பெட்டி முதல் ஆடம் ஸ்மித் வரை, ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பொருளாதார விஞ்ஞானம் வெகுதூரம் முன்னேறியது; மூலச் சிறப்புடைய மரபினரின் ஆரம்ப நிலையிலிருந்து ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்றது; தனித் தனியாக – சில சமயங்களில் அங்கொன்றும் இங்கொன்றாக வெளிவந்த பிரசுரங்களிலிருந்து நாடுகளின் செல்வம் என்று வரையறுத்துக்கூறும் விளக்க நூல் வரை முன்னேறியது. இந்த நூலின் உள்ளடக்கமும் உருவமும் அடுத்த நூற்றாண்டிலும் – அதற்குப் பின்னரும் கூட பொருளாதாரத் தத்துவத்தைப் பற்றி எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல்களின் இயல்பை நிர்ணயித்தன.
மார்க்ஸ் எழுதியது போல, “அந்தக் காலகட்டத்தில்”(1)தற்சிந்தனை மிக்க சிந்தனையாளர்கள் அதிகமாக இருந்தனர்; எனவே “அரசியல் பொருளாதாரத்தின் படிப்படியான தோற்றத்தை”(2)ஆராய்வதற்கு அது முக்கியமானதாகும். இங்கிலாந்தில் மூலச் சிறப்புடையை அரசியல் பொருளாதாரத்தின் மாளிகையை ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்துக் கட்டிய சிறப்புமிக்க அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரில் சிலரைப் பற்றி மட்டுமே நாம் இங்கே எடுத்துக் கூறுவது சாத்தியம். நவீனப் பிரச்சினைகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுதும் அவர்களுடைய கருத்துக்களில் சில சுவாரசியமிக்கவையாக இருக்கின்றன.
18-ம் நூற்றாண்டு
இன்றைய புதிய யுகத்தின் பிரிட்டன் 18-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் உருவாயிற்று என்று கூறலாம். நில உடைமையாளர்களான பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த வர்க்க சமரசம் இந்தக் கால கட்டத்தில் உறுதியாயிற்று. இரண்டு சுரண்டும் வர்க்கங்களின் நலன்களும் இணைந்து நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தன. பிரபுக்கள் முதலாளிகளானார்கள்; முதலாளிகள் நில உடைமையாளர்களானார்கள்.
18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் வரைபடம்.
அன்று உருவாகி வளர்ச்சியடைந்த அரசியல் அமைப்பு அடிப்படையான அம்சங்களில் இன்றைய தினத்திலும் கூட நீடிக்கிறது; இரண்டு நூற்றாண்டுகளுக்கு அது முதலாளித்துவ ஜனநாயக இலட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. அது நாடாளுமன்றத்துக்கு அடங்கிய முடியாட்சியைக் கொண்டிருக்கிறது; அங்கே அரசர் ஆள்கிறாரே தவிர ஆட்சி செய்வதில்லை. அங்கே இரண்டு கட்சிகள் இருக்கின்றன; அவ்வப்பொழுது ஒன்றுக்குப் பதில் மற்றொன்று ஆட்சிக்கு வரும். அந்தக் கால ஐரோப்பாவில் முன் எப்போதும் இருந்திராத அளவுக்குத் தனி நபர் சுதந்திரமும், பத்திரிகைச் சுதந்திரமும், பேச்சுரிமையும் அங்கே உண்டு; ஆனால் சமூகத்தில் வசதி மிக்கவர்களும் பணக்காரர்களும் மட்டுமே இந்த உரிமைகளை உண்மையில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நிலவுடைமையாளர்களின் பழமைவாதக் கட்சியான டோரிக் கட்சியும் அதிகமான கல்வி கற்ற பிரபுக்கள், நகர்ப்புற முதலாளிகளின் மிதவாதக் கட்சியான விக் கட்சியும் தமது முடிவற்ற நாடாளுமன்ற, தேர்தல் யுத்தங்களை நடத்துவதற்குத் தொடங்கியிருந்தன. “கீழ்வர்க்கங்களின்” கவனத்தை வர்க்கப் போராட்டத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திருப்புவது இந்த யுத்தங்களின் முக்கியமான வேலையாகும்.
அரசியல் போராட்டம் இதற்கு முந்திய நூற்றாண்டுகளில் கொண்டிருந்த மதப் பூச்சைப் பெரிய அளவுக்கு இழந்து விட்டது. அதிகாரபூர்வமான ஆங்கிலத் திருச்சபைக்கு அருகிலேயே முந்திய பரிசுத்தவாதத்தின் ஏராளமான பிரிவுகளும் ஏற்பட்டன; இங்கிலாந்து “நூறு மதங்களைக் கொண்ட தீவாக” மாறியது. ஆனால் இது முதலாளித்துவ தேசிய இனத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்யவில்லை. ஆங்கில வரலாற்றாசிரியரான ஜி.எம். டிரெவெல்யன் பின்வருமாறு எழுதுகிறார்: “மதம் தேசத்தைப் பிரித்தது, ஆனால் வர்த்தகம் தேசத்தை ஒன்றுபடுத்தியது; ஒப்பு நோக்கில் வர்த்தகத்தின் முக்கியத்துவம் அதிகரித்தது. பைபிள் நூலுக்குப் போட்டியாகக் கணக்குப் பேரேடு வந்து விட்டது.”(3)
ஜி.எம். டிரெவெல்யன்
பேரரசு வேகமாக வளர்ச்சியடைந்தது. வட அமெரிக்காவில் மக்கள் குடியேறினர்; மேற்கிந்தியத் தீவுகளில் கரும்பு, புகையிலைத் தோட்டங்கள் தழைத்துப் பெருகின; இந்தியாவும் கனடாவும் வெற்றி கொள்ளப்பட்டன; உலகத்தின் பல பகுதிகளிலும் ஏராளமான தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கிலாந்து நடத்திய யுத்தங்கள் பிரதானமாக வெற்றியடைந்தன. அது சந்தேகமில்லாத படி உலகத்தின் மிகப் பெரிய கடல் அரசியாக, வர்த்தக வல்லரசாக மாறியது. குறிப்பாக, அடிமை வர்த்தகத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு அநேகமாக ஏகபோகம் இருந்து வந்தது; அவர்கள் ஆயிரக்கணக்கான நீக்ரோக்களை ஆண்டு தோறும் அமெரிக்காவுக்குப் பிடித்துக் கொண்டு போனார்கள்.
இப்படிப்பட்ட எல்லாவிதமான நிகழ்வுப் போக்குகளுக்கும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அடிப்படையாக இருந்தன என்பது உண்மையாகும். முதலாவதாகவும் முதன்மையாகவும், நாட்டுப்புறம் மாற்றமடைந்திருந்தது. அந்த நூற்றாண்டின் மத்தியில் கூட, தொழில்துறையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உற்பத்தி செய்து கொண்டிருந்தது ஆங்கில முறை விவசாயம், நிலங்களை வளைத்துப் போட்டு வேலி அடைப்பது அந்தக் காலத்தில் மிகவும் பரவலாக இருந்தது. சிறு அளவு நிலவுடைமைகளும் பொது நிலமும் படிப்படியாக மறைந்து பெரிய நிலப்பண்ணைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன; இவை சிறு அளவு நிலங்களாகப் பணக்கார விவசாயிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டன. இது விவசாயம், தொழில் துறை ஆகிய இரண்டிலுமே முதலாளித்துவத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தது.
கூலித் தொழிலாளர் வர்க்கம் வேகமாக வளர்ச்சி அடைந்தது; இவர்களிடம் நிலமும் இல்லை, சொத்தும் இல்லை; தங்களுடைய சொந்தக் கைகளைத் தவிர அவர்களிடம் வேறு உடைமைகள் இல்லை. இந்த வர்க்கம் நிலத்தை இழந்த அல்லது பழங்காலத்திலிருந்து வருகின்ற உரிமையான அரை நிலப்பிரபுத்துவக் குத்தகையை இழந்த விவசாயிகளைக் கொண்டும் போட்டியினால் அழிந்து போன குடிசைத் தொழி லாளர்கள், கைவினைஞர்களைக் கொண்டும் ஏற்பட்டிருந்தது.
ஆனால் உண்மையான தொழிற்சாலைப் பாட்டாளி வர்க்கம் இன்னும் “கீழ் வர்க்கங்களில்” முக்கியத்துவமற்ற பகுதியாகவே இருந்தது. முதலாளித்துவச் சுரண்டலிலும் “அந்த நன்மை மிகு பழங்காலத்தின்” எச்சங்கள், தந்தை வழிக் கூறுகள் பல இருந்தன. தொழிற்சாலை அடிமைத்தனத்தின் கோரங்கள் இனி மேல் தான் ஏற்பட வேண்டியிருந்தன.
மறுமுனையில் தொழில்துறை முதலாளிகள் என்ற வர்க்கம் வளர்ந்து கொண்டிருந்தது. இவர்களோடு பணக்கார மேலாண்மைக் கைவினைஞர்களும் வியாபாரிகளும் காலனி நாட்டுத் தோட்ட முதலாளிகளும் சேர்ந்து கொண்டார்கள். கடைசியாகச் சொல்லப்பட்ட இரு ரகங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் திரட்டிய செல்வத்தை இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தார்கள். உற்பத்தி மூலதனத்துக்குக் கீழ்ப்பட்டது பல அடுக்கான நிகழ்வாகும்; முதலில் குடிசைத் தொழில்களுக்கு மூலப் பொருள்களைக் கொடுப்பவர்களாகவும் உற்பத்தி விளைவுகளை வாங்கிக் கொள்பவர்களாகவுமே முதலாளிகள் ஊடுருவி நுழைந்தார்கள்; பிறகு கைத்தொழில் பொருட்களின் உற்பத்தி நிலையங்களையும் தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தினார்கள்.
இது பட்டறைத் தொழில், அதாவது உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு கைகளால் செய்யப்படும் உற்பத்தி யுகத்தின் இறுதிக்கட்டம். முன்னர் பயன்படுத்திய பூர்வீகமான கருவிகளையே உபயோகித்த போதிலும் உழைப்புப் பிரிவினையும் தொழிலாளர்களின் சிறப்புத் தேர்ச்சியும் உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கு உதவி செய்தன. இயந்திரத் தொழில் அப்பொழுதுதான் பிறந்து கொண்டிருந்தது. மாபெரும் கண்டு பிடிப்புகளின் யுகம் ஆரம்பமாகிக் கொண்டிருந்தது . 18-ம் நூற்றாண்டின் முப்பதுக்களில் நூற்புத் தொழில் மற்றும் நெசவுத் தொழிலை இயந்திரமயமாக்குகின்ற முதல் முயற்சிகள் செய்யப்பட்டுவந்தன; நிலக்கரியைச் சுட்டுத் தேனிரும்பு தயாரிக்கின்ற முறை கண்டுபிடிக்கப்பட்டது. அறுபதுகளில் ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
தொழிலதிபர்கள் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கும் வணிகர்கள் அந்நிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் அரசாங்கம் காலனி யுத்தங்களை நடத்துவதற்கும் கடன் வசதி தேவையாக இருந்தது. இதன் விளைவாகப் பண மூலதனத்தைத் திரட்டிய வங்கிகளும் கூட்டுப் பங்குக் கம்பெனிகளும் தோன்றி வேகமாக வளர்ச்சியடைந்தன. தேசியக் கடன் கணிசமான அளவுக்கு உயர்ந்தது. அரசாங்கப் பத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. பங்கு மார்க்கெட் ஏற்பட்டது. லாபத்தை வருமானத்தின் முக்கியமான வடிவமாகக் கொண்ட தொழில்துறை மற்றும் வர்த்தக முதலாளிகளுக்குப் பக்கத்திலேயே பண வசதியுள்ள முதலாளியின் ஆற்றல் மிக்க உருவம் தோன்றியது. அவர் மற்றவர்களுக்குக் கடன் கொடுத்தார். அந்தக் கடனுக்கு வட்டி என்ற வடிவத்தில் உபரி மதிப்பில் அவருக்குப் பங்கு கிடைத்தது.
பண்ட-பண உறவுகள் தேசத்தின் மொத்த வாழ்க்கையிலும் முன்பே நிறைந்திருந்தன. வர்த்தகம் மட்டுமல்லாமல் உற்பத்தியும் பெரும் அளவுக்கு முதலாளித்துவத் தன்மைகளைக் கொண்டிருந்தது. முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையான வர்க்கங்கள் அதிகமான தனித்தன்மையோடு வெளிப்பட்டன. சமூக நிகழ்வுகள் பெருந்திரளான அளவில் திரும்பத் திரும்ப நடைபெற்றதன் விளைவாக மூலதனம், லாபம், வட்டி, நிலவாரம், கூலி போன்ற புறவய இனங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டன. இவை அனைத்தும் இப்பொழுது கவனமான பார்வைக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் உரிய பொருள்களாக முடிந்தது.
மறுபக்கத்தில், சமூகத்தில் மிக அதிக முற்போக்கான வர்க்கமாக இன்னும் முதலாளி வர்க்கம் இருந்தது. அது தன்னுடைய பிரதான எதிரியாக வளர்ச்சியடைந்து வருகின்ற தொழிலாளி வர்க்கத்தை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்த இரு வர்க்கங்களுக்கிடையே வர்க்கப் போராட்டம் இன்னும் கரு வடிவத்தில்தான் இருந்தது. ஆகவே இங்கிலாந்தில் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குரிய நிலைமைகள் இவ்விதத்தில் உருவாயின.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1)மார்க்ஸ் 1691 முதல் 1752 முடிய உள்ள காலகட்டத்தை, பெட்டியின் கருத்துக்களை வளர்த்துச் செல்லும் வகையில் லாக், நோர்த் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டதிலிருந்து, ஆடம் ஸ்மித்தின் முன்னோடியான ஹியூமின் முக்கியமான பொருளாதார புத்தகங்கள் வெளியிடப்படுவது வரை உள்ள கால கட்டத்தைக் குறிப்பிடுகிறார்.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
கேள்வி : //தமிழகத்தில் தேவேந்திர குல மக்களின் தற்போதைய பட்டியல் வெளியேற்ற கோரிக்கை பற்றிய உங்களுடைய கருத்து என்ன?//
-திருமலைகுமார்
அன்புள்ள திருமலைகுமார்,
பட்டியல் இன மக்கள் என்ற பிரிவிலிருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தேவேந்திர குல வேளாள மக்களைச் சேர்ந்த சிலரிடமிருந்து ஏன் வருகிறது? அது சாதி – தீண்டாமை எதிர்ப்பு – ஒழிப்பை முன் வைத்து வரவில்லை. ஆண்ட பரம்பரை, பார்ப்பனமயமாக்கம் மற்றும் பாஜக-வின் மறைமுக ஆதரவோடும்தான் வருகிறது.
பள்ளர்கள் தமிழகத்தை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள், பின்னாளில் ஆளப்படும் பரம்பரையாக வீழ்ந்து போனார்கள் என்று சிலர் முன்வைக்கிறார்கள். இதை பள்ளர் பிரிவைச் சேர்ந்த சில அறிஞர்கள் மட்டுமல்ல ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தோரும் தத்தமது சாதிகள் ஆண்ட பரம்பரை என்றே கூறுகின்றனர். ஆண்ட பரம்பரை வரலாற்றின் படி ஒரு அரசன் அவனது வாரிசுகள் மட்டுமே ஆண்டிருக்க முடியும். மற்றவர்கள் குடிமக்களாகவோ அடிமைகளாகவோ மட்டுமே வாழ்ந்திருக்க முடியும். குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அனைவரும் ஆண்டார்கள் என்று பேசினால் ஆள்வதற்கு இந்த ஒரு பூமி போதாது.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் இப்படி கூறுகிறார்:
“தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படும் மக்கள், பூர்விக வேளாண் குடிமக்கள். இவர்கள் மருத நிலத்தின் மக்கள் ஆவர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆதி திராவிடர் பிரிவில் தேவேந்திர குல வேளாளர்களை சேர்க்கக்கூடாது என்று அப்போதே இந்த சமுதாயத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், வலுவான சமுதாய தலைமை இல்லாத காரணத்தால் தேவேந்திர குல வேளாளர் சமூகம் பட்டியல் சாதிப் பிரிவில் சேர்க்கப்பட்டது. பட்டியல் சாதிப் பிரிவில் சேர்க்கப்பட்டதால் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் தனது பூர்வீக அடையாளத்தை இழந்துள்ளது.
ஆதி திராவிடர் என்றும், ஹரிஜன் என்றும் இந்த சமூகம் கொச்சைப்படுத்தப்பட்டது. இட ஒதுக்கீடு என்ற பெயரில் இந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டது. அதனால், இந்த பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நீக்க நாங்கள் கோருகிறோம்.
சாணார் என்றும் கிராமணி என்றும் அழைக்கப்பட்டவர்களை நாடார்கள் என்று அழைக்கிறார்கள். கள்ளர், மறவர், அகமுடையார் என்று அழைக்கப்பட்டவர்களை முக்குலத்தோர் என்றழைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. வன்னியர்கள் என்று அழைக்கப்பட்டவர்களை சத்திரியர்கள் என்றழைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதே போல், ஏழு பட்டப்பெயர்கள் கொண்ட எங்கள் சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க நாங்கள் கோருகிறோம். எங்கள் சமுதாயத்தின் அடையாள மீட்புக்காக நாங்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறோம்.
பெரும்பான்மை சமூகத்தினருடன் நாங்கள் இரண்டறக் கலப்பதற்கு பட்டியல் சாதிப் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வெளியேற வேண்டும்.”
கிருஷ்ணசாமி கோரிக்கையின் படி பட்டியல் இன மக்களிடமிருந்து பள்ளர்களை விடுவித்து விட்டு இதர பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்க வேண்டுமாம்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் கிருஷ்ணசாமியும் அவரது மகனும் (கோப்புப் படம்)
கிருஷ்ணசாமியின் வாக்குமூலத்தின் படி பள்ளர்கள் வேளாண் குடி மக்கள். எனில் வட தமிழகத்தில் விவசாயக் கூலிகளாக பணியாற்றும் பறையர் இன மக்கள், அதே போன்று மேற்கு தமிழகத்தில் பணியாற்றும் அருந்ததி இன மக்களெல்லாம் வேளாண் குடி மக்களில்லையா? இன்றும் தஞ்சை, கீழத்தஞ்சை மாவட்டங்களில் நிலமற்ற விவசாயக் கூலிகளாக அதிகம் பணியாற்றுவது பள்ளர் மற்றும் பறையர் இன மக்கள்தான்.
