Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 164

13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’

0
25.06.2022
13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு:
இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’
13,000 ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ரூ.7500 முதல் ரூ.12,000 வரை சம்பளம் வழங்கப்போவதாக அறிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை 10 மாதங்களுக்கு மட்டுமே என்றும் கூறப்படுகிறது.
ஜூலை 1-ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு  பிறப்பித்துள்ளார்கள். இது ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட டெட் தேர்வை 5 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். கொரோனா நெருக்கடியில் இரண்டு ஆண்டுகளாக டெட் தேர்வு நடைபெறாததால் இந்தத் தேர்வை எழுத ஏழு இலட்சம் பேர் வரை காத்திருப்பதாக தெரிகிறது.
இவர்களின் வாழ்க்கையில் மண்ணள்ளிப் போட்டுள்ளது அரசின் மேற்கண்ட அறிவிப்பு.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, இடைநிலை ஆசிரியர் பதவியில் 4,989 காலியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,087 இடங்களும் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சில ஆசிரியர்கள் குறிப்பிடுவதிலிருந்து 4989 – இடைநிலை ஆசிரியர்கள், 5154 – பட்டதாரி ஆசிரியர்கள், 3188 – முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மொத்தமாக நிரப்ப வேண்டியுள்ளது.
இதுபோக கொரோனா காலத்தில் கடந்த இரு வருடங்களாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை புதியதாக 5.80 இலட்சம் உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்போவதாகவும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தப் போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
படிக்க :
♦ 10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி: ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மனநல ஆலோசகரா? மாணவர் நலன் அரசா?
♦ குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !
இதுபோக, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி – யு.கே.ஜி தொடங்க அனுமதி கொடுத்து 2381 ஆசிரியர்களை இடைநிலைப் பள்ளியில் இருந்து மழலையர் பள்ளிகளுக்கு பணியை மாற்றி அமைத்தனர். இதை இடையில் ரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் பின்வாங்கிக் கொண்டார்கள். இதனால் இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
இதுபோக அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை பெரிய அளவிற்கு புகுத்தியுள்ளார்கள் இதற்கான ஆசிரியர்கள் எவ்வளவு பேர் தேவை. எதார்த்தத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் தமிழ்வழி கல்வி புறக்கணிக்கப்பட்டு அதனிடத்தில் ஆங்கிலவழிக் கல்வி மேலும் வளர்கிறது. சென்னை போன்ற மாநகரங்களில் தமிழ்வழிக் கல்வி பள்ளிக் கூடங்களை தேடித்தான் பிடிக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் பெற்றோர்கள்.
இப்படி ஆசிரியர் பற்றாக்குறை தலைவிரித்தாடும் இந்த சூழ்நிலையில்தான் மாணவர்கள் 12 பேர் தற்கொலை செய்துள்ளனர். நாற்பத்தி ஏழு ஆயிரம் மாணவர்கள் தமிழில் தேர்ச்சி அடையவில்லை கணிதத்தில் 83 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை. பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
இந்த நிலையில்தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கல்வியாளர்களும் பெற்றோர்களும் பல்வேறு ஜனநாயக முற்போக்கு சக்திகளும் அமைப்புகளும் கோரிவந்த நிலையிலும் கூட அதையெல்லாம் பெயரளவிற்கு சரி, சரி என்று சொல்லிவிட்டு எதுவும் செய்யாமல் இப்போது புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக அறிவிக்கிறார்கள்.
இந்த அறிவிப்பு ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நியமிப்பதன் பெயரில் நவீன கொத்தடிமை முறையை புகுத்துகிறார்கள்.
இதுதான் இன்று தனியார் பள்ளிகளில் வேலை செய்யக்கூடிய ஆசிரியர்களின் நிலைமை. மாதம் ரூ.7000 – ரூ.8000 சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கடும் வேலை நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். எந்த வேலை உத்தரவாதமும் இல்லை. இவர்கள்தான் பெரும்பாலும் அரசு நடத்தக்கூடிய இந்தத் ஆசிரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவர்களை மீண்டும் அதே நிலையில் அரசுப்பள்ளியில் வைத்துக்கொள்வதற்காகதான் மேற்கொண்ட அரசின் தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் உத்தரவு.
இன்று இந்த 13 ஆயிரம் பேரை தற்காலிகமாக நியமிப்பதன்மூலம் அரசு மிச்சப்படுத்த கூடிய தொகை ஒப்பீட்டளவில் மிக அதிகம்.
இதைப்போல, 2022 மார்ச் மாத பட்ஜெட்டில் கல்லூரி செல்லும் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என அறிவித்தார்கள். ஆனால், அதே நேரத்தில் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவி தொகை 50 ஆயிரம் (பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு), 25 ஆயிரம் ஒரு பவுன் தங்கம் என வழங்கி வந்தார்கள்.
இதன்மூலம் ஒரு பெண்ணுக்கு ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்தார்கள். இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டுதான் கல்லூரி பெண்களுக்கான திட்டம் என புகுத்தினார்கள். கல்லூரிப் பெண்களுக்கு மாதம் வழங்குவது வரவேற்கக் கூடியதுதான் என்றாலும் இப்போது பெண்களுக்கு வழங்கிவந்த ரூ.90 ஆயிரம், ரூ.36 ஆயிரமாக குறைத்துவிட்டார்கள்.
பள்ளிக்கல்வித் துறைக்கு கடந்த 2020-ம் ஆண்டு 34 ஆயிரத்து 181 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2021-ம் ஆண்டு 32 ஆயிரத்து 599 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து ரூ.1,582 கோடி நிதியை குறைத்தார்கள்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறையில் கூடுதலாக 4 ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் அது பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கே போதாது என்கிறார்கள் ஆசிரியர்கள். அப்படியானால் புதிதாக ஆசிரியர் பணியை நிரப்ப எந்தப் பணத்தை செலவு செய்வார்கள்.
படிக்க :
♦ ஆந்திரா : கொரோனா காலத்தில் கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் – கல்வி தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசு !
♦ மாதிரிப் பள்ளிகளில் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை : காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை !
அரசு கல்விக்கு ஒதுக்கும் நிதியை குறைப்பது தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது; கல்வியிலிருந்து ஒதுங்கிக்கொள்வது போன்றவை தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கையின் அடிப்படையிலானது.
இதேபோல்தான், கிரீசில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு வழங்கக்கூடிய சம்பளம் உதவிகளை தொடர்ச்சியாக வெட்டி குறைப்பார்கள். இதுதான் ஐ.எம்.எப், உலக வங்கி கிரீசுக்கு இட்ட கட்டளை. அதுதான் இந்தியாவிலும் நடந்து வருகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை தீவிரப்படுத்தி பெயரளவுக்கு கூட மக்கள் நல அரசு என்பது இல்லாமல் ஒழித்துக் கட்டுகிறார்கள். இதற்கு திராவிட மாடல் ஒன்றும் விதிவிலக்கல்ல. இதைத்தான் இன்று தமிழக அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பத்து மாதத்தில் நிறுத்திக் கொள்வோம் என்ற உத்தரவு  இப்போது எழும் எதிர்ப்பு குரல்களை சமாளிக்க மட்டும்தான் பயன்படுத்துவார்கள்.
இல்லம் தேடி கல்வித்திட்டம் ஆறுமாதத்தில் நிறுத்தப்படும் என்றார்கள். ஆனால், இந்த ஆண்டும் ரூ.200 கோடி ஒதுக்கி திட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் மோடி புதிய கல்விக்கொள்கையாக, மூன்று வேளாண் சட்டங்களாக, தொழிலாளர் விரோத சட்டங்களாக தீவிரமாக அமல்படுத்துகிறார்.
இதை எதிர்த்து முறியடிக்க மாணவர்கள் – இளைஞர்கள் – பெற்றோர்கள் – ஆசிரியர்கள் – பேராசிரியர்கள் – கல்வியாளர்கள் மற்றும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து களப் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது.

தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.

10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி: ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மனநல ஆலோசகரா? மாணவர் நலன் அரசா?

0
25.06.2022
10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி : ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை!
தேவை மன நல ஆலோசகரா? மாணவர் நலன் கொண்ட அரசா?
டந்த ஜூன் 20-ம் தேதி 10,12-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தாலும், மதிப்பெண் குறைவாகப் பெற்றதாலும் விரக்தியடைந்த மாணவ, மாணவிகள் ஜுன் 21 அன்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 25-க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
பத்து நாட்களுக்கு முன்புதான் ஆந்திராவில் இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்து 34 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை மீண்டும் நம் முன்னால் நிறுத்துகிறது தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.
இதுபோக, பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வில் தமிழில் 47 ஆயிரம் பேரும் கணிதத்தில் 83 ஆயிரம் பேரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்த நிலைமைகளைப் பற்றியெல்லாம் அமைச்சர்களும் அதிகாரிகளும் கல்வியாளர்களும் மனநல ஆலோசகர்களும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி “10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் தவறான முடிவு எடுக்க வேண்டாம்” என மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரின் இந்தப்பேச்சு எதைக் காட்டுகிறதென்றால், மாணவர்கள் தவறான முடிவு எடுப்பதாக மாணவர்கள்மீது பழியைப்போட்டு கல்வித்துறையின் நடவடிக்கைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் பரிசீலிக்காமல் மூடிமறைத்து தங்களை கருணை கொண்டவர்களாக காட்டிக் கொள்ளவதற்கான வேடத்தைத்தான்.
படிக்க :
♦ குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !
♦ ஆந்திரா : கொரோனா காலத்தில் கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் – கல்வி தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசு !
அமைச்சரின் பேச்சை கண்டித்து பெரிய அளவில் கண்டன குரல்கள் எழும்பாதது வேதனைக்குரிய விஷயம். இந்த எதிர்ப்புக் குரல்கள் இல்லாததால்தான் இவர்களால் கூச்சநாச்சம் இல்லாமல் இப்படியெல்லாம் மாணவர்கள்மீது பழியைப் போட முடிகிறது.
கொரோனா காலகட்டத்தில்  பள்ளிக்கூடம் செல்வதே பெரிய அளவில் தடைபட்டது. ஆன்லைன் வகுப்புகள் பெரிய அளவில் பயன்தரவில்லை. பெரும்பாலான பெற்றோர்களால் ஆண்ட்ராய்டு போன் வாங்கித் தர முடியவில்லை. மக்களின் வறுமைநிலை காரணமாக மாணவர்களும் கிடைக்கும் வேலைக்கு செல்லக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதுபோக கஞ்சா போதை பழக்கங்களுக்கும் ஆன்லைன் கேம்களுக்கும் அடிமையாகினர். கல்வியிலிருந்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் விலகி நின்றனர். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அன்று வேடிக்கை பார்த்தது அரசு.
அதன்பிறகு கொரோனா காலகட்டம் முடிந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “கொரோனா ஊரடங்கால், தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளை தேடி, பெற்றோரும், மாணவர்களும் வருகின்றனர். அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், போதுமான ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என பேசினார்.
கொரோனா காலச் சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை புதியதாக 5.80 இலட்சம் உயர்ந்துள்ளது. இப்படி தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியை நோக்கி இலட்சக்கணக்கான மாணவர்கள் வந்துள்ளனர். இந்த நிலைமைக்குப் பொருத்தமாக இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
அதன்பிறகு, மாணவர்களின் கற்றல் குறைபாட்டைப்போக்க இல்லம்தேடி கல்வி கொண்டுவருவதாக திட்டத்தை அறிவித்தார்கள். ஆசிரியர்கள், பள்ளிக் கூடங்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை காட்டிலும் இல்லம்தேடி கல்விக்கு மேற்பார்வையிட அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசால் நிர்பந்திக்கப்பட்டனர். இதனால் பள்ளிக் கல்வி பாதியில் பரிதவித்தது.
இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் ஒரு பக்கம் மாணவர்கள் வருகை அதிகம்; இன்னொரு பக்கம் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆசிரியர்களை மாற்று வேலைக்கு அனுப்பியது; இதெல்லாம் மாணவர்களின் கற்றல் திறனில் முன்னேற்றத்தை கொண்டு வரவில்லை என்பதுதான் எதார்த்தம்.
Schoolsஇப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அதன்பிறகு தேர்வு நடத்துவதைப் பற்றி எந்த முடிவும் செய்யாமல்; அவசரகதியில் பாடத்திட்டத்தை வேகமாக முடித்தார்கள்; தேர்வை நடத்தினார்கள். அதன்விளைவு 12 மாணவர்கள் தற்கொலை 25 மாணவர்கள் தற்கொலை முயற்சி பல பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி இன்மை என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
கணிதம் போன்ற படத்தில் இவ்வளவு பேர் தோல்வி அடைந்து இருப்பது எதைக் காட்டுகிறது என்றால் மாணவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லை என்பதுதான் எதார்த்தமாக தெரிகிறது.
இதுபோக, மாணவர்களின் நிலைமையை கணக்கில் கொள்ளாமல் கடினமான வினாத்தாள்கள் தேர்வில் கொடுக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் இந்தக் கல்வித் துறையின் அவலங்களை எழுந்து வந்து கேள்வி கேட்கப்போவதில்லை. தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவர்களுக்கோ மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் அதற்காக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற நிலைமைக்கு கல்வித்துறை சென்று கொண்டிருக்கிறது. ஆனால், மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத இந்த அரசுக்கு யார் மனநலஆலோசனை சொல்வது.
மனநல ஆலோசகர்கள் தொடர்ச்சியாக கூறுவதெல்லாம், மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்; உற்சாகப்படுத்த வேண்டும்; ஆசிரியர்கள் கவனமாக பார்க்க வேண்டும்; பெற்றோர்கள் கவனமாக பார்க்க வேண்டும். இதுதான். அரசின் நடவடிக்கை பற்றி பேசுவதில்லை. பாதிப்பை ஏற்படுத்துபவனுக்கு ஆலோசனை இல்லை பாதிக்கப்படுபவர்களுக்குதான் ஆலோசனை என்ன மண்ணாங்கட்டி மனநல ஆலோசனையோ தெரியவில்லை!
தற்போதைய சூழலில் கல்வி என்பது மதிப்பெண் அடிப்படையிலேயே உள்ளது. அதை கண்டிப்பாக மாற்ற வேண்டும். தனி நபர் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தாலும் அதைப்பற்றி ஏன் அரசு அக்கறை கொள்வதில்லை என பார்க்க மறுக்கிறார்கள்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கைகளை அரசு அனுமதித்த பிறகு கல்வி என்பது காசுக்காக விற்கப்படும் ஒரு பொருளைப்போல் ஆகிவிட்டது. அரசும் படிப்படியாக கல்வியில் இருந்து ஒதுங்கி கொண்டே போகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல எங்கும் முளைத்துள்ளன. கடும் போட்டா போட்டியில் இறங்கி தங்கள் பள்ளிகள் இலாபம் சம்பாதிக்க கடும் போராட்டங்களை நடத்துகின்றனர். அதில், முக்கியமானதுதான் மதிப்பெண். மதிப்பெண்களை காட்டியே பெற்றோர்களை தங்கள் பக்கம் கவர்ந்து இழுக்கின்றனர்.
பல ஆயிரங்களிலும் இலட்சங்களிலும் பணங்களை வசூல் செய்கின்றனர். தனியார் பள்ளிகளின் ஆதிக்கமும் அவர்களின் மதிப்பெண் முறையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்துக்கு இதுநாள் வரை உற்சாகமூட்டி ஊக்கப்படுத்தி வந்துள்ளது அரசு.
படிக்க :
♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
இந்த ஒட்டுமொத்த போட்டாபோட்டியில் மக்களுக்கும் மாணவர்களுக்கும் மதிப்பெண் என்பதே முக்கியமானது என்ற சிந்தனையை ஆழப் பதிய வைத்துள்ளனர்.
இதனால் தேர்வுக்கு முன்பே அதிக மதிப்பெண் எடுக்க சொல்லி நிர்பந்தம் கொடுக்கிறார்கள். மதிப்பெண் எடுத்தால் மட்டும்தான்; இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலைமைக்கு மாணவர்களைத் தள்ளியுள்ளியது தனியார்மயமும் அதை தீவிரமாக அமல்படுத்திய அரசும்.
கொரோனா காலகட்டம் இந்த நிலைமையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது என்பதைத்தான் 12 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
மாணவர்களின்மீது வன்முறையை நிகழ்த்தியுள்ள தனியார்மயத்தின்மீது நாம் வன்முறையை நிகழ்த்தும்போதுதான் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையை அமல்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அரசை தூக்கி எறிந்து மக்கள் நலன் கொண்ட அரசை நிறுவுவதன் மூலமே கல்வியை சேவையாக மாற்ற முடியும்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைத்து கல்வியாளர்களின் கோரிக்கையும் கல்வி என்பது சேவை அது அனைவருக்கும் இலவசம் என்பதை உயர்த்திப் பிடிப்பதுதான். பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கொண்ட கூட்டணியை உருவாக்கி எதிர்த்துப் போராடுவோம்.

தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.

குஜராத் படுகொலை வழக்கு: தீஸ்தா செதல்வாட் கைது ! | தோழர் சுரேசு சக்தி | வீடியோ

2002-ம் ஆண்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் கலவரத்தின் பெயரில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக; அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த, நரேந்திர மோடி அவர்களின் பங்கு குறித்து விசாரிப்பதற்கென; தொடர்ச்சியாக ஒரு போராட்டத்தை, அந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜாஃப்ரியின் மனைவியும்; Communalism Combat என்ற மதவெறிகளுக்கு எதிரான பத்திரிகையை திறன்பட நடத்திவந்த திஸ்தா செதல்வாட் அவர்களும்; சட்டரீதியான தொடர் போராட்டங்களை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார்கள்.
அதன் இறுதியான போராட்டமாக உச்சநீதிமன்றத்தில் குஜராத் கலவரத்தில் மோடியுடைய பங்கு எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவானது அறிக்கையை முன்வைத்ததை கீழமை குற்றவியல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திருமதி ஜஃப்ரி அவர்களும் தீஸ்தா செதல்வாட்-ம் தொடர்ந்திருந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பாக அவ்வாறு எஸ்.ஐ.டி என்ற சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்தது சரிதான்; இதில் மோடி அவர்களை அவசியமற்று பொய்யான முறையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளதை பயன்படுத்தி நேற்றையதினம் குஜராத் காவல்துறை உடனடியாக ஒரு எஃப்.ஐ.ஆர்.-யை போட்டு தீஸ்தா செதல்வாட்-யும் முன்னால் டி.ஜி.பி.யும் நானாவதி கமிஷனில் மோடி அவர்களின் பங்கு குறித்து பிரமாண வாக்குமூலம் அளித்த ஸ்ரீகுமார் அவர்களையும் அவர்கள் கைது செய்துள்ளார்கள்.
அதேபோன்று ஏற்கனவே இக்கலவரத்தை முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்துவதை தடுக்க வேண்டாம் இந்து கரசேவகர்கள் மீது மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி கூறியதாக பிரமாண வாக்குமூலம் அளித்த சஞ்சிவ் பட், ஏற்கனவே பல ஆண்டுகளாக அவர் மீது புனையப்பட்ட ஒரு வழக்கில், மோடியை எதிர்த்தார் அமித்ஷாவை எதிர்த்தார் என்ற காரணத்திற்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீதும் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டு சிறையில் வைத்து இந்த வழக்கில் கைதுசெய்யவுள்ளதாக இன்றைய தினம் இந்த வழக்கை விசாரித்துவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த தீவிரவாத தடுப்பு காவல்துறையின் அதிகாரி பேட்டியளித்திருக்கின்றார்.
குஜராத் கலவர வழக்கு தொடர்பான பல்வேறு விபரங்களை இந்த காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.
காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

 


குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது! | மக்கள் அதிகாரம் கண்டனம்

26.06.2022
குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது!
பத்திரிகை செய்தி
குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அளித்ததாகக் கூறி சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்டை பழிவாங்கும் நோக்கில் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தீஸ்தா, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி – அமித்ஷா கும்பலின் இந்த பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தால் இஸ்லாமியர்கள் 2000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார்.
படிக்க :
♦ தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !
♦ தீஸ்தா நேர்காணல் : குஜராத் காவிமயமானது எப்படி ?
இப்படுகொலை குறித்து விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு அப்போதைய முதல்வரும் குஜராத் கலவரத்தை தலைமையேற்று நடத்திய மோடி உள்பட 64 பேரை விடுவித்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஜாப்ரி மனைவி, ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்-ம் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் 2002 குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 64 பேருக்கு சிறப்பு விசாரணை குழு க்ளீன்சீட் வழங்கி உள்ளதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து அவர்களைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது.
இந்நிலையில்தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, தீஸ்டா செதல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்.ஐ.டி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே, மும்பையிலிருந்த தீஸ்தா செதல்வாட்-ஐ குஜராத் மாநில போலீசு கைதுசெய்து அவரை குஜராத் அழைத்துச் சென்றுள்ளது.
மோடிக்கு எதிராக பேசியவர்கள் கைதுசெய்யப்பட்ட காலம் மலையேறிப்போய், மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களை கைதுசெய்வது என்ற பாசிச நடவடிக்கைகளின் புதிய அத்தியாயத்தை மோடி – அமித்ஷா கும்பல் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, பீமாகோரேகன் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களின் கணினிகளை முன்னரே ஹேக் செய்து; அதில் பொய்யான கடிதங்களை வைத்து, அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில், ஒருவரான நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டான் சுவாமிக்கு உறிஞ்சி குடிக்க ஸ்ட்ரா கூட தடைவிதிக்கப்பட்டு அரசு பயங்கரவாதத்தால் கொலை செய்யப்பட்டார்.
ஏறத்தாழ 90 சதவீதத்திற்கு மேல் உடல் ஊனமுற்றோர் பேராசிரியர் சாய்பாபா, கொரோனா தொற்றுநோயால் இரண்டுமுறை பாதிக்கப்பட்டார். எனினும் அவர் இப்போதுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஆனந்த் டெல்டும்டே பலவேறு நோய்களால் பாதிக்கப்பட்டபோதும் அவரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஆந்திராவின் புரட்சிக்கவிஞர் வரவரராவ் தன்னுடைய மருத்துவ பரோல் முடிந்து மீண்டும் சிறை செய்வதற்காக காத்திருக்கிறார்.
அந்த வரிசையில் தீஸ்தா செதல்வாட் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.
படிக்க :
♦ அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
♦ தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்
இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக, சிறுபான்மை மக்களுக்காக, பழங்குடியின – தலித் மக்களுக்காக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் பயங்கரவாதிகளாக்கப்பட்டு சட்டத்தின்முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்டு பழிவாங்கப்படுகிறார்கள். இதையெல்லாம் இந்த நாட்டின் நீதிமன்றங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன அல்லது அரச பயங்கரவாதத்தின் ஒரு பிரிவாகவே மாறிப் போயிருக்கின்றன.
இந்த நாட்டின் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக, அவர்கள் படுகொலை செய்யும்பொழுது அதற்கு எதிராக போராடிய -குரல் கொடுத்த- அறிவுஜீவிகள்,  தலைவர்கள் ஒவ்வொருவராக சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நாடு மீளமுடியாத  காவி பாசிச இருளில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு எதிராக சிந்திக்கும் அனைவருக்குமான இடம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
காவி – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளை கருத்திலும் களத்திலும் மோதி முறியடிக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியதே உடனடிப்பணியாக இருக்க வேண்டும் என்றும் இதற்காக மக்கள் அணிதிரண்டு முன்வர வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.
9962366321.

கார்ப்பரேட்டின் நலனுக்காக நாட்டின் மனித வளத்தை நாசம் செய்யும் நடவடிக்கையே அக்னிபாத்! | வீடியோ

மோடி அரசு அக்னிபாத் என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்திய இராணுவத்தில் இளம் ரத்தத்தை பாய்ச்சுவது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்ற பெயரில் முழுக்க முழுக்க இராணுவத்தில் ஒரு காண்டிராக்ட் முறையை திணிக்கின்றது.
இந்த காண்டிராக்ட் முறை என்பது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நம் நாட்டில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் காண்டிராக்ட் முறை என்பது இன்றைக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
நிரந்த வேலை என்பதை நிரந்தரமாக ஒழிச்சிக்கட்டும் வேலையை இந்த மோடி அரசு செய்து வருகிறது. அதன் ஒரு நீட்சியாகத்தான் இன்று இராணுவத்திலும் நிரந்தரவேலை என்பதை ஒழித்துவிட்டு, காண்டிராக்ட் முறையில் ஆட்களை எடுப்பது என்ற முடிவிற்கு அரசு வந்துள்ளது. அதற்கு அக்னிபாத் என்ற ஒரு பெயரை வைத்துள்ளது.
நாடெங்கிலும் காண்டிராக்ட் முறை என்பது மோடி உருவாக்கிய திட்டமா என்றால் இல்லை. இது தனியார்மய தாராளமய உலகமய கொள்கையின் பின்புலத்தில் நடக்கிறது. இதில் உலக வங்கி உலக வர்த்தகக் கழகம் போன்ற நிறுவனங்களின் மூலம் ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த ஒப்பந்தங்கள் என்ன சொல்கின்றதோ அதைத்தான் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் நடைமுறைபடுத்தி வருகிறார்கள்.
இராணுவம் ஏதோ நாட்டுப்பற்று கொண்ட பணி என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், அது நிரந்தர பணி அப்பளவுதானே தவிர, அதில் நாட்டுப்பற்று எல்லாம் ஒன்றும் கிடையாது.
உண்மையான நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் இராணுவங்கள் தற்போது எங்கும் இல்லை. ஆனால், முன்பு சோவியத் ரஷ்யாவிலும், மாசேதுங் சீனாவிலும் இருந்திருக்கிறது. அவர்களின் அர்ப்பணிப்பு அளப்பறியது. பாசிச இட்லரை மண்ணைக்க வ்வ வைத்த போல்சுவிக் இராணுவம் அது.
இன்று, இராணுவங்கள் சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவதற்கும், அன்னிய நாட்டு மக்களை ஒடுக்குவதற்குமே பயன்படுத்தப்படுகிறது. எனவே இது ஆளும்வர்க்கத்தின் வன்முறைகருவி அப்பளவுதான்.
அக்னிபாத் திட்டத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன்.
காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்: வெற்றிலையில் மை தடவினால் வெற்றி கிட்டுமா?

0
18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்துகொள்ள ஜப்பான் உள்ளிட்ட 13 அணிகள் நேரடியாக  விளையாட தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள 11 அணிகள் தகுதிசுற்று மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்காக கடந்த சில வாரங்களாக தகுதிசுற்று போட்டிகள் நடைபெற்றன.
தகுதிசுற்றில் டி பிரிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் மற்றும் கொலம்பியா ஆகிய 4 அணிகள் இடம்பெற்று இருந்தன. கொல்கத்தாவில் உள்ள சால்ட் கால்பந்து மைதானத்தில் தகுதிசுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆட்டத்தில் இந்தியா அணி ஆப்கானிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய அணிகளை எளிதில் வீழ்த்தியது.
மேலும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு 4-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி டி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறியது. இதன்மூலம் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கான தகுதியையும் இந்திய அணி பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு ஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதிபெற்று இந்தியா சாதனை படைத்ததாக, இந்திய கால்பந்து ரசிகர்களும் இந்திய கால்பந்து சம்மேளனம் கடந்த சில வாரங்களாக பெருமை பேசி வருகின்றன.
படிக்க :
♦ திருடனுக்கு கொலை – ஜோசியனுக்கு பரிகாரம் !
♦ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !
இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு, தற்போது இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சில செயல்பாடுகளால் மிகுந்த நகைக்கக்கூடியதாக உள்ளது. இச்செயல்பாடுகள் சர்வதேச அளவில் இந்தியா கால்பந்து அணியை தலைகுணிய வைத்துள்ளதாக இந்திய கால்பந்து ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அப்படி என்னதான் செய்தது இந்திய கால்பந்து சம்மேளனம் என்று கேள்வி எழலாம். அதற்கான பதில் இதோ! கடந்த வாரம் பெற்ற இந்திய கால்பந்து அணியின் வெற்றி என்பது வீரர்களின் தகுதியாலோ; திறமையாலோ; பயிற்சி அளித்த பயிற்சியாளர்களின் உழைப்பாலோ கிடைக்க வில்லையாம். கால்பந்து அணிக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஒரு ஜோசியரின் உந்து சக்தியால்தான் இப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் ஒரு ஜோதிடர்தான். சுமார் ரூ.16 இலட்சம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்தான் இந்திய கால்பந்து வீரர்களுக்கு உற்சாகமூட்டும் பல செயல்களில் ஈடுபட்டார். அவரின் அளப்பரிய அர்ப்பணிப்பால்தான் இந்தியா இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றிருக்கிறது என்றார். மேலும் அவர் அந்த பதவிக்கு நியமனம் செய்யும்போது அவர் ஜோசியர் என்பது தெரியாது என்றும் பின்னர்தான் அவர் ஜோசியர் என தெரிந்தது என்றும் கூறியுள்ளார்.
இந்திய கால்பந்து சம்மேளனத்தின் இத்தகைய செயலைகண்டு வருத்தமடைந்த இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் தனுமாய் போஸ், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் இத்தகைய செயல் என்பது உலக அரங்கில் இந்தியாவை மிகப்பெரிய கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கி உள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு முறையான இளையோர் கால்பந்து லீக் போட்டிகளை நடத்தாமல் இருந்ததும் பல கால்பந்து தொடர்களை முடக்கியதும்தான் இந்திய கால்பந்து சம்மேளனம் செய்த சாதனை. தற்போது ஜோதிடர்களின் கைகளில் இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை சம்மேளனம் ஒப்படைத்துவிட்டது என்பது நகைப்புக்குரியது. மேலும் இந்திய கால்பந்து கூட்டமைப்பில் ஏகப்பட்ட ஊழல்முறைகேடுகள் அறங்கேற்றப்பட்டு வருகிறது. அது தொடர்பாக கேள்வி கேட்பவர்கள் இந்திய கால்பந்து அணியில் இருந்து வெளியேற்றப்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஊழலின் உச்சம் பெற்ற ஒரு நடவடிக்கைதான் கால்பந்து போட்டியின் ஆலோசகராக ஒரு ஜோதிடரை நியமனம் செய்த விவகாரம் என்று கூறினார்.
இந்த ஜோதிடம் எல்லாம் ஒரு திரைதான். கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்களது அயல்நாட்டு சொகுசு பயணத்திற்காக இந்த பணத்தை பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்திய கால்பந்து ஜோசியர் நியமிக்கப்படுவது என்பது இது ஒன்றும் புதியதல்ல; டெல்லியில் உள்ள கால்பந்து கிளப் ஒன்று பாபா என்ற ஒரு சாமியாரை நியமித்தது டெல்லி அணி வெற்றி பெற்ற பிறகு அவரால்தான் இந்த வெற்றி நடந்தது என்று அந்த கிளப் உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர் என்று கூறினார் போஸ்.
உலகத்தில் உள்ள கால்பந்து சம்மேளனங்கள் அனைத்தும் தங்களது அணி வெற்றிபெற அறிவியலையும், தொழில்நுட்பங்களையும், தீவிர பயிற்சிகளையும்தான் நம்பி உள்ளன. அதன்மூலம் மட்டுமே ஒரு அணியின் வெற்றி அமையும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதற்கான செயல்பாடுகளில்தான் அனைத்து கால்பந்து அணியினரும் இருக்கின்றனர். ஆனால் இந்தியா அணிக்கான தலைமை ஜோதிடரை நியமித்து வெற்றிக்காக வெற்றிலையில் மை தடவி பாத்துக்கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் இந்திய கால்பந்து ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் இப்போது ஜோசியர் நியமனம் என்ற கூமுட்டை தனத்தைப்பற்றி கவலையும் அடைந்து வருகிறார்கள்.
ஏற்கனவே இதுபோன்ற ஓர் கூமுட்டை சம்பவம் உ.பி.யில் அரங்கேற்யுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் 2,500 டன் தங்கப்புதையல் இருப்பதாக ஷோபன் சர்க்கார் என்ற போலி சாமியார் கூறினார். அதைத்தொடர்ந்து பல கோடி ரூபாய் செலவு செய்து அந்த இடத்தில் தோண்டி பார்க்கும்போது அங்கு கல்லும் மண்ணையும் தவிர வேறுஒன்றும் கிடைக்கவில்லை.
படிக்க :
♦ கால்பந்து வெற்றியை வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணித்த மரடோனா !
♦ மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்
அறிவியலை முழுமையாக புறக்கணித்துவிட்டு, பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளை புனிதமானது என ஒன்றிய பாசிச பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார அமைப்புகளும் கூறி வருகின்றன. அதன் நீட்சிதான் இந்த சமியார் நியமனம்.
இதற்குமுன் ஸ்ரோ ஏவிய ராகேட்டில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்து அனுப்பிய இந்திய அரசின் கூமுட்டை தனத்தை நாம் அறிந்திருப்போம். தற்போது விளையாட்டு துறையில் ஜோதிடரை நியமித்து விட்டார்கள். இனி விஞ்ஞானம், மருத்துவம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் இதுபோன்ற அறிவியல் அறிவற்ற ஜோதிடர்கள் நியமனம் செய்யப்படுவதை நாம் எதிர்பார்க்கலாம்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங் பரிவாரங்களில் உள்ள அறிவிளிகளின் கூமுட்டை தனங்களை முறியடிக்க, பகுத்தறிவு – முற்போக்கு எனும் ஆயுதங்களை ஏந்துவதை தவிர வேறுவழி ஒன்றும் இருக்க முடியாது.

