Sunday, August 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 277

அட இந்த மாதிரி வரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலே …

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 05

முதல் பாகம்

“புதுசா” என்ற சொல் காதில் பட்டதுமே அக்காக்கியின் கண்கள் இருண்டன, அறையிலிருந்தவை எல்லாம் தாறுமாறாகச் சுழன்றன. அவனுக்குத் தெளிவாகப் பார்க்க முடிந்த ஒரே பொருள் பெத்ரோவிச்சின் பொடி டப்பி மூடிமேலிருந்த ஜெனரலின் காகிதம் ஒட்டிய முகம் மட்டுமே.

“புதுசாவது, ஒன்னாவது? விளங்கலே” என இன்னும் எதோ கனவு காண்பவன் போலக் கூறிய அக்காக்கிய் அக்காக்கியெவிச், “அதுக்கு வேண்டிய பணம் எங்கிட்ட இல்லையே” என்றான்.

பெத்ரோவிச்சோ, மிருகத்தனமான அலட்சிய பாவத்துடன், “ஆமாம், புதுசாத் தைத்துக் கொள்ள வேண்டியது தான்” என மறுபடியும் சொன்னான்.

“ஊம்…. அப்படிப் புதுசுதான் வேண்டும் என்றால் அதற்கு எப்படி… என்ன…”

“அதாவது, என்ன செலவாகும்ணு கேட்கிறீங்களா?”

“ஆமாம்.”

”ம்ம்… ஐம்பது ரூபிள் நோட்டு மூனைத் தனியா எடுத்து வைக்க வேண்டியது தான்” என்று அர்த்த பாவனையுடன் உதடுகளைக் குவித்துக்கொண்டான் பெத்ரோவிச்..

மற்றவர்களுக்குக் கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்துவதில் பெத்ரோவிச்சுக்கு மிகவும் விருப்பம். ஒருவனைத் திடீரென மண்டையில் சாத்துவது போல எதாவது சொல்லி விட்டு, அவன் எப்படித் திக்குமுக்காடுகிறான் என்று ஓரக் கண்ணால் பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமானது.

“மேல்கோட்டுக்கு நூற்றைம்பது ரூபிளா!” என்று கத்திவிட்டான் பாவம் அக்காக்கிய். எப்போதும் தணிந்த குரலில் பேசுவதைச் சிறப்பியல்பாகக் கொண்ட அவன் வாழ்க்கையிலேயே உரக்கக் கத்தியது இதுதான் முதல் தடவை போலும்.

“ஆமாம், ஐயா. அதுவும் எந்த மாதிரிக் கோட்டு என்பதைப் பொருத்தது. கழுத்துப் பட்டைக்கு மார்ட்டன் மென்மயிர்த் தோலும் குல்லாவுக்குப் பட்டு உள்துணியும் வைச்சா இருநூறு வரை பிடிக்கும்” என்றான் பெத்ரோவிச்.

தையல்காரன் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளாமலும் கேட்க முயலாமலும் அவன் விளைத்த அதிர்ச்சியைப் பொருட்படுத்தாமலும் அக்காக்கிய் கெஞ்சும் குரலில், “இந்தாப் பாரு, பெத்ரோவிச். கொஞ்சம் தயவு பண்ணேன். இன்னும் சிறிது காலத்துக்கு உபயோகிக்கிறது மாதிரி எப்படியாவது தைத்துக் கொடேன்” என்று குழைந்தான்.

“அதுதான் முடியாதுன்னு சொன்னேனே. பாடும் பாழ், பணமும் வீண் விரயம்” என்றான் பெத்ரோவிச்.

படிக்க :
வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !
CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !

இதைக் கேட்டபின் அக்காக்கிய் ஒரேயடியாக உளஞ் சோர்ந்து அங்கிருந்து அகன்றான். தையல்காரனோ, அவன் சென்ற பிறகும் வெகுநேரம் வரை வேலையைத் தொடராமல் உதடுகளை அர்த்தபாவனையுடன் குவித்தவாறு நின்று கொண்டிருந்தான். தன்னையும் தாழ்த்திக் கொள்ளவில்லை, தையல் கலையையும் இழிவுபடுத்தவில்லை என்ற எண்ணம் அவனுக்கு மன நிறைவளித்தது.

வீதிக்கு வந்த அக்காக்கிய் கனவு காண்பவன் போலிருந்தான். “ஆக விஷயம் அப்படியாக்கும், ஊம்?” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான். “இந்த அளவுக்கு வரும் என்று நான் உண்மையில் நினைக்கலே…” என்று கூறி விட்டு, சற்று நேர மௌனத்துக்குப் பின், தொடர்ந்தான்: “ஆக விஷயம் கடைசியில் இப்படியாச்சு! இந்த நிலை வரும் என்று கொஞ்சம் கூட நினைக்கலே…” மீண்டும் நீண்ட மௌனம். அப்புறம் அவன், “அப்படியா சேதி! அட இந்த மாதிரி வரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலே… அடேயப்பா, என்ன விபரீதம்… எவ்வளவு சங்கடமான நிலைமை!” என்றான்.

இப்படி முணுமுணுத்து விட்டு, எங்கு போகிறோம் என்பதைக் கவனிக்காமலே, வீடு செல்லும் வழிக்கு நேர் எதிர்த்திக்கில் விடுவிடென்று நடந்தான். புகைக் குழாய் சுத்தம் செய்பவன் ஒருவன் பாதையில் எதிர்ப்பட்டு, தனது கரிபடிந்த விலாவால் அவன்மேல் உராய்ந்து அவன் தோளைக் கருப்பாக்கி விட்டான்; கட்டுமானம் நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டின் உச்சியிலிருந்து கையளவு காரை அவன் மீது பொத்தென்று விழுந்தது. அவனோ, இவை எவற்றையும் கவனிக்கவே இல்லை. நீள்பிடிக் கோடரியைப் பக்கத்தில் சாய்த்து வைத்து விட்டு, கொம்புச் சிமிழிலிருந்து மூக்குத் தூளைக் குழித்த கைமுட்டிமேல் தூவிக் கொண்டிருந்த போலீஸ்காரன் ஒருவன் மேல் முட்டிக் கொண்ட போதுதான் அவனுக்குக் கொஞ்சம் உணர்வு வந்தது; அதுவும் போலீஸ்காரன் அவனைப் பார்த்து, “எய், என்ன மோதுறே? இடம் போதலையோ நடைபாதையில்?” என்று அதட்டியதனால். இந்த அதட்டல் அவனைச் சுற்று முற்றும் பார்க்க வைக்கவே அவன் நடையை வீட்டை நோக்கித் திருப்பினான்.

வீடு சேர்ந்த பின்புதான் அவன் தன் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, தனது நிலைமையை உள்ளபடியே தெளிவாகக் கண்டு, விஷயத்தைத் தனக்குத் தானே விவாதிக்கலானான் – அரைகுறை வாக்கியங்களில் அல்ல, யுக்திப் பொருத்தமாகவும் ஒளிவுமறைவின்றியும் – அந்தரங்கமான சொந்த விஷயங்களைப் பேசுவதற்குத் தகுதி வாய்ந்த அறிவாளி நண்பனிடம் உரையாடுவது போல.

“ஊஹும். முடியாது. பெத்ரோவிச்சிடம் இப்போது பேசுவது கூடாது. வீட்டுக்காரியிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறான் போலிருக்கிறது, அதுதான் அப்படி… ஞாயிற்றுக்கிழமை காலையில் போய்ப் பார்க்கிறேன், அதுதான் நல்லது. சனிக்கிழமை ராத்திரி பூராவும் குடித்ததன் விளைவாக மறுநாள் காலையில் ஒற்றைக் கண்ணை இடுக்கிக்கொண்டு உறங்கி வழிந்தபடி, மறுபடி ஊக்கம் வருவதற்கு ஒரு கிளாஸ் குடித்தால் நன்றாயிருக்குமே என்று தவியாய்த் தவித்துக் கொண்டிருப்பான். மனைவியோ பணங் கொடுக்கமாட்டாள். ஆகவே நான் வந்து பத்துக் காசோ, கொஞ்சம் அதிகமோ கொடுத்தால் தானே வழிக்கு வருவான், அப்போது மேல்கோட்டைப் பற்றி… என்ன நான் சொல்கிறது…”

உறங்கி வழிந்தபடி, மறுபடி ஊக்கம் வருவதற்கு ஒரு கிளாஸ் குடித்தால் நன்றாயிருக்குமே என்று தவியாய்த் தவித்துக் கொண்டிருப்பான். மனைவியோ பணங் கொடுக்கமாட்டாள். ஆகவே நான் வந்து பத்துக் காசோ, கொஞ்சம் அதிகமோ கொடுத்தால் தானே வழிக்கு வருவான்…

இவ்வாறு தனக்குள் எண்ணிக் கொண்ட அக்காக்கிய் அக்காக்கியெவிச் பெருத்த ஆறுதல் அடைந்து, ஞாயிறு எப்போது வரும் என எதிர்பார்த்திருந்தான். ஞாயிறும் வந்தது. பெத்ரோவிச்சின் மனைவி வீட்டைவிட்டு எங்கோ கிளம்பிச்செல்வதைத் தொலைவிலிருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்த அக்காக்கிய் அக்காக்கியெவிச் நேரே வீட்டிற்குள் புகுந்தான். பெத்ரோவிச் சனிக்கிழமை இரவுக் களியாட்டத்தின் விளைவாக உண்மையிலேயே கடுமையாக மாறுகண் போட்டுக் கொண்டு, தொங்கும் தலையைச் சிரமத்துடன் நிமிர்த்தி வைத்தவாறு தூங்கி வழிந்தான்; இவ்வளவெல்லாமிருந்தும் அக்காக்கிய் அக்காக்கியெவிச் வந்த காரியம் என்ன என்று தெரிந்ததுமே, ஏதோ சைத்தான் விலாவிலே குத்தி விட்டது போலத் துள்ளி நிமிர்ந்து, “முடியவே முடியாது. புதுக்கோட்டு தைக்கக் கொடுங்க” என்று சொல்லிவிட்டான். அக்காக்கிய் அக்கணமே பத்துக் காசை அவன் கையில் திணித்தான். “ரொம்ப நன்றி, உங்களை வாழ்த்திக் குடித்துக் கொஞ்சம் தெம்பு ஏத்திக்கிறேன். ஆனா மேல்கோட்டைப் பற்றி வீணாகக் கவலைப்படாதீங்க. அது இனி எதுக்கும் உருப்படாது. புதுக் கோட்டுக்கு அளவு கொடுங்கள், அருமையா தைத்துத் தருகிறேன். அது மட்டும் நிச்சயம்” என்றான் பெத்ரோவிச்.

அக்காக்கிய் பழங்கோட்டைப் பழுதுபார்ப்பது பற்றி இன்னும் ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் பெத்ரோவிச் அவன் பேச்சைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், “புதிய மேல்கோட்டு கட்டாயமாகத் தைத்துத் தருகிறேன். என்னால முடிந்த வரையில் நல்லாச் செய்து தாறேன். புது பாணிக்கேற்ப காலருக்கு வெள்ளிக் கிளிப்பு வைக்க வேண்டி வந்தாலும் வரலாம்” என்று கூறினான்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !

1

வினவு தளத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் உங்கள் பார்வைக்கு. தொடர்ந்து இணைந்திருங்கள்… ஆதரவு தாருங்கள்…

***

1. நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடுவண்டாரி தமிழ்மணி !

ந்துத்துவத்தை பல்லக்கில் சுமந்து வருகிறது பாஜக – அதற்காக பெரியாரியம் என்கிற ‘முட்களை’ அகற்றும் முள்பொறுக்கி வேலையைச் செய்து கொண்டிருக்கிறார் சீமான்.

இதற்கு ஏற்ப மொத்த கட்சியும் ஜனநாயகமற்ற நாஜிக் கட்சியின் பாணியில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த பலிபீடத்தில் தான் தமிழ்மணிகள் பலியிடப்படுகின்றனர். தலைமையின் மேல் கேள்விக்கிடமற்ற பக்தியும், உட்கட்சி ஜனநாயகமின்மையும் ஏற்கனவே கிறுக்குப் பிடித்த குரங்கிற்கு சாராயம் ஊற்றிக் கொடுத்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. (கட்டுரையை படிக்க)

***

2. ‘நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !

டந்த ஓராண்டாக மிகக் கடுமையாக நீட்டுக்கு படித்து வந்தாள். தனியார் நிறுவனத்தில் பணம் கட்டிப் படிக்க வசதியில்லை. இரவு பகலாகப் படித்து 320 மதிப்பெண் எடுத்திருந்தாள். இந்த மதிப்பெண்ணுக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியில் அரசுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலும் இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியின் நிர்வாகக் கோட்டா அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கலாம். எப்படியும் வருடத்திற்கு 12 லட்சம் வரை செலவாகலாம். தர்ஷினி மருத்துவ படிப்புக் கனவைக் கைவிடும் முடிவை எடுத்திருப்பதாகச் சொன்னார்கள். வெளியூர் சென்று விட்டு மூன்று வாரம் கழித்துதான் அவளைப் பார்க்கச் சென்றேன்.

“என்ன படிக்கப் போறே தர்ஷி..”

“நர்சிங்குக்கு அப்ளை பண்ணிருக்கேன் சித்தப்பா” அவள் முகத்தில் மெலிதான சோகம் தவிர பெரிய துக்கம் ஏதும் இல்லை.

“வருத்தமா இல்லையா தர்ஷி?..”

“எனக்கென்ன சித்தப்பா… அப்பாவுக்கு முடியாம போனா நானே பார்த்துக்கனும்னு நினைச்சேன். அவங்க கைய பாத்தீங்களா? வேற யாரும் அக்கறையா பார்த்துக்க மாட்டாங்க. இப்ப என்ன? டாக்டரா இல்லாட்டி, நர்சா இருந்து பார்த்துக்கப் போறேன். அவ்ளோ தானே?” சிரித்தாள்.  (கட்டுரையை படிக்க)

***

3. கொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் !

டற்கூறாய்வு அறிக்கையில் போலீசு தாக்கியதால்தான் விவேகானந்தகுமார் மரணமடைந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. அதில் “இரண்டிலிருந்து ஆறு வரை உள்ள நெஞ்சு எலும்பு உடைந்திருக்கிறது என்பதும் அவரது மரணத்திற்கு முன்பே, கையில் லத்தியின் அளவுக்கு காயம் (லத்தியால் தாக்கியதால்) ஏற்பட்டதையும்,  மண்டை உடைந்து காதில் ரத்தம் வழிந்துள்ளதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உடற்கூறாய்வு அறிக்கை மூலம், நெஞ்சு எலும்பு உடைந்ததற்கு காரணம் லத்தியைக்கொண்டு அடித்ததுதான் என்பது உறுதியாகியிருக்கிறது. (கட்டுரையை படிக்க)

***

4. பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !

பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றம் குறித்த முன்னெச்சரிக்கை திட்டங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை.

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் 30% குறைந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதன் காரணமாக ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே எந்தவொரு ஆய்வின் முடிவும் தெரிவிக்கும் உண்மை. (கட்டுரையைப் படிக்க)

***

5. சேலம் ஆட்சியர் ரோகிணியின் மறுபக்கம் !

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கன்வாடி மற்றும் சத்துணவு பிரிவில் இருந்து ஒருவர் கூடக் கலந்து கொள்ளவில்லை. காரணம், ஆட்சியரிடம் இருந்து இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிரட்டல். போராட்டத்தில் கலந்து கொண்டால் வேலையை விட்டு நீக்கப்படுவீர் என்ற வகையில் மிரட்டல் சென்று உள்ளது.

ஆனால் ஆசிரியர்களுக்கு இந்த மிரட்டல் செல்லவில்லை, காரணம் ஆசிரியர்களிடம் இந்த மிரட்டல் செல்லுபடி ஆகாது என்பதும், அதே நேரத்தில் தனக்கு எதிராகத் திரும்பும் என்பதும் ரோகிணிக்கு நன்றாகத் தெரியும். (கட்டுரையைப் படிக்க)

***

6. நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

வற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், ‘’கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’ என்று கேள்வி எழுப்பி அரங்கம் அதிர கலகம் செய்தனர். ‘’எக்ஸாம் ஸ்ட்ரசுக்கா நடத்துறியா? எலெக்சன் ஓட்டுக்கா நடத்துறியா?’’ என்ற முழக்கங்களை எழுப்பினர். முற்போக்கு மாணவர்களுக்கு ஆதரவாக, கூடியிருந்த மாணவர்கள் எழுப்பிய கரவொலியும் விசில் சத்தமும் காதை பிளந்தது. மோடியின் நேரலை நிகழ்வும் அத்தோடு நிறுத்தப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு கலைந்து சென்றனர். (கட்டுரையை படிக்க)

***

7. வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

ராட்டிய மாநிலத்தின் பீட் நகரத்தில் குடிநீர் காலியாகி, உடைகளை துவைக்கவும், குளியல் – கழிப்பறை தேவைகளுக்குமான நீர் கூட இல்லை. தேவையான நீரைக் குடிக்காததினால் வரும் வெப்ப நோய்களாலும், மாசடைந்த நீரைக் குடிப்பதனால் வரும் வயிற்றுப் பிரச்சினைகளாலும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருகின்றன.

நகரத்தின் வசதி வாய்ந்த நடுத்தர வர்க்கம் ஆயிரம் லிட்டர் நீரை சுமார் 265 ரூபாய்களுக்கு தனியார் நீர் வணிகர்களிடமிருந்து பெற்று வருகின்றனர். கூடவே மருத்துவமனைகளுக்கு வரும் கூட்டமும் அதிகரித்து வருகிறது. சேறு கலந்த நிரை குடிப்பதற்கு மாடுகளே மறுத்து வருகின்றன. இந்த சேறு கலந்த நீர் வறண்டு போன அணைகள், குளங்களில் கொஞ்சம் இருக்கின்றன. (கட்டுரையை படிக்க)

***

8. அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு

தெப்பக் குளத்தில் மூழ்கியிருந்து விட்டு நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை அவர் வெளியே வந்து தரிசனம் கொடுப்பதாக ஒரு புரட்டை பார்ப்பன பீடங்கள் அவிழ்த்து விட்டன. வரலாற்றின்படி இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. தமிழகத்தில் அரசியல் ரீதியாக வெற்றி பெற முடியாத இந்துத்துவக் கூடாரமும், பார்ப்பன கிச்சன் கேபினட்டும் இணைந்து இந்த அத்தி வரதர் கூத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

இந்தப் புரட்டுக்கு அடிமை எடப்பாடி அரசு ஓகே சொல்லி, பிறகு ஊடகங்கள் அதுவும் பார்ப்பன ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அத்தி வரதரைப் பற்றி இத்துப் போன கதைகளை பலவற்றை வெளியிட்டு வருகின்றன. பிறகு தினமும் இலட்சக்கணக்கானோர் காஞ்சிபுரம் வருகின்றனர் என்று ஊடகங்கள் கொளுத்திப் போட்டன. (கட்டுரையை படிக்க)

***

9. அசோக் லேலண்ட் : அநியாயமான வேலைநாள் பறிப்பும் சம்பள வெட்டும் !

திய  உயர்வுக்காக 6-வது நாள் சட்ட உரிமையை அடகு வைக்கக்கூடாது என்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிரசுரம், அவசரக்கடிதம், சுவரொட்டி  மூலம் கருத்துக்கள் வெளியிட்டதை மீறி கி.வெ. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுதான் விவாதிக்க வேண்டிய விசயம். திரு.கி.வெ அவர்கள் மாற்று சிந்தனையாளர் அல்ல. மாறாக, முதலாளித்துவ சிந்தனையாளர் என்பதைத் தாண்டி நேர்மையில்லாதவர் என ஏன் சொல்ல வேண்யுள்ளது என்றால் “6thday”-வின் பாதகமான மிகைஉற்பத்தி, சம்பளவெட்டு,  ஆட்குறைப்பு ஆகியவற்றை மறைத்தார் என்பதால்தான், இவருக்கு அறப்பார்வை கொண்டவர், நெருப்பு போன்ற நேர்மையாளர், சிறந்த ஆளுமை கொண்டவர் என்று  ‘ஒளிவட்டம்’ போடப்பட்டது. ஆனால், ஒரே ஒப்பந்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட பிம்பங்கள் இரண்டே ஆண்டுகளில் முதலாளித்துவத்தாலே தகர்ந்து போனது.

