Monday, June 15, 2026
முகப்பு பதிவு பக்கம் 221

உப்பிட்டவரை … ஆவணப்படம் || டீசர் || வெளியீட்டு நாள் !

ப்பு – நம் வாழ்வில் தவிர்க்கமுடியாதது.. சுயமரியாதையின் அடையாளமாகக் காட்டப்படும் உணவுப் பொருள் உப்பு. அந்த உப்பு எடுக்கும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது ? அவர்களின் வலிகள்தான் நமது உணவின் ருசியாகின்றது.

உப்பளத்தின் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி வெளிவருகிறது உப்பிட்டவரை … ஆவணப்படம்.

உப்பு சுமக்க வந்தோம் – வலிகளை சுமந்து நின்னோம்..
உப்பு கரிப்பது போல் .. எங்க வாழ்க்கை கரிக்கக் கண்டோம்..
அம்பரமா உப்பு குவிச்சோம், அந்த வானம் தொடும் வரைக்கும்..
405 கூலி கிடைக்கும், காஞ்ச வயிறு ஒட்டி நிக்கும்..

உறக்கம் தொலச்சி உப்பு எடுத்தோம் ருசியும் கூடிடவே ..
கருமணிக்கு பார்வையிழந்தோம் – இருளும் சூழ்ந்திடுதே
வாழ்வில் இருளும் சூழ்ந்திடுதே..

அள்ள அள்ள குறையாது வெள்ளைத் தங்கம்..
ஆனாலும் எங்க வாழ்க்கைய மெல்லத் தின்னும்.
இரும்பக் கூட உருக்குதிந்த உப்புக் காத்து..
எலும்புக்கூடா தேகம் ஆச்சு – இந்த உப்புப் பூத்து.

பாடல் : மக்கள் கலை இலக்கியக் கழகம்

வெளியீட்டு நாள் : 12.10.2021

பாருங்கள்! பகிருங்கள்!
ஆவணப்படம் தயாரிப்பு, ஆக்கம் : மக்கள் கலை இலக்கியக் கழகம் (மாநில ஒருங்கிணைப்புக் குழு)

தொடர்புக்கு : 97916 53200

தேசிய பணமாக்கல் திட்டம் : நோக்கமும் பின்னணியும் !

தேசிய பணமாக்கல் திட்டம் : மறுகாலனியாக்கத்தின் உச்சகட்டச் சூறையாடலுக்கான ஏற்பாடு

நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் என்ற கொள்கையைத் திட்டமிட்டு அமல்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்ட ‘‘நிதி ஆயோக்’’கின் பரிந்துரைப்படி ஆகஸ்ட் 23−ம் தேதியன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் தேசிய பணமாக்கல் (National Monetisation Pipeline − நேசனல் மானிடைசேஷன் பைப்லைன்) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின் நோக்கம் பற்றிக் கூறுகையில் நாட்டு மக்களின் பொதுச்சொத்துக்களில் உயிராதாரமானவற்றை விற்பதன் மூலம் ஆறு இலட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்டுவதும், அந்தப் பணத்தை ‘தேசத்தின்’ உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகச் செலவிடுதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி நெட்டித் தள்ளப்போவதாகவும் பா.ஜ.க. அரசு குறிப்பிடுகிறது.

இதன்படி, 26,700 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகள், 90 பயணிகள் தொடர்வண்டிகள், 400 தொடர்வண்டி நிலையங்கள், 741 கி.மீ. நீளமுள்ள தொடர்வண்டி இருப்புப் பாதைகள், 28,608 கி.மீ. நீளமுள்ள மின்பகிர்மான வழித்தடங்கள், 6 ஜிகாவாட்ஸ் மின் உற்பத்தி நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 40 துறைமுகங்கள், 160 நிலக்கரிச் சுரங்கங்கள், 3,930 கி.மீ. நீளமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பைப் லைன்கள், தில்லி, பெங்களூருவில் உள்ள விளையாட்டரங்கங்கள், 14,197 பொதுத்துறை தொலைபேசி நிறுவன தொலைத்தொடர்புத் கோபுரங்கள், உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நான்காண்டுகளில் நான்கு கட்டமாக மொத்தம் 25 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் தேவைப்படும் ஆறு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்கிறது, பா.ஜ.க. அரசு.

படிக்க :

நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்

LIC தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் மக்களின் காப்பீட்டு நிதி!

ஆறு இலட்சம் கோடி ரூபாய் என மோடி அரசு மதிப்பிட்டிருக்கும் இந்த பொதுச் சொத்துக்களின் உண்மை மதிப்பு அதைவிட பல மடங்காகும். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொதுத்துறையின் ‘‘நவரத்தின’’ நிறுவனங்களின் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் என 4 ஆண்டுகளில் 6 இலட்சம் கோடி ரூபாயை ஈட்ட முடியும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் மோடி அரசின் வாதத்தில் உள்ள பித்தலாட்டத்தையும், திட்டமிட்டே இலாபகரமான பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்குத்தான் இந்தச் சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் என்பதைத்தான், ‘‘70 ஆண்டுகாலமாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் விற்கிறார் மோடி; மோடியின் இந்தத் திட்டம் அவரின் நண்பர்களுக்குத்தான் பயன்படப்போகிறது” என ராகுல் காந்தி குறிப்பிடுகிறார்.

மேலும், ‘‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போதே இது போன்ற தனியாமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், மோடி செய்யும் தனியார்மயமாக்கம் கோடிக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் துறைகளையும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்யும் துறைகளையும் தூக்கிக் கொடுக்கிறது” என்கிறார் அவர்.

‘‘தனியார்மயமாக்கத்திற்கு காங்கிரஸ் எதிரானதல்ல” என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் ராகுல், நாங்கள் செய்தது ‘சின்ன தனியார்மயம்’; மோடி செய்திருப்பது ‘பெரிய தனியார்மயம்’ என்ற ‘‘அளவு” வேறுபாட்டில் தேசிய பணமாக்கல் திட்டத்தை கொண்டுவந்து நிறுத்துகிறார். ராகுல் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும் எல்லா முதலாளித்துவ ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் தேசிய பணமாக்கல் திட்டத்தை இந்த அளவில்தான் விமர்சிக்கிறார்கள்.

ஆனால், தேசிய பணமாக்கல் என்பது மறுகாலனியாக்கத்தின் உச்சகட்டச் சூறையாடலுக்கான ஏற்பாடு. ஒட்டுமொத்த நாட்டையே கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கேற்ற வகையில் மறுகட்டமைப்பு செய்துவரும் நடவடிக்கையில் இதுவொரு பாய்ச்சலாகும்.

விவசாயிகளை ஒழித்துவிட்டு விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் புதிய வேளாண் சட்டங்கள், நாட்டின் கடற்கரைகள் அனைத்திலும் துறைமுகங்கள், பூங்காக்கள், சொகுசு விடுதிகள் கட்டிக் கொள்ளவும், மீனவர்களை விரட்டிவிட்டு கடல் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ள கடல் மீன்வள மசோதா உள்ளிட்ட சாகர்மாலா திட்டங்கள் ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய அரசு.

இந்தச் சட்டங்களோடு கூடுதலாக, கெயில், மீத்தேன் (ஹைட்ரோகார்பன்) உள்ளிட்ட இயற்கை வளங்களைச் சூறையாடும் கனிம வளக் கொள்ளை திட்டங்கள், சூறையாடப்படும் வளங்களை (சரக்குகளை) நாடு முழுவதும் தடையின்றி எடுத்துச் செல்வதற்காக அமைக்கப்படும் எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பாரத்மாலா திட்டங்கள், காண்டிராக்ட்மயத்தை சட்டப்பூர்வமாக்கி தொழிலாளர்களின் பெயரளவிலான உரிமைகளையும் பறித்து அவர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள் முதலானவற்றோடு ஒட்டுமொத்த நாட்டையே கார்ப்பரேட் கொள்ளைக்காக மாற்றியமைக்கும் மறுகாலனியாக்க திட்டங்களில் முக்கியமானதொரு மைல்கல்தான் தேசிய பணமாக்கல் திட்டம்.

தேசிய பணமாக்கல் திட்டம் என்றால் என்ன?

தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline) என்பது தேசிய உள்கட்டமைப்பு திட்டம் (National Infrastructure Pipeline) என்ற திட்டத்துடன் இணைந்த ஒரு திட்டமாகும். இதைப் பற்றி நிர்மலா சீத்தாராமன் 2021−22 நிதிநிலை அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தார். இவையிரண்டும் இருவேறு வகையான வேலையை மேற்கொள்கின்ற, ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ‘‘பைப்லைன்” நடவடிக்கைகள்.

‘‘பைப்லைன்” நடவடிக்கையைப் புரிந்துகொள்வதற்கு நாம் இதயத்தின் செயல்முறையை சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இதயம் வலது, இடது என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவ்விரண்டு பகுதிகளும் இருவேறு நடவடிக்கைகளைச் செய்கின்றன. இதயத்தின் வலப்பகுதி நம் உடலில் உள்ள ஆக்ஸிஜன் குறைந்துபோன பழைய இரத்தத்தை உள்வாங்கிக் கொண்டு நுரையீரலுக்கு அனுப்புகிறது. நுரையீரலில் இரத்தத்திற்கு ஆக்ஸிஜனேற்றப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை இடப்பகுதி உள்வாங்கிக்கொண்டு மீண்டும் உடலுக்குச் செலுத்துகிறது.

இந்த செயல்முறையில் இரண்டும் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஆனால், உடலில் உள்ள இரத்தத்தை ஆக்ஸிஜனேற்றி மீண்டும் உடலுக்கு செலுத்தும் ஒரு முழுமையான செயலின் இரு பகுதிகளைத்தான் தமக்குள் இவை பிரித்துக் கொள்கின்றன. இதேபோலத்தான் கார்ப்பரேட் சூறையாடலுக்காக இந்த நாட்டை மறுகட்டமைப்பு செய்யும் முழுமையான திட்டத்தில் தேசிய பணமாக்கல் திட்டமும் தேசிய உள்கட்டமைப்பு திட்டமும் இணைந்து செயல்படுகின்றன.

தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் பொதுச் சொத்துக்களை விற்றுத் திரட்டப்படும் பணம் தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்திற்காக செலவிடப்படவுள்ளது. தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்தின் மூலம் ஐந்தாண்டுகளில் மூலதனமிடப்பட இருக்கும் தொகை 111 இலட்சம் கோடி ரூபாய் (1,11,00,000 கோடி) ஆகும். இதன்படி பார்த்தால், தற்போது தொடங்கும் இந்த ஆறு இலட்சம் கோடி நிதித் திரட்டல் என்பது தொடக்கம்தான். அடுத்தடுத்த பணமாக்கல் திட்டங்களின் மூலம் முழுமையாக இந்த 111 இலட்சம் கோடியும் திரட்டுவதுதான் மோடி அரசின் திட்டம்.

படிக்க :

உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2021 மின்னிதழ் !

மறுகாலனியாக்க சூறையாடலில் புதியதொரு மைல் கல் :

இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து, எப்படித் திரட்டப் போகிறார்கள்? இதற்காக மூன்று அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக நிதிநிலை அறிக்கை 2021−22−ல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதில் முதலாவது அவசிய நடவடிக்கை, பணத்தை திரட்டுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதுதான். இதற்காக, தேசிய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி அளிப்பை விரைவுப்படுத்தும் வினையூக்கியாக செயல்படும் வகையில் ‘‘மேம்பாட்டு நிதி நிறுவனம்” (Development Finance Institution) ஒன்றை உருவாக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

அந்தவகையில்தான், கடந்த மார்ச் மாதத்திலேயே ஒரு புதிய வங்கியை உருவாக்குவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த வங்கியின் பெயர், ”உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியளிப்புக்கான தேசிய வங்கி” (NBFID) ஆகும். இந்த வங்கி ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட இருக்கிறது என்று அறிவித்துள்ளது, மோடி அரசு.

இரண்டாவது அவசிய நடவடிக்கை, சொத்துக்களைப் பணமாக்குதலில் ஒரு உந்துதலை ஏற்படுத்துவது ஆகும். இதன் பொருள், முதலாவது பணமாக்கலின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பணமாக்கல் திட்டங்களை அறிவிப்பதுதான். இதை ‘‘நிதி ஆயோக்’’ தனது அறிக்கையில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது. மேலே சொன்ன ‘‘உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியளிப்புகான தேசிய வங்கி” (NBFID) தொடங்கத் தேவைப்படும் தொடக்க மூலதனமான ஒரு லட்சம் கோடி ரூபாய் இதன் மூலம்தான் திரட்டப்பட இருக்கிறது.

இவ்வாறு மிக பிரம்மாண்டமான திட்டத்தோடு திரட்டப்படும் பணத்தை வைத்து ‘தேச வளர்ச்சிக்காக’ உள்கட்டமைப்புகளை உருவாக்கப் போவதாகச் சொல்கிறார்கள். 70 ஆண்டுகாலமாக ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் உள்கட்டமைப்புகளை அழித்துவிட்டு, வேறெந்த உள்கட்டமைப்புகளுக்கு செலவு செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழலாம்.

சாகர்மாலா, பாரத்மாலா, ஸ்மார்ட் சிட்டி, கெயில், மீத்தேன் எடுப்பு, புதிய ஆலைகளைத் தொடங்குவதற்கு கார்ப்பரேட்டுகளுக்கு தரப்படும் தொழில் கடன் போன்றவைதான் அதற்கான பதில். அதாவது, கார்ப்பரேட் சூறையாடலுக்கான வசதிகளைச் செய்துதரும் வகையிலான உள்கட்டமைப்புகள்தான் ‘தேச வளர்ச்சிக்கான’ உள்கட்டமைப்புகள். இதுதான் மோடி சொல்லும் ‘‘புதிய இந்தியா”.

இறுதியாக சொல்லப்படும் மூன்றாவது அவசிய நடவடிக்கை என்னவெனில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வரவு−செலவுத் திட்டங்களில் மூலதனச் செலவின் பங்கை அதிகரித்தல். அதாவது, வரவு−செலவு திட்டத்தின் பெரும் பகுதி நிதியை ராட்சத கார்ப்பரேட் கம்பெனிகள் ‘தொழில்’ தொடங்க ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும். அந்தவகையில், இனி நிதிநிலை அறிக்கைகளின் பரிமாணம் முற்றிலுமாக மாற்றப்பட்டுவிடும்.

இனி, நிதிநிலை அறிக்கைகளில் மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசு செய்யவேண்டிய பணிகள் குறித்து எதுவும் இருக்காது. கார்ப்பரேட்டுகளுக்கான வரவு−செலவுத் திட்டங்களைப் பற்றிப் பேசுவதும், அவர்களுக்கு நாட்டின் சொத்தையும் மக்கள் பணத்தையும் வாரிக் கொடுப்பது மட்டுமே நிதிநிலை அறிக்கைகளின் சாரம்சமாகப் போகிறது. இதுதான் மோடியின் புதிய இந்தியாவிற்கான ‘‘ஆத்ம நிர்பார்” நிதிநிலை அறிக்கை.

இதுவொரு மறுகாலனியாக்கத்திற்கேற்ற மறுகட்டமைப்புக்கான தொடர் நடவடிக்கை. இந்தப் போக்கு நிறைவடையும்போது சாலைகள், பொதுப் போக்குவரத்து, மின்சாரம், விவசாயம், காடுகள், மலைகள், கடல் உள்ளிட்ட இயற்கை ஆதாரங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தில் சென்றிருக்கும். அரசின் கைகளில் போலீசையும் இராணுவத்தையும் தவிர வேறெதுவும் இருக்காது. இதைத்தான் மறுகாலனியாக்க சூறையாடலின் ஒரு மைல்கல் என்கிறோம்.

இச்சூறையாடலை எதிர்த்து எழும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை தொடக்கத்திலேயே ஒடுக்கவும், அடக்குமுறையை நிரந்தரமாக்கவும்தான் என்.ஐ.ஏ, ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம், குற்றவியல் திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், புதிய தொழிலாளர் சட்டங்கள் போன்ற சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

வளர்ச்சியின் பின்னே மறைந்திருக்கும் கார்ப்பரேட் கொள்ளை:

இருப்பினும், இவற்றையெல்லாம் மூடிமறைத்து இதுவரை புதிய தாராளவாத ஆட்சியாளர்கள் அனைவரும் சொல்லி வந்த, ‘‘தேச வளர்ச்சி”, ‘‘வேலைவாய்ப்பு” போன்ற அதே புளித்துப்போன விசயங்களைத்தான் தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போதும் மோடி கும்பல் சொல்லிவருகிறது. இப்படி ‘தேசத்தின் நலன்’ என்று சொல்லி கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை முதல், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மோடி அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டை திவாலாக்கும் நிலைக்குத்தான் தள்ளியுள்ளது. வேலையின்மை பலமடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த மோசடிப் பிரச்சாரத்தை கோயபல்ஸ் பாணியில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, மோடி அரசு.

முதலில், இங்கே அரசின் பொதுச்சொத்துக்களை குத்தகைக்கு எடுப்பவர்களின் யோக்கியதை என்ன?, அவர்களை மோடி அரசு எப்படிக் கையாண்டது என்பதைப் பரிசீலிக்க வேண்டும். மல்லையா, நீரவ் மோடி முதல் வீடியோகான், கெய்ர்ன் உள்ளிட்ட பல வழக்குகளில் கார்ப்பரேட் முதலாளிகள் கடனைத் திருப்பிக் கட்டாமல் ஓடியது, வட்டியைக் கட்டாமல் ஏமாற்றியது, பொய்யான விவரங்களைக் கூறி மொத்த அரசுச் சொத்தையே சூறையாடியது, வங்கி அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து அரசை ஏமாற்றியது போன்றவைதான் கடந்தகால வரலாறு.