வினோதன்

ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !

0
திரௌபதி முர்மு, பழங்குடி சமூகத்தில் இருந்து சென்ற முதல் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும், அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் பழங்குடி மக்கள் எஃகு ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போராட்டங்களுக்காக அரசின் மிகவும் கொடூரமான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
வெற்றிலை விவசாயிகள் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மீனவர்கள் வசிக்கும் பகுதிதான் திங்கியா. கடந்த பத்தாண்டுகளில் தென் கொரிய நிறுவனமான போஸ்கோ (POSCO) மற்றும் இப்போது ஜிண்டாலுக்கு சொந்தமான JSW உட்கல் ஸ்டீல் லிமிடெட் (JUSL) ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களின் மையமாக விளங்குகிறது திங்கியா.
கடந்த ஆறு மாதங்களில், எஃகு ஆலைக்கு எதிராக போராட்டத்தில் 60 பேரை போலீசு கைதுசெய்துள்ளது. ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமங்களில் மிகவும் கொடூரமான அடக்குமுறைகளை போலீசு ஏவி வருகிறது. இதனால் அப்பகுதி தொடர்ந்து பதட்டமான சூழலே நிலவுகிறது. இராணுவப்படையினரும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதனால் இக்கிராமங்களில் உள்ள பழங்குடி மக்கள், தங்கள் மனித உரிமைக்கு தொடர்ந்து அச்சுருத்தல் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு திங்கியாவில் அரசின் அடக்குமுறை தீவிரமடைந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள், கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்து பழங்குடி மக்கள்மீது தடியடி நடத்தியுள்ளனர். பல ஆர்வலர்களை கைது செய்துள்ளனர்.
***
ஜிண்டால் குழுமத்தால் ஆண்டுக்கு 13.2 மில்லியன் டன் ஒருங்கிணைந்த எஃகுத் திட்டம் அமைக்கப்படுவது என்பது பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்கின்றனர் ஆர்வலர்கள்.
படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
♦ திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
இக்கிராமங்களில் இதற்குமுன், ரூ.52,000 கோடி முதலீட்டில் 12 மில்லியன் டன் திறன் கொண்ட எஃகு திட்டத்தை அமைக்க போஸ்கோ (POSCO) திட்டமிட்டிருந்தது. 2011-ம் ஆண்டில் கோபிந்த்பூர், திங்கியா மற்றும் நுகாவ்ன் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் வன உரிமைச் சட்டத்தின்படி, நிலத்தை போஸ்கோ (POSCO) நிறுவனம் கையகப்படுத்துவதற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தென் கொரிய எஃகு நிறுவனம் (POSCO) அதிகாரப்பூர்வமாக எஃகுத் திட்டத்திலிருந்து வெளியேறியது.
ஜிண்டால் பிரதிரோத் பீதாமதி சுரக்ஷா சமிதி (ஜிண்டால் எதிர்ப்புக்குழு)-வின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் பைக்ரே, “கடந்த ஆறு மாதங்களில் 60 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். போஸ்கோ (POSCO) எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்ற 2,500 பேர் மீது 400-க்கும் மேற்பட்ட பொய்யான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது, ​ஜிண்டால் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்பதற்கு எதிராக பலர் அவ்வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,000 பேர் மீது குறைந்தது 72 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக்கிய தலைவர் தேபேந்திர ஸ்வைன் உட்பட ஏழு தலைவர்கள் சிறையில் அவதிப்படுகின்றனர். சமீபத்தில், குனி மாலிக், சுமந்த நாயக் மற்றும் திலிப் ஸ்வைன் உள்ளிட்ட ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்” என்று பைக்ரே கூறினார்.
திங்கியாவில் போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுவர்கள்.
மேலும், “கடந்த 2021 டிசம்பர் முதல், திங்கியா பாரிய உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போலீசு கட்டுப்பாட்டில் உள்ளது. திங்கியாவில் மட்டும் இரண்டு படைப்பிரிவு போலீசார் உள்ளனர். நாங்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை; நாங்கள் பொதுநல வழக்கு ஒன்றின்மூலம் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். இருப்பினும், வழக்கு முடித்து வைக்கப்பட்டு, கலெக்டர் மூலம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம்” என்று பைக்ரே கூறினார்.
போலீசின் நோக்கம் மக்களை நீண்ட காலம் சிறையில் அடைப்பதும், பழைய வழக்குகளை மீண்டும் செயல்படுத்துவதும், அனைத்து போராட்டங்களையும் ஒடுக்குவதும்தான். இரண்டு பெண் ஆர்வலர்களும் சிறையில் வாடுகின்றனர். ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு – இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முர்மு இதற்கு முன்பு பாஜக சார்பில் இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.
“பழங்குடியினரின் உரிமைகள் பற்றி முர்மு ஒருபோதும் பேசியதில்லை. அவர் அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் ஒரு கைப்பாவையாக மட்டுமே இருப்பார். அவர் மீது நாங்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?” என்று கூறுகிறார் மக்கள் இயக்கத்தின் தேசியக் கூட்டணியின் (NAPM) பிரஃபுல்லா சம்ந்தா.
படிக்க :
♦ ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?
♦ ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!
மேலும், “தேபேந்திர ஸ்வைனின் குடும்பத்தைப் பார்க்க வந்த மேதா பட்கர் தடுத்து நிறுத்தப்பட்டார். போலீசு இடைவிடாமல் திங்கியா மக்கள்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து வருகிறது. இங்கு யாருக்கும் மனித உரிமை இல்லை; யாருக்கு பேச உரிமை இல்லை. தினமும், இடைவிடாத கைதுகள் நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுகின்றன. அதில் இளைஞர்களும் கைதுசெய்யப்படுகிறார்கள்” என்று வேதனையுடன் கூறுகிறார் பிரஃபுல்லா சமந்தா.
இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடுவற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ஒடிசா மாநிலத்தின் பழங்குடி மக்களை, அரசு தன் கொடுங்கரங்களினால் ஒடுக்கி வருகிறது. திரௌபதி முர்மு ஜனாதிபதியானால் மட்டும் இந்த அடக்குமுறைகள் குறைந்துவிடுமா என்ன? அவர் பாசிச அரசின் இன்னொரு பாசிஸ்டாக இருப்பாரே தவிர பழங்குடி மக்களுக்கு ஒருபோது உதவமாட்டார்.
ஜிண்டா நிறுவனத்திற்காக பழங்குடி மக்களை ஒடுக்கும் பாசிச அரசின் கொடுங்கரங்களை உடைத்தெறிய வேண்டியது அவசியம். இயற்கை வளங்களை கார்ப்பரேட் கழுகுகளிடமிருந்து பாதுகாக்க, தொடர்ந்து போராடிவரும் ஒடிசா பழங்குடி மக்களுக்கு ஆதரவாக கரம் நீட்ட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

காளி

ஆரோக்கியமற்ற உணவு – ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் இந்திய உழைக்கும் மக்கள் !

0
றிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மற்றும் Down to Earth இதழ் வெளியிட்ட அறிக்கை, 71 சதவித இந்தியர்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் 17 இலட்சம் பேர் சத்துக்குறைவான உணவு உட்கொள்வதால் ஏற்படும் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது.
உலக மக்கள் தொகையில் 42% பேர் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என்று “இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை 2022 : புள்ளிவிவரங்களில்” என்ற தலைப்பில் அறிக்கை கூறுகிறது.
ஒரு சராசரி இந்திய குடிமகனின் உணவில் போதுமான பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் இல்லை என்று அறிக்கை கூறுகிறது. ஊட்டச்சத்து குறைவான உணவு உட்கொள்ளப்படுவதால், உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, சுவாசக் கோளாறுகள், நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.
20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியர் ஒரு நாளைக்கு 35.8 கிராம் பழங்களை மட்டுமே உட்கொள்கிறார். ஒவ்வொரு நாளும் 200 கிராம் பரிந்துரைக்கப்படுகிறது. பெரியவர்கள் ஒரு நாளைக்கு 168.7 கிராம் காய்கறிகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் குறைந்தபட்ச பரிந்துரை ஒரு நாளைக்கு 300 கிராம் ஆகும்.
படிக்க :
♦ ஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் ! – படக்கட்டுரை
♦ மோடியின் ஜூம்லாவும் இந்தியாவின் நீடித்த ஊட்டசத்து குறைபாடும் !
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமான உணவின் விலை ஒரு நபரின் வருமானத்தில் 63 சதவிதத்தை விட அதிகமாக இருந்தால் அது கட்டுப்படியாகாது என்று கருதப்படுகிறது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மற்றும் Down to Earth இதழின் அறிக்கை, நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டு எண் பணவீக்கம் கடந்த ஆண்டில் 327 சதவிதம் அதிகரித்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு – நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டை உள்ளடக்கியது – அதே காலகட்டத்தில் 84 சதவிதம் உயர்வைக் கண்டது. இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு அல்லது சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவிதமாக உயர்ந்தது.
Down to Earth இதழின் நிர்வாக ஆசிரியர் ரிச்சர்ட் மஹாபத்ரா, “உற்பத்திச் செலவு அதிகரிப்பு, சர்வதேச பயிர்களின் விலை உயர்வு மற்றும் தீவிர வானிலை தொடர்பான இடையூறுகள் ஆகியவற்றால் உணவுப் பணவீக்கத்தின் தற்போதைய உயர் நிலைகள் உந்தப்பட்டிருக்கின்றன. உண்மையில், CRISIL (Capital market company) தரவுகளின் பகுப்பாய்வு 2022 மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக விகிதத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
குடிமக்களின் உணவுமுறை ஆரோக்கியமானதாக இல்லை என்றும், “ஏற்றுக்கொள்ள முடியாத ஊட்டச்சத்து குறைபாடு” நாட்டில் தொடர்வதாகவும் அறிக்கை குறிப்பிட்டது. நாட்டுமக்களின் ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றால், மக்களின் உடல்நலம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும்.
ஒருப்புறம், மக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்க முடியாத இந்த பாசிச மோடி அரசு, பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி, விலைவாசி உயர்வை ஏற்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை விதித்து, மானியங்களை குறைத்து, மக்கள் மீது வரிக்குமேல் வரியை போட்டு சுரண்டி வருகிறது. மறுபுறம், கார்ப்பரேட் முதலாளிகள், மோடி அரசின் உதவியுடன் உழைக்கும் மக்களின் உழைப்பையும், நாட்டின் இயற்கை வளங்களையும் சூரையாடி தனது சொத்து மதிப்பை பெருக்கிக் கொள்கின்றன. கார்ப்பரேட் முதலாளிகளையும், காவி அரசையும் ஒழிக்காத வரை ஊட்டச்சத்து என்பதெல்லாம் உழைக்கும் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

புகழ்

“பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஜாமீன் வழங்கு” – சர்வதேச குழுக்கள் காவி அரசுக்கு கடிதம் !

0

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு உடனடியாக மருத்துவ ஜாமீன் வழங்க வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள பல சிவில் சமூகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் கூட்டாக கடிதம் மூலம் இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை வலியுறுத்தின.

மாவோயிஸ்ட் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பேராசிரியர் சாய்பாபாவுக்கு கடந்த 2017-ம் ஆண்டு கட்சிரோலியில் உள்ள கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பேராசிரியரின் விடுதலைக்கான கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள், சாய்பாபாவின் உடல்நிலை குறித்து “கடுமையான கவலையை” வெளிபடுத்துகின்றனர்.​​முன்னாள் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் 90 சதவித உடல் ஊனமுற்றவர் என்றும் இரண்டுமுறை கொரோனா தொற்று சோதனை செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர். தற்போது நாக்பூரில் உள்ள ‘ஆண்டா செல்லில்’ தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தனது முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை படிப்படியாக இழந்து வருகிறார். தற்போது “அவரது ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாறியுள்ளது” என்று தெரிவித்தனர்.

படிக்க :

♦ சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !

♦ சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !

கடந்த ஜூலை 2021-ல் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது 84 வயதில் இறந்த தந்தை ஸ்டான் சுவாமியை அவர்கள் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளனர். அவர் எல்கர் பரிஷத் – மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அவர் மருத்துவத்திற்காக காத்திருந்தபோது கொரோனா தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

“நீங்கள் உடனடியாக பதிலளிப்பீர்கள் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, அதனால் நீதிமன்ற காவலில் இறந்த ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்த கதி பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஏற்படாது. அவரது பரோல் கோரிக்கை மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரது மருத்துவ ஜாமீன் விண்ணப்பம் இரண்டுமுறை நிராகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தலையிட்டு, பேராசிரியர் ஜி.என்.சாய்பாவுக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார். உடனடியாக, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக, அவரை தனிமை சிறையில் இருந்து சக்கர நாற்காலி பயன்படுத்தக்கூடிய அறைக்கு மாற்ற வேண்டும். பின்னர் அவரை மருத்துவ ஜாமீனில் விடுவித்து, சிகிச்சைக்காக பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்” என்று கையொப்பமிட்டவர்கள் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தினர்.

Scholars At Risk (USA), PEN America (USA), Freedom Now (USA), The Free Saibaba Coalition-US, Stitching the London Story (The Netherlands), India Solidarity Germany (Germany) போன்ற சர்வதேச குழுக்கள் கையொப்பமிட்டவர்களில் அடங்கும். மேலும், இந்திய நீதித் திட்டம் (ஜெர்மனி), அமெரிக்காவின் தெற்கு இல்லினாய்ஸ் ஜனநாயக சோசலிஸ்ட்டுகள் (அமெரிக்கா), இந்திய பட்டியலிடப்பட்ட சாதிகள் நலச் சங்கம் (யுகே), இந்தியன் அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் (அமெரிக்கா), ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான கூட்டணி (யுகே), அம்பேத்கர் கிங் ஸ்டடி சர்க்கிள் (கலிபோர்னியா, அமெரிக்கா), பாஸ்டன் தெற்காசிய கூட்டணி (அமெரிக்கா), இந்தியா சிவில் வாட்ச் இன்டர்நேஷனல் (அமெரிக்கா), மனித உரிமைகளுக்கான இந்துக்கள் (அமெரிக்கா) ஆகிய சர்வதேசக் குழுக்களும் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஸ்டான் சுவாமியை கொன்றதுபோல், போராசிரியர் சாய்பாபாவையும் கொன்றுவிடாதீர்கள் என்பதுதான் சர்வதேசக் குழுக்கள் வைக்கும் கோரிக்கை மனு.

பேராசிரியர் சாய்பாபாவை, கழிவறை-குளியல் அறைகளில் சிசிடிவி கேமராக்களை வைப்பதுபோன்ற பல்வேறு முறைகளில் சிறைக்குள் சித்திரவதை செய்து வருகிறது பாசிச மோடி அரசு. பேராசிரியரை போன்ற அனைத்து சமூக செயற்பாட்டாளர்களையும் பாசிச கொடுங்கரங்களில் இருந்து மீட்க, நாம் களப்போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது அவசியம்.


சந்துரு

ஏமாற்றும் ரிலையன்ஸ், மயிலிறகால் தடவிக் கொடுக்கும் செபி ! | சு. விஜயபாஸ்கர்

ங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உண்டு.
பங்கு மதிப்பை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுத்தால், அது தொடர்பான தகவல்களை (Price Sensitive Information) சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செபி (SEBI) எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு புதிய முதலீடு வரப்போகிறதெனில், எந்த நிறுவனம் முதலீடு செய்யப்போகிறது, எவ்வளவு முதலீடு, எந்த தேதியில் முதலீடு, முதலீட்டின் மற்ற விவரங்களை எவ்வளவு விரைவாக தெரிவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக செபிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், ஊடகங்களில் ஊகமாக பரவும் செய்திகள் பங்கு மதிப்பை பாதிக்கக்கூடும். உள்பேர வர்த்தகத்திற்கும் (Insider Trading) இது வழிவகுக்கலாம். ஊடகங்களில் ஊகமாக வரும் தகவல்கள் (Price Sensitive Information) பங்கு மதிப்பை கூட்டவோ, குறைக்கவோ உதவும். அன்றைய நாளின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை கூட இதுபோன்ற தகவல்கள் பாதிக்கும். அது பங்குச்சந்தையின் போக்கையே மாற்றும் திறன் பெற்றது.
முகேஷ் அம்பானி பங்குச் சந்தையை தன் போக்கிற்கு ஆட வைப்பதில் கில்லாடி. எவ்வளவுதான் மோசடிகள் செய்தாலும், ஹர்ஷத் மேத்தா போன்று, ஒருபோதும் அம்பானி சிக்கமாட்டார். அப்படியே சிக்கினாலும், செபி அம்பானியை சிறையில் தள்ளாது. மாறாக மாலை போட்டு வாழ்த்தி அனுப்பும். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது.
வாட்சப் செயலி வழியாக சிறு தொழில்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் நோக்கத்தில் பேஸ்புக்  நிறுவனம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்ய முனைகிறது. 2020-ம் ஆண்டில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு நிறுவனங்களும் ஈடுபடுபட்டன. ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு, முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.43,574 கோடி (5.7 பில்லியன் டாலர்) முதலீடு செய்யப்போவதாக் பேஸ்புக் ஏப்ரல் மாதம் 22-ம் தேதி (புதன்கிழமை) அறிவித்தது. பேஸ்புக்கின் இந்த முதலீட்டால் கோடி ரூபாய் இலாபத்தில் திளைத்தார் அம்பானி.
படிக்க :
♦ கிரிப்டோ கரன்சி : அரசுக்கு இணையான பொருளாதாரம் !
♦ தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்துக்கு உலகிலேயே அதிக பயனாளர்கள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி செய்திப் பரிமாற்றச் செயலியான வாட்சப்புக்கு இந்தியாவில் சுமார் 30 கோடி பயனாளர்கள் உள்ளனர். “இந்தியா மீதான எங்களுக்குள்ள உறுதிபாட்டை இந்த முதலீடு காட்டுகிறது; மேலும் நாட்டில் ஜியோ ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய மாற்றம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என ஃபேஸ்புக் (ஏப்ரல் 22 2020) அன்று அக மகிழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து 22-ம் தேதி மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் 10.20 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் ஆனது. அதுவல்ல விஷயம்.
ரிலையன்ஸும் பேஸ்புக்கும் அதற்கு முன்னதாகவே இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்து விட்டன. எனினும் முகேஷ் அம்பானி இது குறித்து செபியிடம் மூச்சு கூட விடவில்லை. ஆனாலும் ஊடகங்களில் பேஸ்புக் – அம்பானி ஒப்பந்தம் குறித்த தகவல்கள் கசிந்தன; அதன் விளைவாக, மார்ச் மாதத்தில் மட்டும் 5 சதவிதத்திற்கும் அதிகமான ஏற்ற இறக்கங்களை 8 வர்த்தக நாட்களில் ரிலையன்ஸ் நிறுவனம் சந்தித்தது.  மார்ச் மாதத்தின் மொத்த வர்த்தக நாட்கள் 18. அதனைத் தொடர்ந்த ஏப்ரல் மாதத்திலும் ரிலையன்ஸ் பங்கு விலை 31 சதவிதம் அதிகரித்தது. இதுபோன்ற திடீர் ஏற்ற இறக்கங்கள் பங்குச்சந்தையை வெகுவாக பாதிக்கும் என்பதால் முன்கூட்டியே செபிக்கு ரிலையன்ஸ் தெரிவித்திருக்க வேண்டும்.
ஃபேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் டிஜிட்டல் யூனிட்டில் முதலீடு செய்த தகவல்கள் நாளேடுகள், இணையதளங்கள், சேனல்களில் செய்தியாக வெளியாகின.
ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் இதை அதிகாரபூர்வமாக செபி அமைப்பிடம் தெரிவிக்கவில்லை. ஃபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் இடையே எந்தமாதிரியான நிதி ஒப்பந்தங்கள் நடந்துள்ளன; பங்கு கைமாற்றம், பங்குவிற்பனை ஆகியவை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
செபி திங்கள் (ஜுன் 20, 2022) இரவு வெளியிட்ட அறிவிப்பில், “ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை பங்குப் பரிமாற்றம், விலைநிலவரம் குறித்த எந்தத் தகவலையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அது குறித்து தெளிவுபடுத்தவும் இல்லை. நாளேடுகள், உள்ளிட்ட பிற வாய்ப்புகள் மூலம் தகவல்கள் கிடைத்த பின்பும் கூட ரிலையன்ஸ் விளக்கமளிக்கவில்லை. இதன்மூலம் அந்த நிறுவனம் தனது பொறுப்பை துறந்தது தெரியவருகிறது. ஆதலால், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், இரு அதிகாரிகளுக்கும் சேர்த்து  ரூ.30 இலட்சம் அபராதம் விதிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
2020 நடந்த இந்த விதிமிறல் நிகழ்வை விசாரித்த செபி, தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம் விதித்திருக்கிறது. 17 இலட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் நிறுவனம் இந்த 30 இலட்சம் அபராதத்தைக் கண்டு பயந்து நடுங்கும் என்பதால் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளது.
முறையாக தகவல்களை தெரிவிக்காமல் பல ஆயிரம் கோடிகளை ரிலையன்ஸ் சம்பாதித்திருக்கலாம். ஆனால், செய்த மோசடிக்கு பெற்ற அபராதமோ வெறும் 30 இலட்சம். ரிலையன்ஸ் ஏமாற்றுகிறது, மயிலிறகால் தடவிக் கொடுக்கிறது செபி. இந்த மோசடியான பங்குச் சந்தைக்குள் முதலீடு செய்து பணக்காரர்களாக மாற நடுத்தர வர்க்க மக்களை தூண்டில்போட்டு இழுக்கின்றனர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளம்பரதார நடிகர்கள்.
படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
♦ ஜியோ நிறுவனம் செல்பேசி கோபுரங்களை விற்கத் தடை – ஏன் ?
செபியின் விதிமுறைகளை மீறீயதற்காக கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.14 கோடி அபராதமும், 2021 ஆண்டில் 25 கோடி அபராதமும் செபி முகேஷ் அம்பானிக்கு விதித்தது.
இத்தனை முறை தன் வயிற்றுப் பசிக்காக ஒருவர் திருடி இருந்தாலும், அவர் மீது குண்டர் சட்டமோ, தேசப் பாதுகாப்பு சட்டமோ பாய்ந்திருக்கும்.
ஆனால், இப்படி செபியையும் நாட்டு மக்களையும் ஏமாற்றுவது முகேஷ் அம்பானிக்கு புதிதல்ல. அதேபோல் ஒவ்வொரு முறையும் முகேஷ் அம்பானி முறைகேட்டில் ஈடுபடும்போதும், செபி மயிலிறகால் தடவிக் கொடுக்க தவறுவதில்லை.
எத்தனை முறை முகேஷ் அம்பானியும் அவருடைய ரிலையன்ஸ் நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டாலும், செபி கடுமையான தண்டணை அளிக்காது. நீ திருடுவதுபோல் திருடு; நான் வலிக்காத மாதிரி அடிக்கிறேன் என இரு தரப்பும் சொல்லி வைத்து மக்களை ஏமாற்றுவார்கள். ஏனெனில், இது தான் தனியார்மயம்.
சு.விஜயபாஸ்கர்
ஆதாரம் : Economictimes, Businesstoday, indianexpress, Businesstoday2, Economictimes2

உ.பி : சட்டவிரோத காவி புல்டோசர்களை சட்டபூர்வமாக மாற்றும் யோகி அரசு !

0
மீபத்தில் கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் முஸ்லீம் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்ட நிகழ்வு, நகராட்சி சட்டங்களின்படி மேற்கொள்ளப்பட்டதாக உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 22 அன்று தெரிவித்துள்ளது.
வீடுகள் புல்டோசரால் இடக்கப்படுவதற்கு எதிராக ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், மாநில அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத இடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு உத்தரப்பிரதேச அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
***
ஜூன் மாத தொடக்கத்தில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள், நபிகள் நாயகத்தைப் பற்றிய இரண்டு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களின் இழிவான கருத்துக்களுக்கு எதிராகப் போராடி முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளியது.
அதில், பிரயாக்ராஜில் உள்ள ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீடும் இடிக்கப்பட்டது. நபிகள் நாயகத்தைப் பற்றிய பா.ஜ.க.வின் அவதூரு கருத்துக்களை எதிர்த்து நகரில் வன்முறைப் போராட்டங்களை நடத்த சதி செய்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
படிக்க :
♦ முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !
♦ காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்துராஷ்டிரத்திற்கான கரசேவை!
பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம், சட்டவிரோத கட்டுமானம் குறித்து முகமதுவுக்கு மே 10 அன்று நோட்டீஸ் கொடுத்ததாகக் கூறியது. ஆனால், முகமதுவின் குடும்பத்தினர் எந்தத் தகவலையும் பெறவில்லை என்று கூறுகிறார்கள். பல இடங்களில் வீடுகள் இடிக்கப்பட்ட நாள் அன்று நோட்டீஸ் கொடுத்த சில மணி நேரத்திலேயே வீடுகளை இடிக்கத்தொடங்கிவிட்டன காவி புல்டோசர்கள்.
பிரயாக்ராஜ் இடிப்பு வழக்கில், அது ஒரு குடியிருப்பு கட்டிடமாக இருந்ததாகவும், எனினும் அது ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. “மே 10, 2022 அன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் – காரண அறிவிப்பிற்கு பதிலளிக்கத் தவறியதால் – ஜூன் 10-ம் தேதி இடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று அறிக்கை கூறியது.
ஜூன் 11 அன்று, மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார். “புல்டோசர்களின் நிழலில் வீடுகள் இருப்பவர்கள் மற்றவர்கள் மீது கற்களை எறிய மாட்டார்கள்” என்று கூறினார்.
ஜூன் 4 அன்று, கான்பூரில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் இடிக்கப்படும் என்று கூடுதல் போலீசுத்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறியுள்ளார். இருப்பினும், கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையங்கள், சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்புகள் என்றும், உ.பி நகர்ப்புறத்திற்கு ஏற்ப, அங்கீகரிக்கப்படாத / சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத்தான் அவர்கள் இடிப்புகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அந்த பிரமாணப் பத்திரம் கூறுகிறது.
வளர்ச்சித்துறை அதிகாரிகள் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுவதாக அரசு கூறினாலும், ஜூன் 12-ம் தேதி முதல்வர் ஆதித்யநாத், “புல்டோசர் நடவடிக்கையை தொடருங்கள்” என்று அதிகாரிகளுக்கு கூறியதாக தகவல்கள் வெளியாகின. பாஜக தலைவர்களின் கருத்துக்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதே கருத்துக்களைதான் மூத்த அதிகாரிகளும், பிற அதிகாரிகளும் பல்வேறு வடிவங்களிலும், சமூக ஊடகங்களிலும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.
முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்தது மட்டுமல்லாமல் அது சட்டப்பூர்வமாக நடந்தது என்று தனது சட்டவிரோத வீடுகள் இடிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தப் பார்க்கிறது பாசிச யோகி அரசு. பாஜகவிற்கு எதிராக போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, எப்படி அதுநாள் வரை சட்டப்பூர்வமாக இருந்த வீடுகள் சட்டவிரோத வீடுகளாகவும், ஆக்கிரமிப்பு வீடுகளாகவும் மாறியது என்று கேள்வியெழுகிறது. எனவே இந்த ‘புல்டோசர் நீதி’ என்பது காவி பாசிஸ்டுகளின் ஓர் புதிய நடைமுறை. இந்த புதிய நடைமுறையைதான் சட்டப்பூர்வமானதாக மாற்ற முயற்சித்து வருகிறது பாசிச யோகி ஆதித்யநாத் அரசு.
காவிகள் இனி முஸ்லீம் மக்களை உ.பி.யில் வாழவே விடமாட்டார்கள் என்பதுதான் யோகி ஆதித்யநாத் அரசின் பாசிச செயல்பாடுகள் நமக்கு உணர்த்து செய்தி!

புகழ்

‘புல்லி பாய்-சுல்லி டீல்ஸ்’: முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய ‘அ’நீதிமன்றம்!

0

மும்பை செஷன்ஸ் நீதிமன்றம், ஜூன் 21 அன்று ‘புல்லி பாய்’ & ‘சுல்லி டீல்ஸ்’ வழக்குகளில் இன்னும் காவலில் உள்ள மூன்று குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூவருக்கும் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் இப்போது ஜாமீனில் உள்ளனர்.

கடந்த ஜூலை 2021-ல் வெளிவந்த ‘Sulli Deals’ – GitHub என்ற உள்ளடக்கப் பகிர்வு தளமான GitHub-ல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. முக்கிய முஸ்லீம் பெண்களின் ஒப்புதலின்றி, அவதூறான கருத்துக்களுடன் அவர்களின் படங்களைப் பயன்படுத்தி, அவர்களை இணையத்தில் ஏலம் விடும் செயலை அரங்கேற்றியது.

இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) கீழ் டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தாலும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.

இந்த ஆண்டு ஜனவரியில், ‘புல்லி பாய்’ ‘சுல்லி டீல்ஸ்’ உடன் இணைந்த முக்கிய முஸ்லீம் பெண்களுக்கான ஏலங்களையும் நடத்தியது. மக்களின் எதிர்ப்புக்கு பிறகு போலீசார் இரண்டு வழக்குகளிலும் முதல் கைது செய்தனர்.

இரண்டு வழக்குகளிலும் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஔம்காரேஷ்வர் தாக்கூர் என்பவன் ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கியவன். நீரஜ் பிஷ்னோய் என்பவன் ‘புல்லி பாய்’ செயலியை உருவாக்கியவன். இவர்களுடன் விஷால் குமார் ஜா, ஸ்வேதா சிங், மயங்க் அகர்வால் மற்றும் நீரஜ் சிங் ஆகிய 4 பேரும் இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

படிக்க :

♦ புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்

♦ டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !

குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஜா, சிங் மற்றும் அகர்வால் ஆகியோருக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  அப்போது, ​​தாக்கூர் மற்றும் பிஷ்னோய் ஆகியோருக்கு பாந்த்ரா நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. எவ்வாறாயினும், இந்த இரண்டு செயலிகளையும் உருவாக்கியவர்களுக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும், மும்பையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் பெயரில் போலீசு காவலில் இருந்தனர்.

***

தற்போது கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.பி. சர்மா, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரூ.50,000 ஜாமீன் பத்திரம் மற்றும் அதே தொகைக்கு ஒன்று அல்லது இரண்டு ஜாமீன்களுடன் சேர்த்து விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர்கள் மாதாந்திர சைபர் போலீசு நிலையத்திற்குச் செல்ல வேண்டும். நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

வழக்கறிஞர் சிவம் தேஷ்முக் மூலம் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில், ஜாமீன் வழங்குவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கில் பொய்யாக இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படும் குற்றங்களைச் செய்யவில்லை என்றும் விண்ணப்பம் வாதிட்டது; அவர்கள் செயலியை உருவாக்கியவர்கள் அல்ல; வெறுமனே பின்பற்றுபவர்கள்; எனவே இது ஒரு குற்றமாகாது; மேலும் குற்றங்களுக்கான தண்டனை மூன்று வருடங்களுக்கும் குறைவாக இருப்பதால் சிறை தேவையற்றது. அவர்கள் ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றுள்ளதாகவும், அவர்களின் இணை குற்றவாளிகளுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் விண்ணப்பம் வாதிட்டது. இறுதியாக, குற்றம் சாட்டப்பட்டவர் ‘மரியாதைக்குரிய’ குடும்பங்களைச் சேர்ந்தவர் என்றும், கூறப்படும் செயல் ‘கற்பனைக்கு அப்பாற்பட்டது’ என்றும் விண்ணப்பம் வாதிட்டது.

அரசின் சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர், இந்த வாதங்களில் பெரும்பாலானவற்றை எதிர்த்தார். இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக உள்ளது என்று வாதிட்டார். மேலும், அவர்களின் செயல்கள் தேசத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைத்து, அதன் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது என்று அவர் கூறினார். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்த போதிலும், அது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

‘புல்லி பாய்’ – ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலிகள் மூலம் முஸ்லீம் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவுப்படுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம், நீதிமன்றம் என்பது குற்றவாளிகளின் கூடாரமாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிர்நிலையாகவும் மாறிவிட்டது என்பதை நம்மால் உணர முடியும். முஸ்லீம் மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த நீதிமன்றம் உள்ளிட்ட பாசிச அரசு கட்டமைப்பிற்கு எதிராகவும், சங் பரிவார – கிருமினல் மாஃபியா கும்பல்களுக்கு எதிராகவும் நாம் களமிறங்க வேண்டியது அவசியம்.


காளி

இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 1

டந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தொடங்கியிருந்தது. அரசி, பருப்பு, காய்கறிகள், பால் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களும்; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற மிக அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் விண்ணை முட்ட விலை உயரத்தொடங்கின. எரிபொருட்களைப் பொருத்தவரை மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. எரிபொருள் நிரப்பும் மையங்களில், பல மணிநேரங்கள் மக்கள் வரிசை கட்டி நிற்க வேண்டியிருந்தது.
இலங்கையில் மின்சாரமானது பெருமளவு எரிபொருட்களைச் சார்ந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. டீசல் இல்லாததால், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இரண்டு ஆலைகளைத் தவிர, மற்ற அனைத்து மின் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டன. ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து மணி நேரங்களுக்கு மேலாகவாவது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புற்றுநோய்க்கான மருந்துகள், குழந்தைகளுக்கான இன்ட்யூபேஷன் கருவிகள் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் தீர்ந்துபோய்விட்டன; இறக்குமதி செய்வதற்கு அரசிடம் பணம் இல்லாததால், மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளைக் குறைக்கத் தொடங்கின. காகிதங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலையில், பள்ளி-கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
நெருக்கடியின் சுமைகள் தாளமுடியாமல், மக்களில் ஒருபிரிவினர் நாட்டைவிட்டே வெளியேறினர். பல ஈழத் தமிழர்கள், தங்கள் பிள்ளைகளுடன் குடும்பம் குடும்பமாக கப்பல் மூலம் தமிழகத்திற்கு வரத் தொடங்கினர். அதேநேரம் அரசை எதிர்த்த போராட்டங்களோ சிறுசிறு தீப்பொறிகளாகக் கிளம்பி, நாட்டின் பலப் பகுதிகளிலும் பரவிக்கொண்டிருந்தன. தொடக்கத்தில், அவை எதிர்க்கட்சிகளின் அடையாளப் போராட்டங்களாகவே இருந்தன. பின்னர் மக்கள் போராட்டங்களாக தீவிரமடைந்தன.
தடுக்க முடியாத போராட்டப் பெருவெள்ளம்
மார்ச் 25-ஆம் தேதிக்கு பின்னர் பல்வேறு நகரங்களில், “ராஜபக்சேக்களே வீட்டுக்கு போங்கள்”, “கோ கோத்தபயா” போன்ற முழக்கங்கங்களை ஒலித்தபடி, மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான ரெய்ட் அவென்யு (Reid Avenue), வி.எம்.டி பார்க் (VMD Park), நெகம்போ (Negambo), பண்டரகம (Bandaragama), நுகேகொட (Nugegoda), கொஹுவல சந்திப்பு (Kohuwela Junction) ஆகிய பகுதிகளில், மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார்கள். இது மெல்ல மெல்ல தென்னிலங்கையின் மற்ற பகுதிகளுக்கும் பரவிக் கொண்டிருந்தது.
படிக்க :
♦ புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ
கணக்கீடு ஒன்றின்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 19 தேதிகளுக்குள் மட்டும் நாடு முழுவதும் 304 அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றுள் மிகப்பல தென்னிலங்கையில் நடைபெற்றவை. குறிப்பாக, கொழும்புவைச் சுற்றிமட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. ஒரு சூறாவளியின் கருவைப் போல, போராட்டங்களின் குவிமையமாக கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மாறிக் கொண்டிருந்தன.
அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், முதன் முதலில் மிகப்பெருமளவு கவனத்தை ஈர்த்த போராட்டமாக அமைந்தது மிரிஹானை (Mirihana) போராட்டமாகும். மார்ச் 31 அன்று, நுகேகொட புறநகர் பகுதியான மிரிஹானையில் கூடிய மக்கள், மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பின்னர், அருகாமையில் அமைந்திருந்த கோத்தபய இராஜபக்சேவின் வீட்டை முற்றுகையிடுவதற்காகப் பேரணியாகச் செல்லத்தொடங்கினர். போராட்டம் பிற்பகல் சுமார் ஆறு மணி அளவில் தொடங்கியது. நடு இரவுவரையில் மிரிஹானையை நோக்கி மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கப் பிரிவினர்.
மின் தடை, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் நடுத்தர வர்க்கப் பிரிவினரையும் அரசை எதிர்த்து வீதிக்கு வரும்படி கட்டாயப்படுத்தியிருந்தது.
ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இப்போராட்டம்தான் காலிமுகத்திடல் போராட்ட முகாமுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. தங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டம் உருத்திரள்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத இராஜபக்சேக்கள், ஆரம்பத்திலேயே இதனை கிள்ளியெறிய முற்பட்டார்கள். ஆனால் தோற்றுப் போனார்கள்.
அதிபரின் வீட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்த சிறப்பு போலீசுப் படை, வரவழைக்கப்பட்ட போலீசு கும்பல் ஆகியவை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் மக்களை கலைக்க முயற்சித்தது. பதிலுக்கு மக்கள் கையில் கிடைத்தப் பொருட்களை போலீசை நோக்கி வீச ஆரம்பித்தார்கள். எனவே போராட்டத்தை ஒடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. போராட்டங்களை செய்தியாக்க வந்த ஊடகங்களுக்கு அதிபர் மாளிகையிலிருந்து மிரட்டல்கள் குவிந்தன. ஊடகவியலாளர்கள் போலீசால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இப்போராட்டத்தை ஒட்டி, போலீசால் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்ட 53 பேர்களுள் (ஏப் 2 வரை) ஊடகவியலாளர்களும் அடக்கம்.
இவற்றின் மூலம் கோத்தபயவின் வீட்டைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்ததே ஒழிய, போராட்டங்களை ஒடுக்க முடியவில்லை. இரவு முழுவதும் போராட்டச் செய்திகளும் போலீசின் ஒடுக்குமுறைகளும் சமூக ஊடகங்களில் போராட்டக்காரர்களால் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன. “கோட்டா கோ ஹோம்” (#Gota Go Home – கோத்தபயவே வீட்டுக்கு போ) – என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் பிரபலமானது. இவை இதர பகுதி மக்களுக்கும் கிளர்ச்சியூட்டின. அரசின் அடக்குமுறையைக் கண்டு ஆத்திரமுற்றனர் மக்கள். அடுத்தடுத்த நாட்களிலேயே தென்னிலங்கையின் வீதிகள் மக்கள் போராட்டங்களால் மூழ்கத்தொடங்கின.
ஏப்ரல் 2 ஆம் தேதி, அவசர நிலை மற்றும் நாடுதழுவிய ஊரடங்கை அறிவித்தது கோத்தபய அரசு. தங்களது ஆட்சிக்கெதிராக ‘தீவிரவாதிகள்’ சதிசெய்ததாகவும்; ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதக் குழுவொன்று, இலங்கையில் ‘அரபு வசந்தத்திற்கு’ அழைப்பு விடுத்துள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் இதனை திட்டமிட்டதாகவும் புலம்பியது அதிபர் மாளிகையின் ஊடகப் பிரிவு அறிக்கை.
காலிமுகத்திடல் போராட்ட மைதானம். மாலைநேரமொன்றில், மைதானத்தில் குவிந்திருக்கும் மக்கள் வெள்ளத்தின் ஒருபகுதி.
முகநூல், வாட்ஸப், டுவிட்டர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டாக் என அனைத்து வகை சமூக ஊடகங்களும் திடுமென முடக்கப்பட்டன. “கோட்டா கோ ஹோம்” என்ற பெயரில் முகநூல் பக்கம் தொடங்கியதற்காக, அனுருத்த பண்டார என்பவர் கைதுசெய்யப்பட்டார். ஊரடங்கை மீறியதாக, ஒரே நாளில் 660 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தகைய முயற்சிகளின் மூலம் போராட்டங்களை பரவாமல் இருக்கச் செய்யவும், கலைத்துவிடவும் முயற்சித்தது அரசு.
ஆனால், போராட்டங்கள் மேலும் தீவிரமடையவே செய்தன. ஒடுக்குமுறைகள் தூள் தூளாக்கப்பட்டன. ஊரடங்கையும் மீறி, வீதிகள் ஆர்ப்பாட்டங்களால் அழகுபடுத்தப்பட்டன. மிரிஹானை போராட்டம் தொடர்பாக கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட 53 பேரையும் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது, சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராளிகளை கைதட்டி, முழங்கங்களை முழங்கி ஆரவாரமாக வரவேற்றனர். வழக்கு முடிகின்ற வரை ஒருவர் கூட நீதிமன்றத்தை விட்டு வெளியேறவில்லை. காயம்பட்ட போராளிகளுக்கு, மருத்துவர்கள் சிறப்பு கவனமெடுத்து மருத்துவம் பார்த்தனர். நாடு முழுவதிலும் காணப்பட்ட கொதிநிலையை அறிந்துகொண்ட மஹிந்த-கோத்தபய அரசு வேறுவழியே இல்லாத நிலையில் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டது. 15 மணிநேரத்திற்கு பிறகு முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள் விடுவிக்கப்பட்டன.
கொழும்பு கடற்கரையை நோக்கி தன்னெழுச்சி அலை
மக்கள் போராட்டங்கள் அரசின் அடக்குமுறைகளையும் கடந்து தீவிரமாகி வந்ததால், ஓட்டுக் கட்சிகள் மக்கள் போராட்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஏப்ரல் 4-ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நூற்றுக்கணக்கானோர் தலைநகர் கொழும்புவில் பேரணியாக சென்றனர். அன்றைய நாளே, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 26 அமைச்சர்கள், “அரசின் சில தவறான நடவடிக்கைகள்தான் நெருக்கடிக்கு காரணம்” என்று கூறி கூண்டோடு பதவி விலகினர்.
கோத்தபயவும் மஹிந்தவும் உடனடியாக பதவி விலக வேண்டும், அனைத்துக் கட்சித் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது.
ஆனால், ஓட்டுக்கட்சிகளின் கபடநாடகத்தால் மக்கள் கவரப்படவில்லை. போராட்டக்காரர்களில் பலரும் (60 சதவிகிதம் பேர்) எந்தக் கட்சிகளும் யோக்கியம் இல்லை; நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களுமே பதவி விலக வேண்டும் என்று கருதுவதாக, “மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்” என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மேலும் 96.2 சதவிகிதம் மக்கள், அனைத்து அரசியல்வாதிகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; மக்களை கொள்ளையிட்டுச் சேர்த்த அவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
***
ஏப்ரல் 5, 6-ஆம் தேதிகளில் கொழும்புவைத் தாண்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் திரள் திரளாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தங்களது வீடுகளிலும் வாகனங்களிலும் கருப்புக் கொடிகளை ஏற்றுவது, “கோட்டா கோ ஹோம்” என்ற முழக்கம் பதித்த அட்டைகளை வீட்டின் மேல் மாட்டுவது, சுவர்களில் எழுதுவது என நாடே போர்க்கோலம் பூண்டது. ஒரு பக்கம் பல்வேறு பகுதிகளிலும் தனித்தனியே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் 6 ஆம் தேதிக்கு பின்னர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொழும்பு கடற்கரையை நோக்கி திரளத் தொடங்கினார்கள். கொழும்புக் கடற்கரை, அதிபர் வீட்டிற்கு அருகாமையில் உள்ள காலிமுகத் திடல் மக்கள் கூட்டங்களால் நிரப்பப்பட்டது. பீதியானது அரசு.
இலங்கையில் 1953-ஆம் ஆண்டு ஏற்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் பேரெழுச்சி.
ஏனெனில், காலி முகத்திடல் ஏற்கெனவே வர்க்கப் போராட்டத்தின் குறியீடாக இருந்தது. 1953 ஆம் ஆண்டு மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்களை வெட்டிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மிகப்பெரிய தொழிலாளர் ஆர்ப்பாட்டம் இதே காலி முகத்திடலில் நடைபெற்றது; அந்த ஆண்டு ஜீலை மாதம் 23-ஆம் தேதி, சுமார் இரண்டு இலட்சம் மக்கள் – அதிகம் தொழிலாளர்கள் – காலிமுகத்திடலில் ஒன்றுகூடினார்கள். அதைப் போன்றதொரு போராட்டம் மீண்டும் நடைபெற்றுவிடக்கூடாது என்று பயந்த கோத்தபய-மஹிந்த அரசு, அதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் இறங்கியது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எப்போதும் வழங்கும் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பதிலாக, ஒரு வார காலம் விடுமுறை வழங்கியது. கொழும்பு, ஓர் தலைநகரம். நமது சென்னை நகரத்தோடு கொழும்புவை ஒப்பிடலாம். நாட்டின் பல பகுதிகளிலிருந்து கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகரத்தில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் விடுமுறை காலத்தில் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஆனால், நடந்ததோ தலைகீழானது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து கொழும்பு கடற்கரையை நோக்கி அணிவகுத்தார்கள். திகைத்துப் போனது அரசு. போராட்டத்தை கலைப்பதற்கு, வாடகைக்கு எடுத்த குண்டர்களை அனுப்பி வாகனங்களை எரித்து கலவரத்தை நடத்தியது. பொதுமக்களை, ‘வன்முறையாளர்களாக’ சித்தரித்து போலீசை ஏவி ஒடுக்கும் முயற்சியாக அது இருந்தது. அரசு ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பி எச்சரிக்கை செய்வது, போலியான சமாதான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை திசைதிருப்புவது என எவையுமே பலிக்கவில்லை.
அனைத்தையும் கடந்து, ஏப்ரல் 9 அன்று தன்னெழுச்சியாகத் திரண்ட மக்கள், ஒரு மாபெரும் பேரணியாகச் சென்று காலிமுகத்திடலை கைப்பற்றிக் கொண்டார்கள். கொழும்பு நகரத்தின் மொத்த மக்கள் தொகையே 7 இலட்சம்தான் என்ற நிலையில், இந்த பேரணியில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகச் சொல்கிறார்கள்.
காலிமுகத்திடல்: இலங்கையின் மெரினா!
50 நாட்களைக் கடந்து, இன்றுவரை தொடர்ந்துவரும் காலி முகத்திடல் போராட்டத்தை, நாம் சுருக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அது இலங்கையின் மெரினாப் போராட்டம், ஷாகீன்பாக், டெல்லிச் சலோ…
பலதரப்பட்ட மக்கள், அன்றாடம் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக வேலைசெய்யும் நேரம் போக, மாலை நேரங்களில் காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு செல்கிறார்கள். (ஒரு பிரிவு மக்கள் அங்கேயே முகாமிட்டுள்ளார்கள்) அது ஒரு வாடிக்கையாக இருக்கிறது. பிபிசி ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆட்டோ ஓட்டும் தமிழ்த் தொழிலாளி, “நான் அன்றாடம் மாலை நேரம் போராட்டத்திற்குச் செல்கிறேன்; போராடினால்தான் விடிவுகாலம் பிறக்கும்; அந்த மைதானத்திற்கு செல்லும்போது, இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராடுவது உற்சாகமூட்டுவதாக இருக்கிறது” என்று பூரிப்படைகிறார்.
போராட்டம் தொடங்கிய மூன்று வாரங்களில், ஒவ்வொரு நாள் மாலையும் சுமார் 40,000-லிருந்து 50,000 வரையிலான மக்கள் காலிமுகத்திடலுக்கு வரத்தொடங்கினார்கள். இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.
 அந்தப் போராட்டக் களமே தங்கும் முகாம்கள், தற்காலிகக் கழிப்பிடங்கள், மருத்துவ நிலையம், நூலகம், சிறுவர்களுக்கான பள்ளிக்கூடம் ஆகியவை உள்ளடங்கிய “கோட்டா கோ கம” (Gota Go City) எனும் மாதிரி நகரமாக உருவாகியிருக்கிறது. இந்த மைதானத்தை, மக்கள் சிங்கள மொழியில் “அரகலய” (மக்கள் போராட்டம்) என்று அழைக்கிறார்கள்.
படிக்க :
♦ இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1
♦ இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!
கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், கூடாரங்கள், முதலுதவிப் பொருட்கள் அனைத்தும் சிறு வணிகர்களாலும், சில பெரு நிறுவனங்களாலும் நன்கொடையாக வழங்கப்படுகின்றன. போராடும் மக்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களுக்காக வாதாட வழக்கறிஞர்களும், சிகிச்சையளிக்க மருத்துவர்களும் மக்களுடன் சேர்ந்து போராட்டக்களத்தில் காத்திருக்கின்றனர்.
“கோட்டா கோ ஹோம்” மட்டுமல்லாமல், “மக்களை வதைக்கும் அரசை விரட்டியடிப்போம்; மக்கள் நேய ஆட்சியை கட்டியெழுப்புவோம்”, “நமது உச்சநீதிமன்றத்தில் வரலாறு தீர்பளிக்கும்”, “சாதி, மதம், இனம் கடந்து இலங்கையர்களாக ஒன்றிணைவோம்” என மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பல வண்ண முழக்க அட்டைகள் போராட்டக் களத்தை அழகுபடுத்துகின்றன. குடைகள், டீ சர்டுகள், தலையில் அணியும் ரிப்பன்கள் என பல வடிவப் பொருட்களிலும் முழக்கங்கள் வரையப்பட்டிருக்கிறது.
போராட்டக்களத்தின் ஒருபகுதியில், 2005 முதல் 2015 வரை இராஜபக்சே அரசால், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூறும் வகையில், அவர்களின் புகைப்படங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன.
மஹிந்த இராஜபக்சேவைப் போல வேடமிட்ட சிலர், அவர் மக்களால் சிறைப்படுத்தப்பட்டிருப்பதைப்போல காட்சிப்படுத்திக் கொண்டிருந்தனர். பங்கேற்பாளர் உரைகள், பாடல்கள், ஓவியங்கள், நடனம், நாடகம் என ஓர் கலை-இலக்கிய விழா மேடையாகவே காலி முகத்திடல் காணப்பட்டது. தோழர் லெனின் சொன்னதைப் போல, புரட்சிப் போராட்டம் என்பது பொதுமக்களின் திருவிழா அல்லவா.
ஏப்ரல் 13-ஆம் தேதி, பிரதமர் மஹிந்த இராஜபக்சே, காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் அரசிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி தூதுக்குழுவொன்றை ஏற்பாடு செய்தார்; “பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்றுமில்லை; நீங்கள் அரசாங்கத்தைவிட்டு அகலும்வரை நாங்கள் அரகலய-வை (போராட்டம்) விட்டு அகலப்போவதில்லை” – என முகத்தில் அறைந்தார் போல் சொல்லிவிட்டனர் மக்கள்.
(தொடரும்…)

பூபாலன்

அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு, புரட்சி செய்ய துடிக்கும் வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம் !

22.06.2022
அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு புரட்சி செய்ய துடிக்கும்
வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம்!
ன்பார்ந்த தோழமை சக்திகளுக்கு எமது அமைப்பின் சார்பில் ஒரு வேண்டுகோள்! என்ற பெயரில் வழக்கறிஞர் திரு.ராஜூ அவர்கள் கடிதமொன்றை இணையவெளியில் வெளியிட்டிருந்தார். பொதுவாகவே ஒரு அமைப்பிலிருந்து பிரிந்து செல்பவர்கள் தாங்கள்தான் அந்த அமைப்பு என்றும், கொடி மற்றும் அமைப்பின் பெயரை பயன்படுத்துவதும் சாதாரணமாக நடைபெறுபவையாகும். மேலும் பிரிந்து செல்லும் தரப்பு மற்ற தரப்பைப்பற்றி கேள்விக்குள்ளாக்குவதும் நடைபெறுபவைதான்.
அப்படிப்பட்ட விவாதங்கள் அரசியல் ரீதியாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு பதில் அளிப்பது என்பது தங்களுடைய அணிகளையும் மக்களையும் அரசியல்படுத்துவதாக அமையும். ஆனால், அமைப்பு ரீதியான பிரச்சினைகளைப் பேசிக்கொண்டு இருப்பதில் எங்களுக்கு ஒருபோதும் விருப்பமில்லை. எனினும் திரு.ராஜூ அவர்கள் வெளியிட்டுள்ள இந்த கடிதத்தில் அரசியல் பிரச்சினையும் அமைப்புப் பிரச்சினையும் ஒருசேர கலந்து இருப்பதால், முடிந்தவரை அக்கப்போர்களில் தலையிடாமல் அரசியல் பிரச்சினையைப் பற்றிய விவாதம் மேற்கொள்வது சரியாக இருக்கும்.
நாமே தெரிவு செய்து முன்வைத்த அரசியலை புறந்தள்ளினீர்கள். சதிகாரர்களோடு இணைந்தீர்கள். உங்களை எமது அமைப்பிலிருந்து விடுவித்தோம். பிளவுக்கு பின்னரும் சரி உங்களையோ, உங்களது தோழர்களையோ எதிரிகளாக பாவித்தது இல்லை. பாசிசத்துக்கு எதிரான சக்திகளில் ஒன்றாகவே உங்களை கருதுகிறோம். ஆனால் 10.06.2022 அன்று வெளியான கடிதமோ எங்களை பா.ஜ.க-விற்கு சேவை செய்வதாக கூறியிருந்தது. ஆகவே உங்கள் கடிதத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உங்கள் மற்றும் உங்கள் அமைப்புத் தோழர்களின் தியாகம் அர்ப்பணிப்பை மதிக்கும் அதேவேளையில் உங்கள் அணுகுமுறையையும் அரசியலையும் விமர்சிக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்களே எங்களை தள்ளிவிட்டிருக்கிறீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
//மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற சிலர் மக்கள் அதிகாரம் என்ற பெயரில் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். இந்த நிலை தொடர்வதால் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. கூட்டு இயக்கங்களில் இருவரையும் அழைத்து ஒன்றாக பெயர் போடுவது இன்னும் குழப்பத்தை அதிகரிக்கிறது. எனவே அதை தவிர்க்கும் பொருட்டு கூட்டமைப்பில் இருவரும் ஒன்றாக பங்கேற்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் தோழர் வெற்றிவேல் செழியன் தரப்பினரையோ, அல்லது வேறு சிலரோ இதே பெயரில் இயங்குவதை அங்கீகரித்து அழைப்பது பற்றி தாங்கள் பரிசீலிக்க வேண்டும் என கோருகிறோம்// (திரு.ராஜூவின் கடிதம்)
திரு.ராஜூவை மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவித்தோம். திரு.காளியப்பன் உள்ளிட்ட சிலரை சதிவேலைகள் செய்த காரணத்தால் எமது அமைப்பிலிருந்து வெளியேற்றினோம். விடுவிக்கப்பட்டவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் இணைந்து மக்கள் அதிகாரம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்கள் என்ற உண்மையை மூடி மறைத்து, ஏதோ நாங்கள்தான் பிரிந்து சென்றோம் என்ற பொய்யை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வைத்து காலம் கடத்துவீர்கள் திரு.ராஜூ?
இரண்டு மக்கள் அதிகாரம் இருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவுவதாக தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் ராஜூ. ஆம்! அது உண்மையாகவும் கூட இருக்கலாம். ஆனால், ஒரு விசயத்தை பரிசீலிப்பதில் இருந்து இந்த விவாதத்தை தொடங்க வேண்டும். ஒன்றாக இருந்தபோது நாங்கள் யார்? மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு தனியானதா? அதற்கு வேறு எந்த அமைப்புகளோடும் தொடர்பும் இல்லையா? எவ்வித தொடர்பும் இல்லை என்பதுபோல நாணயத்தோடு இந்த கடிதத்தை எழுதியுள்ளார் திரு.ராஜூ அவர்கள்.
தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் தொடர்ச்சியாகவே 2015-ல் கட்டமைப்பு நெருக்கடி என்ற கொள்கையை முன்வைத்து மக்கள் அதிகாரம் என்ற அமைப்பை உருவாக்கினோம். அதில், பங்கு வகித்தவர்கள் யார்? மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணைச் செயலாளர் காளியப்பன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச் செயலாளர் வெற்றிவேல் செழியன், பெண்கள் விடுதலை முன்னணியின் மாவட்டச் செயலாளர் அமிர்தா உள்ளிட்டோர் முதன் முறையாக அமைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் தலைமைக் குழுவில் இருந்தனர்.
மக்கள் அதிகாரம் நடத்திய அனைத்து இயக்கங்களிலும் போராட்டங்களிலும் ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பெவிமு ஆகிய அமைப்புகளின் தோழர்கள் பங்குபெற்றதுடன். அந்தந்த அமைப்புகளே மக்கள் அதிகாரம் வேலைகளைக் கொண்டு சென்றன. அப்படி வேலைகளைக் கொண்டு சென்ற, மக்கள் அதிகாரம் அமைப்பையே உருவாக்கிய அந்த நக்சல்பாரி இயக்கங்களின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு மாற்றாக மக்கள் அதிகாரம் மட்டும் இயங்க முடியுமா?
போலீசு முதல் அரசியல் சக்திகள் வரை யாரிடம் போய் மக்கள் அதிகாரம் என்று கூறினால் அவர்கள் நீங்கள் ம.க.இ.கவினர் தானே என்று கேட்கிறார்கள். இல்லை அவர்களுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், எங்களுடைய போராட்டங்களில் அவர்கள் கலந்து கொள்வார்கள். அந்த அமைப்புகளின் தலைவர்கள் எங்கள் மேடைகளில் பேசுவார்கள். நாங்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல, நாங்கள் நக்சல்பாரி இயக்கம் இல்லை, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதுகூட தவறு, சிவப்புச் சட்டைப் போடக் கூடாது என்ற நடைமுறைகள் எல்லாம் மக்கள் அதிகாரம் அமைப்பு தொடங்கப்பட்டபோது எங்கேயும் முன்வைக்கப்படவில்லை. மாறாக அதன் நடைமுறையில் இப்படிப்பட்ட வலது விலகல்கள் வெளிப்பட்டன. இதற்கு அடிப்படையாக மக்கள் அதிகாரம் கொள்கையில் எவ்விதத்தீர்வும் வைக்கப்படாமல் இருந்ததே காரணம். அமைப்புப் பிளவுக்குப் பின்னர் அதை நாங்கள் பரிசீலித்து இருக்கிறோம். அதன்படி மக்கள் அதிகாரம் அமைப்பை மார்க்சிய – லெனினிய அமைப்பாக அறிவித்து இருக்கிறோம். இதில் என்ன தவறு உள்ளது. ஒரு அமைப்பு தனது கடந்தகால தவறுகளில் இருந்து படிப்பினைகளை எடுத்து முன்னேற்றத்தை நோக்கி செல்வது எப்படி தவறாக இருக்க முடியும்?
“அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே” என்ற ரசியாவின் முழக்கத்திலிருந்தே மக்கள் அதிகாரம் என்ற பெயர் உருவானதென்பதை திரு.ராஜூ நினைவில் வைத்திருக்கிறாரா என்பதை தெரியவில்லை. நினைவில் இருந்தாலும் அவரும் திரு.காளியப்பனும் இதை ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் நான் கம்யூனிஸ்டே கிடையாது என்று இறுதிக் காலங்களில் கூறிக்கொண்டு (இப்போதும் கம்யூனிச அமைப்பாக கூறிக்கொள்ளும் ஒரு அமைப்பில் அவர் இருக்கிறார்) இருந்த திரு.ராஜூவும் கம்யூனிச கொள்கைகளை குழிதோண்டி புதைப்பதையே வாழ்நாள் இலட்சியமாக தற்போது கொண்டிருக்கும் திரு.காளியப்பனும் இவ்வுண்மையை ஏற்றுக்கொள்வது சந்தேகமே. மணற்கொள்ளை போராட்டங்களின்போது திரு.ராஜூவுக்கு கொலை மிரட்டல் வந்தபோது அதை ஒட்டி சேத்தியாதோப்பு பகுதியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் தோழர் அம்பேத்கர்(வி.வி.மு) “நக்சல்பாரி இயக்கத்தின் தோழரான வழக்கறிஞர் ராஜூ” என்று கூறினாரே அதெல்லாம் நினைவிருக்கிறதா என்ன? மேடையில் அமர்ந்திருந்த உங்களுக்கு மறந்து போகலாம். அப்பொதுக்கூட்டத்துக்கு போஸ்டர் ஒட்டுவது முதல் பாதுகாப்பு வரை மேற்கொண்ட எங்களுக்கு தோழர் அம்பேத்கரின் வார்த்தைகள் இன்னமும் நினைவிருக்கின்றன. திரு.ராஜூவும், திரு.காளியப்பனும் இத்தனை ஆண்டுகாலம் கம்யூனிச அமைப்பில் இருந்ததை மறைத்து, மக்கள் அதிகாரமே நக்சல்பாரி இயக்கத்தால் வழிகாட்டப்பட்டது என்பதை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு? ஊரை ஏமாற்றத்தானோ?
//மக்கள் அதிகாரம் பெயரில் இயங்கும் எமது அமைப்பு “குறிப்பிட்ட தருணத்தில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்கை சரியாக அவதானித்து அதை எதிர்த்து முறியடிக்கும் வகையில் மக்களை அணிதிரட்டும் வகையில் ஒன்றுபட்ட அரசியல் தலைமையால் வழக்கறிஞர் சி.ராஜு மாநில ஒருங்கிணைப்பாளராக, தோழர் காளியப்பன் பொருளாளராக மேலும் சில தோழர்களை உள்ளடக்கி மாநில ஒருங்கிணைப்பு குழுவாக 2015-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. போராடி வருகின்ற பல்வேறு தரப்பு வர்க்க பிரிவு மக்களையும் பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைத்து ஈடுபடுத்தும் நோக்கத்தில் மக்கள் அதிகாரம் உருவாக்கப்பட்டது.
அன்றைக்கு ஒருங்கிணைப்பு குழுவில் ஒருவராக இருந்த தோழர் வெற்றிவேல் தரப்பினர் இந்த நோக்கத்திலிருந்து மாறியதுடன், 2015ஆம் ஆண்டு துவக்கபட்டபோது, “குறிப்பான தருணத்தில் நாட்டின் பிரதான அபாயத்தை எதிர்த்து முறியடிப்பதை நோக்கமாக கொண்டு புதிய ஜனநாயக புரட்சிக்கு இடையில் ஓர் அதிகார அமைப்பாக” மக்கள் அதிகாரம் செயல்படும் என தீர்மானிக்கப்பட்டதை தற்போது மறுத்து விட்டனர். மீண்டும் புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு என்கின்றனர். கொடியில் இருந்த கருப்பு கலர் கையினை இடது பக்கம் திருப்பியதுடன், வெள்ளை நிறத்திற்கு மாற்றி உள்ளனர். அதற்கு “வலது திசை விலகலை அடையாளபடுத்தும் விதமாக கை வலது புறம் இருப்பதை இடது புறமாக திருப்புகிறோம் என்றதுடன் ஒற்றுமையின் அடையாளம் கருப்பு அல்ல, எனவே வெள்ளையாக மாற்றுகிறோம் என சித்தாந்த விளக்கம் அளித்தனர். மக்கள் அதிகார கொள்கையை ஆதரிப்பவர்கள் அனைவரும் உறுப்பினராகலாம் நிர்வாகியாக வரலாம் என்பதை சுருக்கி கம்யூனிச கொள்கையை ஆதரிப்பவர்கள் மட்டும் என மாற்றி புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுக்கும் அமைப்பாக மாற்றிக்கொண்டனர், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு முதற்கட்டமாக மக்கள் அதிகாரம் என்ற முழக்கத்தை அமைப்பாக கொண்டு செயல்படுகின்ற எமது மக்கள் அதிகாரம் பெயரை புதிய ஜனநாயகப் புரட்சிதான் மக்கள் அதிகாரத்தின் இலக்கு என அறிவித்துக் கொண்ட பிறகும் மக்கள் அதிகாரம் என்ற பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளாதது அறிவு நாணயமற்றது உள்நோக்கம் கொண்டது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.
மேலும், பாசிசத்தை வீழ்த்துவதற்கு தோழர் டிமிட்ரோவ் முன் வைத்த ஐக்கிய முன்னணி தற்போதைக்கு சாத்தியம் இல்லை. புதிய ஜனநாயகப் புரட்சியே பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழி என்று கொள்கை முடிவெடுத்து புதிதாக கொள்கை அறிக்கையும் நிறைவேற்றிய பிறகு அமைப்பு பெயரை மட்டும் மாற்றாமல் இருப்பது நேர்மையற்ற செயலாகும்.// (திரு.ராஜூவின் கடிதம்)
திரு.ராஜூ அவர்கள் தோழர் டிமிட்ரோவின் வாக்கியங்களை பயன்படுத்துவதற்காகவாவது கம்யூனிஸ்டுகளுடைய புத்தகங்களின் சில பக்கங்களை படித்திருப்பாரேயானால் மகிழ்ச்சியே. ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.விமு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு ஆகிய நக்சல்பாரி அமைப்புகளால் உருவாக்கப்பட்ட மக்கள் அதிகாரம் அதன் இலட்சியத்தில் இருந்து தடம் புரள்வதை தடுத்து நிறுத்தினோம். சதிகாரர்களையும் நான் கம்யூனிஸ்டே இல்லை என்று ஓங்கி ஒலித்த திரு.ராஜூ போன்றவர்களையும் வெளியேற்றவும் விடுவிக்கவும் செய்தோம். மக்கள் அதிகாரம் உருவாக்கப்பட்டு 5 அண்டுகள் ஆகியும் அமைப்பு விதிகள் கூட வகுக்க முடியாத அளவுக்கு பிரபல வாதத்தில் மூழ்கிக்கிடந்தது தலைமைக்குழு. அதிலிருந்து மீண்டு பிளவு ஏற்பட்ட ஓராண்டில் அமைப்பு விதியை வகுத்து முடித்தோம். அதனால் அம்பலப்பட்ட திரு.ராஜூ தரப்பினர் உடனே மாநாட்டை நடத்தி அமைப்பு விதிகளை நிறைவேற்றினார்கள். ஆக எங்களின் செயல்பாடுகள் உங்களை அறியாமலே அமைப்பு முறைக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறதே, அதனால் ஏற்பட்ட விரக்திகூட இப்படி ஒரு கடிதம் எழுத காரணமாக இருக்கலாம்.
இப்போது திரு.ராஜூவுக்கு என்ன பிரச்சினை? மக்கள் அதிகாரத்தை கம்யூனிச அமைப்பாக்கி விட்டார்கள் என்பதுதானா? இதனால் அவருக்கு என்ன பிரச்சினை? நாங்கள் மார்க்சிய – லெனினிய தத்துவத்தால் வழிகாட்டப்பட்ட மக்கள் அதிகாரம் என்று அழைத்துக் கொள்கிறோம். நீங்கள் கம்யூனிச இலட்சியம் என்று அறிவித்துக் கொள்ளுங்கள் அல்லது முதலாளித்துவ அமைப்பு என்று அறிவித்துக் கொள்ளுங்கள், அது உங்கள் விருப்பம். அணிகளையும் மக்களையும் ஏய்க்க, உள்ளுக்குள் நாம் கம்யூனிச அமைப்புதான் என்பதும் ஆளும் கட்சிகளோடு ஒட்டிக்கொள்வதற்கு, நாங்கள் கம்யூனிச அமைப்பு கிடையாது என்பதுமான இரட்டை நாடகத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஆடப்போகிறீர்கள்? அதற்கு ஏன் எங்களை இழுக்கிறீர்கள்? நீங்கள் தேர்தல் சகதியில் புரள்வதற்கும் நீந்துவதற்கும் நாங்கள்தான் காரணமாக கிடைத்தோமா என்ன? இப்படியெல்லாம் இருந்துவிட்டு அறிவு நாணயம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றீர்களே!
//மக்கள் அதிகார கொள்கையை ஆதரிப்பவர்கள் அனைவரும் உறுப்பினராகலாம் நிர்வாகியாக வரலாம் என்பதை சுருக்கி கம்யூனிச கொள்கையை ஆதரிப்பவர்கள் மட்டும் என மாற்றி புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுக்கும் அமைப்பாக மாற்றிக்கொண்டனர்// (திரு.ராஜூவின் கடிதம்)
ஆகா, என்ன ஒரு வியாக்கியானம்! மக்கள் அதிகாரம் பரந்து விரிந்த கொள்கையாம். கம்யூனிச கொள்கையை ஆதரிப்பவர்கள் என்றால் அது சுருக்குவதாம். மக்கள் ஜனநாயகம், புதிய ஜனநாயகம், சோசலிசம், இவை அனைத்தும் வெவ்வேறு படி நிலைகளைக் கொண்டதாக இருந்தாலும் அவை கம்யூனிச இலட்சியத்தை கொண்டதே. அது சரி! நாங்கள் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கும் அமைப்பாக மாற்றிக் கொண்டதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் உங்கள் அணிகள் உங்கள் அமைப்பை கம்யூனிச அமைப்பாக மாற்ற வேண்டும் என்று போராடுகிறார்களா? அவர்களுக்கு பதில் கூற முடியாமல் எங்கள் மீது பாய்கிறீரோ?
//புதிய ஜனநாயகப் புரட்சியே பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழி என்று கொள்கை முடிவெடுத்து புதிதாக கொள்கை அறிக்கையும் நிறைவேற்றிய பிறகு// (திரு.ராஜூவின் கடிதம்)
ஆக, எதையும் முழுமையாகப் படிக்காமல் கருத்து சொல்வதுபோல எங்களுடைய கொள்கை அறிக்கையையும் முழுமையாகப் படிக்கவில்லை போலும். படித்துவிட்டு வாருங்கள், தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். வீம்பாக தவறுகளைப் பிடித்துக் கொண்டு தொங்க மாட்டோம்.
//மக்கள் அதிகாரத்தின் அரசியல் தலைமை 2020-ஆம் ஆண்டு தனது ஜனநாயக விரோத அதிகாரத்துவ தன்மையினால் ஏற்பட்ட தவறுகளை மறைப்பதற்கு ஒன்றுபட்ட மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்புக்குழுவில் மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில பொருளாளர் உட்பட பெரும்பான்மையினரை புறக்கணித்து ஒரு சில தோழர்களை ரகசியமாக கூட்டி அனைவரையும் நீக்கி விட்டதாக அறிவித்தனர். அமைப்பின் ஜனநாயக வழிமுறைகளை துச்சமாக தூக்கி எறிந்து எந்த விவாதமும் இன்றி தலைமையின் அதிகாரத்தை கேள்வி எழுப்பிய மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு தோழர்களை அவதூறு செய்து தமக்கு சாதகமான ஒரு சிலரை அழைத்துக்கொண்டு அமைப்பை பிளவுபடுத்தியது. தலைமைக்குழுவில் இருந்த வெற்றிவேல் செழியனும் சில தோழர்களும் அமைப்பை பிளவுபடுத்தி வெளியேறிய பிறகு புதிய பெயர் வைத்து இயங்காமல் பெரும்பான்மை தோழர்கள் உள்ள எமது மக்கள் அதிகாரம் அமைப்பு பெயரை பயன்படுத்தும் செயலையும் கண்டிக்கிறோம்.
பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுக்குழு கூடி 80% தோழர்கள் பங்கேற்க வெற்றிவேல்செழியன் தரப்பிலான சிறுபான்மை தோழர்கள் ரகசியமாக எடுத்த முடிவை நிராகரித்து தற்போது தோழர் ராஜு தலைமையிலான மக்கள் அதிகாரத்தை உறுதி செய்தது.// (திரு.ராஜூவின் கடிதம்)
அமைப்பு பிளவுபட்டு இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஸ்ஸப்பா… போதும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சிறுபான்மை, பெரும்பான்மை பேசிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள். ஒரு அமைப்பு பிளவுபட்ட நேரத்தின்போது நான் சிறுபான்மை நீ பெரும்பான்மை என்று பேசலாம். பிளவுபட்ட உடனே ஒவ்வொரு தரப்பும் தங்கள் ஆதரவாளர்களை நியமித்து செயல்படுவது சாதாரணமான நடைமுறைதானே.
//அமைப்பின் ஜனநாயக வழிமுறைகளை துச்சமாக தூக்கி எறிந்து எந்த விவாதமும் இன்றி தலைமையின் அதிகாரத்தை கேள்வி எழுப்பிய மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு தோழர்களை அவதூறு செய்து தமக்கு சாதகமான ஒரு சிலரை அழைத்துக்கொண்டு அமைப்பை பிளவுபடுத்தியது// (திரு.ராஜூவின் கடிதம்)
யாரோ சிலர் சொன்னால் ஏற்றுக்கொண்டு செல்ல யாரும் ஆட்டு மந்தைகள் அல்ல. மற்றவர்கள் சிந்திப்பார்கள், சொந்தமாக முடிவெடுப்பார்கள் என்ற இயக்கவியலை மறுக்கும் பார்ப்பனீய புத்தி கொண்டோர்க்கு எங்கள் செயல்பாடுகள் அப்படித்தான் தெரியும். ஏனெனில் அணிகள் சுயமாக சிந்திக்கக் கூடாது என்பதில்தானே உங்கள் தலைமை இறுதி வரை காப்பாற்றப்படும். உங்களின் தலைமையை ஏற்றுக்கொண்ட தோழர்கள் எல்லாம் நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொண்ட தலையாட்டி பொம்மைகள் அல்ல. இந்த அமைப்புக்காக அர்ப்பணிப்பு தியாகம் அனைத்தையும் சிரமேற்று செய்தவர்கள். இந்த அமைப்பில் பல ஆண்டுகளாக நீடித்த வலது திசைவிலகல் அரசியலை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே செல்கின்ற பாதை சரி என்று முடிவெடுத்தவர்கள் தானே தவிர, அவர்கள் ஒன்றும் சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்ல. உங்கள் தரப்பு ஆகட்டும் எங்கள் தரப்பு ஆகட்டும் அனைவருமே சொந்தமாக யோசித்து முடிவெடுத்தவர்கள்தான் என்பது உங்களுக்கு எப்போது புரியும்?
//பாசிசத்தை வீழ்த்த பரந்த ஐக்கிய முன்னணி தேவை அதை உருவாக்க வேண்டும் என்பதில் முழு உறுதியோடு செயல்பட விரும்புகிறோம். ஆனால் கூட்டு இயக்கங்களில் ஒரே பெயரில் இரு அமைப்புகள் என்பது தொடருவது தவிர்க்க வேண்டும் என கருதுகிறோம். எனவே இது குறித்து தாங்கள் ஜனநாயக அடிப்படையில் பரிசீலியுங்கள் என கோருகிறோம். அது மட்டுமல்ல எமது அமைப்பிற்கும், வெற்றிவேல் செழியன் தரப்பினருக்கும் நடைமுறையில் பொது எதிரிக்கு எதிரான கொள்கையிலும், முழக்கங்களிலும் தேர்தல் முறையை அணுகுவதிலும் பாரிய வேறுபாடு இருக்கிறது. ஜனநாயக மத்தியத்துவம் என்ற உட்கடசி ஜனநாயக கோட்பாட்டை நாங்கள் வழுவாமல் கடைபிடிப்பதால் குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்று சேர்கின்ற பல கட்சிகள் இயக்கங்கள் ஆகியவற்றுடன் ஜனநாயக பூர்வமான விவாதங்களையும் தோழமையுடன் கூடிய அணுகுமுறையையும் நாங்கள் கையாண்டு வந்துள்ளோம்.
நாடு தழுவிய அளவில் கார்ப்பரேட் காவி பாசிசம் ஏறித்தாக்கி வருகின்ற சூழலில் அதனை பிரதான எதிரியாக வைத்து எதிர்த்துப் போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒரு குடையின்கீழ் திரட்டுவதற்கு பொருத்தமான வேலை முறையை முன்வைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால் எங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டு செயல்படும் சிலர் நட்பு சக்திகளை எதிரிகளை போல கடுமையாக விமர்சனம் செய்து உண்மையான எதிரிகளான பாரதிய ஜனதா கட்சி கட்சிக்கு சேவை செய்கின்றனர்.
எனவே தற்போது நாட்டின் பிரதான அபாயமான கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக போராடுவதை திசைதிருப்புகின்ற வகையில் செயல்படும் வெற்றிவேல் செழியன் எமது மக்கள் அதிகாரம் பெயரில் இயங்குவதையும் தாங்கள் அதனை அங்கீகரிப்பதை பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
அமைப்புகள் கட்சிகள் பிளவுபடுவது ஒன்றும் புதிதல்ல.பெரும்பான்மையான அமைப்புகளில் நடந்து வருகின்ற ஒரு செயல்தான். பிரிந்தவர்கள், சிறுபான்மை தகுதி கொண்டவர்கள் தங்களது பெயரை மாற்றி செயல்பட்டு வருவதுதான் மரபு, ஜனநாயக பூர்வமானது நேர்மையானது. இதற்கு முன்பு பிரிந்த தேர்தல் கட்சிகளோ, பெரியாரிய இயக்கங்களோ பிரிந்தவர்கள் மீண்டும் கூட்டாக வெவ்வேறு பெயரில் பல போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் வெற்றி தரப்பினர் பிடிவாதமாக அதே பெயரில் இயங்குவதன் மூலம் அவர்களின் கீழ் உள்ள அணிகள் மத்தியில் எமது அமைப்பின் மீதான வெறுப்பரசியலை விதைப்பதுடன், அவதூறு சேற்றை வாரி இறைத்து சக தோழர்களுடன் உரையாடுவதையே தடுத்து சிதைக்கின்றனர்.
இன்றைய அரசியல் பொருளாதார பண்பாட்டு சூழல் அனைத்தும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக மாற்றப்பட்டு வருகிறது. இத்தகைய கார்ப்பரேட்-காவி பாசிசத்தை தேர்தல் அரசியலுக்கு அப்பாலும் பரந்து பட்ட கூட்டணி அமைத்து முழுமையாக வீழ்த்த வேண்டியது அனைவரின் கடமையாகும். அத்தகைய போராட்டத்தின் வழியாக பெரும் மக்கள் திரள் நலனை பிரதிபலிக்கும் உத்திரவாதப்படுத்தும் பங்கேற்க செய்யும் ஜனநாயக கூட்டரசை உருவாக்க வேண்டும். இதற்காக மக்கள் அதிகாரம் சாத்தியமான அனைவரோடும் கைகோர்த்து செயல்படும் என்பதை உறுதியாக சொல்கிறோம்.// (திரு.ராஜூவின் கடிதம்)
மக்கள் ஜனநாய இளைஞர் கழகம் பிளவுபட்டது, ம.ஜ.இ.க-வும் ம.ஜ.இ.மு-வும் ஒரே கொடியை பயன்படுத்துகின்றனர். இதனாலேயே இந்த அமைப்புக்கள் ஒருவர் கலந்து கொள்ளும் கூட்டமைப்பில் தாங்கள் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுக்கவில்லை. ஏனெனில் காலப்போக்கில் அமைப்புகளின் பெயரில் ஒன்று மாற்றம் பெற்றே தீரும் அதிலும் கூட மக்களும் சூழலுமே முடிவெடுக்கும் காரணியாக இருக்கும். ஒரு அமைப்பு பெயரையும் அல்லது கொடியையையும் பயன்படுத்துவதும் அதில் அரசியல் நியாயமிருக்கும் வரை அது அவ்வாறே தொடரும். அவ்வளவு நாணயமுள்ளவராக இருந்தால் புதிய ஜனநாயகம் என்ற பெயரின் பதிவுசெய்யப்பட்டு இருக்கும் ஒரு பத்திரிகை பெயரில் நாம் செயல்படக் கூடாது என்று திரு.ராஜூ தனது அரசியல் தலைமையிடம் ஏன் தெரிவிக்கவில்லை. தனக்கு வந்தால் ரத்தம். மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
//நாடு தழுவிய அளவில் கார்ப்பரேட் காவி பாசிசம் ஏறித்தாக்கி வருகின்ற சூழலில் அதனை பிரதான எதிரியாக வைத்து எதிர்த்துப் போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒரு குடையின்கீழ் திரட்டுவதற்கு பொருத்தமான வேலை முறையை முன்வைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால் எங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டு செயல்படும் சிலர் நட்பு சக்திகளை எதிரிகளை போல கடுமையாக விமர்சனம் செய்து உண்மையான எதிரிகளான பாரதிய ஜனதா கட்சி கட்சிக்கு சேவை செய்கின்றனர்.// (திரு.ராஜூவின் கடிதம்)
நட்பு சக்தியை பகை சக்திபோல கடுமையாக விமர்சனம் செய்து பாரதிய ஜனதா கட்சிக்கு சேவை செய்கின்றோமாம். உங்களுக்கு நேர்மை இருந்தால் அந்த நட்பு சக்திகள் யாரென்று சொல்லுங்கள் உங்கள் சாயம் வெளுத்துப்போகும். காங்கிரசும், திமுகவும் செய்யக்கூடிய தவறுகளை எதிர்க்கிறோம் இது தவறா? திமுகவிற்கு கோபம் வருவதற்கு முன்னர் உங்களுக்கு ஏன் இப்படி கோபம் வெடிக்கிறது?
டாஸ்மாக்கை மூடுவோம்! என்று 2016 தேர்தலின்போது வாக்குறுதி அளித்த ஸ்டாலின் இப்போது ஏன் அதை செய்யவில்லை என்று நாங்கள் கேட்கிறோம். நீங்கள் என்ன செய்தீர்கள்! வேண்டுகோள் வைத்தீர்கள்!
தமிழில் பாடுவதை தடுக்கும் தீட்சிதர்களை ஏன் கைது செய்யவில்லை? அதற்கு திராணி இல்லையா என்று கேட்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தீட்சிதர் அட்டூழியங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினீர்கள். சிற்றம்பல மேடையிலேயே தமிழ் பாடினீர்கள். மிக்க மகிழ்ச்சி, வரவேற்கிறோம். ஆனால் இப்போது என்ன செய்கிறீர்கள்? தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்பது போலவும் முகாந்திரத்துக்காக அலைவது போலவும் அதற்காக பொதுமக்களே புகார் கொடுங்கள் என்று புகார் வாங்குகிறது. நீங்களும் ஆயிரம் பேர்களுக்கு மேல் கையெழுத்து வாங்கி புகார் அளிக்கின்றீர்கள். உங்கள் புகாரை வைத்துக்கொண்டுதான் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்போகின்றதா? இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்வில் அரசுக்கும் அரசாங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமலா இருந்துவிட்டீர்கள்?
பட்டினப்பிரவேசத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினீர்கள். மிகவும் பாராட்டக் கூடியதும் வரவேற்கக் கூடியதுமாகும். ஆனால் போராடிய தோழர்கள் நள்ளிரவு வரை மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்களே. இப்போது கூடவா உங்களுக்கு தமிழ்நாட்டை ஆளும் திமுகவை விமர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை அல்லது வேறுவழி இல்லையா?
பறையா என்று இழித்துரைத்து பேசுகிறார் அண்ணாமலை. ஆனால் தமிழ்நாட்டு அரசு அவரை கைது செய்யவில்லை. இந்தப் பிரச்சினையில் எப்படி உங்கள் பாணியில் திமுகவுக்கு நட்பு முறையில் எடுத்துக் கூறுவது திரு.ராஜூ அவர்களே!
//எமது அமைப்பிற்கும் வெற்றிவேல் செழியன் தரப்பினருக்கும் நடைமுறையில் பொது எதிரிக்கு எதிரான கொள்கையிலும், முழக்கங்களிலும் தேர்தல் முறையை அணுகுவதிலும் பாரிய வேறுபாடு இருக்கிறது // (திரு.ராஜூ கடிதம்) இது உண்மையிலும் உண்மை.
அய்க்கியமும் போராட்டமும்தான் தோழமையை பலப்படுத்தும் என்ற அரசியல் அடிப்படையே புரியாமல் ஆளும் திமுகவிற்கு சோப்பு போட்டு அய்க்கிய முன்னணி கட்டும் வேலையில் அல்லவா இறங்கி இருக்கின்றீர்கள்.
உங்களுடைய தலைவர் திரு.மருதையன் அவர்கள் திமுக அரசாங்கத்துக்கு பாதுகாப்பு அளிக்கின்ற வேலையை, திமுக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்ற வேலையை மேற்கொள்வதுதான் மக்கள் இயக்களின் வேலை என்றார். அதை தமிழ்நாட்டில் எந்த மக்கள் இயக்கங்களும் ஏற்கவில்லை. ஆனால், நீங்கள் திரு.மருதையனின் கருத்துக்களை அச்சுப்பிசகாமல் பின்பற்றி அல்லவா வருகிறீர்கள்.
திமுக அரசு 5 ஆண்டு காலம் தொடர்ந்து நீடித்திருப்பதற்காக, சொர்க்கத்துக்கு செல்லும் பட்டினப்பிரவேசத்துக்கு, முள் பொறுக்கியாக வேலை செய்ய வேண்டுமென்ற திரு.மருதையனது அரசியலை தாங்கள் சிறப்பாக செய்து முடிக்க திட்டமிட்டு இருக்கின்றீர்கள். அந்த பட்டினப்பிரவேசப் பாதையில் நாங்கள் முள்ளாக வந்து விட்டோமோ?
புரட்சிக்கான பாதையில் முள்ளாக இருப்பதுதான் தவறு. திமுகவை பல்லக்கில் வைத்து தூக்கிக்கொண்டு செல்வோருக்கும் முள் பொறுக்குவோருக்கும் நாங்கள் முன்வைத்த அரசியல் முள்ளாக உள்ளதென்றால் என்றால் அது மகிழ்ச்சியே. அதுவும் கூட நீங்கள் பரிசீலிப்பதற்கே.
//எனவே தற்போது நாட்டின் பிரதான அபாயமான கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக போராடுவதை திசைதிருப்புகின்ற வகையில் செயல்படும் வெற்றிவேல் செழியன் எமது மக்கள் அதிகாரம் பெயரில் இயங்குவதையும் தாங்கள் அதனை அங்கீகரிப்பதை பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
எனவே கூட்டியக்கங்களில் எமது மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று அதே பெயரில் இயங்கும் தோழர் வெற்றிவேல் செழியன் தரப்பினர் அல்லது வேறு எவரையும் அதே பெயரில் அங்கீகரித்து எமது மக்கள் அதிகாரம் அமைப்பையும் ஒன்றாக அழைப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.// (திரு.ராஜூ கடிதம்)
காவி – கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் அனைத்து சக்திகளோடும் இணைந்து போராடுவதே காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்திற்கு எதிரான முக்கியப்பணி என்று வகுத்துக் கொண்ட நாங்கள், யாரையும் வரக்கூடாது; இவர்கள் இருந்தால் நாங்கள் வரமாட்டோம் என்று ஒருபோதும் சொல்லமாட்டோம். பாசிச எதிர்ப்பில் உறுதியாக இருக்கும், பொறுப்புடன் வேலை செய்யும் எவருடனும் இணைந்து செயல்படுவோம் இதுவே எமது நிலைப்பாடு.
இதுவரை அணிகளுக்கு ஆணையிட்டு வந்த திரு.ராஜூ, இப்போது மற்ற அமைப்புகளுக்கும் ஆணையிட ஆரம்பித்துவிட்டார். எமது அமைப்பை அழைத்தால் நாங்கள் வரமாட்டோம் என்று மறைமுகமாக மிரட்டவும் தொடங்கிவிட்டார். ஒரு கூட்டு நடவடிக்கையோ அல்லது கூட்டமைப்போ அதன் நோக்கத்திலிருந்துதான் யாரை சேர்த்துக் கொள்வது என்ற முடிவை எடுக்கும். இதைப்பற்றிய அடிப்படை புரிதல் இன்றி அமைப்பு பிளவு – தனிநபர் பிரச்சினை என்ற அக்கப்போரை மற்ற அமைப்புக்களின் முன்வைத்து இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுங்கள் என்கிறார் திரு.ராஜூ அவர்கள். அடிப்படை கொள்கைகளோடு மாறுபாடு இல்லாத எவருடனும் பயணிக்கலாம். அப்படி இல்லாமல் இவர் வந்தால் நான் வரமாட்டேன் என்பதெல்லாம் பார்ப்பனீய புத்தியே.
செஞ்சட்டை மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட அனைவரும் சிவப்பு சட்டையில் வந்திருக்கும்போது, தனக்கிருக்கும் சிவப்பின் மீதான – கம்யூனிச சித்தாந்தத்தின் மீதான – அலர்ஜி காரணமாக செஞ்சட்டையை தவிர்த்த ராஜூவால் அதற்கான காரணத்தைக்கூட வெளிப்படையாக கூறமுடியாது. திரு.ராஜூ அவர்கள் எங்கேயாவது தன்னை தோழர் என்று விளித்துக்கொண்டு இருக்கிறாரா அல்லது துண்டறிக்கையில் தோழர் என்று போட்டுக்கொள்ள அனுமதித்து இருக்கிறாரா?
எல்லாவற்றிலும் தான் தனித்திருக்க வேண்டும். எல்லோரும் தனக்கு கட்டுப்பட வேண்டும் என்ற தனது கொள்கையை மற்ற அமைப்புகளுக்கும் விரிவு படுத்திவிட்டார். அவருடைய கனவெல்லாம் திமுக, காங்கிரசுடன் இணைந்த அய்க்கிய முன்னணியில் அல்லவா இருக்கிறது. அதனால்தான் அவருக்கு ஆணையிடுவது எளிதாகிவிட்டது.
இறுதியாக ஒன்று,
கொள்கையை துறந்தோடியது நாங்கள் அல்ல; மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கையில் இந்த கட்டமைப்பை பயன்படுத்த முடியாது, தேர்தல் கட்டுமானம் சீரழிந்து போயிருக்கிறது, ஆளை மாற்றுவது தீர்வல்ல; கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு என்று கூறியிருப்பதை மூடி மறைத்துவிட்டு தேர்தல் பாதையில் மூழ்கி முத்தெடுத்து, அதிகாரத் தாழ்வாரங்கங்களில் ஒட்டிக்கொண்டு புரட்சித் திட்டம் கொண்டிருக்கும் நீங்களே இன்னமும் மக்கள் அதிகாரம் என்று பெயரை தாங்கிக்கொண்டு இருக்கின்றீர்கள். நக்சல்பாரி இயக்கத்தின் வழித்தோன்றலாக, நாங்கள் செய்த தவறுகளை மக்களிடம் வெளிப்படையாக முன்வைத்து முன்னேறிவரும் எங்களுக்கு மக்கள் அதிகாரம் என்ற பெயரை முன்னெடுத்துச்செல்ல உரிமை இல்லையா என்ன?
எமது செயல்படுகளால், எமது அரசியல் முழக்கங்களால் ஆளும் வர்க்கத்தைவிட நீங்கள்தான் அதிகம் அம்பலப்பட்டுப்போய் இருக்கின்றீர்கள். அதனால் அச்சமடைந்து ஆணவ அறிக்கை வெளியிட்டு இருக்கின்றீர்கள். நாங்கள் மக்கள் அதிகாரம் பெயரை பயன்படுத்துவதா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம்; மக்கள் முடிவு செய்யட்டும். நீங்கள் ஆளும் வர்க்கத்தின் புட்டம் வலிக்காதவாறு முள் பொறுக்கும் புனிதப்பணியை மேற்கொள்வீராக! அரசியலற்ற விவாதங்களில் எங்களை தள்ளிவிடாதிருப்பீராக!
நாம் இருவரும் தத்தமது அரசியலை நேர்மையாய் முன்வைப்போம்! எது சரி என்று மக்கள் தீர்மானிக்கட்டும்!

தோழமையுடன்,
தோழர் முருகானந்தம்,
கடலூர் மண்டலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !

0
ஜூன் 21 அன்று ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிடம், ‘புல்டோசர் நீதி’-க்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கடிதம் எழுதியுள்ளனர்.
அரசியலமைப்பு நடத்தைக் குழுவின், 90 முன்னாள் அரசு ஊழியர்கள் உத்தரப்பிரதேசத்தில் “சட்டவிரோதமாக காவலில் வைத்தல், குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு இடித்தல் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான போலீசின் வன்முறை” ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அக்கடித்தத்தில் கூறியுள்ளனர்.
“எந்தவொரு எதிர்ப்பையும் மிருகத்தனமாக அடக்குவதற்கு” தேசிய பாதுகாப்புச் சட்டம் 1980, உத்தரப்பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1986 ஆகியவற்றை செயல்படுத்த “வெளிப்படையான வழிகாட்டுதல்கள்” உள்ளன என்று முன்னாள் அரசு ஊழியர்கள் கூறினர்.
“இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் உயர் மட்டத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது. உள்ளூர் மட்ட அதிகாரிகள், போலீசுகாரகள் இந்த அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்றாலும், உண்மையான குற்றம் அரசியல் நிர்வாகத்தின் உயர் மட்டங்களில் உள்ளது” என்று கடிதம் கூறுகிறது.
“மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், சட்டப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது அரசாங்கத்தை விமர்சிக்கவோ அல்லது சட்டப்பூர்வ வழிமுறைகளை பயன்படுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தவோ துணிந்த குடிமக்களுக்கு மிருகத்தனமான தண்டனையை வழங்குகிறது இந்த ‘புல்டோசர் நீதி’. தற்போது பல இந்திய மாநிலங்கள் விதிவிலக்காக இல்லாமல் புல்டோசர் நீதி வழக்கங்கப்பட்டு வருகிறது” என்று கூறுகிறது.
படிக்க :
♦ காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் ! இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுப்போம் ! | மக்கள் அதிகாரம்
♦ ‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!
பிரச்சினை இனி உள்ளூர் மட்டத்தில் போலீசுத்துறை, நிர்வாகத்தின் ‘அதிகப்படியான செயல்கள்’ அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சி, ‘முறையான செயல்முறை’, ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி’ என்று கருதப்பட வேண்டும் என்பதே உண்மை. இந்து தற்போது தலைகீழாக மாற்றப்படுகிறது” என்கின்றனர்.
“பிரயாக்ராஜ், கான்பூரில், சஹாரன்பூர் மற்றும் கணிசமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட பல நகரங்களில் ஒரு மாதிரியைப் பின்பற்றுகிறது. அரசியல் ரீதியாக வழிநடத்தப்படுகிறது” என்று அவர்கள் கூறினர்.
இக்கடித்தத்தில் கையெழுத்திட்டவர்களில் முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை, முன்னாள் வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், முன்னாள் இந்தியக் போலீசுத்துறை (ஐ.பி.எஸ்) அதிகாரிகள் ஜூலியோ ரிபெய்ரோ, அவினாஷ் மோகனானி, மேக்ஸ்வெல் பெரேரா மற்றும் ஏ.கே. சமந்தா மற்றும் முன்னாள் சமூக நீதித்துறை செயலாளர் அனிதா அக்னிஹோத்ரி உள்ளிட்ட 90 பேர் இதில் அடங்குவர்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதிகள் மற்றும் முன்னணி வழக்கறிஞர்கள் சிலர் ஜூன் 14 அன்று தலைமை நீதிபதிக்கு அனுப்பிய மனுவை முன்னாள் அரசு ஊழியர்கள் ஆதரித்தனர். உத்தரப்பிரதேசத்தில் சமீபத்திய செயல்களை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பினால் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை இடித்ததை எதிர்த்து நீதிபதிகள் போபண்ணா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் “எல்லாம் நியாயமாக இருக்க வேண்டும்” என்றும், சட்டத்தின் கீழ் உரிய நடைமுறைகளை அதிகாரிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.
“இந்த பிரச்சினையில் உயர் மட்டத்தில் உள்ள நீதித்துறை தலையிடாவிட்டால், கடந்த எழுபத்திரண்டு ஆண்டுகளாக மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும் கட்டப்பட்ட அரசியலமைப்பு நிர்வாகத்தின் முழு கட்டிடமும் இடிந்து விழும்” என்று கூறினார்கள்.
காவி – கார்ப்பரேட் பாசிசம் என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் குறைந்த பட்ச ஜனநாயக விழுமியங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்குமே எதிரானது. ‘புல்டோசர் நீதி’ என்பது முஸ்லீம் மக்களை இந்நாட்டில் எதிர்ப்பு குரலெழுப்பக் கூடாது என்ற ஓர் பாசிச நடவடிக்கை. அமைதியாய் இரு! அடிமையாய் இரு! அதைத்தாண்டி உரிமை என்று பேசினால் ஒடுக்கப்படுவாய்! நசுக்கப்படுவாய்! உன் வீடுகள் இடிக்கப்பட்டு சொந்த நாட்டிற்குளேயே அகதிகளாக்கப்படுவாய்! என்பதே யோகி அரசு நமக்கு கூறும் ‘புல்டோசர் நீதி’யின் சாரம்.
இது ஏதோ முஸ்லீம் மக்களுக்கு மட்டும் நடைபெறுகிறது என்று கண்டுகொள்ளாமல் விட்டால், நாளை காவி – கார்ப்பரேட் பாசிசம் கோலோச்சும் போது ‘காவி புல்டோசர்கள்’ நம் வீட்டு கதவுகளையும் தட்டும்.

சந்துரு