Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 741

திருட்டுத் ‘தாண்டவம்’ !

27
தாண்டவம்

தாண்டவம்பொன்னுச்சாமி, ஓர் உதவி இயக்குநர். முதலாளிகள் ஆதிக்கம் செய்யும் சினிமாவில் சாதிக்க முடியும் என்று நம்பி சென்னைக்கு வந்த லட்சக்கணக்கான அப்பாவிகளில் இவரும் ஒருவர். ‘மொழி’, ‘பயணம்’ உட்பட பலப் படங்களை இயக்கிய ராதாமோகனின் உதவியாளர். தனியாக  படம் இயக்க முடிவு செய்ததும் அலைந்து திரிந்து இறுதியில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் என்னும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தமிழக அதிகாரியான தனஞ்செயனை சந்தித்து கதை ஒன்றை சொல்லியிருக்கிறார்.

இவர் சொன்ன கதையை கேட்டதுமே தனஞ்செயனுக்கு அலாரம் அடித்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும் என அனுபவ மூளை உணர்த்தியிருக்கிறது. உடனே முழு திரைக்கதையையும் எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார். பொன்னுச்சாமியும் நம்பிக்கையுடன், தான் எழுதிய திரைக்கதையை கம்ப்யூட்டரில் டைப் செய்து, பிரிண்ட் எடுத்து, அதை பைண்ட் செய்து கொடுத்திருக்கிறார். உரிய நேரத்தில் அழைக்கிறோம் என்று சொல்லி அவரை தனஞ்செயன் வழியனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால், நாட்கள் மாதங்களாகி ஆண்டுகள் ஆன பிறகும் யுடிவி-யில் இருந்து பொன்னுச்சாமிக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. இடையில் இயக்குநர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன் நடிக்கும் ‘தாண்டவம்’ படத்தை யுடிவி தயாரிப்பதாக செய்தி வந்தது. ஒருவேளை இந்தப் படம் முடிந்ததும், தன்னை அழைக்கலாம் என பொன்னுச்சாமி காத்திருந்தார்.

அப்போதுதான் அந்த இடி இறங்கி பொன்னுச்சாமியின் வாழ்க்கையை பொசுக்கியது. ‘தாண்டவம்’ படம் குறித்த செய்திகளை வாசித்தவருக்கு அதிர்ச்சி. எந்தக் கதையை தனஞ்செயனிடம் சொன்னாரோ, அந்தக் கதை அப்படியே இயக்குநர் விஜய்யின் பெயரில் உருவாகிக் கொண்டிருந்தது. பார்வையற்ற மாற்றுத் திறனாளியான கதாநாயகன், தன் செவிகளையே கண்களாக பாவித்து எதிரிகளை பழி வாங்குவதுதான் கதை. இந்த ஒன் லைன் யாருக்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால், திரைக்கதை? அது அப்படியே பொன்னுச்சாமி கொடுத்த பவுண்டட் ஸ்கிரிப்ட்.

பொதுவாக கதை திருட்டு என்பது தமிழ்ப் படவுலகில் சர்வசாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி. சொல்லப்போனால் இதற்காக யாரும் கூச்சப்படுவதில்லை. வெளிநாட்டு படங்களை சுட்டும், தங்களிடம் உதவி இயக்குநராக இருப்பவர்களின் படைப்பை களவாடியுமே பெரும்பாலான இயக்குநர்கள் படம் எடுக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர்களுக்கும் தெரியும். ஆனாலும் எதிர்காலத்தில் கிடைக்கும் என நம்பும் பொற்கால வாழ்க்கைக்காக நிகழ்காலத்தில் தங்கள் கற்பனை திருடப்படுவதை பொறுத்துக் கொள்கிறார்கள்.

‘தாண்டவம்’ படத்தின் இயக்குநரான விஜய், இப்படி கதை திருடுவதில் மற்ற இயக்குநர்களைப் போல மன்னர். ‘க்ரீடம்’, ‘பொய் சொல்லப் போறோம்’ ஆகிய அவரது படங்கள் பிறமொழிகளின் தழுவல் என்றால், ‘மதராசப்பட்டினம்’, அப்படியே ‘டைட்டானிக்’ ஹாலிவுட் படத்தின் காப்பி. இதனுடன் ‘லகான்’ இந்திப் படத்தை தயிர்வடையில் பூந்தி தூவுவது போல் தூவியிருந்தார். ஆனால், சென்ற ஆண்டு வெளியான அவரது ‘தெய்வத் திருமகள்’ காட்சிக்கு காட்சி, வசனத்துக்கு வசனம் அப்படியே ‘ஐ’ம் சாம்’ ஹாலிவுட் படத்தின் நகல். இதில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. இந்த ‘தெய்வத் திருமகள்’ படத்தை தமிழகத்தில் வெளியிட்டதன் வழியாகத்தான் யுடிவி மோஷன் பிக்சர்ஸ், முதல்முறையாக தென்னகத்தில் காலடி எடுத்து வைத்தது.

ஆகவே தனஞ்செயனும் சரி, இயக்குநர் விஜய்யும் சரி ஆரம்பம் முதலே அக்யூஸ்டுகளாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் தன் கதையை திருடியிருக்கிறார்கள் என பொன்னுச்சாமியும் அடித்துச் சொல்கிறார். இதை பொன்னுச்சாமியின் திரைக்கதையை படித்தவர்களும் ஆமோதிக்கிறார்கள். ‘தாண்டவம்’ டிரெய்லரில் இருக்கும் பல காட்சிகள் அப்படியே  பொன்னுச்சாமியின் திரைக்கதையில் இருப்பதாக சத்தியம் செய்கிறார்கள்.

ஆனாலும் ‘தாண்டவம்’ கதை, இயக்குநர் விஜய்யின் சொந்த சரக்கே என நிரூபிக்க குட்டிக்கரணம் அடிக்கிறார், தனஞ்செயன். இதற்காகவே பல லட்சம் ரூபாயை செலவு செய்து அமெரிக்காவில் இருந்து  டேனியல் கிஷ் என்னும் பார்வையற்ற நபரை அழைத்து வந்து, ‘இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுதான் ‘தாண்டவம்’ படத்தை எடுத்திருக்கிறோம்…’ என காதில் பூ சுற்றுகிறார்.

இதையெல்லாம் பார்த்து கொந்தளித்துப் போன பொன்னுச்சாமி, தனஞ்செயனை சந்தித்து நியாயம் கேட்க முயன்றிருக்கிறார். ஆனால், இவரை சந்திக்கவே தனஞ்செயன் மறுத்துவிட்டார். உடனே, தான் அங்கம் வகிக்கும் இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். சொம்பும், ஜமுக்காளமுமாக யுடிவி சென்ற பஞ்சாயத்து தலைவர்கள், கடைசி வரை பேச்சு வார்த்தையை இழுத்தடித்திருக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ‘தாண்டவம்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வாங்கி விட்ட தனஞ்செயன், வரும் வெள்ளிக்கிழமை (28.09.12) படம் வெளியாவதாக விளம்பரமும் செய்து வருகிறார்.

படம் வெளியாகி விட்டால், தனக்கு நியாயம் கிடைக்காது… யுடிவியுடன் சமரசமாகி, அடுத்தப் படத்துக்கான வாய்ப்பை பெற்று இயக்குநர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தனக்கு துரோகம் செய்து விட்டார்கள். இனியும் அவர்களை நம்பி பயனில்லை… என்பதை புரிந்து கொண்டு சக உதவி இயக்குநர்களின் உதவியோடு நீதிமன்றத்தின் கதவை பொன்னுச்சாமி தட்டியிருக்கிறார்.

இன்று இந்த வழக்கில் வந்த இடைக்கால உத்தரவின்படி தாண்டவம் படத்தை வெளியிடுவதற்கு யூடிவிக்கு தடையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம் வழக்கு தொடர்ந்து நடக்கிறது. இறுதித் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது ஒரு புறமிருக்க எந்த நாளிதழ் அல்லது பத்திரிகைகளிலும் இது குறித்த செய்தி, ஒரு துணுக்காகக் கூட இதுவரை வரவில்லை. அப்படி செய்தி வரக் கூடாது என்பதற்காகவே ‘தாண்டவம்’ பட விளம்பரங்கள் அனைத்து பத்திரிகைகளுக்கும் வாரி வழங்கப்பட்டுள்ளன. தவிர இன்றைய தினம் பல படங்களை யுடிவி தயாரித்து வருகிறது. அந்தப் படங்களின் புகைப்படங்களும், செய்திகளும், விளம்பரங்களும் ஒவ்வொரு வார – மாத – நாளிதழுக்கும் தேவை. எனவே இந்த கதைத் திருட்டை குறித்து அச்சு ஊடகங்கள் கவலைப்படவில்லை. சன் டிவியில் வெளியாகும் பெரும்பாலான நெடுந்தொடர்களுக்கு யுடிவிதான் விளம்பரங்களை வாங்கித் தருகிறது. பிற தனியார் தொலைக்காட்சிகளுக்கு படியளப்பதும் யுடிவிதான். எனவே காட்சி ஊடகங்களும் மவுனம் சாதிக்கின்றன.

பொன்னுச்சாமி கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். டைட்டில் கார்டில் தன் பெயர் வர வேண்டும். தன் படைப்புக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைக்காகத்தான் போராடி வருகிறார்.

ஆனால், டைட்டில் கார்டில் பெயர் போட முடியாது. அது பணிந்தது போலவும், திருட்டை ஒப்புக் கொண்டது போலவும் ஆகும். வேண்டுமானால், கொஞ்சம் பணத்தை வீசுகிறோம். எடுத்துக் கொண்டு போ… என யுடிவி பேரம் பேசுகிறது.

இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வையுங்கள் என பொழுதெல்லாம் விளம்பரத்தில் கூவும் வேலை இருப்பதால், இப்படியொரு சம்பவம் நடப்பதே தனக்கு தெரியாது என்பது போல் விக்ரம், ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்கப் போய்விட்டார்.

இயக்குநர் சங்க பொறுப்பில் இருக்கும் பலர், வெறும் இயக்குநர்கள் மட்டுமல்ல தயாரிப்பாளர்களும் கூட. எனவே யுடிவியில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றுதான் நாக்கைத் தொங்க போட்டபடி அலைகிறார்களே தவிர, பொன்னுச்சாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடத் தயாராக இல்லை.

கமலஹாசனின் ‘தசாவதாரம்’ படம் முதல் எண்ணற்ற படங்கள் இப்படி உதவி இயக்குநர்களின் படைப்பை களவாடித்தான் உருவாகி இருக்கின்றன. லாபம் சம்பாதித்திருக்கின்றன. பசி, பட்டினியால் வாடியபடி தங்கள் கற்பனையை காகிதத்தில் வடிக்கும் உதவி இயக்குநர்களின் நிலை குறித்து குரல் கொடுக்க மட்டுமல்ல, பரிதாபப்படவும் யாரும் தயாராக இல்லை.

திருட்டு டிவிடிக்காக கைகோர்த்து குரல் எழுப்ப தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயாராக இருக்கிறார்கள். காரணம், இது மூலதனம் தொடர்பானது. லாபம் பறிபோகும் விஷயம். ஆனால், கதை திருட்டு அப்படியல்ல. அது, வெறும் உதவி இயக்குநர்களின் மூளை உழைப்பு. அவர்கள் சிந்தும் ரத்தம். ஆனாலும் இந்த ரத்தம் தமிழக மக்களின் நலனுக்காக அவர்களது வாழ்க்கையை பண்படுத்துவதற்கு பயன்படுவதில்லை. முதலாளிகள் உருவாக்கியிருக்கும் ஃபார்முலாக்களில் வெரைட்டி காண்பிப்பதையே இத்தகைய உதவி இயக்குநர்கள் வாழ்க்கை இலட்சியமாக கருதுகிறார்கள்.

அதுவே இறுதியில் கதைத்திருட்டுக்கு அடிப்படையாக இருக்கிறது. சினிமாவில் ஒரு ஆளாகி மக்களுக்கு மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற கனவின் பின்னால் இருப்பது பணம், புகழ், பிரபலம் மூன்றின் மீதான கவர்ச்சிதான். அதனால்தான் சினிமாத்துறை முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் துறையாக இருக்கிறது. இதை உடைக்க வேண்டுமானால் சினிமாவில் ஒரு ஆளாகி செய்வதன் மூலம் முடியாது. சினிமா உலகுக்கு வெளியே நடக்கும் மக்கள் போராட்டங்களில் தனது கலை பயன்படட்டும் என்று ஒரு மக்கள் கலைஞனைப் போல சிந்திக்க வேண்டும்.

பொன்னுச்சாமியைப் போன்ற உதவி இயக்குநர்கள் அப்படி சிந்திப்பார்களா? அப்படி சிந்திக்காதவரை இந்த கதை திருட்டுக்களுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களை தண்டிப்பது சாத்தியமில்லை.

சுந்தரபாண்டியன்: உசிலம்பட்டி வழக்கா, தேவர் சாதி அழுக்கா?

536
சசிகுமார்-சுந்தரபாண்டியன்

சசிகுமார்-சுந்தரபாண்டியன்

“சுந்தரபாண்டியன்”’ திரைப்படம் ஒன்றும் நாட்டை ‘திருத்த’ வந்த கருத்து சினிமா இல்லை. அப்படி அவர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த திரைப்படம் மோசமான பிற்போக்குத்தனங்களையும், அசூசையான பிழைப்புவாதத்தையும் நேர்மறையில் உணர்த்துகிறது. அவற்றை அன்றாட வாழ்க்கையின் இயல்புகள் போல சித்தரிக்கிறது. காமடி, செண்டிமெண்ட் முதலான அதுவும் தேய்ந்து போன அரதப்பழசான காட்சிகளின் ஓட்டத்தில் பார்வையாளர்கள் அதை உணர்வாளர்களா என்பது சந்தேகம்தான்.

சுந்தர பாண்டியன்’ என்ற தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் “பாண்டியன்”’ என்ற சொல், இந்தப் படத்தின் ரசிக இலக்கு யார் என்பதை நமக்கு கோடிட்டுக் காட்ட… திரை விலகி ஆரம்பக் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம்’ என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.

“இதுதான் உசிலம்பட்டி”’ என்ற வாய்ஸ் ஓவரில் முத்துராமலிங்க தேவர் பெயர் பலகையுடன் துவங்குகிறது படம். சுவரில் போஸ்டர் ஒட்டும் ஒருவரை “எங்க ஆளுகளை தவிர யாரும் ஒட்டக்கூடாது… போ, போ’” என்று விரட்டிவிடுகிறார் ஒரு வயதானவர். தமிழ்நாட்டில் எவ்வளவோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களுக்கு பிரபுவும், கார்த்திக்கும்தான் ஸ்டார்கள்’ என்கிறது குரல். இருவரும் தேவர் சாதி நடிகர்கள் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. “தமிழ்நாட்டில் ஆயிர கட்சிகள் இருந்தாலும் இவர்கள் வட இந்திய தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்துவார்கள். நேதாஜிதான் இவர்களுக்குத் தலைவர்”’ என்கிறார்கள். ஃபார்வர்டு பிளாக் பற்றியும் முத்துராமலிங்க தேவர் பற்றியும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.

“எவ்வளவு பாசக்காரய்ங்களோ, அதே அளவுக்கு கோபக்காரய்ங்க. குலசாமியா நினைச்சு வளர்க்கும் பொண்ணுங்க மனசை காதல், அது இதுன்னு எவனாவது கெடுத்துட்டா என்ன செய்வாங்க தெரியுமா?”’ என குரல் நிறுத்த.. இளைஞர் ஒருவரை கருவேலங்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டிக் கொல்கிறது ஒரு கும்பல். “குல கவுரவத்த சீண்டுறவனை கருவருக்குற இடம் இதுதான்”’ என்கிறது குரல். எங்க கிட்ட மோதினா இதுதான் கதி’ என்று நமக்கு மிரட்டல் விடப்படுகிறது. சாதித் திமிரே பெருமிதமாக, ஒரு கொலையை நியாயப்படுத்தும் நீதியாக காட்டும் இந்தக் காட்சிகளை உசிலம்பட்டி பற்றிய டாக்குமென்டரி’ என்கிறார்கள் சிலர். ஆனால், இதுதான் உசிலம்பட்டியா? தேவர்கள் மட்டும்தான் உசிலம்பட்டியா?

ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களும் அதே உசிலம்பட்டியில்தான் வாழ்கின்றனர். பாப்பப்பட்டியும், கீரிப்பட்டியும் கூட உசிலம்பட்டிக்கு மிக அருகில்தான் இருக்கின்றன. இவர்கள் யாரும் அந்தக் காட்சியின் வரம்புக்குள் வரவில்லை. தலித்துக்களையும் இதர சாதி உழைக்கும் மக்களையும் கணக்கிலேயே எடுக்காமல் உசிலம்பட்டியின் ஒவ்வொரு அங்குலமும் தேவர் சாதிக்கு மட்டுமே பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதை போல “இதுதான் உசிலம்பட்டி”’ என்கிறார்கள்.

சுந்தரபாண்டியன்இதை விட முக்கியமானது.. இந்த சுந்தரபாண்டியன் படமாகட்டும்… இதேபோல அண்மை ஆண்டுகளாக மதுரையை மையப்படுத்தி வந்த மற்ற தேவர் சாதி படங்களாகட்டும்… அனைத்தும் தேவர் சாதிவெறி நடவடிக்கைகளை ஒரு நகைச்சுவையான அழகியலுடன் சித்தரிக்கின்றன. இதை ஒரு ரசனையாகவே மாற்றி வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் அவரை நல்லவர் என்று நிறுவ வேண்டியதில்லை. ஏனெனில் ரசிகர்களின் மனங்களில் ஆல்ரெடி எம்.ஜி.ஆர் நல்லவராக இருக்கிறார். மிச்சக்கதையை சொன்னால் போதும். அதுபோல கடந்த கால தேவர் சாதி பெருமித படங்கள், அந்த சாதி வெறியை ரசிக்க பழக்கப்படுத்தியிருக்கின்றன. அந்த அஸ்திவாரத்தில்தான் சுந்தரபாண்டியன் எழுந்து நிற்கிறது.

கதாநாயகன் சசிகுமார் அந்த ஊரின் பெரிய குடும்பத்தின் பையன். வேலை வெட்டி எதுவும் இல்லை. நண்பர்களுக்கு உதவுவதையே முழுநேர வேலையாக செய்கிறார். அந்த ஊர் வழியே செல்லும் பேருந்தில் கல்லூரி சென்று வரும் ஹீரோயினை சசிகுமாரின் நண்பர் காதலிக்கிறார். அவருக்கு உதவ இவர் போக… அங்கு ஏற்கெனவே அதே பெண்ணை இன்னொருவர் காதலிக்கிறார். அந்த இன்னொருவர் சசிகுமாரின் நண்பனின் நண்பன். உடனே “நீ ஒரு மாசம், அவன் ஒரு மாசம்”’ என அந்த பெண்ணை காதலிப்பதற்கான வாய்ப்பை நண்பர்களுக்கு ஓப்பன் டெண்டர் விடுகிறார். ஆனால் தன்னை டெண்டர் விட்ட சசிகுமாரையே காதலிக்கிறாள் அந்தப் பெண். பிறகு ஒரு கொலை, அதற்கான பழிவாங்கல்… என்று போகிறது கதை. இதில் நாம் பல விஷயங்கள் பேசலாம் என்றாலும், முக்கியமானது கதாநாயகின் பாத்திரம்.

தன்னை இரண்டு பேர் காதலிக்கிறார்கள். அந்த இரண்டு பேரிடமும் ஆளுக்கு ஒரு மாதம் என தன்னை ஒருவன் ஏலம் விடுகிறான் என்பதை அறிந்ததும் ஒரு பெண்ணுக்கு கோபம் வர வேண்டாமா? சாதி, வர்க்கம், ஆண்&பெண் பேதம் எல்லாம் பிறகு. முதலில் சுயமரியாதையுடன், ‘என்னை ஏலம் விட நீ யாருடா நாயே?’ என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? ஆனால் கதையின் நாயகியோ, தன்னை ஏலம் விட்டது தெரிந்த பிறகும் சசிக்குமார் மீது கோபப்படவில்லை. மாறாக அவரையே காதலிக்கிறார். காரணம், மூவரில் சசிகுமார்தான் பணக்காரர் என்பதாலா? சுயமரியாதை இழிவுபடுத்தப்படுவதை ஏற்கும் இந்த பெண்தான் நாயகி. செய்பவன் நாயகன்.

“யார் மீது காதல் வரும் என்று எப்படி சொல்ல முடியும்?”’ என்று கேட்கலாம். எனில் மற்ற இருவரையும் நிராகரித்துவிட்டு, சசிகுமாரை ஓ.கே. செய்வதற்கு கதைப்படி எந்த தர்க்க நியாயமும் இல்லையே?! அதுபோலவே, தனக்கு யார் மீது காதல் இருக்கிறது என்பதை அந்த பெண்தான் முடிவு செய்ய வேண்டும். சசிகுமாரோ, தனது நண்பர்களில் ஒருவரை காதலிக்குமாறு கட்டாயப்படுத்துகிறார். “பயலுகளை பின்னாடி சுத்த விடுறதுல உங்களுக்கு ஒரு சந்தோஷம்”’ என்ற தொனியில் கதாநாயகியை பார்த்து சசிகுமார் பேசும் வசனத்தை வேறு பல படங்களிலும் கேட்டிருக்கிறோம். ஆனால் கதாநாயகன்தான் வேலை வெட்டி இல்லாமல் எல்லா படங்களிலும் பல பெண்களின் பின்னால்தான் சுற்றுகிறான்.

பொறுக்கித்தனத்தை ஹீரோயிசமாக முன்னிருத்தும் தமிழ் சினிமா ஃபாமுலாவில் இருந்து துளியும் மாறாமல் இருக்கிறது சசிகுமாரின் பாத்திரம். நாம் அனைவரும் வேலைபார்த்துதான் வாழ்கிறோம். சுந்தரபாண்டியன் படத்தை பார்க்கும் ரசிகர்களும் ஏதோ ஒரு வேலை பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் படத்தின் கதாநாயகனுக்கோ எந்த வேலைவெட்டியும் இல்லை. எந்த வேலையுமே இல்லாமல் ஒருவன் எப்படி இருக்க முடியும்? இருக்கிறான். நாமும் அதை ஏற்றுக்கொள்கிறோம். அவருக்கு மட்டுமில்லை… சசிகுமாரின் நண்பர்களுக்கும் வேலை இல்லை. அவர்கள் வேலை பார்ப்பது போல் ஒரு காட்சி கூட இல்லை. அவர்களின் வேலை எல்லாம் டீக்கடையில் அமர்ந்துகொண்டு பெண்களை கிண்டல் செய்வது, பேருந்தில் வரும் பெண்களை சைட் அடிப்பது, காதலில் கஷ்டப்படும் நண்பர்களுக்கு உதவுவது… இவைதான்.

இதில் அப்புக்குட்டியின் கதாபாத்திரம் தோற்றத்தை வைத்து மோசமாக கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது. குட்டையான, குண்டான, கருப்பான அப்புக்குட்டி மாதிரியான ஆண்கள், அழகிய’ பெண்களை கனவில் கூட நினைத்துப் பார்ப்பது தப்பு என்கிறார் இயக்குநர். இங்கும் இயக்குநருக்கு கை கொடுப்பது முந்தைய ‘எம்.ஜி.ஆர் உதாரணம்’தான். “அழகற்ற அசிங்கமான ஆண்கள் அழகான பெண்களை விரும்புவது கிண்டலுக்குரியது”’ என்பது ஏற்கெனவே ரசிக மனதில் பதிந்திருப்பதால் இயக்குநர் அதை பயன்படுத்தி அந்த கிண்டலை வில்லத்தனமாக மாற்றுகிறார். இதனால் அப்பு குட்டி போன்ற தோற்றத்தில் ‘அழகில்லாதவர்கள்’ குரூர குணம் கொண்டவர்களாக இப்படம் உணர்த்துகிறது. ஆனால் தான் காதலிக்கும் பெண்ணுக்காய் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடும் அப்புக்குட்டி வில்லன் என்றால் ஒரு காலத்தில் காதலித்த பெண்ணை மற்ற இருவரிடமும் ஏலம் விடும் சசிகுமார் யார்?

சுந்தரபாண்டியன்-2அக்காவையும், தங்கையையும் ஒருசேர திருமணம் செய்துகொண்டவர் சசிகுமாரின் அப்பா. வழக்கொழிந்து போய்விட்ட இருதார மணம் எந்த விமர்சனமுமின்றி அழகியல் அம்சமாக காட்டப்படுகின்றது. கதைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத இந்த காட்சி எதற்கென தெரியவில்லை. ஒருவேளை ஊரில் உள்ள பெண்களை எல்லாம் கிண்டல் செய்து திரியும் சசிகுமாரின் பாத்திரத்தை நியாயப்படுத்த அப்பாவையும் அதேபோல மைனர் குஞ்சுவாக அமைத்திருக்கிறார்களோ என்னவோ…  ஆனால் இந்த மைனர் குஞ்சுகள் படத்தில் நெஞ்சு நிமிர்த்திய கனவான்களாக வரும்போதுதான் சகிக்க முடியவில்லை.

