Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 356

இத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 14

டோக்ளியாட்டி

விரிவுரை 3

தேசிய பாசிஸ்டுக் கட்சி

பாசிசம் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் யுத்தத்திற்கு முன்னர் இருந்து வந்த பூர்ஷுவா சக்திகளின் அரசியல் நிறுவனம் பற்றி நான் ஏற்கெனவே கூறியதை தோழர்கள் நன்கு நினைவில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இத்தகைய நிலைமையில் பாசிஸ்டுக் கட்சி எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதையும், அதனால் இன்று ஏற்பட்டுள்ள விளைவுகளையும் அவர்களால் சரியாகப் புரிந்து கொள்வது கடினம்.

பூர்ஷுவா வர்க்கம் ஒரு வலுவான, ஒன்றுபட்ட அரசியல் நிறுவனத்தை என்றுமே பெற்றிருந்ததில்லை; கட்சி வடிவத்திலும் அதற்கு ஒரு நிறுவனம் இருந்ததில்லை. இதுதான் யுத்தத்திற்கு முன்னர் இத்தாலியில் இருந்த நிலைமை. யுத்தத்திற்கு முன்னர் ஓர் அரசியல் கட்சிக்குரிய இயல்பும், பெயரும் கொண்ட ஒரு பூர்ஷுவா அரசியல் நிறுவனத்தை நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்துடனும், செயல்முறையுடனும் நாடு முழுவதுக்குமான ஒரு மத்திய தேசிய நிறுவனத்தையே இங்கு குறிப்பிடுகிறேன். இத்தகைய ஒரு அமைப்பு இருந்ததா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள், உங்கள் முயற்சி வீண்தான். ஏனென்றால் அத்தகைய ஓர் அமைப்பு இருந்ததை உங்களால் காண முடியாது.

இத்தாலியப் பொருளாதாரக் கட்டமைப்பின் நேரடி விளைவிலிருந்து தோன்றியதே இத்தகைய அரசியல் நிலைமை. ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது நாட்டில் கனரகத் தொழில்துறை இருந்து வந்த போதிலும் தேசத்தின் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் அதனால் ஒழுங்குபடுத்த முடியாததே இந்த அரசியல் பலவீனத்துக்குக் காரணம். விவசாயப் பொருளாதாரம் இத்தாலியப் பொருளாதாரத்தில் இன்னமும் பெரும் பங்காற்றி வந்தது. பெரும் எண்ணிக்கையில் இருந்த இடைப்பட்ட பிரிவினரும் ஒரு முக்கியப் பங்காற்றி வந்தனர்.

நீங்கள் எப்படித் துருவிப் பார்த்தாலும் இங்கிலாந்தில் இருப்பது போன்ற ஒரு நிலைமையை இத்தாலியில் காண முடியாது. உதாரணமாக இங்கிலாந்தில் இரண்டு எடுத்துக்காட்டான கட்சிகள் இருக்கின்றன. லிபரல் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி ஆகியவையே அவை. அக்கட்சிகள் தேசிய அளவில் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு திட்டத்தையும், கொள்கை வழியையும், ஒருமைப்பாட்டு உணர்வையும் கொண்டுள்ளன. ஒன்று மாற்றி ஒன்று அதிகாரத்துக்கு வருகின்றன. இத்தாலியில் இத்தகைய கட்சிகள் ஏதுமில்லை.

இதற்குப் பதிலாக, பூர்ஷுவாக்களின் கருத்தோட்டம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்த இயலாதவையும், தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை எய்த முடியாதவையுமான கட்சிகளும் கோஷ்டிகளும்தான் ஏராளமாக உள்ளன. யுத்தத்திற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் மிகப்பல கட்சிகளின் குழுக்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்தனர்.

காஸ்டான்டினோ லஸ்ஸாரி (Lazzari Costantino)

ஆனால் இந்தக் கட்சிகள், குழுக்களின் அரசியல் மற்றும் ஸ்தாபன திட்ப நுட்பத்தைப் பார்ப்பீர்களேயானால் பின் கண்ட முடிவுகளுக்குத்தான் வருவீர்கள்: இக்கட்சிகளை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் காட்டும் எல்லைக் கோடுகள் முனைப்பானவையாக, கூர்மையானவையாக இல்லை. அவை மங்கிப்போய் தெளிவின்றி அரைகுறையாகத்தான் காணப்படுகின்றன. நீங்கள் பெரிய குழுக்களை நெருங்கிச் சென்று பார்க்கும்போது அவற்றிடம் கட்சி இயல்பை நீங்கள் காணமுடியாது. பெரும் எண்ணிக்கையிலுள்ளவர்களைக் கொண்ட குழு கியோலிட்டி குழுதான். ஆனால் அதுவும் கூட ஓர் அரசியல் கட்சி அல்ல. ஒவ்வொரு பிரதிநிதியும் தமது சொந்தப் பகுதியில் ஒரு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்தக் குழு ஒரு ஸ்தாபனம் என்ற முறையில் அதன் சொந்தப் பிராந்தியத்துக்கு அப்பால் சென்றதில்லை. டூரினிலுள்ள லிபரல் முடியாட்சி யூனியனை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கொத்துக் கொத்தாக உள்ள இந்தக் குழுக்கள் ஓர் ஒருங்கிணைந்த கட்சியாக உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை.

ஆனால் அதே சமயம் இடதுசாரி அமைப்புகளை, உழைக்கும் வெகுஜனங்களது அமைப்புகளைப் பார்ப்பீர்களேயானால் முற்றிலும் வேறுபட்டதொரு காட்சியைக் காண்பீர்கள்.

யுத்த முற்கால பிரதிநிதிகள் சபையில் பெரிதும் ஒருங்கிணைந்த ஒரு பூர்ஷுவாக் கட்சியாக இருந்தது ரேடிக்கல் கட்சிதான். இது ஏன்? ஏனென்றால் வடபகுதியைச் சேர்ந்த உழைக்கும் வெகுஜனங்கள் அக்கட்சியின் ஆதார அடித்தளமாக அமைந்திருந்தனர். சோஷலிஸ்டுக் கட்சி உருவான அதே சூழ்நிலையில்தான் ரேடிக்கல் கட்சியும் தோன்றிற்று. ஆனால் அது பூர்ஷுவா ஜனநாயகப் பாதையில் விலகிச் சென்றது. பாட்டாளி வர்க்கத்தின் பல்வேறு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் உதயமானதால் இது ஒரு கட்சியின் வடிவத்தை எய்தியது.

படிக்க:
தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

யுத்த முற்காலத்தில் இருந்த ஒரே கட்சி, உண்மையான ஒரே கட்சி சோஷலிஸ்டுக் கட்சிதான், தேர்தல்களில் மிலானிலும் அதே சமயம் காக்லியரியிலும் ஒரே வேட்பாளரை நிறுத்தக்கூடிய ஒரே கட்சி சோஷலிஸ்டுக் கட்சிதான். இதேபோன்று டூரினிலும் பாரியிலும் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஒரே வேட்பாளரை நிறுத்துவது என்பது எண்ணிக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும்.

நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமரச நடவடிக்கைளின் விளைவாக பூர்ஷுவாக்களின் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டது. இது 1890-1898-ம் ஆண்டுகளில் நடைபெற்றது. இதனை கியோலிட்டியின் காலம் எனக் கூறலாம்.

கியாசின்டோ மெனோட்டி செர்ராட்டி (Giacinto Menotti Serrati)

மேலும், வடக்கிலுள்ள பூர்ஷுவா அரசியல் குழுக்களுக்கும் தெற்கிலுள்ள பூர்ஷுவா அரசியல் குழுக்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு நிலவுவதை நீங்கள் காணலாம். வடக்கில் உள்ள அரசியல் குழுக்கள் விரிந்து பரந்தவை. ஒரு லிபரல் கட்சியை உருவாக்கும் போக்கு கொண்டவை. இந்தச் சக்திகளை ஒன்றுபடுத்தும் பிரச்சினை அச்சமயம் முன்னணிக்கு வந்தது. பத்திரிகைகளிலும் பெரிதும் விவாதிக்கப்பட்டது. ஆனால் அச்சமயம் இது முற்றுப் பெறவில்லை.

தெற்கே செல்வீர்களேயானால் இதைக்கூடப் பார்க்க முடியாது. அங்கு பூர்ஷுவாக்களின் அமைப்பு ஸ்தல நலன்களாலும், தனிப்பட்ட சொந்த நலன்களாலும் சிதறுண்டு கிடந்தது. ரேடிக்கல் கட்சி, சோஷலிஸ்டுக் கட்சி, குடியரசுக் கட்சி (கட்சி என்னும் சொல்லின் உண்மையான அர்த்தத்தில் இது தேசியத்தன்மை கொண்ட ஒரு கட்சியாக இருக்கவில்லை, ஒரு சில இடங்களில் மட்டுமே ஆதரவு பெற்ற ஓர் அமைப்பாக இருந்தது) ஆகிய கட்சிகள் எல்லாம் தெற்கில் ஸ்தல முத்திரைகளாகக் கொண்டவையாகவே இருந்தன. உதாரணமாக சோஷலிஸ்டுக் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நேப்பள்சில் சோஷலிஸ்டுக் கட்சியின் வரலாறும் இத்தாலியின் இதர பிராந்தியங்களில் சோஷலிஸ்டுக் கட்சியின் வரலாறும் ஒரே மாதிரியானதல்ல. சில அம்சங்களில் இது ஏனைய பூர்ஷுவாக் கட்சிகளை ஒத்திருந்தது. கட்சிக்குள் நடைபெறும் கோஷ்டி சண்டைகளிலும், சூழ்ச்சிகளிலும் இது பிரதிபலிக்கக் காணலாம். இதேதான் சிசிலியிலும் நடைபெற்றது. அங்கு இன்னொரு கட்சியைத் துவக்கும் அளவுக்கு உட்கட்சிப் பூசலும் சச்சரவும் கருத்து வேறுபாடும் மேலோங்கி இருந்தன. ரெக்கியோ எமிலியாவில் ¹ நடைபெற்ற சோஷலிஸ்டுக் கட்சியின் தேசிய காங்கிரசில் தேசியவாதிகள் பிளவுபட்டு “சிசிலி” சீர்திருத்தக் கட்சியை அமைத்தனர். வேறு சில குழுக்களும் தோன்றின. இவையாவும் தனியமைப்புகளாக மெஸ்ஸினாவிலும் கடானியாவிலும் சிறிதுகாலம் செயல்பட்டு மறைந்தன.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

1 லியோனிடா பிஸ்ஸோலாட்டியும் மற்ற தீவிர வலதுசாரி சீர்திருத்தவாதிகளும் கியோலிட்டியின் மேன்மேலும் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட காலனிக் கொள்கையை, குறிப்பாக லிபியாவை ஆக்கிரமித்துக் கொண்டதை ஆதரித்தனர்: எமிலியாரெக்கியோவில் 1912 ஜூலையில் நடைபெற்ற சோஷலிஸ்டுக் கட்சியின் 12-வது தேசிய காங்கிரஸில் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். காஸ்டான்டினோ லஸ்ஸாரி, கியாசின்டோ மெனோட்டி செர்ராட்டி தலைமையில் கட்சியின் கட்டுப்பாடு மாக்சிமலிஸ்டுகள் கைக்குச் சென்றது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

ஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் ?

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 7

தற்கிடையில் வெளியே வசந்தம் கும்மாளி போடலாயிற்று.

எப்போதும் போலவே வசந்தம் உள்ளங்களைக் கனிவித்தது, கனவுகளை எழுப்பியது.

“ஆகா, இப்போது துப்பாக்கியும் கையுமாக எங்கேனும் காட்டுக்குப் போனால், எவ்வளவு நன்றாயிருக்கும்! எப்படி, ஸ்தெபான் இவானவிச், சரிதானே? பொழுது புலரும் வேளையில் குடிசையில் பதிபோட்டுக் காத்திருந்தால்… அற்புதமாயிருக்கும்!

காலை நேரம் ரோஜா நிறம் பொலியும், உற்சாகமூட்டும், இளங்குளிர் அடிக்கும். நாம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு உட்கார்ந்திருப்போம். திடீரென்று கல, கல, கல என்ற ஒலி. இறக்கைகள் ஷ்ஷ, ஷ்ஷ, ஷ்ஷ என வீசும் சத்தம். நமக்கு மேலே வால் விசிறி போல விரித்தவாறு இறங்கிவரும் ஒரு பறவை, இன்னொன்று, மூன்றாவது…”

ஸ்தெபான் இவானவிச் ஓசையுடன் மூச்சு இழுத்தார். அவர் நாவில் நீர் ஊறியது போலும். கமிஸாரோ, விடாது பேசிக் கொண்டு போனார்.

“அப்புறம் நெருப்புக்குப் பக்கத்தில் நீர்சுவறாக் கோட்டை விரித்துக் கொண்டு, புகை மணம் வீசும். தேநீரும் கொஞ்சம் வோத்காவும் பருகுவோம். ஒவ்வொரு தசையும் கதகதப்பு அடையும்படி, ஊம்? உழைப்புக்குப் பிறகு..

“ஆஹ்ஹா! ஒன்றும் சொல்லாதீர்கள், தோழர் கமிஸார்..”

இவ்வாறு வேட்டை அனுபவங்களின் வர்ணனைகள் தொடங்கின. ஒருவரும் கவனிக்காத முறையில் பேச்சு போர்முனை நிலவரங்களுக்குத் திரும்பியது. தங்கள் டிவிஷனில், படைப் பகுதியில் இப்போது என்ன நடக்கிறது, பனிக்காலத்தில் கட்டப்பட்ட நிலவறைக் காப்பிடங்கள் நீர் கசிகின்றனவா இல்லையா, அரண்கள் சிதைந்து விட்டனவா இல்லையா, மேற்கே தார் ரோடுகளில் நடந்து பழகிய பாசிஸ்டுகளுக்கு இந்த வசந்தகால நீர்க்குட்டங்களும் சேறும் எப்படியிருக்கும் என்றெல்லாம் அனுமானிக்கலானார்கள் நோயாளிகள்.

பகல் உணவு வேளைக்குப் பிறகு சிட்டுக் குருவிகளுக்கு இரை கொடுப்பது தொடங்கிற்று. சாப்பாட்டுக்குப்பின் எஞ்சிய துணுக்குகளைத் திரட்டி, ஜன்னலின் மேல் திறப்பு வழியே அவற்றைப் பறவைகளுக்காக வெளிக்குறட்டில் போடும் யோசனை ஸ்தெபான் இவானவிச்சுக்கு உதித்தது. இது பொது வழக்கம் ஆகிவிட்டது. இப்போது வெறுமே எஞ்சிய துணுக்குகள் மட்டுமே போடப்படவில்லை. நோயாளிகள் பெரிய துண்டுகளை வேண்டுமென்றே மிச்சம் வைத்து அவற்றைத் துணுக்குகளாக நொறுக்கினார்கள்.

இவ்வாறு, ஸ்தெபான் இவானவிச்சின் யோசனையால் சிட்டுக் குருவிக் கூட்டம் முழுவதும் இரை கொள்ள வகை செய்யப்பட்டது. இரைச்சலிடும் இந்தச் சின்னஞ்சிறு பறவைகள் சற்றுப் பெரிதான ஒவ்வொரு துணுக்குகளையும் கொத்தித் தின்னப்பாடுபடுவதையும் கீச்சிடுவதையும் சச்சரவு செய்வதையும், வெளிக்குறட்டைச் சுத்தம் செய்ததும் பாப்ளார் மரக்கிளைகளில் இளைப்பாறுவதையும் இறகுகளைக் கோதிக்கொள்வதையும் பிறகு ஒன்றாகச் சிவ்வென்று பறந்து தங்கள் சிட்டுக்குருவி அலுவல்களுக்காக எங்கோ செல்வதையும் அவதானிப்பதில் வார்டு முழுவதற்கும் பெருத்த இன்பம் உண்டாயிற்று.

சிட்டுக் குருவிகளுக்கு இரை போடுவது விருப்பப் பொழுதுபோக்கு ஆகிவிட்டது. சில பறவைகளை நோயாளிகள் இனங்கண்டு கொண்டு அவற்றிற்குப் புனைப் பெயர்களும் சூட்டினார்கள். வார்டுக்காரர்களைச் சிறப்பாகக் கவர்ந்தது வாலறுந்த, துடுக்கும் சுறுசுறுப்பும் மிக்க ஒரு சிட்டுக்குருவி. சச்சரவிடும் கெட்ட சுபாவம் காரணமாகவே அது வாலைப் பறிகொடுத்தது போலும். ஸ்தெபான் இவானவிச் அதற்கு “இயந்திரத் துப்பாக்கிவீரன்” என்று பெயரிட்டார்.

இரைச்சலிடும் இந்தப் பறவைகளுடன் நடந்த அமளியே டாங்கிவீரனை அவனது வாய்மூடித்தனத்திலிருந்து வெளியே கொண்டுவந்தது என்பது அக்கறைக்குரிய சேதி. ஸ்தெபான் இவானவிச் உடம்பை இரண்டாக மடித்து வளைத்து, கவைக் கோல்களை ஆதாரமாகப் பற்றியவாறு வெப்பநீராவிக் குழாய் மீது நெடுநேரம் தம்மைச் சமன்படுத்திக் கொண்டு ஜன்னல் குறட்டின் மேல் ஏறி ஜன்னல் மேல்திறப்பை எட்டுவதற்கு முயற்சிப்பதை உற்சாகமின்றி அசட்டையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், மறுநாள் சிட்டுக் குருவிகள் பறந்து வந்ததும் டாங்கி வீரன் அவற்றின் பரபரப்பு மிக்க அமளியை நன்றாகப் பார்க்கும் பொருட்டு, வலியினால் முகத்தைச் சுளித்தவாறு கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். மூன்றாம் நாளோ அவன் இனிய கேக்கின் பெரிய துண்டு ஒன்றைப் பகல் சாப்பாட்டின் போது மறைத்து வைத்துக் கொண்டான் – மருத்துவ மனையின் இந்த விசேஷத் தின்பண்டம் இலவசத் தீனிக்காரக் கீச்சுமூச்சுக் கும்பலுக்குச் சிறப்பாகப் பிடித்தாக வேண்டும் என்பதுபோல. ஒரு தடவை “இயந்திரத் துப்பாக்கி வீரன்” வரவில்லை. அதைப் பூனை பிடித்து விழுங்கியிருக்கும் என்றும் அதற்கு நன்றாக வேண்டும் என்றும் சொன்னான் குக்கூஷ்கின். மறுநாள் வாலறுந்த குருவி ஜன்னல் வெளிக்குறட்டில் கண்கள் துடுக்குடன் பளிச்சிடத் தலையை வெற்றிப் பெருமிதத்துடன் திருப்பியவாறு மறுபடி கீச்சிடவும் சண்டை போடவும் தொடங்கியபோது டாங்கிவீரன் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தான். நீண்ட பல மாதங்களுக்குப் பின் முதல் தடவையாக வாய்விட்டுச் சிரித்தான் அவன்…

படிக்க:
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?

