Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 330

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு ! மக்கள் அதிகாரம்


PP Letter headபத்திரிகை செய்தி

காவிரி நீர் கடைமடையில் பாயாமல் கொள்ளிடம் ஆறு மூலம் கடலில் கலப்பதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை.

டந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணை ஜூன்-12 ல் திறக்காததால் காவிரி டெல்டாவில் குறுவை பருவம் பொய்த்து போய்விட்டது. கனமழையால் கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணையில் 70 அடி இருக்கும் போதே தமிழக அரசு நீரை திறந்து விட்டிருந்தால் குறுவை சாகுபடி செய்தும், கடலில் வீணாவதை தடுத்தும் இருக்க முடியும்.

இந்த ஆண்டும் 35,000 கனஅடிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து வீணாக கடலில் கலந்து வருகிறது. காவிரியின் கிளை ஆறுகளில் பாசனத்திற்கு நீரை திறந்திருந்தால் காய்ந்து கிடக்கும் கடைமடை பகுதி வரை பாய்ந்து ஏரி, குளம் நிரம்பி விவசாயம் செழித்து இருக்கும். மக்களுக்கு வேலைவாய்ப்பும், குடிநீர்- நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். கடந்தாண்டு உடைந்த மேலணை இதுவரை கட்டப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போதே கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு என்ற கிராமம் அருகே கதவணை கட்ட 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் இதுவரை கட்டப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் சந்தப்படுகையில் சென்ற ஆண்டு தடுப்பணை கட்ட 110 கோடி ரூபாயில் அடிக்கல் நாட்டப்பட்ட அணையும் கட்டப்படவில்லை. இதனால் காவிரியின் உபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது.

காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், நிலக்கரி எடுக்கும் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் வளமான காவிரி டெல்டாவை அழிப்பதற்கு மத்திய அரசு மற்றும் வேதாந்தாவுடன், தமிழக அரசும் கூட்டு சேர்ந்து இந்த துரோகத்தை செய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நீர் திறப்பதற்கு முன்பே பழுது பார்ப்பது, தூர்வார்தல், பாலம் கட்டுவதை செய்யாமல் தண்ணீர் திறந்துவிட்ட பின்பு செய்வதால் குறைந்தபட்ச தண்ணீர் கூட கடைமடைக்கு வராமல் தடுக்கின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு துரோகம் செய்யும் எடப்பாடி அரசையும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

♦ கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்டு!
♦ காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி!
♦ கடைமடை வரை நீரை உடனே பாய விடு!
♦ விவசாயத்திற்கான அனைத்து ஈடு பொருட்களையும் போர்க்கால அடிப்படையில் உடனே வழங்கு!

மக்கள் அதிகாரம்

***

காவிரி நீர் கடைமடைப்பகுதி வரை சென்று சேராததற்கு காரணமாக அமைந்துள்ள அரசின் அலட்சியம் – பொதுப்பணித்துறையில் நடைபெற்றுவரும் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும், மிக முக்கியமாக டெல்டா பகுதியை கார்ப்பரேட் கொள்ளைக்கான வேட்டைக்காடாக மாற்ற முயலும் அரசின் சதியை அம்பலப்படுத்தும் வகையிலும் கடந்த செப்-17 அன்று சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காயும் கடைமடை விவசாயத்திற்கு தண்ணீர் விடாததை கண்டித்தும்!
திருவாலி – பெருந்தோட்டம் ஏரிகளை நிரப்பக்கோரியும்!
பாசன அமைப்புகளை சீர் செய்யாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும்- பொதுப்பணித்துறையை கண்டித்தும்!
கொள்ளிடத்தில் வீணாக வடியும் தண்ணீரை சேமித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடியாக தடுப்பணை கட்ட கோரியும்!
2018-2019 பயிர்காப்பிட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும்!

கடைமடை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். கட்சிகளைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்தன.

தோழர் அ.சீனிவாசன், நாகை மாவட்ட செயலாளர், சி.பி.ஐ.

”பொதுப்பணித்துறை என்பது பொறுப்பான துறை தான். தற்போது பொறுப்பாக தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் பங்கு பிரித்து  கொடுப்பது என்பதில் மிகவும் சிறப்பாக தான் செய்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக நகரத்தில் தான் தண்ணீர் பிரச்சனை அதிகமாக இருக்கின்றது என்று நினைத்திருந்தோம். ஆனால், கிராமங்களிலும் பல கிலோமீட்டர் தூரம் சென்று தான் நல்ல தண்ணீர் கொண்டு வரும் நிலை சீர்காழி வட்டாரங்களில் உள்ளது. இன்று ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்தினால் காவிரி டெல்டா பாலைவனமாகும் அபாயம் உள்ளது. இப்பெரும்பிரச்சனையை பற்றிப் பேசாமல் இந்தியா முழுவதும் இந்தியை திணிக்கின்ற வேலையில் இறங்கியிருக்கின்றது மத்திய அரசு. குளு குளு அறையில் உட்கார்ந்துக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு ஏழை, எளிய மக்களின் பிரச்சனைகள் எப்படித் தெரியும். தமிழக அரசு பல ஆண்டுகளாக மழை பெய்யும் போதே காவிரி தண்ணீரை திறந்து விடும். ஆனால், அது மழைநீரா? இல்லை காவிரி நீரா? எனத் தெரியாது. இந்தாண்டு நான் காவிரி நீரை ஏ- பிரிவு வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்காலில் மட்டும் பார்த்தேன். மற்ற வாய்க்காலில் எங்கும் பார்க்க முடியவில்லை. பார்த்த நீரை கூட எங்களால் அனுபவிக்க முடியவில்லை. சீர்காழி பகுதிக்குட்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்கள் அதிகாரம் அமைப்புடன் சேர்ந்து செய்வோம். எங்கள் மாநில செயலாளர் 10 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என அரசுக்கு நல்ல ஆலோசனை கூறியிருக்கிறார். தற்போது இருக்கும் அரசாங்கம் இதைச் செய்யாது.”

தோழர் த. ரவி, வட்டார ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், சீர்காழி.

”பொதுப்பணித்துறையில் நிறைய அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களின் வேலை குடிக்கத் தண்ணீர் கொடுக்கனும், விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்கனும், வாய்க்காலை தூர்வாரனும், தடுப்பணை கட்டனும் இதுதான் அவர்களின் வேலை. ஆனால், தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கியும் ஏன் இவ்வளவு நாள் தடுப்பனை கட்டவில்லை என அரசிடம் கேட்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தகுதியில்லையா? அறிவில்லையா? வெட்டிய வாய்க்காலில் ஏன் தண்ணீர் வரவில்லை என அதிகாரி பார்க்கனுமா? பார்க்கக் கூடாதா? இப்படி எந்த வேலைகளையும் எதையும் செய்வது இல்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முக்கியமான நோக்கம் பங்கு போட்டுக் கொள்ளையடிப்பது தான். ஒரு வேலையை வருங்கால தேவைக்காக முன் கூட்டியே திட்டமிட்டு செய்வதற்கு தான் பொதுப்பணித்துறை. இன்று தண்ணீர் வந்த பிறகு அறைகுறையாக தூர்வாரி கணக்கைக் காட்டி கொள்ளையடித்து விடுகிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து பொதுப்பணித்துறை சட்டையை என்றைக்கு பிடித்து கேள்வி கேட்கிறோமோ அன்று தான் குடிக்கத் தண்ணீர் கிடைக்கும், விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கும், சாப்பிட உணவு கிடைக்கும்”

தோழர் வீரராஜ், ஒன்றிய செயலாளர். த.வி.ச.

”பொதுப்பணித்துறை தண்ணீர் திறந்து விட்டதாக கூறியிருக்கிறது. ஆனால், எந்த வயலிலும் தண்ணீர் இல்லை. ஏ- பிரிவு வாய்க்காலில் மட்டும் தான் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். மக்களிடம் பொய்க் கூறி மக்களை நம்ப வைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கூறுவதற்கு கூட போலிசே தடுக்கின்றது. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான இடத்தையே ஒதுக்கித் தரவில்லை. நாங்களே ஆர்ப்பாட்டத்திற்கு இடம் ஏற்பாடு செய்து கொண்டு நடத்தும் அவல நிலைதான் இன்று இருந்தது. இது போல நடைமுறையை மீண்டும் கடைபிடித்தால் போலிசைக் கண்டித்துத்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியிருக்கும்.”

படிக்க:
கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE

மேலும், தோழர் ப.வ. பெரியார் செல்வம், மாவட்ட செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்; தோழர் சி.வி.ஆர். ஜீவானந்தம் மாவட்ட செயற்குழு, சி.பி.ஐ.எம்; தோழர் கி. வரதராசன், ஒன்றிய வி.ச. செயலாளர், சி.பி.ஐ., மற்றும் தோழர் எஸ். மேகலா, மாவட்ட செயலாளர், அனைத்திந்திய மாதர் சங்கம், நாகை மாவட்டம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, தோழர் செல்லப்பன் நன்றியுறை கூறினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.

இசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 01

பள்ளி நாளின் முழு இசைக் குறியீடு (122-வது நாள்) இசையும் ஆசிரியரியலும்

ன்றாடம் காலை நான் பள்ளிக்குச் செல்லும்போது புதிய பள்ளி நாளுக்கான திட்டத்தை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். முதல் நாள் இரவு இதை நான் தயாரிப்பேன். முந்தைய நாட்களை நன்கு சீர்தூக்கிப் பார்த்து விட்டு, பின் எனது சின்னஞ்சிறு மாணவர்களின் அடுத்த தினத்தை எனக்கே உரித்தான போதனை நயங்களுடன் நான் கற்பனையில் பார்ப்பேன். ஒவ்வொரு பள்ளி நாளையும் பற்றிய இந்த சிம்பனி இசை என் காதுகளில் இனிமையாக ஒலிக்கிறது. நாள் பூராவும் நான் குழந்தைகளுடன் எப்படிக் கலந்து பழகப் போகிறேன் என்பதும் அவர்களுடைய பள்ளி வாழ்வின் காட்சிகளும் என் மனக் கண்ணில் நிழலாடுகின்றன.

இதற்கெல்லாம் என்னை நானே தயார்படுத்திக் கொள்ளும்போது நான் மிகவும் ஒன்றிப் போவதால், யதார்த்தத்தில் இவற்றைச் சந்திக்கும் போது ஏதோ நன்கு பழக்கமானவற்றைச் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படுவதால் உறுதியோடு செயல்படுகிறேன். இந்த யதார்த்தத்தை எனது ஆசிரியரியல் எண்ணங்களைச் செயல்படுத்தும் களமாக நான் கருதுவதால் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, உற்சாகமாகக் கலந்து பழகுகிறேன். இந்த யதார்த்தம் மானுட மனதை மேம்படுத்தப் போவதாக நான் கருதுவதால் முழுப் பொறுப்புணர்வோடு செயல்படுகிறேன்.

அடுத்த பள்ளி நாளைத் திட்டமிடுகையில் பார்க்கும் போது, என் வகுப்புக் குழந்தைகள் பெரியவர்களாகும் நிகழ்ச்சிப் போக்கை, அறிவையும் ஒழுக்க அடிப்படைகளையும் கற்கும் பொருட்டு இவர்கள் முன்னோக்கி நடைபோடுவதை என் மனக் கண்ணில் காண விரும்புகிறேன். எனது போதனை முறையை நாளைய தினத்தின் ஊடாகப் பார்த்து, இதைப் புதுப்பிக்கவும் அதன் மூலம் என்னை நானே புதுப்பித்துக் கொள்ளவும், கடந்த காலத்திலிருந்து அல்லாமல் எதிர்காலத்திலிருந்து என் வகுப்பறையில் நுழையவும் நான் விரும்புகிறேன். நான் அடிக்கடி ஆசிரியரை எதிர்கால மனிதனாகத் தான் பார்க்கிறேன்.

தன்னால் எவற்றையெல்லாம் இனி அடைய முடியாதோ அவற்றை நோக்கி தன் மாணவர்களைத் தள்ளுபவர் உண்மையான நவீன ஆசிரியர் அல்ல. தன் மாணவர்களை ஊக்குவித்து எதிர்காலத்திற்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக, எதிர்கால இலட்சியங்களை நிலைநாட்ட இவர்களுக்குச் சொல்லித் தருவதற்காக அந்த எதிர்காலத்திலிருந்து “வந்தவர் தான்” உண்மையான நவீன ஆசிரியர் – என்று எனக்குத் தோன்றுகிறது.

கல்வி – வளர்ப்புப் பணியின் அன்றாட திட்டத்தை நான் ஏன் முழு இசைக்குறியீடு என்கிறேன்? இசை அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட இவ்வார்த்தை எனக்குப் பிடித்துள்ளதாலா?

ஆம், இச்சொல்லும் இதன் உள்ளடக்கமும் எனக்குப் பிடித்துள்ளது. ஒரு இசைக் குழு, பாட்டிசைக் குழு, வாத்திய இசைக் குழுவிற்கான இசை படைப்பின் எல்லா பாத்திரங்கள் அல்லது குரல்களுக்காகவும் எழுதப்பட்ட முழுப் பதிவை இது குறிக்கிறது. குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்கு கல்வி சொல்லித் தருவதற்கான எல்லா அவசியமான, சாத்தியமான விஷயங்களின் பதிவையும் நான் பள்ளி நாளின் முழு இசைக் குறியீட்டில் பார்க்கிறேன். இவ்விஷயங்களை நிறைவேற்றும் கலையை, திறமையை நான் இதில் பார்க்கிறேன்; இதையும் இசையுலகச் சொற்களால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தலாம்.

கேள்வி கேட்பது, விளக்குவது, மனதில் பதியச் செய்வது, வீட்டு வேலை தருவது என்ற வழக்கமான பாணியில் நான் பாட திட்டங்களைத் தீட்டி வந்த எனது பழைய நடைமுறையை நினைத்து இப்போது வியப்படைகிறேன், மேற்கூறிய அம்சங்கள் ஒவ்வொன்றிற்காகவும் ஒரு சில கேள்விகளையும் வேலைகளையும் நான் யோசித்து வைப்பது வழக்கம். இதில் சிக்கலானது ஒன்றுமேயில்லையென பெரும்பாலும் நம்பினேன். பாடம் நடக்கும் போதே உள்ள நிலவரத்தைக் கொண்டு அங்கேயே நேரடியாகக் கூடுதல் கேள்விகளையும் மற்ற வேலைகளையும் என்னால் சிந்தித்துக் கேட்க முடியாதா என்ன? உண்மையைச் சொன்னால், இத்தகைய மேற்போக்கான திட்டங்களுக்குக் கூட நான் எதிராக இருந்தேன்: “இவையெல்லாம் எனக்கு எதற்கு? இவையெல்லாம் சம்பிரதாயமாயிற்றே! பூர்வாங்கத் தயாரிப்பின்றி ஆரம்ப வகுப்புகளில் எந்த ஆசிரியரால் பாடம் நடத்த முடியாது!”

ஆசிரியரியலில் எளிய விஷயங்களே கிடையாது என்று குழந்தைகளும் பள்ளி வாழ்க்கையும் எனக்குச் சொல்லித் தரும் வரை நான் இப்படி நினைத்தேன். குழந்தைகள் எனது ஆசிரியர்கள். அவர்களுடன் கலந்து பழகுவது எவ்வளது சிக்கலானது என்று பல ஆண்டுகள் அவர்கள் எனக்குப் பொறுமையாகச் சொல்லித் தந்தனர். அவர்களை வளர்ப்பது எளிதாக வேண்டுமெனில், ஒவ்வொரு பள்ளி நாளையும் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டுமெனில், எனது முயற்சிகள் நல்ல பயன்களைத் தர வேண்டுமெனில் நாளைய தினத்தை நான் முன் கூட்டியே திட்டமிட வேண்டும், இயன்ற அளவு தெட்டத் தெளிவாக, செயல் முனைப்போடு இதற்குத் தயாராக வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.

ஆனால் இது மட்டும் போதாது. இதையெல்லாம் எப்படி நடைமுறையில் நிறைவேற்றுவது என்பதைப் பற்றியும் முன் கூட்டியே தீவிரமாகச் சிந்திக்க வேண்டும், ஏனெனில் குழந்தைகள் தாம் கற்றுக் கொள்ளும் விஷயங்களை, இவ்வாறு புதியவற்றை அறிவதை, தம் ஆசிரியரை எப்படி அணுகுகின்றனர் என்பது மேற்கூறியதைப் பொறுத்துள்ளது. விஷயங்கள் எவ்வளவு சுவாரசியமானவையாகவும் முக்கியமானவையாகவும் இருந்தாலும் இவற்றைக் குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லித் தருகின்றோம் என்பது பெரிதும் முக்கியமானது. ஆசிரியர் குழந்தைகளை நேசிப்பது மட்டும் போதாது, இந்த நேசத்தை வெளிப்படுத்தத் தெரிந்தவராயும் அவர் இருக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு வேண்டும். குழந்தை வளர்ப்புக் கலை, கல்வி போதிக்கும் கலை பற்றிச் சிந்திக்க வேண்டும். இதைப் பற்றி நேரடியாக பாடத்தின் போது சிந்திப்பதானது பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஒரு கலைஞன் ரசிகர்களின் முன் மேடையில் எப்படி நடிக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தால் எப்படியிருக்குமோ அதே போல் இருக்கும். பள்ளி நாளின் முழு இசைக் குறியீட்டில் அன்றைய தினத்திற்கான திட்டம் மட்டும் அடங்கியிருக்கவில்லை, குழந்தைகளின் மீது எப்படி அக்கறை செலுத்துவது, அவர்களுக்கு எப்படி சந்தோஷத்தை அளிப்பது, எனது ஆசிரியர் வாழ்க்கையில் நான் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றிய எண்ணங்களும் இவற்றில் அடங்கியுள்ளன.

இசையும் குழந்தை வளர்ப்பும்! இசையும் கல்வி போதனையும்! இங்கே இசை எதற்கு?

ஆம், இசைத் தத்துவத்தால், குழந்தை வளர்ப்புத் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் மனிதாபிமான சாரத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்க முடியும். பள்ளி வாழ்க்கையை, குழந்தைகளுக்கு புத்தி சொல்லிக் கொடுப்பதற்காக ஆசிரியருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் நடக்கும் முடிவற்ற போராட்டமாகப் பார்க்காமல் நேர்மையான மனதையும் மென்மையான இதயத்தையும் படைக்கும் மாபெரும் இசைப் படைப்பாக ஏன் பார்க்கக் கூடாது? இந்த இசை பெரும்பாலும் ஓங்கியும் சில சமயங்களில் சுருதி தாழ்ந்தும் ஒலிக்கும், சோகமும் சில நேரங்களில் தலை தூக்கும். ஆனால் இந்த இசை கண்டிப்பான, அதிகாரத் தொனியிலான, பதட்டமான, எரிச்சலூட்டக் கூடிய, முரட்டுத்தனமான இசையாக இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட தன்மைகள் இசைக்குத் தேவையே இல்லை, ஆசிரியரியலுக்கும் இவை அவசியமில்லை .

இசை மானுட மனதில் உள்ள மனிதாபிமானத்தின் அடிப்படை. பள்ளி நாளின் முழு இசைக் குறியீடுகளுடன் குழந்தைகளை நோக்கிச் செல்லும் ஆசிரியர், இந்த இசையைக் கேட்கும் போது, குழந்தை வளர்ப்பு எனும் மந்திரக் கோலோடு தான் நிற்பதைக் கற்பனை செய்து பார்க்கையில், தன்னைத் தானே குழந்தைகளுக்கு அர்ப்பணித்துள்ளதில் தான் குழந்தை வளர்ப்பின் ரகசியம் உள்ளது என்று நம்பும் போது – இதை விட ஆசிரியருக்கு வேறு மகிழ்ச்சி இருக்க முடியாது.

ஒரு ஆசிரியர் தீய எண்ணங்களோடு பள்ளிக்குச் செல்லாமலிருப்பது நல்லது, அப்போது தான் குழந்தைகளின் மனதைப் பாழ்படுத்தாமலிருக்கலாம்; தெளிவான இலட்சியங்களும் வளர்ப்பு எண்ணங்களும் இல்லாமல் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது நல்லது, அப்போது தான் மலைப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் விஷயங்களைக் குழந்தைகள் மீது திணிக்காமல் இருக்கலாம்; நேற்றைய தினத்திலிருந்து, தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளாமல் பள்ளியினுள் நுழையாமலிருப்பது நல்லது, அப்போது தான் சலிப்பையும் ஒரே மாதிரியான அலுப்பேற்படுத்தும் தன்மையையும் விட்டொழிக்க முடியும்; ஆசிரியரியல் மீது நம்பிக்கையின்றி குழந்தைகளிடம் வராமலிருப்பது நல்லது, அப்போதுதான் தம் மீதும் தம் ஆசிரியர் மீதும் உறுதியின்மையை அவர்கள் மனதில் விதைக்காமலிருக்கலாம். இதெல்லாம் நல்லது, ஏனெனில் ஆசிரியர் என்பவர் ஒவ்வொரு குழந்தையின் மனநிலையின் துவக்கத்தில் நிற்கிறார், தன் சொந்தக் கரங்களால், தன் நடவடிக்கையால் எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை இடுகிறார். உற்சாகம், உறுதி, அர்ப்பணிப்பு இல்லாமல் எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை அமைக்க முடியாது.

படிக்க:
ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !
மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !

நான் பாடவேளைகளுக்கு மட்டுமின்றி, பள்ளி நாள் முழுவதற்குமான முழு இசைக் குறியீட்டை உருவாக்குவதையே விரும்புகிறேன். பாடங்கள் தான் பள்ளி நாளின் அடிப்படை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் குழந்தைகள் பாடங்களுக்காக மட்டுமே பள்ளிக்கு வரவில்லை என்பது தெளிவு. இவர்கள் இடைவேளைகளுக்காகவும், பள்ளியில் தங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் புதியவற்றிற்காகவும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவும், ஆசிரியரைச் சந்திக்கவும், பொதுவில் சுவாரசியமான பள்ளி விஷயங்களுக்காகவும் பள்ளிக்கு வருகின்றனர். பாடவேளைகளில் மட்டுமின்றி பள்ளி வாழ்க்கைச் சூழல் முழுமையாலும் பள்ளியில் கலந்து பழகுவதாலும் பள்ளி விஷயங்களாலும் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு ஆர்ப்பாட்டம்

0

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது மாணவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் !

”கிராமப்புற ஏழை மாணவர்களைப் பள்ளி படிப்பில் இருந்து விரட்டவே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு !. இந்த அரசாணையை உடனே திரும்பப் பெற வேண்டும்.” என்ற முழக்கத்துடன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 18.09.2019 அன்று மாலை 5:30 மணியளவில் கரூர் பஸ் நிலையம் அருகில் ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாமானிய மக்கள் நல கட்சி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் தோழர் குணசேகரன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சிவா, வழக்கறிஞர் தோழர் முருகேசன் மற்றும் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தோழர் மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

படிக்க:
காஷ்மீரிகளை ஒடுக்காதே ! பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் !
♦ ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் தோழர் காவிரி நாடன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக தோழர் தாமரைக்கண்ணன் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சமயத்தில் மழை பெய்தபோதும் வந்திருந்த பள்ளி – கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் என யாரும் கலைந்து செல்லாமல் இருந்து கவனித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர். தொடர்புக்கு : 96298 86351.

ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !

மோடியின் ஆட்சியில் இந்தியா இதுவரை சந்தித்திராத பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. என்னதான் மோடி அரசும் நிர்மலா சீதாராமனும் அதை மறுத்தாலும் களநிலவரம் இந்த பொருளாதார வீழ்ச்சியை உறுதி செய்கி்றது.

இருசக்கர மற்றும் வணிக வாகன விற்பனையாளர்கள் இருவர் தங்களது அனுபவங்களைப் பகிர்கின்றனர் ..

பாருங்கள் ! பகிருங்கள் !

கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி

கேள்வி: //பெரியாரை நான் படித்தாலும் சாதிய வாழ்வியல் உள்ள இந்த சமூகத்தில் எப்படி அதை கடந்து வருவது?//

– வினோத்குமார்

ன்புள்ள வினோத் குமார்,

சொந்த வாழ்விலும் சமூக வாழ்விலும் சாதியத்தை துறப்பதற்கு மூன்று வழிகள் உள்ளன.

  • ஒன்று – சாதி – தீண்டாமை மறுப்பு மணம் செய்வது.
  • இரண்டு – குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதமற்றவர்களாக பதிவு செய்வது.
  • மூன்று – சாதி – தீண்டாமை ஒழிப்பு மற்றும் இதர அரசியல் போராட்டங்களில் ஈடுபடுவது.

Thanthai Periyar memories

இம்மூன்றையும் செய்யும்போது சொந்தபந்தங்கள், குடும்பத்தினர் தடுப்பார்கள் அல்லது ஊக்கமிழக்கச் செய்வார்கள். அதில் உறுதியாக இருப்பது நம்முடைய தெரிவு. இத்தகைய போராட்டங்களைச் சொந்த வாழ்வில் உறுதியாகச் செய்யும் போது மட்டுமே நம் அகநிலை வலுப்படும்.

பெரியார், அவர் காலத்தில் ஏராளமான சாதி – தீண்டாமை மறுப்பு மணங்களையும், கைம்பெண்கள் மறுமணங்களையும் செய்து வைப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றார். அதே போன்று தனது குடும்பத்து பெண்களையும் தான் கலந்து கொள்ளும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடச் செய்தார். நாமும் அவ்வழியில் பயணிக்க வேண்டும்.

முதல்பார்வையில் இது ஏதோ நாம் தியாகம் செய்து இந்த சமூக மாற்றத்திற்கு பயன்படுகிறோம் என்று பிழையாக தோன்றும். உண்மையில் சாதிய வாழ்வை வாழ்வதுதான் மிகப்பெரிய சுமை! அதைத் துறப்பது உண்மையில் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருமென்பதும் உண்மை.

♦ ♦ ♦

கேள்வி: //தமிழ்நாட்டில் எதிர் காலத்தில் கல்வியில் எவ்வித மாற்றம் நிகழும் என எண்ணுகிறீர்கள்?//

– சுதாகர்

ன்புள்ள சுதாகர்,

அரசு பள்ளி – கல்லூரிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மேலும் நலிந்து போகும். இப்போதே அங்கு ஆதரவற்றவர்கள், வறிய ஏழைகள், வேறு வழியின்றி தமது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். கொஞ்சம் வசதி இருந்தால் பெண் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைத்து விட்டு ஆண் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். தனியார் பள்ளியும், ஆங்கில வழிக் கல்வியும்தான் தரம் என்பது நூற்றுக்கு நூறு மக்களிடம் மாற்றமுடியாத மூட நம்பிக்கையாக நிலைபதிந்து விட்டது. அதற்கு அடிப்படையாக கல்வியில் தனியார்மயத்தை அரசு உறுதிப்படுத்தி விட்டது.

உயர்கல்வியை எடுத்துக் கொண்டால் பொறியியல் கல்லூரிகளின் காலி இடம் அதிகரிக்கும். அங்கு படிப்போரும் வேலையின்றி கிடைத்த வேலையைச் செய்வது என்ற போக்கு அதிகரிக்கும். வேலையில்லா ரிசர்வ் பட்டாளம் அதிகரிக்கும். நீட் தேர்வினால் பெரும்பாலும் வசதி உள்ளவர்களே மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.

இதைத்தாண்டி செல்பேசி, வாட்ஸ் அப் காலத்தில் கல்வியும் அறிவும் தனது ஒளியை இழந்து நம்மை தக்கை மனிதர்களாக மாற்றும். மண், மனிதர்கள், சூழல், தேவை சார்ந்த கல்வி போய் வேலை, தொழில்நுட்பம், கிராக்கி கொண்டதாக மாறிக் கொண்டே இருக்கும். உலகமயம் தனது தேவையை ஒட்டிய கல்வியை திணித்து அதில் பல்லாயிரம் பேரை காசிழக்கச் செய்வதோடு படிக்கச் செய்து அதிலிருந்து சில நூறு பேர்களை மட்டும் பணியில் அமர்த்தும்.

படிக்க :
♦ கேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ?
♦ 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE

ஐஐடி – ஐஐஎம் போன்ற அதி உயர் கல்விக்கான வசதிகளை மட்டும் அரசு செய்து தரும். அங்கே படிப்போர் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதி உயர் சிந்தனையாளர் குழாமில் சேருவார்கள். புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும் பட்சத்தில் மேற்கண்ட நிகழ்ச்சிப் போக்கு முன்னிலும் வீரியமாக நடைமுறைப்படுத்தப்படும்.

அதே நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்கள் மேற்கண்ட எதிர்மறைச் சூழலை மாற்றுமா, புதிய சமூகத்தை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இயற்கையின் இயக்கத்தையும், மனித குல வரலாற்றையும், இயக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்வி காசுக்கேற்ற பண்டமாக மாற்றப்படுகிறது. இதை எதிர்த்த அரசியல் கல்வியே இன்றைய காலத்தில் மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வியாக இருக்கிறது.

♦ ♦ ♦

கேள்வி: //சமூக வலை தளங்களில் நாம் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு, சங்கிகள் மிரட்டும் போது அவர்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது?

நன்றி.//

– துழாயன்

ன்புள்ள துழாயன்,

சங்கிகளின் மிரட்டலுக்கு நாம் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து தரவுகள், உண்மைகள், புள்ளிவிவரங்கள் சார்ந்து அவர்களை அம்பலப்படுத்த வேண்டும். அவர்களே மறுக்க முடியாதபடி நமது பிரச்சாரம் இருக்க வேண்டும். அந்த நிலையில் அவர்கள் பின்வாங்கி தற்காப்பு நிலைக்கு போய்விடுகிறார்கள்.

Nirmala-Sitharaman-Economy-Cartoon-Slider“ஓலா, உபர் டாக்சி சேவைகளை அதிகம் இளைஞர்கள் பயன்படுத்துவதால் கார்கள் விற்பனை வீழ்ச்சி அடைந்திருக்கிறது” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் எதிர்வினையாற்றி வைரலாக்கினர். இத்தகைய சூழலில் சங்கிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறார்கள். இது தொடர்பாக தோழர் வில்லவன் அழகாக எதிர்வினையாற்றிருந்தார். பொருத்தம் கருதி அதை இங்கே இணைக்கிறோம்.

கார் விற்பனை குறைந்தது ஏன்?
எல்லாரும் ஓலால போறாங்க.

அப்ப ஓலா வருமானம் ஏன் குறையுது?
எல்லாரும் ஒர்க் ஃபிரம் ஹோம் எடுக்குறாங்க.

வேலைவாய்ப்பு ஏன் குறையுது?
மக்கள் சோம்பேறி ஆயிட்டங்க, அதான்.

ஆடை விற்பனை ஏன் குறையுது?
எல்லாரும் கைலி, நைட்டியோட வெளிய வந்துடறாங்க.

ஏன் மக்கள் புது ஜட்டிகூட வாங்கறது இல்ல?
பழைய ஐந்தாண்டு கால ஆட்சியில நாடு ரொம்ப சுபிட்சமாக இருந்தால அப்போ வாங்கின ராசியான ஜட்டிய யாரும் மாத்த விரும்பல.

விவசாய உற்பத்தி ஏன் குறைஞ்சுடுச்சி?
மக்கள் பேலியோவுக்கு மாறுவாங்களா இருக்கும்.

புதிய வீடுகள் ஏன் விற்பதில்லை?
அப்போ எல்லாத்துக்கும் வீடு ஏற்கனவே கிடைச்சிருக்குமா இருக்கும்.

ஏற்றுமதி சரிவு?
தனக்கு மிஞ்சிதான் தானம் என மக்கள் நினைத்துவிட்டார்கள்.

அதானி அம்பானி தவிர நாட்டுல யாருக்குமே வருமானம் கூடலையே?
அல்ஃபாபேட்டிக்கல் ஆடர்ல அவங்க முதல்ல வர்றாங்க. மத்தவங்களுக்கு பொறுமையா கிடைக்கும்.

நாட்டுல பசி பட்டினி ரொம்ப அதிகமாயிருக்கு…
சாரி பசி பட்டினி பத்தி பேச நான் டாக்டர் இல்ல. என்கிட்ட பொருளாதாரம் பத்தி மட்டும் கேளுங்க.

-நிருபர் தற்கொலை – பேட்டி நிறைவு.

♦ ♦ ♦

கேள்வி: //தமிழகத்தில் இளைஞர்கள் சாதரணமாக ரோட்டு ஓர தள்ளுவண்டி கடைகளில் பீஃப் வருவல் சாப்பிடுகிறார்கள். ஆனால் வட இந்தியாவில் சாத்தியமில்லலை. ஒரு மனிதனின் மனநிலையை புறச்சூழல் அல்லது சூழ்நிலை தீர்மானிக்கிறதா?//

– வேழவேந்தன்

ன்புள்ள வேழவேந்தன்,

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரூப்ஸா சக்ரவர்த்தி ஒரு பெண் பத்திரிகையாளர். பார்ப்பனராக பிறந்திருந்தாலும் மேற்கு வங்க பண்பாட்டுப்படி அவர் இறைச்சி உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடக் கூடியவர். குஜராத்தில் பணி நிமித்தமாக செல்பவருக்கு அங்கே சென்ற பிறகே இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு வீடே கிடையாது என்ற உண்மை தெரிய வருகிறது.

பிறகு தான் சைவம் என்றொரு பொய்யைச் சொல்லி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வீடு வாடகைக்கு பிடிக்கிறார். அசைவம் சாப்பட வேண்டுமென்றால் அகமதாபாத்தில் உள்ள முசுலீம்கள் பகுதிக்கு சென்று உணவகங்களில் சாப்பிடுகிறார். அவருடைய அனுபவத்தை கீழ்க்கண்ட கட்டுரையில் படிக்கலாம்.

♦ குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் !

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பசுப்படுகை மாநிலங்களில் அசைவம் சாப்பிடுவதையே குற்றமென்பதாக வைத்திருக்கிறார்கள். வட இந்திய மாநிலங்களில் கணிசமான ஆதிக்க சாதிகளின் பண்பாட்டில் சைவம் இருந்தாலும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அதில் தலித்துக்கள், முசுலீம்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் அசைவ உணவைச் சாப்பிடக்கூடியவர்கள்தான். இதை வைத்து இந்தியாவில் சைவம்தான் முதன்மையானது என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது அது உண்மையல்ல.

♦ Most Indians are non-vegetarian, Southern and Northeastern states top the list: Report

இந்தியா ஸ்பெண்ட் இணையதளத்தின் ஆய்வுப்படி 80% ஆண்களும், 42.8% பெண்களும் இந்திய அளவில் அசைவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். தென்னிந்தியா, வடகிழக்கு இந்தியாவில் ஆகப் பெரும்பான்மையினர் அசைவத்தையும், வட இந்தியாவில் மட்டுமே சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் குறிப்பிடத் தகுந்த அளவில் இருக்கிறார்கள். பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் மட்டும் ஆண்களும், பெண்களும் பத்து சதவீத அளவுக்குள் அசைவம் சாப்பிடுகிறவர்களாக இருக்கிறார்கள்.

பார்ப்பனியப் பண்பாட்டின் அசைவம் சாப்பிடுகிறவர்கள் கீழானவர்கள் என்ற கருத்து மத அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. தமிழகத்தில் உழைக்கும் மக்கள் தமது குலதெய்வங்களுக்கு இறைச்சி உணவுகளை படையல்களாக வைக்கும் போது ‘உயர்’ சாதி இந்துக்கள் வணங்கும் தெய்வங்களுக்கு சைவ உணவு வகைகளே பிரசாதங்களாக வைக்கப்படுகின்றன.

எனவே இந்தியாவில் பெரும்பகுதி மக்களின் சூழல் அசைவ உணவு சாப்பிடுவதை நிலை நாட்டியிருக்கிறது. சிறுபான்மை வட இந்திய பகுதி மாநிலங்களில்தான் அந்த சூழல் நேரெதிராக இருக்கிறது. அங்கும் கூட கோழி, ஆட்டிறைச்சி மட்டும்தான். மாட்டிறைச்சியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இதை விடக் கொடுமை, பாஜக ஆளும் வட இந்திய மாநிலங்களில் குழந்தைகளுக்கான சத்துணவில் முட்டை கூடக் கிடையாது. தமிழக சத்துணவில் அன்றாடம் முட்டை உண்டு.

மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !

எனவே நம் மக்களின் உணவுச் சூழலில் அசைவம் வலுக்கட்டாயமாக மறுக்கப்படுகிறது. இந்துத்தவத்தை வேரறுக்கும் வரை நம் மக்களுக்கு அசைவ உணவும், நம் குழந்தைகளுக்கு முட்டையும் கிடைக்காது. தமிழகத்தில் உதிரிப்பணிக்காக வரும் வட இந்திய இளைஞர்களில் பெரும்பாலோனோர் அசைவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். அவர்கள் ஊரில் அத்தகைய சூழல் இல்லை.

ஆக உணவு உண்பதை நம் மக்களின் அக விருப்பம் தீர்மானிக்கும் சூழல் இங்கில்லை. அதை பார்ப்பனியமே கட்டுப்படுத்துகிறது. தமிழகத்தில் கூட பீஃப் வறுவல்கள் பரவலாக கிடைத்தாலும் மேட்டுக்குடியினர், ஆதிக்க சாதியினர் வசிக்கும் நகர – கிராமப் பகுதிகளில் கிடைப்பதில்லை. இங்கேயும் அதை ஏதோ சாக்கனாக் கடை போல ‘தீண்டத்தகாததாக’ வைத்திருக்கிறார்கள். நமது அரசியல் போராட்டங்களில் வருடந்தோறும் மாட்டுக்கறி உணவு உண்ணும் விழாக்களை நடத்துவதும், இது குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்வதும் அவசியம்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

 

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE

மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் !

18.09.2019

டப்பு கல்வியாண்டிலிருந்து 5 மற்றும் 8 -ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இப்பொதுத் தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்களை 2021-22 வரை இடைநிறுத்தம் செய்யக்கூடாது எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வையும் சேர்த்து ஐந்து பொதுத் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எழுத வேண்டும். இப்பொதுத் தேர்வுகள் பெரும்பான்மை மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கே சாதகமாக அமையும். எனவே உடனடியாக இவ்வரசாணையை திரும்ப பெறுமாறு பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு தமிழக அரசைக் கோருகிறது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை இல்லாத ஆரம்பப் பள்ளிகளை நூலகங்களாக மாற்றுவது, பத்துக்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் ஓராசிரியரை மட்டுமே நியமிப்பது, ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவது, ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு போன்றவைகளை உதாரணங்களாகக் கூறலாம். மேலும் ஒன்பதாம் வகுப்பில் இருந்து தொழிற்கல்வி வழங்கப் போவதாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

மேற்கண்ட இவ்வறிவிப்புகள் அனைத்துமே இன்னும் விவாதத்தில் மட்டுமே உள்ள, சட்ட அங்கீகாரம் கூட பெறாத தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளாகும். இருந்தபோதிலும் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் என்ற போர்வையில் தனியார்மயத்தை தீவிரப்படுத்துவதற்காகவே இது போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு செயல்பட்டுவருகிறது.

படிக்க :
♦ புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !
♦ பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள் போராட்டம் !

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, படிப்பதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலிருப்பது போன்ற குறைபாடுகளை சரிசெய்ய வேண்டுமென கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இக்குறைபாடுகளை சரி செய்யாமல் 5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு அதிக சுமையை உருவாக்கும். இது மாணவர்களை தனியார் பயிற்சி வகுப்புகளை (Tuition) நோக்கி செல்லுவதை கட்டாயமாக்கும். மேலும் இத்தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்கள் கட்டாய இடைநிற்றலுக்கும் தள்ளப்படுவர். குறிப்பாக கிராமப்புற மற்றும் சமுதாய – பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய சூழலிருந்து வருகின்ற மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவர்.

மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்துவதற்காகவே நீட் தேர்வு என்ற பொய்யை சொல்லி கிராமப்புற மாணவர்களை மருத்துவக் கல்வியிலிருந்து வெளியேற்றி பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்ற நிலையை உருவாக்கியுள்ளனர்.

அதுபோலவே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது எதார்த்தத்தில் பெரும்பான்மை மாணவர்களை பள்ளிக் கல்வியிலிருந்து வெளியேற்றுவதற்கும், தனியார் கல்வி நிறுவனங்களின் வரைமுறையற்ற கொள்ளைகுமே சாதகமாக அமையும். ஆகையால் மாணவர்களின் நலன்களுக்கு எதிராக உள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொது தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

– பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு
தொடர்புக்கு : 94443 80211, 94892 35387, 96005 82228

1) பேரா. வீ. அரசு, ஒருங்கிணைப்பாளர், CCCE – சென்னை.
2) பேரா. மன்சூர், திருச்சி, ஒருங்கிணைப்பாளர், CCCE – திருச்சி.
3) பேரா. அமலநாதன், ஒருங்கிணைப்பாளர், CCCE – நெல்லை.
4) பேரா. கதிரவன், சென்னை.
5) பேரா. சிவக்குமார், சென்னை.
6) பேரா. கருணானந்தன், சென்னை.
7) பேரா. அருணாச்சலம், திருச்சி.
8) பேரா. மருதை, திருச்சி.
9) பேரா. மதிவானன், திருச்சி.
10) பேரா. ஐயம்பிள்ளை , திருச்சி.
11) பேரா. சோமசுந்தரம், நெல்லை.
12) பேரா. சாம், திருச்சி.
13) முனைவர். ரமேஷ், சென்னை.

பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள் போராட்டம் !

0

கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் திண்டிவனம் அரசுக் கல்லூரி மாணவர்களின் இரண்டாம் நாள் போராட்டம் !

“திருவள்ளுவர் பல்கலைகழக தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெறு ! இந்தியை திணிக்காதே ! 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அரசாணையை திரும்பப் பெற வேண்டும் !”  ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (RSYF) ஒருங்கிணைப்பில் தொடர் போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இரண்டாவது நாளாக நேற்று (18.09.2019) விழுப்புரத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் திண்டிவனத்தில் உள்ள கோவிந்த சாமி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி அமைந்துள்ள சாலையில் அமர்ந்து விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டமானது சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம். தொடர்புக்கு : 91593 51158.

படிக்க :
♦ அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !
♦ மாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !

***

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது நாளாக மாணவர்கள் போராட்டம் !

  • திருவள்ளூர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்!
  • பேராசிரியர் நிர்மல் குமார் பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்!
  • 5, 8-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அரசாணையை திரும்பப் பெற வேண்டும்!

இவற்றோடு அமித்ஷா அறிவித்த நாடு முழுவதற்குமான ஒரே மொழி இந்திதான் என்ற ஆணவ பேச்சை கண்டித்தும், கடலூரில் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்றும் (18.09.2019) இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தினர்.

திருவள்ளுவர் பல்கலைகழகம் தேர்வு கட்டணத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் இப்போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்து நடத்தினர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திண்டிவனம் மற்றும் கடலூர் அரசு கலைக் கல்லூரிகளில் இன்றும் (19.09.2019) மூன்றாம் நாளாக மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110

அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !

0

ந்தியை திணிக்கும் அமித்ஷாவின் ஆணவப் பேச்சை கண்டித்தும்;  5, 8-ம் வகுப்பு மாணவர்களை கல்வியிலிருந்து விரட்ட பொதுத் தேர்வைத் திணிக்கும் சதித்தனத்தை எதிர்த்தும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றின் தொகுப்பு…

***

போலீசு மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடிய தர்மபுரி மாணவர்கள் ! 

  • இந்தியை திணிக்கும் அமித்ஷாவின் ஆணவ பேச்சு!
  • 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு! மாணவர்கள் மீதான வன்முறை!
  • கிராமப்புற ஏழை மாணவர்களை பள்ளிப் படிப்பில் இருந்து விரட்டும் அரசாணையை திரும்பப் பெறு!

என்ற தலைப்பில் 18-09-2019 காலை 11:30 மணிக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்கு கல்லூரி நிர்வாகமும், போலீசும் மாணவர்களை போராட்டத்தில் கலந்துக் கொள்ள விடக்கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் மாணவர்கள் அந்த தடையையும் தாண்டி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தை துவங்கினர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது சுமார் 15-க்கும் மேற்பட்ட போலீசாரும், 10-க்கும் மேற்பட்ட உளவுப் பிரிவினரும் வந்து மாணவர்களை சூழ்ந்து கொண்டு களைத்து விடும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்கள் எழுச்சிமிகு முழக்கமிட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆர்ப்பாட்டத்தை இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடத்தி முடித்தனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்து மாணவர்கள் அனைவரும் சென்ற நிலையில், அங்கிருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மற்றும் தோழர் பாலன் ஆகிய இருவரையும் தர்மபுரி அதியமான் கோட்டை ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் ஐந்து போலீசார் ஒரு வேனில் வந்து வழிமறித்தனர்.

“வண்டில ஏறு.. நீ எதுக்கு இங்க வந்து போராட்டம் நடத்தற.. நீ அனுமதி வாங்கினேயா? நாங்கள் எல்லாம் என்னாத்துக்கு இருக்கிறோம்? உன்னுடைய இஸ்டத்துக்கு வந்து அரச எதிர்த்து போராட்டம் நடத்துவ.. அதனை நாங்க பார்த்துக் கொண்டு இருப்போமா? ஏறுடா வண்டியில…” என்று வலுக்கட்டாயமாக போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

படிக்க :
♦ கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள் போராட்டம் !
♦ தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி

அப்போது தோழர்களின் செல்போனையும் வலுக்கட்டாயமாக பிடிங்கிக் கொண்டது போலீசு. அதன் பிறகு குற்றவாளிகளை விசாரிப்பது போல் லாக்-அப்பில் அடைக்க முயன்றனர். இதனை எதிர்த்து தோழர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரண்டுபோன போலீசு அதிகாரிகள் அதன் பிறகு சரி உங்கள் முகவரியை மட்டும் கொடுங்கள் என்று கூறி எழுதி வாங்கிக் கொண்டனர்.

நண்பகல் 12 மணிக்கு தோழர்களை கைது செய்த போலீசு இரவு 7:30 மணிக்கு தான் அவர்களை விடுவித்தது. மேலும் தோழர்கள் மீது 151 சி.ஆர்.பி.சி. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, சட்டவிரோதமாக கூடியது ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் கல்வி உரிமை பறிப்புக்கு எதிராக மத்திய மாநில அரசு தொடுக்கும் அடக்குமுறைக்கு எதிராக, தொடர்ந்து மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தும், அடுத்தக்கட்ட போராட்டத்துக்கும் தயாராகி வருகிறது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தருமபுரி மாவட்டம். தொடர்புக்கு: 63845 69228

***

5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 3 வருடம் தள்ளிவைப்பு ! தமிழக அரசின் கபடநாடகம் ! சென்னையில் ஆர்ப்பாட்டம் !

  • 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு !
  • தமிழக அரசே 3 வருடம் தள்ளிவைப்பு என்று நாடகமாடாதே!
  • அரசாணையை திரும்பப்பெறு!

என்ற முழக்கங்களின் அடிப்படையில், சென்னை பள்ளி கல்வி துறை இயக்குனரகம் (DPI) முன்பு 18.9.2019 அன்று பிற்பகல் 3:00 மணியளவில் சென்னை பு.மா.இ.மு சார்பில் ஆப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பட்டத்துக்கு புமாஇமு சென்னை நகர செயலாளர் தோழர் சாரதி தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்து கண்டனங்களைப் பதிவு செய்தார்.

பின்னர் போராட்டத்தில் பங்குபெற்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் போலீசு நிலையத்தில் மாலைவரை வைக்கபட்டிருந்தனர். பின்னர் அவர்களை விடுவித்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு : 94451 12675.

***

கடலூர் அஞ்சலகம் முன் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

  • 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு என்ற கிராமப்புற மாணவர்கள் கல்வியை பாதிக்கும் அரசாணையை  திரும்பப் பெறு!
  • 2019 தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தாதே!
  • ஒரே நாடு – ஒரே மொழி இந்தி என்ற அமித் ஷாவின் ஆணவப் பேச்சுக்கு கண்டனம்!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து கடலூர் அஞ்சல் அலுவலகம் முன்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 18.09.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பு.மா.இ.மு மாவட்டசெயலாளர் தோழர் மா.மணியரசன் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் வெண்புறா குமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் செந்தில்குமார், மற்றும் மாணவர்கள் வெங்கடேஸ்வரன், பூங்குழலி, பால்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110

***

உளவுப் பிரிவு போலீசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் கள்ளக் கூட்டை முறியடித்த திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் !

ல மொழிகளை அழித்து இந்தியை திணிக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்தும்; 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரியும், திருச்சி பெரியார் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடத்தினர்.

கல்லூரி வாட்ச் மேன் மூலம் நேரடியாக உளவு பிரிவுக்கு தகவல் சென்றது. உடனே 3 வேன்களில் 2 உளவுப் பிரிவு மற்றும் 13 போலீசார் வந்திறங்கினர். அதுமட்டுமல்லாது போராடும் மாணவர்களை கலைக்க ஒரு போராசிரியரும் முயன்றார். அந்த பேராசிரியருடன் மாணவர்கள் நிகழ்த்திய உரையாடல் கீழே…

மாணவர்கள் : மாணவர்கள் போராட்டம் என்றாலே நாம் ஒருங்கிணைவதற்குள் இவர்கள் வந்து விடுகிறார்கள். நமக்குள் கருப்பு ஆடு இருக்கு. நல்லா வாட்ச் பன்னணும்.
ஒரு ஆசிரியர் : 5-வது 8-வது பள்ளிக்குதானே தேர்வு, இங்கு எதுக்கு போராடுறீங்க…
மாணவர்கள் :‌ வேறு எங்கு டாஸ்மாக் கடையில நின்னு போராடவா…
ஆசிரியர் : எங்காவது நின்னு போராடு. இங்க பன்னாதிங்க.
மாணவர்கள் : சரி, அப்போ கல்லூரி பிரச்சனையை பத்தி பேசுவோம், சரியா டாய்லட் இருக்கா, நல்ல தண்ணி இருக்கா… சொன்னா லிஸ்ட் பத்தாது…
ஆசிரியர் : ???!!!????

அடங்கிய ஆசிரியர் அமைதியாக உள்ளே சென்றுவிட்டார்.

அதன் பின்னர் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. உரிமைக்காக போராடுவது கடமை! உரிமையை பறிக்கும் போதும் உறுதியாக போராடுவதும் நம் கடமை என மாணவர்கள் உறுதியாக நின்றனர்.

இந்தப் போராட்டத்தில் தாய் மொழி தமிழ் இருக்க இந்தியை திணிக்காதே! 5, 8 வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வில் 3 ஆண்டு விலக்கு என ஏமாற்றாதே ! முழுமையாக ரத்து செய்! என மாணவர்கள் முழக்கமிட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர் கூட்டமைப்பு.
திருச்சி. தொடர்புக்கு : 74182 06819.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி ? | மரு. ஃபரூக் அப்துல்லா

மிழகமெங்கும் கார்காலம் தொடங்கிவிட்டதால் நம்மை அச்சுறுத்தும் கொள்ளை நோயான டெங்குவைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • டெங்கு வைரஸ் கிருமியால் உண்டாகும் நோய் நிலை.
  • வைரஸை பரப்பும் வேலையை செவ்வனே செய்வது ஏடிஸ் எனும் கொசுவின் வேலை.

டெங்கு எவ்வாறு பரவும் ?

டெங்குவும் மலேரியாவும் பரவும் விதத்தில் ஒன்றானவை. டெங்குவால் பாதிக்கப்பட்ட கொசு யாரையெல்லாம் கடிக்கிறதோ அனைவருக்கும் டெங்கு நோய்க்கிருமி பரவும். இருமனிதர்க்கு நடுவே தொடுவதாலோ இருமுவதாலோ பரவுவதில்லை

டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு எங்கே வளரும் ?

இந்த ஏடிஸ் எனும் எதிரி, நல்ல நீரில் வளரும் தன்மை கொண்டது. எங்கெல்லாம் நல்ல நீர் தேங்கியுள்ளதோ அங்கெல்லாம் வளரும். 10 மில்லி நீர் போதும் இந்தக் கொசு முட்டையிட்டு வளர.

பொதுவாக வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் டெங்கு புழு காணப்படும் இடங்கள் ?

Dengu-Awarenessகுப்பையில் கிடக்கும் சின்ன சின்ன பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், கொட்டாங்குச்சி சிரட்டைகள், அருந்திவிட்டு போடப்படும் இளநீர், டையர்கள், குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னே சேரும் நீர், வீட்டில் வளர்க்கும் செடிகளின் சட்டிகளில் சேரும் நீர் என்று ஒரு இடத்தையும் விடுவதில்லை இந்த எதிரி.

மூடிவைக்காத தண்ணீர் குடங்கள், தண்ணீர் தொட்டிகள் யாவும் இந்தக் கொசுப்புழுவுக்கு சொர்க்கச் சோலைகள்.

சரி. டெங்கு நோயை எவ்வாறு கண்டு கொள்வது ?

  1. மற்ற வைரஸ் காய்ச்சல் போல் அல்லாமல் அதீத உடல் உஷ்ணம் (>102 டிகிரி) நோய் ஆரம்பித்த அன்றிலிருந்தே இருக்கும்

2. பொறுத்துக்கொள்ள இயலா உடல் வலி இருக்கும். கண்களுக்கு பின்னே வலி இருக்கும்.

3. காய்ச்சலோடு வயிற்றுவலி இருக்கலாம். கருப்பாக மலம் செல்லலாம்.

4. கடும் காய்ச்சல் மூன்று நாள் இருக்கும் . நான்காவது நாள் திடீரென்று குணமாகிவிடும். இது நல்ல அறிகுறி அல்ல. உள்ளங்கை உள்ளங்கால் ஜில்லென்று ஆகும். இதுவும் நல்ல அறிகுறி அல்ல.

படிக்க:
நூல் அறிமுகம் : தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்
♦ உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா

டெங்குவை தடுப்பது எப்படி ?

டெங்குவுக்கு தடுப்பூசிகள் இன்னும் ஆராய்ச்சியில் உள்ளன. டெங்குவுக்கு பரப்பும் கொசுவை ஒழிப்பதே நல்லது.

1. சேமிக்கும் தண்ணீரை மூடி இட்டு வைக்கவும்

2.தினமும் வீட்டைச் சுற்றி குப்பை சேராமல் கண்காணிக்க வேண்டும். சேர்ந்தார்கள் ஒன்று அப்புறப்படுத்தவும் அல்லது எரித்து விடவும்.

3. குழந்தைக்கோ தங்களுக்கோ காய்ச்சல் வரின் தங்கள் குடும்ப மருத்துவரையோ குழந்தைகள் மருத்துவரையோ அணுகவும்

4. மருந்துக்கடைகளில் சுய மருத்துவம் பார்ப்பது நல்லதல்ல. போலி மருத்துவர்கள் ஆங்காங்கே தோன்றுவார்கள். அவர்களை இனங்கண்டு தவிர்க்கவும்.
அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையை அணுகுவது சாலச்சிறந்தது .

4. கொசுப்புழுவை அழிக்க அபேட் எனும் புழுக்கொல்லி சேமித்து வைத்திருக்கும் நீரில் லிட்டருக்கு ஒரு மில்லி வீதம் தெளிக்கவேண்டும்

5. கொசுவாக உருவாகி நோய் பரப்பினால் பைரித்ரம் எனும் கொசுக்கொல்லி மருந்து டீசலில் கலந்து புகையாக அடிக்கப்படும். ஏடிஸ் பகலில் கடிக்கும் கொசு மற்றும் வீட்டுக்குள்ளே வாழ்வதால் காலையும் மாலையும் வீட்டுக்குள் புகை அடிக்கப்பட வேண்டும்.

6. கொசு நம்மை கடிக்காத வண்ணம் கொசு வலைகளை பயன்படுத்தலாம். முழுக்கை சட்டைகளை குழந்தைகளும் நாமும் அணியலாம்

டெங்குவைத் தடுப்போம் !
இன்னுயிர்களைக் காப்போம் !!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

ஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 07

தேர்வுக்குழுவின் முன் மெரேஸ்யேவ் முதலில் அழைக்கப்பட்டான். பிரமாண்டமான, முதிர்ந்து கனிந்த முதல் வரிசை இராணுவ மருத்துவர் கடைசியில் அலுவல் பயணத்திலிருந்து திரும்பித் தலைமைப் பீடத்தில் வீற்றிருந்தார். அலெக்ஸேயை அவர் உடனே அடையாளம் கண்டுகொண்டு அவனை வரவேற்க இருக்கை விட்டு எழுந்து முன் சென்றார்.

“என்ன, ஏற்க மாட்டோம் என்கிறார்களா அன்பரே. உமது விவகாரம் சிக்கலானது. சட்டத்தை மீற நேரிடும். சட்டத்தை எப்படித் தாண்டுவது?” என்று நல்லியல்புடன் பரிவு காட்டினார் அவர்.

அலெக்ஸேய் சோதித்துக் கூடப் பார்க்கப்படவில்லை. அவனுடைய காகிதத்தில் இராணுவ மருத்துவர் சிவப்புப் பென்சிலால் பின்வருமாறு எழுதினார்: “பணியாளர் நியமன அலுவலகத்துக்கு. விமானப் பயிற்சி ரெஜிமென்டுக்குச் சோதனைக்காக அனுப்பப்படலாம் என்று கருதுகிறேன்.” இந்தக் காகிதத்துடன் நியமன அலுவலகத் தலைவரான ஜெனரலிடமே நேரே சென்றான் அலெக்ஸேய். துணை அதிகாரி அவனை ஜெனரலிடம் போகவிடவில்லை. அலெக்ஸேய்க்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. இந்தத் துணையதிகாரி கறுகறுவென்ற மீசையும் வடிவமைந்த மேனியும் கொண்ட இளம் காப்டன். குதூகலமும் நல்லியல்பும் ஒளிர்ந்த அவனது முகத்தால் வசீகரிக்கப்பட்ட அலெக்ஸேய் அவனுடைய மேஜை அருகே உட்கார்ந்து தானே எதிர்பார்க்காத விதத்தில் தன் கதையை எல்லாம் சாங்கோபாங்கோமாக அவனுக்கு எடுத்துரைத்தான். டெலிபோன் மணி அவனுடைய கதையை அடிக்கடி இடை முறித்தது. காப்டன் மறுபடி மறுபடி எழுந்து தன் தலைமையதிகாரியின் அறைக்குப் போகவேண்டியிருந்தது.

ஆனால் அங்கிருந்து திரும்பியதுமே அவன் மெரேஸ்யெவுக்கு எதிரே உட்கார்ந்து, குழந்தைமையும் எளிமையும் ஆவலும் பாராட்டும் ஓரளவு அவநம்பிக்கையுங்கூடத் ததும்பும் விழிகளுடன் நோக்கியவாறு, “ஊம், ஊம், ஊம், அப்புறம்?” என்று அவசரப்படுத்துவான். அல்லது திடீரென்று கைகளை விரித்து விளங்காமைதோன்ற, “மெய்தான் சொல்லுகிறாயா? கடவுளாணை, பொய் சொல்லவில்லையே நீ? ம்-ம்-பிரமாதம்!” என்பான்.

ஒவ்வோர் அலுவலகமாகத் தான் அலைந்ததை மெரேஸ்யெவ் விவரித்தும் காப்டன் எரிச்சலுடன் கத்தினான்: “அடச் சைத்தான்களா! வீணாக உன்னை அலைகழித்திருக்கிறார்களே. நீ அருமையான ஆள், ஊம், எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை….. நீ அசாதாரண இளைஞன்! ஆனாலும் அவர்கள் செய்தது சரியே. கால்கள் இல்லாமல் விமானம் ஓட்ட முடியாது.”

“ஓட்டமுடியும்….. இதோ….” என்று மெரேஸ்யெவ் பத்திரிக்கைத் துணுக்குகளையும் இராணுவ மருத்துவரது முடிவையும் அவரது சிபாரிசையும் எடுத்து வைத்தான்.

“ஆனால் கால்கள் இல்லாமல் நீ எப்படி விமானம் ஓட்டுவாய்? விசித்திரப் பேர்வழி! முடியாதப்பா. ருஷ்யப் பழமொழி கூட உண்டே, ‘காலில்லாதவன் நடனமாட முடியாது’ என்று.”

வேறு ஒருவன் இப்படிச் சொல்லியிருந்தால் மெரேஸ்யெவ் கட்டாயம் மனத்தாங்கல் கொண்டிருப்பான், ஒருவேளை கோபங்கொண்டு முரட்டுத்தனமாகப் பேசிக்கூட இருப்பான். காப்டனின் துடியான முகத்தில் காணப்பட்ட நல்விருப்பம் காரணமாக அவன் அப்படிச் செய்யாமல் சிறுவன் போன்ற உற்சாகப் பெருக்குடன் கூவினான்:

“முடியாதோ?” – இவ்வாறு கத்திவிட்டு எதிர்பார்ப்பு அறையிலேயே நடனம் ஆடத் தொடங்கிவிட்டான்.

காப்டன் பாராட்டுத் தோன்ற அவனைக் கவனித்தான், பின்பு ஒரு வார்த்தை பேசாமல் அவனுடைய காகிதங்களை எடுத்துக் கொண்டு தலைமையதிகாரியின் அறைக்குள் மறைந்தான்.

வெகு நேரம் வரை திரும்பவில்லை. கதவின் மறுபுறமிருந்து வந்த இரு குரல்களின் ஒலிகளைக் கேட்டுக் கொண்டிருந்த மெரேஸ்யெவின் உடம்பு முழுவதும் இறுகிக் குறுகியது, இதயம் கடுமையாக, விரைவாகத் துடித்தது – விரைந்தியங்கும் விமானத்தில் அவன் செங்குத்தாகப் பாய்ந்து இறங்குவது போல.

காப்டன் மனநிறைவைக் காட்டும் புன்னகையுடன் வெளியே வந்தான்.

“விஷயம் இதுதான். உன்னை விமானியாகச் சேர்த்துக் கொள்வது பற்றிய பேச்சைச் செவியேற்கவே ஜெனரல் விரும்பவில்லை. ஆனால் விமானப்படை டெப்போவுக்கு இதே சம்பளத்துடன் வசதிகளுடன் பணியாற்ற அனுப்பும் படி இதோ எழுதியிருக்கிறார். புரிந்ததா? இதே சம்பளத்துடன்…”

அலெக்ஸேயின் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதில் ஆத்திரத்தைக் கண்டு காப்டன் பெருவியப்படைந்தான்.

“டெப்போவுக்கா? ஒருபோதும் இல்லை. அட உங்களுக்கு என் இது புரியமாட்டேன் என்கின்றது? வயிற்றுப்பாட்டையும் சம்பளத்தையும் பற்றி அல்ல நான் கவலைப்படுவது. நான் விமானி, புரிகிறதா? நான் விரும்புகிறேன் விமானம் ஓட்ட, போரிட!. இதை ஏன் ஒருவரும் புரிந்துகொள்ளவதில்லை? இது வெகு சுலபமான விஷயம் ஆயிற்றே….”

காப்டன் குழப்பமடைந்தான். நல்ல விண்ணப்பதாரன்தான் வந்து சேர்ந்தான்! இவன் இடத்தில் வேறு எவனும் மறுபடி களிப்பால் கூத்தாடத் தொடங்கியிருப்பான். ஆனால் இவனோ… வேடிக்கையான பிரகருதி! எனினும் இந்த வேடிக்கைப் பிரகருதி மேல் காப்டனுக்கு முன்னிலும் அதிக அன்பு உண்டாயிற்று. இவன்பால் பரிவு அவன் உள்ளத்தில் ஊறித் ததும்பியது. இவனது அசாத்தியத்தியமான முயற்சியில் எவ்வகையிலேனும் உதவக் காப்டனுக்கு விருப்பம் கிளர்ந்தெழுந்தது. சட்டென அவன் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அவன் மெரேஸ்யெவைப் பார்த்துக் கண் சிமிட்டி, விரல் சைகையால் அவனை அருகே அழைத்து, தலைமையதிகாரியின் அறையை ஓரக் கண்ணால் நோக்கியபடி கிசுகிசுத்தான்:

“ஜெனரல் தம்மால் முடிந்ததை எல்லாம் செய்து விட்டார். இதற்கு மேல் அவருக்கு அதிகாரம் இல்லை. கால்கள் இல்லாதவனை விமானியாக நியமித்தாரானால் அவரையே பைத்தியக்காரர் என்று எல்லோரும் எண்ணிவிடுவார்கள். நேரே நமது உச்ச அதிகாரியிடமே போ. அவர்தான் உன் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.”

அரைமணி நேரத்திற்கெல்லாம் மெரேஸ்யெவ் தன் புதிய நண்பனின் முயற்சியால் கிடைத்த நுழைவு அனுமதிச் சீட்டுடன் உச்ச அதிகாரியுடைய எதிர்பார்ப்பு அறையின் தரைக் கம்பளத்தின் மேல் பதற்றத்துடன் நடந்தான். முன்னமே இது அறிவில் படாமல் போயிற்றே! ஆம். இவ்வளவு நேரத்தை வெட்டியாகக் கழிக்காமல் எடுத்த எடுப்பிலேயே இங்கே வந்திருக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ, இரண்டில் ஒன்று தீர்ந்து போயிருக்கும்… உச்ச அதிகாரி தாமே தேர்ந்த விமானியாக இருந்தவராம். அவர் கட்டாயம் புரிந்து கொள்வார். சண்டை விமானியை டெப்போவுக்கு அவர் ஒருபோதும் அனுப்பமாட்டார்!

படிக்க:
அசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி ! வேலை நாள் குறைப்பு சதி !
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

எதிர்பார்ப்பு அறையில் ஜெனரல்களும் கர்னல்களும் நயப்பாங்குடன் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் வெளிப்படையாகப் பதற்றப்பட்டார்கள். புகை குடித்துக் கொண்டிருந்தார்கள். அலெக்ஸேய் மட்டுமே தரைவிரிப்பின் மீது விந்தையான முறையில் எம்பி எம்பிக் குதித்தவாறு முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தான். காண வந்திருந்தவர்கள் எல்லோரும் கண்டு சென்ற பின் மெரேஸ்யெவின் முறை வந்ததும் அவன் துணையதிகாரியின் மேஜையருகே சட்டெனப் போய் நின்றான். ஒளிவு மறைவு அற்ற முகத்தினனான மேஜர் அந்தத் துணையதிகாரி.

“தோழர் சீனியர் லெப்டினன்ட், நீங்கள் உச்ச அதிகாரியையே பார்க்க வேண்டுமா?” என்று அவன் வினவினான்.

“ஆம், முக்கியமான ஒரு சொந்தக் காரியம் அவரால் எனக்கு ஆக வேண்டியிருக்கிறது.”

“இருந்தாலும் உங்கள் விவகாரத்தை எனக்கும் தெரிவிக்கலாமா? உட்காருங்களேன். சிகரெட் பிடிப்பது உண்டா?” என்று சிகரெட் பெட்டியை மெரேஸ்யெவிடம் நீட்டினான் துணையதிகாரி.

மெரேஸ்யெவ் புகை பிடிப்பதில்லை என்றாலும் எதற்காகவோ ஒரு சிகரெட்டை எடுத்துக் கையில் பிடித்துக் கசக்கி விட்டு மேஜைமேல் வைத்தான். பின்பு, திடீரென்று தன் அசாதாரண அனுபவங்களை எல்லாம் கேப்டனுக்கு விவரித்தது போலவே ஒரு மூச்சில் சொல்லித் தீர்த்துவிட்டான். மேஜர் அவனுடைய கதையை வெறுமே மரியாதைக்காக இன்றி, மிகுந்த நட்புடனும் பரிவுடனும் கவனித்தும் கேட்டான். பத்திரிக்கைக் குறிப்பையும் மருத்துவரின் பரிந்துரையையும் படித்தான். அவனுடைய பரிவால் உற்சாகமடைந்த மெரேஸ்யெவ் துள்ளி எழுந்து, தான் இருக்கும் இடம் எது என்பதைக் கணப்பொழுது மறந்து மறுபடி நடனமாடிக் காட்ட முற்பட்டான்… அவனுடைய நோக்கமெல்லாம் பாழாகாமல் மயிரிழையில் தப்பியது. தலைவர் அறைக் கதவு சட்டெனத் திறக்கப்பட்டது. கருமுடியும் நெடிய ஒடிசலான மேனியும் உடைய ஒருவர் அங்கிருந்து வெளிப்பட்டார். போட்டோக்களில் பார்த்திருந்தமையால் அலெக்ஸேய் அவரை உடனே அடையாளம் தெரிந்து கொண்டான். நடந்தவாறே அவர் மேல் கோட்டுப் பொத்தான்களைப் போட்டுக் கொண்டு, தன் பின் வந்த ஜெனரலிடம் ஏதோ சொன்னார். கவலையில் வெகுவாக ஆழ்ந்திருந்தமையால் அவர் அலெக்ஸேயைக் கவனிக்கக் கூட இல்லை.

“நான் கிரெம்ளினுக்குப் போகிறேன்” என்று கடிகாரத்தைப் பார்த்து விட்டு மேஜரிடம் சொன்னார் அவர். “ஆறு மணிக்கு ஸ்தாலின்கிராத் செல்ல விமானத்துக்கு ஆர்டர் கொடுங்கள். வெர்க்னியா பொக்ரோம்னயாவில் விமானம் இறங்க வேண்டும்” என்று கூறி விட்டு வந்தது போலவே விரைவாக வெளியே போய்விட்டார்.

மேஜர் உடனே விமானத்துக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, மெரேஸ்யெவை நினைவு படுத்திக்கொண்டு கைகளை விரித்தார்.

“உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. இன்றே விமானத்தில் வெளியூர் போகிறோம். நீங்கள் காத்திருக்க நேரும். தங்க இடம் இருக்கிறதா உங்களுக்கு?” என்று கேட்டார்.

நிமிட நேரம் முன்பு பிடிவாதமும் சித்தவுறுதியும் தென்பட்ட அலெக்ஸேயின் சாமள முகத்தில் திடீரென ஒரே ஏமாற்றமும் சோர்வும் காணப்பட்டதைக் கவனித்த மேஜர் தன் தீர்மானத்தை மாற்றிக் கொண்டான்.

“நல்லது… நமது தலைமை அதிகாரியை நான் அறிவேன். அவரும் இப்படியே செய்திருக்கிறார்.”

இவ்வாறு கூறி, அலுவலகக் காகிதத்தில் சில வார்த்தைகளை எழுதி, காகிதத்தை உறையில் இட்டு, “பணியாளர் நியமன அலுவலக தலைவருக்கு” என்று எழுதி அலெக்ஸேயிடம் கொடுத்து அவன் கையைப் பற்றிக் குலுக்கினான்.

“நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று உளமார விரும்புகிறேன்!” என்றான்.

காகிதத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது: “லெப்டினன்ட் அ. மெரேஸ்யெவ் விமானப்படைத் தலைவரைக் காண வந்திருந்தார். அவர் விஷயத்தில் முழுக்கவனம் செலுத்தப் பட வேண்டும். அவர் விமானப் படைக்குத் திரும்ப முடிந்த வகையில் எல்லாம் உதவுவது அவசியம்.”

ஒரு மணி நேரத்திற்கெல்லாம் கருமீசை காப்டன் தன் தலைமையதிகாரியின் அறைக்கு மெரேஸ்யெவை இட்டுச் சென்றான். சினக் குறி காட்டும் பறட்டைப் புருவங்கள் கொண்ட பாரியான முதிய ஜெனரல் காகிதத்தைப் படித்து விட்டு, களி சுடரும் நீல விழிகளை உயர்த்தி அலெக்ஸேயைப் பார்த்து நகைத்தார்.

“அதற்குள் அங்கேயும் போய் வந்துவிட்டாயா!… துருசான ஆள்தான் நீ, படு துருக்காரன்! நான் உன்னை டெப்போவுக்கு அனுப்பியதால் மனத்தாங்கல் கொண்டவன் நீ தானே? ஹஹ்ஹஹ்- ஹா!” என்று அவர் கடகடவென்று உரக்கச் சிரித்தார். “சபாஷ்! உயர்தர விமானி நீ என்பதைக் கண்டு கொண்டேன். டெப்போவுக்குப் போக மாட்டானாம், அவமதிப்பாக நினைக்கிறான்….. சரியான வேடிக்கைதான்! நான் உன்னை என்ன செய்வது, ஊம், நடன சிகாமணி? விமானத்தோடு விழுந்து நொறுங்கினாயானால் என் தலையை வாங்கி விடுவார்களே. ‘கிழட்டு மட்டி, அவனை எதற்காக நியமித்தாய்?’ என்று கேட்பார்களே! ஆனால் நீ என்ன செய்வாய் என்று யார் கண்டது?… இந்த யுத்தத்தில் நம் ஆட்கள் உலகை பிரமிக்க வைத்து விட்டார்கள் என்றால் வெறுமேதானா… இப்படிக் கொடு அந்தக் காகிதத்தை” என்றார்.

படிக்க:
காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !

காகிதத்தின் குறுக்கே நீல நிறப் பென்சிலால் விளங்காத கையெழுத்தில் அரைகுறைச் சொற்களில் “பயிற்சிப் பள்ளிக்கு அனுப்புக” என்று எழுதியிருந்தார் ஜெனரல். நடுங்கும் கைகளால் காகிதத்தைப் பெற்றுக் கொண்டான் மெரேஸ்யெவ். அப்போதே, மேஜை அருகிலேயே அதைப் படித்தான். அப்புறம் மாடிப் படி மேடையிலும், பிறகு கீழே அனுமதிச் சீட்டைச் சரிபார்க்கும் பாராக்காரனின் பக்கத்திலும், பின்பு டிராமிலும், முடிவில் நடைபாதையில் மழையில் நின்று கொண்டும் மறுபடி மறுபடி படித்தான். அலட்சியமாகக் கிறுக்கப்பட்டிருந்த இந்தக் சொற்களின் குறி பொருளை, இவற்றின் மதிப்பையும் புரிந்துகொள்ளக் கூடியவன் இந்தப் பரந்த உலகில் வாழும் மக்களில் அவன் ஒருவன் மட்டுமே.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி

கருவறையில் தமிழ் பாடினால் தீட்டு என்று கூறி உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிய தீட்சிதர்கள், தில்லை நடராஜர் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தை திருமணத்திற்கு வாடகைக்கு விட்டு பணம் பார்த்திருக்கிறார்கள்.

சிவகாசி ஸ்டேண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனரின் மகளுக்கும், சென்னை ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனரின் மகனுக்கும் நடைபெற்ற திருமணம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பிரசித்தி பெற்ற ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்தது என்பது பலருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தியாக இருந்தது.

தில்லை நடராஜர் கோவிலில் பன்னெடுங்காலமாக ஆண்டு அனுபவித்து வரும் தீட்சிதர்கள் தங்களது கல்லாவை நிரப்பிக் கொள்ள கோவிலைக் கொள்ளையடிக்கவும் திறந்துவிடத் தயங்கமாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய சான்று தான் இந்த நிகழ்வு.

இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் உரையாற்றுகிறார்.

பாருங்கள் ! பகிருங்கள் !

கேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ?

Identity-Politics-Slider

கேள்வி: //எனக்கு தெரிந்து 2009 தேர்தல் முதல் 2019 வரை அடையாள அரசியல் கட்சிகள் (பாமக, விசிக) திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் தோல்வியை சந்தித்து இருக்கிறது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா?//

– தமிழ்ச் செல்வன்

ன்புள்ள தமிழ்ச் செல்வன்,

இந்த 2019 தேர்தலில் விசிக வெற்றியும், பாமக தோல்வியும் அடைந்திருக்கின்றன. பொதுவில் சாதி, மத அடையாளங்களை முன்னிறுத்தும் கட்சிகள் அந்தந்த பிரிவு மக்களை முற்று முழுதாக திரட்ட முடிவதில்லை. பா.ம.க-வின் தோல்வி வன்னியர்களிடமே அக்கட்சி செல்வாக்கு பெறவில்லை என்பதைக் காட்டுகிறது. அதே போன்று விசிக-வின் வெற்றிக்கு ஓரளவு வன்னியர்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அக்கட்சியை ஓரளவுக்கு பொதுவான கட்சியாக பார்க்கும் பார்வையை குறிக்கிறது. தேர்தல் அரசியலைத் தாண்டி நாம் அடையாள அரசியலை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு மனிதரிடமும் பால், சாதி, மதம், தேசிய இனம் போன்ற அடையாளங்கள் இருக்கிறது. இவற்றை விட வர்க்க அடையாளமே (அவர் என்ன தொழில் செய்கிறார்) ஒரு மனிதரின் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இதனால் மற்ற அடையாளங்களுக்கு பங்களிப்பே இல்லை என்பதல்ல. ஆனால் அவை இரண்டாம் பட்சமானதுதான். ஏனெனில் ஒவ்வொரு அடையாளமும் கூட ஒரே படித்தானதாக இல்லை. அவையும் வர்க்க ரீதியில் வேறு வேறு பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன. சாதி என்ற அடையாளத்தில் ஒரு பார்ப்பனருக்கும், வன்னியருக்கும், தலித்துக்கும் இருக்கும் பிரச்சினைகள் கூட வர்க்க ரீதியாக பிரிந்திருக்கின்றன. பார்ப்பனர்கள் சமூகத்தில் இருக்கும் மேல் தட்டு தகுதியில் வாழ்க்கை பிரச்சினைகளை ஒப்பீட்டளவில் சுலபமாக எதிர்கொள்கிறார்கள். வன்னியர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தாலும் சில நேரம் சாதிய உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். தலித்துகளுக்கோ பொருளாதாரமும் சரி, சாதி ஆதிக்கமும் சரி இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

படிக்க :
♦ அறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் !
♦ தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்

நள்ளிரவில் மாநகராட்சி தண்ணீருக்காக காத்திருக்கும் குடிசைப் பகுதி பெண்களும் நள்ளிரவில் பஃப்புக்கு செல்லும் மேட்டுக்குடி பெண்களும், பெண்கள் என்ற அடையாளத்தில் ஒரே பிரச்சினைகளை கொண்டிருக்கவில்லை. ஆழ்கடலில் அன்னிய மீன்பிடிக் கப்பல்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதியால் மீன் வளமின்றி அவதிப்படும் ஒரு மீனவர் தமிழர் என்ற முறையில் வாழ்க்கைப் பிரச்சினையை எதிர் கொள்வதில்லை.

இப்படி வர்க்கம் பல்வேறு அளவுகளில் மக்களிடம் பங்காற்றுகிறது. இது குறித்த அறிவு – அறியாமைக்கேற்ப அடையாள அரசியல் வலுவாகவோ, பலவீனமாகவோ தொழிற்படுகிறது. பொருளாதாரப் பிரச்சினைகளை திசை திருப்பும் உணர்ச்சிகரமான அரசியலாக அடையாள அரசியல் இருக்கிறது. அதே நேரம் அது எல்லா நேரத்திலும் பலிப்பதில்லை. மக்களின் அரசியல் பார்வை முதிர்ச்சி அடைய அடைய, அடையாள அரசியல் வலுவிழந்து போகும். இன்றைக்கும் தமிழகத்தில் ஓரிரு விதிவிலக்குகளைத் தாண்டி ஆதிக்க சாதி சங்கங்கள் அரசியல் வெற்றி அடைவதில்லை. தாழ்த்தப் பட்டோர் பிரிவில் அடையாள அரசியலை முன்வைக்கும் கிருஷ்ணசாமி கூட தென்காசியில் தோற்றுத்தான் போனார்.

அதே நேரம் தலித் அரசியல் கூட வர்க்க ஒற்றுமைக்கு எதிரான அடையாள அரசியலாக நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் சாதிகள் என்பது பொதுவில் வர்க்க ரீதியாகவே இருக்கிறதே அன்றி அவை என்ன சாதி என்பது அதற்கு உட்பட்டதே. அனைத்து வகையான அடையாள அரசியல்களையும் ஆளும் வர்க்கம் முன்னிலைப்படுத்துகிறது. வர்க்க ரீதியான ஒற்றுமை வந்து விட்டால் அது ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பதில் வலுவடையும். அதை பிரிப்பதே ஆளும் வர்க்கங்களின் நோக்கம். இன்றைக்கும் பாஜக-வுடன் ராம் விலாஸ் பஸ்வான் போன்ற சில தலித் அரசியல் கட்சிகள் சேர்ந்திருக்கின்றன.

இந்துக்களின் பிரதிநிதி என்று கூறும் பாஜக-வும் தமிழகத்தில் தோற்றிருக்கிறது. அதே நேரம் கிட்டத்தட்ட 40% மக்கள் வட இந்தியாவில் அக்கட்சியினை ஆதரித்திருக்கிறார்கள். அடையாள அரசியல் பேசும் கட்சிகளுக்கு போதிய மாற்றுக் கட்சிகள் இல்லாதிருப்பதால் பாஜக போன்ற கட்சிகள் செல்வாக்கு பெறுகின்றன. பாஜக-வின் இந்துத்துவ அடையாள அரசியலை தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் வீழ்த்த முடியும் என்பதால் வாக்கு வங்கி அரசியல் கட்சிகள் வட இந்தியாவில் பாஜக-விடம் தோற்றுப் போகின்றன. அதனால்தான் காங்கிரசு கூட தானும் இந்துத்துவாவை பின்பற்றுவதாக அவ்வப்போது காட்டிக் கொள்கிறது.

படிக்க :
♦ கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?
♦ மாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !

குஜராத்தில் உனா தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்வினையாக தலித் மக்கள் அகமதாபாத் வந்து போராடினர். அரசு அலுவலகங்களில் மாட்டுத் தோல்களையும், எலும்புக்கூடுகளையும் வீசி தமது கோபத்தை காட்டினர். கோமாதா என்று புனித வணக்கம் கோலேச்சும் பசுப்படுகையில் இத்தகைய எதிர் நடவடிக்கையை எது சாத்தியமாக்கியது? அதுவே அடையாள அரசியலுக்குரிய பதிலாகும். மேலும் மக்களை அடையாள அரசியலுக்கு அணி திரட்டுவது பொதுவில் சுலபமாகவும், வர்க்க ரீதியில் அணி திரட்டுவது பொதுவில் கடினமாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் இந்துத்துவா தனது வேலையைக் காண்பித்து மக்களை மதவெறியிலும், சாதி வெறியிலும் ஆழ்த்துகிறது. பிற்போக்குத்தனங்களை எதிர்த்துப் போராடும் வர்க்க அரசியல் ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும் நீண்டகால நோக்கில் வெற்றி அடைந்தே தீரும்.

UNA-attack
உனா தலித் மக்கள் மீதான தாக்குதல்

உலக அளவில் நியோ நாசிசக் கட்சிகள் செல்வாக்கு அடைந்து வருகின்றன. இக்கட்சிகளை அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கங்கள், கார்ப்பரேட் நிறுனவங்கள் ஓரளவுக்கு ஆதரிக்கின்றன. உள்ளூர் தொழிலாளியின் வேலையின்மைக்கு எதிராக வேறு நாட்டிலிருந்து அகதியாக வந்த தொழிலாளி முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் முதலாளித்துவத்தின் கட்டமைப்பு நெருக்கடியை மேற்கத்திய நாடுகளில் கூட மக்கள் உணர்ந்து வர்க்க ரீதியாக ஒன்றிணைந்து வருகிறார்கள். பிரான்சில் நடந்துவரும் மஞ்சள் சட்டை போராட்டம் சமீபத்திய சான்று.

கம்யூனிசம் என்றாலே சாத்தான் என்று பழக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவிலே கூட பொருளாதார நெருக்கடி முற்றிய இக்காலத்தில் “முதலாளித்துவம் ஒழிக, நாங்கள் 99%” போன்ற அரசியல் முழக்கங்கள் ஒலிக்கின்றன. எனவே நமது அடையாளங்களை விட நம் வாழ்வை நகர்த்திச் செல்லும் பொருளுதார வாழ்க்கை மிகப்பெரியது. அந்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்துவதற்கேற்ப ஒரு நாடு முற்போக்காக பயணிக்கும். தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் கூட இது பொருந்தும்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

அறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் !

0

மீபத்தில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்தியப் பொருளாதாரத்தை ஐந்து ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்த அரசின் முயற்சிக்கு தன்னுடைய அமைச்சகத்தின் பங்களிப்பாக ஏற்றுமதியை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு வியர்த்துக் கொட்டியிருக்க வேண்டும். அவர்ககளின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட அமைச்சர், தனது திட்டத்தையும் அங்கேயே விவரித்தார்.

“ஒரு ட்ரில்லியன் என்பதை யாருக்கும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. கணக்கு பார்க்காத ஐன்ஸ்டீன் தான் புவியீர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்பதை மறக்க கூடாது” என்றார்.

அருண் ஜெட்லி இறந்த பின் மோடியின் அமைச்சரவையில் இருப்பவர்களிலேயே ஓரளவுக்கு அறிவாளி என பெயர் பெற்றவர் இந்த பியூஷ் கோயல் என்பதை வாசகர்கள் மறந்து விடக்கூடாது. இருப்பதிலேயே அறிவாளி இப்படி உளறிக் கொட்டியதை இணைய உலகம் கொண்டாடித் தீர்த்தது.

மோடியின் சகாப்தம் துவங்கியபின் முட்டாள்தனத்திற்கும் அறிவாளித்தனத்திற்கும் இடையே இருந்த சீனப் பெருஞ்சுவர் தகர்த்தெறியப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் பாரதிய ஜனதா அமைச்சர்கள், மோடி அரசின் உயரதிகாரிகள், விஞ்ஞானிகள், சாமியார்கள் என தில்லி கொலு மண்டப செட் பிராப்பர்ட்டிகள் உதிர்த்த தத்துவங்கள் ஒவ்வொன்றும் வடிவேலுவின் வின்னர் காமெடியை தோற்கடித்து விடும் என்றால் அது மிகையல்ல. அவை அனைத்தையும் ஒருவர் தேடித் தேடி தொகுத்துள்ளார்.

அந்த தொகுப்பில் இருந்து சில வைரத் துளிகள் உங்களுக்காக இங்கே.. 

அனைத்தையும் சர்வ வல்லமை பொருந்திய “தலை” தான் ஆரம்பித்தது : புவிவெப்பமடைதலால் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள் குறித்து பேசிய மோடி, “சீதோஷ்ண நிலை மாறவில்லை. நாம் தான் மாறிவிட்டோம். நம் வீட்டுப் பெரிசுகள் குளிர்காலத்தில் நடுங்குகிறார்கள் இல்லையா… அது அவர்களின் வயதின் காரணமாக நடக்கிறது. வயதானதால் எதிர்ப்பு சக்தி குறைந்து போனதால்தான் குளிர் அதிகமாகத் தெரிகின்றது”

“தலையின்” மற்றொரு முத்து : “கர்ணன் அவனது தாயின் கருப்பையில் இருந்து பிறக்கவில்லை. அப்போதே மரபணு விஞ்ஞானமும், பிளாஸ்டிக் சர்ஜரியும் இருந்தது. அன்றே வினாயகனின் தலையில் யானையின் தலையில் பொருத்தியுள்ளனர். அதே போல் வானவியல் விஞ்ஞானத்திலும் நமது முன்னோர்களுக்கு பெரும் அறிவு இருந்தது”

தலையே ஆடிய பின் வால்கள் சும்மா இருக்குமா?

“பண்டைய இந்தியர்கள் விமானங்களை ஓட்டினர். அவர்கள் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அதே போல் வின்வெளி ஆயுதங்களை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் ஏராளமான ஆதாரங்கள் உண்டு” – இப்படிச் சொன்னவர் சுதர்ஷன் ராவ். இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க முதல்வர் ரமேஷ் போக்ரியால் அசால்ட்டாக அணுகுண்டையே எறிந்து விட்டார். “பல லட்சம் வருடங்களுக்கு முன் (பல லட்சமாம் !?! ) கானாட் என்கிற முனிவர் அணுகுண்டு சோதனை செய்துள்ளார். நமது ஜோசியத்தின் முன் எல்லா அறிவியலும் மண்டியிட வேண்டும்”

சாதாரண பாஜக-வினரின் உடல் முழுக்க மூளையால் நிரம்பியிருக்கும் போது அவர்களின் அறிவியல்துறை அமைச்சர் எப்படி இருப்பார்? “அல்ஜீப்ராவும் பித்தகோரஸ் சூத்திரங்களும் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்த வெளிநாட்டுக்காரர்கள் பெயரைத் தட்டிக் கொண்டு போயிட்டாங்க” என சூளுரைத்துள்ளார் மத்திய அறிவியல் துறை (முன்னாள்) அமைச்சர்  ஹர்ஷ் வர்த்தன்.

படிக்க:
வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !
♦ ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !

பார்ட் டைம் விஞ்ஞானிகளே இப்படி இருக்கும் பார்ட் டைம்களின் ஆட்சியின் கீழ் ஃபுல்டைம் விஞ்ஞானிகளாக இருந்தவர்கள் எப்படி பர்மாமென்ஸ் காட்ட வேண்டும்?

இதோ வருகிறார் ஓய்வு பெற்ற விஞ்ஞானி பி.பி சிங் – “பல இந்திய அறிவியலாளர்கள் பண்டைய இந்தியா அறிவியலில் முன்னேறிய நிலையில் இருந்தது எனக் கருதுகின்றனர். விமானத் தொழில்நுட்பம், ஏவுகணைகள், ராக்கெட்டுகள், மாற்று உயிரின உறுப்பு மாற்று மற்றும் மாற்று உயிரின குழந்தை பிறப்பு மனித குளோனிங்… இப்படி பல விஞ்ஞானங்கள் வளர்ந்திருந்தது” (அதாகப்பட்டது மனித இனமும் பிற விலங்கினங்களும் சேர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்வது; நரசிம்மரைப் போல என்று நாம் ‘புரிந்து’ கொள்ள வேண்டும்)

விமானங்கள் மோடியின் சீடர்களுடைய கற்பனையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பதன் இரகசியம் என்னவென்று தெரியவில்லை – இப்படிச் சொல்வதால் இதை ரஃபேலுடன் நீங்கள் தொடர்புபடுத்திப் புரிந்து கொண்டால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல. விமான தொழில்நுட்பம் நம்முடையது என அமைச்சர்களே சொன்ன பின், விமானப் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் வேறு மாதிரி சிந்திக்க முடியுமா என்ன?

“7000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் விமானங்கள் இருந்தது. விமானத்தின் மூலம் வேறு நாடுங்களுக்கும் கண்டங்களுக்கும் பயணித்துள்ளனர். விமானிகளின் உணவில் எருமைப் பால், பசும்பால், ஆட்டுப்பால் ஆகியன முக்கிய இடம் பிடித்திருந்தது. விமானிகளின் அணிந்த ஜட்டி தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது” – சத்தியமாக இதை நாங்கள் சொல்லவில்லை! இதைச் சொன்னவர் ஆனந்த் போடாஸ் விமானப் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர்.

படிக்க:
ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்
♦ இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !

விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசும் போது இஸ்ரோ இல்லாவிட்டால் நாமும் ஆண்டி இந்தியர்கள் ஆகிவிடுவோமே. எதற்கு வம்பு, இதோ முன்னாள் இஸ்ரோ சேர்மன் மாதவன் நாயர் பேசியதையும் கேட்டு விடுவோம். “வேதங்களில் உள்ள சில சுலோகங்கள் நிலாவில் தண்ணீர் இருப்பதை குறிப்பிடுகிறது. ஐசக் நியூட்டனுக்கு முன்பே ஆர்யபட்டாவுக்கு புவியீர்ப்பு விசை குறித்து தெரியும்”

இவ்வாறானவர்கள் தலைமையில் இஸ்ரோ சிறப்பாக செயல்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பாதார விந்தங்களுக்குக் கீழ் தானே?

“இன்றைக்கு இஸ்ரோ என்ன செய்ததோ அதை அன்றைக்கே பகவான் ஸ்ரீ ராமர் செய்து விட்டார். அவரிடம் எஞ்சினியர்கள் இருந்தனர். அவர் ராம சேது பாலத்தைக் கட்டினார். அதற்கு அனுமான் மட்டுமா… சிறிய அணில் கூட உதவி செய்தது. மலையையே தூக்கி வரும் தொழில்நுட்பம் அன்றைக்கு இருந்துள்ளது” என்கிறார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி.

பகவான் ஸ்ரீராமர் அருள் பெற்ற இஸ்ரோ, விஞ்ஞானத்திற்கான இந்திய ஏஜெண்டு என்றாலும், மேரிமைந்தனின் ஆசிபெற்ற நாசா தானே உலக ஏஜெண்டு? நாசாதானே ஏரியாவில் பெரிய கை? எனவே, எதுவாக இருந்தாலும் அது நாசா உறுதிப்படுத்தியதாக இருந்திடுவது அவசியம்.

“சமஸ்கிருதம் தான் பொருத்தமான மொழி என்று நாசாவே சொல்லி விட்டது. சமஸ்கிருதத்தில் எழுத்துப் பிழை என்கிற பிரச்சினையே கிடையாது (ஏன்னா அதில் எழுத்தே கிடையாது) அது ஒரே போல் தான் ஒலித்தாக வேண்டும். ஏனெனில் அது ஒலி விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது” இந்த தத்துவத்தின் சொந்தக்காரர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

MHRD-Minister-Ramesh-Isaac-Newton
ரமேஷ் போக்ரியால்

இந்த உலகத்தில் பிச்சைக்காரனாக கூட வாழ்ந்து விடலாம், ஆனால் நாசாவாக வாழ்வது அதை விடக் கொடூரமானது. இதோ மற்றொரு அமைச்சர் நாசாவை துணைக்கு அழைக்கிறார் – “நடக்கும் கம்ப்யூட்டர்கள் சாத்தியமாகும் போது அது சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று நாசாவே சொல்லி விட்டது” – ரமேஷ் போக்ரியால் (மோடி 2.0 -வில் மனித வளத்துறை அமைச்சர்).

இதற்குப் பின் மேற்படி ஆசாமி (நாசா) உத்திரத்தில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். போகட்டும். நம்ம தல மோடியின் விழுதுகள் கைவைக்காத இடமே இல்லை. விஞ்ஞானத்தோடு கபடி விளையாடியவர்கள் விவசாயத்தை மட்டும் சும்மா விடுவார்களா என்ன?

“யோக விவசாயம் என்பது விதைகளுக்கு நேர்மறை எண்ணத்தை வழங்கும். ராஜயோகத்தின் மூலம் விதைகளுக்கு அன்பு, அமைதி மற்றும் தெய்வீகத் தன்மையை விவசாயிகள் வழங்க வேண்டும்” – ராதா மோகன் சிங் (மத்திய விவசாயத் துறை அமைச்சர்).

தெய்வீகத் தன்மை பெற்ற விதைகள் விளைந்த பின் குறைந்தபட்ச உத்திரவாதத் தொகையாவது கிடைக்குமா என்பது குறித்து அமைச்சர் ஏதும் பேசவில்லை. ஆனால், யோகம் என்று வந்து விட்டால் நம்ம ரூட்டு தலயின் அடிப் பொடிகளை கையில் பிடிக்கவே முடியாது.

படிக்க:
நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !
♦ ஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !

“யோகாசனத்தால் கான்சர் போன்ற கொடிய வியாதிகள் குணமாகும். இன்னும் ஒரு வருடத்தில் இதற்கான அறிவியல் ஆதாரங்களை அரசு முன்வைக்கும். தொடர்ந்து யோகப் பயிற்சி செய்பவர்கள் கீமோதெரபி செய்து கொள்ள வேண்டியதில்லை” மத்திய அமைச்சர் (ஆயுஷ்) ஸ்ரீபாத நாயக்.

புற்றுநோயை யோகா குணமாக்கா விட்டால்? இருக்கவே இருக்கிறது மாட்டு மூத்திரம். தப்பு… கோமூத்திரம். மாட்டு மூத்திரத்தால் புற்று நோய் குணமாகும் என்று பல அமைச்சர்கள், பல சந்தர்பங்களில், பல விதமாக குறிப்பிட்டுள்ளனர். இதில் வித்தியாசமாக கூவியது யார் என்பதை கண்டு பிடிப்பது சிரமம்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அஷ்வினி சௌபே, மாட்டு மூத்திரம் கொண்டு மருந்து தயாரிக்கும் முயற்சியில் தனது அமைச்சகம் ஈடுபடும் என்று கூறியுள்ளார். “மாடு எங்கள் தாய். அதன் சாணியும் மூத்திரமும் அமிர்தம். அது எல்லா நோயையும் குணப்படுத்தும் போது உங்கள் கைபேசியில் இருந்து வரும் ரேடியேஷனில் இருந்தா காப்பாற்றாது?” என சந்தேகப்படும் ஆண்டி இந்தியர்களைப் பார்த்து ஆத்திரப்படுகிறார் சங்கர்லால் (அகில பாரதிய கௌ சேவா)

மாட்டின் மகாத்மியங்கள் கிண்டக் கிண்ட வந்து கொண்டே இருக்கின்றது. மாட்டு மூத்திரத்தில் தங்கம் எடுக்கும் முயற்சியையே செய்திருக்கிறார்கள் (மஞ்சளாக இருப்பதாலோ என்னவோ!). ஆனாலும் சர்வசக்தி வாய்ந்த பரப்பிரம்மா ஸ்ரீலஸ்ரீ மாட்டையும் அதன் சுச்சாவையும் மீறி சிலருக்கு புற்றுநோய் குணப்படுத்தவே முடியாத நிலைக்குச் செல்வது ஏன் என்றால், “அதெல்லாம் அவர்கள் செய்த பாவங்களின் கர்ம வினை” என்கிறார் அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா. மேற்படியாருக்கு எந்த நேரத்தில் குண்டு பார்சல் போய்ச் சேரும் என்பதை பிரக்யாசிங்கே அறிவார்.

அறிவியலை பிடித்து வந்து மாட்டுத் தொழுவத்தில் கட்டிய பின் அறிவியல் நிலையங்கள் என்ன செய்வதாம்? அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எய்ம்சைச் சேர்ந்த மருத்துவர் அசோக் குமார் விளக்குகிறார் கேளுங்கள். “மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய மையம் ( Indian Council of Medical Research) மகாமிருத்யஞ்சயா மந்திரம் மூளையில் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்த என்ன விதமாக உதவி செய்கிறது என்பதை ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது”

இந்த விசயத்தில் உத்திராகண்ட் மாநில பாஜக அரசு ஒரு படி மேலேயே சென்று விட்டது. “உத்திராகண்ட் அரசு ராமாயனத்தில் ராமன் தன் தம்பி லட்சுமனனை எழுப்ப பயன்படுத்திய சஞ்சீவினி பூதி என்கிற மூலிகையைத் தேடிக் கண்டுபிடிக்க 3.7 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது” என்று அறிவித்துள்ளார் அம்மாநில அமைச்சர் ஸ்ரீபாத நாயக்.

இத்தனை செலவு செய்து ராமாயன மூலிகைகளை எல்லாம் தேடிப் பீராய்ந்து மருந்து கண்டுபிடித்த பின் அதையெல்லாம் அம்பானிக்கும் அதானிக்குமா கொடுக்க முடியும்? மக்களுக்குத் தானே? ஆனால் மக்களுக்கு இந்த மருந்துகளைப் பரிந்துரைக்க மருத்துவர்கள் மறுத்து விட்டால்? “சில அலோபதி மருத்துவர்கள் ஆயூர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுருத்துகின்றனர். இவர்களெல்லாம் தேச விரோதிகள்” என எச்சரிக்கிறார் அதே அமைச்சர் ஸ்ரீபாத நாயக்.

இதற்கு மேல் வரக் கூடிய தத்துவ முத்துகளை செறிக்கும் ஆற்றல் இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் விரல்களுக்கே இல்லை. “டார்வினின் பரிணாம தத்துவம் தவறு. ஏனெனில் எங்க ஆயா காலத்துல குரங்கு மனிதக் குழந்தையைப் பெற்றெடுத்ததை யாரும் பார்க்கவில்லை”, “நியூட்டனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மகுப்தா புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்து விட்டார்” (இது ராஜஸ்தான் கல்வித்துறை மந்திரி சொன்னது). “மகாபாரதத்தில் இண்டெர்நெட்” (இது திரிபுரா முதல்வர் பிப்லப்தேவ் சொன்னது) – இப்படி பல ஸ்பெசல் அயிட்டங்கள் உள்ளன.

மன உறுதி கொண்டவர்கள் மேலே வழங்கப்பட்டிருக்கும் டிவிட்டர் இணைப்பைத் திறந்து படித்து உய்யலாம்.

– சாக்கியன்

ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

0

கலையரசன்

ஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து?

முன்னாள் பிரிட்டிஷ் கால‌னியான‌ ஹாங்காங் 1997 -ம் ஆண்டு சீனாவிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்ட‌து. அப்போது ஹாங்காங் தொட‌ர்ந்தும் த‌னித்துவ‌ம் பேணுவ‌த‌ற்கு சீனா ச‌ம்ம‌தித்த‌து. அத‌னால் சீனாவுக்கும் இலாப‌ம் கிடைத்த‌து. அப்போது தான் சீனா முத‌லாளித்துவ‌ உல‌கில் காலடி எடுத்து வைத்திருந்த‌து.

உல‌கில் பெருமள‌வு மூல‌த‌ன‌ம் புழ‌க்க‌த்தில் உள்ள‌ நாடுக‌ளில் ஹாங்காங்கும் ஒன்று. ஆக‌வே சீனாவுக்கு அருகில் உள்ள‌ ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ள் சீன‌ ச‌ந்தையில் முத‌லிட‌ ஓடி வ‌ருவார்க‌ள். அத‌னால் சீன‌ பொருளாதார‌ம் வ‌ள‌ர்ச்சி அடையும் என்று க‌ண‌க்குப் போட்ட‌து. அப்ப‌டியே ந‌ட‌ந்த‌து. அது ம‌ட்டும‌ல்ல‌, ம‌று ப‌க்க‌மாக‌ சீன‌ அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ள் கூட‌ ஹாங்காங் ப‌ங்குச் ச‌ந்தையில் முத‌லிட்டு இலாப‌ம் ச‌ம்பாதித்துள்ள‌ன‌.

hongkongத‌ற்போது அங்கு ந‌ட‌க்கும் ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றி எம‌க்கு ஊட‌க‌ங்க‌ள் ஒரு ப‌க்க‌ச் சார்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌. இது “குற்ற‌வாளிக‌ளை நாடுக‌ட‌த்தும் ச‌ட்ட‌ம்” தொட‌ர்பான‌ அர‌சிய‌ல் பிர‌ச்சினை என்ப‌து ஒரு ப‌குதி உண்மை ம‌ட்டுமே. அது அல்ல‌ முக்கிய‌ கார‌ண‌ம். உண்மையில் குற்ற‌வாளிக‌ளை நாடுக‌ட‌த்துவ‌தை எந்த‌ நாடும் த‌வ‌றென்று சொல்ல‌ப் போவ‌தில்லை. ஹாங்காங் ம‌க்க‌ளும் அந்த‌ள‌வு முட்டாள்க‌ள் அல்ல‌.

உண்மையான‌ பிர‌ச்சினை வேறெங்கோ உள்ள‌து. ஹாங்காங்கில் இன்று வ‌ரையில் பிரிட்டிஷ் கால‌னிய‌ கால‌ ச‌ட்ட‌ம் தான் அமுலில் உள்ள‌து. Common Law என்ற‌ பிரிட்டிஷ் ச‌ட்ட‌ம் நிதித் துறையில் அதிக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதிப்ப‌தில்லை. laisser faire (பிரெஞ்சு சொல்லின் அர்த்த‌ம் “செய்ய‌ விடு”) எனும் பொருளாதார‌ சூத்திர‌த்தின் அடிப்ப‌டையில், வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ள் அர‌சு த‌லையீடு இன்றி வ‌ர்த்த‌க‌ம் செய்து அதிக‌ இலாப‌ம் ச‌ம்பாதிக்க‌லாம். சுருக்க‌மாக‌, குறுக்கு வ‌ழியில் ப‌ண‌க்கார‌ராக‌ வர விரும்புவோருக்கு ஹாங்காங் ஒரு சிற‌ந்த‌ நாடு.

ஹாங்காங் அதி தாராள‌வாத‌ பொருளாதார‌த்தை கொண்டுள்ள‌தால் சாத‌க‌ம் ம‌ட்டும‌ல்ல‌ பாத‌க‌மும் உண்டு. அத‌ன் அர்த்த‌ம் அங்கு ந‌ட‌க்கும் மூல‌த‌ன‌ப் பாய்ச்ச‌லையும் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாது. யார் எத்த‌னை கோடி டால‌ர் ப‌ண‌ம் ச‌ட்ட‌விரோத‌மாக‌ ச‌ம்பாதித்தார்க‌ள்? அதை எங்கே ப‌துக்கி வைக்கிறார்க‌ள்? இந்த‌க் கேள்விக‌ளுக்கு விடை தெரியாது.

படிக்க:
காஷ்மீரிகளை ஒடுக்காதே ! பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் !
♦ அடைக்கலம் தேடி ஹாங்காங்கிலிருந்து வெளியேறினார் ஸ்னோடன் !

இத‌னால் சீன‌ அர‌சால் புதிய கட்டுப்பாடுகள் போடப் பட்டன. நிதி மூல‌த‌ன‌ம் ஹாங்காங்கை விட்டு வேறு நாடுக‌ளுக்கு செல்வ‌தை க‌ட்டுப்ப‌டுத்தும் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் ஒரு ப‌குதி தான் குற்ற‌வாளிக‌ளை நாடு க‌ட‌த்தும் ச‌ட்ட‌ம். அதாவ‌து கோடிக்க‌ண‌க்கில் ப‌ண‌ மோச‌டி செய்த‌ க‌ம்ப‌னி நிர்வாகியும் குற்ற‌வாளி தான். புதிய‌ ச‌ட்ட‌த்தினால் அப்ப‌டியான‌ ஊழ‌ல்பேர்வ‌ழிக‌ள் நிறைய‌ அக‌ப்ப‌டுவார்க‌ள் என்ற‌ அச்ச‌ம் எழுந்த‌து. அத‌ன் விளைவுதான் அங்கு ந‌ட‌க்கும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ள்.

அநேக‌மாக‌ எல்லா பெரிய‌ வ‌ங்கி நிறுவ‌ன‌ங்க‌ளும் ஹாங்காங்கில் த‌ள‌ம் அமைத்துள்ள‌ன‌. அதே போன்று பெரிய‌ அக்க‌வுன்ட‌ன்ட் நிறுவ‌ன‌ங்க‌ளும் உள்ள‌ன‌. அவை அங்கு முத‌லிட‌ம் வ‌ரும் ப‌ன்னாட்டு கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு ஆலோச‌னைக‌ள் வ‌ழ‌ங்குகின்ற‌ன‌. ஆனால், அவை அதை ம‌ட்டும் செய்ய‌வில்லை. அர‌சிய‌லிலும் த‌லையிடுகின்ற‌ன‌ என்ப‌த‌ற்கு அங்கு ந‌டக்கும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளே சாட்சிய‌ம்.

கார்ப்ப‌ரேட் க‌ம்ப‌னிக‌ள் நினைத்தால் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை தெருவுக்கு கொண்டு வ‌ந்து ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌ வைக்க‌ முடியும். அத‌ற்கு ஆதார‌மாக‌ KPMG, EY, Deloitte, PwC ஆகிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் வெளியிட்ட‌ ஆர்ப்பாட்ட‌க்கார‌ரை ஆத‌ரிக்கும் விள‌ம்ப‌ர‌ங்க‌ளை குறிப்பிட‌லாம். இது அங்கு எந்த‌ள‌வு தூர‌ம் கார்ப்ப‌ரேட் க‌ம்ப‌னிக‌ள் அர‌சிய‌லில் ஈடுப‌டுகின்ற‌ன‌ என்ப‌தை நிரூபிக்கின்ற‌து. இது குறித்து சீன அர‌சு க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌ பின்ன‌ர் த‌ம‌து ஆதரவை வெளிப்ப‌டையாக‌ காட்டிக் கொள்வ‌தில்லை.

சீன‌ அர‌சுக்கும், ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் இடையிலான‌ பிர‌ச்சினையில், அரசின் அழுத்த‌ம் அதிக‌ரிக்கும் போதெல்லாம் “ம‌க்க‌ள் எழுச்சி” ஏற்ப‌டுகிற‌து. உதார‌ண‌த்திற்கு, ஹாங்காங் விமான‌ சேவைக‌ள் நிறுவ‌ன‌மான‌ க‌தே ப‌சிபிக் தலைவ‌ர் ப‌த‌வி வில‌கினார். அந்த‌ நிறுவ‌ன‌த்தின் ஊழிய‌ர்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌ நேர‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லை என்று அர‌சு குற்ற‌ம் சாட்டி இருந்த‌தே ப‌த‌வி வில‌க‌லுக்கு கார‌ண‌ம். அதைத் தொட‌ர்ந்து எங்கிருந்தோ வ‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் விமான‌ நிலைய‌த்தை முற்றுகையிட்டு விமான‌ப் போக்குவ‌ர‌த்தை சீர்குலைத்த‌ன‌ர்.

முன்னைய‌ ச‌ம்ப‌வ‌த்தை இருட்ட‌டிப்பு செய்து விட்டு பின்னைய‌தை ப‌ற்றி ம‌ட்டுமே ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ள் தெரிவித்த‌ன‌. அதே மாதிரி ஹாங்காங்கில் சீனாவுக்கு ஆத‌ர‌வான‌ ம‌க்க‌ள் ந‌ட‌த்தும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளும் ஊட‌க‌ங்க‌ளில் காட்ட‌ப்ப‌டுவ‌தில்லை. அது ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் கூட‌ த‌டைசெய்ய‌ப்ப‌டும் என்று ட்விட்ட‌ர் ப‌கிர‌ங்க‌மாக‌ அறிவித்திருந்த‌து.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் ! தமிழகமெங்கும் கொண்டாட்டம் !

ந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு 17.09.2019 அன்று திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா தலைமை தாங்கினார். கலைக்குழு பாடகர் தோழர் கோவன் அவர்கள் பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். பெரியாரின் புகழை உயர்த்தியும் இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையில் இந்தியா முழுவதும் பாசிசத்தை கட்டவிழ்த்து விடும் மோடி, பா.ஜ.க, RSS கும்பல்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

அதை தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முருகானந்தம் மற்றும் வழக்கறிஞர் ஆதி தலைமையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ரெங்கநாதன் மற்றும் பாலகுரு ஆகிய இருவரையும் அழைத்து தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர்.

பின்னர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருவரும் பெரியார் உருவச்சிலை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைஞர் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி படித்த நாங்கள் அர்ச்சகராக முடியாமல் திட்டமிட்டே அ.தி.மு.க அரசால் பழிவாங்கப்பட்டோம்.

படிக்க:
கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள் போராட்டம் !
♦ வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

அன்றிலிருந்து இன்றுவரை கோயில்களில் அர்ச்சகராவதற்கு பல்வேறு வழக்குகள் நடத்தி வருகின்றோம். எங்களுக்கு அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்கவில்லை. அதை கண்டித்துதான் நாங்கள் இப்போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் என்று கூறினார்கள். இம்மாணவர்களுக்கு ஆதரவாக ம.க.இ.க அதன் தோழமை அமைப்புகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்தோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வு அங்கு தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை போட வந்திருந்த பல்வேறு கட்சிகள் அமைப்புகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

***

தஞ்சையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தோழர்கள் !

செப்டமபர் 17, தஞ்சையில் அதிமுக, பிஜேபி தவிர எந்த அமைப்பிற்கும் கூட்டம் போட அனுமதி கிடையாது. அப்படியே கிடைத்தாலும் வழக்கு உறுதி. அதனால் கூட்டங்கள், ஆர்பாட்டங்களை சமீபகாலமாக தஞ்சையில் அதிகம் பார்க்க முடிவதில்லை. இரயிலடியில் காவல்துறையின் பாதுகாப்பில் இருபத்தைந்து பேர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்ததை பார்த்தபடி மக்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

கருப்பு சட்டை அணிந்தவர்கள் பழைய பேருந்து நிலையம் நோக்கி நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று கொண்டிருந்தனர். பெரியார் சிலையை சுற்றி நூற்றுக்கணக்கில் கருஞ்சட்டைகள் மற்றும் மக்கள் கூட்டம். அந்நிகழ்வில் இளைஞர்கள், மாணவர்களின் பங்கேற்பு மகிழ்சியூட்டியது.

மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், தஞ்சை ஒருஙகிணைப்பாளர் தோழர் தேவா, மக்கள் கலை இலக்கியக் கழக தஞ்சை கிளைச்செயலர் தோழர் இராவணன் உள்ளிட்ட தோழர்களோடு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பார்பன மதவெறி பாசிசத்திற்கெதிராக விண்ணதிர முழக்கமிட்டபடி வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பிஜேபி -யினர் நீங்கலாக காங்கிரஸ் கடசியினர் உட்பட அனைத்துக் கட்சியினர், அமைப்பினர் என அணிஅணியாக திரண்டுவந்து பெரியாருக்கு மாலை அணிவித்து பெரியாரைப் போற்றி முழக்கமிட்டனர். இன்றைய நிகழ்ச்சிகள் தஞ்சையின் நிறம் அவ்வளவு எளிதாக காவியாக மாறிவிடாது என்ற நம்பிக்கையை பறைசாற்றியது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.

படிக்க:
மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !
♦ 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !

***

அம்பேத்கர் பெரியாரைப் படிப்போம் ! சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் !

தந்தை பெரியாரின் 141-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் பெரியாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதோடு மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கக் கூடிய வகையில் நீட் தேர்வு மற்றும் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என கல்வியில் இருந்து பெரும்பான்மை மாணவர்களை விரட்டவும்; மீண்டும் குலக்கல்வியை திணிக்கும் காவி கும்பலுக்கு எதிராக அம்பேத்கர் பெரியார் பற்றி படிப்போம் என உறுதியேற்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110

***

சாதி ஒழிக்க சபதமேற்போம் ! மதுரையில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா !

பெரியாரின் 141-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அம்பேத்கர் சிலையில் இருந்து பேரணியாக புறப்பட்ட தோழர்கள், சாதியை ஒழிக்க, சமத்துவம் காக்க, மதவெறி மாய்க்க, மடமை மாய்க்க, பகுத்தறிவு வளர்க்க, பெண்ணடிமை தீர, மொழி உரிமை காக்க, மனுநீதி ஒழிக்க பெரியார் வேண்டும்! என முழக்கமிட்டபடி பெரியார் சிலைக்கு வந்தடைந்து பெரியாருக்கு மாலை இட்டு, இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகளை முறியடிக்க சபதம் ஏற்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
மதுரை.