Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 163

பாசிச அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா!

1

மெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ-வில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

“இந்த ஆண்டு இந்தியா 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடுகிறது. இந்தியா குடியரசாகி 72 ஆண்டுகள் ஆகின்றன. அப்படி இருந்தும் அரசியலமைப்பின் படி, ஒவ்வொரு அமைப்புக்கும் வழங்கப்பட்ட பணிகள் குறித்து நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. ஆட்சியில் இருக்கும் கட்சிகள் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், நீதி அமைப்புகளின் ஒப்புதலைப் பெற வேண்டியது தங்களின் உரிமை என நினைக்கின்றனர். ஆனால் எதிர்கட்சிகளோ தங்கள் நலனையும், அரசியல் செல்வாக்கையும் விரிவுப்படுத்துவதற்காகவும் நீதிமன்றங்கள் பயன்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

அரசியல் சட்டம் மற்றும் ஜனநாய அமைப்புகள் குறித்து மக்களிடம் போதுமான புரிதல் இல்லை. பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததை பயன்படுத்தியே இதுபோன்ற சக்திகள் சுதந்திரமான அமைப்பான நீதித்துறையை கீழே தள்ளிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். நீதிமன்றங்கள் அரசியலைப்பு சட்டத்திற்கு மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டுள்ளன.

பலதரப்பட்ட மக்களை வரவேற்பதாலும் அவர்களை ஊக்குவிப்பதாலும் அமெரிக்காவிற்கு ஏராளமான இந்தியர்கள் வருகின்றனர். மக்களின் சகிப்புத்தன்மை மற்றும் உள்ளடக்கிய சிறப்பியல்புகளால் உலகம் முழுவதிலும் இருந்து திறன் வாய்ந்தவர்கள் வருகிறார்கள். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறார்கள். அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை சர்வதேச அளவிலானது. இதை இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும்” என்றார்.


படிக்க : வரவர ராவின் நிரந்தர மருத்துவப் பினையை மறுக்கும் பாசிச நீதிமன்றம்!


நமது நாட்டின் தலைமை நீதிபதி ஒருவர் தனது பதவி காலத்தில் வெளிநாட்டிற்கு சென்று நமது நாட்டின் அரசியல் நிலைமை குறித்து விமர்சிப்பது அல்லது பேசுவது பலருக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், நம் நாட்டின் நீதித்துறையின் பின்னணியை அறிந்தவர்கள் நிச்சயம் அதிர்ச்சி அடையப் போவதில்லை.

ஒரு ஏகாதிபத்திய நாட்டிற்குச் சென்று நமது நாட்டின் நீதிமன்றத்தின் நிலையையும், அரசியல் நிலையையும் பற்றி பாசிச மனோபாவத்திலிருந்து விமர்சித்துப் பேசி இருப்பது மேலோட்டமாக பார்த்து, ஒரு சங்கியின் பிரச்சாரம் என்று ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.

இந்தியா குடியரசாகி 72 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அரசியலைப்பிற்கு வழங்கப்பட்ட பணிகள் குறித்து நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார் நீதிபதி என்.வி ரமணா. அப்படியானால் இதற்கு யார் பொறுப்பு என்பதை இவர் பேசியிருக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி என்பதே இன்னும் முற்றுப் பெறாத நிலையில் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து இருக்கின்ற கல்வியையும் பறிக்கப்படுகின்ற சூழலில் ஏற்கனவே இருக்கின்ற சொல்லப்படுகின்ற ஜனநாயக உரிமைகளான சங்கம் சேரும் உரிமை, 8 மணி நேர வேலை உரிமை, போராடும் உரிமை, இலவச மருத்துவம்., சுகாதாரம், வாழ்விடம் போன்றவை எல்லாம் மறுக்கப்படுகின்ற நிலையில் அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு துறைக்கும் கொடுத்துள்ள பணிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவில்லை என்று இந்த ஜனநாயகத்தின் தோல்வியாகும். இதை நேர்மையாக அவர் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்.

எளிமையாக சொன்னால், நாட்டில் சரிபாதிக்கும் மேலான மக்கள் அன்றாட தேவைக்கும், அடிப்படை வாழ்வாதரத்திற்கே அலைந்து திரிகிற அவலநிலை குறித்து அவருக்கு அக்கறையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சட்டத்தின் முன்னே அனைவரும் சமம் என்று சொல்கிறது அரசியல்சாசனம். ஆனால் ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் CAA, NRC போன்றவை அரசியலமைப்பிற்கு எதிரானதாக இவருக்குத் தோன்றவில்லையா? குறிப்பிட்ட மதத்தினரை, சிறுபான்மையினரை நாட்டை விட்டே துரத்தும் அரசின் நடவடிக்கை, நாட்டில் பிரிவினைவாதத்தை உண்டாக்குவது. சிறுபான்மையினரை தனிமைப்படுத்துவதாகும். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பாபர் மசூதி நிலம் தொடர்பான தீர்ப்பு, குஜராத் படுகொலைக் குற்றங்களில் இருந்து அமித்ஷா-மோடி கும்பல் விடுவிப்பு போன்றவை அனைத்தும் நீதிமன்றத்தின் வழியே நிறைவேற்றப்படுகின்ற பயங்கரவாத தீர்ப்புகள் அல்லவா?

ஆனால், ஜனநாயகத்தின் பாதுகாவலன் போல நீதிமன்றம் தன்னைக் காட்டிக்கொள்வதைவிட வெட்க்கக்கேடு எதுவுமில்லை.


படிக்க : அமெரிக்கா : கருக்கலைப்புக்கு தடை – உச்ச நீதிமன்றத்தின் பெண் அடிமை தனத்திற்கு எதிராக போராட்டம் !


அடுத்து, “ஆட்சியில் இருக்கும் கட்சிகள் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், நீதி அமைப்புகளின் ஒப்புதலைப் பெற வேண்டியது தங்களின் உரிமை என நினைக்கின்றனர்” என்கிறார் தலைமை நீதிபதி.

உண்மையில் அப்படிதான் உள்ளதா? காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை, ஐயப்பன் கோவில்களுக்கு பெண்கள் செல்ல அனுமதி, முல்லை பெரியாறில் 142 அடி நீர் தேக்குவதற்கான அனுமதி போன்ற உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை ஆளும் கட்சிகளே நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத் தீர்ப்புகளையே துளியும் மதிக்காமல் தூக்கி வீசிவிட்டன. ஆனால் பச்சையாக ஆளுங்கட்சிகள் நீதிமன்றத்தை மதிப்பது போல் பொய் பேசுகிறார் தலைமை நீதிபதி.

மேலும், நீதிமன்ற தீர்ப்பை நடமுறைப்படுத்த சொல்லி எதிர்கட்சிகளும் ஜனநாய சக்திகளும் போராடினால் கூட வழக்கு என்னவோ போராடுபவர்கள் மீது தான் பாய்கிறது. ஆனால் நீதிபதி சொல்வதோ எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு நீதிமன்றம் அடிபணிந்து போவதாக கூறுகிறார். அதாவது ஆளும் ஒன்றிய அரசு எப்படி இசுலாமிய மக்களை ஒடுக்கிக் கொண்டே, ஒருபுறம் அவர்களால் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்று கூறி அஞ்சுவது போல் இசுலாமியர்கள் மீது பாசிசத்தை ஏவுகிறதோ, அது போல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வின் பேச்சு பாசிச மனோபாவத்தின் வெளிப்பாடாகும்..

”ஜனநாயக சக்திகள் குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததால் இது போன்ற சக்திகள் நீதிமன்றத்தை கீழே போட்டு தள்ளிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என நீதிபதி என்.வி.ரமணா கூறுகிறார். தன்னுடைய உரிமை மறுக்கப்படும்போதோ அல்லது மக்களின் உரிமை மறுக்கப்படும் போதோ அதை எதிர்த்து போராடும் போது ஒரு ஜனநாயக சக்திகள் அடையாளம் காணப்படுகின்றனர். இது போன்ற கருத்து உடையவர்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாகவும் செயல்படுகிறார்கள்.

அப்படியானால் மக்களில் ஒரு பகுதியினர் தான் ஜனநாயக சக்திகள். மக்களுக்கு என்றுமே ஆதரவானவர்கள். ஆனால் போராடுபவர்களால் நீதிமன்றத்தின் அதிகாரம் கீழிறக்கபடுவதாக நீதிபதி சொல்லும் கருத்து மக்களிடமிருந்து ஜனநாயக சக்திகளை தனிமைப்படுத்தும் ஆபத்தான கருத்தாகும். இஸ்லாமியர்கள் குறித்து இதே அணுகுமுறையை தான் காவி பாசிஸ்டுகள் கையாளுகிறார்கள்.


படிக்க : ‘புல்லி பாய்-சுல்லி டீல்ஸ்’: முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய ‘அ’நீதிமன்றம்!


உரிமைகள் மறுக்கப்படும் போது போராடுவது, சங்கம் வைத்துக் கொள்வது போன்றவை அரசியலைப்பு சட்டத்தின் பிரிவு 19(1)C வழங்கியிருக்கும் உரிமையாகும்.

இந்த உரிமையையே மறுப்பதாக உள்ளது நீதிபதியின் பேச்சு. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுகிறார். ஆனால் மக்கள் மத்தியில் இவற்றை எடுத்து சொல்லும் ஜனநாயக சக்திகளை எதிரிகளாக சித்தரிக்கிறார்.

ஆளும் பாசிச பா.ஜ.க-வின் அடியாள் போல் நீதிபதி பேசுகிறார். போராடும் ஜனநாயக சக்திகளை தனிமைப்படுத்தி ஒடுக்குவதுதான் இவர்களது நோக்கம்.

நகர்ப்புற நக்சல்கள் என்று சமூக செயல்பாட்டாளர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது, அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள், செய்தியாளர்களை ஊபா சட்டங்கள் மூலம் கைது செய்வது, இசுலாமியர்கள் மீதான சங்கப் பரிவார கும்பல் நடத்தும் அடக்குமுறைகளை வேடிக்கைப் பார்ப்பது, அந்த குற்றவாளிகளை விடுவிப்பது என மொத்த நீதித்துறையே சங்கப்பரிவார கும்பலின் அடியாள் படையாக மாறியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகத்தான், நமது நாட்டின் தலைமை நீதிபதி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைகள் அவையொன்றில் சென்று, மேற்கண்டவாறு அறிவித்திருப்பதைப் பார்க்க வேண்டும். ஆம், இது பாசிசத்தின் அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றுகிறது!

ஓவியா

செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில் 60-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் அவர்களின் நீண்டகால கோரிக்கைகளான ஊதிய உயர்வு, கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜுன் 29-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்கள் முன்வைத்து போராடும் கோரிக்கைகளில் மூன்று முக்கிய கோரிக்கைகளைப் பற்றி சுருக்கமாக முதலில் பார்ப்போம்.

***

1) 2009-ம் ஆண்டு கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்டதே அரசாணை 354. அரசு மருத்துவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அவர்களுக்கு ஊதியமானது நான்காம் நிலை மருத்துவ அதிகாரி என்ற பிரிவின்கீழ் வழங்கப்பட வேண்டும் என்பதே அரசாணையில் கூறியிருப்பது. அரசாணை 354-ஐ அமல்படுத்தாததால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மருத்துவரும் ஏறக்குறைய ரூ.40,000 வரை இழக்கின்றனர்.

தற்போதைய விதிமுறைகளின் படி, மருத்துவர்கள் 20 ஆண்டுகள் மருத்துவப் பணியை முடித்த பிறகே நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு பெற முடியும். இளநிலை, முதுநிலை, சிறப்பு படிப்பு முடித்து அரசுப் பணியில் சேர 30-32 வயதாகும் நிலையில், நான்காம் நிலை மருத்துவ அதிகாரி ஊதியத்தைப் பெறும்போது 50 வயதைக் கடந்து விடுகின்றனர். இந்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் அரசாணை 354 இயற்றப்பட்டது.


படிக்க : 13 ஆண்டுகளாக பணி வழங்காததை கண்டித்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம்!


இந்த அரசாணையை நிறைவேற்ற திமுக அரசுக்கு 300 கோடி வருடத்திற்கு செலவாகும். கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கும் அரசானது, மக்கள் உயிரை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு செலவு செய்ய நிதி இல்லாமல் தவிக்கிறது. நாம் என்ன செய்ய?

2) கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு 25 இலட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் தமிழ்நாட்டில் மட்டும் 110 மருத்துவர்கள் இறந்ததாக இந்திய மருத்துவ சங்க தரவுகள் கூறுகின்றன.

அதிமுக அரசானது இறந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களை முறையாக வழங்கவில்லை. ஆட்சிக்கு வந்த திமுக அரசும் அதிமுக விட்டுச்சென்ற பணியை தொடர்ந்தது. ஆகஸ்ட் 2021 புள்ளிவிவரப்படி 34 மருத்துவர்கள், செவிலியர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 8.5 கோடி விடுவித்து அரசாணையை திமுக அரசு வெளியிட்டதே சிறந்த சான்று. அதுவும் கூட முறையாக அமல்படுத்தப்பட்டதா என்பது வேறு விசயம்.

கொரோனா முதல் அலையில் தனியார் மருத்துவர்கள் பணிசெய்ய மறுத்தபோது தங்கள் உயிரை கொடுத்து மக்கள் உயிரைக் காப்பாற்றினார்கள் அரசு மருத்துவர்கள். ஆனால், அவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கூட போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலைதான் இங்கு நிலவுகிறது.

3) கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ல் வெளியிடப்பட்ட அரசாணை 4D2 மூலமாக மருத்துவப் பணியிடங்கள் மறுசீரமைக்கப்பட்டன. இந்த மறுசீரமைப்பு பணிகள் தேசிய மருத்துவ ஆணையம் வகுத்த விதிகளின்படி அமையவில்லை.

சான்றாக, மதுரை மருத்துவக் கல்லூரி உளவியல் துறையில் 250 மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 9 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அங்கு பணியாற்றுவது 5 ஆசிரியர்களே. இந்த நிலைமைதான் தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவுகிறது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், சென்னை எழும்பூர் மருத்துவமணையில், மயக்கவியல் துறை மருத்துவர்களின் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அறுவைச் சிகிச்சை செய்வதற்கான காத்திருப்பு பட்டியல் நீண்டு, நோயாளிகள் பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. (செய்தி ஆதாரம், இந்து தமிழ், 17.03.2022)

ஆளும் வர்க்க ஊடகங்களால் மருத்துவர்கள் ஊதிய உயர்வுக்காக போராடுகிறார்கள் என்ற பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. அவர்கள் ஊதிய உயர்வுக்காக மட்டும் போராடவில்லை, அரசு மருத்துவக் கட்டமைப்பை பாதுகாக்கவும் போராடுகிறார்கள் என்பதற்கு காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையே சான்று.


படிக்க : மறுகாலனியாக்க சுரண்டலுக்கு நவீன பண்ணை அடிமைகளாக மாற்றப்படும் செவிலியர்கள் !


மருத்துவர்கள் தற்போது திமுக ஆட்சிக்காலத்தில் மட்டும் போராட்டம் நடத்தவில்லை. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்து தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். 2019-ம் ஆண்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட, போராட்டக்களத்திற்கு வந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசாணை 354-ஐ நிறைவேற்றுவோம் என வாக்குறுதியளித்தார்.

மருத்துவர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளரை பதினைந்து தடவைக்கு மேல் போய் பார்த்தும், தர்ணா போராட்டம், கண்ணில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டம் போன்று ஐந்துக்கு மேற்பட்ட போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசானது தங்கள் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டதே மிச்சம்.

