட்டப்படுகிறேன், உணர்ச்சி வசப்படுகிறேன். நானும் ஒரு சமயம் மாணவனாக இருந்தேன் என்பதையும், ஆசிரியரின் சிவப்பு மையை அவள் எப்படிப் பார்க்கிறாள் என்பதற்கும் நான் குழந்தைப் பருவத்தில் எப்படிப் பார்த்தேன் என்பதற்கும் சிறிது கூட வித்தியாசமில்லை என்பதையும் சமீபத்தில் லேலா எனக்கு நினைவுபடுத்தினாள். இதே மாதிரியான சிவப்புக் குறிகளால், கோடுகளால் நான் இவர்களைப் பதட்டமடையச் செய்கிறேன், அழச் செய்கிறேன். நானோ எல்லாம் வேறு மாதிரியாக இருக்க வேண்டும் என்றல்லவா விரும்புகிறேன்.

என்னை இச்சிந்தனைக்கு இட்டுச் சென்ற சிறுமிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இது பின்வரும் “முதுமொழிக்கு” வழிகோலியது:

மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் என் முறையை நான் மேம்படுத்த விரும்பினால், நானும் ஒரு சமயம் மாணவனாக இருந்தேன் என்பதை மறக்கக் கூடாது, அன்று என்னைத் துன்புறுத்திய அதே உணர்வுகள் எனது இன்றைய சிறுவர் சிறுமியரைத் துன்புறுத்தாமலிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறாக குழந்தையைத் தனி நபராக வளர்ப்பதில் என் முன் மையின் நிறம் பற்றிய பிரச்சினை தோன்றியது.

குழந்தை செய்யும் பிழைகளை அடிக்கடி சுட்டிக் காட்டுவது குழந்தைக்கு அதிகம் உதவுமா, அல்லது அவனது வெற்றிகளைக் குறிப்பிடுவது அதிகம் உதவுமா? எப்படிச் செய்யக் கூடாது என்பதன் மீது குழந்தையின் கவனத்தை அதிகம் திருப்ப வேண்டுமா, அல்லது எப்படிச் செய்ய வேண்டும் என்பதன் மீது கவனம் செலுத்த வேண்டுமா? தோல்வி குறித்த வருத்தமா அல்லது வெற்றியின் மகிழ்ச்சியா, எது அவன் வளர்ச்சிக்கு அதிகம் உதவும்? இக்கேள்விகள் அனைத்தையும் ஒரு பிரச்சினையாக ஒன்றிணைத்தால் அது பின்வருமாறு ஒலிக்கக் கூடும்: “மோசம்! தப்பு! வெட்கமாயில்லையா!” என்பது போன்ற எண்ணற்ற குறிப்புகளாக மாறும் சிவப்பு மைக்குப் பதிலாக, “நல்லது! மகிழ்ச்சி! அப்படியே இரு! அற்புதம்!” என்பன போன்ற எண்ணற்ற ஊக்குவிப்புகளாக மாறும் பச்சை மையைப் பயன்படுத்தலாமா?

நிச்சயமாக, இப்பிரச்சினையை ஒரு தலைப்பட்சமாகத் தீர்க்க முடியாது. மையின் நிறத்தின் பின் ஆசிரியரின் கருத்து நிலைகள் உள்ளன, இவற்றில் எதையாவது தேர்ந்தெடுக்க, அல்லது வேறொன்றைத் தேடத் தீவிர சிந்தனை அவசியம். லேலாவுடன் நடந்த சம்பவம் குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்களில் மையின் நிறத்தை மாற்றும்படி செய்தது. இப்போது என் மேசையில் சிவப்பு மை நிரப்பப்பட்ட பேனாவும் பச்சை மை நிரப்பப்பட்ட பேனாவும் உள்ளன. நோட்டுப் புத்தகங்களைத் திருத்தும் போது எனக்குப் பிடித்தவற்றைச் சுற்றி, நான் வெற்றி என்று கருதுவதைச் சுற்றி பச்சை மையால் கோடிடுகிறேன். இந்தப் பச்சைக் குறிகள் குழந்தைகளின் முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்குமான என் பாராட்டுகள். ஒவ்வொரு முறை நோட்டுப் புத்தகங்களைத் திருத்தும் போதும் நான் பச்சை மையைப் பயன்படுத்தினால், என் மனநிலை மேம்படுவதையும் அவர்களுக்கு என்ன தெரியும், அவர்களால் என்ன முடியும் என்று அதிகம் அறிய முடிவதையும் உணர்ந்தேன். நான் சிவப்பு மையால் எழுதும் போது வருவதை விட பச்சை மையால் எழுதும் போது கோடுகளும் வட்டங்களும் அடைப்புக் குறிகளும் நன்கு துல்லியமானவையாக வருவதை உணர்ந்தேன்.

அனேகமாக, எரிச்சலை விட சந்தோஷம் அழகானதாயிருக்க வேண்டும், எனவே குழந்தைகளுக்கு சந்தோஷம் தர வேண்டிய மையால் செய்த குறிகள் அழகானவையாக வருகின்றன. சரி, பிழைகளை என்ன செய்வது? குழந்தைகள் எழுதும் போது செய்யும் பிழைகளை முதலில் கல்வி போதனையின் முறையியல் மேம்பாடின்மையின் விளைவாக நான் கருதுவதால், இவற்றை என் பிழைகளாக ஏற்று, தனி நோட்டுப் புத்தகத்தில் சிவப்பு மையால் எழுதுகிறேன். கவனக் குறைவு, கவனமின்மையால் ஏற்படும் பிழைகளை, அதாவது இயந்திரகதியான பிழைகளை ஒரு பிரிவாகச் சேர்க்கிறேன். இத்தகைய பிழைகள் அதிகமிருந்தால் இந்த இயந்திரகதியான பிழைகளைத் திருத்துவதில் பயிற்சியளிக்காமல் கவனத்தை, செயல் முனைப்பை வளர்க்கும் பயிற்சிகளைத் தருகிறேன். திறமையில்லாததால், தெரியாததால், புரியாததால் செய்யும் பிழைகளை வேறு விதமானவையாகக் கருதுகிறேன். இந்தப் பிழைகளுக்கு ஏற்ப புதிய பயிற்சிகளைத் தருகிறேன், எழுத்து வேலைகளைக் கொடுக்கிறேன், அல்லது பாடத்தை மீண்டும் விளக்குகிறேன்.

படிக்க:
அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

பிழைகளைத் திருத்துவதை புதிய பாடத்தை கிரகிக்கும் நிகழ்ச்சிப் போக்கில், புதிய வேலைகளைச் செய்வதில் சேர்ப்பது எனும் கோட்பாட்டைப் பின்பற்றுகிறேன். பாடங்களை மேற்கொண்டு படிக்கும் போக்கில் பிழைகளைத் திருத்தும் வாய்ப்பு இருந்தால், குழந்தைகளுக்கு மிக சலிப்பேற்படுத்தும் பிழைத் திருத்தம் என்றழைக்கப் படுபவற்றில் நேரத்தை வீணாக்குவதில் பொருள் இல்லை. இப்படியாக இந்தப் பழக்கமான வேலை என் பாடங்களிலிருந்து மறையும், ஆனால் இதனால் என் வகுப்புக் குழந்தைகளின் வெற்றி ஒரு சிறிதும் குறையாது.

இன்று லேலா என்னிடமிருந்து கணித நோட்டுப் புத்தகத்தைப் பெற்றதும், “இதோ, எவ்வளவு கணக்குகளை நான் போட்டிருக்கிறேன், கணிதப் பாடம் எனக்குப் பிடிக்கும்!” என்று மகிழ்ச்சியாகக் கூறிய போது இந்தப் புதிய அம்சத்தைப் பற்றிய குழந்தைகளின் மதிப்பீட்டை அறிந்தேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி ! கருத்துப்படம்

அயோத்தி இறுதித் தீர்ப்பு ! கோர்ட்டாவது மயி@#வது… இந்த விசயத்துல நான் ராசா ஆளு…

***

கண்ணீர் அஞ்சலி – இந்திய ஜனநாயகம்

***

கருத்துப்படம் : வேலன்