Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 370

சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்

ச்சம் தரும் அளவுக்கு தமிழக இளைஞர்களிடையே வளர்ந்து நிற்கிறது சாதி வெறி. குறிப்பாக பதின்ம வயது இளைஞர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் தெறிக்கவிடும் ரத்தமும், வீசியெறியும் அரிவாள்களும் நம்மை பயம்கொள்ள வைக்கின்றன.

பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முந்தைய கிராமத்தின் சாதி அடர்த்தி, இப்போது பன்மடங்கு கெட்டிப்பட்டிருக்கிறது. குறிப்பாக இளைஞர்களிடையே சாதியை வெளிப்படுத்திக்கொள்வதில் இருந்த வெட்கமும் கூச்சமும் விடைபெற்று, அது ஒரு பெருமிதம் தரும் நடவடிக்கையாக உருமாறிக் கொண்டிருக்கிறது. முளைக்காத மீசையை தடவி விட்டுக்கொண்டு இல்லாத எதிரிக்கு சவால் விடுகிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம் பகுதிகளில் இதன் நேரடி சாட்சிகளைக் காண முடியும்.

டிக்-டாக் செயலிகளில் சாதிவெறி பேசும் இளைஞர்கள்.

அஜித் பிறந்த நாளாக இருந்தாலும், அக்கா மகள் பூப்பு நீராட்டு விழாவாக இருந்தாலும் தத்தமது சாதிப் பெயரோடு முச்சந்தியில் ப்ளெக்ஸ் வைக்கிறார்கள். ஒரு சாதிக்காரன் இப்படி ஃப்ளெக்ஸ் வைத்தால், ‘அப்ப நாம மட்டும் என்ன தக்காளி தொக்கா?’ என்று இன்னொரு சாதிக்கார சிறுவர்களும் ப்ளெக்ஸ் வைக்கிறார்கள். நடு ரோட்டில் போஸ்டர் அடித்து தங்கள் பிள்ளைகள் சாதியை அறிவித்துக்கொள்வது குறித்து இந்த சிறுவர்கள் / இளைஞர்களின் பெற்றோர்களுக்கு எந்த தடையும் இருப்பதில்லை. எப்படி இருக்கும்? அவர்களுக்கு பணம் கொடுப்பதே இந்தப் பெற்றோர்கள்தானே? மேலும், பல கிராமங்களில் சாதி உணர்வுடன் ஒன்றிணைவதை ஒரு சமூகப் பங்களிப்பு என்ற வகையில் வியாக்கியானப்படுத்துகின்றனர். ‘எல்லாரும் சொந்த வேலையைப் பார்த்துக்கிட்டு போனா ஊரை பார்க்கிறது யார்?’ என்ற கேள்வியில் வெளிப்படும் ‘ஊர்’ என்பது எல்லோரையும் உள்ளடக்கியது அல்ல.

கிராமத்து இளைஞர்கள், கல்வியின் வழியே வேலைவாய்ப்பைப் பெற்று வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிகின்றனர். இவர்கள் வாட்ஸ் அப் குழுக்களின் வழியே ஒன்றிணைந்து தத்தமது கிராமங்களுக்கு நற்பணிகள் செய்ய முயற்சிக்கின்றனர். அந்த கிராமத்து பள்ளிக்கூடத்தில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசளிப்பது, சிலருக்கு கல்லூரி கல்விக் கட்டணம் செலுத்துவது என்பதாக இது இருக்கிறது. இதற்காக கைக்காசை செலவழிக்கின்றனர் என்றாலும், பெரும்பாலும் இந்த உதவியின் இலக்கு அவர்களின் சொந்த சாதியினர் மட்டுமே. உண்மையிலேயே அதிகபட்ச உதவி தேவைப்படக்கூடிய ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்கள் இவர்களின் பயனாளிகள் பட்டியலில் இருப்பதில்லை. அப்படியே ஓரிரு இடங்களில் வழங்கினாலும் கூட, அதை தங்களின் பெருந்தன்மைப் பட்டியலில் மறக்காமல் இணைத்துக்கொள்கின்றனர். இத்தகையோர் செய்யக்கூடிய நற்பணி என ஏதேனும் இருக்குமானால், அது சாதிவெறியின் திரட்சியைத் தடுப்பதுதான். அது எங்கும் நிகழ்வதில்லை.

படிக்க:
♦ சுந்தரபாண்டியன்: உசிலம்பட்டி வழக்கா, தேவர் சாதி அழுக்கா?
♦ தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!

மதுரை, இராமநாதபுரம் பகுதி பள்ளிக்கூடங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு, சில குறிப்பிட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்கள், ஆளுக்கு ஒரு வண்ணத்தில் கயிறு கட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். கயிறைப் பார்த்தே சாதியைக் கண்டுபிடித்துவிடும் அதிநவீனத் தொழில்நுட்பம். இந்த சாதிக் கயிறு இப்போது தஞ்சாவூர், நாகை மாவட்டங்கள் வரையிலும் வந்துவிட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்புவரை, பசும்பொன் முத்துராமலிங்கத்தின் புகைப்படங்களைக் கூட திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் காண முடியாது. இந்தப் பெயரே அங்குள்ளவர்களுக்கு பரிச்சயம் இல்லை. ஆனால் இன்று ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி தென்படுகிறது. தங்களை மாபெரும் ஆண்ட சாதியின் அங்கத்தினர்களாக நிறுவிக்கொள்ள துடிக்கின்றனர்.

எப்படி நிறுவுவது? அதற்குத்தான் இந்து மதம் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறதே… உனக்கும் கீழுள்ள சாதியை தூக்கிப்போட்டு மிதி. அப்படி ஒடுக்குவதை பரம்பரை அனுபவ பாத்தியதை வழியிலான மரபுரிமையாக பெற்றுள்ள இவர்கள், அதை ஓர் அனிச்சை செயலாகவே மேற்கொள்கின்றனர். ஓர் ஊரில் இருக்கும் பத்து சாதிகளில் தன் சாதி மட்டும் எப்படி மேலானது என்று நிறுவுவதற்கு, போலியான ஆண்ட சாதி கட்டுக்கதைகளைத் தவிர இவர்களுக்கு எதுவுமில்லை. இதனால், ஒடுக்கப்பட்ட மக்களை யார் அதிகம் துன்புறுத்துவது என்பதன் வழியே யார் பெரிய சாதி என்று காட்டிக்கொள்கின்றனர்.

இவர்களுக்கு ஓர் அண்மைக்கால வெற்றிகரமான முன்மாதிரியாக இருப்பவர் மருத்துவர் ராமதாஸ். நாய்க்கன்கொட்டாய் வன்முறையை முன்வைத்து பா.ம.க. சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டாலும் கூட அது சமூக யதார்த்தத்தில் எதிர்மறை முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறது. ’வன்னியரை பாரு… எப்படி கெத்தா இருக்கான், நம்மளும் அதேபோல இருக்கணும்’ என்று இதை ஒரு peer pressure-ஆக, எதிர் நிலையில் இருந்து உள்வாங்கிக்கொண்டு தலித் ஒடுக்குமுறையில் தீவிரம் செலுத்துகின்றனர். பொன்னமராவதி ஆடியோவும், பொன்பரப்பி தாக்குதலும் ஊடக கவனம் பெற்றதால் வெளியில் தெரிகின்றன. ஆனால், இத்தகைய எண்ணற்ற ஒடுக்குமுறைத் தாக்குதல்கள் மிக அதிகமாக தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேற்பரப்பில் வெளிப்படுவதை விட உள்ளே நிலவும் கொந்தளிப்பு அதிகம்.

படிக்க:
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
தமிழகத்தைக் குலுக்கிய மே தினம் ! | செய்தி – படங்கள் !!

கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் என்பது முற்றிலும் லாபமற்ற, நிச்சயமற்ற தொழிலாக மாறிவிட்டது. அதை நம்பியிருந்த தொழிலாளர்கள் நகர்ப்புறம் சார்ந்த வெவ்வேறு உதிரித் தொழில்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். கூடுதலாக, படிப்பின் வழியே பெற்றுள்ள கணிசமான வேலைவாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த, கண்களால் காணத்தக்க பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதே சமகாலத்தில், மேல் உதட்டில் முளைத்த நான்கு மயிரைத் தடவிக்கொண்டு ஊர்ச் சாவடியில் சாதிப் பெருமை பேசிக்கொண்டிருந்தவர்களின் பெருமிதத்துக்கு அடிக் கட்டுமானமாக இருந்த விவசாயம் கண்ணெதிரே சரிந்தது. மிகக் குறைந்த நிலம் இருப்பினும் அல்லது நிலமே இல்லை எனினும் அவர்களிடம் இழப்பதற்கு சாதிப் பெருமிதம் இருந்தது. கோவணத்துக்கு வழியின்றி அம்மணமாக நின்றாலும் சாதியை எப்படி விட முடியும்?

தன்னை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருந்து ஒரு ஒடுக்கப்பட்டவன் விலகிச் செல்கிறான் என்ற யதார்த்தம் இவர்களின் மனதைக் குடைகிறது. கல்வி, வேலைவாய்ப்பின் வழியே ஓர் ஒடுக்கப்பட்டவன் பெரும் வசதிகள் இவர்களின் கண்களை உறுத்துகிறது; வயிறு எரியச் செய்கிறது. அதனால்தான் பெரும்பான்மையான தாக்குதல்களில், தலித்களின் வீடுகளும், வண்டி வாகனங்களும், பொருட்களும் சேதப்படுத்தப்படுகின்றன. அதன் வழியே இவர்கள் குரூரமான திருப்தி அடைகின்றனர். ஏதேனும் ஒரு கிராமத்து தலித் தெருவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதன் ripple effect அந்த வட்டாரம் முழுவதும் இரு தரப்பிலும் எதிரொலிக்கிறது. அதாவது ஒடுக்கும் தரப்பு அதில் இருந்து உற்சாகம் பெறுகிறது. ஒடுக்கப்படும் தரப்பு, மேலும் அச்சம் கொண்டு ஒடுங்கிப்போகிறது.

படிக்க:
♦ ஷேக்கினா : கத்தோலிக்க திருச்சபை லீலைகளை மறைக்கும் திரைச்சீலை !
♦ பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

இந்தப் பின்னணியில் ’தேவராட்டம்’ போன்ற திரைப்படங்கள் மிக பாரதூரமான பாதிப்பை சமூக தளத்தில் ஏற்படுத்துகின்றன. தன் முன்னிருக்கும் சமூக- பொருளாதார சிக்கலுக்கான காரணத்தை கண்டறிந்து தீர்க்க வழி தெரியாத இளைஞர்கள், சாதியிடம் சரணடைகின்றனர். அவர்களின் கைகளில் இத்தகைய திரைப்படங்கள் ஒரு அரிவாளை போல கொடுக்கப்படுகிறது. பேசலாமா, கூடாதா என்ற தயக்கத்தில் இருப்பவனை இது பேச வைக்கிறது. திட்டு, திட்டாக இருக்கும் சாதி உணர்ச்சியை திரட்டித் தருகிறது. அவன் இந்தத் திரைப்படத்தை வைத்துக்கொண்டு இன்னும் பத்து பேரை வம்பிழுப்பான். இன்னும் பத்து பேருக்கு சவால் விட்டு டிக்டாக் வீடியோ போடுவான். எந்த ஊரிலாவது நாலு பேர் வெட்டிக்கொண்டு சாவார்கள். இயக்குனருக்கு அதைப்பற்றி என்ன கவலை? அவர் மயிராட்டம், மட்டையாட்டம் என்று அடுத்த ஆட்டத்தை எடுக்க கிளம்பிவிடுவார்.

இதுபோன்ற அருவருப்பான சாதிவெறி தலைப்புகளுக்கு சென்ஸார் போர்டு எப்படி அந்த காலத்தில் இருந்து இப்போது வரை அனுமதி தருகிறது? இதேபோல ஒவ்வொரு சாதியின் பெயரோடும் திரைப்படங்கள் உருவாகி வந்தால், அது உருவாக்கும் பாதிப்பு இன்னும் ஒரு நூற்றாண்டுக்கேனும் தொடரக்கூடும். ஒரு தலித் குடியிருப்பை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தால் அதன் பொருள் என்ன? அவர்கள் இரு தலைமுறைகளாக உழைத்து சேர்த்த செல்வம் கரிக்கட்டையாகிவிட்டது என்று பொருள். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு இருந்ததைப் போல, சாதிப் பெயரோடு தலைப்பிட்டால் அப்படத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.

நன்றி :
முகநூலில் பாரதி தம்பி

Trust WHO ஆவணப்படம் : உலக சுகாதார நிறுவனத்தின் மறுபக்கம் !

0

லக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகளின் பின்னால் மறைந்துள்ள நோக்கங்களையும், அதனைக் கட்டுப்படுத்தும் உண்மையான சக்திகளையும் குறித்ததொரு புலனாய்வு ஆவணப்படம்.

(இந்த ஆவணப்படம் இணையத்தில் கிடைக்கப் பெறுவதில்லை)

உலக சுகாதார நிறுவனம், கடந்த 1948-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. எங்கும் எல்லோருக்கும் சுகாதாரமான எதிர்காலம் கட்டமைக்கப்படவேண்டும் என்ற இலக்கோடு உருவாக்கப்பட்டது இந்நிறுவனம்.

சுவிச்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவா-வில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 7000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். உலகம் முழுவதிலும் 6 மண்டல அலுவலகங்களையும் 150 நாடுகளில் அலுவலகங்களையும், கொண்டுள்ளது இவ்வமைப்பு. மேலும், ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏற்றவகையிலான ஒழுங்குமுறை விதிகளை ஏற்றுக் கொண்ட 194 -க்கும் மேற்பட்ட நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

படிக்க:
♦ பில்கேட்ஸ் பவுண்டேஷன் : அதிர்ச்சியூட்டும் உண்மைகள் !
♦ SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்

புகைப்பிடித்தலின் பாதிப்பாக இருக்கட்டும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பாக இருக்கட்டும் அல்லது ஒரு அணு விபத்தாக இருக்கட்டும், நாம் அறிவுரைக்காகவோ அல்லது ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவோ சார்ந்திருக்கும் ஒரே அமைப்பு உலக சுகாதார நிறுவனம் மட்டும்தான். ஆனால், அது நம்பத்தகுந்ததாக இருக்கிறதா? உலக சுகாதார நிறுவனம் தனது பரிந்துரைகளை எவ்வாறு முடிவெடுக்கிறது? அந்தப் பரிந்துரைகள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை?

உலகளாவிய சுகாதார விவகாரங்களை பாரபட்சமின்றி கையாளும் அதன் திறனின் மீதான நம்பிக்கை, உலக சுகாதார நிறுவனத்தின் தொடக்க காலங்களில் இருந்ததைப் போல இப்போது உறுதியாக இல்லை. இந்நிறுவனத்திற்கான நிதி மற்றும் அதில் பங்களிப்பு செலுத்தும், தனிப்பட்டவர்களின் ஆதிக்கம் குறித்த கவலையும், கடந்த 1950-களிலிருந்தே இருந்து வருகிறது.

ஆவணப்படத்தின் முன்னோட்டம் (ட்ரெய்லர்)

இக்காலகட்டங்களில் எவ்வித செயல்பாடுகளும் இல்லாத சில ஆண்டுகளுக்குப் பின்னர், புகையிலை தொழில்துறையின் முக்கிய நிறுவனங்களுடனான இந்நிறுவனத்தின் உறவு வெளிச்சத்துக்கு வந்தது.

“புகையிலை தொழில்துறையினர், சில நிறுவனங்களை உருவாக்கி, அதில் தமது நிலைப்பாட்டை முன் வைக்கக் கூடிய அறிவியலாளர்களை பணிக்கு அமர்த்தினர். மேலும் தமது பெயர் எங்கும் வெளிவராதபடிக்கு அவர்கள் பார்த்துக் கொண்டனர். அந்த நிறுவனங்கள் உண்மையில் புகையிலை தொழில்துறையின் நலனை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனவோ என நீங்கள் சந்தேகிக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் தங்கள் பெயர் வெளியே வராதபடி செய்தனர்.” என்கிறார் ‘சுவிச்சர்லாந்தின் சுகாதாரம்’ என்ற அமைப்பின் முன்னாள் செயலாளர் தாமஸ் செல்ட்னர்.

இந்த நிறுவனங்களில் இருக்கும் அறிவியலாளர்களும், முக்கியப் புள்ளிகளும், பெரும் புகையிலை ஜாம்பவான்களுடனும், உலக சுகாதார நிறுவனத்தினுடனும் ஒரே சமயத்தில் தொடர்பை வைத்துள்ளனர். இதற்கு ஒரு உதாரணத்தையும் பார்க்கலாம்.

புகையிலை (எதிர்ப்பு) இயக்கம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகராக பணியாற்றிய விச(முறி)வியல்துறை நிபுணர் ஒருவர், பன்னாட்டு புகையிலை மற்றும் சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிலிப் மோரிஸ் நிறுவனத்தால் நிதி பங்களிப்பு செய்யப்படும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது பலதரப்பட்ட தொடர்புகள் அம்பலமான பின்னும், அவர் உலக சுகாதார நிறுவனத்தில் ஆலோசகராகத் தொடர்ந்தார்.

அதன் பின்னரும் இதுபோன்ற நிறுவனங்கள், தங்களது திட்டமிட்ட நலனுக்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இயற்கை நியதிக்கு எதிரான உறவுகளைக் கொண்டிருந்த பல்வேறு தருணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களின் உச்சத்தில்தான் நிகழ்ந்திருக்கின்றன.

முழு ஆவணப்படத்தை பணம் செலுத்திப் பார்க்க : TrustWHO

இதுபோன்ற தொடர்புகளுல் ஒன்றுதான், மருந்து தயாரிப்பு நிறுவனங்களான க்ளாக்சோ, நோவார்டிஸ் ஆகிய நிறுவனங்கள், உலக சுகாதார நிறுவனம், பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடுகள் ஆகிய முத்தரப்பிற்கும் இடையிலான தொடர்பு. இந்நாடுகள் நோவார்ட்டிஸ், க்ளாக்சோ ஆகிய நிறுவனங்களில் இருந்து பன்றிக் காய்ச்சல் மருந்துகளைப் பெறுவதற்குத்தான் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தன.

கடந்த 2009-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தொற்று அபாய எச்சரிக்கைதான், இத்தகைய ஒப்பந்தங்கள் போடப்படுவதற்கான தூண்டுதல் புள்ளியாக இருந்தது.

அந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு அடுத்த முதல் மூன்றுமாத காலத்தில், பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய மருந்து நிறுவனம், வருடாந்திர கூடுதல் லாபமாக 1.95 பில்லியன் டாலரை ஈட்டியது. ஆனால் பன்றிக் காய்ச்சல், அதற்குக் கொடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கையின் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஜெர்மனியில் மொத்தம் 258 பேர் இந்தக் காய்ச்சலுக்கு பலியாகினர். இது சாதாரணக் காய்ச்சலால் ஏற்படும் பலியைவிட வெகு அதிகமாக இல்லை.

உலக சுகாதார நிறுவனம், பன்றிக் காய்ச்சலுக்காக அதீத முன்னெச்சரிக்கையாக இருந்து, சுமார் 18 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியதாக பழிசுமத்தப்பட்டது. “பன்றிக்காய்ச்சல் பரவும் சமயத்தில், நான் உலக சுகாதார மையத்தின் பொது சுகாதாரத் துறை, மருந்து மற்றும் அறிவுசார் சொத்துடைமைப் பிரிவின் பொதுச் செயலாளராக இருந்தேன். அங்கிருக்கும் யாரும் பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சப்படவில்லை” என்கிறார் ஜெர்மன் வெலஸ்க்யஸ். இவர் தற்போது பசுமை பருவநிலை நிதியம் எனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

“எனக்குத் தெரிந்து உலக சுகாதார நிறுவனத்தில், அதன் பொது இயக்குனர் உள்ளிட்டு  அங்கு பணியாற்றும் யாரும் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதில்லை. இது குறித்து அதன் பொது இயக்குனரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தனக்கு நேரமில்லை என்றும், பிறிதொரு நேரத்தில் அந்த தடுப்பு மருந்தை போட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார் அந்தப் பெண்மணி.” என்கிறார் வெலஸ்க்யஸ்

ஐரோப்பிய கவுன்சிலின் முன்னாள் பிரதிநிதி வோல்ஃப்கேங் வோடார்க், இத்தகைய உறுதியற்ற மற்றும் உண்மை மறைக்கப்பட்ட சூழ்நிலைமைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார். உலக சுகாதார நிறுவனத்தினர், நிதி திரட்டலுக்குக் கைமாறாக குறிப்பான நிலைமைகளின் யதார்த்தத்திற்கு அடிக்கடி பாராமுகமாய் இருந்து விடுகின்றனர் என்கிறார்.

“உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் இவ்விவகாரங்கள் குறித்து எதுவும் அறியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அறிவியலாளர்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அனைத்து அறிவியலாளர்களும் பல்வேறு நாடுகளாலும், உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி அளிக்கும் அமைப்புகளாலும் நியமிக்கப்படுபவர்களே. அவர்களில் பெரும்பாலானவர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆதாயம் தரும் முடிவுகளையும், அவர்களுக்கு ஆதரவான ஆலோசனைகளையுமே வழங்கிவந்தனர்” என்கிறார் வோடார்க்.

படிக்க:
♦ எபோலா வைரசால் வேட்டையாடப்படும் ஆப்ரிக்கா !
♦ பன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?

பல ஆண்டுகளாக, உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை, குறிப்பான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மத்தியிலான உறவில் இது போன்ற நிலைமைகளே வளர்ந்து வருகின்றன. செர்னோபில் பேரழிவு உட்பட நடக்கக்கூடாத, மோசமான சூழ்நிலைமைகளிலும் இத்தகைய போக்கு வளர்ந்துள்ளது.

அணு உலை வெடிப்பின் காரணமாகவும், அதற்குப் பிந்தைய விளைவுகளின் காரணமாகவும் நேரடியாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையைக் குறைத்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்நிறுவனம் நெருக்கமாகப் பணியாற்றி வந்ததும், அப்போது உறுதியாகத் தெரிந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் குடையின் கீழ் “அமைதிக்கான அணுக்கள்” முகமை என்றுதான் முதன்முதலில் சர்வதேச அணுசக்தி முகமை உறுவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு நிறுவனங்களும், – ஒன்று உலக சுகாதாரத்திற்காகவும், மற்றொன்று ‘பாதுகாப்பான’ அணு சக்தி பயன்பாட்டிற்காகவும் என – ஒட்டுமொத்தமாக இரு வேறு நோக்கங்களைக் கொண்டதாக இருக்கும் அதே வேளையில், செர்னோபில்லில் மட்டுமல்லாது, புகுஷிமாவிலும் அதனால் ஏற்பட்ட இழப்பின் அளவு குறைவாகக் காட்டியது உலக சுகாதார நிறுவனம்.

உலக சுகாதார நிறுவனத்தினுள் எவ்வாறு தொழிலக லாபிக்கள் உள் நுழைகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காக்க இந்நிறுவனத்தை நம்ப முடியுமா ? என்ற கேள்வியையும் எழுப்புகிறது இந்த ஆவணப்படம்.


தமிழாக்கம் : நந்தன்
நன்றி : அல்ஜசீரா 

உலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் !

0
துருக்கி தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள், அதிபர் எர்டோகன் மேற்கொண்டு வரும் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர்.

பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு, குறைந்தபட்ச கூலி உயர்வு மற்றும் பணிச்சுமை குறைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே தினத்தன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு ..

உலகெங்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி மே தினம் என்றழைக்கப்படும் அகில உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நாளில் போராட்டங்கள், பேரணி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

ஹாங்காங் நகரப் பேருந்து ஓட்டுனர்களும், குடும்பப் பணிப் பெண்களும் வாரம் ஒன்றுக்கு 44 மணி நேர வேலை உத்திரவாதத்தை வலியுறுத்தி பேரணி ஒன்றை நடத்தினர். வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் குறைந்த பட்ச ஊதிய உயர்வை வலியுறுத்தி பேரணி நடத்தினர்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : மே தின வரலாறு !
♦ ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள் | கலையரசன்

இவற்றில் சில அமைதியாகவும், சில வன்முறையிலும் முடிந்தன. துருக்கி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் கலவரத் தடுப்பு போலீசார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டு, நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளனர்.

இன்று நாம் அனுபவிக்கும் சலுகைகளான எட்டு மணிநேர வேலை, ஓய்வு, விடுமுறை போன்றவை, நூறு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் விளைவுகள் என்பது பலருக்குத் தெரியாது. சிக்காகோ நகரில், இரத்தம் சிந்திப் போராடிய தொழிலாளர்கள் தங்களது உரிமைகளைப் பெற்ற நாள்தான் மே தினம்.

சிக்காக்கோ நகரில், ஹே மார்க்கெட் சதுக்கத்தில் கூடிய (May 4, 1886) அமெரிக்க தொழிலாளர்கள், எட்டு மணி நேர வேலை வேண்டுமென போராடினார்கள். அன்றைய நாட்களில், தொழிலாளர்கள் தினசரி பதினைந்து மணிநேரம் வேலை செய்வது சர்வசாதாரணமானது.

எட்டு மணிநேர வேலை செய்யும் உரிமை கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், சமாதானக் கொடியான வெள்ளைக் கொடி ஏந்திச் சென்றார்கள். அன்று நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். குண்டடிபட்ட தொழிலாளர்களின் உடலில் இருந்து வடிந்தோடிய இரத்தம், வெள்ளைக் கொடியை சிவப்பாக்கியது. அன்றிலிருந்து, செங்கொடியானது உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களின் கொடியானது. மே 1, உலகத் தொழிலாளர்களின் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.

தைவான் தலைநகர் தாய்பே-யில் ’அதிக விடுமுறை நாட்களும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்’ என்ற முழக்கத்துடன் மே தினத்தில் போராடும் தொழிலாளர்கள்

கிர்கிஸ்தானிய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் தோழர்கள் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்களை ஏந்தி முழுக்கமிட்டபடி ஊர்வலம் செல்கின்றனர்

இத்தாலியின் தூரின் நகரத் தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உணவு விநியோக வாகன ஓட்டுனர்கள். ”ஆர்டருக்கான கமிசன் என்பதை மாற்றி, குறைந்தபட்ச மணிநேர ஊதியத்தை உத்திரவாதப்படுத்து” என்ற முழக்கத்துடன் போராடியவர்களைத் தடியடி நடத்திக் கலைக்கும் போலீசு

வங்கதேச பெண் ஆயத்த ஆடை தொழிலாளர்களின் மே தினப் போராட்டம்.  “சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு கொடு, பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்திடு” என்று முழக்கமிடும் பெண்கள்

பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் போலீசின் கண்ணீர்ப் புகை குண்டு தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக கண்ணாடியும் முகமூடியும் அணிந்து போராடும் தொழிலாளர்கள். பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கொண்டுவந்துள்ள தொழிலாளருக்கெதிரான திட்டங்களைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் அமைதிப்பேரணியில் ஈடுபட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள். அரசுக்கெதிராக முழக்கமெழுப்பிய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்

சம்பள உயர்வு கேட்டு ஊர்வலம் நடத்தும் இந்தோனேசியத் தொழிலாளி வர்க்கத்தை, முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ள போலீசு

பிரெஞ்சு நாட்டு மஞ்சள் ஆடைப் போராட்டக்குழுவினர் தலைநகர் பாரீசில் உள்ள தடுப்பரண் ஒன்றை எரித்துள்ளனர்.  அந்நாட்டு அரசுக்கெதிராக கடந்த பல மாதங்களாகவே தீவிரப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கி தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள், அதிபர் எர்டோகன் மேற்கொண்டு வரும் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர்.

அல்ஜீரியத் தலைநகரில் அரசுக்கெதிரான முழுக்கங்களை எழுப்பும் தொழிலாளி வர்க்கம். ஆசிரியர்கள், சுரங்கப் பணியாளர்கள் மற்றும் ஆலைத் தொழிலாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலையின்மையை ஒழித்து மக்களை வறுமை நிலையிலிருந்து மீட்க வேண்டும் என்று போராடுகின்றனர்.

நாங்கள் அடிமைகள் அல்ல; தொழிலாளர்கள் என ஹாங்காங்-கில் பதாகைகளை ஏந்தி நிற்கும் தொழிலாளி வர்க்கம்

கட்டுமானத் துறையில் நிலவிவரும் கடும்போக்கைக் கண்டித்தும், தற்காலிக ஊழியர்களுக்கும் சமவிகித ஊதியம் வேண்டும் என்றும் சியோல் நகரத்தில் போராடும் தென்கொரிய தொழிலாளி வர்க்கம்

பிலிப்பைன்ஸ் அதிபரின் கொடும்பாவியை எரிக்கும் தொழிலாளி. குறைந்தபட்ச ஊதிய உயர்வு அளிக்கக் கோரியும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தக்க மரியாதை தரப்பட  வேண்டுமென்பதும் இத்தொழிலாளர்களின் மேதினக் கோரிக்கை

மே தினத்தன்று பாலஸ்தீனிய நகரம் காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராகப் பேரணி நடத்திப் போராடும் மக்கள். அமெரிக்காவால் அளிக்கப்பட்டு வந்த நிவாரண நிதி, டிரம்ப்பின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டால் இரத்து செய்யப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் பொருளாதார மந்தநிலைக்கு எதிர்வினையாகவும், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் நைஜீரிய தொழிலாளர்கள் நடத்திய பேரணி…

இலண்டன் மே தினப் பேரணியில்  கலந்து கொண்ட ஒரு பெண், வண்ணப் புகையை வெளிப்படுத்தி தனது வர்க்க ஒற்றுமையை பறைசாற்றுகிறார்.


தமிழாக்கம் : வரதன்
நன்றி : vox

 

 

 


இதையும் பாருங்க …

தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?

1

ங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையைக் கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத அவலநிலையில்தான் தொழிலாளி வர்க்கம் இருக்கிறது என்பதை வெளிச்சமாக்கியிருக்கிறது, மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் போராட்டம்.

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் (கோப்புப் படம்)

மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் போராட்டம் மட்டுமல்ல கடந்த ஓராண்டு காலத்தில் சென்னை – காஞ்சிபுரம் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்பேட்டைகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆண்டைத்தனத்திற்கெதிராக எண்ணற்றப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

எம்.எஸ்.ஐ., யமஹா, ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டங்கள் என நினைவுக்குத் தெரிந்த சில உதாரணங்களைச் சொல்லலாம். இவற்றுக்கு அப்பால் பல போராட்டங்கள் நம் கவனத்திற்கு வராமலேயே கடந்தும் போயிருக்கின்றன.
அந்தவகையில் ஒன்றுதான், இன்றுவரை உறுதியோடு நடத்துவரும் ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம்.

இங்கும் தொழிலாளர்கள் ”சங்கம் அமைத்தார்கள்” என்பதுதான் பஞ்சாயத்து.

ராயல் என்பீல்டு ஆடம்பர இருசக்கர வாகன உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. சென்னையில் திருவெற்றியூர், காஞ்சிபுரத்தில் ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய மூன்று யூனிட்களில் உற்பத்தி நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ராயல் என்ஃபீல்டு தொழிலாளர் போராட்டம் (கோப்புப் படம்)

ஒரகடம் மற்றும் வல்லம் யூனிட்டில் தலா 8000 பேர் பணியாற்றுகின்றனர். இதில், ஆயிரம் பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். மீதமுள்ள 7000 பேரும் காண்டிராக்ட் தொழிலாளர்கள் தொழிற் பழகுனர்கள் மற்றும் நீம் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட அத்துக்கூலிகள். ஷிப்ட் ஒன்றுக்கு 600 முதல் 800 வாகனங்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.

தொழிற்பழகுனர்களாக கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு உள்ளே நுழைந்தவர்கள் இன்றுவரையில் தொழிற்பழகுனர்களாக, பயிற்சிபெறும் தொழிலாளியாகவே உழன்று வருகின்றனர்.

தொழிற்பழகுனர்களாகிய தங்களை சட்டவிரோதமான முறையில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தியபோதும்; மிகைபணி செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட போதும்; உணவு சரியில்லை என்று புகார் கூறியதற்காகக்கூட சக தொழிலாளிகள் பழிவாங்கப்பட்ட போதும் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என பணியாற்றி வந்தவர்கள்தான் இத்தொழிலாளர்கள்.

படிக்க:
கார்ப்பரேட் காட்டாட்சியை ( GATT ) தூக்கியெறிவோம் ! – 133 வது மே தின நிகழ்வு !
♦ யமஹா – என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள் : கற்றுத்தருவதென்ன ?

”பணிநிரந்தரமாகும் வரை இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டுதான் போகவேண்டும்; இது அடிமை வாழ்க்கை என்று சொல்பவர்கள் சொல்லிக்கொள்ளட்டும். தம்மைப் பொறுத்தவரையில் இப்படி வாழ்வது ஒன்றுதான் பிழைப்புக்கான வழி.” என்பதுதான், இத்தொழிலாளர்களை ஆட்கொண்டிருந்த சிந்தனை.

ஆனால், ”ஐந்து ஆண்டுகளாக அடிமை வாழ்க்கை வாழ்ந்தும் பணி நிரந்தரம் ஆகப்போவதில்லை. நீம் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படப் போகிறோம். இருக்கும் உரிமைகளும் பறிக்கப்பட்டு சக்கைகளைப் போல ஒன்றிரண்டு ஆண்டுகளில் ஒப்பந்தம் முடிந்து தூக்கி கடாசப்படப் போகிறோம்.” என்பதை தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்தபோதுதான் நிர்வாகத்திற்கு எதிராகப் போராட ஆயத்தமாகினர், இத்தொழிலாளர்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், ”ராயல் என்பீல்டு எம்பிளாய்ஸ் யூனியன்” என்ற பெயரில் சங்கமாக அணிதிரண்ட தொழிலாளர்கள், ”நான்காண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பயிற்சி தொழிலாளர்களை நீம் திட்டத்தின் கீழ் வகை மாற்றம் செய்யக்கூடாது; ஏற்கெனவே வாக்குறுதியளித்திருந்தபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்; சம்பளம் உயர்த்தப்பட வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகத்திடம் முன்வைத்தனர்.

ராயல் என்ஃபீல்டு தொழிலாலாளர்கள் தொடங்கிய சங்கத்தின் பதிவுச் சான்றிதழ்.

தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளின் நியாயம் – அநியாயம் பற்றி பேசாமல், ”என்கிட்ட பர்மிசன் கேட்காமல், ராயல் என்பீல்டு என்ற வார்த்தையை எப்படி நீங்க யூஸ் பன்னலாம்” என்றுதான் எதிர்க்கேள்வி கேட்டது என்பீல்டு நிர்வாகம்.
சட்டப்படி பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழையும் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் மனுவாக வழங்கிய போது, ”கலெக்டரே சொன்னாலும் கேட்க மாட்டோம். சங்கத்தை அங்கீகரிக்க முடியாது” என்று அடாவடி செய்தது, நிர்வாகம். இதுதான் பிரச்சினையின் தொடக்கம்.

மூன்று வருடம் டிரெய்னியாக இருந்தவர்களை நீம் திட்டத்தின் கீழ் மாற்றப்போவதாக நோட்டிஸ் போர்டில் லிஸ்ட் ஒட்டியிருந்த நிலையில், அம்முடிவை கைவிட்டது நிர்வாகம். மாறாக, இனி புதிதாக சேர்க்கப்படும் தொழிலாளர்கள் மட்டுமே நீம் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று அறிவித்தது. இதன் வெளிப்படையான அர்த்தம், ”மூன்றாண்டுகளுக்கு மேலாக டிரெய்னியாக பணியாற்றும் தொழிலாளர்களை வெளியேற்றப் போகிறேன்” என்பதுதான்.

படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த தொழிலாளர்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போடும் விதமாக வந்து சேர்ந்தது நிர்வாகத்தின் இத்தகைய அறிவிப்பு.

இந்தப் பின்னணியில்தான், கடந்த அக்டோபர் 2018-ல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் பிரதான கோரிக்கை, ”சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும்; கூட்டுபேர உரிமையின் அடிப்படையில் சம்பள பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் உடன்பட்டு வர வேண்டும்; மிக முக்கியமாக நீம் திட்டத்தை கைவிட வேண்டும்” என்பதுதான்.

தீபாவளி பண்டிகைக் காலத்தையும் பொருட்படுத்தாமல் 60 நாள் தொடர்ந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் டிரெய்னி தொழிலாளர்கள் கணிசமாக கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தின் ‘பலனாக’, 120 டிரெய்னி தொழிலாளர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். ”அவர்களுக்கான பீரியட் முடிந்துவிட்டது” என்று புளுகியது, நிர்வாகம்.

இதே காலகட்டத்தில்தான், FTE, NEEM திட்டங்களுக்கு எதிராக எம்.எஸ்.ஐ. தொழிலாளர்களும், சங்கம் தொடங்கியதற்காக சங்க முன்னணியாளர்கள் பழிவாங்கப்பட்டதற்கு எதிராக யமஹா தொழிலாளர்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.

இந்த மூன்று ஆலைகளில் நிலவும் அசாதாரண நிலையை கணக்கில் கொண்டு பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களின் முன்முயற்சியில் பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட்டது. ”போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கக்கூடாது; போராட்டத்திற்கு முந்தைய நிலை தொடர வேண்டும்” என்ற உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார் கலெக்டர்.

பல்வேறு தொழிற்சங்க முன்னணியாளர்கள் பங்களிப்புடன் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம். (கோப்புப் படம்)

இந்த ஒப்பந்தத்தின்படி வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களை நயவஞ்சகமான முறையில் பழிவாங்கத் தொடங்கியது, என்பீல்டு நிர்வாகம். ”கேண்டீனில் சாப்பாடு சரியில்லை..” என்றுகூட சொல்லிவிட முடியாது; ”முடிந்தா இரு கஷ்டம்னா போராட்டம் நடத்திக்கோ…” என்ற பதில் எச்.ஆர். இடமிருந்து உடனே வரும்.

தொழிலாளர்கள் இதுவரை பணியாற்றி வந்த டிபார்ட்மென்ட்-ஐ மாற்றுவது; அனுபவமிக்க டெக்னீஷியன்களை ஆர்.ஓ. பிளாண்டிலும் குவாலிட்டி கண்ட்ரோல் டிபார்ட்மென்டிலும் போடுவது; ஒரகடம் யூனிட்டில் பணியாற்றும் தொழிலாளியை வல்லம் யூனிட்டுக்கு மாற்றுவது; சங்க முன்னணியாளர்களை திருவெற்றியூர் யூனிட்டுக்கும், ஓ.எம்.ஆரில் உள்ள R&D யூனிட்டுக்கும் இடமாற்றம் செய்வது என முன்னைக்காட்டிலும் பழிவாங்கும் நடவடிக்கை தீவிரமடைந்தது.

இவ்வளவு ரணகளத்துக்கு மத்தியிலும், கொலாப்ரேசன் ஃபாரம் என்ற பெயரில் நிர்வாகமே ஒரு சங்கத்தை உருவாக்கியிருக்கிறது. புதிய நபர்களை சேர்க்கும் பொழுதே கை ரேகையை உருட்டி வாங்கிக் கொண்டே உள்ளே அனுப்புகிறது.

“சங்கம் என்ற பெயரில் வெளி ஆட்கள் உள்ளே வரக்கூடாது. நிர்வாகத்துக்கு எதிராக ஸ்டிரைக் செய்யக்கூடாது. குறைகளை மட்டும் சொல்ல வேண்டும். மிக முக்கியமாக, உன்னோட சேலரியை சக தொழிலாளியிடம் கூட சொல்லக்கூடாது” என்று ‘தொழிற்சங்க வகுப்பு’ எடுத்து வருகிறது..ராயல் என்பீல்டு நிர்வாகம்.

நிர்வாகம் வேண்டுமென்றே பழிவாங்குகிறது என்பதை உணர்ந்திருந்த போதிலும், சகித்துக்கொண்டு பணியாற்றி வந்தனர், தொழிலாளர்கள். சங்கத்திற்கு புதிய தலைவர்களையும் தேர்வு செய்தனர். புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளையும் ஜெய்ப்பூர், கல்கத்தா, புது டெல்லி, மும்பை என ஆளுக்கொரு திசைக்கு டிரான்ஸ்பர் செய்வதாக மீண்டும் அடாவடி செய்தது, என்பீல்டு நிர்வாகம்.

கடந்த ஓராண்டுகளாக தொடர்ந்து வரும் நிர்வாகத்தின் இத்தகைய பழிவாங்கும் போக்கை கண்டித்து ஆலைக்குள்ளும் ஆலைக்கு வெளியே பிற ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டியும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்திவிட்டனர், இத்தொழிலாளர்கள். தாம்பரம், திருவெற்றியூர் பகுதிகளில் உள்ள ராயல் என்பீல்டு ஷோரூம் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றனர். இவ்வளவுக்குப் பிறகும் நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகள் மட்டும் நின்றபாடில்லை.

படிக்க:
கல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் !
♦ தொழிலாளி வர்க்க அரசியல் எது ?

இதுவரை 28 பேர் பணியிடமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். 3 மாதம் டெபுடேசன், டிரைய்னிங் என்ற பெயரில் வடமாநிலங்களுக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கின்றனர். 40 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். பலருக்கு பல்வேறு காரணங்களுக்காக மெமோ கொடுக்கப்பட்டு அவர்கள் மீது உள்விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சகட்டமாக, நாலரை ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்பட்டதற்கான ஆர்டர் வரும் என் காத்துக்கிடந்த டிரெய்னி தொழிலாளர்கள் 60 பேர் டெர்மினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஓராண்டு காலத்தில் ராயல் என்பீல்டு தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் பழிவாங்கப்பட்டார்கள் என்ற கதையின் சுருக்கம்தான் இது. நாள், நேர வாரியான குறிப்பான சம்பவங்கள் இன்னும் பல இருக்கின்றன. ராயல் என்பீல்டு என்றில்லை, எம்.எஸ்.ஐ., மற்றும் யமாஹாவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதியும் ஏறத்தாழ இதுவேதான்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விசயம், நிர்வாகங்களால் பழிவாங்கப்பட்ட இத்தொழிலாளர்கள் அனைவரின் வயதும் 25 முதல் 30-க்குள்தான். இவற்றுள் வெகு சிலருக்கே திருமணமாகியிருக்கிறது. சிலருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுவில் பலர் பணி நிரந்தரத்திற்காக திருமணத்தை தள்ளிப் போட்டிருப்பவர்கள். இன்னும் சிலர் பணிநிரந்தர உத்தரவோடு தம் காதல் கனவும் கைகூடும் என்று காத்திருப்பவர்கள். இவ்விளம் தொழிலாளர்களின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டதோடு, அவர்களை வீதியிலும் வீசியெறிந்திருக்கிறது நிர்வாகம்.

நிர்வாகங்கள் வேறு வேறு என்ற போதிலும், தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்ட விதமும் பழிவாங்கப்பட்டதற்கான காரணமும் ஏறத்தாழ ஒன்றுதான். ”தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்றும் நீம் திட்டத்தை கைவிட வேண்டும்; சங்கம் அமைத்ததற்காக தொழிலாளர்களை பழிவாங்கக்கூடாது” என்பதுதானே தொழிலாளர்களின் பொதுக்கோரிக்கை. ஆனால், இவற்றுக்கெதிரான போராட்டங்கள் தனித்தனியாகத்தானே நடைபெற்று வந்திருக்கின்றன.

எம்.எஸ்.ஐ.யும், யமாஹாவும், ராயல் என்ஃபீல்டும் ஒரகடம் சிப்காட் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள ஆலைகள். எம்.எஸ்.ஐ. -இல் ஒரு சங்கம், யமாஹாவில் மற்றொரு சங்கம், என்ஃபீல்டில் வேறொரு சங்கம். எம்.எஸ்.ஐ.-ல் போராட்டம் நடைபெறும்போது யமாஹா தொழிலாளி கடந்து போவதும்; யமாஹாவில் நடைபெறும் போராட்டத்தை என்பீல்டு தொழிலாளி கடந்து போவதும்தானே நடந்திருக்கிறது. மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் போராட்டத்தையும் இவ்வாறு கடந்து செல்லப்போகிறோமா?

தொழிற்சங்க சட்டங்கள் படிப்படியாகத் திருத்தப்பட்டு இதுவரை தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற பல உரிமைகள் ஒவ்வொன்றும் பறிக்கப்பட்டு வரும் இந்தச் சூழலில்; FTE, NEEM என்ற பெயரில் எவ்வித உரிமைகளுமற்ற அத்துக்கூலிகளாய் தொழிலாளர்கள் மாற்றப்பட்டுவரும் அபாயம் சூழ்ந்துள்ள இந்நிலையில் இவற்றுக்கெதிரான போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டாமா?

சாதி, மதம் கடந்து ஓர் ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்கள் என்ற அளவில் சங்கமாக அணிதிரள்வதால் மட்டுமல்ல; ஆலை கடந்து சங்க வேறுபாடுகள் கடந்து பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தின் ஓர் அங்கமாக தொழிற்சங்கக் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையல்லவா இந்த நிலைமைகள் நமக்கு உணர்த்துகின்றன.

– இளங்கதிர்

நூல் அறிமுகம் : கச்சத்தீவும் இந்திய மீனவரும் ..

பாக் நீரிணை, மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா பகுதிகளில் எல்லைகளை வகுப்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1974-லும் 1976-லும் கையெழுத்தான இந்தியா – இலங்கை கடல் எல்லை ஒப்பந்தங்கள் பாக் நீரிணைப் பகுதியில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தன. எல்லை வகுத்தபின் மீன்வளம் அதிகமிருக்கும் பகுதிகள், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்தன. இதை முன்னிட்டுத் தமிழக மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் தொடர்ந்து மோதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. இப்படி மோதல் நடக்கும் போதெல்லாம் கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென்ற குரல் தமிழகத்தில் எழுகிறது

இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன? கட்டாந்தரையான சிறிய தீவான கச்சத்தீவு ஏன் தமிழகத்தில் ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருக்கிறது? இந்திய – இலங்கை உறவுகளில் சிக்கல் ஏற்படாமல் இந்தியாவின் நலன்களை, குறிப்பாகத் தமிழக மீனவர்களின் நலன்களை உறுதி செய்யவும் பாதுகாக்கவும் முடியுமா? பாக் நீரிணைப் பகுதியைச் சர்ச்சைக்குரிய பிரதேசமாகப் பார்க்காமல், அந்நீரிணையின் இரு புறமும் வசிக்கும் மீனவர்களின் பொதுச் சொத்தாகப் பார்க்க முடியாதா? இந்தப் பகுதியில் மீன் வளம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் கூட்டு முயற்சியின் மூலம் அதை மேம்படுத்த முடியாதா? இந்தக் கேள்விகளுக்கு விடைதேட முயல்கிறது இந்தப் புத்தகம். (நூலின் முன்னுரையிலிருந்து)

பாக் நீரிணையில் வசிக்கும் மீனவர்களின் பிரச்சினைகளில் இருக்கும் சிக்கலைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மாறிவரும் இந்திய – இலங்கை உறவுகளின் பின்னணியில் மீன்பிடித் தொழிலைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் அடுத்தடுத்து வந்த மத்திய, மாநில அரசுகள் மீன் பிடித்தல் தொடர்பாக உருவாக்கிய கொள்கைகள் மீன்பிடித் தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மீன் பிடித்தல் என்பது உள்ளூர்ச் சந்தையை மட்டுமே மையப்படுத்தியதாக இருந்தது. சென்னை மாகாணம், கொச்சி, திருவாங்கூர் சமஸ்தானங்களிலிருந்து கருவாடு சிறிய அளவில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

1950-களில் உறைய வைக்கப்பட்ட இறால் மீன் ஏற்றுமதியாக ஆரம்பித்தது. அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இறால் மீனுக்கான கிராக்கி பெருமளவு அதிகரித்ததும் அரசின் கொள்கையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தேசத்தின் இறக்குமதியைச் சமாளிக்கும் அளவுக்கு அந்நியச் செலாவணி இருப்பு கிடையாது. இது தேசத்தின் கொள்கை வகுப்பாளர்களுக்குப் பெரும் பிரச்சினையாகவே இருந்தது. இந்தத் தருணத்தில்தான் இறால் மீனுக்கு வெளிநாட்டில் இருக்கும் மவுசு அரசின் கண்ணில் பட்டது. அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது அரசு. “கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை, குறைவான உற்பத்தித்திறனும் அதனால் ஏற்படும் ஏழ்மையும்தான் பாரம்பரிய மீனவர்களின் பிரச்சினை என்று புரிந்து கொண்டனர். இந்த ஏழ்மைக்கு உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரிப்பது என்ற வியூகத்தை முன்வைத்தனர். அதாவது பழைய, பாரம்பரிய வள்ளங்களிலிருந்து பிரிட்டன், நார்வே போன்ற தொழில்மயமான நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரப் படகுகளுக்கு மாறுவதுதான் அவர்கள் முன்வைத்த வியூகத்தின் அடிப்படை” என்று குறிப்பிடுகிறார் மீன்வள நிபுணரான ஜான் குரியன். (நூலிலிருந்து பக் 34-35)

பாக் நீரிணையின் இருபகுதியிலும் வசிக்கும் மீனவர்கள் வரலாறு, மொழி, பண்பாடு எனப் பல வகையிலும் பிணைக்கப்பட்டவர்கள். கடந்த காலத்தில் அவர்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்துவந்தனர். 1974இல் கடல் எல்லை வகுக்கப்பட்டுவிட்டாலும் எல்லையைத் தாண்டி மீன் பிடிப்பதென்பது பொதுவாக நடந்துகொண்டுதான் இருந்தது. இலங்கையில் இனப் போராட்டம் துவங்கியபோது கடும் துயரங்களை அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். தமிழ்நாடு அவர்களுக்குப் புகலிடமாக அமைந்தது. கடந்த காலத்தில் பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைத்துச் செயல்பட்டதை மனதில் வைத்துப் பார்த்தால், இப்போதும் இரு தரப்பும் தங்களுக்கிடையில் இருக்கும் புரிதலை அதிகரிக்க முடியும். பிரச்சினைகளைக் குறைக்க முடியும். இப்போது ஒரு புதுமையான அணுகுமுறை தேவை. பிராந்திய ஒத்துழைப்பு என்ற விரிந்த பார்வையில் பிரச்சினையைப் பார்க்க வேண்டும். தெற்காசியாவில் மிகப் பெரிய நாடு என்ற வகையில் இந்தியாதான் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தெற்காசியப் பார்வையில் தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.

படிக்க:
மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம் ! அறநிலையத்துறை ஆணையருக்கு ம.க.இ.க. கண்டனம் !
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !

கேரளா ஸ்வதந்திர மலையாள தொழிலாளி ஃபெடரேஷ னுக்கும் கேரளா ட்ரால்நெட் போட் ஆபரேட்டர்ஸ் அசோசி யேஷனுக்கும் இடையில் ட்ராலர்களைப் பயன்படுத்துவது குறித்து ஒரு வழக்கு நடந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி, “ஒரு வருடத்தில் பிடிக்கப்பட்ட மீன்களின் அளவை மட்டும் வைத்துப் பொது நலனை அளவிட முடியாது. பாரம்பரிய மீனவர்களின் பொருளாதார நலனைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த வாழ்வாதாரமும் இல்லாமல் போகக்கூடும். அப்படி நடக்காமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார். (நூலிலிருந்து பக்.131-132)

நூல்:கச்சத்தீவும் இந்திய மீனவரும்
ஆசிரியர்கள்: வி. சூரியநாராயன், கே. முரளிதரன்

வெளியீடு: சென்டர் ஃபார் ஏசியா ஸ்டடீஸ் மற்றும் காலச்சுவடு,
669, கே.பி. சாலை, நாகர்கோவில் – 629001.
தொலைபேசி: 91-4652 – 278525.
மின்னஞ்சல் : publications@kalachuvadu

பக்கங்கள்: 148
விலை: ரூ 175.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: commonfolks | noolulagam

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகத்தின் புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தைக் குலுக்கிய மே தினம் ! | செய்தி – படங்கள் !!

“நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!

கூலி அடிமை முறையை தீவீரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை (GATT) தூக்கியெறிவோம்!” என்கிற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பேரணி – ஆர்ப்பாட்டம் – பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அவற்றின் செய்தி மற்றும் புகைப்படத் தொகுப்பு…

*****

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 01.05.2019 அன்று மே நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் துவங்கி, தபால் நிலையம் வரையில் மே நாள் பேரணி நடத்தப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் விகேந்தர் தலைமையேற்றார். பொதுக்கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. மணிபாலன், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி கும்முடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் தோழர் J. அருள், கும்முடிப்பூண்டி செந்தமிழ் சோலை அமைப்பை சேர்ந்த கவிஞர் சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளர் தோழர் நெடுஞ்செழியன், மணலி தொழிற்சங்க கூட்டமைப்பின் கெளரவ தலைவர் தோழர் செங்கை S. தாமஸ், மற்றும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கும்முடிப்பூண்டி நாகராஜ கண்டிகை கிராம மக்கள் ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி சுதேஷ்குமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் ஆகியோர் மே நாள் எழுச்சி உரையாற்றினர்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் தோழர் சரவணன் நன்றியுரைக்கு பின் இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.

***

புதுச்சேரியில்…

ட்டு மணி நேர வேலை, 8 மணி நேர புத்துயிர்ப்பு, 8 மணி நேர உறக்கம் என மனித வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தது மே நாள். 18-ம் நூற்றாண்டின் கொடிய அடக்குமுறை வரலாற்றைத் திருப்பிப் போட்டது மே நாள். அந்த மே நாள் அரசியலின் அவசியத்தை யோசிக்கவிடாமல் பாராளுமன்றத் தேர்தல் களேபரங்களில் மக்களை மூழ்கவைத்துக் கொண்டிருக்கின்றன ஓட்டுக் கட்சிகள்.

வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஓட்டுப் பொறுக்கி, பதவியைக் கைப்பற்ற நாயாய் அலைகின்றனர். வாக்குறுதிகள் பொய் என்பது ஒருபுறம் இருந்தாலும், எந்த வாக்குறுதிகளும் மக்களது பிரச்சினைகளைப் பேசுவதாக இல்லை. மக்களுக்கு சம்மந்தமே இல்லாத வளர்ச்சியைப் பற்றியும், 6,000 தருகிறேன், 72,000 தருகிறேன் என மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதாகவும் தான் வாக்குறுதிகள் உள்ளன.

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசினாலே அரசின் அடக்குமுறைகள் பாய்கிறது. முதலாளித்துவம் தோன்றிய 18-ம் நூற்றாண்டில் இருந்த அதே நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன தொழிலாளர் மீதான அடக்குமுறைகள். ஆனால், அன்று தொழிற்சங்க அமைப்புக்களோ, சட்டங்களோ இல்லை. ஆனால் இன்றோ தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்து பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருகிறது தொழிலாளி வர்க்கம்.

தொழிலாளர்களுக்கென இருக்கின்ற 44 சட்டங்கள் இன்று காலாவதியாகி விட்டன. வேலைவாய்ப்பை உருவாக்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் கூறு போட்டு தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டன. லாபமீட்டும் நிறுவனங்களையும் ஒழிக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. புதிதாய் பணியமர்த்தப்படும் எந்த ஒரு துறையிலும், நிரந்தர வேலை என்பது கிடையாது.

ஏற்கெனவே காண்டிராக்ட் முறையில் 480 நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால் வேலை நிரந்தரம் என இருந்தது. நடைமுறையில் அது இல்லாமல் ஒழிக்கப்பட்டு விட்டது. தற்போது NEEM, FTE உள்ளிட்ட நவீன உழைப்புச் சுரண்டல் முறைகளால் தொடர்ச்சியாக 480 நாள் வேலை என்பது குதிரைக்கொம்பு தான்! ஒரு தொழிலாளி வேலைக்கு சேரும்போதே வேலையை விட்டு நீக்கும் தேதியை தீர்மானித்து பணிக்கு அமர்த்துவதுதான் குறிப்பிட்ட காலத்திற்கான வேலை வாய்ப்பு (FTE) எனும் கொத்தடிமை திட்டம்.

நீம் (NEEM) என்ற பயிற்சித்திட்டம் மூலம் இளம் தொழிலாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பயிற்சி கொடுத்து திறனை வளர்ப்பதாகச் சொல்லி, நேரடி உற்பத்தியில், நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை இடங்களில் திணிக்கின்றன. இத்தொழிலாளர்கள் கடைசிவரை பயிற்சியாளர்களாகவே இருக்க முடியும். ஒருபோதும் வேலை நிரந்தரம் கிடையாது. நேரடி உற்பத்தியில் ஈடுபட்டாலும், பயிற்சியாளர் என்று சொல்லப்படுவதால் சம்பளப் பட்டுவாடா சட்டத்தின் மூலம் கோரும் நியாயமான சம்பளம், போனஸ், பணிக்கொடை போன்ற எதையும் கோர முடியாது. தொழிலாளி என்ற வரையறையில் வராததால், சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமையும் கிடையாது. இவற்றின் மூலம் நிரந்தர வேலை சட்டப் பூர்வமாகவே ஒழிக்கப்பட்டு விட்டது.

நிரந்தர தொழிலாளர்கள் என்று சொல்லப்படுபவர்களை, இயந்திரத்தோடு இயந்திரமாய் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கட்டிப் போடுகின்றனர் முதலாளிகள். அரை நொடி நகர்ந்தாலும், ஒலி எழுப்பும் கருவிகளை வைத்துக் கண்காணிக்கின்றனர். சிறுநீர் போன்ற இயற்கை உபாதைகளுக்கு அட்டவணை போடுகின்றனர். விடுப்பு எடுத்தால் கக்கூஸ் கழுவ வைப்பது, கழுத்தில் போர்டு மாட்டி விடுவது என மனரீதியிலான ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். இவ்வளவு கடும் பணிச் சூழலில் நாளொன்றுக்கு 12 முதல் 16 மணிநேரம்  வேலை செய்தாலும், அற்பக் கூலிதான் பெறுகின்றனர்.

மொத்தத்தில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்குமுறைகள் சட்டப்படியே நிலை நாட்டப்பட்டு உரிமை கோரும் எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஏதோவொரு மூலையில் ஒரு மணிநேரத்திற்கு 55 தொழிலாளர்கள் முதலாளிகளின் லாபவெறிக்கு பலியாகின்றனர் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆய்வறிக்கை. மறுபுறம், அம்பானி, அதானி, மிட்டல், ரூயா உள்ளிட்ட 9 முதலாளிகளின் சொத்துமதிப்பு மக்களில் 63 கோடிபேரின் சொத்து மதிப்பிற்குச் சமம் என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.

இந்த ஏற்றத்தாழ்வான சூழலைப் புரிந்து கொள்ளாமல் மேதினத்தை சடங்காகக் கொண்டாடுவதில் பயனில்லை. ஆலையில் ஒரு தொழிலாளி பாதிக்கப்பட்டால் அதற்கான போராட்டம் தொழிற்பேட்டை, அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புக்கள் போன்ற எல்லைகளைத் தாண்டி பல்வேறு ஆலைத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் என இணைந்து போராட வேண்டும். ஒரே ஒரு தொழிலாளிக்குப் பிரச்சினை என்றால் கூட அனைத்து தொழிற்சாலைத் தொழிலாளர்களும் ஒன்று சேர்வார்கள், போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்ற அச்சத்தை முதலாளிகளுக்கு உருவாக்க வேண்டும். அதை மேதினத் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி அவர் தம் வழியில் போராட வேண்டும்.

மேற்படி நோக்கத்தை தொழிலாளர் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக மே தின பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நகரின் முக்கிய சிக்னலான ராஜா தியேட்டர் சிக்னலில் பேரணியும், பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

பேரணியையும், ஆர்ப்பாட்டத்தையும் புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர். சரவணன் தலைமை தாங்கினார்.

பேரணியில் மே நாள் தியாகிகளைப் போற்றியும், தொழிலாளர் மீதான அடக்குமுறைகள், சுரண்டல்களை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கட்டுப்பாடோடும், விடாத முழக்கங்களையும் நின்று பார்த்துச் சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், NEEM மற்றும் FTE பற்றியும், அந்த திட்டங்கள் எவ்வாறு உரிமைகளற்ற கொத்தடிமையாக மாற்றுகிறது என்பதை பல்வேறு உதாரணங்களுடனும் விளக்கினர். மேதினத் தியாகிகளால் கிடைத்த உரிமைகளை நிலைநாட்ட அந்தத் தியாகிகளை நெஞ்சிலேந்திப் போராட வேண்டும் என விளக்கினர்.

திருவண்ணாமலை, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தோழர். கண்ணன், “உரிமைகள் பெறுவதற்கு நீதிமன்றத்தை மட்டும் நாடுவதில் ஒரு பலனும் இல்லை. ஏனெனில், நீதிபதிகள் காவி சிந்தனையோடும், கார்ப்பரேட்டுக்களின் அடியாளாகவும் மாறி தீர்ப்புக்களை வழங்குகின்றனர். எங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடக்கிறதோ அங்கு மட்டுமே ஓரளவிற்கு மக்கள் சார்பாக தீர்ப்புக்களை வழங்குகின்றனர். எனவே, உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள ஒரேவழி போராடுவது மட்டுமே” என விளக்கினார்.

அடுத்ததாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர், தோழர். மணியரசு, தொழிலாளர்களது உரிமைகள் பறிக்கப்படுவது போல், பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் மாணவர்கள் உரிமைகள் பறிக்கப்படுவது பற்றி விரிவாக விளக்கினார். கல்வியில் இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழிப்பதன் மூலம், ஏழை, எளிய மாணவர்கள், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார். எனவே, மேதினத் தியாகிகளின் வழியில் தொழிலாளர்களுடன் இணைந்து மாணவர்களும் போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என விளக்கினார்.

இறுதியாக உரையாற்றிய புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் தோழர். மகேந்திரன், மே தினம் என்பது, உரிமைகள் பெற்ற தினம் என்றும், அந்த நாளை போதை விருந்து என கொண்டாடத்தான் என்று முதலாளிகள் கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால், இன்று தொழிலாளர்கள் மட்டுமல்ல, தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாக்க விவசாயிகளும், ஒக்கி புயலில் சிக்கி மீனவர்களும், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போராடுகின்றனர் என்பதை பல்வேறு உள்ளூர் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டு விளக்கினார்.

நிகழ்ச்சியில் நானே உலகம், கம்யூனிசம் வெல்லும் ஆகிய புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், விடாத முழக்கங்களுடன் நகர்ந்த பேரணியும், அதைத் தொடர்ந்த ஆர்ப்பாட்டமும் உணர்வுப்பூர்வமாக வெயிலில் அமர்ந்து கலந்து கொண்ட தோழர்களது அர்ப்பணிப்பும் மக்கள் மத்தியில் நிகழ்ச்சியை கவனிக்க வைத்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி, தொடர்புக்கு: 95977 89801. 

*****

வேலூரில்…

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்ப்பாக 133-வது மே நாள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் 01.05.2019 அன்று மாலை நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில், வேலூர் மண்டி வீதியலிருந்து மாலை 5.00 மணிக்குத் தொடங்கிய பேரணியில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாலை 6.00 மணிக்கு அண்ணா கலையரங்கம் அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின்  மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் சங்கம் சார்பில் அடுக்கம்பாறை, மீன் மார்க்கெட், அண்ணா கலையரங்கம் கிளைகளிலிருந்தும் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின்  மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சரவணன், வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் சங்கம், அடுக்கம்பாறை கிளை உறுப்பினர் தோழர் செல்வி, வழக்கறிஞர் பாலு மற்றும்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பொன்.சேகர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர்.

பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசு நடைமுறைப் படுத்திவரும் தேசிய வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பணி (NEEM-National Employability Enhancement Mission), ஒப்பந்த கால வேலை வாய்ப்பு (FTE – Fixed Term Employment) போன்ற தொழிலாளர் விரோத திட்டங்களை ஒழித்துக் கட்டவும், கார்ப்பரேட் கம்பெனிகளின் காட்டாட்சிக்கு முடிவு கட்டவும் தொழிலாளர்கள் ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்விதமாக அமைந்தது வேலூர் பேரணி மற்றும் அர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்

*****

திருச்சியில்…

லகத் தொழிலாளி வர்க்கம் தனக்கான விடியலைப் போராடி நிறுவிய மே தினமான 01.05.2019 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கங்களான பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம், திருச்சி அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம், திருச்சி சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்புச் சங்கம் ஆகிய சங்கங்களின்

நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளான ம.க.இ.க, பு.மா.இ.மு உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்ற மே தினப் பேரணி மாலை 5.30 மணியளவில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து புறப்பட்டது. பேரணியை பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் உத்திராபதி தொடங்கி வைத்தார்.

பேரணியின் முன்பு சிறுவர்கள் – தோழர்கள் என உற்சாக நடனத்துடன் பறை இசை இசைத்தனர். தேர்தல் கட்டுப்பாடு என்ற மோன நிலையை களைத்தது தோழர்கள் பறை இசை!

ஆயிரக்கணக்கான மக்கள் குவியும் பிரதான சாலையின் மத்தியில், நமது மே தின ஊர்வலத்தையும் பெண்கள், குழந்தைகள் மற்றும் தோழர்கள் உயர்த்திப் பிடித்த செங்கொடி பதாகைகளைப் பார்த்து திருச்சி நகர மக்கள் பரவசப்பட்டனர்.

தோழர்களின் விடாப்பிடியான முயற்சியின் விளைவாக காவல்துறை மக்கள் நெருக்கம் மிகுந்த பிரதான சாலையில் மேதின ஊர்வலம் நடத்த அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

மே – தின கோரிக்கைகளான,

  • நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!
  • கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்!
  • இட்லர் முசோலினி வாரிசுகளாகிய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – சங் பரிவார் கும்பலை வீழ்த்த தொழிலாளி வர்க்கமாய் ஒன்று திரள்வோம்!

என எழுச்சியாக முழங்கிய பேரணி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது. அங்கே 6.30 மணியளவில் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் உதவித்தலைவர் தோழர் சுந்தரராசு, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் மணலிதாசன், அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலாளர் தோழர்.பழனிச்சாமி, பு.மா.இ.மு. திருச்சி. அமைப்பாளர், தோழர் பிரித்திவ், பு.மா.இ.மு. கரூர், பொருளாளர் தோழர்.சிவா, மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன், ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலாளர் தோழர்.ஜீவா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சிறப்புரையாற்றிய ம.க.இ.க மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள் “ஒரு சதவீதம் முதலாளிகளுக்கு சொர்க்கத்தையும் 99 சதவீதம் உழைக்கும் மக்களுக்கு நரகத்தையும் கட்டியமைக்கும் கார்ப்பரேட் ஜனநாயகத்தை வீழ்த்தாமல் விடிவில்லை!

மே தினம் என்றாலே மண்டையை பிளந்து, இரத்தம் சிந்தி உயிரை கொடுத்து தொழிலாளிவர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் நினைவுக்கு வரவேண்டும். அப்படிபட்ட தியாகத்தின் வரலாறே மேதின வரலாறு!

ஆனால் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதிய தாராளமயக் கொள்கைகளை பல கட்டமாக திணித்ததன் விளைவாக தொழிலாளி வர்க்கத்தை நடைமுறையில் பாதுகாத்த 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் காலாவதியாகிவிட்டன. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதெல்லாம் கானல் நீராகிவிட்டது. அரசு வேலை என்பதே ஒழிக்கப்பட்டுவிட்டது. நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM – FTE திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலை என்ற, அடிப்படை உரிமைகள் அற்ற கொத்தடிமைச் சட்டம் நடைமுறையாக்கப்படுகிறது என்றார்.

சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் மெட்ரோ இரயில் தொழிலாளர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சட்டவிரோதம். தொழிலாளர் நலனுக்காக 7 பேர் இணைந்து சங்கம் வைக்கலாம் என இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் தொழிற்சங்கம் அமைத்தது குற்றமெனகூறி 8 பணியாளர்களின் வேலையை பறித்த கொடூரத்தை கண்டித்துத்தான் மெட்ரோ இரயில்வே தொழிலாளர்கள் போராடிவருகின்றனர்.

கார்ப்பரேட் நலனில் காட்டும் அக்கறை சாதாரண குடிமக்கள் மீது இந்த அரசுகள் காட்டுவதில்லை! தொழிலாளர்கள்-வியாபாரிகள் மாணவர்கள் – விவசாயிகள் என எந்த பிரிவு மக்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை! தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பை சுரண்டி சுருட்டிய பணம் , முதலாளிகளின் – கார்ப்பரேட் கும்பலின் கையில் மூலதனமாக குவிகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அம்பானி, அதானி, மிட்டல் ரூயா உள்ளிட்ட 9 முதலாளிகளின் சொத்து 63 கோடி மக்களின் சொத்துமதிப்பிற்கு சமமாக இருக்கிறதென்றால் ஒரு சதவீதம் முதலாளிகளுக்கு சொர்க்கத்தையும் 99 சதவீதம் உழைக்கும் மக்களுக்கு நரகத்தையும் கட்டியமைக்கும் இந்த கார்ப்பரேட் ஜனநாயகத்தையும் அதன் அடிவருடி அரசுகளையும் வீழ்த்தாமல் மக்களுக்கு விடிவில்லை ! ஆகவே நாம் இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையில் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது! கம்யூனிச ஆசான்கள் காட்டிய திசையில் சிந்திப்போம்! மக்கள் அதிகாரத்தைக் கட்டியமைப்போம்! மேதினத் தியாகிகளின் லட்சியத்தை நினைவாக்குவோம்” என தனது சிறப்புரையில் கூறி முடித்தார்.

திருச்சி ம.க.இ.க தோழர்கள் மற்றும் பெண் தோழர்கள் இணைந்து புரட்சிகர பாடல்களை பாடினர். இறுதியாக தஞ்சை ம.க.இ.க செயலர் தோழர் இராவணன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி, தொடர்புக்கு : 89030 42388.

*****

கோவையில்…

கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக மே தினத்தன்று KNG புதூர் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய பேரணியை ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்டிரிஸ் சங்கக் கிளைத் தலைவர் தோழர் எம்.கோபிநாத் அவர்கள் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் துணைத் தலைவர், தோழர் பழனிச்சாமி முழக்கமிட்டு பேரணியைத் துவக்கி வைத்தார். இந்த பேரணி வெளியில் இருந்த மக்களை கவரும்படி இருந்தது.

இந்தப் பேரணியில் தொழிலாளர்கள் மற்றும் ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் உள்பட சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். பேரணியை கணுவாய் நோக்கி சென்ற சாலையில் பொதுமக்கள் இருபுறமும் நின்று கவனித்தனர். மக்களிடம் மே நாள் பிரசுரம்  விநியோகம் செய்யப்பட்டது.

சுமார் 5.30 மணியளவில்  கோவை மாவட்ட துணைத்தலைவர்  தோழர்  எம்.தேவராஜ்  அவர்கள் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது அதில் மே நாள் என்பது யாருக்கானது? இது தற்போதைக்கு எந்தவகையில் அவசியம்? எங்கு முதலில் போராட்டம் துவங்கியது என்பதைப்பற்றி விளக்கி பேசினார்.

மக்கள் கலை இலக்கிய கழகதின் சார்பில் நன் உலகம் பாடலுடன் நிகழ்ச்சி  துவங்கியது. முதலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தோழர்.  சுரேஷ் அவர்கள் இந்த அரசு முறையாக தேர்தல் நடத்துவதற்குக்கூட வக்கற்ற வகையில் இருப்பதையும் கல்வியில் பார்ப்பனியத்தை திணிப்பதையும்  அம்பலப்படுத்தும் விதமாக பேசினார்.

மக்கள் கலை இலக்கிய கழகதின்  சார்பில்  தோழர் சித்தார்த்தன்  அவர்கள்  கோவை மாவட்ட  கண்காணிப்பாளர் SP. பாண்டியராஜனையும் , டாஸ்மாக்  கடைகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், புரட்சிகர அமைப்புகளில் பொதுமக்கள்  தங்களை இணைத்து  கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி பேசினார்.

முருகன் மில் கிளை செயலாளர் தோழர் ஜெகநாதன் அவர்கள் மில் தொழிலாளியின் அவலநிலைமையும் , ஆணாதிக்க மனநிலையில் பெண்கள் வீட்டில் படும் பாட்டையும், ஆலையில் அவர்களின் உழைப்பினை ஒட்ட சுரண்டி ஏமாற்றப் படுவதை விவரித்தார். கூட்டத்தில் இருப்பவர்களை கலகலப்பாக இருக்கும் வகையில் பேசி  ஒட்டு போடுவதால் பிரச்சனை  தீராது போராட வேண்டும் என்று  தனது உரையை  நிறைவுசெய்தார்.

மாவட்ட பொருளாளர் தோழர் சரவணக்குமார் தனது உரையில் பு.ஜ.தொ.மு சங்கம்  துவங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள், ஆனால்  GST, பணமதிப்பு இழப்பு  ஆகியவற்றால் லட்சக்கணக்கானோர்  வேலை இழந்தனர் அதை  கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள், அனைத்திற்கும் அரசுதான் காரணம்  மற்றும்  தொழிலாளர்கள் நுகர்வு வெறியால் போர்குணம் மழுங்கடிக்கப்பட்டு இருப்பதை  அம்பலப்படுத்தியும், காட் ஒப்பந்தம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் அமைந்துள்ளதையும் விளக்கினார்.

இறுதியாக மாவட்ட பொறுப்பாளர் தோழர் லோகநாதன் அவர்கள் மே தினம்  உழைப்பாளர் தினம் என்றும், அது  காலப்போக்கில்  தொழிலாளர் தினமாக சுறுக்கப்பட்டுள்ளது என்பதையும். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு மக்கள் போராட்டங்களே என்பதை விளக்கும் விதமாக பண்ணிமடை பகுதி 6 வயது சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் மக்கள் போராட்டம்தான்  குற்றவாளியை   கண்டுபிடிக்க வைத்துள்ளது என்பதை கூறினார். மக்கள் போராட தயங்குவதற்கு அச்சம் காரணமாய் இருக்கிறது. அச்சமின்றி போராடவில்லையெனில் மனிதகுலம் உயிர் வாழ முடியாது. போராட தயங்கும் எந்த உயிரினமும்  உயிர் வாழ   முடியாது என டார்வின் கூறியதை நினைவு கூர்ந்தார்.

காவல் துறையும் அரசும் மக்கலுக்கானது அல்ல குற்றவாளிகளின் பாதுகாவலன் என்றும்,  இந்த அரசு நீடிக்கும் வரை பிரச்சனைகள் தீராது. கோவில்களில் வழிபாடு, பூஜைகள் செய்து நமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளமுடியாது. தோற்று  போன  இந்த கட்டமைப்பை வைத்துக்கொண்டு தேர்தல் பாதையின் மூலம் நமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியாது.

புதிய  ஜனநாயகத் தொழிலாளர்  முன்னணி போல  ஜனநாயகப்பூர்வமான, தவறு  செய்தால் உடனே திருப்பி அழைக்கிற அமைப்பு முறைகொண்ட  புதியஜனநாயகப்  புரட்சிதான் தீர்வு. எனவே சாதி – மத பேதங்களை  களைந்து வர்க்கமாய் ஒன்றிணைந்து மக்கள் வரவேண்டும்  என பேசி முடித்தார்.

பிரான்ஸ் நிறுவனம் சூயஸ்-க்கு  சிறுவாணித் தண்ணீர் தாரை வார்க்கப்பட்டது    குறித்து ம.க.இ.க நாடகம் நடத்தப்பட்ட பிறகு SRI கிளைத்தலைவர்  தோழர் கோபிநாத் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.

பீரங்கிக் குண்டுவீச்சு அவனைக் கவர்ந்து இழுத்தது ! உற்சாகமூட்டியது !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 10

ன்றைய தினம் வெண்பனியில் நூற்றைம்பது அடிகள் கூட முன்னேற அவனுக்கு வாய்க்கவில்லை. மாலைக் கருக்கல் அவனைத் தடை செய்து விட்டது. மறுபடி ஒரு பழைய அடிக் கட்டையைத் தேர்ந்தெடுத்து அதைச் சுற்றிலும் சுள்ளிகளைக் குவித்து, துப்பாக்கித் தோட்டாவால் செய்த அருமை சிகரெட் கொழுவியை எடுத்து பற்ற வைக்க முயன்றான். அது எரியவில்லை. இன்னொரு தரம் முயன்றான். அவன் உடல் சில்லிற்றுப் போயிற்று. கொழுவியில் பெட்ரோல் தீர்ந்துபோய் விட்டது. அதைக் குலுக்கினான். எஞ்சிய பெட்ரோல் ஆவியை வெளிக் கொணர்வதற்காக ஊதினான். ஒன்றும் பயனில்லை. இருட்டிவிட்டது. பொருத்து சக்கரத்துக்கு அடியிலிருந்து சிதறிய நெருப்புப் பொறிகள் சிறு மின்னல்கள் போல, அவன் முகத்தை சூழ்ந்திருந்த இருளை கண நேரத்துக்கு விலக்கின. சிக்கிமுக்கிக் கல் தேய்ந்து விட்டது, நெருப்பு மூட்டமுடியவில்லை.

தட்டித் தடவித் தவழ்ந்து அடர்த்தியான இளம்பைன் மரக்கன்றின் அடியை அடைந்து, நூல் உருண்டைப்போல சுருண்டு, மோவாயை முழங்கால்களில் புதைத்துக் கொண்டு முட்டுகளைக் கைகளால் அறுகக் கட்டியவாறு, காட்டின் சந்தடிகளைக் கேட்ட படியே முடங்க வேண்டியதாயிற்று. அந்த இரவில் புகலற்ற சோர்வு அலெக்ஸேயை ஒருகால் ஆட்கொண்டிருக்கும். ஆனால், உறங்கிய காட்டில் பீரங்கி வெடிகளின் ஓசைகள் முன்னைவிடத் துலக்கமாகக் கேட்டன. குண்டுகள் சுடப்படுகையில் உண்டாகும் குட்டையான அடியோசைகளையும் குண்டுகள் வெடிக்கும் போது ஏற்படும் ஆழ்ந்த சிதறொலிகளையும் தனிப் பிரித்து அறியத் தான் தொடங்கி விட்டதாகக் கூட அலெக்ஸேயிக்குத் தோன்றியது.

விளங்காத கலவரமும் துயரமும் உலுப்பக் காலையில் விழித்துக் கொண்டு அலெக்ஸேய் உடனே நினைத்துப் பார்த்தான்: “என்னதான் நடந்து விட்டது? கெட்ட கனவு கண்டேனா?” என்று. அப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது சிகரெட் கொளுவியைப் பற்றி. ஆனால் வெயில் கொஞ்சலாக வெப்பமூட்டத் தொடங்கி, சுற்றும் இருந்தவையாவும் – மங்கிய மணல் மணலான வெண்பனியும், பைன் மரங்களும், ஊசியிலைகளுமேக்கூட – மினு மினுத்துப் பளிச்சிட்டதும், பெரிய விபத்தாகப்படவில்லை. இன்னும் மோசமாயிருந்தது வேறொன்று. இறுகப் பிணைத்திருந்த மரத்துப் போன கைகளைப் பிரித்ததும் தன்னால் எழுந்து நிற்க முடியாது என்பதை அவன் உணர்ந்தான். எழுந்திருப்பதற்கு சில வீண் முயற்ச்சிகள் செய்கையில் அவனது ஊன்றுகோல் முறிந்துவிட்டது. சாக்குப்போலத் தரையில் துவண்டு விழுந்தான் அவன். மரத்த அங்கங்கள் சரி நிலைக்கு வர இடமளிப்பதற்காகப் புரண்டு நிமிர்ந்து படுத்தான். ஊசியிலைப் பைன் மரக் கிளைகளின் ஊடாக ஆழங்காணமுடியாத நீலவானை நோக்கலானான். தூய வெண்மையான, மென்தூவி போன்ற, தங்க முலாம் பூசிய சுருட்டை விளிம்புகள் கொண்ட மேகங்கள் அதிலே விரைந்து சென்றன. இப்போது அங்கங்கள் கொஞ்சங்கொஞ்சமாகச் சரியாகத் தொடங்கியிருந்தன. ஆனால், கால்களுக்கு என்னவோ நேர்ந்துவிட்டது. அவற்றால் எழுந்து நிற்கவே முடியவில்லை. பைன் மரத்தைப் பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க அலெக்ஸேய் இன்னும் ஒரு முறை முயன்றான். கடைசியாக இதில் அவனுக்கு வெற்றிகிடைத்தது. ஆனால், கால்களை மரத்தின் பக்கம் கொண்டுவர முயற்சி செய்ததுமே பலவீனம் காரணமாகவும் உள்ளங்கால்களில் ஏற்பட்ட ஏதோ பயங்கரமான, புதிய நமைச்சலுடன் கூடிய வலி காரணமாகவும் விழுந்துவிட்டான்.

இது தான் முடிவா என்ன? இங்கே, பைன் மரங்களுக்கு அடியில், இப்படியே மடிந்து போவதுதானா? இங்கே அவனுடைய உடலை விலங்குகள் கறவிக் குதறித் தின்று எலும்புகளை மட்டுமே விட்டுவைக்கும். அந்த எலும்புகளைக் கூட எவனும் ஒரு போதும் காணமாட்டான், அடக்கம் செய்ய மாட்டானே! சோர்வு திமிற முடியாதபடி அவனைத் தரையோடு தரையாக அழுத்தியது. ஆனால், தொலைவில் முழங்கிற்று பீரங்கிக் குண்டுவீச்சு. அங்கே சண்டை நடந்து கொண்டிருந்தது. அங்கே தன்னவர்கள் இருந்தார்கள். இந்த கடைசி எட்டு, பத்து கிலோ மீட்டர் தொலைவைக் கடப்பதற்கு வேண்டிய வலிமை அவனிடம் இருக்காதா என்ன?

இது தான் முடிவா என்ன?
இங்கே, பைன் மரங்களுக்கு அடியில், இப்படியே மடிந்து போவதுதானா? இங்கே அவனுடைய உடலை விலங்குகள் கறவிக் குதறித் தின்று எலும்புகளை மட்டுமே விட்டுவைக்கும்.
அந்த எலும்புகளைக் கூட
எவனும் ஒரு போதும் காணமாட்டான்,
அடக்கம் செய்ய மாட்டானே!

பீரங்கிக் குண்டு வீச்சு கவர்ந்து இழுத்தது, உற்சாகம் ஊட்டிற்று, அவனை வற்புறுத்தி அழைத்தது. அந்த அழைப்புக்கு அவன் பதில் அளித்தான். கைகளையும் முழங்கால்களையும் ஊன்றி எழுந்து, கிழக்கு நோக்கித் தவழ்ந்து செல்லலானான். தொடக்கத்தில் தொலைவில் நடந்த சண்டை ஓசைகளால் மயக்கப்பட்டு வசமின்றிச் சென்றான். பின்னர் சுய உணர்வுடன் முன்னேறினான். காட்டில் இந்த மாதிரி முன்னேறுவது ஊன்று கோலின் உதவியுடன் செல்வதைவிட எளிது. பாதங்கள் இப்போது எந்தச் சுமையையும் தாங்க வேண்டியிருக்கவில்லை ஆதலால் குறைவாகவே வலிக்கின்றன. விலங்கு போல் தவழ்ந்து செல்வதால் எவ்வளவோ அதிக விரைவாகத் தன்னால் முன்னேற முடியும் என்பதை எல்லாம் அவன் புரிந்து கொண்டான். மகிழ்ச்சி காரணமாக உருண்டை ஒன்று நெஞ்சில் கிளம்பித் தொண்டையில் அடைத்துக் கொள்வதை மீண்டும் அவன் உணர்ந்தான். தனக்குத்தானே அல்ல, இத்தகைய நம்ப முடியாத இயக்கத்தின் வெற்றியைச் சந்தேகித்த பூஞ்சை உள்ளம் படைத்த வேறு எவனுக்கோ போல அவன் இரைந்து சொன்னான்:

“பரவாயில்லை, பெரியவரே, இப்போது எல்லாம் ஒழுங்குக்கு வந்துவிடும்!”

ஓர் இடைநிறுத்தத்தின் போது அவன் குளிரில் விரைத்துப் போன அங்கங்களைக் கக்கத்துக்கிடையே வைத்துச் சூடு படுத்திக்கொண்டான். அப்புறம் பிர் மரப்பட்டையை நகங்கள் பிய்ந்து போகும்படி உரித்து நீண்ட வெண்பட்டை நார்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டான். கம்பளி லேஞ்சித் துண்டுகளை பூட்சுகளுக்கு உள்ளிருந்து வெளியே எடுத்தான். அவற்றைக் கைகளில் சுற்றிக் கொண்டான். உள்ளங்கைகள் மேல் செருப்பின் அடித்தோலின் வடிவில் மரப்பட்டையை வைத்து பிர்மர் நார்களால் அதை இணைத்துக் கட்டிக்கொண்டான். பின்பு இராணுவ மருத்துவப் பைகளில் இருந்த பட்டித் துணிகளை அதன் மேல் சுற்றி இறுக்கினான். வலது கையில் மிகவும் செளகரியமான அகன்ற அடித்தாங்கல் அமைந்துவிட்டது. இடது கையிலோ பற்களால் சுற்றிக் கட்டுப்போட வேண்டியிருந்த படியால் கட்டு அவ்வளவு நன்றாக வாய்க்கவில்லை. எனினும் கைகள் செருப்புகள் அணிந்து இருந்தன. இயங்குவது முன்பை விடச் சுலபமாக இருப்பதை உணர்ந்தவாறு அலெக்ஸேய் மேலே தவழ்ந்து சென்றான். அடுத்த நிறுத்தத்தில் முழங்கால் மீதும் மரப்பட்டைத் துண்டுகளை வைத்துக் கட்டிக் கொண்டான்.

நடுப்பகலில் கதகதப்பு உடம்பில் உறைக்கத் தொடங்கியது. அதற்குள் அலெக்ஸேய் கைகளால் கணிசமான “அடிகள்” முன்னேறியிருந்தான். பீரங்கிக் குண்டு வீச்சு – அவன் அதை நெருங்கிவிட்டதாலோ, அல்லது செவிப்புலனின் ஏதேனும் ஏமாற்றுக் காரணமாகவோ தெரியவில்லை – முன்னிலும் உரக்க ஒலித்தது. நிரம்ப வெப்பமாக இருந்தமையால் அவன் தனது விமானி உடுப்பின் “ஜிப்பை” நெகிழ்த்த வேண்டியதாயிற்று.

பாசி அடர்ந்த சதுப்புத் தரையின் குறுக்காக அவன் தவழ்ந்து சென்றான். அதில் வெண்பனிக்கு அடியிலிருந்து வெளித் துருத்திக் கொண்டிருந்தன பசிய மேடுகள். அங்கே விதி அவனுக்கு இன்னொரு பரிசை ஆயத்தமாக வைத்திருந்தது. ஈர்ப்பும் மென்மையும் உள்ள வெளிறிய பாசிமீது மெருகூட்டியவை போல பளபளத்த கூரிய இலைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த மெல்லிய நூல் போன்ற தண்டுகளை அவன் கண்டான். இந்த இலைகளின் நடு நடுவே, மேட்டின் மேற்பரப்பின் மீதே கிடந்தன கருஞ்சிவப்பான கிரான் பெர்ரிப் பழங்கள். கொஞ்சம் நசுங்கியிருந்தாலும் சாறு நிறைந்தவை அவை. அலெக்ஸேய் குனிந்தான். வெல்வெட் போன்ற மென்மையும் வெதுவெதுப்பும் சதுப்பு நில ஈர மணமும் கொண்ட பாசியிலிருந்து பெர்ரிப் பழங்களை ஒன்றன் பின் ஒன்றாக உதடுகளாலேயேக் கவ்விப் பறித்துத் தின்னத் தொடங்கினான்.

வெண்பனியின் கீழ் இருந்த கிரான் பெர்ரிப் பழங்களின் இனிப்பும் புளிப்புமான இனிய சுவை, சில நாட்களுக்குப் பிறகு அவன் முதல் தடவை உண்ட இந்த உண்மையான உணவு அவன் வயிற்றில் இசிவு வலியை உண்டாக்கியது. ஆனால், அறுப்பது போன்ற இந்தக் குத்துவலி நிற்கும் வரைக் காத்திருக்க அவனுக்கு சக்தி பற்றவில்லை. ஒவ்வொருத் திட்டாகத் தவழ்ந்து ஏறி, வாய்ப்பாக இருந்து கொண்டு, இனிப்பும் புளிப்புமான மணமுள்ள பழங்களைக் கரடி போன்று நாக்காலும் உதடுகளாலும் லாவி லாவித் தின்றான். இந்த மாதிரிச் சிலத் திட்டுக்களை காலி செய்துவிட்டான். வெண்பனி உருகியதால் தேங்கியிருந்த வசந்தகாலக் குளிர்நீர் அவனுடைய பூட்சுகளுக்குள் கசிந்து ஈரமாக்கிற்று. கால்களிலோ, காந்தும் கொடிய வலி உண்டாயிற்று. களைப்பினால் உடல் சோர்ந்தது. ஆனால் அவனோ, இவற்றில் எதையும் உணரவில்லை. வாயில் ஓரளவு இனிப்பு கலந்த கடும் புளிப்பையும் வயிற்றில் இனிய கனத்தையும் மட்டுமே அவன் உணர்ந்தான்.

அவனுக்குக் குமட்டல் எடுத்தது. ஆனால், அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. மறுபடியும் பழங்களைத் திரட்டுவதில் முனைந்தான். தான் செய்திருந்த செருப்புக்களைக் கைகளிலிருந்து கழற்றினான். பெர்ரிப் பழங்களைப் பறித்து டப்பாவிலும் தலைக் காப்பிலும் அவற்றைச் செம்மச் செம்ம நிறைத்துக் கொண்டான். நாடாக்களால் தலைக்காப்பை இடுப்பு வாறுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டான். உடல் முழுவதையும் ஆட்கொண்ட கடும் உறக்க மயக்கத்தை அரும்பாடுப்பட்டுப் போக்கிக் கொண்டு தவழ்ந்து மேலே சென்றான்.

இரவில் முதிய பிர் மர விதானத்தின் அடியை அடைந்து, கிரான் பெர்ரிப் பழங்களைத் தின்றான், மரப் பட்டைகளையும் பிர் கூம்புக்கனி விதைகளையும் சவைத்தான். எச்சரிக்கையும் கலவரமும் நிறைந்த உறக்கத்தில் ஆழ்ந்தான். யாரோ ஓசை செய்யாமல் இருளில் தன் அருகே பதுங்கி வருவது போல அவனுக்கு அநேகதடவைத் தோன்றியது. அவன் கண்களை விழித்து, சட்டென எச்சரிக்கை அடைந்து ரிவால்வரைக் கையில் பிடித்தவாறு அசையாது உட்கார்ந்திருந்தான். விழும் கூம்புக் கனிகளின் சத்தம், லேசாக உறைந்து இறுகும் வெண்பனியின் சரசரப்பு, வெண்பனிக்கு அடியிலிருந்து பெருகும் சிற்றோடையின் மெல்லிய கல கலவொலி, எல்லாமே அவனுக்கு நடுக்கம் உண்டாக்கின.

விடியும் தருவாயில்தான் ஆழ்ந்த தூக்கம் அவனை ஆட்கொண்டுவிட்டது. நன்றாக வெளிச்சம் ஆனபிறகு, தான் எந்த மரத்தடியில் உறங்கினானோ அதைச் சுற்றிலும் நரிக்கால்களின் அடித்தடங்களைக் கண்டான். அவற்றின் நடுவே, தரையில் இழுபட்ட வாலின் நீண்ட அடையாளம் தென்பட்டது.

ஓகோ, இதுவா அவனைத் தூங்க விடாமல் தொந்தரவுச் செய்தது! நரி அவனைச் சுற்றியும் அருகாகவும் நடந்தது, சற்று உட்கார்ந்து விட்டுப் பின்னும் நடந்தது என்பது தடங்களிலிருந்தது தெரிந்தது.

படிக்க:
சைவ சமயத்தின் மீதான கம்பனின் கருத்தியல் குண்டுவெடிப்புகள் !
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !

அலெக்ஸேயின் மனத்தில் கெட்ட சிந்தனை உதயமாயிற்று. தந்திரமுள்ள இந்தப் பிராணி, மனிதனின் சாவை முன் கூட்டி உணர்ந்து கொள்கிறது என்றும், சாவு விதிக்கப்பட்டவனைப் பின்பற்றத் தொடங்குகிறது என்றும் வேட்டைக்காரர்கள் சொல்வார்கள். கோழைத்தனமுள்ள இந்த ஊனுண்ணியை இந்த முன்னுணர்வுதான் அவனுடன் பிணைத்திருக்கிறதோ?

திடீரென அலெக்ஸேய் எச்சரிக்கை அடைந்தான். கிழக்கேயிருந்து இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்த பீரங்கி குண்டுகளின் அதிரொலியின் ஊடாக, மெஷின்கன் குண்டு வரிசைகளின் சடசடப்பு சட்டெனத் துலக்கமாக அவன் காதுகளுக்கு எட்டிற்று.

களைப்பை அக்கணமே உதறி எறிந்து விட்டு, நரியையும் இளைப்பாறலையும் மறந்துவிட்டு, அவன் மீண்டும் காட்டுக்கு உள்ளே தவழ்ந்து முன்னேறினான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம் ! அறநிலையத்துறை ஆணையருக்கு ம.க.இ.க. கண்டனம் !

3

பத்திரிகைச் செய்தி

02-04-2019

ரசியல் சட்டத்திற்கு எதிராகவும் அறிவியலுக்குப் புறம்பாகவும் தமிழக அறநிலையத்துறை ஆணையர் பணிந்தர் ரெட்டி ஒரு ஆணை வெளியிட்டுள்ளார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும்; வருணஜபம், நந்தி பூஜையோடு அமிர்த வர்ஷிண, மேக வர்ஷிணி,  கேதாரி, ஆனந்தபைரவி, ரூப கல்யாணி ஆகிய ராகங்களில் பாடல்கள் பாட வேண்டும்; ஓதுவார்களைக் கொண்டு தேவாரப் பதிகங்களைப் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட விரிவான ஆணை வெளியிட்டுள்ளதோடு, சுந்தரர் பதிகம் பாடி மழை பொழிய வைத்த கதையையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மதச்சார்பற்ற அரசின் மூத்த அதிகாரி ஒருவர் அறிவியலுக்கு எதிராகச் செயல்படுவதும் அரசியல் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படுவதும் கடும் கண்டனத்திற்குரியது. அறநிலையத்துறை உடனடியாக இந்த ஆணையை திரும்பப் பெற வேண்டும்.

யாகம் நடத்தி பாட்டு பாடி மழை பெய்ய வைக்க முடியுமென்றால் வேலையின்மை, வறுமை போன்று ஆயிரக்கணக்கான மக்கள் பிரச்சினைகளையும் இதே போல மிக எளிதாகத் தீர்த்து விடலாமே!

கோடையில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்வது இயல்பான இயற்கை நிகழ்வு. இதைப் பயன்படுத்திக்கொண்டு யாகம் என்ற பெயரில் ஊழல் நடக்குமேயன்றி சொட்டு மழைகூடப் பெய்யாது.

செயற்கைக்கோள்கள் போன்ற அதிநவீன அறிவியல் சாதனங்கள் மூலம் மிகத்துல்லியமாக வானிலையைக் கணிக்கும் இந்தக் காலத்தில், இவ்வாறு மூட நம்பிக்கையின் அடிப்படையில் ஆணை வெளியிடுவது மிகவும் ஆபத்தானதாகும்.

அறிவியல் நெறிகளை வளர்க்க வேண்டிய அரசு இவ்வாறு கட்டுக் கதைகளையும் மூடநம்பிக்கைகளையும் வளர்ப்பது எதிர்காலச் சமுதாயத்தை சீரழிக்கும் செயலாகும். தமிழக அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ், பாஜகதான் இயக்குகிறது என்ற தமிழக மக்கள் கருத்தை மெய்ப்பிப்பதாகவே அறநிலையத்துறை ஆணையரின் செயல் அமைந்துள்ளது. எனவே உடனடியாக இவ்வாணையைத் திரும்பப் பெற வேண்டும். பணிந்தர் ரெட்டி ஆணையர் பொருப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இவண்
காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

பெண்களின் பார்வையில் அழகு – ஆபரணம் – ஆடை – உணவு | பெண்கள் நேர்காணல்

0

ட்சய திரிதியைக்கு எத்தனை பவுன் தங்கம் வாங்குவீர்கள் ?  என்ன சீரியல் பார்ப்பீர்கள் ? அழகு சாதனங்களுக்கு எவ்வளவு செலவழிப்பீர்கள் ? மாதம் எத்தனை முறை ஹோட்டல் உணவு சாப்பிடுவீர்கள் ? எத்தனை பட்டுப்புடவை வைத்திருக்கிறீர்கள் ? இன்னும் பல அதிரடி கேள்விகளுக்கு அதிரடி பதிலளிக்கிறார்கள் பெண்கள் !

பொதுவான ஒரு கேள்விக்கு, வெவ்வேறு வர்க்கப் பிரிவைச் சேர்ந்த பெண்களின் பதில்கள் எவ்வாறு இருக்கின்றன ? பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்கள்

 


கொஞ்சம் இதையும் பாருங்க …

சைவ சமயத்தின் மீதான கம்பனின் கருத்தியல் குண்டுவெடிப்புகள் !

கம்பன் சைவசமயத்தின் மீது மேற்கொண்ட கருத்தியல் குண்டுவெடிப்புகள் ! | வி.இ.குகநாதன்

‘இராமாயணங்கள் எத்தனை வகை?’ என்ற ஒரு கேள்விக்கான விடை காண்பதே மிகப் பெரும் புதிரான பணியாகும். பலரும் வால்மீகி எழுதிய இராமாயணத்தை கம்பர் தமிழில் மொழிபெயர்த்தார் என்றே கருதியிருப்பார்கள். அது தவறு. உண்மையில் நாட்டுப்புறக் கதைகளாக வாய்மொழி மூலமாகவே பல வகையான இராமாயணக் கதைகள் கடத்தப்பட்டு வரப்பட்டு, பல்லாண்டுகளின் பின்னரே அவை எழுத்துருப் பெற்றன. இந்த வகையில் மொத்த இராமாயணக்கதைகள் நூற்றுக்கணக்கானவையா அல்லது ஆயிரக்கணக்கானவையா என்பதே ஆய்விற்குரிய பகுதியாகும்.

இது தொடர்பாக ராமானுஜன் (A. K. Ramanujan) என்பவர் எழுதிய ‘Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation’  என்ற கட்டுரை பல்கலைக்கழக பாடத்திட்டங்களிலேயே இடம்பெற்றுப் பின்னர் இந்துத்துவா அமைப்பினரின் அழுத்தங்களால் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பல்வகைப்பட்ட இராமாயணங்களில் ராமனையும், சீதையினையும் உடன்பிறந்தவர்களாகக் காட்டும் ஒரு கதை; சீதையே இல்லாத ஒரு கதை எனப் பல்வேறுபட்ட வகையான கதை வடிவங்கள் உண்டு. இவை எல்லாவற்றிடையேயும் வால்மீகி எழுதிய இராமாயணமும், கம்பர் எழுதிய கம்ப இராமாயணமுமே மக்களிடம் பெரிதும் பரவலடைந்தவையாகும்.

ஏற்கனவே நாட்டுப்புறக் கதைகளாகவிருந்த இராமாயணத்தை வால்மீகி மற்றும் கம்பர் ஆகியோர் தாம் வாழ்ந்த காலப்பகுதிகளிற்கேற்ப தாம் சார்ந்திருந்த மதங்களிற்குச் சார்பாக இன்னொரு மதத்தின் மீதான தாக்குதலாகவே கதையினை வடிவமைத்திருந்தார்கள். இதில் கம்பரின் நோக்கத்தினைப் பார்ப்பதற்கு முன்னால் காலத்தால் முந்தியவரான வால்மீகியின் நோக்கத்தினைப் பார்ப்போம்.

வால்மீகி ராமாயணத்தின் பவுத்தத்தின் மீதான போர் :

வால்மீகி ராமாயணம் என்பது பவுத்த எதிர்ப்பினையும், பார்ப்பனியத் தாங்கலையுமே முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இதனை விளங்கிக்கொள்வதற்கு புத்தரின் காலத்திற்குச் சென்றுவரவேண்டும். பார்ப்பனியர் குளிரான இடங்களிலிருந்து வந்தமையால் நெருப்பினைக் (அக்கினி) கடவுளாகவும் வேள்வியினை (யாகம்) முதன்மையான சடங்காகவும் கொண்டிருந்தனர். இந்த வேள்விகளின் போது பெருமளவு மாடுகளையும், பிற மிருகங்களையும் வெட்டி வேள்வியில் பலியாக்கி வந்தனர் (இதற்கான சான்றுகளை வேதங்களிலேயே காணலாம்).

அரக்கியாக உருவகப்படுத்தப்படும் தாரகை …

இத்தகைய நிலையில் வேளாண்மையில் பயன்படுத்தப் போதிய மாடுகள் இன்மையால் புத்தர் வேள்வியினை எதிர்த்தார். ஒரு முறை சொர்க்கத்திற்குச் செல்ல என்று கூறி பார்ப்பனர்களால் யாகம் ஒன்று நடத்தப்பட்டு மிருகங்கள் வெட்டப்பட்டு அதில் பலியிடப்பட்டன. அந்த யாகம் நடைபெறுமிடத்திற்குச் சென்ற புத்தர், “ஏன் இவ்வாறு மிருகங்களை நெருப்பில் பலியிடுகிறீர்கள்?” எனக்கேட்டார். அப்போது பார்ப்பனர்கள் யாகத்தில் பலியிடப்படும் மிருகங்கள் எல்லாம் நேரே சொர்க்கம் செல்வதால் கவலைப்படவேண்டாம் எனக்கூற, புத்தர் “இவ்வாறு மிருகங்களைப் பலியிட்டுப் பின்னர் சொர்க்கம் போவதற்குப் பதில் நீங்களே நேரில் நெருப்பில் குதித்து நேரடியாகச் சொர்க்கம் செல்லலாமே!” என்றார். பார்ப்பனர்களிடம் பதிலில்லை, அந்த யாகம் பாதியிலேயே குழம்பிற்று.

இவ்வாறு புத்தருக்குப் பின்னரும் பவுத்தர்களிற்கும் பார்ப்பனர்களிற்கும் யாகங்கள் தொடர்பான மோதல்கள் இடம்பெற்றுவந்தன. இக் காலப்பகுதியிலேயே வால்மீகி ராமாயணம் எழுதப்படப்பட்டது.

இப்போது வால்மீகி இராமாயணத்திற்கு வந்தால், ராமன் மேற்கொண்ட முதற்போர் தாடகை என்ற அரக்கப் பெண்ணிற்கு எதிராகவேயிருந்தது. அதாவது வேள்வியினைக் (யாகம்) குழப்ப வந்த தாடகையினை எதிர்த்து விசுவாமித்திரரின் அழைப்பின் பெயரில் ராமன் எதிர்த்துப் புரிந்த போரே ராமனின் முதற்போர். இதிலிருந்தே அரக்கர்களுடனான பகை ராமனிற்குத் தொடங்குகின்றது.

படிக்க:
அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !
அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?

இங்கு யாகத்தைக் குழப்பும் அரக்கர்களாக புத்தரும், அவரது கொள்கையினைப் பின்வற்றுவோருமே உருவகப்படுத்தப்படுகின்றார்கள். இங்கு ராமாயணத்தில் வேள்விக்குக் கொடுக்கப்படும் சிறப்பினையும், அதனை எதிர்த்தோரை கொடிய அரக்கர்களாகவும் உருவகப்படுத்துவதனைப் பார்த்தால் வால்மீகியின் நோக்கம் புலனாகும். இதனைப் படிக்கும் சிலருக்கு ‘நாம் இறைச்சி சாப்பிட்டுவிட்டுக் கோயிலிற்கே போவதில்லை, ராமபிரான் எவ்வாறு மிருகங்களைப் பலியிடும் யாகத்திற்கு உதவுவார்’ என்ற ஐயம் ஏற்படும்.

ராமாயணத்தில் ராமர் இறைச்சி உண்பவர் மட்டுமல்லாமல் மதுவும் உண்பார் (சான்று : உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8).  வால்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றது எனப் பார்க்க ருத்திர காண்டத்திற்கு வரவேண்டும்.

ராமர் அரசனாக முடி சூட்டப்பட்ட பின்பும் அரசாட்சியில் ஈடுபடவில்லை. பரதனும், அமைச்சர்களுமே ஆட்சியினைப் பார்த்துக்கொண்டனர். வால்மீகி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். ‘நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான்.’ (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).

இவ்வாறு ஆட்சியில் பங்கெடுக்காத ராமன் முதன்முதலில் ஆட்சியில் செய்யும் செயலே சம்பூகன் தலைவெட்டல் ஆகும். அதாவது சூத்திரர்கள் தவம் செய்யவோ அல்லது ஞானம் (கல்வி) பெறவோ கூடாது என்ற பார்ப்பன சனாதன தர்மத்திற்கு முரணாக, சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்வதாக பார்ப்பனர்கள் ராமனிடம் முறையிட, அவன் மரத்தில் தொங்கியபடி தலைகீழாகத் தவம் செய்த சூத்திரனான சம்பூகனின் தலையினை வெட்டி வீழ்த்துகின்றான். (உத்தர காண்டத்தின் 73 முதல் 76 வரையிலான சருக்கங்கள்).

இவ்வாறு வால்மீகி ராமாயணமானது பார்ப்பனிய நலன்களிற்காகப் பவுத்தத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட போராகவே உருவகப்படுத்தப்படுகின்றது. வால்மீகி காலத்தில் பவுத்தமே பார்ப்பனியத்தின் எதிரியாகக் காணப்பட்டமையால் வால்மீகி ராமாயணம் பவுத்தத்தின் மீது போரினைத் தொடுத்தது, ஆனால் கம்பனின் காலத்தில் அத் தேவையில்லை. எனவே கம்ப ராமாயணம் யார் மீது போர் தொடுத்தது என இனிப் பார்ப்போம்.

தமிழர்களிடையே இராமாயணக் கதை :

கம்ப இராமாயணத்திற்கு முன்னரே தமிழர்களிடையேயும் ராமர் கதை பரவியிருந்தது. சங்க இலக்கியங்கள் (அகநானூறு 70, புறநானூறு 378), சிலப்பதிகாரம் (மதுரைக்காண்டம், ஆய்ச்சியர் குரவை) என்பனவற்றிலேயே வேறுபட்ட ராமர் கதைகள் சிறு செய்திகளாக இடம்பெற்றுள்ளன. ‘இராவணன் மேலது நீறு, எண்ணத் தகுவது நீறு’  என திருஞானசம்பந்தரே தேவாரத்தில் இராவணனைப் பற்றி உயர்வாகக் கூறியுள்ளார். இவ்வாறு தமிழகம் ராமர் கதைகள் பற்றி அறிந்திருந்த சூழ்நிலையிலேயே கம்பர் தனது இராமயணத்தை பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் (CE 12th cent) எழுதுகின்றார்.

கம்பரின் காலத்தில் பவுத்தம் இந்தியாவை விட்டுத் துரத்தியடிக்கப்பட்டு, சமணம் கழுவேற்றப்பட்டு விட்டது. எனவே அவற்றினை எதிர்க்கவேண்டிய தேவை கம்பரிற்கு இல்லை. நாயன்மார்களின் செயற்பாட்டினாலும், அக் காலச் சோழ அரசர்களின் தாங்கலாலும் சைவமானது பெரும் சமயமாக உருவெடுத்திருந்தது. கம்பரோ வைணவர் என்பதுடன் அக்காலத்தில் சைவத்திற்கும் வைணவத்திற்குமிடையே பூசல்கள் காணப்பட்ட காலம்.

எனவேதான் கம்பர் சைவத்தின் மீதான பனிப்போராகக் கம்ப ராமாயணத்தை எழுதியிருந்தார். இங்கு பனிப்போர் (Cold war) என்ற சொல் கவனிக்கத்தக்கது (பனிப்போர் என்பது தானே நேரடியாக ஈடுபடாமல் மறைமுகமாகப் போர் செய்வது. எ.கா- அமெரிக்கா-சோவியத் பனிப்போர்).

வால்மீகி போன்று வெளிப்படையாகவல்லாமல் கம்பர் இவ்வாறு மறைமுகமாகப் போர் புரிவதற்குச் சோழர்களின் சைவத்தின் மீதான பற்று, பார்ப்பனிய நலன் இரு புறங்களிலும் (சைவம்-வைணவம்) இருந்தமை, சைவர்களையும் கவர்ந்து தமது கடவுளை ஏற்கச்செய்தல் ஆகியவை காரணங்களாக அமைந்திருக்கக்கூடும். இது பனிப்போர் என்பதால் மிக நுணுக்கமாகப் பார்த்தாலே கம்பரின் நோக்கத்தினை விளங்கிக்கொள்ள முடியும். சைவ-வைணவ முரண் என்பது யார் முதன்மையான கடவுள், எந்தக் கடவுள் ஆற்றல் கூடியவர், எந்தப் பெயரினை (நாமத்தை) உச்சரித்தல் என்பன தொடர்பான மோதல்களே என்பதனை மனதிற்கொண்டு பாருங்கள்.

கம்பர் சைவத்தின் மீது தொடுத்த கருத்தியல் போர் :

கம்பர்  பெருமளவிற்கு உவமைகளைக் கையாண்டே சைவத்தின் மீதான தாக்குதலை மேற்கொண்டிருந்தார். பல்வேறு கட்டங்களாகவே இத் தாக்குதல் இடம்பெற்றிருந்ததுடன், இத்தகைய தாக்குதல்கள் வால்மீகி இராமாயணத்திலோ அல்லது நாட்டுப்புற ராமர் கதைகளிலோ இல்லாதவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கம்பர் முதற் கட்டமாக சிவ (சைவ) பக்தர்களாகவும், ராம பக்தர்களாகவும் உருவகப்படுத்தப் படுபவர்களைக் கொண்டு தனது பனிப்போரினைத் தொடங்குகின்றார். சிவ பக்தர்கள் (வாலி முதற்கொண்டு ராவணனும், அவரது அரக்கர் கூட்டமே சிவ பக்தர்கள்) மற்றையோரின் மனைவியினைக் களவாடுபவர்களாகவும், போரில் தோற்பவர்களாகவுமே காண்பிக்கப்படுகின்றனர்.

மறுபுறத்தில் வால்மீகி ராமாயணத்தின்படி வாலி இறந்தபின் சுக்கீரிவன் வாலியின் மனைவியான தாரையினைத் தனது மனைவியாக்கிய செய்தியினை கம்பன் மாற்றி ராம பக்தனான சுக்கீரிவனின் நற்பெயரினைப் பேணுகின்றான். இன்னொரு ராம பக்தனான அனுமானின் ஆற்றலினைக் கூறும்போது சிவனாலும் செய்ய முடியாத செயலினைச் செய்தவனாகக் காட்டப்படுகின்றான்.

`முத் தலைஎஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம்
முற்றி,
வித்தகத் தூதன்மீண்டது இறுதியாய் விளைந்த
தன்மை,
அத் தலை அறிந்தஎல்லாம் அறைந்தனம்;
ஆழியான்மாட்டு
இத் தலைநிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக்
கொண்டாம்.

(சான்று- கம்ப ராமாயணப் பாடல் 6019)

பொருள் – அனுமன் மூன்று தலைகளை உடைய சூலாயுதம் ஏந்திய சிவபிரானுக்கும் செய்து முடிப்பதற்கு அருமையான காரியத்தை நிறைவேற்றி….

இன்னொரு ராமபக்தனான அங்கதனின் செயலினை உருத்திரமூர்த்தியினாலும் செய்ய இயலாது என்கின்றார்.

அத் தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி
ஆர்த்தார்;
இத் தொழில் இவனுக்கு அல்லால், ஈசற்கும் இயலாது
என்பார்;
குத்து ஒழித்து, அவன் கைவாள் தன்கூர் உகிர்த் தடக்
கை கொண்டான்,
ஒத்து இரு கூறாய் வீழ வீசி, வான் உலைய ஆர்த்தான்.

(க.ரா 7939 வது பாடல்)

பொருள் – (அங்கதனுடைய) அந்த (வீரத்) தொழிலைக்  கண்ட தேவர்கள், கை கொட்டிப்   பேரொலி   செய்தார்கள்; இந்த  வீரத் தொழிலை; இவனுக்கு அல்லால் சிவபிரானுக்கும்; இயலாது என்பார்….

கம்பன் இரண்டாவது கட்டமாக சிவனால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஒவ்வொன்றாக ராமனால் வெற்றி கொள்ளப்படுவதாகக் காட்டுகின்றார். இதனை ராமன் சிவதனுசினை (சிவன்-வில்) சீதை சுயம்வரத்தின்போது உடைப்பதுடன் தொடங்குகின்றது. அடுத்தாக “ சங்கரன் கொடுத்த வாளும்…” பாடல் பொதுவாக அறியப்பட்டதே. இவ்வாறு சிவன் வழங்கிய ஆயுதங்களும், வரங்களும் மட்டும் ராமனால் தோற்கடிக்கப்படவில்லை. சிவனின் வேலாலும் (சூலத்தாலும்) துளைக்கமுடியாத மார்பினை உடைய பலம் பொருந்திய ராவணன் எனக் குறிப்பிட்டு, பின்னர் போரில் ராம பாணத்தால் துளைக்கப்படுவதன் மூலம் ராமனின் ஆயுதம் சிவனின் ஆயுதத்தை விடப் பலம் வாய்நததாக் கம்பன் கூறுகின்றான்.

பழிப்புஅறு மேனி யாள்பால்
சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனி சால
வெதும்பினான், ஈசன் வேலும்,
குழப்பு அரிது ஆய மார்பை,
மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக்
கிடந்தவாள் அரக்கன் கேட்டான்.

(க.ரா 8275 வது பாடல்)

இன்னொரு இடத்தில் சிவனின் சூலத்தை விட ராமனின் அம்பே வலுக் கூடியது என ராவணன் வாய் மூலமாகவே கம்பர் கூற வைக்கின்றார்.

இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று
என்னும்
மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும்
கண்டேன்;
அந்தரம் நீளிது, அம்மா! தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை
நோற்ககிற்பார்?’

(7294 வது பாடல்)

பொருள் – இந்திரனுடைய  வச்சிராயுதமும்; சிவபிரானின் கைகளில் உள்ள மூன்று       இலை வடிவத்தைக் கொண்ட மந்திர ஆற்றல் பொருந்திய முத்தலைச் சூலமும் திருமாலின் வளைந்த சக்கரப் படையின் வருகையையும் பல போர்களில் கண்டுள்ளேன்; அப்படைகளுக்கும் இராமனுடைய அம்புக்கும் வேற்றுமை மிகுதி. இந்திரன்  படை, ஈசன் கை மந்திர அயில், மாயோன் வளை ஆகியவற்றை எளிமையாகப் பொறுத்த யான் தவவேடம் பூண்ட இராமன் அம்புக்குப் பொறுக்க மாட்டாது நொந்தனன். யானல்லாத மற்றையோர்  யார் அவ்வம்பின் ஆற்றலை எதிர்த்துத் தாங்க வல்லார்.

மேற்குறித்த பாடலில் சிவனின் சூலத்துடன், மாயோனின் சக்கரத்தையும் விட ராமனின் அம்பு வலிமையானது எனக் கூறுவதனைக் காணலாம். இவ்வாறு சில இடங்களில் ராமரின் ஆற்றலினை திருமாலின் ஆற்றலை விடக் கூடுதலாகக் காட்டுவது, திருமாலின் அவதாரமே ராமன் என்ற செய்திக்கு முரணானது (சிலவேளைகளில் தனது பாத்திரப் படைப்பான ராமனை மற்றைய எல்லாக் கடவுள்களையும் விட உயர்வாகக்காட்டுவதற்காகவோ! என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது).

இன்னொரு இடத்தில் கம்பர் ‘சிவனின் வில்லும் திருமாலின் வில்லும் நேரடியாக மோத சிவனின் வில் தோற்றது’ என்று வேறு பாடுகின்றார்.

இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும்
வெருவரத் திசைகள் பேர வெங்கனல் பொங்க மென்மேல்
செருமலே கின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன்
வரிசிலே இற்ற காக மற்றவன் முனிந்து மன்னோ`

(1291 வது பாடல்)

மேற்குறித்தவாறு, கம்பர் சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனினை நேரடி மோதலிலேயே தோற்க வைக்கின்றார்.

மூன்றாவது கட்டமாகக் கவிக் கூற்று உவமைகள், ஒப்பீடுகள் என்பவற்றினூடாக கம்பர் தனது சைவத்தின் மீதான போரினைத் தொடர்கின்றார்.  கம்ப ராமாயணத்தில் சிவன் குறித்து கூறப்பட்டுள்ள 395 இடங்களில் 168 இடங்கள் கவிக் கூற்றாக வருவதாகப் பெருமையாகக் கூறுகின்றார் ‘சிவம் பெருக்கும் சீலர்’ ராய.சொ என்பவர். அது உண்மைதான், ஆனால் அவற்றில் பெரும்பாலானவைகளில் அரக்கர்களின் ஆற்றலே சிவனிற்கு ஒப்பிடப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு.

  • திரிசுரா என்ற அரக்கன் சிவனின் சூலாயுதம் போன்றவன் (2987 வது பாடல் )
  • அயோமுகி என்ற அரக்கியின் தோற்றம் ஊழிக்கால உருத்திரமூர்த்தியின் தோற்றம் போன்றது (3585 வது பாடல் )
  • இந்திரசித்தனின் தோற்றமானது சிவன், முருகன், விநாயகன் ஆகிய மூவரையும் ஒருங்கே சேரப் பெற்ற தோற்றம் எனல் (4974 வது பாடல் )
  • சிவனும் நடுங்கும் படி இந்திரசேனன் அம்புகளை எறிதல்(8123 வது பாடல் )
  • ராமன் விட்ட கருடப்படையினால் சிவன் அணிந்திருந்த பாம்புகள் அஞ்சி நடுங்கல் (10006 வது பாடல் )

இதை விடப் பல இடங்களில் சிவன் ‘அழிப்புக் கடவுள்’ என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் (பொதுவாக மக்கள் உலகை அழிக்கும் கடவுளிடம் இறையன்பு செலுத்தமாட்டார்கள், காத்தல் கடவுளையே விரும்புவர் என்ற உளவியல்). இவற்றின் உச்சமாக சிவனின் உணவுக்காகவே ஊழிக்காலம் ஏற்படுகின்றது எனக் கம்பன் பாடுகின்றார்.

நீலநிற நிருதர், யாண்டும் நெற்பொழி வேள்வி நீக்க,
பால்வரு பசியன், அன்பால் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட, உலகுஎலாம் அழிவின் உண்ணும்
காலமே என்ன மன்னோ, கனலியும் கடிதின் உண்டான்.

(5942 வது பாடல் )

கம்பர் காலத்தில், சைவ மதத்தவரோ ஒரு உயிரினைக் கொன்று உண்பதே தீவினை (பாவம்) என்றிருக்க, கம்பரோ ஊழிக்காலத்தில் சிவனோ பசிக்காக முழு உலகையும் உண்பவராக மேலுள்ள பாடலில் காட்டுகின்றார். இதிலிருந்து கம்பரின் நோக்கத்தினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இறுதிக் கட்டத்தில் சிவனின் எட்டுத் தோள்களும் ராமனின் ஒரு விரலிற்கு ஈடு ஆகாது (7295 – “பேய்இரும் கணங்க ளோடு…” ) என்கின்றார் கம்பர்.

சிவ பக்தனான ராவணனே ராமனைப் பரம்பொருளாக ஏற்றுக்கொள்வதாகவும் (9837- “சிவனோ? அல்லன் நான்முகன்..”) ராவணன் வதைபடலத்தில் (134) கம்பர் பாடுகின்றார்.

எல்லாவற்றிலும் உச்சமாக சிவன், பிரம்மன் உட்பட எல்லோரும் “நாராயணாய” எனும் மந்திரத்தை மறந்தால், அவர்கள் இறந்தவரேயாவர் (6232- “முக்கண் தேவனும், நான்முகத்து ஒருவனும்….” ) என்று கம்பர் கூறி எந்த நாமத்தை (பெயர்) யார் கூற வேண்டும் என வலியுறுத்தி சைவத்தின் அடிமடியிலேயே கைவைக்கின்றார்.

இவ்வாறு கம்பன் பல்வேறு கட்டங்களாக சைவத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களை கம்ப ராமாயாணத்தை அணுகி நுணுக்கமாகப் பார்ப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம். சில இடங்களில் கம்பர் சிவனைப் பெருமையாகவும் குறிப்பிடுகின்றார் என்பதனை மறுக்கவில்லை. அதெல்லாம் மேற்கூறியனவற்றுடன் மட்டுமல்லாமல், விரிவஞ்சி நான் குறிப்பிடாத இன்னமும் பல கம்பரின் கூற்றுக்களுடன் கவனமாக ஒப்பிட்டுப் பார்த்தால் கம்பர் சைவத்தின் மீது மேற்கொண்ட பனிப்போர் தெளிவாகப் புரியும்.

கம்பரின் சைவத்தின் மீதான எதிர்ப்புணர்வினை கவிக்கோ ஒரு கவியரங்கில் அனுமான் வேடத்தில் பாடிய ஒரு கவிதை தெளிவாக விளக்கும் (கீழுள்ளது கம்பராமாயணப் பாடலன்று).

தென்னிலங்கை வேந்தன்
திருநீற்றுப் பக்தன் என்றே
பொன்னிலங்கைதனை
பொடியாக்கித் தந்துவிட்டேன்’

–  கவிக்கோ

வி.இ.  குகநாதன்

அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !

0

ரேந்திர மோடி அரசின் மிகவும் விருப்பத்துக்குரிய சொல் ‘துல்லியத் தாக்குதல்’ (Surgical Strike).  2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் முகாம்கள் மீது இந்தியா எல்லை தாண்டி நடத்திய தாக்குதலின்போது இந்த சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. இராணுவம் இந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது; பிரதமரும், அவருடைய பரப்புரையாளர்களும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.

அதே ஆண்டு நவம்பர் மாதம் பிரதமரின் திடீர் பேரழிவுப் பிரகடனமான 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களை திரும்பப் பெறும் முடிவின்போது கருப்புப் பணத்தின் மீதான ‘துல்லியத் தாக்குதல்’ என அந்தச் சொல்லை ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர் பயன்படுத்தினார்.

பயங்கரவாதத்தின் மீதான மோடி அரசின் துல்லியத் தாக்குதல்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தானில் இருந்து வரும் கிளர்ச்சியாளர்களின் ஊடுருவலைத் தடுக்க நமது பாதுகாப்புப் படைகள் தினமும் போரிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  கருப்புப் பணத்திற்கு எதிரான துல்லியத் தாக்குதலும் எதிர்விளைவுகளையே உண்டாக்கியது. பணமதிப்பழிப்பு கருப்புப் பணத்தை ஒழிப்பதற்குப் பதிலாக, பணத்தாளை அடிப்படையாகக் கொண்ட பல சிறு, குறு தொழில்களை ஒழித்துக்கட்டியது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் விதைகள் வாங்கவோ, உரம் வாங்கவோ பணம் இல்லாமல் தடுமாறி நின்றனர்.

படிக்க :
♦ #SayNoToWar : போரை விரும்புகிறவர்கள் உங்கள் குழந்தைகளை அனுப்பி வையுங்கள் !
♦ மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?

அதேபோன்றதொரு தாக்குதலை, மே 2014 முதல் அதாவது மோடி அரசு பதவியேற்றது முதல் நமது சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் போன்ற அறிவுசார் துறைகளை மீது நடத்தி வருகிறது மோடி அரசு. அந்நிறுவனங்களை வேண்டுமென்றே குறைமதிப்பிட்டு அவற்றின் மீது தொடர்ச்சியாக போர் தொடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் மிகவும் வெற்றிகரமாகவே முடிந்திருக்கின்றன; இந்த கல்வி நிறுவனங்களுக்கிடையே இருந்த அறமும் நம்பகத்தன்மையும் இழப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. விளைவாக, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்த நிறுவனங்கள் பெற்றிருந்த மதிப்பிற்குரிய இடத்தை இழந்து வருகின்றன.

தற்போதைய பிரதமர், ஆய்வாளர்கள் மீதும் ஆய்வு உதவித்தொகை மீதும் எத்தகைய மதிப்பு வைத்திருக்கிறார் என்பதை இந்தத் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் மூலமாக வெளிப்படுத்துகிறார். இதுவரை நியமிக்கப்பட்ட இரண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களும் கல்விப் புலத்திலோ அல்லது ஆய்வு புலத்திலோ பின்புலம் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் தங்களுடைய கட்டளையை ஆர்.எஸ்.எஸ்-டமிருந்தே பெற்றிருக்கிறார்கள்.  உதாரணத்துக்கு ‘சங்கி’ சிந்தனைக் கூடத்திலிருந்து உருவான, பூஜ்ஜிய ஆய்வுத்தன்மையுள்ளவர்கள் இந்திய வரலாற்றியல் ஆய்வு கவுன்சிலின் தலைவராகவும் இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கவுன்சிலின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற நேரங்களில், ஆர்.எஸ்.எஸ்.-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் கட்டளைகளை ஏற்று இரண்டு சிறந்த அரசு பல்கலைக்கழகங்களான ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீது மனிதவள மேம்பாட்டுத்துறை வெளிப்படையான விரோதப் போக்கை கடைப்பிடித்தது. முந்தைய காலங்களில் இந்த கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர் அமைப்புகள் ஏபிவிபி-யின் பிரச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், திட்டமிட்டு இந்தப் பிரச்சினைகளை உண்டாக்கியது இந்த அமைப்பு.

முந்தைய காலங்களில் இந்தப் பல்கலைக்கழகங்களில், வெளிநாட்டு மார்க்சிய சித்தாந்தங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அவற்றை சரிசெய்யும்விதமாக தற்போது சுதேசி தேசப்பற்றாளர்களின் சித்தாந்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சில வலதுசாரி சித்தாந்தவாதிகள் கூறிக்கொள்கிறார்கள். சமூக அறிவியல் மற்றும் மனிதநேயத் துறைகள் மீது மட்டுமே மோடி அரசின் போர் என்பதை இவர்களின் கூற்று சொல்வதாக நம்பினாலும், உண்மையில் அப்படி இல்லை. இது இயற்கை அறிவியலின் மீதும் உளப்பூர்வமாக தொடுக்கப்பட்ட போராகும்.

பழங்கால இந்தியர்களே பிளாஸ்டிக் சர்ஜரியையும் செயற்கைக் கருவூட்டலையும் கண்டறிந்தார்கள் என்று பிரதமரே சொன்னது அறிவியல் மீதான தாக்குதலில் முதன்மையானதாக அமைந்தது. முத்தாய்ப்பாக, “அனைத்து நவீன கண்டுபிடிப்புகளும் பழங்கால அறிவியல் சாதனைகளின் தொடர்ச்சிகளே” என்றவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நியமித்தார். அந்த அமைச்சர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன கோட்பாடுகள், வேதங்களிலேயே சொல்லப்பட்டிருப்பதாக சொன்னார்.

படிக்க:
♦ ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !
♦ மோடிக்கு சேவகம் செய்யும் ஜே.என்.யூ துணை வேந்தர் !

அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சரின் இந்தக் கூற்றுகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ். சாகாக்களிலோ சொல்லப்பட்டவை அல்ல; இந்திய அறிவியல் மாநாட்டில் சொல்லப்பட்டவை! சமீப ஆண்டுகளில் நடக்கும் இந்த வருடாந்திர நிகழ்வானது, நவீன அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து பேசப்படுவதற்கு பதிலாக, அமைச்சரின் சித்தாந்தக் கூட்டாளிகள், பழங்கால இந்துக்கள் விமானத்தை கண்டுபிடித்தார்கள் என்றும் கௌரவர்கள் முதன் முதலில் பிறந்த சோதனைக் குழாய் குழந்தைகள் என்றும் பேசினார்கள்.

துயரமாக இல்லாத வகையில் இவை வேடிக்கையானவையாக இருந்திருக்கும். இந்திய அறிவியல் கழகம், தொலைநோக்காளர் ஜாம்சட்ஜி டாடாவின் உதவியோடு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து அறிவியல் ஆய்வுகள் இந்த நாட்டில் மூடநம்பிக்கை மற்றும் புராணத்தின் வழியாக அல்லாமல், காரணம் மற்றும் பரிசோதனைகளின் அடிப்படையில் வழிகாட்டப்பட்டன. டாடா அடிப்படை ஆய்வியல் நிறுவனம், தேசிய உயிரியல் அறிவியல் மையம் போன்ற கல்வி நிறுவனங்கள் சர்வதேச தகுதிக்குரியவை.

அதேசமயத்தில், ஐஐடி-க்கள் தொழிற்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றின. அங்கே படித்த பட்டதாரிகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பலவகைகளில் உதவி வருகின்றனர்.  பிரதமரால் உற்சாகமளிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்களால் ஊக்குவிக்கப்படும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் அறிவியல் சிந்தனைக்கு கடுமையான, மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அறிவுத்துறை மீது இந்த அரசின் போர் குறித்து விமர்சிப்பவர்கள், தற்போதைய பிரதமருக்கும், இந்தியவின் முதல் பிரதமருக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக் காட்டினார்கள். விமர்சகர் பிரசன்ஜித் சவுத்ரி, “உலகின் இரண்டாவது பெரிய அளவிலான பயிற்சியளிக்கப்பட்ட அறிவியலாளர்களையும் பொறியியலாளர்களையும் நேரு உருவாக்கினார். ஹோமி பாபா,  விக்ரம் சாராபாய் போன்றவர்கள் நேருவின் அறிவுறுத்தலின் பேரில், இந்திய அறிவியல்தளத்தை உருவாக்கினார்கள்.. அறிவியல் கோட்பாட்டின் மீது ஆழமான பற்றுமிக்க நேருவை எதிர்க்கும் முயற்சியில், மோடி வெகுஜன போலி அறிவியல் பிற்போக்குத்தனத்தை தேர்வு செய்தார்” என டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில் எழுதினார்.

இந்தியாவின் உயர்தரமான சமூக அறிவியல் ஆய்வை மோடி அரசு ஆபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது என்பதை, நான் அதில் கூடுதலாக சேர்க்கிறேன். காவி சிந்தனையாளர்களுக்கு மாறாக, நேருவிய கலைக் கழகத்தில், மார்க்சியம் உள்ளிட்ட பல அறிவார்ந்த நீரோட்டங்கள் இருந்தன. D.R. Gadgil மற்றும் André Béteille போன்றவர்கள் தங்களது பொருளாதாரம் மற்றும் சமூகவியல் துறைகளில் பாபாவாகவும் சாராபாயாகவும் திகழ்ந்தார்கள். இவர்களும் இவர்களைப் போன்றவர்களும் சமத்துவமின்மை, கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, அரசின் கொள்கைகளை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை புகுத்தாமல் ஆதாரத்தின் அடிப்படையில் உருவாக்கியவர்கள். காவி ஊடுருவல் காரணமாக இதுவும் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.

அறிவியல் மற்றும் அறிவியல் ஊக்குவிப்பு என வரும்போது மோடி அரசு தன்னை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் அரசைக் காட்டிலும் தாழ்வாக உள்ளது. அடல் பிகாரி வாஜ்பாயி அரசில் சில அமைச்சர்கள் கற்றவர்களாகவும் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும் இருந்தனர். முதல் தே.ஜ.கூ. அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இயற்பியலில் ஆய்வுப்பட்டம் பெற்ற எம்.எம்.ஜோஷி இருந்தார்.  அவருடைய அமைச்சரவை சகாக்களான ஜார்ஜ் பெர்னாண்டஸ், யஷ்வந்த் சின்ஹா மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் வரலாற்றையும் அரசு கொள்கைகள் குறித்தும் ஆர்வத்துடன் வாசிப்பவர்களாக இருந்தவர்கள்.  ஜஸ்வந்த் சின்ஹாவும் அருண் சோரியும் படிப்பவர்களாக மட்டுமல்லாது, எழுதுபவர்களாகவும் இருந்தனர்.

படிக்க:
♦ மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்
♦ அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது

இப்போது நேரெதிராக, இந்த அரசில் உள்ள ஒரே ஒரு அமைச்சர், பிரதமர் உள்பட ஒரே ஒருவர்கூட வரலாறு, இலக்கியம் அல்லது அறிவியலில் ஆழ்ந்த ஆர்வம் உள்ளவர்களாக இல்லை. அவர்களில் ஒருவராவது தினமும் செய்தித்தாள்களை படிப்பாரா என நான் யோசிக்கிறேன். சிலர் முகநூல், ட்விட்டர் அல்லது வாட்சப் போன்றவற்றில்கூட இல்லை. பல்கலைக்கழக துணைவேந்தர்களையோ அல்லது ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர்களையோ நியமிக்கும்போது முதல்தரமான ஆய்வாளர்களை நியமிப்பதற்கு பதிலாக, மூன்றாம் தரமான சிந்தாந்தவாதிகளை நியமிக்கும் போது, இவற்றை நினைத்துக்கொள்வேன்.

25 ஆண்டுகளுக்கு முன்பு கல்விப் புலத்தை விட்டு விலகியதிலிருந்து, மோடி அரசின் வலுவிழந்த மனப்பான்மை என்னை பாதிக்கவில்லை என்றாலும் எனக்குள் துயரத்தை உணர்கிறேன். நான் இந்தியாவிலேயே முழுக் கல்வியையும் பெற்றவன்,   அப்போது அரசு பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி மதிக்கப்பட்டது, ஊக்குவிக்கப்பட்டது. தற்போது, பகுதி நேர பணியாளராக உள்ள நான், பல ஆய்வியல்  நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், தனிப்பட்ட முறையில் தொழில்முறையில் துயரத்துக்கு உள்ளாவதைக் காண்கிறேன். தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த இந்த கல்வி நிறுவனங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக தாக்கப்படுவது அவர்களை துயரம் கொள்ளச் செய்கிறது.

மோடி அரசு டெல்லியில் அதிகாரத்துக்கு வந்த அடுத்த ஒரு வருடத்தில் ‘இந்த அரசு அறிவுக்கு எதிரானதாக உள்ளது’ என எழுதினேன். என்னுடைய கருத்தை பொய்ப்பிக்கும் வகையில், மோடி அரசு எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை. ஆனால், நான் சொன்னதை பலவிதங்களில் உறுதிப்படுத்தியது.  மோடி அரசு ஆட்சிக்கு வந்த நிமிடத்திலிருந்து அறிவியல் மீதும் அறிவியல் ஊக்குவிப்பு மீதும் தொடர்ச்சியான துல்லிய தாக்குதல்களை நடத்தியது. பயங்கரவாதம் மற்றும் கருப்புப் பணத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக்காட்டிலும் இது மிகுந்த சேதாரத்தை விளைவிக்கக்கூடியது.

அறிவை உற்பத்தி செய்யும், கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சிறந்த கல்வி நிறுவனங்களை அமைப்பாக குறைமதிப்பிற்கு ஆட்படுத்துவதன் மூலம் மோடி அரசு நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தை புதைத்துவிட்டது. தற்போது வாழும் இந்தியர்களும் பிறக்காத இந்தியர்களும் இந்த மிருகத்தனமான, சகிப்புத்தன்மையற்ற அறிவின் மீதான போரின் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும்.

கட்டுரையாளர்: ராமச்சந்திர குஹா
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: தி வயர்

மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

ன்று நாம் பார்க்க இருப்பது மாரடைப்பைப் பற்றி. உலக அளவில் பெரும்பாலான மக்கள் என்ன காரணத்தால் இறக்கிறார்கள் ? உங்களுக்கு நான் 4 விடைகள் தருகிறேன். சிந்தித்துப் பதில் அளியுங்கள்.

  • முதலாவது சாலை விபத்து அல்லது வன்முறை சம்பந்தமான இறப்புகள்.
  • இரண்டாவது கேன்சர்.
  • மூன்றாவது இருதயம் சம்பந்தமான நோய்கள்.
  • நான்காவது நுரையீரல் மற்றும் கிட்னி சம்பந்தமான நோய்கள்.

உங்களில் அதிகம் பேர் நினைக்கக் கூடியது சரியே. இருதயம் சம்பந்தமான நோய்கள் தான் சரியான விடை, அதிலும் குறிப்பாக மாரடைப்பு.

இது பெரும்பாலும் தடுக்கக் கூடியது. மாரடைப்பு, என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். உடலில் எந்த பாகமும் உயிர்ப்போடு இருக்க வேண்டுமென்றால் அதற்கு போதுமான ரத்தம் தேவை.

உதாரணத்திற்கு உங்கள் கையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இறுக்க மூடி மணிக்கட்டில் இன்னொரு கையை வைத்து அழுத்துங்கள். இப்படி செய்யும்போது அந்த விரல்களுக்கும் உள்ளங்கைக்கும் தேவையான ரத்தம் செல்லாது. இப்போது மூடிய அந்தக் கையை விரித்து பார்ப்போமானால் அது வெளிறிப் போய் இருக்கும்.

நீங்கள் அவ்வாறே இறுக்கிப் பிடித்தது போல் இரண்டு நிமிடம் இருந்தீர்களானால், உங்களால் கையை அசைக்க முடியாது. அதுவே ஒரு மணி நேரம் கழித்து பார்த்தீர்கள் என்றால் உங்கள் கைகளில் நீலம் படர்ந்திருக்கும். அதுவே ஒன்றரை மணி நேரம் கழித்து பார்ப்போமானால், உங்கள் கைகளில் உள்ள ஒவ்வொரு செல்களும் இறந்திருக்கும். அவ்வாறு செல்கள் இறக்கும் முன் நீங்கள் இறுகப் பற்றி இருந்த கையை விட்டீர்கள் என்றால் உங்கள் உள்ளங்கைகளுக்குள் மீண்டும் ரத்தம் ஓட ஆரம்பித்துவிடும், கையானது சிவப்பு வண்ணத்திற்கு மீண்டும் மாறி உயிர் பிழைத்து விடும்.

உடம்பில் உள்ள அனைத்துப் பாகங்களும் ரத்தத்தினால்தான் உயிர் வாழ்கின்றன. ரத்தம் இல்லை என்றால் அந்தப் பாகத்திற்கு உயிர் இருக்காது. உடல் முழுவதும் ரத்தத்தை அனுப்புவது இதயம்தான். ஆனால் இதய தசைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அந்த இதயத் தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்வதற்காகவே சில ரத்தக்குழாய்கள் இருக்கிறது. நரம்பு என்பதன் பொருள் நரம்பு மண்டலம். எனவே நாம் அந்த வார்த்தையை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ரத்தம் கொண்டு வரும் ரத்தக் குழாய்களை நாம் தமனி எனக் கூறுவோம். இந்த தமனி என்ற ரத்தக் குழாய்தான் உடல் முழுக்க ரத்தத்தைக் கொண்டு செல்கிறது. இந்த இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டுவரும் தமனி அடைபடுவதால் உண்டாவதுதான் ஹார்ட் அட்டாக். அதாவது மாரடைப்பு.

படிக்க :
♦ பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு விடை கொடுப்பது சாத்தியமா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ அமெரிக்கா : குண்டு வைத்தால் இதய சிகிச்சை இலவசம் !

இருதயம் துடிக்கும்போது, இருதயத்தின் மேல் உள்ள அந்த மகா தமனி மூலமாய் ரத்தம் உடல் முழுக்க பாய்கிறது. இந்த மகா தமனியில் இருந்தே இரண்டு குழாய்கள் இருதயத்துக்கு வருகிறது. ஒன்று வலது பக்கத்திலும் மற்றொன்று இடது பக்கத்திலும் வருகிறது. இடது பக்கத்தில் வரும் அந்த ரத்த குழாய் இரண்டாகப் பிரிகிறது ஒன்று முன்புறமும், மற்றொன்று பின்புறமும் வருகிறது. இந்த மூன்றும்தான் இதயத்துக்கு ரத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்போது இந்த ரத்தக்குழாயின் இறுதி பாகம் பாதிக்கப்பட்டால், அந்த ரத்தக்குழாயைச் சுற்றியுள்ள பாகங்களுக்கு ரத்தம் பரவாது. அதனால் அந்தத் தசைகள் பாதிக்கப்படும். இதுவே ரத்தக்குழாய் நடுவில் பாதிக்கப்பட்டால் அந்த ரத்தக்குழாயை சுற்றி உள்ள பெரிய அளவிலான தசைகள் பாதிக்கப்படும். இதுவே அந்த ரத்தக்குழாய் தொடக்கத்திலேயே அடைபடுமானால், அந்த ரத்தக்குழாயை சுற்றியுள்ள முழுமைமான தசைகளும் பாதிக்கப்படும். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ரத்தக்குழாய் அடைப்பு இடத்தைப் பொறுத்து இந்த பாதிப்பானது மாறுபடும்.

ஒரு தமனியின் இறுதியில் அடைப்பு ஏற்படுமானால் அப்போது பாதிப்பு குறைவாக இருக்கும் அதுவே ஆரம்பத்தில் அடைபடுமானால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இன்னும் சில பேருக்கு இந்த இந்த தமனிகளை சுற்றியுள்ள அதன் கிளைகளில் அடைப்பு ஏற்படும். அப்படி கிளைகளில் அடைப்பு ஏற்படும்போது அந்த கிளைகளை சுற்றியுள்ள தசைகள் மட்டுமே பாதிக்கப்படும். எந்த குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது அந்தக் குழாய் எந்த அளவிலான தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்துதான் நாம் சிறிய அளவிலான அடைப்பு அல்லது பெரிய அளவிலான மாரடைப்பு என்று கூறுகிறோம். அதுவும் முழுவதுமாக சரி கிடையாது, அதை நாம் பின்னர் பார்ப்போம்.

ரத்தக்குழாயின் இறுதி இடங்களில், அடைப்பு இருந்தால் ஒருவர் எளிதில் பிழைத்துக் கொள்வார். ஆனால், அந்தத் தசைகள் மட்டும் செயலிழந்து போகும். அவருக்கு அதிக வலியைக் கொடுக்கும். அதுவே நாம் மாற்று மருந்து கொடுக்கும்போது அவர் உடல் நலம் தேறி விடுவார். இதுவே ரத்தக்குழாயின் ஆரம்ப இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்குமாயின், அவர் இறக்கும் வாய்ப்பு அதிகம். பெரிய அளவிலான தசைகள் பாதிக்கப்பட்டதால், அவர் வாழ்நாள் முழுக்க மாத்திரை மருந்துகளை உட்கொள்ள வேண்டி வரும்.

எனவே நாம் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான் மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் வருவது, அது எந்த இடத்தில் அடைப்பு ஏற்படுகிறது என்பதை பொறுத்து மாரடைப்பின் தன்மையானது மாறுபடும்.

இப்போது நாம் மூன்று நபர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். முதல் நபருக்கு ஏற்கனவே ரத்த குழாயில் 30% அடைப்பு உள்ளது. இரண்டாம் நபருக்கு 70% அடைப்பு உள்ளது. மூன்றாம் நபருக்கு 90% அடைப்பு உள்ளது என வைத்துக் கொள்வோம்.

நாம் முதலில் எடுத்துக் கொண்ட 30% அடைப்புள்ள நபருக்கு எந்த விதமான பாதிப்பும் தென்படாது. அவர் இயல்பான மனிதரைப் போல் ஓடி, ஆடி தனது அன்றாடப் பணிகளை செய்த வண்ணம் இருப்பார்.

இதுவே 70% அடைப்பு உடைய நபர் மாடிப்படி ஏறும்போது அல்லது கடினமான வேலைகள் செய்யும் போது, அவருக்கு சிறிது களைப்பு ஏற்படும். ஆனால், சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு திரும்பி அவர் தன் பணிகளைத் தொடர்வார். எனவே இவரது அன்றாடப் பணிகளிலும் பெரிய அளவிலான மாறுபாடுகள் எதுவும் தென்படாது.

90% அடைப்புள்ள நபருக்கும் மாறுபாடுகள் தென்படும். ஆனாலும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்து அல்லது அதைப் பொருட்படுத்தாது தனது அன்றாடப் பணிகளை மேற்கொண்டவாறு இருப்பார். இதற்குக் காரணம் இந்த மூன்று நபர்களுக்கும் ரத்த ஓட்டம் அடைபடாமல் பாய்ந்து கொண்டுதான் உள்ளது.

ரத்த ஓட்டம் தடைபடாமல் உள்ளதால், எந்தவித பாதிப்பும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு நாம் ECG மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தோமேயானால், அதில் எந்தவித குறைபாடும் தென்படாது. ஒரு விதமான ஜவ்வு இருக்கும். அதுதான் ரத்தத்தையும் அடைப்பையும் பிரிக்கிறது. இந்த ஜவ்வில் ஏதேனும் விரிசல் அல்லது கிழிசல் ஏற்படுமாயின் ரத்தமானது அதில் படரப்பார்க்கும்.

உதாரணத்திற்கு, நமது கையில் அடிபட்ட இடத்தில் ரத்தம் கசிகிறது என்றால், நாம் கையை வைத்து அந்த ரத்தத்தை அடைக்கப் பார்ப்போம். அவ்வாறு கையை வைத்து மூடும்போது ஏன் ரத்தம் வருவது நிற்கிறது என்றால், நமது உடலில் எப்போதெல்லாம் இவ்வாறு ஜவ்வு அல்லது சதைகள் பாதிப்புக்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் அந்த இடங்களில் ரத்தமானது சிறிய சிறிய இரத்த கட்டிகளாக மாறி படர்ந்து நிற்கும் இவ்வாறு நிற்கும்போது ரத்தமானது வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இதுதான் இயற்கை.

இதேபோல் நமது ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பின் மீதும் படர்ந்துள்ள ஜவ்வானது கிழியும் போது, அதில் நமது ரத்தமானது படர்ந்து அந்தக் கிழிஞ்சல்களை அடைக்க பார்க்கும். இவ்வாறு ரத்த கட்டியானது மேலும் படர்ந்து படர்ந்து முழு அடைப்பை உண்டாக்கிவிடும். எனவே நாம் முதலில் பார்த்த 30% மட்டுமே அடைப்புள்ள நபர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நன்றாகத்தான் இருந்தார். ஆனால் அவருக்கு ஜவ்வானது கிழியும்போது ரத்தமானது படர்ந்து அடைப்பு ஏற்பட்டு முழு விதமான அடைப்புக்கு வழி செய்து, பெரிய அளவிலான மாரடைப்பின் விளைவுக்கு வந்து நிற்கிறார். இந்த வகையான பாதிப்பானது மூன்று நபர்களுக்கும் பொதுவான ஒன்று. அதேபோல் மாரடைப்பும் இந்த மூன்று நபர்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

எனவே மாரடைப்பு ஏற்படும் முன்பு அவருக்கு 30, 60, 90 என எந்த சதவீதத்திலும் அடைப்பானது இருந்திருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு மாரடைப்பு ஏற்படாது. எப்போது மாரடைப்பு ஏற்படும் என்றால், அது 100% எட்டும்போது தான்.

இதை எப்படித் தடுப்பது ? இந்த மூன்று நபர்களுக்கும் பொதுவான பாதிப்பு என்பது ரத்தக்கட்டிகள் ஏற்படுத்தியதுதான். இந்த ரத்தக் கட்டிகளை நாம் கரைத்து விட்டோமேயானால், இரத்தமானது இயல்பாகப் பாய ஆரம்பித்துவிடும். மறுபடியும் அவர்கள் பழைய நிலைக்குத் திரும்புவார்கள்.

ஆனால், அதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. இந்த ரத்தக் கட்டிகள் ஆரம்பத்தில் உருவாகும்போது மிகவும் மெல்லியதாக இருக்கும். பின்னர் கடினமானதாக மாறும். அதுவே 3 மணி நேரம் கழித்துப் பார்ப்போமானால் மிகவும் கடினமானதாக மாறிவிடும். எனவே இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது, எவ்வளவு விரைவாக நாம் ரத்தக் கட்டிகளை கரைக்க மருந்துகளை உபயோகப்படுத்துகிறோமோ, அவ்வளவு விரைவாக இந்த ரத்தக் கட்டிகள் எளிதாகக் கரையும். இப்போது ஒரு நோயாளி ரத்தக்கட்டிகள் உருவாகிய ஒரு மணி நேரத்துக்குள் வருகிறார் என்றால், உடனடியாக அவருக்கு நாங்கள் சிகிச்சை அளிப்போம். அவர் அரை மணி நேரத்திற்குள் சரியாகி விடுவார்.

இதுவே அவர் இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து வருகிறார் என்றால், இந்த ரத்தக் கட்டிகளை கரைக்க நாம் சிரமப்படவேண்டியிருக்கும். ஆகவேதான் வலி ஏற்படும்போது உடனடியாக நாம் வரவேண்டும் எனக் கூறுகிறோம். அதைப்பற்றி நாம் பின்னர் பார்ப்போம்.

இதற்குத் தேவையான மருந்தானது எல்லா அரசு மருத்துவமனைகளிலும் உண்டு. ஒரு பத்து அல்லது இருபது படுக்கையில் மட்டுமே கொண்ட தனியார் மருத்துவமனைகளிலும் கூட நாம் இந்த மருந்தைக் காண முடியும். எனவே நெஞ்சு வலியோடு வருபவர் மாரடைப்பு உள்ளதா என்று பார்க்க ஒரு மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, இந்த ரத்தக் கட்டிகளைக் கரைக்க சரியான, முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மருந்துகளிலும் இரண்டு முதல் மூன்று வகையான மருந்துகள் உள்ளன. இந்த இரத்தக் கட்டிகளை கரைக்கும் மருந்தானது, 100 பேருக்கு செலுத்தினால் 50 முதல் 70 பேருக்குத்தான் இது சரியாக வேலை செய்யும். மீதி உள்ள நபர்களுக்கு நாம் மருந்தை செலுத்தி இருப்போம். ஆனால், இந்த ரத்த கட்டியானது அதில் கரையாமல் இருக்கும். அப்படி கரையாமல் இருக்கும் பொழுது, இருதயமானது சரியாக இயங்க வாய்ப்பில்லை. அந்த நபர்களுக்கு இவ்வாறு மருந்தை செலுத்தி சரியாகவில்லை என்று தெரிந்தபின் ஆஞ்சியோபிளாஸ்டி செய்வோம்.

படிக்க :
♦ மருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் மின் நூல் வெளியீடு
♦ இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?

எனது துறையில் உள்ள மருத்துவர்கள், இத்தகைய ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்பு எனத் தெரிந்த பின் இன்ஜெக்சன் செலுத்தாமல், நேரடியாகத் அந்த ரத்தக் கட்டிகளை உறிந்து எடுத்து ரத்தம் மீண்டும் சரியாக இயங்க வழி அமைத்துக் கொடுத்து விடுவோம். உங்களுக்கு ஒரு நோயாளியை அறிமுகப்படுத்துகிறேன். ஒரு நோயாளி ரத்தக்கட்டு ஏற்பட்ட 4 மணி நேரம் கழித்து வந்தார். இவருடைய நாடித் துடிப்பானது 30 என கீழிறங்கியது. உள்ளே சென்று பார்த்தோமேயானால் வலது பக்கம் உள்ள தமனி முழுவதுமாக அடைபட்டிருந்தது. அங்கு இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பின் அவருடைய நாடித் துடிப்பானது 70 என அங்கேயே அதிகமானது. அவர் இயல்பான நிலைக்கு திரும்பி விட்டார்.

ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்த பாதிப்பை சரி செய்யக் கூடிய அளவிலான மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவமனை அருகில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் இதை சரி செய்ய முடியும். எனவே நாம் செய்யவேண்டியதெல்லாம் இதற்கான மருந்தை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு சரிசெய்வதற்கு பெரிய மருத்துவமனைகளுக்கு செல்லலாம். ஆனால், உடனடியாக அந்த மருந்தை செலுத்த வேண்டியது அவசியம். இதுதான் மாரடைப்புக்கான வைத்தியம்.

இப்போது மாரடைப்பு என்றால் என்ன? அதற்கு உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொண்டோம். நான் உங்களை இன்னொரு கேள்வி கேட்கிறேன்.

மாரடைப்பு வந்தால் எத்தனை பேர் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்கிறார்கள்? ஒரு நூறு பேருக்கு மாரடைப்பு வருகிறது என்றால், எத்தனை பேர் மருத்துவமனையை வந்தடைகிறார்கள் ? விடை வெறும் ஐந்து சதவீதம் பேர்தான். மீதி உள்ள 40 முதல் 50 சதவீதம் பேர் வழியிலேயே இறந்து விடுகிறார்கள். அல்லது வீட்டிலேயே இறந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.

நமது உடலில் இருதயமானது எந்த பக்கம் உள்ளது என்று கேட்டால். அதிகம் பேர் இடது பக்கம் தான் உள்ளது என்று கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நமது இதயத்திற்கு நேரே மூன்று கோடை போட்டால், அது மூன்று பாகங்களாக பிரிக்கும். இடப்பக்கம் சிறிது அளவு அதிகமாக இருக்குமே தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது. எனவே இருதயமானது எங்கு உள்ளது என்று கேட்டால், அது இடப்பக்கமும் அல்ல, வலப்பக்கமும் அல்ல… மாறாக, நடுவில் உள்ளது என நாம் கூற வேண்டும்.

இதையே நாம் இங்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றால் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எல்லாம் அதன் அறிகுறிகளாக நடுப்பக்கத்தில் தான் வலியை ஏற்படுத்தும். ஆனால் மக்கள் இதை வாய்வு என தவறாக புரிந்து கொள்கின்றன.

மாரடைப்புக்கு உண்டான அறிகுறிகள் எவ்வாறு எல்லாம் தென்படலாம்? அனைவரும் கூறுவது போல வலியாக தென்படுவது வெறும் 50 சதவீதம்தான். பல பேருக்கு ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு இருக்கும். அதை வெளிப்படுத்த இயலாது. இன்னும் நிறைய பேருக்கு அந்த இடத்தில் அமுக்குவது போலவும், பிசைவது போலவும் இருக்கும். சில பேருக்கு வெறும் வாந்தி வரும் உணர்வாகத்தான் இருக்கும். சில பேருக்கு இதுவும் இருக்காது. உடலில் வியர்வை மட்டும் அதிகமாக வரும். இப்படி பல அறிகுறிகள் இருப்பதால் இப்படி வந்தால்தான் மாரடைப்பு என நாம் குறிப்பிட்டு கூற இயலாது. இந்த மாதிரி அறிகுறிகள் எங்கெல்லாம் தென்படலாம் என்றால். தாடைக்கு கீழும், வயிற்றுப் பகுதிக்கு மேலும் முன் அல்லது பின் எங்கேனும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்புக்கானதாக இருக்கலாம்.

இப்படிக் கூறுவதால் பலபேருக்கு பல இடங்களில் வலியானது உண்டாகிக் கொண்டுதான் இருக்கும். அதுவெல்லாம் மாரடைப்புக்கான அறிகுறிதானா? என கேள்வி எழலாம். இதற்கு விடை இல்லை. காரணம் மாரடைப்புக்கான அறிகுறி என்றால் வலியானது குறைந்தது 15 அல்லது 20 நிமிடம் நம்மை வாட்டி எடுக்கும். இவ்வாறு இல்லாமல் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடத்தில் வலியானது வந்து செல்கிறது என்றால், அது மாரடைப்புக்கானதாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. மேலும் நாம் மேற்கூறிய இடங்களில் வலி ஏற்பட்டால் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை. யாருக்கெல்லாம் மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதோ, அவர்கள்தான் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு ஒருவர் புகை பிடிக்கிறார் என்றால், அவருக்கு நெஞ்சுக்கரிப்பு அதிக நேரம் ஒரு 40 நிமிடம் உள்ளது என்றால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். அதை அவர் எளிதில் கடந்து போக இயலாது. எனது நண்பர் ஒருவர் ஓடும் போதும் அல்லது நடை பயணம் மேற்கொள்ளும்போதும் சிறிது ஏப்பம் வரும். ஒரு ஐந்து பத்து நிமிடம் உட்கார்ந்தால் சரியாகிவிடும் என கூறினார். நான் அவரை ஒரு ஈஸிஜி(பரிசோதனை) எடுக்க சொன்னேன். அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. எனவே சில நேரம் இவ்வாறு ஏப்பம் வருவது கூட மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் அல்லது மாரடைப்புக்கான முன்னறிவிப்பாகவும் இருக்கலாம்.

ஏன் மாரடைப்பு வரும்போது 50 % பேர்தான் மருத்துவமனைக்கு வந்து சேர்கின்றனர்? இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. நாம் முன்னர் கூறியது போல கையை இறுகப் பற்றிக் கொள்ளும் போது கையானது ரத்த ஓட்டம் இல்லாமல் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது. அதேபோல் இருதயத்தில் நாம் முன்னர் விளக்கியது போல பெரும்பகுதியான தசைகள் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் போது உடனடியாக மரணம் சம்பவிக்கும். இருதயத்தின் தசைகள் பலவீனம் ஆகிய உடன் இந்த நிகழ்வானது நிகழும். நாங்கள் அதை வீ.டி.வி.எஃப் என கூறுவோம். இதுவே மைனர் அட்டாக். அதாவது சிறிய அளவிலான மாரடைப்பு.

நாம் மேலே விளக்கியது போல சிறிய அளவிலான தசைகள்தான் இருதயத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும், இதயமானது சீராக இயங்காமல் வேகமாகத் துடித்து இரத்த ஓட்டத்தை கீழேயும் மேலேயும் செல்ல விடாமல் செய்து விடும். இதனாலும் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புகள் உண்டு. இதற்கு ஒரு காரணம். மாரடைப்பானது நிகழ்ந்து வீட்டிலேயே மரணிப்பது. இரண்டாவது காரணம் மாரடைப்புக்கான அறிகுறி என உணராமல், அதை தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு பின் இறுதிக் கட்ட நிலையில் மருத்துவமனையை வந்து சேர்வது அல்லது வராமல் பாதியிலேயே மரணிப்பது.

அதிக பேர் கசாயம் குடிப்பது அல்லது உஷ்ணம் எனக் காரணம் காட்டி எலுமிச்சம் பழத்தை பிழிந்து குடிப்பது, என மருத்துவமனைக்கு வராமல் காலத்தை கடத்துகின்றனர். இதற்காகத்தான் இந்தப் பதிவில் நாம் சுட்டிக்காட்டுகிறோம். இருதயமானது நடுவில் உள்ளது. இடப்பக்கமும் வலப்பக்கமும் அல்ல. மாரடைப்புக்கான அறிகுறி என்றால் அது நடுவில் ஏற்படும். அப்படியினில் எல்லோரும் பயந்து கொண்டுதான் இருக்க வேண்டுமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில்.

மாரடைப்பானது அனைவருக்கும் வரும்தான். ஆனால், எல்லோருக்கும் வரும் எனக் கூற முடியாது. மாரடைப்பானது யாருக்கெல்லாம் வரும் என நாம் ஒரு லிஸ்ட் போடுவோமா?

  • முதலில் பீடி அல்லது சிகரெட் புகைப்பவர்களுக்கு. இதில் புகையிலையை வாயில் வைத்து மெல்பவர்கள் அல்லது வேறு விதமாக பயன்படுத்துபவர்கள் எல்லோரும் அடக்கம்.
  • இரண்டாவது, சர்க்கரை நோய் உள்ளவர்கள்.
  • மூன்றாவது, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்.
  • நான்காவது, அதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள்.
  • அடுத்தது, வீட்டில் ரத்த உறவுகள் அண்ணன், தம்பி, அப்பா அல்லது தாய் யாருக்கேனும் மாரடைப்பு வந்தது என்றால் அது நமக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.
  • அடுத்தது உடல் பருமன் அதிகம் உள்ள நண்பர்களும், அடிக்கடி டென்சன் ஆகும் நபர்களுக்கும், உடல் உழைப்பு மிகவும் குறைவாக உள்ள நபர்களுக்கும் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் உள்ளது.

நாம் மேலே கூறிய காரணங்களைத் தகர்த்தால், அதாவது சர்க்கரை நோயாளி என்றால் சரியான உணவுமுறை எடுத்துக்கொள்வது, நடை பயணம் செல்வது; அதேபோல், உடல் உழைப்பு இல்லாதவர்கள் என்றால் உடல் உழைப்பில் ஈடுபடுவது, அதிக நேரம் ஒரே இடத்தில் இருப்பதைத் தவிர்ப்பது போன்ற காரணங்களால் நாம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தவிர்க்கலாம்.

மேலும், நாம் சிரமம் ஏற்படாமல் இருக்க, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ஒரு ஈசிஜி அதாவது பரிசோதனை செய்து கொள்வது நல்லது. நாம் மருத்துவமனைக்குச் சென்றால், அவர்கள் ஈசிஜி பிறகு பிளட் டெஸ்ட் ஏதேனும் எடுப்பார்கள். அதனால் நமக்கு சிறிது செலவு ஏற்படத்தான் செய்யும். இந்தச் செலவுக்கு பயந்து, நாம் வீட்டிலேயே இருந்தோமானால், அது நம் உயிருக்கான விலையைத் தந்துவிடும். எனவே நாம் செய்ய வேண்டியது இரண்டுதான். மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் நம்மிடம் இருக்கும் என்றால் அந்த காரணங்களைக் கலைவது.

இரண்டாவது, ஏதேனும் சிறிய அறிகுறி தென்பட்டாலும், நாம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, அதற்கான பரிசோதனைகளைச் செய்து கொள்வது. நாம் இந்த விஷயத்தில் மிகவும் ரிஸ்க் எடுப்பது சரியானதல்ல. இந்த சிறிய வீடியோவில் மாரடைப்புக்கான அனைத்து விஷயங்களையும் நாம் உள்ளடக்குவது எளிதானதல்ல. மக்களிடம் மாரடைப்பு சம்பந்தமான எழும் கேள்விகளுக்கு அடுத்த காணொளியில் விரிவாக விடையளிக்கிறோம்.. நன்றி.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

மாமா நீ நல்ல ஆசிரியர் ! உன்னை எனக்குப் பிடித்துள்ளது !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 3

வார்த்தைகளின் படிகத்தன்மை தொடர்ச்சி …

தேம்பியழுதபடியே தன்னைப் பள்ளியிலிருந்து விரட்ட வேண்டாமெனக் கெஞ்சிய சூரிக்கோ என்ற சிறுவனோ குழந்தைக்கே உரிய தாராள மனப்பாங்குடன் என்னை இரண்டு கரங்களாலும் கட்டிப் பிடித்தபடி, முப்பத்தெட்டு குழந்தைகளிலேயே முதலாவதாக, தன் வாழ்வின் முதல் பாடவேளையிலேயே என்னை மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கடித்தான். நான் பின்னால் மற்ற எல்லாக் குழந்தைகளிடமும் இதையே தான் எதிர்பார்க்க ஆரம்பிப்பேன். ”மாமா, நீ நல்ல ஆசிரியர். எனக்கு உன்னைப் பிடித்துள்ளது” என்று அச்சிறுவன் என் காதில் முணுமுணுக்கிறான்.

இதற்குப் பின் கெட்ட ஆசிரியராக இருக்க முடியுமா என்ன!

இவ்வளவு தாராளமாக, நம்பகமாக, எதிர்பாராவிதமாக, இன்னும் நான் ஒன்றும் சாதித்து விடும் முன்னராகவே நீ ஏன் என் மீது உன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாய்? நிச்சயமாக, உனக்கேற்ற ஆசிரியராக இருக்க நான் மிகவும் பாடுபடுவேன், முயற்சி செய்வேன், உன்னுடைய நம்பிக்கைகளை மெய்ப்பிப்பதற்காக நான் இரவும் பகலும் உழைப்பேன், உனக்காக உன்னோடு சேர்ந்து வளருவேன். சரி, துவக்கத்திலேயே, உனது பள்ளி வாழ்க்கையின் முதல் நிமிடங்களிலேயே எனது ஆசிரியர் மனசாட்சியின் தூய்மைக்கான பொறுப்பை ஏன் என் மீது சுமத்துகிறாய்!

இத்தருணத்தில் குழந்தைகள் என்னைப் பார்க்காமல் இருந்தால் நல்லது .

”பெஞ்சைப் பார்த்து தலையைக் குனியுங்கள்…. கண்களை மூடுங்கள்!… உங்களுக்கு மிகவும் சிரிப்பை வரவழைக்கக் கூடிய ஏதாவது ஒன்றை, உங்கள் குறும்புகளில் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள்.”

நான் சுதாரித்துக் கொண்டு, குழந்தைகள் தம் தலையைக் கரங்களால் பிடித்துக் கொண்டு, கண்களை இறுக்க மூடியபடி தம் குறும்புகளை நினைத்துக் கொள்வதைப் பார்க்கிறேன். சத்தம் போடாமல் மெதுவாக குழந்தைகளின் வரிசைகளிடையே நடந்தபடியே கிசுகிசு வெனச் சொல்கிறேன்:

”பெரும் சிரிப்பேற்படுத்தக் கூடியதை…. உங்களது குறும்புகளிலிருந்து…. சிரிப்பானவற்றை… இடைவேளையின் போது எனக்கு அவற்றைச் சொல்லுங்கள்…”

திடீரென ஒரு சலசலப்பு கேட்டது. மூலிகை மருந்துகள் அடங்கிய நீரூற்று ஒன்று பூமியைப் பிளந்து கொண்டு மேலே வருவதைப் போலிருக்கிறது. இந்த அடக்கமான, அமுக்கமான சிரிப்பை விவரிப்பதே கடினம். இது சிறிது சிறிதாகப் பெருகி வெடிச்சிரிப்பாக உருவெடுத்தது. முப்பத்தெட்டு குழந்தைகள் தலையைக் குனிந்தபடி, கண்களை மூடிக்கொண்டு கலகலவென சிரிக்கின்றனர். பின் அனைவரும் அமைதியானர்கள். ”படிகத் தன்மையுள்ள கண்ணாடிக்குத் திரும்பி வர வேண்டும்.”

”நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நாம் இப்போது வார்த்தைகளைப் பார்த்தோம், இனி வாக்கியங்களைக் கவனிப்போம்….. தலையை உயர்த்துங்கள்!… நேராக நிமிருங்கள்!”

கரும்பலகையை மூடியிருந்த திரையை அகற்றுகிறேன். அங்கே ஒரு படம் உள்ளது. அதில் ஒரு சிறுவன் புத்தகம் படிக்கிறான்.

”இப்படத்தைப் பார்த்து வாக்கியத்தை அமையுங்கள். இச்சிறுவன் எதைச் செய்கிறான்?”

”சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்.”

தாம்ரிக்கோ வாக்கியத்தை உருவாக்க வேண்டுமென எண்ணவில்லை. படத்தைப் பார்த்து அவள் என் கேள்விக்குப் பதில் சொன்னாள், அவ்வளவு தான். இப்போது, ”சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்” எனும் இப்பதிலை வாக்கியம் என்போம்.

”இவ்வாக்கியத்தை எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள் பார்க்கலாம்.”

குழந்தைகள் ஒரே குரலில் சொல்லும் பதில்களை என் கரங்களால் நான் ஒழுங்குபடுத்துகிறேன். திரையை மூடிவிட்டு மூன்று நீல நிற முக்கோண அட்டைவில்லைகளை (வார்த்தைகளின் அடையாளங்களை) எடுக்கிறேன்.

இவ்வாக்கியத்தை எழுத்தைக் குறிக்கும் அட்டைவில்லைகளின் உதவியால் ”எழுதுகிறேன்”. சிறுவன் (அனைவருக்கும் தெரியும்படியான ஓரிடத்தில் ஒரு அட்டைவில்லையை வைக்கிறேன்)… புத்தகத்தை (அருகே அடுத்த அட்டை வில்லையை வைக்கிறேன்)… படிக்கிறான் (பின் மூன்றாவது அட்டைவில்லையை வைத்து இறுதியில் முற்றுப் புள்ளியுடன் கூடிய அட்டைவில்லையை வைக்கிறேன்).

”எங்கே இந்த வாக்கியத்தைப் படியுங்கள்”. நான் ஒவ்வொரு அட்டைவில்லையாக சுட்டிக் காட்ட குழந்தைகள் படிக்கின்றனர்”: ”சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்”.

இப்போது ஒரு சிவப்பு நிற அட்டைவில்லையை எடுக்கிறேன்.

”இந்த அட்டையில்லை ‘சுவாரசியமான’ எனும் சொல்லைக் குறிக்கிறது. எங்கே திரும்பச் சொல்லுங்கள். சரி, இப்போது இந்த வார்த்தையை வாக்கியத்தின் எந்த இடத்தில் வைத்தால் நன்றாக இருக்கும்?”

ஆரம்பத்தில் வைத்தால் நன்றாயிருக்கும் என்று யாரோ பதில் சொன்னார்கள். சரி, பார்ப்போம்:

சுவாரசியமான சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்.

வேறு பதில்களும் வந்தன:

சிறுவன் புத்தகத்தை சுவாரசியமான படிக்கிறான்.

சிறுவன் சுவாரசியமான புத்தகத்தைப் படிக்கிறான்.

சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான் சுவாரசியமான.

மற்ற அட்டைவில்லைகளின் இடையில் சிவப்பு நிற அட்டைவில்லை இடம் மாறிக் கொண்டே இருக்கிறது. எல்லா மாதிரிகளையும் முயற்சி செய்த பின் ”சுவாரசியமான” எனும் சொல்லை இரண்டாவது இடத்தில் வைக்குமாறு குழந்தைகள் எனக்கு ஆலோசனை கூறுகின்றனர். பின் நான் கேள்விகளைத் தொடுக்கிறேன்:

”இந்த வாக்கியத்தில் எவ்வளவு சொற்கள்?.. இந்த வாக்கியத்திலிருந்து கடைசிச் சொல்லை எடுத்து விட்டால்” – நான் கடைசி அட்டைவில்லையை எடுக்கிறேன் – ”என்ன மிஞ்சும்?”

குழந்தைகள் ”படிக்கின்றனர்”: ”சிறுவன் சுவாரசியமான புத்தகத்தை”.

”இது நன்றாக இல்லை, வார்த்தையை பழைய இடத்திலேயே திரும்ப வையுங்கள்!” யாரோ ஆலோசனை கூறுகின்றனர்.

அதை வைத்து விட்டு மூன்றாவது சொல்லை எடுக்கிறேன். குழந்தைகள் ”படித்துவிட்டு” சிரிக்கின்றனர்.

”நன்றாக இல்லை!”

அட்டைவில்லையைத் திரும்ப வைக்கிறேன். இரண்டாவது சிவப்பு நிற அட்டைவில்லையை எடுக்கிறேன்.

”இது ‘மிகவும்’ எனும் சொல். இச்சொல்லை எந்த சொற்களுக்கு இடையில் வைத்தால் நன்றாக இருக்கும் சொல்லுங்கள். என் காதில் மெதுவாகச் சொல்லுங்கள்.”

ஒவ்வொருவரையும் விரைவாக அணுகுகிறேன்: ”நன்றி!….. நல்லது!… நன்றி!..” இதில் கிட்டத்தட்ட யாருமே தவறிழைக்கவில்லை. போன்தோ திடீரென என் கையைப் பற்றிக் கொண்டு, சிரித்தபடியே “நான் உங்களை விட மாட்டேன்” என்கிறான்.

“சரி, அப்படியெனில் என்னைப் பிடித்துக் கொள், சேர்ந்து வகுப்பறையைச் சுற்றுவோம்.”

போன்தோ என் பின்னால் வருகிறான். “மிகவும்” எனும் சொல்லை “சிறுவன்” எனும் சொல்லிற்கும் “சுவாரசியமான” எனும் சொல்லிற்கும் இடையில் வைக்கும்படி நீங்கள் கூறினீர்கள்.”

நான் வேண்டுமென்றே வேறு அட்டைவில்லைகளை நகர்த்தி விட்டு அவற்றின் இடையே புதியதை வைக்கிறேன். போன்தோவுடன் சேர்ந்து ஒரு புறமாக விலகி நின்று சற்று பேச்சை நிறுத்துகிறேன். ஒரு சிறுமி மட்டுமே நான் செய்ததைக் கவனிக்கிறாள்.

”நீங்கள் வார்த்தையைச் சரியானபடி வைக்கவில்லை!” மாயா கரும்பலகையை நோக்கி ஓடுகிறாள், “இதை இங்கே வைக்க வேண்டுமே தவிர அங்கல்ல.”

அவள் அட்டைவில்லைகளை மாற்றியமைக்கிறாள். நான் அவள் கரங்களைப் பற்றிக் குலுக்குகிறேன்.

”நன்றி, மாயா, மிக்க நன்றி, நீ என் தவறைக் கண்டு பிடித்தாய்!”

இப்போது நாங்கள் மூவருமாக வகுப்பின் முன் நிற்கிறோம்.

”சரி, நாம் இன்று என்ன செய்தோம் என்று பார்ப்போம் வாருங்கள்.”

”நாங்கள் உங்கள் காதில் முணுமுணுத்தோம்…”

”கண்களை மூடிக் கொண்டு பெஞ்சில் தலையைக் கவிழ்த்த படி இருந்தோம்…”

”அட்டைப்பெட்டியில் வார்த்தைகளைச் சேகரித்தோம்…”

”நீங்கள் மெதுவாக கிசுகிசுவென கூறிய வார்த்தைகளை நாங்கள் கண்டுபிடித்தோம்…”

படிக்க:
உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !

”பிறகு வாக்கியம்…”

”வாக்கியத்தில் நாங்கள் ’சிவப்பு’ வார்த்தைகளைச் சேர்த்தோம்…”

”எங்கள் குறும்புகளை நினைத்துப் பார்த்தோம்…”

”சிரித்தோம்…”

நான்: ”தாய் மொழிப் பாட வகுப்பு உங்களுக்குப் பிடித்திருந்ததா?”

”மிகவும்… ஆம்… பிடித்திருந்தது…”

இனிய மணியொலி கேட்கிறது. முதல் பாடம் முடிந்து விட்டது. ‘

”அடுத்த பாடம் கணிதம்! எங்கே, குழந்தைகளே, எழுந்திருங்கள்!…”

எல்லா சிறுவர்களையும் பார்த்துச் சொல்கிறேன்: ”வகுப்பறையில் உள்ளே வரும்போதும் வெளியே போகும் போதும் முதலில் சிறுமிகளுக்கு இடம் விடுங்கள்!.. இப்போது ஓய்வெடுங்கள்!”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

மனித குலத்தை எச்சரிக்கிறது மேதின வரலாறு ! பத்திரிக்கைச் செய்தி

PP Logo

1-5-2019

பத்திரிக்கைச் செய்தி

மனித குலத்தை எச்சரிக்கிறது மேதின வரலாறு !

துப்பாக்கித் தோட்டாக்கள், தூக்குமேடை என உலக தொழிலாளி வர்க்கம் நெருப்பாற்றில் நீந்தி பெற்ற உரிமைகளான, எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர புத்துயிர்ப்பு

இன்று மே தினக் காட்சிப் பொருளாய் !

கார்ப்பரேட் அதிகார யுகத்தில் பொறியாளர், மருத்துவர், பேராசிரியர், எழுத்தாளர், விஞ்ஞானி என அனைத்துப் பிரிவினரும் கூலிகளாக மாற்றப்பட்ட நிலையில்,

உழைப்புச் சந்தையே அருகும் சூழலில் – எந்த வேலை கிடைத்தாலும், எத்தனை மணி நேரமானாலும்,

எவ்வளவு சம்பளமானாலும், மாடுகளாய் உழைத்து, உரிமைகளை மெல்ல இழந்து,

நிரந்தரமில்லா வாழ்வில் அல்லாடும் உழைக்கும் மக்களே,

இனி எட்டு மணி நேர வேலை, பணிபாதுகாப்பு என கோரிக்கை வைப்பதில் என்ன பயன்?

வேலை வாய்ப்புக்களை ஒழித்து, மனித குலத்தினையே அழிவுக்குத்தள்ளும்,

முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அரசு கட்டமைப்பை வீழ்த்தி,

மக்கள் அதிகாரத்தை நிறுவாமல் இழந்த உரிமைகளை பெற முடியுமா ?


தோழமையுடன்

வழக்கறிஞர். சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?

தொழில் நுட்பத்தால் வழிநடத்தப்படும் சமூகமாக நாம் மாற்றப்பட்டு வருகிறோம். நாம் எப்படி வாழவேண்டும் நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதை அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி இன்று வடிவமைத்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன்னால் நாம் ஒரு கையடக்க டிஜிட்டல் எந்திரத்தில் விரல்களால் தேய்த்து தேய்த்து பக்கங்களைத் தள்ளி ஒரு மின் புத்தகத்தை படிக்க முடியும் என்பதை கற்பனை செய்திருக்க மாட்டோம். இன்று அதை தொழில்நுட்பம் சாதித்திருக்கிறது. தற்காலம் நம்மில் பெரும்பான்மையினர் டிஜிட்டல் வகையிலான வாசிப்பையே கொண்டிருக்கிறோம். அது கிண்டில் மூலம் அல்லது ஒரு மின் புத்தகத்தை பி.டி.எஃப் கோப்பாக வாசிப்பதாக இருக்கலாம். அல்லது உங்களது ஆண்ட்ராய்டு போனில் நடப்பு செய்திகளையோ வாட்ஸ்அப் அரட்டைகளை மேய்வதாக இருக்கலாம்.

எனினும் இன்றும் கூட நம்மில் சிலர் டிஜிட்டல் வாசிப்பை வசதியாகவும் வேறு சிலரோ அச்சு புத்தக வாசிப்பை வசதியாகவும் கருதுகிறார்கள். இந்த இரண்டு முறைகளிலும் என்ன வேறுபாடு இருக்கிறது, இரண்டின் சாதக பாதகங்கள் என்ன என்பன குறித்து விவாதிப்போம்

அச்சு வாசிப்பு அழிந்து விட்டது, அது டைனோசர் போல் அழிவிற்கான நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறது என்று சில டிஜிட்டல் சித்தாந்தவாதிகள் கருதுகின்றனர். உண்மை என்னவோ வேறொன்றாக இருக்கிறது. பொதுவில் படிப்பது என்று எடுத்துக் கொண்டால் மக்கள் அச்சு புத்தகமாக படிப்பதற்கு தான் விரும்புகிறார்கள். டிஜிட்டலில் படிப்பதற்கு பெரிய அளவில் விரும்புவதில்லை. அல்லது டிஜிட்டல் உலகில் வாசிப்பு என்றொரு துறையை அவர்கள் முக்கியமான ஒன்றாக கருதுவதில்லை.

டிஜிட்டல் வாசிப்பை பொறுத்த வரையிலும் அது குறுகிய கட்டுரைகள் குறுஞ்செய்திகள் ஆகியவற்றை மட்டுமே படிப்பதற்கு அதிகம் பயன்படுத்துகிறது. இப்படித்தான் சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் நம்மிடம் பிரபலமாகியிருக்கிறது. ஃபேஸ்புக்கில் வரும் நிலைத்தகவலில் (Read more) எனப்படும் மேலும் என்ற இணைப்பு இருந்தால் 100-க்கு 80 பேர் அதை சொடுக்கி படிப்பதிதல்லை. அப்படியே சொடுக்கினாலும் அதை சுட்டியின் உதவியோடு பறந்து பறந்து படிப்பார்கள். முழுக்கட்டுரையையும் ‘பார்ப்பார்களே’ ஒழிய படிப்பார்கள் என்று சொல்ல முடியாது.

மேலும் டிஜிட்டல் வாசிப்பில் கவனச் சிதறதல் ஒரு முக்கியமான குறை. இணைய இணைப்போடு ஒரு மின் புத்தகத்தை நாம் வாசிக்கும் போது திரையில் தென்படும் தொடர்புடைய அல்லது நமது உலவல் வரலாறு தொடர்புடைய ஏதாவதொரு இணைப்பை அழுத்தி அதன் பிறகு அடுத்த இணைப்பு என்று கடத்தப்படுவோம். இணைய இணைப்போடு வேலை செய்யும் கணினித் துறை சார்ந்தவர்களது வேலைத்திறனையும் இந்தப் பண்பு பாரதூரமாக பாதிக்கிறது. இதுவே பிரவுசிங் எனப்படும் இணைய உலவலாக கருதுப்படுகிறது.

அச்சு புத்தக வாசிப்பின் பலன்கள்

அச்சு புத்தக வாசிப்பு என்பது அளப்பரிய பல பலன்களை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சிலர் சமீபத்திய வருடங்களில் செய்த ஆய்வுகளில் இருந்து தெரிய வந்திருக்கின்றது. அதன்படி புத்தக வாசிப்பு மட்டுமே நீங்கள் கவனமாக படிப்பதற்கும் படித்ததை கிரகிப்பதற்கும், கிரகிப்பதை மனதில் பதிய வைத்து ஒழுங்கு படுத்துவதற்கும் பயன்படுகிறது.

ஒரு அச்சு புத்தகத்தை வாசிக்கும் பொழுது நமது மூளையானது சிக்கலான தகவல்களை அதன் இணைப்பை, இணைப்பு உருவாக்கும் அரூபமான கருத்துச் சித்திரத்தை,  நீண்ட வாக்கியங்களை புரிந்து கொள்ளும் விதமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. அதாவது புத்தக வாசிப்பின் போது நமது மூளை அதற்கேற்றபடி புதியதொரு இயங்கு நிலையில் தகவமைத்துக் கொள்கிறது.

இந்த மாற்றம் டிஜிட்டல் வாசிப்பின்போது நடப்பதில்லை. இவையெல்லாம் நம்மை அறியாமல் மூளையில் நடக்கும் மாற்றங்கள் என அந்த ஆய்வுகள் கூறுகின்றன. புத்தக வாசிப்பு என்பது ஒரு குவிமையக் கவனப் பணியாக இருப்பதால் ஒன்று நீங்கள் அந்த புத்தகத்தை ஒன்றி விரும்பிப் படிக்க வேண்டும். விருப்பமில்லை என்றால் எடுத்த புத்தகத்தை மூடிவிட்டு வேறு ஏதாவது செய்யப் போய்விடுவீர்கள்.

டிஜிட்டல் உலகில் இந்த விருப்பமின்மை என்பது பல்துறை கவன ஈர்ப்பால் இணைய உலவலை நாம் மூடுவதற்கு பதில் வெறொன்று என்று தாவிச் செல்வதற்கு தோதாக இருக்கிறது. இதன்படி மூளையானது டிஜிட்டல் என்று வந்தாலே குரங்கு போன்றதொரு தாவல் நிலைதான் பொருத்தமானது என்று ஏற்றுக் கொள்கிறது. கவனத்தை இழந்து நிற்கிறது.

வாசிப்பு என்பது மனித சமுதாயத்தின் தொழில்நுட்ப உரையாடல் என்கிறார்  நார்வே நாட்டின் ஸ்டாவென்ஜர்  பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் ஆனி மேங்கன் (Anne Mangen of Norway’s University of Stavenger). என்ன இருந்தாலும் பௌதீக ரீதியாக ஒரு புத்தகத்தைத் தொட்டுப் படிப்பது உணர்ச்சி சார்ந்த அனுபவமாக இருக்கிறது என்கிறார் அவர். இது முற்றிலும் உண்மை என்பவர் வாசிப்பு என்பது ஒரு தாவித்தாவி இங்கும் அங்கும் மேய்வது அல்ல அது குறிப்பான கவனத்தைக் கோரும் ஒன்று என்கிறார் ஆனி.

டிஜிட்டல் வாசிப்பின் பிரச்சினைகள்

கணினித் திரையில் வாசிப்பது என்பது அச்சு புத்தக வாசிப்பை விட வேகமாக நடந்தாலும் நமது வாசிப்பின் மூலம் குறைவான தகவல்களை மட்டுமே மூளை பெறுகிறது. அப்படி எந்தக் குறைவான தகவல்களை நமது மூளை பெறுகிறது என்பது நமது வளர்ப்பு, ரசனையோடு தொடர்புடையது.

பேருந்து நிலையத்தில் திருடன் கைது என்ற தலைப்பை விட “பஸ் ஸ்டாண்டில் டிப் டாப் உடையுடன் பிக்பாக்கெட் ஆசாமி கைது” என்ற தலைப்பைப் பார்த்தால் நாம் விரும்பிச் செல்வோம். டிஜிட்டல் உலகில் இத்தகைய தலைப்புகள், பன்ஞ்ச் டயலாக்குகள், மெல்லிய முரண்பாட்டைக் கொண்ட காமடி வழக்குகள் போன்றவைகளையே அதிகம் மூளை கவனத்தில் கொள்கிறது. இதற்கு சான்றாக ஒன் இந்தியாவின் தலைப்புகளையும் உள்ளீடற்ற அதன் செய்திகளையும் கூறலாம்.

படிக்க:
செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு
♦ 42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : வாசிப்பின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்

மேற்கத்திய நாடுகளில் மாணவர்களிடையே பாடப்புத்தகம் சார்ந்த வாசிப்பில் என்ன போக்கு நிலவுகிறது என்று பார்க்கலாம். டிஜிட்டல் வாசிப்பு என்பது ஆழமான வாசிப்பிற்கு பதிலாக மேலோட்டமான வாசிப்பையே ஊக்குவிக்கிறது. இதன் பொருட்டு பெரும்பான்மையான மாணவர்கள் ஒரு டிஜிட்டல் கட்டுரையை அச்சில் எடுத்துக்கொண்டு படிக்கிறார்கள். இது அவர்களை கட்டுரைக்குள் நுழைவதற்கும் முக்கியமான பாகத்தை வண்ணமிட்டு குறிப்பதற்கும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தில் நாம் எங்கே நிற்கிறோம் எது புரிந்தது புரியவில்லை என்பதை நிதானித்து முடிவு செய்வதற்கும் உதவி செய்கிறது.

நீங்கள் டிஜிட்டலில் வாசிப்பதும் அச்சு புத்தகத்தை வாசிப்பதும் இருவேறுபட்ட அனுபவங்களாக நடப்பதால் நமது புரிந்துகொள்ளும் திறனை இரண்டும் வேறுபட்ட அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி சாதக பாதகங்களை நிகழ்த்துகின்றன.

அச்சு வாசிப்பும் டிஜிட்டல் வாசிப்பும் ஒரு ஒப்பீடு

டிஜிட்டல் – அச்சு எனும் இரண்டு வகைப்பட்ட வாசிப்பு அனுபவங்களின் முதன்மையான வேறுபாடு என்னவென்றால் அச்சு வாசிப்பில் வாசிக்கும் போது நீங்கள் அந்த புத்தகத்தின் கனத்தையும் வார்த்தைகளின் நீளத்தையும் உணர்கிறீர்கள். அச்சு புத்தகத்தினுடனான நேரடியான தொடர்பு அந்த புத்தகத்தின் எழுத்து மற்றும் கருத்து ரீதியான வரைபடத்தை நமது மூளை உணருமாறு செய்கிறது. மேலும் நாம் என்ன வாசிக்கிறோம் என்பதை நின்று நிதானித்து புரிந்து கொள்வதற்கும் அச்சு புத்தகம் உதவுகிறது. மறுபுறத்தில் டிஜிட்டல் வாசிப்பு என்பது நமது கண்களுக்கு அதிக அழுத்தத்தையும் வேலையையும் கோருவதால் வாசிப்பு என்பது கடினமாகிறது.

இதன் பொருட்டே நவீன தொழில்நுட்பம் நமது கண்களுக்கு அதிக வேலையை கொடுக்காத வண்ணம் திரைகளை கண்ணுக்கினியதாக மாற்றி வருவதும் உண்மைதான். அதன்படி கிண்டில் (Kindle) வாசிப்பு கணினித் திரை வாசிப்பை விட மேம்பட்டதாக இருக்கிறது. அதில் கண்கள் வெண்திரை வெளிச்சத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது. மேலும் அதன் திரை கண்ணாடிக்கு பதில் வேறு ஒரு பொருளில் தயாரிக்கப்பட்டிருப்பதால் ஒளியின் எதிர்விளைவு (ரிஃபிளக்சன்) என்பது நிகழ்வதில்லை அல்லது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது. இப்படியாக கண் மற்றும் அதன் பிரச்சினைகளை நவீன தொழில்நுட்பம் குறைப்பதற்கு முயன்று வருகிறது.

சரி இது தான் பிரச்சனை என்றால் நாம் நமது டிஜிட்டல் வாசிப்பையும் புத்தக வாசிப்பை ஒத்திசைவாக பயன்படுத்த முடியுமா என்று பார்க்க் வேண்டும். அதற்கான பதில் முடியும் என்பதுதான். எதை டிஜிட்டலில் வாசிக்க வேண்டும் எதை புத்தகத்தில் வாசிக்க வேண்டும் எதை மேலோட்டமாக படித்தால் போதும் அதை ஆழமாக அசைபோட்டு படிக்க வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் முடிவு செய்யும் பட்சத்தில் இரண்டு வாசிப்பையும் முரண்படாமல் பயன்படுத்த முடியும்.

நினைவில் கொள்ளுங்கள் வினவில் இந்த கட்டுரையை நீங்கள் டிஜிட்டல் வடிவத்தில் தான் வாசிக்கிறீர்கள் ஆனால் இது உங்களிடம் மேலோட்டமான சிந்தனையை ஏற்படுத்துகிறதா ஆழமான அசைவுகளை ஏற்படுத்துகிறதா யோசித்துப் பாருங்கள். இந்தக் கட்டுரையை கணினி சாராமல் பிரிண்ட் அவுட் போட்டு படித்துப் பார்த்தால் இதன் உள்ளடக்கம் இன்னும் மேம்பட்ட அளவில் நம்மில் உள்ளிறங்கும் என்பது உண்மைதானே?

டிஜிட்டல் வாசிப்பின் பிரச்சினைகள் நவீன தொழிற்நுட்பத்திற்கு தோல்வியா?

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. டிஜிட்டல் வாசிப்பை விட புத்தக வாசிப்பு தான் மேம்பட்டது என்ற கருத்து நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நாம் நம்மை தகவமைத்துக் கொள்கிறோம் என்று நவீன உண்மையை மறுக்கிறதா? ஏனெனில் இதற்கு முன் பல துறைகளில் இந்த பிரச்சனைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

நாடகம் வரும்போது கூத்து அழிந்தது; சினிமா வரும்போது நாடகம் அழிந்து விட்டது; தொலைக்காட்சி வரும்போது சினிமா நலிவடைந்தது. இணையம் வந்த பிறகு தொலைக்காட்சியே தத்தளிக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த மாற்றங்களை, கலைரசனையை, அறிவுத்திறனை நமது மூளை ஏற்றுக் கொண்டு மாறியிருப்பது உண்மைதானே?

நாடகங்களைப் போல வசனத்தையும், முழு வடிவிலான நடிப்பு காட்சிகளுக்கும் பதில் நவீன சினிமாவில் அல்லது நவீன ஓவியத்தில் குறைவான காட்சிகள், நெருக்கமான காட்சிகள், வசனமற்ற காட்சிகள் மூலம் நாம் ஒரு ஆழமான அனுபவத்தை பெறுவதில்லையா?

இணையப் பத்திரிகைகள் வந்தபிறகு அச்சுப் பத்திரிக்கைகள் தங்களது வணிகத்தை இழந்து வருகின்றன என்பது மேற்கத்திய நாடுகளில் ஒரு தவிர்க்க இயலாத உண்மை. அதன் பொருட்டே கார்டியன் போன்ற பத்திரிகைகளெல்லாம் விளம்பரங்களை இழந்து மக்களிடையே நன்கொடை பெற்று ஊடகத்தை நடத்தும் நிலையைப் பார்க்கிறோம். இப்படி இருக்கையில் புத்தக துறையில் மட்டும் அச்சுப் புத்தகம் மட்டும் அதிகம் இருப்பதும் வாசிப்பதும் சாத்தியமா? இந்த கேள்விக்கும் நாம் பதிலறிய வேண்டும்.

மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படிக்கும் லாரன் சிங்கர் ஒரு ஆசிரியரும் கூட. அவர் தனது சிறார் மாணவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். ஆரம்பத்தில் அவர் நம்மை போல குழந்தைகளுக்கு புத்தகங்கள் மூலம் வாசிப்பை சொல்லிக் கொடுக்கிறார். அதன்பிறகு அந்த குழந்தைகள் அனைவருக்கும் ஒரு ஐபேட் கொடுக்கப்பட்டு வாசிக்கச் சொல்கிறார். என்ன அதிசயம் குழந்தைகள் அப்போதும் அதே போல தான் வாசித்தார்கள். என்ன… ஒரு வித்தியாசமான எந்திரத்தை கொடுத்து படிக்க சொல்வதாக குழந்தைகள் கருதினார்கள், அவ்வளவுதான்.

இது தனக்கு அதிசயமாக இருந்தது என்கிறார் சிங்கர். அவருடைய கருத்தின்படி முந்தைய அச்சுபுத்தக வாசிப்பும், இப்போதைய கணினி வாசிப்பும் இருவேறுபட்ட திறன்களை கோருகிறது. எதிர்காலத்தில் இது குறித்து நாம் ஒரு தெளிவான புரிதலை பெற முடியும். அதாவது மாணவர்கள் டிஜிட்டல் வாசிப்பின் போது எத்தகைய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது நாம் புரிந்து கொண்டிருப்பது போல இருக்காது என்கிறார் அவர்.

லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்த போது நாம் பல தொலைபேசி எண்களை மனப்பாடமாக அறிந்து வைத்திருந்தோம். கம்பியில்லா தொலைபேசியான செல்பேசி வந்தபிறகு அப்படி மனனம் செய்ய வேண்டிய தேவை இல்லை. எல்லா எண்களையும் செல்பேசி எந்திரமே வைத்திருக்கிறது. கால்குலேட்டர் வருவதற்கு முன்னர் எவ்வளவு பெரிய பெருக்கல், வகுத்தலாக இருந்தாலும் கையாலே கணக்கு போட்டு கண்டுபிடிப்போம். இப்போது கால்குலேட்டர் வந்து விட்டதால் மூளை திறனை இழந்து விட்டதா என்றால் இல்லை. புதிய கருவிகளை நமது பழைய திறன்களுக்கு தேவையில்லை என்று அறிவித்து விட்டபடியால் நமது மூளை புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் நிலையை எய்துகிறது. அப்படி நாம் நம்மை அப்டேட் செய்து கொள்கிறோமா என்பதே பிரச்சினை.

சிங்கரும் மற்றுமொரு பேராசிரியருமான முனைவர் பாட்ரிகா அலெக்சாந்தர் இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின்படி வாசகர்கள் டிஜிட்டல் வாசிப்பு குறித்து சிக்கலான மனநிலையை உருவாக்கிக் கொள்வதில்லை. மேலும் அவர்களது பார்வையின்படி டிஜிட்டல் வாசிப்பு என்பது இருபத்தோராம் நூற்றாண்டு வாழ்க்கையை கற்றுக் கொள்வதின் ஒரு பகுதி என்கிறார்கள். இரு வேறுபட்ட வகைகளில் நாம் வாசிப்பது என்பது பிரச்சினை இல்லை. மாறாக எப்போது நாம் டிஜிட்டல் வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு புரிதல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இருப்பினும் சிங்கர் ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறார். சில நேரம் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் அறிய வேண்டுமென்றால் அவர்கள் டிஜிட்டல் வாசிப்பை மேற்கொள்ளலாம். ஏனெனில் டிஜிட்டல் வாசிப்பு மட்டுமே அச்சு வாசிப்பை விட வேகமாக வாசிக்கக்கூடிய சாத்தியங்களை கொண்டிருக்கிறது. அதே நேரம் ஆழமாக புரிந்து கொள்வதற்கும் பொருள் அறிந்து புரிந்து கொள்வதற்கும் மாணவர்கள் குறிப்பிட்ட கட்டுரையை டிஜிட்டலில் இருந்து அச்சில் பிரிண்ட் அவுட் எடுத்து கொள்வது நல்லது. ஆகவே நாம் என்ன கற்கும் முறையை ஏற்கிறோம் என்பது எதை எப்படி கற்கப் போகிறோம் என்பதோடு தொடர்புடையது.

ஆனி அருண்டேல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் ஆங்கிலத் துறை பேராசிரியர் வேயன் கோபிலின்ஸ்கி என்பவரது கருத்தை பார்ப்போம் (English professor, Wayne Kobylinski, Anne Arundel Community college) “என்னுடைய வகுப்பில் பெரும்பாலும் மாணவர்கள் அச்சு நூல்களை வாசிக்க தான் விரும்புகிறார்கள். எனினும் யாராவது ஒருவர் மின் புத்தகத்தை பயன்படுத்த வா என்று கேட்டால் நானும் மறுக்காமல் ஒத்துக் கொள்வேன். என்னுடைய மாணவர்களுக்கு அச்சுப் புத்தகங்கள் மட்டுமே படிப்பதற்கு ஈர்ப்பாக இருக்கின்றன”, என்கிறார் அவர்.

இதற்கு நேர்மாறாக கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோடி டொனாவன் என்ன சொல்கிறார் என்றால் தனது மாணவர்கள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவத்தில் தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் அச்சிட்ட நூல்களை விரும்புவதில்லை. ஆனால் எங்களது ஆசிரியர்கள் இரண்டையுமே பயன்படுத்துமாறு கூறுகிறார்கள் என்கிறார்.

மேலும் டொனாவன் கவனித்தபடி அவரது மாணவர்கள் டிஜிட்டல் வாசிப்பை இலகுவாக பயன்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள். டிஜிட்டலில் வாசிக்கும் பொழுது எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்க முடியும். அதே சமயம் அச்சிட்ட நூல்கள் என்றால் ஓரிரு முறை மட்டும் தான் படிக்கத் தோன்றும்.

உலகளாவிய அளவில் நாம் டிஜிட்டலில் வாசிப்பது என்பது இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது உண்மையில். டிஜிட்டல் ஊடகம் என்பது நமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. அது பேஸ்புக் ஆகவோ வாட்ஸ்அப் ஆகவோ அல்லது விவாதிக்கும் குழுமங்கள் ஆகவோ இருக்கலாம். இது குறித்து 180-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் 33 நாடுகளில் ஒருங்கிணைந்து ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள்.

(Anne Mangen, Chair of the Action, working at the Reading Centre at the University of Stavanger.) இந்த ஆய்வு குறித்து ஆய்வு குழுமத்தின் அங்கத்தினரும் ஸ்டாவேன்ஞ்சர் பல்கலைக் கழகத்தில் பணிபுரிபவருமான ஆனி மேங்கன் கூறுகிறார்.

டிஜிட்டல் உலகில் நாம் எவ்வளவு நேரம் வாசிக்கிறோம் எதை வாசிக்கிறோம்?

இதற்கான விடை என்பது வாசிப்பு என்பதை நாம் எப்படி வரையறுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. இத்துறையில் இது குறித்த புள்ளி விவரங்கள் அனைத்தும் மேற்கண்ட வரையறையை பொறுத்தே அமைகிறது. நமது வரையறையில் பாடப்புத்தகங்கள் அதிலுள்ள படங்கள் சமூக வலை தளங்கள் பல்வேறு இணைய தளங்களுக்கு இட்டுச்செல்லும் ஹைபர் லிங்குகளை கொண்ட உள்ளடக்கங்கள் அனைத்தும் இருக்கின்றன.

படிக்க:
உலக புத்தக தினம் : புத்தக வாசிப்பு – பலன்கள் பதினைந்து
♦ 2017-ம் ஆண்டின் புத்தக வாசிப்பு – கருத்துக் கணிப்பு

இதன்படி ஒவ்வொரு நாளும் நாம் மின்னஞ்சல்கள், அரட்டை செய்திகள், நடப்பு செய்திகள், அலுவலக ஆவணங்கள், பதிவுகள், விவாதங்கள் அனைத்தையும் படிக்கிறோம். சுவாரஸ்யமான முறையில் இசையும் சினிமாவும் கூட முற்றிலும் டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. இதை ஒப்பிடும் போது பல நாடுகளில் டிஜிட்டல் புத்தகங்கள் என்பது ஒட்டுமொத்த இணைய உலகில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவைத்தான் கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் வாசிப்பின் அளவு அதிகரித்து வந்ததோடு தற்போது அது ஒரு முக்கியமான துறையாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

கிண்டில் போன்ற தொழில்நுட்ப சாத்தியங்கள் தற்போது கிடைத்திருந்தாலும் அது இணையத்தோடு இணைக்கப்பட வில்லை என்றாலும் வாசகர்களைப் பொறுத்தவரை அச்சுப் புத்தகங்கள் படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இதில் அடைவதில்லை.

எப்போது நாம் அச்சிட்ட புத்தகங்களை படிக்க வேண்டும் என முடிவு செய்கிறோம்?

இக்கேள்வியை பொருத்தவரை பல பகுதிகள் காரணங்கள் நிலைமைகள் தீர்மானிப்பதாக இருக்கின்றன. ஒரு வாசகர் என்ன வகை புத்தகத்தைப் படிக்கிறார் அதன் பயன் மதிப்பீடு என்ன போன்றவைகளும் வாசிக்கும் முறையை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதில் முதன்மையானது அளவு மிக நீண்ட கட்டுரைகள் நீண்ட ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை படித்து உள்வாங்குவதற்கும் குறிப்பெடுத்துக் கொண்டு படிப்பதற்கும் பலரும் மாணவர்களும் கூட அச்சுப் புத்தகங்களையே விரும்புகிறார்கள். குறுகிய கட்டுரைகள் என்றால் அப்போது நிலைமை வேறாக இருக்கிறது

இறுதியாக, இணையம் வந்த பிறகு நாம் வாசிக்கும் பழக்கத்தையே இழந்து வருகிறோம் என்ற உண்மையும் இருக்கிறது. அதிகம் பார்க்கிறோம், கேட்கிறோம் போல படிக்கிறோம் எனச் சொல்ல முடிவதில்லை. இணையத்தில் கருத்துருவாக்கம் செய்யும் அறிஞர் பெருமக்கள் அனைவரும் படிப்பை முதன்மையாகக் கொண்டிருக்கிறார்கள். படிப்பு இல்லையேல் அவர்களது புத்தாக்க உணர்வு, செயல்பாடு எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே முதலில் நாம் படிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இல்லையேல் இந்த அச்சு, டிஜிட்டல் பிரச்சினையே இல்லை. அப்படி படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு இரு வகைகளுக்கும் ஏற்ற மாதிரி நமது வாசிப்பு பழக்கத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

– இளநம்பி

நன்றி :
♦ How Is Reading Digitally Different Than Reading Print?
♦ ‘There’s No Easy Answer’