திமுகவானது எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஏப்ரல் 16, 2020 அன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கொரோனாவால் இறந்த முன்களப் பணியாளர்களுக்கு 10 இலட்சத்தை ஒரு கோடியாக உயர்த்தி நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.

ஒரு கோடி நிவாரணமாக வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவர்கள் மருத்துவர்களுக்கு 25 இலட்சத்தை வழங்கவே, முக்குகிறார்கள்! முனங்குகிறார்கள்!. மருத்துவர்களுக்கே இவர்கள் நிவாரணம் வழங்கவில்லை என்றால் மற்ற செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு எல்லாம் நிவாரணம் வழங்கி இருப்பார்கள். அந்தக் கடவுளுக்குதான் வெளிச்சம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை எல்லாம் கழிவறைக் காகிதமாக கசக்கி தூக்கி எறிவது என்பது எல்லாம் எல்லா ஓட்டுக்கட்சிகளின் வழிமுறைதானே. திமுக மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

***

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது சரி, திமுக ஆட்சிக் காலத்திலும் தங்கள் கோரிக்கைக்காக அரசு மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராடி வந்துள்ளார்கள். ஏன் அவர்களின் போராட்டம் வெற்றி அடையவில்லை.


படிக்க : சென்னை துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !


தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் மட்டும் போராடவில்லை. செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மின்சார ஊழியர்கள் ஆகியோரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராடிக் கொண்டுதான் உள்ளார்கள். ஏன் இவர்களின் போராட்டங்கள் எல்லாம் வெற்றி அடைய மாட்டிக்கின்றன?

அவை எல்லாம் அடையாளப் போராட்டங்களோடு நின்று விடுகின்றன. அரசை பணியவைப்பதை நோக்கி நகரவில்லை. அரசும் இவர்கள் சில நாட்கள் போராட்டம் செய்துவிட்டு கலைந்து விடுவார்கள் என்று நம்முடைய போராட்டங்களை கண்டுகொள்வதில்லை.

செவிலியர்களும், மருத்துவர்களும் மருத்துவத்துறையில் தான் உள்ளார்கள். அவர்கள் கூட தங்கள் கோரிக்கைகளுக்காக ஒன்றினைந்து போராடவில்லை.

மருத்துவர்கள், செவியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு எல்லாம் பொது எதிரி அரசே. அரசுக்கு எதிராக ஒன்றினைந்த மற்றும் அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதே நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி. வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடமும் அதுவே.


ஆயிஷா


ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!

0

ஷ்ய போல்சுவிக் கட்சியின் உதவியுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 1, 1921 அன்று உதயமானது. கடந்த ஜூலை 1, 2021 அன்று தனது நூறாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. 13 பேரை மட்டுமே கொண்டு உருவான ஒரு சிறிய குழு அது. அதில், தோழர் மாவோவும் ஓர் உறுப்பினர்.

அக்கட்சி தனது முதல் கட்டமான (1921-1949) புதிய ஜனநாயகப் புரட்சி கட்டத்தில், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும், ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் களமாடி வெற்றிக்கண்டது. கட்சி தொடங்கப்பட்ட 28 ஆண்டுகளில், கீழ்த்திசை நாடுகளின் புரட்சிக்கு ஏங்கும் காலத்தில் தனது முதல் வெற்றியை பறைசாற்றியது மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி.

பல்லாயிரக் கணக்கான தோழர்களின் அளப்பறிய தியாகத்தால், கட்சி தலைமையின் கூர்மையான அரசியல் வழிகாட்டுதல்களால் தனது முதல்கட்ட புரட்சியை சாதித்தது. அதன்பின், ரஷ்ய போல்சுவிக் கட்சியின் பொதுக் கோட்பாடுகளை வரித்துக் கொண்ட அதே நேரத்தில், சீனாவின் தனிச்சிறப்பு நிலைமைகளுக்கு ஏற்ப ஓர் சோசலிச நிர்மாணத்தை கட்டியெழுப்பியது மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் ஆய்வுகளில் தோழர் மாவோவின் பங்கு மிகவும் முக்கியமானது. அதற்கான புதிய வழிமுறையாக கலாச்சாரப் புரட்சியை மாவோ தொடங்கி வைத்தார்.

படிக்க :

♦ பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ

♦ புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ

பல்வேறு அரசியல் கோட்பாடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை கட்சிக்குள் செழுமைப்படுத்திக் கொண்டே இருந்தார் தோழர் மாவோ. சீர்செய் இயக்கத்தை முன்னெடுத்து தவறுகளை திருத்த சளையாத போராட்டத்தை மேற்கொண்ட ஓர் மகத்தான கட்சிதான் மாவோ தலைமையிலான சீனப் பொதுவுடைமை கட்சி. மார்க்சிய – லெனினியத்தை அடுத்தக்கட்ட பாய்ச்சலாக வளர்த்தெடுத்ததில் முக்கிய பாத்திரம் தோழர் மாவோவிற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகார சகாப்தத்தில் உண்டு.

கம்யூனிஸ்டுகளாகிய நமது இறுதி இலட்சியம் கம்யூனிசம் மட்டுமே. அதை அடையும் வரலாற்று கட்டத்தில் நாம் பயணிக்கிறோம். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தனது வரலாற்றில் அரை நூற்றாண்டுகள் சோவியத் கட்டுமானத்தை நிலைநாட்டியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏறத்தாழ முப்பதாண்டுகள் தனது சோசலிச கட்டுமானத்தை நிலைநாட்டியது. நம் பயணம் வெற்றியும் தோல்வியும் முன்னேற்றமும் பின்னடைவும் கொண்டதுதான். ஆனால் தோல்வியில் இருந்து பாடம் கற்று வெற்றியை நோக்கி வீறுநடைப்போடுவதுதான் மார்க்சியத்தின் மகத்தானக் கூறு.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற அறிவியலின் அடிப்படையில் செயல்படும் இந்த மார்க்சியத் தத்துவம் நூற்றாண்டுகள் கடந்தாலும் இளமைத் துடிப்புடன் தன்னை புதுப்பித்துக் கொண்டு வருகிறது. அதேபோல், உலகப் பாட்டாளி வர்க்கத்தில் முன்னணிப்படையான கம்யூனிஸ்ட் கட்சியும், ஒவ்வொரு நாடுகளிலும் புரட்சி கனலை மூட்டிக் கொண்டிருக்கிறது. எனவே நமது இறுதி இலக்கான சோசலிசம் – கம்யூனிச சமூகத்தை நாம் அடைந்தே தீருவோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர்களாக நாம் கம்யூனிச சமூகத்தை வரலாற்றில் படைப்போம்!

கம்யூனிசமே நம் இறுதி இலட்சியம் !

மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனை நீடுழி வாழ்க !

வினவு

வரவர ராவின் நிரந்தர மருத்துவப் பினையை மறுக்கும் பாசிச நீதிமன்றம்!

0
பீமா கோரேகான்-எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வரவர ராவ் தனது மனு ஏப்ரல் 13 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து நிரந்தர மருத்துவ ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஜூலை 11-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
***
கடந்த டிசம்பர் 31, 2017 அன்று புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியது மற்றும் மேற்கு மகாராஷ்டிரா நகரத்தின் புறநகரில் அமைந்துள்ள கோரேகான்-பீமா போர் நினைவிடம் அருகே அடுத்த நாள் வன்முறை வெடித்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது புனே போலீசுத்துறை. மாவோயிஸ்ட் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் நபர்களால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கியது.
கவிஞர் வரவர ராவ் ஆகஸ்ட் 28, 2018 அன்று, ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். பீமா கோரேகான் வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். ஜனவரி 8, 2018 அன்று விஷ்ரம்பாக் போலீசு நிலையத்தில் அவர்மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது.
படிக்க :
♦ வரவர ராவின் கவிதையில் இருந்து ‘இந்துத்துவா’ ‘காவிமயமாக்கல்’ போன்ற வார்த்தைகளை நீக்கும் சங் பரிவார கும்பல் !
♦ தோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை ! எல்கார் பரிஷத் வழக்கிலிருந்து அனைவரையும் விடுவி !
ஆரம்பத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், பின்னர் நவம்பர் 17, 2018 அன்று அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார், இறுதியில் அவர் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.
பிப்ரவரி 22, 2021 அன்று, பம்பாய் உயர் நீதிமன்றம் அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கியது. மார்ச் 6, 2021 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மார்ச் 6, 2021 முதல் ஹைதராபாத்தில் உள்ள தனது சொந்த ஊரில் ஜாமீனில் வெளியில் இருக்கும் ராவ், நிரந்தர மருத்துவ ஜாமீன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மார்ச் 2021-ல் அவர் பெற்ற ஜாமீன் அவரது உடல்நிலை மற்றும் அவர் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடைமுறைகள் காரணமாக பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மனுதாரரின் உடல்நிலை மோசமடைந்தது மற்றும் அவருக்கு குடலிறக்கம் நோய்க்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவரது இரண்டு கண்களிலும் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. மும்பையில் மருத்துவ செலவு அதிகமாக இருப்பதால் இந்த சிகிச்சைகளை அவர் மேற்கொள்ளவில்லை. அவர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
***
ராவ் தனது மேல்முறையீட்டில், விசாரணை 10 ஆண்டுகளுக்கு குறையாமல் நடக்கும் என்று சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தந்தை ஸ்டான் சுவாமி, மனுதாரரை போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்டு, விசாரணை தொடங்குவதற்கு முன்பே இறந்துவிட்டார். அரசியலமைப்பின் பிரிவு 21 (உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான உரிமை)-ன் கீழ் மனுதாரருக்கு உடல்நலம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு உரிமை உண்டு என்றும், அவர் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டால் அது மீறப்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
“குற்றம் சாட்டப்பட்டவர் அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றத்தில் குற்றவாளி அல்ல என்று அறிவிக்கப்படும் வரை குற்றத்தில் தீவிரத்தன்மை இருக்கும்” என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
தலோஜா சிறைச்சாலையில் மருத்துவ வசதிகள் இல்லாதது மற்றும் அங்குள்ள மோசமான சுகாதார நிலைமைகள் குறித்து ராவின் வழக்கறிஞர் கூறிய பல கோரிக்கைகளில் ஆதாரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் கருதியது. எனவே, “குறிப்பாக தலோஜா சிறைச்சாலையில்” மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் இத்தகைய வசதிகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மகாராஷ்டிர சிறைத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஏப்ரல் 13 உத்தரவு, நிரந்தர ஜாமீனுக்கான அவரது மனுவை நிராகரித்தது, ஆனால் 83 வயதான வரவர ராவ் தலோஜா சிறை அதிகாரிகளிடம் சரணடைவதற்கு மூன்று மாதங்களுக்கு நேரத்தை நீட்டித்தால் மட்டுமே அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை உருவானது. அவர் சரணடைய மூன்று மாதங்கள் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அவர் ஜூலை மாதம் சரணடைய வேண்டும்.
படிக்க :
♦ வரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா ?
♦ தலோஜா சிறையின் சித்திரவதைகளை எதிர்த்து போராடும் சாகர் தத்யாராம் கோரகே !
இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் முன்பு மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ராவ் 83 வயது முதியவர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்.
“இந்த வழக்கை அவசரமாகப் பட்டியலிடக் கோரி மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாய்மொழியாகக் குறிப்பிட்டதை அடுத்து, இந்த வழக்கை ஜூலை 11, 2022 அன்று பொருத்தமான பெஞ்ச் முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றது விடுமுறைக்கால பெஞ்ச்.
***
கவிஞர் வரவர ராவை இன்னும் எத்தனைக் காலம்தான் இந்த நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரியவில்லை. ஸ்டான் சுவாமியை போன்று முற்போக்காளர்களை சிறையிலும், மருத்துவ ஜாமின் வழங்காமலும் கொல்ல முயற்சிக்கும் சிறைத்துறையையும், நீதித்துறையையும் வன்மையாகக் கண்டிப்போம். ராவை போன்ற பல முற்போக்காளர்களை, சமூக செயற்பாட்டாளர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வதைக்கும் இந்த பாசிச மோடி அரசை (நீதிமன்றம், சிறை) எதிர்த்து போராட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

சந்துரு

13 ஆண்டுகளாக பணி வழங்காததை கண்டித்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம்!

13 ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்றும் வேலை கிடைக்காமல் இருக்கும் ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் கடந்த ஜூன் 28 அன்று முதல் உண்ணாவரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வை எழுதி முடித்தும் எங்களுக்கு இத்தனை ஆண்டுகாலம் பணி வழங்கப்படவில்லை. சரி அதிமுக அரசுதான் வழங்கவில்லை, விடியல் அரசு வந்தால் பணி வழங்கிவிடும் என்று நினைத்தோம் ஆனால் பணி வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
அனைத்து தகுதிகளும் இருந்தும் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் இழுத்தடிப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளை சீரழித்து தனியார்மயத்தை ஊக்குவிப்பதையே நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது என்பதைதான் இந்த ஆசிரியர்களுக்கு பணிவழங்காமல் கைவிடும் செயல்பாடு நமக்கு உணர்த்துகிறது.
நிரந்தர ஆசிரியர்களை வேலைக்கு எடுக்காமல், தற்போது அக்னிபாத் திட்டம்போல்,  தற்காலிக ஆசிரியர் பணிக்கு திட்டமிடுகிறது அரசு. போராடும் ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக வேலையில்லாமல் அவதிப்படுகிறோம், அந்த தற்காலிய வேலையையாவது எங்களுக்கு வழங்கு என்று குமுறுகிறார்கள்.

போராட்டத்தில் ஆசிரியர்கள் நம்மிடையே கருத்துக்களை பகிர்த்துக்கொள்ளும் நேர்காணல் வீடியோ :

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

வேட்டையாடும் சிங்கங்களா? பலியாகும் ஆடுகளா? நாம் யார்! – முடிவு செய்யும் காலம் நெருங்குகிறது !

0
ன்றிய அரசானது சண்டிகரில் நடந்த 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பெரும்பாண்மை உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை உயர்த்தி உள்ளது. இந்த வரி உயர்வானது ஜீலை 18 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனா மை, மோட்டார் பம்புசெட், எல்.இ.டி பல்புகள் மற்றும் சர்க்யூட் போர்ட் ஆகிய பொருட்களுக்கு வரியானது 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும், சோலார் வாட்டர் ஹீட்டர் மற்றும் தோல் பொருட்களுக்கு 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும், தானியம் தரம் பிரிக்கும் இயந்திரம் மற்றும் சுத்தம் செய்யும் இயந்திரம் ஆகியவற்றிக்கு 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை வரி விதிக்காமல் இருந்த பொருட்களுக்கு வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு புதியதாக வரி விதிக்கப்பட்டு உள்ளது. பாக்கெட்டில் விற்கப்படும் இறைச்சி, மீன், பன்னீர், கோதுமை மற்றும் பிற தானியங்களுக்கு 5 சதவீதமும், வங்கி காசோலைகளுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அஞ்சல் சேவைகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
புதியதாக வரி விதிக்கப்பட்டுள்ள மற்றும் வரி உயர்த்தப்பட்டுள்ள பொருட்கள் யாவும் நாட்டில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருட்களே.
ஏற்கெனவே, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு, இவ்வரிவுயர்வானது அவர்களின் தலையில் இடிபோல் விழும்.
படிக்க :
♦ ‘மக்கள் கடுமையாக உழைத்து வரிக்கட்ட வேண்டும்’ – பாபா ராம்தேவ்
♦ மோடியின் பொய் உரைகள் : கூட்டாட்சி தத்துவம், பெட்ரோல் டீசல் வரிகுறைப்பு, மாநில அரசு மீதான குற்றசாட்டு !
உழைக்கும் மக்களின் மீதான வரிச்சுரண்டலை தீவிரப்படுத்தும் மோடி அரசானது, உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி கொழுத்துப் போயுள்ள பெரும் முதலாளிகள் மீது வரி விதிப்பதை பற்றி கடுகளவும் யோசிப்பதில்லை. அவர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு கூட வரி விதிக்க யோசிக்கின்றனர்.
சான்றாக, இந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் வைரத்தின் மீதான வரியானது 0.25 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வைரமானது உழைக்கும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொருளாக இருந்து இருந்தால் அதன்மீது அதிக வரி விதிக்கப்பட்டு இருக்கும். நம் மக்களுக்கு வைரம் என்றாலே என்னவென்று தெரியாதே?
***
மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதை நீட்டிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்காதது, மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய ஜி.எஸ்.டி இழப்பீட்டை ரத்து செய்து, அதை ஈடுசெய்ய மக்களின்மீது கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையே தற்போதைய ஜி.எஸ்.டி வரி உயர்வு என்ற முடிவிற்கு நம்மை ஆணித்தரமாக இட்டுச்செல்கிறது.
2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படும் போது ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்ய அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒப்பந்தம் 2022 ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
மாநிலங்களில் வரி வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்களை உருவாக்க கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, கேரள நிதியமைச்சர் கே.என் பாலகோபால், பிஹார் துணை முதல்வர் தார்கிஷோர் பிரசாத் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவானது தன்னுடைய அறிக்கைகளை தற்போது நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சமர்பித்தது. ஜி.எஸ்.டி கவுன்சிலானது அவ்வறிக்கையை ஏற்றுக்கொண்டது.
கடந்த 5 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டை மத்திய அரசானது முறையாக வழங்கியதில்லை. மாநில அரசுகளின் பல்வேறு அழுத்தங்களாலே ஜி.எஸ்.டி இழப்பீடானது வழங்கப்பட்டது.
மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய ஜி.எஸ்.டி இழப்பீட்டை எப்போது நிறுத்துவோம் என்று கண்ணுல எண்ணெயை ஊற்றி காத்துக் கொண்டிருந்த மத்திய அரசானது, தற்போது மக்களின் மீதான வரியை உயர்த்தி மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய ஜி.எஸ்.டி இழப்பீட்டை ரத்து செய்துள்ளது.
***
இந்தியாவில் பொருளாதார ரீதியாக மேல்நிலையில் உள்ள 10 சதவீதம் பேர், நாட்டின் மொத்த வருமானத்தில் 57 சதவீதத்தை அபகரித்துக் கொள்கின்றனர். பொருளாதார ரீதியாக கீழ்நிலையில் உள்ள 50 சதவீதம் மக்களுக்கு, நாட்டின் வருமானத்தில் 13 சதவீதமே செல்கிறது என்று உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022 குறிப்பிடுகிறது.
உழைக்கும் மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருட்கள் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரி விதிப்பானது ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
படிக்க :
♦ ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் – டீசல் ஜி.எஸ்.டி வரி நாடகம் !
♦ மோடியின் தடுப்பூசி ஜூம்லா முதல் ஜி.எஸ்.டி கொண்டாட்டம் வரை || குறுஞ்செய்திகள்
கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் கரும்பானது எப்படி பிழியப்படுகிறதோ, அதேபோல் அதிகப்படியான வரியை கட்ட சொல்லி பெரும்பான்மை மக்களின் உழைப்பானது பாசிஸ்டுகளாலும், கார்ப்பரேட் முதலாளிகளாலும் பிழியப்படுகிறது. கரும்பிலிருந்து வெளிவருவது கரும்புச்சாறு, மக்களிடமிருந்து உழைப்பாய் வெளிவருவதோ அவர்களுடைய இரத்தம். அந்த இரத்தத்தை குடித்தே, இரத்தவெறி பிடித்த ஓநாய்கள் இவ்வளவு காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது மற்றும் கொலை, திருடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகமாகியிருக்கும் இச்சூழலில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யாமல், அதற்கு 28 சதவீத வரி விதிக்க பரிந்துரைத்துள்ளோம் என்று கூறுவதை நாம் என்ன வார்த்தைகளில் கூறுவது. இரத்தவெறி பிடித்த ஓநாய்களிடம் வேறு என்ன நாம் எதிர்ப்பார்க்க முடியும்?
இரத்தவெறி பிடித்த ஓநாய்களை வேட்டையாடும் சிங்கங்களா? பலியாகும் ஆடுகளா? நாம் யார்! முடிவு செய்யும் காலம் நெருங்குகிறது.
பிரவீன்

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாய் மதிப்பு – என்ன காரணம் ?

0
மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது சமீபகாலமாக தொடர்ச்சியாக சரிந்து கொண்டே வருகிறது. ஜூன் 29 நிலவரப்படி, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயானது 79.05 காசுகள் வரை சரிந்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே ரூபாய் மதிப்பானது இந்த அளவுக்கு சரிந்தது கிடையாது. மார்ச் மாதத்தில் 77 ரூபாயாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பானது தற்போது 79.05-யை தொட்டுவிட்டது. ரூபாய் மதிப்பானது மேலும் சரியக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்திய ரூபாய் மதிப்பானது ஏன் தொடர்ச்சியாக சரிந்துக்கொண்டு இருக்கிறது? இதனால் யாருக்கு பாதிப்பு என்பதே நம் முன்னால் உள்ள கேள்வியாக அமைகிறது.
***
முதலாவதாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவிற்கு கூறப்படும் முக்கிய காரணம், அமெரிக்க மத்திய பெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிப்பு. பெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவதால் இந்திய பங்குச் சந்தையில் உள்ள அந்நிய முதலீட்டாளர்கள், தொடர்ச்சியாக இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் முதலீடு செய்கிறார்கள். இலாபம் அதிகமாக கிடைக்கும் என்ற நோக்கமே அதற்கு காரணம்.
அமெரிக்க மத்திய பெடரல் வங்கியானது தற்போது வரை 1.5 டாலர் வட்டி அதிகரித்து உள்ளது. மார்ச் மாதத்தில் 0.25 டாலர், மே மாதத்தில் 0.5 டாலர், மற்றும் ஜீன் மாதத்தில் 0.75 டாலர் அதிகரித்துள்ளது. வருங்காலங்களில் வட்டி விகிதமானது இன்னும் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
படிக்க :
♦ மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !
♦ ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா ?
அதனால்தான் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஜீன் 23 புள்ளிவிவரப்படி, 40 ஆயிரம் கோடி அந்நிய முதலீடுகள் ஜீன் மாதத்தில் மட்டும் இந்தியப் பங்குச் சந்தையைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகின்றன. ஜீன் மாதத்திலேயே இவ்வளவு தொகை என்றால் அதற்கு முந்தைய மாதங்களில் எவ்வளவு பணம் வெளியேறி இருக்கும் என்பதை கணக்கிட்டு பார்த்தாலே இந்திய பொருளாதாரத்தின் அவல நிலையை புரிந்துக்கொள்ள முடியும்.
அமெரிக்க மத்திய பெடரல் வங்கியானது ஏன் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும்? அமெரிக்காவின் வரலாற்றில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கமானது 8.6% வரை அதிகரித்துள்ளது. பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையானது விண்னைமுட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளன. எனவே அமெரிக்க அரசானது பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரும் நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும்போது, வங்கிகளில் கடன் வாங்கினால் அதிக வட்டி கட்ட வேண்டும் என நிர்பந்தம் ஏற்படும். அதனால் மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கடன் வாங்க யோசிப்பர் அல்லது கடன் வாங்க மாட்டார்கள். பெரும்பாலான மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் தேவைகளை கடன் வாங்கிதான் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
வட்டி அதிகரிக்கும்போது தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதைப் பெரும்பாலான மக்கள் குறைத்துக் கொள்கிறார்கள். முதலீட்டாளர்களும் புதிய திட்டங்களில் கடன் வாங்கி முதலீடு செய்வதற்கு தயங்குகிறார்கள். எனவே சந்தையில் பெரும்பாலான பொருட்களுக்கான தேவைகள் குறைகிறது. பொருளாதாரத் தத்துவமானது (supply and demand) தேவை – அழிப்பு தத்துவத்தை பொறுத்து இயங்குவதால், பொருட்களுக்கான தேவை குறையும்போது பணவீக்கமும் குறைகிறது.
பணவீக்கத்தை மீண்டும் 2 சதவீதமாக கொண்டு வருவதில் உறுதி பூண்டுள்ளோம் என அமெரிக்க மத்திய பெடரல் வங்கியின் கொள்கைகளை வகுக்கும் திறந்த சந்தை குழு தெரிவித்துள்ளது. எனவே வட்டியானது மேலும் அதிகரிக்கப்படும். அதனால் இந்திய பங்குச் சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறுவது தொடர்ந்து நடக்கும். வெளியேறும் அந்நிய முதலீட்டாளர்கள் அந்நிய செலவாணியை கொண்டு செல்வதால் இந்திய அரசின் அந்நிய செலவாணி கையிருப்பு தொடர்ந்து குறையும்.
இரண்டாவதாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது தொடர்ந்து அதிகரிப்பது. உக்ரைன் – ரஷ்ய போரினால் பெரும்பாலான நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து அதன் விலை ஏறிக்கொண்டே வருகிறது.
இந்தியாவானது கச்சா எண்ணெயை பொருத்தவரை 80% இறக்குமதியையே சார்ந்து உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரியும்போது, அதிக டாலர் கொடுத்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்நிய செலவாணியானது மேலும் கரைகிறது.
ரஷ்யாவானது குறைந்த விலையில், ரூபாய் – ரூபிள் பரிவர்த்தகத்தில் எண்ணெய் தரும்போது இந்தியாவானது அமெரிக்காவை மீறி வாங்கியதற்கு காரணம் ரஷ்ய – இந்தியா பரிவர்த்தனையில் டாலர் தேவையில்லை என்பதே ஆகும்.
இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வானது இந்திய அரசின் அந்நிய செலவாணிக் கையிருப்பை வெகுவாக குறைக்கிறது. அந்நிய செலவாணி கையிருப்பை பொறுத்தே நாணயத்தின் மதிப்பு தீர்மாணிக்கப்படுவதால் அதன் மதிப்பும் வெகுவாக குறைகிறது.
***
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால் யாருக்கு பாதிப்பு? பெரும்பாண்மை உழைக்கும் மக்களுக்கே. அம்பானி, அதானி போன்றவர்கள் ஒரு நிமிடத்தில் தங்கள் முதலீடுகளை வேறொரு நாட்டிற்கு மாற்றிவிடுவார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் யாவும் உழைக்கும் மக்களின் முதுகின் மீதே ஏற்றப்படுகின்றன.
படிக்க :
♦ கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !
♦ கொரோனா ஊரடங்கிலும் 8,130 கோடி டாலர் வருவாயை ஈட்டிய ஃபைசர் நிறுவனம் !
அத்தியாவசியப் பொருட்களின் விலையானது தாறுமாறாக உயரும், கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலையானது மேலும் அதிகரிக்கும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும்.
மே மாதத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாய், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாய் மற்றும் உஜ்வாலா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள கேஸ் இணைப்புகளுக்கு 200 ரூபாய் மானியமாக வழங்கியது எல்லாம் இந்திய ரூபாய் வீழ்ச்சியால் ஏற்பட்ட பணவீக்கத்தை குறைக்கவே.
மோடி அரசுக்கா மக்களின் மீது அக்கறை என்ற கேள்வி இயல்பாக எழலாம். ஜீன் இறுதியில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் அரிசி, கோதுமை மற்றும் மருந்துப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதித்ததன் மூலம் கேள்வி என்ற பேச்சுக்கே இடமில்லை, தாங்கள் முற்றிலுமாக மக்கள் விரோதிகள் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து விட்டார்கள்.
இலங்கை நிலையை நோக்கி இந்தியாவானது படிப்படியாக மெல்ல நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இலங்கை உழைக்கும் மக்கள் ராஜபக்சே கும்பலை எப்படி புறமுதுகிட்டு ஓட வைத்தார்களோ, அதேபோல் இந்தியாவில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை உழைக்கும் மக்கள் ஓடஒட அடித்து விரட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.
பாசிஸ்டுகள் பற்றி வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம் ஒன்றே ஒன்றுதான் “பாசிஸ்டுகள் வீழ்வர், மக்களே வெல்வர்”.
பிரவீன்

இலங்கையில் மக்கள் எழுச்சி! தேவை, புரட்சிகர கட்சி! | வெளியீடு அறிமுகவுரை

“இலங்கையில் மக்கள் எழுச்சி ! தேவை புரட்சிகர கட்சி” என்ற தலைப்பில் இலங்கையில் தற்போது நிலவும் போராட்டங்கள் தொடர்பான அரசியல் சூழ்நிலைமைகளை விளக்கும் ஓர் சிறப்பு வெளியீட்டை புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக கொண்டுவந்துள்ளோம்.

தோழர்கள், வாசகர்கள், நண்பர்கள் வெளியீட்டை வாங்கி படித்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும், இவ்வெளியீட்டை அறிமுகப்படுத்தும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்களின் உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வெளியீடு நன்கொடை: ரூ.30

வெளியீட்டை பெற தொடர்பு கொள்ளவும் :
9791653200, 94448 36642, 80563 86294, 99623 66321

உதய்பூர் கொலையை காரணம்காட்டி நாடுமுழுவதும் காவி பாசிசத்தை அரங்கேற்ற சொல்லும் கர்நாடக பாஜக!

