Thursday, June 25, 2026
முகப்பு பதிவு பக்கம் 145

சங்கியுடன் ஒரு பயணம்

துரைக்குச் செல்ல வேண்டும். குருவாயூர் ரயிலைப்பிடிக்க வேண்டும். முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு காத்திருப்புப் பட்டியலிலேயே காத்துக்கிடந்து காலாவதியாகிவிட்டது. ஏறத்தாழ முக்கால் மணி நேரம் காத்திருப்புக்குப்பின்னர் ரயில் வந்தது. முன்பு ஒரு பெட்டி, பின்னால் ஒரு பெட்டி என மொத்தமே முன்பதிவற்றப் பெட்டிகள் இரண்டுதான். முன்பதிவில்லாத பெட்டியில் அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறினேன். காவி வேட்டியுடன் இடம் இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருந்த முதியவர் ஒருவருக்கு எனது அருகிலேயே இடம் பிடித்துத்தந்தேன்.

ரயில் பயணங்களில் எப்போதும் அருகில் இருப்பவர்களுடன் உரையாடுவது வழக்கம் என்பதால் பெரியவரிடம் விசாரிக்க ஆரம்பித்தேன். “ நாகர் கோயில்ல இருந்து வேலையா வந்தேன். எம்.எல்.ஏ ஹாஸ்டல்ல பத்து நாள் தங்கி இருந்தேன். காந்தி தெரியுமா? கால்ல செருப்பு போடாம நடப்பாரு. ரொம்ப தங்கமான மனுசன். பெரிய பணக்காரரு. கல்யாணமே பண்ணல, யாரு வந்து கேட்டாலும் எம்.எல்.ஏ ஹாஸ்டல் சாவிய தந்துடுவாரு” என்று புராணம் பாட ஆரம்பித்தார்.

“அடுத்த மொற காங்கிரஸ் ஜெயிக்குமா?” என்றேன்.

“ராகுல்காந்திக்கு நாக்குல சனி, ஆமா, மோடிங்குறது வட இந்தியாவுல தலித் சாதி, தலித்துங்குள தப்பா பேசுனான், அதான் பதவிய கோர்ட் புடுங்கிடுச்சு, அவன்கிட்ட 50 லட்சம் கோடி சொத்து இருக்கு , உருப்பட மாட்டான்” என்று கொந்தளிக்க ஆரம்பித்தார்.

“மோடிங்குறது சாதியா யாரு சொன்னா, அப்படியெல்லாம் இல்லையே, ஆதாரம் இருந்தா கொடுங்க” என்றேன்.

ஆதாரம் கேட்டதும் பெரிசு பொங்கினார் “நான் சொல்றது உண்மைதான் உண்மைதான் ” என்றார்.

“நரேந்திர மோடி, நீரவ் மோடி, லலித் மோடி எல்லாம் ஒரே ஜாதியா என்ன? அப்படின்னா வி.பி சிங்கும் ஹர்பஜன் சிங்கும் ஒரே ஜாதியா? எல்லாம் தெரிஞ்ச மாரி சும்மா வாய்க்கு வந்தத எல்லாம் பேசக்கூடாது. மோடிங்கற பேரை பார்சி கூட பயன்படுத்துறாங்க தெரியுமா” என்றேன்.

முனகிக் கொண்டே அமைதியானார்.


படிக்க: இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிகப்பு அலை பாடல் | வீடியோ


தாம்பரத்தில் ஒருவர் தன் மகனுடன் ஏறினார். திருவெற்றியூரில் இருந்து தினமும் தடாவுக்கு வேலைக்கு செல்கிறார். கொஞ்ச நேரத்திலேயே மோடியையும் அதானியையும் கார்ப்பரேட்டுகளையும் வெளுத்து வாங்க ஆரம்பித்தார். சங்கியோ கண்ணை மூடிக்கொண்டு காதைத்திறந்து கொண்டு தூங்கி’க் கொண்டு இருந்தது. நாங்கள் இருவரும் மாறி மாறி மோடி – அமித்ஷா – அம்பானி – அதானியை வாரிக்கொண்டு இருந்தோம். தாம்பரத்தில் ஏறியவர் திண்டிவனத்தில் இறங்கினார்.

எனக்கு எதிர் இருக்கையில் இந்தவரிடம் என்ன செய்கிறீர்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தேன். அவர் மாதவரத்தில் இருக்கிறார். திருப்பெரும்புதூரில் உள்ள கல்லூரியில் பேருந்து ஓட்டுனராக 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். விருது நகரில் இறங்க வேண்டியவர். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. காவியிடம் இருந்த தினமலர் நாளிதழை வாங்கினார். போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டுவந்தவருக்கு சிலை என்று தலைப்பிடப்பட்ட செய்தியை என்னிடம் காட்டி,
“ ஏன் சமூக நீதிக்காவலர்னு வி.பி. சிங்ன்னு போட்டா என்ன கேடு இவனுக்கு, அட்லீஸ்ட் முன்னாள் பாரதப்பிரதமர்ன்னு போட வேண்டியதுதானே” என்றார்.

“பத்திரிக்கையில இடம் வேணாமா? ஒவ்வொருத்தரு பேரையும் முன்னாள் பிரதமர்ன்னு எழுதிக்கிட்டு போவமுடியுமா” சங்கி பதிலளித்தது.

“லால்பகதூர் சாஸ்திரி எத்தன வருசம் பிரதமரா இருந்தாரு? அவருக்கு மட்டும் முன்னாள் பிரதமர்ன்னு போடறான். இவனுக்கெல்லாம் திமிரு” என்றார்.

சங்கிக்கோ கோபம் கொப்பளிக்க “அவரு சொதந்திரப் போராட்ட வீரரு” என்றது.
“வி.பி. சிங் சமூக நீதிப்போராட்ட வீரர் தெரியுமா?” என்றார்.

“ யாரத்தான் நாட்டுக்காகப் போராடுனவருன்னு ஒத்துக்குவீங்க, வாஜ்பாய்தான் விடுதலைக்குப் போராடுனாரா” என்றேன்.

“வாஜ்பாயை நான் சொதந்திரப் போராட்ட வீரர்னு நான் சொன்னனா” என்று சங்கி குழறியது.

“இந்த ஸ்டாலின் பாருங்க 12 மணி நேர வேலைன்னு ஆக்கிட்டார்” என்று பேச்சை மாற்றியது சங்கி.

“ஸ்டாலின் செஞ்சது தப்புதான், தி.மு.க ஒன்னும் தமிழ்நாட்டுக்கு அத்தாரிட்டி இல்ல. தமிழ்நாட்டுக்கு அத்தாரிட்டி தமிழ்நாடுதான், ஏன் 12 மணி நேர வேலையை மோடி எதிர்க்கல” என்றேன்.

சுமார் அரை மணி நேரம் சங்கி எதுவும் பேசவில்லை. விருதுநகருக்கு போக வேண்டிய ஓட்டுநரோ , சதாசிவம் முதல் லோயா, ரஞ்சன் கோகய் வரை கிழித்து நார் நாராகத் தொங்கவிட்டார்.

இந்தித் திணிப்புப் பற்றி நான் பேசத்துவங்கினேன். உடனே சங்கி மீண்டும் பேசத்துவங்கியது “நம்மள படிக்க வேணாம்னுட்டு எல்லாம் அவனவன் பசங்கள இந்தி படிக்க வச்சுச்சு முன்னேறிட்டான்”

“இவரு என்ன உலகம் தெரியாம இருக்காரு, இந்தி படிச்சா வேலை கெடைக்குமா? அப்புறம் ஏன் இங்க வேலைக்கு வராங்க” என்று அந்த இருக்கையில் இருந்த 4 வட இந்தியர்களை காட்டினார்.

“இந்த தி.மு.க காரனெல்லாம் அவன் பசங்கள படிக்க வெச்சுட்டான், நாம படிக்க முடியல” என்றது சங்கி.

“அய்யா இந்தி வேணும்னா படிங்க யாரு தடுத்தா? திணிக்காதீங்கன்னு சொல்றோம். சொல்றது புரியலையா” என்றார்.

“உங்களுக்கு தமிழ்ல்ல 123 தெரியுமா, தெரியாதுல்ல, அப்புறம் பேசறீங்க, இந்திக்காரங்கனுக்கு புரியணும்னு இங்க இந்தியில எழுதி போட்டுருக்கு, சும்மா தமிழ் தமிழ்ன்னு பேசி முன்னேற உடமாட்டீங்க” என்றது.

“நீங்களே போதும்யா தமிழ அழிச்சுடுவீங்க” என்றார் அவர்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒரு நடுத்தரவயது பெண் “இச், இச்” என்று சொல்லிக்கொண்டு வந்தார். நாம் பேசுவது பிடிக்கவில்லை என்று நினைத்திருந்தேன்.

“நீங்களே போதும்யா தமிழ அழிச்சுடுவீங்க” என்ற வாக்கியம் அவரை அதிகம் பாதித்துவிட்டது போல!

அந்தப் பெண் “ என்ன அய்யா ரொம்ப பேசறீங்க, எங்களுக்கு எது வேணுமோ அப்படி பேசுறோம், உங்களுக்கு என்ன பிரச்சின, தமிழ்ல 123ன்னு எழுதத்தெரியாதுன்னா தமிழன் இல்லைன்னு ஆயிருமா? அப்ப இருந்து பாக்குறேன் தமிழுக்கு எதிரா பேசிட்டே இருக்கீங்க ? திருச்சிக்கு டிக்கெட் வேணும்னு தமிழ்ல்ல தான கேக்குறோம். உங்க மாதிரி 2 பேரு இருந்தா போதும் தமிழை சீக்கிரம் அழிச்சிடுவீங்க, எதுக்கு ரயில்ல இந்தியில எழுதியிருக்கான், இது மாதிரி வட இந்தியாவுல தமிழ்ல எழுதுவானா ? அயோக்கியப்பசங்க” என்ற படி வெடித்தார்.

சங்கி மீண்டும் பிளைட் மோடுக்கு சென்றது , கண்டிப்பாக நாகர்கோயில் வரை சங்கி நார்மல் மோடுக்கு வராமல் அங்கிருப்பவர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

சங்கிகள் எல்லோரிடமும் எல்லாவற்றையும் பேசுவதில்லை. ஏதாவது ஒன்றில் எதையாவது பேசி, அதில் மக்களிடம் ஏதாவது அதிருப்தி இருப்பின் அதன் மீதேறி அதன் மூலம் மோடி செய்வது எல்லாம் சரி என்று நிறுவுகிறார்கள். ஆனால் அந்த மோடி வித்தைகள் எல்லாம் இங்கு பலிக்குமா? கஷ்டம்தான்.

இது தமிழ்நாடு!

வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!

மருது

கார்ப்பரேட்மயம்: நேற்று பள்ளிக்கல்வித்துறை! இன்று போக்குவரத்துத்துறை! நாளை ?…

ண்மையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பேருந்துகளை, ஒப்பந்த அடிப்படையில் இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தி.மு.க. அரசின் இந்நடவடிக்கையைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்களும் ஜனநாயக இயக்கங்களும் கண்டனங்களைத் தெரிவித்தன, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தி.மு.க.வின் தொழிற்சங்கமான  தொ.மு.ச.வும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதிக்கும் அரசின் நடவடிக்கையானது தொழிற்சங்கங்கள் மத்தியில் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் விமர்சனங்களை  தெரிவித்து வருகின்றனர்.

இதன் விளைவாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்  “சென்னை மாநகரப் பேருந்துகள் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க  டெண்டர் விடப்படவில்லை. தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக, பாதகங்களை ஆராயவே டெண்டர் விடப்பட்டது” என தெரிவித்தார். அதேவேளையில், “உலக வங்கியின் கருத்துகள் அடிப்படையில் தனியார் மூலமாக கூடுதல் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்” எனவும் கூறினார்.

அதாவது, போக்குவரத்துத் துறையில் தனியார் பேருந்துகளை இயக்கவில்லையாம், ஆனால், தனியார் மூலமாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமாம். தனியார்மயத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டே, அது இதுவல்ல என்று ‘விளக்கெண்ணெய்’ விளக்கம் கொடுப்பதன் மூலம் மக்கள் எதிர்ப்பை மடைமாற்ற முயற்சித்து தோற்றுப்போயுள்ளார் அமைச்சர்.

கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம்

சென்னை மாநகராட்சியில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம்  625 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சராசரியாக இதில் தினசரி 29.50 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை, 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்.

தற்போது கூட்ட நெரிசலைக் காரணமாக கூறி, கூடுதலாக 1,000 பேருந்துகளை “மொத்த செலவு ஒப்பந்தம்” (Gross Cost Contract) முறையில் இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 500 பேருந்துகளையும், 2025 ஆம் ஆண்டுக்குள் 500 பேருந்துகளையும் இயக்க திட்டமிட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் எந்தவகையில் இயக்கப்படும் என்பதில்தான் தற்போது தனியார்மயமாக்கம் பற்றிய பிரச்சினை எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில், சென்னை பெருநகரப் போக்குவரத்துத் துறையில், “தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சென்னை மாநகரத்தில் 2,300 பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. 900 பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” எனக் கூறுகிறார் சி.ஐ.டி.யு அமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயனார்.


படிக்க: மக்களின் உழைப்பில் உருவான போக்குவரத்துத் துறையை விழுங்கவிருக்கும் கார்ப்பரேட்டுகள் | தோழர் பரசுராமன்


ஆகையால், புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது, இருக்கும் பேருந்துகளை சீர்படுத்தியோ, புதிய பேருந்துகளை வாங்கியோ போக்குவரத்துத் தேவையை ஈடு செய்வது குறித்து தி.மு.க. அரசு சிந்திக்கவில்லை என்பது முதன்மையான பிரச்சினையாகும்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் சில வழித்தடங்களில் நேரடியாக தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தி.மு.க. அரசு இந்தவகையில் சென்னை மாநகரப் போக்குவரத்துத் துறையில் தனியார் அனுமதிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

ஆனால், பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த முறையில் இயக்கப் போவதாக அமைச்சர் கூறுவதன் பொருள் என்ன? இதுதான் தீவிரமான தனியார்மயமாக்கமாகும். இது போக்குவரத்துத் துறையையே கபளீகரம் செய்யும் வடிவமாகும். அதாவது, போக்குவரத்துத் துறையில் சில வேலைகளை அயல்பணி (அவுட்சோர்) செய்வதைத்தான் அமைச்சர் இங்கு குறிப்பிடுகிறார்.

அரசானது மொத்த செலவு ஒப்பந்த முறையில், ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு கட்டணம் என்பதை நிர்ணயித்து  ஒப்பந்த காலம் முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிக்கான (தினந்தோறும் கூட) குறிப்பிட்ட தொகையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். பேருந்துகளை ஏற்பாடு செய்வது, பராமரிப்பது, ஓட்டுநர்களை நியமிப்பது தனியார் நிறுவனங்களின் பணி.

பேருந்துகள் இயங்கும் வழித்தடங்களை தீர்மானிப்பது, நடத்துனர்களை நியமிப்பது அரசின் பணி. வசூலாகும் பயணக் கட்டணம் அரசினுடையது.

இதன் மூலமாக, பேருந்துகளைச் சொந்தமாக வாங்குவது, அவற்றைப் பராமரிப்பது என்ற பெரிய பணி அரசிடமிருந்து தனியார் கைகளுக்குச் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, ஓட்டுநர்களை தனியார் நிறுவனங்களும் நடத்துனர்களை அரசும் நியமிக்கும் இந்த முறையானது போக்குவரத்துத் தொழிலாளர்களை பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையிலானதாகும்.

தற்போது பின்பற்றப்படும் முறையில் அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் எந்த ஒப்பந்தமும் கிடையாது. அரசுப் பேருந்துகள் இயங்கும் வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும். இந்த வழித்தடங்களில் எத்தனை தனியார் பேருந்துகளை இயக்குவது என அரசு தீர்மானித்து அதற்கு அனுமதி வழங்குவதுடன் அரசின் பணி முடிந்துவிடுகிறது. இதன் மூலம், ஒரு பேருந்தை மட்டும் வைத்திருக்கும் பேருந்து உரிமையாளர் கூட, தன்னுடைய பேருந்தை அரசு நிர்ணயிக்கும் வழித்தடங்களில் இயக்க முடியும்.

ஆனால், மொத்த செலவு ஒப்பந்த முறையில் இது போன்ற சிறிய பேருந்து உரிமையாளர்கள் போட்டியிட முடியாது. நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை மூலதனமாகக் கொண்ட கார்ப்பரேட் முதலாளிகள் தான் பேருந்தை  இயக்க முடியும்.

முக்கியமாக, மொத்த செலவு ஒப்பந்த முறையில் மின்சாரப் பேருந்துகளைத்தான் அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 500 மின்சாரப் பேருந்துகளை வாங்க வேண்டுமென்றால், 1,000 கோடி ரூபாய் மூலதனமாவது தேவைப்படும். இவ்வளவு அதிக செலவில் பேருந்துகளை இயக்குவதற்கான ஒப்பந்தங்கள் இயல்பாக, கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்குத்தான் செல்லும். எனவே இத்திட்டமானது, மக்களின் சேமிப்பில், உழைப்பில் உருவாக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படும் போக்குவரத்துத் துறையை கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு தொடக்கமாக அமையும்.

நட்டத்தைக் காரணம்காட்டி மக்களைப் பட்டவர்த்தனமாகக் கொள்ளையடித்தல்

பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் மொத்த செலவு ஒப்பந்த முறைக்கு வக்காலத்து வாங்குபவர்கள்  போக்குவரத்துத்துறை நஷ்டமடைந்து உள்ளதை காரணமாக கூறுகின்றனர். நாளொன்றுக்கு ஏறக்குறைய எட்டு கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அரசு இருக்கும் நிதிச்சுமையில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து  பேருந்துகளை வாங்குவது தற்போது சாத்தியமில்லாத ஒன்று என்றும் கூறுகின்றனர். ஆனால் இவை எவையும் உண்மையல்ல. பல ஆயிரம் கோடி ரூபாய் மூலதனமிட்டு பல தொழில்களுக்கு செலவு செய்யும் அரசினால் போக்குவரத்துத் துறையை நட்டமில்லாமல் இயக்கவும் முடியும்; சொந்தமாக மூலதனமிடவும் முடியும்.

போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 50 ரூபாய் செலவாகிறது. அதில் 30 ரூபாய் மட்டுமே வருமானம் வருகிறது. 20 ரூபாய் பற்றாக்குறை ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பற்றாக்குறை பல காரணங்களால்  ஏற்படுகிறது. அவற்றில் முதன்மையானது, அதிகார வர்க்கத்தின் முறைகேடுகளும் ஊழலும்தான். இந்தப் பிரச்சினைதான் போக்குவரத்துத் துறையில் இருக்கும் நட்டத்திற்கு அடிப்படையாகும்.

போக்குவரத்துத் துறையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்த நெருக்கடியைக் காரணம் காட்டி போக்குவரத்துத் துறையையே  கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்ல வழிவகுக்கிறது தி.மு.க. அரசு.

தற்போது பேருந்துகளை இயக்க ஒரு கிலோமீட்டருக்கு செலவாவதை விட, மொத்த செலவு ஒப்பந்த முறையில் அதிகப்படியான கட்டணமே  நிர்ணயிக்கப்படும். இத்திட்டம்  சென்னையில் செயல்படுத்தப்படுவதற்கு முன்னால், மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநில அரசுகள் ஒரு கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்குவதற்கு 125 ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கின்றன. சென்னையிலும் அதற்கு நிகரான ஒரு தொகையே கட்டணமாக நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதாவது, போக்குவரத்துத் துறையில் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கான தற்போதைய காரணங்கள் எந்தவகையிலும் குறைந்துவிடப் போவதில்லை. இதில் நடக்கப் போகும் ஊழலின் பரிமாணங்கள் மட்டுமே  மாறப்போகின்றன. இத்திட்டம் மூலம் நேரடியாக கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலதனமிட்டு பேருந்துகளை இயக்கும் போது, அவர்களுக்கு இலாபத்தை உத்தரவாதம் செய்து கொடுப்பதும் அரசின் கடமையாகிவிடுகிறது.

ஓட்டுநர்களும் நடத்துனர்களும் இருவேறு நிர்வாகங்களின் கீழ் வருவதால், போக்குவரத்து மூலமாக அரசு வசூலிக்கும் கட்டணங்கள் குறைவதற்கான காரணங்கள் அனைத்தும் நடத்துனர்கள் மேலேயே சுமத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. இவையெல்லாம், இத்துறை மேலும் நட்டமடையவும் அதனைத் தொடர்ந்து முழுவதும் கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பதுதான் சரி என்ற முடிவுக்கு மக்களைத் தள்ளுவதையும் நோக்கமாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ள திட்டமாகும்.


படிக்க: திராவிட(கார்ப்பரேட்) மாடல் : தனியார்மயமத்தை நோக்கி தமிழ்நாடு போக்குவரத்து கழகம்!


அதுமட்டுமல்ல, இனிவரும்காலங்களில் தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் போது, அவையும் மொத்த செலவின ஒப்பந்த முறைக்கு மாற்றப்படும். வளர்ச்சிப் போக்கில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாகப் புதிய பேருந்துகள் வாங்குவது நிறுத்தப்பட்டு, மொத்த செலவு ஒப்பந்த முறைக்குள் கொண்டு செல்லப்படும். இந்தவழியிலும் போக்குவரத்துத் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் முழுமையாக்கப்படும்.

ஆகையால், தற்போது சென்னையில் மாநகரப் பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த முறையின் மூலம் கார்ப்பரேட்டுகளை இயக்க அனுமதிப்பது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் போக்குவரத்துத் துறையையும் கார்ப்பரேட் மயமாக்குவதற்கான தொடக்க நடவடிக்கையாகும்.

ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையையும் தனியார்மயமாக்கும் இந்நடவடிக்கையை தி.மு.க. அரசானது திட்டமிட்டு செய்கிறது. மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துகிறது . தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதும் போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகும்.

போக்குவரத்துத் துறைகளில் மட்டுமல்ல, கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளிலும் தி.மு.க. பாணி கார்ப்பரேட் மயமாக்கம் அமல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அமல்படுத்தப்படும் “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்”  “வானவில் மன்றம்” போன்ற திட்டங்கள் இதற்குச் சான்றுகளாகும்.

ஆகையால், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மேற்கண்ட கார்ப்பரேட் சார்பு திட்டங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கவேண்டும். தி.மு.க. அரசின் கார்ப்பரேட் சார்பு திட்டங்களை எதிர்ப்பதன் மூலம் மக்கள் மத்தியில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்கு பா.ஜ.க.-அ.தி.மு.க. கும்பலுக்கு இடமளித்துவிடக் கூடாது. இதற்காக, தி.மு.க.வில் இருக்கும் ஜனநாயக சக்திகள், போக்குவரத்துத் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கத்தைக் கொண்டுவரும் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு தங்களது தலைமைக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும்.

அமீர்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை! | மக்கள் அதிகாரம் கண்டனம்

03.05.2023

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை!
அகர்வாலின் அரசா?
இது திமுகவின் அரசா?

கண்டன அறிக்கை

ஜிப்சம் அகற்றுவது, ஆலையை பராமரிப்பது என்ற நாடகங்கள் மூலம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் சதி வேலைகளைக் கண்டித்து தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த மக்களை அடக்குமுறை மூலம் கைது செய்து மாலை 7 மணி வரை மண்டபத்தில் அடைத்து வைத்திருந்திருக்கிறது  போலீசு. இது திமுகவின் அரசா? அகர்வாலின் அரசா? என்று மக்கள் காறி உமிழும் அளவில்தான் போலீசின் நடவடிக்கைகள் இருந்திருக்கின்றன.

வேதாந்தா நிறுவனம், தனது கைக்கூலிகளுக்கு பணத்தை இறைத்து  ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும்  என்று தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்வதை போலீசும் மாவட்ட நிர்வாகமும் ஒருபோதும் தடுக்க வில்லை. ஆனால் மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்த மக்களை தடுப்பதும் கைது செய்வதும்தான் நடைபெற்றிருக்கிறது. இதற்கு பெயர்தான் ஜனநாயகமா? வந்திருந்த மக்கள் அனைவரையும் சந்திக்க முடியாத ஒருவர் எதற்காக கலெக்டராக இருக்க வேண்டும்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப்போராட்டம் – படுகொலைகள் ஆகியவற்றின் தேர்தல் அரசியல் அறுவடையை பலனாகப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக அரசு தூத்துக்குடி மக்களுக்கு எதிராகவும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.


படிக்க: வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு! | மக்கள் அதிகாரம் கண்டனம்


ஜிப்சம் அகற்றல், ஆலை பராமரிப்பு என எந்த வடிவிலும் ஸ்டெர்லை ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் இயற்றுவதுதன் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய ஒரே வேலை.

அவ்வாறு  சட்டம் இயற்றப் போராடுவதே ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும். ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு தூத்துக்குடி மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை பாதுகாப்பதும் தமிழ்நாட்டு மக்களின் கடமையுமாகும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

உலகைக் உலுக்கிய 138-வது மே தினம் | படங்கள் !

லகம் முழுவதும் மே தினத்தில் எழுந்த செங்கொடி தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்காமல் இனி இறங்காது.

இனி வரும் ஒவ்வொரு தினமும் தொழிலாளர் வர்க்கம் முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்து ஆளும் வர்க்கங்களை குலைநடுங்க வைக்ககூடியதாகவே இருக்கும் என்பதற்கு சான்றுதான் உலகமெங்கும் நடைபெற்ற மே தின பேரணி.

இச்சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சர்வலோக நிவாரணி நான்தான் என்று கொக்கரித்துக்கொண்டு வந்த முதலாளித்துவம் பல்வேறு நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் மரணப்படுக்கைக்கு வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது.

தன்னுடைய மரணத்தை ஒப்புக்கொள்ள மறுத்து மீண்டும் தட்டிதடுமாறி எழ முயற்ச்சிக்கும் முதலாளித்துவத்தின் நெஞ்சில் ஏறி மிதிக்கிறார்கள் உலக பாட்டாளிகள்.

சர்வதேச தொழிலாளர் தினமான மே நாளில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் திரளாக திரண்ட தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை கேட்டு மிகப்பெரிய பேரணி மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மே தின பேரணியில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாக்ககோரியும் அண்மையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கொண்டு வந்த ஓய்வூதிய திருத்த சட்டங்களை திரும்பபெறக்கோரியும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கெதிரான முழக்கங்களை முன்வைத்து போராடினர். அதனை முடிவுக்கு கொண்டுவர எண்ணிய பிரான்ஸ் போலீஸ் போராடும் தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது; 291 பேரை கைது செய்ததுள்ளது

பிரான்ஸ்: மே தின பேரணி

இதைபோன்று இத்தாலியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து பாசிஸ்ட் ஜார்ஜியா மெலோனி அரசுக்கு எதிராகவும் இத்தாலி நாட்டின் வரிக் கொள்கையை சீர்திருத்தகோரியும், தொழிலாளர்களின் ஊதியத்தை விலைவாசி உயர்வுக்கெற்ப்ப அதிகரிக்க வேண்டியும் ஆளும் அரசாங்கத்திற்கு ஆணையிட்டு ஆர்பாட்டம் செய்தனர்.

இத்தாலிய பிரதமர் பாசிஸ்ட் ஜார்ஜியா மெலோனியை நையாண்டி செய்வதுபோல் பேரணி நடத்தப்பட்டது.

அதைதொடர்ந்து தென்கொரிய நாட்டில் கடந்த கரோன பெருந்தொற்று காலகட்டத்திற்கு பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பெருந்திரளாக ஒன்றுகூடி நடத்திய மிகப்பெரிய பேரணியாக மே தின நிகழ்வு நடைபெற்றது.

ஜெர்மனியில் மே தினத்தையொட்டி 398 நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், மொத்தமாக 2,88,000 பேர் பங்கேற்றதாகவும் ஜெர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) கூறியுள்ளது. வேலைநிறுத்த உரிமை உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி பேரணிகள் நடைபெற்றன.

ஜெர்மனியில் முனிச் நகரில் தொழிலாளர் உரிமையை வலியுறுத்தி நடைபெற்ற பேரணி

ஜப்பானில் டோக்கியோ மாகாணத்திலும், நெதர்லாந்து, லெபனான், தைவான், இந்தோநேஷியா போன்ற நாடுகளிலும் எழுச்சிகரமான மே தின பேரணிகள் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. அந்தந்த நாடுகளில் ஒன்றுதிரண்ட தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளை முழக்கங்களாக முன்வைத்து நடத்திய பேரணி அந்நாட்டில் ஆளும் அரசாங்கங்களை அசைத்து விட்டது. ஏதோ தொழிலாளர்கள் உரிமையை விலைவாசியை குறை என்று கெஞ்சாமல் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடிந்தால் உடனடியாக தீருங்கள் இல்லையேல் உங்களுடைய பதவிகளில் இருந்து விலகி கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கான அரசியல் போராட்டமாக இருந்தது.

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற பேரணி

மேலும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வழக்கமாக நடைபெறும் மே தின நிகழ்ச்சிகளை போன்று இல்லாது பெருந்திரளான மக்களுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற பேரணி

இப்படி உலகம் முழுவதும் எழுச்சிகரமாக நடைபெற்ற மே தின பேரணிகள் ஆர்பாட்டங்கள் நமக்கு உணர்த்துவது உலகம் முழுவதும் உழைக்கும் மக்களின் மீது அரச ஒடுக்குமுறைகளும் பொருளாதார நெருக்கடிகளும் தீவிரமாகி, பாசிச சூழல் நெருங்கி வரும் தருவாயில் அவற்றிற்கெதிராக தொழிலாளர் வர்க்கம் நடத்தும் போராட்டங்களும் காட்டமாகத்தான் என்பதைத்தான்.

எழுந்த செங்கொடி முதலாளித்துவத்தின் முடிவை எழுதாமல் இறங்காது. பாட்டாளி வர்க்கம் அக்கடைமையை முடிக்காமல் உறங்காது.

தொகுப்பு:சித்திக்

தொடர்ந்து திவாலாகிவரும் அமெரிக்க வங்கிகள்: வெடிக்கக் காத்திருக்கும் உலகப் பொருளாதரம்!

2008-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய சப்ரைப் நெருக்கடி, அமெரிக்காவின் ஒற்றைத்துருவ மேலாதிக்கத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருந்தது. இன்று மீண்டும் அதைப்போன்றதொரு அல்லது அதைவிட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி அமெரிக்கா நகர்ந்துவருகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டின் இறுதியிலிருந்தே அமெரிக்காவில் வங்கிகள் திவலாகும் போக்கு தொடங்கிவிட்டது. 2020 அக்டோபரில், அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள அல்மேனா வங்கி, புளோரிடா மாகாணத்தின் ஃப்ர்ஸ்ட் சிட்டி வங்கி ஆகிய இரண்டு சிறிய வங்கிகள் திவால் நிலைக்கு வந்தன. அதை அமெரிக்க அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இந்த இரண்டு வங்கிகளின் மொத்த வைப்புத்தொகை சுமார் 200 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளும் திவாலகத் தொடங்கிவிட்டன. மார்ச் 8-இல் அமெரிக்காவின் சில்வர் கேபிடல் கார்ப்பரேஷன் வங்கி முதலில் திவாலானது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியும் பல ஸ்டார்ட் அப் நிறுவங்களின் முதலீடுகளைக் கொண்டிருந்த வங்கியுமான சிலிக்கான் வேலி, சிக்னேச்சர் வங்கி, 166  ஆண்டுகள் பழமையான கிரெடிட் சூயிஸ் குருப் வங்கி ஆகியவை திவாலாகின. இவற்றின் வரிசையில் தற்போது, ஃப்ர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவாலாகும் நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், கடலில் மூழ்கும் கப்பல்களைக் காப்பாற்றத் துடிப்பதுபோல் திவாலாகும் வங்கிகளைக் காப்பாற்ற அமெரிக்க அரசும், அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளி வர்க்கமும் போராடி வருகிறது. திவாலாகும் நிலையில் உள்ள ஃப்ர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கிக்கு 11 பெரும் வங்கிகள் இணைந்து 30 பில்லியன் டாலர் நிதி உதவி செய்தும் அவ்வங்கியைக் காப்பாற்ற முடியாத சூழலே நிலவுகிறது. சிலிக்கான் வேலி வங்கி தனது சொத்துக்களை 1.8 பில்லியன் டாலருக்கு விற்று மூலதனத்தைத் திரட்டியும் திவாலாவதைத் தடுக்க முடியவில்லை.

வங்கிகள் திவாலாவதால், இதுவரை சேமிப்பிற்காக வங்கிகளை நம்பியிருந்த அமெரிக்க மக்கள், வங்கிகளிலிருந்து தாங்கள் வைத்திருந்த வைப்புத் தொகைகளை எடுக்கத் தொடங்கினர். இதனால் மேலும் வங்கிகள் முடங்குவதும்  திவலாவதும் தொடர்கதையாகியிருக்கிறது. சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் அமெரிக்க வங்கிகளுக்கு எதிர்மறைப் புள்ளிகள் வழங்கியிருக்கிறது. வங்கிகள் திவாலாவதைத் தடுக்க முடியாத அமெரிக்க அரசு, சமூக ஊடகங்களில் இச்செய்திகள் காட்டுத்தீயாய் பரவுவதைத் தடுக்க என்ன  செய்வதென விழிபிதுங்கி நிற்கிறது.

உயரும் வட்டிவிகிதம் திவாலாகும் வங்கிகள்

அமெரிக்க வங்கிகள் தொடர்ச்சியாக திவலானதற்கு அமெரிக்காவின் பெடரல் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்துவதுதான் காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2022 மார்ச் மாதத்திற்கு முன்பு வரை வட்டி விகிதம் பூஜ்ய சதவிகிதமாகத் தான் இருந்தது. அதன் பிறகு, பணவீக்கம் அதிகரித்த நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தத் தொடங்கியது. குறுகிய காலங்களில் தொடர்ச்சியாக வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டது.

இந்த ஆண்டின் மார்ச் மாதத் தொடக்கத்தில் 4.75 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, 5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. மார்ச் 2022லிருந்து டிசம்பர் 2022 வரையிலிலான 9 மாதங்களில் 5 முறை வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டது. இது கடந்த 16 ஆண்டுகளில் இருந்ததைவிட அதிகமாகும். தொடர்ந்து பணவீக்கம் கட்டுப்பாடின்றி உயர்ந்து வரும் நிலையில், பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. மார்ச் 22, 2023 -இல் 25 புள்ளிகள் அளவு வட்டிவிகதத்தை பெடரல் வங்கி உயர்த்தியிருக்கிறது. இந்த வட்டி விகித உயர்வானது இன்னும் அதிகரித்து 5.5 சதவிகிதமாக உயரும் என்கின்றனர் அமெரிக்க பொருளாதாரவாதிகள்.


படிக்க: ஐரோப்பிய உணவு வங்கிகள்: ஏகாதிபத்திய உலகின் அவலம்


இவ்வாறு தொடர்ச்சியாக  வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டு வருவதால், ஒருபுறம் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்பு நிதிக்கான வட்டி குறையும்,  வங்கிகளிலிருந்து கடன் பெறுவது பாதிக்கப்படும், வங்கிகள் முதலீடு செய்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புப் பத்திரங்களின் மதிப்பு வட்டி விகித உயர்விற்கு ஏற்ப எதிர் விகிதத்தில் குறையும். இதனால் வங்கிகளின் சொத்து மதிப்பு குறைவதோடு, வங்கிகளில் வைத்துள்ள வைப்புநிதி திரும்பக் கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது. இதனை முன்னுணர்ந்த அமெரிக்கா மக்கள் தங்களது வைப்புநிதிகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். நிலச்சரிவைப் போல ஒன்றை ஒன்று வேகமாக பாதாளத்திற்கு இழுத்துச் செல்கின்றன. இதன் வெளிப்பாடுகள்தான் வங்கிகள் தொடர்ச்சியாக திவாலாகி வருவதாகும்.

இத்தகைய சூழலில், அதிகரிக்கும் வட்டி விகித உயர்வால் அமெரிக்க வங்கிகள் திவாலாவது எப்பொழுது முற்றுப் பெறும் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. மொத்தத்தில் அமெரிக்க பொருளாதாரம் மீளாமுடியாத புதைகுழியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கின்றது.

நச்சுச் சுழலில் அமெரிக்கப் பொருளாதாரம்

2008-இல் அமெரிக்காவில் ஏற்பட்ட வீட்டுக்கடன் நெருக்கடி அமெரிக்க மக்களை  நடுத்தெருவிற்கு வீசியெறிந்தது. தற்போது நடந்து வரும் வங்கிகளின் திவால்கள் 2008-இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை மீண்டும் கொண்டுவருமா என்ற அச்சம் அமெரிக்காவை சூழ்ந்திருக்கிறது.

2020-இல் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று அமெரிக்காவையும், அந்நாட்டுப் பொருளாதாரத்தையும் நிலைகுலையச் செய்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு,  மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படாததால் மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது.  மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதால்  பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூலை 2022-இல் அமெரிக்காவில் 9.7 சதவிகிதம் பணவீக்கம் இருந்தது.  இது 1970 மற்றும் 80-களில் அமெரிக்காவில் இருந்ததைப் போன்ற அதிகபட்ச பணவீக்கமாகும்.

2022-ஆம் ஆண்டின் அமெரிக்க வணிகத்துறை புள்ளிவிவரத்தின்படி, அமெரிக்க மக்களின் கூலியும், சம்பளமும் 6.2 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. எனினும் பொருட்களின் விலையோ 8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. வாங்கும் சம்பளத்தைவிட பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால்  வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை பெருமளவில் விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன. எரிவாயு பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருப்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது.

கடந்த 2021 டிசம்பருடன் ஒப்பிடும்போது 2022 டிசம்பரில், தானியங்கள் மற்றும் பேக்கரி உணவு பொருட்கள் 16.1 சதவிகிதமும், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் 15.3 சதவிகிதமும், ஆல்கஹால் கலக்காத  உணவு பொருட்கள் 12.6 சதவிகிதமும், பழங்கள் மற்றும் காய்கறிகள் 8.4 சதவிகிதமும், கறி, மீன் மற்றும் முட்டைகள் 7.7 சதவிகிதமும்,  எரிபொருள் 41.5 சதவிகிதமும்,  இயற்கை எரிவாயு 19.3 சதவிகிதமும், மின்சாரம் 14.3 சதவிகிதமும் விலை உயர்ந்திருக்கிறது. இந்த விலைவாசி உயர்வானது அமெரிக்க மக்களை மென்மேலும் கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் வாங்கி வாழும் நிலைமைக்குத்  தள்ளியிருக்கிறது.

இத்தகைய சூழலில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதமானது விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீது மேலும் சுமையைக் கூட்டியிருக்கிறது. வட்டி விகிதம் உயர்ந்திருப்பதால் வங்கிகளில் வாங்கிய வீடு, வாகனக் கடன்கள், கிரெடிட் கார்டுகளுக்கான  வட்டிவிகிதம் உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தான் வாங்கிய கடன்களுக்கு கூடுதலாக வட்டி செலுத்த வேண்டியிருப்பதால், மக்களின் வாழ்க்கைத்தரம் மேலும் குறைவதோடு மக்களின் வாங்கும் சக்தி மேலும் குறையும்.


படிக்க: ஏகாதிபத்தியம் உலகை ஆண்டால், போர்கள் என்பது இயல்புநிலையாகும் !


இந்த வாங்கும் சக்தி குறைவானது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும், மென்மேலும் அதிகரிக்கும் பணவீக்கத்தால்  வட்டி விகிதம் உயரும். வட்டி விகித உயர்வால்  வங்கிகள் முதலீடு செய்துள்ள அமெரிக்க பாதுகாப்பு பத்திரங்களின் மதிப்புகள் மென்மேலும் குறையும், வங்கிகள் திவாலாவது கணக்கின்றி தொடரும். இவ்வாறு திரும்பத் திரும்ப ஏற்படும் நச்சுச் சுழலில் அமெரிக்க பொருளாதாரம் சிக்கிக் கொண்டுள்ளது.

ஏற்கெனவே  உள்நாட்டு உற்பத்தியில் 96 சதவிகிதத்தைக் கடனாகக் (32 ட்ரில்லியன்) கொண்டுள்ள அமெரிக்க பொருளாதாரத்தால் இந்த நச்சு சூழலிலிருந்து மீள்வது பெரும் சிரமத்துக்குரியதே. ஒருபுறம் பணவீக்கமும், வட்டி விகித உயர்வும், வங்கி திவாலும் அமெரிக்கப் பொருளாதாரத்தை புதைகுழியில் தள்ளியிருக்கும் சூழலில், மற்றொருபுறம் அமெரிக்காவில் தொடர்ந்து வரும் வேலையிழப்புகளும், புதிய வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்டும் வருகின்றன. இது மேலும் மக்களின் வாங்கும் சக்தியை குறைக்கும். இதுவும் அமெரிக்காவை மீளாத நெருக்கடியில் தள்ளவே வாய்ப்பிருக்கிறது.

அமெரிக்காவின் சர்வதேச மூதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனமானது, “இந்த வங்கி நெருக்கடியானது அமெரிக்கப் பொருளாதார வளார்ச்சியைப் பாதிக்கும்” என்கிறது. அமெரிக்க வங்கி திவால் குறித்து, அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜே.பி மார்கன் வங்கியின் பொருளாதார அறிஞர்கள், “அமெரிக்காவின் நீண்ட நெடிய பொருளாதார வளர்ச்சிக் கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது (Minsky moment)” என்று அறிவித்துவிட்டனர்.

பெருமந்தத்தை  எதிர்நோக்கி உலகப் பொருளாதாரம்

2008-இல் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடி உலகின் 59 நாடுகளை சூறாவளியாகத் தாக்கியது. பல நாடுகள் இப்பொருளாதார நெருக்கடியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தன. தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வங்கி நெருக்கடி, அமெரிக்காவுடன் பொருளாதாரச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள நாடுகளைக் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய வங்கி நெருக்கடி மீண்டும் உலகப் பொருளாதாரத்தையே மந்தத்தை நோக்கித் தள்ளும் என்கிறது உலக வங்கி. நிகழ்வுகளும் உலகவங்கியின் கூற்றை மெய்பிப்பதாய் இருக்கின்றன.

அமெரிக்க வங்கி நெருக்கடியால் ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் பீதியில் உறைந்திருக்கின்றன. இங்கிலாந்து வங்கியும் ஒன்பதாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கிறது. அமெரிக்காவின் பெடரல் வங்கி 25 புள்ளிகள் வட்டிவிகிதத்தை உயர்த்தியவுடன், ஐரோப்பிய வங்கியும் வட்டிவிகிதத்தை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஐரோப்பிய மற்றும் ஜப்பான் நாடுகளின் அரசுப் பத்திரங்கள், ஓய்வூதிய நிதி மற்றும் இறையாண்மை நிதி ஆகியவற்றின் மதிப்புகள் வெகுவாகக் குறைந்திருக்கிறது. அமெரிக்காவுடன் நெருங்கிய பொருளாதார பிணைப்புக் கொண்டுள்ள அந்நாடுகளின் வாகன உற்பத்தி நிறுவனங்களான மிட்சுபிஷி, நிசான், மஸ்டா மற்றும் கட்டுமான நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் ஆகியவை சரிவை சந்தித்து வருகின்றன. தங்கம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.


படிக்க: பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!


அமெரிக்க பெடரல் வங்கியின் தாளத்திற்கு ஏற்ப இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த மே மாதத்திலிருந்து தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதுவரை 250 புள்ளிகள் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவில் உயர்த்தப்பட்ட 25 புள்ளிகளுக்கு ஏற்ப இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டிவிகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவின் வட்டி விகித உயர்வால், அந்நிய மூலதனத்தையே நம்பியிருக்கும் இந்திய  தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஐ.டி துறை நிறுவனங்கள் பாதிக்கப்படும். அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். சர்வதேச அளவில் கச்சாப் பொருட்கள் விலை குறையும் போதுகூட பெட்ரோல் விலையைக் குறைக்காத மோடி அரசு, இதையே காரணமாக காட்டி பெட்ரோல்-டீசல் விலையை மேலும் அதிகரிக்கும்.

ஏற்கெனவே, விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய உழைக்கும் மக்களுக்கு இது பேரிடியாகவே இருக்கும். இது இந்தியாவில் மேலும் பணவீக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கெனவே தேக்கம் நிலவுவதால், இந்திய தொழிற்துறை உற்பத்தி, குறிப்பாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலையில் இருக்கின்றன.

ரஷ்ய-உக்ரைன் போரால் மீளமுடியாத பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகளை அமெரிக்க வங்கி நெருக்கடி மேலும் நெருக்கடிக்குள் தள்ளும். இதனால் அமெரிக்க, ஐரோப்பிய ஏற்றுமதியைச் சந்தையைச் சார்ந்திருக்கும் இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதம் உயரும்போது அமெரிக்க முதலீட்டாளார்கள், அமெரிக்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர். இதனால் இந்திய பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறுவது நடக்கிறது. இந்தாண்டின் தொடக்கத்திலேயே இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த ரூ.27,000 கோடி அந்நிய மூதலீடு இந்தியாவிலிருந்து வெளியேறியிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் செயல்படுத்தப்படும் பெரும்பாலான உள்கட்டமைப்பு திட்டங்கள் அந்நிய முதலீட்டை சார்ந்திருப்பதால் அவை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.


படிக்க: உலகளவில் அதிகரித்து வரும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!


இந்தியாவிலிருந்து அந்நிய முதலீடு வெளியேறினால், அந்நிய செல்வாணி கையிருப்புக் குறையும், இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரியும். இதனால் இந்தியப் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்திக்கும்.

ரஷ்ய – உக்ரைன் போரால் உலகப் பொருளாதாரமே பணவீக்கத்தாலும், கடுமையான விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் அமெரிக்க ஏகாதிபத்திய சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள இதர உலக நாடுகளை இந்த நெருக்கடி கொரோனா தொற்றைவிட ஆயிரம் மடங்கு பாதிப்படையச் செய்யும். இலங்கை, பாகிஸ்தான், மேற்கு ஐரோப்பிய நாடுகள் என தொடரும் நெருக்கடியை இந்த வங்கி நெருக்கடி தீவிரப்படுத்துவதோடு உலகைப் பெருமந்தத்தை உருவாக்குவது தவிர்க்கமுடியாதது.

பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக உலகம் காத்திருக்கிறது!

2008-இல்  ஒரு பெருமந்தத்தை சந்தித்த உலக ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்டமைப்பு 15 ஆண்டுகளுக்கு உள்ளாகவே அடுத்த ஒரு பெருமந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறது. 1890-களில் ஏகாதிபத்தியமாக முதலாளித்துவம் பரிணமிக்கத் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு  குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பில் நெருக்கடி தவிர்க்க முடியாததாகிறது. எனவே, நொறுங்கி வீழ்ந்து கொண்டிருக்கும் உலக ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், அதன்  தலைவனான அமெரிக்காவையும் வீழ்த்துவதற்கான காலம் நெருங்கிவிட்டது.

நொறுங்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தை பாட்டாளி வர்க்கம் தனது புரட்சிப் போராட்டத்தால் அடித்து வீழ்த்துதான் மிச்சமிருக்கும் ஒரே செயலாகும். அதையே  உலகெங்கும் பற்றிப் படரும் உழைக்கும் மக்கள் போராட்டங்கள் கோருகின்றன. மீண்டும் உலகம் முழுக்க ஏகாதிபத்திய அடிமைத் தளையிலிருந்து  விடுவித்து  சோசலிசத்தைப் படைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. உலகப் பாட்டாளி வர்க்கமும் உலகெங்கும் உள்ள புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற தாயாராக வேண்டியிருக்கிறது.

அப்பு

மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்தால் தொழிற்சங்க உரிமம் பறிக்கப்படும்!

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக நிதியுதவி செய்தது, கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து புத்தகங்கள் வாங்கியது என அற்ப காரணங்களை முன் வைத்து, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (AIPEU) மற்றும் தபால் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NFPE) ஆகிய இரண்டு பெரிய அஞ்சல் சங்கங்களின் அங்கீகாரத்தை பறித்திருக்கிறது மோடி அரசு.

1920-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்ட AIPEU சங்கமானது இந்தியாவின் மிகப்பழமையான தொழிற்சங்கங்களில் ஒன்றாகும்.NFPE என்பது அஞ்சல் துறை சங்கங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும்.மேலும் தபால் ஊழியர்களின் 75% பெரும்பான்மை வாக்குகளை பெற்று இயங்கும் இச்சங்கத்தில் AIPEU உட்பட 8 அஞ்சல் ஊழியர் சங்கங்கள் இணைந்து செயல்படுகின்றன.

இந்நிலையில், NFPE மற்றும் AIPEU ஆகிய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு நிதியளிப்பதாகவும், CPI(M) மற்றும் CITU சங்கங்களுக்கு நிதியளிப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் தபால் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு போன்ற சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் அஞ்சல் துறையின் உதவி இயக்குநர் நஹர் சிங் மீனா.


படிக்க: தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!


மேலும் “அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களுக்கு நன்கொடை வழங்குவது என்பது பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் விதிகளுக்கு முரணானது நடவடிக்கைக்கு உரியது” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

“இவ்வாறு தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையானது தொழிற்சங்கங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று NFPE உதவிப் பொதுச் செயலாளர் பி.கே.முரளீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் NFPE தொழிற்சங்கமானது அஞ்சல்துறை சேவைகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. குறிப்பாக ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரியது என இவர்கள் கொண்டுவரும் கார்ப்பரேட் நலச் சட்டங்களுக்கு எதிராக நின்று போராடி அவற்றை அமல்படுத்தவிடாமல் தடுக்கும் வேலைகளை இச்சங்கங்கள் செய்து வருவதால், இம்மாதிரியான பாசிச நடவடிக்கைகளை அஞ்சல் சங்கங்கள் மீது ஏவிவிட்டிருக்கிறது மோடி அரசு.


படிக்க: நவ 19: தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் மத்திய அரசிற்கு எதிராக வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்!


இதில், நாம் கவனிக்க வேண்டியது AIPUE மற்றும் NFPE போன்ற தொழிற்சங்கங்களின் மீது அவ்வாறான புகார்கள் அளித்தது ஆர்.எஸ்.எஸ்-இன் பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் (BMS) இணைந்த பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் (BPEA). இவர்கள் கொடுத்த பல்வேறு புகார்கள் நெருக்கடிகளின் பெயரில்தான் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்திகள் தெரிவிக்கிறது.

NFPE மற்றும் AIPEU தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை பரித்திருக்கும் மோடி அரசின் இந்நடவடிக்கையானது, உரிமைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற அச்சத்தை தொழிற்சங்களுக்கு உருவாக்கும் நடவடிக்கை. மக்கள் போராட்டத்தை ஆதரித்தால் நாளை உங்களுக்கும் இதே நிலை தான் என்று தொழிற்சங்கங்களை பார்த்து கொக்கரிக்கிறது பாசிச கும்பல்.

டேவிட்

சென்னை – மதுரை மே தின பேரணி ஆர்ப்பாட்டம் | நேரலை காணொலிகள்

சென்னை ஆவடியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம் !

பேரணி:

 

ஆர்ப்பாட்டம்:

0-0-0

மதுரை உசிலம்பட்டியில் கொட்டும் மழையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம்!

பாகம் -1

 

பாகம் -2

 

பாகம் – 3

 

பாகம் – 4

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

மே தினம் குறித்து தோழர் லெனின்

மே தினத்தை ஒரு ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஷ்ய தொழிலாளர்களுக்கு லெனின் தன்னுடைய ஆரம்பகால ரஷ்ய புரட்சி இயக்க நடவடிக்கையின் போதே அறியச் செய்தார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்ட சங்கம் ரஷ்யாவில் இருந்த ஒரு மார்க்சிய அரசியல் குழு. இந்த சங்கத்துக்காக 1896-ம் ஆண்டு லெனின் சிறையில் இருந்தபோது மே தின துண்டு பிரசுரம் ஒன்றை எழுதினார்.

அந்த பிரசுரம் சிறையிலிருந்து கடத்தப்பட்டு 200 பிரதிகள் எடுக்கப்பட்டு 40 தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. அந்தப் பிரசுரம் மிகவும் சுருக்கமாக, லெனினுக்கே உரிய நேரிடையான மற்றும் எளிமையான முறையில் சாதாரண தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது.

படிக்க : நான் உலகம்! தொழிலாளி நானே உலகம் | ம.க.இ.க பாடல் | சிவப்பு அலை

“பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.

தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளின் நலனுக்காக எங்ஙனம் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், தங்களின் நிலையில் முன்னேற்றத்தை கோருபவர்கள் எவ்வாறு அரசாங்கத்தால் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் சொல்லிய பிறகு மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து லெனின் எழுதுகிறார்.

“பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே வலுவான சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தங்களின் பல உரிமைகளை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏப்ரல் 19 (மே 1 ரஷ்ய நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாட்காட்டியை விட 13 நாட்கள் பிந்தியது) அன்று பொது வேலை நிறுத்த நாளாக கடைபிடித்தார்கள்.

காற்று வசதியற்ற தங்கள் தொழிற்சாலைகளை விட்டு, விரிந்த பதாகைகளுடன் தொழிலாளர்கள் தெருவிலே இறங்கினர். முதலாளிகளுக்கும் அவர்களின் வளர்ந்து வரும் சக்திக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இசைக்கு ஏற்ப நகரங்களின் முக்கிய வீதிகள் வழியே அணிவகுத்து சென்றனர்.

மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒன்று கூடினார்கள். அங்கே அவர்கள் முதலாளிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு தாங்கள் பெற்ற வெற்றிகளையும், வருங்கால போராட்டத்திற்கான திட்டங்களை குறித்தும் பேசினார்கள்.

இந்த வேலை நிறுத்தத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அன்று வராததற்காக அபராதம் விதிக்கக்கூடிய துணிவு அவர்களின் முதலாளிகளுக்கு இல்லை. அந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் தங்களின் முக்கிய கோரிக்கையான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர பொழுது போக்கு என்பதை நினைவுப்படுத்தவும் தவறவில்லை. இதைத்தான் மற்ற நாட்டு தொழிலாளர்களும் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’.

ரஷ்ய புரட்சி இயக்கம் மே தினத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொண்டது. 1900-ஆம் ஆண்டு நவம்பரில் புதிப்பிக்கப்பட்ட “கார்கோவில் மே தினம்” என்ற பிரசுரத்தில் முன்னுரையில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார்.

“இன்னும் ஆறு மாதத்தில் ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் புதிய நூற்றாண்டின் முதலாண்டு மே நாளை கொண்டாடுவார்கள். எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் மே தினத்தை சிறப்பாக, விரிவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய இதுதான் நேரம்.

மே தின நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபன கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும், ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும்தான் முக்கியமானது. இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதியாக சந்தர்ப்பமும், சோஷலிசத்திற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.”

மே தின ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆறுமாதங்கள் முன்னமேயே கவனத்தை இழுத்திருக்கிறாரென்றால், அதை லெனின் எவ்வளவு முக்கியமாய் கருதியிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது.

லெனினுக்கு மே தினம் என்பது “ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்கமுடியாத போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிசத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்”.

மே தின விழாக்கள் எங்ஙனம் ஒரு மாபெரும் அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறும் என்று பேசுகையில், 1900-ம் ஆண்டு கார்கோவ் மே தின விழா எப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறியது என்ற கேள்விக்கு லெனின் பின்வருமாறு பதிலளிக்கிறார்.

“வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட பெருந்திரளான தொழிலாளர்கள், தெருக்களிலே நடந்த மாபெரும் வெகு ஜனக்கூட்டங்கள், செங்கொடிகளின் பதாகை, கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள், அவற்றின் புரட்சித்தன்மை, எட்டு மணி நேர வேலைநாள், அரசியல் விடுதலை இவைகள்தான்”.

படிக்க : உழைப்பாளர் தினம்: முதலாளிகளை அச்சுறுத்தும் நாள்! || கவிதை

கார்கோவ் கட்சித் தலைவர்கள் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையோடு சாதாரண, வெறும் பொருளாதார கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டதை லெனின் சினந்து கொண்டார். காரணம் மே தினத்தின் அரசியல் தன்மை எந்த விதத்திலும் மங்கக் கூடாது என்று விரும்பினார். அவர் இந்த முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.

“8 மணி நேர வேலைதான் இந்த முதல் கோரிக்கையானது உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன் வைத்ததிலுருந்து கார்கோவின் வளர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் சர்வதேச சோசலிச தொழிலாளர் இயக்கத்தோடு தங்கள் ஐக்கியத்தை உணருகிறார்கள் என்பது தெரிகிறது.

குறிப்பாக இந்த ஒரு காரணத்திற்காகவே, இதுபோன்ற ஒரு கோரிக்கையை, மேஸ்திரி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், பத்து ஸென்ட் ஊதிய உயர்வு வேண்டும் போன்ற சாதாரண கோரிக்கைகளுடன் சேர்த்து வைக்கக் கூடாது. 8 மணி நேர வேலை நாள், பாட்டாளி வர்க்க முழுமைக்குமான ஒரு கோரிக்கையாகும். அது சமர்ப்பிக்கப்படுவது தனிப்பட்ட முதலாளிகளிடத்தில் அல்ல. உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரர்களான முதலாளித்துவ வர்க்கத்திடம் தற்போதைய அரசியல், பொருளாதார அமைப்பின் பிரதிநிதியாக இருந்து சமர்ப்பிக்கப்படுவதாகும்.”

– அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க் எழுதிய மே தின வரலாறு நூலிலிருந்து…

நான் உலகம்! தொழிலாளி நானே உலகம் | ம.க.இ.க பாடல் | சிவப்பு அலை

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழாவில் ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலின் காணொலியை இங்கே வெளியிடுகிறோம்.

பாடல் வீடியோவை பாருங்கள்! பகிருங்கள்!!

உழைப்பாளர் தினம்: முதலாளிகளை அச்சுறுத்தும் நாள்! || கவிதை

தெரிந்தோ தெரியாமலோ
சுரண்டப்பட்டு கொண்டிருக்கும்
தொழிலாளியின் வியர்வை
காய மற்றொரு நாள்
விடுமுறை!

புலனத்தில்
ஒரு ஸ்டேட்டஸ்
தெரிந்தவர்களுக்கு
ஒரு வாழ்த்து
அவ்வளவுதானா
இத்தினத்தின் வீரியம்?

பிறகு,
சிந்திக் காய்ந்த
குருதியையும்
தியாகம் செய்யப்பட்ட
உயிர்களையும்
நினைவுக் கூர்வது
எப்போது?

முட்டி முளைக்கும்
விதை முதல்
எட்டி உதைக்கும்
குழந்தை வரை
இங்கு அனைத்து உயிரும்
தன் தேவைகளை
போராடிதான்
பூர்த்தி செய்கிறது.

அப்படி நடந்த
பல போராட்டங்களின்
ஒரு அடையாளமே
இந்த மே தினம்.

குறைந்தபட்ச கூலிக்கு
உலகெங்கும் அடிமைகளாய்
மாற்றப்பட்ட தொழிலாளர்கள்
சிலிர்த்தெழுந்ததின்
நினைவு தினம் அது.

20 மணி நேர
வேலை நேரத்தை
8 மணி நேரமாக
அடைந்து காட்டிய
சரித்திர வெற்றியின்
கொண்டாட்ட தினம் அது.

தொழிலாளர் வர்க்கத்திற்கான
ஆர்ப்பாட்ட நாளாய்
பாரிஸ் மாநாடு
அள்ளித்தந்த தினம் அது.
ஆம், இது நமக்கான நாள்!

இருந்த வேலை வாய்ப்புகளை
பிடுங்கிக் கொண்டு
கிடைக்கும் வேலைக்கெல்லாம்
நம்மை துரத்தியடிக்கும்
முதலாளிகளை அச்சுறுத்தும் நாள்!

தொழில்நுட்ப சுரண்டளுக்கான
எச்சரிக்கை நாள்!
முதலாளித்துவத்திற்கு எதிராய்
தொழிலாளர்கள் சங்கேந்தி
கிளம்ப வேண்டிய
புரட்சி நாள்!

– துலிபா

மாநாடு பிரச்சாரத்தில் ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு தோழர்கள்! | வீடியோ

க்கள் கலை இலக்கிய கழகம் “சிவப்பு அலை” கலைக்குழு சார்பாக சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு என்ற தலைப்பில் மே மாதம் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டுக்கான தொடர்வண்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் தோழர் தீரன் அவர்கள் பாடிய பாடல் இரயிலில் பயணித்த மக்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஜெர்மனிக்குள் நுழைந்த சோவியத் படை – தற்கொலை செய்து கொண்ட பாசிச ஹிட்லர்!

கொடூரமான நாஜி – பாசிச படைகளின் பிரதிநிதியாக இருந்த ஹிட்லர் 1945 ஏப்ரல் 30-ம் தேதி தனது பதுங்கு குழியில் தற்கொலை செய்து கொண்டான். தனது கனவுகள் சிதைந்து போனதையும், குறிக்கோள்கள் தன் கண்ணெதிரே தோற்றுப் போனதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டான், ஹிட்லர்.

பெர்லினில் உள்ள ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சோவியத் செங்கொடி ஏற்றப்பட்டது.

1945-ம் ஆண்டு மே 8-ம் தேதிதான் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சோவியத் செங்கொடி ஏற்றப்பட்டது. நாஜிக்களின் பாசிச படைகள் இறுதித் தோல்வியை தழுவின.

1939-ம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று தொடங்கிய இரண்டாம் உலகப் போர் 6 ஆண்டுகள் நீடித்தது. அதில் 61 நாடுகளின் 170 கோடி மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இது அன்றைய உலக மக்கள் தொகையில் 80% ஆகும். இந்தப் போரில் 7 கோடி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சோவியத் குடிமக்கள். சோவியத் யூனியனின் 1,710 நகரங்கள், 70,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 32,000-த்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள், 65,000 கிலோமீட்டர் நீளமான ரயில்வே பாதை ஜெர்மன் படைகளால் அழிக்கப்பட்டன. மனித வரலாற்றிலேயே எந்த ஒரு நாடும் எந்த ஒரு போரிலும் சந்தித்திராத இந்த பேரிழப்பின் பொருளாதார மதிப்பு 2,600 பில்லியன் ரூபிள்.

சோவியத் இராணுவம் 11.3 கோடி மக்கள் தொகை கொண்ட 11 நாடுகளை நாஜிகளின் பிடியிலிருந்து விடுவித்தது. மேலும், பாசிசத்துக்கு எதிராக சோவியத் யூனியன் ஈட்டிய வெற்றி, உலகெங்கிலும் காலனிய ஆட்சியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த மூன்றாம் உலக நாடுகளில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை வீரியமடையச் செய்தது.

இன்றும் உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.

இந்தியாவிலும் தனது இந்துராஷ்டிர கனவை நிறைவேற்ற கொக்கரித்துக் கொண்டிருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச படையை முறியடிக்க சோவியத் மக்களின் வழியில் வீறுநடைபோடுவோம்!

பில்கிஸ் பானோ வழக்கு: நீதிக்கான நீதிமன்ற போராட்டம் இன்னும் எத்தனைக்காலம்!

0

பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் 14 பேரைக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி அளித்துள்ளது குஜராத் அரசு. இதை பற்றி விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசிடம் உச்ச நீதிமன்றம் 2023 ஏப்ரல் 18 அன்று கேட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி குஜராத்தில் நடந்த காவிக் குண்டர்களின் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் போது அகமதாபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பில்கிஸ் பானோ காவிக் குண்டர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது அவருக்கு 19 வயது, கர்ப்பிணியாக இருந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் காவிக் குண்டர்களால் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அவரது மூன்று வயது மகனும் அடங்குவார்.

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் கோத்ரா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குஜராத் அரசு அதன் மன்னிப்புக் கொள்கையின் கீழ் அவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது.

படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

குஜராத் மாநிலத்தில் குற்றம் நடந்ததால் மன்னிப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் 2022 மே மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

11 குற்றவாளிகளுக்கு விடுதலை அளிக்கும் குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனு உள்ளிட்டு ஒரு தொகுதி மனுக்கள் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 2023 ஏப்ரல் 18 ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.

ஒன்றிய அரசு மற்றும் குஜராத் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, உச்ச நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி 2023 மார்ச் 27 ஆம் தேதி முதல் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். அன்றைய தினம், குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்குவது குறித்த காரணங்கள் அடங்கிய அசல் கோப்புகளுடன் தயாராக இருக்குமாறு குஜராத் அரசுக்கு நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் இன்னும் கோப்புகளை தாக்கல் செய்யாததால், அரசின் நிலைப்பாடு நீதிமன்ற அவமதிப்புக்கு சமம் என்று அமர்வு குறிப்பிட்டது.

“கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுள்ளார். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்” என்று அமர்வு குறிப்பிட்டது. “பாதிக்கப்பட்டவரின் வழக்கை வழக்கமான பிரிவு 302 கொலை வழக்குகளுடன் ஒப்பிட முடியாது. ஆப்பிளை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாது என்பதுபோல, படுகொலையை ஒரு வழக்கமான கொலையுடன் ஒப்பிட முடியாது. குற்றங்கள் பொதுவாக சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் எதிராக செய்யப்படுகின்றன. சமத்துவமற்றவர்களை சமமாக நடத்த முடியாது” என்று அமர்வு கூறியது.

“இன்று பில்கிஸ், ஆனால் நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். விடுதலை வழங்குவதற்கான காரணங்களை நீங்கள் கூறவில்லை என்றால், நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளை எடுப்போம்” என்று நீதிமன்றம் கூறியது.

படிக்க : பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகள் விடுதலையை எதிர்த்து எழும் கண்டனங்கள்!

விளக்கம் அளிக்காமல் நாட்களை கடத்தி பில்கிஸ் பானோவிற்கு நீதி கிடைக்க விடாமல் காவிக் குண்டர்களுக்கு விடுதலை கிடைக்க வழிவகையை செவ்வனே செய்துவருகிறது குஜராத் – ஒன்றிய மோடி அரசு.

பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். அவர்கள் பா.ஜ.க நடத்தும் நிகழ்ச்சிகளில் பா.ஜ.க தலைவர்களோடு மேடையை பகிர்கின்றனர். தற்போது நடத்தப்படும் விசாரணையும் அவர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கி விடுதலை செய்வதற்கே! இன்னும் எத்தனை காலத்திற்கு காவிமயமாக்கப்பட்டு வரும் நீதிமன்றங்களை நம்பி சட்டப்போராட்டம் மட்டும் நடத்திக்கொண்டு இருக்கப்போகிறோம்?

கல்பனா

“ஈரோடு பட்டி ஃபார்முலா”: புழுத்து நாறிக்கொண்டிருக்கும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மற்றொரு பரிணாமம்!

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எல்லா அராஜக அத்துமீறல்களையும் அரங்கேற்றி, ஒரு அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது தி.மு.க; திருமங்கலம் மாடலை விஞ்சிவிட்டது ஈரோட்டு மாடல்” – என ஈரோடு இடைத்தேர்தலின் முடிவுகள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் பணநாயகம் வென்றதாகவும் ஜனநாயகம் தோற்றதாகவும் பேசி வருகின்றன. ஓட்டுக்கு பணம் வாங்குவது, பரிசுப் பொருட்கள் தருவது எல்லாம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தல்களிலும் நடக்கும் விஷயம்தான் என்றாலும் இவர்களின் புலம்பல்கள் ஈரோட்டில் இது உச்சம் அடைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.

படிக்க : அறிவிப்பு: மாநாடு பேரணி தேதி ஒத்திவைப்பு!

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிப்பெற்றுள்ளார். இது தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துவிட்டனர்.

காங்கிரஸ்தான் தேர்தலில் போட்டியிட்டது என்றாலும், ஆரம்பம் முதலே தி.மு.க.தான் களத்தில் இறங்கி மும்முரமாக வேலை செய்து வந்தது. எப்போதுமே இடைத்தேர்தல் என்றால், அதற்கு ஆளும்கட்சிகள் காட்டும் அக்கறையே தனிதான். எனினும் தனது திராவிட மாடல் ஆட்சியின் மீதான பிம்பத்தை இழந்துவிடக்கூடாது என்ற தி.மு.க.வின் பதற்றமும், வரப்போகும் மக்களவைத் தேர்தலில் இது கண்டிப்பாக பிரதிபலிக்கும் என்ற எதிர்கட்சிகளின் எண்ணமும் ஈரோடு தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்தது.

குறைந்தது 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற வேண்டும் என்ற இலக்கில் களமிறங்கிய தி.மு.க. இத்தேர்தலுக்கு செலவழித்த மொத்தத் தொகை சுமார் 400 கோடி என்று சொல்லப்படுகிறது. இரண்டரை ஆண்டுகள் பார்த்துப் பார்த்து கட்டமைத்து வைத்திருந்த “திராவிட மாடல்” பிம்பத்தையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, ஒட்டுப் பொறுக்குவதற்காக எல்லா அயோக்கியத்தனங்களையும் அராஜகத்தையும் நிகழ்த்தியது.

தேர்தல் தேதி அறிவித்ததும் ஒட்டுமொத்த தி.மு.க. அமைச்சரவையும் ஈரோட்டில் கூடாரம் போட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தது. ஒரு அமைச்சருக்கு மூன்று வார்டுகள் என பிரித்துக் கொடுக்கப்பட்டதால் திரும்பும் திசையெல்லாம் அமைச்சர்களின் ஊர்வலங்களும், அவர்கள் செய்த கோமாளித்தனங்களும்தான் பேசுபொருளாக இருந்தன.

தி.மு.க. அமைச்சர் செஞ்சி மஸ்தான் போட்ட பரோட்டா, அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி ஆடிய ஒயிலாட்டம், உதயகுமார் போட்ட டீ – என கேலிக்கூத்துகளுக்கு சற்றும் பஞ்சமில்லாமல் இருந்தது தேர்தல் களம்.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தையும் பரிசுப் பொருட்களையும் வாரியிறைத்தன. ஒரு ஓட்டுக்கு சுமார் 15,000 ஆயிரம் ரூபாய்வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. குக்கர், ஹாட்பாக்ஸ், சேலை, கொலுசு, வெள்ளி டம்ளர், ஸ்மார்ட் வாட்ச், லேப் டாப் என பரிசுப் பொருள்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போனது. தி.மு.க. வழங்கிய வெள்ளி டம்ளர் அளவில் பெரியதாக இருப்பதாகவும் அ.தி.மு.க. கொடுத்த டம்ளர் சிறியதாக இருப்பதாகவும் ஒப்பிட்டுக் காட்டி சமூக வலைதளங்களில் வீடியோக்கள் உலாவிக் கொண்டிருந்தன. மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிற்கே சென்று இறைச்சி தருவது, காதணி விழா என்ற பெயரில் பிரியாணி வழங்குவது என எப்படியாவது ஓட்டுக்களை பொறுக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக வேலை செய்துவந்தன தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்.

“தமிழ்” “தமிழர்” என பேசிவந்த நாம் தமிழர் கட்சியின் சீமான் தனது தேர்தலுக்கான ஆயுதங்களாக இனவெறியையும் சாதிவெறியையும் எடுத்துக் கொண்டார். “போர் நடந்தால் முதலில் வேல் ஏந்தி வரும் மக்கள்தான் முதலியார்”. விஜயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு தூய்மை பணி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட தெலுங்கர்கள்தான் அருந்ததியர்கள்” என அப்பட்டமாக சாதிவெறியை கக்கினார். நாட்டையே காவி இருள் சூழ்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றியெல்லாம் பேச வக்கற்றுப்போன சீமான் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநிலத் தொழிலார்களை அடிப்பேன் உதைப்பேன் என இனவெறியைத் தூண்டி மக்களை பிளவுபடுத்தும் வேலையில் இறங்கினார்.

பிழைப்புவாதத்தின் மற்றொரு பரிணாமம்!

மற்ற இடைத்தேர்தல்களைவிட, ஈரோடு தேர்தலை மற்றொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றது “பட்டி ஃபார்முலா”. தி.மு.க.வினர் ஏற்பாடு செய்த மண்டபங்களில் காலை முதல் நண்பகல் வரை இருந்தால் 500 ரூபாயும், காலை முதல் மாலை வரை இருந்தால் 1,000 ரூபாயும், மூன்று வேலை உணவும் தருவதாகக் கூறி மக்களை கொத்துக் கொத்தாக அழைத்துச் சென்று அடைத்து வைத்தது. இவ்வாறு கருங்கள்பாளையத்தில் மக்களை பட்டியில் அடைத்து வைத்திருப்பதை நேரலையில் செய்தியாக வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிருபர்களை தி.மு.க.வினர் அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியாகி நாறிப்போனது.

தி.மு.க. கையிலெடுத்த இந்த பட்டியில் அடைக்கும் தேர்தல் உத்தியினால் எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்திற்கு செல்லும்போது, தெருக்களிலும் பிரச்சாரக் கூட்டங்களிலும் ஈயாடியது. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு செல்லும்போது மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை பார்த்து, “நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால், சூடு, சொரணை, வெட்கம், மானம் உள்ளவராக இருந்தால் வாக்களர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்” என கதறும் நிலைமைக்கு உள்ளானார்.

“பட்டி ஃபார்முலா”விற்கு அடுத்து, வாக்களர்களை “இன்பச் சுற்றுலா” அழைத்து செல்லும் சலுகையையும் அறிவித்து ஓட்டுக்களை கவர்ந்தது தி.மு.க.

தி.மு.க. மக்களை பட்டியில் அடைத்து வைக்கிறது, பணம் பரிசுப்பொருட்களை வாரியிறைக்கிறது என தேர்தல் ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன; நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என அப்படமாக கைக்கழுவி விட்டு நடக்கும் அராஜகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தேர்தல் ஆணையம்.

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதைத் தடுத்து தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் பாராட்டு விழா” என்று கரூரில் ஒட்டப்பட்ட சுவராட்டிகள் தேர்தல் ஆணையத்தின் கேவலமான நிலையை அம்பலப்படுத்தியது.

வரலாறு காணாத அராஜகங்களையும், அட்டூழியங்களையும் அரங்கேற்றி தேர்தலில் வெற்றிப்பெற்று விட்டு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், “இந்த வெற்றி 20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். தி.மு.க.வை ஆதரிப்பவர்களும் இந்த வெற்றியை தி.மு.க.வின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்று வெட்கமே இல்லாமல் கொண்டாடுகிறார்கள்.

தேர்தல் சீரழிவின் கதை!

தமிழ்நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தின் இந்த இழிந்த கேடுகெட்டநிலை திடீரென்று தோன்றிய ஒன்றல்ல.

தற்போது திரிபுராவில் சட்டமன்ற தேர்தலில் பாசிச பா.ஜ.க எதிர்க்கட்சிகளை அடித்து விரட்டவதும், கொலை செய்வதும், ஓட்டுப் போடவிடாமல், பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கும் வழிமுறைகளையும், தமிழ்நாட்டில் பாசிச ஜெயலலிதா, 2002 ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலிலேயே கையாண்டார். எதிர்க்கட்சிகள் அனைவரையும் அடித்து உதைத்து, கைதுசெய்து, பிரச்சாரத்திற்கு கூட வர விடாமல், வாக்குச்சாவடியிலும் நுழைய விடாமல் பல அட்டூழியங்களை நிகழ்த்தி ஜெயலிலதா அத்தேர்தலில் வெற்றிபெற்றார்.

அதேபோல, தற்போது ஈரோடு மாடலுக்கு முன்னோடி 2009 திருமங்கலம் இடைத்தேர்தல் ஆகும். அப்போதைய தி.மு.க.வின் தென்மண்டலச் செயலாளராக இருந்த அழகிரி தலைமையில் இடைத்தேர்தலை சந்தித்த தி.மு.க, ஒரு ஓட்டுக்கு 5,000 ஆயிரம் வரை பணமும், மிக்சி, கிரைண்டர், செல்போன், திருநெல்வேலி அல்வா, சாராயம் போன்ற பொருட்களும் வழங்கியது. இந்த தேர்தலை ஒட்டி உருவான “திருமங்கலம் ஃபார்முலா” என்ற சொல்லாடல் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

ஆபாச நடனம், கறிவிருந்து என கலாச்சாரச் சீரழிவுகளை தேர்தல் பிரச்சாரத்தில் பிரபலப்படுத்தியதில் ஜெயலலிதாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. தி.மு.க. உருவாக்கிய “திருமங்கலம் ஃபார்முலாவை”, 2014 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தல் விஞ்சிவிட்டது.

2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓட்டு போட்ட பிறகும்கூட மக்களுக்கு பணம் கிடைக்கும் வகையில் அ.ம.மு.க. கட்சியின் டி.டி.வி. தினகரன் உருவாக்கிய “டோக்கன் ஃபார்முலா” இன்றைய ஈரோடு தேர்தலிலும் பயன்படுத்தப்பட்டது.

சீரழிந்த தேர்தல் முறையின் இன்றைய கேடுகெட்ட பரிணாமம்தான் “பட்டி ஃபார்முலா” ஆகும். ஆடு-மாடுகளை அடைத்துவைப்பதற்குப் பெயர்தான் பட்டி. வாக்காளர்களை காசுக்காக ஆடு-மாடுகளைப் போல, காலை முதல் மாலை வரை ஒரு கூரையின் கீழ் அடைத்துவைப்பது ஒப்பீடு சொல்ல முடியாத இழிவாகும். இந்த அளவிற்கு மக்களை பிழைப்புவாதச் சாக்கடையில் மூழ்கடித்திருக்கிறது சொல்லிக்கொள்ளப்படும் தேர்தல் ஜனநாயகம்.

ஈரோடு இடைத்தேர்தல் நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அதே மாவட்டத்தில்    கோபிசெட்டிபாளைய பகுதியில் பல நாட்களாக உணவின்றி பசிக் கொடுமையினால், இறந்துபோன தன் கணவர் மற்றும் தாயின் உடலை புதைக்கக் கூட பணமில்லாமல் ஒரு வாரகலாமாக சாந்தி என்ற பெண், வீட்டில் வாழ்ந்த கோடூரம் அரங்கேறியது. இதுதான் மக்களின் உண்மையான வாழ்நிலை.

படிக்க : தற்கொலையை ’நகைச்சுவை’யாக்கும் பாசிஸ்டு மோடி!

வேலையின்மை, வறுமை, மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் எவையும் ஈரோடு தேர்தலிலோ அல்லது வேறு எந்த தேர்தலிலும் பேசப்படப் போவதில்லை. தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று முழக்கங்கள் என்பதும், ஓட்டுக்கு கொடுத்தவரை பணத்தை வாங்கிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பதும் பெரும்பான்மை மக்களின் கருத்தாக உள்ளது.

ஓட்டுக்கட்சிகள் தேர்தல்களை, அதிகாரத்தின் மூலம் பொறுக்கித் திண்பதற்கான வாய்ப்பாகத்தான் பார்கின்றன. பெரிய கட்சிகள் அனைத்தும் இன்று கார்ப்பரேட் பாணியில் மாறிவிட்டன. அதனோடு தேர்தல் சீரழிவும் கார்ப்பரேட் பாணியில் மாறிவிட்டன. இங்கு அரசியல் கொள்கைகளுக்கு எந்த வேலையும் இல்லை.

பாசிச அபாயம் சூழந்து வரும் நிலையில் ஈரோடு “பட்டி ஃபார்முலா” போன்ற அரசியலற்ற பிழைப்புவாதத்தை ஊட்டிவளர்க்கும் வேலையை செய்வது பாசிச பா.ஜ.க வளர்வதற்குதான் துணைப் புரியும். கவர்ச்சிவாத-பிழைப்புவாத அரசியலை மற்ற ஓட்டுக் கட்சிகளை விட பாசிச பா.ஜ.க-வால் சிறப்பாகவே செய்ய முடியும் என்பதை விளக்கத் தேவையில்லை. உண்மையான அரசியல்படுத்துதல் என்பது மக்களை போராட்டக்களங்களுக்கு அழைத்துவருவதிலேயே இருக்கின்றது.

மதி

முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!

ர்நாடக மாநிலத்தில் வரும் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் ரீதியான செல்வாக்குமிக்கவர்களாக பார்க்கப்படும் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினரின் ஓட்டுகளை கவர்வதற்காக இம்மூன்று கட்சிகளும் முனைப்புக் காட்டி வருகின்றன.

இதற்கிடையே கா்நாடகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கடந்த மார்ச் 24-இல் ஆணை பிறப்பித்தது. இந்த 4 சதவீத இடஒதுக்கீடு, ஒக்கலிகா, லிங்காயத்து சமூகத்தினருக்கு கூடுதல் இடஒதுக்கீடாக பிரித்து வழங்கப்படும் என்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பிரிவில் முஸ்லீம்கள் இடஒதுக்கீடு பெறலாம் என்றும் மாநில அரசு அறிவித்தது.

கா்நாடகாவில் மே 10-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட அரசின் இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், “தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்குவோம்” என்று வாக்குறுதி அளித்தது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியோ, “தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர் ஒருவரே முதல்வராக அமர்த்தப்படுவார்” எனக் கூறியது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பா.ஜ.க., இந்த கட்சிகள் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாக கூறியது.

படிக்க : கர்நாடகா: பள்ளி வகுப்பறைகளில் காவி நிறம் அடிக்கும் பாஜக அரசு!

இதனையடுத்து, ஏப்ரல் 25 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டிற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முஸ்லீம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கை என்று பேசினார்.

“கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத அடிப்படையில் முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலுக்கு இடம் கொடுக்காமல், முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது. மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எப்போதும் ஏற்க முடியாது” என்றார்.

மேலும், “முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஒக்கலிகர், லிங்காயத்து சமூகங்களுக்குக்கான இடஒதுக்கீட்டு அளவை பா.ஜ.க அரசு உயர்த்தியுள்ளது” என்று கூறினார்.

இதற்கிடையே, முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யபட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 9 வரை கர்நாடக மாநில அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, மே 9 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

கர்நாடகாவில் மட்டுமல்லாமல் இதே யுக்தியை தெலுங்கானவிலும் பயன்படுத்தியது பா.ஜ.க. சமீபத்தில், இந்தாண்டு இறுதியில் சட்டபேரவை தேர்தலை சந்திக்கவுள்ள  தெலுங்கானாவில் அமித்ஷா உரையாற்றியபோது,  “இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டவிரோதமானது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” என்று நேரடியாகவே கூறினார்.

தேர்தல் நேரத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தால் ஏதாவது பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற எந்தவித அச்சமுமின்றி முஸ்லீம்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பா.ஜ.க.  இதனை, தேர்தல் பிரச்சாரம் குறித்து பா.ஜ.க தலைவர் ஈஸ்வரப்பா பேசுகையில், “சாலை, குடிநீர்,வடிகால் போன்ற வளர்ச்சி திட்டங்கள் குறித்துப் பேச வேண்டாம். இந்து – முஸ்லீம் பிரச்சனை குறித்தும், இந்து தர்மம் குறித்தும் பேசி தேர்தலை சந்திப்போம். இஸ்லாமியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட நமக்கு தேவையில்லை” என்று பேசியதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

படிக்க : கர்நாடக சட்டசபையில் சாவர்க்கர் படம் திறப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ததன் மூலம் பகிரங்கமாக முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கையை பா.ஜ.க மேற்கொண்டிருப்பது ஏதோ வடமாநிலங்களில் அல்ல. கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில்.

“மிஷின் சவுத்” என்ற திட்டத்தை முன்வைத்து தென்மாநிலங்களில் தீவிரமாக வேலை செய்துவரும் பா.ஜ.க, தற்போது மேற்கொண்டிருக்கும் முக்கியமான நகர்வு இது. தென்மாநிலங்களிலும் முஸ்லீம்களை தனிமைப்படுத்தும் வேலையில் பா.ஜ.க இறங்கியுள்ளது. முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதன்மூலம் முஸ்லீம் அல்லாதவர்களிடையே தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வாக்குகளை அறுவடை செய்துகொள்வதற்கும் இந்த கீழ்த்தரமான யுக்தியை காவிக்கும்பல் கையாள்கிறது.

தூய்ஷன்