Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 345

ஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை

0

லகம் முழுவதும் பருவ நிலை மாற்றத்தால் ஒரு சில இடங்களில் அதீத மழையும், மேற்குலக நாடுகளில் அதீத வெப்பமும், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான வறட்சியும் ஏற்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போர் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டல் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானும் இதற்குப் பலியாகி வருகிறது.

தெற்கு சூடான் நாட்டில் நிலவிவரும் அரசியல் ஸ்திரமின்மையால், எதிர்வரப்போகும் பஞ்சத்திலிருந்து தங்களின் கால்நடைகள்  மற்றும் தங்களின் உணவுப் பாதுகாப்பைக் குறைந்தபட்சமாவது உறுதிசெய்யும் நோக்கத்துடன் அரசாங்கத்தை எதிர்பாராமல் நீர்நிலைகளைத் தாங்களே தூர்வாரி வருகின்றனர் பொதுமக்கள்.

தெற்கு சூடானின் ஜோங்லே மாநிலத்தில் ருவார் லீக் எனும் கிராமம் தற்போது நிலவிவரும் கடும் வறட்சியின் பாதிப்பில் சிக்குண்டுள்ளது. தண்ணீர் இருந்த இடங்களெல்லாம் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுகிறது. கால்நடைகளை வளர்த்து வருபவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் கால்நடைகளை ஓட்டிச்சென்றால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலையில் இருக்கின்றனர்.

படிக்க:
ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் !
பாகிஸ்தான் நிரம்பிவிட்டது நிலவுக்குச் செல்லுங்கள் ! – அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டும் கேரள பாஜக

இப்போது அவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு, குளம், குட்டைகளைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தங்கள் கால்நடைகளுக்கு அருகாமையிலேயே தண்ணீர் கிடைக்கும் என்கிறார் ஜேம்ஸ் ஜாங்கு நியாங்.

தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரின் விளைவாக பாரிய அளவிலான மக்கள் கொல்லப்பட்டதோடன்றி, மருத்துவம், தண்ணீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்துமே சீர்குலைந்துவிட்டன.

(முகப்புப் படம் : ஜோங்லே மாநிலத்தின் ருவார் லீக் கிராமத்தினர் கடுமையான பஞ்சத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள குளம் ஒன்றைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.)

ஜேம்ஸ் ஜாங்கு நியாங், வயது 55 சிறு குட்டையுடன் ஊடாக நடந்து வருகிறார். வறட்சி அதிகமாகி இந்தக் குட்டை வறண்டு போகும்போது, இதை நம்பி வாழும் மக்கள் அனைவரும் தண்ணீரைத் தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஜேம்ஸ் ஜாங்கு நியாங் தன்னுடைய கால்நடைகளின் ஊடாகச் செல்கிறார். உள்ளூரிலேயே அவற்றிற்குத் தண்ணீர் கிடைக்கும்பட்சத்தில் அவை பாதுகாக்கப்பட்டுவிடும் என்கிறார். கடந்த வருடப் பஞ்சத்தில் நிறைய கால்நடைகள் தண்ணீரின்றி மடிந்து விட்டன. என்னிடம் எத்தனை கால்நடைகள் இருக்கின்றன என எண்ணுவதேயில்லை, அப்படி எண்ணும்போது அவற்றில் ஒன்று இறந்துவிடும் என்ற மூடநம்பிக்கை இங்கு நிலவுகிறது என்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்தக் குட்டையைத் தூர்வாரும் பணியைத் தொடங்கிவிட்டோம். இதனால் கூடுதல் தண்ணீர் சேர்ந்து என்னுடைய கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்போகிறது, மேலும் அவை காணாமல் போவதும் தடுக்கப்படுகிறது என்கிறார் ஜேம்ஸ் ஜாங்கு நியாங்.

மண்வெட்டி, கோடரிகளுடன் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 316 பேர் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

கொத்தி எடுக்கப்பட்ட மண்ணை கையாலேயே வாளியில் அள்ளிப்போடும் பெண். 20 நாட்கள், 80 மணி நேர வேலை என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்த வேலையை முடிக்கும் பட்சத்தில் 50 கிலோ சோளம், 5 கிலோ பட்டாணி மற்றும் 3 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்.

ஆன்யீத் காரங் (ஆரஞ்சு நிற உடையணிந்திருப்பவர்) குட்டையில் உள்ள காலி டப்பா ஒன்றை அப்புறப்படுத்துகிறார். 2013-ம் ஆண்டு நடந்த சண்டை ஒன்றில் தன் கணவரை இழந்த தன் போன்ற பெண்களுக்கு இந்தக் குட்டை தூர்வாரப்படுவது ஆறுதலைத் தரும் என்கிறார்.

கால்நடைகள் அடைக்கும் பட்டியில் பொருட்களைக் காய வைக்கிறார் காரங்.  “என்னுடைய மகன்கள் வீட்டைப் பழுதுபார்ப்பதிலும், புணரமைப்பதிலும் குறியாக உள்ளனர். இதனால் என்னுடைய கால்நடைகள் கவனிப்பாரின்றி கிடக்கின்றன.” என்கிறார்

சக கிராமவாசியுடன் உரையாடும் காரங். இந்தக் குட்டையைத் தூர்வாருவதால்   “என்னுடைய கால்நடைகளுக்கு வறட்சி காலத்தில் தண்ணீர் கிடைக்கும். எங்கள் குடும்பத் தேவைகளுக்கும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வோம்.”

தன்னுடைய பசுமாட்டின் மேல் சாம்பலைத் தடவும் ருவார் லீக் கிராமவாசி ஒருவர். கால்நடைகளை நீண்டதூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது என்பது இங்கு மிகவும் ஆபத்தான காரியமாகிறது. “திருடர்களால் நீங்கள் கொல்லப்படலாம் அல்லது உங்கள் கால்நடைகள் திருடப்படலாம் என்ற அசாத்திய சூழல் நிலவுகிறது” என்கிறார் சீமோன் அன்யாங் கொர்யோம்.

ஜேம்ஸ் ஜாங்கு நியாங் மாட்டுச் சாணத்தை எரிபொருள் தேவைக்காக வெயிலில் உலர்த்துகிறார். என் கிராமத்திலேயே வைத்துப் பராமரிப்பதையே நான் விரும்புகிறேன். தொற்று நோய் பரவலைத் தடுக்கலாம், ஒருவேளை கால்நடைகள் பாதிக்கப்பட்டாலும் மருத்துவச் செலவுக்குப் பணம் ஏது என்கிறார்.

ருவார் லீக் கிராமத்தில் பால் கறக்கும் பெண் ஒருவர். வங்கிப் பரிவர்த்தனை வசதியேயில்லாத அல்லது மிகக் குறைந்த வசதி கொண்ட கிராமங்களில் கால்நடைகள் தான் ஒருவரின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

மேரி நியாஞ்ஜாக் புயோச்  வயது 35 – ஆறு குழந்தைகளுக்குத் தாயான இவர் தான் வளர்க்கும் ஆடுகள்தான் தன்னுடைய சொத்து. பணப் பரிவர்த்தனைக்கான வங்கி போன்றிருப்பது என்னுடைய ஆடுகள். குழந்தைகளைப் பராமரிக்கப் பணம் தேவைப்படும்போது ஆடுகளை விற்றுத்தான் சமாளிக்கிறேன் என்கிறார்.

தண்ணீர் கேனை சுத்தம் செய்யும் சிறுவன், அருகில் சாக்கடை நீரைப் பருகும் பசு ஒன்று – இடம் தோனவாய் கிராமம், ஜோங்லே மாநிலம்.

தூர்வாரும் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பத் தயாராகும் பெண்கள். “இந்தத் திட்டம் எங்களுக்குப் பல்வேறு வகையில் உதவி புரிகின்றது.  எதிர்காலப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான வேலைகளைச் செய்வது நிறைவைத் தருகிறது. மற்ற கிராமங்களும் இது போன்ற வேலைகளை முன்முயற்சியுடன் செய்கின்றனர்.”


தமிழாக்கம் : வரதன்
மேலும் படிக்க : aljazeera

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம்

0

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! என்கின்ற தலைப்பில் கடந்த ஜூலை-25, வியாழக்கிழமை அன்று மாலை மதுரை சோக்கோ அறக்கட்டளை அரங்கில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் ஸ்னேகா தலைமை தாங்கினார்.

சிறப்புப் பேச்சாளர்களாக மதுரை காமராஜர் பல்கலையின் மேனாள் பேராசிரியர் சீனிவாசன், பள்ளி ஆசிரியர்கள் சிவா, சரவணன் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்திற்கு திரளான மாணவர்கள் கலந்து கொண்டது ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் இந்த புதிய கல்விக் கொள்கையை முறியடித்துவிட முடியும் என்கின்ற நம்பிக்கையை தருவதாக இருந்தது. அதற்கு தகுந்தாற் போல் இந்த கல்வி கொள்கையை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்துவதாகவும், கருத்தியல் ஆயுதத்தை மாணவர்களுக்கு தருவதாகவும் சிறப்புப் பேச்சாளர்களின் உரைகள் இருந்தது.

முத்தாய்ப்பாக ஆசிரியர் சிவா பேசும்போது “இந்த வரைவு அறிக்கையின் கடைசி பத்தியில் ஒரு ரூபாய் முதல் போட்டால் பத்து ரூபாய் லாபம் கிடைக்கும் கல்வி துறையில் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது என்று கூறுவது ஒன்றே போதும் இந்த கல்விக் கொள்கை என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்படுகிறது” என்று பேசியது ஒட்டு மொத்தமாக இனி வரும் ஆண்டுகளில் நம்முடைய குழந்தைகளின் கல்வி உரிமை கானல் நீராக மறைந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை பளிச்சென்று புரியவைப்பதாக இருந்தது.

அதே போல் கருத்து கேட்பு கூட்டத்தை பகிரங்கமாக மக்களுக்கு தெரியப்படுத்தி நடத்தாமல் ரகசியமாக நடத்துவது, கோவையிலும், திருச்சியிலும் நடந்தது போல் தோழர்கள் கண்டுபிடித்து வந்துவிட்டால் உடனே “இங்கே நடப்பது கருத்து கேட்பு கூட்டம் அல்ல, துறை ரீதியான கலந்தாலோசனைதான்” என்று சமாளிப்பதையும் இதே போல் கடந்த 22 ஆம் தேதி அன்று மதுரையில் ரகசியமாக நடக்க இருந்த கருத்து கேட்பு கூட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சுவரொட்டி மூலம் மக்களுக்கு பகிரங்கமாக தெரிவித்த பின்னர் உடனே அந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்துள்ளது என்பதையும் பேச்சாளர்கள் அம்பலப்படுத்தி பேசினர்.

கூடுதலாக 26-ம் தேதி அன்று மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் நடக்க இருந்த கருத்துக் கேட்பு கேட்பு கூட்டத்தையும் துறைரீதியான கூட்டம் என்பதாக அறிவித்துவிட்டு, மக்கள் யாரும் வர வேண்டாம் என அரசே பத்திரிக்கையில் செய்தி கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டி பேசினர்.

படிக்க:
செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை ! முசுலீமாய் பிறந்ததுதான் குற்றமா ?
‘சாஹேபுக்காக’ இளம் பெண்ணைக் கண்காணித்த அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு தலைவராம் !

இறுதியாக பு.மா.இ.மு. வின் தோழர் ஆனந்த் தனது நன்றியுரையில் இந்த அரங்க கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் மற்றும் மாணவர்கள் இந்த கருத்துக்களை தங்களுடைய நண்பர்கள் உற‌வினர்கள் என அனைவரிடமும் எடுத்து செல்ல வேண்டும்; அவர்களையும் இதை எதிர்த்து போராட தயார்படுத்த வேண்டும். அதுவே இந்த கூட்டத்தை நடத்தியதன் நோக்கம் என்று மாணவர்களை அறைகூவி அழைத்தார்.

தகவல் :
பு.மா.இ.மு,
மதுரை.