இது ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டாமல் இருக்கும் இரண்டு இலட்சம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்ய இருப்பதாக மோடி அரசு செப்டம்பர் மாத மத்தியில் அறிவித்துள்ளது. இதற்காகவே ஒரு வங்கியைத் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. அந்த வங்கியின் பெயர் தேசிய சொத்து மறுசீரமைப்பு கம்பெனி லிமிடெட் (National Asset Reconstruction Company Limited − NARCL). கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டாத வாராக்கடனை அரசாங்கம் கட்டுவதற்கான ஏற்பாடாக இந்த வங்கியின் செயல்பாடுகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன.

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இவ்வாறு கார்ப்பரேட் முதலாளிகள் திருப்பிச் செலுத்தாத வாராக்கடன் 18.28 இலட்சம் கோடி ரூபாயாகும். இதில் திருப்பிச் செலுத்தப்படாத சுமார் ஆறு இலட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது, மோடி அரசு. தற்போது உருவாக்கியிருக்கும் இந்த வங்கியின் மூலம் அனைத்து முதலாளிகளும் இனி தப்பித்துக் கொள்வார்கள். இதைத்தான் மோடி வகையறா ‘‘தேச வளர்ச்சி” என்று சித்தரிக்கிறது.

என்ரான் கொள்ளை – வகைமாதிரிக்கு ஒரு உதாரணம் :

1992−இல் தபோல் பவர் கார்ப்பரேஷன் என்ற பெயரில், 300 கோடி டாலர் முதலீட்டில் மகாராஷ்டிராவில் மின்னுற்பத்தித் திட்டத்தைத் தொடங்கிய அமெரிக்க மின் உற்பத்தி நிறுவனமான என்ரான் ஊழல் நாடறிந்த ஒன்றாகும். தனியார்மயம் − தாராளமயம் − உலகமயத்தின் தொடக்கக் காலத்தில் நடந்த இந்த ஊழல் மிகவும் முக்கியமானது. ஒரு யூனிட் மின்சாரத்தைக்கூட உற்பத்தி செய்யாமல் திட்டச் செலவை வேண்டுமென்றே கூட்டிக் காட்டியது, நிலத்தை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியது, நீர் வளத்தைக் கடுமையாக சுரண்டியது, போலீசுடன் சேர்ந்து கொண்டு உள்ளூர் மக்களை தாக்கியது − என என்ரான் ஒரு பாசிச காட்டாட்சியை அரங்கேற்றியது.

மேலும், பலமடங்கு அதிக விலை கொடுத்து இந்த நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை மகாராஷ்டிரா மாநில அரசு வாங்கியதால், இலாபத்தில் இயங்கிய மகாராஷ்டிர மின்சார வாரியம் 1999, 2000 ஆகிய இரண்டே ஆண்டுகளில் ரூ.1,681 கோடி நட்டத்தைச் சந்தித்தது. இந்நிலையில், சில ஆண்டுகளில் என்ரான் திவாலானதாக அறிவிக்கப்பட்டபோது, அந்த நிறுவனம் தொடங்குவதற்கு மக்கள் பணம் கடனாக கொடுக்கப்பட்டிருப்பதும், அது உற்பத்தி செய்யாத மின்சாரத்திற்கும் மாநில அரசு தொகை செலுத்திய மோசடிகளும் அம்பலமானது.

என்ரான் விவகாரம் என்பது, தனியார்மயச் சூறையாடலின் ஒரு வகைமாதிரி ஆகும். இதே திசையில்தான் இதுவரையில் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் விளைவு, சுற்றுச்சூழல் பேரழிவு, மக்களின் வாழ்வாதாரம் பறிப்பு, விலையேற்றம், அடக்குமுறை அதிகரிப்பு முதலானவைதான்.

வேலைவாய்ப்பு பெருகுமா?

தேசிய பணமாக்கல் திட்டத்தால், வேலைவாய்ப்பு பெருகும் என்ற மோடி கும்பலின் வாதம் மோசடித்தனமானது. மோடி அரசின் இப்போதைய நடவடிக்கையானாலும், முந்தைய நடவடிக்கையானாலும் அவற்றின் முக்கிய இலக்கு வேலையின்மையை அதிகரித்து நவீன கொத்தடிமைத்தனத்தை உருவாக்குவதாகும்.

நாட்டில் 225 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. 1960−61 ஆண்டில் மட்டும் 70 லட்சம் பேர் பொதுத்துறைகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் மட்டுமின்றி, மறைமுகமாகவும் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணிகளாகவும் பல இலட்சம் தொழிலாளர்கள் வாழ்வைப் பெற்று வந்தனர். இவர்களின் எண்ணிக்கை 1997−இல் இரண்டு கோடி பேராக உயர்ந்திருந்தது. ஆனால், 31.03.2017 மத்திய அரசின் அறிவிப்பின்படி, இது 11.3 இலட்சம் பேராகக் குறைந்துள்ளது. இதேபோல, தனியார் துறையில் 1983−இல் 75.5 இலட்சமாக இருந்த வேலைவாய்ப்பு 1994−2000 ஆண்டுகளில் 16.4 இலட்சமாகச் சுருங்கிவிட்டது.

குறிப்பாக, தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் என்ற நாசகரக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர், அரசுத்துறைகளில் புதிய ஆளெடுக்கும் பணி முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டது. மேலும், பொதுத்துறை நட்டம், லே−ஆஃப் போன்ற காரணங்களாலும், தனியார்மயமாக்கத்தினாலும் பெருமளவு பொதுத்துறை வேலைவாய்ப்பு சரிந்துள்ளது. மறுபுறம், எந்தப் பாதுகாப்பும் வேலை உத்திரவாதமும் அற்ற ஒப்பந்தம் பணி முறை எனும் நவீன கொத்தடிமை முறையானது, ஒட்டுமொத்த வேலைவாய்ப்பையும் முற்றிலுமாக நரகமயமானதாக்கிவிட்டது.

தினக்கூலி முறை, காண்டராக்ட் வேலை, சுவிக்கி − ஜொமோட்டோ போன்றவற்றால் உருவாக்கப்பட்டுள்ள சிதறிய, சிறிய வேலைகளையும் வேலைவாய்ப்பு எனக் கணக்கிட்டு பித்தலாட்டம் செய்துள்ள போதிலும், செப்டம்பர் 21−ம் தேதி வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.46 சதவிகிதமாக (2.658 கோடி பேர்) உயர்ந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் என்ற இந்தத் திட்டம் முற்றிலுமாக நடைமுறைக்கு வரும்போது, தொழிலாளிகள் நவீனக் கொத்தடிமையாக மாற்றப்பட்டு மீளமுடியாத நரகத்தில் தள்ளப்பட்டிருப்பார்கள். மற்றொருபுறம், கோடிக்கணக்கான மக்கள் வேலையின்மை, பட்டினி, அடிப்படை வசதிகள் அற்ற நவீன சேரிகளுக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள்.

வேலையற்றவர்களை, ஏழை−எளிய மக்களை நவீன சேரிகளுக்கும், உயர் வருவாய் உள்ளவர்களை ஸ்மார்ட் சிட்டிகளுக்கும் அழைத்துச் செல்வதன் மூலம் தேசத்தை இரண்டு முகாம்களாக பிரித்து ஒடுக்குவதுதான் காவி − கார்ப்பரேட் பாசிசத்தின் நவீன இந்துராஷ்டிரம்.

தேசிய பணமாக்கல் திட்டம், தேசிய உள்கட்டமைப்பு திட்டம் ஆகியன நடைமுறைக்கு வரும்போது மக்களின் வாழ்வாதாரம் மேலும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். நாட்டின் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேவையற்றவர்களாகக் கருதப்படுவர். இவர்கள் வளர்ச்சியின் எதிரிகளாகவும், தேச முன்னேற்றத்தின் தடைகளாகவும் சித்தரிக்கப்படுவர்.

கொரானா பெருந்தொற்றின்போது இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடைபயணமாக சொந்த ஊருக்கு விரட்டப்பட்ட தேசியத் துயரமும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இலட்சக்கணக்கான விவசாயிகள் வீதியில் இறங்கி 9 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்ற நிலைமையும், விவசாயிகளும் தொழிலாளர்களும் நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்கள்தான் என்பதை ஏற்கெனவே காட்டிவிட்டது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்ந்திருந்தாலும், அதனை எதிர்த்துக் கேட்கமுடியாத நிர்கதியான நிலைக்கு மக்களின் வாழ்க்கை நிலைமை சென்றுவிட்டது. அன்றாடம் உழைத்தால் கூட வாழ்க்கையை நடத்துவது பெரும்பாடாகிவிட்டது. இந்த தரித்திர நிலைமையை மேலும் தீவிரமாக்குவதுதான் காவி − கார்ப்பரேட் பாசிச மோடி கும்பலின் நோக்கமாகும்.

படிக்க :

கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !

“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !

கார்ப்பரேட் சேவையில் காங்கிரசும் பா.ஜ.க.வும் :

‘‘அரசு என்பது மக்களின் சொத்துக்களுக்குப் பாதுகாவலனாக இருக்க வேண்டும். ஆனால், மோடி அரசோ பொதுச்சொத்துக்களை விற்று வருகிறது” என்கிறார், காங்கிரசு தலைவர் சச்சின் பைலட். ‘‘நாங்கள் நட்டமடைந்த பொதுத்துறை நிறுவனங்களைத்தான் விற்று வந்தோம். ஆனால், மோடி அரசோ இலாபத்தில் இயங்குகின்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருவதாக…” குற்றம் சாட்டுவதன் மூலம் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கிறார்.

நட்டத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனம் என்பதன் பின்னால், அந்தப் பொதுத்துறை நிறுவனங்களை நட்டமாக்கி முடக்கிய சதி வேலையில் ஈடுபட்டவர்கள்தான் காங்கிரசும் பா.ஜ.க.வும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் கொடுக்கும் முறை அவசியமானது − என தனியார்மய − தாராளமய −உலகமயக் கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட முப்பதாவது ஆண்டை ஒட்டி ப.சிதம்பரம் வாதிடுகிறார். அதேசமயம், காங்கிரசு கட்சியோ தேசிய பணமாக்கல் திட்டத்தை எதிர்ப்பதாக கூறி நாடகமாடுகிறது. இதற்காக காங்கிரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்திருப்பதுதான், இந்த கேலிக்கூத்தின் உச்சமாகும்.

எப்போதும் நாட்டுப்பற்று குறித்து வகுப்பெடுத்துவரும் தமிழ் இந்து, தினமணி உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகள் மோடி அரசின் இந்த தேசத்துரோகச் செயலை ஒரு சிறு பெட்டிச் செய்தியைப் போல வெளியிட்டு, மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இருட்டடிப்புச் செய்தன. மற்ற ஊடகங்களோ தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தாமல், அடக்கி வாசிக்கின்றன.

நம் கண்முன்னே ஒரு பெரும் சூறையாடல் நடந்து வருகிறது. பொருளாதாரத் திட்டமாக மட்டுமின்றி, எதிர்த்துப் போராடுபவர்களை கடுமையாக ஒடுக்கும் நவீன ஒடுக்குமுறைகளையும் கண்காணிப்பு முறைகளையும் கொண்டுள்ள காவி − கார்ப்பரேட் பாசிசத்தின் அரசியல் தாக்குதலாகவும் இது இருக்கிறது. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதும், மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரத்திற்காகவும் மக்களின் அதிகாரத்திற்காகவும் உழைக்கும் மக்களைத் தட்டியெழுப்புவதும் இன்று நம் முன்னுள்ள உடனடி கடமையாகும்.


வேல்முருகன்

இலங்கை : இராணுவ போலீசு வன்முறைகளை எதிர்த்தல் !

வன்முறைகளை எதிர்த்தல் : ‘விகல்ப’ சிங்கள இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்.
காரணம் எதுவாக இருப்பினும், போலீஸ் அதிகாரி ஒருவர் நடுத்தெருவில் வைத்து ஒருவரை மிக மோசமாக மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய காணொளியொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது. (தாக்குதல்களில் மனிதாபிமான முறையொன்றும் இருக்கிறது என்பது இதன் அர்த்தம் அல்ல.) இவ்வாறு சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முகநூலில் பரவலாக பகிரப்பட்ட காணொளிக்கு பலரும் தமது கருத்துக்களை எழுதியிருந்தார்கள்.
அவை அனைத்துமே இலங்கை போலீஸுக்கும், தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிக்கும் எதிரானதாக இருந்ததோடு, போலீஸ் அதிகாரி, போலீஸ் மற்றும் சட்டம் ஆகியவை குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள், கருத்துக்கள், விவாதங்கள் எழுந்தன. அவை அனைத்தின் ஊடாகவும் வலியுறுத்தப்பட்டிருந்தவை போலீஸ் வன்முறைக்கான எதிர்ப்பு, துன்புறுத்தல்களுக்கான எதிர்ப்பு, தாக்குதல்களுக்கான எதிர்ப்பு ஆகியவையே. காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட மிகவும் பிரபல்யமான புகைப்படம் அந்த ஒவ்வொரு கருத்துக்களினதும் பிரதான புகைப்படமாக மாறியிருந்தது.
போலீஸ் வன்முறை குறித்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறான கருத்துக்கள் மூலமான எதிர்ப்பு, சமூகத்தின் செயலாற்றலில் காணப்படும் சிறந்த முன்னேற்றமாகும். வன்முறை மிக்க, இழிவான செயற்பாடுகள் தொடர்பாக விரைவாகவும், பகிரங்கமாகவும் நிகழ்நிலை பரப்பில் உதிக்கும் இவ்வாறான எதிர்ப்புகளை, எவ்விதத்திலேனும் நேரடியாகத் தெரிவிக்க முன்வருவதுவும் மிகவும் முக்கியமானது.
காரணம், ஜனநாயகத்தை விரும்பாத, சட்டம் தமக்குரியது என்று எண்ணியிருக்கும் ஆட்சியாளர்கள் இருக்கும் தேசத்தில் எந்தக் கணத்திலும் சமூக வலைத்தளங்களுக்கான அனுமதி நிறுத்தப்படலாம் என்பதோடு, தேவைக்கேற்ப முழு இணையத் தொடர்பாடலும் எக் கணத்திலும் துண்டிக்கப்படலாம்.
மியன்மாரில், கொலைகார இராணுவ ஆட்சியாளர்களால் குறிப்பிட்ட கால அளவுக்குள் இணையத் தொடர்பாடலை முற்றாக நிறுத்தி விட்டுத்தான் ஜனநாயகத்தைக் கோரும் எதிர்ப்பாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியாவில், சில இடங்களில் கிளர்ந்தெழும் எதிர்ப்புகளை மோடி அரசாங்கம் அவ்விடங்களில் இணையத் தொடர்பாடலுக்கு இடையூறு விளைவித்துத்தான் கட்டுப்படுத்துகிறது. இவை நாம் அறிந்த நாடுகளில் காணப்படும் இரண்டு உதாரணங்கள் மாத்திரமே.
சமூக வலைத்தளங்களின் வலிமையை அறிந்துள்ள இவ்வாறான ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள், அவர்கள் மீது சுமத்தப்படும் கடுமையான எதிர்ப்புகளை மந்தப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளிடையே சமூக வலைத்தளங்களைத் தடை செய்வதையும், சில சந்தர்ப்பங்களில் இணையத் தொடர்பையே இல்லாமல் செய்வதையும் அண்மைக் காலங்களில் அதிகளவில் காணக் கூடியதாக இருக்கிறது. இது, அவ்வாறான ஆட்சியாளர்களின் ஒரு செயற்பாடு மாத்திரமே. ஆகவே வன்முறைக்கு, துன்புறுத்தல்களுக்கு, அநீதங்களுக்கு எதிராகக் காண்பிக்கப்படும் எந்தவொரு எதிர்ப்பின் போதும் நிகழ்நிலையைப் போலவே யதார்த்தத்தில் நேரடியாகவும், பகிரங்கமாகவும் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பது எவ்வாறு என்பதை இப்போது இலங்கையிலிருக்கும் செயற்பாட்டாளர்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் முக்கியம்.
எதிர்ப்புகளை நீர்த்துப் போகாமல் பேணுதல்
இப்போது இந்த போலீஸ் அதிகாரியின் வன்முறை மற்றும் துன்புறுத்தல் நடவடிக்கைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் குறிப்பாக சிங்கள மொழியில் எழுந்துள்ள பலத்த எதிர்ப்பை, இலங்கையில் இதை விடவும் மிகவும் மோசமான துன்புறுத்தல்கள் நடைபெற்ற சந்தர்ப்பங்களின் போது நாம் அவ்வளவாகக் கண்டதில்லை.
குறிப்பாக, பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டிருந்த வேளையில், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில், பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சிறு பிள்ளையின் புகைப்படம் 2009 ஆம் ஆண்டில் இணையத்தளங்கள் முழுவதும் மிகவும் வேகமாகப் பரவியது. பின்னர், அந்தப் புகைப்படத்திலிருந்த பிள்ளை துப்பாக்கிச் சூடுபட்டு பரிதாபமாக விழுந்து கிடந்த புகைப்படமொன்று அதனை விட வேகமாக இணையம் முழுவதும் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியவாறு பரவியது. எனினும் அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் தொடர்பாக பெரும் எதிர்ப்போ, உரையாடலோ சிங்கள மொழியில் குறிப்பிடத்தக்களவு ஏற்படவில்லை.
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்த இளம்பெண்ணொருவர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சித்தரிக்கும் புகைப்படமும் அந்தக் காலத்தில் இணையத்தில் வேகமாகப் பரவியது. பின்னர் அந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட புகைப்படமும் இணையத்தில் பரவியது. சர்வதேச அளவில் மிகுந்த எதிர்ப்புகளும், விமர்சனங்களும் இவ்வாறான குரூரமான நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளம்பின. எனினும் முன்பு போலவே பெரும்பாலான தெற்கின் சிங்கள மொழியிலான எதிர்ப்பானது, அவற்றின் முன்னிலையில் ஊமையாகிப் போயிருந்தது.
படிக்க :
♦ தூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் !
♦ சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !
சிறு குழந்தைகள் உட்பட நிராயுதபாணிகளான அப்பாவி பொது மக்களை மிகக் குரூரமாகக் கொலை செய்த இராணுவ அதிகாரியொருவரை, இலங்கை நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும், அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்த வேளையில் பெரும்பாலானோர் தமது எதிர்ப்பின் எல்லையை வெட்கங்கெட்ட விதத்தில் வரையறுத்துக் கொண்டார்கள். எனினும், அந்த பெரும்பாலானோரின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளும், சிறுபான்மையினராவது தமது பலத்த எதிர்ப்பை வெளியிட்டதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
எவ்வாறாயினும், தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலாவது எதிர்ப்புகள் எழுவதுவும், கருத்துகளைத் தெரிவிப்பதுவும் இன்னும் எமது நாட்டில் காணப்படுகிறது. ஆகவே, அவ்வாறான எதிர்ப்புகளை நீர்த்துப் போக விடாமல், மனிதன் என்ற ரீதியிலும், மனித உரிமைகள் அடிப்படையிலும், எதிர்ப்புகளைத் தெரிவிப்பதுவும், பகிரங்கமாக அதைச் செய்ய முன்வருவதும் இப்போது மிகவும் அத்தியாவசியமானவை.
போலீஸ் வன்முறைகள், இல்லாவிட்டால் சில சமயங்களில் முன்னெடுக்கப்படும் அரச வன்முறைகள் வடக்கில் நிகழ்ந்தாலும், தெற்கில் நிகழ்ந்தாலும் அதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அவற்றை தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு என்று பிரித்துப் பார்க்காமல் மொத்தமாக ‘மனிதன்’ எனும் பொதுவான எண்ணத்தோடு அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அத்தோடு, வன்முறைக்கோ, துன்புறுத்தல்களுக்கோ எதிர்ப்பு தெரிவிக்கும்போது இனம், மதம், நிறம், ஜாதி, குலம், கோத்திரம் எனப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டுமாக இருந்தால் அதனால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு எதிர்ப்பும், அது எவ்வளவுதான் பலத்த எதிர்ப்பாக இருந்தாலும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்று பார்க்கும்போது சமூகத்துக்கு எவ்வித நலனையும் அது ஏற்படுத்தாது.
ஆகவே தற்காலத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக எழக்கூடிய எதிர்ப்புகளை அவ்வாறான நீர்மமாதலுக்கு உட்படுத்தாமல் பரந்தளவிலான ஜனநாயக நோக்கோடு செயற்படுத்தும் பொறுப்பு, இலங்கை சமூகத்தின் முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் அனைவரிடமும் காணப்பட வேண்டும். அவ்வாறே, சில பேரிடமாவது தற்போது காணப்படும் அவ்வாறான ஜனநாயகத்தின் பெறுமதியை மென்மேலும் பலப்படுத்தவும், ஆக்கபூர்வமாக பயன்படுத்தி, பரவலான ஜனநாயக வாய்ப்புக்காக முன் வருவதுவும் இன்றைக்குப் போலவே எதிர்காலத்திலும் பயனளிக்கக் கூடியது.
வன்முறைகளுக்கான பிரதான காரணம்
போலீஸ் அதிகாரிகளாலும், இராணுவ அதிகாரிகளாலும் இவ்வாறு எவ்வித அச்சமும் இல்லாமல், நடுத்தெருவில் மனிதர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுவது ஏன்? இது நாங்கள் எழுப்ப வேண்டிய அடுத்த கேள்வியாகும். இது பெரியளவில் விவரித்துச் சொல்லப்பட வேண்டிய விடயம் அல்ல.
எனினும், மேலே குறிப்பிட்ட குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை மிகக் குரூரமாகக் கொன்ற இராணுவ அதிகாரி தொடர்பாக யோசித்துப் பாருங்கள். அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்தது. ரதுபஸ்வல பிரதேசத்தில் குடிதண்ணீர் கேட்டவர்களை துப்பாக்கியால் சுடுமாறு கட்டளையிட்ட இராணுவ அதிகாரியைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது ஜீவனோபாயத்தை நடத்திச் செல்ல மண்ணெண்ணெய் சலுகை கோரி அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்ட ஹலாவதை பிரதேச மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அந்தோணி எனப்படும் மீனவத் தொழிலாளி கொல்லப்பட்டார். அந்த ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு என்ன நடந்தது? யோசித்துப் பாருங்கள். இதுதான் இலங்கை. இவை போல இன்னும் எக்கச்சக்கமான உதாரணங்கள் இருக்கின்றன.
இவ்வாறு குற்றம் செய்து தண்டனை வழங்கப்படாமல் இருக்கும் மிகப் பயங்கரமான கலாசாரத்தை தமது ஆட்சிக் காலத்தின் ஒரு பகுதியாக, இதுவரையில் இலங்கையை ஆண்ட அனைத்து அரசியல்வாதிகளும் பேணி வந்திருக்கிறார்கள். தற்காலத்திலும் நிலைமை அவ்வாறேதான் இருக்கிறது. ஆகவே, அவ்வாறான நிலைமையில் போலீஸோ, இராணுவ அதிகாரிகளோ மனிதர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க எவ்வித அச்சமும் கொள்வதில்லை. அதனால் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படாதிருக்கும் கலாசாரத்தை அல்லது குற்றவாளியை குற்றத்திலிருந்து விடுவித்தலை தொடர்ச்சியாக செய்து வருதலும், அதற்கு சமூகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்புகள் ஏதுமற்றிருப்பதும் இவ்வாறான வன்முறைகளுக்கு ஒரு பிரதான காரணம் ஆகும்.
எம். ரிஷான் ஷெரிப்
சமூக செயற்பாட்டாளர், இலங்கை 
disclaimer

ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !

தமிழகத்தைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு || புதிய ஜனநாயகம்

மாநில அரசுகளின் மீதான தனது குடுமிப் பிடியை வலுவாக நிலைநாட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட அதிகாரிகளை மாநிலங்களின் ஆளுநராகவும் பிற முக்கிய பொறுப்புகளிலும் பாசிச மோடி அரசு நியமித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி காலம் முடிவடைவதற்கு ஓராண்டு உள்ள நிலையில், அவசர அவசரமாக நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு புதிய ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி, .பி.எஸ். அதிகாரியாகவும் உளவுத்துறை (.பி.) அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்றும், நாகாலாந்தில் ஆளுநராக இருந்த பொழுது அமைதியை நிலைநாட்டியவர் என்றும் பா... ஆதரவு ஊடகங்கள் இவரைப் பற்றி புகழ்ந்தன.

ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானது. நாகாலாந்து ஆளுநர் பொறுப்பில் இருந்து இவர் மாற்றப்படுகிறார் என்ற செய்தியை அறிந்த நாகாலாந்து பத்திரிக்கையாளர்களும் மக்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

படிக்க :

தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !

உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!

போலி சுதந்திரத்துக்குப் பின்னர் துப்பாக்கி முனையில் நாகா பழங்குடியினப் பிரதேசங்களை ‘இரும்பு மனிதர்’ வல்லபாய் பட்டேல் இந்தியாவோடு இணைத்ததற்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக நாகா மக்கள் தேசிய சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு நாகாலாந்து போராட்டக் குழுக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஆர்.என்.ரவியை மத்தியஸ்தராகக் கொண்டு ஒரு அமைதி ஒப்பந்தம் (Framework Agreement) கையெழுத்தானது. 23 ஆண்டுகளாக ஆறு பிரதமர்களால் செய்ய முடியாததை தாங்கள் செய்துவிட்டதாகவும், 60 ஆண்டுகாலப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாகவும் மோடி அரசு அப்போது தம்பட்டம் அடித்துக் கொண்டது.

ஆனால், ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட வகையில் நாகாலாந்திற்கான தனி அரசியல் அமைப்புச் சட்டம், தனி தேசியக் கொடி போன்ற வாக்குறுதிகளை இந்திய அரசு நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், 2019ல் நாகாலாந்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட வாக்குறுதிகளை இனி நிறைவேற்ற இயலாது என கூறி போராட்டக் குழுக்களை வஞ்சித்தார்.

நாகாலாந்தில் அமைதியை நிலைநாட்டப் போவதாகவும் இந்திய தேசியத்துடன் நாகாலாந்தை ஒருங்கிணைக்கப் போவதாகவும் கூறிய ஆர்.என்.ரவி, போராட்டக் குழுக்களை வழிப்பறி கும்பல்‘, ‘வன்முறையில் ஈடுபடும் ஆயுதக் கும்பல்என்று இழிவுபடுத்தி பேசியதால் நாகா மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார்.

இந்நிலையில், 2020 ஆகஸ்ட் மாதம் நாகா தேசிய இன உரிமைக்காகப் போராடிவரும் ஆயுதக் குழுவான நாகாலந்து சோசலிஸ்ட் கவுன்சில் (NSCNIM) வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட வாக்குறுதிகளை இந்திய அரசும் ஆர்.என்.ரவியும் நிறைவேற்றாமல் ஏமாற்றியதோடு, ஒப்பந்தத்தில் பல மோசடிகளைச் செய்துள்ளதையும் அம்பலப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஆர்.என்.ரவியை அந்த மாநிலத்தில் இருந்து திரும்பப் பெறவேண்டும் என்று நாகாலாந்து மக்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதையடுத்து, தான் மண்ணைக் கவ்வியதை மறைத்துக் கொண்டு, மோசடி தில்லுமுல்லு பேர்வழியான ஆர்.என்.ரவியை இப்போது தமிழகத்தின் ஆளுநராக நியமித்துள்ளது, மோடி அரசு.

படிக்க :

சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் !

சீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்

மோடி அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் தங்களது அதிகார வரம்பை மீறி, மாநில அரசுகளுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பது மட்டுமின்றி, எவ்வித நேர்மையையும் ஒழுக்கத்தையும் பின்பற்றாத பாசிசப் பேர்வழிகள் என்பது ஊரறிந்த கதை. தற்போது தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவியும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல.

உளவுத்துறை (.பி.) சிறப்பு இயக்குனராகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு துணைத்தலைவராகவும் பணியாற்றிய இவர், இந்துவெறி பாசிச பா...மோடி கும்பலை எதிர்ப்போரையும் தமிழகத்தின் உரிமைக்காகப் போராடுவோரையும் ஒடுக்குவதற்காகவே ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக மக்கள் விழிப்புடன் இருந்து காவி கார்ப்பரேட் பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.

அறிவு

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் வர்க்கங்களும் சமயங்களும் || நா. வானமாமலை

0
நா. வானமாமலை
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 08
முதல் பாகம்
மூடுதிரை
(‘நாடும் நாயன்மாரும்என்றதோர் ஆராய்ச்சிக் கட்டுரையை இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை உரையாளர் க. கைலாசபதி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சைவம் பெருவெள்ளம் போலத் தமிழ்நாட்டில் பெருகிய காலத்தில் நிலவிய சமூக அடித்தளத்தையும், தத்துவ மேற்கோப்பையும் அவர் அக்கட்டுரையில் ஆராய்கிறார். இத்தகைய முயற்சி நம் நாட்டுத் தத்துவங்களை, சமூக அடித்தளத்தோடு சேர்த்துக் கற்றுக் கொள்வதற்கோர் வழிகாட்டியாக உள்ளது. இம்முயற்சி மிகவும் போற்றத்தக்கது.
ஆயினும் அவருடைய வரையறுப்புகளிலிருந்து நான் பல விஷயங்களில் மாறுபடுகிறேன். கண்ணோட்டம் ஒன்றாயினும் அது ஆதாரங்களை வரிசைப்படுத்தும் போது வேறுபடக் கூடும். அது கண்ணோட்டத்திலுள்ள குறைபாடாகவோ ஆதாரங்கள் போதிய அளவு சேகரிக்கப்படாததாலோ இருக்கலாம். இது அவருடைய கட்டுரைக்கு மட்டுமல்ல, என்னுடைய இச்சிறு கட்டுரைக்கும் பொருந்தும். இது போன்ற பல கட்டுரைகள் வெளியாகுமாயின், நமது கருத்துக்களைத் தொகுத்து விவாதித்து நமது பொதுவான கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டு ஆதாரங்களை ஆராய்வதில் கருத்து ஒற்றுமை ஏற்படும் என்ற உறுதியான நம்பிக்கையோடு இதனை எழுதுகிறேன் நா.வா.)
நாயன்மாரது பக்தி வெள்ளமான இலக்கியத்தின் அடித்தளத்தைக் காண நாடும் நாயன்மாரும்என்ற கட்டுரை முயலுகிறது. இம்முயற்சி மிகவும் கடினமானது. கடினமான இப்பணியை மேற்கொண்ட கைலாசபதி அவர்களின் துணிவை நாம் போற்ற வேண்டும். அம்முயற்சி இத்துறையில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தினால் அதுவே மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தோன்ற வழிவகுக்கக் கூடும். இப்பயனை இக்கட்டுரைத் தோற்றுவிக்கும் என்பதே என் நம்பிக்கை.
படிக்க :
தமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன ? | நா. வானமாமலை
இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி
இக்கட்டுரையில் சைவம் தனக்கு முன் தமிழ்நாட்டில் வேரூன்றி நின்ற இரண்டு சமயங்களை எதிர்த்துப் போராடி வளர்ந்தது என்று ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அதனைப் பற்றி அவர் தரும் முடிவுகளே பின்னர் சைவம் இவ்விரு சமயங்களை எதிர்க்க எத் தத்துவத்தை உருவாக்கிக் கொண்டது என்பதை விவரிக்க அடிப்படையாக அமைந்துள்ளது. ஆகவே இவ்விரு சமயங்களின் சமூக அடிப்படையை விரிவாக ஆராய்தல் அவசியம்.
கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் குலங்களும், குடிகளும் அழியத் தொடங்கி நிலவுடைமை முறை தோன்றத் தொடங்கிவிட்டது. அம்முறையின் அரசியல் வடிவம் குறுநில மன்னர் ஆட்சி, தென் தமிழ் நாட்டில் பொருநைக் கரையிலும், காவிரிக் கரையிலும், பெருவிளைச்சல் காரணமாக அரசுகள் எழுந்தன. இதுவும் இரண்டாம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வந்ததென ஆதாரத்தோடு சொல்லலாம்.*1
குலங்களையும், குடிகளையும் விழுங்கிவிட்ட சிற்றரசுகள் தம்முள் போட்டியிட்டு மூன்று முடியரசுகளாயின. அவை, சிதைவைத் தவிர்க்க பௌத்தத்தைக் கருவியாக்கிக் கொண்டன. பௌத்தம் இணைப்புக் கருவியாகப் பயன்பட்டது. குழுக்களிலுள்ள மாற்ற முடியாத பழைமைப் பற்றை ஒழிக்கப் பௌத்தம் பயன்பட்டது. குழுவினுள் அடங்கிச் சிறு தெய்வ வணக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களை பௌத்தம் தனது ஜாதகக் கதைகளினாலும், எழுத்தறிவினாலும், நீதி போதனையாலும், புத்தனைக் கடவுளாக வழிபடும் வணக்க முறையைப் புகுத்தியதாலும், புதிய அகன்ற உலகத்தை கற்பனையில் காண உதவிற்று.*2
பேராசிரியர் கைலாசபதி
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவில் காணப்பட்ட நிலைமையையும், தமிழ் நாட்டில் கி.மு.2, 1-ம் நூற்றாண்டில் நிலவிய நிலைமையையும் ஒன்றெனக் கொள்ள முடியாது. இக்காலத்தில் தென்னாட்டில் அரசுகள் நிலைத்து விட்டன. வர்க்கப் பிரிவினைகள் தீவிரமடையத் தொடங்கி விட்டன. உணவுக்குத் திண்டாடிய நாட்டில் தேவைக்கு மிஞ்சும் உற்பத்தி தோன்றிவிட்டது. அதன் காரணமாக உள்நாட்டு வாணிபமும் தலைதூக்கத் தொடங்கிற்று.
முதலில் நிலக்கிழாரில் ஒரு பகுதியினரே வாணிபத் துறையில் இறங்கியிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களிடம் தானே தேவைக்குப் போக எஞ்சிய தானியம் இருக்கும்? விவசாய உற்பத்தி அதிகமாக வாணிபமும் செழித்தது. பல புதிய பொருள்களுக்குத் தேவை பிறந்தது. இத்தேவை வணிக வர்க்கத்தை வளர்த்தது.
முதலில் நிலக்கிழார் வர்க்கத்திலிருந்து தோன்றிய வணிக வர்க்கம் நிலக்கிழார்களின் நிலப்பிடிப்பை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுதான் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டுவரை நிலவிய வர்க்க முரண்பாட்டின் சித்திரம்.*3
இந்நிலையில் பௌத்தம் தமிழ் நாட்டில் பரவியது. பிராமி பாசனங்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பது உண்மையானால் அது அக்காலத்தில் பரவத் தொடங்கியது என்று கொள்ளலாம். ஆனால் செல்வாக்கு பெறவில்லை. அது தமிழ் நாட்டிற்கு வந்த காலத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டில் தோன்றிய தர்மபாதையாக வரவில்லை. 6-ம் நூற்றாண்டில் சமூக மாறுதல்கள், பௌத்த தத்துவங்களையும் மாற்றியிருந்தது. இங்கு வந்த தத்துவம் ஹினாயன தத்துவம். இதில் விக்ரக வணக்கம் உண்டு.
சக்ரவர்த்திகளும் போதி சத்துவர்களும் சமமாகக் கருதப்படுகிறார்கள். சக்கரவர்த்திகள் பல பிறப்புகளில் செய்த புண்ணியம் காரணமாக அப்பதவியடைகிறார்கள் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆணைச் சக்கரமும், தர்ம சக்கரமும் இணைக்கப்படுகின்றன. நிலப்பிரபுத்துவம் வடநாட்டில் பரவி பேரரசு தோன்றிய காலத்தில் அதற்காதரவாகத் தோன்றிய தத்துவம் இது. இதுதான் தமிழ் நாட்டில் நிலப்பிரபுத்துவம் வளருவதற்கும் அவசியமான தத்துவமாக இருந்தது. இக்காலத்தில் போர் அவசியமில்லை. ஆகவே அஹிம்சையை ஒரு தத்துவமாகக் கொண்ட ஹினாயன பௌத்தம்ஆளும் வர்க்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
சமணம் தமிழ்நாட்டில் பின்னரே தோன்றியது. தோன்றும் காலத்தில் அது பேரரசு தோன்றவே ஆதரவான கொள்கைகளைக் கொண்டிருந்தது. பெருங்கதை முதலிய முற்காவியங்களின் அடிப்படைக் கருத்துக்களும் கதாநாயகர்களது பண்புகளும் இதற்குச் சான்று. ஜீவக சிந்தாமணி பேரரசு ஆதரவில் மிக மிக முன்னேறிச் சென்றது.*4
இவையாவும் சமணக் காப்பியங்களாயினும், உலகியலில் கௌடலியத்தைப் பின்பற்றுகின்றன. பேரரசுகள் நிலைக்கவே சாணக்கியர் தமது அர்த்த சாஸ்திரத்தை எழுதினார் என்பது அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மையே.
இவ்விரு சமயங்களும், அவற்றின் வளர்ச்சிக் காலத்தில் சாதித்த மாறுதல்கள் எவை?
1. சிறு குழு உணர்வைத் தகர்த்தன.
2. பேரரசு தோன்றத் துணை செய்தன.
3. வாணிபம் வளரவும், வணிக வர்க்கம் தோன்றவும் துணை செய்தன.
4. குழுக்களையும் சாதிகளையும் ஓரளவு ஒன்றாக இணைத்தன.
5. மொழி வளர்ச்சிக்கு உதவின.
6. புதிய பாட்டுருவங்களைப் புகுத்தி காவிய காலத்துக்குப் பாதை அமைத்தன.
7. ஒரே தமிழ்நாடு என்ற அமைப்பை மக்களும், மன்னரும் வணிகரும், நோக்கமாகக் கொள்ள உதவின.
8. இதன் மூலம் கலாச்சார ஒருமையை வளர்த்தன.
9. காவியங்களின் மூலம் இந்தியப் பண்பாட்டோடு, தமிழ்நாட்டின் பண்பாட்டை இணைத்தன.
10. போரைத் தவிர்த்து வாணிப வளர்ச்சிக்கு உதவின.
இம்மாறுதல்களின் காரணமாக சமூகச் சித்திரம் மாறுபாடடைந்தது. மன்னர்கள், நிலக்கிழார் வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும், வணிக வர்க்கம் வலுவடைந்தால் அதனோடும் மாறி மாறிச் சேர்ந்து கொண்டார்கள். சமூக மாறுதல்களால் தோன்றிய நிலமற்ற உழவரும், நிலத்தொடர்பிழந்த கைத்தொழிலாளரும், விதிக் கொள்கையால் உயர் வர்க்கங்களின் பிடிப்புக்குள்ளாயினர். அவற்றை எதிர்க்க முடியாதபடி விதிக்கொள்கை அவர்களைச் செயலற்றவராக்கியது.
களப்பிரர் காலத்தில் (இக்காலத்தில் தமிழ் மொழி இலக்கண அடிப்படை பெற்றது.) ஆரம்ப இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. காவிய காலத்தின் தொடக்கமும், நீதி நூல்களின் ஆரம்பக் காலமும் அதுவே. இம்மாறுதல்கள் நெருக்கடியை நோக்கி விரைந்தன. நிலப் பிரபுத்துவவர்க்கம், நிலத் தொடர்புடைய தொழில் புரியும் மக்களைத் திரட்ட முயன்றது.
இவ்வர்க்கங்கள் சமூக அடிப்படை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் வர்க்கப் போராட்டம் முற்ற ஆரம்பித்தது. இச்சமயம் உழைக்காத ஆயிரக்கணக்கான பிரபுக்களும், திகம்பர ஸ்வேதாம்பரத் துறவிகளும், உணவு பெற பள்ளிச்சந்த நிலங்களை அரசர் உதவியால் பெருக்கிக் கொண்டனர். விகாரைகளும், சைத்தியங்களும் சமணப் பள்ளிகளும் நிலப்பிரபுத்துவ ஸ்தாபனங்களாயின. இவை வணிக வர்க்கத்தாரோடு பொருளாதாரத் தொடர்பு பூண்டன. அவர்கள் நிலத்தில் விளைந்தவற்றை வணிகர் வாங்கி விற்றனர், அல்லது கச்சாப் பொருளாக வாங்கிச் செய் பொருள்களைச் செய்தனர். இவைத் தவிர நிலக்கிழார்கள், சிறு நில உடைமையாளர்கள் ஏராளமாக இருந்தனர். சமண, பௌத்த சமய நிறுவனங்கள் பெரும் சுரண்டல் ஸ்தாபனங்களாயிருந்தன. அவைதாம் நேரடியாகச் சுரண்டும் உழவர்கள், தமது செல்வாக்கினால் பாதிக்கப்பட்ட நிலக்கிழார்கள், சிறு நில உடைமையாளர் ஆகிய பகுதியினரின் வெறுப்புக்களாயின. தம்மை ஆதரிக்கும் வியாபாரிகளின் நலனுக்காகவே மத ஸ்தாபனங்கள், நிலங்களை நிருவகித்தன. ‘மத்தவிலாசப் பிரகசனம்பௌத்த விகாரைகளின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் கூறுகிறது.
இவ் வர்க்கங்களில் பெருநிலக் கிழார்கள், சமண பௌத்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினர். அவர்களது போராட்டத்திற்கு பக்தி இயக்கம் உதவியாக இருந்தது. வெளிப்படையாக அது எந்த நலனையும் ஆதரிக்காவிட்டாலும் சமண, பௌத்த, எதிர்ப்பு பொருளாதாரத் துறையில் வாணிக வர்க்க எதிர்ப்பாகவே சாராம்சத்தில் இருந்தது.
நிலப்பிரபுத்துவ சமூக அடிப்படையை விரிவுபடுத்த எல்லோரையும் ஆகர்ஷிக்கும் வண்ணம், மக்கள் அனைவரும் சகோதரர்கள். ஒரே குலம் என்ற தத்துவத்தை சமயம் பரப்பியது. கொள்வினை, கொடுப்பு வினை செய்து கொள்ள ஆதரவு காட்டியது. உறவில்லாத உறவை சிருஷ்டித்தது. (Idyllic relations) சிவனை. விதியை வெல்ல வழி காட்டும் மூலத் தலைவனாக்கியது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலால் ஏற்படும் வேதனைகளுக்கும், துன்பங்களுக்கும் விகாரைகளும், பள்ளிகளும் காரணமயிருந்ததால், அவற்றை எதிர்த்து அவர்களுடைய விதிக் கொள்கையை எதிர்த்து, மக்களைத் திரட்டுவதற்காக வேதனை நீக்கச் சிவனிடம் சரணடையும்படி சைவம் கோரியது. விதியை வெல்லச் சிவனிடம் சரணடையக் கோரியது.
நமச்சிவாயம்என்ற சொல்லே இகபர செல்வங்களையெல்லாம் அளிக்குமென்றது. மக்கள் புரிந்து கொள்ள இது எளிதாயிருந்தது, புத்த, சமண தத்துவச் சுழல்கள் ஆரம்ப சைவ சமயத்தில் இல்லை , சிவன் யாரும் வழிபடக் கூடிய பொதுக் கடவுளாயிருந்தார். பிறவிப் பெருங்கடலை நீந்த பிரபுக்களின் தர்ம போதனையோ, சமணக் குரவர், குரத்தியரது துணையோ தேவையில்லை. சைவ மடங்களும் அப்பொழுது தோன்றவில்லை.
சைவம் தழைக்கப் பணி செய்த முதன் நாயன்மார்கள் நாடு முழுவதும் அலைந்து மக்களிடையே வழங்கி வந்த இனிய பண்களில் மனித உணர்வை உருவமாக்கிச் சிவனை மனிதருக்கு மட்டும் எட்டும் தந்தையாக, தாயாக வருணித்துப் பாடினார்கள். அறிவைப் பின் தள்ளி உணர்ச்சியை ஆழமாக்கி பக்தி வெள்ளத்தில் நாட்டை மூழ்கடித்தார்கள்.
இந்நிலையில் வாணிக வர்க்கம் பலம் குன்றியிருந்தது. மூவரசுகளிடையே வாணிகத் தடைகள் தோன்றியிருந்தன. மேனாட்டு வாணிபம் சீர்குலைந்தது. இஸ்லாமிய வளர்ச்சியாலும், வெற்றியாலும் அண்டை நாடுகளில் இவர்களது வாணிபம் நின்றது, நாட்டுக்குள் முடங்கிய வணிக வர்க்கம் வலிமை குன்றி இத்தாக்குதலைச் சமாளிக்க இயலாது நின்றது.
படிக்க :
உ. பி. விவசாயிகள் படுகொலை : பாஜக-வின் வெறியாட்டம் ஆரம்பம்
டெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை !
இந்நிலையில் சைவம் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் பல்லவர் நாட்டிலும் பரவிற்று. சமூக ஒற்றுமைக்கு அது துணை செய்தது. சமண பௌத்த மடங்கள் செல்வாக்கிழந்தன. அரசர்கள், செல்வாக்குப் பெற்ற சைவத்தை ஆதரிக்கத் தொடங்கினர். சமண பௌத்த மடாலயங்களின் சொத்துக்கள் புதிதாகத் தோன்றிய சிவாலயங்களுக்கு மாறின. புதிய தேவ தானங்களும், பிரம தேசங்களுக் சிருஷ்டிக்கப் பட்டன.
பாண்டி நாட்டின் வேள்விக்குடி செப்பேடுகளும் திருநெல்வேலி செப்பேடுகளும் களப்பிரர் காலத்தில் அந்தணர்களிடமிருந்து பறித்துக் கொண்ட நிலங்களை மீண்டும் அவர்களுக்கு உரிமையாக்கியதைக் கூறுகின்றன. மகேந்திரன், மாமல்லன் காலத்துச் சாசனங்கள், காஞ்சி கைலாயநாதர் கோவிலுக்கு . பண்டைச் சமணப் பள்ளிகள் விகாரைகளின் நிலங்களை உரிமையாக்கியதைக் கூறுகின்றன. இவ்வாறு சிவன் கோயில்கள் படிப்படியாக நிலவுடைமை ஸ்தானங்களாயின. இம் முறை நாடு முழுதும் பரவிற்று. ஊர் நிலத்தின் பெரும் பகுதி கோயில்களுக்குச் சொந்தமாயிற்று. அதற்கடுத்தாற்போல நிலமுடைய பெரு நிலக் கிழார்கள் கோயில் நிலங்களை மேற்பார்வை செய்யும் சபையினராகவும், ஆயத்தினராகவும், வாரியத்தினராகவும், ஊரவராகவும் நாட்டினராகவும், அதிகாரம் பெற்றனர்.*5 இப்படி ஓர் புதிய நிலவுடைமை முறை உருவாகியது.
வாணிக வர்க்கத்தினரும் தமிழ்நாடு முழுவதும் வாணிபம் செய்யும் வாய்ப்பை மறுபடி பெற சைவத்தை அனுசரித்தனர். அவர்களில் பெரும் பகுதியினர் வீர சைவர்களாயினர். இது நிலவுடைமை வர்க்கத்தினரோடு வணிக வாக்கத்தின் நட்புறவு கொண்டதையே காட்டுகிறது. 8-ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் வணிக வர்க்கத்தினர், பல சிவன் கோயில்களுக்குப் பொன்னளித்ததும், மகமை முறைகள் ஏற்படுத்தியதும் சமகாலச் சாசனங்களால் புலனாகின்றன. கூட்டுச் சுரண்டலுக்கு இவ்வுறவு காரணமாயிற்று.
(தொடரும்)

அடிக்குறிப்புகள் :
*1 தமிழ் நாடும் மோரியரும் நா. வா. (தாமரை பொங்கல் மலர் 1961)
*2 (Philosophies of India – Essay on Buddihism Zimmer).
*3 சிலப்பதிகாரத்தில் வர்க்கப் போராட்டம், நா.வா., ஜனசக்தி மே. மலர் 1957
*4 காவியக் கதைத் தலைவர்கள் நா.வா., தாமரை
*5 South Indian Polity – K.S.Krishnaswamy Iyengar உத்தர மேரூர் சாசனம்.
« முந்தைய பாகம் …………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2021 மின்னிதழ் !

மின் இதழ் மற்றும் சந்தா தொடர்பான அறிவிப்பு !

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் மின் இதழை வாங்கும் வாசகர்களில் சிலர் ஒரு இதழை தொகை கொடுத்து வாங்கி அதன் நகலை நண்பர்களுக்கான வாட்ஸ்−அப் குழுவில் பகிர்ந்துள்ளனர். சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் தவிர்க்க இயலாது எனினும், புதிய ஜனநாயகம் வணிநோக்கம் கொண்ட ஒரு இதழ் அல்ல என்பதை உணர்ந்து இத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு கோருகிறோம்.

மின் இதழ் கோரும் நண்பர்கள், வாசர்களிடம் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜி−பே (G−Pay) முறையிலோ வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு சந்தாக்கள் சேகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். ஆண்டு சந்தா என்ற அடிப்படையில் ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம். அஞ்சல் மூலம் இதழ் கோருகின்ற வாசகர்கள், எமது அலுவலக எண்ணிற்கு ஜி−பே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்−ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்−அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.20
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

 

அக்டோபர் மாத இதழில் வெளியான கட்டுரைகள் குறித்த விவரம் அறிய : இங்கே அழுத்தவும்.

– நிர்வாகி.

உள்ளாட்சித் தேர்தல்கள் : ஜனநாயக விரோதிகளால் நடத்தப்படும் ‘ஜனநாயக’ நாடகம் !

ன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் என்றால் வேர்மட்ட ஜனநாயகம், பெண்கள் − தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்ற வழக்கமான கதைகள் ஒருபுறம்; இக்கதைகளை எல்லாம் எள்ளி நகையாடும் வகையில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றிய உறுப்பினர் பதவிகளை ஏலம் விடுவது மறுபுறம் என ‘ஜனநாயகக் கூத்துகள்’ அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
வேர்மட்ட ஜனநாயகத்தை அரிக்கக்கூடிய இந்த ஏல முறை பற்றி இப்போதுதான் தெரியும் என்பதுபோல, தூக்கத்திலிருந்து எழுந்த மாநிலத் தேர்தல் ஆணையம் ‘கடுமையான’ உத்தரவுகளைப் போட்டிருப்பதாக ஊடகங்கள் பூச்சாண்டி காட்டுகின்றன. தேர்தல் ஆணையம் சொல்லும் அரசியலமைப்புச் சட்டம், மக்களாட்சித் தத்துவம், ஜனநாயக முறையிலான உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையில் எப்படி இருக்கிறது?
படிக்க :
‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!
காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க அரசு !
பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட எந்தப் பதவியாக இருந்தாலும், அந்தப் பதவிக்குப் போட்டியிடும் பெண்களின் கணவர்களே ‘உண்மையான’ வேட்பாளர்கள். எந்தப் பெண் வெற்றி பெற்றாலும், அதிகாரப் பசி கொண்ட அவர்களின் வீட்டு ஆண்களே ‘செயல்படும்’ அதிகாரம் கொண்டிருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.
இது ஒருபுறம் இருக்க, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான ஒதுக்கீடுகள் உள்ள ஊர்களில், ஆதிக்க சாதியினரின் கைப்பாவைகளே வேட்பாளராக நிறுத்தப்படுவதும், தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையாக இருக்கும் ஊர்களில் ஆதிக்க சாதியினரின் சதிகளால் பிளவுபட்டுத் தோற்பதும் தொடர் நிகழ்வுகள். அதையும் தாண்டி வெற்றி பெறும் தாழ்த்தப்பட்டவர்கள், குறிப்பான பெண்கள் ஊராட்சித் தலைவர் நாற்காலியில் அமர்வதே ‘பெருங்குற்றம்’ என்ற நிலைதான் இன்னும் நீடிக்கிறது.
தேர்தல் ஆணையம் சொல்லும் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட முயன்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், தலைவராகத் தேர்வு செய்யப்பட்டாலும் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதும், இழிவுபடுத்தப் பட்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மைகள். இவை, ஆணாதிக்க − சாதிய மேலாதிக்கத்தின் கீழ் உள்ளாட்சித் தேர்தலின் ‘ஜனநாயக’ மாண்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதற்கான உதாரணங்கள்.
இந்த ‘ஜனநாயகத்தை’ நிலைநாட்டும் இன்னொரு கூறாக இருப்பவர்கள் கார்ப்பரேட்டுகள், திடீர்ப் பணக்கார ரவுடிகள் உள்ளிட்ட பணம் படைத்த கும்பல். ஏலம் விடப்படும் ஊராட்சிகளில் கல் குவாரி, மணல் குவாரி என இயற்கை வளங்களைச் சூறையாடும் கும்பல்களோ, சுற்றுச்சூழலை நாசம் செய்யும் கம்பெனிகளோ கட்டாயம் இருக்கவே செய்கின்றன. ஊராட்சி சார்பாக இவர்களிடம் ‘வசூல்’ செய்யும் அதிகாரத்துக்கோ, நத்திப் பிழைக்கும் நோக்கத்திலோதான் தேர்தலுக்கு முன்பாகவே ஐந்து முதல் அறுபது இலட்சம் வரை கொட்டி, ஏலத்தில் வெற்றி பெற்று, பதவிக்கு வருகிறார்கள். எதிர்ப்பார் யாருமின்றி போவதால் இந்த ஊர்களில் தேர்தல் நடப்பதில்லை. அதாவது, ‘ஜனநாயகம்’ விலைபேசப்பட்டு விடுகிறது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கோடிகளைச் செலவிடும் நபர், பதவிக்கு வந்தபின், முதலீடு செய்த பணத்தை ஒன்றுக்கு பத்தாக, நூறாகத் திரும்ப எடுப்பது எல்லாரும் ‘ஏற்றுக்’ கொள்ளும் உண்மையாகி இருக்கும்போது, ஊராட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மட்டும் நேர்மை, பரிசுத்தத்தின் அடையாளமாக இருக்க முடியுமா?
பொறுக்கித் தின்பதற்கு மட்டுமே நேர்ந்து விடப்பட்டுள்ள இந்த ஊராட்சித் தேர்தலில், அரிதினும் அரிதான வகையில் மக்கள் ஆதரவோடு வென்று, ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் கிராம சபை − ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரத்தை நிலைநாட்டுவது, அதாவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை நிலைநாட்டுவது என்று எவரேனும் புறப்பட்டால், அவர்களின் கதி என்னவாகும்?
இயற்கை வளக் கொள்ளைக்கு எதிராக, சுற்றுச்சூழலை நாசம் செய்யும் கம்பெனிக்கு எதிராக, அரசே நடத்தும் டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக ஏதேனும் தீர்மானம் போட்டு தடுத்து நிறுத்த முடியுமா? எத்தனை ஊர்களில் அப்படி சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படிருக்கிறது? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, நாசகர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போடப்பட்ட தீர்மானங்களின் கதி என்ன?
நெல்லை − கங்கைகொண்டானில் இருக்கும் கோக் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி மன்றத் தலைவரை, அந்நிறுவனமே கொன்றொழித்ததே, இது அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் நியாயமாகும்? மணற்கொள்ளையை எதிர்த்த காரணத்துக்காக கொலை செய்யப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்களுக்கு அரசின் எந்த உறுப்பு நியாயம் தேடிக் கொடுத்தது?
இவை யாவற்றையும் விட, ‘ஜனநாயக’ முறைப்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றம், அரசு கொண்டுவரும் திட்டங்களை எதிர்த்தால், கட்டுப்பட மறுத்தால் அதைக் கலைக்கும் உரிமையை மாவட்ட கலெக்டருக்குக் கொடுத்திருப்பது இதே சட்டம்தானே?
எந்தவிதமான ஜனநாயக முறையின்படியும் தேர்வு செய்யப்படாத கலெக்டர்தான் மாவட்டத் தேர்தல் அதிகாரி; அவர் பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட கிராம சபைகளைக் கலைக்கும் அதிகாரம் படைத்தவர் என்பதை நியாயப்படுத்துகிறது, தேர்தல் ஆணையம். இத்தகைய ஜனநாயக விரோத தேர்தல் ஆணையம்தான், ஊராட்சித் தேர்தலில் ஏலம் எடுக்கும் முறை ‘ஜனநாயக’ விரோதமானது என கூப்பாடு போடுகிறது.
படிக்க :
புதிய ஜனநாயகம் அக்டோபர் – 2021 அச்சு இதழ் !
நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !
நாட்டின் இயற்கை வளங்களை, மக்களின் உரிமைகளை பன்னாட்டு − உள்நாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரைவார்த்து, நாட்டையே மறுகாலனியாக்கும் ‘இலட்சிய வேகத்துடன்’ செயல்படும் இந்த நாடாளுமன்ற − போலி ஜனநாயகம் ஒருபோதும் மக்களுக்கான ஜனநாயகமாக இருக்கவே முடியாது. சாதி, மத, ஆணாதிக்க மேலாதிக்கத்தைக் கட்டிக்காப்பதே இதன் நோக்கமெனில், இங்கு ஜனநாயகத்திற்கு இடமேது?
இத்தகைய மோசடி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, தேர்ந்தெடுக்கவும், திரும்ப அழைக்கவும், கண்காணிக்கவும் உழைக்கும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசாங்க முறையை, சட்டமியற்றும் மக்கள் பிரதிநிதிகளே அதை அமல்படுத்தும் அதிகாரம் கொண்ட அரசு அமைப்பை உருவாக்கும் போராட்டங்களின் மூலமாகத்தான் மக்களை ஜனநாயகப்படுத்துவதும், மக்களுக்கான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதும் சாத்தியம்.

புதிய ஜனநாயகம் அக்டோபர் – 2021 அச்சு இதழ் !

நம்பிக்கையின் தொடக்கம் !
அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
செப்டம்பர் மாதம் முதலாக மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ள புதிய ஜனநாயகம் இதழுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. பு.ஜ.வின் பல வாசகர்கள் மின்னிதழாகவும் அச்சிதழாகவும் பு.ஜ.வைப் பார்த்து மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த செம்படம்பர் மாத இதழ் மீது வாசகர்கள் பலரும் தங்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவித்து கடிதங்கள் எழுதியுள்ளனர்.
  • பு.ஜ. கட்டுரைகள் சிறப்பாக இருந்ததாகவும் நடப்பு அரசியல் போக்குகளின் மேல் சரியான கண்ணோட்டத்தைக் கொடுக்க கூடிய வகையில் அமைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
  • ஒசூரைச் சேர்ந்த இனியன் என்கிற தோழர் அனைத்து கட்டுரைகள் மீதும் தனது விரிவான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அடுத்தடுத்து வரவேண்டிய கட்டுரைகள் குறித்து சில ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் தலையங்கக் கட்டுரை குறித்து, ‘‘…அங்குலம் அங்குலமாக நாடாளுமன்றத்தில் நடந்த கூத்தை பட்டியலிட்டு நினைவூட்டி செல்கிறது, கட்டுரை. நாடாளுமன்றம் அதன் சொல்லப்பட்ட உரிமைகளைக் கூட இழந்து விட்டதை படம் பிடித்து காட்டுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
  • ‘‘சி.பி.ஐ.(எம்.எல்.)(ரெட் ஸ்டார்)’’ குழுவின் தோழர்கள் பு.ஜ.வைப் பார்த்து பெரு மகிழ்ச்சியுடன் வாங்கியுள்ளனர். தொடர்ந்து தங்களது தோழர்களுக்கும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
  • ம.ஜ.இ.க.வில் இருந்து பிரிந்து தனித்தனி அமைப்புகளாக செயல்படுகின்ற பல தோழர்கள் பு.ஜ.வை மீண்டும் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
  • மதுரையில் ‘‘மக்கள் அதிகாரம்’’ சார்பாக செப்டம்பர் 1−ம் தேதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய, ‘‘தமிழ் புலிகள்’’ அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் பேரறிவாளன், ‘‘புதிய அரசியல் விசயங்கள், போக்குகள் குறித்து கற்றுக்கொள்வதற்கு புதிய ஜனநாயகம் உதவியாக இருக்கிறது. இது புதிய ஜனநாயகத்தின் பங்களிப்பு. அதனை மீண்டும் கொண்டு வந்ததற்கு எமது வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
  • சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வி.சி.க.வின் துணைப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் ஆளூர் ஷாநவாஸ் பு.ஜ.வைப் பெற்றுக்கொண்டு இதழ் மீண்டும் வருவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத் தோழர்கள் பலரும் வரவேற்று இதழைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
  • பல கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பு.ஜ.வைப் பார்த்து தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.
  • பு.ஜ. தொடர்ந்து வெளிவருவதால் கடைகளில் விற்பனைக்கு இதழை கொடுக்குமாறு சில புத்தகக் கடை உரிமையாளர்கள் நமது தோழர்களிடம் கோரியுள்ளனர்.
மொத்தத்தில், பு.ஜ.வின் வருகையானது கலைப்புவாதிகளைத் தவிர முற்போக்கு, புரட்சிகர, ஜனநாயக அரசியல் சக்திகள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
தோழர்களுக்கும் வாசகர்களுக்கும் எமது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
− நிர்வாகி
000
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !!
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 = ரூ.25
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்,
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
தேசிய பணமயமாக்கல் திட்டம் : மறுகாலனியாக்கத்தின் உச்சகட்டச் சூறையாடலுக்கான ஏற்பாடு!
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • தலையங்கம் உள்ளாட்சித் தேர்தல்கள் : ஜனநாயக விரோதிகளால் நடத்தப்படும் ‘ஜனநாயக’ நாடகம் !
  • காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி, மக்கள் தலைவர், தொழிலாளர் தோழர், சுதேசி இயக்கத்தின் முன்னோடி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் : மறுகாலனியாக்கத்தையும் இந்து மதவெறி பாசிசத்தையும் முறியடிக்க சூளுரைப்போம்!
  • தமிழகத்தைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
  • தேசிய பணமயமாக்கல் திட்டம்: மறுகாலனியாக்கத்தின் உச்சக்கட்டச் சூறையாடலுக்கான ஏற்பாடு !
  • இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !
  • சென்னை ஃபோர்டு ஆலை மூடல் அறிவிப்பு : தனியார்மயத்தின் கோரத் தாண்டவம் !
  • ஸ்மார்ட் சிட்டி மதுரை : தண்ணீர் தனியார்மயமாகிறது !
  • தி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல்
  • கொடநாடு கொலை – கொள்ளை : விவாதப் பொருளாக வேண்டியது எது?
  • கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை : நெருக்கடியைத் தீவிரமாக்கி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள்
  • பத்திரிகைச் செய்தி : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் !
  • உத்திரப்பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்
  • திரிபுராவில் இந்து மதவெறி குண்டர்களின் வெறியாட்டம்! தேவை : பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியும் போராட்டங்களும்!
  • மேக்கேதாட்டுவை நோக்கி நடை பயணம், ஆர்ப்பாட்டம்!

உப்பிட்டவரை… ஆவணப்படம் – டீசர் || ம.க.இ.க.

ப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். நம் வாழ்வோடும் உணவோடும் என்றென்றும் இணைந்திருக்கும் உப்பு, தமிழகத்தின் தூத்துக்குடி நகரில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த உப்பை உற்பத்தி செய்யும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை பற்றி நாம் இதுவரை எண்ணிப் பார்த்திருக்கிறோமா ?
நமது உணவுக்கு உப்பிட்டவர்கள் அவர்கள்தான். அவர்களின் வாழ்க்கை நிலையையும் துயரங்களையும் மக்கள் கலை இலக்கியக் கழகம், களப் பதிவு செய்து ஆவணப்படமாகத் தயாரித்துள்ளது. ”உப்பிட்டவரை…” ஆவணப்படம் விரைவில் வினவு தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை (டீசர்) தற்போது வெளியிடுகிறோம் !

பாருங்கள் ! பகிருங்கள் !
ஆவணப்படம் தயாரிப்பு, ஆக்கம் :
மக்கள் கலை இலக்கியக் கழகம் (மாநில ஒருங்கிணைப்புக் குழு)

தொடர்புக்கு : 97916 53200

மாப்பிளா கிளர்ச்சி : பிரிட்டிஷ் அரசு நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன?

பாகம் 1 : மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது
பாகம் 2 : மாப்பிளா கிளர்ச்சி : 1921 அக்டோபரில் நிகழ்த்தப்பட்ட இராணுவ வெறியாட்டம்
பாகம் 3 : மாப்பிளா கிளர்ச்சி : பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற இராணுவம் !
பாகம் 4 : மாப்பிளா கிளர்ச்சி : பிரிட்டிஷ் அரசு நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன ?
(சலீல் இலக்கில் அவர்களின் பதிவின் தமிழாக்கத்தை தொடர்கின்றேன்)
5. கோணோம்பாற சீரங்கந்தோடி அரீப்புரம் பாரக்கல் சக்காரியாவின் பரம்பரை வீட்டுக்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் நான்கு பேர் அடக்கம் செய்யப்பட்டனர். அரீப்புரம் பாரக்கல் குஞ்சீன் ஹாஜி, அவர் மகன் ஆயாமு, மகள் கடியாமு, மருமகன் நானத் இஞ்ஞாலி ஆகியோர். நோய்வாய்ப்பட்டு இருந்த ஹாஜி, பிரிட்டிஷாரின் கண்ணில் படாத இடத்தில் தன்னை மறைத்து வைக்குமாறு சொன்னார். நோயாளியான அவருக்கு பிரிட்டிஷார் துன்பம் தர மாட்டார்கள் என்றுதான் குடும்பத்தின் பிறர் எண்ணியதாக ஆயாமுவின் பேத்தி பாத்திமா சொல்கின்றார். ஆயாமுவின் மகன் வாப்பு ஹாஜி (அப்போது இவருக்கு வயது 14)யும் நண்பன் நானத் குஞ்ஞாலாவியும் பெண் உடையணிந்து பிற பெண்களோடு கலந்து வைக்கப்பட்டதால் தப்பினர்.
வல்லிக்கடன் குடும்பத்தில் ஒருவர் மிக மோசமாக காயம் அடைந்துள்ளார். நான்கு நாட்களாக காயத்துடன் போராடியுள்ளார். பாப்பு ஹாஜி என்னும் சிறுவன், அவருக்கு குடிக்க நீர் கொடுத்துள்ளான். ஆனால் அருந்தி ய நீர் முழுமையாக வெளியேறிவிட, கவனிக்க யாருமற்ற நிலையில் நான்காம் நாள் உயிரிழந்தார், அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். காலம் ஓடிவிட்டது, அவரது கல்லறையும் மறந்துவிட்டது.
படிக்க :
நாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால் அகமது
கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
6. கோணோம்பாறவில் சந்தைக்கு பின்புறம் உள்ள அடக்க ஸ்தலத்தில் நரிப்பட்ட கபூர் குடும்பத்தை சேர்ந்த இருவர் அடக்கம் செய்யப்பட்டனர். நரிப்பட்ட கபூர் அகமது, அவர் மகன் போக்கர் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டபின் இருவரும் தப்பியோடி காய்ந்த சருகுகளின் பின்னால் ஒளிந்திருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டனர். அகமதுவின் மற்றுமொரு மகன் குஞ்ஞாலாவி பிடிபட்டு அந்தமான் தீவுக்கு கொண்டுக்குச்செல்லப் பட்டார். அகமதுவின் பேரன் அலாவி (மொய்தீன் குட்டியின் மகன்) தன் குடும்பத்துடன் இங்கே வசிக்கின்றார்.
7. மேல்முறி வலியட்டபாடி நம்பன்குண்ணன் முகம்மது அலி வீட்டின் கொல்லையில் அவர் தாத்தாவின் தந்தை அலாவி அடக்கம் செய்யப்பட்டார். மிக வயதான அவரை வேறு யாரும் சுமந்து செல்ல மாட்டார்கள் என்று எண்ணியதால், சிறிய ஜன்னல் வழியே வெளியே வந்துள்ளார். பிரிட்டிஷாரின் கையில் பிடிபட்ட பின்னர் தன்னை சுட்டுக்கொல்வது உறுதி என்று தெரிந்த பின் தொழுகை நடத்த ஆயத்தம் ஆனார். தன்னை நீரால் சுத்தப்படுத்திக்கொண்டு மேற்குத்திசை நோக்கி நின்றார் என்று உறவினர் மொய்தீன் (87 வயது) கூறுகின்றார். பிரிட்டிஷாரின் பீரங்கிகள் தாக்கியதில் அங்கே இருந்த தென்னை மரங்கள் மொட்டையாக இருந்தன என்று அவர் சொல்கின்றார். சுட்டுக்கொல்லப்பட்ட அலாவியின் உடலை, பெண்கள்தான் இரவில் குழி தோண்டி அடக்கம் செய்ததாகவும் இரண்டு அடி ஆழம் மட்டுமே அவர்களால் தோண்ட முடிந்தது என்றும் சொல்கின்றார்.
8. கபூர் உஸ்மானின் வீட்டு கொல்லையில் கபூர் குடும்பத்தின் இருவர், கபூர் இத்தீரும்மாவின் தந்தையின் சகோதரர், தாத்தா ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டனர். இத்தீரும்மாவுக்கு குழந்தைகள் இல்லை, சமீபத்தில்தான் அவர் காலமானார். இருவரும் முறையே கபூர் உஸ்மானின் தாத்தா ஆன இஸ்மாயில் என்ற இதேலுவின் சகோதரரும் மகனும் ஆவர்.
இத்தேலு பிடிபட்டார், ஆந்திராவில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார், அங்கேயே இறந்தார். அவர்களின் பரம்பரை வீட்டுக்கு பிரிட்டிஷார் தீ வைத்து அழித்தனர். வீட்டின் இடிபாடுகளை இடித்தபோது பிரிட்டிஷாரின் துப்பாக்கி தோட்டாக்கள் சுவரில் புதைந்து இருந்ததை கண்டுபிடித்ததாக உஸ்மானின் தந்தை முகம்மது ஹாஜி நினைவுகூர்ந்துள்ளார்.
9. மேல்முறி முட்டிப்பாடி மத்திய தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள மடாம்பி உபையத்தின் வீட்டின் அருகே நான்கு பேர் அடக்கம் செய்யப்பட்டனர். மடாம்பி குஞ்ஞாரமு, மடாம்பி மாமுண்ணி, காடேறி மூஸா ஹாஜி, சேர்க்காடன் மொய்தீன் ஆகிய நால்வர். மடாம்பி குடும்பத்தின் பரம்பரை வீட்டின் முற்றத்தில் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் இந்த வீட்டை செப்பனிட்ட போது சுவர்களில் தோட்டாக்கள் புதைந்து இருந்ததை கண்டுபிடித்தார்கள். மூஸா ஹாஜியின் மகன் ஆன மம்முது ஹாஜிதான் இந்த நிலத்தை விலைக்கு வாங்கி, நிலம் பறிபோகா வண்ணம் அதை தன் தாயார் இயாத்துக்குட்டி ஹஜும்மாவின் பெயரில் ஆலத்தூர்பாடியில் உள்ள மசூதிக்கு வக்பு கொடையாக அளித்துள்ளார். இக்குடும்பத்தை சேர்ந்த எழுத்தாளர் உமர் மேல்முறி இத்தகவலை தருகின்றார்.
பெரும்கொல்லன் சாதியை சேர்ந்த சிலர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். தட்டாந்தோடி அருகே உள்ள வைஷ்யர்தோடியில் வசித்து வந்தார்கள். இவர்களின் தலைமுறையை சேர்ந்த மூவரை பிரிட்டிஷ் ராணுவம் சுட்டுக்கொன்றது. அவர்களின் வீட்டுக்கு தீ வைத்தது. வீட்டின் கிணற்றருகே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டனர். ஆனால் கல்லறைகளை முறையாக பராமரிக்கவில்லை என்று ஆலத்தூர்ப்பாடியை சேர்ந்த பி டி முகம்மது மாஸ்டர் கூறுகின்றார்.
(சலீல் இலக்கில் எழுதிய பதிவின் தமிழாக்கம் கீழே)
பிரிட்டிஷ் ராணுவம் நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன?
மலபார் கிளர்ச்சியின் தலைவர் அலி முஸ்லியாரின் செல்வாக்கு மேல்முறியிலும் அதிகாரித்தோடியிலும் பலமாக இருந்ததுதான் அப்பகுதிகளை பிரிட்டிஷார் தம் இலக்காக ஆக்கியமைக்கு காரணமாகும். தார் (Dar) எனப்படும் இஸ்லாமியக் கல்வி மையங்களை மேல்முறி பொடியாட் பரம்மலிலும் பின்னர் மேல்முறி ஆலத்தூர்ப்பாடியிலும் முஸ்லியார் நடத்திவந்தார். மூன்று வருடங்கள் இப்பகுதியில் அவர் இருந்தார் என்பதால் இயற்கையாகவே அப்பகுதி மக்களிடம் செல்வாக்கை வளர்த்து இருந்தார். காங்கிரஸ் கிலாபத் இயக்கத்தின் கோழிக்கோடு தாலுக்கா தலைவர் பழக்கம்தோடி அபூபக்கர் முஸ்லியார் மலபார் கிளர்ச்சி இயக்கத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவர், அவர் பொடியாட்டின் தாரில் இருந்த அலி முஸ்லியாரின் மாணவர் (A K Kodoor, page 98). மலபார் கிளர்ச்சியின் பல தலைவர்கள் இளவயது அறிவாளிகள், அலி முஸ்லியாரின் மாணவர்கள்.
அலி முஸ்லியார் தவிர மற்றுமொரு குறிப்பிடத்தக்ககிளர்ச்சி த் தலைவர் வரியன்குன்னத் குஞ்ஞாகமது ஹாஜி, இவர் தலைமறைவாக இருந்தபோது மேல்முறிக்கு பலமுறை ரகசியமாக வந்து சென்றுள்ளார். தத்தையில் குடும்பத்தின் மாடம்பி முஹம்மது, தன் தந்தை தன்னிடம் கூறியதாக சொல்கின்றார்: குஞ்ஞாகமது ஹாஜி ஒருநாள் இரவில் வந்து அரிசிக்கஞ்சி கேட்டார்,கஞ்சி இல்லாமல் போகவே தேங்காய் சில்லுகளை வைத்துக்கொண்டு பழைய சோறு மட்டுமே உண்டார். (Nisar Kaderi, page 23).
பிரிட்டிஷார் இப்பகுதியை குறிவைத்து தாக்கியமைக்கு பூக்கோட்டூர் போர்க்களம் மற்றொரு காரணம். 1921 ஆகஸ்ட் 21 அன்று நடந்த சண்டையில், மாப்பிளாகள் ஒருபுறமும் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஆயுதப்படையான Leinster ரெஜிமெண்ட், சிறப்பு போலீஸ் படை ஆகியன மறுபுறமும் மோதியதில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாப்பிளாக்கள் முறியடிக்கப்பட்டார்கள்.
பூக்கோட்டூர் போர்க்கள வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த மலபார் கிளர்ச்சியின் வீழ்ச்சியில் முக்கியமான பங்கை வகித்தது. இக்களத்தில் மாப்பிளாக்கள் பெரும் உயிர்ச்சேதத்தை சந்தித்தார்கள் என்பது உண்மைதான் எனினும் பிரிட்டிஷ் அரசு இக்களத்தை மிகக் கவலையுடன்தான் பார்த்தது. காரணம், வேறொரு ராணுவம் அல்லது அரசின் உதவி ஏதும் இல்லாத நிலையில் மாப்பிளாகளால் இவ்வுலகத்தின் மிக வலிமையான ராணுவத்தை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடிந்தது என்பதே.
பூக்கோட்டூர் கும்பல் எனப்பட்ட மாப்பிளா இராணுவ அமைப்பில் இருந்தவர்கள் முற்காலத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்களுடைய திட்டங்களும் கிளர்ச்சியை ஒருங்கமைத்த விதமும் பூக்கோட்டூர் களத்தில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு மிகப்பெரும் சேதங்களை விளைவித்தது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் ஆக இருந்த FB Evans மெட்ராஸ் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். Tottenham , page 48. 1921 அக்ட்டோபர் 20- நவம்பர் 10 இடைக்காலத்தில் கொண்டோட்டி, மஞ்சேரி, அரீகோட், மலப்புரம் ஆகிய பகுதிகளில் பிரிட்டிஷ் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் பகுதியாகவே மேல்முறிஅதிகாரித்தோடி படுகொலைகள் இருந்தன, அதன் உடனடி நோக்கம் பூக்கோட்டூர் கும்பலையும் ஆதரவாளர்களையும் வளைத்துப் பிடிப்பதுதான். Tottenham, page 40.
அவ்வாறெனில் உண்மையான நோக்கம் என்ன? பூக்கோட்டூர் கும்பலை ஒழித்துக்கட்டவே இந்த படுகொலைகள் என்று சொல்லிக்கொண்டாலும், கிளர்ச்சியில் நேரடியாக பங்கு பெறாத மாப்பிளா மக்களை அச்சுறுத்துவதே இப்படுகொலையின் உண்மையான நோக்கம். கிளர்ச்சியில் தாங்கள் பங்கு பெறாததால் பிரிட்டிஷ் ராணுவம் தங்களுக்கு தீங்கு செய்யாது என்று நம்பியவர்களையும் ராணுவம் தீர்த்துக்கட்டியது. நானத் குருவயில் மொய்து அப்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவர். இவ்வாறு ஒரு பயங்கரத்தை கட்டவிழ்த்து விடுவதன் மூலம், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு செய்தியை எச்சரிக்கையாக அனுப்பியது பிரிட்டிஷ் ஆதரவாளராக இருங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்.
பிரிட்டிஷ் அரசு ஆவணங்கள் கூட படுகொலைக்கு ஆளானவர்கள் அப்பாவிகள் என்றுதான் சொல்கின்றன. அன்றைய அரசின் கீழமை செயலாளர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
“….அக்ட்டோபர் 25 அன்று மேல்முறியில் 246 மாப்பிள்ளாக்களை Dorset படையினர் படுகொலை செய்தார்கள். இவர்கள் அனைவருமே கிளர்ச்சியில் நேரடியாக பங்கு பெற்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது, ஏனெனில் இப்படுகொலைகள் அப்பகுதி மக்கள் மத்தியில் மனக்கிலேசத்தை உருவாக்கிவிட்டதை பார்க்க முடிந்தது. படுகொலைகள் நிகழ்ந்த பின்னர் உடனடியாக, மலப்புரத்தின் சுற்று வட்டார அம்சங்களில் (கிராம நிர்வாக அமைப்பு) இருந்து அரசுக்கு வந்த மனுக்களை பார்த்தால், அவை அரசுடன் ஒத்துழைப்பதாக எழுதப்பட்டு இருந்தன“. ஹிட்ச்காக்கின் பதிவு, டார்செட் படையினர் அப்பகுதியில் ஒவ்வொரு வீடாக நுழைந்து மாப்பிளாகளை பிடித்ததாக சொல்கின்றது. தங்களுக்கு பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பு அளிக்கும் எனில் பெண்களும் குழந்தைகளுமாக சுமார் ஆயிரம் பேர் சரணடைய ஆயத்தமாக இருப்பதாக மலப்புரம் காஜி மனு எழுதியாக நவம்பர் 2 அன்று Evans மெட்ராஸ் அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். Tottenham page 257.
படிக்க :
அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 261 சதவிகிதம் உயர்வு !
பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !
மவுனத்தின் வரலாறும் வரலாற்றின் மவுனமும்
ஆப்பிரிக்கஅமெரிக்க எழுத்தாளர் Saidiya Hartman தனது முதல் நூலான Scenes of subjection னில் இப்படி குறிப்பிடுகிறார்: ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து கடத்தி செல்லப்பட்ட அடிமைகளின் அவல ஓலத்தை விடவும் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி சமாதி ஆன பல்லாயிரம் அடிமைகளின் மவுனம் மிக உரத்தது. இப்போது வரலாற்றில் இடம்பெற்றுள்ள வாக்குமூலங்களின், வரலாற்றின் அடிப்படையில் ஆன ஆவணங்களை விடவும் பதிவு செய்யப்பட வேண்டியவை எவை எனில் பெருங்கடலில் மூழ்கி உயிரை இழந்த பல்லாயிரம் அடிமைகளின் குரல்கள்தான்.
ஹார்ட்மானின் கூற்று சரி எனில், மேல்முறி அதிகாரத்தோடியில் உயிரை இழந்த 200 பேர்களின் வரலாற்றை எதன் ஆதாரத்தின் பேரில் எழுதுவது? 40 பேர்களின் சமாதி ஒன்றைத்தவிர? சான்றுகள் எதையும் விட்டு வைக்காமல் மூழ்கி சமாதி அடைந்தவர்கள் ஒரே ஒரு செய்தியை விட்டு செல்கின்றார்கள்: வரலாற்றின் சிக்கல் என்பது அதன் குரல்கள் அல்ல, வரலாற்றின் மவுனம்தான் சிக்கலானது. மலபார் கிளர்ச்சி என்பது நம் தேச வரலாற்றின் மவுனம் எனில் இந்த புதைக்குழிகள்தான் அந்த வரலாற்றின் மவுனத்துக்குள் உறைகின்ற மவுனம். எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சான்றுகளையும் தாண்டி சான்றுகளும் எச்சங்களும் இன்றி மறைந்து போனவர்களின் வரலாற்றை தோண்டி ஆய்வதன் முக்கியத்துவத்தையே மலபார் கிளர்ச்சியின் இந்த மையமான பகுதி நமக்கு உணர்த்துகின்றது.
(முற்றும்)
மு இக்பால் அகமது
வினவு குறிப்பு :
முகநூலில் தோழர் மு. இக்பால் அகமது எழுதிய 8 பாகத் தொடரை, நான்கு பாகங்களாக மாற்றி இங்கு தொடராக வெளியிடுகிறோம். நன்றி !!
disclaimer

உ.பி-யில் விவசாயிகள் படுகொலை : கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி :

உ.பி.யில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய இணை அமைச்சர் அஜய்மிஸ்ரா மகன் அஷிஷ் மிஸ்ராவை தூக்கிலிடு என்ற முழக்கத்தின் கீழ், திட்டமிட்டு விவசாயிகள் படுகொலையைத் தூண்டிவிடும் BJP – RSS-ஐ கண்டித்தும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, தருமபுரி BSNL அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

This slideshow requires JavaScript.

ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் அர்ஜுனன் தலைமை தாங்கினார். தோழர் முத்துக்குமார் – மக்கள் அதிகாரம் – மண்டல ஒருங்கிணைப்பாளர், தோழர் பிரதாபன் – த.மா.வி.ச – மாவட்டச் செயலாளர், தோழர் கோவிந்தராஜ் – CPI(ML) விடுதலை – மாவட்டச் செயலாளர், தோழர் ராஜீஸ்குமார் – DYFI – மாநில தலைவர், ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் பெரியண்ணன் – ம.ஜ.இ.மு – மாவட்டச் செயலாளர் நன்றியுரை ஆற்றினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்,
9790138614.

***

சென்னை :

உ.பி.யில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை மத்திய இணை அமைச்சர் அஜய்மிஸ்ரா மகன் அஷிஷ் மிஸ்ராவை தூக்கிலிடு என்ற முழக்கத்தின் கீழ் திட்டமிட்டு விவசாயிகள் படுகொலையைத் தூண்டிவிடும் BJP – RSS-ஐக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

This slideshow requires JavaScript.

ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் மேரி லில்லி தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அமிர்தா கண்டன உரையாற்றினார். தோழர் பாலகிருஷ்ணன் கணடன உரையாற்றினார். கடைசி சோறு அமைப்பைச் சேர்ந்த தோழர் பேரோளி, SUCI அமைப்பைச் சேர்ந்த தோழர் செபாஸ்டியன் உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

000

திருவாரூர் :

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

000

மதுரை :

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

தமிழக வரலாறு குறித்த இரு குறுகிய கண்ணோட்டங்கள் || நா. வானமாமலை

1
நா. வானமாமலை
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 07
முதல் பாகம்
« முந்தைய பாகம்
தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள்
கடந்த 5 ஆண்டுகளில் (1961-1965) தமிழக வரலாற்றுச் சான்றுகள் பல வெளியாகியுள்ளன. புதைபொருள் ஆராய்ச்சியாலும் கல்வெட்டு ஆராய்ச்சியாலும் இலக்கிய நூல்களிலுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த ஆராய்ச்சியாலும் பற்பல வரலாற்று நிகழ்ச்சிகள் ஆராய்ச்சியாளர்களது கவனத்திற்கு வந்துள்ளன.
வரலாறு நிகழ்ச்சிகளின் கோர்வையல்ல. வரலாற்று ஆசிரியர் நிகழ்ச்சிகளைத் தமது கண்ணோட்டத்திற்கு ஏற்ற முறையில் பகுத்து ஆராய்ந்து அவற்றிற்குப் பொருள் கொடுக்கிறார்கள். அதனாலேயே ஒரேவிதமான நிகழ்ச்சிகள் கண்ணோட்ட வேறுபாட்டால் இருவிதமான பொருள் பெறுவதுண்டு.
தமிழக வரலாற்றுத் துறையில் இருவகையான கண்ணோட்டங்களை நாம் காண்கிறோம். ஒவ்வொரு கண்ணோட்டமும் குறிப்பிட்ட அரசியல் – சமூக சூழ்நிலையில் எழுகின்றது. பின்னர் அக்கண்ணோட்டம் வரலாற்று நிகழ்ச்சிகளுக்குக் குறிப்பிட்ட முறையில் பொருள் அளிக்கின்றது. இவ்வாறு வரலாற்றின் பொருள், கண்ணோட்டத்தைப் பொறுத்ததாகி விடுகிறது.
நமது வரலாற்றை நாம் அறிந்து கொள்வதற்கு மேற்குறித்த இரு கண்ணோட்டங்கள் எவ்வகையில் வழி காட்டுகின்றன? எச்சூழ்நிலையில் அவை எழுந்தன? அவற்றின் மூலம் வரலாற்றுண்மையை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமா? என்னும் வினாக்களுக்கு விடை காண முயலுவோம்.
படிக்க :
புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் !
கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !
இந்திய வரலாறு முதன்முதலில் ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்டது. அவர்களில் வின்சென்ட் ஸ்மித் முக்கியமானவர். அவர் சரித்திரம் எழுத மேனாட்டு ஆசிரியர்களது கீழ்திசைத் தத்துவ ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டார்.
ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவுவதற்கு முன் இந்தியாவில் தோன்றியிருந்த நாகரிகத்தைப் பற்றி உயர்வான எண்ணம் அவருக்குக் கிலடயாது. ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவியது இந்நாட்டின் தவப்பயன் என்று எண்ணினார். ஆங்கில ஆட்சியின் மேன்மையை விளம்பரப்படுத்த விரும்பினார். இக்கண்ணோட்டம் வரலாற்றுண்மைகளை அவருடைய போக்கில் காண உதவிற்று. இவரைப் போன்றே பல ஆங்கில ஆசிரியர்கள் இந்நாட்டு உண்மைகளைக் கண்டார்கள். இது ஏகாதிபத்தியக் கண்ணோட்டமாகும். இவர்கள் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை விரும்பவில்லை. எனவே ஒவ்வொரு இன மக்களின் நாகரிகத்தையும் தனிப்பட்டதாகவும், ஒன்றிற்கொன்று முரண்பட்டதாகவும் வருணித்தார்கள்.
ஆரிய நாகரிகம், திராவிட நாகரிகம் இவற்றிடையே தவிர்க்க முடியாத முரண்பாடுகள் இருப்பது ஆகிய தன்மைகளை இவர்கள் கண்ணோட்டக் கண்ணாடி மூலம் பெரிதாக்கிக் கொண்டார்கள். இந்து முஸ்லீம் முரண்பாடுகளைப் பெரிதாக்கி வரலாற்றில் அதனையே நமது இடைக்கால வரலாற்றின் அச்சாணியாக்கிக் காட்டினார்கள். ஆங்கில ஆசிரியர்களில் சிலர் ஆரிய நாகரிகத்தை உயர்த்தினர். சிலர் இந்து மன்னர் ஆட்சியை உயர்த்திப் பேசினர். இன முரண்பாடுகளையும் மிக விரிவாக எழுதினர்.
இந்நூல்கள்தாம் நமது தமிழக வரலாற்று ஆசிரியர்களின் மூல நூல்கள். அவற்றை அவர்கள் பயன்படுத்திய விதத்தை நாம் ஆராய்தல் வேண்டும்.
தமிழக வரலாற்றை எழுதியவர்களில் இரு கண்ணோட்டங்கள் கொண்டவர்கள் உண்டு என்று முன்னர் குறிப்பிட்டேன். முதல் கண்ணோட்டம் எது என்று தற்போது காண்போம்.
நீலகண்ட சாஸ்திரி
தமிழக வரலாற்றில் சிற்சில பகுதிகளை முதன் முதலில் எழுதியவர்கள் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரியார், பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் முதலியோர். இவர்கள் யாவரும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் அறிவாளி’ வர்க்கம் என்று கருதப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இவ்வர்க்கம் ஆங்கில ஆட்சியில், அதன் உதவியோடு உயர்ந்து அதன் ஆதிக்கத்தில் பணிபுரிந்தது. ஆரிய உயர்வு பற்றி தமக்கே உரிய உணர்வு, ஆங்கில ஆசிரியர்களால் போற்றப்பட்டது கண்டு பெருமை கொண்டது. ஆரிய நாகரிகம், வேத நூல்கள், உபநிஷத தத்துவங்கள், வடமொழி நூல்களில் காணப்படும் அரசியல் கருத்துக்கள் இவற்றை ஆங்கிலேய மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் உணர்ந்து அவற்றைப் பெருமையோடு போற்றினர்.
ஆங்கில நாகரிகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எவ்வாறு கீழ் நிலையிலுள்ள இந்திய நாகரிகத்தை மாற்றியமைத்ததோ, அதுபோலவே இந்தியாவின் பழங்காலத்திலுள்ள பல்வேறு நாகரிகங்களையும் ஆரிய நாகரிகம், மாற்றியமைத்தது என எண்ணினர். இந்நாகரிகத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் பிராமணர்கள் என்று அவர்கள் நினைத்தனர். உதாரணமாக, எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காரின் சொற்பொழிவுகளுக்கு, அவர் எழுதிய முன்னுரையில் இக்கருத்தை அவரே கூறுகிறார்:
“தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் தனித்தன்மை வாய்ந்தது. வெளிநாட்டாருடைய மதிப்பீட்டில், வேதகால முறை, அடிப்படை மாறுதல் எதுவுமின்றி தென்னாட்டில் நிலவி வருகிறது. தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் பற்றிய விவாதம் தற்பொழுது முன்னணிக்கு வந்துள்ளது. இந்நிலையில் வரலாற்று ரீதியாக இப்பிரச்சினையை ஆராய்வது அவசியம். இந்திய சமூகத்தில் பிராமணருடைய ஸ்தானம் பற்றி ‘ஸ்த பாத பிராமணம்’ கூறுகிறது. தென்னாட்டிலும் அதே ஸ்தானம் அவர்களுக்கு இருந்தது (வட நாட்டிலிருந்து தென்னாட்டிற்குக் குடியேறிய காலத்திலிருந்து சமீப காலம் வரை இந்நிலை மாறவில்லை). அவர்களுக்கு இரண்டு பொறுப்புகள் சமூகத்தில் இருந்தன. ஒன்று சமூக நன்மைக்காக யாகம் முதலிய வழிபாடுகளைச் செய்வது; மற்றொன்று கல்வி கேள்விகளைப் பாதுகாத்து வளர்ப்பது. இவற்றைப் பாதுகாப்பது என்றால் இவற்றைச் சமூகத்தில் பரப்புவதும் அடங்கும்.
கிடைக்கும் ஆதாரங்களினின்றும், பிராமணர் தங்களது கடமையைத் திறமையாகச் செய்து, தங்கள் நடைமுறையினின்றும் பிற மக்களின் உயர்வுக்கு வழிகாட்ட உதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்குக் கீழ்நிலையிலிருந்த பிறர் அவர்களைப் பின்பற்றி அவர்களுடைய நிலைக்கு உயர முயன்றார்கள். எனவே இந்தியாவிலுள்ள பெருவாரியான மக்களின் சமூகம் உயர்வதற்கு பிராமணர்கள் முக்கிய காரணமாக இருந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற பெயர்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். பிராமண முறை சமுதாய அமைப்பே கல்வி, நாகரிகம் முதலியன தமிழ் நாட்டில் முன்னேறியதற்குக் காரணம்”
இந்த மேற்கோளிலிருந்து தமிழக வரலாற்றின் ஒரு கண்ணோட்டம் தெளிவாயிற்று. மேலும் அது எழுந்த சமூகச் சூழ்நிலையும் ஒருவாறு விளங்கப்பட்டது.
இனி இரண்டாவது கண்ணோட்டத்தை ஆராய்வோம்.
தமிழ்நாட்டில் பிராமணருக்குச் சமமாகத் தங்களைக் கருதிக் கொண்ட சைவர்களான முதலியார், பிள்ளை, சைவச் செட்டியார்கள், நகரத்தார், கவுண்டர் முதலிய நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சார்ந்தவரும் சமூக நிலையில் பிராமணருடைய ஆதிக்கம், தங்களுக்கு வேண்டுமென்று எண்ணினர். ஆங்கில ஆதிக்கத்தில் அறிவாளி வர்க்க’மாகத் தாங்கள் உயர வேண்டுமென எண்ணினர். பிராமணர்களுடைய ஆரிய நாகரிகக் கொள்கை இவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்தது. இவர்களும் ஒரு தத்துவத்தை உருவாக்கிக் கொண்டனர். அதற்கு அடிப்படை ஆரிய, திராவிட நாகரிகங்களிலுள்ள முரண்பாடுகளைப் பற்றி, ஆங்கில ஆசிரியர்களுடைய கருத்துக்கள் தாம் தமிழிலக்கியத்தில் இவர்கள் தென்னாட்டுப் பெருமையைக் கண்டார்கள். தமிழின் சிறப்பையும், தமிழ் நாட்டின் தொன்மையையும் நிறுவ இவர்கள் வரலாறு காணத் துணிந்தனர். இச்சமயம் ‘மொகன்சதாரோ, ஹரப்பா’ அகழ்வு ஆராய்ச்சிகள் வெளிவந்தன. அவற்றைப் பற்றி ஹீராஸ் பாதிரியார் என்ற மேனாட்டு ஆராய்ச்சியாளரின் கருத்துக்களை விமர்சனம் எதுவுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் ஆரிய உயர்வைப் பற்றி எழுதினால் இவர்கள் ஆரிய இழிவையும் திராவிட உயர்வையும் பற்றி எழுதினர்.
வரலாற்று நிகழ்ச்சிகளை திராவிட உயர்வு என்ற கண்ணோட்டத்தில் இவர்கள் கண்டனர். வேத கால முறை தமிழ் நாட்டில் மாறாமல் இருக்கிறதென்று, முதல் கண்ணோட்டமுடையவர்கள் கூறினால் இவர்கள் கற்காலம் முதல், தமிழ் நாடும், திராவிட நாடும் எவ்விதத்திலும் மாறவில்லை என்று கூறினர். தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தேட, தென்னாட்டு வரலாறே, திராவிட ஆரிய முரண்பாடுதான் என்று கூறினர். இராமாயணக் கதையை ஆரிய திராவிடப் போராகச் சித்தரித்தனர். சுக்ரீவனையும், அனுமானையும் ஆரிய அடிவருடிக ளாக்கினர். வாலியை ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்க திராவிட வீரனாக்கினர்.
ஆரியர் ஆதிக்கத்தை எதிர்க்கத் திராவிட நாடு என்றும் போராடியுள்ளது; இது விடுதலை காக்கும் உணர்வு என்று அந்த மூச்சில் வடநாட்டை அடக்கியாண்டான் கரிகாலன் என்றும், கனக விசயர் தலையில் கல்லேற்றிக் கொணர்ந்தான் செங்குட்டுவன் என்றும் ஆதிக்கப் பெருமை பேசுவர். ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கொண்டு, பெரும் போர் ஒன்று நடந்ததாக ஆதாரமின்றியே கயிறு திரிப்பர்.
இவ்விரண்டு போக்குடையோர் ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் தனித் தனியே விரித்து வைத்த இரண்டு வலைகளில் விழுந்து அதனையே வரலாற்று ஆதாரமாகக் கற்பனை செய்து கொண்டார்கள்.
தமிழ்நாட்டு வரலாற்றை இவ்விரு கண்ணோட்டமுடையோராலும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், இவையிரண்டுமே விஞ்ஞானக் கண்ணோட்டங்களல்ல.
தமிழ்நாட்டு வரலாற்றை உண்மையாக்கிப் புரிந்து கொள்வதற்குத் தமிழ் நாட்டு வளர்ச்சியையும் பிற இனங்களோடு தமிழர் சமுதாயம் கொண்ட தொடர்புகளையும் ஆராய வேண்டும்.
தமிழர் சமுதாய வளர்ச்சியை வரலாற்றுத் தொடக்ககால முதல் ஆராய்வதற்கு, சிற்சில பிராமிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும் ஆதாரமாக அமையக் கூடும். புத்த மத வரலாற்று நூல்களும், சைவ வைணவ சமய நூல்களும் ஓரளவு உதவி புரியக் கூடும். பல்லவர் காலத்திற்குப்பின் ஏராளமான கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அவையாவும் பெயர்த்து எழுதப்பட்டால் வரலாற்றின் அடிப்படை செம்மையாக அமையும். காசுகள், பழம் பொருள்கள் முதலியவை பற்றிய ஆராய்ச்சி இனிதான் தொடங்க வேண்டும். அவை மேற்கொள்ளப்பட்டால் சரித்திரத்தைப் பற்றிய புதிய உண்மைகள் வெளியாகும். தமிழ் நாட்டுப் பண்டைய நகரங்கள் இருந்து மறைந்து போன இடங்கள் அகழ்ந்து ஆராயப்பட்டால், புதிய புதிய உண்மைகள் வெளியாகும்.
இவ்வாறு கிடைக்கும் ஆதாரங்களின் சமுதாய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு வரலாறு எழுதப்பட வேண்டும். மலையிலும் கடற்கரையிலும் சிறு குடியாக வாழ்ந்த தமிழன், தனது உழைப்பினால் உற்பத்திச் சக்திகளை வளர்த்து முன்னேறி, முல்லை நிலத்திலும், மருதத்திலும் பெருவாழ்வடைந்து பேரரசுகளை நிறுவி, பல்வேறு நாட்டு மக்களோடு நேசப்பான்மையோடும், போர் புரிந்தும் எவ்வாறு வாழ்ந்தான் என்பதை சமூக வளர்ச்சி அடிப்படையில் அன்றி எழுத முடியாது. இது போலவே பிற இன மக்களும், படிப்படியாக வளர்ச்சி பெற்றனர். இந்தியாவில் வளர்ச்சி பெற்ற பல இனங்களைச் சேர்ந்த மக்கள் வாணிபத்தின் மூலம், அறிவுத் தேட்டத்தின் மூலம் நிலப்பிரபுத்துவப் போர் வெறியர் தூண்டுதலாலும், சிற்சில வேளைகள் நேச உறவோடும், சிற்சில வேளைகள் போரின் மூலமாகவும் தொடர்பு பெற்றனர்.
இவற்றால் சமூக வளர்ச்சிகள் சிக்கலடைந்தன. பண்பாட்டுக் கலப்புகள் ஏற்பட்டன. சமுதாய மாறுதலுக்கேற்ற வகையில் பண்பாட்டு மாறுதல்களும் நிகழ்ந்துள்ளன.
படிக்க :
நூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா
நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்
ஒரு இன மக்களின் பண்பாட்டில் வளர்ச்சியுறும் அம்சங்களும் உண்டு; தேய்வுறும் அம்சங்களும் உண்டு. பண்பாட்டுக் கலப்பு நிகழும் போது சூழ்நிலை, இரு பண்பாடுகளின் பக்குவ நிலை பொறுத்து பண்பாட்டு அம்சங்கள் சில இணையும், சில அம்சங்கள் இணையா.
இதை மனத்துட் கொண்டு தமிழர் சமுதாய வளர்ச்சிப் போக்கை உண்மையாகச் சித்தரிக்கும் வரலாறு எழுதப்பட வேண்டும். இனக்
கண்ணோட்டமோ சாதிக் கண்ணோட்டமோ உண்மையைக் காண உதவாது.
வரலாறு ஒரு சமூக விஞ்ஞானம். அது பல விஞ்ஞானங்களின் துணையோடு எழுதப்பட வேண்டும். மானிட இயல், அகழ்வு ஆராய்ச்சி, காசு ஆராய்ச்சி, சமூக இயல், அரசியல், பொருளாதாரம் ஆகிய விஞ்ஞானங்களின் துணையோடு வரலாறு எழுதப்பட வேண்டும். இலக்கியமும் கலைகளும் சமூக வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் சரித்திரம் எழுதத் துணையாகும்.
இத்தகைய கண்ணோட்டத்தை உருவாக்குவது உண்மை வரலாறு காண விரும்புவோர் கடமையாகும்.
(தொடரும்)
« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !

2
காதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் துக்கிலிடப்பட்டு 90 ஆண்டுகாலம் நிறைவடைந்துவிட்டது. சோவியத் யூனியனின் தலைவர் தோழர் ஜோசப் ஸ்டாலின் பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வருகைதர அழைப்பு விடுத்த வரலாற்றில் பலருக்கும் தெரியாத ஒன்று !
பகத்சிங் மற்றும் ஸ்டாலினை வரலாற்றில் இணைக்கும் நபர் ஷாக்கத் உஸ்மானி. தாஷ்கண்டில் நிறுவப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர், எம்.என்.ராய் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் இந்திய புரட்சியாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக அனுப்பப்பட்டவர்.
இந்தியாவில் பகத்சிங் மற்றும் அவர்களது தோழர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு உஸ்மானிக்கு கிடைத்தது. அவர் 1928-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது மாநாட்டிற்கு புறப்படவிருந்தபோது, பகத்சிங் மற்றும் அவரது நெருங்கிய தோழர் பிஜோய் குமார் சின்ஹா ஆகிய இருவரையும், சோவியத் யூனியனுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
படிக்க :
♦ இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?
♦ மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்
ஆனால், சிங்ஹாவும் பகத்சிங்கும் விவாதித்து, தமது செயல்திட்டங்களை நிறைவேற்றிவிட்டு மாஸ்கோவிற்கு செல்வதாக முடிவெடுத்து உஸ்மானியின் அழைப்பிற்கு மறுப்பு தெரிவித்தனர்.
தமது திட்டமிட்டபடி 1928-ஆம் ஆண்டு சோவியத் யூனியனுக்கு உஸ்மானி செல்கிறார். அங்கு காலனி ஆதிக்கம் குறித்த பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கும்போது, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தோல்விகளைப் பற்றியும், அதற்கு நேர் எதிராக செயல்படும் புரட்சிகர இயக்கமான HRA-வின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையிலும் விவாதம் இருந்தது.
மேலும், HRA-வை HSRA-வாக பகத்சிங் மாற்றியது பற்றியும், சோசலிசத்தின் லட்சியத்திற்காக, இந்திய புரட்சியாளர்களும் பகத்சிங்-கும் வேலை செய்வது பற்றியும் உஸ்மானியா மூலம் அறிந்து கொள்ளும் ஸ்டாலினுக்கு பகத்சிங் மீதான ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது.
இந்த நேரத்தில், பகத்சிங் மற்றும் அவரது தோழர்களும் 1928, டிசம்பரில் ஜான் சாண்டர்ஸை சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவாகினர். இதன்பிறகு தலைமறைவாக இருக்கும் பகத்சிங்கை, உடனே சோவியத் யூனியனுக்கு அனுப்ப வேண்டும் என HSRA-வின் தலைவர்கள் கருதினர்.
வேறுசில புரட்சியாளர்களைக் கொண்டு பாராளுமன்றத்தில் குண்டு வீசும் செயல்திட்டத்தை நிறைவேற்றலாம் என்றும் எண்ணினர். ஆனால், சுக்தேவ் மற்றும் பகத்சிங்-ன் நீண்ட விவாதத்திற்கு பிறகு பகத்சிங் நீதிமன்றத்திற்கு சென்றால்தான் நம் கட்சியின் செயல்பாடுகளை தெளிவாக முன்வைக்க முடியும் என்று கருதி பகத்சிங், பட்டுகேஸ்வர் தத் ஆகிய இருவரும் பாராளுமன்றத்தில் குண்டு வீச HSRA தோழர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
மீரட் சதி வழக்கு துவங்கிய பிறகு, திட்டமிட்டபடி, பகத்சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் HSRA-வின் சார்பாக தொழிலாளர் விரோத மற்றும் தொழில் தகராறு மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு குண்டுகளை பாராளுமன்றத்தில் ஆள் இல்லா இடங்களில் வீசி கைதாகினர்.
உஸ்மானி மாஸ்கோவிலிருந்து திரும்பியவுடன், 1929-ம் ஆண்டும் மார்ச் மாத துவக்கத்தில் மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால், சோவியத் யூனியனில் இருந்து உஸ்மானி எடுத்து வந்த செய்தியை HSRA-வின் உறுப்பினர்கள் அறிந்துக் கொள்ள முடியவில்லை.
இதைப்பற்றி, பின்னாட்களில் உஸ்மானி புதுதில்லியிலிருந்து வெளியான ‘நை ஜமீன்’ இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று எழுதியிருக்கிறார். உஸ்மானியின் கூற்றுப்படி, ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.
லாகூர் சதி வழக்கில் சின்ஹா கைது செய்யப்பட்ட பிறகு, HSRA தலைவர்கள் சந்திரசேகர் ஆசாத்தை சிந்தாந்த மற்றும் இராணுவப் பயிற்சிக்காக சோவியத் யூனியனுக்கு அனுப்ப முடிவு செய்தனர். ஆசாத் செல்ல முடியாததால் சுரேந்திர பாண்டே மற்றும் யாஷ்பால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும், பிப்ரவரி 1931-ல் ஆசாத்தின் திடீர் மரணம் அந்த திட்டத்தை நிறுத்தும்படி செய்தது. அதன்பின் சில மாதங்களில் யாஷ்பால், பாண்டே இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே, சோவியத் யூனியனுக்கு HSRA-வின் தோழர்கள் செல்லும் திட்டம் நிறைவேறாமலேயே போனது.
இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகுதான் பிஜோய் குமார் சின்ஹா சோவியத் யூனியனுக்கு ஒரு பயணமாக செல்ல முடிந்தது.
ஒருவேளை சோவியத் யூனியனுக்கு பகத்சிங் முன் கூட்டியே சென்றிருந்தால், இந்திய புரட்சியின் திசை வேறு கோணத்திற்கு சென்றிருக்கலாம்.

சந்துரு
செய்தி ஆதாரம் : நியூஸ்கிளிக்

மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?

0
தோழர் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நிலப் பிரபுக்களையும் பிற்போக்கு முதலாளிகளையும் ஏகாதிபத்திய தாசர்களையும் வீழ்த்தி மக்கள் சீனக் குடியரசை 72 ஆண்டுகளுக்கு முன்னர் 01-10-1949-ல் நிறுவியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1921, ஜூலை 1-அன்று துவங்கப்பட்டு 28 ஆண்டுகளில் ஒரு மகத்தான புரட்சியை சாதித்தது. புரட்சியை நோக்கிய பயணத்தில் பெரும் வெற்றிகள், பேரிழப்புகள் என அனைத்து சூழல்களையும் கையாண்டுதான், வெற்றிகரமாக புரட்சியை சாதித்தது.
படிக்க :
புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ
குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !
டாக்டர் சன் யாட் சென் தலைமையிலான கோமிண்டாங் கட்சியுடன் இணைந்து பிற்போக்கு நிலப்பிரபுத்துவக் கும்பல் மற்றும் ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற தரகுமுதலாளித்துவ கும்பல் ஆகியோருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய முன்னணியைக் கட்டியது.
சன் யாட் சென்னின் மறைவிற்குப் பிறகு கோமிண்டாங் கட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்த சியாங்கேஷேக், கம்யூனிஸ்ட்களுடனான ஐக்கிய முன்னணியை சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டான்.
இக்காலகட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் கமிட்டியில் இருந்த சென்டுஷியுவினால் தலைமை தாங்கப்பட்ட வலது சந்தர்ப்பவாதக் கும்பல், ஐக்கிய முன்னணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பை முதலாளித்துவ கோமிண்டாங் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன் வைத்தது. சீனாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை கோமிண்டாங் தான் தலைமை தாங்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு இலாயக்கற்றது என்றும் முன் வைத்தது இந்தக்கும்பல்.
அதாவது முதலாளிகளின் தலைமையில், அவர்களுக்குக் கீழ் ஒரு வாலாக கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட்டு நிலப் பிரபுத்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறியது.
கட்சிக்குள் இருந்த இடது சந்தர்ப்பவாத சாங்குவா டாவோ பிரிவினர் வெறுமனே தொழிலாளி வர்க்க இயக்கம் மட்டும் தனித்துச் செயல்பட வேண்டும் என முன் வைத்தனர்.
இந்த இரு தரப்புமே, யார் தலைமையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடக்கவேண்டும் என்பதில் எதிர் எதிர் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், சாராம்சத்தில் சீனாவின் நிலப்பிரபுத்துவத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் நேரடியாக சுரண்டப்படும் வர்க்கமும், பாட்டாளி வர்க்கத்தின் நேச சக்தியுமான விவசாய வர்க்கத்தினரை கண்டுகொள்ளாமல் விடுவதில் ஒரே நிலைப்பாட்டை எடுத்தன.
அப்போதுதான் தோழர் மாவோ, தொழிலாளி வர்க்கத் தலைமையில், விவசாயிகளை பிரதானமான நட்பு சக்தியாகக் கொண்டு அவர்களை அணிதிரட்டி சீனாவில் சிவப்புப் பிரதேசங்களை உருவாக்கி அதனை விரிவுபடுத்தி சீனப் புரட்சியை சாதிக்க முடியும் என்பதை முன் வைத்தார்.
மாவோ முன் வைத்த அந்தப் பாதை வெற்றியை சாதித்தது. சீனப் புரட்சி அக்டோபர் 1, 1949-இல் நிறைவுற்றது. ஆனால் 1926-ல் மாவோ இந்தப் பாதையை முன் வைத்த போது இந்த வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் இருந்திருக்க முடியாது. அன்று பிறரது கருத்தைப் போல் இதுவும் ஒரு கருத்து, அவ்வளவுதான்.
எனில், மாவோவினால் முன் வைக்கப்பட்ட வழி மட்டும் எப்படி வெற்றிபெற்றது  ? ஏனெனில், அவர் தனது மூளையில் இருந்து அகநிலையாக இந்த வழியை முன் வைக்கவில்லை. சமூக எதார்த்தத்தை பரிசீலித்து மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துதான் இந்த வழிமுறையைக் கண்டடைந்தார்.
1926-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், “சீன சமுதாயத்தில் வர்க்கங்களைப் பற்றிய ஆய்வு” (Analysis of the Classes in Chinese society) என்ற பெயரில் சீன சமூதாயத்தின் வர்க்க நிலைமைகளைப் பற்றிய பகுப்பாய்வை முன் வைத்தார். அதிலிருந்து சீனாவில் இருக்கும் வர்க்க முரண்பாடுகளை ஆய்வு செய்து, விவசாயிகளை திரட்டி, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான “புதிய ஜனநாயகப் புரட்சி” நடத்தப்பட வேண்டும் என்பதை முன் வைத்தார்.
படிக்க :
மூவர் கும்பலின் வலது விலகலை எதிர்ப்போம் || தோழர் ஸ்டாலின்
கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள் || தோழர் ஸ்டாலின்
கட்சியில் இந்த வழிமுறை ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகும் கூட பலரது சந்தேகங்கள், எதிர்க்கருத்துக்களுக்கு பதில் சொல்லி அவர்களுக்கு தமது ஆய்வை உணரச் செய்யும் வகையிலான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி, கட்சியில் இருப்பவர்களின் மனப்பூர்வமான அறிவுப்பூர்வமான பங்களிப்பை சாத்தியப்படுத்தினார்.
அத்தகைய போராட்டங்களுக்கு, 1930-ம் ஆண்டில் மாவோ எழுதிய “சிறு பொறி பெருங்காட்டுத் தீயை மூட்டும்” எனும் ஆவணமே சான்று. இத்தகைய அரசியல்ரீதியிலான ஆய்வுப் பார்வையும் அமைப்புரீதியிலான ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் தான் சீனப் புரட்சியைச் சாதித்தது.
இன்று சீனா முதலாளித்துவ பின்னடைவை சந்தித்து பெயரளவிலான கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாலும், 1949-ல் நடைபெற்ற சீனப் புரட்சி அடித்தளமிட்டு வளர்த்த சோசலிச கட்டமைப்புதான் இன்று அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்கு பொருளாதாரம், அறிவியல், இராணுவம் என அனைத்திலும் முன்னேறியிருப்பதற்கான அடிப்படைக் காரணமாகும்.

சரண்

மாப்பிளா கிளர்ச்சி : பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற இராணுவம் !

பாகம் 1 : மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
பாகம் 2 : மாப்பிளா கிளர்ச்சி : 1921 அக்டோபரில் நிகழ்த்தப்பட்ட இராணுவ வெறியாட்டம்
பாகம் 3 : மாப்பிளா கிளர்ச்சி : பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற இராணுவம் !
லபார் புரட்சியின் போக்கில் பெண்கள், குழந்தைகள், முதியோர்க்கு பிரிட்டிஷ் இராணுவம் இழைத்த கொடுமைகளில் பலவும் பொதுவெளியில் ஆவணப்படுத்தப்படாமலேயே போயின. மேல்முறி – அதிகாரத்தோடி நிகழ்வில் பெண்கள், குழந்தைகள், முதியோர் சந்தித்த கொடுமைகள், போர்க்காலங்களின் போது பின்பற்ற வேண்டிய பொதுவான கட்டுப்பாடுகளை மீறியவை ஆகும். தங்கள் தந்தையரை பிரிட்டிஷ் இராணுவத்தினர் இழுத்துச் சென்றபோது தடுக்க முனைந்த இரண்டு மகள்களின் கல்லறைகளும் அங்கே உள்ளன.
அதிகாரத்தோடியில் இருந்த கீடக்கடன் குடும்பத்தை சேர்ந்த 11 வயதுக் குழந்தை அவள். வீட்டுக்குள் புகுந்து தன் தந்தையை பிரிட்டிஷ் இராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது இவள் அவரை கட்டிப்பிடித்து இழுத்திருக்கின்றாள், அப்போது இரக்கமின்றி துப்பாக்கியின் பின் கட்டையால் அவளை அடித்திருக்கின்றார்கள். அதையும் மீறி அவள் தன் தந்தையை இறுக தழுவி இருந்ததால், பிரிக்க முடியாத நிலையில் இருவரையும் ராணுவம் சுட்டுக்கொன்றது. தன் அம்மாவழிப் பாட்டியின் வீட்டுக்கு வந்தபோதுதான் இருவருக்கும் இந்த கொடுநிலை ஏற்பட்டுள்ளது.
கோணோம்பாற சீரங்கந்தோடியைச் சேர்ந்த அரீப்புரம் பாரக்கல் குஞ்சீன் ஹாஜியின் மகள் கடியாமு. திருமணம் ஆன அவள், நோய்வாய்ப்பட்டு இருந்த வயதான தன் தந்தையை கவனித்துக்கொள்ள வந்திருந்தாள் கடியாமு. பத்தாயம் எனப்படும் பெரிய மரப்பெட்டியின் மீது படுத்துக்கொண்டு இருந்த தந்தையை, பிரிட்டிஷ் இராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது தடுக்க முனைந்த அவளை துப்பாக்கியின் பின்கட்டையால் தாக்கியுள்ளனர். வலுக்கட்டாயமாக அவரை இழுத்து சென்று வீட்டின் கிழக்கு முற்றத்தில் தரையைப் பார்த்ததுபோல படுக்கச்சொல்லி ஆனையிட்டுள்ளனர். தன் தந்தையை சுட்டுவிடுவார்கள் என்று அறிந்த கடியாமு, அவர் மீது கட்டிப்பிடித்து படுத்துள்ளாள். இராணுவம் இருவரையுமே சுட்டுக்கொன்றது.
படிக்க :
நாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால் அகமது
கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
இந்த இரு வீராங்கனைகள் பற்றி நம் வரலாற்றுப் பக்கங்களில் எதுவும் சொல்லபடவில்லை. மாப்பிளா வரலாறு குறித்த, மாப்பிளா சமூக பெண்கள் குறித்த வரலாறு திட்டமிடப்பட்ட வகையில் மறைக்கப்படுகின்றது என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணம்.
மேல்முறி – அதிகாரத்தோடி படுகொலைகள் குறித்து பொதுவான வரலாறு மவுனமாக இருக்கின்றது, ஆனால் மலபார் முஸ்லிம் சமூகத்தின் கிசாப்பாட்டுகளில் இந்த நிகழ்வை அந்த மக்கள் பாட்டாக பாடி பதிவு செய்துள்ளார்கள். யோக்யன் ஹம்ஸா மாஸ்டர் என்ற கிசாப்பாட்டு நிபுணர், விடுதலைப் போராட்ட வீரர் முகம்மத் அப்துர் ரஹ்மானைப் போற்றி எழுதிய அப்துர் ரஹ்மான் கிசாப்பாட்டு என்ற பாடலில் இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார்.
இப்பாடலின் பொருள் இது : மேல்முறியில் கிளர்ச்சியாளர்கள் கூடியுள்ளதை அறிந்த பிரிட்டிஷ் இராணுவம், பீரங்கிகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்து, ஓசையடக்கப்பட்ட துப்பாக்கிகளால் சிரித்துக் கொண்டே மக்களை சுட்டு வீழ்த்தினார்கள், ஒரு விசாரணையும் இன்றி.

000

சமீல் இலக்கில் அவர்களின் பதிவின் தமிழாக்கமே இது:
ஒன்பது சவக்குழிகள்:
  1. அதிகாரித்தோடி வட்டப்பரம்பில் இருக்கும் அரீப்புரம் பாரக்கல் கோயாகுட்டி ஹாஜியின் வீட்டு முற்றத்தில் தோண்டப்பட்ட குழியில் 11 பேர் புதைக்கப்பட்டனர். அவர்களின் விவரம் : அவரது தாத்தா அரீப்புரம் பாரக்கல் அகமது குட்டி ஹாஜி, அவர் சகோதரர் மொய்தீன் குட்டி ஹாஜி, குட்டிரயீன், மரைக்காயர், கொங்காயன் அலாவி, கீடக்காடன் குடும்பத்தின் ஒரு ஆணும் அவர் மகளும். அவள் 11 வயதே ஆனவள்.

    அகமது குட்டி ஹாஜியின் மகள் ஆயிஷா – அப்போது 4 வயது சிறுமி. பிற்காலத்தில் அவர் தன் மகன் யோக்யன் ஹம்ஸா மாஸ்டருக்கு இந்த சம்பவங்களை பற்றி சொல்லியிருக்கிறார், மாஸ்டர் கிசாப்பாட்டு எழுதுபவர், பாடுபவர். மாஸ்டர் 2017-ல் தன் 102-வது வயதில் காலமானார். வீட்டில் இருந்த அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பின் வீட்டுக்கு தீ வைத்தார்கள். பெண்களும் குழந்தைகளும் அருகில் இருந்த வாழைத்தோப்புக்குள் சென்றுவிட, ஆண்கள் அனைவரையும் ஓசையடைக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள்.

    அகமது குட்டி ஹாஜியின் நண்பரும் அருகில் வசித்துவருபவரும் ஆன கொங்கையன் அலாவியும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என்று அலாவியின் பேரன் சொல்கின்றார். இவர் தந்தையின் பெயரும் அலாவிதான். நான்கு தலைமுறைகளிலும் ஒருவருக்கு அலாவி என்று பெயர் சூட்டியுள்ளனர். ஏமன் நாட்டில் இருந்து மாம்புரத்தில் தங்கி அங்கேயே வசித்துவந்த மாம்புரம் சையத் அலாவி தங்ஞள் என்ற இஸ்லாமிய அறிஞரின் நினைவாகவே இப்படி பெயர் சூட்டப்படுகின்றது. ஆன்மிகம், மதம், சமூகம் தொடர்பான விசயங்களைப் பற்றி அவருடன் உரையாடுவதற்காக மக்கள் அவரை சந்திப்பது வழக்கம்.

    19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியததுக்கு எதிரான நிலை எடுத்திருந்தார் என்பதால் அவர் புகழ் பெற்றிருந்தார். மாம்புரத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூண், கேரளாவின் புகழ்பெற்ற புண்ணிய யாத்திரை தலங்களில் ஒன்று. வீட்டின் முற்றத்தில் அமைந்துள்ள செவ்வோடு குவாரியில் பாய்கள் விரிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் அவற்றில் கிடத்தப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டனர்.

  1. கபூர் குடும்பத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதிகாரித்தோடியில் அமைந்துள்ள அரசு மாப்பிளா உயர் தொடக்கப்பள்ளியின் பின்னால் இருந்த நிலத்தில் குழி தோண்டப்பட்டு அதில் புதைக்கப்பட்டனர். கபூர் முண்டசேரி யூசுப், அவர் மகன் போக்கர், கபூர் மூசம், ஆயமுட்டி, மம்முது ஆகிய அந்த ஐவரின் வாரிசுகள் ஒருவர் கூட இப்போது அந்த ஊரில் இல்லை.
  2. நானத் குருவயில் ஹம்சாவின் வீட்டுக்கு அருகில் குழிதோண்டப்பட்டு அறுவர் புதைக்கப்பட்டனர். ஹம்சாவின் அப்பாவழி தாத்தாவான நானத் குருவயில் மொய்து, அவர் சகோதரர் குஞ்ஞி மரைக்காயர், மாடம்பி குஞ்ஞி முகம்மது ஆகியோர் உட்பட அறுவர்.

    நானத் குருவயில் மொய்து தன் வீட்டுக்குள் உட்கார்ந்து குர் ஆன் வாசித்துக்கொண்டு இருந்தார். தாங்கள் ஒரு சம்பவத்திலும் ஈடுபட்டதில்லை என்பதால் கவலைப்பட அவசியமில்லை என்று நம்பிக்கொண்டு இருந்தார். அவரை இராணுவத்தினர் வந்து பிடித்தபோது 14 வயது மகன் முகம்மது தன் தந்தையின் கையை இறுகப்பிடித்து இழுத்துள்ளான், ஆனால் இராணுவத்தினர் அவனை கீழே தள்ளியுள்ளனர். இத்தகவலை முகம்மதுவின் மூத்த மகன் ஆன மொய்து (82) இப்போது கூறுகின்றார். அங்கிருந்து செல்லும்முன் வீட்டின் கூரையில் இராணுவத்தினர் தீ வைத்துள்ளார்கள். ஹம்சாவின் இப்போதுள்ள வீடு அந்த இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது.

    அருகில் கரட்டுபரம்பனில் அப்போது குடியிருந்த தீயர் சமூக மக்கள்தான் அப்போது உதவிக்கு ஓடி வந்தவர்களில் முதன்மை ஆனவர்கள் என்று மொய்து கூறுகின்றார். தீயர் சமூக மக்கள் அப்போது அங்கே நடந்த அனைத்துக் கொடுமைகளையும் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார்கள், அவர்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. இராணுவம் அங்கிருந்து நகன்ற பின் உடனடியாக ஓடி வந்து வீட்டின் தீயை அணைத்துள்ளார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆன ஈழவர், தீயர் ஆகியோரும் முஸ்லிம் மக்களும் அப்போது யாருக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். (தீயர், ஈழவ மக்கள் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களாக அறியப்படுகின்றனர்.)

  3. அதிகாரித்தோடி ஆக்கப்பரம்பில் கண்ணன்தோடு என்ற ஊரில் முள்ளப்பள்ளி உம்மர் என்பவர் வீட்டின் பின்புறம் தோண்டப்பட்ட குழியில் 5 பேர் அடக்கம் செய்யப்பட்டனர். அதிமண்ணில் மம்மூட்டி, வல்லிக்கடன் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் உட்பட ஐவர். மம்மூட்டியின் மகன் குஞ்ஞி முகம்மது பெண் உடை தரித்து தப்பியதாக அவர் மகன் மொய்தீன் (72) கூறுகின்றார். வீட்டில் இருந்த அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் செவ்வோடு குவாரிகளில் புதைக்கப்பட்டன.
தொடரும்…

மு இக்பால் அகமது
வினவு குறிப்பு :
முகநூலில் தோழர் மு. இக்பால் அகமது எழுதிய 8 பாகத் தொடரை, நான்கு பாகங்களாக மாற்றி இங்கு தொடராக வெளியிடுகிறோம். நன்றி !!
disclaimer