திரு.கி.வெ. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, “ ‘win – win’ – என் பாலிசி, மற்ற தலைவர்கள் சரியில்லை, இதயத்தோடு பேசுகிறேன்” என்று தேன் தடவி பேசினாலும் முதலாளித்துவ சுரண்டல், வஞ்சகத்தை எத்தனை நாளைக்கு மறைத்திட முடியும் (கட்டுரையை படிக்க)

***

10. சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

“ஒரு மணி நேரம் எங்கண்ணன் காட்டுக் கத்து கத்தியும், சோத்து மேட்டரை மட்டும் பிடித்துத் தொங்கினால் எப்படி?” என்று நாதக தம்பிமார்கள் மனங்கோணி விடக் கூடாது. கடந்த பத்தாண்டுகளில் அண்ணன் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருந்தாலும் எல்லா மேடைகளிலும்  “புஹாஹாஹா” “வாய்ப்பில்ல ராஜா” “தொலைச்சிபுருவேய்ன்” “பிச்சிப்புருவேய்ன்” “கிழிச்சிப்புருவேய்ன்” “அடிச்சிப்புருவேய்ன்” “தீர்த்துப்புருவேய்ன்” “கொண்டேடேடே….புருவேய்ன்” போன்ற  வழக்கமான தத்துவங்களையே வெளிப்படுத்தி வருகின்றார். இடைக்கிடையே அண்ணன் முன்வைக்கும் இது போன்ற சைடுடிஷ்கள் தான் நமக்கு  சுவாரசியமூட்டுகின்றன.

மேற்படி பேச்சுக்கு தம்பிமார்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். மண்டையில் மூளை என்கிற வஸ்து இருக்கிறவர்களால் எப்படி இதற்கெல்லாம் கைதட்ட முடியும் என்கிற சந்தேகம் சமீப நாட்கள் வரை நமக்கும் இருந்தது; ஆனால் இந்த தம்பியின் பராக்கிரமத்தை படித்த பின் அந்த சந்தேகம் நீங்கியது. (கட்டுரையைப் படிக்க)

தொகுப்பு :

 

60 வகையான விசப் பாம்புக் கடி – ஒரே வகை நச்சுமுறிவு மருந்து !

0

பாம்புகளைப் போலவே, பாம்புக்கடிக்கான நச்சுமுறிவு பற்றிய ஆய்விலும் கூட கொள்கை வகுப்பாளர்களையும் விஞ்ஞான அமைப்புகளையும் உருவாக்குவதில் இந்தியாவின் கவனம் சறுக்கிவிட்டது போல தெரிகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பாம்புக்கடியால் குறைந்தது 46,000 பேர் இறக்கின்றனர் என்று தனியார் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் பாம்பு கடியால் ஏற்படும் மரணங்களில் இது பாதியாகும். தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் மரணிப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த  பல்கலைக்கழகமான University of Reading-ன் ஆய்வு தெரிவிக்கிறது. இது நாட்டின் மிகப் பெரிய மனித – விலங்கு முரண்பாடாக இருந்தாலும் இதற்கான ஆராய்ச்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவம் அதிர்ச்சியூட்டும் விதத்தில் காலங்கடந்து பொருத்தமற்றதாகி உள்ளது.

“பாம்பு கடித்தவர்களுக்கான மருத்துவ தொழில்நுட்பத்தின் சாராம்சம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மாறவில்லை” என்று இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) உள்ள சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் (Centre for Ecological Sciences) ஒரு பகுதியாக இருக்கும் பரிணாமவியல் நஞ்சியல் ஆய்வகத்தின் (Evolutionary Venomics Lab) உதவி பேராசிரியர் கார்த்திக் சுனகர் கூறினார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்ணிய பள்ளப்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் மது கண்ணன் என்ற 7 வயது சிறுவன் பாம்பு கடித்து பலியான சோகம். (உள்படம்: மதுராந்தகத்தை அடுத்துள்ள கருங்குழியில் நள்ளிரவில் பாம்பு கடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் பலியாகினர்.

பாம்புக்கடி நச்சு முறிவுக்கான ( snake antivenoms – ASVs ) ஆராய்ச்சியிலுள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தும் புதிய ஆய்வொன்றை  தற்போது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.  பாம்புக்கடி மருந்தை வட்டார அளவில் மிகுந்த பயனுள்ளதாக மாற்ற அவற்றை விஞ்ஞான ரீதியாக கண்டுபிடிக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றனர்.

காலாவதியான  தொழில்நுட்பம்:

இந்தியாவைப் போலவே மாறுபட்ட புவியியல் மற்றும் பல்லுயிர் அமைப்பு கொண்ட ஒரு நாட்டில் பாம்புக்கடி சிகிச்சைக்கு ஒரே ஒரு வகை நச்சு முறிவான பல்லிணைத்திறன் (polyvalent) பாம்புக்கடி நச்சு முறிவு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  இந்த நச்சு முறிவு  என்பது இந்திய நாகம் (the spectacled cobra), கட்டு விரியன் (the common krait), கண்ணாடி விரியன் (Russell’s viper) மற்றும் சுருட்டை விரியன் (the saw-scaled viper) என்ற ”நான்கு பெரிய” பாம்புகளின் நஞ்சிலிருந்து தயாரிக்கப்படும் கலவையாகும். ஆனால் இந்தியாவில் சுமார் 270 வகையான பாம்புகளில், 60 வகையான பாம்புகள் பல்வேறு வகையான நச்சுத்தன்மை கொண்டவை என்று கருத்தப்படுவதால் அதற்கு தகுந்தாற்போல வேறுப்பட்ட மருத்துவம் தேவைப்படுகிறது.

நச்சுமுறிவு தயாரிப்பதற்காக சேகரிக்கப்பட்ட நஞ்சின் பெரும்பகுதி சென்னை மற்றும் அதன் புறநகரிலிருந்து வருகிறது.

இந்த நான்கு நச்சுப்பாம்புகள் தவிர வேறு பாம்புகள் கடித்த நோயாளிகளுக்கு தற்போதைய நச்சுமுறிவு பயனற்றது மட்டுமல்லாமல் 4 நச்சுப்பாம்புகள் இனத்தின் இரண்டு வெவ்வேறு கூட்டத்துடன் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகள் அளவிலும் அந்த மருந்தின் செயல்திறன்  கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் ”நான்கு பெரிய” நச்சுப்பாம்புகள் இல்லாத மாநிலங்களில் கூட இந்த பல்லிணைத்திறன் நச்சு முறிவுதான் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. சான்றாக, அருணாச்சல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்லாமல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கூட இந்த நான்கு பாம்புகளில் எதுவும் இல்லை. எனினும் அதே பல்லிணைத்திறன் நச்சு முறிவுதான் இங்கு பயன்படுத்தப்படுகிறது” என்று பொது அறிவியல் நூலகத்தால் (Public Library of Science) தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான சுனகர் கூறினார்.

ஈரிடவாழ்வியல் (herpetology) – ஊர்வன (reptiles) மற்றும் நில நீர் வாழ்வன (amphibians) பற்றிய ஆய்வுக்காக 2018-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதை பெற்ற ரோமுலஸ் விட்டேக்கருடன் – ஐ.ஐ.எஸ்.சி (IISc) மற்றும் ஜெர்ரி மார்ட்டின் திட்டத்தின் (Gerry Martin Project) விஞ்ஞானிகள் சேர்ந்து இந்த கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் சுமார் 60 வகையான நச்சுப்பாம்புகள் உள்ளன. ஆனால் ”பெரிய நான்கு” பாம்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நஞ்சிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை நச்சுமுறிவு மட்டுமே அதற்கு உள்ளது.

இந்த புதிய ஆய்வுக்கட்டுரையானது சோச்சுரேக்கின் விரியன் (Sochurek’s viper) – இந்த பாம்பினத்தை ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஈரிடவாழ்வியலாளர் எரிச் சோச்சுரேக் கண்டறிந்ததால் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது, சிந்து கட்டுவிரியன் (Sind krait), மஞ்சள் வளைய கட்டுவிரியன் (banded krait), ஒற்றைக் கண்ணாடி நாகத்தின் (monocled cobras) இரண்டு கூட்டங்கள் மற்றும் அவற்றின் நெருங்கிய ‘நான்கு பெரிய’ உறவினர்களான இந்திய நாகம், கட்டு விரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியவற்றின் நச்சுத்தொகுதிகளை ஆய்வு செய்திருக்கிறது.

படிக்க:
CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

இந்த பாம்புகளின் நச்சுக்கலவை ஒரே இனத்தைச் சேர்ந்த வெவ்வேறு பாம்பு கூட்டத்தினிடையே மட்டுமல்லாமல் மாறுபட்ட நிலப்பரப்புகளிலும் கூட மிகவும் வேறுபாடாக இருக்கிறது என்பதை அந்த ஆய்வறிக்கை கண்டறிந்தது. “சான்றாக, மேற்கு வங்கம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஒரே ஒற்றைக் கண்ணாடி நாகப்பாம்பு இனத்தின் இரண்டு வெவ்வேறு கூட்டத்திடையே நச்சின் தன்மையில் ஒரு தெளிவான மாறுபாடு காணப்பட்டது. ஒன்று மிகவும் நரம்பு நச்சுத்தன்மை (neurotoxic) கொண்டது மற்றொன்று மிகவும் செல் நச்சுத்தன்மை (cytotoxins) நிறைந்ததாக இருந்தது என்று கண்டறியப்பட்டதாக” சுனகர் கூறினார்.

நச்சுமுறிவுகளை பரவலாக்குதல்:

பாம்புக்கடி நச்சுமுறிவு உற்பத்தியை பரவலாக்க வேண்டும் மற்றும் அதே பகுதியியைச் சேர்ந்த பாம்பின் நஞ்சைப் பயன்படுத்தியே சிகிச்சைக்கு வேண்டிய  நச்சு முறிவை உருவாக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ‘பெரிய நான்கு’ பாம்புகளிலிருந்து பாதுகாப்பான அளவிலாக எடுக்கப்பட்ட நஞ்சை குதிரைகளுக்குள் செலுத்துவதன் மூலம் நச்சுமுறிவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த விலங்குகள் மனிதர்களை விடவும் பாம்புக்கடி நச்சு எதிர்ப்புத்தன்மையைக் கொண்டுள்ளதுடன் அதற்கான நச்சுமுறிவையும் உடலிலேயே உருவாக்குகின்றன. பின்னர் அவை பிரித்தெடுக்கப்பட்டு நச்சுமுறிவாக மாறுகின்றன.

பாம்பின் நச்சிலிருந்து நச்சு எதிர்ப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது.

நச்சுமுறிவு தயாரிப்பதற்காக சேகரிக்கப்பட்ட நஞ்சின் பெரும்பகுதி சென்னை மற்றும் அதன் புறநகரிலிருந்து வருகிறது. பாம்புகளைப் பிடிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த இருளர் பழங்குடியின (Irula tribe) மக்கள், பாம்பு கடித்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினாலும் தற்போதைய சிக்கலைத் தீர்க்க அவர்களின் பணி மட்டுமே போதுமானதாக இல்லை.

பாம்புகளின் நச்சுத்தன்மை அவற்றின் புவியியல், உணவு, பருவம் மற்றும் பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது. உள்ளூர் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான தேவையான நச்சுமுறிவை உருவாக்க, அதே பகுதியிலிருந்து நஞ்சினை பிரித்தெடுக்க வேண்டும். சென்னையில் காணப்படும் பாம்புகளின் நஞ்சினிலிருந்து தயாரிக்கப்படும் நச்சுமுறிவு தெற்கு பகுதியில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் மேலும் தூரம் அதிகரிக்க அதிகரிக்க அதன் செயல்திறனும் குறைகிறது.

எதிர்கால நம்பிக்கை:

இந்த ஆராய்ச்சியானது, சிறந்த நச்சுமுறிவை உருவாக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று சுனகர் நம்புகிறார். “சிறந்த நச்சுமுறிவுகளை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் இரண்டு தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த ஆராய்ச்சி அடித்தளத்தில் சிறந்த சிகிச்சையாக மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் அரசாங்கத்தை அணுகிக்கொண்டிருக்கிறோம்”என்று அவர் மேலும் கூறினார்.

நச்சு எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை ஒரு இருளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் காட்டுகிறார்.

மும்பையிலுள்ள உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான ஹாஃப்கைன் நிறுவனமும் (The Haffkine Institute) ஒரு ஆய்வைத் தொடங்கியுள்ளது. “நச்சுமுறிவுகளின் செயல்திறனை நன்கு புரிந்துகொள்ள நாடு தழுவிய நச்சு பட்டியலாக்கம் (nation-wide venom mapping)  குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, எட்டு வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 22 பாம்புகளை ஆய்வு செய்ய எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.” என்கிறார் நிறுவனத்தின் இயக்குநர் நிஷிகந்த நாயக். ஆய்வின் பரப்பெல்லை விரிவானது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் பல மாநிலங்களின் வனத்துறையிடம் அனுமதி பெற்று வருகிறோம்.” என்று மேலும் கூறினார்.


தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : scroll

CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !

மிழகம் முழுவதும் 2020 புத்தாண்டு தொடக்கத்தை போராட்ட தினமாக மாற்றி மக்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். போராட்டத்தோடு பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டு, மோடி ஆட்சியிலிருக்கும் சூழலில் போராட்டங்கள் நிறைந்ததாகத்தான் நீடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நம் ஒவ்வொரு போராட்டமும் பார்ப்பன பாசிசக் கும்பலின் தூக்கத்திலும் அசுர சொப்பனமாக வந்து அவர்களை அச்சுறுத்த வேண்டும்.

புத்தாண்டு பிறந்த சமயத்தில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக..

***

சென்னை :

சென்னை பனகல் மாளிகை அருகில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் CAA – NPR – NRC எதிர்ப்பு நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்தனர். மேலும் போராட்டத்தில் இசுலாமியர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருச்சி :

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே, மக்கள் அதிகாரம் மற்றும் இதர தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தோழர்க்ள் மற்றும் திரளான பொதுமக்கள் ஒன்றுகூடி நள்ளிரவில் CAA – NPR – NRC ஆகியவற்றிற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

***

கோவை :

கோவையில் அவினாசி சாலையில் புத்தாண்டு தினத்தை ஒட்டி, வீதியில் NO CAA , NO NRC, NO NPR ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டு, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து பதாகைகளோடு 2020 புத்தாண்டு CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிரான போராட்டமாகத் தொடங்கியது.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

***

தருமபுரி :

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் CAA, NPR, NRC ஆகியவற்றை எதிர்த்து நள்ளிரவு புத்தாண்டு போராட்டம் !

புத்தாண்டு தினத்தில் மது போதையிலும், குத்தாட்டத்திலும் திளைப்பதைவிட்டு போராட்டமாக மாற்று! என்ற வகையில் CAA, NRC, NPR -க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்கள் அதிகாரம், DYFI , இஸ்லாமிய முற்போக்கு இளைஞர்கள் இணைந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகரத்தில் நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

CAA – NRC – NPR – எதிர்ப்பு கேக்

விண்ணதிரும் முழக்கத்தோடு தொடங்கியது மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு. போராட்டத்தை தொடங்கும் விதமாக தயாரிக்கப்பட்ட கேக்கை மோசின் கான் வெட்டி தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து DYFI மாவட்ட செயலாளர் தோழர் எழில், மக்கள் அதிகாரம் மண்டல பொருளாளர் தோழர் கோபிநாத் ஆகியோர் கண்டன உறையாற்றினர். அதுமட்டுமல்லாது தெருக்களில் கோலம் போட வைப்பது, ரோட்டில் எழுதுவது என்ற வகையில் இந்த போராட்டம் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

படிக்க:
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா
♦ எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ?

இதனை தொடர்ந்து நகரத்தில் போடப்பட்ட முழக்கத்தினை கேட்டு உளவு துறை போலீசும், நகர போலீசாரும் வந்து கூட்டத்தை போட்டோ எடுத்து கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். இதற்கு சிறிதளவும் அச்சப்படாத இளைஞர் கூட்டம் வந்த போலீசாருக்கு கேக்கை ஊட்டினர்.

போராட்டம் கேக் வடிவிலும் வரும் என்பதை எதிரிகளுக்கு புரிய வைத்தனர். RSS – BJP இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என உறுதியேற்று நள்ளிரவு ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம் வட்டம்.
தொடர்புக்கு : 97901 38614.

***

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் NAA,NPR, NRC எதிர்த்து நிற்கும் மாணவர்கள் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
தருமபுரி.
6384569228.

 

***

கடலூர் :

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், CAA – NRC – NPR இவற்றுக்கு எதிப்பு தெரிவித்து நள்ளிரவு புத்தாண்டு போராட்டங்கள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக CAA – NRC – NPR எதிர்ப்பு முழக்கங்கள் வீதிகளில், வீட்டு வாயில்களில் என கோலங்களில் எழுதப்பட்டன. அதுமட்டுமில்லாது இளைஞர்கள் கேக் வெட்டி முழக்கங்களை எழுப்பினர்.

கடலூர் பூவனூர் கிராமத்தில் நள்ளிரவு புத்தாண்டு போராட்டம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மோடி அரசு கொண்டு வந்த CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் கிராமத்தில் நடந்த  நள்ளிரவு புத்தாண்டு போராட்டம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

படிக்க:
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – டிசம்பர் 2019 | டவுண்லோடு
♦ சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்

***

விருத்தாச்சலம் :

விருத்தாச்சலம் பகுதியில் மக்கள் அதிக்கரம் தோழர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தங்கள் குடும்பத்துடன் CAA – NRC – NPR எதிர்ப்பு நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

விழுப்புரம் :

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துறவி கிராமத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் CAA – NRC – NPR எதிர்ப்பு நள்ளிரவு புத்தாண்டு போராட்டம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

புதுச்சேரி :

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR), குடியுரிமை திருத்த சட்டம் (CAA) ஆகியவற்றை எதிர்த்து, மக்கள் அதிகாரம் தோழர்கள் புதுச்சேரி கடற்கரையில் நடத்திய போராட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருப்பூர் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொகுப்பு :

சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்

சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்

ருவ வயதுடைய 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதற்கு மரபு என்ற பெயரிலும் சட்டப்படியும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை மறு ஆய்வு (review petition) செய்யக் கோரும் மனுக்கள் மற்றும் பருவ வயதுடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்குச் சென்று வழிபடுவதற்கு மீண்டும் தடை விதிக்கக் கோரும் மனுக்கள் (writ petitions) என ஐம்பதுக்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்துவந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில், ஆர்.எஃப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய இரு நீதிபதிகள் இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து, ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டனர். அதேசமயம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகிய மூவரும் இப்பிரச்சினையோடு தொடர்புடைய வேறு சில பிரச்சினைகளையும் அம்சங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்த வழக்கை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்தனர்.

இம்மனுக்கள் மீது மாறுபட்ட தீர்ப்புகள்  வழங்கப்பட்டிருப்பதால், “பெரும்பான்மைத் தீர்ப்பு” என்ற அடிப்படையில் தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கூறியிருக்கும் பரிந்துரைதான் சபரிமலைத் தீர்ப்பின் தற்போதைய நிலை. அதாவது, சபரிமலை வழக்கில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்கள் ரத்து செய்யப்படவில்லை. அவற்றை, அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுதான்  வருங்காலத்தில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்படும்போது  விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதால், அம்மனுக்கள் கிடப்பில் (pending) வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பெரும்பான்மை நீதிபதிகள் ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்காததாலும், சிறுபான்மை நீதிபதிகள் அத்தீர்ப்பை உறுதிசெய்திருப்பதாலும் அத்தீர்ப்புதான் நடைமுறையில் உள்ளது.

10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட உரிமையுண்டு என்ற தீர்ப்புதான் சட்டப்படி செல்லத்தக்கது என்றபோதும், அத்தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிசக் கும்பல் மட்டுமின்றி, கேரள இடதுசாரிக் கூட்டணி அரசாங்கமும் நடைமுறையில் ரத்து செய்துவிட்டது. சபரிமலைக்கு வரத் துணியும் பெண்களை மிரட்டுவது, தாக்குவது ஆகிய சட்டவிரோதமான வன்முறை வழிகளின் வழியாக வலதுசாரிக் கும்பல் இத்தீர்ப்பை ரத்து செய்கிறது எனில், கேரள இடதுசாரிக் கூட்டணி அரசோ தீர்ப்பில் குழப்பம் இருப்பதாக வேண்டுமென்றே சித்தரித்தும் சபரிமலைக்கு வர விரும்பும் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாது எனக் கூறியும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய தனது பொறுப்பை, கடமையைத் தட்டிக் கழிப்பதன் மூலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்கிறது.

தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே (S.A. Bobde)

இவற்றுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மட்டுமின்றி, கோவிலுக்குச் செல்லத் தமக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனப் பெண்கள் கோரியிருக்கும் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று தம்முன் விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது இறுதி முடிவை இன்னமும் தெரிவிக்கவில்லை என்று சங்கப் பரிவாரத்தினர் போலவே பேசியிருக்கிறார்.

கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு மறு ஆய்வு மனுக்களை ஏற்கவுமில்லை. முந்தைய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கவுமில்லை. இந்நிலையில் நீதிபதி நாரிமன் கூறியிருப்பது போல, பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு அமலில் இருக்கிறது என்பதுதான் சட்டப்படியான நிலை. எனவே, நீதிபதி பாப்டேவின் கூற்று அப்பட்டமாகவே சட்டவிரோதமானதாகும்.

♦ ♦ ♦

ந்து மதத்தில் காணப்படும் சாதி, தீண்டாமை போன்ற பல்வேறு மனிதத் தன்மையற்ற பழக்க வழக்கங்கள் குறித்து யாரேனும் சங்கிகளிடம் விவாதித்தால், உடனே அவர்கள் இஸ்லாத்திலும், கிறித்தவத்திலும் காணப்படும் குற்றங்குறைகள் குறித்துப் பட்டியல் போட்டுக் கேட்டவரின் வாயை மூடிவிட எத்தணிப்பார்கள். அடுத்தவன் தவறைக் காட்டித் தனது தவறை நியாயப்படுத்தும் இந்த குறுக்குவழியைப்  பயன்படுத்தித்தான் சபரிமலைத் தீர்ப்பு குறித்துத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களைப் பெரும்பான்மை நீதிபதிகள் தரப்பு கிடப்பில் போட்டுள்ளனர்.

ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையுடைய பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில் வேறு சில பிரச்சினைகளையும், அம்சங்களையும் சேர்த்துப் பரிசீலிக்க வேண்டியிருப்பதாகப் பெரும்பான்மை நீதிபதிகள் கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிட்டுள்ளனர்:

மசூதி மற்றும் தர்காக்களில் முஸ்லிம் பெண்கள் சென்று வழிபாடு செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை; பார்சி மதத்தைச் சேர்ந்த பெண்கள், பார்சி அல்லாத ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால், தமது புனிதமான ஆக்யாரி கோவிலுக்குச் சென்று வழிபடுவதற்குள்ள தடை; போரா முஸ்லிம் பெண்களின் பிறப்புறுப்பைச் சிதைக்கும் மதப் பழக்கம், அம்மதத்தின் இன்றியமையா நடவடிக்கையா? ஆகியவற்றோடு, மதம் மற்றும் மத நிறுவனங்களுக்கு அரசியல் சாசனப் பிரிவுகள் 25 மற்றும் 26 வழங்கியிருக்கும் உரிமைகளுக்கும், அரசியல் சாசனப் பிரிவு 14 வழங்கப்பட்டிருக்கும் தனிநபர் உரிமைகளுக்கும் இடையேயான உறவில் எது தீர்மானகரமானது? அரசமைப்பு சட்டத்தின்படியான ஒழுக்கம் மத ஒழுக்கத்தின் மீது மேலாண்மை செலுத்த முடியுமா? ஒரு மதத்தின் இன்றியமையாத  நடவடிக்கை என்பதை யார் தீர்மானிப்பது? தனி வகையறாக்கள் என்பதை எப்படித் தீர்மானிப்பது? ஒரு மதத்தைச் சேராத வெளியாள் அம்மதத்தின் நம்பிக்கைகள் குறித்துப் பொதுநல வழக்குத் தொடுப்பதை எந்தளவில் நீதிமன்றத்தில் அனுமதிப்பது?

பிந்து அம்மினி மீது மிளகாய் பொடியை வீசும் இந்து மதவெறியன்.

இவற்றுள் முதல் மூன்றுக்கு  முஸ்லிம் மற்றும் பார்சி பெண்களின் வழிபாட்டு உரிமை, போரா முஸ்லிம் பெண்களின் பிறப்புறுப்பைச் சிதைத்தல்  எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவ்வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகளில் வெவ்வேறு நிலைகளில் விசாரணையில் உள்ளன. மற்ற அம்சங்களைப் பொருத்தவரை, சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகள் அவற்றைத் தமக்குத்தாமே எழுப்பி, அவற்றையும் பரிசீலிக்க வேண்டுமெனக் கோருகின்றனர்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பில் பாரிய தவறுகள் அல்லது குறைபாடுகளை அம்மனுக்கள் சுட்டிக் காட்ட வேண்டும். அல்லது வழக்கு விசாரணையில் இருந்தபோது நீதிமன்றத்திடம் அளிக்கப்படாத சாட்சியங்கள், விவரங்கள் புதிதாகக் கிடைத்து, அதன் அடிப்படையில் மறு ஆய்வு கோரலாம். இப்படி எந்தவிதமான குறிப்பான குறைபாடுகளோ, சாட்சியங்களோ மறு ஆய்வு மனுவில் குறிப்பிடப்படாவிட்டால், அவற்றைத் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்பது மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு அனுமதிப்பதற்கான சட்டவிதிமுறை.

ஐயப்ப பக்தர்கள் தனி வகையறாக்கள் கிடையாது; 10 முதல் 50 வயதுடைய பெண்கள் அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடத் தடை விதிப்பது அப்பெண்களின் மதச் சுதந்திரத்தைப் பறிப்பதால், அதனை அங்கீகரிக்க முடியாது; தனி நபரின் உரிமையைப் பறிப்பதை மத உரிமையாக அங்கீகரிக்க முடியாது; இவ்வயதுடைய பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதைத் தடை செய்யும் கேரள அரசின் இந்து கோவில்கள் பொதுவழிபாட்டுச் சட்டத்தின் பிரிவு 3(b) அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமின்றி, இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் சுதந்திரமாகக் கோவிலுக்குச் சென்று வழிபடலாம் எனக் கூறும் அச்சட்டத்தின் பிரிவு 3 எதிரானது; இவ்வயதுடைய பெண்கள் அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதைத் தடை செய்வது இந்து மதத்தின் இன்றியமையா நடவடிக்கையாகக் கருத முடியாது என்பதால், அத்தடை அரசியல் சாசனத்தின் பாதுகாப்பைப் பெறுவதற்குத் தகுதியற்றது; மேலும், தீட்டு என்ற பெயரில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமையின் இன்னொரு வடிவமே” என்ற வாதங்களின் அடிப்படையில்தான் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் சபரிமலையில் வழிபடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

பிந்து அம்மினி.

ஏற்கெனவே அளிக்கப்பட்ட இத்தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தவறுகள் எதுவும் சுட்டிக் காட்டப்படவில்லை; எந்தவொரு புதிய சான்றும் காட்டப்படவில்லை” என்பதைச் சுட்டிக்காட்டித்தான் நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகியோர் அம்மனுக்களைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பை உறுதிசெய்தும் உத்தரவிட்டனர். மேற்குறிப்பிட்ட மனுக்கள் மட்டுமல்ல, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகிய மூவரும்கூட ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பில் எந்தவொரு தவறையும் சுட்டிக் காட்டவில்லை. தீர்ப்பு குறித்து எந்தவொரு தவறையும் சுட்டிக்காட்டாமலேயே, இம்மனுக்களை அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று தன்னிச்சையாகப் பரிந்துரைத்திருப்பது சட்டவிரோதமானது என மூத்த வழக்குரைஞர்கள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

மேலும், முஸ்லிம் மற்றும் பார்சி பெண்களின் வழிபாட்டு உரிமை குறித்த வழக்குகளை வெவ்வேறு உச்ச நீதிமன்ற அமர்வுகள் விசாரித்து வரும் நிலையில், அந்த வழக்குகளின் மனுதாரர்களுக்கும் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளுக்குமே தெரியாமலும், அவர்களுடைய ஒப்புதல் இல்லாமலும் அந்த வழக்கு விசாரணைகளையும் தன்னிச்சையாக முடக்கியிருக்கிறார்கள் கோகோய் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள். இது சட்டவிரோதம் மட்டுமல்ல, அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.

படிக்க :
அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?
பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா !

பெரும்பான்மையினரின் இந்தத் தீர்ப்பை மறுத்து ஒரு மறு ஆய்வு மனுவை ஏற்பதற்கான வரையறையை நீதிபதி நாரிமன் சுட்டிக்காட்டுகிறார். இந்த நீதிமன்ற அமர்வின் முன் இருப்பது இந்த நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே அளித்த தீர்ப்பு மீதான மறு ஆய்வு மனுக்கள் மட்டும்தான். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் எதிர்காலத்தில் அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு, அந்நீதிமன்றம் கருத்தில் கொள்ளக்கூடிய அல்லது கொள்ளாத மற்ற பிரச்சினைகள் எல்லாம், நிச்சயமாகச் சொன்னால், இந்த நீதிமன்ற அமர்வின் முன் இல்லை. இதன் விளைவாக, நீதிமன்றம் தலையீடு செய்யக்கூடிய வரம்புகளைக் கருத்திற்கொண்டு, இந்த அமர்வு மறு ஆய்வு மற்றும் ரிட் மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக” உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், பருவ வயதுடைய பெண்கள் சபரிமலையில் வழிபட அனுமதித்து அளிக்கப்பட்ட பெரும்பான்மைத் தீர்ப்பில் நீதிபதி சந்திரசூட், தனி மனித உரிமையைவிட மத நிறுவனங்களின் உரிமை பெரிது கிடையாது; மத ஒழுக்கத்தைவிட அரசியல் சாசன ஒழுக்கம்தான் தீர்மானகரமானது, ஒரு மதத்தின் இன்றியமையா நடவடிக்கையானது சமூகத்தின் ஒரு பிரிவினரை ஒதுக்குவதாக இருந்தால் அதனை அனுமதிக்க முடியாது” என்பனவற்றை அரசியல் சாசனச் சட்டப்படி விளக்கியிருக்கிறார்.

நீதிபதி சந்திரசூட் அம்மூலத் தீர்ப்பில் அளித்திருக்கும் இந்த விளக்கங்களை மறுதலிக்காமல்,  அவரது தீர்ப்பில் ஆராயப்பட்ட பிரச்சினைகளைப் புதியவை போல தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட மூவரும் பரிந்துரைப்பது கயமைத்தனமானது. மேலும், தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட வழக்குகளைத் தூக்கிவந்து சபரிமலை வழக்கில் இணைப்பது சூழ்ச்சிகரமானது. பார்ப்பன பாசிசத்தின் அரசியல்  பண்பாட்டு நிலைப்பாடுகளை எந்த விதத்திலும் கேள்விக்குள்ளாகாமல் பாதுகாப்பதும் அவற்றுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவதும்தான் இந்த தீர்ப்பின் நோக்கம்.

ராம ஜென்மபூமி விவகாரத்தைத் தொடர்ந்தும் உடனடியாகவும் உச்ச நீதிமன்றத்தால் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இன்னொரு வெகுமதி இது.

ஆர்.ஆர்.டி.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

தொப்புள் கொடி தாயத்து : ஸ்டெம் செல்லின் முன்னோடியா ? | ஃபரூக் அப்துல்லா

நமது பாட்டன்கள் தொப்புள் கொடியை தாயத்தாக கட்டியது எதற்கு ? அவர்களுக்கு ஸ்டெம் செல் தெரபி பற்றி அப்போதே தெரிந்து… இது போன்று செய்தார்களா ?

எனது பதில் :

முதலில் அனைவரும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நம்மை விட நம் முன்னோர்
உழைப்பாளிகளாகவும், ஐந்து புலன்களையும் நுட்பமாக பயன்படுத்துவதிலும் சிறந்து விளங்கினார்கள். அது உண்மை.

அவர்களிடம் அறிவியல் இத்தனை முன்னேற்றம் ஏற்படாத காலத்திலும்
அவர்கள் செய்த கட்டடகலை, கோபுரங்கள் அனைத்தும் நேர்த்தியாக உள்ளன.
ஆகவே அப்போதே இன்ஜினியரிங் துறை ஒரு பெரிய கோவில்/பிரமிடு கட்டுமளவு வளர்ந்திருந்தது என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியும்.

ஆனால் இன்று இஞ்சினியரிங் துறை நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அசகாய சூர வளர்ச்சி அடைந்திருப்பதைக் காண முடியும்.

துபாய் புர்ஜ் கலீஃபா போன்ற ஒன்றை நம் முன்னோர்கள் நிச்சயம் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

கடலுக்குள் செல்லும் சாலைகள், வானத்தில் வானூர்தி கொண்டு பறப்பது போன்றவை நம் முன்னோர் காலத்தில் இல்லாதவை.

அதே போன்று தான் மருத்துவத்திலும், சித்தர்கள் எழுதி வைத்துச்சென்ற ஓலைகளை படித்து அவர்கள் வழி வந்தோர் வைத்தியம் பார்த்தனர். அக்கால நோய்களுக்கு தங்களால் இயன்ற சிறப்பான வைத்தியத்தை பார்த்தனர்.

ஆனால் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நம்மை விட அனைத்திலும் சிறப்பாக நம் முன்னோர் இருந்தனர் என்று கூறுவது ஏற்கலாகாது.

காரணம் கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை; மின்சாரம், பெட்ரோல் இன்ஜின், கணிணி, மைக்ரோஸ்கோப், டெலிபோன், ரேடியோ, டிவி, விமானம், ஒளி விளக்கு, செயற்கை கோள் போன்றவை, கண்டுபிடிக்கப்படவில்லை.

இவையனைத்தையும் கொண்டு நாம் அடைந்த இந்த அசுர வளர்ச்சியை நிச்சயம் நம் முன்னோர் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள்.

சரி தாயத்துக்குள், தொப்புள் கொடிக்கு வருவோம் :

ஸ்டெம் செல்கள் இருப்பதை அறிந்தெல்லாம் அவர்கள் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அப்போது நுண்ணோக்கி கிடையாது. நமது உடல் செல்களினால் தான் ஆனது என்று கூறிய ராபர்ட் ஹூக் கடந்த பதினேழாம் நூற்றாண்டில்தான் பிறந்தார்.

ஸ்டெம் செல் தெரபி தற்போது இருபது ஆண்டுகளாக தான் வளர்ந்து வருகிறது.
பிரபலமாகி வருகிறது.

மேலும் ஸ்டெம் செல்களை குறிப்பிட்ட உறைகுளிரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தாயத்தில் சாதாரண வெப்பத்தில் வைத்து பின்னாடி ப்ரயோஜனம் இல்லை.

சாதாரண வெப்பத்தில் பால் பாக்கெட்டை கூட வைத்து இரண்டு நாள் பயன்படுத்த முடியாது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள்.

என்ன காரணம்?

சாதாரண வெப்ப நிலையில் மிருகத்திடம் இருந்து கிடைக்கும் ஒரு பொருளை கிருமிகள் தாக்கி அழிக்கும். இது இயற்கை.

இறந்த உடலைக்கூட தகனம் செய்ய/ அடக்கம் செய்ய தாமதம் ஆகிறது என்று தெரிந்தால் அது டீகாம்போஸ் ஆகாமல் இருக்கத்தான் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கிறோம். ஃப்ரீசர் பாக்சிஸ் வைக்காமல் விட்டால் கிருமிகள் தாக்கி கெட்ட நாற்றம் வர ஆரம்பிக்கும்.

இதே தான் ஸ்டெம் செல்களுக்கும். அவற்றை ஃப்ரீசிங் செய்து வைத்தால் தான் ப்ரயோஜனம். அதை அந்த குளிரில் பராமரிக்கத்தான் ஃபீஸ் வாங்குகிறார்கள்.

எதையாவது தாயத்தாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று நரி முடி, பித்தளையில் எழுதி போட்டுக்கொள்வது, குழந்தையின் தொப்புள் கொடி என்று போட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தாயத்து போட்டதின் முக்கிய நோக்கம் பயத்தை போக்கும் (Placebo) ப்லாசிபோவாக அந்த தாயத்து உதவியது.

படிக்க :
கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !
♦ போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

Placebo என்றால் என்ன?

ஒரு பாட்டி என்னை அடிக்கடி மூட்டு வலி என்று சந்திக்க வருவார். நான் அவரது வயதை காரணம்காட்டி நேரடியாக வலி நிவாரணி மாத்திரை தராமல் சத்து மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்புவேன்.

அந்த பாட்டிக்கு என் மீது உள்ள நம்பிக்கையால், சத்து மாத்திரைக்கே வலி சரியாவதாக கூறுவார். ஆனால் நான் பாட்டிக்கு சத்து மாத்திரை தான் கொடுத்தேன் என்பது அவருக்கு தெரியாது. இது தான் Placebo.

இப்படிதான் பல விசயங்கள் அக்கால placebo க்களாக இருந்தன.

குழந்தைகள் பிறப்பதே பெரிய விசயம்… பிறந்ததில் எத்தனை ஒரு வருடம் வரை உயிரோடு இருக்கும் ? எத்தனை ஐந்து வயதை தாண்டும் ? எந்த குழந்தையை ப்ளேக்கு வாரிக்கொண்டு போகும்? எந்த குழந்தையை பெரியம்மை வந்து சுருட்டிச்செல்லும் ? எத்தனை குழந்தைகள் பஞ்சத்துக்கு சாகும் என்று தெரியாது.

இதற்கெல்லாம் அக்காலத்தில் மருந்தும் கிடையாது நிவாரணமும் கிடையாது.
அதனால் தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வளரும் குழந்தைக்கு ஒரு ப்ளாசிபோவாக இருக்கும் என்று கட்டப்பட்டவையே இந்த வகை தொப்புள் கொடி தாயத்துகள். அவ்வளவே… அதற்கு மீறி முக்கியத்துவம் அதற்கு தேவையில்லை.

நம் முன்னோர் வழக்கப்படி நரபலி கொடுக்கும் பழக்கமும் தான் வழக்கில் இருந்தது. அதற்கும் அறிவியல் காரணம் ஏதும் காண முடியுமா?

அனைத்துமே அக்காலத்தில் அவர்களுக்கு தெரியாதவற்றின்; அறியாதவற்றின் மீது கொண்டிருந்த மூடநம்பிக்கையின் வெளிப்பாடு அவ்வளவே.

“முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” கும்பலுக்கு என் கருத்து. நம் முன்னோர்கள் நிச்சயம் முட்டாள்கள் இல்லை. அவர்கள் காலத்தில் அவர்கள் தான் மிகச்சிறந்த அறிவாளிகள்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

பேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 50

பேராசிரியர் ஸ்மித் 

அ.அனிக்கின்

டம் ஸ்மித் 1723-ம் வருடத்தில் எடின்பரோவுக்கு அருகிலுள்ள கெர்கால்டி என்ற சிற்றூரில் பிறந்தார். சுங்க இலாகாவில் அதிகாரியாக இருந்த அவருடைய தகப்பனார் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ஒரே குழந்தை என்பதால் இளம் விதவையான அவருடைய தாயார் தன்னுடைய முழு கவனத்தையும் அந்தக் குழந்தையை வளர்ப்பதில் ஈடுபடுத்தினார்.

குழந்தை மெலிந்தும் அடிக்கடி நோய்வாய்ப்படுவதாகவும் இருந்தது; தன் வயதுக் குழந்தைகளின் உற்சாகமான விளையாட்டுக்களில் ஈடுபடவில்லை. அவர்கள் ஏழைகளைப் போல கஷ்டமான வாழ்க்கை நடத்தவில்லை, ஆனால் அடக்கமான வாழ்க்கை நடத்தினார்கள். நல்ல வேளையாக அந்த ஊரில் ஒரு சிறப்பான பள்ளிக்கூடம் இருந்தது. அதன் ஆசிரியர் மற்றவர்களைப் போல, குழந்தைகளின் தலைகளில் பைபிள் வாசகங்களையும் இலத்தீன் மொழியின் இலக்கணக் குறிப்புகளையும் திணிப்பது அவசியம் என்று நினைக்கவில்லை. அந்தக் குழந்தையைச் சுற்றிலும் எப்போதும் புத்தகங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிற்காலத்தில் அறிவுக் களஞ்சியம் என்ற சிறப்பைப் பெற்ற ஸ்மித்தின் கல்வி இவ்வாறுதான் தொடங்கியது .

பிரபுக்கள் குடும்பத்திலே பிறந்த டியுர்கோவைப் போல மிகச் சிறப்பான கல்வி வசதி ஸ்மித்துக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணங்கள் தெரிந்தவையே. உதாரணமாக, பிரெஞ்சு மொழியை நன்கு கற்பிக்கக் கூடிய ஆசிரியர் அவருக்குக் கிடைக்கவில்லை; அதன் விளைவாக அவர் பிரெஞ்சு மொழியை வேகமாகப் படித்த போதிலும் சரியான உச்சரிப்போடு பேசத் தெரியாமலிருந்தார். 18-ம் நூற்றாண்டில் கல்விச் சிறப்புடைய ஒருவர் மூலச் சிறப்புடைய தொன்மையான மொழிகளை நன்கு கற்றிருக்க வேண்டும். ஆனால் ஸ்மித் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகு தான் அந்த மொழிகளை (குறிப்பாக கிரேக்க மொழியைக்) கற்கத் தொடங்கினார்.

ஸ்மித் தனது பதினான்காம் வயதிலேயே கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் (அது அந்தக் கால வழக்கம்). தர்க்கவியலை (முதல் வருடத்தில்) கட்டாய பாடமாகப் படித்த பிறகு, கலைப்பாடங்களை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார், அறநெறித் தத்துவஞானம் பயின்றார். ஆனால் அந்தப் பாடத்தோடு கணிதமும் வானவியலும் படித்தார், எப்போதும் அந்தத் துறைகளில் குறிப்பிடத் தக்க பேரறிவு கொண்டு விளங்கினார்.

பதினேழு வயதிலேயே மாணவர்களுக்கு மத்தியில் சிறந்த அறிவாளி என்றும் விசித்திரமான மாணவர் என்றும் பெயரெடுத்தார். ஆரவாரமான மாணவர் கூட்டத்திலிருக்கும் பொழுது அவர் திடீரென்று சிந்தனை வயப்பட்டு விடுவார் அல்லது தன்னைச் சுற்றிலும் இருப்பவற்றை அடியோடு மறந்து தனக்குத்தானே பேசிக் கொள்ள ஆரம்பிப்பார். இத்தகைய விசித்திரமான போக்குகள் வாழ்நாள் முழுவதும் அவரிடம் நிலைத்து நின்றன. 1740-ல் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்ததும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்வதற்கு ஒரு செல்வந்தருடைய அறக்கட்டளையிலிருந்து அவருக்கு உபகாரச் சம்பளம் கிடைத்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்மித் ஆறு வருடங்கள் தொடர்ச்சியாக இருந்தார்.

கிளாஸ்கோ பல்கலைக் கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆடம் ஸ்மித்தின் சிலை.

அங்கே பணியாற்றிய ஆசிரியர்களும் பேராசிரியர்களும் மாணவர்கள் படிக்கக்கூடிய புத்தகங்களைத் தணிக்கை செய்வதுண்டு; குறிப்பாக சுதந்திரமான சிந்தனையை வற்புறுத்துகின்ற புத்தகங்களைத் தடை செய்தார்கள். அங்கே ஸ்மித்தின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக இருந்தது, பிற்காலத்தில் அவர் தான் பயின்ற இரண்டாவது பல்கலைக்கழகத்தைப் பற்றிப் பேசும் பொழுது ஆத்திரப்படுவார். மேலும் அங்கே அவர் தனிமையான வாழ்க்கை நடத்தினார்; அடிக்கடி நோய் வாய்ப்பட்டார். புத்தகங்கள் மட்டுமே அவருக்குத் துணையாக இருந்தன. அவர் மிக விரிவான அளவுக்கு எல்லாத் துறைகளையும் பற்றிப் படித்தார், எனினும் பொருளாதார விஞ்ஞானத்தில் அவர் இப்பொழுது விசேஷமான அக்கறை எதுவும் காட்டவில்லை.

1746-ம் வருடத்தில் அவர் கெர்கால்டிக்குச் சென்று அங்கே இரண்டு வருடங்களைக் கழித்தார். அங்கே அவருடைய சுயவளர்ச்சி தொடர்ந்தது. அங்கேயிருந்து கொண்டு எடின்பரோவுக்கு எப்பொழுதாவது போய் வருவார். அவ்வாறு சென்றிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் செல்வந்தரும் நிலஉடைமையாளரும் புரவலருமான ஹென்ரி ஹியூமை (பிற்காலத்தில் கைம்ஸ் பிரபு) சந்தித்தார். அதன் விளைவாக ஸ்மித்தின் திறமைகளைப் பற்றி மிகவும் உயர்வான அபிப்பிராயம் அவருக்கு ஏற்பட்டது. அந்த இளம் புலமையாளர் பங்கெடுத்துக் கொள்கின்ற வகையில் ஆங்கில இலக்கியம் பற்றிய தொடர் சொற்பொழிவுக்கு அவர் ஏற்பாடு செய்தார். ஸ்மித் நிகழ்த்திய சொற்பொழிவுகள் சிறப்பான வகையில் வெற்றியடைந்தன. பின்னர் அந்த சொற்பொழிவுத் தலைப்புக்களில் மாற்றம் ஏற்பட்டது. அவை பிரதானமாக இயற்கைச் சட்டத்தைப் பற்றி இருந்தன. 18ம் நூற்றாண்டில் இந்தத் தலைப்பில் நீதி இயல் மட்டுமின்றி அரசியல் தத்துவங்கள், சமூகவியல், பொருளாதாரம் ஆகியவையும் அடங்கியிருந்தன. அரசியல் பொருளாதாரத்தில் அவர் விசேஷமான அக்கறை காட்டத் தொடங்கியதன் முதல் அறிகுறிகளை இந்தக் காலகட்டத்தில் பார்க்கலாம்.

1750-51-ம் வருடங்களில் அவர் பொருளாதார மிதவாதத்தின் பிரதான கருத்துக்களைச் சொல்லிவந்தார் எனத் தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கள் தம்முடைய எடின்பரோ சொற்பொழிவுகளைச் சேர்ந்தவை என்று 1755-ம் வருடத்தில் அவர் எழுதிய விசேஷக் குறிப்பில் தெரிவித் தார்.

“இராஜியவாதிகளும் திட்டங்களைத் தயாரிப்பவர்களும் பொதுவாக மனிதனை ஒரு வகையான அரசியல் செயல் முறைக்கு உரிய பொருளாகவே கருதுகிறார்கள். திட்டங்களைத் தயாரிப்பவர்கள் மனித விவகாரங்களில், நடவடிக்கைகளின் இயற்கையான போக்கில் இடையிட்டுத் தடுக்கிறார்கள்; இயற்கை தன்னுடைய நோக்கங்களை அடைவதற்காகப் பாடுபடும் பொழுது தன்னுடைய சொந்த செயல் திட்டத்தை நிறுவுவதில் நடுநிலை கோடாமல் அது இயங்குமாறு நாம் அனுமதிப்பது மட்டும் போதும்…. மிகவும் கீழ் நிலையிலுள்ள காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மிகவும் அதிகமான வளப்பெருக்க நிலைக்கு ஒரு அரசைக் கொண்டு போவதற்கு சமாதானம், குறைவான வரிகள், சகித்துக் கொள்ளக் கூடிய நிர்வாக முறை ஆகியவற்றைத் தவிர அதிகமாக வேறு எதுவும் தேவை இல்லை; மற்றவை அனைத்தும் இயற்கையான போக்கில் தானாகவே ஏற்படக் கூடியவை. இந்த இயல்பான போக்கில் தலையிட்டு வளர்ச்சியை வேறு திசையில் மாற்றுவதற்கு அல்லது சமூகத்தின் வளர்ச்சியை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிறுத்துவதற்கு முயற்சி செய்கின்ற எல்லா அரசாங்கங்களும் இயற்கைக்கு மாறுபட்டவையே; தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவை கொடுங்கோன்மையையும் ஒடுக்குதலையும் பின்பற்றத் தொடங்குகின்றன”(1)  என்று அவர் எழுதினார்.

படிக்க :
இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ! | ஃபரூக் அப்துல்லா
♦ ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !

18-ம் நூற்றாண்டிலிருந்த முற்போக்கான முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ உடைகளை இன்னும் மாற்றாமலிருந்த அரசின்பால் கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. அவர்களுடைய மொழியைத்தான் ஸ்மித் கையாளுகிறார். மேலே தரப்பட்டிருக்கும் பகுதியில் ஸ்மித்துக்கே உரிய துணிச்சலான, வேகமான நடையைக் காணலாம். நாடுகளின் செல்வம் புத்தகத்தில் ஆத்திரமும் கிண்டலும் கலந்து எழுதியிருக்கும் பின்வரும் பகுதியில் அதே ஸ்மித்தைக் காணலாம். ”நயவஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த பிராணியைக் கொச்சையாக ராஜியவாதி அல்லது அரசியல்வாதி என்று நாம் குறிப்பிடுகிறோம்; பொது விவகாரங்களில் அவ்வப் பொழுது ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்கள் அவர்களுடைய முடிவுகளை நிர்ணயிக்கின்றன.”(2)  ஒரு முதலாளித்துவ சித்தாந்தி தன் காலத்திய அரசின் பால் கொண்டிருக்கும் எதிர்மறையான அணுகுமுறையாக மட்டுமே இது தோன்றிய போதிலும், ஜனநாயகத் தன்மை கொண்ட ஒரு அறிவுஜீவி அதிகார வர்க்கம், அரசியல் சூழ்ச்சிகளின் பால் கொண்டிருக்கும் மிகவும் ஆழமான வெறுப்பு இது என்றும் கருதலாம்.

1751-ம் வருடத்தில் ஸ்மித் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியை வகிப்பதற்காக கிளாஸ்கோவுக்குச் சென்றார். முதலில் தர்க்கவியல் துறையின் தலைவர் பதவியையும் பிறகு அறநெறித் தத்துவஞானத்தின், அதாவது சமூக விஞ்ஞானத்துறையின் தலைவர் பதவியையும் வகித்தார். அவர் கிளாஸ்கோ நகரத்தில் பதிமூன்று வருடங்கள் வாழ்ந்தார்; வருடந்தோறும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு எடின்பரோவுக்குத் தவறாமல் போய்வருவார். இது தான் தன்னுடைய வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியான காலம் என்று அவர் தன்னுடைய வயோதிகப் பருவத்தில் எழுதினார். அவர் தனக்கு மிக அறிமுகமான, தன் மனதுக்கு மிகவும் உகந்த சூழ்நிலையில் வாழ்ந்தார்; பேராசிரியர்களும் மாணவர்களும் நகரப் பெருமக்களும் அவரை மதித்துப் போற்றினார்கள். அவருடைய பணியில் யாரும் குறுக்கிடவில்லை. கல்வித் துறையில் அவர் அரிய சாதனைகளைச் செய்வாரென்று எதிர்பார்க்கப்பட்டது. சில நண்பர்களோடு மட்டும் நெருங்கிப் பழகினார், அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இங்கிலாந்தில் பொழுதுபோக்கு மன்றத்தின் உறுப்பினருக்கென்று குறியடையாளமாகச் சில கூறுகள் உண்டு; இந்தக் காலத்தில் அவர் அந்தப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் அவற்றைப் பின்பற்றினார்.

நியூட்டனையும் லீப்னிசையும் போல ஸ்மித்தின் வாழ்க்கையிலும் எந்தப் பெண்ணும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கவில்லை. அந்தக் காலத்தில் -எடின்பரோ, கிளா ஸ்கோ வருடங்களில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் கட்டத்துக்கு இரண்டு தடவை வந்தார் என்று தெளிவற்ற, ஆதாரமில்லாத வதந்திகள் இருப்பது உண்மையே. ஆனால் என்ன காரணத்தாலோ ஒவ்வொரு தடவையும் அந்த பாக்கியம் அவருக்குக் கிட்டவில்லை. எனினும் இது அவருடைய மனஅமைதியைக் குலைக்கவில்லை. அதனால் அவருடைய மன அமைதி குலைந்ததாக அவருடைய கடிதங்களில் (இவை மிகக் குறைவு தான்) அல்லது அவருடைய சமகாலத்தவர்களின் நினைவுக் குறிப்புகளில் எத்தகைய குறிப்புக்களும் இல்லை.

ஆடம் ஸ்மித்

அவருடைய வாழ்க்கை பூராவும் அவருடைய தாயாரும் வயோதிகப் பெண்மணியான மாமன் மகளும் அவருடைய வீட்டை நிர்வாகம் செய்து வந்தார்கள். ஸ்மித் தன்னுடைய தாயார் காலமான பிறகு ஆறு வருடங்களும், மாமன் மகள் காலமான பிறகு இரண்டு வருடங்களும் உயிரோடிருந்தார். அந்த வீடு ”முற்றிலும் ஸ்காட்லாந்துத் தன்மையைக் கொண்டிருந்தது என்று அவர் வீட்டுக்கு வருகை புரிந்தவர்களில் ஒருவர் எழுதியிருக்கிறார். ஸ்காட்லாந்தின் தேசிய உணவு வகைகள் அங்கே பரிமாறப்பட்டன, ஸ்காட்லாந்துப் பழக்க வழக்கங்களும் மரபுகளும் அங்கே பின்பற்றப்பட்டன. இந்த வழக்கமான வாழ்க்கைமுறை அவருக்கு மிகவும் அவசியமாக இருந்தது. அவர் அதிக காலத்துக்கு வேறு ஊர்களுக்குப் போவதில்லை. எங்கே சென்றாலும் எப்பொழுதும் அவசரமாக வீட்டுக்குத் திரும்பி விடுவார்.

1759-ம் வருடத்தில் ஸ்மித் அறவியல் உணர்ச்சிகளின் தத்துவம் என்ற தமது முதல் பெரிய விஞ்ஞானப் புத்தகத்தை வெளியிட்டார். அது அந்தக் காலத்துக்கு முற்போக்கான புத்தகம், அந்த அறிவுயுகத்துக்கும் அதன் இலட்சியங்களுக்கும் பொருத்தமானதாக இருந்தது. எனினும் ஸ்மித்தின் தத்துவஞான, பொருளாதாரக் கருத்துக்களின் உருவாக்கத்தில் ஒரு கட்டத்தை எடுத்துக் கூறுகின்றது என்ற வகையிலேயே அது இன்றைக்குப் பிரதானமாக சிறப்புப் பெறுகிறது. மறு உலகத்தில் வஞ்சத் தீர்வு ஏற்படும் என்ற அச்சத்தையும் சொர்க்கத்தில் ஆனந்தமயமான வாழ்க்கை கிடைக்கும் என்ற உறுதியையும் அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ சமய அறவியலை அவர் தாக்கி எழுதினார். அவருடைய அறவியலில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கொள்கையான சமத்துவம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. எல்லா மனிதர்களும் இயற்கையில் சமமானவர்கள், எனவே அறவியல் கோட்பாடுகளும் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

எனினும் ஸ்மித் மனித நடத்தை பற்றிய தனி முதலான, “இயற்கையான” விதிகளிலிருந்து முன்னேறினார், அறவியல் என்பது அடிப்படையில் சம்பந்தப்பட்ட சமூகத்தின் சமூகபொருளாதார அமைப்பினால் நிர்ணயிக்கப்படுவது என்ற கருத்து அவரிடம் மிகவும் தெளிவற்ற வடிவத்தில் இருந்தது. எனவே மத அறவியலையும் “உள்ளார்ந்த அற உணர்ச்சியையும்” நிராகரித்து விட்டபடியால், அவற்றுக்குப் பதிலாக “அனுதாபக் கொள்கை” என்ற சூக்குமமான கோட்பாட்டை ஏற்படுத்தினார். மற்ற மனிதர்களோடு சம்பந்தப்பட்ட வகையில் மனிதனுடைய உணர்ச்சிகளையும் நடவடிக்கைகளையும், அவர்களுடைய நிலையில் தன்னைக் கற்பனையில் வைத்துப் பார்த்து அவர்களுக்காக அனுதாபப்படுவது, “அடுத்தவர்களுடைய உள்ளங்களுக்குள் நுழைவதற்கு” உள்ள திறமையைக் கொண்டு விளக்குவதற்கு முயற்சி செய்தார். இந்தக் கருத்தை அவர் எவ்வளவு சாமர்த்தியமாகவும் நகைச்சுவையாகவும் வளர்த்துச் சென்ற போதிலும் அது விஞ்ஞான ரீதியான பொருள்முதல்வாத அறவியலின் அடிப்படையாக முடியாது.

படிக்க :
தெவிட்டத் தெவிட்ட நகலெழுதித் தீர்க்கும் எழுத்தன் !
♦ பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !

ஸ்மித்தின் அறவியல் உணர்ச்சிகளின் தத்துவம் 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகு நிலைத்திருக்கவில்லை. அந்த நூலின் மூலமாக ஆசிரியருக்கு அமரத்துவம் கிடைக்கவில்லை. இதற்கு மாறாக, நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தின் ஆசிரியருடைய புகழ் அந்தப் புத்தகத்தைப் புறக்கணிப்பிலிருந்து காப்பாற்றியது.

இந்தத் தத்துவ நூலை எழுதிக் கொண்டிருந்த காலத்திலேயே ஸ்மித்தின் விஞ்ஞானக் கருத்தார்வங்களின் திசை கணிசமாக மாறிவிட்டது. அவர் அரசியல் பொருளாதாரத்தை மென்மேலும் ஆழமாக ஆராய்ந்தார். அவருடைய தனிப்பட்ட ஈடுபாடுகள் மட்டுமல்லாமல் அந்தக் காலத்தின் தேவைகளும் இவ்வாறு ஆராயுமாறு அவரை ஊக்குவித்தன. தொழில் துறை, வர்த்தக நகரமான கிளா ஸ்கோவில் பொருளாதாரப் பிரச்சினைகள் விசேஷமான வேகத்தோடு வெளிப்பட்டன. அங்கே ஒரு அரசியல் பொருளாதாரக் கழகம் இருந்தது; வர்த்தகமும் சுங்க வரியும், கூலியும் வங்கித் தொழிலும், நிலக் குத்தகை நிலைமைகளும் குடியேற்றங்களும் அங்கே விவாதிக்கப்பட்டன. அந்தக் கழகத்தின் மிக முக்கியமான உறுப்பினர்களில் ஒருவராக ஸ்மித் இருந்தார். அவருக்கும் ஹியூமுக்கும் ஏற்பட்ட சந்திப்பும் அவர்களுக்கிடையே வளர்ந்த நட்பும் அரசியல் பொருளாதாரத்தின் மீது ஸ்மித் கொண்டிருந்த அக்கறையை ஊக்குவித்தன.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலப் பொருளியலாளரான எட்வின் கான்னான் சில முக்கியமான கட்டுரைகளைக் கண்டுபிடித்து வெளியிட்டார். அவை ஸ்மித்தின் கருத்துக்களின் வளர்ச்சியைப் பற்றி புதிய செய்திகளைக் கூறுகின்றன. கிளா ஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஸ்மித் ஆற்றிய விரிவுரைகளை ஒரு மாணவர் குறிப்பெடுத்து பின்னர் அவற்றை ஓரளவுக்குத் திருத்தங்கள் செய்து மறுபடியும் எழுதித் தயாரித்த கட்டுரைகள் இவை. இவற்றின் உள்ளடக்கத்தை ஆராய்கின்ற பொழுது இந்த விரிவுரைகள் 1762 – 1763-ம் வருடங்களில் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அறவியல் தத்துவஞானத்தைப் பற்றி அவர் மாணவர்களுக்கு விரிவுரையாற்றத் தொடங்கினார். ஆனால் அந்தக் காலத்திலேயே அது சமூகவியல், அரசியல் பொருளா தாரத்தைப் பற்றிய விரிவுரைகளடங்கிய தொடராக மாறிவிட்டது என்பது இவற்றிலிருந்து தெளிவாகிறது. அவர் குறிப்பிடத்தக்க வகையில் சில பொருள் முதல்வாதக் கருத்துக்களை வெளியிட்டார். உதாரணமாக ஒரு கருத்தை மேற்கோள் காட்டுகிறோம்; “உடைமை இல்லாதிருக்கும் வரை அரசு ஏற்படவில்லை; ஏனென்றால் செல்வத்தைக் காப்பதும் ஏழைகளிடமிருந்து பணக்காரர்களைக் காப்பதுமே அரசினுடைய முடிவான நோக்கம்”  (3) இந்த விரிவுரைகளின் பொருளாதாரத்தைப் பற்றிய பகுதிகளில் அவர் பிற்காலத்தில் நாடுகளின் செல்வம் நூலில் வெளியிட்ட கருத்துக்களைக் கருவடிவத்தில் காணலாம்.

இருபதாம் நூற்றாண்டின் முப்பதுக்களில் மற்றொரு சுவாரசியமான ஆதாரம் கண்டு பிடிக்கப்பட்டது. இது நாடுகளின் செல்வத்தின் முதல் அத்தியாயங்கள் சிலவற்றின் பூர்வாங்க நகலாகும். இது 1763-ம் வருடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அறிஞர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். பிற்காலத்தில் எழுதிய புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ள முக்கியமான கருத்துக்களில் சில உழைப்புப் பிரிவினையின் பாத்திரம், பயனுள்ள மற்றும் பயனற்ற உழைப்பு என்னும் கருதுகோள்கள் முதலியவை இந்தப் பூர்வாங்க நகலில் காணப்படுகின்றன. மேலும் வாணிப ஊக்கக் கொள்கை பற்றி மிக ஆணித்தரமான விமர்சனத்தையும் சுதந்திரமான உற்பத்திக்கு ஆதரவான வாதத்தையும் இவற்றில் காண்கிறோம்.

ஆகவே, கிளாஸ்கோ கால கட்டத்தின் முடிவில் ஸ்மித் ஏற்கெனவே தற்சிந்தனையும் அறிவாழமும் நிறைந்த பொருளாதாரச் சிந்தனையாளராகிவிட்டார். ஆனால் அவர் தன்னுடைய மாபெரும் புத்தகத்தை எழுதுவதற்கு இன்னும் தயாராகவில்லை. அவர் மூன்று வருடங்கள் பிரான்சில் கழித்தார் (இளம் பக்லூ கோமகனுக்கு ஆசிரியராக); அங்கே பிஸியோகிராட்டுகளைச் சந்தித்தார். அவருடைய தயாரிப்புகள் இப்போது முழுமையடைந்தன.

 

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  W. Scott, Adam Smith as Student and Professor (Glasgow, 1937, Pp. 53-54) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.

 (2) A. Smith, The Wealth of Nations, Vol. I, London, 1924, p. 412.

 (3) A. Smith, Lectures on Justice, Police, Revenue and Arms, Oxford, 1896, p. 15.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

2

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்சங்சலக் மோகன் பகவத், ஹைதராபாத்தில் ஒரு உரையை நிகழ்த்தினார். அதில் அவர், இந்துக்களையும் இந்து மதத்தையும் முற்றிலும் வித்தியாசமாக வரையறுத்தார். அமைதி மற்றும் அகிம்சை பற்றிய உலகளாவிய அங்கீகாரம் பெற்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உலகம் கொண்டாடிய, கிறிஸ்துமஸ் தினத்தில் பகவத்தின் உரை நிகழ்த்தப்பட்டது.

அவரைப் பொறுத்தவரை, அனைத்து இந்தியர்களும் அதாவது 1.3 பில்லியன் மக்களும் இந்துக்கள். இந்த (இந்திய) நிலத்தில் வசிக்கும் ஒரு இந்து, பாரத மாதாவை வணங்க வேண்டும், மேலும் மண்ணையும் நீரையும் நேசிக்க வேண்டும். அதாவது அனைத்து இந்தியர்களும், அவர்கள் நம்பும் கடவுளை வணங்குவதையோ அல்லது ஜெபிப்பதையோ தவிர, ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய தெய்வமான பாரத் மாதாவையும் வணங்க வேண்டும்.

மோகன் பகவத்.

எனவே, அனைத்து முசுலீம்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் பலர்  தங்கள் கடவுளையும் மற்றொரு சக்தியான பாரத் மாதாவையும் வணங்க வேண்டும்.

குடிமக்களின் தேசிய பதிவேட்டில் அல்லது பள்ளியில் அல்லது வேறு எந்த பதிவிலும் தங்கள் பெயர்களை பதிவு செய்யும் போது ‘மதம்’ என்ற நெடுவரிசைக்கு எதிராக அவர்கள் முசுலீம் – இந்து, பவுத்த – இந்து, கிறிஸ்தவ – இந்து, சீக்கிய – இந்து, பார்சி – இந்து என எழுத வேண்டும். அதன் பிறகு, அவர்கள் தங்கள் புத்தகம், உணவு கலாச்சாரம், திருமண முறை ஆகியவற்றைப் பின்பற்றலாம்.

இந்த முறை அவர் பசுவை வணங்கவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை கைவிடவும் அவர் கேட்கவில்லை. பொது சிவில் சட்டம் குறித்தும் அவர் பேசவில்லை.

இப்போது எவரும் புதிதாக கிறிஸ்தவம் அல்லது பவுத்தம் அல்லது சீக்கியம் அல்லது இஸ்லாத்திற்கு மாற விரும்புகிறார்களோ அவர்கள் இந்துக்களை தங்கள் மதத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து குறிப்பிட வேண்டும்.

சாவர்க்கர், ஹெட்கேவர், கோல்வல்கர் மற்றும் பலரால் வழங்கப்பட்ட இந்துத்துவத்தின் முந்தைய வரையறையிலிருந்து மோகன் பகவத் வந்தவர். முந்தைய இந்து மதமும் இந்துத்துவாவும் ஒருவிதத்தில் வித்தியாசமாக தோன்றின.

பகவத் சொற்பொழிவிலிருந்து அரசியல் கருத்தியல் உள்ளடக்கத்தை வெளியே எடுத்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, இந்த உருவாக்கம் முஸ்லிம்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் விரும்பும் அனைத்தையும் உள்ளடக்கியது. ஒருவேளை இது CAA – NRC பிரச்சினையையும் தீர்க்கும். அந்த முசுலீம் குடியேறியவர்கள் அல்லது அகதிகள் தங்கள் பெயர்களுக்கு எதிராக ‘முசுலீம் – இந்து’ என்று குறிப்பிட வேண்டும். பின்னர் அவர்கள் தங்கள் அல்லாஹ்விடம் அரபு மொழியில் பிரார்த்தனை செய்யலாம், ஆனால் பிரார்த்தனையின் முடிவில் அவர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்ல வேண்டும்.

கவுடில்யா மற்றும் மனுவுக்குப் பிறகு மோகன் பகவத் இந்து தத்துவத்தின் மிகப் பெரிய கோட்பாட்டாளராக உருவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. கவுடில்யா மற்றும் மனு இருவரும் மவுரியா சந்திர குப்தா மற்றும் புஷ்யமித்ரா ஷுங்கா ஆகிய ராஜ்யங்களுக்கு தங்களது சொந்த தத்துவார்த்த நூல்களான அர்த்தசாஸ்திரம் மற்றும் மனுதர்ம சாஸ்திரங்களை எழுதி அடித்தளத்தை வழங்கினர். கவுடில்யாவும் மனுவும் தங்கள் கோட்பாடுகளுடன் சந்திர குப்தா மற்றும் புஷ்யமித்ராவை ஆட்சிக்கு கொண்டு வந்த நிலையில், மோகன் பகவத், நரேந்திர மோடியை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளார். நரேந்திர மோடிக்குப் பிறகு அமித் ஷா பிரதமராக வருவார். பாராளுமன்றத்தில் தற்போதுள்ள பாஜக பெரும்பான்மையும், இரண்டு கால ஆட்சியும் மோகன் பகவத்தின் தத்துவ மூலோபாய பங்களிப்பாகும்.

மோகன் பகவத்தின் கூற்றுப்படி, ஹைதராபாத் கூட்டத்தில் தனது புதிய கோட்பாட்டை விளக்கும்போது, உலகின் மனிதர்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவர்கள் அனைவரும் மூன்று வகையான வெற்றிகளை விரும்புகிறார்கள். அவை:

“அசுரா, ராஜசிகா, தர்மம். அசுரா பிரிவைச் சேர்ந்தவர்கள் சோகத்தில் வாழ்ந்தனர், மற்றவர்களை சோகப்படுத்தினர், வன்முறையை ஏற்படுத்தினர், ஆனால் வெற்றியை அடைந்தனர், இது இறுதியில் எல்லாவற்றையும் அழிக்கும். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் சுயநலத்துக்காக செய்தார்கள். அவர்கள் தங்களுக்கு செல்வத்தையும் பெருமையையும் பெற மற்றவர்களைப் பயன்படுத்தினர். சங்கமும் இந்தியாவும் தர்ம வெற்றியை நம்பின; அங்கு மக்கள் மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகவும் நலனுக்காகவும் வாழ்ந்தார்கள். மேலும் தங்களுக்கு சொர்க்கம், ராஜ்யம் அல்லது எதையும் வேண்டும் என அவர்கள் விரும்பவில்லை.”

படிக்க:
“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !
போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

இது மிகவும் கற்பனைபூர்வமான கோட்பாடாகும். சொர்க்கம் மற்றும் ராஜ்யத்தின் நம்பிக்கையிலிருந்து இது விசுவாசிகளை பாதுகாக்கிறது. மோகன் பகவத் தனது இந்துக்களை சொர்க்கம் மற்றும் ராஜ்யத்தின் விருப்பத்திலிருந்து விடுவித்துள்ளார்.

இந்த இரண்டு ஆசைகளும் இவ்வளவு வன்முறையை ஏற்படுத்தின, அவை காரணமாக இனப்படுகொலைகள் நடந்தன. இப்போதைக்கு அவர்கள் முசுலீம்களாக இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும், பவுத்தர்களாக இருந்தாலும் அல்லது சீக்கியர்கள் தூய முசுலீம்களாகவோ, தூய பவுத்தர்களாகவோ, அல்லது தூய்மையான சீக்கியர்களாகவோ இருந்தாலும் சரி ‘இந்த வாழ்க்கையில் அவர்கள் மரணத்திற்குப் பின் சொர்க்கத்தையும் ராஜ்யத்தையும் (அரசியல் அதிகாரத்தை) விரும்புகிறார்கள்.’

அவரைப் பொறுத்தவரை அத்தகைய சக்திகளும் வன்முறையைச் செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் ‘சொர்க்கத்தையும் ராஜ்யத்தையும் விரும்பவில்லை’ என்று முதன்முறையாக உலகுக்குத் தெரிவிக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைப் போலவே, சொர்க்கம் மற்றும் ராஜ்யத்தின் விருப்பத்திலிருந்து வெளியேற விரும்பும் மக்கள் தங்களிடம் உள்ள வேறு எந்த மதக் குறிப்பையும் சேர்த்து ஒரு இந்து குறிச்சொல்லை வைத்திருக்க வேண்டும். அவர் அவர்களிடம் இந்து மதத்திற்கு மாறும்படி கேட்கவில்லை, இந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களை மீண்டும் மதமாற்றும்படி கேட்கவில்லை.

அவர்கள் ஏற்கனவே இருக்கும் மதத்தில் ‘இந்து’ என்ற புதிய குறிச்சொல்லைச் சேர்க்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும், நிச்சயமாக ‘தர்ம’ வன்முறை மட்டுமே.

ஒரே கேள்வி என்னவென்றால், மாநில அதிகாரத்தை (இராஜ்ஜியம்) கைப்பற்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ். ஏன் பாஜகவை நிறுவியது, மதச்சார்பின்மை மற்றும் அரச அதிகாரத்தை நம்பும் மற்ற அரசியல் கட்சிகளுக்கு எதிராக, அதன் வெற்றிக்காக அது ஏன் தொடர்ந்து செயல்படுகிறது? அவருடைய கூற்றுப்படி, இவை பாவச் செயல்களா?

95 ஆண்டுகால வாழ்நாளில் தனது அமைப்பு அசுரா மற்றும் ராஜ்சிகா நடவடிக்கைகளில் ஒருபோதும் பங்கேற்கவில்லை என்று அவர் உலகுக்குச் சொல்கிறார். 2014-க்கு முன்னர் அதன் கலகக் காலத்தை அவர் தர்ம காலமாகக் கருதவில்லையா? அத்வானியின் ரத யாத்திரை மற்றும் 1990 களில் ஏற்பட்ட கலவரங்கள் அசுர மற்றும் ராட்சசா நடவடிக்கைகள் என்று அவர் அர்த்தப்படுத்துகிறாரா? அப்படியானால், அவரது சொந்த பாஜக அரசு அத்வானியையும் அவரது குழுவினரையும் ஏன் சிறைக்கு அனுப்பவில்லை?

பகவத்தின் புதிய இந்து கோட்பாடு பண்டைய இந்து நூல்கள் நமக்குச் சொன்னது போல அசுரர்களும் ராஜ்சிகாக்களும் பாரதத்தில் இல்லை என்று ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தைத் தருகிறது. அவர்கள் தாழ்ந்த சாதியினர் அல்லது முசுலீம்கள் அல்லது இந்திய கிறிஸ்தவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ளனர். இந்திய முஸ்லிம்கள், பவுத்தர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் தங்கள் மதக் குறிப்பில் இந்துக்களைச் சேர்க்காவிட்டால், அவர்கள் வெளியில் இருந்து குடிபெயர்ந்த அசுரர்கள் மற்றும் ராஜசிகாக்கள் என்று கருதப்படுவார்கள்.

படிக்க:
ஆத்திகர்களின் “சாமானிய சாலம்” – அறிவியல் அயோக்கியத்தனம் !
அக்காக்கிய் – ஒரு அரசு எழுத்தனின் அறிமுகம் | மேல் கோட்டு | புதிய குறுநாவல் தொடர்

ஒரு புதிய மாற்ற முறை மூலம் அவர்களின் (மத) மாற்றத்திற்கு போதுமான வாய்ப்பை அவர் வழங்கியுள்ளார். அவர்கள் மாறாவிட்டால், அவருடைய தர்ம வன்முறை அதன் சொந்த போக்கைப் பின்பற்றும்.

இதுதான் மோகன் பகவத்தின் புதிய பாரதம். தேசத்தின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர் ஒரு சிறந்த வடிவமைப்பை கொடுத்துள்ளார். ஹைதராபாத் கோட்பாடு, விளக்கம் அளிக்கப்பட்டு மீண்டும் விளக்கப்படும். அவரது கோட்பாட்டை ஊடகங்கள் மிக முக்கியமான கவனத்தை தந்துள்ளன. தொலைக்காட்சி சேனல்கள் அவரது உரையை நேரடியாக ஒளிபரப்பின.

இந்தக் கோட்பாட்டிற்கு பிற மத அறிவுஜீவிகள், மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் மற்றும் மேற்கத்திய கல்வி அறிஞர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அவரது கோட்பாடு இந்திய சிறுபான்மையினருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல சிறுபான்மை தலைவர்கள் ஏற்கனவே இந்த வகையான ஒரு இந்து தேசக் கோட்பாடு குறித்து கடுமையான அச்சங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

அறியப்பட்ட இந்திய வரலாற்றில் முதல்முறையாக, மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர், CAA மற்றும் NRC ஐ எதிர்க்க வீதிகளில் வந்துள்ளனர். மோகன் பகவத் இந்த கோட்பாட்டின் மூலம் அவர்களை மேலும் பயமுறுத்துகிறார்.

காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட்.

முன்னதாக அவர் ‘இந்தியாவில் இடஒதுக்கீடு இல்லை’ என்ற கோட்பாட்டைக் கொண்டு இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்வதற்காக பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பயமுறுத்தினார். கேள்வி என்னவென்றால்: ஒரு தேசமாக இந்தியா இந்த வகையான ஆபத்தான மதக் கோட்பாடுகளுடன் வாழ முடியுமா? நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பிற்கு என்ன நடக்கும்? எனது அச்சம் என்னவென்றால், இந்தியா என்கிற கருத்தாக்கம் கடுமையான அச்சுறுத்தலில் உள்ளது. மேலும் மோகன் பகவத் வேண்டுமென்றே தனது நிலையிலிருந்து இந்த அச்சுறுத்தலை முன்வைத்துள்ளார்.

சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட் ஒரு அரசியல் கோட்பாட்டாளர் ஆவார். அவர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 2012 வரை பேராசிரியராக பணியாற்றியவர்.


தமிழாக்கம் :
கலைமதி
நன்றி: தி வயர்.

அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !

ண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளி எல்&டி துறைமுகத்தை  2018 ஆண்டு ஜூனில் அதானி குழுமம் கையகப்படுத்தியது. 330 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இத்துறைமுகத்தை சுமார் 53 ஆயிரம் கோடி செலவில் 6200 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யவும், தொழிற்பூங்கா அமைக்கவும் திட்டமிட்டுள்ளது அதானி குழுமம். இத்திட்டத்துக்கான சூழலியல் தாக்க மதிப்பீடு செய்வதற்கு குறிப்பாணை கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் 2018  நவம்பரில் துறைமுக நிர்வாகம் விண்ணப்பித்திருந்த நிலையில், சென்னை மாநகருக்கும், எண்ணூர் முதல் பழவேற்காடு ஏரி வரையிலான பகுதிகளுக்கும் சூழலியல் பேரழிவை உருவாக்கவல்ல இத்திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கான குறிப்பாணையை சமீபத்தில் வழங்கியுள்ளது மோடி அரசு.

பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த பகுதியாகவும் பறவைகள் சரணாலயமாகவும் விளங்கும் பழவேற்காடு ஏரி, சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில்  அமைந்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்புநீர் ஏரியாக விளங்கும் இந்த ஏரி, 250 ச.கி.மீ முதல் 450 ச.கி.மீ வரையிலான பரப்பளவுடன், பழவேற்காடு முதல் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் வரை பரவிக் கிடக்கிறது. இதில் தமிழகத்தின் கொசஸ்தலை, ஆரணி; ஆந்திராவின் சொர்ணமுகி, காளங்கி ஆகிய ஆறுகளும் பல ஓடைகளும் கலக்கின்றன. ஏரியும் வங்கக்கடலும் இணையும் முகத்துவாரப் பகுதியில் ஆறு மணிநேரத்துக்கு ஒருமுறை கடல்நீர் ஏரிக்கும், ஏரிநீர் கடலுக்கும் சுழற்சி முறையில் வந்து செல்கிறது. பழவேற்காடு முகத்துவாரப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபம் நடந்துள்ளது என்பதற்கு வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.

பழவேற்காடு ஏரியில் கலக்கும் கொசஸ்தலையாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியும் எண்ணூர் சதுப்புநிலப் பகுதியும் சுற்றுசூழல் நுண்தன்மை வாய்ந்தவையாக வரையறுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கோட சேறு போன்ற இயற்கையான சேற்றுத்திட்டுகள் கடலையொட்டி அமைந்துள்ளன. இவை கடல் அரிப்பைத் தடுத்து, கடல் சீற்றத்தைத் தணிப்பதோடு பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் பெரிதும் துணைபுரிகின்றன.

நன்னீரும், உப்புநீரும் கலக்கும் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்திலும், எண்ணூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் அரிய வகை சிங்க இறால்கள், பச்சைக்கல் நண்டுகள் உள்ளிட்ட 15 வகையான இறால் மற்றும் நண்டு இனங்களும், சிப்பிகளும், 50 வகையான மீன் இனங்களும் உயிர்வாழ்கின்றன. கடல் நீரோடு சேர்ந்து இறால்கள் ஏரிக்குள் நுழைவதும், இனப்பெருக்கம் செய்து பின் வெளியேறுவதும் காலங்காலமாக நடந்துவருகிறது. மேலும், 10 வகையான பாசிகள், 50- மேற்பட்ட நீர்ப்பறவை இனங்கள், பாம்புகள், சிறு கடல் ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக இப்பகுதியிலுள்ள மாங்குரோவ் காடுகள் திகழ்கின்றன.

பழவேற்காடு ஏரியைச் சுற்றியுள்ள 50- மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. எண்ணூர்  காட்டுப்பள்ளி சுற்றுவட்டாரத்திலுள்ள பல கிராம மக்களும் மீன்பிடித்தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், கைவினைஞர்கள், வியாபாரிகள் என பலதரப்பு மக்களின் வாழ்க்கையும் கொசஸ்தலை ஆற்றோடும், பழவேற்காடு ஏரியோடும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பழவேற்காடு பகுதி மீனவர்கள் நடத்திய பேரணி.

பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அடிப்படையாக விளங்குகின்ற, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததொரு நுட்பமான இப்பகுதியில்தான் துறைமுக விரிவாக்கம் செய்ய திட்டமிடுகிறது அதானி குழுமம். ஏரியையும், கழிமுகத்தையும், கடலையுமே நம்பி காலங்காலமாக இப்பகுதியில் வசித்துவரும் மக்களின் கருத்தைக் கேட்காமல், குரலுக்கு செவிசாய்க்காமல், இத்திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கான குறிப்பாணையை அரசு வழங்கியிருப்பது, மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரிவாக்கத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் 6200 ஏக்கரில் ஆற்று வடிநிலப்பகுதி, கரைக்கடல் பகுதிகள், தனியார் நிலங்கள் ஆகியவை அடங்கும். குறிப்பாக 7 கி.மீ நீளம் மற்றும் 1.5 கி.மீ அகலத்திற்கு, சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில், மணல் மற்றும் சேற்றுத் திட்டுக்கள் நிறைந்த கரைக்கடல் பகுதியைத் தூர்த்து மேடாக்குவது இத்திட்டத்தின் ஒருபகுதியாக உள்ளது. இதற்காக கடலில் இருந்து அகழ்ந்தெடுத்தும் பிற பகுதிகளில் இருந்தும் மணலைக் கொண்டுவந்து கொட்டி நிரப்புவர். தூர்த்து மேடாக்கப்பட்ட இப்பகுதியில் துறைமுகக் கட்டுமானப் பணிகள், அதற்கான மின் உற்பத்தி, பெட்ரோலிய, கனிம மற்றும் வேதிப் பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளும், அதிநவீன குளிர்சாதன அமைப்புகளும் நிர்மாணிக்கப்பட இருக்கின்றன. சுனாமி போன்ற கடல்சீற்றங்களின் போது கரையோரப் பகுதிகளுக்கு அதிக சேதாரம் ஏற்படாமல் தடுத்துக் காத்து வருபவை கரைக்கடலில் இயற்கையாகவே உருவாகியிருக்கும் மணல்திட்டுகளும், சேற்றுத்திட்டுகளும்தான். சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களால் உருவான கடல் அரிப்பின் தாக்கத்தை இப்பகுதியில் தடுத்து நிறுத்தியதும் இத்திட்டுகள்தான். அவற்றை முற்றிலுமாக அழித்து இயற்கையின் நில அமைப்பையே மாற்றும் சூழலியல் பேரழிவைத்தான் விரிவாக்கத்தின் பெயரால் அதானி உருவாக்கவிருக்கிறார்.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பழவேற்காடு பகுதி மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த 2015 ஆண்டு சென்னையைப் பெருவெள்ளம் சூழ்ந்தபோது, ஒரு இலட்சம் கனஅடிக்கும் அதிகமான வெள்ளநீரைக் கடலில் கொண்டு சேர்த்தது கொசஸ்தலையாறு. இவ்வாற்றின் வடிநிலப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால், பெருமழைக் காலங்களில் ஆற்றின் நீரோட்டம் தடுக்கப்பட்டு வெள்ளநீர் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்குள்ளும் மேய்ச்சல் நிலங்களுக்குள்ளும் புகுந்துவிடும். இதனால், வடசென்னையும், பொன்னேரி வரையிலான ஏராளமான கிராமங்களும் வெள்ளப்பெருக்கில் மூழ்கடிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்ளும்.

எண்ணூர்  பழவேற்காடு சதுப்புநிலத்தின் மேற்குவெளிப்பகுதி 3,4 மாதங்கள் வரை மழைநீரை உள்வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளும் இயல்புடையது. இங்கிருந்து சென்னை மாநகருக்கு தினசரி பத்துகோடி லிட்டருக்கு மேல் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில், 6078 கோடி செலவில் பேரூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. பல ஆயிரம் கோடி செலவுசெய்து கடல்நீரை சுத்திகரிப்பதாக சொல்லும் அரசு, இயற்கையான நீராதாரமாக விளங்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பாதுக்காக்க வேண்டும் என்ற மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதில்லை. மாறாக அதானி, காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் சதுப்புநில ஆக்கிரமிப்புக்கு தாராளமாக அனுமதியளிக்கிறது. நன்னீர் சேமிப்புப்பகுதிகள் செயற்கையாகத் தூர்க்கப்படுவதன் காரணமாக நிலத்தடியில் கடல்நீர் ஊடுருவி, நிலத்தடிநீர் உவர்நீராக மாறும். இதனால் குடிநீர் ஆதாரங்கள் முற்றாகப் பயனற்றுப் போவதோடு, விவசாயமும் தரிசாகிப் போகும்.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்படும் சதுப்பு நிலங்கள்.

கரைக்கடலைத் தூர்த்து மேடாக்குவதோடு, கடல் அலையைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவரையும் ஒரு கிலோமீட்டருக்கும் மேல் கட்டவிருக்கிறது அதானி துறைமுக நிர்வாகம். ஏற்கனவே சென்னைத் துறைமுகம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள அலைத் தடுப்புச்சுவர்கள், அலைகளின் இயற்கையான போக்கினைத் தடுக்கின்றன. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு, சாத்தான் குப்பம் போன்ற கடலோர பகுதிகளை கடல் விழுங்கிவிட்டதை நினைவுகூர்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். இப்போது வரவிருக்கும் அதானி துறைமுக விரிவாக்கம், கொசஸ்தலையாற்றின் குறுகிய கரையும், பழவேற்காடு ஏரியின் கரைப்பகுதியும் அரிக்கப்பட்டு கடலோடு இணைந்துவிடும் அபாயத்தைக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென போராடி வருகின்றனர்.

ஏற்கனவே, எண்ணூர் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும், பாதரசம், காட்மியம் உள்ளிட்ட நச்சு வேதிப்பொருட்கள் நிரம்பிய சாம்பல் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய் வழியே கொசஸ்தலையாற்றில் கலந்து ஆற்றின் ஆழத்தைக் குறைத்து சாம்பல் மேடுகளை உருவாக்கியிருக்கின்றன. இச்சாம்பல் கழிவுகளால் கொசஸ்தலையற்றிலும், அதன் வடிநிலப் பகுதிகளிலும் வாழ்ந்து பெருகிய இறால்களும் நண்டுகளும் மீன்களும் அழிந்தன. இவற்றை நம்பி வாழ்ந்த மீனவர், இருளர் மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். அதானி துறைமுக விரிவாக்கமோ இப்பாதிப்புகளை பழவேற்காடு வரையிலும் நீட்டிக்கவிருக்கிறது. எத்தனை கோடிகள் கொடுத்தாலும் மீட்க முடியாத சதுப்புநிலங்களையும், கரைக்கடலையும், முகத்துவாரங்களையும், விவசாய நிலங்களையும், பல்லுயிர்ப் பெருக்கத்தையும் அழித்து அதானியின் சொத்தைப் பெருக்குவதையே நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தை மத்திய –  மாநில அரசுகள் சத்தமின்றி அனுமதித்து வருகின்றன. இதன் பாதிப்புகளை நேரடியாக உணர்ந்திருக்கும் மீனவ மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

படிக்க:
ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் !
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இந்தியர்கள் பொறுப்புணர்வுடன் இருக்கிறார்கள்”, சுற்றுச்சூழலைப் பாதுகாக்காத கலாச்சாரத்தால், பேரழிவை சந்திப்பதைத் தவிர்க்க முடியாது” என்று வீரவசனம் பேசுகிறார் அதானியின் நெருங்கிய கூட்டாளியான மோடி. ஆனால் நடைமுறையிலோ, சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திய ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும், மக்களிடம் கருத்துகூட கேட்காமல் அதானியின் துறைமுக விரிவாக்கம் என்னும் நாசகரத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதும் மோடியின் ஆட்சியில்தான். அணுவுலைகள் – அணுக்கழிவு மையம், எட்டுவழிச்சாலை, மீத்தேன்  ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் உருவாக்கும் சுற்றுச்சூழல் – இயற்கைவள அழிவுகள் யாவும் வளர்ச்சியின் பெயராலேயே நியாயப்படுத்தப்படுகின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம்.

பூங்குழலி

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ?

எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ?

டிசம்பர் 26 அன்று சென்னையில் நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தொடர் இசை, முழக்கக் கூட்டத்தை போலீசாரின் கெடுபிடிகளுக்கிடையே அவசரமாக முடிக்க வேண்டியிருந்ததால் மிகவும் சுருக்கமாகப் பேசினேன். போராட்டத்தில் நான் பேசியதன் விரிவான வடிவம் இங்கே.

***

ழை வரும் என்ற நம்பிக்கையில்தான் நாம் வெயிலைத் தாங்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறோம். இன்று காலை கிரகணம் விலகி விட்டது. நாட்டைப் பிடித்த கிரகணம் விலகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

இஸ்லாமியருக்கும் கிறிஸ்துவருக்கும் இந்தியா தந்தை நாடாக இருந்த போதிலும் அதனை புண்ணிய பூமியாக அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்று சாவர்க்கர் குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மையில்லை. அப்படியே இருந்தாலும் இந்துக்களுக்கு மட்டும் இது புண்ணிய பூமியாக இருக்கிறதா?

கடந்த 20 வருடங்களில் நான்கு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக் கணக்கானோர் வேலையிழந்திருக்கின்றனர். பாலியல் குற்றங்களுக்கு உள்ளான நூற்றுக் கணக்கான பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர். தலித்துகள் அடிப்படை மனித உரிமைகளை இழந்திருக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தானே? அப்படியென்றால் இது அவர்களுக்குப் புண்ணிய பூமியா? பாவ பூமியா?

நாம் இஸ்லாமியர் உரிமைக்காக மட்டும் இன்று போராட வில்லை. இந்தியாவைக் காப்பாற்றப் போராடுகிறோம். அது யார் கனவு கண்ட இந்தியா?

கோல்வால்கரின் இந்தியா:

கோல்வால்கர்

“அன்னிய சக்திகளுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன : அவர்கள் தேசிய இனத்தில் ஐக்கியமாகி அதன் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது தேசிய இனம் அனுமதிக்கும் வரை அவர்கள் அந்த இனத்தின் கருணையில் வாழ்ந்து அது விரும்பும் போது வெளியேற வேண்டும். சிறுபான்மையினர் பிரச்சினை குறித்த சாரமான பார்வை இது மட்டுமே. இது மட்டுமே தர்க்கரீதியான, சரியான தீர்வு. அது மட்டுமே தேசிய வாழ்வு ஆரோக்கியமானதாகவும் குலைக்கப்படாமலும் இருக்கச் செய்யும். அது மட்டுமே அரசியல் அமைப்பில் ஒரு தேசத்திற்குள் மற்றொரு தேசத்தை உருவாக்கும் புற்றுநோயிலிருந்து நாட்டைக் காக்கும்.”

அபுல் கலாம் ஆசாத்தின் இந்தியா:

மார்ச் 1940-ல் இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து இரண்டு முஸ்லிம் தலைவர்கள் பேசினர். அதில் ஒருவர் முகமது அலி ஜின்னா. முஸ்லிம் லீக் மார்ச் 23, 1940 அன்று நிறைவேற்றிய பாகிஸ்தான் தீர்மானம் குறித்து அவர் பேசினார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், ராம்கரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அபுல் கலாம் ஆசாத் தலைமை உரையாற்றினார். அவர் பேசியது இதுதான்:

“நான் ஒரு முஸல்மான்; அந்த உண்மையைக் குறித்து எனக்குப் பெருமைதான். இஸ்லாமிய மதத்தின் அற்புதமான 1300 வருட பாரம்பரியத்தை நான் வரித்துக் கொண்டுள்ளேன். அந்தப் பாரம்பரியத்தின் மிகச் சிறிய துண்டைக் கூட நான் இழக்க மறுக்கிறேன். இஸ்லாமின் வரலாறு, போதனைகள், கலைகள், இலக்கியங்கள், நாகரீகங்கள் என் சொத்து. என் அதிர்ஷ்டம். அவற்றைப் பாதுகாப்பது என் கடமை.

ஒரு முஸல்மானாக எனக்கு இஸ்லாமிய மதத்தின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் விசேஷமான ஆர்வம் இருக்கிறது. அவற்றில் நடக்கும் எந்தத் தலையீட்டையும் நான் சகித்துக் கொள்ள மாட்டேன். ஆனால் இந்த உணர்வுகளைத் தவிர, என் வாழ்க்கையும், சூழலும் என் மீது திணித்திருக்கும் பிற உணர்வுகளும் எனக்கு இருக்கின்றன.

படிக்க:
கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !
♦ மகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை ! கோல்வால்கருக்கு செருப்படி !

இஸ்லாமியத்தின் தன்மை இந்த உணர்வுகளுக்குக் குறுக்கே வருவதில்லை; அது நான் முன்னே செல்ல எனக்கு உதவுகிறது. ஒரு இந்தியனாக இருப்பதில் எனக்குப் பெருமை இருக்கிறது. இந்திய தேசியம் என்கிற பிரிக்க முடியாத ஒற்றுமையின் அங்கம் நான். இந்த உன்னதக் கட்டுமானத்தினால் தவிர்க்க முடியாதவன் நான். நான் இல்லாமல் அந்த அற்புதக் கட்டுமானம் முழுமை பெறாது. இந்தியாவைக் கட்டுவதில் பயன்பட்ட அம்சங்களில் முக்கியமானவன் நான். இந்தப் பெருமையை நான் என்றும் விட்டுக் கொடுக்க முடியாது.

அபுல் கலாம் ஆசாத்

விருந்தோம்பலில் சிறந்த இந்திய மண்ணை வீடாகப் பாவித்து பல மனித இனங்களும், கலாச்சாரங்களும், மதங்களும் அதனை நோக்கிப் பாய்வதும், கூண்டு வண்டிகளில் (கேரவன்) வந்த பயணிகள் இங்கு ஓய்வெடுப்பதும் அதன் விதியாக இருந்தது. வரலாறு உதிப்பதற்கு முன்பே கூண்டு வண்டிகள் இந்தியாவிற்குள் வந்தன. அவற்றைத் தொடர்ந்து அலை அலையாக புதியவர்கள் வந்து சேர்ந்தனர்.

செழித்துப் பரந்திருந்த இந்த மண் அவர்களனைவரையும் தன் மார்போடு அணைத்து வரவேற்றது. அவர்களின் அடியொற்றி கடைசியாக வந்த மூன்று கூண்டு வண்டிகளில் இருந்த பயணிகள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் இங்கு வந்து நிரந்தரமாகத் தங்கி விட்டனர். இதனால் இரு வேறு கலாச்சார நீரோட்டங்கள் கலந்தன. முதலில் கங்கை, யமுனை போல வேறு பாதைகளில் ஓடினாலும், இயற்கையின் மாறாத விதி அவர்களை ஒன்றாகக் கொண்டு வந்து சங்கமிக்கச் செய்தன.

இந்த சங்கமம் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வானது. அன்று முதல் பழைய இந்தியா இருந்த இடத்தில் ஒரு புதிய இந்தியாவை விதி தனக்கே உரித்தான ரகசிய வழியில் உருவாக்கியது. நாங்கள் எங்களுடைய செல்வங்களைக் கொண்டு வந்தோம்; இந்தியாவும் அதன் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் செல்வக் குவியல்களைக் கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் செல்வங்களை அவளுக்குக் கொடுத்தோம். அவளும் செல்வங்கள் குவிந்து கிடந்த அறையின் கதவுகளை எங்களுக்காகத் திறந்து வைத்தாள்.

நாங்கள் அவளுக்கு அதிகம் தேவைப் பட்டதோ அவற்றையெல்லாம் கொடுத்தோம் – இஸ்லாமின் கருவூலத்திலிருந்த விலைமதிப்பற்ற பரிசுகளையும், ஜனநாயகம், மனித உரிமைகள் எனும் செய்திகளையும் கொடுத்தோம்..

அதற்குள் 11 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. இந்திய மண்ணின் மீது இந்து மதத்திற்கு இருந்த அளவு உரிமை இஸ்லாமிற்கும் வந்து விட்டது. இந்து மதம் இங்கிருந்த மக்களின் மதமாக பல ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இருந்ததென்றால், இஸ்லாமும் அவர்களின் மதமாக ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. தான் இந்து மதத்தைப் பின்பற்றும் இந்தியன் என்று ஒரு இந்து பெருமையுடன் கூறுவது போல, நாங்களும் இஸ்லாமைப் பின்பற்றும் இந்தியர்கள் என்று அதே பெருமையுடன் கூற முடியும்.

படிக்க:
வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை
♦ உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?

இந்த வட்டத்தை இன்னும் விரிவாக்கி ஒன்று சொல்வேன். இந்தியாவில் வாழும் ஒருகிறிஸ்துவர் கூட தான் ஒரு இந்தியன் என்றும், தான் தன் மதமாகிய கிறிஸ்துவத்தைப் பின்பற்றுவதாகவும் அதே பெருமையுடன் கூற உரிமை உள்ளது.
பதினோரு நூற்றாண்டுகளாக உருவான பொது வரலாற்றின் பொது சாதனைகள் இந்தியாவை செழுமையாக்கியுள்ளன.

நமது மொழிகள், நமது கவிதைகள், நமது இலக்கியங்கள், நமது கலாச்சாரம், நமது கலை, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள், நம் வாழ்க்கையின் கணக்கிலா நடப்புகள் இவை அனைத்தும் நம் பொது விழைவின் முத்திரையைத் தாங்கி நிற்கின்றன. நம் வாழ்க்கையின் எந்த அம்சமும் இந்த முத்திரையிலிருந்து தப்பிக்க வில்லையென்றே கூறலாம்.

நமது மொழிகள் வேறாயிருந்தாலும் நாம் பொது மொழி ஒன்றைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டோம்; நமது பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை; ஆனால் அவை ஒன்றன் மீது ஒன்று வினை புரிந்து ஒரு புதுச் சேர்க்கையையை உருவாக்கின.

நம்முடைய புராதன உடைகளை பழைய படங்களில் மட்டுமே காணமுடியும்; அவற்றை யாரும் இப்போது உடுத்துவதில்லை. இந்தப் பொதுச் செல்வம் நம்முடைய பொது தேசியத்தின் பாரம்பரியம்; அதை விட்டு விட்டு, கூட்டு வாழ்க்கை தொடங்குவதற்கு முன் இருந்த காலத்திற்கு நாங்கள் செல்ல விரும்ப வில்லை.”

நாம் ஆசாதின் இந்தியாவிற்காகத்தான் போராடுகிறோம் பிரதமர் மோடி மனதின் குரல் (மன் கீ பாத்) என்று அடிக்கடி மக்களிடையே உரையாடுகிறார். ஒரு பிரதமர் பேசுகிறார் என்றால் ஒரு நாடே பதட்டமடைகிறது என்றால் எவ்வளவு மோசமான சூழலில் நாம் வாழ்கிறோம் என்று புரியும்.

கேள்வி கேட்க எதிரே யாரும் இல்லாத ஊடகங்கள் மூலமாகத்தான் அவர் இன்று பேசிக் கொண்டிருக்கிறார்.

மோடிக்கு ஒரு வேண்டுகோள். இன்று இந்திய நாட்டின் மக்கள், குறிப்பாக மாணவர்கள், உங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். இதுதான் மதசார்பற்ற இந்தியாவுடைய மன் கீ பாத். இதை நீங்கள் கேட்க வில்லையென்றால் உங்களுக்கு விமோசனமே கிடையாது.

நன்றி : ஃபேஸ்புக்கில் ஆர். விஜயசங்கர். ஆசிரியர், ஃபிரண்ட்லைன்

ஆத்திகர்களின் “சாமானிய சாலம்” – அறிவியல் அயோக்கியத்தனம் !

0
நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 03

முதல் பாகம்

2. ஆத்திகர்களின் புரட்டுவாதம்

த்திகர்களின் அறிவு எல்லாம், நாத்திகர்களின் கொள்கைளை புரட்டுவதிலேயே குவிக்கப்பட்டது. நாத்திகர்கள் சொல்லுகிற வாதங்கள், தங்கள் கொள்கைகளுக்கேற்ப மாற்றுவதில் சொல் மயக்கங்களை அவர்கள் கையாண்டார்கள். இதற்குத் தற்கால உதாரணம் ஒன்று தருவோம். இது நாத்திகர்களைப் பற்றியது அல்ல எனினும் புரட்டுவாதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகக் காணப்படுகிறது.

“கம்யூனிஸம் ஒரு புதிய மதம்” என்று ராதாகிருஷ்ணன் அடித்துச் சொல்லுகிறார். அவர் இக்கூற்றை நிரூபிக்கும் முயற்சியில் புரட்டுவாதத்தைத் திறமையாக் கையாளுகிறார்.

“மாஸ்கோ நகரின் சுவர்களில் சில சுவரொட்டிகள் காணப்படுகின்றன. ‘உலகம் எப்போது படைக்கப்பட்டது’ என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு புதிய உலகம் அக்டோபர் 1917-ல் படைக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். விண்ணிலிருந்து கடவுள்களை விரட்டுங்கள். உலகில் இருந்து முதலாளித்துவத்தை விரட்டுங்கள். கம்யூனிஸத்திற்கு வழி விடுங்கள்.

இத்தகைய ‘வலுவான’ சான்றுகளில் இருந்து நமது இந்தியத் தத்துவவாதி தம்முடைய முடிவுகளைக் கூறுகிறார்:

ஆன்மீக எண்ணங்கள் கொண்ட ரஷ்ய நிலத்தில் கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸக் கொள்கை என்ற நாற்று பிடுங்கி நடப்பட்டபோது அது ஒரு மதமாயிற்று. மதத்தின் பிரச்சார முறைகளைக் கம்யூனிஸம் மேற்கொண்டது. இதற்காக கம்யூனிஸ்டுக் கட்சி, செஞ்சேனை, பள்ளிகள், பிரச்சார மேடைகள், பத்திரிகைகள் ஆகியவை பரப்புக் கருவிகளாக (பிரச்சாரக் கருவிகளாக) ஆக்கப்பட்டன. போல்ஷ்விஸத்தின் இயக்கு சக்தி, கம்யூனிஸத்தின் மீது நம்பிக்கைதான், ஆழ்ந்த பக்திதான் (mysticism), உயிர்ப்பலி கொடுக்கவும் தயாராகவுள்ள தியாக உணர்ச்சிதான். அது பண்டைக்கால யூதர்களின் புதிய சுவர்க்கத்தையும் புதிய உலகையும் பற்றி கனவுகளைப் போல ரஷ்ய மக்களைக் கவர்ந்து கொண்டுள்ளது. சோஷலிஸ்டுகள் கூறுகிறார்கள்: “நாங்கள் மதத்திற்கு எதிரிகள் அல்ல. மதத்தை நாங்கள் ஒதுக்கி விடுகிறோம். ‘மனித சகோதரத் துவம்’ என்னும் எங்களது சோஷலிஸ்டுக் குறிக்கோள், கடவுளை விடவும், இயேசுநாதரை விடவும் முக்கியமானது.” இவ்வாறு கூறிவிட்டு ராதாகிருஷ்ணன் தமது முடிவுக்கு வருகிறார்: “கடவுளையும், கிருஸ்துவையும் வழிபடுவோரைவிட உண்மையான, உணர்ச்சியுள்ள மதவாதிகளாக இவர்கள் இருக்கிறார்கள்.”

மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோரிலும் கம்யூனிஸத்திலும் மதத்தையும், மத உணர்ச்சியையும், மத நம்பிக்கையையும் ராதாகிருஷ்ணன் காண்கிறார். இப்புரட்டு வாதத்திற்கு பண்டைய இந்தியத் தருக்க முறையில் ‘சாமான்ய சாலம்’ என்று பெயர். நமது முன்னோர்களுக்கு புரட்டுமுறை வாதங்கள் பற்றி மிக நன்றாகவே தெரிந்திருந்தது.

சாமான்ய சாலம் என்றால் என்ன?

தன்னுடைய கொள்கைக்கு எதிரான கொள்கையுடையவர், சொல்லுகிற சொற்களையும், வாக்கியங்களையும், தன்னுடைய கொள்கைக்குப் பொருத்தமான பொருளில் மாற்றிக் கூறுவதும், இதனால் எதிரான கொள்கையுடையவருடைய வாதங்களையே திரித்து விடுவதும் ஆகும். இதனை ‘அறிவியல் அயோக்யத்தனம்’ என்று பச்சையான தமிழில் கூறலாம். இம்முறையைத்தான் ஆத்திகர்கள் பண்டைக் காலத்திலும், நடுக்காலத்திலும் நாத்திகத்தை ஆத்திகமாக்கப் பயன்படுத்தியுள்ளார்கள். இதற்கு ஓர் உதாரணம் காண்போம். உதயணர் என்பவர் நடுக்கால தத்துவவாதி. இவர் கடவுள் உண்டென்று நிரூபிக்க முயலும் ‘நியாயம்’ என்ற தத்துவப் பிரிவின் சார்பாளர். இவருடைய “நியாய குஸிமாஞ்சலி” என்ற நூலைத்தான் ஆத்திகர்கள் ‘கடவுளை நிரூபிக்கத்’ துணையாகக் கொள்ளுகிறார்கள், அவருடைய வாதம் முழுவதையும் இங்கே தருவோம்.

“உலகில் யாருமே நாத்திகரில்லை. ஒவ்வொருவரும் தங்கள், தங்கள் வழியில் கடவுளை நம்புகிறார்கள்” என்று கூறி தம்முடைய வாதத்தை உதயணர் துவக்குகிறார். மேலும் அவர் எழுதுகிறார் :

“எல்லோராலும் வணங்கப்படும் பரம்பொருள், (வணங்கும் மனிதர்களின் வாழ்க்கைக் குறிக்கோள்கள் வேறுபட்ட போதிலும்) உபநிஷதங்கள் ஒன்றென அழைப்பதும், ‘முதல் அறிவன்’ என்று கபிலர் குறிப்பிடுவதும், கிலேசங்களால் பாதிக்கப்படாத ஒன்று என்று பதஞ்சலி வருணிப்பதும், சிவன் எனச் சைவர்கள் சொல்லுவதும், புருஷோத்தமன் என வைஷ்ணவர்கள் வணங்குவதும், சர்வ சக்தியுள்ளது எனப் பௌத்தர்கள் பணிவதும், நிர்வாணி என்று ஜைனரால் கருதப்படுவதும், சாருவாகர்கள் ‘லோக விவகார சித்தம்’ (உலக நிகழ்ச்சிகளின் மனம்), என்று கூறுவதும், ஜாதி, கோத்திரம், பரிவாரம் போன்ற உலக உண்மைகளைப் போல உண்மையானது. எனவே இப்பரம்பொருள் பற்றி ஆராய்ச்சி தேவையில்லை.”

ஆத்திகர்களால் பேரறிவாளர் என்று போற்றப்படும் உதயணரது புரட்டல், ஏமாற்று வித்தையை வாசகர்கள் அறிந்து கொள்வார்கள். இந்திய தத்துவவாதிகள் அனைவரும் கடவுளை ஏதாவது ஒரு வழியில் நம்புகிறார்கள். என்று காட்ட உதயணரது மாயாஜாலம் பயன்படுகிறது. கபிலர் என்பவர் சாங்கியத்தின் முதல்வர். இவரது சாங்கியம் பொருளே பிரதானம் என்று கூறுகிறது. பௌத்தர்கள், ஜைனர்கள், மீமாம்சகர், சாருவாகர்கள் அனைவரும் கடவுளை மறுக்கப் பல வாதங்களை உருவாக்கியவர்கள். புகழ்பெற்ற நாத்திகர்களை ஆத்திகர்களாக மாற்ற உதயணர் செய்திருக்கும் மோசடி வித்தையை நம்பின மூடர்களும் நடுக்காலத்தில் இருந்தார்கள். இக்கால ஆத்திகவாதிகள், ராதாகிருஷ்ணன் உள்பட இந்த சாமான்ய சாலத்தை நம்புகிறார்கள். ஆனால் தத்துவவாதிகளில் பலர் சாமான்ய சாலத்தின் தருக்கப் பிழையை விளக்கி கடவுளை மறுத்துள்ளார்கள்.

உதயணரின் நியாய குஸிமாஞ்சலி நூல்.

மிக முக்கியமான இந்திய தத்துவங்கள், மீமாம்சம், சாங்கியம், வேதாந்தம் (பிற்கால மீமாம்சம்), பௌத்தம் (எல்லாப் பிரிவுகளும்), ஜைனம் (எல்லாப் பிரிவுகளும்) சாருவாகம் (லோகாயதம்) ஆகியவை. பிற்காலப் பிரிவுகளான அத்வைதம், விசிஷ்டாத்துவைதம், மாத்வம், சைவ சித்தாந்தம், நியாய வைசேஷிக தத்துவப் போக்கையும், பிரம்மஸுத்ரத்திற்கு விளக்கவுரையாகவும், ஆகமங்களின் தொடர்ச்சியாகவும் எழுந்தது. பண்டைய இந்தியத் தத்துவங்கள் வேதச் சார்புடையவை, வேத எதிர்ப்புடையவை எனப் பிரிக்கப்படும். வேத சார்புடையவைக் கூட ஒப்புக்குத்தான் வேதங்களை ஒப்புக் கொள்கின்றன. முக்கியமான கடைப்பிடிகளில் அவை வேதத்தினின்றும் வேறுபடுகின்றன.

படிக்க :
ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !
கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ?

ஆயினும் கடவுள் என்ற பிரச்சினை – இவற்றுள் வேதாந்தமும், நியாய-வைசேஷிகமும் தான் தெளிவாகக் கடவுளை ஒப்புக் கொள்ளுகின்றன. பிற முக்கியமான இந்தியத் தத்துவங்கள் எல்லாம் கடவுளை மறுக்கின்றன. ஆறு சமயம் என்று உபசார வழக்காகக் கூறப்படும் ஆறு தத்துவங்களில் நான்கு, நாத்திகப் போக்குடையவை. இரண்டே இரண்டு தான் ஆத்திக நம்பிக்கையுடையவை. இவ்வாறு இருக்கும் பொழுது இந்திய தத்துவங்கள் எல்லாம் கடவுள் தத்துவத்தை அடிப்படையாக உடையவை என்று கூறுவது அறிந்தே பொய் சொல்லி ஏமாற்றுவதாகும்; சாமானிய சாலம் ஆகும்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !

1

ந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றிக்கொண்டிருக்கும் பாஜக அரசு, அரசமைப்பின் எல்லா பிரிவுகளையும் தன்னுடைய ஊதுகுழல்களாக மாற்றிவருகிறது. இராணுவத் தளபதி, தனது பதவிக்குரிய ‘மாண்பையும்’, அதிகார எல்லையையும் மீறி நடந்துவரும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசால் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆரிஃப் முகமதுகானும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான்.

அண்மையில் கேரள மாநிலத்தில் உள்ள, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த ‘இந்திய வரலாறு கூட்டமைப்பின்’ 80-வது நிகழ்வில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்று துறை பேராசிரியர் இர்பான் ஹபீப், எம்.பியும் பல்கலை சிண்டிகேட் உறுப்பினருமான பிஜு கண்டக்காய், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கே.கே. ராகேஷ் போன்றோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பிஜு கண்டக்காய், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடந்துவரும் போராட்டங்கள் குறித்து பேசினார். கே.கே. ராகேஷும் இதுகுறித்து பேசினார். ஆனால், இவர் ஆங்கிலத்தில் பேசியதால், உடனடியாக கவனம் பெற்ற ஆளுநர், ராகேஷின் பேச்சை குறிப்பெடுத்துக்கொண்டார்.

இந்திய வரலாற்று கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர். அமியா பாக்சி பேசி முடித்த பின்னர் ஆளுநர் பேசத்தொடங்கினார். முதலில் தனக்கு முன் பேசியவர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் ராகேஷுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுவதாக கூறினார்.

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசத் தொடங்கினார். அதற்கு கூட்டத்தில் இருந்த சில பங்கேற்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். இது குறித்து விவாதிக்க ஆளுநர் அழைத்தபோது, பதாகைகள் மூலம் இரு பெண்கள் அழைப்பை நிராகரிப்பதாக தெரிவித்தனர். ஜனநாயகப்படி போராடுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என ஆளுநர் சொன்னபோது, கேரள போலீசு அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பார்த்தது.

படிக்க :
வீதி தோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் !
♦ இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

அதோடு, ஜே.என்.யூ., அலிகர், டெல்லி, ஜாமியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பலர் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அலிகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த பேராசிரியர் ஒருவரையும் வெளியேற்ற முயற்சித்தது போலீசு.

இந்த நிலையில் ஆளுநர் தனது உரையில் மவுலானா ஆசாத் மேற்கோளை சுட்டிக்காட்டி பேசிய போது அரங்கில் எதிர்ப்பு குரல்கள் வலுவாக எழுந்தன.

“பிரிவினை சில அழுக்குகளை எடுத்துச் சென்றது. அதில் சில குழிகள் அப்படியே விடப்பட்டன. அதில் இப்போது தண்ணீர் சேகரமாகி, துர்நாற்றம் வீசுகிறது.” என்ற ஆளுநர், போராட்டக்காரர்களைப் பார்த்து “நீங்கள் துர்நாற்றம் வீசுகிறீர்கள். மவுலானா ஆசாத் உங்களுக்காகத்தான் இதைச் சொன்னார்” என்றார்.

மேடையில் தடுத்து நிறுத்தப்படும் வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப்.

அதுவரை ஆளுநரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் இர்பான் ஹபீப் எழுந்து நின்று,“மவுலானா ஆசாத் அல்லது காந்தியை விட நாதுராம் கோட்சேவை மேற்கோள் காட்டுங்கள்” எனக் கூறினார்.

ஆளுநர் மவுலானா ஆசாத்தை மேற்கோள் காட்டிய உடனேயே மேடையில் என்ன நடந்தது என்பதை அலிகார் வரலாறு மற்றும் தொல்லியல் சமூகம் தனது செய்திக்குறிப்பில் இப்படி கூறுகிறது:

“ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியவுடன், இந்திய வரலாற்று கூட்டமைப்பின் தலைவராக உள்ள பேராசிரியர் இர்பான் ஹபீப் தனது இருக்கையில் இருந்து எழுந்து கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரனிடம் சென்று, ‘வரலாற்று கூட்டமைப்பின் அரங்கத்தை ஆளுநர் தனது அரசியல் அரங்கமாக மாற்றுவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்’. பேராசிரியர் ஹபீப் அங்கு சென்றவுடன், கூடுதல் துணை ஆட்சியரும் ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியும் அவரைத் தள்ளி அவரைத் தடுக்க முயன்றனர். ஆளுநரும் தான் பேசுவதை ஹபீப் தடுக்க முயன்றதாக குற்றம் சாட்டத் தொடங்கினார்.”

உலகளவில் புகழ்பெற்ற மூத்த வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீபை மரியாதைக்குறைவான முறையில் பாதுகாப்பு அதிகாரிகள் கையாண்ட நிலையில், தன் பேச்சை ஹபீப் தடுக்க முயன்றதாக தனது ட்விட்டர் மூலம் பரப்பத் தொடங்கினார் கேரள ஆளுநர்.

அப்போது மேடையில் இருந்த கந்தக்காய், “பேராசிரியர் ஹபீப் ஆளுநர் உரை நிகழ்த்துவதை தடுக்கவில்லை; உடல் ரீதியாகவும் தடுக்கவில்லை, ஆனால் அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்” என கூறுகிறார்.

ஆளுநரேகூட உரையை குறுக்கிட்டார் என்றுதான் கூறினார். ஆனால், வட இந்திய ஊடகங்கள் ஹபீப், ஆளுநருக்கு சவால் விடுத்ததாக இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டன.

பின்னர் ஊடகங்களிடம் நடந்ததை தெளிவுபடுத்திய வரலாற்றாசிரியர், “ஆரிஃப் முகமது கான் சொல்வதைப் பொருட்படுத்தவில்லை. அலிகரில் இருந்த நாட்களில் இருந்தே நான் அவரை அறிந்திருக்கிறேன். ஆனால், காவல்துறையின் நடவடிக்கைதான் எனக்கு கவலையளிக்கிறது, அதுவும் ஒரு கம்யூனிச அரசாங்கத்தின் கீழ் இப்படியா..” என்று அவர் கூறினார். மேலும், எதிர்ப்பாளர்கள் அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டு பேசினார் அவர்.

நாடே பாசிசமயமாகிவரும் நிலையில், கம்யூனிஸ்ட் அரசாங்கம் என சொல்லிக் கொண்டாலும் அதன் கீழ் இயங்கும் போலீசும்கூட காவி அரசுக்கு கட்டுப்பட்டதே. ஆளுநர் முசுலீம் பெயரில் உள்ள ஒரு காவி என்பதும் அவர் நியமனத்தின்போதே தெரியவந்த விசயம். கர்நாடகத்தில் வீதிக்கு வந்து போராடிய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவை மிக மோசமாக நடத்தியது கர்நாடக போலீசு.

இப்போது மதிப்பிற்குரிய வரலாற்றாசிரியரான இர்பான் ஹபீப் மோசமாக நடத்தப்பட்டுள்ளார். இந்திய வரலாற்றில் மிக மோசமான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.


கலைமதி
செய்தி ஆதாரம் :  தி வயர். 

குடியுரிமை சட்டம் : புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

  • NRC – CAA – NRP-க்கு எதிரான நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல் ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் கைது !
  • கைது செய்யப்பட்ட தோழர் செழியன் அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் !

ன்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்.-க்கு எதிராக வீடுகளில் கோலமிடவேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிராக புத்தாண்டு தினத்தில் இந்தியா முழுவதும் மக்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

போலிசால் கைது செய்யப்பட்ட தோழர் செழியன்.

இந்நிலையில் திருச்சியில் மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில்; என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்-க்கு எதிரான நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல் ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் இன்று காலை 10 மணிக்கு அவரது வீட்டில் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த புத்தாண்டு கொண்டாட்டம் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிரான எரிமலையாகவே இருக்கும். அடக்குமுறைகளால் போராட்டங்களை தடுக்க முடியாது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

பின்குறிப்பு: புதுப்பிக்கப்பட்ட நேரம் காலை 6 மணி, 1.1.20

பொது அமைதியை கெடுத்தது CAA – NRC – NPR போன்றவையா?
மக்கள் அதிகாரம் அமைப்பா?

CAA – NRC – NPR க்கு எதிராக புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததற்காக கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் விடுவிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தோழர் செழியனை பல இடங்களில் அலைக்கழித்து கண்டோன்மெண்ட் போலீசு நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவரிடம் சொந்த ஊர், மனைவி பேர், மாமனார் பெயர் என்றெல்லாம் விசாரித்து விட்டு கிரிமினல் போல விசாரிக்க வேண்டிய நிலைவரும் என்று கண்டோன்மெண்ட் ஏ.சி மிரட்டியுள்ளார்.

டாஸ்மாக் சரக்கை சைடில் விற்பவர்களுக்கும் மணற்கொள்ளையர்களுக்கும் ஆதரவாக இருக்கும் போலீசு, மக்களை பிளக்காதே என்பவர்களை கிரிமினல் போல டீல் செய்யுமாம்.