வெற்றிப் பெருமிதம் உறைந்த முகத்துடன் கமிஸார் உயிர் நீத்தார் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 11

மே மாதம் முதல் தேதி கமிஸார் உயிர் நீத்தார். அவரது மரணம் ஒருவரும் கவனிக்காத வகையில் நிகழ்ந்தது. அதிகாலையில் முகங்கை கழுவித் தலைவாரிக் கொண்ட பின், முகம் மழித்த நாவிதச்சியிடம் பருவ நிலை நன்றாயிருக்கிறதா, விழா நாள் மாஸ்கோ நகரம் எப்படி காட்சி அளிக்கிறது என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி போட்டுக் குடைந்து எடுத்தார் அவர். வீதிகளில் தடையரண்கள் அகற்றப்படுகின்றன என்பதை அறிந்து மகிழ்ந்தார். பளிச்சென்று வெயில் கொஞ்சும் இத்தகைய அற்புதமான வசந்த நாளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடக்காது என்பதைக் குறித்து வருந்தி அங்கலாய்த்தார். அவர் உடல் நிலை முன்னைவிடச் சீர்பட்டுவிடுவது போலத் தோன்றியது. ஒரு வேளை அவர் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டாயிற்று.

வெகு நாட்களாகவே, அவரால் செய்தித்தாள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது முதலே, வானொலி வாங்கிச் செவிக் குழாய்கள் அவருடைய கட்டிலருகே வைக்கப்பட்டிருந்தன.

வானொலித் தொழில் நுட்பம் ஓரளவு அறிந்திருந்த க்யோஸ்தியேவ் அவற்றில் ஏதோ புத்தமைப்புகள் செய்தான். அப்புறம் அவை வார்டு முழுவதற்கும் கேட்கும் படி முழங்கின, உரக்கப் பாடின. அந்த நாட்களில் உலகினர் எல்லோரும் கேட்டு அறிந்திருந்த குரலை உடைய செய்தி அறிவிப்பாளர், காலை ஒன்பது மணிக்கு மக்கள் தற்காப்புக் கமிஸாரின் உத்தரவைப் படிக்கத் தொடங்கினார். அதில் ஒரு வார்த்தையைக் கூடக் கேட்காமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காக எல்லோரும் கப்சிப்பெற்று அடங்கிவிட்டார்கள். சுவற்றில் தொங்கிய இரு கறுப்பு வட்டக் குழாய்கள் மீதே எல்லோரது கவனமும் லயித்திருந்தது. “மாபெரும் லெனினது வெல்லரும் கொடியின் கீழ் வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!” என்ற சொற்கள் ஆர்த்தன. அப்புறமும் வார்டில் இறுக்கம் நிறைந்த நிசப்தம் குடி கொண்டிருந்தது.

“ஒரு விஷயத்தை எனக்குத் தெளிவுபடுத்துங்கள், தோழர் கமிஸார்” என்று ஆரம்பித்த குக்கூஷ்கின் திடீரென்று “தோழர் கமிஸார்” எனக் கலவரத்துடன் வீரிட்டான்.

எல்லோரும் அங்கே பார்வையை திருப்பினார்கள். கமிஸார் கட்டில் மீது நேராக நீட்டி விரைத்துக் கிடந்தார். அவரது விழிகள் முகட்டின் மேல் ஏதோ ஒரு புள்ளியில் அசையாது குத்திட்டிருந்தன. வாடி வெளிறிய அவருடைய முகத்தில் வெற்றிப் பெருமிதமும் அமைதியும் மாண்பும் துலங்கும் பாவம் உறைந்து போயிருந்தது.

குக்கூஷ்கின் அவரது கட்டிலருகே முழந்தாள் படியிட்டு, “காலமாகிவிட்டார்! இறந்து போனார்!” என்று கதறினான்.

குழப்பம் அடைந்த அறைத் தாதிகள் வார்டுக்குள் ஓடி வருவதும் வெளியே ஓடுவதுமாக அலை பாய்ந்தார்கள். நர்ஸ் பரபரத்தாள். மருத்துவர் ஓடுகிற ஓட்டத்திலேயே அங்கிப் பொத்தான்களை மாட்டியவாறு பாய்ந்து வந்தார். சச்சரவு இடுபவன், சுமுகமாகப் பழகத் தெரியாதவன் என மதிக்கப்பட்ட லெப்டினன்ட் கன்ஸ்தாந்தீன் குக்கூஷ்கின், ஒருவரையும் கவனியாமல், குழந்தையைப் போலப் போர்வையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, ஓசையுடன் மூக்கை உறிஞ்சியவாறு, தோள்களும் உடல் முழுவதுமே பதற, காலமான கமிஸாரின் மார்பு மீது சாய்ந்து குலுகுலுங்கி அழுதான்……

அன்று மாலை, இடம் காலியான நாற்பத்து இரண்டாம் வார்டுக்குப் புதிய ஆள் கொண்டுவரப் பட்டார். தலைநகரின் விமானப் பாதுகாப்பு டிவிஷனைச் சேர்ந்த சண்டை விமானி மேஜர் பாவேல் இவானவிச் ஸ்த்ருச்கோவ் அவர். மேதின விழா நாளில் மாஸ்கோ மீது பெருத்த விமானத் தாக்கு நடந்த பாசிஸ்டுகள் தீர்மானித்தார்கள். அனேக அணிகளாக முன்னேறிய அவர்களது விமானத் தொகுதி சோவியத் சண்டை விமானங்களால் தடுக்கப்பட்டு, உக்கிரமான போருக்குப்பின் பத்ஸோல் கெச்னயா என்னும் இடத்தருகே தகர்த்து வீழ்த்தப்பட்டது. ஒரே ஒரு “யூன்கெர்ஸ்” விமானம் மட்டும், சோவியத் விமான வளையத்தின் ஊடாகப் பாய்ந்து வெளியேறி மாஸ்கோவை நோக்கித் தொடர்ந்து பறந்தது. விழாக் கொண்டாட்டத்தைப் பாழ்படுத்தும் பொருட்டு என்ன நேர்ந்தாலும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இடப்பட்டிருந்த பணியை நிறைவேற்றுவது என்று அந்த விமானத்தின் ஊழியர்கள் முடிவு செய்துவிட்டனர் போல் இருந்தது. விமானச் சண்டைக் கெடுபிடியிலேயே அந்த விமானத்தைக் கவனித்துவிட்ட ஸ்தோருகோவ் அதைத் துரத்திச் சென்றார். சண்டை விமானப் படைக்கு அப்போது வழங்கப்படத் தொடங்கியிருந்த சிறந்த சோவியத் விமானங்களில் ஒன்றை அவர் ஓட்டிக் கொண்டிருந்தார். மாஸ்கோ நகர்புறத்துக்கு மேலே, தரைக்குமேல் ஆறு கிலோ மீட்டர் உயரத்தில் எதிரி விமானத்தை எட்டிப் பிடித்து, அதன் வாலருகே லாவகமாக நெருங்கி, பகை விமானத்தை இலக்கு வைத்துச் சுடுவிசையை அழுத்தினார். பிறகும் மெஷின்கன் குண்டுகளின் வழக்கமான சடசடப்பு கேட்காதிருக்கவே அவர் வியப்படைந்தார். சுடுவிசை பழுதடைந்திருந்தது.

பகை விமானம் சற்று முன்னே சென்றது. வெடி விமானத்தைப் பின்புறத்திலிருந்து காத்த இரு மெஷின்கன்களிலிருந்து அதன் வால் பகுதியால் மறைக்கப்பட்டவாறு சுடமுடியாத நடு மையத்தில் அதைத் தொடர்ந்தார் ஸ்த்ருச்கோவ். தெளிந்த மே மாதக் காலையில் மாஸ்கோ நகரம் புகைபோர்த்த சாம்பல் நிறக் குவியல்களின் தொகுதி போன்று தொடுவானில் மங்கலாகத் தென்பட்டது. ஸ்த்ருச்கோவ் அப்போதே முடிவு செய்துவிட்டார். இருக்கை வார்களைக் கழற்றி, விமான வளை முகட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜெர்மன் விமானத்தின் மேல் தானே பாயப்போவது போலத் தசைநார்களை எல்லாம் இறுக்கியவாறு பதுங்கிக் கொண்டார். தமது விமானத்தின் வேகத்தை ஜெர்மன் விமானத்தின் வேகத்துக்கு ஏற்பச் சரியாக இசைவித்துக் கொண்டு அவர் இலக்குப் பார்த்தார். கண்ணுக்குப் புலப்படாத கயிற்றினால் ஒன்றுக்கொன்று நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவை போல ஒன்றன் பின் ஒன்றாக அவை கணப்போது காற்றில் சமீபமாக மிதந்தன. பகை விமானத்தின் ஒளிபுகும் முகட்டின் ஊடாக ஜெர்மன் மெஷின்கன் வீரனின் கண்கள் ஸ்த்ருச்கோவுக்குத் துலக்கமாகத் தெரிந்தன.

ஸ்த்ருச்கோவின் ஒவ்வொரு பாய்ச்சலையும் உன்னிப்பாகக் கவனித்தவாறு, அவரது விமான இறக்கையின் ஒரு பகுதியேனும் மறைவிலிருந்து வெளிப்படாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அந்த பாசிஸ்ட். பதற்றம் காரணமாக, அவன் தன் தலைக் காப்பைக் கழற்றிவிட்டதை ஸ்த்ருச்கோவ் கண்டார். அவனுடைய நீண்ட வெளிர் நிறத் தலைமயிர் சிறு சிறு கற்றைகளாக அவனது நெற்றி மேல் விழுந்திருந்தது கூட அவருக்குத் தெரிந்தது. மெஷின்கன்னின் பெரிய இணைக் குழாய்களை ஸ்த்ருச்கோவின் பக்கமே நோக்கியவாறு, உயிருள்ளவை போன்று எதிர்பார்ப்புடன் அசைந்தன. திருடன் தன் மீது ரிவால்வரைக் குறிவைத்திருக்கும் போது தான் நிராயுதபாணியாய் இருப்பதாக ஸ்த்ருச்கோவ் கணநேரம் உணர்ந்தார். ஆயுதமற்ற தைரியசாலிகள் இத்தகைய சந்தர்ப்பங்களில் என்ன செய்வார்களோ அதையே அவர் செய்தார். தாமே பகைவன் மீது பாய்ந்து தாக்கினார் அவர். தரையில் போன்று முட்டிகளால் அல்ல, விமானத்தின் பளிச்சிடும் உந்து சக்கரத்தைப் பகை விமானத்தின் வாலுக்குக் குறி வைத்து விமானத்தை முன்னே பாய்ச்சினார்.

படிக்க:
ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?
கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்

மடாரொலி அவர் செவிகளில் படக் கூட இல்லை. பயங்கரமான உந்துதலால் வீசி எறியப்பட்டு, தான் காற்றில் தலைகுப்புற விழுவதை அவர் உணர்ந்தார். தரை அவரது தலைக்கு உயரே விரைந்தது, பின்பு ஓரிடத்தில் நிலைத்து, பச்சைப் பசேலென்று ஒளிர்ந்தவாறு அவரை எதிர்கொண்டு சீழ்கையுடன் பாய்ந்து வந்தது. அப்போது அவர் பாராஷூட்டின் வளையத்தைச் சுண்டி அதை விரித்தார். பாராஷூட் கயிறுகளில் உணர்வின்றித் தொங்குவதற்கு முன், சுருட்டு வடிவான “யூன்கெர்ஸ்” விமானத்தின் வால் உடைந்து உடல் இலையுதிர் காலக் காற்றில் மேப்பிள் இலை போலச் சுழன்றவாறு தம் அருகாகக் கடந்து கீழே சரிவதைக் கடைக் கண்ணால் கண்டுகொண்டார் அவர். பாராஷூட் கயிறுகளில் தன் வசமின்றி ஊசலாடியவாறு வந்த ஸ்த்ருச்கோவின் உடல் ஒரு வீட்டுக் கூரைமேல் தடாலென்று மோதியது. மாஸ்கோ நகர்ப்புறத்தில் விழாக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த வீதியில் அவர் நினைவற்று விழுந்தார்…….!

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 16

பெரும்பாலரான திராவிட மக்கள், சூத்திர நிலை, தீண்டாமை முதலிய ஆரியப் படுகுழிகளில் வீழ்ந்து உழல்வதற்கும், விரல்விட்டு எண்ணக்கூடிய சிறு வகுப்பினராகிய ஆரியர் சுகவாழ்வு வாழ்வதற்கும் ஆதாரமாயிருக்கிற ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் என்று கேட்டால், கற்காலத்திலிருந்து நடைபெற்று வருகிற இந்தப் பழக்க வழக்கங்களை எப்படிக் கைவிடுவதென்று திராவிட மக்களிலே பலர் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது திராவிட நாகரிகத்தின் மறுமலர்ச்சியை நாடும் நண்பர்களின் மனம் துடியாய்த் துடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சொல்லுகிற படியாவது இந்த ஆரியக் கொள்கைகளும் வழக்கங்களும் உண்மையாகவே முற்காலம் முதல் ஏற்பட்டு நடந்து வருகின்றனவா என்று பார்த்தால், அப்படியும் இல்லை.

