Sunday, June 21, 2026
முகப்பு பதிவு பக்கம் 142

காவிகளின் கற்பனைகளை பொடியாக்கிய, கர்நாடக உழைக்கும் மக்கள்!

ந்து ராஷ்டிரத்தின் தென்னிந்திய நுழைவாயிலாக கர்நாடகத்தை பிடித்துவிட்டோம் என்றும் அடுத்து கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு என ஒவ்வொரு மாநிலங்களாக ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றும் கொக்கரித்துக் கொண்டிருந்த காவி பாசிஸ்டுகளின் முகத்தில் கரியை அள்ளிப் பூசியுள்ளார்கள் கர்நாடக உழைக்கும் மக்கள்.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றும் என்று குறிப்பிட்டாலும், தேர்தல் நெருங்க நெருங்க “கர்நாடகத் தேர்தல் முடிவுகளை யாரும் கணிக்க முடியாது”, “காங்கிரஸ் வென்றாலும் பெரும்பான்மை பெறுவது சந்தேகமே” என்று திட்டமிட்டே பாசிஸ்டுகளுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்தன மைய ஊடகங்கள்.

அனைத்து கருத்துருவாக்கங்களையும் மீறி, ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்களைவிட 22 இடங்கள் கூடுதலாகப் பெற்று 135 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது காங்கிரஸ். சென்ற சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களில் வென்ற பா.ஜ.க., அதைத் தக்கவைத்துக் கொள்ளக்கூட முடியாமல் 66 தொகுதிகளுக்கு சரிந்திருக்கிறது.

இது காங்கிரஸின் தேர்தல் வெற்றி என்ற வரம்பைத் தாண்டி, நாடு முழுக்கவும் உள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள், தங்களின் வெற்றியாகக் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.

படிக்க : கர்நாடகா : குடகில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் பஜ்ரங் தள் !

குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் “தெற்கு பா.ஜ.க.வை நிராகரித்துவிட்டது” (The South Rejects BJP), “பா.ஜ.க அல்லாத தென்னிந்தியா” (BJPmukthsouthindia) போன்ற முழங்கங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். உண்மையில் குஜராத், உ.பி போன்ற மாநிலமல்ல கர்நாடகா, “இது வேறு” என்று பாசிஸ்டுகளுக்கு கர்நாடக உழைக்கும் மக்கள் வகுப்பெடுத்திருப்பதுதான் இந்த தேர்தல் முடிவுகளாகும்.

கர்நாடகத்திலும் கரைசேராத மோடி அலை!

மோர்பி பால விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான பிறகும், “மோடி” என்ற பிம்பத்தை முன்னிறுத்தி குஜராத்தை பாசிஸ்டுகளால் மீண்டும் வெல்ல முடிந்தது. “நான் உருவாக்கிய குஜராத்” என்ற முழக்கம் எடுப்பட்டது. ஆனால், “கர்நாடகத்தில் மோடிக்கு மவுசு இல்லை; கர்நாடகா குஜராத்தும் இல்லை” என்று காட்டியிருக்கிறது இத்தேர்தல் முடிவுகள்.

காங்கிரஸ் முன்வைத்த “40 சதவிகிதம் சர்க்கார்”, “இரட்டை ஊழல் சர்க்கார்” போன்ற முழக்கங்களை எதிர்கொள்ள முடியாமல், முழுக்கமுழுக்க “மோடி” என்ற பிம்பத்தையும், “தேசியவாதம் – இந்துத்துவம்” என்ற ஆயுதங்களையும் கைக்கொண்டே பாசிச பா.ஜ.க தேர்தலை எதிர்கொண்டது. பா.ஜ.க.வின் தோல்வி இந்த ஆயுதங்களெல்லாம் கர்நாடகத்தில் வேலைக்கு ஆகவில்லை என்பதையே அம்பலமாக்கியிருக்கிறது.

“சாலை, குடிநீர் வடிகால் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசத்தேவையில்லை. இந்து – முஸ்லீம் பிரச்சினை குறித்தும், இந்து தர்மம் குறித்தும் பேசி தேர்தலைச் சந்திப்போம். ஒரு முஸ்லீம் வாக்குகூட எங்களுக்குத் தேவையில்லை” என்று வெளிப்படையாகவே அறிவித்தார் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. பா.ஜ.க.வின் இந்த தேர்தல் உத்திக்கு கை மேல் பலனாகத்தான் முடிவுகள் வெளியாகியுள்ளன.

‘பாரதப் பிரதமர்’ மோடியே பங்கேற்று பிரச்சாரம் செய்த 20 பேரணிகள், அமித்ஷா பங்கேற்ற 30 பேரணிகள், பா.ஜ.க.வின் மையத் தலைமை வழிகாட்டி நடத்தப்பட்ட 30,000 பொதுக்கூட்டங்கள் அத்தனையும் புஸ்வானம். “என்னை 92 முறை காங்கிரஸ் இழிவுபடுத்தியுள்ளது” என்றார் மோடி; 93-ஆவது முறையாக கர்நாடக மக்களும் காரித் துப்பியுள்ளார்கள்.

2014-ஆம் ஆண்டு தொடங்கி மோடி இதுவரை வளர்ச்சியின் முகமாகவே பாசிஸ்டுகளால் முன்னிறுத்தப்பட்டிருகிறார்; அமித்ஷா போன்றோர் வெளிப்படையாக முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும் மோடி அவ்வாறு செய்வதில்லை. இந்த கர்நாடகத் தேர்தலில், மோடியின் பிரச்சாரங்களிலும் காவி நெடி தூக்கலாக வீசின.

“பஜ்ரங் தள் அமைப்பை தடைசெய்வோம்” என காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை விமர்சித்து, “ஆஞ்சநேயரையே அவமதித்துவிட்டார்கள், இந்த காங்கிரஸை தண்டிக்க வேண்டும்” என்றார் மோடி. மேடைக்கு மேடை “ஜெய் பஜ்ரங்பலி” என்று முழங்கினார்.

உத்தரப்பிரதேசத்தில் ராமனைப் போல, கர்நாடகத்தில் (பஜ்ரங்பலி) ஆஞ்சநேயரை முன்னிறுத்தும் இந்த முழக்கம் எடுபடும் என்று பலரும் கருதினார்கள். ஆனால், கர்நாடக மக்களோ “தாங்கள் வணங்கும் ஆஞ்சநேயர் வேறு, ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் வேறு” என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.

“தி கேரளா ஸ்டோரி” படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்றார் மோடி. ஆனால், அது தென்னிந்தியா முழக்க போனியாகமலே போனது.

வெத்து வேட்டாய்ப் போன சாதிவெறி – மதவெறிக் கணக்குகள்!

முஸ்லீம்களின் நான்கு சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்துவிட்டு, அதை லிங்காயத்துகளுக்கும் ஒக்கலிகர்களுக்கும் தலா இரண்டு சதவிகிதமாக பிரித்து வழங்கியது; எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 15-லிருந்து 17 சதவிகிதமாகவும், எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 3-லிருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்தியது – போன்ற சாதிரீதியான முனைவாக்கமும் பெரிதாக எடுபடவில்லை. லிங்காயத்துகள் மத்தியில் ஓரளவு வாக்குவங்கியைப் பெற்றாலும், ஒக்கலிகர்கள் மத்தியிலோ, தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள் மத்தியிலோ பா.ஜ.க போட்ட கணக்குகள் தப்பாகின.

திப்பு சுல்தானைக் கொன்றது உரி கவுடா, நஞ்சே கவுடா ஆகிய ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த இந்து மன்னர்கள்தான் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் லிங்காயத்துக்களுக்கும் ஒக்கலிகர்களுக்கும் வழங்கப்பட்ட 2 சதவிகித இடஒதுக்கீட்டைப் பறித்து மீண்டும் முஸ்லீம்களுக்கே வழங்கிவிடுவார்கள் என்றும், பி.எஃப்.ஐ அமைப்பை மீண்டும் கொண்டுவந்துவிடுவார்கள் என்றும் பிரச்சாரம் செய்தனர் பா.ஜ.க.வினர்.

முஸ்லீம் எதிர்ப்பையும், சாதிவெறி – இந்துமதவெறியையும் ஒருசேர தூண்டிவிட்ட இதுபோன்ற பிரச்சாரங்கள் பா.ஜ.க.வின் சிறந்த உத்திகள் என்று கணிக்கப்பட்டன. ஆனால், ஆர்.எஸ்.எஸ் வலுவாக உள்ள கடலோர கர்நாடகா (Coastal Karnataka) மாவட்டங்களைத் தவிர வேறெங்கும் இது எடுபடவில்லை.

ஒக்கலிகர்கள் அதிகம் வசிக்கும் பழைய மைசூர் பகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றிபெற்றனர். மும்பை கர்நாடகா மாவட்டங்களில், லிங்காயத்துகளின் ஒருபகுதி வாக்குகள் காங்கிரஸூக்கு சென்றுள்ளன. பா.ஜ.க.வின் கோட்டையாகக் கருதப்படும் குடகு மாவட்டங்களில் ஏறத்தாழ அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தப்பிப் பிழைத்தது கடலோரக் கர்நாடகா மட்டும்தான்.

வர்க்கப் பிரச்சினைகளை எதிரொலித்த வாக்குகள்!

பெரும்பாலான கிராமப்புறப் பகுதிகளில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க.விற்கு நகர்ப்புறங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், பெங்களூரு பகுதியில் பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது. 2018-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், அங்கு அதிக தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.

“40 சதவிகிதம் சர்க்கார்” என்ற பிரச்சாரம் கர்நாடகா முழுக்க ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், படித்த பிரிவினர் வாழும் பெங்களூரு போன்ற நகர்ப்புற மாவட்டங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பதை பலராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. “பா.ஜ.க தனது பிரச்சாரங்களை நகர்ப்புறத்தில் வீச்சாக கொண்டுசேர்த்துள்ளது” என்ற பொதுவான காரணத்தைத் தாண்டி பெரும்பாலான கணிப்பாளர்களால் இதை விளக்க முடியவில்லை.

பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலுக்கோ, வளர்ச்சி குறித்த வாய்ச்சவடால் அரசியலுக்கோ எந்த மக்கள் பிரிவினர் பலியாகிறார்கள் என்பதை ஆராயாமல் இதற்கு விடை காண முடியாது. அதிலும் “லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் வாக்குவங்கி” என்று சாதிரீதியாக மட்டுமே பார்த்தால் நிச்சயம் பா.ஜ.க.வின் தோல்வியைப் பரிசீலிக்க முடியாது.

கர்நாடகத் தேர்தல் சாதிய – மத ரீதியான பிரச்சினைகளைத் தாண்டி வர்க்கப் பிரச்சினைகளை எதிரொலித்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும்போது மட்டுமே பா.ஜ.க.வின் தோல்வியையும் காங்கிரஸின் வெற்றியையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மிகப்பெரும் கார்ப்பரேட் ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளைவிட, கர்நாடக தேர்தல் முடிவுகளை மிகத் துல்லியமாக எடைபோட்டது ஓர் சிறிய கன்னட செய்தித்தளமான “ஈ-தினா” (eedina.com)வின் கருத்துக்கணிப்பாகும்.

படிக்க : கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது

ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில் அது வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள், காங்கிரஸ் 132 முதல் 140 இடங்களைப் பெறும் என்றும், பா.ஜ.க. 57 முதல் 65 இடங்களைப் பெறும் என்றும், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 19-25 இடங்களுக்குள் பெறும் என்றும் கணித்திருந்தது. ஏறத்தாழ தற்போதைய முடிகளுக்கு நெருக்கமான கணிப்பாக இதுவொன்றுதான் இருக்கிறது.

“இக்கணிப்புகள் தொலைபேசி மூலம் நடத்தப்படாமல் நேருக்கு நேர் மக்களிடம் உரையாடுவதன் மூலம் பெறப்பட்டது” என்கிறார் ஈ-தினாவுக்கு வழிகாட்டியாக இருந்த யோகேந்திர யாதவ்.

மேலும், இக்கருத்துகணிப்பு மக்களின் வர்க்க நிலையை ஆராய்ந்ததன் அடிப்படையில் நடத்தபட்டதுதான் சிறப்புக்குரிய விசயம். அனைத்து சாதிகளிலும் உள்ள மக்கள் எந்த வகையான பொருளாதார நிலையில் உள்ளவர்கள் என்பதை இக்கருத்துக்கணிப்பு மிகத்தெளிவாக பதிவுசெய்தது. அது பல முக்கியமான அம்சங்களை வெளிக்காட்டியது.

அனைத்து சாதிகளிலும் மேட்டுக்குடிகள் மத்தியிலும் அதிக சம்பளம் பெறும் குடும்பத்தினர் மத்தியிலும் பா.ஜ.க.விற்கு பெரும்பளவு ஆதரவு இருப்பதையும், ஏழைகள், சொற்ப சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தும் குடும்பங்களிடம் காங்கிரஸுக்கு அதிக ஆதரவு இருப்பதையும் ஈ தினாவின் கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியது.

224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 204 தொகுதிகளில் 41,169 பேரிடம் நேரில் சென்று பதிலைப் பெற்றதில், விவசாயத் தொழிலாளர் – அன்றாடங்காய்ச்சிகளில் 50 சதவிகிதம் பேர் காங்கிரஸூக்கும், 29 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கும் வாக்களிப்போவதாக கூறியுள்ளனர். வியாபாரிகள், சொந்தமாக தொழில் செய்பவர்களில் 43 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வையும் 30 சதவிதம் பேர் காங்கிரஸையும் ஆதரிக்கின்றனர். அதிக அளவும் ஊதியம் பெறுவோரில் குறைவானர்களே காங்கிரஸை ஆதரிக்கின்றனர். குறைந்த அளவு ஊதியம் பெறுவோரில் அதிகமானோர் காங்கிரஸை ஆதரித்துள்ளனர்.

பா.ஜ.க.வின் உறுதியான வாக்குவங்கிகளாகக் கருதப்படும் முற்படுத்தப்பட்ட சாதிகளிலேயே மிகவும் ஏழைகள் 34 சதவிகிதம் பேர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். லிங்காயத்துகளில் பணக்காரர்களில் 24 சதவிகிதமும் ஏழைகளில் 32 சதவிகிதமும் காங்கிரஸை ஆதரித்துள்ளனர். அதேநேரம், பட்டியல் இனத்தவர்களில் ஏழைகளில் 31 சதவிகிதம் காங்கிரஸையும், பணக்காரர்களில் 4 சதவிகிதம் பேர் பா.ஜக.வையும் ஆதரித்துள்ளனர்; முஸ்லீம்களில்கூட முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் 22 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஈ-தினா கருத்துக்கணிப்பின் துல்லியம், அதன் ஆய்வு எந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது என்பதையே காட்டியுள்ளன. அந்த உண்மை, மதவெறியைத் தாண்டி வர்க்கப் பிரச்சினைகள்தான் தேர்தலில் எதிரொலித்துள்ளன என்பதையே காட்டுகின்றன.

தற்போது பா.ஜ.க தனது அடித்தளத்தை தக்கவைத்திருக்கும் கடலோரக் கர்நாடகத்தில்கூட நீண்டகாலமாக முஸ்லீம்களின் பொருளாதார வளர்ச்சியை, மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கு எதிராகக்காட்டி நீண்டகாலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் செயல்பட்டுவந்ததன் விளைவாக பா.ஜ.க வென்றிருக்கிறது.

அதேநேரம், ஹிஜாப் தடை, ஹலால் ஜிகாத், முஸ்லீம்களுக்கு இந்து கோயில்களை கூற்றி கடைவைக்க அனுமதி மறுப்பு போன்ற விவாகரங்களில் ஏழை – எளிய மக்களிடம் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரான உணர்வே பிரதிபலித்தது என்பதை பல ஊடகங்களின் பேட்டிகளும் காட்டின.

திப்பு சுல்தானுக்கு எதிரான பிரச்சாரம், இடஒதுக்கீட்டுச் சலுகை அனைத்தையும் தாண்டி பழைய மைசூர் பகுதிகளில் ஒக்கலிகர்களின் ஓட்டுகள் காங்கிரஸுக்கு விழுந்ததற்கு காரணம், ஒக்கலிகர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள். “குஜராத்தின் அமுல் நிறுவனத்தை கர்நாடகத்தில் திணிப்பதன் மூலம் கர்நாடக பால் கூட்டுறவு நிறுவனமான நந்தினியை பா.ஜ.க அழிக்கிறது” என்ற காங்கிரஸின் பிரச்சாரமே ஒக்கலிகர்களின் காங்கிரஸ் ஆதரவுக்கு அடித்தளம்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ரூ.3,000-ம், பட்டயதாரிகளுக்கு ரூ.1,500-ம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகையாக கொடுப்பது போன்ற வாக்குறுதிகள் ஏழை எளிய மக்களை காங்கிரஸின் பக்கம் வென்றெடுத்தன. (இந்த வாக்குறுதிகளெல்லாம் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் என்பவரால் திட்டமிட்ட நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டன என்பது முக்கியமானது)

மாறாக, வறுமைகோட்டுக்கு கீழுள்ளவர்களுக்காக பா.ஜ.க அறிவித்த மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள் (யுகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு); தினமும் அரை நந்தினி பால், ஐந்து கிலோ சிறுதானியம் போன்றவை ஏழை மக்களால் புளுகு மூட்டைகளாகவே அணுகப்பட்டன. மாநிலத்தில் யூனிஃபார்ம் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், பெண்களின் பாதுகாப்பிற்கு பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் நகர்ப்புற வாக்களார்களை கவர்ந்துள்ளன.

தேர்தல் முடிவுகள் எதை வெளிப்படுத்துகின்றன?

பொருளாதார அம்சங்களின்றி, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்போம் என்ற வாக்குறுதி கன்னட மக்களின் இந்தி எதிர்ப்புணர்வையும், மேகேதாட்டு அணை கட்டும் வாக்குறுதி இனவெறியையும் தூண்டிவிட்டது அரசியல் ரீதியில் காங்கிரஸுக்கு வலுச்சேர்த்துள்ளது.

மேலும், “கர்நாடகத்தின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது” என்று சோனியா காந்தி பேசிய விவாகரத்தில், “கர்நாடகம் என்ற ஒரு மாநிலத்திற்கு இறையாண்மை என்பதன் மூலம் காங்கிரஸ் பிரிவினைவாதம் பேசுகிறது” என்ற பா.ஜ.க.வின் பிரச்சாரம் பா.ஜ.க.வுக்கு எதிராகவே முடிந்துள்ளது. “ஒரே பாரதம்” என்ற காவிகளின் நிகழ்ச்சிநிரலுக்கு கர்நாடகம் பலியாகவில்லை என்பதன் நிரூபனங்களே இவை.