க்ளாவ்தியா மிஹாய்லவ்னா முதுகுக்குப் பின் கையை மறைத்தவாறு மர்மத் தோற்றத்துடன் கதவருகே நின்று, பளிச்சிடும் விழிகளால் எல்லோரையும் பார்வையிட்டுவிட்டு, “ஆமாம், இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள்?” என்று கேட்கும் நேரம் நாற்பத்து இரண்டாம் வார்டில் மிக மகிழ்ச்சி பொங்கும் நேரம் ஆக விளங்கியது.

கடிதங்கள் வந்திருக்கின்றன என்று இதற்கு அர்த்தம். கடிதம் பெறுபவன் நடனமாடும் பாவனையில் கட்டில் மேல் கொஞ்சமாவது துள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட அடிக்கடி இப்படிச் செய்ய நேர்வது கமிஸாருக்குத்தான். சில தடவைகளில் அவருக்கு மொத்தமாகப் பத்துப் பன்னிரண்டு கடிதங்கள் கிடைப்பது உண்டு. அவருக்கு டிவிஷனிலிருந்தும் பின்புறத்திலிருந்தும் கடிதங்கள் வரும். உடனுழைப்பாளர்களும் கமாண்டர்களும் அரசியல் அலுவலர்களும் எழுதுவார்கள். அதே போலப் படைவீரர்களும், பழைய ஞாபகத்தை வைத்துக் கொண்டு கமாண்டர்களின் மனைவிகளும் (கட்டுக்கு அடங்காத கணவன்மாரை வழிக்குக் கொண்டுவரும்படி இவர்கள் கேட்பார்கள்), போரில் கொல்லப்பட்ட தோழர்களின் விதவைகளும் எழுதுவார்கள். அவர்கள் ஏதேனும் யோசனை கேட்பார்கள், அல்லது உதவி கோருவார்கள்.

கஸாஃஸ்தானிலிருந்து ஒரு பயனீர் சங்கத்துப் பெண்கூட எழுதுவது உண்டு. கொல்லப்பட்ட ரெஜிமெண்டுக் கமாண்டரின் மகள் அவள். இந்தப் பெண்ணின் பெயர் கமிஸாருக்கு எவ்வளவோ முயன்றும் நினைவுக்கு வருவதில்லை. இந்தக் கடிதங்களை எல்லாம் கமிஸார் அக்கறையுடன் வாசிப்பார். எல்லாக் கடிதங்களுக்கும் கட்டாயமாகப் பதில் அளிப்பார். இன்னின்ன கமாண்டரின் மனைவிக்கு உதவும்படி தேவையான அலுவலகத்துக்கு அதே கையோடு எழுதிவிடுவார். கட்டுமீறிச் சென்றுவிட்ட கணவனைக் கோபத்துடன் விளாசுவார். வீட்டு நிர்வாக அதிகாரிக்கு, எழுதும் கடிதத்தில் போர்முனையில் பணியாற்றும் துடியான கமாண்டர் இன்னாருவடைய இருப்பிடத்தில் அவன் கணப்பு ஏற்பாடு செய்யாவிட்டால் தாமே நேரில் வந்து அவன் தலையை வெட்டி விடுவதாக அச்சுறுத்தி எழுதுவார். நினைவு வைத்துக்கொள்ள முடியாத சிக்கலான பெயர் கொண்ட கஸாஃஸ்தான் சிறுமியை அரையாண்டுத் தேர்வில் ருஷ்ய மொழிப் பாடத்தில் அவள் தேறாததற்காகக் கடிந்து கொள்வார்.

ஸ்தெபான் இவானவிச்சும் முனைமுகத்துடனும் பின்புலத்துடனும் சுறுசுறுப்பாகக் கடிதப் போக்குவரத்து நடத்திக் கொண்டிருந்தார். தம்மைப் போன்ற வெற்றிகரமான ஸ்னைப்பர்-களாயிருந்த புதல்வர்களிடமிருந்தும் கூட்டுப் பண்ணைக் குழுத் தலைவியான பெண்ணிடமிருந்தும் தமக்கு வரும் கடிதங்களை ஸ்தெபான் இவானவிச் பெரு மகிழ்ச்சியுடன் அப்போதைக்கப்போதே உரக்கப் படிப்பார். வார்டு நோயாளிகள் எல்லோருக்கும், அறைத் தாதிகளுக்கும் நர்ஸ்களுக்கும் வறண்ட, சிடுமூஞ்சியான உள்ளுறை மருத்துவருக்குங்கூட அவருடைய குடும்ப விவகாரங்கள் எல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தன.

கலகலப்பின்றி, உலகம் அனைத்துடனும் சச்சரவிடுபவன் போலிருந்த குக்கூஷ்கினுக்கு கூட, பார்நெளல் என்னும் இடத்திலிருந்து அவன் தாயார் கடிதங்கள் எழுதுவாள். அவன் மருத்துவத்தாதியிடமிருந்து கடிதத்தை ஆர்வத்துடன் பிடுங்கிக் கொண்டு, எல்லோரும் உறங்கும்வரை காத்திருந்து, வாய்க் குள்ளாகச் சொற்களை முணுமுணுத்தவாறு படிப்பான். அந்த நேரத்தில் கூரிய, கடுமையான அமைப்புள்ள அவனது சிறு முகத்தில், அவனுடைய இயல்புக்கு முற்றிலும் பொருந்தாத, கம்பீரமும் சாந்தமும் திகழும்; சிறப்பான பாவம் தென்படும். முதிய உதவி மருத்துவச்சியான தன் தாய் மீது அவன் பெருத்த பாசம் கொண்டிருந்தான், ஆனால் தனது இந்த அன்பு குறித்து நாணினான், அதை முயன்று மறைத்து வந்தான்.

கிடைத்த செய்திகள் வார்டில் உற்சாகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும். இந்தக் களிபொங்கும் நேரத்தில் டாங்கி வீரன் ஒருவன் மட்டுமே முன்னிலும் அதிக ஏக்கங்கொண்டு முகத்தைச் சுவர்பக்கம் திருப்பிப் போர்வையை இழுத்துத் தலையை மூடிக் கொண்டுவிடுவான். அவனுக்குக் கடிதம் எழுதுவோர் யாரும் இல்லை .

ஆனால், ஒரு நாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா ஏதோ தனிப்பட்ட கிளர்ச்சியுடன் வந்தாள்.

“ஆமாம், இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள்?” என்றாள்.

டாங்கிவீரனின் கட்டில் மேல் அவள் பார்வை சென்றது. நல்லியல்பு திகழும் அவளுடைய முகத்தில் பரந்த புன்னகை சுடர்ந்தது. ஏதோ வழக்கத்துக்கு மாறான விஷயம் நடந்திருக்கிறது என்று எல்லோரும் உணர்ந்தார்கள். வார்டு உன்னிப்பாகக் கவனித்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

இந்து என்றால் யார் ? இந்துஸ்தானம் என்பது எது ?

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 06

கி.பி. 320 முதல் 600 வரை:

”இக்காலத்தில் மத்திய இந்தியாவில், யசோதர்ம தேவன் என்ற பிராமணர் பிரக்யாதியாய் அரசாண்டார். இவரைக் கலியுக அவதாரமென்று அழைத்தனர். ஜெயினர்கள் (சமணர்) அவரை வெறுத்தனர். இஸ்லாம் ஆட்சி பரவிய பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான், இந்தக் கலியுக அவதாரக் கொள்கை உண்டாகியிருக்கிறது. நர்மதை, கிருஷ்ணா ஆகிய இரு நதிகளுக்குமிடையே ஆண்ட வகாடா வம்சத்தைச் சேர்ந்த ஹரிஷேணாவின் மந்திரிகள், மலபார் பிராமணர்களாய் இருந்தனர். இந்த நூற்றாண்டில் கூட வட நாட்டின் கோட்பாடு, பழக்க வழக்கங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கஞ் செலுத்தவில்லை. பல நூற்றாண்டாக மூன்றாம் சங்கம் பாண்டிய மன்னர்களால் நடைபெற்றது. இவற்றினால் தமிழர் வாழ்க்கை கி.மு. 5000 முதல் கி.பி. 400 வரை யாதொரு மாறுதலும் இன்றி ஒரே படித்தரமாக அமைந்திருந்தது.

இந்நிலையில் இன்றுள்ள இந்து மகாசபைக்கு என்ன இலட்சியம் இருக்கிறது, இந்து ஆட்சியை ஏற்படுத்த? இந்துஸ்தானம் இந்துக்களுக்கே என்று கூற முடியுமானால் ஏற்படுத்தட்டும்!

சரி! செய்யட்டுமே அதனை! இந்துஸ்தான் இந்துக்களுக்கு ஏற்பட இந்து மகாசபை வேலை செய்ய வேண்டும். வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை? இந்துஸ்தானத்திலே இரதகஜதுரக பதாதிகளை புண்ய தீர்த்தப் புரோஷணத்தை, பூவையர் பாடலை, ஆடலை, அம்பு விடுவதைச் செய்வதை விட்டு, இங்கு என்ன வேலை என்று கேட்கிறோம்?

”இந்து” என்றால் யார்? இந்துஸ்தானம் என்பது எது? திராவிடர் யார்? திராவிட நாடு என்பது எது? என்ற பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் எந்த வீரரும், வீராங்கனையும் வேறு எங்கும் போக வேண்டாம். நல்ல படிப்பகத்துக்குப் போகட்டும்; அகராதியைப் பார்க்கட்டும்; இலக்கியங்களைக் காணட்டும்; உண்மை விளங்கும்.

நேரம் கிடைக்காது என்பர். உண்மை! சுருக்கித் தொகுத்து நாமே தருகிறோம். படித்து உணரட்டும்.

• இராமேஸ் சந்திர தத் எழுதிய “புராண இந்தியா”
• இராமேஸ் சந்திர முசும்தார் எழுதிய ”பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்.”
• சுவாமி விவேகானந்தர், ”இராமாயணம்’ என்னும் தலைப்பில் பேசிய பேச்சு.
• 1922 -ல் கேம்பிரிட்ஜ் பிரசுரித்த, ”பழைய இந்தியாவின் சரித்திரம்.”
• இராதா குமுத முகர்ஜி எழுதிய “இந்து நாகரிகம், ரிக்கு வேதம்.”
• ஜேம்ஸ் மர்ரே எழுதிய “அகராதி”
• பண்டர்கார் கட்டுரைகள்.
• டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய ”தென் இந்தியாவும், இந்தியக் கலையும்.”
• P.T. சீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”
• ஜெகதீச சந்தர்டட் எழுதிய ”இந்தியா – அன்றும் இன்றும்”
• A.C. தாஸ் எழுதிய “வேதகாலம்”
• C.S. சீனிவாசாச்சாரியார் எழுதிய ‘இந்திய சரித்திரம்’, ”இந்து இந்தியா.”
• H.G. வெல்ஸ் எழுதிய “உலக சரித்திரம்”
• சகலகலா பொக்கிஷம் என்னும் “நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா.”
• C.G. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு”
• ஹென்றி பெரிஜ் 1965-ல் எழுதிய விரிவான “இந்திய சரித்திரம்”
• இ.பி. ஹாவெல் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி”
• G.H. இராபின்சன் எழுதிய “இந்தியா”
• நாகேந்திரநாத் கோஷ் எழுதிய “ஆரியரின் இலக்கியமும் கலையும்”
• வின்சென்ட் ஏ ஸ்மித் எழுதிய ”ஆக்ஸ்போர்ட் இந்திய சரித்திரம்’
• ‘இம்பீரியல் இந்தியன் கெஜட்”
• சர். வில்லியம் வில்சன் ஹண்டர் எழுதிய ”இந்திய மக்களின் சரித்திரம்”
• இராகோசின் எழுதிய “வேதகால இந்தியா”

– இவ்வளவு ஆராய்ச்சியாளர்களிடமும் ‘தப்பி’ பிறகு நம்மிடம் வரட்டும், வீர சவர்க்காரும், வீர வரதரும், வயது முதிர்ந்த (ஆனால் விவேக முதிர்ச்சிக்கு நாம் உறுதி கூற முடியாது) திவான்பகதூர் சாஸ்திரியாரும்!

இந்துஸ்தானம் என்ற பகுதி, குஜராத், இராஜஸ்தான் ஐக்கிய மாகாணம் ஆகிய பிரதேசம் கொண்ட இடம்.

சரித பாகங்களை ஒட்டியும் விளக்கவும் அவ்வப்போது வெளியிடப்படும் பூகோளப் படங்களில் இந்துஸ்தானம் என்ற பகுதி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எங்கே போய் அந்தப் படங்களைத் தேடிக் கொண்டிருப்பது? என்று இந்து மகாசபைக்காரர் கவலைப்படுவர். உண்மைதான். அவர்களுக்கு வேலை அதிகம். தேடித் திரிய வேண்டாம். நாமே குறிப்புத் தருகிறோம்.

கான்ஸ்டேபிள் கம்பெனியார் வெளியிட்ட பூகோளப் பாடப் புத்தகத்தில் (Atlas) இந்தியா எனும் பூபாகத்தில் இனவாரி வட்டாரமும், மொழிவாரி வட்டாரமும் பிரித்து வேறு வேறு வர்ணம் தீட்டப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இரு விதமான படங்களிலும், திராவிடம் தனியாக இருக்கக் காணலாம்.

சரித சம்பவங்களில் முக்கியமானவற்றை நோக்கினாலும், இந்தியா எனும் பூபாகத்தில், இடையிடையே ஏற்பட்ட ”வல்லரசு’’களின் எல்லைகளை நோக்கினாலும், எந்த இராஜ்யமும், விந்திய மலைக்கு மேற்புற அளவோடுதான் இருக்கக் காண்பர். நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணியமாக ஓடிக் கொண்டிருந்தது என்பதைச் சரிதம் படிப்போர் அனைவரும் நன்கு அறிவர்.

படிக்க:
ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !
வட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் ! மோடியையும் நேசிக்கிறார்கள் !

இத்தகைய தனித் திராவிட நாட்டிலே இந்துக்களுக்கு என்ன வேலை இருக்கிறது? இந்து மதத்தின் பேரால் இம்சை பல செய்தது போதாதா? இன்னமும் இந்துஸ்தானத்துக்கும், பாகிஸ்தானத்துக்கும் தகராறு இருப்பதாக திராவிட நாட்டிலே பேசி, இங்குள்ள மக்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று கேட்கிறோம். ஒரு குடம் கங்கை நீரை அங்குக் கொண்டு வந்து புரோக்ஷணம் செய்வதைவிட இந்து மகா சபையினர் கங்கையிலே நன்றாக முழுகி எழுந்து அங்கே பேசட்டும். இந்துஸ்தானத்தைத் தமதாட்சிக்குட்படுத்திக் கொள்ளட்டும். பாகிஸ்தானத்தாரும் அதைத் தடுக்கவில்லை. நாமும் தடுக்கவில்லை. மேலே பாகிஸ்தான் தெற்கே திராவிட நாடு! இடையே இந்துஸ்தான்! இதுதான் முடிவு.

முன்பு, திவான் பகதூர் K.S. இராமசாமி சாஸ்திரியார் மதுரையில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டு வரவேற்புத் தலைவராக இருந்து ஆற்றிய சொற்பொழிவில், இங்கு இந்து மகாசபையைக் கூட்ட வேண்டி வந்த உட்காரணத்தைக் கக்கிவிட்டார். அதாவது, இந்து – முஸ்லீம் பிரச்சினையைப் பற்றிய பயங்கரமான பீதிகளைக் கிளப்பிவிட்டுத் திராவிடத்தில் உள்ளோரையும் “இந்துக்கள்’  என்று பாத்யதை கொண்டாடித் திராவிடரைத் துணைக்கு அழைப்பது போல் நடித்து, ஆரியத்தை நிலைக்கச் செய்வதுதான் இங்குள்ள இந்து மகா சபையினரின் உண்மையான கருத்து. அது சாஸ்திரியாரின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

கேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் !

கேள்வி : //விலங்குகளை கொல்வது குற்றமா?அப்படி குற்றம் எனில் ஏன் அதை சாப்பிடுகிறார்கள்? வள்ளலார் ஏன் இதை முன்வைத்தார்? அதே போல் வாடின பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்? அசைவம்! சைவம்? இதற்கான விளக்கம்?//

– கொடுக்கு

ன்புள்ள கொடுக்கு,

கேள்விகளை உங்களது சொந்தப் பெயரிலேயே கேட்கலாம். பொதுவில் விலங்குகளை கொல்வது குற்றமா என்று கேட்பது பொருத்தமற்றது. விலங்குகளை காட்டு விலங்குகள், வீட்டு வளர்ப்பு விலங்குகள் என்று இரு பிரிவாக பார்க்க வேண்டும். காட்டு விலங்குகள் சுற்றுச் சூழலின் சமநிலையை பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகவே அவற்றினை கொல்லக்கூடாது. இது உலகெங்கும் உள்ள நடைமுறை.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை காட்டு விலங்குகளைக் கொல்வது ஒரு பொழுதுபோக்காக மன்னர்கள், நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள் காலத்தில் உலகெங்கும் இருந்தது. தற்போது அப்படிக் கொல்லக் கூடாது என்று பல நாடுகளில் சட்டமே இருக்கிறது.

வீட்டு வளர்ப்பு விலங்குகள் என்பவை நமது தேவைக்காக நம்மால் வளர்க்கப்படுபவை. அவற்றை இறைச்சிக்காக கொன்று உண்பதில் பிழையில்லை. ஏனெனில் வீட்டு விலங்குகள் எவையும் பாரம்பரியமாக இயற்கையாக வீட்டு விலங்காகத் தோன்றி வளரவில்லை. நாய், ஆடு, மாடு, கோழிகள், வாத்துகள் அத்தனையும் காட்டு விலங்குகளில் இருந்து மனிதனால் கைப்பற்றப்பட்டு பின்னர் புதிதாக பழக்கப்படுத்தப்பட்டு வீட்டு விலங்குகளாக தோற்றுவிக்கப்பட்டவை. குரங்கு மூதாதையர் காலத்தில் இருந்தே மனிதன் தனது உணவுத் தேவைக்காக இந்த விலங்குகளை வளர்த்து வந்தான். சமீபத்தில் வந்த ஆல்பா என்ற ஹாலிவுட் திரைப்படம் ஓநாய் எப்படி மனித குலத்தின் வீட்டு நாயாக மாற்றப்பட்டது என்பதை சுவாரசியமாக விளக்குகிறது.

இன்று மக்களின் புரதச்சத்து தேவையை வீட்டு விலங்குகளே பூர்த்தி செய்கின்றன. மேலும் கால்நடைகளின் வளர்ப்பை நாமே கட்டுப்படுத்திக் கொள்வதால் அவற்றை எவ்வளவு எண்ணிக்கையிலும் உருவாக்கிக் கொள்ளலாம். இவற்றைக்  கொன்று தின்பதால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதில்லை.

அடுத்து வள்ளலார் ஏன் அசைவ உணவை சாப்பிடக் கூடாது என்றார், எனக் கேட்டிருக்கிறீர்கள். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஜீவகாருண்யம் பேசியவர். சத்திய ஞான சபையை நிறுவியவர். எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம், தான் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். ஆகவே இவர் அன்றைய பார்ப்பன மற்றும் உயர்சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார்.

எனவே இராமலிங்க அடிகளாரை ஏதோ அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று மட்டும் சொன்ன சாமியாராகச் சுருக்கிப் பார்ப்பது தவறு. அவருடைய பிரதான வாழ்க்கைப் பணி இந்த சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்தான். சைவ உணவுப் பழக்கம் கொண்ட சைவ மதத்தாரும் வள்ளலாரை ஏற்கவில்லை. அவர் எழுதிய திருவருட்பா மீது வழக்கே போட்டிருக்கிறார்கள். எனவே நாம் வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பை வரித்துக் கொள்வோம். அசைவம் சாப்பிடக்கூடாது என்ற அவரது கொள்கையை ஏற்க வேண்டியதில்லை.

♦ ♦ ♦

கேள்வி : //சீமான் முன்னெடுக்கும் இன தூய்மைவாதத்தை முன்னிலைபடுத்தும் தமிழ்தேசியம் சரியா ? வர்க்க (வர்க்கமே இங்கு சாதியாய் உள்ள போது) முரண்பாடுகளை களையாத தமிழ்தேசியம் சாத்தியமா?//

அருள் செல்வன்

ன்புள்ள அருள்செல்வன்,

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. சீமான் முன்னெடுக்கும் இனத்தூய்மை வாதம் என்பது தமிழகத்தில் தமிழோடு தெலுங்கு, கன்னடம், உருது மொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருப்போரை தமிழர்கள் என்று ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களைத்தான் தமிழ் தேசியத்தின் எதிரிகளாக அவர் கட்டியமைக்கிறார்.

சாதிகளை வைத்தே யார் தமிழர் என்று பிரிப்பதும் உள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இங்கே ஒடுக்கும் தேசிய இனம் எதுவும் இல்லை. இந்து – இந்தி – இந்தியா எனப்படும் அரசியல்ரீதியான அமைப்பே நம்மை ஒடுக்குகிறது. அதை எதிர்த்துப் போராடும்போது நம்மை ஒத்த பிற தேசிய இன மக்களையும் கூட்டாக சேர்த்துக் கொண்டு போராட வேண்டுமே ஒழிய அவர்களை எதிராக நிறுத்த வேண்டியதில்லை.

இன்று தமிழகத்தில் இருக்கும் சிறு நிறுவனங்கள், டீக்கடைகள், ஓட்டல்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் அனைத்திலும் வெளி மாநில மக்களே பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு உரிமையாளர்களாக உள்ள தமிழர்களே, இக்கடைகளில் தமிழர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதை ஏற்க மாட்டார்கள். ஏனெனில் குறைந்த கூலிக்கு நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவது அவர்கள் மட்டுமே. இந்தப் போக்கு தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா தென்னிந்திய மாநிலங்களிலும் உள்ளது. விவசாயத்தின் அழிவு காரணமாகவே இத்தகைய இடப்பெயர்வுகள் இந்தியா முழுவதும் நடக்கின்றன.

சாதிகளே வர்க்கமாகப் பிரிந்து கிடக்கும்போது தமிழ் தேசியம் பேசுவோர் அதை கணக்கில் கொள்வதில்லை. அவர்கள் முன்வைக்கும் தமிழ் தேசியம் என்பது எல்லா வர்க்கங்களையும் உள்ளடக்கியதுதான். இது சாத்தியமா, சாத்தியமில்லையா என்று பார்ப்பதை விட சரியா, தவறா என்று பார்த்தால் நிச்சயம் தவறுதான்.

வர்க்க விடுதலையைப் பேசாமல் நம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க இயலாது. இன்று கல்வியிலும், மருத்துவமனைகளிலும் தனியார்மயம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான தமிழ் முதலாளிகள் கல்வியை – சுகாதாரத்தை வணிகச் சரக்காக்கியிருக்கின்றனர். அவர்களது நிறுவனங்களை அரசுடைமையாக்காமல் நம் மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரத்தை இலவச உரிமையாக வழங்குவது எங்கனம்?

சீமான் போன்றோர் தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போடும் வகையில் அரசு கல்வி நிறுவனங்களை மாற்றுவோம் என்று கூறுகின்றனரே அன்றி தனியார்மயமாக்கத்தை ஒழிப்போம் என்று பேசுவதில்லை.

வாழ்க்கைச் சிக்கல்கள் பெருகிவரும் நேரத்தில் வர்க்கரீதியான அரசியல் பலவீனமாய் இருக்கும்போது சீமான் போன்றோரின் ‘தூய்மைவாத’ அரசியல் கொஞ்சம் எடுபடலாம். அரசியல்ரீதியாக அதைத் தவறு என்பதோடு, உண்மையில் மக்களின் விடுதலைக்கு என்ன வழி என்று மொழி, இனம் பார்க்காமல் போராடுவதே சரியாகும்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

தமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு !

வானிலை குறித்த தனது தனிப்பட்ட ஆர்வத்தில் தகவல்களைச் சேகரித்து வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் பிரதீப் ஜான் – தமிழ்நாடு வெதர்மேன் – அவர்கள், அவருடைய யூ-டியூப் தளத்தில் நேற்று (20.06.2019) ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.

அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட, சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவ்வப்போது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். கடும் தண்ணீர் பஞ்சத்தில் வதைபடும் சென்னைவாசிகளுக்கு இது ஒரு நற்செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்த தமிழ்நாடு வெதர்மேனின் காணொளிப் பதிவைக் காண :

நன்றி : தமிழ்நாடு வெதர்மேன்.

உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா

“தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்” என்பது போல எங்கோ அமெரிக்காவின் வால் வீதியில் நிகழும் பங்குச்சந்தை சரிவுகள், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. உலக நாடுகளைப் பிணைத்திருக்கும் உலகப் பொருளாதரம் பற்றி நாம் என்ன தெரிந்துள்ளோம் என சோதித்துப் பார்ப்போம் வாருங்கள்.

(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)

  1. 2007 -2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முந்தயை 2006-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 5.5%-ஆக இருந்தது. எனில் 2009-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு?
  2. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளரும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தோரயமாக எவ்வளவு? (இந்த நாடுகளில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட 155 நாடுகள் உள்ளன.)
  3. உலகில் எந்த நாடு அதிக அளவிலான பணவீக்க விகிதத்தைக் கொண்டிருக்கிறது?
  4. கீழ்க்கண்ட உலகப் பகுதிகளில் எந்த மண்டலம் அதிக அளவிலான வளர்ச்சி விகதத்தை 2018-ம் ஆண்டில் கொண்டிருக்கிறது? அந்த மண்டலம் 3.1 வளர்ச்சி விகிதத்தை கொண்டிருக்கிறது.
  5. கீழ்க்கண்ட நாடுகளில் எந்த நாட்டின் உள்ளூர் வங்கிகள் அந்த நாட்டு அரசின் கடன் பத்திரங்களை அதிகம் வைத்திருக்கிறது?
  6. கீழ்க்கண்ட வளர்ந்து வரும் நாடு அல்லது மண்டலங்களில் எது அதிக அளவில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக கடனைக் கொடுத்து வருகிறது?
  7. 2017-ம் ஆண்டில் உலக அளவிலான தனியார் மற்றும் பொதுத்துறை கடன் தொகை கடன் எவ்வளவு?
  8. குறைந்த அளவு வளர்ச்சி கொண்ட நாடுகளுக்குத் தேவைப்படும் வளர்ச்சிக்கான பணம் எவ்வளவு?
  9. உலக நாடுகளுக்கு கடன் கொடுத்து கந்து வட்டிக்காரன் போலச் செயல்படும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமையகம் எங்குள்ளது?
  10. ஒரு தொழில் மந்தம் என்பது எத்தனை தொடர் காலாண்டுகளைக் கொண்டிருக்கும்?
  11. உலக அளவில் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு எது?
  12. முதன் முதலில் காகிதப் பணத்தை பயன்பாட்டிற்குக் கொண்டுவந்த நாடு எது?
  13. சூதாட்டமே பங்குச் சந்தை என்பது ஒருபுறமிருக்க உலகின் முதல் பங்குச் சந்தை எந்த நாட்டில் துவங்கியது?
  14. ஜப்பான் நாட்டின் செலவாணி என்னவென்று அழைக்கப்படுகிறது?
  15. யூரோ எனும் செலவாணியை எத்தனை நாடுகள் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துகின்றன?
  16. ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?
  17. ஒவ்வொரு ஆண்டின் உலகப் பொருளாதார மன்றத்தின் குளிர்கால சந்திப்பு எங்கு நடைபெறுகிறது?
  18. உலக நாடுகளுக்கு கடன் கொடுத்து கண்டிசனும் போடும் உலக வங்கி எந்த ஆண்டில் துவங்கப்பட்டது?
  19. GDP எனப்படும் பெயரின் விரிவாக்கம் என்ன?
  20. ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக துவங்கப்பட்ட உலக வர்த்தகக் கழகம் எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
  21. ரூபிள் எனப்படும் செலவாணி எந்த நாட்டிற்கு உரியது?
  22. பொருளாதார மற்றும் அரசியல் அரங்கில் புகழ் பெற்ற “டாஸ் கேப்பிட்டல்” நூலை எழுதியவர் யார்?
  23. BRIC எனப்படும் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் எவை?
  24. ஜி 20 எனப்படும் நாடுகளின் கூட்டமைப்பின் முதல் சந்திப்பு எந்த ஆண்டில் நடைபெற்றது?
  25. 1930-ன் உலகப் பெருமந்தம் எந்த நாட்டில் துவங்கியது?

நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !

தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி

0

தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும்….
(தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்)

நண்பர்களே…

பொ.வேல்சாமி
மிழ் செய்தி சேனலில் ( NEWS 18 ) தோழர் பெ.மணியரசனின் பேச்சைக் கேட்டேன். நன்றாகப் படித்த, படிக்கின்ற பண்புள்ள அவர் பொய்யையும் புளுகையும் அள்ளி வீசியது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருடைய பெரும் புளுகுகளில் இரண்டை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவர் புளுகுகிறார் என்பதற்கான ஆதாரங்களையும் அந்த ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல்களின் இணைப்பையும் உங்களுக்குத் தருகின்றேன்.

தோழரின் பொய் – 1 :

தமிழ்நாட்டில் வேத வேள்விகளை பார்ப்பனர்களைக் கொண்டு செய்து அவர்களுக்கு நிலங்களைக் கொடுத்தது “களப்பிரர்கள்“ என்று கூறினார். உண்மையி்ல் சங்க கால சேர சோழ பாண்டிய மன்னர்களே வேத வேள்விகளைத் தொடங்கி வைத்து பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்கியவர்கள் என்பதை சங்க நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன.

பெ.மணியரசன், தலைவர் தமிழ்த் தேசியப் பேரியக்கம் (முன்னர் இக்கட்சி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.)

சங்க இலக்கியங்களில் உள்ள இத்தகைய வேத வேள்விகள் சார்ந்த ஆதாரங்களை குறிப்பிடும் பாடல்களையும் அப்பாடல்கள் இடம் பெற்றுள்ள பகுதிகளையும் தொகுத்து விரிவாகப் பேசுகின்ற “சங்கநூல்களும் வைதீக மார்க்கமும்” என்ற நூலை நீங்கள் வாசிப்பதற்கு உதவியாக அந்த நூலின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

சங்ககால தமிழ் மன்னர்களால் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை களப்பிரர்கள் மீண்டும் பறித்தார்கள். அதனால் அவர்கள் பிற்காலத்தில் வந்த வேதம் சார்ந்த வைதீகர்களால் தூற்றப்பட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்தி பதிவாகி உள்ளது. இந்தச் செய்தியைக் குறிப்பிட்டுள்ள நூலின் பக்கத்தை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். இதே நூலை இலங்கையிலும் மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பை தரவிறக்கம் செய்து கொள்ள இதன் இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.

நூல்களை தரவிறக்கம் செய்ய :

 “சங்கநூல்களும் வைதீக மார்க்கமும்”
 தென் இந்திய வரலாறு – இலங்கை மொழிபெயர்ப்பு

தோழரின் பொய் – 2 :

சோழர் காலத்தில் “குலுக்குச் சீட்டு” முறையில் பார்ப்பனர்களை மட்டும் பார்ப்பனார்களால் மட்டும் குலுக்கி எடுக்கப்பட்ட பார்ப்பன சபை அங்கத்தினர்களைப் பற்றிக் கூறுகின்ற ஒரு இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அதனை உத்திரமேரூர் கல்வெட்டு என்று சொல்லுவார்கள்.

இந்தக் கல்வெட்டுகளைச் சுட்டிக்காட்டி தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா அடித்து வந்த அடிவருடி கல்வியாளர்களும் சோழர்காலத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் முறை இருந்ததாக தமிழ் மக்களின் காதுகளில் பூ சுற்றி கப்சா அடித்து வந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இத்தகைய கப்சாவை தானும் அடித்து ஒரு கூடுதல் கப்சாவையும் தோழர் இணைத்துக் கொள்கிறார். அது என்னவென்றால் இந்த இரண்டு கல்வெட்டுகளும் கி.பி.919-ல் முதலாம் பராந்தகச் சோழன் என்று குறிப்பிடப்படுகின்ற, இராஜராஜனின் பாட்டனாரால் வெளியிடப்பட்டது என்பதை மறைத்து இராஜராஜ சோழன் வெளியிட்டார் என்பதுதான். இந்தச் செய்திக்கான ஆதாரத்திற்கான படத்தையும் இணைத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குறிப்பு : கி.பி. 8-ம் நூற்றாண்டு வாக்கில் வெளியிடப்பட்ட வேள்விகுடி செப்பேடு சங்ககால மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கிய நில கொடைகள் களப்பிரர்கள் பறித்து பொதுமக்களுக்கு அளித்ததாகவும். நெடுஞ்சடையன் பராந்தகன் என்ற பாண்டிய மன்னன் பொது மக்களிடமிருந்த நிலங்களை மீண்டும் பறித்து பார்ப்பனர்களுக்கு வழங்கியதையும் பேசுகின்றது. இந்த வேள்விகுடிச் செப்பேடு பதிவாகியுள்ள பாண்டிய செப்பேடுகள் பத்து என்ற பெரிய நூலின் இணைப்பையும் கொடுத்துள்ளேன்.

 பாண்டியர் செப்பேடுகள் பத்து

தோழர் பெ.மணியரசன் அவர்களின் வீடியோ இணைப்பு :

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

வட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் ! மோடியையும் நேசிக்கிறார்கள் !

3

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு பணி நிமித்தமாக இரு நாட்கள் தங்க நேர்ந்தது. வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நான்கு பேர் அந்த குறுகிய காலத்தில் நண்பர்களானார்கள். ஒருவர் டில்லியை சேர்ந்தவர். இன்னொருவர் போபால். மற்றவர்கள் ஒடிசாவையும், கேரளாவையும் சேர்ந்தவர்கள்.

இந்தியும், ஆங்கிலமுமாக கலந்திருந்தது அவர்களது உரையாடல். எனது வேண்டுகோளை ஏற்று, இந்தியை தவிர்த்து ஆங்கிலத்திலேயே முடிந்தவரை நடந்தது. அனைவரும் ஊபர் புக் செய்து அகமதாபாத்தில் சில சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றோம்.

முதலில் காங்கரியா ஏரி (kankaria lake) சென்றோம். அது ஒரு செயற்கை ஏரி; படகு சவாரி அதன் சிறப்பு. அங்கு ஒரு ட்ராம், வாடிக்கையாளர்களை ஏற்றிக் கொண்டு அந்த ஏரியை சுற்றி வந்தது. அந்த ட்ராமின் பெயர் அடல் எக்ஸ்பிரஸ். நமக்கு பெரியார், அண்ணா பெயர்களை போன்று அவர்களுக்கு அடல், ஹெட்கேவர் போலும்.

காங்கரியா ஏரி (kankaria lake)

அங்கிருந்து கொண்டு என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம். கூட்டம் அதிகமில்லை, காதல் ஜோடிகள் ஒன்றிரண்டுதான் கண்ணில்பட்டன. அதனால் அந்த இடம் களையிழந்து காணப்பட்டது. அது ஏதோ ஒன்றை உணர்த்துவது போலிருந்தது. சற்று நேரத்தில் எல்லோருடைய மொபைல் போன்களும் அதிரத் தொடங்கின.