வரலாற்றுக் காலத்தில் வாழாத வடநாட்டரசன் இராமன் இடைநாட்டு வானரர் துணைக்கொண்டு, அணைகட்டிக் கணைதொடுத்து இணையற்ற தென்னாட்டுப் பேரரசன் இராவணனை அழித்த செய்தி, இதிகாசப் பெயரால் இயம்பப்படுகிறது.

முற்காலத் திராவிட மக்கள் இவ்வித ஆபாசமான, இழிவையே தரும், தன்மானத்தைக் கெடுக்கும் மதச் சடங்குகளையும் சாதிக் கட்டுப்பாட்டையும் கையாண்டதில்லை. அக்காலத்திய திராவிட நாகரிகம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் உயர் தனி நாகரிகமாயிருந்தது. இவையெல்லாம் சரித்திர ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உண்மைகள்.

ஆரிய நூலாசிரியர் சிலரும், இந்த உண்மையை ஒருவாறு எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

அவற்றுள், ஒரு சிறிய அத்தாட்சியை இங்கே எடுத்துரைக்க விரும்புகிறோம்.

விஜய நகரம் மகாராஜா கல்லூரிச் சரித்திரப் பண்டிதர் தோழர் எம்.எஸ்.இராமசாமி ஐயங்கார் எழுதியுள்ள (மதுரை ஜில்லா பூவருணனை) நூலில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

ஆதிகாலத்திலே திராவிடர்கள் சாதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். பின்பு ஆரியர், திராவிட நாட்டில் வந்து குடியேறித் திராவிட மன்னர்களின் தயவைப் பெற்றார்கள். ஆரியரில் சிலர் அந்த மன்னர்களுக்குக் குருவானார்கள். அதன் பின்னர்தான் தமிழ்நாட்டில் ஆரிய நாகரிகம் பரவத் தொடங்கிற்று. ஆரிய மதமும் தெய்வங்களும் ஆசாரங்களும் சாதி வித்தியாசங்களும் தமிழ்நாட்டில் வேரூன்றிவிட்டன.

கி.மு. முதலாவது நூற்றாண்டு முதல் மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டு வரையில் புகழ்பெற்ற சங்கங்கள் இருந்தன. அரிய பெரிய கவிஞர்களும் வித்துவான்களும் இச்சங்கங்களில் அங்கத்தினராயிருந்தார்கள். அவர்கள் எழுதி வைத்த நூல்களின் மூலமாக அரசாங்கத்தில் தமிழ்நாட்டில் பரவியிருந்த மதங்களின் வரலாறு நன்றாய்ப் புலப்படுகின்றன. அக்காலத்தில் பௌத்த சமண மதங்கள் பரவியிருந்தன.

இக்காலத்து மதநிலையைப் பற்றி நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அதாவது தற்காலத்தில் குடும்பத்திலிருக்கும் ஒருவன் ஒரு மதத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவினால், அவனைச் சாதியில் சேர்த்துக் கொள்வது வழக்கமில்லை. சங்க காலத்தில் அப்படியில்லை, ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் எந்த மதத்தை வேண்டுமானாலும் அனுசரிக்கலாம். அதனால் அவனுக்கு யாதொரு குற்றமும் ஏற்படாது. குடும்பத்தார் அவனை நீக்குவதும் இல்லை. இது அக்காலத் தமிழர்களுடைய விரிந்த மனப்பான்மையையும் நாகரிக உயர்வையும் காட்டுகிறது’’.

இது நாம் கூறுவதல்ல. ஆரிய ஆசிரியர் ஒருவரே எடுத்துக் கூறியிருக்கும் உண்மை. அக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் விருப்பம் போல் பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அதனால் அவர்களுக்குள் வேறுபாடோ, வெறுப்போ, பிரிவினையோ இல்லாமல் எல்லோரும் ஒரே குடும்பத்தினர் போல், ஒரே இனமாக ஒற்றுமையுடனும் சகோதர பாவத்துடனும் பழகி வந்தனர். இது தமிழ் நாகரிகத்தின் மாண்பு. ஆரியர் வந்த பின்தான் மேலே குறிப்பிட்டபடி தமிழ்நாட்டில் சாதி வித்தியாசங்களும் மத வேற்றுமைகளும் மதத்துவேஷமும் வளர்ந்து தற்காலச் சிறுமை நிலை ஏற்பட்டது. இதெல்லாம் ஆரியர் சேர்க்கையால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மகத்தான கேடு! இந்தச் சீர்கேடும் சிறுமை நிலையும் நம் முன்னோர் காலத்தில் உள்ளதல்ல என்பதும், இடைக்காலத்திலே ஆரியர் வரவால் உண்டானதென்பதும், மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டால் தெற்றென விளங்குகிறது. இதற்கு ஆதாரமாக இது போன்ற நூற்றுக்கணக்கான சான்றுகளைச் சரித்திரத்திலிருந்து எடுத்துக் காட்டலாம்.

முற்காலத் திராவிட மக்கள் இவ்வித ஆபாசமான, இழிவையே தரும், தன்மானத்தைக் கெடுக்கும் மதச் சடங்குகளையும் சாதிக் கட்டுப்பாட்டையும் கையாண்டதில்லை.

ஆகவே, முன்னோர் வழக்கம் என்று தவறாக எண்ணிக் கொண்டு ஆரியர் சிறுமை நிலைகளுக்கு இடங்கொடுக்க வேண்டியதில்லை. திராவிட நாட்டு மாபெருந் தலைவர் ஈ.வெ.ரா-வின் இடைவிடாத முயற்சியால், தமிழர் மீது சுமத்தப் பெற்ற ஆரிய இழி நிலைகள், ஒவ்வொன்றாக வீழ்ந்து வருகின்றன! இந்த அரிய தருணத்திலே, தமிழ்ப் பெருமக்கள் ஆரிய சூழ்ச்சியினால் மறந்து போன, மறைந்து கிடக்கும் பழந்தமிழ் நாகரிகத்தை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டுவர, ஒவ்வொரு வழியிலும் முற்பட வேண்டும். திராவிடத் தமிழ் நாகரிக மறுமலர்ச்சியே, திராவிடர்களின் முன்னேற்றத்திற்கும் திராவிட நாட்டின் விடுதலைக்கும் வழிகோல வல்லது.

தென்னிந்திய மொழிகளை நன்றாக ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல், இவை வடமொழியினின்று தோன்றியவை அல்லவென்றும் வட மொழி திராவிடத்தினின்று கடன் பட்டுள்ளதென்றும் கூறியுள்ளார். ‘இந்தியக் கலையின் அடிப்படை, திராவிடக்கலையே’ என்று டாக்டர் கில்பர்ட் ஸ்லேட்டர் அவர்களும் இந்தியக் கலைகளை ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.

இனித் திராவிடம் தெற்கில் சிறப்பதேன், என்பதை இந்தியத் துணைக் கண்டத்தின் உண்மை வரலாறு காண, வரலாறு, வேதகால வேதியர் சிந்துக்கரையிலும் கங்கைக்கரையிலும் வாழ்ந்ததிலிருந்து தொடங்குவது மாறி வைகை, காவேரி, பாலாறு ஆகிய ஆற்றோரங்களில் அமைந்த அரசுகளின் பழமையிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்றும், அதுவே உண்மையான வரலாற்றை உணர வழியென்றும், பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூறியது மறைக்க – மறுக்க முடியாததோர் உண்மையாகும்.

படிக்க:
கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்
செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை ! முசுலீமாய் பிறந்ததுதான் குற்றமா ?

இந்திய வரலாற்றின் ஏட்டைப் புரட்டினால், வரலாற்றுக் காலத்தில் வாழாத வடநாட்டரசன் இராமன் இடைநாட்டு வானரர் துணைக்கொண்டு, அணைகட்டிக் கணைதொடுத்து இணையற்ற தென்னாட்டுப் பேரரசன் இராவணனை அழித்த செய்தி, இதிகாசப் பெயரால் இயம்பப்படுகிறது. பாண்டவரிடையே நடந்த போரும், நூற்றுவர் ஐவரிடையே இருந்த நியாயமும் கூறப்படுகிறது. ஆனால் பாரதப்போரில் பெருஞ்சோறளித்த சேரனைப்பற்றிய குறிப்புக் காணப்படுவதில்லை.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0

கும்பகோணம் அரசு கலைக் கல்லுரியில் மோடி அரசு கொண்டுவரும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கக் கோரியும், சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்தும் கடந்த 25/07/2019 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

வகுப்பு புறக்கணிப்பின் பொது கியூ பிரிவு போலீசார் இருவர் கல்லூரி வளாகத்திற்குள் வேவு பார்க்க நுழைந்தனர். அப்போது மாணவர்களிடம் அந்த இருவரையும் உளவு பார்ப்பவர்கள் என்று கும்பகோணம் பு.மா.இ.மு அமைப்பாளர் தோழர் திலிப் அடையாளம் காட்டிய பின்னர், மாணவர்களே அந்த இருவரையும் கல்லூரிக்கு வெளியே அனுப்பினர்! அதன் பிறகு புதியதாகக் கொண்டுவரப்படும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் என்றும் இக்கொள்கை சர்வாதிகாரப் போக்குடையது என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு எதிராக முழக்கம் இட்டனர்.

பின்னர், தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சத்தை பு.மா.இ.மு தோழர்கள் ஒலிப்பெருக்கியால் மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தனர். இக்கல்விக் கொள்கையைப் பற்றி எடுத்துரைத்த பிறகு அனைவரிடமும் நம் கல்வி உரிமையை பறிக்கும் புதிய கல்விக் கொள்கை நமக்குத் தேவையா? என்று கேள்வி எழுப்பியதும் மாணவ, மாணவிகள் கோபத்துடன் தேவையில்லை என்று கூறினார்கள். அங்கு வந்த பிற பத்திரிகையாளர்கள் விவரங்களைக் கேட்டுச் சென்றனர். போராட்டமே மகிழ்ச்சி !
புரட்சியே தீர்வு ! அரசின் ஏழை மக்கள் விரோத,  மாணவர் விரோத முடிவுகளை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடுவோம் !

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்.
தொடர்புக்கு: 97902 15184

நாள் முழுக்க உங்களால் இரைச்சலை ரசிக்க முடியுமா ? | படக்கட்டுரை

சென்னையின் சாலை இரைச்சலை மட்டுப்படுத்தியது, மாவு மிசின் இரைச்சல்… உள்ளே நுழைந்தோம். இரைச்சலுக்கு மத்தியில் காது மூக்கு என மொத்தமாக மிளகாய் நெடி. பெண்களும் ஆண்களும் பிளாஸ்டிக் வாளி, அலுமினியம் குண்டான் என்று பல்வேறு வீட்டுப் பாத்திரங்களில அரைக்க வேண்டிய மளிகை சாமான்களோடு நின்றிருந்தனர்.

கடை உரிமையாளர் மோகன்.

அதன் மத்தியில் மாவு மிசின் ஓனர் மோகனிடம் (65) சத்தமாக, “நாங்கள் இந்த தொழில் பற்றியும் அதன் நிலைமை பற்றியும் பேச வந்திருக்கிறோம்” என்றோம். அவர் சத்தமாக “அப்படியா…?” என்று, மீண்டும் வேலையில் மூழ்கினார்.

நாம், அங்கிருந்த வாடிக்கையாளரிடம் “ஆச்சி, சக்தியின்னு பாக்கெட் மசாலா வந்துவிட்டது, வேலை மெனக்கெட்டு இங்கு வந்து ஏன் அரைக்க வர்றீங்க?”

