Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 341

தமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்

அணுக்கழிவுகள் – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை –
நியூட்ரினோ – புதிய கல்வி கொள்கை

தமிழகத்தை நாசமாக்காதே !

வேண்டுகோள் அல்ல, தமிழக மக்கள் விடுக்கும் எச்சரிக்கை !

பொதுக்கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி

நாள் : 19.08.2019, திங்கள்கிழமை, மாலை 5.30 மணிக்கு.
இடம் : நடராஜ் திரையரங்கம் அருகில், சுப்பிரமணியபுரம் காவல்நிலையம் எதிரில்,
             வசந்த நகர், மதுரை.

தலைமை :

தோழர் குருசாமி,
மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

வரவேற்புரை :

தோழர் மருது,
மதுரை ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

சிறப்புரை :

வழக்கறிஞர் தோழர் ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

கருத்துரைப்போர் :

தோழர் விஜயராஜன்,
மதுரை மாநகர் மாவட்டச் செயலர், சி.பி.ஐ.(எம்).

தோழர் மீ.த. பாண்டியன்,
தலைவர், தமிழ்தேச மக்கள் முன்னணி.

பேராசிரியர் முரளி,
தேசியச் செயலர். மக்கள் சிவில் உரிமைக் கழகம்.

வழக்கறிஞர் இன்குலாப்,
மதுரை தெற்கு மாவட்டச் செயலர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் நாகை. திருவள்ளுவன்,
நிறுவனத் தலைவர், தமிழ்ப்புலிகள்.

வழக்கறிஞர் தியாகராஜன்,
உயர்நீதிமன்றம். மதுரை.

தோழர் மா.பா. மணிஅமுதன்,
மதுரை மாவட்டச் செயலர், திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் சிறிதர் நெடுஞ்செழியன்,
நாணல் நண்பர்கள், மதுரை.

நன்றியுரை :

தோழர் சரவணன்,
மக்கள் அதிகாரம், மதுரை.

அனைவரும் வாருங்கள்! தமிழகத்தை நாசமாக்கும் பேரழிவு திட்டங்களைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!

தகவல்:
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு – 98438 73975
98943 12290


இதையும் பாருங்க :

பசுமை எங்கும் அழிகிறதே ! இனி பாலைவனமோ தமிழகமே | Kovan Song

மக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே ! உசிலை பொதுக்கூட்டம்

‘தமிழகத்தை நாசமாக்காதே’ என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 6, 2019 அன்று உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில், மக்கள் அதிகாரம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இப்பொதுக்கூட்டதிற்கு மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார்.

♦ திரு. மூவேந்திரன், உசிலை தி.மு.கழகப் பேச்சாளர்
♦ தோழர் வழக்கறிஞர் ராஜன், உசிலை சி.பி.எம்
♦ திரு. தென்னரசு, (வி.சி.க, விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணை செயலாளர்)
♦ திரு. பச்சைச்துண்டு பெருமாள், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம்
♦ தோழர்.சினேகா, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மதுரை
♦ தோழர்.ஆசை, ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், உசிலை

– ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இக்கூட்டத்தில் தமிழகத்தை நாசமாக்கிவரும் அழிவுத் திட்டங்களான ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு, 8 வழிச்சாலை மற்றும் நியூட்ரினோ திட்டங்களைப் பற்றியும், புதிய கல்விக் கொள்கை 2019 பற்றியும் அவற்றால் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் விளக்கிப் பேசப்பட்டது.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

படிக்க:
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !
♦ டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை

இக்கூட்டத்தில், சிறப்புரை ஆற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே காவி பாசிஸ்டுகள் திட்டமிட்டு நாசகர திட்டங்களை அமல்படுத்தி வருவதையும், காஷ்மீரின் மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்பின் காரணமும் கார்ப்பரேட் நலனுக்கானதே என்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும், ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பும் நிலைகுலைந்துள்ளதை சுட்டிக்காட்டி, இதை சமாளிக்க முடியாமல் கார்ப்பரேட்-காவி கும்பல் பாசிசத்தை, நாட்டு மக்கள் மேல் ஏவுவதையும் அம்பலப் படுத்தினார்.  இந்தக் காவி-கார்பரேட் பாசிஸ்டுகளை மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்கள் மூலம் முறியடிக்க வேண்டுமென அறைகூவினார்.

திரளான மக்கள் இறுதிவரை கலையாமல் நின்று கூட்டத்தை கவனித்தனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்
உசிலம்பட்டி.

காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ?

7

த்திவரதர் தரிசனத்தில் சராசரி மக்கள் சிலரை வி.வி.ஐ.பி வரிசையில் அனுமதித்ததாக ஒரு போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு கொதிக்கும் கலெக்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்தது. கலெக்டரிடம் போலீஸ்காரர் மன்னிப்பு கேட்டு கெஞ்சும் காட்சியும் அதில் வருகிறது. மத உணர்வு நிரம்பிய ஒருவருக்கு கலெக்டரின் செயல் தவறில்லை என்று தோன்றலாம். ஆனால் அடிப்படை மனித அற உணர்வு நிரம்பிய ஒருவருக்கு நிச்சயம் ஒரு சிறு தவறுக்கு வழங்கப்படும் அதிகப்படியான தண்டனையாகத்தான் அது தோன்றும்.

காமிராக்களுக்கு மத்தியில், போலீசை மிரட்டும் காஞ்சிபுரம் கலெக்டர்.

அந்த போலீஸ்காரரின் செயலுக்கு அவரை கூனிக்குறுக செய்து அவமானப்படுத்தி உள்ளார், கலெக்டர். உச்சபட்சமாக அவருக்கு வழங்கப்படும் தண்டனையை அங்கேயே அறிவித்து மிரட்டுகிறார். கலெக்டரின் ஆவேசம் வீடியோ பதிவு செய்யப்பட்டு பின்னர் அது அதிகளவுக்கு பகிரப்படுவதால் கூடுதல் அவமானப்படுத்தலை அந்த போலீஸ்காரர் சந்தித்து வருகிறார்.

ஓரிரு வாரங்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி  மாணவர்கள் சிலர் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் மாணவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கையை உடைத்தது போலீஸ். பின்னர் மாவு கட்டு போடப்பட்ட கரங்களுடன் மாணவர்கள் தோன்றும் வீடியோ காட்சி மாலையில் வெளியானது. சில சமூக வலைதள கணக்காளர்கள் குதூகலமாக அதை பரப்பினார்கள். சமூக வலைதளத்தில் அது பேசுபொருளாகவும் ஆனது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சமூக ஒழுங்கை மீறுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி விடுகையாக அது கருதப்பட்டது.

போலீசு ரவடிகளால் கை உடைக்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.

இந்த தண்டனைகளின் உள்ளியல்பு 18–ம் நூற்றாண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழைய தண்டனை முறையை ஒத்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரத்தை மக்கள் முன்னால் காட்சிப்படுத்துவதன் மூலம் மொத்த சமூகமும் குற்றமிழைக்க காத்திருப்பது போன்ற ஒரு எண்ணத்தை அது ஏற்படுத்துகிறது. தனக்கு விதிக்கப்பட்ட சமூக அந்தஸ்தை மீற நினைத்தால் என்ன நடக்கும் என்ற விளைவு பற்றிய எச்சரிக்கையை விடுக்கிறது. என்.டி.டி.வி வெளியிட்ட செய்தியின்படி தள்ளாட்டம் கொண்ட ஒரு முதிர்ந்த ஜோடியை தான் வி.வி.ஐ.பி வரிசையில் அந்த போலீஸ்காரர் அனுமதித்துள்ளார். நல்ல சமாரியன் செயல்தான் அது. அதற்கு சனாதன தர்மத்தில் எந்த மதிப்பும் இல்லை.

பெண் அல்லது புலி? நூலின் முகப்பு அட்டை.

இயேசு சிலுவையில் ஏற்றப்பட்டது, சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதும் கூட மக்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட தண்டனை நிறைவேற்றம்தான். மத்தியகால தண்டனை முறையை நகைக்கும் ஒரு அங்கத சிறுகதையாக ஃபிராங்க் ஆர். ஸ்டாக்டனின் ‘பெண் அல்லது புலி?’–ஐ (The Lady or the Tiger) கொள்ளலாம். ஒரு அரைக்காட்டுமிராண்டி மன்னன் தனது ஆளுகைக்கு உட்பட்ட குடிமக்கள் செய்யும் தவறுகளை வித்தியாசமான முறையில் தீர்த்து வைப்பான். குற்றம் சாட்டப்பட்ட நபர் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். பின்னர் அந்த நபரின் வயது மற்றும் சமூக தகுதிக்கேற்ப ஒரு பெண் தேடப்படுவார். குற்றத்தின் தீவிரத்துக்கேற்ப புலியும் கொண்டு வரப்படும்.

தண்டனை நாளின் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு மைதானத்துக்கு அழைத்து வரப்படுவார். மைதானத்தில் இரண்டு அறைகள் இருக்கும். சுற்றிலும் மக்கள் திரண்டிருப்பர். குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு அறைகளில் ஒன்றை திறக்க வேண்டும். அவரின் அதிருஷ்டத்தை பொறுத்து பெண்ணோ? புலியோ? அறையிலிருந்து வெளிப்படுவார்/வெளிப்படும். ஒரு வேளை பெண் வெளியே வந்தால் அவளை மணந்து கொள்ள உரிமை உண்டு. அது குற்றமின்மையின் அறிவித்தலாக கொள்ளப்படும். ஒரு வேளை புலி வெளிப்பட்டால் அவருடைய ‘குற்றத்துக்கு’ உடனடி மரண தண்டனை கிடைத்ததாக கொள்ளப்படும். கூடியிருக்கும் மக்கள் இரண்டு விதமான தண்டனை அமலாக்கத்துக்கும் உரிய உணர்ச்சி வினையாற்றலை ஆற்றி விட்டு கலைந்து செல்வர்.

பெண் அல்லது புலி? கதையைச் சித்தரிக்கும் ஓவியம்.

இது குழந்தைகளுக்கு சொல்லப்படும் விளையாட்டு கதையாக தோன்றினாலும் பதினெட்டாம் நூற்றாண்டு வரை மக்கள் முன்னிலையில்தான் கைதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கான பதிவுகள் இருக்கின்றன. 1757–ம் ஆண்டு ஃபிரான்சில் ராபர்ட் டேமியன்ஸ் என்ற முன்னாள் ராணுவ வீரர் 15–ம் லூயி மன்னனை நோக்கி ஓடி சென்று உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி சிறு காயத்தை ஏற்படுத்தினார். உடனடியாக கைது செய்யப்பட்ட டேமியன்ஸ் மீது இரண்டு விதமான கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ராஜ கொலை (regicide) மற்றும் தந்தை கொலை — parricide (மன்னன் குடிமக்களின் தந்தை என்பதால்) — குற்றச்சாட்டுகள் அவை.

தண்டனை நாளின் போது டேமியன்ஸின் கரங்களில் எரியும் மெழுகை ஏந்த செய்து பாரீஸ் தேவாலயத்திலிருந்து மரண கம்பம் வரை கட்டை வண்டியில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு மரண மேடையில் வைத்து அவரது கை, தொடை மற்றும் நெஞ்சு பகுதிகளிலிருந்து கூர்மையான இடுக்கி ஒன்றின் மூலம் சதை உருவப்பட்டது. துளையிடப்பட்ட உடல் பாகங்களில் சூடான எண்ணெய், கந்தகம் மற்றும் சுடுபசை ஆகியவை ஊற்றப்பட்டன. அதன் பின்னர் நான்கு குதிரைகள் அழைத்து வரப்பட்டன. மரண கம்பத்தில் கட்டிவைக்கப்பட்ட அவரது உடலிலிருந்து தசைநார்களை உருவும் பொருட்டு நான்கு குதிரைகளையும் அவர் உடலோடு பிணைத்து பின்னர் இயக்கப்பட்டன. அப்போது அவரது உடல் பாகங்கள் துண்டாயின. இவை அனைத்தும் மக்கள் முன்னிலையில் அரங்கேறின என்பது முக்கியமானது. குற்றம் புரியும் எண்ணத்திலிருந்து விடுபடும் ஆன்ம துப்புரவாக்கலாக அது அப்போது கருதப்பட்டது.

ஃபிரான்சில் ராபர்ட் டேமியன்ஸ் – உடலில் நான்கு குதிரைகளைக் கட்டி நாலாபுறமும் சிதறியடிக்கப்படும் கொடூரத் தண்டனையை விவரிக்கும் கோட்டோவியம்.

‘பெண் அல்லது புலி?’ சிறுகதையிலும் தண்டனை அமலாக்கத்துக்கு பிறகு கூடியிருக்கும் மக்கள் தங்கள் மனஅழுக்குகளை தூய்மைப்படுத்தி விட்டுச் செல்வர். மாணவர்களின் கைகளை உடைக்கும் போலீஸின் நடவடிக்கையை ஆதரிக்கும் நபர்கள்  ‘தப்பு செய்யணும் என்ற எண்ணம் இனிமேல் யாருக்கும் வராதென்று’ கூறி நியாயப்படுத்துகின்றனர்.

ஐரோப்பாவில் மத்தியகால காட்டுமிராண்டி தண்டனை முறைகள் பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு படிப்படியாக கைவிடப்பட்டன. தண்டனை வழங்கல் நான்கு முக்கிய அளவுகளில் மாற்றம் அடைந்தது. 1) மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது  ஒழிக்கப்பட்டது. அது தனியாக, மக்களின் உணர்ச்சியை கிளறாத நடவடிக்கையாக பார்த்துக் கொள்ளப்பட்டது. 2) குற்றவாளியின் சமூகப் பொருளாதார மற்றும் வளர்ப்பு சூழல் தண்டனை வழங்கலின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது. 3) தண்டனையை நிறைவேற்றுவது நீதிபதியின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அதற்கென்று பணியமர்த்தபட்ட ஊழியர்கள், மருத்துவர்கள், உளவியலாளர்கள் என்று பல துறையினருடன் பகிரப்பட்டது. 4) தண்டனையின் நோக்கம் பழி வாங்குவது என்றில்லாமல் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு என்பதாக மாற்றப்பட்டது.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கொண்டாடும் இந்துமதவெறியர்கள்.

தற்போதைய நவீன கால தண்டனை முறையில் போலீஸ் வதை என்பது மறைமுகமாக தொடர்ந்தபடியேதான் உள்ளது. அவற்றின் கொடூரம் பற்றிய புரிதல் அனைவரின் நினைவுகளிலும் இருக்கிறது. என்றாலும் மக்கள் இந்த தண்டனை வழங்கலின் ஒரு பகுதியாக தங்களை இணைத்து சிந்திப்பது ஒரு புதிய போக்காக சமீபகாலத்தில் இருந்து வருகிறது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை பஜ்ரங் தள் மற்றும் ஏபிவிபி அமைப்பினர் கொண்டாடித் தீர்த்தனர். சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்களை  மட்டுமே முன்வைத்து அஃப்சல் குருவுக்கு எதிராக தீர்ப்பெழுதிய நீதிபதி சொன்னது, ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சி இந்த வழக்கில் மரண தண்டனை மூலம்தான் திருப்தியுறும்’ என்றார்.

இயேசுவும் கூட சமூகக் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்தத்தான் கொல்லப்பட்டார் என்று கூற முடியும். ரோம ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து இயேசுவை விடுவிக்கவே விரும்பினான். இயேசுவிடம் எந்த குற்றத்தையும் அவன் காணவில்லை. அவனது மனைவியும் கூட இயேசு விடுவிக்கப்படுவதையே விரும்பினாள். ஆனால் அதற்கு மாறாக இருந்தது மதவாதிகளின் கூச்சல். மதவாதிகள் மற்றும் அவர்களால் தூண்டப்பட்ட மக்கள் முன்பு பிலாத்து ஒரு தெரிவுரிமையை வைத்தான். பஸ்கா பண்டிகைக்கு ஒருவரை விடுவிக்க வேண்டும். அதற்கு யாரை விடுவிக்கலாம் — இயேசுவையா? அல்லது குற்றங்கள் மிகுபுரிந்த பாரபாசையா? என்று முடிவு செய்யும்படி கோரினான். பாரபாசை விடுவிக்கவே கூடியிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இயேசுவை சிலுவையில் அறைய விரும்பும் மதவாதிகளின் கோரிக்கைக்கு பிலாத்து வேறு வழியில்லாமல் இணங்கினான்.

படிக்க:
எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !
காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !

மதப் பெரும்பான்மைவாதத்தின் பாதிப்புக்கு இந்திய சமூகத்தின் கூட்டு மனசாட்சி ஆளாகி வருவது சிறுபான்மையின மக்கள், தலித் மக்கள் மற்றும் சமூகப் படிநிலையில் கீழே இருக்கும் மக்கள் பிரிவினரின் நல்வாழ்வுக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கிறது. அத்தி வரதர் தரிசனத்தில் வி.வி.ஐ.பி. வரிசை மீதான அதீத அக்கறை, மத்தியில் இருக்கும் மதவாத ஆட்சியாலும், மாநிலத்தில் இருக்கும் பொம்மை ஆட்சியாலும் கலெக்டருக்கு வருகிறது. ஆட்சியாளர்கள் எவரேனும் வருகை புரியும்போது அவர்களுக்கு சிறிது அசவுகரியமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்விலிருந்து அது ஆவேசமாக பீறிட்டு வெளி வந்துள்ளது.

உ.பி. அரசால் பழிவாங்கப்பட்ட, குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான்.

அந்த போலீஸ்காரர் ஓர் இஸ்லாமியராக இருந்தால் அவருடைய ‘கடமை மீறல்’ மாபெரும் சதியாக மாற்றப்பட்டிருக்கும். விசாரணை செய்யப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டிருக்கலாம். உ.பி.யின் கோராக்பூர் மருத்துவமனையில் 2017–ம் ஆண்டு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் குழந்தைகளின் உயிர்களை அப்போது காப்பாற்ற போராடிய குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கானுக்கு ஏற்பட்ட நிலைமை எண்ணிப் பார்க்கத்தக்கது.

மாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது. ‘பெண் அல்லது புலி?’ சிறுகதையில் மன்னனை அரைக்காட்டுமிராண்டி என்று கதாசிரியர் குறிப்பிட்ட இடத்தில் அது சற்று நேர்மறை தன்மையில்தான் இருந்தது. தூரத்து லத்தீன் மற்றும் கிரேக்க தாக்கத்தால் கவித்துவ நீதியின் மேல் மன்னனுக்கு ஏற்பட்ட தாகத்தின் காரணமாக கொடூரமான தண்டனை முறையிலும் வெளிப்பட்ட சில நற்பண்புகளின் அடிப்படையில் அவ்வாறு அழைக்க முற்பட்டார்.

கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறாமல் இருக்க வயதான தம்பதியரை காலியாக இருந்த வி.வி.ஐ.பி வரிசையில் அழைத்து சென்ற போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்வதாக மிரட்டும் கலெக்டரிடம் என்ன அற உணர்வு அல்லது நேர்மறை அம்சம் உள்ளது?

ராஜ்

நூல் அறிமுகம் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி

வியட்நாம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியென் பியென்பூ போர் ஒரு திருப்புமுனையான கட்டம். பிரெஞ்சுக்கு எதிரான விடுதலைப் போரில் 1945-ல் வியட்நாமின் பெரும் நிலப்பரப்பை வியட்நாமின் மக்கள் படை கைப்பற்றிவிட்டது. தென் வியட்நாமின் ஒரு சில பகுதிகளே எஞ்சியிருந்தன. ஆனால் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஹோசிமின் தலைமையிலான அரசை அங்கீகரிக்க மறுத்து வந்தது. தொடர்ந்து வியட்நாமை தன் காலனியாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

1953-ம் ஆண்டு நவார்ரே திட்டம் என்ற இராணுவ நடிவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்தியது. பதினெட்டே மாதங்களில் வியட்நாம் மக்கள் படையை அழித்து ஒழிப்பதற்காகத் தீட்டப்பட்ட திட்டம் இது. அதற்காக பெரும் எண்ணிக்கையில் தனது படைகளை தியென் பியென் பூ மலைப்பள்ளத்தாக்குப் பகுதியில் குவித்தது. இந்தத் திட்டத்தை ஹோசிமின்னும் அவரது ராணுவத்தளபதியுமான தளபதி கியாப்பும் எவ்வாறு முறியடித்தனர் என்பதை விவரிக்கும் நூல் இது. (பதிப்புரையிலிருந்து…)

இந்நூலாசிரியர், பிரெடெரிக் ஃஎப். கிளெய்ர்மோன்ட் ஐ.நா. வில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். புகழ்பெற்ற பொருளாதார நிபுணர். இவர் தனது அலுவலகப் பணி தொடர்பாக வியட்நாம் சென்றிருந்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளிவந்த நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறது, தமிழோசை பதிப்பகம்.

” … இது ஓர் அந்தரங்கக் குறிப்பு. இந்தோ சீனாவில் நான் தங்கியிருந்ததுடன் தொடர்பு உடையது. அப்போது ஏற்பட்ட நெருக்கமான ஓர் உறவு குறித்த நான் ஒரு சிறிய விளக்கம் தர விரும்புகிறேன்.

சர்வதேச கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுவின் ஓர் உறுப்பினனாக நான் இந்தோ சீனாவுக்குச் சென்றிருந்தேன். இது நான் கூறவரும் கதையின் ஒரு பகுதி.

இரண்டாயிரமாவது ஆண்டில் காலமான என் வாழ்க்கைத் துணைவியும் தோழரும் நண்பருமான ஜெர்த்ரு கிளெய்ர்மோனுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அவரது உயிர்ப்பு மிக்க தூண்டுதலும் ஆதரவும் இல்லாமல் இந்தோ சீனாவுக்கும், அதனைத் தொடர்ந்து சீனத்துக்கும் நான் சென்ற பயணம் முழுமை பெற்றிருக்க முடியாது.

தியென் பியென் பூ போர் முடிவுற்ற உடனே நான் வியட்நாமில் இருந்தாக வேண்டிய தேவையை அவர் எனக்கு உணர்த்தினார். நான் அங்கு கட்டாயம் இருந்தாக வேண்டியது இன்றியமையாதது என அவர் எண்ணினார்; நம்பினார். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அவரது அவ்வெண்ணத்தை உறுதி செய்வனவாக இருந்தன. இந்தோ – சீன பயணம் என் வாழ்வில் மட்டுமின்றி என் துணைவியாரின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அது ஒரு துயரகரமான பிரிவு என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்திருந்தோம். அத்துடன் எங்களது பரந்துபட்ட அரசியல் பணிகளின் காரணமாக அப்பிரிவின் விளைவுகளையும் மதிப்பிட நாங்கள் தவறவில்லை.

ஜெர்த்ரூ ஒரு புள்ளிவிவர நிபுணர், சர்வதேச தொழிலாளர் அலுவலகத்தில் பணி. சிறப்புக் குணங்கள் கொண்ட ஒரு தனிவகையான போராளி. போராட்ட குணம் மிக்கவர். அவரது சிவில் சர்வீஸ் தகுதி, அவரது அரசியல் கொள்கை ஆகியவற்றின் காரணமாக தனித்தன்மைமிக்கதோர் போராளியாக அவர் இருந்தார். நம் எல்லோரையும் போலவே பிறப்பிலிருந்து ஒருவர் சந்திக்கும் வரலாற்றுச் சக்திகளாலும் அதன் தாக்கங்களாலும் உருவாக்கப்பட்டிருந்தார். இந்த வரலாற்றுச் சக்திகள் தற்செயலானவை என்று ஏற்றுக் கொள்பவரல்ல. அவரது கொள்கை முடிவுகள் ஏகாதிபத்தியப் பரவலால் ஏற்பட்ட பாதிப்புகள், செத்துக் கொண்டிருக்கின்ற ஏகாதிபத்திய நோய், அதன் விளைவுகள் ஆகியன குறித்த சிந்தனா பூர்வமான வரலாற்றுப் புரிதல்களின் அடிப்படையில்தான் உருவானவை.

ஹோசி மின்.

அவர் தனது சொந்த நாடான ஆஸ்திரியாவிலிருந்து அரசியல் அகதியாக வந்தவர். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், எஃகு போன்ற இதயமுள்ளவராக அவரை உருவாக்கியிருந்தன. இது அவரிடம் இருந்த திறனாய்வு ஆற்றலை மேலும் கூடுதலாக்கியது என்று கூறலாம். அதன் காரணமாக அவர் முதலாளித்துவத்தின் மிக மோசமான வெளிப்பாடான பாசிசத்தை ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாகப் பார்த்தார். இட்லரின் ஜெர்மனியை இக்கொடூர சக்தியின் மிகச் சிறந்த முன்னுதாரணமாக அவர் எண்ணினார். “நான் இட்லரை மதிக்கிறேன். அவர் என் ஆசானும் மாபெரும் ஆசானுமாவார். அதாவது எதிர்மறையான உதாரணம் என்ற வகையில்” என ஜெர்த்ரூ அடிக்கடி கூறுவதுண்டு.

உலகு குறித்த அவரது பார்வையில் அது திசைகாட்டியாக இருந்தது. ஏகாதிபத்தியத்தை அவர் ஒரு கொடூரமான சக்தியாகப் பார்த்தார். அதற்கு எதிராகப் போராடுவதில் சமரசம் செய்து கொள்ளாத போராளி. மூழ்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியப் பேரரசுகளான பிரான்சையும் வட அமெரிக்காவையும் அவர் ஒன்றாகக் கருத இதுவே காரணம். வியட்நாமும் அதன் விடுதலைப் போராட்டமும் அவரது அரசியல் இலக்குகளாவதற்கும் கூட இதுவே காரணம்.

வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதில் அவர் தடுமாற்றம் கொண்டதில்லை. அதன் பலமான ஆதரவாளராக இருந்தார். அது மட்டுமின்றி மிகத் தாராளமாயும் இடைவிடாதும் நிதியுதவி அளித்து வந்தார். அதை அவர் என்றும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அது குறித்து அவர் கூறுவதாவது: உலகில் எந்தவொரு தேசமும் மனித குலமும் சிந்தாத அளவு இரத்தம் சிந்தியவர்கள் வியட்நாமியர்கள். நாம் ஏதோ சில தங்கத் துகள்களைக் கொடுத்து அவற்றை ஈடுகட்டப் பார்க்கிறோம். இது ஒரு சமத்துவமில்லாத பண்டமாற்றம். ஆனால் ஒரு வேறுபாடு என்னவெனில், இந்த சமத்துவமில்லாத பண்டமாற்று என்பது இரு பெரும் நண்பர்களிடையே நடக்கிறது. பின் ஒரு கட்டத்தில் வெளிப்படையாக அவர் ஒத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்தது. அவ்வுதவியை அவர் தனது ”சிறிய இரகசியம்” என்றும் காலமெல்லாம் தான் அதைப் பாதுகாத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

நாங்கள் எதிர்பார்த்த நீண்ட பிரிவு இடையிலேயே – இந்தோ சீனாவில் நான் இருந்தபோது மகிழ்ச்சிகரமாக முறிந்தது. தற்செயலாக அது நடைபெற்றது.

லாவோசில் நான் இருந்த காலத்தில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். சிகிச்சைக்காக நான் ஹாங்காங் அனுப்பிவைக்கப்பட்டேன். அச்சமயத்தில் ஜெர்த்ரூவும் சர்வதேச தொழிலாளர் மாநாட்டுக்காக டோக்கியோவுக்கு வரவிருந்தார். வழியில் நாம் அங்கு – ஹாங்காங்கில் – சந்திக்கலாம் என்று எனக்குத் தகவல் தந்திருந்தார். மிகமிகக் குறுகிய நாட்கள் ஆனால் அவை உன்னதமான காலங்கள். அவர் என் அனுபவங்களை மிகக் கூர்ந்து கேட்டார். ஆனால், அவர் துருவித் துருவிக் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் விடையளிப்பதில் நான் எப்போதுமே முழுமையாக வெற்றிபெற்றதில்லை. பழுப்புத்தாளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த, நாள்தோறும் அந்நிமிடம் வரை நான் நேர்மையுடன் எழுதி வந்த எனது அந்தரங்கக் குறிப்பேட்டினை அவரிடம் காண்பித்தேன். சிறிய மிட்டாய் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் அழும் குழந்தையைப் போல் அவர் வாய்விட்டு அழுதுவிட்டார். நான் மனநிறைவுற்றேன். இதுதான் அவர் எப்போதுமே விரும்பியதும் கவனித்துவந்ததும் ஹாங்காங்கின் மிகச்சிறந்த உணவைச் சாப்பிடுவதை விட மிகமிகச் சிறப்பானதாயிருந்தது. அவரது உதட்டிலிருந்த மலர்ந்த ஆனந்தப் புன்னகை.

படிக்க:
Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !
ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !

விரைவில் குணமடையுங்கள். உங்கள் நோய்க்கான மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள், மறந்து விடாதீர்கள்; அத்துடன் தொடர்ந்து கேள்விகளைக் கேளுங்கள். இது போன்ற குறிப்பேடுகளைத் தொடர்ந்து எழுதிவாருங்கள் என அவர் பிரியா விடையுடன் கூறிய சொற்கள் மிக சாதாரணமானதல்ல. அதைத்தான் நான் செய்தேன். அக்குறிப்பேட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளையே நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.” (ஆங்கிலப் பதிப்பின் முன்னுரையிலிருந்து)

நூல் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி
ஆசிரியர் : ஃபிரெடெரிக் ஃஎப். கிளெய்ர்மோன்ட்
தமிழில் : க. விசயகுமார்

வெளியீடு : தமிழோசை பதிப்பகம்,
1050, சத்திசாலை, காந்திபுரம், கோவை – 641 012.
தொலைபேசி எண் : 94865 86388.
மின்னஞ்சல் : tamilosai_vijayakumar@yahoo.co.in
பக்கங்கள்: 64
விலை: ரூ 30.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval | marina books

காஷ்மீரைப் பற்றி பேசாதே : மிரட்டும் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் !

பத்திரிகைச் செய்தி                                தேதி :  12.08.2019

ன்புடையீர் வணக்கம்,

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 7-ம் தேதி மாலை 7 மணியளவில் காஷ்மீருக்கான சிறப்புரிமை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ-ஐ மத்திய அரசு நீக்கியதை விவாதித்ததற்காக 30 மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் கூட மாணவர்கள் நடப்பு நாட்டு நிலைமை குறித்து விவாதிப்பதையே தடை செய்வது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, கல்வியின் தரத்தையே சீர்குலைப்பதாகும். விவாத சுதந்திரம் இல்லாத கல்விமுறை  சமூகத்தை காட்டுமிராண்டி நிலைக்குத்தான் இட்டுச் செல்லும்.

காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து விட்டு அம்மக்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி வருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. சிறுரவைகளால் (பெல்லட்) தாக்கப்பட்டு பலர் பார்வையிழந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. கடும் அடக்குமுறை நடப்பதையும் அதையும் மீறி பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு எதிர்த்து வருவதையும் பிபிசி அம்பலப்படுத்தியிருக்கிறது.

இவற்றையெல்லாம் மூடி மறைத்து, காஷ்மீரில் அமைதி நிலவுவதாகவும், மக்கள் மகிழ்ச்சியாக  இருப்பதாகவும் மோடி அரசு பொய்களைப் பரப்பிவருகிறது.  மொத்த காஷ்மீரையும் இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தகவல் தொடர்பினை கடந்த ஒரு வாரமாக முடக்கி வைத்திருப்பதோடு பத்திரிகையாளர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் தடுத்து வருகிறது.

படிக்க:
காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !
Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !

மத்திய அரசு காஷ்மீர் மக்கள் மீது தொடுத்துவரும் இராணுவ ஒடுக்குமுறைகளை உடனே நிறுத்தவும், பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கவும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். மேலும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் 30 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை  மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது.

இப்படிக்கு,
காளியப்பன்,
மாநில பொருளாளர்.

உங்களுக்கு நாட்டிய மொழியைச் சொல்லித் தரட்டுமா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 17

கூடுதல் பள்ளி நேரம்: பன்முக நடவடிக்கை

திங்கட்கிழமை முதல் கூடுதல் பள்ளி நேரம் ஆரம்பமாகும். அதாவது வகுப்புகள் முடிந்த பின் குழந்தைகள் 6-7 மணி நேரத்தைப் பள்ளியில் கழிப்பார்கள். இந்நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது? அவர்கள் பள்ளியில் சலிப்போடு உட்கார்ந்திருக்க விடக்கூடாதல்லவா!

தான் வளர்க்கப்பட வேண்டுமெனக் குழந்தை விரும்புகிறான் என நான் நம்புகிறேன். ஆனால் அக்குழந்தையால் இதை வாய்விட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் இதை அவன் இன்னமும் முழுமையாக உணரவில்லை. ஓய்வு நேரம், என்றழைக்கப்படுவதை அவன் விரும்புவதில்லை. இச்சமயத்தில் என்ன செய்வதென அவனுக்குத் தெரியாது. குழந்தை சும்மாயிருக்கலாம் என்றால் என்ன பொருள்? விரும்பமானதைச் செய் என்று பொருளா? ஆனால் அவன் என்ன விரும்புகிறான் என்பது அவனுக்கு என்ன வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தது.

குழந்தை ஓடியாடித் திரியும் தன்மையுள்ளவன், சுறுசுறுப்பானவன். என்ன செய்வது என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லாவிடில் சுதந்திரம், ஓய்வு நேரம் என்பதெல்லாம் அவனைப் பொறுத்தமட்டில் ஒன்றையுமே குறிப்பதில்லை. கூடுதல் பள்ளி நேரத்தின் போது பல்வேறு விதமான, உணர்ச்சிகரமான, புதியவற்றை அறியும் விஷயங்களுக்கும் பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யாவிடில் குழந்தைகளுக்குச் சலிப்பேற்படுமென நான் உறுதியாக நம்புகிறேன். குழந்தைகளுக்குப் பிடித்தவற்றைச் செய்யவல்ல உற்சாகமான, அன்பான ஆசிரியர்களுக்காக அவர்கள் ஏங்குவார்கள். நாள் பூராவும் குழந்தைகள் குறிப்பிட்ட நோக்கமின்றி ஓடியாடி, அலைந்து திரிந்து, சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் முற்றிலுமாக மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர், இவையெல்லாம் அவர்களுடைய முழுத் திருப்தியின் வடிவம் என்று யாரும் எண்ண வேண்டாம். பல விதங்களில் சலிப்பை வெளிப்படுத்தலாம், விஷயமின்றி குழந்தை அங்குமிங்கும் அலைந்து திரிந்தால் அவன் தன் சலிப்பை இதன் மூலம் வெளிப்படுத்துகிறான் என்று என்னால் நிச்சயம் கூற முடியும்.

எனது சக ஆசிரியர்களைப் போன்றே நானும் என் வகுப்புக் குழந்தைகளைப் பன்முக ரீதியாக வளர்க்க முயல்கிறேன், அவர்களின் அறிவு, உழைப்பு, தார்மிக, மானுட, அழகியல், உடற்கூறு வளர்ச்சிக்குப் பாடுபடுகிறேன். குழந்தையிடம் உருவாகும் மனநிலையில் இந்த அம்சங்கள் அனைத்தும் சீரிசைவாக இணைய வேண்டும், பரஸ்பரம் செயலாக்கம் புரிய வேண்டும் (ஏனெனில் மனநிலை என்பது மேற்கூறிய பண்புகளின் வெறும் கூட்டல் அல்ல, இது சீரிசைவான முழுமை) என்று விழைகிறேன். எனது இந்த ஆசை எதார்த்தமாக பன்முக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் மீது அக்கறை காட்டுகிறேன். இவற்றில் எனது ஆறு வயதுக் குழந்தைகள் பங்கேற்கலாம், ஏனெனில் நடவடிக்கை தான் வளர்ச்சிக்கும் மனிதன் உருவாவதற்கும் தேவையான நிபந்தனையாகும்; ஒன்றுடன் ஒன்று செயல் நோக்கமுள்ள வகையில் தொடர்பு கொண்ட நடவடிக்கைகள் மட்டுமே சீரிசைவான, பன்முக வளர்ச்சிக்கான நிபந்தனையாக முடியும்.

ஆசிரியர்களால் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது – குழந்தைகளுக்கு உற்சாகமான கூடுதல் பள்ளி நேரத்தை அளிக்க இயலாது. எங்களுக்கு உதவி வேண்டும். எந்த விதமான உதவி வேண்டும்? யாரிடமிருந்து?

பெற்றோர்களிடமிருந்து உதவி வேண்டும். பாடங்கள் முடிந்த பின் என் வகுப்புக் குழந்தைகளின் கூடுதல் பள்ளி நேரத்தை சிந்தித்துப் பார்க்கிறேன்: இந்த வகுப்பறையில், தாழ்வாரத்தில், பள்ளி முற்றத்தில், பூங்காவில் எப்படியிருக்குமென யோசித்துப் பார்க்கிறேன். அவர்களுடன் எப்படி பொழுதைக் கழிக்கலாம்?

வகுப்பறையில் மேசைகள் அகற்றப்பட்டு விட்டன. அறையின் நடுவில் நாற்காலிகள் மட்டும் அரை வட்ட வடிவத்தில் போடப்பட்டுள்ளன. சிலர் உட்கார்ந்திருக்கின்றனர்,

சிலர் நிற்கின்றனர். குழந்தைகளிடம் மரக் கரண்டிகள், முக்கோணங்கள், கஞ்சிரா, பேரிகைகள், கிசிலோஃபான் எனும் இசைக் கருவி முதலியன உள்ளன. இது சந்த இசைக் குழு. கோச்சாவின் தந்தையாகிய வலேரி மாமா உருவாக்கியுள்ள இசை நாடகத்தை இவர்கள் நடத்துகிறார்கள். சமீபத்தில் தான் இவர் என்னிடம் வந்து, “வீரமுள்ள முயல்” எனும் இசை நாடகத்தைத் தான் எழுதியுள்ளதாக மகிழ்ச்சியோடு அறிவித்தார்; சில பாடல்களைப் பாடிக் காட்டினார். அவை எனக்குப் பிடித்திருந்தன, சந்தமும் இசைநயமும் உள்ளவையாக, பாட எளிமையானவையாக இருந்தன. குழந்தைகளுக்கு இசை வகுப்புகள் நடத்தவும் இசைக் குழுவை தோற்றுவிக்கவும் இவர் ஒப்புக் கொண்டார். இந்த உற்சாகமான, இசைநேயமுள்ள மனிதர், அதிசயமான இசையுலகை குழந்தைகளுக்குத் திறந்துகாட்ட முயலுகிறார். இந்தக் கூடுதல் பள்ளி நேரத்தில் நடக்கப் போவதை நான் இப்படித்தான் கற்பனை செய்து பார்க்கிறேன்.

“நாம் இப்போது எந்த காட்சியை நடித்துக் காட்டுகிறோம்?”

“வீரம் மிக்க முயல் சிங்கத்திடம் செல்ல இருக்கையில் மற்ற மிருகங்கள் இதை வழியனுப்புகின்றன.”

“நமது இசைக்கருவிகள், பாடல் எதை வெளிப்படுத்த வேண்டும்?”

”மற்ற மிருகங்கள் முயலின் மீது இரக்கம் காட்டுகின்றனவா?”

“முயலை விட்டுப் பிரிவது குறித்து மற்ற மிருகங்கள் – கவலை கொள்கின்றன.”

“நாம் துக்கத்தை, வருத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், முயல் ஒருவேளை திரும்பாமல் இருக்கலாம்.”

”நீ உனது கிசிலோஃபான் கருவியில் இதை எப்படி வாசிப்பாய்? பேரிகையில்….. இப்படியில்லை, நாம் இசையின் மூலம் அச்சத்தையும் முயலுக்கான கவலையையும் வெளிப்படுத்த வேண்டும். தயாரா…”

இசைக்குழு இசைக்க, வலேரி மாமா கையை ஆட்டி, சைகை காட்டி, குரல் எழுப்பி இசைக்குழுவை வழி நடத்துகிறார்.

“நான் இப்போது உங்களுக்குச் சிறிது வாசித்துக் காட்டட்டுமா?” என்று இறுதியில் அவர் குழந்தைகளைக் கேட்டுவிட்டு, பியானோ முன் அமருகிறார். குழந்தைகள் அவரைச் சுற்றிக் குழுமுகின்றனர்.

“இன்னமும் கொஞ்சம் வாசியுங்கள்!” என்கின்றனர் குழந்தைகள். அவர் இன்னமும் வாசிக்கின்றார். குழந்தைகளுக்கோ வலேரி மாமாவை விடவே விருப்பமில்லை…..

லேவானின் தந்தையாகிய நுக்ஸார் மாமாவும் குழந்தைகளிடம் வருவார். இவரும் உற்சாகமானவர், அன்பானவர், இளைஞர், ஒப்பேரா, பாலே நாடகமன்ற நாட்டியக் கலைஞர்.

“உங்களுக்கு நாட்டிய மொழியைச் சொல்லித் தரட்டுமா?” குழந்தைகளுக்கு விருப்பம்தான்: நாட்டியமும் புன்சிரிப்பு மிக்க இளைஞரும்.

“நான் இப்போது உங்களுக்கு என்ன சொல்லப்போகிறேன் தெரியுமா?” என்று அவர் அங்கேயே சில நடன அம்சங்களைச் செய்து காட்டுவார்.

பின்னர் இவர் குழந்தைகளை வட்டமாக நிற்கச் செய்து பாலே நடன அம்சங்களைச் சொல்லித் தர ஆரம்பிப்பார். நுக்ஸார் மாமா கண்டிப்பானவர், ஒரே மாதிரியான பாவனையைப் பன்முறை செய்து காட்டும்படி செய்வார் என்ற போதிலும் குழந்தைகளுக்கு இந்த வகுப்புகள் பிடிக்கும். களைப்படைவார்களா? களைப்படைந்தால் நீக்ஸார் மாமா இவர்களை வட்டமாக உட்கார வைத்து நடனங்களைப் பற்றி சுவாரசியமான கதைகளைச் சொல்லுவார், எல்லோருக்கும் புரியக் கூடிய இந்த வியத்தகு “நடன மொழி” பற்றிக் கூறுவார்.

“ஞாயிற்றுக்கிழமை ஒப்பேரா, பாலே அரங்கின் காலைக் காட்சிக்கு வாருங்கள். நான் நடனமாடப் போகிறேன். பின்னர் உங்களுக்கு என்ன பிடித்தது, என்ன பிடிக்கவில்லையென்று சொல்லுங்கள்…”

நீனோவின் தந்தையாகிய கீவி மாமாவுடன் பேசுவதும் சுவாரசியமாக இருக்கும். இவர் பொம்மலாட்ட அரங்கில் பணிபுரிகிறார். மழை பெய்யும் போது வீதியில் மனிதர்கள் எப்படி நடப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று கூறி துவங்குவார். லேலா வெட்கப்படுகிறாள். ஏல்லாவிற்கு விருப்பமில்லை. மாக்தாவிற்கு சரியாக வரவில்லை. மாயாவோ முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு அறையில் அங்குமிங்கும் நடந்து காட்டுகிறாள்.

“மழையில் இப்படியா நடப்பார்கள்?” என்று பார்வையாளர்கள் மறுப்பு தெரிவிப்பார்கள்.

லேரி தலையைப் பத்திரிகையால் மூடியபடி “நடை பாதை” விளிம்பில் கவனமாக நடக்கிறான். அவன் முற்றிலுமாக நனைந்து விட்டான், வழுக்கி, “குட்டையில்” வேறு விழுந்து விட்டான், எழுந்திருக்க முயன்று மீண்டும் விழுகிறான்; யாரோ அவனுக்கு எழ உதவுகின்றனர்; அருகேயுள்ள வீட்டு வாசலை நோக்கி ஓடுகிறான், அங்கே கும்பலாயிருந்தாலும் மழை கிடையாது.

கற்பனையான ஊமை நாடகம் மகிழ்ச்சிகரமானது, எல்லோருக்கும் புரியக் கூடியது. குழந்தைகள் சிரிக்கின்றனர், கை தட்டுகின்றனர். கீவி மாமாவும் நடித்துக் காட்டுகிறார்.

“நான் யார் மாதிரி நடிக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்று அவர் செய்து காட்டுகிறார்.

“முதியவர் மாதிரி!”

“சரி, இப்போது?”

“நீங்கள் இளைஞர்கள் இருவர்களைப் போல் நடித்தீர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர்!”

“இப்போது?”

குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். கீவி மாமா சிறுமியைப் போல் நடித்தாரென சிலரும், நாயுடன் உள்ள சிறுவனைப் போல் நடித்தாரென வேறு சிலரும் கூறுகின்றனர். ஆனால் லேரி மட்டுமே கண்டு பிடித்தான்:

“நீங்கள் ஒரு சிறுமியைப் போல் நடித்தீர்கள். ஆனால் அவள் மழையில் நடக்கவில்லை, மாறாக சூரியன் பிரகாசிக்கும் சூழலில் இருக்கிறாள்.”

பின் கீவி மாமா மகிழ்ச்சிகரமான ஒரு கவிதையை சோகமயமான குரலில் படித்து, தான் படித்தது சரியா, இல்லையெனில் ஏன் என்று கேட்பார். பாடம் முடிவை நெருங்கும். ”நீங்கள் நாடக மொழியைக் கற்பீர்கள்” என்று விடை பெறுகையில் குழந்தைகளைப் பார்த்து கீவி கூறுவார்.

இந்த இசை, நாட்டிய, நுண்கலை, நாடக வகுப்புகள் குழந்தைகளின் அழகியல் உணர்வையும் ரசனையையும் வளர்க்கும். “தன்னை வெளிப்படுத்தும் போது மனிதன் வளருகிறான். தன் உணர்வுகளைப் பாடலில், நடனத்தில், ஊமை நாடகத்தில் வெளிப்படுத்துவதன் மூலம் மனிதன் தன்னை நன்கு உணருகிறான்” என்று சோவியத் ஆசிரியரியலின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகிய நதேழ்தா கான்ஸ்தன்தீனவ்னா குரூப்ஸ்கயா கூறினார்.

தனிப்பட்ட கலைகளைப் பயிற்றுவிப்பதன் சாரத்திற்குப் பொது அடிப்படை இருக்க வேண்டுமென நான் யோசிக்கிறேன். எது இப்படிப்பட்ட அடிப்படையாக இருக்க முடியும்? சய்கோவ்ஸ்கியின் இசைத் தட்டைப் போட்டு இதற்கேற்ப மனதில் தோன்றுவதை வரையும்படி குழந்தைகளிடம் சொல்லலாமா? இது நல்லது. என்றாலும் இசை, வரைதல், நடனம், நாடகம் (இவற்றையெல்லாம் ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கூடுதல் பள்ளி நேரத்தில் சொல்லித்தர விரும்புகிறேன்) ஆகியவற்றை இணைப்பது எது?

இதில் பிரச்சினை எதுவும் இருக்கக்கூடாது. எல்லா விஞ்ஞானங்களையும் போன்றே எல்லா வகையான கலையம்சங்களுக்கும் பொதுவானது யதார்த்தமாகும். ஆனால் கலை பிரதிபலிக்கும் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். தனியான பட்ட மரம் ஒன்றை ஓவியர் வரைகிறார். இதில் ஒரேயொரு இலை மட்டும் எப்படியோ தொங்கிக் கொண்டிருக்கிறது. ஓவியர் இதில் எதை பிரதிபலிக்கிறார்? இந்த மரத்தை இந்த இலையுடன் காட்டவா இவர் விரும்பினார்? ஒரு இசையமைப்பாளர் இசையை அமைக்கும் போது ஒலிகளின் இணைப்புதான் எல்லாவற்றையும் விட முக்கியமானதா?

படிக்க:
காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !

உண்மையான கலைப் படைப்புகள் எல்லாவற்றிலும் மனிதர்களின் பால், இயற்கையின் பால், தன்மீது, மொத்தமாக வாழ்க்கையின்பால் தனி நபருக்குள்ள உணர்வுப்பூர்வமான, உணர்ச்சிகரமான உறவு பிரதிபலிக்கிறது. சிம்பனி இசை, சித்திரம், உடலின் வளைவு, நெளிவுகள் இவையெல்லாம் மனித மகிழ்ச்சிகள், ஏமாற்றங்கள், நாட்டங்களின் பல்வேறு விதமான வெளிப்பாடுகளாகும். ஒவ்வொரு கலைப் படைப்பிலும் யதார்த்தம் – கலைஞன், இவனுடைய உலகக் கண்ணோட்டம், போராட்டம் – உருக்கொண்டு நிற்கிறது. ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு விதத்தில் – ஒலி, வண்ணம், நெளிவு சுழிவுகள் மூலம் – இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது…. கலைப் படைப்பைப் புரிந்து கொள்ள இந்தக் கலையின் மொழி தெரிந்திருக்க வேண்டும், எப்படி கிரகிப்பது, எப்படிக் கேட்பது, எப்படிப் படிப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ? கருத்துக் கணிப்பு

துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நூலை வெளியிட உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அந்த விழாவில் பாஜகவின் காது குளிர ஐஸாக உருகியிருக்கிறார் ரஜினி. “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து மிகவும் சிறப்பான நடவடிக்கை; அது குறித்த அமித்ஷாவின் பாராளுமன்ற உரை அற்புதம்; மோடியும் அமித்தும் அர்ஜுனன் – கிருஷ்ணன் போல; அதில் யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணன் என்பது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த இரகசியம்” என்று போற்றிப் புராணம் பாடியிருக்கிறார் ரஜினி.

இந்த போற்றி ஃபுளோவில் பார்த்திபன், பகவான் என்று உவமை பேசினாலும் அதிலும் பாதுகாப்பாக உளறியிருக்கிறார் ரஜினிகாந்த். இருவரில் யார் பகவான், யார் பார்த்திபன் என்று சுட்டியிருந்தால் பிரச்சினை. அதனால் அந்த விசயம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று சேஃப்பாக செப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

காஷ்மீரே இழவு விழுந்த வீடு போல தத்தளிக்கும் போது இந்த நடிகரோ நீரோ போல மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு பிடில் வாசிக்கிறார். இணையம், தொலைபேசி, செல்பேசி, பத்திரிகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஊரடங்கு போட்டு, பாதுகாப்புப் படைகள் மட்டும் காஷ்மீரின் தெருக்களில் வலம் வரும் வேளையில் ஒரு புயலுக்கு முந்தைய அமைதி போல காஷ்மீர் காணப்படுகிறது. காஷ்மீர் மக்களின் வாயையும் வயிற்றையும் கட்டிவிட்டு அங்கே எதிர்ப்பு குரலே இல்லை என நாடகமாடுகிறது அரசு. அந்த நாடகத்தை பொய்யென விரைவிலேயே காஷ்மீர் மக்கள் நிரூபிப்பார்கள்.

வெங்கய்யா, நூல் விழாவில் அடிமை எடப்பாடி அரசின் இரட்டையரும் கலந்து கொண்டு பாஜகவைப் போற்றி புராணம் பாடியிருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி – பாஜக – அதிமுக கூட்டணிக்காக பாடுபடும் துக்ளக் குருமூர்த்தியும் அந்த விழாவில் இருந்தார்.

படிக்க:
Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !
ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !

அதிமுக-வின் பாராளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் முன்னர் ஒருமுறை அங்கே பேசும் போது “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்” என்று பாடி தனதும், அதிமுகவினதும் வக்கிரத்தை காட்டியது போல இங்கே ரஜினி எனும் திரை நடிகர் காஷ்மீரின் சோகத்தை கேலி செய்வது போல அமித்ஷா – மோடி கூட்டணியை வாய் வலிக்க பாராட்டுகிறார். ஒரு சினிமா ஷூட்டிங் என்ற பார்வையைத் தாண்டி இந்த கருமாந்திரத்திற்கு காஷ்மீர் குறித்து என்ன தெரியும்?

இன்றைய கருத்துக் கணிப்பின் கேள்வி:

காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ?

பாஜக-விற்கு சொம்படிக்க
அதிமுக-பாஜக-ரஜினி கூட்டணிக்காக
காஷ்மீரில் சொத்து வாங்க
முஸ்லீம் வெறுப்பு
அனைத்தும்

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூப் :

வாக்களிக்க…

 

இது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை

1

மேட்டுக்குடிகளின் குளியல் தொட்டியின் வழுவழுப்புகளுக்காக சிதைக்கப்பட்ட ஒரு மத்திய கிழக்கு நகரத்தில் ஒரு குளியல்!

அகத்தின் அன்பை வெளிப்படுத்தும் ரோஜாக்கொத்தின் சுகமான முட்கள் அல்ல இவை, இலாபவெறிப் போரில் அகதிகளாக்கப்பட்டவர்களின் வருகையைத் தடுக்க வன்மத்தின் உச்சகட்டமாகப் போடப்பட்ட தடுப்புவேலியின் முட்கள்.

“நீங்கள் பருகவிருக்கும் பானம் மிகவும் சூடாக உள்ளது” என்ற காபிக் கோப்பையின் எச்சரிக்கை இந்த மக்களுக்குத் தேவையில்லை. அவர்கள் தாம் பெறத் தவிக்கும் தண்ணீரின் சூட்டை ஏற்கெனவே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பனியில் வழுக்கிச் செல்லும் ஆனந்தத்திற்குத் துணை புரியும் ஊன்றுக்கோல் அல்ல. ஏகாதிபத்தியங்களின் போர் வெறிக்கு கால்களைப் பலிகொடுத்த சிறுவர்களின் வாழ்க்கைக்குத் துணைபுரியும் ஊன்றுகோல்.

கலைத்துப் போட்டு மீண்டும் கட்டி ஆடும் ஆட்டம் அல்ல இது ! கலைக்கப்பட்ட வாழ்க்கையை மீண்டும் எழுப்ப கொடுக்கப்படும் இளமைப் பலி !

உற்சாகத்தின் கூத்தாடுதல் அல்ல, கொலைக்களத்தின் கூப்பாடு !

ஓவியக் கலையின் சாட்சியமா இது ? இல்லை, ஓயாத போரின் சாட்சியம் இது !

மேற்குலகின் மேட்டுக்குடி குழந்தைகளின் ரசிக்கத்தக்க இடர்பாடற்ற தூக்கம் – இடர்பாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இக்குழந்தையின் தூக்கத்தின் விளைபலன்தான்..

புத்தகங்கள் தூக்கவேண்டிய கையில் புல்லட் கூடுகள்!

மனித இன நாகரிகத்தின் உயர்ந்தகட்டமான காதலின் நாகரீக வெளிப்பாடு ஒருபுறம் – போரின் கொடுமையில் தண்ணீரையே விலங்கினத்தைப் போலக் குடிக்க வேண்டிய அநாகரீக நிலை இன்னொருபுறம்.

‘அழகுப்’ பெண் அல்ல ! அகதிப் பெண் !

படிக்க:
ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !
தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?

காயம்படாத பகுதி உண்டா ? இலாபவெறிப் போரின் விளைவுகள் இப்படிப்பட்ட ரணகளத்திலும், அவற்றின் பலன்கள் மெத்தையிலும் துயில் கொள்கின்றன.

நம் சிந்தனையையும் செயலையும் நம் வாழ்நிலைதான் தீர்மானிக்கிறது என்றார் மார்க்ஸ் !

நன்றி : படங்கள் – உகர்கேலன்

– நந்தன்

 

நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் !

2

டந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கலின்போது விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வாக ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயம் நுட்பங்களை பின்பற்ற அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று சொன்னார். இந்தியாவின் விவசாயத் துறையை முந்தைய அடிப்படை நிலைக்கு திரும்ப கொண்டு செல்லும் எனவும் அவர் பேசினார்.

‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ அறிமுகப்படுத்தியவர் மகாராஷ்டிர மாநிலம், விதார்பாவைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர். தமிழக வேளாண் இதழ்கள் இவரை ஹீரோவாக்கியுள்ளன. இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்கள் குறிப்பாக, மாட்டுச்சாணம், மாட்டு மூத்திரம், வேப்பிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி உரம், வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி மருந்து ஆகியவற்றை தயாரிக்கலாம் என்பதே பாலேக்கர் முன்வைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம். செயற்கை வேதிப்பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் இவர்.

சுபாஷ் பாலேக்கர்.

தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பாஜக அரசு சூளுரைத்த நிலையில், “ஜீரோ பட்ஜெட் விவசாயம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்” என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட்டை அடுத்த இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், “ஜீரோ பட்ஜெட் விவசாயம் பயிர் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, காற்றில் உள்ள நைட்ரஜன் மூலம் மண்ணை வளமாக்கும். அதோடு, விவசாயிகளின் உற்பத்திச் செலவை குறைக்கும்” என சொல்லப்பட்டது.

தமிழகத்தில்கூட இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மூலம் இத்தகைய கருத்துக்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. அதை பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். ஆனால், ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்த போதிய அறிவியல்பூர்வமான ஆய்வுகள் எதுவும் அரசிடம் உள்ளதா என்பதும் தெளிவில்லாமலேயே உள்ளது.

‘வேதிப்பொருட்கள்’ என்ற பதம் இயற்கை விவசாயத்தை மிகைப்படுத்த பொதுவில் வைக்கப்படும் வார்த்தையாகிவிட்டது. ஆனால், இது அடிப்படை வேதியியல் செயல்முறைகள் மீதான அலட்சியத்தின் அறிகுறியாகவும் மாறியுள்ளது.

நவீன வேளாண் தொழிற்நுட்பங்களுக்கு சாத்தியமான மாற்றாக ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை இதுநாள் வரை ஆய்வுத் துறையினர் கவனத்தில் கொள்ளவே இல்லை என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். “இது அந்த அளவுக்கு திறன்படைத்தது எனில், பசுமை புரட்சி என்ற ஒன்று ஏற்பட்டே இருக்காது. ஏனெனில் பசுமை புரட்சிக்கு முன்பாக, ஏதோ ஒரு வகையில் இயற்கை விவசாயத்தை தான் பெரும்பாலான விவசாயிகள் செய்துகொண்டிருந்தனர்” என்கிறார் ஒரு அறிவியலாளர்.

“எப்படியாயினும், அனைத்து அறிவியல் பகுப்பாய்வுகள் எதிர்திசையையே சுட்டிக்காட்டுகின்றன. இயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் குறைகிறது என்பதே அது. உற்பத்தித்திறன் குறையும்போது எப்படி விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்?” என வினவுகிறார் அவர்.

இயற்கை விவசாயத்தின் உற்பத்தித் திறன், மண்வளம், செடிகளின் நிலையில், விவசாயிகளின் வருமானம் குறித்த குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் எதுவும் இல்லை.  இந்த நிலையில், மெத்தப் படித்த நிர்மலா சீதாராமன் எந்த வகையில் இந்தத் திட்டத்தை சொன்னார் என்பது கேள்விக்குறியதாகிறது. பட்ஜெட் உரையில் அறிவிக்கிறார் எனில், அந்தத் திட்டத்துக்கு பின்புலமாக அமைந்த ஆய்வறிக்கைகள், ஆதாரங்கள், புள்ளி விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

பட்ஜெட்டுக்கு சிறிது காலங்களுக்கு முன்னதாக ஏப்ரல்- ஜூன் மாதத்தில்  நிதி ஆயோக், ICAR மற்றும் NAARM ஆகியவற்றிடம் இயற்கை விவசாயம் குறித்த ஆய்வொன்றை செய்யுமாறு பணித்துள்ளது. அந்த ஆய்வு முடியும் முன்பே, நிர்மலா சீதாராமன் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்கிறார்.

இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர் ஒருவர், “இந்த ஆய்வு இரண்டு பிரிவுகளாக செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் சமூக பொருளாதார தாக்கம் மற்றும் மண் வளம், செடி மாதிரி பகுப்பாய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். இதில் இயற்கை விவசாயத்தை விவசாயிகள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் பகுப்பாய்வு செய்ய உள்ளோம். அவர்களிடம் வருமானம் குறித்தும் உற்பத்தியின் தரம் எப்படி மாறியுள்ளது, உற்பத்தி அளவு எப்படி மாறியுள்ளது என்பது குறித்தும் கேட்டுள்ளோம். இதை சரிபார்ப்பதற்கு போதிய நேரம் தரப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்கிறார்.

இரண்டாவது பகுதி ஆய்வில், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலத்தின் மண் மற்றும் செடிகளை வேதியியல் சோதனைகளுக்கு உட்படுத்த சேகரித்துள்ளதாக கூறுகிறது.

“அதிலும்கூட ஒரு பருவத்துக்கு பிந்தைய நிலங்களில்தான் பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க முடிகிறது. ஆனால், ஒரே ஒரு பருவத்தை வைத்து சோதனை முடிவுகளை பொதுவானதாக்க முடியாது” என்கிறார் ஒரு ஆய்வாளர்.

மாட்டுச் சாணம், மாட்டு மூத்திரம், வெல்லம் மற்றும் பருப்பு மாவுகளை சேர்த்து செய்யப்படும் பயிர் ஊக்கியில் எவ்வளவு சத்துக்கள் உள்ளன, மண் மற்றும் செடியின் தேவைகளை எப்படி அது பூர்த்தி செய்யும் என்பது குறித்து குறுகிய காலத்தில் ஆய்வு செய்ய முடியாது என்கிறார்.

“நாங்கள் நிதி ஆயோக்கிடம் முறையான ஆய்வுகளை முடிக்க எப்படியும் இரண்டாண்டுகளாவது வேண்டும் என்று கூறினோம். இந்த குறுகிய காலத்தில் எந்தவித தாக்கத்தையும் காண முடியாது. ஆறு மாதத்துக்குள் ஆய்வை முடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அறிவியல்பூர்வமான தகவல்களைத் தர இந்தக் காலம் போதாது” என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் அறிவியலாளர்கள்.

ஜீரோ பட்ஜெட் விவசாயம் என சொல்லிக்கொண்டாலும் அது ஜீரோ பட்ஜெட் விவசாயமல்ல; வழக்கமான விவசாய முறையைக்காட்டிலும் 30-40% செலவு குறைவானது எனவும் முதல் இரண்டு வருடங்களில் உற்பத்தி அளவு 20-30% குறையும். ஆனால், அடுத்த ஆண்டு வழக்கமான நிலைக்கு வரும் என சொல்கிறார்கள். அது பற்றி ஆய்வாளர்கள் உறுதியளிக்கவில்லை. அதற்கு நீண்ட கால ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

பிறகு எப்படி இயற்கை விவசாயிகளின் வருமானம் பெருகியுள்ளதாக சிலர் கூறிக்கொள்கிறார்கள். ‘இயற்கை’ முறையில் விளைவிக்கப்பட்டது என்கிற முத்திரைதான் காரணம் என்கிறார்கள் அவர்கள். வழக்கமான விலையைக் காட்டிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதாகக் கூறும் பொருட்களின் விலை 30-40% அதிகம்.

படிக்க:
தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை !

ஒட்டுமொத்தமாக, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை நாடு முழுவதிலும் பெரிய அளவில் நடைமுறைப்படுத்த முடியாது என நிபுணர்கள் சொல்கிறார்கள். “உற்பத்தி திறன் குறைவதால், பெருமளவில் பற்றாக்குறை ஏற்படும். அதோடு, இதுபோன்ற உற்பத்திக்கு ஏற்ற வளர்ச்சியடைந்த, நிலையை உணர்ந்த சந்தை நமக்குத் தேவை. அது நம்மிடம் இல்லை” என்கிறார் ஒரு நிபுணர்.

ஆக, ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது மேட்டுக்குடிகளையும் மேல்தட்டு நடுத்தர வர்க்க சந்தையை குறிவைத்து இறங்கியுள்ள ஒரு மார்க்கெட்டிங் உத்தி. சாமானிய விவசாயியால் ஒருபோதும் இதைச் செய்து இலாபம் ஈட்ட முடியாது. கூடுதலாக, மாட்டு மூளை சங்க பரிவாரங்களின் ‘பழங்கால’ விவசாய பாரம்பரியத்தை முன்னெடுக்கவும் பயன்படுகிறது. மாட்டு மூத்திரம் கேன்சரை உள்ளிட்ட மனித நோய்களுக்கு மருந்தாகும் என நம்பும் சங்கிகள், மாட்டுச்சாணத்தை நிலத்தில் போட்டு இரண்டு மடங்கு லாபம் ஈட்டலாம் என பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து வியப்பு கொள்ள முடியவில்லை.

கட்டுரை: கபீர் அகர்வால்
தமிழாக்கம் : அனிதா

நன்றி : thewire.in

பெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 20

கோவலனைப் பாருங்கள். பெரிய கோடீஸ்வரனின் ஒரே பிள்ளை. அவன் ஏன் இரவில் புறப்பட்டு ஒருவருக்கும் தெரியாது மதுரைக்குச் செல்ல வேண்டும்? பொருள் தேட தந்தையைக் கேட்டால் கொடுக்க மாட்டாரா? அல்லது கண்ணகி மாமன் மாமியுடன் சண்டை போட்டுக் கொண்டாளா? ஒரு சமயம் கண்ணகி கூறுகிறாள் தோழியிடம், “நான் அழுதேனென்று என் மாமியிடம் கூறாதே. கூறினால் மனைவிக்கு வேண்டியதைக் கொண்டு கொடுத்து முகங்கோணாது வைத்து வாழத் தெரியாத நீயும் ஓர் ஆண்மகனா? என்று என் நாயகனைக் கோபிப்பாள் மாமி” என்று கூறுகின்றாள். இதனால் கண்ணகிக்கு மாமியிடம் சண்டையல்ல; அன்புடன் வாழ்ந்தவர்கள் எனத் தெரிகிறது. பின் ஏன் கோவலன் மதுரை சென்றான்? தந்தை பொருளால் வாழுகின்றான் என்று தன்னை உலகம் பழிக்குமெனக் கருதியேதான். மேலும் கோவலனுக்கு மணமான உடனேயே, பெற்றோர் இவர்களை தனியே வைத்து விடுகின்றனர். ஏன்? வேறுபடு திருவின் வீறு பெறக் காணவே. தந்தையின் பணத்தால் வாழுதலைப் பழியெனக் கருதினர் தமிழ் மக்கள். ஒருவேளை தந்தை இறந்தால், மீதி வைத்து விட்டுப் போனால் – அது மக்களைச் சாரும். ஆனால், இக்காலத்தே போல் தந்தை இருக்கும்போதே “பாகத்தைப் பிரி” எனச் சண்டை பிடிப்பது அன்று கிடையாது.

கலியாணம் செய்தபின் மனைவியிடத்து அன்பைச் செலுத்து என்பது ஆரியர் கொள்கை. காரணம் என்ன? தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி ஆண் பிள்ளைகளைப் பெறுவதற்காக, ஒரு பிள்ளை பெறும் கருவியாக எண்ணியே திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தமிழர்களைப் போல் வாழ்க்கையில் இன்பம் பெற வாழ்க்கைக்கு ஒரு கூட்டாளியே மனைவி எனக் கருதினார்களில்லை. தமிழன், ஒரு பெண்ணிடத்து முதலில் அன்பு செலுத்தியதன்றி, அவளை மணக்க விரும்பினானில்லை. பெண்ணும் அது போலவே .

ஒரு தமிழன் ஒரு பெண்ணை முதன் முதல் பார்த்த காலையில் ஐயப்படுவான். ஏன்? இருவரும் ஒருவரையொருவர் அறியாவிடத்து, அன்பு உண்டாகிறது! கம்பரும், இராமனைத் தெருவில் கண்ட அளவில் சீதைக்கு முன்பு அன்பு உண்டாகிறது. பின் ஐயப்படுகிறாள் என்று தெரிவிக்கின்றார். இராமனுக்கும் அவ்வாறே ஐயம் தோன்றுகிறது. ஐயம் நிகழ்வது அவசியம். அது இயல்பானதே. ஆனால் வால்மீகி, இராமனும் சீதையும் ஒருவரையொருவர் பார்த்ததாகவே தெரிவிக்கவில்லை. ஏன்? ஆரியருக்கு அன்பு செலுத்திய பிறகு மணம் செய்யும் வழக்கமில்லை. இந்த ஐயம் ஆணுக்கு மட்டுமல்ல; பெண்ணுக்கும் உண்டாகும்.

ஆனால், தொல்காப்பியத்திற்கு உரையெழுத வந்த நச்சினார்க்கினியர், “ஆணுக்கு மட்டுந்தான் அறிவிருக்கின்றது” என்று கூறுகின்றார். ஆனால், தமிழ் மகனாகிய சேக்கிழாரோ, பெரிய புராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவர் மனைவியும் முதன் முதல் சந்தித்த காலத்து, இருவருக்கும் ஐயம் தோன்றியதாகத் தெரிவிக்கின்றார். இதுதான் சிறந்தது. பெண்ணுக்கும் சம உரிமை கொடுப்பதே தமிழன் வழக்கம். ‘சிறந்துழி ஐயம் சிறந்ததென்ப’ என்றார் தொல்காப்பியர். ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் இவள் விபச்சாரியா? கற்புடையவளா? எனச் சந்தேகித்தால் அங்கே அன்பு திகழ இடமில்லை . அவருக்குத் தகுந்த ஐயம் தோன்றலாகாது. பாலைக்கண்ட ஒருவன் இது பசுவின் பாலா? அன்றிப் பன்றியின் பாலா? என்று நினைப்பானானால் பின்னர் அப்பாலைச் சாப்பிட முடியுமா? எனவே மேலதாய் வந்தவிடத்து, அதாவது சிறந்ததாய் வந்தவிடத்துத்தான் அன்பு செல்லும். இதைத்தான் ”சிறந்துழி ஐயம்” என்றார் தொல்காப்பியர். இதையுணராத நச்சினார்க்கினியர், சிறந்த ஆண்மகனிடத்துத்தான் ஐயம் தோன்றுமென அறியாது கூறினார்.

நிற்க, தன் மகள் ஒருவனைக் காதலித்தால், பெற்றோர் அவள் விருப்பத்திற்கிணங்குவர்; இன்றேல் அப்பெண் உயிரை விடுவாளே தவிர வேறோர் ஆடவனை மனதில் நினையாள். ஆடவனும் அப்படியே. எனவே இரண்டிடத்தும் சமமாய் ஒத்த காதலாய் இருக்க வேண்டும். இருந்தால்தான், வாழ்க்கை செவ்வனே நடைபெறும். காதலர் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டாலும் பெற்றோர் சம்மதம் பெற்றே மணப்பர். சம்மதம் கிடைக்காவிட்டால் பல வழியிலும் பெற முயல்வர். இத்திருமணம் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே நடைபெறும். இவ்வழக்கை இன்னும் தமிழ்நாட்டில் காணலாம். சில சமயம் பெண்ணின் பெற்றோர் சம்மதம் தராவிடில், இருவரும் ஒருவருக்குத் தெரியாது வீட்டை நீங்கிச் செல்வதுமுண்டு. அப்படித் தன் பெண் சென்று விட்டால், அப்பெண்ணின் தாய், எங்கு மணமகன் வீட்டில் திருமணம் நடந்துவிடுமோ என்று வருந்துவாள். பின்னர் அவர்களைத் தேடிச் சென்று அழைத்து வந்து மணம் முடிப்பார்.

அக்காலத்தில் எங்கும் – ஏன்? இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே கூடத் தரகர்கள் கிடையாது. இடைக்காலச் சைவம் கூட இதில் சிறிது மாறுபட்டது. ஆனால், முன்பு இறைவனுக்கும் உயிர்க்கும் நேரே தொடர்பு இருந்து வந்ததேயொழிய இடையில் யாருமில்லை. இந்தத் தொடர்பு போல் இருவர் காதலும் தூய்மையானது.

”பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப” என்ற நச்சினார்க்கினியர், பார்ப்பனத் தோழன் உண்டென்று கூறுகிறார். இது தவறு. இன்று மணச்சடங்கு செய்ய வரும் பார்ப்பனன் தோழனா? கிடைத்தவற்றையெல்லாம் அடித்துக் கொண்டல்லவா போகிறான்?

படிக்க:
பயங்கரவாதி பிரக்யா சிங் மீதான வழக்கை கமுக்கமாக விசாரிக்க வேண்டுமாம் !
என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

நிற்க, காதலரிருவரும் ஒருவரையொருவர் விரும்பிய அன்றே மணம் நடந்து விடுகின்றது. ஆனால் இவர்கள் மணத்தினை உலகறியச் செய்யவே, பழி நீங்கவே, சில சடங்குகள் வகுத்தனர். அதுதான் “காரணம்” என்பது. இப்பழைய முறைகளில் இன்னும் சில நம்மிடையே இருந்து வருகின்றன.

தான் தேடிய பொருளால், தன் முயற்சியால் இல்லறம் நடைபெற வேண்டுமெனத் தமிழன் விரும்பியது போல விருந்து புறந்தருதல், அதாவது விருந்தினரை உபசரித்தலும் தமிழனின் சிறந்த குணமாகும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

காத்திருக்காதே ! இளமையை வீணாக்கி விடாதே !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 13

கிரிகோரிய் க்யோஸ்தியேவ் ஜூன் மாத நடுவில் மருத்துவமனையிலிருந்து வெளியேறினான்.

இதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அவனும் அலெக்ஸேயும் விரிவாகப் பேசிக் கொண்டார்கள். இருவரும் துன்பத்தில் தோழர்கள், இருவருடைய சொந்த விவகாரங்களும் ஒரே மாதிரியாகச் சிக்கலான நிலைமையில் இருக்கின்றன என்பது குறித்து இருவருமே உள்ளுற மகிழ்ச்சிகூட அடைந்தார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில் வழக்கமாக நடப்பது போல இருவரும் தங்கள் அச்சங்களை எவ்வித ஒளிவு மறைவும் இன்றி ஒருவருக்கொருவர் விவரித்தார்கள். தங்கள் ஐயப்பாடுகளை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள அவர்களது தன்மானம் இடந்தரவில்லை. ஆதலால் தமக்குள்ளேயே அவற்றை வைத்துக் கொண்டு மருகவேண்டியிருந்தது. இது அவர்களுக்கு இருமடங்கு அதிகக் கடினமாயிருந்தது. இப்போது அந்த ஐயப்பாடுகளை எல்லாம் ஒன்றுவிடாமல் ஒருவருக்கொருவர் சொல்லி ஆற்றிக் கொண்டார்கள் அவர்கள். தங்கள் காதலிகளின் நிழற்படங்களை ஒருவருக்கொருவர் காட்டினார்கள்.

அன்யூத்தா, க்யோஸ்தியேவை எப்படி வரவேற்றாள், அவனது விகாரமான முகத்தைப் பற்றி என்ன நினைத்தாள், அவர்கள் விவகாரம் எப்படி முடிந்தது என்பதை எல்லாம் மெரேஸ்யெவுக்கு அவன் எழுதுவதாக ஒப்பந்தமாயிற்று. க்யோஸ்தியேவ் விஷயம் நல்லபடியாக முடிந்தால் ஓல்காவுக்குத் தன்னைப் பற்றி எல்லாவற்றையும் எழுதிவிடுவது என்றும், இன்னும் பலவீனமாக, பெரும்பாலும் படுத்த படுக்கையாயிருந்த தாயாருக்குக் கலவர மூட்டுவதில்லை என ஓல்காவிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்வது என்றும் மெரேஸ்யெவ் அப்போதே தீர்மானித்துக் கொண்டான்.

க்யோஸ்தியேவ் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாளை இந்தக் காரணத்தால்தான் இருவரும் அவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்தார்கள். பதற்றத்தால் இருவரும் சந்தடி செய்யாமல் எழுந்து ஆளோடிக்கு வருவார்கள். க்யோஸ்தியேவ் கண்ணாடி முன் நின்றுகொண்டு காயத் தழும்புகளைத் தடவித் தேய்த்துக் கொள்வான். மெரேஸ்யெவ் ஓசைப் படாமல் இருக்கும் பொருட்டுக் கவைக்கோல்களின் நுனியில் துணியைச் சுற்றிக் கொண்டு அதிகப்படி முறை நடைபழகுவான்.

காலைப் பத்து மணிக்குக் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா க்யோஸ்தியேவைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக அவனிடம் தந்திரப் புன்னகையுடன் தெரிவித்தாள். அவன் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு துள்ளி எழுந்தான். தழும்புகள் முன்னிலும் துலக்கமாகத் தெரியும் படி அவன் முகம் கன்றிச் சிவந்திருந்தது. மளமளவென்று சாமான்களைத் திரட்டலானான்.

அவனுடைய பதற்றத்தையும் பரபரப்பையும் பார்த்து முறுவல் செய்தவாறு, “அருமையான பெண், ரொம்பப் பொறுப்புள்ளவள்” என்று கூறினாள்….

வார்டுக்காரர்கள் எல்லோரும் – ஏக்கம் பிடித்த மேஜரும் மெரேஸ்யெவும் புதிதாக வந்திருந்த நோயாளிகளும்- க்யோஸ்தியேவ் தெருவில் வருவதை எதிர்பார்த்து ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தார்கள்.

“வருகிறான்!” என்று கிசுகிசுத்தான் மெரேஸ்யெவ். கனத்த ஓக் மர வெளிவாயிற் கதவு மெதுவாகத் திறந்திருந்தது. அதிலிருந்து இருவர் வெளிப்பட்டார்கள். ஒருத்தி, கறுப்பு ஸ்கர்ட்டும் வெள்ளை பிளவுஸும் அணிந்த, சதைப் பிடிப்புள்ள பெண். அவள் தொப்பி அணியவில்லை. அவளது கேசம் பகட்டின்றி வாரி விடப்பட்டிருந்தது. மற்றவன் இளம் படை வீரன். அவன் க்யோஸ்தியேவ் என்பதை மெரேஸ்யெவ் கூட முதல் பார்வையில் கண்டு கொள்ள முடியவில்லை. ஒரு கையில் பெட்டியையும் மறு கையில் மேல் கோட்டையும் எடுத்துக் கொண்டு மீள்விசையும் உறுதியுமாக அனாயாசமாக அவன் நடந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சி உண்டாயிற்று. தனது பலத்தைச் சோதித்துப் பார்த்து, வெகு தூரம் நடக்கும் வாய்ப்பினால் களிப்படைந்து க்யோஸ்தியேவ் வாயில் படிகளில் ஓடக்கூட இல்லை, லாவகமாக வழுகிச் சென்றான் போலும். தனது துணைவிக்குக் கைலாகு கொடுத்து நடத்திச் சென்றான். இருவரும் நாற்பத்து இரண்டாம் வார்டு ஜன்னலை நெருங்கியவாறு ஆற்றோரச் சாலையில் நடந்தார்கள். லேசாகத் தூறிய பெருத்த பொன் மழைத் துளிகள் அவர்கள் மேல் தெறித்தன.

அவர்களைக் கண்டு அலெக்ஸேயின் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து பொங்கிற்று. எல்லாம் நலமாகத் தீர்ந்துவிட்டது. அந்தப் பெண்ணின் முகத்தில் ஒளிவு மறைவின்மையும் எளிமையும் இனிமையும் ததும்புவது காரணம் இன்றி அல்ல. இத்தகைய பெண் முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டாள். ஆமாம், இம்மாதிரிப் பெண்கள் துன்பத்துக்கு உள்ளான மனிதனை அருவருத்து ஒதுக்க மாட்டார்கள்.

அவர்கள் ஜன்னலுக்கு நேராக வந்து சற்று நின்று நிமிர்ந்து பார்த்தார்கள். மழையால் மெருகூட்டப்பட்டிருந்த கரையோரக் கைப்பிடிச் சுவர் அருகே நின்றார்கள் அவர்கள். மெதுவாக வீழ்ந்த மழைத்துளிகள் இட்ட கோணலான பளிச்சிடும் கோடுகள் அவர்களுக்குப் பின்னணியாக விளங்கின. க்யோஸ்தியேவின் முகத்தில் குழப்பமும் கடுகடுப்பும் கலவரமும் காணப்பட்டதையும் அவனுடைய அன்யூத்தா எதனாலோ கவலையும் கலக்கமும் கொண்டிருப்பதையும் அலெக்ஸேய் அப்போது கவனித்தான். அன்யூத்தாவின் கை க்யோஸ்தியேவின் கையில் தளர்வாகவே கோக்கப்பட்டிருந்தது. அவளது நிலை கிளர்ச்சியையும் தயக்கத்தையும் காட்டியது. இதோ அவள் கையை உருவிக் கொண்டு ஓடிப் போய்விடுவாள் போலிருந்தது அவளது தோற்றம்…

அன்று எஞ்சிய நேரமெல்லாம் அலெக்ஸேய் கலவரமுற்றிருந்தான். மாலையில் அவன் நடைப் பயிற்சிகூடச் செய்யவில்லை. எல்லோருக்கும் முன்னதாகவே உறங்குவதாகப் படுத்துக் கொண்டான். ஆனால் வார்டில் மற்றவர்கள் யாவரும் உறங்கி நெடு நேரம் சென்ற பின்னரும் அவனுடைய கட்டில் வில்கம்பிகள் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தன.

மறுநாள் காலை மருத்துவத்தாதி வாயில் நிலையில் கால் வைத்ததுமே தனக்கு ஏதேனும் கடிதம் வந்திருக்கின்றதா என்று கேட்டான். கடிதம் இல்லை. அலெக்ஸேய் சுரத்தில்லாமல் முகங்கை கழுவிக் கொண்டான், உற்சாகமின்றி உணவு கொண்டான். ஆனால் வழக்கத்தைவிட அதிகமாக நடந்தான். முந்தைய நாளைய பலவீனத்திற்காகத் தன்னைத் தண்டிக்கும் பொருட்டு அதிகப் படியாகப் பதினைந்து தடவை நடந்து முந்திய நாள் விட்ட குறையைப் பூர்த்தி செய்தான். எதிர்பாராத இந்தச் சாதனை எல்லாக் கலவரத்தையும் அவனுக்கு மறக்கடித்து விட்டது. கவைக்கோல்களின் உதவியால், மிகவும் கலைத்து விடாமல் விட்டாற்றியாக நடக்க தன்னால் முடியும் என நிரூபித்து விட்டான். ஆளோடியின் நீளமான ஐம்பது மீட்டரை நடைகளின் எண்ணிக்கையான நாற்பத்தைந்தால் பெருக்கினால் இரண்டாயிரத்து இரு நூற்று ஐம்பது மீட்டர், அதாவது இரண்டே கால் கிலோ மீட்டர் ஆயிற்று. இது கணிசமான தூரம், நிச்சயமாக!

தினப்படி பயிற்சியைக் காலையில் இருபத்து மூன்று, மாலையில் இருபத்து மூன்று, ஆக நாற்பத்து ஆறு நடைகள் ஆக்குவது என்றும் மறுநாள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் பொழுது கவைக்கோல்கள் இல்லாமல் நடந்து பார்ப்பது என்றும் மெரேஸ்யெவ் முடிவு செய்தான். இது இருண்ட எண்ணங்களிலிருந்து அவன் மனத்தை வேறுபுறம் திருப்பியது, உற்சாகம் ஊட்டியது, செயல்புரியச் சித்தமான மனநிலையை ஏற்படுத்தியது. மாலையில் அவன் பெருத்த மன எழுச்சியுடன் நடை பழகத் தொடங்கியவன், முப்பது நடைகள் போய் வந்ததைக் கவனிக்கக் கூட இல்லை. அந்தக் கணத்தில் உடையறைக்காரி அவனை நிறுத்தி ஒரு கடிதத்தை கொடுத்தாள்.

ஜன்னல் குறட்டில் சாய்ந்து கொண்டு மெரேஸ்யெவ் உறையைப் பிரித்தான். அது க்யோஸ்தியேவ் முந்தைய இரயில் நிலையத்தில் எழுதியிருந்த கடிதம். இந்த விரிவான கடிதத்தைப் படிக்கப் படிக்க அலெக்ஸேயேவின் முகத்தில் மேலும் மேலும் ஏக்கம் ததும்பலாயிற்று. அன்யூத்தா தாங்கள் நினைத்தபடியே அருமையான பெண் என்றும் அவளைக் காட்டிலும் அழகானவள் மாஸ்கோவில் ஒரு வேளை இருக்க மாட்டாள் என்றும், சொந்தக்காரன் போலத் தன்னை அவள் வரவேற்றதாகவும் தனக்கு அவள் முன்னிலும் அதிகமாகப் பிடித்துவிட்டாள் என்றும் எழுதியிருந்தான் க்யோஸ்தியேவ்.

“… ஆனால் நீயும் நானும் சர்ச்சை செய்த விஷயம் நாம் நினைத்த மாதிரியே ஆயிற்று. இவள் நல்லவள். என்னிடம் அவள் ஒன்றுமே சொல்லவில்லை, தோற்றத்திலும் எதையும் காட்டவில்லை. எல்லாம் நல்லபடியாகவே நடந்தது. ஆனால் நான் குருடன் அல்லவே. எனது பாழாய்ப்போகிற முகரக்கட்டை அவளுக்கு திகில் ஊட்டுவதைக் கண்டேன். எல்லாம் சாதாரணமாகவே இருப்பது போலிருக்கும். ஆனால் சட்டென்று கண்ணோட்டுவேன்: அவள் என்னைப் பார்க்கும் பார்வையில் வெட்கமோ, அச்சமோ, பரிதாபமோ, ஏதோ ஒன்று புலப்படும்… அவள் தனியாக இருக்கிறாள். பெற்றோர் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். கெளரவமான குடும்பம் என்பது தெரிகிறது. எனக்குத் தேநீர் கொடுத்து உபசரித்தாள். ஆனால் தேநீர்ப் பாத்திரத்தில் என் பிரதி பிம்பத்தைப் பார்த்துப் பெருமூச்செறிந்த வண்ணமாக இருந்தாள். சுருங்கச் சொன்னால் நம்மால் முடியாது என்று உணர்ந்தேன்.

நான் அவளிடம் இப்படி இப்படி என்று விண்டு சொல்லியேவிட்டேன். ‘என் தோற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதைக் காண்கிறேன். அதற்கென்ன, சரிதானே. உங்களைப் புரிந்து கொள்கிறேன். எனக்கு மனத்தாங்கல் ஏற்படவில்லை’ என்றேன். அவள் கண்ணீர் பெருக்கினாள். ‘அழாதீர்கள். நீங்கள் நல்ல பெண். எவனும் உங்கள் மீது காதல் கொள்வான். வாழ்க்கையை நீங்கள் ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றேன். அப்புறம் சொன்னேன்: ‘நான் எப்பேர்பட்ட அழகன் என்பதை இப்போது நீங்கள் பார்த்துவிட்டீர்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள். நான் என் படைப் பிரிவுக்குப் போகிறேன். முகவரியை எழுதி அனுப்புகிறேன். எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிடவில்லை என்றால் எழுதுங்கள். அந்தச் சமயத்தில் விமானத்தாக்கு அபாய அறிவிப்பு ஒலித்தது. அவள் வெளியே போனாள். அந்தச் சந்தடியில் நான் மெதுவாக நழுவி நேரே ரெஜிமெண்ட் அலுவலகம் சென்றேன். போகிற போக்கிலேயே நியமனப் பத்திரம் பெற்றுக் கொண்டேன் எல்லாம் நலம். பிரயாணச் சீட்டு பையில் இருக்கிறது. போகிறேன். ஆனால் ஒரு விஷயம். அலெக்ஸேய், இப்போது நான் அவள் மேல் முன்னிலும் அதிகக் காதல் கொண்டு விட்டேன். அவள் இல்லாமல் எப்படி வாழ்வேனோ தெரியவில்லை.”

படிக்க:
காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?

அலெக்ஸேய் நண்பனின் கடிதத்தைப் படித்தான். தன் வருங்காலத்தை ஒரு பார்வை பார்த்தது போல அவனுக்குத் தோன்றியது. அவன் விஷயத்திலும் இப்படியே நேரும் போலும். ஓல்கா அவனை அருவருத்து ஒதுக்க மாட்டாள், முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டாள். பெருந்தன்மையுடன் புன்னகை செய்வாள், அருவருப்பை உள்ளடக்கிக் கொண்டு கொஞ்சி வருடுவாள்.

“இல்லை, இல்லை, வேண்டாம்! வேண்டாம்!” என்று உரக்கக் கூவினான் அலெக்ஸேய்.

விரைவாகக் கெந்தி நடந்து வார்டுக்குப் போய் மேஜை அருகே அமர்ந்து ஓல்காவுக்கு மளமளவென்று ஒரு கடிதம் எழுதினான். சுருக்கமான, விவகாரரீதியான, உணர்ச்சியற்ற கடிதம்: நம் உறவைப் பற்றி வெகுவாகச் சிந்தித்தேன். காத்திருப்பது உனக்குக் கடினமாயிருக்கும். யுத்தம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ? ஆண்டுகள் கழிந்து விடும், இளமை போய் விடும். யுத்தமோ, நிலையற்ற விஷயம் – எதிர்பார்ப்பு வீணாகவே முடியலாம். திடீரென நான் கொல்லப்படலாம். நீ எனக்கு மனைவி ஆகும் முன்பே விதவை ஆகிவிடக்கூடும். அல்லது இன்னும் மோசமானது நிகழலாம்: நான் அங்கவீனம் அடையலாம். அப்போது நீ அங்கவீனனின் மனைவியாக நேரிடும். எதற்காக? இளமையை வீணாக்கி விடாதே. விரைவில் என்னை மறந்து விடு. எனக்கு நீ பதில் கூட எழுதாமல் இருக்கலாம். நான் மனத்தாங்கல் கொள்ள மாட்டேன். எவ்வளவு தான் கஷ்டமாயிருந்தாலும் நான் உன்னைப் புரிந்து கொள்வேன். இவ்வாறு செய்வதே மேலாயிருக்கும்….

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

தமிழகத்தை நாசமாக்காதே ! மக்கள் அதிகாரம் சென்னை கருத்தரங்கம் | Live Streaming

அணுக்கழிவுகள் – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச் சாலை

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்

நாள்: 10.8.2019,
நேரம்: மாலை 4:00 மணி,
இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.

தலைமை :

தோழர் அமிர்தா,
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை.

சிறப்புரை :

திரு. அய்யநாதன்,
பத்திரிகையாளர்.

தோழர் தியாகு,
ஆசிரியர்,
உரிமைத் தமிழ்தேசம்.

திரு. வெற்றிச்செல்வன்,
பூவுலகின் நண்பர்கள்.

வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

தமிழகத்தை காக்க ஒன்றுதிரள்வோம்! வாரீர்!

மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 9176801656

குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை !

குஜராத் மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 10 விழுக்காடு. ஆனால், அவர்கள் சார்பில் நாடாளுமன்ற மக்களவையில் ஒரு பிரதிநிதி கூடக் கிடையாது. இந்து ராஷ்டிரம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதற்கு குஜராத் ஒரு எடுத்துக்காட்டு.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் திருத்தியமைக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். அதுவா பிரச்சனை? மக்களின் சிந்தனை திருத்தியமைக்கப்பட்டு விட்டது. “கடந்த 17 ஆண்டுகளில் மக்கள் சிந்திக்கும் முறையையே அவர்கள் மாற்றி விட்டார்கள். அதன் விளைவுதான் இந்தத் தேர்தல் வெற்றி” என்கிறார், 2002 குஜராத் படுகொலையில் தப்பிப் பிழைத்த ஷரீப் மலேக்.

அனைவரது நம்பிக்கையையும் பெறுவது (சப் கா விஸ்வாஸ்) தனது நோக்கம் என்றும், தனது அரசின் கீழ் சாதி, மத அடிப்படையில் எவருக்கு எதிராகவும் பாகுபாடு காட்டப்படாது என்றும் மோடி சொல்கிறார். ஆனால், குஜராத் முஸ்லீம்கள் யாரும் நம்பவில்லை. குஜராத்தில் எங்களுக்கு என்ன நடக்கிறதோ, அதுதான் நாடு முழுவதும் நடக்கப் போகிறது என்கிறார் மலேக்.

”இந்து ராஷ்டிரத்தின் ஹல்வாத் நகரம் உங்களை வரவேற்கிறது விஷ்வ இந்து பரிஷத்-பங்ரங்தள்” என குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருக்கும் விளம்பரப் பலகை.

குஜராத்தில் நடந்தது நாடு முழுவதும் நடக்காதா என்ன?… 2002-ல் என்ன நடந்தது என்பதை நாடு மறந்துவிட்டதா? ஏற்கனவே இது மே.வங்கத்தில் நடக்கத் தொடங்கிவிட்டது. வேண்டுமானால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் உருவாக்கும் இந்து ராஷ்டிரத்துக்கு முன்மாதிரிதான் குஜராத்” என்று சொல்கிறார் 2002-ல் நரோதா காம் கொலைக்களத்திலிருந்து உயிர் தப்பிய இம்தியாஸ் குரேஷி.
2002-ல் நடைபெற்றதைப் போன்ற வெளிப்படையான வன்முறை மீண்டும் ஒரு முறை குஜராத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதைச் சான்றுகள் காட்டுகின்றன. அல்ப சங்கியா அதிகார் மஞ்ச் என்ற குஜராத்தை சேர்ந்த மனித உரிமை அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை, அந்த மாநிலமே எங்ஙனம் மதரீதியாகப் பிளவுபட்டிருக்கிறது என்பதைத் தரவுகளுடன் விளக்குகிறது.

இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்துவதிலும் சகிப்பின்மையை அதிகரிப்பதிலும் சிறு அளவிலான கலவரங்கள்தான் பெரும்பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில் குஜராத்தில் மதக் கலவரமே நடப்பதில்லை என்பது போன்ற ஒரு பொய்த்தோற்றத்தையும் இந்த உத்தியின் மூலம் வெளியுலகிற்குக் காட்ட முடிகிறது என்று கூறுகிறது அந்த அறிக்கை.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விவரங்களின்படி 1998 முதல் 2016 வரையிலான காலத்தில் குஜராத்தில் 35,568 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. 2014-ம் ஆண்டு மட்டும் 164 கலவரங்களில் 305 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் கலவரங்கள் நடைபெற்ற இடங்கள் எல்லாம் 2002 படுகொலையின்போது அமைதியாக இருந்தவை என்பதும், சமூக ஊடகங்கள்தான் மதத் துவேசத்தைப் பரப்புவதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கவை.

இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தும் தந்திரத்தை வெற்றிகரமாக அமலாக்கியிருக்கும் நகரம் அகமதாபாத். முன்னர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக வசித்து வந்த முஸ்லீம்கள் இப்போது நகரின் குறிப்பிட்ட சில இடங்களுக்குள் ஒதுக்கப்பட்டு விட்டனர். நகரின் மேட்டுக்குடி வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளில் வசதி படைத்த முஸ்லீம்கள்கூடக் குடியேற முடியாது. நகருக்கு வெளியே உள்ள ஜுகாபுரா போன்ற சேரிப்பகுதிகளில் குடியேறும்படி பணக்கார முஸ்லீம்களும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிறுபான்மை மக்களை வஞ்சிப்பதற்கு மோடி அரசு கடைப்பிடித்த சூழ்ச்சிகளில் சிலவற்றைப் பார்ப்போம். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மாற்று மதத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு தனது சொத்தை விற்க விரும்பினால், அதற்கு மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்று ஒரு சட்டம் அமலில் இருப்பது இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் மட்டும்தான்.

மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளுக்கு மத்தியில் ”சிட்டிசன் நகர்” குடியிருப்புகள்.

மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வாடகைக்குக் குடியிருக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மக்களை வீட்டின் உரிமையாளர்கள் வெளியேற்றுவதைத் தடுக்கும் பொருட்டும், அவர்களது வீடு, மனைகளைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டும் ஒரு சட்டம் 1991-ல் இயற்றப்பட்டிருந்தது. 2012-ம் ஆண்டில் அந்த சட்டத்தில் மோடி அரசு கொண்டு வந்த திருத்தம், மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் பிற மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொத்தை விற்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியது.

இந்தச் சட்டம் கலவரம் பாதித்த பகுதிகளுக்கானது என்பதால், அந்தப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற விரும்பிய முஸ்லீம்கள்தான் இதனால் பாதிக்கப்பட்டனர். நகரின் மையப்பகுதியில் சொந்த வீட்டில் குடியிருந்த முஸ்லீம்கள், 2002 கலவரத்துக்குப் பின் நகருக்கு வெளியே உள்ள பாதுகாப்பான ஜுகாபுரா, ஜமால்பூர் ஆகிய பகுதிகளுக்குக் குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேநேரத்தில், இந்தச் சட்டத் திருத்தத்தின் காரணமாக நகரின் மையப்பகுதியில் அவர்கள் ஏற்கனவே குடியிருந்த சொந்த வீடுகளை விற்கவும் முடியவில்லை. முஸ்லீம்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் அவர்களை ஏதிலிகளாக மாற்றியது மோடியின் சதித்தனமான இந்தச் சட்டத்திருத்தம்.

2012-ல் மைய அரசு சிறுபான்மை சமூகத்தின் மாணவர்களுக்கு அளித்த உதவித்தொகையை அவர்களுக்கு வழங்குவதில்லை என்று அன்றைய மோடி அரசு முடிவெடுத்தது. இதற்கு மோடி அரசு அளித்த விளக்கம் வக்கிரமானது. சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இந்தச் சலுகையின் காரணமாகப் பெரும்பான்மை சமூகத்தினர் ஆத்திரம் கொள்வார்கள் என்றும், பெரும்பான்மையினரின் கோபத்திலிருந்து சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதைத் தவிர்ப்பதாகவும் விளக்கமளித்தது மோடி அரசு.

2002 இனப்படுகொலையின் காரணமாக நிவாரண முகாம்களில் வசித்து வந்த முஸ்லீம்களுக்கு நிரந்தரக் குடியிருப்புப் பகுதியை ஒதுக்குவதாகக் கூறி, அவர்களை அகமதாபாத் நகரத்தின் குப்பைக் கிடங்கிற்கு அருகில் குடியேற்றியது அன்றைய மோடி அரசு. குப்பை மேட்டின் காம்பவுண்டு சுவரை ஒட்டி சாக்குகளாலும் தார்பாலின்களாலும் உருவாக்கப்பட்ட குடிசைகள், மண் சாலைகள், திறந்த சாக்கடை, குடிநீர் இல்லை என்ற அவலங்கள் நிறைந்த, மனிதர்களே வாழமுடியாத அந்தப் பகுதிக்குச் சூட்டப்பட்டிருந்த பெயர் சிட்டிசன்ஸ் நகர்.

குப்பைக்கிடங்கு – சாக்கடைகளுக்கிடையே குடிநீர் விநியோகம்.

“குப்பைகளின் வாடை தோலைத் துளைத்துக் கொண்டு உடலுக்குள் செல்கிறது” என்கிறார் அந்தக் குப்பை மேட்டின் ஓரத்தில் குடியிருக்கும் கடூனப்பா என்ற பெண். அவர் நரோதா பாட்டியா தாக்குதலில் உயிர் தப்பியவர். அந்தக் குடியிருப்பின் பெரும்பாலான மக்கள் நுரையீரல் நோயால் அவதிப்படுகிறார்கள்.

மோடி, அமித் ஷா விடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். என் படத்தைப் போட்டு முகவரியைப் போட்டு உங்கள் பத்திரிகையில் எழுதுங்கள். வேண்டுமானால் என்னைச் சுடட்டும். எனக்கொன்றும் பயமில்லை. மிருகங்கள்கூட வாழமுடியாத சூழலில் அவர்கள் எங்களை வைத்திருக்கிறார்கள். எங்களைக் கொல்லாமல் விட்டிருக்கிறார்கள், – அவ்வளவுதான். எங்கள் மீதான அவர்களுடைய கோபத்தையும் வெறுப்பையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் அவர்களுக்கு என்ன குற்றம் செய்தோம்?” என்று கேட்கிறார் கடூனப்பா.

படிக்க :
காஷ்மீர் : கார்கில் பகுதியில் தொடரும் போராட்டங்கள் | படங்கள்
டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை

முகலாயர்கள் நம் நாட்டைச் சூறையாடினார்கள். கோயில்களை இடித்தார்கள் என்று தங்கள் முஸ்லீம் வெறுப்புக்கு காரணம் சொல்கிறார்கள். இவர்களுடைய வரலாறும் ஒரு நாள் எழுதப்படும். முகலாயர் வரலாற்றைப் பற்றி என்ன சொல்கிறார்களோ அதைப் போன்றதாகத்தான் இவர்களுடைய வரலாறும் இருக்கும்” என்கிறார் குரேஷி.

அஜித்.

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?

0

ந்திய மோட்டார் வாகனச் சந்தை கடும் தேக்கத்தை எதிர்நோக்கி உள்ளது. வாகனச் சந்தை எதிர் கொள்ளும் நெருக்கடி, பிற தொழில்களுக்கும் மெல்ல மெல்ல பரவி ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி இந்தியா மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றது. இதன் விளைவாக உற்பத்தி நிறுத்தம்  உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்தித்து வருகின்றனர். உற்பத்தி ஆலைகளில் நடந்து வரும் வேலையிழப்புகளை விட, உதிரி பாகங்களைத் தயாரிக்கும் சிறு பட்டறைகளில் ஏற்பட்டு வரும் வேலை இழப்பு பன்மடங்கு அதிகம். சில இலட்சம் வேலைகளை இப்போதைய பொருளாதார காவு வாங்கியுள்ளது.

நெருங்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மோட்டார் வாகனச் சீர்திருத்தங்களில் துவங்கி இதர எண்ணற்ற காரணங்களை முதலாளிய பொருளாதார அறிஞர்கள் பட்டியலிட்டு வருகின்றனர். தி வயர் இணைய தளத்தில் வெளியாகி உள்ள இந்தக் கட்டுரை வேறு ஒரு கோணத்தை முன் வைக்கிறது.

”கார்கள் தாமாக விற்றுப் போவதில்லை; அவற்றுக்கு கிடைத்து வந்த கடனுதவி தான் கார்களை விற்றது” என்கிறார் மும்பையைச் சேர்ந்த மாருதி கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த சந்தை மேலாளரான ஆர்.விஜயராகவன். மேலும், “இன்றைய நிலையில் கடனுதவி கிடைப்பதில் சிக்கல் என்பதால் தான் கார்களும் விற்பனை ஆவதில்லை” என்கிறார். அதே நிறுவனத்தின் பொது மேலாளர் கார்புரே, “முன்பெல்லாம் ஒவ்வொரு நாளும் 15-ல் இருந்து 20 கார்கள் விற்பனை ஆகும். இப்போதெல்லாம் 3-ல் இருந்து 5 கார்கள் விற்றாலே பெரிய விசயமாக இருக்கிறது” என்கிறார்.

இது அந்த குறிப்பிட்ட விற்பனை நிறுவனத்தின் பிரச்சினை மட்டுமல்ல. இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் கார்கள் விற்பனையில் 20.55 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் இந்த விற்பனைத் தேக்கம் சுமார் 19 ஆண்டுகளில் காணாத ஒரு சூழலாகும். கடந்த ஜூலை மாதம் ஏறத்தாழ 30 சதவீத அளவுக்கு விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பூர்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் இந்தியச் சந்தையின் வீழ்ச்சி என்றால் இன்னொரு புறம் சீனச் சந்தையும் வீழ்ச்சியில் உள்ளது. மற்றொருபுறம் கடுமையான புகை உமிழ்வு கட்டுப்பாடுகளால் மின்வாகனங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடி. ஏற்கெனவே பெட்ரோலிய பொருட்களில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்கள் மின்வாகன உற்பத்தியில் ஈடுபட அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். இதற்கு நிறைய செலவிடவும் வேண்டும் – எனினும், விற்பனை வீழ்ச்சியின் விளைவாக அவ்வாறான ஆராய்ச்சிப் பணிகளும் மந்தகதியிலேயே நடந்து வருகின்றன.

சீனாவின் வாகனச் சந்தையின் தேக்கத்திற்கு காரணமாக கடுமையாக்கப்பட்டுள்ள புகை உமிழ்வு கட்டுப்பாட்டு சட்டங்களையே பெரும்பாலான சந்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியாவில் அதோடு சேர்த்து வேறு சில காரணிகளும் உள்ளன. இந்திய நுகர்பொருள் சந்தை 2016-ம் ஆண்டு மோடி அறிவித்த இழிபுகழ் பெற்ற பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் துவங்கி வீழ்ச்சிப் பாதையில் நுழைந்தது. அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட புதிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. இந்தியப் பொருளாதாரத்தை சவப்பெட்டியினுள் கிடத்தி அதன் மேல் மூடியைச் சாத்தியது.

இதைத் தொடர்ந்து விவசாயப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி ஊரகப்பகுதிகளில் ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்தது. இறுதியாக வங்கியில்லா நிதிநிறுவனங்களின் வீழ்ச்சி, சவப்பெட்டியின் கடைசி ஆணியை அடித்து இறக்கியுள்ளது. வங்கியல்லாத நிதிநிறுவனங்களிலேயே மிக முக்கியமானது ஐ.எல். & எப்.எஸ். இந்நிறுவனம் தான் அரசு மற்றும் தனியார் கார்ப்பரேட்டுகளின் பல்வேறு உள்கட்டுமானத் திட்டங்களுக்கு நிதி உதவி செய்து வந்தது. ஐ.எல். & எஃப்.எஸ். வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து வீட்டுக்கடன் வழங்கி வந்த டி.ஹெச்.எப்.எல். செய்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.  டி.ஹெச்.எப்.எல். செய்த மோசடி ஊடகங்களில் பரபரப்பான விவாதப் பொருளான நிலையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் கணக்கு விவரங்களைக் கேட்டு மத்திய ரிசர்வ் வங்கி நெருக்கடி கொடுத்தது.

ஒருபுறம் தமது கணக்குப் புத்தகங்களை உடனடியாக “சுத்தமாக்க” வேண்டிய கட்டாயமும் இன்னொரு புறம் பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் துவங்கி மோடி அரசு பொருளாதாரத்தின் மீது நடத்திய “சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளால்” ஏற்பட்டு வந்த பணப்புழக்கமின்மையும் (liquidity crisis) வங்கியல்லாத நிதிநிறுவனங்களை நெருக்கிப் பிடித்தன. எனவே, இந்நிறுவனங்கள் தமது கடன் கொடுக்கும் ”வெறியை” கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உருவானது.

இந்தியாவில் விற்பனையாகும் வர்த்தக கார்களில் (மஞ்சள் போர்டு) சுமார் 55-60 சதவீதம் வங்கியல்லாத நிதிநிறுனவங்களின் கடனுதவி வழங்கி வந்தன. அதே போல் தனியார் நுகர்வோர்களுக்கான கார்களில் (வெள்ளை போர்டு) 30 சதவீதமும், இரு சக்கர வாகனங்களில் 65 சதவீதத்திற்கும் வங்கியல்லாத நிதிநிறுவனங்களே நிதி உதவி செய்து வந்தன.

உற்பத்தியான கார்கள் தேங்கி நிற்பதால் ஏற்படும் பராமரிப்பு செலவுகளைக் கட்டுப்படுத்த மாருதி, டாடா, ஹூண்டாய், மகிந்திரா போன்ற நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன. ஒரு சில நிறுவனங்கள் சில உற்பத்தி ஆலைகளையே மூடி விடுவது என்கிற முடிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன.

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்கள் பாதிக்கும் மேல் குறைந்துள்ள நிலையில் வங்கிகளோ தங்களது கணக்குப் புத்தகங்களை “சுத்தமாக” வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கடன் பெறும் நுகர்வோரை முடிந்த வரை சலித்து கழித்துக் கட்டுகின்றன. இதன் விளைவாக புதிதாக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

படிக்க:
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !
வாகன விற்பனையில் மந்த நிலை :  32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !

இந்த சூழல் எப்போது விடியும் என பல்வேறு முதலாளிய சந்தை நிபுணர்களும் வெவ்வேறு விதமான ஆருடங்களைச் சொல்லி வருகின்றனர். ஆனால், சிக்கல் என்னவென்றால் இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு அதன் அடித்தளத்தில் இருந்தே ஆட்டம் கண்டுள்ளது என்பது தான். இதைத் தீர்ப்பதற்கான யோசனையோ விருப்பமோ ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதால் கூடிய விரையில் விடிவு ஏற்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தனது சமீபத்திய ட்வீட் ஒன்றில் ராகுல் காந்தி இவ்வாறாக கூறியிருந்தார் “தூரத்தில் தெரிவது வெளிச்சப் புள்ளியல்ல – அது வெகு வேகமாக நெருங்கி வரும் பொருளாதார நெருக்கடி என்கிற ட்ரெயினின் முக விளக்கு” – அரிதான சந்தர்ப்பங்களில் காங்கிரசுப் பெருச்சாளிகளும் உண்மையைப் பேசி விடுகின்றனர்.


சாக்கியன்
மேலும் வாசிக்க : தி வயர்

அறிவுத்துறையினரின் மௌனம் – பாசிசத்தின் பாய்ச்சல் !

silence-slider

ரசியல் சட்டப் பிரிவு 19 வழங்கும் கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்கள், போலீசின் அதிகாரம் குடிமக்களின் கருத்துரிமையை காட்டிலும் மேலானது என்ற கோணத்தில்தான் சமீபகாலமாகத் தீர்ப்புகளை வழங்குகின்றன.

ஹைட்ரோ கார்பன் போன்ற வளர்ச்சித் திட்டங்களை ஆதரித்துக் கருத்து தெரிவிப்பதோடு நில்லாமல், அதனை எதிர்த்துக் கருத்து தெரிவிப்போரை நாட்டின் முன்னேற்றத்துக்கு எதிரானவர்களாகவும் சித்தரித்து சில நீதிபதிகள் கருத்து கூறுகின்றனர். ஒரு மாற்றுக் கருத்து என்ற முறையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துரிமையைக்கூட நிராகரிக்கின்றனர். தூத்துக்குடி தியாகிகள் நினைவஞ்சலிக் கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததை அப்படியே வழிமொழிகின்றனர்.

h-raja-on-periyarபழனி கோயிலில் மோப்ப நாய் பாதுகாப்பு எனச் சமீபத்தில் வந்த செய்தியை விமர்சனம் செய்து பகுத்தறிவாளரான ஒரு பெண் தனது முகநூலில் எழுதியதைத் தொடர்ந்து, அவருக்குத் தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் மீது இந்து முன்னணியினர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. அவர் முன் பிணை மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த திண்டுக்கல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட 66-ஏ பிரிவில் போலீசார் அந்த வழக்கைப் பதிவு செய்திருப்பதே செல்லாது என்று வழக்கறிஞர் கூறியதைக் கணக்கில் கொள்ளவே இல்லை. மாறாக, அந்தப் பெண் முப்பது நாட்களுக்கு பழனி கோயில் வாசலைக் கூட்டிச் சுத்தம் செய்வதாக இருந்தால், முன்பிணை வழங்குவதாகக் கூறியிருக்கிறார்.

முன்பிணைக்கான நிபந்தனையையே தண்டனையாக மாற்றும் இந்த அணுகுமுறையே சட்டவிரோதமானது என்பது ஒருபுறமிருக்க, இந்த நிபந்தனை மதச்சார்பின்மைக்கு எதிரானது எனக் கூறி அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் நிபந்தனையை ஏற்க மறுத்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதியும் இல்லாத குற்றப் பிரிவில் வழக்கு தொடுத்த போலீசைக் கண்டிக்கவில்லை. மாறாக, பிணைக்கான நிபந்தனையையே தண்டனையாக மாற்றும் அதே கண்ணோட்டத்தில், பழனி மலை மேல் இருக்கும் காவல் நிலையத்தில் அன்றாடம் சென்று கையெழுத்திட்டால் முன்பிணை தருவதாகக் கூறியிருக்கிறார். பெரியாரை எதிர்த்த காரணத்துக்காக எச்.ராஜாவை என்ன பாடு படுத்தினீர்கள் என்றும் வெளிப்படையாகவே நீதிமன்றத்தில் பேசியிருக்கிறார்.

படிக்க:
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !
♦ போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !

எச். ராஜாவுக்கு ஒரு மாத காலத்திற்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தால்தான் முன்பிணை தருவோம் என்று கூறினால், அது எப்படித் தவறாகுமோ, அப்படித்தான் நீங்கள் ஒரு பகுத்தறிவாளருக்கு விதிக்கும் நிபந்தனையும் தவறானது, அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியது என்று வழக்கறிஞர் வாதிட்டதைத் தொடர்ந்து, அந்த நிபந்தனையை நீதிமன்றம் கைவிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் காவல்துறை மட்டுமின்றி, நீதித்துறையும் மென்மேலும் இந்துத்துவ சார்பாகவும் புதிய தாராளவாத பேரழிவுத் திட்டங்களுக்குச் சார்பாகவும் இவற்றை எதிர்த்துப் போராடுகிற மக்கள் இயக்கங்களுக்கு எதிராகவும் பேசி வருவதை நாம் காண்கிறோம். இந்த நடவடிக்கைகள் தமிழகத்தில் பாரதிய ஜனதாவைக் காலூன்ற வைப்பதற்கான முயற்சியுடன் நேரடியாகத் தொடர்புள்ளவை. இது நீதித்துறையில் தோன்றி வரும் ஒரு புதிய இயல்பு நிலை.

வடமாநிலங்களில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற கும்பல் தாக்குதல்கள் மற்றும் பசுக் குண்டர்களின் கொலைகள் எங்ஙனம் ஒரு புதிய இயல்பு நிலையாக மாற்றப்பட்டிருக்கின்றனவோ, அது போலத் தமிழகத்தில் இந்தப் புதிய இயல்புநிலை உருவாக்கப்படுகிறது.

இது குறித்து வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர் மத்தியில் அதிருப்தியும் குமுறலும் இருந்த போதிலும், இதனை எதிர்த்து நிற்காமல், போராடிக் களைத்தவர்களைப் போல பலர் மவுனம் சாதிக்கின்றனர். பாசிசம் இந்த மவுனத்தின் மீதுதான் மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

– புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart