Sunday, June 21, 2026
முகப்பு பதிவு பக்கம் 149

வீழாது தமிழ்நாடு எங்களில் கோட்டை | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | Pala Gana Song | Audio Launch

மார்ச் 30 அன்று சுற்றிவளைக்குது பாசிசப்படை வீழாது தமிழ்நாடு துவளாது போராடு என்ற பாடல் இசை வெளியீட்டு விழா மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவினரால் வெளியிடப்பட்ட “சுற்றிவளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு எங்களின் கோட்டை” என்ற பாடல் காணொலி வடிவில் இங்கே வெளியிடுகிறோம்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பெண்களை அசிங்கப்படுத்தும் விதமாகத்தான் ஜெயமோகன் சொல்வார் | தோழர் புவன் | வீடியோ

நூறு கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு நானும் நடிகன் தான் நானும் கலைஞன் தான் என்று கூறுகிறார் ரஜினி. அவரது படங்களில் பணத்தை சேர்த்து வைத்தால் தூக்கமே வராது என்று கூறுவார். அப்படி ரஜினி கூறுவது மக்களுக்கு மட்டும்தான்; அவருக்கு இல்லை. அவர் கோடிகளை வாங்கி சேர்த்துக் கொள்வார்.

பணத்தை சேர்த்து வைத்தால் முள்ளைப் போல குத்தும், மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராது என்பார். ஆனால் மக்களுக்கு தங்களின் அடுத்த நாளைய பொருளாதார தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என நினைப்பதால் தூக்கம் வருவதில்லை.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழு பாடல் – இசை வெளியீட்டு விழாவில் மக்கள் அதிகாரம் சென்னை மண்டலம் தோழர் புவன் அவர்கள் ஆற்றிய உரை ரூட்ஸ் யூடியூப் வெளியிட்டுள்ளது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காய்ந்த சருகுகள் எரிவதற்குத் தேவை சிறு தீ பொறியே!

உலகின் பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள்:
காய்ந்த சருகுகள் எரிவதற்குத் தேவை சிறு தீ பொறியே!

ண்மையில் உலகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஏகாதிபத்தியப் போர், பொருளாதார நெருக்கடி, பாசிச கொடுங்கோன்மை சட்டங்கள், வறுமை  உள்ளிட்டவை தொடர்ச்சியாக மக்களை போராட்டக்களத்தை நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக பின்தங்கிய நாடுகளில் மட்டுமின்றி பணக்கார நாடுகளாக கருதப்பட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய போரட்டங்கள் தீவிரமடைந்து வருவது கவனிக்கத்தக்கது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் கொண்டுவந்த ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேலாக அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்தியது மற்றும் 43 ஆண்டுகள் வேலை செய்தால் தான் ஓய்வூதியம் வழங்கப்படும் போன்ற ஒடுக்கமுறை அம்சங்களுக்கு எதிராக கடந்த  மார்ச் மாதம் 12 ஆம் தேதி தலைநகர் பாரிசில் 35 லட்சம் மக்கள் ஆறாவது முறையாக மாபெரும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசியும், லத்தியால் தாக்கியும் மாபெரும் மக்கள் போராட்டத்தைக் கலைக்க போலீஸ் முயன்றபோதும் அது தோற்றுப்போனது.

பல இடங்களில்  போலீசே தலைகவசங்களை கழட்டிவிட்டு மக்களுக்கு ஆதரவாக அவர்களுடன் நிற்கும் காட்சிகளும் அரங்கேறின. தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  பிரான்சின் பல நகரங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. போராடும் மக்கள் அக்குப்பைகளை எரித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒடுக்குமுறையின் மூலமும் கள்ள மௌனத்தின் மூலமும் போராட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த மேக்ரோன் அரசின் கனவில் மண்ணை தூவுவது போல நாளுக்கு நாள் பிரான்சில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

பிரான்ஸை போல் ஆளும் அரசை மக்கள் போராட்டத்தின் மூலம் ஸ்தம்பிக்க வைத்த மற்றொரு நாடு என்றால் அது இஸ்ரேல். இஸ்ரேலில் யூத இனவெறி பாசிஸ்டுகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொண்டுவந்த நீதித்துறை சீர்திருத்த சட்டம் பாசிஸ்டுகளுக்கு நீதித்துறை மீது கட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது. இதற்கு எதிராக பல வாரங்களாக மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தையும் மீறி நெதன்யாகு அரசு சட்டத்தை நிறைவேற்றிய போதிலும், மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை எதிர்த்து இந்த முடிவை தற்சமயத்துக்கு நிறுத்திவைத்துள்ளது. எந்த அளவிற்கு மக்கள் எதிர்ப்பு தீவிரமாக உள்ளதென்றால் நீதித்துறை சட்டதிருத்தத்திற்கு எதிராக நெதன்யாகு அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சரே வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார்.


படிக்க: இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்!


இலங்கையில் மாபெரும் மக்கள் எழுச்சிக்குப் பிறகு ஆளும் வர்க்கத்தால் நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க உலக வட்டிக்காரனான சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்க ஒப்பந்தம் போட்டுக்கொண்டு மக்கள் தலையில் நெருக்கடியை சுமத்தி வருகிறார். ஐ.எம்.எப்-இன் கட்டளைக்கு இணங்க ரணில் அரசு செலவினத்தை குறைப்பதோடு வரியை உயர்த்தி வருகிறது. இதனால் அடிப்படை உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு கூட மக்கள் மத்தியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு எதிராக இலங்கை மக்கள் மீண்டும் கிளர்ந்து எழுந்துள்ளனர். உலக கந்துவட்டி ரௌடியிடம் இருந்து வாங்கும் கடனை சமாளிக்கக் கடுமையான சுமையை உழைக்கும் மக்கள் தலைமீது ஏற்றாதே என இலங்கை தலைநகரான கொழும்புவில் பொதுத்துறை ஊழியர்கள் மாபெரும் பொது வேலைநிறுத்தத்தில் இடுபட்டனர்.   இடையில் சற்று தணிந்திருந்த இலங்கை மக்கள் போராட்டம் இந்தாண்டு ஜனவரியில் இருந்து மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

பெறும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் பிரிட்டனில் “ஊதிய உயர்வு இல்லாமல் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாது” என்ற கோரிக்கையை முன்வைத்து பிரிட்டனின் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். இவர்கள் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் மோசமாகி பெரும்பான்மை மக்கள் தொடர் போரட்டடங்களை நடத்தி வருகின்றனர்.

ஏகாதிபத்திய அமெரிக்க ரசியா மீது பொருளாதார தடை விதித்தால் பெறும் பாதிப்புக்கு உள்ளான மற்றொரு  நாடு ஜெர்மனி. பொருளாதாரத் தடையினால் உணவு மற்றும் எரிப்பொருட்களின் விலை விண்ணை முட்டுகின்றன. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் தவித்தது வருகின்றனர் ஜெர்மன் மக்கள். இந்நிலையில் அனைத்து துறை போக்குவரத்து தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரி எழுச்சிகரமான ஒரு வேலைநிறுத்தத்தை நடத்தி உள்ளனர். இவ்வேலைநிறுத்தத்தில் வெர்டி என்ற தொழிற்சங்கத்தில் இருந்து மட்டும் 25 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பிற தொழிற்சங்கத் தொழிலாளர்களும் இவ்வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். வேலைநிறுத்தத்தால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. மேலும், பல்வேறு சர்வதேச விமான நிலையங்களும் முடங்கிவிட்டன. இதனால் கிட்டத்தட்ட 4 லட்சம் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.


படிக்க: துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!


பிரிட்டன் மற்றும் ஜெர்மனியை போல் பாதிக்கப்பட்ட மற்றொரு ஐரோப்பிய நாடான போர்த்துகீசியமும் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. நெருக்கடியைச் சமாளிக்கத் தங்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு போர்த்துகீசிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி காலியாகக் கிடக்கும் ஊழியர்களின் பணியிடங்களை நிரப்பாமல் மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளும் கிரீஸ் அரசின் போக்கைக் கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அந்நாட்டுத் தொழிலாளர்கள் மேற்கொண்டனர்.

கடந்த மார்ச் 12 அன்று தென் ஆப்பிரிக்காவில் கல்வி, சுகாதாரம் மற்றும் அதன் துணைதுறைகளை சார்ந்த ஊழியர்கள் ஊதிய உயர்வுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடியுள்ளனர். 2018 ஆம் ஆண்டு மூன்றாண்டுக் கால உடன்பாடு போடப்பட்டது. ஆனால் மீண்டும் 2021 ஆம் ஆண்டு போடப்பட வேண்டிய உடன்பாடு இதுவரையில் எட்டப்படவில்லை. இதனை எதிர்த்து பல்லாயிரம் ஊழியர்கள் போராடினர்.

இவையன்றி ஜியார்ஜியா, தென்னமெரிக்க நாடுகளான பெரு, துனிசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்துள்ளது. உக்ரைன்-ரஷ்யப் போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்காக மட்டுமின்றி உக்ரைன் மீதான போரை கண்டித்து போரை உடனடியாக நிறுத்தக் கோரி ரஷ்யாவுக்கு எதிராகவும், “உக்ரைனுக்கு ஆயுதம் வழங்காதே” என்று அமெரிக்க தலைமையிலான மேல்நிலை வல்லரசுகளை கண்டித்தும் மக்கள் அவ்வபோது போராடி வருகின்றனர்.

பசி, பட்டினி, உணவு மற்றும் எரிப்பொருள் விலையேற்றம், வேலை பறிப்பு, ஏகாதிபத்திய போர் இதற்கெல்லாம் எதிராக மாபெரும் வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் உலகின் குறுக்கும் நெடுக்குமாய் உள்ள பிரான்ஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஜெர்மனி, கிரீஸ் என உலக நாடுகள் முழுவதும் படர்ந்து வருகிறது.

ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க போட்டாபோட்டி காரணமாக ஏற்பட்ட போர்களும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுமே மக்களை இப்போராட்டங்களை நோக்கி தள்ளியுள்ளது. பல நாடுகளில் இனி வாழவே முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் தோல்வியின் நெருக்கடி முழுக்க முழுக்க மக்கள் தலையில் வந்து விடிகிறது. இவையெல்லாம் உணர்த்துவது ஒரு விஷயத்தை தான்.  முதலாளித்துவத்தை தூக்கி எறிந்துவிட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான ஆட்சியை நிறுவும் ஓர் புரட்சிக்காக இந்த உலகம் ஏங்கிகொண்டிருக்கிறது. அதனை செய்வதற்கான மக்கள் அடித்தளம் கொண்ட போஷ்விக்மயமான கட்சியே ஒவ்வொரு நாட்டிற்கும்  தற்போதைய தேவை. ஏனெனில் உலக மக்கள் புரட்சியை பாற்றிகொள்ள காய்ந்த சருகுகளாக காத்துக்கிடக்கின்றனர். அது எரிவதற்கு தேவை சிறு தீ பொறியே!

நிலம் கையகப்படுத்துதல்: என்.எல்.சி-யின் அடாவடித்தனம் – பாதிப்புள்ளாகும் கடலூர் மாவட்ட மக்கள்! | வீடியோ

தொடர்ச்சியாக மக்களிடமிருந்து விளைநிலங்களை பிடிங்கிக் கொள்ளும் என்.எல்.சி நிர்வாகம் இதுவரை எந்த நிலத்திற்கும் முழு இழப்பீடு தொகையையும் வழங்கவில்லை. வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை என மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசும், மூன்றாம் கட்ட விரிவாத்திற்காக நிலங்களை கையப்படுத்திவரும் ஒன்றிய அரசும் தொடர்ந்து செவிசாய்க்கவில்லை என்றால் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என குமுறி வருகிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.

மேலும் தொடர்ந்து களத்தில் நின்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இச்செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ந்து போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும். இவ்விரிவாக்க பணிகளை உடனே நிறுத்தி விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும். இத்திட்டத்தை உடனே அரசு கைவிட வேண்டும்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல் பாடும் நேஹா சிங் ரத்தோர்! | தோழர் அமிர்தா | வீடியோ

உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்படும் மக்களுக்கெதிரான  திட்டங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி  பாடல்களாக பாடி வருபவர்தான் நேஹா சிங் ரத்தோர்.

இதுவரை இருநூறுக்கு மேற்ப்பட்ட பாடல்களை பாடிய இவர் தொடர்ச்சியாக பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளை அவர்கள் மண்ணில் இருந்து தன்னுடைய தாய்மொழியான போஜ்புரியில் பாடிவருவது பல லட்சக்கணக்கான மக்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. அவர் பாடிய சில மணி நேரத்தில் லட்சம்பேரால் பார்க்கப்பட்டு அம்மக்களிடையே நெருப்பாக பரவியது.

இதை கண்டு அஞ்சிய அம்மாநில பா.ஜ.க அரசு அவர் மீது பல போலிபுகார்கள் பதிவு செய்து தாக்குதல் தொடுத்திருக்கிறது. இவற்றை கடந்து களத்தில் நிற்கும் பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட நேஹா சிங்கிற்கு துணைநிற்க வேண்டும். அவரிடமிருந்து பாசிச எதிர்ப்புணர்வை வரித்துகொண்டு செயலாற்ற வேண்டும்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு போலீசு!

சுற்றி வளைக்குது பாசிச படை:  வீழாது தமிழ்நாடு துவளாது போராடு” மே 1 மதுரை மாநாட்டுக்கான பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இன்று (02.04.2023) காலை 9 மணி அளவில் தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள கோவில் மரத்தடியில் அமர்ந்து மாநாட்டு பிரச்சாரத்திற்கான பிரசுரங்களை மக்கள் அதிகாரம் தோழர்கள் மடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு போலீசு உடையில் இல்லாத ஒருவர் (போலீசு ஆய்வாளர்) ”இங்கு என்ன நடக்கிறது; யார் நீங்கள்” என்று கேட்டார். தோழர்களிடம் பிரசுரத்தை வாங்கிப்படித்துவிட்டு “இதுபோன்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது. மக்கள் அதிகாரம் தடைசெய்யப்பட்ட அமைப்பு. நீங்கள் எப்படி பிரச்சாரத்தில் ஈடுபடலாம்; நீங்கள் மக்களுக்கு விரோதமாக பிரச்சாரம் செய்பவர்கள்” என்று கூச்சலிட்டார்.  “இங்கெல்லாம் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது” என மிரட்டும் தொனியில் பிரசுரங்களை பிடிங்கி தள்ளுமுள்ளில் ஈடுபட்டார். ”இது உழைக்கும் மக்கள் பணத்தில் தயார் செய்த பிரசுரம்; இதிலிருந்து கையை எடுங்கள்” என்று தோழர்கள் போலீசுக்கு பதில் கூறினர்.

“இங்கு பிரச்சாரம் செய்யவரவில்லை; நாங்கள் வெளியில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வதற்காகவே பிரச்சுரங்களை மடித்து கொண்டிருந்தோம்” என கூறிய பிறகும் தோழர்களை உரத்த குரலில் “வெளியே போங்கடா” என ஒருமையில் ஏசி அதிகார திமிருடன் நடந்துகொண்டார். “உங்களை கைது செய்து போலீஸ் ஸ்டேசனுக்கு இழுத்து செல்ல வேண்டும்” என கூறிய அவர் போலீசு உடையில் இல்லாத  மற்றொரு நபரையும் சேர்த்துக்கொண்டு தள்ளுமுள்ளில் ஈடுபட்டார். மிரட்டிய போலீசிடம் “நாங்கள் பிரச்சினையை சந்திக்க தயார்” என தோழர்கள் பதிலளித்தனர்.


படிக்க: மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக! | ம.க.இ.க மனு


அங்கு கூடியிருந்த வியாபாரிகள் மக்களிடம் சத்தமாக “நாங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள். மக்களுடைய பிரச்சனைகளை பற்றி பேசும் எங்களை பேசவிடமால் தடுத்து இப்படி அராஜகம் செய்கிறார்கள்; இங்கெல்லாம் பேச கூடாது வெளியே போங்கள் என  மிரட்டுகிறார்கள்”  என்று முறையிட்டனர்.

தலைநகர் சென்னையிலே இப்படி நடக்கும் அதேவேளையில், முன்னதாக மதுரையில் மாநாட்டுக்காக 40-க்கும் மேற்பட்ட சுவர் எழுத்துகளுக்கு வெள்ளை அடித்துள்ளது மதுரை காவித்துறை. இப்படி மாநாட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யும் தோழர்களை குறிவைத்து மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகிறது போலீசு.

இதுபோன்ற சுவரெழுத்து விளம்பரங்களும், பிரச்சாரங்களும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. பாசிச எதிர்ப்பு குரல்களை ஒடுக்குவதற்கு நாடு முழுவதும் அதிகார வர்க்கத்தை ஆக்கிரமித்துள்ள பாசிசகும்பல், தமிழ்நாட்டிலும் அதிகார வர்க்கத்தில் ஊடுருவி வருகிறது. தனது அடிவருடிகளை உருவாக்கி பாசிச எதிர்ப்பு குரல்களை முடக்க முற்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிராகப் போராடும் முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் மீதான போலீசுத்துறையின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒரணியில் திரளுவோம்.

நேரலை | ஏப்ரல் 02, 2023: பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா!

தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதில் புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!

நிகழ்ச்சி ஏற்பாடு:
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
செல்: 73974 04242

பாகம் – 1
(வீடியோ காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்)
https://fb.watch/jEXDBIjsq6/

பாகம் – 2
(வீடியோ காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்)
https://fb.watch/jEXC0qIcUf/

பாகம் – 3
(வீடியோ காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்)
https://fb.watch/jEXsvhKRC9/

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஈராக்: புல்லுருவி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புபோரை தொடுத்து 20 ஆண்டுகள் நிறைவு!

க்ரைன் ரசிய போரால் தாம் கொல்லப்பட்டுவிட்டால், தமது குழந்தைகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக முதுகில் முகவரிகளை எழுதிய பெற்றோர்களின் காட்சி நமது நெஞ்சை உலுக்கியது. இத்தகைய கொடூரமான சம்பவம் தான் மார்ச் 20, 2003 அன்று ஈராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட போர் பிரகடனம். அக்கொடிய நிகழ்வு தொடங்கி 20 ஆண்டுகளை கடந்துவிட்டோம். பிணந்தின்னி ஏகாதிபத்திய அமெரிக்கா தொடுத்த போரினில் கழுத்தறுக்கபட்டு உடலில் இரத்தம் சொட்ட சொட்ட குற்றுயிரும் குலையுயிருமாக உயிரைவிடும் நிலையில் இருந்தது ஈராக். இன்றும் சொட்டும் இரத்தத்தை குடித்து கொண்டுதான் இருக்கிறது அமெரிக்கா.

இந்த மறுகாலனியாக்க நடவடிக்கைக்கு உலக யோக்கியன் புஷ் அன்று இட்ட பெயர் “ஈராக்கிய விடுதலை நடவடிக்கை’’ (Operation Iraqi Freedom). ‘அதிபர் சதாம் உசேனின் ஈராக்கை நிராயுதபாணி ஆக்குவது; பேரழிவு ஆயிதங்களை (Weapons of mass destruction) அழிப்பது’ – இதன்மூலம் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு அபாயத்தை நீக்குவது என்று முழங்கியது புஷ் – பிளேர் கும்பல்.

ஆனால் எதார்த்தத்தில் நடந்ததோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னிடம் இருந்த பேரழிவு ஆயுதங்களை சோதித்தறிய வாய்ப்பாக ஈராக்கை பயன்படுத்திக் கொண்டது தான். இதன்மூலம் தனது ஆயுத சந்தையை விரிவுபடுத்திக் கொண்டது.

சதாம் உசேனின் கொடுங்கோல் ஆட்சியை நீக்கிவிட்டு ஜனநாயகத்தை நிறுவுவதே தனது நோக்கம் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவது தான் அமெரிக்காவின் நோக்கம் என்பது உலகிற்கு அம்பலப்பட்டு போனது.


படிக்க: ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை


இந்தப் போர் 2003-ஆம் ஆண்டு தொடங்கப்படவில்லை; இதற்கு முன்னர் 1991-ஆம் ஆண்டிலேயே பல்வேறு முனைகளில் சிறுசிறு அளவுகளில் தொடங்கப்பட்டுவிட்டது. ஐ.நா விதித்த பொருளாதார தடையினாலும் அமெரிக்க தாக்குதலாலும் உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு 6 லட்சம் குழந்தைகள் செத்து மடிந்தனர். போர் காலங்களில் தினமும் 1500 முறைக்கு மேல் விமானங்கள் மூலம் பல ஆயிரம் டன் குண்டுகளை பாக்தாத் நகர் மீது வீசப்பட்டது.

அமெரிக்கா பயன்படுத்திய துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகள், ஏவுகணை முனைகள் அனைத்திலும் நுண்ணிய யுரேனிய அணுசக்தி துகள்கள் பயன்படுத்தப்பட்டன. போரின் போது இராணுவத்தினர் மட்டுமல்ல போருக்கு பின் ஆயிரம் ஆயிரம் குடிமக்களும் செத்து மடிந்தனர். ஈராக் மக்கள் மட்டுமல்ல அமெரிக்க கூலிப்படையினரும் நோய்க்கு பலியானார்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 67 சதவீத குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். 2003 – 2011 இடைப்பட்ட காலத்தில் மட்டும் 4,61,000 பேர் இறந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது.

“ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் அவர்களின் வர்க்க நலன் அடங்கி இருக்கிறது” என்பதற்கேற்ப புஷ் முழங்கிய வார்த்தைக்கு பின்னும் ஒரு வர்க்க நலன் அடங்கி இருந்தது. அமெரிக்காவை உலக ஒற்றை துருவ மேலாதிக்க வல்லரசாக நிறுவிக்கொள்ளவும் உலக ஏகபோக நிறுவனங்களின் மறுகாலனியாக ஈராக்கை மாற்றுவதே அது.

“ஈராக்கிய விடுதலை நடவடிக்கை’’ என்று முழக்கியது எல்லாம் பிற அரபு நாடுகளில் உள்ளதை போன்று ஈராக்கிலும் ஏகாதிபத்திய அடிவருடி கும்பலுக்கு சேவை செய்யும் உல்லாச – ஊதாரிகள் அடங்கிய ஒரு பொம்மை ஆட்சியை அமைப்பதைதான். அன்று அதிபர் புஷ் பிணக்குவியல் மீது ஏறி நின்று ஈராக்கின் எண்ணெய் வளங்கள் அந்நாடு மக்களின் எதிர்கால நலனுக்காக பாதுகாக்கபட்டுவிட்டது என்று கூச்சலிட்டதெல்லாம் பெட்ரோலிய எரிபொருள் துறையில் அமெரிக்காவின் உலக ஏகபோக சந்தை ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதைதான்.

அமெரிக்கா ஈராக் மீது போர் புரிந்ததன் உண்மையான நோக்கமே, ஈராக் உலகிலேயே இரண்டாவது எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதே. ஏற்கனவே பிற எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை தனது ஆளுகைக்கு கொண்டு வந்து விட்ட நிலையில் ஈராக்கையும் தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வரவும், வீழ்ச்சி அடைந்து வந்த அமெரிக்க டாலர் மதிப்புக்கு முட்டுக் கொடுக்கவும் அமெரிக்கா வெறித்தனமாக செயல்பட்டது. ஈராக், லிபியா என்று தனது உலக மேலாதிக்கத்திற்கு அடிபணியாத நாடுகள் மீது ஏதாவது ஒரு போரை தொடுத்து அடிபணிய வைப்பதே அமெரிக்காவின் நோக்கம்.


படிக்க: இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. அமெரிக்கா வீசிய குண்டுகளுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள மூலை முடுக்குகளில் இருந்து அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரை எதிர்த்து முழக்கங்கள் எழும்பின. உலகெங்கிலும் இருந்து கோடான கோடி உழைக்கும் மக்கள் ஈராக்கின் ஆக்கிரமிப்பு போருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உலகப் பாட்டாளி வர்க்க கட்சியின் தார்மீக கடமைக்கிணங்க தமிழகத்திலும் “உலக மேலாதிக்க போர் வெறியன் புஷ்சே ஈராக் மீது கை வைக்காதே! ” என்ற முழக்கத்தின் அடிப்படையில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு மற்றும் பு.மா.இ.மு போன்ற புரட்சிகர அமைப்புகள் சார்பாக திருச்சி, சென்னை, பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் போர் எதிர்ப்பு முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 20 ஆண்டுகள் ஆகியும் 2,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் ஈராக் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. தற்போது அவர்கள் கூறும் காரணமோ ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது. ஆனால், ஐ.எஸ் அமைப்பு உருவாவதற்கு காரணமே அமெரிக்கா தான் என்பது உலகறிந்த விசயம்.

உலகம் சிவப்பதற்கு எதிராகத்தான் (அதாவது சோவியத் ரஷ்யா விரிவாக்கத்திற்கு எதிராக) நேட்டோ கூட்டணிகள் என்று முழங்கியது அமெரிக்கா. ஆனால் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னரும் நேட்டோ ஏன் இன்னும் களைக்கப்படவில்லை? இன்றும் ஏன் நேட்டோ கூட்டமைப்பை வைத்து ரஷ்ய-உக்ரைன் போர் மூலம் பதிலிப் போர் நடத்திகொண்டிருக்கிறது அமேரிக்கா? இதற்கான விடையை தெரிந்து கொண்டாலே ஏன் இன்றும் ஈராக்கில் அமெரிக்காவின் துருப்புக்கள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இரண்டின் நோக்கமுமே ஒன்றுதான்; அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நிறுவுவதும் அதனை தக்கவைப்பதும் தான். அதனை சரிய விடாமல் முட்டுக் கொடுக்கத்தான் அமெரிக்க துருப்புகளும் நேட்டோவும்.

அன்றைய ஈராக் போர், இன்றைய உக்ரைன் பதிலி போர் என அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கரங்கள் உலகம் முழுவதும் நீண்டுள்ளன. தனது ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 800 ராணுவ தளங்களை அமைத்துள்ளது. உலக பாட்டாளி வர்க்கத்தின் பிரதான எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்த ஒன்றிணைவோம்! வீழ்த்துவோம்!

ஊபா உச்சநீதிமன்ற தீர்ப்பு: பாசிச அரசுடன் கைகோர்க்கும் நீதிமன்றம்!

ரலாற்றை ஆராய்ந்தால் முடியாட்சி முதல் குடியாட்சிவரை அனைத்து அரசுகளுமே மக்களின் மீது ஒடுக்குமுறையை செலுத்தும் வன்முறைக் கருவியாக தான் இருந்துவந்துள்ளன. இந்திய வரலாறும் அப்படி தான். அதில் தற்போது மோடியின் எட்டு ஆண்டுகால ஆட்சியில் அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த உறுப்புகளும் மேலும் மேலும் பாசிசமயமாகி வருகிறது. அதற்கு தக்க எடுத்துக்காட்டு தான் சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு.

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) 1967, மற்றும் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (TADA), 1987 ஆகியவற்றின் கீழ், “தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையில் மட்டுமே ஒரு நபரை குற்றஞ்சாட்ட முடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை (25.03.2023) அன்று இத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றி வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பின்படி, தடைசெய்யப்பட்ட அமைப்பின் வெறும் “உறுப்பினர்” என்ற காரணத்திற்காகவே சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA), 1967 கீழ், ஒருவரை கைது செய்யலாம் எனவும், மேலும் அவர் அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உள்ளாக நேரிடும் எனும் கட்டற்ற அரச ஒடுக்குமுறைக்கு வழியமைக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த வாரம் தனது தீர்ப்பின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.

இக்கொடிய தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான குஜராத்தை சேர்ந்த எம்.ஆர்.ஷா தொடர்ந்து இதுபோன்ற மக்கள் விரோத தீர்ப்பை வழங்கிவருபவர் ஆவார். இவர் நீதிபதியாகப் பதவி ஏற்றதிலிருந்தே இவர்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தனது பேட்டி ஒன்றில் மோடியை மாடல் அண்ட் எ ஹீரோ (model and a hero) என்று புகழ்ந்தவர். எனில் அவர் யாருக்காகச் செயல்பட்டு வருகிறார் என்பதனை புரிந்துகொள்ளமுடியும். இப்படி ஆளும் பாசிச பா.ஜ.க – சங்கபரிவாரின் உறுப்பினர் போலவே செயல்பட்டுக் கொண்டிருப்பது எம்.ஆர்.ஷா. மட்டுமல்ல, ஒட்டுமொத்த நீதித்துறையும் பிற அரசு எந்திரங்களும் அரசின் பிரதிநிதிகளாக இருந்தே செயலாற்றி வருகின்றன.


படிக்க: ஊபா (UAPA) : செயற்பாட்டாளர்களை செயலிழக்க செய்வதற்கு தான் || அருந்ததி ராய்


ஏற்கெனவே ஊபா சட்டத்தை கருப்புச்சட்டம் என மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எதிர்த்து வரும் நிலையில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பானது மிக மோசமான மனித உரிமை மீறல்களை விளைவிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

இத்தீர்ப்பு குறித்து, “வரலாற்றில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளை விட இது மிகவும் மோசமான அடிப்படை உரிமைகளை அழிக்கக்கூடிய தீர்ப்பு” என சட்டவியல் அறிஞர் கெளதம் பட்டாயா விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி” எனும் கூற்றிற்கு இணங்க தீர்ப்பு வழங்கும் போது, “இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” என தனது போலி தேசபக்தியைத் தம்பட்டம் அடித்துக் கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

நாட்டையே அதானி அம்பானிக்கு கூறு போட்டு விற்றுக்கொண்டிருக்கும் மோசமான சூழலில் இப்படிப்பட்ட முதலாளிகளுக்குச் சேவை செய்யும் இவர்களின் தேசபக்தி கேலி கூத்தானது. முதலாளிகளுக்குச் சேவை செய்வது தேசப்பக்தி என்றும், தம் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்கள் நிற்பதும், மக்களுக்கு ஆதரவாக புரட்சிகர – ஜனநாயக சக்திகள் நிற்பதும் தேசவிரோதம் எனவும் கற்பித்து கொண்டிருக்கின்றன அரசு இயந்திரங்கள்.

000

மேலே குறிப்பிட்டுள்ள 2011 ஆம் ஆண்டு ஊபா வழக்கில் ஒரு தனிநபர் குற்றம் ஏதும் செய்யாமல், அதாவது எந்தவித பயங்கரவாத செயலிலும் ஈடுபடாமல், இந்திய இறையாண்மைக்கும் எவ்வித தீங்கும் செய்யாத நபர், தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக மட்டும் இருந்தால் அவரைக் குற்றவாளியாகக் கருத முடியாதென அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால் தற்போது தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் வெறும் உறுப்பினராக இருந்தால் மட்டும் கூடப் போதுமானது, அவரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கலாம் எனத் தீர்ப்பை மாற்றியுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஊபா போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டதானது அரசப் பயங்கரவாதத்திற்கு எதிராகப்போராடும் மக்களை, எல்லாவித அடிப்படை உரிமைகளையும் மறுத்துச் சிறையில் தள்ளிக் கொடுமைப்படுத்தி, இனி அரசபயங்கரவாதத்தை யாரும் எதிர்க்கத் துணிய அச்சப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காய் உருவாக்கப்பட்டிருப்பது வெள்ளிடைமலை. அவ்வகையில் சமீபகாலமாக அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூகப் பிரச்சனைக்கு ஜனநாயக ரீதியில் குரல்கொடுப்பவர்கள் என யாராக இருந்தாலும் அனைவரையும் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தி வருகிறது இந்தப் பாசிச மோடி அரசு.`

ஊபா சட்டம் மற்ற குற்றவியல் சட்டத்தைப் போல் இல்லாமல், இது எவ்விதக் காரணமும் இன்றி வருடக் கணக்காக ஒருவருக்குப்பிணை வழங்காமல் சிறையில் அடைக்கும்படியான முகாந்திரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை விசாரிக்கும் தேசியப் புலனாய்வு அமைப்பானது, மாநில அரசின் அனுமதியின்றியே எந்நேரத்திலும் எவரை வேண்டுமானாலும் விசாரிக்கவும், கைது செய்யவுமான அதிகாரத்தினை இச்சட்டமானது சாத்தியப்படுத்தி உள்ளது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திதான்  எல்கர் பரிஷத் வழக்கில் மனித உரிமைப் போராளிகளான முனைவர் ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா ஆகியோரை கைது செய்தது மோடி அரசு.

இந்தியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான மிக வயதான நபரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 84 வயதான பழங்குடியின உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டு மும்பையில் நீதிமன்றக் காவலில் இருக்கும்போது போதிய மருத்துவ வசதி மறுக்கப்பட்டு சூலை 5, 2021 அன்று உயிரிழந்தார். மேலும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களின் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதேபோல் நாட்டையே உலுக்கிய அத்ராஸ் கொலைத் தொடர்பாக நேரில் தகவல் சேகரிக்க சென்ற கேரளாவைச் சேர்ந்த பதிரிக்கையாளர் சித்திக் கப்பன் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


படிக்க: சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !


மேலும் தங்களது உரிமைக்காகப் போராடும் மக்களின் மீதும் மாணவர்களின் மீதும் இக்கொடிய சட்டத்தை ஏவி அடக்குமுறையை நிகழ்த்தி வருகிறது இந்தப் பாசிச அரசு. இந்நிலையில் தான் இதற்கெல்லாம் மணிமுடி வைத்தாற்போல் “தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருந்தாலே அவரை கைது  செய்யலாம்”  என்ற இத்தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

இந்தப் பாசிச ஆட்சியில் போராட்டமே வாழ்க்கையாக மாறியுள்ள நிலையில் தங்களது உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடும் மக்களை அமைப்புகளாக ஒன்றிணைக்க விடாமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

இந்தத் தீர்ப்பின்படி தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற நிலையை எதை வைத்து தீர்மானிப்பார்கள்? ஓர் அமைப்புத் தடைசெய்யப்படாத வரை அங்கீகாரம் பெற்ற அமைப்பாகவே கருதப்படுகிறது. ஆனால் தடைசெய்யப்பட்ட உடன் அதில் செயல்படும் உறுப்பினர்கள் எப்படிக் குற்றவாளிகளாகக் கருதப்படுவர்? இதற்கெல்லாம் சட்டத்தில் எந்த பதிலும் இல்லை.

ஏற்கனவே ஊபா சட்டத்தைப் பயன்படுத்தி இது போன்ற பொய்யான வழக்குகளைத் தயார் செய்து பல நபர்களை சிறையில் தள்ளியுள்ளது மத்திய அரசு. இனி அரசை எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசினாலும், தமது உரிமைகளைக் கேட்டாலும் அவர்கள் மீது பொய் வழக்குகளைத் தயார் செய்து சிறையில் அடைப்பதை எளிமைப்படுத்தி இருக்கிறது இச்சட்டம்.

பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருப்பதாகக் கைது செய்யப்பட்ட ஸ்டான்சாமியின் கணினியானது புலனாய்வு துறையைச் சேர்ந்தவர்களால் ஹாக் (Hack) செய்யப்பட்டுப் பயங்கரவாத அமைப்பில் இருப்பதைப் போன்ற தகவல்கள் அதற்குள் செலுத்தப்பட்டது சமீபத்தில் அம்பலமானது. எனில் இச்சட்டம் ஏற்கனவே யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதனை புரிந்துகொள்ளமுடியும்!

இருப்பினும் அரசானது எந்தளவிற்கு உழைக்கும் மக்களின் போராட்டங்களை கண்டு எந்த அளவிற்கு மிரண்டுப்போய் உள்ளது என்பதனையே அரசின் இந்த மக்கள் விரோத சட்டங்கள் எடுத்து காட்டுகின்றன. அதனால்தான் அத்தகைய அறிவினை வழங்குபவர்கள், வழிநடத்துபவர்கள், கோட்பாட்டாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அமைப்புகள், தனிநபர்கள் என அனைவரின் மீதும் அரச பயங்கரவாத சட்டங்களைப் பாய்ச்சி தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிவகைகளை எல்லா வழியிலும் செய்து வருகிறது மோடி அரசு.

“ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ” – என்றார் பாரதிதாசன்.

இதற்கேற்ப கொடிய சட்டங்களை நிறுவி மக்களை எப்போதும் அடக்கி வைக்கமுடியாது என்பதையே உலக வரலாறுகள் காட்டிநிற்கின்றன. இதை ஆட்சியாளர்கள் உணரும் தருணம் வெகுதொலைவில் இல்லை. மக்களின் கோபத் தீ மூளுமேயானால் அது காட்டுத்தீயைப் போல எங்கும் பரவி, வரலாற்றில் வெல்லவே முடியாத சர்வாதிகாரிகளாகத் தம்மைக் கருதிக்கொண்ட பாசிஸ்டுகளலான ஹிட்லர், முசோலினியன அரசுகளைப்போன்று இந்தப் பாசிச அரசையும், எந்தப் பாசிச அரசையும் வீழ்த்துவர். தத்துவமும் அமைப்புகளும் அனைத்து அரசப் பயங்கரங்களையும் தாண்டி மக்களை அணிதிரட்டி அதனைச் சாதிக்கும் நாள் வரும். இது ஆருடம், அல்ல ஆவணம்!

தீ

கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம்

01.04.2023

நேற்று ஐஐடி! இன்று காலாஷேத்ரா!
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே!

தமிழ்நாடு அரசே!

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வா!
பார்ப்பன பாலியல் குற்றவாளிகளையும் துணை போன கலாஷேத்ரா நிர்வாக அதிகாரிகள்,
தேசிய மகளிர் ஆணைய நிர்வாகிகளை கைது செய்!

கண்டன அறிக்கை

த்தாண்டுகளுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை, நிறப்பாகுபாடு, உடல் பாகுபாடு போன்ற மனிதவிரோத குற்றங்களை செய்து வந்த காலாஷேத்ராவின் பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் மேற்கொண்ட போராட்டம் நேற்று (31.03.2023) இரவு தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் குற்றம் சாட்டப்பட்ட பொறுக்கிகள் பணிகள் நீடித்திருக்கிறார்கள்.

தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நான்கு பேராசிரியர்கள் மீது மாணவிகள் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். அந்தப் புகார்களில் உண்மை எதுவுமில்லை என்றும் போலீசு தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்து கலாஷேத்ரா நிர்வாகமும்  தேசிய மகளிர் ஆணையமும் பாலியல் குற்றவாளிகளுக்கு துணையாக இருந்திருக்கின்றனர். இந்த கொடுமைகளுக்கு எதிராக தேர்வுகளை எழுதாமல் புறக்கணித்து மாணவிகள் செய்த போராட்டத்தின் விளைவாக பிரச்சினை வெளியே வந்துள்ளது.

மாணவியரால் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் தொடர்ச்சியாக பணியில் இருக்கும் பொழுது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்று போராடி இருக்கிறார்கள் மாணவர்கள். பிரச்சினை இவ்வாறு வெளிச்சத்திற்கு வந்த பிறகும் பாலியல் குற்றவாளிகளான பார்ப்பன பேராசிரியர்களை அந்த நிர்வாகமும் ஒன்றிய அரசும் காப்பாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. தற்பொழுது முன்னாள் மாணவி ஒருவரிடம் இருந்து புகார் பெறப்பட்டு ஒரு ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மாணவியிடமிருந்து புகார் பெறப்பட்ட அடுத்த நிமிடமே குற்றவாளி ஆசிரியரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த குற்றவாளி ஆசிரியர் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட கலாஷேத்ரா நிர்வாகி ரேவதியும் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்.


படிக்க: ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | மக்கள் அதிகாரம்


சிறுபான்மை மக்களுக்கு எதிரான,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து ஊடகங்களும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரபலங்களும் இப்பிரச்சினையில் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருக்கின்றனர்.

ஐஐடியில் நடைபெறும் தீண்டாமை குற்றங்கள், ஊழல்கள், கிரிமினல் தனங்கள் ஆகியவற்றிலிருந்து பார்ப்பன கிரிமினல்களை காப்பாற்றும் ஒன்றிய அரசு கலாஷேத்ராவிலேயும் தன்னுடைய வேலையை காட்டுகிறது.

ஆகவே மாணவிகளால் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள்,  பாலியல் பொறுக்கிகளை காப்பாற்றிய தேசிய மகளிர் ஆணைய நிர்வாகி, கலாஷேத்ராவின் நிர்வாக இயக்குனர் ஆகியோரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் புகார்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய இடங்களை  திரும்பப் பெற வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை.
99623 66321

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல்– 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

தலையங்கம் : ராகுல் தகுதி நீக்கம் : நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!

♦ சர்வதேச சட்டங்கள் அனுமதி : பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலுக்கான திறவுகோல்!

♦ இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!

♦ கார்ப்பரேட்மயம் : நேற்று பள்ளிக்கல்வித்துறை! இன்று போக்குவரத்துத்துறை! நாளை?

♦ “ஈரோடு பட்டி ஃபார்முலா” : புழுத்து நாறிக்கொண்டிருக்கும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மற்றொரு பரிணாமம்!

♦ தொடர்ந்து திவாலாகிவரும் அமெரிக்க வங்கிகள் : வெடிக்கக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம்!

♦ “ஸ்டிங் ஆப்பரேஷன்” : ஊடக புரோக்கர்களும் ஊடுருவும் பாசிசமும்!

♦ திரிபுரா, நாகலாந்து, மேகாலாயா தேர்தல் முடிவுகள் : எச்சரிக்கை, பரவிவருகிறது பாசிசம்!

♦ ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!

♦ மீண்டும் மண்டைக்காடு கலவர அபாயம் : தமிழ்நாடே விழித்துக்கொள்!

♦ ஏப்ரல் 2, 2023. பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 2

♦ பரந்தூர் முதல் ஓசூர் சிப்காட் வரை : கார்ப்பரேட் சேவையில் தி.மு.க!


புதிய ஜனநாயகம்

ஆளுநர்கள் நியமனம்: அடிவருடிகளுக்கு பரிசு! அடியாள் வேலைக்கு பதவி!

ந்துராஷ்டிரத்தை நிறுவத்துடித்துக் கொண்டிருக்கும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு, எதிர்க்கட்சிகளையும் தங்களுக்கு எதிரான போராட்டங்களையும் ஒழித்துக்கட்டுவது இன்று முக்கியப் பணியாக உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு ஆளுநர்கள் கருவியாகப் பயன்பட்டுவருகின்றனர். இந்த ஆளுநர்கள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் இந்துராஷ்டிர லட்சியத்தை சாதிப்பதற்கு, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் காவிக் கும்பலின் அடியாட்களாக செயல்பட்டுவருகின்றனர். அந்தவகையில், தற்போது புதிய அடியாட்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த மாதம் 12 ஆம் தேதி, 13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்துள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏழு ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் பல முக்கியமான மாநிலங்களில் பொருத்தமான உளவாளிகளை நியமித்துள்ளது பா.ஜ.க. அரசு.

கரசேவைக்கு தரப்பட்ட வெகுமதி

தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு செய்த கரசேவையின் பலனாய், தற்போது சன்மானம் பெற்றிருக்கிறார் மேனாள் நீதிபதி அப்துல் நசீர். கடந்த ஜனவரி நான்காம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வுப் பெற்ற இவர், ஓய்வுப் பெற்று 40 நாட்கள் கூட ஆகாத நிலையில், தற்போது ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


படிக்க : ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்? | தோழர் மருது வீடியோ


குஜராத் போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து மோடியைக் காப்பாற்றிய நீதிபதி சதாசிவத்திற்கு, 2014 ஆம் ஆண்டு கேரள ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. இப்போது, அப்துல் நசீருக்கு பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-விற்கு ஆதரவாக, அயோத்தி நிலம் ராமர் கோயிலுக்கே சொந்தம் என்ற அயோக்கியத்தனமான தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பை வழங்கிய அமர்வில் அங்கம் வகித்த அசோக் பூஷன், ரஞ்சன் கோகாய் ஆகியோருக்கு ஏற்கெனவே பதவிகள் வழங்கி ‘கவுரவிக்கப்பட்டு’ விட்டது. இப்போது அப்துல் நசீருக்கு கிடைத்திருக்கிறது.

அசோக் பூஷன் ஓய்வுப் பெற்ற இரண்டு மாதங்களில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) தலைவராக நியமிக்கப்பட்டார். அயோத்தி மட்டுமல்லாமல், ரபேல் ஊழல், அசாமில் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவதற்கான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் மோடி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய மற்றொரு நீதிபதியான ரஞ்சன் கோகாய், ஓய்வுபெற்றப் பிறகு பா.ஜ.க.வால் நியமன எம்.பி.யாக பதவியில் அமர்த்தப்பட்டார்.

அப்துல் நசீர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதே பெரும் சர்ச்சைக் குறியதாகும். 2017-ஆம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய இவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றாத நிலையிலேயே உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். இது பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அப்துல் நசீர் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கிறோம் என்றது மோடி அரசு. பாசிச மோடி அரசுக்கு சிறுபான்மையினர் மீது அத்துணை அக்கறையாம்! ஆனால், தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள கே.எம்.ஜோசப் என்ற நீதிபதி ஒரு கிறித்தவர் என்பதனால் கொலிஜியம் பரிந்துரைத்து பல மாதங்கள் வரையிலும் ஒப்புதல் அளிக்கப்படாமல் வஞ்சிக்கபட்டார்.

மோடி அரசின் பூரண ஆசியுடன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அப்துல் நசீர், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் பொழுதே ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான அகில பாரதிய ஆதிவக்த பரிஷத்தின் (ஏபிஏபி) 16-வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். “இந்திய நீதித்துறை மனு, சாணக்கியர், காத்யாயனர், பிரஹஸ்பதி, நாரதர், யாக்யவல்க்கியர் போன்றோர் உருவாக்கிய சட்ட மரபைப் புறக்கணித்து வருகிறது. காலனிய நீதி அமைப்பைப் பின்பற்றுகிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், தேச நலனுக்கும் எதிரானது” என்று வெளிப்படையான சங்கியாகப் பேசினார். உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரே இவ்வாறு பேசியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இஸ்லாமியர்களை நான்காந்தரக் குடிமக்களாக நடத்தும், அம்மக்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்துராஷ்டிரத்தை அறிவிக்க வேண்டும் வெறிக்கூச்சலிடும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலுக்கு, தானும் ஒரு இஸ்லாமியன் என்ற பெயரில் சங்கியாக செயல்படும் அப்துல் நசீர், சொந்த மக்களுக்கே எதிரான துரோகி. அவரது விலைமதிப்பில்லாத துரோகத்தின் பரிசாகக் கிடைத்திருப்பதுதான் ஆளுநர் பதவி.

மேலும், அப்துல் நசீர் ஆந்திராவுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில், தென்னிந்தியாவைக் குறிவைத்து வேலைசெய்யும் பா.ஜ.க.வின் மிஷன் சவுத் திட்டமும் இணைந்திருக்கிறது.

மாநிலங்களின் மீது பாசிச உளவாளிகளின் படையெடுப்பு

மஹாராஷ்டிரா ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி கடந்த ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றார். இந்நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு ரமேஷ் பயஸ் என்பவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உத்தரவின் பேரில் ‘வெற்றிகரமாக’ சிவசேனாவை உடைக்கும் பணியை நிறைவேற்றிவிட்டதால் இதன்பிறகு பகத்சிங் கோஷ்யாரிக்கு மஹாராஷ்டிராவில் வேலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லடாக் துணைநிலை ஆளுநர் ராதா கிருஷ்ணன் மாத்தூரின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அருணாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த பி.டி.மிஸ்ரா லடாக்கின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரியில் இந்த அறிவிப்பு வருவதற்கு முதல்நாளே எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி, ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளார் ராதா கிருஷ்ணன். இதற்கு லடாக்கின் கொந்தளிப்பான போராட்டச் சூழலே காரணமாகும்.

2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக உடைக்கப்பட்டபோது, அதை லடாக்கின் லே பிராந்திய மக்கள் வரவேற்றனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போது லடாக்கில் ஒன்றிய அரசுக்கு எதிராக, மாநில உரிமைக்காகவும் ஆறாவது அட்டவணைப்படி சிறப்பு உரிமை கோரியும் தீவிரமாக போராடி வருகின்றனர் லே பிராந்திய மக்கள். கார்கில் ஜனநாயகக் கூட்டணி (KDA), லே அபெக்ஸ் பாடி (LAB) ஆகிய கட்சிகள் மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

லடாக்கில் தீவிரமாக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்தான், பழைய ஆளுநர் மாற்றப்பட்டு, பி.டி.மிஸ்ரா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்திலேயே முன்னாள் இராணுவ அதிகாரியான அவர், லடாக்கிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மொத்தமுள்ள 8 வடகிழக்கு மாநிலங்களில் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்டு 5 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


படிக்க : ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை மக்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் ஆட்சிக்கு வருவது என்னமோ பா.ஜ.க.தான். கடந்த காலங்களில் சிக்கிம், மேகாலயா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறாதபோதும், பிற கட்சி ஆட்களை பேரம்பேசுவதன் மூலமும் ஆளும் கட்சியை மிரட்டி கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வைப்பதன் மூலமும் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. இந்த நிழல் பேரங்களை எல்லாம் ஆளுநர்களின் துணைக்கொண்டே நடத்திவருகிறது பா.ஜ.க. மேகாலயா தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.விற்கு பாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது ஆளுநர் மாற்றம் நடைபெற்றிருக்கிறது.

0-0-0

மதவெறி செல்வாக்கு, சந்தர்ப்பவாதக் கூட்டணி, குதிரை பேரம் போன்றவற்றின் மூலம் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் இணையாட்சியை நடத்திவருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் முறைகேடு என பல்வேறு காரணங்களைச் சொல்லி எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும்; ஆட்சிக்கவிழ்ப்பு சதிவேலைகளில் ஈடுபடுவதற்கும் ஆளுநர்களை அடியாட்களாகப் பயன்படுத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தமிழ்நாடு, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களின் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.

இன்னொருபக்கம், தனது பாசிசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அடிமைச்சேவகம் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசாகவும் ஆளுநர் பதவி உள்ளது. தற்போதைய ஆளுநர்கள் நியமனமும் அதற்கொரு சாட்சியாக உள்ளது.


துலிபா

‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!

0

பாசிச பா.ஜ.க ஆளும் ஹரியானாவில் பசு குண்டர்களால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்கள் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன.

கடந்த ஜனவரி 28-அன்று நூஹ் மாவட்டத்தில் வாரிஸ் (Waris) என்ற 22 வயது இளைஞர் பஜ்ரங் தள் அமைப்பினர் உள்ளிட்ட பசு குண்டர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். வாரிஸ்-இன் மனைவியும், 3 வயது மகளும் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், டெம்போ மீது அவரது கார் மோதி விபத்திற்கு உள்ளானதால் வாரிஸ் உயிரிழந்ததாக போலீசு கூறுகிறது. உண்மை என்னவென்றால், பசு குண்டர்கள் விரட்டிச் சென்றதால்தான் வாரிஸ்-இன் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக, வாரிஸ் மற்றும் இரண்டு இஸ்லாமியர்களை பசு குண்டர்கள் தாக்கி, அதை வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த தாக்குதலானது ஹரியானா போலீசின் முன்னிலையில்தான் நடைபெற்றிருக்கிறது. ஆனால் போலீசு பசு குண்டர்களை கண்டுகொள்ளக்கூட இல்லை.

அதேபோல, ஹரியானாவின் பல்வாலில் (Palwal) மார்ச் 5-ஆம் தேதியன்று மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லிம் லாரி டிரைவர் பசு குண்டர்களால் தாக்கப்பட்டார்.

இவை சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் பசுவதை – மாட்டிறைச்சியை வைத்து சங்க பரிவார கும்பல்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை தாக்குதல்கள். 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் நாடு முழுவதும், அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், வன்முறை சம்பவங்கள் அதீத அளவில் நடைபெற தொடங்கியுள்ளன. பாசிஸ்டுகள் ‘பசு பாதுகாப்பு’ என்பதை தங்களுக்கான இந்துத்துவ அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான விரிவுபடுத்திக் கொள்வதற்கான கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அரசு எந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளும் பாசிஸ்டுகள்!

சங்க பரிவார் கும்பல் அரசு எந்திரத்தில் ஊடுருவி தனது பாசிச நோக்கங்களுக்கு ஏதுவாக அதைப் பயன்படுத்திக் கொள்கிறது. கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் பரத்பூர் (Bharatpur) மாவட்டம் காட்மிக்கா (Ghatmeeka) கிராமத்தைச் சேர்ந்த நசீர் மற்றும் ஜுனைத் எனும் இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பசு குண்டர்களால் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட அவர்கள் இரண்டு நாட்கள் கழித்து ஹரியானாவின் பிவானி (Bhiwani) மாவட்டம் லோஹரு (Loharu) கிராமத்தில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலங்களாகத்தான் மீட்கப்பட்டனர்.

முன்னதாக, பசுக்களை கடத்தியதாக‌க் கூறப்பட்டு தாக்கப்பட்ட நசீர் மற்றும் ஜுனைத் ஆகிய இருவரும்  படுகாயங்களுடன் ‘பசு பாதுகாவலர்’களால் (gau rakshak) ஹரியானா பெரோஸ்பூர் ஜிர்கா (Firozpur Jhirka) போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  தாக்கப்பட்ட இருவரின் நிலையைக் கண்ட போலீசோ, அவர்களை திரும்ப அழைத்துச் செல்லும்படி அந்தக் கும்பலிடமே கூறிவிட்டது. அக்கும்பல் காரில் வைத்தே 20 மணிநேரம் அவர்களை அலைக்கழித்தது. பிறகு அவர்களை பிப்ரவரி 16-ஆம் தேதி இரவில் காரில் வைத்தே பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டது.


படிக்க: அரியானா : பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை தாக்கும் காவி குண்டர்கள் !


பிவானியின் பஜ்ரங் தள் உறுப்பினரான மோனு மானேசர் (Monu Manesar) தலைமையிலான கும்பல்தான் இந்தப் படுகொலையை செய்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 2019-ஆம் ஆண்டில் ஹரியானாவின் பாஜக அரசு பசுவதை தடுப்புச் சட்டத்தில் பசுக்களை கடத்தினால் பத்து ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தத்தை மேற்கொண்டது.

மேலும் 2021-ஆம் ஆண்டு ஜூலையில், பசுக்களைக் கடத்துவதையும் கொல்வதையும் தடுக்க, பல மூத்த அதிகாரிகளைக் கொண்ட மாநில அளவிலான சிறப்பு பசு பாதுகாப்பு பணிக்குழுவை (Special Cow Protection Task Force Committee) அமைப்பதாக அறிவித்தது. இந்த குழுவின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு பசு பாதுகாப்பு பணிக்குழுக்கள் (SCPTF) அமைக்கப்பட்டன. இக்குழுக்களில் பசு பாதுகாவலர்கள் (குண்டர்கள்) தங்களை இணைத்துக் கொண்டனர்.

கொலைகார கும்பலின் தலைவனான இந்த மோனு மானேசர் குருகிராம் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட பணிக்குழுவின் உறுப்பினர். இவ்வாறு ஹரியானாவில் அரசே பசு குண்டர்களை சட்டரீதியாக அங்கீகரிக்கிறது. இந்த சட்ட ரீதியிலான பசு குண்டர்களுடன் சட்ட விரோதமாக இயங்கும் பசு குண்டர்களும் இணைந்து செயல்படுகிறார்கள். இம்மாநிலத்தில் 15,000-க்கும் மேற்பட்ட பசு குண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.  இதில் கௌ ரக்ஷா தள் (Gau Raksha Dal), பஜ்ரங் தள் மற்றும் கௌபுத்ர சேனா (Gauputra Sena) ஆகிய இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

இஸ்லாமியர்களையும் தலித்துகளையும் ‘பசு கடத்தல்காரர்கள்’ என்று கூறி தாக்கி வருகின்றனர். குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டத்தின் மூலம் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது காவி பாசிச குண்டர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஏதுவாக உள்ளது.

அப்பாவி இஸ்லாமியர்களும் தலித்துகளும் பசு குண்டர்களால் தாக்கப்படுவது ஒரு புறமிருக்க, மறுபுறம் அரசோ பாதிக்கப்படும் இஸ்லாமியர்கள் மீதுதான் பசுவதை தடை சட்டத்தின் கீழ் பொய் வழக்குகளை புனைகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், ஹரியானாவின் நூஹ் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட 69 ‘பசுவதை’ தொடர்பான வழக்குகளில், 4 வழக்குகளில் மட்டுமே ‘பசுவதை’ நடந்ததாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றமும் பசுவதையும்

குஜராத்தில் பசு கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த தாபி (Tapi) மாவட்ட நீதிமன்ற நீதிபதி சமீர் வினோத்சந்திரா வியாஸ் குற்றம்சாட்டப்பட்ட முகமது அமீன் என்ற 22 வயது முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும் ₹ 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் வழங்கப்பட்டது.  தீர்ப்பின் முழுவிவரம் தற்போது தான் வெளியானது. மகாராஷ்ட்ராவில் இருந்து 16 பசு மாடுகளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் அமீன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த தீர்ப்பில் நீதிபதி “பசு நமது தாய் போன்றது; பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். வீட்டில் பசு சாணம் பூசியிருந்தால் கதிர்வீச்சு பாதிப்பு கூட அண்டாது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுவின் கோமியம் பல தீரா நோய்களை தீர்க்க வல்லது. பசு பாதுகாப்பு பற்றி நாம் நிறைய பேசுகிறோம்; ஆனால் அது முழுவீச்சில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை” என்று கூறியுள்ளார்.


படிக்க: கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !


சட்டவாதிகள் திகைத்துவிட வேண்டாம். சுகாதார வல்லுநர்கள் பலரால் நிராகரிக்கப்பட்ட இக்கூற்றுகளைக் கூறியிருப்பது பாசிச காவி குண்டர்கள் அல்ல; குஜராத் மாநிலத்தில் உள்ள மாவட்ட நீதிபதி ஒருவர்‌தான்.

உத்தரபிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 14-அன்று நீதிபதி ஷமிம் அகமது (Justice Shamim Ahmed) பசு வதையை தடை செய்து, பசுவை ‘பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்கு’ என அறிவிக்க வேண்டும்‌ என்று கருத்து தெரிவித்துள்ளார். பாராபங்கி கிராமத்தை சேர்ந்த முகமது அப்துல் காலிக் (Mohd. Abdul Khaliq) என்பவர் தன்மீது பசுவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பசுவைப் பற்றி ஒரு ஆன்மீக சொற்பொழிவையே ஆற்றியுள்ளார்.

இந்து மத கடவுள்களான சிவன், விஷ்ணு, இந்திரன் போன்றோருடன் தொடர்புடைய பசு தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்றும்,

பசுவின் 4 கால்களும் 4 வேதங்களை குறிக்கிறது என்றும்‌ கூறியுள்ளார். மேலும், பசுக்களை கொலை செய்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்றும், இந்தியாவில் வேத காலத்திலேயே பசுவதை தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும், மகாபாரதம் உள்ளிட்ட புராணங்களில் பசுவதை தடை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே, 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி பாராளுமன்றத்திற்கு அறிவுரை வழங்கி இருந்தது. அதற்கும் முன்னதாக, 2017-ஆம் ஆண்டிலேயே ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இதே கருத்தை வெளிப்படுத்தி இருந்தது.

நீதிபதிகள் நியமனம் முழுமையாக பாசிச பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத போதே இந்துத்துவா சித்தாந்தத்தின் குரல் நீதிமன்றங்களில் இவ்வாறு உரக்க ஒலிக்கிறது.

பசுவதையும் சட்ட வழிமுறைகளும்!

சமீபத்தில், மார்ச் 17 அன்று, மகாராஷ்டிரா அமைச்சரவை பசுவதை தடுப்புச் சட்டத்தை கராராக அமல்படுத்துவதற்காக பசு சேவை ஆணையம் (Maharashtra commission for Cow Services) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ₹ 10 கோடி நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. இதில் ஏக்நாத் ஷிண்டே அரசு பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாதிரியை பின்பற்றியுள்ளது.

இஸ்லாமியர்களையும் தலித்துகளையும் ஒடுக்குவதற்காக திட்டமிட்டே பல்வேறு மாநிலங்களில் இயற்றப்படும் பசுவதை தடைச் சட்டத்தின் அச்சாணி இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் உள்ளது. அரசியலமைப்பின் பகுதி IV-ஆக உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) சரத்து 48 பசுவதையை (மாட்டிறைச்சியை) தடை செய்ய அரசுக்கு அதிகாரத்தை அளிக்கிறது.

எனவே, நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதன் மூலம் சட்ட ரீதியாக இந்த வன்முறை வெறியாட்டங்களை ஒழித்துக்கட்ட இயலாது. பசுவதை தடை சட்டத்திற்கு எதிராகவும், பசு குண்டர்களை பின்னணியில் இருந்து இயக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு எதிராகவும் களத்தில் மக்கள் திரள் போராட்டங்களை கட்டமைப்பதன் மூலமே தீர்வு காண முடியும்.

பொம்மி

நேரலை..! வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சி!

சுற்றி வளைக்குது பாசிசப் படை!
வீழாது தமிழ்நாடு! எங்களின் கோட்டை!

நேரலை – வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சி!

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”சிவப்பு அலை” (RED WAVE) புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் – இசை நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் வினவு யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும்..

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாத தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், வாசகர்கள் நேரலை வீடியோவை காணலாம்… பாருங்கள்! பகிருங்கள்!

நேரலை வீடியோவை காண :

பாருங்கள் பகிருங்கள்!