“அதை நம்பி சாப்பிட முடியாது. வயிறு கெட்டுப் போகும். அதில் என்ன பொருட்களைப் போடுகிறார்கள் என்றே தெரியாது. கையில் பொருட்களாக வாங்கினாலே அதில் ஆயிரத்தெட்டு கலப்படம். அரைத்து பாக்கெட்டில் கொடுத்தால் ஒழுங்காகவா இருக்கும்? அரைத்துப் பயன்படுத்தினால்தான் நமக்கு ஏற்ற மாதிரி ருசி.. வயித்துக்கும் பிரச்சினை இல்லை” என்றார், பனிமலர் கல்லூரியில் ஆசிரியாராக இருக்கும் சந்திரன்.

பனிமலர் கல்லூரி ஆசிரியர் சந்திரன் : ”வேலை மிச்சம்னு பாக்கெட் மசலா வாங்கினா டாக்டருக்கு யார் செலவுபண்றது? கால்குடைச்சல், கைகுடச்சல், நெஞ்செறிச்சல், வயித்தெறிச்சல்னு மாறிமாறி ஓடணும். நமக்கு தேவையா?”

“வேலை மிச்சம்னு பாக்கெட் மசலா வாங்கினா டாக்டருக்கு யார் செலவுபண்றது? நமக்கு தேவையா? கால் குடைச்சல், கை குடைச்சல், நெஞ்செரிச்சல்னு மாறிமாறி ஓடணும். ஒபிசிடி, தொப்பன்னு ஜிம்முக்கு போகணும்; இல்ல சைக்கிளிங், ஜாக்கிங் செய்யணும். இது தேவையா…?” என்றார்.

அதற்குள் கடை உரிமையாளர், “என்ன கேட்கப் போறீங்க?” என்று அருகில் வந்தார்.

“மாவு மிசின் இரைச்சல், நெடி 5 நிமிடம்கூட எங்களால தாங்க முடியல. நாள் முழுக்க எப்படி வேலை பார்க்கிறீங்க” என்றோம்.

“அதெல்லாம் பழகிவிட்டது. மொதல்ல வேலையை முடிக்கணும். நெடி, இரைச்சலெல்லாம் நான் எங்கே கவனிப்பது?” என்றார்.

வாடிக்கையாளர் கூட்டம் கொஞ்சம் குறைந்தவுடன் அவரிடம் “ஒரு தொழிலாக உங்களால் இதைத் தொடர்ந்து நடத்த முடிகிறதா? ஏதும் பிரச்சினை இல்லையா?” என்றோம்.

“இந்தத் தொழில் எங்க அப்பா கொடுத்த சொத்து. தாத்தா, எண்ணெய் செக்கு வைத்திருந்தவர். இத்தொழில் எங்கள் குடும்பத்து கவுரவம். 40 வருஷமா இந்தத் தொழில செஞ்சுதான் பையன மெக்கானிக் படிக்க வச்சேன். இப்போ சொந்த வீட்டோடு இருக்கிறான்.

தினமும் கடைய திறக்கும்போது, 1000 ரூபாய்க்காவது அரைக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்வேன். 50 கஸ்டமர்கள் வந்தால் போதும். அரை கிலோ, ஒரு கிலோன்னு சராசரியாக ஆளுக்கு 30 ரூபாய் வீதம் வந்தாலே என் பொழப்பு போகும். சீசனுக்கு தகுந்தாற்போல்தான் வேலை. தீபாவளின்னா கூட்டம் அதிகமா வரும். சீர் வரிசை, பலகாரம், முறுக்கு, அதிரசம் என அவுங்கவுங்க தேவைக்கேற்ப அரைப்பாங்க. விஜயதசமி வந்தால் அய்யர்மார் நிறையபேர் வருவாங்க. சீடை, முறுக்கு, தட்டு மாதிரியான பலகாரங்களுக்கு அரைச்சிப் போவாங்க.

மிளகாய், தனியா (மல்லி), கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, சோம்பு, சீரகம், அரிசி, உளுந்து ஒவ்வொன்றையும் தனித்தனியா இளம் வறுவலா வறுத்து அரைச்சா, அதோட சுவையே தனிதான்.

ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழு ஊற்றுவதற்கு கேழ்வரகு அதிகம் வரும். ஆனால் மழைக்காலமுன்னா வேலையிருக்காது, கடையில காத்துதான் வரும். அப்போ 300 ரூபா சம்பாதிப்பதே பெரும்பாடு. தண்டலுக்குக் கடன் வாங்கித்தான் வாடகை, கரண்ட் பில்லுன்னு சமாளிப்போம். ஆண்டுக்கு 6 மாதம் இப்படியும் அப்படியும் இருக்கும். சில நேரம், சிறு வியாபாரம் செய்றவங்க 10, 20 கிலோன்னு மொத்தமா அரைச்சி போவாங்க. அரிசி சேமியா, சர்க்கரை, கடல பருப்பு மாவு இப்படி ரவா லட்டிலிருந்து புட்டு வரைக்கும் பாக்கெட் போட்டு விக்கிறவுங்க வருவாங்க.

இதிலும் சில சிரமம் இருக்கத்தான் செய்யுது. 2 கிலோவ 1.5 கிலோன்னு சொல்வாங்க. மல்லுகட்டி அவர்களிடம் காசு வாங்குவது பெரும்பாடாகி விடும். பத்து இருபத மிச்சப்படுத்தி வீடா கட்டப் போறாங்க; ஏதோ வீட்டுக்கு கொஞ்சம் காய்கறி, குழந்தைகளுக்கு திண்பண்டமுன்னு வாங்கிப் போவாங்க. பாவம் என்ன செய்யிறது! ஆனால், அதிகமாக ஏமாத்துனா விடமாட்டேன். எடை மிசின்ல வெயிட் போட்டு திருப்பி அனுப்பி விடுவேன்.

இந்த நெடியிலும் சத்தத்திலும் எப்படித்தான் நிற்கிறீர்களோ என வாடிக்கையாளர்களே அலுத்துக்கொள்வார்கள். வயிறுன்னு ஒன்னு இருக்கிறதே என்று சிரிப்பேன். உண்மையில் இந்த நெடியும் இரைச்சலும் என் உடம்புக்கு உரமாகத்தான் இருக்கு. இதுவரை எந்த நோய் நொடியும் வந்ததில்லை. மசாலாத் தூள்களின் மனம் என் உடம்புக்கு போசாக்கு தருகிறதோ என்னவோ. நீங்கள்லாம் செய்து சாப்பிட்டாத்தான் மணம். நான் வாசனை புடிச்சாலே போதுமே” என்று சிரித்தார்!

இங்கு, மிளகாய்க்கு தனி மிசின்; அரிசி மாவு அரைக்க தனி மிசின்; பருப்பு, நவ தானியம், கோதுமை, கேழ்வரகு அரைக்க தனி மிசின். சீயக்காய் அரைக்கன்னு தனி.

இங்கு, மிளகாய்க்கு தனி மிசின்; அரிசி மாவு அரைக்க தனி மிசின்; பருப்பு, நவ தானியம், கோதுமை, கேழ்வரகு அரைக்க தனி மிசின். சீயக்காய் அரைக்கன்னு தனி. ஒரே மிசினுல அரைச்சா, அரிசி மாவு கலராகிடும். ருசியும் போயிடும். இதை ஓட்டுவதற்கு 10 எச்பி மோட்டர்கள் தேவை. 3 பேஸ் பவர் இருந்தால்தான் சுணக்கமில்லாமல் வேலை நடக்கும்.

நாளொன்று 1000 ரூபாய்க்கு அரைத்தால் கரண்டு, வாடகைக்குன்னு மேல் செலவு 400 ரூபாய் எடுத்து வைக்கணும். மிசின் பிளேட் அடிக்கடி தேஞ்சிடும். ஒரு மிசினுக்கு 2 பிளேட் வேணும். அதை சாணை பிடிக்க 400 ரூபா. வேலையைப் பொருத்து ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ, இல்ல ரெண்டு தடவ செலவு வைக்கும். அரைக்கிற வருமானத்துலதான் இதெல்லாம் பாக்கணும்.

 

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மாவு மிசின்காரங்களுக்கு சாதாரணமா வாடகைக்கு கடை கிடைக்கிறதில்ல. மாடி வீடும் ஆகாது. ஒரே சத்தமுனு சண்டைக்கு வருவாங்க.

இந்தத் தொழில்ல நான்தான் கடைசி. இந்தத் தலைமுறை பசங்க யாரும் விரும்புறதில்ல. இதெல்லாம் ஒரு வேலையான்னு ஓடுறாங்க” என்று சோகங்கலந்த சிரிப்போடு மிளகாயை மிசினில் கொட்டினார்.

ரன்வே பெல்ட் சுற்றியது. நெடியும் இரைச்சலும் மேலோங்கியது. இப்போது மட்டும் அந்த இரைச்சல், வயதான கிழவனின் தொடர் இருமலை ஒத்திருந்தது.

விடுதி பணிப்பெண் : ஒரு மாசத்துக்குத் தேவையான மிளகாத் தூளை அரைச்சு வச்சிப்போம். ஹாஸ்டல்ல தங்கியிருக்கவங்க இதத்தான் விரும்பி கேக்குறாங்க.

பாக்கெட் மசாலா வாங்கி சாப்பிட்டா வயிறு கெட்டுப் போகும். அதில் என்னென்ன போடுறாங்கன்னே தெரியாது. கண்ணால பாக்குறதிலேயே ஆயிரத்தெட்டு கலப்படம். அரைத்து பாக்கெட்டில் கொடுத்தால் ஒழுங்காகவா இருக்கும்?

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !

1

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மோடியின் தேசிய கல்விக் கொள்கை 2019 – ஐ எதிர்த்து போராட்டம் !

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, பேராசிரியர்களே !

மோடி தற்போது கொண்டுவந்திருக்கும் தேசிய கல்வி கொள்கை 2019 இது பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை பறிக்க கூடிய வகையில் உள்ளது. இதனை, எதிர்த்து தமிழகம் முழுக்க கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர் அமைப்புகள் என தொடர்ச்சியாக கருத்தரங்கம் – அரங்க கூட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மோடி அரசு கல்வி கொள்கை சம்பந்தமாக இரகசிய கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதையும் பல்வேறு அமைப்புகள் எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் இதனை ஒவ்வொன்றாக மறைமுகமா நடைமுறைப்படுத்தி வருகிறது அரசு. அதில் நீட், கேட் எக்ஸிட் ,TANCET, NTA என பல்வேறு தேசிய தகுதித் தேர்வு வைத்து அதனை நடைமுறையில் படிப்படியாக கொண்டுவருவது.

மேலும் தற்போது இந்திய பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கல்விக் கொள்கையை அமுல் படுத்தும் விதமாக 400 கோடி ஒதுக்கியது. ஆகிய இந்த நடவடிக்கைகள் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.

ஏனென்றால் ஜூலை 31 வரை கருத்து சொல்லலாம் என சொல்லிவிட்டு, நடைமுறையிலோ இதனை அமுல்படுத்தி பார்ப்பன சூழ்ச்சி புத்தியை காட்டி வருகிறது ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல்.

கல்வியை முழுவதும் தனியார்மயப்படுத்தவும், காவிமயப்படுத்தக் கூடிய வகையில் இருக்கிறது தே.க.கொ 2019. இட ஒதுக்கீடு, உதவித்தொகை என எல்லாவற்றையும் ஒழித்து கட்டக்கூடிய வகையிலும்; 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைத்து ஏழை மாணவர்களை வெளியே தூக்கி எறியவும் போகிறது.

படிக்க :
♦ திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்

பல்கலைக்கழக  மானியக் குழுவை கலைத்துவிட்டு, உயர்கல்வி ஆணையம் அமைகிறது; இதன் தலைவர் பிரதமர் மோடி ஆவார். கல்வியாளர்களுக்கு இதில் இடமில்லை, இவ்வளவு ஆபத்து நிறைந்த நயவஞ்சகமான கல்விக்கொள்கை கூடாது.

இதனை வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கை 2019-யை நிராகரிக்க வேண்டும் என்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் கடந்த 24.07.2019 அன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை பேராசிரியர்களும் ஆதரித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் தொடர் போராட்டம் நடக்கும் என அறிவித்து மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110

நூல் அறிமுகம் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்

”பண்ணையடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி” என்கிற தலைப்பில்1993-ல் வெளியான இந்நூல், ”ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்” என்ற தலைப்பில் நான்காம் பதிப்பாக கடந்த டிசம்பர் 2010-ல்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தென்சென்னையுடன் இணைந்து சவுத்விஷன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

”… அன்றைய ஆரம்ப நாட்களில் சாட்டையடி பெற்று சாணிப்பால் குடிக்கும் கொடுமைகளையே வாழ்வாய்ச் சுவீகரித்துக் கொண்டிருந்த தஞ்சை மாவட்ட மக்களுக்கு ஒளிக்கீற்றாய் – உற்றத் துணைவனாய் – நின்று வழிகாட்டி உடன் நடந்த செங்கொடி இயக்கத்தின் சரிதம்தான் அந்த இயக்கத்தின் ஊனோடும் உயிரோடும் கலந்து நின்ற தோழர் பி.எஸ். தனுஷ்கோடியின் வாழ்க்கைச் சரிதமாகும். ஆகவே தனுஷ்கோடி அவர்களை அறிந்து கொள்வதற்கு மட்டுமின்றி அன்றைய தஞ்சை மாவட்ட மக்கள் வாழ்வையும் – செங்கொடி இயக்கத்தின் அந்த ஆரம்ப நாட்களையும் அறிந்து கொள்ள வகை செய்கிறது.

குறிப்பாக பொருளாதார ரீதியாக மட்டுமின்றி சமூக ரீதியாகவும் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தமிழகத்தில் பற்பல இயக்கங்களால் நடத்தப்பட்ட போராட்ட வரலாற்றில் செங்கொடி இயக்கம் வகித்திட்ட பங்கு எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்துகொள்ள இந்த நூல் பேருதவியாய் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக அன்றைய போராட்ட அனுபவங்கள் – இன்னும் தொடரும் இன்றைய கொடுமைகளை எதிர்த்திடும் போராட்டத்திற்கு உரமூட்டட்டும்.” (நூலின் அறிமுக உரையில் கி.வரதராசன்)

பண்ணையடிமை முறையானது எத்தகைய கொடூரத்தன்மை வாய்ந்தது என்பதை விளக்க வேண்டுமானால் அந்த அடிமைகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை முறைகளை ஆராய்வதே போதுமானதாகவிருக்கும்.

தினமும் இரவில், நிலப்பிரபுவிடம் அன்றைய தினம் பகலில் நடைபெற்ற வேலைகள் விவரிக்கப்படும். அத்துடன் யார் வேலைக்கு தாமதமாக வந்தார்கள், யார் எதிர்த்துப் பேசினார்கள், யார் வேகமாக வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டது போன்றவைகளும் சொல்லப்படும். சம்பந்தப்பட்ட ஆளை – அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி – அடுத்த நாள் பண்ணை வீட்டுக்கு கொண்டு வரும்படி நிலப்பிரபு உத்தரவிடுவான்.

அடுத்த நாள் தலையாரி போய் சம்பந்தப்பட்டவரை பண்ணை வீட்டிற்கு கொண்டு வருவார். அந்த நபர் பறையராக இருந்தால் பள்ளரைக் கூப்பிட்டு மாட்டுக் கொட்டடித்தூணில் கட்டச் சொல்லுவார்கள். பள்ளராகவிருந்தால் பறையரைக் கொண்டு கட்டச் சொல்லுவார்கள். அவர் படையாச்சி அல்லது தேவராக இருந்தால் பள்ளரையும், பறையரையும் விட்டு கட்டச் சொல்லி புளிய விளாரால், சாட்டையால் அடிப்பார்கள். சாட்டைக்கு ஐந்து பிரிசாட்டை என்று பெயர். ஐந்து பிரியை முறுக்கேற்றி வைத்திருப்பார்கள். சாட்டை முனையில் அந்தப் பிரியை விலக்கி விட்டு கூரான கூழாங்கல்லைச் சொருகி வைத்திருப்பார்கள்.

சம்பந்தப்பட்ட நபரை சாட்டையால் அடித்து இழுக்கும் பொழுது அது ரம்பம் போல் கரகரவென்று அடித்து தோலை இழுத்து வரும். ரத்தம் பீறிட்டோடும். அடிப்பவன் கை சோர்ந்து போகும் வரை அடிப்பான். பின் தலையாரி அடிப்பான். தலையாரி சரியாக அடிக்காவிட்டால், நிலப்பிரபு அந்தச் சாட்டையை வாங்கி தலையாரியை அடிப்பான். அதன் பின் அடிவாங்கி ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் தொழிலாளியை மிருகம் போல் அடிப்பான்,

அடி வாங்குபவன் அந்த வேதனை பொறுக்க மாட்டாமல் தன் முகத்தில் துப்பிவிடக்கூடாது என்பதாலும், உணர்ச்சி வசப்பட்டு “என்னை சாகடி” என்று எதிர்த்துப் பேசிவிடுவான் என்பதாலும் துணியை அவன் வாயில் அடைத்து வைத்து கட்டியிருப்பார்கள். வெறிதீர அடித்து முடித்த பின் அடிபட்டவனை சாக்கு, வைக்கோலில் போட்டு படுக்க வைப்பார்கள். பண்ணை வீட்டு ரசம் சோறு போடுவார்கள். அடிபட்டவன் தன் ரத்தக் காயத்துக்கு மருந்தாக சாணி உருண்டையை வைக்கோல் தீயில் போட்டு ஒத்தடம் கொடுத்துக் கொள்ள வேண்டும். யாரும் உதவி செய்ய இருக்கக்கூடாது. வீட்டிலிருந்து சோறு கொடுக்கக்கூடாது. ஆனால் அடிபட்டுக் கிடக்கும் நாளுக்கு வேலை செய்ததாக கணக்குப் போடப்பட்டு கூலி கொடுக்கப்படும்.

படிக்க:
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !
இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை !

வேலைக்கு தாமதமாக வரும் பெண்கள் பழைய சாக்கையோ அல்லது கிழிந்த துணியையோ தொடையைச் சுற்றி கட்டியிருப்பார்கள். பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்படும் அந்தப் பெண்ணை அடிக்க தலையாரி கையில் புளிய விளார் கொடுக்கப்படும். புளிய விளார் முதல் நாளே மரத்திலிருந்து பறிக்கப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்டு சாட்டையாக இருக்கும்.

‘சுளீர்,’ ‘சுளீர் என்று சாட்டையடி விழுந்து அந்தப் பெண் கதறுவாள். ஆனால் தலையாரி அடிப்பதை நிறுத்தக் கூடாது. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் அந்தத் தலையாரி என்பவன் அந்தப் பெண்ணின் அப்பனாகவோ, அண்ணனாகவோ, சிற்றப்பனாகவோ, மாமனாகவோ, உறவினனாகவோ இருக்கலாம். ஆனால் அவன் தன் வேதனையை வெளிப்படுத்தக்கூடாது. சரியாக அடிக்கவில்லையென்றால் அவனுக்கும் அதே அடி கிடைக்கும்.

அந்தப் பெண்ணின் உடலிலிருந்து ரத்தம் கொட்டும்வரை அடித்த பின்புதான் அது நிறுத்தப்படும். ரத்தம் சொட்டச் சொட்ட அந்தப் பெண் அழுது கொண்டே நடக்க வேண்டும். அந்தப் பெண்ணுக்கு காயம் இருக்கும்வரை பண்ணை வீட்டில் ரசம் சோறு கிடைக்கும். வீட்டிற்கும் துணியில் கட்டிக் கொண்டு போகலாம்.

ஆணோ, பெண்ணோ அடிபடும்பொழுது யாராவது அவர்களுக்கு பரிந்து பேசினாலோ, அடிக்கவேண்டாம் என்று கெஞ்சினாலோ அவர்களும் ஈவிரக்கமின்றி சாட்டையால் அடிக்கப்படுவார்கள்.

பண்ணைவேலையில் ஏற்படும் ‘தவறுகளுக்கு மட்டும் இந்தத் தண்டனை என்பதல்ல, கிராமத்திற்குள் ஒருவருக்கொருவர் ஏற்படும் சச்சரவுகளும் நிலப்பிரபுவிடம் கொண்டுவரப்பட்டு அதற்கும் இத்தகைய தண்டனை உண்டு.

பண்ணையடிமைகளுக்கு உலகில் வேறெந்தப் பகுதியிலும் தரப்படாத ஒரு ஈனத்தனமான தண்டனை தஞ்சை மாவட்டத்தில் அன்று தரப்பட்டது. அதுதான் சாணிப்பால் குடிக்க வேண்டும் என்ற தண்டனையாகும். மாட்டுச் சாணத்தை மண்குடத்திலிட்டு தண்ணீரை ஊற்றி கரைப்பார்கள். பின்பு அதை துணியால் வடிகட்டி, வடிகட்டப்பட்ட நீரை, தண்டனை விதிக்கப்பட்ட பண்ணயடிமை குடித்தே தீர வேண்டுமென்று நிலப்பிரபு உத்தரவிடுவார். அது மனிதன் செய்யக் கூடிய காரியமா? பண்ணையடிமை தயங்குவான். ஈவிரக்கமின்றி சவுக்கடி அவன் உடல் மீது விழும் வேதனை பொறுக்கமாட்டாமல் சாணிப்பால் என்றழைக்கப்பட்ட அந்த சாணிக்கரைசலை முழுங்குவான். அதன் விளைவு பல நாட்களுக்கு அவனை பாதித்துவிடும், பல சமயங்களில் சவுக்கடி தண்டனையும் சாணிப்பால் தண்டனையும் ஒரு சேர கொடுக்கப்படும். (நூலிலிருந்து பக்.31-33)

நூல் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்
ஆசிரியர் : என்.ராமகிருஷ்ணன்.

வெளியீடு : தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தென்சென்னையுடன் இணைந்து சவுத்விஷன்.
132, (புதிய எண் 251), அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 600 086.
மின்னஞ்சல் : southvisionbalaji@gmail.com

பக்கங்கள்: 96
விலை: ரூ 30.00

இணையத்தில் வாங்க : marinabooks

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! – கடலூரில் கருத்தரங்கம்

0

மோடியின் தேசிய கல்விக் கொள்கை 2019-ஐ முறியடிப்போம் !

  • 3, 5, 8 -ஆம் வகுப்புகளுக்கும் தேசிய அளவிலான பொதுத் தேர்வாம் !
  • இது ஏழை, கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் சதித்திட்டம் !
  • ஆரம்பக் கல்வி முதலே மும்மொழித் திட்டம் கட்டாயம் !
  • தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தேசிய இனங்களின் மொழியை ஒழித்துக்கட்ட இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு !

அரங்கக் கூட்டம்

நாள் : ஜூலை 30, மாலை 4:00 மணி
இடம் : டவுன்ஹால், கடலூர்.

தலைமை :

தோழர். மணியரசன்
மாவட்டச் செயலாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம்.

கருத்துரை :

முனைவர். ஜானகி. இராஜா
மாநில செயலாளர்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம்.

பேராசிரியர் முனைவர். இளவரசன்

முனைவர். க.ரமேஷ்
துணை ஒருங்கிணைப்பாளர்
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு CCCE . சென்னை.

பேராசிரியர் முனைவர். கு.நிர்மல் குமார்
நுண்ணுயிரியல் துறைத் தலைவர்.
பெரியார் அரசு கலை கல்லூரி, கடலூர்.

தோழர். த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

நன்றியுரை :

தோழர். பால்ராஜ்

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110

கண்டிப்புகளும் தண்டனைகளும் குழந்தைகளைத் திருத்துமா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 12

ண்டிப்புகளும் தண்டனைகளும் குழந்தைகள் மத்தியில் அதிகம் நிலவினால் எப்படியிருக்கும்? கட்டுப்பாடு அதிகமாகும், தப்புகள் குறையுமா? குழந்தைகளிடம் மனச்சாட்சியும் பொறுப்புணர்வும் கூடுமோ? இல்லை, இப்படி நடக்காதென்றே எனக்குத் தோன்றுகிறது. அனேகமாக இதற்கு மாறாக நடக்கக் கூடும். அச்சுறுத்தப்பட்ட குழந்தைகள் ஒழுங்காக நடந்து கொள்வார்கள், ஆனால் யாரைக் கண்டெல்லாம் அவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுடனெல்லாம் பூசல் மனப்பாங்கில் இருப்பார்கள்; பரஸ்பரம் ஒருவர்பால் ஒருவர் கடுமையாக நடப்பார்கள்; பிறர் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வு, மென்மை, உதவும் மனப்பாங்கு முதலியன குறையும்” என்று நான் சொல்லும்போது இப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களுக்கு மாறாக வேறொரு சூழல் தோற்றுவிக்கப்படலாம் என்பதை மனதில் இருத்தியே இப்படிக் கூறுகிறேன்.

