Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 214

‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

ர்.என். ரவி, நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்தபோது அந்த மாநில அரசு நிர்வாகத்தை சீர்குலைத்து பா.ஜ.க. ஆதரவு கட்சிகளுக்கு ஆள்பிடித்தவர். அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அடியாட்களை நிரப்பியவர். உளவுத்துறை அதிகாரியான அவர் நாகா போராளிக் குழுக்களிடம் நெருங்கி, அவர்களை சீரழித்து போர் நிறுத்த அறிவிப்பை ஏற்படுத்தியவர். நாகாலாந்திலிருந்து ஆளுநர் ரவி வெளியேறிய நாளை மக்கள் வெடிவைத்துக் கொண்டாடினர். ரவியின் பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சியினை பத்திரிகைகள் புறக்கணித்தன. இப்படிப்பட்ட இழிபுகழ் வாய்ந்தவரும் பாசிஸ்டுகளின் கையாளுமான ஆர்.என். ரவி, தமிழகத்தில் தான் பதவியேற்றது தொடங்கி இன்றுவரை தனக்கு கொடுக்கப்பட்ட கையாள் வேலையை கனகச்சிதமாக அமல்படுத்தி வருகிறார்.
000
செப்டம்பர் 21-ம் தேதி ஆளுநர் ரவி, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் நேரில் வரவழைத்து தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்றப் போராட்டங்கள் பற்றியும் முந்தைய ஆளுநர் புரோகித்துக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் பற்றியும் விசாரித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆளுநர், அரசு சம்பந்தமாக ஏதேனும் தகவல்பெற வேண்டுமானால், தலைமைச் செயலாளரை வரவழைத்து பேசுவது  வழக்கம். ஆனால், புதிய ஆளுநர் வழக்கத்துக்கு மாறாக போலீசு அதிகாரிகளை அழைத்து பேசினார். கடந்த எடப்பாடி ஆட்சியில், பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கம்பு சுழற்றிய தி.மு.க. இதைப்பற்றி வாயே திறக்கவில்லை.
படிக்க :
புதிய ஜனநாயகம் ஜனவரி – 2022 அச்சு இதழ் !
ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
தமிழக ஆளுநர் கேட்கும்போது துறைசார்ந்த விவரங்களை வழங்கத் தயாராக இருக்க வேண்டும் என அரசு செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இது ‘வழக்கமான நடைமுறைதான்’ என்று தலைமைச் செயலர் இறையன்பு பூசி மெழுகினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 167-இல், ஆளுநர் சில விவரங்களை மாநில அரசிடம் கேட்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் கேட்கும் விவரங்களை அளிக்க வேண்டிய பொறுப்பு அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்குத்தான் உள்ளது. நேரடியாக அரசு செயலாளர்களை ஆளுநர் அழைத்துப் பேசுவது மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவே பொருள்படும். இதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. ஆளுநரின் அடுத்தடுத்த செயல்பாடுகள் தி.மு.க. கூட்டணிக் கட்சியினரிடம் கூட புலம்பலையும் ஆத்திரத்தையும் உருவாக்கியுள்ளது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “நேரடியாக அதிகாரிகளை சந்திப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதாக அமையும்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் தி.மு.க. கமுக்கமாக இருக்கிறது.
000
கோவையில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவி, அப்பள்ளி ஆசிரியரின் பாலியல் ரீதியான சுரண்டலால் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான பள்ளி ஆசிரியர் மற்றும் முதல்வரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடினர். இறந்துபோன மாணவியின் உடலை வாங்கச் சொல்லி பெற்றோர்களை மிரட்டிய போலீசு, இன்னொரு பக்கம் பள்ளியின் முதல்வரை கைதுசெய்யாமல் தப்பிச் செல்ல கால அவகாசம் ஏற்படுத்திக் கொடுத்தது. பின்னர் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை வேறு வழியின்றி கைது செய்து சில நாட்களிலேயே விடுதலையும் செய்துள்ளது போலீசு. இதற்கு எதிராகப் போராடிய மக்கள்மீது வழக்கு தொடுத்தது. மேலும், இப்போராட்டத்தை சீர்குலைக்க வந்த இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்துக்கு கார் கதவை திறந்துவிட்டு குடை பிடித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் இலங்கை இராணுவத்தினரால் கடலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி மீது இரு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால் பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு எவ்வித இடையூறுமின்றி இருந்துள்ளனர். “இப்போது நிலைமைகளை பார்க்கும்போது தி.மு.க. அரசை பெருவாரியாக மவுனம் காத்துவருகிறது.
மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும்போது அது குறித்து கேள்வி எழுப்புவதுதான் மாநில சுயாட்சி. ஆனால், அதில் தி.மு.க. கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. தமிழ்நாடு போலீசுத்துறை தமிழ்நாட்டு அரசின் கையில் இல்லை. அது நேரடியாக ஒன்றிய அரசின் கையிலோ அல்லது அதற்கு சார்பானவர்களின் கையிலோதான் இயங்கிக் கொண்டிருக்கிறது” என்று வெளிப்படையாகவே போட்டுடைத்தார் திருமுருகன் காந்தி.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை கருப்பு தினமாகக் கடைபிடிக்கும் முசுலீம் அமைப்புகளுக்கு போலீசால் இம்முறை கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றுவதற்கு போலீசுத்துறை தடை விதித்ததுடன், அப்போது ஆதிக்க சாதியினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளது. பின்னர் அதை கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்கு, “ஆட்சிதான் மாறியது காட்சிகள் மாறவில்லை, தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும், அ.தி.மு.க. மனநிலையிலேயே போலீசார் நடந்து கொள்கின்றனர்” என திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடியதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விமர்சித்து பேசிய அவரும், “ஆட்சி மாறியது ஆனால் காட்சிகள் மாறவில்லை. ஆட்சிக்கு தி.மு.க. வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது போலவே நிலைமை தொடர்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீதே வழக்கு போடுகிற போலீசாக தமிழக போலீஸ் உள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஒன்றிய இணையமைச்சரின் மகனால் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மோடி அரசுக்கு எதிராக தமிழகம் முழுக்க விவசாயிகள் சங்கங்கள் உட்பட பல்வேறு இயக்கங்கள் போராடினார்கள். மயிலாடுதுறையில் மோடியின் உருவ பொம்மையை எரித்தபோது, “மோடி உருவ பொம்மையை எரித்தால் பதிலுக்கு நாங்கள் லெனின் உருவ பொம்மையை எரிப்போம்” என்று தகராறு செய்த பா.ஜ.க.வினர் கைது செய்யப்படவில்லை. அதேபோல், தஞ்சையிலும் விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்ச்சியிலும் பா.ஜ.க.வினர் தகராறு செய்துள்ளனர். அவர்களை மரியாதையாக வழியனுப்பிய போலீசு, போராடும் விவசாயிகளை ஒடுக்கியது.
கல்வித் துறையில் காவிகளின் பிடி மென்மேலும் இறுகிக் கொண்டிருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலகுருசாமியை ஆளுநரின் பரிந்துரையின்படி தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. பாலகுருசாமி நீட், புதிய கல்விக் கொள்கை, நவோதயா பள்ளிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஆவார்.
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக Azadi Ka Amrit Mahotsav என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” எனத் தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு, அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியபோதும் அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறி இந்தி முழக்கத்தை பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க. எம்.பி அன்புமணி, “இது இந்தித் திணிப்புதான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?” என்று வினா எழுப்பியுள்ளார்.
அக்டோபர் மாத இறுதியில் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தைக்கூட்டிய ரவி, “புதிய கல்விக்கொள்கையை உடனே அமுல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். மும்மொழிக் கல்விக் கொள்கையை விமர்சித்த அமைச்சர் பொன்முடிக்கு பதில் அளிக்கும் விதமாக பட்டமளிப்பு நிகழ்ச்சியின் மேடையிலேயே புதிய கல்விக் கொள்கையின் ‘சிறப்பு அம்சங்களை’ எடுத்துக் கூறியுள்ளார். மேலும், “புதிய  கல்விக் கொள்கையானது இந்தியாவை சமத்துவமான மற்றும் துடிப்பான அறிவுச் சமூகமாக மாற்றும்” என்று மேடையில் சவாலாக பதிலளித்துள்ளார்.
அனைத்து அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழங்களிலும் குறிப்பாக பெருநகரங்களில் உள்ள கல்வி நிலையங்களில் இடதுசாரி அரசியல் பேசுகின்ற மாணவர்களின் பட்டியலை தயார்செய்து தருமாறு ‘மேலிடத்திலிருந்து’ இரகசிய உத்தரவு வருகிறது. தமிழகத்தில் செயல்படுகின்ற பெரும்பாலான கல்வி நிலையங்களில் பல ஆண்டுகளாக திட்டமிட்டு நெருக்கடிகள் கொடுத்து மாணவர் அமைப்புகள் துடைத்தொழிக்கப்பட்டிருக்கிற நிலைமையில், அமைப்பாய் இல்லாத ஒருசில முன்னணி மாணவர் செயல்பாட்டாளர்களையும் குறிவைத்து ஒடுக்குவதில் கவனத்தை குவித்துள்ளார்கள்.
000
“மத்திய அரசின் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உதவி மற்றும் ஆலோசனை (Aid & Advice) கொடுப்பதற்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறதே ஒழிய, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவுகளை மாற்றவோ அல்லது தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கவோ எந்த அதிகாரமும் கிடையாது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எல்லாவிதமான விதிகளையும் சட்டங்களையும் தகர்த்து, தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சிக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆர்.என். ரவி.
படிக்க :
NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !
திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
“மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை பா.ஜ.க. நுழைய முடியாது, ஆர்.எஸ்.எஸ். கனவு நிறைவேறாது” என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாய் ஜம்பம் ஒன்றும் புதிதல்ல, 1999-ம் ஆண்டு பா.ஜ.க.வுடன் திமுக கூட்டு வைத்த நாடாளுமன்றத் தேர்தலில், மேடையிலேயே “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தாலும் சரி, கலைஞர் இருக்கும் வரை தமிழகத்தில் மதவாதம் வராது” என்று பேசினார்கள். அதே கருணாநிதிதான் ஆட்சியை தக்க வைக்கவும் மத்தியில் அமைச்சர் பதவிக்காகவும் குஜராத் இனப்படுகொலை குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ‘சமுதாய அமைப்பு’ என்றார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.விற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். பதவி என்று வந்துவிட்டால் கொள்கையாவது சுரைக்காயாவது!
000
உளவாளியின் வேலையே எதிரி நாட்டில் ஊடுருவி தனது எஜமானர் அரசுக்கான அடித்தளத்தை உருவாக்கி, பின் எதிரி அரசை வீழ்த்துவதே! அதைத்தான் ஆர்.என். ரவி திறம்பட செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இந்த பாசிச படையெடுப்பை ‘தேர்தல்’ அட்டைக் கத்தியில் வீழ்த்த முடியும் என்ற பகற்கனவில் நம்மில் பலர் உள்ளார்கள்.
காவி – கார்ப்பரேட் பாசிச ஆட்சியை நிறுவுவதற்காக ஒரு மறைமுகமான போரை தமிழகத்தின் மீது நடத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பார்ப்பன பாசிச கும்பல். அக்கும்பலின் உளவுப்படைத் தளபதியான ஆர்.என். ரவி, தமிழக அரசின் அனைத்து விழுமியங்களையும் காலில் போட்டு மிதித்துக்கொண்டும் தங்களுக்கான ஐந்தாம் படையை உருவாக்கிக்கொண்டும் வருகிறார்.
எனவே, ‘பா.ஜ.க.வை தி.மு.க. பார்த்துக்கொள்ளும்’, ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதன் மூலம் பாசிசத்தை தடுத்துவிடலாம்’ என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போக்கை தமிழக அறிவுத் துறையினரும் ஜனநாயக சக்திகளும் விட்டொழிக்க வேண்டும். பார்ப்பன பாசிஸ்டுகளை களத்தில் வீழ்த்தும் போரில்தான் ஆர்.என் ரவியைக் கூட வீட்டுக்கு அனுப்ப முடியும்.

மருது

ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்

PP Letter head07.01.2022
ஆன்லைன் சூதாட்டம் :
கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்
பத்திரிகை செய்தி
ன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த திருவான்மியூர் இரயில்வே நிலையத்தில் டிக்கெட் விற்பனையாளராக இருக்கும் டீக்காரம் என்ற ஊழியர் பணிபுரியும் இடத்தில் பணத்தை திருடி விட்டு கொள்ளை போனதாக நடித்து மனைவியுடன் சிறைக்கு சென்றுள்ளார்.
அவருடைய குழந்தைகள் மூவரும் தற்போது பரிதாப நிலையில் நிற்கின்றனர்.
தனியார் வங்கியில் வருடம் ரூ.38 இலட்சம் சம்பாதிக்கக் கூடிய  ஒருவர் ரூ.75 இலட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மனைவிக்கு விஷயம் தெரிந்தவுடன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார்.
படிக்க :
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைபேசியிலும் தொலைக்காட்சிகளிலும் ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் சம்பாதிக்க வைப்பது. அவர்கள் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான பிறகு பணத்தை இழந்தாலும் பரவாயில்லை என்று விளையாடும் அளவிற்கு அடிமைகளாக தள்ளப்படுகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனதால்  ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சட்டம் பிறப்பித்து அதன்மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டது. அதற்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. தனிமனித உரிமை என இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்படுகின்ற அடிப்படை உரிமையை, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் பறித்துள்ளதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து, அந்த தடைச் சட்டத்தை ரத்து செய்தது.
உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட மேற்கண்ட தனிமனித உரிமை, மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்களுக்கு ஒருபோதும் துணைக்கு வருவதில்லை. ஆக இந்த ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் ஏகாதிபத்திய நுகர்வு பண்பாடு, அரசு, நீதித்துறை ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதே.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு உடனே கொண்டு வரவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மனிதனை அடிமையாக்கி தன்னையே விற்பனைப் பொருளாக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டி உழைக்கும் மக்களின் பண்பாட்டை மக்களிடம் கொண்டு செல்வதில் முன்னெப்போதையும் விட தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.
தோழமையுடன்,

தோழர் அமிர்தா,
மாநில செயற்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
99623 66321.

புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்

புல்லிபாய் என்ற வலைத்தள செயலியின் மூலமாக முசுலீம் சமூகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக அந்தஸ்தில் உள்ள பெண்களையும் இணையத்தில் ஏலம் விட்டுள்ளனர் சங்க பரிவாரக் கும்பல்கள்.
கடந்த ஆண்டு ஏற்கெனவே சுல்லி கேர்ள்ஸ் என்ற பெயரில் இதே போன்ற செயலியை உருவாக்கி முசுலீம் சமூகப் பெண்களை இழிவுபடுத்தினர். அதனைத் தொடர்ந்து அதன் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், மற்றொரு பெயரில் அதே வகையிலான செயல்பாட்டைத் துவங்கியிருக்கிறது சங்கி கும்பல்.
கடந்த ஆண்டே இவ்விவகாரம் பெரிதாகப் பேசப்பட்ட போது, எவ்வித கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் உத்தரப் பிரதேச போலீசு இழுத்தடித்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது. இந்த ஆண்டில் புல்லி பாய் என்ற இந்த செயலி குறித்த புகார், பாஜக ஆளாத மகாராஷ்டிர மாநிலப் போலீசில் பதிவு செய்யப்பட்டதால், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, இச்செயலியை உருவாக்கிய நபர்கள் மற்றும் பகிர்ந்த நபர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புல்லிபாய் செயலியில் 16 வயது சிறுமி முதல் சங்க பரிவாரத்துக்கு எதிராகப் பேசிவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த 67 வயதான சமூகச் செயற்பாட்டாளர் வரை அனைத்து முசுலீம் பெண்களையும் ஆபாசமாகச் சித்தரித்து அவர்களை ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ். – பாஜக -வின் இந்துராஷ்டிரக் கனவை சாதிப்பதற்கான முசுலீம் வெறுப்பு அரசியலை கீழ்மட்டத்தில் மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கத்துடன் தான் சுல்லி கேர்ள்ஸ், புல்லிபாய் போன்ற செயலிகளை சங்க பரிவாரக் கும்பல்கள் இயக்கிவருகின்றன, என்பதை விரிவாகப் பேசுகிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்திமுருகன்.

அனைவரும் பாருங்கள் ! பகிருங்கள் !

பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !

PP Letter headபத்திரிக்கை செய்தி

07.01.2022

மீண்டும் ஊரடங்கு; மூடு டாஸ்மாக்கை! பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !

கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு நடக்கும் வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வாரத்தில் நான்கு நாட்கள் கோயில்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கெனவே ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் குறைந்து போயுள்ளதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள இந்தச் சூழலில் பள்ளிகள் மூடப்படுவது என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். மீண்டும் ஷிப்ட் முறையில் பள்ளிகளை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா சுனாமியாய் பரவி வருவதால் பொது இடங்களில் தேவையின்றி கூடக்கூடாது என்று விளம்பரம் செய்து வரும் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக்கை மூடுவது பற்றி வாயே திறக்காமல் இருப்பது மிகப்பெரிய அநியாயம் ஆகும். கொரோனா பரவல் என்பது உண்மை என்றால் முதலில் மூட வேண்டியது டாஸ்மாக்கைதான். ஆகவே தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இல்லையென்றால் கடந்த ஆட்சியின் போது டாஸ்மாக்கை மூடாத எடப்பாடி அரசின் மீது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வைத்த விமர்சனங்களே இந்த ஆட்சிக்கும் பொருந்தும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் மூடப்படாது. மக்கள் போராட்டங்களே டாஸ்மாக்கை மூடும் என்பதே மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

தோழமையுடன்
தோழர் சி வெற்றிவேல் செழியன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2022 || மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஜனவரி-2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜி−பே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜி−பே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்−ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்−அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

000

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
  • தலையங்கம்: ‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021: இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்
  • கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்துவரும் இந்துராஷ்டிர பேரபாயம்! – பாகம்:01
  • குழந்தைத் திருமண தடுப்பு (திருத்த) மசோதா 2021 : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின் ஒளிந்திருக்கும் பாசிச நோக்கம் !
  • பாசிச படையெடுப்பின் கைதேர்ந்த உளவாளி ஆர்.என்.ரவி !
  • உலக மனித உரிமைகள் தினம்: பாசிஸ்டு மோடியைக் கண்டித்து உலகெங்கிலும் எழுந்த போராட்டங்கள் !
  • ஹரித்துவார் மாநாட்டின் அறைகூவல்: எச்சரிக்கை ! இந்துராஷ்டிரம் நிறுவப்படும் காலம் நெருங்குகிறது.
  • அமெரிக்காவின் மேலாதிக்க வெறியால் பட்டினியில் மடியும் ஆப்கான் மக்கள்
  • நாகாலாந்தில் 15 தொழிலாளர்கள் படுகொலை: இராணுவ ஒடுக்குமுறையில் நிலைநாட்டப்படும் ‘இந்திய ஒற்றுமை’
  • ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடும் அமெரிக்காவின் நாட்டாண்மைப் பதவியும் !

வாங்கிப் படியுங்கள் !!

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !

“நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை – 2020 ! எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?” என்ற தலைப்பின் கீழ், பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) கடந்த 05-01-2022 அன்று பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் கதிரவன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து “அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கம்” அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உமா மகேஸ்வரி சிறப்புரை ஆற்றினார்.

ஆசிரியர் உமா மகேஷ்வரி, தனது உரையில் இந்தியா முழுவதும் மோடி அரசு ஆட்சியில் அமர்ந்த பின்னர் படிப்படியாக கல்வி காவிமயப்படுத்தப் பட்டதை அம்பலப்படுத்திப் பேசினார். மேலும், தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதையும், அரசுப் பள்ளிக் கூடங்கள் பராமரிப்பின்றி படிப்படியாக மூடப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டி உரையாற்றினார்.

ஆசிரியர் உமா மகேஷ்வரியின் உரை காணொலியாக இங்கு பதிவிடப்பட்டிருக்கிறது !

பாருங்கள் ! பகிருங்கள் !!

 

நாகாலாந்து : ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தூக்கியெறியப் போராடுவோம்!

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற வெற்றுப் பூச்சாண்டியை  அம்பலப்படுத்துவோம் !
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தூக்கியெறியப் போராடுவோம் !
நாகாலாந்தில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்ப பெற வேண்டும் என்று அம்மாநில மக்களும் அங்குள்ள அமைப்புகளும் பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், நாகாலாந்து மாநிலம் அச்சுறுத்தல் நிறைந்ததாக (disturbed area) உள்ளது என்று காரணம் காட்டி அச்சட்டத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது ஒன்றிய அரசு.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) அமலில் இருக்கும் காஷ்மீர், நாகாலாந்து உள்ளிட்ட 9 மாநிலங்களில் இராணுவத்துக்கு எல்லையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவம் நினைத்தால் மக்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் சோதனை என்ற பெயரில் அத்துமீறலாம். இராணுவம் செய்யும் கொலை, பாலியல் வெறியாட்டங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நீதிமன்ற விசாரணையோ நடவடிக்கையோ கூடக் கிடையாது. இராணுவ நீதிமன்றங்களே இவற்றை விசாரிக்கும்.
சுருங்கக் கூறின் இம்மாநிலங்கள் அறிவிக்கப்படாத ஒரு இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளன. இத்தகைய வானளாவிய அதிகாரங்களை கையில் வைத்துகொண்டு அப்பகுதி மக்களிடம் எல்லையற்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவதோடு, எந்தக் காரணமுமின்றி அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது இந்திய இராணுவம்.
சமீபத்தில் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் சுரங்க தொழிலுக்குச் சென்று வீடு திரும்பிய 6 தொழிலாளர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது இராணுவம். அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த இச்சம்பவம் குறித்து மக்களவையில் பேசிய அமித்ஷா, இராணுவத்தினர், தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என தவறுதலாக அடையாளம் கண்டுகொண்டு சுட்டுவிட்டதாகவும், அச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் தன் ஆழ்ந்த ‘இரங்கலை’ தெரிவித்தார். தினசரி அங்குள்ள மக்கள் வேலைக்குச் சென்று திரும்பும் மக்களின் நடைமுறைக்கும், பயங்கரவாதிகளின் நடைமுறைக்கும் ‘வித்தியாசம் தெரியாமல்’ இவர்கள் சுட்டுவிட்டார்களாம், அதற்காக வருந்துகிறார்களாம். மோடி-ஷா கும்பலால் கூறப்படும் இப்பச்சைப் பொய்யை எவ்விதக் கூச்சமுமின்றி இந்தியாவின் எல்லா ஊடகங்களும் ஒளிபரப்பின.
படிக்க :
♦ AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
♦ எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம்!
உண்மையில், 6 தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற பின் அவர்களை தூக்கி வண்டியில் போட்டு, அவர்களுக்கு கிளர்ச்சியாளர்களின் (பயங்கரவாதிகளின்) உடையை அணிவித்து அவர்களின் கைகளில் ஆயுதங்களைத் திணித்து அவர்களை பயங்கரவாதிகளாகவே சித்தரிக்க முயற்சித்திருக்கிறது, இராணுவம். ஆகவே, இராணுவத்தினர் தவறாகச் சுடவில்லை. ஒரு திட்டத்துடன் தான் வந்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.
மக்கள் வருவதற்குள் கொல்லப்பட்ட 6 பேரையும் தாம் வந்த வண்டியில் தூக்கிப் போட்டு, அந்தப் பிணங்களின் மீது தார்ப்பாயும் போர்த்தப்பட்டு, அதன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு வண்டி கிளம்பியது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த மக்கள் இராணுவ வாகனத்தை மறித்துப் பார்த்ததில் இவ்வுண்மை தெரியவந்துள்ளது. தங்கள் உறவினர்களைக் கொன்று அதன்மேல் அமர்ந்ததைப் பார்த்து ஆத்திரமுற்ற மக்கள் இராணுவத்தின் இப்பச்சைப் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதனைப் பொறுத்துகொள்ள முடியாத இராணுவமோ நியாயம் கேட்டுப் போரடிய மக்களின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மேலும் 8 பேர் கொல்லபட்டனர். கொடூரமான மோன் மாவட்ட படுகொலை சம்பவம் நிகழ்ந்த பின்னர், நாடே முப்படைத் தளபதி பிபின்ராவத் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் ‘தேசபக்தி’ வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.
2021 டிசம்பர் 21-ம் தேதியன்று தினமணி நாளிதழ், இச்சம்பவத்தை பற்றி விவரிக்கும்போது, தீவிரவாதிகள் என்று நினைத்தே உழைக்கும் மக்கள் மீது இராணுவத்தினர் ‘தவறுதலாக’ துப்பாக்கிச்சூடு நிகழ்த்திவிட்டதாகவும், அதில் உழைக்கும் மக்கள் 6 பேர் ‘உயிரிழந்தனர்’ என்றும் வன்முறையில் இராணுவ வீரர் ஒருவர் ‘கொல்லப்பட்டார்’ என்றும் எழுதியிருகின்றது. ஒரே சம்பவத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை ‘உயிரிழந்தனர்’ என்றும் மக்கள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கியபோது பலியான இராணுவ வீரரை ‘கொல்லப்பட்டார்’ என்றும் எழுதிய தினமணியின் ஊடக ‘அறத்தை’ நாம் என்னவென்று சொல்வது? ‘நடுநிலை நாயகர்களாக’ தங்களைக் காட்டிக்கொள்ளும் பத்திரிகைகளின் இலட்சணம் இதுதான்.
நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உழைக்கும் மக்கள் இராணுவத்தால் கொல்லபடுவது இது முதன்முறையல்ல. 1947-க்குப் பின்பு வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவோடு அடக்கி ஒடுக்கி இணைக்கபட்டதில் இருந்து அம்மாநிலங்களில் துப்பாக்கிச்சூடு சத்தமும் ஓலக்குரல்களும் கேட்ட வண்ணமே உள்ளது. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் அமலாக்கப்பட்டு, அப்பாவி உழைக்கும் மக்களைக் கொன்று குவிக்கும் இக்கொடிய சட்டத்தை (AFSPA) திரும்பப்பெற பல ஆண்டுகளாக அம்மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மோன் மாவட்ட படுகொலை சம்பவத்திற்கு பிறகு நாகாலாந்தில் இக்குரல் வலுத்து வந்தது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே அவசர அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை இரத்து செய்ய ஒன்றிய அரசிடம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இவ்வாறு முன்பைக் காட்டிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ள சூழலில் அதை இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருப்பது நாகாலாந்து மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவிற்கு  கிழக்கு நாகாலாந்து மக்கள் கூட்டமைப்பு, சர்வதேச நாகா கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாகா பழங்குடியினர் குழுக்களில் ஒன்றான ஹோஹோ வெளியிட்ட அறிக்கையில், “நாகா மக்களின் விருப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அரசின் முடிவை நாகா மக்கள் ஏற்கமாட்டார்கள். மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவும்போது ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமென்ன? மாநிலத்தில் இராணுவத்தினரே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாசிச பா.ஜ.க. அரசு ஒவ்வொரு மாநிலங்களிலும் ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என்று காரணம் காட்டி அவற்றை இராணுவ சர்வாதிகாரத்தின் பிடியில் கொண்டுவரும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறது. பஞ்சாப்பிலும் அசாமிலும் தற்போது எல்லைப் பாதுகப்புப் படையின் (BSF) அதிகார வரம்பை 15 கி.மீட்டரில் இருந்து 50 கி.மீட்டராக நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது நாகாலாந்தில் சட்டத்தை நீட்டித்ததற்கும் ‘பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற அதே காரணத்தைத்தான் கூறியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத சம்பவங்கள் வளர்ந்து வருவதைப் போலவும் அதன் மூலம் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதைப் போலவும் ஊடகங்கள் மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காகவே அவற்றை அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளாக (disturbed area) அறிவிப்பதாகவும், அங்கெல்லாம் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டிப்பதாகவும் ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இவற்றில் கடுகளவும் உண்மையில்லை என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA) வெளியிட்டுள்ள தகவல்களில் இருந்தே நாம் அம்பலப்படுத்த முடியும்.
படிக்க :
சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இச்சட்டத்தை நீட்டிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அவ்வாறு நீட்டிப்பதாயின் அதற்கான காரணங்களை வெளியிட வேண்டும் என்பது விதி. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ‘கிளர்ச்சி சார்ந்த சம்பவங்களின்’ (Insurgency related incidents) எண்ணிக்கைகளையும் காரணங்களையும் குறிப்பிட்டு அதற்காக இச்சட்டத்தை நீட்டிப்பதாக ‘நியாயவாதம்’ (Justification) கூறிவந்த ஒன்றிய அரசோ, 2018 முதல் இப்போது வரை எவ்வித நியாயவாதமும் இல்லாமல் இந்த நீட்டிப்பைச் செய்து வருகிறது.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படியே, வடகிழக்கு மாநிலங்களில் 1999-இல் 1,743-ஆக இருந்த கிளர்ச்சி சார்ந்த சம்பவங்கள் ஆகஸ்டு 2021-இல் வெறும் 135-ஆகக் குறைந்துள்ளது. அசாமில் இச்சட்டத்தை நீட்டிப்பதற்காக செப்டம்பர் 10-ம் தேதி அசாம் அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் “அந்நிய நாட்டின் புலனாய்வு நிறுவனங்களால் தீய திட்டம் தீட்டப்பட்டுள்ளது” என்றும் பங்களாதேசும் மியான்மரும் சீனாவும் பூடானும் அதைச் சூழ்ந்திருப்பதாலும் “HMB, JMB, HM போன்ற இசுலாமிய பயங்கரவாதக் குழுக்களால் அசாமுக்கு ஆபத்து உள்ளது” என்றும் இச்சட்டம் நீட்டிக்கப்படுவதற்கான காரனங்கள் கூறப்பட்டுள்ளன.
ஆனால், அசாமில் 2000-இல் 536-ஆக இருந்த இச்சம்பவங்கள் 2020-இல் வெறும் 15-ஆகவும் 2021-இல் வெறும் 17-ஆகவும் குறைந்துள்ளது என்பதுதான் ஒன்றிய உள்துறை அமைச்சகமே வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரமாகும். இதேபோலத்தான் மணிப்பூரும் ‘அச்சுறுத்தல் நிறந்த பகுதியாக’ உள்ளது என்று கூறி இச்சட்டத்தை நீட்டிப்பதற்கான அறிவிப்பை டிசம்பர் 8-ம் தேதி வெளியிட்டுள்ளது மணிப்பூர் அரசு. ஆனால் 2008-இல் 740-ஆக இருந்து வந்த வன்முறைகள் 2021-இல் வெறும் 72-ஆகக் குறைந்துள்ளன. (ஆங்கில ஹிந்து நாளிதழ் 02.01.2022, பக்கம் 19)
பாசிஸ்டுகளின் புகலிடம் தேசபக்தி என்பார்கள். ‘தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்பது பாசிஸ்டுகள் காட்டும் பூச்சாண்டி என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. எனவே ‘தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற இப்பூச்சாண்டி காட்டி, அமுலாக்கப்படும் பாசிச சட்டங்களையும் இராணுவ சர்வாதிகாரத்தையும் அம்பலப்படுத்தி தோலுரித்துக் காட்டுவோம். இத்தகைய கொடிய சட்டங்களைத் தூக்கியெறிய வடகிழக்கு மாநில, காஷ்மீர் மக்களோடு கரம் கோர்த்துப் போராடுவோம்.

துலிபா

சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா.

ந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாள் (ஜனவரி 3) இன்று.  சமீபகாலங்களில் தான் அவரை நம்மில் பலருக்கும் தெரியவந்திருக்கிறது. மிகச் சமீபகாலங்களில் தான் அவரை பலரும் நினைவுகூருகிறார்கள்.
‘சாதி நல்லது’ என்றும் ‘சாதி அப்படியே தொடரவேண்டும்’ என்றும் சொன்ன இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் சாவித்ரிபாயை இத்தனை ஆண்டுகளாக நம்மில் பலருக்கும் தெரியாமலேயே நம் முன்னோர்கள் வைத்திருந்திருக்கிறார்களே, ‘அது ஏன்?’ என்று யோசித்துப் பார்த்தால் அவர் மறைக்கப்பட்டதற்கான காரணம் நமக்குப் புலப்படும்.
சாவித்ரிபாய் ஒரு பெண் என்பதால் தான் அவரது வரலாற்றை மறைத்தார்களா? என்று கேட்டால், “ஆம் அதுவும் ஒரு காரணம் தான். ஆனால் அது மட்டுமே ஒரேமுக்கியமான காரணமல்ல”.
படிக்க :
பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !
நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்கமுடியும் என்கிற பார்ப்பனிய ஒடுக்குமுறையினால், வேறு எந்த சாதியினரும் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பள்ளிகள் உருவாவதற்கு முன்னர் இருந்த குருக்குலங்களிலும் கூட பார்ப்பனர் அல்லாத எவருமே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதிலும், பார்ப்பன ஆண்கள் மட்டுமே கல்வி கற்கிற உரிமையினைப் பெற்றிருந்தார்கள்.
இப்படியான சூழலில் தான் சாவித்ரிபாய் புலேவைத் திருமணம் செய்திருந்த ஜோதிராவ் புலே, தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுத்தார். அதுகுறித்து கேள்விப்பட்டதும், பார்ப்பனர்கள் தங்களது படைசூழ ஜோதிராவ் புலேவின் வீட்டுவாசலில் வந்து நின்று, ஜோதிராவ் புலேவின் அப்பாவிடம் சண்டையிட்டு, ஜோதிராவ் புலேவையும் அவரது மனைவியான சாவித்ரிபாய் புலேவையும் வீட்டைவிட்டே விரட்டவைத்தனர். அதாவது, சொந்த மகனையும் மருமகளையுமே வீட்டைவிட்டு துரத்தும் அளவிற்கு ஜோதிராவ் புலேவின் அப்பாவிற்கு பார்ப்பனர்கள் நெருக்கடி கொடுத்தனர். எதற்காக? பார்ப்பனர்கள் அல்லாத ஒரு பெண் படிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக.
இந்த ஒரு புள்ளி தான் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையை மாற்றியது என்று சொல்லலாம். இதுதான் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அது கொடுத்த கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் தான் சாணியைக் கரைத்து ஊற்றியபோதிலும், சேரை வாரி இறைத்தபோதிலும், மேலும் பல கொடூரமான தாக்குகள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.

இந்த உண்மைகள் எவருக்குமே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் சாவித்ரிபாய் புலேவின் வரலாற்றை இத்தனை ஆண்டுகளாக சொல்லிவிடாமல் மறைத்தும், பள்ளிப்பாடத்திட்டத்தில் இடம்பெறாமல் தடுத்தும் வருகிறார்கள் சாதி மேலாதிக்கவாதிகள்…
இன்றைக்கு எல்லா சாதியைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் ஒன்றாக இணைந்து ஒரே பள்ளியில் படிக்கமுடிகிறதென்றால், அது தானாக வந்ததில்லை. பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராக சாவித்ரிபாய் புலே போன்ற எண்ணற்ற மறைக்கப்பட்டவர்களின் சாகசகங்களாலும் கடும் போராட்ட வாழ்க்கையினாலும் தான் சாத்தியமாகி இருக்கிறது.
இதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்… சாவித்ரிபாய் புலேவைப் பற்றி எங்கு பேசினாலும், இதையும் இணைத்தே தான் பேசவேண்டும்…
சாவித்ரிபாய் புலே குறித்து பேசுகையில், நான்கு முக்கியமான கோரிக்கைகளை நாம் தொடர்ந்து வைக்க வேண்டும்.
1. சாவித்ரிபாய் புலே குறித்து 107 எப்பிசோடுகளைக் கொண்ட தொடர் நாடகத்தை இந்தியில் தூர்தர்சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதனை அப்படியே யூட்யூபிலும் கூட தூர்தர்சன் முழுவதுமாக வெளியிட்டிருக்கிறது. அந்தத் தொலைக்காட்சித் தொடரை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து, இந்தியாவின் அனைத்து மாநில தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்ப வேண்டும், யூட்யூபிலும் பதிவேற்ற வேண்டும்.
2. சாவித்ரிபாய் துவங்கிய பெண்களுக்கான இந்தியாவின் முதல் பள்ளியின் நிலை இன்று படுமோசமாக இருக்கிறது. அதனை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து, முழுவதுமாக சரிசெய்து, சீரமைத்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும்.
3. இந்தியா முழுக்க உள்ள அனைத்து பாடத்திட்டங்களிலும் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும்.
4. சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாளை “சமத்துவ ஆசிரியர் தினம்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆண்டுதோறும் நாடுமுழுவதிலும் கொண்டாடப்பட வேண்டும்.
முகநூலில் : Chinthan E P
disclaimer

புதிய ஜனநாயகம் ஜனவரி – 2022 அச்சு இதழ் !

புதிய ஜனநாயகத்தின் 2022 ஜனவரி மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. தோழர்கள் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்மாதம் புதிதாக சந்தா கொடுத்து வாசகர்களான அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
சந்தா பற்றிய விவரம் :
  • ஓராண்டு சந்தா- ரூ.240
  • இரண்டாண்டு சந்தா- ரூ.480
  • ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
அறிவிப்பு
அன்பார்ந்த வாசகத் தோழர்களே!
உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அரசியல் ஆயுதமாய் தொடர்ந்து சமர் செய்து கொண்டிருக்கும் நமது புதிய ஜனநாயகம், தனது பாதையில் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அதில் ஒரு பகுதியாக, நாம் முன்பே அறிவித்தவாறு புதிய ஜனநாயகம் இதழ்களில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இதழாக கொண்டு வந்துள்ளோம்.
கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி, புதிய ஜனநாயகம் சார்பாக இம்மாதம் இரண்டு வெளியீடுகளை கொண்டு வர இருக்கிறோம். அவற்றையும் வாங்கிப் படித்து ஆதரிக்குமாறும் அரசியல் முன்னணியாளர்களிடம் கொண்டு சேர்க்குமாறும் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்

000

வெளியீடுகளின் விலைப்பட்டியல் :

NEW DEMOCRACY (புதிய ஜனநாயகத்தின் ஆங்கில இதழ்)
நன்கொடை : ரூ.25

 

காவி-கார்ப்பரேட் பாசிசம்: எதிர்கொள்வது எப்படி?
(புதிய ஜனநாயகம் இதழின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு)
விலை: ரூ.80 (மாற்றத்தக்கது)
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவமே கொரோனா!
(வினவு தளத்தில் வெளியான தொடர் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு)
விலை: ரூ.50 (மாற்றத்தக்கது)

000

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2022 இதழின் அச்சுப் பிரதி, புதிய ஜனநாயகத்தின் ஆங்கில இதழ் (NEW DEMOCRACY), வெளியீடுகள் ஆகியவற்றைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
000

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
  • தலையங்கம்: ‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021: இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்
  • கர்நாடகா, திரிபுரா, அசாம்: பற்றிப் படர்ந்துவரும் இந்துராஷ்டிர பேரபாயம்! – பாகம்:01
  • குழந்தைத் திருமண தடுப்பு (திருத்த) மசோதா 2021: காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின் ஒளிந்திருக்கும் பாசிச நோக்கம்!
  • பாசிச படையெடுப்பின் கைதேர்ந்த உளவாளி ஆர்.என்.ரவி!
  • உலக மனித உரிமைகள் தினம்: பாசிஸ்டு மோடியைக் கண்டித்து உலகெங்கிலும் எழுந்த போராட்டங்கள்!
  • ஹரித்துவார் மாநாட்டின் அறைகூவல்: எச்சரிக்கை! இந்துராஷ்டிரம் நிறுவப்படும் காலம் நெருங்குகிறது.
  • அமெரிக்காவின் மேலாதிக்க வெறியால் பட்டினியில் மடியும் ஆப்கான் மக்கள்!
  • நாகாலாந்தில் 15 தொழிலாளர்கள் படுகொலை: இராணுவ ஒடுக்குமுறையில் நிலைநாட்டப்படும் ‘இந்திய ஒற்றுமை’
  • ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடும் அமெரிக்காவின் நாட்டாண்மைப் பதவியும்!

#GoBackModi என்றால் மோடி எதிர்ப்பு மட்டும்தானா?

ந்தியா முழுமைக்கும் ஒரு திட்டத்தையும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான திட்டங்களையும் வகுத்துத் தான் ஆட்சியதிகாரத்தை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கைப்பற்றிவருகிறது.
ஒரு மாநிலத்தில் இராமனென்றால், மற்றொரு மாநிலத்தில் மாட்டுக்கறி. இது எதுவுமே சரிவராத மாநிலத்தில், அங்கே முன்னணியில் இருக்கிற கட்சிகளின் உதவியோடு காலடி எடுத்துவைத்து உள்ளே நுழைந்துவிடுவது பாஜகவின் கடைசி ஆயுதம். அப்படியாக மேற்குவங்கத்தில் ஜீரோவாக இருந்த பாஜக, மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைத்து, அதன் உதவியுடன் மெகா வளர்ச்சியடைந்து இன்றைக்கு அம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறது.
படிக்க :
#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு
மோடி வரும் பின்னே ! #gobackmodi வரும் முன்னே !
அதேபோல பாஜக என்கிற கட்சியே இல்லாமல் இருந்த தமிழகத்தில் காலங்காலமாக பார்ப்பனிய எதிர்ப்பினால் வளர்ந்திருந்த திராவிடப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கிற திமுகவுடனேயே கூட்டணி வைத்து தமிழகத்தில் தடம்பதித்துவிட்டது பாஜக. ஒரு சாரணர் இயக்கத் தேர்தலில் கூட வெற்றிபெறத் தகுதியற்ற ஹெச்.ராஜாவை எம்எல்ஏ ஆக்கி சட்டமன்றத்தில் உட்காரவைத்து ஐந்தாண்டுகள் அழகு பார்த்ததே திமுக தான். திமுகவே கூட்டு வைத்தபிறகு கொள்கையே இல்லாத கட்சியான அதிமுக பாஜகவுடன் கூட்டு வைத்ததை என்னவென்று சொல்லமுடியும்.
பாஜக ஒரு தீண்டத்தகாத கட்சி என்கிற மக்களின் பொதுப்புத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, அக்கட்சியும் மற்ற கட்சிகளைப் போன்றதொரு கட்சிதான் என்கிற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியது இந்தப் புள்ளி தான்.
அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கு அதிமுக பாமக என தமிழகத்தின் பல்வேறு கட்சிகளில் ஊடுருவி தமிழகம் முழுவதும் தனது கிளைகளை பாஜக விரித்துக்கொண்டிருக்கிறது.
பிரியாணி அண்டா திருடர்கள் என்று நாம் கிண்டல் செய்தாலும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அவர்கள் தான் முன்னிறுத்தப்படுகிறார்கள். கிண்டல் செய்வதானாலும் கேலி செய்வதானாலும் கூட தினமும் பாஜக இல்லாத விவாதங்களோ சண்டைகளோ இல்லாத சூழல் உருவாகியிருக்கிறது. இதெல்லாமே பாஜகவிற்கு வெற்றிதான்.
பாஜக நுழைந்த எந்த மாநிலமும் உருப்பட்டதாக வரலாறோ பூகோளமோ இல்லை. அண்டை தேசமான வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்திருக்கிற போதும், எல்லைப் பிரச்சனை கூட இல்லாமல் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சிக்காலத்தில் அமைதியான மாநிலமாக இருந்த திரிபுரா இன்றைக்கு பாஜக ஆட்சியில் அனுதினமும் எரிந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த வடகிழக்கு இந்தியாவின் நிலையும் அது தான் இன்றைக்கு.
அதனால்… அதனால்… அதனால்… ஏற்கனவே செய்த தவறுகளை தவறுகள் தான் என்று புரிந்துகொண்டு, பாஜகவிடம் இருந்து பல அடிகள் தள்ளிநிற்பதோடு மட்டுமல்லாமல் கடுமையாக எதிர்க்க வேண்டிய கடமை மற்ற அனைவரையும் விட திமுகவிற்கு தான் அதிகம் உண்டு.
ஆகவே #GoBackModi என்பதன் பொருளானது, மோடியே திரும்பப்போ என்பது மட்டுமல்ல. மோடியே, நீயும், உன்னுடைய பாஜகவும், அதன் தலைமை அமைப்பான ஆர்எஸ்எஸ் உம், அதன் தத்துவமான பார்ப்பனியமும் எங்களுக்குத் தேவையில்லை… ஒட்டுமொத்தமாக திரும்பிப்போங்கள் என்பதே பொருள்..
முகநூலில் : Chinthan EP

disclaimer

தேசிய இனக் கோரிக்கையின் அடிப்படையும் மொழியின் முக்கியத்துவமும் : லெனின் || மணியம் சண்முகம்

‘உலகம் பூராவும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப் பகுதி தேசிய இன இயக்கங்களுடன் இணைந்துள்ளது. பண்ட உற்பத்தி முழு வெற்றி அடைவதற்கு, முதலாளி வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும், ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசியல் வழியில் ஒற்றுமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அதற்கு வேண்டும்.
அந்த மொழியின் வளர்ச்சிக்கும், அதன் இலக்கியம் உருப்பெற்று விளங்கவும், குறுக்கே நிற்கும் தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும் – இங்குதான் இந்த இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கின்றது. மனித இடைத் தொடர்புகளுக்கு மிக முக்கியமான சாதனம் மொழியாகும்.
நவீன முதலாளித்துவத்துக்குச் சரியான வீதத்தில் மெய்யாகவே தடையற்ற விரிவான வாணிகத்துக்கும், பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்த மக்கள் சுதந்திரமான, விரிவான பிரிவுகளாக அமைவதற்கும், இறுதியாக சந்தையுடன் ஒவ்வொரு பெரிய சிறிய உரிமையாளரும், விற்போரும் வாங்குவோரும் பரஸ்பரம் நெருக்கமான தொடர்பு ஏறபடுத்திக் கொள்ளவும் மிக முக்கியமான நிபந்தனைகளில் மொழியின் ஒற்றுமையும் தங்குதடையற்ற வளர்ச்சியும் அடங்கும்.
படிக்க :
நூல் அறிமுகம் : தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி
தேசிய இனப் பிரச்சினையும் பாட்டாளி வர்க்கமும் – லெனினியம்
எனவே, ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் போக்கும் தேசிய இன அரசுகளை நிறுவும் திசையிலானதாகும். அவ்வரசுகளின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்தத் தேவைகள் மிகவும் நன்றாகப் பூர்த்தி செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் இந்த இலட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன.
எனவே, மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் ஏன் நாகரீக உலகம் முழுவதற்குமே முதலாளித்துவ காலப் பகுதியில் தேசிய இன அரசு மாதிரிப் படிவமானது சகஜமானது.’
(‘தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை’ என்ற கட்டுரையில் லெனின் இவ்வாறு கூறியிருக்கிறார்)
குறிப்பு :
இங்கே லெனின் ஒரு தேசிய இன இயக்கத்தின் பொருளாதார அடிப்படையையும், அந்த இயக்கத்தின் இறுதி இலட்சிய நோக்கையும், வர்க்க அடிப்படையிலான விஞ்ஞான நோக்கில் மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
லெனின் எடுத்துரைத்த கருத்துகளின் அடிப்படையில்தான் ஐரோப்பாவில் பொருளாதார அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் தேசிய இன அரசுகள் அமைந்துள்ளதைக் காணலாம். ஆனால், ஐரோப்பாவில் தனித்தனி தேசிய அரசுகள் அமைந்த பின்பும், அங்கு இன்னமும் சில நாடுகளில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்றன. ஏன் அப்படி நடைபெறுகின்றது?
மறுபுறத்தில், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றால் காலனிகளாக ஆக்கப்பட்டு, பின்னர் நாட்டுச் சுதந்திரம் பெற்ற பெரும்பாலான ஆசிய – ஆபிரிக்க – லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மை இன ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகச் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்றன.
அவ்வகையான ஒரு போராட்டம்தான் இலங்கைத் தமிழர்களின் போராட்டமும் என அதன் தலைமைகளும் கூறி வருகின்றன. உண்மையில் லெனின் குறிப்பிட்டவாறு, இலங்கைத் தமிழினம் தனது முதலாளித்துவ சந்தையை உறுதிப்படுத்துவதற்காகத்தான் ஒரு அரசு வேண்டும் என்று போராடுகிறதா? அப்படியான ஒரு சுதேசிய முதலாளித்துவ சந்தை (வளர்ச்சி) இலங்கைத் தமிழினத்தின் மத்தியில் உருவாகி இருக்கிறதா? (அதாவது இரவல் வாங்கிய முதலாளித்துவ சிந்தனை இருக்கிறது, ஆனால் நடைமுறை வளர்ச்சி இருக்கிறதா என்பதே இக் கேள்வியின் அர்த்தம்)
அப்படி ஒரு வளர்ச்சி அடைந்த உள்நாட்டுச் சந்தை இருந்தால் எதற்காக தனது சொந்தப் பலத்தில் நின்று போராடாமல் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் தயவை இலங்கை தமிழினம் எதிர்பார்த்து நிற்கிறது.
இலங்கை தமிழினத்தின் போராட்டம் எத்தகையது என்பதைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிவது இன்றியமையாதது.