0
பாஜக தலைவர் நுபுர் சர்மாவை ஆதரித்ததற்காக இளம் தையல்காரரின் தலை துண்டிக்கப்பட்டதைக் கண்டித்த கர்நாடக பாஜக, மத அடிப்படைவாதத்தை சமாளிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (உ.பி) மாடலை நாடு பின்பற்ற வேண்டும் என்று ஜூன் 29 அன்று கூறியது.
முகமது நபிக்கு எதிரான கருத்துக்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை ஆதரித்து, சமூக ஊடகப் பதிவை வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ஜூன் 28 அன்று மாலை கன்ஹையா லால் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் ஆகிய இருவர் வாடிக்கையாளர்களைப் போல், லாலின் கடைக்குள் நுழையும் வீடியோவை வெளியிட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பின்னர் மற்றொரு வீடியோவை வெளியிட்டனர். அதில், அவர்கள் கொலைக்கு பொறுப்பேற்றனர். இந்து தையல்காரரைக் கொல்லப் பயன்படுத்திய ஆயுதத்தைக் காட்டினர். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உதய்பூர் போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை இப்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
படிக்க :
♦ உ.பி : சட்டவிரோத காவி புல்டோசர்களை சட்டபூர்வமாக மாற்றும் யோகி அரசு !
♦ உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ
செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல், சமகால உலகில் யோகி ஆதித்யநாத் மாடல்தான் தேவை. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்த முடிவுகளை அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார்.
“நாட்டில் மீண்டும் தீவிரவாதச் செயல் தொடங்கியுள்ளது. இந்து தையல்காரர் இரக்கமின்றி கொல்லப்பட்டது வெட்கக்கேடானது. கர்நாடகாவில் பஜ்ரங் தளச் செயற்பாட்டாளர் ஹர்ஷா கொல்லப்பட்டதும் இதே வழியில்தான் நடந்துள்ளது. சிவமொக்கா மாவட்டத்தில் ஹர்ஷா கொலையாளிகள். மாநிலம் ஹர்ஷாவின் கழுத்தை அறுத்து, அவரது சகோதரிக்கு வீடியோ அனுப்பியது” என்று கட்டீல் கூறினார்.
ராஜஸ்தான் சம்பவத்தின் பின்னணியில் வெளிநாட்டு கை உள்ளது. மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசின் சமாதானக் கொள்கையால் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் சம்பவம் மனித குலத்திற்கே சவாலாக உள்ளது. வன்முறை மற்றும் கொலைகளை தூண்டுவதற்கு திட்டமிட்டு சமூகம் உடைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜிஹாத் என்ற பெயரில் செய்யப்படுகிறது.
சமூகத்தில் ஜிகாதி மனப்பான்மையை வளர்க்கும் முயற்சி நடக்கிறது. அந்த முயற்சிகள் முளையிலேயே நசுக்கப்பட வேண்டும். தலை துண்டிக்கப்படுதல் மற்றும் பிற செயல்களை நடத்த முயலும் மனப்போக்குகள் மத்தியில் அச்சம் இருக்க வேண்டும் என்றார்.
***
இதனிடையே, கன்னையா லால் கொலைக்கு கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். “எல்லா மதத்தினரும் நிம்மதியாக வாழும் நாடு இது. மரணத்தை மகிமைப்படுத்தக் கூடாது” என்று கூறினார்.
“முன்னதாக, ஷங்கர் லால் என்ற நபர் ஒருவரை கொன்றார். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஃபரிதாபாத்தில் ஒரு கொலை நடந்தது. ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவாவில் ஐந்து வயது சிறுமி கொல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் கண்டிக்கப்பட வேண்டும். இந்தியாவில் சகிப்பின்மை இல்லை. 8 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வகுரு (பிரதமர் மோடி) வந்தபிறகு இந்த சம்ப்வங்கள் அதிகரித்து வருகின்றன. சிவில் சமூகம் இதை கண்டிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
படிக்க :
♦ உ.பி : மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றிய யோகி அரசு !
♦ உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
பாபர் மசூதி இடிப்பு அதை தொடர்ந்து முஸ்லீம் மக்கள் படுகொலை. கொத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்கள். குஜராத் மாநிலத்தில் 3000 முஸ்லீமக்கள் படுகொலை செய்த சங் பரிவார கும்பல். தமிழகத்தில் கோவை கலவரம். உனா தலித் மக்கள் மீதான காவிக் குண்டர்களின் தாக்குதல். மாட்டுகறி வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் அக்லக் – பெக்லூகான் காவி குண்டர்களால் படுகொலை. உ.பி.யில் இவை அனைத்து தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது.
ரம நவமி வன்முறையை நிகழ்த்தி இஸ்லாமியர்களின் வீடுகளை அரசு அதிகாரிகளை கொண்டே இடிக்கும் ஓர் புதிய நடைமுறையை அரங்கேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்களை கரசேவை செய்து இடித்து தள்ளவும், சொந்த நாட்டிலேயே இஸ்லாமிய மக்களை அகதிகலாக மாற்றவும் எத்தனித்து வருகிறது யோகி அரசு. இந்த காவி பயங்கரவாதிகள் நிறைந்த உ.பி மாடலைத்தான் கர்நாடக பாஜக நாடு முழுவதும் அமைக்க வேண்டும் என்கிறது.
தன் சொந்த கட்சியினரையே அரசியல் ஆதாயத்திற்கான கொலை செய்யும் அளவிற்கு கூட செல்லக்கூடிய பயங்கரவாதிகளை கொண்ட கட்சியான பாஜக, இன்று உதய்பூர் கொலை காரணமாக கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் காவி பயங்கரவாதமாக (உ.பி மாடல்) மாற்றப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது. காவி பயங்கரவாதம் தலை தூக்கினால், அதற்கு எதிர்வினை இருக்கும். இஸ்லாமிய தீவிரவாதம் வருவதற்கு அடிப்படையே காவி பயங்கரவாதம்தானே தவிர வேறுஒன்றும் இருக்க முடியாது.


காளி

ஜூன் 30, 1855 : சந்தால் எழுச்சி தொடங்கிய நாளை நினைவுக்கூறுவோம் !

0

1855-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதியன்று சோட்டா நாக்பூர் பிராந்தியத்தில் சந்தால் பழங்குடி மக்களின் ஆயுத எழுச்சி தொடங்கியது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய இந்த சோட்டா நாக்பூர் என்ற இந்தியாவின் முக்கியமான பீடபூமி பகுதியாகும். இது பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் விரவிக்கிடக்கிறது. கிழக்கில் கங்கை சமவெளியையும், தெற்கே மகாநதி ஆற்றுப்படுகையும் அமைந்துள்ளது.

ஆங்கில ஏகாதிபத்தித்திற்காக, சந்தால் மக்களை ஒடுக்கிய ஜமீன், சவுக்கார் சுரண்டல் அடையாளங்கள் கருதப்பட்டன. ரயில், அரசு அலுவலகங்கள், சாலைகள் ஆகியவை சுரண்டலின் சின்னங்கலாக கருத்தப்பட்டன. கயிறுகள் சந்தால் மக்களுக்கு ஓர் அடக்குமுறைக்கருவி.

“எத்தனை ஆயிரம் அடி கயிறு உனக்குக் கிடைத்துவிடும், பார்த்து விடலாம்; அமைதியான எல்லாச் சந்தால்களையும் கட்டிப்போட்டு இழுத்துச் சென்று ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விடுவாயா, பார்த்து விடுவோம்” என்றார் கொக்கரித்தனர் சந்தால் மக்கள்.

“வரியக் கொடுடா என்றா கேட்கிறான்? அவனை வெட்டி வீசுங்கள்! எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் நியாயத்துக்காகக் கலகம் செய்யுங்கள்! ஆயுதங்களை கர்ரூ நதியில் ரத்தம் போகக் கழுவி எடுங்கள்” – இது சோட்டா நாக்பூர் ‘கோல்’ பழங்குடிகளின் வீரச் சூளுரை.

படிக்க :

♦ வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி

♦ நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் !

1855-ன் மைய நாட்கள் சந்தால் ஆயுதப் போராட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது.

“சரணடைந்து விடு, பிழைத்துக் கொள்வாய்” என்கிறான் ஆங்கிலேய சிப்பாய். ஒரே எட்டில் முதிய சந்தால் வீரர் அந்தச் சிப்பாய் மீது பாய்ந்தார். கையிலிருந்த சண்டைக் கோடரியால் ஒரே வெட்டில் வீழ்த்தினார். இதனை கண்ட அந்நியப் படை அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றது.

சந்தால் மக்கள் சமவெளி மக்களில் பல்வேறு தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவினரை போராட்டத்தின் நட்புச் சக்திகளாக வென்றெடுத்து களமிறக்கினார்கள். பழங்குடிக் கலையின் கருவிகளான முழவுகளும், குழலும் போராட்டக்களங்களில் செய்தி அறிவிப்புக் கருவிகளாகவும், வீர எழுச்சி இசையாகவும் மாறின. அந்நியப்படை அவற்றை அழித்துவிடும் பட்சத்தில் விரைவிலேயே புதிய முழவுகள், புதிய குழல்கள் களத்திற்கு விரைந்தன.

“கலகக்காரர்கள் உறுதியாக நின்று போர் செய்தார்கள். கைகளால் அம்பு எறிந்தார்கள்; கால்களாலும் வில் நாண் இழுத்து அம்பு எறிந்தார்கள், கைக் கோடரிகளால் சண்டை போட்டார்கள்” என்று சந்தால் மக்களின் எழுச்சியை பற்றி அந்நியப்படை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

தலைவர் என்பவர் வீரரில் ஒருவர். சந்தால் தலைவரும் போரிடுவார்; சாதாரண மக்களும் போரிடுவார்கள். கூடுதலாக அவர் தலைமை தாங்கி வழிநடத்துவார்.

எழுச்சிக்குத் தலைமை தாங்கிய சீது, கானு சிலை

எழுச்சிக்குத் தலைமை தாங்கிய சீது, கானு மற்றும் பிற தலைவர்கள் சந்தால் மக்களோடு மக்களாக கலந்திருந்தார்கள். இலையால் செய்யப்பட்ட தொன்னையில் மஞ்சளும், எண்ணெய்யும் எடுத்துக்கொண்டு அவர்கள் பல கிராமங்களுக்குச் சென்றார்கள். முன்பு அது பொது நிகழ்விற்கான அழைப்பு, இப்போது அது போராட்டத்திற்கான ரகசியத் செய்தி அறிவிப்பு. அதேபோல, சால்மரக் கிளைகள் கொண்டுவருவோரிடம் “எங்கே கூட்டம்?” என்று கேட்டு அறிந்து கொள்வார்கள் சந்தால் மக்கள்.

சந்தால் எழுச்சி ஆலோசனைக் கூட்டத்துக்கே 7,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அடுத்த கூட்டத்தில் 10,000 பேர் கூடி விவாதித்து எழுச்சி பற்றி முடிவு செய்தார்கள். எழுச்சியைக் குறிப்பிட வேட்டை, மீன் பிடித்தல் என்ற சொற்களை சந்தால் மக்கள் பயன்படுத்தினார்கள். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஆயுதம் ஏந்தினார்கள்.

அந்நியர்களை அண்டிப் பிழைத்த கூலி எழுத்தாளர்கள், “ரத்தவெறி பிடித்த இந்தக் காட்டுமிராண்டிகளுக்கு எதிராகப் பயங்கரத்தைக் கட்ட விழ்க்காமல் இந்த எழுச்சியை நாம் அடக்க முடியாது” என்று ஆங்கிலேய அரசினை தூண்டிவிட்டு வகையில் எழுதினார்கள். பகல்பூர் ஜமீன்கள், உள்ளூர் அவுரிப் பயிர் முதலாளிகள், முர்ஷிதாலாத் பகுதி நவாப் நசீம், ஐரோப்பிய அவுரி முதலாளிகள் ஆகியோர் சந்தால் மக்களை ஒடுக்க ஆங்கில அரசுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தார்கள்.

ஆங்கிலேய அரசின், சந்தால் மக்கள் மீதான தாக்குதல் மிகவும் கொடூரமாக இருந்தது. பல சந்தால் மக்களின் கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. பயிர்கள், வீடுகள், பெண்கள், குழந்தைகள் என்று கண்ணில் பட்டதையெல்லாம் ஆங்கிலேய வெறிநாய்கள் குதறின. பல ஆயிரம் மக்களை கொலை செய்தார்கள்.

சீதுவும் கானுவும் மற்ற தலைவர்களும் ஆங்கிலேய வெறிநாய்களால் தூக்கிலிடப்பட்டார்கள். அன்று 20,000 சந்தால் வீரர்கள் கொடுத்த இன்னுயிர்கள் இன்றும் புரட்சிக் கனலை வீசிக் கொண்டுதான் இருக்கிறது.

வினவு

பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு பலியாகப் போகிறோமா நாம்?

0
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்னையா லால் என்பவர் இரு முஸ்லீம் இளைஞர்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருப்பது, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் இச்சம்பவத்தை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, நாடு முழுவதும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்ட உதவியாகியுள்ளது.
கண்னையா லால் உதய்பூர் நகரில் உள்ள மால்தாஸ் பகுதியில் தையல் கடை நடத்தி வந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக முஸ்லீம் மக்களின் இறைதூதரான நபிகள் நாயகத்தை இழிவாக நுபூர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவாக தனது கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார்.
இதனால் அவர்மீது கோபமடைந்த கௌஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய இருவரும் கண்னையா லாலை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவ்வீடியோவில் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான செய்தி பரவியவுடன் அப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. 24 மணி நேரம் இண்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு மேற்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்திற்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
படிக்க :
♦ ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !
♦ உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !
குற்றவாளிகளான இருவரும் சில மணி நேரங்களிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனே இவ்வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.
***
இக்கொலைச் சம்பவத்தை தொடர்ந்து முஸ்லீம் மக்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக ஆளும் வர்க்க ஊடகங்களாலும், பா.ஜ.க-வின் சமூக வலைத்தள குழுக்களாலும் பரப்பப்பட்டு, முஸ்லீம் மக்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற வெறுப்புணர்வு மக்களின் மனதில் ஆழ பதியவைக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களில் ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சென்று வந்ததாகவும், அவருக்கு பாகிஸ்தானை சேர்ந்த “தாவட் இ இஸ்லாம்” என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் ராஜஸ்தான் மாநில போலீசுத்துறை தலைவர் தெரிவத்துள்ளார்.
கௌஸ் முகமதுவை பொறுத்தவரை, நேபாளத்திற்கு இருமுறை சென்று வந்ததாகவும் சில பயங்கரவாத இயக்கங்களுடன், குறிப்பாக துபாயில் சிலருடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் ஆளும் வர்க்க ஊடகங்களால் வெளியிடப்படுகின்றன.
ரியாஸ் அக்தாரியை பொறுத்தவரை, அவருடைய போனில் பாகிஸ்தானை சேர்ந்த 10 பேரின் தொலைபேசி எண்கள் இருந்ததாகவும், இவர்கள் இருவரும் அடிக்கடி ஐ.எஸ்.ஐ.எஸ் வீடியோக்களை பார்த்ததாகவும், அந்த உணர்வினால்தான் இப்படுகொலையை நிகழ்த்தியதாகவும் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
பாகிஸ்தான் என்றாலே தீவிரவாத நாடா? அல்லது பாகிஸ்தான் மக்கள் என்றாலே தீவிரவாதிகளா? யாரோ ஒருவர் நேபாளம் மற்றும் பாகிஸ்தானுக்கு சுற்றுலாவுக்கோ அல்லது வேற சில வேலைகளுக்கோ சென்று வந்தால்; அல்லது பாகிஸ்தானில் உள்ள உறவினர்கள் – இணையதள நண்பர்களுடன் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டு இருந்தால் இந்த அரசானது அவர்களை தீவிரவாதியாக தான் கருதுமா?
சான்றாக, சென்னையில் ஒருவர் ஒரு படுகொலையை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று வந்துள்ளார் மற்றும் அங்குள்ள நண்பர்களுடன் தொலைபேசியில் அடிக்கடி உரையாடி உள்ளார் என்றால், இந்த அரசானது கொலையாளியை அமெரிக்க தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்று கூறுமா? கண்டிப்பாக கூறாது. அதில் மோடி அரசுக்கு எந்த ஆதாயமும் கிடையாது.
மேலும், இங்கே ஒரு கேள்வி எழுகிறது. கொலை செய்த அடுத்த நாளே, கொலையாளிகளுக்கு உள்ள வெளிநாட்டு தொடர்பை எல்லாம் கண்டுபிடித்து விட்டார்களா? அவ்வளவு திறமை வாய்ந்ததா நம்முடைய அரசு. இந்த திறமை ஊழல் செய்த கார்ப்பரேட் முதலாளிகளை பிடிப்பதில் வெளிப்பட மாட்டிகிறதே? வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்பதிலும் வெளிப்பட மாட்டிக்கிறதே?
குற்றவாளிகள் கொலை செய்தது உண்மை. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்கள் மற்றும் பாகிஸ்தான், நேபாளம் சென்று வந்தார்கள் என்பது எல்லாம், இந்த அரசுக் கட்டமைப்பு மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்துக் கொண்டு முஸ்லீம் மக்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற பிம்பத்தை கட்டியமைக்கும் முயற்சியே.
#justiceforkannaiyalal, #hindusunderattackinindia, #hindulivesmatter மற்றும் #islamicterrorismindia என்ற பெயரில் டிவிட்டரில் பா.ஜ.க-வின் சமூக வலைத்தள குழுக்கள், முஸ்லீம் திவிரவாதிகள், ஜிகாதிகள், முஸ்லீம் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், மகாபாரத மேற்கோள்களைகாட்டி முஸ்லீம்களுக்கு எதிரான போருக்கு நாம் தயாராக வேண்டும் என்பது போன்று முஸ்லீம் மக்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் மற்றும் இந்து மதவெறியை தூண்டும் பிரச்சாரங்களை செய்து இச்சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கொலை செய்ததோ இருவர், ஆனால் குற்றவாளியாக காட்டப்படுவதோ ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களும். இதுதான் தற்போது நம் முன்னால் உள்ள பேரபாயம்.
***
முஸ்லீம் மக்களை தனிமைப்படுத்தி ஒடுக்க வேண்டுமென்றால் நாட்டு மக்கள் அனைவருக்கும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்க வேண்டும். அதற்கு சங்கிகள் மட்டும் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் செய்தால் போதாது. மேற்கண்ட கொலை சம்பவங்கள் முஸ்லீம் சிலரால் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் சங்கிகளால் அதைக்காட்டி ஒட்டுமொத்த இந்து மக்களையும் முஸ்லீம்களுக்கு எதிராக திருப்ப முடியும்.
ஆக, முஸ்லீம் மக்களின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிப்பது, சொத்துகளை பறிமுதல் செய்வது, தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கைது செய்வது மற்றும் அவர்கள் புனிதமாக கருதும் விசயங்களைப் பற்றி இழிவாக பேசுவது, மத நம்பிக்கைகளில் தலையிடுவது எல்லாம் திட்டமிட்டு சங்கிகளால் மேற்கொள்ளப்படுவதுதான். இவையெல்லாம் முஸ்லீம் மக்கள் கோவப்பட்டு தனிநபர் செயலில் இறங்க வேண்டும் என்பதற்காகவே.
படிக்க :
♦ மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா
♦ தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!
நாம் எதைப்பற்றி சிந்திக்க வேண்டும், எதைப்பற்றி பேச வேண்டும் என்பதை எல்லாம் சங்கிகள் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு பலியாகப் போகிறோமா? என்பதே நம் முன்னால் உள்ள கேள்வி.
சங்கிகளின் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் செயல்களுக்கு பலியாகி தனிநபர் செயலில் இறங்கப் போகிறோமா அல்லது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல்களை வீழ்த்த வேண்டுமென்றால் தனிநபர் சாகச செயல்பாடுகளால் முடியாது, பொருளாதார ரீதியாக சுரண்டலுக்கு உள்ளாகும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் சாதி, இனம், மதம் கடந்து வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து அதை நோக்கி நம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள போகிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது.
இலங்கையில் ராஜபக்சே கும்பலை, உழைக்கும் மக்கள் இனம் கடந்து வர்க்க அடிப்படையில் ஒன்றுதிரண்டு வீழ்த்தியதே அதற்கு சான்று.
இலங்கையைப் போன்று உழைக்கும் மக்கள் பேரெழுச்சியை இந்தியாவில் உருவாக்குவதே, பாசிச கும்பலை வீழ்த்துவதற்கான தொடக்கமாக அமையும். அதை நோக்கி நம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வோமாக.
பிரவீன்

சேலம் : மல்லி குந்தம் பகுதி பாமக-வின் சாதிவெறியால் ஒடுக்கப்படும் ஆசிரியர் !

சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிப்பகுதி மல்லி குந்தம். இப்பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாக வன்னியனூர், பள்ளக்காடு ஆகிய இடங்களில்  பெரும்பான்மையாக வன்னியர்களும், அதற்கு அடுத்தபடியாக பட்டியல் சமூக மக்களும், குறிப்பிட்ட அளவில் மற்ற இடைநிலை சாதியினரும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பட்டியல் சமூகத்தில் இருந்து பலரும் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, அரசுத்துறைகளில் பொறுப்பு வகிப்பவர்களாக, ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
மல்லிகுந்தம் பஞ்சாயத்திற்குட்பட்டு வன்னியனூர், பள்ளக்காடு ஆகிய பகுதிகள் உள்ளன. மல்லிகுந்தத்திற்கு அருகிலுள்ள பஞ்சாயத்து பள்ளிப்பட்டி பகுதியாகும். இப்பஞ்சாயத்திற்குட்பட்டு நரியனூர் என்ற கிராமப் பகுதி உள்ளது. விவசாயப் பகுதியான இக்கிராமங்களில் ஆகப்பெரும்பான்மையாக வன்னிய சாதியைச் சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நிலங்களுக்கு விவசாயக் கூலி வேலைகளுக்கு பட்டியல் சமூக மக்கள் செல்கின்றனர்.
மேற்கண்ட சில ஊர்களில் இடைநிலைப்பள்ளிகள் இருந்தாலும், பெரும்பாலும் வன்னியனூரில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளியிலேயே வன்னிய சாதியைச் சார்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். வன்னியனூர் பள்ளியில் 95%-க்கும் மேலானவர்களாக வன்னிய சாதி மாணவர்களின் எண்ணிக்கை உள்ளது.
இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுவது என்னவெனில், வன்னியனூரைத் தவிர மற்ற ஊர்களில் குறிப்பாக பள்ளக்காட்டில் குறிப்பிட்ட அளவில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளிப்பட்டியில் உள்ள பள்ளியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குறிப்பிட்ட அளவில் படிக்கின்றனர். இதனால் அங்கு சேர்ப்பதை வன்னிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் தவிர்த்து விடுகின்றனர் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற மனிதத்தன்மைக்கு விரோதமான வேலைகளை முன்னெடுப்பதில் இப்பகுதியில் உள்ள பாமக-வைச் சேர்ந்த நபர்கள் முன்நிற்கின்றனர் என்று கூறுகின்றனர். இதற்கு வன்னியனூர் பள்ளியின் தலைமையாசிரியர் சிவகுமார் உடந்தையாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில்தான் 2019-ல் வன்னியனூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு மல்லிகுந்தம் ஆதி திராவிடர் பகுதியைச் சார்ந்த ஆசிரியர் இரவீந்திரநாத் பணிமாற்றலாகி வருகிறார். இவர் அறிவியல் பாடத்திற்கு ஆசிரியராக இருக்கிறார். வன்னியனூர் பள்ளியில் கணிதப் பாடத்திற்கு ஆசிரியர் இல்லாத நிலையில் மாணவர் நலன் கருதி கூடுதலாக கணிதப்பாடம் பயிற்றுவித்து வந்துள்ளார். வன்னியனூர் பள்ளியில் பணிக்கு வந்தபிறகு இவரது பயிற்சியில் அப்பள்ளி மாணவிகள் தனித்திறன் சார்ந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுவதற்கும் முன்முயற்சி எடுத்துள்ளார். அதேபோல் N.M.S (National Merit Scholarship) தேர்வில் மாணவி ஒருவர் தேர்வாகியுள்ளார்.
படிக்க :
♦ சேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்
♦ சேலம் வி.சி.க கொடிக்கு தடை : கொடி மட்டும்தான் பிரச்சினையா?
இப்படி பொதுநோக்கத்தில் ஆசிரியர் இரவீந்திரநாத் செயல்பட்டு வந்தாலும், அவர் அங்கு பணிக்கு வந்ததில் இருந்தே சாதிவெறியர்கள் குறிப்பாக பாமக-வைச் சார்ந்த சில நபர்கள் தொடர்ச்சியாக ஆசிரியர் இரவீந்திரநாத் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வந்துள்ளனர். ”சாதிபெயர் சொன்னார், ஊர்பெயர் சொன்னார், குழந்தைகளிடம் தேவையின்றி பேசி வருகிறார்” என பள்ளித் தலைமையாசிரியரிடம் பாமக நபர்கள் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுவதும், தலைமையாசிரியர் ஆசிரியர் இரவீந்திரநாத்திடம் கேட்பதும் என்பது தொடர்ந்து நடக்கிறது. தன்மீதான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து தலைமையாசியரிடம் தொடர்ந்து போராடி வந்துள்ளார் ஆசிரியர் இரவீந்திரநாத்.
தொடர்ந்து அப்பகுதி பாமக-வைச் சார்ந்த சாதிவெறியர்கள் குற்றச்சாட்டுகளை கூறிவந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார். விசாரணை செய்வதற்கு அப்பள்ளியின் பெண் ஆசிரியர்கள் குழுவொன்றை அமைத்துள்ளார். பெண் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். அதில், ஆசிரியர் இரவீந்திரநாத் தவறாக எதுவும் பேசவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அவர் மீது கூறப்பட்டது பொய்க்குற்றச்சாட்டு என்பதும் அம்பலமாகியுள்ளது. விசாரணையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பல்வேறு சாதிகளைச் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு சமீபத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் வன்னியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆசிரியர் இரவீந்திரநாத்தை அப்பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கின்றனர். தலைமையாசிரியரும் சேர்ந்துதான் தேர்ந்தெடுக்கிறார். இதை உடனே அங்கிருந்த கருப்புச்செட்டி என்ற நபர் எதிர்க்கிறார். வன்னிய சாதியைச் சார்ந்தவரைத்தான் ஆசிரியர் பிரதிநிதியாக போட வேண்டும் என்று கூறுகிறார். அவரைத் தொடர்ந்து சில பெற்றோர்களும் எதிர்க்கின்றனர். இதனால் அத்தோடு குழு கூட்டம் முடிக்கப்பட்டது.
இந்த கருப்புச் செட்டி என்பவர்தான் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை ஒருங்கிணைக்கிறார்.
பள்ளி மேலாண்மைக் குழுவில் அனைத்து சாதியைச் சார்ந்த பெற்றோர்களுக்கும் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு குறிப்பிட்ட ஒரு சாதியைச் சார்ந்த பெற்றோர்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் வழங்குவது என்பது தொடர்ந்து நடந்து வருவதாக கூறுகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வன்னியனூர் அரசு நடுநிலைப் பள்ளிக் கூடத்தில் படிக்கும் சில பெண் மாணவிகளை தனியாக அழைத்துச் சென்று கருப்புச் செட்டி பேசியுள்ளார். அப்போது “அறிவியல் சார் எப்படியெல்லாம் திட்டுகிறார், பேசுகிறார் என்று வெளியில் சொல்ல  வேண்டும்”என்று அம்மாணவிகளிடம் கூறியுள்ளார். இதைப் பார்த்த தனியார் பள்ளி  ஆசிரியர் (இவர் இரவீந்திரநாத்தின் நண்பர், வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்) கருப்புச் செட்டியை கண்டித்துள்ளார். அப்போது தலைமையாசிரியர்தான் இவ்வாறு செய்யச் சொன்னார் என்று கருப்புச் செட்டி கூறியுள்ளார்.
இதேபோல், வார்டு கவுன்சிலராக உள்ள சிவகுமார் என்பவரும் ஆண்டிக்கவுண்டனூரை சார்ந்த பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் இரவீந்திரநாத்தைப் பற்றி அவதூறாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர் இதுபற்றி தலைமையாசிரியரிடம் இரவீந்திரநாத் கேட்டபோது, தலைமையாசிரியர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
“பள்ளியின் எல்லா நிகழ்வுகளிலும் கருப்புச் செட்டியும், சிவகுமாரும் பங்கெடுக்கிறார்கள், எனவே நீங்களே இருவரிடமும் கேளுங்கள்”என்று தலைமையாசிரியரிடம் இரவீந்திரநாத் கூறியுள்ளார்.
தலைமையாசிரியர் கருப்புச் செட்டியிடம் போன் செய்து கேட்டபோது, “பேசியது உண்மைதான், ஆனால் தலைமையாசிரியர் கேட்கச் சொன்னார் என்று கூறவில்லை”என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
ஆனால், இன்னொரு பக்கம் சில மாதங்களுக்கு முன்பாகவே ”இரவீந்திரநாத்தை Transfer(பணியிடமாற்றம்) செய்வதற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்துவிட்டதாக” தலைமையாசிரியர் கூறியதாக தலைமையாசிரியரின் நண்பர் ஒருவர் பேசியதை இரவீந்திரநாத்தின் நண்பர்கள் காதுபட கேட்டுள்ளனர்.
இச்சூழ்நிலையில் ஜூனில் பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. வன்னியனூர் பள்ளி தொடங்கியதில் இருந்து இதுவரை பட்டியல் சமூக மாணவர்கள் அங்கு படிக்க முன்வராமல் இருந்துள்ளனர். இந்த வருடம்தான் இருவர் சேர்க்கைக்காக வருகிறார்கள். அவ்வாறு வந்த இரு மாணவர்களிடமும் தலைமையாசிரியர் சிவக்குமார் “மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அட்மிசன் போடக்கூடாது என வட்டாரக் கல்வி அலுவலர் கூறியுள்ளார்”என்று கூறி பள்ளியில் சேர்க்க மறுத்துள்ளார்.
உண்மையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயில வந்தால் மாற்றுச் சான்றிதழை காரணம்காட்டி சேர்க்கையை மறுக்கக் கூடாது. வயதுக்கு ஏற்றாற்போல் அனுமதிக்க வேண்டும் என்று விதிகள் சொல்கின்றன. ஆனால், தலைமையாசிரியரின் நடைமுறையோ பார்ப்பனிய வருணாசிரம சட்டத்தை அமல்படுத்துகிறது.
இந்த விசயம் ஆசிரியர் இரவீந்திரநாத் கவனத்துக்கு வந்தவுடன் தலைமையாசிரியரிடம் கேட்டுள்ளார். அப்போது வட்டாரக் கல்வி அலுவலர் சேர்க்கை தொடர்பாக அனுப்பியதாக ஒரு செய்தியை இரவீந்திரநாத்துக்கு தலைமையாசிரியர் அனுப்பியுள்ளார். அதன்பின்பு வட்டாரக்  கல்வி அலுவலரிடம் இரவீந்திரநாத் தொடர்பு கொண்டு “மாணவர் சேர்க்கைக்கு மாற்றுச் சான்றிதழ் கேட்டு கட்டாயப்படுத்தலாமா?” என்று கேட்டுள்ளார். ”அவ்வாறு கட்டாயப்படுத்தக் கூடாது”என்று வட்டாரக் கல்வி அலுவலர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டு பட்டியல் சமூக மாணவர்களையும்  வன்னியனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்க்கக் கோரி தலைமையாசிரியிடம் வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்ட பின்பே அட்மிசன் போடப்பட்டது.
அதற்குப் பிறகு காசிநாதன் என்பவர் தலைமையாசிரியரை வந்து சந்திக்கிறார். இவர் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலும்,  பள்ளி மேலாண்மைக் குழுவிலும்  இருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, “காலனியில் இருந்து ஆசிரியரை அனுமதிப்பதே பெரிய விசயம், மாணவர்களையும் வேறு சேர்க்கிறார்”என்று ஆசிரியர் இரவீந்திரநாத்தின் மீது சாதி ரீதியாக வெறுப்பு விதைக்கப்படுகிறது. இப்பிரச்சாரம் பிரதானமாக கருப்புச் செட்டி, காசிநாதன், வார்டு கவுன்சிலர் சிவகுமார் ஆகிய நபர்களால் முன்னின்று நடத்தப்படுகிறது.
அதேபோல், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவராக இருந்த வேலாயுதம் என்பவரும் குடிபோதையில் ஆசிரியர் இரவீந்திரநாத்தை மாணவர் சேர்க்கை குறித்த விசயத்துக்காக பேச வேண்டும் என்று வருகிறார். அவரை தலைமையாசிரியர் திருப்பி அனுப்புகிறார்.
இந்நிலையில் ஜூன் 16 அன்று 8-ம் வகுப்பு பாடம் எடுக்கும்போது, வகுப்பை தொந்தரவு செய்யும் வகையில்  நடந்து கொண்ட ஒரு மாணவனை லேசாகத் தலையில் தட்டி, ”அவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது”என்று ஆசிரியர் இரவீந்திரநாத்  கண்டிக்கிறார்.
அடுத்தநாள் பெற்றோர்கள் 40 பேர் வரை பள்ளிக்கு வருகின்றனர். சம்பந்தப்பட்ட மாணவனை கூட்டிச் செல்கிறார்கள். வெளியில் போவதற்கு முன் தலைமையாசிரியரை பார்த்துப் பேசிவிட்டு செல்கிறார்கள். பள்ளி வாயிலுக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். பத்திரிகை நிருபர்கள் 10 பேர் வருகிறார்கள். உதவி ஆய்வாளர்கள் 3 பேர், பெண் போலீசு 3 பேர், ஆண் போலீசு 3 பேர் வந்து நிற்கிறார்கள். ”கைது செய்! கைது செய்! ஆசிரியர் இரவீந்திரநாத்தை கைது செய்!” என்று வந்திருந்த பெற்றோர்கள் முழக்கமிடுகிறார்கள்.  சம்பந்தப்பட்ட மாணவனின் அம்மா “ஆசிரியர் இரவீந்திரநாத் அடித்ததில் தன் பையனுக்கு காது, மூக்கு, மார்பு ஆகிய பகுதிகளில் இரத்தம் வந்ததாக”பேட்டி கொடுக்கிறார்.
ஆசிரியர் இரவீந்திரநாத்தின் சாதியைச் சொல்லி அசிங்கமாகத் திட்டியும், அவரின் பாட்டி பெயரை கூறி “இவ பேரனெல்லாம் பள்ளிக்கூடம் வரலாமா”என்று மனிதத்தன்மை இல்லாமல் சாதியக் குரூரத்தோடு ஆர்ப்பாட்டத்தில் இருந்தவர்கள் பேசியுள்ளனர்.
ஆசிரியர் இரவீந்திரநாத் தலைமையாசிரியரிடம் சென்று, “சிசிடிவி ஆய்வு மேற்கொள்ளுங்கள், வகுப்பு குழந்தைகளிடம் விசாரணை மேற்கொள்ளுங்கள், அதில் தவறு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுங்கள்”என்று கூறுகிறார். ஆனால் தலைமையாசிரியர் அதைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. மேலும், ஆசிரியர் இரவீந்திரநாத் பெண் பிள்ளைகளை ஆபாசமாகப் பேசினார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டையும் தலைமையாசிரியர் மறுத்துப் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
அங்கு ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து தலைமையாசிரியர் “உங்களால்தான் பள்ளி முன்னேறியுள்ளது, உங்கள் சமூகத்திற்கான பள்ளி”என்று சாதிய கூறியுள்ளார். இது வீடியோ ஆதாரமாக உள்ளது.
“கட்டடம் மட்டும்தான் அரசாங்கத்துடையது, உள்ளே இருப்பதெல்லாம் எங்களுடையது” என்று நேரடியாகவே சாதி ஆணவத்தோடு பேசுகிறார் அங்கு வந்திருந்த பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகன் செந்தில் என்பவர்.
கல்வித்துறை அலுவலரும் வராமல், ஆசிரியர் இரவீந்திரநாத்திடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் மேச்சேரி டி.எஸ்.பி விஜயகுமார் அங்கு வந்து “ஆசிரியர் இரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுப்பதாக”கூறுகிறார். ஆனால், அவரை சாதி வன்மத்தோடு இழிவாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இதெல்லாம் எந்த சட்டத்தில் வருகிறது என்று தெரியவில்லை.
போலீசு ஆசிரியர் இரவீந்திரநாத்தை வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. ஆசிரியர் இரவீந்திரநாத்திடம் என்ன நடந்தது என்று எழுதச் சொல்லி கேட்கிறார்கள். எழுதுவதற்குள்ளேயே விருதாசம்பட்டிக்கு அவரை மாற்றல் செய்வதாக ஆணை வருகிறது. சாதிவெறியர்களுக்கு ஆதரவாக அரசு நிர்வாகம் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்று. ஆனால், அந்த ஆணையை இரவீந்திரநாத் வாங்க மறுக்கிறார்.
மாற்றல் ஆணையைப் பெற்றுக் கொள்வது என்பது தன்மீதான பொய்யான குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதற்கு சமமாகிவிடும் என்று உணர்ந்து வேறுவழியின்றி மருத்துவ விடுப்பு எடுக்கிறார்.
7 நாட்களுக்குப் பிறகு பள்ளியில் சி.சி.டிவி ஆய்வு மேற்கொள்கிறார்கள். அதில்  இரவீந்திரநாத்தால் அடித்து காது, மூக்கு, நெஞ்சில் இரத்தம் வந்ததாக சொல்லப்பட்ட மாணவன் குறிப்பிட்ட அந்த நேரத்தில் இயல்பாக இருப்பது தெரிய வருகிறது.
ஆசிரியர் இரவீந்திரநாத் மீது பா.ம.க சாதிவெறியர்கள் இவ்வளவு வன்மம் காட்டுவதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. பஞ்சாயத்து விசயங்களில், கிராம சபைக் கூட்டங்களில் தனது பகுதி மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கிறார். விடாப்பிடியாக போராடுகிறார் என்பதுதான் அது.
கிராம அளவில் தனிநபர் வாழ்க்கைத் தர குறியீட்டை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அரசாணை நிலை எண்: 23-ன் படி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II-ன் அடிப்படையில் ஊராட்சிகளில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் 30% ஒதுக்க வேண்டும் என்பது விதி.
இந்த திட்டத்தின் அடிப்படையில் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் ரூ.77 இலட்சத்தில் ரூ.23 இலட்சத்தை மல்லி குந்தம் பட்டியல் இன மக்களின் பகுதி வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் ஊராட்சி நிர்வாகம் ஏமாற்றுவதை எதிர்த்து ஆசிரியர் இரவீந்திரநாத் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அளிக்கிறார். இதனால் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைக் காரணமாக வைத்து தங்களது தவறை மறைத்துக் கொண்டு இரவீந்திரநாத்துக்கு எதிராக வன்னிய சாதி உழைக்கும் மக்களை திருப்பிவிடும் வேலையை ஊராட்சி நிர்வாகத்தில் இருக்கும் பா.ம.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மல்லி குந்தத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் 8-வது வார்டு பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்படாமல் இருப்பதை நேரில் பார்க்கும்போது உணர  முடிகிறது.
இந்தப் பிரச்சினையில் ஆசிரியர் இரவீந்திரநாத்துக்கு ஆதரவாக ஜூன் 27 அன்று தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்களும், ஜனநாயக சக்திகளும் அறிவித்திருந்தனர். போலீசு அனுமதி மறுத்த நிலையில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஆசிரியர் இரவீந்திரநாத்தின் பக்கம் நியாயம் இருப்பது வெளிப்படையாக தெரிந்தாலும், சாதிய வன்மத்தோடு அவர் ஒடுக்கப்படுவதை உணர்ந்தாலும் போலீசுத்துறையோ, கல்வி அதிகாரிகளோ அவர் பக்கம் நின்று பா.ம.க சாதிவெறியர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. அந்த அளவுக்கு சாதிவெறியர்களுக்கு அடிபணிந்து போவதாகவே அதிகார வர்க்கத்தின் செயல்பாடு உள்ளது. பா.ம.க-வைச் சார்ந்த குறிப்பிட்ட சில நபர்களும், வேறு சிலரும் இன்னமும் இரவீந்திரநாத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
படிக்க :
♦ சேலம் மாவட்டம் – வடகுமரை தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் ! அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஆதரிப்போம் !
♦ சேலம் மாவட்டமும் – நெசவுத் தொழில் நெருக்கடியும் !
என்னதான் பா.ம.க சாதிவெறியைத் தூண்டி குளிர்காய நினைத்தாலும், வன்னிய சாதியைச் சார்ந்த இரவீந்திரநாத்தின் நண்பர்கள், ஜனநாயக சக்திகள் அவர் தரப்பு நியாயத்தை உணர்கின்றனர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் செய்கின்றனர்.
தன்மீதான நியாயத்தை உணர்த்தவும், தலைமையாசிரியர் மற்றும் பா.ம.க-வைச் சார்ந்த சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்வித்துறை அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் என்று அலைந்து கொண்டிருக்கிறார் ஆசிரியர் இரவீந்திரநாத். மாணவர்களுக்கு அறிவைப் புகட்ட வேண்டிய நேரத்தை தன்மீதான பொய்யான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக ஒதுக்க வேண்டிய அவலம். அப்பகுதி ஜனநாயக சக்திகளின், மக்களின் உதவியுடன் தொடர்ந்து போராடுகிறார். அவரின் கோபம் வன்னிய சாதி உழைக்கும் மக்கள் மீதல்ல. சாதிவெறியைத் தூண்டும் நபர்கள் மீதே. அதே பள்ளியில் தடையின்றி பணிபுரிய காலம் அனுமதித்தால் சமூகத்திற்கு சிறந்த மாணவர்களை உருவாக்க இன்னும் கூடுதலாக போராடுவார். ஆனால், உண்மையை வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது என்பதே யதார்த்தம்.
நியாயம் கிடைக்கும் என்று ஒடுக்கப்படும், உழைக்கும் மக்கள் நம்பும் இடங்களோ இறுகிப்போய் கிடக்கின்றன. என்னவாயினும் போராடித்தானே ஆக வேண்டும். ஏனென்றால் இது அவருக்கான போராட்டம் மட்டுமல்ல…
பா.ம.க உள்ளிட்ட சாதிவெறிக் கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காக தங்களை பயன்படுத்தி வருவதை பெரும்பாலான வன்னிய சாதி உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனென்றால் அன்றாட வாழ்க்கையின் யதார்த்தம் அவர்களை சுட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு எந்தவகையிலும் சாதிவெறியர்கள் துணைநிற்க மாட்டார்கள் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகிறார்கள்.
பா.ம.க உள்ளிட்ட சாதிவெறிக் கட்சிகள் அந்தந்த சாதி மக்களாலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும். தடை செய்யப்பட வேண்டும் என்பதே சாதியக் கொடுமைகளை முடிவுக்குக கொண்டு வருவதற்கான தொடக்கப் படிக்கல்லாகும்.
வினவு களச் செய்தியாளர்

ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம் – காண்ட்ராக்ட்மயமே திராவிட மாடல்!

0
மிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
4,989 இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்திலும், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்திலும் ஜீலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரை 10 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3,188 முதுநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.12,000 தொகுப்பூதியத்தில் ஜீலை 2022 முதல் பிப்ரவரி 2023 வரை 8 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம்தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் முன்னுரிமை தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது மற்றும் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிங்களை நிரப்ப சிறிது காலமாகும் என்பதால் தற்காலிகமாக ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பதாக தமிழக அரசு நியாயவாதம் பேசுகிறது.
படிக்க :
♦ வந்தேபாரத் ரயில் சக்கரம் தயாரிக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் : பல்லிளிக்கும் பா.ஜ.க.வின் தேசப்பற்று !
♦ மதுரை காமராஜர் பல்கலையில் ஒப்பந்த ஊழியர்கள் 135 பேர் பணி நீக்கம் !
தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்பும் தமிழக அரசின் இச்செயலை ஆசிரியர் சங்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.
***
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணிவாய்ப்புக்காக காத்திருக்கும் 70,000 பேரை (ஆசிரியர்களை) நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதேன்? உடனடியாக நியமிக்கப்படுவதற்கு நிரந்தர ஆசிரியர்களே இல்லை என்பதுபோல நாடகம் ஏன்?
ஒன்றிய அரசால் 2009-ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, கொண்டுவரப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வானது, தமிழகத்தில் 2011-ம் ஆண்டுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது.
2013, 2014 (உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஆசிரியர்கள்) 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றுள்ளது. அத்தேர்வுகளில் 95 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்து, அதில் 25 ஆயிரம் பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் 70 ஆயிரம் பேர் பணிக்காக இன்றுவரை காத்திருக்கின்றனர்.
திமுக தங்களுடைய 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி 177-ல், ‘2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துக்கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தது.
ஒப்பந்த ஆசிரியர்களை நியமிப்பது திமுக அரசுக்கு புதிதல்ல. 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலே 2774 தற்காலிக ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் 5 மாதத்திற்கு நியமித்தது. இப்போது என்ன நியாயவாதத்தை முன்வைக்கிறார்களோ, அதை அப்போதே முன்வைத்தார்கள்.
திமுக அரசு மட்டுமல்ல, முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்திலும் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். திமுக ஆட்சிக்கு வந்தும் அதையே தொடர்கிறது.
எல்லா ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதை நிறைவேற்றுவோம், இதை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு தங்களை புதிய தாராளவாதக் கொள்கைகள் பெற்றெடுத்த பிள்ளையாக காட்டிக்கொள்கிறார்கள். திமுக மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
***
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணிவாய்ப்புக்காக காத்திருக்கும் 70 ஆயிரம் பேரை ஆசிரியர்களாக நியமிக்காத திமுக அரசு, ஏற்கெனவே டெட் தேர்வு எழுதாமல் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களை டெட் தேர்வு எழுதி தங்களுடைய தகுதியை நியமிக்க சொல்கிறது.
2009-ம் ஆண்டு மத்திய அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட டெட் தேர்வானது தமிழகத்தில் 2011-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இடைப்பட்ட ஆண்டுகளில் முந்தைய வழக்கப்படி தேர்வில்லாமல் நேரடி நியமனத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள். அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள் முதற்கொண்டு மீண்டும் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தங்கள் பணியை உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்திரவிட்டது தமிழக அரசு.
அதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகையை நிறுத்தி வைத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணை வழியே முதலில் 5 ஆண்டுகள், பிறகு 4 ஆண்டுகள் என 9 ஆண்டுகள் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் வழங்கப்பட்டது.
இறுதியாக ஏப்ரல் 4, 2022 அன்று சென்னை உயர் நீதிமன்றமானது இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியிருந்தது. தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இனி பணியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் இவ்வாறு 12 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்குப் பணி உயர்வோ, சம்பள உயர்வோ வழங்கப்படக் கூடாது என்றும் அத்தீர்ப்பில் திமிர்த்தனமாக கூறியது அரசு. இத்தீர்ப்பின் மூலம் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களின் பணி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. ‘தகுதியுள்ள ஆசிரியர்கள்தான் பள்ளிகளில் நிரப்பப்பட வேண்டும்’ என்று அரசு தரப்பு இத்தீர்ப்பிற்கு நியாயவாதம் கூறியது.
ஒருபக்கம் “தகுதி முக்கியம், ஆதலால் தேர்வு எழுதாமல் பணியில் நீடிக்க முடியாது” என்று சொல்வது, மறுபக்கம் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்க மறுப்பது என்று இரட்டை வேடம் போட்டுவருகிறது அரசு.
***
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதே ஆசிரியராக பணியாற்ற ‘தகுதி’ என்று கூறும் தமிழக அரசானது, தற்போது டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியராக நியமிக்க மற்றொரு தேர்வான மறுநியமனத் தேர்விலும் தேர்ச்சி அடைவதே ‘தகுதி’ என்று புதிய விளக்கம் கூறுகிறது.
டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்து எப்பொழுது நமக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என்று ஏக்கத்தோடு காத்திருந்த ஆசிரியர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியைக் கொடுத்தது தமிழக அரசு. 2018-ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைவரும் மீண்டும் அரசு நடத்தும் மறுநியமனத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் வேலை என்ற அறிவிப்பை அரசாணை எண் 149 மூலம் வெளியிடப்பட்டது.
தங்களுக்கு நேர்ந்த இந்த வஞ்சகத்தைக் கண்டித்து, ஆசிரியர் நியமனத் தேர்வை இரத்துசெய்யக்கோரி அப்போதே சென்னை டி.பி.ஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்போரட்டத்தை நடத்தினர். “சாகும்வரை நாங்கள் தேர்வு மட்டும்தான் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா? எங்களை நீங்களே கொன்று விடுங்கள், ஏன் வருடம் ஒரு அரசாணைப் போட்டு கொலை செய்கிறீர்கள்?” – என்று போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் மனம் கொந்தளித்து கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2022 மார்ச் மாதத்தில், டெட் தேர்வுக்கான தேதியும் அதனைத் தொடர்ந்து மறுநியமனத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கொதிப்படைந்த பட்டதாரி ஆசிரியர்கள், ‘மறுநியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’, ‘திமுக தேர்தல் வாக்குறுதி 177-யை அமல்படுத்த வேண்டும்’ உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறுநியமனத் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருந்தும், திமுக அரசானது மறுநியமனத் தேர்வை அமல்படுத்துகிறது.
2018-ம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியில் மறுநியமனத் தேர்வு அரசாணை எண் 149 வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வை(டெட்) போல, மறுநியமனத் தேர்வானது மத்திய அரசின் 2009 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அமல்படுத்தப் படவில்லை. மாறாக தமிழக அரசினால் அமல்படுத்தப்படுகிறது. வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதில் சிக்கல்கள் இருப்பதால் ஆந்திராவைப் போன்று தமிழகத்திலும் மறுநியமனத் தேர்வு நடத்தப்படுவதாக தான் அரசாணை எண் 149-லேயே கூறப்பட்டுள்ளது.
***
மறுநியமனத் தேர்வில் தேர்ச்சி அடையும் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்குமா தமிழக அரசு. தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தும் அரசிடம் ‘நிரந்தரப் பணி’ என்பதை நாம் எதிர்பார்க்க முடியுமா?
டெட் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி அடைந்து பல ஆண்டுகளாக பணி நியமனத்திற்காக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களை நிரந்திர ஆசிரியர்களாக நியமிக்காதவர்கள். டெட் தேர்வு எழுதாமல் ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தால்தான் பணி என்று கூறியவர்கள். மறுநியமனத் தேர்வை ரத்து செய்ய அதிகாரம் இருந்தும் ரத்து செய்யாதவர்கள். இவர்களில் மறுநியமனத் தேர்வில் தேர்ச்சி அடைந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப் போகிறார்கள். இவர்களுடைய உண்மையான நோக்கம்தான் என்ன? அரசுத்துறைகளை எல்லாம் காண்ட்ராக்ட் மயப்படுத்துவதே.
அரசுத்துறைகளை எல்லாம் தீவிரமாக காண்ட்ராக்ட் மயமாக்குவதற்கு சிறந்த சான்று, செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களின் சமீபத்திய போராட்டமே.
அரசுத்துறையில் நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல் ஒப்பந்த முறையைப் புகுத்தி செலவினங்களை மிச்சப்படுத்துவதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராள சலுகைகள் வழங்குவதும், இதன்மூலம் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதாக கூறுவதும் தனியார்மய – தாராளமயக் கொள்கையின் அங்கமாகும்.
அரசுத்துறைகளை எல்லாம் தனியாருக்கு திறந்துவிடுவது மட்டும் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவது ஆகாது. அரசுத் துறைகளை காண்ட்ராக்ட் மயமாக்குவதும் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதே.
மறுநியமனத் தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் நிரந்தரப் பணி என்பது பகல் கனவே. மறு நியமனத் தேர்வில் தேர்ச்சி பெறும் சொற்ப நபர்கள் மட்டுமே நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதுவும் இரண்டு சூழ்நிலைகளிலே சாத்தியம்.
ஒன்று, தன்னுடைய கவர்ச்சிவாத அரசியலுக்காக திமுக ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் பெயரளவுக்காக 12,000-க்கு மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களில் 1212 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்த மாதிரி சொற்ப அளவில் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டால் வாய்ப்புண்டு. மற்றொன்று, மறுநியமனத் தேர்வில் தேர்ச்சி அடையும் பட்டதாரி ஆசிரியர்களை, நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் தீவிரமாகும் போது.
படிக்க :
