வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : பாண்டநாடு – புத்தன்காவு பகுதிகளிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 6
கேரளாவில் பெய்த கனமழை அம்மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது என்பதற்கு சாட்சி பல லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் வடிந்த பிறகும் வீட்டுக்கு செல்லாமல் முகாம்களில் தங்கியுள்ளதே. முக்கியமாக பாண்டநாடு – பிரையார் பகுதி மற்றும் புத்தன்காவு பகுதியில் பம்பை ஆற்று வெள்ளம் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. #KeralaFlood #KeralaFloodRelief
வெகுநாட்களுக்குப் பின் வெயில் எட்டிப்பார்க்கிறது, சுற்றுப்புறம் சேரும் சகதியுமாய் வீடுகள்
இன்றுவரை இப்பகுதிகளுக்கு மின்சாரம் இல்லை. இப்பகுதிகளுக்கு மின்சாரம் வர குறைந்த பட்சம் 3 நாட்கள் ஆகும் என்கிறார்கள் மின்துறை ஊழியர்கள். பேருந்து செல்லவில்லை. ஆட்டோக்களும் இப்பகுதிகளுக்கு போக வேண்டும் என்றால் வர மறுக்கிறார்கள். இருப்பினும் மக்கள் நடந்தே தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து வீட்டை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களும் குறைந்தபட்ச வாழ்க்கை உத்திரவாதத்துடன் இருப்பவர்கள் மட்டும்தான்.
வீட்டின் முன்புறம் உலர வைக்கப்பட்டுள்ள மெத்தை, புத்தகங்கள் மற்றும் மரச்சாமான்கள்காய வைக்கப்பட்டிருக்கும் நாற்காலிகள்
வீட்டிற்கு சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு சரிவர இல்லாததால் மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் சோர்வாகவே காணப்படுகிறார்கள். தன்னார்வலர்களின் நிவாரண உதவியும் பெரிய அளவில் இல்லாததால் அரசு சார்ந்த உதவிகளை மட்டுமே அப்பகுதி மக்கள் தற்போது பெற்று வருகின்றனர். உயர் நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் வீதியில் வரும் நிவாரண வாகனங்களை எதிர்பார்த்தே வாழும் நிலைதான் உள்ளது. அன்றாட தொழிலாளிகள், ஏழைகள் நிலை வேறு. அவர்களுக்கு இன்னமும் முகாம் ஒன்றே கதி.. படிப்படியாக தண்ணீர் வடிந்தாலும் அவர்களின் கண்ணீர் மட்டும் குறையவில்லை.
அணில் குமார்முன்னாள் ராணுவ ஊழியர்
என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லாரும் இப்போ குன்னூரில் இருக்காங்க.. என்னோட பொண்ணுக்கு பிரசவ காலம் என்பதால அதை பார்க்க போயிட்டாங்க.. நான் மட்டும் இங்க வந்தேன். வந்தபோது இங்க பெரும் மழையில் மாட்டிக்கிட்டேன். விஷயம் கேள்விப்பட்டு எங்க சொந்தக்காரங்க எல்லோரும் பதறிட்டாங்க. நான் இருக்கேனா இல்லையான்னு கூட தகவல் சொல்ல முடியலை. இப்பவும் கரண்ட் எதுவும் இந்த பகுதிக்கு வரல. இந்த கெட்டதுலயும் ஒரு நல்லது என் மனைவி அங்க இருந்துட்டாங்க. பொருட்களையும் எல்லா சாதனங்களையும் மீட்பது கடினம்தான்.
ஜெர்ரிதெரு விளக்குகள் அமைக்கும் நிறுவனம் வைத்திருப்பவர்எங்க வீடு முழுதும் நீரில் முழ்கி விட்டது. எங்களோட மாமா வீட்டின் இரண்டாவது மாடியில் மொத்த முடும்பமும் தங்கிட்டோம். அங்கேயே அனைவரும் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். ஆர்மி ஹெலிகாப்டரிலிருந்து போட்ட உணவு பொருட்களை கொண்டு சமாளிச்சோம். வீட்டில் உள்ள பொருட்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்துக்கும் மேல நஷ்டம். மின்சாதன பொருட்கள், துணி, பர்னிச்சர் எல்லாம் போச்சி… இப்ப எங்களோட பணியாளர்களை கொண்டு வீட்டை சுத்தம் செஞ்சிட்டு இருக்கோம். நாலஞ்சி பேர் இந்த வேலையை செஞ்சாலும் ரொம்ப சிரமமா இருக்கு. இதுக்கே நாங்கள் சொந்தமாக ஜெனரேட்டர் ஏற்பாடு செஞ்சி மோட்டார் வச்சி தண்ணீர் இறச்சி மிஷினால சுத்தம் பண்ணிட்டு இருக்கோம். ஆனாலும் வேலை தீர்ந்தபாடில்ல.
பிலிப் போஸ்ரப்பர் தோட்ட முன்னாள் அதிகாரி பிலிப்-ன் வீட்டு வெளியில் காய வைக்கப்பட்டிருக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்
எங்களோட வாழ்நாளின் மொத்த சேமிப்பையும் ஒரு இரவில் வந்த பெரு மழை அழிச்சிட்டு போயிடுச்சி. இப்போ கேம்பில் இருந்து திரும்பி வந்து பார்த்தா பொருட்கள் எல்லாம் நாசமாயிருக்கு. வீட்டு கதவை திறக்குறதே ரொம்ப கஷ்டமாயிருந்தது. திறந்து பார்த்ததும் பெரிய நல்ல பாம்பு இருந்தது. நான் பொதுவா பாம்புகளை அடிக்க மாட்டேன். ஆனா வேற வழியில்ல. கிரசின் தெளிச்சி அடிச்சி அத தூக்கி போட வேண்டியதாயிற்று. அது ஒண்ணுதான்னு பார்த்தா, சிலாப்புல இன்னொரு பாம்பு இருக்கு. அதையும் அடிக்க வேண்டியதாக போச்சு. ரொம்ப மோசம்.
நாங்க இரண்டே பேர்தான் கணவன்-மனைவி. அறுபது வயசுக்கு மேல ஆனவங்க. எல்லாம் போச்சி. எனக்கு பென்சன் பணம் மட்டும்தான் வருமானம் என்பதால வீட்டுல சில தென்னை மரம், கோழி வளர்க்கிறதுன்னு செஞ்சேன். அறுபத்தி அஞ்சி கோழிக்கு மேல வளர்த்தேன். அது எல்லாம் செத்து போச்சு. அரசாங்கம் இவ்ளோ நடந்த பின்னாடியும் இழப்பீடு பத்தி பேசவே இல்ல. அணைகளை முழு கொள்ளளவு எட்டிய பிறகு திறந்து விட்டதுதான் இவ்ளோ பெரிய பாதிப்பு.
ஜோபி மற்றும் அவரது மாமியார்
என்னோட கணவர் வளைகுடா நாட்டுல வேலை செய்கிறார். நானும் என் மாமியார் என் குழந்தை, மூணு பேர்தான் இங்க இருக்கோம். மழை பெய்ய ஆரம்பிச்ச பின்னாடி இவ்ளோ வெள்ளம் வரும்னு நாங்க யாரும் எதிர்பாக்கல. இந்த திடீர் வெள்ளத்தால் பொருட்கள பாதுகாக்கிறது முடியாம போச்சி. எல்லா பொருட்களும் வீணாகி போச்சி. இது என்னோட சொந்த வீடு இல்ல. உறவினர் வீடு. எங்க வீட்டுல கொஞ்சம் சீரமைப்பு வேலை நடக்கிறதால. இங்க தங்கினோம். அங்க கொஞ்சம் பொருள், இங்க கொஞ்சம் பொருள்னு மொத்தமா போச்சி… இதெல்லாம் சீராக எத்தனை நாள் ஆகும்னு தெரியல. ஒரு சில தன்னார்வலர்கள் வந்து வீட்ட சுத்தம் பண்ண உதவி செஞ்சாங்க. அதுக்கு பின்னாடி இப்ப பொருட்களை எல்லாம் நாங்க சரி பண்ணிட்டு இருக்கோம்.
வேணுகோபால் மற்றும் கே.எஸ்.ராஜன்கரிங்காட்டுகாவு தேவி கோவில் அறங்காவலர்கள்
சேரும் சகதியுமாய் கோவில்
பம்பையாற்றின் கரையிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. இதுல பத்திரகாளியும், துர்கையும் இருக்காங்க. கோவிலுக்குள்ள வெள்ளம் புகுந்துடுச்சி. இப்ப கோவில் முழுக்கவே சேரும் சகதியுமா இருக்கு. அதை எல்லாம் சுத்தம் செய்யும் வேலையை தான் இப்ப செய்யுறோம். ஓணம் தொடங்குறதால குறைந்தது பூஜைகளை செய்யலாம் அப்படிங்கிறதால முடிஞ்சத செஞ்சிட்டு இருக்கோம். மழை வெள்ளத்துக்கு பிறகு பூஜை எதுவும் நடக்கவேயில்லை.
வினிஷ்குமார்பம்பையாற்றின் கரையோரம் அமைந்துள்ள முகாமில் தற்போது தஞ்சமடைந்திருப்பவர்
வயதான அப்பா, அம்மாவோட சேர்ந்து இந்த முகாமில் தங்கியிருக்கிறோம். எங்களுடைய வீடு முழுவதும் சேதமடைந்து விட்டதால் திரும்ப போக முடியவில்லை. இந்த மழையின் போது என்னோட அப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு ரொம்ப மோசமான நிலைக்கு போயிட்டார். எப்படியோ அவரை காப்பாத்தி வச்சிருக்கோம். இதெல்லாம் எப்ப சரியாகுமோ தெரியல.
பாண்டநாடு – பிரையார் பகுதியில் பரந்து விரிந்து ஓடும் பம்பை ஆறு
சின்னம்மா சாக்கோபுத்தன்காவு.
”என்பத்தைந்து வயதான என்னோட வாழ்நாள்ல இந்த மாதிரி வெள்ளைத்த பார்த்ததே இல்ல. வீடு முழுக்க தண்ணி. கூரை மண்டை வரைக்கும் ஏறிடுச்சி. ஓடுகள் எல்லாம் ஒடஞ்சி சேதமாகிடுச்சி. இப்ப வரை ஒரு பொருளும் எனக்கு நிவாரணமா கிடைக்கல. நாம் கேம்புக்கு போயி தங்கல. இங்க பக்கத்துலயே உறவின வீட்டுல தங்கிட்டேன். அதையே சொல்லி அதிகாரிகள் யாரும் எந்த பொருளும் தராம இருக்காங்க. சாப்பாடு கூட சர்ச்லதான் கொடுத்தாங்க.” என்று சொல்லிக்கொண்டே தன்னிடம் இருக்கும் பிஸ்கட்டுகளை நம்மிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். ”அடுப்பு எதுவும் இல்லை. இல்லனா டீ போட்டு கொடுத்திருப்பேன்” என்கிறார்.
உஷாபுத்தன்காவு.
இந்த வீடு கட்டி பதினெட்டு வருஷமாகுது. இந்த இடம் ரொம்ப பள்ளத்துல இருக்கு. மழை எப்ப வந்தாலும் முழங்கால் அளவுக்குதான் தண்ணி வரும். ஆனா இப்ப தரையில இருந்து 8 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் வந்துடுச்சி. மழை கொஞ்சம் அதிகமா வரும்போதே நான் கீழ இருந்த எல்லா பொருளையும் எடுத்து மாடி மேல வச்சிட்டு உறவினர் வீட்டுக்கு போயிட்டேன். வந்து பார்த்த பிறகு எல்லாம் சாதனங்களும் நனைஞ்சி வீணாகி போயிருக்கு. வீட்டுல இப்ப ஒரு சாதனமும் மிஞ்சல.. எனக்கு மகன் மகள் யாரும் இல்ல. எப்படி இதெல்லாம் சரிகட்ட போறன்னு தெரியல…!
வீட்டின் மேற்கூரைகளின் ஓடுகள் அளவிற்கு வெள்ளம் பாய்ந்திருக்கிறது
வாசவன்வயது 75, புத்தன்காவு
நானும் என்னோட மனைவியும் மட்டும்தான் இருக்கோம். மழை வெள்ளம் வர ஆரம்பிச்சதுமே.. நாங்க முகாமுக்கு போயிட்டோம். திரும்பி வந்து பார்க்கும்போது பொருட்கள் எல்லாம் வீணாகி போயிருந்தது. ரொம்ப நாசமாகி போயிருக்கதால எங்களால சுத்தம் செய்ய முடியல… அவ்ளோ மண்ணு,குப்பை இருக்கு. அதனால தன்னார்வலரும், சர்ச்ல ஏற்பாடு செய்த ஆட்களும் வந்து சுத்தம் பண்ணிட்டு இருக்காங்க. இதெல்லாம் இனிமே எப்படி சம்பாதிக்க போறனோன்னு தெரியல.
செபாஸ்டின்பாதிரியார் மற்றும் பர்னாபாஸ்கேரளா பல்கலைக்கழக மாணவர்
சர்ச் சார்பா பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் வேலைகள்ல ஈடுபட்டிருக்கோம். ஜெனரேட்டர், மோட்டாரையும் கொண்டு போயி தண்ணிய வெளில இறச்சிட்டு கிணத்து தண்ணிய கொண்டு சுத்தம் பண்ணி தருகிறோம். அது மட்டுமில்லாம கிணத்தையும் சுத்தம் பண்ற வேலைய நாங்க செய்யுறோம். இதெல்லாம் எங்க சக்திகுட்பட்டுதான் செய்யுறோம். பல பகுதிகள்ல பாதிப்பு இருக்கு. அதையெல்லாம் சுத்தம் செய்ய அதிக ஆட்கள் தேவைப்படுறாங்க. என்னோட கல்லூரி இருக்க இடத்துல எதுவும் பெரிய அளவில் பிரச்சினை இல்ல. ஆனாலும் நாங்க மாணவர்கள் சார்பா பொருட்களை சேகரிப்பது, நிவாரண மருந்துகளை சேமிக்கிறது போன்ற வேலைகளை செஞ்சேன். இப்பதான் நான் எங்க வீட்டுகிட்டயே வந்திருக்கேன்.
சந்தோஷ் மற்றும் அவரது குடும்பம். நீர்விளாகம் பகுதி
சினு கேட்டரிங் சர்விஸ் என்ற பெயரில் இங்க கடை வச்சிருக்கேன். அரிசி மூட்டைகள், தட்டு, பேப்பர் ரோல், தேநீர் கப்புகள், என பல பொருட்கள் நாசமாகிட்டது. கேட்டரிங் உணவு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்துக்கு நஷ்டம். இது இல்லாம வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாமும் நாசமா போயிடுச்சி” என்று சொல்லிக் கொண்டே, “நீங்க ஏதாவது நிவாரணம் தருவீங்களா?” என்று ஏக்கமாகக் கேட்டார்.
வினவு களச் செய்தியாளர்கள்பாண்டநாடு, புத்தன்காவு, ஆலப்புழா மாவட்டம், கேரளா.
தூத்துக்குடி சதி வழக்கு : தேசிய பாதுகாப்புச்சட்டம் , குண்டாஸ் சிறை சென்ற போராளிகளுக்கு வரவேற்பு ! விடுவித்த வழக்கறிஞர்களுக்கு நன்றி!
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது கடும் அடக்குமுறையை அரசு மேற்கொண்டது. அதனால் பலர் குண்டாஸ் வழக்கிலும் என்.எஸ்.ஏ.விலும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருமே தமிழக மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஆதரவாலும் வழக்கறிஞர்களின் இடைவிடாத பணியால் விடுவிக்கப்பட்டுளனர். தேசிய பாதுகாப்புச்சட்டம், குண்டாஸ், சிறை சென்ற போராளிகளுக்கு வரவேற்பும் விடுவித்த வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் அரங்கக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அரங்கக்கூட்டம் 26.08.2018 | ஞாயிறு மாலை 4 மணி, சென்னை நிருபர்கள் சங்கம்,சேப்பாக்கம், சென்னை._____________________________________________________________________
வரவேற்புரை : தோழர் மருது, செய்தித் தொடர்பாளர், மக்கள் அதிகாரம்.
தலைமை : தோழர் வெற்றிவேல் செழியன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
கருத்துரை : வழக்கறிஞர் அரிராகவன், மாவட்டச்செயலாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி.
வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், மாவட்டச்செயலாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.
பேராசிரியர் கருணானந்தன், மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவர், விவேகானந்தா கல்லூரி.
தோழர் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.
தோழர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
தோழர் முகமது அனஸ், என்.எஸ்.ஏ., சிறை சென்றவர், நெல்லை.
தோழர் சரவணன், என்.எஸ்.ஏ. சிறை சென்றவர், கோவில்பட்டி.
தோழர் மகேஷ், குண்டாஸ் சிறை சென்றவர், குமரெட்டியாபுரம், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.
உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு விலை கொடுத்த நாடுகளில் முக்கியமானது கிரேக்கம். கிரேக்க பொருளாதாரம் உலகமயமாக்கலில் பிணைக்கப்பட்டு, கிரேக்க உழைக்கும் மக்களை பணயம் வைத்து அந்நாட்டு முதலாளிகளும் ஐரோப்பிய வங்கிகளும் நடத்திய சூதாட்டம், 2008-இல் தொடங்கிய உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் போது கிரேக்க நாட்டை திவால் நிலைக்குத் தள்ளியது. வயதானவர்களின் ஓய்வூதியங்கள் காணாமல் போயின, வங்கிகள் திவாலாகின, வேலை இழப்புகள் அதிகரித்தன, வணிகம் படுத்து விட்டது.
நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக ஐரோப்பிய/அமெரிக்க நிதி நிறுவனங்கள் முதியவர்களின் ஓய்வூதியங்களை மறுசீரமைத்து வெட்டுவது, அரசு வழங்கும் பொதுச் சேவைகளை குறைப்பது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்தன. அவற்றை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ‘ஜனநாயக’ அரசை அவமானப்படுத்தி தமது கட்டளைக்கு பணிய வைத்தன. இதன் விளைவாக அந்நாட்டு மக்களில் பலர் தமது வாழ்வாதாரங்களை இழந்து கடும் நெருக்கடியில் சிக்கினர்.
கிரேக்கம் பற்றிய குறிப்பு : இந்நாடு கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு தீவுகளைக் கொண்டது. இதன் தலைநகர் ஏதென்ஸ். மக்கள் தொகை சுமார் 1.1 கோடி, தனிநபர் ஆண்டு வருமானம் $29,030.
கிரேக்க நாடு தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு இந்தக் கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டிகளை பார்க்கவும்.
பரோலில் விடப்பட்டிருக்கும் கிரேக்க பொருளாதாரம் மூவரணியின் மீட்பு திட்டம் என்று அழைக்கப்படும் சிறையிலிருந்து கிரேக்கம் (கிரீஸ்) சட்டபூர்வமாக விடுவிக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க அரசு அதன் வரி வருவாயை எப்படி செலவிட வேண்டும் என்பது பற்றியும், அது எவ்வளவு கடன் வாங்கலாம் என்பது பற்றியும் யூரோ குழு, ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகியவை அடங்கிய மூவரணியின் கட்டுப்பாடுகளும், வெளிப்படையான உத்தரவுகளும் முடிவுக்கு வந்திருக்கின்றன.
ஆனால், கிரேக்க நாட்டின் முழுமையான விடுதலையாக இதை பார்க்க முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, கிரேக்க அரசு யூரோ குழுவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது. அதன்படி ஓய்வூதிய திட்டத்திலும், அரசு வழங்கும் பொது சேவைகளிலும் ‘சீர்திருத்தங்கள்’ செய்வது உள்ளடங்கிய கறாரான செலவு குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக, கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 180 சதவீதமாக உள்ள அரசு கடனை திரும்பக் கட்டுவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட கடன்-நீட்டிப்பு திட்டத்தின் படி, கிரேக்கம் இரண்டாவது மீட்பு திட்டத்தின்கீழ் பெற்ற 9,700 கோடி யூரோ ($11,200 கோடி) மதிப்பிலான கடன்களை திருப்பிக் கட்டுவதற்கு இன்னும் 10 ஆண்டு அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதாவது, அந்தக் கடன்கள் மீதான வட்டியையும், அசலையும் கட்டுவது 10 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்படுகிறது. கட்டாமல் நிலுவையில் இருக்கும் பழைய கடன் பாக்கிகளை தீர்ப்பதற்கும், எதிர்வரும் கடன் கட்டும் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும், 2400 கோடி யூரோ கையிருப்பை ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு 1500 கோடி யூரோ புதிய கடன் கொடுப்பதாக கடன் காரர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோர்பு நகரம்.
அதாவது, யூரோ குழுவுக்கு கிரேக்கம் கொடுக்க வேண்டிய கடன் தொகையை அந்நாடு 2032 வரை கட்ட வேண்டியதில்லை. இது நல்ல விஷயமாக தெரியலாம். ஆனால், கடன் சுமை எந்தக் குறைப்பும் இல்லாமல் தொடர்கிறது.
“கடன் தள்ளுபடி செய்யாமல் கடன் கட்டும் தவணையை மட்டும் தள்ளிப் போடுவதன் விளைவாக ஐரோப்பிய அரசுகள் கிரேக்க நாட்டிடமிருந்து வசூலிக்க வேண்டிய கடன் 2018- இறுதியில் எந்த அளவில் இருக்கும் என்ற இப்போதைய மதிப்பீட்டை விட 50%-க்கும் மேல் உயரும். இதன் விளைவாக 22-ம் நூற்றாண்டு வரையிலும் கிரேக்கம் ஐரோப்பிய கடன் காரர்களுக்கு கடன் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்”. என்று சொல்கிறது ஒரு ஆய்வு.
இப்போது, வெளியாகியிருக்கும் இன்னொரு அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், மூவரணியின் ஒரு பகுதியாக கிரீசுக்கு கடன்களை வழங்குவதற்கு பொறுப்பாக இருந்த ஐ.எம்.எஃப் அதிகாரிகள், ஐ.எம்.எஃப்-ன் அனைத்து விதிகளையும், நடைமுறைகளையும் மீறியதோடு, ஐ.எம்.எஃப் இயக்குனர் குழுவிடமிருந்தும் பல தகவல்களை மறைத்திருக்கின்றனர். இது ஐ.எம்.எஃப்-ன் சுயேச்சையான மதிப்பீட்டு அலுவலகம் தயாரித்த ஒரு அறிக்கையில் வெளியாகியிருக்கிறது. இந்த அலுவலகம் ஐ.எம்.எஃப் மேலாண்மை இயக்குனர் கிரிஸ்டீன் லகார்ட் மற்றும் அவரது அதிகாரிகளை பைபாஸ் செய்து அதன் செயல்பாட்டு இயக்குனர்களான அரசுகளின் பிரதிநிதிகளுக்கு அறிக்கையை அனுப்பியிருந்தது. கிரீஸ், போர்ச்சுக்கல், அயர்லாந்து நாடுகளுக்கான பொருளாதார மீட்பு திட்டங்களில் அந்நாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட ஐ.எம்.எஃப் நிதி ஒதுக்கீட்டை விட 2000% அதிகம் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது. அதிகாரபூர்வ வரம்பான 435%-ஐ இது அப்பட்டமாக மீறியிருந்தது.
இப்படி விதிமுறைகளை மீறியது “இந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமே” என்ற ஐ.எம்.எஃப் அதிகாரிகளின் நல்லெண்ணத்தால் நடக்கவில்லை. இதன் நோக்கம், திவாலாகிக் கொண்டிருந்த இந்த கடன் வாங்கிய நாடுகளுக்கு கடன் கொடுத்திருந்த ஐரோப்பிய வங்கிகளை திவால் ஆகாமல் பாதுகாப்பது ஆகும். பிரெஞ்சு, ஜெர்மன், பிரிட்டிஷ் வங்கிகள் நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டு அரசுகளின் கடன் பத்திரங்களை, அவை மிக உயர்ந்த வட்டி வீதத்தை ‘ஈட்டுவதால்’ வாங்கின. அதன் மூலம் பெருமளவு லாபத்தை குவிப்பதுதான் அவற்றின் நோக்கம். இந்நாடுகள் தங்கள் கடன்களை கட்டத் தவறியிருந்தால் ஐரோப்பிய வங்கி அமைப்பே குலைந்து போகும் அபாயம் இருந்தது. இந்த அபாயத்திலிருந்து முதலாளித்துவத்தை (நிதி மூலதனம்) காப்பாற்றுவது ஐ.எம்.எஃப்-க்கு மிக முக்கியமானது, அதை சாதிக்கும் முயற்சியில் விதிமுறைகளை மீறி, அனைத்து ஐரோப்பிய நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்நிலையையும் துயரத்தில் தள்ளி பண முதலைகளின் பணத்தை மீட்டுக் கொடுத்தனர்.
ஐ.எம்.எஃப் மீதான மதிப்பீட்டு அறிக்கை இதை வெளிப்ப்படையாக சொல்கிறது, “வங்கித் துறை வாராக் கடன்கள் சர்வதேச அளவில் பரவி விடாமல் தடுப்பது அவசியமான ஒரு பொறுப்பு என்றால், அதைத் தடுப்பதற்கான செலவை, அதனால் பயனடையும் சர்வதேச சமூகம் பகுதியளவாவது சுமக்க வேண்டும்”. [அதாவது, வங்கிகளின் ஊதாரித்தனத்துக்கும், லாப வேட்டைக்கும் விலையை உழைக்கும் மக்கள் கொடுக்க வேண்டும்.]
அதாவது, யூரோ கடன் நெருக்கடி வெடித்துக் கிளம்பிய போது வங்கிகள் தாம் கடன் கொடுத்த முழு தொகைகளையும் திரும்பிப் பெறுவதையும் இலாபத்தை தக்க வைத்துக் கொள்வதையும் ஐ.எம்.எஃப், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மூலம் உறுதி செய்து கொண்டன – எனவே வங்கிகள் தமது பணத்தை இழக்கும் எந்த அபாயமும் இல்லாமல் உறுதி செய்யப்பட்டது. [அதாவது, லாபம் எங்களுக்கு ரிஸ்க் பொதுமக்களுக்கு என்பது நிதி மூலதனத்தின் மந்திரம்]
இதற்கிடையில் அயர்லாந்து, போர்ச்சுக்கீசிய, கிரேக்க குடிமக்கள் இந்த மூவரணியின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக சிக்கன நடவடிக்கைகளை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக எதிர் கொண்டனர். இதை அப்போதைய கிரேக்க நிதி அமைச்சர் யானிஸ் வருஃபகிஸ் இதை “நிதி சித்திரவதை (financial waterboarding)” என்று அழைத்தார்.
கடனை திரும்பக் கட்டுவதற்கான கிரேக்க நாட்டின் மீதான சுமை 10 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டிருந்தாலும். இன்னும் ஒரு மலை போன்ற கடன் சுமை தொடர்கிறது. பொதுச் சேவைகளில் வெட்டு, வரி அதிகரிப்பு போன்ற அரசின் கழுத்தை நெரிக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஏதுவான நிதிநிலை அரசிடம் இல்லை, ஏற்கனவே செய்த வெட்டுகளை குறைத்து சேவைகளை மீண்டும் வழங்குவது பற்றி பேசவே வேண்டியதில்லை.
கடந்த மே மாதம் நான் சொன்னது போல, “நிதர்சனம் என்னவென்றால், கிரேக்க பொருளாதாரத்தின் நிஜ வளர்ச்சி கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆண்டுக்கு 2%-க்கு அதிகமாக போவது சாத்தியமற்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக உள்ள கடன் சுமை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரிக்கிறது. அதைக் கட்டுவதற்கு மீண்டும் கடன் வாங்க வேண்டும், சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் கடன் காரர்கள் கைப்பற்றிக் கொண்டு, உயிர் வாழ்வதற்கு அவர்களையே சார்ந்திருக்கும் கடன்பட்டவரின் சங்கிலியிலிருந்து கிரேக்க நாடு விடுபடுவதற்கு வழியே இல்லை.”
கிரேக்க நாட்டு மக்களின் வாழ்வில் 8 ஆண்டுகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. 2010-க்குப் பிறகு பொருளாதாரம் நான்கில் மூன்று பங்காக சுருங்கியிருக்கிறது; குடிமக்களின் வருமானம் மூன்றில் இரண்டாக குறைந்திருக்கிறது. வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களைத் தவிர மீதம் இருப்பவர்கள் மத்தியில் வேலையின்மை 20 சதவீதம் ஆக உள்ளது.
“நெருக்கடிக்கு முன்பு நன்றாக செயல்பட்ட நிறுவனங்களில் சுமார் 20 சதவீதம் தம்மை வெற்றிகரமாக புதுப்பித்துக் கொண்டு செயல்படுகின்றன. இன்னொரு 40 சதவீதம் கடனை அடைக்கும் அளவுக்கு செயல்பட்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அதற்கு மேல் லாபம் ஈட்டுவதில்லை.” என்கிறார் ஏதென்ஸ் சேம்பர் ஆஃப் சிறு நிறுவனங்களின் தலைவரும், முதிர்ந்த தொழில் முனைவருமான பாவ்லோஸ் ரவனிஸ். இவற்றைத் தவிர 40 சதவீதம் நிறுவனங்கள் நடமாடும் பிணங்கள் என்று அழைக்கும் நிலையில் உள்ளன. “அவற்றால் வரி கட்டவும் முடிவதில்லை, வங்கிகளிடம் வாங்கிய கடனையும் அடைக்க முடிவதில்லை” என்று சொல்லும் அவர், “பெரும் அளவு நிதியை முதலீடு செய்ய தயாராக ஒரு முதலீட்டாளர் முன் வந்தாலும் இந்த நிறுவனங்களில் பாதிக்கும் குறைவானவற்றையே மீட்க முடியும்.”
கிரேக்க பொருளாதார வளர்ச்சி 2%-ஐ விட குறைந்தாலோ, உலக முதலாளித்துவம் புதிய பொருளாதார தேக்கத்தில் விழுந்தாலோ, கடன் அடைக்கும் சுமை மீண்டும் கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கும்.
நன்றி : new-democratsதளத்தில் வெளியான கட்டுரை
_______________________________________________________
முதலாளித்துவ சூதாட்டத்திற்கு இரையாகி மீள முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கும் கிரேக்க நாடு அதே சூதாட்டத்துக்குள் கண்ணை திறந்து கொண்டே போய் விழும்படி தூண்டும் நமது நாட்டின் முதலாளிகளையும், அவர்களுக்கு சொம்படிக்கும் மன்மோகன் சிங், மோடி போன்ற அரசியல்வாதிகளையும், அவர்களை ஆதரித்து புகழ்பாடும் முதலாளித்துவ அறிவாளிகளையும் முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்துகிறது.
கிரேக்க பொருளாதார நெருக்கடி பற்றிய கூடுதல் விபரங்களுக்கு
பெண்கள் கர்ப்பமுற்று, கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவிக்கும் நேரத்தில் ஏற்படும் இடர்களைக் களைந்து, அடி வயிற்றில் அறுவை செய்து கர்ப்பப்பையில் இருந்து குழந்தையை எடுக்கும் சிகிச்சை முறைக்கு பெயரே சிசேரியன் ஆகும்.
இதை மருத்துவ வழக்கில் LSCS என்போம். அதாவது lower segment caesarean section என்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மாதிரிப்படம்
இந்த சிகிச்சை முறை பன்னெடுங்காலமாக வழக்கில் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் கிபி 300-களில் மவுரிய அரசு ஆட்சியில் இருக்கும் போது
பிந்துசாரரின் தாயார் கர்ப்பமாக இருக்கையில், தவறாக விசத்தை உண்டு இறந்து விடுகிறார்.
சந்திரகுப்தரின் ஆசிரியரும் அரசின் ஆலோசகருமான சாணக்கியர் ராணியின் வயிற்றை கிழித்து மகவை வெளியே எடுத்ததாக வரலாறு கூறுகிறது. இதே முறை ரோமானிய அரசுகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது
இந்த சிகிச்சை முறையினால் நாம் அடைந்த நன்மை என்ன?
சுமார் 40 – 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த சிசேரியன் நமது தமிழ்நாட்டில் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. கடந்த 30 வருடங்களாக இந்த சிகிச்சை நமது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது.
வீட்டில் பிரசவம் நடக்கையில் பிரசவத்தின் போது நிகழும் பல பிரச்சினைகளுக்கு நமக்கு வழி தெரியாமல் இருந்தது.
கர்ப்ப கால பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படும் பல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு குழந்தை மற்றும் தாயின் உயிரைக்காக்க முன்னெச்சரிக்கையாக சிசேரியன் செய்யப்படும்.
காரணங்கள் பல அவை என்னென்ன?
1. தாயின் இடுப்பெலும்பு குறுகிய தன்மை இதை cephalo pelvic disproportion என்றோம். குழந்தையின் தலை கீழே இறங்குவது தடைபடும் இதனால் பிரசவம் நிகழாமல் குழந்தை உள்ளே இறந்து அதன் விளைவாய் தாயும் இறப்பாள்.
பொதுவாக 140 – 145 CM அளவுக்கு கீழ் வளர்ச்சி உள்ள தாய்மார்களுக்கு இடுப்பெலும்பு குறுகலாக இருக்கும். இன்னும் வளர்ந்த தாய்மாரில் சிலருக்கும் கர்ப்ப காலத்திலும் இடுப்பெலும்பு அளவு குறுகலாக இருப்பது கண்டறியப்படுகிறது. சிலருக்கு குழந்தையின் தலை பெரிதாக இருப்பதால் இந்த நிலை ஏற்படும்
2. அசாதாரண குழந்தை இருப்பு நிலை ( abnormal presentation) குழந்தையின் தலை கீழ் இருப்பது சாதாரண நிலை 100-க்கு 95 சதவிகிதம் சாதாரண நிலையிலும் 5 சதவிகித குழந்தைகள் குதம் கீழாகவோ, பக்கவாட்டில் படுத்துக்கொண்டோ இருக்கும்.
இத்தகைய நிலைமைகள் ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டு இறுதிவரை அவை தலைகீழ் நிலைக்கு வரவில்லையெனில் சிசேரியன் மூலம் எடுக்கப்படுகின்றன.
3. தாய்க்கு ரத்த கொதிப்பு மற்றும் அதை ஒட்டிய பிரசவத்தின் போது வரும் வலிப்பு நோய் ( இதை eclampsia) என்று கூறுவோம். இத்தகைய கர்ப்பிணிகளை தொடர் சோதனைகள் மூலமே கண்டறிகிறோம்.
இவர்கள் பிரதிமாதம் மருத்துவரை சந்தித்து ரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டு ஸ்கேன் மூலம் குழந்தையின் நலத்தை சோதித்து ரத்த அழுத்தம் மாத்திரைகள் கொண்டு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
இந்தநோயினால் பிரசவமாகும் போது வலிப்பு வந்து பல தாய்மார்களின் இழப்புக்கு காரணமாக இருப்பதால் இத்தகையோருக்கு அவர்களது கர்ப்ப கால முடிவில் சிசேரியன் செய்து குழந்தை எடுக்கப்படுகிறது
4. கர்ப்ப காலத்தில் நீரிழிவு தாய்மார்களுக்கு வருவதை கண்டறிந்து அவர்களுக்கு உணவு முறை மாற்றம் மற்றும் இன்சுலின் சிகிச்சை அளிக்கப்படுகிறது இத்தகையோரின் குழந்தை சாதாரண நிலையை விட அதிகமாக வளரும் தன்மையுடன் இருக்கும் இதை macrosomia என்றோம்.
இத்தகைய குழந்தைகள் பிறக்கையில் 4 முதல் 5 கிலோவுடன் தலை பெரிதாக இருக்கும் ஆகவே இத்தகைய தாய்மார்களும் சிசேரியன் செய்யபடும் வாய்ப்பு அதிகமாகிறது.
5. இரட்டை கர்ப்பம் கொண்ட தாய்மார்களுக்கு சிசேரியன் செய்யப்பட்டு குழந்தைகள் எடுக்கப்படுகின்றன இதனால் குழந்தைகள் இறப்பு குறைகிறது.
தாய்மார் இழப்பும் குறைகிறது.
6. தாய்மார்களுக்கு இதய நோய் இருப்பின் அவர்களால் பிரசவகால வலி மற்றும் ஆற்றல் விரயத்தை தாக்குப்பிடிக்க முடியாது. ஆகவே அவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிசேரியன் செய்யப்படுகிறது.
இவையனைத்தும் தாய் சேய் உயிரை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிசேரியன் செய்ய காரணங்களாக அமைகின்றன.
அடுத்த பாகத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் இடற்பாடால் சிசேரியன் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.
காதல் அனைவரையும் ஏதேனுமொரு சமயத்தில் கிளர்ச்சி கொள்ள வைக்கும் ஒன்று. பதின்மத்தின் ஒருதலைக் காதலுக்காகவோ, திருமணத்தில் முடிவுறாத காதலுக்காகவோ, ‘உண்மையான காதலை’த் தேடியோ பெரும்பாலான மனங்கள் ஏங்கித் தவிக்கின்றன. கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்த தினத்தில் அவருடைய கோட்பாடுகளை விவாதிப்பதைக் காட்டிலும் ஜென்னியுடனான அவருடைய காதலின் மகத்துவத்தை சொன்ன பதிவுகளைத்தான் முகநூலில் அதிகம் காணமுடிந்தது. காதலைக் கொண்டாட எல்லோருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. இடது, வலது, லிபரல் என வேறுபட்ட கருத்துடையவருக்கும் காதல் மிகக் கிளர்ச்சியூட்டும் வார்த்தை! எது காதல்? அது எப்படிப்பட்ட தன்மையில் இயங்குகிறது? காதல் உணர்வு ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானதா?
மிகைப்படுத்தப்பட்டு, பதின்மத்தின் உயிரியல் தேவைகளை புனிதத்துடன் முன்வைக்கும் ’காதல்’ உதாரணங்கள்தான் நம் முன்னே மலைபோல் குவிக்கப் பட்டிருக்கின்றன. தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் ‘காதல்’களில் ஆண் நாயகர்கள் வெள்ளையான, தங்களைவிட உயரம் குறைவான, நாகரிக உடைகள் அணிந்த, ஒல்லியும் குண்டுமல்லாத பெண்களையே காதலிக்கிறார்கள். புரையோடிப்போன ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்தும் களமாக தமிழ் சினிமாக்கள் உள்ளன. ஒரு பெண்ணை துரத்தித் துரத்தி துன்புறுத்தி ‘காதல்’ கொள்ள வைக்கும் நவீன ‘கிருஷ்ணர்’கள் தமிழ் சினிமாவில் நாயகர்களாக உலவுகிறார்கள். தன் காதலை ஏற்காத பெண்களை குத்துடா, கொல்லுடா என்னும் போது தியேட்டரில் விசில் ஆராவாரம் காதை அடைக்கும்.
‘அடிடா அவளை கொல்றா அவளை’ என்ற நடிகர் தனுஷின் புகழ்பெற்ற பாடலை பகடி செய்யும் விதமாக சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’-இல் ‘அடிடா அவனை’ என நாயகி பாடுவதாக ஒரு பாடல் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலின் போது திரையரங்கு ஆழ்ந்த அமைதியில் இருந்தது.
‘அடிடா அவளை கொல்றா அவளை’ என்ற நடிகர் தனுஷின் புகழ்பெற்ற பாடலை பகடி செய்யும் விதமாக சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’-இல் ‘அடிடா அவனை’ என நாயகி பாடுவதாக ஒரு பாடல் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலின் போது திரையரங்கு ஆழ்ந்த அமைதியில் இருந்தது. விசிலடிக்கும் ‘ரசிகர்’கள் இதை ரசிக்கவில்லை என படம் பார்த்த பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்கள். தமிழ் சினிமாவும் அதில் தன்னை பிணைத்துக் கொண்டிருக்கும் சமூகமும் ஒன்றைப் பார்த்து ஒன்று பிரதியெடுத்துக்கொள்கின்றன. இந்த பிரதியெடுப்பில் முதன்மையானது ஆணாதிக்க சிந்தனை.
ஒரு லும்பன் (வேலையற்ற-பெரியோரை மதிக்காத-சதா குடியும் கூத்துமாக திரியும் ஒருவன்) ஒரு கல்லூரி பெண்ணை ஈவ் டீசிங் செய்கிறான், பின் அந்தப் பெண் அவனை காதலிக்கிறாள். அந்தக் காதலுக்காக தன் படிப்பை, வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறாள். பல இடர்ப்பாடுகளுக்கிடையே இருவரும் திருமணம் செய்துகொள்வதாக ஒரு சினிமா முடியும். இது பொதுவானதொரு சினிமா டெம்ப்ளேட். இதில் ஆண்-பெண்ணின் பின்னணி, ஊர் இவைகளை மாற்றி பல சினிமாக்களை உருவாக்கிவிடலாம். இப்படியான சினிமாக்கள் முக்கியமான இரண்டு விஷயங்களுக்காக எடுக்கப்படுகின்றன. முதலாவதாக திரையரங்குக்கு வரும் பதின்பருவத்தினருக்காக எடுப்பது, இரண்டாவது பதின்பருவ அல்லது இருபது வயதுக்குள்ளான காதல்களைக் காட்டும்போது பெண்களுக்கு அரைகுறை ஆடை அணிவித்து அதிக பாலுணர்வு தூண்டும் காட்சிகளை வைக்க முடியும். சமூகவியல் நோக்கில் சொல்லப்போனால் காதலை பண்டமாக மாற்றும் நுகர்வுத்தன்மையை விதைக்க உதவுபவையே இத்தகைய சினிமாக்கள்.
சமூகவியல் பேராசிரியர் இவா இலோஸ் (Eva Illouz) தன்னுடைய ‘Consuming the romantic utopia: Introduction to a political economy of love’ என்ற நூலில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அமெரிக்க சமூகத்தில் நுகர்வை மையப்படுத்திய கற்பனாவாத காதலை பிரபலப்படுத்த சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் எப்படி பங்களித்தன என்று குறிப்பிடுகிறார். முதலாளித்துவ கலாச்சாரத்தில் நவீன காதல் எப்படி பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது அதன் நடைமுறைகள் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தனது நூலில் விவரிக்கிறார் இவா இலோஸ்.
“மரபார்ந்த இணைந்திருத்தல் என்பதற்கு பதிலாக டேட்டிங் என்பது அறிமுகமாகிறது. நுகர்வை மையப்படுத்திய ஓய்வுநேர செயல்பாடுகள் (உணவகங்களுக்குச் செல்லுதல், சுற்றுலா, சினிமாவுக்குச் செல்வது, வாகனங்களில் பயணிப்பது போன்றவை) டேட்டிங்கின் முக்கிய வழிமுறைகளாக உருவாக்கப்பட்டன என்கிறார் இவா. வெகுஜென பரப்பில் விளம்பரங்கள், சினிமாக்கள் மூலம் ‘நுகரும் இணைகளாக’ அவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். விளம்பரங்களும் நடுத்தர வர்க்கத்தினர் வாசிக்கும் இதழ்களும் முன்வைக்கும் மிகைப்படுத்தப்பட்ட காதலும் ஓய்வை மையப்படுத்திய சந்தையும் ஒன்றுக்கொன்றை கருவியாக பயன்படுத்திக்கொண்டன. ஓய்வை மையப்படுத்திய சந்தை, காதல் நடத்தையை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. அதுபோல, இந்தப் பொருட்களை நுகர்வதன் மூலம் இதுதான் ‘காதல்’ என உறுதிப்படுத்தப்படுகிறது. சந்தையை அடிப்படையாகக் கொண்ட காதல் இத்தகைய கற்பனாவாதத்தின் அடிப்படையில் இயங்குவதாக இவா தன்னுடைய கருத்தை முன்வைக்கிறார்.
நுகர்வின் வழியாக உடோப்பிய – கற்பனாவாத காதலை பெற்று, திருமணத்தின் மூலம் அது நிறைவை எட்டுவதாக திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லப்படுகின்றன. லும்பனை திருமணம் செய்துகொண்ட பெண்ணின் வாழ்வு எப்படி இருக்கும்? லும்பனை மட்டுமல்ல, இளவரசனை திருமணம் செய்து கொண்ட சிண்டரெல்லாக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூட எவரும் கவலைப்படுவதில்லை.
‘‘பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் மையமாக காதல் இருக்கிறது. ஒரு படுகுழியைப் போல, நரகத்தைப் போல, தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதைப் போல பெண்களுக்கு எதிராக காதல் பயன்படுத்தப்படுகிறது”
புரட்சிகர பெண்ணியவாதியான ஷுலமித் ஃபயர்ஸ்டோன் (Shulamith Firestone, ‘The dialectic of sex: the case for feminist revolution’ என்ற நூலின் ஆசிரியர்) தன்னுடைய நூலில், ‘‘பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் மையமாக காதல் இருக்கிறது. ஒரு படுகுழியைப் போல, நரகத்தைப் போல, தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதைப் போல பெண்களுக்கு எதிராக காதல் பயன்படுத்தப்படுகிறது” என்கிறார்.
ஷுலமித் தன்னுடைய நூலில் The Culture of Romance என்ற தலைப்பில் சொல்கிறார், “கற்பனைமயமாக்கப்பட்ட காதல் (ரொமாண்டிக்)அதிகாரத்தின் பார்வையில் சிதைந்துபோய் பாலின வர்க்க அமைப்பை வலுப்படுத்துகிறது. பெண்கள் உளவியல் ரீதியாக ஆண்களை சார்ந்திருக்க சமூக, பொருளாதார ஒடுக்குமுறைகள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிவோம். நவீன உலகில் சமூக-பொருளாதார ஒடுக்குமுறைகள் மட்டுமே பெண்களை உளவியல் ரீதியாக கட்டுப்படுத்தி வைக்கப் போதுமானதாக இல்லை. எனவே, அங்கு ரொமாண்டிசம் தேவைப்படுகிறது. பாலின வர்க்க அமைப்பு தகரும்போது செயற்கையான ஒன்றை அல்லது, முந்தைய ஒடுக்குமுறையின் மிகைப்படுத்தப்படுத்தப்பட்ட வடிவம் ஒன்றின் மூலம் ஆண் மேலாதிக்கம் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு முந்தைய குடும்ப அமைப்பு தளர்வான கட்டுப்பாடுகளுடன் இருந்தது. இப்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய, இறுக்கமான ஆணாதிக்க தனிக்குடும்ப அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஒருகாலத்தில் வெளிப்படையாக பெண்கள் அவமதிக்கப்பட்டனர். இப்போது, போலியாக துதிக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். ரொமாண்டிசம் பெண்களை கலாச்சார ரீதியாக தங்களுடைய நிலையை உணர முடியாமல் வைக்கிற ஆண்களின் அதிகாரம். தொழிற்மயமாகிவரும் சமூகங்களில் அது முக்கிய தேவையாக உள்ளது.”
‘உண்மையான காதல்’, ‘தெய்வீகமான காதல்’ என பல பெயர்களில் உருவாக்கப்பட்ட அனைத்து ‘காதல்’களும் ஆண்களுக்கு தேவைப்படும் கட்டுக்கதைகள்; ஆணாதிக்க சிந்தனையில் உருவான கட்டுக்கதைகள் என்பதே பெண்ணியலாளர்களின் கருத்தாக உள்ளது.
அன்பு, காதல் எதுவும் உண்மையில்லை என்கிற ‘விரக்தி’ நிலைக்கெல்லாம் வரவேண்டியதில்லை. பெரும்பாலான உயிரினங்கள் அன்பு கொள்கின்றன. இதற்கெல்லாம் உதாரணம் சொல்ல உயிரியியலாளர்களின் மேற்கோள்களைச் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் அருகிலேயே இருக்கும் நாய், பூனைகளை கவனியுங்கள். மனித தாயைவிட அவை தங்கள் குட்டிகளுக்காக செய்யும் ‘தியாகம்’ மிகப் பெரியதாகத் தெரியும். அவற்றை தியாகம் என எண்ணி அவை செய்வதில்லை, வழியாக வந்த மரபணுக்களின் வழியாக அந்த குணங்களை அவை பெறுகின்றன. அதுபோலத்தான் மனிதர்களும். நம்மால் சிந்திக்க முடிகிறது என்பதற்காக மனிதர்கள்தான் அன்பு காட்டுவதில் சிறந்தவர்கள் எனக் கோரிக் கொள்கிறோம்.
‘உண்மையான காதல்’, ‘தெய்வீகமான காதல்’ என பல பெயர்களில் உருவாக்கப்பட்ட அனைத்து ‘காதல்’களும் ஆண்களுக்கு தேவைப்படும் கட்டுக்கதைகள்; ஆணாதிக்க சிந்தனையில் உருவான கட்டுக்கதைகள்
சற்றே நுணுக்கமாக அணுகிப் பார்த்தால் ஆண் மேலாதிக்கம், பெண்களை குடும்ப அமைப்புக்குள் இறுக்கிக் கொள்ள ‘தாய்மை’ உணர்வை பயன்படுத்திக் கொண்டது. இயல்பாக குழந்தைகள் வளரும்வரை தாயின் உதவியும் அரவணைப்பும் வழிகாட்டுதலும் தேவைப்படலாம். ஆனால், ஒரு பெண் தன் குழந்தைகள் வளர்ந்து பெரியர்களாகி, அவர்களுக்கு குழந்தை பிறந்து, அதாவது அந்தப் பெண் இறக்குவரை அவளை ‘தாய்மை’யின் பெயரால் சுரண்டுவது ஆணாதிக்கம் உருவாக்கிய குடும்ப அமைப்பில் விதியாக மாற்றப்பட்டுள்ளது.
ஷுலமித் சொன்னதுபோல, நகரமயமாதல்-தொழில்மயமாகும் சூழல் காரணமாக கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. பல கிராமங்களில் வயது முதிர்ந்த பெண்கள் தனியாக வசிக்கிறார்கள். வயது முதிர்வின் காரணமாக கணவர்களின் ஆதிக்கம் தணிந்திருக்க, பெண்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள். அதேசமயம் தனிக்குடும்ப அமைப்பில் பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் பிடி இறுக ஆரம்பிக்கிறது. ஒடுக்குமுறை ஆயுதமாக ‘காதல்’ பயன்படுத்தப்படுகிறது. சமூகவியலாளரும் பெண்ணியவாதியுமான கேரல் ஸ்மார்ட் (Carol Smart), “ஆணாதிக்க சமூகத்தின் கருத்தியல் ஆயுதமாக காதல் உள்ளது. காதல் என்ற பிணைப்பின் மூலம் பெண்கள், ஆண்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பின், திருமணம் என்கிற சாதகமற்ற சட்ட ஒப்பந்தத்தில் நுழைந்து, குழந்தைகளை பராமரித்தல் என்கிற இறுதி முடிவில் நிறுத்தப்படுகிறார்கள்” என்கிறார்.
“ஆணாதிக்க சமூகத்தின் கருத்தியல் ஆயுதமாக காதல் உள்ளது. காதல் என்ற பிணைப்பின் மூலம் பெண்கள், ஆண்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பின், திருமணம் என்கிற சாதகமற்ற சட்ட ஒப்பந்தத்தில் நுழைந்து, குழந்தைகளை பராமரித்தல் என்கிற இறுதி முடிவில் நிறுத்தப்படுகிறார்கள்”
பல சமூகவியல் அறிஞர்கள் காதல் பெண்களுக்கு சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சுயத்தையும் அளிப்பதாக சொல்கிறார்கள். நம்முடைய சாதிய சமூகத்தில் சாதியை ஒழிக்கும் காரணியாக ‘காதல்’ இருக்கும் என பலர் பேசிவருகிறார்கள். பெரியாரும்கூட இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். காதல் மட்டுமே பெண்களுக்கு போதுமானதல்ல, அந்தக் காதலில் சமத்துவம் இருக்க வேண்டும் என்கிறார் பெரியார். ஆனால் இங்கே முந்தைய கருத்து மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. சமத்துவம் மீண்டும் குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறது.
என்னைச் சுற்றிலும் இருக்கும் ‘காதல்’களைப் பார்க்கிறேன். உடன் பணியாற்றியவர்கள், அருகில் வசிப்பவர்கள், உறவினர் என பலருடைய ‘காதல்’களை ஆராய்ந்ததில் அவர்களுடைய திருமணத்துக்குப் பின்பான வாழ்க்கை என்பது பிற்போக்குத்தனமான நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்ட பெண்களின் துயர வாழ்க்கைப் போலவே உள்ளது. திருமணம் முடிந்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்; குழந்தை பிறந்தவுடன் வேலையை விடவேண்டும். முழுநேரமாக குழந்தைகளை வளர்த்து சரியாக மூன்று ஆண்டுக்குப் பின் அடுத்த குழந்தைக்கு தயாராக வேண்டும். அடுத்த குழந்தையை பெற்றெடுத்து இரண்டு குழந்தையை ‘சிறப்பாக’ வளர்த்து, கான்வெண்டில் படிக்க வைத்து, எண்ட்ரென்ஸ் எழுத வைத்து, வேலைக்கு அனுப்பி, திருமணம் செய்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆய் கழுவி… அதாவது அந்தப் பெண் சாகும்வரை இத்துப்போன குடும்ப அமைப்புக்காக உழைக்க வேண்டும். பெண்ணின் விருப்பங்கள், தேர்வுகள் எப்போதும் கண்டு கொள்ளப்படுவதேயில்லை. தான் பார்த்து வந்த பணியில் தனிப்பட்ட திறமையுடன் மிளிர்ந்த பெண்கள், காதல் – திருமணம் – குடும்பம் என்கிற ஆண் மேலாதிக்க அமைப்புகளால் சிதைந்துபோகிறார்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் இதழ் வடிவமைப்பாளராக பணியாற்றியவர். காதல் திருமணம் செய்துகொண்டு, குழந்தை பிறந்தபின் பணியை விட்டுவிட்டார். பணி நிமித்தமாக அவரைத் தேடி தொடர்பு கொண்டேன். குழந்தையை கவனிக்கும் நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் வடிவமைப்பு வேலைகளை செய்து தருவதாக சொன்னார். தன்னை தொடர்புகொண்டு பணி கொடுத்ததற்காக நன்றி சொன்ன அவரிடம், வீணாகிக் கொண்டிருக்கும் திறமை ஏதோ ஒருவிதத்தில் பயன்படுத்துவது மகிழ்ச்சி என்றேன். உடனடியாக மறுத்த அவர் தன் குடும்ப பொருளாதாரத்துக்கு சிறு உதவியாக இருக்கும் என்பதற்காக மட்டுமே செய்வதாகவும் திறமை, பெரிய இலட்சியமெல்லாம் தனக்கில்லை என்றார். சுயமான கனவும் இலட்சியமும் கொண்ட பெண்களெல்லாம் குடும்ப வாழ்க்கைக்கு ஆகாதவர்கள் என அவருடைய ஆழ்மனதில் பதிந்து போயுள்ளதை அறிய முடிந்தது. உரையாடலின் முடிவில் தான் கற்றது வீணாகக்கூடாது. தன்னாலும் பொருளீட்ட முடியும் என்கிற சுயத்தை இந்தப் பணி மீட்டுத்தரும் என போகிற போக்கில் சொன்னார்.
இவா இலோஸ் சொல்கிறார், “காதல் சுதந்திரமானதாகவும் முற்போக்கானதாகவும் இருக்கலாம். அதே சமயம் அது அடக்குமுறையுடனும் இருக்கலாம்.” அடக்குமுறையையும் ஆணாதிக்கத்தையும் மறுத்த காதல் மட்டுமே புரட்சிகரமானதாகவும் சமநிலை திறன் கொண்டதாகவும் அமையும் என்கிறார்.
எழுத்தாளர் வெண்டி லாங்ஃபோர்டு தன்னுடைய Revolutions of the Heart: Gender, Power, and the Delusions of Love நூலில் காதலின் தன்மை நீதியின் கூறுகளை உள்ளடக்கி உள்ளதை சுட்டிக்காட்டுவதோடு அது பெரும்பாலும் தவறான வழிநடத்தல்களில் போய் முடிவதாகவும் சொல்கிறார்.
“நாம் எதிர்ப்பார்க்கும் சமத்துவம், சுதந்திரம், இணைவு ஆகியவற்றை காதல் தருவதில்லை. கூடவே வலிமிகுந்த உணர்வையும் திருப்தியின்மையையும் சுயத்தையும் இழக்க வைக்கிறது. சொல்லப்போனால், அது நேர்மறையாக மட்டுமல்ல, நடுநிலையாகவும் இல்லை; ஆனால் பெரும்பான்மையும் எதிர்மறையானது. காதலின் வெற்றி என்பது தனிப்பட்டவர்களின் குணங்களின் அடிப்படையிலும் அவர்களுடைய பகுத்தறிவு மிக்க நடவடிக்கைகளின் அடிப்படையிலும் அமைகிறது” என்கிறார்.
காதல் குறித்த இந்தக் கட்டுரையை எழுதக் காரணம் காதலின் மிகைப்படுத்தப்பட்ட பிம்பத்தை உடைக்க வேண்டும் என்பதும் காதலும்கூட ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு அமைப்பாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவுமே. நமக்குத் தேவை ஒரு இணைவு. அந்த இணைவு சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். அதோடு, காதலோ, இணைவோ வாழ்வின் இலக்காக ஒருபோதும் இருந்துவிடுவதில்லை. திருமணம் செய்துகொள்ளாவிட்டால் வாழ்க்கை முழுமையடையாது என சொல்லப்படுகிறது. உண்மையில் காதலோ, திருமணமோ எவருக்குமே முழுமையைத் தந்து விடாது. ஒரு குறிப்பிட்ட வயதின் தேடலாக மட்டுமே காதல், திருமணமும் இருக்குமே அன்றி, வாழ்க்கையின் தேடல்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 3
கேரள மழை வெள்ள பாதிப்பு குறித்தும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை வினவு செய்தியாளர்கள் சந்தித்து வருகின்றனர். கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைசேர்ந்த புதனூர் மற்றும் பாண்டநாடு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இங்கே பதிவு செய்கின்றனர். #KeralaFloods #KeralaFloodReliefலூயிஸ் கே.ஆபிரகாம்,டெல்லி காவல்துறை, ஓய்வு, பாண்டநாடு.
வெள்ளம் வந்தபோது மேல்தளத்தில் நான் மட்டும் தனியாக இருந்தேன். வீட்டில் வேற யாரும் இல்லை. சுமார் இருபது மணிநேரம் தவித்துகொண்டிருந்தேன். என்ன செய்வது என்று புரியவில்லை. உதவிக்கு யாரையும் கூப்பிடவும் முடியவில்லை. முதல் தளம் வரை வெள்ளம். வீட்டில் ஒரு பொருளும் மிஞ்சவில்லை. அந்த நேரம் மீனவர்கள் வந்தார்கள். அவர்கள் வரவில்லை என்றால் இந்நேரம் என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது. கடற்படை எல்லாம் அவர்களுக்கு பிறகு வந்தவர்கள்தான். அவர்கள் வந்திருந்தாலும் காப்பாத்தியிருக்க முடியாது.
சந்தோஷ்,பெந்தெகொஸ்தே சர்ச், பாண்டநாடு.
வெள்ளம் வந்தபோது சர்ச் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் வீட்டின் மேல் தளத்தில்தான் இருந்தோம். எங்கு பார்த்தாலும் வெள்ளம். வெளியேறி செல்வதற்கு எந்த வழியும் இல்லை. வெள்ளத்தின்போது மேல்தளத்தில் போட்டிருந்த ஓடும் உடைந்து விட்டது. ஒன்றும் புரியவில்லை. ஹெலிகாப்டர் வருமா என்று எதிர்பார்த்தோம், வரவில்லை. அப்படியே வந்திருந்தாலும் நிச்சயம் அவர்களால் எங்களை மீட்டிருக்க முடியாது. மேல்தளம் முழுவதும் ஓடுகள். அவர்கள் கீழே வந்திருக்க மாட்டார்கள். மீனவர்கள்தான் எங்களை மீட்டனர். தங்கள் உயிரைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. எங்களை காப்பற்றுவது மட்டும்தான் மீனவர்களின் லட்சியமாக இருந்தது.
ராதிகா,புதனூர்.
கடந்த ஒரு வாரமா முகாமில் தங்கியிருக்கோம். கழிப்பிடம் முதற்கொண்டு எல்லாம் பிரச்சினையாகத்தான் இருந்தது. சுத்தமான தண்ணியும் உணவும் இல்லை. இப்பதான் தண்ணி வடிய ஆரம்பிச்சிருக்கு. வீட்ட கிளின் பண்ணலாம்னு வந்திருக்கோம். நிவாரணம் கொடுக்குற வண்டியும் உள்ள வர ஆரம்பிச்சிருக்கு. வண்டி வரும்வரை காத்திருந்து வாங்கிட்டு போறோம்.
ராதாமணி,புதனூர்.
ஒன்பது ஆடு இறந்துடுச்சி… ஒரு மாடு ரொம்ப நோய் வாய்பட்டிருக்கு. என்னோட வருமானமே இந்த ஜீவன்களை நம்பிதான். இப்ப அதுவும் இல்லாததால.. கஞ்சிக்கு கூட வழி இல்லை… ரோட்டுல யாராவது உணவு பொட்டலம் கொடுப்பாங்களான்னு காத்துக்கிட்டிருக்கோம். இங்க இருந்து கேம்புக்கு போனபோது கட்டியிருந்த துணியோட போனோம். திரும்பி வந்தா உடுத்தக்கூட துணி இல்லை. அதுவும் ஏதாவது வண்டியில வந்து தருவாங்களான்னு பார்த்துட்டிருக்கோம்.
சுதி, புதனுர்.
கேம்புல இருந்து இன்னைக்குதான் வந்தோம். வீட்டுல ஒரு சாதனமும் இல்ல. மொத்தமும் போயிடுச்சி. கட்டிக்க கூட துணி இல்ல. இப்ப இந்த துணி கொடுத்தாங்க…. ஏதோ.. பழசோ… புதுசோ. இதை விட்டா வேற வழி இல்ல.
கருணாகரன்- கனகாம்பாள், பாண்டநாடு.
சமீபத்துலதான் எனக்கு ஹார்ட் ஆபரேசன் பண்ணேன். மழை பெய்ய ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா வீடு மூழ்கிடுச்சி. அதனால பக்கத்து வீட்டு மாடியிலதான் தங்கியிருக்கோம். இங்க இருந்து மாடிக்கு நீந்தி தான் போனோம். அப்பவே நிறைய மழை தண்ணிய குடிச்சிட்டோம். அதுக்கு பிறகு மூணு நாள் சோறு தண்ணி இல்லாம கிடந்தோம். மழை தண்ணிய குடிச்சிட்டு இருந்தோம். எனக்கு கண்ணெல்லாம் சொருக ஆரம்பிச்சிடுச்சி. இப்ப கொஞ்சம் கொஞ்சம் தண்ணி வடிய ஆரம்பிச்ச பிறகு சில வண்டிகள்ல வந்து பிரட் கொடுத்தாங்க. அதைத்தான் சாப்பிட்டோம். அதுவும் சிலது கிடைக்கும்.. கிடைக்காது…. ஒரு வாரமா மாத்திரை மருந்து எதுவும் சாப்பிடல… எல்லாம் வெள்ளத்துல போயிடுச்சி… அஞ்சி லட்ச ரூபா வரைக்கும் நஷ்டம்.
சுதா ராஜேந்திரன்,பாண்டநாடு.
இப்ப வரைக்கும் வீட்டுக்கு தேவையான அடிப்படையான எந்த பொருளும் இல்ல. அரிசி, பருப்பு எதுவும் இல்ல… நிவாரண பொருட்கள் எல்லாம் வருது. ஆனா மெயின் ரோட்டில இருப்பவங்களுக்கு மட்டுந்தான் கிடைக்குது. உள்ளே 52 குடும்பங்கள் இருக்கு. அவங்களுக்கு எதுவும் கிடைக்கலை. எனக்கு கிடைச்சது இந்த டார்ச் லைட் மட்டும்தான்.
ராஜலட்சுமி,புதனூர்.
கேம்பா இருந்தாலும், வீடா இருந்தாலும் பெரும் பிரச்சனையாத்தான் இருக்கு. பாத்ரூம் எங்கயும் போக முடியல. வெளியில தண்ணியா இருக்கு. வீட்டுல இருக்க பாத்ரூமும் மூழ்கிடுச்சி. பெண்களுக்கு தான் நிறைய பிரச்சனையே. முக்கியமா மாத்து துணி இல்ல. ஒரே துணிய போட்டுட்டு இருக்கோம். வீடுகள் எல்லாம் மூழ்கி இருக்கிறதால, என்ன நிலைமையில இருக்குன்னு பார்த்துட்டு நிவாரணப் பொருட்களை எல்லாம் சேகரிச்சி மாடி வீட்டுல வச்சிட்டு எல்லாரும் திரும்ப முகாமுக்கு போறாங்க. எல்லா இடத்துலயும் தண்ணியா இருக்கிறதால நிவாரணப் பொருட்களை வாங்க திரும்பத் திரும்ப மெயின் ரோட்டுக்கு வர முடியல.
வினவு களச் செய்தியாளர்கள்செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 2
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்கனச்சேரி, குட்டநாடு, பாண்டநாடு ஆகிய பகுதிகள் மிகவும் மோசமான வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. செங்கனச்சேரியிலிருந்து ஆலப்புழா செல்லும் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருக்கும் பகுதி குட்டநாடு. இப்பகுதியில்தான் பம்பை ஆறு ஓடுகிறது. இந்த பம்பை நதிக்கரையோரம் பல நூறு குடும்பங்கள் குடியிருக்கின்றன.
இன்றுவரை பம்பா நதியில் வெள்ளநீர் கரைபுரண்டு சாலைகளில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வாரி அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. இப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக மீட்கபட்டாலும் எட்டுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் இறந்துள்ளதாக கூறுகின்றனர்.
கடந்த ஏழு நாட்களாக முகாமில் தங்கியிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று பார்வையிட முடியாத சூழல்தான் நிலவுகிறது. போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் யாரும் செல்லவில்லை. அதையும் மீறி சிலர் எட்டு கிலோ மீட்டர் துரம் வரை நடந்தே வீடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் மீண்டும் மாலை நடந்தே முகாமிற்கு திரும்ப வேண்டிய நிலைதான் நீடிக்கிறது.
எட்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள முகாமிலிருந்து நடந்தே வந்து வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு மீண்டும் முகாமுக்கு செல்லும் அவலம்.
பாண்டநாடு பகுதியின் முழு சேதாரத்திற்கும் பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளில் வந்த வெள்ளபெருக்குதான் காரணம். இந்த இரண்டு ஆறுகளின் வடிகாலாக பாண்டநாடு குடியிருப்புப்பகுதி மாறியுள்ளது. அந்தளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. வீடுகள் மற்றும் சுற்றுசுவர்கள் பெரும்பாலும் காட்டாற்று வெள்ளத்தில் தகர்ந்து கிடக்கின்றன. பல கடைகளின் ஷட்டர்கள் உடைந்து போயிள்ளன.
இப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. இன்னமும் வீட்டுல வெள்ளம் வடியல….!
தங்களுடைய வீட்டு மாடி முழுவதும் நிரம்ப தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாகவும் மீனவர்கள் மட்டும் வரவில்லை என்றால் இங்கே யாரையும் உயிரோடு பார்த்திருக்க முடியாது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான நேரம், சாலையின் இருபக்கமும் நிவாரண பொருட்கள் ஏதேனும் கிடைக்குமா என கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
பம்பையாற்றுக் கரையோரப் பகுதி மக்களுக்கான முகாம். மக்கள் தங்களது வீடுகளுக்கு சென்று புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவதால் முகாம் காலியாக இருக்கிறது.
செங்கனாச்சேரி, மணக்கச்சிரா, பம்பையாற்றங்கரை ஆகிய பகுதிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் தமது வீட்டு நிலைமையைக் காண வந்திருந்த மக்களின் கருத்துக்கள்:
லல்லு சூசன், புழவாது, செங்கனாச்சேரி.
இது எங்களோட வீடும், அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட் சென்டரும். ஒன்னரை மாசமா பெய்த மழையால் ஒரு சிகிச்சை கூட செய்ய முடியலை. பதினைந்தாம் தேதி அன்று பலமாக மழை பெய்ததால் வீட்டில் இருந்த சில பொருட்களை மட்டும் பத்திரமாக எடுத்து மேலே வைச்சிட்டோம். கீழே இருந்த சாதனங்கள் எல்லாம் நாசமாகிடுச்சி. வீட்டில் போட்டிருந்த தோட்டம் எல்லாம் அழிஞ்சிடுச்சி. இப்போது வெள்ளம் வடிஞ்சிடுச்சு… கனமழையின்போது ஆள் உயரம் வெள்ளம் வந்தது. குடும்பத்தோட முகாமுக்கு போய் தங்கிட்டோம். ஆறு நாளா முகாமில்தான் இருக்கோம்.
பொன்னப்பன்,தட்டு கடை வைத்திருப்பவர். மணக்கச்சிரா.
இந்த ஏரியா முழுவதும் வெள்ளம்… இங்க இருக்கும் முப்பது குடும்பமும் முகாமுக்கு போயிட்டோம். வெள்ளத்துல அடிபட்டவங்கள உடனடியா பக்கத்துல இருக்க அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனதால உயிர்கள காப்பாத்த முடிஞ்சது…. வீடு முழுக்க வெள்ளம். வீட்டிலிருந்த பொருள் எல்லாம் நஷ்டம்… இது என்னோட கடைதான். எல்லாம் போயிடுச்சு…. இப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. இன்னமும் வீட்டுல வெள்ளம் வடியல….!
ஜோபின் ஜான்சன், மனக்கச்சிரா.
வீடு முழுக்க வெள்ளம்… 7 நாளா கேம்புல இருக்கோம். இன்னைக்குதான் வீடு எப்படி இருக்குன்னு பார்க்க வந்தோம்.. வீட்டில் இருந்த எல்லா சாதனங்களும் நஷ்டம். இப்ப குடிக்க சுத்தமான தண்ணி இல்ல… உணவு இல்ல…. கேரளா சர்கார் எல்லா உதவிகளையும் செஞ்சாலும் எல்லா பகுதிகளுக்கும் செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கு.. எங்க ஏரியாவில் இருந்து குட்டநாடு வரைக்கும் அதிகம் பாதிக்கபட்டிருக்கு. இந்த பக்கம் யாரும் இதுவரை வரலை… எங்களுக்கு வீட்டில் உள்ள சாதனங்கள் போனது கவலை இல்ல… உடனடியாக சுத்தமான தண்ணியும், உணவும்தான் தேவையா உள்ளது. கேம்பில் எல்லா அதிக ஆட்கள் இருக்கிறார்கள். எல்லா உதவியும் கிடைக்கிறது. அங்க பிரச்சனை இல்லை… ஆனால் இங்கு உள்ள பிரச்சனைகளை சர்கார் அறியணும்.
கனகன்,பம்பையாற்றின் கரையோரம் வசிப்பவர்.
வீட்டில் எதுவும் இல்ல, இங்க இருக்க எல்லாரும் முகாமுக்கு போயிட்டோம்… எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்ல முடியாது… இங்க இருக்க சவுரியம் கேம்பில் இல்ல… இருந்தாலும் எங்க நிலைமை சரியில்லை… அங்க இருக்கோம்.
கோபி,பம்பையாற்றின் கரையோரம் வசிப்பவர்.
மொத்தம் இங்க தொண்ணூறு குடும்பங்கள் இருக்கு.. இப்ப யாரும் வீட்டில் இல்ல. எல்லாம் கேம்பில் இருக்காங்க.. இன்னைக்குதான் வீட்டை பார்க்க வந்தேன்… வீட்டில் எந்த சாதனமும் இல்ல. எல்லாம் வெள்ளத்தில் போயிடுச்சி.
வினவு களச் செய்தியாளர்கள், செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.
இன்று காலை என்னுடைய மருத்துவமனையில் உட்கார்ந்து நோயாளிகள் ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டிருந்தேன். (கலைஞர் இருந்திருந்தால் நோயாளிக்கு மாற்றாக வேறு பெயர் வைக்கச் சொல்லிக் கேட்டிருக்கலாம். நோயாளி என்ற சொல்லே நோய்வாய்ப்பட்டுவிட்டது. நோயாளியை ஆங்கிலத்தில் அழைக்கும் பேசண்ட் என்ற வார்த்தை இதமாக இருக்கிறது)
சரியாக பதினாறாவது பேஷண்ட்டாக வாட்ட சாட்டமான ஜீன்ஸ் பேண்ட் அரைக்கை சட்டை அணிந்திருந்த 50 வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார். வந்ததும் என்னிடம் “தம்பி டாக்டர் இருக்காரா?” என்று எதன் மேலும் அக்கறை இல்லாத, தான் மட்டும்தான் உயர்ந்தவன் என்று நினைப்பில் இருக்கும் மனிதனைப் போல் கேட்டார். நானும் சிரித்துக் கொண்டே ” நான் தான் டாக்டர்” என்றேன். ‘என்னது நீயெல்லாம் டாக்டரா?’ என்று அவர் மனதில் நினைப்பதை அவரது பாடி லாங்குவேஜ் எனக்கு காட்டிக் கொடுத்தது. ” இல்ல தம்பி, உன்ன விட பெரிய டாக்டர் யாரும் இங்க இல்லையா?” என்றார். ( இப்பவும் அவர் என்னை டாக்டராக ஏற்றுக் கொள்ளவில்லை. டாக்டர் என்று அழைக்காமல் தம்பி என்றுதான் அழைத்தார், ‘உன்னவிட’ என்று ஒருமையில்தான் அழைத்தார் ).” இங்க நான் மட்டும்தான் பெரிய சிறிய டாக்டர் எல்லாம் ” என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னேன். ( டாக்டர்கள் முக மலர்ச்சியுடன் இருப்பது புரோபஷனல் எதிக்ஸ்ஸாம். போலிஸ் ஸ்டேஷன் போய் அங்கு இருக்கும் இன்ஸ்பெக்டரைப் பார்த்து , தம்பி இன்ஸ்பெக்டர் இருக்காரா ? என்று கேட்டால் அந்த இன்ஸ்பெக்டர் காண்டாகி வாயிலையே மிதித்திருப்பார்?. அப்படி ஒரு டாக்டர் காண்டாக முடியாது.)
“சரி, உட்காருங்க, பேரு சொல்லுங்க ?” என்றதும் என் மேல் நம்பிக்கையற்று வேண்டா விருப்பாய் உட்கார்ந்து , ” ராகவன் சீனிவாசன் ” என்றார்.
ராகவன் சீனிவாசன் என்ற பெயரிலேயே அவர் யார் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். (பெயரில் என்ன இருக்கிறது? பெயரில்தான் எல்லாமும் இருக்கிறது).
“சொல்லுங்க சார் என்ன பண்ணுது ? ” என்றேன். அவர் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் ” தம்பி, எந்த காலேஜ்ல படிச்சிங்க? கவர்ன்மெண்ட்டா பிரைவேட் மெடிக்கல் காலேஜ்ஜா? என்று கேட்டார்.
அவர் பேசிய தமிழைப் பார்த்து நான், ” என்ன ராகவன், நீங்க கும்பகோணமா? ” என்றேன். ( சார் எனக்கு இப்போ ராகவனாகிவிட்டார் )
அவர் முகமலர்ச்சியுடன் ” ஆமா சார், எப்படி கண்டுப்பிடிச்சிங்க??” (தம்பி இப்போது ‘சார்’ராகிவிட்டேன் )
” நான் ஆடுதுறை தான் ” என்றேன். ஆடுதுறை என்றதும் ராகவன் இன்னும் குஷியாகிவிட்டார்.
அடுத்த கேள்வி, “ஆடுதுறைல எங்க சார்?” என்றார். அவரது நோக்கம் வீடு இருக்கும் இடத்தை வைத்து எப்படியாவது என்னுடைய ஜாதியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதே. ஆனால் என்னுடைய ஊர் தூத்துக்குடி.
(சென்னையில் இருப்பவர்களில் அதிகப்பட்சம் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் தான். என்னிடம் பேஷண்ட்டாக வருபவர்களின் பேச்சு ஸ்லாங்கை வைத்து அவர்கள் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று கண்டுப்பிடித்துவிடுவேன். உதாரணத்திற்கு சேலம் மாவட்டைச் சேர்ந்தவர் என்று கண்டுப்பிடித்துவிட்டால், அவரிடம் நான், ‘என்ன சார் சேலமா?’ என்று கேட்பேன். அவரும் குஷியாகி ‘ஆமா சார். நீங்களும் சேலமா?’ என்று என்னிடம் கேட்பார். நானும் சேலம் தான் என்பேன். அவர் சேல்த்தில் அம்மா பேட்டை என்றால், நான் எனது ஊரை சீல நாயக்கன்பட்டி என்று சொல்லிவிடுவேன். இப்படிப் பொய் சொல்வதால், இரண்டு நன்மைகள் உண்டாகின்றன, 1. டாக்டர் நம்ம ஊர்க்காரர் என்ற எண்ணம் அவர்களுக்கு வருவதால், என்னிடம் மிகவும் நெருங்கிவிடுவார்கள். மனதார நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 2. அவர்கள் என்னைவிட்டுவிட்டு வேறு மருத்துவர்களிடம் அதன்பின்பு போக மாட்டார்கள்)
நான் யூ.பி.எஸ்.ஸி மெயின் எக்ஸாமிற்கு இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆப்ஷனல் பேப்பர் தமிழ் இலக்கியம். தமிழ் விருப்பப் பாடத்தில் பக்தி இலக்கியம் என்ற பகுதியில் திருஞானசம்பந்தரின் திருவாசகத்தில் ‘ நீத்தல் விண்ணப்பம்’ என்ற பகுதியும் உள்ளது. நீத்தல் விண்ணப்பம் பகுதியை இன்று படித்துக் கொண்டிருந்ததால் அந்த புத்தகத்தை எனது மேசையில் வைத்திருந்தேன். ராகவன் அந்த திருவாசகம் புத்தகத்தைப் பார்த்து மேலும் குஷியாகிவிட்டார். ” சார் நீங்க் திருவாசகம் எல்லாம் படிப்பீங்களா? ” என்று என் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார். ( தம்பி டாக்டராகி இப்போது என் கையைப் பிடித்துவிட்டார்)
” நீங்க சிவன் பக்தரா ? ” என்று அடுத்தக் கேள்வியைப் போட்டார். அதாதவது அவர் நான் என்ன ஜாதி என்று கண்டுபிடித்துவிட்டார். இப்போது அதன் உட்பிரிவுக்குள்ப் போய் சைவமா, வைணவமா என்று கண்டுப்பிடிக்க வேண்டும்.?
“அதெல்லாம் இன்னொரு நாள் வாங்க அப்போ ஃபிரீயா பேசலாம் ராகவன். வெளியில் நிறைய பேஷண்ட்ஸ் வெயிட் பண்றாங்க, நீங்க உங்க உடம்புக்கு என்னப் பிரச்சனைனு சொல்லுங்க?” என்றேன். ( மனதிலுள்ள பிரச்சனையை அல்ரெடி கண்டுப்பிடித்துவிட்டேன்)
” சார் மோஷன் போற இடத்துல கட்டி இருக்கு” என்றார்.
“மோஷன் போற இடத்துல மட்டும்தான் கட்டி இருக்கா?” என்றேன் சிரிப்புடன்.
“அப்படின்னா உங்களுக்கு ரீசண்ட்டா ஹார்ட்ல எதுவும் பிரச்சனை வந்திருக்குமே? LVH வேற இருக்கும் போல. ரெண்டு காலும் வீங்கிப் போய் இவ்ளோ ஷைனிங்கா இருக்கே , ரத்தத்துல யூரியா லெவலும் ஜாஸ்தியா இருக்கும் போலயே?? என்றேன்.
” ஆமா சார், எப்படி ரிப்போர்ட் எதுவும் பாக்காம இவ்ளோ கரெக்ட்டா சொல்றீங்க தெய்வம் சார் நீங்க..!”
(தம்பி டாக்டராகி, இப்போது தெய்வமாகிவிட்டார் )
(ஹாரிசன் புக்க ஒழுங்காப் படிச்சா எந்த ரிப்போர்ட்டும் தேவை இல்லை. நோயின் அறிகுறியையும் உடலில் ஏற்பட்ட மாற்றங்களையும் வைத்து எந்த நோயையும் எளிதில் கண்டுப்பிடிக்கலாம். தேங்க்ஸ் டூ ஹாரிஸன் )
எக்ஸ்டர்னல் ஹெமராயிடிற்கு மெடிசின்ஸ் கொடுத்து, ‘சிட்ஸ் பாத்’ எடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறேன்.
அடுத்த முறை ராகவன் வரும்போது மேஜையில் 1.அம்பேத்கர் 2.பெரியார் புத்தகங்கள். 3.மார்க்ஸ், 4.ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய டெலூசன் ஆஃப் காட் போன்ற புத்தகங்களை வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.
இன்றைக்கு முதலாளித்துவ நிறுவனங்களில் தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி சுரண்டுவதாகவும், அடக்கி ஒடுக்குவதாகவும் செயல்படுவது எச்.ஆர். என்ற மனித வள மேம்பாட்டுத் துறை.
சென்ற ஆண்டு டெக் மகிந்த்ரா என்ற ஐ.டி. நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்ட உரையாடல் வெளியாகி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது. அந்த உரையாடல் பதிவில் பேசும் பெண் எச்.ஆர். அதிகாரி ஊழியரை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு போகச் சொல்கிறார்.
அந்த எச்.ஆர் அதிகாரியின் பெயரைக் கூட அப்போதுதான் கேட்டு தெரிந்து கொள்கிறார், ஊழியர். மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவை தான் நிறைவேற்றுவதாகவும், ஊழியரின் மேலாளர்களுக்கு தகவலை சொல்லி விட்டதாகவும், வேலையை விட்டு அனுப்புவதற்கு தனக்கு அனைத்து அதிகாரமும் இருப்பதாகவும் ஊழியரை மிரட்டுகிறார் அந்த எச்.ஆர். அதிகாரி.
இன்றே ராஜினாமா கொடுத்து விட வேண்டும், இரண்டு நாட்களுக்குப் பிறகு வேலைக்கு வர வேண்டாம் என்று அதட்டுகிறார். இது மேலிடத்து முடிவு இதற்கு மேல் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று அடக்குகிறார். திடீரென்று சொல்லி, 24 மணி நேரத்துக்குள் வெளியேற்றுவது அநியாயம் என்ற ஊழியரின் வாதத்தை புறங்கையால் ஒதுக்கித் தள்ளுகிறார்.
மொத்தத்தில், மேலிடத்திலிருந்து வரும் உத்தரவை தலைக்கு மேல் ஏற்று என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரி போல நடந்து கொள்கிறார் அந்த எச்.ஆர். அதிகாரி. எச்.ஆர். சந்திப்பு என்றாலே சிம்ம சொப்பனம் என்று ஊழியர்கள் அஞ்சும் அளவுக்கு எச்.ஆர். அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது.
இவ்வாறாக ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கி, ஆலைகள் வரை அனைத்து இடங்களிலும், தொழிலாளர்கள் குறித்த நிர்வாகத்தின் முடிவுகளை அமல்படுத்தும் அடக்குமுறை கருவியாக எச்.ஆர். இருக்கிறார். எச்.ஆர். அதிகாரிகளுக்கு எங்கிருந்து இவ்வளவு அதிகாரம் வந்தது?
1970, 80-களில் தொழிற்சாலைகளிலும் கார்ப்பரேட் அலுவலகங்களிலும் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவது, வருகைப் பதிவேட்டைப் பராமரிப்பது, சம்பளத்தைக் கணக்கிடுவது போன்ற பணிகளை எழுத்தர்களும் (கிளர்க்), கணக்காளர்களும் (அக்கவுண்டன்ட்) முதலாளிகள் அல்லது நிர்வாக தலைமை அதிகாரியின் வழிகாட்டலின் பேரில் செய்து வந்தனர்.
இயந்திரங்களை எவ்வாறு ஓய்வின்றி இயக்கி, காலப்போக்கில் தேய்ந்து போனாலோ, புதிய தொழில்நுட்பத்தால் காலாவதியாகிப் போனாலோ தூக்கி எறிவது போல ஊழியர்களையும் நடத்துகிறது இன்றைய கார்ப்பரேட் முதலாளித்துவம்.
நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை, வாங்குதல் போன்ற அனைத்து செயல்பாடுகளும் தனியொரு முதலாளியின் கட்டுப்பாட்டில் இயங்கின. அதாவது, உற்பத்தியை ஒருங்கிணைக்கும் வேலையும், தொழிலாளர்களை சுரண்டி இலாபம் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடைபெற்று வந்தது. இன்றும் சிறிய நிறுவனங்களில் இது போன்ற நடைமுறைதான் தொடர்கிறது.
மேலும், தொழிற்சங்கங்கள் வலுவாக இருந்த நிலையில் தனிப்பட்ட ஒரு தொழிலாளியை நிர்வாக அதிகாரிகள் மூலம் மிரட்டி ஒடுக்கி இலாபத்தை பிழிந்தெடுப்பதற்கான சாத்தியங்கள் குறைவாக இருந்தன.
ஆனால் 1990-களில், நிதி மூலதனத்தின் ஆட்சியின் கீழ் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் அமல்படுத்தப்பட ஆரம்பித்த பிறகு, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பங்குச் சந்தைகளில் நிறுவனத்தின் பங்குகளை அதிக அளவில் வைத்திருப்பவரே முதலாளி என்ற நிலை உருவானது. நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளில் பங்கேற்று உற்பத்தியையும், விற்பனையையும் கண்காணிப்பவர் முதலாளி என்ற நிலை மாறியது.
இந்தப் புதிய வகை பங்குச் சந்தை சூதாடிகளுக்கு உற்பத்தியும் தெரியாது, விற்பனையும் தெரியாது, லாபத்தைக் கணக்கிடுவது ஒன்று மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். நிறுவனத்துக்கே வராமல், உலகின் ஏதோ ஒரு மூலையில் கூட அமர்ந்துகொண்டு நிறுவனத்தை கட்டுப்படுத்தி, இலாபத்தை கைப்பற்றுகின்றனர்.
மேலும், தாராளமய கொள்கைகளின் விளைவாக தொழிற்சங்க இயக்கத்தின் நலிவும் தொழிலாளர்கள் மீது உழைப்புச் சுரண்டலையும், நிர்வாகத்தின் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தி இலாபம் ஈட்டுவதற்கான சாத்தியங்களையும் தேவையையும் அதிகரித்திருந்தது.
தொழிற்சாலைகளை நிர்வாகம் செய்வதற்கு, உற்பத்தியையும், விற்பனையையும் திட்டமிட்டு மேற்பார்வை செய்வதற்கு என்று தனிச்சிறப்பான, அந்தந்த துறையில் தனிப் பயிற்சி பெற்ற மேலாளர்களை முதலாளிகள் பணிக்கு அமர்த்திக் கொண்டனர்.
அந்த வகையில் தொழிலாளர்களை மேற்பார்வை செய்து ஒடுக்குவதற்கான கங்காணி வேலைக்கென்றே உருவாக்கப்பட்டதுதான் இந்த மனிதவள மேம்பாட்டுத் துறை. (Human Resource Department).
இந்தத் துறையின் பெயரிலேயே முதலாளித்துவ இலாப வெறியும் தொழிலாளர் விரோத கண்ணோட்டமும் அடங்கியிருக்கிறது. கச்சாப் பொருட்கள், எந்திரங்கள், கட்டிடங்கள் போல தொழிலாளர்களும் இலாபம் ஈட்டுவதற்கு தேவைப்படும் ஒரு ரிசோர்ஸ் (வளம்) ஆக கருதப்படுகிறார்கள்.
கச்சாப் பொருட்களுக்கு மெட்டீரியல்ஸ் டிபார்ட்மென்ட் போல, எந்திரங்களுக்கு மெயின்டனன்ஸ் டிபார்ட்மென்ட் போல ஊழியர்களை நிர்வகிக்க ஹியூமன் ரிசோர்ஸ் டிபார்ட்மென்ட் செயல்படுகிறது. ஐ.டி நிறுவனங்களில் ஊழியர்களை ரிசோர்ஸ் என்ற பெயரிட்டே குறிப்பிடுகிறார்கள்.
இயந்திரங்களை எவ்வாறு ஓய்வின்றி இயக்கி, காலப்போக்கில் தேய்ந்து போனாலோ, புதிய தொழில்நுட்பத்தால் காலாவதியாகிப் போனாலோ தூக்கி எறிவது போல ஊழியர்களையும் நடத்துகிறது இன்றைய கார்ப்பரேட் முதலாளித்துவம்.
உற்பத்தியிலும், அன்றாட நிறுவன செயல்பாட்டிலும் தொடர்பில்லாமல், அந்த வகையில் தொழிலாளர்களோடு உற்பத்தி சார்ந்த பழக்கம் இல்லாமல், எச்.ஆர். அதிகாரிகள் தொழிலாளர்களை வெறும் பெயர்களாக, எண்களாக பார்த்து பணிகளை நிறைவேற்றுகின்றனர்.
அதற்கு சேவை செய்வது மனித வள மேம்பாட்டுத் துறையின் பணி. தேவையான தகுதியுடைய ஊழியர்களை, தேவையான எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துவது, அவர்களிடமிருந்து இலாபத்தை பிழிந்தெடுப்பதற்கான திட்டங்களை தீட்டிக் கொடுப்பது, முதலாளியின் நேரடி கையாளாக அவற்றை அமல்படுத்துவது, தேவை முடிந்ததும் வேலையை விட்டு தூக்குவது என்று எந்திரங்களைப் போன்று தொழிலாளர்களையும் ஒரு பொருளாக கையாள்கின்றனர் எச்.ஆர். அதிகாரிகள்.
அவர்களது பார்வையில் தொழிலாளர் என்பவர் இயந்திரங்களை விட எந்த வகையிலும் முக்கியமானவராக இருப்பது இல்லை. இயந்திரங்களுக்கு கூட ஸ்க்ரேப் மதிப்பு இருப்பதை கணக்கிடும் இந்த அமைப்பு, உயிருள்ள தொழிலாளர்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை.
எச்.ஆர். அதிகாரிகளை தயாரிப்பதற்கென்றே நாடு முழுவதும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்கள், தொழிலாளர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்கின்றன.
இது போன்ற கல்வி நிறுவனங்களில் ஏழைத் தொழிலாளர்களின் பிள்ளைகள் சென்று படிக்க முடியாது. பணக்கார மேட்டுக்குடியிலிருந்து மட்டுமே மாணவர்கள் வந்து சேரும் வகையில் மிகக் கவனமாகத் திட்டமிட்டு இவை நடத்தப்படுகின்றனர். ஆகவே, பிறப்பிலேயே கொடூரன்களாக உருவாக்கப்படுகின்றனர், எச்.ஆர். அதிகாரிகள்.
எச்.ஆர் அதிகாரிகளை தயாரிப்பதற்கென்றே நாடு முழுவதும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சாதாரண குடிமகனாக இருந்து போலீஸ் பயிற்சியில் சேருபவர், பயிற்சி முடித்து வெளியே வரும்போது, உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான அரசின் கருவியாக மாறியிருப்பதைப் போல, இந்த எச்.ஆர். பயிற்சி நிறுவனங்களை விட்டு வெளியே வரும் மாணவர்கள், தொழிலாளர்களை எவ்வாறு கசக்கிப் பிழிந்து உற்பத்தியைப் பெருக்குவதற்கும், அச்சுறுத்துவதற்கும், தேவையில்லாதபோது வெளியே தூக்கி எறிவதற்கும் முதலாளி வர்க்கத்தின் கொலைக்கருவியாக அடியாளாக மாறி விடுகிறார்.
ஐ.ஐ.எம். என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தில் நாடு முழுவதும் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட நிலையங்கள், இன்னும் நூற்றுக் கணக்கான தனியார் மேலாண்மை கல்வி நிலையங்கள் எச்.ஆர். படிப்புகளை வழங்குகின்றன. இதில் படிக்கும் மாணவர்களுக்கு இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து, முதலாளிகள் வேலைக்கமர்த்திக் கொள்கின்றனர்.
பணியிடத்தில் சட்டப்படி தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளையும், கொடுக்கப்பட வேண்டிய சலுகைகளையும் உறுதி செய்து சட்டப்படி நடப்பதாக ஆவணப்படுத்துவதும் எச்.ஆர்.-ன் வேலையாகும்.
மேலும், போலீஸ் பொதுமக்களின் நண்பன் என்பது போல எச்.ஆர். ஊழியர்களின் புரவலன் என்று காட்டுவதற்காக பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பிரிவுபசார விருந்துகள், கிரிக்கெட் விளையாட்டுகள், அல்லது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகளை நடத்துவதிலும் எச்.ஆர். அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். நிறுவனத்துக்கு பணமாகவோ, சந்தைப்படுத்துவதற்கோ ஆதாயம் அளிக்கும் வகையில் இவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி கொடுக்க வேண்டியதும் எச்.ஆரின் பொறுப்பு.
ஆனால், இது எல்லாவற்றையும் முக்கியமானது தொழிலாளர்களை சுரண்டுவதற்கான நிர்வாகத்தின் முடிவுகளை அமல்படுத்துவது எச்.ஆர்.-ன் தலையாய கடமையாக உள்ளது. தொழிலாளர்களின் திறனை அளவிடுதல், ஆட்குறைப்பு செய்தல், பதவி உயர்வு வழங்குதல், ரேட்டிங் வழங்குதல் போன்ற நிர்வாகத்தின் முடிவுகள் தொழிலாளர்களோடு தொழிலாளர்களாக உற்பத்தியில் ஈடுபட்டு, அவர்களோடு தினசரி முகம்பார்த்துப் பேசும் மேலாளர்கள் அல்லது சூப்பர்வைசர்களால் செய்யப்படுவதில்லை.
அதற்குப் பதில் அலுவலகத்தில் எங்கோ ஒரு மூலையில் கணிணித் திரையைப் பார்த்துக் கொண்டு, தொழிலாளர்களை மதிப்பிடும் எச்.ஆர். அதிகாரிகளிடம் தான் அந்தப் பணி கொடுக்கப்படுகிறது.
உற்பத்தியிலும், அன்றாட நிறுவன செயல்பாட்டிலும் தொடர்பில்லாமல், அந்த வகையில் தொழிலாளர்களோடு உற்பத்தி சார்ந்த பழக்கம் இல்லாமல், எச்.ஆர். அதிகாரிகள் தொழிலாளர்களை வெறும் பெயர்களாக, எண்களாக பார்த்து இந்தப் பணிகளை நிறைவேற்றுகின்றனர்.
இது தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ சுரண்டலை இன்னும் தீவிரமாகவும், திறமையாகவும் நடத்தி லாபத்தை குவிப்பதற்கு அவசியமான நடைமுறையாக மாறியுள்ளது.
தொழிலாளர்கள் தொழிற்சங்கமாக திரண்டு தம்மை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம் எச்.ஆர். உருவில் வரும் முதலாளித்துவ சுரண்டலை எதிர் கொள்ளலாம். ஆனால், இந்த முதலாளித்துவ காட்டாட்சியை தூக்கி எறிந்து மனிதரை மனிதன் சுரண்டுவதை முற்றிலும் ஒழித்துக் கட்டும் சோசலிச உற்பத்தி முறையில்தான் எச்.ஆர். என்கிற மனித கொடூரனை இல்லாமல் ஒழிக்க முடியும்.
ராஜா
புதிய தொழிலாளி, ஜூலை 2018 நன்றி :new-democratsதளத்தில் வெளியான கட்டுரை
கேரளாவின் 39 அணைகளில் 35 அணைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதன் 44 நதிகளில் 41 நதிகள் அபாயக் குறியீட்டிற்கு மேலே நீர் நிரம்பி வழிகின்றன. பெருமளவிலான உயிர்ச்சேதம், நிலச்சரிவு, வாழ்வாதார இழப்பு, இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்ச்சி என சர்வ நிச்சயமாக இது அவர்களின் வாழ்நாள் பேரழிவுதான்
ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர உதவி மையத்திற்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
ஒரு தன்னார்வலராக நான் அங்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்று பதிலளித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெங்களூருவிலிருந்து ஒரு இளைஞர், தனது மாமா ஒருவர் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள அரண்முலாவிலுள்ள தமது வீட்டில் தனது மனைவியின் இறந்த உடலோடு முதல்மாடியில் நின்று கொண்டிருப்பதாகவும், கற்பனை செய்து பார்க்கமுடியாத அச்சூழலில் இருக்கும் அவரைக் காப்பாற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.
”ஆலப்புழா மாவட்டம், செங்கனூரைச் சேர்ந்த மற்றொரு குடும்பமும் ஒரு இறந்த உடலை தங்களோடு கொண்டுள்ளனர்” என போலீசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த உடல் தண்ணீரில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க அதனை படிக்கட்டின் கைபிடியோடு சேர்த்துக் கட்டியுள்ளனர். பெருமழை துவங்கியதிலிருந்து மக்களின் வாழ்க்கை அசாதாரணமானவையாக மாறிவிட்டது.
”இங்கே, வெள்ளம் சூழ்ந்த ஒரு வீட்டில் பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். விரைவாக உதவி அனுப்பவும்”, கம்பியில்லா தகவல் தொடர்புச்சாதனம் மூலம் தன்னார்வலர் ஒருவர் தகவல் தருகிறார்.
” தரைத்தளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கிய ஒரு மருத்துவமனையில் இன்றோ நாளையோ பிரசவிக்கக் காத்திருக்கும் பெண்கள் 8 பேர் மாட்டியிருக்கிறார்கள்” எனப் பதறுகிறது அவசர உதவி மையத்தின் மற்றுமொரு செய்தி.
நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளைக் கொண்ட பல மருத்துவமனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தால் சூழப்பட்ட தமது வீடுகளில் தங்களது விதிக்காக காத்திருக்கிறார்கள். ஆக்ரோஷமாகப் பாயும் இரு பெரும் நதிகளான பெரியாறு மற்றும் சாலக்குடிக்கு இடையில் வளாகத்தைக் கொண்ட கலாடி, ஸ்ரீ சங்கராச்சார்யா சன்ஸ்கிருதி பல்கலைக்கழகத்தினுள் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளனர். கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும், நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சம் புகும் அகதிகள் முகாம்களாக மாறியிருக்கின்றன. அவற்றில் பலவும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன. இரண்டாம் கட்ட மழைகளில் பத்தனம்திட்டா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
மழை வெள்ளத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள்:
சில வாரங்களுக்கு முன்னால் மழை பொழிய ஆரம்பித்தது. கடந்த வாரத்தில் மழை தீவிரமடையத் தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொழிந்த கனமழை காரணமாக ஆறுகள் கரையைப் பெயர்த்துக் கொண்டோடின. இதன் காரணமாக பெருமளவிலான வெள்ளமும் நிலச்சரிவும் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டது. பெரும்பான்மையான மரணங்களுக்கு நிலச்சரிவுகளே காரணமாக அமைந்தன. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுகளில் உயிருடன் புதைபட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்தன.
நிலச்சரிவு
முதல்கட்ட மழைகள் துவங்கியபோது அரசு இயந்திரம், எச்சரிக்கையாகவும் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. சீரான இயக்கமுள்ள இயந்திரத்தைப் போல நதிக்கரைகளில் உள்ள மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர். முக்கிய அணைகளின் மதகுகளும் முறைப்படி திறக்கப்பட்டன. எனினும் எதிர்பாராத நிலச்சரிவுகளிலும் ஓரிரு இடங்களில் நீரில் மூழ்கிய சம்பவங்களிலும் சிலர் பலியாகினர். தண்ணீரின் அளவு 2,401 அடியைத் தொட்டதன் காரணமாக, இடுக்கி அணையின் 5 மதகுகள் முதன்முறையாக திறந்துவிடப்பட்டன. மலைப்பாங்கான பகுதிகளான வயநாடு, நிலம்பூர் மற்றும் கிழக்கு கோழிக்கோடு ஆகியவற்றை உள்ளடக்கிய மலபார் பகுதிதான் இந்த முதல்கட்ட மழைகளில் அதிகமான நிலச்சரிவுகளால் மோசமான பாதிப்புக்குள்ளானது. முதலமைச்சர் பிணராயி விஜயன் பாதிப்படைந்த பகுதிகளை வான்வழியே பார்வையிட தன்னுடன் வருமாறு எதிர்கட்சித் தலைவர் சென்னிதாலாவுக்கு அழைப்பு விடுத்தார். இயற்கையின் உண்மையான ஆட்டம் இன்னும் அரங்கேறத் தொடங்கவில்லை.
பூர்வாங்க மதிப்பீட்டின்படி முதல்கட்ட வெள்ளத்திற்குப் பின்னான மதிப்பிடப்பட்ட இழப்பு ரூ. 8316 கோடி (தற்போது 20,000 கோடிக்கும் மேல்). பிணராயி விஜயன் உடனடி உதவியாக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 820 கோடி உள்ளிட்டு ரூ.1220 கோடியை (தற்போது 2,000 கோடி) மைய அரசிடமிருந்து கோரினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட ராஜ்நாத் சிங் கோரிக்கை வைக்கப்பட்ட ரூ.1220 கோடியில் வெறும் 10%-க்கும் குறைவான தொகையான ரூ.100 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்தார் (பின்னர் மோடி வந்த போது 500 கோடி ஒதுக்கினார்). முதலமைச்சர் பிணராயி விஜயன் மத்திய அரசுக்கு எதிராக பகிரங்கமாக எதுவும் கூறவில்லையெனினும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தரப்பிலிருந்து இச்செயல் கடும் விமர்சனத்தைப் பெற்றது. தொழில்நுட்ப அடிப்படையில் இந்த பெருவெள்ளத்தை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க மறுத்தது பாஜக அல்லாத பிற எல்லா தரப்பினரையும் வெறுப்புறச் செய்தது.
”இந்த பெருவெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவித்திருக்கலாம். விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்து அறிவித்திருக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளில் இதுவே மிகப்பெரும் வெள்ளமாகும்” என்றார் கேரள எதிர்கட்சித் தலைவர் சென்னிதாலா. இவையெல்லாம் பிரச்சினைக்குரிய முல்லைப் பெரியாறு அணை அதன் கொள்ளளவை எட்டுவதற்கு அருகாமையில் இருக்கையில் ஏற்பட்ட இரண்டாம் கட்ட வெள்ளப் பெருக்கிற்கு முன்னர் நடந்த விசயங்கள்.
வெள்ளப்பெருக்கு
ஓயாத மழை நிலைமையை இன்னும் மோசமாக்கியது. மாநிலம் முழுவதுமுள்ள அணை மதகுகள் அனைத்தும் உயர்த்தப்பட்டதன் காரணமாக கடந்த திங்கள் கிழமையிலிருந்து (13-08-2018) இதற்குமுன் அம்மாநிலம் கண்டிராத வெள்ளத்தில் சிக்கியது கேரளம். இந்தமுறை அது அரசு இயந்திரத்தின் ஆற்றலுக்கு மீறியதாக இருந்தது. நிலைமை கையைமீறிப் போனது. தெற்கிலிருந்து வடக்கு வரை அனைத்து மாவட்டங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. பெரியாறு, சாலக்குடி, பம்பா, அச்சன்கோவில் மற்றும் பாரதபுழா ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடின. ஆற்றங்கரையோர வீடுகள் அனைத்தும் இரண்டு மாடி உயரத்திற்கு தண்ணீர் உயர்ந்ததன் காரணமாக மூழ்கின.
தமிழக – கேரள அரசுகளின் முரண் போக்கு:
முல்லைப் பெரியாறின் மதகுகளைத் திறந்து விடுவதற்கு தமிழகம் காட்டிய தயக்கம், கவலையை அதிகரிக்கச் செய்வதாக இருந்தது. மேலும் தென்னகத்தின் இரு அண்டை மாநிலங்களுக்கிடையிலான கொஞ்சநஞ்ச உறவுகளையும் அது சிக்கலுக்குள்ளாக்கியது. எனினும், கேரள முதலமைச்சர் தமது மாநிலத்தின் இடர்பாடுகள் குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார். அதற்கு அவருக்குக் கிடைத்த பதிலும் திருப்தியடையச் செய்வதாக இல்லை.
கேரள முதல்வர் பிணராயி விஜயன் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ”தமிழகத்தின் களப் பொறியாளர்கள், தண்ணீர் அளவைப் பதியும் மின்னணு சாதனங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று தகவல் தெரிவித்ததாகவும், அதன் காரணமாக தண்ணீர் மட்டத்தை துல்லியமாக அளக்க முடியாமல், அதை ஆற்றில் நடப்பட்டிருக்கும் சாதாரண அளவீட்டுக் கம்பங்களின் குறியீடுகளின் அடிப்படையிலேயே அளப்பதாகவும் அறியப் பெற்றேன். அணையிருக்குமிடத்தில் தற்போது நிலவும் பருவநிலை மற்றும் காற்றின் நிலையைக் கணக்கில் கொண்டு பார்க்கையில் அளவீட்டுக் கம்பங்களின் மூலம் நீர் மட்டத்தை அளவிடுவதில் தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்பிருப்பதால், இந்த நிலைப்பாடு பொருத்தமானதாக இருக்காது” என குறிப்பிட்டிருக்கிறார்.
பிணராயி விஜயன் – எடப்பாடி பழனிச்சாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது பதில் கடிதத்தில் “நீரியல், நிலவியல் மற்றும் கட்டிடவியல் அடிப்படையில் அணை பாதுகாப்பாகத்தான் உள்ளது” என்ற தமது பழைய நிலைப்பாட்டையே மீண்டும் எழுதினார். இறுதியில் இதில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது.
”நாங்கள் நிலவும் உச்சபட்ச பருவநிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தொடக்கம் முதலே வெவ்வேறு கட்டங்களில் எங்கள் அணைகளிலிருந்து நீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் 142 அடியைத் தொட்டபிறகே திறந்துவிடப்பட்டது. அதுவே அதிவேகமாக நீர் வெளியேறியதற்கும் அதன் தாக்கம் அதிகரித்ததற்கும் காரணம்” என்று கூறியிருக்கிறார் பிணராயி விஜயன்.
பெரு வெள்ளத்தின் முதல் கட்டத்தில் தனது கணிசமான ஆதரவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது அண்டை மாநிலத்துக்கு அளித்தது தமிழகம். வெள்ள நிவாரண பணிக்காக ரூ. 5 கோடி உதவித் தொகை வழங்கியது (தற்போது மொத்தம் 1 கோடி). கடிதம் எழுதி, அதற்கு ஆறுதலற்ற பதில் கிடைத்த பிறகும் பிணராயி விஜயன் அமைதி காத்து, இரண்டு மாநிலங்களும் அணைப் பராமரிப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தார்.
தேசிய ஊடகங்களின் அக்கறையற்ற போக்கு:
தென்னகத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பேரிடர் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் எவையும் இது குறித்து தமது கணிசமான கவிப்பெல்லையை (Coverage) விரிவாக்க ஆர்வத்தோடு இல்லை. சில விதிவிலக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால் அவர்களது கவிப்பெல்லைகள் உணர்சியற்றனவாகவே இருந்தன. ஊடக சகோதரத்துவத்திலிருந்து செய்யப்படவேண்டிய வலுவான செயல்வினையின் தேவையை இது காட்டியது.
”உங்களுக்கு (தேசிய ஊடகங்கள் என அவர்கள் கூறிக் கொள்ளும்) பெரிய தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரிபவர்கள் யாரேனும் தெரிந்திருந்தால், உங்களுக்கு டில்லியில் அதிகார மட்டத்தில் காரியங்கள் சாதித்துக் கொடுக்கக் கூடியவர் – அவர்களை நாங்கள் அதிகாரிகள் என அழைப்போம் – யாரேனும் தெரிந்திருந்தால், மத்திய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் யாரேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால், சர்வதேச சமூகத்தினரை தென்னிந்திய மாநிலமான கேரளாவிற்கு உதவி செய்ய தமது நாட்டு அரசாங்கங்களை வலியுறுத்தச் செய்யக் கூடிய யாரையேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால், தயவு செய்து அவர்களிடம் கூறுங்கள், ‘எங்களுக்கு உதவி தேவை’ நெருக்கடியான நேரம் இது” என மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீஜித் திவாகரன் தமது முகநூல் பதிவில் எழுதினார்.
பேரிழப்பை பார்வையிட்ட ராஜ்நாத் சிங் கொடுப்பதாகக் கூறியது வெறும் 100 கோடி
மத்தியிலிருந்து போதுமான உதவி கிடைக்காமலிருப்பதற்கு மோடி அரசாங்கம்தான் காரணம் என்ற பரப்புரை சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சென்று கொண்டிருக்கிறது. கேரளாவைச் சாராத சங்கபரிவாரத்தினரின் சமூக வலைத்தள கணக்குகளின் எதிர்மறை பரப்புரைகளும் எண்ணிலடங்காதவை. சில முகமறியாத சங்கிகளின் சமூக வலைத்தளங்களிலிருந்து, பிணராயி விஜயன் அரசாங்கத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டாம் என ’இந்து சமூகத்தை’ வற்புறுத்தும் விசப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முரணாக கேரள பாஜகவின் ஒரே எம்.எல்.ஏ-வான ஓ.ராஜகோபாலும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் இந்நாள் மிசோராம் கவர்னருமான கும்மணம் ராஜசேகரும் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு குறிப்பிடத்தக்க தொகையை வழங்கி அதற்கு நல்லதொரு ஆதரவையும் பெற்றுள்ளனர். இதற்கு இடதுசாரி இணையவாசிகளின் பதில் பரப்புரைக்குதான் நன்றி தெரிவிக்கவேண்டும்.
தற்போது தோராயமான மதிப்பீடு போட்டால்கூட இழப்புத் தொகை சுமார் ரூ.20,000 – 30,000 கோடியைத் தொடும். லட்சக்கணக்கான மக்கள் 6000 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநிலம் சந்தித்திருக்கும் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகையில், இவ்விவகாரம் வெறுமனே மாநில அரசினால் மட்டும் கையாளத்தக்கது அல்ல என்பது மிகத் தெளிவாக புரியவருகிறது. இது தேசியப் ’பேரிடராக’ எடுத்துக் கொள்ளப்படாவிட்டாலும் தேசியப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஏற்பட்டிருக்கும் பேரிடரின் அளவு கட்டுக்கடங்காத வகையில் இருப்பதால் தேசிய மற்றும் சர்வதேச முகமைகளையும் இந்தப் பணியில் இறக்கிவிட வேண்டும்.
தண்ணீர் வடிந்த பின்னர், இந்த சேறு படிந்த நிலத்திலிருந்து மக்களின் வாழ்க்கையை மறுகட்டமைப்புச் செய்வதுதான் இங்கு நம் அனைவரின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.
ராஜீவ் ராமச்சந்திரன் (கொச்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்)
தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின்மொழியாக்கம்.
தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி நடப்பதாக நடிகர் கருணாஸே கூறிவிட்ட பிறகு அதை இல்லை என பவர் ஸ்டாரே மறுக்க முடியாது (பொன்னாரைப் பார்த்து பா.ஜ.க.வில் சேர்ந்தவர் ப.ஸ் சீனிவாசன்). எடப்பாடி, ஓ.பி.எஸ். கட்சியினரைப் பொறுத்த வரை தேர்தல் வரும் வரையிலும் விமான நிலையம் போகும் போது போடப்படும் போலீஸ் பந்தோபஸ்தை பந்தாவாக அனுபவிப்பது, நெடுஞ்சாலை முதல் சத்துணவு வரை ஒப்பந்தப் பணத்தை முடிந்த மட்டும் பாதுகாப்பான வழிகளில் சேர்ப்பது தவிர பா.ஜ.க. இட்ட வேலையை தலையால் செய்வதற்கு கூச்சநாச்சம் பார்ப்பதில்லை. சுதந்திரத்தை என்னவென்றே அறியாத அடிமைகள் அடிமையாட்சி புரிவது இயல்புக்கு மாறான ஒன்றல்ல.
சமூகவலைத்தளங்களில் ஆல் டைம் ஹிட்டாக இருக்கும் இம் மீம் நாயகர்களை அதே போன்று விவாத சந்து பொந்துகளில் கிண்டலோ, சுண்டலோ செய்யும் ஊடகங்களின் நிலை என்ன? மோடியின் தில்லி சந்திப்பிற்கு பிறகு என்றல்ல அதற்கு முன்பேயே தமிழக ஊடகங்களின் பெரும்பான்மை பா.ஜ.க.-விற்கு ஜிஞ்சக்கு ஜிஞ்சா-வை ஆரம்பித்து விட்டன. தற்போது தில்லி விசிட்டுக்கு பிறகு ஜால்ரா சப்தம் காதைக் கிழிக்கிறது. “2019 தேர்தலுக்காக மோடி பிரச்சாரத்தை ஆரம்பித்தது தினத்தந்தி!” என்று ஆகஸ்டு 13 எழுதியிருந்தோம். அதே தலையங்கத்தின் பார்வையை கிட்டத்தட்ட எழுதியிருக்கின்றன தினமணியும், தினமலரும்! இந்த தலையங்க ஒற்றுமையைப் பார்த்தால் சென்னை கமலாலயத்திலிருந்துதான் இப்பத்திரிகைகளுக்கு தலையங்க சப்ளை நடைபெறுகிறது என்பதை அறுதியிட்டு சொல்லலாம்.
ஆகஸ்டு 11 அன்று தினமணி எழுதிய தலையங்கம் “ பலவீனம்தான் பலம்!”. அதன் வரிகளில் சிலவற்றை படியுங்கள்!
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவையின் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் வெளிச்சம் போட்டிருக்கிறது
பிகாரில் தனது கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியது மட்டுமல்லாமல், மாநிலக் கட்சிகளுடன் தொடர்பு கொள்வதிலும் பா.ஜ.க. தலைமை சுறுசுறுப்பாக இயங்கியது. ஒன்பது உறுப்பினர்கள் உள்ள பிஜு ஜனதா தளம், ஆறு உறுப்பினர்கள் உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி, மூன்று உறுப்பினர்கள் உள்ள அகாலிதளம், மூன்று உறுப்பினர்கள் உள்ள சிவசேனா இவையெல்லாம் போதாதென்று தமிழகத்திலிருந்து அ.தி.மு.க.வின் 13 உறுப்பினர்களும் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வந்தனர் என்பதை விட, பா.ஜ.க. தொடர்பு கொண்டு அவர்களது ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டது என்பதுதான் நிஜம்.
எதிர்க்கட்சிகளின் பலவீனம் பா.ஜ.க.வின் பலம். இது 2019 மக்களவைத் தேர்தலுக்கும் பொருந்தலாம்!
அடுத்து “ஓங்கட்டும் அர்த்தமுள்ள விவாதங்கள்….” எனும் தினமலரின் ஆகஸ்டு 14 தலையங்கத்தைப் பார்ப்போம்.
ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் முடிவானது, 2019 லோக்சபா தேர்தல் முடிவு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக அமையும் என்ற விவாதங்களை குறைத்துவிடும்.
பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா, அ.தி.மு.க., – பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு, இத்தேர்தலில் மோடி உத்திகள் வெற்றியைத் தரும் என்பதை உணர்த்தியிருக்கிறது.
1 of 4
“எப்போது யானை ஓடத் துவங்கும்?” இது தினமலரின் ஆகஸ்டு 19 தலையங்கம். பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கான பொழிப்புரையாம் இது! சில வரிகளைப் படியுங்கள்!
இந்த, ஐந்து ஆண்டுகளில் அரசில் இருந்த, ‘சிவப்புநாடா’ முறை குறைந்திருக்கிறது என்பதின் அடையாளம், உலகின், ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இதற்கு மோடி அரசின் சில துணிச்சல் முடிவுகள் காரணமாகும். ஊழல் செய்பவர்கள், லெட்டர் பேடு கம்பெனிகள் மூலம் கருப்புப் பணம் குவிப்பவர்கள் பலர் பிடிபட்ட செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அதிக பயன்களைத் தரும் சீர்திருத்தங்களை மோடி அறிவித்திருப்பது, அடுத்த தேர்தலிலும், பா.ஜ., ஆட்சி வரும் என்பதை குறிப்பால் உணர்த்துவதாகும்.
ஆகஸ்டு 21 அன்று தினமலர் எழுதிய தலையங்கம் “வேலைவாய்ப்புகளும் சமூக பதற்றமும்”. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறித்த விவாதங்களில் மோடிக்கு கேடயமாக ஓடி வருகிறது தினமலர்.
நாட்டின் நலன் என்ற, மக்களின் பொருளாதார மேம்பாடு அளவுகோலை வைத்து மட்டும் அளக்கப்படும் விஷயமா வளர்ச்சி என்பதை, ஆராய வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. அதற்கேற்ப சரியான புள்ளி விபரம் மற்றும் தரவுகள், பல ஆண்டுகளாக திரட்டப்படவில்லை. பொருளாதாரம் என்பது, பல அம்சங்களை கொண்டது. அது அதிகமாக பேசப்படும்போது, ‘போர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாகி விடும்.
நடப்பாண்டில், மொத்த வளர்ச்சி போகிற திசையைப் பார்க்கும் போது, அது வீழ்ச்சிக்கு வித்திடவில்லை. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்திருப்பது, தவிர்க்க முடியாதது. இது, உலகளாவிய பொருளாதாரத்துடன் தொடர்பு கொண்ட விஷயம் என்பதால் பிரச்னையாகிறது: ஆனால், மொத்த பணவீக்கம் என்பது அதிகரிக்காமல் இருப்பதால், விலைவாசி விண்ணை முட்டும் என்பதற்கு பின்னணி இல்லை.
எதிர்க்கட்சிகள் இன்னமும், ஜி.எஸ்.டி., வரியை குறை கூறினாலும், அதற்கான காரணங்களை கூறத் தவறுகின்றன.சிறு மற்றும் குறு தொழில்கள், இந்த வரிவிதிப்பில் பாதிக்கப்படாமல் இருக்க, அமைச்சர்கள் குழு ஆராய்ந்து பரிந்துரை செய்ய, முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
நோபல் பரிசு பெற்ற, அமர்தியாசென் போன்றவர்கள், அதிக குறை சொல்லும் முன், பல தகவல்களை திரட்டினரா… என்பதை, யார் கேட்க முடியும்?
கமலாலயத்தின் கனிவுக்காக தலையங்கம் எனும் துதிபாடலை “மோடியை பாடுவேனன்றி, மற்றவர்களையோ மக்களையோ பாடேன்” என்று உடும்பிப்பிடியாக அடிக்கும் தினமலரின் கை என்னவெல்லாம் எழுதுகிறது பாருங்கள்! பொருளியல் அறிஞர் அமர்தியாசென் போன்றோர் குறை சொல்லும் முன் பல தகவல்களை திரட்டவில்லை என்று சொல்கிறார்கள். நோபல் பரிசு அறிஞருக்கே சவால் விடுக்கும் இந்த அறிஞர் புலிகள் ஜி.எஸ்.டி.-யால் சிறு தொழில்கள் பாதிப்படையவில்லை என்கிறார்கள். ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உலகளாவியதாம். அதனால் பணவீக்கம் இல்லை என்பதால் விலைவாசி விண்ணை முட்டவில்லையாம்.
பொய்யோ புரட்டோ சொல்வதென்று துணிந்து விட்டால் செக்கா, சிவனா பார்க்க மாட்டார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். தினமலரோ சூரியனா, சீரோவாட்ஸ் பல்பா என்று கூட பார்க்கமாட்டோம் என இருட்டறையில் படம் காட்டுகிறது. வேலை வாய்ப்பின்மை தோற்றுவிக்கும் பதற்றம் பொய், அவை எதிர்க்கட்சிகள், அறிஞர்கள் தோற்றுவிக்கும் பிரமை என்று தமிழிசையின் அதிரும் குரலில் எழுதிக் கொண்டு இதுதான் “உண்மையின் உரைகல்” என்று வேறு சொல்கிறார்கள். காசு கொடுத்து வாங்கும் வாசகரை இதற்கு மேல் யாரும் இழிவுபடுத்த முடியாது.
மல்லையா, நீரவ்மோடி என்று வரிசையாக கருப்புப் பண முதலைகள் வெளிநாடு தப்பிச் செல்லும் போது, முதலைகள் வரிசையாக பிடிபடுகிறார்கள் என்று பொய் சொல்வதை திட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. மோடியின் சுதந்திர தின உரையைப் பார்க்கும் போது அடுத்த ஆட்சியும் அவரே அமைப்பார் என்பதை பகிரங்கமாக எழுதுகிறது தினமலர். முற்றும் துறந்த பார்ப்பன வெறி என்பது இதுதான்.மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி குறித்து தினத்தந்தி என்ன எழுதியதோ அதையே தினமணியும், தினமலரும் எழுதியிருக்கின்றன. மோடி-அமித்ஷாவின் ராஜதந்திரம், எதிர்க்கட்சிகளின் பலவீனம், 2019 தேர்தலிலும் மோடி வெற்றிபெறுவார்………..
ஒரு தேர்தலில் சதி, பேரங்கள், திரைமறைவு மிரட்டல்களால் வெல்வதைப் பாராட்டுபவர்கள், இதே சாமர்த்தியங்களோடு தொழில் புரியும் மாஃபியாக்களை மட்டும் குற்றவாளிகள் என்று பாரபட்சம் காட்டுவது ஏன்?
என்ன, தொழில்முறை திருடர்களுக்கு இப்படி புலவர் மரபில் பொழிப்புரை போட்டு நல்லவர்களாக காட்டும் பத்திரிகைகள் இல்லை! அந்த வகையில் பா.ஜ.க. கொடுத்த வைத்த கட்சிதான்!
பல பிராமண இந்துக்கள் தம்மைத் தொடாமல் படகில் ஏற அனுமதித்தால் மட்டுமே படகில் ஏறுவதற்குச் சம்மதித்ததாகக் கூறுகிறார் மீனவர் மரியான் ஜார்ஜ்
மரியான் ஜார்ஜ், 47 வயதான கேரள மீனவர். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலிருந்து தனது மீன்பிடி படகுடன் கிளம்பி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த சுமார் 150 பேரைக் காப்பாற்றி இருக்கிறார் மரியான். மத்திய அரசிடம் இருந்து கோரிய அளவுக்கு ஹெலிகாப்டர்களோ மீட்புப் படையோ வந்து சேராத நிலையில், மக்களைக் காப்பாற்ற சுமார் 2,800 மீனவர்கள் களமிறங்கி உள்ளனர்.
இம்மீனவர்கள் பெரும்பாலும் தமது சொந்தப் படகுகளையே மீட்புப் பணிக்குப் பயன்படுத்தி வருகின்றனர். மீட்புப் பணியில் ஈடுபடும் மீனவர்கள் காப்பாற்றப்படுபவர்களிடம் இருந்து கூலியையோ வேறு சன்மானங்களையோ எதிர்பார்ப்பதும் இல்லை, அவர்களாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வதும் இல்லை. எனினும், கேரள முதல்வர் பிணராயி விஜயன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு அரசு சார்பாக உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் ஈடுபடும் தன்னார்வலர்களும் மீனவர்களும்
கேரளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர், மொத்த இந்தியாவையும் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மொழி இன பேதமின்றி எல்லாத் தரப்பு மக்களுக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளனர். மசூதிகளிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இந்துக் கோவில்களிலும் மதம் கடந்து எல்லாப் பிரிவு மக்களும் தஞ்சமடைந்துள்ளனர். இது பக்ரீத் நாள். மலப்புரத்தில் உள்ள நிலாம்பூர் பகுதியில் அமைந்திருக்கும் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள் இசுலாமிய மக்களோடு சேர்ந்து ஈகைத் திருநாளைக் கொண்டாடுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் கேரள மீனவர்களோடு தமிழக மீனவர்களும் இணைந்துள்ளனர். உதவிகள் பல்வேறு திசைகளில் இருந்தும் குவிந்து வருகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து வரும் கேரள மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தைத் துயரில் இருந்து மீட்க தங்களால் இயன்ற அளவுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். எனினும் இந்தப் பேரவலத்திலும் நெற்றிக் காசைத் திருடித் தின்னும் ஈனத்தனங்கள் நாம் எதிர்பார்த்த திசையில் இருந்து வருவதையும் காண முடிகின்றது.
சுமார் 20 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ள நிலையில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள உதவித் தொகை வெறும் 600 கோடி ரூபாய். இந்நிலையில் ஐக்கிய அரேபிய அமீரக அரசு, கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்க முன்வந்ததுள்ளது. எனினும், பேரிடர் காலங்களில் வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவிகளை ஏற்றுக் கொள்வது மரபில்லை என்பதால் இத்தொகை கேரள அரசுக்குக் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாகபத்திரிகைச் செய்திகள்தெரிவிக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரத்தினர் அம்பலப்பட்ட தருணங்கள்
1 of 3
சங்க பரிவாரத்தின் தலைமையகமே போலியான படங்களை கேரள நிவாரணப் பணிகளின் படங்களாக வெளியிட்டதை ஆல்ட்நியூஸ் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட குஜராத் வெள்ளத்தில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்ட படத்தை தற்போது கேரளத்து மீட்புப் படமாக வெளியிட்டிருப்பதை அம்பலப்படுத்தும் தி பிரிண்ட் இணையதளம்
குஜராத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மீட்புப் பணியின் படங்கள்
அதிக வரி செலுத்தும் தென்னிந்திய மாநிலங்களிடம் இருந்து அட்டையாக உறிஞ்சிக் கொள்ளும் இந்திய அரசு, இந்த மாநிலங்களின் துயரைத் துடைக்காமல் இருப்பதோடு வெளியில் இருந்தும் உதவிகள் கிடைப்பதை சில்லறையான விதிமுறைகளைக் காரணம் காட்டித் தடுக்க முயற்சிக்கின்றன. இது ஒருபுறம் என்றால், ஆர்.எஸ்.எஸ் கும்பல் மீட்புப் பணியில் ஈடுபடும் பொதுமக்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதைச் செய்வது தங்களது தொண்டர்கள்தான் என்று விளம்பரம் செய்து வருகின்றது.
Sanghis post Kerala Agriculture Minister's photo while working at flood relief, as 'RSS Karyawahak'… 😅😂
(கேரள விவசாயத்துறை அமைச்சர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தைப் போட்டு ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டதாக ஒரு சங்கி பரப்பிய செய்தியை அம்பலப்படுத்தியிருக்கிறார் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்)
மேலும், தங்கள் அமைப்பான சேவா பாரதியை தவிர வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தால் அதைக் கொண்டு முசுலீம்களையும் கிறித்தவர்களயுமே பாதுகாப்பார்கள் என்று இன்னொரு பக்கம் பிரச்சாரம் செய்து வருகின்றனர் இந்துத்துவக் காலிகள். இது ஒரு நோய் பீடித்த மனநிலை. இந்த மனநிலை கேரளத்திற்கு வெளியில் மட்டுமில்லை – உள்ளேயும் இருக்கத்தான் செய்கிறது.
பல பிராமண இந்துக்கள் தம்மைத் தொடாமல் படகில் ஏற அனுமதித்தால் மட்டுமே படகில் ஏறுவதற்குச் சம்மதித்ததாகக் கூறுகிறார் மீனவர் மரியான் ஜார்ஜ்
இந்தச் செய்திக் கட்டுரையின் துவக்கத்தில் அறிமுகமான மரியான் ஜார்ஜ் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கொல்லத்தை அடுத்துள்ள பகுதி ஒன்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதை அறிந்து அவர்களை மீட்கச் செல்கிறார். மரியானின் படகைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள், ”நீ ஒரு கிறித்தவனா?” எனக் கேட்டுள்ளனர். மரியான் ’ஆம்’ என பதிலளித்ததும், ”உனது படகில் நாங்கள் ஏற மாட்டோம்” என மறுத்துள்ளனர்.
மீண்டும், ஐந்து மணி நேரம் கழித்து அதே பகுதிக்குச் சென்றுள்ளார் மரியான். இப்போதும் காப்பாற்ற யாரும் வராததால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த அவர்கள் மரியானை உதவிக்காக அழைத்துள்ளனர். எனினும், தங்கள் வீட்டார் யாரையும் மரியான் தீண்டக் கூடாது என்கிற உத்தரவாதத்தின் பேரிலேயே அவர்கள் படகில் ஏறியுள்ளனர். மரியான் மட்டுமின்றி தன்னுடன் பேசிய வேறு சில மீனவர்களுக்கும் இதே அனுபவம் கிடைத்துள்ளது என்கிறார் சி.என்.என் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட போது சேதாரமான தனது படகுடன் அருண் மைக்கேல்
அருண் மைக்கேல் என்கிற மற்றொரு மீனவர் சுமார் 1500 பேரை மீட்டுள்ளார். வெள்ள பாதிப்பை அறிந்த உடன், தனக்கு சொந்தமான 32 அடி நீள படகை லாரியில் ஏற்றி பத்தனம்திட்டாவுக்குச் சென்றுள்ளார். அருணின் அனுபவத்தில், மேட்டுக்குடியினர் பலரும் மீட்புப் பணிக்கு வரும் மீனவர்கள் தங்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைத் திருடிச் சென்று விடுவார்களோ என அஞ்சியுள்ளனர். வேறு சிலர் தங்கள் செல்லப் பிராணிகளை முதலில் படகில் ஏற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். மற்றும் சிலர் வீட்டிலிருக்கும் விலை உயர்ந்த பொருட்களை விட்டு வர மனமின்றி உணவை மட்டும் கொடுத்து விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
“எங்களுக்கும் இதே போல் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அவர்களும் எங்களுக்கு உதவி செய்ய வருவார்கள் அல்லவா?” – அருண் மைக்கேல் தனது மகளுடன்
இது போன்ற புறக்கணிப்புகளால் மீனவர்கள் மனம் சோர்ந்து விடவில்லை என்பதுதான் ஆறுதல் அளிக்கும் செய்தி. ”இப்போது என்ன நடந்ததோ, அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். நாளையே எங்களுக்கும் இதே போல் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அவர்களும் எங்களுக்கு உதவி செய்ய வருவார்கள் அல்லவா?” என்கிறார் அருண் மைக்கேல்.
எளிய மனிதர்களின் எளிய மனங்கள்தான் எத்தனை வெளிப்படையாக இருக்கின்றன… பார்ப்பனிய சூது-வாதுகள் அந்த மனிதர்களை அடைந்து விடாமல் கடல் தடுத்து நிறுத்தும் என்று நம்புவோம்.