Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 751

திண்டுக்கல் காகித ஆலைத் தொழிலாளர் போராட்டம்!

3

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், விளாம்பட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தனலட்சுமி, சர்வலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய 3 காகித ஆலைகளின் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகவும், கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூலி உயர்வுக்காகவும் 10.4.12 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் இணை ஆணையர்  அழைத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முதலாளி மறுத்து விட்டார். மாறாக எந்த முடிவும் எடுக்க அதிகாரமற்ற ஆலையின் நிர்வாகிகளைப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்துள்ளார். முதலாளியின் கைபேசி எண்ணைக் கேட்ட இணை ஆணையருக்குத் அதனைத் தர மறுத்து விட்டனர் நிர்வாகத் தரப்பினர்.

முன்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் மது அருந்தி விட்டு வந்து தங்களை மிரட்டியதாகப் பொய்ப்புகார் கூறி, அதனால் தற்போது பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்று தட்டிக்கழிக்கிறது முதலாளி தரப்பு.  தொழிற்சங்கங்கள் மூலம் அறிவிப்பு செய்து அனுமதி பெற்று நடத்துகின்ற வேலை நிறுத்தத்தை சட்ட விரோதமானது என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார் முதலாளி.

முப்பது ஆண்டுகளாக வேலை செய்து வரும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கே சம்பளம் ரூ.7500 க்குள்தான். 150 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி மாத்திரம்தான்; எந்தச் சலுகையும் கிடையாது. தலா 500 பேர் வரை வேலை செய்யும் இந்த ஆலைகளில் தொழிலாளர்களுக்கு உணவக வசதி கூட கிடையாது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு தரப்பட வேண்டும் என்ற தற்போதைய ஒப்பந்தத்தை மதிக்காமல், கடந்த 7 ஆண்டுகளாக சம்பள உயர்வு தராமல் இழுத்தடித்து வரும் முதலாளி தரப்பு, அதற்குக் காரணம் ஆலை மேம்பட்ட தொழில் நுட்பத்தால் மாத்திரமே இயங்குவதாகவும், தொழிலாளர் உழைப்பால் அல்ல என்றும் கூறி வருகின்றது. ஆரம்பத்தில் ஒரு ஆலை என்பதிலிருந்து இன்றைக்கு 7 ஆலைகளாக மாறியுள்ளதற்கு தொழிலாளர்களது உழைப்பு காரணமல்ல என்று கூசாமல் பேசுகிறார் அம்முதலாளி.

அண்மையில் நெல்லை மாவட்டத்தில் தொடங்கியுள்ள புதிய ஆலைக்கு இங்கிருந்து  போன தொழிலாளர்களுக்கு ரூ 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. கேட்டால் அது வேறு, இது வேறு என்று சொல்கிறார்கள். கிராமப்புற விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களைக் குறைந்த சம்பளத்துக்கு அமர்த்தி, அவர்களது உழைப்பை ஒட்டச் சுரண்டி, பல கோடிகளைக் குவித்துள்ளார் இம்முதலாளி. மாறாக இன்று தொழிலாளர்களெல்லாம் குடும்பமாகி, எல்லாப் பொருட்களும் ஒன்றுக்கு பத்து மடங்கு விலை உயர்ந்து நிற்கும் விஷச் சூழலில் வாழக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை இப்பகுதியில் உள்ள 3 ஆலைகளின் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியதே இல்லை. ஆனால் இம்முறை அனைத்துத் தொழிலாளர்களும், சங்கங்களும் ஒருமித்து ஒற்றுமையாகப் போராடுகிறார்கள் என்றால், அதற்கு காரணம் எல்லா தொழிலாளர்களும் ஒரே மாதிரியான வாழ்க்கை நெருக்கடியைச் சந்திப்பது தான். ‘மூத்த தொழிலாளர்களுக்கு ரூ 5 ஆயிரம் சம்பள உயர்வு, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம், முன் தேதியிட்டு ஊதிய உயர்வு’ ஆகிய முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் தொழிலாளர்களுக்கு பேச்சுவார்த்தையின் போது ‘ஊதிய உயர்வில் ரூ. 1000 க்கு மேல் சல்லிக்காசு கூட தர முடியாது’ என்று நிர்வாகம் சண்டித்தனம் செய்து வருகின்றது.

தொழிலாளர்களது அழைப்பின் பேரில் 26.4.12 அன்று ஆலை வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். நூற்றுக்கணக்கில் திரளாகத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் போராட்டத்துக்கு எல்லா வகையிலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஒத்துழைப்பு நல்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. தொடர்ச்சியான இப்போராட்டம் தொழிலாளர்களிடையே வர்க்க ஒற்றுமையையும், புதிய நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

_______________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?

16

தனியார் துப்பறியும் நிறுவனங்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் இருக்கும் மேட்டுக்குடியினர் தமது வாரிசுகளின் மண உறவு, கள்ள உறவு குறித்த உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்கு இவர்களைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் அதற்கும் மேலே போய் ’ஒரு மனிதன் என்ன பொருள் வாங்குகிறான்’ என்று கண்டுபிடிப்பதற்குக் கூட ஆள் வைத்து அறிந்து கொள்கிறார்கள். அதாவது எல்லா பேரங்காடிகளையும் நடத்தும் நிறுவனங்களுக்கு இத்தகைய புலனாய்வுப் புலிகள்தான் முக்கியமானவர்கள்.

அமெரிக்காவில் இருக்கும் டார்கெட் எனும் சங்கிலித்தொடர் பல்பொருள் அங்காடியில் நுழையும் அந்த மனிதர் கடையின் மேலாளரைப் பார்த்து ”என் மகள் இப்பொழுது ஹைஸ்கூல் தான் படிக்கிறாள். அவளுக்கு ஏன் கர்ப்பமுற்றோர்களுக்கு உதவும் பொருட்கள் மீதான சலுகைக் கூப்பன்களை அஞ்சலில் அனுப்பியுள்ளீர்கள்?” என்று கோபமாகக் கேட்கிறார். மேலாளர் ”ஏதாவது தவறு நடந்திருக்கலாம்” என மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இரண்டு நாள் கழித்து அதே நபர் மீண்டும் கடைக்குள் வருகிறார். கடையின் மேலாளரிடம் சென்று தன் மகள் உண்மையில் கர்ப்பமுற்றிருப்பதாகவும், ஒரு வழியாக அவள் காதலன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும் கூறி, அவளுக்குச் சில பொருட்களை வாங்க வந்திருக்கிறேன் என்கிறார். மீண்டும் அவர் வீட்டிற்கு டார்கெட்டிலிருந்து கூப்பன்கள் வரத் துவங்குகின்றது.

மேலே நீங்கள் படித்தது ஒரு உண்மைச் செய்தி. மகள் கர்ப்பமுற்றாள் என்பது அப்பனுக்கும் தெரியாது, ஆண்டவனுக்கும் தெரியாது எனும் போது ஒரு கடைக்காரனுக்கு மட்டும் தெரிந்தது எப்படி? இது வெறும் மாயவித்தை அல்லது எதேச்சையானது என்றால் அடிக்க வந்து விடுவார்கள் டார்கெட் நிறுவன மார்கெட்டிங் பிரிவினர். இப்படித் தங்கள் வாடிக்கையாளர்கள் வீட்டில் யாராவது கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க பல இலட்சம் ரூபாய்களை மாதச் சம்பளமாகக் கொடுத்து தேர்ந்த புள்ளியியல் நிபுணர்களையும், உளவியல் மருத்துவர்களையும் புலனாய்வுப் பணிக்கு அமர்த்தியிருக்கிறது டார்கெட்.

கர்ப்பமானவர்களை ஏன் பல்பொருள் அங்காடி மார்கெட்டிங் பிரிவு கண்டுபிடிக்க வேண்டும்? ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இதைப் புரிந்து கொள்ள நாம் இன்னொரு நபரைச் சந்திக்க வேண்டும். அவர் ரிச்சர்டு.

ரிச்சர்டு ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆனால் சேமிப்பைப் பெரிதும் விரும்புபவர். தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்க மாட்டார். கடன் அட்டையைக் கச்சிதமாகப் பயன்படுத்துவார். தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதால் போதுமான அளவு சேமிப்பில் பணம் வைத்திருந்தார். அந்த நாளும் வந்தது; அவர் மனைவி கருவுற்றார். சில நாட்கள் கழித்து டார்கெட் அங்காடியில் இருந்து கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் மீதான சலுகைக் கூப்பன்கள் அவருக்கு அஞ்சலில் வந்தன. சரி சலுகையில்தானே என்று கவரப்பட்டு கருவில் இருக்கும் குழந்தைக்காகவும், தன் மனைவியின் உடல் நலத்திற்காகவும் சில பொருட்களை வாங்கினார்.

சில நாட்கள் கழித்து பிற உபயோகிக்கும் பொருட்கள் மீதும் சலுகைக் கூப்பன்கள் வர ஆரம்பித்தன. முதலில் 50% கழிவு என வந்த கூப்பன்கள் மெல்ல 30, 20, 15 சதவீதம் எனக் குறையத் தொடங்கின. இதை ரிச்சர்டு கவனித்தாலும், விலை குறைகிறது இலாபம் தானே என்று பார்த்தார். இன்னொரு பக்கம் அவர் மனைவி பல பொருட்கள் உபயோகமற்றிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். ரிச்சர்டு காதில் எதனையும் வாங்கவில்லை. தாம் எவ்வளவு புத்திசாலித்தனமாக மலிவு விலையில் பொருட்களை வாங்குகிறோம் என்பதில் அவர் அசாத்திய மேதை போல நினைத்திருந்தார்.

மெல்ல ரிச்சர்டு அந்தக் கடையில் உறுப்பினர் ஆனார். அவர் அந்தக் கடையில் எது வாங்கினாலும் 5 சதவிகிதக் கழிவு என்றனர். ரிச்சர்டு அலுவலகம் விட்டும் வரும் வழியில் அந்தக் கடைக்குச் சென்று ஏதாவது வாங்க ஆரம்பித்தார். அலுவலக நெருக்கடி, மன உளைச்சல், வீட்டில் சண்டை, நேரம் கடத்த வேண்டும் என்றாலும் அவர் டார்கெட்டில் நுழைந்து கடையைச் சுற்றி வர ஆரம்பித்தார். அது அவர் மனதை ஆசுவாசப்படுத்தியது. டார்கெட் உள்ளே நுழைந்தாலே ஒரு டாலருக்காவது ஏதாவது வாங்கி விடுவார். கடன் அட்டையில் கடன் அதிகமாகி விட்டது. இப்பொழுது ரிச்சர்டு மனதளவில் அந்தக் கடைக்கு ஒரு அடிமையாகி விட்டார்.

அத்தியாவசியத்திற்கும், தேவைக்கும் வாங்கியது போய் கடைக்குள் நுழைந்து ஏதாவது வாங்கியே ஆக வேண்டுமென்ற அப்ளூயன்சா (Affluenza – நுகர்வுக் கலாச்சார மன நோய்) நோய்க்கு ஆளானார். இது ஏதோ ஒரு ரிச்சர்டுக்கு உள்ள நோய் என்று நினைத்து விடாதீர்கள். முழு அமெரிக்காவுக்கும் உள்ள நோய். இந்தியாவிலும் நடுத்தர வர்க்கத்திடம் பரவி வரும் நோயும் இதுவே.

இந்த நோயை ’தேர்ந்த விஞ்ஞானம்’ என்கிறார்கள் டார்கெட் நிறுவனத்தினர். ஆனால் நாமோ இதைப் ’பகற்கொள்ளை, பொறுக்கித்தனம்’ என்கிறோம்.

நுகர்வு-கலாச்சாரம்-1

தனியார் பலர் நுழைந்தால் ஏற்படும் அவர்களுக்குள்ளான போட்டியினால் பொருட்கள் விலை குறையும் என்பது முதலாளித்துவ ஆதரவாளர்களின் வாதம். ஆனால் முதலாளித்துவமோ விலையைக் குறைத்து விற்று நட்டத்தை (குறைவான இலாபத்தை) ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால், அதே விலைக்கு அனைத்தையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற  மனநிலையை வாடிக்கையாளர்களின் மத்தியில் உருவாக்குவது தான் அந்நிறுவனங்கள் இலாபத்தைக் குறையாமல் பெறுவதற்கான ஒரே வழி. குடிப்பழக்கம், புகைப் பழக்கம் மாதிரி வாங்கும் பழக்கம் என்பதை மக்களிடம் உருவாக்க வேண்டும். இதைத்தான் டார்கெட் உள்பட பல நிறுவனங்கள் செய்கின்றன.

உலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கணித வல்லுநர்களையும், புள்ளியியல்  நிபுனர்களையும் புலனாய்வுப் பணியில் அமர்த்தியிருப்பதன் இரகசியம் இதுதான். இவர்களின் வேலை, வாடிக்கையாளரை வேவு பார்த்து அவர்கள் என்ன வாங்குகிறார்கள், அவர்களை எப்படி வாங்க வைக்கலாம் என்று ஆய்வு செய்து, கடையில் எதையாவது வாங்கியே தீர வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு ஒரு பழக்கமாகவே மாற்ற வேண்டும்.

புதிதாக முளைத்திருக்கும் இந்தத் துறை, வாடிக்கையாளரின் கடன் அட்டை, வங்கிக் கணக்கு, செல்பேசி எண், முகவரி இவற்றை வைத்து தொடர்ந்து என்ன வாங்குகிறார்கள் என்று வேவு பார்க்கும். அவர்கள் பணத்தை உபயோகித்தால் நிறுவனமே முன் வந்து அவர்களுக்கு உறுப்பினர் அட்டை கொடுக்கும். அதை உபயோகித்தால் தள்ளுபடி கிடைக்கும் என்பார்கள். ஆனால் உண்மையில் வாடிக்கையாளர்களை வேவு பார்க்கத்தான் உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால், அதைச் சார்ந்த பிற பொருட்களின் மேல் தள்ளுபடி என போலி கூப்பன்கள் மூலம் உண்மை விலைக்கு தேவையற்ற பொருட்களை வாங்க வைக்க முயற்சிப்பார்கள்.

இன்னொரு பக்கம் அவர்களின் முக்கிய கண்டுபிடிப்பு, குழந்தை பிறக்கப் போகும் வீட்டில் வாங்கும் பழக்கம் அதிகரிக்கும் என்பது. அதனால் மருத்துவமனை முதல் குழந்தைகள் பிறப்பு தகவல் மையம் வரை உள்ள தகவல்களைச் சேகரித்து, அந்தப் பெற்றொர்களுக்குப் போலியான தள்ளுபடி கூப்பன்களை அனுப்பி அவர்களை பொருட்கள் வாங்க வைப்பார்கள்.

குழந்தை பிறக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும், பெண்கள் வாங்கும் பொருட்களை ஆராய்ந்தாலே கர்ப்பிணிகள் குறிபிட்ட பொருட்களை வாங்குவார்கள் என்று தெரியும். ஒரு பெண் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் கிருமி நாசினி சோப், பஞ்சு, சில லோஷன்களை வாங்குகிறார்; அவரே 2 மாதம் கழித்து கிருமி நாசினி, இரும்புச் சத்து மாத்திரைகளை வாங்கினால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கணிக்கிறார்கள். கணிப்பு 90 சதவிகிதம் சரியாகவே இருக்கின்றது. அவ்வளவுதான், அவர்களைக் கண்காணித்து, தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்து, மெல்ல வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுவார்கள்.

தேவைக்குப் பொருட்கள் என்பதை ஒழித்து, நோக்கமற்று வாங்குவதையே பழக்கமாக உருவாக்க அந்த நிறுவனம் மனநல நிபுணர்களை வேலைக்கமர்த்தவும் தயங்கவில்லை. இன்னொரு புறம் விலைவாசி ஏறி விட்டிருக்கும் இந்த நாட்களில் தள்ளுபடி கூப்பனை உபயோகிக்க வேண்டும் என்று எந்த மனமும் சொல்லும். கட்டுப்படியாகாத விலை என்பதன் மறுபக்கம்தான் இந்தத் தள்ளுபடி மயக்கத்தைத் தோற்றுவிக்கும் கூப்பன்கள். ஆக விலை உயர்வினால் மட்டும் மக்கள் அவதிப்படவில்லை. விலை குறைவு போல தோற்றமளிக்கும் இந்த தள்ளுபடி போதையாலும் துன்பப்படுகிறார்கள்.

உங்களைத் திட்டமிட்டு அடிமையாக்குவது, அதைக் கலாச்சாரமாகத் திணிப்பது இன்றைய தனியார்மயத்தின் அடிப்படை விதி. நீங்கள் வாங்கியே ஆக வேண்டும். பணத்தை சேமிப்பதை விட அதைச் செலவழிக்க வேண்டும். மக்களைச் செலவழிக்கும் எந்திரங்களாக மாற்றி ரத்தத்தை உறிஞ்சுவதுதான் முதலாளிகளின் இன்றைய நிலை.

அமெரிக்க அரசு யார் தீவிரவாதிகள் என்பதற்காக மக்களை உளவு பார்க்கின்றது. அமெரிக்க முதலாளிகள் யார் கையில் பணம் இருக்கிறது என்று உளவு பார்க்கிறார்கள்.

____________________________________________

– புதிய கலாச்சாரம், மே – 2012

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!

3

பதனி-டோலா‘‘தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை நிலைநாட்டுவது, பாதுகாப்பது ஆகியவை குறித்து மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடைக் கூட்டப் போவதாக” மைய அரசு டாம்பீகமாக அறிவித்த இரண்டாவது நாளே, அதனின் முகத்தில் சாணியை அடித்தாற்போன்றதொரு தீர்ப்பை பீகார் மாநில உயர் நீதிமன்றம் அளித்திருக்கிறது.  பீகாரிலுள்ள பதனி டோலா கிராமத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் முசுலீம் மதத்தைச் சேர்ந்த 21 பேரை, ரன்வீர் சேனா என்ற ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் குண்டர் படை படுகொலை செய்த வழக்கில், கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 23 குற்றவாளிகளையும் விடுதலை செய்து அளித்த தீர்ப்புதான் அது.

பதனி டோலாவில் நடந்த படுகொலை தமிழகத்தில் கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைக்கு இணையானது.  அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்படும் கூலியை முப்பது ரூபாயாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரி, சி.பி.ஐ. (எம்.எல்.)  லிபரேஷன் என்ற கட்சியின் தலைமையில் அணிதிரண்டு போராடி வந்தனர்.  கூலி விவசாயிகள் சங்கமாக அணிதிரண்டு தமது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதையும் கூலிஉயர்வு கேட்பதையும் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிகளான ராஜ்புத் மற்றும் பூமிகார் சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், தாழ்த்தப்பட்ட கூலிவிவசாயிகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க நடத்திய படுகொலைதான் பதனி டோலா படுகொலை.

ரன்வீர் சேனா ஜூலை 21, 1996 அன்று நடத்திய அத்தாக்குதலின்பொழுது, நய்முதீன் என்பவரின் மூன்று மாதப் பெண் குழந்தை மேலே தூக்கியெறியப்பட்டு, கொடுவாளால் பந்தாடப்பட்டுக் கொல்லப்பட்டது.  இப்பச்சிளங்குழந்தையின் மரணம் ஒன்றே அப்படுகொலை எந்தளவிற்கு காட்டுமிராண்டித்தனமான முறையில் நடத்தப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும்.  ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட அத்தாக்குதலில் இறந்துபோன 21 பேரில், 20 பேர் பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும்தான்.

இப்படுகொலை நாடெங்கும் அம்பலமாகி, பலத்த கண்டனங்களையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியதால், படுகொலை நடந்த மறுநாளே பாதிக்கப்பட்டோரிடமிருந்து வாக்குமூலம் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம், அப்பொழுது ஆட்சியிலிருந்த லல்லு அர”க்கு ஏற்பட்டது.  ஆனாலும், கீழமை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு பதினான்கு ஆண்டுகள் கழித்துதான் வந்தது.  இவ்வழக்கில் 63 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும்,  கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தபொழுதே, நான்கு பேர் இறந்து போனார்கள்; ஐந்து பேர் பாட்னா உயர் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மீதிப் பேரில், 30 பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்த கீழமை நீதிமன்றம், 3 பேருக்குத் தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மே, 2010  இல் தீர்ப்பளித்தது.  பாட்னா உயர் நீதிமன்றம் தற்பொழுது இத்தீர்ப்பை தள்ளுபடி செய்து, 23 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்துவிட்டது.

ரன்பீர்-சேனா-பதனி-டோலா
படுகொலைக்கு காரணமான ரன்வீர் சேனா, ஆதிக்க சாதியின் கொலைப்படை

பாட்னா உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நவ்நீதி பிரசாத் சிங், அஷ்வாணி குமார் சிங் என்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மன்றம் வழங்கிய இத்தீர்ப்பில் அதிகாரவர்க்கத்திற்கேயுரிய குதர்க்கப் புத்தியும், ஆதிக்க சாதி மனோபாவமும் பின்னிப்பிணைந்து வெளிப்பட்டுள்ளது.  இவ்வழக்கில் படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்தோர்தான் முக்கிய சாட்சியங்கள்.  சாதி மற்றும் வர்க்கப் படிநிலையில் அடிமட்டத்தைச் சேர்ந்த அவர்களது சாட்சியங்களை நம்ப முடியாது என ஒதுக்கித் தள்ளியதோடு, அவர்களைப் பொய்யர்கள், கட்டுக்கதை சொல்பவர்கள், நம்பத்தகாதவர்கள் என ஆதிக்க சாதிக் கொழுப்பெடுத்து அவமதித்துள்ளனர், நீதிபதிகள்.

‘‘ரன்வீர் சேனா பதனி டோலாவில் வசிக்கும் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்ததாகக் கூறும்பொழுது, அவர்கள் தங்களை மட்டும் எப்படி உயிரோடு தப்பவிட்டிருப்பார்கள்?  நீங்கள் புதர்களுக்கு அருகே மறைந்துகொண்டு சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தபொழுதே, ரன்வீன் சேனா தங்களைத் தேடி வந்து கொன்று போட்டிருக்காதா?” எனக் குதர்க்கமாகக் கேள்விகளை எழுப்பி, சம்பவத்தைப் பார்த்த நேரடி சாட்சியங்களைப் பொய் சாட்சியங்கள் என ஒதுக்கித் தள்ளியுள்ளனர், நீதிபதிகள்.

பதனி-டோலாஇந்த ஏழைகளின் சாட்சியங்களுக்கு உள்நோக்கம் கற்பித்து ஒதுக்கித் தள்ளிய நீதிபதிகள், ஆதிக்க சாதியைச் சேர்ந்த 23 குற்றவாளிகளையும் அப்பாவிகள் எனத் தமது தீர்ப்பில் குறிப்பிட்டு உருகியுள்ளனர்.  மேலும், இக்குற்றவாளிகளுள் மூன்று பேர் சம்பவம் நடந்தபொழுது சிறுவர்களாக இருந்தனர் என்றும், அவர்கள் தேவையில்லாமல் தண்டனை அனுபவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு, தீர்ப்பிலேயே வருத்தம் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்.  மனுகூட இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதக் கூச்சப்பட்டிருப்பான்.  ஆதிக்க சாதி பாசத்தால் இத்தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது என்பது பச்சையாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, போலீசு நடத்திய புலன் விசாரணையில் உள்ள ஓட்டைகளையும் பட்டியலிட்டு, குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளனர், நீதிபதிகள்.

பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக நிதிஷ்குமார் அரசு அறிவித்த மறுநிமிடமே, அவரது அமைச்சரவையைச் சேர்ந்த கிரிராஜ் சிங், “பதனி டோலாவை இதோடு கிள்ளி எறிந்துவிட வேண்டும்; இப்பிரச்சினையை மேலும் மேலும் விவாதத்திற்கு உள்ளாக்குவது, நிலைமையை மோசமடையச் செய்யும்” என எச்சரித்தார்.  இந்த எச்சரிக்கையை நிதிஷ்குமாரின் நல்லாட்சியில் ஒட்டிக்கொண்டுள்ள ஆதிக்க சாதிவெறி பிடித்த ஏதோவொரு அமைச்சரின் குரலாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது.

ரன்வீர் சேனாவிற்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமிர் தாஸ் விசாரணை கமிசனை, நிதிஷ்குமார், தான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடனேயே கலைத்து உத்தரவிட்டார்.  இத்தீர்ப்பு வெளிவருவதற்கு ஏறத்தாழ ஒரு வருடம் முன்பாக, ரன்வீர் சேனாவின் தலைவனும் பதனி டோலா படுகொலையைத் தலைமை தாங்கி நடத்தியவனுமான பிரம்மேஷ்வர் சிங்கிற்குப் பிணை வழங்குவது தொடர்பான வழக்கில், பிணையை மறுத்து வாதாடாமல், அவனை மேளதாளத்தோடு வழியனுப்பி வைத்தது, நிதிஷ்குமார் அரசு.

பதனி-டோலாஅவரது அரசு பெயரளவிற்கான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளைக்கூட எடுக்க மறுத்து, ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களுக்குச் சாதகமாகவே நடந்து வருகிறது.  ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையேயான நிலப்பிரச்சினையொன்றில், அமாவ்ஸி என்ற பகுதியில் நடந்த அடிதடி  கொலை வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்ட 14 தாழ்த்தப்பட்டோரில் 10 பேருக்குத் தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.  பாட்னா உயர் நீதிமன்றம் பதனி டோலா வழக்கில் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு விடுதலை வழங்கிய அதேநேரத்தில் நிலத்திற்காகப் போராடிய தாழ்த்தப்பட்டோருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இத்தீர்ப்பு சாதிவெறியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை, சட்டப்படியே அளிக்கப்பட்டுள்ளது எனக் காட்டிக் கொள்வதற்காகவே, அத்தாழ்த்தப்பட்டோர் அனைவரும் மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனச் சாட்சியங்கள் சோடிக்கப்பட்டன.

இந்தப் பின்னணியிலிருந்து பார்த்தோமானால், பாட்னா உயர் நீதிமன்றத் தீர்ப்பு, ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட ஏதோ இரண்டு நீதிபதிகளின் உள்ளக்கிடக்கையல்ல என்பதையும் நிதிஷ்குமாரின் நல்லாட்சி என்பது ஆதிக்க சாதிக் கும்பலின் விசுவாச ஆட்சி என்பதையும் புரிந்துகொள்ளலாம்.  அவரது ஆட்சியைப் புகழ்ந்து தள்ளிவரும் தேசியப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும்கூட இத்தீர்ப்பு குறித்து அடக்கியே வாசிக்கின்றன.  ஜெஸிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து வானத்துக்கும் பூமிக்குமாக சாமியாடிய ஊடகங்களின் மனசாட்சி, இந்தப் பிரச்சினையில் ஊமையாக இருப்பதேன் என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள், அவைகளின் ஆதிக்க சாதிவெறிப் பாசமும் அம்பலப்பட்டுப் போகும்.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ!

5
இளமையின்-கீதம்

இளமையின்-கீதம்

யாங் மோ
யாங் மோ

சீனப் புரட்சியின் பின்னணியில் ஒரு பிற்போக்கான குடும்பத்தை சேர்ந்த டாவொசிங் எனும் பெண் புரட்சியில் பங்கெடுக்கும் உணர்வுப்பூர்வமான புதினத்தை ‘இளமையின் கீதம்’ என்ற பெயரில் யாங் மோ எழுதினார். இப்புதினத்தைப் பற்றி ஏற்கெனவே புதிய கலச்சாரத்தில் ஒரு அறிமுகக் கட்டுரை வந்திருக்கிறது. இப்புதினம் சீனாவில் திரைப்படமாக எடுக்கபட்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தின் பகிர்வே இப்பதிவு. இந்தப் படத்திற்கு யாங்மோ கச்சிதமான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். புதினத்தின் மையக்கருத்தை சிதைக்காமல் டாவொசிங்கின் பாத்திரத்தை திரையில் உயிருடன் உலவ விட்டிருக்கிறார்கள். வடிவம் உள்ளடக்கம் என அனைத்திலும் சிறப்பானதொரு திரைப்படம்.

கதை:

மிகப் பிற்போக்கான சீனக் குடும்பத்தை சேர்ந்தவர் டாவொசிங் எனும் பெண். அவள் அம்மா சீன கோமிங்டாங் கட்சியில் போலிசாக பணிபுரியும் ஒருவருக்கு அவளை மணமுடிக்க முயற்சி செய்கிறார். அந்தத் திருமணத்தில் இருந்து தப்பிக்கும் டாவோசிங் தன் உறவினரைத் தேடி வேறு ஊருக்கு வருகிறாள். உறவினர் அந்த ஊரை விட்டே சென்று விட்ட நேரத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள். அவளை அந்த ஊரைச் சேர்ந்த யுயுவாங் காப்பாற்றுகிறான். அவன் ஒரு பல்கலைக்கழக மாணவன்.

யுயுவாங்கிற்கும், டாவொசிங்கிற்கும் காதல் மலர்கிறது. யுவாங் படிப்பதற்கு நகரம் செல்ல டாவொசிங் அந்த ஊரிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறாள்.

அந்த காலகட்டத்தில் ஜப்பான் சீனா மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கிறது. அடிமையாக வாழ விருப்பமில்லாத டாவோ ‘சீனா எதிர்த்துப் போரிட வேண்டும், ஜப்பானை வீழ்த்த வேண்டும்’ என்று நினைக்கிறாள். அதைத் தன் மாணவர்களுக்கு பாடமாகவும் நடத்துகிறாள். ஆனால் ‘அரசியலை எல்லாம் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது’ என்று தலைமையாசிரியரிடமிருந்து கணடனம் வர கோபமாக வேலையை விட்டு விட்டு, நகரத்தை நோக்கி செல்கிறாள். வழியில் சீன கம்யூனிஸ்ட் தோழர்கள் ‘ஜப்பானை எதிர்த்துப் போரிட வேண்டும். நாட்டிற்கு புரட்சி வேண்டும்’ என்று முழக்கமிடுவதைக் கண்டு மகிழ்கிறாள். நகரத்திற்கு செல்லும் டாவோ யுயுவாங்கைச் சந்தித்து அவனுடன் ஒன்றாக வாழ்கிறாள்.

ஒரு நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் மத்தியில் சீன நாட்டின் அடிமைத்தனத்தைப் பற்றி கொந்தளிப்பான பேச்சு வருகின்றது. அந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான தோழர் லுஷூவை டாவொசிங் சந்திக்கிறாள். லுஷூ மாவோ, சூடே தலைமையிலான சிவப்பு ராணுவம் வீரத்துடன் சண்டையிட்டு ஜப்பானை வீழ்த்தி வருவதாகவும், விரைவில் அமெரிக்க அடிவருடி சாங்கேஷேக்கை விரட்டிவிட்டு சீனா ஒரு புரட்சிகரப் பாதையில் நடைபோடும் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு டாவொசிங் மகிழ்ச்சி கொள்கிறாள். தானும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள். லுஷூ அவளை மார்க்ஸியம் பயிலச் சொல்கிறார்.

மார்க்ஸியத்தை படிக்க ஆரம்பிக்கிறாள் டாவோ. மார்ச் எட்டாம் தேதி நடக்கும் மகளிர் தினக்  கூட்டத்தின் போது போலிசு கலகம் விளைவித்து கம்யூனிஸ்டுகளைக் கைது செய்ய முயல்கிறது. கைதிலிருந்து முக்கிய கம்யூனிஸ்டுகள் தப்பித்தாலும். டயூ மாட்டிக் கொள்கிறான். மாட்டியவன் போலிசின் ஆட்காட்டியாகி விடுகிறான்.

லுஷு தலைமறைவாக இருக்கும் போது டாவொவை சந்தித்து ஒரு பொட்டலத்தைக் கொடுக்கிறார். அதை மறைத்து வைக்குமாறும், ஒரு வேளை மூன்று வாரங்களில் தான் வரவில்லை என்றாள் அதை எரித்து விடுமாறும் சொல்லுகிறார்.

டாவொசிங்கின் இந்த கம்யூனிச நட்பு யுயுவாங்கிற்கு பிடிக்கவில்லை. ஆனால் டாவொசிங் ‘வீட்டில் சுயநலமாய் வாழ்வதை விட நாட்டிற்காகப் போராட வேண்டும்’ என்கிறாள். கருத்து வேறுபாடு முற்றி இருவரும் பிரிகிறார்கள். மறுபுறம் லூஷு கைது செய்யப்படுகிறார்.

சிறையில் லுஷு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். மறுபுறம் அனைத்து தோழர்களும் தலைமறைவாகி விட, என்ன செய்வதென்று தெரியாத அவள் தோழர் லுஷூ கொடுத்த பொட்டலத்தைப் பிரிக்கிறாள். அதில் சிவப்பு வண்ணத்தில் எழுதிய முழக்கங்கள் இருக்கின்றன. இரவோடு இரவாக வீதி வீதியாகப் போய் அதை ஒட்டிவிட்டு வருகிறாள். அந்த நகரம் முழுவதும் பரபரப்படைகிறது. போலிசார் உஷார்ப்படுத்தப் படுகிறார்கள். விளைவு டாவோ போலிசு கண்காணிப்பில் வருகிறாள். அவள் யாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று முதலில் வீட்டைவிட்டு வந்தாளோ அவரே அவளைக் கண்காணிக்கும் போலிசு படையின் தலைவர்.

அங்கிருந்து தந்திரமாகத் தப்பி வேறு ஒரு கிராமத்திற்கு போய் அங்கே ஆசிரியராக அமர்கிறாள். அங்கு பழைய தோழர்களைச் சந்திக்கிறாள். அந்த கிராமத்தில் நடக்கும் கூலி விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுத்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்துகிறார்கள்.

அங்கிருந்து பெய்ஜிங் போகிறாள். ஆனால் பெய்ஜிங்கில் போலிசாரால் கைது செய்யப்படுகிறாள். சிறையில் முன்னர் சந்தித்த தோழர் சிங் எனும் பெண்மணியை மீண்டும் சந்திக்கிறாள். இருவரும் ஒரே சிறையில் அவதிப்படுகிறார்கள். கொடுமைகள், சித்திரவதைகள் எதற்கும் சிங் அஞ்சாததைக் கண்டு ஆச்சரியமடைகிறாள். அப்பொழுது சிங் ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் கதையைச் சொல்கிறாள். அந்தத் தோழர் கைது செய்யப்பட்டு சிறைக்கு வருகிறார். ஆனால் சிறையில் வழக்கம் போல் காலை எழுந்து உடற்பயிற்சி செய்கிறார்; மற்றவர்களுக்கு கம்யூனிசம் கற்றுக் கொடுக்கிறார்; காவலர்களுடன் நட்பாகப் பழகுகிறார்; மகிழ்ச்சியாக சிறை வேலைகளைச் செய்கிறார்.

அவருக்குத் தூக்குத்தண்டனை உறுதியாகிறது; ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றமுமில்லை. அதே உற்சாகத்துடன் தினமும் சிறையில் கழிக்கிறார். தண்டனை நாள் அன்று அனைவருக்கும் கைகுலுக்கி விடைபெற்று மைதானத்திற்குள் நுழையும் விளையாட்டு வீரனைப் போல மகிழ்ச்சியாகச் செல்கிறார்.

அவர் தோழர் சிங்கின் கணவர். அவரைப் பார்த்து வியப்படைந்த அனைத்துத் தோழர்களுக்கு சொல்லுவது ஒன்றேதான், ‘நான் மற்றவர்கள் மாதிரி வாழ்க்கையை வெட்டியாக வாழவில்லை, ஒரு கம்யூனிஸ்டாக அனைவருக்கும் பயனுள்ள வாழ்க்கையை நான் வாழ்கிறேன். சிறை, சமவெளி எங்கும் கம்யூனிஸ்டின் வாழ்க்கை மக்களுடன் உறவாடுவது தான்; அதை நான் செய்கிறேன், எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை’ என்கிறார். அந்தத் தோழரின் கதையை கேட்டு டாவோ உற்சாகம் அடைகிறாள். தன் சிறைப் பொழுதுகளையும் உபயோகமாகக் கழிக்கிறாள்.

மீண்டும்  பீஜிங் வருகிறாள். அங்கு சிவப்பு ராணுவமும், சீன கொமிண்டாங் அரசும் ஒருங்கிணைந்து முன்னனி ராணுவப்படையை ஜப்பானுக்கு எதிராக கட்டுகிறது. இறுதியில் இவ்வளவு போராட்டங்களுக்கு பின், சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகிறாள். வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுதான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் டவோசிங்.

டாவொசிங் கட்சி உறுப்பினர் உறுதிமொழியேற்க, சர்வதேசிய கீதம் முழங்குகிறது. டாவோசிங் போராட்டங்களில் பங்கெடுக்கும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.

______________________________________________________

– ஆதவன்

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இந்திய நடுத்தர வர்க்கம் வீட்டுப் பணியாளர்களை கேவலமாகவும் கொடூரமாகவும் நடத்துவதற்கு காரணம் என்ன?

3
இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் வீட்டு வேலைக்கு போவதற்கு பெண்கள் காத்திருக்கிறார்கள்

மீட்கப்பட்ட வீட்டு உதவியாளர்களுக்கு செவிலியராக வேலை செய்த தனது ஒன்பது ஆண்டு கால அனுபவத்தில் மோசமானவற்றை எல்லாம் பார்த்து விட்டதாக கே மாரியம்மா நினைத்திருந்தார். 2010 இல் அவரும் உடன் பணி புரிபவர்களும் மேற்கு தில்லியில் இருக்கும் வீடு ஒன்றிலிருந்து சங்கீதா என்ற 17 வயது பெண்ணை மீட்பதற்கு போன போது அவர் தனது நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. சங்கீதா உடல் முழுவதும் கடிக்கப்பட்ட காயங்களுடன் காணப்பட்டார். “நாங்கள் கடும்  அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு விலங்கையா அல்லது மனிதப் பிறவியையா என்று சந்தேகமாக இருந்தது” என்று நினைவு கூர்கிறார் மாரியம்மா. மாரியம்மா, வீட்டு உதவியாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நிர்மலா நிகேதன் என்ற குழுவில் வேலை செய்கிறார்.

முதலில் சங்கீதாவின் எஜமானர்கள், அவள் தன்னைத்தானே கடித்துக் கொண்டதாகச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் கழுத்தில் எப்படி காயங்கள் ஏற்பட்டன என்பதற்கு விளக்கம் இல்லை. அதன் பிறகு அவர்கள் கதையை மாற்றிக் கொண்டு –  வீட்டு எஜமானி மனநிலை சரியில்லாதவர் என்று சொன்னார்கள். “ஆனால் நாங்கள் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஏன் தனது குழந்தைகளைக் கடிக்காமல் வீட்டு உதவியாளரை மட்டும் கடிக்க வேண்டும்’ என்று மாரியம்மா வாதிட்டார். பின்னர் பிரச்சினை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு 50,000 ரூபாய் கொடுக்கப்பட்டது, அவர் அஸ்ஸாமில் இருக்கும் தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தான் பார்த்த மோசமான கொடூரங்களைப் பற்றிப் பேசுவதற்கு மாரியம்மா தயாராக இருக்கலாம். ஆனால் தில்லியின் வீட்டு வேலை செய்பவர்கள் மன்றத்தின் தன்னார்வலர்களுக்கு அது அவ்வளவு எளிதாக இல்லை. அவர்களின் அனுபவம், சென்ற ஆண்டு பிப்ரவரியில் எஜமானி தனது காலணியின் கூர்மையான அடிப்பகுதியை முதுகில் உதைத்ததை எதிர் கொண்ட வீணாவாக இருக்கலாம், அல்லது வேலைக்கு வைத்திருந்த நர்சினால் மார்பில் சூடு போடப்பட்ட ஜார்கண்டை சேர்ந்த 15 வயது சோபனாவாக இருக்கலாம் அல்லது ஒரு அரசு அதிகாரியின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட அந்தரங்க உறுப்புகள் பல முறை உருளைக் கட்டையால் தாக்கப்பட்டிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிறுமி ஹசீனாவாக இருக்கலாம்.

“இந்தியாவில் 9 கோடி வீட்டு வேலை செய்பவர்கள் இருப்பதாக அதிகாரபூர்வமாக மதிப்பிடப்பட்டுள்ளது. புது தில்லியில் இருக்கும் சுமார் 2,300 ஏஜன்சிகளில் 269 மட்டுமே பதிவு செய்யப்பட்டவை”

இப்போது நாட்டின் தலைநகரில் நிலைமை மோசமாக இருப்பதாகத் தோன்றுகிறது. (சென்ற மாதம் விடுமுறைக்கு சென்ற தம்பதியர் அவர்களது வீட்டில் வேலை செய்யும் 13 வயது ஜார்கண்ட் சிறுமியை மிகவும் சொற்பமான உணவுப் பொருட்களுடன் வீட்டில் பூட்டி வைத்து விட்டுப் போன செய்தி வெளியானது). ஆனால், உண்மையில் நாடு முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் (பட்டியலைப் பார்க்கவும்) வீட்டு உதவியாளர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே போகிறது.

உடல்ரீதியாக வன்முறைக்குள்ளானவர்கள்

1. 2004 கல்கத்தாவின் கோல்பார்க் ஹோம்சில் உதவியாளராக வேலை செய்த 14 வயது சிறுமி தூக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் இருந்தும் போலிசு அதைத் தற்கொலை வழக்காகப் பதிவு செய்தது.

2. ஜூன் 2009 நடிகர் ஷைனி அஹூஜா அவனது வீட்டு உதவியாளரைப் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 2011 இல் பிணை வழங்கப்பட்டது.

3. ஆகஸ்ட் 2009  நடிகர் ஊர்வசி தனோர்கரிடம் வேலை செய்யும் 10 வயது சிறுவன் கைகளில் தீக்காயங்களுடனும், உடல் முழுவதும் கீறல்களுடனும் மீட்கப்பட்டார்.

4. செப்டம்பர் 2011  ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூலில் 12 வயது சிறுமி எஜமானரின் வீட்டில் எரிந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப் பட்டாள். பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன.

5. டிசம்பர் 2011, 15000 ரூபாய் கடனைத் திருப்பித் தராத தனது வீட்டு உதவியாளரை எரித்ததாக உறுதி செய்யப்பட்டு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

6. மார்ச் 2012, ஒரு இந்திய வீட்டு உதவியாளர் நியூயார்க் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு பெற்றார். அவரது முன்னாள் எஜமானர்கள் நீனா மல்ஹோத்ரா என்ற ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரியும் அவரது கணவரும் கொடுமைப்படுத்தியதாகவும், அடிமை போல நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டிய அவருக்கு 1.5 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்கப்பட்டது.

7. மார்ச் 2012 தில்லியின் துவாரகாவிலிருந்து 13 வயது சிறுமி மீட்கப்பட்டாள். அவரது எஜமானர்கள் மருத்துவர்கள் சஞ்சய், சுனிதா வர்மா தம்பதியினர் தாய்லாந்துக்கு விடுமுறைக்குப் போகும்போது அவளை வீட்டில் பூட்டி வைத்து விட்டுப் போனார்கள். அவள் உடல் முழுவதும் கிள்ளியது உள்ளிட்ட காயங்களுடன் காணப்பட்டாள். அவள் இரண்டு சப்பாத்தியும், உப்பும் கொண்ட உணவில் உயிர் பிழைத்திருந்திருக்கிறாள்.

8. ஏப்ரல் 2012 பீகாரைச் சேர்ந்த பதின்ம வயது வீட்டுத் தொழிலாளரை எஜமானர்களின் மகன்கள் நதீமாலும் பர்தீனாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாகவும், உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் தகவல் வெளி வந்தது. அந்தச் சிறுமியின் கைகளில் சூட்டுக் காயங்கள் இருந்தன. பர்தீன் கைது செய்யப்பட்டான்.

இந்த அப்பட்டமான கொடூரம் எங்கிருந்து உருவானது? நகரங்களில் வசிக்கும் பணக்காரர்களின் வீடுகளில் வேலை செய்வதற்கு சந்தையில் தொழிலாளர்கள் நிறையக் கிடைப்பதும், அவர்கள் சுரண்டப்படுவதற்கு எதிரான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருப்பதும்தான் காரணமா? மோசமான, கிட்டத்தட்ட இல்லவே இல்லாத குற்ற நிரூபண விகிதம், பணம் இருந்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடலாம் என்ற நிலைமை இவைதான் நகரத்தில் வசிப்பவர்கள் மத்தியில் இந்தக் கொடூர குணத்தை வளர்த்திருக்கிறதா? (இரண்டாவதாகச் சொன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. முன்பு குறிப்பிட்ட மருத்துவ தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் போதே அவர்கள் பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள 75,000 ரூபாய் கொடுப்பதாகப் பகிரங்கமாக அறிவித்தனர்).

புதிய பணக்காரர்கள் ஆகியிருக்கும், ஏழைகளை மனிதர்களாகவே மதிக்காத நடுத்தர வர்க்கத்திற்கு இது சிறப்பாகப் பொருந்துகிறது. உண்மையில் “ஒருவரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் ஏதோ சமூக சேவை செய்வதாகப் பலர் நினைக்கிறார்கள். ஏழைகளுக்கு உணவு அளிப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். இத்தகையவர்கள் மத்தியில் நிறைய தார்மீக ஆவேசமும், கோபமும் இருக்கிறது” என்று பல பெண்களை மீட்பதற்கு உதவி செய்த சமூக ஆர்வலர் ரிஷி காந்த் சொல்கிறார். “’ஏன் அவர்களை அழைத்துக் கொண்டு போகிறீர்கள்..  குறைந்த பட்சம் இங்கு அவர்களுக்கு சாப்பாடு போடுகிறோம்’ என்று சில வீடுகளில் எஜமானர்கள் எங்களிடம் கேட்கிறார்கள்…..” “இந்தக் குழந்தைகளுக்கு மாதம் 1,000 ரூபாய் சம்பளம் வழங்கி, பழைய உடைகளையும், மீந்து போன உணவையும் கொடுப்பதை பெரிய உதவி செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்” என்கிறார் இன்னொரு ஆர்வலர் ராகேஷ் செங்கர்.

 

இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
நமிதா ஹல்தார். நமிதா வேலை செய்யும் பத்துப் பன்னிரெண்டு வீடுகளில் எந்த வீட்டிலும் கழிவறையைப் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை என்பது இந்தியாவின் வளரும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றி என்ன சொல்கிறது? இருந்தும் அவர் தன்னை அதிர்ஷ்டக்காரராகவே கருதிக்கொள்ள வேண்டும். இன்னும் பலருக்கு அவமதிப்புகள் உடல் ரீதியான கொடுமைகள் வரை நீள்கின்றன.

சமீபத்தில் வெளியான நிகழ்வுகளையும், அது பற்றிய கொதிப்புகளையும் (குறைந்தபட்சம் ஊடகங்களில்) தொடர்ந்து இந்த உறவை நவீன எஜமானருக்கும் அடிமைக்குமான உறவாகப் பலர் சித்தரிக்கிறார்கள். இது மிகச் சிறிய பரிமாற்றங்களில் கூட பிரதிபலிக்கின்றது. உதாரணமாக கொல்கத்தாவின் நமீதா ஹல்தார் பல வீடுகளில் வேலை பார்த்தாலும் ஒரு வீட்டில் கூட கழிவறையைப் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை. “அவர்களை மனிதர்களாக நடத்துவதற்கு நமக்குத் தோன்றாததற்குக் காரணம் நமது ஆழ் மனதில் அவர்களை மனிதர்களை விடத் தாழ்ந்தவர்களாகப் பார்க்கிறோம் என்பதுதான். பணம் கொடுப்பதாலேயே கடைசி பைசா வரை தமது பணத்தின் மதிப்பைக் கறந்து விட வேண்டும் என்று வேலைக்கு வைப்பவர்கள் நினைக்கிறார்கள்” என்று கொல்கத்தாவைச் சேர்ந்த பரிசித்தி அமைப்பின் காகுலி தேப் சொல்கிறார்.

நாடு முழுவதிலும் இருக்கும் 9 கோடி வீட்டு உதவியாளர்களில் பெரும்பகுதியினர் வறிய பகுதிகளான ஜார்கண்ட், மேற்கு வங்கம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களிருந்து வருகின்றனர். நகர்ப்புற வீடுகளைத் தூய்மையாக வைத்திருக்கவும், நகர வாசிகளின் அவசர வாழ்க்கையை வசதியாக்கவும் இந்தத் தொழிலாளர்களில் பலர் பெரு நகரங்களுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் மட்டும் 2010 ஆம் ஆண்டும் 2011 ஆ ம் ஆண்டும் 8,000 சிறுமிகள் தொலைந்து போனதாகப் பதிவாகியிருக்கின்றது. வேறு புகல் இல்லாத பழங்குடிப் பகுதியைச் சேர்ந்த சிறுமிகளுக்குத்தான் தேவை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார் சஞ்சய் கே. மிஷ்ரா. அவர் மீட்கப்பட்ட வீட்டு உதவியாளர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் பணியைச் செய்து வருகிறார். “அவர்கள் எளிமையானவர்களாகவும், அப்பாவிகளாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக எந்த ஆதரவும் இல்லாதவர்கள். அதனால் நடக்கும் கொடுமைகள் பெரும்பாலும் பதிவாகாமலேயே போய் விடுகின்றன”. சிறுமிகளை ஏஜென்சிகள் எங்கு கொண்டு செல்கின்றன என்ற விபரம் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பதால் எல்லா வகையான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள்.

இந்தப் பெரிய சந்தையில் தெளிவற்ற அடையாளத்துடன் கொழுக்கும் பல ‘ஆள் சேர்ப்பு ஏஜென்சிகள்’ செயல்படுகின்றன (தில்லியில் மட்டும் சுமார் 2,300). எஜமானர்கள் வேலைக்கு ஆள் தேட இந்த ஏஜென்சிகளுக்கு பணம் கொடுப்பதோடு, பெரும்பாலும் மாதச் சம்பளத்தையும் தொழிலாளருக்குக் கொடுக்காமல் ஏஜென்சியிடம் கொடுக்கின்றனர்.

குழந்தைத் தொழிலாளரைப் பயன்படுத்துவதைப் பற்றிய உறுத்தல் இருந்தாலும் பலர் இன்றும் அதை கண்டு கொள்ளாமல் இருக்க விரும்புகிறார்கள். கொல்கத்தாவில் கரியாகாத் பகுதியில் ஒரு சிறு நிறுவனத்தை நடத்தும் முகுல் தாஸ் “வீட்டு வேலை செய்யும் சிறுமிகள்” கூடுதல் பணிவுடன் இருக்கிறார்கள் என்கிறார். அவரது வீட்டில் கடைசியாக வேலை செய்த 8 வயது ஷெபாலி கழுவுவது, பெருக்குவது, சமைப்பது என்று எல்லா வேலைகளையும் செய்து விட்டு, தரையில் படுத்து உறங்கி விடுவாள். அது நிச்சயமாக லாபகரமான ஒப்பந்தம்தான். சென்ற ஆண்டு தில்லியின் நடுத்தர வர்க்க வீடுகளிலிருந்து 116 ‘தொழிலாளர்கள்’ மீட்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் மட்டுமே 18 வயதுக்கு அதிகமானவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடத்தப்பட்ட சர்வேயில் 5-14 வயதுடைய சிறுமிகள் கிட்டத்தட்ட 60,000 பேர் வீட்டுத் தொழிலாளர்களாக இருப்பது தெரிய வந்தது.

இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
18 வயதே ஆகும் சாந்தினி. அமிர்தசரஸில் எஜமானரின் மாமனாரால் திரும்பத் திரும்ப பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டாள். அவளுக்கு உதவி செய்வதாக அழைத்துப் போன ஒரு ஆளால் தில்லியில் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். அவள் செய்த பல ஆண்டு வேலைக்கு ஒரு பைசா கூட சம்பளமாக கொடுக்கப்படவில்லை

இந்தியா முழுவதிலும் 1.26 கோடி சிறுவர்கள் வீட்டு உதவியாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்களில் 86% சிறுமிகள், 25% பேர் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 14 வயதை விட குறைவானவர்கள்.

‘குறைந்த பட்சம் இந்த குழந்தைகளுக்கு உணவும் உடையும் கிடைக்கிறது. விபச்சார விடுதியில் போய்ச் சேராமல் போனது அவர்கள் அதிர்ஷ்டம்’ என்ற வழக்கமான நியாயப்படுத்தல் நடுத்தர வர்க்கத்தினரிடையே இருக்கின்றது.  ஆனால், அவர்கள் எஜமானர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இப்போது 18 வயதாகும் சாந்தினி அமிர்தசரஸில் எஜமானரின் மாமனாரால் திரும்ப திரும்ப பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டாள். அவளுக்கு உதவி செய்வதாக அழைத்துப் போன ஆளால் தில்லியில் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். தனது துன்பங்களை நினைவு கூரும் அவள், தனது வீட்டுக்கு உதவி கேட்டு அழைக்கக் கூட முடியவில்லை என்கிறாள். “அவர்கள் வெளியில் போகும் வீட்டுத் தொலைபேசியை பூட்டி விட்டுதான் போவார்கள். என்னைச் செருப்பால் அடிப்பார்கள். நான் செய்த அத்தனை வேலைகளுக்கும் ஒரு பைசா கூட சம்பளமாக கிடைக்கவில்லை” என்கிறாள் அவள். அவளது பிரச்சனையைப் பற்றி விபரம் சேகரிக்க வந்த தில்லி பத்திரிகையாளர் மாதுரி சிங் இப்போது அவளை வேலைக்கு வைத்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்தினர் இந்தச் சிறுமிகளைச் சுரண்டுவதற்கு காரணம் அவர்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லாமல் இருப்பதே ஆகும் என்று அவர் கருதுகிறார். “அதிகார மட்டங்களில் தங்களது சொல்தான் எடுபடும் என்று எஜமானர்களுக்குத் தெரியும். இந்தத் தொழிலாளர்களின் பேச்சு எடுபடாது.”

கொடுமை என்னவென்றால் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் கூட வீட்டு உதவியாளர்களைத் துன்புறுத்துவதில் சளைத்தவர்கள் இல்லை. தேசிய வீட்டுத் தொழிலாளர்கள் இயக்கத்தின் ஆந்திரப் பிரிவு தலைவர் அத்தகைய ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். ஹைதரபாத்தில் உள்ள ஓய்வு பெற்ற டிஐஜியின் வீட்டில் இரண்டு குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்டனர். 14 வயதும் 15 வயதுமான அந்தச் சிறுமிகள் ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் பேரக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள அமர்த்தப்பட்டிருந்தார்கள். ஒருமுறை அந்தக் குழந்தை நீச்சல் குளத்துக்கு அருகில் போய் விட்டதைத் தொடர்ந்து, தண்டிக்கும் விதமாக அந்தச் சிறுமிகளைக் கழுத்தளவு தண்ணீரீல் இரவு முழுவதும் நீச்சல் குளத்தில் நிற்க வைத்தார் டிஐஜி. “அந்தக் குழந்தைகள் வீட்டிலிருந்து தப்பித்து போன போது, அந்தச் சிறுமிகள் நகைகளைத் திருடி விட்டதாக அவர் போலி வழக்கு பதிவு செய்தார். விசாரணையின் போது அந்தச் சிறுமிகள் சித்திரவதை செய்யப்பட்டது தெரிய வந்தது.”

 

இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
ராஞ்சிக்கு அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மணிரூபா என்ற சிறுமி தில்லியில் பல கொடுமைகளை அனுபவித்தாள். பின்னர் ஒரு தன்னார்வக் குழுவால் மீட்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டாள்

வீட்டுத் தொழிலாளர் சந்தையின் மிகப்பெரிய பிரச்சினை ஏஜென்சிகள் தொழிலாளர்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்யாமல் இருப்பது. அதன் மூலம் சுரண்டல் எளிதாகி விடுகின்றது. “ஒவ்வொரு ஏஜென்சியும் தான் சேர்த்து விடும் வீட்டு உதவியாளர்கள் பற்றிய முழு விபரங்களையும் பதிவு செய்திருக்க வேண்டும். வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வதற்கு, அவள் ஒரு ஆட்டுக் குட்டியோ அல்லது அலங்கார பொருளோ அல்ல. நீங்கள் அப்படி ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் அது ஏதாவது ஒரு இடத்தில் ஏன் பதிவு செய்யப்படக் கூடாது” என்று கேட்கிறார் அமைப்பு சாரா துறைகளின் தொழிலாளர்களுக்கான தேசிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பட்நாகர்.

வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டம் 2008 லேயே தயாராக இருந்தாலும் அது இன்னமும் தேசிய பெண்கள் ஆணையத்தில் (NCW) தேங்கிக் கிடக்கிறது. “அது சட்டமாக மாறுவதற்கு இன்னும் நீண்ட  காலம் ஆகும். அதிகார மையங்களில் இருக்கும் பலர் வீட்டு உதவியாளர்களை நம்பி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என்கிறார் தில்லி குழந்தைகள் நல வாழ்வு குழுவின் முன்னாள் தலைவர் பாரதி ஷர்மா.

இது போலவே, மாநிலங்களிலும் சட்டங்கள் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு வீட்டுத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிளாரா, 2007 இல் திமுக அமைச்சரிடம் குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 30 ரூபாய் நிர்ணயிக்கும்படி வலியுறுத்தியதாகச் சொல்கிறார். ஆனால் முடிவு தள்ளிப் போடப்பட்டு விட்டது. “சென்ற ஆண்டு தொடக்கத்தில்,  தேர்தல்கள் வரும் நேரத்தில் வேலைக்கு வைப்பவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்க முடிவு தள்ளிப்போடப்பட்டதாக அமைச்சர் என்னிடம் சொன்னார்”. மார்ச்சில் தொழிலாளர் துறைச் செயலரைச் சந்தித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் “விசயம் பரிசீலனையில் இருப்பதாக” சொல்லப்பட்டது. சட்டம் இயற்றுவதற்கு அதற்கே உரிய காலம் பிடிக்கலாம், ஆனால், சுதந்திர இந்தியாவில் நடுத்தர வர்க்க வீடுகளில் சமத்துவமின்மையும், அடக்குமுறையும் நிலவுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கக் கூடாது.

(தனிநபர் நலன்களை பாதுகாக்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

____________________________________________________________________________________________

கட்டுரை – படங்கள் – அவுட்லுக், ஆங்கில வார இதழ் ((தேபாஷி தாஸ்குப்தா, தோலா மித்ரா, புஷ்பா ஐயங்கார், மாதவி டாடா, சந்திரானி பானர்ஜி, அம்பா பத்ரா பாக்ஷி)

தமிழாக்கம்: அப்துல்.

__________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

போலி சாமியார்-நல்ல சாமியார் பிழையான வழக்கு! (இறுதிப்) பாகம் 6

58

நித்தியானந்தா-கார்டூன்-8

போலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு!

பார்ப்பனிய இந்து மதத்தைப் பொறுத்த வரை நல்ல சாமியார், போலி சாமியார் என்ற வேறுபாடுகள் இல்லை. பார்ப்பனியத்தின் அநீதியான சமூக அமைப்பு – சடங்குகளை எதிர்த்து வந்ததால்தான் புத்த, சமண, சாருவாகன, சித்தர்களை பார்ப்பனிய எதிர் மரபு என்று போற்றுகிறோம். அவர்களெல்லாம் பார்ப்பனியத்தை அவரவர் கால வரம்புகளோடு எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டவர்கள் மன்னர்களின் ஆயுத பலத்தால் ஒழிக்கப்பட்டார்கள். அவர்களது இலக்கியங்களும் அழிக்கப்பட்டன. அந்தக் கேள்விகளின் இருப்பு பார்ப்பனியத்தால் கரைக்கப்பட்ட பிறகு உலகோடு ஒட்ட ஒழுகலே இங்கு விதியாகிப் போனது. இன்றைக்கு நாம் காணும் சாமியார்களும், அதற்கு முந்தைய வரலாற்றில் உள்ள சாமியார்களும் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வான வருண சாதி அமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள். சே குவேரா போன்று ‘இந்துக்களால்’ இமேஜ் கவர்ச்சியுடன் போற்றப்படும் விவேகானந்தரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்தப் பின்னணியில் பார்ப்பனியம் முன்வைக்கும் துறவறம் என்பது இத்தகைய சமூக அநீதியை ஏற்று வாழும் மக்கள் வியந்தோதுவதற்காக முன்வைக்கப்பட்ட ‘தியாகம்’ போன்றது. ஆனால் சிற்றின்பங்களை துறப்பதால் மட்டும்தான் அந்த தியாகம் தனது மேலாண்மையைக் கோருகிறது. சமூக துன்பங்களை மதம், சடங்கு, மரபு என்று ஏற்று வாழும் மக்கள்தான் உண்மையில் தியாகம் செய்பவர்கள். அந்த தியாகத்தை விதியென கற்பித்து சிவனே என்று வாழ்வதைத்தான் பார்ப்பனியத் துறவிகள் பேசி வந்தனர். மீறுபவர்களை அரசு உதவியுடன் தண்டித்தும் வந்தனர்.

சங்கர மடத்தையோ, சைவ ஆதீனங்களையோ இத்தகைய பின்னணியில் பொருத்திப் பார்த்தால் அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்து கொள்ளலாம். துறவிகள் மக்கள் நலனுக்காக தமது இன்பங்களை துறக்கவில்லை. மக்களை ஆதிக்கம் செய்யும் பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிறுவும் பொருட்டே குடும்ப வாழ்க்கையைத் துறந்தார்கள். மன்னர்களுக்கும் பார்ப்பனியத்தின் இதர ஆளும் வர்க்கங்களுக்கும் தேவைப்படும் சித்தாந்த தலைமையை துறவிகள் அளித்ததனர். பதிலுக்கு அவர்களுக்கு தரப்படும் மரியாதை மன்னர்களின் ஆயுத வலிமை கொண்டு தீர்மானிக்கப்பட்டது. ஒரு வேளை அத்தகைய ஆயுத வலிமை தேவையில்லாத நிலை என்றால் அதைக்கூட பார்ப்பனியத்தின் சமூக அமைப்புதான் தோற்றுவித்திருந்தது.

சாமியார்களைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது, சந்தேகப்படக் கூடாது, கேலி செய்யக்கூடாது போன்றவையெல்லாம் இயல்பான சட்டதிட்டங்களாக உருவாகி அமையப் பெற்றன. பார்ப்பனிய சமூக அமைப்பை கேள்வி கேட்க முடியாது என்பதும், பார்ப்பனியத்தின் துறவிகளை கேள்வி கேட்கக் கூடாது என்பதும் வேறு வேறு அல்ல. எனவேதான் மடங்கள் நிறுவனங்களாக நிலை பெற்ற பிறகுதான் மடத்தலைவர்கள் கெட்டுப் போனார்கள் என்ற வாதம் தவறு என்கிறோம். அவையெல்லாம் துணை விளைவுகள் மட்டுமே. மடங்களின் தார்மீக பலம் பார்ப்பனிய சமூகத்தின் பலத்தில் குடி கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே மடத்தலைவர்களின் புனிதமும், அரச மனோபாவமும், கேளிக்கை நாட்டமும் வருகின்றனது. ஒன்று இல்லை என்பதால் மற்றது மகத்தானது அல்ல.

நித்தியானந்தா-9
பணமும் பொருளும்தான் பரம்பொருள், இது புரியாம நீ பாட்டுக்கு ஜீப்புல ஏறுனா எப்படி?

சிற்றின்ப நாட்டம் இல்லாமல் வாழ்ந்த செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி, ரமணர் போன்றவர்களை நடப்பு கார்ப்பரேட் சாமியார்களுக்கு மாற்றாக சிலர் கூறுகின்றார்கள். இத்தகைய ‘ஒழுக்க’ சாமியார்களெல்லாம் பார்ப்பனியத்தின் அநீதியான சமூக ஒழுக்கத்தை பின்பற்றுவதைத்தான் தங்களது துறவறத்தின் ஆன்மாவாகக் கொண்டிருந்தார்கள். ஆன்மாவிலேயே இத்தகைய அழுக்கு இருக்கும் போது அவர்களது ஆண்குறிகள் அடங்கியிருந்தால் என்ன, ஆடினால்தான் என்ன? அதனால்தான் நித்தியானந்தாவும், ஜெயேந்திரனும் சரி, சந்திரசேகர சங்கராச்சாரி, ரமணரும் சரி இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்கிறோம்.

சமூகத்தை முற்று முழுதாகத் துறந்து வாழ்தல் ‘கடவுளு’க்கும் கூட சாத்தியமில்லை. துறவிகளின் ஆடம்பர மடங்களுக்குப் பின்னால் உழைக்கும் மக்களின் சமாதியாகிப்போன வாழ்வே அஸ்திவாரம். ஜெயமோகனது குருவான நித்ய சைதன்ய யதி கூட ஊட்டியில் முக்கியமான இடத்தில் ஒரு வசதியான குருகுலத்தை கட்டியிருக்கிறார். அவர் ஏன் நாங்குநேரி பாலைவனத்தில் கட்டவில்லை, காஸ்ட்லியான சுற்றுலா மண்ணில் ஏன் கட்டினார், காசு ஏது, மடத்தின் புரவலர்கள் யார், அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அங்கே இருப்பது துறவறமா இல்லை சுரண்டல் அறமா என்பதை உள்ளுணர்வு இன்றியே தெளியலாம்.

சமூகத்தில் இருக்கும் அநீதிகளை மாய்ப்பதற்க்காக தனது வாழ்க்கை இன்பங்களை துறப்பதோடு அதை தான் மட்டும் செய்ய முடியாது, ஒரு மக்கள் கூட்டத்தால் மட்டுமே செய்ய முடியுமென ஒருவன் முனைந்தால் அவனை துறவி என்று அழைக்கலாம். அல்லது போராளிகள் என்றும் அழைக்காலம். பார்ப்பனியத்தின் வரலாற்றில் இந்தப்போராளிகள் இருந்த இடம் தெரியாமல் ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த ஒழிப்பின் மரபைத்தான் ஆதீனமாகவும், மடங்களாகவும் நாம் பார்க்கிறோம். இதற்கும் மேல் ஒத்துக்கொள்ள தயங்குபவர்கள் உண்மையான துறவிகளைப் பார்க்க வேண்டுமென்றால் பழனி படிக்கட்டில் பிச்சை எடுக்கும் சாமியார்களை போற்றுங்கள், பிரச்சினை இல்லை.

எனவே இத்தகைய பின்னணியில் புரிந்து கொள்வதால்தான் நாம் நித்தியானந்தா ஆதீனமாகக் கூடாது என்ற பிழையான கோரிக்கையை வைக்கவில்லை. அப்படி வைத்தால் நல்ல ஆதீனம், நல்ல சாமியார் என்ற முறையில் பார்ப்பனியத்தின் அநீதிக்கு துணை போன தவறினைச் செய்தவர் ஆவோம்.

சாரமாக இந்தப்பிரச்சினையில் நாம் வைக்கும் மையமான கோரிக்கை என்ன? ஆதீனங்கள், மடங்களது சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். மரபு என்ற பெயரில் இருக்கும் பார்ப்பனிய அடிமைத்தனங்கள் ஒழிக்கப்பட வேண்டும். மதம் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். துறவிகள், சாமியார்கள் என ஆக விரும்பும் எவரும் பழனி படிக்கட்டில் அமர்ந்து மட்டுமே பிச்சை எடுக்க வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகள் நிறைவேறப் போராடும் சூழ்நிலைக்கு நித்தியானந்தா ஆதீனமாவது உரம் சேர்க்கும். பிடிபட்ட பொறுக்கிக்கும் பிடிபடாத பொறுக்கிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையை நாம் பார்ப்பனியத்திற்கு பாடை கட்டும் நோக்கத்திற்கு பயன்படுத்துவோம். தோற்கடிக்கப்பட்ட பார்ப்பனிய எதிர் மரபின் இறுதி வெற்றியை நிலைநாட்டுவோம்.

•முற்றும்

_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காரரா? பாகம் 5

5

நித்திக்கு ஆதரவாக வரும் ‘முற்போக்காளர்கள்’!

நித்தியானந்தாவிற்கு அச்சுறுத்தும் தொண்டை முள்ளாக பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமாக எழுந்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. தாராளமய சிந்தனை கொண்ட ‘முற்போக்காளர்கள்’ பலரும் இதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும். நித்தியானந்தாவின் துறவறமும், பாலியல் வேட்கையும் அவரது தனிப்பட்ட விசயம், அவரது படுக்கை அறையை எட்டிப்பார்ப்பது அநாகரீகம் என்கிறார்கள் அந்த ‘முற்போக்காளர்கள்’. ஒருவேளை அது தவறு என்றாலும் அதை கேட்க்க அருகதை உள்ளவர்கள் அவரது பக்தர்கள்தானே அன்றி மற்றவர்கள் அல்ல என்றும் கூறுகிறார்கள். இதை நித்தியானந்தாவும் பலமுறை விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

லிபரல் சிந்தனையும் பார்ப்பனிய ஆன்மீகமும் இப்படி ஒத்துப் போவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இந்த வாதத்தை குற்றவாளிகள் பலரும் அவ்வப்போது எழுப்புவது வாடிக்கையானதுதான். பேருந்தில் பிக்பாக்கட் அடிக்கும் ஒருவன் கூட தன்னை அடிப்பதற்கு பணத்தை இழந்தவனுக்குத்தான் உரிமை உண்டெனக் கூறுவான். சட்டமும் கூட பாதிக்கப்பட்டவன் புகார் அளித்தால்தான் வழக்கையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். அப்பட்டமான பாலியல் வன்முறை நடந்தாலும் கூட பாதிக்கப்பட்டவள் புகார் தர தயாரில்லை எனும் போது குற்றம் இழைத்தவரை சட்டப்படியே தண்டிக்க முடியாது.

இதை வைத்து குற்றவாளிகள் யோக்கியமானவர்கள் என்று ஆகிவிட முடியுமா? பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக புகார் தெரிவிப்பதன் மூலம் தனது சமூக பாதுகாப்பை இழந்து விடுவார்கள் என்ற யதார்த்தமே அவர்களது சரணாகதி அணுகுமுறையை தீர்மானிக்கிறது. இது குறிப்பிட்ட சமூகத்தின் குற்றமே அன்றி பாதிக்கப்பட்டவரின் கோழைத்தனம் அல்ல.

நித்தியானந்தாவின் ஊடக உலக கொ.ப.செவாக செயல்பட்ட சாரு நிவேதிதாவின் சாட் வக்கிரத்தையே எடுத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்ட பெண் பொது வெளியில் புகாராக்கி வழக்கு தொடுக்க முன்வராத நிலையில் சாரு மீண்டும் சகஜமாக தனது பணிகளைத் தொடருகிறார். சட்டத்தின் மொழியில் அவர் குற்றவாளி இல்லை. ஆனால் அவர் வக்கிரத்திற்கு மறுக்க முடியாத சான்று இருந்தும் லீகலாக பதியப்படவில்லை என்று கிழக்குப் பதிப்பகம் பத்ரியோ, பத்திரிகையாளர் ஞாநியோ சகஜமாக அவரோடு பேசுகிறார்கள், புத்தகத்தை போடுகிறார்கள், அறிமுகம் செய்கிறார்கள்.

பொதுவில் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வக்கிரங்களை நாள்பட நாள்பட சமூகம் ஒரு பாரதூரமான அநீதியாக பார்ப்பதில்லை. இதைத்தான் இதெல்லாம் ஒரு விசயமா என்று அருணகிரி கேட்கிறார். கூடவே ஒரு படுக்கையறைக்குள் நடக்கும் விசயத்தை வைத்தெல்லாம் ஒருவனை தண்டிக்க முடியாது என்றும் இந்த சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள்.

நல்லது, விவசாயியின் வயலுக்குள்ளேயும், ஏழையின் குடிசைக்குள்ளேயும் அரசும், முதலாளிகளும் அநீதியாக தலையிடுகின்றனர். மின்வெட்டை ஏற்க வேண்டுமென உத்தரவு போடுகின்றனர். சமையலறைக்குள் புகுந்து விலைவாசி ஏற்றத்தை ஏற்றே ஆகவேண்டும் என கட்டளையிடுகின்றனர். மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்தே வேலை செய்ய வேண்டும் என்று அலைய விடுகின்றனர்.

இவையெல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது ஆகாதா? கேட்டால் நாட்டின் நலனுக்காக தலையிடலாம் என்பார்கள். உண்மையில் இந்த நலன் முதலாளிகளின் நலனுக்காகத்தான் தலையீடு செய்கிறது. எனில் மக்களின் நலனுக்காக ஒரு முதலாளி, சாமியாரின் படுக்கையறைக்குள் ஏன் தலையிடக்கூடாது? முகேஷ் அம்பானி கட்டியிருக்கும் ஆன்டிலியா மாளிகையை பணக் காரர்களின் வக்கிரம் என்று சொல்வது அவரது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது ஆகிவிடுமா? ரஜினியின் வருமானம் பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டின் மூலம் வருகிறது என்று சொல்வது அவரது தனிப்பட்ட தொழிலில் தலையிடுவது ஆகுமா?

ஆம். நித்தியானந்தாவின் மாளிகை மடமும், வசதிகளும், ஏவல் வேலைகளுக்கு காத்திருக்கும் சேவிகைகளும் மக்கள் பணத்தை ஏமாற்றி பெறப்பட்ட ஒன்று. இதை பக்தன் மட்டும்தான் கேட்க முடியுமென்றால் இந்த உலகில் எல்லா அநீதிகளையும் யாரும் எதிர்த்து கேட்க முடியாது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை ஈராக் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், ஆதிக்க சாதியின் திமிரை தலித் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், கோவிலில் தமிழ் நுழைவதற்கு பக்தன்தான் போராட வேண்டும், பாலியல் வன்முறையை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்தான் போராட வேண்டும் என்று பேசினால் அந்த தாராளமய சிந்தனையாளர்கள் ஒத்துக் கொள்வார்களா?

நித்தி - சாரு
நித்தி : வாங்கடா வாங்க ஆதினம் வண்டிக்கு பின்னால – சாரு : வட போச்சே 🙁

நித்தி விளிம்பு நிலை கலகக்காராரா?

இவர்களோடு ஒத்துப் போகும் பின்நவீனத்துவ அறிவாளிகளும் கூட நித்தியானந்தாவின் கலகத்தை வரவேற்று வாழ்த்துப்பா பாட வாய்ப்பிருக்கிறது.

தற்போது மதுரை ஆதீனத்தில் திருநங்கைகள் முக்கிய பொறுப்பில் வைக்கப்படுவார்கள் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை அவர்கள் வரவேற்கவே செய்வார்கள். மேலும் தான் ஆண்மை, பெண்மை கடந்தவர் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை திருநங்கை போல இருப்பவர் ஆதீனமாக முடியாது என்று அர்ஜூன் சம்பத் கோஷ்டி தெரிவித்திருக்கிறது. இதுவும் திருநங்கைகளை இழிவுபடுத்தும் ஒன்றுதான். இவற்றை வைத்தெல்லாம் நித்தியானந்தாவை நாம் பெண்ணுரிமை போராளியாகவோ, ‘விளிம்பு நிலை’ கலகக் காரனாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. கொண்டால் சங்கர மட, மதுரை ஆதீன அந்தப்புறங்களில் பெண்கள் வந்திருப்பதால் மடத் தலைவர்களை பெண்ணுரிமைப் போராளிகளாவும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

பின்னாளில் தனது பாலியல் அத்து மீறல்கள் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டால் தான் மன ரீதியாக திருநங்கை மாதிரியானவர் என்று தப்பித்துக் கொள்ளலாமென நித்தி யோசித்திருக்கலாம். சட்டத்திற்கு இந்த மொழி என்றால் சமூகத்திற்கு அப்படி சொல்ல முடியாது. அதனால்தான் தான் ஒரு அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரே போடாக போட்டுவிட்டார் நித்தி.

மாமூல் வாங்கியே வயிற்றையும், பாங்க பாலன்சையும் வளர்க்கும் ஒரு ரவுடி ஊரின் கோவிலுக்கு கொடை என்றதும் வாரி வழங்குவதில்லையா? மக்களும் அவனது தயாளா குணத்தை போற்றுவதில்லையா? அது போலவே தனது பொறுக்கித்தனத்தை மறைப்பதற்கும் மடை மாற்றுவதற்கும் நித்தி இந்த கலகக்கார வேடத்தை கையிலெடுக்கிறார். இதிலெல்லாம் பின் நவீனத்துவ அறிவாளிகள் விழுந்து விடுவார்கள் என்றால் அவர்களை ஆண்டவன் தெரிதாவால் கூட காப்பாற்ற முடியாது.

சங்கர மடத்திலோ, மதுரை ஆதீனத்திலோ பெண்கள் பெண்ணுரிமையின் பாற்பட்டு வரவில்லை. அந்தப்புறத்து நாயகிகளாகத்தான் மறைமுகமாக கொண்டு வரப்படுகிறார்கள். ஆதலால் இது நாம் பெருமைப்படத்தக்க ஒன்றல்ல. சபரிமலையில் பெண்கள் வழிபடவேண்டும், கருவறைக்குள் பெண்கள் பூஜை செய்ய உரிமை வேண்டும், ஆதீன, மடங்களின் தலைவர்களாகவும் பெண்கள் வருவதற்கு உரிமை வேண்டும் என்று கோரினால்தான் அது பெண்ணுரிமையின் பாற்பட்டது.

‘கற்பை’ப் போற்றும் இந்துமதம்தான் தேவதாசிகளையும் கொண்டு வந்திருக்கிறது. ‘தாய்மையை’க் கொண்டாடும் இந்து மதம்தான் தாய்மார்களை உடன்கட்டை ஏற்றிக் கொன்றது. ஆறுகளுக்கு பெண்களது பெயரை வைத்ததாகப் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனியம்தான் விதவைப் பட்டத்தையும் திணித்தது. ‘குழந்தைகள் தெய்வங்கள்’ என்று பார்த்த பார்ப்பனியம்தான் பால்ய விவாகத்தையும் பேணி வளர்த்தது. எனவே பார்ப்பனியத்தின் ஒழுக்கமும், ஒழுக்கமின்மையும் என்பது ஒரு அடக்குமுறையின் மறுபாதி நாணயம்.

இதற்கு மேலும் நித்தியானந்தாவின் தனிப்பட்ட உரிமைகள் குறித்து கவலைப்படுவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது. என்றாலும் இதை வைத்து நித்தியானந்தா ஆதீனமாவதற்கு உரிமை இல்லை என்று நாம் கூறவில்லை. உரிமை உண்டு என்று ‘ஆதரிக்கவே’ செய்கிறோம்.

அதற்கு போலி சாமியார், நல்ல சாமியார் என்ற பொருட்பிழை கொண்ட வழக்கை பரிசீலிக்க வேண்டும்.

– தொடரும்

_____________________________________________________

_____________________________________________________

நித்தி: மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்! பாகம் 4

5

மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்!

ஆதினம் அருணகிரியே நித்தியின் நீண்ட முடிதான் அவரது டிரேட் மார்க் என்று அங்கீகரித்து விட்ட புடியால் முடி பிரச்சினையை ஏன் எழுப்புகிறீர்கள் என்று கேட்கிறார் நித்தியானந்தா. இந்து மதத்திற்கு எத்தனையோ சோதனைகள் இருக்கும் போது மயிரெல்லாம் ஒரு பிரச்சினையா என்று அவர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. இவைதான் சைவ ஆதீன மகா சன்னிதானங்கள் கண்டு பிடித்த மரபு மீறல். எனில் எது மரபு? எவை மரபு மீறல்?

பெருசு உயிரோடு இருக்கும்போது தனது காதலியுடன் ஓடிப்போன ஜெயேந்திரன் போகும் போது தண்டத்தை கொண்டு செல்லவில்லை. அதை விட்ட உடனேயே அவரது சங்கர மட பதவி ரத்தாகிவிட்டது என்பதெல்லாம் பார்ப்பனியத்தின் கீர்த்தி கருதி மாற்றப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்த ஜெயேந்திரர் மீண்டும் மட பட்டத்தை பெற்றார். இப்படி ஆயிரத்தெட்டு விதி மீறல்களெல்லாம் அவரவர் தேவை கருதி எல்லா ஆதினங்களிலும் நடந்திருக்கின்ற உண்மைகள்.

கோவில் கருவறைகளை எடுத்துக் கொள்வோம். மற்ற சாதியினர் புரோகிதராக வரலாமெனும் போது மட்டுமே இது ஆகம விதிக்கு எதிரானது என்று பார்ப்பனர்கள் ஊளையிடுவது வழக்கம். ஆனால் கோவில் கருவறைக்குள், மின்சாரம், டியூப்லைட்டு, சோடியம் விளக்கு, ஏர் கூலர்கள், டைல்ஸுகள் எல்லாம் இன்று நுழைந்திருக்கின்றன. இவையெல்லாம் உள்ளே வரலாம் என்று எந்த ஆகமத்தில் கூறப்பட்டிருக்கின்றன? இல்லை ‘1500’ ஆண்டு மரபு உள்ள மதுரை ஆதினம் கல்மடமாக இருந்து இன்று ஏ.சி மடமாக மாறியிருக்கிறதே இதற்கென்ன பொருள்? ஆகவே ஆகம விதி, மரபு என்பதெல்லாம் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு மாறிக்கொள்ளும், வேறு விளக்கங்களும் தரப்படும். எனில் அந்த சலுகை நித்தியானந்தாவிற்கு மட்டும் கிடையாதா?

சங்கராச்சாரியும், ஆதீனங்களும் காரிலும், விமானங்களிலும், இரயிலிலும் செல்வதெல்லாம் எந்த மரபில் வருகின்றன? இவையெல்லாம் காலத்துகேற்ற மாற்றங்கள் எனில் பக்தர்களின் மனம் கவர்ந்த நித்தியின் முடி மட்டும் வெட்டப்பட்டு மொட்டையடிக்க வேண்டுமா? ஆகவே நித்தியானந்தாவை மரபு கருதி ஏற்கக் கூடாது என்பதில் அவர்களே சீரியசாக கருதும் எவையுமில்லை. ஏனென்றால் இந்த மரபு விதிமுறைகளின் மையமாக இருப்பது ஒரு ஆதினத்தின் வாரிசை நியமிக்கும் உரிமை உயிரோடு இருக்கும் ஆதினத்திற்குத்தான் உண்டு என்பதே. இதை மறுக்க முடியாது. மறுத்தால் இதுதான் ஆகப்பெரிய மரபு மீறல்.

நித்தியானந்தா-மொட்டை
பழயை ஆதினம்: தம்பி நித்தி மொட்டை போடறீயா? நித்தி : ஏண்ணே அதான் இவ்ளோ கொட்டை போட்டிருக்கேனே?

 

மரபின் மையம் சொத்துடைமையில்தான்! தீர்வு அரசுடமையில்தான்!

எனவே ஆதினங்களை ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்வு செய்ய வேண்டுமென்று கூறினால்தான் இந்தப் பிரச்சினையில் மற்றவர் தர்க்க ரீதியாக தட்டிக் கேட்பதற்கு வழியுண்டு. அது சாத்தியமில்லை என்றால் வேறு எவையும் சாத்தியத்திற்குள் வந்துவிடாது. மற்ற ஆதினங்கள் இது குறித்து நீதிமன்றத்திற்கு போவதும் சிரமம். போனாலும் அப்படி சட்டென்று முடிகிற விசயமல்ல. ஏனெனில் இந்தக் குழாயடிச் சண்டைக்கு நீதிமன்றம் சென்றால் அப்படி ஒரு புதிய மரபு ஏற்படுத்தப்படுமென்றால் எந்த ஆதினங்களும் நிம்மதியாகத் தூங்க முடியாது. அதனால்தான் அவர்களில் சிலர் இது குறித்து அறநிலையத்துறைக்கும், புரட்சித் தலைவியின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக பேசுகின்றனர்.

இங்கு வாசகர்கள் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு அறநிலையத்துறையின் கீழ் இந்து கோவில்களை வைத்திருப்பது தவறு, அவற்றை மீண்டும் ‘இந்துக்கள்’ அதாவது ஆதிக்க சாதி அறங்காவலர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்று கூப்பாடு போட்டவர்கள் இப்போது மட்டும் அரசு தலையீடு செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். ஒரு சிலர் மதுரை ஆதீனத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமென்றும் கேட்கிறார்கள். மக்கள் பிரதிநிதியாக இருக்கும் மதச்சார்பற்ற அரசு இன்றி ‘1500’ ஆண்டுகள் வரலாறு கொண்ட ஆதீனம் கூட காப்பாற்றப்பட முடியாது எனில் அந்த நீதி கோவில்களுக்கு மட்டும் இல்லையா? ஏன் இந்த இரட்டை வேடப் பேச்சு?

மசூதிகளும், சர்ச்சுகளும் அந்தந்த சிறுபான்மையினர் கையில் இருக்கும் போது கோவில்கள் மட்டும் இந்துக்கள் வசமில்லையா என்று நியாயம் பேசிய இந்து மதவெறியர்கள் இப்படி தடாலென்று சரணாகதி அடைகிறார்கள் என்பதை நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முரண்பாட்டின் மையம் என்ன? ஆதினங்களோ, கோவில்களோ தனியார் சொத்துக்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே என்ன முறைகேடுகள் நடந்தாலும் வெளியார் தலையிட முடியாது.  முறைகேடுகளை தட்டி கேட்க வேண்டுமென்றால் அவை மக்கள் சொத்தாகவோ இல்லை அரசு மேற்பார்வையிலோ இருக்க வேண்டும்.

ஆகவே இந்துமதவெறியர்களின் முன் இருவழிகள்தான் இருக்கின்றன. தனியாரென்றால் தில்லு முல்லுகளை சகித்துக் கொள்ள வேண்டும். தட்டிக் கேட்க வேண்டுமென்றால் அரசுதான் அவற்றை ஏற்று நடத்த வேண்டும். என்ன பதில் தருவார்கள்? இங்கும் கூட மதுரை ஆதீனத்தின் எதிர் கோஷ்டி மடத்தின் உள்ளே  நுழைந்து கூட எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. தற்போது மதுரை ஆதீனம் நித்தியானந்தாவிற்கு பாத்தியப்பட்ட சொத்தாக மாறிவிட்டபடியால் அவர்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை. மீறி நுழைந்தால் போலீசு கைது செய்யும்.

ஏற்கனவே கூறியபடி ஆதினங்கள் என்பவை தனி ஒருவருக்கு சொந்தமாக இருக்கம் பட்சத்தில் புதிய ஆதீனங்களின் நியமனம் குறித்து ஒருவர் அதிருப்தி மட்டுமே தெரிவிக்கலாமே ஒழிய தடுத்து நிறுத்த முடியாது. இதை தற்போதைய மதுரை ஆதினமான அருணகிரி பல முறை நேரடியாகவும், மறைமுகமாவும், மிரட்டலோடும் தெரிவித்திருக்கிறார். இதை எதிர் கொள்ள அவர்கள் செய்த ஏற்பாடு என்ன?

நித்தியின் வசிய மருந்து! அருணகிரியின் பிசினெஸ் உடன்பாடு!!

அருணகிரி அவர்கள் சுய நினைவில் இல்லை, நித்தியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார் என்று பேசியதோடு நீதிமன்றத்திலும் வழக்கு போட்டார்கள். அதாவது ஒரு முதலாளி சுய நினைவோடு உயில் எழுதவில்லை என்றால் செல்லுபடியாகாது என்று தமிழ் சினிமாவில் கேட்டிருப்போமே? ஆனாலும் தான் குத்துக் கல்லாகத்தான் இருக்கிறேன் என்று ஆதினம் போட்ட உத்தரவை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டது. இதிலும் ஒரு தத்துவப் பிரச்சினை உண்டு.

ஓஷோ போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் சரி, கங்கை மகாமத்திற்கு வரும் நாகா சாமியார்களும் சரி போதை வஸ்துகளோடுதான் பரப்பிரம்மத்தோடு ஒன்றுகின்றனர். அவை கஞ்சா, அபின் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை. ரோல்ஸ்ராய்ஸ் காராகவோ, பிரதமர் துவங்கி பாமரர் வரை காலில் விழுவதாகவோ  கூட இருக்கலாம். மதுரை ஆதீனமும் தனக்கு நீண்ட காலம் இளைப்பு பிரச்சினை இருந்ததாகவும் தற்போது நித்தி அதை குணப்படுத்தி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

நித்தியானந்தா வசிய சக்தி உள்ளவரென்று அவரது எதிர்ப்பாளர்கள் கூட கூறுகிறார்கள். பொருள்களை பயன்படுத்தத் தெரிந்த எவரும் வசிய ஆற்றலை தாராளமாகப் பெறலாம். இங்கே கூட நித்தி ஸ்டராய்டு மருந்துகளை பெரிய ஆதீனத்திற்கு கொடுத்திருக்கலாம். வயதான அருணகிரி இன்றோ நாளையோ மண்டைப்போடும் தருணத்தில் இருப்பதால் இதனால் ஒன்றும் குடி மூழ்கிவிடாது. குவார்ட்டரில் பெப்பர் கலந்து அடித்தால் தொண்டைக் கட்டு சரியாகிவிடும் என்று விவேக் ஒரு படத்தில் சொல்வாரில்லையா, நிஜத்திலும் இத்தகைய மருந்துகளை கார்ப்பரேட் சாமியார்கள் பயன்படுத்தினால் யார் கண்டு பிடிக்க முடியும்?

நித்தியானந்தா
எங்க்கிட்டயும் செருப்பிருக்கு நாங்களும் வீசுவோம் - எதிர் கோஷ்டி மீது செருப்பு வீசிய நித்தி ஆதரவு கோஷ்டி

ஆனாலும் மதுரை ஆதீனம் நித்தியின் கார்ப்பரேட் பாணி ஆன்மீகத்தில்தான் மனதைப் பறி கொடுத்திருக்கிறார். அதற்கு விலையாக ஐந்து கோடி ரூபாய்களையும் வாங்கியிருக்கிறார். முற்றும் துறந்த ஆதீனத்திற்கு இந்த பணம் எப்படிப் பயன்படும் என்று கேட்பது அறீவீனம். ஊருக்கு மூன்று, நான்கு குடும்பங்கள் இருக்கையில் அவருடைய மாதாந்திர பட்ஜெட் என்பது நிச்சம் பெரிய தொகைதான். ஆகவே இந்த ஆதீன வாரிசு நிகழ்வு என்பது பக்காவான பிசினெஸ்ஸாகவும் இருக்கிறது. ஏராளமான சொத்துக்களை வைத்திருக்கும் ஆதீனங்கள் இயற்கையாகவே பிசினெஸ் ஆட்களாக இருந்தாக வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நியதி. இதைப் புரிந்து கொண்டால் மதுரை ஆதீனத்திற்கும் நித்தியானந்தாவிற்கு ஏற்பட்ட வணிக நடவடிக்கையை குறை சொல்ல முடியாது.

இறுதியாக நித்தியை எதிர்ப்பவர்கள் அவரது பாலியல் முறைகேட்டினை மட்டும் வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள். ஆனால் நித்தியின் படுக்கையறையில் எட்டிப்ப பார்த்து முடிவு செய்வது அநாகரீகம் என்கிறார்கள் சில தனி மனித உரிமையாளர்கள்.  எது தனியுரிமை? எது தனியுரிமை மீறல்?

– தொடரும்

_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்! பாகம் 3

37

சங்கர மடத்தின் பார்ப்புக்கு ஒரு நீதி! மனு தர்மத்தின் நியதி!

பார்ப்பனியத்தின் தலைமை பீடமாக திகழ்ந்த சங்கர மடத்தை அவாள்களும் சரி, அவாள்களின் அரசியல் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸூம் சரி என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தற்போது நித்தியானந்தா ஆதீனமாக மலர்ந்திருக்கும் நிலையில் யாரும் ஜெயேந்திரன் விவகாரத்தை எழுப்பி விடக்கூடாது என்பதில் தினமணி வைத்தி மாமா மிகவும் கவலைப்ப்படுவது அதற்கோர் சான்று. அதாவது ஜெயேந்திரன் மடாதிபதியாக இருக்கும் போதுதான் குற்றம் சாட்டப்பட்டாராம். அது நீதிமன்றத்தால் நிரூபணமாகாத நிலையில் அவர் பதவி விலக தேவையில்லையாம். ஆனால் நித்தியானந்தா பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் புதிதாக மடத்தின் தலைவராக வருவது சரியில்லை என்று புலம்புகிறது தினமணி. எனில் அவர் நித்தியானந்தா தியான பீடத்தின் தலையாக வலம் வருவதில் வைத்திக்கு உடன்பாடுதான். புதிய பதவிதான் பிரச்சினையாம்.

நெஞ்சு நிமிர்த்தி ” நீதான் குற்றவாளி” என்று சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைதான், “நித்தியானந்தா ஆதினத்திற்கு பொருத்தமானவர் அல்ல, மரபுகள் தேவைப்படாத சித்த மரபைச் சேர்ந்தவர்”, என்றெல்லாம் செத்துப்போகும் பாயிண்டுகளை வைத்து பேசுகிறார் வைத்தி மாமா. என்னதான் கவனமாக இருந்தாலும் மல்லாக்க படுத்து துப்பும் போது எச்சில் கீழேதானே விழவேண்டும்?

நித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்!

ஜெயமோகன்
நோ, நோ! திஸ் நான்சென்ஸ் இஸ் நாட் ஒரிஜினல் ஆன்மீகம் என்கிறார் ஜெயமோகன்

கொலையே செய்தாலும் ஒரு பார்ப்பனருக்கு மரண தண்டனை இல்லை எனும் மனு தர்ம விதி ஜெயேந்திரன் விசயத்திலும் அப்பட்டமாக பின்பற்றப்படுகிறது. பார்ப்பனரல்லாத சாமியார்களின் லீலைகளை கண்டிக்கும் எவரும் சங்கர மடத்திற்கு மட்டும் அனிச்சை செயலாய் விலக்கு கொடுத்து விடுகிறார்கள். நித்தியானந்தாவின் படுக்கையறை ஆட்டம் நாறிய போது தனது இந்து பக்தர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக ஆன்மீகம் – போலி ஆன்மீகம் தொடரை ஜெயமோகன் எழுதியிருந்தார்.

ஆனால் செத்துப் போன சீனியர் சங்கராச்சாரியின் சாதித் திமிர், மொழித் திமிர், ஆணாதிக்க திமிர் எல்லாவற்றையும் கடந்து அவர் ஒரு கலாச்சாரக் காவலர் என்று கொண்டாடும் ஜெயமோகன் அந்தக் காவலர் நியமித்த ஜெயேந்திரனது குற்றங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இவர் வேறு, அவர் வேறு என்று ஒற்றை வரியில் கடந்து செல்ல முடியாது. பெருசின் உள்ளொளிதானே சிறுசின் ஞானத்தை கண்டுபிடித்து அரியணையில் ஏற்றியிருக்கிறது. பெருசு உயிரோடு இருக்கும் போது மட்டும் சிறிசு நல்லாத்தான் இருந்தார் என்ற வாதமெல்லாம் பூமாரம் போல திருப்பித் தாக்கும்.

நமது கேள்வி எளிமையானது. அதிகார, அரசியல் தரகு மையமாக மாறியதால் மட்டும் ஜெயேந்திரன் தவறு செய்து விடவில்லை. இந்த வாதத்தை நீட்டித்தால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருமுன்னர் ஆர்.எஸ்.எஸ் கூட ஒழுக்கமாகத்தான் இருந்தது என்றும் சொல்லலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அரசியல் அதிகாரத்தை சுவைப்பதற்காக நெடுங்காலம் போராடிய இந்துமதவெறியர்கள் குறிப்பிட்ட காலத்தில் அதை பறித்தெடுக்கிறார்கள்.

ஒழுக்கத்தை வெறுமனே பாலியல் சார்ந்த தனிப்பட்ட ஒழுக்கமாக மட்டும் குறுக்குவதால் சமூகம் சார்ந்த பேரொழுக்கங்கள் மறைந்து கொள்கின்றன. கூடவே தனது ஆதிக்க பாசிசக் கொள்கையை நியாயப்படுத்தவும் செய்கின்றன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தை மதத்தால் சாதியால் மொழியால் ஒடுக்கும் கும்பல் பெண்ணாசை துறப்பு அல்லது தொடுப்பின் மூலம் தனது சமூக ஒழுக்கக் கேட்டை ஒழுக்கமாக சித்தரிக்கிறது.

ஜெயமோகன் போன்றோர் விழும் இடம் துல்லியமாக இதுதான். அந்த வகையில் பெரிய சங்கராச்சாரி மற்றும் ஆட்சிக்கு முந்தைய ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தன்னளவிலேயே உழைக்கும் மக்களுக்கு எதிரான பார்ப்பன பாசிசத்தை கொள்கையாகவும், மதமாகவும், சடங்காகவும் கொண்டிருந்ததார்கள். இந்த ஒடுக்குமுறை அரசியலை விடவா ஜெயேந்திரனது பாலியல் ஒழுக்கம் கீழானது? இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிறோம். ஒன்றின் வெளிப்பாடு மற்றதை இல்லை என்றோ உயர்ந்தது என்றோ ஆக்கிவிடாது. ஆயினும் இந்த எளிய உண்மையை ஜெயமோகன்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

மக்களுக்கான ஜனநாயகத்தை மறுப்பதால்தான் ஞானிகள், மடங்கள், அற்பவாத இலக்கியவாதிகளின் இருப்பு கருத்தாலும், நடைமுறையாலும் தனது வம்படியான மேல் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. அப்படித்தான் இவர்களது அகங்காரமே நீதிமன்றமாகவும், தன்னிலையே கேள்விக்கு அப்பாற்பட்டும், கருத்தே எதிர்க்கப்படக்கூடாததாகவும் தொழிற்படுகின்றன. அதனால் சமூகத்தின் பரந்துபட்ட செயல் துடிப்பில் வைத்து இவர்கள் எப்போதும் தங்களை விமரிசனம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆகவேதான் இத்தகைய ஞானிகளை நாம் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டுமே அன்றி நம்மை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பாமரத்தனம் என்று ஜெயமோகன் நீண்ட காலமாக ஓதுகிறார். பார்ப்பனியத் திமிரின் இலக்கிய சாட்சியாக அவர் நீடித்திருப்பதன் தத்துவம் இதுதான்.

சைவ ஆதீனங்கள் – பார்ப்பனியத்தின் பங்காளிகள்!

ஆக நித்தியானந்தாவை மட்டம் தட்டும் போக்கில் ஜெயேந்திரனை கண்டு கொள்ளாமல் விடுவதில் பார்ப்பனிய ஆதிக்கமும், அடிமைத்தனமும் நிச்சயமாக இருக்கிறது என்கிறோம். இதனால் சைவ ஆதீனங்கள் அனைத்தும் பார்ப்பனியத்தை எதிர்க்கிறது என்பதல்ல. சொல்லப் போனால் இவர்களும் பார்ப்பனியத்தின் பிரச்சார பீரங்கிகிகள்தான். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்கும் பார்ப்பன சிவாச்சாரியர்களுக்கு சைவ ஆதீனங்கள்தான் தோள் கொடுத்தார்கள். கருவறையில் தமிழ் மொழி கூடாது என்பதையும் இவர்கள்தான் முன்னின்று பேசினார்கள். அந்த வகையில் இவர்களது பார்ப்பனிய கிரைம் ரிகார்டு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. இவர்களது கோவில்களில் கூட பார்ப்பனர்கள்தான் புரோகிதர்களாக உள்ளனர்.

பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு மாற்றாக வந்த சமண புத்த மதங்களை இரத்தத்தால் அழித்த வரலாற்றில் ஆதீனங்களுக்கும் இடமுண்டு. சமண துறவிகளை கழுவிலேற்றிக் கொன்ற திருஞான சம்பந்தர்தான் மதுரை ஆதீனத்தின் ஸ்தாபகராம். எனில் கொலைகார சம்பந்தரை விட குஷால் பேர்வழி நித்தியானந்தா எவ்வளவோ மேலில்லையா? அல்லது அந்த கொலைக்கும் இந்த மன்மதக் கலைக்கும் தொடர்பில்லையா? பெண்ணாசையை விட ஒரு முழு சமூகத்தையே ஆட்டிப்படைக்கும் ஆசை பேராசை இல்லையா?

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு தேவைப்படும் உதவிகளையும் இந்த ஆதினங்கள் கண்ணும் கருத்துமாக செய்துதான் வருகின்றனர். குன்னக்குடி போன்ற ஒரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பார்ப்பன ஆதிக்கத்தின் தளகர்த்தர்களாகத்தான் அனைத்து ஆதீனங்களும் இருக்கின்றனர். இங்கும் கூட சைவ வேளாளர் சாதிகளைச் சேர்ந்தோர் மட்டும்தான் தம்பிரான்களாகவும், ஆதீனமாகவும் வர முடியும். தற்போது நித்தியானந்தா விவகாரத்தில் மரபு என்ற பெயரில் இதைத்தான் எழுப்புகிறார்கள்.

நித்தியானந்தா-மதுரை ஆதீனம் மீட்புக் குழு
ஆதீனம்! தீர்ப்ப மாத்திச் சொல்லு! இப்படிக்கு, நெல்லைக்கண்ணன், அர்ஜூன் சம்பத், முருகன்ஜி , மதுரை ஆதீனம் மீட்புக் குழு!

சைவப் பிள்ளைதான் ஆதீனமென்றால், மற்றவர்கள் வேசி மக்களா?

அதாவது சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ செட்டியார் சாதிகளைச் சேர்ந்தோர்தான் ஆதினமாக வரமுடியுமாம். நித்தியானந்தா ஆற்காடு முதலியார் என்பதால் தகுதியில்லை என்கிறார்கள். அர்ஜூன் சம்பத் கும்பலோடு இணைந்திருக்கும் நெல்லைக் கண்ணன் போன்றோர் இதை ஒரு பெரிய நல்லொழுக்க விசயமாக திரும்பத் திரும்ப ஓதுகின்றனர். ஆனாலும் நித்தியானந்தா தொண்டை மண்டல முதலியார்தான், தகுதியுள்ளவர்தான் என்று எக்சிஸ்டிங் மதுரை ஆதினம் ஓதியபடியே வாதாடுகிறார்.

சங்கர மடத்திற்கு பார்ப்பனர்கள், சைவ ஆதீனங்களுக்கு சைவ வேளாளர்கள் என்பதெல்லாம் மரபோ மண்ணாங்கட்டியாகவோ இருக்கட்டும். இவையெல்லாம் மற்ற ‘இந்து’க்களை இழிவு படுத்துகிறது என்று எவருக்குமே தோன்றவில்லை ஏன்? பூணூல் பார்ப்பானும், விபூதி சைவப் பிள்ளையும்தான் ‘இந்து’க்களுக்கு மத குருக்களாக வர முடியும் என்றால் அங்கே மானமுள்ள ‘இந்து’வுக்கு என்ன வேலை? இந்து முன்னணியின் பார்ப்பனிய ஆதிக்கத்திற்காக பிரிந்து சென்றதாக கூறிக் கொள்ளும் இந்து மக்கள் கட்சி தற்போது அந்த ஆதிக்கத்தை சைவப் பிள்ளைக்கு மாற்றித் தரத் துடிப்பது ஏன்?

சக்கலியரும் சங்கராச்சாரியாகலாம், பறையரும் ஆதீனமாகலாம் என்று கேட்க வேண்டிய காலத்தில் மரபின் பெயரால் உழைக்கும் மக்களை இவர்கள் ஆதிக்கம் செய்யவே துடிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று. நித்தியானந்தாவும் இந்த மரபை மீற விரும்பவில்லை. தானும் சைவ வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்தான் என்று உறவினர்களை நிறுத்தியே கேட்கிறார். ஒரு வேளை அவர் சைவ வேளாளர் பிரிவுக்குள் வரவில்லை என்றாலும் மற்ற ஆதினங்கள் என்ன செய்ய முடியும்? சாதி குறித்த நிரூபிக்குமாறு ஒரு சிவில் வழக்கு போட்டால் அது கீழிருந்து சுப்ரீம் கோர்ட்டு போய் பைசல் ஆவதற்குள் நித்தியானந்தாவின் பேரனே ஆதீனமாகலாம். அல்லது நித்தியும் அவரது உறவினர்களும் சைவ வேளாளர்தான் என்று ஒரு சான்றிதழை பெறமுடியாதா என்ன?

இத்தகைய குற்றச்சாட்டுகளையெல்லாம் நித்தியானந்தா விரும்பவே செய்கிறார். பாலியல் தவிர்த்த மற்ற விவகாரங்களை பெரிது படுத்தப்படுமானால் அது அவருக்கு உதவியாகத்தான் இருக்குமென்பது தெரியும். நித்தியானந்தா மதுரை ஆதீனமாக நிலை பெற்று கார்ப்பரேட் நிறுவன உத்தியால் பிரபலமாக்கி விட்டார் என்றால் ஏனைய வவ்வால் புகழ் ஆதீனங்கள் கீர்த்தியை இழந்து விடுமென்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. இதை நித்தியானந்தாவே குறிப்பிடுவது சுவாரசியமான ஒன்று. இவர்களது குழாயடிச் சண்டைக்கு இப்படியும் ஒரு கோணமிருக்கிறது.

இந்நிலையில்தான் நித்தியை எதிர்க்கும் ஆதீனங்களும், அர்ஜூன் சம்பத் கும்பலும் மயிறுப் பிரச்சினையை மரபுப் பிரச்சினையாக மாற்றி சண்டமாருதம் செய்கிறார்கள். உண்மையில் இந்த மரபின் அடிப்படை என்ன?

– தொடரும்

_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்? பாகம் 2

7

நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்?

மதுரை ஆதீனம் அருணகிரி தனது வாரிசை நியமித்தார் என்றதும் மற்ற ஆதீனங்களால் அதை முற்று முழுதாக அதாவது வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. மதுரை ஆதீனம் மரபை மாற்றிவிட்டார் என்று பலவீனமான அதுவும் காறி உமிழத்தக்க பார்ப்பனிய சடங்குகளில்தான் அவர்களது விமரிசனம் மையம் கொண்டிருக்கிறது. நித்தியானந்தா சைவப்பிள்ளை இல்லை, தீட்சை பெறவில்லை, திருமேனியில் 16 இடங்களில் திருநீறு பூசவில்லை, மொட்டையடிக்கவில்லை, தனியாக மடம் வைத்திருக்கிறார், என்று இறுதியில்தான் பாலியல் குற்றச்சாட்டு உடையவர் என்கிறார்கள்.

எதற்கு இப்படி வெட்டியாக அற்ப விசயங்களை மரபு என்ற பெயரில் பட்டியிலிட வேண்டும்? நித்தியானந்தா ஒரு பொறுக்கி என்று மட்டும் சொல்லி ஏன் எதிர்க்க முடியவில்லை? சைவ ஒழுக்கத்தை தீர்மானிக்கும் விசயமாக முடி ஏன் இருக்கிறது? இதற்கு மாட்சிமை தாங்கிய ஆதினங்கள் யாரும் வாயைத் திறக்க முடியாது. நித்தியானந்தாவே அதற்கு பதிலளித்திருக்கிறார். அதாவது தனது படுக்கையறையை 24 மணிநேர கேமரா கண்காணிப்பிற்குள் வைத்திருக்க முடியுமென்றும் மற்ற ஆதீனங்கள் தயாரா என்று அவர் சவால் விட்டிருக்கிறார். ஒருவேளை தனது படுக்கையறை ஊரறிந்து விட்டபடியால் அதில் புதிதான மர்மங்கள் இல்லை என்றும் அவர் நினைத்திருக்கக் கூடும்.

இதற்கு ஏதோ வயதான ஒரு ஆதீனம் மட்டும் சவாலை ஏற்றிருக்கிறார். மற்றவர்கள் கமுக்கமாக அமைதி காக்கிறார்கள். இப்படி நித்தியானந்தா ஏதோ ஏட்டிக்குப் போட்டியாக மட்டும் கேட்டிருக்கிறார் என்பதல்ல. அவர் அனைத்து ஆதீனங்களுக்கும் மிகப் பணிவாகவே தனது விளக்கத்தை கேட்குமாறு கோரியிருந்தார். அவர்களோ அருணகிரியை மட்டும் சந்திப்பதாகவும், நித்தியானந்தாவை சந்திக்க முடியாதெனவும் மறுத்து விட்டார்கள். தான் யோக்கியனில்லை என்று அவர்கள் கூக்குரலிட்டபடியால் இவரும் “நீங்கள் மட்டும் யோக்கியர்களா?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார். இந்த பூமாரங் சண்டையின் வேர் என்னவென்று புரிகிறதா?

“ஆட்டத்தை இருவரும் ஆடுகிறோம், என்னை மட்டும் தனிமைப்படுத்த நினைக்காதீர்கள்” என்பதே நித்தியின் விமரிசனம். ஒரு வேளை நித்தியானந்தா இதைக் கிளப்பவில்லை என்றாலும் பிரச்சினை இதுதான், யார் யோக்கியர்கள், எது அளவு கோல்?

தற்போது ஆதினமாக இருக்கும் அருணகிரியையே எடுத்துக் கொள்ளுங்களேன். முரசொலியில் நிருபராக பணியாற்றி பின்னர் சொத்துக்கு ஆசைப்பட்டு விபத்து போல ஆதீனமாகிறார். இவர் ஆடாத மன்மத ஆட்டமா, திருவிளையாடல்களா? மதுரை ஆதீனத்தில் சமையலறை முதல் பொக்கிஷ அறை முதல் வளைய வந்த செல்வி, சுதா, வைஷ்ணவி போன்றோர் நித்தியானந்தாவோடு ஏற்பட்ட அதிகாரச் சண்டை காரணமாக மாறி மாறி இந்த உண்மைகளை புட்டு வைக்கிறார்கள். அதுவும் வைஷ்ணவி வாழும் கச்சனம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஆதீனத்திடம், ” ஊருக்கு மூணு வைப்பாட்டிகளை வைச்சிருக்கியா?” என்று அதே கிராமத்திலேயே சண்டை போட்டிருக்கிறார். சுதா என்ற அந்த இளம்பெண் ‘மகா சன்னிதானத்தை’ மாமா என்றுதான் கூப்பிடுவாராம்.

தி.மு.க ஆதரவு, ஈழ ஆதரவு, என்று அரசியல் ஆதரவோடும், இமேஜோடும் தனது அந்தப்புரத்து நாயகிகளை அனுபவித்தபடிதான் அருணகிரி ஆட்டம் போட்டிருக்கிறார். இப்போது வயதாகிவிட்டாலும் தனது திருப்பணியை கட்டிளங்காளையான நித்தி இளமை முறுக்குடன் தொடருவார் என்று அவர் விரும்புகிறார். அந்த வகையில் அருணகிரி தனது வாரிசை சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அதிலும், நித்தி மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் கூறுகையில், “இந்தக் காலத்தில் யார் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுக்கள் இல்லை” என்று தீர்ப்போடு விடுதலையையும் வழங்கியிருக்கிறார். யார்தான் ஊழல் செய்யவில்லை, யார்தான் யோக்கியன், யார்தான் ஆசைப்படவில்லை என்று நாடு முழுக்கவே இத்தகைய பொன்மொழிகள் வலுவான யதார்த்தத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதால் அருணகிரியின் பேச்சு பொறுக்கித்தனத்தை ஒத்துக் கொள்ளும் நேர்மையான பேச்சு.

ஆர்.எஸ்.எஸ் கும்பலும், அர்ஜூன் சம்பத் கும்பலும் ஏன் அடக்கி வாசிக்கிறார்கள் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நித்தியானந்தாவை அவர்கள் எதிர்ப்பது போல மலர்ச்சண்டை போடுவதற்கு காரணம் அவர் ஆதாரத்தோடு பிடிபட்டுவிட்டார். அருணகிரி அப்படி பிடிபடவில்லை. பிடிபடாதாவரை இந்து தர்மம் யோக்கியமானது. ஆகவே இதை பெரிதாக்க பெரிதாக்க அவர்களுக்குத்தான் சிக்கல். மற்ற ஆதீனங்களின் ஜல்சா ஆட்டங்களை நித்தியானந்தா வெளிப்படுத்த ஆரம்பித்தால் இந்துமதவெறியர்கள் ஒட்டு மொத்தமாக தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அப்படி செய்யுமளவுக்கு அவர்கள் ஒன்றும் மான, ரோசம் கொண்டவர்கள் அல்ல என்பது வேறு விசயம். இவை புதிய பிரச்சினையும் அல்ல. வரலாறு நெடுகிலும் அவர்கள் அறிந்த ஒன்றுதான்.

மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்
மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்

கும்பலோடு கும்பலாக நித்தியை கும்மும் ஜெயேந்திரனது பார்ப்பன சூழ்ச்சி!

அதே நேரம் முடியோடும், ரஞ்சிதாவோடும் சுற்றும் நித்தியானந்தா மதுரை ஆதீனமாவதற்கு தகுதியற்றவர் என்று சங்கர் சாரி ஜெயேந்திரனும் வெட்கமின்றி புகார் படித்திருக்கிறார்.

சங்கராச்சாரியின் யோக்கியதையை இறந்து போன எழுத்தாளர் அனுராதா ரமணன் உலகறியச் செய்திருப்பதை நினைவுபடுத்திக் கொள்வோம். சங்கர் சாரியின் ஆசை அயோக்கியத்தனத்திறத்கு மறுத்தவர் இவரென்றால் ஒத்துப்போனவர்களின் பட்டியலோ மிகப்பெரியது. அவற்றில் நடிகைகள் முதல் நாட்டியத் தாரகைகள் முதல் பலருண்டு. அவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்பது அப்போதும் கூட மேல் கீழ் தராசை விடாத ஜெயேந்திரனின் ஆச்சார ஒழுக்கத்தை காட்டுகிறது. எனினும் ஒரு களவாணி மற்றொரு களவாணியை களவாணி என்று நல்லவன் போல் திட்டுவதை திட்டப்படும் களவாணிகள் சகித்துக் கொள்வதில்லை. தற்போது ரஞ்சிதா அதற்க்காக ஜெயேந்திரன் மீது வழக்கு போட்டிருக்கிறார். ரத்து செய்ய சங்கர மட மேனேஜர் தூது போவதாக செய்திகள் வந்திருக்கின்றன.

நித்தியானந்தாவை முழு வில்லனாக மாற்றுவதன் மூலம் தனது வில்லத்தனம் மறக்கப்படலாம் என்ற மலிவான உத்தியே ஜெயேந்திரனது அணுகுமுறையில் வெளிப்படுகிறது. ஆனாலும் இந்தப் போட்டியில் விட்டுக் கொடுக்குமளவு நித்தியானந்தா ஒன்றும் விரல் சூப்பும் குழந்தையல்ல. சொல்லப் போனால் நித்தியை மறுக்கும் சாமியார்களை ஒண்டிக்கு ஒண்டி வருவாயா என்று அவர் விடும் சவால்களை ஆதீன உலகம் இதுவரை கண்டிருக்கவில்லை.

சங்கரசாச்சாரியின் மீது வழக்கு, தருமபுரம் ஆதீனம் முன்னால் ஆர்ப்பாட்டம், மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு, ஊடகங்களுக்கு சுடச்சுடப் பதில் என்று அவரது வேகத்திற்கு மற்றவர்கள் ஈடு கொடுக்க முடியாததன் காரணம் அவர்களுக்கு வயதாகிவிட்டது என்பதல்ல, எதிர்ப்பதற்கு போதுமான ஒழுக்க சரக்கில்லை என்பதே.

திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும் பாலுறவு கொள்ள முடியாத சூழ்நிலை என்பது உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை சர்வசாதாரணம். ஆனால் இதையே பிரமச்சரியம் என்றும் உலகிலேயே கடினமான தவமென்றும், தியாகமென்றும் பார்ப்பனிய சித்தாந்தவாதிகள் வரலாறு நெடுகிலும் அச்சுறுத்தியே வந்திருக்கின்றனர். அப்போது தொழில்நுட்பம் வளரவில்லை, எதிர்த்துக் கேட்கும் ஜனநாயமில்லை என்பதால் அந்த ஆச்சார வேடம் பல காலம் ஓடியது. இப்போது சூழ்நிலை திரைச்சீலைகளை தூக்கி விடுகிறது.

ஆர்.எஸ்.எஸ் இன் புதிய முழக்கம்: செக்ஸ் மாதா கி ஜெய்!

ஜெயேந்திர-சரஸ்வதி-ஸ்வாமிகள்
சங்கரராமன் கொலைவழக்கில் கைதானவர்தான் காஞ்சி பெரியவாள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளின் தியாகத்தில் மைய இடம் வகிக்கும் பிரமச்சரியம் அறிவியில் ரீதியாக சாத்தியமற்றது என்பதைத் தாண்டி, அதிகாரத்தை ருசிக்கும் மேட்டுக்குடியினர் எவரும் சைவப்புலிகளாக இருக்க முடியாது என்பதால் அந்தப்புரக் கிசுகிசுக்கள் ஆதாரத்துடன் வெளிவருகின்றன. வாஜ்பாயி, இல.கணேசன்களது ஆண்மைகள் குமுதத்தின் கிசுகிசு கதைகளிலேயே வெளிவந்திருக்கின்றன. சி.டியுடன் பிடிபட்ட சஞ்சய் ஜோஷி எனும் பிரச்சாரக் மற்றும் பா.ஜ.கவின் தலைவர் தற்போது மீண்டும் பொறுப்பிற்கு வந்திருக்கிறார். பெங்களூருவிலும், அகமதாபாத்திலும் சட்டசபையிலேயே பிட்டுப்படம் பார்த்த பெருமையும் பா.ஜ.க உறுப்பினர்களுடையதுதான்.

கூடுதல் போனசாக மத்தியப் பிரதேசத்தில் துருவ் நாராயண் சிங் எனும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் தனது பங்கிற்கு செக்ஸ் மாதாகி ஜெய் என்று புனிதப் பணியில் சேர்ந்திருக்கிறார். ஷெக்சா மசூத் எனும் பெண் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொல்வதற்கு ஏற்பாடு செய்தவர் சஹிதா பர்வேஸ் எனும் மேட்டுக்குடி இசுலாமியப் பெண். இந்த இரண்டு பெண்களும் துருவின் காதலிகள். இது போக சட்டப்பூர்வமாக துருவுக்கு ஒரு மனைவியும், சாட்சியமாக குழந்தைகளும் உண்டு. இவரும் ஆர்.எஸ்.எஸ் ஆல் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்துதான்.

கிழட்டு என்.டி.திவாரி, ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர்கள், அபிஷேக் மனு சிங்வி போன்ற காங்கிரசுகாரர்கள்தான் பா.ஜ.கவின் செக்ஸ் திருப்பணிக்கு தோள்கொடுத்து ஆறுதல் தருகிறார்கள். ஆனால் இந்து மதவெறியர்களுக்கு இதெல்லாம் கூட பிரச்சினை இல்லை. சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி மாட்டியதும்தான் ஆடிப் போனார்கள். அன்றைக்கு பார்ப்பன இந்துத்வ உலகமே ஜெயேந்திரனை காப்பாற்றத் துடித்தது. டெல்லியில் வாஜ்பாயி உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜெயேந்திரனது பாலியல் கூத்துக்களை அம்பலப்படுத்தியதால்தான் சங்கரராமன்  கொல்லப்பட்டார். சங்கர் சாரியின் கூலிப்படை கோவிலில் வைத்தே கொன்றது. தேவநாதனது கருவறை செக்ஸ் சி.டி தோற்றுவித்த அதிர்வலைகள் கூட வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கொடூரத்திற்கு ஏற்படவில்லை. தேவநாதன் கூட பக்தர்களின் நம்பிக்கையைத்தான் இழிவு படுத்தினார். ஜெயேந்திரனோ பக்தர்கள் தன்னை கேள்வி கேட்கக் கூடாது என்பதற்க்காக கொலையே செய்தார். இன்றைக்கு நித்தியானந்தை “கையப் பிடிச்சு இழுத்தியா” என்று சவுண்டு விடும் அர்ஜூன் சம்பத் கும்பல் கூட அன்று பார்ப்பன பீடத்தின் முன் வீழ்ந்து கிடந்தது.

ஜெயேந்திரனைக் காப்பாற்ற தினமணி நேரடியாகவும், ஜெயமோகன் மறைமுகமாகவும் பாடுபடுகின்றனர். அந்தக் கதை அடுத்த பதிவில்…..

– தொடரும்
_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு? பாகம் 1

24

பா.ஜ.கவின் மதுரை சங்கமம், நித்தியால் பஞ்சரான கதை!

தமிழர்களின் ‘பண்பாட்டுத்’ தலைநகராகத் திகழும் மதுரை தனது வரலாற்றில் முக்கியமான அத்தியாயத்தை சமீபத்தில் உலகறியக் காட்டியிருக்கிறது. செய்தி தெரிந்ததுதான். மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக நித்தியானந்தா நியமிக்கப் பட்டிருக்கிறார். நியிமித்தது அருணகிரி எனப்படும் 292வது நடப்பு ஆதீனம். மடங்களில் சிவனே என்று படுத்துறங்கும் காமா சோமாவாக இருக்கும் தம்பிரான்களில் ஒருவர்தான் புதிய ஆதீனமென்றால் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது.

அத்தகைய தம்பிரான்களும், மற்றைய ஆதீனங்களும் அப்படி காமா சோமா பார்ட்டிகள் இல்லை என்றாலும், அவர்களது அந்தப்புறத்தில் ரஞ்சிதா போன்ற திரையுலகத் தாரகைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் ஊடக வெளிச்சமும் இல்லை. சொத்துக்கள் இருந்தும் வவ்வால்கள் மட்டும் வந்து போகும் பாழடைந்த சிவன் கோவிலைப் போன்று ஆதீனங்களின் அன்றாட தர்பார்களில் சுறுசுறுப்பும்,விறுவிறுப்பும் துளிக்கூட இல்லை. ஆகவே மன்மதலீலை புகழ் மற்றும் கார்ப்பரேட் சாமியார் நித்தியானந்தா ஆதீனம் ஆனார் என்பதால் ஊடகங்கள் துவங்கி பாமரர் வரை படித்து, ரசித்து, பொழுதைப் போக்குகின்றனர்.

என்றாலும் தமிழகத்தில் செயல்படும் இந்துமதவெறி அமைப்புகளுக்கு இது ஒரு மரண அடிச் செய்தி. இது முதல் அடி இல்லையென்றாலும் முக்கியமான அடி. மெல்லவும், முழுங்கவும், தள்ளவும் முடியாமல் அவர்கள் படும் அவஸ்தை இருக்கிறதே அதை புரிந்து கொண்டால் வருடக்கணக்கில் ரூம் போட்டு சிரிக்கலாம்.

புதுப்படங்கள் குறித்த மவுத் டாக்கா, அந்தப் படங்களில் வரும் உடை, வளையல்கள் ரிலீசாவதா எல்லாம் மதுரையில்தான் முதலில் போணியாகும். லெட்டர் பேடு கட்சிகள் முதல் தே.மு.தி.க காமடி பீஸ்கள் வரை மதுரையில் மாநாடு நடத்தினால்தான் அரசியல் உலகில் கவனிக்கப்படுவார்கள். அப்படித்தான் அரசியல் அனாதை பட்டத்திற்கு போட்டி போடும் தமிழக பாரதிய ஜனதா, மதுரையில் “தாமரை சங்கமம்” என்ற பெயரில் மாநாடு நடத்தியிருக்கிறது. ஆயினும் ஊடகங்களில் தாமரைக்கு கிடைக்கவே வாய்ப்பில்லாத கவரேஜை, அதே மதுரையில் ஆதினமானதன் மூலம் நித்தியானந்தா ஒரே அடியில் அள்ளிச் சென்றுவிட்டார்.

தி.மு.க, அ.தி.மு.கவின் தயவில் ஓரிரு தொகுதிகளை ருசி பார்த்த பாரதிய ஜனதாவை அந்தக் கட்சிகள் தேவையின்மை கருதி சீண்டுவதே இல்லை. எனினும் தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக தனித்து ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா தயாராகி வருவதை மெய்ப்பிக்கும் மாநாடு என்று அவர்களாகிய அவாள்கள் சிரிக்காமலேயே ஜம்பமடிக்கிறார்கள். இது விஜயகாந்த், ராம்தாஸ் என்று எல்லா கோமாளிகளும் புலம்பும் இத்துப் போன டயலாக்தான். யாரும் கவனிக்கமாட்டார்களா என ஏங்கும் பிச்சைக்காரன், மனக்கோட்டையில் ஊரின் அரசனாக தன்னைத்தானே முடிசூட்டிக் கொள்வது போலத்தான் பாரதிய ஜனதாவின் மதுரை மாநாடும். இந்திய அளவிலேயே இந்துத்வம் சூடு பிடிக்க முடியாத நிலை. தமிழகத்திலோ அது இன்னும் பரிதாபமாக இருக்கும் நிலையில் அந்த பரிதாபத்தை அய்யோ பாவமாக மாற்றி விட்டது மதுரை ஆதின பட்டமேற்பு விழா.

மதுரை ஆதீனமானார் நித்தி
மதுரை ஆதீனமானார் நித்தி

நித்தி ஆதீனமானதை ஜீரணிக்கவோ, வாந்தி எடுக்கவோ முடியவில்லை!

மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து கேட்ட போது, “புதிய ஆதீனம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை. எனினும் இதை வைத்து இந்து மதத்தை விமரிசிப்பது சரியில்லை” என்றார் பா.ஜவின் தமிழகத் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன். இந்த வாக்கு மூலத்தில் டன் கணக்கில் உறைந்திருக்கும் துயரத்தை உங்களால் உணர முடிகிறதா?

ஆரம்பத்திலிருந்தே நித்தியானந்தா ஆதீனமானதை ‘எதிர்ப்பதாகக்’ கூறும் காமடி பாசிஸ்ட்டுகளான இந்து மக்கள் கட்சியினரின் வாக்கு மூலத்தை கவனித்தால் அதே துயரத்தை கொஞ்சம் கவித்துவமாக ருசிக்க முடியும். மேலும் ரஞ்சிதா அத்தியாயத்தின் போதே இவர்கள் நித்தியானந்தாவை எதிர்த்து செய்த குட்டி கலாட்டாக்கள் அனைத்தும் மலிவான ஊடக விளம்பரங்களை நாடித்தான். கர்நாடகாவின் ஸ்ரீராம் சேனா காசு வாங்கிக் கொண்டு செய்யும் கலாட்டக்கள் போலவும் இவர்களது குத்தாட்டங்களைக் கருத முடியும். அதன்படி மறைமுகமாக இது நித்தியானந்தாவின் செட்டப்பாகக் கூட இருக்கலாம்.

அர்ஜூன் சம்பத் கும்பலுக்கு உண்மையிலேயே ஆதீனம் குறித்து அக்கறை உள்ளதாக வைத்துக் கொண்டாலும் அதன் அடிப்படையில் உள்ளது ‘இந்து தர்மம்’ குறித்த பெருமிதம் அல்ல. வடிவேலு காமடியையே விஞ்சும் வண்ணம் மாறிவரும் பார்ப்பனியத்துக்கு ஏதாவது நட்டுவைத்து முட்டுக் கொடுக்க முடியாதா என்ற அவல நிலைதான் அந்த அக்கறை. அதனால்தான் இந்த கும்பல் பழைய ஆதீனத்தை எதிர்க்காமல், புதிய ஆதீனத்தை மட்டும் எதிர்க்கிறது. ஜெயேந்திரனை விடுத்து நித்தியானந்தாவை மட்டும் குறி வைக்கிறது. அந்த எதிர்ப்பும் மடத்திற்குள் சென்று திருஞானசம்பந்தரை வழிபடுவோமென்றுதான் காந்திய வழியில்தான் காட்டப்படுகிறது. இன்னும் தேவராம் பாடியும், மதுரை ஆதீனத்தை வாழ்த்தியும்தான் அவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள்.

காரணம் என்ன? இதில் தெளிவான நிலையெடுத்து போராட வேண்டி வந்தால் அது கரையான் புற்றுக்குள் கைவிடுவதைப் போல. பூதத்தைக் கிளப்பாமல் கிணறு வெட்ட முடியுமா என்ன? இந்து மதத்தின் மேன்மைகளை சொல்லி பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில், அதன் கீழ்மைகளை முடிந்த அளவுக்கு மறைக்க முயல்வதுதான் இந்து மக்கள் கட்சியின் வியூகம். அதனால்தான் எதிர்ப்பைக் காட்டுவதிலும், வார்த்தைகளை உச்சரிப்பதிலும் மிகுந்த கவனம் காட்டுகிறார்கள். சாரமாகச் சொல்வதென்றால் இந்த பிரச்சினையை தீவிரமாக கிளப்புவதன் மூலம் பார்ப்பனிய இந்து மதம் எள்ளி நகையாடப்படும் என்பதை அவர்கள் அறிந்தேயிருக்கிறார்கள். இதில்தான் சங்க பரிவாரங்களுக்கும், அவர்களிடமிருந்து விலகியதாகக் கூறிக் கொள்ளும் அர்ஜூன் சம்பத் கும்பலுக்கும் வரம்புக்குட்பட்ட போட்டி நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பெரிது என்பதால் சற்று அடக்கி வாசிக்கிறார்கள். இந்து மக்கள் கட்சி சிறு கும்பல் என்பதால் விசில் சத்தம் கொஞ்சம் அதிகம்.

நித்தியானந்தா
நித்தி ஆதீனமாவதை எதிர்த்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்

ஆதினங்கள் – மடங்கள் – சாமியார்களின் இரத்த வரலாறு!

திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், குன்னக்குடி உள்ளிட்ட பெரும் ஆதீனங்களும், சில்லறை மடங்களும் ஒன்று கூடி தங்களது அதிருப்தியை அல்லது எதிர்ப்பு மாதிரி ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு மடத்தை ஆதீனமா, சில்லறையா என்று எதைக் கொண்டு அளவிடுவது? சில்லறையை அதாவது சொத்தை வைத்துத்தான். மேற்கண்ட ஆதீனங்களும், சங்கர மடமும் டாடா, பிர்லா, அம்பானி போன்று சில ஆயிரம் கோடி சொத்துக் கொண்டவைகள். பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், கிராமங்கள், கடைகள், கல்லூரிகள், கோவில்கள், மருத்துவமனைகள் என்று கிட்டத்தட்ட தனி சாம்ராஜ்ஜியமே நடத்துகிறார்கள்.

“நித்தியானந்தாவை ஆதீனமாக அறிவித்திருப்பதை பத்து நாட்களுக்குள் ரத்து செய்ய வேண்டும்” என்று இந்த ஆன்மீக முதலாளிகள் தீர்மானித்த போது ஆரம்பத்தில் குன்னக்குடி பொன்னம்பலம் சம்மதிக்கவில்லை. “ஒவ்வொரு ஆதீனமும் தனது வாரிசையே ஆதினமாக நியமிக்க வேண்டும். வாரிசுகள் இல்லாத பட்சத்தில் திருவாவடுதுறை, தரும்புரம் என இருபெரும் ஆதீனங்களும் சேர்ந்து வாரிசுகளை தேர்ந்தெடுப்பார்கள்” என்ற வாக்கியத்தை அவர் ஏற்கவில்லை. அதை நீக்கிவிட்டே தீர்மானத்தில் அனைவரும் கையெழுத்திட்டார்கள்.

தங்களது சாம்ராஜ்ஜியத்தின் வாரிசுதார்களை தேர்ந்தெடுக்கும் உரிமை தம்மை விட்டுப் போகக்கூடாது என்றால் அதன் சூட்சுமம் ஆதீனங்களின் சொத்துடைமையில் பொதிந்திருக்கிறது. அம்பானி சொத்தை அவரது குண்டு பையனுக்கு கொடுப்பாரா இல்லை தெருவில் போகும் குப்பனுக்கு கொடுப்பாரா? முதலாளிகளுக்கு மட்டுமல்ல ஆதீனங்களுக்கும் இந்த வாரிசு முறை பொருந்தும்.

வருணாசிரமத்தை இதயமாகக் கொண்டு வாழும் பார்பனிய இந்து மதத்தில் ஆரம்பத்தில் வேள்வி வழிபாடே பிரதானம். உருவ வழிபாடும், கோவில்களும் சமண மதத்திற்குரியவை. அதே போன்று மதப்பிரச்சாரத்திற்கும், கல்விக்கும் பயன்பட்ட மடங்கள், பள்ளிகள் போன்றவையும் புத்த, சமண மதத்திற்குரியவை. பார்ப்பனியம் நிலை பெற்ற பிறகு இவற்றை திருடிக் கொண்டார்கள். தமிழகத்தில் பிற்கால சோழர்கள் காலத்தில் பார்ப்பனியாமயமாக்கத்தின் பகுதியாக மன்னர்களின் ஆதரவுடன் இத்தகைய ஆதீனங்கள் எழுந்தன. புராண புரட்டுக்கதைகளால் இவர்களது வரலாற்றுக் காலம் ஊதி உப்பவைக்கப்பட்டாலும் அவற்றுக்கென்று நேரடி ஆதாரம் ஏதுமில்லை.

பண்டைய இந்தியாவில் கோவில்களே அரசியல், பொருளாதார, கருவூல நிறுவனமாக இருந்தன. கஜினி முகமது மட்டுமல்ல, எல்லா இந்து மன்னர்களுமே எதிரி நாட்டுக் கோவில்களை கொள்ளையடித்திருக்கின்றனர். பொக்கிஷங்களை கைப்பற்றுவது என்பதைத் தாண்டிய மத விரோதம், கடவுள் விரோதம் ஏதுமில்லை. கோவில்களின் துணை நிறுவனமாக ஆதீனங்கள் தோன்றியதும், ஏராளமான மக்களும், கிராமங்களும், இலவச சமூக உழைப்பும் தானமாக கொடுக்கப்பட்டன. இவற்றை அனுபவிக்கின்ற உரிமை பார்ப்பன – ‘மேல்’ சாதியினருக்கு மன்னர்களால் அளிக்கப்பட்டன. அப்படித்தான் ஆதீனங்களின் உறவினர்களும், சாதிக்காரர்களும், மறைமுக வாரிசுகளும், பினாமிகளும் இத்தகைய மக்கள் சொத்துக்களை காலம் காலமாக ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.

மதத்தின் பெயரால் இருப்பதாலேயே அவர்களின் சுரண்டும் உரிமை இயற்கை உரிமை போல மக்களால் சகித்துக் கொள்ளப்படுகின்றது. 1930களில் தமிழகத்தில் உள்ள கோவில்களை நீதிக்கட்சி அரசுடமை ஆக்கிய போதுதான் அந்தந்த வட்டார ஆதிக்க சாதி அறங்காவலர்கள் கொன்ற கணக்கும், தின்ற கணக்கும் தெரிய வந்தது. அப்போதும் சரி, 47க்கு பின்னரும் சரி, ஆதீனங்களின் சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படாமல் நீடித்திருக்குமாறு விடப்பட்டன.

சொத்துடமையின் மையத்தில் சுழலுவதால் ஆதீனங்களின் இருப்பும், பிறப்பும், நிறைய மர்மங்களையும், வன்முறைகளையும் கொண்டிருக்கின்றன. முகலாய மன்னர்கள்தான் தமது இரத்த உறவுகளைக் கொன்றுவிட்டு பட்டம் சூட்டிக் கொண்டார்கள் என்று இந்து வெறியர்கள் பீற்றிக் கொள்வது வழக்கம். இது எல்லா மன்னர்களுக்கும் பொருந்தும் என்பதை வரலாறு காட்டியிருக்கின்றது.

மன்னர்களை விடுங்கள், துறவறம் பேசும் சாமியார்கள், மடாதிபதிகளின் வன்முறைகளைப் பாருங்கள். புட்டபர்த்தியில் நடக்காத கொலையா, சாயி பாபா – ரஜ்னீஷிடம் இல்லாத பாலியல் வக்கிரமா, பாபா ராம் தேவ் செய்யாத வருமான வரி ஏய்ப்பா, ஆர்.எஸ்.எஸ்-இன் ராமஜன்ம பூமி முக்தி மோர்ச்சா தலைவர்கள் நடத்தாத ஹவாலா மோசடியா, இல்லை ‘தாயுள்ள’த்தோடு இருக்கும் அமிர்தானந்தா மாயி மடத்தில்தான் கொலை நடக்கவில்லையா?

ஏன், ஆதீனங்களின் வரலாற்ற்றைக் கூட பாருங்கள். 2002 ஆம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதினத்தை இளைய ஆதீனம் கொலை செய்து விட்டு கைப்பற்ற முயன்ற கதை சனாதான தர்மத்தின் சமீபத்திய யோக்கியதையைக்  காட்டுகிறது.

சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதாகக் கூறும் இவர்களது சிந்தை டில்லி சுல்தான்களை விடவும் வன்முறையானது என்பதற்கு இதுவே போதுமானது. தற்போதைய மதுரை ஆதீனம் கூட இடையில் ஓரிருவர்களை பட்டம் கட்டி பின்னர் பங்கு பிரிப்பதில் சண்டை வந்ததால் மடத்தை விட்டே விரட்டியிருக்கிறார். அடுத்த வாரிசு தான்தானென்று நம்பி ஏமாந்த தம்பிரான்கள் பலரது சண்டையும், அவர்களில் சிலர் தனி மடங்கள் கண்டதும் எப்போதும் நடக்கின்ற வரலாறு.

எனவே வாரிசுச் சண்டைகள், பட்டமேற்பதில் போட்டி எல்லாம் வாழையடி வாழையாக மடங்களில் நடக்கின்ற ஒன்றுதான். இதில் நித்தியானந்தா மட்டும் அயோக்கியன் என்றால் யோக்கியன் யார் என்ற கேள்விக்கு விடை உண்டா?

– தொடரும்

_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று! – மதுரையில் அரங்கக்கூட்டம்! அனைவரும் வருக!!

6

மறுகாலனியாக்கம்மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று!

அரங்கக்கூட்டம்

நாள்:
20.5.2012, ஞாயிறு, மாலை 5 மணி

இடம்:
V.P வேலாயுத நாடார் – ராஜலெட்சுமி கல்யாண மண்டபம்,
பிளாட் எண். 436, கிழக்கு 9-வது தெரு,
கே.கே. நகர். மதுரை.
(பேட்டா ஷோரூம் அருகாமை ரோடு,
சுந்தரம் பார்க் எதிர் ரோடு)

பஸ் நிறுத்தம்:
3,3A- வக்ஃப் போர்டு, C4 – சுந்தரம் பார்க்

தலைமை:

தோழர். கதிரவன்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

சிறப்புரை:

தோழர். மருதையன்
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

அனைவரும் வருக!

______________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை

______________________________________

வினவுடன் இணையுங்கள்

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு…..

20

ஒவ்வொரு நாளும் இருநூறு கி.மீ. தூரம் வரை புகைவண்டியில் கடந்து வேகமாக சென்னைக்குள் வந்து விட்டு, மாலை ஆறு மணிக்கு மீண்டும் அதே வேகத்துடன் இன்னொரு இருநூறு கி.மீ பின்னோக்கிப் பயணித்து, இடைப்பட்ட நான்கு மணி நேரத்தை இருளில் உண்டு, உறங்கிக் கழித்து விட்டு, அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் எழுந்து சென்னைக்கு பயணிப்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

காலை ஒன்பதரை மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் ஏலகிரி விரைவு வண்டி, நடைமேடையை அடைவதற்குள்ளாகவே பெட்டிகளிலிருந்து குதிப்பவர்கள், நடைமேடையில் பாதம் பட்ட உடனே கூட்டம் கூட்டமாக வாயிலை நோக்கி ஓடுகிறார்கள். வாயிலை அடைந்ததும் மாநகரப் பேருந்துகளில் திணித்துக் கொண்டு சென்னை நகரின் பல்வேறு திசைகளுக்கும் சிதறி மறைந்து போகிறார்கள். மீண்டும் மாலை 5 மணி முதல் 5.55க்குள் அனைத்துத் திசைகளிலிருந்தும் சென்ட்ரலை நோக்கிக் விரையும் கூட்டம், காலையில் வந்த அதே ஏலகிரி விரைவு வண்டிக்குள் தன்னைத் திணித்துக் கொள்கின்றது.

சென்னையில் புதிது புதிதாக எழும் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்காக கொத்தனார், சித்தாள், தச்சர், பிளம்பர், பெயிண்டர் என பல்வேறு கூலி வேலை செய்பவர்களையும், தனியார், அரசு அலுவலகங்களில் மாதச்சம்பளம் பெறுபவர்களையும் உள்ளடக்கியது தான் இந்தப் பயணிகள் கூட்டம். இவர்களில் பெண்களும் உண்டு.

ஏலகிரி விரைவு வண்டி சென்னை சென்ட்ரலிலிருந்து தருமபுரி மாவட்டம் திருப்பத்தூர் வரை செல்கின்றது. இந்த வண்டிப் பயணிகளில் பெரும்பான்மையினர் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, ஆற்காடு, வாலாஜா, திருத்தணி, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் வருகிறார்கள்.

சென்னை சென்டரல் நிலையம். மாலை மணி 5.50. கிளம்புவதற்கு தயார் நிலையில் நான்காவது நடைமேடையில் நிற்கிறது ஏலகிரி விரைவு வண்டி. வண்டியைப் பிடித்து விட்ட மகிழ்ச்சியில் வண்டியை நெருங்கினேன். நெருங்க நெருங்க மூத்திரம், பான்பராக், சிகரெட் அனைத்தும் கலந்த ஒரு துர்நாற்றம் ‘குப்‘ எனக் காற்றில் கலந்து வீசியதால் குமட்டிக் கொண்டு வந்தது. ‘கடும்பயணத்தின் களைப்பை இந்த போதைப் பொருட்கள்தான் நீக்குகின்றதோ ? என்னவோ ?! ‘

‘இந்தப் பெட்டியில் ஏறினால் மூச்சுக் கூட விட முடியாது போலிருக்கின்றதே !‘ என்று எண்ணியபடியே அடுத்த பெட்டியை நோக்கி நகர்ந்த போது முந்தைய பெட்டியின் கழிவறையைப் பார்க்க நேர்ந்தது. கழிவறையின் ஜன்னலில் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் இல்லையா ? அது அங்கே இல்லை. எனவே வெளியிலிருந்து பார்த்த போது கழிவறையின் உள்பக்கம் ‘பளிச்‘ எனத் தெரிந்தது. ‘சரி ! ஒரு சில பெட்டிகள் இப்படித்தான் இருக்கும்‘ என அடுத்த பெட்டியை நெருங்கினால் அங்கேயும் அதே நாற்றம், இப்பெட்டியிலும் கழிவறைக்கு ஜன்னல் பலகை இல்லை. எல்லாம் ஒன்று தான் என்று முடிவு செய்து கொண்டு ஒரு பெட்டியில் ஏறி விட்டேன். வண்டி கிளம்ப சில நொடிகளே இருந்தன. இந்த நேரத்திலும் பலர் பறந்து வந்து வண்டியில் தொற்றிக் கொண்டனர்.

ஏலகிரி விரைவு வண்டி சரியாக 5.55 க்கு கிளம்பி விடும். தாமதம் என்பது இந்த வண்டிக்கு விதிவிலக்கு. எனவே தினசரிப் பயணிகள் அனைத்தையும் திட்டமிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் அவர்களிடமிருக்கும் குறைவான ஓய்வு நேரத்தையும், கூடுதலான செலவையும் எடுத்துக்கொள்ளும். 5 மணிக்கு வேலை முடிந்தால் 5.10 க்குள்  பேருந்தைப் பிடிக்க வேண்டும். அடுத்து இருப்பது 45 நிமிடங்களே ! அதற்குள் வண்டிக்குள் இருக்க வேண்டும். ஏறிய பேருந்து தாமதமாகின்றது என்று தெரிந்தால் உடனடியாக ‘அடுத்து என்ன ?‘ என்று யோசிக்க வேண்டும்.

வேறு பேருந்திலோ, ஷேர் ஆட்டோவிலோ மாறி ஓட வேண்டும். இந்த நிமிடக் கணக்கில் ஏற்படும் தாமதத்தால் ஏலகிரியைத் தவற விட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்து அந்தத் திசையில் எந்த வண்டி கிளம்புகிறதோ அதில் தான் போக வேண்டும். அது 7 மணிக்கும் இருக்கலாம்; 8 மணிக்கும் இருக்கலாம். ஏலகிரியில் போனாலே சாப்பிட்டுவிட்டு தூங்க 12 மணி ஆகி விடும். அடுத்த வண்டி  என்றால் அதுவே 1 அல்லது 2 மணியாகலாம். ஆனால் காலையில் எழும் நேரம் அதே 4 அல்லது 4.30 மணி தான்.

சென்னை-ஜோலார்பேட்டை

சரியாக 5.55 க்கு வண்டி நகர்ந்தது. நாங்கள் வாசலில் நின்று கொண்டிருந்தோம். வேகமெடுத்து ஓடிய அடுத்த சில நிமிடங்களில் பெரம்பூரை வந்தடைந்தது வண்டி. அங்கே மேலும் நூற்றுக்கணக்கானவர்களை நிரப்பிக்கொண்டு மேலும் வேகமெடுத்தது. பெட்டியில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது என்பதல்ல விசயம்; முழுப் பெட்டியுமே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெட்டியின் முன் வாசல் படிக்கட்டில் துவங்கி பின் வாசல் படிக்கட்டு வரை உட்கார்ந்திருக்கிறார்கள், அதே போல எதிர்ப்பக்கமும். படிகளை தாண்டி பெட்டிக்குள்ளே பார்த்தால் இடைவெளியின்றி வரிசையாக நூற்றுக்கணக்கில் நிற்கிறார்கள்.

சென்னையிலேயே குடியிருக்க போதிய வருவாய் இல்லாததால் தான் இவர்கள் இந்த சாகசப் பயணத்தைத் தினசரி மேற்கொள்கிறார்கள். வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தினந்தோறும் சந்தித்துக் கொள்வதால் இயல்பாக ஒருவருக்கொருவர் நண்பர்களாகி விடுகிறார்கள். தங்களுக்குள்ளேயே அரையட்டையடித்துக் கொண்டும், அரசியல் பேசிக் கொண்டும், சொந்த வாழ்க்கையின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டும் பயணிக்கிறார்கள். தினசரிப் பயணம் என்பதால் புகைவண்டியில் தின்பண்டங்களை விற்பவர்களும் இவர்களுக்கு நண்பர்களாகி விடுகிறார்கள்.

இவர்களில் யாராவது ஒரு சிலர் வாங்கி வரும் செய்தித்தாள்கள் வண்டிக்குள் வந்த மறுகணமே அனைவருக்குமானதாகி விடுகின்றது. அதே போல தாம் எடுத்து வரும் தண்ணீரை இரண்டு மடக்கு குடித்துவிட்டு யாராவது கேட்டுவிடுவார்களோ என்று அற்பத்தனமாக சீட்டுக்கடியில் சொருகாமல் அதை அனைவருக்குமானது என்று பொது இடத்தில் எல்லோரும் வைக்கிறார்கள்.

படிக்கட்டில் அமர்ந்து கொண்டிருந்த ஒருவர் நிற்பதற்காக எழ நான் அதில் அமர்ந்து கொண்டேன். எனக்கருகில் அமர்ந்திருந்தவர் வெங்கடேசன். தினமும் சோளிங்கரிலிருந்து சென்னைக்கு  கடந்த ஓராண்டாக வந்து செல்கிறார்.

‘இதுக்கு முன்னாடி பதிமூணு வருசமா சோளிங்கர்ல இருக்கிற டி.வி.எஸ் ல வேல செஞ்சேன் சார். 55 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்து பதிமூணு வருசத்துல 320 ரூபா தான் சம்பளம் உயர்ந்துச்சு. நிரந்தரமாக்கச் சொல்லி தொழிலாளிங்க எல்லாம் கேஸ் போட்டோம். அவன் நிரந்தரமா எங்கள வீட்டுக்கு அனுப்பிட்டான். அதுக்கப்புறம் இந்த வேலைக்குத் தான் வர்றேன். சோளிங்கர்ல இருந்து எங்க ஊரு ஆறு கி.மீ. சோளிங்கர்ல இறங்கி அங்கயிருந்து சைக்கிள மிதிச்சிருவேன். எட்டர ஒம்பது மணிக்கு வீட்டுக்குப் போனா, சாப்பிட்டு தூங்க பதினோரு மணியாகிடும். காலைல 5 மணிக்கெல்லாம் எழுந்து கௌம்பிருவேன். 7 மணிக்கு வண்டி. அந்த வண்டிய பிடிச்சு திருவள்ளூர்ல இறங்கி, அங்கிருந்து அடுத்து பட்டாபிராமுக்கு லோக்கல் ட்ரெய்ன்ல ஏறி 9 மணிக்கு வேலைக்கு எடுக்குற இடத்துல நிக்கணும். அப்படி கரெக்டான டைமுக்கு நின்னா தான் வேலை. இதுல எங்கையாச்சும் லேட்டாச்சுன்னா பாதி நாள் வேலை தான் கணக்கு‘ என்றார் வெங்கடேசன்.

அருகில் அமர்ந்து கொண்டிருந்த கந்தன் என்பவரும் சோளிங்கரிலிருந்து தான் வருகிறார். இவர் வரும் போது காலை 5 மணிக்கு சோளிங்கரில் நிற்கும் காவிரி விரைவு வண்டியில் ஏறி ஏழு மணிக்குள் பட்டபிராமில் இறங்க வேண்டும். ‘அங்கே எந்த இடத்தில் வேலை‘ என்றதும், ‘மார்க்கெட் இருக்கு சார். அங்க தான் வேலை‘ என்றார். ‘என்ன மார்க்கெட்? காய்கறி மார்க்கெட்லயா வேலை‘ என்றதும் ‘இல்ல சார், அது வேலைக்கு ஆள் எடுக்குற மார்க்கெட். அங்க நிறைய புரோக்கர், காண்ட்ராக்ட் காரங்க எல்லாம் வேலைக்கு ஆள் எடுக்க வருவாங்க. என்னென்ன வேலைக்கு ஆள் தேவையோ எல்லாத்தையும் கூட்டிட்டு எட்டு மணிக்குள்ள வேலை இடத்துக்கு கூட்டிட்டு போய்டுவாங்க. அதனால ஏழு மணிக்குள்ள போனா தான் வேலை கிடைக்கும்‘ என்று பேசிக்கொண்டே எழுந்தார். அடுத்து நிறுத்தம் வந்து விட்டது. ‘வர்றேன் சார்‘ என்று சோளிங்கரில் இறங்கிக் கொண்டார் கந்தன்.

கூட்டத்திலிருந்து சற்று தலையை உயர்த்தி கழிவறைப் பக்கம் எட்டிப் பார்த்த போது இரண்டு கழிவறைகளில் ஒன்றின் கதவு மட்டும் உள்பக்கமாகத் தாளிடப்பட்டிருந்தது. திறந்திருந்த மற்றொரு கழிவறையின் வாசலிலிருந்து கழிவறையில் மலம் கழிக்க கால்களை வைக்கும் மேடை வரை மொத்தம் ஆறு பேர் உட்கார்ந்திருந்தனர். அப்போது தான் கழிவறை ஜன்னல் பலகைகளின் பயன்பாடு என்ன என்பதைப் புரிய முடிந்தது. அந்தப் பலகைகள் தான் நமது மக்களுக்கு கழிவறைக்குள் அமரும் இருக்கையாக பயன்படுகிறது. திறந்த ஜன்னல் வழியாக சுவாசிக்க கொஞ்சம் காற்றும் கிடைக்கிறது.

அப்படி அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் வாலாஜாவிலிருந்து கட்டிட வேலைக்கு வரும் ரவி. அவரைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களும் அவருடன் வேலைக்கு வந்தவர்கள் தான். அவர்களுக்கு அருகிலேயே எனக்கும் அமர இடம் கொடுத்தனர். இந்த வண்டியில் வரும் பெரும்பான்மை கூலித்தொழிலாளர்களின் மாதிரியாக ரவியை எடுத்துக் கொள்ளலாம். ரவிக்கு சொந்த ஊர் வாலாஜாவுக்கு அருகிலுள்ள நீலகண்டராயன்பேட்டை. வயது நாற்பத்தெட்டு. இரண்டு பிள்ளைகள். சில மாதங்களுக்கு முன்பு தான் மகளைத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகன் பத்தாம் வகுப்பில் தோல்வி. மனைவி அவ்வப்போது கிராமத்திலேயே கிடைக்கும் கூலி வேலைகளுக்குச் செல்வாராம். குடும்பத்தின் முதன்மையான வருவாய் இவரை நம்பியே உள்ளது.

சென்னையில் புதிய கட்டுமானம் நடக்கின்ற இடங்களில் பொறியாளர் சொல்லுகின்ற வடிவத்தில் கட்டிடத்தை  எழுப்பும் நூற்றுக்கணக்கானவர்களில் ரவியும் ஒருவர். சித்தாள் அடுக்கும் செங்கற்களையும், சிமெண்டையும் கொண்டு சுவர்களைக் கட்டி எழுப்புவது தான் ரவியின் வேலை. இதற்கு தினசரி கூலி நானூற்று ஐம்பது ரூபாய். சென்னைக்கு வந்து செல்ல போக்குவரத்து, தேநீர் ஆகியவற்றுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செலவாகி விடுகின்றது. கடந்த ஐந்தாண்டுகளாக ரவி இந்த வேலையில் இருக்கிறார். சுவரெழுப்ப தினமும் குறைந்தது ஐநூறு செங்கற்களையாவது குனிந்து குனிந்து எடுக்கிறார். பூசுவதற்கு அதைவிட இரு மடங்கு அதிகமான முறை குனிந்து கலவையை எடுக்கிறார். காலை ஒன்பதரை மணிக்குத் துவங்கும் வேலை மாலை ஐந்து மணிக்கு முடிவடைகின்றது.

பகற்பொழுது முழுவதும் குனிந்து, நிமிர்ந்து உழைத்த தொழிலாளர்கள் வேலை முடிந்ததும் வண்டியைப் பிடிக்க ஓடோடி வருகிறார்கள். கணிசமானோர் வாரத்தில் மூன்று நாட்களாவது டாஸ்மாக்கில் ஐந்து பத்து நிமிடங்களில் அவசர கதியாக மதுவருந்தி விட்டு வருகின்றனர். உடல் வலி, பயண வலி அனைத்திற்கும் இதுவே உத்திரவாதமான ’மருந்து’. புகைவண்டியில் ஏறியதுமே தளர்வுற்று, கழிவறைகளில் சுருண்டு கொள்கிறார்கள். எட்டரை மணிக்கு வாலாஜாவில் இறங்கும் ரவி அங்கிருந்து பத்து கி.மீ. தொலைவிலுள்ள நீலகண்டராயன்பேட்டையை அடைய பத்தரை மணியாகி விடுகின்றது. பிறகு சாப்பிட்டு விட்டுத் தூங்க பதினொன்று, பன்னிரெண்டாகி விடும். எட்டு மணி நேரம் கூட நிம்மதியாக உறங்காமல் காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்ப வேண்டும். ஒவ்வொரு நாளும்  வீட்டிற்குள் வரும் போதும், கிளம்பும் போதும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் குழந்தைகளைப் பார்க்க முடியும். அன்று கறி சமைத்து சாப்பிட்டு விட்டு, முழுவதும் அவருக்கு ஓய்வு, உறக்கம் தான்.

குடும்பம், குழந்தைகள், மனைவி, இல்லம் என எல்லாம் இருந்தும் அமைதியான, ரசனையான வாழ்க்கை எதுவும் இந்தப் பயணிகளுக்கு வாய்க்கவில்லை. சாவி கொடுக்கப்பட்ட எந்திரங்களைப் போல சென்னைக்கு வந்து போகும் இந்த மக்களிடம் வாழ்க்கைக் கதைகள் அல்லது வலிகள் ஏராளமிருக்கின்றன. அந்த சோகமான கதைகளைச் சுமந்து கொண்டுதான் ஏற்காடு விரைவு வண்டி தினமும் சடசடவென்று ஓடுகின்றது.

வேலைக்குக் கிளம்பும் போது இரு வேளை உணவையும் கூடையில் எடுத்துக் கொள்கிறார்கள். காலை உணவை பயணத்தின்போது முடிக்கிறார்கள். புளி மூட்டைகளைப் போல திணிக்கப்பட்டிருக்கும் இடத்தில் எப்படி சாப்பிடுவது ? எந்த இடத்தில் நிற்கிறார்களோ அந்த இடத்தில் நின்றபடியே சாப்பிட வேண்டும். கழிவறையில் நின்றால் அங்கேயே தான் சாப்பிட வேண்டும்! சாப்பிட்ட பிறகு கை கழுவும் இடத்திற்கெல்லாம் போய் கழுவ முடியாது. அப்படி இப்படி எந்தப் பக்கமும் நகரக் கூட இடம் இருக்காது.

‘பையன் பத்தாம் வகுப்பு பெயிலானா என்ன ! மறுபடியும் எழுதச் சொல்லலாம் இல்ல!‘ ரவியிடம் பேச்சுக் கொடுத்தேன்.‘அதுக்கும் காசு தானே சார் பிரச்சினை. மாசம் மூவாயிரம் பீசு சார்‘ என்றார். அப்போது ஒருவர் சிறுநீர் கழிக்க உள்ளே செல்ல வேண்டும் என்றார். கழிவறை மேடையில் போடப்பட்டிருந்த ஜன்னல் பலகையை எடுத்து ஓரமாகச் சாய்த்து வைத்துவிட்டு ஒவ்வொருவராக வெளியே வந்தனர். அவர் உள்ளே சென்றார். மீண்டும் அவர் வெளியே வந்ததும் பழையபடி பலகையை இருக்கையாக்கிக் கொண்டு அமர்ந்தனர். கழிப்பறையைப் பயன்படுத்திக் கொண்டும், –பயணித்துக் கொண்டும் செல்லும் இந்தக் காட்சியின் அதிர்ச்சியில் நான் உறைந்திருக்க, ரவி அதை சட்டை செய்யாமல் தொடர்ந்தார்.

‘பொண்ணு கல்யாணத்துல லட்சக்கணக்குல கடன் ஆகிடுச்சு சார். அதுக்கு வட்டி கட்ட தான் சரியா இருக்கு. கடனை அடைக்க முடியல. அடுத்து தங்கச்சிங்க இருக்காங்க. அவங்களையும் நாங்க தான் பார்த்துக்கணும். அப்பா இல்ல. மூணு அண்ணனுங்க. பொண்ணு கல்யாணத்துல கடன் மூன்றரை லட்சம்.‘  ‘அவ்வளவு செலவு பண்ணி எதுக்கு கல்யாணம் பண்ணீங்க ?‘  ‘நகையே பத்து பவுண் சார். அதுக்கு மட்டுமே ரெண்டு லட்சம் ஆயிருச்சு. அப்புறம் கல்யாணச் செலவு எல்லாம் சேத்து மூன்றரை ஆகிடுச்சு. கூலி வேலை செய்றோம்னு கேவலமா பார்க்கிறாங்க, நம்மளும் நல்லா நடத்திக்காட்டணும்னு தான் கடனை வாங்கியாவது கல்யாணத்தைப் பெருசா நடத்தணும்னு நடத்தினோம்.‘   அவர் பேசுவதை மற்றவர்கள் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

‘நான்லாம் அஞ்சு வருசமா தான் சார் இந்த வேலைக்கு வந்து போறேன். இருக்கிறதுலேயே இவன் தான் சார் சீனியர்‘ என்று அருகிலிருந்த சதீசைக் காட்டினார்.  சதீசு பதினைந்து ஆண்டுகளாகத் தினமும் சென்னைக்கு வந்து போகிறார். அவருடைய கண்கள் நன்றாகச் சிவந்திருந்தன. ‘என்ன இப்படி சிவந்திருக்கு. சரியா தூக்கம் இல்லையா ?‘ ‘இல்லை சார்! சீலிங்கை பூசும் போது சிமெண்ட் பால் கண்ணுல விழும். இத்தனை வருசமா அது பட்டு பட்டு தான் இப்படி இருக்கு‘ என்றார். சதீசுக்கு வயது முப்பது. சரியாகப் படிக்கவில்லை என்பதால் பதினைந்து வயதிலேயே கூலியாளாக வேலைக்கு வந்து இன்று மேஸ்திரியாக இருக்கிறார். ரவி வாங்குகின்ற சம்பளம் தான் இவருக்கும்.

‘இந்தப் பையன் இன்னைக்கு தான் சார் வந்திருக்கான், பத்தாவது பெயிலாகிட்டான்‘ என்று மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பையனைக் காட்டிச் சொன்னார் சதீசு. அந்தப் பையனுக்கு பதினைந்து வயது தான் இருக்கும். அன்றிலிருந்து அவனும் அந்த இயந்திர வாழ்க்கையில் சிக்குண்ட ஒருவனாக பிணைக்கப்பட்டு விட்டான்.

அடுத்த பெட்டியில் ஏறினேன். கூட்டமாகப் பலர் குழுமி நின்று கொண்டிருந்த ஒரு இடத்தில் கட்சிகளை ஒரு குரல் மானக்கேடாகத் திட்டிக் கொண்டிருந்தது. அதாவது அங்கே ‘அரசியல் விவாதம்‘ நடந்து கொண்டிருந்தது. அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் ‘என்ன சார் விவாதம்‘ என்றேன். ‘தி.மு.க. கனிமொழி, அலைக்கற்றை பற்றி‘ என்றார். அவர் பெயர் சுந்தர். ‘மின்வெட்டு, மின்கட்டண உயர்வு பற்றி எல்லாம் பேசலையா ?‘ என்றதும், ‘நீங்க ரொம்ப லேட்டு, அதெல்லாம் சோளிங்கருக்கு முன்னாடியே பேசியாச்சு‘ என்றார்.

சுந்தர் ஆர்.பி.எஃப். இல் (ரயில்வே பாதுகாப்புப்படை) வேலை செய்கிறார். ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் ஆவடி ஸ்டேசனுக்கு வந்து செல்கிறார். அவர் சக பயணிகளுடன் ஒரு காவலரைப் போல நடந்து கொள்ளவில்லை. சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார். இரவு பன்னிரெண்டு மணிக்கு வீட்டிற்குள் நுழைந்து காலை நான்கு மணிக்குக் கிளம்பும் பல்லாயிரக்கணக்கான பயணிகளில் இவரும் ஒருவர். இப்போது வண்டி சற்று வேகம் குறைந்தது. ஏதோ ஒரு நிறுத்தம் வருவதற்கான அறிகுறி அது. ’நம்ம தாய் நாடு வந்துருச்சு எல்லோரும் வாங்க‘ என்றார் ஒருவர். அது காட்பாடி. நிறைய பேர் இறங்கினர். ’தாய்நாட்டில்’ வாழ முடியாமல் ’அந்நிய’ நாட்டிற்கு அலுத்துக் களைத்து செல்லும் பயணம் என்று அவர் சொல்லுகிறாரோ?

காட்பாடியில் இறங்குபவர்களில் கணிசமானவர்கள் அங்கிருந்து வேலூருக்கு இரு சக்கர வாகனங்களிலும், பேருந்துகளிலும் செல்கிறார்கள். காட்பாடி தாண்டியதும் சற்றுக் கூட்டம் குறைந்தது. பிறகு வந்த முகுந்தராயபுரத்தில் அடுத்த பெட்டிக்கு மாறினேன். அங்கு கணிசமாக கூட்டம் குறைந்திருந்தது. அருகில் அமர்ந்து கொண்டிருந்த செல்வராஜ் என்பவர் வனத்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர். சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அலுவலகம். வீடு வேலூர். இந்த வண்டியில் தான் தினமும் வந்து செல்கிறார். ‘ஏன் சார்? வேலூருக்கே மாற்றலாகி வரலாமே‘ என்றால், ‘அதுக்கு இப்படி ட்ரெய்ன்லயே அலைஞ்சிறலாம்‘ என்றார். வேலூர் அலுவலகத்திலுள்ள ஒரு அதிகாரியின் குடைச்சலால் தான் இவரே சென்னைக்கு மாற்றல் கேட்டு வந்திருக்கிறார்.

அடுத்தடுத்து வந்த ஊர்களில் இறங்க வேண்டியவர்கள் எல்லாம் இறங்கி, இருளில் மறைந்து போனார்கள். நான் இரவு முழுவதையும் இரயில் நிலையத்திலேயே கழித்துவிட்டு காலை ஐந்து மணிக்கு வரும் ஏலகிரிக்காக ஜோலார்பேட்டையில் காத்திருந்தேன். காலையில் வண்டியைப் பிடித்து சென்னை திரும்பினேன்.

சென்னையில் இறங்கியதும் பக்கத்து நடைமேடையில் ஒரு வண்டி நின்று கொண்டிருந்தது.

அந்த வண்டியைப் பார்த்ததுமே ‘நாம் என்ன ஐரோப்பிய இரயில் நிலையத்திற்குள் ஏதும் வந்து விட்டோமோ?!‘ என்று ஒரு விநாடி தோன்றியது. இதுவரை அந்த வண்டியை அங்கே பார்த்ததில்லை. அது அவ்வளவு சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருந்தது. அது பெங்களூர் செல்லும் சதாப்தி விரைவு வண்டி. அந்த வண்டியில் பொதுப்பெட்டிகள் இல்லை. அது முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட உயர்தர மக்களுக்கான வண்டி.

அன்றாடம் கழிப்பறையில் அமர்ந்து கொண்டு பயணிக்கும் மக்களுக்கு வாய்த்த ஏலகிரி விரைவு வண்டி இருக்கும் நாட்டில்தான் சதாப்தியும் செல்கிறது. இரண்டு இந்தியா இருக்கிறது என்பதற்கு வேறு சான்று வேண்டுமா என்ன?

குடியிருக்கும் ஊரில் ஒரு குறைந்தபட்ச வேலையும், வாழ்க்கையும் இல்லாமல் இந்த மக்கள் தினந்தோறும் இந்த நரக வாழ்க்கையை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

ஏலகிரியில் செல்லும் மக்களுக்கு மானாட மயிலாடவோ, ஏர்டெல் சூப்பர் சிங்கரோ, ஐ.பி.எல் போன்றனவோ இல்லை. சீரியல்களோ எதுவுமில்லை. வார விடுமுறையில் சுற்றுலாவோ, உயர்தர உணவு விடுதிக்குச் செல்வதோ, இன்னபிற நடுத்தர வர்க்க கேளிக்கைகளெல்லாம் இந்த மக்களின் கனவில் கூட இல்லை. இவர்களை அடித்துத் தோய்த்துதான் பணக்காரர்களின் இந்தியா நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாக ஜொலிக்கிறது.

ஒளிரும் இந்தியாவைப் பார்க்க வேண்டுமா? ஏலகிரியில் ஒரு முறை பயணம் செய்யுங்கள்! கண்ணைப் பறிக்கும் அந்த அவல வாழ்க்கைக் காட்சிகளின் அதிர்ச்சிகளிலிருந்து நான் இன்னமும் மீளவில்லை.

______________________________________________________

– வினவு செய்தியாளர், – புதிய கலாச்சாரம், மே – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

குடிமக்களை கிரிமினல்களாக நடத்தும் பாசிசத்தை முறியடிப்போம்!

19

வாடகைதாரர்களின் விவரம் திரட்டும் சென்னை போலீசின் உத்தரவுக்கு நீதிமன்றத் தடை!

வாடகைதாரர் விவரம்சென்னை மாநகரப் போலீசு நடத்திய போலி மோதல் கொலைகளும், வடமாநிலத் தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன. சென்னையில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் குடியிருக்கும் ‘சமூக விரோதி’களால் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர்கள் தாங்கள் குடியமர்த்திருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய விவரங்களை அருகாமை போலீசு நிலையத்தில் தரவேண்டும் என்றும், அவ்வாறு அளிக்கத் தவறினால், வீட்டு உரிமையாளர்கள் மீது இ.பீ.கோ பிரிவு 188இன் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர போலீசு உத்தரவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ், மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவின்படி, போலீசு தருகின்ற படிவத்தில், ‘வாடகைதாரரின் புகைப்படம், அடையாள அட்டை, அவரது நிரந்தர முகவரி, அவர் ஏற்கெனவே குடியிருந்த முகவரி, செல்பேசி எண், வேலை செய்யும் இடத்தின் முகவரி, வீட்டில் தங்கியிருப்பவர்கள் குறித்த விவரம்’ ஆகியவற்றைத் தரவேண்டும்.  வீட்டு உரிமையாளர் அதற்கு கைச்சான்றும் அளிக்க வேண்டும்.

ஜெயா அரசின் அப்பட்டமான இந்த பாசிச நடவடிக்கையை ஓட்டுப் பொறுக்கிகள் யாரும் கண்டிக்கவில்லை. சில மனித உரிமை அமைப்புகளும் வழக்குரைஞர்களும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். வலுவான எதிர்ப்பேதும் இல்லாததால், உள்ளூர் ஓட்டுப்பொறுக்கித் தலைவர்கள் மூலம் வீட்டு உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தது போலீசு. வீட்டு உரிமையாளர்களின் பார்வையில், வாடகைதாரர்கள் சந்தேகத்திற்கிடமான குற்றவாளிகளாக மாறிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC) இவ்வுத்தரவுக்கு எதிராக, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றையும் தாக்கல் செய்தது. போலீசின் உத்தரவு வாடகைதாரர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பறிப்பதுடன், அவர்களது தனிமைச் சுதந்திரத்தை மறுப்பதாகவும், சொந்த வீடு இல்லாதவர்களையும் வெளிமாநிலத்தவரையும் கிரிமினல்களாகச் சித்தரிப்பதாகவும், வீட்டு உரிமையாளர்களை ஆள்காட்டிகளாக மாற்றுவதாகவும் வாதிட்ட ம.உ.பா.மையம், இந்த உத்தரவுக்கு உடனே  தடை விதிக்கக் கோரியது. வீட்டு உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் 30.3.2012 அன்று தடை விதித்த உயர் நீதிமன்றம் 25.4.2012 அன்று மொத்த உத்தரவுக்கும் தடை விதித்திருக்கிறது. போலீசின் இவ்வுத்தரவு  தடுக்கப்படாமலிருந்தால், தமிழகம் முழுவதற்கும் இது விரிவுபடுத்தப்பட்டிருக்கும்.

பயங்கரவாத தடுப்பு, கிரிமினல் குற்றத் தடுப்பு என்ற பொய் முகாந்திரங்களை வைத்து மக்கள் மீதான கண்காணிப்பை அதிகரித்து வருகின்றன, மத்தியமாநில அரசுகள். மக்கள் மீதான மறுகாலனியாக்கத் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவற்றுக்கெதிரான போராட்டங்களும் அதிகரிக்கும் என்பதால், குடிமக்கள் அனைவரையும் கண்காணிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாகவே அரசும் ஆளும் வர்க்கமும் கருதுகின்றன. மத்தியமாநில உளவுத் தரவுகளை ஒருங்கிணைக்கும் “நாட்கிரிட்” என்ற தேசிய உளவு வலைப்பின்னல், ஆதார் அட்டை, வீதிகளில் ஆங்காங்கே நிறுவப்படும் டி.வி. காமெராக்கள், கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர் போன்றோரின் தரவுகள் திரட்டப்படுதல் போன்றவற்றின் வரிசையில் வருகிறது, சென்னை போலீசின் இவ்வுத்தரவு.

பாசிசம் வெகுவேகமாக நிறுவனப்படுத்தப்படுகிறது. சுருக்கு இறுகுமுன்னர் விழித்துக்கொண்டு அதனை அறுத்தெறிந்தாகவேண்டும்.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே – 2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?

9

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் (1900-2000) பணக்கார வரலாற்று மாந்தர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருக்கும் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 210.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதே பட்டியலில் இருபதாவதாக வரும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்கள் தான்.

இந்த சொத்துக்களனைத்தும் அந்தக் காலத்தில் நிஜாம் வயலில் இறங்கி நாற்று நட்டோ, சுமை சுமந்து சம்பாதித்ததோ அல்ல. முகலாயர் காலம் தொடங்கி வெள்ளையர்  காலம் வரை தக்காணத்தில் அவர்களுக்கு அடியாளாகப் பணியாற்றி, மக்களைப் பல்வேறு வரிகளின் மூலம் கசக்கிப் பிழிந்து சம்பாதித்தவைதான். இது போக சிறப்பான அடிமையாகப் பணியாற்றியதற்காக வெள்ளை அதிகாரிகளாலும், காலனிய அரசாலும் அளிக்கப்பட்ட பல்வேறு பரிசுப்பொருட்களும் தான் நிஜாமின் கஜானாவில் நிறைந்துள்ளது.

அன்றைக்கு வெள்ளையனின் காலில் விழுந்து கிடந்த மைசூரின் உடையாரும், திருவிதாங்கூர் ராஜாவும், ஆற்காடு நவாப்பும், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனும், தொண்டைமானும், இன்னும் சிந்தியாக்களும், மராத்திய பேஷ்வாக்களும் இன்றும் சுகபோகிகளாகவே வாழ்கிறார்கள். அவர்களது மாளிகைகள், இதர சொத்துக்களைப் பறிமுதல் செய்யாத இந்திய அரசு இன்றும் அவற்றைப் போஷித்து வருகின்றது.

திப்பு சுல்தான் உள்ளிட்ட தியாகிகள் வெள்ளையனை எதிர்த்த போது, ஹைதராபாத் நிஜாம்கள் பச்சையான துரோகம் புரிந்து காலனிய அரசுக்கு வால் பிடித்தார்கள். இவர்களின் ஊதாரித்தனமும், உல்லாச வாழ்வும் உலகறிந்தது. ஹைதராபாத்தின் ஆறாவது நிஜாம், ஒரு வாத்து முட்டையின் அளவுள்ள வைரத்தையே செருப்பில் பதித்து வைத்திருந்திருக்கிறார். அவரது மரணத்திற்குப் பின் அதைக் கண்டெடுக்கும் அவரது வாரிசு, அந்த வைரத்தை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

இப்பேர்ப்பட்ட பெயருக்கும், புகழுக்கும் உரிய நிஜாம் குடும்பத்தார் இப்போது மாபெரும் அவமானத்தில் உழல்வதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன அவமானம்?

1995-ம் ஆண்டு நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்த தங்க நகைகளில் ஒரு பகுதியை இந்திய அரசு 206 கோடி ரூபாய்களுக்கு வாங்குகிறது. இதற்கு வருமான வரித்துறை சுமார் 30 கோடி ரூபாய்களை வரியாக விதிக்கின்றது. தங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தை தாம் விற்பதற்கு அரசுக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த நிஜாமின் வாரிசுகள், நீதிமன்றத்தை நாடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இடைக்கால ஏற்பாடாக சுமார் 15.45 கோடியை வருமானவரித் துறையிடம் வரியாகவும், 15.05 கோடியை வங்கியில் பிணைத் தொகையாகவும் வைக்கிறது அரச குடும்பம்.

இந்த 15.05 கோடியில் அரச குடும்பத்து வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட்ட ஈவுத்தொகை போக தற்போது 8.66 கோடிதான் மீந்துள்ளது. மீதம் உள்ள தொகையோடு வட்டியையும் சேர்த்து 8.99 கோடியை நிஜாம் குடும்பம் வரிப் பாக்கியாக வைத்துள்ளது. சுமார் 120 வாரிசுகளைக் கொண்ட நிஜாம் குடும்பத்தினர் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டுமென்று நோட்டீசு விடுத்துள்ளது வருமான வரித்துறை. அரச குடும்பத்துக்கே நோட்டீசா என்று கொதித்துப் போன நிஜாமின் வாரிசுகள், இதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரை சென்று முறையிட்டுள்ளனர்.

இதைப் பற்றி மனம் வெதும்பிப் பேசிய நிஜாம் ஓஸ்மான் அலியின் கொள்ளுப் பேரன் நவாப் நஜஃப் அலிகான், “நாங்கள் தில்லி சென்று போராடுவோம். அப்போது தான் அரசகுடும்பத்துக்கு வருமான வரித்துறை இழைத்துள்ள அவமானத்தை இந்த நாடும், மக்களும் புரிந்து கொள்வார்கள்” என்று புலம்பியுள்ளார்.

ஹைதராபாத்-நிஜாம்

வெள்ளையனை அண்டிப்பிழைத்த இந்தக் கைக்கூலிகள் தமது துரோகத்தனத்துக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கு வரிகட்டுவதை அவமானம் என்கிறார்கள். நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்கு வீசப்பட்ட எலும்புத் துண்டுகளை நட்ட ஈடின்றிக் கைப்பற்றுவோம் என்று அறிவிக்க துப்போ திராணியோ இல்லாத இந்த ‘சுதந்திர’ அரசின் நிதியமைச்சர் ’நிஜாமின் கவலையைப் போக்க அரசு நடவடிக்கையெடுக்கும்’ என்று உறுதியளிக்கிறார். திப்புவையும், மருதுவையும், கட்டபொம்மனையும் மறைத்து விட்ட முதலாளித்துவ ஊடகங்களோ நிஜாமின் ’துயரத்துக்கு’ மனமிரங்குகின்றன – மைசூர் உடையாரின் வருடாந்திர கேளிக்கைகளுக்கு சிறப்புக் கவனம் கொடுத்து வெளியிடுகின்றன.

கட்டபொம்மனைக் கைது செய்து கும்பினியின் காலை நக்கி அடிமைச் சேவகம் புரிந்த தொண்டைமானின் வாரிசு திருச்சியின் முன்னாள் மேயர் என்றால், வடக்கே சிந்தியாக்கள், காஷ்மீரின் கரண் சிங் என்று சுதந்திரத்துக்குப் பின் நேரடியாக ஓட்டுக் கட்சி அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைத் தொடர்ந்து ருசித்தவர்கள் ஏராளம்.  அப்படி நேரடியான வாய்ப்புக் கிடைக்காத வெள்ளைக்காரனின் சவுக்கு நுனிகளான ஜமீன்களும், இன்ன பிற சிற்றரசர்களும் வட்டார அளவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நிலச்சுவான்தார்களாகவே நீடித்து வருகிறார்கள்.

உண்மை என்னவெனில் இவர்களைப் பராமரிக்கும் இந்திய அரசு கூட கைக்கூலிகளின் அரசு என்ற முறையில் நடப்பது கும்பினியின் ஆட்சி தான் – என்ன, கவர்னரின் தலையில் தொப்பிக்குப் பதில் டர்பன் இருக்கின்றது.

______________________________________________________

 – புதிய கலாச்சாரம், மே – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்