Tuesday, June 30, 2026
முகப்பு பதிவு பக்கம் 305

நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்

லகின் எல்லா நாடுகளிலும் அரசதிகாரம் உருவான போது அதனை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களும் உருவாகும். இதுவே உலக வரலாறு காட்டும் உண்மையாகும். அரசதிகாரம் மக்களை ஒடுக்கிய காலங்களில் அதனை நியாயப்படுத்தும் சாத்திரங்களும் எழுதப்படும். பெரும்பாலான மக்கள் எழுத்தறிவற்றவர்களாக வாழும் காலங்களில் எழுதப்பட்ட சாத்திரங்கள் அவர்களது சிந்தனைத் திறனை அடிமைப்படுத்தி தாங்கள் அடிமையென்று தங்களையே ஏற்கச் செய்யும் இந்தியத் துணைக் கண்டத்தில் அவ்வாறு உருவான சித்தாந்தத்தைத் தான் நாம் பார்ப்பனியம் என்று அழைக்கின்றோம். பார்ப்பனியம் என்பது ஒரு கருத்தியல் வன்முறையாகும். பிறப்பின் வழியாகவே ஏனைய மக்கள் திரள்களை இழிந்தவர்கள் என்று அது அடையாளம் காட்டுவதையே நாம் வன்முறை என்கிறோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் அறத்தினைப் பார்ப்பனியம் ஒரு போதும் ஏற்க இயலாது. பிறப்பினால் பார்ப்பனர் ஆனவர்கள் இன்னமும் தங்களை ஆகமேல்சாதி என்றே உணருகின்றனர். நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் மறுபக்கமானது மற்றவர்கள் இழிந்தவர்கள் என்பதாகும். நாடு விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுக் காலமான பின்னரும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இந்த உணர்வினை வெளிப்படுத்த அவர்கள் தயங்குவதில்லை.

தங்களுக்கு மட்டுமே உரிய வடமொழி, வேதம் ஆகியன அறிவார்ந்த விவாதங்களுக்கு அப்பாற்பட்டன என்பதும் வட்டார மொழிகளை நிராகரித்து சமஸ்கிருதத்தை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதும் கோயில்களின் தலைமையும், மற்ற சாதியாரின் சடங்கியல் தலைமையும் தங்களுக்கேயுரியன எனச் சாதிப்பதும் பார்ப்பனியத்தின் வேசங்களாகும்.

ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும்.

அண்மைக் காலமாக காஞ்சி சங்கராச்சாரியாரும் அவரைக் கொண்டு கலாச்சார அரசியல் நடத்துபவர்களும் இந்து என்ற கூட்டுக்குள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். கிறித்தவரல்லாத, இசுலாமியரல்லாத எல்லா மக்களுக்கும் இவரே ஆன்மீகத்தலைவர் என்பது போல அவருக்கு ‘முடிசூட்டி’ பெருந்திரளான தமிழர்களை ஏமாற்ற முற்படுகின்றனர். அவர்களது மாயாவாத சித்தாந்தம் எல்லா அரசியல், சமூக அதிகாரங்களையும் மீண்டும் பார்ப்பனிய வன்முறை வலைக்குள் கொண்டு வரப்பார்க்கின்றது. சைவம், வைணவம், நாட்டார் தெய்வங்கள் ஆகிய அனைத்தையும் பார்ப்பனியம் தின்று தீர்க்கப் பார்க்கிறது. இந்தச் சூழ்நிலையில் சமூக வரலாற்றுக் கல்வி ஒன்றே நம்மைக் காப்பாற்றும்.

நூலாசிரியர் தொ.பரமசிவன்.

பிறப்பு வழிப்பட்ட பார்ப்பனியத்தினை மட்டும் எதிர்ப்பதில்லை இந்த வெளியீட்டின் நோக்கம். பார்ப்பனியக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட பார்ப்பனர் அல்லாதவர்களும் மறுப்புக்குரியவர்கள். ஆராய்ச்சியாளர்கள் இவர்களைப் புதிய பார்ப்பனர்கள் (Neo-Brahmins) என அழைக்கின்றனர். நிகழ்காலத்தில் எல்லாவகையான ஊடகங்களையும் பார்ப்பனியக்கருத்தியல் தனதாக்கிக் கொண்டது. பார்ப்பனியம் என்பது ஒரு பண்பாட்டு வல்லாண்மை என்ற கருத்தை முன் வைத்தே இந்த வெளியீடு உண்மையான சனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கின்றது. (நூலின் முன்னுரையிலிருந்து…)

பார்ப்பன எதிர்ப்புணர்வும் சீர்திருத்த உணர்வும் கொண்ட அறிஞர்களும் செயல் வீரர்களும் இந்தியாவில் பல முறை தோன்றியுள்ளனர். புத்தர் தொடங்கி பூலே வரை இவர்களது எண்ணிக்கை ஏராளம். அவர்களில் யாரும் பெறாத வெற்றியைப் பெரியார் மாத்திரமே பெற்றார். அதுவும் தம் வாழ்க்கையிலேயே பெற்றார். … தூங்காமை, கல்வி (பட்டறிவு), துணிவுடைமை அனைத்துக்கும் மேலாகத் தன்னலமின்மை ஆகிய பண்புகள் பெரியாரை மாமனிதராக ஆக்கின. (நூலிலிருந்து பக்.30-31)

படிக்க:
தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !
சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !

பார்ப்பனியம் எங்கே இருக்கிறது, அது செத்துப் போய்விட்டது’, பார்ப்பனர்கள் மாறிப் போய்விட்டார்கள்’, இப்படியொரு வாதத்தைப் பார்ப்பனரல்லாத படித்த நண்பர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம். இவர்கள் இந்த முடிவுக்கு எப்படி வந்தனர்? வேறு எப்படி? வழக்கம் போல பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டுத்தான்.

பூணூல், குடுமி, பஞ்சகச்சம் வைத்துக்கட்டுதல், தீண்டாமை, புலால் உண்ணாமை முதலிய பழக்கங்களை பார்ப்பனர்கள் விட்டுவிட்டார்கள் என்பது உண்மைதான். இவையெல்லாம் பார்ப்பனியத்தின் முகம் மட்டுமே. எவையெல்லாம் பார்ப்பனியத்தின் உயிர் என்பதனைக் கீழ்க்காணுமாறு அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். ஏனென்றால் பார்ப்பனியம் என்பது வெளி ஆச்சாரம் மட்டுமல்ல. அது கருத்தியல் (ideology) ஆகும். அது மட்டுமன்று, அது பார்ப்பனரல்லாதார் மீதான ஒடுக்குமுறைக் கருத்தியலும் ஆகும்.

தமிழ்நாடு பார்ப்பனர்1. பிறவியினால் ஒருவனை மேல், கீழ் என அடையாளம் காணுவது, நினைப்பது, காட்டுவது.

2. கடுமையான உடல் உழைப்புள்ள தொழில்களைத் தாழ்வாக எண்ணுவது, உடல் உழைப்புத் தொழில்களைத் தவிர்ப்பது.

3. ஒவ்வொருவரையும் குலத் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தி அதிலிருந்து வெளியே வராமல் இருக்கச் செய்வது. வெகுஜனப் பத்திரிக்கைகளில் வரும் பார்ப்பனக் கருத்தாக்கங்களை நம்பி அவற்றினைப் பிரச்சாரம் செய்வது (குறிப்பாக சங்கராச்சாரியார், அஹிம்சை, கணபதி ஹோமம், இந்து மதம் முதலிய சொற்களில் நம்பிக்கை வைப்பது).

பார்ப்பனியம் நேற்று வரை வேதத்தின் புனிதம், புராணக் கதைகள், சடங்குகள் ஆசாரங்கள் ஆகியவற்றின் மூலம் தனக்கு வேண்டிய கருத்துக்களை மற்றவர்கள் மூளைக்குள் திணித்தது. இன்றும் அதே கருத்தாக்கங்களை மறைமுகமாகப் பத்திரிகைகள் மூலம் மற்றவர்கள் மூளையில் திணித்து வருகிறது.

மேற்குறித்த வகையான கருத்துக்களை அறிந்தே கடைப்பிடித்தும். ஏமாறும் தமிழர்களை நாம் பார்ப்பன அடிவருடிகள் என்று அழைப்பதே பொருத்தமானது. இவர்கள் பார்ப்பனியம் என்ற ஒடுக்குமுறைக் கருத்தியலுக்குப் பலியாகிப் போனவர்கள்.  (நூலிலிருந்து பக்.35)

நூல் : இதுதான் பார்ப்பனியம்
ஆசிரியர் : தொ. பரமசிவன்

வெளியீடு : மணி பதிப்பகம்,
29-அ, யாதவர் கீழத்தெரு,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627 002.
தொலைபேசி எண் : 0462 – 2560083

பக்கங்கள்: 40
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் பகுதி கரிமேடு. காங்கிரிட் காடுகள் என்றழைக்கப்படும் சென்னை மாநகரத்தின் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குத் தேவையான செங்கற்களை சப்ளை செய்யும் முதன்மைப் பகுதி.

70 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளை அதிபர்களையும் நான்காம் தலைமுறை வியாபாரிகளையும் உருவாக்கிய இடம். தற்போதைய கட்டுமானங்கள் ஹாலோ பிளாக் கட்டிடங்களுக்கு மாறிவிட்டதாலும், ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குப் பிறகு ரியல் எஸ்டேட் மற்றும் சிறு குறுந் தொழில்கள் நசிந்து போனதால் கட்டுமானப் பணிகள் குறைந்து, வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டு, மேலும் பொருளாதார தேக்கத்தில் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.

செங்கல் சூளை நேரடி வியாபாரம் படுத்து விட்டதால், தள்ளுவண்டி காய்கறி வியாபாரம் போல், சாலையோரங்களில் செங்கற்களைக் காட்சிப்படுத்துகின்றனர். தேவைப்படுவோர் வாங்கிச் செல்ல, எப்போதும் தயார் நிலையில் செங்கற்களுடன் லாரியில் காத்திருக்கின்றனர். இப்படி வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருந்தத் தொழிலாளர்களில் சங்கர் நம்மிடம் பேசும்போது,

சங்கர்

“இப்போ இருக்குற கோயம்பேடு பஸ் நிலையம், பக்கத்தில் இருக்குற காய்கறி மார்கெட், மெட்ரோ ஸ்டேசன் எல்லாம் செங்கற் சூளைகளாக இருந்த இடங்கள். அப்படியே 20 கி.மீ நீளத்திற்கு திருமழிசை வரை நூற்றுக்கணக்கான சூளைகள் ஆண்டுதோறும் எரிந்து கொண்டிருக்கும். 13 லட்சம் பச்சைக் கற்களை ஒரு சுற்றில் வேகவைத்து வெளித்தள்ளும் பிரம்மாண்டமான சூளைகள் இங்கு பல இருந்தன. இவை காலப்போக்கில் அழிந்துவிட்டன. இப்போது செங்கல் தேவையென்றால் சென்னையை விட்டு 150 கி.மீ தூரம் சென்றால்தான் வாங்க முடியும். இங்கு மிச்சமிருந்த சூளை முதலாளிகளும் ஆந்திர எல்லையோரம் போய்விட்டார்கள்.

குறைந்தது ஒரு சூளைக்கு 15 ஏக்கர் நிலம் தேவை. இந்த இடத்தில் 50 ஏக்கர் பரப்பளவுடைய பெரிய சூளைகளெல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. நூறு அடி சிமிழ் (புகைப்போக்கி) கொண்ட ஒரு சூளைக்கு 16 கட்டைகள் (அறை) இருக்கும். ஒரு கட்டையில் 80 ஆயிரம் கற்கள் வரை வேகும்.

பல நூறு தொழிலாளர்களைக் கொண்டு பச்சைக் கற்களை அறுத்து வெயிலில் உலர வைத்து சூளையில் வைப்பார்கள். இப்போது ஒரு செங்கலின் விலை ரூ.7.30 லிருந்து 7.80 வரை போகிறது. முக்கால் அடி நீளமும் 4 இன்ஞ் அகலமும் 2 கிலோ எடையும் இருந்தால், அது தரமான செங்கல். அதிலும் பல இரகங்கள் உண்டு. மண் வளத்தைப் பொருத்து செம்பருத்திப் பூ நிறத்தில் சிறந்த கல்லும், உப்பேறிய மண்ணில் வெளுத்துப்போன கல்லும் கிடைக்கும்.

இந்த இடத்தில் ஒன்று முதல் 3 வண்டிகள் வரை வியாபாரம் செய்யும் முதலாளிகள் இருக்கிறார்கள். இங்கு சராசரியாக 40 லாரிகள் வரை தயாராக நிற்கும். ஒரு லாரிக்கு எடை எண்ணிக்கையைப் பொருத்து 3 முதல் 5 தொழிலாளர்கள் வரை தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். 3,000 கற்களை அடுக்கும் லாரியிலிருந்து 12 ஆயிரம் கற்களை அடுக்கும் டிம்பர் வரை இங்கு உண்டு.

படிக்க :
♦ கை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு…! பிச்சை எடுக்க வச்சிடாத..!”
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

லாரி முதலாளிகள் ஒரு கல்லை 6 ரூபாய்க்கு வாங்கி, 7.30க்கு விற்கிறார்கள். சராசரியாக கல்லுக்கு 1லிருந்து 1.50 வரை விற்பார்கள். காரணம், எடுத்து வரும் வண்டிக்கான டீசல் செலவு, வண்டித் தேய்மானம், லேபர் கூலி இப்படி போக முதலாளிக்கு கல்லுக்கு 30 காசு நிற்கும். அதற்கு முன் 50 காசு வரை லாபம் பார்த்தார்கள். இப்போது லாபம் வேண்டாம், வண்டி வாடகை வந்தால் போதும் என்று வந்த விலைக்கே விற்கிறார்கள். அப்படியும் வியாபாரம் இல்லை. ஒரு லாரி கல் ஓட சமயத்தில் 2 நாள்கூட ஆகும். அப்போது மேல் செலவு இரட்டிப்பாகி நஷ்டம் ஏற்படும். இதனால் பல முதலாளிகள் தொழிலை விட்டே போய் விட்டார்கள். இதை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பாடு பெரும் திண்டாட்டமாகி விட்டது.

எப்போதும் தயார் நிலையில் இருக்கும் லாரிகள்.

விற்கும் வரை லாரியிலேயே காத்திருப்போம். அதுவரை கைச்செலவு, சாப்பாட்டுச் செலவுக்கு அட்வான்சாக வாங்குவதால், மொத்தத்தில் கூலி குறைவாகத்தான் கிடைக்கும். சில நேரம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் லாரிக்கு கீழேயே சுருண்டு படுத்துக் கிடப்போம்.

மழைக்காலம் வந்தால் இன்னும் கொடுமை. ஒதுங்கி நிற்க இடம் இருக்காது. டீ குடிக்க காசு இருக்காது. வெடவெடன்னு குளிரு வேற. இப்படித்தான் எங்க பொழப்பு போகுது. நகரத்தில் இருக்கிறோம். ஆனால், நரகத்தில் வாழ்கிறோம்.

***

பெருமாள், லாரி ஓட்டுநர்

பெருமாள், லாரி ஓட்டுநர்

டிரைவர் வேலை, வருமானம், வாழ்க்கைப் பற்றிய நம்முடைய கேள்விக்கு எரிச்சல் அடைந்தார்.

என்ன செய்யிறது கடன் வாங்கி, கடன் வாங்கி காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. போற நிலைமைய பார்த்தா, வாங்குன கடன்காரங்களுக்கு பதில் சொல்லவே முடியல. மானத்துக்குப் பயந்து கடைசியா தூக்கு மாட்டிக்கொள்ள வேண்டியதுதான் என்றார், 35 வயதே நிரம்பிய இளம் தொழிலாளி.

அங்கிருந்த தொழிலாளிகள் பலரும், தங்கள் குழந்தைகளுக்கு கஞ்சிகூட ஊற்ற முடியல, அதுக்கே கடன் வாங்க வேண்டிய நிலைமையை எண்ணி உடைந்துப் போகிறார்கள். ரேசன் அரிசி சோத்தக்கூட நிம்மதியாக சாப்பிட முடியவில்லை என்று நம்மிடம் முறையிடுகிறார்கள்.

***

லாரி பார்கிங் கட்டணம் வசூலிப்பவர்

லாரி பார்கிங் கட்டணம் வசூலிப்பவர்

கட்டுமானப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிற சந்தை மாதிரி. எல்லா பொருட்களையும் லாரியில் வைத்துக் கொண்டு வெயிட் பண்ணுவார்கள். வாடிக்கையாளர்கள் வந்தால் வீட்டிற்கே சென்று சப்ளை செய்வார்கள். 24 மணி நேரமும் இங்கு வந்து பொருட்களை வாங்கலாம்.

கம்பி, எம்சான்ட் மணல், பல இரக செங்கற்கல் மற்றும் அதற்குத் தேவையான லேபர்களும் இங்கு கிடைப்பார்கள். பிளெம்பர், கொத்தனார், எலெக்ட்ரீஷியன், டைல்ஸ் பதிப்பவர் என அனைவரும் இங்கு வந்து காத்திருப்பார்கள். வீட்டிற்குச் சென்றாலும் ஃபோன் பண்ணி கூப்பிட்டால் அடுத்த நிமிடம் வந்து நிற்பார்கள்.

இங்கு வந்து நிற்கும் லாரிகளுக்கான பார்க்கிங் கட்டணம் நாளுக்கு ரூ. 100. முன்பெல்லாம் அதிக நேரம் நிற்காது. எப்போதும் ஓட்டத்தில் இருக்கும். ஒரு நாளைக்கு 3 லோடுகூட அடிப்பார்கள். ஆனால், இப்போது 1 லோடுக்கு 3 நாட்கள் கூட சீந்துவார் இல்லாமல் காத்திருக்கிறார்கள்.

வண்டிக்கான பார்க்கிங் பணம் கூட கொடுக்க முடியாமல் கடன் வைக்கிறார்கள். அவங்க முறையா கொடுத்தாத்தான் எங்களுக்கும் வாழ்க்கை, இல்லேன்னா திண்டாட்டம்தான். பக்கத்தில் கோயம்பேடு காய்மார்கெட் இருப்பதால், அந்த லாரிகளும் இங்கே நிறுத்துவாங்க, ஏதோ சமாளிக்கிறோம். வேலை செய்யிற தொழிலாளிகளையும் கொறை சொல்ல முடியாது, பணம் இருந்தால் டீ, டிபன் என எல்லாம் வாங்கித் தருவார்கள். இப்போது அவர்களே நொந்து போய் கிடக்கிறார்கள், என்ன செய்ய? என்கிறார் சகத் தொழிலாளியாக.

படிக்க :
♦ என் உருவ பொம்மையை எரியுங்கள் ! பாசிச மோடியின் நீலிக் கண்ணீர் | கேலிச்சித்திரம்
♦ மோடியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ! என்ன செய்யப் போகிறோம் ? PRPC 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! – செய்தி | படங்கள்

***

இரவு பகல் பாராமல், வாடிக்கையாளர் கூப்பிடும் நேரத்திற்கு செல்ல வேண்டுமானால், கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

சென்னை நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள செங்கல், மணல் லாரிகள்.

விழுப்புரம் அருகில் உள்ள கிராமத்திலிருந்து சென்னையில் தங்கி வேலை செய்யும் தொழிலாளி அய்யனார்.

வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகள்..

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !

மீபத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் பேசப்பட்ட பஞ்சமி நில விவகாரம் தமிழகத்தில் விவாதத்தைக் கிளப்பியது. திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டிருப்பதாக வெடியைக் கொளுத்திப்போட்டார் பா.ம.க. ராமதாஸ். அவை குறித்த வாதப் பிரதிவாதங்கள் பேசப்பட்டு அடங்கியும்போனது. ஆனால், தமிழகமெங்கும் பஞ்சமி நில மீட்புக்கான போராட்டமோ, தாழ்த்தப்பட்ட சாதி சங்கங்கள் மட்டுமே பேசக்கூடிய, நிலத்தை இழந்து பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மட்டுமே நின்று மல்லுக்கட்டக்கூடிய தனிநபர் பிரச்சினையாக சுருக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.

இதற்கு ஓர் எடுப்பான உதாரணம்தான், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கெண்டையனஅள்ளி காவக்காடு கிராமத்தில் நடைபெற்றுவரும் பஞ்சமி நிலமீட்புக்கான போராட்டம். இக்கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கென வழங்கப்பட்டிருந்த பஞ்சமி நிலத்தை முறைகேடாக அபகரித்துக்கொண்டதோடு, அந்நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்து அக்கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையையே முடக்கியிருக்கின்றனர், ஆதிக்க சாதிவெறியர்கள். முரசொலி அலுவலகம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆதாரங்களை அள்ளிப்போட்டு, மீடியாக்களில் மல்லுக்கட்டிய பா.ம.க. ராமதாசுவின் வன்னிய சொந்தங்கள்தான் காவக்காடு கிராமத்தில் பஞ்சமி நிலத்தை அபகரித்திருக்கிறார்கள்.

ஜேம்ஸ் ஹென்றி அப்பெர்லெய் த்ரெமென்ஹீர். 1891-ல் செங்கல்பட்டு ஆட்சியராக பணியாற்றிய சமயத்தில், பஞ்சமி நில சட்டத்திற்கான முன்வரைவை முன்வைத்தவர்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த 1892-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் பஞ்சமி நில சட்டம். இச்சட்டத்தின்படி, அரசின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. இந்நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்யலாம், வீடு கட்டி வசிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு யாரிடமும் விற்கவோ, அடமானம் வைக்கவோ குத்தகைக்கு விடவோ முடியாது. பத்தாண்டுகளுக்கு பிறகு விற்கவோ, அடமானம் வைக்கவோ குத்தகைக்குவிடவோ விரும்பினால், தாழ்த்தப்பட்ட பிரிவினர் (பட்டியல் சாதியினர்) என அரசால் வரையறுக்கப்பட்டுள்ள சாதியினரிடம் மட்டும்தான் பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும் என்கிறது இச்சட்டம். இதனை மீறி வேறு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு நிலவுரிமை மாற்றப்பட்டால், அம்மாற்றம் செல்லாது என்றும் நட்டஈடின்றி அந்நிலங்களை கையகப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது என்கிறது, இச்சட்டம். 1950-க்கு பிறகும் இதே நிலை தொடர்ந்ததோடு மட்டுமின்றி, மேலும் விரிவுபடுத்தப்பட்டு சேரிநத்தம், வெட்டியான் மானியம், பூமிதானம், ஜமீன் ஒழிப்பு  உள்ளிட்ட 14-பிரிவுகளின் கீழ் நிலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  இவ்வாறு விநியோகிக்கப்பட்ட நிலங்கள், வருவாய்த்துறையினரின் பதிவேடுகளில் AD (Adi Dravidar) Condition Land என்ற வகையில் தொடர்ந்து பராமரித்து வந்திருக்கின்றனர். காலப்போக்கில், இவ்வகையின் கீழ் விநியோகிக்கப்பட்ட நிலங்கள் வருவாய்த்துறை அதிகாரிகள், பத்திர பதிவுத்துறை அதிகாரிகளின் துணையோடு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களின் கைகளுக்கு பட்டா மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய முறைகேடுதான், கெண்டையனஅள்ளி காவக்காடு கிராமத்திலும் நடைபெற்றிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இக்கிராமத்தில் கொடுவாளன் என்கிற சின்ன பையன் என்பவருக்கு சர்வே எண்.187 இல் 10.18 ஏக்கர் நிலம் பஞ்சமி நில வகையின் கீழ் வழங்கப்பட்டிருக்கிறது. தமக்கு பாத்தியப்பட்ட அந்நிலத்தில் அவர் குடிசையொன்றை அமைத்து அங்கேயே விவசாயமும் செய்து வந்திருக்கிறார்.

பஞ்சமி நிலம் என்ற வகைப் பிரிவில் அமைந்துள்ள இந்நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் செட்டியார் வருவாய்த்துறை அதிகாரிகளை சரிகட்டி தமது பெயரில் (1991-இல்) போலியான பட்டா பெற்றுள்ளார். பின்னர், இவரிடமிருந்து வன்னிய சாதியைச் சேர்ந்த சாராய வியாபாரி – குமாரசாமி என்பவரின் பெயருக்கு பட்டா மாற்றப்பட்டிருக்கிறது.

சின்ன பையன் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து ஆண்டு அனுபவித்து வந்த பஞ்சமி நிலத்துக்கு வன்னிய சாதியைச் சேர்ந்த குமாரசாமி உரிமை கோரியதோடு மட்டுமன்றி, ரவுடிகளை வைத்து அக்குடும்பத்தாரை அப்புறப்படுத்தவும் முயற்சித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் தாக்கி கொலைமிரட்டல் விடுப்பதும்; பாத்திரங்களை வீசியெறிந்து அராஜகம் செய்வதும்; இதன் உச்சகட்டமாக குடிசைக்கு தீவைப்பதும் என சாராய வியாபாரி – குமாரசாமி வகையறா தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், 26. 10.1991 -இல் சின்ன பையன் இறந்த பிறகு, அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்த சமாதியையும் அடித்து நொறுக்கியதோடு, மண்ணில் புதைந்திருந்த சின்ன பையனின் எலும்புக்கூட்டையும் தோண்டியெடுத்து வீசியெறிந்துள்ளார், குமாரசாமி.

குமாரசாமி கும்பலின் தொடர் வன்முறைகளை எதிர்கொள்ள முடியாமல், ”நிலம் போனாலும் போய்த்தொலையட்டும் உயிரையாவது காப்பாற்றிக்கொள்வோம்” என்று, 2015-ஆம் ஆண்டு வாக்கில், அக்கிராமத்தை விட்டே இடம்பெயர்ந்து, மேட்டூர் வீரக்கல் பகுதிக்கு சென்றுவிட்டனர், சின்ன பையனின் குடும்பத்தினர்.

அவர்களை விரட்டிவிட்ட கையோடு, சின்னப் பையனுக்குச் சொந்தமான நிலத்தை மட்டுமின்றி அவரது நிலத்தையொட்டி அமைந்திருந்த பொதுப்பயன்பாட்டிற்கான பாதையையும் மறித்து வேலி அமைத்துள்ளார், குமாரசாமி.

குமாரசாமி உரிமை கோரும் அந்த 10 சென்ட் இடம் சின்ன பையனுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம்தான் என்ற போதிலும், அவரது நிலத்தின் ஒரு பகுதியின் வழியாகத்தான் மலை கிராமமான மெச்சேரியிலிருந்து பென்னாகரம் செல்லும் பிரதான சாலைக்கு செல்ல முடியும். மேலும், ஆடு – மாடுகளை மேய்ச்சலுக்காக மலைப்பகுதிக்கு ஓட்டிச்செல்வதற்கும்; விவசாய வேலை கிடைக்காத நாட்களில் மலைப்பகுதியில் விறகு பொறுக்க போவதற்கும் சின்ன பையனுக்குச் சொந்தமான நிலத்தையொட்டிய பொதுப்பாதையைக் கடந்துதான் அக்கிராம மக்கள் செல்ல வேண்டும். வருவாய்த்துறை பதிவேடுகளில் ஊர் பொதுப்பயன்பாட்டிற்கான பாதை என்றுதான் பதிவாகியிருக்கிறது.

ஏற்கெனவே, குமாரசாமியின் தொடர் அட்டூழியங்களால் ஆத்திரமுற்றிருந்த கிராம மக்கள், தாங்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையையும் மறித்து வேலி அமைக்கப்பட்டதை எதிர்த்து தட்டிக்கேட்டுள்ளனர்.

அநீதியைத் தட்டிக்கேட்ட மக்கள் மீதே பொய்வழக்குப் போட்டதோடு, முன்னின்று போராடிய ஆண்கள் சிலரை குறிவைத்து நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர், பென்னாகரம் பெரும்பாலை போலீசார். ஆதிக்க சாதிப்பற்றோடு, நேற்றுவரை சாராயம் காய்ச்சி வந்த குமாரசாமியுடன் போலீசாருக்கு இருந்த தொழில் பற்றும் சேர்ந்து வினையாற்றியது. குமாரசாமியின் கூலிப்படையாகவே செயல்பட்டது, பெரும்பாலை போலீசு. அக்கிராம மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் இன்றுவரை எதிர்கொண்டு வருகின்றனர். ஏறத்தாழ 35 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக நீடித்து வருகிறது.

அன்றாடம் பள்ளிச் செல்லும் பிள்ளைகளும், மலையிலிருந்து விறகு பொறுக்கித் தலைச்சுமையாய் சுமந்து வரும் மக்களும், ஆத்திர அவசரத்துக்கு மெயின்ரோட்டுக்குக்கூட சென்றுவர முடியாமல் அக்கிராம மக்கள் அனுபவித்துவரும் சித்திரவதைகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.

விவசாய வேலையுமின்றி, ஆடு – மாடு மேய்ச்சல் தொழிலும் குறைந்து போனதாலும், மலைப்பகுதிக்கு விறகு சேகரிப்பது ஏறத்தாழ நின்று போனதாலும், பிழைப்புக்காக மாவட்டம் விட்டு மாவட்டமாக புலம்பெயரும் கூலித்தொழிலாளிகளாக மாறிவிட்டதாலும் பொதுப்பாதைக்கான போராட்டத்தை தொடருவதில் கிராம மக்களின் ஆர்வம் குறைந்து போனது. வருவாய்த்துறை அதிகாரிகளையும் போலீசையும் தமது கைக்குள் போட்டுக்கொண்டு, அடாவடி செய்துவரும் குமாரசாமி கும்பலை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது என்று அக்கிராம மக்கள் விரக்தியடைந்து காலப்போக்கில், பின்வாங்கினர். நிலவுரிமைக்கான போராட்டத்தில் பொய்வழக்கை எதிர்கொண்ட சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, இன்றுவரை எதிர்த்து நிற்கின்றனர்.

படிக்க:
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

வன்னிய சாதியைச் சேர்ந்த குமாரசாமி என்ற தனிநபருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சின்னபையன் என்ற தனிநபர்களுக்கிடையிலான நிலப்பிரச்சினையாக இதனை சுருக்கி பார்த்துவிட முடியாது.

மண்ணில் புதைக்கப்பட்ட எலும்புக்கூட்டைக்கூட விடாமல் எடுத்துவீசியிருப்பது அப்பட்டமான சாதிவெறியன்றி வேறென்ன? அடங்கிக்கிடக்க வேண்டிய தாழ்த்தப்பட்ட சாதியினர், உரிமையென்று தட்டிக்கேட்பதைச் சகிக்க முடியாமல்தானே போலீசு நிலையத்தில் வைத்து நிர்வாணப்படுத்தப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கின்றனர். குமாரசாமியின் பார்வையிலிருந்து, தான் உரிமை கொண்டாடும் நிலத்தில் வேலி அமைத்திருப்பதாக வாதிடக்கூடும். உண்மையில், தனது நிலத்தைச் சுற்றி போடப்பட்ட வேலியாக மட்டும் அது இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையே முடக்கிப்போட்டிருக்கும் தீண்டாமை வேலி அது.