கர்நாடகத்தின் தேர்தல் வெற்றிகள், “மோடி என்ற பிம்பம், இந்துத்துவ அரசியல், இந்திய தேசியவாதம்” ஆகிய பா.ஜ.க.வின் அஸ்திரங்கள் பசுவளைய மாநிலங்களில் வேண்டுமானல் செல்லுபடியாகலாம், தென்னிந்தியாவில் செல்லுபடியாகாது என்பதை மட்டுமின்றி, வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதரப் பிரச்சினைகள் நாளுக்கு முற்றிவருவதையும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல உழைக்கும் மக்கள் புழுங்கிவருவதையும் சேர்த்தே காட்டுகின்றன.

படிக்க : கர்நாடகா: பள்ளி வகுப்பறைகளில் காவி நிறம் அடிக்கும் பாஜக அரசு!

தேர்தலுக்காக இதுபோன்ற கவர்ச்சிவாத வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அள்ளி வீசினாலும், தனியார்மயம் – தாரளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடாத காங்கிரஸ், நடைமுறையில் அதை அமலாக்குவது குதிரைக் கொம்பே. பேருக்காக சிலவற்றை அமலாக்கினாலும், வேறு பல துறைகளில் தீவிர மறுகாலனியாக்கத்தை அமல்படுத்தவே முற்படும். கொதித்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் அப்போது காங்கிரஸுக்கு எதிராக திரளுவதும், அதை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்வதும் நிச்சயம்.

இன்னொருபக்கம், தான் ஆட்சியில் இருந்ததைவிட இனிமேல்தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தனது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை தீவிரப்படுத்தும், மென்மையான இந்துத்துவப் போக்கைக் கடைபிடிக்கும் காங்கிரஸ், ‘இந்துக்களின் மனது புண்படாமல்’ அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதும் கேள்விக்குறி!

மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் இந்துத்துவ பாசிசத்தையும் வீழ்த்தும் பாதை தேர்தலுக்கு வெளியே வர்க்கப் போராட்டக்களத்திலும் மக்கள் எழுச்சியை உருவாக்குவதிலும் உள்ளது. கர்நாடக உழைக்கும் மக்களை அதை நோக்கி வழிநடத்திச் செல்ல வேண்டியது புரட்சிகர சக்திகளின் பொறுப்பாகும்.

ஆசிரியர் குழு
புதிய ஜனநாயகம்
14-05-2023

குகைகளில் தஞ்சம் அடையும் ஆப்கான் மக்கள் | படக்கட்டுரை

நெருக்கடியில் இருந்து இன்றும் மீளவில்லை ஆப்கான். விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை. இதனால், 2.83 கோடி மக்கள் அதாவது ஆப்கான் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட மக்களில் 60 இலட்சம் பேர் நெருக்கடியின் அபாயகரமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும்தான்.

மத்திய ஆப்கானில் உள்ள மலைப் பிரதேசமான பாமியானில் ஆய்வினை நடத்தியுள்ள ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம், அங்கு குளிர்காலம் பல ஆண்டுகள் இல்லாத அளவு கடுமையாக நிலவுவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே வறுமையிலும் நெருக்கடியிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்களை இக்குளிர் மேலும் வாட்டியுள்ளது. கடும் குளிரில் இருந்து தப்பிக்க இருப்பிடம் இல்லாத பல குடும்பங்கள் குகைகளில் தஞ்சமடையும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து UNHCR வெளியிட்ட படங்கள்..

கடும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தினசரி உணவு ரொட்டியும் தேநீரும்தான்.
வாடகை வீட்டிற்கு குடிபெயர முடியாததால், தனது மூன்று குழந்தைகளுடன் சிறு குகையில் தஞ்சம் அடைந்துள்ளார் ஃபாதீமா.
ஆப்கானின் மிகவும் குளிர்ச்சியான பாம்யானில், வாடகை வீட்டிற்கு செல்ல வழியில்லாமல், மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் குகைகள்.
66 வயதான ஷய்மா பாம்யான் மாகாணத்தில் சிறு குகையில் வாழ்ந்து வருகிறார். கடுமையான நெருக்கடிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறு துணிக்கடை ஒன்றை நடத்திவந்தார். தாலிபான்களின் ஆட்சிக்கு வந்ததும் வியாபாரம் சரிந்தது, “மக்களிடம் வாங்குவதற்கு பணம் இல்லை” என்கிறார் ஷய்மா.
தனது நான்கு குழந்தைகளுக்கு மாவும் எண்ணெய்யும் வாங்கக்கூட பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் 27 வயதான விவசாயி ஜாவத், “எதிர்காலம் குறித்து சிறிதும் நம்பிக்கையில்லை” என்கிறார்.
நசீம் மற்றும் அவரது குடும்பம் பான்யானில் சிறு குகை ஒன்றில் வசித்து வருகின்றனர். கட்டட தொழிலாளியான நசீம், சில நாட்களாக வேலையில்லாமல் தனது குடும்பத்தினருக்கு அன்றாட உணவுக்கூட வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

ஸ்வாதி
படக்கட்டுரை: அல்ஜஸீரா

அஸ்கர் அலி எஞ்சினியர்: மதவெறியை எதிர்த்த செயல் வீரர்!

அஸ்கர் அலி எஞ்சினியர் : மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர் ! – மீள்பதிவு

தீவிர மதவெறி எதிர்ப்பு செயல் வீரரும், ஆய்வாளரும், உறுதிமிக்க இசுலாமிய சீர்திருத்தவாதியுமான அஸ்கர் அலி எஞ்சினியர் மே 14, 2013 அன்று தனது 73-வது வயதில் இயற்கை எய்தினார்.

1980-களில் தீவிரம் பெற்ற பார்ப்பன இந்து மதவெறியையும் அதற்கு எதிர்வினையாக வலுப்பெற்ற இசுலாமிய மதவெறியையும் எதிர்த்துப் போராடிய அறிவுத் துறையினரில் எஞ்சினியர் மிகவும் முக்கியமானவர். இந்து மதவெறியை மட்டுமின்றி, இசுலாமிய மதவெறி, கடுங்கோட்பாட்டுவாதத்தை எதிர்ப்பதற்கும் அவரது எழுத்துகள் பெரிதும் பயன்பட்டன.

ஷியா இசுலாமின் ஒரு உட்பிரிவான தாவூதி போஹ்ரா சமூகத்தில் பிறந்தவர் அஸ்கர் அலி எஞ்சினியர். சையத்னா என்ற தலைமை மதகுருவின் சர்வாதிகாரத்திற்கு பெயர் போனது இந்த உட்பிரிவு. சையத்னா மொகியுத்தீன் என்ற தலைமை மதகுருவை வணங்க மறுத்து, தன் இளம் வயதிலேயே கலகத்தைத் தொடங்கியவர் அஸ்கர். 70-களில் சையத்னாவின் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதியதைத் தொடர்ந்து இவர் சமூக நீக்கம் செய்யப்பட்டு, சொந்த தாயைக் கூடப் பார்க்க முடியாமல் தடுக்கப்பட்டார். ஆறு முறை அஸ்கரின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் சையத்னாவின் கூலிப்படையினர். அவருடைய வீடும் அலுவலகமும் சூறையாடப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது. ஆனால், அஸ்கர் அலி எஞ்சினியர் இறுதிவரை பணியவில்லை..

படிக்க : கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது

அஸ்கர் இறை நம்பிக்கையாளர். நாத்திகக் கோட்பாடு என்ற காரணத்தினால் மார்க்சியத்தை ஒதுக்கியதாகவும், பின்னர் மார்க்சியம் தன்னை வென்றெடுத்துவிட்டதாகவும் அவர் சொல்வாரென்று குறிப்பிடுகின்றனர் அவரது நண்பர்கள். “ஒடுக்கப்பட்டோரின் ஏக்கப் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம்” என்ற கோணத்தில் மதத்தின் பாத்திரத்தை முதன்மைப்படுத்தி மதிப்பிட்ட அஸ்கர், மத நிறுவனங்களின் பிடியிலிருந்து மதத்தை விடுவிக்க வேண்டுமெனக் கருதினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவான இசுலாமை, பிரபுக்குலத்தினர் தம் வர்க்க நலனுக்கேற்ப வளைத்ததையும், பெண்ணுரிமையைப் பறித்ததையும், துணைக்கண்டத்தில் அஷ்ரப், அஜ்லப் என்ற மேல்சாதி – கீழ்சாதி பிரிவினை பேணப்பட்டதையும் அவர் அம்பலப்படுத்துகிறார். காலனியாதிக்க எதிர்ப்பிலும் கூட, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழை முசுலீம்களும் உலமாக்களும்தான் முன் நின்றனரேயன்றி, மேட்டுக்குடி முஸ்லிம்கள் அல்ல என்பதையும் தனது ஆய்வுகளில் ஆதாரபூர்வமாக அவர் விளக்குகிறார்.

1980-களில் ஷா பானு வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி அந்த மூதாட்டிக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட்டதை எதிர்த்தும், முஸ்லிம் பெண்களின் மணவிலக்கு வழக்குகள் ஷரியத்தின்படி மட்டுமே தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் இசுலாமிய மதவாதிகள் எழுப்பிய கோரிக்கையை எதிர்ப்பதில் அஸ்கர் முன்னணியில் நின்றார். இந்தப் போராட்டம் இந்து மதவெறி சக்திகளை வளர்த்து விடுவதற்குத்தான் உதவும் என்று சாடினார்.

இந்து மதவெறியின் எதிர்விளைவாகத்தான் இசுலாமிய கடுங்கோட்பாட்டுவாதமும், தீவிரவாதமும் வலுப்பெற்றன என்ற போதிலும், சிறுபான்மை மதவெறியை அவர் மென்மையாக அணுகவில்லை. மதவெறியினால் ஏற்படும் பாதிப்புகளை, இந்து-முஸ்லிம் என்ற சட்டகத்திற்கு அப்பாற்பட்டு, உழைக்கும் வர்க்கத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ற கோணத்திலேயே அவர் முதன்மையாக அணுகினார்.

