Wednesday, July 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 400

டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !

முழங்காலுக்கு கீழ் தான் டெங்கு பரப்பும் ஏடிஸ் கடிக்கும். அதனால் முழங்காலுக்கு கீழ பாதம் வரைக்கும் தேங்காய் எண்ணெய் தேய்க்கணுமாம். அந்த கொசுவால் முழங்காலுக்கு மேல பறக்க முடியாதாம்

இது சிரிக்கிற மெசேஜ் தான் ஆனாலும் இதையும் சீரியசா பகிர்ந்துக்கிறாங்க;

ஒரு விசயம் உங்களிடம் பரப்பப்பட்டால் அது உண்மையா இல்லையானு நல்லா ஆராய்ஞ்சு முடிவு எடுக்கணும்.

படிக்க :
மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு !
டெங்கு ஒழிப்பு : விடை மறுக்கப்படும் கேள்விகள் !

சும்மா ஒரு ஷேர் பட்டன் இருக்குனு அழுத்திவிட்டா நாளைக்கு இந்த மெசேஜ பாத்துட்டு ஒருத்தர் தன்னோட காய்ச்சல் அடிக்குற பிள்ளைக்கு முழங்காலுக்கு கீழ தேங்காய் எண்ணெய மட்டும் தேய்த்து விட்டு அதுவே தன்னை காக்கும் என்று அலட்சியமாக இருந்துவிட வாய்ப்பு இருக்கிறது.

சரி இந்த செய்தியில் துளியாவது உண்மை இருக்கானா அதுவும் இல்லையே..

டெங்கு பற்றியும் அந்த கொசு பற்றியும் சில முக்கிய தகவல்கள் இதோ

1. டெங்குவை பரப்பும் கொசுவின் பெயர் – ஏடீஸ் எஜிப்டி.

2 . இந்த கொசு பகலில் மட்டும் கடிக்கும். புலி போன்று கால்களில் வரிகள் இருக்கும். இரவிலும் நாம் வெளிச்சமான விளக்குகளை உபயோகிப்பதால் இப்போது இரவிலும் கடிக்குமாறு பரிணமித்து வருகிறது.

3. சுமார் அரை கிலோமீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டது.

4. வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட கொசு ஆரோக்கியமான மனிதனை கடிப்பதால் இந்த நோய் பரவுகிறது.

5. ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு கொசு கடிப்பதால் மட்டுமே பரவும். இருமல், தும்மல் போன்றவற்றால் பரவுவதில்லை.

ஏடீஸ் கொசு

6. வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் கொசு தனது முட்டைகளுக்கும் வைரஸை கடத்தி விடுகிறது. இதனால் புதிய கொசு பிறக்கும் போதே வைரஸோடு பிறக்கிறது. தனது வாழ்நாளில் சுமார் 600 முட்டைகளை ஈன்று அந்த 600 குஞ்சுகளுக்கும் டெங்கு வைரஸை பரப்புகிறது.

7. குழந்தைகள் மற்றும் வயோதிகர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இவர்களுக்கு டெங்கு வரும் வாய்ப்பு அதிகம். ஆகவே அதிக பாதுகாப்பு இவர்களுக்கு தேவை.

8. தங்கள் பகுதியிலோ தெருவிலோ ஒருவருக்கு டெங்கி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு 15 தினங்களுக்குள் அந்த தெருவில் பிறர்க்கு வரும் காய்ச்சலை டெங்குவாகத்தான் நினைத்து சிகிச்சை பெற வேண்டும்.

9. நில வேம்பு குடிநீர்/ பப்பாளி இலைச்சாறு போன்றவை காய்ச்சலையும் உடல் வலியையும் குறைக்கும். இருப்பினும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. நில வேம்பு குடித்து விட்டு காலம் தாழ்த்தி மருத்துவமனையை அடைவது தவறு.. டெங்கு ஜூரத்தில் முதல் ஐந்து நாட்களுக்குள் சிகிச்சை பெற வேண்டும் என்பது விதி.

10. காய்ச்சல் தொடங்கியது முதல் சரியான மருத்துவரிடம் காட்டி சரியான சிகிச்சை பெறுவது நம் பொறுப்பு. வீண் வதந்திகளையும், அறிவியல் ஆதாரமற்ற கருத்துகளையும் நம்பி சிகிச்சையை புறக்கணித்தால் டெங்கு விசயத்தில் நிலைமை ஆபத்தாகி விடக்கூடும்.

படிக்க :
டெங்கு பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளை !
டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !

டெங்கு பற்றிய பொய் மற்றும் உண்மை பின்வருமாறு

பொய் 
உண்மை 
டெங்கிவை பரப்பும் ஏடிஸ் கொசு முழங்காலுக்கு கீழ் மட்டுமே பறந்து கடிக்கும். ஏடிஸ் கொசு நமது உடலில் அனைத்து பகுதிகளையும் கடிக்கும்.
ஏடிஸ் கொசு மாடிகளுக்கு ஏறாது. கீழ் வீடுகளில் இருக்கும் மக்களையே தாக்கும். மாடிகுடியிருப்பு மக்களுக்கு பிரச்சனையில்லை ஏடிஸ் கொசுவிற்கு உயரம் பிரச்சனையில்லை. 20 டிகிரி முதல் 30 டிகிரி வரை சீதோஷ்ன நிலை உள்ள இடங்களில் வாழும். அதற்கும் கீழ் வெப்பநிலை இருக்கும் இடங்களில் ஏடிஸ் வாழாது
சாக்கடைகள், கூவம் போன்ற இடங்களில் இருந்து டெங்கி கொசு பரவும் நம் வீட்டிற்கு வெளியேவும் உள்ளேயும் சேமித்து வைக்கும் நல்ல தூய நீரில் மட்டுமே இந்த கொசு வளரும்.

 

உண்மைகளை மட்டும் பரப்புவோம்… சமுதாய பொறுப்புடன் செயல்படுவோம்…

நன்றி : ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

தாய் பாகம் 13 : ஓநாய்கள் ஒன்றையொன்று கடித்துத் தின்பது அவைகளுக்குச் சரிதான்

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 13

பாவெல் கீழே இறங்கிவந்து தன் தாயருகே நின்றான்.

கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக்கொண்டார்கள். ஆவேசமாகக் கூச்சலிட்டுக்கொண்டார்கள்.

மாக்சிம் கார்க்கி
ரீபின் பாவெலிடம் வந்து சொன்னான். “இவர்களை நம்பி நீ வேலை நிறுத்தம் செய்ய வைக்க முடியாது. எல்லாரும் பேராசைக்காரர்கள்தான். காசை விடமாட்டார்கள். ஆனால், கோழைகள், தைரியமில்லாதவர்கள்! முன்னூறு பேர் கூட உன்னைப் பின்பற்ற மாட்டார்கள். ஒரு வண்டிக் குப்பையையும் ஒரே சுமையிலே அகற்றிவிட முடியுமா?”

பாவெல் பதில் பேசவில்லை. அவனுக்கு முன்னால் திரண்டு நிற்கும் கரிய முகங்களின் பல ஜோடிக் கண்களும் அவனையே ஆழ்ந்து நோக்கி அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவனது இதயம் அதிர்ச்சியால் படபடத்தது. வறண்ட பூமியின் மீது விழுந்த சிறு தூற்றலைப் போல், தன்னுடைய பேச்சு எந்தவிதப் பலனும் இல்லாமல் எங்கோ காற்றோடு கரைந்து போய்விட்டது போல அவனுக்குத் தோன்றியது.

”இவனை மாதிரி ஆட்களெல்லாம் மனிதர்களே அல்ல; வெறும் மண்ணாங்கட்டிகள் பெயர்ந்து விழுந்த இடத்தை அடைக்கத்தான் உதவுவான்! பாவெல்! உன்னைத் தூதனுப்ப வேண்டும் என்று சொன்னவர்களைக் கவனித்தாயா! உன்னை சோஷலிஸ்ட் என்றும், கலாட்டாக்காரன் என்றும் வதந்திகளைப் பரப்பினார்களே, அவர்களேதான், அதே ஆசாமிகள்தான்!

அவன் களைத்துப்போய்த் தலையைத் தொங்கப் போட்டவாறே வீட்டுக்குத் திரும்பினான். அவனுக்குப் பின்னால், அவனது தாயும் சிஸோவும் வந்துகொண்டிருந்தார்கள், ரீபின் அவனுக்குப் பக்கமாக வந்து, அவனது காதில் ஏதோ குசுகுசுத்தான்.

”நீ நன்றாகத்தான் பேசுகிறாய், ஆனால் உன் பேச்சு இதயத்தைத் தொடவில்லை. ஆமாம், நீ அவர்களது இதயங்களைத் தொடுகிற மாதிரிப் பேச வேண்டும்! இதயத்தின் மத்தியிலேதான் தீப்பொறி விழவேண்டும். நீ மக்களை உன் அறிவைக் கொண்டு வசப்படுத்த முடியாது. காலுக்கேற்ற செருப்பல்ல இது.”

”பெலகேயா, நம்மாதிரிக் கிழடுகள் எல்லாம் சமாதியிலே இடம் தேடிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது” என்று தாயை நோக்கிப் பேச ஆரம்பித்தான் சிஸோவ். “ஒரு புதுத் தினுசான மக்கள் வளரத் தொடங்கிவிட்டார்கள். நீயும் நானும் எப்படி வாழ்ந்தோம்? முட்டும் முழங்காலும் தேய, மண்டையெல்லாம் தரையிலே முட்டி மோத, நமது முதலாளிக்குச் சலாம் போட்டுதானே வாழ்ந்தோம். ஆனால், இந்தக் காலத்திலோ? பிள்ளைகளுக்குப் புத்திதான் பெருத்துப்போயிற்றோ, தவறு தான் அதிகம் பண்ணுகிறார்களோ? எப்படியிருந்தாலும், இவர்கள் நம் மாதிரி இல்லை. இவர்களைப் பாரேன்! மானேஜரோடு, அவரோடு சம அந்தஸ்து உள்ளவர்கள் மாதிரி பேசுகிறார்கள், பார்த்தாயா?…… போகட்டும். போய் வா , பாவெல் மிகாய்லவிச்! நீ ஜனங்களுக்காகக் கச்சை கட்டிக்கொண்டு நிற்பது நல்லதுதான், தம்பி கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும்! ஒருவேளை இவர்கள் விமோசனத்துக்கு உனக்கு ஒரு வழி கிடைத்தாலும், கிடைக்கும்! கடவுள் உனக்கு உதவட்டும்!”

அவன் போய்விட்டான்.

“போ போ , சீக்கிரம் போ. போய்ச் செத்துத் தொலை” என்று முனகினான் ரீபின். ”இவனை மாதிரி ஆட்களெல்லாம் மனிதர்களே அல்ல; வெறும் மண்ணாங்கட்டிகள் பெயர்ந்து விழுந்த இடத்தை அடைக்கத்தான் உதவுவான்! பாவெல்! உன்னைத் தூதனுப்ப வேண்டும் என்று சொன்னவர்களைக் கவனித்தாயா! உன்னை சோஷலிஸ்ட் என்றும், கலாட்டாக்காரன் என்றும் வதந்திகளைப் பரப்பினார்களே, அவர்களேதான், அதே ஆசாமிகள்தான்! ‘பயலுக்கு வேலை போய்விடும்; அதுதான் அவனுக்கு வேண்டும்’ என்று அவர்கள் தமக்குள்ளாக நினைத்திருக்கிறார்கள் தெரிந்ததா?”

“அவர்கள் நினைக்கிறபடி பார்த்தால், அவர்கள் செய்தது சரிதான்’ என்றான் பாவெல்.

”ஆமாம். ஓநாய்கள் ஒன்றையொன்று கடித்துத் தின்பது அவைகளுக்குச் சரிதான்!”

ரீபினுடைய முகம் இருண்டது, அவனது குரலில் அசாதாரணமான உத்வேகம் தொனித்தது.

“மக்கள் வெறும் வார்த்தைகளை மட்டும் கேட்கமாட்டார்கள்; பட்டால்தான் தெரியும். உன் வார்த்தைகளை இரத்தத்தில் தோய்த்தெடுக்க வேண்டும். பாவெல்…”

அன்று முழுதும் பாவெல் களைப்போடும், சோர்வோடும் மனச்சஞ்சலத்தோடும் தான் உலவித் திரிந்தான், அவனது பிரகாசமான கண்கள் எதையோ தேடித் திரிவது போலத் தெரிந்தன. தாய் இதைக்கண்டு கொண்டாள்.

“என்ன விஷயம், பாஷா!” என்று ஜாக்கிரதையோடு கேட்டாள். ”தலை வலிக்கிறது” என்றான் பாவெல். ”படுத்துக்கொள். போய் வைத்தியரை அழைத்து வருகிறேன்.”

‘வேண்டாம், வீணாய்ச் சிரமப்படாதே” என்று அவன் அவசரப்பட்டுப் பதில் சொன்னான். பிறகு அவன் தாயிடம் அடி மூச்சுக் குரலில் சொல்ல ஆரம்பித்தான்.

”நான் மிகவும் இளையவன்: மிகவும் பலவீனமானவன். அது தானம்மா தொல்லை அவர்கள் என்னை நம்பவில்லை; என் கொள்கையை ஏற்கவில்லை – அதாவது – என் கொள்கையை அவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அம்மா, என் மனம் நொந்து போய்விட்டது. எனக்கு என்மீதே கசப்பேற்பட்டுவிட்டது.”

அவனது சிந்தனை தேங்கிய முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் அவள், பிறகு அவனைத் தேற்ற முனைந்தாள்:

”கொஞ்சம் பொறுத்திரு” என்று மெதுவாகச் சொன்னாள்; “இன்றைக்கு அவர்கள் தெரிந்து கொள்ளாது போனதை நாளைக்கு நிச்சயம் தெரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்.”

“அவர்களுக்குத் தெரிந்துதான் ஆகவேண்டும்!” என்றான் பாவெல்.

“நீ சொல்வதுதான் சரி என்பது எனக்குக் கூடத் தெரிகிறது.” பாவெல் தாயருகே நெருங்கிச் சென்றான்.

“அம்மா, நீ ஒரு அற்புதப்பிறவி….” என்று கூறிவிட்டுத் திரும்பி நடந்தான். அந்த மென்மையான வார்த்தைகளால் சூடுபட்டவள் போலத் துணுக்குற்ற அவள், கைகளால் இதயத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, அதனுடன் தன் மகனின் பரிவுணர்ச்சியையும் சுமந்துகொண்டு, அங்கிருந்து வெளியேறினாள்.

அன்றிரவு அவள் படுத்துத் தூங்கிய பிறகு, பாவெல் படுக்கையில் படுத்தவாறே ஏதோ படித்துக்கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில், போலீஸ்காரர்கள் வந்து சேர்ந்தார்கள். வீட்டிலுள்ள சகல சாமான்களையும் தாறுமாறாக இழுத்தெறிந்து சோதனை போட்டார்கள். கூரை மீதும், வெளி முற்றத்திலும் தேடினார்கள். அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரி முன்னொரு முறை வந்தது போலவே, இப்போதும் அவர்களது இருதயங்களைத் தொட்டுத் துன்புறுத்தும் குத்தலான கிண்டலும், குறும்புத்தனமான சிரிப்பும் வெடிக்க, வந்து சேர்ந்தான். தன் மகனது முகத்தின் மீது பதிந்த பார்வையை அகற்றாது. அமைதியாக ஒரு மூலையிலே முடங்கி உட்கார்ந்துவிட்டாள் தாய். அவனோ தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமலிருக்க முயன்றான். என்றாலும் அந்த அதிகாரி சிரிக்கும் போதெல்லாம் அவனது கை விரல்கள் அவனையும் அறியாமல் முறுக்கிப் பிசைந்து கொண்டன; அவன் எதிர்த்துப் பேசாமல் வாயை அடக்கிக்கொண்டிருப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறான் என்பதையும், அந்தப் போலீஸ்காரனின் கிண்டல்களைக் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பது அவனுக்கு எவ்வளவு வேதனை தருகிறது என்பதையும் தாய் உணர்ந்துகொண்டாள். முதல் தடவை பயந்தது போல் அவள் இப்போது அவ்வளவாக பயப்படவில்லை. இந்தக் கொடிய அர்த்த ராத்திரி விருந்தாளிகள் மீதுள்ள பகையுணர்ச்சிதான் அவள் உள்ளத்தில் வளர்ந்திருந்தது;

அவளது பயவுணர்ச்சியை அந்தப் பகையுணர்ச்சி விழுங்கிவிட்டது.

”அவர்கள் என்னைக் கொண்டுபோய் விடுவார்கள்” என்று அவளிடம் லேசாக முணுமுணுக்க முயன்றான் பாவெல்.

“எனக்குத் தெரியும்” என்று மெதுவாக, தலையைக் குனிந்து கொண்டே சொன்னாள் தாய்.

அன்று காலையில் அவன் தொழிலாளர்களிடம் பேசிய பேச்சுக்காக அவனை அவர்கள் சிறையில் போடத்தான் செய்வார்கள் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். ஆனால், எல்லாரும் அவன் கூறியதை ஒப்புக்கொண்டார்கள்: எனவே எல்லாரும் அவனது விடுதலைக்காக விழித்தெழுந்து போராட வேண்டும். அப்படிச் செய்தால் அவனை அவர்கள் அதிகநாள் சிறையில் வைத்திருக்க முடியாது…

தன் கைகளால் அவனை அணைத்து வாய்விட்டு அழவேண்டும் என்று அவள் விரும்பினாள். ஆனால் அந்த அதிகாரியோ அவளுக்கு அருகில் வந்து நின்று ஓரக்கண்ணால் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அவனுடைய மீசை துடித்தது. உதடுகள் நடுங்கின. அவன் நிற்கிற நிலையைப் பார்த்தால், கண்ணீரும் கம்பலையுமாகத் தான் கதறப்போவதை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றே அவளுக்குத் தோன்றியது. அவள் தனது முழுப்பலத்தையும் சேகரித்துக்கொண்டு தன் மகனின் கரத்தைப் பற்றிப் பிடித்தாள்; மெதுவாகவும் அமைதியாகவும் திணறுகின்ற மூச்சோடும் பேசினாள்.

”போய்வா, பாஷா. உனக்கு வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டாயா?”

”ஆமாம், நீ தனியாயிருந்து கவலைப்படாதே!” ”கடவுள் உனக்கு அருள் செய்யட்டும்……..”

அந்த மானேஜர் கண்ணைக் காட்ட வேண்டியது, போலீஸ் தலையை ஆட்ட வேண்டியது. அப்புறம் ஒரு மனிதனைக் கொண்டு போய் விட வேண்டியது அவர்கள் இருவரும் அழகாகத்தான் ஒத்துழைக்கிறார்கள். ஒருவன் கொம்பைப் பிடித்துக்கொள்கிறான். மற்றவன் பால் கறக்கிறான். இவ்வாறு மக்களைக் கறந்து தீர்க்கிறார்கள்……..”

அவர்கள் அவனை அழைத்துச் சென்ற பின்னர், அவள் அப்படியே பெஞ்சின் மீது சரிந்து சாய்ந்து உட்கார்ந்தாள். அமைதியாகக் கண்ணீர் பெருக்கினாள். அவளது கணவன் வழக்கமாகச் சாய்ந்திருக்கும் நிலையிலேயே, அவளும் அந்தச் சுவரோடு சாய்ந்து, சோகம் நிறைந்த உள்ளத்தோடு, நிராதரவான தன் நிலையைப் பற்றிய பிரக்ஞை உணர்ச்சியின் வேதனையோடு அப்படியே இருந்தாள். தலையைப் பின்னால் பட்டென்று மோதிச் சாய்த்தவாறே அவள் அமுங்கிய, ஓய்வற்ற குரலில் அழுதாள். அந்த அழுகுரலில் அவளது புண்பட்ட இதயத்தின் வேதனை முழுவதும் பொங்கி வழிந்தது. ஆனால் அவளது மனக்கண் முன்னே அந்த அசைவற்ற மஞ்சள் மூச்சு அதிகாரியின் மெல்லிய மீசையும், களி துள்ளும் குறுகிய பார்வை கொண்ட கண்களுமே நிழலாடிக் கொண்டிருந்தன. நியாயத்துக்காகப் போராடும் ஒரே காரணத்துக்காகத் தாய்மார்களிடமிருந்து பிள்ளைகளைப் பறித்துச் செல்லும் அந்த மனிதர்களின் மீது ஏற்படும் கசப்புணர்ச்சியும் பகையுணர்ச்சியும் கார்மேகம்போல் கவிந்து படர்ந்தது.

நல்ல குளிர்; வெளியிலே பெய்யும் மழை ஜன்னல்களின் மீது படபடத்து விழுந்தது. நெடிய கைகளும் கண்களே இல்லாத சிவந்த முகங்களும் கொண்ட சாம்பல் நிற உருவங்கள் அந்த அர்த்த ஜாமத்தில் தன் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பாராக் கொடுப்பது போலவும், அவர்களது பூட்ஸ் லாடங்கள் மங்கி ஒலித்துக்கொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோன்றியது.

”அவர்கள் என்னையும் கொண்டு போயிருந்தால்?” என்று நினைத்தாள் அவள்.

ஆலைச்சங்கு அலறி, தொழிலாளர்களை வேலைக்கு அழைத்தது. அந்த அதிகாலை வேளையில் அந்தச் சங்கு தாழ்ந்தும் கரகரத்தும் நிதானமற்று ஒலித்தது. கதவைத் திறந்து கொண்டு ரீபின் உள்ளே வந்தான். தாடியிலிருந்து வழிந்தொழுகும் மழை நீரைத் துடைத்துவிட்டுக்கொண்டு அவன் முன் வந்து நின்று கேட்டான்.

“அவர்கள் அவனைக் கொண்டுபோய் விட்டார்களா?”

“ஆமாம். அவர்கள் நாசமாய்ப் போக” என்று பெருமூச்சுடன் பதில் சொன்னாள் அவள்.

”எதிர்பார்த்த விஷயம்தான்” என்று கூறி லேசாகச் சிரித்தான் ”அவர்கள் என் வீட்டையும் தான் சோதனை போட்டார்கள். ஒன்றும் பாக்கியில்லை. எல்லாவற்றையும் உருட்டிப் புரட்டிப் பார்த்தார்கள். என்னை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். ஆனால், எனக்கு அவை ஒன்றும் உறைக்கவே இல்லை. அவர்கள் பாவெலைக் கொண்டுபோய் விட்டார்கள். இல்லையா? அந்த மானேஜர் கண்ணைக் காட்ட வேண்டியது, போலீஸ் தலையை ஆட்ட வேண்டியது. அப்புறம் ஒரு மனிதனைக் கொண்டு போய் விட வேண்டியது அவர்கள் இருவரும் அழகாகத்தான் ஒத்துழைக்கிறார்கள். ஒருவன் கொம்பைப் பிடித்துக்கொள்கிறான். மற்றவன் பால் கறக்கிறான். இவ்வாறு மக்களைக் கறந்து தீர்க்கிறார்கள்……..”

”பாவெலுக்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும்” என்று எழுந்து நின்று சத்தமிட்டாள் தாய், “எல்லாருக்காகவும் தானே அவன் வேலை செய்தான்.”

“யார் செய்கிறது?”

”ஒவ்வொருவரும்!”

“ஹூம். நீ அப்படியா நினைக்கிறாய்? உஹூம் அது மட்டும் நடக்காத காரியம்!”

சிரித்துக்கொண்டே அவன் வெளியே நழுவிவிட்டான். அவனது நம்பிக்கையற்ற வார்த்தைகள் அவளது பரிதாப நிலையை மேலும் மோசமாக்கியது.

”அவனை அவர்கள் அடித்தால், சித்ரவதை செய்தால்…..”

தன் மகனது உடம்பெல்லாம் அடிபட்டுப் பிரிந்து போய் இரத்தம் ஒழுகிக்கொண்டிருக்கும் காட்சியைக் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அதை நினைத்தவுடனேயே அவளது உள்ளத்தில் ஒரு நடுக்கமும் பயமும் குளிர்ந்தோடிக் குத்தியது. அவளது கண்கள் குத்தலெடுத்தன.

அன்று முழுதும் அவள் அடுப்பு மூட்டவில்லை; சாப்பிடவுமில்லை. தேநீர்கூட அருந்தவில்லை. இருட்டி வெகுநேரம் கழிந்த பிறகுதான் ஒரு துண்டு ரொட்டியைக் கடித்துத் தின்றாள். அன்றிரவு அவள் படுக்கச் சென்றபோது அவளது வாழ்க்கையில் இதுவரை இந்தமாதிரியான சூனிய உணர்ச்சியும் தனிமை உணர்ச்சியும் என்றுமே இருந்ததில்லை என்பதை அவள் உணர்ந்தாள். கடந்த சில வருஷங்களாகவே அவள் ஏதோ ஒரு முக்கியமான, நன்மை தரும் விஷயத்தையே எப்போதும் எதிர்பார்த்து எதிர்பார்த்துப் பழகிப்போய்விட்டாள். அவளைச் சுற்றிலும் உற்சாகமும் உவகையும் நிறைந்த இளைஞர்களின் கலகலப்பு நிறைந்திருந்தது. அந்த நன்மைக்கெல்லாம், எனினும் ஆபத்தான வாழ்க்கைக் கெல்லாம் தூண்டுகோலாயிருந்த தன் மகனது முகத்தையே அவளுக்குப் பார்த்துப் பார்த்துப் பழக்கமாகியிருந்தது. இன்றோ, அவன் போய்விட்டான் அவன் மட்டுமா? எல்லாமே போய்விட்டன!

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

நூல் அறிமுகம் : வரலாறும் வக்கிரங்களும்

விபரங்களை சேகரித்து அவற்றிலிருந்து உண்மைகளை கண்டறிந்து அந்த உண்மைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கவேண்டும் என்ற உயரிய அறிவுபூர்வமான பொதுக் கோட்பாடு வரலாற்று ஆய்வுக்கு மிகமிக அவசியமானதாகும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் தங்கள் வசதிக்கேற்ப ஒரு முடிவை அல்லது முடிவுகளை எடுத்துவிட்டு அவைகளுக்கேற்ப “விபரங்களை சேகரிப்பதிலும் அல்லது உண்மை விபரங்களை திரித்து திசை மாற்றுவதிலும் ஒரு சாரார் எப்போதுமே ஈடுபட்டு வந்துள்ளனர். இப்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.

வரலாற்று ஆய்வில் இத்தகைய வக்கிரப் போக்கை அம்பலப்படுத்துவதிலும் அதே சமயத்தில் விபரங்களின் அடிப்படையில் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்று உண்மைகளை நிலை நிறுத்துவதிலும் வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர் முன்னணியில் இருப்பவர். அவரின் இந்த இருமுனைப் போராட்டத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது “வரலாறும் வக்கிரங்களும்” என்னும் இந்த அரிய நுல்…

வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளை வெறுமென பட்டியலிட்டுக் காட்டுவதல்ல. மாறாக உற்பத்திக் கருவிகள் படிப்படியாக முன்னுக்கு வந்ததன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்டு வந்த மாறுதல்களை அறிவதேயாகும். இந்த அடிப்படையில் இந்நூலில் கடந்தகால இந்திய வரலாற்றை ஊடுருவிப் பார்த்துள்ளார் திருமதி தாப்பர்.

கி.பி. 500-க்கு முந்தைய பண்டைய இந்தியர்கள், வரலாற்று ஆவணங்கள் என்ற நோக்கில் முக்கியமானவைகள் என்று கருதி பாதுகாத்து வைத்தவைகள் சமய நிறுவனங்களின் வரலாறுகள் மட்டுமேயாகும்; கி. பி. 500-க்கு பிறகு, வரலாற்றுத் தன்மையுடைய வாழ்க்கை வரலாறுகள் துருக்கிய முகலாய அரசர்களின் ஆதரவுடன் எழுதப்பட்டன; அனுபவ வருணனைகள் என்பதால் அவை, வரலாற்று மதிப்புமிக்கவை. ஆனால் அவை பிராமி மொழியில் எழுதப்பட்டிருந்தன. ஆனால் அந்த மொழியின் வரிவடிவத்தை இந்தியர்கள் மறந்துவிட்டனர் என்பதால் இந்திய வரலாற்று ஆய்வுகளை ஆங்கிலேயரின் ஆதரவுடன் தான் நடத்தவேண்டியிருந்தது என்று ரொமிலா தாப்பர் தனது ஆய்வில் முடிவு செய்கிறார்.

படிக்க:
புராணங்கள், அறிவியல், சமூகம்
இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !

மேலும் 18 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஏகாதிபத்திய காலனியாதிக்க முறைக்கேற்ப ஐரோப்பிய மொழிகளும் இந்திய மொழிகளும் குறிப்பாக சமஸ்கிருதமும் ஒரே வழித் தோன்றியவை என்றும் ஐரோப்பியர்களும் இந்திய உயர்குல இந்துக்களும் ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் எழுதி மொழி – இனவாதத்தை கிளப்பினர். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தேசியவாதிகளும் அந்த எதிர்ப்பை இந்து மதக் கண்ணோட்டத்துடனேயே கிளப்புகின்றனர் என்றும் ரொமிலா தாப்பர் ஆதாரங்களுடன் விவரிக்கிறார்.

“வேதகால இலக்கியத்தின் துவக்கக் காலத்திற்கு இந்தியாவின் நாகரிக உதயத்தை தொடர்புபடுத்துவது காலப் பிழையாகும்” என்று பிரகடனம் செய்கிறார் ரொமிலா தாப்பர். இந்தியாவில் முதலில் தோன்றிய சிந்துவெளி நாகரிகம் (ஹரப்பா நாகரிகமும்) வேதகால நாகரிகம்தான். அதாவது ஆரிய நாகரிகம்தான் என்று இந்துமதவாதிகள் நிருபிக்க முயல்கின்றனர். இதை இலக்கியச் சான்றுகளைவிட மிக நம்பிக்கையான அகழ்வாராய்ச்சி சான்றுகளைக்கொண்டு முறியடிக்கிறார் ரொமீலா தாப்பர்.

வரலாற்றை எவ்விதமாக ஆய்வு செய்யவேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக விளங்கும் அவரது இந்நூல், இந்தியாவைப் பற்றி சமூக விஞ்ஞான முறையில் ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளது…  (இந்நூலின் பதிப்புரையிலிருந்து பக்-3-4)

“வரலாற்றின் பொருளைக் காண்பதில் இருவித சிந்தனை முறைகள் இருக்கின்றன. தற்காலத் தேவைகளை கடந்த காலத்தில் காணமுயல்வதும், பழங்காலத்தின் படிமத்தை தற்காலத்தின் மீது பதிக்க முயல்வதும் அவ்விரு செயல் முறைகளாகும்.” என்று கூறும் தாப்பர், பழங்காலப் படிமம் ஒன்று தற்காலத்தே எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஆரிய இனத்தின் (Race) உயர்வு குறித்த கருத்தாக்கத்தை சுட்டிக் காட்டி, இட்லரும் பாசிஸ்டுகளும் அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதை குறிப்பிடுவர்… (பக்-5)

ஆரிய இனத்தின் உயர்வு குறித்த கருத்தாக்கம் சிந்து வெளி நாகரிக ஆய்விலும் நுழைந்து, அந்த நாகரிகம் ஆரியருடையது என வரையறுக்கும் போக்கு தொடர்கிறது. மொழியியல், தொல்லியல், சூழலியல், பொருளியல் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது, ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே சிந்துவெளி நாகரிகம் செயல்பட்டிருந்தது என்றும், அதே நாகரிகத்தின் பிற்காலத்தே தான் ஆரியர்கள் வந்தார்கள் என்றும், வந்தாலும் அந்த மக்களோடு உறவாடியும் முரண்பட்டும் வாழ்ந்தனர் என்றும் தெரிய வந்தன. ரிக்வேதத்தில் பல திராவிட மொழிச் சொற்கள் இடம்பெற்றுள்ளதும் பிராகுயி என்கிற திராவிட மொழி அந்தப் பகுதி சார்ந்த பலுசிஸ்தானில் இன்றும் வழக்கிலிருப்பதும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாகும் என்கிற கருத்திற்கு வலுச்சேர்க்கின்றன. இருப்பினும் இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாது அரசியல், சமயம் சார்ந்த ஆரியச் சார்பான சிந்துவெளி நாகரிகம், ஆரிய நாகரிகம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்தின் வழியில் சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization) சிந்து சரஸ்வ தி நாகரிகம் (Indus Saraswathy Civilization) எனப் பெயர்மாற்றம் பெற்றுள்ளது. ரொமிலா தாப்பர், ஆர். எஸ். சர்மா, இர்ஃபான், ஹபீப் போன்ற வரலாற்றுப் பேரறிஞர்கள் இதை மறுத்துள்ளனர். வரலாற்று ஆய்வில் ஏற்படும் தவறான இவ்வகைக் கண்ணோட்டம் வரலாற்றில் ஏற்படும் வக்கிரத்துக்கு மற்றொரு சான்றாகும்… (பக். 6-7)

படிக்க:
கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை
சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

மற்ற நாடுகளில் இல்லாத சாதிப்பிரிவுகள் இந்தியாவில் ஏற்பட்டு, அவையே சமூக அமைப்பின் அடித்தளமாயின. தாப்பர் சொற்களில் இந்தியாவில் சமூக அமைப்பு ஜாதி அமைப்பாக உருவாயிற்று. இது வருணக் கொள்கையாயிற்று. பிராமணன், சத்ரியன், வைசிகன், சூத்திரன் என்ற இந்த நான்கு வருணமும் முறையே பிரமனின் வாய், தோள், தொடை, பாதம் ஆகியவற்றிலிருந்து உண்டாக்கப்பட்டன என்ற ரிக்வேதம் கூறுகிறது. இது ரிக்வேதத்தின் பிற்காலச் சேர்க்கை என்றும் கருதப்படுகிறது. இவ்வகை சாதிய அமைப்புகள் உருவாக, சமூக பொருளாதார அந்தஸ்து, அரசியல் ஆற்றல், சுத்த அசுத்த வேறுபாடு ஆகியன பெருமளவு உதவின. சாதி-வருணம் இரண்டுக்கும் உள்ள ஒரு சிறுவேறுபாட்டையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். வருணம் என்பது சடங்கு ஆசாரத்தின் அந்தஸ்தாகும். “ஜாதி ‘ என்பது உண்மையான சமூக அந்தஸ்தாகும். இன்றைய சமூகவியல் ஆய்வில் சாதி/வருணம் -வர்க்கம் பற்றிய ஆய்வு சிறப்பிடம் பெறக் காணலாம். உயர்வாகக் கருதப்படும் பிராமணர்களுக்குள்ளேயே, சூத்திரர், மிலேச்சர் போன்ற பிரிவுகளும் இருப்பதைச் சில சான்றுகள் வழி ஆசிரியர் காட்டுகிறார். பலவகைத்தொழில் செய்தோர், இனக் குழு மக்கள் முதலியோரும் காலப்போக்கில் புதிய சாதிகளை தோற்றுவித்தனர். சாதிய உறவுகள், முரண்கள் பற்றியும் குறிப்பிடத்தவறவில்லை. “ஹரப்பா காலத்திலேயே சாதிய அமைப்பாக வளர்ச்சி பெறக் கூடிய சமுகக் கூறுகள் இருந்தன” என்றும் எழுதுகிறார். இவ்வகைச் சான்றுகள், இந்திய சாதி அமைப்பு பற்றிய ஆய்வை விரிவுபடுத்த உதவும்.

சாதிகளோடு சமயங்களும் தொடர்புகொண்டன. இனக் குழுமக்களின் சமய நம்பிக்கைகள் இந்து மதத்தோடு இணைக்கப்பட்டன. சமய இயக்கங்கள் புதிய சாதிகள் தோன்ற வழிவகுத்தன… (பக்.8) (இந்நூலுக்கு இராம.சுந்தரம் எழுதியுள்ள அணிந்துரையிலிருந்து)

நூல்: வரலாறும் வக்கிரங்களும்
ஆசிரியர்: டாக்டர் ரொமீலா தாப்பர்
தமிழில்: நா.வானமாமலை

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
பேச: 044 – 26251968, 26359906

பக்கங்கள்: 82
விலை: ரூ.35.00 (ஆகஸ்டு-2008 பதிப்பு)

இதர மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

வெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் !

டி.சி.எஸ் ஊழியர்கள் ஈட்டுவது பெருமளவு லாபம்,
பெறுவது சொற்ப ஊதிய உயர்வு

னக்கு டி.சி.எஸ் நிறுவனத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் வேலை அனுபவம் உள்ளது. அமெரிக்கா, கனடா என்று பல்வேறு நாடுகளின் வாடிக்கையாளர் உள்ள ப்ராஜெக்ட்களில் வேலை பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு வருமானம் பற்றிய செய்தி வெளியானது. டி.சி.எஸ் காலாண்டு முடிவுகள் குறித்து 2018 அக்டோபர் 10 வெளியான செய்தியில் நிகர லாபம் சென்ற ஆண்டை விட 22.57% அதிகரித்து ரூ 7901 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிகிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் மொத்த விற்பனை வருவாய் ரூ 30,541 என இருந்தது இந்த வருடம் ரூ 36,854 கோடியாக (20.67%) உயர்ந்துள்ளது.

இதைப் படிக்கும்போது நாம் வேலை செய்யும் கம்பெனி இவ்வளவு வருமானம் வந்துள்ளது என்று ஒருவிதத்தில் பெருமையாக நினைத்தாலும் பல வகையில் வெறுப்புதான் வந்தது. ஏனென்றால் கம்பெனிக்குள் ஊழியர்களுக்கு அவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது.

படிக்க :
TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !
தொழில் தகராறு சட்டம் ஐ.டி. நிறுவனங்களுக்குப் பொருந்துமா ? நீதி மன்றம் உத்தரவு !

வருடாந்திர மற்றும் காலாண்டு வருமானம் சிறப்பாக உள்ளதாக செய்தி சொல்கிறது. ஆனால் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நிறுவனம் சம்பளம் எப்படி வழங்குகிறது, அவர்களின் வேலை நிலைமைகள் எப்படியாக உள்ளன என்று வெளியே தெரிவதில்லை. கம்பெனியின் லாபத்தை மட்டுமே பார்த்துவிட்டு செல்லும் பலபேருக்கு உண்மையான அனுபவங்களை சொல்வதன் மூலம் இதை புரிய வைக்க உதவும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு வருடமும் தொழிலாளர்களுக்கு அப்ரைசல் வைக்கப்படுகிறது. அதன் மூலம் ஊதிய உயர்வு கொடுக்கப்படுகிறது. கடந்த வருடமும் நல்ல வருமானம் இருந்தும் பெரும்பான்மையான ஊழியர்களுக்கு C பேண்ட் போட்டு அவர்களுக்கு 7-8% ஊதிய உயர்வு தருவதாக சொன்னார்கள். மீதியுள்ள மிகக் குறைந்த பேருக்கு A அல்லது B பேண்ட் கொடுத்து 10-11% ஊதிய உயர்வு தருவதாக சொன்னார்கள்.

இதை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள் என்றால் அனுபவம் உள்ள ஊழியர்களுக்கு மூன்று அல்லது நான்கு பேர் செய்யும் வேலையை செய்ய சொல்வது, அதனால் கண்டிப்பாக அவர்களால் செய்ய முடியாமல் போகும். அதனை காரணமாக காட்டி அவர்களுக்கு கடைசி பேண்ட் போடுவதன் மூலம் அவர்களின் ஊதிய உயர்வினை குறைத்து விடலாம்.

ஆனால் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு அதிக ஊதிய உயர்வும் கொடுக்கின்றனர். அதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்? அனுபவம் உள்ள தொழிலாளர்கள் வேலையை விட்டு நீங்களாகவே செல்ல வைப்பது ஏனென்றால் கம்பெனி ஊழியர்களை வெளியேற்றினால் சட்ட வரைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆதலால் அந்த நரித்தனமான போக்கை கம்பெனி கடைபிடிக்கிறது.

டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தால் அரசாங்க வேலை போல நினைத்துக் கொள்ளலாம் என்று பலர் கருதுகின்றனர். அதாவது ஊழியர்களின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், வெறும் லாப நோக்கம் மட்டுமே கிடையாது என்ற பொருள் உள்ளது ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லை. ஏனென்றால் ஊழியர்கள் மீதான அக்கறை கொண்ட ஒரு நிறுவனம் மேலே சொன்னபடி தொழிலாளர்களை வேண்டுமென்றே ஊதிய உயர்வை குறைத்து அவர்களை வெளியேற்ற நினைக்காது.

ஒருவரின் மீது இவ்வளவு கடுமையான வேலை சுமை செலுத்தி அவர்களை கஷ்ட நிலைக்கு உள்ளாக்காது. தவறுகளை எதிர்த்து கேட்கும் ஊழியர்களை குறிவைத்து மறைமுகமாக தாக்க மாட்டார்கள். குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. நிஜத்தில் கொத்தடிமைகளாவே ஐ.டி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். மேலும் எந்த பிரச்சனையை வைத்து ஊழியர்களை வெளியேற்றலாம் என்று திட்டம் போடுவது என்பதெல்லாம் எப்படி ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் நிறுவனமாக எடுத்துக் கொள்ள முடியும் நீங்களே சொல்லுங்கள்.

Jamsetji Tata

டாடாதான் முதன் முதலில் தொழிலாளர்களுக்கான அனைத்து சட்ட உரிமைகளும் வழங்கியது என்று சொல்லிக் கொண்டாலும், டி.சி.எஸ் 2015-ல் 25,000 தொழிலாளர்களை கம்பெனியை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றுகிறது என்ற செய்தி வெளியானது.

புதிதாக 10,000 மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்த்துள்ளதாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு வருமானம் உள்ளபோது ஏற்கனவே வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை ஏன் குறைக்க வேண்டும். ஏற்கனவே வேலைபார்க்கும் ஊழியர்களால் உருவான கம்பெனி வருமானத்தை அவர்களுக்கு செலவு செய்யாமல் ஏமாற்றுவது தெளிவாக தெரிகிறது. புதிதாக இவ்வளவு பேரை வேலைக்கு எடுத்திருக்கிறோம் என்று சொல்வதன் மூலம் ஏற்கனவே உள்ள தொழிலாளர்களின் நிலையை மறைக்கிறார்கள்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிக வருமானம் வந்துள்ளது என்று சொல்லும் தலைமை அதிகாரி அதெல்லாம் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை படித்து புரிந்துகொண்டு கடுமையான உழைப்பில் ஈட்டியது என்பதை ஏன் மறைக்க வேண்டும். ஆனால் அதே தலைமை அதிகாரிதான் கம்பெனி இணையதளத்தில் “உங்களின் உழைப்பால் உங்களின் ஒத்துழைப்பால் இவ்வளவு பிரமாண்டமாக வருமானம் வந்துள்ளது மேலும் இதை தொடர்ச்சியாக எடுத்து செல்ல வாழ்த்துக்கள்” என்று ஒவ்வொரு காலாண்டு முடிவின் போதும் லாபத்தை பற்றிய கட்டுரை வெளியிடுகிறார்.

“கம்பெனிக்கு இவ்வளவு வருமானம் வந்துள்ளது ஆதலால் இந்தமுறை எல்லா வகைப்பட்ட ஊழியர்களுக்கும் இந்த அளவுக்கு ஊதியம் உயர்த்தி கொடுக்கிறோம்” என்கிற செய்தி வெளிப்படையாக வருவதில்லை. மாறாக அப்ரைசல் போட்டு அதன் மூலம் ஊதியம் உயர்த்துவதாக சொல்லி பெரும்பாண்மை ஊழியர்களுக்கு குறைவான ஊதிய உயர்வை அளிப்பதன் மூலம் தன்னுடைய லாபத்தை மேலும் அதிகப்படுத்திக் கொள்வதையே நோக்கமாக கொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இதை கேள்வி கேட்க முடியாமல் செய்திகளை படித்துவிட்டு மட்டும் செல்லும் ஒற்றுமை இல்லாமல் ஐ.டி ஊழியர்களுக்குள் போட்டிபோடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஐ.டி ஊழியர்கள் சங்கமாக ஒன்றிணைந்தால்…

டாடாதான் முதன் முதலில் தொழிலாளர்களுக்கான அனைத்து சட்ட உரிமைகளும் வழங்கியது என்று சொல்லிக் கொண்டாலும், டி.சி.எஸ் 2015-ல் 25,000 தொழிலாளர்களை கம்பெனியை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றுகிறது என்ற செய்தி வெளியானது. பிறகு சமூக அக்கறை உள்ள தொழிலாளர்கள் அதனை எதிர்த்து பலவிதமாக எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சங்கங்கள் குரல் கொடுத்தும் ஊழியர்களை சட்ட விரோதமாக வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த முயற்சித்தார்கள்.

ஆனால் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் எந்தவித பெரிய சலசலப்பும் இல்லாமல் இருந்தது போலவே காணப்பட்டது. அவர்கள் கூட்டாக இணைந்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குள்ளே ஒருவிதமான போட்டி மனப்பான்மையை கம்பெனி உருவாக்கி பராமரிக்கிறது. அதனால் தன் அருகில் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல், அல்லது தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அவர்கள் கொடுத்த பேண்ட் பொருத்தமில்லை என்று சொன்னாலும் அவர்கள் போட்டதை ஏற்றுக் கொள்ளும்படி பேசி நம்மை நம்பவைத்து முட்டாள் ஆக்கும் நிலைதான் உள்ளது. ஆனால் ஐ.டி ஊழியர்கள் சங்கமாக ஒன்றிணைந்தால் ஊழியர்களின் ஊதிய உயர்வை பற்றி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். தொழிலாளர் விரோத போக்கு எதுவாக இருந்தாலும் யூனியன் மூலம் நிறுவனத்திற்கு கொண்டு செல்லலாம். செய்யவில்லை என்றால் நாம் தொழிலாளர் அலுவலகத்தில் முறையிட்டு நடைமுறைப்படுத்தலாம். அவ்வாறு செய்வதன் மூலம்தான் ஊழியர்களின் வேலை நிலைமைகள் மேம்படும்.

படிக்க :
Log off your silence! Log into NDLF-IT Wing!!
டாடா குழுமத்தின் கோரமுகம் -1

இல்லை என்றால் ஏற்கனவே இருப்பது போல அதிக லாபம் வந்தாலும் குறைவான ஊதிய உயர்வும், அனுபவம் உள்ளவர்களை வெளியேற்றும் நோக்கத்தோடு அவர்களின் சம்பள உயர்வை தடுப்பதும் கேள்வி கேட்டால் குறிவைத்து தாக்குவதும் சாதி-மதம் பார்த்து பிரிவினையாக செயல்படுவதும் என்று பலவற்றை சகித்துக் கொண்டு வாழும் கொத்தடிமைகளாக நாம் மாறிவிடுவோம், மாறிக்கொண்டிருக்கிறோம்.

வாருங்கள் நாம் சங்கமாக அணிதிரள்வோம் ஒற்றுமையாக தொழிலாளர்களின் பலத்தை காண்பிப்போம் !

இப்படிக்கு
ஒரு அனுபவமுள்ள ஐ.டி ஊழியர்
நன்றி : new-democrats

New Democratic IT/ITES Employees Circle (NDIEC) co-ordinates activities of employees in IT/ITES sector all over India. We will organize employees working in different companies in various locations so that they can synchronize their activities.
செயலாளர் – சுகேந்திரன்
முகவரி: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
110/63, மாநகராட்சி வணிக வளாகம், 2-ம் தளம்,
என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம்,
சென்னை – 600 024
தொலைபேசி 9003009641 மின்னஞ்சல் combatlayoff@gmail.com

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை” என்ற தலைப்பின் கீழ் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பில்,  கடந்த அக் 22  அன்று சென்னை ஆவடியில் உள்ள ஓ.சி.எஃப். ஒர்க்கர்ஸ் யூனியன் பொன் விழா அரங்கத்தில் அரங்கக்கூட்டம்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பு.ஜ.தொ.மு., மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் உரையின் காணொளி.

ஒருவன் இன்னொரு ஆளிடம் ஒரு பத்தாயிரம் கடன் வாங்குகிறான். கடன் வாங்கிய பணத்தை திருப்பிக் கட்ட முடியவில்லை. கடன் கொடுத்தவன் கோர்ட்டுக்கு போகிறான். கோர்ட்டில் மூன்றாவது ஆசாமி வருகிறான். முதலாவது ஆசாமி வாங்கிய பத்தாயிரம் கடனை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், கடன் கொடுத்த இரண்டாவது நபருக்கு இரண்டாயிரம்தான் தருவேன்; எஞ்சிய எட்டாயிரத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மூன்றாவது ஆசாமி கோர்ட்டில் சொல்கிறான். இதனை கோர்ட்டும் ஏற்றுக் கொள்கிறது. கடன் கொடுத்தவருக்கு எட்டாயிரம் நட்டம், கடனை ஏலத்துக்கு எடுத்த மூன்றாவது ஆசாமிக்கு எட்டாயிரம் இலாபம், கடன் வாங்கியவன் சுதந்திரமாக வெளியில் போகிறான்.

இந்தக் கதையை வங்கிகளுக்கு பொருத்திப் பாருங்கள். வங்கியில் முதலாளி வாங்கிய கடனை திருப்பிக்கட்ட முடியவில்லை. இந்த கடன் தொகையை இன்னொரு முதலாளி பாதி தொகைக்கும் கீழாக ஏலம் எடுக்கிறான். இதனால் கடன் கொடுத்த வங்கிக்கு பாதிப்பணம் கூட திரும்ப கிடைக்கவில்லை. இதற்கு வாராக்கடன் என்று பெயர் வைத்து பட்டியல் போட்டுள்ள, வங்கிகள், ஒட்டுமொத்த கடனும் வாராதோ என்று பயந்த நிலையில் பாதியோ இதற்கும் குறைவோ, ஏதோ ஒரு தொகை திரும்பி வந்துவிட்டதே என்று வங்கிகள் ஏற்றுக் கொள்ளவேண்டும், இந்த கட்டப்பஞ்சாயத்தை செய்து முடிப்பதற்கு சட்டப்படியாக அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் ஒன்று இருக்கிறது. தேசிய கம்பெனிச் சட்டங்களுக்கான தீர்ப்பாயம் National Company Law Tribunal (NCLT) என்று அதற்குப் பெயர்.

படிக்க:
#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
பரோலில் விடப்பட்டிருக்கும் கிரீஸ் ! இந்தியா பாடம் கற்றுக் கொள்ளுமா ?

முதலாளிகள் ஏமாற்றிய கடனை சரிக்கட்டுவதற்கு அரசு கையாளுகின்ற குறுக்கு வழிகளில் மற்றொன்று நேரடியாக மக்கள் தலைமீதே இடியை இறக்குவதாகும், வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) உயர்த்துவதும், அப்படி குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாவிட்டால் அபராதம் போட்டு பணம் திரட்டுவதும் நடக்கிறது. இவ்வாறு ஸ்டேட் வங்கி அபராதம் போட்டு ஒரே ஆண்டில் திரட்டிய தொகை ரூ.12,000/- கோடிகள், ஏனைய பொதுத்துறை வங்கிகளை சேர்த்தால் இன்னும் பல ஆயிரம் கோடிகள் சேர்ந்திருக்கும், முதலாளிகள் கொழுக்க. குறைந்தபட்ச பேலன்ஸ் கூட வைக்க முடியாத பஞ்சைப்பராரி மக்கள் துன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

சமீபத்தில் நட்டத்தில் இயங்கிய தேனா வங்கியை பாங்க் ஆப் பரோடா மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றுடன் இணைக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது. இதேபோல் ஏனைய வங்கிகளை ஒன்றுடன் மற்றொன்றை இணைத்து மொத்தம் 7 வங்கிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது,இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாத்தே தீரவேண்டும். பொதுத்துறை வங்கிகளைக் காப்பது என்பதன் சாராம்சம், மக்கள் பணத்தை பாதுகாப்பது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தையே பாதுகாப்பதாகும். நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், பொருளாதாரத்தை கார்ப்பரேட் கைகளிலிருந்து பறித்தெடுத்து மக்கள் சார்பு, தற்சார்பு பொருளாதாரமாக கட்டியமைக்கும் திட்டத்தோடு களமிறங்க வேண்டும்.

முழுமையான காணொளி!

பாருங்கள்! பகிருங்கள்!!

அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்

“நாங்கள் தொழிலாளிகள். எங்கள் நாடான ஹோண்டுராசில் தொழில்களே இல்லை எனும் போது நாங்கள் மட்டும் அங்கே இருந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்?”  என்கிறார் 21 வயதேயான எவின் மாதா. மூன்று மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வந்த எவின் மாதா நாடு கடத்தப்பட்டார். ஹொண்டுராசைச் சேர்ந்த எவின், போதுமான ஆவணங்கள் அல்லது கடவுச் சீட்டு இல்லாமல் அமெரிக்காவில் பணியாற்றி வந்தவர்.

எவின் மாதாவைப் போல் பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவிலிருந்து குடியேற்றத் தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை வந்தேறிகள் பறித்துக் கொள்வதாக குற்றம் சாட்டியதோடு, இசுலாமிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வேலைகளுக்காக அமெரிக்கா வரும் தொழிலாளர்களுக்கான நடைமுறையைக் கடுமையாக்கினார்.

இதைத் தொடர்ந்து திடீர் திடீரென பணியிடங்களில் போலீசார் சோதனைகள் நடத்தி கொத்துக் கொத்தாக குடியேற்றத் தொழிலாளர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். ”பிடிபட்ட” தொழிலாளர்கள் பலரின் குடும்பங்களும் குழந்தைகளும் இன்னமும் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், அவர்களின் நிலைமை என்னவென்பதைக் கூட அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு ஹொண்டுராசைச் சேர்ந்த வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் தற்போது ஒரு மாபெரும் பேரணியாகத் திரண்டு அமெரிக்காவுக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் மேற்கொண்டிருக்கும் அந்த நீண்ட நடை பயணம் ஹோண்டுராசில் துவங்கி கௌதமாலா நாட்டையும், மெக்சிகோவையும் கடந்து அமெரிக்க எல்லையைத் தொட வேண்டும். அதன் பின்னர் எல்லையைக் கடந்து அமெரிக்க மண்ணுக்குள் நுழைவது தொழிலாளர்களின் திட்டம். ஹொண்டுராசின் எல்லைப் புற நகரமான சான் பெட்ரோ சூலோவில் இருந்து அமெரிக்காவின் தெற்கெல்லை நகரமான எல் பசோ வரையிலுமான தொலைவு சுமார் 3500 கிலோ மீட்டர்கள். ஒரு புரிதலுக்காக – காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து கண்யாகுமரி வரையிலான தொலைவும் ஏறத்தாழ 3500 கிலோ மீட்டர்கள் தான். இந்த தொலைவை அந்த மக்கள் நடந்தே கடப்பதென முடிவு செய்து தற்போது கௌதமாலாவைக் கடந்து மெக்சிகோவினுள் நுழைந்துள்ளனர்.

ஏன் தொழிலாளிகள் இந்த தொலைவை நடந்து கடப்பதென முடிவு செய்தனர்?

முதலில் இவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவினுள் நுழைய டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார். சட்டவிரோத மாஃபியாக்களின் உதவியோடு அமெரிக்க எல்லைகளுக்குள் நுழைவதிலும் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. மாஃபியாக்களுக்கு பலநூறு டாலர்களைக் கொடுக்க வேண்டும் – இதற்குப் பெரும்பாலானவர்களிடம் பணம் இருப்பதில்லை. அடுத்து, அப்படியே மாஃபியாக்களின் உதவியோடு எல்லையைக் கடந்தால் அமெரிக்க எல்லைக் காவல் படையினரால் கைது செய்யப்படும் அபாயமும் உண்டு.

நடைபயணத்தின் மூலம் அமெரிக்க எல்லையைக் கடக்கும் போதும் பிடிபடும் அபாயம் இருக்கிறதே?

”அவர்கள் இராணுவத்தை எல்லைக்கு அனுப்பப் போவதாகவும், எங்களை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள்” என்று குறிப்பிடும் ஜோப் ரேய்ஸ், என்றாலும் வேறு வழியில்லை என்கிறார். தனது குழந்தைப் பருவம் முதல் அமெரிக்காவில் வளர்ந்த ஜோப் ரேய்ஸ், தனது 36 வது வயதில் நாடுகடத்தப்பட்டார். அவரது கடவுச் சீட்டு காலாவதியான பின் 14 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த நாடான கௌதமாலா திரும்பியவருக்கு கால் சென்டர் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. மாதம் ஐநூறு டாலர்கள் சம்பளம் போதவில்லை என்பதோடு, ஒவ்வொரு முறை அமெரிக்காவில் இருந்து கால் செண்டருக்கு அழைப்பு வரும் போதும் திரையில் தெரியும் அமெரிக்க நகரின் பெயர்கள் அவருக்கு அவரது பழைய நல்ல வாழ்க்கையை நினைவூட்டியுள்ளது.

படிக்க:
ஹாலிவுட் காமெராவும் அமெரிக்க பீரங்கியும் !
உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!

இனிமையான பழைய நினைவுகளுக்காகவும் சொகுசான வாழ்க்கையைத் தேடியும் மட்டும் மீண்டும் அமெரிக்கா செல்ல பெரும்பாலானோர் முடிவு செய்யவில்லை. 34 வயதான நெஸ்டர் ரேய்சின் மனைவியும் குழந்தையும் இன்னமும் அமெரிக்காவின் ஓஹையோ நகரில் இருக்கிறார்கள். அந்தோனி பியெண்டெசின் குடும்பம் அலபாமாவில் உள்ளது. இன்னும் பலரின் குடும்பங்களும் குழந்தைகளும் அமெரிக்காவில் இருக்கின்றனர். எப்படியும் தங்கள் குடும்பத்தோடு போய் இணைந்து கொள்ள இந்தப் பேரணியில் கலந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதே பலரின் ஏக்கமாய் உள்ளது.

அந்தோணி ஏற்கனவே ஆறு முறை நாடு கடத்தப்பட்டவர். “அதெல்லாம் அப்படித்தான்… அவர்கள் உங்களைப் பிடித்து வெளியே தூக்கி எறிவார்கள்.. நீங்கள் மீண்டும் எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும்” என்கிறார் அந்தோணி. பெரும்பாலும் அமெரிக்காவின் தெற்கு எல்லையைக் கடப்பவர்கள் ஆபத்தான ஆற்று நீர்வழிப் பாதையின் ஊடாகவோ, எல்லையில் பரந்து விரிந்திருக்கும் பாலைவனத்தின் ஊடாகவோ அமெரிக்காவினுள் நுழைகின்றனர்.

இவ்வாறு கடும் சிரமங்களுக்கு இடையில் அமெரிக்காவுக்கு வரும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே அந்நாட்டின் இயக்கத்திற்கு இன்றியமையாத அடிப்படைத் தொழில்களிலும் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, அமெரிக்காவை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆர்வமோ கிடையாது – வயிறு நிரம்பும் அளவுக்கு கூலி தரும் ஏதாவது ஒரு வேலை. ஆனால், டொனால்ட் டிரம்ப் இவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்கிறார். இவர்களால் தான் அமெரிக்கர்களின் வாழ்க்கையே நாசமானது என்கிறார். டிரம்பின் இந்த விளக்கத்தின் படி பார்த்தால் இன்றைய அமெரிக்க மக்கள் தொகையில் கணிசமான பகுதியினரை ஐரோப்பாவுக்கே நாடு கடத்த வேண்டியிருக்கும். பூர்வகுடி செவ்விந்தியர்களின் பூமியை ஐரோப்பிய குடியேறிகள் ஆக்கிரமித்து உருவாக்கியதே நவீன அமெரிக்கா. சொல்லப் போனால் அன்றைய ஐரோப்பிய குடியேறிகளைப் போல் லத்தீன் அமெரிக்க குடியேறிகளால் உள்ளூர் மக்களின் உயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதே உண்மை.

நீயும் வெளியேறு…! வாய்ப்பிருந்தால் மீண்டும் வரலாம். – பிரான்சு நாடு அன்பளிப்பாக தந்த சுதந்திரதேவி சிலைக்கும் இதுதான் கதி!

என்றாலும் டொனால்ட் டிரம்பின் அரசியல் “குடியேறிகளையே” சுற்றி வருகின்றது. தனது தேர்தல் பரப்புரைகளின் போது அமெரிக்க தொழிலாளிகளுக்கு ஒரு பொன்னுலகைப் படைத்துக் கொடுப்பதாக டிரம்ப் வாக்களித்து வெற்றி பெற்று ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் மீண்டும் தேர்தல் வரவுள்ளது. ஆனால், இன்று வரை டிரம்ப் வாக்களித்ததைப் போல் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. மேலும், வெளிநாடுகளில் உற்பத்தி ஆலைகள் நடத்தும் பெரும் கார்ப்பரேட்டுகளையும் பகைத்துக் கொள்ள முடியவில்லை. அதே போல் சீன இறக்குமதியின் மீது கட்டுப்பாடு விதிக்க முயன்றால் அது சர்வதேச வர்த்தகப் போராக விடித்துள்ளது. இந்நிலையில் டிரம்புக்கு கிடைத்திருக்கும் எளிய தாக்குதல் இலக்காக இருப்பவர்கள் குடியேற்றத் தொழிலாளர்கள் தாம். எனவே தான் அவர்களை ஒடுக்குவதன் மூலம் தனக்கு வாக்களித்த குறுகிய தேசிய வெறி கொண்டவர்களை சமாதானம் செய்யப் பார்க்கிறார்.

அனால், தொழிலாளர்களுக்கோ சொந்த தேசமோ, எல்லைகளோ, தேச பக்தியோ இல்லை என்பதையே அணிவகுத்து வரும் லத்தீன் அமெரிக்கத் தொழிலாளிகள் உணர்த்துகின்றனர்.

தாய் பாகம் 12 : இவன் சோஷலிஸ்ட் ! முட்டாள் அல்ல

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 12

விலாசவ் குடும்பத்தின் சின்னஞ் சிறிய வீட்டின்மீது மக்களின் கவனம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்தக் கவனத்தால் அவர்களது மனத்திலே சிறுசிறு சந்தேகங்களும், காரண காரியம் தெரியாத பகைமை உணர்வும் ஏற்பட்டாலும் கூட, ஏதோ ஓர் இனந்தெரியாத நம்பிக்கை நிறைந்த ஆர்வக் குறுகுறுப்பும் ஏற்படத்தான் செய்தது. சில சமயங்களில் யாராவது ஒருவன் பாவெலைச் சந்தித்து அவனைச் சிரத்தையோடு பார்த்துக்கொண்டு கேட்பான்.

மாக்சிம் கார்க்கி

“தம்பி! நீ புத்தகங்களையெல்லாம் படிக்கிறாய். உனக்குச் சட்டங்களெல்லாம் தெரியும். அப்படியென்றால் எனக்கு இதை விளக்கிச் சொல்லேன்……..”

அவன் சொல்லுகின்ற விஷயம் போலீஸின் அநியாயத்தைப் பற்றியோ, அல்லது தொழிற்சாலை நிர்வாகத்தின் அநீதியைப் பற்றியோதான் இருக்கும். மிகவும் சிக்கலான விஷயமானால் தனக்குப் பழக்கமான நகரத்து வக்கீல் ஒருவருக்கு ஒரு சீட்டு எழுதிக்கொடுத்து அனுப்புவான் பாவெல். ஆனால், அவனது சக்திக்கு உட்பட்ட தாயிருந்தால், அவனே அதற்குரிய சட்ட விஷயங்களை விளக்கிச் சொல்லுவான்.

வரவர ஜனங்கள் சிரத்தையுள்ள இளைஞனை மதிக்கத் தொடங்கினார்கள். எளிமையாகவும் துணிவாகவும் பேசிய இந்தப் பலசாலியான இளைஞனை, எதையும் கூர்ந்து கவனித்து, காது கொடுத்துக் கேட்கும், பிரச்சினையின் ஆழத்துக்குச் சென்று ஆராயும் இந்த இளைஞனை, எல்லாப் பிரச்சினைகளிலும் ஊடுருவிச் செல்லும் ஏதோ ஒரு நூலிழை அனைத்து மக்களையும் இணைக்கிறது என்று காணும் பாவெலை அவர்கள் மதிக்கத் தொடங்கினார்கள்.

இதன் பின்னர் பாவெலின் மதிப்பு மேலும் உயர்வதற்குக் காரணமாயிருந்தது ஒரு நிகழ்ச்சி. அதுதான் “சதுப்புக் காசு” சம்பவம். தொழிற்சாலையைச் சுற்றி அழுகல் வட்டமாய் ஒரு பெரிய சதுப்பு நிலம் பரவியிருந்தது. அங்கே பிர் மரங்களும், பிர்ச் மரங்களும் மண்டி வளர்ந்திருந்தன. வேனிற்காலத்தில் அந்தச் சதுப்பு நிலத்திலிருந்து மஞ்சள் நிறமான நுரை கொப்புளித்துப் பெருகும், இந்தச் சாக்கடை நுரையிலிருந்து படைபடையாகக் கொசுக் கூட்டம் உற்பத்தியாகிக் கிளம்பும். அந்தக் கொசுக்களின் உபத்திரவத்தால், தொழிலாளர் குடியிருப்பில் காய்ச்சலும் ஜூரமும் உண்டாகும். அந்தச் சதுப்பு நிலம் தொழிற்சாலைக்குச் சொந்தமானது. தொழிற்சாலையின் புதிய மானேஜர் அந்தச் சதுப்பு நிலத்தைத் தூர்ப்பதன் மூலம் எரு எடுத்து அதன் மூலம் லாபம் அடையத் திட்டமிட்டார். அந்தச் சதுப்பு நிலம் தூர்க்கப்பட்டால் தொழிலாளர்களின் ஆரோக்கியமும், குடியிருப்பின் சுகாதாரமும்தான் மேம்பாடு அடையும் என்று காரணம் கூறி அந்தச் சதுப்பு நிலத்தைச் சீர்படுத்துவதற்காக தொழிலாளர்களின் சம்பளத்தில் ரூபிளுக்கு (1) ஒரு கோபெக் (2) பிடித்தம் செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைக் கண்டு தொழிலாளர்கள் கொதிப்படைந்தார்கள். அவர்கள் இந்த உத்தரவை எதிர்த்ததற்குரிய முக்கிய காரணம், தொழிற்சாலைக் காரியாலயத்தின் குமாஸ்தாக்களுக்கு மட்டும் அந்தச் சம்பள வெட்டிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மானேஜர் இந்தக் கூலிக்குறைப்பு உத்தரவைத் தொழிற்சாலை விளம்பரப் பலகையில் ஒரு சனிக்கிழமையன்று வெளியிடச் செய்தார். அன்று பாவெலுக்கு உடல் நலமில்லாததால் அவன் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டில் இருந்தான். எனவே, அவனுக்கு அந்த உத்தரவைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், மறுநாள் வயதும், கண்ணியமும் நிறைந்த பாத்திரத் தொழிலாளி சிஸோவும், நெட்டையான பூட்டுத் தொழிலாளி மாகோதினும் பாவெலைப் பார்க்க வந்தபோது மானேஜரின் தீர்மானத்தைப் பற்றிச் சொன்னார்கள்.

”நாங்கள், வயதானவர்கள் இந்த விஷயத்தைப்பற்றிக் கலந்து பேசினோம்” என்று மனங்கவரும் முறையில் பேசத் தொடங்கினான்.

சிஸோவ். “நீ விஷயம் தெரிந்தவன் என்பதால், உன்னிடம் இது பற்றிப் பேசுவதற்காக எங்களை அனுப்பியுள்ளார்கள் தோழர்கள். கொசுக்களுடன் போராட, நம்மிடம் பணம் பறிக்க மானேஜருக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் ஏதாவது இருக்கிறதா?”

“யோசித்துப்பார்” என்று தனது குறுகிய கண்களில் பிரகாசம் தெறிக்கப் பேசினான் மாகோதின். “நாலு வருஷத்துக்கு முன்னால், இந்த முடிச்சுமாறிப் பயல்கள் என்னமோ குளியல் அறை கட்டப் போவதாகச் சொல்லி, நம்மிடம் காசு பிடுங்கினார்கள். மூவாயிரத்து எண்ணூறு ரூபிள்களைப் பிடுங்கிச் சேர்த்தார்கள். அந்தப் பணம் எல்லாம் எங்கே? அந்தக் குளிக்கிற இடம்தான் எங்கே? இதையும் காணோம்; அதையும் காணோம்!”

நமது கோபெக்கும் மற்ற காசுகளைப்போலவே வட்டக் காசுதான். ஆனால், மற்றவற்றை விட இதன் கனம் அதிகம், அவ்வளவுதான். ஆனால், மானேஜரின் ரூபிளில் இருப்பதைவிட நமது கோபெக்கிலுள்ள மனித இரத்தம் அதிகம்! நாம் வேறும் காசை மதிக்கவில்லை; அந்தக் காசிலுள்ள இரத்தத்தை,  நியாயத்தைத்தான் மதிக்கிறோம்!

அந்தக் கூலிக் குறைப்பு அநீதியானதுதான் என்பதை பாவெல் விளக்கினான்; மேலும் அதன் மூலம் தொழிற்சாலைக்குக் கிடைக்கக்கூடிய லாபத் தொகையையும் குறிப்பிட்டான். அந்த இரு மனிதர்களும் முகத்தைச் சுழித்துக்கொண்டே திரும்பிப் போனார்கள். அவர்கள் போனவுடன் லேசாகச் சிரித்துவிட்டு, பாவெலின் தாய் சொன்னாள்:

”பாவெல், கிழவர்கள்கூட உன்னிடம் யோசனை கேட்கக் கிளம்பிவிட்டார்கள்!”

அவளுக்குப் பதில் சொல்லாமல் பாவெல் கீழே உட்கார்ந்து ஏதோ எழுத ஆரம்பித்தான். சில நிமிஷம் கழித்து, அவன் தன் தாயைப் பார்த்துச் சொன்னான்.

“அம்மா. நீ எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும். இந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நகர் வரையிலும் போய்வர வேண்டும்.”

”அதென்ன, ஆபத்தான இடமா?” என்று கேட்டாள் அவள்.

“ஆமாம், நமக்காக அங்கொரு பத்திரிகை நடக்கிறது. அங்கு தான் உன்னை அனுப்பப்போகிறேன். அடுத்த இதழில் இந்தக் கூலிக் குறைப்பைப் பற்றிய செய்தி வெளிவந்தாக வேண்டும்.”

“சரி, இதோ போகிறேன்” என்றாள் அவள்.

இதுதான் மகன் அவளது பொறுப்பில் விட்ட முதல் பணி. அவன் நிலைமையைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டது அவளுக்கு மகிழ்ச்சி அளித்தது.

”பாஷா! எனக்கும் புரிகிறது” என்று உடை உடுத்திக்கொண்டே பேசினாள் அவள். ”அவர்கள் மக்களைக் கொள்ளையடிக்கிறார்கள்.

ஆமாம்! சரி— அந்த மனிதனின் பெயர் என்ன சொன்னாய்? இகோர் இவானவிச், இல்லையா?”

அவள் மாலையில் வெகு நேரங்கழித்துக் களைத்து ஓய்ந்து திரும்பி வந்து சேர்ந்தாள். எனினும் அவள் உள்ளத்தில் களிப்பே நிறைந்திருந்தது.

”நான் சாஷாவைப் பார்த்தேன்” என்று தன் மகனைப் பார்த்துச் சொன்னாள். ”அவள் உனக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கச் சொன்னாள். அந்த இகோர் இவானவிச் படாடோபமே இல்லாத பேர்வழி; சிரிக்கச் சிரிக்க வேடிக்கையாகப் பேசுகிறான். அவன் பேசுவதே ஒரு விநோதமாயிருந்தது!”

”அவர்களை உனக்குப் பிடித்துப் போனது பற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

”அவர்கள் எல்லாருமே ஆடம்பரம் இல்லாதவர்கள்தான். “பாஷா. தடபுடல் இல்லாதபடி பழகுவதுதான் நல்ல குணம் இல்லையா? உன் மீது அவர்களுக்கு ஒரே மதிப்பு.”

திங்கட்கிழமையன்றும் பாவெலுக்கு உடல்நிலை சீராகவில்லை; எனவே அன்றும் அவன் வீட்டிலேயே தங்கிவிட்டான். மத்தியானச் சாப்பாட்டு வேளையில் பியோதர் மாசின் குதூகலம் பொங்கும் உணர்ச்சியோடு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க, ஓடோடியும் வந்து சேர்ந்தான்.

“புறப்படு! உடனே புறப்படு! தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிற்கிறார்கள். அவர்கள் உன்னை உடனே அழைத்து வரச்சொன்னார்கள். நீ வந்தால்தான் எல்லாவற்றையும் விவரமாக எடுத்துச் சொல்லுவாய் என்று சிஸோவும் மாகோதினும் கூறினார்கள். வந்து பார்!”

பாவெல் பதிலொன்றும் பேசாமல், உடைமாற்றிக்கொள்வதில் முனைந்தான்.

”பெண்களும் கூடக் கூடிவிட்டார்கள்; அவர்கள் அனைவரும் ஒரே கூச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

”நானும் வருகிறேன்” என்றாள் தாய். ”அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இரு, நானும் வருகிறேன்.”

”வா சீக்கிரம்!” என்றான் பாவெல்.

தேவாலாயங்களையும் தொழிற்சாலைகளையும் கட்டியெழுப்புவது நாம்; கைவிலங்குகளையும் காசுகளையும் உருவாக்குவதும் நாம் தான். தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒவ்வொருவரின் உணவுக்கும், களிப்பிற்கும் ஆதார சக்தியாய் திகழ்வது நாம்!

அவர்கள் மூவரும் தெருவழியே விரைவாகவும் மௌனமாகவும் நடந்தனர். தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பரவசத்தினால், தாய்க்கு மூச்சுக்கூடத் திணறித் தவித்தது. ஏதோ ஒரு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நிகழப்போவதாக அவள் உணர்ந்தாள். தொழிற்சாலையின் வாசலில் பெண்களின் ஒரே கூட்டம்; அவர்கள் சண்டையிட்டுக் கொண்டும் சலசலத்துக் கொண்டும் இருந்தார்கள். தொழிற்சாலையின் முற்றத்துக்குள் அவர்கள் மூவரும் நுழைந்தவுடனேயே அவர்களைச் சுற்றிலும் உணர்ச்சிப் பரவசத்தோடு இரைந்து கொண்டிருக்கும் இருண்ட மாபெரும் ஜனக்கூட்டத்தைக் கண்டார்கள். தொழிற்சாலையின் உலைப் பட்டறைச் செங்கற் சுவருக்குப் பக்கத்தில் கிடந்த பழைய இரும்புச் சாமான்களின் குவியல் மீது சிஸோவ், மாகோதின், வியாலவ் முதலியவர்களும், செல்வாக்குள்ள ஐந்தாறு தொழிலாளிகளும் நின்றுகொண்டிருந்தார்கள். தொழிலாளர்களின் கவனம் முழுவதும் அவர்கள் பக்கமே திரும்பியிருந்தது என்று தாய் கண்டாள்.

”இதோ பாவெல் விலாசவ் வந்துவிட்டான்!” என்று யாரோ சத்தமிட்டார்கள்.

”சத்தம் போடாதீர்கள்” என்ற குரல் பல திசைகளிலிருந்து ஒரே சமயத்தில் ஓங்கி ஒலித்தது.

எங்கோ பக்கத்திலிருந்து ரீபினின் நிதானமான குரல் கேட்டது: ”நாம் வெறும் கோபெக்குக்காகப் போராடப் போவதில்லை; நியாயத்துக்காகவே போராட வேண்டும்! ஆமாம்! நாம் இந்தக் கோபெக் காசைப் பிரமாதப்படுத்தவில்லை. நமது கோபெக்கும் மற்ற காசுகளைப்போலவே வட்டக் காசுதான். ஆனால், மற்றவற்றை விட இதன் கனம் அதிகம், அவ்வளவுதான். ஆனால், மானேஜரின் ரூபிளில் இருப்பதைவிட நமது கோபெக்கிலுள்ள மனித இரத்தம் அதிகம்! நாம் வேறும் காசை மதிக்கவில்லை; அந்தக் காசிலுள்ள இரத்தத்தை,  நியாயத்தைத்தான் மதிக்கிறோம்! ஆமாம்!”

அவனது பேச்சுக் கூட்டத்தினிடையே பரவி ஒலித்தது. உடனே பல குரல்கள் எழும்பின.

“ரொம்ப சரி, ரீபின்.”

“பாவெல் இதோ வருகிறான்!”

தொழிற்சாலை யந்திரங்களின் கர்ஜனை, நீராவியின் இரைச்சல், யந்திரச் சக்கரங்களின் மீது ஓடும் நாடாக்களின் படபடப்பு முதலிய சகல ஓசைகளையும் அமுங்கடித்து, ஓங்காரமிடும் சுழற்காற்றாக ஒன்று கலந்தது. அத்தொழிலாளர்களின் குரல்கள். எட்டுத் திசைகளிலிருந்தும் ஜனங்கள் தங்கள் கைகளை ஆட்டிக்கொண்டும். ஒருவருக்கொருவர் உணர்ச்சிமயமான கொதிப்படைந்த வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டும் திரண்டு ஓடி வந்தார்கள். ஓய்ந்து களைத்த அவர்களது உள்ளங்களில் பதுங்கிக்கிடந்த அதிருப்தி உணர்ச்சி உயிர் பெற்றெழுந்து, போக்கிடம் தேடி முட்டி மோத ஆரம்பித்தது. எனவே அந்த அதிருப்தி உணர்ச்சி தனது அகன்ற இறக்கைகளை வீசியடித்து மேலே பறந்தெழுந்தவாறு தன்னோடு அந்த மக்களையும் கட்டிப் பிணைத்து இழுத்தோடிக்கொண்டு, அவர்களை ஒருவருக்கொருவர் மோதிச் சாடவிட்டுக் கொண்டு, வெற்றிகரமாக வெளிப்பட்டது. அந்த உணர்ச்சியினால், அவர்கள் மனத்தில் வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் சுவாலை வீசிக் கனன்றது. ஜனசமுத்திரத்துக்கு மேலாக புகைக்கரியும் செந்தூளும் பறந்து கவிந்தன. அவர்களது உணர்ச்சிவசப்பட்ட முகங்களில் வியர்வை பூத்து மினுமினுத்தது. கன்னங்களில் கறுத்த வியர்வை நீர் வழிந்திறங்கியது. அவர்களது கரிய முகங்களில் கண்களும் பற்களும் மட்டும் பிரகாசமாகப் பளிச்சிட்டன.

சிஸோவும் மாகோதினும் நின்றிருந்த இரும்புக் குவியலின் மீது பாவெலும் ஏறி நின்றான்.

“தோழர்களே!” என்று அவன் கத்தினான்.

அவனது முகம் எவ்வளவு தூரம் வெளுத்துப்போய்விட்டது. உதடுகள் எப்படி நடுங்குகின்றன என்பதையெல்லாம் தாய் கவனித்துக் கொண்டிருந்தாள். தன்னையுமறியாமல், அவள் கூட்டத்தினரை இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறிச் சென்றாள்.

“யாரம்மா நீ? ஏன் இப்படி இடித்துக் கொண்டு போகிறாய்?” என்று அவளை நோக்கி எரிந்து விழுந்தார்கள் தொழிலாளர்கள்.

அவர்களும் அவளைப் பதிலுக்கு இடித்துத் தள்ளினார்கள். என்றாலும் அதனாலெல்லாம் அவள் பின் தங்கிவிடவில்லை. தோளாலும் கையாலும் இடித்து மோதிக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு அவள் முன்னேறினாள். தன்னுடைய மகனுக்குப் பக்கத்தில் சென்று தானும் நிற்கவேண்டும் என்ற உணர்ச்சியே அவளை உந்திப் பிடித்துத் தள்ளிக் கொண்டு முன்னேறச் செய்தது.

படிக்க:
#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

‘தோழர்களே’ என்ற அந்த வார்த்தை அவனது நெஞ்சிலிருந்து வெடித்துப் பிறந்தபோது, அவனைப் பொறுத்தவரையில் பரிபூரண அர்த்த பாவம் கொண்டிருந்த அந்த வார்த்தையைச் சொன்னபோது அவனது தொண்டைக்குழி போராட்ட உணர்ச்சியின் ஆனந்த வெறியால் அடைபட்டுத் திணறுவது போலிருந்தது. உண்மையாலும், உண்மையைப் பற்றிய கனவுகளாலும் கனன்றெரிந்து கொண்டிருந்த தனது இதயத்தை, அந்த மக்களுக்குச் சமர்ப்பித்துவிட வேண்டும் என்ற ஆசை அவனைப் பிடித்து உலுப்பியது.

பெருங்களிப்புடனும் தெம்புடனும் அவன் மீண்டும் முழங்கினான். “தோழர்களே! தேவாலாயங்களையும் தொழிற்சாலைகளையும் கட்டியெழுப்புவது நாம்; கைவிலங்குகளையும் காசுகளையும் உருவாக்குவதும் நாம் தான். தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒவ்வொருவரின் உணவுக்கும், களிப்பிற்கும் ஆதார சக்தியாய் திகழ்வது நாம்!”

“ஆமாம், ஆமாம்!” என்று கத்தினான் ரீபின்.

” எங்கு பார்த்தாலும் சரி, எப்போது பார்த்தாலும் சரி. நாம்தான் உழைப்பதில் முன்னணியில் நிற்கிறோம். வாழ்க்கையிலேயோ நாம்தான் பின்னணியில் நிற்கிறோம். நம்மைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? நமது நன்மைக்காக, யாராவது என்றாவது சிறிதளவாவது உதவியிருக்கிறார்களா? யாராவது நம்மை மனிதப் பிறவிகள் என்றாவது மதிக்கிறார்களா? இல்லை, ஒருவருமே இல்லை!”

“ஒருவருமே இல்லை” என்று எங்கோ ஒரு குரல் எதிரொலித்தது.

பாவெல் மீண்டும் தன்னைச் சுதாரித்துக்கொண்டு அமைதியுடனும் எளிமையுடனும் பேசத் தொடங்கினான். மக்கள் அனைவரும் ஒரு ஆயிரந்தலை உடல் போல ஒன்று சேர்ந்து, அவனை நோக்கி நகர்ந்தனர். அனைவரும் ஆர்வம் நிறைந்த கண்களோடு அவனது முகத்தையே பார்த்தார்கள், அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினார்கள்.

”நமது உரிமைகளுக்காகப் போராடும் ஆசையால் ஒன்றுதிரண்டு ஒருவரோடு ஒருவர் பிணைந்து நின்று, நாமெல்லாம் நண்பர்கள் என்ற உண்மையை உணர்ந்தாலன்றி, நமது சுக வாழ்வை நாம் போராடிப் பெற முடியாது”

“விஷயத்துக்கு வா!” என்று தாய்க்குப் பக்கத்திலிருந்து ஒரு முரட்டுக்குரல் கத்தியது.

”குறுக்கிட்டுப் பேசாதே!” என்று வெவ்வேறு இடங்களிலிருந்து இரண்டு குரல்கள் ஒலித்தன.

தொழிலாளர்களது கறுத்த முகங்கள் நம்பிக்கையற்றுச் சுருங்கிச் சுழித்தான். எனினும் பல தொழிலாளர்கள் பாவெலின் முகத்தையே ஆழ்ந்து நோக்கிக்கொண்டிருந்தார்கள்.

”இவன். சோஷலிஸ்ட்! முட்டாள் அல்ல” என்றது ஒரு குரல்.

”தைரியமாகப் பேசுகிறான், இல்லை?” என்று ஒரு நெட்டையான ஒற்றைக் கண்ணனான தொழிலாளி தாயை இடித்துக்கொண்டே சொன்னான்.

“தொழிற்சாலை நிர்வாகத்தின் சொந்தச் செலவிலே அந்த நிலத்தைச் சீர்பண்ணினால் தான் எங்களுக்கும் அதன் நன்மைகளை உணர முடியும்” என்று எல்லாருக்கும் கேட்கும்படியாகச் சொன்னான் பாவெல்.

“தோழர்களே! நமக்கு உதவி செய்வதற்கு, நம்மைத் தவிர யாருமே கிடையாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒவ்வொருவரின் நன்மைக்காக நாம் எல்லாரும் ஒன்று சேர வேண்டும். எல்லாருடைய நன்மைக்காகவும் ஒவ்வொருவரும் ஒன்றாக வேண்டும். நமது எதிரிகளை ஒழிப்பதற்கு இதுவே நமது தாரக மந்திரம்!

”ஏ பையன்களா! இவன் உண்மையைத்தான் பேசுகிறான்” என்று தன் முஷ்டியை மேலே உயர்த்திக் காட்டிக்கொண்டே பேசினான் மாகோதின்.

“மானேஜரைக் கூப்பிடுங்கள்!” என்று கத்தினான் பாவெல்.

கூட்டத்தினர் மத்தியில் திடீரென ஒரு சூறாவளிக் காற்று சுழித்து வீசிய மாதிரி தோன்றியது. அந்தக் கூட்டமே அசைந்து கொடுத்தது. ஒரே சமயத்தில் எண்ணற்ற குரல்கள் உரக்கக் கத்தின.

“மானேஜரைக் கூப்பிடு!” “அவருக்கு ஆள் அனுப்புங்கள்!”

தாய் மேலும் முன்னேறி வந்தாள். பெருமிதமும் பெருமையும் பிரதிபலிக்கும் முகத்தோடு தன் மகனை ஏறிட்டுப் பார்த்தாள். பாவெல் அந்த மதிப்பும் வயதும் நிறைந்த தொழிலாளர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான். அது மட்டுமா? ஒவ்வொருவரும் அவன் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டார்கள். அவன் சொன்னவை அனைத்தையும் ஒப்புக்கொண்டார்கள். அவன் கோபாவேசமடைந்து, மற்றவர்களைப் போல் வசைமாரி பொழியாதிருந்தது பற்றி அவளுக்குப் பிடித்தது.

தகரக் கொட்டகையிலே கல் மழை பொழிந்த மாதிரி கேள்விகளும் வசைமாரிகளும், குத்தலான வார்த்தைகளும் இரைந்து ஒலித்தன. பாவெல் ஜனக்கூட்டத்தைக் குனிந்து நோக்கினான். தனது அகன்று விரிந்த கண்களால் அந்தக் கூட்டத்திடையே எதையோ துழாவிக் காண்பது போலக் கூர்ந்து பார்த்தான்.

“தூது செல்வது யார்?” “சிஸோவ்!”

“விலாசவ்!”

“ரீபின் தான் சரி! அவன் துடியாகப் பேசுவான்!”

திடீரென அமுங்கிப்போன குரல்கள் கூட்டத்தினரிடையே கலகலத்தன.

“அவரே வந்துவிட்டார்!”

”அதோ மானேஜர்!”

கூரிய தாடியும் நீண்ட முகமும் கொண்ட ஒரு நெட்டை மனிதன் வருவதற்கு வழிவிட்டு ஜனக்கூட்டம் இடம் கொடுத்து விலகியது.

“வழியை விடுங்கள்” என்று சொல்லிக்கொண்டே, தொழிலாளர்களைத் தொட்டு விடாதபடி, மெதுவாக வழிவிடும்படி கையாட்டிக்கொண்டே வந்தான் அவன். அவனது கண்கள் குறுகிச் சுழித்திருந்தன. மனிதர்களை அடக்கியாளும் அதிகாரியின் பழகிப்போன பார்வையோடு அவன் தொழிலாளர்களை முறைத்துப் பார்த்துக்கொண்டே முன்னேறினான். தொழிலாளர்கள் தங்கள் தொப்பிகளை எடுத்துவிட்டு, அவனுக்கு மரியாதையாக வணங்கினர். ஆனால் அவனோ தான் பெற்ற மரியாதைக்குப் பிரதி வணக்கமே செய்யாமல், முன்னே சென்றான். மக்கள் அனைவரும் வாயடைத்துப் போய் நின்றார்கள். கலக்கம் நிறைந்த புன்னகையும், அமைதியான வியப்பும் அவர்களிடையே பரவியது. குற்றம் செய்து கொண்டிருக்கும் போது பெற்றோரிடம் அகப்பட்டுக்கொண்ட குழந்தைகளைப் போல் திருகத் திருக விழித்தார்கள்.

மனிதர்களை அடக்கியாளும் அதிகாரியின் பழகிப்போன பார்வையோடு அவன் தொழிலாளர்களை முறைத்துப் பார்த்துக்கொண்டே முன்னேறினான். தொழிலாளர்கள் தங்கள் தொப்பிகளை எடுத்துவிட்டு, அவனுக்கு மரியாதையாக வணங்கினர்.

மானேஜர் தாயைக் கடந்து சென்றான். செல்லும்போது அவளது முகத்தைக் தனது உக்கிரம் நிறைந்த கண்களால் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அந்த இரும்புக் குவியலுக்கு எதிரே போய் நின்றான். யாரோ அவனை மேலே ஏற்றுவதற்காகக் கைகொடுத்து உதவ முன்வந்தார்கள். ஆனால் அவனோ அந்த உதவியை நிராகரித்துவிட்டு பலத்த வேகத்தோடு, தானே மேலே தாவியேறி சிஸோவுக்கும் பாவெலுக்கும் எதிரே நின்றான்.

“இதெல்லாம் என்ன கூட்டம்? நீங்கள் ஏன் வேலைக்குப் போகவில்லை ?”

சில கணநேரம் ஒரே அமைதி நிலவியது. தானியக் கதிர்களைப் போல் மனிதர்களின் தலைகள் ஆடியசைந்தன. சிஸோவ் தன் தொப்பியை எடுத்து வீசினான், தோள்களைச் சிலுப்பினான், தலையைத் தொங்கவிட்டான்.

“என் கேள்விக்குப் பதில் சொல்” என்று கர்ஜித்தான் மானேஜர்.

பாவெல் அவனுக்கு முன்னால் வந்து நின்று, சிஸோவையும் ரீபினையும் சுட்டிக்காட்டிக்கொண்டு உரத்த குரலில் பேசத் தொடங்கினான்.

“கூலிக் குறைப்பு பற்றிய உங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று உங்களிடம் கோரும்படி எங்கள் மூவரையும் தோழர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.”

“ஏன்?” என்று பாவெலைப் பார்க்காமலேயே கேட்டான் மானேஜர்.

”ஏனென்றால், இந்த மாதிரியான தலைவரிவிதிப்பு அநியாயமானது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று உரக்கக் கூவினான் பாவெல்.

”சதுப்பு நிலத்தைச் சரிபண்ணுவது தொழிலாளர்களது நன்மைக்காக அல்லாமல், அவர்களைச் சுரண்டுவதற்காகச் செய்த காரியம் என்றா நீ கருதுகிறாய்? அதுதானே உன் எண்ணம்?”

“ஆம்” என்றான் பாவெல்.

“நீயும் கூடவா?” என்று ரீபினைப் பார்த்துக் கேட்டான் மானேஜர்.

”நாங்கள் எல்லாருமே அப்படித்தான் நினைக்கிறோம்.”

”ஏனப்பா, நல்லவனே! நீயுமா?” என்று சிஸோவைப் பார்த்துக் கேட்டான்.

“நானும்தான். எங்கள் காசை எங்களுக்கு விட்டுக்கொடுப்பதுதான் நல்லது.”

சிஸோவ் மீண்டும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, குற்றம் செய்தவனைப்போல் லேசாகச் சிரித்துக்கொண்டான்

மானேஜர் அந்த ஜனத்திரள் முழுவதையும் மேலோட்டமாகப் பார்த்தான்; தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான். பிறகு அவன் பாவெலிடம் திரும்பி, அவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே சொன்னான்

“உன்னைப் பார்த்தால் படித்தவன் மாதிரி தோன்றுகிறது. உனக்குக் கூடவா இந்த நடவடிக்கையால் ஏற்படக்கூடிய நன்மைகளை உணர முடியவில்லை?”

“தொழிற்சாலை நிர்வாகத்தின் சொந்தச் செலவிலே அந்த நிலத்தைச் சீர்பண்ணினால் தான் எங்களுக்கும் அதன் நன்மைகளை உணர முடியும்” என்று எல்லாருக்கும் கேட்கும்படியாகச் சொன்னான் பாவெல்.

“தொழிற்சாலை தர்ம ஸ்தாபனம் அல்ல! நீங்கள் அனைவரும் இப்போதே வேலை செய்யத் திரும்பியாக வேண்டும். இது என் உத்தரவு!” என்றான் மானேஜர்.

அவன் யாரையும் பார்க்காமல், இரும்புக் குவியலின் மீது பதமாகக் கால் வைத்துக் கீழிறங்கத் தொடங்கினான்.

கூட்டத்தினரிடையே அதிருப்திக் குரல்கள் கிளம்பின. “என்ன இது?” என்று சட்டென்று நின்று சத்தமிட்டான் மானேஜர்.

அமைதியைக் குலைத்து தொலைவிலிருந்து ஒரே ஒரு குரல் ஒலித்தது.

“நீயே போய் வேலை செய்!”

“இன்னும் பதினைந்து நிமிஷ நேரத்தில் நீங்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால், உங்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கும்படி உத்தரவிடுவேன்” என்று அழுத்தமும் வறட்டுத் தன்மையும் நிறைந்த குரலில் சொன்னான் மானேஜர்.

மீண்டும் அவன் கூட்டத்தின் ஊடாக வழிதேடி, நடந்து சென்றான், அவன் திரும்பிச் செல்லும்போது அவனுக்குப் பின்னால் தங்கிய கூட்டத்தினர் கசமுசத்தனர். அவன் செல்லச் செல்ல அந்தக் கசமுசப்பும் அதிகரித்தது.

“போய், அவனோடு பேசிப் பாருங்கள்!”

”இதுதானப்பா, உனக்குக் கிடைக்கும் நியாயம்! என்ன பிழைப்பு வாழ்கிறது?” அவர்கள் பாவெலை நோக்கித் திரும்பிச் சத்தமிட்டார்கள்.

“ஏ, சட்டப்புலியே! இப்போது நாங்கள் என்ன செய்வதாம்?”

”பிரமாதமாக மட்டும் பேசிக் கிழித்துவிட்டாய்! மானேஜர். முகத்தைக் கண்டவுடன் உன் வீராப்பெல்லாம் பறந்தோடி விட்டது.”

”பாவெல் சொல்லு நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்”

தாங்கமுடியாத அளவுக்கு இந்தக் கசப்புக் குரல்கள் பெருகிவரவே, பாவெல் வாய் திறந்தான்:

”தோழர்களே, கூலியைக் குறைக்கமாட்டேன் என்று அவர் உறுதி கூறினால் அல்லாது, நாம் வேலைக்குப் போகக்கூடாது. இதுதான் என் யோசனை.”

“உத்வேகமான பல குரல்கள் உடனே ஒலித்தன.” ”எங்களை என்ன, முட்டாள்கள் என்று நினைத்தாயா?”

“வேலைக்குப் போகாதே என்றால் ……. வேலை நிறுத்தமா?”

”எதற்காக? கேவலம் ஒத்தைக் காசுக்காகவா?”

“ஏன், வேலை நிறுத்தம் செய்தால் என்ன?”

“நம்மையெல்லாம் சுட்டுத் தள்ளிவிடுவான்!”

“அப்புறம் அவனுக்கு வேலை பார்க்க ஆள் ஏது?”

“ஆளா கிடைக்காது? எத்தனையோ பேர் தயாராக முன் வருவார்கள்!”

“கருங்காலிகள்!”

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1) ரூபிள் – ருஷியாவின் நாணயம் நமது ரூபாயைப் போன்றது. – மொ – ர்.
(2) கோபெக் – ருஷியாவின் செப்புக் காசு. – மொ – ர்

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?

சாலைகளில் விபத்துகள் நடக்க பேனர்களோ குண்டு குழிகளோ காரணம் அல்ல, நமது சக வாகன ஓட்டிகள் தான் காரணம்! சொல்வது ‘உயிர்’ அமைப்பு!

கோவையில் ஏதோ ஆளும் கட்சி விழா அல்லது அரசு விழா நடக்கும் போல் தெரிகிறது. கோவையின் ஒரு பிரதான சாலையான அவிநாசி சாலையில் கிட்ட தட்ட 2 கிமீ தூரத்துக்கு சாலையின் கால்வாசி இடத்தை மறைத்து ஆளும் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு இதே கோவையில் இதே அ.தி.மு.க.வின் பேனர் இருந்ததால் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் விபத்தில் சிக்கி கொல்லப்பட்டார். அந்த விபத்து நடந்ததும் இதே அவிநாசி ரோட்டில் தான், இப்போது பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும் அதே இடத்தில் தான்.

அந்த விபத்துக்கு பிறகு கட் அவுட் மற்றும் பேனர் வைப்பது கடும் விவாதத்துக்கு உள்ளானது. அப்போது தான் சென்னை உயர் நீதி மன்றம் போக்குவரத்தை பாதிக்கும் வண்ணம் சாலைகளில் பேனர்கள் வைக்க கூடாது என்று தடை போட்டது. ஒரு வருடத்துக்குள் அரசே அந்த உத்தரவை காற்றில் பறக்க விடுகிறது.

இரு சக்கர வாகனங்களில் செல்கிற கை குழந்தை கூட ஹெல்மெட் போட வேண்டும் என்று திரும்ப திரும்ப உத்தரவு போடும் நீதி மன்றம் இந்த மாதிரி அரசு தெரிந்தே செய்யும் தவறுகளை கண்டுகொள்வது போல் தெரியவில்லை. எவ்வித அவமதிப்பும் இல்லை!

கோவை நகரத்துக்குள் இருக்கும் சாலைகளில் எந்த வித பராமரிப்பும் நடப்பது போல் தெரியவில்லை. ஒரு கிமீ தொலைவுக்கு சாலையின் பரப்பளவு எவ்வளவு, அதில் தார் இருக்கும் பரப்பளவு எவ்வளவு என்று அளவிட்டு கணக்கிட்டால் சாலையில் எத்தனை சதவீதம் தார் உள்ளது என்று தெரிந்துவிடும். என் கணிப்புப்படி ஒரு சில சாலைகளில் 60 சதவீதம் தான் தார் இருக்கும்.

பேனர் வைப்பதையோ சாலைகள் பராமரிப்பு இல்லாமல் குண்டு குழிகளில் இறங்கி இரு சக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி மக்கள் கொல்லப்படுவதையோ எல்லாம் நீதி மன்றங்கள் கேட்பது இல்லை. இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லக் கூடாது! ஹெல்மெட் அணியாமல் செல்லலாம் என்று நான் கூறுவதாக எண்ண வேண்டாம்! நீதிமன்றங்கள் யாரிடம் கடுமையாகவும் யாரிடம் நீக்கு போக்காகவும் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்!

கோர்டாவது beepஆவது என்று எச்சை ராஜா சொல்வதில் தவறு இருக்கிறதா என்று எண்ண தோன்றுகிறது!.

இந்த பேனரை ஒட்டி இன்னொரு முக்கியமான செய்தியும் உள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி பார்த்தேன். கோவையில் உள்ள பெரு முதலாளிகள் சிலர் இணைந்து ‘உயிர்’ என்ற அமைப்பை துவங்கி உள்ளனர். இந்த அமைப்பின் நோக்கம் கோவையில் வாகன விபத்துகள் நடப்பதை தடுப்பது.

நல்ல எண்ணம் தான்! சரி, எப்படி தடுப்பார்கள்? போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பிடித்து தண்டிப்பதன் மூலம் விபத்துகள் குறையுமாம்!

இந்த ‘உயிர்’ அமைப்பு இரு வேலைகளை செய்ய உள்ளது. முதலில் கோவையின் முக்கிய சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளனர். அதற்க்கு ‘உயிர்’ அமைப்பு சில லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இந்த கேமராக்கள் மூலம் கண்காணித்து போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை காவல் துறை தண்டிக்கப் போகிறது. இரண்டாவது, ‘உயிர்’ அமைப்பு ஒரு செயலியையும் (app) வெளியிட உள்ளது. அந்த செயலியை உபயோகப்படுத்தி போக்குவரத்து விதி மீறல்களை பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்கலாம். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்குமாம்!

ஆளும் கட்சி ரோடுகளை மறைத்து பேனர்கள் வைப்பதையோ அல்லது ரோடுகள் குண்டு குழிகளுக்கு நடுவில் இருப்பதையோ இந்த செயலியை வைத்து புகார் தெரிவிக்க முடியுமா என்று தெரியவில்லை. நம்மை போன்ற சக மனிதர்களை, சக குடிமக்களை, நம்மை போன்று குண்டு குழிகளில் விழுந்துவிடுவோமோ என்று மரண பயத்தில் வேறு வழியின்றி வண்டி ஓட்டுபவர்களை தான் இந்த செயலி மூலம் காவல்துறையிடம் பிடித்து தர முடியும்.

நமது மக்கள் சாலைவிதிகளை முழுமையாக மதிக்கிறார்களா என்று கேட்டால், இல்லை என்று தான் நானும் கூறுவேன். அதற்காக, ‘மேலை நாடுகளில் எல்லாம் இப்படி இல்லை, நம்ம இந்தியர்கள் தான் ரூல்ஸை மதிக்கறதே இல்லை’ என்ற காரணத்தை நான் சுத்தமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். மனிதர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வதற்கு காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணிகளை மாற்றினால் தான் மனிதர்கள் நடந்துகொள்வதை மாற்ற முடியும். இல்லையென்றால் நாம் நோயை குணப்படுத்தாமல் நோய்க்கான அறிகுறிகளையே குணப்படுத்த முயற்சி செத்துக்கொண்டிருப்போம்!

ரோடுகள் சரிவர பராமரிக்கப் படாததாலும், அரசே தெரிந்தே விதிகளை மீறுவதாலும் சாலைகளில் போக்குவரத்து ஒழுங்காக இருப்பது இல்லை, போக்குவரத்து நெரிசல்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. வாழ்க்கையில் வேலை மற்றும் தொழிலில் இருக்கும் நேர நெருக்கடி காரணமாக நமது மக்களும் இந்த ஒழுங்கு படுத்தப்படாத போக்குவரத்தை சமாளிக்க விதிகளை மீறுகின்றனர்.

எனவே, விபத்துகளை தடுக்க முதலில் போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட வேண்டும். தனி மனித விதி மீறல்களும் தண்டிக்கப்பட வேண்டும்தான் ஆனால், முதலில் செய்ய வேண்டியது ரோடுகளின் பராமரிப்பு.

இந்த செயலி பற்றி கேள்விபட்ட பொழுது நல்ல முயற்சி என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் இதில் ஒரு நுட்பமான அரசியல் உள்ளது என்று பின்பு தான் புரிந்தது. போக்குவரத்து நெரிசல் குறித்தும் விபத்துகள் குறித்தும் நாம் அனைவருக்கும் கோபம் உள்ளது. சில சமயங்களில் அது வெளிப்படவும் செயகிறது. இந்த கோபத்தை நாம் எங்கு செலுத்துகிறோம் என்பது முக்கியம். அதைப் பொறுத்து தான் விளைவுகளும் அமையும். இந்த ‘உயிர்’ அமைப்பின் செயலி நமக்கு ஒரு செய்தியை சொல்லாமல் சொல்கிறது. ‘போக்குவரத்து நெரிசலுக்கும் விபத்துகளுக்கும் காரணம் நமது சக வாகன ஓட்டிகள் தான்’ என்கிற செய்தி தான் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் அந்த செயலி நமது சக பயணிகளின் விதி மீறல்களை காவல்துறையிடம் போட்டுக் கொடுக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இந்த ‘உயிர்’ அமைப்பு அரசின் விதி மீறல்கள் பற்றியோ, சாலைகள் பராமரிக்கப்படாதது பற்றியோ, பேருந்துகளில் பயணிகள் படியில் தொங்கி செல்வது பற்றியோ ஒரு நாளும் மூச்சு கூட விடாது. வேலை அவசரத்தில் ஓடும் இரு சக்கர வாகன ஓட்டி தான் ‘உயிர்’ அமைப்புக்கு வில்லன். நாம் அனைவருக்கும் வசதியான வில்லனும் அவனே!

இவ்வாறு நமது கோபத்தை மடைதிருப்புவதன் மூலம் நம் கோபம் அரசு மீதோ, நீதி மன்றங்கள் மீதோ, அதிகார வர்க்கம் மீதோ, சுருக்கமாக இந்த அமைப்பின் மீது திரும்பாமல் பார்த்துக்கொள்ளும் வேலையை ‘உயிர்’ அமைப்புகள் தெளிவாக செய்கின்றன.

இது போன்ற அமைப்புகள் ஒரே ஒரு நபர் காரில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி மறந்தும் பேசிவிட மாட்டார்கள்! கேட்டால், அது சட்டப்படி குற்றம் இல்லை என்று சொல்வார்கள்! கேள்வி கேட்டால் அது அவர்களையே கேள்வி கேட்பதாக ஆகி விடும்!

படிக்க:
அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர்
மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

இந்த செய்திகள் அனைத்தும் போக இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவலும் உள்ளது. இந்த ‘உயிர்’ அமைப்பின் செயலியை வெளியிடப்போவது யார் தெரியுமா? பிடல் காஸ்ட்ரோ தான்! புரியவில்லையா? அட, நமது எடப்பாடி சாமி தான். ஞாயிறு அன்று கோவையில் அந்த செயலியை வெளியிட உள்ளார். அவர் வருகைக்காக தான் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மொத்த செய்தியையும் தொகுத்து பாருங்கள். சாலைவிபத்துகள் நடக்காமல் தடுக்க நம்மை போன்ற சக வாகன ஓட்டிகளை காவல்துறையிடம் பிடித்து தர வேண்டும், அப்படி பிடித்து தர ஒரு செயலி, அதை வெளியிட ரோடுகளை எந்த வித பராமரிப்பும் செய்யாத முதல்வர் வருகிறார், அவர் வருகைக்கு விபத்துகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் சாலைகளை மறைத்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன!

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களாட்சி! ஆங்கிலத்தில் “Irony just died a thousand deaths” என்று சொல்வார்கள்.

அருண்கார்த்திக்

சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் !

சென்னை சேத்துப்பட்டு, மேயர் ராமநாதன் தெருவோர பிளாட்பாரத்தில் மூங்கில் கூடைகள், பிரம்பாலான நாற்காலி, ஊஞ்சல், சோபா போன்ற கலைப்பொருட்களை கடைவிரித்திருந்தார் நாகராஜ். மூன்று பிரம்புக் குச்சிகள் ஏற்ற இறக்கங்களின்றி ஒருசேர வளைந்து நயமாய் காட்சியளிக்கிறது நாகராஜ் கைவண்ணத்தில் உருவான நாற்காலி.

நாற்காலிகள் மட்டுமல்ல; நாகராஜ் குடியிருக்கும் வீடும் மூங்கிலால் ஆனதுதான். நட்சத்திர விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும் இருப்பதைப் போன்ற கண நேரக் களிப்பிற்கான குடில்களல்ல இவை. பிளாட்பாரத்தையொட்டி, கூவம் கரையோரம் திசைக்கொரு மூங்கிலை நிறுத்தி அதன் மேல் பலகையை போட்டு சமதளமாக்கப்பட்டிருக்கிறது, இக்குடிசை. சுற்றுச்சுவர் கிடையாது. வெயில் மழையிலிருந்து காக்க மேலே போர்த்தப்பட்டிருக்கிறது, பிளாஸ்டிக் தார்ப்பாய். இந்தக் குடிசையில்தான் கடந்த பதினைந்து வருடமாக குடியிருக்கிறார், நாகராஜ்.

பத்தாம் வகுப்புவரை படித்திருக்கும் நாகராஜ், ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட குரும்பன்ஸ் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அப்பா காலத்திலேயே ஆந்திராவை விட்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

‘’நான் மெட்ராசுக்கு வந்து பதினஞ்சு வருசமாகுது. சத்ய ஸ்வரூப், சந்தீப், ஸ்வாதினு ரெண்டு பசங்க ஒரு பொண்ணு. எல்லாம் ஆந்திராவில படிக்குதுங்க. லீவுக்கு வந்திருக்கிதுங்க. நாங்க இங்கேயேதான் இருக்கோம்’’ என்கிறார், நாகராஜின் மனைவி லெட்சுமி.

வீட்டில் மின்சாரமில்லை; கேஸ் அடுப்பு இல்லை; பீரோ, கட்டிலும் இல்லை. சமைத்துப் போட்ட சமையல் பாத்திரங்கள் பிளாட்பாரத்தில் இறைந்து கிடக்கின்றன. மழைகாலங்களில் விறகு அடுப்பில் சமைக்க முடியாத போது, அம்மா உணவகம் அல்லது விலை மலிவான ரோட்டோரக் கடை உணவுதான் அவர்களின் பசியாற்றுகிறது.

கையிலிருக்கும் ஆண்டிராய்டு போன் ஒன்றுதான் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு; வெளி உலகைக் காண்பதற்கான ஒரே வாய்ப்பு. ‘’தலையெல்லாம் ஒரே பொடுகு. யூட்யூப்ல போட்ருந்தாங்க, அதான் வெங்காயத்தை அரச்சி தலையில தடவியிருக்கிறேன்’’ என்று புன்சிரிப்போடு கூறுகிறார், லெட்சுமி. நாகராஜின் நண்பர்களின் வீடுகளில்தான் போனுக்கு சார்ஜ் செய்து கொள்கிறார்கள்.

‘’2005 இல வெள்ளம் கரைய தொட்டுகிட்டு போச்சு. பொருள எல்லாம் பிளாட்பாரத்துல எடுத்து வச்சிட்டு இங்கேயே இருந்திட்டோம். வர்தா புயலப்பதான் பொருள எல்லாம் தார்ப்பாய் போட்டு மூடி வச்சிட்டு, சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேசன்ல தங்கிட்டோம்’’ என்கிறார் நாகராஜ்.

‘’ஆந்திரா நெல்லூர் பக்கத்துலதான் என் சொந்த ஊர். எங்களுக்கு சொந்தமாக ஆடுகள் இருந்திச்சி. மேய்ச்சலுக்கு ஓட்டிட்டு போவோம். புல்லு கிடைக்கல. அப்பவே வித்துட்டோம். அப்புறம் இவரை கல்யாணம் பன்னிட்டு இங்கயே வந்துட்டேன்’’ என்கிறார் லட்சுமி.

பிள்ளைகள் மூவரும் நெல்லூரையடுத்த கோலகாமுடியில் தாய்மொழி வழியில் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். இங்கேயே தெலுங்கு பள்ளிகள் இருக்கிறதே, படிக்க வைக்கலாமே? என்றபோது, ‘’நாங்க பழங்குடியினர்ன்றதால ஆந்திராவிலேயே படிச்சா., அரசாங்கம் வேலை போட்டுக்கொடுப்பாங்க. முதல்ல எங்களுக்கு போட்டுட்டுதான் மத்தவங்களுக்கு போடுவாங்க.’’ என்று வெள்ளந்தியாய்க் கூறுகிறார், லட்சுமி. வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பழங்குடியினருக்கு வழங்கப்படும் முன்னுரிமையையே, படித்துவிட்டால் அரசாங்க வேலை நிச்சயம் என்ற அளவிற்கு புரிந்து கொண்டுள்ளார்.

பிள்ளைகளை பதினைந்து நாளுக்கு ஒருமுறை சென்று பார்த்து வருகின்றனர். மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்விடுமுறை கிடைக்கும் நாட்களில் மட்டுமே பிள்ளைகளை இங்கே அழைத்து வருகிறார்கள்.

வளைக்கப்படாத பிரம்புகள்; மூங்கில் குச்சிகள்; இரண்டு சிறு கத்திகள்; சிறியதாய் ஒரு அறுவா; சின்ன சுத்தியல்; பொடி ஆணிகள் கொஞ்சம்; வார்னிஷ் டப்பா இதுதான் நாகராஜின் ஆலை. அவரது சொத்தும் அதுதான். பிரம்பை நெருப்பில் மிதமாக வாட்டியெடுத்து லாவகமாக வளைப்பதில்தான் திறமையிருக்கிறது, என்கிறார் அவர்.

‘’பிரம்பு நாற்காலி இல்லனா ஊஞ்சல் பின்னனுனா மெட்டீரியல் மட்டும் 1,500 முதல் 2,000 வரையில் அடக்க செலவு ஆகும். குறைஞ்சது ரெண்டு நாளாயிடும் செஞ்சி முடிக்க. முதநாள் பிரம்ப நெருப்புல வாட்டி வேனுன்ற பதத்துக்கு வளச்சி பிரேம் செஞ்சிருவோம். அப்புறம் அடுத்தநாள் அத பின்னுவோம். அதுக்கப்புறம்தான், வார்னிஷ் அடிச்சி பினிசிங் கொடுப்போம். இது எப்படியும் ரெண்டு மூனு நாளாயிரும்’’ என்கிறார், நாகராஜ்.

கணவருக்கு உதவியாக லெட்சுமியும் வேலை செய்கிறார். நாகராஜ் செய்து முடித்த பிரம்பு நாற்காலியொன்றுக்கு வார்னிஷ் பூசியபடியே பேசிய லெட்சுமி, ‘’செய்யிற பொருளுக்கேத்தமாதிரி 2,500 லிருந்து 3,500 வரை சொல்வோம். பேரம் பேசிதான் வாங்குவாங்க. பண்டிகை காலங்களில் மட்டுமே ஓரளவு வருமானம் இருக்கும். மத்த நாட்களில் சின்னதா இருக்கும் கூடைகள், தட்டுங்க மட்டும் விக்கும். சிலநேரம் வாரம் முழுக்க வியாபாரமே ஆகாம போயிடும். அப்போ, 3,000 ரூபாய் பொருள 1,500க்கு தர்றியானு கேட்பாங்க. வித்தாதான் சாப்பாடுன்றதால, நட்டம்னாலும் கொடுத்துடுவோம். இப்போகூட, மூனு நாளா பெரிய பொருள் எதும் போகல. நூறு, இருநூறுதான். மூனுநாளுக்கு முன்ன வித்த காசுலதான் செலவாகிட்டு வருது.’’ என்றார்.

‘’பிரம்புகள்  வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யனும். பாரிஸில சேட்டுங்கதான் வாங்கியாறாங்க. அவங்கள்ட்டருந்து நாங்க வாங்கிக்குவோம். மத்த வேலைக்கு காட்டு ஈச்சை பயன்படுத்துவோம். காட்டு ஈச்ச இங்க புதூர் அத்திப்பட்டு மாதிரி ரெண்டு மூனு இடங்கள்ல  கெடைக்கும். எங்காளுங்க ரெண்டு மூனு பேரா சேர்ந்து வேட்டைக்கு போறப்ப எடுத்தாருவோம்’’ என்கிறார் நாகராஜ்.

‘’கார்ப்பரேசன் காரங்கதான் அப்பக்கி அப்ப வந்து பொருள எடுத்துட்டு போயிடுவாங்க. எடத்த காலி பண்ணுனு சொல்வாங்க. அப்புறம் அதிகாரிங்கள பாத்து பேசிட்டு வர்றப்ப, எடுத்து போன பொருள்ல ரெண்டு மூனு பொருளு இருக்காது. பொருள காணோனு கேட்டா, அவ்வளவுதான் இருந்துச்சி. இங்கதான் போட்ருந்தோம். என்கிட்ட கேக்காதனு வெரட்டுவாங்க… ‘’ என்கிறார், லெட்சுமி.

விடுமுறைக்காக வந்திருந்த அவர்களது குழந்தைகள் பிளாட்பாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மூத்த பையன் வீட்டிற்குள் ஓடிச்சென்று ஆங்கில இந்து நாளிதழ் ஒன்றை எடுத்து வந்தான். நாகராஜின் படம் அதில் பிரசுரமாகியிருந்தது.

படிக்க:
இராவணனை எரிக்காதே ! மராட்டிய பழங்குடி மக்கள் போராட்டம் !
சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

தனியார் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் பழங்குடியினரின் விழா ஒன்றில் பங்கேற்று பாரம்பரிய வில் உள்ளிட்ட வேட்டைக் கருவிகளை கலை பொருட்களை உருவாக்கியிருக்கிறார். இது குறித்து கேட்டபோது, ‘’ எங்களுக்கு தொழில் கத்துக் கொடுத்தது முன்னோர்கள் ஏகலைவன். அவுங்க நினைவா நடத்துற நிகழ்ச்சி அது’’ என்றார், லட்சுமி.

‘’அழிந்துவரும் கைத்தொழில் இது. இந்த வேலை செய்யிற எங்காளுங்களே குறைஞ்சிட்டாங்க. எல்லாம் வேற வேற வேலைக்கு போயிட்டாங்க. கவர்மெண்ட்தான் இதுக்கு ஸ்டெப் எடுக்கனும். எக்மோர்ல வியாபாரிங்களுக்கு கடை கட்டி விட்டுருக்காங்க. அவங்களுக்கு கொடுக்க வேணானு சொல்லல. ஆனா, அவங்க வாங்கி விக்கிறவங்க. நாங்க கைத்தொழிலா பரம்பரையா செஞ்சிட்டிருக்கோம். அவங்களமாதிரி, எங்களுக்கும் கடை அமைச்சி கொடுக்கனும்.’’ என்றவரிடம் ஏக்கமாய் வெளிப்பட்டது, ‘’தனியா கடை போடனுனுதான் என்னோட ஆசை, பார்க்கலாம்…’’ என்ற வார்த்தைகள்.

விடைபெறும் முன்பாக, சத்ய ஸ்வரூப்பிடம், உன்னோட கனவு என்ன? என்றோம், சற்றும் தாமதிக்காமல் சொன்னான் ‘’சயின்டிஸ்ட் ஆகனும். ரோபோட் செய்யனும்’’.

#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !

பாடகர் ஓ.எஸ். தியாகராஜன்.

மீ டூ இயக்கம் சினிமா, ஊடகம், தொழில், கலை, அறிவியல், கல்வி என பல துறையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்களின் குரலை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சினிமா துறையைச் சேர்ந்தவர்களின் பாதிப்புகளை சொல்ல ‘சுவாரஸ்யப்படும்’ ஊடகங்கள், மற்ற துறைகளை கண்டு கொள்வதில்லை. முக்கியமாக, ‘பாரம்பரியம்’, ‘புனிதம்’ என போற்றப்படும் கர்நாடக இசை உலகில் நடக்கும் பாலியல் சுரண்டலை, அத்துமீறலை பெரும்பாலான ஊடகங்கள் சொல்ல விரும்பவில்லை. இந்த பாரம்பரிய கலைகள் வெகுஜெனத்த்திற்கும் வெகுதூரத்தில் உள்ளன; சொல்வதில் ‘சுவாரஸ்யமிருக்காது’ என்பது மட்டும் காரணமில்லை. இது நேரடியாக பார்ப்பன அதிகார மையத்துக்கு தொடர்புடையது. இதை சொன்னால் ஒட்டுமொத்த புனித கட்டுக்கதையும் அவிழ்ந்துவிடும் என்கிற பயம் முதன்மையான காரணமாக இருக்கலாம்.

மனுஸ்மிருதியைப் பொறுத்தவரை பார்ப்பன பெண்ணுக்கும்கூட அடிமையாகவே வாழப் பிறந்தவள். இந்த அடிப்படையில்தான் கர்நாடக இசை உலகின் மூத்த ஜாம்பவான்கள் இயங்குகிறார்கள் என்பதை பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் சொல்கின்றன. பாரம்பரியத்தின் பெயரால் ‘தேவரடியார்கள்’ என்கிற பழகத்தின் மூலம் சிறுமிகளை சீரழித்த வரலாற்றை இப்போதைய தலைமுறை மறந்திருக்கலாம். ஆனால், பாரம்பரிய கலை ஜாம்பவான்களின் டி.என்.ஏ-வில் இது ஆழப்பதிந்திருக்கலாம் என்றே நம்பத் தோன்றுகிறது.

நாட்டிய உலகில் புகழ்பெற்ற மேக்-அப் ‘கலைஞர்’ சேதுமாதவன் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தந்தை இப்படி சொல்கிறார்…

மேக் -அப் கலைஞர் சேதுமாதவன்.

“நாட்டிய உலகில் நன்கு அறியப்பட்ட மேக் -அப் கலைஞர் சேதுமாதவன் குறித்து மிகுந்த மனச்சோர்வும் அதிர்ச்சியும் அளித்த சம்பவம் குறித்து பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நாங்கள் அமெரிக்காவில் வசிக்கிறோம். எங்களுடைய இரண்டு மகள்கள் (வயது முறையே 17, 13) நாட்டிய அரங்கேற்றத்தை சென்னையில் வைத்திருந்தோம். சேதுமாதவன், முன்னணி நடன கலைஞர்கள் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு மேக் -அப் போடுகிறவர் என சொன்னார்கள். அவரே எங்கள் மகள்களின் அரங்கேற்றத்துக்கும் உடைகள் மற்றும் மேக்-அப் செய்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தோம். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகவே நடந்தது. பெற்றோர் நாங்கள் இருவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் தீவிரமாக இருக்கும்போது, எங்கள் இளைய மகள் மற்றும் அவளுடன் இருந்த 11 வயதுள்ள உறவுக்காரப் பெண்ணிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மோசமானது. உடைகளை சரி செய்கிறேன் என்று தொடக்கூடாத இடத்தில் தொட்டிருக்கிறார். எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைத்ததோ அப்போதெல்லாம் அதைச் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் இதை கவனித்த என் மனைவியும் உறவுக்கார பெண்ணும் அவரிடமிருந்து காப்பாற்றியுள்ளனர். அரங்கேற்றத்தைவிட, இந்த ஆள் செய்த செயல் எங்களை மிகவும் சோர்வு கொள்ள வைத்தது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலியை கற்பனை செய்ய முடியவில்லை”.

மீ டு இயக்க குற்றச்சாட்டுக்களை கவனித்தோம் என்றால் இரண்டு விஷயங்கள் தெரியும். குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆண்கள் தொடர்ச்சியாக இத்தகைய பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். பாதிக்கப்படுகிறவர்கள் குழந்தைகளாகவும் இளம் பெண்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக, பாரம்பரிய இசை-நடன துறையைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட வித்வான்கள் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் அத்துமீறியது குழந்தைகளிடம். வேட்டையாடும் பீடாபைல்களாக (pedophile – குழந்தைகளிடம் பாலியல் வன்முறை செய்பவர்கள்) வித்வான்கள் இருந்துள்ளனர்.

சென்ற 2017-ம் ஆண்டு மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் பெற்றவர் சித்தரவீணா என். ரவிக்கிரண். மழலை மேதை என புகழப்படும் இவரைப் பற்றி மறைந்த இசைக்கலைஞர் பண்டிட் ரவிஷங்கர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், ரவிக்கிரணைப் பாருங்கள்’.  திறமை மட்டுமே ஒருவரை கடவுளாக்கிவிட முடியுமா? கடவுள்களின் வன்புணர்வுகளை கொண்டாடும் சமூகம் அல்லவா இது? சரி, ரவிக்கிரண் என்ற கடவுள் என்ன செய்தார் எனப் படியுங்கள்..

சித்ரவீணா என். ரவிக்கிரண்.

“அப்போது எனக்கு 18 வயதிருக்கும். ரவிக்கிரண் சிஷ்யர்களிடம் மிக சகஜமாகப் பழகக்கூடியவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். (அது ஏன் என்பது பின்னால்தான் தெரிந்தது.) என்னை வீட்டிற்கு வந்து காரில் அழைத்துப் போவார். கார் மெதுவாக செல்லும், இடையில் பேசிக் கொண்டே இருப்பார். சில சமயம் காபி ஷாப்பில் இறங்குவோம். சில நாட்களுக்குப் பின் பேச்சு, அவருடைய மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கை குறித்து திரும்பியது. அந்த பேச்சிலிருந்து திசை திருப்புவேன். வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்தார். உள்ளுணர்வால் அதையும் மறுத்து விட்டேன். நான் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என சொல்லும் அளவுக்கு மெயில், குறுஞ்செய்திகள் மூலமாக சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு நாள் வலுக்கட்டாயமாக என்னை அவருடைய படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, ‘உன் பாய் ஃபிரெண்ட் உன்னை முத்தமிட்டால் என்ன செய்வாய்?’ எனக் கேட்டார்.”

ரவிக்கிரணின் பாலியல் அத்துமீறல்களை பாதிக்கப்பட்ட பெண் மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். அவருடைய இச்சைக்கு இணங்காத போது, துறையை விட்டே ஒழித்து விடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார். இசைக் கடவுளின் கதை நாற்றமடிக்கிறது.

மன்னார்குடி ஏ. ஈஸ்வரன்.

“விபூதி பட்டைகளுக்கும் நாமங்களுக்கும் பின்னால் ஒளிந்து கொண்டுள்ள ’மேல்’சாதி ஆண்கள் சபாக்களின் அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் பூணூல் எந்த பெண்ணையும் அழைத்து விடலாம் என்கிற அதிகாரத்தையும் வழங்கிடுவதாக நினைக்கிறார்கள். இந்த அழுக்குகளுடனேதான் அவர்கள் பக்தியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார்கள்.” என்கிறார் நடனம் கற்றுவரும் பார்ப்பனரல்லாத ஒரு பெண்.

“சபாவில் நாட்டிய நிகழ்ச்சி நிகழ வேண்டுமென்றால் சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் படுக்க வேண்டும் என சொன்னார் ஒருவர். அவர் பார்ப்பனர் என்பதாலும் நான் பார்ப்பனர் இல்லை என்பதாலும் இதை சொல்வதாக அவர் சொன்னார். தேவதாசி நடனக் கலைஞர்கள், பார்ப்பன ஆண்களுக்கு தலைமுறை தலைமுறையாக விபச்சாரம் செய்ததாக அவர் சொன்னார். சமூக ரீதியாக தாழ்ந்த சாதியில் பிறந்துவிட்ட என்னை இது உயர்விக்கும் என அவர் சொன்னபோது எனக்கு வயது 17”.

இன்னும் பெயர் சொல்லாத பல பெண்களின் பகிர்வுகள், தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட ஒரு காலத்தில் இன்னமும் பாரம்பரியத்தின் பெயரால் பெண்களை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர்கள் என்பதையே காட்டுகின்றன. இதை இவர்கள் மிக வெளிப்படையாகவும் பெருமையாகவும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது. அமெரிக்காவில் இருக்கும் பெண்ணுக்கு ஆன்லைனில் சங்கீதம் கற்றுத்தரும் குரு, ‘உனக்கு சைபர் செக்ஸ் பற்றி தெரியுமா?” என கேட்பதும் அடக்கம்.

திருவாரூர் வைத்தியநாதன்.

“எனக்கு எப்போ வேணாலும் நேரம் கிடைக்கும். நான் பாதி ராத்திரிக்கு கூப்பிட்டாலும் பெண்ணை அனுப்பி வெக்கணும். சங்கீதம்-னா சும்மா இல்லை”, என்று முதல் நாளே பெற்றோரிடம் நிபந்தனை போட்டுக் கொள்ளும் வாத்தியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.” என்கிறார் கர்நாடக இசை -நடன விமர்சனங்கள் எழுதிவரும் லலிதாராம் தன்னுடைய வலைப்பதிவில்.

பார்ப்பனியத்தால் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை பார்ப்பனிய பெண்களே காறி உமிழ்கிறார்கள். இசைக் கலைஞர் ரஞ்சனா சுவாமிநாதன், பாரம்பரியத்தின் பின்னால் பார்ப்பன ஆண்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை பாதுகாப்பதாக கடுமையாக சாடுகிறார்.

படிக்க:
மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்
சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

கர்நாடக இசை பாடகர் டி. எம். கிருஷ்ணா, “நான் கடந்த பல வருடங்களாக கர்நாடக இசை மற்றும் பரதநாட்டிய துறைகளில் நடக்கும் இந்த விஷயங்களை அறிவேன். பத்தாண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்ததை ஒரு இளம் பெண் தனக்கு நேர்ந்ததை சொல்லியிருந்ததை, அதை நாம் புறக்கணித்துவிட்டோம் என்பதில் நானும் வருத்தம் கொள்கிறேன். ஆண் அதிகார மையம், படிநிலைகள், கட்டுப்பெட்டித்தனத்தால் வரும் பயம் ஆகியவற்றின் காரணமாக நாம் அமைதியாக இருந்துவிட்டோம். இப்போது எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பொது சமூகத்தால் விசாரிக்கப்பட வேண்டும்” என தனது முகநூலில் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீமுசானம் வி. ராஜாராவ்.

“நமது பழமைமிக்க இந்திய கலைகளை தார்மீக அறத்தின் அடிப்படையில் தூய்மையாக்கப்பட வேண்டும். பாலின பாகுபாட்டை உருவாக்கும் நமது பாரம்பரியத்தை நாம் கேள்வி கேட்க வேண்டும். ஆன்மீகம், மதம், புராணங்களைக் காட்டி அவற்றை நியாயப்படுத்தக்கூடாது. பாரம்பரிய கலைகளின் மீதுள்ள அதீத ஜோடனை, மக்களை ஒடுக்கும் அதிகாரத்தை கலைஞர்களுக்கு தந்துவிடுகிறது. கலைஞர்களுக்கு ஒளிவட்டங்கள் தேவையில்லை, அவர்களும் சாதாரண மனிதர்கள்தாம். புனிதமாக்கியதெல்லாம் போதும்” என்கிறார் டி. எம். கிருஷ்ணா.

மீ டூ இயக்கத்தின் மூலம் பல கர்நாடக இசை, நடன ஜாம்பவான்களின் பெயர்கள் வெளிவந்தபோதும், ஏழு கலைஞர்களை மட்டும் ஒதுக்கி வைத்திருக்கிறது மியூசிக் அகாடமி. சித்ரவீணா என். ரவிக்கிரண், பாடகர் ஓ.எஸ். தியாகராஜன், வயலின் கலைஞர் நாகை ஸ்ரீராம், மிருதங்க கலைஞர்கள் மன்னார்குடி ஏ. ஈஸ்வரன், ஸ்ரீமுசானம் வி. ராஜாராவ், ஆர். ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரை மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்திருக்கிறது அவ்வமைப்பு.

வைரமுத்து பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என ஏ. ஆர். ரகுமான் சொல்வதைப் போல, இசை-நடன கலைஞர்கள் பற்றி தனக்கு ஒன்றுமே தெரியவில்லை என இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறது மியூசிக் அகாடமி. குறைந்தபட்சம் வெளிப்படையாக பெயர்கள், புகார்கள் வந்தபிறகு இப்படி சொல்கிறார்களே என்று திருப்தி பட்டுக் கொள்ளலாம். ஆனாலும் சீழ்பிடித்த பார்ப்பனிய புண் இருக்கும் இடத்தில் பாதிப்புகளும் ஆழமாகத்தான் இருக்கும். பார்ப்பனியம் சூத்திரர்கள், பஞ்சம்களை மட்டுமல்ல பார்ப்பனப் பெண்களையும் சேர்த்தே ஒடுக்குகிறது. பாட்டு வகுப்பிற்குச் செல்லும் அந்தப் பெண்கள் பார்ப்பனியத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்களில் ஒன்றிணையும் போது அந்தப் புண்ணை அகற்றும் வழிகிடைக்கும்.

செய்தி ஆதாரங்கள்:

♦ #metoo in the Carnatic World
Unsavory encounter with make-up artiste during arangetram
♦ #MeToo: I have been abused and wrongfully accused, says Chitravina Ravikiran
♦ Understanding gender disparity in Bollywood’s great ‘comeback’
#MeToo: In world of Carnatic music and Bharatanatyam, women say harassment is an open secret

ஓசூர் மைக்ரோ லேப் : ஊதிய உயர்வு கேட்ட 23 தொழிலாளிகள் பணி நீக்கம்

சங்கம் கேட்டால் டிஸ்மிஸ் ! ஓசூர் மைக்ரோ லேப் நிர்வாகம் அட்டகாசம் !

சூர், சிப்காட் – 1, பகுதியில் அமைந்துள்ள மைக்ரோ லேப்ஸ் micro labs ஆலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் கோடிவரை வர்த்தகம் நடக்கின்ற இந்த ஆலையில் நிரந்தர தொழிலாளர்கள் மட்டும் 300 பேர் உள்ளனர். உயிர் காக்கும் மருந்து உற்பத்தி என்பதால் தங்கள் உயிரை பணயம் வைத்து பலவிதமான கெமிக்கல்களை கையாண்டு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

கடந்த 35 ஆண்டுகளாக இயங்கும் இவ்வாலையில் தொழிற்சங்க உரிமைகள் மற்றும் ஊதிய உயர்வு கேட்டவுடன் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட், விசாரனை, சம்பள வெட்டு என வாழ்வுரிமையைப் பறித்து வருகிறது ஆலை நிர்வாகம்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, சங்கம் அமைக்கும் உரிமை கோறியதற்காக 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது நிர்வாகம். அப்போது சென்னை தொழிலாளர் ஆணையர் தலையிட்டு பிரச்சனையை தற்காலிகமாக பேசித் தீர்த்து வைத்தார்.

படிக்க :
ஓசூர் : மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் !
ஓசூர் விவசாயி சேகர் தற்கொலை !

2011-இல் தொழிற்சங்கத்தை இரண்டாக உடைந்தது நிர்வாகம். நிர்வாகத்தின் சூழ்ச்சிக்கு பலியான 21 தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில், தற்போது 2017 – ல் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு சங்கம் கோரியவுடன் 23 தொழிலாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 12 பெண் தொழிலாளர்கள் மீது விசாரணை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கடந்த 13 ஆண்டுகளாக வேலை செய்யும் 56 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் சட்டபூர்வ உரிமைகளை மறுத்து செப்டம்பர் மாத சம்பளத்தில் இருபது நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்து கொண்டு வேலைநிறுத்தத்தை தூண்டுகிறது நிர்வாகம்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு சட்டபூர்வ உரிமைகளை கோரினாலே தொழிலாளர் வாழ்வுரிமை பறிப்பது என்றால் நிர்வாகம் என்ன நினைக்கிறது? சட்ட விரோதமாக செயல்பட தைரியம் கொடுப்பது யார்? நிர்வாகத்தின் சட்ட விரோதமான செயல்களை அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது நியாயம் இல்லை, ஆகையால் நிர்வாகத்தின் மேற்கண்ட அடாவடித்தனத்தை கண்டித்தும், கோட்டாட்சியர் இதில் தலையிட்டு நிர்வாகத்திற்கும் சங்கத்திற்குமான பிரச்சினையை தீர்த்துவைக்கக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 22.10.2018 திங்கள் மாலை 5 மணி அளவில் ஒசூர் ராம்நகரில் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தலைவர் திரு. நாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் திரு. சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர். திரளான அளவில் எமது சங்க உறுப்பினர்கள் மற்றும் பிற ஆலைத்தொழிலாளர்கள் பெண்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்துக்கொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவுச் செய்துள்ளனர்.

தகவல் :
திரு சீனிவாசன், சங்க செயலாளர்,
micro labs பிரவுன் & பர்க் தொழிலாளர்கள் சங்கம்,
ஓசூர். பதிவு எண்: 503/DRP.

சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

”சபரிமலையில் பெண்கள் நுழையலாம்” எனும் தீர்ப்பைக் கொடுத்து விட்டு ஓய்வு பெற்றுவிட்டார் தீபக் மிஸ்ரா. பக்தி சார்ந்து என்ன தீர்ப்பு வந்தாலும் அதை பயன்படுத்தும் திட்டம் சங்க பரிவாரத்திற்கு இருந்திருக்கும். அதுவும் நுழையலாம் என்று தீர்ப்பு வந்தது ‘இந்து தர்மத்திற்கு’ ஆபத்து என்று பிரச்சாரம் செய்து மதவெறியை ஊட்டும் வாய்ப்பாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். “இந்துக்களின் மீதான தாக்குதல்” என இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் குழும இயக்கங்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டன.

இந்துத்துவக் கும்பலின் தூண்டுதலில் நடைபெறும் பேரணி

சபரிமலை பக்தியில் செல்வாக்காக விளங்கும் கேரளத்திலும் தமிழகத்திலும் ஊர்வலங்கள் நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது, உண்ணாவிரதம் நடத்துவது என இந்துக்களின் காவலனாக தம்மை காட்டிக் கொள்கிறார்கள். கேரளாவைப் பொறுத்த வரையில் நாயர் சேவா சங்கம் என்ற நாயர் ஆதிக்கசாதி அமைப்பினர், இந்துத்துவக் கும்பல்களோடு இணைந்து கொண்டு இந்த தீர்ப்புக்கு எதிராக கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலின், முன்னாள் தேவசம் போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணலில் சபரிமலை கோவிலுக்கு பெண்கள் வரத் தொடங்கினால், சபரிமலை தாய்லாந்து (விபச்சார சுற்றுலா) போன்று ஆகிவிடும் என்று கூறியிருக்கிறார். பாஜக ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்தில் மலையாள நடிகர் கொல்லம் துளசி பேசுகையில், சபரி மலையில் நுழையும் பெண்களை இரண்டாகக் கிழித்தெறிய வேண்டும்; ஒரு பாதி டெல்லியிலும், மற்றொரு பாதி இங்கிருக்கும் முதலமைச்சர் வீட்டிலும் போய் விழ வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு புறத்தில், கவிஞர் சச்சிதானந்தம், வரலாற்றாளர் எம்.ஜி.எஸ். நாராயணன், எழுத்தாளர் சாரா ஜோசப் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட அறிவுத் துறையினர் இந்த தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “நம்பிக்கை என்ற பெயரில் மதவாத சக்திகள் மற்றும் உயர்சாதிப் பிரிவினரின் இந்த மதவாத நிகழ்ச்சி நிரலுக்கு பணிந்து விடக் கூடாது. கடந்த நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள் வரை பக்தர்களில் பெரும்பான்மையானவர்களாகிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை கோவிலுக்குள்ளே அனுமதித்ததில்லை. இன்று அனைவரும் செல்வதைப் போன்று, ஆண், பெண் பாலின வேறுபாட்டை போக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

போலீசு பாதுகாப்போடு…

“நாங்கள் நாயர்களல்ல, ஈழவர்கள் அல்ல, புலையர்கள் அல்ல.. நாங்கள் இந்துக்கள்” என்ற வாசகத்தை சங்க பரிவாரக் கும்பல்கள்  இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கையில் கேரளத்தின் ஈழவர் சமூகத்தினரும், புலையர் சமூகத்தினரும் இந்துத்துவாக்களின் இந்தப் போராட்டத்தை கடுமையாக சாடுகின்றனர். “அவர்கள் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவே இத்தகைய எதிர்ப்பை காட்டுகின்றனர். உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

கேரளத்தின் நிலை இதுவென்றால், தமிழகத்தில் என்ன நிலைமை என்பதைப் பார்ப்போம்.  சேலம், திருச்சி, சென்னை என பல்வேறு இடங்களில் பெண்கள் ஊர்வலம், உண்ணாவிரதம் என போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஒருவேளை இது எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலின் செட்டப்தான் இது என்பதில் ஐயமில்லை.

ஆனால் சபரிமலைக்கு மிகப்பெரும் பக்தர் கூட்டத்தை ஈந்துவரும் தமிழகத்தின், பக்தர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஒரு கருத்துக் கணிப்பை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தினோம்.

சென்னை நுங்கம்பாக்கம் அருகிலுள்ள மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவில், கே.கே.நகர் ஐயப்பன் கோவில், சென்னை வடபழனி முருகன் கோவில் மற்றும் திருத்தணியில் இருக்கும் முருகன் கோவில் ஆகிய கோவில் வளாகங்களிலும், சென்னை மெரினா கடற்கரை மற்றும் “சென்னை – அரக்கோணம்” தொடர் வண்டியிலும் இந்தக் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.

மொத்தம் 1815 பேரிடம் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. பங்கேற்பவர்களின் பாலினம் மற்றும் வயது போன்ற விவரங்களுடன், சபரிமலை தீர்ப்பு தொடர்பான 5 கேள்விகள் கேட்கப்பட்டன. அவை,

1 சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையலாம் என்ற கோர்ட்டு உத்தரவு சரியா தவறா ?
பதில் வாய்ப்புகள் : அ) சரி ஆ) தவறு இ) கருத்து இல்லை

2 மாதவிலக்கு நிற்கும் வரை சுவாமி ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையக் கூடாது என்ற வழக்கத்தை ஆதரிக்கிறீர்களா ?
பதில் வாய்ப்புகள் : அ) ஆதரிக்கிறேன் ஆ) எதிர்க்கிறேன் இ) கருத்து இல்லை

3 வாய்ப்பு இருந்தால் குடும்பத்தோடு சென்று ஐயப்பனை தரிசிப்பீர்களா ?
பதில் வாய்ப்புகள் : அ) செல்வேன் ஆ) செல்ல மாட்டேன் இ) கருத்து இல்லை

4 சுவாமி ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையக் கூடாது என சில கட்சிகள் எதிர்ப்பதற்கு என்ன காரணம் ?
பதில் வாய்ப்புகள் : அ) இந்து தர்மத்தைக் காக்க ஆ) ஆன்மீகத்தின் பெயரில் அரசியல் இ) கருத்து இல்லை

5 எந்த மதம் ஆணுக்கு இணையான சமத்துவத்தை பெண்ணுக்கு வழங்குகிறது?
பதில் வாய்ப்புகள் : அ) இந்து ஆ)முசுலீம் இ) கிறித்தவம் ஈ) இதர மதங்கள் உ) எந்த மதமும் இல்லை ஊ) அனைத்து மதங்களும்

இந்த கேள்விகள் அனைத்தும் சபரிமலையில் பெண்கள் நுழையலாமா என்ற ஒரே கேள்வியை பல முறைகளில் கேட்பதாகவும் கொள்ளலாம். ஏனெனில் பக்தி என்று வரும் போது எது சரி, தவறு என்பதற்கு அப்பால் காலம் காலமாக இருந்து வரும் வழக்கம் என்ற கேள்விக்கிடமற்ற நம்பிக்கையும் மக்களிடம் இருக்கிறது. அதனாலும், அதை தாண்டியும் மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதறியவே இந்த ஐந்து கேள்விகள்.

ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவு குறித்து கருத்துக் கணிப்பு எனச் சொன்னவுடனேயே சிலர் முகத்தில் ஒரு ஆவேசம் வந்தது. பெண்கள் நுழைவதை ஆதரித்தவர்கள் அதிகம் பேசவில்லை. எதிர்த்தவர்களே அதிகம் பேசினர்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 1813 பேரில் ஆண்கள் 1261 பேர், பெண்கள் 551 பேர் மற்றும் திருநங்கை ஒருவர். பெண்களின் சதவீதம் பாதி வரவில்லை என்றாலும் இதுவும் ஒரு பெரிய எண்ணிக்கைதான்.

வயதுவாரியாக பார்த்தோமானால், 18 – 25 வயது வரையிலானோர் 493 பேர், 26 – 35 வயதிலானோர் 555 பேர், 36 – 49 வயதிலானோர் 419 பேர், 50 வயதைக் கடந்தவர்கள் 346 பேர். அவ்வகையில் இளைய வயதினர் அதிகம் இருக்கின்றனர். நம்பிக்கையூட்டும் இளைய சமூகம் இதில் எப்படி பார்க்கும் என்பது ஒரு ஆர்வமூட்டும் விசயம்.

சபரி மலையில் பெண்கள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து கேட்கப்பட்ட போது, ஆண்களில்  29.03 % பேர் அதனை சரி என்று ஏற்றுக் கொண்டனர். சுமார் 63.28% அத்தீர்ப்பு தவறானது என்று கூறியுள்ளனர். 7.69% பேர் கருத்து ஏதும் இல்லை எனத் தெரிவித்திருக்கின்றனர்.

பெண்களைப் பொறுத்தவவரையில், சுமார் 27% பேர் இத்தீர்ப்பு சரி என்றும், 65.75% பேர் இத்தீர்ப்பு தவறு என்றும் 7.25% பேர் கருத்து எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதில் ஆண் – பெண் பெரிய வேறுபாடில்லை.


பொதுவான இந்துக்கள் என்பதைத் தாண்டி, பக்தர்கள் என்ற வகையில் அன்றாடம் கோவிலுக்குச் செல்லக் கூடிய மக்களில் சுமார் 28.41 % பேர் இத்தீர்ப்பை வரவேற்றிருப்பது கவனிக்கத்தக்கது. சுமார் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பழக்கம் என்ற முறையில் திணிக்கப்பட்டிருந்த ஒரு விதியை மறுக்கிறார்கள் என்பது சமூக மாற்றம் குறித்து நினைப்போர் குறித்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயம்.

ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் சபரிமலை ஐயப்பனை குடும்பத்தோடு (பெண்கள் உட்பட) தரிசிப்பீர்களா என்ற கேள்விக்கு, இதே பக்தர்கள் வேறுமாதிரி பதிலளித்தனர்.

இக்கேள்விக்கு 40.93% பேர் செல்வேன் என்றும் சுமார் 42.42% பேர் செல்ல மாட்டேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். கருத்து இல்லை என சுமார் 16.65% பேர் தெரிவித்துள்ளனர். ஏன் முதல் கேள்விக்கு நுழைவதை வேண்டாம் என்று சொன்ன சதவீதம் இதில் குறைந்திருக்கிறது?

காரணம், முதல் கேள்வி ஒரு பழக்க வழக்கம் என்ற முறையிலும், இந்த கேள்வி இப்போது யார் வேண்டுமானாலும் செல்லலாமே என்ற மாற்றத்திலும் பதிலளிக்கப்படுகிறது. இதிலிருந்து ஆன்மீக பழக்க வழக்கங்களின் இருக்கும் பேதங்களைப் பொறுத்தவரை அது  பகுத்தறவு அற்ற முறையில் மக்களிடம் இருப்பதையும் அதை சட்டத்தாலும், சமூக மாற்றத்தாலும் எளிதில் கடந்து போக முடியும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையக் கூடாது என சில கட்சிகள் எதிர்ப்பதற்கு என்ன காரணம் எனக் கேட்டபோது, ஆன்மீகத்தின் பேரில் அரசியல் என 38.61% பேரும், இந்து தர்மம் காக்க என 32.32% பேரும் வாக்களித்துள்ளனர்.

சங்கிகளின் நாடகத்தைப் புரிந்து கொண்டவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. ஆகவே ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு இருப்பதாக ஒரு பிரம்மாண்டம் காட்டப்பட்டாலும் அந்த போராட்டத்தை அரசியல் ஆதாயம் என்று மறுக்கும் பெரும்பான்மை இங்கே மவுனமாக இருக்கிறது.

எந்த மதம் ஆண்களுக்கு இணையான சமத்துவத்தை பெண்களுக்கு வழங்குகிறது என்ற கேள்வுக்கு , ஆண்களில் 41.56% பேர் எந்த மதமும் இல்லை என்றும், 41.55% பேர் இந்து மதம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 9.44% பேர் கிறிஸ்தவ மதம் என்று குறிப்பிட்டுள்ளனர். 4.83% பேர் முசுலீம் உள்ளிட்ட இதர மதங்களை குறிப்பிட்டுள்ளனர். 2.62% பேர் அனைத்து மதங்களும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

பெண்களைப் பொறுத்தவரையில், எந்த மதமும் இல்லை என 51.09% பேர் தெரிவித்துள்ளனர். இந்து மதம் என்று 32.25% பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். கிறித்தவ மதம் என்று 10.87% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 4.35% பேர் முசுலீம் உள்ளிட்ட இதர மதங்களை குறிப்பிட்டுள்ளனர். 1.44% பேர் அனைத்து மதங்களும் சமத்துவத்தை வழங்குகின்றன எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதிலும் நாம் கவனிக்கத்தக்க சமூக யதார்த்தங்கள் நிறைய இருக்கின்றன. கடவுளும் ஆணும் இணைந்து வைத்த ஒடுக்குமுறைக் கூட்டணியில் மதவேறுபாடே இல்லை என்பதை பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் கருதுகிறார்கள்.

ஆண்களை விட பெண்களில் பெரும்பான்மையினர் மதங்களின் பெண்ணடிமைத்தனத்தை ஒத்துக் கொள்வதற்கு காரணம் அது அவர்களது யதார்த்த வாழ்க்கையோடு தொடர்புடையது. இந்த சர்வேயில் கிறித்தவ மதத்தை 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தெரிவு செய்ததும் குறிப்பிடத் தக்கது. கருத்துக் கணிப்பில் இந்துக்களே மிக அதிகம் என்றாலும் கிறித்தவ மதத்தில் பாலின சமத்துவம் இருப்பதாக கணிசமான பெண்கள் நம்புகிறார்கள்.

முதல் இரண்டு கேள்விகளைப் பொறுத்தமட்டில், 18-25 வயதுடையவர்களில் சராசரியாக சுமார் 40% பேர் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். 50% பேர் மட்டுமே தீர்ப்பை எதிர்த்துள்ளனர். இவ்வயதினர், மூன்றாம் கேள்விக்கு வாய்ப்பிருந்தால் சபரிமலைக்கு குடும்பத்தோடு செல்வேன் என சுமார் 53% பேர் தெரிவித்துள்ளனர். செல்ல மாட்டேன் என 31.2% பேர் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு 18-25 வயதினர் 26–50 + வயதினர்
சரி 40% 25%
தவறு 50% 70%
கருத்து இல்லை 10% 5%

26 முதல் 50+ வரையிலான வயதினரில் சுமார் 70% பேர் தீர்ப்பு தவறு என்றும், 25% பேர் மட்டுமே தீர்ப்பு சரி என்றும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதிலிருந்து இளைய சமூகம் மாற்றத்தை எளிதில் ஏற்பதை அறியலாம்.

அதே போன்று பெண்கள் நுழைவை சில கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம் ஆன்மீகத்தின் பெயரில் அரசியல் என்பதை 18 வயது முதல் 49 வயது பிரிவினர் கிட்டத்தட்ட 40% பேர் ஏற்கிறார்கள். இந்து தர்மத்தைக் காக்க என்ற பதிலை முப்பது சதவீதம் பேரே சொல்கிறார்கள். இதே கேள்விக்கு 50 வயதிற்கு மேற்பட்டோரை எடுத்துக் கொண்டால் 45 சதவீதம் பேர் இந்து தர்மத்திற்காகவும், அரசியல் காரணத்தை 33 சதவீதம் பேரும் தெரிவு செய்திருக்கிறார்கள்.

பெண்கள் நுழைவை சில கட்சிகள் எதிர்க்கும் காரணம் 18-49 வயதினர் 50 + வயதினர்
ஆன்மிகத்தின் பெயரில் அரசியல் 40% 33%
இந்து தர்மம் காக்க 30% 45%
கருத்து இல்லை 30% 22%

எந்த மதம் பாலின சமத்துவத்தை வழங்குகிறது என்ற கேள்விக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களில் எந்த மதமும் இல்லை என்பதை கிட்டத்தட்ட 50% பேர் தெரிவு செய்திருக்கிறார்கள். இது இந்து மதத்தை தெரிவு செய்த 33% பேரை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

இதே கேள்விக்கு 36 வயது முதல் 50 + வயதுப் பிரிவனரில் இந்து மதம் 46%மாகவும், எந்த மதமும் இல்லை என்போர் 37%மாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. வயது ஆக ஆக மதத்தில் சரணடைவோர் சற்று அதிகரிக்கின்றனர்.

பெண்களுக்கு சமத்துவம் வழங்கும்
மதம்
18-35 வயதினர் 36-50 + வயதினர்
எந்த மதமும் இல்லை 50% 37%
இந்து 33% 46%
இதர மதங்கள் 17% 17%

ஆக இந்துத்துவத்தின் சமூக அடிப்படை என்பது வயதானவர்கள் என்பதும் இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் இளையோர் என்பதும் வெள்ளிடை மலை.

மொத்தத்தில் 30 சதவீதம் பேர் பெண்கள் நுழைவை ஏற்கிறார்கள். மாத விலக்கு நிற்கும் வரை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையக் கூடாது என்ற வழக்கத்தை ஆதரிப்போரும் கிட்டத்தட்ட மேற்கண்ட சதவீதம்தான். 40 சதவீதம் பேர் குடும்பத்துடன் ஐயப்பன் கோவிலுக்கு செல்வோம் என்கிறார்கள்.  பெண்கள் நுழைவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் நோக்கம் மதம் சார்ந்த அரசியல் என்பதை 40%த்திற்கும் மேற்பட்டோர் ஏற்கின்றனர். அதே எண்ணிக்கையில் எந்த மதமும் சமத்துவத்தை வழங்கவில்லை என்கின்றனர்.

தமிழகம் இந்துமதவெறியில் அவ்வளவு எளிதில் சிக்கிவிடாது என்பதற்கு இந்த சர்வே முடிவுகள் நம்பிக்கையூட்டுகின்றன. அதனால்தான் என்னவோ எச்.ராஜா முதல் அர்ஜுன் சம்பத் வரை ஆர்.எஸ்.எஸ் கூடாரம் இங்கே சதி வேலைகள் பலவற்றை தொடர்ந்து செய்கின்றன. முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து பார்ப்பனியத்திற்கு பாடை கட்டும் வேலையை செய்வதற்கு தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.

மக்கள் கருத்துகள்:

தீர்ப்புக்கு எதிரான கருத்துகள்:

“இந்துன்னா என்ன இளிச்சவாயங்களா சார் ? இதே மாதிரி மசூதிக்குள்ள முசுலீம் பொண்ணுங்களை அனுமதிக்கனும்னு சொல்லுவாங்களா? என்று சீறினார் ஒருவர்.

பட்டையும் கொட்டையுமாக அமர்ந்திருந்த ஒரு 45 வயதுக்காரரிடம் கருத்துக் கணிப்பு சீட்டைக் கொடுத்த போது ஆவேசத்தோடு “இந்த தீர்ப்பு கொடுத்த நீதிபதி ரொம்ப முட்டாள். அவனுக்கு பக்தியை பத்தி ஒன்னும் தெரியாது. காலங்காலமா பெண்கள் போகக் கூடாதுங்கிறதுதான் வழக்கம். அந்த வழக்கத்த மாத்த முடியுமா? ”என்றார்.

வயதான நடுத்தர வர்க்க பாட்டி ஒருவர் “பெண்களை கோவிலுக்குள்ள விட்டதால்தான் கேரளாவுல வெள்ளமே வந்துச்சு. இது போதாதா ?” என்று ஆவேசமாகக் கூறினார்.

“இந்து தர்மம் என்பதே சயின்ஸ்-தான். மாதவிலக்கு நேரத்துல கோயிலுக்குள்ள போனா அங்கிருக்குற பாசிட்டிவ் எனர்ஜியினால நமக்கு அதிகமா விலக்கு போகும். அதுனாலதான் நம்மள அங்க போக கூடாதுன்னு சொல்றாங்க.” என்று புதியதொரு ‘அறிவியல்’ விளக்கத்தை அளித்தார் கல்லூரி ஆசிரியை ருக்மணி.

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் சுமார் 40 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க இரண்டு பார்ப்பனப் பெண்கள், “I oppose this order. இத நோட் பண்ணிக்கோங்கோ. ஃபார்ம் எல்லாம் ஃபில்-அப் பண்ணி தரமுடியாது. ஒரே பதில்தான்” என்று ரொம்ப ‘ஸ்ட்ரிக்ட்’ஆக பதிலளித்தனர்.

நடேசன் பார்க்கில் இருந்த இளைஞர் ஒருவர், கருத்துக் கணிப்பு படிவத்தை நீட்டியதும், “கொடுங்க சார். இதைத்தான் எதிர்பாத்துகிட்டிருக்கேன். நான்கூட வக்கீல்தான். இந்து முன்னணியில் இருக்கேன். ஊரப்பாக்கத்துல ஆலோசனைக் கூட்டம் போட்டோம். உடனடியா பெரிய அளவில எதிர்ப்பக் காட்டியே ஆகணும்” என்றார் பரபரப்பாக.

“கோர்ட் தீர்ப்புக்கு எதிரா தமிழ்நாட்டுல எதிர்ப்பு இருக்குன்னு எழுதுங்க சார். மசூதியில பெண்கள் நுழையமுடியுமா? அது ஏன் இந்துக்களுக்கு மட்டும் இப்படியொரு சட்டம்? பெண்கள் கோவிலுக்குள் போகணுமுன்னா எவ்வளவோ கோயில் இருக்கு, அது ஏன் ஐயப்பன் கோவிலுக்குத்தான் போகணுமா?” என்று வினவினார் சுமார் 45 வயது ஆண் ஒருவர்.

அய்யப்பன் கோயிலுக்கு வருடந்தோறும் மாலை போடும் வழக்கமுடைய 30 -35 வயது கூலித் தொழிலாளி, கடுமையாக பேச ஆரம்பித்தார். “வடநாட்டுல ஒக்காந்துகிட்டு என்ன வேணாலும் தீர்ப்பு கொடுக்கலாமா? நாங்கள்லாம் 41 நாள் கடுமையா விரதம் இருந்து சுத்தபத்தமா கோயிலுக்கு போறோம். பொம்பளன்னாலே ஐயப்பனுக்கு ஆகாது. தப்பு சார்.” என்று படபடப்பாகவே பொரிந்துத் தள்ளினார்.

மற்றொரு புறத்தில் பொறுமையாக சிலர் விளக்கவும் செய்தனர்.

55 வயது பெரியவர் ஒருவர் பேசுகையில், “தம்பி… எல்லாக் கோவிலுக்கும் பெண்கள் போகும்போது அதுக்கு மட்டும் போகக் கூடாதுன்னு சொல்லுறதுல ஒரு அர்த்தம் இருக்கு… நம்ம ஆட்கள் 41 நாள் விரதம் இருந்து போறாங்க. அந்த இடத்துல பொம்பளங்கள விட்டா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாதுப்பா… மனிசனுக்கு இருக்கிறது மிருக குணம். அது எப்ப வெளிப்படும்னு யாருக்கும் தெரியாது. அந்த நேரத்துல கடவுள் சிந்தனையும் வராது… பக்தி எல்லாம் காணாமப் போயிடும், என பக்தர்களின் ஒழுக்கத்திற்கு சான்றளித்து சேம் சைடு கோல் அடித்தார்.

தீர்ப்புக்கு ஆதரவுக் குரல்கள்:

எதிர்ப்புக் குரல்களைப் போல் இத்தீர்ப்புக்கு ஆதரவுக் குரல்களும் கேட்டன. குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தாம் ஏன் செல்லக் கூடாது என்ற கேள்வியையே முன் வைத்தனர்.

மெரினா கடற்கரை.

இராட்டினம் சுற்றும் பெண் ஒருவர் ”நான் கண்டிப்பா போய் பார்ப்பேன். பொம்பளைதான் சக்தி அவ போகக்கூடாது, தீட்டுன்னா எப்படி?” என்று வினவினார்

முப்பத்தைந்து வயது துப்புரவுத் தொழிலாளி ஒருவர், “போகலான்னுதான் ஆசை. எங்க நேரமிருக்கு? வேலையே சரியா இருக்கு. போறதுக்கு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா போவேன். சாமிய பார்க்கிறதில என்ன குத்தம் இருக்கு” என்றார்.

“ஏன் பொம்பளைங்க கோயிலுக்கு போக கூடாது?. 41  நாள் விரதம் இருந்து ஆம்பள கோயிலுக்கு போயிட்டு திரும்ப வர வரைக்கும் வீட்ட சுத்தபத்தமா வச்சிக்கிறது பொம்பளைங்கதான். ஆம்பளைங்க சரியா விரதம் இருக்குரதுக்கே பொம்பளைங்க தான் கரணம். எவ்ளோ வழக்கம் மாறிடுச்சு. இதும் மாறிடும்” என்றார் சென்னை சின்ன திருப்பதி கோவிலில் பூ விற்கும் அம்மா ஒருவர்.

“நான் ஐயப்பன் சாமி பக்தை. சின்ன வயசுல மூணு வாட்டி போய் வந்திருக்கேன். நான் கேட்டு இதுவரைக்கும் ஐயப்பன் இல்லைன்னு சொன்னதில்ல. இப்பவும் கண்டிப்பா போவேன். எங்களை ஐயப்பன்சாமி காப்பாத்துவார். முதல்ல போகணும்ன்னாதான் 48 நாள் விரதம் இருக்கணும் அப்புறம் 20 நாள்ல கூட போகலாம். பொண்ணுங்க போறது தப்பில்ல” என்கிறார் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 24 வயதுப் பெண் பிரியா.

“நான் கண்டிப்பா போவேன். சின்ன வயசுலேர்ந்து மாதவிலக்கை தீட்டுன்னு சொல்லி நம்ம வளர்த்துட்டாங்க. அந்த நேரத்துல மட்டுந்தான் போக மாட்டேன். பொம்பளைங்க போக கூடாதுன்னு போராட்டம் பண்றாங்களே.. சாமி வந்து இவங்ககிட்ட சொல்லுச்சா, இந்து தர்மத்தை காக்க சொல்லி ?” என்று பளீரெனக் கேட்டார் 25 வயது பி.ஈ.பட்டதாரி சவுந்தர்யா

தி.நகரிலுள்ள சின்ன திருப்பதி கோவில்.

சின்ன திருப்பதி கோவிலுக்கு வந்து சென்ற பெண் பக்தர் ஒருவரோ, “கண்டிப்பா ஐயப்பன் கோயிலுக்கு போறதுக்கு பெண்களுக்கும் உரிமை இருக்குங்க. இந்தியாவுல சராசரி வயது 60-ன்னு சொல்றாங்க.  இவுங்க சொல்றபடி 50 வயசுக்கு அப்புறம்தான் போகணும்னா என்னைக்குமே பொம்பளைங்களுக்கு வாய்ப்பே இல்ல. ஆனா உண்மையில ஆணும் பெண்ணும் இங்க சமமா இல்லையே சார்” என்றார்.

நடேசன் பூங்காவில் அமர்ந்திருந்த 70 வயது மிக்க பெரியவர் ஒருவர் பேசுகையில், “பெண்களுக்குத் தெரியும் சார் எப்போ சாமி கோவிலுக்கு போகணும், போகக்கூடாதுன்னு ! ஆம்பளைங்க சுத்தமா இருக்கிறதா சொல்றாங்க. உள்ள மொத்தமுமே நாத்தம்தான். கொலை, கொள்ளையடிக்கிறவன் கூட மாலை போடுறான். பெண்கள் பெரும்பாலும் உண்மையாத்தான் இருப்பாங்க. ஐயப்பன் கன்னி சாமிங்கிறதனால பொம்பளைங்க போனா ஆவாதுனு சொல்றாங்க. விநாயகருக்கு கூடதான் கல்யாணம் ஆகல. ஆனால் எல்லா பெண்களும் விநாயகர் கோயிலுக்கு தவறாம போயிட்டுதான இருக்காங்க ?” என்றார்.

”கோயில் பொதுவானது… யார் வேணாலும் போகலாம்.” இது வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் கோகுலின் கருத்து.

குடும்பமாக வந்தவர்களிடையே நடந்த உரையாடல்கள்:

தனி நபர்களின் கருத்துக்கள் இவ்வாறிருக்க, குடும்பமாக, நண்பர்களோடு வந்திருந்தவர்கள் கருத்துக் கணிப்பு படிவத்தை நிரப்புவதற்குள்ளே தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினர்.

திருத்தணி செல்லும் இரயிலில் படிவத்தை பூர்த்தி செய்யும் தாயும் மகனும்.

திருத்தணிக்குச் செல்லும் இரயிலில், அப்பாவும், அம்மாவும் படிவத்தை பூர்த்தி செய்கையில் 7வது படிக்கும் அவர்களது மகள், தன் தாயிடம் “கோர்ட் உத்தரவு சரின்னு போடும்மா” என்றார். “அதல்லாம் உனக்கு புரியாது. சும்மா இரு” என்றார். ஆனால் அந்த சிறுமியோ, “அதெல்லாம் அப்போ… இப்போ எல்லாம் போகலாம். ஏன் போகக்கூடாது? போ., நான் போவேன். சரினு எழுதி கொடும்மா” என்று அடம்பிடித்து நச்சரித்தாள்.

தாய், தந்தை, 15 – 16 வயது மதிக்கத்தக்க இரண்டு மகள்களோடு பயணம் செய்து கொண்டிருந்த மற்றொரு குடும்பத்தில் ”கோர்ட் உத்தரவு தப்பு. அவ்ளோ கூட்டத்துல பெண்கள் போக முடியுமா? என்று மகள்களிடம் கூறினார். அதற்கு அவர்கள் இருவரும் ”அதெல்லாம் போகலாம். கூட்டத்த கட்டுப்படுத்த ஏதாவது அரேஞ்ச் பண்ணுவாங்க” என்றனர். தாயோ விடாமல், “அவ்ளோ கூட்டத்துல ஆம்பளையும் பொம்பளையும் ஒன்னா சேர்ந்து எப்படி நிப்பாங்க? ஆம்பள போலீசு கைய வச்சி தள்ளி விடுவான், பரவாயில்லையா?” என்றார். மகள்கள் இருவரும் “ஏன் பொம்பள போலீசு இருப்பாங்கதானே” என்றனர்.

திருத்தணி மலைக் கோயில்.

“பெண்கள் கோவிலுக்கு வந்தாங்கன்னா, அவங்களுக்கு எப்போ வேணும்னாலும் எதுவும் நடக்கலாம் (மாதவிலக்கு). அது கட்டுப்படுத்த முடியாது. இந்த உத்தரவு தப்பு” என்றார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர். அவருடனிருந்த அவரது நண்பரோ உடனடியாக அதனை மறுத்தார். “அது இயற்கையானது. தீட்டுன்னு ஒதுக்குறது தப்பு. அவங்க கோவிலுக்கு போறதை நான் ஆதரிக்கிறேன்” என்றார்.  “இந்து மதத்தில அதெல்லாம் தப்புடா. தப்புன்னு டிக் பண்ணுடா” என நண்பரை வலியுறுத்தினார் அந்த இளைஞர். ஆனால் நண்பரோ, “நானும் இந்துதான். என்ன பொறுத்தவரைக்கும் போகலாம்னுதான் செலக்ட் பண்ணுவேன்” என்றார்.

திருத்தணி கோயில்.

ஆணாதிக்க சிந்தனை கொண்ட கணவனை, அவரது மனைவி மூக்குடைபடச் செய்த சம்பவமும் திருத்தணி கோவிலில் நடந்தது. குடும்பத்தில் இருவருக்கும் 30 – 35 வயதிற்குள் இருக்கும். தனித்தனியே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.“கடைசி கேள்விக்கு என்னங்க போடுறது” எனக் கேட்டார் மனைவி.

“இந்து மதம்னு போடுடி… கிறிஸ்டினும், முஸ்லிமும்தான் சம உரிமை கொடுக்குறானா?” என அதிகாரத்தோடு உத்தரவிட்டார் கணவர்.

“தெரியும் நீங்க இததான் சொல்வீங்கன்னு..  பட், திஸ் இஸ் மை ரைட்ஸ்.. நான் கிறிஸ்டியன்தான் ’சூஸ்’ பண்ணுவேன்” என்று நக்கலாக கணவருக்கு பதிலளித்தவாறே பூர்த்தி செய்து கொடுத்தார் அந்த ‘இந்துப்’பெண்.

மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

5

நேற்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அறையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ தொடர்பாக ஒரு விவாதம் ஓடிற்று.

வில்லவன்

“அந்தப் பொண்ணு ஒரு ஐட்டமா இருக்கும்” என ஆரூடம் சொல்கிறார் ஒருவர்.

“அது எப்படி குழந்தை பிறக்கும் வரை ஒரு குடும்பம் விட்டு வைக்கும்?” என ஐயமெழுப்புகிறார் இன்னொருவர்.

“இதெல்லாம் பிளான் பண்ணி பிளாக்மெயில் பண்ற குடும்பம் போலருக்கு” என்கிறது இன்னொரு குரல்.

“கூப்பிட்டது அமைச்சர்ங்கறதால போயிருப்பா” என்றொரு கருத்தும் வந்தது.

அத்தனை பேரும் அந்த பெண்ணும் அவர் தாயாரும் அமைச்சரை வளைக்கும் நோக்கில் அங்கே போயிருப்பார்கள் என்றே தீர்மானமாக நம்புகிறார்கள். அதில் இருப்பது ஜெயக்குமார் குரலா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, அதில் அவர் தவறு என்ன இருக்கிறது எனும் சிந்தனையே அவர்களிடம் மேலோங்கி நின்றது.

அத்தனை பேரும் அந்த பெண்ணும் அவர் தாயாரும் அமைச்சரை வளைக்கும் நோக்கில் அங்கே போயிருப்பார்கள் என்றே தீர்மானமாக நம்புகிறார்கள். அதில் இருப்பது ஜெயக்குமார் குரலா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

நேற்று  நடிகை அமலா பால் தன்னிடம் இயக்குனர் சுசி.கணேசன் அநாகரீகமாக நடந்துகொண்டார் என குற்றம் சாட்டுகிறார். உடனே முகநூலில் இப்படி ஒரு எதிர்வினை வருகிறது “உன் புருசனோட ஒழுங்கா வாழ வக்கில்லை! நீ பத்தினின்னு நிரூபிச்சுட்டு அடுத்தவன் மேல கம்ப்ளெயிண்ட் பண்ணு.” என்பது பெரும்பான்மை தரப்பின் பொது விதியாக இருக்கிறது.

இதே கண்ணோட்டம்தான் சின்மயி விவகாரத்திலும் காணக்கிடைக்கின்றது. பாண்டே அவரிடம் நடத்திய நேர்காணல் வார்த்தைகளால் நடத்தப்பட்ட வன்முறை, தாம்ப்ராஸ் நாராயணன் அய்யங்கார் தேவடியாள் என வர்ணித்ததைவிட கேவலமாக இருந்தது பாண்டேவின் கேள்விகள்.

பொதுவாக பாண்டேவை கழுவி ஊற்றுவதற்க்கு பேரார்வத்தோடு காத்திருக்கும் முகநூலில் இது விமர்சிக்கப்படவேயில்லை. சின்மயியின் முந்தைய நடவடிக்கைகள் வாயிலாக அவர் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது எனும் வாதம் அத்தனை நியாயமானது அல்ல. காரணம் வைரமுத்துவின் வரலாறும் மெச்சத்தக்கது இல்லை.

படிக்க :
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?
♦ #MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !

நாம் எல்லா சமயங்களிலும் நம் வெறுப்பை ஒரே அளவில் வெளிப்படுத்துவதில்லை. இந்துத்துவ பொறுக்கிகள் வைரமுத்துவை இலக்கு வைத்து தாக்கியபோது நாம் அவரது வரலாற்றை ஆராயவில்லை. இன்னும் பெரிய உதாரணம் வேண்டுமானால், சசிகலா தினகரன் மீதான தமிழக மக்களின் வெறுப்பு எத்தகையது? ஆனாலும் அவர்களை பாஜக ஒழிக்க முனைந்த போது இந்த கும்பல் (சசிகலா) இப்படியாவது நாசமாகட்டும் என அனேகர் கருதவில்லை. மாறாக அதிலும் பாஜகவின் மீதான எதிர் நிலைப்பாடே வலுவாக இருந்தது. ஆக இங்கே நம்மை (அதாவது பெரும்பான்மை சமூக ஊடக கருத்தாளர்கள்) சின்மயிக்கு எதிராக நிறுத்தி வைரமுத்துவுக்கு மவுன ஆதரவை வழங்க வைக்கும் காரணி எது?

ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நமது பெரும்பாலான நடத்தைகளும் நடவடிக்கைகளும் தானியங்கி செயல்பாடுகள் (ஆட்டோமேட்டிக்). அதில் நமது சமூக கற்றல் பெருமளவு தாக்கம் செலுத்தும். கம்யூனிசம் மற்றும் பெரியாரிசத்தை ஏற்றுக்கொண்டவர்களிடத்திலும் பகுதியளவுக்கான ஆணாதிக்க மனோபாவம் இருக்கும். அதனை ஒப்புக்கொள்ளவும் பிறகு சீர்திருத்திக்கொள்ளவும் தயாராய் இருக்கிறோமா என்பதை வைத்தே ஒரு கம்யூனிஸ்ட்டையும் பெரியாரிஸ்ட்டையும் மதிப்பிட வேண்டும்.

சின்மயி விவகாரத்தில் பாண்டே அவரிடம் நடத்திய நேர்காணல் வார்த்தைகளால் நடத்தப்பட்ட வன்முறை.

ஆகவே மீ டூ விவகாரத்தில், குறிப்பாக சின்மயி தொடர்பான நமது (சமூக வலைதளங்களில் இயங்கும் இடதுசாரி மற்றும் திராவிட சார்புடையவர்கள்) எதிர்வினைகளை இந்த கோணத்தில் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சின்மயி, கவிஞர் வைரமுத்துவோடு பணியாற்றிய தருணங்களில் நிகழ்ந்த பாலியல் தாக்குதல் குறித்து ஒரு ட்வீட் போடுகிறார். வழக்கமாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் அது நிகழ்ந்திருக்க சாத்தியம் இருக்கிறதா என ஆராய்வோம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் மும்பை குழு நடனப் பெண் ஒருவர் அபிஷேக் பச்சன் தன்னை மணந்துகொண்டதாக குற்றம் சாட்டினார். அவர் விவரித்த சம்பவம் யதார்த்தத்துக்கு முற்றிலும் பொருந்தாததாக இருந்தது (பார்ட்டியில் சந்தித்தார், எனக்கு பொட்டு வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டார் என சொன்னதாக நினைவு). அப்படியான ஒரு பிறழ் நடவடிக்கையாக சின்மயியின் குற்றச்சாட்டு இல்லை.

இது நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது. மேலும் சினிமாத்துறை மீதான பொதுவான அபிப்ராயம், இதெல்லாம் அங்கு சாதாரண நிகழ்வு என்பதுதான்.

ஏ.ஆர்.ரஹமானின் சகோதரி ரைஹானா வைரமுத்துவின் பாலியல் சீண்டல்கள் சினிமாத்துறையின் வெளிப்படையான ரகசியம் என்கிறார். வைரமுத்துவிடம் இதே வடிவத்திலான பாலியல் தாக்குதல்களை எதிர்கொண்டதாக ஒரு பெண் வெளிப்படையாக தன் பெயரைக் குறிப்பிட்டே குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த தொடர் கருத்துக்களை வைத்துப் பார்க்கையில் வைரமுத்து இதனை செய்திருக்க முகாந்திரம் இருக்கிறது என நாம் சந்தேகித்திருக்க வேண்டும். ஆனாலும் நாம் சின்மயி எனும் பாடகியிடம் குற்றம் கண்டுபிடிப்பது எனும் புள்ளியில் இருந்து நகரவில்லை.

எலைட் ஃபெமினிசம், பார்ப்பன பெண் ஆகிய காரணங்கள் மட்டுமே வைரமுத்துவை நிரபராதி என நம்ப போதுமானவையா? அல்லது நாம் வெறுக்கத்தக்க ஒரு வரலாற்றைக்கொண்ட பெண்மணிக்கு இப்படி ஒரு பாலியல் சீண்டல் நடந்திருந்தால்தான் என்ன எனும் பழியுணர்ச்சியா?

இதன் பலனாக நாம் இரண்டு வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம். ஒரு போலியான தெய்வீக இமேஜை உருவாக்கி வைத்துக்கொண்டு இந்த கர்னாடக சங்கீத கும்பல் ஆடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. பார்ப்பனீயத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களில் முக்கியமானது இந்த இந்த கர்னாடக சங்கீதம்.

பார்ப்பனரல்லாத சாதிப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு பார்ப்பன குரு கிடைத்துவிட்டால் அடையும் மகிழ்ச்சி அளவில்லாதது. பார்ப்பனர்கள் தங்கள் தனிப்பட்ட அடையாளமாக கருதுவதும் கர்னாடக சங்கீதத்தைத்தான். ஆகவே இந்த “குரு”க்கள் தொடும் எல்லைக்குள் சிறார்களும் இளையோர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்.

மீ டூ நகர்வுகளில் சின்மயியின் பாத்திரம் இந்த தெய்வீக இமேஜை உடைப்பதற்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பம். சின்மயி மீதான வெறுப்பிலும் “நீ என்ன பத்தினியா” எனும் இந்தியாவின் பிரத்தியோக சிந்தனையின் விளைவாக நாம் அந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம். ஒரு குறைந்தபட்ச விளக்கம்கூட கொடுக்க அவசியமில்லாமல் அந்த பார்ப்பன கும்பல் தப்பித்திருக்கிறது.

படிக்க:
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

இந்த விவகாரத்தில் அம்பலமான கதைகளை பேசுபொருளாக்கியிருந்தால் இன்னும் அதிகமான பெண்கள் அம்பலத்துக்கு வராத பல “குரு”க்களின் உண்மை முகத்தை தோலுரித்திருக்கக்கூடும். அவர்களிடம் சிக்குண்டிருப்பது பெரும்பாலும் பார்ப்பன குழந்தைகள்தான், அவர்களைக் காக்க வேண்டியதும் நம் பொறுப்பு இல்லையா?

பெரியாரது பெண்ணுரிமை செயல்பாடுகளின் முதல் பலனாளிகள் பார்ப்பன பெண்கள்தான். அதற்காக அவர் அச்செயலை நிறுத்திக்கொண்டாரா என்ன!

சின்மயியை மட்டும் இலக்கு வைக்கும் நமது பொது எதிர்வினையின் இன்னொரு கோணம்தான் என்னை பெரிதும் அச்சமூட்டுகிறது. சிறார்களுடன் பணியாற்றும் எந்த ஒரு ஆற்றுப்படுத்துனரிடமும் கேளுங்கள். அவர்களிடம் சில பாலியல் வன்முறை கதைகள் கிடைக்கும்.

மகளிடம் வல்லுறவு கொள்ளும் அப்பா அதனைக் கண்டும் கண்டிக்க முடியாத அம்மா, அப்பாவோடு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனும் மாணவி தினசரி அதே அப்பாவோடு பள்ளிக்கு வருகிறார், பாலுறவு என்றால் என்னவென்று அறிய இயலாத வயதில் அதற்கு அறிமுகமாகி பிறகு அதனை இயல்பானதாக கருதி ரசிக்கும் சிறுமிகள், பாலியல் வன்முறையை தமது தவறாக கருதி குற்ற உணர்வில் தன்னைத்தானே சபித்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் என பட்டியலில் அடங்காத கேஸ் ஹிஸ்டரிகள் எங்கள் வட்டாரத்தில் கிடைக்கின்றன. பொது வெளியில் புழங்கும் முன்முடிவுகளும் எள்ளலும் இப்படியான குழந்தைகளிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் யோசிப்பதே இல்லை.

சின்மயிக்கும் நமக்கும் (சமூக ஊடக நண்பர்கள்) இருக்கும் தகராறு வெளியில் இருக்கும் பலருக்கும் தெரியாது. அப்படியான சூழலில் இத்தகைய விமர்சனங்களைக் படிக்கின்ற மற்றும் பாண்டே வகையறா (அந்த பிரஸ் மீட் நிருபர்களும்) ஆட்களின் வல்லுறவுக்கு நிகரான கேள்விகளும் இளையோர் மற்றும் மாணவர்களிடையே என்ன செய்தியை கொண்டுசெல்லும்?

இப்படி பாதிப்புக்கு ஆளாகும் பெண்கள் / மாணவர்கள் எண்ணிக்கை நாம் நினைத்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் மிக அதிகம். இப்படியான சமூக எதிர்வினைகள் அவர்களை மேலும் மேலும் மனரீதியாக முடமாக்கலாம். அது பாலியல் குற்றவாளிகளை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் கருவுற்றிருப்பதை பிரசவம் வரை அறியாத பெற்றோர்கள் இருப்பதை சமீபத்தில் வந்த செய்தியொன்று சுட்டிக்காட்டுகின்றது. ஆசிரியர்கள் பேஸ்புக் பொதுக்கருத்தினையே வெளிப்படுத்துகிறார்கள். இதன் அபாயகரமான பின்விளைவுகளை யார் எதிர்கொள்வது?

வயாக்ரா புழக்கத்துக்குப் பிறகு வசதியான/ செல்வாக்கான கிழவர்கள் இப்படியான சீண்டல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்கிறார் உளவியலாளரான நண்பர் ஒருவர் (ஆளை மடக்கினால் போதும் எழுச்சிக்கு வயாக்ரா இருக்கிறது எனும் நம்பிக்கையில்).

ஊடகவியலாளர் சுகிதா தனக்கு தரப்பட வேண்டிய நீதிமன்ற ஆணையொன்றைப் பெற ஓராண்டு காத்திருந்ததாக சொல்கிறார். தொலைந்துபோன தமது ஆவணங்களைப் பற்றி புகார் கொடுத்து சி.எஸ்.ஆர் பெற ஒரு வாரம் அலைவதாக பதிவிடுகிறார். பிரபலமான ஒரு ஊடவியலாளரின் கதியே இப்படி இருக்கிறது. காதல் ஜோடிகளை அடாவடியாக பிரித்து பெண்ணை அப்பாவோடு கட்டாயப்படுத்தி அனுப்புகின்ற நீதிமன்றங்கள் இங்கிருக்கின்றன. இப்படி மிகக்கொடூரமான அமைப்புக்களை வைத்திருக்கும் நாம் சமூக ஊடகங்களையும் வழமையான போலீஸ் ஸ்டேஷன் போல மாற்றி எதை சாதிக்கப்போகிறோம்?

மீ டூ தவறாக பயன்படுத்தப்படலாமா என கேட்டால் அதற்கு வாய்ப்பு இருக்கின்றதுதான். அப்படியான வாய்ப்புக்கள் எல்லா குற்றங்களிலும் இருக்கின்றன. அதற்காக புகார் கொடுக்கும் எல்லோரையும் குற்றவாளிகள் போல நடத்த முடியாது.

பாலியல் சீண்டல் செய்யும் ஆட்கள் அடிப்படையில் கோழைகள். அதனால்தான் அவர்கள் தம்மிலும் மிக பலவீனமான ஆட்களை தெரிவு செய்கிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுக்களை நேர்மையோடும் கரிசனத்தோடும் அனுகுவதன் வாயிலாக நாம் எதிர்காலத்தில் பல பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். ஒப்பீட்டளவில் அதன் எதிர்மறை விளைவுகள் குறைவாகவே இருக்கும்.

எனக்கும் சின்மயியை ஆதரிக்க வேண்டும் எனும் விருப்பம் இல்லை. ஆனால் சின்மயியை எதிர்க்கவேண்டும் எனும் அல்ப நோக்கத்திற்காக ஒரு பெரும் சமூக விரோத செயலை இலகுவாக கடந்துபோக இயலாது. மீ டூ போன்ற இயக்கங்களை இன்னும் செம்மைப்படுத்தவும் இன்னும் பரவலாக கொண்டு செல்லவும் நாம் முயற்சிக்கலாம்.

அதனை பகடி செய்யவோ அல்லது அவளுக்கு நல்லா வேணும் என சாபமிடவோ நான் தயாரில்லை. இவ்விவகாரத்தில் எப்படி எதிர்வினையாற்றுவது என குழப்பத்தில் இருக்கும் நண்பர்களுக்கும் நான் இதையே பரிந்துரைக்கிறேன்.

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

தாய் பாகம் 11 : உண்மையான கடவுளைக் கூட நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிட்டார்கள்

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 11

றுநாள் புகின், சமோய்லவ், சோமவ் முதலியவர்களையும் வேறு ஐந்து பேர்களையும் கைது செய்துவிட்டதாகத் தெரியவந்தது. அன்றிரவில் பியோதர் மாசின் பாவெலின் வீட்டிற்கு வந்தான். அவனது வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறது. அந்தச் சோதனையால், தான் ஒரு வீரனாகிவிட்டதாகக் கருதி மிகவும் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தான்.

மாக்சிம் கார்க்கி

”நீ பயந்துவிட்டாயா, பியோதர்?” என்று கேட்டாள் தாய்.

அவன் வெளிறிப் போனான்; முகம் கடுகடுத்தது; மூக்குத் துவாரங்கள் நடுநடுங்கின.

“அந்த அதிகாரி என்னை அடித்துவிடுவான் என்று நான் பயந்தேன். அவன் பூதாகாரமாக இருந்தான். கரிய தாடி மயிரடர்ந்த கைகள். கண்களே இல்லாது போனவன் மாதிரி கறுப்பு மூக்குக் கண்ணாடி வேறு மாட்டியிருந்தான். அவன் ஆங்காரமாகச் சத்தமிட்டு, தரையைக் காலால் மிதித்தான். ‘உன்னை நான் சிறையில் போடுவேன்’ என்று கத்தினான். என்னை இதுவரையிலும் யாரும் அடித்ததில்லை. என் தாயும் தந்தையும் கூட அடித்ததில்லை. நான் அவர்களுக்கு ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை.”

அவன் கண்களை ஒரு கணம் மூடினான். உதடுகளைக் கடித்துக்கொண்டான்; இரண்டு கைகளாலும் தலைமயிரைப் பின்புறமாகத் தள்ளிவிட்டுக்கொண்டான். பிறகு செக்கச் சிவந்த கண்களோடு பாவெலைப் பார்த்துச் சொன்னான்

”எவனாவது என்னை அடிக்கத் துணிந்தால் மூமூ அவ்வளவுதான் – நான் ஒரு வாளைப்போல் அவன் மீது பாய்ந்து சாடுவேன், என் பற்களால் கடித்துக் குதறுவேன். அவர்கள் வேண்டுமானால் என்னைக் கொன்று தீர்க்கட்டும்; அத்துடன் இந்த உயிர் போகட்டும்!”

”நீ ஒரு நோஞ்சான். சண்டைக்கே லாயக்கில்லை” என்றாள் தாய்.

“இருந்தாலும் சண்டை போடத்தான் செய்வேன்!” என்று அடி மூச்சுக் குரலில் பதிலளித்தான் பியோதர்.

பியோதர் போன பிறகு தாய் பாவெலை நோக்கிச் சொன்னாள்: ”எல்லோரையும்விட இவன்தான் முதலில் ஓடப்போகிறான்.”

பாவெல் பதில் பேசவில்லை .

சில நிமிட நேரத்தில், சமையலறைக்கு அடுத்துள்ள வாசற் கதவு திறக்கப்பட்டது. ரீபின் உள்ளே வந்தான்.

‘வணக்கம்’ என்று இளஞ்சிரிப்போடு சொன்னான் அவன். “நான் பழையபடி வந்துவிட்டேன். நேற்று ராத்திரி அவர்கள் என்னைக் கொண்டு வந்தார்கள்; இன்று நானாக வந்திருக்கிறேன். அவன் பாவெலின் கையைப் பிடித்துக் குலுக்கினான்; பெலகேயாவின் தோளில் கையைப் போட்டுக்கொண்டான்.

”எனக்குத் தேநீர் கிடைக்குமா” என்று கேட்டான்.

அடர்ந்து வளர்ந்த கரிய தாடியும், கறுத்த கண்களும் கொண்ட அவனது அகன்ற பழுப்பு முகத்தைக் கண்களால் மெளனமாய் அளந்து நோக்கினான் பாவெல். அவனது அமைதியான பார்வையில் ஏதோ ஓர் அர்த்தம் தொனித்தது.

தாய் தேநீருக்குத் தண்ணீர் போடுவதற்காக அடுக்களைக்குச் சென்றாள். பின் உட்கார்ந்து, தனது முழங்கைகளை மேஜை மீது ஊன்றி பாவெலையே பார்த்தான்.

”எவனாவது என்னை அடிக்கத் துணிந்தால் மூமூ அவ்வளவுதான் – நான் ஒரு வாளைப்போல் அவன் மீது பாய்ந்து சாடுவேன், என் பற்களால் கடித்துக் குதறுவேன். அவர்கள் வேண்டுமானால் என்னைக் கொன்று தீர்க்கட்டும்; அத்துடன் இந்த உயிர் போகட்டும்!

“சரி” என்று ஏதோ ஒரு சம்பாஷணையில் குறுக்கிட்டுப் பேசும் தோரணையில் பேச ஆரம்பித்தான் அவன், “உன்னிடம் நான் ஒளிவு மறைவில்லாமல் சொல்ல விரும்புகிறேன். உன்மீது கொஞ்ச காலமாய் எனக்கு ஒரு கண்தான். நானும் உனக்குப் பக்கத்து வீட்டிலேதான் குடியிருக்கிறேன். உன் வீட்டுக்கு நிறையப் பேர் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் குடிப்பதைக் காணோம், கூச்சலையும் காணோம். அதுதான் முதல் காரணம். கலாட்டா பண்ணாமல் இருக்கிறவர்களை எல்லாரும் உடனே கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஏனடா இப்படி இருக்கிறார்கள்? என்று அதிசயப்படுகிறார்கள். நான் ஒதுங்கி வாழ்கிறேனா, அது அவர்கள் கண்களை உறுத்திவிட்டது!”

அவனது பேச்சு அமைதியாகவும் அழுத்தமாகவும் ஒலித்தது. பேசும்போது அவன் தனது கரிய கரத்தால் தாடியை வருடிவிட்டுக்கொண்டே, பாவெலின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.

“ஊரில் உன்னைப்பற்றி எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். உதாரணமாக, என் எஜமான் உன்னை ஒரு மதத் துரோகி என்கிறார். நீ தான் தேவாலயத்துக்கே போவதில்லையே. நானும் போகவில்லை. பிறகு அந்தப் பிரசுரங்கள் வந்து சேர்ந்தன. அதுவும் உன் வேலையா?”

“ஆமாம்” என்றான் பாவெல்.

“நீ என்ன சொல்கிறாய்?” என்று சமையலறையிலிருந்தவாறு தலையை நீட்டிக்கொண்டு வந்து கேட்டாள் அவனது தாய். ”அதை நீ மட்டுமே செய்யவில்லை!”

பாவெல் சிரித்தான்; ரீபினும் சிரித்தான்.

”ரொம்ப சரி” என்றான் ரீபின்.

தனது வார்த்தைகளை அவர்கள் மதியாததைக் கண்டு மனம் புண்பட்ட மாதிரி சிணுங்கிக்கொண்டு உள்ளே போய்விட்டாள் தாய்.

”அந்தப் பிரசுரங்கள் இருக்கிறதே. அருமையான வேலை. மக்களைத் தூண்டிவிட்டுவிட்டன; மொத்தம் பத்தொன்பது. இல்லை?”

“ஆமாம்” என்றான் பாவெல்.

”அப்படியென்றால் நான் அத்தனையையும் படித்துவிட்டேன். அதிலுள்ள சில விஷயங்கள் தெளிவாக இல்லை; சில தேவையில்லாதவை. ஆனால், எவ்வளவோ விஷயங்களை ஒரு மனிதன் சொல்ல வேண்டியிருக்கும் போது இப்படி ஒன்றிரண்டு தப்பிப்போவது சகஜம் தான்.”

ரீபின் தனது வெள்ளைப் பற்கள் வெளியே தெரியும் வண்ணம் புன்னகை செய்தான்.

பிறகுதான் சோதனை நடந்தது. அதுதான் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. நீயும் அந்த ஹஹோலும் நிகலாயும் நீங்கள் எல்லாரும்……”

சொல்வதற்குச் சரியான வார்த்தை வாய்க்கு வராமல், அவன் பேச்சை நிறுத்திவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தான்; மேஜை மீது கைவிரல்களால் தாளம் கொட்டினான்.

“நீங்கள் எல்லாரும் உங்கள் உறுதியைக் காட்டிவிட்டீர்கள் மூமூஓ. பெரியவர்களே, உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள், நாங்கள் எங்கள் வழியில் போகிறோம் என்று சொல்வது மாதிரி இருந்தது. அந்த ஹஹோல் ரொம்ப அருமையான ஆசாமி. தொழிற்சாலையிலே அவன் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் எனக்குள் நினைத்துக்கொள்வேன் – இந்த ஆசாமியை எதுவும் அசைக்க முடியாது. சாவு ஒன்றுதான் இவனைச் சரிக்கட்டும். உருக்கினாலான பிறவி இவன்!  பாவெல், நான் சொல்வது உண்மைதானே?”

“ஆமாம்” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் பாவெல்.

சோகத்தைத் தாங்கித் திரிவதற்கு நாம் பழகிப்போய்விட்டோம். இதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாரும் தங்கள் கண்களை இருட்டடிப்புச் செய்து கொள்வதில்லை. சிலர் தாங்களாகவே கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

“நல்லது! என்னைப் பார். எனக்கு நாற்பது வயதாகிறது. உன்னை விட இரட்டை வயது. உன்னை விட இருபது மடங்கு அனுபவம் எனக்கு உண்டு. மூன்று வருஷத்திற்கு மேல் நான் பட்டாளத்தில் வேலை பார்த்தேன். இரண்டு தடவை கல்யாணம் பண்ணினேன். முதல் தாரம் செத்துப்போனாள். இரண்டாவது பெண்டாட்டியை நானே விரட்டியடித்துவிட்டேன். காகஸஸிலும் இருந்திருக்கிறேன். துகபர்தசி(1)களையும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு வாழ்க்கையைச் சமாளிக்கத் தெரியாது. தெரியவே தெரியாது, தம்பி!”

அவனது நேரடியான பேச்சை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். இத்தனை வயதான ஒரு மனிதன் வந்து தனது மகனிடம் அவனது உள்ளத்தில் கிடந்ததையெல்லாம் திறந்து கொட்டிப் பேசுவதைக் காண்பது அவளுக்கு இன்பம் அளித்தது. ஆனால், பாவெல் நடந்து கொள்ளும் முறையோ சுமூகமாக மாற்றியிருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. எனவே தானாவது அவனுக்கு அன்பு காட்டி, அந்த வயோதிகனின் பேச்சுக்கு ஈடுகட்ட வேண்டும் என்று நினைத்தாள்.

“மிகயீல் இவானவிச்! ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று கேட்டாள்.

“கேட்டதே போதும், அம்மா. நான் சாப்பிட்டாயிற்று. பாவெல், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கவில்லை என்பதுதானே உன் எண்ணம்?”

பாவெல் இடத்தைவிட்டு எழுந்து, கைகளை முதுகுப்புறமாகக் கட்டிக்கொண்டு மேலும் கீழும் நடந்தான். .

வாழ்க்கை சரியான பாதையில்தான் போகிறது” என்று பேச ஆரம்பித்தான் பாவெல்; உங்களைக் கூடத் திறந்த மனத்தோடு இங்கு கொண்டு வந்து சேர்க்கவில்லையா? வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் நம் போன்றவர்களை அது கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று சேர்க்கிறது; நம் அனைவரையும், ஒவ்வொருவரையும் ஒன்று சேர்க்கும் காலமும் வந்தே தீரும். வாழ்க்கை என்பது நமக்கு இன்று ஒரு பெரும் பாரமாகவும் அதீதமாகவும் இருக்கிறது. ஆனால் அதே வாழ்க்கைதான் தனது கசப்பான உண்மையை நமது கண்ணுக்கு முன்னால் காட்டுகிறது: வாழ்க்கைப் பிரச்சினைகளை நாம் எப்படி விரைவில் தீர்ப்பது என்பதற்கும் அதுவே வழிகாட்டுகிறது.”

”அப்படிச் சொல்லு, அதுதான் உண்மை” என்றான் ரீபின். ”மக்கள் அனைவரையும் பரிபூரணமாகச் சீர்படுத்தியே ஆகவேண்டும். ஒரு மனிதன் அசுத்தமாயிருந்தால், அவனைக் கொண்டுபோய்க் குளிப்பாட்டி, துடைத்துத் துவட்டி, அவனுக்குச் சுத்தமான ஆடைகளை அணிவித்தால் சரியாகிவிடுவான். கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பான். இல்லையா? ஆனால், அவன் உள்ளத்தைச் சுத்தப்படுத்துவது எப்படி அதுதான் சங்கதி!”

பாவெல் தொழிற்சாலையைப் பற்றியும் தொழிற்சாலை முதலாளிகளைப் பற்றியும், உலகின் பிற பாகங்களிலுள்ள தொழிலாளர்கள் எப்படித் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் என்பது பற்றியும் உணர்ச்சிமயமாகப் பேசினான். சில சமயங்களில் பாவெலின் பேச்சுக்கு முத்தாய்ப்பு வைப்பது மாதிரி ரீபின் மேஜை மீது குத்துவான். இடையிடையே அவன் சொன்னான்.

”ஆமாம். அதுதான் சங்கதி!” ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னான்:

“நீ இன்னும் சின்னப்பிள்ளை. மனிதர்களைச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை.”

”சின்னவன் பெரியவன் என்று பேச வேண்டாம்” என்று ரீபினின் முன்னால் வந்து நின்றுகொண்டு கடுமையாகச் சொன்னான் பாவெல்;

“யார் சொல்வது சரி என்பதைப் பார்ப்போம்!”

”அப்படியென்றால் – நீ சொல்கிறபடி பார்த்தால் – நம்மை ஏமாற்றுவதற்காகத்தான் கடவுளைக் கூட உண்டாக்கியிருக்கிறார்கள் என்றாகிறது. இல்லையா? ஹும். எனக்கும் அப்படித்தான்படுகிறது. நமது மதம் – ஒரு போலி, பொய்.”

இந்தச் சமயத்தில் தாய் வந்து சேர்ந்தாள். அவளுக்கோ கடவுள் நம்பிக்கை அதிகம். அந்த நம்பிக்கை அவளைப் பொறுத்தவரையில் புனிதமானது: உயிருக்குயிரானது. எனவே தனது மகன் கடவுளைப் பற்றியோ கடவுள் நம்பிக்கையைப் பற்றியோ ஏதாவது பேச ஆரம்பித்தால், அவள் தன் மகனைக் கூர்ந்து பார்ப்பாள்; கூரிய நாத்திக வார்த்தைகளால் தன் இதயத்தைக் கீற வேண்டாம் என்று தன் மகனிடம் மௌனமாய்க் கெஞ்சுவது போல் இருக்கும் அந்தப் பார்வை. எனினும் அவனது நாத்திகத்திற்குப் பின்னால் நம்பிக்கை ஒன்றிருப்பதாக அவளுக்குப்படும். அந்த எண்ணமே அவளை ஓரளவு சாந்தப்படுத்தும்.

“அவன் எண்ணங்கள் எனக்கு எப்படிப் புரியும்?” என்று தனக்குள் நினைத்துக்கொள்வாள் தாய்.

கடவுள் தன் உருவம் போலவே மனிதனையும் படைத்தான் என்கிறார்களே, அதற்கு என்னம்மா அர்த்தம்? கடவுள் மனிதனைப்போல் இருக்கிறார்; மனிதன் கடவுளைப் போல் இருக்கிறான் என்பதுதானே. ஆனால், இன்றோ நாம் கடவுள் மாதிரி இல்லை, காட்டு மிருகங்கள் மாதிரி இருக்கிறோம். தேவாலயத்தில் பூச்சாண்டிதானம்மா இருக்கிறது.

பாவெலின் பேச்சு, வயதான ரீபினின் மனதைக் கூடப் புண்படுத்தி இருக்கும் என்று அவள் கருதினாள். ஆனால், ரீபினே அமைதியுடன் பாவெலை நோக்கி அது பற்றிக் கேட்டதைக் கண்டு அவளால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

“கடவுளைப் பற்றிப் பேசும்போது மட்டும், கொஞ்சம் ஆற அமரப் பேசு, அப்பா!” அவள் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு விட்டு அதிகமான உத்வேகத்தோடு பேசினாள்: ”நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்! ஆனால் நானோ கிழவி. எனக்கோ, என் கடவுளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு மட்டும் போய்விட்டால், என் துயரத்தைச் சொல்லியழக்கூட ஒரு துணையிராது!”

அவளது கண்களில் கண்ணீர் நிரம்பி நின்றது. தட்டுக்களைக் கழுவும்போது அவளது கைவிரல்கள் நடுங்கின.

“நீங்கள் எங்களைப் புரிந்து கொள்ளவேயில்லை, அம்மா” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

“எங்களை மன்னித்துக்கொள். அம்மா” என்று மெதுவாக ஆழ்ந்த குரலில் சொன்னான் ரீபின். லேசாகச் சிரித்துக்கொண்டே பாவெலைப் பார்த்தான்.

”இத்தனை வருஷமாய் ஊறிப்போன உன் நம்பிக்கையைப் பிடுங்கியெறிய முடியாது என்பதை நான் மறந்துவிட்டேன்.”

“நீ நம்புகிற இரக்கமும் அன்பும் நிறைந்த கடவுளைப்பற்றி நான் பேசவில்லை” என்று தொடர்ந்தான் பாவெல்; “ஆனால் நமது குருக்கள் குண்டாந்தடி மாதிரி காட்டி நம்மைப் பயமுறுத்துகிறார்களே அந்தக் கடவுளை, ஒரு சிலரின் கொடுமைக்கு மக்களெல்லாம் பணிந்து கொடுக்க வேண்டும் என்று எந்தக் கடவுளின் பேரால் நம்மை நிர்ப்பந்தப்படுத்துகிறார்களோ அந்தக் கடவுளைப் பற்றித்தான், அம்மா, நான் பேசுகிறேன்.”

அதுதான் சங்கதி!” என்று மேஜையை அறைந்து கொண்டே சொன்னான் ரீபின். “அவர்கள் உண்மையான கடவுளைக் கூட நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிட்டார்கள்! நம்மைத் தாக்குவதற்கு எல்லாவற்றையும் தமது கைக் கருவியாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள்! அம்மா, ஒரு கணம் சிந்தித்துப்பார். கடவுள் தன் உருவம் போலவே மனிதனையும் படைத்தான் என்கிறார்களே, அதற்கு என்னம்மா அர்த்தம்? கடவுள் மனிதனைப்போல் இருக்கிறார்; மனிதன் கடவுளைப் போல் இருக்கிறான் என்பதுதானே. ஆனால், இன்றோ நாம் கடவுள் மாதிரி இல்லை, காட்டு மிருகங்கள் மாதிரி இருக்கிறோம். தேவாலயத்தில் பூச்சாண்டிதானம்மா இருக்கிறது; நாம் நமது கடவுளை மாற்றியாக வேண்டும்: புனிதப்படுத்தியாக வேண்டும்; அவர்கள் கடவுளைப் பொய்யாலும் புனை சுருட்டாலும் மூடி மறைத்துவிட்டார்கள், நமது உள்ளங்களைக் கொன்று குவிப்பதற்காக, அவர்கள் கடவுளது திரு உருவத்தையே பாழாக்கிவிட்டார்கள், அம்மா !”

படிக்க:
கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்

அவன் அமைதியாகவே பேசினான். எனினும் அவனது பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் காதில் பலத்த அறைபோலத் தாக்கி ஒலித்தது. கறுத்த தாடிக்குள்ளாக தெரியும் அவனது முகத்தின் நிழலாடிய துயரத்தைக் கண்டு பயந்தாள் அவள். அவனது கண்களின் இருண்ட ஒளியை அவளால் தாங்க முடியவில்லை; அந்த ஒளி அவளது இதயத்தில் ஏதோ ஒரு வேதனையை எழுப்பியது.

“இல்லை, இல்லை. நான் இங்கிருந்து போய்விடுகிறேன்” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னாள் தாய்; “இந்த மாதிரி விஷயங்களைக் கேட்கவே எனக்குச் சக்தி போதாது, போதாது!”

அவள் சமையலறைக்குள் விரைந்து சென்றுவிட்டாள். அவள் சென்றவுடன் ரீபின் பாவெலை நோக்கிச் சொன்னான். “பார்த்தாயா, பாவெல்? இந்த விஷயங்களுக்கு ஆதாரம் இதயமே தவிர, மூளை அல்ல. மனித மனத்தில், வேறு எதுவும் இல்லாத ஓர் இடத்தில், இந்த இதயம் இருக்கிறது.”

”அறிவுதான் மனிதனை விடுதலை செய்யும்” என்று உறுதியோடு சொன்னான். பாவெல்.

“ஆனால் அறிவு மனிதனுக்குப் பலம் தருவதில்லை” என்று உரக்கச் சொன்னான் ரீபின். “இதயம்தான் மனிதனுக்குப் பலம் தருகிறது. அறிவு அல்ல.”

தாய் தன் ஆடையணிகளைக் களைந்து மாற்றிவிட்டு பிரார்த்தனைகூடச் செய்யாமல் படுக்கப் போய்விட்டாள். அவளுக்குக் குளிராகவும், வெறுப்பாகவுமிருந்தது. ஆரம்பத்தில் புத்திசாலியாகவும், மனதுக்குப் பிடித்தவனாகவும் தோன்றிய ரீபின் மீது இப்போது பகைமை உணர்ச்சி உண்டாயிற்று.

அவன் பேசுவதைக் கேட்ட சமயத்தில் தனக்குள் நினைத்துக்கொண்டாள். “மதத்துரோகி குழப்பவாதி இவன் ஏன் இங்கு வந்து தொலைந்தான்?”

ஆனால் அவனோ நம்பிக்கை தோய்ந்த குரலில் அமைதியுடன் பேசிக்கொண்டே போனான்:

”அந்தப் புனிதமான இடத்தைக் காலியாக விடக்கூடாது. பாவெல். மனித இதயத்தில் கடவுள் குடியிருக்கும் இடம் ஒரு வேதனை இல்லம். அங்கிருந்து அவரைப் பிடுங்கியெறிந்தால், அந்த இடத்தில் படுகாயம் ஏற்படும். எனவே அவ்வில்லத்தில் ஒரு நம்பிக்கையை, மனித குலத்தின் நண்பனான ஒரு புதிய கடவுளைப் படைக்க வேண்டும். அது தான் சங்கதி ”

”கிறிஸ்து இருந்தாரே!” என்றான் பாவெல்.

“கிறிஸ்துவுக்கு ஆத்ம பலம் கிடையாது. ‘இந்தக் கோப்பை என் கையை விட்டுப் போகட்டும்’ என்றார் அவர். அவர் சீசரை ஆமோதித்து ஒப்புக்கொண்டார். மனிதர்களிடையே மனித ஆட்சியைக் கடவுள் எப்படி ஆமோதிக்க முடியும்? கடவுள்தான் சர்வ வல்லமையும் பொருந்தியவராயிற்றே. அவர் தமது ஆத்மாவைத் துண்டுபடுத்திப் பேச முடியாது. இதுதான் கடவுள் சித்தம். இதுதான் மனித சித்தம் என்று பாகுபாடு செய்ய முடியாது. ஆனால் கிறிஸ்துவோ வியாபாரத்தை ஒப்புக்கொண்டார். திருமணத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அத்தி மரத்தை அவர் சபித்தது இருக்கிறதே – அது தவறான காரியம். கனி தராதது மரத்தின் தவறா? அது போலவே மனத்தில் நலம் விளையாததற்கு அந்த மனம் பொறுப்பல்ல. எனது இதயத்தில் நானாகவா, விதையூன்றித் தீமையை வளர்த்தேன்?”

இருவரது பேச்சுக்களும் ஒன்றையொன்று கல்விப்பிடிப்பது மாதிரி உணர்ச்சி வசமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. பாவெல் மேலும் கீழும் நடந்துலாவும்போது தரையில் காலடி ஓசை எழும்பியது. பாவெல் பேசும்போது வேறு எந்தச் சப்தமும் ஓங்கி ஒலிக்கவில்லை. அவனது குரலே உயர்ந்து ஒலித்தது. ரீபினோ அமைதியும் ஆழமும் நிறைந்த குரலில் பேசினான். அவன் பேசும்போது, கடிகாரப் பெண்டுல ஓசை கூட வெளியே சுவர்களில் விழுந்து வழியும் பனிமழையின் ஓசையும்கூட, தாயின் செவியில் நன்றாகக் கேட்டன.

”நான் என் பாஷையிலே, ஒரு கொல்லனின் பாஷையிலேயே பேசுகிறேன். கடவுள் ஒரு நெருப்பு! அவர் இதயத்தில்தான் வாழ்கிறார். ‘பூர்வத்தில் சொல்தான் பிறந்தது; அந்தச் சொல்தான் கடவுளாயிருந்தது’ என்கிறார்கள். எனவே சொல் தான் பரிசுத்த ஆவி!” என்றான் ரீபின்.

“இல்லை, சொல்தான் அறிவு” என்று அழுத்திக் கூறினான் பாவெல்,

”ரொம்ப சரி. அப்படியென்றால், கடவுள் இதயத்தில் குடியிருக்கிறார், அறிவிலும் குடியிருக்கிறார் – ஆனால், நிச்சயமாக தேவாலயத்தில் அல்ல; தேவாலயம் கடவுளின் கல்லறை; கடவுளின் சமாதி!”

தாய் தூங்கிப் போய்விட்டாள்; ரீபின் போனது அவளுக்குத் தெரியாது.

ஆனால் அது முதற்கொண்டு பின் அங்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். அவன் வரும் சமயத்தில் பாவெலின் பிற தோழர்கள் யாரேனும் இருந்தால், அவன் தன் பாட்டுக்கு ஒரு மூலையிலே உட்கார்ந்து ஒன்றுமே பேசாமலிருப்பான். எப்போதாவது இடையிலே ”அதுதான் சங்கதி!’ என்று ஒரு வார்த்தையை மட்டும் போட்டுவிட்டுச் சும்மா இருந்துவிடுவான்.

ஒரு நாள் அவன் அங்கு கூடியிருந்த கூட்டத்தைத் தனது இருண்ட பார்வையால் நோட்டம் பார்த்துவிட்டுச் சோர்ந்த குரலில் பேசினான்.

“நிலைமை இன்று இப்படி இருக்கிறது என்பதைப் பற்றித்தான் நாம் பேச வேண்டுமே ஒழிய, அது நாளை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அல்ல. நிலைமை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டால், அவர்களே தங்களுக்கு எது நல்லது என்பதைத் தீர்மானித்துக் கொள்வார்கள். அவர்களைக் கேட்காமலேயே அவர்கள் தலைமீது வேண்டாத விரும்பாத விஷயங்களையெல்லாம் புகுத்தியாயிற்று. அவை போதும்! இனி அவர்களாகவே சிந்தித்துப் பார்க்க அவகாசம் கொடுப்போம். வேண்டுமென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை, கல்வியை, கற்ற அறிவை, உதறித் தள்ளிவிட்டுப் போகட்டும், தேவாலயத்திலுள்ள கடவுளைப்போல், எல்லாமே தமக்கு எதிராகத்தான் அணிவகுத்து நிற்கின்றன என்பதை அவர்களே உணரட்டும். புத்தகங்களை அவர்கள் கையிலே கொடுங்கள். அவர்களே விடை கண்டு கொள்ளட்டும். ஆமாம்!”

ரொம்ப சரி. அப்படியென்றால், கடவுள் இதயத்தில் குடியிருக்கிறார், அறிவிலும் குடியிருக்கிறார் – ஆனால், நிச்சயமாக தேவாலயத்தில் அல்ல; தேவாலயம் கடவுளின் கல்லறை; கடவுளின் சமாதி!

ரீபினும் பாவெலும் தனியாக மட்டும் இருக்க நேர்ந்தால், அவர்கள் மூச்சுவிடாமல், முடிவில்லாமல் விவாதம் பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். எனினும் விவாதம் செய்யும்போது அவர்கள் தங்கள் நிதானத்தை இழந்து உணர்ச்சி வசப்படுவதில்லை. தாய் விவாதத்தை ஆர்வத்தோடு கேட்பாள். அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதை அறிய அரும்பாடு பட்டுக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்பாள். சமயங்களில் அகன்ற தோளும் கரிய தாடியும் கொண்ட ரீபினும், நெடிது வளர்ந்த பலசாலியான தன் மகனும் கண்மூடித்தனமாக, குருடாகப் போவதாக அவளுக்குப் படும். அவர்கள் முதலில் ஒரு திசையில் செல்வார்கள். பிறகு மறு திசைக்குச் செல்வார்கள். போக்கிடம் தெரியாது. பிரச்சினைக்கு மார்க்கம் காணாது அவர்கள் கையால் நிலந்தடவிச் செல்வதாக, ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு மாறுவதாக, தாம் செல்லும்போது தமது கைப்பொருளைத் தவறவிட்டு, அவற்றைக் காலால் மிதித்துக்கொண்டு நடப்பதாகத் தோன்றும். அவர்கள் எங்கெங்கோ மோதிக்கொண்டார்கள். எதை எதையோ தொட்டு உணர்ந்து கொண்டார்கள், தங்களது கொள்கையையும் நம்பிக்கையையும் இழந்துவிடாமல் எதை எதையோ தூக்கிவிட்டெறிந்தார்கள்……

அவர்கள் எத்தனை எத்தனையோ பயங்கரமான, துணிச்சலான வார்த்தைகளைக் கேட்டுப் பழகுவதற்கு அவளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். என்றாலும், அந்த வார்த்தைகள் ஆரம்பத்தில் அவளைத் தாக்கி உலுக்கியது போல், பின்னர் உலுப்பவில்லை. அந்த வார்த்தைகளை உதறித்தள்ள அவள் கற்றுக்கொண்டுவிட்டாள். சமயங்களில் கடவுளை மறுத்துச் சொல்லும் வார்த்தைகளில் கூட, கடவுள் நம்பிக்கை தொனிப்பதை அவள் கண்டாள். அப்படிக் காணும்போது அவள் அமைதியாக, எல்லாவற்றையும் மறந்து, மன்னித்துத் தனக்குத் தானே சிரித்துக்கொள்வாள். அவளுக்கு ரீபினைப் பிடிக்காவிட்டாலும், இப்போது அவள் உள்ளத்தில் அவன் பகைமை உணர்ச்சியைக் கிளப்பவில்லை.

ஒவ்வொரு வாரமும் அவள் வெளுத்த துணிமணிகளையும், புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு, ஹஹோலிடம் கொடுப்பதற்காகச் சிறைக்குச் செல்லுவாள். என்றாலும் ஒரே ஒரு தடவைதான் ஹஹோலைக் கண்டு பேச அவளை அனுமதித்தார்கள்.

படிக்க:
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு !

திரும்பி வந்தபோது அவனைப்பற்றி அன்போடு அவள் பேசினாள். “அவன் கொஞ்சங்கூட மாறிவிடவில்லை. எல்லோரிடமும் நல்லபடியாகவே பழகுகிறான். அனைவரும் அவனிடம் தமாஷாகப் பேசுகிறார்கள். அவனுக்குக் கஷ்டமாய் மிகவும் கஷ்டமாய்த் தானிருக்கிறது. இருந்தாலும் அவன் அதை வெளியில் காட்டிக்கொள்வதே இல்லை.”

“அதுதான் சரி” என்று பேச ஆரம்பித்தான் ரீபின், ”நம்மையெல்லாம் சோகம்தான் மூடிப் போர்த்தியிருக்கிறது: நாம் சோகத்துக்குள்தான் இருக்கிறோம். இருந்தாலும், சோகத்தைத் தாங்கித் திரிவதற்கு நாம் பழகிப்போய்விட்டோம். இதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாரும் தங்கள் கண்களை இருட்டடிப்புச் செய்து கொள்வதில்லை. சிலர் தாங்களாகவே கண்களை மூடிக்கொள்கிறார்கள். அதுதான் சங்கதி! நாம் முட்டாள்தனமாயிருந்தால், நாம்தான் அதன் பலாபலனை அனுபவித்துத் தீர வேண்டும்!”

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1) துகபர்தசி – ஒரு சமயக் கட்சியினர் — மொ – ர்.

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

 

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:
(பாகம் – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பாகம் – 2) அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

(பாகம் – 3) உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்
(பாகம் – 4) நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ?

(பாகம் – 5) இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் ?
(பாகம் – 6)நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்
(பாகம் – 7)  பாஷா ! நீ ஒரு சோஷலிஸ்டா ?
(பாகம் – 8) பாதி மனம் காதலிக்கிறது .. பாதி மனம் பகைக்கிறது ..
(பாகம் – 9) ஜாக்கிரதையாயிரு , இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது
(பாகம் – 10) நஹோத்கா , உம்மை நான் கைது செய்கிறேன் …

நீரோட்டம் எப்படி போகுதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகணும் !

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் பழம்பெரும் அடையாளங்களில் ஒன்றாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இங்கிருந்து இந்தியாவின் எந்த மூலைக்கும் ரயிலில் பயணிக்கலாம். சரக்கு உற்பத்தி பொருட்களை எற்றிச் செல்லலாம். அந்த அளவிற்கு சமூக முன்னேற்றம் அடைந்துள்ளதில் வியப்பில்லை. ஆனால் இன்றும் சென்னையில் ஆங்காங்கே மாட்டு வண்டிகளை பார்க்க முடிகிறதே… அதுதான் ஆச்சர்யம்.

நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களே இந்த நெரிசலில் ஊர்ந்து செல்வதற்கு திணறும்பொழுது எப்படி இவர்கள் இதனை சமாளிக்கிறார்கள்? ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கியவை எல்லாம் காலப்போக்கில் மெல்ல காணாமல் போய்விடுகின்றன. காலச்சக்கரத்தின் ஓட்டத்திற்கு ஏற்பவரும் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் ஈடுகொடுக்க முடியாமல் மங்கி விடுகின்றன. அப்படி ஒரு காலத்தில் சென்னையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த ஜட்கா, மாட்டு வண்டிகள், ரிக்‌ஷாக்கள் போன்ற அனைத்தும் நவீன வாகனங்களின் வருகைக்கு பின் காணாமலே போய்விட்டன.

“சென்னையில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையில் சாலைகள் போடப்பட்ட பின்னர், போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ரயில் கண்டுபிடிக்கப்பட்டு ராயபுரம், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் எல்லாம் வந்த பிறகு, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருகியது. ரயில் நிலையங்களில் வந்திறங்குபவர்களை அழைத்துச் செல்லும் வாகனம்தான் ஜட்கா மற்றும் ரிக்‌ஷாக்கள்.

படிக்க :
வெட்டிவேர் வாசம் – உள்ளே வியர்வையின் வீச்சம்!
சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !

ஒற்றை குதிரை பூட்டிய ஒரு சிறிய கூண்டு வண்டிதான் ஜட்கா வண்டி என்பார்கள். மாடு பூட்டிய சில ஜட்கா வண்டிகளும் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால் குதிரைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் இவை சீக்கிரமே வழக்கொழிந்துவிட்டன”.

சென்னைக்கு வந்த ஆங்கிலேயர்களும் இந்த ஜட்கா வண்டியில்தான் பயணித்திருக்கிறார்கள். “எலட்ரிக் ட்ராம்கள்” வந்த பிறகு அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன. இருப்பினும் மாட்டு வண்டிகள் மட்டும் சரக்கு பொருட்களை ஏற்றுவதற்கு பயன்பட்டு வந்தன. கிராமப்புறங்களில் அதிகளவில் விவசாயத்திற்கும், நகரங்களில் ஒற்றை மாட்டு வண்டிகள் சரக்கு ஏற்றவும் பயன்பட்டு வருகின்றன.

சென்னையின் வால்டாக்ஸ் சாலையில் இருக்கும் தனலட்சுமி ரைஸ் மில் எதிரில் உள்ள காலியிடத்தில் மூன்று நான்கு மாட்டு வண்டிகள் நிறுத்தி விட்டு, மாடுகளை அந்த வண்டியிலே கட்டி வைத்திருந்தனர்.

மாடுகள் அசைபோட்டுக்கொண்டே தீனியை எதிர்பார்த்திருக்க, அருகே வளர்ந்திருந்த பெரிய மர நிழலில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர் மாட்டு வண்டி தொழிலாளர்கள்.  பகல் பதினோறு  மணி.. உண்ட மயக்கம்…… தூக்கத்தில் தெரிய…… அவர்களை வலிந்து எழுப்பினோம்…..

திடுக்கென்று எழுந்த அவர், எங்களைப் பார்த்ததும் தெரிந்துகொண்டார்போல…… “சொல்லுங்க இன்னா வேணும்….” என்றார்.

“இல்ல… லாரி, மினி வண்டி எல்லாம் வந்துடுச்சி…. இந்த காலத்துல அதுவும் சென்னையில இந்த வண்டிய வச்சிக்கிட்டு இருக்கிங்களே எப்படி”?

“அதுக்கு இன்னா பன்றது… தம்பி.. நம்ம பொழப்பு அப்படி இருக்குது என்றார் துக்கக் கலக்கத்துடன்…. அவர் பெயர் தாஸ்.  தாஸின் சொந்த ஊர் மரக்காணம்.

திரு தாஸ்

“முப்பது வருஷத்துக்கு முன்னாடியே சென்னைக்கு வந்துட்டேன். வந்ததுல இருந்து இந்த வேலைதான்… அப்பப்ப கெடக்கிற வேலைய செஞ்சி குடும்பத்த காப்பாத்துறேன்.

எங்களோட வேலையே ஹார்டுவேர் கம்பனியில இருக்க கம்பிய ஏத்திகிட்டுதான் போகனும். பக்கத்துல யாராவது பாக்ஸ் தூக்க கூப்பிட்டா லோடு இல்லாதப்ப போவோம். வேற எந்த வேலையும் தெரியாது. அதனாலதான் இதுலயே கெடந்து காலத்த ஓட்டிடலாம்னு இருக்கேன்.

ஒரு நாளைக்கு 400,500 ரூபா கெடைக்கும். இந்த வண்டியில நாலு டன் வரைக்கும் இரும்பு ஏத்த முடியும்..  ஒரு டன்னுக்கு 600,700 வரைக்கும் கொடுப்பாங்க…. ஒரு டன் கம்பிய ஏத்த மூனு ஆள் தேவை. அத மூனா நாங்க பிரிச்சிக்குவோம்.  மாட்டு வண்டிகாரருக்கு ஒரு அமெளண்ட் கொடுத்துடுவோம்.

இந்த ஒத்த மாடு வெல 60,000 வரைக்கும் விக்குறாங்க. இந்த மாட்ட வெலைக்கு கேட்டாங்க. ஓனரு கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாரு. மாடு வேணும்னா பெங்களூர் போயிட்டுதான் வாங்கி வருவோம். அந்த அளவுக்கு டிமாண்ட்.

இன்னிக்கு இந்த மாட்டு வண்டிக்கு வேலை இருக்குதுன்னா… அதுக்கு ஒரே காரணம்தான்.  லாரியில சரக்க கொண்டு போகனும்னா வாடகை, ஏத்துக்கூலி – இறக்கு கூலின்னு ஏகப்பட்டது ஆயிடும். எங்களுக்கு அப்படி இல்ல. பாதிக்கு பாதிதான் ஆகும்.

அதே மாதிரி எங்க வண்டி சந்து பொந்து எல்லா இடத்துக்கும் போகும். லாரி அப்படி போக முடியாது. நாங்களும் பால்மாறாம கொண்டு போயிட்டு இறக்கிடுவோம். சைட், கடை இரண்டு இடத்துக்கும் கொண்டு போயிட்டு இறக்கிடுவோம். மாசம் 15,000 லிருந்து 20,000 வரைக்கும் கெடைக்கும். அத வச்சிதான் எப்படியோ வாழ்க்க போயிட்டு இருக்கு…” என்று சொல்லிகொண்டிருக்கும்போதே மூட்டை இறக்கும் வேலை வந்ததால் அவசரமாக ஓடினார்.

அருகில் இருந்த ராமச்சந்திரன்  ஆர்வமாக பேச ஆரம்பித்தார். “சொந்த ஊர் வானூர். பதினாறு வயசுல இந்த மெட்ராசுக்கு வந்தேன்பா..  இன்னமும் இந்த மாட்டு வண்டியும்… மூட்ட தூக்குறதும் தான் தொழிலு.  எனக்கு தெரிஞ்சி இந்த மாட்டோட வெல… 400 ரூபா 500  ரூபா வரைக்கும் பல்லாவரம் சந்தையில வித்தாங்க. இப்ப நெனச்சிக்கூட பார்க்க முடியாது.

திரு ராமச்சந்திரன்

இவ்ளோ கம்மியான வெலைக்கு மாடு வித்ததா என்ன?

ஆமாம்..ப்பா.. அப்ப எல்லாம் கார்ப்பரேசன்ல குப்பை அள்ளுறதுக்கு மாட்டு வண்டியதான் பயன்படுத்தினாங்க. அந்த மாட்ட எல்லாம் விக்க டெண்டர் விடுவாங்க. அதை ஏலம் எடுத்து கொண்டு வந்து குறைந்த விலைக்கு சந்தையில விப்பாங்க…ப்பா..

அப்ப எல்லாம் மாட்டு வண்டியில மூட்ட அடிச்சினு போனா.. எல்லா செலவும் போக 5 ரூபா கெடக்கும். இப்ப முன்னூறு ரூபா கெடக்கிது.  இருபது ரூபாய்க்கு தவுடும், 150 ரூபாய்க்கு வக்கிலும் வாங்கி போடுவோம். போற இடமெல்லாம் வக்கில் கெடைக்கும். இப்ப எங்கயும் கெடக்கிறது இல்ல. விலையும் ஏறிடுச்சி.

நான் ஓட்டிட்டு இருந்த மாட்டு வண்டி கருவாடு சுமை மட்டும் தான் ஏத்துவோம். ராமேஸ்வரம், தூத்துக்குடியியில இருந்து கருவாடு வரும். அதை ஏத்துறதுக்கு எக்மோர் ரயில்வே ஸ்டேசன்ல போயி காத்து கெடப்போம்.  வண்டிய உள்ள விடமாட்டாங்க; மாடு சானம் போட்டுடும்னு. மாட்ட வெளியில கட்டிட்டு கையால வண்டிய உள்ள இழுத்து போவோம்.

அப்ப கார் மட்டும் தான் உள்ள விடுவாங்க. அவங்களும் டோக்கன் வாங்கிட்டுத்தான் வரனும். எங்களுக்கு எல்லாம் அந்த டோக்கன் கொடுக்க மாட்டங்க. எக்மோர்ல இருந்து  கருவாட்டு மண்டிக்கு ஏத்திகிட்டு வருவோம்.  இப்ப இருக்க மாதிரி வசதி எதுவும் இல்ல. வேலைக்கு போறவங்க எல்லாம் நடந்துதான் போவாங்க.  திருப்பிள்ளை ஏரியாவுல இருந்து மக்க வரிசையா  நிப்பாங்க. அவங்கள எல்லாம் இந்த மாட்டு வண்டியில தான் ஏத்திகிட்டு வருவோம். அதுக்கு 15 காசு வாங்குவோம்.

படிக்க :
மெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை !
தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !

நாளடைவுல வண்ணாரப்பேட்டை, யானைகவுனி, சால்ட்கோட்டைன்னு எல்லா இடத்துலயும் மாட்டுவண்டி அதிகமாயிடுச்சி.  ரைஸ்மில்லுல உமி மூட்டை ஏத்துறது, கொத்தால்சாவடிக்கு காய்கறி ஏத்துறது, டான்சி குடோன்ல இருந்து பொருட்களை ஏத்திகிட்டு வருவதுன்னு எல்லாம்  மாட்டு வண்டியில தான்.  இங்க மட்டுமே 75 மாட்டு வண்டிங்க இருந்துச்சி. அப்புறம் காலப்போக்குல எல்லாம் அழிஞ்சிடுச்சி. இப்ப வெறும் 7 வண்டிதான் இருக்கு.

இதுவே நிரந்தரமா இருந்தா போதும்னு… கெடக்கிற வருமானத்தை வச்சிகிட்டு இந்த வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருக்கேன். பொண்டாட்டி  இறந்துட்டாங்க… புள்ளங்க விட்டுட்டு போயிட்டாங்க….. இந்த ரைஸ் மில் குடோன்ல தான் வாழ்க்கை போயிகிட்டு இருக்கு…. இப்ப இந்த ரைஸ் மில்லும் வேற தொழிலுக்கு மாத்திட்டாங்க….காலத்தின் கட்டாயம்… நீரோட்டம் எப்படி போகிறதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகனும்…!