சசிகுமார் பாத்திரம் திருமணம் ஆன, ஆகாத முறைப் பெண்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்கிறது. இப்படிப்பட்ட காட்சிகளை இப்போதும் நாம் கிராமங்களில் காணலாம். ஆனால் அந்த முறைப்பையன்கள் யாரும் அந்த முறைப்பெண்களை திருமணம் செய்துகொள்வது இல்லை. கிண்டல் செய்வதற்கு மட்டும் அவர்கள்.. திருமணம் செய்துகொள்ள தங்கள் வசதிக்கு ஏற்ற வேறு பெண்கள்… என காரியவாதமாக பிரித்துக் கொள்கிறார்கள். சுந்தரபாண்டியனிலும் அப்படித்தான். ‘மாமா, மாமா’ என்று சசிகுமாரையே சுற்றி வரும் பக்கத்து வீட்டுப் பெண்ணை கிண்டல் செய்யும் எல்லையில் நிறுத்தி வைக்கும் சசிகுமார், தன் சொந்த சாதியில், தனக்கு இணையான வசதியில் உள்ள பெண்ணையே திருமணத்துக்கு தேர்ந்தெடுக்கிறார்.

எந்த விழுமியங்களுமற்ற நட்பு, காரியவாதமான காதல், பெண்களை அசிங்கப்படுத்தும் பாத்திரப் படைப்பு, தோற்றத்தை வைத்து கீழ்மைப்படுத்தும் வக்கிரம், சாதித் திமிர் என அனைத்து வகையான பிற்போக்குத்தனங்களையும் சிறு விமர்சனமும் இல்லாமல் நேர்மறையில் அணுகும் இந்தப் படத்தை சிலர் பயங்கர ஜாலியான படம் என்கிறார்கள். வலையுலகிலும், சமூக வலைதளங்களிலும் குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி பரிந்துரைக்கின்றனர்.

அவர்களிடம்…. இதே கதையை இப்படி எடுக்க முடியுமா என்று பாருங்களேன்… ‘இதுதான் பரமக்குடி…’ என்று வாய்ஸ் ஓவர் துவங்குகிறது. இமானுவேல் சேகரன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. தேவர் படம் போட்ட போஸ்டர் ஒட்ட வரும் இளைஞர்களை ‘ஏம்பா.. யாருப்பா இங்கே போஸ்டர் ஒட்டுறது.. எங்க ஆளுக மட்டும்தான் ஒட்டனும்’ என்று ஒரு பெரியவர் விரட்டிவிடுகிறார். படம் நெடுக காட்டப்படும் தேவர் குறியீடுகளுக்கு மாற்றாக அம்பேத்கர், இமானுவேல் சேகரன் படங்கள் காட்டப்படுகின்றன. ஒரு பெண், திருமணம் ஆன/ஆகாத தன் முறை பையன்களை எல்லாம் கிண்டல் செய்கிறாள். சாத்தியமா இவை எல்லாம்? கிரியேட்டரின்’ மூளையே இந்த சிந்தனையை சுய தணிக்கை செய்துவிடும். அதை மீறி வெளியே வந்தால் தணிக்கைத்துறை தாளித்துவிடும்.

உசிலம்பட்டி பற்றி வரும் துவக்கக்காட்சியை அப்படியே கத்தரித்துவிட்டாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அந்தக் காட்சியை வலுக்கட்டாயமாக திணித்து, “இது அசல் தேவர் சினிமா”’ என்று உணர்த்தி, குறைந்தப்பட்ச சந்தையை பிடிக்கிறார்கள். ஆகவே சுந்தரபாண்டியன் மற்றுமொரு குடும்பப்படம் அல்ல. இது ஒரு திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஆபத்தான அழுக்கான சினிமா! மதுரை வழக்கில் மயங்கியவர்கள் அந்த அழுக்கின் வீச்சை உணரவேண்டும்.

___________________________________________________

– வளவன்
கார்டூன் – ரவி
______________________________________________

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு! விவசாயிக்கு ஆதாயமா?

5

சில்லறை-வணிகம்சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பவர்களும், அமல்படுத்தும் அரசும் பல பொய்களை நம்பும் விதத்தில் திரும்பத் திரும்பப் பிரச்சாரம் செய்கின்றனர். இது குறித்து இன்றைய (24.9.2012) தீக்கதிரில் “சில்லரை விற்பனையில் அந்நிய முதலீடு மத்திய அரசின் கோயபல்ஸ் விளம்பரமும் – உண்மையும்” என்ற கட்டுரை வெளியாகியிருக்கிறது.

அதில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டின் வருகை குறித்த அரசின் பிரச்சாரங்களுக்கான பதில்கள் விரிவாக தரப்பட்டிருக்கிறது. அதில் முதன்மையானது வால்மார்ட்டால் விவசாயிகளுக்கு நன்மை என்ற கருத்து. ஆனால் வால்மார்ட்டின் வருகை இந்தியாவில் இருக்கும் சிறு விவசாயிகளை ஒழித்து விட்டு பண்ணை விவசாயம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தைத்தான் கொண்டு வரும். மேற்கத்திய நாடுகளில் இருக்கும் ஒரு விவசாயிக்கு சில பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கும் போது இந்தியாவில் அது ஓரிரு ஏக்கராக இருக்கிறது. பண்ணை விவசாயம் வந்தால் பல கோடி சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வேலை இழப்பார்கள்.

அடுத்து விவசாயிகளின் பொருளை கொள்முதல் செய்து குளிர்பதன கிட்டங்கியில் வைத்து விற்பார்கள் என்பெதல்லாம் ஏட்டுச்சுரக்காய் மட்டுமே. நடைமுறையில் சாத்தியமே இல்லை. மேலும் உள்ளூர் அளவில் நுகரப்படும் விலை குறைந்த சந்தையை வால்மார்ட் அழித்து விடும் என்பதும் முக்கியமானது. இதனால் நகர்ப்புறத்து விலைகளுக்கு இணையாக கிராமங்களிலும் விலைவாசி உயரும்.

வால்மார்ட்டின் வருகைக்குப் பிறகு பல நாடுகளில் சில்லறை வணிகத்தை நம்பி வாழும் மக்கள் தூக்கி எறியப்பட்ட கதை எத்தனை பேருக்குத் தெரியும்? ஆகவே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது வேலையின்மையை அதிகரிக்கவே செய்யும். வணிகர்களை மட்டுமல்ல, சிறு, நடுத்தர தொழில்களையும் வால்மார்ட்டின் வருகை ஒழித்து விடும். சீனாவிலிருந்து மலிவு விலையில் பல்வேறு பொருட்கள் வால்மார்ட்டால் இறக்குமதி செய்யப்படும் போது இந்தியாவின் தொழில்கள் பல காணாமல் போகும். இந்த வேலையிழப்பு தனி.

இவை குறித்தும், இன்னும் பல உண்மகளை ஆதாரங்களோடு தீக்கதிர் கட்டுரை விரிவாக பேசுகிறது. படித்துப் பாருங்கள். அதே நேரம் போலிக் கம்யூனிஸ்டுகள் சீனாவை இன்னமும் ஒரு கம்யூனிச நாடாக கருதுவதால் இந்தக் கட்டுரை சீனாவில் வால்மார்ட்டின் வருகை பிரச்சினை எதையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது. அமெரிக்க வால்மார்ட்டின் விற்பனை என்பது சீனத் தயாரிப்பினால்தான் சாத்தியமாகிறது என்பதற்கேற்ப சீன மக்கள் சுரண்டப்படுகின்றனர்.

மேலும் அமெரிக்கா அதிகம் தின்றால்தான் சீனாவின் பொருளாதாரம் இழுத்துச் செல்லப்படும். சீனாவின் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமென்றாலும் அந்த பலனும் அமெரிக்க கடன்பத்திரங்களின் மேல்தான் முடக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தின்பதைக் குறைத்தாலோ, இல்லை டாலரின் மதிப்பு குறைந்தாலோ சீனாவின் பொருளாதாரம் பிரச்சினைக்குள்ளாகும். இதை இந்தக்கட்டுரை கணக்கில் கொள்ளவில்லை. மற்றபடி இந்தக்கட்டுரை அரசின் பொய்ப்பிரச்சாரத்தை தர்க்க பூர்வமாக முறியடிக்கிறது.

படியுங்கள்:

சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!

7

சிரியாப்கானிஸ்தான், இராக், லிபியா  அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, மறுகாலனியாக்கப்பட்டுள்ள இந்த நாடுகளின் வரிசையில் அடுத்ததாக சிரியா குறிவைக்கப்பட்டுள்ளது.  வடக்கே துருக்கியையும், கிழக்கே இராக்கையும், மேற்கே இசுரேல் மற்றும் லெபனானையும் எல்லைகளாகக் கொண்ட சிரியா, மேற்காசியாவின் தொன்மையான நாகரிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.  1960களில் சிரியாவில் பாத் கட்சியின் தலைமையில் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டு, ஹஃபேஸ் அல் அஸாத் சிரியாவின் அதிபரானார்.  அவர் இறந்த பின் அவரது மகனான பஷார் அல் அஸாத் சிரியாவின் அதிபராக முடிசூட்டப்பட்டார்.  சன்னி பிரிவைச் சேர்ந்த முசுலீம்கள் பெரும்பான்மையாகவும், ஷியா முசுலீம்களில் ஒரு பிரிவான அலாவி முசுலீம்கள் மற்றும் கிறித்தவர்கள், குர்து இனத்தவர்கள் சிறுபான்மையினராகவும் வசிக்கும் சிரியாவில் விவசாயமும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் முக்கியத் தொழில்களாக உள்ளன.

பாத் கட்சியின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு, சிரியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவசரநிலை பாசிச காட்டாட்சிதான் நடந்து வருகிறது.  பெயரளவிலான முதலாளித்துவ சீர்திருத்தங்கள், உரிமைகள்கூட அந்நாட்டு மக்களுக்கு பாத் கட்சி ஆட்சியின் கீழ் வழங்கப்படவில்லை என்பதெல்லாம் உண்மைதான்.  அதேசமயம், பாத் கட்சியின் ஆட்சியை எதிர்க்கும் எதிர்த்தரப்பு ஒன்றும் சொக்கத் தங்கம் கிடையாது.  மன்னராட்சி நடைபெறும் சவூதி அரேபியா, இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெறும் துருக்கி, மத அடிப்படைவாதக் கட்சியான முசுலீம் சகோதரத்துவக் கட்சி, ஜிஹாதிகள் உள்ளிட்ட ஒரு கும்பல்தான்  பிற்போக்குத்தனமும் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் நிறைந்த கும்பல்தான் சிரியாவில் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு நடத்தி வருகிறது. சிரியாவில் பஷார் அல் அஸாத் ஆட்சியைத் தூக்கியெறிந்து, அங்கு அமெரிக்கா மற்றும் இசுரேலின் நலன்களைப் பாதுகாக்கும் பொம்மையாட்சியொன்றை நிறுவ வேண்டும் என்பதைத் தாண்டி, இக்கும்பலுக்கு வேறு நோக்கமும் கிடையாது.

சிரியாவில் பாத் கட்சியின் தலைமையில் உள்ள அரசு, இரானில் இசுலாமியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்தே அந்நாட்டினை ஆதரித்து வருவதோடு, இரானுடன் நெருக்கமான அரசியல், இராணுவ உறவுகளைப் பேணி வருகிறது.  இன்னொருபுறம், இசுரேலின் பிராந்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடி வரும் லெபனானைச் சேர்ந்த ஹெஸ்புல்லா போராளிக் குழுவையும் பாலஸ்தீன விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடி வரும் ஹமாஸ் குழுவையும் ஆதரித்து வருகிறது.  சிரியாவின் பாரம்பரியப் பகுதியான கோலான் மலைக் குன்றின் ஒரு பகுதியை இசுரேல் ஆக்கிரமித்து வைத்திருப்பதால், இசுரேலுடன் சமாதானமாகச் செல்லுவதற்கும் அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது.

இந்தக் காரணங்களால்தான் அமெரிக்காவும் இசுரேலும் சிரியாவில் ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகின்றன.  மேலும், மேற்காசியாவில் இரானின் செல்வாக்கை மட்டுப்படுத்தி, அதைத் தனிமைப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதை முதல்படியாகக் கருதுகின்றன.  சிரியாவும் இரானும் வீழ்ந்தால், கச்சா எண்ணெய் வளம் நிறைந்த மேற்காசியா தொடங்கி மத்திய ஆசியா வரை தனது மேலாதிக்கத்தை எஃகு போல உறுதிப்படுத்திக் கொண்டு, அப்பகுதியிலிருந்து ரசியா  சீனாவின் செல்வாக்கையும் அப்புறப்படுத்திவிடலாம் என்பதுதான் அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.

அமெரிக்கா, சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பை நடத்த இன்று நேற்றல்ல, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே பல திரைமறைவு வேலைகளைச் செய்துவருகிறது.  பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான போரை நடத்தத் தொடங்கிய சமயத்திலேயே, அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் சிரியாவைத் தீய நாடுகளுள் ஒன்றாகக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் மேலாதிக்கப் போர் இலக்குகளுள் ஒன்றாக வைத்தார். இராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா நடத்தி வந்த சமயத்தில் நேடோ படைகளின் தலைவராக இருந்த ஜெனரல் வெஸ்லி கிளார்க், “இராக் போர் முடிந்த பிறகு அமெரிக்கா ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் ஏழு நாடுகளுள் சிரியாவும் ஒன்று” எனக் குறிப்பிட்டார்.  “2009ஆம் ஆண்டு அமெரிக்க அரசு சிரியாவின் எதிர்தரப்பிற்கு உளவு பார்க்கும் தொலைதொடர்புச் சாதனங்களைக் கொடுத்ததை” விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக வீசுவதாகச் சொல்லப்படும் “அரபு வசந்தம்” அமெரிக்காவிற்கு சிரியாவில் நேரடியாகத் தலையீடு செய்யும் வாய்ப்பை வழங்கியது.  கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிரியாவின் டேரா பகுதியில் அதிபர் பஷாருக்கு எதிராக ஒரு திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தவுடனேயே, சவூதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற சன்னி பிரிவைச் சேர்ந்த ஜிஹாதிகள், ஜோர்டானிலிருந்து சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதலைத் தொடங்கினர்.  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஆயுதந்தாங்கிய எதிர்த்தரப்பு நடத்தும் தாக்குதல்கள் சிரியாவில் வசிக்கும் சிறுபான்மை மத, இன பிரிவினருக்கு எதிரான வன்முறையாகயும், அரசின் நிலைகளைத் தாக்கி விட்டு ஓடும் பயங்கரவாத நடவடிக்கையாகவும்தான் இருந்து வருகின்றன.

சிரியா
சிரிய அதிபர் பஷார் அல் அஸாத்

சிரிய அதிபரை எதிர்த்து இன்று ஆயுதத் தாக்குதல்களை நடத்தி வரும் கூட்டணியில் உள்ள குழுக்களிலேயே முசுலீம் சகோதரத்துவக் கட்சிதான் ஓரளவு பெரியதும் அமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாகும்.  இது, சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தின் ஆதரவைப் பெற்றுள்ள, சன்னி முசுலீம் பிரிவைச் சேர்ந்த மத அடிப்படைவாத அமைப்பாகும்.  இந்தக் கட்சியையும், அஸாத்துடன் நடந்த பதவி  அதிகாரத்திற்கான போட்டியில் தோற்று நாட்டைவிட்டு ஓடிப்போய் துருக்கியிலும், மேற்குலக நாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் ஒன்றிணைத்துதான் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் “சிரியா தேசிய கவுன்சில்” என்ற பெயரில் ஒரு கதம்பக் கூட்டணியையும், “சுதந்திர சிரிய இராணுவ”த்தையும் அமைத்துள்ளன.

அரபு வசந்தம் பற்றிய நூலொன்றை எழுதிவரும் மும்பையைச் சேர்ந்த அலியா அல்லானா என்ற பத்திரிகையாளர், “சிரியா தேசிய கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தலைவர்களுக்கும் சிரிய மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.  அவர்கள் அனைவரும் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் உட்கார்ந்துகொண்டு, தமது எஜமானர்கள் வீசியெறியும் காசைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்வதாக” அம்பலப்படுத்துகிறார் (தி ஹிந்து, 24.07.2012, பக்.9).  மேலும், சுதந்திர சிரிய இராணுவம் அமெரிக்காவுக்கு நெருக்கமான அல் காய்தா பிரிவைச் சேர்ந்த ஜிஹாதிகளையும் லிபியாவிலிருந்து கொண்டுவரப்படும் கூலிப்படையினரையும் கொண்டு கட்டப்பட்டிருப்பதை இங்கிலாந்தைச் சேர்ந்த டைம்ஸ் இதழின் நிருபர் ஜாஃப்ரி கேட்டல்மேனும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகைகளும் அம்பலப்படுத்தியுள்ளன.

சிரியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான அலெப்போவில் மட்டும் ஏறத்தாழ 12,000 சுதந்திர சிரிய இராணுவத்தினர் ஊடுருவியிருப்பதாகவும், இவர்களுள் சரிபாதிப்பேர் ஆப்கான், செசன்யா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஜிஹாதிகள் எனக் குறிப்பிடுகிறார், பிரேம் சங்கர் ஜா என்ற இந்தியப் பத்திரிகையாளர். (தி ஹிந்து, ஆக்.7, பக்.8)

அமெரிக்கா இசுரேலின் கூலிப்படையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சுதந்திர சிரிய இராணுவம், “ஷியா பிரிவு அலாவி முசுலீம்களைக் கல்லறைக்கும் கிறித்தவர்களை பெய்ரூட்டுக்கும் அனுப்புவோம்” என வெளிப்படையாகவே  மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.  இக்கூலிப்பட்டாளத்திற்கான பயிற்சியினை துருக்கி வழங்குகிறது.  இதற்குத் தேவைப்படும் நிதியை சவூதி அரேபியாவும் கத்தாரும் வழங்குகின்றன.  இவர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்களை அமெரிக்கா கொடுக்கிறது.  இக்கூலிப்பட்டாளம் சிரியாவினுள் நடத்திவரும் தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கரவாதமாகத்தான் கருதமுடியுமே தவிர, அதனை ஜனநாயக உரிமைகளுக்கான ஆயுதப் போராட்டமாகவோ, மக்கள் இயக்கமாகவோ கருதமுடியாது.

···

மார்ச் 2011க்குப் பின் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்தியங்கள் அஸாத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகப் பல்வேறு சதித் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியதையடுத்து, அதிபர் அஸாத், “அவரச நிலைச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; எதிர்க்கட்சிகளின் மீதான தடைகளை விலக்கிக் கொள்வது; புதிய அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கி, அதனைப் பொதுமக்களின் வாக்கெடுப்புக்கு விடுவது; புதிய அதிபர் தேர்தலை 2014  இல் நடத்துவது” உள்ளிட்டுப் பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்ததோடு, அவற்றைச் செயல்படுத்தவும் முனைந்தார்.  மேலும், ஐ.நா.வின் முன்னாள் தலைவர் கோஃபி அன்னான் அளித்த அமைதி திட்டத்தின்படி 300 ஐ.நா. பார்வையாளர்கள் நாட்டு நடப்புகளைக் கண்காணிக்க அனுமதிக்கப்பட்டனர்.  அரபு லீக் கூட்டமைப்பு கோரியபடி, சிறிய நகரங்களிலிருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட்டது.

இந்த அரசியல் சீர்திருத்தங்களும் சலுகைகளும், “தான் ஆட்சியில் தொடருவதற்கு அமெரிக்காவின் சம்மதத்தைப் பெற்றுத் தரும்” என எதிர்பார்த்தார், பஷார் அல் அஸாத்.  ஆனால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஆட்சி மாற்றத்திற்குக் குறைவாக எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டன.  அது மட்டுமின்றி, கோஃபி அன்னானின் அமைதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் சதிகளிலும், சிரிய அதிபருக்குப் பல்வேறு முனைகளில் நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கின.

சிரியா
சிரியாவிலிருந்து இராக்கிற்குத் தப்பியோடும் சிறுபான்மை குர்து இனத்தவருக்காக, இராக்கின் தோஷூக் நகருக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள அகதிமுகாம்

அரபு நாடுகளின் கூட்டமைப்பிலிருந்தும், முசுலீம் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்தும் சிரியா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டது.  அரபு நாடுகளின் கூட்டமைப்பும் அமெரிக்காவும் சேர்ந்துகொண்டு சிரியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மூன்று முறை தீர்மானங்களைக் கொண்டு வந்தன. அதிபர் பஷார் அல் அஸாத்தை ஆதரிக்கும் சீனாவும், ரசியாவும் தமது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்மானங்களைத் தோற்கடித்தன.  மூன்றாவது முறையாகவும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டவுடனேயே, “நாங்கள் ஐ.நா.விற்கு அப்பாற்பட்டுச் செயல்படுவோம்” என அமெரிக்கா அறிவித்தது.  அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளான ஐரோப்பிய யூனியனும், துருக்கியும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை சிரியா மீது விதித்தன.

இந்த அரசியல் நெருக்கடிகள் ஒருபுறமிருக்க, “சுதந்திர சிரிய இராணுவத்தினருக்கு அமெரிக்காவின் உளவு அமைப்புகள் பயிற்சி அளிக்கும்” என அமெரிக்க அரசு வெளிப்படையான உத்தரவை வெளியிட்டது.  சிரியாவின் பிரதமர் உள்ளிட்டு, பல இராணுவ உயர் அதிகாரிகள் விலைக்கு வாங்கப்பட்டு, சிரிய அரசிலும் இராணுவத்திலும் பிளவை உண்டாக்கும் சதிகள் அரங்கேற்றப்பட்டன.  ஹோம்ஸ் மற்றம் ஹௌலா நகரங்களில் பொதுமக்களைக் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்தது எந்தத்தரப்பு என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே, மேற்குலக ஊடகங்கள் அஸாத் அரசின் மீது பழியைப் போட்டு, இந்த மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு சிரியா மீது அமெரிக்கா போர் தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன.  எனினும் அந்நகரங்களில் இப்படுகொலையை நடத்தியது சுதந்திர சிரிய இராணுவத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் என்பதும், கோஃபி அன்னானின் அமைதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன்தான் ஹௌலா படுகொலை நடத்தப்பட்டது என்பதும் பின்னர் அம்பலமானது.

சுதந்திர சிரிய இராணுவத்துக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்கள் மற்றும்  சன்னி பிரிவைச் சேர்ந்த ஜிஹாதிகள் நடத்திவரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக, இதுவரை ஏறத்தாழ 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இறந்தவர்களுள் கணிசமான பேர் சிறுபான்மையினரான அலாவி முசுலீம்களும் கிறிஸ்தவர்களும் தானென்றும் கூறப்படுகிறது.  சுதந்திர சிரிய இராணுவக் கும்பல் நடத்திய தாக்குதல் காரணமாக ஹோம்ஸ் நகரிலிருந்து மட்டும் 50,000 கிறித்தவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.  கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது இப்பொழுது சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ, மிடன் நகரங்களுக்கும் பரவியிருக்கிறது.  டமாஸ்கஸிலும், அலெப்போவிலும் நடந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் அல் காய்தா அமைப்பின் ஒரு பிரிவான அல் நுஸ்ரா வெளிப்படையாகவே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

பஷார் அல் அஸாத் அரசு அமெரிக்கா இசுரேல் கூட்டணியை எதிர்த்து இன்று போரிட்டு வந்தாலும், பாத் கட்சியின் அமெரிக்க எதிர்ப்பை முரணற்றதாகப் பார்க்க முடியாது.  சதாம் உசேன், கடாஃபி போலவே அஸாத் அரசின் அமெரிக்க எதிர்ப்பிலும் இரட்டைத் தன்மை இருப்பதைக் காணமுடியும்.  அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்த பிறகும் இசுரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்துவிட்ட அஸாத் அரசுதான், 2000க்குப் பின் மேற்குலகைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்குச் சாதகமாகத் தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை சிரியாவில் அமல்படுத்தியது.  சவூதியின் மன்னர் குடும்பம் போல அஸாத் அமெரிக்க அடிவருடியாக, கைக்கூலியாக இல்லாவிட்டாலும், தனது குடும்ப ஆட்சியின் நலன், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது குடும்பம் திரட்டிக் கொண்ட சொத்தின் நலன் ஆகியவற்றைப் பொருத்தே, அஸாத் அரசு அமெரிக்கா மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியங்களுடன் உறவு கொண்டாடி வந்திருக்கிறது.

ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி, ஏகாதிபத்தியங்களுடான உறவில் இரட்டைத் தன்மை என்ற பலவீனங்கள் ஒருபுறம் இருந்தபோதும், பஷார் அல் அஸாத்தின் அரசு மதச்சார்பற்ற அரசாக இருந்துவருகிறது.  பல்வேறு மதம், இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் சிரியாவில் பாத் கட்சியின் ஆட்சியின் கீழ் மத  இன மோதல்கள் நடந்ததில்லை என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிரியா
அமெரிக்காவால் ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்ட எதிர்தரப்பு, சிரியாவின் ஹெளலா நகரில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவர்கள்

சிரியாவின் மீது ஒரு நேரடியான தாக்குதலை நடத்துவதற்கு ஏற்ப இராணுவத்தை ஒதுக்குவதில் மேற்குலக ஏகாதிபத்தியங்களிடேயே ஒத்த கருத்து ஏற்படாததால், ரசியாவும் சீனாவும் நேரடித் தாக்குதலை நடத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதால், பிரித்தாளும் சூழ்ச்சியினையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்துவதன் மூலம் பஷார் அல் அஸாத் ஆட்சியைக் கவிழ்த்துவிட முயன்று வருகின்றன, மேற்குலக ஏகாதிபத்தியங்கள்.

சிரியாவில் பஷார் அல் அஸாத் ஆட்சி வீழ்த்தப்பட்டால், அங்கு ஜனநாயகம் மலரப் போவதில்லை.  சன்னி பிரிவைச் சேர்ந்த மதவாத அமைப்புகளின் சர்வாதிகார ஆட்சிதான் நிறுவப்படும்; மத  இனரீதியாக நாடு துண்டாடப்படும்.  தனது மேலாதிக்க நலன்களுக்காக ஜிஹாதிகளை, முசுலீம் பயங்கரவாதிகளை  அமெரிக்கா ஊட்டி வளர்க்கத் தயங்காது என்பதற்கு சிரியா இன்னொரு உதாரணமாக அமைந்துள்ளது.  விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்தித் தடை செய்த அமெரிக்கா, சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவது, பயங்கரவாதம் குறித்த அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

‘‘முசுலீம் பயங்கரவாதத்தால்,  எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் தேசத்திற்கு ஆபத்து“ என மூச்சுக்கு முன்னூறு தடவை கூச்சல் போட்டு வரும் இந்தியா, துருக்கியிலிருந்து சிரியா மீது ஏவிவிடப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கண்டிக்க மறுக்கிறது.  மாறாக, முசுலீம் அடிப்படைவாதிகளையும் ஜிஹாதிகளையும் தூண்டிவிட்டுப் பயங்கரவாதத்தின் மூலம் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கும் அமெரிக்காவின் தீய நோக்கத்திற்கு வாலாட்டி வருகிறது.

___________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_________________________________________________

தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?

18
இட-ஒதுக்கீடு-புரட்சி
வன்கொடுமைச் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தக்கோரி அருந்ததியர் சாதியைச் சேர்ந்த பெண்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்
இட-ஒதுக்கீடு-புரட்சி
பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு – அரசின் வன்கொடுமை

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் பன்மடங்கு பல்கிப் பெருகி வருகின்றன. இதில் மாறுபட்ட கருத்தோ இருவேறு கருத்தோ கிடையாது. அத்தாக்குதல்களைத் தொடுப்பவர்களின் தரப்பை பல்வேறு வகைகளிலும் அளவுகளிலும் நியாயப்படுத்துபவர்களும் கூட, இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இணையாக அரசு எந்திரத்தின் ஆயுதப் படையாகிய போலீசும் இந்தக் கிரிமினல் குற்றச் செயல்களை நடத்துகின்றன.

இத்தாக்குதல்கள் எல்லாம் இப்போது புதுப்புது, ஆபாசமான, வக்கிரமான, குரூரமான பயங்கரவாத வடிவங்களை எடுக்கின்றன. தாழ்த்தப்பட்ட பெண்களானால் நிர்வாணப்படுத்தித் தெருத்தெருவாக இழுத்துச் செல்வது; பலர் கூடி நிற்க கும்பலாகத் திரண்டு பாலியல் வன்புணர்ச்சி கொள்வது; ஆண்களானால் மலம் திண்ண வைப்பது, மூத்திரம் குடிக்க வைப்பது என்று நடக்கிறது. சிறுவர் சிறுமிகளைப் படுகொலை செய்வதோ, கால்களைப் பிடித்து பாறைகளில் மோதி அடித்துக் கொன்ற காட்டுமிராண்டி கால இனக்குழுச் சண்டைகளின் வெறிச் செயலை நினைவுபடுத்துகின்றன.

முற்போக்கு எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; மனித உணர்வு கொண்ட நாகரிக காலத்து மனிதர்கள் எவரையும், அதிர்ச்சியும் ஆத்திரமும் பொங்கச் செய்வன இந்த வன்கொடுமைச் செய்திகள்.  ஆனால், வன்கொடுமைக் குற்றச் செயல்களுக்கு போலீசும், அதிகார வர்க்கமும் காட்டும் பாராமுகமும், குற்றவாளிகளைத் தண்டனையின்றி விடுவிப்பதற்கு உயர்நீதி,  உச்சநீதிமன்ற நீதியரசர்கள் கூறும் விளக்கங்களும் மேலும் அதிர்ச்சியும் ஆத்திரமும் பொங்கச் செய்வனவாக உள்ளன. சாதிவெறியர்களால் வெட்டப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் காயங்களில் அமிலத்தை ஊற்றுவதாக உள்ளன.

ஆதிக்க சாதிவெறியர்கள் கலப்பு மண இணையர்களைப் படுகொலை செய்யும் கொடுங்குற்றங்களுக்கு “கௌரவக் கொலைகள்” என்று நீதியரசர்கள் பட்டஞ் சூட்டிக் கொண்டாடும் வெட்கக்கேடுகள் இந்த நாட்டில்தான் நடக்கின்றன. இவ்வாறான போக்கால்  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கிரிமினல் குற்றச் செயல்களாகக் கருதி சாதி வெறியர்கள் அஞ்சி இரகசியமாகச் செய்வதில்லை. சமூக மதிப்புக்குரிய வீரதீரச் செயல்களாகவும், தாழ்த்தப்பட்ட சமூகம் முழுவதையும் அஞ்சி நடுநடுங்கச் செய்யும் பயங்கரவாத நடவடிக்கையாகவும் கருதி நடத்துகின்றனர்.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, பொருளாதாரத் துறையிலும் வேறு பிற துறைகளிலும் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக ஆட்சியாளர்கள் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் கூறும் வளர்ச்சி  முன்னேற்றத்துக்கு ஏற்ப தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நேர் விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. சாதிவெறிச் சக்திகளும் ஆதிக்க பலம் பெற்று வருகின்றன. பொதுவில் பழங்குடியினர், பெண்கள், மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகளும் அளவிலும் தன்மையிலும் பெருகி வந்தாலும், குறிப்பாக, சாதிய அடுக்குகளின் படிநிலையில் அடித்தட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள்தாம் தமக்கு மேலிருக்கும் அனைத்துச் சாதிகளாலும் வன்கொடுமை ஆதிக்கத்துக்குப் பலியாகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து மதுரையில் உள்ள ‘எவிடன்ஸ்’ (சாட்சியம்) என்ற தன்னார்வக் குழு நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், “தமிழ்த் தேசத்தில் சேரித் தமிழர்களின் நிலை!” என்ற கட்டுரையை டிசம்பர், 2011 “தலித் முரசு” இதழ் வெளியிட்டிருக்கிறது. அதில் காணக் கிடைக்கும் ஆதாரங்களின்படி,

  • 2008ஆம் ஆண்டு 34 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1545 வன்கொடுமைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்துள்ளன.
  • 2009ஆம் ஆண்டு 27 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1264 வன்கொடுமைகள் நடந்துள்ளன.
  • 2010ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாதங்கள் 22 படுகொலைகளையும் 24 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1633 வன்கொடுமைகளைக் கண்டுள்ளன.
  • 2011ஆம் ஆண்டு 44 படுகொலைகளும் 20 பாலியல் வல்லுறவும், 12 பாலியல் வல்லுறவு முயற்சிகளும் உள்ளடக்கிய 336 வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 44 பேரில் 4 வயது, 6 வயது, 11 வயது, 16 வயது சிறுமிகள் உட்பட 8 பேர் சிறுவர்  சிறுமியர்.
  • இந்த ஆண்டு முதல் மூன்று வாரங்களில் மட்டும் எட்டு தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

“தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதியரீதியான வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்த அளவே பதிவு செய்யப்பட்டாலும் தண்டனை வெறும் 5 சதவிகித@ம உள்ளன. குறிப்பாக, கொலை (3.9%), பாலியல் வன்கொடுமை (5.8%) உள்ளிட்ட கொடுங் குற்றங்களில் ஈடுபடுகிற குற்றவாளிகளில் 95 சதவிகிதத்தினர் தப்பித்துக் கொள்கின்றனர்.

“இத்தகைய துயரப் போக்கிற்கு காவல் துறையும், நீதித்துறையும் முக்கியப் பொறுப்பு என்றாலும் அத்துறைகளை சரியாக இயக்க வைப்பதற்கான அரசியல் அழுத்தம் அண்மைக் காலங்களில் பெரிய அளவில் இல்லை.

“தலித் அரசியல் கட்சிகள், இயக்கங்களாக இருக்கின்ற போது இத்தகைய படுகொலைக்கு எதிராக வீறுகொண்டு ஜனநாயகப் போராட்டங்களை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தி வந்தனர். ஆனால், தற்போது  இதுபோன்ற எதிர்ப்பு போராட்டங்களோ, குறைந்தபட்சம் இப்படுகொலைகளைக் கண்டித்து அரசுக்குக் கொடுக்கக்கூடிய அழுத்தங்களோ முற்றிலும் இல்லாமல் போனது கெடுவாய்ப்பானது. தலித் படுகொலைகளை தலித் அல்லாத அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என்கிற ஜனநாயகப் பண்பு இருந்தாலும், தலித் தலைமையிலான அரசியல் கட்சிகளுக்குக் கூடுதல் கடமையும் பொறுப்பும் உள்ளது. ஆனால், இன்று அரசு நிறுவனங்களோடு சமரசம் செய்து கொண்டு, விலை போய்க் கொண்டு அல்லது இத்தகைய படுகொலைகளைக் கண்டிக்கிற செயல்பாட்டில் ஒருவிதமான சலிப்போடு தலித் அரசியல் கட்சிகள் உள்ளன. இந்நிலையில் இதுபோன்ற படுகொலைகளைக் கண்டித்து ஆங்காங்கே பாதிக்கப்பட்ட மக்களும் மக்கள் இயக்கங்களும் வலிமையான அளவில் குரல் கொடுத்தாலும் அத்தகைய போராட்டங்கள் வெளியே தெரியாமல் போய் விடுகின்றன.” (தலித் முரசு, டிசம்பர் 2011)

இட-ஒதுக்கீடு-புரட்சி
உத்தப்புரத்திலிருந்த தீண்டாமை சுவர்

இவையெல்லாம் நம்முடைய சொந்த ஆய்வு முடிவுகள் அல்ல. தலித் அரசியல் கட்சிகள் மீதான கருத்துக்களும்‘எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.கதிர் எழுதி, “தலித் முரசு” ஏட்டில் வெளிவந்திருப்பவை. இதே கருத்தை “புதிய ஜனநாயகம்” ஏட்டில் நாம் எழுதியிருந்தால், “தலித் அரசியல் தலைவர்கள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் நம்மீது பாய்ந்து குதறியிருப்பார்கள்.

1989ஆம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு 22 ஆண்டுகள் கடந்த பின்னரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியர்களின் வன்கொடுமைத் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவோ அல்லது குறைந்ததாகவோ சொல்ல முடியாது. மிகக் கடுமையான இச்சட்டத்தால்கூடத் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிருக்குப் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

அதேசமயம், வன்கொடுமைத் தாக்குதல்களைவிட மோசமாக தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கி வைக்கக்கூடிய புதிய சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் ஆதிக்க சாதிகள் இப்போது மேற்கொண்டு வருகின்றன. அதாவது, தீண்டாமைக்குப் புதிய வடிவம் கொடுக்கப்படுகிறது.

  • மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் சேரிக்கும் ஊருக்கும் இடையில் எழுப்பப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர் நீண்ட “போராட்டம்”  முயற்சிக்குப் பிறகு அகற்றப்பட்ட போதும் அங்கு இன்னமும் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் “இணைந்து வாழ முடியாது” என்று அடம் பிடிக்கின்றனர். அருகிலுள்ள மலைமீது குடிபுகுந்து ஊர்ப் “புறக்கணிப்பு” என்ற புதிய முறையில் தீண்டாமையைத் தொடர்ந்தனர். அதேமுறையில் இப்போது ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள நகப்பாளையம் கிராமத்தில் ஒரு தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது.
  •  திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இரு குழந்தைகளை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் சேர்த்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிக்க சாதியினர் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திக்கொண்டனர். இதனால் அந்தப் பள்ளியையே மூடிவிடும்படி நிர்ப்பந்தித்தனர்.
  • விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி பஞ்சாயத்து ஒன்றியப் பள்ளியில் மதிய உணவு சமைப்பதற்கு இரு தாழ்த்தப்பட்ட பெண்கள் நியமிக்கப்பட்டனர். இதை அறிந்த அவ்வூர் கம்பளத்து நாயக்கர் சாதியினர் தமது 50 சிறுவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டனர். பிற சாதியினர் சமைத்த உணவை உண்ணுவதில்லை என்பது தமது சாதிவழக்கம் என்பதால் (உணவு விடுதிகளில் என்ன செய்வார்களோ; கோவில் பிரசாதத்தைக்கூட உண்ணமாட்டார்களோ!) இப்படிச் செய்கிறோம் என்று கம்பளத்து நாயக்கர்கள் செய்த முறையீட்டின் பேரில், அத்தாழ்த்தப்பட்ட பணியாளர்களை இடமாற்றம் செய்துள்ளார் வட்டார வளர்ச்சி அதிகாரி. “இது அந்த சமூகத்தின் தனிச்சிறப்பான வழக்கம்தான்” என்று நியாயப்படுத்தும் மாவட்ட ஆட்சியர், அடுத்தமுறை கம்பளத்து நாயக்கர் சாதியினரையே பணியமர்த்தப் போவதாக வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்.
  • சமூகத்தின் பொதுவான கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை ஏற்கும்படி நிர்பந்திக்கப்படும் கிராமங்களில், ஆதிக்க சாதியினர் தமக்கெனத் தனியார் கோயில்களைக் கட்டிக் கொள்வதும், அக்கோவில்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நுழைவதற்குத் தடை விதிப்பதும் இப்போது புதுப் போக்காகத் தலையெடுத்துள்ளது. இந்த வகையான கோவில்கள் தனியாருக்குச் சொந்தமானவை என்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டுரிமையை அரசு உட்பட யாரும் கோரமுடியாது என்றும் ஆதிக்க சாதியினர் வாதிடுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுடனான காதல்மண உறவை மறுப்பதற்காகவும், சாதியத்தின் இறுக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் சாதிவெறிக் “கௌரவக் கொலைகள்” அப்பட்டமான பயங்கரவாதவன்கொடுமைப் படுகொலைகள் என்றால், மேற்கண்டவை மாதிரியான ஆதிக்க சாதிகளின் நடவடிக்கைகள் தாழ்த்தப்பட்ட மக்களைச் சமூக விலக்கம் செய்யும் வக்கிரமான, நரித்தனமான தீண்டாமைக் குற்றங்கள் ஆகும்.

இட-ஒதுக்கீடு-புரட்சி

தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார “அவலநிலை” கண்டு, கிறித்தவப் பாதிரியார்கள் கண்டுபிடித்தத் தீர்வுதான் இலவசக் கல்வி வாய்ப்பு. கிறித்தவ மதத்தைப் பரப்பவும் மதமாற்றம் செய்யவும் ஒரு வாய்ப்பாக அது அமைந்தது. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்கள் கண்டுபிடித்த இன்னொரு தீர்வுதான் இடஒதுக்கீடு. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்கள் புகுத்திய இந்த இடஒதுக்கீடு கொள்கையைத்தான் “சமூக நீதிக் கொள்கை” என்ற பெயரில் “பார்ப்பனரல்லாத இயக்கம்” நிறுவிய வேளாள, வேளம, நாயர், வொக்கலிகா, லிங்காயத்து, நாயுடு, ரெட்டி ஆகிய சாதி இந்துத் தலைவர்கள் கையிலெடுத்துக் கொண்டார்கள். (ஆதாரம்: 1945 சேலம் திராவிடர் கழக நிறுவன மாநாட்டு அண்ணா உரை. பார்த்தசாரதி எழுதிய தி.மு.க.வின் வரலாறு) பின்னாளில் இதையே “சமூகப் புரட்சிக் கொள்கை”யாக பெரியாரியவாதிகளும் அம்பேத்கரியவாதிகளும் வரித்துக் கொண்டார்கள்.

சமூக நீதி, சமூகப் புரட்சிக் கொள்கையை மேலும் விரிவு படுத்துவது ஆழப்படுத்துவது என்கிற பெயரில் புகுத்தப்பட்டவைதாம் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் பரிந்துரை அமலாக்கம், உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் இடஒதுக்கீடுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், கல்வி உரிமையை அடிப்படையாக்கும் சட்டம் ஆகியன. இவற்றில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அமலாக்கப்படும் இலட்சணத்தை இதுவரைப் பார்த்தோம்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்படும் வரை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஓரளவு இருந்தது. அதிலும் உயர் கல்வியிலும், ஆசிரியர் மற்றும் நிர்வாகத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் தொடர்ந்து வஞ்சனை செய்யப்படுவதை கிருஷ்ணசாமியும் திருமாவளவனும் பலமுறை சுட்டிக் காட்டி வெள்ளை அறிக்கை கோரி வருகின்றனர். ஆனால், அரசுகள் எதுவானாலும் செவி சாய்ப்பதே கிடையாது.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகோ கல்வித்துறையில் அரசின் பொறுப்புகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. எங்கும் மேட்டுக்குடி ஆதிக்க சாதிப் பிள்ளைகள் மட்டு@ம படிக்கக் கூடிய ஆங்கில வழிப் பொதுப்பள்ளிகள் (மெட்ரிக்) அதையும் விட “உயர்தரம்”, “உலகத்தரத்தில்” சீமான்வீட்டுப் பிள்ளைகள் தங்கிப் படிக்கும் பள்ளிகள் பல்கிப் பெருகி வருகின்றன. கல்விக்கான அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏழை மாணவர்க்கு 25 சதவீத இடஒதுக்கீடு என்பதும், தனியார்  பொதுத்துறை கூட்டுப் பங்கேற்பு என்ற பெயரிலும் புதிய மனுதர்ம அடிப்படையில் நவீன தீண்டாமை பின்பற்றப்படுகிறது. பழைய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டு பாழடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அடிப்படைக் கட்டுமான வசதிகளும் இல்லை; தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் இல்லை. அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இதே நிலையில்தான் உள்ளன. இந்த வகைப் பள்ளிகள்  கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் தனியார்துறைத் தொழில் மற்றும் நிர்வாகக் கல்வியிலும்  வேலைகளிலும் பணிகளிலும் புறக்கணிக்கப்பட்டு, ஒருவகைத் தீண்டாமைக் கொள்கை பின்பற்றப்படுகிறது.

இட-ஒதுக்கீடு-புரட்சி
வன்கொடுமைச் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தக்கோரி அருந்ததியர் சாதியைச் சேர்ந்த பெண்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்

பொறியியல், மருத்துவம், நிர்வாகம், சட்டம் போன்ற தொழிற்சார் கல்வி நிறுவனங்கள், மிகப் பெரும்பாலும் சுயநிதித் தனியார் துறையில் புற்றீசல்களாகப் பல்கிப் பெருகி வருகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் அரசுக்கான இட ஒதுக்கீடுகள் இருப்பினும், சாமானிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில முடியாதவாறு கட்டாயக் கட்டணம் கடுமையாக வசூலிக்கப்படுகிறது. பொதுத்துறைத் தொழில்கள் தனியார்மயமாக்கப்படுவதோடு, உள்நாட்டு  வெளிநாட்டு கார்ப்ப@ரட் தரகு முதலாளிகளின் ஏகபோகமாக தொழிற்துறை மாறிவிட்டது. ஆகவே, தாழ்த்தப்பட்டோருக்குத் தொழில்துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது வெறுங்கனவாகி வருகிறது. மேற்படிக் கல்வியிலும் பணிகளிலும் தனிநபர் என்கிற முறையில் ஒரு சிலரின் “சாதனைகள்” முன்னேற்றங்கள் மட்டும் எடுத்துக்காட்டுகளாக செய்தி ஊடகங்களில் பிரபலப்படுத்தப்படுகின்றன. மற்றபடி ஒரு சமூகம் என்கிற முறையில் பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலனடைந்து வருவதாகக் கூற முடியாது. ஆக, தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி என்பது கானல் நீராக உள்ளதென்பதே உண்மையாகும்.

ஆனால், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற்றதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறிவிட்டதாகவும், சமூக நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாகவும், அதை அரசியல் ரீதியில் விரிவுபடுத்த வேண்டியதுதான் குறைபாடாக நிலவுவதாகவும் கற்பிக்கும் ஆளும் கட்சிகள் ஜனநாயகத்தைப் பரவலாக்குவது, சமூக நீதியை உறுதி செய்வது என்ற பெயரில் உள்ளூராட்சி வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு செய்து அதிகாரப் பகிர்வு கொண்டு வந்தன. உள்ளூராட்சிகளில் அதிகாரப் பகிர்வு, இடஒதுக்கீடு என்ற ஏற்பாட்டைக் கேலிக்கூத்தாக்கி விடும் வகையில் ஆதிக்க சாதியினர் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். முக்குலத்தோரின் கடும் எதிர்ப்பையும் மீறி உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மேலவளவு முருகேசன் படுகொலை நாடு தழுவிய அளவில் தெரிந்த விவகாரம். கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தவிடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்து நிறுத்தியிருந்ததும் அனைவரும் அறிந்ததே. ஆனால், தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளூராட்சித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தாழ்த்தப்பட்ட மக்கள் “ஆட்சி” நடத்த முடியாமல் முடக்கி வைத்து அவமானத்துக்குள்ளாக்கும் நிகழ்வுகள் பலவும் நடந்து வருகின்றன.

நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளி தெய்வானை போன்றவர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல் வன்முறைகள் தொடர்கதைகளாக உள்ளன. விருதுநகர் மாவட்டம் கொட்டக்கச்சியேந்தல் கிராம ஊராட்சித் தலைவர் கருப்பன் கொடுத்துள்ள புகாரின்படி, அவர் தொடர்ந்து சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்படுகிறார்; மன்றக் கூட்டங்களின்போது தரையில் உட்கார வைக்கப்படுகிறார்; தொகை நிரப்பப்படாத காசோலைகளில் கையொப்பமிடும்படி நிர்பந்திக்கப்படுகிறார்; மன்ற ஆவணங்கள், கணக்கேடுகள் காட்டப்படுவதில்லை; ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவனும் அலுவலக எழுத்தருமே தலைவரை ஒடுக்கி வைக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருவடத்தெரு ஊராட்சி மன்றத் தலைவர் அ.கலைமணியை குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்துத் தாக்கியுள்ளனர், ஊராட்சி மன்ற ஆதிக்கசாதித் துணைத்தலைவரின் மகனும் 20 ரௌடிகளும். இவ்வாறு செய்வதென்று கள்ளர் சாதியினர் திட்டமிட்டிருந்ததை அறிந்து போலீசிடம் முன்கூட்டியே கலைமணி புகார் அளித்தும் பாதுகாப்புக் கோரியதும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

ஊராட்சிமன்றத் தலைவர்கள் கருப்பனுக்கும் கலைமணிக்கும் கிருஷ்ணவேணி மற்றும் வள்ளி தெய்வானைக்கும் நேர்ந்துள்ளது தனிப்பட்ட ஒரு சில சம்பவங்கள் அல்ல. தமிழ்நாடு மகளிர் பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு  புதுச்சேரி தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்பு ஆகியவை சார்பாக உண்மை அறியும் குழு கடந்த இரண்டாண்டுகள் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது ஆதிக்கச் சாதியினர் தொடுக்கும் வன்கொடுமைத் தாக்குதல்களைப் பற்றிப் பல உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. பல கிராமங்களில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த துணைத் தலைவர்கள், எழுத்தர்கள், மக்கள் நலப் பணியாளர்களே அதிகாரத்தைப் பறித்துக் கொள்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்கென்று அரசு ஒதுக்கும் நிதியை அம்மக்களுக்கென்று தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களேகூட பயன்படுத்த முடியாத நிலைதான் உள்ளது. அவர்கள் கொடுக்கும் புகார்களைப் பதிவுகூட செய்ய மறுக்கும் அதிகாரவர்க்கமும் போலீசும் நீதித்துறையும் ஆதிக்க சாதியினரின் முழுக் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இவையே ஒடுக்குமுறை வன்கொடுமை அமைப்புகளாகவும் உள்ளன.

இட-ஒதுக்கீடு-புரட்சி
ஆதிக்க சாதிவெறிக் கும்பலால் தாக்கப்பட்ட தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவி கிருஷ்ணவேணி

இடஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி என்ற ஏற்பாடு கொண்டு வரப்பட்டு ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலாகி விட்டது. காந்தி  அம்பேத்கருக்கிடையே ஏற்பட்ட பூனே ஒப்பந்தம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ ஜனநாயக உரிமையைக் கொண்டு வந்து முக்கால் நூற்றாண்டு கால சாதனையாகப் போற்றப்படுகிறது. உள்ளூராட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மகளிருக்கான இடஒதுக்கீடு செய்யும் 73வது அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு முப்பதாண்டுகளுக்கும் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 22 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இத்தனை ஆண்டுகளில் இத்தகைய சட்டங்களும், அவற்றின் அமலாக்கங்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், விளைவுகள், முன்னேற்றங்கள் பற்றிய ஆய்வும் தொகுப்பும் செய்யப்படவே இல்லை.

அரசும், அரசு சார்பு அமைப்புகளும் இதைச் செய்யாததில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்த வகையில் அவற்றின் தோல்வியையும் செயலற்ற தன்மையையும் சார்புத் தன்மையையும் அத்தகைய ஆய்வும், தொகுப்பும் சொல்லிவிடும். தாழ்த்தப்பட்டோருக்கான கட்சிகள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும்கூட இதைச் செய்வதில்லை. தனிப்பட்ட சம்பவங்களாக மட்டுமே இவை கையாளுகின்றன. தமது கையாலாகாத்தனம் அப்பட்டமாகி விடும் என்பதாலேயே தொகுப்பான ஆய்வுகளுக்கும் முடிவுகளுக்கும் இவை வர மறுக்கின்றன. முற்போக்கு சிந்தனையாளர்களாகக் காட்டிக் கொள்ளும் பின்நவீனத்துவ, பின் மார்க்சிய அறிஞர்கள், இவை பற்றிய தொகுப்பான ஆய்வுகளுக்கும் முடிவுகளுக்கும் வருவதே தவறான அணுகுமுறை என்றும், பெருங்கதையாடல் என்றும் ஒதுக்கிவிட்டுத் தனித்தனி நிகழ்வுகளாக மட்டுமே பார்த்து, மனித உரிமை மீறல்களாகக் கருதி, உண்மை அறியும் குழுக்களை அமைத்துக் கொண்டுபோய் ‘கள’ நிலைமைகளை ஆய்வு செய்து அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தாலே போதும் என்றிருக்கின்றனர்.

இதுவரை இத்தனை ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு மேற்கொண்ட சமூகநீதிக்கான இடஒதுக்கீடுகள் போன்ற ஏற்பாடுகளும், சீர்திருத்தச் சட்டங்களும், வளர்ச்சிமுன்னேற்றத்துக்கான திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இம்மக்கள் வாழ்வில், சமூகத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டன என்று யாராலும் துணிந்து கூற முடியாது. மாறாக, இத்தகைய முயற்சிகள் மூலம் சாதிய சமத்துவத்தை ஒருக்காலும் ஏற்படுத்தி விட முடியாது என்பதையே நாட்டில் நாளும் பெருகிவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல்கள் திரும்பத் திரும்பக் காட்டுகின்றன.

புகார்களும், முறையீடுகளும் முன்வைக்கப்படும் இடங்களில், விவகாரங்களில் மட்டுமே பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றில் தலையிட்டுச் சரிசெய்து விட்டால் போதுமானது என்றும் அரசு மாய்மாலம் போடுகிறது. மற்ற இடங்களில், விவகாரங்களில் பிரச்சினைகள் ஏதும் இல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் சீரான முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் என்றதொரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.

இட-ஒதுக்கீடு-புரட்சிதாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும். சமூக நீதிக்கான இடஒதுக்கீடுகளை மேலும் உறுதியாக்க வேண்டும், இம்மக்களின் நலன்களுக்கான திட்டங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் அதிகமாக்க வேண்டும்” என்பதற்கு மேல் செல்வதில்லை. “தலித்” அமைப்புகளின் முறையீடுகள், புகார்கள் எல்லாம் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோரின் பாராமுகச் செயல்பாடுகள் மீது குறை காண்பதோடு நின்று விடுகின்றன. ஆனால், இத்தகைய கோரிக்கைகள், முறையீடுகள், புகார்கள் எல்லாமும் ஒட்டு மொத்த அரசு  அமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாகவே உள்ளன.

“தலித்” அமைப்புகளுக்கு மட்டுமல்ல; அவற்றின் பேராசானாக கருதப்படும் அம்பேத்கருக்கே கூட அரசு மூலமாக மேற்கொள்ளப்படும் சட்டபூர்வ, அதிகாரபூர்வ நடவடிக்கைகளைக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக, அரசியல் ,பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டு விட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அம்பேத்கரியவாதிகள் ஒவ்வொரு விவகாரத்திலும் திரும்பத் திரும்பக் கூறும் குற்றச்சாட்டு, “தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கும் பாதுகாப்புக்கும், உரிமைக்கும் பெரும் இடையூறாகவும் கேடு விளைவிப்பதாகவும் இருப்பது ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அதிகார வர்க்கத்தினரும் காவல்துறையினரும்” என்பதுதான்.

ஆங்கிலேயக் காலனியவாதிகளால் கட்டியெழுப்பப் பட்டு, ஆதிக்க சாதிகள் மற்றும் தரகு முதலாளிகள் அடங்கிய ஆளும் வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகளான காந்திநேரு காங்கிரசினால் வரித்துக் கொள்ளப்பட்ட இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது, சாதிய சமுதாய அமைப்பு குலைந்து போகாமல் காப்பதற்கானதுதான். இதன் அங்கங்களான அதிகார வர்க்கம், இராணுவம், போலீசு, நீதிமன்றங்கள் எல்லாம் சாதிய சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக உள்ளவைதாம்.

இந்த நோக்கத்துக்காகவே போதனையும் பயிற்சியும் அளிக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்படும் மேற்படி அரசு அமைப்பினரே ஒரு தனிவகை சாதியினர். சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ இந்தத் தனிவகை சாதிய அமைப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை, தனி ஒரு சாதியினை தாக்கித் தகர்த்து விட்டு, தமக்கென ஒரு புதிய அரசுக் கட்டுமானத்தை நிறுவிக் கொள்வதுதான் அரசியல் புரட்சி; இவ்வாறான அரசியல் புரட்சி ஒன்றின்றி சமூகப் புரட்சி சாத்தியமே கிடையாது. பழைய கட்டுமான அமைப்பை அப்படியே தக்க வைத்துக் கொண்டு உழைக்கும் மக்கள்  ஒடுக்கப்படும் சாதியினர் தமது நலன்களுக்கான சமத்துவம், ஜனநாயகம், சமூக நீதியை நிறுவுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

இதுதான் புரட்சிகரக் கண்ணோட்டம். ஆனால், புரட்சி பற்றிய இத்தகைய பார்வையின்றி, நமது நாட்டில், தமிழகத்தில் எத்தனையோ ‘புரட்சிகள்’ அவதாரமெடுத்துள்ளன. அம்பேத்கர் தலைமையில் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டமும், அதன் பிறகு  இடஒதுக்கீட்டை உறுதி செய்த முதலாவது அரசியல் சட்டமும்கூட இந்திய அரசியலமைப்பின் மேற்படி குணத்தை (சாதிய  வர்க்கத் தன்மையை) மாற்றி அமைத்துவிடவில்லை. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர்  இடஒதுக்கீடு ஏற்பாடு மூலம் இந்த அரசு இயந்திர அமைப்பில் சேருவதனால், அவ்வாறான மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடுவதில்லை. மாறாக, இவர்களும் அந்தப் புதிய, தனிவகை சாதியினராக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கான போதனை, பயிற்சி, குடியிருப்பு, வாழ்க்கைமுறை, பண்பாடு, அதிகாரம் எல்லாமும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுகின்றன. குடியரசுத் தலைவரான கே.ஆர். நாராயணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் முதல் தமிழகத் தலைமைப் போலீசு அதிகாரிகளான காளிமுத்து, முத்துக்கருப்பன் வரை இதுதான் பொதுவிதியாக உள்ளது. அரசு அமைப்புக்குள்ளாகவே ஆதிக்க சாதி அதிகாரிகளால் ஒடுக்கப்படும் சாதி அதிகாரிகள் சமமாக நடத்தப்படுவதில்லை, இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்கிற உண்மையும் கூட இந்தப் பொதுவிதியை மறுப்பதில்லை. சாதிய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக நிறுவப்பட்டுள்ள அரசு அமைப்புக்குள் மட்டும் சாதிய சமத்துவம் நிலவுமா, என்ன? உமாசங்கர், சிவகாமி போன்றவர்களுக்கு மட்டும் நீதியும் சமத்துவமும் கொடுக்கப்படுமா, என்ன?

தாழ்த்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி ஏற்பாடுகள், முன்னேற்றத்துக்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், பாதுகாப்புக்கான சட்டங்கள், ஆட்சி அதிகாரப் பகிர்வுக்கான உள்ளூராட்சி ஒதுக்கீடுகள்  இவை எல்லாமும் ஏற்கெனவே உள்ள அரசியல், சமுதாய, பொருளாதாரக் கட்டமைவுக்குள்ளாகவே செய்யப்படும் சீர்திருத்தங்கள் தாமே தவிர, இக்கட்டமைப்பைத் தகர்ப்பதற்கான, இதற்கு வெளியே மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எதுவும் கிடையாது. பெரியார், அம்பேத்கார் முதலியவர்களுக்கு எவ்வளவுதான் நேர்மையான, உயரிய நோக்கங்கள் இருந்தபோதும், அவர்கள் முன்வைத்த தீர்வுகள் இந்தக் கட்டமைவைத் தகர்த்துப் புதிய கட்டுமானத்தை நிறுவுவதற்கான புரட்சிகர உள்ளடக்கத்தையும் வழிமுறைகளையும் கொண்டவையாக இல்லை. அம்பேத்கர் உயர்த்திப் பிடித்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகத் தத்துவம்கூட மேற்கத்திய முதலாளியக் கண்ணோட்டம்தானே தவிர, உழைக்கும் மக்களின் ஜனநாயகம் அல்ல.

மார்க்சிய ஆசான்களாலேயே முன்வைக்கப்படாத, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பான சாதியாதிக்க சமூகத்தைக் கொண்டது இந்திய நாடு என்கிற பேருண்மையைப் பெரியாரும் அம்பேத்கரும் மட்டுமே கண்டுபிடித்து விட்டதாக அம்பேத்கரிய, பெரியாரியவாதிகளால் உரிமை பாராட்டப்படுகிறது. ஆனால், அச்சாதி ஆதிக்க சமூகத்தைத் தகர்க்கவும், சமத்துவ, ஜனநாயக சமுதாயத்தை உருவாக்கவும் கூடிய, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பான புரட்சிகரமான தீர்வுகளையும் வழிமுறைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளார்களா?

அடுக்கடுக்கான படிநிலை சாதிய சமுதாயத்தில், சாதி இந்துக்களுக்கு மட்டுமே சாதி ஆதிக்கமும் அதிகாரமும் உள்ளது. அவை பலவீனமடைவதாக உணரும்போதெல்லாம் ஆதிக்க சாதிகள் கூட்டுச் சேர்ந்து புதுப்புது நடைமுறைகளைக் கண்டுபிடித்து மீண்டும் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். ஆகவே, வேண்டுவது மேலும் மேலும் சீர்திருத்தங்கள் அல்ல! கெட்டி தட்டிப் போயிருக்கும் சாதியாதிக்க சமுதாயத்தை உலுக்கித் தலைகீழாகப் புரட்டிப் போடும் உழைக்கும் மக்கள் தலைமையிலான சமூக அரசியல் புரட்சி! ‘தலித்’ தலைவர்களும் அமைப்புகளும் அத்தகைய புரட்சிக்குத்தான் பணியாற்றுகிறார்களா?

___________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_________________________________________________

படிக்க

கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -4

3
கறுப்பு-பணம்

னக்கு ஒரு கனவு உண்டு. எந்த தேசமும் சொந்தம் கொண்டாட முடியாத வகையில், நமக்கு மட்டும் சொந்தமான ஒரு தீவை விலைக்கு வாங்க வேண்டும். எந்த தேசத்துக்கும் சமூகத்துக்கும் கட்டுப்படத் தேவையில்லாத, உண்மையிலேயே நடுநிலையான அந்த மண்ணின் மீது டௌ நிறுவனத்தின் உலகத் தலைமையகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.’

கார்ல் கெர்ஸ்டாக்கர், தலைவர், டௌ கெமிக்கல்ஸ்,1972.

கறுப்பு-பணம்இந்தியாவிலிருந்து வெளியேறிய கறுப்புப் பணம், அந்நிய முதலீடாக வேடமணிந்து இந்தியாவுக்குள் நுழைவதை முன்னேற்றம் என்று கொண்டாடிக் கொண்டே, கறுப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்கிறது அரசு என்று குறிப்பிட்டு, ஜூலை இதழில் இக்கட்டுரைத் தொடரை நிறுத்தியிருந்தோம்.

2009  ஆம் ஆண்டில் இந்தியாவில் போடப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடுகளில், 21% மொரிசியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்களின் மூலம் நுழைந்திருக்கும் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் கறுப்பு பணம்தான் என்கிறது ஐ.எஸ்.ஐ.டி. என்ற ஆய்வுக் கழகத்தினைச் சேர்ந்த பேரா.சலபதி ராவ், பிஸ்வஜித் தர் ஆகியோருடைய ஆய்வு.

இதுவன்றி அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் ( FII ) மூலம் இந்தியப் பங்குச்சந்தைக்குள் அன்றாடம் நுழைந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான டாலர்களுக்குள்ளேயும் இந்தியக் கறுப்பு பணம் இருக்கிறது. அது சர்வதேச நிதிமூலதனம் என்ற பரமாத்மாவில் ஐக்கியமாகிவிட்ட தேசிய கறுப்புப் பண ஜீவாத்மா. அதனைப் பிரித்தறிவது கடினம்.

“இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்பட்ட சட்டவிரோத (கருப்பு) பணத்தின் கணிசமான பகுதி, ஹவாலா, வரியில்லா நாடுகள் மூலமான அந்நிய நேரடி முதலீடு, இந்திய கம்பெனிகளுக்கான பன்னாட்டு முதலீட்டு வரவுகள் (GDR), பார்ட்டிசிபேட்டரி நோட்டுகள் ஆகிய வடிவங்களில் மீண்டும் இந்தியாவுக்குள்ளேயே நுழைந்திருப்பது சாத்தியமே” என்று கூறுகிறது நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்டிருக்கின்ற கறுப்பு பணம் குறித்த வெள்ளை அறிக்கை.

மேற்கூறிய ‘கருப்புப் பண‘ தீவுகளெல்லாம் ஏதோ சட்டத்திற்கு உட்படாத மர்மமான பிராந்தியங்கள் போலவும், அவர்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு அரசுகள் முயன்று கொண்டிருப்பதைப் போலவும், இந்திய அரசும் அவ்வாறு முயன்றால், கறுப்புப் பணம் மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு வந்துவிட முடியும் என்பதைப் போலவும் உருவாக்கப் படும் சித்திரம் அபத்தமானது, மோசடியானது என்பதை இத்தொடரில் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம்.

நிக்கோலஸ் ஷாக்ஸன் என்ற பொருளாதாரப் பத்திரிகையாளர் எழுதி, சென்ற ஆண்டு வெளிவந்துள்ள “டிரஷர் ஐலேண்ட்ஸ்  வரியில்லா சொர்க்கங்களும், உலகத்தைக் கொள்ளையிடும் மனிதர்களும்” என்ற நூல், ஏகாதிபத்தியங்கள் இந்தக் கடல் கடந்த சொர்க்கங்களைத் திட்டமிட்டே எப்படி உருவாக்கின என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது.

கடல் கடந்த சொர்க்கங்கள் எனப்படுபவை, சுயேச்சையான அரசுகள் அல்ல; அவை, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற உலகின் வல்லரசுகளால்  கட்டுப்படுத்தப்படும் வலைப்பின்னல்கள் என்பதை ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறார், ஷாக்ஸன்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சரிந்து விட்ட தனது உலக சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ள இயலாத பிரிட்டன், உலகின் நிதி மூலதனத்தைத் தன்னை நோக்கி ஈர்க்கும் பொருட்டு இலண்டன் மாநகரத்தையே உலக கோடீசுவரர்களின் பணத்தைப் பாதுகாக்கும் ரகசியச் சுரங்கமாக மாற்றியது என்கிறார் ஷாக்ஸன். பிரிட்டிஷ் அரசின் சட்டங்களுக்கு, குறிப்பாக நிதி மற்றும் வரிகள் தொடர்பான சட்டங்களுக்கு அப்பாற்பட்ட, ஒரு தனித் தீவாக, ‘சிட்டி ஆப் லண்டன்’ என்ற நிதி நகரத்தைச் சட்டபூர்வமாக உருவாக்கியதுடன், உண்மையான இலண்டன் நகரத்துக்கான மேயரைப் போன்றே, இந்த நிழல் நகரத்துக்கும் ஒரு மேயரை உருவாக்கியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.

இப்படி உலகெங்குமுள்ள முதலாளிகளும் கோடீசுவரர்களும், தத்தம் நாட்டின் சட்டங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு இடத்தில், தமது பணத்தை இரகசியக் கணக்குகளில் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியும் என்பதற்கான சாத்தியத்தை உருவாக்கியதே பிரிட்டன்தான்.

இன்று மொரிசியஸ் உள்ளிட்ட வரியில்லா சொர்க்கங்களில்  கம்பெனிகளைப் பதிவு செய்து கொண்டு வரி ஏய்ப்பு செய்பவர்கள், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை இன்னொரு நாட்டில் உள்ள தனது நிறுவனத்தின் கிளைக்கே பத்து ரூபாய்க்கு விற்றதாகக் கணக்கெழுதி ( Transfer pricing) நட்டக்கணக்கு காட்டி வரி ஏய்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் பிதாமகர்களே பிரிட்டனைச் சேர்ந்த ஏகபோக முதலாளிகளான வெஸ்டே சகோதரர்கள்தான் என்பதையும் தனது நூலில் கூறுகிறார் ஷாக்சன்.

பிரிட்டனின் காலனியாக இருந்த 14 சிறிய தீவுகளை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கடல் கடந்த பிரிட்டிஷ் பகுதிகளாக (Overseas British Territories) அறிவித்துக் கொண்டது பிரிட்டன். இன்று வோடஃபோன் வழக்கில் 11,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருக்கும் ஹட்சின்சன் வாம்போவா நிறுவனம், பதிவு செய்யப்பட்டிருக்கும் கே மேன் தீவுகள் உள்ளிட்ட இந்த 14 சொர்க்கத்தீவுகள் கொண்ட வலைப்பின்னலின் சிலந்தி, இலண்டன் நிதி நகரம். வெறும் 54,000 பேர் மக்கட்தொகை கொண்ட கே மேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுமே 80,000.

பிரிட்டன் நிதி நகரத்தைப் போலவே, அமெரிக்கா, தன் நாட்டுக்குள்ளேயே உருவாக்கியிருக்கும் வரியில்லா சொர்க்கம் டெலாவர் என்ற மாநிலம். ‘பார்ச்சூன் 500‘ என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் டெலாவரில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. டெலாவரில் ஒரு கம்பெனியைப் பதிவு செய்து அம்மாநில அரசின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தேவைப்படும் அவகாசம் ஒரே ஒரு நாள் என்று இம்மாநிலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது.

இத்தனை பெரிய வரியில்லா சொர்க்கத்தை தன் நாட்டில் வைத்துக் கொண்டு,கே மேன் தீவுகளில் ஒரே கட்டிடத்தில் 12,000 கம்பெனிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்று அந்த அரசை விமரிசித்தார் ஒபாமா. “அது உலகின் மிகப்பெரிய கட்டிடமாக இருக்கவேண்டும், அல்லது  மிகப்பெரிய ஊழலாக இருக்க வேண்டும்” என்று கேலி செய்தார்.

இதற்குப் பதிலளித்த கேமேன் தீவுகளின் நிதித்துறை ஆணையர், டெலாவர் மாநிலத்தில், 1209, வடக்கு ஆரஞ்சு தெரு, வில்மிங்டன்  என்ற முகவரியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், கோகோ கோலா, போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், கென்டகி சிக்கன், கூகிள், டாயிஷ் வங்கி உள்ளிட்ட 2,17,000 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை ஒபாமாவுக்கு நினைவுபடுத்தி, ஈயத்தைப் பார்த்து பித்தளை இளிக்கக் கூடாது என்று ஒபாமாவுக்கு சூடு வைத்தார்.

உலகத்தில் உள்ள வரியில்லாத கறுப்புப் பண சொர்க்கத் தீவுகளைப் பட்டியலிட்டால், அதில் முதல் இரண்டு இடங்கள் இலண்டனுக்கும் டெலாவருக்கும்தான் என்கிறார் ஷாக்சன்.

கறுப்பு-பணம்

உலகமுழுவதிலும் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளும், கோடீசுவரர்களும் வரி ஏய்ப்பு, கள்ளக்கணக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் மூலம் தாங்கள் ஈட்டிய பணத்தை, பினாமி பெயர்களில் முதலீடு செய்வதற்குத் தெரிவு செய்யும் சொர்க்கத் தீவு எது?

‘டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க்‘ என்ற சர்வதேச தன்னார்வ அமைப்பு 2009   நவம்பரில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளும், நிதி நிறுவனங்களும் கோருகின்ற நிதித்துறை கள்ளத்தனத்தை (Financial secrecy) பேணுவதில் உலகத்திலேயே இலண்டன் 5  வது இடத்தில் இருக்கிறது. நான்காவது இடம் கேமேன் தீவு, மூன்றாவது இடம் சுவிஸ், இரண்டாவது இடம் லக்சம்பர்க், முதல் இடம் அமெரிக்கா. அதாவது, அம்பானி முதல் ஆ.ராசா வரையிலான யாரும் தங்களது பணத்தை இரகசியமாக முதலீடு செய்து வருவாய் ஈட்ட உகந்த இடம் அமெரிக்கா என்பதே இந்த ஆய்வு முடிவின் பொருள்.

கறுப்புப் பணம் என்பது கட்டு கட்டாக ஸ்விஸ் வங்கியின் இரும்பு பீரோக்களில் வைக்கப்பட்டிருப்பதல்ல. பூட்டி வைக்கப்பட்டால் அது செத்த பணம். உயிருடன் அலைந்து சுரண்டலில் ஈடுபட்டு அல்லது சூதாட்டத்தில் ஈடுபட்டு, பெருக முடிந்தால்தான் அது மூலதனம். பங்குச் சந்தை, நாணயச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் உற்பத்தி போன்றவற்றில் புகுந்து மூலதனம் இலாபமீட்டவேண்டும். அதே நேரத்தில் எந்த நாட்டின் சட்டத்திற்கும் வரி விதிப்பிற்கும் கட்டுப்படவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கக் கூடாது. இதுதான் உலக முதலாளி வர்க்கத்தின் விருப்பம்.

கடந்த சுமார் 25 ஆண்டுகளில், அதாவது உலகம் முழுவதும் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதற்குப் பின்னர், முதலாளி வர்க்கத்தின் இந்த விருப்பம் வெகு வேகமாக நிறைவேறி வருகிறது. முகவரி இல்லாத முதலீட்டு வடிவங்களைச் சட்டபூர்வமானவையாக ஆக்கியதன் மூலம், சட்டவிரோதமானவையெல்லாம் சட்டபூர்வமானவையாகிவிட்டன. கறுப்பு வெள்ளையாகிவிட்டது.

எடுத்துக் காட்டாக, பிரைவேட் ஈக்விடி போன்ற முதலீட்டு நிறுவனங்களில், பார்ட்டிசிபேட்டரி நோட்டுகள் போன்ற நிதிக் கருவிகளில் (Financial instruments) டாடா, மித்தல், அம்பானி முதலிய தரகு முதலாளிகள் தங்களது வரி ஏய்ப்பு செய்த கறுப்பு பணத்தையோ, அமைச்சர்கள் தங்களது ஊழல் பணத்தையோ எத்தனை ஆயிரம் கோடிவேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அந்த நிறுவனங்கள் அப்பணத்தை எந்த நாட்டின் பங்குச் சந்தையிலும் சூதாடி இலாபம் ஈட்டும். தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் யார் என்பதை எந்த அரசுக்கும் அவர்கள் காட்டத்தேவையில்லையென்றும், அவர்கள் போட்டிருக்கும் மூலதனத்துக்குக் கிடைக்கின்ற ஆதாயத்திற்கும் (Capital gains) வரி செலுத்த தேவையில்லை என்றும் டெலாவர், இலண்டன், கேமேன் தீவுகள் போன்றவை சட்டமியற்றி வைத்துள்ளன. வரி ஏய்ப்பு, இரகசியம் என்ற இரட்டை ஆதாயங்களை வழங்குவதால்தான் பன்னாட்டு நிறுவனங்களும் ஊழல் அரசியல்வாதிகளும் தங்கள் கறுப்பு பணத்தை இங்கே முதலீடு செய்கின்றனர்.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் முதல் தனியார்துறை நிறுவனங்கள் வரை பலவற்றிலும் அந்நிய நிதி நிறுவனங்களின் (FII) முதலீடு பெருகி வருகிறது. ஆனால் இப்படி முதல் போடும் ‘அந்நியர்கள்‘ யார் என்பது இந்திய அரசுக்குத் தெரியாது. காரணம், இவை முகமூடி அணிந்த முதலீடுகள். இவ்வாறு “பங்குச்சந்தைக்குள் முகவரி தெரியாத முதலீடுகள் நுழைவது ஆபத்து” என்று ஒருபுறம் ரிசர்வ் வங்கி கூறுவதும், மறுபுறம் “அந்நிய முதலீடுகள் பெருகுவதுதான் முன்னேற்றம்” என்று மன்மோகன் அலுவாலியா கும்பல் கூவுவதும் தொடர்ந்து நாம் கண்டு வரும் காட்சிகள்.

2007அக்டோபரில், அந்நிய மூலதனத்தில் சரி பாதி, பார்ட்டிசிபேட்டரி நோட்டுகள் என்ற வடிவத்தில் வந்திருப்பது கண்டு பீதியடைந்த செபி (SEBI) அமைப்பு அதனைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற தகவலை நிதியமைச்சகத்துக்கு அனுப்பியது. இந்த செய்தி கசிந்தவுடன் அக்டோபர் 17  ஆம் தேதி ஒரே நாளில் சென்செக்ஸ் 1744 புள்ளிகள் வீழ்ந்தது. மும்பை பங்குச் சந்தையின் வரலாற்றில் இவ்வளவு மோசமான வீழ்ச்சி நடந்ததில்லை. பங்குச்சந்தையின் செயல்பாடு ஒரு மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பார்ட்டிசிபேட்டரி நோட்டுகளை தடை செய்யப்போவதில்லை என்று காலில் விழாத குறையாக நிதி அமைச்சர் சிதம்பரம் கெஞ்சிய பின்னரே, பங்குச் சந்தை சாதாரண நிலைக்கு திரும்பியது.

தற்போது வோடஃபோன் வரி ஏய்ப்பைத் தொடர்ந்து, வரி தவிர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை (GARR) அறிமுகப்படுத்த இருப்பதாக நிதியமைச்சகம் கூறியதும், சுமார் ஒரு இலட்சம் கோடி அந்நிய மூலதனம் வெளியேறியது. உடனே நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி , “அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் பார்ட்டிசிபேட்டரி நோட்டுகளாக  முதலீடு செய்துள்ளவர்கள் யார் என்ற கேள்வியை இந்திய வரி அதிகாரிகள் யாரும் கேட்கமாட்டார்கள். சோதிக்கவும் மாட்டார்கள். எனவே, பார்ட்டிசிபேட்டரி நோட் உரிமையாளர்கள் இந்தியாவில் வரி கட்டவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சத்தியம் செய்தார். (தி இந்து, மார்ச்30, 2012)

வரிவிதிப்பு தொடர்பான இந்திய அரசின் கொள்கைகள் அமெரிக்க முதலீட்டாளர்களை அச்சுறுத்துவதாக இந்திய அரசை ஒபாமா எச்சரித்தவுடன், “விதிகள் தளர்த்தப்படும்” என்றார் மன்மோகன். அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார் தற்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம். ஜி.ஏ.ஏ.ஆர் விதிமுறைகளை உருவாக்கிய வருவாய்த்துறை செயலர் ஆர்.எஸ்.குஜ்ராலும் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டுவிட்டார்.

கறுப்பு-பணம்வோடஃபோன் வரி ஏய்ப்பைத் தொடர்ந்து, 1983இல் மொரிசியசுடன் போடப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யப்போவதாக நிதியமைச்சகம் கூறியவுடனே, அங்கே பெயர்ப்பலகை கம்பெனி வைத்துள்ள இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு கம்பெனிகள் மொரிசியஸ் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்தியாவுக்குப் பத்தி விட்டனர். 1983 ஒப்பந்தத்தை மாற்றவோ, திருத்தவோ வேண்டாம் என்றும், 40 சதுர கி.மீ. பரப்பளவுள்ள ‘அகலேகா‘ தீவுகளை இந்தியாவுக்கு வழங்குவதாகவும், அங்கே இந்தியா கடற்படைத் தளம் அமைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் ஆசை காட்டியிருக்கிறார்.

சமீபத்தில் ஹாங்காங் ஷாங்காய் பாங்கிங் கார்ப்பரேசன் (HSBC) என்ற பிரிட்டிஷ் வங்கியின் மீது அமெரிக்க அரசு பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது. அந்தப் பன்னாட்டு வங்கி மெக்சிகோவைச் சேர்ந்த போதை மருந்து மாஃபியாவின் கறுப்பு பணத்தை அமெரிக்காவுக்குள் முதலீடு செய்திருக்கிறது; சுமார் 700 கோடி டாலரை காகிதப் பணமாகவே மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்தி வந்திருக்கிறது. சவூதியை சேர்ந்த இசுலாமிய பயங்கரவாதிகளின் வங்கிக் கணக்கைப் பேணுகிறது.

இதேபோல, அமெரிக்க அரசு விதித்துள்ள பொருளாதாரத் தடையையும் மீறி, இரானின் வணிகத்தை கள்ளத்தனமாகச் செய்து கொடுத்ததாக ஸ்டான்சார்ட் வங்கியின் மீதும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருக்கிறது. ஆனால், இத்தகைய அதிபயங்கர குற்றங்களை இழைத்த வங்கிகளுக்கு அமெரிக்க அரசு விதித்திருக்கும் தண்டனை  அபராதம்!

கறுப்பை வெள்ளையாக்கும் குற்றம் (Money laundering) என்று அழைக்கப்படும் இந்தக் குற்றம் எச்.எஸ்.பி.சி. வங்கியில் நடந்தபோது அதன் தலைவராக இருந்த லார்டு ஸ்டீபன் கிரீன் என்பவர்தான், தற்போது பிரிட்டனின் வர்த்தகத்துறை அமைச்சர்.

இந்த இலட்சணத்தில், கறுப்பு பணத்துக்கு எதிராக அமெரிக்கஐரோப்பிய அரசுகள் தீவிரமான நடவடிக்கை எடுப்பதாகவும், அதுபோன்ற தீவிர நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவில்லை என்றும் பாரதிய ஜனதா, காங்கிரசு அரசை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.

கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் நடத்திக் காட்டப்படும் இந்த “திருடன்  போலீசு விளையாட்டில்”, திருடன்தான் போலீசு  கறுப்புதான் வெள்ளை ! இரண்டையும் வேறு வேறாகக் காண்பது நம்முடைய காட்சிப்பிழை.

கறுப்புப் பணம் என்பது, போதை மருந்துக் கும்பல்கள், கடத்தல்காரர்கள், மாஃபியாக்கள், பயங்கரவாதிகள் ஆகியோருடனும் ஊழல் அரசியல்வாதிகளுடனும் மட்டுமே தொடர்புள்ள, கன்னங்கரிய நெடிய கரடியைப் போன்ற சித்திரமாகவே மக்களின் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வெள்ளை நிறத்தின் பிரநிதிகளாக காட்டப்படும் டாடா, அம்பானி, மித்தல், மல்லையா போன்றோரே கறுப்பின் முதன்மையான உறைவிடங்கள்.

கறுப்புப் பணம் என்பது வரி ஏய்ப்பு செய்தது அல்லது இலஞ்ச ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈட்டியது என்று மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது. அவ்வாறே சித்தரிக்கவும் படுகிறது. ஆனால், சட்டபூர்வமானவை என்று அங்கீகரிக்கப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு உள்ளேதான் கறுப்புப் பணத்தின் பெரும்பகுதி ஒளிந்து கொண்டிருக்கிறது.

கறுப்புப் பணம் ஒளிந்திருக்கும் இடங்களாக வரியில்லா சொர்க்கத் தீவுகள் காட்டப்படுகின்றன. மாறாக, அவை சர்வதேச வர்த்தகத்தின் முக்கியமான வழித்தடங்கள். அந்தத் தீவுகளுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள், கறுப்பை வெள்ளையாக்கிக் கொள்வதற்கு முதலாளிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள்.

கறுப்பு என்பது முகமூடியின் நிறம் மட்டுமே. அதற்குப் பின்னால் இருக்கின்ற முகம் எது என்பதுதான் நம் கவனத்துக்குரியது. முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளான தரகு முதலாளிகள்.

டெலாவர், மொரிசியஸ், கே மேன் தீவுகள் போன்ற வரியில்லா சொர்க்கங்களில் இருப்பவை, பித்தளையில் பளபளக்கும் பெயர்ப் பலகைகள் மட்டுமே. அந்தப் பலகைகளின் பெயரில் நாள்தோறும் பல்லாயிரம் கோடி டாலர்கள் வால் ஸ்டிரீட்டிலும், இலண்டன், டோக்கியோ, மும்பை பங்குச்சந்தைகளிலும் சூதாடப்படுகின்றன.

பன்னாட்டு நிதி நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து வேலைக்கு அமர்த்தியிருக்கும் நிதித்துறை வல்லுநர்களும், ஆடிட்டர்களும், சர்வதேச வர்த்தகம் சார்ந்த சட்ட வல்லுநர்களும் புதிய புதிய சூதாட்ட முறைகளையும், கருவிகளையும் உருவாக்குகிறார்கள். நாடுகளில் கண்காணிப்புகளை மீறி, சட்டங்களின் ஓட்டைகளின் புகுந்து, எல்லாவிதமான வரிகளையும் ஏய்த்து இலாபமீட்டுகின்ற முறைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அமெரிக்காவின் டாட். காம் குமிழியை உருவாக்கியவர்களும், தென் கிழக்காசியாவை திவாலாக்கியவர்களும், சப்பிரைம் குமிழியை உருவாக்கி அமெரிக்க மக்களின் வீடுகளைப் பறித்தவர்களும், கிரீஸையும் ஸ்பெயினையும் போண்டியாக்கித் அந்த மக்களைத் தெருவில் நிறுத்தியிருப்பவர்களும் இவர்கள்தான்.

1997இல் 5.7 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) டாலராக இருந்த உலக கோடீசுவரர்களின் செல்வம் 2009இல் 32.8 டிரில்லியன் டாலராக உயர்ந்தது இப்படித்தான். “உலகின் சொர்க்கத் தீவுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 21 டிரில்லியன் டாலர்; அதிகபட்சம் 32 டிரில்லியன் டாலர்” என்கிறது டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க். இந்தியாவின் உண்மைப் பொருளாதாரத்தைப் போல 7 மடங்கு தொகை பங்குச்சந்தையிலும், நாணயச் சந்தையிலும், ஆன்லைன் வர்த்தகத்திலும் சூதாடப்படுகிறது. இதில் எவ்வளவு கறுப்பு, எவ்வளவு வெள்ளை என்பதை யாரும் கண்டறிய முடியாது.

“சிக்கலான நிதிக்கருவிகள், ஒன்றிலிருந்து ஒன்று கைமாறிச் செல்லும் சிலந்தி வலை போன்ற நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றைப் பின் தொடர்ந்து சென்று கறுப்புப் பணத்தின் உடைமையாளரை ஒருக்காலும் அடையாளம் காணமுடியாது. வங்கிக் கணக்குகளைச் சோதனை போடுவதையும் எந்த வங்கியும் அனுமதிக்காது. ஒரு வேளை கறுப்புப் பணத்துக்கு உரியவரைக் கண்டு பிடித்துவிட்டாலும், அதைச் சட்டப்படி நிரூபிப்பது சாத்தியமற்றது”  என்கிறார் குளோபல் பைனான்சியல் இன்டக்ரிடி என்ற அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர் தேவ்கார்.

சொர்க்கத்தீவுகள், அவற்றின் இறையாண்மை, இரகசியப் பாதுகாப்புச் சட்டங்கள் போன்ற ஏற்பாடுகள் அனைத்துமே உலக முதலாளி வர்க்கம் தனது கொள்ளையைப் பாதுகாப்பதற்கு செய்து கொண்டிருக்கும் ஏற்பாடு. இந்த ஏற்பாட்டுக்கு அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான அரசுகள்தான் போலீசாக நின்று காவல் காக்கின்றன. திருடனைப் பிடிக்கப்போவதாக சவடால் அடிப்பதும் இதே போலீசுதான்.

எந்த அரசுக்கும் சமூகத்துக்கும் கட்டுப்படத் தேவையில்லாத ஒரு தீவை டௌ கெமிக்கல்ஸ் தலைவர் 1972இல் கனவு கண்டிருக்கிறார். உலக முதலாளி வர்க்கத்தின் கனவும் அதுதான். கடந்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் அந்தக் கனவு நனவாகி வருகின்றது. நாடே பர்மா பஜார் ஆகிவிட்ட பிறகு, தனியே பர்மா பஜார் எதற்கு? மூலதனத்தின் வரியில்லா சொர்க்கமாக உலகமே மாறி வரும்போது தனி ஒரு தீவு எதற்கு?

ஆலகால நஞ்சாகத் திரண்டு மேலெழும்பி, உலக மக்களை அச்சுறுத்துகிறது மூலதனம். நஞ்சின் நிறம் கறுப்பானாலும் வெள்ளையானாலும் அதன் குணம் ஒன்றுதான்.

•முற்றும்

___________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_________________________________________________

அனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும்!

27
கால-பைரவர்

கால-பைரவர்யக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யாவும், அனுஷ்காவும் ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஜார்ஜியாவில் நடந்தது. அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் தெரியவரும் போது ஜெயமோகன் வயிற்றில் பால் வெள்ளம் பொங்குவது உறுதி.

படப்பிடிப்பு சமயத்தில் ஜார்ஜியாவை சேர்ந்த தெரு நாய் ஒன்று, யூனிட் ஆட்கள் எங்கு சென்றாலும் கூடவே சென்றிருக்கிறது. எனவே அனைவருக்கும் நண்பராகவும் மாறியிருக்கிறது. ஒருநாள் யூனிட்டை சேர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுவிட்டு, தன் வாயை டிஷ்யூ பேப்பரால் துடைத்து தூர எறிந்திருக்கிறார். இதைப் பார்த்த அந்த நாய், ஓடிச்சென்று அந்த டிஷ்யூ பேப்பரை கவ்வி சாப்பிட ஆரம்பித்திருக்கிறது.

உடனே அனுஷ்கா, பதறி விட்டார். டிஷ்யூ பேப்பரை சாப்பிட்டால், நாயின் உடல்நலம் பாதிக்கும். பேதியாகும். எனவே ஓடிச்சென்று நாயின் வாயை பற்றி திறந்திருக்கிறார். அத்துடன் தன் கையை நாயின் வாயில் விட்டு அந்த டிஷ்யூ பேப்பரை முழுமையாக எடுக்க முயன்றிருக்கிறார். நாய்க்கு இது பிடிக்கவில்லை. கேவலம் ஐந்தறிவு படைத்த உயிரினம்தானே? எனவே எங்கே தன் உணவை பறிக்க அனுஷ்கா முயல்கிறாரோ என்று நினைத்து கோபத்துடன் அவர் கையை கடித்து விட்டது.

அனுஷ்கா அசரவேயில்லை. வசிஷ்டரில் ஆரம்பித்து ரமணர் வரை சகல ஞானிகளும் அருள்வாக்கு வழங்கிய இந்துஞான மரபின் ஜீவகாருண்யத்தை அல்லவா உண்டு செறித்து வாழ்கிறார்? எனவே நாய் கடியையும் தன் பல்லைக் கடித்தபடி பொறுத்துக் கொண்டார். முழுமையாக டிஷ்யூ பேப்பரை நாயின் வாயில் இருந்து எடுத்த பிறகே தன் கையை வெளியே எடுத்தார். நாயை காப்பாற்றிய திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது. இதன் பிறகு நாய் கடித்ததால், தொடர்ந்து மூன்று நாட்கள் அனுஷ்கா ஊசி போட்டுக் கொண்டது தனிக்கதை.

ஒரு தெருநாய் அதுவும் சினிமா யூனிட்டின் எச்சில் பருக்கைகளை உண்டு வாழும் நாயின் கடியை பொறுத்துக்கொண்டு அனுஷ்கா செய்திருப்பது சாதாரணமான செய்கையல்ல. தனது வீட்டு நாயைக் குளிப்பாட்டவில்லை என்று வீட்டு டிரைவரை அடித்தும் பிற்காலத்தில் ஹைதராபாத்தின் ப்ளூ கிராஸ் தலைவராக உயர்ந்த முன்னாள் நடிகை அமலாவின் செய்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய ஒன்றுதான் அனுஷ்காவின் தியாகம்.

அனுஷ்காவின் இந்த தியாகத்தை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளும் ஜீவாத்மா மற்றும் பரமாத்மா இந்த உலகில் ஜெயமோகன் மட்டுமே என்பது நமது உறுதியான கணிப்பு. மாறுபடுபவர்கள் ஆதாரங்களை காண்பிக்கலாம்.

இந்தியாவில் இலட்சியவாதத்தின் மறைவு குறித்து அடிக்கடி துக்கப்படுபவர் ஜெயமோகன். இலட்சியவாதம் என்றால் என்ன என்று ஜெயமோகன் அளவுக்கு அறிவில்லை என்றாலும் வாசகருக்காக ஒரு இலக்கணம் தர முயற்சி செய்கிறோம். அதாவது கறாரான விழுமியங்களுடன், புற உலகு பேதமிட்டு பிரிந்தாலும், அர்ப்பணிப்புடன் வாழும் இலட்சியவாதிகளின் அரசியல், சமூக, ஆன்மீக நடைமுறைகள்தான் இலட்சியவாதம். இந்த இலட்சியவாதிகள் அநேகமான எல்லா நிறுவனங்களோடும் முரண்பட்டாலும் தமது இ.வாதத்தை விடமாட்டார்கள்.

ஆனாலும் இந்த இலட்சியவாதிகள் கையெடுத்து கும்பிடும் வண்ணம் வரலாற்றின் பக்கங்களுக்குள் மட்டும்  ஒளித்து வைக்கப்படுவதாக ஜெயமோகன் வருந்துகிறார். அண்ணா ஹசாரேவின் எழுச்சியும், பிறகு வீக் எண்ட் புரட்சியாளர்கள் அவரைக் கைவிட்டதும் அவருக்கு பெரும் துக்கத்தை கொடுத்திருக்கிறது. அதே போல குஜராத்தில் அமுல் ராஜ்ஜியத்தை கட்டியமைத்த குரியனின் மறைவும் அவரை சொல்லணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இடையில் ஜெயமோகன் அன்புடனும், ஆன்மீக அர்ப்பணிப்புடனும் வளர்த்த ஹீரோ எனும் நாயும் சமீபத்தில் இறந்திருக்கிறது.

ஆனால் இந்த நாயின் சோகத்திலிருந்தும், இலட்சியவாதத்தின் மறைவு குறித்தும் இனி ஜெயமோகன் வருந்தத் தேவையில்லை. இரண்டின் அறத்தையும் வியப்பூட்டும் விதத்தில் அனுஷ்கா உயிர்ப்பித்திருக்கிறார்.

அனுஷ்கா அடிப்படையில் ஒரு யோகா டீச்சர் என்பது ஒரு முக்கியமான விசயம். அதன்படி ஜெயமோகன் மட்டுமே விளக்கும் அருகதை கொண்ட பதஞ்சலி யோக சூத்திரத்தை கற்று செரித்த ஒரு ஞானம் அனுஷ்காவிடம் உண்டு. அதனடிப்படையிலேயே தனது கட்டழகை பராமரிப்பதோடு பிரபல தமிழ் வலைப்பதிவர்கள் உள்ளிட்டு மிகப்பெரும் இரசிகர்களையே கட்டிப்போட்டிருக்கிறார். தென்னிந்தியாவின் இப்போதைய நடிகைகளில் ஏன் இந்திய அளவில் கூட அவரது அழகுக்கும் அறிவுக்கும் ஈடான ஒருவர் கிடையாது என்பது சத்தியமான உண்மை.

அத்தகைய அனுஷ்கா ரசிய நாட்டிலே ஒரு தெருநாயின் கடியைப் பொறுத்துக் கொண்டு அதைக் காப்பாற்றியிருக்கிறார் என்றால் இதைக் கேள்விப்படும் ரசிகர்கள் அதன்படி தங்களது தெருநாய்களை காப்பாற்ற துணிவார்கள் என்பது நிச்சயம். இப்படி நடிகையாக இருந்தாலும் ஒரு ஞானப்புரட்சியை, ஜீவகாருண்யத்தை தனது இமேஜை வைத்து பரப்புகிறார் என்றால் இந்தியாவில் இலட்சியவாதம் ஏன் மறைய வேண்டும்? அதுவும் மற்றவர் காமக்கண்ணால் பறிக்கும் அழகைக் கொண்டிருப்பவர், அதையே நடிப்பு என சம்பாதிப்பவர் செய்யும் செயலா இது? கண்டவர் விண்டிலர்.

அனுஷ்கா, காப்பாற்றியது நாயை அல்ல. பைரவரை. அதுவும் கால பைரவரை. எனவே காலத்தை அழியாமல் அனுஷ்கா பார்த்துக் கொண்டிருக்கிறார்… என்று அர்த்தம் சொல்லி, இடம் சுட்டி பொருள் விளக்கி, குறியீட்டுடன் ஜெயமோகன் எழுதுவார் என மலையாள பகவதியின் மேல் சத்தியம் செய்வதும் கொலைக் குற்றமாகவே கருதப்படும்.

இவ்வளவு பெரிய மன நிம்மதியையும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் நடிகை அனுஷ்கா, தனக்கு கொடுப்பார் என ஜெயமோகன் துளியும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவரையே நம்பி இயங்கும் ‘விஷ்ணுபுர வாசகர் வட்டம்’ கூட தராத பரிசு இது. என்ன செய்ய, அவரது மொழியில் சொல்வது என்றால், தற்செயலாக நிகழ்பவைதானே வரலாற்றை எழுதுகிறது?

கமான் ஜெயமோகன், உங்களது விசைப்பலகையை தட்டுங்கள்! அறம் வரிசையில் அனுஷ்காவின் நாய்க்கடியை மகுடமேற்றும் மந்திரசக்தி உங்கள் கைகளுக்குத்தான் உண்டு!

ஜெய் ஹிந்த்!

_____________________________________________________________

படம் – காலபைரவர் வாயில் பிரசாதம் வைத்து, எடுக்கும் பக்தை படஉதவி கூகிள்

______________________________________________________

கூடங்குளம்: சி.பி.எம்மின் புரட்சி! அறிஞர் அ.மார்க்ஸின் மகிழ்ச்சி!!

15
பிரகாஷ்-காரத்
பிரகாஷ் காரத்

சி.பி.எம்-மின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் “இறக்குமதி அணு உலைகள் ஆகாது பாதுகாப்பில் சமரசம் கூடாது” என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். முதலில் இந்தக்கட்டுரையை அவர் ஏன் எழுதினார்? கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் சி.பி.எம் கட்சி மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூர் திட்டத்தை மட்டும்  ஏன் எதிர்க்கிறது என்ற கேள்விக்குத்தான் இந்த பதில். அதாவது சி.பி.எம்மின் இரட்டை வேடத்தை அல்லது டபுள் ஆக்டிங் சரிதான் என்பதே காரத்தின் பதில்.

காரத் எழுதிய இந்த வழா வழா கொழா கொழா கட்டுரையின் சாரம் என்ன? அல்லது ஏற்கனவே சி.பி.எம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை இந்தக் கட்டுரை மறுக்கின்றதா அல்லது ஆதரிக்கின்றதா? நிச்சயமாக ஆதரிக்கவே செய்கிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்திற்கு முன்பேயே ரசியாவிடமிருந்து இரண்டு அணு உலைகள் வாங்கப்பட்டு 15,000 கோடி ரூபாய் செலவில் கூடங்குளத்தில் கட்டப்பட்டு விட்டதால் அதை மூடுவது சாத்தியமானது அல்ல என்பதோடு நாட்டு நலனிற்கும் உகந்தது இல்லையாம்.

இதைத் தவிர்த்த மற்ற அணு உலைகள் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு வந்தவையாம். இந்திய சுதேசி அணு உலைகளை விட இவை மிகுந்த செலவு பிடிப்பவையாம். அதனால் அமெரிக்க, ஐரோப்பாவிலிருந்து இறக்குமடி செய்யப்பட்ட அணு உலைகளை சி.பி.எம் கட்சி எதிர்க்கிறதாம். சரி, இதன்படி இந்த ஐரோப்பாவின் மேப்பில் ரசியா வராது போலும். மேலும் இத்தகைய அணு உலைகளின் பாதுகாப்பும் பிரச்சினையாம். அதாவது ஒரு இடத்தில் இரண்டு உலைகள் இருந்தால் பிரச்சினை அல்ல, நான்கு, ஆறு என்று இருந்தால் பிரச்சினை என்பதை காரத் சுற்றி வளைத்து கூறுகிறார். இதற்கு ஆதாரமாய் புகுஷிமா வில் ஆறு உலைகள் இருந்ததை காரத் கண்டுபிடித்துக் கூறுகிறார்.

புகுஷிமா விபத்திற்குப் பிறகு அணு உலைகள் குறித்த மக்களின் அச்சம் அதிகரித்திருக்கிறதாம். இதை நிவர்த்தி செய்யுமாறு சுயேச்சையான நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்து அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டுமாம். பாதுகாப்பு தொடர்பான அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தில் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அரசு தெளிவு படுத்தி அதையும் மக்கள் முன் வைக்க வேண்டுமாம்.

அணுமின் நிலையங்களை ஆதரிக்கும் அப்துல் கலாம் உள்ளிட்டு பலரும் காரத் பேசுவதைப் போலத்தான் பேசுகின்றனர். மக்களின் அச்சத்தை போக்குவது என்ற போர்வையில்தான் கூடங்குளம் அணுமின்நிலைய அனுமதியும், துவக்கமும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இதையெல்லாம் செய்து விட்டால் அணுமின்நிலையங்களை சேமமாக நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் காரத் மற்றும் அவரது கட்சியின் நிலைப்பாடு.

தந்திரமான மொழியிலும், விவாதத்திலும் மறைந்து கொண்டாலும் காரத்தின் சந்தர்ப்பவாதம் இங்கே பட்டவர்த்தனமாக காட்டிக் கொள்ளவே செய்கிறது. இந்தியாவின் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களது பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காகவே இங்கு அணுமின்நிலையங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அமெரிக்கா முதல் ஆதாயம் அடைகிறது என்றால் பிரான்ஸ், ரசியா அடுத்தடுத்து ஆதாயம் அடைகின்றன. இதில் ஒன்றை எதிர்த்து விட்டு பிறிதொன்றை ஆதரிப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

மேலும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் என்று என்.ஜி.ஓ மொழியில் விளக்கமளிப்பது சி.பி.எம்மின் மறைமுக ஆளும் வர்க்க சேவையையே குறிக்கிறது. ஒரு வேளை போராடும் மக்கள் அப்படித்தான் அதை புரிந்து கொண்டு எதிர்த்தாலும் அதை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்துக் கொண்டு செல்வது நமது  கடமை. மேலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பது என்பது இந்திய அரசையே எதிர்ப்பதாக கருதப்பட்டு அங்கு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை ஒரு பகுதியின் பொருளாதார பிரச்சினையாக சுருக்கி பார்ப்பதன் மூலம் சி.பி.எம் கட்சி தனது மறைமுக இந்திய முதலாளிகளது சேவையை தொடர்கிறது.

அடுத்து கூடங்குளம் திட்டம் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு முன்பேயே வந்தாலும் அது முற்றிலும் தற்போதைய அமெரிக்க ஒப்பந்த்தத்தின் ஷரத்துக்களின் படியே அமல்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமானது விபத்து ஏற்பட்டால் அணுஉலைகளை அளித்த நாடுகள் நிவாரணம் வழங்கத் தேவையில்லை என்பது. இதை காரத் குறிப்பிட்டாலும் பெரிய மனதுடன் இரண்டு உலைகளை அங்கே செயல்படலாம் என்று அனுமதிக்கிறார். அங்கு கூடுதலாக வரும் இரண்டு உலைகளை மட்டும் அவரது கட்சி எதிர்க்குமாம்.

கூடங்குளம் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அது இதர அணு உலை எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்குமென்பதால்தான் இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அதை அடக்க முனைகிறது. இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட காரத்திற்கு அறிவு இல்லை என்பதல்ல, அவரது சந்தர்ப்பவாதம் இங்கே உண்மைகளை கொன்று விடுகிறது.

இதற்கு மேல் நிறைய செலவு செய்து விட்டார்கள் என்று கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிப்பதை இப்படியும் சொல்லலாம். அதாவது முதலாளித்துவம் இதுவரை செலவழித்து உருவாக்கியிருக்கும் பல கோடி பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கைப்பற்றி சோசலிச சமூகத்தை படைக்கும் புரட்சி கூட நாட்டு நலனுக்கு உகந்தது அல்லதான். அதனால்தான் சி.பி.எம் கட்சி புரட்சியிலிருந்து விலகி மனமகிழ் மன்றமாக மாறிவிட்டது போலும்.

அ-மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

அதே நேரம் காரத்தின் இந்தக் கட்டுரை அறிஞர் அ.மார்க்சை குஷிப்படுத்தியிருக்கிறது. முகநூலில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கும் அ.மா அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

” மக்கள் திரளைச் சார்ந்து இயங்கும் ஒரு கட்சி இப்படியான ஒரு கருத்தியல் மாற்றத்தையும், அதனடிப்படையில் ஒரு நிலைபாட்டு மாற்றத்தையும் மேற்கொள்வது கேலிக்குரியதோ, இழிவானதோ அல்ல. மக்களைத் திரட்டுவது குறித்துக் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்களுக்கு வேண்டுமானால் தாங்கள் கொள்கை மாற்றம் இல்லாமல் என்றோ உருவாக்கப்பட்ட பழைய திட்டத்தின் அடிப்படையில்  கறாராகச் செயல்படுவது பெருமையாக இருக்கலாம். இந்த அடிப்படையில் காரட்டின் கட்டுரையினூடாக வெளிப்படும் அணுகல் முறை மாற்றம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, தனி மனித ஆர்வங்கள், சுற்றுச் சூழல் இயக்கங்கள், சிறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் துணையுடனேயே இதுவரை நடைபெற்று வந்த அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் இந்தியாவின் முக்கிய இடதுசாரி அமைப்பான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு ஒரு பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பலாம்.”

இந்தக்கட்டுரை சி.பி.எம்மிடம் எந்த நிலைப்பாட்டு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதே காரத்தே ஒத்துக் கொண்டாலும் அறிஞர் அ.மா மறுப்பார் போலும். நிலவுகின்ற சமூக அமைப்பை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொண்டு சீர்திருத்தம் கோரும் ஒரு நிலையை மாபெரும் புரட்சி என்று சித்தரிக்கும் அளவு அறிஞரின் காமன்சென்ஸ் குறுகிவிட்டது. அணு மின்சாரம் தவிர்த்த மாற்று எரி சக்தி திட்டங்களை மையமாகக் கொள்ள வேண்டும் என்று காரத் கூறயிருப்பதெல்லாம் அ.மாவுக்கு மாபெரும் கலக குரலாக தென்படுகிறது. இதைத்தான் டிராபிக் ராமசாமி முதல் சூரிய விளக்கிற்காக என்.டி.டி.வியுடன் கூட்டணி அமைத்து செயல்படும் பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான் வரை பலரும் சலிப்பூட்டும் விதத்தில் சொல்கிறார்கள். அதன்படி அவர்களையும் புரட்சிக்காரர்களாக அ.மா ஏற்றுக்கொள்வார் என்று நம்புவோம்.

மக்களை அணிதிரட்டும் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்கள் மட்டும் இது போல ஏதாதாவது கூவிக் கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறார் அ.மா. இதைத்தான் கருணாநிதி பலமுறை ஈழம் குறித்து சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும், ஆட்சியில் இருக்கும் போது எச்சரிக்கையாகத்தான் செயல்பட முடியும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட முடியாது…. இதெல்லாம் கூட அ.மாவின் இந்த இரும்பு இலக்கணத்தில் கண்டிப்பாக வரும். ஒரு பிரச்சினைக்கு இறுதித் தீர்வு என்ன என்பதும் அதை நோக்கியே தற்கால போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பதும் புரட்சி குறித்து ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சி அறிய வேண்டிய அடிப்படைப் பாடம். அதாவது புரட்சிக்காகத்தான் மக்களை திரட்டுகிறோமே அன்றி மக்கள் எதற்காகவாவது திரண்டு விட்டால் அது புரட்சி அல்ல. ஆனால் அ.மா இரண்டாவதைத்தான் புரட்சி என்று நம்புவதால் அதை அதற்கு உரிய சி.பி.எம்மிற்கும் விருதாக அளித்து மகிழ்கிறார்.

அணுமின்நிலையத்தை சுற்றுசூழல் பிரச்சினையாக மட்டும் பார்ப்பது என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உத்தி. சி.பி.எம் அதையும் பேசிக் கொண்டு அமெரிக்க எதிர்ப்பு என்பதாகவும் நாடகம் ஆடுகிறது. உள்நாட்டு உலை பாதுகாப்பானது, வெளிநாட்டு உலை ஆபத்தானது என்ற காரத்தின் அபத்தத்தை சுட்டிக்காட்டும் அ.மா அதன் அரசியல் சந்தர்ப்பவாதத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் எப்படியும் புரட்சி வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் போது ஒரு அறிவாளியின் நடவடிக்கையில் சந்தர்ப்பவாதம் மட்டும்தானே மையமாக இருக்க முடியும்? ஆனாலும் இது ஒரு நாசுக்கான, நாகரீகமான முறையில் வெளிப்படும் என்று அறிஞர் அ.மார்க்ஸ் நம்பிக் கொண்டிருந்தால் அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

__________________________________________________

இதையும் படிக்கலாம்:

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி!

4

அரசுப்பள்ளிகள்: ஆங்கிலவழிக் கல்வி வந்தது முன்னே!

தனியார்மயம் நுழையும் பின்னே!!

மிழகத்தில்  சுமார் 320 அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டில் இருந்து ஆங்கிலவழிக் கல்வி அமல்படுத்தப்படும் என அரசு அண்மையில் அறிவித்திருந்தது. ஏற்கெனவே ஆங்கிலவழிக் கல்வி ஒருசில அரசுப் பள்ளிகளில் மட்டுமே இருந்த நிலையில், மாவட்டந்தோறும் 10 பள்ளிகள் வீதம், 24 ஆயிரம் மாணவர்களைத் தமிழ்வழிக் கல்வியில் இருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றி, அரசு உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்துறை ஆகியவற்றின்  தேவைக்காக என்றும், பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்றும் அரசு இதற்குக்

ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு பிரிவுகள் என அறிமுகமாகியுள்ள ஆங்கிலவழிக் கல்வி, வெகுவிரைவில் தமிழ்வழிக் கல்வியை அரசுப் பள்ளிகளிலிருந்து ஒழித்துக்கட்டப் போகிறது. அரசின் நடவடிக்கை ஆங்கிலவழிக் கல்வியை வலிமைப்படுத்தி தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு இடமில்லாமல் செய்துவிடும் என்ற கோணத்தில் இருந்து குமரி அனந்தன், பொன்வைக்கோ போன்றவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலவழிக் கல்வி என்பது மொழிப் பிரச்சினை மட்டும் அல்ல. அரசுப் பள்ளிகளில் வீழ்ச்சியடைந்து வரும் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்திக் காட்டி, அப்பள்ளிகளைத் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கும்  நயவஞ்சகத் திட்டத்தின் ஒருபகுதிதான் இது.

இந்நயவஞ்சகத் திட்டத்தை மூன்றாண்டுகளுக்கு முன்பே சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆரம்பித்துவிட்டனர். பல்வேறு பெயர்களில் இயங்கிவந்த அப்பள்ளிகளை “சென்னைப் பள்ளி” என மாற்றி,  70 பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டுவந்தனர். பின்னர் தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்  உதவியுடன் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி,  மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரித்தனர். அவற்றில் 10 பள்ளிகளைத் தேர்வு செய்து தனியார் வசம் ஒப்படைப்பது என்பது அரசின் திட்டம். தற்போது அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கியிருப்பதும் தனியார்மயமாக்கலை நோக்கமாகக் கொண்டதுதான்.

தனியார்துறை  பொதுத்துறை கூட்டு என்பது உலகவங்கியால் வழிகாட்டப்படும் தனியார்மயத்தின் ஒரு வடிவம். இது முழுமையான தனியார்மயத்தைக் காட்டிலும் நயவஞ்சகமானது. சுகாதாரம், துறைமுகம், விமானத்தளம், ரயில்வே, கல்வி போன்றவற்றை பொதுத்துறை  தனியார் துறை கூட்டு எனும் வடிவத்துக்கு மாற்றவேண்டுமென்று 11ஆவது ஐந்தாண்டுத் திட்டம் கோருகிறது. மத்திய மனிதவளத்துறையும், நாடெங்கும் பொதுத்துறைதனியார்துறை கூட்டு முறையில் உயர்நிலைப்பள்ளிகளை உருவாக்க பொதுக்கொள்கையை வகுத்துள்ளது.

அரசுப்-பள்ளி

தனிநபர்களோ, அறக்கட்டளைகளோ பள்ளிக் கட்டடங்களைக் கட்டி, ஆசிரியர்களை நியமிப்பதும், அப்பள்ளிகளைக் குறிப்பிட்ட சில காலம் நடத்திய பின்னர், அரசு அவற்றை ‘அரசு உதவிபெறும்’ பள்ளிகளாக அங்கீகரித்து ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் வழங்குவதும்தான் இதுவரை இருந்த நடைமுறை.

இதை அப்படியே தலைகீழாக்கியுள்ளது, புதிய கொள்கை. இதன்படி, அரசே பள்ளிகளைக் கட்டிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஏற்று நடத்தச் சொல்லும். ரூ.25 இலட்சம் முன்பணம் செலுத்தும் வசதிகொண்ட எந்த நிறுவனமும் இதற்குத் தகுதிபடைத்ததாகும். நாடெங்கும் 3000 பள்ளிகள் இவ்வாறு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியும் சுயமாகவே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளும்.  ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் அப்பள்ளிகளே தீர்மானிக்கும். பாடத்திட்டம் ஒன்று இருந்தாலும், பள்ளி நேரம் முடிந்த பின், தனியார் முதலாளிகள் தமக்குத் தேவையான துறைகளில் தேவையான மாணவர்களைப் பயிற்றுவித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். காலப்போக்கில் பாடத்திட்டத்தையும் தனியார் முதலாளிகளே முடிவு செய்வதை நோக்கிச் செல்வதற்கான முதல் படியாகும் இது.

‘அரசுப் பள்ளிகள்’ என்றே அழைக்கப்படும் இந்தப் பள்ளிகள் ஏழை மாணவர்களிடம் மாதம் ரூ.25ம், பிற மாணவர்களிடம் மாதம் ரூ.1000மும் வசூலிக்கலாம். இதில் ஏழை மாணவர்களுக்கான மானியத்துக்கு அரசு டோக்கன்களை வழங்கிவிடும். பள்ளி ஒன்றுக்கு 1000 மாணவர்களுக்கு டோக்கன் தர 2017ஆம் ஆண்டுவரை அரசு ரூ.10ஆயிரம் கோடி வரை செலவிட உள்ளதாகக் கூறுகிறது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளை வாழ வைப்பதைப் போல, இந்தப் பணம் பள்ளிகளை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கு வழங்கப்படும் மானியமாகவே இருக்கும். அதற்கு மேல் கட்டணம் செலுத்துமாறு ஏழை மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இல்லையேல் ஒதுக்கப்படுவார்கள். தற்போது தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு தரும் கல்வி உரிமைச் சட்டம் அமலாகும் யோக்கியதையிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

இப்படி கரையான் புற்றெடுத்து கருநாகத்திடம் ஒப்படைக்கும் இந்த அற்புதத் திட்டத்தில் தலைநகர் தில்லிதான் முன்னிலை வகிக்கிறது. அரசுப் பள்ளிகளை தாங்கள் ஏற்று நடத்த வேண்டுமானால், அக்கட்டிடத்தை தங்களது வணிக நோக்கத்துக்கு  பயன்படுத்திக் கொள்வோம் என்று கூறுகின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள். ஆரம்பத்திலேயே இவ்வாறு செய்வது அரசாங்கத்தை அம்பலப்படுத்திவிடும் என்பதால், இது இன்னும் நடைமுறைக்கு வராமல் இழுபறியில் உள்ளது.

நகரின் மையப் பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிக் கட்டிடங்களைத் தனியாரிடம் தருவது மட்டுமின்றி, பள்ளியை நடத்தப்போகும் முதலாளிகளுக்கு இலாபம் கிடைக்கும் வகையில் மாணவர் எண்ணிக்கை இருப்பதையும் அரசு உத்திரவாதப்படுத்த வேண்டியிருக்கிறது. தற்போது அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கைவிகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களே வராத பள்ளியை ஏற்பதற்கு எந்த கார்ப்பரேட் நிறுவனந்தான் ஒப்புக்கொள்ளும்? எனவே சேர்க்கை வீதத்தைக் கூட்ட, மாணவர்களை ஈர்த்தாக வேண்டும். இந்தக் காரணத்துக்காகவும் ஆங்கில வழிக் கல்வியைத் திணிக்கிறது அரசு.

அரசுப்-பள்ளி

கல்வி தனியார்மயமாவதும், தாய்மொழிக் கல்வி புறக்கணிக்கப்படுவதும் ஒன்றோடொன்று இணைந்தவை. தாய் மொழி என்பது  ஒரு சமூகத்தின் பண்பாடு, விழுமியங்கள், பாரம்பரிய அறிவு, வரலாற்று உணர்வு ஆகியவற்றோடு தொடர்பு கொண்டதாகும். சுயசார்புப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகம்தான் தனது உற்பத்தி மற்றும் பிற சமூகத் தேவைகளுக்கு உகந்தவாறு, மக்களுக்கு தாய்மொழியிலேயே கல்வியைக் கொடுக்கும்.

தற்போதைய உலகமயமோ, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்குச் சேவை செய்யும் உள்கட்டமைப்பையே இங்கு உருவாக்குகிறது. அமெரிக்க  ஐரோப்பிய முதலாளிகளுக்கான  அவுட்சோர்ஸிங் மையமாக இந்தியப் பொருளாதாரம் கட்டமைக்கப்படுவதால், அதற்கு ஆங்கிலம் அறிந்த, அடிமைத்தனமான, தமிழ் மண்ணின் வாசனை அற்ற மூளைகளே தேவைப்படுகின்றன.

எனவே, கல்வியின் நோக்கமும் மாறுகிறது. சொந்த மண்ணையும் மக்களையும் பற்றித் தெரியாத, அவர்களுடைய வாழ்க்கையை  பண்பாட்டைப் புரிந்து கொள்ளக்கூட முடியாத ஒரு கூட்டம் உருவாக்கப்படுகிறது. தேசிய உணர்வு, மொழியுணர்வு, பண்பாடு, வரலாற்றறிவு, சமூகப் பொறுப்புணர்ச்சி, குடிமை உணர்வு போன்ற மனிதத்தன்மைகள் ஏதுமற்றவர்களாக இளைஞர்களைப் பயிற்றுவிப்பதே தமது எதிர்காலத்துக்கு நல்லது என்று பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிகளும் கருதுகின்றனர்.

ஒருபுறம் ஆங்கில மோகம், இன்னொருபுறம் தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற அச்சம்  இரண்டும் பிடித்தாட்டுவதால், மக்கள் ஆங்கிலவழிக் கல்வியில் விழுகிறார்கள். இந்த அடிமை மோகத்தை எதிர்த்து விடாப்பிடியாக நாம் போராடித்தான் ஆகவேண்டும்.

___________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: எரிபொருள் நிரப்பும் அனுமதிக்காகச் செய்யப்பட்ட மோசடிகள்!

3

கூடங்குளம்-மோசடி-2கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி இடிந்தகரை பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டம் ஓராண்டு நிறைவெய்திய அதே தருணத்தில், கூடங்குளம் அணு மின்நிலையத்தின் முதல் அணு உலையில் எரிபொருட்களை நிரப்பி, அதனை இயக்கும் அனுமதியை அளித்திருக்கிறது, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம்.  இதனையடுத்து, கடந்த ஐந்து மாத காலமாக கூடங்குளம் அணுஉலையைச் சுற்றி 7 கி.மீ. தூரத்துக்குப் போட்டு வைத்திருக்கும் 144 தடையுத்தரவை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டித்துள்ள ஜெயா அரசு, அப்பகுதியில் மீண்டும்  போலீசைக் கொண்டுவந்தும் குவித்திருக்கிறது.  இந்த 144 தடையுத்தரவை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கில் வாய்தா வாங்கியே வழக்கை இழுத்தடித்து வருகிறது, தமிழக அரசு.

கூடங்குளம் அணுஉலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்பட்டிருப்பது குறித்து ஆய்வு நடத்தி உறுதிசெய்துகொண்ட பிறகுதான் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்திருப்பதாகக் கூறுகிறது, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம்.  இக்கூற்று எந்த அளவிற்கு உண்மையானது?  கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகின்றன.  சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக சமீபத்தில் அளித்திருக்கும் ஒரு உத்தரவு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் சமரசங்கள் செய்துகொள்ளப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது.

அணுஉலையிலிருந்து கடலுக்குள் கொட்டப்படும் கழிவுகளின் வெப்பநிலை 37 டிகிரி சென்டிகிரேடுக்குள்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்தி, கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தமது கழிவுகளை 45 டிகிரி சென்டிகிரேடு கொதிநிலையில் கடலில் கொட்டுவதற்குத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்திருந்தது.  மேலும், கடல்சார் ஒழுங்குமுறைச் சட்டங்களிலிருந்தும் கூடங்குளம் அணுஉலைக்கு  மைய அரசால் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இவ்விதிவிலக்குகள் கடல்சார் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் கூடங்குளம் அணுஉலை இயங்குவதைச் சட்டபூர்வமானதாக்கும் குறுக்கு வழியன்றி, வேறெதுவுமில்லை.

இவ்விரு விதிவிலக்குகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அளித்திருக்கும் விதிவிலக்கை நீக்கச் சொல்லி விட்டது, சென்னை உயர் நீதிமன்றம். எனினும், அணுக் கழிவுகளை எத்தனை டிகிரி சென்டிகிரேடில் வெளியேற்றும் வண்ணம் கூடங்குளம் அணுஉலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது?  அதில் குறைபாடு இருப்பது தெரியவந்து, அதன் காரணமாகத்தான் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டதா? இந்த உத்தரவுக்குப் பின் அணுஉலை நிர்வாகம் 37 டிகிரி சென்டிகிரேடுக்குள்தான் அணுக்கழிவுகளை வெளியேற்றும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? அதனை யார் தொடர்ந்து கண்காணிப்பது?  என்பது போன்ற கேள்விகளை விசாரணையின்பொழுது நீதிபதிகள் எழுப்பவில்லை.  மாறாக, விதிவிலக்கை நீக்கிவிட்டு, அணுஉலை இயங்க மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கலாம் எனக் காதைக் குடைந்தபடி உத்தரவிட்டுள்ளனர்.  அணுக்கழிவு பிரச்சினையை, ஏதோ குப்பையை அகற்றும் பிரச்சினையைப் போல பார்க்கும் அலட்சியம்தான் நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிகிறது.

‘‘ஜப்பான் ஃபுகுஷிமா விபத்திற்குப் பிந்தைய இந்திய அணுஉலைகள் பாதுகாப்பு குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்திய பிறகே கூடங்குளம் அணுஉலை செயல்படுத்தப்படும்” என அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உயர் நீதிமன்றத்திடம் உறுதி அளித்திருந்தது.  ஆனால், நீதிமன்றத்திடம் அளித்த அந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்தாமலேயே எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகப் பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுப்புறச் சூழல் அமைப்பு தற்பொழுது நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது.

அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கும் முன்பாக, அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களுக்குப் பேரிடர் மேலாண்மை பயிற்சி மிகவும் வெளிப்படையாக அளிக்கப்பட வேண்டும் என்பது விதி.  ஆனால், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், யாருக்கும் எந்த விவரத்தையும் சொல்லாமல், பத்திரிகைகளையும் அழைக்காமல், நக்கநேரி கிராமத்தில் மிகவும் இரகசியமான, மோசடியான ஒரு பயிற்சியை நடத்தி முடித்திருக்கிறது.  அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் அனுமதியை வழங்க, ஒப்புக்காக நடத்தப்பட்ட இப்பயிற்சியை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியமும் அங்கீகரித்திருக்கிறது.

எரிபொருள் நிரப்பப்படும் பகுதியான அணுஉலை அழுத்தக் கலனில் இரண்டு பற்றவைப்புகள் (welding) இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் 2008இல் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.  எனினும், இந்த பற்றவைப்புகள் அணுக்கதிர் வீச்சைத் தாங்கும் திறன் குறித்த சோதனைகள் நடத்தப்படாமலேயே எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்படி பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து வெளியே கசிந்துவரும் ஒவ்வொரு உண்மையும், இந்த அனுமதி பல்வேறு விதிமுறைகளை மீறித்தான் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகின்றன.

‘‘ஃபுகுஷிமா விபத்திற்கு சுனாமியைவிட, மனிதத் தவறுதான் பிரதான காரணம்.  பாதுகாப்பு ஏற்பாடுளை நிர்வாகம் அலட்சியப்படுத்தியதுதான் காரணம்” என ஜப்பான் நாடாளுமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், இத்துணை பாதுகாப்பு குறைபாடுகளோடு கூடங்குளம் அணுஉலை இயங்க அனுமதிக்கப்படுகிறதென்றால், ஆளும் கும்பல் தெரிந்தே தமிழகத்தை அழிவுப் பாதைக்குள் தள்ளிவிட முயலுகிறது என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.

ஃபுகுஷிமா அணுஉலை விபத்தின் பின், மேற்குலக நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்திய நாடுகளே அணுமின் திட்டங்களை மூடுவது, குறைப்பது, கைவிடுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன.  சூரியமின்சக்தி, காற்றாலை போன்ற சுற்றுப்புறச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று மின்திட்டங்களை அமல்படுத்த முனைகின்றன.  தமிழகத்திலும் இப்படிபட்ட மாற்று மின்உற்பத்திக்கான வாய்ப்புகள் இருப்பதை  மேலும் 1,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலைகளை அமைப்பது, தனுஷ்கோடி கடற்பரப்பில் காற்றாலைகள் அமைப்பது  வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மாற்று மின்திட்டங்களுக்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், இந்திய ஆளும் கும்பலோ ஆபத்தும், பெருஞ்செலவும் நிறைந்த அணுஉலை தொகுப்புகளை வங்காள விரிகுடா கடற்கரையையொட்டி அமைக்கத் திட்டம் போடுகின்றன.  இந்திய மக்களின் உயிர், நல்வாழ்வைவிட, இந்திய ஆளும் கும்பலுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு போட்டுக் கொண்டுள்ள அணுஉலை வியாபார, இராணுவ ஒப்பந்தங்கள்தான் பெரிதாகத் தெரிகிறது.

நமது நாட்டில் தற்பொழுது இயங்கிவரும் அணுஉலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அவ்வுலையை இயக்கி வரும் நிறுவனத்திற்குச் சட்டப்படி விதிக்க முடிந்த அபராதம் வெறும் 500 ரூபாய்தான் எனத் தலைமைக் கணக்கு அதிகாரியின் சமீபத்திய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.  கடந்த 2010ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த அணுசக்தி கடப்பாடு சட்டமோ இதைவிடக் கேவலமாக உருவாக்கப்பட்டுள்ளது.  அணுஉலையை விற்கும் நிறுவனங்கள் இந்த 500 ரூபாய் அளவிற்குக்கூட அபராதமோ, நட்ட ஈடோ அளிக்கத் தேவையில்லை எனச் சலுகை அளிக்கிறது, அச்சட்டம்.

தற்பொழுது கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ள அணுஉலை எண் 1 மற்றும் 2இல் விபத்து ஏற்பட்டால், இந்த அணுஉலைகளை விற்ற ரசியா அதற்குப் பொறுப்பேற்று நட்ட ஈடு வழங்கத் தேவையில்லை என மன்மோகன் சிங் அரசு, நாடாளுமன்றத்திற்கே தெரியாமல் ரசியாவிற்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளது.  இதே போன்ற விலக்கை கூடங்குளத்தில் நிறுவப்படவுள்ள அணு உலைகள் 3 மற்றும் 4க்கும் தர வேண்டும் என்கிறது, ரசியா.  “அது சாத்தியமா?” என யோக்கியர் போல அதிகாரிகளிடம் ஆலோசனை கலக்கிறார் மன்மோகன்.

அணுஉலையை ஆதரிப்பதில் ஜெயா வேறு கட்சி, மன்மோகன் சிங் வேறு கட்சி அல்ல.  இடிந்தகரை மக்களின் முதுகில் குத்தி ஜெயா இதனை நிரூபித்திருக்கிறார்.  எனினும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைமை, “ புதிய பேச்சுவார்த்தைத் தொடங்க விரும்புவதாகவும், கூடங்குளம் மின் திட்டத்தை மக்களுக்கு உகந்த, இயற்கையோடு இணைந்த திட்டமாக மாற்ற நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்”  வேண்டுகோள் விடுத்து,  தமிழக முதல்வர் ஜெயாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது (தினமணி 27.8.2012, பக்.9).  வௌக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது தகுமா?

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!”

11

கூடங்குளம்…வேண்டுவது அனுதாப அலையல்ல..

அடக்குமுறைக்கெதிரான போராட்டம்!

நிராயுதபாணியாய் மக்கள்,
நிரம்பிய ஆயுதம் தரித்து போலீசு படை,
கைக்குழந்தையோடு போராடுபவர்கள்
வன்முறையைத் தூண்டுபவர்களாம்!

கைத்தடியும் துப்பாக்கிகளோடும் சூழ்ந்தவர்கள்
அமைதியை நிலைநாட்ட அவதரித்தவர்களாம்?!

மூலதனமும், பேரழிவும் உயிர்வாழ
சட்டத்தைக் காட்டி கலைந்து போகச் சொல்லும்
உத்திரவு ஆளும் வர்க்கத்துக்கு உண்டெனில்,

எங்கள் இயற்கையும், சந்ததியும் உயிர்வாழ
அணு உலையைத் திரும்பிப் போகச் சொல்லும்
உரிமை மக்களுக்கும் உண்டுதானே!

ஜனநாயக நெறிப்படி எதிர்ப்பைக் காட்ட
கடலோரம் சுடுமணலில் கலந்தனர் மக்கள்.
ஒரு நாள் வெயில் தாங்கி
உழைத்து பழக்கமில்லாத அதிகார வர்க்கமே,
உனக்கும் ‘ஜனநாயகத்’ தெம்பிருந்தால்
உன் ‘கொள்கைக்காக’ சுடுமணலில்
நீயும் அமர்ந்து கொள்ளடா எதிரில்
ஏன் ஜனநாயகம் தாங்காமல் அலறுகிறாய்
எங்கள் இருப்பைப் பார்த்து!

கடலோரம்… மண்ணை பிளந்து
கூடங்குளத்தை தன்னில் பார்க்கும்
எங்கள் மழலையரின் தாய்மண் உணர்ச்சிக்கு
நேர் நிற்க முடியுமா?
கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!

அலைகளின் முழக்கில்
இரண்டறக் கலந்த அணுஉலை எதிர்ப்பில்…
மெகா போனை வைத்துக் கொண்டு
மெகா சீரியல் ஓட்டிய அதிகாரி குரல்கள்
அடிபட்டுப் போயின…
போராட்டத்தின் அலை பொங்கி வரும்போது
செத்த மீனுக்குள்ள மரியாதை கூட
மொத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் க்கு கிடையாதென்பதை
கடல் புறம் காட்டி நின்றது.

உளவுப்படை, இழவுப் படை எதுவாயினும்
கடலுக்குப் போகாமலேயே மணற்பரப்பில்
போலீசை கருவாடாய் காயவைத்தனர் மக்கள்.

ஜனநாயக அவஸ்தைகளை தாங்கிக்கொள்ளும்
சகிப்புத்தன்மை மக்களுக்கிருக்கலாம்,
ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும்
அது ஒரு போதும் இல்லையென…
மீண்டும் உறுதி செய்தது போலீசு…
நிராயுதபாணியாய் நின்ற மக்கள்மீது
தடியடி, தாக்குதல், கண்ணீர்புகை, துப்பாக்கிச் சூடு!

முற்றுகைப் போராட்டம் சட்டவிரோதமென
அறிவித்த அரசு… இப்போது ஆயுதங்களுடன்
கன்னியாகுமரி தொடங்கி… கடலோரப் பகுதிகள்
இடிந்தகரை வரை முற்றுகை.

சம்மணம் போட்டு அமர்வது கூட
சட்டவிரோதமென,
இடிந்தகரை உண்ணாநிலை போராட்ட
பந்தலையும் ஆக்கிரமித்து
சொந்த நாட்டு மக்கள் மீது
அரசுப்படையின் அட்டூழியங்கள்

தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்களை
தடை செய்து,
இடிந்தகரையை முள்ளிவாய்க்காலாக்கும்
பாசிச காட்டாட்சி!

இத்தனைக்கும் மத்தியில்..
போராடும் மக்கள் நம்மிடம் வேண்டுவது
அனுதாப அலையல்ல…
உண்மைகளை கண்டுணரும் நேர்மை!

அணு உலைக்கெதிரான போராட்டத்தின் வழியே
கதிரியக்க பயங்கரத்தை மட்டுமல்ல,
உழைக்கும் மக்களுக்கு உதவாத
இந்த போலி ஜனநாயக அமைப்பையும்
இதில் புழுத்து திரியும்
அரசியல் பயங்கரங்களையும்
நமக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் கூடங்குளம் மக்கள்.

பயங்கரவாதிகள் பலரகம்… பலவிதம்…

ரத்தக் களறியில் மக்கள்.
‘ரத்தத்தின் ரத்தமான’ தா.பாண்டியனோ
தாக்குதல் நடத்திய கைக்கு
தங்கக் காப்பாய் அறிக்கை;

“பொறுமையாகவும், நிதானமாகவும்
பிரச்சினைகளை கையாண்டு
சுமூகமாக தீர்க்க வேண்டும்…”

போராடி… துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட
மீனவர் அந்தோணியின்
போஸ்ட்மார்டம் அறிக்கைக்கு
கட்டாயம் தா.பா. ‘டெக்னிக்’ உதவும்.

அடித்தவனுக்கே போய் ஆறுதலும்
தேறுதலும் சொல்லும்
இப்படியொரு பயங்கரவாதியை
எங்காவது பார்த்ததுண்டா?

இன்னொருபடி முன்னேறி…
மார்க்சிஸ்டு ஜி.ராமகிருஷ்ணனோ
“மக்கள் போராட்டத்தை கைவிட்டு
சுமூகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டும்”
என ஜெயாவின் ஆவியாகி ஜீவிக்கிறார்.
சொந்தநாட்டு மக்களையும்,
சொன்ன பேச்சை கேட்காத கட்சிக்காரனையும்
நந்திகிராமிலும், கேரளாவிலும்
வேட்டையாடுவதில்
ஜெயலலிதாவுக்கே ராஜகுரு
சி.பி.எம். பயங்கரவாதிகள் என்பதை
கூடங்குளமும் குறித்துக் கொள்கிறது.

போராட்டக் களத்தில்
அப்பாவி மக்களை விட்டுவிட்டு
தலைவர்கள் தப்பியோடிவிட்டதாய்
ஊடக பயங்கரவாதிகள் ஊளை!
பாவம்! தவிக்கும் மக்களை
சன்.டி.வி. கலாநிதிமாறன் போய்
காப்பாற்றி வரவேண்டியதுதானே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில்
தப்பியோடும் பயங்கரவாதிகள்
வாழ்வுரிமைக்குப் போராடுபவர்கள் மீது
வன்மம் கொப்பளிப்பது
தற்செயலல்ல, வர்க்கப் பகைதான்!

தெற்கிருந்து தினந்தோறும்
போராடுபவர்களைப் பார்த்து,

நயன்தாரா இடுப்பைக் கிள்ளவும்,
நாடார்கள் ஓட்டை பொறுக்கவுமே
தெற்கு பக்கம் ‘செட்டு’ போடும் சரத்குமார்
“தலைவர்கள் தலைமறைவானதிலிருந்தே
அவர்கள் சரியானவர்கள் இல்லை” என
வாய் கொழுப்பும், வர்க்கக் கொழுப்பும்!

வாய் சும்மா இருந்தாலும்
உங்கள் வர்க்கம் சும்மா இருக்காது
வாய்திறந்து பேசுங்கள் வரவேற்கிறோம்…
உங்கள் வர்க்கம் தெரியவருவதால்!

புடைசூழ வாருங்கள் பொய்யர்களே…
உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது…
பணம் உள்ளது…. படை உள்ளது….
ஆனால் உண்மையும், நீதியும்
எங்களிடம் மட்டுமே!

உரிமையின் உணர்ச்சிகளை
அறியாத உங்கள் தோல்களை
உரித்துக் காட்டும் மக்களின் போராட்டம்.

போராட்டத்தின் நியாயம் அறிய
கொஞ்சம் கூடங்குளத்திற்கு  செவி கொடுங்கள்…
போராட்டத்தின் உண்மை அறிய
கொஞ்சம் இடிந்தகரையை உற்றுப் பாருங்கள்…
போராட்டத்தின் சுவை அறிய
துப்பாக்கிகளுக்கு முன்னே
தங்கள் மழலையை போராட்டத்திற்கு ஒப்படைத்திருக்கும்
எம் பிள்ளைகளின் கரம் சேருங்கள்…

அதோ… தடிகொண்டு தாக்கும் போலீசை
நெய்தல் செடிகொண்டு
வர்க்க குறியோடு எறியும் – எங்கள்
பரதவர் மகனின் போர்க்குணம் பார்த்து
பொங்குது கடல்!

மண்ணைக் காக்கும் போராட்டத்தில்
மண்ணும் ஒரு ஆயுதமாய்
வெறுங்கையோடு எம் பெண்களும்
பிள்ளைகளும் தூற்றும் மணலில்…
அடக்குமுறை தூர்ந்து போவது திண்ணம்!

______________________________________________

– துரை. சண்முகம்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம மக்களின் போராட்டம்!

7

ஏரிவிழுப்புரம் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் பல ஏரிகள் பல்வேறு ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அவ்வப்போது நாளேடுகளில் செய்திகள் வந்துள்ள நிலையில், இப்பகுதியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் கடந்த ஜூன்ஜூலை மாதங்களில்  கிராமங்கள் தோறும் ஆய்வு செய்தபோது, பண்ருட்டி வட்டாரத்தில் மட்டும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் துணையோடு 40 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஏறத்தாழ ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இதை அம்பலப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்தி விவசாயத்துக்குப் பயன்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜூலையில் சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஆக்கிரமிப்புகளால் விவசாயம் பாதிக்கப்பட்டு வேதனையில் துவண்டிருந்த இவ்வட்டார விவசாயிகள், இப்பிரச்சாரத்தை வரவேற்று தங்கள் ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

பண்ருட்டி வட்டம் ஒரையூர் கிராமத்தில் கடந்த 20 ஆண்டு காலமாக 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் ஏறத்தாழ 80 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக இக்கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வி.வி.மு.வின் சுவரொட்டிப் பிரச்சாரத்தால் உற்சாகமடைந்து, கடந்த ஆகஸ்டு முதல் நாளன்று தங்கள் சொந்த செலவில் மூன்று மண்வாரும் எந்திரங்களை வரவழைத்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து ஆக்கிரமிப்பை அகற்ற வருமாறு கோரினர்.  நில அளவை செய்துவிட்டுச் சென்ற அதிகாரிகள், வருவதாகச் சொல்லிவிட்டு ஒருநாள் முழுக்கவும் வரவில்லை. இதில் முன்முயற்சியுடன் செயல்பட்ட தே.மு.தி.க.வைச் சேர்ந்த கவுன்சிலர் கார்த்திக், காளிதாஸ் ஆகிய தன்னார்வலர்கள் வி.வி.மு. தோழர்களைத் தொடர்பு கொண்டு, நீங்களே வந்து இந்த ஆக்கிரமிப்பு அகற்றலைத் தொடங்கி வைக்குமாறு கோரினர். அதன்படி வி.வி.மு. தோழர்கள் ஆகஸ்டு 2ஆம் தேதியன்று செஞ்சட்டையுடன் அணிதிரள, ஆக்கிரமிப்பாளர்கள் அரண்டு போயினர். ஏரியில் கால் வைக்கக் கூட முடியாமல், ஆடுமாடுகள் கூட மேய்ச்சலுக்குச் செல்ல முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டு குமுறிக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அணிதிரண்டு தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதைத் தொடர்ந்து ஏரியின் கரை மடிக்கப்பட்டது. இந்தச் செய்தி காட்டுத் தீ போல அருகிலுள்ள கிராமங்களுக்கும் பரவியதால், பலரும் தங்கள் கிராமத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை நிற்குமாறு வி.வி.மு.விடம் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

வி.வி.மு. தோழர்களின் துணையோடு கிராம மக்கள்  ஒற்றுமையாக அணிதிரண்டு ஏரியை மீட்ட இச்சம்பவம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளதோடு வி.வி.மு. மீது புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

அசாம் கலவரம்: ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வங்கதேச ஊடுருவல் உண்மையா?

7

சாமியர்களைக் காப்பாற்று.பாரதக் குடிமக்களாகிய போடோக்களைக் காப்பாற்று. வங்கதேச ஊடுருவல்காரர்களை வெளியேற்று. அசாமியர்களின் நிலங்களையும் தொழில்களையும் ஆக்கிரமித்துவருகின்ற வங்கதேச முஸ்லீம்களை வெளியேற்று”

மேற்கண்ட முழக்கங்களோடு ஆர்பாட்டம் ஒன்றை ஆகஸ்ட் 21ம் தேதியன்று விஷ்வ ஹிந்து பரிசத் என்கிற சங்கப்பரிவார அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு ‘தேசபக்தர்களை’ அணிதிரளக் கோரி ஒரு துண்டறிக்கையையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி துண்டறிக்கையில், “பங்களா தேசத்தவர்கள் முறையான அனுமதிப் பத்திரம் இன்றி பாகிஸ்தானுக்குள் நுழைய முடியுமா?” என்றும், “பாகிஸ்தானியர்கள் முறையான அனுமதிப் பத்திரம் இன்றி சௌதி அரேபியாவுக்குள் நுழைய முடியுமா?” என்றும் கேள்வி  எழுப்பப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டில் 3 கோடி வங்க தேசத்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளாதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் அடித்துள்ள நோட்டீஸின் சாராம்சம் இது தான் – வங்கதேசத்திலிருந்து முசுலீம்கள் கள்ளத்தனமாக ‘பாரத’ தேசத்திற்குள் நுழைகிறார்கள்; இது சட்டவிரோதமானது. மேலும், இந்த வந்தேறிகளின் மூலம் வடகிழக்கு மாநிலங்களை முசுலீம்கள் ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள் என்பதும் ஆகும். இவை எப்பேர்பட்ட பொய்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில வரலாற்று பின்னணிகளையும் புள்ளிவிவரங்களையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

 

Table 1

Percentage Decadal Variation in Population since 1951 in India and Assam

1951-61

1961-71

1971-81

1971-91

1991-01

01-2011

India

21.64

24.80

24.66

54.41

21.54

17.64

Assam

34.98

34.95

53.26

18.92

16.93

Dhubri

43.74

43.26

45.65

22.97

24.40

Dhemaji

75.21

103.42

107.50

19.45

20.30

Karbi Anglong

79.21

68.28

74.72

22.72

18.69

 

மேலே உள்ள புள்ளிவிவரத்தை கவனமாகப் பரிசீலித்தால் நமக்கு சில விஷயங்கள் தெளிவடையும். இந்தப்  பட்டியலில், ஒவ்வொரு பத்தாண்டுகளில் அனைத்திந்திய அளவில் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம், அசாமின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் அதன் சில மாவட்டங்களில் வளர்ச்சி விகிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கலவரம் நடந்து வரும் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தை ஒட்டி அமைந்திருக்கும் துப்ரி மாவட்டம் தான் பங்களாதேசத்தின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் தான் வங்க மொழி பேசும் முசுலீம்களின் மக்கள் தொகை அதிகளவில் உள்ளது.

பட்டியலின் படி பார்த்தால், 1971-ம் ஆண்டுக்குப் பிறகு துப்ரி மாவட்டத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் விழுந்துள்ளது ( அதாவது, முசுலீம்களின் வளர்ச்சி விகிதம்) அதற்கு முன்பும், துப்ரி மாவட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக இருந்த காலத்திலேயே அசாமின் பிற மாவட்டங்களில் ‘இந்துக்களின்’ மக்கள் தொகை மிக அதிகளவிலான வளர்ச்சி நிலையில் இருந்துள்ளது. குறிப்பாக தெமாஜி மற்றும் கார்பி மாவட்டங்களின் வளர்ச்சியை துப்ரி மாவட்டத்தோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும்.

அதே போல், இப்போது கலவரம் நடக்கும் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 2001 – 2011 காலகட்டத்தில் அதன் மக்கள் தொகை வளர்ச்சியே 5.19 சதவீதத்திற்கு வீழ்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தியும் மிகக் குறைவான அளவான 280 பேராக (சதுர கிலோமீட்டருக்கு) உள்ளது. மேலும் மக்கள் இம்மாவட்ட மக்கள் தொகையில் 20% அளவுக்கே முசுலீம்கள் உள்ளனர். இந்த விவரங்களில் இருந்தே முசுலீம்களால் பிரதேச அளவில் பெரியளவில் நெருக்கடி ஏதுமில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஆக, வங்கமொழி பேசும் முசுலீம்கள் பங்களாதேசத்திலிருந்து ஊடுருவி அசாமிய நிலங்களை அக்கிரமிக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் சொல்வது பச்சைப் பொய். ஆனால், அசாம் மாநிலத்தில் – குறிப்பாக துப்ரி மாவட்டத்தில் – வங்க மொழி பேசும் முசுலீம்கள் மக்கள் தொகை சதவீதத்தில் அதிகளவில் இருப்பதற்குக் காரணம் என்ன?

1826-ம் ஆண்டுக்கு முன்பு அசாம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இல்லை. அது அப்போது மூன்றாம் பர்மிய சாம்ராச்சியத்தின் மேற்குப் பகுதி எல்லைப்புற பிரதேசமாக இருந்தது. 1800களின் துவக்கத்தில் நடந்த ஆங்கிலோ – பர்மிய யுத்தத்தில் தோல்வியுறும் பர்மாவின் ஏவா அரசு ஆங்கிலேயருடன் ஒரு ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுகிறது – அது யெந்தபோ ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் படி, பர்மா காலனிய இந்தியாவிடம் விட்டுக் கொடுத்த நிலப்பகுதி தான் அசாம். அதாகப்பட்டது, பாரதமாதாவின் பீச்சாங்கையாக விளங்கும் நிலப்பகுதியே வேறு ஒரு நாட்டிடம் இருந்து அடித்துப் பறித்து ஒட்டவைக்கப்பட்டது தான்.

அதே காலகட்டத்தில் வெள்ளையர்கள் வங்காளப் பகுதியில் அமுல்படுத்திய விவசாயக் கொள்கைகளும், பொருளாதாரக் கொள்கைகளும் விவசாயிகளையும் கைவினைஞர்களையும் ஓட்டாண்டிகளாக்குகிறது. பெருந்திரளான மக்கள் வெள்ளை அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஜமீந்தாரி முறையின் கீழ் அல்லலுற்று வந்தனர். அதே நேரம் வெள்ளையர்கள் புதிதாக ஆக்கிரமித்துக் கொண்ட பகுதியில் நிறைய நிலங்கள் இருந்தன – ஆனால், அவற்றின் மூலம் நிலவருவாய் ஏதும் கிடைக்காத நிலையில் அவர்களே வங்கத்தின் கிழக்குப் பகுதி மக்களை புதிய நிலப்பகுதியில் குடியேற ஊக்குவித்துள்ளனர். அப்படிக் குடியேறியவர்கள் அசாமியப்பகுதியில் நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்யத் துவங்குகிறார்கள்.

இப்படி புதிதாக குடியேறும் வங்காளிகளின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் அதிகரித்துச் சென்ற நிலையில், 1920-ம் ஆண்டு வாக்கில் வங்க விவசாயிகளின் இடப்பெயர்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். ஆனால், அதற்குள் கோல்பாரா, நாகாவ்ன், காமரூப் போன்ற மாவட்டங்களின் முசுலீம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு அரசின் அலட்சியமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் இடம்பெயர்ந்தவர்களைத் தான் இன்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘சட்டவிரோதமாக’ குடியேறியவர்கள் என்று தூற்றுகிறது.

இத்தனைக்கும் இவர்கள் தேசப் பிரிவினையின் போது தாங்கள் குடியேறிய மண்ணுக்கு விசுவாசமாக இந்த நாட்டையே நம்பி இதன் இறையாண்மையையே ஏற்றுக் கொண்டு இங்கே தங்கி விட்டவர்கள். அவர்கள் அசாமின் மொழி கலாச்சாரத்தை தமக்குள் வரித்தும் கொண்டனர். உதாரணமாக, துப்ரி மாவட்டத்தில் முசுலீம்களின் மக்கள் தொகை சதவீதம் 74.29% அங்கே அசாம் மொழி பேசுபவர்கள் 70.09%. முசுலீம்கள் என்றாலே அவர்கள் நமது நாட்டின் மீது விசுவாசம் அற்றவர்களென்றும் அவர்கள் பிற மொழிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்களென்றும் ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் வழக்கமாக அவிழ்த்து விடும் பொய்களின் மேல் வங்காளதேச முசுலீம்கள் காறித் துப்பியிருக்கிறார்கள். பிறகு ஏன் இந்தக் கலவரங்கள்?

அசாம்-கலவரம்-1இன்றைக்கு அசாமில் நடந்து வரும் கலவரங்களுக்கு சிக்கலான வரலாற்றுப் பின்னணி உள்ளது. இன்றைக்கு போடோக்களின் தரப்பாகவும் பார்ப்பன இந்து தேசியத்தின் தரப்பாகவும் முன்வைக்கப்படும் ‘வங்காளதேச முசுலீம் ஊடுருவல்காரர்களின்’ ஆக்கிரமிப்புகள்  உண்டாக்கும் சமூக பொருளாதார நெருக்கடி என்பது முதன் முதலில் ‘அந்நியர்களுக்கு’ எதிரானதாகத் தான் துவங்கியது. அசாமியர்களோடு முதலில் முரண்பட்டது வங்கதேச முசுலீம்கள் அல்ல வங்காள மொழி பேசும் இந்துக்கள் தாம்.

போலி சுந்தந்திரத்திற்குப் பின் அசாமின் உள்ளூர் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது அசாமியர்கள் தான். அதே போல, ‘சுதந்திரத்தின்’ மூலம் கிடைத்து வந்த பலன்களை பெருமளவில் அனுபவித்து வந்ததும் நடுத்தர வர்க்க அசாமியர்கள் தான். அரசு வேலைகளிலும் மற்ற பிற சலுகைகளிலும் அசாமிய நடுத்தர வர்க்கத்துக்குப் போட்டியாக வங்க மொழி பேசும் இந்துக்கள் எழுகிறார்கள். அசாமியர்களும் வங்காளிகளுக்கும் இடையிலான முதல் கலவரம் 1960-ல் நடக்கிறது – அது இரண்டு மொழி பேசும் ‘இந்துக்களுக்கு’ இடையில் நடந்த கலவரம்.

அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் (All Assam Students Union/ AASU) ஆரம்பத்தில் நடத்திய ‘அசாம் இயக்கம்’ அதன் துவக்கத்தில் வங்காளதேச முசுலீம் ‘ஊடுருவல்காரர்களுக்கு’ எதிராக நடத்தப்பட்டதல்ல – அது அந்நியர்களுக்கு எதிரான இயக்கம் என்றே சொல்லப்பட்டது. அதற்கு, உள்ளூர் அளவிலான அதிராக வர்க்கத்தின் ஆதரவும் இருந்தது.

இதற்கிடையே எழுபதுகளில் இடதுசாரிகள் அசாமில் ஓரளவுக்கு செல்வாக்குப் பெறுகிறார்கள். 1974-ல் நடந்த கவுஹாத்தி முனிசிபல் தேர்தலில் முதன்முதலாக இடதுசாரிகள் வெற்றி பெருகிறார்கள். வங்கதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த முசுலீம்கள் மட்டுமின்றி வங்கமொழி பேசும் இந்துக்கள் மற்றும் பல்வேறு பழங்குடியினரின் ஆதரவையும் இடதுசாரிகள் பெற்றிருந்தனர். அந்த சமயத்தில் எழுந்து வந்த இனவாதிகளுக்கு இப்போது ஒரு நெருக்கடி உண்டாகிறது; அதாவது, உள்ளூர் பழங்குடியினரையோ அல்லது மாநிலத்துக்கு வெளியே – குறிப்பாக தில்லியில் – அரசியல் செல்வாக்குடன் திகழும் பிரிவினரையோ தமது வெறுப்புப் பிரச்சாரத்தின் இலக்காக வைத்திருப்பது ஆபத்துக்குரியதானது.

இந்த கட்டத்தில் தான் ‘அந்நியர்களுக்கு எதிராக’ என்பது ‘வங்கதேச முசுலீம் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக’ என்று மாறுகிறது. இதன் தொடர்ச்சியாகத் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முசுலீம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். பிரிக்கப்படாத நாகோன் மாவட்டத்தில் 1983 பிப்ரவரி 13ம் தேதி நிகழ்ந்த நெல்லீய் படுகொலையில் மட்டும்  சுமார் 2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பெருமளவு குழந்தைகளும் பெண்களுமே இருந்தனர்.

1979 துவங்கி 1985 வரை அசாமிய இனவாதிகள் நடத்திய படுகொலைகள் இன்றும் ஆறாத ரணமாய் இருக்கிறது. வடகிழக்கில் உள்ளூர் அளவில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களிடம் ஒரு ஐக்கியம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இந்திய ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாகவே இருந்துள்ளது. போடோ, குக்கி, மிசோ நாகா என்று வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே தீராத இனக்கலவரங்களை மூட்டி விட்டது இந்திய ஆளும் வர்க்கம் தான்.

போடோக்கள் மற்றும் அசாமியர்களின் தொடர்தாக்குதலுக்குள்ளான முசுலீம்கள், தம்மைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டாயிரங்களில் பத்ருதீன் அஜ்மால் என்பவரால் துவங்கப்பட்ட அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கீழ் அணிதிரளத் துவங்குகிறார்கள். வாசனைத் திரவியங்கள் தயாரித்து விற்கும் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பெருமுதலாளியான பத்ருத்தீன் அஜ்மால் தியோபந்த் எனும் அடிப்படைவாத இசுலாமியப் பிரிவைச் சேர்ந்தவர்.

இரண்டாயிரங்களின் மத்தியில் அவ்வளவாகச் செல்லாக்கு இல்லாமலிருந்த இவரது கட்சி தற்போது 18 எம்.எல்.ஏக்களுடன் முக்கியமான எதிர்கட்சி எனும் அந்தஸ்திற்கு வளர்ந்துள்ளது. காங்கிரசு மற்றும் பாரதியஜனதாவின் இந்துத்துவ வெறிக்கு பதிலடியாகத் துவங்கப்பட்ட இந்த அமைப்பும் இசுலாமியர்களை ஒரு முக்கியமான ஓட்டுவங்கியாக அணிதிரட்டியுள்ளது. தற்போது நடந்து வரும் கலவரங்கள் இந்த அணிசேர்க்கையை மேலும் உறுதிப்படுத்துவதோடு மக்களைக் கூர்மையாகப் பிளந்து எதிரெதிர் முகாம்களாக நிறுத்தியுள்ளது.

சுமார் நூறைம்பது ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர் காலத்தில் அசாமில் குடியேறிய வங்காளிகளின் நிலைமை என்பது இலங்கையின் மலையகத் தமிழர்கள் மற்றும் மலேசியத் தமிழர்களின் நிலைமையை ஒட்டியது தான். சிங்கள இனவாத பாசிஸ்டுகள் மலையகத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதும் ஆர்.எஸ்.எஸ் காட்டுமிராண்டிகள் வங்காளி முசுலீம்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வது ஏறக்குறைய ஒன்று தான்.

மட்டுமல்லாமல் அசாமிய தேசிய இனத்தைக் காக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் நோக்கமன்று – இந்த பிரச்சினையை வைத்துக் கொண்டு அகில இந்திய அளவில் இந்துக்களிடையே பதற்றத்தை உண்டாக்கி முசுலீம்களை அந்நியப்படுத்துவதும், வடகிழக்கில் ஓட்டுக்களை அள்ளுவதும் தான் உண்மையான நோக்கம். அகில இந்திய அளவில் இந்துக்களை பாசிச செயல்திட்டத்தின் கீழ் அணிதிரட்ட இவர்கள் பிரதேச அளவிலான உத்திகளைக் கையாள்கிறார்கள். உதாரணமாக, கருநாடகத்தில் கன்னடப் பெருமிதம், குஜராத்தி அஸ்மிதா, மராத்தி மானூஸ் போல அந்தந்த பிரதேசங்களில் உள்ள பிற்போக்கு நிலபிரபுத்துவ ஆதிக்கக் கருத்தியலை தங்கள் முகமூடியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இவ்வாறு தயார்படுத்தப்படும் இந்துத்துவ இயக்கங்களின் தொண்டர்களோ மூளையற்ற வெற்று மண்டையோடுகளோடு தான் அலைகிறார்கள் என்பது சமீபத்தில் நிரூபணமானது. கடந்த 30ம் தேதி பெங்களூருவில் இருந்து மங்களூருக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்த வட இந்தியத் தொழிலாளர்களை மாண்டியாவில் தடுத்து நிறுத்திய ஏ.பி.வி.பி எனும் சங்கப்பரிவார அமைப்பின் குண்டர்கள், அதில் 89 தொழிலாளர்களை வெளியே இழுத்துப் போட்டு ‘வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் இவர்கள்’ என்று கூச்சலிட்டபடியே அடித்துள்ளனர். இந்தத் தொழிலாளர்களில் பலர் ராஜஸ்தான், உ.பி, பீகார், ஒரிசா மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தாம் – அதிலும் பலர் ‘இந்துக்கள்’.

இந்து பாசிசம் பொய்களையும் வதந்திகளையும் செயல்தந்திரமாகக் கொண்டு வளர்ந்து வருகிறது. இது இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல – அனைத்து உழைக்கும் மக்களுக்குமே எதிரானது என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் போது தான் அவர்களைக் களத்தில் வீழ்த்த முடியும்.

தகவல் மூலங்கள் – கஃபிலா, அவுட்லுக் மற்றும் ஹிந்து நாளிதழ்

_________________________________________________

– தமிழரசன்.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இலண்டன் கலகம்: 1800 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

1

லண்டன்-கலவரம்ங்கிலாந்தின் தலைநகர் இலண்டன் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மார்க் டக்கன் என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அங்கு வெடித்த கலகம், அந்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பரவியது.  இக்கலகம் போலீசின் அத்துமீறலுக்கு எதிரான பொதுமக்களின் எதிர்வினையாக மட்டுமில்லாமல், தனியார்மயம் உருவாக்கிய சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டமாகவும் உருவெடுத்தது.

அமெரிக்காவின் மிகப்பெரும் கோடீசுவரனும் பங்குச் சந்தை சூதாடியுமான வாரன் பஃபெட், “இங்கிலாந்தில் நடந்ததைப் போன்றதொரு கலகம் அமெரிக்காவிலும் நடக்க வாய்ப்புள்ளது” என இக்கலகத்தின் தன்மையை உணர்ந்து எச்சரிக்கும் அளவிற்கு, அதாவது ஆளும் கும்பலுக்கு உறைக்கும் அளவிற்கு, இக்கலகம் தனியார்மயத்தைக் குறி வைத்துத் தாக்கியது. இக்கலகத்தின்பொழுது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான சூப்பர் ஸ்டோர்கள் தாக்கப்பட்டதைக் கண்டு பீதியடைந்த இங்கிலாந்து அரசு,  இது சாதாரண தெருப் போராட்டம் அல்ல, வர்க்கப் போரின் தொடக்கம் என்பதை உணர்ந்து,  இதனை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடும் நோக்கத்தோடு, “கலகக்காரர்களை விரைவாகவும் கடுமையாகவும் தண்டிப்பதன் மூலம்தான் சமூகத்தின் அமைதியை, ஒழுங்கைப் பாதுகாக்க முடியும்” என்ற பாசிச பிரச்சாரத்தை நடத்தி வந்தது.  இங்கிலாந்தின் நீதித்துறையும் இந்த அரசு பயங்கரவாதத்திற்கு ஒத்து ஊதியது.

கலகத்தில் இறங்கிய பெரும்பாலோர் மீது அதற்கு முன்னதாக எவ்வித கிரிமினல் குற்றமும் இல்லாதபோதும்; கலகத்தில் இறங்கியவர்கள் தாமே போலீசு நிலையங்களுக்கு வந்து சரண் அடைந்தபோதும்; அவர்கள் நீதிபதியின் முன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டபோதும்; குற்றம் சுமத்தப்பட்டவர்களுள் பலர் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய பருவத்தில் உள்ள இளம் பருவத்தினர் என்றபோதும் கலகக்காரர்களுக்கு மன்னிப்பு அளிப்பதோ, குறைந்த தண்டனை அளிப்பதோ நிராகரிக்கப்பட்டது.

  • 25 பவுண்டு பெறுமானமுள்ள செண்ட் பாட்டிலைத் ‘திருடிய குற்றத்திற்காக’ டேவிட் ஸ்வார்பிரிக் என்ற 25 வயது இளைஞனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை;
  • ஒரு சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து 10 பாக்கெட் சுயிங்கத்தை எடுத்த ‘குற்றத்திற்காக’ ஷனோலா ஸ்மித் என்ற இளம் பெண்ணுக்கு ஆறு மாத சிறை தண்டனை  என நீதித்துறையால் சட்டபூர்வ பாசிச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

சாதாரண காலங்களில் நடைபெறும் திருட்டுக் குற்றத்திற்கு 2 மாதங்கள் மட்டுமே தண்டனை அளிக்கும் இங்கிலாந்து நீதிமன்றம், கலகத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டுக்கு 7 மாதங்கள் எனத் தண்டனையை அதிகரித்து அளித்தது; கடையை உடைத்துக் கொள்ளையிடும் குற்றச்சாட்டுக்கு வழக்கமாக அளிக்கப்படும் தண்டனைக்குப் பதிலாக (8 மாதங்கள்), 14 மாதங்கள் தண்டனை அளிக்கப்பட்டது; பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிக்கும் குற்றச்சாட்டுக்கு வழக்கமாக அளிக்கப்படும் 5 மாத தண்டனைக்குப் பதிலாக இரண்டு மடங்கு தண்டனை (10 மாதங்கள்) வழங்கப்பட்டது.

இக்கலகத்திற்காக இலண்டன் நகரில் மட்டும் 1292 பேர் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மொத்த சிறைத் தண்டனைக் காலம் ஏறத்தாழ 1,800 ஆண்டுகள் ஆகும்.  இத்தண்டனைக் காலத்தின் சராசரியைக் கணக்கிட்டால், தண்டிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டும்.

தனியார்மயம்  தாராளமயம் உருவாக்கியுள்ள மாபெரும் பொருளாதார மந்தத்திலும், கட்டமைப்பு நெருக்கடியிலும் சிக்கிக் கொண்டுள்ள ஐரோப்பா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின், மாணவர்களின், இளைஞர்களின் கலகங்கள் காட்டுத் தீ போலப் பரவி, முதலாளித்துவ சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்தி வருகின்றன.  கடுமையான தண்டனை அளிப்பதன் மூலம், உழைக்கும் மக்கள் மத்தியில் அரசு பயங்கரவாத அச்சத்தை உருவாக்குதன் மூலம் அத்தீ தன் நாட்டுக்குள் பரவுவதைத் தடுத்துவிட முடியும் என மனப்பால் குடிக்கிறது, இங்கிலாந்தின் ஆளுங்கும்பல்.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!

8

கிரானைட்-ஊழல்லைக்கள்ளன் பி.ஆர். பழனிச்சாமி கைது செய்யப்பட்டுவிட்டாராம். கைது என்று குறிக்கும் முகமாக போலீசார் கைதியின் கையைப் பற்றுவது வழக்கம். பழனிச்சாமி கைது காட்சியைப் பார்த்தால், பதவியேற்பு விழாவுக்கு அமைச்சர் செல்வது போல இருக்கிறது. போலீசு உயரதிகாரிகள் பயபக்தியாக உடன் நடந்து வருகிறார்கள். கைது செய்து 24 மணிநேரத்தில் நீதிமன்றத்திற்குக் கொண்டுவராமல், 6 மணிநேரம் அதிகம் எடுத்துக் கொண்டது ஏன் என்று சீறுகிறார் நீதிபதி. நீதிமன்றத்தில் பழனிச்சாமிக்கு நாற்காலி போடப்படுகிறது. போலீசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே அவருடைய தனிப்பட்ட மருத்துவர் வந்து சோதனை செய்கிறார். போலீசு விசாரணையின் போது தனக்குத் தூக்கம் வருவதாக பி.ஆர்.பி. கூறியவுடன் விசாரணைக்கு இடைவேளை விடப்படுகிறது. சிறையில் முதல்வகுப்பு கொடுக்குமாறு நீதிபதி நினைவுபடுத்துகிறார். பி.ஆர்.பி. யின் மகன்கள், துரை தயாநிதி ஆகியோர் மீது வழக்கிருந்தும் போலீசு அவர்களைத் தேடவில்லை. அவர்கள் முன் ஜாமீன் போட்டிருக்கிறார்கள். கைது செய்யமாட்டோம் என்று உயர் நீதிமன்றத்துக்கு அரசாங்கம்  உறுதி அளிக்கிறது.

இதற்குப் பெயர் அம்மாவின் கடுமையான நடவடிக்கையாம். “யாராயிருந்தாலும் விடவேண்டாம்” என்று அம்மா கூறிவிட்டதால், பழனிச்சாமியுடன் தொடர்புள்ள ஓ.பி.எஸ். போன்ற அ.தி.மு.க. வினர் பீதியில் இருக்கிறார்களாம். துக்ளக், ஜுவி முதலான பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதுகின்றன. சகாயத்தின் கடிதத்தைக்கூட அதிகாரிகள் அம்மாவுக்கு மறைத்து விட்டதாகவும், சகாயம் மாற்றப்பட்டதுகூட அம்மாவின் கவனத்துக்கே வராமல் நடந்து விட்டதாகவும் கூச்சமே இல்லாமல் புளுகுகிறது  ஜூவி.

ஓராண்டிற்கு முன்பே தினபூமி நாளிதழ் ஆதாரப்பூர்வமாக இந்தக் கொள்ளையை வெளியிட்டது. உடனே தி.மு.க. ஆட்சி தினபூமி ஆசிரியரை வழிப்பறி வழக்கில் கைது செய்தது. சகாயத்தின் கடிதத்தை அன்பழகன் என்றொரு பத்திரிகையாளர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கி பத்திரிகையில் வெளியிட்ட பின்னர்தான், வேறு வழியின்றி தற்போதைய நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன.

நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளை ரவுண்டு கட்டிச் சிறையிலடைத்த ஜெயலலிதா, இன்று கருணாநிதியின் குடும்பம் நேரடியாகச் சிக்கியுள்ள இந்தக் கொள்ளையைப் பயன்படுத்திக் கொள்ளாமலிருப்பதற்குக் காரணம், இதில் அ.தி.மு.க. வினரும் சம்மந்தப்பட்டிருப்பது மட்டுமல்ல, மொத்த அதிகாரவர்க்கமும் இதில் சம்மந்தப்பட்டிருப்பதுதான்.

கிரானைட் கொள்ளைவழக்கில் அம்மாதான் பி.ஆர்.பி.யை விடவும் மூத்த ‘அக்யூஸ்டு’.  தமிழகத்தின் கிரானைட் சுரங்கங்கள் அனைத்தும் தமிழ்நாடு மினரல்ஸ் (டாமின்) நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தன. ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான், “ரெய்சிங் அண்டு சேல்” முறையில்  தனியார் முதலாளிகள் சொந்தமாக கிரானைட் குவாரிகள் அமைத்துக்கொள்ள ஏதுவாகச் சட்டம் இயற்றப்பட்டு, இவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அன்று “37 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, டாமினுக்குச் சொந்தமான சுரங்கங்களின் உரிமத்தை, முறைகேடாகத் தனியாருக்கு கொடுத்தார்” என்று ஜெ. மீதும், அன்றைய டாமின் தலைமை அதிகாரி தியானேஸ்வரன் மீதும் 1997இல் தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால், மீண்டும் ஜெயலலிதா முதல்வரானதும் 2004இல்  இந்த வழக்கு ஊத்தி மூடப்பட்டது. அண்ணன் அழகிரி கிரானைட் கொள்ளையில் இறங்கிவிடவே, மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. இந்த வழக்கு விவகாரத்தை கிளறவில்லை.

ஒரிஜினல் மலைக்கள்ளன் எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கிரானைட் கொள்ளையின் வரலாறு துவங்குகிறது. சாராய உடையாரையும், ஜேப்பியாரையும் உருவாக்கிய எம்.ஜி.ஆர், கிரானைட் மலைகளை உடைத்து விற்பதற்கு 1978இல் டாமின் நிறுவனத்தைத் தொடங்கி, அதற்குத் தனது நண்பரான நிலவியல் துறை பேராசிரியர் சரவணன் என்ற திருடனை தலைவராக நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் இருந்த கிரானைட் சுரங்கங்களை ’டைகோ’ என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விட்டுப் பல கோடிகளைக் கொள்ளையடித்தார் சரவணன்.

1989இல் கருணாநிதி ஆட்சியில் இவர் மீது வழக்கு பதியப்பட்டுத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் 1991இல் ஜெயலலிதா வந்தவுடன் சரவணன் மீண்டும் டாமின் தலைவராக்கப் பட்டார். பின்னர் சரவணனை விருப்ப ஓய்வில் அனுப்பி விட்டு, தொழிலை தொடர்வதற்கு தியானேசுவரனை நியமித்தார் அம்மா.

ஓய்வு பெற்ற பின் ‘மாபெரும் பக்திமானாக’, சென்னை அசோக் நகரில் செட்டிலாகி இருந்த சரவணன், 2008ஆம் ஆண்டு மர்மமான முறையில், அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு, நகைகளும் வெளிநாட்டு கரன்சிகளும் களவு போயின. சரவணனுக்கு ஸ்விஸ் வங்கியிலெல்லாம் பணமிருப்பதாகவும் அப்போது நாளேடுகளில் செய்தி வந்தது. அந்த திருட்டுச் சொத்துக்கள் யாருக்குச் சேர்ந்தன என்பது போலீசுக்குத்தான் வெளிச்சம்.

ஆட்சி மாறியவுடன் பேருந்து நிலைய சைக்கிள் நிறுத்தம், கட்டணக் கழிப்பறை போன்றவற்றில் சம்பாதிக்கும் உரிமையை சுமுகமாக அடுத்த கட்சிக்கு கைமாற்றிக் விடுவதைப் போல, மணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் பி.ஆர்.பி. போன்றோரிடம் பங்கு வாங்குவதிலும், தொழில் கூட்டுச் சேர்ந்து கொள்வதிலும், பங்கு பிரித்துக் கொள்வதிலும் சர்வ கட்சிகளும்  ஒரு சுமுகமான கூட்டினைப் பேணி வருகின்றனர். தனியார்மயம் இந்தக் கொள்ளைகளில் பெரும்பகுதியை சட்டபூர்வமாக்கிவிட்டது.

மதுரையின் வடக்கு எல்லையில் உள்ள ஆனைமலை என்ற குன்று மக்களின் அபிமானத்துக்குரியது. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அந்தக் குன்றை அறுத்து விற்பனை செய்ய முயன்றது பி.ஆர்.பி.அழகிரி கூட்டணி. ஆனால், மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. இமயமோ, பொதிகையோ எதுவானாலும், அது நோட்டுக்கட்டின் உருவமாகவே மலைக்கள்ளர்களுக்கு தெரிகிறது. “அக்கா, தங்கச்சி, பெண்டாட்டி, பிள்ளைகூட உனக்கு ரூவா நோட்டாகத்தான் தெரியுமா?” என்று அழகிரியையோ பி.ஆர்.பி.யையோ மக்கள் கேட்டால், “அதுக்கெல்லாம் கிரானைட் அளவுக்கு விலை வராது” என்று அவர்கள் கோபப்படாமல் பதிலளிக்ககூடும்.

இயற்கை வளங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களைத் தமது சொந்த சொத்தாக எண்ணி, அவற்றைப் பாதுகாக்க மக்கள் அணிதிரண்டு இந்தக் கொள்ளையர்களை மோதி அழிக்காத வரை இந்தக் கொள்ளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: