Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 311

சிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 46

அத்தியாயம் ஒன்பது | டியுர்கோ : சிந்தனையாளர், அமைச்சர், மனிதர்

அ.அனிக்கின்

தினாறாம் லுயீயின் கீழ் நிதித்துறைப் பொறுப்பாளராக டியுர்கோ பணியாற்றிய இரண்டு வருடங்களும் புரட்சிக்கு முந்திய பிரான்சின் வரலாற்றில் உணர்ச்சித் துடிப்புள்ள திடீர்த் திருப்பங்களைக் கொண்ட பகுதியாகும். அவர் செய்த சீர்திருத்தங்கள் வெற்றியடையவில்லை. ஏனென்றால் அன்று புரட்சியால் மட்டுமே திருத்தப்படக் கூடியனவற்றை அவர் சீர்திருத்தங்களின் மூலமாகச் செய்ய முனைந்தார்.

அந்த மனிதரிடம் ஏதோ ஒரு விதமான கற்பனாவாதத் தன்மை இருந்தது. உண்மை என்னவென்றால் அவர் இயற்கையிலேயே கற்பனாவாதி அல்ல, ஆனால் சந்தர்ப்பங்களின் நிர்ப்பந்தத்தினால் அவர் அப்படித் தோன்றினார்; அதிகமான அளவில் பகுத்தறிவுக்குப் பொருந்தக்கூடிய கருத்துக்களும் சாமர்த்தியமான நடவடிக்கைகளும் கூட சில சமயங்களில் கோமாளித்தனமாக முடிவதுண்டு. ஆனால் இந்த உதாரணம் இன்னொரு அம்சத்திலும் பொருத்தமானதே. டியுர்கோ தனிப்பட்ட முறையில் அதிகமான ஆன்மிகச் சிறப்பும் எந்த விதிவிலக்கும் இல்லாத உயர்ந்த கோட்பாடுகளும் அபூர்வமான தன்னல மறுப்பும் கொண்டவர். இவை பதினைந்தாம் லுயீ, பதினாறாம் லுயீயின் அரசவைகளுக்குச் சம்பந்தமில்லாத விசித்திரமான குணங்களாகும்.

சிந்தனையாளர்

டியுர்கோ 1727-ம் வருடத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பழைய நார்மன்டிய மேன் மக்கள் குடும்பத்தில் பிறந்தார். அந்தக் குடும்பம் நெடுங்காலமாக அரசுக்குச் சேவை செய்து வந்திருக்கும் மரபைக் கொண்டது. பாரிஸ் நகரத்தில் அவருடைய தகப்பனார் வகித்த பதவி இன்றுள்ள நகராட்சித் தலைவர் அல்லது மேயர் பதவிக்குச் சமமானதாகும். அந்தக் குடும்பத்தில் அவர் மூன்றாவது மகன்; மரபுப்படி அவர் திருச்சபையில் சேர வேண்டும். எனவே அன்றைய நிலைமைகளுக்கு மிகவும் சிறப்பான கல்வியை அவர் கற்றார். சமயக் கல்லூரியில் உயர்ந்த தகுதிகளோடு படிப்பை முடித்துக் கொண்டு பட்டம் பெறுவதற்காக ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே இருபத்து மூன்று வயது நிரம்பிய மதகுரு, ஸோர்போன் பல்கலைக்கழகத்துக்குப் புகழை ஈட்டித் தந்தவர், கத்தோலிக்க சமயத்தின் எழுச்சிச் சுடர் சமயப் பணிகளை மேற்கொள்வதில்லை என்று திடீரென்று முடிவு செய்தார்.

இது முதிர்ச்சியும் சிந்தனைத் தெளிவும் உடைய ஒரு மனிதரின் முடிவு. இந்தக் காலகட்டத்தில் அவர் ஆங்கிலச் சிந்தனையாளர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தார், தத்துவஞான நூல்களைப் படிப்பதில் அதிகமான நேரத்தைச் செலவிட்டார். புற உலகம் முழுவதுமே மனித உணர்வின் படைப்பு என்று கூறிய அகநிலைக் கருத்துமுதல்வாதத்தை மறுத்துக் கூறுகின்ற பல தத்துவ நூல்களை அவர் எழுதினார். அவருடைய திறமையைக் கண்டு அவரது ஆசிரியர்களும் நண்பர்களும் அதிசயித்தார்கள். அவருக்கு ஆறு மொழிகள் நன்றாகத் தெரியும்; பல விஞ்ஞானங்களை ஆராய்ந்து கற்றிருந்தார்; அவருடைய நினைவாற்றல் குறிப்பிடத்தக்கதாகும். அவருக்கு இருபத்திரண்டு வயதாகும் பொழுது, காகிதப் பணத்தைப் பற்றி ஆராய்ச்சி மிக்க புத்தகத்தை எழுதினார், அதில் லோவின் திட்டத்தையும் அதன் குறைபாடுகளையும் பற்றி விமர்சித்தார். எனினும், இந்தக் காலகட்டத்தில் விரிவான தத்துவஞான வரலாற்றுச் சுற்றுவட்டத்திற்குள்ளாகத்தான் அவர் பொருளாதாரப் பிரச்சினைகளில் ஈடுபாடு காட்டினார்.

1752-ம் வருடத்தில் டியுர்கோ சட்ட ஆலோசகர் பதவியையும் பிறகு பாரிஸ் நாடாளுமன்றத்தின் சட்ட இலாகாவின் துணை சபாநாயகர் பதவியையும் வகித்தார். எனினும் பல துறைகளைப் பற்றியும் அவர் தீவிரமாகப் படிப்பதையோ, பாரிஸ் நகரத்தின் அறிவுலக வாழ்க்கை ஒன்று குவிக்கப்பட்டிருந்த வரவேற்புக் கூடங்களுக்குப் போவதையோ அவருடைய பதவிப் பொறுப்புகள் தடை செய்யவில்லை. இளைஞரான டியுர்கோ வெகுசீக்கிரத்திலேயே சமூகத்தின் மேன்மக்களிடையேயும் தத்துவஞானிகள் குழுவினரிடையேயும் அறிவிற்சிறந்தவர் என்று புகழடைந்தார். டிட்ரோ , ட அலம்பேர் மற்றும் அவர்களோடு கலைக்களஞ்சியத்தை உருவாக்குகின்ற பணிகளில் ஈடுபட்டிருந்த உதவியாளர்களிடமும் அவர் நெருங்கிப் பழகினார். கலைக்களஞ்சியத்துக்குத் தத்துவஞான, பொருளாதார விஷயங்களைப் பற்றி சில கட்டுரைகள் எழுதினார்.

Turgot
டியுர்கோ

முற்போக்கான நிர்வாகி என்று புகழ்பெற்ற வென்சான் குர்னே டியுர்கோவின் வாழ்க்கையில் அதிக முக்கியமான பாத்திரத்தை வகித்தார்; அவர் பொருளாதாரத்துறையில் டியுர்கோவுக்கு ஆசிரியரானார். குர்னே-பிஸியோகிராட்டுகளைப் போலன்றி- தொழில்துறையும் வர்த்தகமும் ஒரு நாட்டின் வளத்துக்கு மிக முக்கியமான தோற்றுவாய்கள் என்று கருதினார். எனினும் அவர்களோடு சேர்ந்து குர்னேயும் கைத்தொழிற் குழுக்களின் மீது விதித்த கட்டுப்பாடுகளைக் கண்டித்தார், சுதந்திரமான போட்டியை ஆதரித்தார். நாம் முன்னர் குறிப்பிட்டது போல “சுதந்திர உற்பத்தி, சுதந்திர வர்த்தகம்” என்ற பிரபலமான கருத்தை அவர் கூறியதாகச் சொல்லுவதுண்டு. டியுர்கோ அப்பொழுது சப்ளை இலாகாவின் அதிகாரி பதவியை வகித்த குர்னேயோடு தொழில், வர்த்தகத் துறைகளை மேற்பார்வையிடுவதற்காக மாநிலங்களில் சுற்றுப் பயணம் சென்றார்.

பாரிசுக்குத் திரும்பிய பிறகு குர்னேயோடு கெனேயின் “மாடியறை மன்றத்துக்கு” அவரும் போவதுண்டு; ஆனால் பிஸியோகிராட்டிய மரபினரின் அதிகத் தீவிரமான கருத்துக்களை அதற்கு முன்பாகவே அவர் ஒதுக்கிவிட்டிருந்தார். அவர் கெனேயின் முக்கியமான கருத்துக்கள் சிலவற்றை ஒத்துக் கொண்டார், தனிப்பட்ட முறையிலும் அவரிடம் அதிகமான மரியாதை கொண்டிருந்தார். எனினும் அந்த விஞ்ஞானத்தின் பல துறைகளில் அவர் தனக்கென்று ஒரு தனி வழியைப் பின்பற்றினார். குர்னே 1759-ம் வருடத்தில் மரணமடைந்தார். அவர் மரணமடைந்தவுடனே டியுர்கோ வெளியிட்ட குர்னேக்கு அஞ்சலி என்ற புத்தகத்தில் அவர் காலஞ்சென்ற தன்னுடைய நண்பரின் கருத்துக்களை விளக்கி எழுதியதோடு, தன்னுடைய பொருளாதாரக் கருத்துக்களையும் முதல் தடவையாக முறைப்படி விளக்கி எழுதியிருந்தார்.

1761-ம் வருடத்தில் லிமோஜ் என்ற நகரத்தில் சப்ளை இலாகாவில் அதிகாரியாக டியுர்கோ நியமிக்கப்பட்ட பொழுது அவருடைய விஞ்ஞான, இலக்கியப் பணிகள் தடைபட்டன. அவர் அங்கே பதிமூன்று வருடங்களைக் கழித்தார்; அவ்வப்பொழுது பாரிஸ் நகரத்துக்குப் போய் வருவதுண்டு. மத்திய அரசின் முக்கியமான பிரதிநிதி என்ற முறையில் அந்த மாநிலத்தின் எல்லாப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் சப்ளை இலாகா அதிகாரியே பொறுப்பாக இருந்தார். எனினும் அரசரின் சார்பில் வரிகளை வசூலிப்பது தான் அவருடைய முக்கியமான வேலையாகும்.

அங்கே நிலவிய கடுகடுப்பூட்டும் யதார்த்தத்தைப் பற்றி டியுர்கோ பின்வருமாறு எழுதினார்: “இங்கே எழுதப் படிக்கத் தெரிந்த விவசாயிகள் அநேகமாக யாரும் இல்லை. இவர்களில் அறிவும் நேர்மையும் கொண்டவர்கள் வெகு சிலரே; தங்களுடைய நன்மைக்காகச் செய்யப்படுகின்ற சீர்திருத்தங்களைக் கூட எதிர்க்கும் முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள்”.(1)

ஆனால் டியுர்கோ மனந்தளரவில்லை. அவர் சுறுசுறுப்பானவர்; சுய நம்பிக்கையும் அதிகார தோரணையும் உடையவர் என்று கூட அவரைச் சொல்லலாம். அதிகமான கஷ்டங்கள் இருந்த போதிலும் அந்த மாநிலத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்யத் தொடங்கினார். வரி வசூலிக்கின்ற முறையை சுலபமாக்குவதற்கு முயற்சி செய்தார்; எல்லோராலும் வெறுக்கப்பட்ட கட்டாயமாக சாலை அமைக்கும் முறைக்குப் பதிலாக வேறு முறையைக் கொண்டு வந்தார். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய கூலியுழைப்பின் மூலம் சாலைகளை நன்கு செப்பனிட்டு வைத்திருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்; நல்ல சாலைகளை அமைத்துக் கொடுத்தார்; கால்நடைகளுக்கு வரும் தொத்து நோய்களையும் பயிர்களை அழிக்கும் கிருமிகளையும் ஒழிப்பதற்குத் தீவிரமான இயக்கம் நடத்தினார்; உருளைக் கிழங்கைப் பயிரிடுமாறு செய்தார்; தனக்கும் தன்னுடைய விருந்தினர்களுக்கும் உருளைக் கிழங்கில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தினமும் பரிமாற வேண்டுமென்று தன்னுடைய சமையற்காரனுக்கு உத்தரவு கொடுத்ததன் மூலம் மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்கினார்.

எல்லாவற்றையும் தனிப்பட்ட முன்முயற்சிக்கும் சுதந்திரமான போட்டிக்கும் சம்பவங்களின் இயற்கையான வளர்ச்சிக்கும் விட்டுவிட வேண்டுமென்பது அவருடைய தத்துவமாகும். ஆனால் அந்த மாநிலத்தில் அறுவடைகள் மோசமாகி மக்கள் உணவு இல்லாமல் கஷ்டப்பட்ட பொழுது, இந்த நெருக்கடிகளைத் துணிச்சலாகவும் திறமையாகவும் சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட பொழுது அவர் தம்முடைய தத்துவக் கோட்பாடுகளை ஒதுக்கி வைக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். அவர் முற்போக்கும் இரக்க உணர்ச்சியுமுள்ள நிர்வாக அதிகாரியாக நடந்து கொண்டார். ஆனால் பதினைந்தாம் லுயீ ஆட்சி செய்த காலத்தில் அவரால் அதிகமாகச் செய்ய முடியவில்லை.

படிக்க:
உடல் நல ஆய்வு முடிவுகளை நம்பலாமா ?
♦ பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

அவர் லிமோஜிலிருந்த காலத்திலும் பாரிஸ் நகரத்துக்குப் போகும் பொழுதும் பிஸியோகிராட்டுகளின் வெற்றிகளைக் கூர்ந்து கவனித்தார். அவர் டுபோனோடு நட்புக் கொண்டு பழகினார்; பாரிஸ் நகரத்தில் ஆடம் ஸ்மித்தின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது. எனினும் இந்தக் காலகட்டத்தின் போது அவர் அறிக்கைகளையும் கணக்குகளையும் அதிகாரபூர்வமான குறிப்புகளையும் சுற்றறிக்கைகளையுமே முக்கியமாக எழுதினார். அவருக்கு அபூர்வமாகக் கிடைத்த ஓய்வு நேரத்தில், எதிர்பார்க்கப்படாத பொழுதுகளில் மட்டுமே அவர் தன்னுடைய ஆழ்ந்த படிப்பைத் தொடர முடிந்தது.

ஆகவே 1766-ம் வருடத்தில் அவர் தன்னுடைய முக்கியமான பொருளாதார நூலாகிய செல்வத்தின் தோற்றம் மற்றும் வினியோகம் பற்றிய சிந்தனைகள் என்ற புத்தகத்தை எழுதிய பொழுது அதை ஒரு தற்செயலான சம்பவம் என்றே கூற வேண்டும். அந்தப் புத்தகத்தின் அடிப்படையான கருத்துக்களை வெகு காலத்துக்கு முன்பே அவர் சிந்தித்து முடிவு செய்திருந்தார்; அவற்றில் சிலவற்றை அவர் அரசாங்க ஆவணங்களில் எழுத்து வடிவத்திலும் குறித்து வைத்திருந்தார்.

இந்தப் புத்தகம் அசாதாரணமான வரலாறு உடையது. ஏசு நாதர் சபையைச் சேர்ந்த பாதிரிமார்கள் இரண்டு சீன இளைஞர்களை படிப்பதற்காகப் பிரான்சுக்குக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். நண்பர்களுடைய வேண்டுகோளின் பேரில் அந்த சீன இளைஞர்களுக்காக டியுர்கோ எழுதிய பாடபுத்தகம் அல்லது வழிகாட்டியே இந்தப் புத்தகம். டுபோன் இதை 1769-70-ம் வருடங்களில் வெளியிட்டார். அவர் வழக்கம் போல டியுர்கோவை ஒரு பிஸியோகிராட் என்று காட்டுகின்ற வகையில் அந்தப் புத்தகத்தைத் “திருத்தி” வெளியிட்டார்; அதன் காரணமாக அவர்களிருவருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. 1776-ம் வருடத்தில் டியுர்கோ இந்தப் புத்தகத்தின் மறு பதிப்பைத் தானே வெளியிட்டார்..

அவருடைய சிந்தனைகள் மூதுரை வடிவத்தில் மிகவும் சிறப்பான முறையில் எழுதப்பட்டிருந்தது. அவற்றைப் படிக்கும் பொழுது பெட்டியின் மிகச் சிறந்த எழுத்துக்கள் நம் நினைவுக்கு வருகின்றன. அதில் நூறு சுருக்கமான பொருளாதாரத் தேற்றங்கள், ஆராய்ச்சிக் கருத்துக்கள் இருந்தன (இவற்றில் சில என்றுமே ஒத்துக்கொள்ளப்பட்டவை என்பது உண்மையே). டியுர்கோ எழுதிய தேற்றங்களை மூன்று தனிப் பகுதிகளாகப் பிரிக்க முடியும்.

முதல் தேற்றத்திலிருந்து முப்பத்தொன்றாம் தேற்றம் வரையிலும் டியுர்கோ ஒரு பிஸியோகிராட்டாக, கெனேயின் மாணவராக இருக்கிறார். எனினும் நிகரப் பொருள் என்ற தத்துவத்துக்கு அவர் கொடுக்கின்ற புது அர்த்தம் மார்க்சைப் பின்வருமாறு சொல்லத் தூண்டியது: “டியுர் கோவிடம் பிஸியோகிராட்டிய அமைப்பு மிக அதிகமான அளவுக்கு வளர்ச்சியடைந்தது”,(2) பிஸியோகிராட்டுகளின் அமைப்பின் வளர்ச்சி எனப்படுவது அவர்களுடைய போலியான ஆரம்ப முற்கோள்களல்ல, ஆனால் அந்த அமைப்பின் சுற்றுவட்டத்துக்குள் யதார்த்தத்தை மிக அதிகமான அளவுக்கு விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து விளக்குதலே. டியுர்கோ உபரி மதிப்பைப் புரிந்து கொள்வதை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் – உபரி எனப்படுவது “இயற்கையின் பரிசுத்தமான அன்பளிப்பு” என்பதிலிருந்து மாறி அது விவசாயியின் உழைப்பினால் படைக்கப்படுகிறது; முக்கியமான உற்பத்திச் சாதனமாகிய நிலத்தின் உடைமையாளர் அதைத் தனக்கு ஒதுக்கிவிடுகிறார் என்ற கருத்தை நோக்கி மிக நுட்பமான வகையில் முன்னேறி வருகிறார்.

இதற்கடுத்த பதினேழு தேற்றங்களும் மதிப்பு, விலைகள், பணம் ஆகியவற்றை எடுத்துக் கூறுகின்றன. இந்தப் புத்தகத்திலும் டியுர்கோவின் மற்ற நூல்களிலும் நூறு வருடங்களுக்குப் பிறகு முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அமோகமாகச் செழித்து வளர்ந்த அகநிலைத் தத்துவங்களின் முதல் விதைகளைக் கண்டனர். மொத்த பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தையும் போல டியுர்கோ உழைப்பளவை மதிப்புத் தத்துவத்துக்கு வந்து சேரவில்லை. ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பும் விலையும் தேவைகளுக்கிடையே உள்ள உறவுகளினால், பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற நபர்களுடைய, அதாவது விற்பனையாளர், வாங்குபவருடைய விருப்பங்களின் தீவிரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பது அவருடைய கருத்து. ஆனால் டியுர்கோவின் இத்தகைய கருத்துக்கள் அவருடைய போதனையின் முக்கியமான அம்சங்களோடு அதிகமான தொடர்புடையவை அல்ல.

கடைசியாக வருகின்ற ஐம்பத்திரண்டு தேற்றங்கள் தான் அரசியல் பொருளாதார வரலாற்றில் மிகவும் கௌரவமான இடங்களில் ஒன்றை டியுர்கோ அடைவதற்கு உரிமையைக் கொடுக்கின்றன.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல பிஸியோகிராட்டுகள் சமூகத்தை உற்பத்தி செய்யும் வர்க்கம் (விவசாயிகள்), நில உடைமையாளர்கள், மலட்டு வர்க்கம் (மற்ற எல்லோரும்) என்ற மூன்று வர்க்கங்களாகப் பிரித்தனர். இந்தப் பகுப்பு முறையில் டியுர்கோ கூடுதலாக ஒன்றைச் சிறப்பாகச் சேர்க்கிறார். கடைசியாகச் சொல்லப்பட்ட வர்க்கத்தில் “இரண்டு உட்பிரிவுகள், இரண்டு வகைகள் இருப்பதாகச் சொல்லலாம். பட்டறைத் தொழில் அதிபர்கள், தொழிற்சாலை உடைமையாளர்கள் அதிகமான பணத்தை மூலதனமாக வைத்து அந்த முன்பணத்தைக் கொண்டு தொழிலாளர்களை உழைக்குமாறு செய்து லாபம் தேடுபவர்கள் எல்லோரும் முதல் வகையைச் சேர்ந்தவர்கள். தங்கள் கைகளைத் தவிர வேறு எவ்விதச் சொத்தும் இல்லாத சாதாரணமான தொழிலாளர்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் அன்றாட உழைப்பை மட்டும் தொழிலதிபர்களுக்குக் கொடுத்து கூலியைத் தவிர வேறு எந்த லாபமும் அடையாதவர்கள்.”(3) இந்தத் தொழிலாளர்கள் உயிரோடிருக்கத் தேவையான குறைந்தபட்ச அளவுக்குக் குறைவான கூலியே அவர்களுக்குக் கொடுக்கப்படுவதை டியுர்கோ வேறொரு பகுதியில் எடுத்துரைக்கிறார்.

இதே மாதிரியாக ”விவசாயி வர்க்கத்தினரையும் மலட்டு வர்க்கத்தினரைப் போல இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: தொழிலதிபர்கள் அல்லது முதலாளிகளைப் போல எல்லா முன்பணங்களையும் கொடுப்பவர்கள் ஒரு பிரிவிலும் சாதாரணக் கூலி உழைப்பாளிகள் அடுத்த பிரிவிலும் அடங்குவர்” (4)

கெனேயின் மாதிரிப்படிவத்தில் சமூகம் மூன்று வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது; ஆனால் டியுர்கோ சமூகத்தை ஐந்து வர்க்கங்களாகப் பிரித்தார். இந்த மாதிரிப் படிவம் யதார்த்தத்தை அதிகமாக ஒட்டியிருந்தது. பிஸியோகிராட்டுகளுக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த மூலச் சிறப்புடைய பொருளியலாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக டியுர்கோவின் மாதிரிப் படிவம் இருக்கிறது. மூலச் சிறப்புடைய பொருளியலாளர்கள் உற்பத்திச் சாதனங்களோடு கொண்டிருக்கும் உறவை அடிப்படையாக வைத்து சமூகத்தை நில உடைமையாளர்கள், முதலாளிகள், கூலி உழைப்பாளிகள் என்ற மூன்று முக்கியமான வர்க்கங்களாகப் பிரித்தார்கள். பொருளாதாரம் முழுவதையும் தொழில் துறை, விவசாயம் என்ற பிரிவுகளாக நிறுத்திவிட்டார்கள்; ஆனால் டியுர்கோ அவ்வாறு செய்யத் துணியவில்லை.

படிக்க:
நூல் அறிமுகம் : உபரி மதிப்பு என்றால் என்ன ?
♦ மூலதனம் நூலின் அனைத்து பாகங்களும் – PDF வடிவில் !

அவர் மூலதனத்தைப் பற்றிச் செய்த ஆராய்ச்சி அவருடைய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்றாகும். இது கெனே செய்த ஆராய்ச்சியைக் காட்டிலும் ஆழமானது, பலன் கொடுப்பது. மூலதனம் என்பது இயற்கையான வடிவங்களிலுள்ள பலவிதமான முன்பணங்களின் (மூலப் பொருள், கூலி, இதரவை) மொத்தம் என்று தான் கெனே பிரதானமாகக் கருதினார்; ஏனென்றால் அவரிடம் சமூகத்திலுள்ள வர்க்கங்களுக்கிடையே பொருளை வினியோகித்தல் பற்றிய பிரச்சினையோடு மூலதனம் போதுமான அளவுக்கு நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கவில்லை. கெனேயின் அமைப்பில் லாபத்துக்கென்று இடம் கிடையாது; அவருடைய முதலாளி “நிர்வாகம் செய்ததற்காகக் கூலி வாங்கிக் கொண்டார்” என்று சொல்லப்பட்டது; ஆனால் இந்தக் ‘கூலியை’ நிர்ணயிக்கின்ற விதிகள் எவை என்பதைக் கெனே ஆராயவில்லை.

இங்கு தான் டியுர்கோ பெரிய அளவுக்கு முன்னேறிச் செல்கிறார். அவரால் “லாபம்” என்ற இனம் இல்லாமல் சமாளிக்க முடியவில்லை; இயல்பான அறிவுத்திறத்தோடு தொழில் முதலாளியிடமிருந்து தம்முடைய ஆராய்ச்சியைத் தொடங்குகிறார். இங்கே லாபம் எப்படித் தோன்றுகிறது என்பது மிக வெளிப்படையாகத் தெரிகிறது, ஏனென்றால் ”எல்லா உபரியுமே நிலத்திலிருந்துதான் வருகிறது” என்ற பிஸியோகிராட்டுகளின் தவறான எண்ணம் பிரச்சினையை மறைக்கவில்லை.

டியுர்கோ என்ற பிஸியோகிராட் ”இயற்கையான வரிசை முறையை மாற்றுவதற்கு” முன்னேறுகிறார், விவசாயத்தை இரண்டாவதாக மட்டுமே எடுத்துக் கொள்கிறார். ஆனால் அதற்காக அவர் மன்னிப்புக் கோருவது விந்தையானதே. ஏனென்றால் அவர் மன்னிப்புக் கோருவது அவசியமல்ல. இதற்கு மாறாக அவருடைய வாதம் மிகச் சரியானது. கூலி விவசாயிகளை உபயோகிக்கும் முதலாளித்துவ விவசாயி, தொழிற்சாலை உடைமையாளரைப் போலவே தன்னுடைய மூலதனத்தின் பேரில் அதே அளவு லாபமாவது பெற வேண்டும். இதோடு, நிலவுடைமையாளருக்கு வாரம் என்ற வகையில் கொடுப்பதற்காகச் சிறிதளவு உபரியும் சேர வேண்டும்.

இதில் மிகவும் வியப்பைத் தருவது அறுபத்திரண்டாவது தேற்றமே. உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் மூலதனம் சுய வளர்ச்சிக்கான திறமையைப் பெற்றிருக்கிறது. இந்த சுய வளர்ச்சியின் அளவை, அளவு விகிதத்தை நிர்ணயிப்பது எது?

மூலதனத்தினால் (உண்மையைச் சொல்வதென்றால் சம்பந்தப்பட்ட மூலதனத்தால் சுரண்டப்படுகிற உழைப்பினால்) படைக்கப்பட்ட பொருளின் மதிப்பு எதிலடங்கியிருக்கிறது என்பதை விளக்குவதற்கு டியுர்கோ முயற்சிகளைச் செய்கிறார். முதலாவதாக, தொழிலாளர்களின் கூலிகளையும் சேர்த்து ஏற்பட்டிருக்கும் மூல தனச் செலவை உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பு ஈடு செய்கிறது.(5) மற்றவை (அடிப்படையில் உபரி மதிப்பு) மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

அந்தப் பண மூலதனத்தின் உடைமையாளர் என்ற வகையில் முதலாளி ”எத்தகைய சிரமமும் இல்லாமல்” பெறக் கூடிய வருமானத்துக்குச் சமமாக இருக்கின்ற லாபம் முதற் பகுதியாகும். இது லாபத்தில் கடன் வட்டிக்குச் சரியாக வருகின்ற பகுதியாகும். தொழிற்சாலையில் அல்லது நிலத்தில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்கின்ற முதலாளியின் “உழைப்பு, அபாய நேர்வு, திறமை” ஆகியவற்றுக்குத் தரப்படும் கூலி லாபத்தின் இரண்டாம் பகுதியாகும். இது தொழிலூக்கத்தின் வருமானமாகும். ஆகவே டியுர்கோ தொழில்துறை லாபத்தில் ஒரு பிரிவைக் காண்கிறார் – பணத்தை கடனாகக் கொடுக்கும் முதலாளிக்கும் நிர்வாகம் புரிகின்ற முதலாளிக்கும் இடை யில் அந்தப் பிரிவினை உள்ளது.

நிலவாரம் மூன்றாவது பகுதியாகும். இது விவசாயத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் மூலதனத்துக்கு மட்டுமே இருப்பது. இந்த ஆராய்ச்சி பொருளாதார விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் ஒரு முன்னேற்றம் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் டியுர்கோ உடனே அதை விட்டு விலகிப் போய்விடுகிறார். லாபம் என்பது உபரி மதிப்பின் பிரதானமான, பொதுமையான வடிவம்; வட்டி, வாரம் ஆகிய இரண்டுமே அதிலிருந்து தான் கிடைக்கப் பெறுகின்றன என்ற சரியான கருத்தை விட்டுப் போய்விடுகிறார். முதலில் அவர் லாபத்தை வட்டி என்று வகைப்படுத்துகிறார்; குறைந்த பட்சமாக இதைப் பெறுவதற்கு ஒவ்வொரு முதலாளிக்கும் உரிமை உண்டு என்கிறார். தன்னுடைய நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக தொழிற்சாலையின் புகைக்கும் வியர்வைக்கும் நெருப்பைப் போல எரிக்கும் வெய்யிலில் நடுவே சென்று தன்னுடைய தொழிலாளிகளை மேற்பார்வை செய்வதற்கு அவருக்குக் கொஞ்சம் கூடுதலாகவே கொடுக்க வேண்டும், விசேஷமான கூலி கொடுக்க வேண்டும். வட்டி, அதன் பங்குக்கு, நிலவாரமாக வகைப் படுத்தப்படுகிறது; ஏனென்றால் மூலதனத்தைக் கொண்டு ஒரு வயலை விலைக்கு வாங்கி அதைக் குத்தகைக்கு விடுவது தான் சுலபமாகச் செய்யக்கூடியதாகும். எனவே இப்பொழுது உபரி மதிப்பின் முக்கியமான வடிவம் நிலவாரமே, மற்றவை எல்லாம் அதிலிருந்து கிடைப்பவை மட்டுமே. மேலும் சமூகம் முழுவதுமே நிலத்திலிருந்து மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்ற “கூலிகளைக் கொண்டு உயிர்வாழ்கிறது”, டியுர்கோ இப்பொழுது பிஸியோகிராட்டுகளின் மடிக்குத் திரும்பிவிடுகிறார்.

மாபெரும் சிந்தனையாளர்களின் தவறுகளும் கூட முக்கியமானவை, அவை பலன் தருபவை என்பது நமக்குத் தெரியும். இது டியுர்கோவுக்கும் பொருந்துகின்றது. வெவ்வேறு வகையான மூலதன முதலீடுகளை ஆராய்கின்ற பொழுது அவர் மூலதனங்களின் போட்டி என்ற முக்கியமான பிரச்சினையை எழுப்புகிறார்; ஒரு முதலீட்டுத் துறையிலிருந்து வேறொரு துறைக்கு மூலதனத்தை மாற்றக்கூடிய சாத்தியத்தின் காரணமாக, லாபம் இயற்கையிலேயே சரி மட்டத்தை அடைவதைப் பற்றிய பிரச்சினையை எழுப்புகிறார். அடுத்தபடியாக, இந்தப் பிரச்சினைகளின் தீர்வுக்கு முக்கியமான அடி எடுத்து வைப்பவர் டேவிட் ரிக்கார்டோ. பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இத்தகைய தேடல்கள் படிப்படியாக முன்னேறி மார்க்ஸ் காட்டுகின்ற தீர்வை அடைந்தன. அவருடைய மூலதனம் என்ற நூலின் மூன்றாவது புத்தகத்தில் லாபம் மற்றும் உற்பத்தி விலையின் தத்துவத்திலும் கடன் மூலதனம் மற்றும் வட்டியின் தத்துவத்திலும் நிலவாரத்தைப் பற்றிய தத்துவத்திலும் அவர் இந்தத் தீர்வை எழுதியிருக்கிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) D. Dakin, Turgot and the Ancien Regime in France, N.-Y., 1965, பக்கம் 37ல் இந்த மேற்கோள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

(2) K. Marx, Theories of Surplus-Value, Part I, p. 54.

(3) Turgot, Textes choisis et preface par Pierre Vigreux, Paris, 1947, p. 112.

(4) Ibid., p. 114.. 

(5) பொருளின் மதிப்பில் எதிர்பாராத செலவுகளுக்காக (கால்நடை நோய் முதலியன) ஒதுக்கிவைக்க வேண்டிய காப்புத் தொகையை டியுர்கோ விசேஷமாகக் குறிப்பிடுகிறார்.

 

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை | காணொளி

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் குற்றமிழைத்தவர்களுக்கே நிலத்தை வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த 30.11.2019 அன்று சென்னை சேப்பாக்கத்தில் அரங்கக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அந்த நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி !

ஆளூர் ஷாநவாஸ் உரை :

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உரை :

பாருங்கள் ! பகிருங்கள் !

மேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க ?

6

“கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாமாய் இறந்தனர்” – என்கின்றன பத்திரிகை செய்திகள். ஆனால், இது வெறுமனே இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட விபத்து மரணம் அல்ல. அரசு நிர்வாகமும், உள்ளூர் சாதி வெறியர்களும் கைகோர்த்துக் கொண்டு நிகழ்த்திய பச்சைப் படுகொலைகள் இவை. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த  நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் அருந்ததிய மக்களின் குடியிருப்புகள் உள்ளன.

பல்லாண்டுகளாக அருந்ததியின மக்கள் வசித்து வந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள நிலத்தில் கூட்டுறவு சங்கம் ஒன்று லே-அவுட் போட்டது. இந்த லே-அவுட்டில் பெரும் பணக்காரர்கள் நிலம் வாங்கி வீடுகட்டினர். நடூர் மக்கள் தலித்துகளாகவும் ஏழைகளாகவும் இருந்ததால் அவர்கள் தங்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது. அவர்கள் யாரும் தங்களது லே-அவுட்டின் சாலையைப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே சுமார் 100 அடி நீளத்திலும், 20 அடி உயரத்திலும் இந்த தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு தங்கள் வசிப்பிடத்தை பெரும் மதில் சுவரின் மூலம் தனிமைப்படுத்திக் கொள்ள ஒன்று தனியார் டவுன்ஷிப்பாகவோ அல்லது கேட்டட் கம்யூனிட்டியாகவோ இருக்க வேண்டும் – அதற்கும் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த லே-அவுட் அப்படியான அனுமதியைப் பெறவில்லை. லேஅவுட்களில் உள்ள மனைகள் விற்றுத் தீர்ந்தவுடன், சாலைகளை அரசின் வசம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது விதி – ஆனால் இங்கே பெரும் மதில் சுவர் அமைத்து தடுத்துள்ளனர். அதே போல், மதில் சுவர்கள் ஆறரை அடி உயரம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி – இதுவும் மீறப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த சுவரின் மறுபக்கமாக சக்கரவர்த்தி துகில் மாளிகை என்கிற பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியனுக்கு 22 செண்ட் நிலத்தில் பெரிய சொகுசு பங்களா உள்ளது. தீண்டாமைச் சுவர் அனுமதியின்றி 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டதோடு, அதனைத் தாங்கிப்பிடிக்க கான்க்ரீட் பீம்களும் இல்லாமல் இருந்துள்ளது. ஏற்கனவே மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அருந்ததிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சுவரை ஒட்டிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்று வந்துள்ளது. மழை நீர் தேங்குவதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால் சுவரின் கட்டுமானம் பலவீனமாவது போன்ற காரணங்களால் சுவர் விழுந்து விடும் என மக்கள் அஞ்சியுள்ளனர். எனவே இச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி அரசிடம் மனு அளித்துள்ளனர்.

படிக்க:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
♦ தலித் இளைஞர் மீது கொங்கு சாதியினரின் கொலைவெறி தாக்குதல் !

அதே போல் அந்த சுவர் ஆதிக்க சாதித் திமிரில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் என்பதையும் அருந்ததிய மக்கள் சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பலமுறை புகாரளித்துள்ளனர். இந்த காரணங்களுக்காக மேற்படி சுவரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். எனினும், மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பெய்து வரும் தொடர் மழை கோவை மாவட்டத்திலும் அடர்த்தியாக பெய்து வந்தது. பல ஆண்டுகளாக மழை பெய்து தண்ணீர் தேங்கி பலகீனமாய் இருந்த சுவர் இந்த மழைக்கு தாக்குப்பிடிக்கவில்லை. திங்கட்கிழமை (02/12/2019) அதிகாலை மூன்று மணிக்கு மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்தது.  இதில் அருந்ததிய மக்களின் குடியிருப்பைச் சேர்ந்த நான்கு வீடுகளை முற்றிலும் சுவரின் இடிபாடுகள் மூடிக் கொண்டது. அந்த வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்ளிட்டு 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகினர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டு தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரத்தோடு வந்து இடிபாடுகளை அகற்றி பிணங்களையே கைப்பற்றினர். சக்ரவர்த்தி துகில் மாளிகையின் முதலாளி மனம் கோணி விடக்கூடாது என்கிற “நல்ல” நோக்கத்தில் அதிகாரிகள் நடந்து கொண்டதன் விளைவு அப்பாவி மக்களின் உயிர் பலிகள். குரு (45), அரிசுதா (16), ராமநாதன் (20), அட்சயா(7), லோகுராம் (7), ஓவியம் மாள் (50), நதியா (30), சிவகாமி (50), நிவேதா (20), வைதேகி (22), ஆனந்தகுமார் (46), திலாகவதி (50), அருக்காணி (55), ருக்குமணி (40), சின்னம்மாள் (70) என 11 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள், மூன்று ஆண்கள் பலியாகியுள்ளனர். மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போராடுபவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் போலீசு.

இதையடுத்து ஊட்டி நெடுஞ்சாலையில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்துக்கு காரணமான சக்ரவர்த்தி துகில் மாளிகையின் முதலாளியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் விபத்தை ஆய்வு செய்ய வந்த ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ. சின்னராஜ் ஆகியோர் போராடும் மக்களால் முற்றுகையிடப்பட்டனர். ஏற்கெனவே கோரிக்கை வைத்த சமயத்திலும் அவற்றைப் புறக்கணித்த அதிகாரிகள் தற்போது மழைக் காலம் என தெரிந்தும் பலகீனமாய் இருந்த சுவரை அகற்ற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் அவரது தோழர்களை அடித்தே இழுத்துச் சென்று கைது செய்துள்ளது போலீசு. கோகுல்ராஜ்  படுகொலையில் சம்பந்தப்பட்ட யுவராஜை பயபக்தியோடு அழைத்து வரும் ‘காவல்துறை’, அநீதியாய்க் கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு போராடிய மக்களின் மீது கொலை வெறித் தாக்குதல் செய்துள்ளது.

இந்துக்களுக்காகவே அரசியல் செய்வதாய் சொல்லிக் கொள்ளும் பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் இறந்து போன இந்துக்களுக்கு நியாயம் கிடைக்க இதுவரை எந்த போராட்டமும் அறிவிக்கவில்லை – வாயே திறக்கவில்லை. இந்து புராணங்களில் உள்ள கதைகள் குறித்து ஒரு கூட்டத்தில் பேசினார் இதே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காரப்பன் சில்க்ஸ் என்கிற கடையின் முதலாளி. அப்போது காரப்பன் சில்க்சை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர் சங்கிகள் – இப்போது இறந்து போன ‘இந்துக்களுக்காக’ சக்ரவர்த்தி துகில் மாளிகையை புறக்கணிக்க வேண்டும் என ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை?

படிக்க:
கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?
♦ பயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !

தலித்தை ஆதிக்க சாதி அடிக்கும் போது ஆதிக்க சாதிக்கு ஆதரவு; கவுண்டர், வன்னியர், நாடார், தேவர் போன்ற ‘ஆதிக்க’ சாதியினரைப் பார்த்து “சூத்திரப்பயலே கருவறைக்கு வெளியே நில்லடா” என்று பார்ப்பான் சொல்லும் போது பார்ப்பானுக்கு ஆதரவு என்பதுதான் இந்துத்துவ அரசியல். இதை மீண்டும் ஒரு முறை தங்களது 17 உயிர்களைக் கொடுத்து நிரூபித்துள்ளனர் நடூர் மக்கள்.

***

வ்வொரு முறை தீண்டாமைச் சுவர் குறித்த செய்திகள் வெளியாகி கடும் போராட்டங்களுக்குப் பின் அது இடிக்கப்பட்ட பின் இதுவே கடைசி தீண்டாமைச் சுவராக இருக்கும் என நமக்கெல்லாம் ஒரு சுயதிருப்தி ஏற்பட்டு விடுகிறது. ஆனால், அந்த சுயதிருப்தியின் மீது திரும்பத் திரும்ப அமிலத்தைக் கொட்டுகின்றது சாதி வெறி. மீண்டும் ஒரு முறை போராட்டம் – மீண்டும் ஒரு முறை சுவர் தகர்ப்பு – மீண்டும் மற்றொரு சுவர் கண்டுபிடிப்பு – என்கிற இந்த நிகழ்ச்சிப் போக்கு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

மந்தமாய்ப் போன நமது செக்குமாட்டுச் செயல்பாடுகளின் விளைவாய் 17 உயிர்கள் பறிபோய் உள்ளன. சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை எதார்த்தத்தில் இது போல் இன்னும் நாம் அறியாத இடங்களில் உள்ள தீண்டாமைச் சுவர்கள் குறித்த ஒரு பட்டியலை உருவாக்கி அனைத்துக்கும் எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் நமது மனசாட்சியை உலுக்கி தட்டியெழுப்ப சில உயிர்கள் பலி கொடுக்கப்பட வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள பெரியாரியவாதிகள், அம்பேத்கரிஸ்டுகள், மார்க்சியவாதிகள் உள்ளிட்ட முற்போக்கு ஜனநாயக சக்திகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

சாக்கியன்

திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்

அனுப்புதல்
சு.ஜிம்ராஜ் மில்டன், வழக்கறிஞர்,
த.பார்வேந்தன், வழக்கறிஞர்,
கோ.பாவேந்தன், வழக்கறிஞர்.

பெறுதல்
காவல் ஆணையர் அவர்கள்,
சென்னை மாநகர காவல்துறை,
சென்னை மாநகர காவல் ஆணையரகம்,
வேப்பேரி, சென்னை – 600 006

மதிப்பிற்குரிய அய்யா,

பொருள் : துக்ளக் பத்திரிக்கை நடத்துவது என்ற பெயரில் சட்டவிரோத, தேசத்துரோக, சமூக விரோத, திரைமறைவு வேலைகளைச் செய்யும் திரு.குருமூர்த்தி என்பவர் மீது புகார் கொடுப்பது தொடர்பாக…

♦♦♦

ணக்கம், நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில்புரிந்து வருகின்றோம். எனக்கு whatsapp மூலமாக நேற்று (28.11.2019) காலை திரு குருமூர்த்தி என்பவர் பேசியதாக 45 நொடிகள் கால அளவு கொண்ட வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில் மேற்படி திரு குருமூர்த்தி, தற்போதைய தமிழக துணை முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களை, தான் ”நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க” என்று கேட்டதாக தெரிவித்து பேசியிருந்தார். இதுபற்றி அறிந்து கொள்ள நேற்று (28.11.2019) மாலை youtube-ல் பார்த்த போது மேற்படி திரு குருமூர்த்தி, திருச்சியில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கையின் விழாவில் பேசிய 27 நிமிட வீடியோ இருந்தது. மேற்படி வீடியோவில் திரு குருமூர்த்தி பேசியதன் சாரம்சம் பின்வருமாறு;

”சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்தபொழுது ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் வந்தார். என்னை விழா மேடையில் துப்புரவு பணிகளை சூபர்வைஸ் செய்யச் சொல்லி அவமானப்படுத்துகிறார்கள்; அதிமுகவில் இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்ன பொழுது அவரிடம் நான் கூறியதை அப்படியே கூற முடியாது. நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன். அதன் பிறகு போ போய் அந்த அம்மா சமாதியில் தியானம் செய் என்றேன். நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். அதன்பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. ஒரு மாற்றம் ஏற்பட்டது.”

”பிரிந்த அதிமுகவை ஒருங்கிணைத்தேன்…”

”எடப்பாடி பழனிச்சாமியின் இந்த ஆட்சி பாவமான, தவறான ஆட்சி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. பா.ஜ.க-விடம் எனக்கு செல்வாக்கு இருப்பதால், அவர்களிடம் சொல்லி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என இங்குள்ளவர்கள் பேசினார்கள்.”

கும்பகோணத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் உரையாற்றும் குருமூர்த்தி.

“அரசியல் சாசனப்படி இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தால், அடுத்த 6 மாதத்திற்குள் தமிழகத்தை மாற்றிவிட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.”

“அதிமுக-வை டிஸ்மிஸ் செய்தபின்பு நிச்சயம் பா.ஜ.க-வால் ஆட்சிக்கு வர முடியாது. அதே நேரம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது?” – என்று பேசியுள்ளார்.

மேற்படி திரு குருமூர்த்தியின் பேச்சில், தான் நினைத்தால் தனது செல்வாக்கின் மூலம் அரசியலமைப்பு உறுப்பு 356-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தின் மூலம் தமிழக அரசினை கலைக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த நபர் என்பதையும், அதிமுக கட்சியில் சாதாரண உறுப்பினராகக்கூட இல்லாவிட்டாலும் பிரிந்திருந்த அந்தக்கட்சியினை இணைக்கு அளவிற்கு அதிகார மையமாக செயல்படுவதாகவும், தமிழகத்தின் முதல்வரே தன்னிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு செல்வாக்கு பெற்றுள்ளதுடன், அவ்வாறு ஆலோசனை கேட்க வந்தவரை ”நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க” என்று ’உரிமையுடன்’ கூறும் அளவிற்கு நெருக்கமும், அதிகாரமும் படைத்தவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது மேற்கண்ட அரசியல் தரகு, திரைமறைவு வேலைகளைப் பற்றியும், தமிழக முதலமைச்சரையே ”நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க” என்று பேசுவதையும் மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆர்ப்பரித்து கைதட்டுகின்றனர்.

அரசியல் தரகர் குருமூர்த்தி.

திரு குருமூர்த்தி, தன்னை ஒரு அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், ஆடிட்டர், தற்போது துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் என்பதாக தமிழக மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தினை ஏற்படுத்திக் கொண்டு அதிகார மையமாக திரைமறைவு வேலைகளைச் செய்து வருபவர் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாகவே தெரிவித்துள்ளார். குறிப்பாக திரு குருமூர்த்தியின் ஆலோசனையின் பேரில் திரு ஓ.பன்னீர் செல்வம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ’தியானம் செய்ததும்’; அதிமுக கட்சியிலிருந்து வெளியேறியதும்; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததும்; அதன் பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்ததும்; இதற்கிடையே ஆளுநர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது ஆளுநரின் செயலர் சட்டப்படி செய்ய வேண்டிய நடைமுறைகளை செய்யாமல் தாமதப்படுத்தியதும் ஆகியனவற்றின் பின்னணியில் தான் இருந்தது அவரது பேச்சின் மூலமாகவே பகுதியாக அம்பலமாகியுள்ளது.

திரு குருமூர்த்தி மேற்படியான சட்டவிரோத, திரைமறைவு நடவடிக்கைகள், ஆளுநரின் நேரடியான அதிகாரத்தில் தலையீடு செய்வதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை திரைமறைவு சதிச்செயல்கள் மூலம் தூக்கியெறிய முயற்சிப்பதும், அப்போதைய தமிழகத்தின் முதல்வரை ஆபாசமாக பேசுவதுமான குற்றச்செயல்களாகும்.

படிக்க:
சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !
இஸ்லாமோபோபியா : பாயல் தாத்வி – பாத்திமா லத்தீஃப் மரணத்தின் பொது அடையாளம் !

ஏற்கனவே சென்னை மாநகர சைபர் க்ரைம் பிரிவினரால் சாராயத்தை எதிர்த்து பாடல் பாடியதற்காக திருச்சியைச் சேர்ந்த கோவன் என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124A-ன் கீழும், தமிழக ஆளுநரைப் பற்றி நக்கீரன் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் திரு கோபால் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124A-ன் கீழும் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றுடன் ஒப்பிடும் போது திரு குருமூர்த்தியின் குற்றச்செயல்கள் தீவிரத்தனமையும், மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும். துக்ளக் பத்திரிக்கை நடத்துவதாக கூறிக்கொண்டு, அதன் ஆசிரியர் என்ற பெயரில் சட்டவிரோத, தேசத்துரோக, சமூக விரோத, திரைமறைவு வேலைகளைச் செய்யும் திரு குருமூர்த்தியின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், உரிய விசாரணை நடத்தி துக்ளக் பத்திரிக்கையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மேற்படி குற்றச்செயல்களில் அவருடன் உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,
சு.ஜிம்ராஜ் மில்டன், வழக்கறிஞர்,
த.பார்வேந்தன், வழக்கறிஞர்,
கோ.பாவேந்தன், வழக்கறிஞர்.

நாள் : 29.11.2019,
இடம் : சென்னை.


தகவல் : வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன்,
தொடர்புக்கு : 9962366320
மின்னஞ்சல் : chennaiprpc@gmail.com

நூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா

9-2-1943 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்குச் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில் ஆரியச் சுவடிகளான கம்ப இராமாயணம், பெரிய புராணம் பற்றிய ஓர் உரையாடல் (டிபேட்) நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்துமத பரிபாலன நிலையத் தலைவர் தோழர் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார், பி.ஏ., ஆர்.பி.எல்., அவர்கள் தலைமை வகித்தார். உரையாடலில் தோழர்கள் சி.என். அண்ணாதுரை எம்.ஏ., ஈழத்தடிகள் பி.ஏ., பி. சேதுப்பிள்ளை பி.ஏ.,பி.எல்., சீனிவாசன் ஆகியவர்கள் கலந்துகொண்டு தத்தம் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.

கூட்டத்தைப்பற்றிய எவ்விதமான விளம்பரமும் செய்யப்படவில்லை என்றபோதிலும், மக்கள் திரளாக வந்து குழுமியிருந்தனர். தன் மதிப்பு இயக்கத் தோழர்கள் நூற்றுக்கணக்கானவர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், புலவர்களும், தாய்மார்கள் பலரும் மண்டபம் நிறையக் குழுமியிருந்தனர்.

சட்டக்கல்லூரித் தமிழ்க் கழக அமைச்சர் தோழர் வேணுகோபாலன், தலைவரைப் பிரேரேபிக்கையில் “பெரியோர்களே! தமிழருக்குச் செல்வம் போன்ற கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூற்களைக் கொளுத்த வேண்டும்; அல்லது அழிக்க வேண்டும் என்று பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் கூறியது கேட்டு தமிழ் மக்கள் கோபம் கொள்வது இயற்கை. ஆனால் சுயமரியாதைக்காரர்களின் தீர்மானத்தைப் புறக்கணிப்பது கூடாது. ஆகவே, அதுபற்றி அவர்களின் கருத்தை அறியத் தோழர் சி.என். அண்ணாதுரை அவர்களை அழைத்துள்ளோம். அவர் இந்திரசித்துக்குச் சமம் என்று கூறுவேன். அவருரையை மறுத்துப் பேசத் திருவாளர் சேதுப்பிள்ளை அவர்கள் இராமபிரான் போல் வந்திருக்கிறார்கள். இதற்கு நடுநிலைமையாளராக இருக்க, ஜனக மகாராஜனைப்போல உயர்திரு இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் வந்திருக்கிறார்கள். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்கவேண்டுமென விழைகின்றேன் என்று கூறினார். (நூலிலிருந்து பக்.5-6)

கலையை அழிக்கின்றனர், கம்பன் புகழை மறைக்கின்றனர் என்று கூறப்படும் பழிச்சொல்லை நாங்களறிவோம். கலையிலே தேர்ந்து, அதிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, கம்பனின் இராமாயணமும், சேக்கிழாரின் பெரிய புராணமும் கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் பேரால், ஓர் அண்ணாதுரையின் அனலால் அக்கலை அழிந்துவிடும் என்று கருதுவரேல் அவ்வளவு சாமான்யமானது கலையாகாது. அத்தகைய கலை இருத்தலுமாகாது என்றுரைக்க ஆசைப்படுகின்றேன். கலையைக் குலைக்கும் செயலல்ல எமது செயல். கலையிலே புரட்சி உண்டாக்க விழைகின்றோம்…. தக்க காரணங்களோடு.

கலை ஓர் இன மக்களின் மனப்பண்பு. இவ்வின மக்களிடையே தோன்றும் தெளிவு, வீரம் ஆகியவற்றின் எடுத்துக்காட்டு. எனவே, கலை இன வளர்ச்சிக்கு ஏற்றபடி மாறியும் விரிந்தும் வருமென்பதே நுண்ணறிவினரின் துணிபு. கலை உலகில், அவ்வப்போது மாறுதல் உண்டாகும். இனத்துக்கோர் கலையும், இடத்தின் இயல்பு, தட்பவெப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற முறையிலும், கலை உண்டாகும், வளரும், மாறும்.

அரபு நாட்டுக் கலையிலே, தென்றலைப்பற்றிய கவிதைகள் அதிகமிருக்க முடியாது. எஸ்கிமோ நாட்டுக் கலையிலே, கதிரோனின் ஒளி பற்றிய கவிகள் அதிகமிராது. ஆப்பிரிக்கா நாட்டு ஜூலு வகுப்பினரின் கலையிலே, அவர்களின் நாட்டியம் கவியிலே இருக்கும், அதுபோலவே ஆரியக் கலையிலே கங்கையின் கவர்ச்சியும், கரையோரக் காட்சியும் சோலை மாட்சியும் என்பன போன்றவைகள் கவிதைகளாக – இலக்கியமாக இருக்கும்.

இந்தியா என்ற இந்த உபகண்டம், பல இனங்கள் வசிக்கும் இடம். ஆகவே இங்கு பல கலைகள் உண்டு. இனத்திற்கோர் கலை என்றுண்டு. எனினும் இரு பெரும் கலைகள் இங்குள்ளன என்று அறிவாளிகள் கூறியுள்ளனர். ஆரியக் கலை ஒன்று; திராவிடக் கலை பிறிதொன்று. இடத்திற்கோர் கலை உண்டென்றும், இனத்திற்கோர் கலை உண்டென்றும் கூறினேன். அவை ஒன்றை ஒன்று தழுவாவிடினும், மோதிக் கொள்ளாமல் இருத்தலுண்டு, அவை தனித்தனி அமைப்புப் பெற்றுத் திகழ்வதால், இந்துக்கலை என்று கூறப்படுவதும், இஸ்லாமியக் கலை என்று கூறப்படுவதும் வேறு வேறு. எனினும் அவை ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாதபடி தனித்தனி அமைப்புக்களாகி விட்டன.

ஆனால், ஆரியக்கலையும் திராவிடக் கலையும் அப்படியின்றி, ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும், மோதிக்கொள்வதாகவும் இருத்தலை, அறிஞர் ஒப்புக் கொள்கின்றனர். இந்நிலையின் பயனாகத் திராவிடர் கலைமீதும், சட்ட திட்டங்கள் மீதும், ஆரியம் ஆதிக்கம் செலுத்தலாயிற்று. இக்கல்லூரியில் பன்னெடு நாட்களுக்கு முன்பு இருந்தவரும், சட்ட நிபுணருமான மிஸ்டர் நெல்சன் என்பார், இந்து சட்டம் என்பது ஆரியர்களின் மனு, பராசரர், யாக்ஞவல்கியர் ஆகியோரின் நூற்களின் அடிப்படைகளின் மீது அமைக்கப்பட்டிருப்பதாலும், தென்னாட்டு மக்களில் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் ஆரியரல்லாதார் ஆகையினாலும், அவர்கள் மீது இந்து சட்டத்தைத் திணிப்பது தவறு என்று எடுத்துக் காட்டினார். அவரது பேச்சு, காட்டுக் கூச்சலாகி விட்டது. இந்த சட்டமே, ஆரிய நீதியே இன்று நம்மை ஆள்கிறது. தமிழருக்குத் தேவை வளமை போன்ற சட்டமோ அல்லது குறள் நீதியோ இன்று இல்லை. ஆரியமே சட்டத்தை ஆள்கிறது. கலையிலே, ஆரியத்தை ஆதிக்கம் செய்யவிட்டதனால், நாம் கண்ட பலன் இதுவென்றுரைக்க ஆசைப்படுகின்றேன். (நூலிலிருந்து பக்.7-9)

படிக்க :
சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !

ஆரிய கலை வேறு, திராவிட கலை வேறு. ஆரியக் கலை நம்பொணாக் கருத்துக்களும் ஆபாசமும் நிரம்பியதுடன், திராவிட இனத்தை அடக்கவும் பண்பை அழிக்கவும் பயன்பட்டுப் பாமரரின் மனத்தைப் பாழாக்குகிறது என்ற குற்றச் சாட்டுகளைக் கூறிக் கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கண்டிக்கிறோம். கொளுத்துக என்று கூறுகிறோம். இவைகட்குச் சேதுப்பிள்ளை சமாதானம் கூறிய பின், எனது மறுப்புரை கூறும் சந்தர்ப்பம் கிடைக்குமென்று நம்புகிறேன். பண்டிதர்கள் எங்களைப்பற்றித் தவறாக எண்ணி வருவது சரியல்ல. அவர்களுக்கு நாங்களே துணை. எமக்கு அவர்கள் அரண். நம்மிருவருக்குள் பகை மூட்டி, இராமன் மரத்தின் மறைவிலிருந்து அம்பு எய்ததுபோலச் செய்ய ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கவனமூட்ட விரும்கிறேன். மக்களிடம் இத்தகைய புராணங்கள் கற்பனை என்பது எடுத்துரைக்காது. அவர்கள் மனப்பாங்கைக் கெடுப்பதன் பலனாக, மக்களின் நிலை கெட்டுவிட்டது. திருமூலர் வேறொரு விஷயத்துக்காகக் கூறினார், “குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளாது; குருட்டுக் குருவைக் கொண்டு, குருடுங் குருடுங் குருட்டாட்டமாடிக் குருட்டில் வீழ்ந்தனர்” என்றுரைத்தார். நமது மக்களின் நிலைமை அதுவாக இருப்பதை உணருங்கள்” என்று பேசி முடித்தார். (நூலிலிருந்து பக்.19)

நூல் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா
ஆசிரியர் : சி.என்.அண்ணாதுரை

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8163
இணையம் :dravidianbookhouse.com

பக்கங்கள்: 56
விலை: ரூ 20.00 / ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | noolulagam | dravidianbookhouse

பரவசமூட்டிய பள்ளிக் குழந்தைகளின் படைப்புத்திறன்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 11

எங்களுடைய கண்காட்சி

தாழ்வாரத்தில் நான்கு மேசைகளைக் கொண்டு வந்து போடுகிறோம். தயாரான பொருட்களைக் குழந்தைகள் வகுப்பறையிலிருந்து வெளியே கொண்டு வந்து மேசைகளில் வைக்கின்றனர். எப்படி வைத்தால் பார்க்க வசதியாயிருக்கும், அழகாயிருக்கும் என்று விவாதிக்கின்றனர்.

முதல் மேசையில் நான்கு அழகிய தொகுப்பேடுகள்: “அறிவின் மூல ஊற்று” (முதல் பிரிவும் இரண்டாவது பிரிவும்); “மக்கள் கவிதை” (முதல் பிரிவும் இரண்டாவது பிரிவும்).

வகுப்பிலும் தாழ்வாரத்திலும் உள்ள கரும்பலகைகளில் நான் குழந்தைகளுக்கு அடிக்கடி பழமொழிகளையும் முது மொழிகளையும் எழுதியிருக்கிறேன். குழந்தைகள் இவற்றை இடைவேளைகளின் போது படிப்பார்கள், பலர் மனப்பாடம் கூடச் செய்து விட்டனர். ஒரு நாள் நான் அவர்களிடம் “வாருங்கள், பழமொழிகளையும் முதுமொழிகளையும் தேடுவோம்! இவற்றில் மக்களின் பகுத்தறிவு உள்ளது” என்று முன்மொழிந்தேன். வீட்டில் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்த பழமொழிகள், முதுமொழிகளைச் சேகரிக்குமாறு கூறினேன். குழந்தைகள் தாள்களில் எழுதப்பட்டிருந்த பழமொழிகளையும் முதுமொழிகளையும் வகுப்பிற்குக் கொண்டு வரத் தொடங்கினர். சிலர் வாசகத்தின் அருகே மலர்களையும் வேறு பல வடிவங்களையும் வரைந்தனர். ஒரு விசேஷ காலைப் பாடம் நடத்தி அதில் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த பழமொழிகளைப் படிக்கலாம் என்று முன்மொழிந்தேன். இதில் நான் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினேன்:

“வாருங்கள், இப்படிச் செய்யலாம்: நீங்கள் பழமொழிகள், முதுமொழிகளை எழுதியுள்ள தாள்களை எல்லாம் சேர்த்துத் தைப்போம். விக்டர் இவற்றை நாடாவால் கட்டுவான், பழமொழிகள், முதுமொழிகளின் அழகிய தொகுப்பு நூல்கிடைக்கும். இதற்கு என்ன பெயர் வைப்பது?”

“அறிவின் மூல ஊற்று” என்ற பெயரை வைப்பது என்று முடிவு செய்தோம். உடனடியாக அட்டைக்கு ஏற்பாடு செய்யுமாறு நீயாவிடமும் மாக்தாவிடமும் கூறினோம். இவ்வாறாக பழமொழிகள், முதுமொழிகளடங்கிய இரண்டு தொகுப்பு நூல்கள் கிடைத்தன. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 50 பழமொழிகள் உள்ளன.

இந்தத் தொகுப்பு நூல்கள் தான் கண்காட்சியில் வைக்கப்பட்டன.

பெரியவர்களின் உதவியோடு கிராமியக் கவிதைகளைக் கண்டெடுத்து, மனப்பாடம் செய்து, விசேஷ காலைப் பாடத்தில் படிக்குமாறு ஏப்ரலில் நான் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறினேன். விசேஷ காலைப் பாடம் சுவாரசியமானதாக இருந்தது. பின் இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து, இரண்டு அழகிய அட்டைகளைத் தயாரித்தோம், இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் கிடைத்தன. வீட்டில் உள்ளவர்களுக்குக் காட்டுவதற்காக இவற்றை குழந்தைகள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இப்படித்தான் இந்த நான்கு புத்தகங்களும் (இவை குழந்தைகளின் சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் உள்ளடக்கியுள்ளன) தோன்றின.

இரண்டாவது மேசையில் ஒரு ஆல்பத்தை வைத்தோம். “விருப்பமிருந்தால் நம்புங்கள், இல்லாவிட்டால் வேண்டாம்!” என்று இதற்குத் தலைப்பு தந்தோம். இதில் அசாதாரண இயற்கைச் சம்பவங்கள் பற்றிப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வந்த பத்து செய்திகள் கத்தரித்து ஒட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் தான் சிறுவர்கள் இதைத் துவங்கினர், அடுத்த கல்வியாண்டில் இதைத் தொடருவார்கள்.

மூன்றாவது மேசையில் “குழந்தைகள் தாமாகவே செய்த வேலைகளின் முதல் தொகுப்புகள்” இருக்கின்றன. ஜனவரியில் என் குழந்தைகளிடம் பின்வருமாறு கூறினேன்:

“நூலாசிரியர்களாக விரும்புகின்றீர்களா?” என்று கேட்டு, இதற்கு என்ன பொருள் என்று விளக்கினேன். “இந்த நூல்களில் உங்களுடைய சிறந்த எழுத்துப் பயிற்சிகளையும், நீங்கள் போட்ட சிறந்த கணக்குகளையும் சேர்க்கலாம். உங்களுடைய கருத்துக்கள், கதைகள், நீங்களே கண்டுபிடித்துப் போட்ட புதிர்கள், உங்களுடைய கணக்குகள், படங்கள், மாடல்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். அதாவது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் எல்லாவற்றையும் இவற்றில் சேர்க்கலாம். பக்கங்களை நீங்கள் அழகுபடுத்தலாம்… நூலிற்குப் பெயரை நீங்களே யோசித்து முடிவு செய்யுங்கள்!”

எனது முந்தைய ஆறு வயதுக் குழந்தைகளின் ஒரு சில நூல்களை நான் காட்டினேன். “உங்களுடைய நூல்கள் இப்படி இருக்கும்!” இந்நூல்களைக் கண்டு குழந்தைகள் பரவசமடைந்தனர்.

லேரி: “ஏன் இங்கு ‘முதல் தொகுதி’ என்று எழுதப்பட்டுள்ளது?”

“ஏனெனில் தமது இரண்டாவது நூலை, இரண்டாவது தொகுதியை இரண்டாவது. வகுப்பிலும் மூன்றாவது தொகுதியை மூன்றாவது வகுப்பிலும் நான்காவது தொகுதியை நான்காவது வகுப்பிலும் உருவாக்கினார்கள்.”

இந்தத் தடிமனான, அழகிய நூல்களைக் குழந்தைகள் – முன் வைக்கிறேன்.

எனது ஆறு வயதுக் குழந்தைகள் நிச்சயமாக தம் சொந்த நூல்களின் ஆசிரியர்களாக விரும்பினர். எனது “முதுமொழிகளில்” ஒன்று பின்வருமாறு ஒலிக்கிறது:

உடனடியாக செய்யத்தக்க சுவாரசியமான விஷயங்களைத் தான் குழந்தைகளுக்கு முன்மொழிய வேண்டுமே தவிர எப்போதாவது செய்ய வேண்டியவற்றை முன்மொழியக் கூடாது; இந்த விஷயங்களை நிறைவேற்றும் முகமாக இவர்கள் எடுத்து வைக்கும் முதலடிகள் முதல் வெற்றிகளுக்கு இவர்களை இட்டுச் செல்ல வேண்டுமே தவிர முதல் கசப்பான தோல்விகளுக்கு இட்டுச் செல்லக் கூடாது.

“நாங்கள் எப்போது எங்கள் நூல்களைச் செய்வோம்?” இக்கேள்வி உடனேயே வகுப்பின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வந்தது.

“ஏன் தள்ளிப் போட வேண்டும்! இப்போதே துவங்குவோம்!”

குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்கள், ஓவியங்கள், மாடல்கள் அடங்கிய கோப்புகளை ஒவ்வொருவருக்கும் அளித்தேன். அவர்கள் அலமாரியிலிருந்து கோந்து, கத்தரிக்கோல், வண்ணப் பேனாக்கள், காகிதம் முதலியவற்றை எடுத்தனர். எப்படித் தேர்ந்தெடுப்பது, வெட்டுவது, ஒட்டுவது, அழகுபடுத்துவது, காகிதங்களை வரிசைப்படுத்துவது, நாடாவால் கட்டுவது என்றெல்லாம் அவர்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறேன். குழந்தைகள் தங்கள் நூலின் தலைப்பைப் பற்றியும் அட்டையை எப்படி அழகுபடுத்துவது என்பதைப் பற்றியும் என்னுடன் ஆலோசனை செய்தனர். உழைப்புப் பாடவேளையிலும் ஓவியப் பாடவேளையிலும் எல்லோரும் உற்சாகமாக காரியத்தில் மூழ்கினர். அன்று ஒவ்வொருவரிடமும் “தூக்கணாங்குருவி”, “ரோஜா”, “கழுகு”, “சூரியன்”, “மகிழ்ச்சி”, “நட்சத்திரம்”, “வசந்தம்”, “ஓடை”, “மலர் தோட்டம்” என்று தனித் தனி நூல்கள் உருவாயின.

நாங்கள் வகுப்பறையில் இந்த நூல்களுக்காக ஒரு மேசையை ஒதுக்கினோம். ஒவ்வொருவரும் தத்தம் நூல்களை எடுத்து அதில் புதியவற்றைச் சேர்க்கலாம், நண்பரின் நூலை எடுத்துப் பார்க்கலாம்.

குழந்தைகளின் உற்சாகத்தை வழிநடத்தும் அவசியமே எனக்கு இல்லாமல் போயிற்று. நான் மேசையை நெருங்கி ஏதாவது ஒரு நூலை எடுத்துப் புரட்டிப் பார்ப்பேன், பின் எப்போதாவது (இடைவேளையில், உலாவும் போது அல்லது ஒரு வேளை பாடநேரத்தில் அவர்கள் பதில் சொல்லும் போது) “உனது “வசந்தம்” (“நட்சத்திரம்”…) நூலின் புதிய பக்கம் எனக்குப் பிடித்துள்ளது. இன்னும் என்னவற்றையெல்லாம் இதில் சேர்க்கப் போகிறாய்?”

சில சமயங்களில் இடைவேளையின் போது நான் 2-3 நூல்களை எடுத்து வந்து புரட்டிப் பார்ப்பேன். அப்போது குழந்தைகள் என்னைச் சூழ்ந்து நின்று “இது யாருடைய நூல்? உங்களுக்குப் பிடித்துள்ளதா?” என்று கேட்டபடி இருப்பார்கள். சில சமயம் ஒரு நூலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அந்த நூலின் ஆசிரியரிடம் அனுமதி கேட்பேன்: “என் பிள்ளைகளுக்குக் காட்டுவேன்”. யாரை வேண்டுமானாலும் அழைத்து “குழந்தைகளின் இந்த நூல்கள் எவ்வளவு சுவாரசியமானவை பாருங்கள்” என்று கூறுவேன்.

ஆம், எல்லாம் இவ்வளவு எளிமையானவையாக இருந்தன, மழைக்குப் பின் காளான்கள் வளருவதைப் போல் நூல்கள் விரைவாக அதிகரித்தன.

இந்நூல்கள் எல்லாம்தான் இப்போது மூன்றாவது மேசையில் உள்ளன.

நான்காவது மேசையில் சின்னஞ் சிறு நூல்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம். ஒரு பத்திரிகையின் பக்கத்தில் பாதி அளவுள்ள ஒரு தாளில் கதை டைப் செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். 8 பக்கமுள்ள ஒரு நூல்கிடைக்க, தாளை மூன்று முறை மடித்து, பக்கங்களை ஒட்ட வேண்டும், முதல் பக்கத்தில் நூல் ஆசிரியரின் பெயர், கதையின் பெயர், தேதி முதலியவற்றை எழுத வேண்டும்; கதையை கவனமாகப் படித்து உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்; கதைக்கேற்றபடி அட்டையின் மேலும் பின்னும் அலங்கரிக்க வேண்டும்; அட்டையின் இரண்டாவது பக்கத்தில் அலங்கரித்த ஓவியரின் பெயரை எழுத வேண்டும்; பத்திகள் ஆரம்பமாகும் போது முதல் எழுத்துகளை அலங்கரிக்க வேண்டும்; மேற்கோளில் உள்ள வார்த்தைகளின் பொருளை எழுத வேண்டும்; காலியான பக்கங்களில் கதைக்கேற்ற படங்களை வரைய வேண்டும்; கதையின் இறுதியில் கதைப் பொருளுக்கு ஏற்ற சில கேள்விகளை எழுத வேண்டும்; இப்படி வடிவமைக்கப்பட்ட நூலை நண்பர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

இப்படி வடிவமைக்கப்பட்ட நூலைப் பற்றி வகுப்பில் விவாதம் நடத்தினோம். ஓவியங்கள், அட்டைகள், மேற்கோள் வார்த்தைகளின் விளக்கங்கள், கதையின் பொருளுக்கேற்ற கேள்விகள் ஆகியவற்றை, இவ்வாறாக கதையையே விவாதிப்போம். இவ்வாறாக மூன்று கதைகள் உருவாயின. இம்மாதிரியாகப் புதியவற்றை அறிவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று…… கண்காட்சி வேலைகள் முடிந்தன. “வாருங்கள், எல்லாம் சரியாக உள்ளனவா என்று பார்ப்போம்!” என்கிறாள் மாயா.

படிக்க :
ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

நாங்கள் கண்காட்சி அரங்கைச் சுற்றி வருகிறோம். தம் புகைப்படங்களைக் கண்டதும் குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. தம் முதல் எழுத்து வேலைகளைக் கண்டதும் இவர்களுக்கு சந்தோஷம், வியப்பு. இவர்களுக்கு தம் கண்காட்சியில் திருப்தி. ஆங்காங்கே சில மாற்றங்களைச் செய்கின்றனர். தமது இசை நாடக அறிவிப்பைத் தொங்க விடுகின்றனர்.

“இப்போது நாம் நம் மரங்களிடம் செல்லலாம்!” என்று நான் சொல்லியதும் வாளியையும் இரண்டு மண்வெட்டிகளையும் எடுத்தபடி நாங்கள் சத்தமிட்டுக் கொண்டு மாடிப்படியில் இறங்குகிறோம்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !

கேள்வி : // சட்டமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் யாரும் இல்லாமல் இவ்வளவு காலம் வெறும் பேச்சு அரசியல் செய்யும் சீமானின் எதிர்காலம் எப்படி இருக்கும்? //

நவின்

ன்புள்ள நவின்,

எதிர்காலம் சூனியமாகத்தான் இருக்கும். தமிழகம் முழுவதும் ஊருக்கு ஊர் அலைந்து திரிந்து நாம் தமிழர்தான் மாற்று என்று முழங்கிய தனக்கும் 3 சதவீதம், சொகுசாக அரசியல் செய்யும் கமலுக்கும் மூன்று சதவீதம் வாக்குதான் என்ற கேள்வி சீமானிடம் இருக்கிறது. இப்போது கமலோடு ரஜினியும் சேர்ந்தோ தனித்தோ போட்டியிட்டு சும்மா வீட்டுக்கு வெளியே காமெராக்களிடம் நாலு வார்த்தை பேசி பத்தோ பதினைந்தோ சதவீத வாக்கை வாங்கி விட்டால் என்ன செய்வது? இந்தக் கேள்வியும் சீமானின் மனதைக் குடைகிறது. அதனால்தான் மதுரையில் பதட்டத்தோடு வாக்காளப் பெருமக்களை பாய்ந்து குதறும்வண்ணம் அண்ணன் பொங்கியிருக்கிறார்.

ஆளும் வர்க்கங்களும், பார்ப்பனிய ஊடகங்களும் எப்படி மோடியை முன்னிறுத்தி நிலைநாட்டினவோ அப்படி ரஜினிக்கும் முயலும். மேலதிகமாக தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் தத்தமது வாங்கு வங்கிகளை கூட்டியோ குறைத்தோ பராமரித்து வருகின்றன. இந்த சூழலில் ரஜினி, பா.ம.க., அ.தி.மு.க, என்றொரு கூட்டணியை உருவாக்க பாஜக முயலும். இல்லை ரஜினியை தனியே நிற்க வைத்தாலும் அது தி.மு.க வாக்குகளை பிரித்து தனது அடிமைக் கூட்டணியை வெல்ல வைக்கும் என்று அமித்ஷா அணி நினைக்கிறது.

இந்நிலையில் இந்த வாக்கு வங்கி அரசியலில் சீமானுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஏதுமில்லை. மேலும் அவர் வைக்கும் மாற்று அரசியல், திட்டங்கள் அனைத்தும் ஆர்ப்பட்டமான உதார் என்பதைத் தாண்டி இந்த அரசியல் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரும் தகுதி படைத்தது அல்ல. தனியார்மய – தாராளமய – உலகமய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்க்கும் மருந்து வாக்கு வங்கி அரசியலில் இல்லை. இது சீமானுக்கும் தெரியாமல் இல்லை. அதனால்தான் தமிழ், இனம், சொந்தம், ஆடு, மாடு, கடல் வளம், மலை வளம் என்று உணர்ச்சிகரமான அரசியலை பேசுகிறார். இதில் சிலவற்றை மக்கள் ரசிக்கலாம். பலவற்றை வேலைக்காகாது என்று புறந்தள்ளலாம். பட்டிமன்றப் பேச்சுக்களை ரசிக்கும் தமிழ் மரபும், மனதும் சீமானின் பேச்சையும் ரசிக்கிறது. அதற்கு மேல் அண்ணன் ஊழல் செய்யாதவர், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சில மக்கள் எண்ணினாலும் அந்த எண்ண ஓட்டத்தில் ரஜினியும், கமலும் கூட இன்னும் கொஞ்சம் அதிகமாக மக்களிடம் கலந்து விடுகிறார்கள்.

படிக்க :
♦ சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ ஓம் சீமான் ! ஜெய் சீமான் !

எனவே காலம் செல்லச் செல்ல சீமானின் பதட்டம் அதிகரித்து அவரது வாய் வீச்சுக்களில் கோபமும், குரோதமும் அதிகரிக்கும். ஒன்று அவரும் கூட்டணி என்று செட்டிலாகி சில எம்.எல்.ஏக்களோடு தானும் ஒரு தலைவரே என்று செட்டிலாகலாம். இல்லை தனித்தே இருப்பதாக வைத்துக் கொண்டாலும் நான்கு கார் பின் தொடர்ந்து, நாற்பது காமெராக்களுக்கு முன்னே நேர்காணல் தரும் தகுதி கொண்ட ஒரு தலைவராக மிச்சமிருக்கும் வாழ்க்கையைக் கழிக்கலாம்.

ஆட்டுக்குட்டி எவ்வளவு துள்ளினாலும் ஆனை உயரம் வருமா?

நன்றி!

+++

கேள்வி: // ஒருவாரமாக பரபரப்பாக பேசப்பட்ட மகாராஷ்டிரா அரசியலைப் பற்றியும், சிவசேனா-வின் காங் – தே.காங் கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன? //

அகிலன்

ன்புள்ள அகிலன்,

சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக் கடிதத்தை திருடிச் சென்ற அஜித் பவாரை நம்பி நள்ளிரவுக் கூத்தை நடத்தி ஒரு நாளிலேயே பாஜக மூக்கறுபட்டது. பதவி வெறிக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும், பெயரளவில் இருக்கும் அரசியல் சாசன மரபைக் கூட கொல்லும் என்பதற்கு இந்த அதிகாலை பதவியேற்பு ஒரு சான்று. ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர் மூவருக்கும் வெட்கம் மானம் ரோசமில்லை என்பதை இந்நிகழ்வு நிரூபித்திருக்கிறது. அமித்ஷாவின் ராஜதந்திரம் அம்மணமாக அடிபட்டுப் போனது.

பால்தாக்கரே மரணத்திற்கு பிறகு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் சிவசேனா இழந்த நிலையில் பாஜக அந்த இடத்தை நிரப்பியிருந்தது. சிவசேனா – பாஜக இரண்டும் இந்துத்துவ அரசியலை மையப்படுத்திய இயல்பான கூட்டாளிகள் என்றாலும் மகாராஷ்டிராவைப் பொருத்தவரை சிவசேனா பெரிய பங்காளியாகவும், பாஜக சின்ன பங்காளியாகவும் இருந்தன. பிறகு பங்காளிகளின் இடங்கள் தலைகீழாக மாறுகின்றன. பாஜக-வும் மைய அரசாக தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டது. இந்த நிலையில் தேர்தல் கூட்டணியில் சிவசேனாவிற்கு குறைந்த இடங்களே கொடுக்கப்படுகின்றன. ஆனால் தேர்தல் முடிவில் பாஜக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதனால் சிவசேனா சுழற்சிமுறை முதல்வரைக் கோரியது. இதை பாஜக ஏற்கவில்லை. இந்தியாவின் அதிக மாநிலங்களை ஆளும் கட்சி என்ற பெயரை ஈட்ட விரும்பி மூக்கில் கரி பூசிக் கொண்டது.

பாஜக-விற்கு இந்துத்துவ அரசியல் மையமென்றால் சிவசேனாவிற்கு அது இரண்டாம் பட்சமானதுதான். மராத்தா சாதியினரை மையப்படுத்திய மராட்டிய இன உணர்வே முதன்மையானது. கட்சி என்ற முறையில் சிவசேனாவின் தன்மை லும்பன் தன்மையுடையது. கட்சியின் தலைவர்கள், தளபதிகள் பெரும் பணக்காரர்களாகவும், தொண்டர்கள் உதிரிப் பாட்டாளிகளாகவும் இருக்கிறார்கள். சரத்பவாரின் தேசியவாத காங்கிரசு நடுத்தர, பணக்கார விவசாயிகளையும், மராத்தா சாதியினைரையும் மையமாகக் கொண்டது. மாநிலத்தின் சிலபகுதிகளில் சரத்பவாருக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது. காங்கிரசோ தனது பழைய நிலையின் எச்ச சொச்சங்களை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

படிக்க :
♦ மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?
♦ ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!

பாஜக எதிர்ப்பு என்ற முறையில் இவர்களை ஒன்றிணைய வைத்ததும் பாஜகதான். அதேநேரம் இவர்களுக்கிடையே தோன்றவிருக்கும் முரண்பாட்டிற்கும் பாஜக-தான் காரணமாக இருக்கும். கர்நாடகாவில் குமாரசாமியை நேரம் பார்த்து உதைத்து வெளியேற்றிய வைபவத்தை இங்கேயும் நடத்த பாஜக நேரம் பார்த்துக் கொண்டிருக்கும். அப்படி ஒரு அனுபவம் இருப்பதால் உத்தவ் தாக்கரே அரசு கொஞ்ச காலம் எச்சரிக்கையுடன் இருக்கலாம். பாஜக-வும் நள்ளிரவு வைபவத்தால் அம்பலப்பட்டு போயிருப்பதால் தனது கவிழ்ப்பு வேலைகளை உடனடியாக நடத்த வாய்ப்பில்லை. இந்நிலையில் சிவசேனா தன்னை மீண்டும் ஒரு ஆளும் கட்சியாக நிறுத்தும் வண்ணம் பண பலத்தையும், அரசியல் பலத்தையும் பெருக்க முயற்சிக்கும். இதைத்தாண்டி நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மராட்டிய மாநிலத்தில் மக்களுக்கு இந்த புதிய அரசு என்ன புதியதாக சாதிக்க முடியும்?

நன்றி!

பாஜகவை விமர்சித்த ராகுல் பஜாஜ் மீது சமூக ஊடகங்களில் காவி ட்ரோல் படை தாக்குதல் !

0

பாஜக ஆட்சியில் பொருளாதார மந்தநிலை தொடர்பாக மோசமான செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கும் சூழலில் பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ், பாஜக மீது நேருக்குநேர் விமர்சனம் வைத்துள்ளார். பயமுறுத்தக்கூடிய பூனைக்கு ராகுல் பஜாஜ் மணி கட்டியுள்ளதாக டெலிகிராப் இந்தியா இதை வர்ணித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மும்பையில் நடந்த ‘தி எகனாமிக் டைம்ஸ்’ விருது வழங்கும் நிகழ்வில் பொருளாதார நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழிலதிபர்கள், அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய ராகுல் பஜாஜ், நாட்டில் அச்சமுள்ள சூழல் நிலவுவதாகவும் இத்தகைய சூழல் நீக்கப்பட வேண்டும் எனவும் பேசினார்.

rss bjp trolls attack rahul bajaj for his opinion
ராகுல் பஜாஜ்

“நாங்கள் பயப்படுகிறோம்… நிச்சயமாக இந்த சூழ்நிலையை நாங்கள் மனதில் கொண்டிருக்கிறோம். ஆனால், யாரும் இது குறித்து பேச மாட்டார்கள். வெளிப்படையாகச் சொல்வேன், எனது தொழிலதிபர் நண்பர்கள்கூட இது குறித்து பேசமாட்டார்கள். (கைதட்டல்). இதற்கு பதில் வரவேண்டும்; மறுப்பாக மட்டுமல்ல… ஒரு சூழலை உருவாக்க வேண்டும். சுத்தமான சூழலை உருவாக்க வேண்டும். டெல்லி ஓரளவு சிறப்பாகி வருகிறது; நல்லது… ஆனால், சூழலை உருவாக்க வேண்டியது எங்கே?” என கேள்வியோடு நிறுத்திய அவர்,

“வெளிப்படையாக விமர்சித்தால் அது பாராட்டப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.” என்றார்.

“எனது நற்பெயரை நான் தவறாக அல்லது சரியாக பராமரிக்க வேண்டும். யாரையும் புகழ்வது எனக்கு மிகவும் கடினமான விசயம். நான் அப்படி பிறக்கவில்லை; நான் ஏழைகளுக்கு, பின்தங்கியவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். எனது தாத்தா மகாத்மா காந்தியின் வளர்ப்பு மகனாக இருந்திருக்க வேண்டியவர். என் பெயர், உங்களுக்கு பிடிக்காது, என் பெயர் ராகுல்; எனக்கு இந்தப் பெயரை சூட்டியவர் ஜவஹர்லால்” என நேரு குறித்து தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் பாஜக தலைவர்களை மறைமுகமாக விமர்சித்தார். கோட்சே -வை தேசபக்தர் என்ற பிரக்யா தாக்கூர் குறித்து விமர்சனம் வைத்தார் ராகுல் பஜாஜ்.

படிக்க:
‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்
♦ பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?

“இன்று யாரையும் ஒரு தேசபக்தர் என்று அழைக்கலாம், காந்திஜியை சுட்டுக் கொன்றவரை நீங்கள் அறிவீர்கள், அல்லது அதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா, எனக்குத் தெரியாது. இது முன்பு அப்படித்தான் கூறப்பட்டது. நீங்கள் டிக்கெட் கொடுத்தீர்கள், அவர் வென்றார். அது சரி, உங்கள் ஆதரவின் காரணமாக அவர் வென்றார், அதற்கு முன் யாரும் அவரை அறிந்திருக்கவில்லை. அத்தகையவருக்கு டிக்கெட் கொடுத்து, பின்னர் நீங்கள் அவரை ஆலோசனைக் குழுவிற்கு அழைத்து வந்தீர்கள். அவரை மன்னிப்பது கடினம் என்று பிரதமர் கூறியிருந்தார், ஆன போதும் நீங்கள் அவரை ஆலோசனைக் குழுவில் சேர்த்தீர்கள். இப்போது அவர் நீக்கப்பட்டிருக்கிறார்; இந்த சிறிய நாடாளுமன்ற அமர்வுக்கு, அவருக்கு கலந்துகொள்ள அனுமதி இருக்காது. இது ஒரு எடுத்துக்காட்டு” என பேசிய அவர், ப. சிதம்பரம் எந்த வித விசாரணையும் இன்றி சிறையில் இருப்பதை குறிப்பிட்டுப் பேசினார்.

“நாங்கள் பயப்படுகிறோம். நாங்கள் இவ்வாறு இருப்பது எங்கள் தவறு. ஆனால், நான் சொல்ல விரும்பாத சில விசயங்கள் உள்ளன. யாரோ ஒருவர் தண்டிக்கக்கூட படவில்லை, குற்றவாளியாக மாறவில்லை. பாலியல் வன்கொடுமை அல்ல; கொலை குற்றமல்ல, தேசத்துரோகம் அல்ல, வெள்ளை காலர் குற்றம், மிக மோசமானது, பிக்பாக்கெட்… சரி, ஆயிரக்கணக்கான கோடி விசயம். அது தவறுதான். ஆனால், குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒருவர் 100 நாட்களாக சிறையில் இருக்கிறார்.” என்றார்.

ராகுல் பஜாஜின் விமர்சனத்துக்கு அந்நிகழ்வில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா மழுப்பலான பதிலை அளித்தார். “மோடி குறித்து நிறைய செய்தித்தாள்கள் விமர்சித்து எழுதியுள்ளன. ஆனால், நீங்கள் சொன்னதுபோல இத்தகைய சூழல் உருவாகியிருக்கும்போது, அதை மேம்படுத்த வேண்டும். யாரும் பயப்படத் தேவையில்லை” என்றார்.

பெரும்பாலான நேரங்களில் பாஜக மீதான விமர்சனங்களுக்கு தொடர்புடையவர்கள் மவுனமாக கடந்துவிடும் சூழலில், அமித் ஷா, பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். வழக்கமாக பாஜவை விமர்சிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய உயரிய இடத்தில் இருந்தாலும் பாஜக ட்ரோல் ஆர்மி அவர்களை சின்னாபின்னமாக்கிவிடும். ராகுல் பஜாஜும் அதிலிருந்து தப்பவில்லை.

படிக்க:
பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !
♦ பானுகோம்ஸ், சுமன் சி ராமன், ட்ரோல்கள் : மோடியின் சைபர் சேனாவில் 2 கோடி வேலை வாய்ப்பு !

பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, ராகுல் பஜாஜ் மீதான வசை மழையை தொடங்கி வைத்தார்…

“உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், ராகுல் பஜாஜ் அதிகாரத்துக்கு எதிராக உண்மை பேசிவிட்டதாக புகழ்கிறார்கள். அவர் கேள்வி கேட்டதற்கு விரிவான பதில் அளிக்கப்பட்டுவிட்டது. மனம் திறந்து பேசிவிட்ட பிறகு பயம் எங்கே?” என தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியதோடு, ராகுல் பஜாஜ் காங்கிரசுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் தூற்றினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் பங்குக்கு ராகுல் பஜாஜ் சொன்ன ‘பயமுறுத்தும் சூழலை’ கண்முன் காட்டினார். ராகுல் பஜாஜின் விமர்சனங்கள் காதுகொடுத்து கேட்கப்பட்டு பதிலளிக்கப்பட்டதாக சொன்ன அவர், இத்தகைய விமர்சனங்கள் தேசத்தின் நலனுக்கு எதிரானவை என முடித்தார். இதைத்தானே அவரும் சொன்னார் என நிதியமைச்சருக்கு உடனடியான எதிர்வினையும் காத்திருந்தது.

மற்றொரு பாஜக அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, “உலகில் அச்சத்தால் ஆளப்படும் சமூகங்கள் உள்ளன. ஆனால், குடிமக்கள் போலி கதைகளை புனையக்கூடிய, அரசாங்கத்தின் மீது பொய்ப்புகார்களை கூறக்கூடிய ஒரு சமூகத்தை அச்சத்தால் ஆளப்படும் சமூகமாக வகைப்படுத்த முடியாது, இந்த சமூகத்தை ஒழுக்கமற்ற சமூகம் என்பதாகவே கருத வேண்டும்” என ட்விட்டரில் எழுதினார்.

ஆனால், பாஜக தலையைக் கொடுத்து மாட்டிக்கொண்டதுபோல ஆகிவிட்டது. பாஜக ட்ரோல் கும்பலுக்கு மக்களே நேரடியாக பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.

“நாட்டின் ஒழுங்கீனம் என ஒரு அரசாங்கம் சொன்னபோது, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது” என பதில் சொன்னது ஒரு ட்விட்டர் பதிவு. பாஜக ஐடி பிரிவினர் மற்றும் அமைச்சர்களின் பதிவுகள் ராகுல் பஜாஜ் சொன்னதை நிரூபிக்கும் விதமாக உள்ளன என திரைக்கலைஞர்கள், கிரண் மசூம்தர்ஷா போன்ற தொழிலதிபர்களும்கூட ராகுல் பஜாஜுக்கு ஆதரவாக ட்விட்டரில் எழுதினர்.

ஒவ்வொரு முறையும் பாஜக-வின் செயல்பாடுகளை எவரேனும் விமர்சிக்கும்போது அந்த விமர்சனம் குறித்து விவாதிக்காமல், விமர்சித்தவரை இழிபடுத்துவதற்கென்ற காவி ட்ரோல் ‘ஆர்மி’ வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளாய் இவர்களே களமிறங்கி விமர்சிப்பவர்களை தாக்கி வருகின்றனர். விமர்சித்தவர் வைக்கும் கேள்விகளுக்கான நேரடி பதிலை மட்டும் காவி கும்பல் எப்போதும் தருவதில்லை.


கலைமதி
நன்றி : டெல்கிராப் இந்தியா, நேஷனல் ஹெரால்டு.

இலங்கை மண்சரிவு : நாம் ரண்பண்டாவை இழந்து விட்டோம் !

நாம் ரண்பண்டாவை இழந்து விட்டோம் !

ண்பண்டா ஒரு ஏழை கூலித் தொழில் செய்யும் நுவரேலியா வலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர், சென்ற வருடம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொள்ள உள்ளதால் அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு ரண்பண்டாவை அதிகாரிகள் பணித்த போது, “எங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நீங்கள் வெளியேறச் சொல்வது நியாயம்தான். ஆனால் நாம் ஏழைகள் நாங்கள் எங்கு செல்ல முடியும்?” என ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். மக்களை வெளியேறுமாறு கூறும் அரசுக்கு மக்களை எங்கு அனுப்புவது என்ற திட்டம் இல்லை.

நேற்று இரவு பொழிந்த கடும் மழையின் விளைவாக ரண்பண்டாவும் நாளை பரீட்சை எழுத உள்ள அவரது மகன் உட்பட அவரது முழுக் குடும்பமும் மண்சரிவில் புதைந்து மரணித்து விட்டனர். மரணித்தது ரண்பண்டா அல்ல, இந்த தேசத்தின் மொத்த மனச்சாட்சி.

வகைதொகையின்றி நடக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக எதிர்காலம் பற்றிய சிந்தனையின்றி மேற்கொள்ளும் திட்டங்களால் மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை. இந்த மண்சரிவுக்கு பிரதான காரணம் பாரிய கருங்கல் உடைப்பு என பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய சுற்றாடல் அதிகாரசபை, சுற்றாடல் அமைச்சு இருந்து என்ன பயன்? நாம் எத்தனை குடும்பங்களை இழந்து விட்டோம்?

களுத்துறையில் குளோடன் தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் , பாரதி தமிழ் வித்தியாலயத்திற்கும் இடையில் காணப்படும் அழகுமிகு பெரு மலை படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் விடியும் போது அவ்விரு பாடசாலைகளும் மண்சரிவில் அமிழ்ந்து விட்டன என கேள்விப் படாமல் இருப்பதற்கு நாங்கள் இறைவனைப் பிரார்த்திப்போம்.

சுற்றாடலை அழித்து கடலில் நகர் அமைத்து என்ன பயன்? அபிவிருத்தி என்பது கட்டிடங்களின் விருத்தி அல்ல நாட்டு மக்களை வாழவைப்பதே உண்மையான அபிவிருத்தியாகும்.

அசாதாரண மழையினால் மட்டக்களப்பிலும் அனுராதபுரத்திலும் ஏழை மக்கள் படும் துன்பம் எத்தனை பேரின் கவனத்தை ஈர்த்துள்ளது? நாளை பல உயிர்களை காவு கொள்ளுமுன், அசாதாரண காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவுகளை எதிர்கொள்வதற்கு நாம் மக்களை பயிற்றுவிக்க வேண்டும்.

படிக்க:
MCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் !
♦ இஸ்லாமோபோபியா : பாயல் தாத்வி – பாத்திமா லத்தீஃப் மரணத்தின் பொது அடையாளம் !

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவில் அபாயத்தை எதிர் கொண்ட பிரதேசங்களில் மக்கள் வேறு வழியின்றி வாழ்கின்றனர். இந்த மக்கள் தொடர்பில் அரசு உடன் கவனம் எடுக்க வேண்டும். வெளியேறுங்கள் என்று சொல்வது இலகுவானது. ஆனால் அந்த ஏழைகள் எங்கு செல்வது என்பதற்கான வழியை காட்ட வேண்டும். இன்னும் பல ரண்பண்டாக்களை எங்களால் இழக்க முடியாது.

நன்றி : ஃபேஸ்புக்கில் M.n. Mohamed. 

இஸ்லாமோபோபியா : பாயல் தாத்வி – பாத்திமா லத்தீஃப் மரணத்தின் பொது அடையாளம் !

மீபத்தில் உயர் கல்வி கற்கும் நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை முன்பை விட அடிக்கடி செய்திகளில் வருகின்றது. பலியானவர்களில் பெரும்பாலானோர் குறிப்பாக தலித்துகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சிலர் கல்விச் சூழல் தரும் அழுத்தங்களால் தற்கொலை செய்துள்ளனர்.

ரோஹித் வெமுலா மரணத்தைப் பொருத்தவரை, சாதிய பாகுபாடுதான் முக்கியக் காரணமாக இருந்துள்ளது. மேலும், அவர் முன்னெடுத்த சமூக நடவடிக்கைகள் அனைத்தும் தேச விரோத செயல்கள் என முத்திரை குத்தப்பட்டது. மற்ற இரண்டும், மகளிர் மருத்துவ நிபுணரான பாயல் தாத்வி மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸில் முதுகலைப் பட்டம் பெற்ற ஃபாத்திமா லத்தீஃப் ஆகியோரின் வழக்குகள். தாத்வி ஒரு பில் முஸ்லீம், டாக்டர் சல்மான் தாத்வியின் மனைவி. அவர் மருத்துவக் கல்வி நிலையத்தில் தனது சீனியர்களால் அன்றாட வாழ்வில் துன்புறுத்தப்பட்டார்.

பாத்திமா ஒரு திறமையான இளம் மாணவி. அவர் பெரும்பாலான தேர்வுகளில் முதலிடம் வகித்தார். ஐ.ஐ.டி.எம்-மில் சேர்ந்த பிறகு, அவரை முன்தீர்ப்பால் செய்வதறியாமல் திகைத்தார், அவருக்கு திறமை இருந்தபோதிலும் அவருக்கு ‘உள் மதிப்பீட்டில்’ மோசமான மதிப்பெண் வழங்கப்பட்டது. தன்னை அவதூறு செய்ததாக தனது ஆசிரியர்களில் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு, தன் தந்தைக்கு “அப்பா, என் பெயரே ஒரு பிரச்சினை” என்று எழுதினார்.

சாதியை அடிப்படையாகக் கொண்டு, பழங்குடியினராக இருப்பது அல்லது திருநங்கைகளாக இருப்பது போன்ற பிற வகையான அவமானங்கள் பெருகினாலும், பாயல் மற்றும் பாத்திமாவின் இந்த இரண்டு வழக்குகளும் முஸ்லிம் சமூகத்தின் மீதான நுட்பமான மற்றும் வெளிப்படையான வெறுப்பின் ஒரு பகுதியாகும். இந்த நிகழ்வு இந்தியாவில் மட்டுமல்ல,  9/11, 2001 -க்குப் பிறகு, அமெரிக்க ஊடகங்கள் “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற சொற்றொடரை உருவாக்கி பிரபலப்படுத்திய பிறகு உலகம் முழுவதும் நடைபெற்றுவருகிறது.

படிக்க:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !
♦ ஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் !

ஆனால், பயங்கரவாதம் என்பது பல மதங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஈடுபட்டுள்ள ஒரு பரவலான நிகழ்வு ஆகும். ஐரிஷ் குடியரசுப் படையினர், இலங்கை புத்த பிக்குகள் எனப் பலரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு முன்புவரை ஒருபோதும் பயங்கரவாதத்துடன் மதம் தொடர்புபடுத்தப்படவில்லை. இந்த தாக்குதல் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெவ்வேறு மதங்களிலிருந்தும் கிட்டத்தட்ட மூவாயிரம் அப்பாவி மக்களைக் கொன்றது.

இதற்கு ஒசாமா பின்லேடன் – அல்கொய்தா மீது குற்றம் சுமத்தப்பட்டது. அல்கொய்தா அமைப்பு வளர அமெரிக்கா பெருமளவில் நிதியளிப்பதன் மூலம் உதவி புரிந்தது என்பது வேறொரு விஷயம்,  (எட்டாயிரம் மில்லியன் டாலர்கள் மற்றும் ஏழு ஆயிரம் டன் ஆயுதங்கள்).  அறிஞர் மஹ்மூத் மம்தானி தனது ‘நல்ல முஸ்லீம் கெட்ட முஸ்லீம்’ புத்தகம், சிஐஏ ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, அல் கொய்தாவை முடுக்கிவிட அமெரிக்கா செயல்பட்ட பொறிமுறையின் விவரங்கள் மற்றும், வாஷிங்டனில் அதன் நடைமுறைக்கான திட்டம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது போன்ற விவரங்களைத் தருகிறது.

மேற்கு ஆசியாவில் அமெரிக்க கொள்கைகள், மேற்கு ஆசியாவின் எண்ணெய் செல்வத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள், அதையொட்டி ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஐ.எஸ் உருவாக்கம், முதலியன அல்கொய்தாவின் ஆபத்தான வீழ்ச்சிகளுக்கு வழிவகுத்தன. அமெரிக்காவின் துணைத் தலைவர் ஹிலாரி கிளிண்டன் ஒரு வெள்ளை அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அல்கொய்தாவை அமெரிக்கா எவ்வாறு முடுக்கிவிட்டது என்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டி ஒப்புக் கொண்டார்.

அவர் கூறுகிறார், “இங்கே நினைவில் கொள்வோம்… இன்று நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்  நபர்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாம் நிதியளித்தோம்.” “… இந்த முஜாஹிதீன்களை பணிக்கமர்த்துவோம். வஹாபி பிராண்டான இஸ்லாத்தை இறக்குமதி செய்வதால் சோவியத் யூனியனை வெல்ல முடியும்.”

உலகளாவிய இஸ்லாமிய ‘அச்சுறுத்தலின்’ வேர்கள் அமெரிக்க சூழ்ச்சிகளில் உள்ளன. இந்தியாவில் இது முஸ்லிம்களுக்கு எதிராக நிலவும் தப்பெண்ணங்களுக்கு ஒரு கூடுதல் அம்சமாக வந்தது. ‘சமூக பொது அறிவு’-ன் இந்த தப்பெண்ணங்கள் பிரிட்டிஷ் அறிமுகப்படுத்திய வகுப்புவாத வரலாற்றில் அதன் வேர்களைக் கொண்டுள்ளன. இந்த முஸ்லீம் விரோத உணர்வுகளின் வேர்கள் பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களில் உள்ளன. இதன் பெருக்கம் பல்வேறு வழிமுறைகள் மூலம் நடந்தது, இதன் வேர்கள் வகுப்புவாத அமைப்புகளே, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., முஸ்லீம்களை ஆட்சியாளர்களாக முன்வைத்த வரலாற்றை ஏற்றுக்கொள்வதன் மூலம் முஸ்லீம் லீக் தனது சொந்த பங்களிப்பை வழங்கியது.

ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் இந்து கோவில்களை அழிப்பதிலும், இஸ்லாத்தை வாள் முனையில் பரப்புவதிலும் முஸ்லிம் மன்னர்களின் செயல்கள் மற்றும்  அவ்ரங்கசீப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இளம் மனதைத் தூண்டுவதற்கான தளத்தை உருவாக்குகின்றன. இது சர்ஸ்வதி ஷிஷு மந்திர்கள் மற்றும் பல அமைப்புகளின் செயல்பாடுகள் இதற்கு மெருகூட்டின. இந்துக்களை பெருமைப்படுத்துவதற்கும் முஸ்லிம்களை அரக்கர்களாக்குவதற்கும் இவற்றோடு சேர்ந்த பல அமைப்புகள் முற்பட்டன.

படிக்க:
காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் ! மதுரை கண்டன கூட்டம் !
♦ இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்

இந்த இசுலாமிய வெறுப்பு 1980-களின் தசாப்தத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதற்காக தொடங்கப்பட்ட ரத யாத்திரைகள் மூலம் ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற்றது. ராம் பிறந்த இடத்தில் இருந்த ராமர் கோயிலை பாபரின் ஜெனரல் மிர் பாகி அழித்துவிட்டார் என்பது பிரச்சாரம். பாப்ரி மசூதி தொடர்பான சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் நல்ல பகுதி என்னவென்றால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படியே மசூதிக்கு கீழே ஒரு ‘இஸ்லாமிய கட்டுமானமில்லாத வேறொரமைப்பு’ இருந்தது என்பதே. ஏ.எஸ்.ஐ அறிக்கையின்படி, இது ஒரு கோவில் அல்லது அது அழிக்கப்பட்டது அல்லது அது ராமர் பிறந்த இடம் என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை.

இந்த உண்மை அனைத்தும் வெளிவருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது, ஏனெனில் இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக பரவும் பொய்கள் சமூகத்தில் உள்ள பெரும்பாலான மக்களைப் புரிந்துகொள்வதில் முக்கிய பகுதியாகும். எனவே இந்த வழியில் பாத்திமாவின் ஆசிரியர் அல்லது பாயல் தாத்வியின் சீனியர்களுக்கு தங்கள் முஸ்லீம் மாணவர்கள் அல்லது இளைய முஸ்லீம்-பழங்குடி சக ஊழியர்களைப் பிடிக்காமல் போனது பற்றிய நுட்பமான சமிக்ஞைகள் ஒரு விதத்திலும் விதிவிலக்கல்ல.

மக்களின் உணர்வை வடிவமைப்பதில் ஊடகத்தின் சக்தி எல்லையற்றது. காலனியாதிக்கத்திலிருந்து வியட்நாமை விடுவிக்கிறோம் என்ற போலிக் காரணத்தை கூறிக்கொண்டு  அமெரிக்கா வியட்நாமைத் தாக்கத் தொடங்கியபோது ஊடகங்களின் சக்தியின் தீவிரம் காணப்பட்டது, இது சுதந்திர உலகின் மீதான தாக்குதல். அமெரிக்காவின் ஏகாதிபத்திய அபிலாஷைகளுக்கு அமெரிக்க ஊடகங்கள் ‘சம்மதத்தைத் தயாரிக்கிறது’ என்று நோம் சாம்ஸ்கி சரியாகக் கூறுகிறார்.

இன்று உலகளாவிய இஸ்லாமியப் போபியாவைப் பரப்புவதில் அமெரிக்க ஊடகங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றாலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியாவில் ஊடகங்கள் – அமெரிக்க ஊடகங்கள் – பரவி வருவதை மட்டுமல்லாமல்,  ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் உருவாக்கப்பட்ட சமூக ரீதியாகப் பிளவுபடுத்தும் பிரச்சாரங்களையும் பின்பற்றுவதில் கடந்த பல தசாப்தங்களாக பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளன.

பாத்திமா மற்றும் பாயல் ஆகியோரை அவமானங்களிலிருந்தும், அவர்களது சகாக்களாலேயே அவமதிக்கப்படுவதிலிருந்தும், தற்கொலைக்குத் தூண்டுப்படுவதிலிருந்தும், நாம் காக்க முடியுமா?  பாயல் மற்றும் பாத்திமா மரணம், பனிப்பாறையின் ஒரு முனையாக மட்டுமே இன்று தெரிகிறது! உலகளவில் ஊடகங்களின் நெறியை பாதிக்கும் வகையில் அமெரிக்க ஊடகங்கள் மேற்கொண்ட வெறுக்கத்தக்க பிரச்சாரங்களையும், இங்கே இந்து தேசியவாதிகளின் சூழ்ச்சிகளையும், எதிர்த்து இங்கே பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை.

இத்தகைய தப்பெண்ணங்கள் மற்றும் தவறான கருத்துக்களால் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொள்ள வேண்டிய பாதிப்பு எல்லையற்றது. சமுதாயத்தின் பலவீனமான பிரிவுகளுக்கு எதிராக, எங்கெங்கும் வளர்ந்துவரும் இத்தகைய பொய்யான வேட்கைகளை, எதிர்த்து முறியடிக்க நாம் நம்மை உயர்த்திக் கொள்வோமா?


மூர்த்தி
நன்றி : சப்ரங் இந்தியா.

உ.பி : மாட்டுக்கு லட்டு ! மாணவர்களுக்கு பால் தண்ணீர் ! கருத்துப்படம்

தண்ணீரில் பாலைக் கலந்து பார்த்திருப்பீர்களா ?

.பி சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த குழந்தைஅக்ள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு மதிய உணவாக பால் கொடுக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது உ.பி. அரசு. அதன் படி ஒரு லிட்டர் பாலை மட்டும் வைத்து அப்பள்ளியில் படிக்கும் 81 மாணவர்களுக்கும் பால் கொடுப்பது சாத்தியமா ? அதை சாத்தியமாக்கியிருக்கிறது ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் அரசு. ஒரு குண்டா தண்ணீரில் ஒரு லிட்டர் பாலைக் கலந்து காய்ச்சி 81 மாணவர்களுக்கு சத்துணவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

மாட்டுக்கு லட்டை ஊட்டும் ரவுடி சாமியார், மாணவர்களுக்கு சப்பாத்திக்கு உப்பைத் தொட்டுக் கொள்ளக் கொடுக்கிறார். பாலிற்குப் பதிலாக தண்ணீரை உட்கொள்ளக் கொடுக்கிறார்.

இந்து ராஷ்டிரத்தில் ஏழ்மை ஒழிக்கப்படாது. ஏழைகள்தான் படிப்படியாக ஒழித்துக்கட்டப்படுவார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சியம் !

***

கருத்துப்படம் : வேலன்

காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம்

0

”ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய்யாதது ஏன் ? காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம்!”  என்ற தலைப்பில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் கடந்த நவம்பர்-26 அன்று கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் குணசேகரன், வழக்கறிஞர் ஜெகதீசன், வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த தோழர் தனபால் மற்றும் பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் சிவா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

படிக்க :
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !
வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல | காணொளி


புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர்.
தொடர்புக்கு : 96298 86351.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மில்ட்டன் மற்றும் பார்வேந்தன் ஆஜர் !

மாவட்ட ஆட்சியர் திரு. வெங்கடேசன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மகேந்திரன் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை சட்ட ஆலோசகர் சத்தியபிரியா ஆகியோரின் கூட்டுச் சதியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என்று சாட்சியம்!

டந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போரட்டத்தின்பொழுது துப்பாக்கி சூட்டிற்கு பிறகு வழக்கு தொடுத்தவர்களை அழைத்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்து வருகிறது.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் திரு. ஜிம்ராஜ் மில்ட்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி தலைவர் திரு. பார்வேந்தன் மற்றும் வழக்கறிஞர் பாவேந்தன் ஆகியோர் துப்பாக்கி சூட்டிற்கு அடுத்தநாளே (23.05.2018) சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்கள் சட்ட உதவி செய்யவும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை முறையான பிரேத பரிசோதனை நடத்தவும் உத்தரவு பெற்றனர். அதன்பிறகும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கபட்டவர்களுக்கு தொடர்ந்து பல வழக்குகளை நடத்தி வருகின்றனர்.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் திரு. ஜிம்ராஜ் மில்ட்டன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி தலைவர் திரு. பார்வேந்தன் 15.11.2019 அன்று ஆணையம் முன்பு ஆஜரானார்கள். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஹரிராகவன், வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆணையத்தின் முன்பாக சாட்சியம் அளித்த பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த, வழக்கறிஞர் மில்ட்டன் கூறியதாவது,

வழக்கறிஞர் மில்ட்டன் மற்றும் வழக்கறிஞர் பார்வேந்தன் (வலது).

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போரட்டத்தின்பொழுது துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களிடமும், நண்பர்களிடமும் நேரடியாகத் தெரிந்து கொண்டதன் மூலமும், வழக்கு ஆவணங்கள், உண்மையறியும் குழு அறிக்கைகள், முதல் தகவல் அறிக்கைகள், காவல் அடைப்பு அறிக்கைகள், அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் பிற ஆவணங்கள் மூலமும் 22.05.2018 அன்று காவல்துறை எப்படி துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பதை எங்களால் துல்லியமாக அறிந்து கொள்ள முடிந்தது. அவையாவன

(i) 22.05.2018 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை. இது நன்கு திட்டமிட்டு, உரிய முன் தயாரிப்புகளுடன், முதல்நாளே “ஸ்னைப்பர்” – குறிபார்த்து சுடும் வகையிலான காவலர்கள் திட்டமிட்டு அமர்த்தப்பட்டுள்ளனர்.

(ii) துப்பாக்கிச்சூட்டில் பலியான அனைவரும் தலை மற்றும் மார்பு பகுதிகளில் மட்டுமே குறிவைக்கப்பட்டு, ஒரே தோட்டாவினால் குறிபார்த்து சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். எனவே இது பச்சையான படுகொலை.

(iii) ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடும் மக்களை அச்சுறுத்தி பணிய வைக்கவும், பொதுமக்கள் மத்தியில் போராடும் மக்களை வன்முறையாளர்களாகவும், கலவரக்காரர்களாகவும் சித்தரிக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்குவதன் மூலம் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடுவது பற்றி சிந்திக்கவே கூடாது என்ற வகையில் இத்துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

படிக்க:
பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம்
♦ தூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன ? களத்திலிருந்து வழக்கறிஞர் மில்டன்

(iv) ஸ்டெர்லைட் ஆலையுடன், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கூட்டுச்சதி செய்துள்ளனர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் திரு. வெங்கடேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மகேந்திரன் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்களைப் போல செயல்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சத்தியப்பிரியா, முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேந்திரன், சிப்காட் காவல் ஆய்வாளர் திரு.ஹரிஹரன் மற்றும் துணை வட்டாசியர் திரு.சேகர் ஆகியோர்களின் 20.05.2018 முதல் 25.05.2018 வரையிலான கைபேசி அழைப்புகளின் பதிவுகளை ஆராய்ந்து, மேற்படி நபர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்ளாக்கினால் இவர்களுக்கிடையேயான சதியினை அம்பலமாகும்.

ஆணையத்தின் முன் சமர்பித்த ஆவணம்.

இந்த உண்மையை புரிந்து கொள்ள ஆணையத்தின் முன்பாக எமது தரப்பு சான்றாவணங்களாக சுமார் 400 பக்கங்கள் கொண்ட 62 ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். மேற்படி ஆவணங்கள் யாவும் பல்வேறு வழக்குகளில் என்னாலும், வேறு சில வழக்கறிர்களாலும் ஆவணங்களாக தாக்கல் செய்யப்பட்டவை.

எனவே மாண்புமிகு இவ்வாணையம்,

(i) அரசு எந்திரத்தை பயன்படுத்தி தனியார் ஆலையான ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு நிராயுதபாணிகளாக, அமைதி வழியில் போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி, பொய் வழக்கு, தடுப்புக்காவல் என அதிகார துஷ்பிரயோகம் செய்த மாவட்ட ஆட்சியர் திரு.வெங்கடேசன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.மகேந்திரன், ஸ்டெர்லைட் ஆலை சட்ட ஆலோசகர் சத்திய பிரியா, காவல்துறை டி. ஐ. ஜி, உதவி கலெக்டர், தாசில்தார், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்கள் மீது கூட்டுச்சதி மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். நடந்துவரும் விசாரணையை இடையூறு செய்யாத வண்ணம், தடுக்கும் பொருட்டு மேற்சொன்ன அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

(ii) ஸ்டெர்லைட் ஆலையின் பிரிவு உபச்சார விழாவில் கலந்துகொண்ட 5 காவல் ஆய்வாளர்கள் மீது நடந்துகொண்டிருக்கும் நடவடிக்கை விசாரணையை கால வரையறை தீர்மானித்து விரைந்து முடிக்க வேண்டும். அந்த ஐந்து அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக காவல்துறை, வருவாய் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை, அரசு அதிகாரிகளை ஊழல்படுத்தி நிர்வாகத்தை செயல்படுத்த முடியாமல் முடக்கிய குற்றம் தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது ஒரு விரிவான விசாரணை நடத்தி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் என்ன நோக்கத்திற்காக பல்வேறு அரசுத் துறைகள் ஏற்படுத்தப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேறும்.

(iii) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு ஒரு சிறப்பு சட்டத்தை இயற்றி ஆலையை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு அதிக அதிகாரம் கொடுக்க, கொடுக்க அதிகார துஷ்பிரயோக, சட்ட விரோத செயல்களும் அதிகரிக்கும். அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய இந்த நிறுவனங்கள் தனி ஒரு ஆளாக செயல்படும் போக்கு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

(iv) ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல காவல்துறைக்கு சில கட்டுப்பாடுகளை; சட்டங்களை இயற்றவேண்டும். போராட்டக்காரர்களால் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டால் காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு, தடியடி, துப்பாக்கி சூடு என்று நடத்தி கூட்டத்தைக் கலைக்கலாம் என்று தற்போது இருக்கும் காவல்துறை வழிகாட்டுதல்களை திருத்தி உடமைகளுக்கு சேதம் வரும் வேளைகளில் துப்பாக்கிச்சூடு, உயிர்ச்சேதம் வருவதை தடுப்பதற்கு ஏற்றவகையில் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். கொடும் ஆயுதங்களை கொண்டு தாக்கி உயிருக்கு சேதம் விளைவிக்கும் கும்பல்களை தவிர மற்றவர்களிடம் காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை முற்றிலும் தடை செய்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.

– ஆகிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், தங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற அமைதியான முறையில் குடும்பத்துடன் போராடிய மக்களை ஸ்டெர்லைட் ஆலையுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, சதிசெய்து கொடூரமான முறையில் “ஸ்னைப்பர்” மூலம் சுட்டுக் கொலை செய்த காவலர்கள், பொறுப்பான அதிகாரிகள் தண்டிக்கப்படவும், உரிமைக்காக போராடிய மக்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சாட்சிமளித்துள்ளோம்” என்றார்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

அன்பே இதுவரை மறைத்து வைத்த உண்மையை சொல்லி விட தீர்மானித்துவிட்டேன் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 08a

“நன்றி, சீனியர் லெப்டினன்ட்! அற்புதமான தாக்கு, பாராட்டுகிறேன். என்னைக் காப்பாற்றினாய். ஆமாம், தரை வரையில் அந்த விமானத்தைப் பின்பற்றிச் சென்றேன். அது தரையில் மோதிச் சிதறியதைப் பார்த்தேன்…. நீ வோத்கா குடிப்பது உண்டா? என் இருப்பிடத்துக்கு வா. ஒரு லிட்டர் உனக்காக வைத்திருப்பேன். நல்லது, நன்றி. உன் கையைப் பற்றிக் குலுக்குகிறேன். கட்டாயம் வா!” என்றது அந்தக் குரல்.

மெரேஸ்யெவ் டெலிபோன் குழாயை வைத்தான். அன்று அனுபவித்தவற்றால் அவன் ஒரேயடியாகக் களைத்துப் போயிருந்தான். நிற்பதே அவனுக்கு அரும்பாடாக இருந்தது. கூடிய விரைவில் தன் நிலவறையை அடைந்து, பொய்க்கால்களைக் கழற்றி எறிந்து விட்டு கட்டிலில் உடலைக் கிடத்துவது பற்றியே எண்ணமிட்டது அவன் மனம். டெலிபோன் அருகே அசட்டுப் பிசட்டென்று தயங்கி நின்று விட்டு அவன் வாயில் பக்கம் மெதுவாக நகர்ந்தான்.

“எங்கே போகின்றீர்கள்?” என்று வழி மறித்தார் கமாண்டர். மெரேஸ்யெவின் கையைப் பற்றி, தமது வறண்ட சிறு கையால் வலி உண்டாகும் படி பலமாக இறுக்கிக் குலுக்கினார். “ஊம், உங்களுக்கு என்ன சொல்வது? சபாஷ்! என் ரெஜிமென்டில் இப்பேர்ப்பட்ட ஆட்கள் இருப்பது குறித்துப் பெருமை கொள்கிறேன்…… இன்னும் என்ன சொல்வது? நன்றி… உங்கள் நண்பன் பெத்ரோவ் மட்டும் என்ன, மோசமானவனா? மற்றவர்களுந்தாம்… ஆகா, இம்மாதிரி மக்கள் இருக்கும் போது தோல்வி அடைய மாட்டோம்!”

இவ்வாறு கூறி இன்னும் ஒரு முறை மெரேஸ்யெவின் கையை வலிக்கும் படி இறுகப் பிடித்துக் குலுக்கினார்.

மெரேஸ்யெவ் நிலவறையை அடைந்தபோது இரவாகி விட்டது. ஆனால் அவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. தலையணையை திருப்பி வைத்துக் கொண்டான். ஆயிரம் வரை எண்ணிவிட்டுத் தலைகீழாக ஒன்று வரை எண்ணினான். தனது நண்பர்களில் ‘அ’ என்ற எழுத்தில் தொடங்கும் குலப் பெயர் உள்ளவர்களை நினைவுப்படுத்திக் கொண்டான், பிறகு ருஷ்ய நெடுங்கணக்குப் படி வரிசையாக ஒவ்வோர் எழுத்திலும் ஆரம்பிக்கும் குலப்பெயர் உள்ளவர்களை ஞாபகப்படுத்திக் கொண்டான். புகைவிளக்கின் மங்கிய சுவாலையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டான். தூக்கம் வருவதற்காகக் கையாளப்படும் இந்த யுக்திகள் எத்தனையோ தடவை சோதித்து அறியப்பட்டவை. எனினும் இன்று அவனிடம் அவை பயன் விளைவிக்கவில்லை.

அவன் கண்களை மூட வேண்டியதுதான் தாமதம், அறிமுகமான உருவங்கள் ஒருபோது துலக்கமாகவும் மறுபோது மங்கிய மூட்டத்திலிருந்து பிரித்தறிய கடினமாயிருக்கும் படி தெளிவின்றியும் அவன் முன் தோன்றி மறையலாயின: வெள்ளிக் கேசம் பிடறி போல் இலங்க, கவலையுடன் பார்த்தார் மிஹாய்லா தாத்தா. “பசுவினுடையது போன்ற” இமை மயிர் கொண்ட அந்திரேய் தெக்தியாரென்கோ நல்லியல்புடன் கண் ஜாடை காட்டினான். வஸீலிய் வஸீலியெவிச் யாருக்கோ சூடாகக் கொடுத்தவாறு, நரையயோடிய தலையைக் கோபத்துடன் அசைத்தார். முகச் சுருக்கங்கள் எல்லாம் களி துலங்கும் படி குறுநகை செய்தார் முதிய ஸ்னைப்பர். கமிஸார் வரபியோவின் மெழுகு முகம் தலையணையின் வெள்ளைப் பின்னணியிலிருந்து அறிவு சுடரும் விழிகளால் அலெக்ஸேயை நோக்கியது.

படிக்க :
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !
சங்க பரிவாரத்தை தெறிக்க விடும் இளம் குருத்துகள் – காணொளி !

உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கும், நகைச்சுவை விழிகள் அவை, எல்லாவற்றையும் புரிந்து கொள்பவை அவை. ஸீனாவின் தழல்நிறக் கூந்தல் காற்றில் பறந்தவாறு தோன்றி மறைந்தது. துடியான சிறு மேனியான பயிற்சி ஆசிரியன் நவூமவ், புன்னகைத்தான், அனுதாபமும் பரிவும் தோன்ற கண் சிமிட்டினான். நட்பு நிறைந்த எத்தனையோ இனிய முகங்கள் இருளிலிருந்து புன்னகையுடன் அவனை நோக்கின, நினைவுகளை எழுப்பின, ஏற்கனவே தளும்பத் தளும்ப நிறைந்திருந்த இதயத்தை இதமான அன்பால் நிறைத்தன. நட்பார்ந்த இந்த முகங்கள் நடுவே உதித்து, உடனே அவற்றை மறைத்து விட்டது ஒல்காவின் முகம். இராணுவ உடுப்பு அணிந்த இளநங்கையின் தசை பிடிப்பு அற்ற முகம். களைத்த, பெரிய விழிகளால் நோக்கியது அது. தான் ஒரு போதும் கண்டிராத கோலத்தில் தன் முன்னே ஓல்கா நிற்பது போன்று அவ்வளவு தெளிவாக அந்த முகத்தைப் பார்த்தான் அலெக்ஸேய். இந்தத் தோற்றம் மெய்யானதே போல இருந்ததால் அலெக்ஸேய் சிறிது எழுந்திருக்கக் கூடச் செய்தான்.

அப்புறம் துக்கமாவது வருவதாவது! இன்பம் ததும்பும் ஆற்றல் அவனுக்குள் ஊற்றெடுத்துப் பெருகியது. அலெக்ஸேய் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து, விளக்கைப் பொருத்தினான். நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு காகிதத்தை கிழித்தான். பென்சில் நுனியைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டு எழுதத் தொடங்கினான்.

மளமளவென்று பெருகிய எண்ணங்களை அதே விரைவில் எழுத்தில் வடிக்க இயலாதவனாய், கிறுக்கித் தள்ளினான் அவன்: “என் அன்பே! இன்று நான் மூன்று ஜெர்மன் விமானங்களை சுட்டு வீழ்த்தினேன். ஆனால் முக்கியமான விஷயம் இது அல்ல. என்னுடைய சில தோழர்கள் அனேகமாக நாள் தோறும் இவ்வாறு செய்கிறார்கள். உன்னிடம் இதைப் பற்றி நான் பெருமையடித்துக் கொள்ள மாட்டேன்…… தூரத்தில் இருந்து கொண்டு என் நெஞ்சினில் வாழும் இனியவளே! பதினெட்டு மாதங்களுக்கு எனக்கு நேர்ந்ததை எல்லாம் உனக்கு விவரிக்க இன்று நான் விரும்புகின்றேன், இன்று அதற்கு நான் உரிமை பெற்று விட்டேன். இந்தச் சேதியை நான் உன்னிடமிருந்து இதுவரை மறைத்து வைத்திருந்தேன். அதற்காகப் பச்சாதாபப்படுகிறேன், மிகவும் வருந்துகின்றேன். இன்று தான் சொல்லி விடுவதென்று முடிவாகத் தீர்மானித்துவிட்டேன்…..”

« நாவல் முடிவுற்றது »

நாவலாசிரியரின் பின்னுரை தொடரும் …

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல | காணொளி

வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல !

ன்றாடங்காட்சிகளை மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தையும் வாட்டி வதைக்கும் வெங்காய விலை உயர்வு பற்றி மக்கள் கருத்து.

* கால் கிலோ வெங்காயம் 18 ரூபா.. 20 ரூபா..ய் விக்குது அதுவும் 3 வெங்காயம் தான் நிக்கும்…  அத வச்சி 4 பேர் இருக்குற குடும்பத்துக்கு குழம்பு வைக்க முடியுமா?

* விக்கிற விலைவாசியில காய் – கறி வாங்க முடியாம அல்லாடுறோம்…. இப்ப  வெங்காயமும் வெல ஏறி போனா வேற என்ன சாப்புடுறது…

* குடிகார புருசன்கள வச்சிகிட்டு வாழ்க்கைய ஓட்டிகிட்டிருக்கோம். நாளொன்னுக்கு நூறு ரூபா இல்லாம ஒன்னுமே பன்ன முடியாது. இதுல வெங்காய விலையே நூறு ரூபாய்க்கு வித்தா என்ன பன்றது?

பாருங்கள் ! பகிருங்கள் !