போலீசின் அச்சுறுதல்களுக்கு உறுதியாக எதிர்வினையாற்றிய செழியன் இன்று மாலை 4.30 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடன் வேண்டுமென்றே நிந்தித்தல், பொது அழிம்புக்கு ஏதுவாகிற உரைகள் ஆகிய குற்றங்கள் செய்ததாக கூறி 504, 505(i)(ii)(iii) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்

ங்கிலம், ஜெர்மன், இத்தாலியம், பிரெஞ்சு, ஸ்பானியம், போர்ச்சுகீசியம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள மார்செல்லோ முஸ்ட்டோ (1972-இல் இத்தாலியில் பிறந்தவர்), தற்போது கனடாவின் டொரோன்டோ நகரிலுள்ள யோர்க் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் தத்துவம் கற்பித்து வருகிறார். கார்ல் மார்க்ஸின் சிந்தனையையும் அதன் இன்றைய பொருத்தப்பாட்டையும் மையப்படுத்தி எழுதிவரும் அவரது நூல்களும், கட்டுரைகளும், நேர்காணல்களும் உலகம் முழுவதிலும் இதுவரை 20 மொழிகளில் வெளிவந்துள்ளன.

The Last marx (1881-1883) : An Intellecutal Biography என்னும் அவரது நூல் 2016-இல் முதன் முதலில் இத்தாலிய மொழியில் வெளியிடப் பட்டு, அண்மையில் மூன்றாவது பதிப்பைக் கண்டுள்ளது. மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளையொட்டி தமிழ், சீன, ஜப்பானிய, கொரிய, ஜெர்மன், போர்ச்சுகீசிய மொழிகளில் வெளிவரும் இந்த நூல், சற்று விரிவுபடுத்தப்பட்ட வடிவத்தில் அடுத்த சில மாதங்களில் ஆங்கில, பிரெஞ்சு மொழிகளிலும் வெளியிடப்படும். (நூலாசிரியர் பற்றிய குறிப்பிலிருந்து …)

2008-இல் முதலாளியம் மிக அண்மைய நெருக்கடியைச் சந்தித்ததிலிருந்து, கார்ல் மார்க்ஸ் புதுப் பொலிவுடன் திரும்பி வந்துள்ளார். பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதற்குப் பிறகு இடைவிடாமல் பறக்கணிக்கப்பட்டு வந்தார். அந்தத் தகர்வுக்குப் பிறகு சொல்லப் பட்டு வந்த ஆரூடங்களுக்கு நேர்மாறாக, மார்க்ஸின் கருத்துகள் மீண்டும் பகுப்பாய்வுக்கும் வளர்த்தெடுத்தலுக்கும் விவாதத்துக்குமான பொருளாகியுள்ளது. ‘நடைமுறையில் நிலவிக் கொண்டிருக்கின்ற சோசலிசத்துடன் அடிக்கடித் தவறாக அடையாளப்படுத்தப்பட்டு வந்தவரும் 1989-க்குப் பிறகு உதறியெறியப்பட்டவருமான ஒரு சிந்தனையாளரைப் பற்றிப் பலரும் புதிய கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

பரந்து விரிந்த வாசகர்களைக் கொண்டுள்ள செல்வாக்கு மிக்க செய்திப் பத்திரிகைகளும் ஏடுகளும் இக்காலத்துக்கு மிகவும் பொருத்தப்பாடுடைய, தொலை நோக்குடைய கோட்பாட்டாளர் என்று அவரைச் சித்திரித்துள்ளன. கிட்டத்தட்ட உலகின் எல்லா இடங்களிலுமே அவர் இப்போது பல்கலைக்கழகப் பாடங்களில் கற்பிக்கப்படுகிறார்; சர்வதேச மாநாடுகளில் விவாதிக்கப்படுகிறார்; மறு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ள அல்லது புதிய பதிப்புகளில் கொண்டு வரப் பட்டுள்ள அவரது எழுத்துகள் புத்தக விற்பனை நிலைய அலமாரிகளில் மீண்டும் காட்சியளிக்கின்றன; அவரது படைப்புகளைப் பற்றிய ஆய்வு, இருபது அல்லது அதற்கும் கூடுதலான ஆண்டுகளாகப் புறக்கணிக்கப் பட்டு வந்த நிலை மாறி, இப்போது அது மிகப் பெருமளவுக்கு வலுப் பெற்று வருவதுடன், பிற ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைகின்ற முக்கியமான விளைவுகளைச் சில சமயம் உருவாக்கி வருகின்றது.

… மாறிய அரசியல் நிலைமைகளோடு சேர்ந்து ஆராய்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் மார்க்ஸின் சிந்தனையைப் பற்றிய விளக்கம் புதுப்பிக்கப்பட்டு வருவது தவிர்க்க முடியாதபடி தொடர்ந்து நீடிக்கத்தான் செய்யும். மார்க்ஸின் சிந்தனை மீதான இந்த அக்கறை அவரின் கடைசிக் காலத்தில் கோட்பாடுகள் தொடர்பாக அவர் மேற்கொண்ட விளக்கங்கள், விரிவாக்கங்கள் ஆகியன மீது குவியும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

மார்க்ஸின் அறிவு வளர்ச்சி பற்றிய ஆய்வாக எழுதப்பட்டுள்ள இந்த நூலை அடுத்தும் இதனை முழுமைப்படுத்தும் விதமாகவும் மார்க்ஸின் சிந்தனையைப் பற்றிய கோட்பாட்டு ஆய்வைப் பிரத்யேகமாகச் செய்யும் நூலொன்றும் வெளிவரவுள்ளது.

மார்க்ஸின் கடைசி ஆண்டுகளில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் ஓய்ந்து விட்டது என்றும், அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்றும் சொல்லும் கட்டுக்கதையை அந்த ஆண்டுகளில் அவர் எழுதிய கையெழுத்துப்படிகள் தகர்த்தெறிகின்றன. உண்மையில், அவர் தொடர்ந்து தமது ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்ததுடன் அதனை புதிய அறிவுத் துறைகளுக்கும் விரிவுபடுத்தியிருந்தார்.

மானுடவியலில் கிடைக்கப்பெற்ற புதிய கண்டு பிடிப்புகள், முதலாளியத்துக்கு முந்திய சமுதாயங்களில் இருந்த கூட்டு உடைமை வடிவங்கள், ரஷியாவில் பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகு அங்கு ஏற்பட்ட மாற்றங்கள், நவீன அரசின் பிறப்பு ஆகியன பற்றிய ஆழமான ஆய்வினை 1881, 1882 -ம் ஆண்டுகளில் மார்க்ஸ் செய்தார். அயர்லாந்து விடுதலைப் போராட்டத்துக்கான அவரது உறுதியான ஆதரவு, இந்தியா, எகிப்து, அல்ஜீரியா ஆகியவற்றில் இருந்த காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் காட்டிய உறுதியான எதிர்ப்பு ஆகியவற்றை அவரது கடிதங்களிலிருந்து அறிய முடிவதுடன் சர்வதேச அரசியலில் ஏற்பட்டு வந்த முக்கிய நிகழ்வுகளை அவர் உன்னிப்பாக அவதானித்து வந்தார் என்பதும் தெரிய வருகிறது. ஐரோப்பிய வரலாற்றுப் போக்குகளை மையப்படுத்தி மட்டும் அவர் பார்த்தார் என்றோ, பொருளாதார அடித்தளம்தான் அனைத்தையும் நிர்ணயிக்கிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார் என்றோ, வர்க்கப் போராட்டம் என்பதைக் குறித்து மட்டுமே அக்கறை கொண்டிருந்தார் என்றோ கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது கண்கூடு.

புதிய அரசியல் முரண்பாடுகள், புதிய விஷயங்கள், புதிய புவிப் பிரதேசங்கள் ஆகியன பற்றிய ஆய்வு முதலாளிய அமைப்பைப் பற்றி தாம் தொடர்ந்து மேற்கொண்டு வந்த விமர்சனப் பகுப்பாய்வுக்கு அடிப்படையானது என்று மார்க்ஸ் கருதினார். இது பல்வேறு நாடுகளிலும் அவற்றுக்கே உரிய தனித்தன்மையைப் பார்க்கவும், சோசலிசத்தை அடைவது பற்றி அவர் முன்பு வளர்த்தெடுத்திருந்த அணுகுமுறையிலிருந்து வேறுபட்ட அணுகுமுறைக்கான சாத்தியப் பாட்டைப் பரிசீலிக்கவும் உதவியது. (நூலிலிருந்து பக்.7-9)

தமது படைப்புகளில் மார்க்ஸ், உலகமனைத்திற்கும் பொருந்தக் கூடியது என்று சோசலிச சமுதாய முன்மாதிரி எதனையும் ஆலோசனை பார்க்க கூறக்கூடிய விதிமுறைகளைச் சொல்வதை எச்சரிக்கையுடன்  தவிர்த்தார். அவை பயனற்றவை என்றும், விரும்பக்கூடிய விளைவுக்கு நேர் எதிரானதை உருவாக்குபவை என்றும் கருதினார். அதனால்தான் மூலதனம் நூலின் இரண்டாவது ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய பின்னுரையில் ‘வருங்கால உணவகங்களுக்கு சமையல் குறிப்புகள் எழுதிவைப்பது தமது அக்கறைகளிலொன்றல்ல என்று கூறினார்.  ஜெர்மன் பொருளாதாரவாதி அடோல்ஃப் வேக்னர் (Adolph Wagner [1835-1917]) செய்த விமர்சனங்களுக்குப் பதில் கூறும் முகமாக ஆணித்தரமாகக் கூறினார்:  ‘சோசலிச அமைப்பு எதனையும் நான் ஒருபோதும் நிறுவியதில்லை ‘.

படிக்க :
மூலதனம் நூலின் அனைத்து பாகங்களும் – PDF வடிவில் !
CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !

சோசலிசம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லும் விருப்பத்தை அவர் ஒரு போதும் கொண்டிருக்காதது போலவே, முதலாளிய சமுதாயங்களைப் பற்றிய தமது சிந்தனை களில், மனித குலம் உலகின் எல்லா இடங்களிலும் ஒரே பாதையில்தான், ஒரேமாதிரியான வளர்ச்சிக் கட்டங்களூடேதான் சென்றாக வேண்டும் என்று அவர் அறுதியிட்டதும் இல்லை . இருப்பினும் அவர் தாம் கூறியதாகச் சொல்லப்பட்ட ஒரு கருத்துரையை எதிர்கொள்ள வேண்டியவரானார். அதாவது எல்லா இடங்களிலும் பூர்ஷ்வா பொருளுற்பத்தி முறை வரலாற்றுரீதியாகத் தவிர்க்கமுடியாதது ஆகும் என்னும் கருத்துரைதான் அது. ரஷியாவில் எதிர்காலத்தில் முதலாளியம் வளர்ச்சியடைவதற்கான சாத்தியப்பாடு பற்றிய விவாதம் மார்க்ஸின் நிலைப்பாட்டுக்கான தெளிவான சான்றை வழங்குகிறது. (நூலிலிருந்து பக்.103)

நூல் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-1883)
ஆசிரியர் : மார்செல்லோ முஸ்ட்டோ
தமிழில் : எஸ்.வி.ராஜதுரை

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 238
விலை: ரூ 210.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam | ncbh publisher | periyar books

வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை

வாகனங்களில் சுங்கச் சாவடிகளைக் கடப்பவர்கள் எல்லோரும், திடீரென யாரோ தங்களை உலுக்கியதைப் போல் ஒரு விழிப்புணர்வு நிலைக்கு உள்ளாவார்கள். தெருக்களில் கூவி விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப் போல் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் சிறு வியாபாரிகளின் ஓயாத குரல்கள் காதைத் துளைக்கும்.

பொருட்களைப் பார்த்தாலே போதும், அது பயணிகளின் மடியில் வந்து விழும். அது வேண்டும் என்று கேட்க வேண்டியதில்லை, மல்லுகட்டி பேரம் பேசவேண்டியதில்லை. அவித்த வேர்க்கடலை, பிஞ்சு வெள்ளரி, காரம், சிப்ஸ், நொறுக்குத் தீனிகள்; வெயிலுக்கு மோர், தர்ப்பூசணி…. அந்த லிஸ்டில் இப்போது பலவண்ணக் குடைகள். ரூபாய் 100, 150, 200 என்று அளவுக்கேற்ற விலைகள்.

சுங்கச்சாவடியை நாம் கடக்கும்போது, “சார் குடை வேணுமா? எடுத்துக்குங்கோ. பேபி குடை, பேமிலி குடை, லேடீஸ் குடை, தாத்தா குடை…. விதவிதமான கலர் சார். 3D கலர், ரெயின்போ கலர், செக்டு, பிளைன் சார்” என்று பின்னாலேயே ஓடிவந்தார்கள், வடநாட்டு இளம் தொழிலாளர்கள்.

திரும்பிப் பார்த்தால், நாலாபுறமும் குடைகளால் மூடியது போல் வடநாட்டு இளைஞர்கள். நிற்கும் எல்லா வாகனங்களையும் நோக்கி குடையுடன் ஓடிக்கொண்டிருந்தார்கள். அதில் இளம் பெண் தொழிலாளர்களும் உண்டு. அவர்களை அணுகி, அவர்கள் வாழ்க்கையைப் பற்றி வேறு வேறு கேள்விகளைக் கேட்டாலும் அதில் அவர்களுக்கு அக்கறையில்லை. குடையைப் பற்றி 10 வார்த்தைகள் மட்டும் உள்ளீடு செய்வது போல் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

படிக்க:
♦ சிலியின் வசந்தம் !
♦ ஜனவரி 8 – 2020 வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !

இந்த மொத்த வியாபாரக் காட்சிக்கும் உயிர், அதிகம் போனால் 3 நிமிடம் மட்டுமே. அடுத்தடுத்து பயணிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். சுங்கச்சாவடியில் டிராஃபிக் கிளியராகி வண்டிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். அதற்குள் வியாபாரம் முடித்து பண்ட பரிவர்த்தனை நடக்க வேண்டும். பணம் இவர்கள் கைக்கு, குடை அவர்கள் கைக்கு.

வியாபாரத்தை வெற்றிகரமாக முடிப்பது, சாலை விபத்தில் தப்பிப்பது மாதிரிதான். அது ஒரு மேஜிக்.

இவர்களை விட்டு விலகி அங்கேயே சாலையோரத்தில் குடைகளைச் சாத்தி வைத்துவிட்டு உட்கார்ந்தபடி வியாபாரம் செய்த தொழிலாளர்களை அனுகினோம்.

அய்லு, தெலுங்கு

சொந்த ஊரு ரேணிகுண்டா. இப்போ மெட்ராஸ் பெரம்பூர்லதான் தங்கியிருக்கேன். சாப்பாடு எல்லாம் இங்கேதான், பொட்டலம் சோறு. வீட்டுல செஞ்சி எடுத்துவர நேரமில்லை. கார்ல போரவங்க வர்றவங்க சில பேரு இந்த குடையை வாங்குவாங்க. இதுல செலவுக்கு 300 கெடச்சா போதும். சரக்கெல்லாம் பேரிசுக்கு போயி வாங்குவோம். மழை, வெயிலுன்னா இங்கேயே ஓரமா ஒதுங்கிக்குவோம். பசங்களும் அந்த டோல்கேட்டுல வியாபாரம் செய்யிது என்றார்.

அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, குடை விலையை விசாரித்தார், ஐயப்பன் மாலை போட்ட கேப் டிரைவர்.

300, 200 என்று விலையைச் சொல்ல அவர் தடலடியாக 75 ரூபாய் வருமா? 80 ரூபாய் வருமா? என்றார். என்ன கேட்கிறே சார்? என்று அய்லு அவரை பரிதாபமாகப் பார்க்க, விலை கேட்ட டிரைவரை நாம் கோபமாக, இப்படியா விலை கேட்பது என்றோம்.

அதற்கு அவர் ரெடிமேட் பதிலை தந்தார். அப்படி கேட்டாத்தான் 150 ரூபாய்க்கு கொடுப்பாங்க. கொஞ்சம் அசந்தாலும் நம்மல ஏமாத்திடுவாங்க என்று கூறியபடி நகர்ந்தார்.

***

ராஜி, ஆட்டோ டிரைவர்.

உடம்பு முடியாதபோது சீசன் வியாபாரம் இப்படி உட்கார்ந்தது மாதிரி செய்வேன். இப்போ குடை போட்டிருக்கேன். சுமாரா போகுது. சரியா போகலன்னா அத ஓரங்கட்டிட்டு ஆட்டோ ஓட்ட ஆரம்பிப்பேன். இதுக்கு முன்னே கார் டஸ்டர், மொபைல் ஸ்டேண்ட் போட்டு வித்தேன். அது கொஞ்சம் போச்சு.

காலத்துக்கு ஏத்த பிசினஸ் ஏதாவது பன்னணும். ஒரே தொழில் பண்ணினா பொழக்க முடியாது. எது போட்டாலும் பளிச் பளிச்சுனு பார்த்து வாங்கிப் போடுவேன். வாங்குறவங்களுக்கும் சரக்க உடனே புடிக்கணும். அப்பத்தான் போட்டியில நிக்க முடியும்.

படிக்க:
♦ உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?
♦ அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை

***

நாராயணன்

இளம் வயது, நொடிந்த தேகம். வாய்முழுக்க பான்பராக். மஞ்சள் காமாலை நோய் கண்டது போல் கண்கள். அரைமயக்கப் பார்வை. முதுகிலிருக்கும் பைதான் அவரது நடமாடும் கடை.

குழந்தைகள் விளையாடும் அட்டை வீடு, விளையாட்டு மேஜிக் போர்டுகள் என்று பல பொருட்களை வைத்திருந்தார். ஒன்று 50 ரூபாய். ஓடி ஓடி கார் கண்ணாடிகளில் காண்பித்து, ஃபிப்டி என்று கையால் சைகை காண்பிக்கிறார். ஒரு சிலர் கண்ணாடியை இறக்கி நோட்டமிடுகின்றனர். சிலர் வாங்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்தவாறே போய்விடுகின்றனர். நாங்கள் பார்த்தவரை யாரும் வாங்கவில்லை. கவலையுடன் சோர்ந்திருந்த நாராயணனிடம் பேச்சு கொடுத்தோம்.

குழந்தைகள் விளையாடும் அட்டை வீடு.

“எனக்கு ஆந்திரா. சின்ன வயசிலேயே தமிழ்நாட்டுக்கு வந்தோம். எங்க அப்பா குடை, பிளாஸ்டிக் வாலி ரிப்பேர் செய்வாரு. இப்ப இல்ல. எங்க ஃபேம்லில எல்லோரும் ஹான்டிகேப்டு. என் பொஞ்சாதிக்கு 2 காலிலும் பாதமில்லை, வெறும் குதிகால்தான். இழுத்திழுத்து நடக்கும். பொறந்த 2 பசங்களும் வளர்ச்சியில்லாம சூம்பி போய்ட்டாங்க. நிமிர்ந்து நடக்க மாட்டாங்க. நாங்க இடுப்புல வச்சிதான் தூக்கிகிட்டு போவணும். ஆஸ்பத்திரியில எல்லோருக்கும் ஹேன்டிகேப்டுன்னு சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. அத வச்சி ஏதாவது வேல கெடைக்குமான்னு அலைஞ்சோம். எந்த உதவியும் யாரும் பண்ணல. எங்க கவுன்சிலரும் எதுவும் செய்யல. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம். எனக்கு உடம்பு முடியல, கவல. அதான் அடிக்கடி பான்பராக் போடுவேன். அத உட முடியல. சோறு இல்லாமலே இப்படி நெறைய நாளு நிப்பேன். பசங்களுக்கு ஏதாவது வாங்கி போகணுமுன்னு ஆசையா இருக்கும், பணம் இருக்காது.

தினமும் 400 ரூபா கெடச்சா போதும், என் செலவுக்கு 100, வீட்டுக்கு 300ன்னு கொடுக்கலாம். காலையிலேர்ந்து 50 ரூபாய்க்கு ஒரு பீசுதான் வித்துச்சு. இங்கே வியாபாரம் இல்ல, அந்தப் பக்கம் போயி பார்க்கலாம்” என்று மெதுவாக விலகிப் போனார்.

நாராயணன் வாழ்க்கை நெடுகத் தொடரும் ஏழ்மையின் வலி நம் நெஞ்சையும் கனமாக்கியது.

***

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்