அதில் குழந்தையின் மனச்சாட்சியை தட்டியெழுப்பி, உணர்வுப் பூர்வமான “நான்” எனும் உணர்வை வளரச் செய்து, இரக்கம், அன்பு, பிறர்க்கு செவிமடுக்கும் உணர்வு போன்றவற்றை வளர்க்கும் அக்கறை மேலோங்கியிருக்கும். நிச்சயமாக, ஒரு தனி நபரின் குண நலன்கள் இவற்றுடன் நின்று விடுவதில்லை : அத்தனிநபர் இன்னமும் இறுதியானவராக, செயல்முனைப்பானவராக, ஒரு இலட்சிய அடிப்படையை உடையவராக இருக்க வேண்டும். இந்த ஆசிரியர் பாதையில் செல்லத்தான் நான் விரும்புகிறேன். இதில் பல விஷயங்கள் எனக்குத் தெரியாது, ஏனெனில், இப்பாதையில் இதுவரை யாரும் சென்றதில்லை, எனவே, இதில் சில ஆசிரியர் தவறுகளைச் செய்யும் அபாயத்தை மேற்கொள்கிறேன்.

குழந்தைகளின் முரட்டுத்தனத்தைக் கண்டுதான் நான் எல்லாவற்றிற்கும் மேலாக அஞ்சுகிறேன். சில சமயங்களில் அவர்கள் ஒருவர்பால் ஒருவர் எப்படி இரக்கமற்று நடந்து கொள்கின்றனர்! அதிலும் குறிப்பாக ஒரு தனிப்பட்ட குழந்தைக்கு எதிராகப் பல குழந்தைகள் நிற்கும்போது எப்படியிருக்கும் தெரியுமா! ஒரு சிறுவன் வேண்டுமென்றே தப்பு செய்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம் (குழந்தைகள் எப்போதுமே காரண காரியங்களைப் பார்க்க மாட்டார்கள்). கவனக்குறைவான ஆசிரியர் குழந்தைகளைப் பார்த்துப் பின்வருமாறு கூறுவார்: “அவன் நம்மை எப்படி கஷ்டத்திற்கு உள்ளாக்கி விட்டான் பார்த்தீர்களா? அவனது செயலைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்? அவனை எப்படித் தண்டிப்பது?”

குழந்தைகளின் மதிப்பீடுகளைக் கண்டு நான் பயப்படுகிறேன். ஏனெனில் இவர்களைப் பொறுத்தமட்டில், வேண்டுமென்றே மேசை விரிப்பின் மீது இங்க் பாட்டிலைக் கொட்டி சிறு கறையை ஏற்படுத்தியவனை விட தற்செயலாக, தெரியாமல் பெரும் கறையை ஏற்படுத்தியவன் அதிகம் குற்றம் செய்தவனாவான். அவன் கெட்டவன், கொடியவன், அவனுடன் நட்புக் கொள்ளக் கூடாது, அவனைப் பள்ளியிலிருந்து கூட விரட்டலாம் என்றெல்லாம் குழந்தைகள் கூறுவார்கள். கவனக்குறைவான ஆசிரியர் இப்படிச் செய்து இதை நியாயப்படுத்தக் கூட செய்வார், கூட்டு வளர்ப்பு என்று இதற்குப் பெயரிடுவார். ஆனால் இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்: இது கூட்டு வளர்ப்பா, கூட்டாக குழந்தையை இழிவுபடுத்தி அழித்தொழிப்பதா?

இல்லை, நண்பர்களின் மெளனமான இரக்கத்தைப் பள்ளிச் சிறுவன் உணருமாறு செய்வதும், அவன் செய்த காரியத்தைப் பற்றிய பொதுவான கருத்தை அவனை நோக்கி தனிப்பட்ட முறையில் கூறாமல் பொதுவாகக் கூறி அவன் அதை உணர உதவுவதும், தான் உடைத்த பூந்தொட்டிக்காக, தன் குற்றத்தால் நண்பனின் காலில் ஏற்பட்ட காயத்திற்காக அவன் வருந்துவதும் நல்லது. இதைத்தான் என்னால் கூட்டு வளர்ப்பு என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

என் வகுப்பில் இன்னமும் கூட்டு இல்லை. இக்குழந்தைகள் இன்று இருபதாவது தடவையாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு மற்ற அனைவரின் பெயர்கள் கூட முழுமையாகத் தெரியாது, இவர்கள் இன்னமும் எல்லோருடனும் நட்புக் கொள்ளவில்லை, பொது நோக்கத்தை இன்னமும் இவர்கள் உணரவில்லை. கூட்டுணர்வு என்பது கூட்டான, செயல் முனைப்பான நடவடிக்கையில்தான் பிறக்கிறது. நாங்கள் இப்போதுதான் இந்நடவடிக்கையையே துவக்குகின்றோம். எனவே, இவர்களை ஒருவர்பால் ஒருவர் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள வழிகோலுவது சிறந்ததல்ல, அன்பின் அடிப்படையில் இவர்கள் நெருங்கி வரும்படி செய்ய வேண்டுமே தவிர முரட்டுத்தனமான நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அல்ல….

…இதோ அவன் உடைந்து போன பூந்தொட்டியின் முன் நின்று கொண்டிருக்கிறான், மண் தரையில் சிந்திக்கிடக்கிறது, செடி கீழே கிடக்கிறது. கசப்பானதொரு காட்சி! நான் திட்ட வாய்திறந்தாலே போதும், குழந்தைகள் அவன் மீது பாய்ந்து விடுவார்கள். எனது சிறு ஏளனப் புன்னகை போதும், குழந்தைகள் தம் ஏளனத்தால் அவனை அழித்தே விடுவார்கள். ஆனால் இப்படிச் செய்யக்கூடாது. மெளனமான இரக்கம், அக்கறை பற்றிய ஒரு சில பாடங்களை நான் அவர்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறேன். நூற்றுக் கணக்கான இடைவேளைகளில் இன்னமும் இதே போன்ற பிரச்சினைகளை நான் பன்முறை தீர்க்க வேண்டியிருக்குமென எண்ணுகிறேன். நான் செடியைக் குனிந்து எடுக்கிறேன்.

படிக்க:
சீர்காழி போலீசின் கிரிமினல்தனம் : விவசாயிகளுக்காகப் போராடினால் ரவுடிப்பட்டம் !
கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் !

“இப்படிச் செய்யலாமா, யார் இதைச் செய்தது? இப்போது செடியைக் காப்பாற்றுவது முக்கியம்!” குழந்தைகள் இரைந்து கிடப்பவற்றை அள்ளுகின்றனர்.

“நமது வாளியை எடுத்து வாருங்கள். நாளை வரை செடியை அதில் வைத்திருப்போம்.”

செடியை வாளியில் வைக்கின்றோம்.

““பார்த்தீர்களா, உடைந்த தண்டிலிருந்து எப்படி இரத்தம் வருகிறது. இந்த வெள்ளைத் திரவம்தான் இதன் ரத்தம்!…”

“இது ஒரு மூலிகைச் செடி என்று அம்மா சொல்லியிருக்கிறார்” என்று நாத்தோ சொல்கிறான்.

“தண்டு முறிந்த இடத்தில் அதற்கு வலிக்குமா?”

நான்: “அதற்கு மட்டும் பேச முடிந்தால் அது என்ன சொல்லும்?”

“என் மீது பாவமாயில்லையா?” என்று சொல்லும்.”

“ஏன் ஜன்னல் அருகேயிருந்து கீழே தள்ளினாய்? எச்சரிக்கையாயிருக்க வேண்டும்” என்று சொல்லும்.”

“நான் உங்களுக்கு இனி மருந்துச் செடியாக இருக்க மாட்டேன்” என்று கோபம் கொண்டு சொல்லும்.”

“இல்லை, அது அப்படி சொல்லாது, அது அன்பான செடி.”

நான்: “நாளை பூந்தொட்டி கொண்டு வந்து என்னை அதில் நடுங்கள். விரைவில் எனக்கு சரியாகும்படிப் பராமரியுங்கள்” என்றும் சொல்லும்.”

“அதற்குத் தேவையான பூந்தொட்டியையும் மண்ணையும் நான் கொண்டு வருவேன்.”

“நானும் தொட்டியைக் கொண்டு வருவேன்.”

இதோ மணி அடித்தாகி விட்டது. தரை சுத்தப்படுத்தப் பட்டு விட்டது. செடி வாளியில் உள்ளது. நாளை அதை வேறொரு தொட்டியில் நடுவோம் – அவன் தான் ஒரு தொட்டியையும் மண்ணையும் கொண்டு வருவதாக உறுதி அளித்துள்ளானே. இப்போது வகுப்பறைக்குள் வர வேண்டும்.

“சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவிலிருக்கட்டும்.”

குழந்தைகள் வகுப்பறைக்குள் வந்து கொண்டிருக்கையிலேயே ஒரு வாக்கியத்தைப் பன்முறை திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அப்போது தான் இது மறக்காது, ஏனெனில் எனக்கு ஒரு முது மொழியாகும்:

வளர்ப்புப் பணிக்கு ஆரம்பமோ, முடிவோ, இடைவேளைகளோ இல்லை.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

ஷாங்காய் நகரைக் கட்டமைக்கும் சீனக் குடியேறி தொழிலாளர்கள் | படக் கட்டுரை

1

ஷாங்காய் நகரின் பணக்காரர்களுக்கான அலுவலக வளாகங்கள் மற்றும் ஆடம்பர குடியிருப்புகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சீன குடியேறி தொழிலாளர்கள் தாங்கள் அங்கம் வகிக்கும் திட்டங்கள் குறித்த விளம்பர பதாகைகள் முன் நிற்பதை படமாக்கியிருக்கிறார் புகைப்படக்காரர் ஜோனதன் பிரவுனிங்.

ஷாங்காயின் மிக வளமான ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு பகுதியான ஷின்சியான்டி-ல் ஒரு ஆடம்பரக் குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழிலாளி, வெளியே வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகை அருகே மதிய உணவை உண்கிறார்.

அன்குய்-யிலிருந்து குடியேறிய ஸு தபெங், லிஃப்ட் இன்ஜினியராகப் பணியாற்றுகிறார். ஒப்பீட்டளவில் நல்ல ஊதியமாக இந்திய மதிப்பில் மாதம் ரூ. 50,000 (¥5,000) பெறும் இவர், வான்கே ஸுகுய் வளர்ச்சி மையத்தின் சுவரொட்டி முன் நிற்கிறார்.

ஜியாங்சி-யிலிருந்து வந்திருக்கும் இவர் சங்ஃபெங் வளர்ச்சி மையத்தில் பெயிண்டராக பணியாற்றுகிறார். நாள் ஒன்றுக்கு 200 யுவான் சம்பாதிக்கிறார்.

தான் பணியாற்றும் இடத்தில் இருக்கும் ஆடம்பர விளம்பரப் பதாகையின் பின்னணியில், தள்ளுவண்டியில் கட்டுமானப் பொருட்களை இழுத்துச் செல்கிறார் இந்தத் தொழிலாளி.

கீழ் தள வெப்ப நிறுவியாகப் பணியாற்றும் இவர், அன்குய் மாகாணத்திலிருந்து வந்து சென்ஃபெங் வளர்ச்சி மையத்தில் பணியாற்றுகிறார். ஆண்டுக்கு ¥50,000 வருமானம் ஈட்டுகிறார் இவர்.

‘கச்சிதமான வாழ்க்கைக்கு சியர்ஸ் சொல்லுங்கள்’ என்கிற ஷின்சியான்டி ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரம். அங்கு பணியாற்றும் இந்தத் தொழிலாளி ஒரு இடைவேளையின்போது சிகரெட் புகைக்கிறார்.

ஹெனான் மாகாணத்திலிருந்து வந்திருக்கும் திரு. வாங், பொது தொழிலாளியாகவும் தூய்மைப் பணியாளராகவும் உள்ளார். சின்சுவா ரெட்ஸ்டார் லேண்ட்மார்க் என்ற கட்டுமான நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு ¥150 சம்பளம் பெறுகிறார் இவர்.

அன்ஹுய்-யிலிருந்து வந்திருக்கும் இந்தத் தொழிலாளி, தோட்ட வடிவமைப்பு மற்றும் புதிய மரங்களை நடும் பணி செய்கிறார். நாள் ஒன்றுக்கு இவருடைய ஊதியம் ¥100.


கலைமதி
நன்றி : த கார்டியன் 

தேசிய கல்விக் கொள்கை 2019  நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்

தேசிய கல்விக் கொள்கை 2019  நிராகரிப்போம் !

தேசிய கல்விக் கொள்கை 2019 (தே.க.கொ.) குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கை பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கம் 20.07.2019 அன்று வினோபா அரங்கம், சென்னையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கிற்கு பேராசிரியர் வீ. அரசு தலைமை தாங்கினார். கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றத்தின் தலைமைக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஹரகோபால் சிறப்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 220 பேர் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கல்வியையொட்டி தேசிய கல்விக் கொள்கை முன்வைத்துள்ள பரிந்துரைகளையும் அதனால் உருவாகப் போகும் பாதிப்புகள் குறித்தும் ஆசிரியர் மூர்த்தி  விரிவாகப் பேசினார். இப்பரிந்துரைகள் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கே வழிவகை செய்யும் என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் ஹரகோபால் சிறப்புரையாற்றினார். அவர் தேசிய கல்விக் கொள்கை அரசியல் அமைப்புச் சட்டம் கூறியவற்றிக்கு ஏதிராக உள்ளது, அமெரிக்க பல்கலைக்கழங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு தகுந்தாற் போல் மாற்றங்களை உயர்கல்வியில் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை தே.க. கொ. முன்வைத்துள்ளது எனக் கூறினார்.  உலக வர்த்தக் கழகத்தின் (WTO) ஒப்பந்தத்திற்கு தகுந்தவாறு இந்திய கல்விக் கட்டமைப்பை மாற்றுவதற்கான பரிந்துரைகளையே தே.க.கொ. முன்வைத்துள்ளது. எனவே அதை நிராகரிக்க வேண்டும் எனக் கூறினார்.

அடுத்து பேசிய பேராசிரியர் வீ. அரசு, தற்போதுள்ள உயர்கல்வி கட்டமைப்பைக் கலைத்து விட்டு ஒற்றை அதிகாரம் கொண்ட ராஷ்ட்ரிய சிக்சா ஆயோக் அமைப்பை உருவாக்குவது மற்றும் தரம் என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்களை வகை பிரிப்பது போன்ற பரிந்துரைகளின் நோக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். உயர்கல்வி மீதான ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மோடி தலைமையிலான சிறு குழுவிடம் கொண்டு செல்கிறார்கள். இதன் மூலம் RSS மொத்த உயர்கல்வியையும் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளாகக் கூறினார்.

படிக்க:
தேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் ! கருத்தரங்கம் | Live Streaming
♦ தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்

பேராசிரியர் கருணானந்தன் தே.க.கொ முன்வைக்கின்ற  ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பைப் பற்றி விரிவாகப் பேசினார். பேராசிரியர் கதிரவன் மருத்துவம், விவசாயம், பொறியியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள் பற்றி தே.க.கொ. கூறியுள்ள பரிந்துரைகளையும் அதனால் உருவாகும் பாதிப்புகள் பற்றியும் விரிவாகப் பேசினார். அடுத்து பேசிய மருத்துவர் எழிலன் கடந்த எழுபது ஆண்டுகாலமாக  இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக் கொள்கையினால் தமிழ்நாடு பெற்றுவந்த பலன்களை தே.க.கொ.-ன் பரிந்துரைகள் எவ்வாறு தகர்த்தெறியப்போகிறது என்பதை  விரிவாகப் பேசினார். முதலாளிகளின் லாபத்திற்காக பெரும்பான்மை மக்களை  ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தொடர்ந்து வடிகட்டுவதே தே. க. கொ. நோக்கம் என்பதை உதாரணங்களோடும் புள்ளிவிவரங்களோடும் விளக்கினார்.

பேராசிரியர் அமலநாதன் தே.க.கொ.-யை மக்களிடம் கொண்டு செல்வதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அவசியத்தைப் பற்றியும் பேராசிரியர் முருகானந்தம்  உடல் ஊனமுற்ற மாணவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றி தே.க.கொ. புறக்கணிப்பதைப் பற்றியும், முனைவர் ரமேஷ் இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு கல்வி முதலாளிகளின் நலன்களுக்காக எவ்வாறு இந்திய கல்விச் சந்தை உலக சந்தையோடு இணைக்கப்படுவதற்கான பரிந்துரைகளை தே.க.கொ. முன் வைத்துள்ளது என்றும் விளக்கிப் பேசினர்.

 

 

இறுதியாக நீதியரசர் ஹரிபரந்தாமன் நிரைவுரையாற்றினார்.  கல்வி மீதான மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதற்கான அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டமே வழங்கியுள்ளது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டாலும் என்ட்ரி 66-ன் மூலம் கல்வி நிறுவனங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். எனவே நமக்கான கல்வி உரிமைகளை பெற இச்சட்டங்களை மாற்றுவதற்கான போராட்டங்கள் முக்கியம் என விரிவாக பேசினார்.

அனைத்து கருத்துரையாளர்களும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும் என  வலியுறுத்தி பேசினார். பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை பறிக்கின்ற தேசிய கல்விக்கொள்கை 2019-ஐ அனுமதிக்க கூடாது. முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கான கல்விக் கொள்கையை பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஆதரித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கையெழுத்திட்டனர்.

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
(Co-ordination Committee for Common Education)
சென்னை. தொடர்புக்கு : 94443 80211, 72993 61319

திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !

திருச்சி தூய வளனார் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், மோடி அரசுக்கு காவடி தூக்கும் தமிழக அரசு சதித்தனமாக – ரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் ஒன்று ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது.

தூய வளனார் கல்லூரிக்கு விடுமுறை அளித்துவிட்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியாமல் ஊடகங்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என எவருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக தேசிய கல்விக்கொள்கை 2019-க்கான கலந்தாய்வு மற்றும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தினர்.

அதன் தகவல் அறிந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF), AISF, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினர் சென்று விசாரித்தனர். முதலில் மாணவர்களுக்கு அனுமதி உண்டு என்றனர். பின்னர் மாணவர் அமைப்புகள் வந்ததை அறிந்த கல்விதுறையினர் “பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் அனுமதியில்லை. இது துறைசார்ந்த கலந்தாய்வுக் கூட்டம். உங்களுக்கு அனுமதி இல்லை ” என்றனர்.

உள்ளுர் போலீசு அதிகாரிகளுக்கும் என்ன கூட்டம் நடத்துகிறார்கள் எனத் தெரியாமல் “விசாரித்துச் சொல்கிறோம், பிரச்சினை செய்யாதீர்கள்” எனக் கூறியவர்கள்  அதிகாரிகளின் பொய்யையே மீண்டும் கூறினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் உள்ளே இருந்த நமது தோழர்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கையேட்டில் கலந்தாய்வு மற்றும் கருத்துக்கேட்பு என உள்ளது என்ற தகவலைத் தெரிவித்தனர். இதற்கிடையில் கல்லூரிக்கு வெளியே பிற அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு த.பெ.தி.க, SFI, DYFI, ம.க.இ.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் வந்து சேர்ந்தனர்.

போலீசு நின்றுக்கொண்டு உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். ஆனால் உள்ளே விடவில்லை என்றால் சாலை மறியல் செய்வோம் என்றவுடன் வேறுவழியின்றி கல்லூரிக்குள்  செல்ல அனுமதித்தனர்.

அங்கும் கூட்ட அரங்கத்திற்குள் செல்லவிடாமல் வராண்டாவில் போலிசு நின்று கொண்டு தடுத்தனர். வாசலிலேயே அமர்ந்து “நடத்தாதே! நடத்தாதே! இரகசியக் கூட்டம் நடத்தாதே” என அனைவரும் முழக்கமிட்டனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரங்கத்திற்கு உள்ளே கல்வி அதிகாரிகள் மும்முரமாக கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். நம்மைக் கைது செய்துவிட்டு அதிகாரிகள், “புதிய கல்வி கொள்கை 2019 கருத்துக்கேட்பு கூட்டம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறிவிட்டதாக” நாடகமாடுவார்கள் விடக்கூடாது என முடிவு செய்து உள்ளே செல்வோம் என கூறிக்கொண்டே கூட்ட அரங்கத்திற்குள் சென்றார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜா.

(படம் – நன்றி : விகடன்)

“கூட்டத்தை நிறுத்துங்க, திருச்சி மக்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்? பேராசிரியர்களே ! பொதுமக்களே ! இந்தக் கூட்டமே சட்டவிரோதமானது. கருத்துகேட்பு என்று கூறிவிட்டு துறைசார்ந்த அறிஞர்கள், பொதுமக்கள் யாரும் இல்லாமல் திருட்டுத்தனமாக நடத்துகிறார்கள் எனவே அனைவரும் வெளிநடப்பு செய்யுங்கள்” என்றார்.  த.பெ.தி.க, SFI, DYFI, ம.க.இ.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல அமைப்புத் தோழர்களும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பேராசிரியர் நா.முத்துநிலவன் (த.மு.எ.க.ச) “திருச்சி மக்களின் பங்கேற்பு இல்லாமல் ஊடகங்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என எவருக்கும் அறிவிக்காமல் இப்படி கூட்டம் நடத்துவது முறையல்ல என்றும்,  இந்த தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரே தவறு என்றும்” அதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அருமையாக விளக்கினார். சிலர் யோசித்தனர். சுயமரியாதையும் மக்களின் மீது அக்கறை கொண்ட பல பேராசிரியர்களும் வெளியேறினர்.

பேராசிரியர் நா.முத்துநிலவன் (த.மு.எ.க.ச), கருத்து கேட்புக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தி பேசினார். (படம் – நன்றி : விகடன்)

வேறு வழியின்றி அந்நிகழ்விற்கு தலைமைதாங்கிய மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் பொன். குமார் அவர்கள் பத்திரிகையாளர்களிடம்,  “இத்துடன் இந்தக் கூட்டம் நிறுத்தப்படுகிறது. நோட்புக்கில் போடப்பட்ட ‘தேசிய கல்விக்கொள்கை – 2019, கருத்துக் கேட்புப் பணிமனை’ என்பதை தவறுதலாக அச்சடித்துவிட்டோம். மேலும் பொதுமக்களுக்கு அறிவித்து விளம்பரம் செய்து பொதுவாக நடத்தப்படும் என அறிவித்தார். அதன் பிறகுதான் தோழர்கள் அரங்கிலிருந்து வெளியேறினர்.

தமிழக அரசு அதிகாரிகளின் துணையுடன் நடத்த இருந்த மோடியின் மக்கள் விரோத, மாணவர் விரோத தேசிய கல்விக்கொள்கை – 2019 கருத்து கேட்பு கூட்டத்தை ஜனநாயக சக்திகள், அமைப்புகள் இணைந்து முறியடித்துள்ளனர். இது அனைவரின் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு சிறு வெற்றி இது.

பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை பறித்து RSS சித்தாந்தத்தை புகுத்த நினைக்கும் தேசிய கல்விக் கொள்கை 2019-ஐ வீழ்த்த ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் மக்களும், ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைந்து எச்சரிக்கையுடன் போராட வேண்டும். பாசிசத்திற்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்பதே நம் அனைவரின் முன் உள்ள கடமையாக உள்ளது.

ரகசிய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலகம் (காணொளிகள்) :

 

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
திருச்சி. 99431 76246.

சீர்காழி போலீசின் கிரிமினல்தனம் : விவசாயிகளுக்காகப் போராடினால் ரவுடிப்பட்டம் !

விவசாயிகளுக்காகப் போராடிய தோழர் ரவிக்கு சீர்காழி புதுப்பட்டினம் போலீசு கொடுப்பதோ ரவுடிப்பட்டம்!

மக்கள் அதிகாரம் கண்டனம்!

25.07.2018

நாகை மாவட்டம், சீர்காழி வட்டார மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி அவர்களை சீர்காழி – புதுப்பட்டினம் போலீசு ரவுடிப் பட்டியலில் சேர்த்து இருக்கிறது. கடந்த 30 வருடங்களாக சீர்காழி விவசாயிகளுக்கு பிரச்சினை என்றால் எப்போதும் முன்னே நிற்கக்கூடிய தோழர் ரவியின் மீது 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் நாகை மாவட்ட போலீசு நிலையங்களில் மட்டுமே இருக்கின்றன.

தேர்தலுக்கு முந்தைய சில நாட்களுக்கு முன்னர் கூட விளைநிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய்கள் போடும் நாசகார வேலையை மக்களோடு சேர்ந்து தடுத்து நிறுத்தினார். காவிரி டெல்டாவின் முக்கியமான பகுதியான சீர்காழியை குறிவைத்து ஓ.என்.ஜி.சி வாய் பிளந்து நிற்கிறது. மக்களோ எதிர்த்து நிற்கிறார்கள். இந்த நிலையில் மக்கள் போராட்டத்தை நசுக்க போராளிகள் மீது பொய்வழக்குப் போட்டு அச்சுறுத்தி காவலில் வைக்க முயல்கிறது தமிழக அரசு.

படிக்க:
மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி
♦ தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

கடந்த ஜூலை 17-ம் தேதி போராடுவோர் மீது பொய் வழக்குகளைப் போடும் போலீசைக் கண்டித்து சட்டமன்ற முற்றுகையை மக்கள் அதிகாரம் நடத்தியது. அதை சரியென்று நிரூபிக்கிறது சீர்காழி போலீசு! மாபியாக்களின் ஆட்சியில் போராளிகளுக்கு புனிதர் பட்டமா கொடுப்பார்கள்? பொய்வழக்குகளுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை!

எதிர்த்து நிற்போம்!

  • விவசாயிகளுக்காகப் போராடினால் சீர்காழி புதுப்பட்டினம் போலீசு கொடுப்பதோ ரவுடிப்பட்டம்!
  • அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் தொடர்ந்து விவசாயிகளுக்காகப் போராடுவோம்!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321

சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 15

ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும்.

“பிராமணனால் சூத்திரப் பெண்ணிற்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை.” (மனு அத். 9 க 155) என்பது மனுதர்ம சாஸ்திரம். இதனை அடுத்து, மற்றொன்று கூறப்பட்டுள்ளதையும் உற்று நோக்க வேண்டும்.

“பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடத்தில் பிறந்துள்ள புத்திரன் செய்யும் சிரார்த்தமானது பரலோக உபயோகமாகாததால், அத்தகைய பிள்ளை உயிரோடிருந்தாலும் பிணத்திற்கு ஒப்பாவான்” (மனு அத் 9. க. 178) என்று மனுதர்மம் கூறுகிறது.

இந்த மனுதர்ம நீதியே, இன்று ஆரியர் – திராவிடர் கலப்பு மணத்தைச் செல்லாமலடித்ததற்கு காரணம் ஆகும். இக்கருத்துக்களை வெளியிடும் ஆரிய சாஸ்திரங்களே, இன்று ஒரு பார்ப்பனரை மணம் புரிந்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்ற ஒரு திராவிட மாதைச் சோற்றுக்கின்றித் தவிக்க விட்டு விட்டன!

தந்தையின் கருமத்திற்கு உடையவனே புத்திரனாவான். இத்தகைய உரிமையுள்ள புத்திரனுக்குத்தான் தந்தையின் செல்வத்தில் உரிமையுண்டு. இம்மாதிரி கருமஞ் செய்யும் உரிமை பெண்களுக்கில்லாததினால்தான், அவர்களுக்குத் தந்தை சொத்தில் உரிமையில்லை. இக்கருத்துக்களை இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனாலேயே, இன்றும் நம் பெண் மக்கள் சமூகம், சொத்துரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இதுவும் ஆரியக் கொடுமையே.

மேலே நாம் எடுத்துக்காட்டிய மனுதர்மத்தில் சூத்திர மனைவியின் மகன் கருமஞ் செய்வதற்கு உரிமை படைத்தவன் அல்லன் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இக்கருத்தின் மீதுதான், சூத்திரமனைவியின் பிள்ளைக்கும் சொத்துரிமையில்லையென்பது மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளது.

இன்று அமைந்துள்ள இந்து சட்டமும் பெரும்பாலும் ஆரிய ஸ்மிருதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவையே. ஆதலால், இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று, இப்பொழுது பெருங்கிளர்ச்சியும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.

ஒரு பார்ப்பனரல்லாதான், ஓர் ஆரியப் பெண்ணையோ அல்லது ஒரு திராவிடப் பெண்ணையோ மணந்து கொண்டாலும் சரி, மணக்காமல் சேர்த்து வைத்துக் கொண்டாலும் சரி, அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தந்தை சொத்தில் உரிமையுண்டு என்பது சட்டம். இச்சட்டப்படி பல தீர்ப்புகள் ஆகியிருக்கின்றன. ஆனால் பார்ப்பனன் மாத்திரம், மற்ற இனத்துப் பெண்ணிடம் பெற்ற பிள்ளைக்குச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லையாம். என்ன அநீதி! இதுவா, திராவிடர் – ஆரியர் வேற்றுமை இல்லை என்பதற்கு அடையாளம்?

ஆரிய அநீதி என்றும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு, 1939-ம் ஆண்டு நடைபெற்ற வேறொரு வழக்கையும் இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். ஒரு திராவிடர், ஒரு திராவிடப் பெண்ணை மூன்று மாதம் கருவுற்றிருக்கும்போதே தெரியாமல் மணந்து கொண்டார். பிறகு உண்மை வெளிப்பட்டதும் விவாக விடுதலைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால் நீதிபதி, சூத்திரர் விபச்சாரக் குற்றம் கற்பித்து மனைவியை விலக்க உரிமையில்லை என்று தீர்ப்பளித்துவிட்டார். இது ஆரியர் – திராவிடர் பேதமின்மையைக் காட்டுகிறதா?

இத்தகைய அநீதிகளை ஒழிப்பதற்காகத்தான் இன்று ஆரியர் – திராவிடர் கிளர்ச்சி நடைபெறுகிறது; ஆரியர்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டும்; ஆரியர்களின் அக்கிரமமான ஸ்மிருதிகள் அழிய வேண்டும்; அப்பொழுதுதான் இந்த நாட்டில் நாம் சம நீதியைக் காண முடியும்; உத்தியோகங்களில் திராவிடர்க்குக் கிடைக்க வேண்டிய சரியான பங்கு கிடைக்க வேண்டும் என்பது சமநீதி பெறுவதற்குத்தான்.

ஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுகிறது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?

உண்மையில் மேற்படி நீலா வெங்கட சுப்பம்மாள் என்னும் மாதின் வழக்கு, திராவிட சட்டதிட்டப்படி நீதிபதிகளால் விசாரணை செய்யப்பட்டிருக்குமானால், முடிவு வேறாக இருக்குமென்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் ஸ்மிருதிகளையும் வேதங்களையும் நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் இத்தகைய தீர்ப்பைத்தான் கூறக்கூடும்.

இனியேனும் திராவிடர்கள் உண்மையை உணருவார்களா? ஆரியர் – திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுகிறது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?

‘பிராம்மணா போஜனப்பிரிய’ என்ற மொழியின் உண்மையை ஊரார் அறிவர். ஆரிய மதக்காரர் தம் இனத்தவர் பாடுபடாது பிழைக்க வழிவகுத்துக் கொண்டு வரதட்சணை காணிக்கை, சமாராதனை முதலியவற்றைச் செய்வது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு உதவும் என்று கற்பித்து விட்டனர். கள்ளமற்ற உள்ளத்தினரான திராவிட மக்கள், இந்த ஆரியப் பித்தலாட்டத்துக்கு இரையாகிப் பணத்தைப் பாழாக்கிக் கொள்கின்றனர். நம் இனத்தவர் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி வாடுவது பற்றிக் கண்ணெடுத்தும் பாராதவர்கள், எச்சில் இலைமீது பசியுடன் நாய் பாய, அதன் மீது அதிகப் பசியுடன் பாய்ந்து பருக்கையைத் தின்னும் பஞ்சைப் பராரிகளைப் பற்றிய பரிதாப உணர்ச்சி கொள்ளவில்லை. ‘பிராமணப் பிரீதி’ ‘தேவதா பிரீதி’ என்ற கற்பனையில் சொக்கிப் பிராமணர்களுக்கு வயிறு புடைக்கச் சந்தர்ப்பணை நடத்துவர். இன அன்போ , பகுத்தறிவோ இருந்தால் இது நடக்குமா? ஓர் இனம் பாடுபட்டு வதைகிறது; மற்றோர் இனம் நோகாமல் வாழ்கிறது; ஏய்த்துப் பிழைக்கிறது. இது இந்தக் காலத்திலே கிடையாது என்று இளித்தவாயர் கூறுவர்.

திருவல்லிக்கேணி உத்திராதிமடத்தில் பிருந்தாவனமாயிருக்கும் ஸ்ரீ சத்திய ஞானதீர்த்த ஸ்வாமிகளுக்கு விசேஷ அபிஷேக அலங்காராதிகள் செய்து தூப தீப நைவேத்தியம் செய்து, பிறகு 2000 பேருக்குப் பிராமண சந்தர்ப்பணை நடந்தது என்ற சேதி, “சுதேசமித்திரன்’’ 1941 பிப்ரவரி 11-ம் தேதி இதழில் இருக்கிறது. இது போல் செய்திகள் அடிக்கடி வெளிவருவதுண்டு.

அன்னமிடுவது மக்களின் கருணையைக் காட்டும் செயல் எனில், ஏன் பிராமணருக்கு மட்டும் இடுகின்றனர்? ஏழை எளியவர் எல்லோருக்கும் அன்னமிடுவோம் என்று ஏன் நடத்தவில்லை? ஏட்டிலே எழுதிவிட்டான் ஆரியன், பிராமணனுக்குத்தான் சமாராதனை நடத்த வேண்டும். அதுதான் பகவத் கடாட்சத்தைத் தரும் என்று, ஏமாந்த சோணகிரிகள், இன்னும் அதை நம்பி அழிகின்றனர்.

திராவிட நாடு திராவிடருக்கானால், பாடுபடாத பேர்வழிகளுக்குப் பருப்பும் பாயசமும், பாடுபடும் மக்களுக்குக் கம்புங் கூழும் கிடைக்கும் நிலையா இருக்கும்? ”உழைத்து வாழ, ஊரானை ஏய்க்காதே” என்பதன்றோ நீதியாக இருக்கும்? அந்தக் காலம் வந்தால் ஆரியன் வாழ்வு கெடுமே என்ற அச்சத்தினாலேயே திராவிட நாட்டுப் பிரிவினையை ஆரியர் எதிர்க்கின்றனர். ஊரை ஏய்த்து உண்டு கொழுக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

”பசியோ பசி” எனக் கதறும் மக்கள், பாடுபடாது வாழுபவர் இருக்கும் திக்கு நோக்கித் திரும்பினால், என்ன ஆகும்? அந்நாள் வருவது என்றோ ?

படிக்க:
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !
தகவல் அறியும் உரிமை சட்டத்தை ’ வெளிப்படையான ’ மோடி அரசு திருத்துவது ஏன் ?

அன்னியரான ஆரியன் ஆசாரங்களையும், மதக் கொள்கைகளையும் பண்டிகைகளையும் பின்பற்றுவதாலும், ஆரியரை உயர்ந்த வகுப்பினராகவும் குருக்களாகவும் ஒப்புக்கொள்வதாலும், ஆரியர்கள் மேனி தீமைகளுக்கெல்லாம் பொருள் கொடுத்து ஆரியர் பாதம் பணிவதாலும், ஆரிய ஆதிக்கத்திற்குட்பட்ட கோயில்களுக்குப் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பகுத்தறிவில்லாமல் அள்ளிக் கொடுப்பதாலுமே, ஆரிய ஆதிக்கம் வலுக்கவும் திராவிட மக்கள் சிறுமை நிலை எய்தவும் நேரிட்டு விட்டது.

இதைப்பற்றிப் பேசியும் எழுதியும், வாயும், கையும் அலுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். அப்படி இருந்தும், தங்களின் சிறுமை நிலைக்காகத் திராவிட மக்களுக்குப் பேருணர்வு தோன்றாதது பற்றி வருந்த வேண்டியிருக்கிறது.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை