Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 348

பதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை

காலை 10 மணியிருக்கும். குறுகலான சந்துக்குள் இருந்த ஓலைக்குடிசையை நோக்கினோம். சென்னை வெயில் அக்கம் பக்க வீடுகளுக்கு இடையிலிருந்தும், மரக்கிளைகளுக்கு இடையிலிருந்தும் புகுந்து அந்தக் குடிசையைத் தாக்கிக் கொண்டிருந்தது.

ஓலைக் குடிசை நிழலின் தணலில் குத்துக்காலிட்டு, பீடியை ஒட்ட உறிஞ்சிகொண்டிருந்தார் அந்தக் கைவினைஞர். உருட்டி வைத்த மண்ணைச் சுமந்தபடி சுழல்வதை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது சக்கரம்.

பீடித் துண்டை எறிந்த கைகள், களிமண்ணை அணைத்துக்கொண்டது. பின் சக்கரம் சுழல, தானும் கூடவே சுழன்றுகொண்டிருந்தார், 63 வயதான ஆனந்தன். சென்னையிலிருந்து திருவேற்காடு போகும் வழியில் உள்ளது வடக்கு நொளம்பூர் கிராமம்.
அவரிடம் தொழில் அனுபவம் பற்றி கேட்டபோது,

வடக்கு நொளம்பூர் – சேமித்து வைக்கப்பட்டிருக்கும் களிமண் குவியல்.

இந்த ஊர்ல மட்டும் கிட்டத்தட்ட 40 குடும்பங்கள் பானை செய்யும் தொழிலை செய்து வருகிறோம். சின்ன வயசுல 2 ரூபாய் கூலிக்கு வேலைக்கு சேந்தேன். இப்ப சுமார் 20 வருஷமா சொந்தமா தொழில் செஞ்சிகிட்டிருக்கேன். இது எங்களோட பரம்பரை தொழிலு.

எங்கப்பா காலத்துலே நேமம் ஏரி, கூட்டு ரோடு, போரூர் ஏரி இப்படி பக்கத்துல உள்ள ஏரிகளிலிருந்து மாட்டு வண்டியிலதான் மண்ணு எடுத்து வருவோம். இப்போ டிப்பர் லாரியில எடுத்து வர்றோம். ஒரு லோடு ஏழாயிரம் ரூபா. ஒரு தடவ எடுத்து வந்தா ஒரு வருஷத்த ஓட்டிடுவோம். அதுவும் எப்பவும் கிடைக்காது, ஏலம் விடுற நேரம் பாத்து போகணும்.

கொண்டுவர்ற களிமண்ண ஒரு எடத்துல சேத்து வச்சிப்போம். திடீருன்னு மழையேதும் வந்தா ஓலையைப் போட்டு மூடி வைப்போம். மழைக்கு கரைஞ்சது போக மீதியைத்தான் பயன்படுத்த முடியும். ஒரு நாளைக்குத் தேவையான மண்ணை எடுத்து தண்ணீரில் ஊறவைத்துவிடுவோம்.

ஆணி, கூழாங்கற்கள், சிறு சிறு குச்சிகள் நீக்கப்பட்டு நன்றாக பிசைந்து மண்ணை இலகுவாக்குகிறார்.

பிறகு களிமண்ணோடு சவுட்டு மண்ணையும் சேர்த்து நல்லா பெசைஞ்சி பதப்படுத்துவோம். (இந்த மண் சேர்க்கைதான் அதன் தரத்தைத் தீர்மானிக்கிறது. சில இடங்களில் செம்மண்ணும், சில இடங்களிலில் வண்டல் மண்ணும் பயன்படுத்தப்படுகிறது) அப்போது, சின்னச் சின்ன குச்சி, கல்லு, கண்ணாடித் துண்டுக ஒன்னுகூட இல்லாம நீக்கிடுவோம். ஏன்னா சக்கரத்த வேகமா சுத்தி பானை வனையும்போது, அந்த வேகத்துல கைய பதம்பாத்துடும். ஈரத்துலேயே ஊறுன கையில்லையா? சில நேரம் விரல் துண்டாகூட போயிடும். எனக்கு சின்னச் சின்ன கீரல் மட்டும் விழுந்திருக்கு, மருந்தெல்லாம் எடுத்துக்கிறதில்லை. தானாவே ஆறிடும்.

தீட்டிய கத்தி கொண்டு எடுத்தாற்போல் கட்டைவிரலால் நீவி எடுக்கப்பட்ட பதமான களிமண் கலவை.

மழைக்காலங்களில் வேலை செய்ய மாட்டோம். நல்லா வெயிலடிக்கணும். ரொம்பவும் வெயிலா இருந்தா வீறல் விட்டுடும். சில நேரம் திடீருன்னு மழை வந்திடுச்சின்னா அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்கள்லாம் ஓடிவந்து உள்ளே எடுத்து வச்சி உதவி பண்ணுவாங்க.

ஒரு நாளைக்கு 50, 60 பானைச் சட்டிகள் செய்வேன். பானை மட்டுமே தனியாக செய்றதில்ல. குழம்புச் சட்டிகள் போன்ற சின்னச் சின்ன பாத்திரங்களோட சேர்த்துதான் செய்ய முடியும். ஏன்னா பானை செய்ய நேரம் அதிகம் புடிக்கும்.

சக்கரத்தில் திரட்டி வைக்கப்பட்ட மண்ணுக்கு உருக்கொடுக்க தனது முழு பலத்தையும் செலுத்த வேண்டியிருக்கிறது.

சின்ன வயசுல பானைச் சட்டி செஞ்சி மாட்டு வண்டியிலதான் பக்கத்து கிராமங்களுக்கு விக்க கொண்டுபோவோம். ஒரு படி நெல்லுக்கு ஒரு கொழம்புச் சட்டி கொடுப்போம். அப்புறம் தங்கச்சாலை, மண்ணடின்னு டவுனு பக்கமும் லாந்தர் வௌக்க கட்டிகிட்டு விக்கப் போவோம். இன்னைக்கு நெலம தலைகீழா மாறிப்போச்சு. கோடம்பாக்கத்திலேருந்து எப்படா ஆர்டர் வருமுன்னு காத்துகிட்டிருப்போம். ஒரு தடவைக்கு கடைக்காரங்க 200, 300 சட்டிங்க, பூந்தொட்டிங்க ஆர்டர் கொடுப்பாங்க. அவங்களுக்கு 45 ரூபாய்க்கு கொடுப்போம், அவங்க 80, 100 -ன்னு விப்பாங்க. இதைச் செய்யிறதுக்கே எனக்கு ஒன்ற.. ரெண்டு மாசங்..கூட ஆகும்.

ஒருமுறை வேகமாக சுற்றப்பட்ட சக்கரத்தின் சுழற்சி நிற்பதற்குள் ஒரு குழம்புச்சட்டி தயாராகிவிடுகிறது.

அடுத்த தலைமுறை ஆளுங்க, களிமண்ணுல பானை செய்வாங்களான்னு கேப்பாங்க போல. என்ன செய்யிறது… பானை செய்யிறேன்னு சொன்னா எங்க சாதிக்காரங்களே கேவலமா பாக்குறாங்க; பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்க. இனி யாருதான் இதச் செய்யப்போறாங்க; எங்களோடவே இந்தத் தொழிலும் அழிஞ்சிரும்போல என்றார்.

உடல் முழுவதும் சொட்டியது முத்துத் துளிகள்,
அது வியர்வையல்ல, ஆற்றாமையின் கண்ணீர்.

வெயிலுதான் நல்லா அடிக்குதே, அப்புறம் ஏன் நடுப்பொழுதே வேலையை முடிச்சிகிட்டீங்க. எப்போதும் அரை நாள்தான் வேலை பாப்பீங்களா என்றதும்,

ஃபேன் போட்டால் விரைவில் மண் உலர்ந்துவிடும்; சிந்தும் வியர்வையைக் கூடத் துடைக்காது, பானையின் வடிவத்திலே கவனம் செலுத்தியாக வேண்டும்.

இல்லையில்லை… ஒடம்பு சரியில்லாம நாலு நாலா ஹாஸ்பிட்டல்ல தங்கியிருந்தேன். இப்போ சரியாயிருச்சான்னு பாக்குறதுக்காக கொஞ்ச நேரம் வேலை செஞ்சி பார்த்தேன் என்றார். சிலருக்கு பொழுது போக்குவதே வேலையாக இருக்கிறது; இவருக்கோ வேலையே பொழுதுபோக்கு.

ஏடறிந்த வரலாற்றுக்கு முன்பே தோன்றிய மட்பாண்டத் தொழில் இன்று அழியும் தறுவாயில்… அதில் வேலை செய்யும் அனைவரையும் 55 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களாகவே பார்க்க முடிகிறது. மட்பாண்டப் பயன்பாடு மிகவும் சுருங்கி விட்டது. வருடம் ஒருமுறை பொங்கல் விழாவிலும், கல்யாண மண்டபங்களிலும், மால்களிலும் வண்ணம் தீட்டப்பட்ட அலங்காரப் பொருட்களாகவே காட்சியளிக்கிறது.

ஆனந்திடம் நடத்திய 2 மணிநேர உரையாடலில் நலிந்துபோன விவசாயியை ஞாபகப்படுத்திச் சென்றார்.

தோட்டம் தொரவுன்னு அனைத்தையும் இழந்த போதிலும் விவசாயி, தனது வீட்டு வாசலில் ரெண்டு குழியைத் தோண்டி பரங்கி, சுரைக்காய் என்று ஏதேனும் சில விதைகளைத் தூவி தண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது போல; நூல் விலகிய தறியில் ஒட்டிக்கொண்டிருக்கும் நூலாம்படையை நீவிக்கொண்டிருக்கும் நெசவாளியைப் போல; இன்று, பானை வனையும் கைவினைஞர்களின் வாழ்நிலைமை. லாபம் நட்டம் எதுவும் பார்க்க முடியாது, களிமண்ணை பிசைந்து கொண்டே இருந்தால் போதும். அந்த மண்ணின் ஈரத்தில்தான் அவர்களது உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு மூங்கில் பத்தையும் கைவிரல்களுமே பானை வனையும் கலைஞனின் கருவிகள்.

பத்து விரல்களும் சிம்பொனி இசையைப்போல ஒத்திசைவோடு லாவகமாக வளைந்து நெளிந்து வடிவம் கொடுக்கிறது.

உலர்த்தப்படும் பச்சைச் சட்டிகள். அதிக வெயில் பட்டால் விரிசல் விழுந்துவிடும். பதத்தோடு வைத்து எடுக்க வேண்டும்.

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சட்டிகள்.

போலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் ?

0

ரூர் அரசு கலைக்கல்லூரியில் கடந்த 2018- 2019 –ம் கல்வியாண்டில் B.A வரலாறு பிரிவில் தனது படிப்பை முடித்தார் மாணவர் சுரேந்திரன்.

படிப்பை முடித்த பின்னர் இந்த ஆண்டில், M.A வரலாறு பிரிவில் மேற்படிப்பை அதே கல்லூரியில் தொடர்வதற்கு சுரேந்திரன் விண்ணப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 12. 07. 2019 அன்று நடந்த கலந்தாய்வில் கலந்து கொண்டார் சுரேந்திரன். கலந்தாய்வில் மாணவர் சுரேந்திரனுக்கு சீட் கொடுக்க முடியாது என மறுத்துள்ளது கல்லூரி நிர்வாகம்.

படிக்க:
பாலியல் குற்றவாளி பேராசிரியருக்கு பிணை வழங்காதே – கரூர் மாணவர்கள் போராட்டம் !
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து கரூர் – ஈரோடு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

“சீட் வழங்க மறுத்ததற்கு என்ன காரணம்?” என சுரேந்திரன் கேட்டதற்கு, “உன் மீது வழக்குகள் உள்ளன. அதனால் உனக்கு சீட் வழங்கக் கூடாது என S.P அலுவலகத்தில் இருந்து கல்லூரிக்குக் கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தைக் கல்லூரி நிர்வாகக் கவுன்சில் கமிட்டியில் கூடி பரிசீலித்தோம். அப்படிப் பரிசீலித்ததில் உனக்கு சீட் வழங்கக் கூடாது என கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது” எனத் திமிராக பதில் கூறியிருக்கிறார், கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன்.

கல்லூரி விதிப்படி ஒரு  கவுன்சில் கமிட்டி கூறுவது என்றால் கல்லூரியின் வளர்ச்சிக்காக  யோசிக்க  மட்டும்தான்  கமிட்டி கூட வேண்டும். ஆனால் தனி நபருக்காக அந்த கமிட்டி கூடக் கூடாது. ஆனால் போலீசு காலால் இட்ட ஆணையை தலையால் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்காக கமிட்டிக் கூட்டம் நடந்திருக்கிறது.

கமிட்டிக் கூட்டத்திலும் கூட பல பேராசிரியர்கள், “மாணவர் சுரேந்திரன் பெயரில் கல்லூரியில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை, எந்த ஒழுங்கு நடவடிக்கையிலும் அவர் தண்டிக்கப்படவில்லை” என்று கூறியிருக்கின்றனர். அவர் படிக்கும் வரலாற்றுத் துறையில் இருக்கும் பேராசிரியர்கள், சுரேந்திரனை மீண்டும் கல்லூரியில் சேர்ப்பதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறியுள்ளனர்.

ஆனாலும் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் மற்றும் விலங்கியல் துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் திட்டமிட்டு சுரேந்திரனை மீண்டும் கல்லூரிகள் அனுமதிக்கக் கூடாது என்ற தங்களது முடிவை கமிட்டி முடிவாக மாற்றி மாணவர் சுரேந்திரனின் M.A விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர்.

சுரேந்திரனை கல்லூரியில் இருந்து நீக்க இவர்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டவேண்டும் ?

ஏனெனில் மாணவர் சுரேந்திரன், கல்லூரி மாணவர்களுக்கு,

  1. பஸ் பாஸ் கேட்டு மாணவர்களைத் திரட்டி போராடியிருக்கிறார்.
  2. அனிதா மரணம், நீட் தேர்வுக்கு எதிராக போராடியிருக்கிறார்.
  3. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர்களைத் போராடியிருக்கிறார் .
  4. கரூர் அரசு கலை கல்லூரியில் ஏழு வருடங்களாக பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பொருளியல் துறைத் தலைவர் இளங்கோவனின் அக்கிரமத்தை மாணவர்களை ஒன்றுதிரட்டி கல்லூரிக்கு வெளியே போராடி அந்தக் கிரிமினலை சிறைக்கு  அனுப்பவும் செய்தார்.

இது மட்டுமின்றி, கல்லூரியில் மாணவ மாணவியருக்கான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றிற்காகவும் போராடி பெற்றுத் தந்திருக்கிறார்.

இது போன்ற காரணங்களினால் மாணவன் சுரேந்திரனின் மேற்படி விண்ணப்பத்தை திட்டமிட்டு தடுத்து அவர் மீண்டும் கல்லூரியில் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரனும், விலங்கியல்துறைத் தலைவர் ராதாகிருஷ்ணனும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் செய்த சதிதான் மாணவர் சுரேந்திரனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம்.

படிக்க:
18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை !
அடுத்த மல்லையா – ரூ. 47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால் !

மாணவர்கள் தங்களது உரிமைக்காகவும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடக் கூடாது. அப்படி யாராவது போராடினால், அவர்களை திட்டமிட்டு கல்லூரியை விட்டு நீக்குவது, மீண்டும் அனுமதிக்க மறுப்பது என்ற நிலைப்பாட்டையே கல்லூரி நிர்வாகம் எடுத்துள்ளது.

இது ஒரு மாணவரின் கல்வி உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மாணவர்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. மாணவர்களின் போராடும் உரிமைக்கும், கருத்துரிமைக்கும் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினை.

மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம் !


தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர். தொடர்புக்கு: 9629886351

ஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27

3

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 27

அத்தியாயம் ஐந்து – சாகஸக்காரரும் தீர்க்கதரிசியுமான ஜான் லோ
அ.அனிக்கின்

ஜான் லோ பிரபலமானவர். இந்தப் புகழ்மிக்க ஸ்காட்லாந்துக்காரரின் முதல் வாழ்க்கை வரலாறு அவருடைய வாழ்நாளின் போதே வெளியிடப்பட்டிருந்தது. பிரான்சில் ”லோவின் திட்டம்” சீர்குலைந்ததும் அவரைப் பற்றி எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் எழுதப்பட்டது. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு அரசியல் எழுத்தாளர் யாரும் அவரைக் குறிப்பிடத் தவறுவதில்லை.

19-ம் நூற்றாண்டில் நவீன வங்கிகள் ஏற்பட்டு கடன் வசதிகளும் பங்குச் சந்தை ஊக வாணிகமும் விரிவாக வளர்ச்சியடைந்ததோடு சேர்ந்து, கடன் வசதியின் உணர்ச்சிகரமான தலைவராகிய ஜான் லோவின் கருத்துக்கள், செயல்களைப் பற்றி புதிய அக்கறை ஏற்பட்டது. அவர் ஒரு சிறப்பான சாகஸக்காரர் மட்டுமே என்று யாரும் இனிமேல் நினைப்பதில்லை; அவர் புகழ் மிக்க பொருளியலாளராகவும் இருந்தார் என்றே நினைக்கிறார்கள்.

”பண வீக்கத்தின் நூற்றாண்டாகிய” இருபதாம் நூற்றாண்டு இந்தக் குறிப்பிடத்தக்க நபரிடம் ஒரு புது அம்சத்தைக் கண்டு பிடித்தது. அபரிமிதமான கடன் வசதி, அதிகமான காகிதப் பணம் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று அவர் நம்பினார். இந்தக் கருத்து தான் (வேறு வடிவத்தில்) நவீன முதலாளித்துவ அரசின் நெருக்கடி எதிர்ப்புக் கொள்கையின் அடிப்படையாக இருக்கிறது.

முதலாளித்துவ ஆராய்ச்சியாளர்கள் லோவுக்கும் கெய்ன்சுக்கும் உண்மையாகவே மெய்யுணர்வு ரீதியான ஒற்றுமையைக் கண்டு வருகின்றனர். ”பிரெஞ்சு நிதித்துறையின் பொதுப் பொறுப்பாளராக இருந்த லொரி ஸ்டோனைச் சேர்ந்த ஜான் லோவுக்கும் (1671-1729) ஜான் மேனார்ட் கெய்ன்சுக்கும் இடையே உள்ள இணையான அம்சங்கள் மிக ஆழமானவையாகவும் விரிவான தளத்தைக் கொண்டவையாகவும் இருக்கின்றன; அவர்களுடைய சொந்த வாழ்க்கையிலிருக்கும் சிற் சில அம்சங்களில் கூட இந்த ஒற்றுமை இருக்கிறது; எனவே லோ இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கெய்ன்சாக மறு பிறவி எடுத்தார் என்று ஒரு ஆன்மீகவாதி சொல்லுவது கூட சாத்தியமே.” (1)

லோவைப் பற்றி அண்மையில் வெளிவந்திருக்கின்ற புத்தகங்களின் தலைப்புக்களும் கூட தனிச் சிறப்போடு அமைந்திருக்கின்றன : ஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர், கடன் மந்திரவாதி மற்றும் வங்கியாளர். லோவின் அசாதாரணமான வாழ்க்கை. அதே சமயத்தில் அவர் பொருளாதாரச் சிந்தனையின் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்ற கனமான புத்தகங்களில் சிறப்பு மிக்க இடத்தைப் பெற்றிருக்கிறார்.

ஆபத்தான வாழ்க்கைப் பயணமும் துணிவான கருத்துக்களும்

ஜான் லோ 1671-ம் வருடத்தில் ஸ்காட்லாந்தின் தலை நகரமான எடின்பரோவில் பிறந்தார். அவர் தகப்பனார் பொற்கொல்லராக இருந்ததோடு, அந்தக் காலப் பழக்கத்தின்படி வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்தார்.

ஜான் லோ

1683 ம் வருடத்தில் அவர் லொரி ஸ்டோன் என்ற சிறு பண்ணையை விலைக்கு வாங்கினார்; அதன் மூலம் நில வுடைமையாளர்களில் ஒருவரானார். ஜான் லோ-விடம் பணமும் தோற்றப் பொலிவும் கவர்ச்சியும் இருந்தது. எனவே அவர் வெகு சீக்கிரத்திலேயே போக்கிரி, சூதாடி என்று பெயரெடுத்தார். அவருக்கு இருபது வயதான பொழுதே அவர் “எல்லா விதமான சிற்றின்பப் பழக்கங்களிலும் அதிகமான அனுபவமுள்ளவராக இருந்தார்” என்று அவருடைய கூட்டாளி ஒருவர் எழுதியிருக்கிறார்.

லோவுக்கு எடின்பரோ சிறிய நகரமாகத் தோன்றியது. எனவே அவர் லண்ட னுக்குப் புறப்பட்டார். ஸ்காட்லாந்தும் இங்கிலாந்தும் ஒரே மன்னரின் கீழ் இருந்த போதிலும் மற்ற எல்லா அம்சங்களிலும் ஸ்காட்லாந்து இன்னும் சுதந்திரமான அரசாகவே இருந்தது.

லண்டனில் இந்த இளைஞர் சீக்கிரத்தில் லோ பெருமகனார் என்ற பட்டப் பெயரோடு எல்லோருக்கும் அறிமுகமானார். 1694 ஏப்ரல் மாதத்தில் அவர் வாட்சண்டையில் தன்னுடைய எதிரியைக் கொன்றார். நீதிமன்றம் அவர் கொலை செய்ததாகத் தீர்ப்புக்கூறி லோ பெருமகனாரை சிரச்சேதம் செய்யுமாறு தண்டனை வழங்கியது . செல்வாக்குள்ள நபர்கள் தலையிட்டு உதவி செய்தபடியால் அரசர் மூன்றாம் வில்ஹெல்ம் அவருக்கு மன்னிப்பளித்தார். ஆனால் செத்துப் போனவரின் உறவினர்கள் லோ மீது புது வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கின் முடிவுக்காகக் காத்துக் கொண்டிராமல் லோ நண்பர்களின் உதவியோடு சிறையிலிருந்து தப்பினார். அவர் முப்பது அடி உயரத்திலிருந்து கீழே குதித்த பொழுது கணுக்கால் முறிந்தது. இனிமேல் இங்கிலாந்தில் இருக்க முடியாது; எங்காவது வெளி நாட்டுக்குத் தான் போக வேண்டும். அவர் ஹாலந்து நாட்டுக்குப் போக முடிவு செய்தார்.

படிக்க:
♦ மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு !
♦ ஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு

லண்டனில் தங்கியிருந்த மூன்று வருடங்களில் அவர் குடிகாரர்களோடும் பெண்களோடும் உல்லாசமாகப் பொழுது போக்கியதாக மட்டுமே நினைக்கக் கூடாது. அவர் செய்முறையான கல்வியைப் பெற்றிருந்தார்; கணக்குப் போடுவதிலும் பல விதமான பண விவகாரங்களிலும் அபாரமான திறமைசாலியாக இருந்தார். 1688-89 புரட்சிக்குப் பிறகு லண்டனில் பணக்கார வியாபாரிகள் ஏராளமாகப் பெருகிவிட்டார்கள். லோ அவர்களோடு பழகினார். இதற்குச் சில வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து வங்கி துவக்கப்பட்டது; இது ஆங்கில முதலாளித்துவத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும்.

லோ வங்கித் தொழிலைப் பற்றி அதிகமான புத்தார்வக் கற்பனைகள் கொண்டிருந்தார். புத்தார்வக் கற்பனையும் வங்கித் தொழிலும் என்று சொல்வது இன்று வினோதமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் அந்தக் காலத்தில், முதலாளித்துவக் கடன் வசதிகளின் வைகறைப் பொழுதில், அதன் வாய்ப்புக்கள் பலருக்கும் முடிவில்லாதவையாகவும் அதிசய மானவையாகவும் தோன்றின்.

லோ தன்னுடைய கட்டுரைகளில் வங்கிகள் ஏற்பட்டுக் கடன் வசதிகள் வளர்ச்சியடைந்ததை “இந்தியாவைக் கண்டுபிடித்ததோடு”, அதாவது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடல் வழிப் பாதை கண்டு பிடிக்கப்பட்டு அதன் வழியாக விலையுயர்ந்த உலோகங்களும் அபூர்வமான பொருள்களும் ஐரோப்பாவுக்குக் கொண்டு வரப்பட்டதோடு திரும்பத் திரும்ப ஒப்பிடுகிறார் என்பது காரணமில்லாமல் அல்ல.

தான் நடத்தப் போகும் வங்கியின் மூலம் வாஸ்கோடகாமா, கொலம்பஸ் அல்லது பிஸாரோ செய்ததைக் காட்டிலும் அதிகமாகச் சாதிக்க முடியும் என்று அவர் தன் வாழ்க்கை முழுவதும் மனப்பூர்வமாக நம்பினார். ஜான் லோ இன்னும் பரிசோதிக்கப்படாத பலத்தைக் கொண்டிருந்த கடன் வசதியின் ஆர்வலராக, கவிஞராக, தீர்க்கதரிசியாக இருந்தார்.

அக்காலத்தில் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய வங்கிyஆக இருந்த ஆம்ஸ்டர்டாம் வங்கி. (படம் : நன்றி – விக்கிபீடியா)

இது இங்கிலாந்திலே ஆரம்பமாகி ஹாலந்திலே தொடர்ந்தது. அங்கேயிருந்த ஆம்ஸ்டர்டாம் வங்கி ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய வங்கி; அதிகமான செல்வாக்கோடு அது இயங்கி வந்தது. அதன் அமைப்பை லோ ஆராய்ந்தார். 1699-ம் வருடத்தில் அவரைப் பாரிசில் பார்க்கிறோம். அங்கிருந்து அவர் இத்தாலிக்குப் புறப்பட்டபொழுது திருமணமான ஒரு பெண்ணையும் தன்னோடு கூட்டிக் கொண்டு சென்றார். காத்தரின் சென்னியேர் என்ற பெயருடைய அந்தப் பெண் இங்கிலாந்திலே பிறந்தவள். அன்று முதல் எல்லாப் பயணங்களிலுமே அந்தப் பெண் அவரோடிருந்தாள். புது வகையான ஒரு வங்கியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே லோ 1704-ம் வருடத்தில் காத்தரினோடும் அவர்களுடைய ஒரு வயது மகனோடும் ஸ்காட்லாந்துக்குத் திரும்பினார். அங்கே தன்னுடைய கருத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காகப் பாடுபட்டார்.

அன்று நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. வர்த்தகத்தில் தேக்கம் ஏற்பட்டு நகரங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருந்தது. தொழில்களை ஏற்படுத்துவதில் ஊக்க உணர்ச்சி நசுங்கிப் போயிருந்தது. அதுவும் நல்லதே! 1705-ம் வருடத்தில் எடின்பரோவில் லோ வெளியிட்ட நூலில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தன்னுடைய திட்டத்தை விளக்கினார். தேசத்துக்குப் பணம் கொடுப்பதற்கான ஆலோசனையோடு பணத்தையும் வர்த்தகத்தையும் பற்றி என்பது அந்த நூலின் தலைப்பாகும்.

லோ, எந்த விதமான விரிவான அர்த்தத்திலும், ஒரு தத்துவாசிரியரல்ல. பொருளாதாரத்தில் அவருடைய ஈடுபாடுகள் பணம், கடன் வசதி ஆகியவற்றுக்கு அப்பால் ஒரு போதும் போனதில்லை. ஆனால் தன்னுடைய திட்டத்துக்காகத் தீவிரமாகப் போராடிய பொழுது இந்தப் பிரச்சினையைப் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் பொருளாதார விஞ்ஞானத்தில் அதிகமான, மிகவும் முரண்பாடான பாத்திரத்தை வகித்தன.

லோவின் பொருளாதாரக் கருத்துக்களை அவருடைய செய்முறைப் பணிகளோடு சேர்த்தே பார்க்க வேண்டும் என்பது உண்மையே. அவருடைய செய்முறைப் பணிகளின் விளைவுகள் மாபெரும் அளவில் இருந்தன. அவருடைய பிற்காலத்திய எழுத்துக்களைப் போலவே இந்தப் பணிகளிலும் தாம் எடின்பரோவில் வெளியிட்ட புத்தகத்திலிருந்த அடிப்படையான கருத்துக்களையே அவர் செயல்படுத்தினார், வளர்த்துச் சென்றார்.

”அவர் ஒரு முறையை உருவாக்கும் மனிதர்” என்று சான் – சிமோன் கோமகன் அவரைப் பற்றி எழுதினார். இவர் எழுதிய புத்தகத்தில் தனி மனிதர் என்ற முறையில் லோவைப் பற்றி சில முக்கியமான தகவல்கள் கிடைக் கின்றன. தன்னுடைய திட்டத்தின் ஆதாரக் கருத்துக்களை முடிவு செய்தவுடன் லோ சிறிதும் ஊசலாட்டம் இல்லாத பிடிவாதத்தோடும் கொள்கைப்பற்றோடும் அதைப் பிரச்சாரம் செய்து அமுல் நடத்தினார்.

ஒரு நாட்டில் அபரிமிதமான பணப் பெருக்கமே பொருளாதார வளத்தின் திறவுகோல் என்று லோ எடுத்துக் கூறினார். அவர் பணத்தையே செல்வமாகக் கருதியதாக முடிவு செய்யக் கூடாது; உண்மையான செல்வம் என்பது பண்டங்கள், தொழிற்சாலைகள், வர்த்தகமே என்பதை அவர் மிக நன்றாக உணர்ந்திருந்தார். ஆனால் அவருடைய கருத்தின்படி நிலம், உழைப்பு, தொழில் திறமை ஆகியவற்றை முழு அளவுக்குப் பயன்படுத்துவதைப் பணப்பெருக்கம் உறுதிப் படுத்துகிறது.

படிக்க:
♦ 18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை !
♦ முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?

”உள்நாட்டு வர்த்தகம் என்பது மக்களுக்கு வேலை கொடுப்பதும் பொருள்களைப் பரிவர்த்தனை செய்வதுமாகும். உள்நாட்டு வர்த்தகம் பணத்தை நம்பியிருக்கிறது . அதிகமான அளவு பணம் குறைவான பணத்தால் இயன்றதைக் காட்டிலும் அதிகமானவர்களுக்கு வேலை கொடுக்கும்….. பணம் அதனால் முடிந்த அளவுக்கு முழுச் செலாவணியை ஏற்படுத்துவதும் நாட்டுக்கு அதிகமான லாபத்தைத்தரக் கூடிய துறைகளில் அது ஈடுபடும்படி நிர்ப்பந்திப்பதும் நல்ல விதமான சட்டங்களினால் முடியும். ஆனால் சட்டங்களினால் மட்டும் அதிகமான வர்களுக்கு வேலை கொடுக்க முடியாது. அதிகமான எண்ணிக்கையுள்ளவர்களுக்குக் கூலி கொடுக்கும் வகையில் அதிகமான பணத்தைச் செலாவணியில் ஈடுபடுத்தாமல் இது முடியாது ….” (2) என்று லோ எழுதினார்.

லோ பழைய வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து வேறுபடுகிறார் என்பது நிச்சயமானதாகும். அவரும் பொருளாதார வளர்ச்சியின் விசையைச் செலாவணியின் எல்லைக்குள் தேடுகிறார் என்றாலும் கூட, அவர் உலோகப் பணத்தைப் போற்றிக் கொண்டாடவில்லை, அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்குத் தன்னாலியன்ற அனைத்தையும் செய்கிறார்.

இதற்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கெய்ன்ஸ் தங்கப் பணத்தைக் “காட்டு மிராண்டிக் காலத்தின் எச்சம்” என்று கூறினார். லோவும் இதைப் போல சொல்லியிருக்கக் கூடியவரே. பணம் உலோகமாக இருக்கக் கூடாது. அது பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்ப வங்கி உருவாக்குகின்ற கடன் வசதியாக இருக்க வேண்டும்; வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் காகிதப் பணமாக இருக்க வேண்டும். ”பணத்தை அதிகரிப்பதற்கு வங்கிகளை உபயோகப்படுத்துவது இதுவரை பின்பற்றப்பட்டிருக்கும் வழிகளில் மிகச் சிறந்ததாகும்.” (3)

லோவின் முறை இன்னும் இரண்டு கோட்பாடுகளைக் கொண்டிருந்தது; அவற்றின் முக்கியத்துவத்தை மிகைப் படுத்திச் சொல்வது கடினமே. முதலாவதாக, வங்கிகள் கடன் விஸ்தரிப்புக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றார். அதாவது வங்கியில் இருக்கின்ற உலோகப் பணத்தின் அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகக் கடன்கள் வழங்க வேண்டும் என்றார். இரண்டாவதாக, வங்கியை அரசு நடத்த வேண்டும், அரசின் பொருளாதாரக் கொள்கையை அது அமுலாக்க வேண்டும் என்று கோரினார்.

இதை விளக்கி எழுதுவது அவசியம். ஏனென்றால் இன்று இதே மாதிரியான பிரச்சினைகள் -வெவ்வேறான நிலைமைகளிலும் வடிவங்களிலும் விசேஷமாக ஏற்பட்டிருக்கின்றன. ஒரு வங்கியின் உரிமையாளர்கள் தங்கத்தில் ஒரு மில்லியன் பவுன் மூலதனம் போட்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர ஒரு மில்லியன் பவுன் மதிப்புடைய தங்கம் அவர்களிடம் இருப்புநிதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. வங்கி ஒரு மில்லியன் பவுன் மதிப்புடைய நோட்டுகளை அச்சிட்டு அவற்றைக் கடன் கொடுக்கிறது. அந்த வங்கியின் இருப்பு நிலைக் கணக்கு பின்வரும் விதத்தில் இருக்கும் என்று வாணிபக் கணக்குமுறையைப் பற்றி மிகக் குறைவாகத் தெரிந்தவர்கள் கூட அறிந்திருப்பார்கள். 

சொத்துக்கள் கடன் பொறுப்புகள்
தங்கம் 2 மில்லியன்

 

கடன்கள் 1 மில்லியன்

சொந்த மூல தனம் 1 மில்லியன்

 

இருப்பு நிதி 1 மில்லியன்

 

வங்கி நோட்டுகள் 1 மில்லியன்

மொத்தம் 3 மில்லியன் மொத்தம் 3 மில்லியன்

 

இந்த வங்கியை நிச்சயமாக நம்பலாம் என்பது தெளிவு. ஏனென்றால் அதன் தங்க வைப்பு எந்த நேரத்திலும் தங்கத்துக்காகக் கொடுக்கப்படக் கூடிய வங்கி நோட்டுகளையும் அதன் இருப்பு நிதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட வங்கியினால் என்ன பயன் என்று லோ கேட்கிறார். அவர் கேள்வியும் நியாயமானதே. இந்த வங்கியினால் ஓரளவுக்குப் பயன் ஏற்படுவது உண்மையே. அது வழங்கீடுகளுக்கு உதவி செய்கிறது; தங்கம் தேய்ந்து விடாமல் அல்லது தொலைந்து விடாமல் பாதுகாக்கிறது. எனினும் இந்த வங்கி அதிகமான நோட்டுகளை, உதாரணமாக, 10 மில்லியன் பவுன் மதிப்புள்ள நோட்டுகளை வெளியிட்டு அவற்றைப் பொருளாதாரத்துக்குள் புகுத்தினால் அதிகமான பயனுள்ளதாக இருக்கும். அப்படிச் செய்யும்பொழுது பின்வரும் வகையில் கணக்கு இருக்கும்: 

சொத்துக்கள் கடன் பொறுப்புகள்
தங்கம் – 2 மில்லியன்

 

கடன்கள் 10 மில்லியன்

சொந்த மூல தனம் 1 மில்லியன்

 

இருப்பு நிதி 1 மில்லியன்

 

வங்கி நோட்டுகள் 10 மில்லியன்

மொத்தம் 12 மில்லியன் மொத்தம் 12 மில்லியன்

 

இந்த வங்கி ஓரளவுக்கு ஆபத்தோடுதான் இயங்கக் கூடும். வங்கி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மூன்று மில்லியன் மதிப்புள்ள நோட்டுகளைப் பரிவர்த்தனைக்குக் கொடுத்தால் என்ன ஆகும்? வங்கி முறிந்துவிடும் (அல்லது லோவின் காலத்தில் சொல்லப்பட்டது போல, இன்றும் சொல்லப்படுவது போல வங்கி வழங்கீடுகளை நிறுத்திவிடும்). ஆனால் அது அவசியமான, நியாயமான ஆபத்தே என்று லோ நம்புகிறார். இதற்கு மேலும் சென்று, வங்கி குறைந்த காலத்துக்கு வழங்கீடுகளை நிறுத்திவிட நேர்ந்தால், அது ஒன்றும் அவ்வளவு ஆபத்தான தல்ல என்றும் கூறுகிறார்.

மேலே கொடுத்த உதாரணத்தில் வங்கியின் தங்க இருப்பு அது வெளியிட்டுள்ள நோட்டுகளின் மொத்த மதிப்பில் 20 சதவிகிதம் மட்டுமே; இருப்புநிதிகளையும் சேர்த்தால் தங்க இருப்பின் சதவிகிதம் இன்னும் குறைந்துவிடும். இது பகுதி இருப்புக் கோட்பாடு என்று சொல்லப்படுகிறது; முழு வங்கித் தொழிலுக்கும் இதுவே ஆதாரம். இதன் மூலம் வங்கிகள் கடன்களை நெகிழ்ச்சியோடு விஸ்தரிக்கவும் செலாவணியை அதிகரிக்கவும் முடிகிறது. முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சியில் கடன் வசதி மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. இதை முதன் முதலில் தெரிந்து கொண்ட சிலரில் ஜான் லோவும் ஒருவர்.

ஆனால் இதே கோட்பாடு வங்கி அமைப்பின் நிலையுறுதிக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. வங்கிகள் ”ஒரேயடியாகப் போக” முற்படுகின்றன; லாப நோக்கத்தினால் கடன்களின் அளவை உயர்த்தி விடுகின்றன. எனவே வங்கிகள் முறிந்துவிடுவதும் சாத்தியமே, அது பொருளாதாரத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். !

வங்கியினால் ஏற்படும் நன்மையை அரசு தவறான வகையில் உபயோகிப்பது இன்னொரு ஆபத்து அல்லது அதே ஆபத்தின் மற்றொரு அம்சம் என்று சொல்லலாம். வங்கி நாட்டுப் பொருளாதாரத்தின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்கிற விதத்தில் நோட்டுகளை வெளியிடுவதற்குப் பதிலாக நாட்டின் வரவு-செலவுத் திட்டத்திலுள்ள பற்றாக் குறையை மறைப்பதற்காக அதிக அளவில் நோட்டுகளை வெளியிடுமா று நிர்ப்பந்திக்கப்பட்டால் என்ன நடக்கும்? ”பண வீக்கம்” என்ற சொல் அன்று இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் ஜான் லோவின் வங்கிக்கும் அது இயங்கிக் கொண்டிருக்கிற நாட்டுக்கும் அந்த ஆபத்து ஏற்படும்.

கடன் வசதியினால் ஏற்படக் கூடிய சாதகங்களை லோ கண்டார்; ஆனால் அதிலிருக்கின்ற ஆபத்துக்களை அவர் பார்க்கத் தவறினார் அல்லது பார்க்க மறுத்தார். அவருடைய திட்டத்திலிருந்த முக்கியமான செய்முறைக் குறை இது ; அது வீழ்ச்சியடைந்ததற்கு இறுதியான காரணமும் இதுவே.

லோ வெகுளித்தனமாகக் கடன் வசதியையும் பணத்தையும் மூல தனத்துக்குச் சமமென்று கருதியது அவருடைய கருத்துக்களிலிருந்த தத்துவரீதியான குறையாகும். ஒரு வங்கி கடன் வசதிகளை விஸ்தரித்துப் பண நோட்டுகளை அதிகமாக வெளியிடுவதால் மூலதனத்தைப் படைக்கிறது, அதன் மூலம் செல்வத்தையும் வேலை வாய்ப்புக்களையும் பெருக்குகிறது. என்று அவர் கருதினார்.

எனினும் உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு உண்மையான உழைப்பும் பொருளாயத செல்வாதாரங்களும் அவசியம்; எப்படிப்பட்ட கடன் வசதியும் இதற்கு ஈடாகாது. – ஜான் லோ தன்னுடைய முதல் புத்தகத்தில் எதிர்நோக்கிய கடன் வசதியை அதிகரிக்கின்ற நடவடிக்கைகள்இவற்றை 10-15 வருடங்களுக்குப் பிறகு அவர் மிகவும் பிரம்மாண்டமான அளவில் அமுலாக்கினார்- அவருடைய திட்டத்துக்கு நிதித்துறையில் ஆர்ப்பரிப்போடு கூடிய வீரசாகஸத் தன்மையைக் கொடுக்கின்றன.

லோ ”கடன் வசதியின் பிரதான கருத்தறிவிப்பாளர்” என்று மார்க்ஸ் அவரை வர்ணித்துவிட்டு, இப்படிப்பட்ட நபர்கள் “மோசடிக்காரன், தீர்க்கதரிசி ஆகிய இரண்டு பேர்களின் குணாம்சங்களின் இனிய கலவையைக்”(4) கொண்டிருக்கிறார்கள் என்று ஏளனமாக எழுதுகிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) F. Zweig, Economic Ideas. A Study in Historical Perspectives, |N.-Y., 1950, p. 87.

(2) J. Law, Oeucores completes, Vol. 1, Paris, 1934, pp. 14-16.

(3)  Ibid., p. 46.K. 

(4) Marx, Capital, Vol. 3,Moscow, 1971, p. 441

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

இத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 24

டோக்ளியாட்டி

நாம் ஏற்கெனவே பாலில்லாவைப் பற்றிப் பார்த்தோம். இப்போது இளம் பாசிஸ்டுகளைப் பற்றிப் பரிசீலிப்போம். 1930-ல் பாசிஸ்டு சர்வாதிகாரத்தைத் தோற்றுவிக்க முயற்சி நடைபெற்ற மிக நெருக்கடியான கட்டத்தில் இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அச்சமயம் நெருக்கடி ஆரம்பித்திருந்தது. வெகுஜனங்களின் கோபாவேசம் அதிகரித்து வந்தது. கம்யூனிஸ்டு கட்சியின் பணி தீவிரமடைந்திருந்தது. கத்தோலிக்க இளைஞர்களின் பிரச்சினை 2 இன்னமும் தீர்க்கப்படாதிருந்தது.

இளைஞர் முன்னணியிலிருந்து விடுபட்டு கட்சியில் சேருவதற்கு இடைப்பட்ட காலத்தில் இளம் மக்களை அணி திரட்டும் பிரச்சினை 1930-ல் பாசிஸ்டுக் கட்சியை எதிர் நோக்கிற்று. பாசிஸ்டுக் கட்சிக்கு அரசியல் வாழ்க்கை ஏதும் இல்லை. இதர நிறுவனங்களில் இது போன்று இளம் மக்களை ஒன்று திரட்ட முடியாது. இளைஞர்கள் பதினெட்டு வயதை அடைவதற்கும் பாசிஸ்டுக் கட்சியில் சேருவதற்கும் இடையே ஓர் இடைவெளி இருந்தது. இளம் பாசிஸ்டுகள் அமைப்பை நிறுவுவதன் மூலம் இந்த இடைவெளியை அடைக்க பாசிஸ்டுக் கட்சி முற்பட்டது.

இந்த அமைப்பு உருவானபோது அதில் 3 இலட்சத்து 80 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தனர். 1931-ல் இது 8 இலட்சத்துக்குத் தாவிற்று. (கத்தோலிக்க நிறுவனங்களுக்கு எதிராக அப்போது போராட்டம் நடைபெற்று வந்தது); ஆனால் 1932-ம் ஆண்டிலோ இது ஐந்து இலட்சமாக வீழ்ச்சியடைந்தது. அதாவது மொத்த உறுப்பினர்களில் ஏறத்தாழ பாதிப்பேரை இழந்தது. ஏனென்றால் 1932-ம் ஆண்டை எண்ணற்ற போராட்டங்களின் ஆண்டு எனலாம். கம்யூனிஸ்டுக் கட்சி வளர்ச்சியடைந்த ஆண்டு எனக் கூறலாம். இளம் பாசிஸ்டுகளின் எண்ணிக்கை சுருங்கி வந்தபோது இளம் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை விரிவடைந்த ஆண்டு எனவும் இதனைச் சொல்லலாம். முடிவாக, ஏராளமான இளம் பாசிஸ்டுகள் நம் பக்கம் வந்த ஆண்டாகவும் இது இருந்தது. எமிலியா, டுஸ்கேனி போன்ற இடங்களில் இந்த ஆண்டில்தான் நாம் பிரம்மாண்டமான ஸ்தாபன வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டோம்.

இதனால் பாசிசம் மூர்க்க வெறியுடன் நமக்கு எதிராகவும் கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும் கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இளம் பாசிஸ்டுகள் நிறுவனம் இந்த ஆண்டில் 3 இலட்சத்து 50 ஆயிரம் உறுப்பினர்களை அதிகமாகப் பெற்றது. ஆனால் 1933-ல் மீண்டும் 4 இலட்சத்து 50 ஆயிரமாக வீழ்ச்சியடைந்தது.

உறுப்பினர்கள் சேர்ப்பதில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடும் இந்த ஊசலாட்டங்களுக்கு ஓரளவு காரணமாகும். இளம் மக்களுக்குத் தொழில் ஏதும் இல்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கிடந்தன. வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவதிப்படுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. பல்கலைக் கழகங்களில் தங்கள் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் மாணவர்கள் எல்லாமே தங்களுக்கு மூடப்பட்டிருப்பதைப் பார்த்தார்கள். இதனால் வெகுஜனப் பகுதியினரிடையே உறுதியின்மையும், ஊசலாட்டமும், தடுமாற்றமும் அதிகரித்தன. புரட்சிகர சித்தாந்தம் இவர்கள் மத்தியில் எளிதாக ஊடுருவக்கூடிய நிலைமை உருவாயிற்று. இந்த ஊடுருவலைத் தடுக்க பாசிசம் பெருமுயற்சி எடுத்துக் கொண்டது.

படிக்க:
நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !
இந்தியாவில் #MeToo இயக்கம் ! அச்சுநூல்

இளம் பாசிஸ்டுகள் அமைப்புக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பிரச்சினை குறித்துப் பல்வேறு தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. சில பிராந்தியங்களில் இந்த உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் சுய விருப்ப அடிப்படையில் நடைபெறுகிறது. வேறு சில இடங்களில் நிர்ப்பந்த முறையில் நடைபெறுகிறது. இதில் ஒரு வேறுபாடு நிலவுவது தெளிவு. ஆனால், ஒரு பொதுப் படப்பிடிப்பை நோக்கும்போது, இளம் பாசிஸ்டுகள் அமைப்பில் சேரும்படித் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிர்ப்பந்தங்களை வயது வந்தோரைக் கட்சியில் சேருமாறுத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிர்ப்பந்தங்களுடன் ஒப்பிடுவது என்பது சாத்தியமல்ல. இளம் மக்களிடம் சென்று நீ சேரவில்லை என்றால் உனக்கு வேலை இல்லை என்று கூறமுடியாது! ஏனென்றால் எப்படியிருந்தாலும் அன்றைய நிலைமையில் இளம் மக்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்புதான்! ஆதலால் இந்தப் பயமுறுத்தல் அவர்களை அச்சுறுத்த முடியாது.

எனவே, பாசிஸ்டுகள் இளம் பாசிஸ்டுகள் நிறுவனத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பிரச்சினைக்கு வேறு வகையில் பரிகாரம் காண முனைந்தனர்; அதிகார வர்க்க நிர்ப்பந்தத்தைக் கொண்டு “சுய விருப்ப” அடிப்படையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்; இதில் வன்முறையைப் பயன்படுத்தவும் அவர்கள் தயங்கவில்லை.

ஆக, இளம் பாசிஸ்டுகள் பல்வேறு திட்டங்களுடன் எவ்வாறு பெருமளவில் பிணைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும், இதர நிறுவனங்களின் உறுப்பினர்களைவிட இளம் பாசிஸ்டுகள் அமைப்பில் சேருவதற்கு இவர்கள் எவ்வாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதையும், எத்தகைய கடினமான கடமைப் பொறுப்புகளும் கட்டுப்பாடுகளும் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இவற்றை மனத்திற் கொள்ளவில்லை என்றால், இளம் பாசிஸ்டுகள் நிறுவனத்தின்பால் நமது இளைஞர் சம்மேளனம் கைக்கொள்ளும் கொள்கையைப் புரிந்து கொள்ள முடியாது. இளம் பாசிஸ்டுகள் அமைப்பின் இந்த இயல்பு காரணமாகவே அதன் விஷயத்தில் நமது இளைஞர் சம்மேளனம் பின்பற்றும் கொள்கை குறிப்பாக முனைப்பானதாகவும் துணிகரமானதாகவும் இருந்து வருகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

2. கத்தோலிக்க இளைஞர்களின் பிரச்சினை : ஆபேரா நாசியோனலே பாலில்லாவை எல்லா வாலிபர் ஸ்தாபனங்களுக்கும் ஒரு அரசு ஏகபோக அமைப்பாகப் பாசிஸ்டுகள் கண்டனர். இந்த இலட்சியத்தை அடைய கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைக்க வேண்டியிருந்தது. கத்தோலிக்க சாரணர்களிடையே முதலில் ஆக்கிரமிப்பு நடந்தது. அவை 1926-1928-க்கு உட்பட்ட காலத்தில் பல்வேறு உத்தரவுகளால் கலைக்கப்பட்டன.

சமூக, தொழிலாளர் அல்லது அரசியல் பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளும் கத்தோலிக்க செயல்பாட்டு ஸ்தாபனங்கள் எல்லாவற்றின் மீது ஆட்சி ஒரு பெரும் தாக்குதலைத் தொடுத்தது. அதனுடைய பிரதான குறி இத்தாலிய கத்தோலிக்க வாலிபர் கழகமும் இத்தாலிய கத்தோலிக்க பல்கலைக்கழக சம்மேளனமும் போப் பதினொன்றாவது பயஸ் பலாத்காரத்திற்கு கண்டனம் தெரிவித்து சுற்றறிக்கை அனுப்பினார்.

ஆனால் அடிப்படையாக பாசிசத்தைக் கண்டித்தல்ல. இதற்கு அடுத்து, பேச்சுவார்த்தைகள் நடந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, கத்தோலிக்க ஸ்தாபனங்கள் ஆன்மீகம் சம்பந்தமில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை வாட்டிகன் வெகுவாக குறைத்து, பாசிச எதிர்ப்பிலிருந்து விலகிச் செல்லுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. “மத சம்பந்தமான நோக்கங்கள் கொண்ட பொழுதுபோக்கு, கல்வி நடவடிக்கைகளுக்கு” மட்டுமே அவற்றின் செயல்பாடுகளின் களம் என்று கட்டுப்படுத்த வாட்டிகன் ஒத்துக் கொண்டது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் ! ஒருநாள் தேசிய கருத்தரங்கம்

2019 தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் !

கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கும் ‘ஒருநாள் தேசிய கருத்தரங்கம்’

நாள் : ஜூலை 20, 2019, சனிக்கிழமை
நேரம் : காலை 10.00 முதல் 6.00 மணிவரை
இடம் : வினோபா அரங்கம், தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர், சென்னை (நந்தனம் சிக்னல் அருகில்)

சிறப்புரை :

பேராசிரியர் வீ.அரசு
மேனாள் தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
ஒருங்கிணைப்பாளர், பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு-சென்னை

பேராசிரியர் ஜி.ஹரகோபால்
National Law School of India University, Bangalore,
தலைமைக் குழு உறுப்பினர், கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம் (AIRTE)

கருத்துரையாளர்கள் :

பேராசிரியர் கதிரவன்
உயிரி தொழில்நுட்பத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு-சென்னை

ஆசிரியர் சு.மூர்த்தி
ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு

மருத்துவர் எழிலன்
இளைஞர் கழகம்

முனைவர் க.ரமேஷ்
பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு – சென்னை

பேராசிரியர் அமலநாதன்
பொருளியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, பாளை. பொதுக்கல்விக்காக ஓருங்கிணைப்புக் குழு – நெல்லை

நிறைவுரை :

மேனாள் நீதிபதி திரு. அரிபரந்தாமன்
சென்னை உயர்நீதிமன்றம்

நண்பர்களே, வணக்கம்.

த்திய அரசு கடந்த ஜூன் மாதம் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு கருத்துக்கேட்பு நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் 2019 – 2020 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அதை அமுலுக்கும் கொண்டு வந்துவிட்டது. மோடி அரசின் இந்த நடவடிக்கை கல்வித்துறை எதிர்கொள்ளப் போகும் அபாயத்திற்கு ஒரு சான்று.

தேசிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கவில்லை . மாறாக, ஆர்.எஸ்.எஸ் சார்ந்த கல்வி அமைப்புகள் மற்றும் தனியார் பள்ளி/கல்லூரி நிறுவனங்களின் கூட்டமைப்பு, CII, FICCI, NASCOM முதலாளிகள் சங்கம் போன்றவைகளிடம் மட்டுமே கருத்து கேட்டு தயாரித்துள்ளனர். இதிலிருந்தே இந்த கல்விக் கொள்கை யாருடைய நலனுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை உணர முடியும்.

தேசிய கல்விக் கொள்கையிலே, 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு; 8 -ம் வகுப்பிலிருந்து கட்டாய தொழிற்கல்வி; பள்ளிப்படிப்பிலிருந்து உயர்கல்வி வரை இந்தி – சமஸ்கிருத திணிப்பு; கல்வி மீதான மாநில அரசின் அதிகாரத்தை பறித்து பிரதமர் தலைமையிலான தேசிய கல்வி ஆணையத்திடம் ஒப்படைப்பது; B.A.,B.Sc உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் தேசிய அளவிலான தகுதித்தேர்வு; கல்விக்கட்டணம், ஆசிரியர் நியமனம், புதிய கல்லூரிகள் ஆரம்பிப்பது ஆகியவற்றிக்கு அரசின் ஒப்புதல் தேவையில்லை, கல்லூரி நிர்வாகமே தீர்மானித்துக் கொள்ளலாம்; திறமை அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம்; டாடா, அதானி, அம்பானி, பில்கேட்ஸ், மார்க் சுகர்பர்க் போன்ற ‘தனியார் கொடை வள்ளல்கள்’ கல்வித் தொழில் தொடங்க முன்னுரிமை; தனியார் கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளையும் சமமாக அணுகுதல் போன்ற பரிந்துரைகளை வரைவு அறிக்கை முன்வைத்துள்ளது.

இப்பரிந்துரைகளின் நோக்கமே கல்வி கொடுக்கும் பொறுப்பில் இருந்து அரசின் பங்களிப்பை முற்றிலும் நீக்குவதுடன், ஒட்டு மொத்த இந்திய கல்வி சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைப்பதும் அதற்கு தகுந்த நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதுதான்.

படிக்க:
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை என்பதைப் போன்றுதான் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி என்பதே ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யின் கொள்கை.

பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்து நவீன குலக்கல்வியை திணிக்கின்ற, கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கி நிதி மூலதனங்களின் கொள்ளைக்காக வழிவகை செய்கின்ற தேசிய கல்விக் கொள்கையை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, நிராகரிக்க வேண்டும்.

பெரும்பான்மை மக்களின் நலனுக்கான கல்விக் கொள்கையை கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து உருவாக்க வேண்டும்.

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
(Co-ordination Committee for Commin Education)
சென்னை, தொடர்புக்கு : 94443 80211, 72993 61319

மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு !

அனுப்புனர்:

சி.ராஜு,வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

பெறுநர்:

தமிழக காவல்துறை இயக்குநர் அவர்கள் (சட்டம் ஒழுங்கு)
ராஜாஜி சாலை, தமிழ்நாடு. 

பொருள் :  தமிழகத்தில் எமது அமைப்புக்கு ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், அரங்கக் கூட்டங்கள் நடத்த தடை – அனுமதி மறுப்பது,  பிரச்சாரம் செய்தால், போராட்டம் நடத்தினால் பொய் வழக்கு போடுவது குறித்த முறையீடு.

மதிப்பிற்குரியீர் வணக்கம்,

எமது முறையீடு குறித்து தங்களின் பரிசீலனைக்கும் மேல் நடவடிக்கைக்கும் கீழகண்டவற்றை முன் வைக்கிறோம்.

நமது அரசியல் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைகளிலும், இந்தியா கையொப்பமிட்டுள்ள உலகளாவிய மனித உரிமைகளிலும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் முதன்மையானவை. அரசின் திட்டங்களை, கொள்கைகளை செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமை, மக்கள் தங்கள் தேவைகளைக் கோரியும், பாதிக்கும் திட்டங்கள் கொள்கைகளை எதிர்த்தும் போராடும் உரிமை ஆகியவை ஒரு ஜனநாயக அரசின் மிக அடிப்படையான கூறுகள் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளதோடு விமர்சிப்பதையும் எதிர்க்கருத்துச் சொல்வதையும் அரசு ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் பல்வேறு தீர்ப்புகளின் வாயிலாக கூறியிருப்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்.

ஆயினும் ஜனநாயக நெறி முறைகளுக்கும், அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் நேர் எதிரான முறையில் மாவட்ட, கோட்ட, வட்டார காவல்துறை அதிகாரிகள் செயல்படுவதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

படிக்க :
♦ அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி
நந்தினி கைது சட்ட விரோதமானது | மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை பாதிக்கும் பிரச்சினைகளான எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு உள்ளிட்ட கார்ப்பரேட் நலத்திட்டங்களை எதிர்த்தும், பாலியல் வன்கொடுமை, ஆணவப்படுகொலை, ஊழல் முறைகேடு போன்ற மக்களை பாதிக்கின்ற பிரச்சினைகளிலும், பொதுக்கூட்டம், கருத்தரங்கம், தெருமுனைப் பிரச்சாரம், மாநாடு போன்றவற்றிற்கு சட்டப்புறம்பான நியாயமற்ற காரணங்களை கூறி போலீசார் எதேச்சதிகாரமாக எமது அமைப்புக்கு அனுமதி மறுக்கின்றனர்.

மேலும் அமைதியான ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டம், தொடர்முழக்கப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம், ஊர்வலம் ஆகிய எதற்கும் போலீசார் இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கின்றனர். மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்களை விமர்சித்து துண்டு பிரசுரம்விநியோகித்தல், சுவரொட்டி ஒட்டினால்கூட  பொய்யான காரணங்களை புனைந்து பொய் வழக்கு போட்டு சிறையிலடைக்கின்றனர். காவல் சட்டம் பிரிவு 30 (2) பேச்சுரிமைக்கு தடை போட வில்லை. ஆனால் போலீசார் இஷ்டம் போல் இந்த சட்டப்பிரிவை காரணம் காட்டி அனுமதி மறுத்துள்ளனர். இவ்வாறான சட்டப்புறம்பான, கருத்து உரிமையை மறுக்கின்ற காவல்துறை அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு சான்றாக சில நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சட்டப்புறம்பான, நியாயமற்ற காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டவை:

  1. 17.3.2019, 8.4.2019 ஆகிய நாட்களில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மற்றும் பெரியார் சிலை உடைப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அவ்வாறு எந்தத் தடையும் விதிக்காத போது இவ்வாறு மறுத்தது சட்ட மீறல் என்றே கருதுகிறோம்.
  1. 24.4.2019 கோத்தகிரியில் பொன்பரப்பி சாதி வெறி தாக்குதலை கண்டித்தும், 23.4.2019 தருமபுரியிலும் போலீசு சட்ட பிரிவு 30(2) அமலில் உள்ளதைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு அமலில் உள்ளபோது அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்பதை போலீசார் தவறாக செயல்படுத்துகின்றனர்.
  1. மத்திய – மாநில அரசுக்கு எதிராக பேசுகிறீர்கள், இந்து அமைப்புகளைத் தாக்கி பேசக்கூடும் என்ற அனுமானத்திலும், விவசாயிகளைத் தூண்டிவிட வாய்ப்புள்ளது என்ற அனுமானத்திலும், மாற்றுக்கட்சியினரால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும் என்ற அனுமானத்திலும் போலீசார் சென்னையில், கோவையில், திருச்சியிலும்  கூட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளார். இவை சில எடுத்துக்காட்டுகளே,. யார் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவார்கள் எனக் காவல்துறை கருதுகிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்  சட்டப்படியான கருத்து உரிமையை ஒருதலைபட்சமாக பறிப்பது அரசியல் சட்ட மீறல் அநீதியானது.
  1. தனியார் மண்டபங்களில் நடக்கும் உள் நிகழ்ச்சிகளை தடை செய்யக்கூடாது எனவும், பொதுவாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனக் காரணம் கூறி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது என நீதிமன்றத் தீர்ப்புகள் உத்திரவாதப்படுத்தி உள்ள நிலையில் போலீசார் மதிக்காது அனுமதி மறுக்கும் போக்கு தொடர்கிறது.
  1. போலீசாரின் ஒவ்வொரு சட்டமீறலுக்கும் உயர் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் பெறுவது சாதாரண மக்களைச் சார்ந்து இயங்கும் எம்மை போன்ற இயக்கங்களுக்கு மிக சிரமமான் காரிணம்.

  உண்மைக் காரணங்களை மறுத்து பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்தவை:

  1. 17.12.2018 சென்னை, சிந்தாதிரிப் பேட்டை 380/2018 ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறைத்து டாஸ்மாக் கடை பணியாளரை பணம் கேட்டு மிரட்டி டாஸ்மாக் பார்-யை சேதப்படுத்தியதாக வழக்கு.
  1. திருச்சி திருவெறும்பூர் 24.7.2018 233/18 சுவரொட்டி ஒட்டியதற்காக எட்டு காவல்நிலையங்களில் வழக்கு. ஒரு சம்பவத்திற்கு ஒரு வழக்குதான் பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் 8 வழக்கு. அதே போல் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஆய்வாளர் ஒருவர் கீழே தள்ளியதில் இறந்த பெண்ணுக்கு நியாயம் கேட்டதற்கு மூன்று காவல் நிலையங்களில் வழக்கு.
  1. கரூர் டவுன் காவல் நிலையம் 429/18, 15-3-2019 கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு திருச்சி மாநாட்டு விளம்பர பிரசுரம் விநியோகித்த எமது அமைப்பினர் மீதான பொய் வழக்கு
  1. விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் 18.9.18 – Cr.no.864/18 – ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விளக்கி மக்களிடம் துண்டறிக்கை வினியோகித்ததை மறைத்து போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கையில் கருங்கல்லை வைத்து கொண்டு பேருந்து நிலையத்தில் பொது மக்களையும், போலீசையும் மிரட்டியதாக பொய் வழக்கு.
  1. கரூர் பசுபதிபாளையம் (Cr.no.701/18 10.11.2018) எமது அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்த நிர்வாகிகள் மீது பொய் வழக்கு.
  1. கள்ளக்குறிச்சியில் ( Cr.no. 480/18 18.7.2018) ஸ்டெர்லைட்டை மூடக்கோரி துண்டறிக்கை வினியோகித்த எமது தோழர்கள் மீது தேசத்துரோக பொய் வழக்கு.

இவ்வாறு எமது அமைப்பின் மீது மட்டுமல்ல வேறு பல அமைப்புகளுக்கும் அனுமதி மறுப்பு பொய் வழக்கு என போலீசு அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்கின்றன. மேற்குறிப்பிட்டவை சில சான்றுகள் மட்டுமே.

மக்கள் மத்தியில் வெளிப்படையாக செயல்படும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போலீசார் அமல்படுத்துவதாகவே கருதுகிறோம். மக்களின் அடிப்படை கருத்துரிமைகளை நசுக்கும் போக்கு ஜனநாயகத்தை பெரிதும் பலவீனப்படுத்தும். மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுக்காக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. எனவே காவல்துறை அவற்றை நசுக்குவதையும், மக்களுக்காகப் போராடுபவர்களை கிரிமினல் குற்ற வழக்கில் கைது செய்து ஒடுக்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இவண்
வழக்கறிஞர்.சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

ஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு

நெருக்கடி காலகட்டத்தை விட மிகவும் மோசமான சூழலே தமிழகத்தில் நிலவுகிறது ! ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை, நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை, அணுக் கழிவு கூடம் என தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துவருகிறது அரசு. இதனை எதிர்த்து தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்பை எந்த வகையில் பதிவு செய்தாலும், அவர்கள் மீது கருப்புச்சட்டங்களைப் பாய்ச்சி ஒடுக்குமுறையை செலுத்துகிறது போலீசு. போராடுபவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு குவிக்கிறது அரசு.

நமது உரிமைகளை நசுக்கும் போலீசு ராஜ்ஜியத்தை முறியடிக்க, நாளை காலை தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! அனைவரும் வருக ! நாளை (17-07-2019) காலை 11 மணிக்கு …

 

ஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி

தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரில் மோடி அரசு எவ்வாறு மனுநீதியை இந்திய மக்களின் மீது திணிக்கிறது என்பதை விளக்குகிறார் மருத்துவர் எழிலன்.

தேசியக் கல்விக்கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பை எவ்வாறு மத்திய அரசு நேரடியாகச் செய்கிறது ? இந்த பட்ஜெட்டில் கல்விக்கான தொகை ஒதுக்கீட்டை வெறும் 0.01% அதிகரித்துவிட்டு, இந்தி மொழி வளர்ச்சிக்காக அதிகமாக நிதியை ஒதுக்கியது ஏன்?

கல்வியின் மீதான அரசின் பிடியைத் தளர்த்தி அதனை தனியாரின் கையில் தாரை வார்க்கிறது தேசிய கல்விக் கொள்கை. அறிவியல் என்னும் பெயரில் புராணக் குப்பைகளைப் பற்றி பெருமையாகப் பேசுகிறது தேசிய கல்விக் கொள்கை..

இது தேசிய கல்விக் கொள்கை அல்ல ! ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தக் கொள்கை என்பதை அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் முகிலன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

பாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
 இஸ்லாமபாத்தை என்னால் மறக்க முடியாது. பணி நிமித்தமாக பாகிஸ்தானின் தலைநகரத்துக்கு என்னை மாற்றியிருந்தார்கள். காலடி வைத்து பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக நான் ஏமாற்றப்பட்டேன்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பல டாக்ஸி டிரைவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். தாடி வைத்து தொள தொளவென்று நீண்ட மேலங்கி அணிந்த உயரமான பட்டான் சாரதி ஒருத்தர் என்னை வெற்றி கொண்டார். அவருடைய வண்டியிலே ஏறியதும் எந்த ஹொட்டல் என்று கேட்டார். நான் பயண முகவர் குறித்து தந்த ‘பேர்ல் கொன்ரினென்ரல்’ என்ற பெயரைச் சொன்னேன். அவர் ரேடியோவில் ஓர் உருதுப் பாடலை உரக்க வைத்தபடி புறப்பட்டார்.

எந்த நாட்டுக்குப் போனாலும் முதன்முதல் ஏதாவது ஓர் அதிர்ச்சி கிடைப்பது வழக்கம். இங்கே நான் பார்த்த முதல் அதிர்ச்சி மூன்று சக்கர ஒட்டோக்களில். அவற்றின் உருவத்தில் அல்ல, வேகத்திலும் அல்ல, காட்சியில். எனக்கு எதிரிலே வந்த ஒட்டோக்களிலும், என்னைத் தாண்டிப்போன ஒட்டோக்களிலும் பின் படுதாவில் நடிகை சிறீதேவியின் சிரித்த முகப் படம் பெரிதாகக் தொங்கியது. ‘அட எனக்கு முன்பாகவே சிறீதேவி இங்கே வந்து எல்லா ஒட்டோக்களையும் வளைத்து வாங்கிப் போட்டுவிட்டாரே’ என்றுதான் என்னை எண்ண வைத்தது. ஆக பாகிஸ்தானில் வந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே எனக்கு பரிச்சயமான இந்த முகம் ரோடுகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்து சிறிது சந்தோசம் ஏற்படவே செய்தது.

என் சந்தோசம் சாரதிக்குத் தெரிந்துவிட்டது. திடீரென்று ‘எந்த பேர்ல் கொன்ரினென்ரல்?’ என்றார். இந்தக் கேள்வியை பாதி தூரம் கடந்து விட்ட பிறகுதான் கேட்டார். நான் ராவல்பிண்டி என்று சொன்னேன். அவர் எரிச்சலுடன் நாங்கள் இஸ்லாமபாத்துக்கு வந்துவிட்டோம். இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம் என்றபடி வண்டியைத் திருப்பினார். பயண முடிவில் நான் இரண்டு மடங்கு கட்டணம் அழவேண்டி வந்தது.

பிறகு விசாரித்து இரண்டு ஹொட்டல்கள் இல்லை என்பதைக் கண்டுபிடித்தேன். நான் சுலபமாக ஏமாறக்கூடிய ஆள் என்பதை அந்தச் சாரதி எப்படியோ அறிந்து வைத்திருந்தார். சிரித்தபடியே சிறீதேவி இவ்வளவு பெரியது துரோகம் செய்வார் என்பதை நானும் எதிர் பார்க்கவில்லை.

புராணங்களில் சொல்லப்பட்ட எட்டு நாகங்களில் ஒன்று தட்சன். இந்த நாக அரசனின் வழித்தோன்றல்கள் ஸ்தாபித்த நகரம்தான் ‘தட்சிலா’ (Taxilla) என்பது பாரம்பரியக் கதை. இது ராவல்பிண்டியில் இருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் இருந்தது. 2,500 வருடங்களுக்கு முன்னர் இங்கே ஓர் உலகப் புகழ்பெற்ற கல்வி மையம் செழிப்பாக வளர்ந்தது. உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருந்தும் கல்விமான்கள் இங்கே கூடினார்கள். அங்குலிமாலா தன் தாயைக் கொல்லப்போன போது புத்தர் தடுத்து ஆட்கொண்டது இங்கே தான் என்பார்கள். தட்சிலாவுக்கு யேசுவும் வந்திருந்தார் என்று ஹொல்கர் கேர்ஸ்டென் என்பவர் தன் புத்தகத்தில் அழுத்தமாக எழுதுகிறார்.

கி.மு 326 -ல் அலெக்ஸாந்தர் தட்சிலா அரசனான ஒம்பிஃஸின் விருந்தாளியாக மூன்று நாட்கள் தங்கி இருந்திருக்கிறார். தத்துவஞானி கௌடில்யர் இங்கேதான் அலெக்ஸாந்தருக்கு பெரிய பிரசங்கம் செய்தார். பேரரசனுக்கு எரிச்சல் உண்டானது. ஞானியின் ஒயாத வாயசைவை எப்படி நிறுத்துவது என்பது தெரியாமல் அவருடைய தலையை கொய்யுங்கள் என்று சேவகர்களுக்கு கட்டளை இட்டாராம். கௌடில்யர் தன் கால்களின் துரிதத்தினால் தன் தலையைக் காப்பாற்றினார் என்று பின்வந்த வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றி எழுதினார்கள். இந்த விவரங்களை சரித்திரக்காரர்களிடம் விட்டுவிட்டு என்னுடைய சரித்திரத்துக்கு வருவோம்.

படிக்க:
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?
♦ காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு !

நான் சூரியக் கோயிலையும் அங்கே உள்ள பிரபலமான இரட்டைத் தலை கழுகு உருவத்தையும் பார்த்தபடி நின்றேன். எனக்கு சற்று தூரத்தில் இருந்த சிதிலமான 2000 வருடவயதான சுவரில் ஒருத்தர் தன் 40 வயது கால்களை பதித்தபடி குந்தியிருந்தார். மிகப் பெரிய கொட்டாவி ஒன்றை உருவாக்க நினைத்து பாதியிலே அது சரியாகப் போகாததால் நிறுத்திவிட்டு இன்னொரு முயற்சி செய்யும் யோசனையில் இருந்தார். என்னைக் கண்டதும் தன் பின்னங் கால்களை 2000 வருட சுவரில் இருந்து இறக்கி நிலத்தில் வைத்து நிமிர்ந்தார். முரட்டு சால்வை போர்த்தியிருக்கும் ஆறடி உயரம், பச்சைக் கண்கள். என்னிடம் ஏதோ சதிக்கு கூப்பிடுவது போல கிட்ட வந்து தன் உள்ளங்கையில் மறைத்து வைத்த ஒரு நாணயத்தை மெல்லத் திறந்து காட்டினார். நெளிந்த வட்ட நாணயம் மிகப்பழசானது. அலெக்ஸாந்தர் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக தங்கள் குடும்பத்தில் இதைப் பாதுகாத்து வருவதாகவும் வறுமை காரணமாக விற்கவேண்டி இருப்பதாகவும் கூறினார்.

மாதிரிப் படம்

நாணயத்தை வாங்கிப் பார்த்தேன், சந்தேகமே இல்லை. அலெக்ஸாந்தர் தலை போட்ட யானைத்தோல் கவசம் அணிந்த பிரபலமான நாணயம். பேரம் நடந்தது. இருபது டொலருக்கு வாங்கிவிட்டேன். இதன் விலை வெளியே நூறு மடங்கு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒரு நண்பர் தன்னிடம் அதுபோல் இருப்பதாகக் கூறினார். இன்னொருத்தர் தன்னிடம் இரண்டு நாணயங்கள் இருப்பதாகச் சொன்னார். கடைசியில் பார்த்தால் இஸ்லாமபாத்தில் இந்த நாணயம் இல்லாதவரே ஒன்று இரண்டு பேர்கள்தான் என்று தெரிய வந்தது. நாணயம் விற்க வந்தவரிடம் நாணயம் எதிர்பார்த்தது என் குற்றம் என்று மனைவி உற்சாகத்துடன் சுட்டிக்காட்டினாள்.

அந்த வருடம் நல்ல வருடம். என் நண்பர்களில் ஒருத்தராவது கடத்தப்படவில்லை. ஒருத்தராவது குண்டு வெடிப்பில் இறக்கவில்லை. ஒருத்தராவது சிறையில் அடைக்கப்படவில்லை. லாகூரிலே பார்க்க வேண்டியது எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது, இன்னும் ஒரு சில காட்சிகளே எஞ்சி இருந்தன. இந்தக் கடைசிக் கட்டத்துக்கு ஒரு வழி காட்டியை வைத்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று மனைவி அபிப்பிராயப்பட்டாள்.

முத்து மசூதிக்கு கிட்ட இரண்டு காட்டு மயில்கள் சனசந்தடியைப் பொருட்படுத்தாமல் எதையோ கொத்திக்கொண்டிருந்தன. ஒரு பெட்டிக் கடையில் சிலர் ‘நாண்’ ரொட்டியை வாங்கி மொகலாய மன்னர்கள் கண்டுபிடித்த பந்து இறைச்சிக் குழம்பில் தோய்த்து தோய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த பஞ்சாபி வழிகாட்டி குஞ்சம் வைத்த தலைப்பா கட்டியிருந்தார். பஸ் நிலையத்தில் சகாயவிலைக் கடையில் வாங்கிய இருபது ரூபா கறுப்புக் கண்ணாடியை மாட்டியபடி, இரண்டு நாள் வயதான பறவை எச்சமோ, அணில் எச்சமோ, வினை எச்சமோ ஏதோ ஒன்றை வெள்ளையாக தன் தோளிலே அவருடைய தகுதிக்கு ஏற்றவாறு தரிக்திருந்தார். அவருடைய கட்டணம் எவ்வளவு என்பதைக் கறாராக பேசி முடிவு செய்தோம்.

தன் தகப்பனைப் போல ஒளரங்கசீப் கட்டிடக்கலையில் ஆர்வம் காட்டவில்லை. அபூர்வமாக அவர் கட்டிய அலாம்கீர் வாசலை ஏதோ தான்தான் கட்டிமுடித்தது போல வழிகாட்டி பெருமையாகக் காட்டினார். அதன் பிறகு ஷாஜஹான் கட்டிய சீஸ் மஹாலைப் பார்த்தோம். முழுக்க முழுக்க கண்ணாடிகள் பதித்துக் கட்டிய மாளிகை. அதன் உட்புறத்தில் வழிகாட்டி நெருப்பு கொழுந்தைப் பற்றவைத்து வீசி வீசிக்காட்டிய போது எங்கும் தீக்கொழுந்து மின்னல்போல பரவி ஒளியடித்தது.

இறுதியாக ‘நவ்லாக்’ என்ற மண்டபம். வளைந்த சலவைக்கல் விமானம் முழுக்க கலாபூர்வமான உள்வண்ண வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அதைப் பார்த்து அசந்துபோய் சில நிமிடங்கள் பேச்சு வராமல் நின்றோம். ‘நவ்லாக்’ என்றால் ஒன்பது லட்சம். எதற்காக ஒன்பது லட்சம் என்று பேர் வைத்தார்கள் என்று கேட்டேன். ஒன்பது லட்சம் உள் வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். எங்கள் வழிகாட்டி சொன்ன பதில் ஆச்சரியத்தை தந்தது. தாஜ்மஹாலை உலகத்துக்கு தந்த ஷாஜஹானுக்கு கட்டிடங்கள் கட்டுவதே வேலை. அவரிடம் உயர்ந்த கணக்காளர்கள் இருந்தார்கள். வேலை நடக்கும் போதே ஒவ்வொரு செலவுக்கும் நுணுக்கமாக கணக்கு எழுதி வைத்துவிடுவார்கள். இந்த மண்டபம் முடிந்தபோது ஷாஜஹான் செலவு எவ்வளவு என்று கேட்டிருக்கிறார். கணக்காளர்கள் அவசரமாக கூட்டிப் பார்த்தபோது மிகச் சரியாக ஒன்பது லட்சம் காட்டியதாம். அப்படியே அதன் பெயரைக் சூட்டிவிட்டார்கள்.

படிக்க:
கனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை
♦ அமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்

எங்கள் சுற்றுலா ஒருவாறாக முடிவை நெருங்கியது. முழங்கால் தெரிய உடை உடுத்திய வெள்ளைக்காரப் பெண்மணி ஒருத்தி தனியாக, கையிலே ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு, சுவர்களை ஆராய்ந்தபடி நின்றார். அவரை சிறுவர்கள் சூழ்ந்து, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி ரஸ்ய எழுத்துக்கள் போல ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு நின்றார்கள். வழிகாட்டி திடீரென்று அவசரம் காட்டினார். எங்களை சீக்கிரத்தில் முடித்துவிட்டு அந்தப் பெண்ணின் வாடிக்கையை பிடிப்பதற்காக விடை பெற்றுக்கொண்டு அவளை நோக்கி ஒடினார். நாங்கள் வீட்டிற்கு வந்த பிறகு தான் வழிகாட்டி மீதி ஒன்பது ரூபாய்க்கு பதில் நாலு ரூபா கொடுத்தது தெரியவந்தது. ஒன்பது லட்சத்துக்கு ஒழுங்காக கணக்கு வைத்த பேரரசன் கதையைச் சொன்னவர் ஒன்பது ரூபாய் கணக்கில் தவறியது எனக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது.

என்னடா எல்லோரும் எப்ப பார்த்தாலும் என்னை சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்களே என்று அலுத்துக்கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தான் உளவுத்துறை என்னிடம் சிக்கியது. அவர்கள் என்னிடம் ஏமாறும் சந்தர்ப்பமும் வாய்த்தது.

என்னுடைய இஸ்லமாபாத் வாழ்க்கையில் ஒருமுறை இந்திய தூதரகத்தில் நடந்த ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இங்கே இந்தியர்களுடன் பழகக்கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தோம். இருந்தும் ஒரு பலமான, பழமையான உந்துதலால் இந்த விருந்துக்குப் போவதென்று நானும் மனைவியும் முடிவு செய்தோம்.

நாங்கள் இங்கே வசித்த காலங்களில் என் மனைவி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாள். கூந்தலில் பூ வைப்பதும், நெற்றியில் பொட்டு வைப்பதும் ஆபத்தான காரியங்கள். உங்களை இந்தியர் என்று நினைத்து தொடரத் தொடங்கிவிடுவார்கள். அது தவிர சேலை உடுத்தும் போது இடைதெரியும் அபாயம் இருந்தது. சல்வார் கமிஸ் உடை சகல அங்கங்களையும் மறைக்க வல்லது. ஆகவே எல்லா அங்கங்களையும் சேமமாக எடுத்துக் கொண்டு எங்கேயும் பயமில்லாமல் போகலாம், வரலாம்.

விருந்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது எங்கள் காரைத் தொடர்ந்து நீண்ட நேரமாக இன்னொரு கார் வந்தது. உளவுத்துறையில் முன் அனுபவம் இல்லை எனக்கு. நான் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் காலை வீட்டுக் காவல்காரர்களும், கார் சாரதியும் உளவுத்துறையினரால் தாங்கள் விசாரிக்கப்பட்டதாக சொன்னார்கள்.

அதன் பிறகு நாங்கள் வெளியே புறப்பட்டபோதெல்லாம் தொடரப்பட்டோம். முதலில் பயம் வந்தது. பிறகு ஒரு ஜேம்ஸ்பொண்ட் படம் பார்ப்பது போன்ற திரில்லுடன் இதை அனுபவிக்கும் ஆசை துளிர்விட்டது. ஆனால் நாலாவது நாளே இந்த நனைந்த கோழியில் வேலை இல்லை என்று அவர்கள் கைவிட்டு விட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வேறு கோழியைப் பார்க்கப் போயிருக்கலாம்.

இந்த நாலு நாட்களும் என் வாழ்க்கையிலே மறக்கமுடியாத, சந்தோசமான நாட்கள். நான் எங்கு போனாலும் ஒரு கார் என்னைத் தொடர்ந்தது. அடிக்கடி திரும்பிப் பார்த்து அவர்கள் என்னைத் தொடர்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு பயணம் செய்தேன். அவர்கள் என்னைத் தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காக வளைவுகளில் நின்றும், இன்னும் சில நேரங்களில் வேகத்தை குறைத்தும் உதவி செய்தேன். சில வேளைகளில் அவர்கள் போதிய சிரத்தை காட்டாமல், தவறான திருப்பங்களை எடுக்கும்போது இவர்கள் தங்கள் தொழிலை தீவிரத்துடன் செய்யவில்லை என்ற முறைப்பாட்டை அவர்கள் மேலதிகாரிகளுக்கு தெரிவிப்போமா என்றுகூட யோசித்தது உண்டு.

ஒர் உலகளாவிய உளவாளி எப்படி இருப்பான் என்று யோசித்து அதற்குத் தக்க மாதிரி உடை அணியவும், பேசவும், நடக்கவும் பழகிக் கொண்டேன். டெலிபோனில் கதைக்கும் போது சில சங்கேத வார்த்தைகளைச் சேர்த்துக்கொண்டேன். என் பாதைகளையும், கிளம்பும் நேரங்களையும் அடிக்கடி மாற்றவும், முன்பின் தெரியாத மனிதர்களுடன் ரகஸ்யமான வாய் அசைவுகளுடன் பேசவும் கற்றுக் கொண்டேன்.

இவை ஒன்றும் பெரிய பலனைத் தரவில்லை.

எவ்வளவுதான் நான் உலகத்தர உளவாளியாக இருந்தாலும் வீட்டிலே சாதாரண மனுசன்தானே. ஒரு வெள்ளிக்கிழமை காலை, இது அங்கே விடுமுறை தினம், என் மனைவி ஜும்மா சந்தைக்குப் போக வேண்டும் என்றாள். இது இஸ்லாமபாத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடும் பிரம்மாண்டமான சந்தை. பொருட்கள் வாங்க அங்கே சனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு வருவார்கள். ஒர் உலகப் புகழ் உளவாளி செல்லக்கூடிய சந்தை அல்லதான், ஆனாலும் இதை மனைவிகளுக்குப் புரிய வைப்பது எப்படி.

சரி என்றேன். சில துப்புகள் கிடைத்தாலும் கிடைக்கலாம். இந்த இடம் எனக்கு அவ்வளவு பழக்கமில்லாதது. கண்களை ஏமாற்றும் வளைவான தெருக்களும் ஒரு வழிப்பாதைகளும் நிறைந்தது. நான் ஒரே மூச்சில் சந்தையை அடைந்துவிட்டேன். அங்கே என் மனைவி ஒரு ‘புக்காரா’ கம்பளத்தை இரண்டு மணி நேரம் பேரம் பேசி வாங்கி முடித்துவிட்டாள்.

ஆனால் திரும்பும் போது வழி மறந்துபோய்விட்டது. ஒரு வழிப் பாதைகள் என்னை தொடங்கிய இடத்துக்கே மீண்டும் கொண்டு போய் சேர்த்தன. அப்பொழுது நான் என்னை தொடர்ந்து வந்த கார்காரரை அணுகி வழிதவறிவிட்டதைச் சொன்னேன். அவர் நல்ல மனிதர். தான் வழி காட்டுவதாக முன்னே சென்றார். விலாசம் கொடுக்காமலே என் வீட்டு வாசலுக்கு அலுங்காமல் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.

இப்படி என்னை வேவு பார்க்க அனுப்பப்பட்டவர்கள் முன்னே செல்ல, நான் பின்னே சென்றேன். உலக உளவுத்துறை சரித்திரத்தில் இது ஒரு பெரிய சாதனையாக அமைந்தது.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்

ரேஷன் கார்டு மரணங்கள்

ன்று வெளியாகியிருக்கும் ஆங்கில இந்து நாளிதழில் (ஜூலை 13) ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. Death by digital exclusion? என்ற தலைப்பில் வெளியாகிருக்கும் இந்தக் கட்டுரை இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்டில், ஆதார் கணக்குடன் ரேஷன் கார்டுகளை இணைக்காதது, Point of Sales எந்திரங்கள் இயங்க இன்டர்நெட் இணைப்பு இல்லாததால் பொருட்களை விநியோகம் செய்ய முடியாதது ஆகிய காரணங்களால், பழங்குடியின மக்களுக்கு ரேஷன் பொருட்கள் சரியாக சென்று சேர்வதில்லை. இதனால், அந்த மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன என்கிறது கட்டுரை. 

‘ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் இங்கே ரேஷன் கார்டு வாங்கினால், இந்தியாவில் எங்கே வேண்டுமானாலும் போய் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்கிறார்களே, அவர்களுக்கு இந்தக் கட்டுரை பதில் சொல்கிறது. வட மாநிலங்களில் உள்ள பொது விநியோகத் திட்டத்தில் அந்தந்த மாநில மக்களுக்கே பொருட்களை சரியாக விநியோகிக்க முடியாதபோது, எப்படி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விநியோகிப்பார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் பட்டினிக்கு பலியான 11 வயது சிறுமி சந்தோஷி.

பிஹாரிலிருந்து 2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநிலம் ஜார்க்கண்ட். தற்போது பாஜக-வின் ரகுபர்தாஸ் முதல்வராக இருக்கிறார். மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து 2006-ம் ஆண்டுவரையிலும்; 2010-லிருந்து 2013 வரையிலும்; 2014-லில் இருந்து தற்போது வரையிலும் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. நடுநடுவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் இருந்திருக்கிறது.

பொது விநியோகத் திட்டத்தை டிஜிட்டல்மயமாக்கும் சோதனை தற்போது இந்த மாநிலத்தில் நடந்துவருகிறது. இதில் உள்ள குளறுபடிகள் காரணமாக, உணவு தானியம் கிடைக்காமல் பட்டினியால் 2017 செப்டம்பரிலிருந்து 2019 ஜூன் வரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாகச் செத்தவர் லடேஹர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திர முண்டா. இவர் கிராமத்திற்கு பல மாதங்களாக ரேஷன் பொருட்களே வரவில்லை.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை வாங்க பல விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில் ரேஷன் கார்டு இருக்க வேண்டும். பிறகு ஆதார் அட்டை இருக்க வேண்டும். அதற்குப் பிறகு இரண்டையும் இணைக்க வேண்டும். இங்கிருக்கும் ரேஷன் கடைகளில் பாய்ண்ட் ஆஃப் சேல் மிஷின் மூலம்தான் விற்பனை நடக்கிறது. அது இயங்க இன்டர்நெட் வேண்டும். இதெல்லாம் சரியாக இருந்தால்தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.

சில இடங்களில் ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் வந்துவிடும். ஆனால், இன்டர்நெட் இல்லாததால் பொருட்களை பயனாளிகளுக்கு விநியோகிக்க முடியாத நிலை.

படிக்க :
♦ கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை
♦ ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

இதற்கு நடுவில் அதிகாரிகள் இடும் பல உத்தரவுகள், நிலைமையை மோசமாக்கியிருக்கின்றன. 2017-ல் தலைமைச் செயலராக இருந்த ராஜ்பாலா வர்மா, ஆதாருடன் இணைக்காத ரேஷன் கார்டுகளை ரத்துசெய்ய உத்தரவிட்டார். இது மிகப் பெரிய அளவில் பயனாளிகளை பொதுவிநியோகப் பட்டியலில் இருந்து நீக்கியது. இதைவிட இன்னொரு கொடுமை நடந்தது. சத்தர்பூரில் இருந்த துணை வட்டாட்சியர் ஒரு உத்தரவை வெளியிட்டார். அதன்படி ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கழிப்பறையைப் பயன்படுத்தாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, பயனாளிகளுக்கு நேரடியாக பணம் வழங்கும் முறை பரிசோதிக்கப்பட்டது. ஆனால், வங்கிக் கணக்கில் வந்து விழும் பணத்தை வந்து எடுக்க ஒரு நாளும் பொருட்களை வாங்க ஒரு நாளும் ஆனதால், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்தத் திட்டம் இப்போதைக்கு கைவிடப்பட்டது.

இந்த மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மோசமாக செயல்படுத்தப்படுவது நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது.
இதுவரை பட்டினியால் இறந்துபோன 20 பேரில் 11 பேர் ஆதிவாசிகள். 4 பேர் தலித்துகள். 11 பேர் பெண்கள். 13 பேர் ஆதார் கணக்கை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாததால் இறந்துபோனவர்கள்.

கட்டுரைக்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. படித்துப் பாருங்கள் பல விஷயங்கள் புலப்படும்.

Death by digital exclusion? : on faulty public distribution system in Jharkhand

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !

0

பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சி இந்தியாவில் நடத்திய மிக பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவமான ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவு இந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டுவருகிறது.

அதனையொட்டி ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கிய போராளி உத்தம் சிங் குறித்து ‘The Patient Assassin’ என்ற நூலை பத்திரிகையாளர் அனிதா ஆனந்த் எழுதியிருக்கிறார். அந்த நூலுக்கு Francis P Sempa எழுதிய விமர்சனத்தின் தமிழாக்கம் இந்தப் பதிவு.

♦ ♦ ♦

1919 ஏப்ரல் 13-ம் தேதி, பஞ்சாப்பின் அம்ரித்சர் தங்கக் கோயில் அருகே இருந்த ஜாலியன்வாலா பாக் பூங்காவில் கூடியிருந்த போராட்டக்காரர்களை ஜெனரல் ரெக்ஸ் டயர் (General Reginald Rex Dyer) தலைமையிலான பிரிட்டீஷ் மற்றும் ஏகாதிபத்திய படைகள் சுட்டுவீழ்த்தின.

போராட்டத்துக்காக திரண்டிருந்த 400-லிருந்து 600 மக்கள் அந்த இடத்தில் வீழ்ந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். பத்து நிமிடங்கள் நீடித்த அந்த துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பித்து, ஓட முயற்சித்த பலர் சுடப்பட்டனர். உயிர் பிழைக்க பூங்கா சுவர் ஏறியவர்களும் இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை அல்லது அம்ரித்சர் படுகொலை குறித்து அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பாராளுமன்றத்தில், ‘இது ஒரு படுகொலை. ஒரு பயங்கரமான நிகழ்வு’ என கூறினார். “இந்த சம்பவம் பிரிட்டீஷ் பேரரசின் நவீன வரலாற்றில் முன்மாதிரி அல்லாத ஒன்று” எனவும் அவர் பேசினார். பிரிட்டீஷ் வரலாற்றாசிரியர் ஏ.ஜே.பி டெய்லர் இந்தப் படுகொலை, “பிரிட்டீஷ் ஆட்சியில் இந்தியர்கள் அந்நியப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய தருணம்” என எழுதினார்.

நீண்ட காலம் பிபிசி-யில் பணியாற்றிய பத்திரிகையாளர் அனிதா ஆனந்த், ஜாலியன்வாலாபாக் படுகொலையின் பின்னணியில் உத்தம் சிங் குறித்த மிக சுவாரஸ்யமான கதையைக் கூறியுள்ளார். ‘கீழ்சாதி’யைச் சேர்ந்த பஞ்சாபியான உத்தம் சிங், ஜாலியன்வாலாபாக்கில் கொல்லப்பட்டவர்களுக்காக அவர்களைக் கொல்லக் காரணமாக இருந்த பிரிட்டீஷ் அதிகாரிகளை பழிவாங்க தன்னுடைய 21 ஆண்டுகாலத்தை செலவழித்து திட்டமிட்டார்.

1940, மார்ச் 13-ம் நாள், லண்டனில் கேக்ஸ்டன் ஹாலில் நடந்த கிழக்கு இந்திய சங்கத்தின் சந்திப்புக்கு வந்திருந்த சர் மைக்கேல் ஓ. டயரை (Michael O’Dwyer) கொன்றார் உத்தம் சிங். ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது பஞ்சாப் கவர்னராக இருந்தவர் டயர். பிரிட்டீஷின் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தவரும் இவரே. அதன்பின் ஆதரித்தும் பேசியவர். இந்த சம்பவத்தில் மூன்று பிரிட்டீஷ் அதிகாரிகளும் காயமுற்றனர்.

படிக்க:
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
♦ ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

“உத்தம் சிங், துப்பாக்கி விசையை அழுத்திய அந்தக் கணம்,அவர் பிரிட்டனின் அதிகம் வெறுக்கப்பட்ட நபராகவும், இந்தியாவின் கதாநாயகனாகவும் சர்வதேச அரசியலில் மதிப்புள்ள ஒரு கதாபாத்திரமாகவும் மாறினார்” என எழுதுகிறார் அனிதா.

அனிதாவின் பார்வையில் உத்தம் சிங், வில்லனும் அல்ல புனிதரும் அல்ல !

Francis P Sempa

பிரிட்டீஷ் ஒடுக்குமுறை இந்திய தேசிய நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு குறித்த பரப்புரைகளாலும் படுகொலை காரணமாகவும் உத்தம் சிங் தீவிரமயப்படுத்தப்பட்டார். முதலில் கம்யூனிஸ்ட் இயக்கமாகவும் பிறகு நாசிக்களாகவும் மாறிய இந்திய தேசிய ராணுவத்தால், பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சியை பலவீனப்படுத்த அவர் பயன்படுத்தப்பட்டார்.

இந்த நூலை எழுதிய அனிதா ஆனந்த், இந்தப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புள்ளவர். அந்த சமயத்தில் பதின்பருவத்தில் இருந்த இவருடைய தாத்தா, படுகொலையின்போது அம்ரித்சரில் இருந்தார். பிரிட்டீஷ் படைகள் ஜாலியன்வாலாபாக் வருவதற்கு சற்று முன்பான அவர் அங்கிருந்து வெளியேறினார். தன்னுடைய நண்பரை இந்தத் தாக்குதலில் பலிகொடுத்தார்.

அனிதாவின் கணவர் குடும்பமும் பஞ்சாபிலிருந்து வந்ததுதான். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உத்தம் சிங்குடன் வசித்தவர். அவருடைய பார்வை இந்திய தன்மையுடன் உள்ளது, அது தவறானதல்ல எனினும், அது முழுமையாக இல்லை. பிரிட்டீஷ் பார்வை முழுமையாக இல்லை என்றும் சொல்ல முடியாது, ஆனால் ஒப்பீட்டளவில் குறைவானதாகவே உள்ளது.

பேரரசின் அடையாளமாக இருந்த பிரிட்டீஷ் மகுடத்தில் ஒரு ஆபரணமாக இருந்தது இந்தியா. சிறிய அளவிலான பிரிட்டீஷ் இராணுவத்தாலும் அரசியல் உயரடுக்கைச் சேர்ந்தவர்களாலும் துணைகண்டத்தில் இருந்த உள்ளூர் உயரடுக்கைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது அது. பிரிட்டன் தனது பேரரசை தேவைப்படும்போது இரக்கமின்றி ஆட்சி செய்தது, இந்தியாவில் இருந்த பிரிட்டனின் அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தின் மீது பிடிப்புடன் இருப்பதை புரிந்து வைத்திருந்தனர்.

கிளர்ச்சியின் முதல் அறிகுறியில் பிரிட்டனின் நடத்தையை அனிதா இப்படிச் சொல்கிறார், “தொடக்கத்திலேயே செயல்படுங்கள், தீர்க்கமாக செயல்படுங்கள், வலிமையைக் காட்டுங்கள் அல்லது ஆபத்து துடைத்தெறியப்பட வேண்டும்”.

1857-ன் இந்திய சிப்பாய் கலகம் இது தொடர்பாக ஒரு பாடத்தை வழங்கியிருக்கிறது. கொல்கத்தாவில் பிரிட்டீஷ் இராணுவத்தில் பணியாற்றிய சிப்பாய்கள் செய்த கலகம், வட இந்தியா முழுவதும் வேகமாக பரவியது.

“கிளர்ச்சியாளர்கள் இப்பகுதி முழுவதும் வெடித்தெழுந்தனர்” என எழுதுகிற அனிதா, “ஒரு சிறுபான்மையினர் பிரிட்டீஷ் பொதுமக்களுக்கு எதிராக சொல்லமுடியாத குற்றங்களை செய்தனர். 200-க்கும் மேற்பட்ட பிரிட்டீஷ் குழந்தைகள் மற்றும் பெண்களை பிபிகரில் கொன்றனர். இந்த சம்பவங்களில் தொடர்பில்லாத பலரையும் சேர்த்து, கிட்டத்தட்ட ஒரு லட்சம் சிப்பாய்களை தூக்கிட்டதன் மூலம் பிரிட்டீஷ் அரசாங்கம் தனது பழிவாங்கலைச் செய்தது.

1857 சிப்பாய் கலகம் இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இந்திய அரசு வெளியிட்ட தபால்தலை.

பிரிட்டீஷ் அதிகாரிகள் ஏப்ரல் 1919-ம் ஆண்டும் சிப்பாய் கலகம் போன்றதொரு சம்பவம் நடக்கக்கூடாது என்றே கருதினர். தன்னாட்சி அதிகாரத்துக்கான காந்தியின் அகிச்சை இயக்கம், இந்திய புரட்சிகர இயக்கத்தினரால் கடத்தப்பட்டதாக அவர்கள் கருதினர். ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, டெல்லியில் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதன் பின், பஞ்சாபில் கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன், காந்தியையும் மேலும் இரண்டு காலனிய எதிர்ப்பு தலைவர்களையும் பிரிட்டீஷ் போலீசு கைது செய்தது. இந்தக் கைதை கண்டிக்கும் வகையில் ஒரு கும்பல் அம்ரித்சரில் சில ஐரோப்பியர்களை தாக்கியது, இது உள்ளூர் போலீசால் தடுத்து நிறுத்தப்படவில்லை. இந்த கும்பல் ஐவரைக் கொன்று, மூன்று பேரை தெருவில் வைத்து எரித்தது. ஒரு மூத்த மிஷனரி பெண்ணை கடுமையாக தாக்கி, கொன்றது இந்த கும்பல்.

ஏப்ரல் 13-ம் தேதி காலையில் ஜெனரல் டயர், நகரின் பல்வேறு இடங்களில் பொது கூட்டம் நடத்தவோ, கூட்டமாகவோ கூடக்கூடாது என்றும் அப்படி கூடினால் படைகளால் சிதறியடிக்கப்படுவீர்கள் எனவும் பொது அறிவிப்பைச் செய்தார். அவருடைய எச்சரிக்கையை புறம்தள்ளிவிட்டு, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான மக்கள் ஆயுதங்களை ஏந்தி, ஜாலியன்வாலாபாக்கில் கூடினர்.

படிக்க:
♦ பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

பிரிட்டீசின் பார்வையில், டயரின் நடவடிக்கையால் அந்த நாளில் பெருமளவில் நடக்கவிருந்த சேதம் தடுக்கப்பட்டது, பல உயிர்களும் காப்பாற்றப்பட்டது. சில நாட்களில் பிரிட்டீசின் நடவடிக்கை பஞ்சாப் மாகாணத்தில் அமைதியைக் கொண்டுவந்தது. இந்திய கடைக்காரர்களும் வணிகர்கள் தங்களுடைய பொருட்கள் கொள்ளை போகாமல் தடுத்ததற்காக டயரை புகழ்ந்தனர். அருகில் இருந்த தங்கக் கோயிலின் காப்பாளர்கள் டயருக்கு கௌரவ சீக்கியர் பட்டம் அளித்தனர்.

அனிதா மற்றும் சில பிரிட்டீஷ் கண்ணோட்டங்கள் உண்மையை பிரிக்கவில்லை, அது அவர்களுடைய மாறுபட்ட கண்ணோட்டங்களாகும்.

அதன்பின், பிரிட்டீஷ் தலைமையிலான ஆணையத்தின் விசாரணையில் ஜெனரல் டயரின் நடவடிக்கை மீது தவறு இருப்பது தெரியவந்தது, அவர் தன்னுடைய பதவியை இழந்தார். இந்தியர்களுக்கு அம்ரித்சரின் கொடுங்கோலன் அவர். பிரித்தானியர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் பிரிட்டனின் ஆட்சியை காப்பாற்ற இந்திய மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முயற்சித்த ஒரு பலியாடு. அவர் உடைந்த மனிதராக 1927-ம் ஆண்டு ஜூலை மாதம் இறந்தார்.

ஜாலியன் வாலாபாக் நிகழ்வை சித்தரிக்கும் ஓவியம்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை இந்திய தேசியவாதத்தையும் பிரிட்டீஷ் எதிர்ப்பு மனநிலையையும் வளர்த்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. படுகொலைக்கு முந்தைய ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான இந்திய துருப்புகள் முதல் உலகப் போரில் பேரரசுக்கு சேவை செய்திருந்தன என்பது இந்த விசயத்தில் உதவவில்லை. ஆங்கிலேயர்களின் நன்றிக்கடனை காட்டியவிதம்தான் ஜாலியன்வாலாபாக் படுகொலையா?

பிரிட்டீஷ் காலனி ஆட்சிக்கு எதிர்ப்பு இரு முக்கிய வழிகளில் வந்தது: காந்தி மற்றும் அவரை பின்பற்றுகிறவர்கள் அகிம்சை முறையில் பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அமைப்புக்குள்ளே அரசியல் தன்னாட்சி வேண்டும் எனக் கேட்டார்கள். பஞ்சாப்பில் கெதர் கட்சி தலைமையிலான தீவிர புரட்சிகர இயக்கம், பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சி வன்முறையின் மூலமே துடைத்தெறியப்படவேண்டும் என்றது. உத்தம் சிங் கெதர்களின் மீது ஈர்ப்பு கொண்டார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலையின் போது உத்தம் சிங் அங்கே இருந்ததாக அனிதா எழுதுகிறார். ஆனால், அந்த நாளில் எங்கே இருந்தார் என்கிற உண்மை தெளிவாக இல்லை. உத்தம் சிங்கிற்கு மட்டுமே உண்மை தெரியும். அவர் தன்னுடைய வாழ்நாளில் பல நபர்களிடம் பலவிதமான சம்பவங்களைச் சொல்லியிருக்கிறார். எது உண்மை என கண்டறிவது இயலாததாக உள்ளது.

படுகொலை நிகழ்ந்து இருபது ஆண்டுகளில் உத்தம் சிங், வெவ்வேறு பெயர்களில் ஆப்பிரிக்கா முதல் ஐரோப்பிய கண்டம் வரை அமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை “தனது மக்களின் பழிவாங்கும் தேவதையாக” மாறும் முயற்சியில் பயணித்திருக்கிறார்.

இந்திய புரட்சியாளர்கள் மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் தொடர்பு காரணமாக பிரிட்டீஷ் புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்கு பல முறை அவர் உள்ளாகியிருக்கிறார். உத்தம் சிங் குறித்து பிரிட்டீஷ் அதிகாரிகளால் மூடிவைக்கப்பட்டிருந்த ஆவணங்களை தகவல் பெறும் சுதந்திரத்தின் அடிப்படையில் அனிதா பெற்றிருக்கிறார்.

அமெரிக்கா, ஐரோப்பியாவில் இருந்த இந்திய கெதர் கட்சியால் உத்தம் சிங் ஆதரிக்கப்பட்டார். அந்தக் கட்சிக்கு விசுவாசமாகவும் அவர் இருந்தார். கெதர் கட்சிக்காரர்கள் அவருக்கு பணத்தையும் போலி அடையாளங்களுக்கான சான்றுகளை அளித்ததோடு, பயணங்களின்போது தங்குவதற்கு நட்பான இடங்களையும் ஏற்பாடு செய்துகொடுத்தனர்.

அம்ரித்சரில் தேசவிரோத பொருட்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த காரணத்தால் கைதாகி ஐந்து வருடம் சிறை தண்டனை பெற்றார் உத்தம் சிங். அப்போது அவர், 1929-ம் ஆண்டும் டெல்லி சட்டப் பேரவை வளாகத்தில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு பிரிட்டீஷ் போலிசு அதிகாரியைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பகத் சிங்கை சந்தித்தார். உத்தம் சிங், பகத் சிங்கை தன்னுடைய குரு என அழைத்தார். பகத் சிங்கின் முன்னுதாரணத்தைப் பயன்படுத்தி கொலைத்திட்டத்துக்கான ஊக்கத்தைப் பெற்றார்.

உத்தம் சிங்கின் காத்திருப்பு, இறுதியாக 1940 மார்ச் 13-ம் தேதி பலன் கொடுத்தது. சர் மைக்கேல் ஓ டயரைக் கொன்ற பிறகு, ஜாலியன்வாலாபாக் படுகொலைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் என தனது குற்றத்தையும் நோக்கத்தையும் சொன்னார் அவர். இந்த விசாரணை இரண்டு நாள் நீடித்தது. அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, மரணதண்டனை பெற்றார். 1940-ம் ஆண்டு ஜூலை 31-ம் நாள் பென்நோன்வில்லா சிறையில் அவர் தூக்கிலடப்பட்டார்.

எந்தவொரு அரசியல் தொடர்போ அல்லது நோக்கமோ இல்லாத ஒரு ‘தனி-ஓநாய் பயங்கரவாதி’ என்று பிரிட்டீஷ் அதிகாரிகள் அவரை உருவகப்படுத்தினர். அங்கே ஒரு போர் நடந்துகொண்டிருந்தது, பேரரசு காப்பாற்றப்பட்டாக வேண்டிய தேவை இருந்தது.

பிரிட்டன் போரில் வென்றது. ஆனால், பேரரசை காப்பாற்ற முடியவில்லை. இந்திய சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டது, ஆனால் அமைதியாக அல்ல. அனிதாவின் கூற்றுப்படி, பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற மிக கடுமையான விலையைக் கொடுக்க வேண்டிருந்தது. 15 மில்லியன் மக்கள் இடம்பெயர்வுக்கு ஆளானார்கள், 2 மில்லியன் மக்கள் இறந்தார்கள். அனிதா, பிரிட்டீசாரே இதற்குக் காரணம் என குற்றம்சாட்டுகிறார்.

படுகொலை நடந்த இடத்தில் உத்தம் சிங்கிற்கு 2017-ம் ஆண்டு சிலை வைக்கப்பட்டதாக அனிதா முடிக்கிறார்…

“அது அவரை சித்தரிக்கிறது. கையை நீட்டி, உள்ளங்கையை உயர்த்தி, தரையில் சிந்திய ரத்தத் துளிகளை கையில் ஏந்தி நிற்கிறார். ஒரு வாக்குறுதி நிறைவேற்றப்பட இருபதாண்டுகள் பிடித்ததற்கான ஒரு நினைவூட்டல்.”


கட்டுரையாளர் : Francis P Sempa
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: ஸ்க்ரால்

நூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை

ல்கலைக்கழக அளவில், தமிழில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் சடங்குகளாகி வருகின்றன. பதவி உயர்வுகளுக்கு ஆய்வுப் பட்டங்கள் இன்றையமையாத் தகுதிகளாக வற்புறுத்தப்பட்ட பின்பு, ஆய்வாளர்களின் எண்ணிக்கை கூடியது. வருமானத்துக்காக மட்டுமே பதவிகளையும் படிப்பையும் ஏற்றவர்கள், ஆய்வுகளையும் செய்து தொலைக்க வேண்டிய கடனாகக் கருதினார். இதனால் புறநானூற்றில் பூச்சிகள், சிலப்பதிகாரத்தில் பூண்டுகள் என்ற போக்கிலேயே ஆய்வுகள் தொடர்கின்றன. தமிழ் ஆய்வுகளைப் பொறுத்தமட்டிலும் தரமான ஆய்வுகளைச் செய்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தரமான ஆய்வு நூல்களைத் தேடிப்பிடிக்க வேண்டிய ஒரு சூழலில் மா.உத்திராபதியின் எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வு, ”காலந்தோறும் நந்தன் கதை” என்ற தலைப்பில் நூலாக வருகிறது.

எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வு என்ற எல்லைக்குள் நின்று இந்த நூலைப் படிக்கும்பொழுது, இது பத்தோடு பதினொன்று என்று எண்ணிச் செல்ல வேண்டிய ஒரு நூலாகப் படவில்லை. ஆய்வாளரின் ஈடுபாடும், முயற்சியும் நமது கவனத்தை ஈர்க்கின்றன. இது பார்வையிழந்த மாணவர் ஒருவரின் நூல் என்று யாராலும் பரிந்துரைக்கப்பட வேண்டிய தேவையைத் தவிர்த்து நிற்கின்றது.

‘அடியும் முடியும்’ என்ற நூலில், ‘புலைப்பாடியும் கோபுர வாசலும்’ என்ற கட்டுரையில், க. கைலாசபதி, நந்தன் கதையை ஆராய்ந்துள்ளார். இது அந்த ஆய்வின் தொடர்ச்சியாக நீள்கிறது. நந்தனைப் பற்றிய ஒரு புதினம், ஒரு சிறுகதை, ஒரு கதா காலட்சேபம், ஒரு நாடகம், ஒரு கவிதை,  ஒரு வில்லுப்பாட்டு ஆகியவை ஆய்வுக்குரியவையாகின்றன. இவை 1917-ல் இருந்து, 1982 வரை படைக்கப்பட்டவை. இந்தக் கால கட்டங்களில், நந்தன் என்ற கதாபாத்திரம் தமிழ்ச் சமுதாய மாற்றத்தின் தவிர்க்க முடியாத குறியீடாக இருக்கிறான்.

தீண்டாமைக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல் ‘நந்தன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் உரக்கக் கேட்கிறது.

விவேகானந்தரிலிருந்து ஜெயகாந்தன் வரை நந்தன்களை மேல்நிலையாக்கம் செய்யும் நோக்கங்களை வலியுறுத்துகின்றனர். இந்த நோக்கங்கள் இன்றளவும் ஈடேறவில்லை; அது மட்டுமன்று நந்தனுக்குப் பூணூல் போட்டுப் பார்ப்பது எந்த அளவில் அவனை விடுதலை பெற்ற மனிதனாக்கும் என்பதும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

… பூணூலும் வேத பாராயணமும், விடுதலைக்கான சின்னங்கள் அல்ல. அவை மரபு வழிப்பட்ட ஒடுக்குமுறைச் சின்னங்கள், இன்று கல்விகற்று அதிகாரத்தில் அமரும் ஒரு சில தாழ்த்தப்பட்டவர்கள் பூணூல் அணியாதிருக்கலாம். வேதம் ஓதாதிருக்கலாம் – ஆனால் அவர்கள் பெற்ற கல்வி விடுதலைக்கான கல்வி அன்று. வளர்த்துக்கொண்ட சிந்தனை விடுதலைக்கான சிந்தனையன்று. இதனால் அவர்கள் இந்த வாழ்க்கை முறையை உடைப்பதற்கு மாறாக உறவுகளை உடைத்துக் கொள்கிறார்கள், மனோபாவத்தால் ஒடுக்குமுறையாளர்களுடனேயே தங்களை அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். இங்கு மேனிலையாக்கம் என்பது இந்த வகையில் நடைபெறுகிறது என்று சொல்லலாம்…

… ‘காலந்தோறும் நந்தன் கதை’ ஆய்வு நூலைப் படித்து முடித்தால் இன்னும் நந்தன் கதைகளும், அவை தொடர்பான ஆய்வுகளும் வளரும் என்றே தோன்றுகிறது. நந்தனுடைய விடுதலை நந்தன் தன்னை அந்தணனாகக் காண்பதில் இல்லை, புலையனாகக் காண்பதில் இல்லை, மனிதனாகக் காண்பதிலேயே என்றும் கூறத் தோன்றுகிறது. (நூலுக்கான அணிந்துரையில் இன்குலாப்)

வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் போன்ற மிகப்பழமையான நூல்களில் எண்ணற்ற கதைக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. இவை பின்னர் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் காப்பியங்களாகவும் உருப்பெற்றன. இவ்வாறு உருவாகிய கதைகளில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கிலும் அடிப்படுவதைக் காணலாம். அந்த அளவிற்கு இவை மக்களின் அடிமனத்தில் இடம் பெற்றுள்ளன.

… தமிழ் இலக்கியத்திலும் இம் மரபைக் காணலாம். கண்ணகியைப் பற்றிய கதைகள் பலவும் இம் மரபில் தோன்றியவை. பெரிய புராணத்தில் கூறப்பட்டிருக்கும் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் கதைகளில் பல இம் மரபில் பிற்காலத்தில் பல்வேறு வடிவங்களில் இலக்கியப் படைப்புகளாக உருப்பெற்றிருக்கின்ற. இங்ஙனம் இம்மரபிற்கு உட்படுத்தப்பட்ட கதைகளில் திருநாளைப் போவார் எனும் நந்தனார் கதையும் ஒன்று.

தமிழ்நாட்டில் சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு கருதுவதும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுவதும் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. கீழ்ச்சாதியினருக்கும் மேற்சாதியினருக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளின் தன்மை காலத்திற்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளது. கீழ்ச்சாதியினர் தம் நிலையை உயர்த்திக் கொள்ள பலவாறு முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளனர். இம்முயற்சிகள் இன்றும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணுமளவிற்கு வெற்றிபெறவில்லை. தொடர்ந்து நிலவும் முரண்பாடுகள் படைப்பிலக்கியத்தின் கவனத்தை ஈர்ப்பது இயல்பே. கீழ்ச்சாதியைச் சேர்ந்த நந்தனின் கதை இலக்கியப் படைப்பாளிகளால் மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு, புதிய கருத்துக்களுடன் மறுவார்ப்பு செய்யப்படுவதை காணலாம்.

இந்த ஆய்விற்கு இருபதால் நூற்றாண்டில் படைக்கப் பெற்ற ஆறு படைப்புகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன… ஒவ்வோர் இலக்கிய வடிவத்திற்கும் ஒரு நூல் மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

படிக்க:
கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் !
தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

நூல், முன்னுரை, முடிவுரை நீங்கலாக, ஏழு இயல்கள் கொண்டது. முதல் இயலில், புராணக்கதைகள், பழங்கதைகள் ஆகியவை இலக்கியங்களில் ஏன் இடம்பெறுகின்றன என்பது பற்றியும் யுங், பிரை, கைலாசபதி, ஆகியோர் கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன… அடுத்த ஆறு இயல்களில் முறையே நந்தன் கதையின் தாக்கத்தில் படைக்கப்பட்ட ஆறு நூல்களும் ஒவ்வொன்றாக ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. ஒவ்வோர் இயலிலும், அந்நூல் தோன்றிய காலத்து சமூக அரசியல் சூழல் விவரிக்கப்பட்டு அவ்வக் காலக் கருத்துக்கள் எவ்வாறு இலக்கியப் படைப்பைப் பாதித்திருக்கின்றன என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. காலத்தேவையை பூர்த்தி செய்வதில் ஒவ்வொரு நூலும் எந்த அளவிற்கு வெற்றி கண்டுள்ளது, எவ்வகையில் குறைபாடுடையது என்பனவும் விவாதிக்கப்படுகின்றன. (நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து)

நூல் : காலந்தோறும் நந்தன் கதை
ஆசிரியர் : மா. உத்திராபதி

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089..
தொலைபேசி எண் : 98417 75112.

பக்கங்கள்: 124
விலை: ரூ 50.00

இணையத்தில் வாங்க : marinabooks

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 09

“கண்களை மூடுங்கள்… இப்போது உங்களிடம் இரண்டு நேர்க்கோண முக்கோணங்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்த்தால் என்ன வடிவம் கிடைக்கும்?”

ஒரு நொடி நிசப்தம் நிலவியது.

லாலி கண்களைத் திறக்காமலேயே சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொண்டாள்:

“முக்கோணங்கள் ஒரே மாதிரியானவையா?”

“ஆமாம், ஆமாம். தெளிவுபடுத்தியதற்கு நன்றி.”

குழந்தைகள் நிமிர்ந்து என் காதில் தம் பதில்களைச் சொல்லத் துவங்கினர். வகுப்பு முழுவதும் சுற்றி வந்ததும் நான் வியப்புடன் குழந்தைகளிடம் கேட்டேன்:

“இது எப்படி சாத்தியம்? சிலருக்கு மீண்டும் முக்கோணம் வருகிறது, சிலருக்குச் செவ்வகம் கிடைக்கிறது, சிலருக்கோ சதுரம், நாற்கோணம் வருகிறது…”

நாங்களனைவரும், இரண்டு சமமான நேர்க்கோண முக்கோணங்களை எடுத்துக் கொண்டு இவற்றை இணைக்கத் துவங்கினோம். மூன்று வெவ்வேறு விதமான வடிவங்கள் கிடைத்தன. இவற்றை நான் கரும்பலகையில் வரைந்தேன்:

வெவ்வேறு விதமாக குழந்தைகள் முயற்சி செய்தனர். ஆனால் கரும்பலகையில் வரையப்பட்டுள்ள வடிவங்களே தான் மீண்டும் மீண்டும் கிடைத்தன. சில சமயங்களில் இவை ஒன்றுடன் ஒன்று வேறுவிதமாக இணைந்திருந்தன. உதாரணமாக, பின்வருமாறு இருந்தது:

இப்படிப்பட்ட தீர்வு முன்மொழியப்பட்டது:

“இது பாய்மரக் கப்பல்!” என்றனர் குழந்தைகள்.

சுருங்கச் சொன்னால், வரைகணித வடிவங்களுடனான விளையாட்டு குழந்தைகளுக்குப் பிடித்திருந்தது. இரு முறை இப்பெட்டிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று விளையாட அனுமதியளித்தேன். ஒரு வாரத்திற்குப் பின் இவற்றை அவர்களுக்கே தந்துவிடுவேன். வகுப்பறைக்கு இவை இனி தேவையில்லை. வீட்டில் இவற்றை வைத்துக் குழந்தைகள் நிறைய விளையாடுவார்கள்.

இன்று, கவனம் மற்றும் விமரிசனப் பார்வையை வளர்க்கும் இரண்டு அல்லது மூன்று கட்டளைகளை அவர்களுக்குத் தருவேன்.

“உங்கள் முன் உள்ள பெட்டியிலிருந்து இதோ இந்த வடிவத்தை எடுங்கள்.”

பெரிய கறுப்பு நிற சதுரத்தைக் காட்டுகிறேன். கறுப்புச் சதுரம் யாரிடமும் கிடையாது.

“அடுத்து…” என்று சொல்லியபடியே, இப்படிப்பட்ட சதுரம் இல்லையென யார் சொல்வார்கள் என்று நான் கவனிக்கிறேன். “அடுத்து, இதோ இதை எடுங்கள்!” என்று பெரிய சிவப்பு நிற முக்கோணத்தைக் காட்டுகிறேன்.

வாஹ்தாங்: “எப்படி கறுப்பு சதுரத்தை எடுப்பது? எங்களிடம் தான் கறுப்பு நிற வடிவங்களே இல்லையே!”

நான்: “நான் கறுப்புச் சதுரத்தையா எடுக்கச் சொன்னேன்?”

குழந்தைகள்: “நீங்கள் கறுப்புச் சதுரத்தைக் காட்டுகின்றீர்கள், எங்களிடம் கறுப்பு நிறமே இல்லை !”

நான் : “’தவறு” செய்ததை “இப்போதுதான் உணர்ந்தேன்”.

“இல்லையில்லை, இதுவல்ல, இதோ இது!” என்று கூறியபடியே சிவப்பு நிற பல்கோணத்தைக் காட்டுகிறேன். ஆனால் சிலர் சிந்தித்தனர்.

“இது என்ன வடிவம்? இது எங்களிடம் இல்லையே.”

“ஏன், உங்களிடம் தான் சிவப்பு வடிவங்கள் உள்ளனவே.”

சூரிக்கோ: “சிவப்பு வடிவங்கள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் காட்டும் வடிவம் இல்லை.”

ஏக்கா: “இந்த வடிவத்தின் பெயரென்ன?”

நான்: “இது சதுரமல்லவோ?” என்று நான் கேள்வியைக் கண்டு “வியப்படைகிறேன்”. பின் கையில் உள்ள வடிவத்தைக் கவனமாகப் பார்க்கிறேன். “ஓ, மன்னியுங்கள்… மீண்டும் தவறு. இது பல்கோணம். எனக்கு என்ன வேண்டும் தெரியுமா… (மேசையில் தேவையான வடிவத்தைத் தேடுகிறேன்) இதோ இந்த மாதிரி வடிவம்!” என்று பெரிய சிவப்புச் சதுரத்தைக் காட்டுகிறேன்.

குழந்தைகள் சிவப்புச் சதுரங்களை எடுத்து எனக்குக் காட்டிவிட்டுத் தம் முன் வைக்கின்றனர்.

“இதோ இம்மாதிரியான வடிவத்தையும் எடுங்கள்!” என்று பெரிய சிவப்பு நிற முக்கோணத்தைக் காட்டுகிறேன்.

“இவ்வடிவங்களை அருகே வைத்துக் கொண்டு, இந்த சதுரத்தில் இம்மாதிரியான முக்கோணங்கள் எவ்வளவு அடங்குமென கண்டுபிடியுங்கள்.”

“இரண்டு !”

“சரிபாருங்கள்.”

குழந்தைகள் சரிபார்க்கின்றனர்: பெரிய சதுரத்திற்குள் பெரிய முக்கோணங்களை வைக்கின்றனர்.

“சரியாக இரண்டு முக்கோணங்கள் அடங்கின!”

“எல்லோரும் ஒப்புக் கொள்கின்றீர்களா? மிக நல்லது. அந்த இரண்டு முக்கோணங்களையும் ஓரமாக வைத்து விட்டு இதோ இந்த வடிவத்தை எடுங்கள்!” என்று நடுத்தர அளவுள்ள சிவப்பு முக்கோணத்தைக் காட்டுகிறேன். இதை சதுரத்தின் அருகே வையுங்கள். இதே மாதிரி எவ்வளவு முக்கோணங்கள் சதுரத்தினுள் அடங்குமென கண்களாலேயே கணித்துச் சொல்லுங்கள்.”

படியுங்கள் :
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு !
நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்

சிலர் மூன்று என்றும் சிலர் நான்கு என்றும் சிலர் ஐந்து, ஏன் ஆறு என்றும் கூறுகின்றனர்.

”சரிபாருங்கள்.”

குழந்தைகள் அதே முறையில் சரிபார்க்கின்றனர்: நடுத்தர அளவுள்ள முக்கோணங்களை சதுரத்தினுள் வைக்கின்றனர். சதுரத்தினுள் நான்கு முக்கோணங்கள் அடங்குவதாகப் பலர் கூறுகின்றனர். சிலருக்கோ முக்கோணங்கள் சதுரத்தினுள் அடங்கவேயில்லை.

நானும் இதற்குக் கரும்பலகையில் விடை கண்டுபிடிக்க “முயல்கிறேன்”, வாய்விட்டு யோசிக்கிறேன், “கஷ்டப்படுகிறேன்”, குழந்தைகள் சொல்லித் தருகின்றனர், முடிவாக விடை கண்டுபிடித்தாகி விட்டது.

“அந்த முக்கோணங்களை ஒரு ஓரமாக வைத்து விட்டு இதோ இந்த வடிவத்தை எடுங்கள்!” என்று சிறிய சிவப்பு முக்கோணத்தைக் காட்டுகிறேன். இதையும் பெரிய சிவப்பு சதுரத்தின் அருகே வைத்து, எவ்வளவு இப்படிப்பட்ட முக்கோணங்கள் அதனுள் அடங்குமெனக் கண்களாலேயே கணித்துச் சொல்லுங்கள்.”

இக்கணக்கைப் போட குழந்தைகள் கஷ்டப்படுகின்றனர். 5, 6, 8, 10, 12, 20 என்று தோன்றிய விடையைச் சொல்கின்றனர்.

“வைத்துப் பார்க்கும் அளவு இவ்வளவு சிறு முக்கோணங்கள் நம்மிடமில்லை. இதை எப்படி செய்யலாம் என்று யோசித்து பதில் சொல்லுங்கள்.”

இல்லை, என் வகுப்பிலுள்ள ஆறு வயதுக் குழந்தைகளுக்கு, தம் கல்வியின் முதல் மாத இறுதியில், நடுத்தர மற்றும் பெரிய முக்கோணங்களை அளவுகோலாகப் பயன்படுத்தலாம் என்று தெரியாது. சரி, நாளையோ, நாளைய மறுநாளோ இதற்குத் திரும்பி வருவோம். இதற்கான தீர்வை அவர்களே “கண்டுபிடிக்க” உதவும் வழியை நான் முடிவு செய்தாக வேண்டும்.

“நல்லது! இந்தக் கணக்கை நாளை போட முயற்சிப்போம். இப்போது இந்த வடிவங்களிலிருந்து ஏதாவதொரு பூவின் பல்வண்ணப் பட்டையை உருவாக்குங்கள்.”

“ரயில் வண்டி செய்யலாமா?”

“யாருக்கு விருப்பமோ அவர்கள் ரயில் வண்டியையோ வேறு எதையாவதையோ செய்யுங்கள்.”

குழந்தைகளின் பல்வண்ணப் பட்டையைப் பார்த்து ஆமோதிக்கிறேன், திருத்துகிறேன், ஆலோசனை கூறுகிறேன்.

கணிதப் பாடவேளையின் பதினைந்தாவது நிமிடம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பின் இன்னுமொரு கணித மினி – பாடம் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு வேலைத் தாள் தரப்படும்: படங்களின்படி கணக்குகளை உருவாக்கி விடை கண்டுபிடித்து, எழுத வேண்டும். வேலைத்தாள் இப்படிப்பட்டது:

இப்படிப்பட்ட வேலைகளை நான் இதற்கு முன் தரவில்லை. ஒரு வேளை கடினமாக இருக்குமோ? ஒருவருடன் ஒருவர் கலந்தாலோசித்தோ என்னுடன் கலந்து பேசியோ இவற்றைச் செய்ய நான் அனுமதியளிப்பேன். எங்களுடைய மினி – பாடவேளையின் போது நிச்சயமாக எல்லோராலும் ஆறு – கணக்குகளையும் போட முடியாது. ஒரு சிலர் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று, வகுப்பில் போட முடியாதவற்றை வீட்டில் செய்ய விரும்புவார்கள்.

“வடிவங்களை உள்ளே போடுங்கள்!… எழுந்திருங்கள்!… சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பதை மறந்து விட வேண்டாம்.”

நீண்ட இனிய பள்ளி மணியொலி கேட்கிறது.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை

சேலத்தில் எட்டு வழிச் சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் :

டப்பாடி பழனிச்சாமி  கடந்த வியாழனன்று, மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் எட்டுவழிச்சாலை ஒரு அபிவிருத்தி திட்டம் என்றும், மேலும் நிலங்களை கையகப்படுத்துவதற்காக மூன்று மடங்கு  இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இதைக் கண்டித்து விவசாயிகள் சேலத்தில் பாரப்பட்டி மற்றும் புலாவரியில் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினர்.

பலகட்டப் போராட்டத்திற்குப் பிறகும், இந்த அரசு எங்கள் குறைகளை கேட்க தயாராக இல்லை, இது ஒரு மேம்பாட்டுத் திட்டம் இல்லை, இத்திட்டத்தால் நீர்நிலைகள், உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். மேலும் தேர்தலில் மத்திய அரசு தமிழகப் பாராளுமன்ற தொகுதிகளில் தோற்றுப் போனதால் , விவசாயிகளை பழிவாங்குவதைப் போல  உணர்வதாகவும் கூறுகிறார்கள்.

♦ ♦ ♦

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பனுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் :

விவசாயிகள் சார்பில் ஜுலை 9-ம் தேதியன்று பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

போராடிய விவசாயிகள், இத்திட்டம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க வந்தத் திட்டம் என்றும், வளமான நிலங்களை அழிக்க வந்த இந்தத் திட்டம், சுற்றுச்சூழலை நாசமாக்கும் என்றும் இந்த திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஒரு போதும்  சீர் செய்ய முடியாது என்றும் கூறுகின்றனர்.

♦ ♦ ♦

கோபிசெட்டிபாளையத்தில் கொடிவேரி ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டம்  தொடங்கும் பகுதிக்கு  எதிராக விவசாயிகள் போராட்டம் :

கொடிவேரி அணைக்கட்டின் நீர் பரவல் பகுதியின் வளையத்தில் உள்ள கிணற்றிலிருந்து, பெருந்துறை மற்றும் ஊத்துக்குளிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய பாசன நீர்வரத்துக்கு பங்கம் ஏற்படும்; இந்த திட்டம் தற்போது செயல்படுத்தும் பகுதியிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு விவசாயிகள் திரண்டனர். இதற்காக கோபிச்செட்டிப் பாளையத்தில் கடைகளும் அடைக்கப்பட்டன.

படிக்க:
மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !
♦ ஒரு வரிச் செய்திகள் – 15/07/2019

♦ ♦ ♦

கர்நாடக – ஹாசன் மாவட்ட விவசாயிகள் போராட்டம் :

ர்நாடக ஹாசன் மாவட்ட விவசாயிகள் நீர்ப்பாசனத் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், விவசாய கடன்களிலிருந்து விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

ஹேமாவதி சிலையிலிருந்து அவர்கள் ஊர்வலமாக துணை ஆட்சியர் அலுவலகம் வரை சென்றனர். வறட்சியின் காரணமாக உருளை, மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கப் போவதில்லை என்றும், நீர்ப்பாசனத் திட்டங்களை உரிய காலத்தில் அரசு முடிக்க தவறிவிட்டது என்றும் அவர்கள் போராடினர்.

♦ ♦ ♦

கர்நாடக மைசூரு விவசாயிகள் போராட்டம் :

மைசூரு துணை ஆய்வாளர் அலுவலகம் முன்பு மாநில விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தங்கள் கோரிக்கை மனு அளிப்பிற்குப் பிறகு போரட்டம் நடத்தப்பட்டது.

அதில் அவர்கள் வறட்சியின் காரணமாக கரும்புகளை உடனே சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்ய வழி வகுக்க வேண்டும் என்றும்; விவசாயிகள் தங்கள் நிலங்களை அடமானம் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவது விவசாயிகளுக்கு அதிக  அலைச்சல்  தருவதாகவும், பணச் செலவு அதிகரிப்பதாகவும் உள்ளது. இதை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடிய விவசாயிகள் கூறுகின்றனர்.

♦ ♦ ♦

சிவகரியில் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் :

திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான நான்கு வழிச்சாலைத் திட்டத்திற்காக தங்களுடைய நிலங்கள் கையகப்படுத்துவதற்காக எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஜுலை 5-ம் தேதி சிவகிரி தாலுகா அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அதிலிருந்து விவசாயிகள் வெளியேறி போராட்டத்தில் பங்கேற்றனர்.

♦ ♦ ♦

ஒடிசா பால் விவசாயிகள் இரண்டாயிரம் லிட்டர் பாலை வீதியில் கொட்டி போராட்டம் :

டிசா அரசு நிறுவனமான ஒடிசா மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் பால் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த பாலை கலப்படம் என்று கூறி நிராகரித்ததால் தங்களுடைய இரண்டாயிரம் லிட்டர் பாலை விவசாயிகள் வீதிகளில் கொட்டி போராடினர்.

தாங்கள் தினந்தோறும் கொண்டுவரும் பாலுக்கு எந்த ஒரு தரக் கட்டுப்பாடும் இல்லாத போதும், அதை தரக் கட்டுப்பாடு என்று வேண்டுமென்றே கூட்டமைப்பு நிராகரிப்பதாகவும், தங்களுடைய பாலை வீதியில் கொட்டுவதற்கு அது நிர்ப்பந்திப்பதாகவும் கூறுகிறார்கள்.


செய்தி ஆதாரங்கள்:

Anti-green corridor farmers stage protest in Salem-The Hindu 13,2019
Farmers protest against hydrocarbon project-The Hindu July 10,2019
Farmers condemn resumption of water scheme works- The Hindu July 13, 2019
Raitha sangha for quick completion of projects- July 09,  The Hindu
DC to hold meet to discuss farmers’ issues on July 15 –The Hindu July 10 2019
Farmers stage protest ag ainst land acquisition- The Hindu July 08,2019
Odisha dairy farmers spill milk on streets after state cooperative cites ‘adulteration- Hindustan times July 13 -2019

ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை

0

என் சொந்த நாட்டிலேயே நான் ஏன் அகதியாகவோ பாலியல் அடிமையாகவோ வாழவேண்டும் ?

ராக்கில் ஐ.எஸ் அமைப்பால் 2014-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மனிதப் படுகொலைகளின் சாட்சியாக விளங்கும் யாசிடி குலப் பெண்களின் கேள்வி இது.

2014 -ம் ஆண்டு வடக்கு ஈராக்கில் கிராமம் கிராமமாகப் புகுந்த ஐ.எஸ் அமைப்பினர்; கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் காக்கைக் குருவிகளைப் போன்று சுட்டுத்தள்ளிவிட்டு, பெண்களைப் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றிச் சென்றனர்.

தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் பல பெண்கள் இப்போது தங்கள் பூர்வீக இடத்திற்குச் சென்று வசிக்க விரும்புகின்றனர். இது குறித்து அவர்களுக்கு எந்த பயமும் இருக்கவில்லை.

யாசிடிகள் இல்லாத சிஞ்சார் நகரமும் இல்லை; சிஞ்சார் இல்லையெனில் யாசிடிகளும் இல்லை என்கிறார் 25 வயதான ஷ்ரீன். மொசூல் நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் பாலியல் அடிமையாக சிறைபட்டிருந்த இவர், அரச படைகளுக்கும், ஐ.எஸ்-க்கும் இடையே போர் தீவிரமடைந்த போது, தப்பிப் பிழைத்து சிரியா சென்று ஐ.எஸ்-ன் பிடியில் சிக்கியிருந்த தன் தங்கையை மீட்கச் சென்றுள்ளார்.

அழுதுபுலம்பும் யாசிடி இனப்பெண்கள் – இடம்: கோஜோ கிராமத்தில் கொத்தாகப் புதைக்கப்பட்ட மனிதச்சடலங்களை அடையாளம் காணும்போது.

நான் மற்றவர்களால் ஒரு அகதியாகவோ அல்லது பாலியல் அடிமையாகவோ பார்க்கப்பட விரும்பவில்லை. மாறாக யாசிடி இனக்குழுவின் போராட்டப் பெண்மணியாகப் பார்க்கப்பட விரும்புகிறேன். என் தந்தையின் இறந்த உடலைப் பெறும் வரை, ஈராக்கை விட்டுப் போகப் போவதில்லை என்கிறார் ஷ்ரீன். இவரின் தந்தை 2014-ம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஷ்ரீன் இப்போது, கோஜோ எனும் கிராமத்தில் ஐ.எஸ் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டு கொத்துக் கொத்தாகப் புதைக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கணக்கெடுக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் நடியா முராத் இந்த கிராமத்தில்தான் ஐ.எஸ் அமைப்பினரால் 2014-ம் ஆண்டு கடத்தப்பட்டார்.

படிக்க:
அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி
♦ மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !

ஐ.எஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட யாசிடி பெண்களின் நிலைமை என்னவானது என்று இதுவரை தெரியவில்லை. ஆனாலும் தப்பிப்பிழைத்த யாசிடி குலப்பெண்கள் உயிரைக் குறித்து அச்சப்படாமல் தங்களுடைய சொந்த இடத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஷ்ரீனைப் போலவே மற்ற ஷானா, நடா ஆகிய பெண்களும் இந்த நிறுவனங்களில் தன்னார்வலர்களாகப் பணியாற்றிவருகின்றனர். தங்கள் சொந்த பந்தங்களின் எலும்புக்கூடுகளையாவது பார்க்க முடியுமா என்பது தான் இவர்களின் நோக்கம்.

மக்கள் முகாம்களில் வாழ்வதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், யாசிடி பெண்களோ தங்கள் சொந்த இடத்திற்கு தைரியமாகச் சென்று புணரமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

யாசிடி மதத்தலைவர் ஷேக் கட்டோ, கோஜோ கிராமத்தில், புதைக்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் முன்பு வெள்ளைப் புறாக்களைப் பறக்கவிடுகிறார். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் சூழ்ந்து நிற்கின்றனர். இது போன்று 70 இடங்களில் ஐ.எஸ் அமைப்பினரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் புதைக்கப்பட்டுள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற நடியா முராத் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார், இதே கோஜோ கிராமத்தில்தான் ஐ.எஸ் அமைப்பினர் 2014-ம் ஆண்டு இவரைக் கடத்தியிருந்தனர்.

மூன்று யாசிடி இனப்பெண்கள் கல்லறைகளுக்கு அவர்களின் மதமுறைப்படி சாம்பிராணி புகை போட்டு, சடங்குகளைச் செய்கின்றனர்.

சிஞ்சார் மலைப்பகுதியில் ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள அகதிகள் முகாம். ஐ.எஸ் தாக்குதல் தீவிரமான போது இந்த மலைப்பகுதியில் பலர் ஒளிந்து கொண்டு உயிர் தப்பியுள்ளனர்.

சிஞ்சார் மலையின் வடக்குப்பகுதியில் ஐ.எஸ் அமைப்பினரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டு மடிந்த யாசிடி இன ஆண்கள் மற்றும் பெண்களின் சதுக்கங்கள்.

நடா மற்றும் ஷானா இருவரும் ஐ.எஸ் தாக்குதலுக்கு முன் தாங்கள் வசித்து வந்த சிஞ்சார் நகரத்தில் இருக்கும் காட்சி. 2014-ல் இங்கிருந்து தப்பிச் சென்றவர்கள் இப்போது திரும்பவும் தங்களுடைய சொந்த இடத்திற்கு வந்துவிட்டனர்.

ஐ.எஸ் அமைப்பினரால் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்ட சிஞ்சார் நகர வீதியொன்றில் நடந்து வரும் நடா, ஷானா. யாசிடி இனத்தவரை இங்கே மீள்குடியமர்த்துவதற்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யும் வண்ணம் இங்கே வந்துள்ளனர்.

சிஞ்சார் நகரின் மலைப்பகுதியிலிருந்து சிஞ்சார் நகரைப் படம் பிடித்த காட்சிதான் இப்போது நீங்கள் பார்ப்பது.

அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருதுபெற்ற ஈராக்கிய பாராளுமன்ற உறுப்பினரான வியான் டக்கீல்-இன் பேனர். தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஈராக்கியப் பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர்

கோஜோ கிராமத்தில் ஐ.எஸ் அமைப்பினரால் சின்னா பின்னமாக்கப்பட்ட வீட்டின் மேல் ஈராக் தேசியக்கொடி பறக்கிறது

ஆயிஷா தன் இரு குழந்தைகள் ஜினான், ஜிகா-வுடன் சிஞ்சாரில் உள்ள தனது வீட்டிலிருக்கிறார். 2014-ல் இவர்கள் ஐ.எஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பிரிக்கப்பட்டு விட்டனர். 2018-ம் ஆண்டு சிரியாவில் உள்ள இருவேறு அகதிகள் முகாம்களிலிருந்து ஆயிஷாவின் குழந்தைகள் மீட்கப்பட்டு இப்போது ஒன்றாக வாழ்கின்றனர்.

யாசிடி இனக்குழுவைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தை சீர்குலைக்கப்பட்ட காரின் மேல் விளையாடும் காட்சி. முகாம்களில் இருந்து தைரியமாக இங்கே திரும்பி வந்துவிட்டாலும் இவர்களின் வாழ்க்கை விளிம்பு நிலையில்தான் இருக்கிறது.

சிஞ்சார் மலைப்பகுதியிலிருந்து ஐ.எஸ் அமைப்பினரால் சீர்குலைக்கப்பட்ட நகரத்தின் காட்சி.

கட்டுரையாளர்: Marta Bellingreri & Alessio Mamo
தமிழாக்கம் : வரதன்
நன்றி : aljazeera