முகநூலில் : Maniam Shanmugam
disclaimer

Don’t Look up : நாம் மேலே பார்ப்பதை தவிர்க்கிறோம் || ராஜசங்கீதன்

“அந்த இரண்டு மார்க்சிஸ்டுகள் உலகம் முழுவதும் சென்று உலகம் அழியப் போவதாக சொல்லிக் கொண்டிருப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது”என ஒரு வசனம் Don’t look up படத்தில் வருகிறது.
நாயகனும் நாயகியும் விஞ்ஞானிகள். ஒருநாள் நாயகி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறாள். வால் நட்சத்திரம்! புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் கொண்டாடுகின்றனர். நாயகன் வால் நட்சத்திரம் இருக்கும் தூரத்தைக் கணக்கிடுகிறான். வால் நட்சத்திரத்தின் தூரம் ஒவ்வொரு கணக்கிடலிலும் குறைந்து கொண்டே இருக்கிறது.
வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது! ஆறு மாதங்கள்தான் கெடு! நாம் அறிந்த வகையில் இருக்கும் உலகம் அழிந்துவிடும்!
இந்த மூன்று விஷயங்களை உலகுக்கு அறிவிக்க முயலும் இரு விஞ்ஞானிகளின் கதைதான் படம்.
படிக்க :
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
முதலில் அமெரிக்க ஜனாதிபதியிடம் பேச முயலுகிறார்கள். நடக்கவிருக்கும் தேர்தலை வால் நட்சத்திரம் பற்றிய செய்தி பாதிக்கும் என யோசிக்கிறார். தொலைக்காட்சியில் சொல்ல முயலுகிறார்கள். ‘இந்த வால் நட்சத்திரத்தை என் முன்னாள் மனைவியின் வீட்டு மேல் விழச் செய்ய முடியுமா?’ என சொல்லி விட்டு சிரிக்கிறார்.
இவை அன்றி, கூப்பிட்டால் ஜனாதிபதி பம்மி ஓடி நிற்கும் ஒரு முதலாளி, வால் நட்சத்திரத்தில் பல ட்ரில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்து மினரல்கள் இருப்பதாகச் சொல்கிறார். அவற்றை எப்படி எடுப்பது என்பதைப் பற்றி ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடக்கிறது.
சமூகதளங்கள் முழுக்க ‘க்ரெட்டா’வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன.
இறுதியில் என்னவாகிறது என்பது மிச்சக் கதை!
கதையில் வரும் வால் நட்சத்திரம், வால் நட்சத்திரம் அல்ல; நிகழ்ந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றமே என்பதை மேற்கண்ட கதையிலேயே ஒருவர் புரிந்துகொள்ள முடியும். காலநிலை மாற்றத்துக்கான எல்லாவித சாட்சிகளும் நேரடியாக நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே எப்படி insensible ஆக அரசும் ஆளும்வர்க்கமும் இருக்கின்றன என்பதையும் காலநிலை மாற்றத்தை மறுக்கும் ஆளும் வர்க்க அடிவருடிகள் சமூக ஊடகங்களைக் கொண்டு எப்படி மக்களை முட்டாள்களாக்குகின்றனர் என்பதையும் முதலாளியம் ஏன் தீர்வாக முடியாது என்பதையும் அறிவியலில் முதலாளிக்கான அறிவியல், மக்களுக்கான அறிவியல் என இரு வகை இருப்பதையும் படம் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.
இத்தகையக் கதைக்குள்தான் இரு விஞ்ஞானிகளையும் பிடிக்காத ஒரு நபர் அவர்களை மார்க்சிஸ்டுகள் எனக் குறிப்பிடுகிறார்.
விஞ்ஞானம் பேசுபவர்கள் எப்படி மார்க்சிஸ்டுகளாக முடியும்? ஆக முடியும். விஞ்ஞானம் முதலாளிகளுக்கானதாகவும் மக்களுக்கானதாகவும் இரு வகையாக இருப்பதை புரிந்து, மக்களுக்கான விஞ்ஞானத்தை அரச எதிர்ப்பு, மக்களின் பொதுப்புத்தி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பேசுபவர்கள் மார்க்சிஸ்டுகள்தான்.
அறிவியலுக்குள் இருக்கும் லாபவெறி, வர்க்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் ஒற்றையாய் அறிவியலைப் புரிந்து கொண்டு கண்மூடித்தனமாக பேசுபவர்கள் அறிவியல் பூசாரி கணக்கில்தான் வருவார்கள்.
காலநிலை மாற்றத்துக்கான தீர்வு அரசநிலை மாற்றமும் உற்பத்தி முறை மாற்றமும்தான் என்பதை முதலாளியமே ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு விஞ்ஞானம் அவர்களைத் தள்ளியிருக்கிறது. அதனால்தான் க்ரெட்டா உள்ளிட்டோர் ‘The system has to be changed’ என மார்க்சிய மொழியில் பேசுகிறார். உலகளாவிய இடதுசாரிகள் ‘System change, not climate change’ என அரசநிலை மாற்றத்தை பிரசாரம் செய்கின்றனர்.
மானுடத்தை அழிவிலிருந்து காக்க இயற்கையே முன் வைக்கும் தீர்வு, மார்க்சியம்தான். அதனால்தான் உலகமெங்கும் சூழலியலாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சமூக ஊடகப் பதர்களைக் கொண்டு Cancel செய்யப்படுகிறார்கள். அரசுகள் காலநிலை மாற்றத்துக்கான தீர்வை முதலாளியத்துக்குள்ளேயே தேடுகின்றன.
பாசாங்கையோ வழக்கமான அரசியல் உத்திகளையே கதைக்குதவாத வாதங்களையோ முன்னெடுக்கும் காலத்தை தாண்டிவிட்டோம் என்கிறோம். ஆனால் கேட்பாரில்லை.
உண்மை என்னவோ பூமியை அழிக்க வந்த வால் நட்சத்திரம் போல் தெள்ளத்தெளிவாக வானில் தெரிகிறது. நாம்தான் மேலே பார்ப்பதைத் தவிர்க்கிறோம். படத்தைப் பார்த்துவிடுங்கள்!

முகநூலில் : Rajasangeethan
disclaimer

மாரிதாசுக்கு முந்தைய ‘கருத்துரிமைக்’ கழிசடைகள் !

மாரிதாஸுக்கு கருத்துரிமை கிடையாதா?
2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதியன்று கோத்ரா இரயில் எரிப்பு நடந்தது. எந்த விசாரணையும் துவக்கப்படுவதற்கு முன்னர், அடுத்த நாளே குஜராத்தின் மிகப்பெரிய பத்திரிகைகளான சந்தேஷ் மற்றும் குஜராத் சமாச்சார் ஆகியவற்றில், மிகக்கொடூரமான வெறுப்புச் செய்திகள் பக்கம் பக்கமாக வெளியிடப்பட்டன. அதிலும் சந்தேஷில் “ஐம்பது இந்துக்கள் எரித்துக் கொலை” என்று முழுக்க முழுக்க படங்கள் அச்சிடப்பட்டு வெளியாகின. அந்த பத்திரிகையை பல்லாயிரக்கணக்கில் ஜெராக்ஸ் எடுத்து, வி.ஹெச்.பி.-யினர் தெருத்தெருவாக விநியோகித்து மிகப்பெரிய வெறுப்புப் பிரச்சாரத்தைத் துவங்கினர்.
அதுமட்டுமில்லாமல் மற்றொரு கட்டுரையில், “கோத்ரா இரயில் எரிப்பில் மீட்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் உடல்களை ஆய்வுசெய்ததில், அவர்கள் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களது மார்பகங்கள் அறுத்து எறியப்பட்டிருக்கின்றன. அவர்கள் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று சந்தேஷில் வெளியாகி இருந்தது.
படிக்க :
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
மார்ச் 1-ம் தேதியன்று சந்தேஷில் வெளியான மற்றொரு கட்டுரையில், “இஸ்லாம் ஆபத்தில் இருக்கிறது. மசூதியில் இருந்து அனைவரையும் உடனடியாக கோத்ரா இரயில் நிலையத்திற்கு அழைத்து வாருங்கள். இஸ்லாமுக்கு எதிரானவர்களை கொன்று தீர்ப்போம்” என்று முஸ்லிம்கள் சொல்லியதாக எழுதப்பட்டிருந்தது.
மார்ச் 1-ம் தேதியில் வெளியான ஒரு கட்டுரையில், “சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா இரயில் நிலையத்திற்கு வரும்போது, அதற்காகவே 7000 – 8000 முஸ்லிம்கள் அந்த இரயில் நிலைய ப்ளாட்பாரமில் காத்துக்கொண்டிருந்தனர்” என்று எழுதப்பட்டது.
அதே மார்ச் 1-ம் தேதியன்று வெளியான இன்னொரு கட்டுரையில், “உத்தரப் பிரதேசத்தில் இருந்து குஜராத்துக்கு இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் தான் குஜராத்தின் பல இடங்களில் மினி பாகிஸ்தானை உருவாக்குகிறார்கள். அதனால் போலீசுத்துறை அவர்களை ‘கவனிக்க’ வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.
கோப்புப்படம் : குஜராத்தின் மிகப்பெரிய பத்திரிகைகளான குஜராத் சமாச்சார் மற்றும் சந்தேஷ்
மார்ச் 6-ம் தேதியன்று, “சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலின் ஒரு பெட்டியை எரிப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்த இரயிலையே எரிக்கத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இன்னொரு தாக்குதலை நடத்தவும் அந்த கும்பல் தயாராக இருந்தது” என்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது.
மார்ச் 7-ம் தேதியன்று, “ஹஜ்ஜு-க்கு சென்று வரும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாத்தான் திரும்பி வருகிறார்கள். அவர்களால்தான் இந்துக்களுக்கு ஆபத்து” என்று ஒரு கட்டுரை சந்தேஷில் வெளியானது.
அதே மார்ச் 7-ம் தேதியன்று, “கோத்ரா இரயில் எரிப்பைக் கொண்டாடி, கராச்சியில் ஒரு ஊருக்கு கோத்ரா என்றே பெயர் சூட்டியிருக்கிறது பாகிஸ்தான்” என்று இன்னொரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டது.
மார்ச் 8-ம் தேதியன்று, “இப்போது போய் முஸ்லிம்களெல்லாம் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிடுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று இன்னொரு கட்டுரை வெளியானது.
மார்ச் 16-ம் தேதியன்று, “ஃபத்தேகஞ்ச் மசூதியினால் கொளுத்தப்பட்ட நெருப்பு” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியானது.
மார்ச் 24-ம் தேதியன்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில், “சாத் கைவல் கோவிலையும், சர்சா கோவிலையும் இந்து பாடசாலைகளையும் ரிமோட் கன்ட்ரோல் மூலமாக வெடித்துச் சிதறடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்” என்று ஒரு முதல் பக்கத்திலேயே தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது.
மார்ச் 26-ம் தேதியன்று, “பிலாலின் ஒற்றை வார்த்தையைக் கேட்டு எந்தக் குற்றத்தையும் செய்யத் தயாராகாவே பல கிரிமினல் இளைஞர்கள் இருக்கின்றனர். அப்படித் திட்டமிட்டுத்தான் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலையே கொளுத்தியிருக்கிறார்கள்” என்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில் கட்டுரை வெளியானது.
முஸ்லிம்கள் மீது வெறுப்பைக் கக்கும் வகையிலான ஒரு வீடியோ சிடி தயாரிக்கப்பட்டு, தெருத்தெருவாக விநியோகிக்கப்பட்டது.
இப்படியான “கருத்துகள்” பரப்பப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், குஜராத் கலவரம் கொழுந்துவிட்டு எரிந்தது.
எந்தவொரு கருத்தையும் எவரும் சொல்வதற்கு உரிமை இருக்கிறது என்கிற நட்டநடுவாதிகளின் வாதப்படி பார்த்தால், மேலே சொன்னவை அனைத்துமே கருத்துகள்தான். இக்கருத்தை சொல்லியதன் மூலம் எவரொருவரையும் அவர்கள் தாக்கவில்லைதான். ஆனால், ஒட்டுமொத்த குஜராத் மக்களின் மனதிலும் ஆழமான முஸ்லிம் வெறுப்பினை விதைத்தன. கையில் கிடைக்கிற எதனையும் எடுத்து, முஸ்லிம்களை எங்கு பார்த்தாலும் தாக்குவதையும் கொல்வதையும் ஊக்கப்படுத்தியது இத்தகைய “கருத்துகள்”.
படிக்க :
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி !
12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி : பதறிய சி.பி.எஸ்.இ
தமிழகத்தில் மாரிதாஸ் என்பவன் யூட்யூப் வழியாக பரப்பிக் கொண்டிருக்கிற “கருத்துகள்” அனைத்தும், மேலே நான் குறிப்பிட்டிருக்கிற கருத்துகளுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல. பொய்களையும், வதந்திகளையும் வெறுப்புணர்வைத் தூண்டு வகையில் பரப்பிக்கொண்டிருக்கிற மாரிதாஸ் பேசுவதையெல்லாம் கருத்து என்றோ, அவனுக்கு அதற்கெல்லாம் “உரிமை” இருக்கிறது என்றோ சொல்பவர்களை மனிதர்கள் என்கிற வகையிலேயே சேர்க்கமுடியாது.
கருத்து சுதந்திரம் மிகமிக அவசியம்தான். ஆனால் மாரிதாஸ் பேசுவதெல்லாம் “கருத்து” என்கிற வகையிலேயே வராது. இந்த சமூகத்தை அழிப்பதற்காக காற்றில் கலக்கப்படுகிற விசம் என்றுதான் அதனைச் சொல்லவேண்டும்.

முகநூலில் : Chinthan EP

disclaimer

COP26 பருவநிலை மாநாடு : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!

கிளாஸ்கோ பருவநிலை மாநாடு (COP26) :
முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!
‘‘புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிருமுறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் நிகழும்’’ – என எச்சரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுக் குழுவின் (IPCC) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை வெளியானது. இவ்வறிக்கையும் பருவநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக நடந்துவரும் பேரிடர்களும் இப்புவிக்கோளத்தைப் பற்றிய அச்சத்தோடு கூடிய அக்கறையுணர்வை மக்கள் மனதில் தூவியுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜுலை மாதங்களிலும்கூட பருவநிலை மாற்றத்தின் கோரமான, மிகச் சமீபத்திய விளைவுகளை உலக நாடுகள் சந்தித்திருக்கின்றன. மேற்கு கனடா மற்றும் வடமேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதியை கொடூரமான வெப்ப அலைகள் தாக்கின. ஒரு மதிப்பீட்டின்படி, இதனால் பாதிக்கப்பட்டு சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். ஜெர்மனியில் இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டித் தீர்த்தது. சீனாவின் ஹுனான் பகுதியில் அம்மாகாணத்தின் ஓராண்டு சராசரி மழை அளவு வெறும் நான்கு நாட்களில் பெய்து வெள்ளக்காடாக்கியது. தெற்கு ஐரோப்பா பெரும் காட்டுத்தீயுடன் போராடியது. கிரீன்லாந்தில் முதல் முறையாக பனிப்பொழிவுக்கு மாறாக மழை பெய்தது. இந்தியாவிலும் கேரளா, உத்தரகாண்ட், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
படிக்க :
பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !
ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
இந்நிலையில்தான், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கான 26-வது ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாடு (COP26) உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழலியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் புவியின் மீது அக்கறையுள்ள இளம் தலைமுறையினரால் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கப்பட்டது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரை இரண்டு வாரங்களுக்கு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று முடிந்த இம்மாநாட்டில் 200 நாடுகளில் இருந்து 30,000 பிரதிநிதிகள், 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
‘சூழலியல் அக்கறை’, முதலாளித்துவ அரசுகளுக்கு முதல்முறை வருவதல்ல!
COP26 மாநாடு, 1994-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ‘காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு உடன்படிக்கை’-இன் (UNFCCC) கீழ் நடைபெறும் ஒரு வருடாந்திர மாநாடு ஆகும். நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் உருவாகக்கூடிய புவி வெப்பமயமாதலுக்கு காரணமான, பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை (கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ்-ஆக்சைடு உள்ளிட்டவை) இந்த நூற்றாண்டின் பாதிக்குள் உலகளாவிய அளவில் நிகர பூஜ்ஜியத்திற்கு கொண்டுவருதல்; அதன் மூலம் உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துதல்; பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கவும், உமிழ்வுகளை குறைப்பதற்கும் ஏழை நாடுகளுக்கு, பணக்கார – வளர்ந்த நாடுகள் ஒவ்வொரு ஆண்டிற்கும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க வேண்டும் என்ற 2009-ம் ஆண்டு உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட குறிக்கோள்களோடு இம்மாநாடு நடைபெற்றது.
இந்த ‘குறிக்கோள்கள்’ ஒன்றும் புதியவையுமல்ல. இவற்றை அடைவதற்காக நடத்துவதாகச் சொல்லப்படும் இதுபோன்ற மாநாடுகளும் புதியவையல்ல. இது ஐ.நா.வின் 26-ஆவது மாநாடாகும் (COP26). வரன்முறையற்ற கனிமவளச் சுரண்டல், காடுகள் அழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு, சுற்றுசூழலை நாசம் செய்யும் நாசகர தொழிற்சாலைகள், அவை வெளியேற்றும் கழிவுகள் என பருவநிலை மாற்றத்திற்கு மூலக்காரணமே சூழலியலைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளத் தயாரில்லாத ஏகாதிபத்திய முதலாளித்துவ உற்பத்திமுறையும் இலாபவெறியும்தான்.
முதலாளிகளின் நலனைக் கட்டிக் காக்கும் அரசுகளின் பிரதிநிதிகளோ தாங்கள் சூழலியல் சிதைவைப் பற்றி பெரிதும் ‘கவலைப்படுவதாகவும்’ அதனை சரிசெய்வதற்காக ‘பெருமுயற்சியெடுத்து’ வருவதாகவும் ஒவ்வொரு முறையும் உலக மக்களை ஏய்ப்பதற்காக இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதும், அதில் கூடிப் பேசி கலைவதும் வழக்கம். இதுவரை போடப்பட்ட உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட இலட்சணத்தைப் பற்றி பரிசீலித்தாலே இதைப் புரிந்துகொள்ள முடியும்.
1997-ல் முதன்முதலாக, கியோட்டோ உடன்படிக்கை (Kyoto Protocol) போடப்பட்டது. இந்த உடன்படிக்கை, ‘‘தொழில்துறையில் வளர்ந்த‌ ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 37 நாடுகளே வரலாற்றுரீதியாக புவி வெப்பமயமாதலுக்கு காரணம். எனவே அவை உடனடியாக பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும்’’ என்று கூறியது. பெரும்பாலான நாடுகள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தன. ஆனால், அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நாடான அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டதால் ஓராண்டில் இவ்வொப்பந்தம் தன்னியல்பாக காற்றில் கரைந்தது.
அதன்பிறகு, 2015-ல் போடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 192 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமானது, ‘‘பூமியின் வெப்ப அதிகரிப்பை 2 டிகிரிக்குள் வைத்திருக்க பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும்; பருவநிலை மாற்றத்திற்கான நிதியாக ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்களை வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும்’’ என்று கூறியது. இது இரண்டுமே தற்போது நடைபெற்ற COP26 மாநாடுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், தற்போது நடந்துள்ள COP26 மாநாட்டின் முடிவுகளையும் உள்ளபடியே இவர்கள் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடத்தான் போகிறார்கள் என்பதற்கு இவர்களது கடந்தகால மாநாடுகளே சான்று. எனினும் தற்போது மாநாடு நடந்த விதம் அதில் தலைவர்கள் ஆற்றிய உரை, நிறைவேற்றிய தீர்மானங்கள் ஆகியவற்றிலிருந்தும் இந்த மாநாட்டு முடிவுகள் எவ்வாறு வெறும் பகட்டு ஆரவாரங்களாக உள்ளன என்பதைப் பார்ப்போம்.
ஒப்பந்தங்களல்ல.. கழிப்பறை காகிதங்கள்!
இந்த மாநாட்டில் 2030-க்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கனடா, பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தோனேசியா என 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையொப்பமிட்டுள்ளனர். இந்தோனேசிய அரசு அதிகாரிகள் இதில் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்தோனேசிய அமைச்சர் சிடி நுர்பயா பாகர், ‘‘எங்களால் செய்யமுடியாததை அதிகாரிகளால் உறுதியளிக்க முடியாது. இந்தோனிசியாவிற்கு ‘வளர்ச்சி’தான் பிரதானமானது’’ என போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக பகிரங்கமாகவே பேசியுள்ளார்.
உலகத்தின் நுரையீரலான அமேசான் காடுகளை அதே ‘வளர்ச்சிப் பணிகளுக்காக’ அழித்து வரும் பிரேசிலும் 2030-க்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரேசிலின் முன்னாள் அதிபர் பொல்சனாரோ ஆட்சியில், கடந்த ஆண்டில் மட்டும் இலண்டன் நகரை விட ஏழு மடங்கு பெரிய அமேசான் மழைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியும், தற்போதுள்ள அரசும் சுற்றுச்சூழலைக் காப்பதற்கான எந்த அக்கறை கொள்ளவில்லை என்பதும், இத்தீர்மானங்கள் – ஒப்பந்தங்கள் நடைமுறைக்குப் போவதன் மீது நமக்கு கேள்வியை எழுப்புகின்றன.
ஏற்கெனவே 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில், இதே போல் 2030-க்குள் காடழிப்பை நிறுத்த ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதன் பிறகு காடழிப்பு விகிதம் 41 சதவிதம் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டிற்குள்ளான பத்து ஆண்டுகளில், சராசரியாக ஆண்டொன்றுக்கு 1.5 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன. ஆனால் 2015-லிருந்து 2020 வரையான ஐந்தாண்டுகளில் – அதாவது பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு – சுமார் 1 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை முதலாளித்துவ நாடுகள் வெறும் கழிப்பறைக் காகிதமாகத்தான் கருதுகிறார்கள் என்பதற்கு இவையே சான்று.
000
கிளாஸ்கோவில் 120 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட COP26 பருவநிலை மாநாடு.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளே, வாக்குறுதி கொடுக்கத் தயங்கி தங்களது இலக்குகளைத் தெளிவாக முன்வைக்காமல் இருந்தபோது, நமது ‘56 இன்ஞ்’ மோடி அரசோ, தைரியமாக ஒரு திட்டத்தை முன்வைத்திருப்பது உலகநாடுகளால் பாராட்டப்பட்டிருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டன. அத்திட்டத்திற்குப் ‘பஞ்சாமிர்தம்’ (ஐந்து அம்ச திட்டம்) என பெயர்சூட்டியது இந்திய அரசு. ‘‘2070-ம் ஆண்டு இந்தியா பூஜ்ஜிய உமிழ்வை அடையும்; 2030-ம் ஆண்டிற்குள் தனது ஆற்றலின் 50 சதவிதத்தை புதுப்பிக்கத்தக்க வளத்திலிருந்து பெறும், புதைபடிவ பொருள் அல்லாத எரிசக்தியின் திறனை 500 ஜிகா வாட்டாக அதிகரிப்போம்; 2030-ம் ஆண்டு முடிவுக்குள் ஒரு பில்லியன் டன் அளவுக்கு  கரியமிலவாயு உமிழ்வைக் குறைப்போம்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2005-உடன் ஒப்பிடும்போது கார்பன் தீவிரத்தை 45% குறைப்போம்’’ – என ஐந்து வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்.
இந்தியாவின் தற்போதைய மின் உற்பத்தித் திறன் 388 ஜிகா வாட்டாகத்தான் உள்ளது. ஆனால், மோடியோ 2030-ம் ஆண்டிற்குள் புதிப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து  மட்டும் 500 ஜிகா வாட் திறனை பெறப்போவதாக கூறியுள்ளார். இக்காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த ஆற்றலில் 50 சதவிகிதம் புதைபடிம எரிபொருளல்லாத மின் உற்பத்தியின் மூலம் சாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அப்படியானால், 2030−ஆம் ஆண்டுக்குள் 1000 ஜிகா வாட்-டுக்கும் அதிகமான மின்னுற்பத்தி செய்தால் மட்டுமே அது சாத்தியம். எனில், அடுத்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மின் தேவை கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகரித்துவிடுமா என்ன?
அது சரி, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கம் இருந்தால் தானே இதைப்பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும். மோடியின் வரலாற்றிலேயே அந்தப் பழக்கம் கிடையாதே. ஆக, இதுவும் ‘5 டிரில்லியன் பொருளாதாரம்’ கட்டியெழுப்பப்பட்ட கதைதான்.
சூழல் அழிப்பு குற்றவாளிகளுடன், சூழலியல் ‘நீதி விசாரணை’
ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட மாநாட்டின் பங்கேற்பாளர்களின் பட்டியலை ஆய்வு செய்த போது , COP26-ல் எந்தவொரு தனி நாட்டையும் விட புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் பங்கெடுத்தது தெரியவந்ததுள்ளது. உலக அளவில் 71 சதவீத பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கு, வெறும் 100 உலகளாவிய நிறுவனங்கள் தான் காரணமாகின்றன. யார் இந்த சுற்றுசூழல் சீர்குலைவுக்கு முக்கியமான காரண கர்த்தாக்களோ அவர்களோடு ஆலோசனை நடத்தித்தான் ‘பூமியை பாதுகாப்பது’ பற்றி திட்டம் வகுத்திருக்கிறார்கள்.
இந்த மாநாட்டின் இறுதியில் இந்தியா, சீனா உள்ளிட்டு அதீத நிலக்கரி பயன்பாட்டாளர்களின் அழுத்தத்தால், மாநாட்டின் வரைவறிக்கையில் நிலக்கரி பயன்பாட்டை ‘‘படிப்படியாக நிறுத்த வேண்டும்’’ என்ற சொல்லுக்கு பதிலாக  ‘‘படிப்படியாக குறைக்க வேண்டும்’’ என்று மாற்றப்பட்டதை முதலாளித்துவ ஊடகங்களே கடுமையாக விமர்சித்தன. மொத்தத்தில், இம்மாநாடு ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளால் நடத்தப்பட்ட ஒரு கபட நாடகமே என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளே!
கண்துடைப்புக்கான வாய்ச் சவடால் இலக்குகள்
புதைபடிம எரிசக்தியைத் தவிர்த்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம் புவி வெப்பமயமாதல், காலநிலை மாறுபாட்டைத் தவிர்ப்பதற்காக, நிர்ணயிக்கப்பட்ட ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’ (NDC-Nationally determined contributions) COP26-இன் குறிக்கோளாகச் சொல்லப்பட்ட 1.5 டிகிரி வெப்பநிலையில் புவியை பராமரிப்பது என்ற திட்டத்திற்கு போதுமானதாக இல்லை என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’-ஐ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாதித்து மாற்றியமைக்கும் வழக்கம் இருந்துவந்தது. இந்த மாநாட்டில்  ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’ புதியதாக தீர்மானிக்கப்பட்டன. ஆனால் அந்தந்த நாடுகள் தமது பங்களிப்பை  முழுமையாக நிறைவேற்றினாலும் கூட 2.4 டிகிரிக்கு மேலாக வெப்பநிலை உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த 2.4 டிகிரி வெப்பநிலை உயர்வினால் உலகில் பேரழிவுகள் நிகழக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. உலகின் வெப்பநிலை வெறும் 2 டிகிரி உயர்ந்தாலே ஒரு பில்லியன் மக்கள் கடுமையான வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்.
இதன் காரணமாக, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையே NDC-க்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்ற வழமையான முறையை மாற்றி 2022-ல் 27-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் இதனை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.
புவியைக் காக்க, முதலாளித்துவத்தின் கழுத்தை நெறி!
COP26 மாநாட்டை எதிர்த்து கிளாஸ்கோவில் மக்கள் பேரணியாக செல்கிறார்கள்.
COP26 மாநாடு ஒரு ஏமாற்று நாடகம் என்று உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் களச் செயல்பாட்டாளர்கள் மாநாடு துவங்கும் முன்னரே கூறிவந்தனர். இத்தகைய மாநாடுகளில் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்கள் கழிவறைக் காகிதமாகவே அனைத்து நாடுகளின் அரசுகளால் கையாளப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டியே இவ்வாறு கூறுகின்றனர். முதலாளித்துவ நாடுகள் தங்கள் இலாப வெறியையே முதன்மையாகக் கருதி சூழலியலின் மேல் அக்கறை காட்டுவதில்லை என்பதையும் அவர்களின் நோக்கமெல்லாம் தங்களது முதலாளிகளின் இலாபத்தை உறுதிப்படுத்துவது மட்டும்தான் என்பதை அவர்கள் புரிந்துவைத்துள்ளார்கள்.
உலகின் பலநாடுகளையும் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் என ஒரு இலட்சம் பேர் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டை அம்பலப்படுத்தி அந்நகரின் வீதிகளில் திரண்டு மிகப்பெரிய பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள், வகுப்புத் தோழர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வீதிகளில் இறங்கினர். தங்களது கண்டனக் கூட்டத்தில் COP26 மாநாட்டில் கூடியிருந்த அரசு பிரதிநிதிகள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட பருவநிலை மாற்ற செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் COP26 மாநாடு ஒரு “தோல்வி”, ‘‘தலைவர்கள் எதுவும் செய்யவில்லை, அவர்கள் தீவிரமாக ஓட்டைகளை உருவாக்கி, தங்களுக்கு நன்மை பயக்கும் கட்டமைப்புகளை வடிவமைத்து வருகின்றனர். மேலும் இந்த அழிவுகரமான அமைப்பில் இருந்து தொடர்ந்து இலாபம் ஈட்டுகின்றனர்’’ என்று சாடினார். ‘‘எங்களுக்கு ‘2030க்குள்.. 2070க்குள்’ போன்ற வாக்குறுதிகள் தேவையில்லை.. நாங்கள் இப்போதே, இன்றே மாற்றத்தை எதிர்ப்பார்கிறோம்’’ என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் முழங்கினர்.
புவிப் பரப்பே நிலைத்திருக்குமா? என்று மனிதகுலமே கவலையோடு பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், புதை படிம எரிபொருளிலிருந்து திடீரென புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம் ஏற்படக்கூடிய மிகப்பெரிய நட்டத்தை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயாராக இல்லை. முதலாளிகளின் நலனைக் காக்கவே உருவாக்கப்பட்டுள்ள இந்த முதலாளித்துவ அரசுகள், முதலாளிகளுக்கு எப்படி அழுத்தம் கொடுப்பார்கள்?
படிக்க :
முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !
ஆகவே, இதுபோன்ற மிகப் பிரம்மாண்டமான சர்வதேச மாநாடுகள் நடத்துவதும் அதில் வெற்று ஒப்பந்தங்களையும், பொய் வாக்குறுதிகளையும் கொடுப்பதெல்லாம், சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் கொதித்தெழும் மக்களின் எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் முதலாளித்துவ அரசுகள் நடத்தும் நாடகமே.
இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அடித்தளமே இலாப வெறியாக இருக்கும்போது, பசுமைக்குடில் வாயுக்களைக் குறைப்பது, கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது போன்ற தமது இலாபத்தைப் பாதிக்கும் எவ்வித முயற்சிகளையும் முதலாளிகள் நடைமுறைப்படுத்தப் போவதில்லை. வேதாந்தா என்ற ஒரு கார்ப்பரேட்டின், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சுற்றுச் சூழல் மாசுபாட்டை தடுத்து நிறுத்தவே 15 பேர் படுகொலையையும், பலநூறு பேர் மீதான வழக்கையும் கடந்துதான் சாதிக்க முடிந்திருக்கிறது. எனில் இந்தப் புவியின் மீதான ஒட்டுமொத்த கார்ப்பரேட் கும்பலின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த, எவ்வளவு வீச்சான மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு எதிரான சூழலியல் போராட்டங்கள் முன்னேறி வளர்ந்துவருவதை நாம் ஆதரிக்கும் அதேவேளையில், முதலாளிகளின் இலாபவெறியே போட்டி போட்டுக் கொண்டு சுற்றுச் சூழலை சீரழித்து வருகிறது என்பதை உணரவேண்டும். முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பைத் தகர்த்தெறிய, உழைக்கும் மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலான சமூகக் கட்டமைப்பை − சோசலிசத்தை − மாற்றாக முன்வைக்கும் அரசியல் முழக்கத்தின் கீழ் அணிதிரள வேண்டும். அதுதான் சுற்றுச்சூழல் பேரழிவில் இருந்து இந்த உலகைக் காப்பதற்கான ஒரே வழி!

மதி

ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு : மோடியின் பாசிச நடவடிக்கை | தோழர் சுரேசு சக்தி

மோடி அரசு நாடாளுமன்றத்தில் எந்தவித விதாதங்களும் இன்றி, எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021-ஐ நிறைவேற்றியுள்ளது.
இது நாட்டின் உழைக்கும் மக்களின் ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து தகவல்களையும் சேகரிக்கும் ஓர் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை பறித்து தான் வெற்றி பெறுவதற்கான அடைப்படையை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஓர் அங்கம்தான் இந்த சட்டம்.
தேர்தல் கமிசனுக்கு தெரிந்த வாக்காளர்களின் தனி உரிமை விவரங்கள் தற்போது ஆளும் வர்க்கத்தின் கார்ப்பரேட் முதலாளிகளின் அனைவருக்கும் கிடக்கபெறும் தகவல்களாக மாறும். ஓர் தனி மனிதனின் அனைத்து உள் விவகாரங்கள் வெளிப்படையாகவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பாசிச மோடி அரசுக்கும் தெரிய வழிவகை செய்து கொடுக்கும் சட்டம்தான் இது.
பாசிசம் அரங்கேறுவதற்கு முன் ஹிட்லர், தான் ஒடுக்க நினைக்கும் மக்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்தான். அதன்பின் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதேபோல் தற்போது மோடி அரசு தன் இந்துராஷ்டிர கனவிற்கான பாசிச செயல்திட்டத்திற்கும், கார்ப்பரேட் சேவைக்கும் மக்களை கண்காணிக்கவே இந்த திட்டத்தை பயன்படுத்த முனைகிறது.
எனவே உழைக்கும் மக்கள் அனைவரும் பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக ஒன்றினைந்து போராடவேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த சட்டத்தின் அபாயங்களை விரிவாக இந்த காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள் !!