Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 391

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த வீதியில்தான் தீர்வு | இராஜு உரை | காணொளி

க்கள் அதிகாரம் பிப்ரவரி 23-ம் தேதி, ”அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் !’ மாநாட்டை திருச்சியில் நடத்தியது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பு பேச்சாளர்கள் எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் மருதையன், தோழர் ராஜு, தோழர் தியாகு, தோழர் ஆளூர் ஷாநவாஸ், வழக்கறிஞர் பாலன் ஆகியோரின் உரைகளைக் கேட்டனர்.

இம்மாநாட்டில் தலைமை உரையாற்றிய தோழர் ராஜு பேசுகையில், “ இந்த மாநாட்டிற்கு அனுமதி வழங்காமல் போலீசு இழுத்தடித்தது. மாநாட்டுக்கு பிரச்சாரம் செய்து நோட்டீசு வழங்கிய தோழர்களைக் கைது செய்தது போலீசு. காரணம் கேட்டபோது, அனுமதியின்றி நோட்டீசு கொடுத்தது தவறு என்று கூறியிருக்கிறது. நோட்டீசு கொடுக்க அனுமதி கேட்க வேண்டிய இந்த நிலையைத் தான் பாசிசம் என்கிறோம்.

மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கிறது இந்த கார்ப்பரேட் எடுபிடி அரசு. எதிர்த்துப் போராடுபவர்களைக் கைது செய்கிறது. நமது உரிமைகளைக் காக்க கார்ப்பரேட் காவி பாசிசத்தை வேரறுக்க மக்கள் ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராடுவதே தீர்வு.. ” என்றார். முழுமையான உரையைக் காண :

யூ-டியூப்:

முகநூல்:

பாருங்கள் ! பகிருங்கள் !

பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை

0

“பசி ஒரு வன்முறை” என்பார், உலக புகழ் பெற்ற முதலாளித்துவ பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென். ஒருபுறம் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களிடம் சொத்துக்கள் குவிந்திருக்க மறுபுறமோ ஏதுமற்றவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதை சென்ற ஆண்டின் இறுதியில் தாமஸ் பிக்கட்டி உள்ளிட்ட அறிஞர்கள் வெளியிட்ட ஐநா உலக வறுமை அறிக்கை அறுதியிட்டு கூறுகிறது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் மரணிப்பதற்கு வசிப்பிட அளவு, தாய்க்கு கிடைக்கும் கல்வியறிவு, குழந்தைகள் திருமணம், மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தான உணவு, சொத்துக்கள் அளவு, திறந்த வெளி கழிப்பிடம் உள்ளிட்ட சமூக ரீதியான பிரச்சினைகளை உலகளாவிய உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் தன்னுடைய 2018-ம் ஆண்டின் அறிக்கையில் கூறுகிறது.

படிக்க:
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !
♦ ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டில் (எண்ணிக்கை அடிப்படையில்) உலகளவில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் இந்தியா முழுதும் இது ஒன்று போலிருப்பதில்லை. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் முன்னணியில் இருக்கின்றன.

குறிப்பாக முட்டையுடன் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதன் வாயிலாக தமிழகம் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் இந்தியாவிற்கே முன்னோடியாக உள்ளது. மறுபுறம் இந்திய மாநிலங்களில் எங்கெல்லாம் பார்ப்பனிய ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அமர்த்தியா சென் கூறியவாறு பசி ஒரு வன்முறையாகவே உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம், பண்டல்கண்ட் பகுதியில் உடல் நலம் குன்றிய தன்னுடைய பேரனை பார்த்துக் கொள்கிறார் ஒரு மூதாட்டி. சமீபத்தில் வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி இந்தியாவில் 2.55 கோடி குழந்தைகள் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டல்கண்ட், லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் தன்னுடைய குழந்தையை வீட்டிற்கு வெளியே தூக்கி செல்கிறார். லலித்பூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளுமே ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தில் ஒரு சமூக நல மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஒரு குழந்தை. உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி உலக அளவில் மூன்றில் ஒருபங்கு குறை வளர்ச்சியுள்ள குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவதியுறும் இராஜஸ்தான் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தின் மற்றுமொரு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை.

உத்திரப்பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இராஜஸ்தான், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பாரன் மாவட்டத்தின் கேல்வாடா கிராமத்தை சேர்ந்த சகாரியா பழங்குடி குழந்தை. 2018-ம் ஆண்டு வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின்படி 4.66 கோடி எடை குறைவான குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக நல மருத்துவ கூடத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை.


தமிழாக்கம்: சுகுமார்
நன்றி:  அவுட்லுக்

துப்புரவுப் பணியாளர்கள் : நாடகமாடும் மோடி ! NSA-வைக் காட்டி மிரட்டும் போலீசு !

2

டந்த ஞாயிற்றுக்கிழமை (24-02-2019) கும்பமேளாவில் பாவங்களைக் கழுவ கங்கையில் மூழ்கி எழுந்த பிரதமர் மோடி, நேராகப் போய் கும்பமேளா குப்பைகளை அள்ளிக் கொட்டிய தூய்மை பணியாளர்கள் கால்களைக் கழுவினார். நாலாபுறமும் கேமராக்கள் அதை விதவிதமான கோணங்களில் படம்பிடிக்க, தனது ஆஸ்கர் நடிப்பை வெளிப்படுத்தினார் மோடி.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாத பூஜை !

வழக்கம்போல மோடியின் ஜால்ரா சங்கி கூட்டம், சமூக ஊடகங்களில் தூய்மை பணியாளர்களின் கால்களைக் கழுவும் மோடியின் படத்தை போட்டு இப்படியொரு பிரதமர் இந்தியா கண்டிருக்குமா என சவால் விட்டது. மோடியை பிரதமர் என்றும் பாராமல் வைத்து செய்யும் தென்னக மக்கள் சமூக ஊடகங்களில் இந்தப் படத்தை வைத்து சங்கிகளை நாறாய் கிழித்துவிட்டார்கள்.

ஆஸ்கர் விருதுகள் வெளியான நாளில் பிரதமர் மோடிக்கு ஒரு விருது பார்சல் என பகடி செய்தும் ஐந்தாண்டுகளாக கண்டுகொள்ளாத தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவினால் என்ன பயன் என விமர்சித்தும் சமூக ஊடகங்களில் எழுதினர்.

உண்மையில், கும்பமேளாவின் குப்பைகளை, கழிவுகளை சுத்தம் செய்வதற்கென்று அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தைக்கூட கொடுக்காமல் மோசடி செய்துள்ளது அம்மாநிலத்தை ஆளும் ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் அரசு. உச்சகட்டமாக, போராட்டத்தை ஒருங்கிணைத்த தலித் அமைப்பினரை ‘தேசிய பாதுகாப்பு சட்டத்தில்’ கைது செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளது.

படிக்க:
நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்
♦ அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்

ஜனவரியில் கும்பமேளா தொடங்கிய நேரத்திலிருந்து போதிய உபகரணங்கள் வழங்கக் கோரியும் சம்பள உயர்வு கேட்டும் தலித் சஃபாய் மஸ்தூர் சங்காதன் என்ற அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த அன்சு மால்வியா, தினேஷ் ஆகியோர்  தூய்மை பணியாளர்களை திரட்டி பல முறை போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து நிர்வாகத்துக்கு பல முறை கடிதங்களும் எழுதியிருக்கின்றனர்.

“எங்களுடைய முக்கியமான கோரிக்கை நாள் சம்பளமான ரூ. 295 -ஐ உயர்த்தி தர வேண்டும் என்பது. போராட்டத்துக்குப் பிறகு, ரூ. 15 உயர்த்தி ரூ. 310 -ஆக தருவதாக சொன்னார்கள். ஆனால், அந்தத் தொகையை தராமல், பழைய சம்பளத்தையே தருகிறார்கள்” என்கிறார் தினேஷ். தங்களுடைய மற்ற கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

தங்கள் உரிமைக்காக போராடும் துப்புரவுத் தொழிலாளர்கள்.

“ஜனவரி மாதம், போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தபோது மாவட்ட நிர்வாகம் எங்களை அழைத்து பேசியது. அப்போது, நாங்கள் தேசத்துக்கு கெடுதல் செய்துகொண்டிருக்கிறோம் என்றும் கும்பமேளா நாட்டின் பெருமைக்குரிய விசயம். இந்த நேரத்தில் போராடுவது தேசத்துக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும். என்று கூறினர். இதனால் உங்கள் மீது தேச துரோகம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் போடுவோம் எனவும் மிரட்டினார்கள்” என்கிறார் மால்வியா.

பிப்ரவரி 7-ம் தேதி அலகாபாத் போலீசு தங்கள் இருவரையும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்போதும் தேசத்துக்கு எதிரான நடவடிக்கை காரணமாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட இருப்பதாகவும் ஆதித்யநாத் போலீசு மிரட்டியதாகவும் தெரிவிக்கிறார்.

இவர்களின் கைதை கேள்விப்பட்டு நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் காவல் நிலையங்களுக்கு முன் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த போலீசு அவர்கள் இருவரையும் வழக்கு ஏதும் போடாமல் ஆறு மணி நேரத்துக்குப் பிறகு விடுவித்திருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் மட்டுமல்லாது பீகார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கும்பமேளா கழிவுகளை சுத்தம் செய்ய ஏஜெண்டுகள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலருக்கு தாங்கள் கழிவறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்கிற விவரம் தெரியப்படுத்தப்படவில்லை. “கழிப்பறைகளை கழுவ வேண்டும் என்று என்னிடம் ஏஜெண்ட் சொல்லவில்லை. என் கணவரிடம் ஆற்றில் விழும் பூக்களை எடுத்துப்போடும் வேலை எனக் கூறிக்கொண்டு என்னை அழைத்து வந்தார். ஆரம்ப நாட்களில் அழுதேன்… இந்த வேலையை நான் இதுவரை செய்யதில்லை” என இயலாமையுடன் சொல்கிறார் ஐம்பது வயதான குரியா.

“ஆயிரக்கணக்கான பணியாளர்களை, அதிக சம்பளம் தருவதாகக் கூறி ஏஜெண்டுகள் கிராமங்களிலிருந்து அழைத்து வந்துவிடுகிறார்கள். இங்கே வந்த பிறகுதான் அவர்களுக்கு நிலைமை தெரிகிறது. கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் 10-20 சதவீதத்தை ஏஜெண்டுகளுக்கு கமிசனாக தரவேண்டும். கும்பமேளா மூன்று மாதங்கள் நடக்கும் என்பதால் அவர்களால் திரும்பிப் போகவும் முடியாது” என்கிறார் தூய்மை பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த தினேஷ்.

கும்பமேளா கழிவுகளை சுத்தம் செய்ய 14 ஆயிரம் தூய்மை பணியாளர்கள், தின சம்பள அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இந்த சங்கம்.

“குறைவான சம்பளம் மட்டுமில்லாமல், எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக சில நேரங்களில் 14 மணி நேரம், பணியாளர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஓவர் டைம் பணிக்கு சம்பளமும் கிடையாது” என்கிறார் தினேஷ்.

தூய்மை பணியாளர்களில் 1% மட்டுமே பூட்ஸ், மாஸ்க், கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களை நிர்வாகம் வழங்கியிருக்கிறது என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.  மூன்று மாத காலம் என்பதால் குடும்பத்தோடு வந்துள்ள இவர்களுக்கு சொதசொதப்பான சேரும் சகதியும் மிக்க இடங்களில்தான் டெண்ட் அமைத்து தந்திருக்கிறார்கள்.

கும்பமேளாவில் அமைக்கப்பட்டுள்ள 1,24,000 கழிப்பறைகளில் உள்ள கழிவுகளை எந்திரங்கள் கொண்டு டேங்கில் இணைக்கும் பணிகளைச் செய்தாலும் சில சமயங்கள் அதிகப்படியான மக்கள் பெருக்கம் காரணமாக அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு அதை சரிசெய்யும் போது மலம், சிறுநீர் தூய்மை பணியாளர்கள் மீது படுகிறது எனவும் இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

“இப்போது கிட்டத்தட்ட மேளா முடியும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், எங்களுடைய கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக தூய்மை பணியாளர்களின் கால்களை மோடி கழுவுகிறார். ஒரு பிரதமர் இப்படியான நாடகத்தை நடத்துவது வேதனை அளிக்கிறது.  எங்களுடைய கால்களை கழுவதால் எங்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?” என கேட்கிறார் தினேஷ்.

கும்பமேளாவின் பொறுப்பாளராக உள்ள அதிகாரி, ஹைகிளாஸ் வசதிகளை தூய்மை பணியாளர்களுக்கு செய்து கொடுத்திருப்பதாக சொல்கிறார். தூய்மை பணியாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்துவதோடு, அதனால்தான் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போட இருந்ததாகவும் சொல்கிறார்.

சங்கிகள் கூறிக்கொள்வதைப் போல, இத்தனை கீழ்த்தரமான பிரதமரை நாடு இதுவரை கண்டிராது. சம்பள உயர்வு கேட்டு போராடியவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்திவிட்டு, இன்னொரு பக்கம் கேமராக்கள் முன்பு அவர்களுடைய கால்களை கழுவும் நாடகத்தை இந்துத்துவ கும்பலால் மட்டுமே அரங்கேற்ற முடியும்.


அனிதா
நன்றி: தி வயர்

மக்கள் அதிகாரம் மாநாடு மாஸ் ! | மாநாட்டில் பங்கேற்றவர்களின் முகநூல் பதிவுகள் !

க்கள் அதிகாரம் பிப்ரவரி 23-ம் தேதி  ‘அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் !’ மாநாட்டை திருச்சியில் நடத்தியது.  இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பு பேச்சாளர்கள் எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் மருதையன், தோழர் ராஜு, தோழர் தியாகு, தோழர் ஆளூர் ஷாநவாஸ், வழக்கறிஞர் பாலன் ஆகியோரின் உரைகளைக் கேட்டனர்.

மக்கள் பாடகர் கோவனின் உணர்ச்சி மிக்க பாடல்களை மக்களும் விருந்தினர்களும் ரசித்தனர். ‘எதிர்த்து நில்’ மாநாட்டில் கலந்துகொண்ட சிலர் முகநூலில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதனுடைய தொகுப்பு இங்கே…

*****

தி. லஜபதி ராய் :

மக்கள் அதிகாரத்திற்காக திருச்சியில் குரல் கொடுத்த  அருந்ததி ராய்

“நான் சற்று பதட்டமாக உணர்கின்றேன் , இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் உரையாற்றியதில்லை” எனத் தொடங்கிய எழுத்தாளர் அருந்ததி ராயின் கவலையும் மக்கள் மீதான அன்பும் அவரது உரையில் பிரதிபலித்தன.

போர் வெறி ஊட்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் திருவாளர் மோடிக்கு எதிரான அவரது உரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

இஸ்லாமியர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், கம்யூனிஸ்டுகள், அனைவரும் பிரிந்து கிடப்பதை சுட்டிக்காட்டிய ராய் தற்போதைய பாசிச ஆட்சியை வீழ்த்த அனைவரும் ஒருங்கிணைய வேண்டியதை வலியுறுத்தினார்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி , எண்கர சாலைகள் என மக்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி அவர்களது பொருளாதாரத்தை சிதைத்த பாஜக அரசின் ஆட்சியில் முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் 175 சதவிகிதம் உயர்ந்ததை ராய் சுட்டிக்காட்டினார்.

1980 -களில் மைய அரசு இரு பூட்டுக்களை திறந்தது முதலாவதாக பாபர் மசூதியை வழிபாட்டுக்காக திறந்தது , இரண்டாவதாக நாட்டை உலக நாடுகளின் கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்திற்கு திறந்தது இவ்விரு பூட்டுக்களை திறந்த நாள் முதல் மாவோயிஸ்ட் பயங்கரவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் என மக்களை திசை திருப்பும் அதே பொழுது இந்து மத பாசிசம் மக்களுக்குள் விதைக்கப்படுவதை ராய் குறிப்பிட்டார்.

அரசின் திட்டமிட்ட மோதல் படுகொலைகள், மதவெறி கும்பலின் கொலைகள், இவை நிகழும் அதே கால கட்டத்தில் சத்திஸ்காரில் போலிஸ் ஆட்சியும் கஷ்மீரில் ராணுவ ஆட்சியும் நடப்பது தற்செயலானதல்ல எனக் குறிப்பிட்ட ராய், புல்வாமா நிகழ்வுக்கு பின்னர் ராணுவத்தை காஷ்மீரில் குவிப்பது அம்மாநில மக்களை பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கும் என கவலை தெரிவித்தார்.

1950-ம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தை இந்நாட்டுக்கு அன்னியமானது, மனு ஸ்மிருதியே இந்தியாவிற்கானது எனக் கூக்குரலிட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைப்படியே இன்று இந்தியாவின் 75% சொத்துக்கள் 1% தனியார்களிடம் குவிந்திருப்பதையும், 9 பேர்கள் கையில் ஐம்பது கோடி இந்தியர்களின் சொத்துக்கள் இருப்பதையும் அவர்கள் அனைவரும் ஒரே சாதியினர் என்பதையும் ராய் பட்டியலிட்டார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானி பொதுமக்களின் பணத்தைப் பெற்று பயன்பெற்றதை சுட்டிய ராய், அம்பானியின் சொத்துக்களால் இந்தியாவிற்கு ஆண்டு முழுவதும் சுத்தமும், சுகாதாரமும், குடிநீரும் வழங்க முடியும் என்றார்.

வனவிலங்குகளுக்காக செயல்படும் வயில்ட் லைப் பர்ஸ்ட் என்ற வழக்கில் இருதினங்களுக்கு முன் காட்டினுள் வசிக்கும் 18 லட்சம் பழங்குடி மக்களை வெளியே தள்ளி காட்டைக் காப்பாற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அதே காடுகளை சுரங்கங்களும், பெரு வணிக நிறுவனங்களும் சூறையாடிய போது என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பினார்.

வடகிழக்கு மாநிலங்களில் 18 லட்சம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

வணிக நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு என கூறுவது தேவையற்றது ஏனெனில் மக்களுக்கு பிச்சை போட வேண்டாம் அவர்களுக்கு சேர வேண்டியதை கொடுத்தாலே போதுமென உறுதியுடன் உரைத்தார்.