♦ இலங்கை – இந்தியா மின் உற்பத்தி ஒப்பந்தம் : ஆதரவா? ஆதிக்கமா?
♦ 13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’
‘எல்லா சமூகங்களுக்கான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்பதுதான் ஸ்டாலினின் திராவிட மாடல். இன்னும் சுருக்கமாக சொன்னால் ‘எல்லாருக்கும் எல்லாம்’. இவை எல்லாம் வார்த்தை ஜாலங்களே.
தீவிரமாக புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்துவதே, திராவிட மாடல் ஆட்சி. புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்துவதில் திராவிட மாடலுக்கும், குஜராத் மாடலுக்கும் என்ன வேறுபாடு. ஒரு மண்ணும் கிடையாது.
பாஜக எதிர்ப்பை முன்னிறுத்தி திமுகவுக்கு காவடி தூக்கும் கூட்டணிக் கட்சிகள் மற்றும் திமுக அடிவருடிகள், திமுகவின் புதிய தாராளவாதக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தும் நடவடிக்கைகளுடன் சமரசம் பண்ணிக் கொள்கிறார்கள்.
தமிழகத்தில் பாஜகவானது, திமுகவை தூக்கியெறிந்துவிட்டு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருக்கிறது.
திமுகவின் புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், பாஜகவால் தூக்கியெறியப்படும் முன்னரே உழைக்கும் மக்களால் தூக்கி எறியப்படும்.
பிரவீன்

DHFL மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் தனியார்மயம் | சு. விஜயபாஸ்கர்

வ்வொரு வாரமும் ஒவ்வொரு புதுப்படம் வெளியாவதைப்போன்று, ஓவ்வொரு வாரமும் ஒரு மோசடி வெளியாகிறது. அந்த வரிசையில் இந்த வார வெளியீடு தேவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (Dewan Housing Finance Limited)  நிறுவனம் செய்த மோசடி.
17 வங்கிகள் (Consortium) இணைந்து தந்த ரூ.34,615 கோடி கடனை மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) மற்றும் அதன் இயக்குநர்கள் கபில் வாதவான், தீரஜ் வாதவான் உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ கடந்த புதன்கிழமை (ஜுன் 17) வழக்கு பதிவு செய்துள்ளது. இதுவரை சி.பி.ஐ பதிவு செய்த வங்கி மோசடி வழக்குகளில் மிகப்பெரிய வழக்கு இதுவாகும்.
2020 மார்ச் மாதம் யெஸ் வங்கியின் தலைமை செயல்அதிகாரி ரானா கபூர் வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அவரும், DHFL நிறுவனத்தின் உரிமையாளர்களான கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் இணைந்து செய்த மோசடியை சி.பி.ஐ மற்றும் அமலாக்க இயக்குனரகமும் விசாரித்தன. அதன் பின்னர் ஏப்ரல் 2020-இல், கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2022 மே மாதம் டெல்லி நீதிமன்றம் தந்த பிணையில் வெளிவந்தனர். அதற்கு இடைப்பட்ட  இரண்டு ஆண்டுகளில் பலமுறை நீதிமன்றங்களால் பிணை மறுக்கப்பட்டாலும் தீரஜ் வாதவான் சிறையில் இருந்த காலம் 9 மாதங்கள் மட்டுமே.
படிக்க :
♦ பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் சந்தோஷ் தற்கொலை !
♦ ரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் ? || தோழர் சுரேசு சக்தி
மீதமுள்ள 15 மாதங்களை, தீரஜ் வாதவான் நோய்களைக் காரணம்காட்டி மருத்துவமனைகளில் இருந்துள்ளார். மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் 10 மாத காலம் தங்கியிருந்த காலகட்டமும் இதில் அடங்கும். கூட்டுக் களவாணிகள் ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்வதுதானே தொழில் தர்மம். உனக்கு நான், எனக்கு நீ துணையாக.
இந்த மோசடி வெளிவராமல் இருந்திருந்தால் வாதவான் சகோதரர்களுக்கு நோய் வந்திருக்காது.
வாதவான் குடும்பத்தினரின் ஆடம்பர வாழ்க்கையோ, விதிமீறலோ புதிதன்று.
தீவிர கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது (ஏப்ரல் 2020) மராட்டிய மாநிலத்திலிருந்து மகாபலிபுரத்திற்கு சொகுசு பங்களாவிற்கு சமையல்காரர்கள், வேலைக்காரர்கள் சகிதம் சொகுசு கார்களில் வந்திறங்கினர் வாதவான் குடும்பத்தினர். ரூ.100-க்கு கத்திரிக்காய் வாங்கச் சென்றவர்களை விரட்டிவிரட்டி அடித்த போலீசு, வாதவான் குடும்பத்தினருக்கு சிறப்பு அனுமதி தந்தது. இதில் கேலிக்கூத்து என்னவெனில், மகாபலிபுரம் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் யெஸ் வங்கி ரானா கபூருடன் இணைந்து செய்த மோசடி வழக்கில் விசாரணக்காக அழைத்தபோது கொரோனாவைக் காரணம்காட்டி விசாரணைக்கு செல்லவில்லை. மார்ச் மாதம் இருந்த நோய் அச்சுறுத்தல் ஏப்ரல் மாதத்தில் மகாபலிபுரத்திற்கு ஆடம்பரச் சுற்றுலாவிற்கு வந்தபோது இல்லை. ரூ.300 சம்பளத்திற்கு 3,000 கிலோ மீட்டர் பயணம் செய்துவந்த வடமாநில தொழிலாளர்களை நடக்கவிட்ட அரசுகள் 30,000 கோடி மோசடி செய்த வாதவான் சகோதரர்களை மூன்று மாநில எல்லைகள் கடந்து ராஜ மரியாதையோடு சொகுசு பங்களாவிற்கு அனுப்பி வைத்தன.
DHFL நிறுவனத்தின் சேர்மன் கபில் வாதவான் கைது செய்யப்படும் வரை,  அந்நிறுவனத்தின் அறிவுஜீவி முகமாக பல தொலைக்காட்சிகளில் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தார். அதுவரை அவரை அறிவு ஜீவியாக காட்டிக் கொண்டிருந்த ஊடகங்கள் தற்போது வில்லனாக காட்டுகின்றன. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, சி.சி.டீவி.யில் மாட்டும் வரை சாமியார், மாட்டிவிட்டால் போலிச் சாமியார் என்பதைப் போல தனியார்மயத்தில் மாட்டும் வரை அறிவு ஜீவி, மாட்டிவிட்டால் பிராடு. தனியார்மயத்தைப் பொறுத்தவரையில் மாட்டியவன் சிறைக்கு உள்ளே இருப்பான். மாட்டாதவன் வெளியே கோட்டு சூட்டு போட்டு இருப்பான். அவ்வளவு தான். தவறு செய்யாதவன் என்பவனில்லை. மாட்டாமல் தவறு செய்வதைக் கற்றுக் கொள் என்கிறது தனியார்மய பெருந்தத்துவம். தீரஜ் வாதவான் போல் திறமைசாலியாக இருந்தால், கைது செய்யப்பட்ட பின்னரும் சொகுசு மருத்துவமனையில் ஓய்வெடுக்கலாம்.
கபிலின் தம்பி தீரஜ் வாதவானும் சளைத்தவர் இல்லை. அண்ணன் அறிவுஜீவியாக அறியப்பட, தம்பி தீரஜ் திவான் மும்பை வட்டாரத்தில் பாபா திவான் என்று அறியப்பட்டவர். பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருங்கிய நட்பு, பல சொகுசு கார்கள், எண்ணற்ற பாடி கார்டுகள் (தனிப் பாதுகாவலர்கள்) என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். முதலாளித்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால், “வாழ்ந்தா இவரை மாதிரி வாழனும்னு” எனும் அளவிற்கு வாழ்ந்தவர். யார் உழைப்பில்? யார் காசில் சொகுசு வாழ்க்கை?
வேர்வை சொட்ட, ரத்தம் சிந்தி உழைத்து, ரூ.1, ரூ.2 என மிச்சம் பிடித்து பாதுகாப்பாக இருக்கட்டும் என உழைக்கும் மக்கள் வங்கியில் போட்ட பணத்தில் சொகுசாக தின்று கொழுத்திருக்கிறார்கள் வாதவான் குடும்பத்தினர்.
மோசடி வழக்கு விவரங்களுக்குள் போக விரும்பவில்லை, பல வழக்குகளில் நாம் பார்த்த கதைதான். தொழில் நடத்துகிறோம் என்ற பெயரில் கடன் வாங்கி, பணத்தை திசை திருப்பி, கடனை முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததுதான் கதை. விஜய் மல்லையா, முகுல் சோக்சி, நீரவ் மோடி, அனில் அம்பானி என பல பெயர்களில் வரும் ஒரே கதை. தனியார்மய உலகில் திரும்பத் திரும்ப வெற்றிகரமாக ஓடும் கதை.
யெஸ் வங்கி (Yes Bank), பஞ்சாப் – மகாராஷ்டிரா வங்கி (PMC Bank) சரிந்து கீழே விழ காரணமாக இருந்தவர்கள் வாதவான் குடும்பத்தினர் நடத்திய நிறுவனங்கள். அதற்கு துணையாக இருந்தவர்கள் யெஸ் வங்கி தலைமைச் செயல் அதிகாரி ரானா கபூரும், PMC வங்கியின் நிர்வாகிகள் சிலரும். இது தவிர யூனியன் வங்கி, எஸ்.பி.ஐ என ஏமாந்த வங்கிகளின் எண்ணிக்கை 17. ஏமாந்த ரூ.34,615 கோடி ஒருபோதும் திரும்ப கிடைக்காது. வாதவான் குடும்பத்தின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். 2012-இல் விஜய் மல்லையாவின் மோசடிகள் வெளி வந்தாலும், இன்று வரை விஜய் மல்லையா கைது செய்யப்படவிலலை. சொத்துக்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்படவும் இல்லை. மல்லையோவோ இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து, இலண்டனில் தனது ஆடம்பர வாழ்வை தொடர்கிறார்.
யெஸ் வங்கி மோசடி வழக்கில் ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்டு, மே 2022-இல் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி பிணையில் வந்த வாதவான் சகோதரர்கள் மீது யுனியன் பாங்க் ஆஃப் இந்தியா தந்த வழக்கில் தற்போது மீண்டும் குற்றச் சாட்டப்பட்டுள்ளனர். மே 2022-இல் பிணை கிடைத்தாலும், பல வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பதால், நீதிமன்றக் காவலில்தான் உள்ளனர். பல கோடி ரூபாய் மோசடி செய்தது வெளிப்படையாக தெரிந்தாலும், பிணை கிடைக்க சட்ட நுணுக்கங்கள் கிடைத்தைப் போன்று, தற்போது குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் ரூ.34,615 கோடி மோசடி வழக்கில் இருந்து வெளிவர சட்டத்தில் ஓட்டைகள் (அது தான் சட்ட நுணுக்கம்) கிடைக்காதா என்ன? எந்த சட்ட நுணுக்கத்தைப் பயன்படுத்தி முகுல் சோக்சியும், விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் சிறைக்குள் வராமல் வெளி நாடுகளில் சுற்றுகிறார்களோ, அதே சட்ட நுணுக்கங்கள் வாதவான் சகோதரர்களுக்கு கிடைக்கும். சட்ட நுணுக்கங்களை கண்டுபிடிக்க திறமையான வழக்கறிஞர்களும் கிடைப்பார்கள். அதற்கான சாட்சி வாதவான் சகோதரர்களிடமே உண்டு.
ஆதாரம் 1:  ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்ட பின்னரும் 15 மாதங்கள் தீரஜ் வாதவான் சொகுசு மருத்துவ மனைகளில் இருந்தார். 44 வயது தீரஜ்-க்கு செல்லுபடியான மருத்துவ காரணங்கள் 81 வயது வரவரராவிற்கு செல்லுபடியாகவில்லை. காரணம் என்ன? மக்கள் பணத்தை தீரஜ் மோசடி செய்திருந்தாலும், இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு மோசடி செய்யவில்லை. மாறாக, அமைப்பை கட்டமைக்க உதவினார். வரவரராவிற்கு அந்த திறமை இல்லை. இந்த மோசடி அரசாங்களை எதிர்த்தார். எனவே ஏராளமான உடல் உபாதைகளோடு, சாகப் போகிற 81 வயதிலும் வரவரராவிற்கு சிறை. திரஜ்ஜிற்கு சொகுசு மருத்துவமனை.
படிக்க :
♦ அம்பலமாகும் அடிமை அதிமுகவின் வேளாண்துறை ஊழல் முறைகேடுகள் !!
♦ ராம ஜென்மபூமி அறக்கட்டளை : தொடர்ந்து அம்பலமாகும் பல கோடி ஊழல் !
ஆதாரம் 2: கபில் மற்றும் தீரஜ் வாதவனால் ஏமாற்றப்பட்ட வங்கிகள் அவர்களுக்கு எதிராக அக்டோபர் 18, 2019 அன்று லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டாலும், ஆறு மாதங்கள் கழித்தே கைது செய்யப்பட்டனர்.
கூடுதலாக DHFL நிறுவனம் பாஜகவிற்கு 27.5 கோடி  நன்கொடை தந்துள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. தனக்கு அள்ளித் தந்த கருணை வள்ளல்களை கண்டிப்பாக பாஜக அரசு தண்டிக்காது.
கடந்த பிப்ரவரி மாதம் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் 22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குத் தொடர்ந்த போதும், இதுவரை நடந்த வங்கி மோசடி ஊழல்களில் இதுதான் மிகப் பெரிய மோசடி எனச் சொல்லப்பட்டது. அந்த சாதனையை தேவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் முந்திவிட்டது. தனியார்மயம் செய்துவரும் மெச்சந்தகுந்த சாதனைகளில் இதுவும் ஒன்று. எங்கும் எதிலும் தனியார்மயம் என்றாகிவிட்ட பின்னர், ஊழல்களின் அளவும் எண்ணிக்கையும் அளவில்லாமல் போய்விட்டன.
அடுத்தமுறை DHFL நிறுவன மோசடியை மிஞ்சி சாதனை படைக்கும் மோசடி வெளிவரும். அதற்கான அத்தனை தகுதியும் தனியார்மயத்திற்கு உண்டு. ஏனெனின் ஊழலின் ஊற்றுக் கண் தனியார்மய கொள்கைகளில் உள்ளது.
சு. விஜயபாஸ்கர்
ஆதாரம்: Economictimes, timesofindia1, Timesofindia2, livemint, newindianexpress, thehindu

பொதுக் கொள்கையில் பாலின விளக்கத்தைப் புரிந்துகொள்வது எப்படி? | சிந்துஜா

பெண்களுக்கான கொள்கையா? அல்லது பெண்கள் அல்லாத கொள்கையா?
(Public policy) பொதுக் கொள்கையில் பாலின விளக்கத்தைப் புரிந்துகொள்வது எப்படி?
முக்கிய முடிவெடுக்கும் பாத்திரங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய கேள்விகளில், எத்தனை பெண்கள் பங்கேற்கிறார்கள் என்பதை கொண்டுதான் பாலின பிரிதிநிதிகள் நிறுவனங்களை நாம் கணக்கில் எடுத்து கொள்கிறோம்.
இந்தியாவில் பிரிதிநிதித்துவம் பற்றிய முயற்சிகள் எடுத்தாலும் கொள்கை வகுப்பதில் பெரும்பாலும் பெண்கள் இடம்பெறுவது இல்லை என்பதை நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் தரவு சுட்டிக்காட்டுகிறது. பாலின ஊதிய இடைவெளி, தாய்வழி சுகாதாரம் மற்றும் சட்டமன்றத்தில் பாலின வன்முறை போன்ற பெண்களின் பிரச்சினைகளுக்கு  முக்கியத்தும்  இல்லாதை இது சுட்டிக்காட்டுகிறது.
இதில் கூடுதலாக, பொதுக் கொள்கையில் பெண்களின் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல் பெரும்பாலும் குறுகிய வட்டத்தில் மட்டுமே நிகழ்கிறது. இவற்றில் முக்கிய முடிவெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பெண்களின் பங்கேற்பு அவர்களின் எண்ணிக்கையுடன் பார்க்கப்படுகிறது. ஓரு சிறந்த பிரதிநிதித்துவத்தின் அளவுகோலாக எவ்வளவு பேர் அதில் பிரதிநிதித்துவம் படுத்தப்படுகிறார்கள் என்பதை கொண்டுதான்  செயல்படுகிறது.
படிக்க :
♦ பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா
♦ ரவிக்கையின் ‘பாரம்பரியமும்’ சாதிய வர்க்க பாகுபாட்டு வரலாறும் | சிந்துஜா
பெண்களின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்த, பொதுக் கொள்கையில் பெண்களைச் சார்ந்த உரையாடல்கள் அவர்களை சமமாக அங்கீகரிப்பதில் தொடங்க வேண்டும். அப்படி பங்கு பெறுபவர்கள் பற்றிய புரிதல் அவற்றை முடிவெடுப்பவர்களைத் தாண்டி முடிவுகளால் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்க்க வேண்டும். பெண்களுக்கான கொள்கைகள் பெண்கள் இல்லாமல்  செயல்பட்டால் அது சாத்தியமற்று போகும்.
பெண்களுக்கான நிறுவனங்கள் மற்றும் பெண்கள் இல்லாத நிறுவனங்களின் தற்போதைய நிலை
சமீபத்திய பொதுத் தேர்தல்களில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், மக்களவையில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 15 சதவீதம் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 2021 யூனியன் கவுன்சில் ஆஃப் மினிஸ்டர்களின் விரிவாக்கத்தில் கடந்த 17 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான பெண் எம்.பி.க்களை அவையில் இடம்பெற்று இருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை குறைவே. மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 78 பெண்களில்  11 பேர் மட்டுமே அமைச்சராக உள்ளனர்.
2022-ஆம் ஆண்டு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ்களில் நியமனம் செய்த மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட 685 நபர்களில் 177 பெண்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அதாவது இது மொத்த சதவீதத்தில் 26% என தெரிவிக்கிறது தரவு புள்ளி. இதில் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் அதிகமான பெண்கள் நிர்வாகப் பிரிவில் நுழைந்தாலும், நாடு முழுவதும் மேல் மாவட்ட ஆட்சியர் பதவிக்கு வரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியல் தளத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதங்கள் பெரும்பாலும்  நபர்களின் எண்ணிக்கையை கடந்து பிரநிதிதுவத்தின் முக்கியதும்தான் என்பதை பகுப்பாய்வு வேண்டும். இது பாலின பாகுப்பாட்டை சமன்படுத்த உதவும்.
“அரசியல், பொருளாதாரம் மற்றும் பொது வாழ்வில் முக்கிய முடிவெடுக்கும் அனைத்து நிலைகளிலும் பெண்களின் முழு ஈடுப்பாட்டையும, பயனுள்ள பங்கேற்பையும் தலைமைத்துவத்திற்கான சம வாய்ப்புகளையும் உறுதி செய்ய” பாலின சமத்துவம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு குறைந்தது 5.5 ஆக இருக்க வேண்டும் என்கிறது. இவை பாலின சமத்துவத்திற்கான மாற்றத்தை நிறுவன முடிவெடுப்பதில் பெண்கள் பங்கேற்பதன் அவசியத்தை இந்த இலக்கு அங்கீகரிக்க உதவும் என்கிறது.
இந்த பரிந்துரையை UN-இன் SDG 5.5 குறியீட்டுடன் சுட்டிக்காட்டுகிறது. இதனால் வலுவான விவாதங்கள் குழுவின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாட்டையுடன் எடுத்துகாட்டுகிறது. ஒதுக்கீடுயின்றி பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்காது என்று சிலர் உறுதியாக நம்பினாலும், சமூக சமத்துவமின்மை மற்றும் பாலின பாகுபாடுகளை வெறும் ஒதுக்கீட்டை மட்டும் வைத்து கொண்டு வழங்கிட முடியாது என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
தேசிய நாடாளுமன்றம் (National Parliament) அல்லது துணை-தேசியத் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகங்களில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் பெற்றிருக்கும் பதவி, பங்கேற்பு மற்றும் வாய்ப்புகளை மதிப்பிடுவது  என்பதை அந்தந்த பகுதி மக்கள் தொகையை கொண்டே நிர்ணயிக்கப்படும் என்கிறது. இந்த குறியீடுகள் மற்றும் தீர்வுகள் முதன்மையாக எடுத்து கொண்டாலும் கூட இவை சரியானதா என மற்றொரு கேள்வியையும் முன் வைக்கிறது. ஏன் என்றால் நமது தேசிய புள்ளிவிவரங்களின் தரவு இதை வேறுவிதமாக கையாள்கிறது. இந்நிலையில் பெண்கள் சார்ந்த நிறுவன கொள்கை முடிவுகள் பற்றிய விவாதம் மிகவும் கவனிக்கதக்கது.
கடந்த 10 ஆண்டுக்கு மேலாக, இந்திய சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்காக வந்து இருக்க வேண்டிய மசோதா வராமல்போனது. ஆனால், அதற்காக தொடர்ந்த 10 ஆண்டு காத்திருப்புக்கு பின், 2008-ஆம் ஆண்டு லோக்சபா திருத்த மசோதா (Amendment) மற்றும் மாநில சட்டசபைகளில் கொண்டுவரப்பட்டது. பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க வேண்டும். லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கவும் எனவும் அறவிக்கப்பட்டது.
மசோதாவின் நோக்கங்களில் கூறப்பட்ட அப்போதைய சட்டம் மற்றும் சமூக நீதி அமைச்சர் ஹெச்.ஆர்.பரத்வாஜ் வலியுறுத்தியபடி, இந்த மசோதா பெண்களுக்கு அரசியல் ரீதியாக அதிகாரம் அளிக்க முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையை வழி மொழிந்தார்.
அதன் பிறகு 2009-இல் சிறப்பாக நியமிக்கப்பட்ட நிலைக்குழுவால் மசோதா மீதான கூடுதல் விவாதங்கள் புதிய நுணுக்கங்களைக் கொண்டு வந்தன. வெவ்வேறு தொகுதிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதியில் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. கூடுதலாக, விளிம்புநிலைப் பெண்களுக்கு என ஒதுக்கப்படும் இடங்களும் கூறப்பட்ட சமூகக் குழுவில் அவர்களின் மக்கள்தொகை விகிதத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
அதன் பிறகு மகளிர் இடஒதுக்கீடு மசோதா (108-வது திருத்தமசோதா) மார்ச் 9, 2010, இந்திய நாடாளுமன்றத்திலிருந்து நிலுவையில் இருக்கிறது. மக்களவை மற்றும் பெண்களுக்கான அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் இடங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டு, தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களில் ஒருமுறை மட்டுமே இடம் ஒதுக்கப்படும் வகையில் சீட்டுக் குலுக்கல் மூலம் தீர்மானிக்கப்படும்.
“ஆண்கள் பொது விவாதங்களில் பெண்களைப் பற்றி பேச விரும்புகிறார்கள், ஆனால் இந்த ஆண் அரசியல்வாதிகள் பெண்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்களா? என்பது இன்னுமும் கூட கேள்விகுறியே”
பெண்களுக்கான கொள்கை, கொள்கைகாக பெண்களா?
ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்தன்று, சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைச் சட்டமாக்க வேண்டும் என்று அழைப்பு மீண்டும் மீண்டும் விடுக்கப்படுகிறது. கொள்கை வகுப்பதில் பாலினத்தின் பங்கை நிவர்த்தி செய்வதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதாகக் கூற,  இத்தகைய தரவுகளால் ஊர்த்திப்படுத்துகிறது.
உலகம் முழுவதும், மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50%, பொது அலுவலகங்களில் பெண்கள் 22.5% மட்டுமே உள்ளனர்.
நாடாளுமன்றத்துக்கு இடையேயான பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் பார்லிமென்டரி யூனியன் தொகுத்துள்ள தரவுகளைப் பார்த்தால், இந்தியா – 11.8% என்கிறது ஆய்வு. உலக 193 நாடுகள் பங்கேற்ற இந்த ஆய்வில் இந்தியா 148-வது இடத்தில் உள்ளது என்கிறது ( Inter Parlimentary Union IPU).  பொலிவியா, கியூபா மற்றும் ருவாண்டா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே 50% பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. தற்போதைய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14%-க்கும் அதிகமாக உள்ளது என்ற உண்மை இருந்தபோதிலும், இது சர்வதேச சராசரியான 22% ஐ விட இன்னும் குறைவாகவே உள்ளது.
படிக்க :
♦ நைட்டி : தேசங்கள் கடந்த பெண்களின் பொது உடை || சிந்துஜா
♦ பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா
நாட்டின் சட்டமன்ற அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றம் திறம்பட சட்டமாக்க வேண்டும்.
இரண்டாவதாக, நிறுவனங்கள் பிரிவு 149 சட்டத்தின்கீழ் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் பெண்களை சேர்க்க வேண்டும். இது இப்படி இருக்க மற்றொரு பக்கம், டெலாய்ட்டின் (DeloIitte) சமீபத்திய ஆய்வில், 12% பெண்கள் மட்டுமே பிரதிநிதிகளால் நிரப்பப்பட்டுள்ளன.
நாட்டின் இறுதியாக, பெண்களுக்கான தேசிய ஆணையம் (NCW), இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைப் பங்கு வகிக்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பானது, வளர்ச்சித் துறை, தனியார் துறை, பல்வேறு சமூகங்கள் மற்றும் நாட்டின் பிராந்தியங்களில் உள்ள பெண்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட வேண்டும். பாலின சமத்துவம் தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும் உண்மையான பிரதிநிதித்துவ உச்ச அமைப்பாக இது செயல்பட வேண்டும். பாலின சட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கும் சிறந்த சர்வதேச நடைமுறைகளைப் படிப்பதில் முன்னணி வகிக்கவும் NCW பணிபுரிய வேண்டும்.
அரசியல்  சுழலில் பெண்களின் பிரச்சினைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆக, பெண்களான கொள்கை முடிவுகளில் பெண்கள் மற்றும் சிறுபாண்மையினர் இல்லாமல் கொள்கைகளை வகுத்தால் அது பயனற்று போவதுடன் எந்தவித சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதும் தெரிய வருகிறது. ஆக, பெண்களை பிரதிநிதித்துவத்தை தொடர்ந்த எல்லா இடங்களில் பெண்கள் பேச தொடங்குவோம் மாற்றத்தை முன்னெடுப்போம்.
சிந்துஜா
சமூக ஆர்வலர்.
disclaimer