ஒரு சில ஊர்களில் பள்ளர்களுக்கு நில உரிமை இருக்கிறது என்றாலும் பெரும்பான்மையினர் இன்னும் கூலிகளாகத்தான் வாழ்கின்றனர். அதே போன்று பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோரிலும் விவசாயக் கூலிகள் இருக்கத்தான் செய்கின்றனர். கிருஷ்ணசாமியின் கணக்குப்படி கூலி வேலை செய்பவர்கள் விவசாயிகள் இல்லைபோலும்!
ஆதிக்க சாதிகளின் சாதி வெறியை, தீண்டாமை ஒடுக்குமுறையை கண்டிப்பதற்கு பதில் நானும் ஆதிக்க சாதிகளின் பட்டியலில் சேருகிறேன், இனிமேல் என்னை ஆதி திராவிடன், ஹரிஜன் என்று அழைக்காதீர்கள் என்று கேட்கிறார் கிருஷ்ணசாமி. அவர் அப்படிக் கேட்டு அதன்படி அரசு நடப்பதாக வைத்துக் கொண்டாலும் இதர ஆதிக்க சாதிகள் பள்ளர் இன மக்களை சரிக்கு சமமாக நடத்துவார்கள் என்று கிருஷ்ணசாமி எதிர்பார்க்கிறார். அது நடப்பதாக இருந்தால் இந்தியாவில் சாதி வேறுபாடுகளும், தீண்டாமையும் இருக்கவே முடியாது.
பட்டியல் பிரிவில் பள்ளர்களை சேர்த்ததாலேயே தாம் இகழப்படுகிறோம் என்று பேசுகிறார் கிருஷ்ணசாமி. இந்தியாவில் தீண்டாமை என்பது ஏதோ ஒரு பேப்பரில் இருக்கும் நிர்வாக விசயத்தால் வந்து விடவில்லை. அது சமூக பொருளாதார அரசியல் வாழ்வில் பௌதீக சக்தியாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையோர் நிலமின்றி வாழ்வதே முதல் பிரச்சினை. தீண்டாமை மற்றும் அசமத்துவ விசயங்களின் அடிப்படையே இந்த நிலமின்மைதான். உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோரிக்கை நிறைவேறும் போதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் தமது அடிமை நிலையை எதிர்த்துப் போராடும் ஊக்க சக்தியைப் பெற முடியும். பொருளாதார ரீதியாக ஆதிக்க சாதிகளை சார்ந்து நிற்கும் இன்றைய நிலையில் இருந்து அவர்கள் ஊரகப் பகுதிகளில் சமத்துவப் போராட்டங்களை நடத்துவது வெகு சிரமம். அதே போன்று இந்தப் போராட்டத்தில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களையும் இணைக்க வேண்டும்.
கீழத்தஞ்சை வெண்மணி தியாகிகள் நினைவுத் தூண்.
கீழத்தஞ்சையில் கம்யூனிச இயக்கம் பண்ணையாதிக்கத்தை எதிர்த்து போராடிய போது இந்த இணக்கத்தை கொண்டு வந்தது. மேற்கு வங்கத்தில் நிலவுடமை கணிசமான அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே அங்கே ஆதிக்க சாதி ஒடுக்குமுறை அதிகம் இல்லை.
கிருஷ்ணசாமி போன்ற இட ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த முன்னேறிய பிரிவினருக்கு பட்டியல் இன மக்கள் என்ற பதம் உறுத்துகிறது. தம்மைப் போன்று இன்னும் சில சாதி மக்கள் அந்தப் பட்டியலில் இருக்கிறார்களே அவர்களெல்லாம் சாதி தீண்டாமையினால் பாதிக்கப்படுவார்களே என்ற சமூக உணர்ச்சி இல்லை. பட்டியல் பிரிவே வேண்டாம் என்று அவர் கோரியிருந்தால் கூட அதில் ஒரு சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக, பொருளாதார வாழ்வில் இம்மக்களுக்கு இடமில்லை என்ற காரணத்தினால்தான் ஆங்கிலேயர் காலத்தில் பட்டியல் பிரிவு உருவாக்கப்பட்டது.
அதன்படியான இட ஒதுக்கீடு இன்றும் தொடர்கிறது. ஏதோ கிராமத்திற்கு ஓரிருவர் முன்னேறுவதற்காகவாவது இந்த இட ஒதுக்கீடு வழி செய்கிறது. கிருஷ்ணசாமி போன்றோர் முன்னேறிய பள்ளர்களை வைத்து பாஜக உதவியுடன் ஒரு அரசியல் சக்தியாக மாறுவதற்கு இந்த கோரிக்கையை கையில் எடுத்திருக்கிறார்கள். சாதி அரசியலை வைத்து வட இந்திய மாநிலங்களில் அரசியல் செய்யும் பாஜக இங்கே முதல் கட்டமாக கிருஷ்ணசாமியை தெற்கிலும், பா.ம.க ராமதாஸை வடக்கிலும் இறக்கியிருக்கிறது. இதை வைத்து அமித்ஷா ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருப்பார்.
புதிய தமிழகம் அல்லாத பள்ளர் இன மக்கள் இக்கோரிக்கையை பொதுவில் ஏற்கவில்லை. இட ஒதுக்கீடும், பட்டியல் பிரிவும் நீடிக்க வேண்டும் என்றே அவர்கள் கருதுகிறார்கள். அப்படி கருதுகிறவர்கள் புதிய தமிழகத்தால் சில இடங்களில் பகிரங்கமாக மிரட்டப்படுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் சமுதாயத் துரோகி என வசைபாடப்படுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்தோடு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முன்வைக்கும் இக்கோரிக்கையை யாரும் ஏற்க இயலாது.
நன்றி!
♦ ♦ ♦
(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட அரசாங்க வேலைவாய்ப்பு தரவு ஆய்வு முடிவுகளில் இந்தியாவில் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011 – 12-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களில் 25%-ஆக இருந்த பெண்களின் வேலை வாய்ப்பு தற்போது 18% ஆக குறைந்துள்ளது. மேலும், நகர்ப்புறங்களில் பணிக்கு செல்லும் பெண்களின் விகிதம் 15%-ல் இருந்து 14% ஆகவும் குறைந்துள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் மாத சம்பள வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2004-ம் ஆண்டு 36.6%-ஆக இருந்ததை விட 2017-ம் ஆண்டில் 52.1%-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் சுயதொழில் அல்லது முறைசாரா வேலைகளில் அவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
மாதிரிப் படம்
கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வேலைவாய்ப்பின்றி உள்ளபோதிலும், அதில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக சமீபத்தில் அரசாங்கத்தால் வெளிடப்பட்ட “குறிப்பான காலத்திற்கான தொழிலாளர் கணக்கெடுப்பு – 2017 – 2018” உறுதிபடுத்துகிறது.
இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக, தேசிய வேலைவாய்ப்பு தரவுகள் அம்பலமான நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த மே 31 அன்றுதான் அதிகாரப்பூர்வ தொழிலாளர் ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.
பணியில் பெண்கள்
1993-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கிராமப்புற பெண்களில் கிட்டத்தட்ட 33% பேர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர். கடந்த 2011-12-ம் நிதியாண்டில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் வேலைவாய்ப்பு வேலையின்மை கணக்கெடுப்பு கடைசியாக நடத்தப்பட்டபோது, இது எட்டு சதவீத புள்ளிகள் குறைந்து சுமார் 25% ஆகவும், நகர்ப்புற பெண்களின் விகிதம் ஒரு சதவீதம் குறைந்து 15% ஆகவும் இருந்தது.
2017-18-ல் நடத்தப்பட்ட தொழிலாளர் கணக்கெடுப்பு மதிப்பீடுகள் இந்த நிலை இன்னும் மோசமாகி உள்ளதை தெளிவுபடுத்தியது. இந்த ஆய்வில், கிராமப்புற பெண்களின் பங்களிப்பு 18% ஆகவும், நகர்ப்புற பெண்களின் பங்களிப்பு 14% ஆகவும் குறைந்துள்ளது.
வீழ்ச்சியடைந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கணவரின் வருமான அதிகரிப்பு பெண்கள் பணிக்கு செல்வதை குறைக்கும் காரணியாக உள்ளதென்றும், பெண்களின் வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற பொறுப்புகள் அவர்களை பணிக்கு செல்வதில் இருந்து கட்டுப்படுத்துகின்றன என்றும் இருவேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை, உயர்கல்வியைத் தொடர்வதற்காக பெண்கள் பணிக்கு செல்வதில்லை என தெரிவிக்கின்றது. 2015-ம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையில், பெண்களுக்கு தகுதியான, சிறந்த வேலைகள் இல்லாததே அவர்களை பணிக்கு செல்வதிலிருந்து தடுப்பதாக வாதிடுகின்றனர்.
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இருப்பினும், கல்வியறிவு பெற்ற பெண்கள் நகரங்களில் சிறந்த வேலைகளைக் கோருகிறார்கள் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. நகர்ப்புறங்களில் சில பெண்கள் முறைசார்ந்த வேலைகளில் அதிகளவில் பணியாற்றுகின்றனர்.
2004-ம் ஆண்டில் நகர்ப்புறங்களில் முறையான சம்பளம் பெறும் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 35.6%-லிருந்து 2017-ம் ஆண்டு வாக்கில், 52.1% ஆக உயர்ந்திருக்கிறது. ஆகவே, சுயதொழில் புரிவோர் அல்லது முறைசாரா தொழிலாளர்களைக் காட்டிலும் வழக்கமான முறையான ஊதியத் தொழிலாளர்களில் தொழிலாளர் பெண்களின் பங்கு அதிகரித்திருப்பதை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை, சுட்டிக்காட்டுகிறது.
2004 மற்றும் 2017 -க்கு இடையில் நகர்ப்புறங்களில் சுயதொழிலில் ஈடுபடும் பெண்களின் பங்கு 47.7%-ல் இருந்து 34.7%-ஆக குறைந்தது. அதே காலகட்டத்தில், நிரந்தரமற்ற தொழிலாளர்களாக பணிபுரியும் பெண்களின் பங்கும் 16.7%-ல் இருந்து 13.1%-ஆக குறைந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் கிராமப்புறங்களிலும் முறையான, ஊதியப் பிரிவில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்தும், நிரந்தரமற்ற பணியாளராக மற்றும் சுயதொழில் வேலைகளில் சரிவும் ஏற்பட்டது. இது வரவேற்கத்தக்க வளர்ச்சியாக இருந்தபோதிலும், முறையான, சம்பள வேலைகளில் பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
மாதிரிப் படம்
வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மதிப்பிடுவதற்கு, ஒட்டுமொத்த உழைப்பாளர்களின் எண்ணிக்கையில் உள்ள ஆண்கள் அல்லது பெண்களின் விகிதத்தால், குறிப்பான வேலைவாய்ப்பு வகையில் அந்த பாலினத்தின் பங்கு வகுக்கப்படுகிறது. இதன்படி, சம்பளத் தொழிலாளர்களாக பெண்களின் பங்களிப்பு காலப்போக்கில் அதிகரித்திருந்தாலும், அவர்கள் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதில்லை. மேலும், பெண்கள் வேலை செய்யும் போது, அவர்கள் சுயதொழில் செய்பவர்களாகவோ அல்லது கூலித் தொழிலாளர்களாகவோ பணியாற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.
சுயதொழில் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த தரவை அறிய ஒரு முக்கியமான கேள்வியை ”குறிப்பான காலத்திற்கான தொழிலாளர் கணக்கெடுப்பு” முன்வைத்தது. இந்தியாவில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் சுயதொழில் செய்வதால், இது முந்தைய ஆய்வுகள் கவனிக்காத ஒரு முக்கியமான விசயமாகும். வருமானம் குறித்த இந்த தரவு இப்போது வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்களும் பெண்களும் எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வழிவகை செய்கிறது.
முறைசார்ந்த, ஊதியப் பிரிவில் கிராமப்புறங்களில் பணிபுரியும் ஆண்கள், பெண்களை விட ரூ 4,594.50 அதிகமாகவும், நகர்ப்புறங்களில் ரூ.3,429.75 அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அதாவது, ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூ.100-க்கும் பெண்கள் கிராமப்புறங்களில் ரூ.70-ம், நகர்ப்புறங்களில் ரூ.80-ம் மட்டுமே வருமானமாகப் பெறுகிறார்கள் என்பது தெரியவருகிறது.
தொழிலாளர் கணக்கெடுப்பில் வேலை நேரம் குறித்த கேள்வியும் கேட்கப்பட்டது. இதன்படி, கிராமப்புறங்களில் ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதத்திற்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும், நகர்ப்புற குடியேற்றங்களில், சுயதொழில் மற்றும் முறைசார்ந்த வேலைகளில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஆண்களை விட அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்தப்படுவதாக தெரியவருகின்றது.
சுயதொழில் செய்யும் ஆண்கள் பெண்களை விட வாரத்திற்கு 12 மணிநேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். தினக்கூலி வேலைகளில், ஆண்கள் ஒரு வாரத்தில் பெண்களை விட ஏழு மணி நேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். இருப்பினும், பெண்களின் ஊதியம் பெறாத வேலை நேரத்தை துல்லியமாக கணக்கிடப்பட முடியாததால் இதைக் கொண்டு பெண்கள் குறைவான மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்பதாக இது குறிக்கவில்லை.
வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பெண்களின் ஊதியமற்ற உழைப்பை புரிந்துகொண்ட பிறகு, வேலை செய்யும் மணிநேரங்களின் தரவை சிறப்பாகப் பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் தொழிலாளர்களின் மீதான உழைப்புச் சுரண்டல் இந்தியா முழுவதும் இருந்துவரும் வேளையில், பெண்கள் ஊதியமில்லா உழைப்பிலும் (குடும்ப பராமரிப்பு வேலைகள்) குறைவான ஊதிய வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு மேலதிகமாகச் சுரண்டப்படுகிறார்கள். இந்தியா போன்ற பார்ப்பனிய ஆணாதிக்கச் சமூகத்தில், இங்கு சுரண்டல் இன்னும் தீவிரமாக இருக்கிறது.
சுருக்கப்பட்ட தமிழாக்கம்: எல்லாளன்
கட்டுரையாளர் : ஜானகி ஷிபு மற்றும் ரோசா ஆப்ரஹாம் நன்றி :ஸ்க்ரால்
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் பல வருடங்களுக்கு முன் என்னுடன் ஒருவர் வேலை செய்தார். அவர் ஒரு போர்த்துக்கீய பெண்ணை மணமுடித்து. அந்த நாட்டிலேயே தங்கிவிட்டவர். அப்பொழுது ஆப்கானிஸ்தான் பிரிவில் என்னுடன் பெஷாவாரில் வேலை பார்த்தார். அவர் பங்களுர்க்காரர் ஆகையால் கொங்கணி என்று ஒரு பாஷை இருக்கிறதாம், அதை பேசுவார். ஆங்கிலத்தையும் அதே மாதிரி பேசுவார். சில நிமிடங்களும், முதல் நாலு வார்த்தைகளும் தவறிய பிறகுதான் அவர் ஆங்கிலம் பேசுகிறார் என்பது எனக்கு பிடிபடும்.
அவரிடம் எல்லாமே இரண்டு இரண்டு பொருள்கள் இருக்கும். இரண்டு ரேடியோ, இரண்டு காமிரா, இரண்டு இஸ்திரிப்பெட்டி, இரண்டு டிவி, இரண்டு சமையல் அடுப்பு என்று இருக்கும். ஒரு நாள் ஏன் இப்படி என்று கேட்டேன். அதற்கும் அவரிடமிருந்து இரண்டு பதில் வந்தது.
1) திடீரென்று யாராவது விருந்தாளி வந்துவிட்டார். உங்கள் சமையல் அடுப்பு வேலை செய்யவில்லை. என்ன செய்வீர்கள்?
2) இந்த நாடுகளில் திருத்துவோரைப் பிடிப்பது கடினம். அப்படி ஏதாவது பொருளை அவர்கள் பழுதுபார்க்க எடுத்துப் போனாலும் ஒரு மாதம் கழித்துதான் திரும்பக் கிடைக்கும். அது வரைக்கும் என்ன செய்வது?
நியாயம்தான். இவர்தான் என்னை தூண்டியவர், ஒரு சட்ட விரோதமான காரியம் செய்வதற்கு. சட்டவிரோதமான காரியம் என்றால் யாருக்குத் தான் கசக்கும். உடனேயே சம்மதித்துவிட்டேன். இது 20 வருடத்திற்கு முந்திய சமாச்சாரம் என்பதால் அதைச் சொல்வதில் இன்றைக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.
பிரிட்டிஷ்காரர் இந்தியாவை ஆண்டபோது ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 40 மைல் தூரத்தில் இருக்கும் டாரா என்ற கிராமத்தினருக்கு 200 வருடங்களுக்கு முன்பாகவே துப்பாக்கிகள் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தனர். அன்றிலிருந்து இன்று வரை இந்தத் தொழில் அந்தக் கிராமத்தில் செழித்து வளர்ந்தது. பாகிஸ்தான் பிரிந்து தனியான சுதந்திர நாடாக இயங்கிய போதும் கூட இதில் ஒரு மாற்றமும் இல்லை. மாறாக இன்னும் முன்னேற்றமான மெசின்களில், மேலும் நுட்பமான துப்பாக்கிகளை அவர்கள் செய்தார்கள்.
மாதிரிப் படம்
டாரா பகுதியை tribal area என்று சொல்வார்கள். நாங்கள் அங்கே போவதற்கு அனுமதி கிடையாது. இங்கே பாகிஸ்தான் சட்டங்கள் செல்லாது. பழங்குடியினரின் சட்டதிட்டங்களே அங்கே செயல்படுத்தப்பட்டன. வாகனத்தில் செல்லும் போது அந்தப் பகுதியைக் கடந்து செல்லலாம். ஆனால் கால்களைக் கீழே வைக்கக்கூடாது.
இந்தப் பகுதிகளில் ரத்தக் கொலைகள் சர்வ சாதாரணம். கொள்ளை அடிப்பது, ஆட்களைக் கடத்துவது, கார்கள் திருடுவது, போதைப் பொருள் வியாபாரம் செய்வது எல்லாம் அன்றாடம் நடக்கும் காரியம். ஆறு மாதங்களுக்கு முன் ஐ.நா ஊழியர்கள் நாலு பேரைக் கடத்தி, பிணையாக பல ஆயிரம் டொலர்கள் கேட்டார்கள். பாகிஸ்தான் அரசாங்கம் தலையிட்டு ஒருவாறு இவர்களை மீட்ட்டுக் கொடுத்தது.
டாராவில் பல விதமான துப்பாக்கிகள் செய்தார்கள், எல்லாமே நகல்தான். ஆனால் அசல் போல நம்பர்கூட இருக்கும். மூலத்துக்கும் நகலுக்கும் வித்தியாசமே காணமுடியாது. நூறு வருடத்துக்கு முந்திய பிரிட்டிஷ் துப்பாக்கிகள், AK 47, M16, கைத்துப்பாக்கி, சுழல் துப்பாக்கி என்று பலவிதமான உற்பத்திகள் நடந்தன. உங்களுக்குப் பிடித்த புது ரக துப்பாக்கியைக் கொடுத்தால் அதுபோலவே நகல் செய்து தருவார்கள். கிழமையில் எழு நாட்களும் பாகிஸ்தானியர்களும், ஆப்கானியர்களும் துப்பாக்கிகள் வாங்க இந்தக் கிராமத்துக்கு வருவார்கள். ஒரு நாளைக்கு இங்கே ஆயிரம் துப்பாக்கிகள் செய்கிறார்கள் என்று விவரம் அறிந்தவர்கள் சொன்னார்கள்.
இந்த இடத்துக்குப் போகக்கூடாதென்ற உச்சமான கட்டளை எங்களுக்கு இருந்தது. இங்கே போவதற்குத்தான் நண்பர் என்னை அழைத்தார். அவரிடம் இரண்டு வாகனங்கள் இருந்தன. அதிலே ஒரு நாலு சில்லு வாகனத்தைக் தெரிவு செய்தார். டாரா தடுக்கப்பட்ட இடம் என்றாலும் பாகிஸ்தானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை எப்படியும் பார்த்த பிறகுதான் திரும்புவார்கள். சட்டவிரோதமான காரியங்களைச் செய்வதில் மனிதர்களுக்கு உள்ளூர பெரிய ஆசை உண்டு.
டாரா போவதென்றால் பெஷாவரில் இருந்து தெற்கே ஒன்றரை மணித்தியாலம் பயணம் செய்யவேண்டும். கரடுமுரடான பழங்காலத்து அரசர்களின் பாதைகள். வீடுகள் என்றால் தட்டைக் கூரைகளுடன் சுவர்களில் சின்னச்சின்ன சதுர ஒட்டைகள் வைத்து, ஒரு கோட்டை போல கட்டப்பட்டிருந்தன. சண்டை என்று வரும் போது இந்த ஒட்டைகள் துப்பாக்கியால் சுடுவதற்குப் பயன்படும்.
அங்கே போய் இறங்கியதும் ஒரு தொழிற்சாலையைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லவே இல்லை. இது ஒரு குடிசைக் கைத்தொழில் போலவே தொழில் நடந்தது. சாரதி எங்களை ஒவ்வொரு வீடாக கூட்டிச் சென்றார். ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு அயிட்டம் செய்தார்கள். துப்பாக்கி கைப்பிடி ஒரு வீட்டில், குழாய் ஒரு வீட்டில், விசைக் கருவிகள் ஒரு வீட்டில், இப்படி. செம்பட்டைத் தலை மயிரும், பச்சைக் கண்களும் கொண்ட சிறுவர் சிறுமியர் இந்தப் பணிகளில் சாதாரணமாக ஈடுபட்டிருந்தார்கள். பெரியவர்கள் கடினமான வேலைகளைச் செய்தார்கள். ஆனால் இந்த உதிரிப் பாகங்கள் எங்கே பொருத்தப்பட்டு துப்பாக்கியாக மாறுகின்றன என்பது தெரியவில்லை. நிரைநிரையாக இருந்த கடைகளில் பூர்த்தியான துப்பாக்கிகள் விற்பனைக்கு இருந்தன. யாரும் வாங்கலாம், ஒருவித தடையுமில்லை. உங்கள் பெயரைக்கூட அவர்கள் பதிவு செய்வதில்லை. ஒரு கேள்வியில்லை. கடைகளின் முன்னே போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டில்களில் வாடிக்கைக்காரர்களும், வேடிக்கைக்காரர்களும் உட்கார்ந்து முதல் நாள் இரவு மிச்சம் வைத்த நித்திரையை தொடர்ந்தனர். இவற்றையெல்லாம் மீறி துப்பாக்கி விற்பனையும் அவ்வப்போது நடந்தது.
இதிலே எனக்கு பிடித்த அம்சம் ஒன்று இருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் துப்பாக்கிக் கடைகளில் குறிபார்த்து சுட்டு வாங்குவதற்கு வசதிகள் இருக்கும். இங்கே அப்படி ஒன்றும் target வசதிகள் இல்லை. இவர்கள் துப்பாக்கி தேர்வு செய்வது வித்தியாசமாக இருந்தது.
நாங்கள் பார்வையிட வந்த கடையின் சொந்தக்காரர் முற்றிலும் நீல உடையில் காட்சியளித்தார். நீல தலைப்பா, நீல சப்பாத்து, நீல கமிஸ். ஒர் உருண்டையான தலையணையில் சாய்ந்தபடி மொகலாய மன்னர்கள்போல ஹுக்காவை இழுத்தபடி வீற்றிருந்தார். துப்பாக்கிகள் எப்படியும் தங்களைத் தாங்களே விற்றுக்கொள்ளும் என்ற பாவனையில் இவருடைய வியாபாரம் அசிரத்தையாக நடந்தது.
அவருக்கு முன்னால் விருந்தாளி போல காணப்பட்ட ஒருத்தர் நூல் நூலாக பிரிந்த இறைச்சியை கடித்து இழுத்துச் சாப்பிட்டார். உடம்பு முழுக்க ரத்தம் கட்டியது போல அவருடைய நிறம். கைச்சதைகள் திரண்டு உருண்டு போய் தெரிந்தன. அவர் கண்களில் ஒன்று மற்றதிலும் பார்க்க விரைவாக மூடித் திறந்தது. வழிப்பறிக் கள்வன் வேலை பார்ப்பவராக இருக்கலாம். எங்களைக் கண்டதும் ஒரு காலை மடக்கி இடம் விட்டார். இதுவே இவர் எங்களுக்குக் கொடுத்த அதிகபட்ச மரியாதை.
கடையின் மறுபக்கத்தில் இன்னொரு வாடிக்கைக்காரர் AK47 துவக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அவருடைய உருவமும் உடையும் அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த பட்டான் ஆள் என்பதைக் காட்டியது. ஒரு துப்பாக்கியை தூக்கி ரோட்டுக்கு வெளியே போய் ஆகாயத்தைப் பார்த்து படபடவென்று சுட்டார். சிறுவர்கள் எல்லாம் அவர் காலில் விழுந்து உதிரி சன்னங்களைப் பொறுக்கினார்கள். அவர் உள்ளே வந்தார். இன்னொரு துப்பாக்கியை எடுத்தார் வெளியே போய் மறுபடியும் படபடவென்று சுட்டார். இப்படி மாறி நடந்தது. அவர் டெஸ்ட் பண்ணுகிறார் என்றார் கடையில் வேலைபார்த்தவர். அவர் சுடும்போது காதுகளைக் கூர்மையாக வைத்து அந்த ஒலிச்சீரை ஆராய்கிறார். கடைசியில் ஒன்றை வாங்கிக்கொண்டு காசு கொடுத்துவிட்டுப் போனார். எங்கள் சாரதி சொன்னார், அந்த ஒலி இழையின் நேர்த்தியில் இருந்து அவருக்கு துப்பாக்கியின் தரம் தெரிந்துவிடும் என்று. ஓர் இலக்கை நோக்கி சுடும் சோதனையெல்லாம் தேவையில்லை.
ஒரு சிறுவன் AK47 துப்பாக்கி ஒன்றின் பாகங்களை ஒரு நிமிடத்தில் கழற்றிப் பூட்டினான். பிறகு துடைத்துவிட்டு இன்னொரு முறை பூட்டினான். கைத்துப்பாக்கிகள் அளவுக்கு மீறி துடைக்கப்பட்டு, தடவிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையைக்கூட்டும் விதமாக, மினுமினுத்தன. சேர்ட்பைக்குள் வைக்கும் பேனைத் துப்பாக்கிகளும் இருந்தன. விலை ரூபா 250. பளபளவென்று மினுங்கும் ஏகே47 துப்பாக்கியின் விலை ரூபா 10,000. 1919-ம் ஆண்டு பிரிட்டிஷ்காரருடன் நடந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசர் அமானுல்லாகான் பாவித்தாக சொல்லப்பட்ட லீயென் ஃபீல்டு அசல் துப்பாக்கியின் விலை ரூபா 50,000 தான் என்று முதல் முறையாக வாய் திறந்து சொன்னார். கடை முதலாளி விமான எதிர்ப்பு பீரங்கியில் சுட்டுப் பார்ப்பதற்கு வெறும் 50 டொலர் கட்டணம்தான் என்றார். விமானத்தை வீழ்த்துவதற்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை நாங்கள் கேட்கவில்லை.
நண்பருக்கு ஒர் ஆசை பிறந்தது. துப்பாக்கியால் சுடும்போது எப்படி இருக்கும். ஒரு டொலர் காசு கொடுத்தால் ஏகே47ல் ஒருமுறை சுட்டுப் பார்க்கலாம். நண்பர் ஏகே47ஐ எடுத்து ஆகாயத்தை நோக்கி ஒருமுறை குருட்டாம் போக்கில் சுட்டார். அந்த குண்டு ஒரு டொலர் காசு போகும் தூரத்துக்குப் போனது. நண்பரின் முகத்தில் ஒரு காது வரைக்கும் நீண்ட சிரிப்பு தோன்றியது. இவரைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இவர் எதை வாங்கினாலும் இரண்டு வாங்குவார், எதைச் செய்தாலும் இரண்டு தடவை செய்வார். இன்னொரு டொலர் கொடுத்து மறுமுறையும் சுட்டு தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார்.
அவருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தலையைச் சாய்த்து விநோதமாக என்னைப் பார்த்தார். வாழ்க்கையில் ஏகே47ஐ நேருக்கு நேராக நான் சந்தித்ததில்லை. இப்பொழுது தொட்டும் பார்த்தாகிவிட்டது. தோளிலே வைத்துச் சுடும்போது தோளை இடித்துப் புண்ணாக்கிவிடும் என்று முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சும்மா இலக்கில்லாமல் ஆகாயத்தில் சுடுவதில் எனக்கு சம்மதமில்லை. ரோட்டுக்கு மற்றப் பக்கம் சிறுவன் ஒருவன் பழைய லிடோ டின்னை கொண்டுபோய் வைத்தான். ஆபத்து குறைவாகத் தெரிந்த ஒரு ஏகே47ஐ நான் தெரிவு செய்தேன். ஒரு டொலரை கொடுத்ததும் கடைக்காரர் துவக்கு கட்டையை தோளில் எங்கே வைப்பது, எந்தத் துளையில் குறி பார்ப்பது, எப்படி விசையை அழுத்துவது என்று சொல்லித்தந்தார். ஒரு டொலர் காசுக்கு இது மிகவும் அதிகமான பயிற்சியாகவே பட்டது. அவர் சொன்ன உதாரணம் டுத் பேஸ்டை அமுக்குவது போல மெதுவாக, மெதுவாக விசையை அமுக்க வேண்டும் என்பது.
அர்ச்சுனன் மச்சத்தில் இலக்கு வைத்ததுபோல குறி பார்த்து ஆடாமல் நின்றேன். என்னுடைய கையில் ஒரு மனித உயிரைக் கணத்திலே பறிக்கும் சக்தி கூடியிருந்தது. முன்பு பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவும், பயங்கரமாகவும் தெரிந்த பட்டான் ஆள் இப்பொழுது சிறு குழந்தை போல காட்சியளித்தான். என் தேகபலம் பத்து மடங்கு அதிகமாகிவிட்டது.
விசையை அழுத்தினேன். தோளிலே தலையணையால் என் நாலு வயது மகள் அடித்ததுபோல் ஓர் அதிர்ச்சி, அவ்வளவுதான். சத்தம்கூட எனக்கு பெரிதாகக் கேட்கவில்லை, மேலே பறப்பது போன்ற ஓர் அற்புதமான உணர்வு. எனக்குப் பக்கத்தில் குழுமியிருந்த சிறுவர்கள் பாய்ந்த விழுந்து ரவைச் சிதறலைப் பொறுக்கினார்கள். அதற்கு பிறகு தான் டின்னைப் பார்த்தேன். அது அப்படியே சேமமாக இருந்தது.
யாரோ என்மீது பூதம் ஒன்றை ஏவிவிட்டது போல இன்னும் பல தடவை இதைச் செய்யவேண்டும் என்ற ஆசை கட்டுக்கடங்காமல் உண்டானது. கண்ணுக்கு தெரியாத பெரிய பவர் என்னிடம் சேர்ந்து அசாதாரணமான தைரியமும், உற்சாமும் தூக்கியது. நான் இரண்டாவது முறை முயற்சி செய்யவில்லை. செய்திருந்தால் அந்த மந்திரக் கட்டில் முற்றாக என்னை இழந்திருப்பேன்.
ஒரு விஷயத்தை என்னால் மறக்க முடியவில்லை. நண்பரிடம் கேட்டபோது அவர் சொன்னது வித்தியாசமாக இருந்தது. முட்டை வாங்கும்போது வெளிச்சத்திலே தூக்கிப் பிடித்து வாங்குகிறோம். சுருட்டு வாங்கும்போது காதுக்கு கிட்டே வைத்து உருட்டி, ஒலியை ஆராய்ந்து அதன் தரத்தை நிர்ணயிக்கிறோம். ஒரு சதத் குற்றியைக்கூட கடித்துப் பார்த்துதான் எடுக்கிறோம், அது போலத்தான் இதுவும். சுடும்போது துப்பாக்கியில் பிறக்கும் ஒலியை வைத்து அதன் தரத்தை சிலரால் தீர்மானிக்க முடியும் என்றார்.
திரும்பும்போது ஓர் அசம்பாவிதம் நடந்துவிட்டது. எங்கள் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் ஒரு டயர் வெடித்தது. அதை மாற்றிக்கொண்டு புறப்பட்டோம். சொல்லி வைத்தாற் போல் இரண்டு நிமிடமாகவில்லை, இன்னொரு டயரும் வெடித்தது. நாங்கள் இன்னும் போக வேண்டிய தூரம் 60 மைல் இருந்தது. பழங்குடியினர் பிரதேசத்தை தாண்டவில்லை. இருட்டிக்கொண்டு வேறு வந்தது. ஒருவித சட்டங்களும் செல்லாத இடத்தில் மாட்டிவிட்டோம்.
எதிரே வந்த ஒரு வாகனத்தில் இடம்பிடித்து டிரைவர் டயரை பழுது பார்க்க எடுத்துக்கொண்டு போய்விட்டார். சில கார்கள் எங்களைத் தாண்டிப் போகும்போது சந்தோஷமாக இருந்தது, பயமும் பிடித்தது. அப்போது எங்களைக் கடந்து ஒரு குதிரை வண்டி போனது. அதற்குள்ளே இரண்டு பர்தா அணிந்த பெண்களும் ஒரு பதினைந்து குழந்தைகளும் இருந்தார்கள். அந்தப் பெண்களுடைய கண்கள் மாத்திரம் ஓட்டை வழியாக எங்களைத் துளைத்துப் பார்த்தன. அரை மணிநேரம் கழித்து தூரத்தில் ஒரு வாகனம் தெரிந்தது. அவர்களும் எங்களை திரும்பிப் பார்த்த படி போனார்கள். இந்த அத்துவானக் காட்டில் எங்களை யாராவது கூறு கூறாக வெட்டிப் புதைத்தாலும் கேட்க ஆளில்லை. டிரைவர் கடைசியில் ஒரு ஒட்டோவில் பழுதுபார்த்த டயருடன் வந்து சேர்ந்தார். எப்படியோ அவசரமாக சில்லை மாட்டிக்கொண்டு வீடு போய்ச் சோந்தோம்.
இந்தப் பயணத்தில் என்னுடைய சாதனை ஒன்று இருந்தது. துப்பாக்கியால் முதல் தடவை குறி பார்த்து சுட்டது அல்ல, பாகிஸ்தான் சட்டங்கள் செல்லுபடியாகாத பழங்குடி வீதி ஒன்றில் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு திரும்பியது அல்ல. இவ்விரண்டு பொருள்கள் சேகரிக்கும் நண்பர் இரண்டு துணை டயர்கள் வைக்காதது எப்படி நடந்தது. தனிமையான ரோட்டோரத்தில், இருட்டில் காத்திருந்தபோது இந்தக் கேள்வி எனக்கு தொண்டை மட்டும் வந்தது. இதைக் கேட்காமல் இரண்டு மணி நேரம் சமாளித்தது என் வாழ்வில் பெரிய சாதனை என்றே நினைக்கிறேன்.
எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு : இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)
சார்லஸ் டார்வின் (1809-1882) வாழ்ந்த காலம் ஐரோப்பாவில் அறிவியல் கிளர்ச்சியும் வணிக முதலாளிய வளர்ச்சியும் கைகோர்த்து எழுந்த காலம். தொன்று தொட்டு நம்பிப்பழக்கப்பட்டுப்போன மையங்கள் அறிவியல் ஆய்வுகளால் கலைக்கப்பட்ட காலம் அது. கலிலியோ, கோபர்நிகஸ் போல டார்வின் உயிர்களின் தோற்றத்தை ஆராய்ந்து கடவுளையும் பைபிளையும் வரலாற்றின் எச்சங்களாக்கினார். மையங்களைத் தொடர்ந்து அழித்த ஐரோப்பிய அறிவியல் மரபும் தத்துவமரபும் கார்ல் மார்க்ஸ், நீட்ஷே, சிக்மண்ட் பிராய்ட், சார்த்தர், பின் நவீனத்துவவாதிகள்… என்று தொடர்ந்து வந்தன. இனக்குழு சார்ந்த மையங்கள் அழிந்து அவற்றினிடங்களில் அணு ஆயுத வல்லரசுகள், பன்னாட்டு வர்த்தகம், காட்சி ஊடகம், விளம்பரம், கணிணி கலாச்சாரம், தீவிரவாதம், டாலர்… என்ற மற்றொரு ரகமான மனித இனத்து மையங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. சார்லஸ் டார்வின் இப்போது இருநூறு ஆண்டுகளுக்குப்பின் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தால் இந்த மாற்றங்களைத் தமது இயற்கை தேர்வுக் கோட்பாட்டின் மூலாக விளக்கிக் கொண்டிருப்பார். நவீனத்துவ மனிதர்களை இயற்கையின் தேர்வில் உருவாகிய புதிய மனித உயிரினமாக (human species) கண்டிருப்பார்.
எப்படியானாலும், நவீன மாந்தரின் சிந்தனையைப் பாதித்துப் பெரும் மாற்றத்தைச் செய்த அதிமனிதர்களில் டார்வின் குறிப்பிடத்தக்கவர். மனிதர்கள் கடவுள்கள் அல்லர்; ஏனெனில் கடவுள்கள் எப்போதும் இருந்ததில்லை – மனிதரின் சிந்தனைக்கு வெளியே. இயற்கையை மனிதர்கள் தங்களது தாற்காலிக வல்லாண்மைக்காக அழிக்கப் போராடிக் கொண்டிருக்கிற இன்றைக்கு, மனிதர்கள் இன்னும் இயற்கையின் பகுதிகளே என்பதை டார்வின் நினைவூட்டிக் கொண்டிருக்கிறார். உயிரினங்களின் உறுப்புக்கள் பயன்படாமையின் காரணமாக எச்சமாவதாக டார்வின் கூறுகிறார். மனிதரின் எண்ணங்களில் வாழ்க்கை நோக்கங்களில் பயன்படாமை தொடருகிறபோது மனிதரும் இந்தப் புவியும்கூட எச்சங்களாகி மறைந்து போகச் சாத்தியம் உள்ளது என்பதை எதிர்பார்க்கலாம். இயற்கைப் பொருட்களை அழகியல், தத்துவ இயல், சமய இயல் வழிபாட்டுப் பொருட்களாக டார்வின் நோக்கவில்லை. இயற்கையின் இயக்கத்தின் ஊடாகச் சிறகடிக்கும் ஓர் ஒட்டுமொத்தமான பேரழகை டார்வின் கண்டுள்ளார். ரசித்துள்ளார். இந்த ரசனை கூடினால் நாளைய உலகம் பிழைக்கும்.
நானூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட பக்கங்களை உடைய டார்வினுடைய ஆங்கில நூலை வரிக்குவரி தமிழில் மொழிபெயர்க்கவில்லை. அது முடியாதது மட்டுமல்ல வேண்டாததுமாகும். டார்வினுடைய மையமான விவாதப் பொருள்கள் மட்டுமே தமிழில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. பல இடங்களில் மொழிபெயர்ப்பின் அந்நியத்தனம் தெரியத்தான் செய்யும். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில உரைநடை ஆங்கிலேயர் அமைத்த தண்டவாளங்களைப் போல (rails) நீண்டு போய்க்கொண்டேயிருக்கும். டார்வின் நூல் ஓர் அறிவியல் ஆய்வாக அமைந்திருப்பதால் எளிதாகத் தமிழில் தருவது பெரும் கடினமாக உள்ளது. (மொழிப்பெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து…)
உயினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டாளரான சார்லஸ் டார்வின் இங்கிலாந்தில், ஸ்ரூஸ்பரி (Shrewsbury)யில் பிறந்தார். எடின்பர்க் பல்கலைக்கழகம் கிறிஸ்து கல்லூரி, கேம்பிரிட்ஜ், ஸ்ரூஸ்பரி கிராமர் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார். 1831-ம் ஆண்டில் பட்டம் பெற்று, அதே ஆண்டில் ‘ஹெச்.எம்.எஸ் பீகிள்’ (HMS Beagle) கப்பலில் ஓர் இயற்கை விஞ்ஞானியாக ஐந்தாண்டுகளாகக் கடற்பயணம் மேற்கொண்டார்.
இதன் நோக்கம் : படகோனியா (Patagonia), டியரா டெல் பூகோ (Tierra del Fuego) கடற்கரைகளை ஆராய்வது; உலகம் முழுவதும் சுற்றி ஒரு தொடர்ச்சியான க்ஷேத்திர வரலாற்று வாசிப்பை (Chronometric reading) செய்வது. இங்கிலாந்து திரும்பியதும் முன்னணி விஞ்ஞானிகளின் வரிசையில் இடம் பெற்றார். 1838-ம் ஆண்டில் இங்கிலாந்தின் புவியியல் கழகத்தின் (Geographical Society) செயலாளரானார். 1839-ம் ஆண்டில் ராயல் காலேஜ் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1859-ம் ஆண்டில் ஜான் மர்ரே, டார்வினுடைய ‘இயற்கையின் தேர்வின் வாயிலாக உயிரினத்தின் தோற்றம்’ (The Origin of Species by means of Natural Selection) என்ற நூலை வெளியிட்டார். வெளிவந்தவுடனே அந்நூலுக்கு எதிர்மறையான – பகைபாராட்டும் விமர்சனங்கள் எழுந்தன.
… அண்மைக்காலம் வரை பெரும்பாலான இயற்கை விஞ்ஞானிகள் பலரும் உயிரினங்கள் (species) எவ்வித மாற்றமும் பெறாத சந்ததிகள், அவை தனித்தனியான, மாறாத படைப்புக்கள் என்றே கருதிவந்தார்கள். ஒருசில விஞ்ஞானிகள் இதற்கு மாறாக உயிரினங்கள் மாறுதல்களை அடைகின்றன; தற்போது காணும் உயிரினங்கள் யாவும் இருக்கின்ற உயிர்வடிவங்களுக்கு முந்தைய தலைமுறையின் வாரிசுகள் என்று நம்பினார்கள். நவீன காலத்தில் இக்கருத்தினை அறிவியல் பாங்கில் விளக்க முயன்ற முதல் அறிவியலாளர் பூபோன் (Buffron). செவ்வியல் சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் தமது “Physical Auscultationes’ உரையாடலில் மழை எதற்காகப் பெய்கிறது என்பது பற்றிக் கூறும்போது ‘பற்கள்’ தேவை காரணமாகவே வளர்கின்றன. முன்னம்பற்கள் கூரானவை, பிளப்பதற்காகத் தக அமைந்தவை. கடைவாய்ப் பற்கள் தட்டையானவை; உணவை அறைக்கத் தக அமைந்தவை. இவை இந்த வேலைகளுக்காக உண்டாக்கப்பட வில்லையாதலால் இவை எதிர்பாராமல் நடந்த நிகழ்வின் விளைவாகும். இதேபோல் உடலின் மற்ற பாகங்களும் வேறு ஒன்றிற்காகத் தக அமைந்தவை போலத் தெரிகிறது. எது எப்படியானாலும் எல்லாப் பகுதிகளும் ஒட்டுமொத்தத்தில் ஏதோ ஒன்றிற்காக உண்டாக்கப்பட்ட தாகத் தோணுகிறது. இவை பேணப்பட்டு உள்ளுக்குள் இருக்கும் தன்னியல்பான ஒன்றால் பொருத்தமாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது, இவ்வாறு கட்டமைக்கப்படவில்லையென்றால் அவை அழிந்துவிடும்” என்று கூறியது வித்தியாசமானது… (நூலிலிருந்து பக்.5-6)
வளர்ச்சியின் கூட்டு உறவு (கூட்டு இசைவு)
சார்லஸ் டார்வின்.
ஓர் உயிரியின் வளர்ச்சியில், உருவாக்கத்தில் இலேசான மாறுபாடுகளும் அவை இயற்கையின் தேர்வால் பாதுகாக்கப்படுதலும் முக்கியமான விசயங்களாகும். இதனை யாரும் இன்னும் சரிவர அறியவில்லை. இளம்குட்டி அல்லது லார்வா (புழுப்பருவம்) பருவத்தின் நலனுக்காகச் சேமிக்கப்பட்ட மாற்றங்கள் அதன் முதிர்ந்த (adult) பருவத்தின் அமைப்பைப் பாதிக்கின்றன. இதேபோன்று, கருவளரும் பருவத்தில் ஏற்படுகிற பொருத்தமற்ற பாகங்களின் உருவாக்கமானது (malconformation) அதன் முதிர்ந்த பருவத்தின் மொத்த அமைப்பையும் கடுமையாகப் பாதிக்கிறது. உடலின் பல அங்கங்கள் சம விகிதாச்சார அளவு பொருத்தம் உடையவை. கருவளர்ச்சிக் கட்டத்தில் இவை ஒன்றாக உள்ளன. போகப்போக இவை ஒன்றுக்கொன்று உறவுடைய விதத்தில் வேறுபடக் கூடியவையாக உள்ளன. உடலின் வலது இடது பக்கங்கள் ஒரே மாதிரிதான் வேறுபடுகின்றன. கீழ்த்தாடை கை – கால்களோடு சம அளவில் பொருத்தமுடையதாக உள்ளது. இத்தகைய போக்குகள் இயற்கையின் தேர்வால் நன்கு அறியப்பட்டிருக்கும். உடலின் அங்கங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையவை. ஒன்று மற்றதைப் பாதிக்கும். பறவைகளில் காணக்கூடிய இடுப்பெலும்பின் அளவுக்குத் தக்கவாறு அவற்றின் சிறுநீரகங்களின் வடிவம் வேறுபட்டுள்ளது. குழந்தையின் தலையின் அளவை மனிதத் தாயின் இடுப்பெலும்பின் வடிவம் தீர்மானிக்கிறது. உறுப்புக்களுக்கு இடையிலுள்ள இந்தக் கூட்டு இசைவான உறவும் பந்தமும் புதிராக உள்ளது.
பொருத்தமில்லாத சில பாகங்களுக்கு இடையிலுள்ள உறவைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பூனையின் நீல விழிகளுக்கும் செவிட்டுத்தன்மைக்கும் உறவு உள்ளது. ஆமையின் பெண் பாலுக்கும் அதன் ஓட்டின் வண்ணத்துக்கும் சம்பந்தம் உள்ளது. புறாவின் கால் விரல்களுக்கு இடையிலுள்ள சவ்வுக்கும், இறகுகளுடைய பாதங்களுக்கும் உறவுண்டு. துருக்கிய நாயின் மயிருக்கும் பற்களுக்கும் இசைவு உண்டு. இவ்வாறு உடல் அங்கங்களுக்கு இடையே உறவு இருந்தாலும், இவ்வுறுப்புக்கள் எந்த வகையில் ஒன்றுக்கு ஒன்று பொருத்தமுடையன என்பது தெரியவில்லை. இந்த உறவும் இசைவும் விபத்தாக நேர்ந்தவையாகும்.
எந்த ஓர் உயிரினத்திலும் ஒரு பகுதி அசாதாரணமான அளவுக்கு வளர்ச்சி பெற்றால் அது பெரிய அளவில் மாறுதலுக்கு உள்ளாகும் போக்கில் உள்ளது என்பதை அறியலாம். தனித்த (individual) உயிரினங்கள் (உறுப்பு, அதன் தோற்றம் ஆகியவற்றால் வேறுபட்டு) செயல்பாட்டில் (function) மட்டும் ஒப்புமை கொண்ட உறுப்புக்களின் (analo gous) மாறுதல்களைப் புலப்படுத்தும். ஓர் உயிரினத்தின் ஒரு ரகம் உறவுடைய மற்றொரு உயிரினத்தின் சில பண்புகளை அடிக்கடி ஏற்றுக்கொள்ளும் அல்லது ஒரு மூதாதையின் சில பண்புகளை நோக்கிப் பின் செல்லும். இதனை வீட்டு வளர்ப்பு இனங்களில் காணலாம். மிகவும் குறிப்பிடத்தக்க புறா வகை, துணை – வகைகளின் பண்புகளை ஏற்கிறது. தலையிலும், பாதங்களிலும் இருக்கவேண்டிய இறகுகள் மாறி இடம் பெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான தலைமுறைகளுக்குப் பின், முன்னர் இருந்த பண்புகள் ஓர் உயிரினத்தில் மீண்டும் தோன்றுவது வியப்பாக உள்ளது. (நூலிலிருந்து பக்.58-59)
நூல் : உயிரினங்களின் தோற்றம் ஆசிரியர் : சார்லஸ் டார்வின் தமிழ்ச் சுருக்கம் : ராஜ்கௌதமன்
வெளியீடு : விடியல் பதிப்பகம், 88, இந்திரா கார்டன் 4-வது வீதி, உப்பிலிபாளையம் – அஞ்சல்,
கோவை – 641 015. தொலைபேசி எண் : 0422 – 2576772 மின்னஞ்சல் : vidiyalpathippagam@gmail.com
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 03
பள்ளி முழுவதும் பாராட்டுகிறது.
“இதிலுள்ள எல்லாவற்றையும் நான் மீண்டும் படிப்பேன்” என்று எலேனா தன் அருகில் உள்ளவனிடம் கூறுகிறாள்.
அச்சமயம் கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. நான் இதற்காகத்தான் காத்திருந்தேன். தாத்தோ கதவைத் திறக்க, பள்ளி இயக்குநர் உள்ளே வருகிறார். குழந்தைகள் எழுந்து நின்று வரவேற்கின்றனர்:
“வணக்கம்!” பரிபூரண நிசப்தம். பள்ளி இயக்குநர் அன்பான புன்னகையுடன் ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கின்றார்.
“மன்னியுங்கள், நான் ஒருவேளை உங்களுக்கு இடையூறு விளைவித்திருக்கக் கூடும். நீங்கள் இன்று அரிச்சுவடியை முடித்துள்ளதை அறிந்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி, எனவே, உங்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவிக்க வந்துள்ளேன்…”
அவர் மீண்டும் தன் பார்வையை ஒவ்வொருவர் மீதும் செலுத்துகிறார். குழந்தைகள் கவனமாகப் பார்க்கின்றனர்.
நீ பலவீனமானவன், மூளை வளர்ச்சி குன்றியவன் என்று சொல்லப் போவதில்லை, இச்சொற்கள் எனக்குப் பிடிக்காதவை. உன் விஷயத்தில் சரியானபடி செயல்படாத என் முறையை பலவீனமானது என்று கூறுவது தான் தகும். நான் இதை மாற்றுவேன், உனக்கு உதவும் மற்ற முறைகளைத் தேடுவேன்.
“உட்காருங்கள்!” என்கிறார் அவர்.
“படிக்க கற்றுக் கொண்டு விட்டீர்களா?”
ஒரே குரலில்: “ஆமாம்!”
“சபாஷ்! உங்களுக்குப் பாராட்டுகள்!…”
அவர் மெதுவாக வரிசைகளின் ஊடாக நடந்து வந்து ஒரு குழந்தைக்குத் தன் கரத்தை நீட்டுகிறார். அவன் இடத்தை விட்டு எழுந்து நிற்கிறான். அவர் அச்சிறுவனின் கண்களையே பார்க்கிறார்.
“உன் பெயரென்ன?.. வாழ்த்துகள், பாராட்டுகள்!”
அவர் உண்மையாக, நன்றாக, கருத்தாழத்தோடு அவன் கையைப் பற்றிக் குலுக்குகிறார்.
இவ்வாறு பள்ளி இயக்குநர் ஒவ்வொருவரையும் தனித் தனியே அணுகுகிறார். குழந்தைகள் அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்….
“நீங்கள் எல்லா எழுத்துகளையும் கற்று முடித்ததற்குப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டனர்.”
ஒரே குரலில்: “நன்றி!”
“புதிய வெற்றிகள் உங்களை வந்தடையட்டும்!”
ஒரே குரலில்: “நன்றி!”
“போய் வருகிறேன்!” குழந்தைகள் எழுந்து நிற்கின்றனர்.
பள்ளி இயக்குநர் வகுப்பறையை விட்டு வெளியேறுகிறார். கதவு திறந்தபடியே இருக்கின்றது. இடைவேளைக்கான மணி அடித்தாகி விட்டது, பள்ளி வானொலியில் ஏதோ சொல்வது இப்போது வகுப்பறையில் கேட்கிறது. நான் கவனமாகக் கேட்கிறேன், குழந்தைகளும் தம் காதுகளைத் தீட்டிக் கொள்கின்றனர்:
“அன்புள்ள தயாரிப்பு வகுப்பு மாணவ மணிகளே! நீங்கள் எல்லா எழுத்துகளையும் படித்து முடித்ததை இன்று அறிந்தோம். பாராட்டுகள்! நீங்கள் முழு பள்ளி மாணவர்கள், உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும். உங்களோடு சேர்ந்து பள்ளியில் உள்ள அனைவரும் எல்லா ஆசிரியர்களும் கம்சமோல் உறுப்பினர்களும் பயனீர்களும் மகிழ்ச்சியடைகின்றனர். இன்றைய கதாநாயகர்களின் பெயர்களைப் பள்ளி முழுவதும் அறியட்டும். இதோ அவர்களுடைய பெயர்கள்…”
ஒவ்வொருவர் பெயரையும் படிக்கும் போது நான் அம்முகத்தைப் பார்க்கிறேன். ”உங்களுள் என்ன நடக்கிறது?” என்று நான் மனதில் பேசிக் கொள்கிறேன். “நீங்கள் ஒவ்வொருவரும் கண் முன் வளருவது தெரிகிறது! இது எதனால்? கல்வியில் நீங்கள் முதல் படியைத் தாண்டிவிட்டதாலா? இல்லை, அனேகமாக பள்ளி இயக்குநரின் வாழ்த்தும், உங்களுடைய பெயர்களை வானொலியில் வாசித்ததும் உங்களுடைய தன்னம்பிக்கையைப் பலப்படுத்தியிருக்கும், பெரியவர்களாக வேண்டும், சமுதாய ரீதியாகப் பயனுள்ளவர்களாக வேண்டும் என்ற நாட்டத்தை உறுதிப்படுத்தியிருக்கும்.
சிறுவனே, நீ ஏன் சோகமாய் இருக்கிறாய்! உனது கண்கள் ஏன் சுருங்கி விட்டன? உன் பெயரை வானொலியில் சொல்ல மாட்டார்களே என்று யோசிக்கின்றாயா? பயப்படாதே, நீயும் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வாயென நிச்சயமாக நம்புகிறேன். எல்லோரையும் போல் உன்னால் செய்ய முடியாமல் போனதற்கு காரணம் நீயல்லவே. நீ பலவீனமானவன், மூளை வளர்ச்சி குன்றியவன் என்று சொல்லப் போவதில்லை, இச்சொற்கள் எனக்குப் பிடிக்காதவை. உன் விஷயத்தில் சரியானபடி செயல்படாத என் முறையை பலவீனமானது என்று கூறுவதுதான் தகும். நான் இதை மாற்றுவேன், உனக்கு உதவும் மற்ற முறைகளைத் தேடுவேன். எங்கே சிறுவனே, சிரி பார்க்கலாம், இதோ உன் பெயரையும் வானொலியில் சொல்லி விட்டார்கள். இன்றில்லாவிடிலும் நாளை உன்னுள்ளும் அதிசயம் நிகழும்!…”
“இரண்டாவது பாடவேளையில் எழுத்துகளை எழுதுவோம்!… இப்போது ஓய்வெடுங்கள்! சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!”
மாயா நாற்காலியில் அசையாமல் உட்கார்ந்திருக்கிறாள். அவளுக்கு உடல் நிலை சரியில்லையா என்ன?
“மாயா, உனக்கு என்னவாயிற்று?”
அவள் மெளனமாக, கல்லைப் போல் உட்கார்ந்திருக்கிறாள், கண்களைக் கூட இமைக்கவில்லை.
“மாயா, பதில் சொல்!”
அவள் உதடுகளை மிகச் சிறிதளவே திறந்து முணுமுணுத்தாள்:
“தாக்குப்பிடிக்கும் திறனைப் பயிற்சி செய்து பார்க்கிறேன்.”
கேள்வி : //இயக்குநர் பா. ரஞ்சித் பொதுவெளியில் எப்போது பேசினாலும் சீற்றம் கொள்கிறாரே…. அது சரியா?//
– சி. நெப்போலியன்
அன்புள்ள நெப்போலியன்,
இயக்குநர் ரஞ்சித் எப்போதும் சீற்றம் கொள்வதில்லை, தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும் சீற்றம் கொள்கிறார். அது சரியா என பார்ப்பதும் அவர் ஏன் அப்படி சீற்றம் கொள்கிறார் என்று பார்ப்பதும் வேறு வேறு இல்லை. சரி, ஏன் சீற்றம் கொள்கிறார்?
சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் இரண்டு ரஜினி படங்கள். அவர் பிரபலமாவதற்கு இது போதும். கூடவே ரஜினி பட இயக்குநர் என்ற அளவில் ஊதியமும் பெறுகிறார். இப்போது அவரிடம் கொஞ்சம் நிதியாதாரம் சேர்கிறது. இரண்டும் சேர்ந்து அவருக்கென ஒரு தனிநபர்வாதப் பார்வையை உருவாக்குகிறது. பிறகு மேடைகளில் பேசுகிறார். வாய்ப்பு வரும்போது தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை எனத் துவங்கி தலித் அடையாள அரசியலை முன்வைக்கிறார். சில சமயம் அவருக்கு வரும் எதிர்வினைகள் கடுமையாக இருக்கிறது. அதனால் அடுத்தமுறை பேசும்போது இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக பேசுகிறார்.
தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது. இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம். ரஞ்சித் அப்படிப் பேசுவதற்கு காரணம் பிரச்சினையை அவர் தனிநபர் கண்ணோட்டத்தோடு பார்ப்பதுதான். அதுதான் உடனடியான கோபங்களையும், உடனடியான தீர்வுகளையும், மற்றவர்கள் அதாவது இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. அவரது பிரபலம், இந்தத் தன்மைக்கு இன்னும் வலு சேர்க்கிறது.
சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வென காஸ்ட்லெஸ் கலெக்டிவ் கலை விழாக்கள், கூகை முயற்சிகள் என்று தனது வருமானத்தை போட்டு செய்கிறார். பயிற்சி பட்டறைகள் நடத்துகிறார். இதன் மூலம் ஒரு மாற்றை உருவாக்க முடியும் என்று கூட அவர் யோசிக்கலாம். அவரது முயற்சிகளில் பங்கேற்கும் பொதுவானவர்களில் பெரும்பாலானோர் அவரது திரைப்பட பிம்பத்தை மையமாக வைத்து திரையுலகில் தனக்கொரு இடம் கிடைக்காதா என்று வருகின்றனர். இது ரஞ்சித்துக்கும் தெரியாமல் இருக்காது.
இருப்பினும் யாராக இருப்பினும் தனிநபராக சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும்போது முதல் சுற்றில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் இருக்கும். அடுத்த சுற்றுகளில் அந்த நம்பிக்கை சமூக யதார்த்தத்தால் கொஞ்சமோ நிறையவோ விரக்தியடையும். பிறகு ஊரோடு ஒத்து வாழ் என்று ‘முதிர்ச்சி’ அடையும். இந்த சரணடைவு ஏதோ திரைப்பட பிரபலம் மற்றும் தலித் அரசியல் பேசுவோருக்கு மட்டும் நடப்பதல்ல. மார்க்சியத்தை தனிநபராக ‘தூக்கிச் சுமக்கும்’ தனிநபர்களும் கூட இப்படித்தான் வீழ்கிறார்கள். மற்றவர்களை விட மார்க்சிய தனிநபர்வாதிகளிடம் பேச்சும் எழுத்தும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். என்ன இருந்தாலும் ஏதோ கொஞ்சம் ‘தத்துவம்’ படித்தவர்கள் அல்லவா?
நன்றி
♦ ♦ ♦
கேள்வி : //நான் குவைத்தில் ஒரு தமிழ் அமைப்பில் இருக்கிறேன். அமைப்பாய் செயல்படும்போது அமைப்பின் ஒற்றுமை முக்கியமா…. ஒற்றுமையை ஒதுக்கிவிட்டு எடுத்துக் கொண்ட செயலின் வெற்றி முக்கியமா….?//
– எம். சிவசங்கரன்.
அன்புள்ள சிவசங்கரன்,
எடுத்துக் கொண்ட செயலும் அமைப்பின் ஒற்றுமையும் ஏன் முரண்படுகிறது? நீங்கள் இருக்கும் தமிழ் அமைப்பு போன்ற மனமகிழ் மன்றங்களில் திட்டவட்டமான விதிகள், ஜனநாயகம், நிதி விசயங்களில் வெளிப்படைத் தன்மை, மன்றங்களின் செயல்பாடு குறித்த தெளிவான பார்வை, இலக்கு ஆகியவை இருக்கும் வரை பெரிய பிரச்சினை இல்லை.
மாறாக இவையன்றி சில நண்பர்களது குழாம் அத்தகைய மன்றங்களை நடத்தும் பட்சத்தில் சிறிது காலத்திற்கு பிறகு நண்பர்களது கருத்து வேறுபாட்டாலோ புதியவர்கள் சேராமல் விரிவடையாமலோ மன்றம் நின்று போகும். மேலும் இம்மன்றங்களில் முடிவுகளை அல்லது செயல்பாட்டை மன்றங்களின் புரவலர்களாக இருக்கும் வசதிவாய்ந்த தனிநபர்களை மையமாக வைத்து எடுக்கும் போது சிக்கல் வரலாம். அப்படி எடுக்காமல் மன்றத்தின் உறுப்பினர்களே கூடிப் பேசி எடுக்கும்போது கருத்து வேறுபாடுகள் வருவது குறையும். அத்தகைய கூட்டுத்துவ முறை ஏற்படும்போது பல்வேறு வழிகளில் சிக்கல்கள் நீங்கும். நீங்கள் குறிப்பிடும் குறிப்பான பிரச்சினை எதுவென்று தெரியவில்லை.
எடுத்துக்கொண்ட செயலும் மன்றமும் ஒத்திசைவாக இருப்பதற்கு மேற்கண்ட வழிமுறைகள் போதுமானது என்று தோன்றுகிறது.
நன்றி.
♦ ♦ ♦
கேள்வி : //வலது, இடது கம்யூனிசம் வேறுபாடு என்ன?//
– சாம்
அன்புள்ள சாம்,
இந்தியப் பொதுவுடமைக் கட்சி 1925-ல் துவங்கப்பட்டது. அதிலிருந்து 1964-ல் பிரிந்தது இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்). முன்னது வலது கம்யூனிஸ்ட் என்றும் பின்னது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் பொதுவில் அழைக்கப்படுகிறது. ஏனிந்த பிளவு?
இந்தியாவிற்கு போலி சுதந்திரம் கிடைத்த 47-க்குப் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 50-களின் துவக்கத்தில் ரசியாவில் திரிபுவாதத்தை அரங்கேற்றிய குருசேவின் பாதையை ஏற்றுக் கொண்டது. நேருவின் ரசிய ஆதரவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டு காங்கிரசை ஆதரிக்க ஆரம்பித்தது. குருசேவின் திருத்தல்வாதத்தின் படி இனி, “புரட்சியின் மூலம் சோசலிசம் வரத் தேவையில்லை, அமைதி வழியில் பாராளுமன்றத்தின் மூலம் கூட சோசலிசம் வரலாம், வல்லரசு நாடுகளுக்கிடையே சமாதான சகவாழ்வு, சோவியத் நாட்டில் உள்ள அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான அரசாங்கம்” போன்றவை மார்க்சியத்தை காவு கொடுத்தது. இதை மாவோவின் தலைமையிலான சீனக் கம்யூனிசக் கட்சி 1960-ம் ஆண்டுகளில் விமரிசிக்க ஆரம்பித்தது.
இந்த வரலாற்றுச் சூழலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருத்தல்வாதத்தை பின்பற்றுகிறது என்று சொல்லி மார்க்சிஸ்ட் கட்சி பிளவு பட்டது.
வலது கம்யூனிசக் கட்சி நேருவை மட்டுமல்ல இந்திராவையும் அவசரநிலை நெருக்கடியையும் ஆதரிக்கும் அளவு சீரழிந்து போனது. வலதுகளிடம் இருந்து சித்தாந்த ரீதியாக பிளவுற்றதாக கூறினாலும் நெருக்கடி நிலைக்கு பிறகு இடது கம்யூனிசக் கட்சியும் சிலமுறை காங்கிரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. கூடவே குருசேவின் திருத்தல் வாதத்தையும், சீனாவில் மாவோவின் தலைமைக்கு பின்னர் தலைமை ஏற்ற டெங்சியோபிங்கின் நவீன திருத்தல்வாதத்தையும் ஏற்றுக் கொண்டது. இவர்களும் பாராளுமன்ற பாதையிலேயே சோசலிசம் கொண்டு வரலாம் என்று ஆரம்பித்து இன்று கேரளாவைத் தவிர எங்கும் ஆட்சியில் இல்லை என்ற நிலையை அடைந்து விட்டார்கள்.
ஆரம்பத்தில் இந்தியக் கம்யூனிசக் கட்சியின் பிற்போக்கான பிரிவினர் வலது கம்யூனிஸ்ட்டுகளாகவும், முற்போக்கு பிரிவினர் பிரிந்து இடது கம்யூனிஸ்ட்டுகளாகவும் வந்தனர் என்ற வழக்கின்படி இந்த இடது, வலது கம்யூனிஸ்ட்டுகள் என்ற பேச்சு வழக்கு அமலில் இருந்தது.
1967-ல் துவங்கிய நக்சல்பாரி விவசாயிகளின் பேரெழுச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவீன திரிபுவாதத்தை வேரறுத்து மார்க்சிய லெனினியக் கட்சியை 69-ம் ஆண்டில் தோற்றுவித்தது. அது குறித்த வரலாற்றை கீழ்கண்ட இணைப்பில் படிக்கலாம்.
“இந்த நிலம் பயன்பாட்டில் இல்லை என்றும், அரசுக்கு சொந்தமென்றும் யார் சொல்வது? இது எங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலம். எங்கள் வாழ்வாதாரமே இந்த நிலத்தை நம்பித்தான் இருக்கிறது. இந்த நிலம் யாருக்கும் உடைமையானதல்ல; அதே நேரம் எல்லோருக்கும் சொந்தமானது” என்கிறார் ராக்கு பென்.
வடமேற்கு குஜராத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சரன்கா கிராமத்தைச் சேர்ந்த ராக்கு பென், ஒரு மால்தாரி. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்க்கும் நாடோடி இடையர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் மால்தாரிகள். இவர்களில் சிலர் இன்னமும் நாடோடி வாழ்கை முறையில் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் நிரந்தரக் குடியிறுப்புகளை ஏற்படுத்தி அக்கம் பக்கத்தில் உள்ள மேய்ச்சல் நிலத்தை நம்பி வாழ்கின்றனர்.
நீரு பாய் மால்தாரி இன பெண்மணி. (படம் : நன்றி – ஸ்க்ரால்)
சரான்காவில் எல்லையின்றிப் பரந்து கிடக்கும் தரிசு நிலத்தில் அங்குமிங்குமாக புதர்கள் வளர்ந்து நிற்கின்றது. அந்த பெரும் நிலப்பரப்பைக் இரண்டாய்க் கிழித்துச் செல்லும் நெடுஞ்சாலையின் ஒரு புறம் கொஞ்சம் பசுமையாக இருக்கிறது; இன்னொரு புறமோ புதர் மண்டிய தரிசு நிலம். பசுமையாக இருக்கும் பகுதிகள் வனத்துறைக்குச் சொந்தமாந்து. தரிசு நிலத்தை காலம் காலமாக மால்தாரிகள் தங்கள் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது சரான்காவில் அரசால் தரிசு நிலம் எனக் குறிக்கப்பட்ட இடத்தில் சுமார் 5,417 ஏக்கரில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமது பாரம்பரிய மேய்ச்சல் நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் மால்தாரிகள்.
மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 2,000 ஏக்கரை சாகுபடி பரப்பு எனவும், எஞ்சியவை அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2010-ல் துவங்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் 2012 ஏப்ரலில் இருந்து தனது உற்பத்தியைத் துவங்கியது. குஜராத் மாநில மின் சக்திக் கொள்கை (2015) மற்றும் குஜராத் காற்று-சூர்யசக்தி இணை மின் சக்திக் கொள்கை (2018) ஆகியவற்றில் “வாழ்வாதாரம்” மற்றும் “நட்ட ஈடு” போன்ற வார்த்தைகள் இல்லை.
வனத்துறை தனக்குச் சொந்தமான நிலத்தை மேய்ச்சலுக்கு வழங்க மறுக்கும் நிலையில் ஏற்கனவே இருந்த மேய்ச்சல் நிலமும் பறிபோயுள்ளதால் முன்பு தற்சார்புடனும் பொருளாதார சுதந்திரத்துடனும் வாழ்ந்து வந்த மால்தாரிகள் இப்போது துப்புறவுத் தொழிலாளிகளாகவும், தினக்கூலிகளாகவும் மாறியுள்ளனர். பலர் கால்நடை வளர்ப்பை கைவிட்டு விட்டனர்.
***
புவி வெப்பமடைதலைக் கட்டுக்குள் கொண்டு வர புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு (renewable energy) இந்தியா படிப்படியாக மாறிச் செல்வது என 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் முடிவானது. இதற்கு 2030-ம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தில் 40 சதவீத அளவுக்கு புதுப்பிக்கத்தக்க மூலங்களில் இருந்து மின்னுற்பத்தியை எட்டுவது அவசியம். இதனடிப்படையில் சூரியமின்சக்தியின் உற்பத்தி இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. 2014-15 ஆண்டு வாக்கில் 3,744 மெகாவாட்டாக இருந்த சூரிய மின்னுற்பத்தி, மார்ச் 2019-ல் 28,181 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக இந்திய மின் கட்டுப்பாட்டு மையத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.
படம் : நன்றி – ஸ்க்ரால்
பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புக் கொண்ட இலக்கை பத்தாண்டுகளுக்கு முன்பாக (2020 -லேயே) அடைந்து விடும் என்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த சிந்தனைக் குழாம் ஒன்று. இந்தியாவில் சூரிய மின்சக்தி பரவலாகாத 2011 காலகட்டத்தில் ஒரு கிலோவாட்டின் விலை 12.76 வரை இருந்தது தற்போது 2.44 ரூபாயாக சரிந்துள்ளது. எனினும், இந்த விலைக் கணக்கீட்டில் மின்னுற்பத்திக்கான உண்மையான செலவினங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என சூழலியல் செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, மின்கலன்கள் அமைக்கத் தேவைப்படும் ஏராளமான நிலத்தின் உண்மையான மதிப்பானது மின்னுற்பத்தியின் உற்பத்திச் செலவுகளில் குறைத்துக் காட்டப்படுகிறது என்கின்றனர்.
மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான அமைச்சகம் (Ministry of New and Renewable Energy) வெளியிட்டுள்ள ஒரு வரைவு அறிக்கையின் படி, ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய 4 – 5 ஏக்கர் நிலம் தேவை. அதே போல் காற்றாலை மூலம் ஒரு மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்ய ஒரு ஹெக்டேர் (2.47 ஏக்கர்) தேவை. இந்நிலையில் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் விலையை ஒரு மெகாவாட் மின்சாரத்தின் விலையால் வகுப்பதன் மூலம் இறுதி விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறையில் விவசாய நிலத்தின் விலையைக் குறைத்துக் காட்டுவதன் மூலம் (அல்லது விவசாயிகளை ஏமாற்றியோ அடித்து பறிப்பதன் மூலமோ) சூரிய மின்சக்தியின் உற்பத்தி விலையை குறைவாக கணக்கீடு செய்கின்றனர்.
இதற்கு அரசின் நிலக் கொள்முதல் கொள்கையும் ஓரளவு துணை போகிறது. எது விவசாய நிலம், எது தரிசு நிலம் என்பதை அரசு முன்வைக்கும் ஆவணங்களின் மூலமே இறுதி செய்யப்படுகிறது. சரான்கா விசயத்தை எடுத்துக் கொண்டால், அது அரசின் ஆவணங்களின் படி பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலம் – ஆனால், அதை பல கிராமங்களைச் சேர்ந்த இடையர்கள் தங்களது மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வந்துள்ளனர். அடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது அதற்கான குறைந்தபட்ச நட்ட ஈடு வழங்கப்படுகிறதே தவிர அந்த நிலம் கைவிட்டுப் போவதால் ஏற்படும் வாழ்வாதார இழப்பு குறித்து அக்கறை கொள்வதில்லை.
சூரிய மின்சக்தி உற்பத்தியில் இவ்வாறான நடைமுறைச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் சூழலியல் நோக்கிலும் சில அம்சங்களைக் கருத்தில் கொள்ளவில்லை. முதலில் மிகப் பரந்த நிலப்பரப்பில் நீண்ட காலத்திற்கு சூரிய மின்கலன்களை நிறுவுவதால் நிலத்தின் மீது நேரடியாக சூரிய வெளிச்சம் பாய்வது தடுக்கப்படுகின்றது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைக் குறித்த ஆய்வுகள் இன்னும் முழுமை பெறவில்லை. அடுத்து, பயன்பாட்டுக் காலம் முடிந்த மின்கலன்களை எப்படி சூழலியல் பாதிப்பின்றி அழிப்பது அல்லது மறுசுழற்சி செய்வது என்பதைக் குறித்தும் இந்திய அரசு அக்கறை கொள்ளவில்லை.
***
ஏற்கெனவே அதிகரித்துவரும் மின்தேவை ஒருபுறம் இருக்க, தற்போது பெட்ரோலிய பொருட்களால் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விரைவில் மின்சாரத்தில் இயங்கும் நிலை உருவாகி வருகின்றது. பெரும் கார்ப்பரேட்டுகள் மின்சக்தி வாகன உற்பத்தியில் மும்முரம் காட்டி வருகின்றன. இதன் விளைவாக எதிர்காலத்தில் மின்சக்தியின் தேவை பன்மடங்கு அதிகரிக்கவுள்ளது. ஆனால், இன்றளவும் நாட்டின் மின் தேவையை அனல் மின்சாரமே பூர்த்தி செய்து வருகின்றது. அனல் மின்நிலையத்தால் உண்டாகும் சூழலியல் சீர்கேடுகள் ஒருபுறம் என்றால், மாற்று மின்சக்தி என முன் வைக்கப்படும் அணுமின் சக்தியின் அபாயங்கள் இன்னொரு புறம்.
இந்நிலையில் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியாக அறியப்பட்டுள்ள புனல், காற்று மற்றும் சூரியசக்தி ஆகியவை சூழலுக்கு பாதிப்பேற்படுத்தாத மாற்று ஏற்பாடுகளாக இருக்கும். இதில் அரசு கவனம் செலுத்துவதும் ஏற்புடையது தான். ஆனால், இதற்காக நிறுவப்படும் பெரும் திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களைத் தங்களது வாழிடங்களில் இருந்து அந்நியப்படுத்தி அவர்களை விரட்டியடித்துவிட்டு நிறுவப்படும் இதுபோன்ற திட்டங்கள் அடிப்படையில் யாருக்கானது என்கிற கேள்வியை எழுப்பும்.
ஒரு மனசாட்சியுள்ள அரசாக இருக்கும்பட்சத்தில் அதன் செயல்பாடு மக்களை முதன்மைப்படுத்தியதாகவும், இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் போதுமான மாற்று ஏற்பாடுகளை செய்வதாகவும் இருக்கும். ஆனால், நடந்து கொண்டிருப்பது மோடி சர்கார் என்பதும் அது அதானி, அம்பானிகளுக்கானது என்பதும் ஒரு எதார்த்த உண்மையாக இருக்கும்போது மக்களின் நிலையைப்பற்றி அது எந்தளவுக்குக் கவலைப்படும் என்பதை விளக்கத் தேவையில்லை.
கட்டுரையாளர் : Karthikeyan Hemalatha
தமிழாக்கம் : சாக்கியன் நன்றி :ஸ்க்ரால்
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா எனும் போட்டியாளர் தற்கொலை முயற்சி செய்ததாக போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகளை காணமுடிகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் கேமராக்களுக்கு முன் தற்கொலை முயற்சி செய்ததால் தற்கொலை பற்றி பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தற்கொலை என்பது மிகவும் சாதாரணம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
♦ உலகில் தற்கொலை செய்து கொள்ளும் மூன்று பெண்களில் ஒருவர் இந்தியர். ♦ தற்கொலை செய்து கொள்ளும் நான்கு ஆண்களுள் ஒருவர் இந்தியர். ♦ வருடந்தோரும் 2.5 லட்சம் பேரை தற்கொலைக்கு இழக்கும் தேசம் இந்தியா. ♦ உலகில் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சதவிகிதம் 7 தான் என்றால் நம் நாட்டில் அது 15 சதவிகிதம்.
திருமணமான பெண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். காரணம் – வரதட்சணைக் கொடுமை, பெண் பிள்ளை பெற்றால் கொடுமை, பிள்ளை பிறக்காவிட்டால் கொடுமை. விதவை பெண்கள், திருமணமாகாத பெண்களிடம் தற்கொலை விகிதம் குறைவாக இருக்கிறது
♦ ஆண்களில் அதிகம் தற்கொலை செய்து கொள்பவர்கள் – குடிகாரர்கள் தான்.
உங்களுக்கு தெரிந்து யாருக்கேனும் குடிப்பழக்கம் இருந்தால் அவரை அதில் இருந்து வெளிக்கொண்டு வாருங்கள். காரணம் குடி போதையில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்கள் அதிகம்.
முதுமை தரும் தனிமை, மனத்தாழ்வு நிலை, யாரும் ஆதரவுக்கு இல்லாத நிலை போன்றவற்றால் தற்கொலை செய்கின்றனர்.
♦ பெண்களின் சராசரி தற்கொலை வயது 19 – 39
கடந்த பத்து வருடங்களில் மட்டும் 75,000 மாணவ – மாணவிகள் கல்வி காரணங்களுக்காக தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலைக்கு அதிகம் பயன்படுத்தும் முறைகள் – பூச்சி மருந்து உண்பது, மாத்திரைகளை அதிகம் உண்பது மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்தல்.
இந்தியாவில் தற்கொலையில் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள்
திரிபுரா
பாண்டிசேரி
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
தற்கொலைகளை எப்படி தடுப்பது ?
♣ முதியவர்களை தனிமையில் விடுவது தவறு. அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் நாட்டில் முதியவர்கள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் நாம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் தற்கொலைகளை கணிசமாக குறைக்க முடியும்.
♣ பெண்களுக்கு எதிரான குற்றங்களை அது வரதட்சணை ஆகட்டும் , பணியிடங்களில் ஏற்படும் வன்முறைகளாகட்டும், பாலியல் சீண்டல்களாகட்டும் உடனுக்குடன் கண்டு களையும் நிர்வாக முறை இருக்க வேண்டும்
♣ படிப்பு, பரீட்சை அதில் வாங்கும் மதிப்பெண்கள் தான் வாழ்க்கை முழுவதையும் தீர்மானிக்கும் என்ற மாயையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். ஒரு பரீட்சையில் தோல்வி அடைந்தால் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் பெற்றோர் விதைக்க வேண்டும்
♣ மது மற்றும் புகைப்பழக்கத்தை விட வேண்டும். அரசும் மதுவை தடை செய்ய ஆவண செய்ய வேண்டும். நாட்டில் ஆண் தற்கொலைகள் பெரும்பான்மை மது தரும் போதை மற்றும் அச்சமற்ற நிலையால் தான் நடக்கின்றன.
♣ தேசிய தற்கொலை தடுப்புக்கொள்கை வரைவு செய்யப்பட வேண்டும்.
உடனே அது நடைமுறைக்கு வரவேண்டும். வயது வாரியாக பாலின வாரியாக தனித்தனியாக தற்கொலை தடுப்பு வழிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகள் கல்வியில் தற்கொலை தடுப்பு கொள்கை இணைக்கப்பெற வேண்டும்.
♣ 2017-ம் ஆண்டு தேசிய மன நல சட்டம் மூலம் தற்கொலை முயற்சிகள் சட்டப்படி குற்றமாகாது என்று அறிவித்ததன் மூலம் பல மறைக்கப்படும் தற்கொலை முயற்சிகள் வெளியே வரும். நிச்சயம் இந்தியா வலுவான மனநல பற்றாக்குறையில் இருக்கிறது.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் சிலையை சாதி வெறியர்கள் உடைத்ததைக் கண்டித்து, இன்று (26.08.2019) காலையில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாதிவெறியர்களைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சாதி வெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், இனி இதுபோன்ற செயல்கள் நடக்காமல் போலீசு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மாணவர்கள் முழக்கம் எழுப்பி கோரிக்கை விடுத்தனர்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றிம் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி கடலூர் மாவட்டம் : தொடர்புக்கு 9788808110.
கோவையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 22.08.2019 அன்று “மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை 2019 ஏன் நிராகரிக்க வேண்டும்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு தோழர் பாலமுரளி (சட்டக்கல்லூரி மாணவர், கோவை) தலைமை தாங்கினார்.
தேசிய கல்வி கொள்கை என்பது நவீன குலக்கல்வி முறையை வலியுறுத்துகிறது, நவீன அடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது, இது பாமர மக்களுக்கான கல்வி கொள்கை அல்ல. இது பாமர மக்களுக்கு எதிரான கல்விக் கொள்கையாகும். கல்வியை வணிக மயமாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது இந்த கல்விக் கொள்கை என்ற கருத்தினை பதிவு செய்தார்.
அடுத்துப் பேசிய மருத்துவர் பாலன், தேசிய கல்விக் கொள்கை என்பது “CCC என்று சொல்லலாம்” என்றார். “CCC என்பது commercialization (வணிகமயமாக்கல்), communalization (மதவாதம்), மற்றும் centralisation (அனைத்து அதிகாரமும் மத்தியில்)” என்பதை விளக்கிபேசத் தொடங்கினார்.
மருத்துவத்துறையில் MCI கலைத்து விட்டு NMC (National medical council) என்று கொண்டு வந்துள்ளனர். இது மருத்துவத் துறையை மத்திய அரசு தன் வசம் கொண்டு வரும் நோக்கமாகும். ஏற்கனவே இருந்த MCI-ல் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் இருப்பார்கள். ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 பேருக்கும் குறைவாகவே உள்ளனர்.
மருத்துவத் துறையை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் மருத்துவத்துறையில் சற்றும் சம்பந்தமில்லாத ஆர்.எஸ்.எஸ்.-காரர்களை அதில் நியமிக்கிறார்கள்.
பின்பு மருத்துவர் ஆக வேண்டுமென்றால் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் நீட் எழுத வேண்டும் என்றார்கள் இப்போது நீட் மட்டும் போதாது மருத்துவராகப் பதிவு செய்ய வேண்டுமென்றால் நெக்ஸ்ட் (next ) அதாவது எக்ஸிட் (exit exam) ஆகிய தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்கிறார்கள். இது ஆட்களை குறைக்கும் செயலாகும். யார் வேண்டுமானாலும் மருத்துவராக முடியாது, அதற்கென ஒரு குறிப்பிட்ட பணத் தகுதி வேண்டும் என்கிறது மத்திய அரசு.
அடுத்து சிறப்புரையாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தர்மபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அன்பு பேசுகையில்; “மத்திய அரசு கொண்டுவந்த இந்த கல்வி முறை கல்வி அறிவு ஆற்றல் உள்ள மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து முன்வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் கொண்டு வந்த கல்விமுறை என்பது அறிவியலுக்கு புறம்பானது. மாணவர்களை சிந்திக்க விடாமல் செய்யும் பழமைவாத கருத்துக்களை கொண்டதே ஆகும். நமது நாடு என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு ஆகும். பல மொழிகள் பல கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் மோடி அரசு மும்மொழி என்ற பெயரில் இந்தி சமஸ்கிருதத்தை திணிக்கின்றது.
கார்ப்ரேட்டுகளுக்கும், காவிகளுக்கும் சேவை செய்கிற வகையில் இக்கல்விக் கொள்கை உள்ளது. இதற்கு எதிர்ப்பு தமிழகத்தில்தான் பலமாக உள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழகத்தில் ஏறத்தாழ 500 அரங்கக் கூட்டங்கள் நடைபெற்று உள்ளன. மற்ற மாநிலங்களில் இதைப் பற்றியான விழிப்புணர்வு மிக குறைந்த அளவே உள்ளது.
எனினும் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையை மாணவர்களாகிய நாம் அமைப்பாக ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். என்று உரையாற்றினார்.
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, கோவை. தொடர்புக்கு : 94451 12675
உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 02
மின்சார ரெயில் சக்கரங்கள் கடகடக்க, ஊதல் அலற, மாஸ்கோ நகர்புறத்தில் உற்சாகமாக விரைந்தோடிக் கொண்டிருந்தது. அலெக்ஸேய் மெரேஸ்யெவ் ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்தான். அவனைச் சுவரோடு சுவராக நெருக்கியவாறு பக்கத்தில் அமர்ந்திருந்தார் மழித்த முகமுள்ள ஒரு முதியவர். விளிம்பு அகன்ற தொப்பியும், தங்க வில் கண்ணாடியும் அணிந்திருந்தார் அவர். களை வெட்டும் மண்வெட்டியும், வறண்டியும் செய்தித்தாளில் பாங்காகச் சுற்றி நாடாவால் கட்டப்பட்டு அவரது முழங்கால்களுக்கு இடையே துருத்திக் கொண்டிருந்தன.
அந்தப் பயங்கர நாட்களில் மற்ற எல்லோரையும் போலவே இந்த முதியவரும் யுத்தத்தைப் பற்றியே சிந்தித்தவாறு காலங்கழித்து வந்தார். மெரேஸ்யெவின் முகத்துக்கு முன் வறண்ட உள்ளங்கையை ஆட்டியவாறு பொருள் பொதிந்த கீழ்குரலில் அவன் காதோடு கிசுகிசுத்தார் அவர்:
“நான் சிவில் உத்தியோகஸ்தன் ஆயிற்றே என்று பார்க்காதீர்கள். நமது திட்டத்தை நான் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டேன். பகைவனை வோல்காப் பிரதேச ஸ்தெப்பி வெளிகளுக்குக் கவர்ந்து இழுப்பது, ஆமாம், தனது போக்குவரத்து மார்க்கங்களை விரிவாக நீட்ட, இப்போது வழக்கமாகச் சொல்வது போல பிரதானத் தளத்திலிருந்து துண்டிக்கப்பட அவனுக்கு இடங்கொடுப்பது, பிறகு இதோ இங்கிருந்து, மேற்கிலும் வடக்கிலும் இருந்து பாய்ந்து தாக்கி, போக்குவரத்துத் தொடர்புகளைத் துண்டித்து, பகைவனைக் கூறுகளாக வகிர்ந்து விடுவது. ஆமாம்… இது மிகவும் புத்திசாலித்தனம். நமக்கு எதிராக ஒரு ஹிட்லர் மட்டும் இல்லையே. ஐரோப்பா முழுவதையும் அல்லவா தனது சாட்டையால் அடித்து நம் மீது ஏவிவிட்டிருக்கிறான் அவன். ஆறு நாடுகளின் சைனியங்களை எதிர்த்து நாம் தன்னந்தனியாகப் போராடுகிறோம். தனிப்போர் புரிகிறோம். விரிவான பரப்பையாவது அதிர்ச்சி தாங்கியாகப் பயன்படுத்தி இந்தக் கொடிய தாக்குதலின் உக்கிரத்தை மட்டுப்படுத்த வேண்டும். ஆமாம். அறிவுக்குகந்த ஒரே வழி இதுவே. பார்க்கப் போனால் நமது நேச நாடுகள் சும்மாதானே இருக்கின்றன!… இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
“நான் நினைக்கிறேன், நீங்கள் சொல்வது வெறும் பிதற்றல் என்று. தாய்நாட்டின் நிலப்பரப்பு விலைமதிப்பற்றது. அதிர்ச்சி தாங்கியாக அதைப் பயன்படுத்துவது தகாது” என்று கடுகடுப்புடன் விடையளித்தான் மெரேஸ்யெவ்.
ஆனால் கிழவனாரோ அலெக்ஸேயின் காதோடு உதடுகளை அனேகமாக ஒட்டியவாறு தொணதொணத்துக் கொண்டே போனார். புகையிலை நெடியும் பார்லிக் காப்பி மணமும் அவரிடமிருந்து வந்தன.
“…இல்லை, நீங்கள் படைவீரர். நீங்கள் சொல்லுங்கள், இது சரிதானா? இதோ ஓர் ஆண்டுக்கு மேலாக நாம் பாசிஸத்தைத் தன்னந்தனியே எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம். ஊம்? ஆனால் நேச நாடுகள் விஷயமோ? இரண்டாம் போர்முனை விஷயமோ? உதாரணமாக இந்தக் காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். எதையும் சந்தேகிக்காமல் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதனைத் திருடர்கள் பாய்ந்து தாக்குகிறார்கள். அவன், அந்த மனிதன், மனங்கலங்காமல் திருடர்களை எதிர்த்துத் தாக்கிச் சண்டை போடுகிறான். குருதியைப் பெருக்கியவாறு போரிடுகிறான், கையில் கிடைத்ததைக் கொண்டு திருடர்களை அடித்துப் புடைக்கிறான். அவன் தனியாள், திருடர்களோ பலர். அவர்கள் ஆயுதபாணிகள். நெடுங்காலமாகவே அவனுக்காகப் பதி போட்டுக் காத்திருந்தவர்கள். ஆமாம். அண்டைவீட்டாரோ இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு தங்கள் வீடுகளின் அருகே நின்று அனுதாபம் தெரிவிக்கிறார்கள். ‘சபாஷ், அருமை, அப்பனே, அருமை! இந்தத் திருட்டுப் பயல்களை இப்படித்தான் மொத்த வேண்டும். அடி அவர்களை, நொறுக்கு!’ என்று உற்சாகப்படுத்துகிறார்கள். திருடர்களை அடித்து விரட்ட உதவுவதற்குப் பதிலாக, கற்களையும் இரும்புத் துண்டுகளையும் அந்த ஆளுக்கு நீட்டுகிறார்கள். ‘இந்தா, இவற்றால் இன்னும் கடுமையாகத் தாக்கு’ என்கிறார்கள். தாங்களோ எட்ட நிற்கிறார்கள். ஆமாம், ஆமாம், இப்போது நேசநாட்டினர் செய்வது இதுவேதான்…”
மெரேஸ்யெவ் அக்கறையுடன் முதியவரைத் திரும்பிப் பார்த்தான். எத்தனையோ பேர் இப்போது அவர்கள் பக்கம் நோக்கிக் கொண்டிருந்தார்கள். செம்மச்செம்ம நிறைந்திருந்த பெட்டியின் எல்லாப் புறங்களிலுமிருந்து குரல்கள் ஒலித்தன:
“அவர் சொல்வது சரிதானே. தன்னந்தனியாகவே போரிடுகிறோம். எங்கே இந்த இரண்டாம் போர்முனை?”
“பரவாயில்லை, ஆண்டவன் அருளால் தனியாகவே காரியத்தைச் சமாளித்து விடுவோம். எல்லாம் முடிந்து இறுதி வெற்றி கிடைக்கும் சமயத்தில் அவர்களும் சேர்ந்து கொள்வார்கள் அதில் பங்கு பெற, இரண்டாம் போர்முனையைத் திறந்துவிடுங்கள்.”
நகர்புறக் குடியிருப்பு ஒன்றின் பிளாட்பாரத்தருகே ரெயில் நின்றது. பைஜாமாக்கள் அணிந்த சில காயமுற்ற படை வீரர்கள் கவைக் கோல்களையும் கைத்தடிகளையும் ஊன்றியவாறு பெட்டியில் ஏறினார்கள். பெர்ரிப் பழங்களும் சூரியகாந்தி விதைகளும் நிறைந்த மூட்டைகள் அவர்கள் கைகளில் இருந்தன. உடம்பு தேறுபவர்களுக்கான மருத்துவமனை ஒன்றிலிருந்து இவ்வூர்ச் சந்தைக்கு அவர்கள் வந்தார்கள் போலும். முதியவர் சட்டென இருக்கைவிட்டு எழுந்தார். ”உட்காருங்கள், தம்பீ, உட்காருங்கள்” என்று கட்டுப்போட்டாலும் கவைக்கோல்களுமாக நின்ற செம்பட்டைத் தலை இளைஞன் ஒருவனை வலுக்கட்டாயமாகத் தமது இடத்தில் உட்கார்த்தினார். “பரவாயில்லை, பரவாயில்லை, உட்காருங்கள். கவலைப்படாதீர்கள், நான் இதோ இறங்க வேண்டியவன் தான்” என்றார்.
தாம் சொல்வது உண்மை என்று காட்டுவதற்காக முதியவர் தமது களைக் கொட்டிகளையும் வறண்டியையும் எடுத்துக் கொண்டு கதவு அருகே நகரக்கூடச் செய்தார். பால்காரிகள் பெஞ்சில் ஒதுங்கி, காயமடைந்தவர்களுக்கு இடம் கொடுக்கத் தலைபட்டார்கள். எங்கோ பின்னாலிருந்து ஒரு பெண்ணின் கண்டனக் குரல் அலெக்ஸேயின் காதுகளை எட்டியது.
“இந்த ஆளுக்கு வெட்கமாயில்லையே! அங்கவீனமடைந்த படைவீரன் பக்கத்தில் நிற்கின்றான், தவிக்கிறான், எல்லோரும் அவனை நெருக்கி இடித்துத் தள்ளுகிறார்கள், ஆனாலும் இந்த ஆள், ஆரோக்கியசாலி, கழுத்து போல உட்கார்ந்திருக்கிறானா, ஏறெடுத்தும் பார்க்காமல். ஏதோ குண்டு தன்னைத் தாக்கவே முடியாது போல. இந்த அழகில் கமாண்டர், விமானி!” என்றது அந்தக் குரல்.
அநியாயமான இந்தச் சுடு சொற்களால் அலெக்ஸேய் கடுஞ்சீற்றம் அடைந்தான். அவனுடைய மூக்குத்துளைகள் கோப மிகுதியால் துடித்தன. ஆனால் சட்டென முகத்தில் களி சுடர்விட அவன் இடத்தைவிட்டுத் துள்ளி எழுந்தான்.
“உட்கார் தம்பீ!” என்றான்.
காயமடைந்தவன் கூச்சமுற்று மறுத்தான்.
”நீங்கள் என்ன, தோழர் ஸீனியர் லெப்டினன்ட்! கவலைப்படாதீர்கள், நான் நிற்கிறேன். ரொம்ப தூரம் இல்லை. இரண்டு நிறுத்தங்கள்தாம் பாக்கி” என்று கூறினான்.
குறும்புத்தனம் கொண்ட குதூகலம் அலெக்ஸேயின் உள்ளத்தில் ஊற்றெடுத்தது. “உட்கார் என்கிறேன்!” என உரக்கக் கத்தினான்.
இந்தச் சமயத்தில் ரெயில் கண்டக்டர் மாது அவன் போக வேண்டிய இடத்தின் பெயரை அறிவித்தாள். ரெயில் மெதுவாக நிற்கலாயிற்று. கூட்டத்தில் புகுந்து விலக்கிக் கொண்டு முன்னேறிய அலெக்ஸேய் கதவருகே கண்ணாடிக்காரக் கிழவரை மறுபடி எதிர்ப்பட்டான். அவர் நெடுநாள் பழகியவர் போல அவனை நோக்கிக் கண் சிமிட்டினார்.
“என்ன நினைக்கிறீர்கள்? என்னவானாலும் இரண்டாவது போர்முனை திறக்கப்படுமா?” என்று கிசுகிசுத்தார்.
“திறக்கப்படவில்லை என்றால் நாமே சமாளித்துக் கொள்வோம்” என்று பதிலளித்துவிட்டு மரப் பிளாட்பாரத்தில் இறங்கினான் அலெக்ஸேய்.
ஆரோக்கிய நிலையம் போகும் வழி மாஸ்கோவில் அவனுக்கு விவரமாக விளக்கப்பட்டிருந்தது. தேர்ந்த படைவீரன் ஆதலால் அவன் ஒரு சில அடையாளங்களைக் கொண்டு ஆரோக்கிய நிலையம் போகும் வழியைச் சிரமமின்றி கண்டு கொண்டான். ரெயிலடியிலிருந்து பதினைந்து நிமிட நடைத் தொலைவில், அமைதியான சிறு ஏரியின் கரையில் இருந்தது ஆரோக்கிய நிலையம்.
சமாதான காலத்தில் விமானிகள் மனைவிமாருடனும் சில வேளைகளில் குடும்பத்தினர் அனைவருடனும் இங்கே தங்கினார்கள். போர்க்காலத்தில் மருத்துவமனைச் சிகிச்சைக்குப் பின் உடம்பைத் தேற்றிக் கொள்ள அவர்கள் இங்கு அனுப்பப்பட்டார்கள். இரு மருங்கிலும் பிர்ச் மரங்கள் வளர்ந்திருந்த விசாலமான தார் ரோடு சுற்றி வளைத்துக் கொண்டு ஆரோக்கிய நிலையத்துக்குச் சென்றது. ஆனால் அலெக்ஸேய் அதில் போகாமல் ரெயிலடியிலிருந்து காட்டின் ஊடாக ஏரிக்கு நேரே சென்ற ஒற்றையடிப் பாதையில் நடந்தான். ஒரு வகையில் சொன்னால் அவன் பின்புலத்திலிருந்து ஆரோக்கிய நிலையத்தை அடைந்தான். ஒருவரும் அவனைக் கவனிக்கவில்லை. பிரதான வாயிலருகே பிதுங்கப் பிதுங்க ஆட்களால் நிறைந்த இரண்டு பஸ்கள் நின்றன. அவற்றைச் சூழ்ந்திருந்த ஆட்கள் கூட்டத்தில் அலெக்ஸேய் கலந்துகொண்டான்.
ஆரோக்கிய நிலையத்திலிருந்து நேரே போர்முனை செல்லும் விமானிகளை வழியனுப்பவே ஆட்கள் கூடியிருக்கிறார்கள் என்பதை உரையாடல்கள், கேலிப் பேச்சுக்கள், வழியனுப்புக் கத்தல்கள், வாழ்த்துக்கள் ஆகியவற்றிலிருந்து அலெக்ஸேய் தெரிந்து கொண்டான். பிரயாணிகள் குதூகலமும் இன்பக் கிளர்ச்சியும் கொண்டிருந்தார்கள் – தாங்கள் போவது ஒவ்வொரு மேகத்துக்கும் பின்னே சாவு தங்களுக்காகப் பதிபோட்டிருக்கும் இடத்துக்கு அல்ல, அமைதி நிறைந்த சொந்தப் படைத்தளங்களுக்கு என்பது போல. வழியனுப்புவோரின் முகங்களில் பொறுமையின்மையும் ஏக்கமும் ததும்பின. அலெக்ஸேய் இதைப் புரிந்து கொண்டான். தெற்கே நடந்து கொண்டிருந்த புதிய பிரமாண்டமான போர் தொடங்கியது முதலே அடக்கமுடியாத இந்தக் கவர்ச்சியை அவனும் உணர்ந்து வந்தான். போர்முனையில் நிகழ்ச்சிகள் விரிவடைந்து கொண்டும் நிலைமை சிக்கலாகிக் கொண்டும் போகப் போக இந்தக் கவர்ச்சி அதிகரித்தது. இராணுவ வட்டாரங்களில், தணித்த குரலிலும் எச்சரிக்கையுடனுந்தான் என்றாலும், “ஸ்தாலின்கிராத்” என்ற சொல் உச்சரிக்கப்படத் தொடங்கியதுமோ, இந்தக் கவர்ச்சி வேதனை தரும் ஏக்கமாக வளர்ந்துவிட்டது. மருத்துவமனையில் கட்டாயம் காரணமாகச் செயலற்று இருப்பது சகிக்க முடியாதது ஆகிவிட்டது.
கேள்வி : //ISO தரச்சான்றிதழ் என்பது என்ன காரணத்திற்காக? அதை வழங்குவது தனியார் நிறுவனமா? அதை அரசுத்துறையால் கொடுக்க இயலாதா? இத்தரச்சான்றிதழ் என்பது எந்த மாதிரியான தொழிற்சாலைகளுக்கு? இதுகுறித்து, முழுவதுமான விவரங்களைத் தாருங்கள்.//
-மா.பேச்சிமுத்து
ஒரு தொழிற்சாலை, ஒரு நாடு என்று ஆரம்பத்தில் இருந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சி – செயல்பாடு இன்று வல்லரசு நாடுகளின் கால கட்டத்தில் உலகளாவிய முறையில் பரவியிருக்கிறது. உற்பத்தி உலகமயமான பிறகு அதை ஒரே மாதிரி தரப்படுத்துவதன் தேவை எழுகிறது. இல்லையெனில் நுகர்வோர் வாங்கும் பொருள் ஒரே தரத்திலானதாக இருக்காது.
சந்தையில் விளம்பரம் செய்யும் போது இந்த ஆப்பிள் ஃபோன் சீனாவில் தயாராகி அமெரிக்காவில் விற்பனையாகிறது என்று செய்ய மாட்டார்கள். மாறாக அதன் தரத்தை மட்டுமே பகிர்வார்கள். உலகமய காலகட்டத்தில் வல்லரசு நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது பொருளியல் உற்பத்தி (அதாவது சுரண்டல்) தரமானதாக இருக்கிறது என்று காட்டுவதற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் உதவுகிறது.
மேலும் பொறியியல், மின்னியல், மின்னணுவியல், தானியங்கி, கனிமவளம், கணினி மென்பொருள் போன்ற பல்வேறு துறைகளில் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான முறைகள் – அளவுகளை பின்பற்ற வேண்டிய தேவையும் இருக்கிறது. அதே போன்று நிதி, வங்கி, பங்குச் சந்தை போன்றவற்றிலும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான செயல்பாட்டு முறைகளை பின்பற்ற தேவை இருக்கிறது. இவற்றை விரிவாக பார்ப்போம்.
பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரே பொருள் அளவிலும், தரத்திலும், சொல்லப்போனால் அதன் பெயரிலும் கூட வெவ்வேறாக இருப்பதால் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்றொரு நாட்டில் பயன்படுத்தும் போது பல சிக்கல்களை உருவாக்கியது. உதாரணமாக, பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பற்சக்கரங்கள் (Gear) வெவ்வேறு பெயர்கள் மற்றும் அளவீட்டு அலகுகள் (units) கொண்டதாக இருந்ததால், ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் இயந்திரத்தை மற்றொரு நாட்டில் பயன்படுத்தும் போது அங்குள்ள பற்சக்கரத்தோடு இணைக்க முடியவில்லை.
இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, உலகம் முழுமைக்குமான பொதுவான நியமத்தை (standards) உருவாக்குவதற்கான தேவை உருவாகிறது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் சுவிட்சர்லாந்து – ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ISO – சர்வதேச தரநியம நிறுவனம் (International Organization for Standardization). இந்நிறுவனத்தை 1947-ம் ஆண்டில் – முதன் முதலாக காட் (GATT) ஒப்பந்தம் போடப்பட்ட அதே ஆண்டில் – 25 நாடுகளின் பிரதிநிதிகள் குழு உருவாக்கியது.
ISO (ISO) என்பது உலக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு தர மேலாண்மை முறைமையாகும் (Quality Management System). முதன் முதலாக தர மேலாண்மை முறைமை, இரண்டாம் உலகப்போர் கால இங்கிலாந்தில்தான் உருவானது. அங்கு ஆயுத உற்பத்தியகங்களிலேயே வெடிகுண்டுகள் வெடிக்க ஆரம்பித்தன, போர்க்களத்திற்குச் சென்ற குண்டுகள் சில வெடிக்காமல் போயின. இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு தர மேலாண்மை செயல்முறையை (BSD 5750) வகுத்தளித்தது. அதன்படி ஆயுத உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்பிற்கான செயல்முறைகளை வகுத்து ஆவணப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் அச்செயல்முறைகளை முறையாக பின்பற்றி உற்பத்தி செய்வதை இடையிடையே ஆய்வுசெய்வதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக இந்த மொத்த நடைமுறையையும் ஒரு அரசு ஆய்வாளர் பரிசோதித்து உறுதியளிக்க வேண்டும். இதன் மூலம் குண்டுகள் தொழிலகத்திலேயே வெடிப்பது தடுக்கப்பட்டது.
தர மேலாண்மை முறைமையென்பது ஒரு நிறுவனத்தின் தரக் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடைவதற்கான உற்பத்தி செயல்முறைகள், நடைமுறைகள், ஒவ்வொருவருக்குமான பாத்திரம் மற்றும் பொறுப்புகளை முறையாக ஆவணப்படுத்தும் ஒரு அமைப்பாகும். இது இன்னின்ன பொருள், இன்னின்ன தரத்தில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற நியமங்களை (standards) நிர்ணயம் செய்வதில்லை. மாறாக, அந்தக் குறிப்பிட்ட உற்பத்தித்துறையில் பின்பற்ற வேண்டிய மொத்த நடைமுறைகள் பற்றிய ஆவணத் தொகுப்பு. இது ISO-வுக்கும் பொருந்தும்.
இந்நிறுவனம் எந்த தரச்சான்றிதழையும் வழங்குவதில்லை. ஒவ்வொரு தொழில் மற்றும் சேவைத்துறைக்குமான பொதுவான வழிகாட்டல்கள் மற்றும் நெறிமுறைகளையே வழங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட சான்றளிக்கும் தனியார் நிறுவனங்களே (Certification Bodies) தரச்சான்றிதழை வழங்குகின்றன. Bureau Veritas, Tuv Nord, BSI, TuvSud போன்றவை இந்தியாவில் சான்றளிக்கும் நிறுவனங்களில் சில.
ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலை ISO சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முன் உற்பத்தி செயல்முறைகள், நடைமுறைகள், ஒவ்வொருக்குமான பாத்திரம், பொறுப்புகள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்கள் (Check Lists) போன்றவற்றை முறையாக வகுத்து ஆவணப்படுத்தியிருக்க வேண்டும். சான்றிதழ் வழங்கும் நிறுவனம் தனது முதல் தணிக்கையில் (First Audit) இவற்றை ஆய்வு செய்து அங்கீகரிக்கும். அதாவது, ஒவ்வொரு தொழிற்சாலையும் தனக்கான தனிப்பட்ட செயல்முறைகள், நடைமுறைகளை (process and procedures) வகுத்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு, சென்னையில் இயங்கும் ஃபோர்ட், ஹுண்டாய், ரெனால்ட் நிஸ்ஸான் போன்ற கார் கம்பெனிகள் தனக்கான தனித் தனியான செயல்முறைகள், நடைமுறைகளை வகுத்துக் கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி, தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ISO உட்குழுவைக் கொண்டு உள் தணிக்கை செய்துகொள்ள வேண்டும். சான்றளிக்கும் நிறுவனமும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தணிக்கை செய்து ISO சான்றிதழை உறுதிப்படுத்தும். சில இரண்டாந்தர சான்றளிக்கும் நிறுவனங்கள் வெறுமனே காசு வாங்கிக்கொண்டு எந்த தணிக்கையும் செய்யாமல் சான்றிதழ்களை வழங்குவதும் இருக்கிறது.
ISO தர மேலாண்மை முறைமையில் செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையையும் ஆவணப்படுத்த வேண்டிய நடைமுறைகள் மிகமிக சலிப்பூட்டக் கூடியதாகும். உற்பத்தி பொருளுடைய அல்லது சேவையின் தரத்தையும், விவர வரையறையையும் (specification) அந்த குறிப்பிட்ட தொழிற்சாலையில் இருக்க கூடிய தர உத்திரவாதத்துறை (QA) தான் பரிசோதித்து உறுதிப்படுத்தும். அதாவது, ISO சான்றிதழ் நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறதே அன்றி உற்பத்திப் பொருளின் தரத்திற்கு சான்றளிக்கப்படுவதில்லை.
1990-களில் காட் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின், உற்பத்தியும் சேவைகளும் குறுக்கும் நெடுக்குமாக உலகு தழுவிய அளவில் நடைபெறத் துவங்கியது. பல தொழில் மற்றும் சேவைத்துறைகள் அவுட்சோர்ஸிங் மூலம் மொத்தமாகவோ அல்லது பகுதியாக பிரித்தோ மலிவான கூலியுழைப்பு கிடைக்கும் நாடுகளை வந்தடைந்தன.
வளரும் நாடுகளில் இருந்து மேற்குலகிற்கு ஏற்றுமதியாகும் உற்பத்திப் பொருள் அல்லது சேவையின் தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. வெவ்வேறு நாடுகளில் நடக்கும் பகுதியளவில் உற்பத்தியாகும் உதிரிப் பொருட்களை ஒருங்கிணைக்க அவற்றுக்குள் ஒரே அளவிலான தரம், உற்பத்திச் செயல்முறை, நடைமுறைகள் (process and procedures) இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இதுதான் ISO மட்டுமின்றி பல்வேறு நியமங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளதன் பின்னணி.
இந்த அடிப்படையில் தான் 1990-களுக்குப் பிறகு ISO தரச் சான்றிதழ் எல்லா இடங்களையும் வந்தடைந்தது. உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமின்றி, சேவை வழங்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற எல்லா நிறுவனங்களும் தாங்கள் ISO தரச் சான்றிதழ் பெற்றுள்ளதாக விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.
உற்பத்தி உலகளாவியபடி மாறி விட்டதால் இந்திய அரசு நடத்தும் ISI ஐஎஸ்ஐ தர நிர்ணயம் போதுமானதாக இருப்பதில்லை. இந்நிறுவனம் இந்தியாவிற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதுவும் அதிகார வர்க்க ஊழலால் பெயருக்கு மட்டும் தரத்தை பேசுகிறது.
ISO தரச் சான்றிதழ் எப்படி பாகுபாட்டோடு இருக்கிறது என்பதற்கு தொழிலாளர் உரிமை பற்றி அது போதுமான அளவு பேசுவதில்லை என்பதே உதாரணம். ஹுண்டாய் நிறுவனம் கார்களை உற்பத்தி செய்யும் முறைகளை ISO படி செய்து கொண்டாலும் அங்கே தொழிற்சங்கம் இருக்கக் கூடாது என்பதையும் விதியாக வைத்திருக்கிறது. மற்றும் பல நிறுவனங்கள் நிரந்தரத் தொழிலாளிகளை குறைத்து ஒப்பந்த தொழிலாளர்களை அதிகம் வைத்து குறைந்த கூலி கொடுத்து செயல்படுகின்றன. அவ்வகையில் ISO-வின் செயல்பாட்டில் தொழிலாளர் நலன், உரிமை இல்லை என்றே சொல்லலாம். அல்லது தொழிலாளிகளுக்கு போதுமான அளவு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று மட்டும் தணிக்கையின் போது காட்டிக் கொள்வார்கள். அதே போன்று ISO ஒரு தனிப்பட்ட தொழிற்சாலை எப்படி செயல்படுகிறது என்பதை மட்டுமே பார்க்கிறது. அதனால் நாட்டளவில், சமூக அளவில் என்ன பாதிப்பு என்பதை பார்ப்பதில்லை.
சான்றாக திருப்பூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனம் ISO தரச்சான்றிதழ் பெற்று தனது ஆயத்த ஆடைகளில் Eco Friendly என்று அச்சிட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்க வாடிக்கையாளரும் இந்த ஆடை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் தயாரானது என்று நம்பி வாங்குகிறார். ஆனால் சாயப்பட்டறை கழிவு நீரால் நொய்யல் ஆறு கழிவான சோகக் கதையை நாமறிவோம்.
முதலாளித்துவம் இருக்கும் வரை எதிலும் “தரம்” பார்ப்பது கடினம். சோசலிச உற்பத்தியில்தான் அனைத்தும் தழுவிய தரத்தை அடைய முடியும்.
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
ஆங்கில ஆட்சி தென்னாட்டில் நிலைபெற்றபோது, பிராமணரல்லாதாரே முதன் முதலில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். கிழக்கு இந்தியக் கம்பெனியார் தென்னாட்டில் வர்த்தகசாலைகள் அமைத்தபோது, அவர்களிடம் முதன் முதல் அடுத்துப் பழகியவர் பிராமணரல்லாதாரே. துபாஷிகளாகவும், தரகர்களாகவும் அந்த வர்த்தகர்களின் நட்பைப் பெற்ற பிராமணரல்லாதாருக்கு நாட்டிலே செல்வாக்குப் பெருகலாயிற்று. வர்த்தகர்களாயிருந்த ஆங்கிலேயரின் தேச நிர்வாகத்தில் பிராமணர் அல்லாதாரே நிர்வாக உத்தியோகஸ்தர்களாய் இருந்தனர். ஆகவே, ஆதி காலத்தில் அரசியல் துறையில் முதலியார், நாயுடு, நாயக்கர், செட்டி, பிள்ளை போன்றவர்களே இடம் பெற்றிருந்தனர். அவ்வாறு இடம் பெற்றிருந்தவர்கள் பிற்காலத்துப் பல பிராமணச் சிறுவர்களுக்கு உதவி புரிந்து உயரிய நிலைமைக்குக் கொண்டு வந்து முள்ளார்கள்.
ஒரு நாயக்கரான தாசில்தார் உதவியால், காலஞ்சென்ற சர்.டி. முத்துசுவாமி அய்யர் உயரிய நிலைக்கு வந்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். பிராமணரல்லாதார் இயல்பாகவே நிர்வாகத் திறமை உடையவராகையினால், ஆங்கிலேயரின் நன் மதிப்பை வெகு எளிதில் பெற்றனர். இதுகாறும் ஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழி என்றும் கருதி ஒதுங்கி இருந்த பிராமணர்கள், அரசியலில் பிராமணரல்லாதார் ஆதிக்கமும் சமூக வாழ்வில் மதிப்பும் பெற்று வருவது கண்டு மேற்கொண்டு ஒதுங்கியிருந்தால், தமது சமூகம் வீழ்ச்சியடைவது உறுதியென உணர்ந்தனர்.
எனவே, ஆங்கிலங்கற்கவும், ஆங்கிலேயர் நட்பைப்பெறவும் அவர்கள் முன் வந்தனர். சென்னை ராஜாங்க கல்லூரிக்கு நூறு ஆண்டுகட்கு முன் அடிகோலப்பட்டது முதல் பிராமணர்கள் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடலாயினர். ஓதலையும் ஓதுவித்தலையும் குலத் தொழிலாகக் கொண்ட பிராமணர்கள் ஆங்கிலக் கல்விப் பயிற்சியில் வெகுவிரைவாக முன்னேற்றமடைந்ததனால், சர்க்காரும் அவர்களுக்குப் பல சலுகைகள் காட்டத் தொடங்கினார்கள். சென்னை மாகாண ராஜாங்கக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டபோது, பிராமணர்களே ஆதிக்கம் வகித்தனர். அதுமுதல் அரசியல் துறையிலும், பொது வாழ்விலும் பிராமண ஆதிக்கம் பெருகலாயிற்று. தமது சமூகநலனைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தமக்குச் சொந்தமாகப் பத்திரிகைகளும் தோற்றுவித்துக் கொண்டார்கள். பிராமணரல்லாதார் நிலைமை சீர்குலையத் தொடங்கிற்று.
அய்.சி.எஸ். உத்தியோகஸ்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஏக காலத்தில் பரீட்சைகள் நடத்த வேண்டுமென்று கிளர்ச்சி செய்தபோது, 1916-ல் சென்னை நிர்வாக சபை மெம்பராக இருந்த சர். அலெக்சாண்டர் கார்ட்யூ 1913-ல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன் சாட்சியம் கொடுக்கையில், அவ்வாறு ஏக காலத்தில் பரீட்சைகள் நடத்தினால், கடுமையான வகுப்புணர்ச்சியுடைய ஒருசிறு சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்களே அப்பரீட்சையில் அதிகமாக வெற்றிபெறுவார்கள்; சிவில் சர்வீஸ் பிராமணமயமாகி விடும் எனக் கூறினார். மற்றும் மாகாண சிவில் சர்வீஸுக்கு 1892 முதல் 1904 வரை நடத்திய போட்டிப் பரீட்சைகளில் வெற்றியடைந்த 16 பேரில் 15 பேர் பிராமணர் என்றும் கூறினார். அதே காலத்தில் அசிஸ்டெண்ட் இஞ்சீனியர் வேலைக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்ற 21 பேரில் 17 பேர் பிராமணர்கள், அம்மட்டோ ! அக்காலத்தில் உத்தியோகம் வகித்த 140 டிப்டி கலெக்டர்களில் 77 பேர் பிராமணர்கள், 30 பேர் பிராமணரல்லாத இந்துக்கள், பாக்கிப் பேர் முகம்மதியர், இந்தியக் கிறித்துவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர். நீதி இலாகாவிலும் நிலைமை இவ்வாறாகவே இருந்தது. 1913-ல் உத்தியோகம் நடத்திய 128 ஜில்லா முனிசீப்புகளில் 93 பேர் பிராமணர், 25 பேர் பிராமணரல்லாத இந்துக்கள், பாக்கிப் பேர் முகம்மதியர், இந்தியக் கிறித்துவர். அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர்கள், இவ்வாறு எல்லாத் துறைகளும் பிராமண மயமாகவே இருந்தன.(நூலிலிருந்து பக்.4-5)
ஹோம்ரூல் இயக்கத்தை எதிர்ப்பதேன்?
பிராமணரல்லாதாராகிய நாம் ஹோம்ரூல் இயக்கத்தை ஏன் எதிர்க்கிறோம்? நமக்கும் சீர்திருத்தத்தில் மிக்க அக்கறை உண்டு. ஹோம்ரூல் அல்லது சுயராஜ்யம் நமது லட்சியமாக இருக்க வேண்டுமென்றும், படிப்படியாக அதைப் பெற வேண்டுமென்றும் நாம் கூறுகிறோம். அந்த லட்சியத்தை முன்னிறுத்தி உழைக்க வேண்டுமென்று பிரிட்டிஷாரே நம்மைத் தூண்டி வருகிறார்கள். நாம் நம்பிக்கையோடும், பொறுமையோடும் இடைவிடாது உழைத்தால், நாம் சுயராஜ்யம் பெறுவது உறுதியே. இப்பொழுது சுயராஜ்யம் வழங்கப்பட்டால், பிராமணரல்லாதார் தமது பழைய ஆதரவற்ற அடிமை நிலையை அடையவும், பிரிட்டிஷார் ஸ்தானத்தில் நம்மை அடிமையாக்கிய கூட்டத்தார் அமர்ந்து நம்மை மேலும் நசுக்கவும் நேருமென்று அஞ்சியே நாம் ஹோம்ரூல் கிளர்ச்சியை இப்பொழுது எதிர்க்கிறோம்.
தர்மப் பாதுகாப்பு இயக்கம், மறுமலர்ச்சி இயக்கம், தேசியக் கல்வி இயக்கம் முதலியன ஹோம்ரூல் கிளர்ச்சியைத் தொடர்ந்து தோன்றியிருப்பது, பழைய வர்ணாச்சிரமத்துக்குப் புத்துயிர் அளித்துப் பிராமண ஆதிக்கத்தை வளர்ப்பதற்கே ஆகுமென நான் திட்டமாக நம்புகிறேன். சமய, சமூக, அரசியல் சீர்திருத்த சம்பந்தமாகப் பிராமணர் செய்துவரும் முயற்சிகள் பிராமணீயத்தை நிலைநாட்டுவதற்கே. இத்தருணத்தில் நாம் ஒன்றுபட்டுச் செயலாற்ற முன்வராவிட்டால், நமது செல்வாக்கும், மதிப்பும் ஒழிவது உறுதியென விவேகிகளான நமது தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.
மற்றும், ஹோம்ரூல் கிளர்ச்சியை எதிர்ப்பதற்கு வேறு காரணங்களும் உண்டு. காங்கிரஸ் ஆதிகாலத்தில் மதவாதிகள் ஸ்தாபனமாக இருந்தது. சத்தியாக்கிரகப் பூச்சாண்டி காட்டி அதிகாரிகளைப் பணிய வைக்க அது எண்ணவில்லை. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே காரியங்கள் நடத்தி வந்தது. தாதாபாய் நவுரோஜி, சர்வபிரோஜ்ஷா மேத்தா, கோகலே முதலிய தலைவர்கள் காங்கிரசை நேர்மையாகவே நடத்தி வந்தார்கள். அரசியல் முறைப்படி அது ஒரு பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனமில்லாவிட்டாலும் காங்கிரஸ் வேலைத் திட்டங்களை ஆதரிக்காதவர்களுங்கூட, காங்கிரஸ் நடவடிக்கைகளை வெகு ஆவலுடன் கவனித்தே வந்தார்கள், படிப்பாளிகளைப் பாதிக்கக்கூடிய விஷயங்களைப் பற்றியே காங்கிரஸ் விவாதித்து வந்தது. பாமர மக்களைப் பற்றிய விஷயங்ளையும், சமூக விஷயங்களையும் லட்சியம் செய்யவே இல்லை. இந்தியா சுயராஜ்யம் பெற வேண்டுமானால் ஒடுக்கப்பட்டவர்களும் மற்றும் பின்னணியில் நிற்கும் சமூகங்களும் முன்னேற்றம் அடைந்தே தீரவேண்டும். ஆனால், காங்கிரஸ் இவ்வுண்மையை உணரவேயில்லை. ஆகவே, ஹோம்ரூல் இயக்கம் தோன்றியிருக்காவிட்டாலும், தேசியப் புனருத்தாரணத்துக்காக வேறுவிதமான கருத்துடையவர்களால் பிராமணரல்லாதார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும் தற்கால முறைப்படி முன்னேற்றமடைவது உண்மையான முன்னேற்றமே இல்லை, எல்லாச் சமூகங்களும் முன்னேற்றமடைவதே உண்மையான தேசிய முன்னேற்றம். இதை ஹோம்ரூல் கிளர்ச்சிக்காரர்கள் உணரவே இல்லை.
எல்லாச் சமூகங்களும் சம அந்தஸ்து, சம சந்தர்ப்பங்களும் பெறவேண்டும். நமது இயக்கம் இந்த லட்சியத்தை முன் நிறுத்தியே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த லட்சியம் நிறைவேற வேண்டுமானால், நாம் புரோகிதர் பிடிப்பிலிருந்து விடுதலை அடையவேண்டும். நமது இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கு இதுவும் மற்றொரு காரணமாகும். (நூலிலிருந்து பக்.25-26)
சீர்திருத்தங்கள் :
பனகல் மந்திரி சபை காலத்துச் செய்யப்பெற்ற சீர்திருத்தங்கள் பல, நமது மந்திரிமார் கவனம் செல்லாத இலாக்காக்களே இல்லையென்று சொல்லலாம். பனகல் ராஜா அவர்கள் நிறைவேற்றிய அறநிலையப் பாதுகாப்புச் சட்டமும், சர் பாத்ரோ நிறைவேற்றிய சென்னைச் சர்வ கலா சங்கச் சீர்திருத்தச் சட்டமும், ஆந்திர சர்வகலா சங்கச் சட்டமும் சர் கே வி ரெட்டி நாயுடு நிறைவேற்றிய கைத்தொழிலுக்குச் சர்க்கார் உதவிச் சட்டமும், எந்த மந்திரி சபைக்கும், பெருமையளிக்கக் கூடியனவேயாகும். உத்தியோக மண்டலத்தை இந்தியமயமாக்கவும், ஆயுர்வேத வைத்தியத்தை விருத்தி செய்யவும் பனகல் ராஜா பல ஏற்பாடுகள் செய்து வெற்றி பெற்றார். சென்னையிலே முதன் முதலாக ஓர் இந்திய வைத்தியக் கல்லூரியை ஸ்தாபித்தார். தொழிலாளர், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்துக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டார். சர் பாத்ரோ முயற்சியினால் ஆரம்பக் கல்வி மிகவும் வளர்ச்சியடைந்தது. சர்வ சாதி மாணவர்களுக்கும் கலாசாலைகளில் தடையின்றிப் பிரவேசம் பெறும் பொருட்டுச் செலக்ஷன் போர்டுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தியாவிலே இரட்டையாட்சியைத் திறம்பட நடத்திக் காட்டியதாக நமது எதிரிகளும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். கட்சி சம்பிரதாயப்படி நிர்வாகம் நடத்திய பெருமை ஜஸ்டிஸாருக்கே எனக் காலஞ்சென்ற மாஜி மந்திரி மவுலானா யாகூர்ஹாசன் சேட் கூட வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். (நூலிலிருந்து பக்.63)
நூல் : நீதிக்கட்சி வரலாறு ஆசிரியர் : பண்டித எஸ். முத்துசாமிப்பிள்ளை
வெளியீடு : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, 84/1, பெரியார் திடல், ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 018. தொலைபேசி எண் : 044 – 2661 8163 மின்னஞ்சல் : info@periyar.org
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.