Wednesday, July 1, 2026
முகப்பு பதிவு பக்கம் 299

நூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)

கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் – காலந்தோறும் மனிதர்கள் நன்றியுடன் நினைவு கூரவும், மனவலிமை பெறவும் பயன்படும் பெயர்கள். கம்யூனிசம் என்பதைப் “பேயாகப்” பார்த்து முதலாளிகளும் ஆளும் வகுப்பும் 170 ஆண்டுகளுக்கு முன் நடுங்கினர் என கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ளது. உண்மையில் இன்றளவும் கம்யூனிசத்தைப் “பேயாகவே” பார்க்கிறது ஆளும் வகுப்பு.

இருவரும் எதனால் ஆளும் வகுப்பிற்குப் ‘பேயாக” மாறிப்போனார்கள் என்பதே கம்யூனிஸ்ட் அறிக்கையின் பேசு பொருள். 170 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களது அறிவுணர்ச்சி மூலம் உருவாகி, எதிர் வரும் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டிய அறிக்கையை, உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் பல்வேறு வடிவங்களில், பல்வேறு விளக்கவுரைகளுடன், அச்சிட்டுப் பரப்பிக் கொண்டாடுகின்றனர்.

தமிழில் சோவியத் வெளியீடாக, சில பத்து பைசாக்களுக்கு விற்கப்பட்ட ரா.கிருஷ்ணய்யாவின் மொழிபெயர்ப்பு பெரும்பாலானவர்களைச் சென்றடைந்துள்ளது.

… அறிக்கையின் உள்ளடக்கம் தாண்டி, அதன் இன்றைய பொருத்தப்பாடு குறித்த, அதாவது அறிக்கையில் இருக்கும் கருத்துகள் செயல் வடிவில் நம் கண்முன் உள்ளதைப் பற்றிய புரிதலை தமிழ்ச் சமூகத்திற்கு தரவேண்டியதன் முயற்சியே இந்த மொழியாக்கம். வழக்கம் போல் உள்ள மொழிபெயர்ப்பு முறைகளிலிருந்து மாறுபட்டு, சொல்லுக்குச் சொல் விளக்கம் என்ற முறையைத் தவிர்த்து, சொற்களுக்குப் பொருள் தரவேண்டி சிறு/குறு வாக்கியங்களைப் பயன்படுத்துவது என்னும் முறையும், வாக்கியத்தின் கருத்தை உள்ளடக்கிய, இயைந்த சில வாக்கியங்களை அமைத்து அதன் பொருளை விளக்கும் முறையும் இந்த மொழியாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எதற்காக இத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதற்கான விளக்கம் ஒன்றே ஒன்றுதான். அறிக்கையின் பொருத்தப்பாடு பற்றிப் பேசுபவர்கள் பாட்டாளி, மூளை உழைப்பாளி என அனைத்து மட்டங்களிலும் உருவாகவேண்டும். அதுவே செயலாற்ற வேண்டிய சமூகத்திற்கான தொடக்கநிலைப் பாடம். தன்னளவில் கருத்தைத் தெளிவுபடுத்தக் கூடிய சொற்களும், வாக்கியங்களும் பயன்படுத்தப்பட்டுள்ள இம்முறை, மார்க்சியத்தை கொண்டு சேர்க்கப்பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.

… மார்க்ஸ் எங்கெல்ஸ் – மார்க்சியம் பற்றிய எவ்வித அறிமுகமுமின்றி நூலினுள் நுழைபவர் கூட, அதைப்பற்றிய ஒரு பருண்மையான புரிதல்களுடன் வெளிவரும் வகையில் இந்நூலை பில் கஸ்பர் வடிவமைத்துள்ளார்.

அறிக்கையின் உள்ளடக்கத்தில், மூலதனம் அதன் வளர்ச்சிப் போக்கில் அடையும் பல்வேறு நிலைகளைப் பற்றியும், அதன் அடிப்படையில் மாறும் சமூகத்தைப் பற்றியும் விளக்குவதன் மூலம் கம்யூனிஸ்ட் அறிக்கை, உலகப் பொதுமறையாகிவிட்டது எனக் கூறலாம். குறிப்பாக 1990 – கள் முதல், உலகம் தழுவிய மூலதனப் பாய்ச்சலை, உலகமயமாக்கல் எனும் நிகழ்வை , அதை ஒட்டி நமது சமூகத்தில் நடந்த மாற்றங்களை, வார்த்தைக்கு வார்த்தை, வாக்கியத்திற்கு வாக்கியம் தொடர்புபடுத்தி படிக்கும் போதுதான் அதன் முழு வீச்சும் நமக்குப் பிடிபடும்.

உயர் தொழில்நுட்ப இயந்திரங்களின் பயன்பாட்டையும், அதன் பிறகு தொழிலாளி வகுப்பு தன் ‘மதிப்பை’ எவ்வாறு பறிகொடுக்கும் என்பதையும் திரைப்படம் போலக் காட்சிப் படுத்துகிறார்கள் மார்க்சும் எங்கெல்சும். தொடர்ந்து விரிவடைந்து செல்லும் மூலதனத்தின் எல்லைகளைக் குறிபார்த்துச் சொல்லும் அறிக்கை அத்துடன் நில்லாது, மாற்றங்களை எதிர்கொள்ளும் சமூகத்தில் ஒவ்வொரு வகுப்பினரது நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகளைத் தெளிவாக விரித்துரை செய்கிறது. வரலாற்றுக் கடமையாக பாட்டாளிகளின் முன்னுள்ள எதிர்காலப் பணிகள் என்ன என்பதைப் பற்றியும் கூறுகிறது.

கடந்த கால வரலாற்றில் சமூக சமத்துவம் தொடர்பான, முன்னோடிகளாக இருந்த போக்குகளை ஆய்வு செய்து, மதிப்பீடுகளையும், எச்சரிக்கைகளையும் தருவதன் மூலம், கம்யூனிச சமூகம் படைக்கப்படும் பொழுது தேவைப்படும் முன்நிபந்தனைகள் மற்றும், முன்தயாரிப்புகளை மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் முன்னறிவிப்புகளாகத் தந்துள்ளனர்.

தங்களது அறிக்கையின் விளைவுகளைத் தங்கள் காலத்திலேயே கண்டு, உறுதி கொண்ட அவர்கள் மேலும் பல பத்தாண்டுகள் அக்கருத்தியலில் ஊன்றி நின்று பல்வேறு படைப்புகளின் மூலம் கம்யூனிசத்தைச் செழுமைப்படுத்தினார்கள்.

உலக அளவில் அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றிய தரவுகளை உள்ளடக்கிய கட்டுரைகள் ஏராளம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் அறிக்கையும், மூலதனம் நூலுமே அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ள நூல்களாக இன்றும் இருக்கின்றன.

படிக்க :
ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்

மனித சமூகக் கட்டமைப்பைப் பற்றி இயற்கையிலிருந்து பெறப்பட்ட அறிவிலிருந்தும், சமூக அமைப்பை இயக்கும் ஆற்றல்களைப் பற்றிய கள ஆய்வுகளிலிருந்தும், வரலாற்று நிலைகளில் காணப்பட்டத் தரவுகளின் அடிப்படையிலும் இருவராலும் எழுதப்பட்டதே கம்யூனிஸ்ட் அறிக்கை. மனித குலத்தின் மீதான பேரன்பும், கண்முன் எழுந்த கடமையும், இறுதிவரை தொடர்ந்த உழைப்பும் நிரம்பியுள்ள அவர்களது எழுத்துகள் அனைத்தும், ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாத தனித்தன்மையைக் கொண்டுள்ளன.

கம்யூனிஸ்ட் அறிக்கை, சமூக வளர்ச்சி நிலைகளின் பிறப்பு, நடப்பு , முடிவு என அனைத்தையும் காட்சிப்படுத்துவதற்காகவும்,மூலதனம் – அதன் நுட்பமான அறிவுச்செறிவிற்காகவும் மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்தில், இன்றைய காலகட்டத்தில், தமிழ் கூறும் நல்லுலகம் படித்துச் செயலாற்றிட வேண்டியே விடியலின் இந்த வெளியீடு. (முதல் நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)

.. மூலதனத்தைப் படித்து புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிமையானது இல்லை. இதைக் கருத்தில் கொண்டே டேவிட்ஸ்மித் எழுதிய, விளக்கப்படங்களுடன் கூடிய இந்நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நூலில் படங்களுடன் (பில் ஈவன்ஸ்), மூலதனத்தின் பிழிவை உயிர்ப்புடன் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எளிமையாகத் தருகிறார் டேவிட்ஸ்மித். மூலதனத்தின் இன்றைய பொருத்தப்பாட்டை விளக்கி கூடுதலாக ஒரு இணைப்பையும் தந்திருக்கிறார்.

உலகை இயக்கிக் கொண்டிருக்கும் ‘பரம்பொருளான’ மூலதனத்தைப் பற்றிய தொடக்கநிலைப் புரிதலுக்கு 18 தலைப்புகளின் வழியாக நம்மை கொண்டு செல்வதில் டேவிட் ஸ்மித் வெற்றி பெறுகிறார். மேலும் விரிவாக மார்க்சின் மூலதனத்தைப் படிப்பதற்கு தூண்டும் நூல் இது. தமிழ் வாசகர்கள் இதற்கு மேல் தோழர்கள் தியாகு மற்றும் ஜமதக்னி ஆகியோரின் மொழியாக்க நூல்களுக்கு செல்ல வேண்டும். (இரண்டாம் நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)

… உதாரணத்திற்கு ஒரு ரொட்டித் துண்டை எடுத்துக் கொள்வோம். மளிகைக் கடையில் உள்ளவரை அதன் பயன்பாடு செயலற்றதாகவே இருக்கும். அது தரமான உணவுப் பொருளாகவே இருந்தாலும் உண்ணப்படுவதற்கு முன் அதற்கான பரிவர்த்தனை மதிப்பை நிரூபிக்க வேண்டும். மக்கள் பசியிலே வாடினாலும் கூட அந்த ரொட்டித் துண்டை யாருமே வாங்கவில்லை என்றால் அது தானாகவே கெட்டு அழுகிவிடும்.

அனைத்து பண்டங்களுக்கும் இதே நிலைதான். விற்கப்படவில்லை என்றால் பயனில்லை. இதுதான் தனிச்சொத்தின் அடிப்படை. அப்படியே எடுத்து இலவசமாக வழங்கிவிடுவதற்காக எந்த ஒரு பண்டமும் உருவாக்கப்படுவதில்லை. (இரண்டாம் நூலிலிருந்து பக்.43)

.. மகிழ்ச்சி உள்ளிட்ட பல மனித உணர்வுகளை, ஹார்மோன்களை மூளையில் உருவாக்க இணையத்தையும் கைப்பேசியையும் நம் கையில் தந்துள்ள முதலாண்மை, மனிதர்களின் பல உணர்வுகளை அக்கருவிகளின் வழியே நிறைவுறச் செய்கிறது. இப்போது நிலவும் சமூக நிலை குறித்த அதிருப்தி, மாற்றம் விழையும் வேட்கை, நம்பிக்கைகளை வலுப்படுத்தும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் தரவுகளைத் தேடும் பண்பு போன்றவை முதற்கொண்டு, மனிதனின் அகம் சார்ந்த ஆசைகள், பிறழ்ச்சிகள் மற்றும் மதிப்பற்ற பண்பு நலன்கள் வரை அனைத்தையும் கற்றுக்கொள்வதும், பரப்புவதும் பெரும்பாலும் செயல்வடிவம் இன்றியே இணையம் வழி நடந்தேறி விடுகின்றன. இவ்வஞ்சனையின் பலிகடாக்களாக மக்கள் மாறிவரும் சூழலில் மார்க்சியக் கல்விக்கு அவர்களைத் தயாரிப்பது என்பது ஒரு சவாலாகவே உள்ளது. குரங்கு தன் குட்டிக்குப் பேன் பூச்சி பார்ப்பது போல், தமது இரண்டு கைகளையும் கைப்பேசிக்குத் தந்து விட்ட மனிதர்களிடம் மார்க்சைத் தவழவிட வைப்பதற்கு முதலில் எதைச் சொல்லி அவர்களுடைய கவனத்தை ஈர்க்க முடியும்? தங்களது உழைப்பை, வாழ்க்கையைத் திருடும் முதலாளியப் பொருளாதார சமூக அமைப்பையா? அதைக் காப்பாற்றும் அரசு ஒடுக்கு முறைகளையா? ஆனால் சூழலியல் சிக்கல்களை முதலாளியப் பொருள் உருவாக்கம் மற்றும் பரிமாற்ற முறையுடன் இணைத்து, நிலவும் நெருக்கடிகளின் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் போது, அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு இணையாகவும் சில இடங்களில் கூடுதலாகவும் சூழல் நெருக்கடிகள் பயணிப்பதைக் காண முடிகிறது. (மூன்றாம் நூலுக்கான பதிப்புரையிலிருந்து …)

மார்க்சியம் இன்றும் என்றும் (மூன்று நூல்கள்)

முதல் நூல் : காரல் மார்க்ஸ் பிரடெரிக் ஏஞ்செல்ஸ் – கம்யூனிஸ்ட் அறிக்கை
தொகுப்பும் விளக்கமும் : பில் கஸ்பர்

தமிழில் : கே.சுப்பிரமணியன்

இரண்டாம் நூல் : காரல் மார்க்ஸ் மூலதனம்
சித்திரவடிவில் : டேவிட் ஸ்மித்

தமிழில் : ச.பிரபுதமிழன், சி.ஆரோக்கியசாமி

மூன்றாம் நூல் : மாந்தர் கையில் பூவுலகு
ஆசிரியர் : பரிதி

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3-வது தெரு,
உப்பிலிபாளையம் – அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641 015.
தொலைபேசி எண் : 0422 – 2576772 | 94434 68758
மின்னஞ்சல் : vidiyal@vidiyalpathippagam.org

பக்கங்கள்: 968
விலை: ரூ 600.00

சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கின்றன …

கடை எண் : 182, 183

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் :
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க : commonfolksperiyar books

வேண்டாமே ஆப்பிரிக்க கெளுத்தி மீன் !

வேண்டாமே ஆப்பிரிக்க கெளுத்தி மீன் !

மிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இந்த வகை மீன்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. ஆனால் இவை இந்தியாவில் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்டு விட்டன. ஏன் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தடை செய்யப்பட்டன?

ஆப்பிரிக்க கெளுத்தி மீனின் விலங்கியல் பெயர் ” Clarias gariepinus ” ஆகும்

இந்த வகை மீன்கள் “ஏலியன்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
இவை உள்ளூர் நீர் நிலைகளில் கலந்து நதிகள், குளம் குட்டைகளில் வியாபித்து தற்போது நமது மாநிலத்தில் இருக்கும் உள்ளூர் மீன் வகைகளை கொன்றொழித்து விடுகின்றன.

இந்த வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள், தான் வாழ பிற மீன்களை கொன்று திண்ணும் தன்மை கொண்டவை. மேலும் மீன்கள் கிடைக்காவிட்டால் பாசி போன்ற நீர்நிலைகளில் இருக்கும் தாவரங்களை உண்டும் பிழைக்கும் எனவே இவை carnivorous மற்றும் omnivorous ஆக மாறும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

பல நேரங்களில் தன் இனத்தையே வேட்டையாடி உண்ணும் ‘நரபலி’ உண்ணும் முறையையும் கடைபிடிக்கின்றன (cannibalism). இது போன்று தான் வாழ பிற மீன்களையும் தன் இன மீன்களையும் கொல்லும் மீன்கள் நமது நீர்நிலைகளில் இல்லை.

அடுத்து, இவ்வகை கெளுத்தி மீன் ஒரு சீசனுக்கு நான்கு லட்சம் முட்டைகள் போடும். ஆனால், நம் நீர்நிலைகளில் உள்ள கெளுத்தி வெறும் 7000 முதல் 15000 முட்டைகளை மட்டுமே போடுகின்றன.

மேலும் இவ்வகை மீன்கள் குறைவான ஆழத்தில் சேற்றில் கூட வளரும் தன்மை கொண்டவை. ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும் தண்ணீரில் கூட பல நாட்கள் உயிர் வாழும். வறண்டு போன நிலத்தில் கூட காற்றைக்குடித்து உயிர் வாழும் தன்மை கொண்டது. சாக்கடையில் கூட வாழும் தன்மை இதற்கு உண்டு.

இத்தகைய பல அசாதாரண விசயங்கள் இதற்கு இருப்பதால் இயற்கையாகவே பிற வகை மீன்களை கொன்றொழித்து இவை மட்டும் அதிகம் வளர்ந்து நமது நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும்.

தற்போது கேரளா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் வண்டிப் பெரியார் அணையில் இந்த வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன.

இது நமது நீர்நிலைகளில் உள்ள மீன்களை அழித்து; இன்னும் சில ஆண்டுகளில் நமது உள்ளூர் நீர் நிலையில் கிடைக்கும் மீன்களின் வரத்தை முற்றிலுமாக ஒழித்து விடும்.

இது ஒருபுறம் இருக்க, இந்த வகை மீன்கள் தண்ணீரில் இருக்கும் உலோகங்களை தன்னகத்தே சேமித்து வைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

படிக்க :
தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?
CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !

தண்ணீர் உலோகங்களால் மாசுபடுவதை அறிவதற்காக இந்த வகை மீன்கள் தான் பரிசோதனை விலங்குகளாக உபயோகிக்கப்படுகின்றன.

பொதுவாக நமது நாட்டில் நீர்நிலைகளின் மாசுத்தன்மை நாம் அறிந்ததே.
அவற்றில் பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகின்றன என்பதும் அறிந்தவையே. எனவே இவ்வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள் மிக அதிகமான அளவில் அபாயகரமான அளவில் இருக்கின்றன.

இவற்றை உண்ணும் நமக்கு உலோகங்கள் ரத்தத்தில் சேர்ந்து அதனால் கேன்சர் / உடல் உபாதைகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது.

இனி ரத்தத்தில் உலோகங்கள் அதிகமாக இருக்கும் நோயர்களைக் கண்டால் இந்த வகை மீன்களை உண்பார்களா என்று கேட்க வேண்டும்.

இத்தனை ரிஸ்க்குகள் இருக்கும் இந்த வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் சீக்கிரம் வளர்கிறது, நல்ல விலைக்கு விற்கிறது என்ற காரணத்திற்காக மக்கள் குட்டைகளில் வளர்க்கிறார்கள். இது தவறானது என்று மீனவப் பெருமக்கள் உணர வேண்டும்.
மேலும், இந்த வகை மீன்களை விற்பதும் வாங்குவதும் நமது ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் செயலாக அமையலாம்.

இந்த வகை மீன்கள் மட்டும் தான் ஒரு இடத்தில் கிடைக்கின்றன என்றால்
புரதச்சத்து எடுக்கும் நோக்கில் இவற்றை நன்றாக அவித்து உண்பது இவற்றில் இருக்கும் உலோகங்களை பெரும்பான்மை நீக்கி விடுகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன

முடிவுரை : ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை தவிர்ப்பது சிறந்தது. அவை உள்ளூர் பிற மீன்களுக்கும் நமது உள்ளுறுப்புகளுக்கும் ஊறு செய்வதால் இந்த வகை மீன்களை விற்பவர்களும் வாங்குபவர்களும் உண்பவர்களும் தவிர்ப்பது சிறந்தது. அரசாங்கமும் கடும்போக்குடன் இந்த மீனை தடை செய்வது சிறந்தது.

References
1. Action to be taken against those rearing African catfish
2. Catfish farming banned, but stocks pose danger
3. Concentrations and Risk Evaluation of Selected Heavy Metals in Water and African Catfish Clarias gariepinus in River Kaduna, Nigeria
4. Lead and Cadmium Levels of African Catfish (Clarias gariepinus) and the Effect of Cooking Methods on their Concentrations

5. Heavy Metals Contamination in the Tissues of Clarias gariepinus (Burchell,
1822) Obtained from Two Earthen Dams (Asa and University of Ilorin Dams)
in Kwara State of Nigeria

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS., MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம் !

PP Letter headபத்திரிகை செய்தி

13.01.2020

டப்பாடி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்திய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் வைத்திருந்தார் என்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறி, ஏதோ பயங்கரவாதியை கைது செய்வதைப் போல நள்ளிரவில் மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகனைக் கைது செய்திருக்கும் காவல்துறையின் செயல் மிகக் கீழ்த்தரமான அடக்குமுறை.

போலிசின் மிரட்டலுக்கு அஞ்சி அவரது அரங்கைப் பறித்ததுடன் அவர் மீது பொய்ப் புகார் கொடுத்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் – பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) செயல் மிகக்கேவலமானது. பதிப்பாளர்கள், விற்பனையாளர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய ‘பபாசி’ காட்டிக்கொடுக்கும் துரோகத்தைச் செய்திருக்கிறது.

பத்திரிக்கையாளர் அன்பழகன்.

ஒரு புத்தகம் தடைசெய்யப்படாத நிலையில் அதனை விற்பனை செய்யக்கூடாது என்று கூற பபாசிக்கு எந்த உரிமையும் இல்லை. அரசுக்கு எதிராக கருத்துக்கள் கொண்ட புத்தகங்களை விற்கக்கூடாது என்றால் பபாசி தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனப் புத்தகங்களை விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, புத்தகக் கண்காட்சி நடத்துவதை விட்டுவிடலாம். எடப்பாடி அரசு தொடர்ந்து மாற்றுக் கருத்துக்கள் கொண்ட அரசியல் செயல்பாடுகளை ஒடுக்கி வருவதுடன் எழுத்தாளர்களையும் ஒடுக்குகிறது.

திரு. அன்பழகன் அவர்களை நீதிபதி சிறையில் அடைக்க மறுத்தப்போதும் காவல்துறையினர் நீதிபதியை மிரட்டும் தொனியில் பேசி சிறையில் அடைத்துள்ளனர். அரசியல் சட்டம், ஐ.நா. மனித உரிமைச் சாசனம் ஆகியவை வழங்கியுள்ள அடிப்படை கருத்துரிமை மீது தொடுக்கப்படும் இத்தாக்குதலை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதேபோல் பபாசியின் ’எட்டப்ப’-தனத்தையும் வன்மையாக கண்டிக்கிறது.

எடப்பாடி அரசு உடனடியாக பத்திரிகையாளர் திரு. அன்பழகனை விடுதலை செய்வதுடன், அவர் மீதான வழக்கையும் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.

காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.

மக்களை மயக்கும் அபினி போன்றது மதம் !

1
நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 07

பொருள் உற்பத்தி அமைப்பை (சமூக அமைப்பு) மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். வர்க்கங்கள் தோன்றுவதற்கு முற்காலம் (இனக் குழுக்காலம்), வர்க்கப் பிரிவினையுள்ள காலம் (வர்க்க சமுதாய காலம்), வர்க்கங்கள் இல்லாத காலம் (வர்க்க பேதங்கள் அகன்ற காலம்) என்று இச்சமூக வளர்ச்சிக் கட்டங்களைப் பகுக்கலாம்.

வர்க்க முற்காலத்தின் உற்பத்திச் சக்திகள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தன. இந்தக் காலகட்டத்தில் ஒரு மனிதன் உழைப்பை வேறோர் மனிதன் சுரண்ட இயலாது. ஏனெனில் உழைப்பினால் விளையும் பொருள் உற்பத்தி சமூகத்தின் வாழ்க்கையை நடத்துவதற்கே போதாது. எனவே பட்டினியையும் பற்றாக் குறையையும் தான் சமூக உறுப்பினர்கள் பங்கு போட்டுக் கொண்டார்கள். எல்லோரும் ஏழைகளாக வாழ்ந்ததால் எல்லோருடைய உழைப்பின் மீதும் சமூக இருப்பு ஆதாரப்பட்டிருந்தது.

மனிதன் தனது உழைப்பால் பண்டைக் கருவிகளை அபிவிருத்தி செய்து கொண்டான். புதிய கருவிகளைப் புனைந்தான். இவற்றால் மேலும் திறமையாகத் தன் உழைப்பை வழிப்படுத்தினான். உற்பத்தி அதிகமாயிற்று. சமூக வாழ்க்கைக்குத் தேவையானது போக பொருள்கள் மிஞ்சின. இதனை மார்க்சீயவாதிகள் உபரிப்பொருள் (Surplus product) என்று அழைக்கிறார்கள். முந்திய இனக்குழு சமூகத்தில் எல்லோரும், எல்லா வகையான உழைப்பிலும் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவனே வேட்டையாடி விலங்குகளைக் கொன்று குழுவிற்கு உணவு கொணர்ந்தான். அவற்றின் தோலை உரித்துப் பதனிட்டு உடைகள் தைத்தான். சிறு குடிசைகள் கட்டினான். பண்டைய விவசாயம் செய்தான். தெய்வங்களை நினைத்து வாழ்க்கையில் செழிப்பை வேண்டிக் கொண்டு ஆடிப் பாடினான். எல்லோரும், எல்லாத் தொழில்களையும் செய்தார்கள். ஆட்டம், பாட்டு முதலிய கலைகளில் எல்லோருமே கலைஞர்களாகவும், ரசிகர்களாகவும் பங்கு கொண்டனர்.

மாறிய நிலைமையில், தொழில் பிரிவுகள் தோன்றின. கைத்தொழில் வல்லவர்கள் செய்யும் தொழிலால், தொழிற் பிரிவுகளாகப் பிரிந்தனர். விவசாயம், கைத்தொழில்கள் வளர்ந்தன. கைத்தொழில்கள் மிகப் பல தோன்றின. இவர்களையே ‘வினைவலார்’ என்று பண்டைய தமிழ் நூல்கள் அழைக்கின்றன. தொழிற் பிரிவு, உற்பத்திச் சக்திகளை வளர்க்கக் காரணமாயிற்று.

இந்நிலைமை குறித்து எங்கல்ஸ், “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்னும் நூலில் எழுதினார்: “தொழில் பிரிவுகள், தொழிற் திறமையையும், உற்பத்தித் திறமையையும் வளர்த்தன. தொழில் நுணுக்கம் முன்னேற்றம் கண்டது. இதனால் சமூகத்தில் ‘உற்பத்தி செய்பவர்கள்’, ‘உற்பத்தியை அமைப்பவர்கள்’ (Producers and Organisers of production) என்ற உழைக்கும் பிரிவினரும், தாம் உழைக்காமல், உழைப்பைத் திட்டமிட்டு அமைப்பவர்களும் என்ற பிரிவுகள் தோன்றின. உழைப்பை அமைப்பவர்கள் உழைப்பின் கடுமையில் இருந்து விடுதலை பெற்றனர். இவர்கள்தான் ‘சிந்தனையாளர்களாக’, ‘மதகுருமார்களாக’, ‘மந்திர தந்திரங்களை’ நடத்துபவர்களாக, பொருளுற்பத்தி உழைப்பில் இருந்து விலகிச் செயல்பட்டனர். இவர்களில் சிலர் மதக் கொள்கைகளையும், வேறு விஞ்ஞானச் சிந்தனைகளையும் உருவாக்கினர், வானவியல், கணிதம், பௌதீகம், ரசவாதம் போன்ற பல விஞ்ஞானங்களை இவர்கள் வளர்த்தார்கள். இவர்கள் உழைப்பை மிகவும் இழிவாகக் கருதினர்.

படிக்க :
போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்
சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !

உதாரணமாக இந்தியாவில் ஆரிய சமூகத்தில் பிராமணனும், க்ஷத்திரியனும் ஏரைத் தொடக்கூடாது என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பிராமணன் ஏழையாகிவிட்டால் அடுத்த வருணமான க்ஷத்திரியன் தொழிலைச் செய்யலாம். இதற்கு ஆபத்து தர்மம் என்று பெயர். அது போன்றே க்ஷத்திரியன் வைசியன் தர்மத்தைக் கடைப் பிடிக்கலாம். ஆனால் மேலிரண்டு வருணத்தாரும் சூத்திரனைப் போல் உடல் உழைப்பை ஒரு போதும் மேற்கொள்ளக் கூடாது. இது போன்றே பௌத்தத் துறவிகள் ஏரைத் தொடக் கூடாது. பொருள் வருவாயுள்ள எந்த உழைப்பையும் மேற்கொள்ளல் ஆகாது. இவ்வாறாக உழைக்க ஆனால் உழைப்பை அமைக்கும் சமூகப் பிரிவாக ஆளும் வர்க்கமும், உழைப்பையே வாழ்க்கைச் சாதனமாகக் கொண்ட உழைக்கும் வர்க்கமுமாகப் பண்டையச் சமுதாயம் பிரிந்தது. இப்பிரிவினரையே மேலோர், கீழோர் என்று பண்டைத் தமிழர்கள் குறிப்பிட்டனர்.

இம்மாறுதல் எவ்வாறு நடந்தன என்று மார்க்சீய சமூக மானிடவியலார் ஆராய்ந்து வருகிறார்கள். இப்போது, பண்டைக்காலச் சமுதாய வளர்ச்சிபற்றி நாம் அறிந்துள்ள மார்க்சீய சிந்தனையை மிகவும் சுருக்கமாக நான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

எங்கல்ஸ்.

மேற்கூறியவாறு சமுதாய வரலாற்றில் தோன்றிய ஆளும் வர்க்கமும், தனது ஆதிக்கத்தை நிறுவிக் கொள்ள வன்முறைக் கருவியொன்றைப் படைத்துக் கொண்டது. உழைக்கும் மக்களும், தங்களது தொழில்களை அமைதியாகச் செய்யத் தேவையானது அரசு என்று நம்பினார்கள். முதன் முதலில் சமூகத்தின் எல்லா உறுப்பினர்களின் சம்மதத்தோடு அரசு தோன்றியது. இதனை மகா சம்மதம் என்று நீதி நூலோர் அழைப்பர். பின்னர் அது ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வன்முறைக் கருவியாக மாறிற்று, எங்கல்ஸ் கூறுகிறார்:

“சமூகத்திற்கு வெளியில் இருந்து அதன் மீது திணிக்கப் பட்டதன்று, அரசு. சமூக வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தில் சமூகத்தால் படைக்கப்பட்டது தான் அது. பல பொருளாதார முரண்பாடுகள் சமூகத்தில் தோன்றிவிட்டன. இவற்றிற்குத் தீர்வு காண முடியவில்லை என்ற உண்மையின் ஒப்புதல் வாக்கு மூலமே அரசு. இந்த முரண்பாடுகளும், பகைமையும் சமூகத்தையே அழித்து விடாமல் இருக்க, சமூகத்திற்கு மேலே இருப்புக் கொண்டது போலத் தோற்றமளிக்கும் ஒரு அமைப்பை சமூகம் ஏற்றுக் கொண்டது, இதுவே அரசு. இது சமூகத்தில் இருந்து பிறந்து, சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிற நிறுவனமாக அதற்கு மேலே இருப்பது போலத் தோன்றுகிறது. சமூகத்தை ஒழுங்காக நெறிப்படுத்தத் தோன்றிய அரசு, அதனின்றும் அந்நியவயமாயிற்று. மேற்குறிப்பிட்ட வர்க்கப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தி வைக்க, அது வலிமை மிக்க நிறுவனமாகத் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டது. பொருளாதார ஆதிக்கம் உள்ள ஆளும் வர்க்கம் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள, உழைக்கும் வர்க்கத்தை வன்முறையால் ஒடுக்க அரசு கருவியாகத் தோற்றம் கொண்டது.”

”அரசு, மக்களைக் கட்டாயப்படுத்தும் கருவி” (Coercive apparalisis) என்று மார்க்ஸ் கூறுகிறார். சட்டங்கள், நீதிமன்றங்கள், போலீஸ், ராணுவம் முதலியன அரசின் வன்முறைக் கருவிகள். ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க, மக்களை அடக்க இவை பயன்படுத்தப்பட்டன. இந்த அரசுதான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் மனத்தையும் செயலற்ற நிலையில் வைத்திருக்க வேண்டியிருந்தது. இதற்காக அவர்களுக்கு மதம் என்ற அபினியைக் கொடுத்தது. மார்க்ஸ் கூறுகிறார்:

“இவ்வரசும், இச்சமூகமும் தலைகீழான உலகம் பற்றிய உணர்வைப் படைக்கின்றன. அதுதான் மதம். மதம், இந்நிலையில் உலகம் பற்றிய பொதுக்கொள்கை. சர்வாம்சமான அறிவுத் தொகுப்பாக அது தோன்றுகிறது. ஜனரஞ்சகமான தருக்கமாகவும், சமூகத்தின் ஆன்மீக கௌரவமாகவும் அது மதிக்கப்படுகிறது, ஒழுக்க விதிகளைக் கட்டுப்படுத்துகிறது. மன ஆறுதலுக்குப் பொதுவான சாதனமாகவும் தோன்றுகிறது. மனிதனது ஆத்மாவின் மாயையான பூர்த்தியாக அது இருக்கிறது. இப்பூர்த்தி உண்மையான தன்று. மதத்தை எதிர்க்கும் போராட்டம், அதன் வெளிப்பாடான வேறோர் கற்பனை உலகத்தை எதிர்க்கும் போராட்டமாகவும் இருத்தல் வேண்டும். இவ்வுலகின் ஆன்மீக வாசனைதான் மதம். உண்மையான சோகத்தின் வெளிப்பாடாகத்தான் மதத்தின் சோக உணர்ச்சி இருக்கிறது. உண்மையான சோகத்தை எதிர்க்கும் உணர்ச்சி மத உணர்ச்சியில் உள்ளது. ஒடுக்கப்பட்ட ஜீவன்களின் பெருமூச்சாக மதம் உள்ளது. இதயமற்ற உலகின் இதயமாக அது தோற்றம் அளிக்கிறது. ஆன்மாவற்ற நிலையில் ஆன்மா போன்று அது காணப்படுகிறது. உண்மையில் மக்களை (மயக்கும்) அபினி போன்றது மதம்.”

“மாயையான மதத்தை ஒழிப்பது மாயையான மத மகிழ்ச்சியை அகற்றுவதற்கும் உண்மையான மகிழ்ச்சிக்காக மனிதன் போராடுவதற்கும் அவசியம். மதம் பற்றிய விமர்சனம், மாயையான பந்தங்களிலிருந்து மனித மனத்தை விடுவிக்கிறது. விடுதலை பெற்ற மனம் புற உலக வாழ்க்கையில் மனிதனது இடம் பற்றிச் சிந்திக்கிறது. மதம் மனிதனைச் சுற்றிச் சுழலுவதாகத் தோன்றும் மாயைத் தோற்றமான சூரியன். மனிதன் தன்னைத்தான் சுற்றிச் சுழலும்போது இத்தோற்றம் அகன்று விடுகிறது.”

மார்க்ஸ் உண்மைக்கப்பால் உள்ள உலகம் மறைந்து விட்ட பிறகு, புற உலகின் உண்மையைக் காண்பதே வரலாற்றின் கடமையாகும். வரலாற்றின் பணிக்கு உதவும் தத்துவம், மனிதன் அந்நியப்படுதலால் விளையும் ‘புனிதமான உருவங்களை’ (மதக்கருத்துக்கள்) பொய்யெனக் காட்டுவதால் புனிதமற்ற உருவங்களின் (புற உலகின் உண்மையை) யதார்த்த நிலையை, அதன் முரண்பாடுகளை சுட்டிக் காட்டுவதும் ஆகும். இதனால், சுவர்க்கத்தைப் பற்றிய விமர்சனம், உலகம் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. மதம் பற்றிய விமர்சனம், நியாயம் பற்றிய விமர்சனம், கடவுளியல் பற்றிய விமர்சனங்களெல்லாம் அரசியல் பற்றிய விமர்சன மாற்றம் அடைகிறது.

முதல் பாகம்

 

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………… அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

இந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் !

ந்தியத் தலைநகரான புது தில்லி 2020-ம் ஆண்டில் கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டுள்ளது. இது வீதிகளில் வசிக்கும் வீடற்ற மக்களின் சுமையை மேலும் கூட்டியுள்ளது.

தனது பேத்தியை மடியில் வைத்துக்கொண்டுள்ள, 71 வயதான முகமது அக்ரம், ஏழு நபர்கள் கொண்ட தனது குடும்பத்தாருடன் பல ஆண்டுகளாக நடைபாதையில் வசித்து வருவதாகக் கூறுகிறார். “இந்த தங்குமிடங்கள் என் மகள்களுக்கு பாதுகாப்பானவை அல்ல, ஏனெனில், வெளியேயிருப்போரில் பலரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் சூதாட்டக்காரர்களாக இருக்கின்றனர். அவர்கள் இங்கே தங்கியிருக்கும் அனைவரிடமும் வரம்பு மீறுகிறார்கள். இங்கே குளிர் தாங்க முடியாததாக உள்ளது. எங்களுக்கு போதுமான விறகு இல்லை” என்கிறார் அக்ரம்.

தில்லி அரசாங்கம் கிட்டத்தட்ட 200 இரவு தங்குமிடங்களை அமைத்தது. ஆனால், அவை நகரத்தின் வீடற்ற மக்கள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் இரவுகளை திறந்த வெளியிலேயே கழிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

“எங்களிடம் சுமார் 40 படுக்கைகள் உள்ளன, இதில் ஒரு படுக்கையைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய குடும்பங்களின் அளவைப் பொறுத்து, அதிகபட்சமாக 60 பேருக்கு இடமளிக்க முடியும்” என்று ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இரவு வசிப்பிடங்களை நிர்வகிக்கும் சுனில் குமார், அல்ஜசீராவிடம் தெரிவித்தார்.

நாங்கள் ஒரு நபருக்கு இரண்டு அல்லது மூன்று போர்வைகளை வழங்க முடியும், ஆனால், இங்கு அடிக்கும் குளிருக்கு இது போதுமானதாகயில்லை. சில அறை ஹீட்டர்களும் இருக்க வேண்டும்,” என்றார்.

சிலர் நடைபாதையில் நெருப்பு எரிப்பதன் மூலம் தங்களை சூடாக வைத்திருந்தனர், அடர்த்தியான மூடுபனி புதன்கிழமை (01.01.2020) இரவு வெப்பநிலையை 2.4 டிகிரி செல்சியஸ் (36.3 டிகிரி ஃபாரன்ஹீட்) ஆகக் குறைத்து, சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை சீர்குலைத்தது.

திங்களன்று (30.12.2019), இந்திய தலைநகரம் 1901-ம் ஆண்டிற்கு பிறகு மிகக் குறைந்த வெப்பநிலை கொண்ட நாளை, வரலாற்றில் மீண்டும் பதிவு செய்தது. அதிகபட்ச அன்று வெப்பநிலை 9.4 செல்சியஸ் (48.9 ஃபாரன்ஹீட்) என்று மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தது.

“அதிகபட்ச வெப்பநிலை வட இந்தியாவின் பெரிய பகுதிகளிலும் 10 டிகிரிக்கு குறைந்தது” என்று புது தில்லியில் உள்ள பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.

தலைநகரைத் தவிர, ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியவை தொடர்ந்து கடுமையான குளிர் அலையை எதிர்கொண்ட பிற இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் ஆகும்.

“பொதுவாக ஜனவரி மாதத்தில்தான் வெப்பநிலையானது குறையும், ஆனால், இந்த முறை டிசம்பர் மாதத்திலேயே பல தசாப்தங்களின் சாதனையை இந்தக் குளிர் முறியடித்துள்ளது” என்று ஸ்ரீவாஸ்தவா மேலும் கூறினார்.

அடர்த்தியான மூடுபனி போக்குவரத்தை கடுமையாக சீர்குலைத்தது, இது புது தில்லி விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கும், ரயில் தாமதத்திற்கும் வழிவகுத்தது. புதுடெல்லியில் இருந்து 29 ரயில்கள் புதன்கிழமை (01.01.2020) தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்திலிருந்து சிகிச்சைக்காக வந்த ரிக்கு தேவி, வயது 40, இந்த தங்கும் இடத்திற்குள் எனக்கும் இடம் கிடைத்து, என் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். “இது அரசாங்கத்தின் ஒரு நல்ல முயற்சி. இங்கும் கொஞ்சம் குளிராக இருந்தாலும், தெருக்களில் உள்ளவர்கள் எதிர்கொள்வதை விட இது பலமடங்கு சிறந்தது” என்று ரிக்கு தேவி கூறுகிறார். இவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு வெளியே ஒரு தங்குமிடம் ஒன்றில் தங்கியிருக்கிறார்.
அடர்த்தியான மூடுபனி கடந்த 01.01.2020 அன்று ஒரு ‘அபாயகரமான’ நிலையைத் தொட்டதால் புதுடில்லியின் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது.
பிரபலமான லஜ்பத் நகர் சந்தைக்கு அருகே ஒரு பறக்கும் பாலத்திற்கு கீழ் வாழும் 62 வயதான நூர் பி தனது கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். தான் டெல்லியைச் சேர்ந்தவள் என்றும் இப்படி தெருக்களில் வாழும் நிலைக்கு எப்படி வந்தேன் என தெரியவில்லை என்றும் கூறினார். “இந்த குளிர் தாங்க முடியாதது. எனது முழு வாழ்க்கையிலும் நான் இவ்வளவு குளிரை உணர்ந்ததில்லை. நான் இங்கே இறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். என்னால் சரியாக நடக்க முடியாது. இங்கே மக்கள் எனக்கு உணவு மற்றும் போர்வைகளை தருகிறார்கள்” என்றார். ஒரு தன்னார்வலர் அவருக்குப் போர்வைகளை வழங்கியுள்ளார்.
புது தில்லியில் வீடற்றவர்கள் பெரும்பாலும் அருகிலுள்ள கடைகளிலிருந்து குப்பைகளை சேகரித்து தங்களை சூடாக வைத்திருக்க அதை எரிப்பதைக் காணலாம்.
சிலர் தங்கள் வீட்டு விலங்குகளை அடிக்கும் குளிரிலிருந்து காப்பாற்ற அவற்றை சணல் சாக்குகளால் மூடியுள்ளனர்
சுகாதார வல்லுநர்கள் மக்களை காலை நடைக்கு வெளியே செல்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். “நீங்கள் மேலும் வெளியே செல்ல விரும்பினால், பல அடுக்கு ஆடைகளை அணிந்து, முகத்தை நல்ல முகமூடியால் மூடுங்கள்” என்று புது தில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் நுரையீரல் நிபுணர் டாக்டர் இம்தியாஸ் அஹ்மத் கூறியுள்ளார்
குளிரை வெல்ல அதிகாலை தேநீர்! வடக்கின் பல பகுதிகளில் வெப்பநிலை 3-4 செல்சியஸ் அதிகரித்துள்ளது என்று இந்தியாவின் வானிலை துறை ஜனவரி 1 அன்று கூறிய போதிலும், குளிரின் பிடியிலிருந்து டெல்லி மீளாமலேயே இருந்தது.
தொடர்ச்சியான குளிர் அலைகளில் வீடற்ற குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
வரவிருக்கும் வாரத்தில் வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும் என்றாலும், தலைநகரில் வாழும் மக்களுக்கு இது மிகவும் கடுமையான குளிர்காலமாக இருக்கிறது. காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 15 கி.மீ (9 மைல்) ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கிலிருந்து வீசும் காற்று தொடர்ந்து புதுடில்லியின் வெப்பநிலையை சற்று அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


மூர்த்தி
நன்றி : அல்ஜசீரா

போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்

0

காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 8-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் இசுலாமியப் பயங்கரவாதிகளென எச். ராஜாவும், பொன்னாரும் அனைவரையும் முந்திக் கொண்டு அறிவித்தனர்.

ஊடகங்களும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களென இரண்டு இசுலாமிய இளைஞர்களின் பெயர்களை உச்சரித்தன. அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பில் உள்ளவர்கள் என்று விறுவிறுப்பைக் கூட்டின. இப்போது தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் குற்றப் பின்னணி உள்ள முஸ்லிம் பெயர் தாங்கிய பலரை பிடித்து போலீஸ் விசாரித்து வருகிறது. முதலில் கைது செய்யப்பட்டவர்களும் கூட வேறு சில வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால் இவர்களனைவருமே போலீசின் வளையத்தில் எப்போதும் இருப்பவர்கள் என்று அறிய முடிகிறது.

கொலை நடந்த குறிப்பிட்ட சோதனைச் சாவடியின் வழியாக குமரி மாவட்டத்திலிருந்து பாறைகளை உடைத்து எடுக்கப்படும் எம்/பி – சேண்ட் பொடிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வெவ்வேறு அளவுகளில் உடைக்கப்படும் பாறைக்கற்கள் ஆகியவை கேரளாவுக்கு கடத்தப்பட்ட போது ஏற்பட்ட மோதல் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் பகுதி மக்களுக்கு இருக்கிறது. ஆனால் விசாரணையின் பரப்பெல்லையில் அது வரவில்லை.

இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட திசைவழியில் விசாரணையை கொண்டு செல்ல ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கூட்டம், அரசுக்கும் போலீசுக்கும் வழங்கும் அழுத்தங்களை அம்பலமாக்கி உள்ளது. இந்த வழக்கு அதன் தர்க்க முடிவை எட்டுவது பற்றி ஆர்.எஸ்.எஸ் – பிஜேபிக்கு எந்த கவலையும் இல்லை. எவ்வளவு தாமதமாகிறதோ அவ்வளவு காலத்துக்கு இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சலிட முடியும் என்று கருதுகிறது. அநேகமாக குமரி மாவட்ட சி.எஸ்.ஐ பிஷப்புக்கு பொன்னார் தொலைபேசி செய்து ஆதரவு தெரிவித்திருப்பார். ‘ஒரு பொய்யாவது சொல்லுங்கள் முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு அஞ்சிக் கிடக்கிறோமென; அந்த வாய்ப்பில் ஒரு கலவரத்தை செய்து விடுகிறோம்’ என்று கெஞ்சாத குறையாக தங்கள் சதி நோக்கத்துக்கு கிறிஸ்தவர்களை ஆர்.எஸ்.எஸ் அழைக்கிறது.

எஸ்.எஸ்.ஐ வில்சனை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் இச்சம்பவத்தை பகடையாக பயன்படுத்தி சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கெதிராக ஒரு மனநிலையை குமரி மாவட்ட கிறிஸ்தவர்களிடம் வளர்க்க ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியினர் பகுதியளவில் முயன்று வருவது குறித்த எச்சரிக்கை உணர்வு அவசியம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ -க்கள் மற்றும் எம்.பி ஆகியோர் கிறிஸ்தவரான கொலையுண்ட வில்சனை கைவிட்டு விட்டதாக ஆர்.எஸ்.எஸ் ஒப்பாரி வைக்கிறது. மாநில அளவில் இச்சம்பவத்தை வைத்து தமிழகம் முஸ்லீம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி விட்டதற்கு உதாரணமாக பொன்னார் ஊடகங்களில் கூறி வருகிறார். இச்சம்பவத்தை பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தார்மீக அடிப்படையில் பலமிழக்க செய்வது எச். ராஜா, பொன்னார் வகையறாவின் திட்டமாக இருக்கிறது.

வில்சன் மரணத்துக்கு ‘நீதி’ கேட்டு ஊர்வலம் போவது, கூட்டங்கள் போடுவதை ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி தனது அன்றாட அரசியல் நடவடிக்கையாக குமரி மேற்கு மாவட்டத்தில் மாற்றி உள்ளது. “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழும்” அவலச்சுவையை இந்த போராட்டங்களில் நாம் கண்டுணர முடிகிறது. தம்மிடம் ஆர்.எஸ்.எஸ் கொள்ள விரும்பும் நட்பு தந்திரமும், தற்காலிகமுமானது என்ற புரிதல் கிறிஸ்தவ மக்களிடம் இருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.

படிக்க :
நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !
அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை

எஸ்.எஸ்.ஐ வில்சன் வீடமைந்திருக்கும் வெட்டுமணியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நித்திரவிளையில் எட்வின் ராஜ் என்ற கிறிஸ்தவ இளைஞன் தனது வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தியதற்காக 2012-ம் ஆண்டு பிஜேபி மாவட்டத் தலைவர் தர்மராஜ் என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஏ-1 குற்றவாளியான தர்மராஜுக்கு ஆதரவாக மார்த்தாண்டத்தில் மறியல் செய்தவர் பொன்னார். பின்னர் அந்த நபருக்கு 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த லட்சணத்தில் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி வில்சன் கொலை விவகாரத்தில் தலையிடுவது நீதியின்பாற்பட்டது என்று யார் நம்புவர்?

இசுலாமிய பயங்கரவாத பிரச்சாரத்தை கையிலெடுக்கும் இந்து தீவிரவாதிகள்.

முஸ்லீம்களுக்கு எதிரான  செயல் திட்டத்தில் கிறிஸ்தவர்களை தற்காலிகமாக இணைத்துக் கொள்ள குடியுரிமை திருத்த மசோதாவை ஆர்.எஸ்.எஸ் கையிலெடுத்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து வரும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக கூறி இருப்பதை சாதகமானதாக ரங்கராஜ் பாண்டே போன்றோர் பார்ப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. சில தீவிர கிறிஸ்தவர்கள் மத்தியகால சிலுவைப்போர் நினைவுகளை கொண்டிருப்பதோடு அமெரிக்க – ஈரான் போர்ப் பதற்றத்தை கிறிஸ்தவ – முஸ்லிம் நாடுகளின் பிரச்சினையாக பார்க்க முயல்பவர்கள். தவ்ஹீத்-ஜம-ஆத் போன்ற அமைப்புகளில் இருப்பவர்களும் கிறிஸ்தவ நம்பிக்கையின் மும்மைக் கொள்கையை கேலி செய்பவர்கள்.

அடித்தட்டு மக்களிடம் இந்த பார்வைகள் செல்வாக்கு பெறவில்லை என்றாலும் அந்த மாற்றத்தை மக்கள் அடைய மதவாதிகள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள் என்பதால் ஒரு விழிப்புநிலை எப்போதும் அவசியமாகிறது. கோவையில் கொல்லப்பட்ட போலீஸ்காரர் செல்வராஜ் ஓர் கிறிஸ்தவர். அவர் இறந்த பிறகு அவரை இந்துவாக்கி, முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு பெரும் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். 98–ல் அரங்கேற்றியது. அந்த கசப்பனுபவத்தை நினைவில் கொள்வது நல்லது.

– ராஜ்

சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !

0

இந்தியாவில் புரட்சி நடந்தால், அதை ஒடுக்கக் காத்திருக்கும் இராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்…

கலையரசன்

ருபது வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு, நான் பெல்ஜிய‌ க‌ம்யூனிஸ்ட் தொழிலாள‌ர் க‌ட்சி ஒழுங்கு ப‌டுத்திய‌ கோடை கால‌ முகாமில் ப‌ங்குப‌ற்றி இருந்தேன். அப்போது எம‌க்கு வ‌குப்பெடுத்த‌ க‌ட்சியின் பிர‌தான‌ உறுப்பின‌ர் ஒருவர் பின்வ‌ரும் த‌க‌வ‌லை தெரிவித்தார்:

“பெல்ஜிய‌த்தில் உள்ள‌ இராணுவ‌ முகாம்கள் பெரும்பாலும் ஏழை உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ள் நெருக்க‌மாக வாழும் ப‌குதிக‌ளை அண்டியே உள்ள‌ன‌. இது ஒன்றும் த‌ற்செய‌ல் அல்ல‌. நாளை இங்கு ஒரு புரட்சி நடந்தால் அதை ஒடுக்குவதற்கு இராணுவம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

எதிரி நாட்டு ப‌டையெடுப்பை எதிர்நோக்குவ‌தை விட‌, உள்நாட்டில் ஏற்ப‌ட‌ப் போகும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சியை நசுக்குவ‌தற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவ‌ம் முக்கியமாகத் தேவைப்படுகிறது. உள்நாட்டில் புரட்சி நடப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென்ற‌ கால‌ங்க‌ளில் தான் எதிரி நாடுக‌ளுட‌ன் யுத்த‌ம் செய்வார்க‌ள்…”

படிக்க :
CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !
சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்

உண்மையில் இந்த‌த் த‌க‌வ‌ல் அன்று என‌க்கு ம‌ட்டும‌ல்லாது, பல பெல்ஜிய‌ தோழ‌ர்க‌ளுக்கும் நம்புவ‌த‌ற்கு க‌ஷ்ட‌மாக‌ இருந்த‌து. எம‌து ச‌ந்தேக‌த்தை நேரடியாகக் கேட்டோம். அத‌ற்கு அவ‌ர் பின்வ‌ரும் ப‌திலைக் கூறினார்:

“உதார‌ண‌த்திற்கு 19-ம் நூற்றாண்டின் இறுதிப் ப‌குதியில் ந‌ட‌ந்த‌ பாரிஸ் கம்யூன் புர‌ட்சியை எடுத்துப் பாருங்க‌ள். அந்த‌ நேர‌த்தில் “ஜென்ம‌ விரோதிக‌ளான‌” பிரெஞ்சு இராணுவ‌மும், ஜெர்ம‌ன் இராணுவ‌மும் விட்டுக்கொடாமல் கடும் போரில் ஈடுப‌ட்டுக் கொண்டிருந்த‌ன‌.

பாரிஸ் க‌ம்யூன் புர‌ட்சி வெடித்த அடுத்த நாளே அதுவரை ஒன்றையொன்று கொன்று குவித்துக் கொண்டிருந்த ஜெர்ம‌ன் இராணுவ‌மும், பிரெஞ்சு இராணுவ‌மும் தமது “ஆயிர‌ம் வ‌ருட‌ கால‌” ப‌கைமையை ம‌ற‌ந்து ஒன்று சேர்ந்து விட்ட‌ன‌.

முப்ப‌டைத் த‌லைமைத் த‌ள‌ப‌தியாக‌ ப‌த‌வியேற்றுள்ள‌ பிபின் ராவ‌த்.

அன்று “எதிரி” நாட்டுப் ப‌டைக‌ளின் ஒத்துழைப்பு இருந்த‌ ப‌டியால் தான், பிரெஞ்சு இராணுவ‌ம் இல‌குவாக‌ பாரிஸ் புர‌ட்சியை ந‌சுக்க‌ முடிந்த‌து. அது முடிந்த‌ பின்ன‌ர் இர‌ண்டு நாட்டுப் ப‌டைக‌ளும் வ‌ழ‌மை போல‌ மீண்டும் யுத்த‌திற்கு திரும்பிச் சென்று விட்டன.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள‌ வேண்டிய‌ பாட‌ம் ஒன்றுள்ள‌து. இந்த முத‌லாளித்துவ‌ தேச‌ங்க‌ள் ஒன்றையொன்று விழுங்கும் அள‌வு ப‌கைமை பாராட்டினாலும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சி ந‌ட‌க்கும் போது ஒன்று சேர்ந்து விடுவார்க‌ள்.”

இந்தியாவில் புதிதாக‌ முப்ப‌டைத் த‌லைமைத் த‌ள‌ப‌தியாக‌ ப‌த‌வியேற்றுள்ள‌ பிபின் ராவ‌த் “இராணுவ‌த்தைக் க‌ண்டு ம‌க்க‌ள் அஞ்ச‌ வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார். இத‌ன் மூல‌ம், எதிரி நாடான‌ பாகிஸ்தானுட‌ன் யுத்த‌ம் செய்வ‌தை விட‌, சொந்த‌ நாட்டில் புர‌ட்சி ஏற்ப‌ட‌ விடாம‌ல் த‌டுப்ப‌து தான் இந்திய‌ இராணுவ‌த்தின் த‌லையாய‌ ப‌ணி என்ப‌தை சொல்லாம‌ல் சொல்லி இருக்கிறார்.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !

CAA, NRC, NPR -க்கு எதிராக திருவண்ணாமலையில் திரண்ட மக்கள் !

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றின் பேராபத்துகளைப் புரிய வைப்பதற்காகவும், இவற்றை எதிர்த்துப் போராடுவதன் அவசியம் குறித்து விளக்குவதற்காகவும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் திருவண்ணாமலையில் 11.01.2020 சனிக்கிழமை அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது.

thiruvannamalai prpc Conferenceமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் சு.கண்ணன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் இராம. பச்சையப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளர் துரை பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் ஜோதி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஞானவேல், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி மாநிலப் பொருளாளர் தோழர் செல்லக்கண்ணு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் பொன். சேகர் ஆகியோர் உரையாற்றினர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் சிறப்புரையாற்றினார். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் ஐ. சேகர் நன்றி கூறினார்.

நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டு இந்திய மக்கள் மிகப் பெறும் துயரங்களை சந்தித்து வரும் வேளையில் அவர்களை ஒன்றிணைத்திருக்கிறது குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிரானப் போராட்டம்.

படிக்க:
CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டம் ! PRPC கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming
♦  அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள், இரயில்வே உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, நீட் போன்ற தேர்வுகள் மூலம் உயர் கல்வி உரிமை பறிப்பு, புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வி முறையை புகுத்துதல், இந்தி – சஸ்கிருதத் திணிப்பு, தேசிய இன ஒடுக்குமுறை, உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு மூலம் பார்ப்பன மேலாதிக்கம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு பறிப்பு, காஷ்மீருக்கான 370 சிறப்புத் தகுதி நீக்கம், அயோத்தி பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்களுக்கு அநீதி என அடுக்கடுக்கான மக்கள் விரோதச் செயல்களை மோடி-அமித்ஷா கும்பல் நேரடியாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் அரங்கேற்றி வருகிறது.

தற்பொழுது குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் வாழும் இந்துக்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்கள், பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்போர் என பலரையும் குடியுரிமையற்றவர்களாக்கி அவர்களை முகாம்களில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்தியாவில் வாழுகிற மக்கள் – அவர்கள் அகதிகளாக இருந்தாலும் சமமாக நடத்தப்பட்ட வேண்டும்; அவர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறு. ஆனால் இதற்கு மாறாக ஒருசாராரை ஏற்றுக் கொள்வதும் மற்றொரு சாராரை ஒதுக்குவதும் இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 14, 17 மற்றும் 21 ஆகியவற்றிற்கு எதிரானது; பாரபட்சமானது; தீண்டாமை நோக்குடையது.

பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுதற்காகவும், தங்களது அகண்ட பாரதம்-இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றுவதற்காகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். அதன் ஒரு பகுதிதான் மோடி-அமித்ஷா கும்பல் நடைமுறைப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை. எனவே அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடி இவற்றை முறியடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைவர்கள் பேசினார்கள்.

ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் பிரசுரங்கள் மூலம் இக்கருத்தரங்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் திருவண்ணாமலை மக்களிடையே CAA, NRC, NPR குறித்து ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர்வத்தோடு பலரும் கலந்து கொண்ட அரங்கு நிறைந்த இக்கருத்தரங்கம் திருவண்ணாமலை மக்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை.

நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !

நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை ! பாகிஸ்தானுமில்லை, பங்களாதேசுமில்லை !

ப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேலும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, இவர்தான் உனக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.

அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கிருந்தோ வாளும் வேலும் குதிரையும் கொண்டு படைதிரட்டி வந்த ஒருவன் என் அரசரின் தலையைக் கொய்து விட்டு இனி நான்தான் உங்களுக்கும் உங்கள் சிற்றரசுக்கும் அரசன் என்றான். சரி என்றேன்.

அப்போது நான் இளைஞனாக இருந்தேன். துப்பாக்கிகளும் பீரங்கியும் கொண்டு கப்பலில் வந்த வியாபாரிகள் என் அரசனைக் கொன்றுவிட்டு சிலரை அடிமையாக்கி நாங்கள் தான் உங்களுடைய அரசாங்கம், நம்முடைய பேரரசின் அரசி பிரிட்டிசில் இருக்கிறார் என்றார்கள். சரி என்றேன்.

படிக்க :
♦ தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு
♦ கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !

அப்போது நான் குடும்பத்தலைவனாக இருந்தேன். நாம் விடுதலை பெற்றுவிட்டோம். இனி நாங்கள் தான் உனக்கும் நம் இந்தியாவுக்கும் அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.

வெடிகுண்டுகள் விமானங்கள் ஏவுகணைகள் கொண்டு நிறைய சண்டைகள் நடந்தது, கொலைகள் நடந்தது, கொள்ளைகள் நடந்தது. இந்தியா என்றார்கள் பாகிஸ்தான் என்றார்கள் பங்களாதேஷ் என்றார்கள் தனித்தனி நாடுகள் தனித்தனி அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.

இப்போது நான் மரணிக்கும் வயதை எட்டிவிட்டேன். ஆவணங்கள் கேட்கிறார்கள். நீங்களாக சண்டையிட்டீர்கள், என்னைச்சுற்றி நீங்களாக எல்லைகளை வகுத்தீர்கள், நீங்களாக போர் புரிந்தீர்கள், எங்களைச்சுற்றி நீங்களாக எல்லைகளை மாற்றிக் கொண்டீர்கள். இப்போது மட்டும் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் ஆவணங்களை..? என்று கேட்டேன்.

துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி முகாமுக்கு போகச்சொல்கிறார்கள். வேறு வழி என்ன இருக்கிறது. சரி என்று சொல்வதைத்தவிர..?

நன்றி : Samsu Deen Heera முகநூல் பதிவிலிருந்து…

disclaimer

கனமாகப் பஞ்சு வைத்து கிழியாதபடி தைத்த மேல்கோட்டுத்தான் அவனது தோழி !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 06

புதுக் கோட்டு இல்லாமல் தீராது என்பதை அப்போது தான் அக்காக்கிய் உணர்ந்தான். அவன் இதயத் துடிப்பு நின்றது போல் ஆகிவிட்டது. எப்படித் தைத்துக்கொள்வது? எதைக் கொண்டு? எந்தப் பணத்தால்? விழாக் கால சிறப்பூதியம் ஒருவேளை கிடைக்கலாம் என்பது உண்மையே. ஆனால் அந்தப் பணத்தைத்தான் முன் கூட்டியே பங்கீடு செய்து ஒதுக்கி வைத்தாகி விட்டதே. புதுக் காற்சட்டை வாங்காமல் முடியாது; அப்புறம் பழைய காலணிகளுக்குப் புதிதாக மேல்தோல் தைத்துக்கொடுத்த செம்மானுக்குக் கடனைத் தீர்த்தாக வேண்டும்; தையல்காரியிடம் மூன்று சட்டைகளும், பெயர் குறிப்பிட முடியாத உள்ளாடைகளும் தைக்கக் கொடுக்க வேண்டும்; ஆகமொத்தம் போனஸ் பணம் பூராவும் ஒரு காசு பாக்கியில்லாமல் செலவழித்தாக வேண்டும். ஒருவேளை இயக்குநர் பெரிய மனது பண்ணி விழாக்கால போனஸ் தொகையை நாற்பதுக்குப் பதில் நாற்பத்தைந்து அல்லது ஐம்பது ரூபிள் ஆக்கினார் என்றே வைத்துக் கொண்டாலுங்கூட, மிஞ்சுவது என்னவோ, மேல்கோட்டுக்கு வேண்டிய முதலோடு ஒப்பிட்டால் கடலில் துளி போலச் சொற்பந்தானே.

பெத்ரோவிச் சில வேளைகளில் வெறி கொண்டவன் போல அளவு மதிப்பில்லாமல் வாய்க்கு வந்த விலையைச் சொல்லிவிடுவான் என்பது அவனுக்குத் தெரியும். தையல்காரனின் மனைவிகூட, “எய், மூளை புரண்டுபோச்சா, கேட்கிறேன், மடையா! மற்றச் சமயங்களில் அடிவிலைக்குச் செய்து கொடுக்க ஒத்துக் கொள்றே. இப்ப என்னடான்னா உன் பெறுமானத்துக்கும் அதிகமான தொகையைக் கூசாமல் கேட்கிறே!” என்று விளாசுவாள். இதெல்லாம் அக்காக்கிய் அறிந்தது தான். எண்பது ரூபிளுக்குக் கோட்டு தைத்துக்கொடுக்க பெத்ரோவிச் இணங்குவான் என்பதை அவன் அறிந்திருந்தான். இருந்த போதிலும், எண்பது ரூபிளுக்கு எங்கே போவது? இந்தத் தொகையில் பாதி வேண்டுமானால் கிடைக்கும்: பாதித் தொகையைச் சிரமமின்றித் தேடிவிடலாம். ஒருவேளை பாதித் தொகைக்குக் கொஞ்சம் கூடுதலாகவே கிடைத்துவிடும். மற்றப் பாதிக்கு எங்கே போவது?

பாதித் தொகை எங்கிருந்து கிடைக்கும் என்பதை வாசகர்கள் முதலில் தெரிந்துகொள்வது அவசியம்.

செலவழிக்கும் ஒவ்வொரு ரூபிளிலும் அரைக்காசை, பூட்டிய உண்டியல் பெட்டியில் போட்டு வைப்பது அக்காக்கியின் வழக்கம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சேர்ந்த செப்புக் காசுகளையெல்லாம் வெள்ளி நாணயங்களாக மாற்றிக்கொள்வான். இப்படி அவன் நீண்ட காலமாகச் சேர்த்துவந்த படியால், பல ஆண்டுகளில் நாற்பது ரூபிளுக்கும் மேலே சேர்ந்துவிட்டது. ஆகவே தேவைப்பட்ட தொகையில் பாதி அவன் கையிலிருந்தது; ஆனால் மறு பாதிக்குப் போவதெங்கே? இன்னும் நாற்பது ரூபிள் எங்கிருந்து கிடைக்கும்?

அக்காக்கிய் திரும்பத் திரும்ப யோசனை செய்தபின், குறைந்தது ஓர் ஆண்டிற்காவது சாதாரணச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான்; அதாவது மாலை நேரத் தேநீரை நிறுத்த வேண்டும்; இரவில் மெழுகுவத்தி எரிப்பதைத் தவிர்க்க வேண்டும், வேலை இருந்தால் வீட்டுச் சொந்தக்காரியின் அறைக்குப் போய் அவளது விளக்கு வெளிச்சத்தில் செய்ய வேண்டும்; தெருவில் போகும் போது, காலணி அடிப்பாகம் சீக்கிரம் தேய்ந்து விடாமலிருக்க கூழாங்கல்லோ தட்டைக்கல்லோ பாவிய இடங்களில் முடிந்த வரை மெதுவாக அடி வைத்து, நுனிக்காலால் நடப்பது போல நடக்க வேண்டும்; துணிகளை அபூர்வமாக எப்போதாவது தான் வெளுக்கப் போட வேண்டும்; அவை நைந்து விடாமலிருக்கும் பொருட்டு, ஒவ்வொரு தடவையும் வீடு திரும்பியதுமே அவற்றைக் களைந்துவிட்டு, ட்வில் அங்கியை மட்டுமே (காலமே இரக்கங்கொண்டு விட்டு வைத்திருந்த மிகப் பழைய ஆடை இது) அணிய வேண்டும் என நிச்சயித்தான்.

உண்மையாகச் சொன்னால், அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு இம்மாதிரி கட்டுச் செட்டாக இருப்பது முதலில் மிகவும் கஷ்டமாகத் தானிருந்தது; பின்னால் அவனுக்குப் பழக்கமாகிவிடவே எல்லாம் சுளுவாய்ப் போயிற்று; மாலையில் பட்டினி கிடப்பது கூட அவனுக்கு உறைக்கவில்லை, ஏனெனில் அவனது எண்ணங்களெல்லாம் வரப்போகும் மேல்கோட்டைப் பற்றிய யுக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாலேயே நிறைந்திருந்தபடியால் ஆன்மீக உணவு அவனுக்கு ஏராளமாகக் கிடைத்துவந்தது. தன்னுடைய வாழ்வே முன்னைவிட இப்போது அதிக முழுமை பெற்றது போலவும் தான் மணந்து கொண்டுவிட்டது போலவும் தன் அருகே யாரோ இருப்பது போலவும் தான் தனியாள் அன்று என்பது போலவும் அன்புக்குகந்த தோழி ஒருத்தி தனது வாழ்க்கைத் துணைவியாக இணங்கி விட்டது போலவும் அவனுக்குத் தோன்றியது – இந்தத் தோழி வேறு யாருமல்ல, கனமாகப் பஞ்சு வைத்து, என்றுங் கிழியாதபடி அழுத்தமான உள்துணி கொடுத்துத் தைத்த அதே மேல்கோட்டுத்தான்.

படிக்க :
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !
அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !

அவன் முன்னைக் காட்டிலும் அதிகக் குதூகலமாகவும், திட்டவட்டமான லட்சியத்தை நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி முன்னேறுகின்ற சுபாவத்தில் அதிக உறுதியுடனும் விளங்கினான். அவன் முகத்திலிருந்தும் செயல்களிலிருந்தும் ஐயப்பாடும் நிச்சயமின்மையும், சுருக்கமாகச் சொன்னால் அவன் சுபாவத்திலிருந்த உறுதியற்ற ஊசலாட்டமெல்லாம் தானாகவே மறைந்து போயிற்று. சிற்சில சமயம் அவன் விழிகளில் ஒளிசுடரும், மூளையில் மிகமிக அடாத, துணிகரம் நிறைந்த கருத்துகள் மின்வெட்டுப் போலப் பளிச்சிடும். அதாவது, மார்ட்டன் மென்மயிர்த் தோல் காலருக்கே ஆர்டர் கொடுத்து விட்டால் என்ன என்று. புது மேல்கோட்டைப் பற்றிய இந்தச் சிந்தனைகள் எல்லாம் அலுவலக வேலையில் அவன் மனம் அநேகமாக ஈடுபடாதவாறு அடித்து விட்டன. விளைவாக ஒரு முறை ஓர் ஆவணத்தை நகலெடுக்கையில் பிழை செய்ய இருந்து “ஐயையோ!” என்று உரக்கக் கத்தி, சிலுவைக் குறி இட்டுக்கொண்டான். மாதம் ஒரு முறையாவது பெத்ரோவிச்சைச் சென்று கண்டு, மேல் கோட்டைப் பற்றியும், துணியை எங்கே வாங்குவது நல்லது, எந்த நிறத்தில், என்ன விலையில் என்றெல்லாம் சர்ச்சை செய்து விட்டு, முகத்தில் ஓரளவு கவலை தென்பட்ட போதிலும், விரைவில் இதையெல்லாம் வாங்கி விடுவோம், மேல் கோட்டு தயாராகிவிடும் என்ற மனத் திருப்தியுடன் வீடு திரும்புவான்.

குறைந்தது ஓர் ஆண்டிற்காவது சாதாரணச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான்; அதாவது மாலை நேரத் தேநீரை நிறுத்த வேண்டும்; இரவில் மெழுகுவத்தி எரிப்பதைத் தவிர்க்க வேண்டும், தெருவில் போகும் போது, காலணி அடிப்பாகம் சீக்கிரம் தேய்ந்து விடாமலிருக்க கூழாங்கல்லோ தட்டைக்கல்லோ பாவிய இடங்களில் முடிந்த வரை மெதுவாக அடி வைத்து, நுனிக்காலால் நடப்பது போல நடக்க வேண்டும் …

உண்மையில் அவன் கனவு கண்டதை விட வெகு முன்னதாகவே எல்லாம் நடந்தேறியது. அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக இயக்குநர் அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு நாற்பதோ நாற்பத்தைந்தோ அல்ல, முழுதாக அறுபது ரூபிள் போனஸ் வழங்கினான்! இவனுக்கு மேல் கோட்டு தேவை என்பதை இயக்குநர் ஊகித்துக்கொண்டானா தற்செயலாக இப்படி நிகழ்ந்ததா, தெரியாது. எப்படியோ இந்த வகையில் மட்டுமே அதிகப்படியாக இருபது ரூபிள் கிடைத்து விட்டது. இது வேலையைத் துரிதப்படுத்தியது. மேற்கொண்டு இரண்டு மூன்று மாதங்கள் குறைப் பட்டினியாகக் கழித்தபின் அவனிடம் ஏறக்குறைய எண்பது ரூபிள் உண்மையாகவே சேர்ந்து விட்டது. சாதாரணமாக நிம்மதியாயிருக்கும் அவன் நெஞ்சு படபட வென்று அடித்துக்கொண்டது. மறுநாளே பெத்ரோவிச்சையும் அழைத்துக்கொண்டு கடைக்குப் போனான். மிக அருமையான துணி வாங்கினார்கள். இதில் வியப்பொன்றுமில்லை: ஆறு மாதங்களுக்கு மேலாக முன்யோசனை செய்து, மாதந்தவறாமல் கடைகளில் சுற்றிப் பார்த்து விலையை நிதானப்படுத்திக் கொண்ட விஷயமாயிற்றே இது! இதன் விளைவாகத்தான், பெத்ரோவிச்சே கூறினான்: “இதைக் காட்டிலும் உயர்வான துணி கிடையவே கிடையாது”. உள்ளே கொடுத்துத் தைப்பதற்குக் காலிக்கோதான் என்றாலும் நல்ல ரகத்தில் உறுதியான துணி வாங்கினார்கள். அது பட்டைவிட எவ்வளவோ மேல் என்றும் உண்மையாகவே பார்வைக்கு அதிக எடுப்பாகவும் மழமழப்பாகவும் இருக்கிறதென்றும் பெத்ரோவிச் சொன்னான். மார்ட்டன் மென்தோல் மெய்யாகவே கிராக்கி ஆனபடியால் அவர்கள் அதை வாங்காமல் அதற்குப் பதிலாக, கடைவீதியில் உள்ளவற்றுள் மிகமிக உயர்வான பூனைத் தோலை – தூரப் பார்வைக்கு மார்ட்டன் போலவே காணப்படும் – வாங்கிக் கொண்டார்கள். பெத்ரோவிச் இரண்டே வாரங்களில் தைத்து முடித்துவிட்டான் – அதுவும் ஏகப்பட்ட பஞ்சுப் பற்றை உள்ளே கொடுக்க வேண்டி இருந்தது, இல்லாவிடில் இன்னும் முன்னதாக முடித்திருப்பான். தன் வேலைக்குக் கூலியாகப் பன்னிரண்டு ரூபிள் வாங்கிக் கொண்டான் – கூலியை மேலும் குறைப்பதற்கு வழியே இல்லை; மெல்லிதாக இரட்டை மடிப்புக் கொடுத்து முழுதும் பட்டு நூலால் தைத்து, அப்புறம் ஒவ்வொரு மடிப்பையும் பற்களால் அழுத்திச் சீர்படுத்தி, மடிப்புக்களின் மேல் பலவிதத் தடங்களைப் பதிய வைத்திருந்தான் பெத்ரோவிச்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி !

240 ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயர் காலத்தில், உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் துவங்கங்கப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கடந்த 5 ஆண்டுகள் முன்னர் வரை பன்மடங்கு வளர்ந்து, பல்கிப் பெருகியது. ஆனால், பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து ஐந்தே ஆண்டுகளில், 140 தோல் பதனிடும் நிலையங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. (இஸ்லாமியர்களின், சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைத் தேடித் தேடி கபளீகரம் செய்கிறது காவிப் படை, மாடு வெட்டுவதைத் தடை செய்தது மூலம் இந்தத் தொழில் நேரடியாக பாதிப்புக்குள்ளானது)

வரலாற்றுப் பின்னணி:

1778-ல் கிழக்கிந்தியக் கம்பெனி கான்பூரில் அடியெடுத்து வைத்தபோது, தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலைகள் பில்க்ராம் எனும் நகரில் முகாமிட்டிருந்த அவர்கள், அவத் நவாப் அனுமதியுடன் தங்களது இராணுவ முகாமை கான்பூருக்கு மாற்றினர். அந்த ஊரின் தலித் சமூகத்தைச் சேர்ந்த கைவினைஞர்களைக் கொண்டு தங்கள் குதிரைகளுக்குச் சேணம், பிற தோல் பொருட்கள் தயாரிப்பும் செய்தனர்.

முகாமிட்ட 20 ஆண்டுகளில், அதாவது, 1798-க்குள், கான்பூர் மொத்தமும் வெள்ளையர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தோல் தொழிலும் செழித்து வளர்ந்தது. அதில் குறிப்பாக மஷ்க் எனப்படும் பொருள் (தண்ணீர் எடுத்துச் செல்லும் தோல் பை) தோல் பதனிடும் தொழிலை வளர்த்தது. பபூல் மரப்பட்டைகளை வைத்துத் தோலை பதனிட்டு வந்தனர். 1840ல், கான்பூரில் தயார் செய்யப்பட்ட சேணம், இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 1857 கலகத்துக்குப் பின், ராணி விக்டோரியாவின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொழில் கொழித்து வந்த சமயம், 1859-ல் கர்னல் ஜான் ஸ்டீவார்ட் என்பவரால் முதல், அரசு சேண மற்றும் கவச தொழிற்சாலை நிறுவப்பட்டது. விரைவிலேயே, கூப்பர் ஆலன், போன்ற நிறுவனங்களும் முளைத்தன.

1902-ல் முதல் தோல் தொழிற்சாலை, ஜஜ்மாவில் தொடங்கப்பட்டு வளர்ந்தது. தொடக்கத்தில் அவை அனைத்துமே இஸ்லாமியர்கள் வசம் இருந்தது. பிறர், துணி / மாவு மில் / சணல் போன்ற தொழிலைச் செய்துவந்தனர். இந்த அதிவேக வளர்ச்சி, கான்பூரை கிழக்கின் மான்செஸ்டராக மாற்றியது.

நையேர் ஜமால் என்பவர் தனது பரம்பரைத் தொழிலான தோல் பதனிடும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வந்தார். ஆனால் இன்றோ அவர் வேலையின்றி, தனது சக தொழில் செய்வோருடன் கூடி தம் தொழில் நசிந்து போனது பற்றி புலம்பி வருகிறார். 1947, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 13 பதனிடும் தொழிற்சாலைகளே இருந்தன. 1995ல் 175 ஆகவும், பின்னர் 402 ஆகவும் உயர்ந்தது. கடந்த 5 வருடங்களில் ஏற்பட்ட நசிவு காரணமாக, 260 தொழில் நிலையங்களே உள்ளதாக ஜமால் கூறுகிறார்.

விவாதப் பொருளும் அதன் விளைவுகளும் :

ப்ரயாக்ராஜில் 2019 கும்பமேளாவில், பக்தர்கள் கங்கையில் புனித நீராடுவர். தோல் தொழிற்சாலைக் கழிவுகள் கங்கையில் கலப்பது, விழாவை பாதிக்கும் என்று கூறி, மார்ச் 2019க்குள் 250 தொழிற்சாலைகளை மூட அரசு உத்தரவிட்டது. (கங்கை சுத்திகரிப்புக்கு ஒதுக்கிய நிதி பற்றிப் பேசினால் நாம் தேச விரோதி) வழக்கமாக, கும்பமேளா முடிந்த பிறகு மீண்டும் தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கப்படும். இம்முறை அவ்வாறு நடக்கவில்லை. இதற்கு மேல் கான்பூரில் தொழில் நடத்துவது சாத்தியமில்லையென, தோல் தொழில் முதலாளிகள் மேற்கு வங்கத்துக்குக் குடிபெயர்வது பற்றி யோசித்து வருகின்றனர். மேற்கு வங்க அரசு தோல் தொழில் நடத்த உகந்த கொள்கைகளைக் கொண்டுள்ளது என்றும், இழந்த வாழ்வை மீட்க அது உதவும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

தொழில் முடக்கத்தால் 3000 கோடி நட்டமடைந்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. கான்பூர், ஏற்றுமதி மூலம், 6000 கோடி வருவாய் ஈட்டி வந்தது. தொழிலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகப் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்லை, பழைய ஆர்டர்களையும் முடிக்க இயலவில்லை. ஹாங்காங்கில் நடைபெறும் தோல் கண்காட்சிக்கு மாதிரிகளை அனுப்பக்கூட முடியாத துயரமான சூழல் நிலவுகிறது. வருடத்துக்குப் 12000 கோடி வருவாய் ஈட்டித் தந்தது கான்பூர்! (இன்று அதில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் பிழைப்பதே பெரிய காரியமாகிவிட்டது)

தொடர்ந்து இயங்குவதில் மிகக் கடுமையான சிக்கலை எதிர்கொண்டு வரும், கான்பூரின் ஜஜ்மாவு நகர, தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தங்களிடம் இருக்கும் பதனிடப்படாத தோலை, உன்னாவோ நகரில், இயங்கும் நிலையில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்கின்றன. வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 முதல் 20 லட்சம் மதிப்புள்ள ட்ரம்கள், இயங்காமல் இருந்தால் கெட்டுப்போகும். அவை வங்கிக்கடன் மூலம் வாங்கப்பட்டவை. கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இவை ஏலம் போகும் நிலை ஏற்படும். (இப்படி பாடுபட்டுக் கட்டும் வங்கிக் கடன்கள் பெரு முதலாளிகளின் கைக்கிப் போய் சேர்ந்து இறுதியில் வராக்கடன்களாகி வங்கிகளையே திவாலாக்குகின்றன).

எஞ்சியுள்ள தோலை ஏலம் போட்டு வங்கிகள் தமக்குச் சேர வேண்டிய தொகையை எடுத்துக் கொள்கின்றன. ஜஜ்மாவு தொழிற்சாலைகள் மட்டும் ஏறத்தாழ 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தது. தொழில் நட்டமடைந்த நிலையில், அதில் வேலை செய்து வந்த பல தொழிலாளிகளும் பிழைப்புத் தேடிப் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். 1000 கோடி அளவிலான வெளி நாட்டு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. க்ரீஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் ஆர்டரை ரத்து செய்து விட்டன.

(ஆக, மோடியின் வெளி நாட்டுப் பயணங்களால் விளைந்த ‘நன்மை’ இவைதான் போலும்!)

தற்போதைய நிலை:

தோல் தொழில் முதலாளிகள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். வழக்கு மே 23, 2019 அன்று நீதிமன்றத்துக்கு வருவதாகத் தகவல் வந்தது. தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்படுவதை உறுதி செய்ய அம்மாநில அரசு, 225 தொழிற்சாலைகளின் மின் இணைப்பைத் துண்டித்தது. இதை எதிர்த்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையைப் பல மணி நேரம் மறித்துப் போராட்டம் செய்தனர். போராட்டக்காரர்கள் கல்லெறிவதைத் தடுக்கவும், கூட்டத்தைக் கலைக்கவும் போலீஸ் தடியடி நடத்தியது.

தொழிற்சாலை வளாகத்தில் பல குடும்பங்கள் வசித்து வருவதாகவும், ரமலான் மாதத்தில் இப்படியான நடவடிக்கை மிகுந்த சிரமத்தை தருமெனவும் கூறினர். திசம்பர் மாதம் முதல் 225 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. 28 ஆலைகள் பாதித் திறனுடன் செயல்பட்டு வருகின்றன. ஆலைக் கழிவுகள் கான்பூரிலிருந்து அலகாபாத் சென்று கங்கையில் கலக்க 3 நாட்கள் ஆகும். எனவே, ஷாஹி ஸ்னான் எனப்படும் கும்பமேளா புனித நீராடலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தாங்களே ஆலையை மூடிவிடுவதாகக் கூறுகின்றனர், ஆலை முதலாளிகள்.

தொழிற்சாலை நடத்துவோர், உ.பி ஜல் நிகாம், பசுமைத் தீர்ப்பாயம் ஆகியன இந்த சிக்கலை எதிர்கொள்கின்றன. இதில் பிரதான புகார் கங்கை அசுத்தமாவது தான். (2014 – 2019 கங்கையைத் தூய்மை செய்யும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யப்படாமல் ஊழல் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும்). அனைத்து ஆலைகளும் ஒரு நாளைக்கு 6 மில்லியன் லிட்டர் கழிவை வெளியேற்றுகிறது. முதலில் இந்தக் கழிவுகள் ஆலையில் சுத்தம் செய்யப்பட்டு, வஜித்பூரில் இருக்கும் பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கு (CTEP) அனுப்பப்படுகிறது. அதன் பின்னரே அது கங்கையில் கலக்கிறது.

தொழிற்சாலை நடத்துவோரும், ஜல் நிகாமும் இணைந்து நடத்துவது தான் CTEP. ஆலைகள் கழிவு சுத்திகரிப்புக்கு மாதாந்திர தொகை கொடுக்கின்றனர். அதன் மொத்தத் திறன் 36 மில்லியன் லிட்டர் ஆகும். இது உ.பி ஜல் நிகாம் எனப்படும் மாநில அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

தோல் தொழிற்சாலைகள் அதன் முழு திறன் அளவுக்குக் கழிவு நீரை வெளியேற்றாமல் அது எப்படி நிறைகிறது? என்று ஒரு கேள்வி வருகிறது. மற்ற ஆலைகள், குடியிருப்புப் பகுதியிலிருந்து வரும் கழிவுகள் அனைத்தும் இதில் கலந்தாலும், தோல் தொழிலே குறி வைத்து தாக்கப்படுகிறது.

அரசியல் விளையாட்டு :

2014 முதலே தோல் தொழில் நசியத் துவங்கியது. கான்பூரிலுள்ள தோல் அங்காடியான “பெக் பாக்” வெறிச்சோடிப் போனது. தோல் வியாபாரிகள் கழகத்தில் ப்ரெசிடெண்ட், அப்துல் ஹக், அவரது பாட்டனார் சொன்னதை நினைவு கூர்ந்தார். 1888-ல், பெக் பாகில், அவரது பாட்டனார் தோல் தொழிலைத் தொடங்கினார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ஹக் சொன்னது, “பெக் பாக் விரைவில் காணாமல் போகும்”. அது உண்மையாகி வருகிறது. ஏற்கெனவே பல கடைகள் துணிக்கடைகளாக மாறிவிட்டன. அந்தக் கழகத்தில் இருந்த 500 உறுப்பினர்களில் பாதிப் பேர் தொழிலை விட்டு நீங்கிவிட்டனர். மற்றவர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். வாரம் ஒருமுறைதான் தோல் வந்து இறங்குகிறது. விலையும், ஒரு லோடு 15 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக வீழ்ச்சியடைந்தது. பாதிக்குப் பாதி விலை வீழ்ந்த நிலையில், குறைந்தபட்சம் போட்ட முதல் கூட திரும்பப் பெற முடியாததால், தொழிலைத் தொடர்வது சாத்தியமில்லை என்கின்றனர்.

கான்பூர் வாசியான, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, டாக்டர். இம்ரான் ஐட்ரிஸ் கூறும்போது, இத்தொழிலில் பிரதானமாக இஸ்லாமியரே ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளிகள் பெரும்பாலானோர் தலித்துகள். தொடக்கம் முதலே, கால்நடைகளின் தோலைத் தொட்டு வேலை செய்ய இந்த இரு பிரிவினரே முன் வந்தனர். ஏனையோருக்கு மத ரீதியான ஒரு ‘புனிதத்துவம்’ இத்தோடு பிணைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட இந்த இரு பிரிவினரும் தமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என உறுதியாகத் தெரிந்த பா.ஜ.க., இத்தொழிலை நலிவடைய வைத்தது. அதற்கு கங்கையின் புனிதமும், பசு புனிதமும் முன்னிறுத்தப்பட்டது.

இதன் விளைவுகள் தொலைதூர கிராமங்களிலும் பிரதிபலிக்கின்றன. செத்த மாட்டுத் தோலை உறிப்பது தலித்துகள் தான். தோலை உறித்து எடுத்து வரும்போது தாக்கப்படுவோமென அஞ்சி அதை செய்யாமல் தவிர்க்கின்றனர். அதனால் நிவர்த்தியின்றி தொழில் முடங்கிவிட்டது.


மொழிபெயர்ப்பு:
பிரியா
நன்றி : சப்ரங் இந்தியா
new-democrats தளத்தில் வெளியான கட்டுரை.

கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? | ஃபரூக் அப்துல்லா

கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் (FATTY LIVER)  என்றால் என்ன ? – அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் !

பெரும்பாலும் நாற்பதுகளை நெருங்கும்/தாண்டிய ஆணோ, பெண்ணோ
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது தற்செயலாக தென்படும் “ஃபேட்டி லிவர்” என்ற கண்டுபிடிப்பு.

இப்போது இந்த நோய் இருபது முதல் முப்பது வயது மக்களுக்கும் தென்பட ஆரம்பித்திருக்கிறது.

உங்களது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்ட்டில் Fatty liver ( grade 1 /2) என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது Hepatomegaly with fatty changes என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

கல்லீரலில் அதிகமான கொழுப்பு தேங்குவதால் ஏற்படும் நிலை தான் இந்த “கல்லீரலில் கொழுப்பு ஏறிய நிலை” நிறைய பேருக்கு தற்செயல் கண்டுபிடிப்பாக தென்படுவதால் இது நார்மல் என்று ஆகிவிடாது.

நம் உடலுக்குள் நேரும் வளர் சிதை மாற்றக்குளறுபடியால் (metabolic syndrome) கல்லீரல் அடிவாங்குகிறது என்பதும். அது எழுப்பும் கூக்குரலாகவே இந்த நோயை கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக கல்லீரல் ஒரு கல்லுளி மங்கன் போன்ற உறுப்பு. எதற்கும் அசையாத ஒரு உறுப்பு. தான் உண்டு. தன் வேலையுண்டு என்று வேலை பார்க்கும்.

அமிலத்தன்மை கொண்ட மதுவைக்கூட செரிமானம் செய்யும் தன்மை கொண்டது.
கல்லைக்கூட செரிமானம் செய்யக்கூடியது. ஆனால் அப்படிப்பட்ட ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பையே அசைத்துப்பார்க்கக் கூடியது இந்த கல்லீரல் கொழுப்பு படியும் நோய்.

இரண்டு நிலைகளில் நம் கல்லீரலில் கொழுப்பு படியும்.

முதல் நிலை – மது அருந்துபவர்களுக்கு நேருவது.

இதை Alcoholic Fatty liver என்போம். தமிழகத்தின் முன் டாஸ்மாக் காலத்தில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் என்று மருத்துவர் கண்டறிந்தால் அவர் நிச்சயம் அவ்வப்போது மது அருந்துபவராகவே இருப்பார். மதுவால் கல்லீரலின் செல்கள் பழுதாகி அதில் குளறுபடி ஏற்பட்டு கொழுப்பு படியும் நிலை.

ஆனால் இதன் இரண்டாவது நிலை – மது அருந்தாதவர்களுக்கும் வர ஆரம்பித்து விட்டது.

இதை Non Alcoholic Fatty liver disease என்று தனிப்பெயரிட்டு அழைக்கிறோம். சமீபத்தில் என்னை உடல் பருமன் என்று சந்தித்த 10 வயது பாலகனுக்கு ஃபேட்டி லிவர் இருந்தது. மிரண்டுதான் போனேன்.

படிக்க :
ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை
♦ ஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் !

கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானதா? நல்லதா?

கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானது அன்று. நல்லதன்று, நிச்சயம் கெட்டது. இதை மட்டும் மனதில் நன்றாக இருத்திக்கொள்வோம்.

எதனால் கல்லீரலில் கொழுப்பு சேர வேண்டும்?

கல்லீரலின் பிரதான வேலைகளில் சில:

  • க்ளூகோசை கொழுப்பாக( triglyceride ) மாற்றி உடலில் சேமிப்பது.
  • லைபோ புரதங்களை உருவாக்குவது.

கல்லீரலை சமையல் கூடத்துடன் ஒப்பீடு செய்யுங்கள். ஒரு கிலோ மாவு கொடுத்தால் நமது அம்மா அதில் நமக்கு இட்லி சுட்டுத்தருவார். மீதமான மாவை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பார். ஒரு கிலோ மாவு மூன்று நாளைக்கு வரும் என்பது அம்மாவுக்கு தெரியும்.

அடுத்த மூன்று நாட்களுக்கு மாவு புதிதாக வாங்க தேவையில்லை. ஏனெனில் ஃபிரிட்ஜில் தான் மாவு இருக்கிறதே..!

ஆனால் அடுத்தநாள் அப்பா தெரியாமல் ஒரு கிலோ மாவு வாங்கி வந்துவிட்டால் அம்மா என்ன செய்வார்??

இந்த ஒரு கிலோ புது மாவை ஃபிரிட்ஜில் வைப்பார். ஆக அடுத்த ஆறு நாட்களுக்கு மாவு கைவசம் இருக்கும்.

இப்படி தேவைக்கு மீறி மாவு இருந்தும் தினமும் யாரோ ஒருவர் மாவு/ பரோட்டா என வாங்கி வந்துவிட்டால்.. நம் அம்மா என்ன தான் செய்வார் பாவம்..!!

ஃப்ரிட்ஜும் ஒரு அளவுக்கு மேல் இடம் கொள்ளாது. ஒரு கட்டத்துக்கு மேல் கிச்சனே அலங்கோலமாகி விடும். இந்த சினாரியோவை நமது கல்லீரலுக்கும் சிந்தித்து பாருங்கள்.

மாவுச்சத்து ஒரு வரைமுறைக்குள் இருந்தால் உடல் அதை சக்திக்கு உட்கொண்டுவிடும். அது வரம்பு மீறி சென்றால் நம் கல்லீரல் அதை கொழுப்பாக மாற்றி தொப்பையில், தொடை, இடுப்பு , மார்பு பகுதிகளில் சேமிக்கும்.

மீண்டும் மீண்டும் அதிக மாவுச்சத்து சாப்பிட்டால் , உண்ட வீட்டையே ரெண்டாக்கிய கதையாய் தன்னை உற்பத்தி செய்த கல்லீரலிலேயே கொழுப்பு படிந்து சேர ஆரம்பித்துவிடும். ஆக, ஃபேட்டி லிவருக்கு காரணம் மாவுச்சத்து தான். கொழுப்பு அல்ல.

உங்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைப்பார்த்தவுடன் நீங்கள் உண்ணும் மாமிசம் / முட்டை / பால் போன்றவற்றை நிறுத்தி விட்டு அதற்குப்பதிலாக அதிகமதிகம் சோறு / கோதுமை / மைதா என்று உண்பீர்களானால் நிச்சயம் உங்களது ஃபேட்டி லிவர் பிரச்சனை முற்றும்.

இதன் படிநிலைகள் (grades) பின்வருமாறு:

அல்ட்ரா சவுண்ட ஸ்கேன் என்பது நுண் ஒலி அலைகளை பீய்ச்சி அந்த அலைகள் நம் உள்ளுறுப்புகள் மேல் பட்டு பிரதிபலிக்கும் பிம்பத்தைக்கொண்டு உருவாக்கப்படும் வெள்ளை-சாம்பல் (white-grey) நிற படங்களை வைத்து உருவாக்குவது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில், கல்லீரல் தான் நடுநிலை நாயகம். அதாவது கல்லீரலின் பிம்பம் தான் நடுநிலை.

கல்லீரலை விட குறைவாக ஒலியை பிரதிபலிக்கும் பாகங்கள் hypoechogenic என்று அழைக்கப்படும். இவை கல்லீரலை விட அதிக பழுப்பு (more greyer than liver) நிறத்தில் இருக்கும்.

கல்லீரலை விட அதிகமாக ஒலியை பிரதிபலிக்கும் பாகங்கள் hyper echogenic என்று அழைக்கப்படும். இவை கல்லீரலை விட குறைந்த பழுப்பு நிறத்தில் (less greyer) இருக்கும்.

ஃபேட்டி லிவர் பிரச்சனையில் கொழுப்பு கல்லீரலில் படிவதால், இந்த கொழுப்பு படிந்துள்ள இடங்கள், நார்மல் கல்லீரலை விட அதிக ஒலி அலையை பிரதிபலிக்கும். அதனால் அந்த இடங்கள் நார்மல் கல்லீரலை விட பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும்.

இதில் Grade I என்பது கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்து காணப்படுவது. நார்மல் கல்லீரலில் கொழுப்பு படியாது. இது ஆரம்ப நிலை.

Grade II என்பது கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவதால், போர்டல் சிறை சரியாக புலப்படாமல் போகும் (portal vein) இது அடுத்த கட்டம்.

Grade III என்பது கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால் உதரவிதானம் (diaphragm) சரியாக புலப்படாது. இது முற்றிய நிலை.

படிக்க :
பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !
♦ 60 வகையான விசப் பாம்புக் கடி – ஒரே வகை நச்சுமுறிவு மருந்து !

இந்த கல்லீரிலில் படியும் கொழுப்பானது பின்னாளில் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி, மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு படியும் நோயாக மாறலாம். (NON ALCOHOLIC STEATO HEPATOSIS) இதன் செல்லப் பெயர் NASH.

மேலும் கல்லீரலில் ஒரு அளவுக்கு மேல் கொழுப்பு சேர்ந்தால் , கல்லீரல் விரிந்து விரிந்து ஒரு நிலைக்கு மேல் சுருங்க ஆரம்பித்து விடும். இது கல்லீரல் அழற்சி நோய் (cirrhosis) எனப்படும். இந்த அளவுக்கு முற்றிய நோயை ரிவர்ஸ் செய்ய இயலாது.

இது பின்னாளில் கல்லீரல் புற்றுநோய் (HEPATO CELLULAR CARCINOMA) அல்லது கல்லீரல் செயலிழப்பு (LIVER FAILURE) வரை இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.

நம்மை பயமுறுத்தும் செய்தி யாதெனில் மேலை நாடுகளில் இருபது வயதைக்கூட எட்டாத பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் செய்த ஆய்வுகளில் அவர்களில் பெரும்பாலானோருக்கு ஃபேட்டி லிவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் நம் நாட்டிலும் அதே அளவு பிரச்சனை இருக்கக்கூடும். ஆனால் யாரும் இங்கு பரிசோதனைக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என்பதால் இருக்கும் பிரச்சனை வெளியே தெரிவதில்லை.

நாமும் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், சாக்லேட், கேக் என்று ரீபைன்டு கார்போஹைட்ரேட்டுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். இதன் கேடுகளை அறிந்தால் நாம் அப்படி செய்யமாட்டோம் என்றே நினைக்கிறேன்…

குழந்தைகள் எதை உண்ண வேண்டும். எதை உண்ணக்கூடாது என்பதில் பெற்றோரின் கவனம் என்றும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஃபேட்டி லிவரை ரிவர்ஸ்/ சரி செய்ய இயலும்.. எப்படி??

ஃபேட்டி லிவர் எப்படி வந்தது என்பதை அறிந்தோம் அல்லவா. பிரச்சினை மாவுச்சத்து அடங்கிய குப்பை உணவுகளை அளவின்றி தின்றதால் வந்தது. அதை உடனே நிறுத்த வேண்டும். இனிப்பு சுவை தரும் அனைத்து பொருட்களையும் நிறுத்த வேண்டும்.

குறை மாவு நிறை கொழுப்பு உணவுக்கு மாறுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.

எப்படி????

1. மாவுச்சத்து குறைத்து உண்பதால் மேற்கொண்டு க்ளூகோஸ் கொழுப்பாக மாற்றம் அடைவது நின்று விடும்.

2. இந்த உணவு முறையில் உடல் கொழுப்பை எரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பும் கரைய ஆரம்பித்து காணாமல் போய் விடும்.

3. நாம் உணவிலேயே தேவையான அளவு கொலஸ்ட்ராலை கொடுத்து விடவதால் கல்லீரல் தினமும் கஷ்டப்பட்டு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. இது அதன் பணிச்சுமையை வெகுவாக குறைத்து விரைவில் நலம் பெற உந்து சக்தியாக அமையும்.

முடிவாக :

உங்களின் உறவினர்களில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் இருப்பின் அவருக்கு இந்த டயட்டை பரிந்துரை செய்யுங்கள்.

அவரது கல்லீரலை பிரச்சனை தீவரமாவதற்குள் காக்க ஒரு வாய்ப்பு வழங்குங்கள்.

ஃபேட்டி லிவர் பிரச்சனையை கொலஸ்ட்ரால் மாத்திரைகளாலோ வேறு எந்த குறுக்கு வழியிலோ சரி செய்ய இயலாது.

எதைத்தின்றதால் அது வந்ததோ அதை நிறுத்த வேண்டும்.

முடிவுரை :

முதல் இரண்டு நிலைகளில் இருக்கும் ஃபேட்டி லிவர் “குறை மாவு நிறை கொழுப்பு (பேலியோ)” உணவுமுறையால் கட்டுப்படும். இந்த முடிவுரையை தங்களுக்கு நல்அறிவுரையாக ஏற்பது அவரவர் தம் சுயவிருப்பம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை

அவர்கள் வருகிறார்கள்

வர்கள் உன் வீடு நோக்கித்தான் வருகிறார்கள்
அவர்கள் என் வீடு நோக்கித்தான் வருகிறார்கள்
அவர்கள் நம் வீடு நோக்கித்தான்
வந்துகொண்டிருக்கிறார்கள்

ஒவ்வொரு முறையும்
அதுதான் அவர்கள் கடைசி இலக்கு
என்று நம்புகிறீர்கள்
இல்லை
அவர்கள் ஒவ்வொரு அரணாக
தகர்த்துக்கொண்டு வருகிறார்கள்
கைபர் கணவாயின் வழியாக
முதல் ஊருடுவல் நிகழ்ந்தது
பிறகு அவர்கள் ஒருபோதும்
வீடு திரும்பவே இல்லை

அவர்கள் முதலில்
தேசத்தின் எல்லைகளை ரத்த ஆறுகளால் வரையறுத்தார்கள்
பிறகு வழிபாட்டிடங்களை இடித்தார்கள்
பிறகு கர்ப்பத்திலிருக்கும் சிசுவை
வாளால் கீறி எடுத்தார்கள்
பிறகு ஓவியக்கூடங்களில் ஓவியங்களை எரித்து
ஓவியனை நாடு கடத்தினார்கள்
பிறகு கலவரத்தில் ‘ மற்றவர்களின்’ கடைகளை உடைத்து
பொருள்களை திருடினார்கள்
பிறகு ‘ மற்ற ‘ பெண்களின் ஆடைகளை பலவந்தமாக களைந்தார்கள்
பிறகு சிந்தனையாளர்களை துப்பாக்கியால்
தெருவில் வைத்து சுட்டார்கள்
பிறகு நீதிக்கு போராடுகிறவர்களை
தேசவிரோதிகள் என சிறைக்கு அனுப்பினார்கள்
பிறகு மாட்டு மாமிசம் உண்பவர்களின்
மாமிசத்தை உண்டார்கள்
இப்போது கல்விக்கூடங்களில்
முகமூடியணிந்து ஆயுதங்களுடன் நுழைகிறார்கள்

ரத்தம் சிந்தும் புகைப்படங்கள்
பரவலாகக் காணக்கிடைக்கின்றன
நாசிகளின் புதிய குழந்தைகள்
கடைவாயில் கோரைப் பற்களுடன்
சிரிக்கும் புகைப்படங்களும் கிடைக்கின்றன
அவர்களுக்கான எதிர்ப்பின் காணொளிகளும்கூட
கிடைக்கின்றன
கோபத்தின் முகங்கள்
அனல் போல் தகிக்கின்றன

அவர்கள் இலக்கு கடைசியாக
உங்கள் வீடுகளுக்குள் நுழைவது
உங்கள் வீட்டை எடுத்துக்கொள்வது
உங்களை வரலாற்றின் விஷவாயுக்கூடங்களுக்கு
அனுப்புவது
உங்கள் குழந்தைகளை
உங்களிடமிருந்து பிரித்து அகதிகளாக்குவது
நீங்கள் என்றால் யார்?
அவர்களோடு இல்லாத எல்லோரும்தான்
அப்போது மதமோ இனமோ
ஒரு பொருட்டில்லை என்றாகிவிட்டிருக்கும்
நீதியின் பக்கம் நிற்கும்
எல்லோர் கரங்களையும்
பின்புறமாகப் பிணைத்து
தெருவில் நடத்திச் செல்வார்கள்
அல்லது நீங்கள் காணாமல் போனவர்களின்
புகைப்படங்களில் ஒரு படமாகிவிடுவீர்கள்

நம்புங்கள்
நான் உங்களை அச்சுறுத்தவில்லை
அஞ்சுவதால் எதுவும் மாறப்போவதில்லை

அவர்கள் எங்கெல்லாம் வர முடியாது என
நம்புகிறீர்களோ
அங்கெல்லாம் வருகிறார்கள்
எதெல்லாம் உங்கள் பாதுகாப்பென்று நினைக்கிறீர்களோ
அது எல்லாவற்றையும் உடைக்கிறார்கள்

முகமூடி அணிந்து தடியுடன் நிற்கும் ஒருவர்
ஆணா பெண்ணா என்று குழப்பமாக இருக்கிறது
தலை முடியும் உடலின் நளினமும்
அது பெண்ணாக இருக்கக்கூடும் என்ற
சாத்தியத்தை அளிக்கிறது
ஆனால் ஒரு பெண் அதைச் செய்யமாட்டாள் என
என் இந்திய மனம் நம்ப விரும்புகிறது
இந்த தேசம் குறித்த எல்லா நம்பிக்கைகளும்
இப்படித்தான் உடைகின்றன

அவர்கள் தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்
தெருவிளக்கின் வெளிச்சத்தில்
பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என
படித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer

கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !

சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் : வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35

கடை எண் : 182, 183

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …

புதிய வெளியீடுகள் :

ஜே.என்.யு: மக்கள் பல்கலைக்கழகம் என்ற பெருங்கனவு!

ட்டுரையாளர் சௌ.குணசேகரன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணை பேராசிரியராக பணியாற்றிவருகிறார். ஜே.என்.யு குறித்து வினவு தளத்துக்கு இவர் எழுதிய கட்டுரைத் தொடரினை கீழைக்காற்று வெளியீட்டகம் தனி நூலாக கொண்டு வந்திருக்கிறது.

ஜே.என்.யு. பல்கலையில் கல்வி கட்டண உயர்வு மற்றும் ஏற்கெனவே அமலில் இருந்த சில நடைமுறைகளை தன்னிச்சையாக ரத்து செய்த நடவடிக்கைகளை எதிர்த்த போராட்டமாக தொடங்கியது. உள்ளிருப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம், பாராளுமன்றம் நோக்கி பேரணி என 40 நாட்களை கடந்து மாணவர்களின் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது.

நாட்டிலுள்ள மற்ற பல்கலைகழகத்தின் வளாகச் சூழலிலிருந்து ஜே.என்.யு. பல்கலைக் கழகம் எவ்வாறெல்லாம் மாறுபட்டது? ஜே.என்.யு.வுக்கென்றே உள்ள தனிச்சிறப்பான சட்டவிதிகளின் (JNU Ordinance) அடிப்படை அம்சம் என்ன? மாணவர்களுக்கான தேர்தல் முறையில் கடைபிடிக்கப்படும் வெளிப்படைத்தன்மை, பிரதிநிதித்துவம் மற்றும் அதன் முன்னுதாரணமான அம்சங்கள் என்ன? தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வழக்கமாக கடைபிடிக்கப்படும் முறைகளிலிருந்து மாறுபட்டு மாணவர்கள் எவ்வாறு மதிப்பிடபட்டார்கள்? சுதந்திமாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும், கவுரமான முறையிலும் மாணவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்? என்பதை பல்வேறு நடைமுறை உண்மையிலிருந்து விளக்குகிறார்.

மேலும், இதுபோன்ற ஜே.என்.யு.வின் தனித்துவம் வாய்ந்த அதன் சிறப்பியல்புகளை சிதைக்கும் வகையில் தற்போதைய துணைவேந்தர் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டார், அதன் அரசியல் பிண்ணனி என்ன? பின்னிருந்து இயக்குபவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்டுகிறார், கட்டுரையாளர்.

பக்கங்கள்: 24
விலை: ரூ.20.00


சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் !
– ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்!

புதிய ஜனநாயகம் இதழில் ஏப்ரல், மே, நவம்பர் – 2018 மற்றும் ஜனவரி – 2019 மாதங்களில் தொடராக வெளியான கட்டுரை.

ஃபிரட் எங்ஸ்ட் உடனான இந்த நேர்முகத்தை ஒனுர்கன் உல்கர் 2017, ஏப்ரல் 7-ம் தேதியன்று பெய்ஜிங்கில் எடுத்துள்ளார். 1952-இல் பிறந்த ஃபிரட் எங்ஸ்ட், சீன பண்பாட்டுப் புரட்சியின்போது செங்காவலராக இருந்தவர். பின்னர் ஐந்து ஆண்டுகள் ஆலைத் தொழிலாளியாக சீனத்தில் பணியாற்றியவர். தற்பொழுது, பெய்ஜிங் பல்கலைகழகமொன்றில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

துருக்கியில் பிறந்த ஒனுர்கான் உல்கர், பீகிங் பல்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றதோடு, சீனத்தில் ஆய்வாளராகவும், ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.

எங்ஸ்ட்-ன் இந்த நேர்முகம், நேரடி அனுபவத்தின் அடிப்படையிலும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலும் சீனாவில் சோசலிசத்தை கட்டியமைப்பது பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த புரிதல்களை வழங்குகிறது.

பக்கங்கள் : 40
விலை: ரூ. 30.00


மறுபதிப்பு :

பிரடெரிக் எங்கெல்ஸ் : – வி.இ.லெனின்.

வம்பர் – 28, 2019 – பிரெடெரிக் எங்கெல்ஸின் இருநூறாவது பிறந்த தினம். இவ்வாண்டை சிறப்பாக்கும் வகையில், எங்கெல்சை அரசியல்ரீதியாக அறிமுகம் செய்யும் லெனின் எழுதியுள்ள இந்த நூலை மறுபதிப்பு செய்திருக்கிறது, கீழைக்காற்று வெளியீட்டகம்.

இந்நூலில், தொழிலாளி வர்க்கத்துக்கு பிரடெரிக் எங்கெல்ஸ் வகுத்தளித்த விடுதலை தத்துவத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கிறார், லெனின். தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளவும் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளவும் உதவி செய்கிறது.

கார்ல் மார்க்சின் இணையபிரியா நண்பராக மட்டுமல்ல, கம்யூனிசத் தத்துவத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலமைந்த அறிவியலாக, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராயுதமாக, மார்க்சுடன் இணைந்து வளர்த்தெடுத்தவர் பிரெடெரிக் எங்கெல்ஸ்.

”தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் அறிவியலை நிலைநாட்டினார்கள். ஆகவேதான், எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும்.” என்கிறார் லெனின்.

பக்கங்கள்: 16
விலை: ரூ.15.00


 

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

0

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி குண்டர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில், கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

***

திருச்சியில் டெல்லி JNU மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஏபிவிபி குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி 08.01.2020 அன்று பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்லூரி வளாகத்துக்குள் இருந்த தந்தை பெரியார் சிலை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் “ABVP – சோலிய முடி! RSS – சோலிய முடி! BJP – சோலிய முடி!” என்று முழக்கமிட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

***

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய யோகேந்திரா தலைமையிலான  ABVP குண்டர்களை கைது செய்யக்கோரி, 07.01.2020 அன்று, கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலில் போராட்டம் நடத்தினர். மேலும் இப்போராட்டத்தின்போது ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்குவோம் என்றும், ABVP குண்டர்களை கைது செய்யக்கோரியும் முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கும்பகோணம். தொடர்புக்கு : 89408 75070.