என்னிடம் போபாலை சேர்ந்தவர் அதிகம் உரையாடினார். அவர் பெயர் ரூபேந்திர பட்டக். அவருக்கு தமிழர் ஒருவர் ஏற்கெனவே நண்பராக இருந்துள்ளார். அவருடைய தமிழ் நண்பர் அறிவுப்பூர்வமானவர் என்று கூறினார். சென்னையை பார்க்க விரும்புவதாகவும் கூறினார். எனது அலைபேசி எண்ணைப் பெற்றார், போபாலுக்கும் அழைத்தார். உடனே செல்ல வேண்டும் என்று ஆவல் பிறந்தது.

அதன் பிறகு சபர்மதி ஆற்றங்கரைக்குச் சென்றோம். பத்து கிலோமீட்டர் தூரம் சபர்மதி ஆற்றின் இருமருங்கிலும் மக்கள் நடந்து இளைப்பாறும் வசதி கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் அழகியல் உணர்வுடன் இருந்தது; அதற்கு அனைவரும் மயங்கி விட்டனர். ‘See. Modi has really worked’ என்றார் பட்டக்,  மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர்.

எனக்கு அகமதாபாத்தின் சேரிகள் நினைவுக்கு வந்தன. அவை மிகவும் மோசமான நிலையில் இருந்தன. ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பறக்காமல் இருக்க கற்கள், கிழிந்த டயர்கள் ஆகியன மேலே வைக்கப்பட்டு இருந்தன. குடிசைப் பொந்துகளில் மக்கள் பல்லி, ஓணான் போன்று நீண்ட நேரம் வெறித்துப் பார்த்தவாறு இருந்தனர். நமது ஊர்களிலும் சேரிகள் இருக்கின்றன. ஆனால் அவை எண்ணிக்கையில் குறைவானது என்று தான் சொல்ல வேண்டும். மணிநகர் பகுதியில் சில கிலோமீட்டர் தூரம் வரையில் சேரி குடிசைகள்தான் இருந்தன. நிறைய ஃபோட்டோக்கள் மற்றும் செல்ஃபிக்கள் எடுத்துக் கொண்டோம். பிறகு சபர்மதி ஆசிரமம் சென்றோம்.

சபர்மதி ஆற்றின் கரையோரம் சபர்மதி ஆசிரமம் இருக்கிறது. குஜராத்தில் பார்த்தவற்றுள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது சபர்மதி ஆசிரமம்தான். அதற்கு காரணம் காந்தி. அனைவருக்கும் காந்தியை பிடித்திருந்தது. நாங்கள் பயணம் செய்த ஊபர் வாகனத்தின் ஓட்டுநர் குஜராத்தின் மாற்றங்கள் (முக்கியமாக சாலை மேம்பாடு) கடந்த பதினைந்து வருட காலத்தில் ஏற்பட்டது என்றார்.

மற்றவர்கள் நெகிழ்ந்தார்கள். தொடர்ந்து அவருடன் பேசிக் கொண்டு வந்தார்கள். அவர்களின் உரையாடலை அருகில் அமர்ந்திருந்த கேரளத்தை சேர்ந்த ஜான் சுருக்கமாக மொழிபெயர்த்து கூறினார். ஊபர் ஓட்டுநரின் இந்தி புரியவில்லை என்றாலும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசியது கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. அவரது பேச்சில் ஒரு பெருமிதத் தொனியும், நிறைவும் ஒலித்தது.

செல்லும் வழியில் காண நேர்ந்த குடிசை வீடுகளை கேட்க சொன்னேன். அவை அகற்றப்பட்டு அங்கே வேறு வீடுகள் கட்டப்படுவதாக பதில் வந்தது. அதே போன்று ஓரிடத்தில் பழைய வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு கிடந்தன.

சபர்மதி ஆசிரமத்துக்குள் நுழைந்தபோது காந்தியின் அரசியல் பரிணாமத்தை விளக்கும் புகைப்படம், அவருடைய மேற்கோள்கள் ஆகியவை இருந்தன. தண்டி யாத்திரையை சிறிய பொம்மைகளால் சித்தரித்த படம் பார்ப்பவர்களை ஈர்த்தது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துமஸ் குடில்களில் வைக்கப்படும் இயேசு, மேரி, ஜோசப் மற்றும் குழந்தை இயேசுவுக்கு பரிசளிக்கும் பொம்மைகளை அவை ஒத்திருந்தன.

ஆற்றின் கரையில் சபர்மதி ஆசிரமப் பரப்பு முடிவுறும் இடத்தில் அமர்ந்தோம். அங்கிருந்து கொண்டு காந்தியை பற்றிய எண்ணங்களை அசை போட்டோம். இந்திய வரலாற்றில் பெரும் மக்கள் திரளை பொதுப் பிரச்சினைக்கு ஒன்றிணைத்தது காந்தி என்று சிலாகித்தார் ஒடிசாவை சேர்ந்த பிரஷீத் மிஸ்ரா. காந்தியின் இறுதி நாட்களில் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டதையும், அது அவர் கொலைக்குக் காரணமாக இருந்ததையும் கூறினேன். அதை நினைத்துப் பார்க்க யாருக்கும் விருப்பமில்லை. இந்தியா மீதிருந்த காந்தியின் பிடியை பாஜக முதலில் தளர்த்தியது என்றபோது கனத்த மவுனம் நிலவியது.

நண்பர்களுக்கு காந்தியையும் பிடித்திருக்கிறது; மோடியையும் பிடித்திருக்கிறது. அதற்காக அவர்கள் மூளையில் இரண்டு தனித்தனி புகைவண்டிப் பெட்டிகள் இயங்குகின்றன. கடந்த தேர்தலில் ஒரு ஓட்டை பிஜு ஜனதா தளத்துக்கும் இன்னொரு ஓட்டை மோடிக்கும் செலுத்தி உள்ளார், பிரஷீத். இது ஒரு விசித்திர இந்து மனநிலை.

வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள விசயம், சமூகக் கொந்தளிப்புகள் என மோடி பற்றிய செய்திகள் அவர்கள் செவிகளில் எளிதில் உட்புகாது. அவர்கள் கேட்க விரும்புவதை மட்டும் தருவதற்கு அல்லது அவர்கள் என்ன கேட்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்குரிய ஊடகங்கள் ஏராளம் இருக்கின்றன. இந்துத்துவக் கொடூரங்கள் சில ‘ஃப்ரிஞ் அமைப்புகளின்’ செயல்பாடாக அவர்கள் மனம் நம்புகிறது. இது மனதின் ஒரு வகை நடிப்பு.

இந்த நடிப்புக்கு இரையாகும் உள்ளம் பின்னர் அதை நடிப்பு என உணர்வதில்லை. “எல்லாவற்றுக்கும் மோடியை தூற்றுகிறவர்கள் இவர்கள்” என்பன போன்ற முன்முடிவுகள் அவர்களை அந்த விசச்சூழலில் இருந்து வெளிவர விடாமல் தடுக்கிறது. ஒரு விடாப்படியான விமர்சன அணுகுமுறைக்கு அவர்கள் எண்ணங்களை உட்படுத்துவது அல்லது மோடி அரசால் நேரடியாக பாதிக்கப்படுகின்ற உணர்ச்சிப்பூர்வ அனுபவம் என்ற ஒன்று ஏற்படும் வரை இந்த சிக்கல் நீடிக்கும். பெரியார் – அம்பேத்கரை ஓரளவு படித்தறிந்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையேயான வித்தியாசமாகவும் இந்த நிலையை புரிந்து கொள்ளலாம்.

அகமதாபாத்தில் இசுலாமியர்கள் நடத்தும் உணவகங்களில் மட்டும்தான் அசைவ உணவு கிடைக்கிறது. இதை மற்ற நண்பர்களும் கூறினர். உணவு என்றாலே சைவம்தான் என்பது நியதியாகிவிட்டிருக்கிறது. இரண்டாம் நாள் இரவு இசுலாமியர் கடைக்கு சென்று உணவருந்தினோம். ஒடிசாவை சேர்ந்த பார்ப்பன நண்பர் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் மசாலாவை வெளுத்துக் கட்டினார். தென்னகத்து பார்ப்பனர்களின் உணவு ஆச்சாரம் பற்றிக் குறை கூறினார். உணவருந்தலில் இருந்த நெகிழ்வுத்தன்மை அவருடைய சமூகப் பார்வையில் இல்லை. இசுலாமியர்கள் பற்றிய அபிப்பிராயம் எல்லாப் பார்ப்பனர்களைப் போலவே அவரிடமும் மோசமாக இருந்தது.

குழந்தைகளை அதிகமாக பெற்றுப் போடுவதுதான் முசுலீம்களின் ஒரே வேலை என்றார். அதனால் அவர்கள் எண்ணிக்கை அதிகரித்து அவர்கள் வசிக்கும் இடங்களில் பதற்றம் அதிகரிக்கிறது என்றார். அது ஒரு கட்டுக்கதை என்பதை 2011-ல் எடுக்கப்பட்டு 2014-ல் வெளியான சென்சஸ் அறிக்கையை முன்வைத்து வாதாடினேன்.

அது ரம்ஜான் மாதம் என்பதால் நள்ளிரவிலும் முஸ்லிம்கள் அதிகளவு வெளியில் தென்பட்டனர். அவர்கள் தொழுகைக்காக வெளியே வந்தவர்கள். அது வித்தியாசமாக இருந்தது. இந்துத்துவ கும்பலை எந்த வகையிலும் ‘எரிச்சலூட்டாத’ ஒரு வாழ்க்கை முறைக்கு அவர்கள் பழகி விட்டனர் போன்றிருந்தது. கூட்டமாக அவர்கள் நிற்பதை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று மனம் குறுகுறுத்தது. அது தேவையற்ற குறுக்கீடாகி விடும் என்ற எச்சரிக்கை உணர்வும் கூடவே ஏற்பட்டது. அகமதாபாத் ரயில் நிலையம் அருகில் நின்றவர்களை படம் பிடிக்க முடிந்தது.

அகமதாபாத்தில் மோடி ஆதரவாளர்களுடன் மட்டுமல்ல; மோடியை நிராகரிக்கும் இருவரிடமும் பேச முடிந்தது. அவர்களில் ஒருவர் 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை விரிவாக கூறிவிட்டு அப்பாவி முஸ்லிம்கள் அதற்கு பழிவாங்கப்பட்டனர் என்றார். இன்னொருவர், சென்னையில் ஆட்டோக்காரர்கள் கூட ஆங்கிலத்தில் பேசுவார்களாமே. அப்படியா? என்றார். இதே கேள்வி quora-வில் கேட்கப்பட்டதற்கு பலரும் சாதகமான பதிலையே வழங்கி இருந்தனர். பொதுவாக தமிழர்களுக்கு வேறொரு இனக்குழுவை வெறுக்கும் அணுகுமுறை இல்லை. மாறாக அவர்களை பார்த்து வியப்பவர்கள்.

சென்னையில் ஒரு டீக்கடைக்காரர் தன்னிடம் கணக்கு வைத்து டீ, சமோசா உண்ணும் ஒரு வட இந்தியத் தொழிலாளி பற்றி கூறும் போது, வார இறுதியில் சரியாகக் கடனை அடைத்து விடுவார் எனவும், கணக்கை முடிக்கும் போது கணக்கு விவரத்தின் மேல் ஒரு கோடு போடுவது வரை நின்று உன்னிப்பாக கவனித்து விட்டு செல்வார் என்றும் வியப்பு மேலிட கூறினார். சீமானின் இனவாத அரசியல் ஓரளவுக்கு மேல் மக்களை ஈர்க்காததற்கான விடையும் இதில் உள்ளது.

மோடியைப் பற்றி சொல்லும் போது அது உங்கள் ஊரில் ‘அம்மா’வுக்கு இருப்பது போன்ற கவர்ச்சி என்றார், அந்த நண்பர். அவர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை ஆதரித்து பேசினார். குஜராத்தில் அரசு பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக் கூறினார். இவர்கள் இருவரிடமும் பேசியது மோடிக்கு எதிரான மனநிலையின் வெகுஜனத் தன்மையை அறிய முடிவதாக இருந்தது.

நவஜீவன் எக்ஸ்பிரசில் சென்ட்ரலிலிருந்து ஏறிய போது இரு கல்லூரி பெண்கள் ஐ லவ் மோடி பனியன்களை போட்டுக் கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். எனது இருக்கையில் அமர்வதற்கு ஒரு சேட்டு குடும்பம் விடவே இல்லை. தூர இருக்கை ஒன்றில் அவர்கள் குடும்ப உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட ஒற்றை இருக்கைக்கு செல்லுமாறு கேட்டு என்னுடையதை விட்டுத்தரக் கோரினர். அங்கு சென்றால் நமது ஊர் பார்ப்பனர்கள் தமிழக அரசியலை அலசிக் கொண்டிருந்தனர். மிகக் குறுகிய நேரத்திலே வேறொரு உலகுக்குக் கடத்தப்பட்டதை போன்ற உணர்வு ஏற்பட்டது.

உணவு மற்றும் மொழி ஆகியவை உடனே உணரக்கூடிய வேறுபாடுகள். நாம் இந்தி கற்காததுதான் பிரச்சினை என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் இந்தி பேசாத மக்கள் வாழ்கிறார்கள் என்ற எதார்த்தம் பற்றிய புரிதலும், நெகிழ்வும் இந்தி பேசும் தரப்பிடம் இல்லாததுதான் அடிப்படை பிரச்சினை. இதனை உணராத படித்த ‘மேதாவிகள்’ சிலர் தமக்கு இந்தி தெரியாததற்காக நமது அரசியல்வாதிகளை திட்டுகிறார்கள்.

நவஜீவன் எக்ஸ்பிரசில் படுக்கை விரிப்பு  விநியோகிக்கும் ஊழியர்கள் (Bedroll Staff) தமிழர்கள். உங்களுக்கு இந்தி தெரியுமா என்று கேட்டதற்கு வேலைக்கு பயன்படும் சில வார்த்தைகள் மட்டும் தெரியும் என்றார்கள். “வேண்டுமென்றேதான் இந்தி கற்கவில்லை” என்று அவர்கள் சொன்னதை வருத்தப்படும் ‘மேதாவிகள்’ கேட்க வேண்டும்.

இந்தியப் பயணத்தை அடிக்கடி மேற்கொள்ளும் ஜெயமோகன் இந்தியாவெங்கும் ஒரு ஒற்றுமை தென்படுவதாக நெகிழ்வார். என்னால் வேறுபாடுகளையே அதிகம் உணர முடிந்தது. ஜெயமோகன் அரசியல் நோக்கு நாமறிந்ததே. என்றாலும் ஒரு எதார்த்தம் வேறுவேறாக பிரதிபலிக்கும் சாத்தியம் கொண்டதுதானே.

தமிழ்நாட்டின் கோயில் கோபுரங்கள் பிரமிட் வடிவில் இருப்பவை. மராட்டியம், குஜராத் கோவில் கோபுரங்கள் குவிந்து, அகன்று மறுபடியும் சுருங்கி கோழி முட்டை வடிவில் இருக்கின்றன. அதில் ஒரு கலைநயமும், நுட்பமும் காண முடியவில்லை. எல்லா கோவில்களிலும் காவி வண்ணக் கொடி பறக்கிறது. அது பாகைமானியின் வடிவத்தில் இருக்கிறது. அவற்றில் மதக் கொடி எது? ஆர்.எஸ்.எஸ் கொடி எது?  என்று தெரியவில்லை. அது வைரஸை பிரித்தறியும் முயற்சி.

ராஜ்

நூல் அறிமுகம் : அறிவியல் தத்துவம் சமுதாயம்

ந்திய சமூகம் பழமையானது. பல இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டது. அறிவியல், தத்துவம், மருத்துவம் போன்ற துறைகளில் உலக அறிஞர்களின் கவனத்திற்கும் ஆராய்ச்சிக்கும் ஆட்பட்டது. வற்றாத வளத்தாலும் தனது வரைபட அமைப்பாலும் பிற நாட்டவர்கள் குடியேறவும், படையெடுப்பாளர்கள் போர் செய்து ஆட்சி அமைக்கவுமான வரலாற்றையும் கொண்டது. அதன் காரணமாகவே பல மதக் கருத்துகளும் அமைப்புகளும் பரவி ஒரு பன்முகச் சமூகமாக அது காட்சியளிக்கிறது. இவையெல்லாம் இந்திய சமூகத்திற்கு பெருமையளிப்பதாயினும் இக்காரணங்களாலேயே இன மத மோதல்களுக்கும் அடிமைத்தனங்களுக்கும் காரணமாகவும் அமைந்துள்ளது.

மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் பழங்கால இந்திய சமூகத்திற்கும் கிரேக்க சமூகத்திற்கும் உள்ள தொடர்புகளை இச்சிறு நூலில் ஆராய்கிறார். சமூக சிந்தனைகள், மத வழிபாடுகள், மருத்துவக் கூறுகள் அனைத்திலும் இரு சமூகத்திற்குள்ள ஒற்றுமைகளை இச்சிறு நூலில் விளக்கியுள்ளார். (பதிப்பாளர் குறிப்பிலிருந்து…)

இயற்கை அறிவியலை நோக்கி அந்த அற்புதமான முதலடி எடுத்துவைக்கப்பட்டது இந்தியாவில்தான். அநேகமாக அது புத்தரின் காலத்திற்குச் சற்று முன்பாக நடந்தது, என்பதே இந்த ஆய்வுக் கட்டுரையில் நிறுவப்படவிருக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். அதே நேரத்தில், பண்டைய இந்தியாவில் இயற்கை அறிவியல் தொடக்கநிலையை அல்லது தொன்மையான கட்டத்தைத் தாண்டி வளர்ந்துவிடவில்லை என்பதும் உண்மை. அதன் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய அளவுக்கு ஏதோவொரு வலுவான காரணக்கூறு இருந்திருக்கிறது என்பது தெளிவு. அந்தக் காரணக்கூறு என்ன?…

பண்டைய மரபுகள் மறைவது கடினமாக இருக்கும் ஒரு தேசத்தில், கடந்த காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை, தற்காலத்தைப் பற்றிய மேம்பட்ட பார்வைக்கு வழிவகுக்கும். வேறு சொற்களில் சொல்வதானால், இயற்கை அறிவியலின் வளர்ச்சிக்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற போதிலும், இன்று வஞ்சகமான முறையில் அதன் வளர்ச்சியை முடக்க முனையும் கூறுகளை புரிந்துகொள்ளவும் அது உதவும்.