“பதிலடி தரவேண்டும் என்று சில முஸ்லிம் இளைஞர்கள் கருதுவது நியாயமாகவே தெரிகிறது” என்று பிவாண்டி கலவரத்தைப் பார்த்த பின்னர் அஸ்கரிடம் தான் கூறியதாகவும், அதை அவர் கடுமையாக மறுத்ததாகவும் நினைவு கூர்கிறார், பத்திரிகையாளர் ஜோதி புன்வானி. 1993-இல் மும்பையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்த அச்சுறுத்தும் சூழலில், மும்பையின் குடிசைப் பகுதிகள் முழுவதிலும் அவர் முன்நின்று நடத்திய நல்லிணக்க பேரணியில் அஸ்கர் ஆற்றிய உரைகள் வர்க்க ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகின்றன.

மதக் கலவரங்கள் தொடர்பான அஸ்கரின் ஆய்வுகள் முன்மாதிரியானவை. ஜபல்பூர் கலவரத்தில் தொடங்கி வட இந்தியாவில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட கலவரங்களை அவர் நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு பிரச்சினையிலும் என்ன விதமான வர்க்க முரண்பாடுகள் அல்லது சமூக பொருளாதாரக் காரணிகள் எப்படி மத முரண்பாடுகளாகத் திரிக்கப்பட்டன என்பதை அவர் நிறுவுகிறார்.

“நாலு பெண்டாட்டி, முஸ்லிம் வாக்கு வங்கி, மதமாற்றம்” என்பன போன்ற இந்துத்துவ சக்திகள் பரப்பிய இசுலாமிய எதிர்ப்பு புனைவுகளுக்கும் அரை உண்மைகளுக்கும் சராசரி இந்துக்கள் எனப்படுவோர் பலியாகியிருந்த சூழலில், அவற்றை முறியடிப்பதற்கு நமக்கு ஆதாரங்கள் தேவைப்பட்டன. அவற்றை அரும்பாடுபட்டுத் திரட்டி நம் கையில் ஆயுதமாக வழங்கியவர்களில் முக்கியமானவர் அஸ்கர்.

இந்தியாவின் வரலாற்றையே இந்து-முஸ்லிம் மோதலின் வரலாறாகத் திரித்துக் காட்டும் சதியை இந்துத்துவ சக்திகள் மிகத் தீவிரமாக அரங்கேற்றி வந்த காலத்தில், ஆதாரபூர்வமாக அவற்றை மறுக்கும் எழுத்துகள் அஸ்கரிடமிருந்து வந்தன. மன்னர்களை அவர்களுடைய வர்க்க நலன்தான் இயக்கியதேயன்றி, மதமல்ல என்பதை அவர் வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவினார். மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உழைக்கும் வர்க்கத்திடம் நிலவி வந்த ஒற்றுமையின் சான்றாக, சுஃபி மற்றும் வட இந்திய பக்தி இயக்க மரபுகளிடையே காணப்படும் ஒற்றுமையை அவர் வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டினார்.

இசுலாமிய சீர்திருத்தவாதியாக இருந்தபோதிலும், எப்போதும் அவர் மதச்சார்பற்றவர்களுடன்தான் இணைந்து நின்றார். இறந்த பின்னரும் முற்போக்காளர்கள் துயிலும் இடுகாட்டில் தன்னைப் புதைக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். “கொள்கையைக் கடைப்பிடிப்பதில் பாறை போன்ற உறுதியைக் கொண்டவர்” என்று தனது தந்தையை நினைவு கூர்கிறார் அவரது மகன் இர்பான் எஞ்சினியர்.

படிக்க : எங்கும் இந்துராஷ்டிர பிரச்சாரம் எதிலும் இஸ்லாமிய மதவெறி பிரச்சாரம்

எனினும், மதவெறியை எதிர்த்த போராட்டத்திற்கே தனது வாழ்நாளை அர்ப்பணித்த அந்த மனிதர், குஜராத் படுகொலை பற்றிய செய்திகளை மட்டும் கேட்க விரும்பவில்லை என்று கூறுகிறார் அவரது நண்பர் ஜாகிர் ஜன்முகமது. “அதில் அவருக்கு அக்கறையில்லை என்பதல்ல; எல்லா மனிதர்களுமே அடிப்படையில் நல்லவர்கள்தான் என்பது அஸ்கர் கொண்டிருந்த நம்பிக்கை. அவருடைய அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்தில் இருந்தன குஜராத்திலிருந்து வந்த செய்திகள்” என்று குறிப்பிடுகிறார் ஜன்முகமது

மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்பன போன்ற அரூபமான நம்பிக்கைகள் தகர்வது தவிர்க்கவியலாததுதான். இருப்பினும், “பழகிய அண்டை வீட்டாரே கொலை செய்வது, வீடு புகுந்து சூறையாடுவது, கடைகளை அபகரித்துக் கொண்டு அகதிகளாகத் துரத்தியடிப்பது, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவைக் கொல்வது” போன்ற குஜராத் இனப்படுகொலையின் கொடூரங்களைக் கேட்டு அஸ்கரின் நல்லெண்ணமிக்க இதயம் நடுங்கியிருக்கக் கூடும்.

தனது ஆதாரமான நம்பிக்கை நழுவியதால் அவரை அழுத்தியிருக்கக் கூடிய துயரத்தின் சுமை, பொருள் முதல்வாதிகளாகிய நம் மீதும் இறங்குகிறது. அவரது மறைவு தோற்றுவிக்கும் துயரத்தைக் காட்டிலும் இது கனமானது.

சூரியன்
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013

கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது

மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவினால் இன்றைக்கு மகிழ்ச்சி அடைபவர்கள் நாளைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள். கட்சி மாறி பிஜேபிக்கு சென்றால் நம்முடைய எதிர்காலம் என்ன ஆகும் என்று ஒவ்வொரு பிழைப்பு வாதியும் சிந்திக்கும் தருணம் எப்போது வரும் ? பாஜக பாசிஸ்டுகளுக்கு எதிரான அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளும் போது தான்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 15 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! | பகுதி 3

துரையில் மே 15, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி – மாநாட்டை வாழ்த்தி வரவேற்றும் ஜனநாயக அமைப்புகள்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்! மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.

மே 15 மதுரை மாநாட்டிற்கு அணி திரள்வீர் | வழக்கறிஞர் சரவணன் | அம்ஜத் கான்

காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள்!!


ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!

சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!

மே 15, 2023,
மாநாடு – கலைநிகழ்ச்சி

ம.க.இ.க “சிவப்பு அலை” கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்

பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில், மதுரை

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு- புதுவை.

9791653200, 9444836642 7397404242, 9962366321


மே 15 மதுரையில் மாநாடு – அனைவரும் வாரீர்! | தோழர் குருசாமி

காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள்!!

எங்கும் இந்துராஷ்டிர பிரச்சாரம் எதிலும் இஸ்லாமிய மதவெறி பிரச்சாரம்

ர்.எஸ்.எஸ் – பா.ஜ.க போன்ற சங் பரிவார் கும்பலின் கருத்துக்களுக்கும் அவர்களின் மதவெறி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்காது மௌனம் காப்பதுதான் சகிப்புதன்மை என்கிறார் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் சத்ய பால்.

அண்மையில் ஆர்எஸ்எஸ்-இன் டெல்லி விளம்பரப் பிரிவின் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் சத்ய பால் சிங் தனது இந்துராஷ்ட்டிர மதவெறி பிரச்சாரத்தையும் இஸ்லாமிய மத வெறுப்பையும் முன்வைத்து மேடையில் பேசினார்.

தொடர்ந்து இஸ்லாமியர் மீதான வெறுப்பை உமிழ்ந்து வரும் சங் பரிவார் கும்பலின் காவி பாசிச கருத்தைதான் இன்று மத்திய இணையமைச்சர் நேரடியாக ஆர்.எஸ்.எஸ்-இன் டெல்லி செய்தி ஊடகப்பிரிவு நிகழ்ச்சியின் மேடையில் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

படிக்க : நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!

மேடையில் அவர் பேசுகையில் இந்திய நாட்டின் கட்டமைப்பே இந்துராஷ்டிர அடிப்படையிலானதுதான் என்றும் இது பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அகண்ட பாரத தேசம்தான் என்றும் பேசினார்.

மேலும் “ஊழல் லஞ்சத்தை விட வகுப்புவாதமே இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை என்று பேசிய அவர், இந்தியாவில் சகிப்புதன்மை கொண்ட இஸ்லாமியர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். அவர்களை தவிர்த்து மீதமுள்ள அனைவருமே ஏதோ ஒரு வகையில் மத அடிப்படைவாதிகளாகவும் வகுப்புவாதிகளாகவும்தான் செயல்படுகிறார்கள்” என்று தன்னுடைய மதவெறுப்பு அரசியலை தொடர்ந்து பேசினார்.

“அப்படி சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இஸ்லாமியர் சிலர் இருக்கிறார்கள். அது ஒரு மூகமுடி. அவர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் தங்களுடைய மதவாதக் கருத்தைப் பேசத் தொடங்குகிறார்கள்” என்றும் தாக்கி பேசினார்.

மேலும் “ஊடகங்கள் தங்களுடைய முதல் பக்கங்களில் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டு நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும். நீங்கள் எழுதும் தலைப்புகளை வெளியிட சரியான நேரம் இதுதானா என்பதையும் சிந்தித்து வெளியிட வேண்டும். மேலும் பத்திரிகை என்பது சமூகம் மற்றும் தேசத்தின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்” எனவும் கூறினார்.

இவர் கூறும் இதுபோன்ற கருத்துக்களை சாதாரணமான மேடை பேச்சாக கடந்த செல்ல முடியாது. இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவார் கும்பல் கூறும் சகிப்புதன்மைக்கு விளக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

குஜராத் இனப்படுகொலை நடந்த போதும் கர்ப்பினியின் வயிற்றை கிழித்தெறிந்து சிசுவைக் கொன்ற போதும் மௌனம் காக்க வேண்டும் அவர்கள்தான் சகிப்புதன்மையுடைய இஸ்லாமியர்கள்.

ஆஷிபா முதல் பில்கிஸ்பானு வரை இந்துமதவெறி காவிக் கும்பலால் பாலியல் பலாத்காரம், சித்திரவதை செய்ததை கைகட்டி வாய்பொத்தி மௌனம் காக்க வேண்டும் அவர்கள்தான் சகிப்புதன்மையுடைய இஸ்லாமியர்கள்.

அக்லக் முதல் பெகலுக்கான் வரை மாட்டு இறைச்சி வைத்திருந்தார்கள் என்று கூறி அடித்துக்கொன்ற போது அமைதி காக்க வேண்டும் அவர்கள்தான் சகிப்புதன்மையுடைய இஸ்லாமியர்கள்.

இப்படி அனைத்து மனித தன்மையற்ற செயல்களை பார்த்துக்கொண்டும் சகித்துக் கொண்டும் ஒரு மனிதன் வாழ முடியுமா? வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்கிறது இந்த காவிக் கும்பல்.

ஆளுநர் மற்றும் துணைவேந்தர் போன்ற பதவிகளில் நீடிக்கும்போது எதை பற்றியும் வாய்திறக்காத  இஸ்லாமிய அதிகாரிகள் பதவி ஓய்வு பெற்றதும் வகுப்புவாதத்தை முன்வைத்து பேசுகின்றனர் என்கிறார் அமைச்சர். இவ்வாறு கூறுவதன் காரணம் ஒன்றுதான். அரசு அதிகாரிகளாக செயல்பட்டு கொண்டிருந்தாலும் சரி அல்லது உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சரி இந்த காவி பாசிசக் கும்பலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இவர்களின் மதவெறி தாக்குதலுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதுதான்.

காவி கும்பலின் மதவெறி நடவடிக்கைகளை கண்டிப்பவர்களையும் அவற்றை விமர்சனம் செய்பவர்களையும் இஸ்லாமிய வகுப்புவாதிகள் சகிப்புதன்மை அற்றவர்கள் என்று கூறுகிறது இக்கும்பல்.

படிக்க : மன் கி பாத்: கேட்காத மாணவர்களை விடுதிக்குள் அடைத்த கல்லூரி!

மேலும் செய்தி ஊடகங்களை கிட்டத்தட்ட முழுமையாக விழுங்கிவிட்ட பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் கும்பல், அவற்றின் முன்பக்கத்தில் என்ன வர வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர். தவறியும் தங்களை பற்றிய எதிர் செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

இதுபோன்ற பாசிச நடவடிக்கைகள் இஸ்லாமியர் மீதான வெறுப்பு பிரச்சாரங்கள் இன்று சாதாரணவையாக மாறி வருகிறது. அந்த வகையில் பதவிகளில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மதக் கலவரங்களை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர்.

தொடர்ந்து இதுபோல் பேசிவரும் சங் பரிவார் கும்பல்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க நேரடி களத்தில் இறங்க போகிறோமா.? அல்லது சகித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கடந்து போக போகிறோமா.? இக்காவி கும்பலை வீழ்த்த வேண்டுமெனில் உழைக்கும் மக்களாய் நாம் ஒன்று சேர வேண்டும், இதன் மூலம் மட்டுமே இதுபோன்ற மதவெறி பாசிஸ்ட் கும்பலை வீழ்த்த முடியும்.

சித்திக்

மே 15 மதுரை மாநாடு பிரச்சாரம் – இடையூறு செய்த ஆண்டிப்பட்டி போலீசு || தோழர் சிவகாமு

துரையில் மே 15 அன்று நடைபெறும் மாநாட்டுக்காக மக்கள் கலை இலக்கிய கலகம்,புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னனி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி(மாநில ஒருங்கிணைப்பு குழு) மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் ஆண்டிப்பட்டி பகுதியில் மாநாட்டு நோக்கத்தை விளக்கி பொது மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

அந்தவேளையில் தோழர்களை தடுத்து பிரச்சாரத்தை நிறுத்த கூறிய உளவுப்பிரிவு போலீசு. இந்த எல்லைக்குட்பட்ட போலீசு நிலையத்தில் முன் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி சங் பரிவார் கும்பல் பொது இடங்களில் மாநாடு பொதுக்கூட்டம் நடத்தி வருவதை இதைபோன்று போலீசுத்துறையால் தடுக்க முடியுமா?

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தனியார் பள்ளி ஆசிரியரின் அவலநிலை

னியார் பள்ளிகள் பற்றிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை நாம் நமது அன்றாட வாழ்க்கையில், செல்லும் திசையெங்கும் பார்த்திருப்போம். “காற்றோட்டமான வகுப்பறை வசதி, குளிரூட்டப்பட்ட அறைகள், உலகத்தரமான கட்டமைப்பு வசதி” என்று ரியல் எஸ்டேட் வியாபாரிகள் போல் தங்களது பள்ளியை அவர்கள் விளம்பரம் செய்வதை நாம் அனைவரும் கண்டிருப்போம்.

ஆனால், இந்த “உலகத்தரமான கவர்ச்சிகளுக்கு” பின்னால் தனியார் பள்ளியின் ஆசிரியர்கள் எப்படி கொத்தடிமை போல் நடத்தப்படுகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் முழுக்கட்டணமும் வசூலித்தது. ஆனால், அந்த பள்ளிகள் தனது ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை அல்லது ஊதியத்தை குறைத்துக்கொடுத்தனர். இதனால் பலர் தங்களது வாழ்நிலையை குறைந்தபட்சமாவது தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு தினக்கூலி வேலைக்கு சென்ற செய்திகளை நாம் ஊரடங்கு காலத்தில் படித்திருப்போம். இப்படி எந்த பணிப்பாதுகாப்பும், வாழ்க்கை பாதுகாப்பும் இல்லாமல் வாழும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பணியிடங்களில் கூட மிகக் கொடுமையாக அடிமையைப் போல் வேலை செய்ய நிர்வாகத்தால் நிர்பந்தக்கப்படுகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

நெல்லை மேலப்பாளையம் ஷரினா பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த கோமதி, நிர்வாகத்தின் துன்புறுத்தல் காரணமாக தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். ஷரினா பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக இருப்பவர் எல்சி. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தையை கவனித்துக்கொள்ள யாருமில்லாததால், பள்ளி தாளாளர் அலுவலகத்திலே ஒரு பெண்ணை ஊதியத்திற்கு பணிக்கு  அமர்த்தி கவனித்து வந்தனர்.

படிக்க : மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: தனியார்மய கல்வியை ஒழிப்பதே தீர்வு!

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜீன் இறுதியில் விளையாட்டு ஆசிரியராக பணியில் சேர்ந்திருக்கிறார் கோமதி. அப்போது சில காலம் பள்ளி நேரத்தில் அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லி கோமதியை கேட்டிருக்கிறார் தலைமையாசிரியர் எல்சி. உடன் பணி புரிந்த சக ஆசிரியர்கள், “தலைமையாசிரியர் சொல்வதை செய்யுங்கள். இல்லையென்றால் உங்களை வேலை செய்ய விடமாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்கள். வேறுவழியின்றி கோமதியும் பள்ளி நேரத்தில் குழந்தைக்கு துணி மாற்றுவது, சாப்பாடு கொடுப்பது போன்ற வேலைகளை செய்திருக்கிறார்.

“வகுப்பு இல்லாத நேரத்தில் நீங்கள் மைதானத்திற்கு செல்லவேண்டாம். என் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார் தலைமையாசிரியர் எல்சி. முதலில் பள்ளி நேரத்தில் இப்படி வேலை வாங்கப்பட்டார் கோமதி. ஆனால், சில நாட்கள் சென்ற பின்பு குடும்ப சூழ்நிலை காரணமாக கோமதி தனது வீட்டை மாற்றுவது பற்றி பேசிய போது தலைமையாசிரியர் எல்சி, ஒரு வீடு காலியாக இருப்பதாக கூறியிருக்கிறார். கோமதிக்கும் அந்த வீடு அவசரத் தேவையாக இருந்ததால், வீடு மாற்றலாகி வந்துவிட்டார்கள். அதன் பின்பு சில நாட்களில் தலைமையாசிரியர் எல்சியும் கோமதி இருக்கும் வீட்டின் மாடிக்கு குடி பெயர்ந்து வந்துவிட்டார்.

வீடு மாற்றிய பின்பு தலைமையாசிரியர் அடிக்கடி மாடிக்கு அழைத்து கோமதியை வேலை வாங்கியிருக்கிறார். இரவு 8 மணிக்கு கூட குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க அழைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் “என் அம்மா இதய நோயாளி. என் வீட்டு வேலை அனைத்தையும் நான் தான் செய்யவேண்டும். இதில் உங்கள் வீட்டு வேலையையும் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார்” கோமதி.

பள்ளி ஆசிரியர்களை கொத்தடிமையாகவே நினைத்து நடத்தி வந்த தலைமையாசிரியருக்கு, கோமதி சுயமரியாதையாக நடந்து கொண்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் கட்டளையை மீறிய அந்த ஆசிரியரை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேவையான நேரத்தில் விடுமுறை தராமல் இருப்பது, எதையாவது மறந்து வைத்துவிட்டு வந்ததாக சொல்லி கோமதி தனது வீட்டுக்கு அனுப்பி அந்தப் பொருளை எடுத்து வரச் சொல்லி வேலை வாங்குவது, LKG படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் டைரி எழுதச் சொல்வது என நேரடியாகவும் மறைமுகமாகவும் கோமதி பழிவாங்கப்பட்டார். ஒரு கட்டத்தில் கோமதியின் அண்ணனையும் தலைமையாசிரியர் ஒருமையில் திட்டியுள்ளார்.

இது பற்றியெல்லாம் பள்ளி தாளாளரிடம் புகார் சொன்னதால் தலைமையாசிரியருக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. இப்போது கோமதியை LKG-யை தவிர மற்ற எந்த வகுப்பறைக்குள்ளும் நுழைய விடாமல் அவமானம் செய்திருக்கிறார்கள். அவருடன் வேலை செய்யும் மற்ற ஆசிரியைகள் அவரிடம் பேசினால்கூட அவர்களையும் மனதளவிலும் துன்புறுத்தல் செய்திருக்கிறார்கள். பள்ளியில் இருக்கும் ஒரே ஒரு விளையாட்டு ஆசிரியர் கோமதி மட்டும்தான். இருந்தாலும் எல்லா வகுப்புகளும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போதுகூட கோமதி புகைப்படத்தில் நிற்க அனுமதிக்கப்படவில்லை. கோமதியிடம் கரிசனத்துடன் பேசியதற்காகவே கோமதியுடன் பணி புரிந்த சக ஆசிரியை வேலையை விட்டு நீக்க முயிற்சித்து வருகிறார்கள்.

இதை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாத கோமதி, ராஜினாமா கடிதத்தை தாளாளரிடம் கொடுத்துள்ளார். அதற்கு தாளாளர், “எல்லாப் பள்ளிகளிலும் தலைமையாசிரியருக்கு ஒரு லட்சம் ஊதியம் தரப்படுகிறது. இவர் மட்டுமே 30,000 ஊதியத்திற்கு எங்களுக்காக வேலை செய்கிறார். இவரைப் போல் ஒருவரை எங்களால் தேட முடியாது. அதனால் தலைமையாசிரியர் கொடுக்கும் வீட்டு வேலைகளை செய்து அனுசரித்து போனால் தான் இங்கே வேலை செய்ய முடியும். என்னால் தலைமையாசிரியரை இதுபற்றி ஒன்றும் சொல்ல முடியாது” என்றிருக்கிறார்.

இங்கே படிப்பு ஒரு தகுதியாகவே எடுத்துக்கொள்ளப்படுதில்லை. முதலாளித்துவ நிறுவனங்கள் அனைத்தும் லாப நோக்கத்தில் தான் இயங்குகிறது. அங்கே சனநாயக சிந்தனைக்கு இடமேயில்லை. உயர் பதவியில் இருப்பவர்கள் அப்பட்டமான அதிகாரத் திமிருடன் நடந்து கொள்வார்கள். ஊதியத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் அதிக நேரம் வேலை வாங்கி துன்புறுத்தல்கள் செய்வது முதலாளித்துவ நிறுவனங்களில் பொதுவாகவே நடக்கக்கூடியது. ஆனால் தனக்கு கீழ் வேலையும் ஆசிரியர்கள் கொத்தடிமை போல் தனது வீட்டு வேலைகளையும் செய்யவேண்டும் என்பதும் மறுத்து, சுயமரியாதையுடன் நடந்துகொண்டால் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதும் அப்பட்டமான பார்ப்பன திமிர்தனமாகும். ஒருவர் பார்ப்பனராக பிறக்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களை தனக்கு கீழ் என நினைக்கும் அனைத்து வித சிந்தனைகளும் பார்ப்பனியமே.

படிக்க : நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம் | அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு அறிக்கை!

படித்த படிப்புக்கு ஏற்ற கூலி இல்லாமல் அதிகநேரம் வேலை செய்வது மட்டுமன்றி கொத்தடிமை போல் நடத்தப்படுகிறார்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள். பொதுவாகவே தனியார் பள்ளி ஆசிரியர்கள் பிற வேலைகளையும் செய்ய நிர்பந்திக்கப் படுகிறார்கள். தனியார் பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கு விடுதியில் சாப்பாடு பரிமாறும் வேலையையும் சில ஆசிரியர்கள் செய்து வருகிறார்கள்.

தங்களது பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை பிடித்து சேர்த்துவிட தெருத் தெருவாக அலைந்து திரியும் ஆசிரியர்களை நாம் பார்த்திருப்போம். கோமதியை போன்று பல ஆசிரியர்களின் நிலை இவ்வாறு இருக்க காரணம் 1990-களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மய கொள்கைகளின் விளைவாக அரசு பள்ளிகள் ஒழித்துக்கட்டப்பட்டு தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தனியார் பள்ளி நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையை நிர்ணயித்து கல்வியை கடை சரக்காக மாற்றி விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

இவ்வாறு கல்வியை கொண்டு கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வரும் தனியார் முதலாளிகள் அங்கு பணிக்கு அமர்த்தப்படும் ஆசிரியர்களையும் லாப நோக்கிலே அனுகுகிறார்கள். குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை செலுத்தக்கூடிய பணிநிரந்திரம் பற்றி வாய்திறக்காத ஆசிரியர்களே முதலாளிகளின் தேவையாக இருக்கிறது.

ராஜன்

நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!

0

நாளந்தா பல்கலைக்கழகத்தில் சங்கிக்கு பதிலாக புதிய வேந்தர் நியமனம்:
காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!

டந்த ஏப்ரல் 28-அன்று நாளந்தா பல்கலைக்கழக வேந்தராக (Chancellor)  அரவிந்த் பனகரியா நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியானது. முன்னாள் நிதி ஆயோக் துணை தலைவரும் தாராளவாதப் பொருளாதார கோட்பாட்டாளருமான பனகரியா, விஜய் பாண்டுரங் பட்கர்-க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் வேந்தரான விஜய் பட்கர் ஓர் அப்பட்டமான சங்கி. ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான விக்யான் பாரதியின் (Vigyan Bharti) தலைவராக இருந்தவர். ஜனவரி 25, 2017 அன்று வேந்தராக நியமிக்கப்பட்ட அவர் “விநாயகரின் யானைத் தலை என்பது பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதற்கான சான்று” போன்ற பிரதமர் மோடியின் முட்டாள்தனமான அபத்தமான வாதங்களை நியாயப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளந்தா பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கவே பாசிச கும்பலால் திட்டமிட்டு நியமிக்கப்பட்டவர்.

இந்நிலையில், தற்போது சங்க பரிவார கும்பலை சேர்ந்த பட்கர் மாற்றப்பட்டு புதிய வேந்தராக பனகரியா நியமிக்கப்பட்டுள்ளதால், நாளந்தா பல்கலைக்கழகம் காவிமயமாக்கப்படுவது தடுக்கப்படும் என்றோ பல்கலைக்கழகத்தில் காவிகளின் அட்டகாசம் குறையும் என்றோ பொருள் அல்ல. மாறாக காவிமயமாக்கல் மேலும் அதிகரிக்கவே செய்யும். அதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று பின்னணி குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

நாளந்தா பல்கலைக்கழகமானது 5-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை 750 ஆண்டுகளாக இயங்கி வந்தது. சீனப் பயணியும் தத்துவஞானியுமான ஹுயென் சாங் (Huyen Tsang) இப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் இடிபாடுகள் இன்றளவும் ஒரு சர்வதேச பாரம்பரியமிக்க பொக்கிஷமாக கருதப்படுகிறது.


படிக்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் EWS 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் குமார் !


பீகார் முதல்வராக 2005 ஆம் ஆண்டு நவம்பரில் நிதிஷ் குமார் பதவியேற்றபோது நாளந்தா பல்கலைக்கழகத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆதரவைக் கோரினார். பின்னர், 2006-ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று பல்கலைக்கழகத்தை மீட்டுருவாக்கம் செய்யப்போவதாக நிதிஷ் குமார் அறிவித்தார். அப்போதைய மன்மோகன் சிங் அரசாங்கமும் அதற்கு ஒப்புதல் அளித்தது.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், மற்றும் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல கல்வியாளர்கள் பல்கலைக்கழக உருவாக்கத்திற்கான திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பீகார் சட்டமன்றம் நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கத்திற்கான மசோதாவை நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் அதற்கான சட்டம் (The Nalanda University Act, 2010) இயற்றப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாளந்தா பல்கலைக்கழகம் 2010-ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

18 நாட்டு பிரதிநிதிகளின் ஏற்புடன் நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட அமர்த்தியா சென் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தரானார். தில்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீராம் கல்லூரியின் பேராசிரியரான கோபா சபர்வால் (Gopa Sabharwal) அதன் முதல் துணைவேந்தராக நிர்வாகக் குழுவால் நியமிக்கப்பட்டார். சீனா, ஜப்பான் மற்றும் இலங்கையிலிருந்து மாணவர்களையும் அறிஞர்களையும் இப்பல்கலைக்கழகம் தொடக்கத்தில் ஈர்த்தது.

2014-ஆம் ஆண்டு மோடி பதவியேற்ற பிறகு பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் அராஜகம் தொடங்கியது. கோபா சபர்வால் தனது மகளின் நண்பர் என்ற காரணத்தால் அமர்த்தியா சென்-ஆல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் என்று சில ஊடகங்களைக் கொண்டு செய்திகள் பரப்பப்பட்டன. மேலும், சென் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டன.

2015-ஆம் ஆண்டுடன் அமர்த்தியா சென்-இன் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 18 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய நிர்வாக குழு அவரை இரண்டாவது முறையாக வேந்தராக தேர்ந்தெடுத்தது. ஆனால், அரசியல் தலையீட்டின் காரணமாக தன்னால் வேந்தராக தொடர இயலவில்லை என்று கூறி அவர் பதவி விலகிவிட்டார். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அவரை பதவி விலக வைத்துவிட்டது என்று கூறுவது இன்னும் பொருத்தமானதாக இருக்கும்.


படிக்க: ஏ.பி.வி.பி குண்டர்களால் அச்சுறுத்தப்படும் பல்கலைக்கழகங்கள்!


பின்னர், சிங்கப்பூரின் புகழ்பெற்ற கல்வியாளரும் கல்வி அமைச்சருமான ஜார்ஜ் யோ (George Yeo) குடியரசு தலைவரால் வேந்தராக நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் உத்தரவின் பேரில், செய்தித்தாள்கள் மற்றும் சேனல்கள் வெளிப்படையாக பல்கலைக்கழகத்தின் சுயேட்சை தன்மையை கேள்வி எழுப்பின‌. வேந்தர் யோ மூலம் கம்யூனிஸ்டுகள் பல்கலைக்கழகத்தை கட்டுப்படுத்துவதாக கட்டுரைகளை வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து சென்-ஐ போலவே யோ-வும் அரசியல் தலையீடுகள் இருப்பதாக காரணம் கூறி பதவி விலகிவிட்டார்.

அடுத்ததாக, ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர் விஜய் பட்கர் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் மூன்றாவது வேந்தராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பல்கலைக்கழகத்தை காவிமயம் ஆக்குவதற்கான நடவடிக்கைகள் வீச்சாக மேற்கொள்ளப்பட்டன. இவருக்கு அடுத்ததாகத்தான் அரவிந்த் பனகரியா தற்போது வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாட்னா மற்றும் டெல்லியைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பனகரியாவின் நியமனத்தை இந்துத்துவத்தின் பிடியை இறுக்கும் நடவடிக்கை என்று கூறுகின்றனர். பனகரியா குறித்து பொருளாதார நிபுணரும், பாட்னா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை முன்னாள் தலைவருமான பேராசிரியர் என்.கே.சௌத்ரி கூறுகையில், “பனகரியா ஒரு வலதுசாரி; உலக அளவில் அறியப்பட்ட ஒரு பொருளாதார நிபுணர். அவர் பட்கர் போன்றவர் அல்ல. ஆனால், பனகரியா மோடியின் நற்பெயருக்கு உரித்தானவர்; மோடி விரும்புவதை செய்து முடிப்பவர். பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் நடவடிக்கையை நியாயப்படுத்தி காட்டுவதற்கு பனகரியா தேவைப்படுகிறார்” என்று  கூறினார்.

“பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபோது இருந்த தொலைநோக்கை நிறைவுசெய்ய முயற்சிப்பதைவிட, பட்கர் செய்ததை நிலைநிறுத்தும் வேலையையே பனகரியா செய்வார் என்பதை சொல்லத் தேவையில்லை,” என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூகப் பணிப் பேராசிரியரும், ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி-யுமான மனோஜ் ஜா கூறுகிறார்.

ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த பட்கரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்து மேற்கொள்ளப்பட்ட காவிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு மனித முகம் கொடுப்பதற்காகவே தற்போது பனகரியா வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி ஆயோக்கில் மோடியின் செல்லப் பிள்ளையாக செயல்பட்ட பனகரியாவின் செயல்பாடுகள் நாளந்தா பல்கலைக்கழகத்தை மேலும் காவிமயமாக்கும் திசையிலேயே இழுத்துச் செல்லும் என்பது திண்ணம். வேந்தர் – துணைவேந்தர்களைக் கொண்டு ஜே.என்.யூ உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களையும் பாசிஸ்டுகள் காவிமயமாக்கி வருகின்றனர். அந்த வகையில், நாளந்தா பல்கலைக்கழகமும் விரைந்து காவிமயமாகி வருகிறது.

பொம்மி

நன்றி: தி வயர்

பு.ஜ.தொ.மு வெள்ளிவிழா | தோழர் ஆ.கா.சிவா மற்றும் தோழர் பா.விஜயகுமார் உரை வீடியோ

மிநாட்டில் புரட்சிகர அரசியலை தாங்கி செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தற்போது 2023-ல் தனது 25-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி பட்டாபிராமில் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் தோழர் ஆ.கா.சிவா, ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு) மற்றும் தோழர் பா.விஜயகுமார், முன்னாள் மாநிலப் பொருளாளர், பு.ஜ.தொ.மு ஆகியோர் ஆற்றிய உரைகளை வெளியிடுகிறோம்.

தெரசா படம் இருந்தால் உனக்கென்ன பிரச்சினை? || தோழர் மருது

திருவண்ணாமலை கோவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட விபூதி பாக்கெட்டில் விளம்பரத்தில் அன்னை தெரசா படம் அச்சிட்டு இருந்ததை கண்டு புகார் அளித்த பாரதிய இந்து முன்னனியினர் இதற்கு காரணமான இரண்டு அர்ச்சகர்களை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் என பிரச்சினை செய்தனர்

இக்கும்பலுக்கு பணிந்த அக்கோவில் நிர்வாக ஆணையர் அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தெரசா யார், இவர்கள் போராடுவதாக கூறும் இதே இந்து மதத்தை சார்ந்த நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேவையை மேற்கொண்ட தெரசாவை எதிர்க்கும் இவர்கள், கோவிலின் உட்பகுதியில் ஏறியும் எடிசன் கண்டுபிடித்த விளக்கை பயன்படுத்துவது வெட்ககேடானது இல்லையா?

இப்படி இவர்கள் செயல்படுவதன் நோக்கம் தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்டுபாட்டில்தான் இயங்குகிறது என அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கான செயல்பாடு. இப்படி எல்லா சந்தர்ப்பங்களிலும் சாதிய மத துவேஷத்தை பரப்பி வரும் இவர்களை உதைத்து கைது செய்யாமல் இவர்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதுதான் சமூகநீதி அரசின் வேலையா.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பு.ஜ.மா.லெ கட்சி இலங்கையில் மே தினப் பேரணி – பொதுக்கூட்டம்!

லங்கையில் செயல்படும் புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சி சார்பாக இராகலை, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகள் 2023 ஆம் ஆண்டு மே நாளை முன்னிட்டு பேரணி – பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் மே தினப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இராகலையில் இடம்பெற்ற மே தின பேரணி :

***

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின பேரணி – பொதுக்கூட்டம்

***

வவுனியாவில் இடம்பெற்ற மே தின பேரணி:

***

இங்கிலாந்தில் இடம்பெற்ற மே தின பேரணி :

நன்றி : புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சி முகநூலிலிருந்து….

தூத்துக்குடி விஏஓ கொலை: மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளை பாதுகாப்போம்! || தோழர் மருது

தூத்துக்குடி வி.ஏ.ஓ படுகொலை என்பது நேர்மையான, மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த அரசுக்கட்டமைப்பில் இதுபோன்ற குறைந்தபட்ச நேர்மையான அதிகாரிகளுக்கு கூட வேலையில்லை என்பதும் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றப்படுவார்கள் என்பதும் கண் முன் நாம் காணும் உண்மை.

வி.ஏ.ஓ போலீஸ்காரர்களிடம் மணல் திருட்டை தடுக்ககோரி மனு கொடுத்தது எப்படி அந்த மணல் திருட்டு கும்பலுக்கு தெரியும்? அப்படியானால் அரசு உயர் அதிகாரிகள் முதல் போலீஸ்துறை வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில் அக்கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டதாகத்தான் பொருள்படுகிறது.

தற்போது தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி போராடும் வி.ஏ.ஓ சங்கம் எத்தனை மக்களுடைய சரியான போராட்டங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறது.

நேர்மையான அதிகாரிகளை இந்த அரசு கட்டமைப்பு ஒருபோதும் காப்பாற்றாது. சாதாரண மக்களாகிய நாம்தான் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அப்படி அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம்தான் குறைந்தபட்சம் இயற்கை வள கொள்ளைகளுக்கு எதிராகவும் ஊழல் லஞ்சம் முறைகேடுகளுக்கெதிராகவும் போராடி வெற்றி காண முடியும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பிரெஞ்சு ‌புரட்சி‌ தின விழாவில் பாசிஸ்டு மோடி!

மகத்தான‌‌ பிரெஞ்சு ‌புரட்சி‌ தின விழாவில், பாசிஸ்டு மோடி!
அழுகி நாறும்‌ முதலாளித்துவ ஜனநாயகம்!!

ஜூலை 14, 1789-ஆம் ஆண்டு நடந்தேறிய மகத்தான பிரெஞ்சு புரட்சி, பிரபுத்துவ கோமான்களை வீழ்த்தி நாடாளுமன்ற அமைப்பையும், தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை, பத்திரிகை சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை போன்ற உரிமைகளையும் பெற்றுத்தந்தது. அந்த பெருமை மிக்க புரட்சி நாளை, பிரான்ஸ் அரசு தேசிய தினமாக கொண்டாடி வருகிறது.

மேற்கண்ட நாளில் இந்தாண்டு சிறப்பு விருந்தினராக பாசிஸ்ட், கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி மோடி பங்கேற்பார் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைக் கேட்கும்போது அரசியல் – சமூக வரலாறு அறிந்தவர்கள் அதிர்ச்சியடையலாம். உண்மையில் இப்படி அதிர்ச்சியடைய வேண்டியதில்லை என்பதைத்தான் உலகின் அரசியல் போக்கு நமக்கு உணர்த்துகிறது.

உலக நாடுகளில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது கொள்ளையை தங்கு தடையின்றி நடத்துவதற்கும், உலகமயமாக்கப்பட்ட இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளுற்பத்தியை பேணி பாதுகாப்பதற்கும் ஏதுவான பாசிச அரசுகளும் கருத்துகளும் உலகம் முழுவதும் வலுப்பெற்று வருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இந்த போக்கு உள்ளது. இந்தியாவிலும் நாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தின் அடக்குமுறையை எதிர் கொண்டு வருகிறோம்.

தேசிய விடுதலை இயக்கங்கள், பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கங்கள், சீர்த்திருத்த இயக்கங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு நாடுகளிலும் உணர்வுப் பூர்வமான பங்களிப்பால் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து வாழும்  தலைவர்கள், கருத்துக்களை வெற்று  அடையாளமாக   மாற்றி அதன் அடிப்படை  கருத்துக்களை  இருட்டடிப்புச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது ஆளும் வர்க்கம்.


படிக்க: பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’


இப்படித்தான், இந்தியாவில் காலனியாதிக்க காலத்தில் ரத்தம் தோய்ந்த அநீதியும் அடக்குமுறையும் ஏவப்பட்ட பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தை கண் கவரும் சுற்றுலா தளமாகவும், பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை, வெறும் அடையாளமாகவும் மாற்றியுள்ளது பாசிச கும்பல். அதன் தொடர்ச்சியாக தற்போது அம்பேத்கரை உள் இழுக்க பார்க்கின்றனர் பாசிசஸ்டுகள். இந்த வரிசையில் பிரான்சின் தேசிய தினமும் அடங்கும்.

பதினேழாம் நூற்றாண்டின் அன்றைய பிரான்ஸ் பிரபுத்துவ கோமான்களின் அடக்குமுறை-அநீதி நாணயத்தின் இரண்டு பக்கங்களாக மக்களின் வாழ்வை பறித்து வந்தது. இதற்கெதிராக ரூசோ-வின் சமுதாய ஒப்பந்தம் மற்றும் பிரான்சின் அறிவொளி இயக்கத்தின் பிரதிநிதிகளான தீதரே உள்ளிட்ட மாபெரும் சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்கள், மேற்கண்ட சமூக அவலத்தின் மீது வினையாற்றி மக்களின் சிந்தனையை  பற்றிக்கொண்டதன் தொடர்ச்சியாக பாஸ்டில் சிறை மக்களால் தகர்க்கப்பட்டு புரட்சி வெற்றி வாகை சூடியது. பிரபுத்துவ கோமான்கள், மதகுருமார்கள், மன்னர்கள் ஆகியோரின் தலைகள் கில்லெட்டில் துண்டிக்கப்பட்டு ரத்தத்தில் வெற்றி பொறிக்கப்பட்டது.

இது பற்றி மார்க்சிய மூலவர்களில் ஒருவரான, எங்கெல்ஸ் கூறுகையில், “பிரெஞ்சு புரட்சி பதினெட்டாம் நூற்றாண்டின் குடிமகனது உணர்வின் கருத்துருவாக்கமே அன்றி வேறல்ல” என்றார்.

மேலும், “அறிவின் வெற்றியால் உருவாகிய சமுதாய அரசியல் நிறுவன அமைப்புகள், தத்துவவியலாளர்களது மகோன்னத வாக்குறுதிகளுடன் ஒப்பிடுகையில் கொடிய ஏமாற்றத்துக்குரிய கேலிக்கூத்துகளாகிவிட்டன. லட்சிய முழக்கமான சகோதரத்துவம், போட்டாபோட்டியின் சூழ்ச்சியிலும், சூதிலும் மெய்யாக்கம் கண்டது. சுதந்திரம் என்ற முழக்கமானது, உண்மையில் வெட்கங்கெட்ட வாணிப சுதந்திரத்தையே, நோக்கமாகக் கொண்டிருந்தது. மொத்தத்தில் பதினேழாம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களால் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பைத்தான் யோசிக்க முடிந்தது” என்றார்.


படிக்க: இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!


மேற்கண்ட பிரெஞ்சு புரட்சியின் தத்துவவியலாளர்கள் கருத்துக்கள் அன்றைய சமூக அமைப்பை முன்னோக்கி நகர்த்துவதை இலக்காக கொண்டிருந்தது. அவர்கள் முதலாளித்துவம் குறித்து அறிய இயலாதது காலம் இட்ட வரம்பு. உண்மையில் ரூசோ உள்ளிட்ட தத்துவியலாளர்கள் இன்னும் சில பத்தாண்டுகள் வாழ்ந்திருந்தால் அவர்களே கூட முதலாளித்துவ உற்பத்தி முறையை காரி உமிழ்ந்திருப்பார்கள். அந்த காலத்தில் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையும் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையேயான முரணும் பிரான்சில் அறை குறையாகவே வளர்ந்திருந்தது.

இந்த பிரெஞ்சு புரட்சிக்கு பின்பு ஆளும் வர்க்கமாக தன்னை அமர்த்திக் கொண்ட முதலாளி வர்க்கம் மேலே விவரித்த அநீதி – அடக்குமுறைகளை தொடர்ந்து வருகிறது. வேலையின்மை, ஓய்வூதிய வயது வரம்பு உயர்வு, விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமை பறிப்பு ஆகிய காரணங்களால் மக்கள் வாழ முடியவில்லை. ஆகப் பெரும்பான்மையான மக்களின் நல வாழ்விற்கு தொடர்பு இல்லாத நாடாளுமன்றமும் இதர அதிகார வர்க்க அமைப்புக்களும் யாருக்கு வேண்டும்?

மேற்படி, மக்களை ஏய்க்கவும் பாசிச அடக்குமுறையை கொண்டு வருவதற்கும் வாய்ப்பாக இருக்கும் இந்நிறுவனங்களை பயன்படுத்துவதில் தான் இந்தியாவின் மோடியும் பிரான்சின் இமானுவேல் மேக்கரனும் ஒன்றுபடுகின்றனர். எனவே, புரட்சி தின விழாவை கொண்டாட்ட நாளாக அனுசரிப்பதின் மூலம் தங்களது கொலை முகத்தை மறைத்துக் கொள்கின்றனர்.

நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் பேச்சு உரிமை, கூட்டம் கூடும் உரிமைகளை பெற்றெடுத்த புரட்சி தின விழாவை கொண்டாடும் நேரத்தில் ஆகப்பெரும்பான்மையான நாடுகளில் அவர்கள் கூறிய ‘ஜனநாயக’ உரிமைகள் காகிதத்தில் இருப்பதைத்தான் பார்க்கிறோம்.

தங்களின் போலித்தனங்களை மறைத்துக் கொள்ள காலாவதியான நாடாளுமன்ற அமைப்பு முறையை தேசிய தினமாக கொண்டாடும் இவர்களை பிரான்ஸ் – இந்திய பாட்டாளி வர்க்கம் புயலுக்கு முன் அமைதியைப்போல பார்த்துக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தை அப்புறப்படுத்துவதுதான் உண்மையான மக்களுக்குரிய தேசிய தினமாக இருக்கும். அதற்கான வேலையை நாம் செய்து முடிப்போம்.

ஆ.கா.சிவா

என் பெயரும் ராமன் தான்! || கவிதை

ன் பெயரும் ராமன் தான்!

மலக்குழியில்
இறங்கப் போகிறேன்
எந்த சாமியை வேண்டுவது
அயோத்தி ஸ்ரீ ராமனை வேண்டுவதா?

என்னைப் பீயள்ளப்
படைத்தவனை அழைக்கிறேன்
என்னை காப்பாற்ற வருவானா?

மலக்குழியில்
மூச்சு அடைக்கையில்
எப்படி அழைக்கலாம் ராமனை?

ராமன் என்றாலே
கண் முன்னால் சம்பூகன் வந்து போகிறானே
சீதை சிதையில் எரிகிறாளே !

ஐயோ காப்பாத்துடா ராமா என்று
கதறியபடி நான் செத்துப் போனால் என்னவாகும்?
ஸ்ரீ ராமனை அவதூறு செய்தான் என்றல்லவா ஆகும்

செத்துப் போன என்மீது
தேசத் துரோக வழக்கு பாயும்
ஸ்லீப்பர் செல்களாக
என் குடும்பம் அடுத்த நாள் செய்தியில் வரும்

வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
ராமனை அழைத்து
செத்து செத்து வாழ்வதைவிட
மலத் தொட்டியில் மாண்டு போவதே மேல்

இன்னும் கொஞ்ச நேரத்தில்
மூச்சடைத்து விடும்
மலத் தொட்டியின் ஒரு மூலையில் இருப்பேன்

என் தாயிடம் சொல்லிவிடுங்கள்
என் பெயரைச் சொல்லி அழ வேண்டாம் என்று
ஏனென்றால் என் பெயரும் ராமன் தான்.

மருது