Wednesday, July 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 404

நஜீப் அகமது எங்கே ? ஏ.பி.வி.பி.யை தடைசெய் | சென்னை பல்கலையில் ஆர்ப்பாட்டம்

“என் மகன் நஜீப் அகமது எங்கே..?” இதுதான் நீதியின் முன்னால் நஜீப்பின் தாய் பாத்திமா நபீஸ் எழுப்பியிருக்கும் முதலும் கடைசியுமான கேள்வி. நஜீப் அகமது ஏ.பி.வி.பி. கொலைகார கும்பலால் காணாமலடிக்கப்பட்டு இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பயோடெக்னாலஜி பிரிவின் ஆராய்ச்சி மாணவர் நஜீப் அகமது, நம்மைப் போல முதல்தலைமுறை பட்டதாரி.

நீதி கேட்கும் நஜீபின் தாய்.

2016ம் ஆண்டு ஜே.என்.யு. மாணவர் சங்க தேர்தலின்போது நஜீப் அகமது தங்கியிருந்த ஜே.என்.யு மஹிமந்தவி விடுதி உணவகத்தின் சுவரில் பா.ஜ.க.வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யினர், முஸ்லீம்கள் தீவிரவாதிகள், முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று முஸ்லீம் மாணவர்களை குறிவைத்து எழுதுகின்றனர். இதை தட்டிக்கேட்ட காரணத்திற்காக ஏ.பி.வி.பி. குண்டர் படையைச் சேர்ந்த 9 பேர், நஜீப் அகமதுவை தாக்குகின்றனர். விடுதியில் இருக்கும்போது விடுதிகாப்பாளர் முன்னிலையிலே இரண்டாவது முறையாக நஜீப் மீது ஏ.பி.வி.பி.யினர் கொலைவெறி தாக்ககுதல் நடத்தியிருக்கின்றனர்.

இந்த தாக்குதலுக்கு மறுநாள் 2016 அக்டோபர் 15-ம் தேதி முதல் அவர் காணாமலடிக்கப்படுகிறார்.

மகன் காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்கிறார் நஜீப்பின் தாய் பாத்திமா நபீஸ். காவல்துறையின் விசாரணையில் திருப்தி பெறாத டெல்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சி.பி.ஐ. ஆர்வம் காட்டவில்லை; இதில் அரசியல் தலையீடு இருக்கிறது என்று டெல்லி உயர்நீதிமன்றமே சி.பி.ஐ. மீது குற்றம்சாட்டுகிறது. இப்படி பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் தலையீட்டால் கொலைகார ஏ.பி.வி.பி. கும்பலைச் சேர்ந்தவர்களை காப்பாற்றுவதற்காகவே வேலை செய்வதைப்போல் சி.பி.ஐ. எடுபிடி வேலை செய்துள்ளது.

படிக்க:
ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு ! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !
புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்

காவல்துறை, சி.பி.ஐ. என குற்றவாளிகளை காப்பதற்கு வேலை செய்ய டெல்லி உயர்நீதிமன்றமும் தன் பங்கிற்கு கடந்த 8ம் தேதி வழக்கை முடித்து வைக்குமாறு உத்தரவு போட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு அமைப்பிடம் இந்த வழக்கை மாற்றுமாறு கோரியதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்றதிலிருந்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தையும் காவிமயமாக்கும் வேலையை செய்து வருகிறது.

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள்  சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொல்லும் கொலைக்களங்களாக மாறிவிட்டன. பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. பாசிச கும்பலை எதிர்த்தால் மாணவர்கள் நிறுவனப் படுகொலை செய்யப்படுகிறார்கள் அல்லது காணாமலடிக்கப்படுகிறார்கள். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா பா.ஜ.க.வின் கைக்கூலியான ஏ.பி.வி.பி.யை எதிர்த்த காரணத்திற்காக நிறுவனப் படுகொலை செய்யப்பட்டார். பாசிச  அச்சுறுத்தலுக்கு மாணவர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்களும் உள்ளடங்குவர். பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் ஒரு அரசு கல்லூரியில் பேராசிரியர் ஒருவரை காலில் விழவைத்துள்ளது ஏ.பி.வி.பி.. சென்னை பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்த துறை தலைவர் பேரா.நல்லூர் சரவணன் அவர்களை உளவியல் ரீதியாக மிரட்டியுள்ளது.

இந்தவகையில் ஜே.என்.யு. மாணவர் நஜீப் அகமதுக்கு நீதி கிடைக்கக்கோரியும், அவர்மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி. குண்டர்களை கைது செய்யக்கோரியும்; அந்த அமைப்பை தடை செய்யக்கோரியும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், எஸ்.ஐ.ஓ. மாணவர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் உரையாற்றிய தோழர்கள், சென்னை பல்கலைக்கழகம் காவிமயமாகிவருவதை அம்பலப்படுத்தியும், இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் போராடுவதே ஒரே வழி என்று உரையாற்றினர்.

படிக்க:
JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை
அங்கித் பைசோயா : தில்லி பல்கலையில் ஒரு தில்லாலங்கடி மோடி !

நஜீப் விவகாரத்தில் ஏ.பி.வி.பி. குண்டர்கள்தான் குற்றவாளிகள் என்பதற்கு போதிய பின்னணியிருந்தும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது நீதியின் முன்னால் நஜீப் எங்கே..? என்ற கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது. பாசிச கும்பலை எதிர்த்தால் நாளை நாமும் கூட காணமலடிக்கப்படலாம், கொல்லப்படலாம். நஜீப் எங்கே என்ற கேள்விக்கு வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறுவழியில்லை. மாணவர்களாகிய நாம் நஜீப்புக்காக வீதியில் இறங்கி போராடுவோம். நீதியைப் பெறுவோம். வாருங்கள்..!

இவண்:  அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC_UNOM)
சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்க வளாகம்.

வரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி

“ஜே.என்.யு. முதல் சென்னைப் பல்கலைக் கழகம் வரை.. அறிவுத் துறையினரைத் தாக்கும் இந்து மதவெறிக் கும்பல்! தமிழ் சமூகமே ஆர்த்தெழு !”  என்ற முழக்கத்தின் கீழ் கடந்த 09 அக்டோபர் 2018 அன்று சென்னையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.

இதில் விவேகானந்தா கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவரது உரையில், “அனைவரும் சமம் என்ற புத்த தத்துவத்தை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு முன்னதாக அதனைச் செய்தவர்கள் வேதாந்திகள். இவர்கள் பிராமணர்கள் அல்ல. இவர்கள் சத்திரியர்கள்.

பிராமணர்கள் வேதங்களை எழுதியவர்கள். இவர்கள் கடவுளர்களைக் கட்டுப்படுத்தவல்லவர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட தரகர்கள்.

இவர்கள் உருவாக்கியதுதான் சதுர்வர்ண தர்மம். இதுதான் இன்று எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம், நக்கீரன் கோபாலுக்கு ஒரு சட்டமாக இருக்கி்றது. சட்டத்தின் ஆட்சி என்பது பெயரளவில்தான் இங்கு நடக்கிறது. இவர்களைப் பொறுத்தவரையில் இது மனுதர்மத்தின் ஆட்சிதான்.

பிராமணியத்தை எதிர்த்து வேதாந்தத் தத்துவத்தை சத்திரியர்கள் முன் வைத்தனர். “அனைத்திலும் பிரம்மம் இருக்கிறது” என்கிறது வேதாந்த தத்துவம். இதனை பிராமணியமயமாக்கியது ஆதி சங்கரர். அனைத்தும் ஜீவனும் கடவுளே என்று கூறிய வேதாந்தத்தை, சதுர் வர்ண பாகுபாடு பேசும் பிராமணியமயப்படுத்த அவர் எழுதிய ஸ்லோகங்களின் தொகுப்புதான் “அபசூத்ராதி கரணம்”. அதில், “அனைத்து பிரம்மங்களும் சமம் என்பது மறுமையில்தான். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் சூத்திரர்கள் மீது நிகழ்த்தப்படும் அனைத்து ஒடுக்குமுறைகள் அனைத்தும் சரியானவைதான் என்றார் ஆதிசங்கரர். அவரது அத்வைதத்தைப் போற்றுபவர்கள் யாரும் “அபசூத்ராதி கரணத்தை” எதிர்ப்பதில்லை.

இந்த திரிபுகளை எல்லாம் புரிந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவிக்க, நமக்கு வரலாற்று உணர்வு தேவைப்படுகிறது. பல்கலைக்கழக ஆய்வுத் துறையில், உண்மையைக் கண்டறியவே ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

கருத்துரிமை என்பது வெறும் கருத்தை வைத்துக் கொண்டிருப்பது என்பது மட்டுமல்ல. அது கருத்தை பதிவு செய்வது என்றும் பொருள். பத்மாவதி ஒரு கருத்தை வைத்திருக்கிறார். அதனை புத்தகமாக பதிவு செய்திருக்கிறார். மாற்றுக் கருத்து இருந்தால் அதனை ஆய்வு செய்து அக்கருத்தை முன் வைத்து இந்தக் கருத்தை மறுக்கலாம். அதுதான் நாணயமான ஆய்வு முறை.

இவர்கள் இன்னும் பக்திகாலத்திலேயே இருக்கிறார்கள். பக்திகாலத்தில் சிவனடியார் வேசம் போட்டு மன்னனையே கொலை செய்யலாம். பக்தி என்றால் அறிவை இழப்பது என்று பொருள். அறிவை இழந்து விட்டு அடியாராக மாறுவதுதான் பக்தி. அரசன், தாய், தந்தை, கடவுள், குரு ஆகியோரிடம் பக்தி கொள்ளச் சொல்கிறது. ஒருதலைப்பட்சமான இந்த பக்தி ஒரு அடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது.

அதனால்தான் சம்பந்தர் “சிரமறுக்கத் திருவுளமே”, “கற்பழிக்கத் திருவுளமே” என்றெல்லாம் பாட முடிந்திருக்கிறது. இந்தக் காட்டுமிராண்டித் தனத்துக்குப் பெயர் பக்தி.

நாம் கல்வித்துறையும் வரலாறும் காவிமயமாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சரியாகச் சொல்லப்போனால், இதுவரை அது காவிமயமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.

சமுத்திரகுப்தனின் பெருமைகளை செப்பேடுகளிலிருந்து பாடப் புத்தகத்தில் ஏற்றியிருக்கிறது அரசு. ஆனால் இராஜராஜ சோழனின் செப்பேடுகள் கூறும் கடாரம் வென்ற, கங்கை வென்ற வரலாற்றை பாடப் புத்தகங்களில் ஏற்றவில்லை. ஏன் இந்த பாகுபாடு?

1800-களில் தமிழ் பள்ளிகளில் சைவமும், வைணவமும்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு சமஸ்கிருதம் இல்லாத சைவ, வைணவ மடம் இல்லை.

அதே போல இன்று இங்கு இருக்கும் சைவ ஆதீனங்கள் யாரும் தமிழை வளர்க்க முன்வரவில்லை. அவர்களது மடங்களில் சமஸ்கிருதத்திற்கு இருக்கும் மதிப்பு தமிழுக்கு கிடையாது.

இந்த சைவ, வைணவ வரலாறு நெடுக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த விடியலும் இல்லை. நந்தன், திருப்பானாழ்வார் போன்றவர்கள் ஒடுக்கப்பட்ட வரலாறே இதைச் சொல்லும். அவர்கள் மூலம் அச்சுறுத்தலை சமூகத்தில் பரப்பினர். அதனால்தான் மற்றுமொரு நந்தனோ, பானாழ்வாரோ இங்கு இல்லை. ஆகவே, இவர்கள் கூறும் வரலாற்றை நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய வேண்டும். பெரியாரிய பார்வையில் பார்க்க வேண்டும்.

விநாயகர், கணபதி, விக்னேஷ்வரன் ஆகிய பெயர்களெல்லாம், புத்தருக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள். புத்தருக்கு உருவ வழிபாடு கி.பி முதல் நூற்றாண்டு வரை செய்யப்படவில்லை. அடையாள வழிபாடுதான் நடைமுறையில் இருந்தது. ஒன்று அவரது கால் பாதங்கள் – தர்ம பாதம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் தர்மச் சக்கரம், அரச மரம், யானை ஆகியவைதான் அவரது அடையாளங்களாக வைத்து வழிபடப்பட்டன.

அரச மரத்தின் கீழ் யானையாக சித்தரிக்கப்பட்ட புத்தர்தான் பின்னர் பிள்ளையாராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். புத்தரின் பாத அடையாளம், கன்னியாகுமரியில் தேவி பாதமாக மாறிவிட்டது.

பௌத்தத்தை அழித்துவிட்டு கொண்டு வரப்பட்டவர்தான் விநாயகர். சிலை வழிபாட்டை ஆரியர்களின் ரிக்வேதம் எதிர்க்கிறது. சிறு கோவில்கள், சிலைகள் இவையெல்லாம் திராவிட பண்பாடு. கோவில்கள், சிலை வழிபாட்டில் ஆதாயமிருப்பதைப் புரிந்து கொண்டுதான் இவர்கள் கோவில்களை ஆக்கிரமித்தார்கள்.

நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவெனில் பார்ப்பனர்கள் எந்த விசயத்தையும் எதிர்க்க மாட்டார்கள். அதை தங்கள் வயப்படுத்திக் கொள்வார்கள். அப்படி மாற்றிக் கொள்ளப்பட்டதை இரண்டாம்பட்சமாகத்தான் நடத்துவார்கள். அப்படிப்பட்ட கடவுள்கள்தான் இன்று சிறு தெய்வங்களாக கொண்டாடப்படும் துலுக்கானத்தம்மன், எல்லையம்மன் போன்றவர்கள்.

இந்த சதியை புரிந்துகொள்ளத்தான் நாம் வரலாற்று உணர்வோடு இருக்க வேண்டும். இப்போது சங்க பரிவாரக் கும்பலோ, வேதகாலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது, விமானம் இருந்தது என கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று அதை அப்படியே பொறியியல் கல்லூரி பாடப்புத்தகத்தில் கட்டாயப் பாடமாக சேர்க்கப் பார்க்கிறார்கள். இதுதான் காவித் திணிப்பு. நம்மை மடையர்களாக்கி காலம் முழுவதும் நம்மை ஆட்சி செய்யவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம். ஒருவருக்கு நம்பிக்கை இருக்கலாம். அந்த நம்பிக்கை ஒரு இலக்கியமாக மாறிவிடலாம். ஆனால் நம்பிக்கையோ, இலக்கியமோ ஒருபோதும் வரலாறு ஆகிவிட முடியாது. வரலாறு மட்டுமே நமக்கு வழித்துணையாக இருக்க முடியும். உண்மைதான் நம்மை வழிநடத்த வேண்டுமே தவிர சதிகாரர்களின் சதித்திட்டங்கள் நம்மை வழிநடத்தக் கூடாது.

இன்று கல்வி முழுக்க மத்திய அரசின் கைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. காவியும், கார்ப்பரேட்டும் ஒன்றிணைந்து கொண்டிருக்கின்றன. இவையிரண்டும் நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்லும். வெள்ளையர்களை நாம் அந்நியர்கள் என்கிறோம். அவர்கள் மட்டுமல்ல,  நம்மை அடிமைப்படுத்தத் துடிக்கும் எந்தத் தத்துவமும், எந்தக் கும்பலும் நமக்கு அந்நியர்களே” என்று பேசினார்.

அவரது முழு உரையை காணொளியில் காண..


பாருங்கள் ! பகிருங்கள் !

சாந்தோம் கடற்கரையில் டீ விற்கும் சந்தோஷ் ஊருக்கு போவாரா ?

சந்தோஷ்

ரு வருடமாக சாந்தோம் கடற்கரையில் டீ விற்றுக்கொண்டிருக்கும் சந்தோஷ், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன். பணி நேரம் காலை 7 முதல் 10, மதியம் 3 முதல் 8. விடுப்பு இல்லை.

தினமும் 700, 800 ரூபாய்க்கு டீ விற்றே ஆகவேண்டும். மாதம் ரூ. 4,000 ரூபாய் சம்பளம். தினசரி சுமார் ரூ. 133 கூலி.

“இன்னும் கொஞ்ச நாள்ல ஊருக்குப் போயிருவேன். திரும்ப வரமாட்டேன். விவசாயத்துல சம்பளம் குறைவுன்னாலும் வீட்டோட போகலாமுன்னு முடிவு பண்ணி இருக்கேன்.”

இருண்ட மேகத்தைப் போல அந்த இளைஞனின் மனதை சோகம் கவ்வியிருந்தது. மொழி, பண்பாடு, உணவு- வாழ்க்கை முறை அனைத்திலும் அன்னியமாய் இருக்கும் மாநிலத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும் மகிழ்ச்சி ஏதுமில்லை. இந்த குறைந்த கூலிக்காக தனது சொந்த ஊர் ஏக்கத்தை மறக்கவும் முடியவில்லை. அதே நேரம் அங்கே அவருக்கு ஒரு மகிழ்ச்சிக்குரிய வாழ்க்கை இருக்கவும் இல்லை. இன்று ஊருக்கு போகலாம் எனும் கருத்து அவரிடம் நிலையாய் இருப்பதற்கு அடிப்படையும் இல்லை. அப்படியே ஊருக்கு சென்றாலும் அவர் சில நாட்களில் திரும்ப வரத்தான் போகிறார். சென்னை சாந்தோம் கடற்கரை அவருக்காக காத்திருக்கிறதா? இல்லை அவரை கட்டிப் போட்டு வைத்திருக்கிறதா?

வை.கோ. புல்லரிப்பதும் புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே ? பொ.வேல்சாமி

1

ண்பர்களே…

பொ.வேல்சாமி
வீரமா முனிவர், டேனியல் புவர், லீவை போல்டிங், மைரன் உவின்சிலோ, எச்.ஆர் ஹொய்சிங்டன், ரேனியஸ், சாமுவேல் பிஸ்க் கிறீன், எல்லீஸ், துரு பாதிரியார், கால்டுவெல், சார்லஸ் கிரால், சாமுவேல் பிள்ளை, சைமன் காசிச் செட்டி, ஜான் முர்டாக், ஹெச் பவார், பர்னல், ஜி.யூ.போப், ஆறுமுகநாவலர், தாமோதரம்பிள்ளை, சதாசிவம்பிள்ளை, உ.வே.சா., ஆப்ரகாம் பண்டிதர், சுவாமி விபுலானந்தர், பாரதியார், பாரதிதாசன், பாண்டித்துரை தேவர், திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., ரா.ராகவையங்கார், மு.ராகவையங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், அவ்வை துரைசாமி பிள்ளை, தண்டபாணி தேசிகர், பொ.வே.சோமசுந்தரனார், மு.அருணாசலம், தி.வே.கோபாலய்யர் இப்படி வெளிநாட்டினரும் உள்நாட்டினருமான பல மனிதர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுமையும் பாடுபட்டு தமிழ்மொழியை வளர்த்தார்கள். இத்தகையவர்களின் கடுமையான உழைப்பை அரசியல்வாதிகளில் பலர் பிற்காலங்களில் அதிகாரமாகவும் செல்வமாகவும் அறுவடை செய்து தங்கள் குடும்பங்களை வளர்த்தார்கள்.

இன்றைய (26.08.18) இந்து தமிழ் பத்திரிகையில் வை.கோ. வைரமுத்துவைப் பற்றிக் கூறியதாவது….“தமிழ்தான் எங்கள் அடையாளம், பண்பாடு, பூகோளம். அந்த(த்)தமிழுக்கு ஒரு வரலாற்றை உருவாக்கியவர் வைரமுத்து. அவரது எழுதுகோலுக்கு தலை வணங்குகிறேன்..”

அரசியல்வாதிகளும் தமிழ்ப்பிழைப்புவாதிகளும் ஒருவரை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் பாராட்டிக் கொள்ளுங்கள். அது உங்கள் தொழிலுக்குத் தேவையானது. ஆனால் அத்தகைய பேச்சுகளை பொதுமையாக்காதீர்கள். கேட்பவர்கள் அனைவரையும் “கேனையர்கள்” என்று நினைத்துவிடாதீர்கள்.
சிந்திக்கத் தெரிந்தவர்களும் உண்மையைப் புரிந்துகொள்ளும் திறன் உடையவர்களும் ஒவ்வொரு சமூகத்திலும் கணிசமான அளவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

வைரமுத்து தமிழை வைத்து பாட்டெழுதி பேரும் புகழும் பெற்றார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அதேசமயம் தமிழுக்கு ஒரு வரலாற்றை உருவாக்கினார் என்று வை.கோ புல்லரிப்பது புரியவில்லை.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !

21

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
டந்த ஒரு வாரமாக இந்திய #metoo இயக்கம் பல பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிருக்கிறது. பல ‘பெரிய’ மனிதர்களின் நாற்றமடிக்கும் நடவடிக்கைகள் குமட்டலை வரவைத்துக்கொண்டிருக்கின்றன. கூடவே, மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன. பத்திரிகையாளராக நானும்கூட இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறேன். நேரிடையான பாலியல் அத்துமீறலாக அவை இல்லாவிட்டாலும் பெண் என்பதாலேயே என்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல், எனக்கு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை வினவு தளத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எனவே, #metoo இயக்கத்தின் ஊடாக ஒலிக்கும் குரல்களில் என்னைப் பார்க்கிறேன். அவர்களின் வலியை உணர்கிறேன்.

இன்று பிரபலமாக இருக்கும் ஒருவருக்கு எதிராக சொல்லப்படும் குற்றச்சாட்டு என்பதால் ஊடக முக்கியத்துவம் கிடைக்கிறது அல்லது குற்றம் சொல்பவர்களுக்கு ஏதோ ஒரு அரசியல் திட்டம் இருக்கிறது என்பதையும் கடந்து #metoo இயக்கம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான சம உரிமை போராட்டத்தில் முக்கிய நகர்வினை ஏற்படுத்தும் என்பது என்னுடைய அவதானிப்பு.

பாலிவுட்டில் #metoo இயக்கம்

ஹாலிவுட்டில் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முப்பதுக்கும் அதிகமான பெண்கள் சொன்னபோது #metoo இயக்கம் உலக ஊடகங்களில் பேசுபொருளானது. இந்தியாவிலும் அதுகுறித்து பேச்சுக்கள் எழுந்தன. நடிகர் தனுஸ்ரீ தத்தா தனக்கு நடிகர் நானா பட்டேகரால் ஏற்பட்ட பாலியல் அச்சுறுத்தல் குறித்து  பேசிய பிறகே, மற்ற பெண்களும் தாங்கள் பாதிக்கப்பட்டதை பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். ‘அரசியல்’செல்வாக்கு மிக்க நடிகரான நானா பட்டேகர், இந்தி பட ஷுட்டிங்கின்போது தன் விருப்பத்துக்கு மாறாக தொட்டதும் அதை விரும்பாத நிலையில் படக்குழுவினரை வைத்து பணிய வைக்கப்பார்த்தது குறித்தும் அடுத்தக்கட்டமாக ‘நவநிர்மாண் சேனா’ என்கிற குண்டர் படையை வைத்து தன் காரின் மீது தாக்குதல் நடத்தியது குறித்தும் தனுஸ்ரீ தத்தா பகிர்ந்திருந்தார். அதன்பிறகு, நானா பட்டேகருடன் நடித்துக்கொண்டிருந்த படத்திலிருந்து விலகியதையும் தனக்கு நேர்ந்த அத்துமீறல் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் சொல்லியிருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை #metoo இயக்கம் வழியாக இப்போது வெளிக்கொண்டுவந்தார் தனுஸ்ரீ. இது ஊடக விவாதமாகி, அப்போது நானா பட்டேகர் மீது பதியப்படாத வழக்கு, இப்போது பதியப்பட்டிருக்கிறது.

நானா பட்டேகர், தனுஸ்ரீ தத்தா.

இதன் பின், ஏராளமான பாலிவுட் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை, சில பாலியல் வன்கொடுமைகளை, ஒடுக்குமுறைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். பாலிவுட்டின் ‘மிக நல்ல அப்பா’ என புகழப்பட்ட நடிகர் அலோக் நாத், தன்னுடைய மகளாக படத்தில் நடித்த நடிகரை எப்படி பாலியல் பண்டமாக பார்த்தார் என்பது வெளியே வந்தது. ’குயின்’ என்ற பெண்ணிய புரட்சி படத்தை இயக்கிய விகாஸ் பால், நிதர்சனத்தில் ஒரு ரேப்பிஸ்ட் என்கிற விஷயம் வெளியே வந்தது. இயக்குநர்கள் சுபாஷ் கய், சுபாஷ் கபூர், சஜித் கான், டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார், இசையமைப்பாளர் அனு மாலிக், பாடகர் கைலாஷ் கர் என பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது. இவர்களெல்லாம் அதிகாரத்தில் இருக்கிற ஆண்கள். தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு பெண்களை வேட்டையாடுவதை பகுதி நேர வேலையாக பார்த்தவர்கள் என்பது பல பெண்களின் குற்றச்சாட்டுக்களின் மூலமாக அறிய முடிகிறது.

இந்திய ஊடகவியாளர்களின் ஆணாதிக்க முகம்

தங்களுடைய பணியிடத்தில் ஏற்பட்ட பாலியல் ஒடுக்குமுறைகளை இந்தி பட உலக பெண்கள் பட்டியலிட தொடங்கியபோது, ஊடக பெண்கள் மெதுவாக பேச ஆரம்பித்தார்கள். ஊடக உலகில் ஜாம்பவான்களாக இருந்தவர்களின் ஆணாதிக்க முகம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. ஏசியன் ஏஜ் பத்திரிகையின் ஆசிரியரும் இப்போது மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சராக உள்ளவருமான எம்.ஜே. அக்பர் மீது 14 ஊடக பெண்கள் நேரிடையாக பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை கூறினர். இத்தனை பெண்களின் கூற்றிலிருந்து எம். ஜே. அக்பர், பணிக்கும் வரும் பெண்களை ஒரு பாலியல் பண்டமாக மட்டுமே பார்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு கீழ் பணியாற்றும் பெண்களை ஒடுக்கி வந்திருக்கிறார்.

எம்.ஜே.அக்பர்

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கொடுக்கப்படும் அதீத கவனம் ‘அவன் எப்படி அவளை வளைத்தான்’ என்கிற விதத்தில் இதை செய்தியாக நுகரும் பெரும்பான்மை ஆண்களின் விருப்பத்திலிருந்து வருகிறது. பாலியல் ஒடுக்குமுறையால் அல்லது அத்துமீறலால் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கை திசை திரும்புகிறது அல்லது வாழ்க்கையே இல்லாமல் போகிறது என்கிற கோணத்தில் ஆண் மனம் பொதுவாக சிந்திப்பதில்லை.

எம்.ஜே. அக்பர் என்னும் ஜென்டில்மேன் அமைச்சர், பத்திரிகையாளராக இருந்தபோது, கஜாலா வகாப் என்ற பத்திரிகையாளரை எப்படி ஒடுக்கினார் என்பதைக் கேளுங்கள்…

“டெல்லிக்கு அருகே ஒரு சிறிய நகரத்திலிருந்து ஊடகப்பணிக்கு வந்தவள் நான். எங்கள் குடும்பத்தில் பெண்களை பணிக்கு அனுப்புவது நடக்காத விஷயம். நான் தான் முதன் முதலில் ஊடகப்பணிக்கு வந்தேன். எம். ஜே. அக்பரின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு அவரைப் போல பத்திரிகையாளராக வேண்டும் என பத்திரிகை தொடர்பான படிப்பைப் படித்தேன். எதிர்பாராத விதமாக அவர் பணியாற்றிய ‘ஏசியன் ஏஜ்’ பத்திரிகையிலேயே எனக்கு பயிற்சியாளர் பணியும் கிடைத்தது.

படிக்க:
ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
ஒரு பெண் பத்திரிகையாளரின் குமுறல்!

பணிக்கு சேர்ந்த பிறகு, எம்.ஜே. அக்பர் எப்படிப்பட்ட நபர் என தெரிந்துகொண்டேன். தொடக்கத்தில் வேண்டாத குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார். தேவையில்லாமல் தன்னுடைய அறைக்கு அழைப்பதை அடுத்த கட்டமாக செய்தார். அவர் பத்தி எழுதுவதற்காக என்னை டிக்‌ஷனரி பார்த்து வார்த்தைகளை சொல்லச் சொல்வார். அதாவது, அவர் முன்பாக என்னை மணிக்கணக்கில் உட்கார வைக்க வேண்டும் என்பதற்காக. இறுதியாக, வெளியேற முடியாத இடத்தில் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட முயன்றார்.” என்கிறார் கஜாலா. ஒருகட்டத்தில் தன்னுடைய பாலியல் அத்துமீறலுக்கு ‘காதல்’ சாயம் அடிக்க முயற்சித்திருக்கிறார் அக்பர்.

‘ஏசியன் ஏஜ்’ பத்திரிகை அலுவலகம் ‘அக்பரின் அந்தப்புரம்’ என பத்திரிகை வட்டாரத்தில் அழைக்கப்பட்டதாகவும் பத்திரிகையின் கிளை அலுவலகங்கள் தோறும் அக்பருக்கு காதலிகள் இருந்ததாகவும் சொல்கிறார் கஜாலா. அக்பரின் காதலிகள் பட்டியலில் தன்னால் ஒருபோதும் இணைய முடியாது என முடிவெடுத்த கஜாலா, தனது பதவியை ராஜினாமா செய்கிறார். அதன்பிறகும் அக்பரின் பின் தொடர்தல் தொடர்ந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் வேறு பத்திரிகையில் பணி தேடுவதை விட்டுவிட்டு, சொந்த ஊருக்குக் கிளம்பியிருக்கிறார் கஜாலா.

பத்திரிகை துறையில் பணியாற்றும் கனவோடு நுழைந்தவருக்கு அக்பர் என்ற வேட்டையாடியால் ஏற்பட்ட பதட்டம் ஒருபுறம் ஆறுதலுக்காக தனது வீட்டாரிடம் நடந்ததை சொல்லக்கூட முடியாத நிலை இன்னொரு புறம். சொன்னால் இனி இந்த வேலையே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். மகளின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவருடைய குடும்பம், மீண்டும் அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

“எங்கள் குடும்பத்தில் படித்து முடித்தவுடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். நான் அப்படியிருக்க விரும்பவில்லை. என் அப்பாவிடமிருந்து பணம் பெறுவதைக்கூட நான் விரும்பவில்லை. குடும்பத்துக்குள்ளேயே பாகுபாட்டுக்கு எதிராக போராடியிருக்கிறேன். நான் மதிப்பிற்குரிய பத்திரிகையாளராக பணியாற்ற விரும்பினேன்.” என்கிற கஜாலா,

“கடந்த 21 வருடங்களாக, இதை எனக்குள்ளே வைத்திருந்தேன். நான் பாதிக்கப்பட்டவளாக இருக்க விரும்பவில்லை. அதோடு, ஒரு அரக்கத்தனமான மிருகம், என்னுடைய பணிவாழ்க்கையை கெடுக்க விடக்கூடாது என்கிற எண்ணத்தில் நான் மீண்டு வந்தேன். அப்போதும்கூட அவ்வவ்போது அந்த கொடுங்கனவு நினைவில் வந்துபோகும். இனி அந்தக் கொடுங்கனவு வராது” என வெடித்திருக்கிறார் கஜாலா. தற்சமயம் ‘ஃபோர்ஸ்’ என்கிற இதழில் பணியாற்றுகிறார்.

படிக்க:
தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !
சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!

பிரியா ரமணி, கஜாலா வகாப், சபா நக்வீ உள்ளிட்ட 14 பேர்கள் அக்பர் மீது குற்றச்சாட்டை சொல்கிறார்கள். அக்பரோ இவை அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்கிறார். அக்பரின் நடவடிக்கைகளை டெல்லி பத்திரிகை வட்டாரம் நன்றாக அறியும் என அவருடன் பணிபுரியாத பல பெண்களும் தெரிவிக்கிறார்கள். ஆனால், விரைவில் மக்களவை தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் மறைமுக திட்டத்தோடு தன்னைப் பற்றிய கதைகளை சில திட்டமிட்டு சொல்வதாகச் சொல்கிறார் அக்பர்.  பெயரோடு வெளியே வந்த 14 பேரின் குற்றச்சாட்டுகளை ஒரே அடியாக தேர்தலோடு முடிச்சு போடுகிறார். முதலமைச்சர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணை நோட்டமிட்ட மோடி-அமித் ஷா கும்பலில் சேர்ந்தவரிடம் ராஜினாமாவையா எதிர்ப்பார்க்க முடியும்?  அமைச்சரவையின் காலம் விரைவில் முடிய இருக்கும் நிலையிலும்கூட இத்தனை பெண்களின் நேரடியான குற்றச்சாட்டுக்கு ஆளானோம் என்கிற உறுத்தலில் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால், இறுதிவரை பதவியில் அமர்ந்துகொண்டு அதிகார திமிரை காட்ட விரும்புகிறார் எம். ஜே. அக்பர்.  வழக்கு ரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாக சொன்ன அக்பருக்கு, இறுதிவரை நின்று நாங்களும் போராடுவோம் என பதிலடி தந்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்.

குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர்கள் பிரசாந்த் ஜா (வலது மேல்), மாயங்க் ஜெயின் (இடது மேல்), கே.ஆர்.ஸ்ரீனிவாஸ் (இடது கீழ்), அனுராக் வர்மா (வலது கீழ்), கவுதம் அதிகாரி (நடுவில்)

ஊடகத்துறையில் எம். ஜே. அக்பர் மட்டுமல்ல பல அதிகார ஆண் திமிர் பிடித்த நபர்களின் முகங்களும் வெளிவந்துள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஹைதாராபாத் பதிப்பின் ஆசிரியர் கே. ஆர். ஸ்ரீனிவாஸ், டி.என். ஏ. மும்பை பதிப்பின் ஆசிரியர் கவுதம் அதிகாரி, ஹிந்துஸ்தான் டைம்ஸின் மனோஜ் ராமச்சந்திரன், அதே நாளிதழின் ஆசிரியர் பிரசாந்த் ஜா, பிஸினஸ் ஸ்டாண்டர்ஸ் நாளிதழின் மயானக் ஜெயின், ஹஃபிங்டன் போஸ்டின் அனுராக் வர்மா என பல பத்திரிகையாளர்களின் நடத்தைகள் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள் பெண்கள். இதில் மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவும் அடக்கம்.

ஆண்-அதிகார திமிரின் பொதுவான குணம்!

தனுஸ்ரீ, கஜாலா என பாதிக்கப்பட்ட பெண்கள் பலருடைய கூற்றுக்களிலிருந்து இந்த வேட்டையாடிகளுக்கு இடையே பொதுவான குணங்கள் உள்ளதைப் பார்க்க முடியும். முதலில் இவர்கள் அக்கறை உள்ளவர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு பெண்களை நெருங்குவார்கள். அது பலன்கொடுக்காத நிலையில், நேரடியான அணுகுமுறையில் இறங்குவார்கள். அதுவும் பலன்கொடுக்காத நிலையில், அந்தப் பெண்ணின் பணி வாழ்க்கையை சீர்குலைக்கும் வேலைகளில் இறங்குவார்கள். குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக சொல்லும்போது அந்தப் பெண்ணின் மீது திறமையின்மையை சுட்டிக்காட்டுவார்கள். இல்லையெனில் முழுவதுமாக மறுப்பார்கள்.

ஆனந்த விகடன் அலுவலகத்தில் எனக்கும் இதுதான் நேர்ந்தது. அப்போதைய ஆசிரியர், ‘சரியாக வேலை செய்வதில்லை, தனி தீவாக இருக்கிறார்’ எனக் காரணம் கூறி ஒரே நாளில் பணிநீக்கம் செய்ய நிர்வாகத்திடம் பேசினார். என்னைப்பற்றிய விமர்சனமோ, ஆய்வோ எனது எழுத்துக்கள் – பணி குறித்து இருக்க வேண்டும். மாறாக இந்த ‘தனித்து’ இருந்தார் என்பது என்ன? அவர் பேசியதற்கு முந்தைய வாரம் வரை என்னுடைய கட்டுரை கவர் ஸ்டோரியாக வந்தது, பிற கட்டுரைகளும் வந்தன. அடுத்த வாரத்தில் என்னுடைய கட்டுரைகள் அச்சில் ஏறாமல் பார்த்துக்கொள்ளப்பட்டன. என்னை பணிநீக்கும் முடிவை கேள்விப்பட்டு, நானே ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினேன். அதன்பிறகு இரண்டு வாரங்கள் கழித்து பெயர் போடாமல் நான் எழுதிய சில கட்டுரைகள் வெளியாகின.

’குங்குமம்’ இதழில் நான் எழுதியதை பார்த்துவிட்டு, அழைத்த அதே ஆனந்த விகடன் ஆசிரியர்தான் நான் பணிசெய்யவில்லை என குற்றம்சாட்டி வெளியேற்ற முயற்சித்தார்.  கையை பிடித்து இழுத்தாரா, ஆபாச எஸ்.எம். எஸ். அனுப்பினாரா என சிலர் கேட்பார்கள். இவை மட்டும் பாலியல் ஒடுக்குமுறைகள் அல்ல.  பெண் என்பதாலேயே சில ‘எதிர்பார்ப்புகளை’ வைத்துக்கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என நினைப்பதும் அதன்படி இணங்காதவர்களை ஓரம்கட்டுவதும் பாலியல் ஒடுக்குமுறையே. சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் இதுதான் எனக்கு நடந்தது.

குற்றச்சாட்டும் விளைவுகளும்

 25 ஆண்டுகள் ஆன பின்னும் கூட தனக்கு நடந்த உடல்ரீதியிலான, மனதளவிலான ஒடுக்குமுறை ஏன் பெண்கள் சொல்கிறார்கள்? ஒவ்வொரு குற்றச்சாட்டு வெளியான பின்பும் சமூக ஊடகங்களில் இந்தக் கேள்வி தவறாமல் முன்வைக்கப்படுகிறது. முதலாவதாக, நீங்கள் பொழுதைப் போக்க நாங்கள் எங்களுடைய பாடுகளை எழுதவில்லை. பணியிடத்தில் ஒரு ஆணுக்கு இருக்கும் அதே சுதந்திரமும் இடமும் பெண்ணுக்கும் வேண்டும் என்கிற சமத்துவத்துவக்கான போராட்டம் இது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டிலும் அடுத்து வருகிற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற கடமையும் எங்களுக்கு உண்டு.

படிக்க:
இந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் ? மு.வி.நந்தினி
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016

#metoo இயக்கத்தால் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆண்கள் சமூகத்தின் அவமானத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். தங்கள் பணியிடங்களிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். நோபல் இலக்கிய தேர்வு குழுவில் இருந்தவர் இத்தகைய குற்றச்சாட்டுக்கு உள்ளானதால், இந்த ஆண்டு பரிசு அறிவிப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆஸ்கர் தேர்வு குழுவில் இருந்தவரை நீக்கியிருக்கிறார்கள். பாலிவுட்டிலும்கூட குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என நந்திதா தாஸ், ஜோதா அக்தர் உள்ளிட்ட 11 பெண் படைப்பாளிகள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அமீர் கானும் அனுராக் காஷ்யப்-உம் குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை என்கிறார்கள். குற்றச்சாட்டுக்கு உள்ளான பத்திரிகையாளர் வினோத் துவாவின் மகள், #metoo இயக்கத்துக்கு ஆதரவாக இருப்பேன் என்கிறார். தன் தம்பி சஜித் கான் மீது குற்றம்சொல்லப்பட்டுள்ள நிலையில், #metoo இயக்கத்தை ஆதரிக்கிறார் ஃபரா கான்.

உரிமைக்கான போராட்டத்தை ‘mistress’ பிரச்சினையாகப் பார்க்கும் தமிழக ஜீவிகள்!

உலகம் முழுமைக்கும் ஆதரிக்கப்படும் ஒரு இயக்கம், வடக்கில் இருப்பவர்களையும் சிந்திக்க வைத்திருக்கும் இயக்கம், தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு ‘mistress’ பிரச்சினையாகப்படுகிறது. அதாவது வைப்பாட்டி பிரச்சினை. அதாவது, தனது சொந்த நலன்களுக்காக ஆண்களை பயன்படுத்திக்கொண்டு, இறுதியில் அவர்கள் மீதே 10, 15 ஆண்டுகள் கழித்த பிறகு குற்றம்சாட்டுகிறார்களாம். அதில் ஒரு அறிவுஜீவி எழுதுகிறார், ஆணுறுப்பை கடித்து துப்பும் வாய்ப்பிருந்து, நன்றாக….. விட்டு, இப்போது குற்றம்சாட்டுகிறார்களாம்! ஒன்றை இவர்கள் புரிந்துகொள்வதேயில்லை, ஆண்களை பயன்படுத்திக்கொள்ளும் எந்த பெண்ணும் வெளியே வந்து குற்றச்சாட்டை பெரும்பாலும் சொல்வதில்லை. ஆனால் நேர்மையாக வாழ முனைந்து, அப்படிக் கிடைத்த பணியின் மீதான கனவை சிதைக்கும் ஆண்கள் மீதுதான் குற்றச்சாட்டை சொல்கிறார்கள்.

எளிய பின்னணியில் பிறந்து, முதல் தலைமுறையாகப் படித்து பட்டம் பெற்று, பணியில் சேர்ந்து பொருளீட்டி சுயமுடன் வாழ நகரம் நோக்கி வருகிற ஆண்களுக்கு இருக்கும் அதே கனவு, பெண்களுக்கும் இருக்கும். பெண்கள் படிக்கக்கூடாது; அப்படி படித்தாலும் வேலைக்குப் போகக்கூடாது; அப்படியே வேலைக்குப் போனாலும் திருமணத்துக்குப் பிறகு போகக்கூடாது; மீறி போனாலும் குழந்தை பிறந்தவுடன் வீட்டில் முடங்கிவிட வேண்டும். அதன் பிறகு, பெண்களின் மூளை வேலை செய்யாது என்பது இவர்களின் மனதில் ஆழப்பதிந்துள்ள சிந்தினை. இந்த சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் உரிமைக்கான பிரச்சினையை ‘வைப்பாட்டி’ பிரச்சினையாக திரித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஒரு வார காலமாக தமிழ் முகநூல் பக்கங்களில் சில எழுத்தாளர்கள் எழுதிவரும் பதிவுகளைப் பார்த்தால், இவர்களையா இத்தனை நாளும் முற்போக்காளர்கள் என நினைத்துக்கொண்டிருந்தோம் என குமட்டத்தோன்றுகிறது.  மூத்த அறிவுஜீவி சுப.வீ. ‘சார் ஒரு கம்ப்ளைண்ட்…ஆனா, அது நடந்தது 16 வருஷத்துக்கு முன்ன” என மூன்றாம் தர ஜோக் அடிக்கிறார். மூத்தவரே சொல்லிவிட்டார் அல்லவா, இளையவர்கள் சும்மா இருப்பார்களா? அடுத்து லிஸ்ட்ல யாரு என நாக்கை தொங்கவிட்டு கேட்கிறார்கள்.  இத்தனை வருசம் ஆகியும் நம்ம மேல யாரும் மீ டு குற்றச்சாட்டு சொல்லவில்லை என அங்கலாய்க்கிறார்கள். பாலியல் கதைகளை எழுதி தங்களுடைய மன வக்கிரங்களை சொரிந்து கொள்கிறார்கள். எனக்குள்ளதெல்லாம் ஒரு எளிமையான கேள்வி இவர்களுடைய மனைவி, குழந்தைகள், சகோதரிகளும்கூட இப்படி பாதிக்கப்படலாம். அப்படி பாதிக்கப்பட்டாலும் இவர்கள் இப்படித்தான் பாலியல் கதைகளாக எழுதுவார்களா?

தமிழ்ப்பெண்களின் பிரதிநிதியா சின்மயி?

இந்தியர்களுக்கு பார்ப்பனீயத்தின் மீது உள்ளுக்குள்ளே அதீத கவர்ச்சி உண்டு. பார்ப்பனர்கள் பிறப்பிலேயே அறிவுஜீவிகள், பார்ப்பனர்கள் வாழ்க்கை முறையே சிறந்தது என பட்டியல் நீளும். ஆண்களுக்கு பார்ப்பனப் பெண்கள் மீதான ஆர்வமும் அதிகம். எங்களைப் போன்ற பெண்கள் எழுப்பும் எந்தக் குரலும் இவர்களுக்கு ஆழமான கிணற்றில் கத்திக் கொண்டிருக்கும் தவளையின் சத்தமாகத்தான் கேட்கும். சின்மயி பார்ப்பனப் பெண் என்பதற்காக அவருடைய குற்றச்சாட்டெல்லாம் ஜோடிக்கப்பட்டதாக இருக்கும் எனவும் அது திராவிட-ஆரிய சிந்தாந்தங்களின் மோதலாக பார்க்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?, #metoo இயக்கம் என்பது சின்மயி Vs வைரமுத்து என திரிக்கப்படுவது பணியிடத்தில் சமத்துவம் கோரும் பெண்களின் போராட்டத்துக்கு செய்யும் அவமரியாதை.  அதை திராவிட அரசியல் பேசும் நபர்கள், ஆதரவாளர்கள் ஏன் செய்கிறார்கள்? இதை தெரிந்தேதான் இவர்கள் செய்கிறார்களா? மேலும் சின்மயி தமிழ்ப்பெண்களின் பிரதிநிதியும் அல்ல.

ஊடகங்களில் பார்ப்பனப் பெண்களுக்கு சர்வ சாதாரணமாக பணிவாய்ப்புகள் கிடைக்கும். நான் பணியாற்றிய ஒரு பெண்கள் இதழில் என்னுடன் பயிற்சி நிருபராக பணிக்குச் சேர்ந்து தனது திறமையின்மையால் தொடர்ந்து பயிற்சி நிருபராகவே இருத்தி வைக்கப்பட்ட அந்தப் பெண் அதைத் தாங்க முடியாமல் தடாலடியாக ராஜினாமா செய்தார். அவருடைய அந்த நேர உடல்மொழி, அந்த பத்திரிகைக்கே அவர்தான் முதலாளி என்பதாக இருந்தது.

உண்மைதான், நிர்வாகம் என்ன செய்தது தெரியுமா? பெண்கள் பத்திரிகையில் எழுத லாயக்கில்லாத அவரை, வெகுஜன இதழில் பணிக்கு சேர்த்துக்கொண்டது நிர்வாகம். அந்தப் பெண்ணை வாயில் வரை சென்று அழைத்துவந்தார் அந்தப் பத்திரிகையின் செயல் அதிகாரி. இதெல்லாம் பார்ப்பனப் பெண்களுக்குக் கிடைக்கும் வசதிவாய்ப்புகள் !  அவர் பார்ப்பனர் என்ற ஒன்றே சகல மரியாதைக்கும் போதுமானது.

பார்ப்பன ஊடகங்களில் மட்டுமல்ல, ‘திராவிட’ பின்னணியுள்ள ஊடகங்களில்கூட பார்ப்பனப் பெண்களுக்கு கூடுதலாகவே இடம் கிடைக்கும்! கூடுதலாக மரியாதை கிடைக்கும். குங்குமம் இதழில் எனக்குப் பணியாற்ற சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் வாரம் ஒரு கட்டுரை மட்டுமே வெளியானது. ஒருமுறை ஆசிரியர் குழுவில் இருந்த ஒருவரிடம் இதுகுறித்து சண்டையிட்டபோது, அவர் சொன்ன காரணம், “அவருக்கு சம்பளம் கம்மி, அவர் நிறைய வேலை பார்க்கிறார் என நிர்வாகத்துக்கு காட்ட வேண்டும்” எனவே நான்கைந்து புனைபெயர்களில் வாரம் நான்கைந்து கட்டுரைகள் அந்தப் பெண்ணின் பெயரில் வரும். அவர் பார்ப்பனப் பெண் என்பதும் அவரால் நான்கைந்து கட்டுரைகள் எழுதும் திறமை இருந்ததும் திராவிட ஆசிரியர் குழுவினர் மனதில் ஆழமாக பதிந்துபோயிருந்தது. இவருடைய கட்டுரை ஏன் ஒன்றே ஒன்று மட்டும் வருகிறது? இவருக்கு ஏன் தண்டச் சம்பளம் தரவேண்டும் என நிர்வாகமும் என்னைப் பற்றி கேட்கவில்லை. நானும் எனக்கு ஏன் தண்டச் சம்பளம் தருகிறீர்கள் எனக் கேட்கவில்லை.

பின்புலம் இல்லாமல் ஊடகங்களில் பணியாற்ற வருகிற பெண்களுக்கு திறமையின் அடிப்படையில் பணிவாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதாகத்தான் நிகழும். புரபஷனலாக இருக்க நினைக்கும் ஒருசில ஆண்கள் அதற்கு காரணமாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் மனுஸ்மிருதியை கரைத்து குடித்தவர்கள் போல, பணியாற்ற வருகிற பெண்களை வாய்ப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ’வைப்பாட்டியாக’ பார்க்கிறவர்கள்.

கடந்த ஒரு வார காலமாக சமூக ஊடகங்களை அவதானித்தபோது #MeToo இயக்கத்தை பற்றி ஆண்களுக்கு மூன்று விதமான கருத்து உள்ளதைக் காண முடிந்தது.

1 ) இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலை பேசும்; இதனால் நன்மைகள் விளையும் என நம்புகிறவர்கள். ஆண்களில் இவர்கள் மிகக் குறைவு. அப்படிப்பேசுகிறவர்களில் ஒருசிலர் தாராளவாதம் பேசும் 30-களுக்குள் வயது கொண்ட இளைஞர்கள்.

2) இன்னொரு பிரிவினர் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். இவர்களைப் பற்றி நிறைய எழுதிவிட்டோம். இதில் ஆரிய-திராவிட-வலது-இடது சித்தாந்த வேறுபாடுகள் இல்லை.

3) மூன்றாவது வகையினம் மிக மிக ஆபத்தானது. குற்றம் நடக்கும்போதும் சந்தர்ப்பவாதமாக வாயை மூடிக்கொண்டிருப்பார்கள். குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களை பாதுகாப்பார்கள். குற்றம்சாட்டும் நபர்களே குற்றச்சாட்டுக்கு பொறுப்பாக்குவார்கள். உரிமைப் போராட்டத்தை mistress பிரச்சினை எனக்கூசாமல் எழுதுவார்கள். இவர்களில் ஒரு பிரிவினர், ஆளுநர் பிரச்சினையை திசை திருப்ப இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது என்கிற சதிக் கோட்பாட்டை முன்வைப்பார்கள். இன்னும் சிலர் ‘உங்களுக்கு வேற வேலையே இல்லையா? தலித் பெண்களுக்கு, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை பேச மாட்டீர்களா?’ என கேட்பார்கள். நாங்கள் இதுவரை எதை எழுதிக்கொண்டிருந்தோம் என்பது பற்றியெல்லாம் இவர்களுக்கு பொருட்டில்லை, நாங்களும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள்தான் என்கிற பிரக்ஞையும் இல்லை. MeToo ஹாஷ்டேக் போடுகிறவர் எல்லாரும் சின்மயி! பார்ப்பனப் பெண்களுக்கு மட்டுமே குரல் இருக்கும் என்கிற பார்ப்பனியம் புழுத்துப் போன ஆண்களின் மனம்.

படிக்க:
ட்ரம்போவும் நானும் – மு.வி. நந்தினி
ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

மு.வி.நந்தினி

MeToo இயக்கத்தை சின்மயி Vs வைரமுத்து பிரச்சினையாக்கி நீர்க்கச் செய்த ஊடகங்கள், மயிலாப்பூர் பார்ப்பன இசைக்கலைஞர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தோ, ஊடகங்களில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறை குறித்தோ தவறியும்கூட பேசமாட்டார்கள். எத்தனை பேருக்கு பதட்டம்? தமிழகத்தின் முற்போக்கு முகம்,  ஆணாதிக்கத்தின் உள்ளே போய் வசதியாகப் பதுங்கிக் கொள்கிறது. ஆனால், பதட்டம் கொள்கிறவர்கள் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.  கல்விக்காகவும் சொத்துரிமைக்காகவும் கோயில் நுழைவுக்காகவும்  குடும்பங்களில் சம உரிமைக்காகவும் போராடிய நாங்கள், எங்கள் பணியிட உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. போராட்டத்தில் இணைகிறவர்கள் தாராளமாக இணைந்துகொள்ளலாம்.

செய்தி ஆதாரங்கள்:

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

தாய் நாவல் : அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 2

ப்படித்தான் மிகயீல் விலாசவ் என்பவனும் வாழ்ந்தான். அடர்ந்த புருவங்களுக்குக் கீழே அவனது சிறு கண்கள் வெறுப்புக் கலந்த சந்தேகத்துடன் பார்க்கும் அவன் ஒரு மந்தமான, உடல் முழுதும் ரோமம் அடர்ந்த தொழிலாளி. தொழிற்சாலையில் அவன் தான் சிறந்த தொழிலாளி. தொழிலாளர்களில் அவனே சிறந்த பலசாலி.

மாக்சிம் கார்க்கி
ஆனால் அவன் தன் மேலதிகாரிகளோடு அடிக்கடி முறைத்துக் கொள்வான்; எனவே அவனால் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. ஒவ்வொரு பண்டிகை நாளிலும் அவன் யாரையாவது நன்றாக அடித்து வெளுத்து வாங்கிவிடுவான். எனவே அவனை யாருக்கும் பிடிப்பதில்லை எல்லோரும் அவனைக் கண்டு பயந்தார்கள். அவனை எப்படியாவது பதிலுக்குப் பதில் தாக்கிவிட வேண்டும் என்று எவரேனும் திட்டமிட்டாலும், நடைமுறையில் நிறைவேறுவதில்லை.

தன்னை யாராவது தாக்க வருவதை விலாசவ் கண்டுவிட்டானானால், உடனே அவன் ஒரு பாறாங்கல்லையாவது, பலகையாவது, கம்பியையாவது கையில் தூக்கிக் கொண்டு தன் கால்களை அகட்டி ஊன்றி, தனது எதிரியை அமைதியுடன் எதிர்பார்த்து நிற்பான். அவனது மயிரடர்ந்த கரங்களையும் கண்ணிலிருந்து கழுத்து வரையிலும் காடாய் அடர்ந்து வளர்ந்து மண்டிய கரிய தாடியையும், கோபாவேசமான முகத்தையும் கண்டுவிட்டாலே போதும். யாரும் நடுநடுங்கிப் போவார்கள். ஆனால் ஜனங்கள் அவனது கண்களைக் கண்டுதான் அதிகம் பயந்தார்கள். ஏனெனில் அவை சிறியனவாகவும், உருக்குத் தமர் உளியைப் போல் துளைக்கும் கூர்மை பெற்றனவாகவும் இருந்தன. அந்தக் கண்களின் பார்வையைக் கண்டதுமே தாங்கள் எதோ ஒரு அசுர சக்தியின் முன்னால் இரக்கமோ பயமோ ஒரு சிறிதும் காட்டாது தம்மை எதிர்த்துத் தாக்கத் தயாராக இருக்கும் ஒரு மிருக வெறிக்கு முன்னால் அகப்பட்டுக் கொண்டதாகவே அவர்களுக்குத் தோன்றும்.

“சரி. இங்கிருந்து ஓடுங்கடா, கழிசடைகளே!” என்று அவன் முரட்டுக் குரலில் சொல்லுவான். அவனது முகத்தை மறைத்து அடர்ந்திருக்கும் தாடிக்கு ஊடாக அவனது மஞ்சள் பூத்த பற்கள் மின்னி மறையும். உடனே அந்த மனிதர்கள் கோழைத்தனமாக வாய்க்கு வந்தபடி வைது கொண்டே பின்வாங்கிவிடுவார்கள்.

“கழிசடைகளே!” என்று அவர்களுக்குப் பின்னே கத்துவான். அப்பொழுது அவனது கண்கள் ஏளன பாவத்தோடு குத்தூசியைப்போல் கூர்ந்து நோக்கும். பிறகு அவன் தன் தலையை நிமிர்ந்து நடந்தவாறே, அவர்களைத் தொடர்ந்து சென்று உரத்துச் சுத்தம் போடுவான்.

”சரி, எவன்டா சாக விரும்புகிறவன்?”

எவனுமே சாக விரும்புவதில்லை. அவன் அதிகமாகப் பேசமாட்டான்; ‘கழிசடை’ என்பது அவனது பிரியமான வாசகம். அவன் போலீசாரையும் தொழிற்சாலை அதிகாரிகளையும் தன் மனைவியையும் இந்த வார்த்தையால்தான் அழைப்பான்.

“இங்கே பார், என் கால்சராய் கிழிந்து போயிருப்பதைப் பார்க்கவில்லையாடி, கழிசடையே!”

ஒரு முறை பதினாலு வயதுச் சிறுவனான தன் மகன் பாவெலின் தலைமயிரைப் பற்றி இழுத்து உதைக்கப்போனான். ஆனால் அந்தப் பையனோ உடனே ஒரு பெரிய சுத்தியலைக் கையில் தூக்கிக்கொண்டு, கடூரமாகச் சொன்னான்.

“விடு என்னை தொடாதே!”

”என்னது?” என்று கேட்டுக்கொண்டே அவனது தந்தை நெட்டையாகவும் ஒல்லியாகவுமிருந்த தன் மகனின் உருவத்தை நோக்கி, மரத்தை நோக்கிச் செல்லும் நிழலைப் போல் முன்னேற முனைந்தான்.

”நான் பட்டபாடு போதும். இனிப் படமாட்டேன்!” என்று கூறிக்கொண்டே சுத்தியலை உயர்த்தினான் பாவெல்.,

தந்தை அவனை ஒரு முறை பார்த்தான். பிறகு தனது மயிரடர்ந்த கரங்களை முதுகுக்குப் பின் கோர்த்துக் கொண்டான்.

”ரொம்ப சரி!” என்று சிறு சிரிப்புடன் சொன்னான். பிறகு ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு: “கழிசடைப் பயலே, ரொம்ப சரி!” என்றான்.

இதற்குப் பின் தன் மனைவியிடம் சொன்னான்.

“இனிமேல் நீ என்னைப் பணம் கேட்காதே. இன்று முதல் பாவெலே உன்னைக் காப்பாற்றுவான்!”

“நீ கிடைக்கிற கூலியையெல்லாம் குடித்துத் தீர்த்துவிடப் போகிறாயா?” என்று துணிந்து கேட்டாள் அவள்.

”ஏ, கழிசடையே அது ஒன்றும் உன் வேலையல்ல. வேண்டுமென்றால் நான் வைப்பாட்டி கூட வைத்துக் கொள்வேன்…”

(மாதிரிப்படம்)

அவன் வைப்பாட்டி வைத்துக் கொள்ளாவிட்டாலும் அன்று முதற்கொண்டு, இரண்டு வருஷம் கழித்து அவன் செத்துப் போன காலம்வரை தன் மகனை மதிக்கவுமில்லை. அவனோடு பேசவுமில்லை.

அவனிடம் அவனைப் போலவே பூதாகாரமாகவும் மயிர் அடர்ந்ததாகவுமுள்ள ஒரு நாயும் இருந்தது. அந்த நாய் ஒவ்வொரு நாள் காலையிலும் அவனைத் தொடர்ந்து தொழிற்சாலை வரையிலும் செல்லும், மாலையில் அவனது வருகைக்காகத் தொழிற்சாலை வாசலில் காத்து நிற்கும். விலாசவ் பண்டிகை நாட்களில் ஒவ்வொரு சாராயக் கடையாகச் சென்று வருவான். வழியில் எவரிடமும் பேச மாட்டான். எனினும் யாரையோ இனம் காண முயல்வது போல ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்ப்பான். அவனது நாயும் தனது அடர்ந்த வாலை ஆட்டிக் கொண்டு அவனுக்குப் பின்னாலேயே நாள் முழுதும் திரிந்து கொண்டிருக்கும். நன்றாகக் குடித்துவிட்டு வீடு திரும்பிய பிறகு, விலாசவ் சாப்பிட உட்காருவான். அப்போது அவன் தன் நாய்க்குத் தனது உணவு பாத்திரத்திலிருந்தே உணவு கொடுப்பான். அவன் அந்த நாயை அடித்ததும் கிடையாது. திட்டியதும் கிடையாது. அதுபோலவே அந்த நாயிடம் கொஞ்சிக் குலாவியதும் கிடையாது. சாப்பாடு முடிந்த பிறகு, சாப்பிட்ட பாத்திரங்களை அவனது மனைவி உடனே அப்புறப்படுத்தத் தவறிவிட்டால் அவன் அந்தப் பாத்திரங்களை எடுத்துத் தரையில் வீசியெறிவான். பிறகு தன் முன்னால் ஒரு பாட்டில் ஒட்கா மதுவை எடுத்து வைத்துக் கொள்வான். தன் முதுகைச் சுவரோடு சாய்த்து, கண்களை மூடி, வாயைப் பிளந்து, கேட்பவர்களுக்கு ஏக்கம் கொடுக்கும் தாழ்ந்த குரலில் ஒரு பாட்டை அழுதாற்போல் பாட ஆரம்பிப்பான்.

(மாதிரிப்படம்)

சோகமயமான அந்த ஆபாச ஒலி ரொட்டித் துண்டுகளை உதவி வெளித்தள்ளி மீசை மயிரில் சிக்கித் திணரும். அவன் தன் தாடி மீசையைத் தன் தடித்த விரல்களால் கோதித் தடவி விட்டுக் கொண்டே பாட ஆரம்பிப்பான். அவனது பாட்டின் வாசகங்கள் தெளிவற்று நீட்டி இழுக்கும். ஆனால் அவனது சாரீரமோ குளிர் காலத்தில் ஊளையிடும் ஓநாய்க்கூட்டத்தின் ஒப்பாரியை நினைப்பூட்டும். ஓட்கா மது தீரும் வரையிலும் அவன் பாடுவான்; அதன் பின்னர் அவன் பெஞ்சின் மீது சாய்ந்துவிடுவான். அல்லது அப்படியே மேஜை மீது குனிந்து படுத்து ஆலைச்சங்கு அலறுகின்ற காலை நேரம் வரையிலும் தூங்குவான். அவனது நாயும் அவன் பக்கத்திலேயே விழுந்து கிடக்கும்.

அவன் குடல் புண்ணால் மாண்டு போனான். சாவதற்கு முன்னால் ஐந்து நாட்களாக, அவன் படுக்கையிலே துடித்துப் புரண்டான். உடலெல்லாம் கறுத்துப் போன அவன், கண்களை மூடி, பற்களை நறநறவென்று கடித்தான். இடையிடையே தன் மனைவியைப்பார்த்துச் சொல்லுவான்;

படிக்க:
இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்
சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்

“எனக்குப் பாஷாணம் கொடு, என்னை விஷங்கொடுத்துக் கொன்றுவிடு!”

டாக்டர் ஏதோ ஒரு ஒத்தடம் போடச் சொன்னார். ஆனால், மிகயீல் விலாசவுக்கு ஆபரேஷன் பண்ணித்தானாக வேண்டும் என்றும், அன்றைய தினமே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றும் சொன்னார்.

“நீ நாசமாய்ப் போக, கழிசடையே உன் உதவியில்லாமலே நான் செத்துப் போகிறேன்” என்று முனகினான் மிகயீல்

டாக்டர் சென்ற பிறகு, அவனது மனைவி கண்ணீர் பொழிந்தவாறே ஆபரேஷன் பண்ணிக் கொள்ளும்படி புருஷனிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். அவனோ தன் முஷ்டியை ஆட்டியவாறே அவளைப் பார்த்துச் சொன்னான்.

“நான் பிழைத்து எழுந்திருந்தால், உனக்குத்தான் சங்கடம்!”

ஆலைச்சங்கு அலறிய அந்த அதிகாலையில் அவன் இறந்து போனான். சவப்பெட்டியில் திறந்த வாயோடும், வெறுப்பு நிறைந்து நெறித்துப் போன புருவங்களோடும் அவன் கிடந்தான். அவனது மனைவியும் மகனும் நாயுமாகச் சேர்த்து அவனைப் புதைத்தார்கள். பழைய திருட்டுப் புள்ளியும் தொழிற்சாலையிலிருந்து நீக்கப்பட்ட குடியாரத் தொழிலாளியுமான தனிலோ வெஸோவ்ஷிகோவும், அந்தக் குடியிருப்பிலுள்ள சில பிச்சைக்காரர்களும் அந்தச் சவ அடக்கச் சடங்கில் கலந்து கொண்டார்கள். அவனது மனைவி கொஞ்ச நேரம் அழுதாள். அமைதியாக அழுதாள். பாவெல் அழவே இல்லை. தெரு வழியே சென்ற அவனது சவ ஊர்வலத்தைக் கண்ட ஜனங்கள் சிறிது நேரம் நின்று குறியிட்ட படி தம்முள் பேசிக்கொண்டார்கள்.

”பெலகேயாவுக்கு இவன் செத்ததே ஒரு கொண்டாட்டம்தான்!”

”அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்!”

சவப்பெட்டியைப் புதைத்துவிட்டு, ஜனங்கள் போய்விட்டார்கள். ஆனால் நாய் மட்டும் அந்த கல்லறையை முகர்ந்தபடி, புது மண்ணில் மெளனமாக உட்கார்ந்திருந்தது. சில நாட்கழித்து யாரோ அதை அடித்துக் கொன்றுவிட்டார்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதி: (பகுதி – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !

சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !

சென்னையின் அதிகாலை விடியலில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிறைந்திருக்கும். அவை அனைத்தும் நம் வீட்டுக்குப்பைகள் என்பதை மறந்து அவ்வழியாக கடந்து செல்லும்பொழுது மூக்கைப் பொத்திக்கொண்டு நகர்வோம். அவசர வேலையாக செல்லும்பொழுது ட்ராபிக்கில் மாட்டிக்கொண்டு தவிக்கும் அவஸ்தையைவிட குப்பை வண்டிகளை கடக்கும்போது அவஸ்தையாக உணருவோம். இவற்றையெல்லாம் ஒரு நிமிட நேரத்திற்கே நாகரிக மனிதர்களாகிய நம்மால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. ஆனால் தினந்தோறும் அந்த குப்பைகளோடு வாழும் மனிதர்களைப் பற்றி நாம் ஒருகணமும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.

ஒரு மனிதனை பற்றி நாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பதிலிருந்துதான் அவர்களை உதாசினப்படுத்துவதும், அவர்கள் பிரச்சனைக்கு முகம் கொடுப்பதும் இருக்கும் என்பது இந்த சமூகம் கட்டமைத்திருக்கும் பொதுப்புத்தி. அதனால்தான் துப்புரவுத் தொழிலாளியின் பிரச்சனைகளை நாம் கண்டுகொள்ள மறுக்கிறோம்.

சென்னையில் துப்புரவு தொழிலாளிகள் போராட்டம், உண்ணாவிரதம் என அன்றாடம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் நமக்கு கடந்து போகும் செய்திகளாகவும், பத்திரிக்கைகளுக்கு பெட்டி செய்தியாகின்றன.  ஆனால் ஒருநாள் சென்னை குப்பை மேடாக மாறினால் அது தலைப்புச் செய்தியாகிவிடுகிறது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை.

துப்புரவு தொழிலாளர்களின் உரிமை மறுக்கப்படுவது, அவர்களுக்கான ஊதியம், பணிப்பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு மூன்றாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் துப்புரவு உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியாருக்கு கொடுக்கும் முடிவை  மாநகராட்சி நிர்வாகம் எடுத்து அதை அமல்படுத்தவும் உள்ளது. இந்த தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து மாநகராட்சியின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து தனியார்மய எதிர்ப்பு கூட்டமைப்பை ஏற்படுத்தி போராடி வருகின்றன.

இந்த மாநகராட்சியின் தனியார்மய மோசடி பற்றி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சீனுவாசலு கூறியது. “சென்னை மாநகராட்சி கடந்த  2009-ல் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டு கடந்த 2011-ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கு முன்பிருந்தே இந்த மாநகராட்சி 350 வருடங்களுக்கு மேலாக சென்னை வாழ் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. இதனை இந்தியாவின் மிகப்பழமையான மாநகராட்சி என்றும் சொல்கிறார்கள். அப்பேற்பட்ட பெருமை வாய்ந்த இந்த மாநகராட்சியின் பல்வேறு துறைகளைத்தான் இப்பொழுது தனியாருக்கு கொடுக்க முடிவு செய்து டெண்டர் அறிவித்து இருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி விரிவாக்கதிற்கு முன்பு 10 மண்டலங்கள், 150 டிவிசன்களாக இருந்தது. பெருநகர மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு 15 மண்டலங்களாகவும் 200 டிவிசன்களாகவும் உருவாக்கினார்கள். மொத்தம் 426 ச.கி.மீ பரப்பளவு  மாநகராட்சியில் உள்ளது. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.

இதில் பல்வேறு துறைகள் இருந்தாலும் பிரதானமாக 7 துறைகள் உள்ளன. சாலை, பூங்கா, மின்சாரம், சுகாதாரம், இயந்திர பொறியியல் துறை, திடக்கழிவு மேலாண்மைத் துறை உள்ளிட்டவையாகும்.  இதன் கீழ் பல்வேறு துணை துறைகள் இயங்கி வருகின்றன. இதில் சாலை, பூங்கா, மலேரியா ஒழிப்புத் துறை உள்ளிட்டவையெல்லாம் ஏற்கனவே தனியாருக்கு கொடுத்து விட்டனர். முதலில் ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும்தான் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து வந்தனர். இப்போது, அனைத்து பணிகளையும் தனியாருக்கு கொடுத்துவிட்டனர்.

மாநகராட்சியில் மிக முக்கியமானது திடக்கழிவு மேலாண்மைத்துறைதான். இதுதான் மாநகராட்சியின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய துறை இந்த திடக்கழிவு மேலாண்மைத்துறை. தற்பொழுது பல்வேறு முறைகேடுகள் நடந்தேறி வருவது மட்டுமல்லாமல் இத்துறையையே மொத்தமாக தனியாருக்கு கொடுக்கவும் துணிந்துவிட்டார்கள்.

1996-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி எல்லா துறைகளையும் தனியார்மயமாக்க வேண்டும் என்ற அடிப்படையில் உலக அளவிலான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூரின் ஓனிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு பழைய 6,8,10 ஆகிய மண்டலங்களை 7 ஆண்டு துப்புரவு பணி – குப்பை அள்ளுவது, வாகனப் பராமரிப்பு, உதிரி பாகங்கள் வாங்குவது  உள்ளிட்ட அனைத்தும் பணிகளும் குத்தகைக்கு விடப்பட்டது. (இந்த ஓனிக்ஸ் நிறுவனம் கனிமொழியின் கணவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது)

அதனுடைய குத்தகைக் காலம் முடிவடைந்த பிறகு 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் “நீல் மெட்டல் பனால்கா” என்ற கம்பெனிக்கு 7 ஆண்டு குத்தகைக்கு விட்டார்கள். 6,8,10 ஆகிய மண்டலங்களுடன்  மண்டலம் 3-யும் சேர்த்து கொடுத்தார்கள்.  மீதி ஆறு மண்டலங்கள் மட்டுமே மாநகராட்சி வசம் இருந்தது. இதனுடைய குத்தகை 2011 டிசம்பருடன் முடிவடைந்து விட்டது. இந்த நீல் மெட்டல் பனால்காவும் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிய ஒரு நிறுவனம்தான். இந்நிறுவனத்திற்கு ஒரு டன் குப்பைக்கு ரூ.642 கொடுக்கப்பட்டது.

படிக்க:
சென்னையை சுத்தம் செய்யும் தொழிலாளிகளின் துயரம் !
ரிப்பன் மாளிகையில் துப்புரவு தொழிலாளர் போராட்டம் !

அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு மண்டலம் 9,10,13 ஆகிய மண்டலங்களை 2012-ம் ஆண்டு ராம்கி என்விரோ இந்துஸ்தான் லிமிடெட் என்ற  தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்தது. அந்நிறுவனம் நீல் மெட்டல் பனால்காவின் ஒப்பந்த தொழிலாளர்கள் 2000 பேரையும் சேர்த்து 4000 தொழிலாளிகளைக் கொண்டு துப்புரவு பணிகளை மேற்கொண்டன.

3 ஆயிரம் பெரிய குப்பைத்தொட்டிகள், 2500 சிறிய குப்பைத்தொட்டிகள்,  1500 மூன்று சக்கரவாகனங்கள், 678 காம்பெக்ட் லாரிகள், மேலும் கிரீன்வேஸ் வண்டிகள், அவசர ஊர்திகளையும் இந்நிறுவனம் பயன்படுத்த உள்ளதாக அப்பொழுது தெரிவித்தார்கள். அதெல்லாம் இப்பொழுது எந்த நிலையில் உள்ளது என்றே தெரியவில்லை.

ரிப்பன் மாளிகை முன்பாக போராடும் துப்புறவுத் தொழிலாளர்கள்.

இந்த ராம்கி நிறுவனம் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், இ.எஸ்.ஐ., பி.எப் என்று அரசினுடைய சட்ட சலுகை எதையும் தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் பல்லாயிரக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்துள்ளது; கொழுத்து வருகிறது என்பது தினந்தோறும் பத்திரிக்கைகளில் அம்பலமாகி வருகிறது.

உதாரணமாக, சென்னை முழுவதும் நாளொன்றுக்கு 5000 டன் திடக்கழிவுகள் மேலாண்மை துறையால் களையப்படுகிறது. ராம்கியிடம் உள்ள 9,10,13 ஆகிய மண்டலங்களில் மட்டும் மூன்று டன் குப்பை எடுப்பதாக சொல்கிறது. மீதி இருக்கும் 12 மண்டலத்தில் இரண்டு டன் குப்பை மட்டுமே எடுப்பதாக  இந்திய எக்ஸ்பிரஸ் மற்றும் இந்து பத்திரிகைகள்  செய்தி வெளியிட்டிருந்தன.

ஒரு டன் குப்பை 1,886 ரூபாய் 2017 காலாண்டில் கொடுக்கப்பட்டது. ஆக மூன்று டன்னுக்கு கணக்கிட்டு கொள்ளவும். இந்த ராம்கி நிறுவனம் குப்பையை டன் கணக்கில் எடுப்பதில் தான் முன்னிலை வகிக்கிறது. தெருவை பெருக்குவது இல்லை. சுத்தமாக வைத்திருப்பது இல்லை. இவர்கள் வி.வி.ஐ.பி. போன்ற முக்கியஸ்தர்கள் ஏரியாவில் மட்டும்  வேலை செய்கிறார்கள். இந்த மூன்று  மண்டலங்களில் VVIP வாழும் பகுதிகளுக்கு நீங்கள் சென்று பார்த்தால் தெரியும்.  முக்கியமாக வாகனங்களை முறையாக பராமரிப்பது இல்லை. அதற்காக ஒதுக்கப்படும் தொகை என்ன ஆகிறது என்றே தெரியவில்லை.

திடக்கழிவு மேலாண்மைத்துறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மாநராட்சியின் தணிக்கை குழுவும் தெரியப்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவை எதையும் கார்ப்பரேசன் கண்டுகொள்வதே இல்லை.

சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சீனுவாசலு

மாநகராட்சியில் நடக்கும் இந்த பல்வேறு முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் 2016-லிருந்தே மொத்த மாநகராட்சியையும் தனியாருக்கு கொடுக்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த அடிப்படையில்தான்  தொழிலாளிக்கு முறையாக கொடுக்க வேண்டிய சம்பளம் கொடுப்பதில்லை. 2017 டிசம்பர் மாதம் ரிப்பன் மாளிகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினோம். அதற்கு முன்னதாக 2017, அக்டோபர் 11-ம் தேதி ஜி.ஓ (டி2) எண். 62 எனப்படும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் அரசாணையை தொழிலாளர் துறை ஆணையம் மூலம் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தொழிலாளிக்கு ரூ.602.25 கொடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் வெறும் 362 ரூபாய் மட்டுமே கொடுக்கிறார்கள்.

இந்த ஊதியம் என்பது ஆண்டுக்கு ஒரு முறை மாநகராட்சி ஆணையர் அறிவிக்கும்  ஊதியம்தான்.  மேலும் பணிப்பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமே கொடுப்பதில்லை. அதனை எல்லாம் தொழிலாளியே தன் சொந்த செலவில் வாங்கி கொள்ள வேண்டும்.  இது போக தினந்தோறும் வேலை வேண்டுமானால் மாதம் ரூ.1500 – ரூ.3000 வரை மேலே உள்ளவர்களுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் குறைந்தபட்சம் 26 நாள் வேலை கிடைக்கும். இதுதான் மாநகராட்சி மற்றும் தொழிலாளியின் நிலை.

இந்த நிலையில் அனைத்து துறையையும் தனியாருக்கு விடுவதற்கு கடந்த 8-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் ஒரு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்க பத்து கோடி டெபாசிட் தொகையும் மூன்று லட்சம் உள்நுழைவு கட்டணமும் கட்ட வேண்டும் என்று அறிவிப்பு வந்துள்ளது.

1,2,3,7, ஆகிய மணடலங்களுக்கு 2922 நாட்கள் அதாவது எட்டு வருடம் இரண்டு நாட்களுக்கு 744 கோடியே 25 லட்சம் செலவிடப்போவதாகவும்,  அதேபோல 11,12,14,15 ஆகிய மண்டலங்களுக்கு எட்டு வருடத்திற்கு ரூ.801 கோடியே 25 லட்சம் செலவிடப்போவதாகவும்  பத்திரிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது. மொத்தமாக ரூ. 1500 கோடிக்கு மேல் தனியாரிடம் ஒப்படைக்கும் வேலையை விரைவாக செய்து வருகிறது அரசு.

மின்துறை – சாலை – பூங்கா என அனைத்தும் ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைத்து தொழிலாளிகளுக்கு ரூ.160, 200, 300 கூலி கொடுத்து அத்துக்கூலிக்கு சுரண்டி வருகிறது. மலேரியா – காலரா என்று நோய் தாக்கும் காலங்களில்  3 மாதம், 6 மாதம் என்று தற்காலிகமாக வேலைக்கு ஆட்களை வைத்துக் கொண்டு சுரண்டுவது, இயந்திர பொறியியல் துறை, வாகனத்துறைகளில் எல்லாம் ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்து அவர்களையும் சுரண்டுவது ஒருபுறம்.

மற்றொருபுறம் குப்பைகளை கிரீன் தொட்டிக்குள்  அடைக்கும் திட்டம், மக்கும் குப்பை – மக்காத குப்பை, விரிவடைந்த சாலை திட்டம், ஸ்டாம் வாட்டர் திட்டம் என பல புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டது.

அதேபோல திருவி.க. நகர் பூங்கா, செனாய் நகர் பூங்கா புதுப்பித்தல் என்கிற பெயரில் பல கோடி இழப்பு எற்படுத்தினார்கள். தெருக்களில் சோடியம் விளக்கை அகற்றிவிட்டு  எல்.இ.டி. விளக்காக மாற்றும் திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.  இதன் மூலம் வேலை இழப்புதான் ஏற்படும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை எரியும்படி ஆட்டோமேட்டிக் திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு ஆள் போட்டு பார்த்துக்கொள்ளத் தேவையே இல்லை.

சுடுகாடுகளை பாரமரிப்பது மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பான பணியையும் தனியாருக்கு கொடுத்துவிட்டனர். சுகாதாரத் துறையிலும் இதே நிலைமைதான். ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் தனியாருக்கு கொடுத்து விடுகின்றனர். அங்கு பணிபுரியும் ஊழியருக்கு சம்பளம், அதன் பராமரிப்பு செலவு என்று அனைத்து செலவுகளையும் அந்த ஒப்பந்தம் எடுத்தவர்களிடமே ஒப்படைத்து விடுவது என்று இருக்கிறது.

மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரை இறைப்பதற்கு கூட ஆளும் கட்சியினரிடம் டெண்டர் விடுவது, சென்னை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கேபிள் ஒயர்  எல்லாம் சாலைக்கு அடியிலேயே போடுவதாக சொல்லி டெண்டர் மோசடி. எந்த ஒரு திட்டத்தையும் சிறப்பு திட்டமாக உயர்த்தி நிதியை அதிகரித்து கொள்ளையைடிப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது.

இவர்கள் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். தூய்மை இந்தியா, ஸ்மார்ட் சிட்டி என்ற இத்திட்டம் மூலம் சென்னையை ஒரு முன்னுதாரணமாக ஆக்கப் போகிறார்களாம். இதுபோன்ற திட்டத்தை ஹைதராபாத்- நாசிக் போன்ற இடத்தில் அமல்படுத்தி இருக்கிறார்கள். அங்கே சென்று நாங்கள் பார்வையிட்டிருக்கிறோம். அங்கே குப்பையை கிலோ கணக்கில்தான் எடுக்கிறார்கள். அதைத்தான் கடந்த ஒரு வருடமாக திருவொற்றியூரில் சோதனைமுறையில் செயல்படுத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் இருக்கும் மால்களில் வரும் குப்பைகளை டன் கணக்கில் எடுக்கிறார்கள். அந்த குப்பைகளை எடுக்க பணம் வாங்கிக்கொள்கிறது ராம்கி நிறுவனம். இப்பொழுது சென்னை மாநகராட்சியே 9 பிளாட்டுக்கு மேலே உள்ள இடங்களில் குப்பைகளை எடுக்க பணம் கட்ட வேண்டும் என நோட்டீசு கொடுத்திருக்கிறது. அனைத்தையும் தனியாரின் கொள்ளைக்காக திறந்து விட்டிருக்கிறது.

இந்த டெண்டர்களில் அனைத்தும் பகாசூர கம்பெனிகள்தான் பங்கேற்க முடியும். 40 சதம் ஷேர் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இதற்குள்ளேயே வர முடியும். யாரோ ஒருவன் 10-10 க்கு ரூமில் அமர்ந்து கொண்டு இந்த டெண்டரை மட்டும் பெறுகிறான். அவன் யாரென்று கூட நமக்குத் தெரியாது. அவனை பார்க்கக் கூட முடியாது. ஆனால் அவனிடம் வேலை செய்வோம். அவனுக்கு டன் கணக்கில் குப்பை கிடைத்தாலே போதும். அந்த அளவிற்கு குப்பைகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது.

சில இடங்களில் எப்படி தெருக்களை சுத்தம் செய்கிறார்கள் என்றால் ஹைதராபாத்தில் இருந்து குடும்பத்துடன் ஆட்களை கொண்டு வந்து ஒரு ஏரியாவை ஒதுக்கி கொடுக்கிறார்கள். அங்கு இருப்பவர்களிடம் காசு கேட்க கூடாது. அங்கு இருக்கும் குப்பைகளை பொறுக்கி அதில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மாதம் 6000 சம்பளம். ரேசன் அரிசி வாங்கி கொடுத்து விடுவார்கள். தெருவில் சமைத்து சாப்பிட்டு வாழ்க்கை நடத்திக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு கொத்தடிமை முறையை இந்நிறுவனங்கள் புகுத்தி வருகின்றன.

படிக்க:
ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே – காணொளி !
சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு ரூ 330

சிங்கார சென்னை என்று சொல்லிக்கொண்டு சென்னையின் குடிசை வாழ் மக்களையும், தெருவோரங்களில் வசிக்கும்  மக்களையும் நகர்ப்புறங்களுக்கு அப்பால் விரட்டி குடிசை இல்லாத நகரமாக காட்ட முயற்சிக்கிறார்களோ, அதுபோல இந்தத் தொழிலில் ஈடுபடும் ஆதி திராவிட- ஆதி ஆந்திரர்களையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.

சென்னையின் பல இடங்களில், தெருக்களில் மலம் கழிக்கிறார்கள். அதனை எல்லாம் அகற்றுவது இந்த தொழிலாளர்கள் தான். இவர்களுக்கு ஸ்கேவஞ்சர்- ஸ்வீப்பர் என்று ஆங்கிலப் பெயர்களை வைத்து கையால் மலம் அள்ளும் தொழிலாளி என்ற கேட்டகிரியிலும் கொண்டு வராமல், நிரந்தர தொழிலாளியாகவும் கொண்டு வராமல் தினக்கூலியாக சுரண்டி வருகிறது. இத்தொழிலாளர்கள் மீது நவீனத் தீண்டாமையை கடைபிடித்து வருகிறார்கள்.

சொற்ப கூலிக்கு வேலை செய்யும் துப்புறவுத் தொழிலாளிகளின் குடியிருப்புக்கள். (திருப்பூர்)

ஒரு குடும்பத்தில் இருந்து கணவன் – மனைவி இரண்டு பேரும் அதிகாலையே துப்புரவு வேலைக்கு வந்து விடுவதால் இவர்களின் குழந்தைகள் மீது எந்த கண்காணிப்பும் இருப்பதில்லை. அந்த பிள்ளைகள் என்ன ஆனார்கள், சாப்பிட்டார்களா? இலையா? பள்ளிகூடம் போகிறார்களா? இல்லையா? என்பது கூட தெரியாது. இப்படிபட்ட சூழலில் பிள்ளைகளின் எதிர்காலமும் இந்த தொழிலை நோக்கியே தள்ளப்படுகிறது என்பது கொடுமையிலும் கொடுமை.

இங்கு வேலை செய்யும் தொழிலாளி ஐம்பத்தி நாலு ரூபாய் கூலி வாங்குவதில் இருந்து வேலை செய்து வருகிறான்.  இந்த தொழிலாளிகள்தான் ஒரு நாளைக்கு 500 மீட்டர் பெருக்க வேண்டும். 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தை பெருக்க குறைந்த பட்சம் 30,000 தொழிலாளர்கள் தேவை. ஆனால் மிகக் குறைந்த ஆட்களைக் கொண்டு,  மொத்த சென்னையையும் சுத்தப்படுத்துவது என்பது கொடூரமான மனித உழைப்புச் சுரண்டல் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து தான் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். அனைத்து துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு தொழிலாளர்களை அத்துக் கூலிக்கு வைத்து உழைப்பை சுரண்ட திட்டமிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இனி குப்பை கொடுக்கும் மக்களிடமிருந்தும் பணத்தை சுரண்டவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இது வெறும் துப்புரவு தொழிலாளியின் பிரச்சினை மட்டும் இல்லை. தினந்தோறும் சென்னைக்கு வந்து போவதாக சொல்லப்படும் ஒன்றரை கோடி மக்களின் சுகாதார நலன் சார்ந்த பிரச்சினை என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். அதனை காப்பாற்ற இடைவிடாமல் போராட்டத்தைத் தொடருவோம்” என்றார்.

அ.தி.மு.க. என்ற கொள்ளைக் கும்பலும், தனியார்மயமும் இணைந்து உருவாக்கி இருக்கும் மிகப்பெரிய இமாலய சாதனை ஊழல்… லஞ்சம்.. கொள்ளை… உழைப்புச் சுரண்டல்.  இனியும் அமைதி காத்தால் சந்தி சிரித்து விடும் என்று சென்னை உயர்நீதி மன்றமும் மாநகராட்சியின் ஊழலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஹைகோர்ட்டாவது… ம!$?ராவது என்று சொன்ன எச்ச ராஜாவையே கண்டு கொள்ளாத நீதிமன்றம்தான் இந்த தனியார்மய கொள்ளையர்களை தண்டிக்கப்போகிறதா என்ன?

சமூக ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமில்லாமல், தனியார்மய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் துப்புரவு தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து போராடினால் மட்டுமே இந்த ஒடுக்குமுறையிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். நமது சுகாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் !

குறிப்பு: சமீப காலமாக, “காலியிடத்தில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்ற பதாகையை காலியிடத்தில் பார்த்திருப்போம். அவை நகரத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இல்லை. இனி வரும் காலத்தில் குப்பையை தனியாரிடம் கொடுக்க வேண்டும். அதோடு சேர்த்து அதற்கான பணத்தையும் கொடுக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டுக் குப்பை வாங்கப்பட மாட்டாது. நீங்கள் காலியிடத்திலும் தூக்கி வீச முடியாது”. அதற்கான ஒரு முன்னோட்டம்தான் என்பதை புரிந்து கொள்ளவும்.

அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !

லகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் எதுவென்று கேள்விக்கு நமது பொதுபுத்தி உடனடியாக “நாலந்தா, தக்‌ஷசீலம்” என பதிலளிக்கும். ஆனால், கின்னஸ் உலக சாதனைப் பட்டியல் “அல்-கராவ்யின்” (Al-Quaraouiyine) என்கிறது.

சங்கி மூளைகளுக்கு இது கொஞ்சம் கசப்பான தகவல் தான் – ஏனெனில், கின்னஸ் உலக சாதனைப் பட்டியல் குறிப்பிடும் “அல்-கராவ்யின்” அமைந்திருப்பது மொராக்கோ எனும் இசுலாமிய தேசத்தில்.

”அல்-கராவ்யின்” (Al-Quaraouiyine) பல்கலைக் கழகம்.

இதில் சங்கிகளின் சங்கடத்திற்கு ஒப்பாக நமது ‘மண்ணடி’ மார்க்கபந்துக்களுக்கும் ஒரு சங்கடம் இருக்கிறது; அதாவது, இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் ஒரு இசுலாமிய பெண்மணி.

ஒரு செல்வந்த வணிகரின் மகளாக கி.பி 800-ம் ஆண்டு துனீசியாவில் ஃபாத்திமா அல் பிஹ்ரி பிறந்த போது வகாபி, சலாஃபி, தியோபந்தி போன்ற அடிப்படைவாத இசுலாமிய பிரிவுகள் தோன்றியிருக்கவில்லை. அன்றைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ், தாலிபான், அல்குவைதா போன்ற இயக்கங்களும் இருக்கவில்லை. ஃபாத்திமாவையும் அவரது சகோதரி மரியத்தையும் நன்றாக படிக்க வைத்துள்ளார் அவர்களின் தந்தை.

ஒன்பதாம் நூற்றாண்டில் மொராக்கோ நாட்டின் ஃபெஸ் (FEZ) நகரம் ஒரு முக்கியமான வணிக மையமாக வளர்ந்து வந்த சமயம். ஃபாத்திமாவின் தந்தை தனது குடும்பத்தோடு ஃபெஸ் நகருக்கு குடிபெயர்ந்து செல்கிறார். அந்நகரில் தனது வியாபார திறமையின் மூலம் பெரும் செல்வம் ஈட்டுகிறார் ஃபாத்திமாவின் தந்தை.

அவரது இறப்பிற்குப் பின் வாரிசுதாரரான ஃபாத்திமாவுக்கும் அவரது சகோதரி மரியத்துக்கும் பெரும் சொத்துக்கள் வந்து சேர்கின்றன. தங்களுக்குக் கிடைத்த பெரும் செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் செலவழிக்க சகோதரிகள் முடிவு செய்கின்றனர்.

தனது 59 -வது வயதில், கி.பி 859 -வது ஆண்டு அல்-கராவ்யின் பல்கலைக்கழகத்தைத் துவங்குகிறார் ஃபாத்திமா. சுமார் 30 மீட்டர் சுற்றளவு கொண்ட கட்டிடம் ஒன்றில் துவங்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழகத்தில் விவாத அரங்கு, வகுப்பறைகள் மற்றும் வழிபாட்டறைகளோடு அந்தக்காலத்திலேயே மிகப் பெரிய நூலகம் ஒன்றையும் அமைத்தார் ஃபாத்திமா. மதக் கல்வியோடு அரபு மொழி இலக்கணம், கணிதம், இசை, மருத்துவம் மற்றும் வானவியல் தொடர்பான கல்விப் பிரிவுகள் அந்தப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டன.

துவங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே பெரும் புகழ்பெற்ற இப்பல்கலைக்கழகத்திற்கு அந்தக் காலத்தில் வாழ்ந்த முக்கியமான அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் வருகை புரிந்துள்ளனர். தனது எண்பதாவது வயதில் இறக்கும் வரை ஃபாத்திமாவும் வகுப்புகளிலும் விவாதங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

அல்-கராவ்யின் பல்கலைக்கழகமே வரலாற்றில் முதன் முறையாக துவங்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். அதற்கும் முன் பண்டைய கிரேக்கம் மற்றும் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட நாலந்தா, தக்‌ஷசீலம் போன்றவற்றை விட இப்பல்கலையே ஒரு பல்கலை எனும் வடிவத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.

அல்-கராவ்யின் துவங்கப்பட்ட பின்னரே ஐரோப்பாவுக்கு நவீன பல்கலைக்கழக வடிவம் அறிமுகமானது. அதைத் தொடர்ந்து அல்-கராவ்யினை முன்மாதிரியாக கொண்டு இத்தாலியின் பொலோக்னா (Bologna 1088) இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் (1096) உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.

மத்தியகாலத்தில் புகழ்பெற்று விளங்கிய அல்-கராவ்யின், தற்போதும் சுமார் 2000 -க்கும் அதிகமான மாணவர்களோடு இயங்கி வருகின்றது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் 800 -க்கும் அதிகமான ஊழியர்கள் இன்றும் பணிபுரிந்து வருகின்றனர். வரலாற்றில் முதலில் துவங்கப்பட்டது மற்றும் நீண்ட காலமாக தொடர்ச்சியாக இயங்கி வருவது உள்ளிட்ட சாதனைகளுக்காக அல்-கராவ்யின் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

*****

சுலாமியர்கள் என்றாலே படிப்பறிவற்ற மூடர்கள் என்றும், இசுலாமியர்கள் என்றாலே பெண்களை தலைமுதல் கால் வரை முக்காடிட்டு வீட்டினுள் பூட்டி வைப்பவர்கள் என்றும் இந்து பொதுபுத்திக்கு அறிமுகமாகியிருக்கும் தகவல்களை அநாயசியமாக உடைக்கிறது இந்த செய்தி.

முன்னொரு காலத்தில் கணிதம், வானவியல், உலோகவியல், மருத்துவம் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளில் மத்திய கிழக்கைச் சேர்ந்த இசுலாமிய அறிஞர்கள் நிபுணத்துவம் பெற்று விளங்கியுள்ளனர். சொல்லப் போனால், இசுலாமிய உலகத்தில் இருந்தே மேற்குலகிற்கு நவீன அறிவியல் அறிமுகமாகியுள்ளது.

இசுலாமிய மதம் தோன்றிய காலத்தில் அது மக்களின் அறிவியல் கல்வி அறிவுக்கும் – குறிப்பாக பெண் கல்விக்கும் தடையாக நிற்கவில்லை என்பதற்கு அல்-கராவ்யின் பல்கலைக்கழகமே சாட்சி. எனினும், மத்திய காலத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய சமூகத்தில் நவீன முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் அதை சாத்தியப்படுத்திய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் வேகமெடுத்தன.

இதே சமயத்தில் இசுலாமிய மதம் மத்திய கிழக்கின் நிலபிரபுத்துவ எதேச்சாதிகாரத்தின் கைவாளாகச் சுருங்கி மக்களை ஒடுக்கும் கருவியாகி நின்றது. ஐரோப்பிய சமூகத்தில் கிறித்துவ திருச்சபைகள் வகித்த அதே பாத்திரத்தை மத்திய கிழக்கில் இசுலாம் மேற்கொண்டிருந்தது. எனினும், ஐரோப்பிய சமூகத்தில் திருச்சபைகளின் அதிகாரத்தை மாபெரும் முதலாளித்துவ புரட்சிகள் கேள்விக்கு உள்ளாக்கியதைப் போல் மத்திய கிழக்கில் நடக்கவில்லை.

இதன் விளைவாக ஏகாதிபத்திய நாடுகள் உருவாகி எழுந்த போது அவை எண்ணை வளம் மிக்க இசுலாமிய நாடுகளை தமது கட்டுப்பாட்டில் வைக்க ஏற்கனவே வெற்றிகரமாக பரிட்சித்துப் பார்க்கப்பட்ட மதம் என்கிற கருவியை பயன்படுத்திக் கொண்டன.

இந்த பின்னணியில் தான் 19-ம் நூற்றாண்டில் வகாபியம், சலாஃபி வகைப்பட்ட கடுங்கோட்பாட்டு வாதங்கள் உருவாகின. அவை தொடர்ந்து மக்கள் அறியாமையில் மூழ்கிக் கிடப்பதை உறுதி செய்து ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஈடுபட்டன. அந்த ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் தான் இன்று வரை தாலிபான், அல்குவைதா, ஐ.எஸ்.ஐ.எஸ், போகோ ஹராம் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அல்-கராவ்யின் பல்கலைக்கழகம் குறித்த செய்தி இரண்டு விசயங்களை உணர்த்துகின்றது:

ஒன்று, இசுலாமியர்களோ, கிறிஸ்தவர்களோ, இந்துக்களோ தம்மளவில் பிற்போக்காகவே இருக்க வேண்டும் என்பதற்காக நேர்ந்து விடப்பட்டவர்கள் அல்ல.

இரண்டு, நவீன சிந்தனைகள் வளர வேண்டுமாயின் யாராக இருந்தாலும் அறிவுச் செயல்பாடுகளுக்குக் குறுக்கே நிற்கும் மதத்தை எட்டி உதைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டியதைத் தவிற வேறு வழியில்லை.

கவனக் குறிப்பு: இன்றைய முதலாளித்துவ கால கட்டத்தில் உள்ள பல்கலை எனும் வடிவம் கல்வித்துறையில் முன்னேறிய நவீன நிறுவனமாகும். ஆகவே அல்-கராவ்யின் பல்கலையை இன்றைய நவீன பல்கலையோடு ஒப்பிட்டுப் பார்க்க கூடாது; முடியாது. அதே நேரம் பல்கலை எனும் பின்னாளில் நிறைவேறிய ஒரு முன்னேற்றத்தின் சுவடுகளை இப்பல்கலையில் நாம் காணலாம். கின்னஸ் நிறுவனம் போக நவீன கல்வித்துறை இப்பல்கலை குறித்து என்ன கருதுகிறது என்பதை நாங்கள் சோதிக்கவில்லை!

மேலும் :

பெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை

பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை கிளை சார்பில், “பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்: போராடாமல் விடிவில்லை!” என்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக பாலியல் குற்றங்களை யார் செய்வது? யார் தூண்டுவது? எப்படி குறைப்பது? என்கிற பல்வேறு கேள்விகளோடு, சமூக ஆர்வலர்களிடம் கருத்துக் கேட்டு அதனைப் பதிவு செய்து வருகிறது, பெ.வி.மு. இப்பதிவில், சமூக செயற்பாட்டாளர் தோழர் வே.மதிமாறன் உரை இடம்பெறுகிறது.

படிக்க:
பாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை ! பெ.வி.மு
தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்

சமூகம் சொத்துடைமை சமூகமாக மாறிய சமயத்திலிருந்துதான் பெண் முதலில் அடிமையாக்கப்படுகிறாள். ஆணுக்கு குழந்தைப் பெற்றுத்தரும் கருவியாகவே பெண் பாவிக்கப்படுகிறாள்.

குழந்தைப் பருவத்திலேயே, பெண் குழந்தைகளை ஒடுக்கி வளர்க்கிறார்கள். கிருஷ்ணனை பெண் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதிலேயே ஆணாதிக்கத்தை பெண்களை ஏற்க வைக்கிறார்கள். இன்று பெண்கள் படித்த பின்னர், பலரும் தங்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்துகிறார்கள். இதற்கு அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் தான் காரணம்.

இன்று இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, பெண்களுக்கு பல்வேறு விதத்தில் பாதுகாப்பை கொடுத்தாலும், பெண்களை இழிவாக சித்தரிக்கும் வேலைகளும் வாட்சப், சமூக வலைத்தளங்களில் அதிகரித்திருக்கின்றன. பெண்களுக்கு அறிவுரை சொல்லுவதை விட்டுவிட்டு ஆண்களுக்கு குழந்தைகளிலிருந்தே பெண்களை மதிக்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களை சாதிய ரீதியாக ஒடுக்குவதும், பெண்களை பாலியல்ரீதியாக ஒடுக்குவதும் வேறு வேறு அல்ல. இங்கு சாதிதான் பெண்ணடிமைத்தனத்திற்கு மிகப்பெரும் அடித்தளமாக இருக்கிறது. மதம் அதை சட்டரீதியாக பாதுகாக்கிறது.

பெண்களுக்கான ஜனநாயகமிக்க நாடாக சொல்லப்படும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான மனநிலை நிலைத்திருக்கிறது. பெண்களை போகப் பொருளாகவே இருத்தி வைக்கின்றனர்.

படிக்க:
போர்னோகிராஃபி : பாலியல் சுதந்திரமா , அடிமைத்தனமா ?
போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ? மு.வி.நந்தினி

பெண்களுக்கு உண்மையான சுதந்திரத்தோடு இருந்தது ஒரே ஒரு நாட்டுலதான்., அது சோசலிச ரசியாவில்தான். தோழர் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் தலைமையிலான சோவியத் ரசியாவில் பெண்களை சரிசமமாக நடத்தினர்.

சிறுவயதில் இருந்து ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு அளிப்பது என்பதை நடைமுறைப்படுத்துவதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.

‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா ?

0

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 8

சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மனித குலம் “வரலாற்றின் முடிவுக்கு” வந்து விட்டதாக குதூகலித்தார் ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமா.

முதலாளித்துவ சமூக அமைப்பே நிரந்தரமானதும் இறுதியானதுமாக தன்னை நிரூபித்துக் கொண்டதென முதலாளித்துவ அறிஞர்களின் உலகம் கொண்டாடியது. ஆனால் தனது வெற்றியை நீண்ட நாட்களுக்கு கொண்டாட முடியாதபடிக்கு தொடர்ந்து ஏகாதிபத்திய கழுத்தறுப்புப் போட்டிகளிலும், பொருளாதார நெருக்கடிகளிலும் சிக்கித் திணறி வருகின்றது ஏகாதிபத்திய உலகம்.

இந்தப் போக்கில் உலகளாவிய அளவில் ஏகாதிபத்தியங்களின் போர் வெறியும் புதுப் புது நோய்களும் பட்டினிச் சாவுகளும் வேலையிழப்புகளும் மிக வீரியமாக மக்களைத் தாக்கி துன்ப துயரங்களுக்கு ஆளாக்கி வருகின்றன.

முதலாளிய தொழிற்புரட்சிக் கட்டங்கள் ஒவ்வொன்றும் உற்பத்தி சக்திகள் அடைந்த ஒரு புதிய வளர்ச்சி மட்டத்தை விளக்குகின்றன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தவிர்க்கவியலாதபடி உற்பத்தி உறவுகளில் மாற்றத்தைக் கோருகின்றது. அதாவது மூலதனத்துக்கும் உழைப்புக்குமான முரண்பாட்டை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி கூர்மைப்படுத்துகின்றது.

நான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தில் ஏற்பட்டுள்ள நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஒவ்வொன்றும் உற்பத்தி சக்திகளின் இமாலய வளர்ச்சியையே குறிக்கின்றன. இந்த வளர்ச்சிப் போக்கு சமூகத்தில் பராமரிக்கப்படும் சமன்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. அதே சமயத்தில், இந்த அறிவியல் முன்னேற்றத்தைப் பயன்படுத்தி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டிக் கொள்ள ஆளும் வர்க்கம் முனைகின்றது.

ஒருபுறம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மூலதனத்திற்கு இருந்த தடைகளைத் தகர்த்துள்ளது. நிதிமூலதன சூதாடிகளுக்கு இருந்த ‘தேச எல்லைகள்’ என்கிற தடையரண் நொறுங்கியுள்ளது. உலகின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்கு மூலதனத்தைக் கடத்திச் செல்வதை நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாத்தியமாக்கியுள்ளது.

பல்வேறு தொழில்களின் அன்றாட இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கும் ஆற்றலையும், உற்பத்தியின் போக்கு, சந்தையின் போக்கு, மக்களின் நுகர்வுத் திறன், நுகர்வின் போக்கு மற்றும் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி, தொழிற்பிரிவுகளின் குறுகியகால மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்பு போன்றவற்றை வேர்மட்ட அளவில் இருந்து கிடைக்கும் மின் தரவுகளை மேல்மட்ட அளவில் வைத்துப் பகுத்தாயவும் அதனடிப்படையில் தொழில்களுக்கு இடையிலான நிதிமூலதனத்தின் சுழற்சியைத் திட்டமிட்டுச் சூதாடுவதற்கான வாய்ப்பையும் நவீன தொழில்நுட்பம் வழங்கியுள்ளது.

இன்னொருபுறம், அதே தொழில்நுட்பம் மக்களுக்கு கலாச்சாரங்களையும் எல்லைகளையும் கடந்த பார்வையை வழங்கியுள்ளது. செய்திகள், தகவல்கள் மற்றும் தரவுகள் மக்கள் எளிதில் பெறத்தக்கவையாக மாறியுள்ளன. பொருட்களின் உற்பத்தியும், நுகர்வும் உலகமயமான போக்கில் அதன் உற்பத்தியிலும், நுகர்விலும் ஈடுபட்ட மக்கள் திரளும் உலகளவில் திரட்டப்படுகின்றனர்.

இந்தப் போக்கு ஆளும் வர்க்கத்துக்கு மக்கள் தொகுதிகளின் ஒட்டுமொத்தம் குறித்த பார்வையை வழங்கின்றது. அதே சமயம் ஆளும் வர்க்கத்தின் தோல்விகளையும் போலித்தனங்களையும் உடனுக்குடன் மக்களின் பார்வைக்கும் கொண்டு சேர்க்கின்றது.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்துக்கு வந்த மோடியின் தோல்விகளை அதே சமூக வலைத்தளங்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.

எனினும் சமூகத்தை மின்னணுவியல் முறையில் ஒன்றிணைப்பது, அதன் போக்கில் ஒவ்வொரு தனிமனிதனின் மீதான கண்காணிப்பையும் பலப்படுத்துவது, அதன் போக்கில் சமூகத்தின் மீதான கட்டுப்படுத்தலை மேலும் மேலும் ஆழமாகவும் நுட்பமான முறைகளுக்கும் விரிவுபடுத்துவது, இறுதியில் சமூகத்தில் நிலவும் சமன்பாட்டை உத்திரவாதப்படுத்திக் கொண்டு முதலாளிய சுரண்டலை நீடித்துச் செல்வது என்பதே ஆளும் வர்க்கங்களின் சித்தமாக உள்ளது.

சமூகத்தை மேலிருந்து கட்டுப்படுத்தி அதன் வளர்ச்சியை கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் நான்காம் தொழிற்புரட்சிக் காலகட்டத்தின் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும் ஆளும் வர்க்கம் தனது சுரண்டலுக்கு ஏதுவான சமூக நிலைமைகளை அப்படியே நீடிக்கச் செய்ய முயற்சித்துக் கொண்டே தான் இருந்தது.

அம்முயற்சிகளுக்கு அந்தந்த காலகட்டத்தில் தோன்றும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தியும் வந்தது. அந்த வகையில் தான் தற்போது எழுந்து வரும் செயற்கை நுண்ணறித் திறன் மற்றும் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பங்களையும் தனக்கான அடக்குமுறைக் கருவிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த முயற்சியில் ஆளும் வர்க்கம் வெற்றியடையுமா?

அது மெரினா எழுச்சியின் இரண்டாவது நாள். போராட்டத் திருவிழாவின் நடுவே கரைந்து போயிருந்தோம். தோழர்களோடு லட்சக்கணக்கான அந்த மக்கள் திரளைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது சூழலுக்குப் பொருந்தாத சில கதாபாத்திரங்களைக் காண நேர்ந்தது.

தார்பாய்ச்சிக் கட்டிய வெள்ளை வேட்டி, நீண்ட ஜிப்பா, குறுக்காக போடப்பட்டிருந்த ஜோல்னா பை, தலை முழுக்க மழித்து விட்டு பின் மேல் மண்டையின் சுழிப் பகுதியில் மட்டும் அரையடிக்கு நீண்ட மெல்லிய குடுமி, பார்ப்பனத் தோற்றத்தோடு சில இஸ்கான் தொண்டர்கள் கையில் துண்டு நோட்டீஸ்களோடு வளைய வந்து கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு அருகிலேயே நாலு முழ வேட்டியும் மங்கிய கலர் சட்டைகளோடும் திராவிட முகங்களோடு சிலர். இவர்கள் நெற்றியில் செந்தூரத் தீற்றல்; ஆர்.எஸ்.எஸ் காரர்களாக இருக்க வேண்டும். முகங்களில் மிட்டாய் பிடுங்கப்பட்ட குழந்தைகளின் உணர்ச்சி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கென்று இந்துத்துவ கும்பல் வடிவமைக்க முயன்ற திரைக்கதை திசைமாறிச் சென்றிருந்ததை அவர்களால் விழுங்கிக் கொள்ளவே இயலவில்லை என்பதைக் காண முடிந்தது.

ஜல்லிக்கட்டு – தமிழரின் மாட்டுப் பண்பாடு, வீரம், இத்யாதி – நாட்டு மாடு – மாட்டின் மேண்மை – கோமாதா என்று அவாள்கள் பின்ன முயற்சித்த சங்கிலியின் கண்ணிகள் மொத்தமாக நொறுங்கி மெரினாவின் கரையெங்கும் இந்துத்துவ எதிர்ப்பு பேரலையாய் எழுந்திருந்தது. பின்னர் மாட்டிறைச்சி தடை விவகாரத்தின் போது “அப்போது மாட்டுப் பாதுகாப்புக்காக வந்தவர்கள் இப்போது மாட்டிறைச்சி உரிமை கோருகின்றனரே” என்று பக்தாளின் புலம்பல்கள் நம் செவிப் பாறைகளில் இனிமையாய் மோதின.

மாடு தின்னாத இடைநிலைச் சாதிகளின் தலையில் கோமாதாவின் “புனித மூத்திரத்தைத்” தெளித்து தலித்துகள் மற்றும் இசுலாமியர்களைத் தனிமைப்படுத்துவதற்கான சாத்தியத்தையும் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பீப் வருவலும், திராவிட நாடு கோரிக்கையுமே அவர்களுக்கான எதிர்வினையாக எழுந்து வந்தது.

அதே போல் வியட்நாம் போரில் அமெரிக்கா வெல்லும் என்ற எதிர்பார்ப்பை முறியடித்து, வியட்நாம் வென்றது. அதுவும், உலகிலேயே ஆற்றல் வாய்ந்த இராணுவத்தைக் கொண்ட, இராணுவத்துக்காக மூன்றாம் உலக நாடுகள் செய்யும் மொத்த செலவையும் விட அதிகமாக வருடா வருடம் கொட்டிக் கொடுத்த, நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்த அமெரிக்காவை போரில் சின்னஞ்சிறிய வியட்நாம் முறியடித்தது.

உலகளாவிய அளவில் ஒவ்வொரு தொழிலின் வேர்மட்ட இயக்கத்தையும், சந்தையின் நுட்பமான போக்குகளையும் கணிக்கும் ஆற்றலையும் மின் தரவுகளின் அடிப்படையில் பகுத்தாய்ந்து கண்டுபிடிக்கும் திறனையும் கொண்டிருந்த அமெரிக்க வங்கித் துறை இரண்டாயிரங்களின் இறுதியில் நொறுங்கிச் சரிந்தது. அதன் தொடர் விளைவாக முதலாளித்துவ கட்டமைவே பெரும் நெருக்கடிக்கு ஆளானது.

தொழில்நுட்பங்களின் உதவியால் தமக்கே ஏற்படவிருந்த பேரிடரை முதலாளித்துவ உலகத்தால் முன்கூட்டியே அறியவோ தடுக்கவோ முடியவில்லை. முதலாளிய உலக ஒழுங்கு தனக்குத் தானே வகுத்துக் கொண்ட ஆட்ட விதிகளை தானே மீறிச் சென்றதும், அதன் விளைவாக உலகப் பொருளாதார இயக்கத்தையே சீர்குலைவிற்குள் இழுத்து விட்டதும் நம் கண்முன்னே நடந்தேறியது.

முடிவில் தனது நெருக்கடிகளை மக்களின் தலையில் சுமத்தித் தப்பிக்கப் பார்த்தது நிதிமூலதனச் சூதாட்ட கும்பல். தமது ஓய்வூதியங்களையும் சேமிப்புகளையும் இழந்த மக்கள் தெருவில் இறங்கினர். தனது எல்லைகளுக்குள் இருக்கும் மக்களை மேலிருந்து ஒட்டு மொத்தமாகக் கண்காணிக்கும் வல்லமை பொருந்திய அமெரிக்காவில், அனைத்து விதமான கண்காணிப்பு முறைகளையும் மக்களின் எழுச்சி முறியடித்தது.

பொருளாதாரம், சமூகம், கல்வி, கலாச்சாரம், என சகல துறைகளின் வழியாகவும் பிறப்பிலிருந்தே மூளையில் முதலாளித்துவம் திணிக்கப்பட்ட அமெரிக்கர்கள், முதலாளித்துவத்தின் கருவறையான வால் வீதியை முற்றுகையிட்டனர். “முதலாளித்துவம் ஒழிக” என்று முழக்கமிட்டனர்.

occupy-wall-streetமுதலாளித்துவத்தின் கருவறையிலேயே முதலாளித்துவ எதிர்ப்புக் கோரிக்கைகள் எழச்செய்த பெருமை முதலாளித்துவ உலகையே சாரும். தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்திருந்த போதும், முதலாளித்துவ உலகம் தாமே வகுத்துக் கொண்ட சூதாட்ட விதிகளை மீறுவதை எந்த தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியவில்லை. சப் பிரைம் நெருக்கடியின் இறுதி விளைவு மக்களின் பொருளாதய வாழ்வின் மீது பேரிடியாக இறங்கியது. மக்கள் வால்வீதியில் குவிந்தனர்.

ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பரப்புரைச் சாதனங்களின் மூலம் மக்களின் கருத்துக்களை வடிவமைப்பது, எதிர்க் கருத்துக்களையும் அதிருப்திகளையும் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் உற்பத்தி செய்து அவற்றை நிறுவனமயமாக்குவது என்கிற உத்தியை ஆளும் வர்க்கம் தீவிரமாக கையாள்கிறது. சமூக வலைத்தளங்களில் மக்களுடைய பங்கேற்பை மின் தரவுகளின் அடிப்படையில் பகுத்தாய்வதும், அதனடிப்படையில் சமூகத்தின் சித்த்ததை கட்டுப்படுத்துவதும் சாத்தியமென்பதால் அம்முயற்சியில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளன ஆளும் வர்க்கங்கள்.

இந்த மெய்நிகர் உலகை பொய்களில் மூழ்கடிக்க ஆளும் வர்க்கங்கள் எத்தனைதான் முயன்றாலும், மெய் உலகப் பொருளாதார வாழ்வின் பிரதிபலிப்பாக இருப்பதிலிருந்து அதனை விடுவிக்க ஆளும் வர்க்கத்தால் முடியாது. சமூகத்தின் பொருளாதார நிலைமைகள், வாழும் சூழல் போன்றவை அச்சமூகத்தில் வாழும் மக்களுடைய சித்தத்தின் மேல் அறுதியான தாக்கத்தைச் செலுத்துகின்றன.

எனவே தான், மூன்றாண்டுகளுக்கு முன் இந்துத்துவ கும்பல் மோடியைக் குறித்து இணையத்திலும் சமூகவலைத்தளங்களிலும் செய்த மோசடிப் பிரச்சாரங்களை நம்பிய அதே மக்கள், மூன்றே ஆண்டுகளில் மோடியை எள்ளி நகையாடுகின்றனர். சமூக வலைத்தளங்கள் நேர்மறையிலோ எதிர்மறையிலோ சமூகத்தில் ஏற்படுத்தும் எழுச்சி அல்லது பொதுக்கருத்து என்பவற்றுக்கு அதே சமூகத்தில் ஒரு அடிப்படை இருந்தாக வேண்டும்.

காங்கிரசின் ஊழல்கள் மக்களிடம் உருவாக்கிய வெறுப்பும், மறுகாலனியாக்க கொள்கைகள் தோற்றுவித்த கோபமும் போட்டுக்கொடுத்த அடித்தளத்தின் மீது நின்றதனால்தான் மோடியின் பிம்பம் மக்களை ஏமாற்ற முடிந்தது.

எனவே தான், தானியங்கல் தொழில்நுட்பத்தின் விளைவாகவும், உற்பத்தி மற்றும் மூலதனத்தின் உலகமயமாக்கல் போக்கின் விளைவாகவும் வேலையிழந்து சேமிப்புகளை இழந்து வீட்டையும் இழந்து வால்வீதியில் திரண்ட அமெரிக்கர்களும், இந்துத்துவ அரசியலால் வஞ்சிக்கப்பட்டு மெரினாவில் திரண்ட தமிழர்களும், இந்துத்துவத்தின் நுகத்தடியின் கீழேயே போலீசின் துப்பாக்கிகளுக்கு மார்பைத் திறந்து காட்டிய மத்திய பிரதேச விவசாயிகளும் அரசுகள் உருவாக்க நினைத்த மோசடியான பொதுக் கருத்துக்களை மறுதலித்து ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றனர்.

சில பத்தாண்டுகளாக பார்ப்பனியக் கம்பளியால் போர்த்தப்பட்டு, இந்துத்துவ இருளிலேயே பழக்கப்படுத்தப்பட்டிருந்த மத்திய பிரதேச மற்றும் மகாராஷ்டிரா விவசாயிகளின் எழுச்சியும், இந்துத்துவத்தின் கருவறையான குஜராத்திலேயே செத்த மாடுகளை அரசு அலுவலகங்களில் வீசியெறிந்த ஊனா தலித் மக்களின் எழுச்சியும் நிரூபிப்பது இதைத் தான். கருத்துக்கள் எந்த ஆதாரமும் இன்றி மந்திரத்தில் தொங்கும் மாங்காய்கள் அல்ல – அவற்றுக்கு ஒரு சமூகப் பொருளாதார அடிப்படை இருந்தாக வேண்டும்.

மக்களுடைய பொருளாயத வாழ்வு எத்தனைக்கெத்தனை நெருக்கடிக்கு உள்ளாகின்றதோ அத்தனைக்கத்தனை சுரண்டலை உத்திரவாதப்படுத்தும் சமூகச் சமன்பாட்டிற்கு எதிராக மக்கள் தள்ளப்படுவர். இது தவிர்க்கவியலாதபடிக்கு சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டினை தீவிரப்படுத்தும். சமூகம் தனது அடுத்த கட்ட வளர்ச்சி நிலை நோக்கி முன்னேறுவதைத் தாமதப்படுத்துவதில் ஆளும் வர்க்கங்கள் வெற்றியடையலாம். ஆனால் அதனைத் தவிர்க்கவியலாது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைக் குறிக்கும் நான்காம் தொழிற்புரட்சி காலகட்டத்தின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உற்பத்தி சக்திகளைக் கட்டுப்படுத்தும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு உள்ளேயே போட்டியைத் தீவிரப்படுத்துகின்றன.

மீப்பெரும் மின் தரவு, செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம், பொருட்களின் இணையம் போன்ற தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்துவதற்கான போட்டியும், நாய்ச் சண்டைகளும் பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளிடையே தீவிரமடைந்து வருகின்றது. அதே சமயத்தில் மேல்நிலை வல்லரசுகளிடையே நடக்கும் ஆதிக்கத்திற்கான போட்டி தற்போது இணையம் மற்றும் மின் தரவுகளின் தளத்திற்கு நகர்ந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரசிய எதிர்ப்பு நிலையை எடுத்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் நன்மதிப்பைக் குலைக்கும் நடவடிக்கையை ரசிய ஹேக்கர்கள் மேற்கொண்டனர். ஹிலாரியின் மின்னஞ்சல் தகவல்களை ரசிய ஹேக்கர்கள் அம்பலப்படுத்தியது பின்னர் தேர்தல் முடிகளில் டிரம்புக்கான ஆதரவாக பிரதிபலித்தது.

தனிப்பட்ட முகமிலி நபர்கள் (Anonymous) ஹேக்கர்களாக செயலாற்றி வந்த நிலையில் தற்போது மேல்நிலை வல்லரசுகளே தொழில்நுட்ப ரீதியில் ஹேக்கர்களைப் பராமரிப்பதும், போட்டி வல்லரசு நாடுகளின் இரகசியங்களை உளவு பார்ப்பதும் நடக்கின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடைய தலைவர்களின் மின்னஞ்சல்களையும் தொலைபேசி உரையாடல்களையும் அமெரிக்கா கண்காணிப்புக்கு உட்படுத்திய விவகாரம் அம்பலமாகி, அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான முரண்பாட்டை தீவிரப்படுத்தியது.

*****

செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தையும், தானியங்கல் தொழில்நுட்பத்தையும் பல்வேறு தொழில்களில் அமல்படுத்தி வரும் பன்னாட்டு முதலாளி வர்க்கம், இதன் விளைவாக ஏற்படும் வேலையிழப்புகள் தோற்றுவிக்கும் சமூக அமைதியின்மையையும் மக்கள் எழுச்சிகளையும் அதே தொழில்நுட்பங்களைக் கொண்டு தடுத்து நிறுத்த முனைகின்றனர்.

எனினும் ஒரு ஆயுதம் என்கிற வகையில் இத்தொழில்நுட்பம் இருபுறமும் கூர்மையானதாகவே உள்ளது. நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஆளும் வர்க்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினாலும், இத்தொழில்நுட்பங்களின் சாத்தியங்கள் ஒரே நேரத்தில் ஆளும் வர்க்கத்தின் கரங்களில் அடக்குமுறைக்கான ஆயுதங்களையும், மக்களின் கரங்களில் எதிர்ப்புக்கான கேடயங்களையும் வழங்குகின்றன.

ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே இருக்கும் முரண்பாடுகள் தற்போது தொழிற்நுட்பம் சார்ந்தும் உருவாகின்றன. அமெரிக்காவின் என்.எஸ்.ஏ திட்டப்படி இணையம், தகவல் தொடர்பு கருவிகளில் பல நேசநாடுகள் உளவு பார்க்கப்பட்டன. ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இவ்வுளவு வேலைகளை கடுமையாக எதிர்த்திருப்பதோடு தத்தமது இணைய பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் அளவு ஹேக்கர்கள் மூலம் ரசியா தலையிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. வடகொரியாவோ தனது அதிபரை இழிவுபடுத்தும் சோனி நிறுவனத்தின் ஹாலிவுட் படம் வெளியாவதற்கு முன்னரே ஹேக் செய்து உலகெங்கும் வினியோகித்தது.

ஏகாதிபத்திய நாடுகளிலேயே கூட இவ்வகை தொழில்நுட்பங்கள் தனிமனித உரிமைளைப் பறிப்பதாக பலர் எதிர்க்கின்றனர். அப்படித்தான்
ஸ்னோடன்
அமெரிக்காவின் என்.எஸ்.ஏ உளவுத் திட்டத்தை வெளியே கொண்டு வந்தார். ஜூலியன் அசாஞ்சேவின் விக்கி லீக்ஸ் மூலம் அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளின் முரண்பாடுகள், உளவுவேலைகள் தொடர்ந்து வெளியிடிப்படுகின்றன.

முதலாளித்துவ ஒழுங்கில் மையப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப கட்டுப்பாட்டுக் கேந்திரங்களின் மீது அதிருப்தியுற்ற ஹேக்கர்கள் அவ்வப் போது அந்தக் கட்டமைப்பின் மீதே கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டு ஏகாதிபத்திய உலகைத் திகைப்படையச் செய்கின்றனர். பல நாடுகளில் நடக்கும் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு சமூகவலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன.

எனவே தான் காஷ்மீரில் மட்டுமின்றி, மத்தியப் பிரதேசத்திலும் மக்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இணையம் தடை செய்யப்படுகின்றது. கண்காணிக்க வேண்டுமானால், மக்களைச் ”சுதந்திரமாகச்” கருத்துப் பரிமாற அனுமதிக்க வேண்டும்.

இணையத்தை முடக்கியபின் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு எதனைக் கண்காணிப்பது? இணையம் எனும் அலங்காரமான வாளை உறையிலிருந்து உருவும் வாய்ப்பையே மக்களின் எழுச்சிகள் ஆளும் வர்க்கத்துக்கு வழங்கவில்லை. இணைய முடக்கத்தையும் தொலைபேசி முடக்கத்தையும் தாண்டியே காஷ்மீரிலும், மத்தியப் பிரதேசத்திலும் மக்கள் தெருக்களில் குவிந்து வருகின்றனர்.

இணையத் தொழில்நுட்பம் என்கிற சீப்பை ஒளித்தாலும் மக்கள் எழுச்சி என்கிற திருமணத்தை நிறுத்த முடியவில்லை. நான்காம் தொழிற் புரட்சியும் அதன் தொழில்நுட்ப சாத்தியங்களும் தலையை சீவும் வாளைப் போலத்தான் தோற்றமளிக்கின்றன. ஆனால் அவை முடியைச் சீவும் சீப்புகள்தான் என்று நிரூபிக்கின்றன இணையத்தடையை மீறி நடக்கும் மக்கள் போராட்டங்கள்.

சர்வ வல்லமை பொருந்திய ஜாரின் இராணுவத்தை வீழ்த்தியது ரொட்டிகளைக் கனவில் தேடிக் கொண்டிருந்த, வயிறு காய்ந்த ரசிய உழைக்கும் மக்கள் படை தான். சமூக மாற்றங்களை அடக்குமுறை ஆயுதங்கள் தீர்மானிப்பதில்லை; மக்களே தீர்மானிக்கிறார்கள், தீர்மானிப்பார்கள்.

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

_____________

இதனை முழுமையான புத்தகமாக வாங்க

20.00Read more

அச்சு நூல் தேவைப்படுவோர் மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60, தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

நூல் அறிமுகம் : ‘இந்து’ தேசியம் | தொ. பரமசிவன்

பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதி ஏற்கெனவே வெளிவந்த ‘நான் இந்துவல்ல நீங்கள்?’, ‘இந்து தேசியம்’, ‘சங்கரமடம்; தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்’, ‘இதுதான் பார்ப்பனியம்’, ‘புனா ஒப்பந்தம்; ஒரு சோகக்கதை’ ஆகிய ஐந்து குறுநூல்களின் தொகுப்புதான் ”இந்து தேசியம்” என்ற இந்த நூல்.

தொ.ப-வை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. பலரது கண்களுக்கு எட்டாத தொலைவில் ஒதுங்கி வாழ்கிற ‘பாவப்பட்ட’ சிற்றூர்கள் அவர் கண்ணில் மட்டும் ‘பளிச்’ என்று புலப்படும். ஊர்ப் புறங்களை, நாட்டுப் புறங்களைப் பார்த்திருந்தாலும் அனைவர் பார்வையிலும் படாத மண்ணின் பண்பாட்டு அசைவுகள் அவர் கண்ணுக்கு மட்டும் தெரியும். அவற்றை அலசி ஆய்ந்து அவற்றில் பொதிந்துள்ள சிறப்புகளைத் தோண்டி எடுத்து நம் பார்வைக்கும் சிந்தனைக்கும் வைத்து திகைக்க வைப்பார். இயல்புப் போக்கு சிலரது சூழ்ச்சியால் முறைமாற்றி வைக்கப்பட்டிருக்கும் அநியாயப் போக்குகளை அம்பலப்படுத்துவார்.

முதல் கட்டுரையான ‘நான் இந்துவல்ல. நீங்கள்..?’ எனும் கட்டுரை ‘இந்து’ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்ற கேள்வியோடு தொடங்குகிறது. செத்துப்போன சங்கராச்சாரி தனது நூலில் ‘வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்று பொதுப் பெயர் வைத்தானோ, இல்லையோ, நாம் பிழைத்தோம்” என்று கூறியுள்ளதை எடுத்துக் காட்டுவது முதலாக, இந்து மதத்தில் உள்ள அனைவரும் ஒன்றா? சமமானவர்களா? என்பது தொடங்கி, சங்கராச்சாரி ‘ஸ்மார்த்தர்’ என்பதால் கோவிலுக்குள் நுழையவோ, வழிபாடு செய்யவோ உரிமை இல்லை என்பதைச் சொல்லி, மதமாற்றம், இந்து மதத்தில் ‘தலித்’துகள் என பலநிலைகளை விரிவாக அலசுகிறார். (பக்.7)

படிக்க:
இந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்
இந்துத்துவத்தை அம்பலப்படுத்தும் 17 நூல்கள் – அறிமுகம்

இரண்டாவது கட்டுரையாக உள்ளது ‘சங்கரமடம்; தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்” என்பதாகும். பெரும்பான்மையான மக்கள் பவுத்த, சமண சமயங்களை பின்பற்றி வந்த நிலையை மாற்ற உழைத்தவரே ஆதிசங்கரர். பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதிய பலருள் இவர் முதலானவர். ஒரே பிரம்ம சூத்திரத்துக்கு இந்த ஆதிசங்கரர் எழுதிய உரை அத்வைத மதப் பிரிவானது. மத்துவர் எழுதிய உரை த்வைதம் ஆனது. இராமானுஜர் எழுதிய உரை விசிஷ்டாத்வைதம் ஆனது. இப்படி சமஸ்கிருதம் என்ற குழப்ப மொழியில் எழுதப்பட்ட ஒரே நூலுக்கு மூவர் எழுதிய உரைகளும் மூன்று மதப் பிரிவாகவே ஆகிவிட்டது ஒரு வேடிக்கை தான்.

ஆதிசங்கரர் தன் ‘சவரக் கத்தி போன்ற கூர்மையான அறிவைப் பயன்படுத்தி, பவுத்த, சமண மதங்களை அழித்தொழித்து விட்டு உயிருக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை ; இருவரும் ஒன்றே எனும் அத்வைதக் கோட்பாட்டை வாயளவில் பேசிக்கொண்டும், சங்கரனுக்கு எதிரே வந்த தாழ்த்தப்பட்ட ஒருவரை ஒதுங்கச் சொன்னபோது அவர் எழுப்பிய கேள்வியால் மக்களின் சமத்துவத்தை ஏற்றுக்கொண்ட கதைகளை உலவவிட்ட அவர்தான், பார்ப்பன மேலாதிக்கத்தைப் பேணிக் காக்கும் சைவம், வைணவம், கெளமாரம், சாக்தம், காணபத்யம், சௌரம் என்ற ஆறு பிரிவுகளை ஒன்றிணைத்து ஒரே மதமாக நிறுவ முயற்சித்த ஷண்மத ஸ்தாபகர் (ஆறு மத ஒற்றுமையை நிறுவியவர்) என்று புகழப்பட்டவர்.

அவர் திசைக்கொன்றாக நான்கு மடங்களை (பத்ரிநாத், துவாரகை, பூரி, சிருங்கேரி) நிறுவியதாகவும் பதிவுகள் உண்டு. தான் பிறந்த கேரளாவின் காலாடியில் கூட ஒரு மடத்தை அவர் நிறுவிக் கொள்ளவில்லை. ஆனால் நமது காஞ்சிபுரத்து சங்கரர்கள் காஞ்சியில் – நிறுவியது தான் சங்கரரே நிறுவிய ஆதிமடம் என்றும், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் பெயரால் காஞ்சி மடத்தைப் பீற்றிக் கொள்ளும் இவர்கள் 2000 ஆண்டு வரலாறு கொண்டது காஞ்சி மடம் என்று புளுகுவது மற்றும் ஒரு அபத்தம் ஆகும். இம்மடத்தின் பொய்மைக் குமிழியை ஆதார ஊசியால் உடைத்துத் தள்ளுகிறார் தொ.ப.

படிக்க:
இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

அடுத்த கட்டுரை ‘இந்திய தேசியம்’ உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு என்பதாகும். இக்கட்டுரை நமக்குப் பல புதிய செய்திகளை அறியத் தருகிறது. நீதிக் கட்சி அரசாங்கம் 1924-ஆம் ஆண்டு கொண்டுவந்த அறநிலையப் பாதுகாப்பிற்கான சட்டவரைவில் இந்து என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்ததற்கு சைவர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது. மனுஸ்மிருதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மோனியர் வில்லியம்ஸ், ஆல்காட், பிளாவட்ஸ்கி அம்மையார், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு மென்மேலும் மேலாதிக்கச் சிந்தனையை புகட்டிய சிவசங்கர பாந்தியா என்ற குஜராத்தி பார்ப்பனர். அனந்தாச்சார்லு எனும் தெலுங்குப் பார்ப்பனர் ஆகியோரின் பங்கு, திராவிடம் என்ற சொல்லை சமூக, அரசியல் தளத்தில் 1885 இல் முதன்முதலில் முன்வைத்த அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், வேதமல்லா மரபு சார்ந்த தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிட்ட கனகசபைப் பிள்ளை சி.வை.தாமோதரம்பிள்ளை, ஜி.யூ.போப், உ.வே.சாமிநாதையர் பற்றிய பல புதிய தரவுகள் விரவிக் கிடக்கின்றன.

இக்கட்டுரையில் ”இந்திய தேசியமும் திராவிட தேசியமும்” என் குணாவின் நூல் பற்றிய குறிப்பும், திராவிட இயக்க முன்னோடிகள் “திராவிட தேசியம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தனர் என்ற குறிப்பும் 1937 – 44 காலகட்டத்தை வீரம் மிகுந்த திராவிட தேசியம் உருவான காலம் என்று நம்பி ஆரூரான் கூறுவதாகவும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நம் அறிவுக்கு எட்டியவரை திராவிட இயக்க முன்னோடிகளுள் எவர் ஒருவரும் ‘திராவிட தேசியம்’ என்ற சொல்லைக் கையாண்டதாக எந்த ஒரு பதிவும் இல்லை. ஆனாலும் திராவிட தேசியம் பேசப்பட்டதாக தற்போது பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான விமரிசனத்தை தொடங்கி வைத்தவர்களில் முன்னோடியான குணா கூட தனது நூலில் எந்த ஆதாரக் குறிப்பும் இல்லாமலேயே ஒற்றை மேற்கோளுக்குள் ‘திராவிட தேசியம்’ என எச்சரிக்கையாகக் குறிப்பிட்டே தொடங்கி வைத்துள்ளார். (பக்.11-12)

படிக்க:
இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் – ஆய்வுக் கட்டுரை – அவசியம் படிக்க !
கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?

அடுத்து வரும் ‘ இதுதான் பார்ப்பனியம், எனும் கட்டுரை. இது முன்பு நூலாக வந்தபோது தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். பார்ப்பனியத்தின் தன்மையை, ஆதிக்கத்தை, நிலைநிறுத்தச் சூழ்ச்சிகள், அதற்கு எதிராக எழுந்த எழுச்சியை என பல ஆழமான விவாதங்களை முன்வைக்கிறது. (பக்.13-14)

அடுத்துவரும் கட்டுரை ‘புனா ஒப்பந்தம் – ஒரு சோகக்கதை’ என்பதாகும், தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கும், வளர்ச்சிக்கும், பொது அவைகளில் தங்கள் கருத்தை எடுத்து வைப்பதற்குமான பல முயற்சிகள் பல காலமாக செய்யப்பட்டே வந்துள்ளன. அவற்றுள் சிறந்த ஒரு முயற்சியே இரட்டை வாக்குரிமை – தனித்தொகுதி கேட்டதாகும்…

படிக்க:
காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்

இக்கட்டுரை வட்டமேஜை மாநாட்டைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு அறிவித்த இத்தனித் தொகுதி முறைக்கு எதிராக காந்தியார் நடந்துகொண்ட முறையையும் அவரது மாயவலையில் விழுந்த எம்.சி.ராஜா போன்ற தாழ்த்தபட்டோர் இயக்கத் தலைவர்கள் இக்கோரிக்கைக்கு எதிராக செயல்பட்ட அவலத்தையும் விரிவாக அலசுகிறார். அதுபோலவே தாழ்த்தப்பட்டோர் மட்டும் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்து ஜே.எஸ்.கண்ணப்பர் ஆசிரியராக இருந்த நீதிகட்சியின் ‘திராவிடன்’ இழில்தான் முதன்முதலில் முன்வைக்கப்பட்டது என்ற ஒரு தகவலையும் சுட்டிக்காட்டியுள்ளார் தொ.ப. (பக்.16)

(இந்நூலில் கொளத்தூர் தா.செ.மணி விரிவாக எழுதியுள்ள அணிந்துரையிலிருந்து)

நூல்: ‘இந்து’ தேசியம்
ஆசிரியர்: தொ.பரமசிவன்

வெளியீடு: கலப்பை பதிப்பகம்,
9/10, முதல் தளம், இரண்டாம் தெரு, திருநகர், வடபழனி, சென்னை – 600 026.
மின்னஞ்சல்: kalappai.in@gmail.com

பக்கங்கள்: 144
விலை: ரூ.130.00

இணையத்தில் வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் | commonfolks.in

மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

தாய் நாவல் : 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !

மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி -1

தாய் நாவல் குறித்து வி. இ. லெனின் – மாக்சிம் கார்க்கி

…லெனின் வேறு விதமாக இருப்பார் என்று நினைத்தேன். அவரிடம் ஏதோ ஒன்று இல்லாதது போல் தோன்றிற்று. அவர் கரகரத்த குரலில் பேசினார்; தமது அக்குளில் எங்கேயோ கைகளை நுழைத்துக் கொண்டு இறுமாப்பான பார்வையுடன் அங்கு நின்று கொண்டிருந்தார், மொத்தத்தில் அவர் ஒரு வெகு சாதாரணமானவராகக் காட்சி அளித்தார். அவரிடம் “தலைவரின் அடையாளம் எதுவுமே இல்லை. நான் ஓர் எழுத்தாளர். சிறு விஷயங்களைக் கவனிக்கும்படி என்னுடைய தொழில் என்னை வற்புறுத்துகிறது. இக்கடமை ஒரு பழக்கமாகிவிட்டது. சில சமயங்களில் இது சலிப்பூட்டும்.

மாக்சிம் கார்க்கி.

நான் ஜி. வி. பிளெக்கனோவிடம் ”அழைத்துச் செல்லப்பட்ட” போது, அவர் தமது கைகளைக் குறுக்கு வாட்டத்தில் வைத்துக் கொண்டு ஒரு கடுமையான, ஆனால் சலிப்படைந்த பார்வையை என்மீது வீசினர், தமது கடமையைச் செய்து சோர்வுற்ற ஓர் ஆசிரியர் மற்றொரு புதிய மாணவனைக் காண்பது போன்று அவர் பார்த்தார். அவர் மிக மிகச் சர்வசாதாரனமா ஒன்றை என்னிடம் கூறினார்: ”நான் உங்களுடைய திறமையைப் போற்றுபவன்” இது தவிர அவர் வேறு எதுவும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. காங்கிரஸ் நடந்தபோது அவரோ அல்லது நானோ ”மனந்திறந்து” பேசவேண்டும் என்று விரும்பவில்லை.

ஆனால், கரகரத்த குரலில் பேசும் இந்தத் தடித்த, துருதுருப்பான மனிதர், சாக்கரடீஸ் புருவம் போன்ற தமது புருவத்தை தமது ஒரு கையால் துடைத்துக் கொண்டும், மற்றொரு கையால் எனது கையை இழுத்துக் கொண்டும் தமது அதிசயமான ஜீவ ஒளி நிறைந்த கண்களில் நேசமிக்க பார்வையை பளிச்சிட என்னை நோக்கி தாய் நூலின் குறைபாடுகள் பற்றி பேசத் தொடங்கினார் ஐ.பி.லேடிஷ்னிகோவிடமிருந்து அதன் கையெழுத்துப் பிரதியை இரவல் வாங்கி அவர் படித்திருந்தார். அந்நூலை அவசரத்தில் எழுதினேன் என்று நான் சொன்னேன், ஏன் அவசர அவசரமாக எழுதினேன் என்று நான் விளக்குவதற்கு முன்பு லெனின் தலையை அசைத்து விட்டு அவரே அதை விளக்கினார்: நான் அதை அவசர அவசரமாக எழுதியது நல்லதாய் போயிற்று; ஏனெனில் இப்புத்தகம் தேவைப்பட்டது. பல தொழிலாளிகள் உணர்ச்சி வேகத்தில், தன்போக்கில் புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்தனர்; தாய் படிப்பது அவர்களுக்குப் பயனுள்ளதாயிருந்தது.

“மிகவும் காலப் பொருத்தமான புத்தகம்” என்று அவர் கூறினார். இதுதான் அவருடைய ஒரே பாராட்டுதல். இது எனக்கு எவ்வளவோ பெரிதாக இருந்தது. பின்னர் அவர், தாய் அந்நிய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறதா? எந்த அளவு ரஷ்ய, அமெரிக்க தணிக்கையாளர்கள் இப்புத்தகத்தைக் கெடுத்துவிட்டனர் என்று வேகமாகவும், காரியகர மான முறையிலும் கேட்டார். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று நான் அவரிடம் சொன்னதும், ‘ முதலில் அவர் முகத்தைச் சுளித்தார்; பின்னர் தமது தலையைப் பின்பக்கமாக சாய்த்துத் தமது கண்களை மூடிக் கொண்டு அதிசயமான வகையில் சிரிக்க ஆரம்பித்தார். அவருடைய சிரிப்பு தொழிலாளிகளின் கவனத்தை ஈர்த்தது.

♦♦♦

மாக்சிம் கார்க்கியின் தாய்

I

புகையும் எண்ணெய் அழுக்கும் நிறைந்த காற்றில் தொழிலாளர் குடியிருப்புக்கு மேல், நாள்தோறும் அந்த ஆலைச்சங்கு அலறிக் கூச்சலிடும். வேலையால் இழந்த சக்தியைத் தூக்கத்தால் மீண்டும் பெறாத தொழிலாளர்கள், ஆலைச்சங்கின் அழைப்புக்குப் பணிந்து, அழுது வடியும் வீடுகளிலிருந்து கடுகடுத்த முகங்களுடன் அடித்து மோதிக்கொண்டு வெளியே ஓடி; கலைப்பட்ட கரப்பான் பூச்சிகளைப் போலத் தெருக்களில் மொய்ப்பார்கள்.

மாக்சிம் கார்க்கி
ஒரு அலட்சியமான தன்னம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்த அந்த ஆலை, பதிற்றுக் கணக்கான விளக்குகளால் புழுதி படிந்த சாலையில் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்கும் குளிரும் குமரியிருட்டும் கவிந்த அந்த அதிகாலையில், செப்பனிடப்படாத சாலையில், அவ்வாலையின் கற்கூடாரங்களை நோக்கி விரைவார்கள் தொழிலாளர்கள். பரபரக்கும் அவர்கள் பாதங்களின் கீழே புழுதி நெறுநெறுக்கும். தூங்கி வழியும் கரகரப்பான கூக்குரல்கள் எங்கும் எதிரொலிக்கும். கொச்சைத்தனமான வசவுகள் காற்றைச் சீறிக் கிழிக்கும் இயந்திரங்களின் ஓங்காரமும், நீராவியின் முணமுணப்பும் இத்தொழிலாளர்களுக்கு எதிராக மிதந்து வரும் குண்டாந்தடிகள் போன்ற நீண்ட கரிய புகைபோக்கிகள் அக்குடியிருப்புகளை விட உயர்ந்து நின்று துயரமும், கடுகடுப்பும் காட்டிக்கொண்டிருப்பது தொலை தூரத்திலிருந்தும் தெரியும்.

சாயங்காலச் சூரியன், வீட்டுச் சாளரங்களின் மீது, ஓய்ந்து போன தன் கிரணங்களைப் படரவிடும் மாலைப் பொழுதில், செமித்துத் தள்ளப்படும் காடு போல், தன் பாறை வயிற்றுக்குள்ளிருந்து, தொழிற்சாலை மக்களை வெளித்தள்ளும். மீண்டும் அவர்கள் அந்த அசுத்தமான தெருக்களின் வழியே கறுத்துப் புகையடித்த முகங்களோடு, பளபளக்கும் பசித்த பற்களோடு, யந்திர எண்ணையின் பிசுக்கு நாற்றம் அடிக்கும் உடலங்களோடு, நடந்து வருவார்கள். அப்போது அவர்களது குரலில் ஓரளவு உயிர் இருக்கும். உவகையும் கூட இருக்கும். அன்றைய நாள் வேலை முடிந்தது. வீட்டில் உணவும் ஓய்வும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.

தொழிற்சாலை யந்திரங்கள் தேவையான மட்டும் அந்தத் தொழிலாளர்களது சக்தியை உறிஞ்சித் தீர்த்துவிடுவதோடு அந்த நாள் விழுங்கப்பட்டுவிடும். எந்தவிதமான எச்சமிச்சங்களும் இல்லாமல் அன்றையப் பொழுது அழிந்து கழியும். மனிதனும் தனது சவக்குழியை நோக்கி ஓரடி முன்னேறிவிடுவான். ஆனால் இப்போதோ ஓய்வின் சுகத்தையும், புகைமண்டிய சாராயக் கடையின் சந்தோஷத்தையும் அவள் எதிர்பார்ப்பாள். அதில் அவனுக்குத் திருப்தி.

ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஜனங்கள் பத்து மணி வரையிலும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். கண்ணியமான இல்லறவாசிகள் தங்களிடமுள்ள சிறந்த ஆடையணிகளைத் தரித்துக்கொண்டு பிரார்த்தனைக்காகத் தேவாலயத்துக்குச் செல்வார்கள். போகும் போது இளவட்டப் பிள்ளைகள் மதத்தின் மீது காட்டும் அலட்சியத்தைக் கண்டித்துச் சரமாரியாகப் பேசிக்கொண்டே செல்வார்கள். பிரார்த்தனை முடிந்த பின்னர் அவர்கள் வீட்டிற்குத் திரும்பி, அப்பம் சாப்பிடுவார்கள், மீண்டும் மாலை வரை தூங்கத் தொடங்குவார்கள்.

வருஷக் கணக்காக அதிகரித்துக்கொண்டே வரும் அலுப்பினால், அவர்களது வயிற்றுப் பசிகூட மந்தித்துப் போய்விட்டது. அந்த வயிற்றை உணர்ச்சி பெறச் செய்வதற்காக அவர்கள் கார நெடி நிறைந்த ஓட்கா மதுவைக் குடித்துக் குடித்துக் கிளர்ச்சி தரும் எரிச்சலை உண்டு பண்ணிக் கொள்வார்கள்.

மாலை நேரங்களில் அவர்கள் வீதிகளில் சுற்றித் திரிவார்கள்; ரப்பர் செருப்பு உடையவர்கள். தெருவின் தரை காய்ந்துபோயிருந்தாலும் கூட அதைப்போட்டுக்கொண்டு திரிவார்கள்; குடை வைத்திருப்பவர்கள், பொழுது வெளிறிட்டு நிர்மலமாக இருக்கும் போதும், அதை உடன் கொண்டு போவார்கள்.

வழியில் தங்கள் நண்பர்களைச் சந்திக்கும் போது தொழிற்சாலையைப் பற்றியும் யந்திரங்களைப் பற்றியும் பேசிக்கொள்வார்கள். மேஸ்திரிகளை வைவார்கள். அவர்கள் தங்கள் தொழிலோடு சம்பந்தப்பட்ட விசயங்களையே பேசினார்கள் சிந்தித்தார்கள். பேசிய விசயத்தை பேசிப் பேசி சலித்துப் போன அவர்களது அன்றாடப் பேச்சில் என்றாவது ஒருநாள் தான் ஏதோ ஒரு சக்தியற்ற எண்ணத்தின் ஒளி லேசாக மின்னிட்டுப் படர்ந்து மறையும். அவர்கள் வீட்டுக்குத் திரும்பியவுடன் தங்கள் மனைவிமாரோடு சண்டை பிடிப்பார்கள்; அடிக்கவும் செய்வார்கள்; தங்களது முஷ்டிகள் வலி கண்டாலும் கூட அடிப்பதை நிறுத்தமாட்டார்கள். இளைஞர்கள் சாராயக் கடைக்கு அடிக்கடி செல்லுவார்கள்; அல்லது வேறு யார் வீட்டுக்காவது சென்று பொழுது போக்குவார்கள்; அங்கு ஆர்மோனியம் வாசிப்பார்கள், ஆபாசமான பாட்டுக்களைப் பாடுவார்கள், ஆடுவார்கள், ஏசுவார்கள், குடித்துக் கிடப்பார்கள். அவர்கள் உழைத்து உழைத்து மிகவும் ஓய்ந்து போனவர்களாதலால், குடித்தவுடனேயே போதை வெறி உச்சிக்கு ஏறிவிடும். அவர்களது இதயங்களில் ஏதென்றறியாத எரிச்சல் குடிகொண்டிருக்கும். எனவே இந்த மாதிரியான உணர்ச்சிகளிலிருந்து விடுபடுவதற்காக, சிறு சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அந்நேரத்தில் அவர்கள் சீக்கிரமே உணர்ச்சி வசப்பட்டு, ஒருவரையொருவர் மிருகத்தனமான மூர்க்க வெறியோடு கட்டித் தழுவி உருண்டு புரள்வார்கள். இதனால் ரத்தக் காயங்கள் காணும் சண்டைகள் தான் கண்ட பலன். சமயங்களில் அந்த காயங்கள் படுகாயமாய்ப் போவதுண்டு. சில வேளை கொலைகளே நிகழ்ந்துவிடுவதுமுண்டு.

படிக்க:
அந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா?
சிறுகதை: எழுத்தரின் மரணம்! – ஆன்டன் செகாவ்

அவர்களது மனித சம்பந்தத்தை மறைமுகமான குரோத உணர்ச்சி ஆக்கிரமித்திருக்கும்; அவர்களது தசைக் கோளங்களின் தளர்ச்சியை எப்படி ஈடு செய்து முறுக்கேற்ற முடியாதோ அது போலவே இந்த உணர்ச்சியும் வெகுநாட்களாய் ஊறி உறைந்து போயிருக்கும். அவர்கள் பிறக்கும் போதே இந்தத் தீய உணர்ச்சியும் அவர்களோடு பிறந்து ஓர் இருண்ட நிழலைப் போல், அவர்கள் சாகிற மட்டும் அவர்களைத் தொடர்ந்து செல்லும்; இலக்கற்ற, வெறுக்கத்தக்க கொடுஞ்செயல்களுக்கே அவர்களைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும்.

விழா நாட்களில், இளைஞர்கள் வெகு நேரங்கழித்து அடிபட்ட முகங்களுடன் வீடு திரும்புவார்கள். திரும்பும்போது அவர்களது துணிமணிகள் எல்லாம் கிழிந்து தும்பு தும்பாகி புழுதியும் சேறும் படிந்திருக்கும். சமயங்களில் அவர்கள் தமது தோழர்களுக்குத் தாம் கொடுத்த அடிகளைப் பற்றி வாய்வீச்சு வீசி வீறாப்புப் பேசுவார்கள். சமயங்களில் தங்களது குடிவெறியை, பரிதாப நிலையை, இழி நிலையை, கசந்த வாழ்வை, அவமானத்தை எண்ணி அழுவார்கள். சீறியெழுவார்கள் அல்லது சோர்ந்து போவார்கள்.

சமயங்களில் எங்கோ ஒரு வேலிப்புறத்தின் நிழலிலாவது, சாராயக்கடையின் தரையிலாவது போதை மயக்கத்தில் கிடக்கும் தம் மக்களைத் தேடிக் கண்டு பிடித்துப் பெற்றோர்கள் வீடு கொண்டு வந்துச் சேர்ப்பார்கள்: வீடு வந்து சேர்ந்த பிறகு முதியவர்கள் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள், அந்த இளைஞர்களது தொள தொளத்துப்போன உடம்பைக் குத்துவார்கள். பிறகு அவர்களை ஏதோ ஒரு அன்புடன் படுக்கையில் பிடித்துத் தள்ளித் தூங்கவைப்பார்கள். அதிகாலையில் அலறும் ஆலைச்சங்கின் கோபாவேசமான கூச்சலைக் கேட்டு எழுந்திருந்து வேலைக்குச் செல்ல வேண்டுமே என்பதற்காகவே இவ்வாறு செய்வார்கள்.

அவர்கள் தங்கள் குழந்தைகளைச் சரமாரியாக உதைப்பார்கள். திட்டுவார்கள். என்றாலும் இளைஞர்கள் குடிப்பதோ சண்டை சச்சரவு செய்வதோ அவர்களுக்குத் தவறாகப்படுவதில்லை. தந்தைமார்கள் இளைஞர்களாயிருந்த காலத்தில் அவர்களுந்தான் குடித்தார்கள், சண்டையிட்டார்கள். அவர்களது பெற்றோர்களும் பதிலுக்கு அவர்களை உதைக்கத்தான் செய்தார்கள். வாழ்க்கை அப்படியேதான் பழகிப்போய்விட்டது. சீராகவும் பொதுவாகவும் எங்கோ அது வருஷக்கணக்கில் சேற்றுக் குழம்பாக ஒடிக்கொண்டிருந்த பழைய காலத்துப் பழக்க வழக்கங்களுடன் இறுகப் பிணைந்து நாள்தோறும் ஒரே மாதிரியான சிந்தனையும் செயலுமாய் இயங்கிக்கொண்டிருந்தது. அந்த வாழ்வில் எந்தவித மாறுதலையும் ஏற்படுத்த எவருமே விரும்பவில்லை.

சில சமயங்களில் வேறு பிரதேசங்களிலுள்ள மக்கள் அந்தத் தொழிலாளர் குடியிருப்புக்கு வருவதுண்டு. அந்த இடத்துக்குப் புது ஆசாமிகள் என்ற காரணத்தால் இங்குள்ளவர்களின் கவனத்தை ஆரம்பத்தில் அவர்கள் கவர்வதுண்டு. அவர்கள் வேலை பார்த்து வரும் இடங்களைப் பற்றிய அதிசயக் கதைகளைச் சொல்லும் போது இங்குள்ளவர்களுக்கு அதில் லகுவில் ஈடுபாடும் ஏற்படுவதுண்டு. ஆனால், அந்தப் புதுமை சீக்கிரத்திலேயே போய்விடும். அந்த மனிதர்களும் இவர்களுக்குப் பழகிப் போய்விடுவார்கள்; பிறகு அவர்களைக் கவனிப்பதைக் கூட இவர்கள் நிறுத்திவிடுவார்கள். புதிதாக வருபவர்கள் சொல்லுவதிலிருந்து இவர்களுக்கு ஒரே ஒரு உண்மை புலப்படும். தொழிலாளிகளின் நிலைமை எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதுதான் அது. இதுதான் உண்மையென்றால், பிறகு எதைப்பற்றி, என்ன பேசுவது?

ஆனால், அந்தப் புதிய மனிதர்களில் சிலர் இந்தக் குடியிருப்பு மக்கள் இதுவரை கேட்டிராத புது விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். ஆட்சேபிக்காமல் நம்பிக்கையின்றி அவற்றைக் கேட்பார்கள். சிலருக்குக் குருட்டுத்தனமான கிளர்ச்சியை அவை உண்டாக்கும். சிலருக்கு லேசான இதய அதிர்ச்சியைத் தரும். சிலருக்கோ அடையாளமே தெரியாமல் மங்கித் தோன்றும். ஒரு சிறு நம்பிக்கை மனத்தில் எழும்பிக் குறுகுறுக்கும். ஆனால் அவர்கள் அனைவருமே தங்களது வாழ்க்கையை மேலும் சிரமத்துக்கு ஆளாக்கிடக்கூடிய அந்த வேண்டாத உணர்ச்சியையும் கிளர்ச்சியையும் மறக்கடித்து விரட்டுவதற்காக மேலும் மேலும் குடித்துத் தீர்ப்பார்கள்.

படிக்க:
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

அந்தப் புதிய ஆசாமிகளில் யாரேனும் ஒருவரிடம் அவர்கள் ஏதாவது ஒரு புதுமையைக் காண நேர்ந்தால், அதை அந்தத் தொழிலாளர்கள் மறக்கவே மாட்டார்கள். தம்மைப் போலில்லாத அந்த ஆசாமியிடம் சர்வ ஜாக்கிரதையுடன் நடக்க முனைவார்கள். தங்களது தற்போதைய வாழ்வின் ஒழுங்கை அவர் கெடுத்துக் குலைத்து விடுவாரோ என்று அவர்கள் பயப்படுவது போலிருக்கும். இப்போதைய வாழ்க்கை சிரம ஜீவனம்தான் என்றாலும் அமைதியாகவும் குழப்பமற்றதாகவும் இருக்கிறதே என்பதே அவர்கள் அடையும் திருப்தி. நிரந்தரமாக ஒரே சுமையைத் தம்மை அழுத்தும் வாழ்க்கையை தாங்கிக் கொள்வது அவர்களுக்குப் பழகிப் போய்விட்டது. மேலும் தங்களது கஷ்டத்துக்கும் ஒரு நிவர்த்தி உண்டு என்ற நம்பிக்கையே அவர்களுக்கு இல்லையாதலால், தனது வாழ்க்கையில் புதியதாக வரும் எந்த மாறுதலும் தங்கள் துயரங்களையும் கஷ்டங்களையும் அதிகரிக்கத்தான் செய்யுமேயன்றி ஒருக்காலும் அவற்றைக் குறைத்துவிடப் போவதில்லை என்றே அவர்கள் கருதினார்கள்.

எனவே, புதுக் கருத்துக்களைக் காதில் போட்டுக் கொள்ளாமலேயே ஒதுங்கிச் செல்வார்கள் அவர்கள். அந்தப் புதிய ஆசாமிகளும் அங்கிருந்து மறைந்து போவார்கள். அங்கேயே தங்கும் ஒரிருவர் அங்குள்ளவர்களைப் போலவே நாளடைவில் வாழத் தொடங்குவார்கள். அவ்வாறு ஒருங்கிணைய முடியவில்லையென்றால் ஒதுங்கி வாழ்வார்கள் …

இப்படிச் சுமார் ஐம்பது வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான்.

(தொடரும்)

நக்கீரன் கோபால் கைது ! மரணப்படுக்கையில் ஜனநாயகம் !

ருப்புக்கோட்டை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்காக மாணவிகளை பாலியல் சுரண்டலுக்கு அழைத்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எந்த உயர் அதிகாரிக்காக மாணவிகளுக்கு வலைவிரித்தார் நிர்மலா தேவி? வேந்தரா அல்லது துணைவேந்தரா அல்லது இணை வேந்தரா அல்லது பதிவாளரா? யார் அந்த ‘உயர் அதிகாரி’ என்று விசாரிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு.

நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

ஆனால் நிர்மலாதேவியோடு பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரையும் இணைத்து இவ்வழக்கை ஊத்தி மூடிக் கொண்டிருக்கிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ். தமிழக மக்கள் இந்த பிரச்சினையை மறந்திருந்த நிலையில் நிர்மலாதேவி கவர்னரை 4 முறை சந்தித்ததைப் பற்றி வாக்குமூலம் கொடுத்தாக செய்தி வெளியிட்டது நக்கீரன் இதழ்.

பல்கலைகழகத்தில் உயர் அதிகாரிகளின் பாலியல் வெறிக்கு கல்லூரி மாணவிகளை பலியாக்க முயற்சித்தார் நிர்மலாதேவி என்பதே குற்றச்சாட்டு. யார் அந்த உயர் அதிகாரி என்ற கோணத்தில் புலனாய்வு பத்திரிகை என்ற முறையில் பல செய்திகளை திரட்டி தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது நக்கீரன் இதழ். இந்த சூழ்நிலையில் நக்கீரன் ஆசிரியர் திரு. கோபால் அவர்கள் 09.10.2018 அன்று காலை கைது செய்யப்பட்டார். பின்னர் நீதித்துறை நடுவர் அவரை சிறையில் அடைக்காமல் விடுவித்தார்.

நக்கீரன் கோபால் மீதான வழக்கு என்ன?

கடந்த ஏப்ரலில் 20-22-ம் தேதி நக்கீரன் இதழில் அட்டைப்பக்கத்தில் “பிரேக்கிங் செய்தி என தலைப்பிட்டு, பூனை கழுத்தில் நக்கீரன் மணிகட்டி விட்டது என்றும், கவர்னர் வலையில் சிக்கினார், ஜெயிலில் உள்ள நிர்மலாவுக்கு ஆபத்து” என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த கட்டுரைக்காக நக்கீரன் கோபால் மற்றும் செய்திப் பிரிவினர் 35 பேர் மீது கவர்னரின் துணை செயலாளர் டாக்டர் டி செங்கோட்டையன் போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 124-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

படிக்க:
♦ நக்கீரன் கோபாலை விடுதலை செய் | விருதையில் சாலை மறியல் !
♦ மாமி – மாட்டுக்கறி – நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!

“இந்திய குடியரசுத் தலைவரை அல்லது ஒரு மாநில கவர்னரை தமது கடமையினை செய்ய விடாமல் தடுத்தல், வன்முறையான அச்சுறுத்தல் மூலம் செய்ய வேண்டியவற்றை செய்யாமலும், செய்ய கூடாதவற்றைச் செய்யும்படி வற்புறுத்துதல், தாக்குதல், சட்டவிரோதமாக தடுத்தல், வன்முறை செயல்களால் அச்சுறுத்தல், அச்சுறுத்த முயற்சி செய்தல் ஆகியவை குற்றங்களாகும். இந்த குற்றங்களில் ஈடுபடுபவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன், அபராதமும் விதிக்கப்படும்.”

இதன்படியே பார்த்தாலும், நக்கீரன் இதழில் வந்த கட்டுரைக்கு எப்படி இந்தச் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யமுடியும்?

நக்கீரன் கோபால் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதால் கவர்னரின் எந்த வேலை பாதிக்கப்பட்டது? கவர்னர் மீதும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் மீதும் ஏற்கனவே சந்தேக நிழல் உள்ளது. நிர்மலாதேவியின் ஆடியோ டேப்-ல் கவர்னர் உள்ளிட்ட பலருடைய பெயர் இடம் பெற்றது. பல்கலைகழக உயரதிகாரிகள் மீதே குற்றச்சாட்டு இருக்கும்போது அந்த பல்கலைகழகத்தின் வேந்தரான கவர்னர் எந்த சட்ட முறைகளையும் பின்பற்றாமலேயே ஓய்விபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சந்தானம் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தார். போலிஸ் விசாரணைக்கு அந்த கமிட்டியின் விசாரணை இடையூராக இருப்பதால் சந்தானம் குழு அறிக்கையை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது*.

கவர்னர் மீதுள்ள குற்றச்சாட்டை முறையாக விசாரிக்க ஏதுவாக அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் விசாரணைக்கு உட்படுவதற்குத் தான் தயார் என்றாவது முன்வந்திருக்க வேண்டும். ஆனால் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே அவரே ஒரு கமிட்டி அமைத்து விசாரணைக்கு உத்தரவு போடுவது கவர்னரின் பதட்டத்தை உலகிற்கு உணர்த்தியது. தற்போது குற்றஞ்சாட்டுவோர் மீதே வழக்கு போடுவது எந்த ஊர் நியாயம்? ஆனால் தமிழக அரசோ எந்த கூச்சமும் இல்லாமல் இப்படி பச்சையாக பொய் வழக்கு போடுகிறது.

நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்படும்போது அவர் மீது என்ன வழக்கு – எந்த காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதைக் கூட குறிப்பிடாமல் கைது குறிப்பாணையை கொடுத்திருக்கிறது காவல்துறை.

காவல் இணை ஆணையர் தலைமையில், பல காவல் உயரதிகாரிகள் புடைசூழ, நூற்றுக்கணக்கான போலீசைக் குவித்து ஒரு கொடூரமான பயங்கரவாதியை கைது செய்வது போல திரு.கோபால் அவர்களை கைது செய்தது தமிழக போலீஸ். கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பார்ப்பதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ-வை, ’ஒரு வழக்கறிஞர்’ என்ற முறையில் தனது அடையாள அட்டையைக் காண்பித்தும் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் காவல் நிலைய வாயிலேயே போராடி கைதானார். சுதந்திரம் – சட்டத்தின் ஆட்சி என்னவாயிற்று என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது.

கொலை செய்யப்பட்டவர் யார் என்றே சொல்லாமல் கொலை வழக்கு போட்டு கைது செய்வதைப் போல கவர்னரை விமர்சித்ததை, கவர்னரை பணி செய்யவிடவில்லை என்று எடப்பாடி அரசு கைகொட்டி சிரிக்கும்படியாக ஒரு வழக்கு போட்டுள்ளது.

உலகெங்கும் பத்திரிகையில் ஆட்சியாளர்களை கடும்சொற்களால் விமர்சிப்பது, கார்ட்டூன் வரைவது என்பது புதிதல்ல. இதுவரை இந்தியாவில் பத்திரிகைத்துறை மீது பயன்படுத்தாத சட்டப்பிரிவை முதல்முறையாக பயன்படுத்தி உள்ளனர். இந்த செயல் ஜனநாயக குரல் வளையை நெறிப்பதாகும்.

படிக்க:
♦ பிறவிப் பத்திரிகையாளனை கண்டுபிடிப்பது எப்படி ?
♦ கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! – பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் !

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதும், இது அவரின் தனிப்பட்ட பிரச்சினையாக கருதாமல் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டதும், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்ததும், குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு.முத்தரசன் ஆகியோர் நீதிமன்றத்திற்கே வந்தும், இந்து பத்திரிகையின் தலைவர் திரு. என். ராம் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து பத்திரிக்கை சுதந்திரத்தை காக்கவும், அப்பட்டமான சட்டவிரோத வழக்கினை எதிர்த்து தனது கருத்தினை பதிவு செய்ததும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

நக்கீரன் கோபால் கைதை ஒட்டி நீதிமன்றத்திற்கு வந்த ராம், திருமாவளவன்

“இன்று நக்கீரன் கோபாலுக்கு நேர்ந்த நிலை, நாளை என்னைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கும் நிச்சயம் நேரும் – இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் – பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாக பாதிக்கும் என்று அஞ்சுகிறேன்” என்று ‘இந்து’ ராம் நீதிமன்றத்தில் முன்வைத்தது வெறும் வார்த்தையல்ல, நிதர்சனமான உண்மையாகும்.

நக்கீரன் கோபால் அவர்களின் வழக்கறிஞர் திரு.பி.டி.பெருமாள் அவர்கள் பிரிவு 124 தாக்கல் செய்ய எந்த அடிப்படையும் இல்லை, ஒரு விமர்சனம் கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கருத எந்த அடிப்படையும் இல்லை. வன்முறையான அச்சுறுத்தல் இல்லாமல் பணி செய்யவிடாமல் தடுத்தார் என்று கூற எந்த முகாந்திரமும் இல்லை. கவர்னரை விமர்சனம் செய்ததற்கு மிஞ்சினால் அவதூறு வழக்குதான் போடமுடியுமே தவிர, வேறு எந்த குற்ற வழக்கும் போடமுடியாது என்று வாதிட்டார்.

இறுதியாக, எழும்பூர் 13-வது நீதித்துறை நடுவர், பத்திரிகை சுதந்திரத்தை காக்கும் பொருட்டும், நக்கீரன் கோபாலை கைது செய்யும்போது எந்த காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதை கூட குறிப்பிடப்படாத கைது குறிப்பாணையை சுட்டிக்காட்டியும், இந்திய தண்டனைச் சட்டம் 124-வது பிரிவின் கீழ் அவரை நீதிமன்ற காவலில் வைக்க எந்த முகாந்திரமும் இல்லை – அரசு தரப்பு அதற்கான எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி விடுதலை செய்தார்.

முதலமைச்சர் – கலெக்டரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததற்காக கார்ட்டூனிஸ்ட் பாலா கைது, தூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி கோரி ஐ.நா-வில் பேசியதற்காக திருமுருகன் காந்தி கைது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு சட்ட ஆலோகராக இருந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது, எட்டு வழி சாலை எதிர்த்த விவசாயிகள் கைது, நடிகர் மன்சூர் அலிகான் கைது, விவசாயிகளை பார்க்கவந்த யோகந்திர யாதவ் கைது, எட்டு வழி சாலை படம்பிடித்த சன் செய்தி பத்திரிகையாளர் மீது போலீஸ் தாக்குதல், கர்ப்பினி பெண்ணை எட்டி உதைத்து கொன்ற போலீசை விமர்ச்சித்தவர் கைது என கடந்த நான்கைந்து மாதங்களாக கைதுகளும் வழக்குகளும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. போலீசின் கைது நடவடிக்கைகளில் கூட சட்டப்படி விதிமுறைகள் பின்பற்றுவதில்லை.

எடப்பாடி அரசால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இந்த இழிநிலை நினைத்து உலக அரங்கில் ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனியும் நிலை உள்ளது. இது சட்டத்தின் ஆட்சி அல்ல. இதுவரை அடைந்த நாகரிக சமூகத்தை பின்னோக்கி இருண்ட காலத்தை நோக்கி இழுத்துச் செல்லும் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சி நடக்கிறது என்பது நக்கீரன் கோபால் உள்ளிட்ட எல்லா கைது நடவடிக்கைகளும் நமக்கு உணர்த்துகிறது. இந்த இழிவை துடைப்பதற்கும், ஆபத்தை எதிர்ப்பதற்கும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது, செயல்பட வேண்டியுள்ளது.

இவண்,
வழக்கறிஞர் சு. ஜிம் ராஜ் மில்டன்,
செயலர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

* சந்தானம் கமிஷன் விசாரணை அறிக்கை வெளியிடத் தடை கோரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அந்த வழக்கை நடத்தி வருகிறது.

அரசு பள்ளியில் இந்து – முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு !

டெல்லி வசிராபாத் பகுதி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் இந்து முஸ்லீம் மாணவர்களை தனித்தனியே பிரித்து வைத்து பாடம் நடத்தும் கொடுமை தற்போது தெரிய வந்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கிடைத்துள்ள வசிராபாத் வடக்கு எம்.சி.டி ஆண்கள் பள்ளியின் பதிவேட்டில் மாணவர்களை பின்வருமாறு பிரித்து வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.

IA: 36 இந்துக்கள், IB: 36 முஸ்லீம்கள்
IIA: 47 இந்துக்கள், IIB: 26 முஸ்லீம்கள் and 15 இந்துக்கள், IIC: 40 முஸ்லீம்கள்
IIIA: 40 இந்துக்கள், IIIB: 23 இந்துக்கள் and 11 முஸ்லீம்கள், IIIC: 40 முஸ்லீம்கள், IIID: 14 இந்துக்கள் and 23 முஸ்லீம்கள்
IVA: 40 இந்துக்கள், IVB: 19 இந்துக்கள் and 13 முஸ்லீம்கள், IVC: 35 முஸ்லீம்கள், IVD: 11 இந்துக்கள் and 24 முஸ்லீம்கள்
VA: 45 இந்துக்கள், VB: 49 இந்துக்கள், VC: 39 முஸ்லீம்கள் and 2 இந்துக்கள், VD: 47 முஸ்லீம்கள்

மாதிரி படம்

இப்பள்ளியை சார்ந்த ஒருவர் கூறுகையில் “பழைய பள்ளி தாளாளர் ஜூலை 2-ம் தேதி மாற்றலானார். புதிய தலைமையாசிரியர் வரும் வரை ஒரு ஆசிரியரை பொறுப்பாக நியமித்தார்கள். அவர் தான் இம்மாற்றங்களை கொண்டு வந்தார். இதில் மற்ற ஆசிரியர்களை கலந்தாலோசிக்கவில்லை. இதை சில ஆசிரியர்கள் சுட்டி காட்டிய போது கோபத்துடன் அவர்களை வேலையை மட்டும் பார்க்கும்படி கூறிவிட்டார்” என்று தெரிவித்தார்.

சி.பி.சிங் செராவத் என்கிற ஆசிரியர் தான் பள்ளியின் பொறுப்புக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் கூறுகையில் உள்நோக்கத்துடன் இப்பிரிவினை நடக்கவில்லை என நம்மை நம்ப சொல்கிறார். “வேண்டும் என்றே இப்படி பிரிக்கவில்லை. மாணவர்களின் வகுப்பு பிரிவுகளை மாற்றி அமைப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. மாணவர்களுக்கு அமைதி, ஒழுக்கம், மற்றும் படிப்புக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக நிர்வாகம் தான் இப்படி பிரிக்கும் முடிவை எடுத்தது. குழந்தைகள் சண்டையிடுகிறார்கள்” என்கிறார்.

மாணவர்கள் மத அடிப்படையில் சண்டையிடுகிறார்களா என்று கேட்டதற்கு “இந்த வயதில் மதம் குறித்து மாணவர்களுக்கு தெரியாதுதான். ஆனால் வேறு விசயங்களுக்காக குறும்புத்தனமாக சண்டையிடுகிறார்கள். சில மாணவர்கள் சைவம் உண்பவர்கள், அதனால் வேறுபாடு ஏற்படுகிறது. இது போல விசயங்கள் இருக்கின்றன. நாம் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும்.” என்கிறார். பார்ப்பனிய ஆதிக்க மனோபாவம் அவர் பேச்சிலேயே தெரிகிறது.

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறையின் மண்டல அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார்கள். ஆனால் தாங்கள் குறிவைக்கப்படுவோம் என்கிற அச்சத்தின் காரணமாக எழுத்துபூர்வமாக புகார் அளிக்கவில்லை. இது குறித்து டெல்லி வடக்கு மாநகராட்சி கல்வி துறை அதிகாரியிடம் கேட்டபோது “இப்போது தான் இது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து நிச்சயம் விசாரணை செய்வோம். தவறு உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த பிரிவினை குறித்து மாணவகளின் பெற்றோர்களுக்கு எதுவும் தெரியவில்லை. “ என் வகுப்பில் இந்து மாணவர்கள் யாரும் இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் வரை நாங்கள் ஒன்றாக இருந்தோம். நானும் என் பிரெண்டும் இப்போ ஒரே வகுப்பில் இல்லை” என்கிறான் ஒரு நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன்.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் தாய் இது குறித்து கூறுகையில் “இது பெரிய தவறு. எல்லா மாணவர்களும் ஒன்றுதான். பள்ளியிலேயே இப்படி நடத்தப்பட்டால் பிறகு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இது மிகவும் கவலையளிக்கிறது” என்கிறார்.

லவ் ஜிகாத் என்கிற பெயரில் வயது வந்த ஆண் பெண் பழகுவதை முதலில் தடை செய்தார்கள். இப்போது சிறு குழந்தைகள் பழகுவதையும் தடை செய்வதோடு சிறு வயதிலேயே அவர்கள் மனதில் பார்ப்பனீய விஷத்தை விதைக்க முயற்சிக்கிறார்கள். இது ஒரு தனிப்பட்ட ஆசிரியரின் செயல் போல தெரியவில்லை. அவ்வாசிரியரின் பின்னணி குறித்து விசாரித்து இது போல எத்தனை பள்ளிகளில் நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளி மாணவர்கள் மனதில் விசத்தை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ்.

தமிழகத்திலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விதுறையில் சார்பில் பயிற்சி வகுப்பு என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.பள்ளிக்கல்வித் துறை ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தலா ஒரு ஆசிரியரை அப்பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதில் பார்ப்பன மூடக் கருத்துகளும், ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியலும்தான் ஆசிரியர்களின் மூளையில் திணிக்கப்பட்டன.

மயிலாப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அறம் மற்றும் பண்பாட்டு முனைவு மையம் என்ற அமைப்புதான் இப்பயிற்சி வகுப்பை ஒழுங்குசெய்து நடத்தியது. இந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.-ன் விஷக் கொடுக்குகளுள் ஒன்று. தயானந்த சரசுவதி, ஆடிட்டர் குருமூர்த்தி, பத்மா சுப்பிரமணியன், திருமதி ஒ.ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமான தமிழகத்துப் பார்ப்பன கும்பல்தான் அவ்வமைப்பிற்குத் தலைமையேற்றுள்ளது.

இப்பயிற்சியின் தொடக்கமே ஆர்.எஸ்.எஸ்.இன் ‘தேசிய’த் திட்டமான கோமாதாவைக் காப்பதை வலியுறுத்துவதாக அமைந்தது. இதனையடுத்து, “துவ்ருக்ஷா வந்தனம், துளசி வந்தனம், பூமி வந்தனம், பித்ரு வந்தனம், சுவாசினி வந்தனம், பாரத் மாதா/பரம்வீர் வந்தனம் என்ற ஆறுவிதமான சமஸ்காரங்களைப் பண்ண வேண்டும்” எனப் பார்ப்பன சடங்குகளைப் பற்றியும், பிள்ளையார் சுழியின் முக்கியத்துவம் குறித்தும் பிரசங்கம் நடந்திருக்கிறது.

“இந்தியாவோட ஒற்றுமை நமக்கு முக்கியம். அதற்கு இந்து மத கலாச்சராம்தான் சரியாக இருக்கும்” என உபதேசம் செய்திருக்கிறார், சனாதன தீவிரவாதி ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி. ப்பயிற்சியை அப்போதே புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியது.

இதே போன்று கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுறுவியிருக்கும் பின்னணியில் தான் இப்படி மாணவர்களை சாதி மத அடிப்படையில் பிரித்து வைக்கும் நிகழ்வை பார்க்க வேண்டும்.

கல்வித்துறையில் பார்ப்பனிய சித்தாந்த ஊடுறுவல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அம்பேத்கர் வகுப்பறையில் தனிவே உட்கார வைக்கப்பட்டிருந்தும், பொது குடத்தில் தண்ணீர் குடித்ததற்காக தண்டிக்கப்பட்டதையும் நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். தமிழகத்தின் சேரன்மகாதேவி குருகுல தீண்டாமை எதிர்ப்பு போரட்டத்தையும் வரலாற்றில் பார்த்திருக்கிறோம்.

இதோ நவீன பார்ப்பனியம் மீண்டும் அதே தீண்டாமையையும், ஒதுக்கலையும், கூடவே ஒடுக்குமுறையையும் திணிக்க ஆரம்பித்துவிட்டது. எது நடந்துவிடுமோ என்று முற்போக்காளர்கள் அச்சப்பட்டார்களோ அது நடக்க ஆரம்பித்துவிட்டது.

இப்போது இந்து முஸ்லீம் என்று பிரித்து வைத்திருப்பது பின்னர் சாதி வாரியாக பிரிப்பதையும், அதற்கேற்ற கல்வி என்கிற நவீன குலக்கல்வி முறையை அடைய வெகுதொலைவு இல்லை. இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

செய்தி ஆதாரம் :

சிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் !

கிளினிக்கில் ஐம்பதுகளில் ஒரு பெண்மணி, தனக்கு சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் சிறுநீர்ப்பாதை எரிச்சல்,  அடிக்கடி வருவது குறித்து என்னை சந்தித்தார்.

மாதம் ஒரு முறை மீண்டும் மீண்டும் சிறுநீர்த்தொற்று ஏற்பட்டுக்கொண்டிருக்கவே, அவரது சிறுநீர் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிறுநீரில் சராசரியாக இருக்க வேண்டிய கிருமி தாக்கிய செல்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக கிருமி பிடிகொண்ட செல்கள் இருந்தன.

ஆகவே, மீண்டும் சிறுநீரை கிருமியை வளர்த்து கண்டறிந்து அந்த கிருமியை அழித்தொழிக்கும் கிருமிக்கொல்லியையும் சேர்த்து நமக்கு கூறும் culture & sensitivity பரிசோதனைக்கு அனுப்பி வைத்தேன்.

இந்த பரிசோதனையில் சிறுநீரில் உள்ள கிருமிக்கு ஏற்ற வளரும் சூழ்நிலையில் ஆய்வகத்தில் பாதுகாக்கப்படும். இதன் மூலம் கிருமிகள் நன்றாக வளரும். இதன் மூலம் நுண்ணுயிரியல் வல்லுனர்கள் எந்த கிருமி என்பதை கண்டறிந்து கூறுவார்கள். மேலும் இந்த கிருமியுடன் பல்வேறு கிருமி கொல்லிகளை சோதித்து, எந்த கிருமிக்கொல்லி சிறப்பாக வேலை செய்கிறது என்றும் கூறுவர்.

இது எதிரியின் தன்மை மற்றும் எதிரியை அழிக்கும் ஆயுதத்தையும் ஒரு ஒற்றன் இருந்து நமக்கு காண்பித்து கொடுப்பதற்கு ஒப்பானது. அவ்வாறு பார்த்த பரிசோதனையில் Enterococcus faecalis என்று வந்திருந்தது.

இதே பிரச்சனைக்கு ஆறு மாதம் முன்பு எடுத்த கல்ச்சர் & சென்சிட்டிவிட்டி ரிப்போர்ட்டிலும் இதே கிருமி இருப்பதும் அதற்காக மருத்துவம் செய்யப்பட்டதும் அறிந்தேன்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” எனும் வள்ளுவரின் சொல்படி இந்த நோய் ஏன் அடிக்கடி வருகிறது என்று சிறிது யோசித்த பிறகு நீங்கள் அடிக்கடி வீட்டிற்கு வெளியே இருக்கும் பொது கழிப்பிடங்களை உபயோகிக்கிறீர்களா? என்று கேட்டேன்

“இல்லை” என்று பதில் வந்தது.

“நான் கூறுவதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு அடிக்கடி இந்த சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்றை ஏற்படுத்தும் அந்த கிருமியானது மலத்தில் பொதுவாக காணப்படும் கிருமியாகும். தாங்கள் மலம் கழித்த பின் எந்த திசையில் இருந்து எந்த திசை நோக்கி மலத்தை சுத்தம் செய்வீர்கள்? மல துவாரத்தில் இருந்து சிறுநீர் கழிக்கும் துவாரம் நோக்கி சுத்தம் செய்வீர்களா? அல்லது அதற்கு மாறாகவா” என்று கேட்டேன்.

படிக்க :
♦ சிறுநீர் : பெண்களுக்கு சிறு பிரச்சினையல்ல !
♦ ஆலையில் சிறுநீர் கழிப்பதற்கே அனுமதியில்லை ? பெண் விடுதலை எப்போது ?

அதற்கு அந்த பெண்மணி சிரித்து விட்டு “என்ன சார் இப்டிலாம் கேக்குறீங்க. அதெல்லாமா பாத்துட்ருப்பாங்க?” என்றார்.

“இல்லமா. அதையும் நோட் பண்ணுங்க . நாளைக்கு வந்து சொல்லுங்க” என்றேன்.

மறுநாள் வந்தார் ” மலதுவாரத்தில் இருந்து கைகளை கீழ் நோக்கி சிறுநீர் துவாரம் நோக்கி கொண்டு சென்று சுத்தம் செய்வதாக கூறினார்”

நான் ” இனிமே அதற்கு மாற்றமாக … கீழிருந்து மேல் நோக்கி மல துவாரத்தை சுத்தம் செய்யுங்கள். உங்களுக்கு சிறுநீர் தொற்று வரும் வாய்ப்பு குறையலாம்.. பார்ப்போம்” என்று அனுப்பி வைத்தேன்.

பிரதி மாதம் சிறுநீர் தொற்று என்று வந்தவர். அடுத்த ஆறு மாதங்கள் அந்த பிரச்சனை என்று வரவில்லை. “நான் வேறு மருத்துவரை பார்க்க போய் விட்டார் போல” என்றே நினைத்தேன்..

ஆனால் அந்த நற்செய்தி காத்திருந்தது. ஆறு மாதத்திற்கு பிறகு வேறு பிரச்சனைக்காக வந்தவரிடம் நான் ஆர்வக்கோளாறில் கேட்டேன்

“யூரின் இன்ஃபெக்சனுக்கு டாக்டர மாத்திட்டீங்களாம்மா?”

அவர் சிரிப்புடன் “சார்.. க்ளீனிங் மெத்தட மாத்துனதுக்கு அப்புறம் எனக்கு அந்த பிரச்சனை வரவே இல்லை சார்..தேங்க்ஸ் சார்” என்றார்.

எனக்கு அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை…

இந்த நிகழ்வு நடந்து நான்கு வருடம் ஆகியும் இன்னும் பசுமரத்தாணி போல் என் மனதில் பதிந்துவிட்ட நிகழ்ச்சி.

அப்போது ஆங்கிலத்தில் எழுதி பதிந்த அந்த பதிவை இப்போது தமிழில் எழுதுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இதுபோன்ற பிரச்சனைகளில் இருக்கும் யாருக்கேனும் இந்தப் பதிவு உதவலாம்.

இறைவனுக்கே புகழனைத்தும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் – Dr.ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.