பண்டைய இந்தியாவில் இயற்கை அறிவியலின் வளர்ச்சிக்கு பகையாக இருந்த சக்தியை அடையாளம் காண இந்த ஆய்வுக் கட்டுரையில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டைய இந்தியாவில் அறிவியலை முடக்கிய முக்கியமான காரணக்கூறு அரசியல்ரீதியானது என்ற வாதமும் இக்கட்டுரையில் முன்வைக்கப்படுகிறது. சொகுசாக அனுபவிக்கும் சிறுபான்மையினராகவும் பாடுபட்டு உழைக்கும் பெரும்பான்மையினராகவும் – இந்தியச் சொல்லாடல்களில் கூறுவதானால் துவிஜர்களாகவும் சூத்திரர்களாகவும் – பிளவுபட்ட ஒரு சமுதாயத்தைப் பராமரிக்கிற, மறு உருவாக்கம் செய்கிற தேவையிலிருந்து அந்தக் காரணக்கூறு வந்தது. இந்தச் சமூக ‘ஒழுங்கமைப்புக்கு’ மிகமிக ஆரவாரமாக, மிகமிக குரூரமாக வக்காலத்து வாங்கியவர்கள் சட்டங்களை இயற்றுகிற இடத்தில் இருந்தவர்கள்தாம். இயற்கை அறிவியலை சாத்தியமானதாக்கக்கூடிய அனைத்துக்கும் எதிராக எல்லாவகையான சட்டங்களையும் பிறப்பித்தவர்கள் அவர்கள்; இதை நாம் பின்னர் காணவிருக்கிறோம்.

படிக்க:
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?

எனினும் சட்டத்தின் மூலம் வலிந்து திணிக்கப்பட்டதை மட்டுமே கவனத்தில் கொள்வது என்பது பண்டைய இந்தியச் சூழலின் ஒரு பகுதியை மட்டுமே பார்ப்பதாகிவிடும். அறிவியலை அழிக்கும் சக்தியாக செயல்பட்ட மற்றொரு காரணக்கூறு, நாட்டில் நிலவிய பொதுவான தத்துவார்த்தச் சூழலை அதே அரசியல் தேவை எப்படி சீர்குலைத்தது என்பதாகும். பண்டைய இந்திய தத்துவார்த்தச் சிந்தனை மரபில் தகுதி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்த புகழ்பெற்ற ஞானிகள் சிலர் தங்களது அறிவு வளத்தையெல்லாம் இயற்கை அறிவியலின் வளர்ச்சியை முடக்குவதற்கென்றே பயன்படுத்தினார்கள். அறிவியலில் அபாயம் இருப்பதாகக் கருதிய சுயநல சக்திகளின் ஈவிரக்கமற்ற அரசியல் சூதாட்டத்தில் கதியற்ற பகடைக் காய்களாகவே அற்புதத் திறன் வாய்ந்த தத்துவ ஞானிகள் பயன்படுத்தப்பட்டனர். (நூலிலிருந்து பக்.7-8)

பண்டைய இந்தியாவில் சமயச் சார்பின்றி முற்றிலும் உலகியல் சார்ந்ததாக இருந்த, அத்துடன் இயற்கை அறிவியல் குறித்த நவீன புரிதலுக்கான தொடக்கத்தைக் கொண்டிருந்த ஒரே கல்வித்துறை மருத்துவம் மட்டுமே. ஒலியியல், இலக்கணம், சொல் இலக்கணம், அளவையியல், காலமுறை வானியல் ஆகியவை – வரைகணிதமும் கூட – வைதிக வட்டாரங்களில் மிக அதிகமாகப் பேசப்பட்ட இதர கல்வித்துறைகளாகும். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட கல்வித்துறை கூட சடங்கு நுட்பம் அல்லது கல்பா என்பதன் ஒரு பகுதியாகவே வரையறுக்கப்பட்ட அர்த்தத்தில் இருந்து வந்தது. சடங்கு நுட்பத்தைப் போலவே இவையனைத்தும் சமய அமைப்புகளிலிருந்து துவங்குவனவாக, அவற்றின் வேத ஞானத்தின் பகுதியாக இருந்தன. இவற்றுக்கான பாரம்பரியச் சொல் வேதங்கா என்பதாகும். அதாவது வேதத்தின் அங்கங்கள் என்று பொருள். இவ்வாறாக இந்தக் கல்வித் துறைகளில் மதத்தின் பிறப்படையாளங்கள் பதிந்துள்ளன அல்லது சமயச்சார்பின்மைக்கு எதிரான அடையாளங்கள் உள்ளன. குறிப்பாக பிரம்மகுப்தரின் வானியல் குறித்து ஆய்வாளர் அல்-பெருனி சிறப்பாகக் குறிப்பிடுவதைப்போல, இவை ஆக்கப்பூர்வ அறிவியலாக வளர்வதில் சமாளித்து நிற்கவியலாத கடினமான நிலைமைகளை எதிர்கொள்கின்றன. (நூலிலிருந்து பக்.33-34)

நூல் : அறிவியல் தத்துவம் சமுதாயம்
ஆசிரியர் : தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தமிழில் : அ. குமரேசன்

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089.
தொலைபேசி எண்: 98417 75112.

பக்கங்கள்: 64
விலை: ரூ 35.00 (முதற் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க : nhm

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பாசிசத்தை எவ்வாறு வரையறுப்பது ?

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் |  விரிவுரை – 2 | பாகம் – 13

டோக்ளியாட்டி

ந்த நெருக்கடி எப்போது ஆரம்பமாயிற்று? 1929-ம் ஆண்டு இறுதியிலும் 1930-ம் ஆண்டு தொடக்கத்திலும் இது ஆரம்பமாயிற்று. ஆனால், நாம் எப்போதுமே வலியுறுத்தி வந்திருப்பதுபோல், இந்த நெருக்கடிக்கான அறிகுறிகள் 1927-ம் ஆண்டு வாக்கிலேயே தென்பட ஆரம்பித்துவிட்டன. உற்பத்தி எந்திரத்தின் வளர்ச்சி காரணமாகவும், தொழில்துறை வளங்கள் ஒரு சிலர் கைகளில் குவிந்ததன் காரணமாகவும், முதலாளித்துவத்தின் தொழில்நுட்ப, ஸ்தாபன வளர்ச்சியின் காரணமாகவும் தோன்றிய பொருளாதார முரண்பாடுகளின் சின்னங்களே இவை. இந்த வளர்ச்சிப் போக்கு முதலில் அளவுக்கு மீறிய பளுவை உண்டு பண்ணிற்று. பிறகு, 1926-ல் உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும் பிரச்சினை தீவிரமடைந்தது. இதன் காரணமாக ஊதிய வெட்டு அத்தியாவசியமானதாகிவிட்டது.

இதன் பிறகு பாசிசம் சர்வாதிபத்தியப் பாதையிலிருந்து ஒருபோதும் விலகிச் சென்றதில்லை. இது இன்றியமையாததாயிற்று. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் முழு உக்கிரமடைந்து இன்றுவரை தொடர்கிறது.

1929-ம் ஆண்டு இறுதியில் நெருக்கடி மிகவும் தீவிரமடைந்தபோது, பிரச்சினையின் போக்கு மாறியது. வெகுஜனங்களைப் பிளவுபடுத்துவது மட்டும் போதாது; இதற்கும் மேலாக ஏதேனும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆட்சியின் மீது வெகுஜனங்களுக்கு அதிருப்தி ஏற்படுவது பாசிசத்தின் வெகுஜன அடித்தளம் சுருங்குவதையே குறிக்கும். இந்தப் பிரச்சினை மிகவும் கூர்மையடைந்தது.

இவ்வாறு, பாசிஸ்டுக் கொள்கையின் இரண்டாவது அம்சம் – வெகுஜனக் கொள்கை – அரங்கேறியது. பொருளாதார நிலைமையை முன்னிட்டும், இத்தாலிய பூர்ஷுவாக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வர்க்க உறவுகளை முன்னிட்டும் வெகுஜனக் கொள்கையைக் கடைப்பிடிப்பது அவசியமாயிற்று. அப்போதுதான் வெகுஜன அடித்தளத்தில் ஏற்படக்கூடிய பிளவுகளைச் சமாளிக்க முடியும்; பாசிஸ்டு எதிர்ப்பு இயக்கங்கள் வளர்வதை எதிர்த்துப் போராட முடியும்.

1930-ம் ஆண்டு முதல் இன்றுவரை நிலைமை தேக்கமடைந்துள்ளது. ஆனால் பிரச்சினை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. பிரச்சினையின் உக்கிரம் எண்ணற்ற மாற்றங்கள் செய்து வருவதிலும், அதிகாரத்திலுள்ளவர்கள் மாற்றப்படுவதிலும் பிரதிபலிக்கக் காணலாம்.

அதிகாரத்திலுள்ளவர்களை மாற்றுவதைப் பொறுத்தவரையில் ஒரு மாற்றம் மிக முக்கியமானது. 1932 மத்தியில் ரோக்கோ தீர்த்துக் கட்டப்பட்டதையே இங்கு குறிப்பிடுகிறோம். பாசிச சர்வாதிபத்தியத்தின் இயல்பில் ஏற்பட்ட மாற்றத்தையும், ஜனரஞ்சகக் கொள்கை எனப்படும் கொள்கையின் தொடக்கத்தையும் இது குறித்தது.

தற்போது, வெகுஜனங்களை தனது ஸ்தாபன அமைப்புகளுக்குள் கொண்டு வருவதற்கும், சர்வாதிகார அமைப்புடன் அவர்களைப் பிணைத்து வைத்திருப்பதற்கும் பாசிசம் பெருமுயற்சி செய்து வருகிறது. பாசிஸ்டுக் கட்சியையும் இளைஞர்களையும், தொழிற்சங்கங்களையும் ஒழுங்கமைப்பது சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினைகள் யாவும் இன்னமும் சர்வாதிபத்தியக் கண்ணோட்டத்திலிருந்தே கையாளப்பட்டு வருகின்றன. எனினும் சற்று வேறுபட்ட முறையில் இது நடைபெற்று வருகிறது.

”பாசிசத்தை… ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட ஒன்றாகவோ, திட்டமிடப்பட்ட ஒன்றாகவோ அல்லது முன்மாதிரி எடுத்துக்காட்டானதாகவோ பார்க்கக் கூடாது. மாறாக, பொருளாதார நிலைமையிலிருந்தும், வெகுஜனங்களின் போராட்டத்திலிருந்தும் தோன்றிய பொருளாதார, அரசியல் உறவுகளின் ஓர் ஒட்டுமொத்த விளைவாகவே அதனை நோக்க வேண்டும்.”

நேற்றைய விரிவுரையிலும் இன்றைய விரிவுரையிலும் ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறேன். அது இதுதான்: பாசிசத்தை ஒரு திட்டவட்டமான, தீர்மானமான இயல்பு கொண்டதாகப் பார்க்கக் கூடாது. அதன் வளர்ச்சிப் போக்கை அடிப்படையாக வைத்து அதனைப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட ஒன்றாகவோ, திட்டமிடப்பட்ட ஒன்றாகவோ அல்லது முன்மாதிரி எடுத்துக்காட்டானதாகவோ பார்க்கக் கூடாது. மாறாக, பொருளாதார நிலைமையிலிருந்தும், வெகுஜனங்களின் போராட்டத்திலிருந்தும் தோன்றிய பொருளாதார, அரசியல் உறவுகளின் ஓர் ஒட்டுமொத்த விளைவாகவே அதனை நோக்க வேண்டும்.

சர்வாதிபத்தியம் நமது போராட்டப் பாதையைத் தடுக்கிறது என்று நினைப்பது தவறு. வெகுஜனங்களுக்கு ஜனநாயகப் பலன்கள் கிட்டச் செய்யும் போராட்டத்தின் பாதையை சர்வாதிபத்தியம் மூடிவிடுகிறது என்று நினைப்பது தவறு. இது தவறு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வாறு நினைக்கும்படி பாசிசம் நம்மைத் தூண்டி வருகிறது. எல்லாம் முடிந்து விட்டது. இனி அதற்கு அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்ற மாயத்தோற்றத்தை நமக்குக் காட்ட பாசிசம் முயல்கிறது.

இந்தக் கண்ணோட்டத்துக்கு அணுவளவும் இடம் தரக்கூடாது. அதனை எதிர்த்துக் கடுமையாகப் போராட வேண்டும், வெகுஜனப் போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சிப் போக்கும் பாசிச சர்வாதிகாரப் பிரச்சினையைத் திரும்பவும் கிளப்புகிறது. வெகுஜன இயக்கங்கள் பல்கிப் பெருகுவது சர்வாதிகாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படுவதைத் தூண்டுகிறது. வெகுஜனங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாசிசம் தனது செயல்முறையை மாற்றிக் கொள்ளச் செய்கிறது. இதனை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

பாசிசத்தைப் பற்றி நான் தெரிவித்திருக்கும் கருத்து நமது கொள்கை முழுவதுக்கும் ஆதார அடிப்படையாக இருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் ஒரு சரியான கொள்கை வழியை நிர்ணயிக்க முடியும்.

சர்வாதிபத்தியம் கட்சியின் போராட்டப் பாதையை மூடி விடுவதில்லை; மாறாக புதிய பாதைகளைத் திறந்து விடுகிறது.

பாசிசம் நமக்குத் திறந்துவிடும் புதிய பாதைகளை உடனடியாகக் காணுவதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தால் அது தவறு.

இந்தத் தவறு அரசியல் ரீதியில் நமது திறமையின்மையையே காட்டும். ஆனால் இதனை கட்சி உணர்ந்து கொள்ளும்போது பாசிச சர்வாதிகாரப் பிரச்சினையை மீண்டும் எழுப்புவதில் வெற்றி பெறும்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

மாயாவைப் பாருங்கள் … அவள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறாள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 02

புதியவற்றை அறியும் மகிழ்ச்சி எப்படிப் பிறக்கிறது?

ன் வகுப்புக் குழந்தைகளுக்கு நடனமாடப் பிடிக்கும். சில சமயம் இடைவேளைகளின் போது அவர்களே கிராமபோனைப் போடுவார்கள். எனவே, இவர்களுக்கு நடனமாடப் பிடிக்குமெனத் தெரிகிறது. மோட்சார்ட், ஷோ பேன், சய்கோவ்ஸ்கி, பா லியஷ்வீலி ஆகிய பெரும் இசைக் கலைஞர்களின் படைப்புகளை நான் தேர்ந்தெடுத்தேன். இசைக்கேற்ப நடனமாடும் போது ராகத்தைக் கேட்க வேண்டும். இதில் எம்மாதிரியான உணர்வுகள் பிரதிபலிக்கின்றன என்று புரிந்து கொள்ள முயல வேண்டும், இவற்றைத் தம் அசைவுகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று விளக்க முற்பட்டேன்.

இப்போது சய்கோவ்ஸ்கியின் “பழைய பிரெஞ்சுப் பாடல்” ஒலிக்கிறது. குழந்தைகள் தம்மிடங்களிலிருந்து எழுந்து நடனமாட வசதியான இடத்தைத் தேடி வந்தனர். பல சிறுமிகள் நேர்த்தியாக நடனமாடுகிறார்கள், சில சிறுவர்கள் இந்த நடனத்தை ஒரு விளையாட்டாக மாற்றினர் – ஒருவருடன் ஒருவர் மோதிய படி அவர்கள் குதிக்கின்றனர். மாரிக்கா மட்டும் தனியே நின்று கொண்டிருக்கிறாள். சாஷாவும் தேன்கோவும் பெஞ்சில் உட்கார்ந்திருக்கின்றனர். என்னருகே வந்து, மற்றவர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்படி அவர்களுக்குச் சொல்கிறேன். மெதுவாக நாங்கள் பேசிக் கொள்கிறோம்.

“மாயாவைப் பாருங்கள்…. அவள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறாள், எவ்வளவு மென்மையாகக் கரங்களை அசைக்கின்றாள்!” என்கிறேன் நான். “சரி, யாருடைய நடனம் உங்களுக்குப் பிடித்துள்ளது?”

“யாருடைய நடனமும் எனக்குப் பிடிக்கவில்லை!” என்கிறான் சாஷா.

“ஏல்லா சிரிப்பு வரும்படி நடனமாடுவது எனக்குப் பிடித்துள்ளது. அவள் எப்படிச் சுற்றுகிறாள் பார்த்தாயா!”

“கோத்தே நடனமாடுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

சரி, இது என்ன? போன்தோ சிறுமிகளின் கால்களை வாரி விட்டுக் கொண்டிருக்கிறானே, அவர்கள் அவனைப் பிடித்துத் தள்ளுகின்றனர். “போ, தொந்தரவு செய்யாதே!” என்று கூறியபடியே தொடர்ந்து நடனமாடுகின்றனர். ஆனால் போன்தோ நிற்கவில்லை. போன்தோ காலை வாரியதைக் கவனிக்காத மாயா கீழே விழுந்தாள்.

“சிறுவர்களே, நீங்கள் போய் மாயாவிற்கு எழுந்திருக்க உதவுங்கள். போன்தோவை இங்கே அழைத்து வாருங்கள்.”

ஆனால் போன்தோ அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை. நானே தலையிட வேண்டி வந்தது. போன்தோ பயந்தபடியே என்னைப் பார்க்கிறான். அவனுக்கு என்ன ஆயிற்று என்றே புரியவில்லை. “போன்தோ, உனக்கு நடனமாட விருப்பமில்லையா?”

“இருக்கிறதே!”

“பின், ஏன் சிறுமிகளின் கால்களை வாரி விடுகிறாய்?” என் குரலில் அச்சுறுத்தும் தொனியே தென்படாவிட்டாலும் போன்தோ கவலைப்பட்டான்.

“அவளே தான் கீழே விழுந்தாள்.” நான் என்ன செய்வது? பொய்யை அம்பலப்படுத்துவதா? சாஷா அவன் மீது பாயவே தயாராயிருக்கிறான்.

“சாஷா, சற்று பொறு. ஒருவேளை அவன் தெரியாமல் செய்திருக்கலாம்.”

பின் நான் அவனை என்னை நோக்கி இழுக்கிறேன். அவனோ முரண்டு பிடிக்கிறான். நான் குனிந்து அவன் காதில் மெதுவாகச் சொல்கிறேன்:

“சிறுமிகளுக்குத் தொந்தரவு செய்ய உனக்கு விருப்பமில்லை என்பதை நான் நம்புகிறேன். சரி, நீ போய் நடனமாடு. நாங்கள் பார்ப்போம்.”

போன்தோ அவர்களுடன் சென்று கலந்து, ஒழுங்காக நடந்து கொண்டான். இதனிடையே மாரிக்கா என் காலருகே உட்கார்ந்தாள், சாஷாவும் என்னுடன் ஒட்டிக் கொண்டான். நாங்கள் நால்வருமாக சேர்ந்து நடன மாடுபவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இசை ஒலிக்கிறது, குழந்தைகள் நடனமாடுகின்றனர். இந்த 20 நாட்களில் இவர்கள் உண்மையிலேயே வளர்ந்து விட்டார்களா, அல்லது எனக்குத்தான் இப்படித் தோன்றுகிறதா? இல்லை , இவர்கள் இன்னமும் தம் வயதைக் கடக்கவில்லை.

“நேராக உட்காருங்கள்! கைகளைப் பின்னால் கட்டுங்கள்! அசையாதீர்கள்! நான் சொல்வதைக் கேளுங்கள்!” போன்ற வழக்கமான முறைகளில் பாடங்கள் நடத்தினால் குழந்தைகள் உடனேயே சலிப்படைவார்கள், கொட்டாவி விடுவார்கள். முழுக்க முழுக்கத் தூய்மையான போதனை முறையின்படி இவர்களுக்கு கண்டிப்பாக, கருத்தாழமுள்ள வேலைகளைத் தந்தால் விரைவிலேயே குழந்தைகளுக்குப் படிப்பில் சலிப்பேற்படும்.

பாடவேளைகளில் என்ன செய்ய வேண்டுமென விரும்புகின்றார்கள் என்றெல்லாம் குழந்தைகளிடமே அடிக்கடி கேட்பது நன்றாயிருக்கும். அல்லது, பாடம் துவங்கும் முன்னரே, எப்படி பாடத்தை நடத்துவது என்று குழந்தைகளிடம் கேட்டால் நல்லதோ!

பரிசோதனைக்காக இப்படிப்பட்ட பாடங்களைச் “சொல்லிப் புரிய வைக்கும்” கோட்பாட்டின்படி நடத்த நான் முயன்றேன். இவற்றில் குழந்தைகள் என்னிடமிருந்து விலகிப் போனதாக எனக்குப்பட்டது. இத்தகைய பாட வேளைகளின் போது சலிப்பாக இருந்தது, ஏதோ நான் விசாரணை நடத்துவது போன்றும் அவர்களை ஏதோ முக்கியமான ரகசியத்தைச் சொல்லுமாறு கட்டாயப்படுத்துவது போன்றும் அவர்கள் என்னை நம்பாதது போலும் எனக்குப்பட்டது. அவர்கள் கரங்களை உயர்த்தினார்கள், என் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். இவற்றில் மகிழ்ச்சியும் உற்சாகமும் இருக்கவில்லை. “கரங்களை உயர்த்துங்கள்! எல்லோரும்!… எல்லோரும் யோசியுங்கள்!” என்று அடிக்கடிச் சொல்லும்படி நேரிட்டது. இதே கடமைகள் சிக்கலானவையாக மாறின. இப்பாடங்களில் என்ன மாற்றம் நடந்தது. எனது உறவுமுறை மாறியது: நான் அதிகாரபூர்வமானவனாக, பிழைபடாதவனாக, கண்டிப்பானவனாக, தெரிந்தவற்றையெல்லாம் சொல்லும்படி குழந்தைகளைக் கட்டாயப்படுத்துபவனாக நான் மாறினேன். அவர்களது அறிவைப் பதிவு செய்பவனாக நான் மாறினேன். அனேகமாக இது குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை போலும். பாட முடிவில் சாஷா (இவன் என்னை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தான்) என்னை அணுகிக் கேட்டான்:

படிக்க:
இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?
கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !

“ஏன் இன்று நீங்கள் எல்லா பாடவேளைகளிலும் சோர்வாயிருந்தீர்கள்? உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா?”

“உனக்குப் பாடங்கள் பிடிக்கவில்லையா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை !” என்றான் சிறுவன். “நாங்கள் ஒரு முறை கூட சிரிக்கவில்லை“ என்று கூடச் சேர்ந்து கொண்டான் இலிக்கோ.

திடீரென எனக்குப் பட்டது: பாடம் எப்படியிருந்தது, எனக்கு அவர்களால் என்ன சொல்ல முடியும், பாடவேளைகளில் என்ன செய்ய வேண்டுமென விரும்புகின்றார்கள் என்றெல்லாம் குழந்தைகளிடமே அடிக்கடி கேட்பது நன்றாயிருக்கும். அல்லது, பாடம் துவங்கும் முன்னரே, எப்படி பாடத்தை நடத்துவது என்று குழந்தைகளிடம் கேட்டால் நல்லதோ! “குழந்தைகளே, நன்றி. எனது ஆசிரியர் திறமையை மேம்படுத்தும் ஆசிரியர்களாக உங்களைப் பார்ப்பது தற்செயல் அல்ல!” இத்தகைய பரிசோதனைகளை இனி மேற்கொள்வதில்லை, கூட்டான மகிழ்ச்சியைத் தராதபடி பாடங்களை நடத்துவதில்லையென முடிவு செய்தேன். பின்வருமாறு எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?

1

நாடாளுமன்றத்தில் பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமது உறுதிமொழியை தமிழில் வாசித்ததோடு இறுதியில் “தமிழ் வாழ்க” என முழக்கமிட்டுள்ளனர். இதற்கு எதிராக பாரத் மாதா கீ ஜே என பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி உள்ளனர். நாடாளுமன்றத்தில் நடந்த இந்தக் காட்சிகள் தமிழ் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக நேற்று (18 ஜூன்) “ #தமிழ்_வாழ்க ” என்கிற ஹேஷ்டேகை தமிழர்கள் வைரலாக்கினர். பா.ஜ.க.வின் தமிழ் வெறுப்பு அப்பட்டமாக வெளிப்படுவது இது முதன்முறையும் அல்ல; கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை.

சமீபத்தில் வெளியான தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் ஆறாம் வகுப்புக்கு மேல் அனைத்து மாணவர்களும் கட்டாயம் இந்தியை ஒரு மொழிப்பாடமாக கற்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழகம் கொந்தளித்து எழுந்ததைத் தொடர்ந்து மெல்லப் பின்வாங்கிய மத்திய பா.ஜ.க. அரசு, எனினும், வரைவு அறிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தம் “மூன்றாவது மொழி ஒன்றை கற்க வேண்டும்” என்கிறது. இவ்வாறு மூன்றாம் மொழியாக சீனம், ரஷியன், ஜப்பான், ஸ்பானிஷ் உள்ளிட்ட சர்வதேச மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்கான உள்கட்டமைப்பு அரசிடம் இல்லை என்பதால் முக்காடு போட்டுக் கொண்டு ஹிந்தியை திணிப்பதற்கான முயற்சி என்பதாகத்தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தி பேசாத மாநிலங்களின் மேல் – குறிப்பாக தமிழகத்தின் மேல் – இந்தியைத் திணிக்கும் இந்த முயற்சிக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாறு உள்ளது. பல்வேறு மதங்கள், கலாச்சார பின்னணி, மொழி, வேறுபட்ட தன்மை கொண்ட புவிப் பரப்பு என பெரிதும் வேற்றுமைகள் கொண்ட இந்த நாட்டை இணைப்பதற்கான பொது அடையாளம் ஒன்றைத் தேடும் முயற்சி சுதந்திரத்திற்கு முன்பே மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறான ஒரு பொது அடையாளமாக மொழியைத் திணிப்பதற்கான முயற்சியும் அப்போதே துவங்கப்பட்டு விட்டது.

நூற்றாண்டுகளைக் கண்ட வெள்ளையர் ஆட்சியின் விளைவாக ஆங்கிலம் மக்களை இணைப்பதற்கான ஒரு ஊடகமாக வளர்ந்திருந்தது. உயர்கல்விக்கான சாதனமாக மட்டுமின்றி வெள்ளை அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரத்தின் ஒருங்கிணைவுக்கும் ஆங்கிலமே கருவியாக இருந்தது. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வடக்கத்திய அரசியல்வாதிகள் ஆங்கிலத்தை அந்நிய மொழியாக கருதி எதிர்த்து வந்தனர். எனினும், தென்னகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளோ ஆங்கிலத்தையே விரும்பினர். இந்த முரண்பாடு குறித்து 1937-ல் கட்டுரை ஒன்றை எழுதிய ஜவகர்லால் நேரு, இந்தியாவை இணைப்பதற்கான ஒரு மொழியின் அவசியத்தை அதில் வலியுறுத்தி இருந்தார்.

அந்த சமயத்தில் நேருவும், காந்தியும் இந்தி மற்றும் உருது கலப்பு கொண்டு ஹிந்துஸ்தானி மொழியை மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு சாதனமாக பயன்படுத்தலாம் என கருத்து கொண்டிருந்தனர். அதே மொழியின் அடிப்படையில் இந்து மற்றும் முசுலீம் மக்களையும் இணைத்து விட முடியும் என அவர்கள் நம்பினர். பின்னர் அரசியல் சாசன அமர்வின்போது உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஆர்.வி. துலேகர் இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென வாதாடினார். அதே போல் அரசியல் சாசனம் அதிகாரப்பூர்வ முறையில் இந்தியிலும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என மேலும் சில உறுப்பினர்கள் வாதாடினர்.

ஆனால், அதே அமர்வில் இருந்த பிற மொழி பேசும் உறுப்பினர்களோ இந்தியை விட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தமிழ், வங்கம் ஒரியா உள்ளிட்ட மொழிகள் உள்ளன என்றும், இந்தியைத் திணிப்பது நியாயமில்லை எனவும் வாதாடினர். இந்நிலையில் அரசியல் சாசன அமர்வின் உறுப்பினர்களான கே.எம் முன்ஷி மற்றும் கோபால்சுவாமி அய்யங்கார் ஆகியோர் இந்தி மொழியில் அரசியல் சட்டம் இருப்பதில் உள்ள முக்கியமான சிக்கல் ஒன்றை சுட்டிக்காட்டினர். இந்தி ஒரு நவீன மொழியாகவோ, முன்னேறிய மொழியாகவோ இல்லாதிருப்பதால் சட்ட மொழியாக அது இருப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அவர்கள் தரவுகளோடு முன்வைத்தனர். அதன் பின் எந்த மொழியும் தேசிய மொழியாக இருக்க வேண்டியதில்லை எனவும், ஆங்கிலத்தோடு இந்தியும் அலுவல் மொழியாக இருக்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

படிக்க:
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

என்றாலும் அன்றைக்குத் துவங்கி இன்று வரை ஒவ்வொரு முறை இந்தியைத் திணிக்க “தேசிய” கட்சிகள் முயற்சிப்பதும், அதை தமிழகம் எதிர்ப்பதும் வாடிக்கையாக நடந்து வருகின்றது. ஒவ்வொரு முயற்சியின் போதும், ஒரு பொது மொழி இல்லாமல் எப்படி ஒரு தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பது? என்கிற கேள்வியை வடக்கு முன்வைக்கிறது.

மக்களை ஒன்றிணைக்க மொழியால் மட்டுமே இயலுமா?

அவ்வாறு இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இந்தியத் துணைக்கண்டம் தனது விரிந்து பரந்த நிலப்பரப்பில் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் தனக்கென தனித்த அடையாளத்தைக் கொண்டிருக்கிறது. மொழி உள்ளிட்ட இந்த தனித்த அடையாளங்கள் ஒவ்வொன்றும் பல நூற்றாண்டுகளாக – இந்தியா என்கிற ஒரு கருத்து உருவாவதற்கும் பல நூற்றாண்டுகளுக்கும் முன்பிருந்தே – வரலாற்று ரீதியில் உருவாகி நிலைபெற்றவை. என்றாலும், எங்கோ தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் அநீதி இழைக்கப்பட்ட நிர்பயாவுக்காக, ஆசீஃபாவுக்காக, தங்ஜம் மனோரமாவுக்காக, போட்மாங்கேவுக்காக மற்றொரு கடைக்கோடியான கன்னியாகுமரியின் முனையில் நிற்கும் ஒரு தமிழன் போராட முன்வருகிறான்.

கருகிய பயிரைக் கண்டு நெஞ்சு வெடித்து சாகும் தஞ்சை விவசாயிகளுக்கு விதர்பா விவசாயியின் கழுத்தில் இறுகும் கயிற்றின் நுணி யார் கையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதா? கல்விக் கடனை அடைக்க முடியாமல் வேலையும் கிடைக்காமல் பரிதவித்து அலையும் வங்கத்து இளைஞனின் நிலையை அத்துக்கூலிகளாய் நாடெங்கும் விசிறியடிக்கப்படும் பீகார் உ.பி. தொழிலாளிகள் புரிந்து கொள்ள மொழிதான் தேவையா? மக்களை இணைக்காமல் நாட்டை மட்டும் இணைத்து விட முடியாது – மக்களை அவர்களது வாழ்க்கை தான் இணைக்குமேயன்றி மொழி மாத்திரமல்ல. மொழி ஒரு கருவி மட்டுமே.

இதைப் புரிந்து கொள்ளாத மாட்டு வளைய சனாதன அரசியல்வாதிகள் இந்தியைத் திணிப்பது தேவையற்ற பகைமை உணர்ச்சியையே தூண்டி விடும். கை விரல்கள் கூட ஒரே நீளத்தில் ஒன்றே போல் இருப்பது ஆபாசமாகத்தானே இருக்கும்?

சாக்கியன்

பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !

மிழக ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் நிலைப் பற்றி, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் அங்கு பணிபுரியும் 100 பெண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற இலாப நோக்கத்தின் அடிப்படையில், மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வர வேண்டும் என்பதே பல ஆயத்த ஆடை தொழிற்சாலைகளின் தேவையாகும். அதனை பூர்த்தி செய்ய தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மருத்துவர்கள் ஆலோசனையின்றி, அங்கீகாரமற்ற மாதவிடாய் வலி நிவாரணி மாத்திரைகளை வழங்கி வந்திருக்கின்றன என்ற உண்மை இந்த ஆய்வின் முடிவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது இலாப நோக்கத்திற்காக முதலாளிகள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு இதைவிட சான்று எதுவும் இல்லை.

தங்களது தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் எடுக்கும் விடுப்புகளைக் கண்காணிக்கவும் உடல்நிலை சரியில்லை என பொய் சொல்கிறார்களா எனச் சோதிக்கவும் உணவு மற்றும் கழிவறை செல்ல அதிக நேரத்தை செலவிடுகிறார்களா என்பனவற்றைக் கண்காணிக்கவும் மேற்பார்வையாளரையும் நியமித்திருக்கிறது தொழிற்சாலை நிர்வாகம். வேலை செய்யும்போது மாதவிடாய் வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் காண்பிப்பதோ, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதோ என இல்லாமல், அங்கீகாரமற்ற வலி நிவாரண மாத்திரையை, மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் பெண்கள் உட்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் இந்த ஆய்வின் மூலம் வெளியாகியுள்ளது.

மாதிரிப் படம்

ஆடைத் தொழிற்சாலையில், தனது 17 வயதில் தையல் வேலைக்குச் சேர்ந்த சுதாவிற்கு தற்போது வயது 20. தனது வீட்டுச் சூழ்நிலையால் இந்த வேலைக்கு வந்திருக்கும் இவர், விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்வார்கள் என அஞ்சி, மாதவிடாய் காலத்திலும், தொழிற்சாலை வழங்கும் மாத்திரைகளை உட்கொண்டு வேலை பார்த்து வந்திருக்கிறார்.

“எனது மாதவிடாய் காலத்தில் தொழிற்சாலை வழங்கிய மாத்திரைகள் என் வலியை குறைத்தது. நான் வலிகளை மறந்து வேலை செய்ய என்னை பழக்கப்படுத்திக் கொண்டேன். ஆனால் இப்போது எனது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறுகிறார் சுதா.

மருத்துவர்களின் ஆலோசனையின்றி, வழங்கப்பட்ட வலி நிவாரணி மாத்திரையை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்ததால், அவரின் கருப்பையில் நீர்த்திசுக்கட்டிகள் உருவாகியுள்ளது என மருத்துவச் சோதனையில் தெரிய வந்துள்ளது. விடுப்பு எடுத்தால் சம்பளம் இழக்க நேரிடும் என்று பயந்த அவர், தான் வாங்கும் 6000 ரூபாய் சம்பளத்தில் பாதியை தற்போது மருத்துவத்திற்கு செலவழித்து வருகிறார். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியும், தன் வீட்டுக் கடனை அடைக்கவேண்டும் என்பதற்காக ஓய்வெடுக்க வழியின்றி வேலைக்கு சென்று வருகிறார் சுதா.

இதுபோல அங்கீகாரமற்ற மாத்திரையை உட்கொள்ளும் பெண்கள் பலரும், மன அழுத்தம், பதற்றம், சிறுநீர்ப் பாதை நோய் தொற்றுகள், நீர்த்திசுக்கட்டிகள், கருச்சிதைவு போன்றவற்றால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

சுதாவை போல், தொழிற்சாலையில் வழங்கிய வலி நிவாரணி மாத்திரையை மாதக்கணக்கில் சாப்பிட்டு வந்த, கனகா மாரிமுத்துவிற்கு, மாதவிடாய் நின்றுவிட்டது. இப்போது அவருக்கு வயது 21.

“அப்போது என் முன் இரண்டு வழிகளே இருந்தது. ஒன்று ஊதியத்தை இழப்பது, மற்றொன்று மாத்திரைகளை உட்கொண்டு வேலைகளை பார்ப்பது” என்று கூறிய கனகா, தற்போது உடல்நலக் குறைவால் விடுப்பில் உள்ளார்.

“மாதவிடாய்க்காக தொழிற்சாலையில் வழங்கும் மாத்திரையை, மேற்பார்வையாளர் முன்னிலையில் நாங்கள் கட்டாயமாக விழுங்க வேண்டும். அந்த மாத்திரையின் பெயர், பின் விளைவுகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. அதன் நிறம், அளவு மட்டுமே தெரியும்” என தொழிற்சாலையில் பணிபுரியும் 15 முதல் 25 வயதுடைய பெண்கள் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் பணிபுரியும் செல்வி மாதவிடாய் குறித்துப் பேச விரும்பவில்லை. ஏனென்றால், ஒருமுறை தனது மாதவிடாய் வலியைக் குறித்து தன்னுடைய மேற்பார்வையாளரிடம் (ஆண்) கூறியபோது, அவர் கிண்டல் செய்துள்ளார். அதிலிருந்து வலி வந்தாலும் அதனை வெளியில் சொல்லாமல், தொழிற்சாலை வழங்கும் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். 6 மாதங்களுக்குப் பின் செல்விக்கு, வயிறு எரிச்சல் அதிகமாகியுள்ளது. அதன் காரணமாக தற்போது 10 நாட்கள் வருமான இழப்புடன் விடுமுறையில் இருக்கிறார்.

இதுகுறித்து தொழிலாளர் உரிமைக்கான மதச்சார்பற்ற சமூக சேவை தொண்டு நிறுவனத் தலைவர் (head of labour rights charity serene secular social service society) ஜேம்ஸ் விக்டர் கூறியதாவது, “இந்தப் பெண்கள் வீட்டில் இருந்தபோது மாதவிடாய் முறையாக இருந்தது, ஆனால், வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் அவர்களுக்கு உடல்நிலை பிரச்சினைகள் வந்துள்ளது. இந்தப் பிரச்சினைகள் ஆபத்தானவை” என்கிறார். மேலும், “மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின் மற்றும் ஓய்வு வழங்காமல், மாதவிடாய் நிற்க மாத்திரைகளை வழங்கியுள்ளது தொழிற்சாலை. வேலைகள் மெதுவாக செய்தால் அதற்கும் பெண்களை வஞ்சிக்கிறது நிர்வாகம்” என்கிறார்.

மாதவிடாய் காலத்தின்போது தொழிற்சாலையில் தங்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பெண்கள் காட்டியுள்ளனர். அந்த மாத்திரையில் பிராண்ட் மற்றும் காலாவதி தேதி போன்ற எந்த தகவலும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் பரிசோதனைக்காக அம்மாத்திரைகளை மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளது ராய்ட்டர்ஸ் நிறுவனம். மருத்துவச் சோதனையில், “அம்மருந்துகள் இபுப்ரோஃபென் (Ibuprofen), அட்வில் (Advil) போன்ற வலி நிவாரணி மருந்துகள் போலவே வலியை குறைக்கவல்லது. எனினும் அதனைத் தொடர்சியாக உட்கொண்டு வந்தால், பக்கவிளைவுகள் ஏற்படும்” என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நிறைய தொழிற்சாலைகளில் கழிப்பறைகளை வேண்டுமென்றே சுத்தப்படுத்துவதில்லை. கழிப்பறை சுத்தமாக இல்லையென்றால் பெண்கள் அதை உயயோகிப்பது குறையும். அதனால் வேலைகள் அதிகமாக நடக்கும் என்பதே அவர்களின் நோக்கம்…

தமிழகத்தில் சுமார் 40,000 ஆயத்த ஆடை மற்றும் நூற்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் கிட்டதட்ட 3 இலட்சம் பெண் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள் என அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதுவன்றி, கணக்கில் வராத முறைசாரா ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்தும், ஏழை எளிய குடும்பத்தில் இருந்தும், கல்வியறிவில்லாத, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்தும் இளம் பெண்கள் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைக்கு பணிபுரிய வருகிறார்கள்.

பெரிய பெரிய தொழிற்சாலைகள் அதிக உற்பத்தி செய்து, குறைவான விலையில் விற்பதால், நடுத்தர தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை அதிகரிக்கவும், இலாபம் ஈட்ட, தங்களது தொழிற்சாலையில் வேலைப் பார்க்கும் தொழிலாளிகளுக்கு சிறுநீர் கழிக்கக் கூட நேரத்தை வழங்குவதில்லை.

பல தொழிற்சாலைகளில் ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் மட்டுமே கழிப்பறைக்கு நேரம் ஒதுக்கும் அவலமும் நிகழ்கிறது. அதுவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது என 2016-ல் சமூக விழிப்புணர்வு ஆராய்ச்சிக் கல்விக்கான தொண்டு நிறுவனம் (Charity community awareness research education trust) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
கள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் !

“பல பெயர்களிலும், பல வடிவங்களிலும் சுரண்டல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நிறைய தொழிற்சாலைகளில் கழிப்பறைகளை வேண்டுமென்றே சுத்தப்படுத்துவதில்லை. கழிப்பறை சுத்தமாக இல்லையென்றால் பெண்கள் அதை உயயோகிப்பது குறையும். அதனால் வேலைகள் அதிகமாக நடக்கும் என்பதே அவர்களின் நோக்கம்” என பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பெண்கள் ஆய்வுத் துறையின் தலைவர் மணிமேகலை நடேசன் தெரிவிக்கிறார். இவர், 2011-ல், ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களின் நிலையை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.

ஆவணப்படுத்தப்பட்டாலும், அவை சட்டத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டாலும் என்ன பயன்? வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த பெண்கள், குடும்பப் பாரம் போக்க பணிக்குச் சென்றால், அங்கேயும் நரக வேதனைதான்.

கட்டுரையாளர் : அனுராதா நாகராஜ்
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : சங்கீதா
நன்றி : ஸ்க்ரால்

” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” | விழுப்புரம் பொய்க் கேஸ் அனுபவம் !

மிழகத்தில் விழுப்புரம் தொடங்கி டெல்டா மாவட்டம் வரை பேரழிவை ஏற்படுத்த காத்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக, பிரச்சாரம் செய்த மக்கள் அதிகாரம் தோழர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்திருகிறார்கள்.

இளம் தோழரான மதுரைவீரனிடம் கைது குறித்து கேட்டபோது, “கடந்த 09.06 2019 ஞாயிறு 11 மணியளவில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மணிமேகலை, தொல்காப்பியன், ஞானஒளி மற்றும் திலீபன் ஆகியோர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தோம்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளிவந்த தோழர்கள்.

அப்பொழுது என்பீல்டு பைக்கில் வந்த ஏட்டு ஒருவர் என்னையும் தோழர் திலீபனையும் கூப்பிட்டார். வழக்கமாக நோட்டீசு கேட்பதற்காகத்தான் கூப்பிடுகிறார் என்று அருகில் சென்றதும், உங்கள் இருவரையும் ஐயா கூப்பிட்டார் என்றார். தோழர் திலீபன் பிரச்சாரம்தானே செய்கிறோம் எதற்காக கூப்பிடுகிறார் என்றார்.

“ஒன்னுமில்லை… உங்ககிட்ட ஏதோ பேசணும் என்று சொன்னார்.”

“நாங்கள் எப்போதுமே இங்கதான் பிரச்சாரம் பண்றோம்.. இப்ப மட்டும் என்ன புதுசா கூப்பிடுறீங்க?” எனக்கேட்டதும் “எது சம்பந்தமா பிரச்சாரம் பண்றீங்க?” என்றார்.

“ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரா”

“நீங்க மட்டும் ஏன் தனியா பண்றீங்க, எவ்வளவு பேர் அமைப்பில் இருக்கிறார்கள்..” என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்பெசல் பிராஞ்ச் மற்றும் இன்னொரு போலீசு தோழர் தொல்காப்பியனை அழைத்து வந்தனர். பல கேள்விகளுக்கு பிறகு அங்கேயே அட்ரஸை வாங்கியவுடன் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் நோட்டீஸை பெற்றுக் கொண்டு “சரி வாங்க போகலாம்” என்றார்.

தாலுக்கா காவல்நிலையம் சென்றதும் இன்ஸ்பெக்டர் ராஜன் “நோட்டீஸ் எதுவும் கொடுக்கக்கூடாது என்று மேலிடத்துல இருந்து சொல்லியிருக்காங்க. கேஸ் போட சொன்னாங்க. வேணும்னா இந்த ஒருமுறை உங்களுக்காக நான் பேசிப் பார்க்கிறேன்” என்று ‘அக்கறையோடு’ சொன்னார்.

படிக்க:
♦ ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !
♦ சிவப்புச் சட்டை!

கொஞ்ச நேரம் கழித்து எஸ்.ஐ கேஸ் போட சொன்னார். ரைட்டர் எங்களிடம் அட்ரஸ் கேட்டு சிஎஸ்ஆர் காப்பியில் பதிவு செய்து கொண்டிருந்தார். ஆனால் எந்த பிரிவில் வழக்கு போடுவது என்று தெரியாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். இதற்கு மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. மதிய உணவு நேரம் என்பதால் சாப்பாட்டை நம்மிடம் வாங்கிக்கச் சொன்னார்கள்.

வழக்கமா நீங்கதானே வாங்கிக் கொடுப்பீர்கள் என்று கேட்டதும்… காசு எதுவும் இல்ல. நீங்க உண்டியல் வச்சிருந்தீங்களே அது எங்க என்று கேட்டார்கள். பிறகு நாங்களே தோழர்களிடம் சொல்லி வாங்கி சாப்பிட்டோம்.

இவர்கள் ஒரு பொய்க் கதையை யோசித்து எழுதி முடிப்பதற்கு மாலை 5:30 மணி ஆகிவிட்டது. எங்கள் மீது வழக்கு போட என்ன காரணம் என்று சொல்லவில்லை. மேஜையில் இருந்த எஃப்.ஐ.ஆர் காப்பியை படித்ததும் அதனை பிடுங்கிக் கொண்டார்கள். எந்த பிரிவில் வழக்கு போட்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் காட்டினார்கள். ஒருவழியாக காவல்நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு சென்று மெடிக்கல் சர்டிஃபிகேட் எடுத்துக்கொண்டு நீதிபதியிடம் செல்வதற்கு மாலை 6:30 மணி ஆகிவிட்டது.

நீதிபதி கேட்டார். உங்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு என்னவென்று தெரியுமா?

“தெரியாதுங்க”

போலிசை ஏற இறங்க பார்த்துவிட்டு… எஃப்.ஐ.ஆர் காபியை படித்தார்.

“புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள், அவர்களை விசாரிக்கையில், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் கைகளில் கருங்கற்களை வைத்துக்கொண்டு, பேருந்து கண்ணாடிகளையும், மின்விளக்குகளையும் உடைப்பதற்காக சதி செய்து கொண்டிருந்தார்களாம். பொதுமக்களின் அமைதிக்கும் உயிருக்கும் கேடு விளைவிப்பதோடு அரசுக்கு எதிராக சதி செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சீர் குலைத்துவிடுவார்கள்…” என்று எழுதியதை நீதிபதி படித்துக்காட்டினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

உடனே போலிசை ஏறிட்டு… என்ன கதை இது. சினிமா ஸ்கிரிப்ட் எழுதி வச்சிருக்கிங்க. மின்கம்பத்தை அடிக்க போனார்கள், கல்லை எடுத்தார்கள்னு… வேற கதையே உங்களுக்கு கிடைக்கலையா? என்று கேட்டுவிட்டு…

இந்த நோக்கத்தில் தான் இருந்தார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க என்ன ஜோசியக்காரர்களா? அவர்கள் மூளைக்குள் புகுந்து இதைத்தான் செய்ய நினைத்தார்கள் என்று எழுதுவதற்கு….. பொது இடம் தானே cctv camera இருக்கும் இல்லையா… அதில் நீங்கள் சொன்னதெல்லாம் பதிவாகி இருக்கிறதா? சரி பொதுமக்களை அச்சுறுத்தும்படி நடந்து கொண்டதாக தானே சொல்கிறீர்கள். பொதுமக்களிடம் வாக்குமூலம் வாங்கினீர்களா? என்று கேட்டார்.

போலீஸ்காரர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள். எஃப்.ஐ.ஆர் காப்பியில் மதுரைவீரன் வயது 21 என்று குறிப்பிட்டு இருந்ததை பார்த்து போலீஸை நோக்கி கேட்டார்.

“மதுரைவீரன்.. இவருக்கான வயது சர்டிபிகேட் இருக்கிறதா” என்றார்.

“இல்லை” என்றது போலிசு.

22 வயதிற்குள் இருப்பவர்கள் மேல் கேசு போடும்போது ஏஜ் சர்டிஃபிகேட் வைக்கணும்னு தெரியாதா? பி.காம் முடித்துள்ள இந்த மாணவன் மேல் வழக்கு போட்டிருக்கிறீர்கள். சமூகத்தைப் பாதுகாக்கும் போலீஸ் இப்படி இருந்தால் எப்படி சமூகம் முன்னேறும்?” என்று ஆவேசமாக திட்டினார்.

போலீஸ் வாயைத் திறக்கவில்லை. கடுப்பான நீதிபதி, “இதனை இன்வெஸ்டிகேசன் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்ட வேண்டும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு..” என்று கோவமாக சொன்னார்.

தோழர் மதுரைவீரன் “ ஐயா…பொய்க் கேஸ் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். இவர்கள் கேசு போட்டு விட்டார்கள். என் வாழ்க்கை என்ன ஆவது? பொய்க் கேசு போட்ட இவர்கள் மீது என்ன நடவடிக்கை” என்றார்.

நீதிபதி சொன்னார். “மக்கள் போலீசை எதிர்த்துப் பேசுவதில்லை, எதற்கு தொல்லை என்று கடந்து சென்று விடுகின்றனர். இந்த வழக்கில் இன்வெஸ்டிகேஷன் என்று குறிப்பிட்டுள்ளேன். டிரையலுக்கு வந்தால் நான் பார்த்துக் கொள்வேன். அப்போது நான் பேசமாட்டேன் என் பேனா தான் பேசும்” என்று சொல்லிவிட்டு எங்களுக்கு ரிமாண்ட் ஆர்டர் கொடுத்தார்.

படிக்க:
♦ பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !
♦ செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு: தோழர்கள் மக்கள் போர்க்கோலம்

அங்கிருந்து விழுப்புரம் பெரும்பாக்கம் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஜெயில் முன்பே சென்று நாங்கள் முழக்கம் போட்டதும் ஜெயிலர் வந்து பார்த்துவிட்டு “தீவிரவாதியை உள்ளே வைத்துக் கொள்ள மாட்டோம்” என்று சொல்லிக் கொண்டே ஓடி விட்டார். எங்களைக் கூட்டி வந்த எஸ்கார்ட் போலிசு “இவர்கள் ரொம்ப நல்லவர்கள்தான். எடுத்துக் கொள்ளுங்கள்” என்றனர். ஆனால் அதனை ஜெயிலர் ஏற்றுக் கொள்ளாமல் திரும்பிவிட்டார்.  அங்கிருந்து கிளம்பி  காவல்நிலையத்துக்கே அழைத்து வந்தனர். எங்களை அழைத்து வந்த போலிசு “என்னோட தங்கச்சிக்கு மஞ்சள் நீராட்டு இருக்கு. அதுக்கு வேற போவணும்” என்று புலம்பினார்.

காவல் நிலையத்தில் எங்களை விட்டுவிட்டு நீதிபதியிடம் சென்று கடலூர் சிறைக்கு மாற்றி ஆர்டர் வாங்கி வந்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன் ஜீப்பைக் கொடுத்தார். ஜீப்புன்னா டீசல் போடணும். கையில காசு இல்ல. அதனால பஸுல போயிடலாம் என்று இரண்டு எஸ்கார்ட் போலீசு பேசிக்கொண்டிருந்தனர். இறுதியாக ஜீப்பில் கூட்டிச் சென்றனர். கடலூர் மத்திய சிறையை அடைந்தபொழுது இரவு 10:30.

ஜெயிலர், “உங்கள சோதனை பண்ணனும் சட்டையை கழட்டுங்கள்” என்றார்.

“முடியாது. நாங்கள் கிரிமினல் குற்றவாளி கிடையாது. அரசியல் கைதி”.

“டேய்..! கழட்டுடா” என்றார்.

மரியாதையாக பேசுங்கள். எங்களால் கழட்ட முடியாது என்றதும்… “இவர்களை வெளியே அனுப்பு” என்றார் ஜெயிலர்.

எஸ்கார்ட் போலீஸ் ரொம்பவும் பாவமான முகத்துடன், “தயவு செஞ்சி கழட்டுங்க..” என்று கெஞ்சினர். நாங்கள் முடியாது என்று கறாராக மறுத்து விட்டோம்.

ஜெயிலர் சொன்னார். “வைகோ, திருமுருகன் காந்தி எல்லோரும் கழட்டுறாங்க நீங்க கழட்ட முடியாதா? சிறைக்குன்னு விதிகள் இருக்கு. இங்க முதல்வரே வந்தாலும் கழட்டித்தான் ஆகணும்..” என்றார் ஜெயிலர்.

எஸ்கார்டு போலிசு எங்களிடம் “நீங்க எதையும் கழட்ட வேண்டாம் லுங்கியை மாற்றிக்கொண்டு, பேண்ட்டை மட்டும் கொடுங்க. அதில் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்று நாங்கள் சோதனை செய்து கொள்கிறோம்.” என்றனர்.

முடியவே முடியாது என்று, ஜெயிலர் சொன்னார். “சிறைக்கென்று மேனுவல் உண்டு” என்றார். அரசமைப்புச் சட்டப்படி எல்லாம் ஒன்றுதான். எந்த மேனுவலாக இருந்தாலும் சட்டத்திற்குட்பட்டதுதான் என்றதும் கடுப்பாகினார் ஜெயிலர்.

கொஞ்ச நேரம் கழித்து எஸ்கார்ட் போலீசு அவர்களுடைய போனில் எங்களை வீடியோ எடுத்தனர். எடுத்த வீடியோவை டி.எஸ்.பி -க்கு அனுப்பி விட்டு பேசினார். சிறைத்துறையும் அவர்களுடைய மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். எஸ்கார்டு போலீஸ் கோபப்பட்டு “நாங்க ஏதாவது தப்பு செய்தோமா… ஏன் இப்படி பண்றீங்க… வேற யாராவது என்றால் நடப்பதே வேறு” என்றார்கள்.  பின்பு அவர்களாகவே “நீங்க சுட்டாலும் பரவாயில்லை என்ற முடிவோடு வந்து இருக்கீங்க. நாங்க அப்படி இல்ல. போய் பொண்டாட்டி புள்ளைய பார்க்கணும்” என்று நம்மிடம் சோகமான முகத்துடன் சொன்னார்கள்.

கொஞ்ச நேரம் கழித்து.. “இவங்க சட்டைய கழட்ட மாட்டாங்க. ஒரு ஓரமா நீ ஒரு 3 மணிநேரம் தூங்கு. நான் ஒரு 3 மணி நேரம் தூங்குறேன். காலையில வரைக்கும் இப்படியேதான் போயிட்டு இருக்கும்” என்று முடிவெடுத்து விட்டனர் எஸ்கார்ட் போலீசு இருவரும்.

ஒரு கட்டத்தில் எப்படியோ மேலதிகாரிகள் மூலம் ஜெயிலரிடம் பேசிவிட்டு, மேல் ஆடையோடு செக் செய்துவிட்டு வர சொன்னார்கள். “இங்க யாராவது பெண்களா இருக்காங்க, உங்களுக்கு கூச்சமாக இருந்தால் கூட ரூமுக்கு சென்று காட்டுங்கள்..” என்று சொன்னார்கள்.

அப்போதும் நாங்கள் “முடியாது” என்றோம்.

சிவில் உடையில் எங்கிருந்தோ வரவழைக்கப்பட்ட இரண்டு போலீஸ் வந்தது. ஒவ்வொரு தோழராக வரச் சொன்னார்கள். தோழர் திலீபனிடம் சட்டையை கழட்டச் சொல்லி மிரட்டினார்கள். தோழர் திலீபன், முடியாது என்றதும் கம்ப்யூட்டர் அறைக்கு அழைத்துச் சென்று சிங்கம் சூர்யா பட பாணியில் டேபிளை தட்டிவிட்டு கழட்ட முடியுமா முடியாதா என்று அதட்டினர். அந்த சத்தத்தில் 10 போலீசு உள்ளே வந்து விட்டனர். தோழர் திலீபன் முடியாது என்று மறுக்கவே….தோழரின் கை-கால்களை ஆளுக்கொரு போலிசு பிடித்துக் கொண்டு சட்டையை கழட்டிவிட்டு பார்த்து உள்ளே அனுப்பினர்.

படிக்க:
♦ கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !
♦ புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

மதுரைவீரன் தோழரோ “சசிகலா – ஜெயலலிதா எல்லாம் சிறைக்குப் போனார்கள் அவர்களை எல்லாம் இப்படித்தான் நடத்தினீர்களா? என்று கேட்டதும் எல்லோருக்கும் ஒரே விதிதான். அந்த வீடியோவ காட்டினாத்தான் நம்புவியா என்று எகத்தாளமாக கேட்டுவிட்டு கைகளை பிடித்துக்கொண்டு சட்டையை கழட்டியது  போலிசு.  நீங்கள் செய்வது “மனித உரிமை மீறல்” என்றதும்….. எதுவாக இருந்தாலும் நீதிபதிகிட்ட சொல்லிக்கோ என்று சொல்லிவிட்டு சட்டையை கழட்டியது.

“இவர்களை எல்லாம் இப்படி பண்ணத்தான் முடியும். அத  விட்டுவிட்டு பிடித்து உருவிக் கொண்டு இருக்கிறீர்களா” என்று சிவில் உடையில் வந்த போலிசு தனது அதிகாரத் திமிரை வெளிப்படுத்தியது. இறுதியாக சோதனை முடிந்த பிறகு அட்மிஷன் போட்டு எங்கள் மூன்று பேரின் சட்டையைக் கொடுத்து அனுப்பினர். அப்பொழுது மணி 1:30-ஐ தாண்டியது.

மக்கள் அதிகாரம் டி-ஷர்ட்டை போடுவதற்கு முனைந்த போது அதற்கு அனுமதி மறுத்து விட்டார்கள். கேட்டதற்கு “உங்களுக்கு எதிரி யாராவது இருப்பார்கள். அவர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாக்கத்தான்” என்றார்கள்.

மூவரையும் தனி அறையில் போட்டு விட்டனர். அடுத்தநாள் காலையில் தலைமை ஜெயிலர், “நீங்கதான் ஆடையை கழட்டுவதற்கு அடம்பிடிச்சிங்களா? அனைத்தையும் கேள்விப்பட்டேன். மனதுக்கு கஷ்டமாக இருந்தது. நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். பல போராட்டம் படிக்கும் காலத்தில் நானும் செய்திருக்கிறேன். கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள். அப்போதுதான் வெற்றி பெற முடியும்” என்றார். மூன்றாவது நாள் பெயில் கிடைத்து வெளியில் வரும் பொழுது எங்களை ஒரு பார்வையுடன் பார்த்தார்.

எங்கள் அனுபவமாக, அதிகாரவர்க்கம் தலைக்கனத்துடன் இருக்கிறார்கள். ஜெயிலுக்கு வருபவர்கள் அனைவரும் அக்யூஸ்ட் என்று அவர்கள் கருதுகிறார்கள். அமைப்பு பெயரை சொன்னால்தான் மரியாதை கொடுக்கிறார்கள். அமைப்பாக இருப்பதன் மூலம்தான் உரிய மரியாதை கிடைக்கிறது. நாம் அவர்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடிகிறது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

நினைவேந்தல் – படத்திறப்பு !

அண்ணாமலை அரங்கம்,
ரயில்வே நிலையம் அருகில்,
கோயம்புத்தூர்.

23-06-2019,
காலை 10 மணி

 

தலைமை :

தோழர் அ.முகுந்தன்,
மாநில தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

உருவ படம் திறப்பு :

தோழர் மனோகரன்,
முன்னாள் பொருளாளர்,
கோவை மண்டல பஞ்சாலைச் சங்கம்.

நினைவேந்தல் உரை :

தோழர் எஸ். கிருஷ்ணமூர்த்தி,
மாவட்டச் செயலாளர்,
சி.ஐ.டி.யு. – கோவை.

தோழர் என். தாமோதரன்,
சி.பி.ஐ.(எம்.எல்) மாநில குழு உறுப்பினர்,
கோவை.

திரு C. நடராஜன்

திரு M.P. ஆறு குட்டி

தோழர் காளியப்பன்,
பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

தோழர் ப.விஜயகுமார்,
பொருளாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

தோழர் மருதையன்,
பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.


ன்பார்ந்த நண்பர்களே !

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோவை மாவட்டத்தின் ஒப்பற்ற புரட்சிகர நக்சல்பாரி தலைவரான தோழர் விளவை இராமசாமி அவர்கள் கடந்த 11.06.2019 அன்று இயற்கை எய்தினார். தான் தலைமையேற்று நடத்திய போராட்டங்களில் தோல்வியை ஒருபோதும் விரும்பாத பிறவிப் போராளியான அவர், உடல் நலிவுற்ற நிலையில் கடந்த 20 மாதங்களாக இயற்கையோடு நடத்திய போராட்டத்தில் மட்டும் ‘தோற்று’ப் போனார். அவரது மறைவு புரட்சிகர இயக்கத்திற்கும், தொழிலாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்திய புரட்சி இயக்கம் ஒரு முன்னணிப் போராளியை இழந்து விட்டது.

கோவையின் வடக்கு வட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான விளாங்குறிச்சியில் பழனியப்பன் – செல்லம்மாள் தம்பதிகளுக்கு 1960-ம் ஆண்டு மார்ச் 6-ம் நாள் பிறந்தார். இளமைக்காலத்தில் இருந்தே பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் மீதும், முற்போக்கு பத்திரிகைகள் மீதும் பெரும் நாட்டம் கொண்டவராக இருந்து வந்தார். முற்போக்கு பத்திரிகைகள் மீதான அவரது ஈர்ப்பு வெறும் இலக்கியத்தின் மீதான காதல் அல்ல. மாறாக சமூகத்தின் மீதும் இந்த சமூகத்தை மாற்ற வேண்டும் என்கிற வேட்கையின் மீதும் உள்ள வெளிப்பாடுதான். புரட்சிகர இயக்கமான நக்சல்பாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு முன்னதாக, 1989-ல் ஞானி நடத்திய “நிகழ்” இதழில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதிய கவிதையே இதற்குச் சான்று. அந்தக் காலகட்டத்தில் தன்னைச் சுற்றி அன்றாடம் நடக்கும் சமூக அவலங்களை பல்வேறு பத்திரிகைகளுக்கு செய்தியாக அனுப்புவதை ஒரு வேலைத்திட்டமாகவே கொண்டிருந்தார்.

CS&W பஞ்சாலைத் தொழிலாளியின் மகனான இராமசாமியினுடைய வாழ்க்கைக் கனவு தான் ஒரு ஓவியராக ஆக வேண்டும் என்பதே. ஆனால், தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, மத்திய அரசின் தேசிய பஞ்சாலைக் கழகத்தைச் (என்.டி.சி) சேர்ந்த முருகன் மில்லில் 1982-ல் சாதாரண பஞ்சாலைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கினார். இவ்வாலையில் அப்ரண்டிசாக பணிபுரிந்தபோது, அவரது சூப்பர்வைசர் அவரிடம் சிகரெட் வாங்கி வரச் சொல்கிறார். இந்தச் செயல் தனது தந்தைக்கு பிடிக்காது எனக்கூறி சூப்பர்வைசரின் உத்தரவை நடைமுறைப்படுத்த மறுக்கிறார். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மறுநாள் இவரது ஐ.டி. கார்டை பிடுங்கிக் கொண்டு தர மறுத்தார் சூப்பர்வைசர். இதை எதிர்த்து, தன்னுடன் பணிபுரியும் அப்ரண்டிஸ் தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு போராடி, நிர்வாகத்தை பணிய வைத்தார். அன்று முதல் சாதாரண தொழிலாளி இராமசாமி தோழர் இராமசாமியாக அறியப்பட்டார்.

இயல்பாகவே பஞ்சாலைகளில் தொழிலாளர்களின் வேலை புல்நைட், பகல்நைட் என ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கைத் தரமோ நாளுக்கு நாள் மோசமாகி போய்க்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தொழிலாளர்களின் பாதுகாவலனாக, அவர்கள் பிரச்சினைகளை நிர்வாகத்திடம் பேசும் தொழிற்சங்கத் தலைவராக உருவெடுத்தார், இராமசாமி. துவக்கத்தில் முருகன் மில்லில் இயங்கி வந்த ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் கிளைச்செயலாளராக பொறுப்பேற்று முருகன் மில்லிலும் என்.டி.சி. நிறுவனத்தின் பிற மில்களிலும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இராமசாமியின் குரல் விரிவடையத் துவங்கியது. வெறும் தொழிற்சங்க நடவடிக்கை என்பதில் இருந்து தாண்டி, தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்துக்கான வழிகுறித்து தனது சித்தனையை விரிக்கத் துவங்கினார். சரியான அமைப்புக்கான தேடலையும் துவங்கினார். இந்தத் தேடலின் இறுதியில் நக்சல்பாரி புரட்சிகர அமைப்பில் இயங்கத் துவங்கி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் முன்னோடிகளில் ஒருவராக உயர்ந்தார். அதன் நிறுவனர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பு.ஜ.தொ.மு. மாநில துணைத் தலைவராகவும், கோவை மாவட்டத் தலைவராகவும், பு.ஜ.தொ.முவுடன் இணைக்கப்பட்ட கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று கொங்கு மண்டலத்தில் புரட்சிகர தொழிற்சங்கத்தை கட்டியமைப்பதில் பெரும் பங்காற்றினார்!

1980-களில் நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தின் வழிகாட்டுதலில் தன் அரசியல் பயணத்தை துவங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளி வர்க்கத்திற்காக செயலாற்றி வந்தார். எந்தப் பிரச்சினை என்றாலும், வெற்றியோ, தோல்வியோ களத்தில் இறங்குவோம் என போராட்டங்களில் உறுதியாக நின்றவர். “உழைக்கும் மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு விசயத்திலும், எதிரி எத்தகைய பலமானவனாக இருந்தாலும், தோற்கக்கூடிய சூழலாக இருந்தாலும் போராடித் தோற்க வேண்டும் தோழரே! பாட்டாளி வர்க்கத்தின் தற்காலிகத் தோல்வி கூட கவுரவமானதாக இருக்க வேண்டும் தோழரே!” இதுதான் தோழர் இராமசாமியின் போர்க்குரல்! தோழர் இராமசாமி உடல் நலிவுற்று வீழ்ந்த நிமிடம் வரையிலும் இந்தக் கம்பீரக்குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.

தோழர் இராமசாமி பணியாற்றிய முருகன் மில்லை உள்ளடக்கிய என்.டி.சி. நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது என்கிற போதிலும், தொழில் நசிவைக் காரணம் காட்டி, பல மில்களை மூடுவது, அதன் சொத்துக்களை அற்ப விலைக்கு விற்பது போன்ற அயோக்கியத்தனங்களுக்கெதிராக போர்க்குரல் எழுப்பிய தோழர் இராமசாமி, என்.டி.சி தொழிலாளர் சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தலை நிர்வாகம் பல ஆண்டுகளாக நடத்தாமல் தொழிற்சங்க கட்டைப் பஞ்சாயத்துத் தலைவர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருந்ததை கண்டு கொதித்துப் போனார். இதன் விளைவாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் ”கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்” என்கிற சங்கத்தை கட்டியமைத்து ஒத்த கருத்துடைய தொழிலாளர்களை அணிதிரட்டினார். தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்றார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடந்த சங்க அங்கீகாரத் தேர்தலில் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்துக்கு தொழிற்சங்க அங்கீகாரத்தை வழங்கிய தொழிலாளி வர்க்கம் தோழர் இராமசாமியை தனது தலைவராக அங்கீகரித்து, செங்கொடியை உயர்த்திப்பிடித்தது.

கோவை பகுதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, சுவரொட்டி ஓட்டுவதற்கு கூட தடை இருந்தபோது அந்தத் தடைக்கு எதிராக, போலீஸ் இராஜ்ஜியத்தை அம்பலப்படுத்தி வீதியில் இறங்கி போராடியதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக 2015-ம் ஆண்டு பாசிச ஜெயாவின் விடுதலை குறித்து பு.ஜ.தொ.மு. சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைக் காரணம் காட்டி தோழர் மற்றும் அவரது மகன் மீது கோவை போலீஸ் பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் தள்ளியது.

அதேபோல கோவை மண்டலத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றதில் தோழரின் பங்கு அளப்பரியது. தொழிலாளர்களுடைய போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு, அவர்களின் போராட்ட பந்தலிலேயே அமர்ந்து உரையாடித் தொழிலாளர்களுக்கு, எளிமையாக வர்க்க அரசியலை விளக்கி உணர்வூட்டுவதில் அவருக்கு நிகர் அவரே! ஆசான் லெனினின் ”என்ன செய்ய வேண்டும்?” நூலை தொழிலாளிகளும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாக காணொளி மூலமாக விளக்கி, தமிழகத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஒரு வழிகாட்டியாக தன்னை பதிவு செய்துள்ளார்.

படிக்க:
தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !
சுத்தியால் அடித்துத்தான் முதலாளி எங்களை எழுப்புவார் !

தான் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் உறுதி, கொள்கையில் விடாப்பிடியான போராட்டம், அரசியல் முன்முயற்சி, இழப்புக்கு அஞ்சாத தலைமை பண்பு ஆகியவை தோழர் இராமசாமியின் அடையாளங்கள். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னணி படைவீரராக களம் கண்டவர். குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதை எதிர்த்தும், தேசிய பஞ்சாலைக் கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது எனவும் கடுமையாக எதிர்த்தவர். கோவை மண்டல பஞ்சாலைச் சங்கத்தை நிறுவி, சிதறிக் கிடந்த பஞ்சாலைத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து இறுதிவரை போராடினார். அதனாலேயே நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு ஆளாகி தன் வேலையையும் இழந்தார். வேலை இழப்பு அவரது உறுதியையோ, பாட்டாளி வர்க்கத்துக்கான பணிகளையோ ஒருபோதும் பாதித்தது இல்லை .

“கம்யூனிஸ்ட் என்பவர் பரந்த உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர் போல கருத வேண்டும். தனது சொந்த நலன்களை புரட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படுத்த வேண்டும். எங்கும் எப்போதும் ஏற்றுக் கொண்ட கோட்பாட்டினை உயர்த்திப் பிடிப்பதும் தவறான கருத்துக்கள், செயல்பாட்டுக்கு எதிராக சளைக்காமல் போராட்டம் நடத்தவும் வேண்டும்” என்கிற மாவோவின் கூற்றுக்கு இணங்க தன்னுடைய புரட்சிகர இயக்க வாழ்க்கையை சமரசம் இன்றி போராடி வாழ்ந்து மறைந்தவர் தோழர் விளவை இராமசாமி.

உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்து மரணமடைந்த தோழரின் அர்ப்பணிப்பை பற்றிக் கொள்ளுவோம்! நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவர் ஏற்றுக் கொண்ட மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! ஆளும் தகுதியை இழந்துவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்த தோழர் விளவை இராமசாமியின் நினைவேந்தலில் உறுதியேற்போம்!

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி.
தொடர்புக்கு: 94444 42374, 90924 60750