பரம்பரை அரசியல் என மத்தியிலும், தமிழகத்திலும் குறை சொல்பவர்களை, பரம்பரை அரசியலில் கூட தேர்தலில் நின்று வெற்றி பெறத்தேவை. ஆனால் சாதி ஆதிக்க சொத்துரிமை வாரிசுரிமையாக தொடர்வதை விமரிசித்தார். நிலம், சொத்துரிமை பொதுவுடமையாக்கப்படுவதன் தேவையை வலியுறுத்திய ராய் வரும் தேர்தலில் மக்கள் பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

வேதாந்தா நிறுவனத்தின் குழந்தையான ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு துணை நின்ற மக்கள் அதிகாரத்தை குறிப்பிடத் தவறாத ராய் தோழர் கோவனின் ஆட்டத்துடன் கூடிய படேல் சிலை நையாண்டிப் பாடலை இரசிக்கத் தவறவில்லை.

தி. லஜபதி ராய்
23.02.2019
திருச்சி

ஆசிர் முகமது :

மகஇக நடத்திய ‘எதிர்த்து நில்’ பொதுக்கூட்டத்துக்கு சென்றிருந்தேன். உண்மையில் மார்க்சிய விமர்சனத்தை மக்கள்மயப்படுத்தியதில் மகஇக தோழர்களுக்கும் வினவு தளத்துக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. ஆரம்பத்தில் அவர்களது பாடல்கள் தான் எனக்கு அறிமுகம்.

சில முஸ்லிம் அமைப்புகளின் கூட்டங்களில் ‘சொல்லாத சோகம்…’, ‘சம்மதமா.. சம்மதமா…’ போன்ற பாடல்கள் ஒலிக்கும். ஆசிரியர் மார்க்ஸின் எழுத்துக்கள் மற்றும் இத்தகைய பாடல்கள் தான் ‘ஒடுக்குபவர்களின் அடையாளங்கள் சுமத்தப்பட்டிருப்பவர்கள் கூட விமர்சனப்பார்வையோடு ஒடுக்கப்படுபவர்களின் சார்பாக தீவிரமாக நிலையெடுக்க முடியும்’ என்பதை எனக்கு உணர்த்தின.

இந்தியாவில் முஸ்லிம் பிரச்சினை என்பது தனித்தவொரு பிரச்சினையில்லை, அது பிற பிரச்சினைகளோடு இணைந்ததே என்ற புரிதலும் எனக்குள் மெல்லப் படிந்தது. இதெல்லாம் தியரியாக அப்போது புரிந்திருக்காவிட்டாலும் அது எனக்குள் ஏற்படுத்திய பார்வைத் தாக்கம் அத்தகையதுதான்.

இதற்கு ஒரு முக்கியமான காரணம் மகஇக ‘தமிழ்நாட்டில்’ கம்யூனிஸ்ட் கட்சி வைத்து நடத்துவதால்தான். இந்தியாவில் கட்சி வைத்து நடத்துபவர்கள் ‘சம்மதமா.. சம்மதமா…’ போன்ற பாடல்களெல்லாம் போடவே முடியாது. அவர்கள் இன்னும் ‘வகுப்புவாத வன்முறை’ என்ற பழைய பல்லவியே பாடுகிறார்கள். அவர்களது universalism பம்பாய் படத்துக்கு விருது கொடுக்கும் universalism. ஏழை பிராமணர்களுக்கு 10% ஒதுக்கீடு கொடுக்கும் universalism.

ஆனால் மகஇக தோழர்களது universalism ஒடுக்கப்படுபவனோடு தீவிரமாக நிலையெடுக்கும் universalism. திராவிட, தலித், பகுஜன் விமர்சனங்களை ஆழமாக உள்வாங்கிய, அதை மக்கள் மயப்படுத்திய universalism. மேற்கண்ட தரப்புகள் இவர்களோடு எவ்வளவு வேண்டுமானாலும் முரண்படலாம். ஆனால் பெரியார்-அம்பேத்கரை வெறுமனே பெயருதிர்த்தலாக அல்லாது, அந்தப் புரிதலையும் மொழியையும் தன்னகப்படுத்திகொண்ட கம்யூனிஸ்டுகளாக இவர்கள் ஒரு போக்கை உருவாக்கினார்கள். அதனால் தான் அவர்கள் பேசும் மார்க்சியம் எல்லோருக்கும் புரிந்தது. இது கம்யூனிஸ்டுகளின் நடைமுறை பற்றிய மதிப்பீடு கிடையாது. அதை என்னால் செய்யவும் முடியாது. மாறாக தொண்ணூறுகளில் பிறந்த ஒரு நடுத்தர வர்க்கத்தின் முஸ்லிமாக, பகுஜனாக இடதுசாரி அரசியல் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைப்பதற்கு எவ்வாறு அவர்களும் ஒரு காரணமாக இருந்தார்கள் என்றே சொல்கிறேன்.

மேலும் பண்பாட்டுத்தளத்தில் வெகுஜன பாணியில் எல்லாவற்றையும் பற்றி சொல்வதற்கு அவர்களுக்கு எப்போதுமே ஒரு கருத்து இருந்தது. வெகுஜன சினிமா, கலை, இலக்கியம் என்று பண்பாட்டுத் தளத்தின் அத்தனை பரிமாணங்களையும் அக்குவேறு ஆணிவேறாகவும், அதேநேரத்தில் பல்வேறுபட்ட தரப்பினருக்கும் புரியும் வகையிலும் சுவாரசியமாகவும், ஒடுக்கும் தரப்புகளுக்கு எதிரான கோபத்தோடும் எழுதுவார்கள்.

இப்போது கூட பாருங்கள், ஆ. ரா. வேங்கடாசலபதி என்ற ‘பார்ப்பனருக்கு உகந்த வேஷ திராவிடர்’ திராவிடத்தை பார்ப்பன அறிவுக்காலனியத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கையை விமர்சித்து வினவு தளத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. இதெல்லாம் வினவு தளத்தில் தான் நடக்கும். இன்றும் தமிழ்ச்சூழலைப் பற்றிய இடதுசாரி விமர்சனம் என்றால் அதில் அவர்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.

திலகவதி திலோ :
மக்கள் அதிகாரம் மாநாடு !

இப்படி ஒரு மாநாட்டில் நான் கலந்து கொண்டதேயில்லை. எத்தனையோ அரசியல் கட்சிகளின் அமைப்புகளின் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறேன், ஆனால் இது மிகவும் வித்யாசமாக இருந்தது.

எந்த வித அரசியல் சடங்கும் இல்லை, நேரம் வீணடிக்கப்படவில்லை, சால்வை போற்றுதல், மரியாதை செலுத்துதல், நோட்டீஸில் உள்ள அனைவரின் பெயரையும் படித்து வணக்கம் சொல்லி அனைவரின் நேரத்தையும் வீணடித்தல், மரியாதை நிமித்தமாக சிலரை பேச வைத்து கண்டன்டே இல்லாமல் மொக்கை போட வைத்தல் போன்ற எந்தவித அரசியல் நிர்பந்தமும், பகுத்தறிவற்ற செயலும் இல்லாத மேடையாக மாநாடாக அது இருந்தது.

அங்கிருந்த தோழர்கள் அத்தனை நாகரிகமாக, இருக்கையில் அமர்ந்து ஒரு சிறு சலசலப்புமின்றி 6 மணி நேரம் அமர்நது கூர்மையாக கவனித்ததை எந்த இடத்திலும் நான் பார்க்கவேயில்லை, அரசியல் படுத்தப்பட்ட தோழர்களின் மத்தியில் தான் இப்படிபட்ட பண்பை பார்க்க முடியும்.

அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் இயக்கங்குளுக்கும் உள்ள வித்யாசம் அது. அமைப்பாதல் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அந்த மக்களை அரசியல் படுத்துதல். அதன் வெற்றியே இம்மாநாடு.

அத்தனை அறிவுப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான, ஆதாரப்பூர்வமான உரைகள் நிகழ்த்தப்பட்டன். கொஞ்சம் கூட கவனத்தை சிதறடிக்க முடியவில்லை, அவர்கள் பேசிய ஒவ்வொரு வரிகளும் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தன.

குறிப்பாக தோழர்கள் அருந்ததி ராய், ஷா நவாஸ், தியாகு, ராஜூ, மருதையன், வழக்கறிஞர்களின் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

காவிகளின் பாசிசத்தை தோலுரித்து மக்கள் முன் நிறுத்தினர் !

கோவன் தோழரின் கலை நிகழ்ச்சிகளும் மேடையில் ஒளிபரப்பப்பட்ட பல்வேறு பிரச்சனைகளின் காணொளிகளும் மாநாட்டினை அத்தனை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியது.

சட்டக் கல்லூரி தோழமைகளுடன் இதில் கலந்து கொண்டது மகிழ்ச்சி 😍
மக்கள் அதிகாரம் மாநாடு மாஸ்👌👌

-திலகவதி திலோ,
சட்டக்கல்லூரி மாணவி.

தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

ஒன்னு சாப்பிட்டதும்… அடுத்ததுன்னு மனசு கேட்கும் | சாட் உணவு சுவைஞர்கள் | புகைப்படக் கட்டுரை

மிழகத்தில் “ஸ்ட்ரீட் ஃபுட்” கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையின் எந்த சாலைகளில் பார்த்தாலும் தள்ளுவண்டி கடைகள்… குறிப்பாக மாலை நேர பானி பூரி கடைகள் புற்றீசல்போல பெருகியுள்ளன. இதுதான் வட இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரம். டீக்கடை தொடங்கி தெருக்கடை வரை வட இந்திய உணவான பானி பூரியும், சமோசாவும், வட இந்திய இளைஞர்களும்தான் இருக்கின்றனர். இந்த கடைகளில் எப்பொழுதும் கூட்டம்தான்.

பள்ளி மாணவர்கள் முதல் வேலை முடித்து விட்டு வரும் நடுத்தர வயதினர் வரை அனைவருக்கும் முதல் சிற்றுண்டி பாணிபூரிதான். தென்னிந்திய சிற்றுண்டிகள் எல்லாம் இருக்கும்போது, எப்படி இந்த உணவை அவர்கள் விரும்பினார்கள்…? என தெரிந்துகொள்ள சென்னை அயோத்தி மண்டபத்தில் ஒரு பானி பூரி கடையில் மொய்த்திருந்தவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ராமச்சந்திரன். சி.., ஆந்திரா. சென்னையில் நிரந்தரமாக குடியிருக்கிறார்.

இப்ப இருக்கிற வேலைக்கும், பாஸ்ட் லைப்புக்கும் கரெக்ட்டா மேட்ச் ஆகுற ஃபுட் இதுதான். இன்ஸ்டண்ட் உணவு. அதிகபட்சம் 3 மணிநேரம் பசி தாங்கற மினி மீல்ஸ் இது.  ஜஸ்ட் லைக் தட். வந்தம்மா…. நின்னம்மா….. சாப்பிட்டம்மா….. போனம்மா..ன்னு இருக்கனும். சாப்பாட்டுக்குன்னு ஸ்பெஷலா டைம் தேவையில்லை.

இட்டிலி, தோசை வேணும்னு ஓட்டலுக்கு போய் ஆர்டர் கொடுத்தா எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாது. அப்படியே வந்தாலும் சட்டினி சரியில்லை, சாம்பார் சரியில்ல, இட்டிலி சூடு இல்லனு எரிச்சலா வரும். இன்னும் இதுமாதிரி பல பிரச்சனை.

இன்னும் சொல்லப்போனா நம்ம சவுத் இன்டியன் புட்ல அரிசிதான் மெயின். அதை அதிகமா எடுக்கிறதாலதான் நமக்கு இல்லாத நோய் எல்லாம் வருது. ஒபிசிட்டி, டயாப்பட்டிஸ், ஹைப்பர் டென்சன், தைராய்டு இதெல்லாம் தட்டு நிறைய உள்ள போவுது. கட்டிட வேலை மாதிரி கஷ்டப்பட்டு வேலை செய்யிறவங்களுக்கு அரிசி சாப்பாடு ஓகே…! நம்மள மாதிரி காலை தொங்கப்போட்டு உட்கார்ந்து வேலை செய்யிறவங்களுக்கு அரிசி பாய்சன்.

இதப்பத்தி, உங்களுக்கு எவ்ளோ தெரியும்னு எனக்கு தெரியல! இந்த நாலேட்ஜ் இல்லாதவங்கதான் சவுத் இன்டியன் ஃபுட் பத்தி ரொம்ப அலட்டுவாங்க… நான் என் குழந்தையோடதான் இங்க வந்து சாப்பிடுவேன்.

சேகர், கிருபாகரன், எழில்மதி. ஆட்டோ ஓட்டுநர் குடும்பம்.

அய்யோ! இன்னிக்குத்தான் நாங்க இங்க அதிசயமா வந்தோம்! இது எங்களுக்கு இல்ல. வீட்டுக்குப்போனா எங்கப் பொண்ணு அடம்புடிப்பா, அவளுக்காகத்தான் இது. நம்மளுக்கு இது ஒத்து வராது. பசங்கக்கூட என்னிக்கினா ஒருநாள் டேஸ்ட் பாக்கிறதோட சரி. நம்ம பலகாரம் மாதிரி வராது. ஆனா அதெல்லாம் ஆற அமர செய்யிறது இப்ப நம்மளாள முடியலியே. பணமும் இல்ல, நேரமும் இல்ல. ஏதோ பசங்களுக்காக நம்ம வாழ்க்கை ஓடுது.

ரமேஷ், வங்கி ஊழியர்.

இங்க சாப்பிட வந்தாவே மனசே ரொம்ப கண்ட்ரோல் பண்ணிக்கிட்டுத்தான் வருவேன். ஒன்னு சாப்பிட்டதும்…அடுத்ததுனு மனசு கேட்கும். ஆனா வயிறு மக்கர் பண்ணுமே..! அதனாலே வாரத்துக்கு ஒரு தடவைதான் இந்தப்பக்கம் வருவேன். ஒரு சமோசா… இல்லனா ஒரு வடை சாப்பிட்டு திரும்பி பாக்காத போய்டுவேன். ஆனா ஜங்க் ஃபுட் மாதிரி ரொம்ப மோசமான உணவுன்னு இதை சொல்லமுடியாது.

நாராயணன், ஸ்பிக் ஊழியர், ஓய்வு.

கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரை வாலி இதெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுதான். தெரியுது. என்ன பிரயோஜனம். நம்மளுக்கு கைக்கு எட்டற மாதிரி கிடைக்கிறது இதுதானே. நம்ம உடம்பு கிடைக்கிறத ஏத்துக்கும். எல்லாத்துக்கும் பழகிக்கும். எதனா புடிக்கலன்னா நம்ம உடம்பே நம்மக்கிட்ட சொல்லும். எனக்கு பாருங்கோ… இங்க ஒரு சமோசா சாப்பிட்டுட்டு போனா ஒன்னும் பண்ணாது. எக்ஸ்ட்ரா ஒண்ணு சாப்பிட்டா வயிறு உடனே அப்செட் ஆவும். பிரச்சனை அங்கதான் இருக்குது. அத தெரிஞ்சி  உடம்பு சொல்றத கேட்டு நாம நடந்தா ஒண்ணுமில்ல. லிமிட்ட தாண்டக்கூடாது.

சமோசாவ நீ சாப்பிடனும். சமோசா உன்ன தின்னா போச்சு… இப்ப காலம் மாறிப்போச்சு. அந்தக்காலத்தில ஊருநாட்டுக்கு போனா வழியில எதுவும் கிடைக்காது. தேவையானத வீட்டிலிருந்து கட்டிண்டு போனாத்தான் உண்டு. வழியில குழந்தைங்களுக்கு சோறு வேணும்னாலும் பெரியவங்களுக்கு காபி வேணும்னாலும் வீட்டிலிருந்து எடுத்துண்டு போவோம்.

ரயில் கூஜான்னு காபி எடுத்துண்டு போறதுக்கு ஒண்ணு தனியா இருக்கும். அது ஒரு காலம். இப்ப எதுன்னாலும் கடக்காரங்க வாயில ஊட்டிவிடாததுதான் பாக்கி. அதுவும் சீக்கிரம் வந்துடும். உபர், ஸ்விகி, மாதிரி வீடுதேடி வந்து தராங்க. இத யூசர் பிரண்ட்லீ, சர்வீஸ் ஓரியண்டட், வேல்யூ ஆடட்னு விதவிதமா சொல்றாங்க.

படிக்க:
லலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை !
♦ விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் – பாகம் 2

விக்னேஷ்.

இப்ப உங்களுக்கு என்னா பிரச்சனை? நான் எத சாப்பிட்ட உங்களுக்கு என்னா? சமோசா நார்த் இன்டியன் ஃபுட்னா அதுக்கு நான் இன்னா பன்றது? பெருசுங்கதானே எங்களுக்கு இதை அறிமுகப்படுத்தினாங்க! அவங்கதானே இந்த  அயிட்டத்த தமிழ்நாட்டுக்குள்ள உட்டது! அப்ப வேடிக்கை பாத்துக்கினு இருந்துட்டு இப்ப நாங்க சாப்பிட்டா கேள்வி கேட்கறீங்க?  அதிரசம், தேன்குழல், உப்பு உருண்டைனு எங்கள சுத்தி நின்னு இதுமாதிரி நீங்க வித்தா சாப்பிட போறோம். அதுக்கு வழியில்ல. அப்போ, எது சீப்பா கெடைக்குதோ அதத்தானே நாங்க சாப்பிட முடியும். எல்லாத்துக்கும் கதவு திறந்து வைச்சா இதுதான் நடக்கும்.

இப்ப காஷ்மீர பாருங்க… 350 கிலோ ஆர்.டி.எக்ஸ். கேட்பார் இல்லாம  உள்ள விட்டுட்டதால இப்ப 50 ராணுவ  வீரர் செத்துட்டான். அப்படின்னா அது யார் தப்பு? இவ்ளோ பெரிய ராணுவம், பெரிய உளவுத்துறை எல்லாம் என்ன வேடிக்கை காண்பிக்கிறதுக்கா வச்சிக்கிறாங்க! இதை, கேட்டா, எங்களையே கொலைகாரன் மாதிரி பாக்கிறானுங்கோ! இங்க எதுவும் சரியில்ல!

ஆனந்தன்

தோ… இந்தமாதிரி வட இந்தியாகாரனுங்கள உள்ள விட்டதால நம்ம உணவுக்கு மவுசு இல்லாம போயிடுச்சி. இருந்தாலும் இவங்களுக்கு இதுதான் வாழ்வாதாரமா இருக்கு. நான் அதை குறை சொல்லல. இதை வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டுற நாம அப்பவே நம்ம உணவுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்திருக்கலாம்னு  சொல்றேன். இன்னைக்கு அது பணக்காரங்க உணவா மாறிடுச்சி.

நம்ம தாத்தா-பாட்டிங்க சாப்ட உணவெல்லாம்  இப்ப பெரிய பெரிய ஹோட்டல்ல இருக்கு. அங்க யாரு போயிட்டு சாப்பிடுவா? பணக்காரன் மட்டும்தான். அப்ப நாம கண்டுக்காம விட்டுட்டதால இப்ப அது காஸ்ட்லி அயிட்டமா ஆயிடுச்சி. ஏழைங்க சாப்பிட முடியாது. ஏழைங்க சாப்பிடுற விலையில இந்த வட இந்திய உணவுதான் இருக்கு… அதுமட்டுமில்லாம இந்த டேஸ்ட் குழந்தைங்களுக்கும் புடிச்சி போயிடுச்சி…!

சுப்பிரமணி, அரசு ஊழியர்.ஓய்வு.

நீங்க எதப்பத்தி எழுதப்போறீங்க? இருக்கிறது சவுத் இன்டியா! சாப்பிடறது நார்த் இன்டியா ஃபுட் அப்படினு இதுக்கு தலைப்பு போடுவீங்களா? எப்படி எழுதுவீங்கனு சொல்லுங்க அதுக்கு ஏத்தமாதிரி நான் உங்களுக்கு சொல்றேன்! நீங்க வந்து கேள்வி கேட்கிற எடம் எதுனு உங்களுக்கு தெரியுதா? அய்யருங்க ஏரியா இது! அதுவும் மாம்..ம்பலம் அய்யருங்க..! அங்க, மயிலாப்பூர் அய்யருங்க வேற மாதிரி! நாங்க பசிக்கு மட்டும் சாப்பிடறது இல்ல! கூட எங்க ஸ்டேட்ஸையும்(status) சேர்த்து தட்டுல வைக்கிறவாகிட்டதான் நாங்க சாப்பிட முடியும். அது முக்கியம். அய்யருங்க அவங்களுக்குள்ள பேசிக்கும் போது நீங்க கவனிச்சிருந்தா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஜம்பலம் பத்தி, இந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? தெரிஞ்சவங்ககிட்ட கேளுங்க சொல்லுவாங்க! …நான் வர்றேன்.

நூல் அறிமுகம் : கடலடியில் தமிழர் நாகரிகம் !

மிழ்மாமணி தோழர் நந்திவர்மன் அவர்கள் எழுதியுள்ள கடலடியில் தமிழர் நாகரிகம் எனும் இந்த நூல் அளவில் சிறியதாக இருப்பினும் ஒன்பது தலைப்புகளில் அமைந்து, ஆழ்ந்த ஆய்வுச் சிந்தனைகளை எழுப்பக் கூடியதாக இருக்கிறது.

எண்ணிறந்த ஆண்டுகளுக்கு முன்பு உலகில் ஒரே ஒரு கண்டமே இருந்தது. பின் அது உடையத் தொடங்கியது. அடுத்தடுத்து உடைசல் ஏற்பட்டுத் தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பிரிந்தது. இன்றுள்ள ஆஸ்திரேலியா, அண்டார்ட்டிகா, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இந்தியா தென்னமெரிக்கா உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு ஒன்று இருந்தது என்றும் நிலவியல் அறிஞர்கள் அதற்குக் கோண்டுவானா எனப் பெயரிட்டனர் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். கண்டங்கள் இடப்பெயர்வு கொண்டன என்ற கருத்தை அல்ஃபெரடு லோதர் வெக்கனர் என்ற ஜெர்மானிய அறிஞர் 1912-ல் வெளியிட்டார்.

காலப்போக்கில் அட்லாண்டிக், இலெமூரியா என்ற இரு கண்டங்களிலும் வாழ்ந்த மனித குல முன்னோடிகள் தொழில் நுட்பங்களில் வல்லமை பெற்றிருந்தனர் எனப் பிராஸ் ஜோசப் கூறியுள்ளார்…

இப்படியாக உலகின் பல்வேறு அறிஞர்களின் அரிய கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு இந்நூலாசிரியர் தமிழர் நாகரிகங்களைக் கொண்ட நிலப் பகுதிகள் மாமல்லபுரம், பூம்புகார், குமரி போன்ற இடங்களில் கடல் அடியில் புதைந்து கிடக்கும் இடிபாடு கொண்ட கட்டிடங்கள் வழியே வரலாற்றை, மீட்டெடுக்கப்பட வேண்டிய வரலாறைத் தேடிக் கண்டறிந்து, தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் நாகரிகத்துக்கும் அடையாளச் சின்னங்களை உருவாக்கித் தர வேண்டும்; அதன் வழியாகத் தமிழ் ஆய்வுப் பணிகள் தொடர வேண்டும் எனும் உள்ளக் கிடக்கையை நூலாசிரியர் அரிய நூல்கள் வழியாகவும், செயற்கைக் கோள் படங்கள் வழியாகவும் ஆதாரங்கள் காட்டி, தான் கொண்ட கருத்தை இந்நூலில் நிறுவுகிறார்.
(உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் -2010- பேரா. முனைவர் கே.ஏ. குணசேகரன் எழுதியுள்ள இந்நூலுக்கான அறிமுக உரையிலிருந்து)

… 25 கோடி ஆண்டுகள் முன்னர் உலகின் நிலப்பகுதி ஒட்டு மொத்தமும் ஒரே கண்டமாக நிலவி, பின்னர் வட தென் பகுதிகளாக, தென்பகுதி கோண்டுவானாவாகப் பிரிந்து, பின்னரும் நெருங்கிச் சேர்ந்து பின்னரும் பிரிந்து இன்றைய கண்டங்களாக, இயற்கை உருவாக்கிய வரலாற்றில், எத்தனை எத்தனையோ கடற்பெருக்கு, நிலமீட்சி, கண்டங்கள் சேருதல், பிரிதல் எனத் தொடர்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் அமைந்தது மடகாஸ்கர் முதல் ஆஸ்திரேலியா வரை ஒட்டியிருந்த நிலப்பரப்பு. அதுவும் சில பல நிலப்பகுதிகளை இழந்த நிலையில் குமரிக்கண்டமாக அமைந்ததென்பர். குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியாக நிலவியது தான் இன்றைய இந்திய நாட்டின் தென்னகம் என்பர்.

அதுவே முதல் மாந்தன் பிறந்த நிலம், அவன் தமிழனாக உயர்ந்த நிலம் என்பர். அவர்களிடம் உருக்கொண்ட தமிழ்மொழியும், வளர்ந்த நாகரிகமும், உலக நாகரிகங்கட்கெல்லாம் ‘தாய்’ என்று கருதும் தரத்தது. உலகின் நிலநடுக்கோட்டின் தெற்கில் ஒரு பெரும் நிலப்பரப்பாக இருந்த கோண்ட்வானா, இன்றைய பசிபிக் கடல் பரப்பை மையமாகக் கொண்டிருந்தது என்றும், பின்னர் நிலத்தடிப் பாறைத் தட்டுக்களின் மோதுதலால் தெற்கு நோக்கி நகர்ந்ததென்றும், அதனால் அந்தப் பகுதியில் வளர்ந்திருந்த ஒரு சிறப்பான நாகரிகத்தில் எழுந்த கட்டுமானங்கள் மூழ்கின என்றும் அறியப்படுவதை ஆசிரியர் விளக்குகிறார்.

அதனால் கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக, பசிபிக் கடலின் அடி நிலம் மெல்லமெல்ல அமிழ்ந்து வருகிறது என்பதுடன். இலெமூரிய நாகரிகத்தின் பழைய தடயங்கள் அங்கு மூழ்கியிருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர் கருதுவதையும் எடுத்துக்காட்டுகிறார்,

அமெரிக்காவின் செவ்விந்தியரான தொல்குடி மக்கள் தலைவன் ‘மாயன்’ சுவடிகளை ஆராய்ந்த அறிஞர் ஒருவர், ‘மூ’ என்னும் பழம் பெருங் கண்டம் ஒன்று இருந்தது பற்றியும், அது மூழ்கியபோது தப்பி வந்தோர் ‘மாயன் நாகரிகத்தை உருவாக்கியதாகவும் கூறியுள்ளதை எடுத்துரைக்கின்றார். – குமரிக் கண்டமென நாம் கருதும் இலெமூரியாவே ‘மூ’ நாகரிகம் கொண்டவர்களாகக் கருதப்படும் ‘தமிழர்’ வாழ்ந்த நிலம் என்றும் கருதுகிறார். தொன்னாளில் நிலவிய குமரிக்கண்டம் என்பது ஒரு சிறந்த அறிவியல் அடிப்படையான கட்டுமானங்களைக் கொண்டதாக, கட்டடவியல் கணக்கியலின்படி கற்கள் இணைத்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதால், பசிபிக்கிலோ, சீனத்தின் கிழக்குக் கடலிலோ, ஆழ்கடல் ஆய்வு நடத்துவதன் மூலம், அந்த நாகரிகத்தைக் கண்டறிய முடியும் என்னும் நம்பிக்கையையும் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

திராவிடத் தமிழ் இனத்தின் நாகரிக வரலாறு, ஆரிய வைதிகச் சுனாமியால் மூழ்கடிக்கப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சி அமைந்த சூழலால், மறுபடியும் உண்மை வெளிப்படும் வாய்ப்பைப் பெற்று, அதன் மூலம் நிலைநாட்டப்பட்ட வரலாற்று உண்மைகளின் துணையால், இக்காலத்தில்தான் தமிழக ஆட்சியில் உள்ள முதல்வர் கலைஞரின் முயற்சியால் “தமிழ் ஒரு செம்மொழி’’ என்பதை நடுவண் அரசு ஏற்று அறிவிக்கும் நிலை பெற்றுள்ளோம்.

இன்று தமிழ் வழங்கும் நிலத்திலும், இந்தியக் கடற்கரை ஒட்டிய மறைந்த பட்டினங்களான பூம்புகார், கொற்கை, மாமல்லபுரம் ஆகியவற்றிலும், அருகன்மேடு, ஆதிச்சநல்லூர், அழகன்குளம். கொடுமணல் ஆகிய ஊர்களிலும் சிந்துவெளி நகரங்கள், துவாரகா முதலான இடங்களிலும் தொடங்கப்பட்டுத் தொய்வு நிலைக்கு ஆளாகியுள்ள அவற்றின் அகழ்வாராய்ச்சியை விரைவுபடுத்துவதாலேயே மேலும் பல அரிய வரலாற்றுச் செய்திகளை நாம் பெற முடியும்.
(க. அன்பழகன் எழுதியுள்ள அணிந்துரையிலிருந்து)

இந்நூலில்,
♣ உலகமே ஒரே கண்டம்: அதில் நாவலந் தீவைத் தேடுவோம்
♣ மறைக்கப்படும் வரலாறும் மீட்டெடுக்க வேண்டிய வரலாறும்
♣ தமிழகக் கடலடியில் கிடைத்ததும் தேட வேண்டிய பணிகளும்
♣ குமரிக்கண்டம் பற்றிய வரைபடங்களும் குற்றம் சுமத்தும் கூட்டமும்
♣ உலகத் தொன்மங்களில் பெருவெள்ளக் கதைகள்
♣ ஆப்பிரிக்கக் கண்டத்தில் வெள்ளக்கதைகள்
♣ ஆசியாவில் பெருவெள்ளக் கதைகள்
♣ உலகெலாம் தமிழன் பரவினான் எனும் உண்மை மெய்ப்பிக்க முனைக
♣ புதிய அறிவும் புத்துருவாக்கமும்
என ஒன்பது உட்தலைப்புகளில் தமிழர் நாகரிகத்தின் வரலாற்றை விவரிக்கிறார், நூலாசிரியர்.

***

நூல் : கடலடியில் தமிழர் நாகரிகம்

ஆசிரியர் : நந்திவர்மன்

வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600 113.

பக்கங்கள் : 128

விலை : ரூ.55.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் இந்நூலை வாங்க: marinabooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்

அறிமுகம்:

ரீஸ் பொலேவோய் புகழ்பெற்ற நூலாசிரியர், பத்திரிகையாளர். சோவியத் யூனியனில் மாபெரும் தேசபக்தப் போர் தொடங்கியது முதல் பொலெவோய் ‘பிராவ்தா’ செய்தித் தாளின் போர்முனை நிருபராகப் பணியாற்றினார். அப்போதுதான் உண்மை மனிதனின் கதையின் கதைமாந்தரான செஞ்சேனையின் வீரமிக்க விமானி அலெக்சேய் மெரேஸ்யெவைச் சந்திக்கிறார். போர்முனையில் மிகச்சிறந்த விமானி எனப் பெயர் வாங்கியிருப்பதைக் கேள்விப்பட்டு, பரீஸ் அவரை பேட்டி காண விரும்பினார்.

அலெக்சேய் மெரேஸ்யெவிற்கும் மாஸ்கோவிலிருந்து வந்துள்ள ‘பிராவ்தா’ செய்தியாளரிடம் நாட்டில் நடந்துவரும் நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை. எனவே இரவு தன்கூடவே தங்குமாறு கூறி அழைத்துச் செல்கிறான்….

….. அதன்பின்னர் அலெக்சேய் மெரேஸ்யெவ் தன் கதையை பரீஸிடம் கூற, அவர் கேட்டுப் பதிவு செய்து, நமக்கு அளித்துள்ள கதைதான் உண்மை மனிதனின் கதை.

உண்மை மனிதனின் கதையை நான்கு பாகங்களாக பரீஸ் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் ஜெர்மானியர்களுடன் நடந்திடும் சண்டையில் அலெக்சேய் மெரேஸ்யெவின் விமானம் சிதறிவிழுதல், அதிலிருந்து எப்படியோ தப்பிப்பிழைத்த அலெக்சேய், தங்கள் ஆட்கள் இருக்கும் திசைநோக்கி, பனிப்புயலினூடே 18 நாட்கள் தவழ்ந்து வந்தது.அவன் வருவதைக் கண்ணுற்ற இரு சிறுவர்கள், ஊருக்குள் அவனுக்கு உறுதுணையாக இருந்த மிஹாய்லா தாத்தா, கிராமத்துப் பெண்கள், ‘கொரில்லா’ கோழி சூப் வைத்துக்கொடுத்த கிழவி உட்பட அனைவரையும் மிகவும் உன்னிப்பாக முதல் பாகத்தில் வர்ணித்திருப்பார் பரீஸ்.

இரண்டாம் பாகத்தில் மருத்துவமனையில் அலெக்சேய்க்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும் அவன் அதனை எதிர்கொள்வதையும், அவனுக்கு உற்ற நண்பர்களாய், தோழர்களாய், செயல்பட்ட சக நோயாளிகள், மருத்துவத்தாதிகள் மற்றும் மருத்துவரை பரீஸ் பொலேவோய் அறிமுகப்படுத்தியிருக்கிறார் ….

…. கதையின் மூன்றாம் பாகத்தில் மீண்டும் போர் விமானியாவதற்காக அலெக்சேய் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் அவனிடம் உள்ள அசாத்திய திறமையைக்கண்டு ஆச்சர்யப்படுவதும், இறுதியில் அவனுக்குக் கால்கள் கிடையாது என்று தெரியவருகிறபோது தங்கள் கையறுநிலையைத் தெரிவிப்பதும், எல்லாவற்றையும் வெற்றிகொண்டு அலெக்சேய் போர் விமானியாவதையும் மூன்றாவது பாகத்தில் நாம் பார்த்திடலாம்.

நான்காவது பாகத்தில் போர் விமானிகளிலேயே முன்னுதாரணமாகத் திகழும் அலெக்சேயை நாம் பார்க்கிறோம்.

இவ்வாறு உண்மை மனிதனின் கதையைப் படிக்கும் எவராக இருந்தாலும், படிப்பதற்கு முன்பிருந்ததைவிட படித்ததற்குப்பின் தன் உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் பொங்கிவழிவதை உணரமுடியும்…

நன்றி : தீக்கதிர்

(முதல் பாகம்)  அத்தியாயம் – 1

விண்மீன்கள் கூரிய குளிரொளியுடன் இன்னும் சுடர்ந்து கொண்டிருந்தன. எனினும் கீழ்த்திசையில் வானம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மரங்கள் இருளிலிருந்து சிறிது சிறிதாகப் புலப்படலாயின. திடீரென அவற்றின் முடிகள் மீது பலத்த குளிர் காற்று வீசியடித்தது. உடனேயே காடு உயிர்த்தெழுந்து முழுக்குரலுடன் கணீரென அரவமிட்டது. தணிந்த சீழ்க்கை ஒலியால் ஒன்றையொன்று கூவி அழைத்தன. நூறாண்டுப் பைன் மரங்கள், பனி அடர்கள் கலவரமுற்ற கிளைகளிலிருந்து மெல்லிய சரசரப்புடன் உதிர்ந்தன.

காற்று வீசத் தொடங்கியது போன்றே தீடீரென அடங்கிவிட்டது. மரங்கள் மீண்டும் குளிரில் விறைத்து உறைந்ததுபோயின. அக்கணமே தெளிவாகக் கேட்கலாயின புலர்வதற்கு முன் காட்டில் எழும் ஒலிகள்: பக்கத்துத் திறப்பு வெளியில் ஓநாய்களின் பேராசை நிறைந்த சச்சரவு, நரிகளின் உறுமல், உறக்கத்திலிருந்து மரங்கொத்தி இன்னும் தீர்மானமின்றி மரப்பட்டையைக் கொத்தும் ‘டொக்’ ஒலி முதலியன. மரங்கொத்தி அடிமரத்தை அல்ல, பிடிலின் வெற்று உடலைக் கொத்துவது போன்ற இன்னிசையுடன் காட்டின் ரிசப்தத்தில் கேட்டது அந்த டொக் ஒலி.

பைன் மரங்களின் முடிகள் மீது கனத்த – ஊசியிலைகளினூடே மீண்டும் குப்பென வீசியடித்தது காற்று. வர வர ஒளி மிகுந்து கொண்டுபோன வானத்தில் கடைசி விண்மீன்கள் அமைதியாக அவிந்தன. வானம் முன்னிலும் இறுகிக் குறுகிவிட்டது. இரவின் இருளை முற்றாக உதறி எறிந்து விட்டுக் காடு தன் பசிய மாண்பு முழுவதும் தோன்ற எழுந்தது. பைன் மரங்களின் சுருள் முடிகளும் பிர் மரங்களின் கூரிய கூம்பு முடிகளும் செம்மையுற்று ஒளிர்ந்ததைக் கொண்டு ஞாயிறு உதித்துவிட்டது என்பதையும் அன்றையப் பகல் தெளிவும் குளிரும் கதிர்வீச்சும் கொண்டிருக்கும் என்பதையும் அனுமானிக்க முடிந்தது.

பலபலவென்று விடிந்து விட்டது. ஓநாய்கள் இரவில் வேட்டையாடி உண்ட இரையைச் ஜீரணிக்கும் பொருட்டுக் காட்டுப்புதர்களுக்குள் போய்விட்டன. நரி, காட்டின் திறப்பு வெளியிலிருந்து அகன்று விட்டது. தந்திரத்துடன் தாறுமாறாக வைக்கப்பட்டிருந்த அதன் அடித்தடம் வெண்பனி மீது பூப்பின்னல் நாடாப் போலத் தோற்றம் அளித்தது. நெடுங்காலக் காடு ஒரு சீராக இடையீடின்றி இரையலாயிற்று. பட்சிகளின் ஆர்ப்பும் மரங்கொத்தியின் அலகொலியும் மரக்கிளைகளினூடே சிவ்வெனப் பறந்த மஞ்சள் சிட்டுக் குருவியின் கீச்சொலியும் வண்ணப் புள்ளியின் பேராசையைக் காட்டும் வறட்டுக் கத்தலும் மட்டுமே குழப்பலான கலவரமும் ஏக்கமும் நிறைந்த மெல்லிய அலைகளாகப் பரவிய இந்த அரவத்தில் வேறுபாடுகள் உண்டாக்கின.

ஆல்டர் மரக் கிளையில் கூரிய கரு அலகைத் தீட்டிக் கொண்டிருந்த கரிச்சான் பறவை திடீரெனத் தலையை ஒரு புறம் திருப்பி கூர்ந்து கேட்டுவிட்டு விர்ட்டென்று பறந்து போக ஆயத்தமாகக் குந்தியது. மரக்கிளைகள் கலவரம் மூட்டும் வகையில் சரசரத்தன. ஏதோ வலிய பெரியது ஒன்று கண்மூடித் தனமானக் காட்டினூடே நடந்தது. புதர்கள் சிலிர்த்தன. சிறு பைன் மரமுடிகள் அசைந்தாடின. இறுகிய வெண்பனிப் பாளம் ஆழ்ந்து போய்க் கறமுறத்தது. கரிச்சான் கத்திக் கூவிற்று, அம்பு இறகு போன்ற வாலை விரித்து நேராக அப்பால் பறந்து போயிற்று.

காலைப்பனி அடர்களால் வெண்பொடி தூவப்பட்ட ஊசியிலைக் கிளையிலிருந்து வெளித்துருத்தியது நீண்ட பழுப்பு மூஞ்சி. அதன் உச்சியில் கனத்து கிளைத்த கொம்புகள் இருந்தன. மிரண்ட விழிகள் விசால திறப்பு வெளிமீது கண்ணோட்டின. மதயானை ஒன்றின் ரோஜா நிற மூக்குத் துளைகள் பதற்றத்துடன் நடுங்கின. அவற்றின் வழியே கலவரம் நிறைந்த மூச்சுடன் வெப்ப நீராவி குப்குப்பென்று வெளி வந்தது.

முதிய மதயானை, பைன் மரங்களுக்கு நடுவே சிலை போன்று அசைவின்றி நிலைத்துவிட்டது. ரோமக் குச்சங்கள் அடர்ந்த அதன் தோல் மட்டுமே முதுகுப்புறம் சிலிர்த்தது.

எச்சரிக்கை அடைந்த அதன் செவிகள் ஒவ்வோர் ஒலியையும் விடாது பற்றி பதித்துக் கொண்டன. பட்டை தின்னிப்பூச்சி, பைன் மரக்கட்டையைக் கறவுவது கூடக் கேட்கும் அளவு கூர்மையாக இருந்தது அந்த யானையின் செவிப்புலன். ஆனால் இத்தகைய கூரான காதுகளுக்குக் கூடக்காட்டில் புட்களின் ஆர்ப்பும் மரங்கொத்தியின் அலகொலியும் பைன் மர முடிகளின் ஒரு சீரான ஓசையும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை .

மேலிருந்து கேட்ட ஒலி ஒன்று கடம்பையின் கவனத்தை ஈர்த்தது. மதயானை நடுங்கிற்று, அதன் முதுகுத் தோல் சிலிர்த்தது, பின்னங்கால் மேலும் அதிகமாக மடங்கின.

சில மேவண்டுகள் மந்தமாக ரீங்காரம் செய்தவாறு இருந்தன. பூத்த பிர்ச் மர இலைகளில் சுழல்வது போலிருந்தது அது. அவற்றின் ரீங்காரத்தின் நடுநடுவே சதுப்பு நிலத்தில் கார்ன்கிரேக் பட்சியின் கத்தலை ஒத்த சடசடப்பு சில வேளைகளில் கேட்டது.

இதோ அந்த வண்டுகள். இறக்கைகள் ஒளிர, குளிர் நீலக் காற்றில் அவை நர்த்தனம் செய்தன. மீண்டும் மீண்டும் உயரே ஒலித்தது சடசடப்பு. வண்டுகளில் ஒன்று தனது இறக்கைகளை மடிக்காமலே கீழ்நோக்கிப் பாய்ந்து வந்தது. மற்றவை விண்ணின் நீல வெளியில் மறுபடி நர்த்தனம் செய்யலாயின. அந்த மதயானை தனது இறுக்கமுற்ற தசைகளைத் தளர விட்டு, திறப்பு வெளிக்கு வந்து, வானைக் கடைக்கணித்த படியே வெண்பனிப் பாளத்தை நக்கிற்று. காற்றில் நடனமிட்ட திரளிலிருந்து இன்னும் ஒருவண்டு திடீரென விலக, பகட்டான, பெரிய வாலைப் பின்னே துருத்தியவாறு நேரே திறப்பு வெளியை நோக்கி வந்தது. அது படு விரைவாக அளவில் பெருத்துக் கொண்டு போயிற்று. யானை புதருக்குள் தாவிப் புகுந்ததும் புகாததுமாக, பிரமாண்டமான ஏதோ ஒன்று, கூதிர்காலப் புயற்காற்றின் திடீர் வீச்சை விடப் பயங்கரமான ஏதோ ஒன்று, பைன் மர உச்சிகளைத் தாக்கித் தரையில் தடாலென்று மோதி வீழ்ந்தது. அதன் மோதலால் காடு முழுவதும் அதிர்ந்து முனகிற்று. காட்டுக்குள் நாற்கால் பாய்ச்சலில் மிரண்டோடிய யானையை முந்திக் கொண்டு முழங்கிற்று அதன் எதிரொலி.

பசிய ஊசியிலை மரங்கள் அடர்ந்த காட்டுக்குள். எதிரொலி அடங்கிவிட்டது. விமானம் வீழ்ந்ததால் முறிந்த மர உச்சிகளிலிருந்து தீப்பொறிகள் போன்று சுடர் வீசிச் சிதறின பனி அடர்கள். மெதுவாகக் கம்பீரமாக நிசப்தம் காட்டில் குடி கொண்டது. ஒரு மனிதன் முனகுவதும், வழக்கத்துக்கு மாறான சந்தடியாலும் சடசடப்பாலும் ஈர்க்கப்பட்டுக் காட்டுக்கு உள்ளிருந்து திறப்பு வெளிக்கு வந்த கரடியின் கனத்த பாதங்களுக்கு அடியே வெண்பனிப் பாளம் நொறுங்குவதும் அந்த ஆழ்ந்த நிசப்தத்தில் தெளிவாகக் கேட்டன.

கரடி பெரியது, முதியது, மயிர் அடர்ந்தது. அழுக்கடைந்த பழுப்பு ரோமக் கற்றைகள் அதன் உட்குழிந்த விலாக்களிலிருந்து துருத்திக் கொண்டிருந்தன. மெலிந்த, தசை நாண் செறிந்த பின்புறத்தில் அவை பனிக்கம்பிகள் போலத் தொடங்கின. இலையுதிர் காலம் தொடங்கி இந்த வட்டாரங்களில் போர்ப் புயல் வீசிக் கொண்டிருந்தது. முன்பு காட்டுக் காவலர்களும் வேட்டைக்காரர்களும் மட்டுமே, அதுவும் எப்போதாவது தான், இந்தக் காட்டுக்குள் வருவது வழக்கம். இப்பொழுதோ இதன் உட்பகுதிக்குள் கூடப் புகுந்து விட்டது போர். அருகே நடந்த சண்டையின் பேரரவம் இலையுதிர் காலத்திலேயே கரடியின் குளிர் கால உறக்கத்தைக் கலைத்து குகையிலிருந்து அதை உசுப்பி விட்டது . இப்போது பட்டினியும் எரிச்சலுமாக, அமைதியின்றிக் காட்டில் அலைந்து திரிந்தது அது. திறப்பு வெளியில், சற்று முன்பு மதயானை நின்ற அதே இடத்தில் நின்றது கரடி. மதயானையின் புதுமை மாறாத, சுவையான மணத்த சுவடுகனை அது முகர்ந்தது. உட்குழிந்த விலாக்களை அசைத்தவாறு பேராசை தோன்றப் பெருமூச்செறிந்தது, உற்றுக்கேட்டது. மதயானை போய்விட்டது. ஆனால் உயிருள்ள, பலவீனமான பிராணி ஒன்றின் ஒலி அருகே கேட்டது. கரடியின் பிடர் மீது ரோமங்கள் குத்திட்டு நின்றன. அது முகத்தை முன்னே நீட்டியது. மறுபடியும் அந்த முறையீட்டொலி திறப்பு வெளியிலிருந்து லேசாகக் காதுக்கு எட்டிற்று.

வறண்ட, கெட்டியான பனிப்புறணி நெறுநெறுத்துத் தகர, மென்மையான பாதங்களை நிதானமாக, எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து, வெண்பனியில் புதைந்து அசையாது கிடந்த மனித உருவத்தை நோக்கி நடந்தது கரடி….

(தொடரும்)

விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் – பாகம் 2

அரை பெடல் போட்டு சைக்கிள் ஓட்டிப் பழகப் போகிறேன்…
இடம்: ஆலம்பறை கோட்டை தீவு, புதுச்சேரி.
படம்: எழில்

♣ ♣ ♣

சமணர் படுகையின் கீழ் இயற்கை நீரூற்றில் சறுக்கி விளையாடும் சிறுவர்கள்.
இடம்: சமணர் படுகை, கீழ குயில்குடி, மதுரை.
படம்: எழில்

♣ ♣ ♣

கஜா புயலுக்கு  குடிசைகளையும் உடைமைகளையும் பறிகொடுத்த போதும், புன்னகையைத் தொலைக்காத சிறுவர்கள்.
இடம்: கருவாக்குறிச்சி, திருவாரூர்.
படம்: வினவு களச்செய்தியாளர்

♣ ♣ ♣

வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும்வரை காத்திருக்க மனமில்லை… இதோ கிளம்பிவிட்டோம் வீதி உலா…
இடம்: செங்கனாச்சேரி, கேரளா.
படம்: வினவு களச்செய்தியாளர்

♣ ♣ ♣

தெருவில் ஓடும் மழைநீரில் கப்பல்விட்டு விளையாடிய எங்களை படகில் பயணிக்க வைத்த கேரள மழைவெள்ளம். எதிர்நீச்சல் இன்றி ஏது வாழ்க்கை?
இடம்: செங்கனாச்சேரி, கேரளா.
படம்: வினவு களச்செய்தியாளர்

♣ ♣ ♣

துள்ளித் திரிந்த எங்களை நிவாரண முகாமுக்குள் அடக்கினாலும் எங்கள் துள்ளலும் துடிப்பும் என்றும் மாறாது.
இடம் : செங்கனாச்சேரி, கேரளா.
படம்: வினவு களச்செய்தியாளர்

♣ ♣ ♣

ஆலமர விழுதை தாங்கியபடி, ஒர் ஊஞ்சல் பயணம்.
இடம் : செஞ்சிக்கோட்டை, விழுப்புரம்.
படம்: எழில்

♣ ♣ ♣

நண்பேன்டா…
இடம் : பெசன்ட்நகர் கடற்கரை
படம்: எழில்

♣ ♣ ♣

மழலைக்கும் மகிழ்ச்சிக்கும் மொழி ஒரு தடையேயில்லை என்கிறார்களோ இத்தாயும் குழந்தையும்.
இடம் : ஆரோவில், புதுச்சேரி.
படம்: எழில்

♣ ♣ ♣

கடல் அலையின் சாரல் தெறிக்கும் தூரத்தில் எங்கள் வீடுகள். விளையாட கடற்கரை ! வேறு என்ன கவலை ?
இடம் : பட்டினம்பாக்கம், சென்னை.
படம்: வினவு புகைப்படச் செய்தியாளர்

♣ ♣ ♣

என்ன போட்டா புடிக்காத… புடுச்சா அழுதுருவேன்…
இடம் : பட்டினம்பாக்கம், சென்னை.
படம்: வினவு புகைப்படச் செய்தியாளர்

♣ ♣ ♣

படிக்க:
நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்
உங்களால் தைரியமாக புகைப்படம் எடுத்துத் தர இயலுமா?

தொகுப்பு:


வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!

இன்னொரு முறை மோடி வந்தா நாட்டை விட்டு ஓடுறதுதான் ஒரே வழி ! அண்ணா பல்கலை மாணவர்கள்

ரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடந்துவரும் கூட்டணி பேரங்கள் குறித்து தமிழக மக்களின் மனநிலை என்ன, அதிமுக அணியில் பாஜக இடம்பிடித்து அதிக இடங்களில் போட்டியிடுவதற்காக மோடி, அமித்ஷா கும்பல் தமிழகத்தின் மீது காட்டிவரும் அளவற்ற அன்பு மற்றும் தமிழ்நாட்டு நலனில் மிகவும் அக்கறை கொண்டது போல் நிறைய திட்டங்களை அறிவித்தல், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருகை தருவது என்ற கூத்துக்கள் தினம் தினம் அரங்கேறி வருகின்றன.   இந்த நிலையில் மோடி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று தமிழக உயர்கல்வித்துறை மாணவர்களிடம் கேள்வி எழுப்பினோம்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கெளதம், இர்பான், அனில், ஷாரில் உட்பட நண்பர்கள் :

தயங்கியபடியே மாணவர்கள் ஒவ்வொருவரும் கேள்வியை உன்னிப்பாகக் கவனித்தனர். ஆனால், ஒருவரும் பேச தயாராக இல்லை என்பதை அவர்களின் உடல்மொழி உணர்த்தியது. “மச்சான், நீ சொல்லுடா, மச்சான் நீ சொல்லுடா…, சாரிங்க.. அரசியல் மேட்டர்-ல எக்ஸ்பேர்ட் ஒருத்தன்  இங்க இல்ல” என்று பதில் சொல்வதைத் தவிர்த்தனர். கேமரா ஏதும் வெச்சுருக்கிங்களா என்று இர்பான் கேட்டார். ஒரு இறுக்கமான சூழல் நிலவியது. நாங்கள் வீடியோ எதுவும் எடுக்கவில்லை என்பதை உத்திரவாதப்படுத்திய பிறகே மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தனர்.

” இங்க பாருங்க காலேஜ்-ல ஒரு ஃபங்சன் நடக்குது அதுக்கு பேரு குருஷேத்ரா-வாம்.  இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் துணைவேந்தர் சூரப்பாவையும் உள்ள திணிச்சிட்டாங்க… இன்னொரு முறை மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டை விட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை.”

‘இப்படியே நீங்க எல்லாரும் ஓடிட்டா நாட்ட யாரு பாத்துக்குவா?’

“எல்லாரும் போயிட்டா மீதி ஒரு 10, 15 பாஜககாரனுங்காதான் இருப்பானுங்க… எது வேணும்னாலும் பண்ணிகிட்டு போகட்டும்” என்றார் ஒரு மாணவர். மற்றொரு மாணவர் மெதுவாக, “எல்லாரும் வெளிநாடு போயிட்டா எப்படி?  வேற என்ன பண்றது, மோடிக்கு எதிரா ஓட்டுப்போட வேண்டியதுதான்” என்று கேள்வியும் பதிலுமாக விவாதிக்க ஆரம்பித்தனர்.

மாணவர் என்ற முறையில் உங்களுக்கு மோடி எந்தக் கெடுதலும் செய்தாரா? ஏன் மோடியை இந்தளவுக்கு வெறுக்கின்றீர்கள்?

“தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்ல… சரிதான்… ஆனா, எங்க எல்லாத்தோட குடும்பமும் மோடியால பாதிக்கப்பட்டிருக்கே… ஜிஎஸ்டி கொண்டு வந்ததுக்கப்புறம் எங்கப்பாவோட பிசினசே போச்சு… இந்த நிலைமையில பிஜேபி-க்கு யாராவது ஓட்டு போடுவாங்களா… என்னோட சாய்ஸ் திமுக தான். அவுங்க கிட்ட தான் கொஞ்சம் சரக்கு இருக்கு. பிராபப்லிட்டி படி பாத்தா திமுக-வுக்குத்தான் சான்ஸ் இருக்குது.

“ஜெயலலிதா இருந்தப்பயாவது பிஜேபி-ய ரெஸ்டிரிக்ட் பண்ணி வெச்சாங்க. இப்ப இருக்குற ஓபிஎஸ், இ.பி.எஸ் ரெண்டு பேரும் சுத்த வேஸ்ட். நீட் வந்துடுச்சு, சூரப்பா வந்தாரு, அவுங்க ஆளுங்கள எல்லா இடத்துலயும் நுழைச்சுட்டாங்க. ஜெயலலிதா இருந்தப்ப எலெக்சனுக்கு இத்தன சீட் கொடுன்னு பாஜக-வால ஆட்டம் போட்டுருக்க முடியுமா? தமிழ்நாட்ல இருக்குற கவர்மெண்ட் ஜாப்ல கூட நார்த் இண்டியன்ஸ் ஈசியா நுழைஞ்சிடுறாங்க.. இதுல ஆச்சரியம் என்னான்னா தமிழ் தேர்வுல தமிழ்நாட்டு மாணவர்கள் ஃபெயில் ஆகுறாங்க… ஆனா நார்த் இண்டியன்ஸ் நிறைய மார்க் எடுக்குறாங்க… இதெல்லாம் எப்படி சாத்தியமாகுது?” என்றார் ஒரு மாணவர்

தமிழ்நாட்டுல அரசியல் பேசுறதுக்குன்னு,  சரியான பொலிட்டிக்கல் பிளாட்பார்மே இல்ல. கேரளாவ எடுத்துக்கங்க….ஸ்கூல் லெவல்லயே ஸ்டூடன்ஸ் அரசியல் பேச ஆரம்பிச்சுடுவாங்க… அசோசியேஷன் இருக்கும்… போன வருசம் தமிழ்நாட்டுல பேருந்து கட்டணத்த உயர்த்துனப்ப நாங்க அது பெரிய அநீதின்னு நெனச்சோம். அண்ணா யுனிவர்சிட்டி-ல உள்ள ஸ்டூடன்ஸ்-ல 10 சதவீதம் பேரு பேருந்துகள்-ல வர்றவங்கதான். பேருந்துகள்ல வர்றவங்க எல்லாரும் புறக்கணிக்கணும், வேற ஏதாவது பண்ணி நம்மளோட கோவத்த காமிக்கணும்னு நெனச்சோம். ஆனா, மத்த 90 சதவீத மாணவர்கள், பஸ்ச புடிச்சி காலேஜுக்கு வந்துட்டாங்க… இதுல எப்படி போராட்டம் பண்றது-ன்னு தெரியல.

படிக்க:
எதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர் கைது
இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு !

இதே விசயம் கேரளாவுல நடந்துச்சுன்னா, ஒரு ஸ்கூல் ஸ்டூடண்டே என்ன பண்ணுவான் தெரியுமா… பஸ்சில ஏறி உக்காந்துக்குவான். ஆனா, டிக்கட் எடுக்க மாட்டேன்னு போராட்டம் நடத்துவான். அதனாலதான் சொல்றேன், இங்க உள்ள கட்சிகள் கிட்ட அந்த மாதிரியான அரசியல் இல்ல… ஒரு வேளை பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்திருந்தா இப்ப இருக்குற நெலம மாறியிருந்திருக்க வாய்ப்புண்டு.”

“நாங்கெல்லாம் திருச்செங்கோடு பள்ளிகள்-ல படிச்சி 100-க்கு 98 மார்க் வாங்கி வந்தவுங்க. ஸ்கூல்ல படிக்கிறப்ப டாப்பரா வரனும்கிறதுதான் ஒரே இலக்கா இருந்திச்சு. நல்லா படிச்சு, நல்ல மார்க் வாங்குனதுக்கப்புறம், நல்ல காலேஜ்-ல அட்மிஷன் வாங்க அல அலன்னு அலஞ்சோம். ஒரு வழியா காலேஜ்-ல செட்டில் ஆன பிறகு கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகனும்கிறதுக்காக, கடுமையா படிச்சோம். நல்ல மார்க் எடுத்தோம். ஆனா, நாங்க நெனக்கிற டாப் 10 கம்பெனிகள்ல வேல யாருக்கும் கிடைக்கல.”

“சரி, கிடைக்கிற வேலக்கு போறோம்னு வெச்சுக்கங்க, அங்க என்ன நடக்கும்? மினிமமா 9 மணி நேரம் எங்கள வேல வாங்காம விட மாட்டாங்க… வாரம் புல்லா வேல பாத்து சண்டே மட்டும் தான் ஃப்ரீயா இருப்போம். அதுவும் டிவி பாக்குறதுக்கே சரியா போயிடும். இதுல எங்க நாங்க இனிமே சொசைட்டிய பத்தி கவலப்பட முடியும்… இப்ப இருக்குற வேலை வாய்ப்பு நிலைமையெல்லாம் பாக்குறப்ப ஏண்டா கஷ்டப்பட்டு படிச்சோம்னு இருக்குது… ஸ்டூடன்ஸா இருக்கும்போதே  அரசியலுக்கு வந்தா இழப்பு வரும்னு சொல்றாங்க… உண்மையிலேயே, இழப்பு நமக்கில்ல, அரசியல்வாதிக்குத்தான்.. இது இப்பத்தான் நமக்குப் புரியுது…

“எங்க நிலைமை இப்படின்னா, அடித்தட்டு மக்களோட நிலைமையெல்லாம் இன்னும் மோசம். குறிப்பா வடநாட்டுல ஒரு நாளைக்கி 100 ரூபா சம்பளம், ஒரு வேள சாப்பாடும் கெடச்சதுன்னா அத மிகப்பெரிய சொர்க்கமா எடுத்துக்குவாங்க… இப்ப அதுக்கும் வழியில்லாம தமிழ்நாட்டுக்கு நார்த் இண்டியன்ஸ் நெறையா வராங்க… கூலி வேலை-ன்னு பல்வேறு காரணங்களுக்காக இங்க வர்றாங்க… தமிழ்நாட்டுல ரொம்ப சேஃபா, ஹேப்பியா இருக்குறதா நெனக்கிறாங்க… பிஜேபி ஆட்சியில இருக்குற நார்த் ஸ்டேட்ஸ்-லேருந்து தான் நெறையா பேர் வர்றாங்க… ஆனா பிஜேபி கவர்மெண்டுக்கு சவுத் இண்டியான்னா ஆகவே மாட்டேங்குது… ஒன்னு வேனும்னா பண்ணலாம், சவுத் இண்டியாவ மொத்தமா பிரிச்சி தனி நாடா அறிவிக்க சொல்லிட்டு உங்க உறவே வேணாம்னு நிம்மதியா இருக்கலாம்.”

“காஷ்மீர்ல வெடிகுண்டு வெடிச்சி 50 பேருகிட்ட இறந்து போயிருக்காங்க… அது ஏன் எலெக்சன் டைம்-ல மட்டும்  குண்டு வெடிக்கிது, தேசப் பற்று பொங்கி வழியுதுன்னு தெரியல. அவ்ளோ டைட் செக்யூரிட்டி இருக்குற எடத்துல எப்படி 350 கிலோ எடையுள்ள குண்ட அசாதாரணமா வெடிக்க வைக்க முடிஞ்சது. செத்துப்போனது அப்பாவி வீரர்கள்தானே.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போன வருசமே சொன்னாரு… இந்தியாவே படையெடுத்து வந்தாலும் நாங்க சண்டை போட தயாரா இல்லன்னு. ஆனா மோடி என்னடான்னா போர், போர்-ன்னு கத்திகிட்டிருக்காரு… மோடி பேசுறத பாத்தா இந்த மாதிரி ஏதோ நடக்கனும்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்ததுமாதிரியே தெரியுது… இன்னும் குறிப்பா சொல்லனும்னா நோ பாகிஸ்தான் நோ மோடி அவ்ளோ தான்” என்றார்கள் நெத்தியடியாக…

தொழுநோய் ஒழிப்பில் பின் தங்கிய இந்தியா !

2

டந்த 2017 -ம் ஆண்டு  தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் 2018-ம் ஆண்டுக்குள் தொழு நோயை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என மத்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் இலக்கை அடையவில்லை

கண்கூடாக காணக்கூடிய உருமாறுதலை ஏற்படுத்தும் தொழுநோயை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒழித்துவிடுவோம்  என மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை இயக்குனர் ஜெனரல் அனில் குமார் இதுகுறித்து கூறுகையில், “கண்கூடாக காணக்கூடிய உருமாறுதலை ஏற்படுத்தும் தொழுநோயை 2020-ம்  ஆண்டுக்குள் ஒழிக்க உலக சுகாதார நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஆனால் நாம் அதற்கு முன்னதாகவே அக்டோபர் 2, 2019-க்குள் அந்த இலக்கை அடைந்துவிடுவோம். தொழுநோயை முற்றிலுமாக ஒழித்து விடுவோம்” என்றார்.

தொழுநோயை முற்றிலுமாக ஒழித்தல் என்பது 10 இலட்சத்திற்கு ஒருவருக்கு மட்டுமே தொழுநோய் இருப்பது எனும் நிலையையே குறிக்கும். கண்கூடாக காணக்கூடிய உருமாறுதல்களை ஏற்படுத்தும் தொழுநோயை, “இரண்டாம் கட்ட முடக்கு நிலை” என குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஜனவரி 25, 2019-ல் தான் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலக அளவிலான  தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சம் என்றும், அதில் பாதிக்கும் மேலானோர் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது. இதுவும், 2018-ம் ஆண்டு இலக்கை எட்டமுடியாமல் போனதும் பொது சுகாதார பார்வையாளர்களின் அக்கறைக்குரிய பிரச்சினையாகும். ஒரு வேளை இந்தியா தனது இலக்கை எட்ட முடியவில்லை எனில், அது உலக அளவிலான தொழுநோயாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கும்.

படிக்க:
♦ கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !
♦ சரஸ்வதி மாமியை மனித மதத்திற்கு மாற்றிய ஹாஜீரா பீவி ! அவசியம் படிக்க !

தொழுநோய் பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த நோய் வெளியே தெரிவதற்கு மிக அதிகமான காலம் ஆகும் என்பதுதான். சராசரியாக ஆறு ஆண்டுகள் கழித்துதான் இந்த நோய் வெளியே இருப்பதற்கான அறிகுறி தெரியவரும். இணை இயக்குனர் ஜெனரல் குமார் இது குறித்து கூறுகையில், “நாங்கள் இந்த நோயை கண்டுபிடிப்பதற்காக சிறப்பான வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். இதன் காரணமாக நாங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய பாதிப்புகளை கண்டுபிடிக்க முடிகிறது. ஏனெனில் தொழுநோய் ஒரு நபருக்குள் பல ஆண்டுகள் மறைந்திருக்கக் கூடியது” என்றார். தொழு நோய் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குவதையும், பாரபட்சம் பார்ப்பதையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக சாசகவா இந்தியா தொழுநோய் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்

இந்தியாவில் தொழுநோய் தாக்குதல் குறித்த புள்ளி விவரங்கள் ஏற்றத் தாழ்வோடு இருக்கின்றன.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் மற்றும் அதன் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பது தேக்கத்தில் இருந்தது. 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் புதியதாக சுமார் 35 ஆயிரம் தொழு நோய் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இது ஊக்கம் அளிக்க கூடியதாக இருக்கலாம். ஆனால் நாம் கவலைப்பட வேண்டியது என்னவெனில், கண்கூடாக பார்க்கக்கூடிய உருமாறுதல் ஏற்பட்ட தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான்.  ஒவ்வொரு ஆண்டும் இது அதிகரித்துவருகிறது. இதனடிப்படையில் பார்க்கையில் இன்னும் வெளித்தெரியாத நிலையில் இருக்கும் தொழுநோய் பாதிப்பும்அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

படிக்க:
♦ வல்லரசு இந்தியாவின் சாதனை : உலகளவில் புதிய தொழு நோயாளிகளில் 60% இந்தியர்கள் !
♦ செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா ?

தொழுநோய் பாதிப்பு வெளிப்படுவதற்கு முன்னர் அதன் அதிகமான அடைகாப்புக்காலம் காரணமாக பல நோய் தாக்குதல்கள் வெளியில் தெரியாமலேயே இருக்கின்றன. மேலும் நோய்த் தாக்குதலின் எண்ணிக்கை திடீரென அதிகமாகவோ குறைவாகவோ மாறாது. முடக்கநிலை ஏற்படுவதைத் தவிர்க்கவும், தொழுநோய் பரவுவதைத் தடுக்கவும், இந்நோயை விரைவாக கண்டுபிடிப்பது முக்கியானது. ஏனெனில் முடக்கநிலை என்பது இந்நோய்த் தாக்குதலின் மிகத் தீவிரமான விளைவாகும்.

இதுகுறித்து குமார் கூறுகையில், “உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள இலக்கான 2020-ம் ஆண்டு என்பது மிகவும் நெருக்கமானது. பெரும்பாலான நாடுகள் இந்த இலக்கை அடைய முடியாமல் போகலாம். ஆனால் நாம் அந்த இலக்கை கண்டிப்பாக அடைந்துவிடுவோம். அதில் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார்.

எதிர்வரும் 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் தொழுநோயின்  இரண்டாம் கட்ட முடக்கு நிலையை ஒழித்து, தொழு நோய் பாதிப்பை 10 லட்சத்திற்கு ஒருவர் என்ற அளவுக்கு குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எதிர்பார்க்கிறது. இந்தியாவில் தற்போது இது 10 லட்சத்திற்கு 2.4 என்ற அளவில் இருக்கிறது. இதுகுறித்து குமார் கூறுகையில், “நாம் செயலூக்கமான பரப்புரையை 2016-ல் துவக்கும்போது இந்த அளவு 10 லட்சத்திற்கு 4.5 என்ற அளவில் இருந்தது. இதன் அடிப்படையில் பார்க்கையில் நாம் இரண்டு ஆண்டுக்குள் பிரச்சினையை சரி பாதியாக குறைத்திருக்கிறோம்.” என்றார்

ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால், தொழு நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்கள், மறுக்கப்படுகின்றன என்பதை கடந்த ஆண்டு தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியது. ஆதார் அட்டையை பொருத்தவரையில் அதற்கு கைரேகையும், கருவிழி பதிவும் அவசியமாக இருக்கிறது. தொழு நோய், நோயாளிகளின் கைகளை பாதித்துவிடுவதால், இத்தகைய உடல்கூறு தகவல்களை ஆதார் அட்டைக்காக கொடுக்க அவர்களுக்கு சாத்தியம் இல்லை. ஆகவே அவர்களால் ஆதார் அட்டை பெற முடிவதில்லை.

இந்தியாவில் பல்வேறு சுகாதார திட்டங்கள், நோயாளிகளுக்கான நலத்திட்டங்களை ஆதார் எண்ணோடு இணைக்க துவங்கிவிட்டன. உதாரணத்திற்கு காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரூ. 500 நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அப்பணம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து குமார் கூறுகையில், “தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவது இல்லை.” என்றார். மேலும், “தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் நாங்கள் இந்த சேவையை வழங்கி வருகிறோம் அவர்கள் ஆதார் அட்டை வைத்து இருக்கிறார்களா இல்லையா என்பது ஒரு பொருட்டில்லை. ஒவ்வொருவரும் இந்த சேவையை பெற்று வருகின்றனர்” என்றார்.

தொழுநோய் குணப்படுத்தக் கூடியதே எனினும், இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மீது பாரபட்சம் காட்டுவதும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதும் இன்னமும் நீடிக்கிறது. கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் பாராளுமன்றம், இந்திய தனிநபர் திருமணச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை மேற்கொண்டது. அதன்படி விவாகரத்து பெறுவதற்கு தொழுநோயை ஒரு காரணமாக சொல்லலாம் என்ற விதியை ரத்து செய்து, சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கவனம் கொடுக்கப்படாத வெப்ப மண்டல நோயாகவே தொழுநோய் கருதப்படுகிறது. இந்தியாவில் காசநோய் மற்றும் மலேரியாவிற்கு ஒதுக்கப்படும் ஆராய்ச்சி நிதி மற்றும் சிறப்புக் கவனமும் தொழுநோய்க்கு கொடுக்கப்படுவதில்லை. காசநோய் குறித்த ஆய்வுக்கு ரூ.147 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், தொழுநோய் குறித்த ஆய்வுக்கு வெறுமனே ரூ.39 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. உலக அளவிலும் கூட தொழுநோய் குறித்த ஆய்வுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. உலக அளவில், தொழுநோய்க்கான ஆய்வு நிதி குறைக்கப்பட்டு வருகையில், கடந்த 2017-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் முன்னெப்போதையும் விட மிக அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது

நோயை ஒழிப்பது குறித்த இந்தியாவின் இலக்குகள் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கின்றன. தொழுநோயை ஒழிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் 2020-ம் ஆண்டு இலக்கு வைக்கையில், அதற்கு முன்னதாகவே ஒழித்துவிட இலக்கு வைத்துள்ளது இந்தியா. அதே போல, காச நோயை ஒழிக்க உலக சுகாதார நி்றுவனம் 2030-ம் ஆண்டு இலக்கு வைத்திருக்கையில், வரும் 2025-ம் ஆண்டிலேயே  ஒழித்துவிட இலக்கு வைத்திருக்கிறது இந்தியா. ஆனால்,  உலகம் முழுவதும் புதியதாக பீடித்திருக்கும், ஒரு கோடியே நாலு லட்சம் காச நோய் தாக்குதல்களில் சுமார் 27% இந்தியாவில் நிகழ்கின்றன என்பதுதான் நிலைமை.


கட்டுரையாளர்     : அனு பூயன்
தமிழாக்கம்        : நந்தன்
செய்தி ஆதாரம் : தி வயர் 

நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்

யிரக்கணக்கான மக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்கிறார்கள். அதனை வெறித்துப் பார்த்தவாறு ஒரு ஓரமாக கிடக்கிறார்கள் ஃப்ளோரசண்ட் கலரில் ஜாக்கெட் அணிந்து கழிப்பறையை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள். மற்றொருபுறம் கையில் துடைப்பத்தை ஏந்தியபடி எங்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்காக சுமார் 1.2 இலட்சம் தற்காலிக கழிவறைகள்  அமைக்கப்பட்டுள்ளன. துப்புரவு மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக சுமார் 15,000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அலகாபாத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருக்கும் இத்தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தலித்துகள் மற்றும் பழங்குடிகள்.

சோட்டாலால். அலிஅசன் மற்றும் அகமத்.

கழிவறையின் முன்னே நின்று கொண்டிருந்தார்கள் அத்தாரா மாவட்டம், பாந்த்ரா கிராமத்தை சேர்ந்த அலிஅசன், அகமத் மற்றும் சோட்டாலால். அவர்கள் கும்பமேளா பற்றியும், இந்த வேலைக்கு வந்தது பற்றியும் சொல்கிறார்கள். “எங்களை சாந்தினி என்ற பெண் காண்ட்ராக்டர் ஊருக்கு வந்து கும்பமேளாவில் நிறைய வேலை இருக்கு. வந்தால் ஒரு நாள் கூலியாக 350 ரூபாய் தருவோம் என்றார். ஊரில் வேலை இல்லாமல்தானே இருக்கிறோம்… மூணு மாசம் வேலை தர்றதா சொல்றாங்க. அதுவும் 350 ரூபா சம்பளம். யாரு கொடுப்பான்னு நெனச்சி வந்தோம். இங்க வந்த பிறகு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து விட்டார்கள்.  பத்து கழிப்பறைக்கு ஒரு ஆள் பொறுப்பு. சுத்தம் செய்வது, தண்ணீர் வராத பட்சத்தில் அதனை முறையாக சொல்லி தண்ணி வரவைப்பது, கழிவறையில் வைக்கப்பட்டிருக்கும் பாட்டில், டப்பா அனைத்தும் பார்த்துக் கொள்வது எங்கள் வேலை.

எங்களை கூப்பிடும்போது இந்த வேலைதான்னு சொல்லி கூப்பிடல.  சொல்லியிருந்தா வந்திருக்க மாட்டோம். இப்ப போகலாம்னு பார்த்தாலும் முடியாது. வீட்டுல சொல்லிட்டு வந்துட்டோம். அவங்க எதிர்பார்த்திட்டு இருப்பாங்க. வேற வழியும் இல்லை” என்கிறார் அசன்.

மேலும், “எங்களுக்கு தங்கறதுக்கு இடம் மட்டும்தான் கொடுத்தாங்க. கூடாரம் நாங்களே போட்டுக்கிட்டோம். நைட்டான செம்ம குளுரு. தாக்கு பிடிக்க முடியல. நெருப்பு மூட்டிக் கொள்ள விறகு கட்டை எதுவும் கொடுக்கல. அதையும் நாங்களே பாத்துக்கனும். அதிகாரிங்களுக்கு மட்டும் விறகு கொடுத்திருக்காங்க. கூலி போக உணவுக்காக 100 ரூபா படி தருவோம் என்றார்கள். அதுவும் இன்னமும் தரல. நாங்க எட்டு மணி நேரம் வேலை பார்க்கனும். ஆனால், இரண்டு ஷிப்டு ஒரே ஆள் பார்த்தாலும் அதற்கான கூலியும் தருவதில்லை. படியும் தருவதில்லை.

சாப்பிட இரண்டு ரொட்டி, சப்ஜி – பருப்பு சாம்பார்ன்ற பேர்ல தண்ணிய ஒரு நேரம் கொடுக்கிறாங்க’’ என்கிறார் அலுப்பாக.

» “வேற என்ன பிரச்சனையெல்லாம் இருக்கு?”

‘’இவ்ளோ கழிப்பறை இருக்கு. அதுக்கான பக்கெட் போதுமானது இல்லை. அப்படியே இருந்தாலும் இங்க வர சாமியாருங்க தூக்கிட்டு போயிடுறாங்க. அவங்கள கேட்கவும் முடியல. பக்கெட் இல்லாததால, வாட்டர் பாட்டில்ல தண்ணி புடிச்சிக்கிட்டு வராங்க. அந்த கொஞ்சம் தண்ணியில என்ன பண்ண முடியும்? அதனால பாத்ரூம் சுத்தமாக இருப்பதில்லை. அத நாங்க கழுவுறோம். இது ரொம்ப பிரச்சனையாக இருக்கு. மனரீதியாக எங்களுக்கு துன்பமாக இருக்கிறது.

எங்க ஊரில் விவசாய வேலை செய்து கொண்டு இருந்தோம். ஆனால், அதில் இப்போது வருமானம் இல்லை என்பதால் இந்த வேலைக்கு வந்தோம். இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறோம். வீட்ல இப்ப கைகொடுக்கிறது ஒரே ஒரு மாடுதான். அதுவும் பால் கறக்கிற வரைக்கும் பிரச்சனை இல்லை. பின்னால் அதை விற்க முடியாது. விற்க பலரும் பயப்படுறாங்க..

» கங்கையில குளிச்சிங்களா?

இன்னும் குளிக்கல. போகும்போது குளிப்போம்.

» குளிச்சா பாவம் போயிடுமா?

ஆண்டவன் என்ன எழுதி வச்சிருக்கானோ அதுதான் நடக்கும். நாம நல்லது செஞ்சா நல்லது நடக்கும். கெட்டது செஞ்சா கெட்டது நடக்கும். எல்லாத்துக்கும் மேல கடவுள் இருக்கான்” என்றவரிடமிருந்து விடைபெற்று சிறிது தூரம் நடந்ததும் மற்றொரு பிரிவு துப்புரவு தொழிலாளர்கள் சச்சின், தினேஷ், சுனில் மோங்க்ரே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

சச்சின்.

இவர்களுடைய பணி, “தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும், குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் மோங்க்ரே என்று சொல்லக்கூடிய பட்டியலின சாதியை சார்ந்தவர்கள். இந்த வேலைக்கு நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. இந்த விழா முடியும் வரை வேறு எந்த வேலைக்கும் எங்கேயும் செல்லக்கூடாது. இங்கேயே தங்கிக் கொள்ள வேண்டும். தங்குவதற்கு ஒரு இடம் மட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதில் இவர்களே குடில் அமைத்துக் கொள்ள வேண்டுமாம்.

படிக்க:
புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !
கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !

குளிப்பது எல்லாம் குழாயில் தண்ணீர் பிடித்து குளித்துக் கொள்ள வேண்டும்.  கொட்டிக் கிடக்கும் குப்பையை அகற்றுவது மட்டும் இல்லாமல், இரும்புப் பாதையை அடிக்கடி பெருக்க வேண்டும். மற்றொரு பிரிவினர் தண்ணீர் தெளிக்க வேண்டும். எந்நேரமும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். எங்குச் சென்றாலும் கையில் துடைப்பத்துடன் சுற்ற வேண்டும். இந்த வேலை முடிந்ததும் ஊருக்கு சென்று அங்கே கிடைக்கும் வேலையை செய்து வாழ்க்கையை நடத்த வேண்டும்” என்றே தெரிவிக்கின்றனர்.

இவர்களை அழைத்து வந்த சுனில் மோங்க்ரே சொல்கிறார், “நான் மும்பை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் மிக்சர் செய்யும் வேலை செய்து கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் நல்ல வருமானம் கிடைத்தது.

தினேஷ் மற்றும் சுனில் மோங்க்ரே.

சென்னையில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இப்பொழுது அந்த வேலைக்கு அதிகம் பேர் வந்து விட்டதால் சம்பளம் குறைந்து விட்டது. வேலையும் சரியாக கிடைப்பதில்லை. மேலும் உடல்நிலை மற்றும் வீட்டு பிரச்சனையால் எனது சொந்த ஊரான பாந்தாவுக்கே திரும்பி வந்துவிட்டேன்.

கும்பமேளா துப்புரவு பணியில் சூப்பர் வைசராக இருக்கிறேன். இந்த வேலைக்கு எங்க ஊரில் இருந்து 12 பேரை கூட்டி வந்தேன். எல்லோரும் தலித் சாதியின் மோங்க்ரே பிரிவை சார்ந்தவர்கள்.

» இந்த பிரிவில் இருந்துதான் துப்புரவு வேலைக்கு வருவார்களா?

ஆம். இன்னும் சில தலித் பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களும் வந்திருக்கிறர்கள்.

» உங்களுக்கு அம்பேட்கரை தெரியுமா?

தெரியும். அவர்தான் எங்க தலைவர். அவர் இருந்ததால் தான் இந்த நிலையில் இருக்கிறோம். இல்லையென்றால் இன்னும் மோசமாகி இருப்போம்.’’ என்றார்.

பிண்டு.

கொஞ்சம் தள்ளி கையில் துடப்பத்தை வைத்துக்கொண்டு தனியாக சோர்வுடன் நின்று கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்ததும் சற்று தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். அவர் பெயர் பிண்டு. மிர்சாபுர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர்.  தலித் சாதியின் வேறொரு பிரிவை சார்ந்தவர்.

» இந்த கும்பமேளா எப்படி இருக்கு?

சூப்பரா இருக்கு. ரொம்ப பேரு வாராங்க. பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு.

» இந்த விழாவுக்காக எவ்ளோ செலவாகியிருக்கும்னு நினைக்கிறீங்க?

“ஒரு 30, 40 கோடி இருக்குமா?” என்று சந்தேகத்துடன் வெகுளியாக சொன்னவரிடம் 4,300 கோடி என்றதும் மலைத்துப் போய் பார்த்தார்.

» உங்களுக்கு இந்த வேலை புடிச்சிருக்கா?

“எனக்கு சுத்தமா இந்த வேலை புடிக்கல.. எனக்கு வண்டி ஓட்டுற வேலை.  அந்த வேலை இல்லாததால இந்த வேலைக்கு வந்தேன். எங்கள மாதிரியான ஆட்கள் நெறைய பேர் இந்த வேலைய செய்யுறோம். என்னா செய்றது வேலை எதுவும் இல்ல….” என்று சொல்லும்போது அவருடைய சூப்பர்வைசர் வந்ததால் நம்மிடமிருந்து விலகிச் சென்றார்.

உழைத்து உழைத்து களைத்துப்போய் உட்கார்ந்திருந்தார்கள் துப்புரவு மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் பெண் தொழிலாளர்கள். அவர்களிடம் கேட்டதும் படப்படப்போடு எழுந்து நின்று அவஸ்தையோடு சொன்னார்கள். “நாங்க பாந்தா ஊர். சித்ரகூட் ஜில்லா.  எங்க ஊர்ல இருந்து 12 பேர் வந்திருக்காங்க.  எங்களுக்கு ஒரு நாள் கூலி 275 ரூபா. தங்கறதுக்கு இடம் மட்டும் எங்கள கூட்டி வந்தவங்க கொடுத்தாங்க.  சாப்பாடு, தண்ணி எல்லாம் நாங்களே பார்த்துக்கனும்.

» ஏன் இந்த வேலைக்கு வந்திங்க?

என்ன கேள்வி கேக்குற …  அங்க என்னமோ வேலைய வச்சிக்கிட்டு இந்த வேலைக்கு வந்த மாதிரி கேக்குற… வேல இருந்தா இங்க வருவோமா…? நாங்க ஏன் குப்பை, மண்ணை பெருக்க போறோம்?

» மோடி கவர்ன்மெண்ட்ல எல்லோருக்கும் நல்லது செய்யிறதா சொல்றாங்களே?

எதுவும் இல்ல. 15 லட்சம் கொடுகிறதா சொன்னாரு…. யாருக்கும் வர்ல. வீடு கட்டி தருவோம்னு சொன்னாரு அதுவும் தரல.. .  மோடி சும்மா எதையாவது சொல்லுவார். மத்தபடி ஒன்னும் இல்ல. நாங்க ஏழ்மையானவங்க.  மோடி நல்லது செய்யிறாருன்னு எல்லோரும் சொல்லுறாங்க. ஆனா யாருக்கு செய்யிறாருன்னு தெரியல. நாங்க ஏழையாவே தான் இருக்கோம்.

படிக்க:
வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை
சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !

அரசு கொடுத்திருந்த புளோரசெண்ட் ஜாக்கெட்டை காட்டி….. “எங்க துணிய பாருங்க.  கொசு வலை மாதிரி கொடுத்து இருக்காங்க. கொசுகூட உள்ள போயிரும்.  கடிக்கும். இதுல தலைக்கு தொப்பி வேற… இது எதுக்கு பிரயோஜனம்? குளிரு தாங்கல.  எனக்கு பரவாயில்ல… தோ… இந்த பொண்ணுக்கு உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு.  ஆனாலும் வேலை செஞ்சிதான் ஆகனும். நாங்க போன வருஷம் இந்த மாதிரி வேலை செய்ய வந்தோம். அப்போ கடைசியில கொஞ்சம் காசு கொடுக்காம அனுப்பிட்டாங்க. இந்த முறை அதை கண்டிப்பா கேட்டிருக்கோம்.

» எல்லோரும் சங்கத்தில் குளித்து விட்டு போறாங்க… நீங்க குளிச்சிங்களா?

நாங்க எப்பவும் குளிக்கிறதுதான். வெளியில இருந்து வரவங்களுக்குத்தான் இது புதுசா இருக்கு. அதனால குளிக்கிறாங்க…. என்றார்கள்.

சாந்தி.

அருகே இருந்த சாந்தி, கழிப்பறைக்கு அழைத்துச் சென்று காட்டினார். மிக மோசமாக இருந்தது. ஆண் தொழிலாளர்கள் சொன்ன அதே பிரச்சனைதான்… “இவ்ளோ மோசமா இருக்கு.. இத எப்படி நாங்க கிளீன் பண்ண முடியும்…. சீக்கிரமாக செப்டிக் டேங்க் நிரம்பிடுறதால வண்டியும் வந்து வாரிச் செல்வதில்லை..” என்று சொன்ன சாந்தி அம்மாவின் முகத்தில் ஆத்திரமும் கோபமும்தான் இருந்தது. அவரால் அந்த கழிவறையைப் பார்க்கக்கூட மனமில்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டே கதவை அறைந்து சாத்திவிட்டு அமைதியானார்.

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து …


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
பாகம் – 2: கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
பாகம் – 3: கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !
பாகம் – 4:
அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்
பாகம் – 5 : நாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் !

லலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை !

லலிதா இனிப்புக்கடை ஒரு மக்கள் பலகாரக் கடை என்றால் மிகையல்ல. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகிறது இக்கடை. இன்றும் அந்த சந்தைப் பகுதியை கடக்கும் எவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கடையிது. எந்த இனிப்பு எடுத்தாலும் பத்து ரூபாய். வேலை முடித்து வீடு திரும்புவோருக்கு மாலைநேர சிற்றுண்டி இக்கடைதான். இருபது ரூபாயில் இருந்து ஐம்பது ரூபாய் வரை நான்கைந்து வகையான இனிப்பு- கார வகைகளை இங்கு வாங்கலாம்.

குலோப் ஜாம், ஜாங்கிரி, மைசூர் பாகு, லட்டு, அல்வா, பூந்தி, பால்கேக், ஸ்பெஷல் லட்டு இன்னும் பெயர் தெரியாத இனிப்புகள்; காரவகையில் பக்கோடா, மிக்சர், காரப்பூந்தி, காராசேவ், என்று மற்ற கடைகளில் கிடைக்கும் பண்டங்கள்தான் என்றாலும் இங்கே தனித்துவமான ருசி இருப்பதை உணர முடியும். இக்கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் நான் இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை என்று முப்பதாண்டுகளைக் கடந்தும் வருவது இக்கடையின் சிறப்பு.

இப்பகுதியை அடுத்து உள்ள கே.கே நகரை சுற்றி உயர் நடுத்தர வர்க்கம் வசிக்கும் இடம். அங்கு கிராண்ட் சுவீட், கிருஷ்ணா சுவீட், அடையார் ஆனந்த பவன் என்று மேட்டுக்குடியினருக்கு உரித்தான கடைகள் குவிந்திருக்கிறது. அங்கே அவ்வப்போது கூட்டம் இருக்குமென்றால் இங்கே எல்லா நேரமும் கூட்டம் மொய்க்கும். அதன் வியாபார ரகசியத்தை அறிய அக்கடைக்கு சென்றோம்.

சாலையில் செல்பவர்களின் மூக்கை துளைக்கும் வெங்காய பக்கோடாவின் வாசனை.

கடை பத்துக்கு பத்து அளவை விட சிறியதாக இருந்தது. அடுப்பு முதற்கொண்டு அனைத்தும் வேலைகளும் அதிலேயே பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 70 வயது நெருங்கும் ஒரு முதியவர் கை நடுக்கத்துடன் சுவீட் பேக்கிங் பெட்டியை மடித்துக் கொண்டிருந்தார். அவர்தான் அக்கடையின் முதலாளி. அவரிடம், உங்கள் கடை மக்கள் விரும்பி வரும் ஒரு பிரபலாமான கடையாக இருப்பதன் ரகசியம் என்னவென்று வினவினோம். அதற்கு அவர் புன்சிரிப்பையே பதிலாக தந்தார்.

பக்கத்தில் நம்மை வாஞ்சையாக அழைத்து…. ஒரு மெல்லிய உடைந்த குரலில் பேசினார்…

“நான் ஒரு அனாதை… எனக்கு சொந்த ஊர் கேரளா. 1967 -ஆம் ஆண்டு சிறு பையனாக சென்னைக்கு வந்தேன். அப்போது இருந்தே உழைத்துக் கொண்டிருக்கிறேன்.  அதுதான் ரகசியம். என்னை சிறு வயதில் வாழ வைத்தவர் பாரிஸ் கார்னரில் மளிகை கடை வைத்துள்ள ஒரு சேட். அங்கதான் பல வருஷம் அவருகிட்ட எடுபிடி வேலை செய்தேன். அவரே எனக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழிகாட்டி ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் கட்டி வச்சார். அதன்பிறகு பல்வேறு வேலைகள் மாறி இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன்.

லலிதா இனிப்பகத்தின் முதலாளி சந்திரன்.

நான் இங்கு வரும்போது எம்.ஜி.ஆர் உடல்நிலை சரி இல்லாமல் அமெரிக்காவில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார். எந்த ஆண்டு என்று எனக்கு நினைவு இல்லை. அப்போது நானும் என் மனைவியும் வீட்டிலேயே இனிப்புக்களை செய்து தள்ளு வண்டியில் வைத்து விற்றோம். இன்று ஏறக்குறைய ஐந்துக்கும் மேற்பட்டோர் பணி புரியும் கடையாக வளர்ந்திருக்கிறது.

என் கடையில் சாப்பிட்ட தாத்தா அவர் பேரனுக்கு வாங்கிக் கொடுக்கிறார். இந்த தொழிலில் மூன்று தலைமுறை வாடிக்கையாளைர்களை பார்த்து விட்டேன்.  எல்லோருக்கும் இக்கடையின் ருசியின் மீதும் தரத்தின் மீதும் பெரும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை தான், இந்த வயதிலும் எனக்கு உழைக்கும் வேகத்தை தருகிறது. ஏறக்குறைய நான் கடை துவங்கிய போது எல்லா பண்டங்களும் வெறும் பத்து பைசா தான்… இன்று அது பத்து ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அதிரசம்.

காலையில் ஏழு மணிக்கு நான் கடைக்கு வந்தால் இரவு பன்னிரெண்டு மணிக்குதான் வீடு திரும்புவேன். என்னால் முடிந்த வேலைகளை செய்து உதவியாக இருக்கிறேன். சில நேரங்களில் மாஸ்டர் வரவில்லை என்றால் நானே வெதுப்பகத்தில் இறங்கி விடுவேன்.  இனிப்பு வகையில் ஒரு டஜன் அயிட்டங்களும், கார வகையில் அதே அளவிற்கு பல பண்டங்களும் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட அயிட்டங்களை இங்கு தயாரித்து இருக்கிறேன். அந்தளவுக்கு காரம் இனிப்பு என்று 150 – 200 கிலோ தினமும் விற்றுத் தீருகிறது.

மேலும் சீர்வரிசை, கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள் என்று 20 கிலோ மீட்டர் சுற்று வட்டாராத்தில் எந்த விஷேசங்கள் நடந்தாலும் பெரும்பாலான ஆர்டர் என் கடைக்குத்தான் வரும். ஒரே பார்டிக்கு 5,000 லட்டு 6,000 லட்டுகூட செய்து கொடுத்திருக்கிறேன்.  இங்கு அதிகபட்சம் ஒரு கிலோ காரமோ, சுவிட்டோ 200 லிருந்து 250-க்கு மேல் விக்க மாட்டேன். விலைதான் இங்கு மலிவே தவிர அதில் போடும் பொருட்கள் எந்த விதத்திலும் தரம் குறைந்தது இல்லை.

கடையில் ஊழியர்களோடு ஊழியர்களாக பனிபுரியும் உரிமையாளர்.

ரீபைண்டு ஆயிலும், பாமாயிலும் உபயோகப்படுத்த மாட்டேன். மைதா மாவு சர்க்கரை இவற்றை தரமாக நானே தேர்ந்தெடுப்பேன். லாபம் என்பது நிரந்தரமாக சிறிய அளவுதான் வைத்துக்கொள்வேன். அதுதான் இந்த வியாபாரம் நீடிக்க உதவுகிறது.  இங்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் பத்து ரூபாய்க்கு வாங்கினால் கூட தங்களுடைய சொந்த வீட்டில் சாப்பிடுவதைபோல பல அயிட்டங்களை எடுத்து ஆசையாக ருசி பார்ப்பார்கள். நான் அதற்கு எந்த தடையும் சொல்வதில்லை. குழந்தைகளை வீட்டில் நாம் எப்படி பார்க்கிறோமோ அதேபோல் தான் நான் வாடிக்கையாளர்களை நேசிக்கிறேன்.

வியாபாரம் எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் என்னுடைய வாழ்க்கை வசதி பெரிதாக எதுவும் மாறவில்லை. வரவுக்கும் செலவுக்குமே சரியாகி விட்டது. நான் முன்னூறு ரூபாய்க்கு வாங்கிய மைதா இன்று 2,300 ரூபாய். நூற்றி ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய சர்க்கரை இன்று 3,500 ரூபாய். ஆயில் 600 – 700 க்கு வாங்கியது இன்று 1,500 ரூபாய் ஒரு டின். இவ்வாறு பல மடங்கு விலை ஏறி இருந்தாலும் நான் பெரிதாக விலையை ஏற்றவில்லை.

கண் முன்னே தயாராகி இருக்கும் மொறு மொறு மிக்சர்.

விலையை குறைப்பதற்கு, வாங்கும் பொருளிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். சரக்கு மாஸ்டருக்கு தினமும் 1,000 ரூபாயும், கடையில் இருப்பவர்களுக்கு 600 ரூபாயும் தருகிறேன். இத்தொழிலில் மன நிம்மதியைத் தவிர  ஆடம்பரம், பணம் என்று எதையும் பார்க்கவில்லை. என் வீட்டில் இருப்பவர்கள் என்னை நல்லா பாத்துகுறாங்க. அதுக்கு மேல பெரிய சொத்து எதுவும் தேவையில்லை” என்றார்.

கடைக்கு உள்ளே அடுமனையில் கொதிக்கும் சட்டியில் இருந்து கட்ட காரஸை போட்டுக் கொண்டிருந்தார் வரதன் மாஸ்டர். “நான் விழுப்புரம் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன். இங்கு 20 வருஷமா மாஸ்டரா இருக்கேன். என்னோட சேத்து இன்னும் இரண்டு மாஸ்டருங்க இருக்காங்க. தினமும் இங்க இரண்டு சிஃப்டு வேலை. காலை ஏழு மணிக்கு வந்தால் மதியம் 3 மணி வரை சிப்டு. மதியம் இரண்டரை மணிக்கு வந்தா இரவு பத்தரை மணி வரை சிப்டு. மூட்டிய அடுப்பை இரவு பத்து மணிக்குத்தான் அணைப்போம். இந்த வேலைக்கு தினமும் எண்ணெய் மட்டுமே ஏழு டின் காலியாகிடும். ஒரு டின் பதினைந்து லிட்டர்.

வரதன் மாஸ்டர்

லட்டிலிருந்து குலோப்ஜாம் வரை பக்கோடாவில் இருந்து ஓமப்பொடி வரை காலியாக காலியாக போட்டுக் கொண்டே இருப்போம். எண்ணெயை மறுநாள் உபயோகப்படுத்த மாட்டோம். முடியும் போது மீந்துகிற எண்ணெயை வெளியில் கொடுத்து விடுவோம். போடும் சரக்கு 90 சதவீதம் அன்றே தீர்ந்து விடும். இரண்டு நாளைக்கு மேல் இங்கு எந்தப் பொருளும் பார்க்க முடியாது. அதனால் தான் இங்கு கஸ்டமர்கள் வருகிறார்கள். சுற்று வட்டாரம் குன்றத்தூரில் இருந்து தாம்பரம் வரை புது புதுசா வந்து கொண்டிருப்பார்கள்.  ஒருமுறை வாங்குவோர், அவரை சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இங்குதான் அனுப்பி வைப்பார்.

கண்கவர் இனிப்பு பூந்தி.

இங்கிருந்து மலேசியா, அந்தமான், சிலோனுக்கு  பலகாரங்கள் செல்கின்றன.  எங்கள் முதலாளி எங்களுடன் உழைத்து எல்லா வேலையும் சேர்ந்து செய்வார். எங்கள் கஸ்டங்களை கேட்டு தீர்த்து வைப்பார். வீட்டு விஷேசத்துக்கு இங்கிருந்துதான் இனிப்பு காரங்களை எடுத்து செல்வோம். அதற்கு எந்த தடையும் சொல்வதில்லை. எல்லோரும் மனம் ஒன்றி வேலை செய்வதால்தான் கடை வியாபாரமும் நிலைத்து உயர்கிறது” என்கிறார்.

ஓயாமல் வந்து கொண்டே இருக்கும் கஸ்டமர்களுக்கு சளைக்காமல் அயிட்டங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார் ரகு. “மாலை 7 மணியிலிருந்து 10 மணி வரை கொடுத்து மாளாது. வந்து கொண்டே இருப்பார்கள். பல அயிட்டங்கள் 2 மணி நேரத்தில் காலியாகி விடும். 9 மணிக்கு மேல வந்தால் விரும்பிய அயிட்டங்கள் கிடைக்காது. வேலை முடித்து வீட்டுக்கு செல்பவர்கள் 10, 20 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு 30 ரூபாய்க்கு வீட்டுக்கு குழந்தைகளுக்கு வாங்கி செல்வார்கள். ஐம்பது ரூபாய் வைத்தால் குடும்பத்தினரின் பலகார ஆசை தீர்ந்து போகும்.

வரவங்களுக்கு பலகாரம் கொடுத்து ஓயவே ஓயாது… வேலையை விவரிக்கும் ரகு.

பள்ளி செல்லும் சிறுவர்கள்கூட பத்து ரூபாயை எடுத்து வந்து விரும்பியதை வாங்கி சாப்பிடுவார்கள். ஒருநாளைக்கு சராசரியாக 30,000-க்கு குறையாமல் கல்லா கட்டுவோம். ஆனால் அப்பணத்தை தண்டல்காரிடமே முதலாளி கொடுத்து விட்டு சென்று விடுவார். இதுநாள் வரையில் ஒரு இரண்டு லட்ச ரூபாய் வைத்து சொந்தப் பணத்தில் சரக்கு வாங்குவதே இல்லை. அதற்கு காரணமும் எங்களுக்கு புரியவில்லை.

கேட்டால், “எங்கடா சேர்த்து வைக்கிறது. வரவுக்கும் செலவுக்கும் சரியாப் போகுது. விலைவாசி முன்ன மாதிரி இல்ல. கொஞ்ச லாபம் பாக்குறதே முடியல. ஏதோ கஸ்டமருங்க குறையாம வந்துனு போயினு இருக்காங்களே  அது போதும். லாபத்தை பார்த்தா மத்தவங்க மாதிரி கடையை மூடிட்டு போக வேண்டியது தான்” என்று சொல்வர். காலையில் தண்டல் வாங்கி சரக்கை விற்பது, மாலை தண்டல்காரரிடம் திருப்பி கொடுப்பது என்று இப்படியே போகிறது” என்று சொல்லி அலுத்துக் கொள்கிறார் ரகு.

கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

நாகலட்சுமி

நாகலட்சுமி

நான் கல்யாணம் பண்ணிகிட்டு வந்துல இருந்து இங்கதான் வாங்கிட்டு இருக்கேன். வீட்டுக்கு பக்கத்துலயே இருக்கதால தினமும் எதாவது வந்து வாங்கிட்டு போவேன். உடம்புக்கு எந்த கெடுதியும் இது வரைக்கும் வந்ததில்ல. எல்லா பொருளும் நல்லா இருக்கும். நம்பிக்கையா வந்து வங்கிட்டு போவேன்.

மணிகண்டன்

சின்ன வயசுல இருந்து சாப்பிடுறேன். பக்கோடா தான் ரொம்ப புடிக்கும். பத்து ரூபா அதிகமா இருந்தா வேற எதனா வாங்கி சாப்பிடுவேன். இல்லனா வீட்டுக்கு வாங்கிட்டு போவேன்.

ராஜா

எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. இங்க வந்து ஆறு மாசம்தான் ஆகுது. இந்த கடையில நாலு மாசமா பலகாரம் வாங்கிட்டு இருக்கேன். காரணம், இங்க தரமா இருக்கு. பல இடங்கள்ல பளப்பளனு இருக்கும். ஆனால் நல்லா இருக்காது. சிக்கு நாத்தம் அடிக்கும். இங்க அப்படி இல்ல. பாக்கத்தான் கடை அழுக்கா இருக்கு. ஆனா எந்த பிரச்சனையும் வரதில்ல. நம்ம கண்ணு முண்ணாடியே செய்யிறாங்க. எல்லாம் உடனே உடனே காலி ஆகிடுது. அதோட இல்லாம நாம வாங்குற எந்த பொருளா இருந்தாலும் கூடதான் குடுப்பாங்களேயொழிய குறைவா இருக்காது. நம்ம மனசுக்கு நிறைவா கொடுப்பாங்க. அதால இங்க வாங்குறதுல ஒரு திருப்தி இருக்கு.

பார்வதி

நான் சக்தி நகர்ல இருக்கேன். இரண்டு நாளைக்கு ஒருமுறை வந்து வாங்கிட்டு போவேன். பசங்க விரும்பி சாப்பிடுறாங்க. அவங்களுக்காகவே வந்து வாங்கிட்டு போவேன்.

நாகம்மாள்

எனக்கு பசங்க இல்ல. ஒரு முப்பது வருஷமா இங்க முறுக்கு, பக்கோடா, பூந்தி வாங்கி சாப்பிடுறோம். என் வீட்டுக்காருக்கு புடிக்கும். தினமும் வந்து வாங்கிட்டு போறேன். குறைவான விலை. மனசுக்கு திருப்தியா சாப்பிடுறோம்.

கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !

0

மோடி ஆட்சியில், பசு குண்டர்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் கும்பல் வன்முறைகளில் ஈடுபடுவதும், மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொல்வதும் அரசின் ஒரு திட்டமாகவே செயல்படுத்தப்பட்டது. பசு குண்டர்களின் இந்த செயல்பாடுகளால் மத – சமூக நிலைகளைக் கடந்து பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் மாட்டிறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதியில்  முக்கிய இடத்தில் இருந்த இந்தியாவின் நிலை, 2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபின் மிகவும் மோசமான நிலைக்கு வந்து விட்டது.  இது இந்தியாவின் வெளிநாட்டு நாணய இருப்பைக் கடுமையாக பாதித்திருக்கிறது என்பதும் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2010-11 லிருந்து 2017-18 ஆண்டுகள் வரையிலான புள்ளிவிவரங்கள் தெரிவித்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகிறது.

பசுக்கள் இறைச்சிக்காகக் கடத்தப்படுவதைத் தடுப்பது என்ற பெயரில் அகில பாரத இந்து மகாசபையைச் சேர்ந்த குண்டர்கள், உ.பி. மாநிலம், அலிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தி நடத்தும் ரவுடித்தனம்.

மோடி ஆட்சிக்கு வரக்கூடிய சூழல் உருவான 2010-ம் ஆண்டிலிருந்து மோடி ஆட்சிக்கு வந்த பிறகான ஐந்தாண்டு காலம் வரை பசு குண்டர்கள் 123 வன்முறைகளை நிகழ்த்தியுள்ளனர்.  வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துத்துக்கள் பசு புனிதமானது என கருதுகின்றனர். இந்துத்துவ கும்பல் பசுவை முன் வைத்து, தொடர்ந்து மக்கள் மத்தியில் இத்தகைய கருத்துக்களை விதைத்து வருகிறது. இந்தியாவில் உள்ள 99.38% சதவீத பசுக்கள் பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்கிறது இந்தியா ஸ்பெண்ட் புள்ளிவிவரம். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பசு வதை சட்டம் அமலில் இருக்கிறது. பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு பசு பாதுகாப்புக்காக தேசிய ஆணையத்தை அறிவித்தது.

“அரசுகளின் இத்தகைய கொள்கை முடிவுகளும் பசுக் குண்டர்களின் தாக்குதல்களும் இந்தியாவின் கால்நடை வர்த்தகத்தையும் கிராமப்புற பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளன.  அதுபோல இவர்களை சார்ந்திருக்கிற இறைச்சி ஏற்றுமதி தொழிலும் தோல் தொழிலும் பாதிப்புகளை சந்தித்திருக்கின்றன” என்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

உலகிலேயே அதிக அளவு இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடான இந்தியா, ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் அளவுக்கான எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்த ஏற்றுமதி குறைய ஆரம்பித்துவிட்டது.

அதிக அளவில் இறைச்சி ஏற்றுமதி செய்யும் மாநிலமான உத்தர பிரதேசத்தில்  இந்துத்துவ ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் ஆட்சியின் கொள்கை முடிவுகளால், இந்த நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.  2013-14 -ம் ஆண்டில் எருமை இறைச்சி ஏற்றுமதி 35.93 சதவீதமாக இருந்தது. 2014-15 ஆண்டில் 9.88 சதவீதமாக வீழ்ச்சியைக் கண்டது. 2016-17-ம் ஆண்டில் 3.93 சதவீதமாகவும் 2017-18-ம் ஆண்டில் 3.06 சதவீதமாகவும் விழ்ச்சியடைந்தது.

உலகின் தோல் ஏற்றுமதியில் இந்தியா 13% பங்காற்றுகிறது. ஆண்டுக்கு 12 பில்லியன் டாலர் வருமானம் தரும் தோல் தொழிலில் 48% ஏற்றுமதியில் மட்டும் கிடைக்கிறது. தோல் தொழிலை நம்பி 3 மில்லியன் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதில் 30% பெண்கள் என்கிறது இந்த ஆணையத்தின் அறிக்கை.

2017-ம் ஆண்டின் அரசின் அறிக்கை இந்தியாவின் ஆடை மற்றும் தோல் தொழில் துறை உலகளாவிய போட்டியில் பங்கேற்கக்கூடியதாகவும் பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கக்கூடியதாகவும் உள்ளதாக கூறியது. அதேவேளையில் அந்த அறிக்கை, அதிக அளவிலான கால்நடைகள் உள்ள இந்தியாவில் கால்நடை தோல் ஏற்றுமதியின் அளவு மிகவும் குறைவு என்றும் கால்நடைகள் வெட்டுவதில் உள்ள பிரச்சினை காரணமாகவே இந்த நிலை என்றும் கூறியது.

படிக்க:
மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை
ராஜஸ்தான் : ரக்பர்கானைக் கொன்ற இந்துமதவெறியர் + போலீசுக் கூட்டணி

பசு குண்டர் படையின் தொல்லைகள் காரணமாக நூற்றுக்கணக்கான வெட்டு கூடங்கள் மூடப்பட்டதையும் அந்த அறிக்கை சொன்னது. 2013-14 -ம் ஆண்டுகளில் 18% வளர்ந்த தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி 2014-15 -ம் ஆண்டுகளில் 9% குறைந்து, 2015-16 ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்து எதிர்மறை அளவுக்கு சென்றுவிட்டது. -9.86 % இருந்த அளவு 2017-18 ஆண்டுகளில் 1.4% அதிகரித்திருக்கிறது. அரசின் புள்ளிவிவரம் இவ்வாறு தெரிவிக்கிறது.

“இந்துத்துவ தலைவர்கள் பசுக்கள் மீதான அதீதத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்கள் சார்ந்த இந்துக்களுக்கும் இந்த நாட்டுக்கும் சேதத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பியல் நிபுணரும் எழுத்தாளருமான எம்.எல். பரிஹார்.

நாட்டின் முதல் பசு அமைச்சர்.

கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆளும் பாஜக அரசுகள் பாதுகாப்பு அளித்து வருகின்றன.

பாரம்பரியமாக இறந்த கால்நடைகளின் உடல்களை அகற்றுகிறவர்களாகவும் அவற்றின் தோலை உரிப்பவர்களாக தலித்துகள் உள்ளனர். முசுலீம்கள் பாரம்பரியமாக வெட்டுக்கூடங்கள் அல்லது கசாப்புக் கடைகளை வைத்திருப்பவர்களாகவும் இறைச்சி விற்பவர்களாகவும் உள்ளனர். எனவே, பசு பாதுகாப்பு குண்டர்கள் இவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக அறிக்கை பேசுகிறது.

இந்த காவி குண்டர்களின் வன்முறைகளில் முசுலீம்கள் 56 சதவீதமாகவும் தலித்துகள் 10 சதவீதமாகவும் 9 சதவீதம் இந்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஃபேக்ட் செக்கர் இணையதளம். குண்டர்களின் தாக்குதல் உயிரிழந்த 78% பேர் முசுலீம்கள் என்பது இந்துத்துவ காவிகளின் உண்மையான நோக்கத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

அரசுகளின் கண்டுகொள்ளாத தன்மையால் இறைச்சியை நம்பியுள்ள இந்துக்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. அதாவது விவசாயிகள், கால்நடை பண்ணை வைத்திருப்போர், கால்நடை வர்த்தகர்கள்,  இறைச்சி வர்த்தகர்கள், தோல் தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்தியாவின் 55%  மக்கள் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு 17% வழங்குகிறது. 190 மில்லியன் பசுக்களும் 108 மில்லியன் எருமைகளும் உள்ள இந்தியா, உலகிலேயே அதிக அளவிலான பால் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. விவசாயிகள் இந்த கால்நடைகளை பராமரித்து வர்த்தகம் செய்து தங்களுடைய வருமானத்தையும் உணவு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால், பசு பாதுகாப்பு குண்டர்கள் மொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குரியாகியுள்ளது. 2010-11 -ம் ஆண்டுகளில் ராஜஸ்தானில் 10 கால்நடை சந்தையில் 56 ஆயிரம் பசுக்களும் காளைகளும் கலந்துகொண்டன. இதில் 31 ஆயிரம் கால்நடைகள் விற்பனையாகின. ஆனால், 2016-17 ஆண்டுகளில் 11 ஆயிரம் கால்நடைகள் மட்டுமே சந்தைக்கு வந்தன. அவற்றில் 3 ஆயிரம் மட்டுமே விற்பனையாகின.

படிக்க:
மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு
மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்

வேளாண்மை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் வயதாகும் கால்நடைகள் பிரச்சினையும் விவசாயிகளை தங்களுடைய பசுக்களை கைவிடும் நிலைக்கு தள்ளுகின்றன. அவற்றை பராமரிக்க விவசாயிகளால் முடிவதில்லை. இது தெருவில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் தெருக்களில் அலையும் கைவிடப்பட்ட பசுக்களால் விவசாயிகளின் விளைச்சல்கள் சேதமாகிறது என்பதும் இந்த இழப்புகளின் வரிசையில் சேரும்.  இவற்றை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று மாநில அரசுகள் மருத்துவம் மற்றும் கல்வி தொடர்பான அடிப்படை பணிகளுக்கு செலவிட வேண்டிய தொகையை மாட்டு கொட்டகைகள் கட்டவும் அவற்றை பராமரிக்கவும் செலவிடுகின்றன.

எனவே, கால்நடைகளை சார்ந்திருக்கிறவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும் மத, சாதி பாகுபாடுகளை உருவாக்கும் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவும் அரசுகளை மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் இராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தை ஆண்ட பாஜகவை அம்மாநில மக்கள் தூக்கியெறிந்தனர்.  உண்மையில், இந்துத்துவ மோசடி பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த காரணத்தாலேயே, வலுவாக இருப்பதாக சொல்லிக்கொண்ட இடத்திலேயே காவிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.  மேலே சொல்லப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள், கிராமப்புற பொருளாதாரத்தை காவி வீணர்கள் மிக மோசமான நிலையில் சீரழித்திருப்பதை உணர முடிகிறது.


கலைமதி
நன்றி: ஸ்கரால்

நூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி ?

மிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வேரூன்றச் செய்வதற்கு அதன் நிறுவனத் தலைவர் ஹெட்கேவர், மராத்திய சித்பவனப் பார்ப்பன கும்பல் ஒன்றை அனுப்பி வைத்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பொருத்தவரை,

“1980-இன் ஆரம்பம் வரை மிகவும் பலவீனமான மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்தது. ஆனால் இன்று, சங்கம் மிக வேகமாக வளரும் பிராந்தியங்களில் ஒன்றாக இது இருக்கிறது. அதோடு சங்கத்தின் சகோதர அமைப்புகள் அனைத்தினது வேலையும் நல்ல முன்னேற்றகரமானதாக உள்ளது. எங்கும் இந்து வேட்கை பற்றிக் கொண்டு வருகிறது. உண்மையில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கிறது.” (தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து எழுச்சியின் கதை, ஆர்.எஸ்.எஸ். வெளியீடு, பக். 4-5).

 “உடைப்பதற்குக் கடினமான ஒரு கொட்டையாகத் தமிழ்நாடு உள்ளது” என்று ஆர்.எஸ்.எஸ்.-ன் பொதுச் செயலாளராக இருந்த தேவராஸ் சித்தரித்தார்; அந்தக் கொட்டை உடைபட உடன்பாடுவதாகத் தெரிந்தது. 1980-81-ல் ஏராளமான புதிய குழுக்கள் பல புதிய இடங்களில் செயல்படத் தொடங்கின, அப்போதுதான் சங்கத்தின் வேலையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது” என்று ஆர்.எஸ்.எஸ். கூறிக் கொள்கிறது. (நூலிலிருந்து பக்.3)

ஒரு 40 ஆண்டு காலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தத் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாமல் தடுமாறி இருக்கிறது. அதன் பின்னர் சில திருப்பு முனைகள் ஏற்பட்டு வேகமான வளர்ச்சி கண்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வுடன் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தேர்தல் கூட்டு வைத்துக் கொண்டதுதான் என்று பார்ப்பது மேலோட்டமான பார்வை. அதே போல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர்கள் இந்த மண்ணில் தவமிருந்ததன் பலன் என்று கூறுவது ஒரு புனிதப் போர்வை போர்த்தும் செயல்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு உண்மை நன்றாகவே தெரியும். பெரியார் தலைமையிலான பகுத்தறிவு – சுயமரியாதை இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். இந்த மண்ணில் வேரூன்றித் தழைப்பதற்கு பெருந்தடையாக இருந்தது என்பதை அறிவார்கள். இதை இந்து, சடங்கு – சாத்திரங்கள், இந்தி, பார்ப்பனியம், சமசுக்கிருதம், இதிகாசம் – புராணங்கள் ஆகிய வடக்கிலிருந்து வந்தவை அனைத்தையும் புறக்கணிக்கும்படி நடத்தப்பட்ட வெறுப்பு இயக்கம் என்று அவர்கள் சித்தரிக்கிறார்கள்.( நூலிலிருந்து பக்.6)

”பித்தலாட்டக்காரர்களின் கடைசிப் புகலிடம் தேச பக்தி” என்று முதலாளிய அறிஞர் ஜான்சன் கூறினார். ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிச – பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு இது முழுமையாகப் பொருந்தும். பார்ப்பன மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது நாட்டிற்கு – தேசத்திற்கு எதிரான துரோகம் என்று சித்தரிப்பதன் மூலம் நாட்டுப்பற்று – தேசப்பற்று என்பதைக் கேடாகப் பயன்படுத்துவதைத் தமது மூல உத்தியாகக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, தேசதுரோக முத்திரை குத்தி தனது எதிராளிகளை ஒழிப்பது எளிய வழி என்று கண்டுள்ளனர். இதோடு கூடவே தனக்கு எதிரானவற்றை அந்நிய ஊடுருவல், அந்நிய ஆக்கிரமிப்பு, அந்நிய சதி என்று முத்திரை குத்தி தேசியவெறியூட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். (நூலிலிருந்து பக்.7-8)

படிக்க:
காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தப்பிப் பிழைத்தது எப்படி ?
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னை ஒரு தேசியவாதப் பண்பாட்டு, சமூக இயக்கம் என்று கூறிக்கொள்கிறது. அதேபோல பாரதிய ஜனதா கட்சி தான் ஒரு சுயேட்சையான அரசியல் கட்சி என்று கூறிக்கொள்கிறது. இந்த இரண்டு கூற்றுமே உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ்-இன் ஒரு அரசியல் பிரிவுதான் பாரதீய ஜனதா கட்சி. இரண்டுக்குமே இந்து மதவெறி பாசிசக் கொள்கையான “இந்துத்துவம்” தான் வழிகாட்டும் சித்தாந்தம், இந்து ராஷ்டிரம்தான் இலட்சியம்.

பா.ஜ.க. வைப் போல வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் ஆர்.எஸ்.எஸ். போன்றதொரு பாசிச அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்டு, பின்னால் இருந்து இயக்கப்படும் உயர்மட்டத் தலைவர்களில் இருந்து உள்ளூர் பிரமுகர்களையும் அணிகளையும் கொண்டிருக்கவில்லை. சங்கப்பரிவாரங்கள் அதாவது சங்கக் குடும்பம் என்று கூறிக் கொள்ளும் பல்வேறு பிரிவு இந்துமதவெறி அமைப்புகளும் இப்படிப்பட்டவைதான்.

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளின் பின்புலமோ, வேறு பிற ஆளும் வர்க்க அரசியல் அமைப்புகளைப் போல ”லேசு”’ப்பட்டவை அல்ல. முன்னாள் – இன்னாள் அரசு உயர் அதிகாரிகள், பார்ப்பன – பனியா தரகு அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு பெற்றவர்கள் பிற ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால், மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது இவர்களை விட இந்து மதவெறி பார்ப்பன பாசிச குருமார்கள், ஆச்சாரியர்கள், சந்நியாசிகள், சாமியார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள் என்று ஒரு பெரும் கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் மட்டுமே திரட்டிவைத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கும்பலின் அரசியல் – பாசிசப் பேராசைகளுக்கு மூடுதிரையாகவும் கவசமாகவும் அவர்கள் விளங்குகிறார்கள். (நூலிலிருந்து பக்.39)

இந்திய நாட்டின் தலைசிறந்த சீர்திருத்தவாதியாகிய பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் முன்பு ஒருமுறை சொன்னார்: ”வெள்ளைக்காரன் ஒரு நல்ல காரியம் செய்தான். நெடுஞ்சாலைகளில் மைல் கல்லை நட்ட வெள்ளைக்காரன் அதில் வெள்ளையடித்து ஊர், பேர், தூரத்தை எழுதி வைத்தான். இல்லையானால் நம்ம ஜனங்க அதற்குப் போய்ப் பொட்டு வைத்து, மாலை போட்டு மைல்சாமி ஆக்கி இருப்பான்.” நமது பாமர மக்களின் பக்தி எத்தகையது என்பது குறித்து கிண்டலாகப் பேசிய ஈ.வெ.ரா.தான் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு, நாத்திகப் பிரச்சாரம் செய்து அந்த மூட நம்பிக்கையை ஒழிக்க அரும் பாடுபட்டார்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். கும்பலோ அந்தப் பாமரப் பக்தர்களிடையே நிலவும் பக்தி உணர்வை மேலும் ஆழப்படுத்தி, பரவச்செய்து தமது பாசிச அரசியல் பேராசைகளை  ஈடேற்றிக் கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. ஆகிய வகுப்புவாத மதவெறி சக்திகளை முறியடிப்பதே தமது நோக்கமென்று கூறிக் கொள்ளும் மதச் சார்பற்ற அல்லது மத நல்லிணக்க அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் பாமர மக்களிடையே நிலவும் மதம், கடவுள், பக்தி உணர்வுகளை பாதித்து விடாமல் – வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்ற அணுகுமுறையின் மூலம் அதைச் சாதித்துவிட எத்தணிக்கிறார்கள்.

ஆனால், தேவையானது ஊசி – வாழைப்பழ அணுகுமுறை அல்ல; அறுவைச் சிகிச்சை, அதாவது பாமர மக்களிடையே நிலவும் மதம், கடவுள், பக்தி உணர்வை வேரோடு பிடுங்கி எறிந்து விடவேண்டும். பகுத்தறிவு சுயமரியாதை, நாத்திகம் என்கிற விதையை பாமர மக்களிடையேயும் விதைக்க வேண்டும். (நூலிலிருந்து பக்.40)

நூல்: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி ?

(புதிய ஜனநாயகம் 2003 ஜூலை முதல் நவம்பர் வரையிலான இதழ்களில் (தொகுதி: 18, இதழ் எண்: 9 முதல் தொகுதி: 19, இதழ் எண்: 1 வரை) வெளியான தொடர் கட்டுரையின் மறுமதிப்பு.)

வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம்,
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
தொலைபேசி: 99623 90277

பக்கங்கள்: 40
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: commonfolks | marinabooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு ! மோடி கலர்கலரா ரூபா நோட்டடிச்சா போதுமா ?

பிற்பட்ட வகுப்பினருக்குக்கான கல்லூரி அரசு மாணவர் விடுதி. சென்னை கிண்டி பேருந்து நிலையத்தை ஒட்டி பாழடைந்த வளாகம். பராமரிப்பின்றி பேய் பங்களா போன்று காட்சியளித்தது. விடுதிக்குள் மிகவும் தயங்கித் தயங்கி சென்றோம். முட்செடிகளுக்கு மத்தியில் ஒரு ஒத்தையடிப் பாதைதான் அதற்கான வழி. காலை நேரம்.

ஒரு மாணவர் வராந்தாவில் குத்துக்காலிட்டு பல் துலக்கி கொண்டிருந்தார். அவரிடம் அறிமுகப்பபடுத்திக் கொண்டோம். கேள்விகளைக் கேட்ட மாத்திரத்தில் “இருங்க இருங்க நீங்க கேட்ட கேள்வி எல்லாம் பதில் சொல்றவங்க அங்க, இருக்காங்க” என்று விடுதி அறைக்குள் அழைத்தார்.

அன்று விடுமுறை நாள் என்பதால் அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் பாதி சோம்பலிலும் பாதி அரட்டையிலும் காலை நேர வேலையில் முழ்கியிருந்தனர். அவர்களிடம் பேசினோம். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மாணவர்களாகிய நீங்கள் யாரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? உங்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா? உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? இங்கு, விடுதியில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? உங்கள் படிப்பு பிரச்சினைகள் என்ன? அவையெல்லாம் வரும் தேர்தலுக்கு பிறகாவது கொஞ்சமாவது தீரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா என்று வினவினோம்.

படிக்க:
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !

அவர்கள் நம்மை வித்தியாசமாகப் பார்த்தனர். சார் எங்கள, காலையிலலே வெறுப்பேற்றாதீர்கள் நாங்க கொலவெறியில் இருக்கிறோம். அப்படி பெரிய கனவு எல்லாம் எங்களுக்கு இல்லை! படுத்தா கொசுக்கடியில் தூக்கமே வரல! இதுல எங்களுக்கு எப்படி இப்படிப்பட்ட கனவெல்லாம் வரும். நாங்கள் தங்கி படிக்க இந்த விடுதியாவது எங்களுக்கு கிடைத்ததே அதுவே பெரிய பாக்கியம்.

அதோ, அங்கே வாங்கி மூடி வைத்து இருக்கிறோம் பாருங்க அதுதான் எங்க உணவு. எங்களுக்கு பேய் பசி எடுக்கும் போது தான் அதை சாப்பிட முடியும். சாதாரணமாக பசி எடுக்கும்போது அந்த சோறு எங்க தொண்டைக்குள் போகாது. ஏன்னா? அது அவ்வளவு ’ருசி’யா இருக்கும்! இத விட்டா எங்களுக்கு இங்க வேறு வழி கிடையாது. காலை ஏழு மணி, மாலை ஏழு மணிக்கு என்று இரண்டு வேளைக்கு மட்டும்தான், இந்த சோத்தை எங்களுக்கு போடுவாங்க அப்போ அதை வாங்கி வைத்தால் தான் அன்றைக்கு எங்களுக்கு சாப்பாடு. இல்லையென்றால் முழுக்க பட்டினிதான். மற்றபடி, கையில் காசு இருந்தா வெளியில் வாய்க்கு ருசியா சாப்பிடுவோம். காலையில் இருபது ரூபாய் இருந்தால் இட்லி சாம்பார். மதியம் 30 ரூபாய் இருந்தால் பொட்டலம் சோறு ருசியாக கிடைக்கும். தினமும் அதுக்கு நாங்க எங்க போறது ?

இங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காலேஜ்ல படிக்கிறோம். ஒருத்தன் மயிலாப்பூர் விவேகானந்தா காலேஜ். இன்னொருத்தன் வடசென்னை அம்பேத்கார் காலேஜ். ஒருத்தன், நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ். அவன், தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக். இதுக்கு போற பஸ் பாஸ் விலையும் கவர்மெண்ட் ஏத்திடிச்சி. போன வருஷம் (2018) மாசம் 130 ரூபாய்க்கு சென்னை முதல் திருவள்ளூர் வரைக்கும் பஸ் பாஸ் கொடுத்தாங்க. உதவியாக இருந்தது. இப்போ அதையும் புடுங்கிட்டாங்க. இப்போ அதே பஸ் பாஸ் 300 ரூபாய். விலை ஏத்திட்டாங்க. நாங்க எங்க ஊருக்கு போறது. தனியா டிக்கெட் வாங்கவேண்டி இருக்கு. இப்ப, சனி ஞாயிறு கூட ஊருக்கு போறது கிடையாது. யோசனை பண்ண வேண்டி இருக்கு. இந்த லட்சணத்துல  நாங்க பிஜேபிக்கு ஓட்டுப் போடனுமா?

படிக்க:
ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து
தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் ! பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை !

தமிழிசை அக்காவ  நாங்க சின்ன பசங்க ஏடாகூடமா சொல்லிட்டம்மா அது தப்பாய்டும். நீங்களே இவனுங்க கிட்ட கேளுங்க என்று மற்ற மாணவர்களைப் பார்த்து, சொல்லுங்கடா என்றார்கள். மாணவர்கள் கோரசாக ‘’ஐயோ நாங்க பி.ஜே.பி.க்கு ஓட்டு போட மாட்டோம், போட மாட்டோம்’’ என்று ஒரு  பாட்டாகப் பாடினார்கள். சார், எங்க காலேஜ் பசங்க மோடிக்கு மீம்ஸ் போட்டு தாக்குனானுங்களே பாக்கலையா? மோடி ஊர் சுத்தும் போது கலர்கலரா ஜிப்பா கவுன் போடுற மாதிரி, அரசாங்கத்துலேயும் அதே மாதிரி கலர்கலரா ரூபா நோட்டும் அச்சடிச்சாங்களே அத நாங்க மீம்ஸ்-சா போட்டு ஓட்டுனோமே அதை நீங்க பாக்கலையா? என்று கலாய்த்தனர்.

பக்கத்தில் இருந்த இன்னொரு மாணவர், “பல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க, மோடி  ஆளுங்க. இதெல்லாம் தமிழ்நாட்டுக்காரணுங்க மறந்துவிடுவானு நினைக்கிறாங்களா?” என்றார்.

ஏதோ அவசர வேலையை மறந்தவர்கள் மாதிரி, “நாங்க வெளியே போகணும் ஆள விடுங்க” என்று பேச்சை நிறுத்தினர்.

ஏனென்று கேட்ட போது”நாங்க கேட்டரிங் வேலைக்கு போகணும் சனி ஞாயிறு இந்த லீவுலதான் எங்க செலவுக்கான வருமானத்தை பார்க்க முடியும். இப்போ, இந்த 10 பேரும் கல்யாண மண்டபத்துல சப்ளையராக போய் வேலை செய்யப் போறோம்  அதுல கெடைக்கிற பணத்துல தான் காலேஜ் பீஸ் கட்டுவோம் எங்க டெய்லி செலவுக்கு வச்சுக்கோம். வீட்டுக்கு அதுல கொஞ்சம் மிச்சம் பிடித்து அனுப்புவோம். அந்த பணத்தைக் கொண்டு அவர்களுக்கு தேவையானதை ஏதாவது வாங்கி அதை எங்ககிட்ட சந்தோசமா சொல்லுவாங்க. வாரக்கடைசியில வேல இல்லன்னா காலேஜ் நாள்லயே மாலை 6 to 10  வரைக்கும் வேலைக்குப் போவோம், அதுக்கு 200 ரூபா கெடைக்கும்.

நாங்க தறிக்காரர்கள் குடும்பம் சார். ஏழைங்க! இப்ப தறி தொழிலும் நொடிஞ்சிபோச்சு. குடும்பம் நடத்தவே ரொம்ப கஷ்டப்படுறாங்க. இந்த லட்சணத்துல நாங்கள் எலக்சனுக்கு பிஜேபிக்குனு எப்படி சார் ஓட்டு போடுவோம்? இதெல்லாம் பிஜேபி கட்சி நடத்துற முதலாளிங்களுக்கு தெரியாது,  நாங்க வர்றோம்… சார்”,என்று சிரித்துக் கொண்டே விடைபெற்றனர்.

  • நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்