Tuesday, June 30, 2026
முகப்பு பதிவு பக்கம் 307

முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !

1

முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் ஒரு பகுதியாக நரேந்திர மோடி அரசாங்கம் நிறைவேற்றிய குடியுரிமை (திருத்த) மசோதா, இந்தியர்களில்  மிகவும் ஏமாற்றப்பட்டவர்கள் இந்துக்கள்  என்பது ஒரு முக்கியமான அனுமானமாக உள்ளது. ஏனென்றால் அடுத்ததாக வரும் தேசிய குடிமக்களின் பதிவேட்டில் (என்.ஆர்.சி), நூற்றுக்கணக்கான மில்லியன் குடிமக்கள் விரைவில் தங்கள் தேசியத்தை நிரூபிக்க வரிசையில் நிற்பார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்துக்களாக இருப்பார்கள்.

சமீபத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த தொலைக்காட்சி விவாதத்தின் போது, பாஜக சார்பு பேச்சாளர் ஒருவர் இந்த அரசாங்கம் முஸ்லிம்களை வெறுக்கவில்லை என்று என்னிடம் உறுதியளித்தார்.  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதால் பாதுகாப்பு கோரும் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு பாகுபாடும் உருவாகாது எனவும் அவர் தெரிவித்தார். இந்த வியக்கத்தக்க அறிவிப்புக்கான ஆதாரமாக, இந்தியா 2015-ல் அட்னான் சாமிக்கு குடியுரிமையை வழங்கியதை அவர் கூறினார்.  நான் அப்போது கிட்டத்தட்ட தொலைக்காட்சியில் சத்தமாக சிரித்தேன்.

லண்டனில் பிறந்த பணக்கார, புகழ்பெற்ற பாகிஸ்தான் குடிமக்களுக்கு அன்புக்காக எந்த அரசாங்கமும் இத்தகைய குடியுரிமையை வழங்கும். நான் எனது இந்தியாவிற்காகவும், என் சக இந்தியர்களுக்கும் – முஸ்லீம் மற்றும் இந்து மற்றும் அனைவருக்குமாக அக்கறை செலுத்துகிறேன். குறிப்பாக ஏழ்மையான, காகிதமில்லாத, ஆவணமற்றவர்களுக்காக நான் கவலை கொள்கிறேன்.

NRC மற்றும் CAB ஆகியவை ஒரே மோசமான விதைகளின் இரட்டையர்கள்; ஆனால் அவை வேறுபட்டவை. CAB என்பது இந்திய அரசியலமைப்பு மீதான தெளிவான ஒரு கருத்தியல் யுத்தம் மற்றும் ஒரு பிரச்சார கருவி.

கருத்தியல் – ஏனென்றால் அது குடியுரிமைக்கான ஒரு அடையாளமாக துன்புறுத்தப்பட்ட, இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களை மூன்று முசுலீம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து பாதுகாப்பதாகக் கூறி ‘மதம்’ என்பதை சட்ட முன்மாதிரியாக நிறுவுகிறது. ஆனால், முசுலீம்களை அதிலிருந்து வெளியேற்றுகிறது. முசுலீம்களை வெல்வதற்கு, அவர்களுக்கு அரசியலமைப்பு தந்திருக்கிற உரிமைகளை  மறுப்பது, அச்சத்தை பரப்புவது, அவர்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை வழங்குவது உள்ளிட்டவற்றைச் செய்வது. இந்தியாவை அழித்து பிளவுபடுத்தி, காவி பார்வையுடன் முன்னேறுவது. இதுதான் அந்தக் கருத்தியல் யுத்தம்.

அடுத்தது பிரச்சாரம் – ஏனெனில் மத்திய உள்துறை அமைச்சர் இந்துக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி.யால் பயப்பட ஒன்றுமில்லை என்று கூறிக்கொண்டே இருக்கிறார். உண்மை என்னவென்றால், என்.ஆர்.சி நம் அனைவரையும் அழித்துவிடும். இந்துக்களையும் கூட.

அரசாங்கத்தின் CAB – NRC திட்டம் அனைத்து இந்தியர்களின் பயம், கீழ்ப்படிதல் மற்றும் அடிமைப்படுத்துதலின் விவரிப்பையும் ஆட்சியையும் முன்வைக்கிறது. குடியுரிமை என்பது ஒரு தேசத்தைச் சேர்ந்த மிக அடிப்படையான மனித உரிமை, இந்த பரந்த கிரகத்தில் ஒரு சிறிய இடத்தை உங்கள் நாடு என்று கூறுவது, அதன் பாதுகாப்பிற்கு உரிமை பெறுவது.

இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்முறைப்படுத்துவதாக அரசாங்கம் அச்சுறுத்துகிறது. விலக்கி வைக்கப்பட்ட இந்துக்கள் குடியுரிமை சட்டத்தின் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் பிரச்சாரம் செய்கிறது. அமித் ஷாவே பிசைந்து உருவாக்கிய பிரசாத லட்டு எனவும் சொல்லப்படுகிறது. டிசம்பர் 9, 2019 அன்று மக்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்திய உள்துறை அமைச்சர் பேசியதைக் கேளுங்கள். அவர் தேர்ந்தெடுத்த சொற்களில் கவனம் செலுத்துங்கள்; அவரது உடல் மொழியைப் பாருங்கள். ஒரு இடைக்கால சர்வாதிகாரி ஒருவரை கற்பனை செய்யுங்கள். அவர் விரும்பும் போது குடியுரிமையை வழங்குவார் அல்லது குடியுரிமையை பறிப்பார். அவர் உங்களை மகிழ்ச்சி படுத்தும்போது, “நாங்கள் அவர்களுக்கு குடியுரிமையைக் கொடுப்போம்; அவர்களுக்கு நாங்கள் குடியுரிமையைக் கொடுப்போம்” . ‘நாம்’ -மதிப்பிற்குரிய ‘நாங்கள்’.

இது ஒரு கருத்தியல் திட்டத்தின் குருட்டுத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அது தனது சொந்த உரிமை கோரல்களை, அதாவது இந்துக்களைக் கூட கவனிப்பதில்லை. CAB மற்றும் NRC இரண்டின் தெளிவான இலக்கு முசுலீம்கள். அது நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்த அரசாங்கம் இந்திய முசுலீம்களின் உரிமைகளைத் தகர்த்து, பறிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்துத்துவா திட்டத்திற்கு முசுலீம்களை விரட்டுவது முக்கியம். அதைப் பற்றி தொடர்ந்து பேசுவது கடினமானது. அதுதான் அவர்கள் யார் என்பதைக் காட்டுகிறது. இதுதான் அவர்களின் கீழ்த்தரமான அரசியல் வகைமை. அதிலிருந்து வேறுபட்டதை நாம் எதிர்பார்க்கக்கூடாது.

ஆனால் அசாமில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்,  இந்தத் திட்டத்துக்கு ஏற்கெனவே லட்சக்கணக்கான இந்தியர்கள் விலை கொடுத்துள்ளனர்; மேலும் பல மில்லியன் கணக்கானவர்கள் இதற்கான விலையைச் செலுத்துவார்கள். அசாமில் இருந்து வரும் இதயத்தை உடைக்கும் படங்களை நினைவு கூருங்கள். இவர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள்; அவநம்பிக்கையான மக்கள். ஆம், லட்சக் கணக்கில் இந்துக்களும் உள்ளனர். அசாமில் உள்ள என்.ஆர்.சிக்கு ஒரு குறிப்பிட்ட உள்ளூர் வரலாறு மற்றும் பகுத்தறிவு இருந்தது. பாஜக அதை வகுப்புவாதமாக்க முயன்றது. அதன் இந்து-முஸ்லீம் கண்ணோட்டத்தை அசாமி-பெங்காலி என்ற பிழையான கோட்டின் மீது மிகைப்படுத்தியது; உச்சநீதிமன்றம் அதை மனிதாபிமானமற்ற முறையில் நடைமுறைப்படுத்தியது. மேலும், அங்குள்ள பரிதாபகரமான சோகமான குழப்பத்தைப் பாருங்கள். இந்தியாவின் பிற பகுதிகளில், என்.ஆர்.சி பெரிய அளவில் மிகப்பெரும் குழப்பத்தை உருவாக்கும்.

என்.ஆர்.சி செயல்படுத்த தொடங்கியவுடன், அமித் ஷாவும் அவரது அதிகாரிகளும் வேறுவிதமாக முடிவு செய்யும் வரை நாம் அனைவரும் குடிமக்கள் அல்லாதவர்களாக குறைக்கப்படுவோம். அந்தத் தருணத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அனைத்து (முஸ்லீம்) ‘கரையான்களையும்’ மற்றும் ‘ஊடுருவல்காரர்களையும்’ ஒரு தேசிய என்.ஆர்.சி  மூலம் விரட்டுவோம் என உள்துறை அமைச்சர் பலமுறை மிரட்டியுள்ளார், ஆனால் CAB மூலம் இந்துக்களை காப்பாற்ற சத்தமாகவும் தெளிவாகவும் சபதம் செய்தார். இந்த கூற்று உண்மையில் எப்படி இருக்கும் என்பதை ஆராய்வோம்.

என்.ஆர்.சியின் அசாம் வார்ப்புருவைப் பொறுத்தவரை, நிரூபிக்கப்படும் வரை நாம் அனைவரும் குடிமக்கள் அல்லாதவர்களாக கருதப்படுவோம். இந்துக்களும் கூட.

♦ 3.3 கோடி அசாம் குடியிருப்பாளர்கள் அனைவரும் என்.ஆர்.சி.க்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது என்பதை நினைவில் கொள்க. இந்துக்களும் கூட.

♦ நம் நாடு நம்முடையது என்பதை நிரூபிக்க நாம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கும். இந்துக்களுக்கும் கூட.

♦ அஸ்ஸாமில் உள்ள என்.ஆர்.சி-யிலிருந்து வெளியேறிய எந்த இந்துவும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார், ஏனெனில் குடியுரிமை திருத்த சட்டம் என்ற சர்க்கஸின் மாஸ்டரே அவர்தான்.

♦ வாழ்த்துக்கள். ஏறக்குறைய நீங்கள் அங்குதான் இருக்கிறீர்கள். இப்போது என்ன?

♦ அசாமில் உள்ள என்.ஆர்.சி-யிலிருந்து 19 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர், வட இந்தியாவைச் சேர்ந்த பெங்காலி அல்லாத இந்துக்கள் உட்பட 12 லட்சம் இந்துக்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

♦ அவர்கள் ஒவ்வொருவரும் இந்திய குடிமக்கள் என்று கூறிக்கொண்டனர். ஆனால் அவர்கள் பங்களாதேஷில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட அகதிகள் என்று கூறுமாறு CAB கோருகிறது.

♦ 12 லட்சம் பேர் தங்கள் ஆவணங்கள் மோசடியானவை என்று சொல்ல வேண்டியிருக்கும், அவர்கள் பொய் சொன்னார்கள். அதனால்தான் CAB அவர்களுக்கு எந்தவொரு சட்ட நடவடிக்கையிலிருந்தும் விலக்கு அளிக்கிறது.

♦ இந்த இந்துக்களும் 1971-க்கு முன்னர் அசாமுக்கு வந்ததாகக் கூறியவர்கள். என்.ஆர்.சிக்கான இறுதி கெடுவும் அதுவே.

♦ ஆகவே, 1971 க்கு முந்தைய லட்சக்கணக்கான இந்த இந்துக்கள், பெங்காலி அல்லாதவர்கள் உட்பட, முதலில் தாங்கள் கிழக்கு பாகிஸ்தானியர்கள் என்று அறிவிக்க வேண்டும், பின்னர் 1) நான் இந்தியன் என்று பொய் சொன்னேன். 2) பங்களாதேஷால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறுபவர்கள், நான் பொய் சொன்னேன், ஏனென்றால் நான் உண்மையில் 1971 க்குப் பிறகு வந்தேன், பங்களாதேஷ் பிறந்ததும் 3) நான் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என சொல்ல வேண்டும்.

அதனுடைய நல்ல அதிர்ஷ்டத்துக்கு வாழ்த்துகள்.

மேலே உள்ள அனைத்தையும்  கவனித்துக்கொள்வதற்கு CAB ‘விதிகள்’ எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பது எனக்கு வியப்பளிக்கிறது.

இந்தியாவின் பிற பகுதிகளில் என்.ஆர்.சி செயல்படுத்தப்பட்டாலும், CAB வந்த பிறகும், எந்த வித்தியாசமும் இருக்காது. காகிதமில்லாத ஏழை தமிழ் இந்து என்.ஆர்.சிக்கு என்ன சொல்லப் போகிறார்? நான் உண்மையில் ஒரு ஆப்கானி. மோசமான விஷயம் என்னவென்றால், பங்களாவின் ஒரு வார்த்தையும் பேச முடியாது, ஆனால் நான் உண்மையில் வங்க தேசத்தைச் சேர்ந்தவன்.. அடிப்படையில், இந்தியாவில் ஒவ்வொரு காகிதமற்ற ஏழை இந்துவும் எப்படியாவது பாதுகாக்கப்படுவார் ஏனெனில் CAB இங்கே உள்ளது என்பது அபத்தமான பிரச்சாரம்.

ஒரு சர்வாதிகார அரசாங்கத்திற்காக குடியுரிமை பெறுவதற்கான தணிக்கைக்கு நாம் அனைவரும் வரிசையில் நிற்க வேண்டும் என்பதே என்.ஆர்.சி திட்டம் ஆகும். முசுலிம்கள் மிகவும் பயப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் வகுப்புவாத என்.ஆர்.சி இயந்திரங்களால் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள்; குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில். ஆனால், அனைவரும் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். யோசித்துப் பாருங்கள். இந்த நாட்டில் யாருக்கு ‘குடியுரிமை’ ஆவணங்கள் இல்லை? ஏழைகள், கிராமப்புறங்கள், நிலமற்றவர்கள், குடியேறியவர்கள், வீடற்றவர்கள், பெண்கள். இந்துக்களுக்கும் கூட. NRC-CAB திட்டம் ஒரு பிளவுபட்ட சித்தாந்தத்தின் சேவையில் மக்கள் விரோத அரசியல் கருவியாகும்.

படிக்க:
“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !
’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் !

அசாமில் மட்டும் என்.ஆர்.சி.க்கு ரூ. 1,220 கோடிக்கு மேல் செலவாகும் என்பதால், இந்தியா முழுவதிலும் இது ரூ. 50,000 அல்லது 60,000 கோடிக்கு மேல் செலவு பிடிக்கலாம். ஊர்ந்து செல்லும் பொருளாதாரம் மற்றும் வேலையின்மையை பெரிதாகி வரும் சூழலில், இது பைத்தியக்காரத்தனமான ஆளுகை. இதன் நோக்கம் என்னவென்றால், பாஜக இந்து-முசுலீம் உறவை ஒரு வகையான கொதிப்பிலேயே வைத்திருக்க வேண்டும். எல்லோரும் என்றென்றும் ஒரு இந்து அல்லது ஒரு முசுலீம் என்பதை உறுதிசெய்து, வெங்காய விலையை மறக்கச் செய்து, 2024 தேர்தலில் பாஜக வெற்றிபெற உதவ வேண்டும். நாடு முழுவதும் பெரும் குழப்பம் இருக்கும். இதன் தாக்கத்தை முசுலீம்கள் தாங்குவர், ஆனால் இந்தியாவின் பரந்த இந்து மக்களும் இதன் இணை சேதத்தை சந்திப்பார்கள். குடிமக்களாகிய நம்முடைய எல்லா உரிமைகளும் என்றென்றும் அழிக்கப்படும்.

இந்தியர்களாகிய நாம் இதைப் பார்க்க முடியாவிட்டால், இப்போது CAB-NRC திட்டத்தை எதிர்க்காவிட்டால், நாம் அனைவரும் விரைவில் மும்மடங்கு ஆவணங்களை வைத்துக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். பணமதிப்பழிப்புக்குப் பின் நாம் எப்படி முட்டாள்களாக வரிசையில் நின்றோம் என்பதை நினைவில் கொள்க. எனது 12 வயது மகன் ஈதிற்காக தனக்கு கிடைத்த பழைய 500 ரூபாய் தாளைப் பற்றி இன்னமும் வருத்தப்படுகிறான். ஒரு மழை நாளில் அதை தனது உண்டியலில் மறைத்து வைத்தான். பணமதிப்பழிப்பு பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது, எனவே பயனற்ற அந்தத் தாள் அப்படியே தேங்கிவிட்டது.

இது இப்போது எனது மேசை டிராயரில் உள்ளது. நம் காலத்தின் நினைவுச்சின்னம். நான் அவனுக்கு ஒரு புதிய ரூபாய் தாளை கொடுக்கவில்லை. பாசிசம் குறித்து அவன் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த CAB-NRC கனவைத் தடுக்க இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சீக்கியர்களும் இன்று ஒன்றுபடாவிட்டால், அந்த நள்ளிரவு நேரத்தில் எங்கள் தாத்தா, பாட்டி மற்றும் பெரிய தாத்தா பாட்டி எங்களுக்காக ஒன்றாக வென்ற விலைமதிப்பற்ற சுதந்திரத்தை காட்டி கொடுத்தவர்களாகிவிடுவோம். நாம் பிளவுபட்ட தேசமாக இருப்போம். ஜின்னா அவரது கல்லறையிலிருந்து சிரிப்பார். எங்களுக்குத் தெரிந்த இந்தியா நம் காலத்தின் நினைவுச் சின்னமாக இருக்கும்.


கட்டுரை :  ஃபரா நக்வி
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : தி வயர்

சுத்த சைவம் – சுத்த அபத்தம் !

மரக்கறி மட்டும் உண்ணும் உணவு முறை குறித்த எனது கருத்து !

விலங்குக்கு உயிர் இருக்கிறதென்றால், பயிருக்கும் தான் உயிர் இருக்கிறது. விலங்கு மூலம் கிடைப்பது கறி என்றால், செடிகள் மூலம் கிடைப்பதும் கறி தான். ஆட்டுக்கறி தவறென்றால், காய் கூட்டுக்கறியும் தவறு தான்.

எந்தக் கீரை வந்து காதில் கூறியது? என்னைப் பறித்து உண்ணடா மானிடா என்று.. விளையும் பயிரில் எந்தப் பயிர் கூறியது? என்னை மட்டும் மூன்று வேலை உண்ணடா மானிடா என்று…

பயிரை நாடி வரும் பூச்சியை கொன்றேன், பூச்சிக்கொல்லி வைத்து.. பூச்சியை நாடி வந்த எலியைக்கொன்றேன், எலிக்கொல்லி வைத்து.. நெற்கதிரை உண்ண வந்த கொக்குக்கு க்ரேன் பாய்சன் வைத்து..

நெருக்கம் நெருக்கமாக மூச்சு முட்டுமாறு நடப்பட்ட நெற்பயிரில் இருந்து வந்த அரிசியில் ஒன்றாவது கூறியதா? என்னை மட்டும் தான் நீ சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும் மானிடா என்று.

கொல்லக்கூடாது என்றால், ஒரு உயிரையும் கொல்லக்கூடாது!

டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா நோய்களைத்தரும் கொசுக்களுக்கும் உயிருண்டு அறிவோம். உயிரைக்கொல்வது தவறென்போர் இனி ஒரு போதும் மஸ்கிட்டோ கில்லரை ஆன் செய்யக்கூடாது..

டைபாய்டு, வயிற்றுப்போக்கு நோய்களைத்தரும் கரப்பான்பூச்சிகளுக்கும் உயிருண்டு அறிவோம். இனி ஒரு போதும் ஸ்ப்ரே அடித்து அவற்றை கொல்லக்கூடாது.

உயிர்களைக் கொல்லக்கூடாது என்றால்… பாக்டீரியாவுக்கும் உயிர் உண்டு, அதுவும் இனப்பெருக்கம் செய்கிறது. வைரஸ்-க்கு கூட உயிர் உள்ளது! பூஞ்சை காளானுக்கு உயிர் உள்ளது !

ஆண்டிபயாடிக், ஆண்ட்டி வைரல், ஆண்ட்டி ஃபன்கல் மாத்திரைகள் எதுவும் எடுக்காமல் இருக்க வேண்டும்…

ஒரு கிளாஸ் தண்ணீரில் பல கோடி நுண்ணுயிர் உண்டு. தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி அவற்றை கொன்று குடிப்பதேன்? மீண்டும் கூறுகிறேன் உணவுக்காக அன்றி பல்வேறு காரணங்களுக்காக உயிர்கள் உலகில் பலியாகின்றன. அடுத்தவன் உணவுத் தட்டில் எட்டிப்பார்ப்பது அநாகரீகம்.

மரக்கறி மட்டும் சாப்பிட விரும்பும், மானுடர் அதை மட்டும் சாப்பிடட்டும். விலங்குக்கறி மட்டும் சாப்பிட விரும்பும் மானுடர், அதை மட்டும் சாப்பிடட்டும். மரக்கறியோடு விலங்குக்கறியும் சேர்த்து சாப்பிட விரும்பும் மானிடர்
இது இரண்டையும் சேர்த்து சாப்பிடட்டும்.

உணவுப் பரிசோதனையை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த மகாத்மா காந்தியால் கூட பாலுக்கும், முட்டைக்கும் சிறந்த மாற்று கூற முடியவில்லை.

மனிதன் இயற்கையில் ஒரு அனைத்துண்ணி. அவன் மரக்கறியும்; விலங்குக்கறியும் உண்ணப் படைக்கப்பட்டவன்.

படிக்க :
மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !
♦ பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை

ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வருடம் தோறும் எழுபது லட்சம் பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்து வரும் நம் தேசத்தில், பால் கூட உண்ணாத மரக்கறி முறையால், இன்னும் பல குழந்தைகளை கொன்றொழிக்கும் அபாயம் இருக்கிறது.

மகாத்மா காந்தி அவர்கள் பால் கூட உண்ணாத முறையில் ஐந்து வருடங்கள் இருந்து, பிறகு உயிருக்கு அபாயமான சூழலில் மருத்துவர்களின் பலவந்தத்தில் ஆட்டுப்பால் அருந்த ஆரம்பித்தார்.

மிருக வதை தவறு. அதை அனைவரும் எதிர்க்கிறோம் ஆனால் உணவுக்காக மிருகங்களை உண்பது தவறாகாது. அதுவே சிறந்தது.

இன்றும் முட்டை தரும் புரதத்துக்கு இணையில்லை. உலகின் வேறு உணவுப்பொருட்களில் உள்ள புரதச்சத்தை முட்டை கொண்டே கம்பேர் செய்வார்கள்.
Egg has complete protein. இன்றும் இரும்புச்சத்து ஏறுவதற்கு சிறந்த உணவு மிருக மாமிசம் மற்றும் கல்லீரல் / செவரொட்டி தான்.

மாதிரிப் படம்

பால் கூட உண்ணாத, மரக்கறி உணவுமுறையில் வெகுநாட்கள் சப்ளிமெண்ட் இல்லாமல் நீடிக்க முடியாது. B complex விட்டமின்களுக்கு,
புரதச்சத்துக்கு என சப்ளிமெண்ட் எடுக்க வேண்டும். நாட்டில் அனைவராலும் சப்ளிமெண்ட் எடுக்க முடியாது.

காரணம் அன்றாட உணவுக்கே இங்கு பாதி பேருக்கு வழியில்லை. எனவே அறிவுக்கும் உடலுக்கும், ஆரோக்கியத்துக்கும் பொருந்தாத இந்த உணவு முறை குறித்து உங்கள் குழந்தையோ, வீட்டில் இருப்போரோ பேசி வந்தால் அவர்களுக்கு தெளிவாக புரிய வைத்து விடுங்கள்.

அது உங்கள் பொறுப்பு.

மரக்கறி + விலங்குக்கறி + பால் பொருட்கள் = உடலுக்கு சிறந்தது.

மரக்கறி + பால் பொருட்கள் = தனிப்பட்ட விருப்பம் / சப்ளிமெண்ட்டுகளுடன் தனிப்பட்ட எண்ணத்தில் தொடர முடியும்.

மரக்கறி மட்டும் = நீண்ட நாள் சப்ளிமெண்ட் இல்லாமல் தொடர்வது உடலுக்கு உயிருக்கு ஆபத்து / கட்டாயம் சப்ளிமெண்ட்கள் அவசியம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் – புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம் !

0

காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் !
அரங்கக் கூட்டம் – புமாஇமு – திருச்சி

”அதிகரிக்கும் சாதி – மத – இன ரீதியான தாக்குதல்கள், திணிக்கப்படும் புராண – இதிகாச குப்பைகள், காவிமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள் காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வியை மீட்போம்” என்னும் தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் கடந்த டிச-12 அன்று திருச்சியில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

உரையாற்றும் பிரித்திவ், அரங்கத்தில் பேராசிரியர் மன்சூர் மற்றும் தோழர் கணேசன்.

பு.மா.இ.மு.வின் மாவட்ட அமைப்பாளர் தோழர் பிருத்திவ் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்டத்தில், CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் பி.மு.மன்சூர் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.

தோழர் பிருத்திவ் தனது தலைமை உரையில், ”இன்று அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சார்பு ஆட்களையே முதல்வர்களாகவும் துணைவேந்தர்களாகவும் நியமித்து வருகிறார்கள். காவி பிடியில் கல்வி செல்கிறது என்றால் இன்னொரு பக்கம் கார்ப்பரேட்டுகள் கல்வியையே கொள்ளை அடித்து செல்கிறார்கள். இந்த கார்ப்பரேட் கொள்ளையையும் வேலையின்மையையும் பற்றி சிந்திக்கவிடாமல் இந்துத்துவா பிரச்சாரத்தை கிளப்பி மக்களை திசைதிருப்பி விடுகிறார்கள்.” என்பதை அம்பலப்படுத்தினார்.

பேராசிரியர் பி.மு.மன்சூர்.

திருச்சி CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் பி.மு.மன்சூர் பேசுகையில், ”நாட்டில் தற்போது நிலவும் வேலையின்மை மிக மோசமாகவுள்ளது. பட்டபடிப்பு படித்து வந்தாலும் இங்கு வேலையில்லை. ஆனால் இவர்கள் கொண்டு வரும் புதிய தேசிய கல்விக்கொள்கை ஏழை, கிராமப்புற மாணவர்கள்  இனி படிக்கவே முடியாத அளவுக்கு மாற்ற போகிறது. பார்ப்பனியம் அந்த காலத்தில் எவ்வாறு நம்மை அடிமை படுத்தி வந்ததோ, அதே போல் இன்று மீண்டும் அதற்கான வேலைகளை பல வழிகளில் செய்து வருகிறது” என்பதனை விரிவாக விளக்கினார்.

தோழர் கணேசன் .

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், ”இந்த காலகட்டத்தில் நம் நாடு முழுக்க அச்சம் குடிகொண்டு இருக்கிறது. இந்த அச்சத்திற்கு எதிராக JNU மாணவர்கள் போராட்டம் முன்னுதாரணமாக இருக்கிறது. மாணவர்கள் மாபெரும் பேரணி சென்று பாராளுமன்றத்தையே முற்றுகையிட்டு போராடுகின்றனர்.  சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் RSS-ன் அராஜகம், உயர் கல்வி நிறுவனங்கள் முழுக்க காவிபிடியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வேளையில் இதனை முறியடிக்க JNU மாணவர்கள் போராட்டம் நமக்கு வழிகாட்டுகிறது. அந்த வகையில் இந்த காவிக் கும்பலை விரட்டுவோம்” என்றார்.

தோழர் சுரேஷ்.

இறுதியாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் திருச்சி மாவட்ட  பொருளாளர் தோழர் சுரேஷ் வழங்கிய நன்றியுரையோடு அரங்கக்கூட்ட நிகழ்வுகள் நிறைவுற்றன. பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்ட நிகழ்வுகள், காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கு, ஆசிரியர்கள் – மாணவர்கள் – பெற்றோர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டம் உணர்த்தியது.

படிக்க:
அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !
அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !


தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.
தொடர்புக்கு : 99431 76246.

திருச்சி அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் போராட்டம் !

0

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி ரெய்னால்ட்ஸ் சாலையில் உள்ளது அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி. இங்கு வெளியூர்களில் இருந்து வந்து பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் கல்லூரி மாணவிகள் தங்கியுள்ளனர். இவ்விடுதியில் சேர்வதற்கு மாணவிகளிடம் 5,000 முதல் 10,000 வரை பணம் வாங்கிக் கொண்டுதான் சேர்க்கிறார்கள்.

இதனால் பணம் கொடுக்க முடியாத மாணவிகள் பலருக்கும் இவ்விடுதிகளில் இடம் கிடைக்கவில்லை. இப்படி மாணவிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தரமான உணவு, குடிநீர், கழிப்பிடம் அமைத்து கொடுக்கவில்லை. இங்கு உள்ள போர்வெல்லில் அடிக்கடி மோட்டார் பழுதாகி விடுகிறது. இப்படி மோட்டார் பழுதாகும் போதெல்லாம் அதற்கும் மாணவிகளிடம் பணம் கேட்டு நிர்பந்திக்கிறார் விடுதி காப்பாளர்.

16.12.2019 அன்று காலை முதலே தண்ணீர் வரவில்லை. இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும் கூட வெளியிலிருந்து வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வாங்கி பயன்படுத்துவதுதான் நிலைமையாக இருந்து வந்தது. இதை சரிசெய்ய விடுதி காப்பாளரிடம் முறையிட்ட போது அரசிடமிருந்து பணம் வரவில்லை நீங்கள் அனைவரும் சேர்ந்து பணம் கொடுங்கள், சரிசெய்து தருகிறேன் என்றுள்ளார். தற்காலிகமாக தண்ணீர் ஏற்பாடு செய்து தரவும் முடியாது என்று கூறியிருக்கிறார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் மாலையில் காலி பக்கெட்டுகளுடனும், அழுக்கு துணிகளுடனும் விடுதி முன் உள்ள சாலையில் அமர்ந்து இரவு வரை போராட்டம் நடத்தினர். உடனே போலிசு விடுதிக்குள் செல்லுங்கள் என்று மிரட்டியது. மாணவிகள் அதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து போராடினர். இறுதியாக தாசில்தார் வந்து சரி செய்து கொடுக்கிறேன் என்று உறுதியளித்தார். அதன் பிறகு உடனே தண்ணீர் லாரி வந்தது. பம்பு செட் சரி செய்யப்பட்டது. கழிவறை சுத்தம் செய்யப்பட்டது.

இன்று நாடெங்கும் மாணவர்களின் போரட்டம் எழுச்சியுற்று வருகிறது. அது பொருளாதார கோரிக்கையோ, அரசியல் கோரிக்கையோ இந்த பாசிச அரசு அதை தீர்ப்பதற்கு வக்கற்றுப் போயுள்ளது. நாடெங்கும் நடக்கும் இந்நிகழ்வுகள் உணர்த்துவது ஒன்றுதான் போராட்டமே நம்முன் உள்ள ஒரே தீர்வு.

படிக்க:
ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் !

0

காஷ்மீரில் தொடங்கி அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மையம் கொண்ட இராணுவ – போலீசு அடக்குமுறை இப்போது டெல்லியில் உச்சம் கண்டுள்ளது. மக்கள் விரோத சட்டங்களை அமலாக்கிக் கொண்டிருக்கும் காவி அரசு, தார்மீக கோபத்தை வெளிப்படுத்தும் மக்களை அடக்கி ஒடுக்க இராணுவம் – போலீசை பயன்படுத்திவருகிறது.

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பும் வகையில், டெல்லி போலீசின் உதவியுடன் களமிறங்கிய குண்டர்படை மூன்று பேருந்துகள், இரண்டு இருசக்கர வாகனங்களை கொளுத்தி வன்முறையைத் தூண்டியுள்ளது.

இதைக் காரணமாக வைத்து அனுமதியில்லாமல் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த டெல்லி போலீசு மாணவர்களை அடித்து உதைத்ததோடு, நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளது. பல்கலைக்கழகத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியுள்ளது.

பல்கலைக்கழகம் உள்ள பகுதியில் குடியிருப்புவாசிகள் சிலர் போலீசுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் பேருந்துகளை எரித்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில் மெரினா போராட்டத்தின் போது குடிசைகளை போலீசே எரித்ததுபோல,பேருந்துகளை டெல்லி போலீசு எரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

இந்த ‘அரங்கேற்ற வன்முறை’ சம்பவத்துக்குப் பின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த போலீசு, ஊழியர்களையும் மாணவர்களையும் அடித்து நொறுக்கியுள்ளது. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரி வாசிம் அகமது கான், போலீசு அத்துமீறி உள்ளே நுழைந்து ஊழியர்களை மாணவர்களையும் அடித்து வலுக்கட்டாயமாக வளாகத்துக்குள்ளிருந்து துரத்தியதாகக் கூறியுள்ளார்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை
♦ கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்

போலீசு அத்துமீறி அமைதியான போராட்டத்தை களைக்கும் வீடியோ…

கல்லூரிக்குள் நுழையும் போலீசு தாக்குதலிலிருந்து மாணவிகளை காப்பாற்றும் பொருட்டு, அரணாக நின்ற மாணவர் ஒருவரை மிகக் கடுமையாக நான்கைந்து போலீசு தாக்குவதும், மாணவிகள் அதை எதிர்த்து நிற்கும் வீடியோவும் போலீசின் ஒடுக்குமுறையை சொல்லும் ஆவணமாகியிருக்கிறது; சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

போலீசு தாக்குதலிலிருந்து தப்பிக்க நூலகத்துக்குள் மறைந்திருந்த மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் போலீசு வீசியுள்ளது. பின் நூலகத்துக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கியதோடு, ஜன்னல்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியுள்ளது. வளாகத்தில் இருந்த மசூதிக்குள் மறைந்திருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது போலீசு. கும்பலாக மாணவர்களை அழைத்துச்சென்ற காவலர்கள் அவர்களை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றும் மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர்.

“மாலை 6.10 மணியளவில் கையெறி குண்டை வீசியது காவல்துறை. புகை மண்டலம் சூழ்ந்த நிலையில், மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் துடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வளாகத்துக்குள் வீசினர். உள்ளே புகுந்து, அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடித்து நொறுக்கினர். கண்ணாடி கதவுகளை உடைத்தனர்” என்கிறார் சட்டம் பயிலும் மாணவர் சயிஃபுல் இஸ்லாம்.

கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ‘பாடம் புகட்டும்’ வகையில் இந்தத் தாக்குதலை போலீசு நடத்தியிருக்கிறது. குறிப்பாக, காஷ்மீரிகள் போன்ற தோற்றத்தில் இருந்த மாணவர்களை தனி அறையில் அடைத்து அடித்ததாகவும் டெலிகிராப் நாளிதழ் தெரிவிக்கிறது. ஞாயிறு மாலை 6 மணிக்கு கல்லூரிக்குள் நுழைந்த போலீசு இரவு 11 மணிவரை அங்கேயிருந்துள்ளது.

படிக்க:
குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! ஆர்ப்பாட்டம் ! நேரலை !
♦ ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் அது என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என மாணவர்கள் கூறிய நிலையில், அருகில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனை இயக்குனர் ஜார்ஜ், குண்டடிபட்ட நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுபோல, டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, போலீசு அதிகாரிகள் பேருந்துக்குள் தீ வைக்கும் காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘போலீசை கொளுத்தவைத்து, பாஜக தனது கேவலமான அரசியலை முடித்துள்ளது’ என அந்த டிவிட்டில் தெரிவித்துள்ளார் அவர்.

கல்லூரியின் எட்டாவது நுழைவாயில் அருகே, பிபிசி செய்தியாளர் புஸ்ரா ஷேக்கின் மொபைல் போனை பிடுங்கிய டெல்லி போலீசு அவரை லத்தியால் அடித்துள்ளது.

“என்னுடைய போனை வாங்கிய போலீசு அதை உடைத்துவிட்டது. என்னை கேவலமாகப் பேசியதோடு லத்தியாலும் தாக்கியது. நான் இங்கே செய்தி சேகரிக்கத்தான் வந்தேன், விளையாட வரவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டத்தை மாணவிகள் சிலரும் பார்த்துள்ளனர்.

நள்ளிரவில் கைது செய்யப்பட்ட மாணவர்களை அடைத்து வைத்திருந்த கல்காஜி காவல் நிலையத்தின் முன் மாணவர்கள், ஆசிரியர், வழக்கறிஞர்கள் குழுமினர். ஆனால், அவர்களிடம் மாணவர்களின் கைது குறித்து முறையான பதிலை அளிக்க மறுத்துள்ளது போலீசு.

மத்திய டெல்லி காவல் அலுவலக வளாக நுழைவாயிலில் மாணவர்களின் பெற்றோர் தர்ணாவில் இறங்கினர். மாணவர்களை விடுவிக்கக் கோரியும் பல்கலைக் கழகத்திலிருந்து போலீசை வெளியேற்றக் கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், பீம் ஆர்மி உள்ளிட்ட அரசியல் அமைப்பினரும் கலந்துகொண்டனர். பெருந்திரளான பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.

“உள்துறை அமைச்சரின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகத்துக்குள் ஒருவரால் நுழைய முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார் பிருந்தா காரத். நள்ளிரவில் மெட்ரோ சேவையும் நிறுத்தப்பட்டது.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அலிகர் முசுலீம் பல்கலைக்கழகம், பாட்னா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இடதுசாரி மாணவர் அமைப்புகள், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் மாணவர் அமைப்புகள் திங்கள்கிழமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

தமிழகத்திலும் அனைத்துப் பகுதி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னையில் நியூ கல்லூரி மாணவர்கள், ஐ.ஐ.டி மாணவர்கள், லயோலா கல்லூரி மாணவர்கள் போரட்டம் நடத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல இடங்களில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி – ஷா-வின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை, தானே புனைந்து உருவாக்கிய திட்டத்தின்படி, வெறியாட்டத்தை நடத்தி முடித்துள்ளது. இனி இந்தியாவை ஆட்சி செய்யப்போவது இராணுவமும் போலீசுமே என பாசிஸ்டுகள் நேரடியாக நடத்திக்காட்டிக் கொண்டுள்ளனர்.


கலைமதி
நன்றி : டெலிகிராப் இந்தியா, நியூஸ் லாண்ட்ரி, த க்விண்ட்

நூல் அறிமுகம் : பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்

சென்னை ராமகிருஷ்ண மடம், பாதராயணரின் பிரம்ம சூத்திரம் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்நூலை மொழிபெயர்த்து விளக்கவுரையும் எழுதியவர் சுவாமி ஆசுதோஷானந்தர் எனப் பதிப்புரையில் சொல்லப்பட்டுள்ளது. பிரம்ம சூத்திரத்திற்குத் தமிழில் பல மொழிபெயர்ப்புகள் உள்ளனவெனினும், புதிதாக வந்த தமிழ் மொழிபெயர்ப்பு என்பதனால் விருப்புடன் அதனைப் படித்தேன். இந்நூலைப் படிக்கும் போது, குறிப்பிட்ட சில பிரச்சினைகள் உறுத்தலாகத் தென்பட்டதால், அதனை இக்கட்டுரையில் பதிவு செய்யலாம் என விழைகிறேன்.

பிரஸ்தான திரயம்

பண்டைய இந்தியாவில் வேதாந்தத் தத்துவம் உருவானதற்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. வேதாந்தத் தத்துவத்திற்கு மூவகை நூல்கள் அடிப்படை நூல்களாக விளங்குகின்றன. இம்மூவகை நூல்களை ப்ரஸ்தான த்ரயம் என்று வைதீகர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவற்றில் வேதங்கள், உபநிடதங்கள் முதல் வகைப்பட்டவை இவற்றை சுருதி பிரஸ்தானம் என்பர். சுருதிகள் என்பவை யாராலோ இயற்றப்பட்டவை என்றோ, எழுதப்பட்டவை என்றோ வைதீகர்கள் ஒப்புக்கொள்வது கிடையாது. பிரபஞ்ச வெளியில் ஒலி வடிவில் நிலவிய பாடல்களை வேத ரிஷிகள் காதுகளால் கேட்டுப்பதிவு செய்தார்கள் என்பது சுருதிகளுக்கு அவர்கள் வழங்கும் விளக்கம். இப்படிப்பட்ட ஒரு விளக்கம் நிச்சயமாகப் பிற்காலத்தியது என்று யூகிக்க முடியும். வைதீக மரபு உருவெடுத்த பின், அதற்குப் பல வகை நூல்களும் பல வித விளக்கங்களும் உருவான பின்னர், ஏதோ ஒரு வகையில் அதன் தொன்மையையும் புனிதத்தையும் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவே சுருதி பிரஸ்தானம் என்ற, அதாவது ரிஷிகளால் கேட்பட்ட பூர்வீகத்தை, வைதீகர்கள் உருவாக்கியிருக்க வேண்டும் என்று யூகிக்கலாம். அதாவது, இது மற்ற நூல்களைப் போல மானுடப் பிறவிகளால் எழுதப்பட்ட நூல் அல்ல (அபௌருஷ்ய) என்ற ஒரு புனித அந்தஸ்தை ஏற்றியுள்ளார்கள்.

வேதாந்தத்தின் இரண்டாவது முக்கியமான நூலாக பகவத் கீதை சொல்லப்படுகிறது. இதனை ஸ்மிருதி பிரஸ்தானம் என்பர். வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் மிகப்பிந்திய காலத்தைச் சேர்ந்தது பகவத் கீதை. பிராமண இலக்கியங்களான வேத உபநிடதங்கள், அவற்றிற்கு இணையாக சிராமணத் தத்துவங்கள் எனப்படும். ஆசீவகம், சமணம், பௌத்தம், இவற்றுக்குப்பின் தோன்றிய ராமாயண மகாபாரதம் என்ற வரிசையில் கடைசியாகத் தோன்றியது பகவத் கீதை. இத்தனை காலங்கள் பின்னால் தோன்றியது என்பதைக் குறிப்பதற்கும், அது பல விசயங்களில் வேத உபநிடதங்களிலிருந்து விலகிச் சென்றது என்பதைக் குறிப்பதற்குமே, அது ஸ்மிருதி பிரஸ்தானம் என்ற இரண்டாம் நிலை அந்தஸ்தில் வைத்துச் சொல்லப்படுகிறது.

படிக்க :
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

மேற்குறித்த இருவகை நூல்களைக் கடந்து, மூன்றாவது நிலையில் தோற்றம் பெற்ற நூலே பாதராயணரின் பிரம்ம சூத்திரம் ஆகும். உண்மையில் வேதாந்தம் என்ற தத்துவம் உருவானதில் இந்நூலே முடிவான பாத்திரம் வகித்தது. வேதங்களின் முடிவு, வேதங்களின் சாரம் என்ற அர்த்தங்களைக் கொண்டதாக இத்தத்துவம் பெயரிடப்பட்டுள்ளது. சிராமணத் தத்துவங்கள் மட்டுமின்றி, சார்வாகம், சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் போன்ற தத்துவங்களும் இக்காலத்தில் நிலைபெற்றுவிட்டதால், வைதீக மரபுக்கென ஒரு தத்துவத்தை உருவாக்கிக் காட்டவேண்டிய அவசியம் இக்காலத்தில் ஏற்பட்டுவிட்டதென்று இங்கு நாம் கணக்கிட முடியும்.  (நூலிலிருந்து பக்.3-4)

ஆளும் வர்க்கம் நேரடியான அதிகாரத்தின் மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது, ஆளும் வர்க்கம் மக்களுடைய ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது (Force and content). இந்த இரு வடிவங்களையும் ஆளும் வர்க்கம் எந்த அளவு வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறதோ அந்த அளவுக்கு அதனால் நீண்டகால ஆதிக்கத்தை நிறுவ முடிகிறது என்பது கிராம்சியின் அணுகுமுறை. அதுபோன்ற ஒரு பார்வை இந்த நூலிலும் (இந்திய வரலாற்றில் பகவத்கீதை – பிரேம்நாத் பசாஸ்) இருக்கிறது. கிராம்சியின் கருத்து இதில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனால் எப்படி இந்தியாவின் ஆளும் வர்க்கம் குறிப்பாக பகவத்கீதையில் நேரடி அதிகாரத்தின் வழியும் உளவியல் ரீதியான அதிகாரத்தை வழியாகவும் மக்களை அதிகாரம் செய்ய நினைத்தது என்ற செய்தியைச் சொல்லுகிறார்.

கிராம்சி சொல்லாத, வஞ்சகம், சதி என்ற ஒன்றையும் கூடுதலாக அடிக்கடி அவர் இந்த நூலில் சொல்லுகிறார். வஞ்சகம், சதி வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. இது பிராமணர் சதி. இது கிருஷ்ணனின் வஞ்சகம். இது இந்துத்துவத்தின் வஞ்சகம் என்று சொல்லக்கூடிய விவாதம் இந்த நூலில் வலுவாக இருக்கிறது. நமக்கொரு பிரச்சினை எழுகிறது. வஞ்சகம் சதி என்ற விஷயத்திற்கு வரலாற்றில் எந்த அளவுக்குப் பாத்திரம் இருக்கிறது? இந்திய வரலாற்றில் இதற்கு பாத்திரம் இருக்கிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன. வஞ்சகம், சதி என்பது பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து வந்த கருத்து. வரலாற்றை விளக்க பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் அதுவும் ஒரு கருவியாகப் பயன்பட்டது. இந்தியாவில் பெரியார் முதலான பலர் இந்த வஞ்சகம், சதி என்ற கருத்தை எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்து மதத்தின் சில நூல்கள் மக்களைக் கைவசம் வைத்துக் கொள்வதற்கு மேலாதிக்க நிலையிலிருந்து சாம, பேத, தான, தண்டம் என்ற சொற்களைச் சொல்லுகின்றன. மக்களைக் கையில் வைத்திருக்க சாம, பேத, தான தண்டத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது, மதத்தை எப்பொழுதும் ஒரு கருவியாக வைத்துக்கொள் என்று சொல்வது என்பன இதுபோன்ற அரசியல் விஷயங்களில் மிகப் பழைய காலத்திலேயே பதிவாகி உள்ளன. நேரடி அதிகாரம், மறைமுகமான கருத்தியல் செல்வாக்கு இவற்றுடன் வஞ்சகம் சதி போன்ற விஷயங்களும் இந்திய வரலாற்றில் பணிபுரிந்திருக்கின்றன என்பதையும் கணக்கிலெடுத்துத்தான் சிந்திக்க வேண்டி இருக்கிறது. (நூலிருந்து பக்.24)

நூல் : பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 24
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval

ஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 15

ரம்பக் கட்டப் போதனை முறை முழு எதிர்கால நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் சக்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், ஒவ்வொரு பள்ளி நாள் குறித்தும் மகிழ வேண்டும், ஒவ்வொரு முறை ஆசிரியரைச் சந்திக்கும் போதும் சந்தோஷப்பட வேண்டும், ஒவ்வொரு முறை பாடத்திற்கு மணியடிக்கும் போதும் உற்சாகப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளி வாழ்க்கை அவனுடைய வாழ்க்கையின் சாரமாக இருக்க வேண்டும். சத்தம் போடுதல், திட்டுதல், அச்சுறுத்தல், முரட்டுத்தனம் ஆகிய விஷயங்கள் குழந்தைகளுடன் கலந்து பழகுவதில் தலைகாட்டவே கூடாது.

எனது கருத்துப்படி, ஆரம்பக் கட்டத்தில் உண்மையான கல்வி போதிக்கும் முறை, குழந்தைகள் மீது உண்மையான அன்புடன் படிப்பு சொல்லித் தந்து, வளர்க்கும் முறை மனிதாபிமான அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர அதிகாரத் தொனியிலான, கட்டாய, நிர்ப்பந்த அடிப்படையில் அமையக் கூடாது.

தமது ஆசிரியர்களுக்குக் கோபமேற்படுத்தவோ, தமக்குப் படிப்பு சொல்லித் தந்து வளர்ப்பதற்கு இடையூறு செய்யவோ குழந்தைகள் பிறக்கவில்லை. யதார்த்தத்தை அறியும் திறமைகளும் வாய்ப்புகளும் இவர்களிடம் கிட்டத் தட்ட எல்லையற்று உள்ளன, அறிவுத் தாகம் இவர்களிடம் மிகுந்துள்ளது என்பதை நாம் நம்ப வேண்டும். எனது கருத்துப்படி, ஆரம்ப வகுப்புகளில் கல்வி – வளர்ப்புப் பணியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முழுவதும் குழந்தைகளின்பாலான மனிதாபிமான உறவைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இது குழந்தை வளர்ப்பின் விதியாக வேண்டும்.

ஆறு வயதுக் குழந்தைகள் படிக்க விரும்புகின்றனர். ஆனால் நாம் எப்படி சொல்லித் தந்தாலும் இவர்கள் படிப்பார்கள் என்பது இதன் பொருளல்ல. அதிகாரத் தொனியோடு, கட்டாயப்படுத்தி இவர்களுக்குப் படிப்பு சொல்லித் தந்தால், முரட்டுத் தனமாக இவர்களுடன் கலந்து பழகினால், படிப்பார்வத்தை ஒரு வருடம் முன்னதாகவே இவர்களிடமிருந்து பிடுங்கியவர்களாவோம், இவர்களின் வளர்ச்சியை செயற்கையாகத் தடுத்து நிறுத்துவோம். விளையாட வேண்டுமென்ற தங்கள் தேவையை குழந்தைகளால் விட முடியாது என்பதை நாம் மறந்தால் நமது போதனை முறை, அவர்களுடைய அறிதல் உலகில் வழிகாட்டியாக இருக்காது, இரவு நேரத்தில் தன்னந்தனியாக தன் மகளை தண்ணீர் எடுத்துவர காட்டிற்கு அனுப்பிய மாற்றாந்தாய் போலிருக்கும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக்கள் மூலம் படிப்பு சொல்லித் தர வேண்டுமா, இதனால் இவர்களுக்கு என்ன பயன் என்று விஞ்ஞானிகள் இன்று வரை விவாதிக்கின்றனர். அதிகாரத் தொனியை விரும்பும் பலர் இப்படிப்பட்ட முறை குழந்தைகளுக்குத் தீங்கிழைக்க மட்டுமே செய்யும், ஏனெனில் படிப்பே ஒரு விளையாட்டு என்ற கருத்து இவர்களிடம் ஏற்படக் கூடும் என்கின்றனர். படிப்பு எவ்வளவு கடினமானது, சிக்கலானது என்று குழந்தைகள் முதலிலேயே நன்கு புரிந்து, உணர்ந்து, அனுபவிப்பது நல்லதாகும் என்று இதற்குப் பொருளாகாதா? ஒருவேளை, படிப்பே ஒரு வேதனை, இம்சை என்று குழந்தைகளுக்குத் தோன்றினால் என்ன செய்வது?

படிக்க :
பேராசிரியர் சாய்பாபாவை விடுவிக்கக் கோரி் கனடாவில் பேரணி !
கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !

என் கருத்துப்படி, பிரச்சினையை இப்படி வைக்கக் கூடாது. விளையாட்டின் மனவியல் சாரத்தை வெளிப்படுத்தி, இந்த அடிப்படையில் கல்வி போதிப்பதைப் பற்றித் தெளிவுபடுத்துமாறு பிரச்சினை முன்வைக்கப்பட வேண்டும். விளையாட்டில் முக்கியமான அம்சம் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு. குழந்தை தானாகவே ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, சலிப்பேற்படும் வரை விளையாடுகிறான், தன் தேவை பூர்த்தியானதாக உணர்ந்ததும் இதை நிறுத்துகிறான். என் கருத்துப்படி, சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உணர்வு தான் விளையாட்டின் மனவியல் அடிப்படையாகும்.

ஆனால் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பயன்படுத்தும் குழந்தை கடினமற்ற நடவடிக்கைகளை மட்டும்தான் விளையாட்டில் தேர்ந்தெடுக்கிறான் என்று இதற்குப் பொருளாகாது. விளையாட்டைத் தேர்ந்தெடுக்கும் குழந்தை இதன் மூலம் இடர்ப்பாட்டையும் தேர்ந்தெடுக்கிறான், இதைக் கடப்பதில் அவன் தன் கவனத்தையும் முயற்சிகளையும் ஒன்று திரட்டி செயல் முனைப்போடு இயங்குகிறான். இடர்ப்பாடுகளைக் கடக்கும் அம்சம் தான் குழந்தையைப் பொறுத்த மட்டில் விளையாட்டை உணர்ச்சிகரமானதாய், இலட்சிய நோக்குடையதாய் ஆக்குகிறது.

விளையாட்டில் ஏற்படும் அதே உணர்ச்சிகளை, கல்வி கற்கும் போதும் குழந்தை அனுபவிப்பதில் என்ன தப்பு? அப்போது நாம் விளையாட்டுப் படிப்பைப் பற்றிப் பேச மாட்டோம், மாறாக, குழந்தைகளின் நிலைகளின் அடிப்படையிலான, இந்த நிகழ்வுப் போக்கில் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உணர்வை குழந்தைகள் அனுபவிப்பதன் அடிப்படையில் கல்வி போதிப்பதைப் பற்றிப் பேசுவோம். குழந்தை விளையாட்டினால் மகிழ்ச்சியடைகிறான் இல்லையா? படிப்பைக் கண்டும் அவன் மகிழ வேண்டும். ஆசிரியர்கள், குழந்தை வளர்ப்பாளர்களாகிய நாம் இந்த சந்தோஷத்தைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். இதுதான் ஆறு வயதுக் குழந்தைகள் விஷயத்தில் எனது பணியின் அடிப்படைகளில் ஒன்று.

பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பை நாம் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரவும் அவர்களை வளர்க்கவும் அதிகபட்சம் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் திறமைகளை உரிய நேரத்தில் வளர்ப்பதற்கு அனுகூலமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்காக மட்டுமே அவர்களை டெஸ்குகளில் உட்கார வைக்க வேண்டும். இத்திறமைகள் இந்த வயதில்தான் முளை விடுகின்றன, புதியவற்றை அறியும் போக்கில் குழந்தைகளின் வெற்றிகரமான முன்னோக்கிய இயக்கத்திற்கு இவை பெரிதும் முக்கியமானவை.

குழந்தை நன்கு படிக்க இவனுக்கு என்ன தேவை? குழந்தைக்குப் படிக்கவும் படித்ததைப் புரிந்து கொள்ளவும் தெரிய வேண்டும், தன் மனப்பதிவுகளை எழுதத் தெரிய வேண்டும், படிப்பதை, பார்ப்பதைப் புரிந்து, கிரகிக்க குறிப்பிட்ட கண்ணோட்டம் வேண்டும், சுற்றியுள்ள ஏராளமான நிகழ்வுப் போக்குகளிலிருந்து, பொருட்களிலிருந்து மேற்கூறியவற்றைப் பிரித்தெடுக்கத் தெரிய வேண்டும், தான் பார்த்ததை வார்த்தைகளில் சொல்லத் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட திறமைகளையும் இவற்றோடு தொடர்புடைய ஞானத்தையும் கிரகிப்பதானது கல்விக்குக் குழந்தை தயார் என்று காட்டுகிறது. குழந்தைக்குப் பேச்சு வராவிடில் எப்படிப் படிக்க முடியாதோ அதே போல் மேற்கூறியது இல்லாமல் பள்ளியில் கல்வியை நிறைவேற்ற இயலாது.

மேற்கூறிய திறமைகள் குழந்தையின் கல்வி – அறிதல் நடவடிக்கைக்கு அவசியமான கருவிகள் ஆகும். இவை எவ்வளவுக்கெவ்வளவு முழுமையானவையாக உள்ளனவோ அவ்வளவுக்கவ்வளவு வெற்றிகரமாக அவனால் விஞ்ஞானக் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் புரிந்து, கிரகிக்க முடியும். குழந்தைகள் இத்திறமைகளைப் பெறுவதை – இது எந்த சூழ்நிலையில் நடைபெற்றாலும், பள்ளியில் நடைபெற்றாலும் கூட – கல்வி என்று இச்சொல்லின் கண்டிப்பான பொருளில் கூற முடியாது. குழந்தை படிக்க, எழுத, எளிய கணக்குகளைப் போடக் கற்றுக் கொள்வதை கல்வி என்று அடிக்கடி அழைத்தாலும் இதை புதிய மட்டத்துக்கு இட்டுச் செல்லும் வளர்ச்சிப் போக்காகத்தான் கருத வேண்டும். படிப்பது, எழுதுவது, எளிய கணக்குகளைப் போடுவது இவையெல்லாம் இன்றைய உலகில் குழந்தையின் வளர்ச்சிப் போக்கில் புதிய மட்டங்கள் மட்டுமே. நடக்கவும் பேசவும் குழந்தை எந்த சமூக – மனவியல் அடிப்படையில் கற்றுக் கொண்டானோ அதே அடிப்படையில் தான் இவற்றையும் கற்றுக் கொள்கிறான்.

வாழ்க்கை அனுபவம், உறுதி, பேச்சின் உள்ளடக்கமும் ஆழமும், வார்த்தைகளின் எண்ணிக்கை, நடவடிக்கைகளின் திடீர் எழுச்சி ஆகியவற்றில் ஆறு வயதுக் குழந்தைகள் ஏழு வயதுக் குழந்தைகளிடமிருந்து கணிசமாக மாறுபடுகின்றனர். முக்கியமானது என்னவெனில் விளையாட்டின் மீதுள்ள நாட்டமும் தேவையும் மாறுபடுவதாகும். ஓராண்டு வித்தியாசம், அல்லது இதற்கும் குறைவான வயது வேறுபாடு நம்மைக் குழப்பாமல் இருக்கட்டும்.

இவ்வாறு ஆறு வயதுக் குழந்தைகளுக்கும் ஏழு வயதுக்  குழந்தைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாததானது இன்னொரு தவறான கருத்திற்கும் இட்டுச் செல்கிறது. அதாவது ஆறு வயதுக் குழந்தைகளின் தயாரிப்பு வகுப்பை முழு முதல் வகுப்பாக்க வேண்டுமென சொல்லப்படுகிறது. இதனால் ஆறு வயதுக் குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை மறைகிறது, பாடத்திட்டங்கள், பாடநூல்கள், முறையியல் சிபாரிசுகளை உருவாக்குபவர்கள் முன் தோன்றக்கூடிய சிக்கலான பிரச்சினைகளும் இதன் மூலம் “அகற்றப்படுகின்றன”. இப்படியிருக்கும் பட்சத்தில் ஆறு வயதுக் குழந்தைகளைத் தவிர மற்ற அனைவருக்கும் – ஆசிரியர்கள், முறையியல் நிபுணர்கள், ஆணையாளர்கள் எல்லோருக்கும் – வசதியாகவும் எளிதாகவும் ஆகிறது. ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் பிரச்சினையை இப்படி எளிதாகத் ”தீர்ப்பதை” நான் குழந்தை வாழ்க்கையை மட்டுமின்றி, குழந்தைகளின் மனவியல், ஆசிரியரியல், முறையியல் போன்ற விஞ்ஞானங்களையும் அதிகார முறையில் அணுகுவதாகப் பார்க்கிறேன்.

(அடுத்த பாகத்துடன் நிறைவடைகிறது)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! ஆர்ப்பாட்டம் ! நேரலை !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இலங்கைத் தமிழரை குடியுரிமை திருத்த சட்டத்தில் இணைக்காததைக் கண்டித்து, டில்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சி.பி.எம் தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !
இடம் : சேப்பாக்கம், சென்னை
நாள் : 16-12-2019
வினவு நேரலை ! காணத் தவறாதீர்கள் !

பாருங்கள் ! பகிருங்கள் !

அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !

மோடி ஆட்சியில் அசுர வேகமெடுக்கும் வளர்ச்சி… இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் !

2014 -க்குப் பிறகு இந்திய வங்கிகளில் அதிகரிக்கும் மோசடிகள்…

1. 2014 -க்குப் பிறகு, அரசு நடத்தும் வங்கிகளில் மோசடிகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. 2017-18 உடன் ஒப்பிடும்போது, 2018-19ல் மோசடிகள் 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.

2. பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடியின் மதிப்பு 2013-14ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில் 10,171 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டில் இது 19,455 கோடி ரூபாயாக அதிகரித்தது.

3. 2016-17ல் 23,944 கோடி ரூபாயை எட்டியது. அதன் பிறகு, மோசடிகளில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. 2017-18ஆம் ஆண்டில் 41,168 கோடியாகவும், 2018-19ல் 71,543 கோடியாகவும் இந்தத் தொகை உயர்ந்தது.

4. 2019 ஏப்ரலில் தொடங்கிய வணிக ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடி 95,760 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார். அப்படியென்றால் மோசடி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

5. 2018-19ல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் 22,000 -க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் 25,417 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக தெரியவந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி (10,822 கோடி ரூபாய்), பாங்க் ஆப் பரோடா (8,273 கோடி ரூபாய்) ஆகியவை மோசடியில் அடுத்த இரண்டு இடங்களை பிடித்தன. நாட்டின் இந்த மூன்று மிகப்பெரிய அரசு வங்கிகளின் நிலைமை அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

படிக்க:
இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்
இந்திய நாடு, அடி(மை) மாடு !

6. மோசடிகளில் 55 சதவிகிதம் பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்றுள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் 90 சதவீதம் பொதுத்துறை வங்கிகளிடமிருந்தே சென்றுள்ளது.

7. பொருளாதார குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் முதலிடத்தை பிடித்துள்ளது ஜெய்ப்பூர். அதையடுத்த இடங்களை லக்னோ, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கான்பூர், மும்பை, புனே, நாக்பூர் மற்றும் காசியாபாத் ஆகிய இடங்கள் பிடித்துள்ளன.

8. முத்ரா கடன்கள் தொடர்பாக வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. பல வங்கிகள் முத்ரா திட்டத்தின் கீழ் கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கவில்லை என்ற தகவல்களுக்குப் பிறகு, இதுபோன்ற கடன்களைக் கொடுக்கும்போது வங்கிகள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்

ண்மையில்  இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பழமைவாதக் கட்சி வெற்றி பெற்றது தெரிந்ததே. பழமைவாதக் கட்சிக்கும் (Conservative Party) , தொழிலாளர் கட்சிக்கும் (Labour party) இடையே கடும் போட்டியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இத் தேர்தலானது, இறுதியில் பெருமளவிற்குப்  பழமைவாதக் கட்சிக்கு சார்பானதாகவே முடிவுற்றிருந்தது.

இக் கட்சிகளின் பெயர்களே கட்சிகளின் கொள்கைகளை ஒரளவிற்குத் தெளிவாக்கிவிடும். கட்சிக் கொள்கைகளை விட, இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விடயமானது (BREXIT) இத் தேர்தலில் முதன்மையான இடத்தினைப் பெற்றிருந்தது. இக் கட்டுரையின் நோக்கமானது கட்சிகளின் கொள்கைகளையோ அல்லது வெற்றி-தோல்விகளிற்கான காரணங்களையோ ஆராய்வதல்ல. மாறாக, இத் தேர்தலில் முதன்முறையாக இந்துத்துவா பரப்புரை இங்குள்ள இந்திய கால்வழி மக்களிடம் செலுத்திய செல்வாக்குப் பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

***

ங்கிலாந்தில் ஏறத்தாழ 3 மில்லியன் தென்னாசியர்கள் வாழ்வதாகவும், அவர்களில் ஒன்றரை மில்லியன் இந்தியர்கள் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஒன்றரை மில்லியன் (15 லட்சம்) இந்தியர்களில் பெருமளவானோர் வட இந்திய இந்துக்களே பெரும்பான்மையானோர். பொதுவாகத் தொண்ணூறுகள் வரை, மிகப் பெருமளவான இந்தியர்கள் தொழிற் கட்சி சார்பானவர்களாகவே இருந்து வந்தார்கள். நிறவெறித் தாக்குதல்களின்போது இந்தியர்களிற்குச்  சார்பாகத் தொழிற்கட்சி செயற்பட்டமையும், இந்தியர்களில் பலர் தொழிலாளர்களாகவிருந்தமையும் இதற்குக் காரணங்களாகவிருந்தன.

தொண்ணூறுகளின் பின்னர் தொழிற்கட்சியும் பழமைவாதக் கட்சி போன்றே முதலாளிகளின் நலன் பேணும் கட்சியாக மாறத் தொடங்கியமையாலும், இந்தியர்களிலேயே பலர் பெரும் பணக்காரர்களாக மாறியிருந்தமையும், நிறவாதம் பெருமளவிற்கு குறைந்து போயிருந்தமையாலும்; இந்த நிலையில் சிறியளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதாவது இந்திய மக்களும் பொது நீரோட்டத்தில் கலந்து வெள்ளையினத்தவர்கள் போன்று தொகுதி வேட்பாளர், அன்றைய இங்கிலாந்து அரசியல் நிலைக்கேற்ப வெவ்வேறு கட்சிகளிற்கும் சார்பாகச் செயற்படத் தொடங்கியிருந்தார்கள். என்றபோதிலும், இதற்குப் பின்னரும் ஒப்பீட்டுரீதியில் பெருமளவான இந்தியர்கள் தொழிற் கட்சியின் சார்பாளர்களாகவே இருந்துவந்தார்கள்.

இவ்வாறான வேளைகளில் எல்லாம் இந்தியர்கள் எப்போதுமே மதம் சார்ந்து சிந்தித்ததில்லை. குறிப்பாக இங்குள்ள இந்திய வழி முஸ்லீம்களுடனும், பாகிஸ்தானியர்களுடனும் இணைந்தே செயற்பட்டு வந்தார்கள். இந்த ஒற்றுமையில் மிகப் பெரிய பிளவாக இந்தத் தேர்தலில் பெருமளவு இந்தியர்களின் செயற்பாடு அமைந்திருந்தது. குறிப்பாக இந்த மோதல் 42 விழுக்காடளவிற்கு தென்னாசியர்கள் வாழும் பிரட்போர்ட் (Bradford) தொகுதியில் தெளிவாகவே வெளித் தெரிந்தது.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இந்து சேனா டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவளிப்பதை அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரம்.

2014 இல் இந்தியாவில் பாரதீய சனதா கட்சியின் இந்துத்துவா ஆட்சி ஏற்பட்டதிலிருந்து புலம் பெயர் நாடுகளிலும் இந்தியர்களிடம் ‘இந்துத்துவா வெறி’ பரவத் தொடங்கியிருந்தது. அதன் பின்னர், இந்துத்துவா அமைப்புகள் புலம்பெயர் நாடுகளிலும் இந்துக்களாக மக்களை அணிதிரட்டி, அந்தந்த நாடுகளிலுள்ள தீவிர வலதுசாரிகளிற்கு வாக்களிக்க வைத்து; அதற்குக் கைமாறாக அந்த அரசுகளிடமிருந்து தமது பார்ப்பனிய-பணியா கும்பலின் வணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தன.

இந்த வகையிலேயே  சென்ற அமெரிக்கத் தேர்தலில் டிரம்பிற்காக இந்து அமைப்புக்கள் களமாடின. டிரம்பின் வெற்றிக்காக யாகங்கள் கூட நடாத்தப்பட்டன.  டிரம்பே வெற்றி பெற்று, இந்தியர்களின் வேலை வாய்ப்பினை அமெரிக்காவில் விசா தொடர்பான கடுமையான நடைமுறைகள் மூலம் பறித்ததும், இந்தியாவிற்கான அவுட்சோர்சிங்  முறையிலான இந்தியாவிலேயே கிடைத்த வேலை வாய்ப்புகளைப் பறித்ததும், டிரம்பின் எழுச்சியால் உந்தப்பட்ட தீவிர வலதுசாரிகளால் இந்தியர்களே கொல்லப்பட்டதும் பிந்திய விளைவுகள். இவற்றைப் பற்றி இந்துத்துவா அமைப்புக்கள் அலட்டிக் கொள்ளவேயில்லை, ஏனெனில் இவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டது நடுத்தர இந்துக்களே. அவை தமது பார்ப்பனிய – பணியா வணிக நலன்களைப் பேணுவதிலையே குறியாகவிருந்தன.

மேற்கூறிய ஒரு இந்துத்துவா அணிதிரட்டலினை இங்கிலாந்து வாழ் இந்திய கால்வழி இந்துக்களிடமும் ‘இந்து கவுன்சில் யுகே’ (HCUK) , RSS, விஸ்வ ஹிந்து பரிசத் போன்ற அமைப்புக்கள் மேற்கொண்டிருந்தன. இதற்காக, இந்த அமைப்புகள் சென்ற சில ஆண்டுகளாகவே கடுமையாகச் செயற்பட்டுவந்தன. தொழிற் கட்சியின் தலைவராக ஜேர்மி கோபன் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து, அக் கட்சியானது தனது பழைய தொழிலாளர் நலன் பேணும் இடதுசாரிப் பாதைக்கு மீண்டும் திரும்பியிருந்தது. சமத்துவம் என்ற சொல்லைக் கேட்டாலே அலறும் இந்து அமைப்புக்களிற்கு, சமத்துவத்தினையே இலக்காகக் கொண்ட ஒரு தலைமையினை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

படிக்க:
♦ பிரக்சிட் – இடியாப்பச் சிக்கலில் இங்கிலாந்து !
♦ அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் !

அப்போதே  இந்துக்களை பழமைவாதக் கட்சிக்குச் சார்பாக அணிதிரட்டும் வேலையில் இறங்கியிருந்தன. 2017 பொதுத் தேர்தலிலேயே இந்து அமைப்புக்கள் தமது வேலையில் இறங்கி ஒரளவு தாக்கத்தினையும் ஏற்படுத்தியிருந்தன, என்ற போதிலும் பெரு வெற்றி பெற்றார்கள் என்று கூற முடியாது. மே 2016 இல் தொழிற்கட்சியின் சார்பில் லண்டன் மேயராக பாகிஸ்தான் கால்வழியினைச் சேர்ந்த ‘சாதிக் கான்’ (Sadiq Khan ) வெற்றி பெற்றதனை முன்னிட்டு இந்துத்துவா அமைப்புக்கள் இந்துக்களிடம் ‘தொழிற்கட்சி ஒரு முஸ்லீம் சார்புக் கட்சி’ என்ற பொய்ப் பரப்புரையினை கட்டிவிட்டது.  இதற்கு முன்னர் பல இந்துக்கள், முஸ்லீம்கள் தொழிற்கட்சியில் பல பதவிகளை வகித்தபோதும், அப்போதெல்லாம் இத்தகைய முத்திரை குத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. இவர்களின் மத வெறுப்புப் பரப்புரை 2017 தேர்தலில் பெருமளவு பலன்களைக் கொடுக்காமையால், அவ்கள் சோர்வடையவில்லை. மாறாக புலனம், முகநூல் போன்ற பல குழுக்களை ஏற்படுத்தித் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவந்தார்கள்.

குறிப்பாக  இந்து கவுன்சில் (HCUK) இந்துக் கோயில்களை மையப்படுத்தி இந்த மத வெறுப்பினைச் சிறப்பாகவே இந்துக்களிடம் கட்டமைத்தார்கள். இவர்கள் கோபன் மீது வெறுப்புக் கொள்வதற்கு இன்னொரு முதன்மையான காரணமும் உண்டு.

சாதி பாகுபாடுகளை கண்டித்து தொழிலாளர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

2010 இல் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சமத்துவச் சட்டத்திறகுள் சாதி ஒடுக்குமுறையினையும் கொண்டு வந்து கோயில்களில் பிறப்பால் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாவதனைத் தடுக்கும் ஒரு முயற்சி நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்திற்காக நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் கடுமையாகக் கோபன் குரல் கொடுத்திருந்தார்.

அம் முயற்சியினைக் கடுமையாகப் போராடி முறியடித்தது இந்த இந்துப் பேரவையே (HCUK). அந்தக்  காரணத்தை வெளிப்படையாகத் தெரிவித்தால், தமது பார்ப்பனப் பற்று வெளிப்பட்டுப்போகும் என மறைத்துவிட்டு, ‘லண்டன் மேயர் ஒரு முஸ்லீம்’ என்ற வெறுப்புணர்வினைக் கட்டியமைத்தார்கள். இவ்வாறான பின்புலத்தில், காஷ்மீர் மாநிலம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த மாநில மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை எதிர்கொண்ட வேளையில், கோபன் அந்த மாநில மக்களிற்காகக் குரல் கொடுத்திருந்தார்.

பொதுவாகவே கோபன் உலகில் எங்கு மக்கள் ஒடுக்கப்பட்டாலும், அங்கு ஒடுக்கப்படுவோர்களிற்காக கட்சி ஆதாய இழப்புகளிற்கு அப்பால் குரல் கொடுத்துவருபவர். அந்த வகையில் ஈழத் தமிழர்களிற்காக 1983 முதலே குரல் கொடுத்து வருபவர். அவ்வாறே இங்கும் காஷ்மீரிய மக்களிற்காகக் குரல் கொடுத்திருந்தார். இதனையே H.U.C.K (இந்து கவுன்சில்) ‘இந்து விரோதி கோபன்’ என முத்திரை குத்தி, வெளிப்படையாகவே ஒரு அறிக்கை வெளியிட்டது. மறுபுறத்தில் பழமைவாதக் கட்சியின் தலைவரான போரிஸ் யோன்சனிற்கு தலைப்பாகை கட்டி ‘இந்துக்களின் காவலன்’ எனும் அடையாளத்தையும் கொடுத்தது.

இந்த இந்துத்துவா அமைப்புக்களின் வேலை பெருமளவான வட இந்திய இந்துக்களைப் பழமைவாதக் கட்சியின் பக்கம் திருப்பியிருந்தது. அதாவது மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை எல்லாம் மறைத்து, வெறும் மத அமைப்பு ஒன்றின் சொல்லிற்கு மிகப் பெரியளவிலான இந்து மக்களை ஒப்பீட்டுரீதியில் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டிலேயே செயற்படவைக்க முடிந்தமை கடுமையான ஆய்விற்குரிய ஒன்றாகும்.

படிக்க:
♦ கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

தமிழர்களின் நிலை :

இங்குள்ள ஒரு ஆறுதலான செய்தி என்னவென்றால் தமிழர்களில் பெருமளவானோர் இந்த ‘இந்துத்துவா’ மாயைக்குள் சிக்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களும் சரி, ஈழத் தமிழர்களும் சரி,  இந்த ‘இந்து’ அணி திரட்டலில் இணையவில்லை. பெருமளவான தமிழர்கள் இங்குள்ள வாழ்வியல் சிக்கல்களிற்கமையவே வாக்களித்திருந்தார்கள்.  இலவச பொது மருத்துவ சேவை (NHS), தரமான பொதுத்துறைக் கல்வி போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தொழிற்கட்சிக்கோ அல்லது  BREXIT இனைக் கருத்திற்கொண்டு பழமைவாதக் கட்சிக்கோ வாக்களித்திருந்தார்கள்.  தமிழர்களில் பெருமளவானோர்கள் மதரீதியான அணி திரட்டலிற்குள் சிக்கிக்கொள்ளாமைக்கு இங்கு செயற்படும் தமிழ் சொலிடாரிற்றி, பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் (லண்டன்), மக்கள் கலை பண்பாட்டுக் களம் போன்ற சிறு அமைப்புகளின் விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் ஒரு காரணம்.

பழமைவாதக் கட்சியின் தலைவரான போரிஸ் ஜான்சனிற்கு தலைப்பாகை கட்டி ‘இந்துக்களின் காவலன்’ எனும் அடையாளத்தையும் கொடுத்தது இந்துத்துவ கும்பல்.

ஆனால், இந்த நிலை எதிர்காலத்தில் மாறாமலிருப்பதற்குப்  பெரியளவிலான செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. தமிழர்கள் இங்குள்ள கோயில்களில் உண்டியல்களில் போடும் பணத்தின் ஒரு பகுதியும் இந்த இந்துத்துவா அமைப்புக்களிற்குச் சென்று சேருகின்றது. இலண்டனிலுள்ள சிறீ முருகன் கோயில் மட்டுமே 769 ஆயிரம் பவுண்களை ஆண்டு (2016) வருவாயாகக் கணக்கு காட்டியுள்ளது. இவ்வாறு இலண்டனிற்குள்ளேயும், வெளியேயும் பல கோயில்கள் உண்டு.

ஈழத் தமிழர்களை மையமாகக் கொண்டு இயங்கும் கோயில்களில் சில ஈழத்தில் மக்கள் சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதனையும் மறுப்பதற்கில்லை. எவ்வாறாயினும் கோயில்களிற்கான கொடுப்பனவுகளில் மிகுந்த கவனம் தேவைப்படுகின்றது. அதே போன்று தமிழர்களிடம் தொடர்ச்சியான விழிப்பூட்டல் மேற்கொள்ளப்பட வேண்டியமுள்ளது. இது தமிழ்நாடு – ஈழம் ஆகிய தாயகங்களிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரைச் செய்யப்படவேண்டியுள்ளது.

மீண்டும் இந்துத்துவா அணிதிரட்டலினைப் பார்த்தால், இதனால் மட்டுமே பழமைவாதக் கட்சி வெற்றிபெற்றது எனக் கூறவரவில்லை. மாறாக, ‘இந்து மாயை’ எவ்வளவிற்கு ஆழமாகப் புலத்திலும் பரவிப் பார்ப்பனிய நலன்களைப் பேணுகின்றது என்பதனை எடுத்துக்காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

உலகின் வலதுசாரிகள் எல்லோரும் கோபனின் வெற்றியானது புதிய ஒரு தொடக்கமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாகவிருந்தன. டிரம்ப் வெளிப்படையாக பொரிஸினை ஆதரித்திருந்தார். ருஸ்யாவின் மாபியா நேரடியாகவே பழமைவாதக் கட்சிக்கு ‘கட்சிப் பணம்’ வழங்கியிருந்தது. யூதர்கள் முதல் கிறிஸ்தவ மதகுருமாருமார்கள் வரைப் பல பிற மத அமைப்புகளும் கூடப் பழமைவாதக் கட்சிக்கு ஆதரவு கொடுத்திருந்தன.

இங்குள்ள சிங்களப் பேரினவாத அமைப்புகள், சில முஸ்லீம் சிறு அமைப்புகள் என இந்த பழமைவாத ஆதரவு நீண்டு செல்கின்றது.  இவ்வாறு பலமான எதிரணியினை எதிர்கொள்ள உலகெங்குமுள்ள இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் ஆகியோரும் இணைந்து செயற்படவேண்டிய தேவையுள்ளது.

வி.இ.  குகநாதன்

குடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை

முற்றுகை

முற்றுகை துவங்கிவிட்டது
அடையாளங்களின் மீதான முற்றுகை
வரலாற்றின் மீதான முற்றுகை
இழப்பதற்கு ஏதுமற்றவர்களின்மீதான முற்றுகை

என் அடையாளங்களை கேட்கிறார்கள்
என் மூதாதையர்களின் அடையாளங்களை கேட்கிறார்கள்
நான் எங்கிருந்து வந்தேன் என்று கேட்கிறார்கள்
இதோ இந்த மண்ணுக்குக் கீழ்
புதையுண்டு கிடக்கும் நகரத்திலிருந்து வந்தேன்
அங்கிருக்கும்
மண் ஓடுகளில் என் அடையாள அட்டைகள் எழுதப்பட்டிருக்கின்றன
நான் வந்தது
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பா
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பா
என்று விவாதங்கள் நடக்கின்றன
என் தெய்வங்கள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன
உங்கள் தேசங்கள் உருவாவதற்கு முன்பே
நான் இந்த பூமிக்கு வந்தவன்

அவர்கள் மூன்று நீண்ட
அகதி வரிசைகளை உருவாக்குகிறார்கள்
உள்ளே வரவேண்டிய அகதிகள் வரிசை
வெளியேறவேண்டிய அகதிகள் வரிசை
உள்ளே நுழையக்கூடாத அகதிகள் வரிசை
அவர்கள் சற்று முன் வரை சகோதரர்கள்
பிரித்து நிறுத்தப்பட்ட வரிசைகளில்
ஒருவர் முகத்தை
ஒருவர் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்

ஒரு மூட்டை தூக்கும் வங்காளி கேட்கிறான்
ஒரு ரிக்‌ஷா இழுக்கும் ரோஹிங்கியா கேட்கிறான்
‘என்னை முகாம்களுக்கு அனுப்பப் போகிறீர்களா
எல்லைக்கு அப்பால் அனுப்பப் போகிறீர்களா?’
கொலைகாரர்களுக்கு
யாருக்கு எதிராக யுத்தம் செய்கிறோம்
என்பதைப்பற்றி எந்த நாணமும் இல்லை

நான் வெளியேற்றப்பட வேண்டிய ஒரு இஸ்லாமியனா
உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாத இஸ்லாமியனா என
குழப்பமாக இருக்கிறது
என்னிடம் ஆவணங்கள் இல்லை
நான்தான் ஆவணம்
என் நினைவுகள்தான் ஆவணம்
என் மூதாதையர்கள் நாடோடிகள்
போர்களாலும் பசியினாலும்
தொடர்ந்து துரத்தப்பட்டவர்கள்
பிறகு ஒரு நிலத்தைக் கண்டுபிடித்தோம்
அதை நாங்களும் சேர்ந்து உருவாக்கினோம்
கடவுள் எங்களைப் பார்த்துக்கொண்டார்
எங்கள் கடவுளை நாங்கள் பார்த்துக்கொண்டோம்

படிக்க :
கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்

கணக்கெடுப்பு துவங்கிவிட்டது
ஆஷ்ட்விட்ச் முகாம்களை கட்ட
கணக்கெடுப்புகள் முக்கியம்
ஒரு தேசத்தையே விஷவாயுக்கூடமாக்கும்
வலிமையான சித்தாந்தம் நம்மை ஆள்கிறது
அது அப்படித்தான் முன்னரும் நிகழ்ந்தது
இனியும் அப்படித்தான் நிகழும்
மக்கள் இரண்டு அணிகளாக பிரித்து நிறுத்தப்படுகின்றனர்
இரண்டு மதங்கள்
இரண்டு தேசங்கள்

நகரங்கள் பற்றிஎரிகின்றன
அஸ்ஸாமிலிருந்து
திரிபுராவிலிருந்து
வங்கத்திலிருந்து
டெல்லியிலிருந்து
தீ பரவிக்கொண்டிருக்கிறது
மிகப்பெரிய அச்சம் ஆள்கிறது
மிகப்பெரிய குழப்பம் ஆள்கிறது

இங்கே ஒருவன் மஞ்சள் நிற சட்டையில்
மக்களை வேன் மீதிருந்து சுட்டான்
அங்கே ஒருவன்
சிவப்பு நிற சட்டையில்
மாணவர்களை குண்டாந்தடியில் தாக்குகிறான்
சீருடைகள் மாறிவிட்டன
அவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது
கறுப்புப் படையினர் மாறுவேடங்களில் இருக்கிறார்கள்
வாகனங்கள் தானே பற்றி எரிகின்றன
எதிர்ப்பவர்களைக் கொல்ல
காரணங்களை உருவாக்கவேண்டும்
இதற்கு முன்பும்
அவை இப்படித்தான் நிகழ்ந்தன

ஒரு இதயமற்ற தேசத்தில் வாழ்கிறேன்
அவமானத்தில் என் உடல் கூசுகிறது
ஒரு கருணையற்ற தேசத்தில் வாழ்கிறேன்
அவர்கள் முதலில் என் தெய்வத்தின் நிலத்தை பிடுங்கினார்கள்
இப்போது என் நிலத்தை பிடுங்க விரும்புகிறார்கள்

பசியைப் பற்றி பேசாதே
வேலையின்மை பற்றிப் பேசாதே
வெங்காய விலை பற்றி பேசாதே
நிகழ்காலத்தையோ
எதிர்காலத்தையோ பற்றிப் பேசாதே

பேசு
முற்றுகையைப் பற்றி
அதற்காகத்தான்
அவர்கள் நகரங்களுக்கு
தீ வைத்திருக்கிறார்கள்

தீ பரவுகிறது
இதயங்களின் ஆழங்களில்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer

ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !

ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 2

ஜே.என்.யூ. பரிசோதனையாக முன்னெடுத்த பல்வேறு சனநாயகக் கூறுகள் முழுவதுமாக வெற்றி கண்டுள்ளன என்று கூறமுடியாது. குறிப்பாகச் சாதி, பால் சார்ந்த குற்றச்சாட்டுகள் அவ்வப்பொழுது எழுந்து அடங்கும். ஆனால், பெண்ணுரிமை அமைப்புகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் அமைப்புகள் இங்கு வலுப்பெற்று வழிப்புணர்வோடு இருப்பதும், பொதுவாக அனைத்துதர சமூகத்தில் இருந்து வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் இதுபோன்ற அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பதும் உரிமைமீறலுக்கான வாய்ப்புக்களை மிகவும் கட்டுப்படுத்தியுள்ளது எனக்கூறலாம்.

இத்தகைய பரிசோதனைகளுக்குக் கடந்த 50 வருடங்களாகத் தொடர்ந்து ஏதோவொரு வகையில் முட்டுக்கட்டைகளும், தொந்தரவுகளும்  வந்தவண்ணம் இருக்கத்தான் செய்தன. ஆனால், மாணவ – ஆசிரியர் போராட்டங்கள் இவற்றைத் துணிச்சலாக எதிர்த்து ஜே.என்.யூ மாண்புகளை பேணிக்காத்தன. அண்மையில், வலதுசாரிகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைபெற்று ஆட்சியைப் கைப்பற்றியபோது ஜே.என்.யூ மீதான தாக்குதல்கள் பல்கிப் பெருகின. இதுவரை எவை.. எவை சனநாயக மாண்புகள், சமத்துவச் சமூகத்தை வென்றெடுப்பதற்கான முன்மாதிரிகள் எனப் போற்றிக் பாதுகாக்கப்பட்டனவோ, அவற்றைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் வலுப்பெற்றன.

இது வெறும் அரசியல் குறுக்கீடு அல்ல. அரசு ஆதரவுபெற்ற, அல்லது அரசுக்குப் பயந்த தொலைக்காட்சிகள், இந்துத்துவா வெறிகொண்ட அரசியல்வாதிகள், பெண் விடுதலைக்கு எதிர்ப்பானோர், இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பானோர், பொதுக் கல்வியை ஒழித்துக்கட்ட விரும்பிய பணக்கார வர்க்கத்தினர் எனப்  பலதரப்பினரிடமிருந்தும் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

குறிப்பாக, இந்துத்துவா அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு இஸ்லாமியருக்கு அல்லது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பான வன்பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டார்களோ அதே அளவிற்கு ஜே.என்.யூ மீதும் தன் வன்மத்தைக் கொட்டினர். ஜே.என்.யூவில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒரு ஓய்வுபெற்ற பெரியமீசை கொண்ட இராணுவ ஜெனரல், ‘இன்று நாம் ஜே.என்.யூ-வைக் கைப்பற்றிவிட்டோம்’ என்று ஒரு எதிரி நாட்டைக் கைப்பற்றிவிட்டது போல், பெருமிதம் கொண்டார்.

இராணுவப் பீரங்கிகள் இங்கு நிறுத்தப்பட வேண்டுமென்றனர். ஒருவர் ஜே.என்.யூ-வின் முதுகெலும்பை உடைக்கவேண்டும் என்றார். மற்றொருவர் ஜே.என்.யூ-வில் ஒருநாளைக்கு எத்தனை உடலுறவு உறைகள் பயன்படுத்தப்படுகின்றன என புள்ளிவிபரம் கொடுத்தார். ஜே.என்.யூ பெண்களை விலைமாதர் என்றனர். ஆண்கள் தேசத்துரோகிகள் ஆனார்கள். சிலநாட்களுக்கு முன்பு பிஜேபி பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி ஜே.என்.யூ-வை இரண்டு வருடங்களுக்கு மூடிவிட்டு மீண்டும் சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றித் திறக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

இத்தோடு மட்டுமல்லாமல் தனக்கு அடிபணிந்து நடக்கும் ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்து ஜே.என்.யூ-வின் அடிப்படை விதிகளை, நடைமுறைகளை மாற்றி அமைத்தனர். இதற்கு எதிர்ப்பான போராட்டங்களே தற்போதைய மாணவர் புரட்சியின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

படிக்க:
ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

தொடர் அத்துமீறல்கள், அடக்குமுறைகள்

ஜே.என்.யூ-வின் முதுகெலும்பை உடைக்கவேண்டும் என்று கூறியவர்கள் அதை நிறைவேற்றத் துரிதமாய்ச் செயல்பட்டனர். துணைவேந்தர் தனக்குச் சாதகமானவர்களை அனைத்து உயர் பதவியிலும் நியமித்தார். மரபுகளை மீறி துறைத் தலைவர்கள், டீன்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கல்விக்குழு (academic council) உறுப்பினர்களாக இருப்போர். இவற்றையும் மீறி கல்விக்குழு கூட்டங்கள் சரியாக முறைப்படி நடைபெறவில்லை. விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன. இதைவிட, கல்விக்குழு கூட்டங்களில் பேச அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

மேலும், கல்விக் குழுவால் நிறைவேற்றப்படாத மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டன. மறுப்பு தெரிவித்தோருக்கு சரியான பதில் இல்லை. இதுபோல தான் ஒவ்வொரு குழுக் கூட்டமும் இதுவரை நடைபெற்றன. இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவானவர்கள் நிர்வாக குழு (Executive council) உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு கல்விக் குழுவால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்ட மசோதாக்கள் நிர்வாகக் குழுவால் எவ்வித விவாதமும், எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன.

முதுகெலும்பை உடைக்கும் கடைசி முயற்சியாக வெவ்வேறு குழுக் கூட்டங்களில் மாணவர் அமைப்புப் பிரதிநிதிகள் பங்கேற்பதற்கு அனுமதி மறுத்ததோடு, நாளடைவில் மாணவர் அமைப்புக்கே அங்கீகாரம் மறுக்கப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே வலதுசாரிகளுக்கு ஆதரவான மாணவர்களின் அமைப்புகளுக்கு அனைத்து வகையான ஆதரவுகளையும் கொடுத்து மாணவர் அமைப்பு தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி ஒவ்வொரு தேர்தலிலும் சனநாயக அமைப்பை சேர்ந்த கட்சிகள் பெருவாரியான வாக்குகளைப்பெற்று மாணவர் அமைப்பின் அனைத்துப் பதவிகளையும் தக்கவைத்துக்கொண்டன. பின் சனநாயக முறைப்படி நடக்கும் தேர்தலுக்குப் பல இன்னல்களைக் கொடுப்பதும் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை அங்கீகரிக்காததும் தொடர்ந்தன. ஒவ்வொரு முறையும் மாணவர்கள் நீதிமன்றம் சென்று தமக்கு ஆதரவாகத் தீர்ப்பு பெறவேண்டியிருந்தது.

இவ்வாறாக, படிப்படியாகப் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கல்வி காலண்டர் மாற்றி அமைத்தல், எம்.பில்-பி.எச்.டி மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைத்தல், வருகைப் பதிவு முறையைக் கொண்டுவருதல்,  மாணவர் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தல், மிகவும் வலிமை வாய்ந்த அமைப்பான GSCASH-ஐ அழித்தல், நிர்வாகத்திற்கு உடந்தையாக இருப்போரை பல்வேறு பதவிகளில் நியமித்தல்,  நியாயமாகப் போராடிய ஆசிரியர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தல், புதிய ஆசிரியர் தேர்வுக் குழுக்களில் சரியான முறையைப் பின்பற்றாமல் தகுதி இல்லாத உறுப்பினர்களை நியமித்து அனைத்து விதிகளையும் இருட்டடித்து, தகுதி இல்லாத, இந்துத்துவாவிற்கு ஆதரவான ஆசிரியர்களை நியமித்தல், நுழைவுத்தேர்வு நடத்துவதைத் தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தல், இணையம் மூலம் நுழைவுத்தேர்வு,  நூல் நிலையத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைக் கணிசமான அளவில் குறைத்தல், உலகெங்கும் BE மற்றும் MBA படிப்புகள் மூடப்பட்டுவரும் நிலையில், இந்த படிப்புகளுக்கான புதிய மையங்களை ஜே.என்.யூ-வில் தோற்றுவித்தல், சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்குத் தடை, தாபாக்களின் திறப்பு நேரங்கள் குறைப்பு, பொதுக் கூட்டங்களுக்குத் தடை,  என ஒவ்வொன்றாக பல்வேறு புதிய விதிகள் எந்தவித விவாதமும் இன்றி அமல்படுத்தப்பட்டன. பொதுவாக முடிவுகளை வெளியில் இருப்போர் எடுப்பதும், அந்த முடிவுகள் துனைவேந்தர் வழியாக அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு குழுவிலும் நிறைவேற்றப்பட்டது எனக் காட்டுவதும் மரபாகிப்போனது.

படிக்க:
ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !
♦ வாரணாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

கல்விக்கட்டணம் விடுதி விதிகளில் மாற்றம்

இந்தச் சூழ்நிலையில்தான் கல்விக்கட்டண உயர்வு மற்றும் ஆடைநெறிமுறைகள் உட்பட விடுதி விதிகளில் மாற்றம் என்ற அறிவிப்பு வெளிவந்தது. பொதுவாக இதுபோன்ற மாற்றங்கள் தீவிர விவாதத்திற்குப் பிறகு, அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலையும் பெற்றுத்தான் அமல்படுத்தப்படும். குறிப்பாக மாணவர்கள் அமைப்பு பிரதிநிதிகளுடன் ஆசிரியர் அமைப்பு பிரதிநிதிகளுடன், விடுதி காப்பாளர்கள், விடுதி மாணவர் தலைவர்கள் எனப் பலபேர் கொண்ட குழு இவற்றைப் பற்றி விவாதித்து, பின் இவை பல்கலைக்கழகக் கல்விக்குழு மற்றும் நிர்வாகக் குழுக்களின் ஒப்புதல் மூலமாகத்தான் நிறைவேற்றப்பட முடியும். ஆனால், இம்முடிவு இவ்வழிமுறைகளிள் பலவற்றைப் பின்பற்றாமலேயே அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மாணவர் அமைப்பு பிரதிநிதிகளை இது தொடர்பான கூட்டங்களுக்கு அழைக்காதது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜே.என்.யூ ஒரு குடியிருப்புப் பல்கலைக்கழகம். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். பொதுவாக மாணவர்கள் இரண்டு வகையான கட்டணங்களைச் செலுத்துவர் – ஒன்று கல்விக் கட்டணம் மற்றொன்று மாதாந்திர உணவுக் கட்டணம் உட்பட ஏனைய விடுதிக் கட்டணங்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் பொதுக்கல்வி என்ற நோக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் கடந்த பல வருடங்களாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனால் விடுதிக் கட்டணங்கள் அவ்வப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றப்படும்.

விடுதி கட்டண உயர்வு மற்றும் தனியார்மயமாக்கப்படும் கல்வி ! இவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் ஜே.என்.யூ மாணவர்கள் (கோப்புப் படம்)

தற்போது திருத்தப்பட்ட கட்டணங்கள் அறிவிக்கப்பட்டபோது, மாணவர்கள் ஏறக்குறைய மாதம் 3000 ரூபாய் கட்டணங்களுக்கு செலவழிக்கவேண்டியிருந்தது. திருத்தப்பட்ட கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இது 6000 முதல் 9000 வரை உயரக்கூடும். இது ஏற்படுமானால், நாட்டின் ஒட்டுமொத்த மத்தியப் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும்போது, ஜே.என்.யூ அதிக கட்டணம் வசூலிக்கும் பல்கலைக்கழகமாக மாறும் என மதிப்பிடப்படுகின்றது.

வசதிபடைத்த குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இக்கட்டணங்கள் பெரும் சுமையாக இருக்காது என்ற போதிலும், 60 சதவிதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் – இவர்களில் 40 சதவீதம் மாணவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்கள் – இக்கட்டணங்களால் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்நிலை தொடர்ந்தால், ஜே.என்.யூ நாளடைவில் மாணவர்களின் கட்டணத்தால் செயல்படும் பல்கலைக்கழகமாக; ஒரு தனியார் பல்கலைக்கழகம் போன்று மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இந்தியர் அனைவருக்கும் பொதுக்கல்வி நிறுவனங்கள் மூலம் இலவசக் கல்வி என்பதே ஜே.என்.யூ சமூகத்தினரின் கோரிக்கையாக இதன் தொடக்கத்திலிருந்தே இருந்துவந்தது. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வரைந்த புதிய கல்விக் கொள்கையை அரசு அறிவித்தபோது, எங்கும் இல்லாத அள‍வில் ஜே.என்.யூ மாணவர்கள், இதற்கு எதிர்ப்பாக பெரும் போராட்டத்தை முன்வைத்தார்கள்.  கல்வி தனியார்மயமாக்கலுக்கு எதிரான குரலாக ஜே.என்.யூ மாணவர்கள் தொடர்ந்து இருந்திருக்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையில், ஒரு பிரசித்தமான, உள்ளடக்கிய பொதுப் பல்கலைக் கழகம் என்ற நிலையிலிருந்து ஜே.என்.யூவே மாறப்போகும் ஆபத்தை உணர்ந்தபோது மாணவர்களின் போராட்டம் அதீத தீவிரம் அடைந்தது.

டிவிட்டரில் உரையாடும் துணைவேந்தர்

பல்கலைக்கழக வளாகத்திற்குள் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் என மிகவும் அமைதியாகப் போராடிவந்த மாணவர்களைப் பல்கலைகழக நிர்வாகம் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காததோடு அவர்கள்மீது பல்வேறு அடக்குமுறைகளைத் தூண்டிவிட்டது மாணவர்களை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது.  துணைவேந்தரைச் சந்திக்க அனுமதி கேட்கப்படும் விண்ணப்பங்கள் பொதுவாக நிராகரிக்கப்பட்டன. மாணவப்பிரதிநிதிகளோ, அல்லது ஆசிரியர்களின் பிரதிநிதிகளோ துணைவேந்தரை சந்திக்க மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பொதுவாக, ஆசிரியர்கள், துணைவேந்தர், மாணவர்கள், பணியாளர்கள் எனப் பெரிதான வேறுபாடு கண்டிராத ஜே.என்.யூ சமூகத்திற்கு இவ்வகையான புதிய நடப்புகள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்தன.  கடந்த சில ஆண்டுகள்வரை, மாணவர்கள் துணைவேந்தரை வளாக அங்காடிகளில் காண நேரிடும்.

வணக்கங்களைப் பரிமாறிக்கொள்வர். எவ்வளவு எதிர்ப்புக்கும் எந்தவொரு துணைவேந்தரும் மாணவர்களைச் சந்திக்க மறுத்தது கிடையாது, சில துணைவேந்தர்கள் மாணவர்களுடன் சேர்ந்து போட்டி உண்ணாவிரதம் இருந்திருக்கின்றார்கள். ஆனால் வலதுசாரிகளால் புதிதாக நியமிக்கப்பட்ட இந்தத் துணைவேந்தரோ இதற்கெல்லாம் மாறாகத் தாம் ஒரு சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரியெனத் தன் முடிவுக்கு அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்பது போன்றதொரு மனப்பான்மையுடன் செயலாற்றினார். பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் இந்தத் துணைவேந்தரை கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை நேரடியாக சந்தித்திருப்பார்களா என்பது சந்தேகமே. இவர் பொதுவாக டிவிட்டர் மூலம் தன் கருத்தை, உண்மைக்கு மாறான திரிக்கப்பட்ட கருத்தை, அனுப்புவார். அல்லது, தன் கீழ் உள்ள அதிகாரிகள் மூலம்  நோட்டிஸ் அனுப்புவார். இதைத் தவிர்த்து நேரடியான உரையாடலில் இதுவரை இவர் ஈடுபட்டதில்லை.

விரைவில் அடுத்த பகுதி : பட்டமளிப்புவிழா போராட்டம் காத்திருந்த அமைச்சர்

(தொடரும்)

தொடரின் முந்தைய பாகம் :

சௌ. குணசேகரன்

(ஆசிரியர் பற்றி : ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்)

டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் !

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று தருமபுரியில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை வழக்கறிஞர் ஜானகிராமன் தலைமை தாங்கி நடத்தினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மற்றும் வழக்கறிஞர் முரளி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். மேலும் வழக்கறிஞர் பொன் சேகர், விரிவாக கருத்துரையாற்றினார். இதில் மனித உரிமை ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதில் வழக்கறிஞர் முரளி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை பற்றி விளக்கிப் பேசினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய  பு.மா.இ.மு. தோழர் அன்பு, மாணவர்களின் உரிமைகளை பற்றி விளக்கிப் பேசினார்.

படிக்க:
♦ மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
♦ பகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி

இறுதியாக கருத்துரையாற்றிய வழக்கறிஞர் பொன் சேகர் நாம் பெற்ற உரிமைகளின் வரலாற்று வழி வகைப்பட்ட வளர்ச்சி போக்கினையும், இன்றைய இந்திய சமுதாயத்தில் அதன் வளர்ச்சிப் போக்கு மற்றும் உரிமைகள் மறுக்கப்படுவதையும் தனது பேச்சில் விளக்கினார். மேலும் இன்றைய கட்டத்தில் பாசிசம் அதனுடைய அபாயப் போக்கு, உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதற்கான தேவை, சட்டபூர்வமான உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றைப் பற்றியும் உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தருமபுரி.

மக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு !

ணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு பிறகு, மக்களின் பண பரிவர்த்தனைக்கு மொத்தமாக வங்கியை நிரந்தர அடியாளாக நியமித்துவிட்டது பி.ஜே.பி,அரசு.

டிஜி-தன் அபியான், டிஜி-தன் மேளா, டிஜி பீம் என்று பல வண்ண டிஜிட்டல் சங்கிலியால் மக்களை வங்கியுடன் பூட்டி விட்டது.

மக்களின் பணம் உள்ளே வந்தாலும் வெளியே போனாலும் கட்டணம் என்ற பெயரில் கப்பம் செலுத்தினால்தான் வங்கியில் வேலை நடக்கும். இதுநாள் வரையில் மக்களின் சிறுசிறு கடன் கோரிக்கைகளைக்கூட காதில் வாங்காமல் அவர்களைத் துரத்தியடித்த அரசு வங்கிகள், இப்போது மக்கள் வங்கியில் தங்கள் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தக்கூட அனுமதிக்காமல் மூர்க்கமாக வெளியேற்றுகின்றன.

வங்கியில் சென்று சலான் எழுதி பணம் செலுத்தினால், வாங்க மறுத்து வாடிக்கையாளரை அவமானப்படுத்தி வங்கி அதிகாரிகள் குரூரமாக நடந்து கொண்ட உண்மைச் சம்பவம் இது.

***

சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மைய கிளையில், எனக்கு தெரிந்தவர்களுக்கு உதவுவதற்காக உடன் சென்றிருந்தேன். அவருடைய மகளுக்கு கல்லூரி செமஸ்டர் பீஸ் கட்டுவதற்காக ரூபாய் 5,000 வங்கியில் போடவேண்டும். ஏற்கெனவே அவ்வங்கியின் வெளியில் இருக்கும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் (Deposit Machine) பல தடவை பணம்போட மற்றவர் உதவியுடன் அவர் முயற்சித்து தோல்வியடைந்துள்ளார்.

“டெபாசிட் மெஷினுல ஏ.டி.எம் கார்டு இல்லாம போட்டா, ஒவ்வொரு தடவைக்கும் சர்விஸ் சார்ஜ் 25 ரூபா போயிடும். ஐயாயிரம் போட்டா ஒரு தடவைக்கு மூணாயிரத்தை எடுத்துட்டு; இரண்டாயிரத்தை தள்ளிடும். மறுபடியும் அத போடணும். மறுபடியும் இருபத்தஞ்சி போய்டும். ஏற்கெனவே இந்த அனுபவம் நிறைய எனக்குண்டு. அதனால, நாளைக்கு பேங்கு போய் சலான் எழுதிப் போட்டுடலாம். கொஞ்சம் கூடவாங்க” என்றார்.

சரி என்று போனேன். மறுநாள் காலைல பதினொரு மணிக்கு சென்றோம். காஞ்சிபுரம் எஸ்.பி.ஐ மெயின் பிரான்ச் என்பதால கூட்டம் அதிகம். சலான் கொடுப்பதற்கு தனியாக ஒரு டேபிள்.

நான், “மேடம்… பணம் போடவேண்டும், அதுக்கான சலான் கொடுங்க” என்றேன்.

அங்கியிருந்த ஊழியர், “வெளியில மிஷின் இருக்கே நாப்பதாயிரம் வரைக்கும் மெஷின்லயே போடலாமே? எவ்ளோ பணம்? உங்களோட அக்கௌண்ட்டா? இந்த பிரான்ச்சா?” என்று சலானைத் தராமல் கேள்வியை மட்டும் அடுக்கிக்கொண்டே இருந்தார்.

“ஐஞ்சாயிரம் பணம் இங்கதான் போடணும். கொஞ்சம் சலான் கொடுங்க” என்றேன் மீண்டும்.

“ஐஞ்சாயிரம்தானே வெளியே மிஷின்லயே போடுங்க, ரெண்டு மிஷின் இருக்கே…” என்றார் விடப்பிடியாக…..

“இல்ல… அங்க பணம் வீணா போய்டுது, சலான்லத்தான் போடணும். சலான் கொடுங்க…” என்றேன்.

“பணம்… இங்க போட முடியாது. வேணும்னா… எட்டாம் நம்பர் சார்க்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு சலான ஃபில்லப் பண்ணுங்க…. போய்ப் பாருங்க… சொன்னா கேட்க மாட்டீங்க… நீங்க.” என்றார்.

எட்டாம் நம்பர் சார்க்கிட்டப் போய் “சார் பணம் போடனும் கையெழுத்து போடுங்க … சலான் நிரப்பணும்” என்றேன்.

“ஏன்.. ம்மா இங்க பணம் போட முடியாது, வெளியில மெஷின் இருக்கு அதுலப்போய் போடு”… என்று தலையை நிமிராமலேயே வேகமாக பதில் சொன்னார்.

படிக்க:
ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !
♦ நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி !

நான், “என்ன அநியாயமா இருக்கு… பேங்க் எதுக்கு சார். பணம் போடவும் எடுக்கவும் தானே. அதுக்குதானே நீங்க இருக்கீங்க. ஏன் இப்படி விரட்டி அடிக்கிறீங்க” என்றேன்.

“யாரும்மா உன்ன இங்க அனுப்புனது? எனக்கு தெரியாது. எனக்கு எவ்ளோ வேல இருக்கு உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. உன் கேள்விக்கெல்லாம் நான் பொறுப்பு இல்ல…. என்கிட்ட அனுப்புன அந்த ஆள்கிட்டப்போய் சொல்லு…” என்று கத்தினார்.

எனக்கும் கோபம். இருவருக்கும் பேச்சில் வேகம் கூடியது. உடனே, வங்கி ஊழியர்கள் அங்கு ஒன்று கூடினர். ஆங்காங்கு இருந்த வாடிக்கையாளர்களும் என்ன ஏதென்று புரியாமல் பார்த்தனர். அனைவரின் கவனமும் என் மீது திரும்பவே, நான் நியாயம் கேட்க மேனேஜர் ரூமுக்கு உள்ளே போனேன்.

மேனேஜர். “என்னம்மா பிரச்சனை… ஏன் கத்துற? என்னா வேணும்… பொறுமையா சொல்லு?” என்றார்.

மறுபடியும் நான், மொதல்லயிருந்து  சொன்னேன்… “ஐஞ்சாயிரம் பணம் என் நண்பர் பொண்ணு அக்கௌண்டுல போடணும். செமஸ்டர் பீஸ் கட்டணும். இன்னிக்கு போட்டாகணும்.” என்றேன்.

மேனேஜர், “வெளியே ஒண்ணுக்கு ரெண்டு மெஷின் இருக்கு, ஒனக்கு போடத்தெரியலனால்லும் போட செக்யூரிட்டி இருக்கும் பாரு, அங்கப் போய் போடும்மா.” என்றார்.

“மெஷின்ல போட்டா இருபத்தஞ்சி ரூபாய் சர்வீஸ் சார்ஜ் போவுது, பேங்க் திறந்திருக்கும்போது நான் ஏன் மெஷின்ல போடணும்? மெஷின் சரியா வேல செய்யல… பணத்த வெளியே தள்ளுது ஒருதடவைக்கு ரெண்டுதடவையா போட்டா அதுக்கு ஐம்பது ரூபாப் போய்டும். அதனால நான் இங்கத்தான் போடுவேன். சலான கொடுக்கச் சொல்லுங்க.. அதுக்கு என்ன வழியோ அத செய்ங்க….சார்”.

“உன் இஷ்டப்படியெல்லாம் இங்க போட முடியாது, ஏ.டி.எம் கார்டு வைச்சிப்போட்டா சர்வீஸ் சார்ஜ் இல்ல…” என்று ஏக வசனத்தில் ஆரம்பித்தார்.

“காலேஜ் படிக்கிற பொண்ணுக்கிட்டத்தானே ஏ.டி.எம் கார்டு இருக்கு… அக்கௌண்ட்ல நாங்க போட்டாதானே, ஏ.டி.எம்-ல அவ எடுக்க முடியும்… நீங்க சொல்லறது புரியல.  சலான் எழுதி இங்கப்போட நான் என்ன பண்ணணும்னு சொல்லுங்க” என்றேன்.

“நான் சொல்லிக்கினே இருக்கேன்… மறுபடி, மறுபடி, அடங்காம பேசிட்டே இருக்க? இங்க நீ போட முடியாது, அவங்க பொண்ணு அக்கௌண்ட்ல நீ போட முடியாது…. அவங்க அவங்க அகௌண்ட்ல அவங்கத்தான் போடணும். மூணாவது ஆளுப் போடக்கூடாது! போம்மா… போ…” என்றார் திமிராக.

“எப்படி? அவுங்க அவுங்கதான் பணம் போடணும்னா? உங்க சம்பளப் பணத்த நீங்களே போட்டுக்கீறிங்களா? மெஷின்ல பணம் போடுறவன் யாருனு பாத்துட்டுத்தான் பணத்த மிஷின் எடுத்துக்குத்தா..? என்ன பேசீறீங்க?” என்றேன்.

மேனேஜர் டென்சனாகி கத்தினார்.

அதற்குள் பண அறையில் இருந்து, இரண்டு  போலீசு – இரண்டு செக்யூரிட்டி என அட்டேன்சன்ல நின்னு அறையில் என்னை சூழ்ந்துட்டாங்க.

“நீ எங்க நின்னு பேசறேன்னு தெரியுதா? இந்தப் பக்கம் பணம் லாக்கர் இருக்கு…. அந்தப்பக்கம் நகை லாக்கர் இருக்கு…. நீ பேசறதெல்லாம் சுற்றி எல்லா கேமராவுலயும் ரெக்கார்டு ஆயிட்டுருக்கு… என் பவருக்கு நான் என்ன செய்யலாம்னு தெரியுமா?” என்றார் மேனேஜர் கோபம் வழிய.

“பேங்க்ல இருக்கற லாக்கரப்பத்தியெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க? கேமரா என்ன மட்டும்தான் ரெக்கார்டு பண்ணுமா, நீங்க பேசறதெல்லாம் டெலிட் பண்ணிடுமா? எடுத்துப்போடுங்க பாக்கலாம்…” என்றேன்.

படிக்க:
உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? மாஃபியா கேங்கா?
♦ ஏழைகளிடம் பிடுங்கித் தின்னும் பாரத ஸ்டேட் வங்கி !

அதற்குள் என்னை சூழ்ந்தவர்கள் எனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஏம்மா…. நீ என்ன மார்க்கெட்டுக்கா வந்திருக்க… பேங்க்குக்கு வந்திருக்க.. அடங்கிப் பேசும்மா…. மேனேஜர் என்ன சொல்றாருன்னு கேளும்மா? என்று அறிவுரைகளை நாற்புறமும் வீச ஆரம்பித்தார்கள்.

நான் உண்மையிலேயே கோபமாகி, “அய்யா, ஆபிசருங்களே..! பேங்குக்கு நான் அட்வைஸ் வாங்க வர்ல, பணத்தை டெபாசிட் பண்ண வந்திருக்கேன், அதுக்கு என்ன வழி அதச் சொல்லுங்க…”. என்றதும்.

திரும்பவும் மேனேஜர், “பொம்பள..ன்ற திமிருல பேசுறீயா? பத்து ஆம்பளைங்க பேசறாங்க, அடங்கவே மாட்ற.. இதுமட்டும் உன் அகௌண்டா இருந்தா, இப்பவே க்ளோஸ் பண்ணி விசிறியடிப்பேன்… அதுக்கு எனக்கு ரிசர்வ் பேங்க் பவர் கொடுத்திருக்கு” என்றார்.

“ஆமாம், எனக்கு திமிருத்தான்! உங்க, ரிசர்வ் பேங்க் பவரை வைச்சி இப்ப இந்த அக்கௌண்ட்ட முடிச்சி அதுல இருக்கற பணத்தை கொடுங்க பாக்கலாம்” என்றேன்.

மேனேஜருக்கு கோபம் கிறுகிறுத்தது. பக்கத்திலிருந்தவர்கள் பதற ஆரம்பித்தார்கள். என்னை மேலும் அறிவுரையில் திணறடித்தார்கள். “கொஞ்சம் அடங்குமா… யாரையும் மதிக்கவே மாட்றயே… பணம் போட வந்தியா? சண்ட போட வந்தியா?” என்று அவர்களும் மேனேஜர் மாதிரியே மாறினார்கள்..

“எனக்கு தெரிஞ்சவங்க பொண்ணோட செமஸ்டர் பீசுக்கு பணம் போட வந்த என்னை சண்டக்காரி, அடங்காபிடாரினு அசிங்கப்படுத்திட்டு, என் மேலயே பழி போடுறீங்களா? யாருன்னா ஒருத்தருன்னா நியாயமா பேசுறீங்களா? அறிவுரை சொல்றீங்க, நான் இங்க அட்வைஸ் வாங்கவா வந்தேன்? ஐஞ்சாயிரம் பணம் போட வந்தேன். நீங்க என்ன செய்தாலும் இந்த சலான்ல பணம் போடாம போகமாட்டேன் யாரை வேணும்னாலும் வரச் சொல்லுங்க…” என்று நான் அழும் நிலையில் தடுமாறி கத்தினேன்.

உடனே, மேனேஜர் பக்கத்திலிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து சாலனில் கையெழுத்துப்போட சொன்னார்கள்.

அப்போதும், என்னை அசிங்கப்படுத்த நினைத்த மேனேஜர், வெளியிலிருக்கும் செக்யூரிட்டியிடம் என் பாஸ் புக்கையும், பணத்தையும் கொடுத்து மெஷினில போடச்சொல்லி வெளியேற்றப் பார்த்தார்.

அவர் கையிலிருந்து, அவற்றை பிடுங்கி “என்னை மேலும் அசிங்கப்படுத்தி பாக்கிறீங்களா? சலான் எழுதி பேங்க்ல தான் இந்தப் பணம் போடணும், இல்லாட்டி நான் இங்கிருந்து போகவே மாட்டேன்.” என்று நான் கத்த…

மேனேஜர், மேலும்.. மேலும் அசிங்கமாவதைத் தவிர்க்க தன்னுடைய கோபம், குரூரத்தைத் மறைத்து, எனக்கு அறிவுரை கூறிவது மாதிரி கையெழுத்துப்போட தயாரானார்.

நான் அப்போதும் அடங்காமல், “ஐயா, அறிவுரைகளை நீங்களே வைச்சிக்கங்க, என் அகௌன்ட்ல பணம் மட்டும் போட வழிப் பண்ணுங்க… உங்களோட அதிகாரத்தையும், அறிவுரையையும் ஐயாயிரம் போட வந்த எங்கிட்டதான் காட்டுவீங்க” என்று சொல்ல அவர் என்னை பார்க்காமலேயே வேகமாக கையெழுத்து போட்ட சலானை என் முன்னே தள்ளினார்.

அப்போது பத்தாம் நம்பர் கௌண்டரிலிருந்து ஒரு இளம் ஊழியர், “….மேடம் கொஞ்சம் ரிலாக்சாவுங்க…. நீங்க ரெண்டாம் நம்பர் கௌண்டருக்கு போங்க….. ஃப்ரண்ட் பேஜ் பிரிண்ட் பண்ணச் சொல்லி போன் பண்றேன்…. போங்க…” என்றார்.

நமக்காக  பேங்க்லருந்து ஒரு குரல் வருதேன்னு அவரை மதிச்சி, இரண்டாம் நம்பர் கொளண்டருக்குப் போனேன்.

“மேடம் ஃப்ரண்ட் பேஜ் பிரிண்ட் பண்ணனும், சாரு சொன்னாரு?” என்றேன்.

“சாரிங்க….. பிரிண்டர் ஒர்க் ஆகல, அப்புறம் போட்டுக்கங்க…. ப்ளீஸ்” என்றார்.

உடனே, என் பக்கத்திலிருந்த ஒருவர் “எப்பத்தான் பிரிண்டர் ஒர்க் ஆச்சி….. வெளியவும் ஒர்க் ஆகல…. உள்ளயும் ஒர்க் ஆகல…” என்றார் விரக்தியாக.

சுமார், 45 நிமிடம் நடந்த இந்தச் சலான் போராட்டத்தில் வெற்றிப் பெற்றாலும் உள்ளுக்குள் உதறல், பதற்றம்  நீடித்தது. இருந்தும் நம் பணத்தை கட்டுவதை தடுக்க இவர்கள் யார்? என்ற சாதாரண உண்மைதான், தைரியமாக கேள்வி கேட்க வைத்தது.

ஆனாலும், சுற்றி மக்கள் இருந்தும் யாரும் என்ன? ஏது? என்று வங்கி அதிகாரிகளை ஒரு கேள்வி கேட்கவில்லையே என்ற வலி… வெளியே வரும்போது ஒருபெண்ணாகக் கண்ணீர் துளிர்த்தது, கண்ணீரைத் துடைத்தப்படியே நண்பருடன் வங்கியை விட்டு வெளியேறினேன்.

***

ரசின் நல்ல நிர்வாகம் என்பது; வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமக்கள் சாத்தியம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இன்றைய அரசு வங்கிகளின் செயல்பாடுகள் யாருக்கானது? இன்றளவும் அரசு வங்கிகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவை செய்வதை தன் கடமையாகவும்; வங்கி படியேறும் சாமான்ய மக்களை அலைக்கழிப்பதும், அவமானப்படுத்துவதும் தன் அதிகாரமாகவும் வலம்வருகின்றன.

அரசு வங்கிகளை மொத்தமாக தனியார்வசம் தாரைவார்க்க மோடி அரசு எத்தனிக்கும் வேளையில், அதன் ஊழியர்களே மக்களிடமிருந்து அந்நியப்பட்டால் யார் அவர்கள் பிரச்சினைக்களுக்கு துணைநிற்பது?

– கீதா

கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்

ம்பம் நகரில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி முஸ்லீம் அமைப்புகள் , மக்கள் அதிகாரம், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாபெரும் எழுச்சிப் பேரணி கடந்த டிசம்பர் 15, 2019 அன்று காலை நடைபெற்றது.

இந்தப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு விடுக்கப்பட்ட அறைகூவலைத் தொடர்ந்து கம்பம் தபால் நிலையம் அருகில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர். அதன் பின் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்த போலீசு ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யத் தொடங்கியது. கைது செய்யப்பட்டவர்கள் அப்பகுதிகளில் இருந்த தனியார் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மதியம் ஒரு மணியளவில் மண்டபங்களில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கம்பம்.