பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயிலின் மிச்சங்கள் இருப்பதாக இந்துத்துவ கும்பல் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தொல்லியலாளர்கள் சிலரைப் பயன்படுத்தி, பொய்யான தொல்பொருட்களை காட்டி, அதை ராமர் கோயிலின் மிச்சங்கள் எனவும் சாதித்தது இந்த கும்பல். 2003-ஆம் ஆண்டு பாபர் மசூதியை ஒட்டிய பகுதிகளில் இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வு முடிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்த சன்னி வஃக்பு வாரியம் இந்த அகழாய்வு முடிவு, ‘தெளிவற்ற மற்றும் உள்முரண்பாடுகளுடன் உள்ளது’ எனக் கூறியது.
பாபர் மசூதியில் ஒரு பகுதியில் நடந்த அகழாய்வில் வஃக்பு வாரியத்தின் சார்பில் பங்கேற்ற சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகியோர் 2010-ஆம் ஆண்டில் ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ இதழில் இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு முடிவு குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தனர். அந்தக் கட்டுரையில், முன்முடிவுகளை வைத்துக்கொண்டு இந்திய தொல்லியல் ஆய்வகத்தைச் சேர்ந்த தொல்லியலாளர்கள் ஆய்வில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர்.
அகழாய்வு.
“எந்தவொரு இந்திய தொல்லியலாளரோ, அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரோ அகழாய்வு நடத்த வேண்டுமெனில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முன் அனுமதி பெற்றாக வேண்டும். இதனால் பலம் பொருந்திய அந்த அமைப்பை எதிர்த்தும் அதன் காலாவதியான அகழாய்வு முறைகள் குறித்தும் பேச எவரும் துணிவதில்லை” என அவர்கள் எழுதியிருந்தனர்.
2019-ஆம் ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தனது தோற்றுப்போன ஆட்சி நிர்வாகத்தினை மறைக்க மீண்டும் அயோத்தி பிரச்சினையை கையெலெடுத்துள்ளது இந்துத்துவ கும்பல். அண்மையில் ஒன்றுகூடிய பரிவாரங்கள், நீதிமன்றத்தைப் பொருட்படுத்தாது ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என முழங்கின.
இந்தச் சூழலில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 26-வது கருப்பு தினம் வியாழன் அன்று நினைவு கூறப்பட்டது. இதையொட்டி ஹஃபிங்டன் போஸ்ட் இணையதளம், அகழாய்வில் பங்கேற்ற ஜே.என்.யு. பல்கலைக்கழக பேராசிரியர் சுப்ரியா வர்மாவின் நேர்காணலை வெளியிட்டிருந்தது. அந்த நேர்காணலில் சுப்ரியா, இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வில் பல செயல்முறை குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார்.
“இப்போது பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததற்கான தொல்லியல் தடயங்கள் எதுவும் இல்லை. உண்மையில் பாபர் மசூதிக்கு அடியில் மற்றொரு மசூதியின் மிச்சங்கள்தான் உள்ளன” என்கிறார் சுப்ரியா.
இந்திய தொல்லியல் ஆய்வகம் அகழாய்வில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களாக மூன்று விசயங்களை கூறியிருந்தது. அந்த மூன்றும் கேள்விக்குறியவை என விளக்குகிறார் சுப்ரியா.
1. மேற்பகுதியில் இருந்த சுவர்: “மேற்கு பகுதியில் சுவர் இருப்பது மசூதி கட்டுமானத்தில் உள்ள முக்கிய அம்சம். அந்த சுவரின் முன்புதான் தொழுகை நடத்துவார்கள். கோயிலில் இப்படியான அம்சம் இல்லை. கோயில் கட்டுமானம் முற்றிலும் வேறானது.”
2. ஐம்பது தூண்களைக் கொண்ட அடிகட்டுமானம்: “இது முற்றிலும் ஜோடிக்கப்பட்டது. பலமுறை இந்த புரட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் புகார் செய்திருக்கிறோம். தூண்கள் என அவர்கள் சொல்லிக்கொள்ளும் அமைப்பு உடைந்த ஓடுகளால் ஆனது. அவற்றின் இடையே மண் நிரம்பி இருந்தது. வலிமையான கட்டடத்தைத் தாங்கும் தூண் எப்படி அவ்வாறு இருக்க முடியும்? என நீதிமன்றத்தில் வாதிட்டோம்”.
3. கட்டுமானத்தின் மிச்சங்கள்: “முக்கியமான கட்டுமான மிச்சங்கள் என 12 துண்டுகள் சமர்பிக்கப்பட்டன. இவை எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டவை அல்ல. மாறாக, இவை பாபர் மசூதியின் சுண்ணாம்பு தரை தளத்தின் மேலே இருந்த கட்டிடக் கழிவுகள். அவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல, இது ஒரு கோயில், கற்களால் ஆன ஒரு கோயிலாக இருந்திருந்தால் இதைவிட பல ஆதாரங்கள், ஏன் கற்சிலைகள் கூட கிடைத்திருக்கலாம். ஆனால் அப்படியெதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
சுப்ரியா வர்மா.
சுப்ரியா வர்மா, இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வு, முன்பு நடந்த தொல்லியல் ஆய்வுகள் குறித்தும் பல விசயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். 1861-ஆம் ஆண்டும் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குனராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், பாபர் மசூதி இருந்த பகுதிகளில் ஆய்வுகள் செய்ததாக தெரிவிக்கிறார். அயோத்தியில் மூன்று பழமையான இடங்கள் இருந்ததாகவும் அவற்றில் இரண்டு புத்த ஸ்தூபிகளாகவும், ஒன்று விகாரையாகவும் இருந்ததாக கன்னிங்ஹாம் பதிவு செய்துள்ளார். அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் பகுதி மக்கள் இங்கிருந்த சில கோயில்கள் இடிக்கப்பட்டதாக வாய்வழி கதைகளை சொன்னதாகவும் ஆனால், பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என்பது குறித்து எவ்வித குறிப்பையும் கன்னிங்ஹாம் எழுதவில்லை என்றும் சுப்ரியா குறிப்பிடுகிறார்.
அதன் பின்பு 1969-ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை இரண்டாவது அகழாய்வை இந்தப் பகுதிகளில் (அயோத்தியில்) நடத்தியது. அந்த அகழாய்வு முடிவுகள் குறித்து தெளிவான அறிக்கைகள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை. கிடைத்த தகவலின்படி, அகழாய்வு நடந்த பகுதிகள் வரலாற்றின் தொடக்க மற்றும் மத்திய காலத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக இருந்திருக்கலாம்.
1975-1980 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குனராக இருந்த பி.பி. லால் இந்த அகழாய்வு திட்டத்துக்கு புத்துயிர் கொடுத்தார். இந்துத்துவ அமைப்புகளின் புரட்டுக்கு ‘அறிவியல்’ சாயம் அடித்தவரும் இவரே.
சுப்ரியா சொல்கிறார், “அயோத்தி, மதுரா, வாரணாசி ஆகிய மூன்று இடங்களில் இருந்த கோயில்கள் இடிக்கப்பட்டதாக 1988-ஆம் ஆண்டு விசுவ இந்து பரிசத் பிரச்சினையை கிளப்பியது. அந்த ஆண்டு, பி.பி. லால், 1975-1978ஆம் ஆண்டுகளில் அயோத்தியில் அகழாய்வு செய்த இடத்தில் கண்டெடுத்ததாக ‘கோயில் தூண்கள்’ எனக்கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏடான ‘மன்தன்’-இல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதோடு, குரோஷியாவில் நடந்த உலக தொல்லியல் மாநாட்டில், இந்த புகைப்படத்தை சமர்பித்து அகழாய்வு தொடர்ந்து நடத்தப்பட்டால் கோயில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கலாம் என பேசினார்.
இந்த லால், ராமாயணம், மகாபாரத புராணங்களில் சொல்லப்பட்ட இடங்களை அகழாய்வதில் ஆர்வம் கொண்டு செயல்பட்டவர். இவர் கொடுத்த ‘புராண புரட்டு ஆதாரங்கள்’ பாபர் மசூதியை வைத்து பா.ஜ.க., மிகப்பெரும் அளவில் அரசியலை கட்டியெழுப்ப உதவியது. 1992-ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு முதன்முறையாக வந்த பா.ஜ.க. (தேசிய ஜனநாயகக் கூட்டணி) ஆட்சியின் போது மீண்டும் அகழாய்வு செய்வது குறித்த பேச்சு எழுந்தது. பின்பு, அலகாபாத் நீதிமன்றம் 2002-ஆம் ஆண்டு அகழாய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வகத்துக்கு ஆணையிட்டது”
சுப்ரியா தன்னுடைய நேர்காணலில், அப்போது செய்யப்பட்ட அகழாய்வு குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தில் பல உண்மைகள் உள்ளன. உள்ளடக்கத்தில் பல தலைப்புகளில் வந்த கட்டுரையை எழுதியவர் யார் என்கிற விவரமும்கூட இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆய்வின் முடிவு பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ளது. முடிவுக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பே இல்லை என்கிறார் சுப்ரியா.
“முழு அறிக்கையையும் படித்தால், ஒரு இடத்தில் கூட கோயில் குறித்த பதிவு இடம்பெற்றிருக்காது. இது தரமான அறிக்கைதான். ஆனால், ஆகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகள் மற்றும் மனித எலும்பு கூடுகள் குறித்த பதிவு அறிக்கையில் இல்லை. அதுகுறித்து அவர்கள் பதிவு செய்யவே இல்லை. அவற்றை ஆய்வுக்கு அனுப்பினால் உண்மைகள் தெரிய வந்திருக்கலாம்.
இறுதியாக மூன்றே மூன்று ஆதாரங்களின் அடிப்படையில் பெயர் போடாமல் ஆய்வின் முடிவு ‘பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது” என எழுதப்பட்டுள்ளது. மூன்றே வரிகளில் எழுதப்பட்ட முடிவுக்கு உள்ளடக்கத்தில் எங்கேயும் ஆதாரங்கள் இல்லை. ஆனால், இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் இரண்டு அல்லது மூன்று அடுக்கில் சிறு மசூதிகள் இருக்கலாம் எனகிற முடிவுக்கு நாங்கள் வந்தோம்” என்கிற சுப்ரியா முசுலீம் மக்களின் குடியேற்றத்துக்கு முன், இந்தப் பகுதியில் பவுத்த மக்களின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் என்கிறார்.
“அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை இந்தப் பகுதி பவுத்த மக்களின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் (அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பதிவு செய்திருக்கிறார்) என்றும் 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டில் முசுலீம் மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அப்போது பழைய இடிந்துபோன பவுத்த கட்டுமானத்தின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டிருக்கலாம். அதன்பின் 1528-ஆம் ஆண்டும் பாபர் மசூதி, பழைய மசூதிகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது” என தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார் சுப்ரியா.
பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது திருட்டுப் பார்ப்பனிய இந்துமதம். வரலாற்று காலம் தொட்டு இந்த திருட்டுத்தனத்தை செய்துவரும் இவர்கள், பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது என சொன்ன புரட்டும் புஸ்வானமாகியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை குற்றவாளிகளான போலீசே விசாரிப்பது எவ்விதத்தில் சரியானதாக இருக்கும் எனக் கேள்வி கேட்டு பத்திரிகையாளர் கவின்மலர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
துப்பாக்கிச் சூட்டின் குற்றவாளிகள்
இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற அமர்வு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ, துப்பாக்கிச்சூட்டில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் கொலைகார அதிகாரிகளைக் காப்பாற்ற தமிழக அரசு, சிபிஐ விசாரணை கூடாது என்றும் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று (07-12-2018) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது. அதில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி போலீசு தரப்பிற்காக வாதாடினார். எதிர் மனுதாரரான பத்திரிகையாளர் கவின்மலர் அவர்களின் சார்பில் வழக்கு நடத்திய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஏற்பாட்டில் மூத்த வழக்கறிஞர் காலின் கான்சால்வேஸ் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழக அரசு ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடாமல், ஆலையை மீண்டும் திறக்க திரைமறைவு வேலைகளை செய்துவருவது போலவே சிபிஐ விசாரணையை ரத்து செய்யக் கோருவதன் மூலம் கொலையாளிகளை காக்கத் துடிக்கிறது தமிழக அரசு. இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் காலின் கான்சால்வேஸ் அவர்களுக்கும், வழக்குநிதி தந்த மக்கள் அதிகாரம் அமைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களை படுகொலை செய்த விசயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்வதும், இவ்விவகாரத்தில் தமிழக அரசின் தலையீட்டை நிராகரிப்பதும் அவசரத் தேவையாக உள்ளது.
தகவல் : வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
****
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய தூத்துக்குடி மக்கள்:
ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த விசாரணைக்குழு, ஸ்டெர்லைட்டை தமிழக அரசு மூடியது தவறு என்று கூறி தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கை இன்று (7-12-2018) விசாரிக்கிறது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
இச்சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தொடர்ந்து அறவழியில் போராடி வந்த தூத்துக்குடி மக்கள் மீண்டும் தங்களது போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். நீதிபதி தருண் அகர்வாலின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்து வருகின்றனர்.
பண்டாரம்பட்டி மக்கள் போராட்டம்:
1 of 3
இந்நிலையில், ”ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து சட்டமன்றத்தில் சட்டமியற்ற வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்து நேற்று (06-12-2018) முதல் தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி மக்கள் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பண்டாரம்பட்டி கிராமத்தில் போலீசைக் குவித்துள்ளது தமிழக அரசு. இப்போராட்டம் குறித்து பண்டாரம்பட்டி கிராமத்தில் வழக்கறிஞர் அரிராகவன் கூறுகையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில், இறுதி விசாரணையின் அடிப்படையில் ஆலைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், கிராம மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். ஆலைக்கு எதிராக தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்துவோம், ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.
மார்க்ஸ் பிறந்தார் – 23 (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
9. ஒரு மேதையும் அவருடைய சூழலும் – 3
மார்க்சை விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி அறிவின் உருவகம் என்று கூறலாம். படைப்புச் சிந்தனையே அவருக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய ஆனந்தம். ஏதாவதொரு வேலையின் காரணமாக விஞ்ஞான ஆராய்ச்சியை அவர் நிறுத்த நேரிட்ட சமயங்களில் அவர் மிகவும் அதிகமாக வேதனைப்பட்டார்.
அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த காலங்களில் ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லையே என்று அவருக்கு ஏற்பட்ட வேதனையுடன் ஒப்பிடுகின்ற பொழுது நோயினால் ஏற்பட்ட துன்பம் ஒன்றுமல்ல என்றே கூற வேண்டும்.
மார்க்சினுடைய விஞ்ஞான நேர்மை குறை சொல்லப்பட முடியாதது மட்டுமல்ல, எங்கெல்ஸ் கூறியதைப் போல அது மிகையானதும் கூட. எங்கெல்ஸ் துல்லியத் தன்மையை மிக அதிகமாக வற்புறுத்தினார் என்றாலும் அவர் சில சமயங்களில் மார்க்சினுடைய நுழைநுணுக்க நேர்மையைப் பற்றிப் பொறுமையிழந்தார். ஒரு கருத்தை ஒரு டஜன் வெவ்வேறான முறைகளில் நிரூபிக்க முடிந்தாலன்றி அவர் அதைப் பற்றி ஒரு வாக்கியத்தைக் கூட எழுதத் துணியமாட்டார்.(1)
மார்க்சிடம் மாபெரும் சிந்தனையாளர் மாபெரும் விமர்சகருடன் இணைந்திருந்தார்; ஆனால் இளமைக் காலத்திலும் முதிர்ச்சிக் காலத்திலும் அவருடைய விமர்சனம் பிரதானமாக அவருக்கு எதிராகவேதான் இருந்தது. “நான் எழுதி முடித்த ஒன்றை நான்கு வாரங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் பொழுது அது எனக்குத் திருப்தியளிக்கவில்லை என்றால் அதை முற்றிலும் திருத்தி எழுதுவது என்னுடைய குணாம்சம்”(2) என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார்.
மூலதனத்தின் முதல் தொகுதியின் (அதைப் போலவே மற்ற தொகுதிகளுக்கும்) பிரதான கருத்துக்கள் ஏற்கெனவே 1857-58ம் வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன, வரையறுக்கப் பட்டுவிட்டன என்பதை மூலதனத்தின் முதல் கையெழுத்துப் பிரதிகள் எடுத்துக் காட்டுகின்றன; எனினும் இத்தொகுதியை இறுதியாக வெளியிடுபவரிடம் அனுப்புவதற்கு முன் மேலும் பத்தாண்டுகள் மார்க்ஸ் கடுமையாக உழைத்தார்.
அந்தச் சமயத்தில் (1867) “வரலாற்றுப் பகுதி”, அதாவது “உபரி மதிப்புத் தத்துவங்கள்” உட்பட எஞ்சிய தொகுதிகளின் வேலை மிகவும் அதிகமான அளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தபடியால் மொத்தப் பணியையும், அதிகமாகப் போனால் கூட, ஒரு வருடத்துக்குள் முடித்துவிட இயலுமென்று மார்க்ஸ் கருதினார். எனினும் அவரால் அந்தப் பணியை மரணத்துக்கு முன்னர் பூர்த்தி செய்ய முடியவில்லை (மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை அச்சிடுவதற்குத் தயாரிக்கின்ற பொறுப்பை எங்கெல்ஸ் நிறைவேற்றினார்). ஒரு பகுதி சம்பந்தமான ஆராய்ச்சிக்கு ருஷ்ய விவரங்களை ஆராய்வது அவசியமான காரணத்தால் மார்க்ஸ் ருஷ்ய மொழியைக் கற்க ஆரம்பித்தார்.
ஒரு பிரச்சினை சம்பந்தப்பட்ட எல்லாப் புத்தகங்களையும் – ஆசிரியருடைய “தரம்” இங்கே முக்கியமானதல்ல – படிக்காமல் அதைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது நியாயமல்ல என்பது மார்க்சின் கருத்து. மூலதனத்தில் அவர் மெய்யாகவே “வரலாற்றின் தீர்ப்பை வழங்கினர்”; ஒவ்வொரு பொருளியலாளருக்கும் – அவருடைய பங்கு எவ்வளவுதான் அற்பமானதாக இருந்தாலும் – உரிய வெகுமதியளித்தார்.
மூலதனம் ஒப்புவமையில்லாத நூலாகும், அது விவரங்களில் பேருருவத்தைக் கொண்டிருக்கிறது, பொருளாதார (பொருளாதாரம் மட்டுமல்ல) சிந்தனையின் எல்லா வடிவங்கள் மற்றும் வெளியீடுகளின் மொத்த வரலாற்றின் கூட்டிணைப்பாக இருக்கிறது; மார்க்சின் வாழ்க்கையின் ஆன்மிக வளர்ச்சியின், கடந்த காலக் கலாச்சார பாரம்பரியம் அனைத்தின் கூட்டிணைப்பாகவும் இருக்கிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறை அதன் தவிர்க்க முடியாத வீழ்ச்சியை நோக்கி முன்னேறுகின்ற தர்க்கம் முதன்முறையாக வெளிப்படுத்தப்படுவதன் காரணமாகவும் அது ஒப்புவமையில்லாத நூலாக இருக்கிறது.
மூலதனம் ஒரு பொருளாதார நூல் மட்டுமல்ல. அது முதலாளித்துவச் சமூகத்தின் எல்லா உறவுகளையும் அம்சங்களையும் பகுப்பாய்வு செய்கிறது. தன் விடுதலைக்காகத் தொழிலாளி வர்க்கம் நடத்துகின்ற அரசியல் போராட்டத்துக்கும் உலக கம்யூனிஸ்டு இயக்கத்தின் போர்த்தந்திரத்துக்கும் செயல்தந்திரத்துக்கும் உறுதியான விஞ்ஞான அடிப்படையை அளிக்கிறது. அதனால் தான் – மார்க்ஸ் கூறியபடி – இப்புத்தகம் முதலாளி வர்க்கத்தை நோக்கிச் செலுத்தப்பட்ட “மிக பயங்கரமான வெடிகுண்டாக” இருக்கிறது. அது முதலாளி வர்க்கத்தின் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை; அதில் மேன்முறையீட்டுக்கு இடமில்லை.
மூலதனம் இலக்கிய நயம் நிறைந்த பேரிலக்கியமாகும். அதைப் படிக்கும் பொழுது ஒருவர் ஆழமான அழகியல் ரசனையை அடைகிறார். அது “முழுமையான கலைப்படைப்பு”. அதன் அமைப்பு, சமநிலை மற்றும் விளக்கத்தில் அமைந்துள்ள கறாரான தர்க்கம் ஆகியனவற்றில் மட்டுமல்ல, அதன் நேர்ப் பொருளிலும் அது உண்மையே. ஏனென்றால் மார்க்ஸ் இந்நூலில் மாபெரும் எழுத்துக் கலைஞராகத் திகழ்கிறார்.
மார்க்ஸ் தன்னுடைய சிந்தனைகளை வெளியிடுகின்ற இலக்கிய வடிவத்துக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்தார். வறட்சியான முறையில், அரசாங்க அறிக்கையின் பாணியில் எழுதுவது புலமைக்கு அவசியமான கூறு என்று கருதிய அறிஞர்களை மார்க்ஸ் வழக்கமாகக் கேலி செய்வார். வொல்தேருடன் சேர்ந்து அலுப்பூட்டுகின்ற நடையைத் தவிர எல்லா இலக்கிய நடையும் நன்றே என்று அவர் திரும்பத் திரும்பக் கூறினார்.
மூலதனத்தின் இரண்டாவது ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய பின்னுரையில் தன்னுடைய எழுத்து நடையைப் பற்றி அக்காலத்திய பத்திரிகைகளின் கருத்துக்கள் சிலவற்றை மார்க்ஸ் மேற்கோள் காட்டினார். ஆங்கிலப் பத்திரிகைகள் அவருடைய கருத்துக்களை எதிர்த்தன, எனினும் அவை கூட மூலதனத்தை எழுதுவதில் கையாளப்பட்டிருக்கின்ற முறை வறட்சியான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் கூட தனிவகையான அழகைத் தந்திருக்கிறது என்று குறிப்பிட்டன.
மார்க்ஸ் கையாண்டிருக்கின்ற நடையில் தெளிவும் அசாதாரணமான உயிரோட்டமும் சிறப்பான கூறுகளாகும்; இந்நூல் ஜெர்மானிய அறிஞர்கள் எழுதிய புத்தகங்களைச் “சிறிதும் ஒத்திருக்கவில்லை”, அவர்கள் மிகவும் வறட்சியான, புரியாத நடையில் தங்கள் புத்தகங்களை எழுதுவதால் சாதாரண வாசகர்களின் மண்டைகள் உடைந்து விடும் என்று ஸெயின்ட் பீட்டர்ஸ்பர்க் சஞ்சிகை எழுதியது.
மார்க்ஸ் மூலதனத்தில் எடுத்துக் கொண்ட மிகச் சிக்கலான பொருளை வியக்கத்தக்க தெளிவு மற்றும் வர்ணனையுடன் எழுத முடிந்ததென்றால், மதிப்பின் வடிவங்கள், பண்ட வழிபாடு, முதலாளித்துவத் திரட்டலின் சர்வாம்ச விதி ஆகியவற்றைப் பற்றித் தன்னுடைய பகுப்பாய்வில் நகைச்சுவையையும் கிண்டலையும் அவர் சேர்க்க முடிந்ததென்றால் அவருடைய இலக்கியத் திறமை அவருடைய கட்டுரைகளிலும் வாதப் போரிலும் எவ்வளவு சிறப்பாகப் பிரகாசித்திருக்கும்!
மார்க்ஸ் வன்மையான, இயக்காற்றலுடைய, அதிகமான கருத்துக்களைத் தாங்கி வருகின்ற வாக்கியத்தை எழுதுகின்ற கலையில் பரிபூரணமான திறமை பெற்றிருந்தார்.அவர் சிலேடையை மிகவும் விரும்புவார். அவர் மரணப்படுக்கையில் இருந்த பொழுதும் சிலேடை இல்லாமல் என்னால் பேச முடியவில்லை என்று தன் புதல்வியருள் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.
ஷேக்ஸ்பியர்
எழுத்துத் துறையில் லேஸ்ஸிங், கேதே, ஷேக்ஸ்பியர், தாந்தே, செர்வாண்டிஸ், ஹேய்னெ ஆகியோரை மார்க்ஸ் தன்னுடைய ஆசான்களாகக் கொண்டிருந்தார். அவர்கள் நூல்களை மார்க்ஸ் திரும்பத் திரும்பப் படிப்பார். ஆனால் அவர் மாணவர் மட்டுமல்ல, அந்த மாபெரும் ஆசான்களை அவர் சில அம்சங்களில் விஞ்சிவிட்டார்.
மார்க்ஸ் வேறு எந்த மாபெரும் எழுத்தாளரையும் காட்டிலும் “உணர்ச்சிகளைத் தத்து வாசிரியர்களாக” மாற்றுவது எப்படி, ஒரு இலக்கியச் சொற்றொடரில் ஆழமான சிந்தனையை ஏற்றிச் சொல்வது எப்படி என்பதை நன்றாக அறிந்திருந்தார். அந்த வாக்கியத்தின் அமைப்பிலேயே இயக்கவியலின் அழுத்தத்தை வேறு எந்த எழுத்தாளரையும் காட்டிலும் அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்.
முதலில் “ஒரு பக்கத்தில்” என்றும் பிறகு “மறு பக்கத்தில்” என்றும் ஆராய்வதும் முடிவில் “கூட்டு ஆய்வுரை” என்பதும் அவருடைய ஆராய்ச்சி முறையல்ல. ஒரே வாக்கியத்தில், ஒரே பிம்பத்தில் வெவ்வேறு அம்சங்களின் “மோதலையும்” அவற்றின் “கூட்டு ஆய்வுரையையும்” அவர் கொடுப்பதற்கு முயற்சிக்கிறார். எதிர்முனைகள் என்ற முறையில் பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் துணிகரமாக ஒன்றுசேர்த்து அவை ஒன்றோடொன்று மோதும்படி, உடனடியாக அவற்றின் எதிரிடையாக மாறும்படி அவர் நிர்ப்பந்திக்கிறார்.
இத்தகைய கருத்துக்களின் இயக்கவியல் ரீதியான பல்டியில், அவற்றைத் தலைகீழாகத் திருப்புவதில்தான் மார்க்சின் நடையின் தனியழகும் புதுமையும் இருக்கின்றன.
“மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், அது உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சி.”
“…விமர்சனம் என்பது அறிவின் உணர்ச்சியல்ல, அது உணர்ச்சியின் அறிவு. அது சிறு கத்தியல்ல, அது ஒரு ஆயுதம்.”
“அவற்றை (கருத்துக்களை) வழிபாடு செய்வதை அவர்கள் ஒரு மரபாகச் செய்திருக்கிறார்களே தவிர அவற்றை வளர்ப்பதில்லை.”
“அநியாயமான முறைகள் அவசியமாக இருக்கின்ற குறிக்கோள் நியாயமான குறிக்கோள் அல்ல.”
“காலணிகளைத் தைத்த ஜாகப் பொமெ மாபெரும் தத்துவஞானியாவார். ஆனால் பல பிரபலமான தத்துவஞானிகள் பாராட்டுக்குரிய காலணி தைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.”
“கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கிறது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.”
மேலே தரப்பட்டிருக்கும் வாக்கியங்களை எழுதிய பொழுது சமூக நிகழ்வுகளின் சாராம்சமே – அவற்றின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும், வளர்ச்சியிலும் மறுப்பிலும் – மார்க்சின் கையைச் செலுத்தியது வாழ்க்கை இயக்கவியல் கருத்தமைப்புகளின் இயக்கவியலில் மிகப் பூரணமான, மிகச் சுருக்கமான வெளியீட்டை அடைந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.
இங்கே ஒவ்வொரு சொற்றொடரும் சிந்தனை விசைச்சுருளாக இருக்கிறது. பிம்பத்துக்கும் கருத்துக்கும் இடையே மோதலில் அதிகச் “செறிவான” உள்ளடக்கத்தைக் கொண்ட ஒவ்வொரு சொற்றொடரும் மிக விரிவாக அமைந்திருப்பதால் அது ஒரு மூதுரையைப் போல இருக்கிறது. மார்க்ஸ் எழுதிய இத்தகைய வாக்கியங்களைக் கொண்டு ஒரு புத்தகமே தயாரிக்க முடியும்.
இதே மூதுரையின் சுருக்கம், ஆழம், ஏளனத்தைத் தொடுகின்ற கிண்டல் ஆகியவற்றுடன் மார்க்ஸ் மனிதர்களையும் வர்ணித்தார். சில வார்த்தைகளைக் கொண்டு ஒரு ஆழமான உளவியல் மற்றும் சமூக ஓவியத்தைத் தீட்டக் கூடிய திறமை மார்க்சுக்கு இருந்தது. பல பிரபலமான தொழில்முறை எழுத்தாளர்கள் கூட இத்திறமையைப் பற்றிப் பொறாமைப்படுவார்கள்.
மார்க்சின் இலக்கிய நடை, அந்த நடையின் நயங்கள் இன்னும் ஆராயப்படாமலிருப்பது துரதிர்ஷ்டமே. அதை நுணுக்கமாக ஆராய்வது அதன் சாராம்சம் இன்னும் அதிகமாக வெளிப்படுவதற்கு, மனிதகுலத்தின் மாபெரும் மேதைகளில் ஒருவருடைய படைப்பு ரீதியான சோதனைச் சாலையை ஊடுருவுவதற்கு உதவி புரியும்.
மூலதனம் நூல் பொருளில் முழுமையாகவும் வடிவத்தில் குறை சொல்லப்பட முடியாததாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மார்க்ஸ் நெடுங்காலம் அதிகமான முயற்சியுடன் பாடுபட்டார். எனினும் புத்தகத்தை எழுதி முடித்த பிறகு அவருக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மூலதனத்தின் முதல் தொகுதி வெளியிடப்பட்ட பிறகும் கூட அவர் அதைத் தொடர்ந்து திருத்திக் கொண்டிருந்தார்.
பயிற்சி மிக்க, கவனமிக்க வாசகர்களின் கண்களுக்குக் கூடத் தெரியாத தவறுகள் அவருக்கு மட்டுமே தெரிந்தன. ஐயம், அதிருப்தி என்ற “பிசாசு” அவரைக் கடைசி நாட்கள் வரை தொடர்ந்தபடியால் அவர் பூர்த்தியடைந்த இரண்டாவது தொகுதியை வெளியிடவில்லை; மூன்றாவது மற்றும் நான்காவது தொகுதிகளின் வேலையை முடிக்கவில்லை.
மூலதனம் எழுதப்பட்ட நிலைமைகளை நாம் நினைத்துப் பார்த்தால் அது உண்மையிலேயே ஒரு மனித மற்றும் விஞ்ஞானச் சாதனையாகும்.
1848-ம் வருடப் புரட்சி ஒடுக்கப்பட்ட பிறகு மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் குடியேறியது. அவர்கள் வாழ்க்கைக்கு வழியில்லை. 1852-இல் மார்க்சின் பெண் குழந்தை இறந்த பொழுது அதை அடக்கம் செய்வதற்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை என்பதிலிருந்து அவர்களுடைய வறுமையைப் புரிந்து கொள்ளலாம்.
விஞ்ஞான ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்து விட்டுக் குறைவான ஊதியமாவது கிடைப்பதற்குரிய வழியைத் தேடும்படி மார்க்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார். New-York Daily Tribune (“நியூயார்க் தினசரி”) என்ற அமெரிக்கப் பத்திரிகைக்கு வாரந்தோறும் இரண்டு கட்டுரைகள் எழுதினார். இப்படிப் பல வருடங்கள் அவர் ஓய்வில்லாமல் உழைத்தார். ஆனால் இந்தக் குறைவான ஊதியம் கூட மார்க்சுக்கு முறையாகக் கிடைக்கவில்லை.
ஏனென்றால் பத்திரிகையின் ஆசிரியர் மார்க்ஸ் எழுதிய எல்லாக் கட்டுரைகளையும் வெளியிடமாட்டார்; சன்மானமாகக் கொடுத்த குறைந்த தொகையையும் அவர் வெட்கமின்றி அடிக்கடி குறைத்துவிடுவார். பத்திரிகை வேலையில் எனக்குக் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு அனுபவமற்ற எந்த எழுத்தாளரையும் காட்டிலும் குறைவாகவே நான் சாப்பிட்டேன் என்று மார்க்ஸ் எழுதியது முற்றிலும் நியாயமே.
அவர் தன்னுடைய ஆராய்ச்சியை எப்பொழுதாவதுதான் செய்ய முடிந்தது; தொடர்ச்சியாகப் பல மாதங்களை ஆராய்ச்சிக்குச் செலவிட முடிந்தால்….. என்று மார்க்ஸ் கனவு காண்பதுண்டு, அது அவர் கைக்கு எட்டாத ஆனந்தத்தின் சிகரம்.
வருடங்கள் ஓடின; ஆனால் வறுமை மார்க்சையும் அவர் குடும்பத்தையும் தொடர்ந்து துன்புறுத்தியது. 1861-இல் மார்க்ஸ் பத்திரிகை நிருபர் வேலையை, தன்னுடைய முக்கிய வருமானத்தை இழந்தார். சில சமயங்களில் அவர் வாரக்கணக்கில் வீட்டை விட்டு வெளியே போவதில்லை, ஏனென்றால் அவருடைய உடைகள் அடகுக் கடையில் இருந்தன.
மூலதனம் நூலுக்காகத் தயாரித்துக் கொண்டிருந்த புள்ளி விவரக் கணக்குகளை ஒதுக்கி வைத்துவிட்டுத் தன்னுடைய கடன் பட்டியலை எழுதுவார்: ரொட்டிக் கடைக்காரருக்கு, இறைச்சிக் கடைக்காரருக்கு, வீட்டின் உடைமையாளருக்கு…. கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து பணம் கேட்கும் சந்தர்ப்பங்களில் முதலாவது அகிலத்தின் “பயங்கரமான” தலைவர் மறைந்து கொள்வதும் உண்டு. மார்க்ஸ் அந்த நபர்களை அரக்கர்கள் என்று கருதினார்.
சில சமயங்களில் நிலைமை நம்பிக்கையற்றதாக இருக்கும். அதிகமான மன வலிமையையும் துரதிர்ஷ்டமான சமயங்களில் கூட நகைச்சுவையைக் கண்டு ரசிக்கின்ற சிறப்பான திறமையையும் கொண்டிருந்த மார்க்ஸ் தன்னுடைய வீட்டில் “மறு தரப்பிலிருந்து” (அதாவது அவருடைய மனைவியிடமிருந்து) வருகின்ற தாக்குதல்களைச் சமப்படுத்துவதற்காக மெளனமாக இருப்பார்”.(3)
சில சமயங்களில் அவரும் பொறுமையிழந்து விடுவார். தன்னுடைய குடும்பத்தின் வறுமை, கடன்கள், மனைவியின் நோய், தன்னுடைய உடல்நலமின்மை ஆகிய துன்பங்களை வர்ணிக்கின்ற பொழுது “சுருக்கமாகச் சொல்வதென்றல் பிசாசு ஆட்டுகிறது”(4) என்று மார்க்ஸ் கசப்பாக எழுதியதுண்டு.
“மெதுவாக எரிகின்ற நெருப்பில் வாட்டப்படுதல் – அதில் தலையும் இதயமும் காயமடைகின்றன, மேலும் பொன்னான நேரமும் வீணாகிறது – முடிவடைய வேண்டும்!’’(5) ஆனால் அது முடிவடையவில்லை.
மார்க்ஸ் மென்மையும் பாசமும் நிறைந்த தந்தையாக இருந்தார். வறுமையின் கொடுமை தன் புதல்வியர்களைப் பாதிப்பதைப் பற்றி அவர் மிகவும் வேதனைப்பட்டார். சில சமயங்களில் அணிவதற்கு உடைகள் இல்லாமல் அவர்கள் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாமற் போனதுமுண்டு.
1862-இல் மார்க்ஸ் எங்கெல்சுக்குப் பின்வருமாறு எழுதினார்:
“தானும் குழந்தைகளும் செத்துவிட்டால் நல்லது என்று என் மனைவி தினமும் சொல்கிறாள், உண்மையில் நான் அவளைக் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் இந்த நிலைமையில் நாங்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய அவமதிப்புக்களும் கடுந்துன்பங்களும் பயங்கரங்களும் உண்மையிலேயே வர்ணிக்க முடியாதவை.”(6)
எனினும் லண்டனில் மார்க்ஸ் மற்றும் அவர் குடும்பத்தினருடைய வாழ்க்கை முற்றிலும் துன்பமயமாக இருந்தது என்று கூறிவிட முடியாது. மார்க்ஸ் தன்னுடைய துன்பங்களை வீரத்துடன் தாங்கிக் கொண்டது மட்டுமல்லாமல் மகிழ்ச்சியோடிருப்பதற்கு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை அகமும் முகமும் மலரப் பயன்படுத்தினார். அவர் இருள்படிந்த, கடுகடுப்பான, எரிந்து விழுகின்ற மனிதர் என்று முதலாளி வர்க்கப் பத்திரிகைகள் எழுதியதுண்டு; ஆனால் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மார்க்ஸ் வேறுவிதமானவராக இருந்தார்.
அவர் தன்னுடைய இளமைப் பருவத்தைப் போலவே முதுமையிலும் நகைச்சுவை நிறைந்த உரையாடலை விரும்பினார், ரசித்தார். உடலியல் மற்றும் ஆன்மிக நோய்களுக்கு அது மிகச் சிறந்த மருந்து என்று அவர் கருதினார்.
மார்க்ஸ் ஜெர்மனிக்குப் போயிருந்த பொழுது லஸ்ஸாலைச் சந்தித்த பிறகு அவருக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்:
“என் தலை முழுவதிலும் ஏராளமான கவலைகள், கல்லீரல் நோய் வேறு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் முக்கியமானது என்னவென்றால் நாம் இருவரும் சேர்ந்து நன்றாகச் சிரித்தோம். Simia non ridet (குரங்கு சிரிப்பதில்லை. – ப-ர்) ஆகவே நாம் பரிபூரண புத்தர்கள் என்பதை நிரூபித்து விட்டோம்.”(6)
மார்க்ஸ் அதிகமான வேதனையுடன் எங்கெல்சுக்கு எழுதிய கடிதங்கள் கூட நகைச்சுவையான செய்திகளுடன் தொடங்குகின்றன. மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் நடைபெற்ற மொத்தக் கடிதப் போக்குவரத்திலும் மேதாவிலாசமான நகைச்சுவை நிறைந்திருக்கிறது. இரு தரப்பிலும் பிரகாசமான மத்தாப்பு வேடிக்கைகளைப் பார்க்கலாம்.
மார்க்ஸ் “இருள்படிந்த” தன்மையைக் கொண்டவர் என்று அற்பவாதிகள் கூறியதற்குப் பதிலளித்து எங்கெல்ஸ் எடுவார்டு பெர்ன்ஷ் டைனுக்குப் பின்வருமாறு எழுதினார்.
“மூருக்கும் (மார்க்சின் செல்லப் பெயர்) எனக்கும் நடைபெற்ற கடிதப் போக்குவரத்தைப் படிக்கின்ற வாய்ப்பு இந்த முட்டாள்களுக்குக் கிடைக்குமானால் அவர்கள் எல்லா உணர்வையும் இழந்துவிடுவார்கள். எங்களுடைய துணிகரமான, குதூகலமான உரைநடைக்கு முன்னால் ஹேய்னெயின் கவிதை குழந்தை விளையாட்டாகவே இருக்கும். மூர் ஆவேசப்படுவதுண்டு, ஆனால் நம்பிக்கை இல்லாமலிருப்பது கிடையாது! பழைய கடிதங்களை மறுபடியும் படித்த பொழுது எனக்குத் தாங்க முடியாத சிரிப்பு ஏற்பட்டது.”(8)
புரட்சிகரமான நிகழ்ச்சிகளைப் பற்றி, தொழிலாளர்களின் வெற்றிகளைப் பற்றி, முதலாளித்துவ அமைப்பில் நெருக்கடிகளைப் பற்றி செய்திகள் வரும் பொழுது மார்க்ஸ் குடும்பத்தில் அதிகமான மகிழ்ச்சி ஏற்படும். உதாரணமாக, 1857-ம் வருடத்திய அமெரிக்க நெருக்கடி வெடித்த பொழுது-அதன் விளைவாக அவருடைய ஒரேயொரு வருமானத் தோற்றுவாய், பத்திரிகைக்கு எழுதுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது என்றபோதிலும்-மார்க்ஸ் அதை உற்சாகமாகக் கொண்டாடினார்.
அவருடைய பழைய சக்தி திரும்பியது; அவர் இரண்டு மடங்கு சக்தியுடன் உழைத்தார், அதாவது பகலில் தன்னுடைய அன்றாட உணவுக்காகவும் இரவில் அரசியல் பொருளாதார ஆராய்ச்சியை முடிப்பதற்கும் பாடுபட்டுழைத்தார்.
1861-இல் ஒரு புதிய நிதித்துறை நெருக்கடி வெடித்த பொழுது அவர் பின்வருமாறு கூறினார்:
“இந்த அருவருப்பான நிலைமைகளிலிருந்து நான் விடுதலையடைந்து கடும் வறுமையினால் என் குடும்பம் நசுக்கப்படாமலிருக்குமானால், Tribune பத்திரிகையில் நான் நெடுங்காலமாகப் பன்முறை முன்னறிவித்த டிசம்பர் நிதி முறையின் தோல்வியை எவ்வளவு உற்சாகமாகக் கொண்டாடுவேன்!”(9)
ஃபெர்னாண்டு லஸ்ஸால்
மார்க்ஸ் தன்னுடைய மேதாவிலாசமான அறிவைக் கொண்டு முதலாளி வர்க்கத்துக்கு அடிமைப்பட்ட அறிவுஜீவிகள் நடத்துகின்ற வசதியான வாழ்க்கை தன் குடும்பத்துக்குக் கிடைக்கும்படி சுலபமாகச் செய்திருக்க முடியும். ஆனால் பணம் சம்பாதிக்கின்ற வழியாக விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது அதைத் திரித்துக் கூறுவதைப் போலக் கேவலமானது என்று அவர் கருதினார். அதைக் காட்டிலும் மரணமடைவதற்கு அவர் தயாராக இருந்தார்.
விஞ்ஞானத்துடன் தொடர்பில்லாத ஒரு நடவடிக்கையின் மூலம் வருமானம் பெறுவதற்கு அவர் விரும்பினார்; ஆனால் அந்தத் துறையில் அவருடைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஒரு ரயில்வே அலுவலகத்தில் வேலைக்கு முயற்சி செய்த பொழுது, அவருடைய கையெழுத்து சரியில்லை என்று வேலை மறுக்கப்பட்டது.
எவ்வளவு நெருக்கடிகளும் சோதனைகளும் ஏற்பட்டாலும் மார்க்ஸ் தன்னுடைய இலட்சியத்தை நோக்கி உறுதியாக முன்னேறினார். மூலதனத்தை எழுதுவதற்கு இத்தனை வருடங்கள் அவசியமாக இருந்தன என்பது முக்கியமானதல்ல; இவ்வளவு நெருக்கடியான சந்தர்ப்பங்களுக்கு இடையில் அந்த நூலை எழுதி முடித்ததுதான் சிறப்புக்குரியதாகும்.
மேதாவிலாசம் என்பது எல்லையற்ற பொறுமை என்பார்கள். மார்க்சைப் பற்றி இதைக் கூறுவது குறைவான மதிப்பீடுதான். மார்க்ஸ் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடர்வதற்காக இரும்பு போன்ற, மனிதனைக் காட்டிலும் மேலான உறுதியைப் பல வருடங்கள் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது, அவர் கடைசி வரை கடுமையாகப் பாடுபட்டார், அவர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டபடியால் எப்பொழுதும் மரணத்தின் விளிம்பிலேதான் இருந்து கொண்டிருந்தார்.
ஆனால் எந்தச் சோதனையினாலும் இந்த மனிதரை வளைக்க முடியவில்லை.
அவர் தன்னுடைய இளமையில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தார், எவ்வளவு கடுமையான தண்டனை கிடைத்தாலும் நெருப்பைக் கொண்டு வருவேன் என்று உறுதி பூண்ட புரோமித்தியசைப் போல மக்களுக்கு அறிவு நெருப்பைத் தருவேன் என்னும் தியாகியின் பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். அந்தப் பாதையில் தலையை உயர்த்திக் கொண்டு அவர் கம்பீரமாக நடந்தார். புரோமித்தியசைப் போலவே மார்க்சும் “பூமியுலகக் கடவுள்களின்” ஊழியர்கள் தந்த சமரசங்கள் அனைத்தையும் நிராகரித்தார்.
மார்க்ஸ் ஜெர்மன் ஜனநாயகவாதி ஸிக்பிரிட் மேயெருக்கு எழுதிய கடிதத்தில் மூலதனத்தின் முதல் தொகுதியை எழுதும் பொழுது தனக்கேற்பட்ட துன்பங்களைச் சிறப்பான வன்மையுடனும் நேர்மையுடனும் தெரிவிக்கிறார். மேயெர் மார்க்சுக்கு அதிகமான நட்புணர்ச்சியுடன் கடிதங்கள் எழுதுவார். அந்த “வேதனை மிக்க காலகட்டத்தில்” அவருடைய கடிதங்கள் மார்க்சுக்கு அதிகமான மகிழ்ச்சியும் ஆறுதலும் அளித்தன. அதிகார பூர்வமான உலகத்துடன் கசப்புமிக்கப் போராட்டத்தை நடத்துகின்ற பொழுது அவர் அதைச் சிறிதளவு கூடக் குறைவாக மதிப்பிடவில்லை என்று மார்க்ஸ் எழுதினார்.
“சரி, உங்கள் கடிதத்துக்கு நான் ஏன் பதில் எழுதவில்லை? ஏனென்றால் நான் மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்ததனால் தான். எனவே நான் வேலை செய்யக் கூடிய ஒவ்வொரு கணப் பொழுதையும் என் புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு நான் உபயோகிக்க வேண்டியிருந்தது. அதற்காக என்னுடைய ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியை, குடும்பத்தை நான் தியாகம் செய்திருக்கிறேன். இந்த விளக்கத்திற்கு மேல் அதிகமாக நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நம்புகிறேன்.
‘காரியவாதிகள்’ என்று சொல்லப்படுகிறார்களே அவர்களுடைய அறிவைப் பற்றி நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஒரு நபர் மாடாக இருக்க முடிவு செய்தால் தன்னுடைய உடம்பைக் கவனித்துக் கொண்டு மனிதகுலத்தின் துன்பத்தைப் பார்க்காமல் முதுகைத் திருப்பிக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய புத்தகத்தை – குறைந்தபட்சம் கையெழுத்துப் பிரதியாகவாவது – எழுதி முடிக்காமல் நான் இறந்துவிட்டால் உண்மையிலேயே காரியவாதி அல்ல என்று தான் கருதியாக வேண்டும்.”(10)
இது மார்க்சின் இதயத்திலிருந்து பிறந்த ஒப்புதல். மார்க்ஸ் தன் வாழ்க்கையை ஆரம்பித்த பொழுது எழுதிய கட்டுரையை, எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பள்ளியிறுதிக் கட்டத்தில் அவர் எழுதிய கட்டுரையை நினைக்கத் தோன்றுகிறது. மனிதகுலத்துக்காகப் பாடுபட வேண்டும், பொது நலத்துக்காகத் தனிப்பட்ட சுகத்தைத் தியாகம் செய்ய வேண்டும் என்று மார்க்ஸ் எழுதியது நம் நினைவுக்கு வருகிறது.
இளம் பருவத்தில் இக்கருத்து அலங்காரமான சொற்றொடராக அவருக்குத் தோன்றவில்லை. அவருடைய வாழ்க்கை முழுவதிலும் அது வழிகாட்டியது. அவருடைய எல்லா முயற்சிகளுக்கும் ஆதாரசுருதியாக இருந்தது. அந்தப் பள்ளியிறுதிக் கட்டுரையை எழுதி முப்பத்திரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் மூலதனத்தை வெளியிட்ட பொழுது தன்னுடைய இளமைப் பருவத்தில் எழுதிய வார்த்தைகளை அவர் பெருமையுடனும் திருப்தியுடனும் நினைவுகூர்ந்திருப்பார்:
“மனிதகுலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது, ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்.”
குறிப்புகள்;
(1) Reminiscences of Marx and Engels, p. 90.
(2) Marx, Engels, Werke, Bd. 30, S. 622.
(3) Marx, Engles, Werke, Bd, 30, S. 310-311.
(4) Ibid., S. 310.
(5) Ibid., S. 314-15.
(6) Ibid., S. 248.
(7) Ibid., S. 604.
(8) Marx, Engles, Werke, Bd, 36, Berlin, 1967, S. 36.
(9) Marx, Engles, Werke, Bd, 30, S. 200.
(10) Marx, Engels, Selected Correspondence, p. 173.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார் நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ் தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ. வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே) 1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்) பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
தமிழகத்தில் இயற்கை வளமான மழைநீரை அறுவடை செய்து, சிறந்த தொழில்நுட்பங்களின் அடிப்படையில் ஏரிகள் அமைத்துப் பாசனத்திற்கு வித்திட்ட வரலாற்றினை சங்ககாலம் தொட்டு இன்று வரை பதிவு செய்வதே இந்நூலின் முக்கிய நோக்கம். சங்க காலத்திற்கு முன்னரே தோன்றிய ஏரிகள் பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் சமுதாயத்திற்குப் பயன்பட்டு வருவதுடன் அவை எவ்விதச் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்பது வியக்கத்தக்கது. ஏரிப்பாசனப் பழமையில் புதுமை உண்டென்பதனை எடுத்துக்காட்டுகளுடன் வலியுறுத்தி இன்றைய பொறியாளர்கள் மற்றும் திட்டக் குழுக்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்ப்பதும் அவசியமாகிறது.
தமிழகத்தில் சுமார் 38200 ஏரிகள் உள்ளதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மக்கள் பெருக்கத்தாலும் மற்றும் சமுதாய மாற்றங்களாலும் சுமார் 4000 ஏரிகள் செயல் இழந்துவிட்டன எனத் தெரிய வருகிறது. இவ்வாறு குறைந்து வரும் ஏரிப்பாசன வேளாண்மையை அதிகரிக்கவும், குறையாமல் தடுப்பதற்கும், திட்டமிடல் அவசியமாகிறது. அப்படி திட்டமிடும்பொழுது ஏரிகள் எந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன என்பதனை ஆய்வு செய்தும், சமுதாய மாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் நீர் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், புதிய பாசன முறைகளை இணைத்தும், திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆகவே, சங்க காலத்திலிருந்து இன்று வரை செயல்பாட்டிலிருக்கும் ஏரிகளின் பாரம்பரியத்தை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து, அது எவ்வாறு தாழ்வு நிலையை அடைந்தது என்ற வரலாற்றை நன்குணர்ந்தபின், அவற்றை மீண்டும் உயர்நிலைக்கு கொண்டுவருவதற்குரிய வழிமுறைகளை வகுத்தல் என்பதனையும் இந்நூல் விளக்குகிறது.
– (நூலின் முன்னுரையிலிருந்து)
மழைக்காலங்களில், மழையின் அளவையும், இடைவெளியையும் பொறுத்து ஆற்றின் வெள்ளப்பெருக்கு அமையும். மழை அதிகமாகி வெள்ளம் பெருக்கெடுக்கும்போது வெள்ளநீர் கரையினைக் கடந்து ஆற்றுப்படுகையில் தங்கும். மழை மாதங்களில், ஆற்று வெள்ளம் கரையினை அடங்கியும், கரையினை மாறிப் பாய்வதும், பரவலாக நிகழும். அன்றைய இயற்கை நிலை வெள்ளம் வடிந்த பின்னரும் கரையோரங்களில் நீர் தேங்கி நிற்கும். இவை பூமியில் உறிஞ்சப்பட்டும், சூரிய வெப்பத்தால் ஆவியாகி மறைவதற்கும் சில நாட்கள் பிடிக்கும். மேலும் மழை தொடர்வதால் ஈரப்பதம் தொடரும். வடியும் இந்த ஆற்று வெள்ளநீரினைக் கொண்டு ஆற்றின் கரையோரங்களில் விவசாயம் மேற்கொண்டனர். இதனை (வெள்ள விவசாயம்) Flood Irrigation / Iriundation Irrigatior என்று ஆங்கிலத்தில் கூறுவர். இது பாசன வளர்ச்சியின் அடுத்த நிலை எனக் கொள்ளலாம்.
அடுத்து, ஆற்றங்கரையினை ஒட்டி அமைந்துள்ள பள்ளங்களில், குட்டைகளில், மழைநீர் தேங்கி நிற்கின்றன. அவற்றை மழைநின்ற பின்னர், பனை ஓலைகள் கொண்ட இறைவட்டியால் இறைத்து மேல்பரப்பில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்களுக்கு நீர் பாய்ச்சுகிறான். இறவைப் பாசனம் / Lift Irrigation பிறக்கிறது. இயற்கைக் குட்டைகளிலிருந்து ஏற்றம் மூலம் நீர் இறைக்கும் போது, குட்டையில் நீர் குறைகிறது. அப்போது பக்கங்களிலிருந்து குட்டைக்குள் ஊற்று நீர் வருவதைப் பார்க்கிறான். குட்டைகளை ஆழப்படுத்துகிறான் கிணறுகள் பிறக்கின்றன. ஆழம் அதிகமானதால் ஏற்றம் போட முடியாது, மாடுகள் பூட்டி “கமலைப் பாசனம்” பிறக்கிறது. மின் சக்தி வந்தபின்னர் இவை “ஆழ்குழாய் கிணறுகளாக” மாறிவிட்டன. வெள்ளநீர் பாசனமும், இறவைப் பாசனமும், ஏககாலத்தில் உருவானதாகக் கருதப்படுகிறது.
பூமியில் பெய்யும் மழைநீர் சிற்றோடைகளாக ஓடி, ஆற்றில் கலந்து, கடலுக்குச் செல்வது மற்றுமொரு இயற்கை நிலை. குட்டைகளை, குளங்களாக மாற்றிய அனுபவம், சிற்றோடைகளில் ஓடி வரும் மழை நீரினைத் தடுத்து பூமி வாட்டத்தின் துணை கொண்டு நிலவாட்டம் தாழ்வான நிலப்பகுதிகளில் செயற்கைக் குட்டைகளை, நீர்த்தேக்கங்களை உருவாக்கினான். குளங்கள் தோன்றின. இவ்வாறு, மழைநீரை அறுவடை செய்து, செயற்கையாக உருவாக்கிய குளங்கள் / ஏரிகளில் சேகரித்துப் பாசனம் மேற்கொண்டது அடுத்த நிலை, “Tankfed Irrigation”.
மழை அதிகமுள்ள பகுதிகளில் அதிக நீர் கொண்டு செல்லும் சிற்றாறுகள், பல உண்டு, இவை பேராறுகளில் கலந்து, பின்னர் கடலை அடைகின்றன. இச்சிற்றாறுகள், பேராறுகளின் உபநதி என அழைக்கப்பட்டன. இச்சிற்றாறுகளின் குறுக்கே, ஏரிகள் அமைப்பது கடினம். அவை நீரின் வேகத்தால் உடையும் அபாயம் அதிகம். எனவே இச்சிற்றாறுகளைத் தடுத்து, அதன் தண்ணீரைச் சிறு சிறு கால்வாய்கள் தோண்டி அவ்வாறுகளின் அருகாமையில் உள்ள பள்ளங்களில் தாழ்வான நிலப் பகுதிகளில், குளங்களை உருவாக்கிக் சேமித்து வைத்தனர். நில வோட்டத்திற்கும் நீர்வரத்துக்கும் ஏற்ப பல ஏரிகள், ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கப்பட்ட பல இடங்களைப் பார்க்கிறோம். இவ்வாறு சிற்றாறுகளின் நீரினைத் தடுத்து, தொடர் குளங்கள் ஏற்படுத்தியமை, பாசன வளர்ச்சியின் அடுத்தபடி, இக்குளங்களைச் சங்கிலித் தொடர் குளங்கள் என்றழைத்தனர். ஆங்கிலத்தில் Small Scale Irrigation என்றழைத்தனர், சிற்றாற்று நீர் (போக்கினைத் தடுத்து, கால் மூலம் எடுத்துச் செல்ல “கொறம்பு” என்ற தொழில் நுட்பத்தைக் கைக்கொண்டனர்.
கொறம்பு:
சவுக்கு அல்லது மூங்கில் கம்புகளை ஆற்றின் குறுக்கும் நெடுக்குமாக அடித்து, நாணல் அல்லது கோரைப்புற்கள் இல்லாவிடில் பனை ஓலை இவைகளைக் கொண்டு இடைவெளியினை அடைத்து தடுப்பணை செய்வார்கள். இப்போது ஏற்படுத்திய தடுப்பிற்குப் பின் மண்ணை அணைத்து ஓலைகளுக்கு பலம் கொடுத்தனர். இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட தடுப்பு “கொறம்பு” என அழைக்கப்பட்டது. எதிர்பாராமல் நீர்வரத்து அதிகமானால் நீரின் விசையால் தடுப்பணை அடித்துச் செல்லப்படும், சிற்றோடைக்கோ, அதனிலிருந்து வெட்டப்பட்ட கால்வாய்க்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. முதலில் உருவான தடுப்பணை இதுதான். பின்னர் இவை கற்களால் கட்டப்பட்டன. அவை கற்சிறை என அழைக்கப்பட்டன. நீரின் போக்கைச் சிறைப்படுத்தி வேறு வழியில் செலுத்துவதால் இவை “கற்சிறை” என அழைக்கப்பட்டன. பின்னர் இவை அணைக்கட்டு என அழைக்கப்பட்டன. எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்புமின்றி நீரின் திசையினை மாற்றி வேறொரு திசைக்குத் திருப்ப, பண்டையத் தமிழன் கையாண்ட தொழில்நுட்பம் “கொறம்பு அமைத்தல்”.
சிற்றாறுகளின், பாசன முயற்சியின் அடுத்த கட்டமாகக் கருதப்படுவது, பெரிய ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டி, கால்வாய்கள் வெட்டி அக்கால்வாய்களின் மூலம் நேரடியாகவும் குளங்கள் மூலமாகவும் பாசனம் மேற்கொள்ளப்பட்டது. பாலாறு, தென்பெண்ணை , காவிரி, வைகை, தாமிரபரணி, கோதையாறு போன்ற ஆற்றுப்படுகைகளில் மலர்ந்துள்ள பாசன ஆதாரங்கள் இதற்குச் சான்றாக அமையும் இவ்வாறுகளில் மழைகாலங்களில் பெருவாரியான வெள்ளநீர் வீணாக கடலுக்குச் செல்வதைத் தடுக்கும் முகத்தான் இவ்வாறுகளின் தலைப்பகுதிகளில் பெரிய நீர்தேக்கங்கள் அமைத்து ஒருபோகப் பாசனத்தை இருபோகமாக மாற்றியும், பாசனப் பரப்பை விரிவுபடுத்தியும், மற்றும் இந்த நீர் நிலைகளிலிருந்து மின் உற்பத்தி செய்யவும். சுதந்திர இந்தியாவில், பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பலநீர்த் தேக்கங்கள் உருவாயின. இதனைப் பெரிய பாசனத்திட்டங்கள் (Large Scale Irrigation System through Dams and anaicuts) என்றழைத்தனர்.
– (நூலிலிருந்து பக்.11-13)
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில், அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் சார்பாக டிசம்பர்-6 அம்பேத்கரின் 62 வது நினைவு நாளை முன்னிட்டு, மாணவர்களின் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்;
சாதி ஆணவ கொலைகளை தடுப்போம்!
சாதி – மத வெறியை பரப்பும் சங்கங்கள், கட்சிகளை புறக்கணிப்போம்!
ஏழை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க வரும் உயர்கல்வி ஆணையத்தை முறியடிப்போம்!
சாதி, மத குப்பைகளை தூக்கி எறிந்து மாணவர்களாக ஒன்றுபடுவோம்!
என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர் அம்பேத்கரின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மக்களை பிளவுபடுத்தும் சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராடிய அம்பேத்கர் வாழ்க! வாழ்க!! என்றும், அம்பேத்கார் நினைவை நெஞ்சிலேந்துவோம் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
(Coordination Committee for Common Education – Chennai)
பத்திரிக்கை செய்தி!
வெளிநாட்டு பட்டதாரிகளை இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கும் வகையிலான UGC-யின் புதிய விதிமுறையை திரும்பப் பெறு !
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் UGC புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களில் வந்த பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் இந்தியாவில் நேரடியாக உதவி பேராசிரியாராக நியமிப்பதற்கான தகுதி பெற்றவர்கள் என்கிறது அந்த விதி.
குறிப்பாக, இவ்விதிமுறை கலை, அறிவியல், வணிகவியல், சமூக அறிவியல், கல்வி, மொழி மற்றும் நூலக அறிவியல் பாட பிரிவுகளுக்கு பொருந்தும் எனக் கூறியுள்ளனர். இதன் மூல இந்தியாவிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழங்களில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை என்ற மிகப்பெரிய அபாயம் உருவாகியுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிகிறோம்.
உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசை படுத்துகின்ற நிறுவனங்களான Quacquarelli Symonds(QS ranking), Times Higher Education rankings (THE racking) and the Academic Ranking of World Universities (ARWU) of the Shanghai Jiao Tong University தரவரிசைபட்டியலில் முதல் 500 இடங்களை பெற்ற பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கே மேற்கண்ட விதிமுறை பொருந்தும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
மேற்சொன்ன தரவரிசை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பல்கலைக்கழக தரவரிசை பட்டியலின் முதல் 500 இடத்தில் வெறும் 10 இந்திய உயர்கல்வி நிறுவனங்களே உள்ளன. மீதமுள்ள 490 பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்.
UGC-ன் இப்புதிய விதிமுறையின் மூலம் மத்திய/மாநில பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கானவர்களை புறம் தள்ளிவிட்டு வெளிநாட்டினரை பேராசிரியர் பணிகளில் நியமிப்பதாகவே அமையும். இதன் முலம் இந்திய பல்கலைக்கழங்களில் படிக்ககூடிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் கிராமபுற மாணவர்களுக்கு பேராசிரியர் பணிகளுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படும்.
உயர்கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் வெளிநாட்டு பேராசிரியர்களை இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளில் பணியமர்த்துவற்கான திட்டமாகவே மோடி அரசு இதை செய்துள்ளது.
இந்த பாதகமான விதிமுறையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பொதுகல்விக்கான ஒருங்கிணைப்பு குழு கோறுகிறது.
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு – சென்னை 72993 61319, 94443 80211.
அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாஃப்ட். இந்நிறுவனத்தின் தலைமையை இதன் ஊழியர்கள் தற்போது கடுமையாக எதிர்த்து வருகின்றனர். காரணம் என்ன? அது ஊதிய உயர்வோ இல்லை பணிச்சுமையோ இதர பணி சார்ந்த பிரச்சினைகளோ அல்ல. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை அமெரிக்க இராணுவத்திற்கு அளிக்கும் முழு ஆதரவே மேற்கண்ட எதிர்ப்பிற்கு காரணம்.
“நாங்கள் உருவாக்கியிருக்கும் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் அமெரிக்க இராணுவம் இனி பயன்படுத்திக் கொள்ள முடியும்.” என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரான பிராட் ஸ்மித் கூறியிருக்கிறார். இந்த ஒப்புதலை அவர் கலிபோர்னியாவில் இருக்கும் சிமி பள்ளத்தாக்கில் ரொனால்டு ரீகன் குடியரசு தலைவர் நூலகத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு கூட்டமொன்றில் கூறியிருக்கிறார்
பிராட் ஸ்மித்.
கூடுதலாக அவர் தனது முடிவை நியாயப்படுத்தியும் விளக்கியிருக்கிறார். “அமெரிக்க இராணுவம், கௌவரம் மற்றும் அறத்தோடு இயங்குவதை மரபாகக் கொண்டிருக்கிறது. இது எப்படி என்பதை சிலிக்கான் பள்ளத்தாக்கு அறிய வேண்டும்”. “செயற்கை நுண்ணறிவில் உலகளாவிய தொழில் நுட்ப முன்னேற்றங்கள் நடைபெறும் போது அவை அமெரிக்க இராணுவத்திற்கு கிடைக்காமல் போய்விடக் கூடாது” என்றும் அவர் வாதிடுகிறார். “இது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. மாறாக மேற்கு கடற்கரையில் வாழ வாய்ப்பு கிடைத்திருக்கும் சில இளைஞர்களின் பிரச்சனை அல்ல” என்கிறார் பிராட் ஸ்மித். இதன் பொருள் என்ன?
இராணுவத்தோடு தொழில் நுட்பக் கூட்டணி வைப்பதும் தமது கண்டுபிடிப்புகளை அளிப்பதும் தேசபக்தியோடு இணைந்த ஒன்று, இதை சில ஊழியர்கள் எதிர்ப்பது தவறு என்று கூறுகிறார் மைக்ரோசாஃப்ட் தலைவர்.
இருப்பினும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் இதைத் தொடர்ந்து எதிர்த்து வருவது குறித்து அவர் முற்றிலும் மௌனம் சாதிக்க முடியவில்லை. ஊழியர்கள் சிலர் கோபம் அடைந்திருப்பதை அவர் மறுக்கவில்லை. “புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் அறிவியல் பிரச்சினைகள் குறித்து நாங்கள் அவர்களிடம் (ஊழியர்களிடம்) பேசுகிறோம்” என்கிறார். அதேசமயம் ஊழியர்களின் எதிர்ப்பால் இராணுவத்திற்கு ஆதரவு அளிக்கும் இந்த கொள்கைகளை மாற்றிக் கொள்வதாகவும் அவர் கூறவில்லை.
ஆனால், மைக்ரோசாஃப்டின் ஊழியர்களைப் பொருத்தவரை அவர்கள் அமெரிக்க இராணுவத்திற்கு அளிக்கும் ஆதரவு குறித்து ஏதோ சிற்சில கருத்து வேறுபாடுகளை மேலோட்டமாக கூறவில்லை. உண்மையில் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். அமெரிக்க இராணுவத்திற்கு இத்தகைய தொழில்நுட்ப ஆதரவு அளிக்கும் The Joint Enterprise Defense Infrastructure – JEDI எனும் திட்டத்தை அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
இந்த ஜெடி திட்டம் கணினி மூலம் நடக்கும் அனைத்து பரிசோதனைகள், தொழில்நுட்ப மேம்பாடு அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை அமெரிக்க இராணுவத்திற்கு வழங்குகிறது.
மைக்ரோசாஃப்டின் ஊழியர்கள் கடந்த அக்டோபரில் அடையாளமில்லாமல் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவில் தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார்கள். “ “நாம் உருவாக்கிய தொழில்நுட்பம் எதுவும் மனித சமூகத்தை துன்புறுத்துவதாகவோ, பாதிப்பை உருவாக்குவதாகவோ இருக்கக் கூடாது என எதிர்பார்க்கிறோம்” என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தானே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு குறித்த கொள்கை முடிவுகளுக்கு துரோகம் விளைக்கிறது என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.
அக்கொள்கையின்படி செயற்கை நுண்ணறிவு என்பது வெளிப்படையாக, தீங்கற்றதாக, நம்பகமாக, பாதுகாப்பாக, தனிப்பட்டமுறையிலும், பொறுப்புணர்வோடும் இருக்க வேண்டும்; குறுகிய இலாப நோக்கத்திற்காக இருக்கக்கூடாது” என்பதையும் நினைவுபடுத்துகிறார்கள்.
இதேபோன்று மற்றொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் இந்த ஜெடி திட்டத்திலிருந்து பின்வாங்கியிருக்கிறது. காரணம் அதன் ஊழியர்கள் இதற்கு முன்னர் இதே போன்றதொரு திட்டமான DoD – Project Maven குறித்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
மாவென் திட்டத்தின் நோக்கம் என்ன? அதில் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கி ஆளில்லா சிறு விமானங்கள் நடத்தும் தாக்குதலை மேம்படுத்துவதாகும். இந்த ஆளில்லா விமானங்கள் தான் தெரிவு செய்து தாக்கும் இலக்குகளை தானே முடிவு செய்யும் என்பதால் சில விமர்சகர்கள் இத்திட்டம் குறித்து எச்சரித்திருக்கிறார்கள்.
எது எப்படியோ மைக்ரோசாப்டின் தலைவர் இதுபோன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் அமெரிக்க இராணுவத்திற்கு ஆதரிப்பது ஆதரவு அளிப்பதை நியாயப்படுத்தும் முதல் நபர் அல்ல.
ஏற்கனவே அமேசான் நிறுவனத்தின் ஜேஃப் பிசோஸ் Jeff Bezos கடந்த அக்டோபரில் இராணுவத்திற்கு வெளிப்படையாக வக்காலத்து வாங்கியிருக்கிறார். “பெரும் தொழில் நிறுவனங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு ஆதரவளிப்பதில் தயங்கினால் இந்த நாடு சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அமெரிக்கா ஒரு மாபெரும் நாடு அது பாதுகாக்கப்பட வேண்டும்”, என்று அவர் கூறியிருக்கிறார்.
ஜேஃப் பிசோஸ்
அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஏதோ சில தொழில் நுட்ப சேவைகளை அமெரிக்க இராணுவத்திற்கு வழங்குவதாக இதை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அமேஃசான் தனது வாடிக்கையாளர் குறித்து உருவாக்கும் செயற்கை நுண்ணறிவும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் மூலம் யாரையும் உளவு பார்க்கும் வல்லமை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து தமது தொழில்நுட்பங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள். இந்த மேம்படுத்தலுக்கு இந்நிறுவனங்களை பயன்படுத்தும் நாம் நம்மையறியாமல் பயன்படுகிறோம். இதை அப்படியே இராணுவத்திற்கு வழங்குகிறார்கள்.
இனி ஹாலிவுட் படங்களில் நாம் பார்ப்பது போன்று ஆளில்லா விமானங்கள், ஆளில்லா கொலைக் கருவிகள் அனைத்தும் அமெரிக்காவை எதிர்க்கும் நாடு – மக்களை நோக்கி வரும். நம்மிடம் என்ன வதந்தியை தோற்றுவிக்க வேண்டும், எப்படி கருத்து ரீதியாக சீர்குலைக்க வேண்டும், எப்படி உளவு பார்க்க வேண்டும் என அனைத்தும் அமெரிக்க இராணுவத்தின் வசம் இருக்கும். இப்போதைக்கு இதை எதிர்ப்பதற்கு அமெரிக்காவிலேயே சில மக்கள் இருப்பதால் இந்த விடயங்கள் நமக்கு தெரிய வருகிறது.
ஸ்னோடன் போன்று உயிருக்கு அஞ்சாமல் சுதந்திரம், ஜனநாயகத்திற்காக பாடுபடும் மக்கள் இருக்கும் வரை அமெரிக்கா தனது மேலாதிக்க நோக்கத்திற்காக நடத்தும் தொழில் நுட்ப போர் அத்தனை சீக்கிரத்தில் வெற்றி பெற முடியாது என்பது மட்டும் நிச்சயம்.
‘’அண்மைக் காலங்களில் கல்வி நிறுவனங்களில் மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க. அரசாங்கமும் ஆர்.எஸ்.எஸ்.-சும் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான சில நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன.’’ என்பதை சுட்டிக்காட்டி, இதன் அரசியல் பின்னணியை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார், குடியாத்தம் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான பேரா ப.சிவக்குமார்.
‘’சென்னைப் பல்கலைக் கழகத்தின் சைவ சித்தாந்தத் துறை தலைவராக இருப்பவர் பேராசிரியர் சரவணன். மாணிக்க வாசகர் தொடர்பான ஒரு நூலை குறித்து அவர் பேசியதற்கு, இந்து மதத்திற்கு எதிராக உள்ளார் எனவே அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்று சிவனடியார்கள் என்ற பெயரில் ஒரு காவிக் கும்பல் கோஷமிட்டுக்கொண்டே ஊர்வலமாக பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தார்கள். அப்பொழுது, அங்கே இருந்த கல்லூரி மாணவர்கள் எதிர்வினையாற்றினார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி சாந்தி என்பவர் பள்ளி விடுமுறையில் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். எதற்காக இந்தப் பயிலரங்கு? என்ன தலைப்பில் யாரெல்லாம் பேசப்போகிறார்கள்? என்ற எந்த தகவலும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. மாநகராட்சிப் பள்ளியொன்றில் நடைபெற்ற இப்பயிலரங்கில் சுப்பிரமணியம் மற்றும் டி.வி. ரெங்கராஜன் என்பவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். வியாசை யோகா பல்கலைக் கழகத்தின் உறுப்பினர் சுப்பிரமணியம். இதிகாச சங்கள சமிதியைச் சேர்ந்தவர் டி.வி. ரெங்கராஜன். அறிவியலின் ஆணிவேர் எல்லாம் இதிகாசங்களில் இருக்கிறது என்று கருத்துத் திணிப்பை செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், சென்னை, கிண்டி அண்ணா பல்கலைகழகத்தில் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இயங்கும் தளத்தில் பணியாளர் ஒருவர் தவறி கீழே விழுந்து இறந்துள்ளார். ‘’ நம்ம தளத்தில் கெட்ட ஆவி ஒன்று இருக்கிறது. அதனை விரட்ட வேண்டும்’’ என்று கூறி, கணபதி ஹோமத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார், துறைத்தலைவர் சாசுவதி முகர்ஜி. மேலும், ‘’பிப்-3 அன்று, கணேஷ் பூஜை நடைபெறவிருக்கிறது, அனைத்துப் பேராசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்று விநாயகர் அருளைப் பெறுங்கள்’’ என்று அழைப்பு விடுத்து சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலையில் கணபதிக்கு சிலை வைத்து மாடம் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, அன்றாடம் விளக்கும் வைக்கப்படுகிறது.
அழகப்பா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலிருந்து அண்ணாவின் நீதிதேவனின் மயக்கம் நாடகத்தை நீக்கிவிட்டு, பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ள ராஜராஜசோழன் என்ற நூலை வைத்திருக்கிறார்கள். அண்ணாவின் நாடகத்தை மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு கைடு – நோட்ஸ் இல்லையாம். கல்விக்குழு மற்றும் ஆட்சிக்குழுவின் ஒப்புதலோடு கொண்டுவரப்பட்ட பாடத்தை தன்னிச்சையாக நீக்கியிருக்கிறார்கள். இந்த நாடகத்தில் யாகங்களைப் பற்றியும் இராவணனைப் பற்றியும் விவாதங்கள் இடம்பெற்றிருக்கிறது என்பதும் திராவிட அரசியல் பார்வையிலிருந்து ஆரியக் கருத்துகளை கேள்விக்குள்ளாக்கியதும்தான் அவர்களின் பிரச்சினை.
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? இந்துத்துவ பாசிச கருத்துக்கு துணை போவதா? இப்போது, நாம் போராடவில்லையென்றால், மிக மோசமான கருத்தியல் ரீதியான சிந்தனையை மழுங்கடிக்கின்ற சிந்தனையில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை திணிக்கின்ற ஒரு கல்விமுறை கூட எதிர்காலத்தில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.” என எச்சரிக்கிறார், பேராசிரியர் ப.சிவக்குமார்.
மூடிமறைக்கப்பட்ட, மர்மமான வழக்குகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மூடிமறைக்கப்பட்ட, மர்மமான தீர்ப்பு குறித்து யாரும் கேள்விப்பட்டதுண்டா? அத்தகையதொரு மகாபாக்கியத்தைத் தமிழக மக்களுக்கு அருளியிருக்கிறது, சென்னை உயர்நீதி மன்றம்.
அந்தத் தீர்ப்புக்குரிய வழக்கும் சாதாரணமானதல்ல. பார்ப்பன பாசிச பா.ஜ.க. கும்பல் தமிழகத்தைக் கொல்லைப்புற வழியில் ஆட்சி செலுத்துவதற்கு அடிகோலிய ஆர்.கே. நகர்இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு அது.
அ.தி.மு.க. என்ற கொள்ளைக்கூட்டத்தின் தலைவி ஜெயலலிதா இறந்துபோனதையடுத்து காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குக் கடந்த ஆண்டு (2017) ஏப்ரலில் இடைத்தேர்தல் நடைபெறவிருந்தது. அச்சமயத்தில் அ.தி.மு.க., ஓ.பி.எஸ். தலைமையில் ஓர் அணியாகவும், சசி-தினகரன் தலைமையில் மற்றொரு அணியாகவும் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. ஓ.பி.எஸ்.-க்கு மோடியின் ஆசியும் பாதுகாப்பும் கிடைக்க, தமிழக ஆட்சியுரிமையோ தினகரன் அணியிடம் சிக்கியிருந்தது. அப்பொழுது தினகரனின் எடுபிடியாக இருந்த எடப்பாடி, தற்காலிகத் தமிழக முதலமைச்சராக உட்கார வைக்கப்பட்டிருந்தார். “நிரந்தர” முதல்வராகும் திட்டத்தோடு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார், தினகரன்.
அந்த இடைத்தேர்தலில் ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாயை வாரியிறைத்த பிறகும்கூட ஓ.பி.எஸ். அணியின் சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதை உளவுத்துறை மூலம் மோப்பம் பிடித்த மோடி – குருமூர்த்தி கும்பல், அந்த இடைத்தேர்தலையே ரத்து செய்யும் சதித் திட்டத்தை அரங்கேற்றியது. அதன்படி, அச்சமயத்தில் தினகரனின் கணக்குப்பிள்ளையாக இருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, குவாரிகள் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு ஏவிவிடப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனை வெற்றிபெற வைப்பதற்காக, ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் என்ற கணக்கில், ஏறத்தாழ 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்ட விவரமும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் வழியாக அந்தப் பணம் விநியோகிக்கப்பட்ட ஆதாரங்களும் துண்டுச்சீட்டு வடிவில் சிக்கின.
ஓட்டுக்குப் பணம் பட்டுவாடா செய்த கும்பல்.
இந்த ஆதாரங்களை வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்திடம் வழங்க, அதன் அடிப்படையில் இடைத்தேர்தலை ரத்து செய்தது, ஆணையம். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர் வைரக்கண்ணு மற்றும் தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில், “ஓட்டுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடருமாறு சென்னை – அபிராமிபுரம் போலீசு நிலையத்திற்குப் பரிந்துரைத்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் தனக்குப் பதில் அளித்திருப்பதாக”த் தெரிவித்திருந்தார், வைரக்கண்ணு.
அரசியல் சாசனத்தின் கீழ் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு எனப் பெருமை பாராட்டப்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை, அபிராமிபுரம் போலீசு நிலைய ரைட்டர்கூடச் சீந்தாததால், சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு தலையிட்டு, அப்பரிந்துரையின்படி வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.
தேர்தல் அதிகாரிகளின் ‘அதிரடி’.
மாடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு, சித்தப்பனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு என்றொரு சொலவடை உண்டு. அதற்கேற்ப, சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை சிரமேற்று, அபிராமிபுரம் போலீசு நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது, எந்தவொரு குற்றவாளியின் பெயரையும் குறிப்பிடாமலேயே! இந்த மோசடியை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் முறையிட, தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருக்கும் நபர்களைக் குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கையைத் தயாரிக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதி மன்றம், இது தொடர்பாக சென்னை மாநகர கிழக்கு இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
இவையெல்லாம் இந்த வழக்கின் பிளாஷ்பேக் காட்சிகள். வழக்கின் தொடக்கம் ஏப்ரல் 2017; நடப்பது டிசம்பர் 2018. இடைப்பட்ட இந்த இருபது மாதங்களில் வழக்கு விசாரணையில் நடந்திருக்கும் “முன்னேற்றம்”தான் சுவாரசியமான ஆண்ட்டி-கிளைமாக்ஸ்.
♣ ♣ ♣
கடந்த டிசம்பர் 3 அன்று இந்த வழக்கை ஆடி அசைந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வின் முன் ஆஜரான அரசு வழக்குரைஞர் சபிதாராணி, அபிராமிபுரம் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஒன்பது மாதத்திற்கு முன்பே – மார்ச் 2018-லியே ரத்து செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு, அந்த உத்தரவை மிகவும் விநயத்தோடு நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். வழக்கின் அடிப்படையே காலி செய்யப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்ட நீதிபதிகள் அதிர்ச்சியில் உறைந்தே போனார்களாம்.
கிரிமினல் மாஃபியா கும்பல் ஸ்கெட்ச் போட்டு தடயமேயில்லாமல் கொலை செய்வார்களே, அது போல, இம்முதல் தகவல் அறிக்கையைக் காலி செய்திருக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி கும்பல்.
திருத்தணி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., நரசிம்மன்.
ஆளும் அ.தி.மு.க.வின் திருத்தணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான நரசிம்மன் இம்முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களுள் யாராவது ஒருவர்தான் இப்படியொரு வழக்கைத் தாக்கல் செய்ய முடியுமே தவிர, அதற்குச் சம்மந்தமேயில்லாத நபர் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடுக்க முடியாது என ஐ.பி.சி.யில் கூறப்பட்டிருக்கிறதாம். இதன்படி, முதல் பார்வையிலேயே இந்த மனுவைச் சட்டப்படி தள்ளுபடி செய்திருக்க முடியும். ஆனால், நீதிபதி எம்.எஸ்.ரமேஷோ நரசிம்மனின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறார்.
இம்மனுவில் எதிர்மனுதாரராக அபிராமிபுர போலீசு நிலைய ஆய்வாளர் மட்டுமே சேர்க்கப்படுகிறார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குத் தொடுக்குமாறு பரிந்துரைத்த ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலர் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்படாமல் திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார். இந்த கிரிமினல்தனத்தை அரசு வழக்குரைஞர் மட்டுமல்ல, நீதிபதி ரமேஷும் கேள்விக்குள்ளாக்கவில்லை. எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்ட அபிராமிபுர போலீசு நிலைய ஆய்வாளரோ இந்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி எதிர்மனு தாக்கல் செய்யாமல் கைகழுவுகிறார்.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்.
இம்முதல் தகவல் அறிக்கையைச் சட்டப்படியே தள்ளுபடி செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களையும் எடப்பாடி பழனிச்சாமி அரசு திட்டமிட்டு ஏற்படுத்திக் கொடுக்க, நீதிபதி ரமேஷோ இன்னும் ஒருபடி மேலேபோய், “பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றால், பெருநகர நடுவர் மன்ற நீதிபதியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். இந்த வழக்கில் அப்படிப்பட்ட அனுமதி பெறப்படவில்லை” எனக் குறிப்பிட்டு, இம்முதல் தகவல் அறிக்கையைத் தான் சட்டப்படி ரத்து செய்வதாகக் காட்டுகிறார்.
ஆனால், உண்மையோ வேறுவிதமாக இருக்கிறது. இம்முதல் தகவல் அறிக்கை 23-ஆவது பெருநகர நடுவர் மன்ற நீதிபதியின் அனுமதியைப் பெற்றுத்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனை நீதிபதியிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அம்பலப்படுத்தியிருக்கிறார். அதாவது அரசு மறைத்த விவரம், நீதிபதி ரமேஷுக்குக் கிடைத்த சாக்காகி விட்டது.
மேலும், “அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட துண்டுச்சீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்களும், அவர்களிடம் மொத்தமாக 89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட கணக்கு விவரங்களும் இருந்தாலும், அந்தத் துண்டுச்சீட்டில் ஓட்டுக்கு இலஞ்சம் கொடுத்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. அந்தத் துண்டுச் சீட்டை ஆதாரமாகக் கொண்டு போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” எனக் குறிப்பிட்டு, அம்முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்திருக்கிறார், நீதிபதி ரமேஷ். இனி இலஞ்சப் பரிமாற்றங்கள் ஸ்டாம்ப் பேப்பரில் சாட்சி கையெழுத்துக்களோடு குறித்து வைக்கப்பட்டிருந்தால்தான் வழக்கே பதிய முடியும் போலும்!
சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தபோது, அந்நீதிமன்றத்திற்கே தெரியாமல், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அவ்வழக்கையே காலிசெய்துவிட முயற்சி செய்தார், ஜெயா. அக்கிரிமினலின் வாரிசுப் பட்டியலில் தனக்கும் இடமுண்டு என்பதை நிரூபித்திருக்கிறார், எடப்பாடி பழனிச்சாமி.
அன்று சொத்துக்குவிப்பு வழக்கைக் காலி செய்ய ஜெயா – சசி கும்பலுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் உடந்தையாகச் செயல்பட்டார் என்றால், இன்று நீதிபதி ரமேஷ் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கைத்தடியாகச் செயல்பட்டிருக்கிறார்.
முதல் தகவல் அறிக்கையைச் சதித்தனமான முறையில் ரத்து செய்ததோடு, அத்தீர்ப்பைக் கமுக்கமாக அமுக்கியும் வைத்திருந்தது, எடப்பாடி பழனிச்சாமி அரசு. குறிப்பாக, இப்பணப்பட்டுவாடா விவகாரத்தை விசாரித்துவரும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மட்டுமல்ல, வழக்குப் போட பரிந்துரை செய்த தேர்தல் ஆணையத்திற்கும்கூட தீர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. சென்னை உயர்நீதி மன்றப் பதிவாளருக்குத் இத்தீர்ப்பு விவரம் தெரியாமல் போயிருந்தால்கூட நாம் அதிர்ச்சியடைந்துவிட முடியாது.
♣ ♣ ♣
சென்னை உயர்நீதி மன்றத்தின் ஒரு அமர்வு முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்கிறது. மற்றொரு அமர்வோ அச்சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றிய எடப்பாடி பழனிச்சாமி அரசிடமே, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வீர்களா எனக் கேட்கிறது. டான்சி நிலபேர ஊழல் வழக்கில் உச்சநீதி மன்றம் ஜெயாவின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்த கேவலத்திற்கும் இதற்கும் வேறுபாடு கிடையாது.
வீட்டில் ரெய்டுக்கு வந்த போலீசிடம் மல்லுக்கட்டும் விஜயபாஸ்கர்.
கரூர் அன்புநாதன், தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ், மணல் கடத்தல் மாஃபியா சேகர்ரெட்டி, விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலெட்சுமி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்கள் என அடுத்தடுத்து நடந்துவரும் வருமான வரித்துறை ரெய்டுகள் இப்பொழுது 2,400 கோடி ரூபாய் பெறுமான சத்துணவு ஊழலில் பங்குதாரரான கிறிஸ்டி ஃபுட்ஸ் நிறுவனத்தில் வந்து நிற்கிறது. இந்த ரெய்டுகள் அனைத்தும் அ.தி.மு.க.வையும் எடப்பாடி பழனிச்சாமி அரசையும் தனது விருப்பப்படி ஆட்டிப்படைக்க பா.ஜ.க. நடத்திவரும் மிரட்டல் நாடகங்கள் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளோ, ரெய்டைத் தொடர்ந்து விஜய பாஸ்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என சீரியஸாக முகத்தைவைத்துக் கொண்டு வருமான வரித்துறையிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.
வருமான வரித்துறை மட்டுமா? ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பரிந்துரைத்த தேர்தல் ஆணையம்தான், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு நடத்தியிருக்க வேண்டிய இடைத்தேர்தலை “ரெட் அலர்ட்டை”க் காரணமாகக் காட்டி நிறுத்தி வைத்தது.
குட்கா வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ.தான் அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர்களை இன்னமும் முதல் தகவல் அறிக்கையில்கூடச் சேர்க்காமல் விசாரணையை நடத்திவருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் டி.டி.வி. தினகரன்.
அவ்வளவு ஏன், தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கிலும், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கக் கோரிய வழக்கிலும் சென்னை உயர்நீதி மன்றம் அளித்திருக்கும் முரண்பட்ட தீர்ப்புகள்தான் இன்றுவரை இந்த ஊழல் ஆட்சி கவிழ்ந்துபோய் விடாமல் காப்பாற்றி வருகின்றன.
எடப்பாடி அரசைக் காப்பாற்றும் இந்தச் சேவையில் மற்ற எல்லோரையும்விட தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல்தான் முன்னணியில் நிற்கிறது. சந்தேகமிருப்பவர்கள், தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்து மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணன் அளித்த தீர்ப்பின் விளைவுகள் பற்றி எழுதப்பட்டிருக்கும் துக்ளக் (7.11.2018) தலையங்கத்தைப் படித்துப் பார்க்கலாம். அதில், தமிழகத்துப் பார்ப்பனக் கும்பலின் ராஜகுருவாகப் பட்டமேற்றிக்கும் துக்ளக் குருமூர்த்தி இப்படி எழுதுகிறார்:
“இந்த நிலையில், மினி (சட்டசபை) பொதுத் தேர்தலையும் (காலியாகவுள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள்) நாடாளுமன்றத் தேர்தலையும் மட்டும் சந்திப்பதைவிட, சட்டசபையைக் கலைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலையும் இணைத்து நடத்த அ.தி.மு.க. சிந்திக்கலாம்” என எடப்பாடி – ஓ.பி.எஸ்.-க்கு ஆலோசனை கூறும் குருமூர்த்தி, அதற்காக முன்வைத்திருக்கும் காரணம்தான் சுவாரசியமானது.
“தற்பொது வெளிப்படையாக நடக்கும் ஊழல் மிகுந்த ஆட்சி 2021 வரை தொடர்ந்து, ஊழல் அதிகமாகி, சட்டசபைத் தேர்தல் நடந்தால், அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். நாளாக நாளாக ஊழல் அதிகமாகுமே தவிர குறையாது. அது பற்றி அ.தி.மு.க. சிந்திக்க வேண்டும். சரியான கூட்டணி அமைத்து 2019-லேயே சட்டசபைத் தேர்தலை நடத்துவது அ.தி.மு.க.வுக்கு நல்லது.” (துக்ளக், 7.11.2018, பக்.4, 5)
குருமூர்த்தி போன்ற பிரம்மஸ்ரீக்களும், நீதிமன்றம், சி.பி.ஐ., வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்களும் எடப்பாடி அரசைக் காக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும்போது, எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பி.எஸ். கும்பல் அடுத்த தேர்தல்களில் தமது வெற்றி பற்றி கவலை கொள்வார்களே தவிர, ஊழல் வழக்குகளில் தாம் தண்டிக்கப்படுவோம் என அஞ்சிக் கொண்டிருக்கமாட்டார்கள்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் வரும் துன்பங்களை வேறு எந்த நாட்டையும் விட இந்திய மக்கள் நன்கு அறிவார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வில் தொடங்கி போக்குவரத்து தொழில் நலிவு மற்றும் சிறு தொழில்களின் முடக்கம் வரை எரிபொருள் விலை உயர்வு தோற்றுவிக்கும் துன்ப துயரங்கள் அதிகம். ஆனால், நம்மால் இந்த விலை உயர்வை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.
பிரான்ஸ் நாட்டு மக்கள் இதை சாதித்திருக்கிறார்கள். இந்த சாதனை என்பது ஏதோ வார இறுதியில் ஓரிரு மணி நேரங்கள் மட்டும் கலந்து கொண்டு நடத்தப்படும் போராட்டங்களினாலும் அறிக்கைகள் மற்றும் கூட்டங்களினாலும் நடந்துவிடவில்லை ஒட்டுமொத்த தேசமும் எழுச்சியுடன் பிரான்ஸ் அரசை வீழ்த்தியதுதான், இந்த போராட்டம்.
மக்களின் வீறுகொண்ட போராட்டத்தை அடுத்து எரிபொருளுக்கான வரிவிதிப்பை வரும் 2019-ம் ஆண்டின் வரவு செலவு அறிக்கையிலிருந்து கைவிடுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு முன்னர் இந்த கட்டண உயர்வை ஆறு மாத காலம் மட்டும் இடைநிறுத்துவதாக கூறியிருந்த பிரான்ஸ் அரசு தற்போது முற்றிலும் அதை கைவிடுவதாக கூறியிருக்கிறது. இதை அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் அறிவித்துள்ளார்
மாணவர்களும் பங்கு பெற்ற பிரான்ஸ் போராட்டம்
பிரான்ஸ் மக்களின் போராட்டம் காரணமாக பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரியை 6 மாதங்கள் நிறுத்தி வைப்பதாக முதலில் அறிவித்தது அரசு. ஆனால் ”இதுவெல்லாம் வேலைக்கு ஆகாது; இந்த வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்” என மக்கள் தீவிரமாகப் போராடினர். அதில் பள்ளி மாணவ மாணவிகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக தமிழகத்தில் ஏதாவது ஒரு மக்கள் போராட்டத்தில் மாணவர்கள், சிறுவர்கள் கலந்து கொண்டால் எதற்கு அபாயகரமான சூழலில் குழந்தைகளை கொண்டு வருகிறீர்கள் என சில ’நல்லுள்ளம்’ படைத்த கனவான்கள் கேட்பார்கள்.
அவர்களால் இந்த எரிபொருள் விலை உயர்வு தோற்றுவிக்கும் வாழ்க்கை சிரமத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. முற்றிலும் நூற்றுக்கு நூறு கல்வியறிவு பெற்ற பிரான்ஸ் நாட்டில் இப்படி பள்ளி மாணவர்களே வீதிக்கு வந்து போராடுகிறார்கள்; அப்படி போராடி வெற்றியை சாதித்திருக்கிறார்கள் என்பதை அந்த கனவான்கள் புரிந்து கொள்வார்களா?
பிரான்ஸ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்ற ”மஞ்சள் சட்டை” என்று அறியப்படும் இந்தப் போராட்டங்கள் முக்கிய நகரங்களை முடக்கின. ஓரளவு சேதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இவை அனைத்தும் விலையை உயர்த்திய அரசின் மீதான மக்களின் கோபத்தை வெளிக்காட்டியது. ஒருவேளை அரசு இந்த வரி உயர்வை ரத்து செய்யவில்லை என்றால் இந்த வார இறுதியில் இன்னும் அதிகமான போராட்டங்கள் நடந்திருக்கும் என ஊடகங்கள் கூறுகின்றன. இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், இந்த தியாகம் வீண் போகவில்லை.
அதனால்தான் புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் 2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலிருந்து வரி உயர்வு கைவிடப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இம்மானுவேல் மேக்ரோன் பிரான்ஸின் அதிபராக போட்டியிடும்போது, தான் தெரிவு செய்யப்பட்டால் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால் சமீபத்திய மாதங்களில் அவரது சீர்திருத்தத்தின் லட்சணம் என்ன என்பதை மஞ்சள் சட்டை போராட்டமே தெளிவுபடுத்துகிறது
போலீசு வீசிய கண்ணீர் புகை குண்டை போலீசின் மீது வீசி எறியும் போராட்டக்காரர் ஒருவர்
பிரான்ஸ் மக்களின் போராட்டத்தில் வன்முறை எப்படி வெடித்தது? போராடுகின்ற மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீர் பாய்ச்சியும் அவர்களை விரட்டியது போலீசு. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திருப்பித் தாக்கினர். ஆனால் பிரான்ஸ் அதிபர் இதை மட்டும் கடுமையாகக் கண்டிக்கிறார். “போலீசு அதிகாரிகளைத் தாக்கியவர்களைக் கண்டு நான் அவமானப்படுகிறேன். குடியரசில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை” என்று அவர் தெரிவித்திருக்கிறார். என்ன இருந்தாலும் ஒரு நாட்டின் அதிபர் தனது காவற்படையை விட்டுக் கொடுக்கமாட்டார் அல்லவா? பிரெஞ்சுக் குடியரசில், இத்தகைய ஜனநாயகப் போராட்டங்கள் மக்களின் தற்காப்பு வன்முறையினால்தான் உருவானது என்பது வரலாறு.
அது பிரெஞ்சு புரட்சியில் துவங்கி இன்றுவரை தொடர்கிறது. ஆகவே இந்த வன்முறைக்கு காரணம், மக்கள் அல்ல அரசுதான். கடந்த சனிக்கிழமை அன்று (1-12-2018) மட்டும் 1200-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்தன. அதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த போராட்டத்திற்கு பாரீஸ் நகரில் மட்டும் 5000 போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். போலீசு வன்முறையை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், மக்கள் திருப்பித் தாக்கி இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
“நாங்கள் வீட்டிலிருந்து போலீசோடு சண்டை போடுவதற்கு வரவில்லை. எங்கள் குறைகளை அரசு கேட்க வேண்டும் என்பதே நோக்கம்”என்கிறார்கள் போராட்டக்காரர்கள். சில பொருட்களை தீயிட்டுக் கொளுத்தியது, அரசுக்கு எதிராக முழங்கியது, காவல்துறையின் மீது சிலர் கற்களை வீசியது இவையெல்லாம் வன்முறை என்றால், இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களது வாழ்க்கையை பல மடங்கு வன்முறைக்குள்ளாகியிருப்பதை எங்கு சென்று முறையிடுவது எனத் தெரியவில்லை.
மக்களின் வன்முறை என்பது அரச வன்முறைக்கு எதிரான ஒரு சிறிய எதிர் வன்முறையே. இதையே பிரான்ஸ் அரசால் தாங்க முடியவில்லை என்றால் பிரெஞ்சு புரட்சியின் போது நடந்த பல்வேறு போராட்டங்களும் இப்போது நடந்தால் இவர்கள் என்ன செய்வார்கள் ? மதசார்பற்ற ஜனநாயக உரிமைகளை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் தேசத்தில் அவையெல்லாம் வன்முறை இல்லாமல் நடந்துவிட்டதா என்ன ? வன்முறைக் குறித்து பிரெஞ்சு வரலாறு என்ன சொல்கிறது என்பது அதன் அதிபருக்குத் தெரியாது போலும். இரத்தம் சிந்தாமல் புரட்சி நடப்பதில்ல என்ற வாசகத்தின் பொருள் மக்கள் தமது உரிமைகளை போராடி இன்னுயிர் இழந்து பெறுகிறார்கள் என்பதே.
பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் 4 பேர் காவல்துறையின் அடக்குமுறையால் கொல்லப்பட்டனர். காவல் அதிகாரிகள் 4 பேர் காயமடைந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வளவு பெரிய போராட்டம் ஏதோ பொழுது போகாமல் நடைபெறவில்லை. டீசலின் விலை லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோவிலிருந்து 1.54 யூரோ வரை உயர்ந்தது. கடந்த 12 மாதங்களில் 23% வரை விலை உயர்ந்ததே இப்போராட்டத்திற்குக் காரணம்.
வன்முறை எங்கள் நோக்கம் அல்ல
இந்த போராட்டத்திற்கு மஞ்சள் சட்டை போராட்டம் என்ற பெயர் எப்படி வந்தது? பிரான்ஸில் வாகனங்கள் பழுதடைந்தால் பாதுகாப்பு கருவிகளுடன், ஓட்டுனர்கள் மஞ்சள் ஜாக்கெட்டுகளையும் வைத்திருக்க வேண்டும். சாலையில் பழுதடைந்த வண்டி நிற்கும் போது ஓட்டுனர்கள், மஞ்சள் சட்டை அணிந்திருக்க வேண்டும். அது தொலைதூரத்தில் வருபவர்களுக்கும் தெளிவாகத் தெரியக் கூடியதாக உதவி செய்யும். இதனால் மஞ்சள் சட்டை அணியத் தவறினால் அபராதம் என்ற சட்டத்தை 2008-ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது பிரான்ஸ் அரசு. இதை ஒட்டியே ஓட்டுநர்கள் பயன்படுத்தும் மஞ்சள் சட்டையை வைத்து இந்தப் போராட்டம், மஞ்சள் சட்டை போராட்டம் என்று அழைக்கப்படுகிறது. அதை தொழிலாளர்களின் போராட்டம் என்றும் அழைக்கலாம்.
இந்தப் போராட்டத்திற்கு தனியொரு கட்சியோ இயக்கங்களோ தலைமை வகிக்கவில்லை என்றாலும் தொழிலாளி வர்க்கம் முன்னணியில் இருந்தது உண்மை. இத்தொழிலாளிகள் அமைக்காக்கப்பட்டு போராடும் போது அதன் வெற்றி இன்னும் பெரியதாக இருக்கும். பிரான்ஸ் மக்களின் வெற்றியில் இருந்து இந்திய மக்கள் பாடம் கற்க வேண்டும். மாருதி ஆலை முதல் திருப்பெரும்புதூர் யமஹா ஆலை வரை உள்ள தொழிலாளிகளும் உற்சாகம் பெற வேண்டும். போராடாமல் வாழ்க்கை இல்லை. போராடினால் தோல்வியும் இல்லை!
சென்னையில் உள்ள ஒரு அம்மா உணவகம். பகல் பதினோரு மணி. உள்ள நோட்டமிட எட்டிப் பாத்தா மதியத்துக்கான சமையல் வேலையே முடிஞ்சுருச்சு. ஆனாலும் ஆவி பறக்க சுடச்சுட இட்லிய கவுன்டருக்கு எடுத்து வந்தாங்க ஒரு அம்மா. இந்த இட்லி ஆறிப்போச்சுன்னா புட்டுத் திங்க கையில பலம் வேணுங்கறது வேற விசயம். ஆனா ஆவி பறக்கும் இட்லிய பாத்தா சாப்பிட ஆசை வருதுல்ல.. அதுதான் இட்லிக்கான சிறப்பு அம்சம்.
வீட்டுல பத்து மணிக்கு சாப்புட்டு வந்த நானு நாலு இட்லிக்கு டோக்கன் வாங்கினேன்னா பாத்துக்குங்க. ஓட்டலின் ருசிக்காக வாடிக்கையாளர் தேடி வருவது போல குறைந்த வருமானத்தில் அல்லல்படும் குடிமக்கள் வாடிக்கையா தேடி வருவது அம்மா உணவகம்தான். அப்படியான வாடிக்கையாளர்களுக்காகத்தான் ஆவி பறந்தன இட்லிகள்.
பகல் பொழுதின் முடிவில் அம்மா உணவகத்தில் சுடப்படும் இந்த இட்லி, முதல்நாள் நள்ளிரவையும் கடந்து வேலை முடித்து வரும் வாடிக்கையாளர்களுக்காக. அந்த நேரம் சொல்லி வச்சாப்போல ஏழட்டு பசங்களும் வந்தாங்க. ஒரு தட்டுல இருந்த இட்லி பல தட்டுக்கு மாறிடுச்சு. அன்னதானம் வாங்கிட்டு ஆலய மண்டபத்துல சங்கடப்பட்டு எடம் பிடிக்கிறது போல அத்தன விசாலமான அறையில இரு மூலையில ரெண்டு பிரிவா உக்காந்தாங்க பசங்க.
அன்னதானம் வாங்குறதுல என்ன சங்கடமுன்னு தோணுதா ? அன்னதானம் வாங்கும் போது பக்தனா இருந்தா பிரசாதத்த பக்தியோட பொறுமையா வாங்கலாம். பசிக்காக பக்தன் போல வாங்குறவன் நிலமெ எப்படி இருக்கும். அவங்களப் பாத்து அய்யோ பாவம்னு தோன்றத விட இந்த நிலைக்கி தள்ளுன ’ஆண்டவன்’ மேலதான் அளவு கடந்த கோவம் வரும்.
“உங்களுக்கு பல தடவ சொல்லிட்டண்டா.. இட்லி பொடி வாங்காமெ வந்துட்டு சாப்புட்ற எடுத்துல வந்து கடன் கேக்காதிங்கன்னு. ஆனா திரும்ப திரும்ப என்ன கோவக்காரனாக்குறீங்க.”
ஓட்டல்ல வேலையா. பிறகு எதுக்கு இங்க சாப்ட்றீங்க. ஒங்க ஓட்டல்ல சாப்பாடு நல்லாருக்காதா?
என்னக்கா நையாண்டியா. பகல் 12 மணிக்கி வேலைக்கி போனா 1 மணிக்கெல்லாம் மதிய சாப்பாடு எந்த முதலாளி போடுவான். ராத்திரி 11 மணிக்கி வேலை முடியும். மிஞ்சுனா ஏதாவது சாப்பிட்டுக்கலாம். இல்லன்னா ரோட்டோர கடைதான்.
“ஓட்டல்ல நீங்க என்னா வேலை பாக்கிறிங்க?“
“நீங்க கேட்ட கேள்வில எனக்கு பொறக்கேறிடுச்சு. தமிழ் சொல்வாங்கா. சொல்றா மச்சான்”.
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். என்ற முழக்கத்தை மறைந்த ஜெயலலிதா அம்மா முழங்கினார். அடுத்து அ.தி.மு.க சாதனைகளை பட்டியலிட்டு காட்சிகள் வந்து போயின.
“அன்னை உள்ளத்தோட உணவு கொடுத்தது முதல் செஞ்ச சாதனைய பட்டியல் போட்டு சொல்றாங்களேப்பா. அதுல உங்க வேலை மட்டும்தான் மிஸ்சாயிருச்சு.”
“அ.தி.மு.க அரசு சாதனையின்னு சொல்றதெல்லாம் அவங்க அமைச்சருக்கே நினைவிருக்குமான்னு தெரியல எங்களுக்கு வாய்ப்பாடு போல மனப்பாடம் ஆயிடுச்சு. எட்டு இட்லி சாப்பிடறதுக்குள்ள பத்து வாட்டி சாதனை பட்டியல் ரிப்பீட்டாகுது.
அது போகட்டும். நான் சொல்ல வர்றது மன்னர் காலத்து அன்னதான சந்திரம் சாவடி எல்லாம் நம்ம ஊருபக்கம் பாத்துருப்பீங்க. அதே போல இந்த காலத்துல அம்மா உணவகம். இது போல சாதனையல்லாம் நமக்கு வேண்டாம். படிச்ச படிப்புக்கு வேல குடுத்தா சாப்பாட்ட நாமே வாங்க முடியும்னு சொல்றேன்.”
படித்தவர்களுக்கு மோடி கொடுக்கும் வேலைவாய்ப்பு – பக்கோடாவாலா
“படிப்பு கடன் போல தொழில் கடன் போட்டு ஏதாவது செய்லாமேப்பா?”
“எது மோடி சொன்னாரே படிச்சவங்க பக்கோடா போடலாம்னு அதுவா? படிக்க வாங்குன கடன் எங்கள படிக்க வைக்க அப்பா அம்மா வாங்குன கடன் எல்லாமே அந்தரத்துல தொங்குது. திரும்ப கடனா போங்கக்கா.”
“வருத்தப் படாதிங்கப்பா கூடி சீக்கிரம் நல்லது நடக்கும்.”
“படிக்கிறவங்க, படிச்சுட்டு வேலை தேடுறவங்க, குருப் தேர்வு எழுதி எப்படியாவது அரசு உத்தியோகத்த அடைய நினைக்கிறவங்க, எங்களப்போல பராமரிப்புக்காக ஒரு வேல பாத்துக்கிட்டு படிப்புக்கான வேலைய தேட்றவங்க எல்லாரும் பெரும்பாலும் அம்மா உணவகத்துலதான் ஒன்னு கூடுறோம். அப்ப வந்து பாருங்க எதிர்காலத்த பத்துன ஏக்கமும், ஏமாற்றமும் நெறஞ்ச அவங்க முகத்த.”
”அக்கா! ஆசை ஐ ஏ ஏஸ் ஆகனுங்கறது அமைப்பு அம்மா இட்லி சாப்பிடனுங்கறது. இருந்தாலும் நீங்க சொல்றீங்க உங்க நம்பிக்கை நடைமுறைக்கு வந்தா சந்தோசம்.”
அம்மா உணவகத்து இட்லி வயித்தை அடைத்தது. அவர்கள் பேச்சு நெஞ்சை அடைத்தது. ஆயிரம் கனவுகளை சுமந்து கொண்டு வாழ்க்கையை அழகாக்க விரும்பியவர்களை அம்மா உணவகத்து வாடிக்கையாளர்களாக ஆக்கியது யார் ?
இந்துத்துவ காவிக் கூட்டம் ஆட்சியில் அமர்ந்தால், நாடு நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி போய்விடும் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆளும் மாநிலங்களே சான்று. சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படும் தாக்குதல், இந்துத்துவ மதவாத கருத்துக்களை கல்வி புலங்களில் புகுத்துதல், அறிவியலை புறக்கணிக்கும் தன்மை, பன்முகத்தன்மையை ஒழித்துக்கட்டுவது, சாதி – பாலின பேதங்களை பேணுகிற அடிப்படைவாதம் என பா.ஜ.க. ஆட்சி படுகுழியில் மக்களை தள்ளிக் கொண்டிருகிறது. வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ராஜஸ்தானை ஆண்டு கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் மிடுக்கான, செல்வம் கொழிக்கும் சில ராஜபுத்திரர்களும் இன்னொரு பக்கம் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடும் ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி செய்த மிகப் பெரிய சாதனை என்ன தெரியுமா? ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பாடப்பு த்தகங்களில் புகுத்தியது. இளம் சிறார்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் விதமாக பா.ஜ.க. செய்திருக்கும் திணிப்பு, கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள்.
’ஆஜ்மீரின் சஹிர்’ என்ற தலைப்பில் மூன்றாம் வகுப்பு இந்தி பாடத்தில் வந்த ஒரு பாடம், ‘ஆஜ்மீர் யாத்திரை’ என பா.ஜ.க. ஆட்சியில் அந்தப் பாடம் திருத்தப்படுகிறது. முந்தைய பாடத்தில் குர்மீத், ரசாக் என்ற இரு நண்பர்கள் இணைந்து ஆஜ்மீரின் புகழ்பெற்ற மொய்னுதீன் சிஷ்டி தர்காவின் ஊர்ஸ் விழா குறித்து கலந்துரையாடுகின்றனர். பின்பு அவர்கள் ஆஜ்மீரின் பிரபலமான மற்ற சுற்றுலா தளங்களுக்குச் சென்று, அந்த இடங்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வதாக அந்த பாடம் இடம்பெற்றிருந்தது.
பா.ஜ.க. ஆட்சிக்குப் பிறகு 2016-ல் திருத்தப்பட்டு வெளியான பாடத்தில் வரும் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஆஜ்மீரைச் சுற்றிப் பார்க்கின்றனர். ஆனால், ஊர்ஸ் விழா குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் பிருத்விசிங் சவுகான் என்ற மன்னரை பற்றிய குறிப்பில், ‘பாரதத்தின் மீது படையெடுத்த முகமது கோரியை பலமுறை தோற்கடித்தவர்’ என்கிற வரலாற்று திரிபும் சேர்க்கப்படுகிறது. மேலும், மகாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்கள் உருவாக்கிய ‘பஞ்ச குண்டத்தை’யும் ‘உலகப் புகழ்ப் பெற்ற’ பிரம்மாவின் கோயிலையும் இருவருடம் சுற்றிப் பார்ப்பதாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
தேவயானி பரத்வாஜ் என்ற கல்வியாளர், “முசுலீம்களை நேர்மறையான விதத்தில் காட்டிய அந்த ஒரு பாடமும் வெட்டப்பட்டுள்ளது” என்கிறார். பாடப்புத்தகங்கள் பெரும்பான்மையினர் பார்வையில் எழுதப்பட்டுள்ளதோடு, சிறுபான்மையினர் அடையாளங்களை முற்றிலுமாக அழித்திருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ராஜஸ்தான் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற சமூகவியல் பேராசிரியர் ராஜீவ் குப்தா, “பெரும்பான்மையான குழந்தைகளுக்கு அரசு இலவசமாக வழங்கும் புத்தகங்கள்தான் அறிவை பெருக்கிக் கொள்ள கிடைத்திருக்கும் ஒரே கருவி. நவீன கால பத்திரிகைகள்கூட அவர்களை இன்னும் சென்று சேரவில்லை”. இத்தகைய சூழலில் பாடப் புத்தகங்களில் செய்யப்படும் திணிப்பு அவர்களை ஆழமாக பாதிக்கும் என்கிறார்.
2005-ஆம் ஆண்டும் மத்திய அரசின் கல்வி ஆலோசனை குழு, மனப்பாடம் செய்யும் கல்வி முறைக்கு பதிலாக, கற்றலின் மூலம் தங்களுடைய அறிவை மாற்றியமைக்கும் விதமான பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி 2013-ல் அமைந்தவுடன் இந்த சிறப்புக் குழு கலைக்கப்பட்டு, வேறொரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸ். அமைப்பிலிருந்து வந்தவர்கள்.
ஜுலை 2016-ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான திருத்தியமைக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன. இந்தப் பாடப்புத்தகங்களை பகுப்பாய்வு செய்த கல்வியாளர்கள் குழு, பாடத்திட்டம் குழந்தைகள் சிந்திக்கத் தூண்டுகிறதா, பாடங்களில் உள்ள வரலாற்று தகவல்களின் உண்மைத்தன்மை என்ன, பாலின பாகுபாடுகளை உருவாக்கும் பாடத்திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்ந்தனர்.
ஆறாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ’முண்டாமால்’ என்ற பாடத்தில் தடை செய்யப்பட்ட இந்துமத சடங்கான உடன்கட்டை ஏறும் ‘சதி’ குறித்து மிக உயர்வாக எழுதப்பட்டுள்ளது என்கிறார் தேவயானி பரத்வாஜ். இந்தக் கதையில் வரும் சாருவாத் என்ற குறுநில மன்னர், டெல்லியிலிருந்து படையெடுக்கும் பாட்ஷா ஒருவரை எதிர்த்து போருக்குச் செல்கிறார். அவரை வழியனுப்பும் ராணி இப்படிச் சொல்கிறார், “பிராணநாதா, ஒன்றை நீங்கள் நினைவுகொள்ளுங்கள், ஒரு சிறுவன் வானத்தை எட்டிப் பிடிக்கலாம். ஒரு சிறிய சிப்பி, கடலை விழுங்கலாம்; இமயமலையே ஆட்டம் காணலாம். ஆனால், பாரதத்தின் சதி மாதா தன்னுடைய சபதத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டாள்”. மனைவியிடம் விடைபெற்று போர்க்களத்துக்குச் செல்லும் சாருவாத், சில நாட்கள் கழித்து, ‘நம்பிக்கையையும் ஆற்றலையும் பெறுவதற்காக’ தன்னுடைய ஒற்றனை அனுப்புகிறார். அப்போது, அந்த ராணி தன்னுடைய தலையை கொய்து, பளிங்கு தரையை ரத்தத்தால் ’சதி மாதா’வாக நிரப்புகிறாள். ராணியின் தலையை ஒற்றன் எடுத்துச் சென்று அரசரிடம் தருகிறான். அரசர், தன்னுடைய ராணியின் தலையை கழுத்தில் மாலையாக அணிந்து (அதுதான் முண்டாமால்) போரிடுகிறார்.
அண்மையில் பா.ஜ.க. வேட்பாளர் ‘என்னை தேர்ந்தெடுத்தால் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த மாட்டேன்’ என பேசியதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. எத்தகைய பிற்போக்குத்தனங்களின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது என்பதை அறியலாம். இந்த சர்ச்சை வந்தபோது, தடைசெய்யப்பட்ட உடன்கட்டை ஏறும் சதி பழக்கத்தையும் புழக்கத்துக்கு கொண்டு வருவார்கள் இந்த சனாதானிகள் எனப் பலர் எழுதினர். அந்தப் பணியை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஏற்கனவே செய்ய ஆரம்பித்துவிட்டது என்பதைத்தான் மேற்கண்ட ‘முண்டாமால்’ பாடம் சொல்கிறது.
மட்டுமல்லாமல், பல பாடங்களில் ஆண் குழந்தைகள் விளையாட்டில் ஈடுபடுவது போன்ற சித்திரங்களும், பெண்கள் தண்ணீர் சேகரிப்பது, அடுப்படி வேலைகளில் ஈடுபட்டிருப்பது போன்ற சித்திரங்களும் இடம்பெற்றுள்ளதாக கல்வியாளர் அம்பிகா நாக் குற்றம்சாட்டுகிறார்.
ஒன்றாம் வகுப்பு எழுத்து கற்றுத் தரும் பாடத்தில் ரிஷி, ரதம், யாகம், திரிசூலம், ஞானி போன்ற இந்துமதம் தொடபான வார்த்தைகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் பசு புனிதமானத்தை விவரிக்கிறது ஒரு பாடம். ‘செல்வம், வளம், ஆற்றல், ஆரோக்கியம் என அனைத்தையும் வழங்கும் காமதேனு பசுமாதா. அதைக் காப்பது உங்கள் கடமை’ என்கிறது அந்தப் பாடம். எட்டாம் வகுப்பு இந்தி பாடத்தில் ‘பசு பாதுகாப்பும் கிராம வளர்ச்சியும்’ என்கிற தலைப்பில் ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது.
தேசத்தின் பெருமைக்குரியவர்கள் என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் அறிவியல் பாடநூலில் வந்துள்ள ஒரு பாடத்தில் 15 தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒருவர்கூட முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர் இல்லை. 6, 7, 8 வது பாட நூல்களில் பழங்குடிகளும் பட்டியலினத்தாரும் செல்வந்தர்களுக்காகவும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்காகவும் தங்கள் உயிரை தியாகம் செய்யக்கூடியவர்கள் என எழுதப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு பாடத்தில் இருந்த சாதி அமைப்பு குறித்த கட்டுரை முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆரம்ப காலத்தில்(வேத காலத்தில்) இருந்த சாதி அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை; தீண்டாமை இல்லை; எல்லோரும் ஒன்றாக பழகினார்கள் என எழுதப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு பாடநூலில் உள்ள 15 பாடங்களில் ஏழு பாடங்கள், பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றன. தவறான பாதைக்குச் சென்றால், அடித்து திருத்தி சரியான பாதைக்கு கொண்டு வரவேண்டும் என்கிற மனுநீதி இந்தப் பாடங்களில் சொல்லித் தரப்பட்டுள்ளது.
மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஒவ்வொரு பாடநூலிலும் ‘பாரத்மாதா’வின் படமும் ‘தேசபக்தி’ பாடலும் இடம்பெற்றுள்ளன. மேலும் அனைத்து நூல்களிலும் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி குறித்தும் மத்திய பா.ஜ.க. அரசின் ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் போன்ற திட்டங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசு எப்படி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக, மக்கள் எப்படி அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்கிறார் குப்தா. கலாச்சார ஏகாதிபத்தியத்தை திணிக்கும் முயற்சியாகவே இந்தப் பாடநூல்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன என்கிறார் இவர்.
இல்லாத சரஸ்வதி நதி ராஜஸ்தானிலும் ஹரியானாவில் பாய்ந்தோடியதாக எழுதியிருப்பது, இந்து புராண அரசர்கள் இந்தந்த ஏரியாவை ஆண்டார்கள் என புராணத்தை வரலாறாக எழுதியிருப்பது, வேத கணிதத்தை எட்டாம் வகுப்பு வரை பாடநூலில் சேர்த்திருப்பது, முகலாய அரசர்கள் குறித்த வரலாற்றை திரித்தி எழுதியிருப்பது, தேசப்பற்று என்பது ரத்தத்தை சிந்துவது என ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு, தனது இந்துத்துவத் திணிப்பை திட்டமிட்டு செய்திருக்கிறது.
இந்த நூல்களைப் படிக்கும் குழந்தைகள் சிந்தித்து செயலாற்றும் அறிவியல் தன்மையுடன் இல்லாமல், மூடநம்பிக்கையை நம்பும், பேய்களின் மீது பயம் கொள்ளும் குழந்தைகளாக உருவாகக்கூடும் என்கிறார் கோமல் ஸ்ரீவத்சவா என்கிற சமூக செயல்பாட்டாளர்.
ராஜஸ்தானில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வசுந்தராவிடம் ஒரு சாதாரண பெண், காவல் கட்டுப்பாடுகளையும் மீறி, “படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள், உனக்கு எப்படி ஓட்டுப்போட முடியும்” என கேட்கிறார். அதை எதிர்கொள்ள முடியாத பா.ஜ.க. முதல்வர் முகத்தை திருப்பிக்கொண்டு செல்கிறார்.
வேலையில்லாத் திண்டாட்டத்தில் ராஜஸ்தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தையோ, விவசாயிகளின் பிரச்சினையையோ தீர்க்க முடியாத பா.ஜ.க.வின் வெற்று இந்துத்துவ முழக்கத்தை மக்களே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அகண்ட இந்து ராஷ்டிர ஆட்சி மக்களை எப்படி வாட்டி வதைக்கும் என்பதை மக்கள் அனுபவித்து விட்டார்கள். அதனால்தான் அவர்களை மதவாதத்தில் மூழ்கடிக்கும் விதமாக இப்படி புரட்டுக்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது துவங்கி அயோத்தி ராமன் கோவில் வரை பல சதித்திட்டங்களை முன்னெடுக்கிறது.
மக்கள் இதற்கு பலியாகாமல் இந்துமதவெறியர்களை தூக்கி எறிவது நாடு முழுவதும் தேவைப்படும் ஒரு அவசியமா போராட்டம் என்பதை ராஜஸ்தான் பகர்கிறது. இல்லையேல் இந்நாட்டில் குறைந்தபட்ச ஜனநாயகமோ, அறிவோ கூட இருக்காது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதித்துறைக்கு வெளியில் உள்ள நபர்களால் ஆட்டுவிக்கப்படுவதாக தாங்கள் சந்தேகித்தோமென முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார். சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 29 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார் குரியன் ஜோசப்.
வழக்குகளை நீதிபதிகளுக்கு பிரித்து வழங்குவதில், தலைமை நீதிபதி அரசியல் சார்போடு செயல்பட்டதாக தாம் மற்றும் பிற மூத்த உச்சநீதிபதிகள் மூவரும் சந்தேகித்ததாகத் தெரிவித்தார்.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
“வெளிநபர்களின் ஆதிக்கம் உச்சநீதிமன்ற செயல்பாடுகளில் சில தருணங்களில் இருந்துள்ளன. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளின் தலைமையிலான அமர்வுகளுக்கு வழக்குகளை பிரித்தளிப்பதிலும், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் அது இருந்தது” என்றார்.
“நீதிமன்றத்திற்கு வெளியிலிருந்து யாரோ சிலர் தலைமை நீதிபதியைக் கட்டுப்படுத்துகின்றனர்” என்பதாகவே தாங்கள் உணர்ந்ததாகக் கூறினார். பிற மூத்த நீதிபதிகள், தலைமை நீதிபதியை சந்தித்து, உச்ச நீதிமன்றத்தின் மாட்சிமையையும், சுதந்திரத்தையும் காக்குமாறு அவரிடம் கேட்டு, கடிதம் எழுதியதாகவும், அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையிலேயே தாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
தீபக் மிஸ்ரா பதவியேற்று நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஏன் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டீர்கள் என குரியன் ஜோசப்பிடம் கேட்கப்பட்டதற்கு, வழக்குகளை குறிப்பான அமர்வுகளுக்கு ஒதுக்குவதிலும், அரசியல் சார்பு கொண்ட நீதிபதிகளைத் தேர்வு செய்ததிலும், வெளிப்புற ஆதிக்கத்தின் குறியீடுகள் இருந்தன என்று கூறினார்.
கோப்புப் படம்
செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோக்கூர் உள்ளிட்ட 4 நீதிபதிகளின் unanimous(ஒருமனதான) முடிவுதான் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு. நீதிபதி செல்லமேஷ்வர் பத்திரிகையாளர் சந்திப்பு வழிமுறையை முன்னெடுத்தார். நாங்கள் மூவரும் அவருடன் ஒத்திசைந்தோம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் நீதிபதி ரஞ்சன் கோகாய், “சிபிஐ நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கைச் சுற்றி எழுந்த விவகாரங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை அவசியப்படுத்திவிட்டன” என்றார்.
நீதிபதி செல்லமேஷ்வர் இதனை, இந்திய வரலாற்றிலும், அதன் நீதித்துறை வரலாற்றிலும் நடைபெறும் தனிச்சிறப்பான சம்பவம் என விளித்தார்.
“சில சமயங்களில், உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் ஒழுங்குமுறைப்படி இருப்பதில்லை. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களாக இந்த நாட்டிற்கும், இந்நிறுவனத்திற்குமான பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. சில விசயங்கள் முறை தவறி நடக்கின்றன என்பதையும், அவர் அதனைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், தலைமை நீதிபதிக்கு எடுத்துரைக்க முயற்சித்தோம். துரதிருஷ்டவசமாக எங்களது முயற்சிகள் தோல்வியடைந்தன. உச்சநீதிமன்றம் தனது சமத்தன்மையை தொடர வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். சுதந்திரமான நீதித்துறை இல்லாமல், ஜனநாயகம் நீடிக்க முடியாது.” என்று ஜனவரியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நீதிபதி செல்லமேஷ்வர் பேசினார்
மேலும், தாங்கள் நால்வரும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அன்றே சந்தித்ததாகவும் தெரிவித்தார். “இன்று காலையில் நாங்கள் குறிப்பான வேண்டுகோளை முன்வைத்து தலைமை நீதிபதியை சந்திக்கச் சென்றோம். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் மறுத்து விட்டார்.” என்றார். ஆனால் என்ன குறிப்பான வேண்டுகோள் என்பதை அவர்கள் சொல்லவில்லை.
நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்கக் கோரிய மனு மீதான வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு ஒதுக்கியதில் இந்த நால்வரும் அதிருப்தியில் இருந்துள்ளனர். ஜனவரி 13 அன்று நடைபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வழக்கமான காலை சந்திப்பின் போது நீதிபதி செல்லமேஷ்வருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து அருண் மிஸ்ரா விலகிக் கொண்டார்.
அதன் பின்னர், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகளால் தலைமை நீதிபதிக்கு எதிராக ராஜ்யசபாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, “போதுமான ஏற்றுக் கொள்ளத்தக்க அடிப்படை இல்லை” எனக் கூறி ராஜ்யசபாவின் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
அந்த நேர்காணலில் நீதிபதி ஜோசப் கூறுகையில் மத அல்லது இன சிறுபான்மையினர் மத்தியிலிருந்து வரும் நீதிபதிகளின் மீது சூட்டப்படும் சிறுபான்மையின அடையாளம் எவ்வாறு அவர்களுக்குப் பெரும் தடையாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார்.
இந்த நிலை, இனி வரும் காலங்களில் இன்னும் மோசமடையலாம் என்ற தனது அச்சத்தையும் தெரிவித்தார். “சிறுபான்மையின சமூகத்திலிருந்து வரும் நபர் தகுதி மிக்கவராக இருந்தாலும், அவர் சிறுபான்மையினத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றனரே தவிர அவர்கள் கொண்ட தகுதியின் அடிப்படையில் பார்க்கப்படுவதில்லை. ஒரு பதவிக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதோடு அவர்களது சிறுபான்மையின அடையாளம் எப்போதுமே இணைக்கப்படுகிறது” என்றார் .
தனது சொந்த வாழ்விலேயே, தாம் உச்சநீதிமன்றத்தில் பதவியேற்றதும், தாம் சிறுபான்மையின அடிப்படையிலேயே அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் தாம் தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தாம் சிறுபான்மையின அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு பின்னர், தலைமை நீதிபதியாகி இருக்க முடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
அவர் கூறுகையில், “பதவியேற்ற தொடக்கத்தில் நான் சிறுபான்மையின அடையாளத்தோடே பார்க்கப்பட்டேனே ஒழிய தகுதியடிப்படையில் பார்க்கப்படவில்லை. ஆனால் எனது பணியின் முடிவில் என் பணிக்கான பலன் கிடைத்தது. முன்னாள் நீதிபதி சிரியக் ஜோசப்பின் பணி ஓய்வுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இருந்த காலியிடத்தை நான் நிரப்பியிருந்தால், 2012-ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றிருக்க முடியும். மதன் பி. லோக்கூர் மற்றும் ரஞ்சன் கோகாயை விட முன்னதாகவே சேர்ந்திருப்பேன். ஆனால் நான் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றேன்” என்றார்
சிறுபான்மையின அடையாளம் தகுதியை மறைக்கும் சிறுபான்மையின அடையாளம் குறித்த பிரச்சினையை தீர்க்க சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் நிலைமை மிகவும் மோசமாகும் என்றார். உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகள் தேர்வில், “ஒரு நபரின் சாதி, சமயம், மதம், பகுதி போன்றவை எதுவும் பார்க்காமல் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தால் மட்டுமே”, இந்தகைய பார்வையை சரிசெய்ய முடியும் என்று கூறினார்.
மேலும், “ஒரு நபர், பல ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியிலிருந்திருந்தால், அவர் சமூக, மத மற்றும் கலாச்சார வேறுபாடுகள் குறித்த தமது சார்புகளை, மனக்கசப்புகளை மறந்து விடுவார். அவரது கவனம் நீதி வழங்குவதில் மட்டுமே இருக்கும்” என்றார்.
பரந்துபட்ட சமூகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் பகுதிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும் என்று வருகையில், சில நெகிழ்வுகள் கொடுக்கப்படவேண்டும் என்றும் கூறினார். மேலும் “ஏழை மற்றும் பலவீனமான பிரிவினருக்கு குறைந்த பட்ச கவனமாவது கொடுக்க வேண்டும். நமது அரசியல் சாசனமும், பொருளாதாரத்தில், சமூகத்தில் பின்தங்கியவர்கள், ஏழைகள் மற்றும் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதனை அரசியல்சாசன கருணை என்றே நான் அழைப்பேன். இது ஒரு நபரை நீதிபதியாக தேர்ந்தெடுப்பதிலும், சொல்லப்போனால், ஒரு வழக்கை முடிவு செய்வதிலும் இருக்க வேண்டும்” என்றார்
நன்றி: ’தி வயர்’ இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு. தமிழாக்கம்: நந்தன்
ஆய்வுக்குழு விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள், நிலத்தடி நீர் ஆய்வுகள், காற்று மாசு ஆய்வுகள் என வலுவான ஆதாரங்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போதிலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, “தமிழக அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், ஆலையினை மூடுவதற்கு முன்பாக ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கருத்துக் கேட்கவில்லை; இது இயற்கை நீதிக்கு எதிரானது; ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் போதுமான காரணங்கள் இல்லை எனக் கூறி சில நிபந்தனைகளுடன் ஆலையை இயங்க அனுமதிக்கலாம்” என பரிந்துரைத்திருக்கிறது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக்குழு. ஆலையை மீண்டும் திறப்பதற்கான திரைமறைவு வேலைகள் அடுத்தடுத்து அம்பலமாகிவருகிறது.
உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது; தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சொல்லி விட்டது; நாங்கள் என்ன செய்வது எனக் கைவிரித்திடும் நாடகத்தை நடத்துவதற்காகவே, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் – உச்ச நீதிமன்றம் என செக்குமாடு போல் சுற்றுக்கொண்டிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால் ஏன் கொள்கை முடிவு எடுக்க மறுக்கிறது. ஆலை வேண்டாம் என மக்கள் பேசுவதற்கும், போராடுவதற்கும், ஏன் போலீசு அனுமதி மறுக்கிறது?
தமிழக அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி, தாமிர உருக்காலையால் ஏற்படும் சிக்கல்கள், ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கிய பாதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக மண்ணில் தாமிர உருக்காலைக்கு அனுமதி இல்லை எனக் கொள்கை முடிவெடுத்து அதை சட்டமன்றத்தில் சிறப்பு சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஊர்கள் தோறும் பணத்தை இறைத்து தனக்கு ஆதரவு உள்ளதாக கைக்கூலிகள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையின் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது எனப் பேசுவதற்கும் போராடுவதற்கும் அனுமதிக்க வேண்டும். என்று கேள்வியெழுப்பியுள்ள மக்கள் அதிகாரம் அமைப்பினர், ”தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு!” என்ற முழக்கத்துடன் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்தியுள்ளது.
சென்னை பாரிமுனையிலிருந்து சட்டமன்றத்தை நோக்கி மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் பேரணியாகப் புறப்பட்டு சென்றனர்.
1 of 4
போராட்டத்தில் கலந்துகொண்ட, பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ள போலீசு, அவர்களை தற்போது ராயபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.