2015-ம் ஆண்டு முதலாக, இக்கிராம மக்களின் நிலவுரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள். மேலும், இக்கிராம மக்களின் போராட்டத்தை அறிந்த பஞ்சமி நில மீட்புக்கான போராட்டத்தை முன்னெடுத்துவரும் நாகர்சேனை அமைப்பின் தலைவர் அருங்குணம் விநாயகம் அவர்கள் இக்கிராம மக்களை நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளார். பஞ்சமி நிலமீட்பு தொடர்பாக இவர் தொடர்ந்த வழக்கில்தான், கடந்த 2015-ல் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச் செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முதன்மைச் செயலர் அடங்கிய பஞ்சமர் நிலமீட்பு மத்தியக் குழுவை அமைக்க வேண்டுமென்றும் அக்குழு ஆறுமாதகாலத்திற்குள் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் உத்திரவிட்டிருந்தது.

அருங்குணம் விநாயகம் அவர்களின் முன்முயற்சியினால்,  கெண்டையனஹள்ளி கிராமம் மற்றும் பாலக்கோடு  சிடி பட்டம் கிராமம் உள்ளிட்ட  கிராமங்களைச் சேர்ந்த மக்களை அணிதிரட்டி, கடந்த டிசம்பர்-16 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டிருக்கின்றனர். மக்கள் அதிகாரம் தோழர்களும் உடன் சென்றனர்.

பஞ்சமி  நிலங்களை  மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களிடம் வழங்க கோரியும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி  நிலங்களை கிராம நிர்வாக அதிகாரியின் மூலம் நில கணக்கு எடுத்து பஞ்சமி  நிலமீட்பு  மத்திய குழுவிற்கு அனுப்பி வைக்க ஆவண செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

”பஞ்சமி நிலங்களை  மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களிடம் வழங்கு! தாழ்த்தப்பட்ட மக்களின் பொது வழியைத் தடுக்கும் தீண்டாமை முள்வேலியை அகற்று! நிலத்தை அபகரித்து தீண்டாமை கம்பி முள்வேலியை அமைத்த ஆதிக்க ஜாதி வெறியன் குமாரசாமி மற்றும் அவனுக்கு துணை போகின்ற அனைத்து ஜாதி வெறியர்களையும்  மற்றும் அதிகாரிகளையும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!” என்ற கண்டன முழக்கம் காவக்காடு கிராமத்திற்கானது மட்டுமல்ல!

– பு.ஜ செய்தியாளர்,
தருமபுரி.

என் உருவ பொம்மையை எரியுங்கள் ! பாசிச மோடியின் நீலிக் கண்ணீர் | கேலிச்சித்திரம்

2019
என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம்! – மோடி.

2012
2002 கோத்ரா ரயில் எரிப்பு – முஸ்லிம்கள் படுகொலையில் என் மீது தவறு இருப்பதாக தெரியவந்தால் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள். – மோடி ஆவேச பேச்சு.

2016
தலித்துக்கள் மீதான கும்பல் படுகொலையில் ”என்னை தாக்குங்க; தலித்துகளை விட்டு விடுங்க” – மோடி ஆவேச பேச்சு.

படிக்க:
ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !
பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !

மோடியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ! என்ன செய்யப் போகிறோம் ? PRPC 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! – செய்தி | படங்கள்

மதுரையில் நடைபெற்ற மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 16-ம் ஆண்டுவிழா கருத்தரங்கம் !

க்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை, 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் 22.12.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடைபெற்றது.

“அயோத்தி-காஷ்மீர்-சபரிமலை-தேசிய குடிமக்கள் பதிவேடு ! – பறிக்கப்படும் மனித உரிமைகள் தகர்க்கப்படும் அரசியல் சட்டம் !” என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளைத் தலைவர் பேராசிரியர் அ. சீநிவாசன் இன்றைய அரசியல் சூழலில் கருத்தரங்கின் அவசியம் குறித்து தலைமை உரையில் பேசினார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் தனது உரையில்,

“மதச் சார்பின்மை, நாடாளுமன்ற ஜனநாயகம் போன்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறுகளை மாற்றுகிற வகையில் எந்த ஒரு சட்ட திருத்தத்தையும் எந்த அரசும் மேற்கொள்ள முடியாது. மாறாக, மோடி – அமித் ஷா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு எதிரானது. இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமையை மறுக்கும் இச்சட்டம் மதச்சார்பின்மைக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது” என எடுத்துரைத்தார்.

“ஆவணங்கள் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டிய பாபர் மசூதி தொடர்பான உரிமையியல் வழக்கில், பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அரசியல் சட்ட விரோதமானது” என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்

“மாநில ஆளுநர்தான் மாநில அரசு என்றும், மாநில சட்ட மன்றம்தான் அரசியல் நிர்ணய சபை என்றும் சட்ட திருத்தம் செய்து காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த 370 சிறப்பு உரிமையை மோடி அரசு பறித்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை மீறிய செயல் மற்றும் நம்பிக்கைத் துரோகம்” என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

“தீண்டாமை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது; தீண்டாமை ஒரு குற்றம்; தீண்டாமையை எந்த வடிவத்திலும் கடைபிடிக்கக் கூடாது என்கிறது இந்திய அரசியல் சட்டம். சபரி மலையில் பெண்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும்  சங்பரிவாரங்கள் மாதவிடாயை தீட்டு என்கிறது. தீட்டு என்பது தீண்டாமைக் குற்றம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால்தான் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்கள் தீர்ப்பை மிகக்கடுமையாக எதிர்க்கின்றன. அரசியல் சட்டத்தால் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள தனிமனித மாண்பு என்பது பெண்கள் விசயத்தில் சிதைக்கப்படுகிறது.

பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் சங்பரிவாங்கள் சபரி மலைத் தீர்பை ஏற்க மறுக்கிறது” என்பதை அம்பலப்படுத்தினார்..

படிக்க:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியர்கள் நாங்கள் எதிர்க்கிறோம் ! – வழக்கறிஞர் பாலன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.ஆளூர் ஷாநவாஸ் தனது உரையில்,

“முத்தலாக் தடைச் சட்டம் , காஷ்மீர் சட்டத் திருத்தம் மற்றும் பாபர் மசூதிப் பிரச்சினைகளைப் போல் அல்லாமல் குடிமக்கள் திருத்தச் சட்டம் கொண்டு வந்த பிறகு இன்று நாடே பற்றி எரிகிறது. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைளுக்கு எதிராக எப்பொழுதும் தமிழ்நாடுதான் பொங்கி எழும். ஆனால் இன்று நாடே பொங்கி எழுகிறது. ஏன்?

திரு.ஆளூர் ஷாநவாஸ்

அண்டை நாடுகளிலிருந்து குடியேறிவர்களால் ஆபத்து, இதை முறைப்படுத்துவதற்குத்தான் குடிமக்கள் திருத்தச் சட்டம் என்கிறது மோடி அரசு.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேச நாடுகளிலிருந்து வந்துள்ள இந்துக்கள், கிருஸ்தவர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள், சீக்கியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது எத்தகைய குற்ற வழக்குகள் இருந்தாலும், அவர்களை குடி மக்களாக ஏற்றுக் கொள்வார்களாம். ஆனால் எந்த வழக்கும் இல்லை என்றாலும் இஸ்லாமியர்களையும் இலங்கைத் தமிழர்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். இது என்ன நீதி? இது இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எதிராக பாகுபாடு பார்ப்பது ஆகாதா?

ரோஹிங்கியா முஸ்லீம்கள் மியான்மர் அரசுக்கு எதிராகப் போராடக் கூடியவர்கள். அவர்களை எப்படி இந்தியாவில் ஏற்க முடியும் எனக் கேள்வி எழுப்பும் மோடி அரசு, தனிநாடு கேட்டு சீனாவுக்கு எதிராகப் போராடும் திபெத்தியர்களை எப்படி தழுவிக் கொள்கிறது?

அண்டை நாடுகளிலிருந்து வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மையினரைப் பாதுகாக்கவே இச்சட்டத் திருத்தம் என்கின்றது பா.ஜ.க அரசு. தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் கிடையாது என கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில், இலங்கைக்குச் சென்றாலும் உரிமைகள் கிடைக்காது என்ற சூழலில் மூன்று தலைமுறைகளாக தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடையாது என்கிறார் மோடி. இலங்கை அண்டை நாடு இல்லையா? பெரும்பான்மை பொளத்த மதத்தால் சிறுபான்மை ஈழத் தமிழர்கள் வஞ்சிக்கப்படவில்லையா? ஏன் இந்தப் பாகுபாடு?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இராமர் கோவில் கட்டுவதற்கான தயாரிப்பு வேலைகள் கடந்த 25 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்ததே. எந்த தையரியத்தில் பெரும் பொருட்செலவு செய்து அவ்வேலைகளை மேற்கொண்டனர்? இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்த வாஜ்பாய் அரசு அதற்கான பணிகள் எதையும் ஏன் மேற்கொள்ளவில்லை? தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று அவர்களுக்குத் தெரியும். அதுதான் அயோத்தியில் நடந்தது.

மோடி அரசு சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. மாறாக இட ஒதுக்கீடு உள்ளிட்ட கொள்கைகளில் பெரும்பான்மை இந்துக்களுக்கும் எதிரானது. எனவே, சிறுபான்மையினர், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் பெரும்பான்மை இந்துக்களிடம் போய் இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் நாம் அப்பணியை செய்வதில்லை. மாறாக அவர்கள் விலை போகும் சிறுபான்மையினர் சிலரை சேர்த்துக் கொண்டு மொத்த சிறுபான்மையினரும் அவர்களுக்கு அதரவாக திரண்டு இருப்பதாக பொய் சொல்லுகின்றனர்.

எனவே, பாதிப்பை எதிர் நோக்கி இருக்கும் பெரும்பான்மை இந்துக்களுடன் இணைந்து போராடினால்தான் ஆர்.எஸ்.எஸ்-மோடி கும்பலை வீழ்த்த முடியும்” என வலியுறுத்தினார்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள் !
♦ ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !

இறுதியாக தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு தனது உரையில்,

தோழர் தியாகு

“காஷ்மீரில் 370-ஐ  முடக்கிய பிறகு, கடந்த 120 நாட்களாக 75 லட்சம் மக்கள், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆசாதி (விடுதலை) என்ற ஒரே முழக்கத்தை அனைத்து மக்களும் முன்வைத்து அஞ்சாத தீரத்துடன் போராடி வருகின்றனர். இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குக்கூட அவர்கள் அனுமதிக்கப்படாத கொடூரமான சூழல் நிலவுகிறது. ஆனால் மோடி-அமித் ஷா மற்றும் அவர்களது அதிகார வர்க்கம் காஷ்மீரில் அமைதி நிலவுவதாக பச்சையாகப் பொய் சொல்கின்றனர். தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று கோருகின்ற அவர்கள் இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் அவர்கள் முன்வைக்கக் கூடாது ?”என்று கேள்வி எழுப்பினார்.

“பாபர் மசூதிக்குள் ராமன் பொம்மையை வைத்தது, இந்துக்களின் வழிபாட்டுக்கு மசூதியைத் திறந்து விட்டது, 1992 டிசம்பர் 6-ல் மசூதியை இடித்தது என அனைத்துமே சட்ட விரோதம் என ஒரு பக்கம் சொல்லிவிட்டு இடித்தவனுக்கே 2.77 ஏக்கர் நிலத்தை கொடையாகக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இது என்ன நீதி?

எனக்கு பிறப்புச் சான்றிதழ் கிடையாது. அது போல வாகனம் ஓட்டத் தெரியாத பலருக்கு ஓட்டுநர் உரிமம் இருக்காது. கிராமங்களில் உள்ளவர்களுக்கு படிப்புச் சான்றிதழ் இருக்காது. சிலருக்கு ஆதார் இருக்காது. இந்தியக் குடிமகன் என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும். தவறினால் அண்ணன்-தம்பியைப் பிரிப்பார்கள். கணவன்-மனைவியைப் பிரிப்பார்கள். மகன்-தந்தையைப் பிரிப்பார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் (CAA) தொடர்ந்து வரப்போகும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) மூலம் இதுதான் நடக்கும். எந்த உரிமையும் சலுகையும் உங்களுக்குக் கிடைக்காது. மொத்தத்தில் பலர் நாடற்றவர்களாக (stateless) ஆக்கப்படுவார்கள்.

குடியுரிமை பற்றி இந்திய அரசியல் சட்டம் பேசுகிறது. மாநில உரிமைகள் குறித்து நாகாலாந்தோடு மோடி ஒப்பந்தம் போடுகிறார். ஈழ மக்கள் யார்? தமிழர்கள்தானே. எங்கே அகதிகளாக இருக்கிறார்கள்? தமிழகத்தில்தானே? எனவே குடியுரிமை குறித்து மாநில அரசு முடிவெடுக்க உரிமை இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கும் குடியுரிமை இல்லை என்ற நிலையே இருக்கக்கூடாது. இரட்டைக் குடியுரிமையாவது வழங்க வேண்டும்” என தனது உரையில் தோழர் தியாகு கோரினார்.

இறுதியாக மாவட்டச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணி ராஜ் நன்றி கூறினார். ஞாயிற்றுக் கிழமை, அதுவும் காலை நேரத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டாலும் சுமார் ஐநூறு பேர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை,
தொடர்புக்கு : 73393 26807.

குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள் !

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து வரும் சூழலில் தமிழகத்திலும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சென்னை பல்கலை மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கி தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் மாணவர்களின் போராட்டத்தை தடுப்பதை நோக்கமாகக் கொண்டே ஜன-2 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

கோவை:

கோவை – அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் :

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து நடைபெறுகின்றன. இதன் தொடர் விளைவாக கோவையில் கோவை அரசு சட்டக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், மற்றும் பிஎஸ்ஜி கலைக் கல்லூரி ஆகியவற்றில் கடந்த டிசம்பர்-18, 19 ஆகிய தேதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநரின் வாகனத்தை வழிமறித்த கோவை பாரதியார் பல்கலை மாணவர்கள் :

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் வருகையின்போது மாணவர்கள், அவரது வாகனத்தை வழிமறித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

PSG கலைக்கல்லூரி மாணவர்கள் :

கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் :

கோவை அரசு சட்டக்கல்லூரியில் பல்கலைக்கழக தேர்வு நடைபெற்றிருக்கும் வேளையில் மாணவர்கள் தங்களது தேர்வுகளை புறக்கணித்து குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் :

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டிச-22 அன்று கோவை காந்திபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் :

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் :

டிசம்பர்-19 அன்று கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கும் நிலையில் அதனை சரிசெய்வதற்கான உருப்படியான முயற்சிகள் எடுக்க முன்வராத மோடி அரசு, அவசரகதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என்று கேள்வியெழுப்பியும்; மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த முயலும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதியை அம்பலப்படுத்தியும் கல்லூரி மாணவர்களிடையே புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் உரையாற்றினர்.

கும்பகோணம் வழக்கறிஞர்கள் :

கும்பகோணம் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பாக, வழக்கறிஞர்கள்  கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.  கடந்த டிசம்பர்-20 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் குருமூர்த்தி, கருணாமூர்த்தி, மகேந்திரன் ஐயப்பன் நிம்மதி, ரமேஷ்குமார், சிவராஜ் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பலரும் பங்கேற்றனர். கருப்புச்சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

திருவண்ணாமலை :

திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் தேசிய குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முற்போக்கு வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து வழக்கறிஞர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொகுப்பு :

ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !

ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 3

பட்டமளிப்புவிழா போராட்டம் காத்திருந்த அமைச்சர்

ல நாட்கள் துணை வேந்தருக்காகக் காத்திருந்த மாணவர்கள் இவர் பங்கேற்க இருந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை இவரைச் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாகக் கருதினார்கள். ஜே.என்.யூ தொடங்கி முதல் இரண்டு ஆண்டுகளிலேயே பட்டமளிப்பு விழா கைவிடப்பட்டது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக, கல்வியில் பட்டம் என்பது அதை கொண்டாடுவதில் இல்லை. கற்ற கல்வியால் நாட்டிற்கும் சமுகத்திற்கும் ஆற்றும் பணி வெறும் காகிதமான பட்டத்தைவிடச் சிறந்தது  என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அதுபோல் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறுவோருக்குப் பதக்கம் கொடுத்துக் கொண்டாடும் பழக்கமும் ஜே.என்.யூ-வில் இல்லை. ஒவ்வொருவருடைய சமூக, குடும்ப, பொருளாதார சூழ்நிலை, பள்ளிப் பருவ வாய்ப்புகள் அவர்கள் தங்கள் உயர்கல்வியில் அடையும் தரத்தையும் நிர்ணயிக்கின்றது. இந்நிலையில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கொண்டு  மாணவர்களைத் தரம் பிரித்து கொண்டாடுவது சரியாகாது என்ற கருத்தும் நிலவிவந்தது.

இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தற்போதைய துணைவேந்தர் பட்டமளிப்பு விழாவை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்ததோடு மட்டும்மல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதைப் பெரும் கேலிக்கூத்தாகவும் கொண்டாடினார். இதுவரை மாணவரை சந்திக்காத துணைவேந்தர், மாணவர்களின் போராட்டத்திற்குப் பயந்து,  இந்தாண்டு பட்டமளிப்பு விழாவை ஜே.என்.யூ-வுக்கு அருகாமையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மன்றம் (all india council for technical education) கலைஅரங்கில் நடத்தினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் போன்றோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ஜே.என்.யூ பட்டமளிப்பு விழாவில் மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். (இடது), துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு (நடு)

துணைவேந்தரைச் சந்திப்பதற்காக மாணவர்கள் இந்த அரங்கை முற்றுகையிடும் நடை பயணத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனை அறிந்த நிர்வாகம் முன்கூட்டியே காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததனால், பல நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு ஆங்காங்கு தடுப்பு அரண்களும் போடப்பட்டிருந்தன. பல்கலைக்கழத்தைவிட்டு அமைதியாக வெளிவந்த மாணவர்களை அதன் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இத்தடைகளைத்தாண்டி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்புவிழா நடைபெறும் இடத்திற்கு வந்தபோது திரு.வெங்கையாநாயுடு தன் உரையை முடித்துக்கொண்டு ஏற்கெனவே விடைபெற்று இருந்தார். துணைவேந்தரும் அமைச்சரும் உள்ளிருந்தார்கள்.

பட்டம் வாங்கச் சென்ற முன்னாள் மாணவர்களும் உள்ளுக்குள்ளேயே தம் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். வெளிவர முடியாத சூழ்நிலையால், பல மணிநேரங்களுக்குப் பிறகு, காவலர்கள் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். துணைவேந்தர் தாம் மாணவர்களுடன் பேசத் தயாராக இல்லை என்று கூறியபோதிலும், அமைச்சர் மாணவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தை நடத்தி அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறியதால், அவர் அரங்கைவிட்டு வெளியே செல்ல முடிந்தது. அதன்பின், பலமணிநேரம் காத்திருந்த துணைவேந்தர், மாணவர்கள் அசந்து இருந்த நேரத்தில் காவலர் துணையுடன் ஓடி மறைந்தார். இது நடந்த‍து நவம்பர் மாதம் 11-ம் தேதி (2019) .

பாராளுமன்றம் நோக்கி நெடும் நடைபயணம்

இதன்பின், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக முழு ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தனர். இதுவரை மாணவர்கள் வழக்கமான வகுப்புகளை மட்டும் புறக்கணித்தனர், ஆனால் வகுப்புகள் வகுப்பறைகளுக்கு வெளியே நடைபெற்றன. வீட்டில் எழுதவேண்டிய கட்டுரைகள் போன்றவை ஈமெயில் மூலம் சமர்ப்பிக்கப்பட்டன. பெரும்பாலும் அனைத்துக் கல்வி தொடர்பான வேலைகளும் நடைபெற்றன. ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் அறிவித்தபிறகு இவை அனைத்தும் நிறுத்தப்பட்டன. துறை அலுவலகங்கள், ஆசிரியர்களின் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

படிக்க:
ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !

இந்நிலையில், நடப்பு பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியதால், மாணவர் அமைப்பு நாடாளுமன்றம் நோக்கிய நடைபயணத்திற்கு அழைப்பு விடுத்தது. என்றும் இல்லாத அளவிற்கு, பல்லாயிரம் மணவர்கள் கலந்துக்கொண்ட இந்தப் போராட்டம் காவலர்களின் காட்டுமிராண்டித்தனமான தடியடியுடன் நிறைவுக்கு வந்தது. ஆனால், ஜே.என்.யூ மாணவர்கள் கொண்டிருந்த உறுதியை, தியாகத்தை பார்த்து நாடே வியந்தது.

முன்புபோல், பலகட்ட காவல்துறை அரண்களைத் தாண்டி ஜேஎன்யுவுக்கும் பராளுமன்றத்திற்கும் இடையில் உள்ள ஜோர்பாக் என்ற இடம்வரை, மாணவர்கள் அமைதியாகச் சென்றடைந்தனர். அதற்குமேல் நகர முடியாத நிலையில் அங்கே அமர்ந்து போரட்டத்தைத் தொடர்ந்தனர். பெரும்பாலான மணவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். இதை அடுத்து சுமார் இரவு 8 மணிவாக்கில் காவல் துறையினர் மாணவர்கள் கூடியிருந்த வீதியின் தெருவிளக்கை அணைத்துவிட்டு தடியடியில் ஈடுபட்டுக் கூட்டத்தை கலைத்தனர்.

இதில் உடல் ஊனமுற்ற, பார்வையற்ற மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். தொலைக்காட்சி ஊடகங்கள் இக்காட்சிகளை உலகம் முழுதும் எடுத்துச்சென்ற அதே வேளையில், அவற்றுள் சில இது தேசத்துரோகிகளின் போராட்டமென பொய்யுரை பரப்பின. இது நடந்தது நவம்பர் மாதம் 18-ம் தேதி (2019)

இருகுழுக்கள் வெவ்வேறு பரிந்துரைகள்

இதுவரை ஜேஎன்யூவில் நடைபெறும் இத்தகைய போராட்டங்களை ஒருசில மாணவர்கள் ஏற்படுத்தும் கூச்சல் என்று ட்விட்டர் மூலம் நாட்டிற்கு தெரிவித்துவந்த துணைவேந்தரின் கருத்தை இந்த நெடும் நடைபயணம் பொய்யென நிருபித்தது. இதன்பின், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஜேஎன்யூ கல்விக் கட்டணப் பிரச்சினையை விசாரித்து முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு முன்னாள்  பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர், வி.எஸ்.சவுகான் தலைமையில் ஒரு உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

இக்குழு, முதன்முறையாக  ஒரு முறையான கலந்தாலோசனையை மேற்கொண்டு, மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர் அமைப்பின் பிரதிநிதிகள் , ஜேஎன்யூ நிர்வாகத்தில் இருப்போர் போன்றோருடன் சந்தித்து அவர்களது கருத்துக்களைப் பெற்றது. வழக்கம்போல் துணைவேந்தர் இக்குழுவையும் சந்திக்க மறுப்புத் தெரிவித்துவிட்டார்.

உயர்மட்டக்குழு விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு, இக்குழுவின் பரிந்துரைகள் தமக்குச் சாதகமாக இருக்காது என அறிந்துக்கொண்ட நிர்வாகம், தம் ஆதரவாளர்களைக் கொண்டு மற்றொரு விசாரணைக் குழுவை அமைத்து ஒரு நாளில் தன் முடிவைத் தரவேண்டும் என வேண்டியது. மாணவர் அமைப்புடன் எவ்விதப் பேச்சு வார்த்தையும் இல்லாமல் வெறும் பெயரளவில் சிலரிடம் கருத்துக்கேட்டு முன்பு அறிவிக்கப்பட்ட திருத்திய கட்டணத்தில் நலிவடைந்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குக் கட்டணச் சலுகைகள் வழங்குமாறு இக்குழு பரிந்துரைத்தது. மாணவர்கள் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கோரி இக்குழுவின் பரிந்துரைகளை நிராகரித்தனர்.

இதற்கிடையில் அரசு அமைத்த உயர்மட்டகுழு தன் அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால், இந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.  சில செய்தித் தாள்கள் இக்குழு கல்வி மற்றும் விடுதி கட்டணங்களைத் திருத்தியதில் ஜேஎன்யூ நிர்வாகம் சரியான முறைகளைப் பின்பற்றவில்லை எனவும், என‍வே கல்விக் கட்டண உயர்வு திரும்பிப் பெறப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இதன்பின், மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த அறிக்கையை வெளியிடக் கோரி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு முன்பு இருவேறு போராட்டங்களை மேற்கொண்டனர். மாணவர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த அமைச்சகச் செயலர், ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்கவில்லை. இதற்கிடையில் திரு. தொல் திருமாவளவன், டாக்டர். ரவிக்குமார் உட்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டி அமைச்சகத்திற்கு வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.

படிக்க:
மோடி – அமித்ஷாவுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது : போராட்டக்களத்தில் பேசும் பதாகைகள் !
♦ “இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” – அருந்ததிராய்

இறுதி கோரிக்கைகள்

இன்றைய நிலையில் மாணவர்களின் கோரிக்கை கீழ்கண்டவையாக இருக்கின்றன.

  1. உயர்மட்டக்குழு அறிக்கையை வெளியிட வேண்டும்.
  2. கல்விக் கட்டண உயர்வு மற்றும் புது விடுதி நெறிகள் முற்றிலுமாக கைவிடப்பட்டு, பின் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி இவை திருத்தப்பட்வேண்டும்.
  3. இதுவரை மாணவர் அமைப்பு பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்ட பல்வெறு குழுக்களில் பங்கேற்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.
  4. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று ஜே.என்.யூ மாணவர் அமைப்பை அங்கீகரிக்கவேண்டும்.
  5. சமூகத்தில் நலிவடைந்தோரின் நலனுக்கு எதிராக இருக்கும் புதியக் கல்வி கொள்கையைக் கைவிடவேண்டும்.
  6. நாட்டின் அனைவருக்கும் தரமான, எளிதில், குறைந்த செலவில் கிடைக்ககூடிய வகையில் பொதுக் கல்வி நிறுவனங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
  7. கல்வியைத் தனியார் மயமாக்குதல் கைவிடப்படவேண்டும்.
  8. ஜே.என்.யூ அது இதுவரை பேணிப்போற்றி வந்த விழுமியங்களுடன் பாதுகாக்கப்படல் வேண்டும்.
  9. அதுபொருட்டு, ஜேஎன்யு-வை அழித்தொழிக்க நினைக்கும் இந்தத் துணைவேந்தர் பதிவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், மாணவர்கள் முழுத் தீவிரத்துடன் தம் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நிர்வாகக் கட்டிடம் மற்றும் நூல்நிலையம் இவற்றைத் த‍விர்த்து ஏனைய கட்டிடங்களில் நுழைய ஆசிரியர்கள் உட்பட எவருக்கும் அனுமதி இல்லை. இந்தக் கடும் குளிரிலும், ஒவ்வொரு கட்டிடத்தின் நுழைவாயில்களிலும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுழற்சி முறையில் அமைதியாக அமர்ந்துள்ளனர். இரவில் அங்கேயே படுத்துறங்குகின்றனர். மேலும், டிசம்பர் 4-ம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கி மறுநாள் கலை 7.30 மணிவரை நடைபெற்ற ஒரு நீண்ட பொதுக்குழுக் கூட்டத்தில் போரட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும், இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்ல மாணவர் அமைப்புக்கு முழு உரிமையையும் வழங்குவதாகவும் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

இத்தோடு, பல்கலைக் கழகத்தின் வேந்தரான ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஒரு புதிய நடைப் பயணத்திற்காக 8-12-2019-க்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தின் விளைவு என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உலகப்போராட்டம்; ஒன்றிணையும் மாணவர் அமைப்புகள்

ஜே.என்.யூ மாணவர்களின் இந்தப் போரட்டம் உலகமெங்கும் பொதுக்கல்வி நிறுவனங்களைக் காக்கும் பொருட்டும், கல்விக் கட்டண உயர்வு, குறைந்த செலவிலான விடுதி வசதி, மற்றும் கல்வி வியபாராமாக்கப்படுதல் போன்றவற்றிற்கு எதிர்ப்பாக ஒலிக்கும் மாணவர்களின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும்.

ஜேஎன்யூவில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்ற இதே காலகட்டத்தில் பாகிஸ்தானும் ஒரு பெரும் மாணவர் புரட்சியை எதிர்கொண்டதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஹாங்காங்கில் நடைபெறும் சனநாயகத்திற்கான புரட்சியில் மாணவர்கள் முன்நிற்கின்றார்கள். இதுபோன்று, பல்வேறு நாடுகளிலிருந்தும் அண்மைக் காலங்களில் மாணவர் போராட்டம் குறித்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்தியாவில், ஜேஎன்யூ மாணவர்களுக்கு ஆதரவாக வெவ்வேறு பல்கலைக்கழகம், மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களைச் ( IITs) சார்ந்த மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டெல்லி தொழில் நுட்ப நிறுவனத்தில் 10 மடங்கிற்குமேல் உயர்த்த இருந்த கல்விக் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இன்று கல்விக் கட்டணம் என்பது ஏழை பணக்காரர் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரு பெரும் சுமையாக உள்ளது. மக்கள் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்காதவரை, அரசு கல்வியை வியபாரமாகத்தான் விற்பனை செய்ய முயற்சிக்கும்.

புரட்சியில் கரையும் பொன்விழா – கனவென நிற்கும் சமத்துவ உலகு

இந்த மாணவப் புரட்சி வெடித்திருக்கும் இந்த ஆண்டு ஜே.என்.யூ வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு. இது இந்தப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு.  பொன்விழா ஆண்டைக் கொண்டாட ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறு திட்டங்களைக் கொண்டிருந்தனர். மாணவர் அமைப்பு, ஆசிரியர் அமைப்பு, மற்றும் ஜேஎன்யு நிர்வாகம் தனக்கான நிகழ்வுகளை திட்டமிட்டிருந்தன. குறிப்பாக, ஜேஎன்யூ நிர்வாகம் பொன்விழாவை ஜேஎன்யூ இதுவரை நடந்த பாதையி்லிருந்து ஒரு புதிய பாதையை, இந்துத்துவ பாதையைக் குறிப்பதைப்போல் சில நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. விவேகானந்தர் சிலை ஒன்று நிர்வாகக் கட்டிடத்திற்கு எதிரில் கட்டப்பட்டு இதுவரை மூடியே வைக்கப்பட்டுள்ளது.  ஜேஎன்யூ இணையதளத்தில் உள்ள பொன்விழாக் கொண்டாட்டப் பட்டியலில் சிலவற்றைத் தவிர மற்றவை ஏதும் நிகழ்த்தப்படவில்லை.

மாறாக, ஜேஎன்யூ மாணவர்கள், ஜேஎன்யூ-வுக்கே உரித்தான முறையில் இதை ஒரு புரட்சி ஆண்டாக மாற்றியுள்ளார்கள். கடந்த ஒரு மாதமாக ஜேஎன்யு பற்றியும் இந்தப் பல்கலைக்கழகம் கடந்துவந்த பாதையைப் பற்றியும், இதன் சமூகத்திற்கான, தேசத்திற்கான பங்களிப்பைப் பற்றியும் தொடர்ந்து செய்தி தாள்களிலும், இதழ்களிலும் கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. இது இந்தப் பொன்விழா ஆண்டில் ஜேஎன்யூ பற்றிய நினைவுகள் மீண்டும் பொதுபுத்திக்கு கொண்டுவர உதவி செய்துள்ளன.

இந்தப் போராட்டம் இத்தோடு நின்றுவிடப் போவதில்லை என்றே தோன்றுகின்றது. நிர்வாகம் பல்வேறு அடக்குமுறைக்கான ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றது. பல மாணவர்களின் கல்வி வேலைவாய்ப்புகள் இதன்மூலம் பாதிக்கப்படலாம். ஆனால், இம்மாணவர்கள் காட்டும் உற்சாகமும், துணிவும், சமூகத்தைப்பற்றிய ஆழ்ந்த புரிதலும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.  இவற்றைப் பார்க்கும்போது 1960-களில் இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ முயன்றோர் எதிர்பார்த்த சனநாயகம், சமத்துவம், அறிவியல் பார்வை இவற்றைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த இந்தியச் சமூகத்திற்கான கனவு இன்றும் வீழ்ந்துவிடவில்லை என்றே தோன்றுகின்றது. மாணவர்களின் கண்களில் தெரியும் ஒளி இதை உறுதிபடுத்துகின்றது.

ஜே.என்.யூ மாணவர்களுக்கு செவ்வணக்கம் !

(முற்றும்)

தொடரின் முந்தைய பாகங்களுக்கு :

சௌ. குணசேகரன்

(ஆசிரியர் பற்றி : ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்)

வளரிளம் பருவம் : இதுவரை தொடாத பகுதி ! | ஃபரூக் அப்துல்லா

ருபக்கம் ஒழுக்கம், கற்பு, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் என்று பாடம் எடுக்கிறோம். மறுபக்கம் தினசரி செய்தித்தாள்களில் குழந்தைகளையும் வன்புணர்வு செய்கிறார்கள், பெண்களை மானபங்கப்பபடுத்தி தீயிட்டு கொளுத்திவிடுகிறார்கள். எய்ட்ஸ் நோயில் இந்தியா தான் முதலிடம். இவை கூறும் செய்தி தான் என்ன?

நம் குழந்தைகளுக்கு பாலுறவு சார்ந்த கல்வியை நாம் முறையாக பயிற்றுவிப்பதில்லை.

நமது உடலில் ஜீரண மண்டலம் இருக்கிறது, சுவாச மண்டலம் இருக்கிறது,
நரம்பு மண்டலம் இருக்கிறது. எலும்புகளும் தசைகளும் இணைந்து நம் உடலை இன்னதென்று கண்டுகொள்ளுமாறு நிற்கச்செய்கிறது.

ஆனால் இந்த இனப்பெருக்க உறுப்புகள் எதற்காக இருக்கின்றன ? என்ற கேள்வி வளரும் ஒவ்வொரு வளர்இளம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லாமல் இல்லை.

எனக்கு பதினொன்றாம்; பனிரெண்டாம் வகுப்பு எடுத்த ஆசிரியர் விலங்கியலில் வந்த இந்த பாடங்களை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று ஸ்கிப் செய்து விட்டார். சமூகத்தில் ஒரே ஒருவரிடம் இருந்து கூட இது குறித்த சரியான பார்வை தருமாறு ஒரு கட்டுரையையோ ஒரு பேச்சையோ நான் கேட்டு வளர்ந்ததில்லை.

ஒரு பெண் பூப்பெய்துவாள், மாதா மாதம் மாதவிடாய் காண்பாள்
ஆனால் ஏன் அவளுக்கு மாதவிடாய் வருகிறது என்று கேட்டால் தெரியாது. மேலும் மாதவிடாய் காலத்தில் தன் நலன் எப்படி பேசுவது என்று தெரியாமல் 90% தமிழக வளர்இளம் பெண்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்படும் போது நாம் இன்னும் எத்தனை பின் தங்கியிருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

வளர்இளம் பருவத்தில்
பல கனவுகள் பூக்கும்.
புலரா வானில்
பல வண்ணங்களை தீட்டும் கதிரவனைப்போல
மலரா வயதில் பல எண்ணங்களை தீட்டும் மனது.

கிட்டத்தட்ட அதே நேரத்தில் தான் தங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை நல்லமுறையில் கடந்து வரும் நிகழ்வுகளும் நடக்கும்.

படிக்க :
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
♦ இளம்பெண்களுக்கு வரும் PCOD நோயும் சில மூடநம்பிக்கைகளும் ! | ஃபரூக் அப்துல்லா

ஒரு குழந்தை பிறந்த மூன்று வயது வரை தன் பாலினம் அறியாது. பிறகு தன் பாலின வேறுபாட்டை உணர ஆரம்பிக்கும். தனக்கு இருப்பது போல் அடுத்த பாலினத்திடம் இல்லை என்பதையும், அடுத்த பாலினத்தில் இல்லாதது நமக்கு இருக்கிறது என்றும் சமூகம் அதற்கு முறையாக கற்றுக்கொடுப்பதற்கு முன்னமே, சினிமா மூலமும்
அதில் காட்டப்படும் அதீத மசாலா பூசப்பட்ட காட்சிகள் மூலமும்
ஓ.. எதிர் பாலினம் என்றால் இப்படித்தான் போல..

  • சினிமா ஹீரோயின் போல கொஞ்சம் அரை லூசாக இருந்தா தான் பசங்களுக்கு புடிக்கும் போல..
  • சைஸ் ஜீரோ தான் நல்லது போல..
  • இந்த க்ரீம் தடவுனா தான் கொஞ்சம் அழகா இருக்கும் போல..

என்று வளர்இளம் பெண்கள் நினைப்பார்கள்.

வளர் இளம் பையன்களும் மீசை அரும்பாத வயதில் கூட தங்களை பெண்களிடம் எப்படி அழகாக முன்னிறுத்துவது என்று சிந்திப்பார்கள். இயற்கையாக ஹார்மோன் மாற்றங்களால் பரு வந்தால்.. அதைக்கூட சில பெண்கள் தங்களை பார்ப்பதால் தான் வருகிறது என்று எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள்.

கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லா ஏதோ ஒரு உருண்டை உருள்வது போல உணர்வார்கள்.

ஒரு சக வயது பெண் பார்த்து சிரித்தால்
உலகை மறப்பார்கள்
பேசிவிட்டாலோ ஊன் உறக்கம் துறப்பார்கள்
சிறகுகள் கூட்டி வானில் பறப்பார்கள்

உண்மையில் வளர்இளம் பெண்கள் தாங்கள் பூப்பெய்தும் வரை பெண்ணுறுப்பு குறித்து அறிவதில்லை. அறிந்து கொள்ளவும் முடியாது. சொல்லித்தர ஆள் இல்லை என்பதே முக்கியமான விசயம் இங்கு.

  • ஏன் காயமே ஏற்படாமல் உதிரம் வருகிறது?
  • காரணமே இன்றி மார்பகம் வளர்கிறது?
  • சுருக்கமே இல்லாத முகத்தில் ஏன் பருக்கள் வருகின்றன?
  • இதுவரை நண்பனாக இருந்தவனிடம் இருந்து தாய் தூரமாக இருக்க சொல்கிறாளே?
  • தந்தை அருகிலே படுத்த என்னை ஏன் திடீரென தாய் தன் அருகில் படுக்க கட்டளையிடுகிறாள்?
  • சக தோழிகளுக்கும் இதே உணர்வு வருகிறதா?
  • இந்த வழியாக தான் குழந்தை வருமா? அத்தனை பெரிய தலை எப்படி இந்த சிறிய ஓட்டை வழியாக வரும்?
  • இறைவா.. என்னை ஏன் பெண்ணாக படைத்தாய்?

இப்படி பல கேள்விகள் எழும்.

பெண்களுக்காவது பூப்பெய்திய நாளில் இருந்து தாய் தனக்கு தெரிந்ததை கூறிவருவார். அது சரியா தவறா விடுங்கள். ஒரு ப்ரைமரி செக்ஸ் கல்வி அங்கு தாயிடம் இருந்து கிடைக்கும் .

ஆனால் வளர் இளம் ஆண்களுக்கோ அதுகூட இல்லை.

  • நேற்று வரை சுருங்கிக்கிடந்த உறுப்பு ஏன் திடீரென இத்தனை வேகமாக வளர்கிறது.?
  • ஏன் மீசை முளைக்கிறது?
  • ஏன் சக பெண் தோழிகளை பார்க்கும் போது திடீரென்று ஆசை துளிர்க்கிறது?
  • ஏன் விடியா காலையில் குறியில் இருந்து வெண்ணிற நீர் வடிகிறது? இது நோயா?
  • எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா? சக நண்பர்களுக்கும் நடக்கிறதா?

இதில் எந்த கேள்விக்கும் ஆண்களுக்கு விடையே கிடைக்காது.

தங்களுக்குள்ளேயே ஃபேண்டசைஸ் செய்வார்கள். அதனால் ஒரு தியரி உருவாகும். அது சரியோ பொய்யோ நம்புவார்கள். இப்படியாக ஒரு மாய உலகில் வாழ்வார்கள்.

படிக்க :
நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்
♦ நடக்கும் வரை தான் நாம் வாழ்கிறோம் ! | ஃபரூக் அப்துல்லா

பசி தாகம் போன்று பாலுறவும் முக்கிய தேவைகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. உணவு பற்றி பேசுகிறோம். ஆனால் பாலுறவு பற்றி பேசுவதே இல்லை. இனி பேச வேண்டும்.

இந்த பகுதிகளை உங்களின் 13 வயது மற்றும் அதற்கு மேல் வளர்ந்த பிள்ளைகளிடம் கொடுத்து படிக்கச்சொல்லுங்கள்.

இறைவன் நாடினால்…
தொடர்ந்து பேசுவோம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

ஊக்கமாக வேலை செய்தான் என்றால் போதாது அவன் காதலுடன் உழைத்தான் !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 02

க்காக்கிய் எப்போது, எந்தத் தேதியில் துறையில் சேர்ந்தான், யார் அவனை நியமித்தார்கள் என்பதையெல்லாம் யாரும் நினைவு கூர முடியவில்லை. எத்தனையோ இயக்குநர்களும் வேறு பலவகை அதிகாரிகளும் வந்து போய்விட்டார்கள், ஆனால் அவன் மட்டும் அதே இடத்தில், அதே நிலைமையில், அதே வேலையில், அதாவது நகலெடுக்கும் எழுத்தன் வேலையில், இருந்து வந்தான். எழுத்தன் உடுப்பும் தலையில் வழுக்கையுமாக, இந்த வேலைக்கு முற்றிலும் தயாராகவே அவன் பிறந்திருக்க வேண்டும் என்று நாளடைவில் எல்லாருமே எண்ணத் தொடங்கி விட்டார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். துறையில் அவன்மீது யாரும் எவ்வித மரியாதையும் காட்டுவதில்லை. அவன் கடந்து செல்கையில் காவலாட்கள் எழுந்து நிற்பதுதான் கிடையாதென்றால் அவனை ஏறிட்டுப் பார்ப்பது கூட இல்லை – எதோ சாதாரண ஈயொன்று எதிர்பார்ப்பு அறை வழியாகப் பறந்து சென்றது போல. மேலதிகாரிகள் அவனிடம் ஒரே கண்டிப்புடன் இருந்தார்கள். உதவித் தலைமை எழுத்தன் ஒருவன் எதாவது காகிதத்தைக் கொண்டுவந்து, “கொஞ்சம் நகலெடுங்க” என்றோ, “இதோ பாருங்க, அருமையான, சுவையான விவகாரம்” என்றோ, நல்ல ஒழுங்குமுறைகளுள்ள அதிகார நிறுவனங்களில் வழங்குவது போல வேறு எதேனுமோ மகிழ்ச்சியாகச் சொல்லக்கூடச் செய்யாமல் அவன் மூக்குக்கு அடியில் நுழைப்பான்.

அவனோ, காகிதத்தை மட்டுமே நோக்கியவனாக, அதை வைத்தவன் யார், அதை வைப்பதற்கு அவனுக்கு உரிமையுண்டா என்று பார்க்காமலே அதை வாங்கிக்கொள்வான். உடனேயே அதற்கு நகலெழுதத் தொடங்கி விடுவான். இளம் எழுத்தர்கள், தங்கள் புத்திக்கு எட்டினமட்டில் அவனைப் பரிகசித்து எள்ளி நகையாடுவார்கள். அவனைப் பற்றிக் கற்பனை செய்த பலவிதக் கதைகளை அவன் முகத்துக்கு எதிரே சொல்லுவார்கள். அவனுடைய வீட்டுச் சொந்தக்காரியான எழுபது வயதுக் கிழவியைப் பற்றிக் கிண்டல் செய்வார்கள்; அவள் அவனை அடிப்பதாகக் கதைப்பார்கள்; அவளை எப்போது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்று கேட்பார்கள். கிழிந்த காகிதத் துணுக்குகளை அவன் தலைமேல் உதிர்த்து, வெண்பனி பெய்கிறது என்பார்கள்.

அக்காக்கிய் அக்காக்கியெவிச் தனக்கெதிரே எவருமே இல்லை என்பது போல, ஒரு வார்த்தை கூடப் பதில் பேசாமல் காரியத்தில் முனைந்திருப்பான். இவற்றால் அவன் வேலைக்குக் குந்தகம் ஏற்படுவதும் கிடையாது. இந்தக் குறும்புகளும் கிண்டல்களும் நடந்து கொண்டிருக்கையில் அவன் நகலில் ஒரு பிழை கூட நேர்வதில்லை. பரிகாசம் பொறுக்க முடியாதபடி போய் விட்டால், யாராவது அவன் தோளுக்கடியில் இடித்துத் தள்ளி வேலையில் ஈடுபடவிடாமல் இடையூறு செய்தால் மட்டுமே அவன், “விடுங்க, ஐயா! ஏன் தொந்தரவு செய்றீங்க?” என்பான். அந்தச் சொற்களிலும் அவை வெளிப்படும் குரலிலும் ஏதோ விசித்திரமாகத் தொனிக்கும். இரக்கம் உண்டாக்கும்படி அதில் எதோ ஒலிக்கும். துறையில் புதிதாக வேலைக்கு அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் மற்றவர்களின் உதாரணத்தைப் பின்பற்றி அக்காக்கிய் அக்காக்கியெவிச்சைப் பரிகசிக்கத் தொடங்கியவன், அவன் சாந்தமாகக் கூறிய சொற்களைக் கேட்டதும் நெஞ்சில் ஈட்டி பாய்ந்து விட்டது போலச் சட்டென்று நிலைத்து நின்று விட்டான்; அது முதல் அவன் கண்களுக்கு எல்லாமே மாறிவிட்டன போலவும், எல்லாம் வேறு வடிவில் தென்பட்டன போலவும் தோன்றின. ஒழுங்கானவர்கள், கண்ணியவான்கள் எனக் கருதி அவன் அறிமுகம் செய்து கொண்டிருந்த நண்பர்களிடமிருந்து இனந்தெரியாத சக்தி ஒன்று அவனை உந்தித் தள்ளி வேறாக ஒதுக்கிவிட்டது.

படிக்க:
பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !
குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !

இதற்கு அப்புறமும் வெகுகாலம் வரை, மிகச் சந்தோஷமான கணங்களில் கூட, குள்ள வடிவமும் வழுக்கைத் தலையுமான எழுத்தனின் உருவம், “விடுங்க, ஐயா! என் தொந்தரவு செய்றீங்க?” என்று கூறுவது போல அவனுக்குக் கற்பனையுண்டாகும், சோகம் ததும்பும் இச்சொற்களிலேயே “நான் உன் சகோதரனல்லவா?” என்ற அருத்தமும் ஒலிக்கும். பாவம், அந்த இளைஞன் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொள்வான். மனிதனிடம் மனித இயல்பற்ற தன்மை எவ்வளவு இருக்கிறது; மிகமிகப் பண்பட்ட, கண்ணியமான நடையுடைபாவனைகளுக்குள்ளும் – அட கடவுளே! பெருந்தன்மைவாய்ந்தவன், கௌரவமுள்ளவன் என உயர் சமூகத்தினரால் மதிக்கப்படுபவனுக்குள் கூட – விலங்கியல்பு கொண்ட முரட்டுத்தனம் எவ்வளவு மறைந்திருக்கிறது என்பதைக் கண்டு வாழ்க்கையில் எத்தனையோ தரம் அவன் பதைபதைப்பான்….

அக்காக்கிய் போல வேலைக்காகவே வாழ்ந்தவனைக் காண்பது அரிதே. அவன் ஊக்கமாக வேலை செய்தான் என்றால் போதாது. இல்லை, அவன் காதலுடன் உழைத்தான். இங்கே, நகல் எழுதும் இந்த வேலையில், அவனுக்கு வண்ண வேறுபாடுகள் கொண்ட மகிழ்ச்சி பொங்கும் ஏதோ ஓர் உலகம் தென்பட்டது போலும். அவன் அனுபவித்த இன்பம் முகத்தில் மிளிர்ந்தது. சில எழுத்துக்கள் அவனுக்குச் சிறப்பாக உவப்பானவை. அவற்றை எழுதுகையில் அவனுக்குக் களிப்பு கட்டுமீறிப் பெருகும்: புன்னகைப்பான், கண் சிமிட்டுவான், உதடுகளால் உச்சரிப்பான். அவனுடைய பேனா வரையும் ஒவ்வொரு எழுத்தையும் அவன் முகத்திலே படித்துவிடலாம் போல தோன்றும்.

அவனது ஊக்கத்தின் அளவிற்கேற்ப அவனுக்கு பரிசளிப்பதாக இருந்தால் அவன் தானே விழும்படி அரசாங்க ஆலோசகர் பதவி வரை எட்டியிருப்பான்; ஆனால் சக எழுத்தர்கள் கிண்டல் செய்தது போல அவனுக்கு கிடைத்தது எல்லாம் கோட்டு மார்பில் உலோகப் பட்டயமும் மூலநோயும் தான். ஆனாலும் ஒருவருமே அவனை கவனிக்கவில்லை என்று சொல்ல முடியாது. மிக உதார குணம் வாய்ந்த இயக்குனர் ஒருவன் அவனது நீண்டகால ஊழியத்துக்கு பரிசளிக்கும் நோக்கத்துடன் வழக்கமான நகல் எழுதும் வேலையை விட அதிக பொறுப்புள்ள வேலை அவனுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான்; அதாவது ஏற்கனவே தீர்ந்து போன விவகாரம் ஒன்றைப்பற்றி வேறு துறைக்கு அறிக்கை தயாரிக்கும் வேலை அவனிடம் ஒப்படைக்கப்பட்டது; தஸ்தாவேஜின் தலைப்பை மாற்றுவதும் சில வினைச்சொற்களை தன்னிலைக்கு பதில் படர்க்கையில் எழுதுவது மட்டுமே அவன் செய்ய வேண்டியிருந்த வேலை. ஆனால், இந்தக் காரியத்தைச் செய்வதில் ஏற்பட்ட சிரமத்தால் அவன் உடலெல்லாம் ஒரேயடியாக வேர்த்துக் கொட்ட நெற்றியை மறுபடி மறுபடி தடவிக் கொண்டிருந்துவிட்டு கடைசியில், “என்னால் முடியாது. ஏதாவது நகல் எழுதுவதற்கு கொடுங்கள்” என சொல்லிவிட்டான். நகல் எழுதும் இந்த வேலைக்கு புறம்பாக அவன் வரையில் எதுவுமே இருக்கவில்லை போலப்பட்டது.

(தொடரும்)

« முந்தைய பாகம் …………………………………………………………………….   அடுத்த பாகம் »

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

அயோத்தி – காஷ்மீர் – சபரிமலை – தேசிய குடிமக்கள் பதிவேடு
பறிக்கப்படும் மனித உரிமைகள் – தகர்க்கப்படும் அரசியல் சட்டம்.

நாள் :     22.12.2019, ஞாயிறு, காலை 10.30 மணி.
இடம்நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கம்.
            (சோகோ அறக்கட்டளை), கே.கே. நகர், மதுரை.

தலைமை :

பேராசிரியர் அ. சீநிவாசன்,
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.

கருத்தாளர்கள் :

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

திரு ஆளூர் ஷாநவாஸ்,
மாநில துணைப் பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் தியாகு,
பொதுச் செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.

நன்றியுரை :

திரு ம. லயனல் அந்தோணி ராஜ்,
செயலாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.

நூலரங்கம் :

கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை.

♦♦♦

மாற்றுக் கருத்து சொல்லும் அறிவுத்துறையினர், போராடும் மக்கள், அரசியல் சட்டத்தின் ஆட்சி கோருவோரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில், தேசிய புலனாய்வு முகமை மூலம் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கிறது மோடி – அமித்ஷா அரசு. பார்ப்பனியத்தை எதிர்த்தால் கவுரி லங்கேஷ், கல்புர்கி போல சுட்டுத் தள்ளுகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்கிறது.

எனினும், வீழ்த்த முடியாத சக்தி அல்ல பாஜக. வரலாறு மாபெரும் சர்வாதிகாரிகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துள்ளது.

சனாதனத்தை வீழ்த்தி, சட்டத்தின் ஆட்சியை உருவாக்கும் சமரை பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம்! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை காப்போம்!


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை.
தொடர்புக்கு : 73393 26807.

பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !

27

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
ஜினி அரசியலுக்கு வருவேன் எனக் கூறியபோதும் பலர், அவர் அரசியலுக்கு வருவார் என்பதை நம்பத் தயாராக இல்லை. தான் நடிக்கும் படங்களின் வெளியீடுகளின்போது மட்டும் அரசியல் பேசுவதன் மூலம், படங்களை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார் அவ்வளவே, அவர் அரசியலுக்கு வரவே மாட்டார் என விளக்கமும் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், தான் அரசியலுக்கு வருவதற்கு தக்கத் தருணம் வந்துவிட்டதை ரஜினி உணர்ந்தே இருக்கிறார். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்களின் இறப்புக்குப் பின் அதற்கான தயாரிப்பு வேலைகளில் அவர் வெகுஜாக்கிரதையாக ஈடுபட்டுவருகிறார்.

பெருமளவில் ரஜினியின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது என்பதும் வெளிப்படையானவை. சமீப காலமாக டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உருவாகியிருக்கும் ரஜினியின் படை , அவர்களை விமர்சிப்பவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறது. ரஜினி வெகு விரைவில் அரசியலில் இறங்க இருக்கிறார் என்பதற்கான முன் தயாரிப்புகளை அடையாளம் காட்டுகின்றன மேற்கண்டவை.

ஆனாலும், ரஜினியின் அரசியல், தமிழகத்தின் அரசியலோடு ஒத்துப் போகுமா என்பது முக்கியமானதொரு கேள்வி. ரஜினியும் ரஜினியை ஆதரிப்பவர்களும் ஆராய மறுக்கும் கேள்வி இது.

முதலில் ரஜினியின் அரசியல் என்னவென்று பார்ப்போம். தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தபோது, ‘உங்களுடைய அரசியல் எப்படிப்பட்டது?’ என செய்தியாளர்கள் ரஜினியிடம் கேட்டனர். ரஜினி சொன்ன பதில் ‘ஆன்மீக அரசியல்’. அவர் அப்படி சொன்ன அடுத்த நாள், இந்து சமயம் சார்ந்த ஒரு மடத்துக்குச் சென்று வந்தார். அதாவது தன்னுடைய அரசியல் ‘இந்து ஆன்மீக அரசியல்’ என பட்டவர்த்தனமாக அறிவித்தார் ரஜினி.

படிக்க :
♦ ரஜினி : எச்ச ராஜாவின் வெர்சன் 2 | துளைத்தெடுக்கிறது டிவிட்டர் !
♦ ரஜினி : வரமா – சாபமா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி வெளியீடு !

‘இந்துத்துவம்’, ‘காவி’ ஆகிய வார்த்தைகள் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘தேச விரோத’ சொற்கள். இந்த வார்த்தைகளை உச்சரிக்கும், உச்சரித்த அரசியல்வாதிகள் சட்டமன்ற தொகுதி தேர்தலில்கூட வெல்ல முடியாது. அத்திவரதரை தரிசிக்க முண்டியடித்துக் கொண்டு சென்ற அதே ஆன்மிக நாட்டம் கொண்ட மக்கள்தான், ஆன்மீகத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களையும் நிராகரிக்கிறார்கள் என்பதை ’ஆன்மீக அரசியல்’ கனவு காண்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, ரஜினி அதை உணர்வாரா என்பது கேள்விக்குறியானதே..!

ரஜினி தன்னுடைய ஆன்மீக அரசியலில் பிடிவாதமாக இருப்பதைப் போன்றே, மக்கள் போராட்டங்களை அவர் அணுகும்விதமும் தமிழக மக்களின் உணர்வுகளிலிருந்து பாரதூரமாக விலகியிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் திரள் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். அந்த சமயத்தில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பிய ரஜினி, “தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டது மக்கள் கிடையாது, சமூக விரோதிகள் தான். இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா விஷக்கிருமிகளை அடக்கி வைத்திருந்தார். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர்” என்றார்.

ஆயிரக்கணக்கான மக்கள் தன்னுணர்வோடு கலந்துகொண்ட போராட்டத்தை, மக்கள் தலைவராக வரத்துடிக்கும் ஒரு நபர் ‘சமூக விரோதிகள்’, ‘விசக்கிருமிகள்’ என கொச்சைப் படுத்தினார். தூத்துக்குடி மக்கள் வெகுண்டெழுந்தார், ரஜினியை இனி தங்கள் மண்ணில் அனுமதிக்கப்போவதில்லை என்றார்கள். ஆனாலும், ரஜினி தன் அரசியலில் பிடிவாதமாகவே தொடர்ந்தார்; தொடர்கிறார்.

அடுத்தது காஷ்மீர் பிரச்சினையை கையிலெடுத்தது பாஜக அரசு. ‘இந்து தேசியம்’ என்ற தங்களுடைய நீண்ட கால இலக்கின் அடிப்படையில் பாஜக அரசு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. காஷ்மீரில் வீட்டுக்கு வீடு இராணுவத்தை நிறுத்தி, தகவல் தொடர்புகளை துண்டித்து, வெகுஜென அரசியல்வாதிகளை சிறை வைத்து தன்னுடைய ராஜ்ஜிய கனவை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறது பாஜக அரசு.

காஷ்மீரை திறந்த வெளி சிறைச் சாலையாக மாற்றிவிட்டு, அம்மக்களின் உணர்வுகளை கேட்டறியாமல் திணிக்கப்பட்ட முடிவை ரஜினி ஆதரிக்கிறார். காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட தமிழக மக்கள், திமுக உள்ளிட்ட பெரும்பாலான தமிழக வெகுஜென அரசியல் கட்சிகள் அரசின் முடிவை எதிர்க்கிறார்கள். மீண்டும் ரஜினியும் தமிழக மக்களும் எதிரெதிர் திசையில் நிற்கிறார்கள்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினி, பாஜக அரசின் முடிவைப் புகழ்ந்து தள்ளினார்.

படிக்க :
♦ காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ? கருத்துக் கணிப்பு
♦ ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !

“உங்களின் மிஷன் காஷ்மீர் ஆபரேஷன் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறேன். இதுகுறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகச்சிறப்பு. அமித் ஷா யார் என்பதை மக்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். அதுகுறித்து நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்” என ரஜினி பேசியது சர்ச்சையானது; ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

தமிழகத்தில் பாஜகவின் அரசியலை புகழ்ந்து யார் பேசினாலும் பேசுகிறவர்களை மக்கள் ஒதுக்கிவிடுவர். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, நாற்பது ஆண்டு காலம் தங்களை மகிழ்வித்த ரஜினியும் விலக்கல்ல. மக்களின் உணர்வோடு பல்வேறு சமயங்களில் முரண்பட்டு நின்ற ரஜினியை, காஷ்மீர் குறித்த பேச்சின் மூலமாக மேலும் சற்று தள்ளி வைத்தனர். சமூக ஊடகங்களில் ரஜினிக்கு கிடைத்த எதிர்ப்பே அதற்கு சாட்சி!

அதோடு விட்டாரா என்றால், இல்லை. விளக்கமளிக்கிறேன் என்கிற பெயரில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளில் கல்லெறிந்துவிட்டுப் போனார் ரஜினி.

“காஷ்மீர் மிகப்பெரிய விஷயம்; அது நம் நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய விஷயம். அந்த காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் ஒரு தாய் வீடாக இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் இந்தியாவில் ஊடுருவ அது ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது. அதை நம் கைப்பிடியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ராஜதந்திரத்துடன், முதலில் 144 தடை உத்தரவு போட்டு, பிரச்சினை செய்பவர்களை வீட்டுக்காவலில் வைத்து, என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்லாமல், பெரும்பான்மை இல்லாத ராஜ்யசபாவில் சட்டத்தைக் கொண்டுவந்து அமல்படுத்தியிருக்கின்றனர். இது அருமையான ராஜதந்திரம். தயவுசெய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசியல் ஆக்க வேண்டும் என புரிந்துகொள்ள வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மிஞ்சும் அளவுக்கு பாஜக அரசின் நடவடிக்கை வக்காலத்து வாங்கினார் அவர்.

சுயாட்சி, தன்னாட்சி, மாநில சுய உரிமை இதெல்லாம்தான் தமிழக மக்களின் உணர்வு. நூறாண்டு கால தமிழக அரசியல் இந்த உணர்வின் மீது கட்டப்பட்டதே. இந்த உணர்வுகளை அடித்து நொறுக்கும் எவரையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மோடியுடன் தனிப்பட்ட முறையில் நட்பாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மோடி பிரதமர் வேட்பாளராக நின்றபோது ஏன் அவருடன் கூட்டணி அமைக்கவில்லை? ஜெயலலிதாவுக்கு மக்களின் உணர்வுகள் தெரியும். மோடியை, பாஜகவை முன்னிறுத்தினால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். திமுக நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிக்கண்டதும் இதே உணர்வின் அடிப்படையில்தான்.

ஏன் புதிய அரசியல்வாதி கமலும்கூட தமிழரின் உணர்வை தெரிந்து வைத்திருக்கிறாரே? ரஜினியைப் போல் அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டாமல், பாஜகவின் அடாவடி திட்டங்களை விமர்சிக்கும் விஜய் சேதுபதி, சித்தார்த் போன்ற நடிகர்களுக்கு இருக்கும் துணிவும் பொறுப்பும்கூட இந்த ஆன்மீக பெரியவருக்கு இல்லை.

படிக்க :
♦ குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !
♦ மோடியின் குடியுரிமை சட்டத்துக்கு இந்து தமிழ் திசையின் மானங்கெட்ட ஜிஞ்சக்கு ஜிஞ்சா !

இப்போது, இந்து ராஷ்டிர கனவுடன் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்திருக்கிறது பாஜக. அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது. மதத்தின் பெயரால் மக்களை ஒரு இனப்படுகொலைக்குத் தயார்படுத்தும் இவற்றை எதிர்த்து தன்னெழுச்சியாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. போராடும் மக்களை ஒடுக்க துப்பாக்கி குண்டுகள் பாய்கின்றன. கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களை இரக்கமில்லாமல் அடித்து விரட்டுகிறார்கள் அமித் ஷாவின் ஏவலர்கள்.

போராட்டங்கள் வலுவடைந்திருக்கும் நிலையில், “எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” பாஜகவின் குரலை அமைதி விரும்பி வேசம் கட்டி கருத்து கூறியிருக்கிறார் ரஜினி.

அமைதி வழியில் வளாகத்துக்குள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துகொண்டிருந்த ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை மாணவர்களை ஈவு இரக்கமில்லாமல் அடித்து உதைத்தது டெல்லி போலீசு. நூலகமெங்கும் இரத்தக்கறை! அதைக் கண்டுதான் மாணவர் சமூகம் வெகுண்டெழுந்தது. அப்போது ரஜினி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். மாணவர்கள் அடிவாங்கியது அவருடைய மனதிற்கு வேதனை அளிக்கவில்லை. சமூகம் கொந்தளிக்கும்போது அதிகாரத்துக்கு கால் பிடித்துவிடும் அவருடைய கேடுகெட்ட ஆன்மீக ஆன்மா விழித்தெழுந்துகொள்கிறது.

ரஜினி பாஜகவின் குரலாக ஒலிப்பதன் பின்னணி என்ன? ரஜினியின் ‘இந்துத்துவ ஆன்மீக ஈடுபாடு’ம் அவற்றை அவர் நடிக்கும் படங்களில் திணிப்பதும், மட்டுமல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ‘பார்ப்பன இந்து மத’த்தின் மேன்மைகளை எடுத்துச் சொல்வதும் பாஜகவினருக்கு நெருக்கத்தை உண்டாக்குகிறது.

இப்போது அல்ல, நீண்ட காலமாகவே ரஜினி, இந்துத்துவ அரசியலுக்கு தோதான ஆளாகவே பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்பினரும் பார்த்து வந்துள்ளனர். ரஜினிக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் இந்து முன்னணி அவரை காத்து நின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரும் சோ விட்ட அரசியல் (தரகர்) பணியைத் தொடர்பவருமான குருமூர்த்தி ‘பாஜகவும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும்’ என ரஜினி உள்ள மேடையிலேயே இணைப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

முழுக்க முழுக்க எதிர்ப்பு நிலையிலேயே தங்களை வைத்திருக்கும் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடிக்க பாஜக பல வகையிலும் திட்டமிடுகிறது. சினிமா செல்வாக்குள்ள, தங்களுடைய ‘கொளுகை’களுக்கு ஒத்துப்போகும் ரஜினி போன்ற பிம்பத்தின் பின்னால் வளரலாம் என்பது அவர்களுடைய நீண்ட காலத் திட்டம்.

ரஜினியின் ‘கொளுகை’கள் காவிமயமானவை; தமிழக மக்களின் எண்ணங்களுக்கு, வாழ்வியலுக்கு எதிரானவை. இதை அவர் உணர்ந்திருந்தாலும் தன்னுடைய சித்தாந்தத்திலிருந்து அவர் ஒருபோதும் கீழே இறங்கியதில்லை. தமிழகத்தின் மத எதிர்ப்பு அரசியலை எதிர்கொள்ள அவருக்குப் போதிய மன தைரியம் இல்லை என்பதோடு அது வெற்றி பெறவும் செய்யாது என்பதை அறிந்திருக்கிறார். அவருடைய இத்தனை ஆண்டுகால தயக்கமே இதை உணர்த்தக்கூடியதுதான். ஆனாலும், பாஜகவுக்கு இது பொருட்டில்லை.

ரஜினி என்பது பாஜகவுக்கு ஒரு முகமதிப்பு மட்டுமே. பணபலத்தைப் பற்றியோ, ஆள் பலத்தைப் பற்றியோ ரஜினி கவலைகொள்ளத் தேவையில்லை; அதை பாஜக கவனித்துக்கொள்ளும். பாஜகவுக்குத் தேவை தங்களுடைய சித்தாந்தத்தைத் தாங்கிச் செல்லும் ஒரு முகம். அந்தப் பணிக்கு ரஜினி கச்சிதமாகப் பொருந்துவார் என அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசிக்கும் நடிகர் ரஜினிகாந்த், தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாதவராகவே இருக்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ரஜினியின் சிந்தனை பள்ளியான காவி, இந்துத்துவ அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அவர்களின் அரசியல் வார்ப்பு அப்படிப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 130 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்சியை வளர்க்கத்தான் ரஜினி களமிறங்கப் போகிறார்.  உங்களுடைய ஆன்மீக அரசியலுக்கு பாடம் கற்பிக்க தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள், வாருங்கள் ரஜினி.

மு.வி. நந்தினி

disclaimer

குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !

“இந்த நிலம் என்னுடையது; ஆனால், நான் இந்த நிலத்திற்குரிய உரியவன் அல்ல!” – இந்த வரிகள், வங்க – அசாமிய முசுலிமான காஸி நீல் என்ற இளம் கவிஞனுடையது. அவனது வலி மிகுந்த இந்த வரிகள் இன்று, குடியுரிமைச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த பிறகு, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும் குடியேறி, இந்தியக் குடிமக்களாகவே மாறிவிட்ட வங்கதேச முசுலிம்களின் அவலத்தை, எதிர்கால அச்சத்தைப் பிரதிபலிப்பதாக மாறிவிட்டது.

1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் இந்திய நாட்டில் பிறந்த அனைவரும் இந்தியக் குடியுரிமை பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. பிரிவினையின்போதும், அதன் பின்னரும் குடிபெயர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதற்கும்கூட மதம் வரையறையாக வைக்கப்படவில்லை.

அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பவர்களை வெளியேற்றும் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, “இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்” எனக் குடியுரிமைச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டு, 1987-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2004-ல் வாஜ்பாயி ஆட்சியில் இந்த நிபந்தனை மேலும் கடுமையாக்கப்பட்டது. குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பதோடு, மற்றவர் சட்டவிரோதக் குடியேறியாக இருக்கக் கூடாது என அச்சட்டம் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தம் இந்தியாவில் குடியேறியிருக்கும் வங்கதேச முசுலிம்களையும், அவர்களது வாரிசுகளையும் ஒதுக்கி, சட்டவிரோத ஊடுருவல் பேர்வழிகளாகக் காட்டும் உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது.

மோடியின் ஆட்சியில் தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத் திருத்தமோ, மிகவும் வெளிப்படையாகவே இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முசுலிம்களை மட்டும் தனிமைப்படுத்தி, ஒதுக்குகிறது.

“பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து எவ்வித ஆவணங்களுமின்றி, டிசம்பர் 31, 2014 முன்பாக இந்தியாவில் குடியேறியிருக்கும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதக் கூடாது. மேலும், அவர்கள் மீது கடவுச்சீட்டுச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால், அவ்வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” எனக் குறிப்பிடுகிறது, அத்திருத்தம்.

மேலும், இச்சட்டத் திருத்தத்திற்கு முன்பு இந்தியாவில் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இந்தியாவில் பதினொரு ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. ஆனால், மோடி கொண்டுவந்திருக்கும் இச்சட்டம் குறிப்பிட்ட இந்த ஆறு மதத்தினருக்கு அக்காலக்கெடுவை ஐந்து ஆண்டுகளாகக் குறைத்துவிட்டிருக்கிறது.

இச்சட்டத் திருத்தம் இந்துக்களுக்குத் தனிச் சலுகை அளிக்கும் விதத்தில் கொண்டுவரப்படவில்லை எனக் காட்டுவதற்காகவே, அந்நிய மதமென ஆர்.எஸ்.எஸ். கும்பலால் கூறப்படும் கிறித்தவம் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும், இச்சட்டத் திருத்தத்தில் ஆறு மதங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதனின் உள்நோக்கம், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறியிருக்கும் வங்கமொழி பேசும் இந்துக்களுக்கு உடனடியாகக் குடியுரிமை வழங்குவதுதான்.

வங்க தேசத்திலிருந்து இந்தியாவில் குடியேறியிருக்கும் முசுலிம்கள் இந்தியக் குடியுரிமை பெற பலவிதமான ஆவணங்களைக் காட்டித் தாங்கள் சட்டவிரோதக் குடியேறிகள் இல்லை என நிரூபிக்க வேண்டியிருக்கும் நிலையில், வங்கமொழி பேசும் இந்துக்கள் எந்தவொரு ஆவணமும் இன்றி, தமது மத அடையாளம் ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு குடியுரிமை பெறுவதற்கு இச்சட்டத் திருத்தம் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

பாபர் மசூதி நிலத்தை இந்துத் தரப்பிற்கு வாரிக் கொடுக்க மத நம்பிக்கை; இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க மத அடையாளம் – இதன் பிறகும் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என நம்புவதற்கு ஏதாவது பொருளுண்டா?

படிக்க:
மோடி – அமித்ஷாவுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது : போராட்டக்களத்தில் பேசும் பதாகைகள் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியர்கள் நாங்கள் எதிர்க்கிறோம் ! – வழக்கறிஞர் பாலன்

துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் அல்லது அத்தகைய அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கும் மதச் சிறுபான்மையினர் என்ற மனிதாபிமான அடிப்படையில்தான் ஆறு மதத்தினருக்குக் குடியுரிமை வழங்கச் சலுகை அளிக்கப்பட்டிருப்பதாக மோடி அரசு கூறினாலும், மோடி அரசு நிறைவேற்றியிருக்கும் திருத்தத்தில் மதச் சிறுபான்மையினர் என்றோ, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பவர்கள் என்றோ குறிப்பிடப்படவில்லை. அச்சட்டத் திருத்தம் மத அடையாளத்தை மட்டுமே பேசுகிறது.

பாகிஸ்தானில் இந்துக்களைவிட, அஹமதியா முசுலீம்கள்தான் கொடூரமான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் மதச் சிறுபான்மையினர். பர்மிய இராணுவம் ரோஹிங்யா முசுலிம்கள் மீது இனப் படுகொலை நடத்தியிருப்பது உலகெங்கிலுமே அம்பலமாகியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் இனப் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுக் கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தம் யூதர்களுக்கு இசுரேல் போல, இந்துக்களுக்கு இந்தியா என்பதை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப, இச்சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகள், வரம்புகளை எதிர்காலத்தில் மாற்றும் அதிகாரத்தையும் மைய அரசிற்கு அளித்தே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

“இந்துக்கள் அல்லாதவர்கள், எந்தவொரு உரிமையினையும் சலுகையினையும் கோராமல், இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்து இந்த நாட்டில் வாழலாம்” என ஆர்.எஸ்.எஸ்.- சித்தாந்த குரு கோல்வால்கர் கூறியிருப்பதற்கு ஏற்ப, இந்து இந்தியாவை உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்.- இறுதி நோக்கம். அதனை நோக்கிச் செல்லும் திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அடுத்த அடிதான் இந்தச் சட்டத் திருத்தம்.

நாடெங்கும் குடிமக்கள் பதிவேட்டினை நடைமுறைப்படுத்தப் போவதாக அமித் ஷா அறிவித்திருப்பதையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க முடியும்.
அதேசமயம், இச்சட்டத் திருத்தத்தின் உடனடி நோக்கம் அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறாமல், சட்டவிரோதக் குடியேறிகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் வங்கமொழி பேசும் இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி அம்மாநிலத்தில் இந்து வாக்குவங்கியை உருவாக்கிப் பராமரிப்பதுதான்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அசாம் மாநிலத் தலைநகர் கவுஹாத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

“மார்ச் 21, 1974-க்கு பிறகு அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அனைவரையும், மத வேறுபாடின்றி வெளியேற்ற வேண்டும்” என்பதுதான் அசாம் மக்களின் கோரிக்கை. ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் போடப்பட்ட அசாம் ஒப்பந்தமும் அதனைத்தான் கோருகிறது.

ஆனால், மோடி அரசோ அந்த ஒப்பந்தத்தைச் சிதைக்கும் நோக்கில் அசாம் மாநிலத்தில் குடியேறியிருக்கும் வங்கமொழி பேசும் இந்துக்களுக்குச் சலுகை அளிக்கும் விதத்தில் இச்சட்டத் திருத்தத்தை உருவாக்கியிருக்கிறது. மேலும், அசாம் ஒப்பந்தத்தில் விதிக்கப்படிருந்த காலக்கெடுவையும் இந்துக்களுக்கு மட்டும் டிச.31, 2014 என நைச்சியமாக மாற்றியமைத்துவிட்டது.

இச்சட்டத் திருத்தம் வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தாது என மோடி அரசு விளக்கம் அளித்தாலும், அச்சமாதானத்தை அசாமியர்கள் யாரும் நம்பவில்லை. இச்சட்டத் திருத்தத்துக்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம் திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் எனப் பரவி வருகிறது.

இந்திய அரசு என்பது இந்து அரசுதான் என்பதை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சட்டபூர்வமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது, மோடி அரசு. அயோத்தி, காஷ்மீர் விவகாரங்களும் இந்த நடவடிக்கையும் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே எதிரானவை என்று கருதிக் கொண்டிருப்போர், இது ஓர் பேரழிவின் தொடக்கம் என்பதை விரைவிலேயே அனுபவித்து உணர்ந்து கொள்வார்கள்.

– புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியர்கள் நாங்கள் எதிர்க்கிறோம் ! – வழக்கறிஞர் பாலன்

0

ந்துத்துவ பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையில் சிறப்பு வழக்கறிஞராக, இந்துத்துவ கும்பலை எதிர்த்து போராடி வருபவர் வழக்கறிஞர் பாலன்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த அவரது ஆங்கில பேட்டியை தமிழாக்கம் செய்து இங்கே கொடுக்கிறோம். பாருங்கள்… பகிருங்கள்…

ந்திய மக்களாகிய நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்க்கிறோம். ஏனெனில், இது ஆர்.எஸ்.எஸ்.-ன் அகண்ட பாரத திட்டத்தின் ஒரு பகுதி. அவர்கள் வகுப்புவாத அரசியலின் மூலம் மக்களைப் பிரிக்க நினைக்கிறார்கள்.

முதலில் அவர்கள் இஸ்லாமியர்களைக் குறிவைக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்கள் தலித்துகளையும் குறிவைக்கிறார்கள். பின்னர், கம்யூனிஸ்ட்டுகள், தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியினரைக் குறிவைப்பார்கள்.

இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது முட்டாள்தனமான திட்டம். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், 1935-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டுவந்த நூரம்பர்க் சட்டங்களுக்கு நிகரானது. பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதே இதன் மொத்த நோக்கமாகும். தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5% மட்டும்தான் இருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு தொழில்துறையும் முடங்கியுள்ளது. வேலைவாய்ப்பு எங்கும் இல்லை. ஆகவே இது மக்களை திசை திருப்பும் வேலை.

இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வேண்டுமெனில் சுமார் ரூ. 6 இலட்சம் கோடி தேவைப்படும். அசாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த அரசாங்கம் 1,500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. மொத்த மக்களும் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவழித்துள்ளனர். இப்போது முதல் கேள்வி என்னவென்றால், இத்திட்டத்தை இந்தியா முழுவதும் 130 கோடி மக்களுக்கும் அமல்படுத்தினால் எவ்வளவு செலவாகும் ?

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. சட்டத்துக்கு முன்னர் அனைவரும் சமம் என்ற அடிப்படைக்கு எதிரானது. இச்சட்டம் முசுலீம்களை விலக்குகிறது. இந்தியாவைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரை ஏற்றுக் கொள்வதாகக் கூறுகின்றனர். எனில் பர்மாவில் பவுத்தர்கள்கால் துன்புறுத்தப்படும் சிறுபான்மையின மக்களாகிய ரோகிங்கிய மக்களை ஏன் சேர்த்துக் கொள்ளமுடியாது என்கிறார்கள் ?

அனைத்து நாடுகளில் இருந்தும் இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மத, சாதி, இன பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம்.

படிக்க :
குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி
♦ மோடியின் குடியுரிமை சட்டத்துக்கு இந்து தமிழ் திசையின் மானங்கெட்ட ஜிஞ்சக்கு ஜிஞ்சா !

அவர்கள் 6 மதங்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாகச் சொல்கிறார்கள். புத்த மதம், ஜைன மதம், பார்சி, சீக்கிய மதம், இந்து மதம், கிறுத்துவ மத மக்களை அனுமதிப்பதாகக் கூறுகிறார்கள். கிறுத்துவ மக்கள் வெகு குறைவானோரே.
மொத்தத்தில் அவர்கள் முசுலீம்களை மட்டும் ஒதுக்குகிறார்கள். இது பாஜக ஆர்.எஸ்.எஸ்.-ன் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.
இது ஏற்றுக் கொள்ள முடியாதது. அரசின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நமது அரசியல்சாசனத்தைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதே தேசப்பற்று நடவடிக்கை. அரசியல் சாசனத்தை சிதைப்பது நம்பிக்கை துரோகிகளின் வேலை.

கேள்வி : “தேசிய குடிமக்கள் பதிவேடு” நடைமுறைப்படுத்தப்பட்டால் முசுலீம்கள் பயம்கொள்ள பல விசயங்கள் இருக்கின்றன. ஆனால் அது ஆவணங்கள் அற்ற அனைத்து இந்தியக் குடிமக்களையும் பாதிக்கும் அல்லவா ? இதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் ? இது எவ்வாறு முசுலீம் அல்லாதவர்களைப் பாதிக்கும் ?

பதில் : எனது பிறப்புரிமையை இவர்கள் எப்படி ஆவணங்களோடு சம்பந்தப்படுத்த முடியும் ? இது கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட சுமார் 42 கோடி தொழிலாளர்களை நேரடியாகப் பாதிக்கும். அவர்களுக்கு வீடு கிடையாது. நிலையான இடத்தில் வேலை கிடையாது. அவர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்று மாதம் கர்நாடகா, 3 மாதம் ஆந்திரா, 3 மாதம் மும்பை என ஒவ்வொருமுறையும் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும் ?

அர்ஜுன் சென் குப்தா கமிட்டி அறிக்கையின் படி 84 கோடி பேர் ஒரு இடத்தில் 28 நாட்களுக்கு மேல் இருப்பதில்லை. இவர்களிடம் எந்த ஆவணங்களும் இருக்காது. ஆகவே இந்த தேசிய குடிமக்கள் பதிவேடும், குடியுரிமை திருத்தச சட்டமும் இந்துக்களுக்கும் எதிரானது.

கேள்வி : சரி, இப்படி தங்களது ஓட்டுவங்கியான இந்துக்களுக்கே எதிரானதை பாஜக ஏன் நடைமுறைப்படுத்துகிறது ?

பதில் : அவர்கள் சோறில்லை என்று கேட்டால், இவர்கள் இராமஜென்ம பூமியில் இராமன் கோவில் கட்டுவதாகக் கூறுகிறார்கள். மக்கள் நேரடியாக சொர்க்கத்திற்குச் செல்வது குறித்துப் பேசுகிறார்கள்.

கேள்வி : இதை எப்படி எதிர்க்கப் போகிறீர்கள் ?

பதில் : மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமைதியான வழியில், அமைதியற்ற வழியில் என தொடர்ந்து போராடுகிறார்கள். பல்வேறு போராட்ட வடிவங்களை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களது போராட்டங்கள் விரிவடைந்து செல்கின்றன. மொத்த நாடே பற்றி எரிகிறது. இது இன்னும் பரவும்.

ஆனால் அமித்ஷா இதற்கு இறங்கிவருவது போல் தெரியவில்லை. “நீ போராடு, நாங்கள் சட்டத்தை அமல்படுத்துவோம்” என்கிறார். இது அமித்ஷாவுக்கும் மக்களுக்கும் இடையிலான சவால்.

கேள்வி : உங்களது இறுதி கோரிக்கை என்ன ?

பதில் : தேசிய குடிமக்கள் பதிவேட்டை விரட்டியடிக்க வேண்டும். குடியுரிமை திருத்த மசோதாவையும் சட்டத்தையும் விரட்டியடிக்க வேண்டும்.


தமிழாக்கம் :
நந்தன்

மோடி – அமித்ஷாவுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது : போராட்டக்களத்தில் பேசும் பதாகைகள் !

1

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மக்கள் தன்னிச்சையாக நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். துணை இராணுவம், போலீசு, ஊரடங்கு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளை ஆளும் அரசு ஏவினாலும் போராட்டத்தின் வீரியத்தை அவர்களால் குலைக்க முடியவில்லை.

மோடி – ஷாவின் பாசிச சட்டத்துக்கு எதிராகவும் இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்கும் பொருட்டும் வெவ்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர். அதன் தொகுப்பு இங்கே…

என்னுடைய ஹிஜாப் அல்லது ”ஹிஜாபுடன் கூடிய நெற்றி போட்டு”… எது உங்களை பாதிக்கிறது?

மும்பையில் நடந்த போராட்டத்தின் போது உரிமைக்காக பதாகை ஏந்திவந்திருந்த பெருந்திரளான மக்கள்

பாசிசம் அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது !
‘நான் முசுலீம்; இந்து; பவுத்தர்; சீக்கியர்; கிறித்துவர்; ஜெயின்; மொத்தத்தில் நான் இந்தியர்.
‘மேரி கிரைசிஸ், ஹேப்பி நியூ ஃபியர்’ (நிறைய பிரச்சினைகளுடன் புதிய பயமுறுத்தல்)

படிக்க :
குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி
♦ “இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” – அருந்ததிராய்

துப்பாக்கியல்ல, புத்தகங்கள். வன்முறை அல்ல கலாச்சாரம். நான் ஜாமியா மாணவர்களுடன் அவர்களுக்காக நிற்கிறேன்.
தேநீர் செய்யுங்கள்; போரை அல்ல.
மோடி – ஷா-வுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!
பாசிஸ்டுகளும் (மோடி அமித்ஷா) கோபக்காரர்களும் (போராட்டக்காரர்கள்)
கேளாத செவிகள் கேட்க வேண்டுமெனில் சத்தம் மிக அதிகமாகத்தான் இருக்க வேண்டும் – பகத் சிங்
மோடி – ஷா – போய் அரசியலமைப்பைப் படியுங்கள்!
பிழை 404 – இந்து ராஷ்டிரம் காணப்படவில்லை
(காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைக் கடந்து) இயல்பு நிலை இப்போது டெல்லியை எட்டியுள்ளது.
பாசிசத்தை முடக்குங்கள்; இணையத்தை அல்ல.
அவர்கள் எங்களைப் பிரித்தால் நாங்கள் பல்கிப் பெருகுவோம்.
உங்கள் துப்பாக்கியைவிட எங்கள் குரல் வலிமையானது
என்னுடைய உடை முசுலீமை போன்றது, நெற்றி இந்துவைப் போன்றது; என்னுடைய கழுத்து கிறித்துவன் எனக் காட்டுகிறது. ஆனால், நான் ஒரு மனிதன்
நான் ஒரு ஜெர்மானியர், (NRC, CAA அனுமதித்தால்) நிச்சயம் உங்கள் எதிர்கால சந்ததியினர் உங்கள் மீது உமிழ்வார்கள்.


கலைமதி

நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்

மார்க்சியம் லெனினியம் பற்றிக் கூறும் “மார்க்சியத்தின் அடிப்படைகள்” என்னும் சிறு தொகுதியில் 11 கட்டுரைகள் உள்ளன … 70 ஆண்டுகள் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் வழிகாட்டியாக, புது வாழ்க்கையின் பேரொளியாக இயங்கி வந்த சோவியத் நாடு சிதைந்து 15 (2006-இல் இந்நூல் வெளியானது) ஆண்டுகள் ஆகின்றன. அந்நிகழ்ச்சிக்குப் பின் மார்க்சியத்தின் எதிர்காலமே கேள்விக்குறியானது. மார்க்சியம் ஓர் அறிவியல். அறிவியலுக்கு அழிவில்லை ; வாழும், வளரும், வெற்றிபெறும் என்பது உறுதி.

விலங்கு நிலையிலிருந்து பிரிந்த மனிதன் மட்டுமே தன் உழைப்பால் பல சாதனைகளைப் படைத்து வரலாற்றை உருவாக்கினான். வார்ரோ என்னும் ரோமானிய அறிஞர் கருவிகள் மூவகை ; முதலாவது பேசக்கூடியவை, இரண்டாவது பேச முடியாதவை, மூன்றாவது ஊமை. இவற்றுள் முதல் வகை சார்ந்தவன் மனிதன். இரண்டாம் வகை சார்ந்தவை பிற உயிரினங்கள், மூன்றாவது வண்டி போன்றவை என்றார். இவற்றுள் மனிதனே தன் உழைப்பால் இவ்வுலகில் காணும் செயற்கைப் பொருள்கள் செல்வங்கள் அனைத்தையும் படைத்தான். இப்படைப்பு நிகழ்ச்சிகளில் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டவன் இந்த உழைப்பாளியே. இந்த உழைப்பாளியேதான் குடும்பம், அரசு, சமூக உறவுகளை உருவாக்குவதில் பங்குபெற்றவன். பொருள் உற்பத்தி படைப்பில்-அதில் உள்ள உற்பத்தி உறவுகளில் மையமானவன்.

வஞ்சகம், சூழ்ச்சி, சுரண்டல் என்னும் தீங்குகளை எதிர்த்துச் சமத்துவத்துக்காக நீண்ட நெடுங்காலமாக மனிதன் போராடி வந்துள்ளான். ஒவ்வொரு நாட்டிலும் கலகங்கள் பல, எழுச்சிகள் பல, கிளர்ச்சிகள் பல, புரட்சிகள் பல, வெற்றிகள் சில, தோல்விகள் பல. வெற்றிகள் சிலவாயினும் அவையே சமூக மாற்றத்திற்கு வித்திட்டன. தோல்விகள் உரமாயின. வரலாறு தந்த படிப்பினைகளின் மேலெழுந்த அறிவியல்தான் மார்க்சியம்.

தந்த படிப்பினைகளின் மேலெழுந்த அறிவியல்தான் மார்க்சியம் மார்க்சியம் தோற்றது எனில் வரலாறு தோற்றது என்பது பொருள் மார்க்சியம் ஏலாது என்றால் மனிதன் மனிதனாகக் கருதப்படுவதற்குத் தகுதியற்றவன் என்பது பொருள். இந்தப் பின்புலத்தில் இக்கட்டுரைகள் பயிலப்படுதல் வேண்டும். ஏறத்தாழ மார்க்சியம் பற்றிய எல்லா அடிப்படை வினாக்களுக்கும் இக்கட்டுரைகள் விடை தருகின்றன.

மார்க்சியம் மாய்ந்துவிட்டது எனத் தம்பட்டம் அடிக்கப்படும் இந்நேரத்தில் தனியார் மயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கை சூறாவளியாகச் சுழன்று அடித்து வரும் இந்நேரத்தில் மார்க்சியம் எதிர் நிற்குமா என்னும் ஐயப்பாடு பலருக்கு இயல்பாக எழும். இப்புதிய பொருளாதாரக் கொள்கையும் உலக முதலாளித்துவத்தின் நீட்சியே என்னும் உண்மையறியப்பட்டால் மார்க்சியத்தின் மெய்ம்மையும் அதன் தேவையும் உணரப்படும். இந்த மன உறுதியை அளிப்பனவாகவே இக்கட்டுரைகள் அமைகின்றன. குறிப்பாக இதுவரை மார்க்சியம் அறியாதவருக்கு அதனை அறிவிக்கும். அறிந்தவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை நீக்கி அறிவு தெளிவிக்கும் இத்தொகுதியை வெளியிடுவதில் என்.சி.பி.எச் பெருமிதம் கொள்கிறது. (நூலின் பதிப்புரையிலிருந்து…)

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
“இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” – அருந்ததிராய்

இந்நூலில், உபரி மதிப்பு என்றால் என்ன? தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன? தொழிலாளி வர்க்கம் என்றால் என்ன? இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்றால் என்ன? முதலாளித்துவம் என்றால் என்ன? அந்நியமாதல் என்றால் என்ன? ஏகாதிபத்தியம் என்றால் என்ன? வர்க்கப் போராட்டம் என்பது என்ன? பெண்களின் மீதான ஒடுக்குமுறை தவிர்க்க முடியாததா? முதலாளித்து வர்க்கம் என்றால் என்ன? சோசலிசம் என்றால் என்ன? புரட்சி என்றால் என்ன? ஆகிய அடிப்படையான 12 கேள்விகளே உட்தலைப்புகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன?

ஒடுக்குமுறையும் சுரண்டலும் முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சங்கள். தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. முதலாளித்துவ உடைமையாளர்களோ உழைப்போரால் உருவாக்கப்படும் உற்பத்திப் பொருள்களிலிருந்து லாபங்களைப் பெறுகின்றனர். இதுவே பொருளாதாரச் சுரண்டலின் சாராம்சமாகும். ஏறத்தாழ ஒவ்வொரு தொழிலாளியும், ‘சுரண்டல்’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துவதில்லையென்றாலும் கூட, அது பற்றி அறியாமலில்லை. முதலாளித்துவத்தின் கீழ் அனைத்துத் தொழிலாளர்களும் – அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பது முக்கியமல்ல உடைமையாளர்களால் சுரண்டப்படுகிறார்கள். தொழிலாளர்களால் உருவாக்கப்படும் செல்வம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சில வங்கியாளர்களிடமும் உடைமையாளர்களிடமும் ஒப்படைக்கப்படுகிறது. முதலாளித்துவ சமுதாயங்களில் அனைத்துச் சட்டங்களும் இந்த ஏற்றத்தாழ்வை வலியுறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன.

மேலும் கூடுதலாக, வர்க்க சமுதாயம் முதலாளித்துவத்தை வரையறுக்கக்கூடிய பொருளாதாரச் சுரண்டலுக்கும் அப்பால் செல்லும் ஒரு தனிச்சிறப்பான ஒடுக்குமுறைகளின் வலைப்பின்னலை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் ஒடுக்குமுறை மற்றும் ஒரு பாலின உறவு, இரு இனங்களுக்கிடையே அல்லது பல்வேறு இனங்களுக்கு இடையிலான பாலின உறவுகளை எதிர்த்த பாலியல் அடிப்படையிலான ஒடுக்கு முறை ஆகியவை இருக்கின்றன.

முதலாளித்துவத்தின் கீழ் தனிவகைப்பட்ட ஒடுக்குமுறைகளின் முக்கியமான வடிவங்களில் ஒன்றாக தேசிய ஒடுக்குமுறை – தேசிய இனத்தின் அடிப்படையில் அவ்வின மக்கள் அனைவரையும் சுரண்டுவது இருக்கிறது. ஒடுக்கப்பட்ட தேசங்களின் பொருளாதாரங்கள் மற்றும் அரசியல் ஆகியவற்றின் மீது மிகவும் பலம் வாய்ந்த ஏகாதிபத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிறபோது, சர்வதேச அரங்கில் இது பரவலாக அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் சொத்துடைமையாளர்களும் பெரிய வங்கிகளாலும் கூட்டிணைவுக் குழுமங்களாலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிற ஏகாதிபத்திய வல்லரசுகளாலும் கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர். (நூலிலிருந்து பக்.7-8)

நூல் : மார்க்சியத்தின் அடிப்படைகள்
ஆசிரியர் : நிழல்வண்ணன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 86
விலை: ரூ 45.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam