ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
உங்கள் தேசபக்தி நாடகத்தில்
ஏதேனும் புதிய சம்பவங்களையோ
வசனங்களையோ சேருங்கள்
நீங்கள் ஒவ்வொரு முறையும்
அதே நாடகத்தின்
அதே வசனத்தை பேசத் தொடங்கும்போது
குழந்தைகள் அடுத்த வசனத்தைச் சொல்லி
சிரிக்கிறார்கள்
ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
நீங்கள் ஜெயிக்க விரும்பும்போதெல்லாம்
தேச பக்தி
ஒரு மந்திரக்கோல் போலாகிவிடுகிறது
எல்லையில் நம் வீரர்கள் இறக்கிறார்கள்
உங்கள் விபரீத முடிவுகள் அம்பலமாகும்போது
தேச விரோதிகள்
நாட்டை ஊடுருவுகிறார்கள்
பயங்கர வாதிகள்
கருப்புப் பணத்தை
பயன்படுத்தாதிருக்கவே
எல்லாப் பணத்தையும் ஒழிக்கிறீர்கள்
ஒரு மாற்றமும் இல்லாமல்
இந்த நாடகம் அரங்கேறுகிறது
தலை நகரம் விவசாயிகளால்
முற்றுகையிடப்பட்டிருக்கிறது
உங்கள் வழக்கமான தந்திரங்களால்
அதை உடைக்க முடியவில்லை
அவர்கள் காந்தியின் பிள்ளைகள்
திடீரென உங்கள் அடியாள் ஒருவன்
உள்ளே ஊடுருவுகிறான்
குழப்பங்களை உருவாக்குகிறான்
உடனே அன்னிய சதிகாரர்கள்
ஊடுருவிவிட்டார்கள் என்று கதறுகிறீர்கள்
அது ஒரு போலிக்கதறல் என
எல்லோருக்கும் தெரியும்
எனக்கு மிகவும் அலுத்துவிட்டது
‘இதைப்பற்றி நாம் பேசினால் என்ன?’
என ஏதோ ஒரு தேசத்துப் பாடகி கேட்கிறாள்
உடனே இங்கிருந்து
ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரன்
தேசத்தின் இறையான்மைக்கு
ஆபத்து எனக் கதறுகிறான்
அது ஒரு போலிக் கதறல் என
எல்லோருக்கும் தெரியும்
போராட்டம் இப்போது
டெல்லி தெருக்களில் அல்ல
ட்விட்டரில் நடக்கிறது
இலட்சணக்கான விவசாயிகள்
குளிரில் வெட்ட வெளியில் கிடக்கிறார்கள்
சிலர் சாகிறார்கள்
அவர்களுக்கு முன்
முள்வேலிகளை அமைக்கிறீர்கள்
அவர்களுக்கு குடிக்க தண்ணீர் தர மறுக்கிறீர்கள்
அதனால் எல்லாம் இந்தியாவின் இறையாண்மைக்கு
எந்தப் பாதிப்பும் இல்லை
நீங்கள் சாவிகொடுத்த பொம்மைகள்
உங்கள் வாக்கியங்களை கக்குகின்றன
நீங்கள் வெட்கப்பட வேண்டும்;
விவசாயிகளுக்கு எதிராக
நீங்கள் ஒரு நடிகனை பயன்படுத்துவதற்கு
ஒரு நடிகையை பயன்படுத்துவதற்கு
ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனை பயன்படுத்துவதற்கு
உண்மையில் நீங்கள்
இந்த தேசத்தையே
ஒரு நாடக மேடையாக்கி விட்டீர்கள்
ஒரு விளையாட்டு மைதானம் ஆக்கிவிட்டீர்கள்
ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
ஒரு அன்னியர் உங்களை விமர்சிப்பதால்
உங்களுக்கு கோபம்வருவதை
நான் நம்பவில்லை
விமானங்கள் ஓடிக்கொண்டிருந்தவரை
நீங்கள் அன்னியர்களுடன்தான்
உரையாடிக்கொண்டிருந்தீர்கள்
அவர்களுடன்தான்
எப்போதும் செல்ஃபி எடுத்துக்கொண்டீர்கள்
அவர்களிடம்தான் போர் விமானங்கள் வாங்கினீர்கள்
அவர்களிடம்தான் குண்டூசிகள்
இறக்குமதி செய்ய
ஒப்பந்தங்கள் போட்டீர்கள்
அன்னிய முதலீடுகளோடு ஒட்டிக்கொண்டு
கொஞ்சம் அன்னியக் கருத்துக்களும்
வந்துவிடுகின்றன
சிந்திக்கும் மனிதர்கள்
எல்லாவற்றிற்கும் கருத்துக்கள்
கூறவே செய்கிறார்கள்
சிந்தனையற்ற தேசபக்தி
புண்படுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது
இறையாண்மை என்பது
அதிகாரத்தில் இருந்தல்ல
நீதியிலிருந்தே பிறக்கிறது
உங்களிடம் நீதியைத்தவிர
எல்லாமே இருக்கிறது
ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
தேச பக்திக்கூவலால்
உங்கள் எல்லாகுற்றங்களையும்
மறைக்க இயலாது
அந்த நாடகத்தை அதிகமாகவே
நிகழ்த்திவிட்டீர்கள்
ஒரு உண்மையான ஆபத்து
தேசத்திற்கு வந்தால்கூட
யாரும் நம்பமுடியாதபடி
அதைக் கேலிக்கூத்தாக்கிவிட்டீர்கள்
ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
போரடிக்கிறது
பயங்கரமாக தலை வலிக்கிறது
விவசாயத்திற்கான மத்திய அரசின் பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக வேளாண்- சந்தை சீர்திருத்தங்களுக்கு எதிராக கடந்த ஆறுமாதங்களாக போராடிக் கொண்டிருக்கும் முன்னணி விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஆய்வினடிப்படையில் விவசாய சங்கத் தலைவர்கள் இந்த நிதிநிலை அறிக்கை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
“திங்கள் அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மத்திய பட்ஜெட்டானது, இந்த அரசு விவசாயத்தை வலுவாக்குவதற்கு பதிலாக அதைக் கைவிடும் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது” என்ற விவசாயிகளின் அச்சம் சரியானது என்பதை நிரூபித்திருக்கிறது என்று விவசாய சங்க தலைவர்கள் யோகேந்திர யாதவ், அவிக் சஹா, கவிதா குருகாந்தி, கிரன்விசா மற்றும் பிற விவசாயத் துறை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
”பெருமளவிலான விவசாயிகளின் போராட்டமும், அவர்களது பொருளாதார நிலைமைகள் குறித்த ஆழ்ந்த அதிருப்தியும் அதிகரித்திருக்கும் சூழலிலும் இந்திய அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு மிக குறைவான முக்கியத்துவமே கொடுத்துள்ளது,’’ என விவசாய சங்கத் தலைவர்கள் நிதிநிலை அறிக்கை குறித்து பகுப்பாய்வு அமர்வு முடிந்தபின்னர் தெரிவித்தனர்.
சென்ற ஆண்டை ஒப்பிடுகையில், விவசாயத்திற்கும் அதன் துணை நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பங்கு 5.1% லிருந்து 4.3% ஆகக் குறைந்துள்ளது. துல்லியமாக கூறுவதென்றால் 1.54 லட்சம் கோடியிலிருந்து 1.48 லட்சம் கோடியாக நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கிறது.
போராடிவரும் விவசாய சங்கங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த புள்ளிவிவரங்களை கோடிட்டு காட்டி, “விவசாயத்தை முதன்மைத் துறை என்று குறிப்பிடுவதன் மூலம் சமீபத்திய பட்ஜெட் உரைகள் விவசாயத்திற்கு உயர் முக்கியத்துவம் கொடுப்பது போன்ற தோற்றத்தை கொடுத்து வந்த அதே நேரத்தில், விவசாயத்திற்கு சொல்லிக் கொள்ளகூடிய அளவிற்கு அறிவிப்புகள் ஏதுமில்லாத காரணத்தால் இந்த முறை, பட்ஜெட் உரையின் பிந்தைய பகுதிக்கு விவசாயம் தள்ளிவிடப்பட்டுள்ளது,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திவரும் AIKSCC-ல் அங்கம் வகிக்கும் ரைத்து ஸ்வராஜ்ய வேதிகா என்ற சங்கத்தைச் சேர்ந்த கிரண்குமார் விஸ்சா, ‘’குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிபடுத்துவது, விளை பொருளை எளிதாக சந்தைப்படுத்தும் உட்கட்டமைப்பு, இயற்கை சீற்றங்களால் பயிர் பாதிப்படையும் போது நல்ல முறையிலான காப்பீடு மற்றும் ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவசாயிகள் சந்தித்துவரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த பட்ஜெட் எதுவும் கூறவில்லை “ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி அன்னதத்த ஆய் சன்ரக்ஷன் அபியான் (PM-AASHA), சந்தை குறுக்கீட்டுத் திட்டம் மற்றும் விலை ஆதரவுத் திட்டம்(MIS-PSS ) ஆகிய இரண்டு திட்டங்களின் நோக்கமும் சந்தையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிபடுத்துவதுதான். ஆனால் பட்ஜெட்டில் அந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிக அளவில் குறைக்கப்பட்டு அத்திட்டதையே பொருளற்றதாக்கி விட்டது.
PM-AASHA திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, “நிதிஆண்டு – ஒதுக்கப்பட்ட தொகை” என்ற வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2019-20 – 1500 கோடி
2020-21 – 500 கோடி 2021-22 – 400 கோடி
MIS-PSS திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, “நிதிஆண்டு – ஒதுக்கப்பட்ட தொகை” என்ற வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2019-20 – 3000 கோடி
2020-21 – 2000 கோடி 2021-22 – 1501 கோடி
“குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக விலை வீழ்ச்சியடைவதன் காரணமாக ஒரு ஆண்டில் ரூ. 50,000 கோடிக்கும் அதிகமாக விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர். ஆட்சியாளர்களின் வெட்டிப் பேரிரைச்சலைத் தாண்டி, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிபடுத்த அரசிடம் எந்த பொறுப்புணர்வும் இல்லை என்பதையே இது காட்டுகிறது” என்று குறிப்பிடும் கிரண்குமார் விஸ்சா மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“ஏன் குறைந்த பட்ச ஆதாரவிலையை உறுதிபடுத்தும் சட்ட உத்திரவாதம் பற்றி விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள் என்றால் அதற்கு இதுவெல்லாம்தான் கூடுதலான காரணங்கள் ஆகும். பட்ஜெட் ஆதரவு மூலமூம் சந்தை தலையீடுகளின் மூலமும் அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலையை பாதுகாக்கவில்லை என்றால், அது (MSP) அர்த்தமற்றதாகிவிடும்” என்றார்.
ஜெய் கிஸான் அந்தோலன் சங்கத்தை சேர்ந்த அவிக் சஹா, “கோவிட்-19 காலத்தில் ஏற்பட்ட ஊரங்கு மற்றும் பொருளாதார மந்தத்தில் ‘ஆத்மநிர்பார் பாரத்’ தொகுப்பு பொருளாதார ஊக்கம் அளிக்கும் என்ற அரசின் கூற்று ஒரு பொய் என்பது விவசாயத்திலும் அதன் துணைத் தொழில்களிலும் நிரூபணமாகிவிட்டது” என்று விமர்சித்தார்.
“எக்னாமிக் சர்வேயில் அத்தியாயம் 7, தொகுதி 2-ல் வெளியிடப்பட்டதன்படி, வேளாண் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்ட்ட ஒரு லட்சம் கோடி அதற்காக செலவிடப்படவில்லை. அல்லது, கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட 15,000 கோடியும் இதற்காக செலவிடப்படவில்லை. அந்த தொகுப்பு அறிவிக்கப்பட்டு 8 மாதம் கடந்த நிலையில் ரூ 2,991 கோடி மட்டுமே துவக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு, கொள்கை அனுமதியில் ஜனவரி 2021 நடுப்பகுதி வரை ஒதுக்கப்பட்டுள்ளது,’’ என்கிறார் சஹா.
விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவரும் சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற சங்கத்தின் உறுப்பினருமான யோகேந்திர யாதவ், “2022-ற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற இலக்கை அறிவித்து 5 ஆண்டுகள் ஆன பிறகு, நாம் அந்த இலக்கை சந்திப்பதற்கான இறுதி ஆண்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போது வரை எந்த அளவிற்கு விவசாயிகள் வருமானம் உயர்ந்துவருகிறது; இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.”
திட்டங்களின் வளர்ச்சி ஏதாவது இருப்பின், அதை கண்காணிக்க, கடந்த சில ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த அறிக்கை தயாரித்து வைக்காததற்காக அரசாங்கத்தை யாதவ் விமர்சித்தார்.
“இந்த அரசு, அடித்தட்டு மக்களுக்கு அரசு வளங்களை வருமானங்களை பிரித்து கொடுத்து உதவி செய்து, பொருளாதார மந்தநிலையை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை. பதிலாக, இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கார்ப்பரேட் இந்தியா கோரிக்கை வைத்து கேட்டுக் கொண்டிருக்கின்ற பொருளாதார சீர்த்திருத்தங்களை அமல்படுத்த உள்ளதையே, விவசாயிகளுக்கான இந்த வெற்று பட்ஜெட் காட்டுகிறது,”என்றார், யாதவ்.
உலகப் பொருளாதார வீழ்ச்சி கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்டதை தொடர்ந்து மந்த நிலையிலேயே நீடித்து வந்த பொருளாதாரம், கடந்த மூன்றாண்டுகளில் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
உலகம் முழுவதுமான பொருளாதார வீழ்ச்சி ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் திருவாளர் நரேந்திர மோடி அவர்களின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீரழித்து பெருவாரியான உழைக்கும் மக்களை வீதியில் நிறுத்தினார்.
இந்த நெருக்கடிகளோடு கொரோனா பெருந்தொற்றும் அதன் காரணமாக பெருமளவிலான வேலையிழப்பு மற்றும் வருமானயிழப்பு ஏற்பட்டு மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை துளியேனும் முன்னேற்றும் விதத்தில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு பல தரப்பினருக்கும் இருந்துவந்தது.
விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டு பல்வேறு போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வந்த நிலையில் மக்களை அமைதிப்படுத்தும் பொருட்டாவது இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றத்தையே பதிலாகக் கொடுத்திருக்கிறது மோடி அரசு.
மக்களுக்கு அளித்துவந்த மானியங்களை கடுமையாக வெட்டிச் சுருக்கியிருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து ஒருபுறத்தில் விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்த்துவிட்டு, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அவர்களுக்கான மானியத்தை வெட்டிச் சுருக்கியுள்ளது.
கடந்த 2020 – 2021-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் உரத்திற்கான மானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 1,33,947 கோடியாகும். ஆனால் இந்த ஆண்டு உர மானியத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறுமனே ரூ. 79,530 கோடி மட்டுமே. கடந்த ஆண்டை விட 40.62% அளவிற்கு உர மானியம் வெட்டப்பட்டுள்ளது.
விவசாயிகளின் உரத்திற்கானது மட்டுமல்லாமல், ஏழை மக்களின் உணவிற்கான மானியத்தையும் வெட்டிச் சுருக்கியுள்ளது மோடி அரசு. குறிப்பாக கடந்த 2020-2021-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.4,22,618 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலையறிக்கையில் ரூ. 2,42, 836 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 42.54% அளவிற்கு மானியத்தை வெட்டிச் சுருக்கியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 67% பேர் ரேசன் கடைகளில் உணவு தானியங்களைப் பெற்று வரும் நிலையில், இந்த மானிய வெட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களை பசி பட்டினிக்கு பலி கொடுக்கவிருக்கிறது.
உணவு மானியத்தை வெட்டியதோடு மட்டுமல்லாமல் அனைத்து பொருட்களின் விலையையும் நிர்ணயிக்கும் சக்தி கொண்ட பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களுக்கான மானியத்தையும் குறைத்துள்ளது. கடந்த 2020-21 நிதிநிலையறிக்கையில் ரூ. 38,000 கோடி பெட்ரோல் டீசல் மானியத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நிதியாண்டில் வெறுமனே, ரூ. 12,995 கோடியை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.
ஒரு வர்க்கத்திடமிருந்து சுரண்டி மற்றொரு வர்க்கத்துக்கு செல்வத்தை தாரைவார்ப்பதுதான் ஒரு அரசின் பாத்திரம். அது யாருக்கான அரசு என்பதிலிருந்துதான் எந்த வர்க்கத்திடமிருந்து எடுத்து எந்த வர்க்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது என்பது தீர்மானிக்கப்படுகிறது. அம்பானியும் அதானியும் இதர பெருமுதலாளிகளும் சிறப்பான பட்ஜெட் என இதனைப் புகழ்ந்திருக்கிறார்கள். மக்களின் மானியங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்பது அப்பட்டமாகத் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு புதியதாக எதையும் அள்ளிக் கொடுக்கவில்லை என்பதை வேண்டுமானால் ஏமாற்றம் எனக் கூறலாம். ஆனால் ஏற்கெனவே நலிந்து கொண்டிருக்கும் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்களையும் பறித்துக் கொண்ட செயலை என்னவென்று சொல்வது ? திமிர்த்தனம் தான் ! இடர்பாடு நிறைந்த சூழலிலும் கூச்சமின்றி மானியங்கள் பறிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில், “மக்கள் நம்மை என்ன செய்துவிட முடியும்?” என்ற திமிரும் தெனாவெட்டும்தான் வெளிப்பட்டிருக்கிறது ! இத்திமிரை இப்போதே அடக்கத் தவறினால், நம்மை அடக்கம் செய்துவிடும் என்பது மட்டும் உறுதி !
சிதம்பரம் அண்ணைமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியான ராஜா முத்தையா மருத்துக் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு மருத்துவக் கல்லூரிகளை விட 30 மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே தங்கள் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர்ந்து இரண்டு மாத காலமாகப் போராடி வருகின்றனர்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவை அடங்கும். இதில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2,293 ஆகும்.
எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ. 5.5 லட்சம் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விடுதிக் கட்டணமும் சேர்ந்த்து ரூ. 6.3 லட்சம் வசூலிக்கப்படுகிறது; பி.டி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதுகலை படிப்பிற்கு ரூ. 9.6 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த கல்விக் கட்டணங்களைக் குறைத்து அரசு கல்லூரிகளின் கட்டணத்தையே நிர்ணயக்க வேண்டும் என்று கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி முதல் மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தனை நாள் போராட்டத்திற்கு கல்லூரி நிர்வாகமோ, அரசோ எந்தவித பேச்சுவார்த்தைக்கும் முன்வராததால், காலவரையற்றப் போராட்டமாக அறிவித்தனர் மாணவர்கள். தற்போது அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.
ராஜா முத்தையா கல்லூரியில் மாணவர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக கல்லூரி மூடபபடுவதாக அறிவிக்கப்பட்டு குடிநீர், உணவு, மின்சாரம் அனைத்தையும் நிறுத்தியிருக்கிறது நிர்வாகம்.
கடந்த ஜனவரி 20-ம் தேதி, “முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், இன்டர்ன்சிப் மாணவர்களுக்கும் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும், மற்ற மாணவர்களுக்கு கல்லூரி மூடப்படுகிறது. எனவே மாலை 4 மணிக்குள் கல்லூரி விடுதியை விட்டு வெளியேற வேண்டும்” என்று காலை 11 மணிக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது கல்லூரி நிர்வாகம். அதற்குள் காலிசெய்யவில்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும் எனவும் மிரட்டல் விடுத்தது.
அதன் பின்பும் மாணவர்கள் போராட்டம் நீடித்ததால், ஜனவரி 21-ம் தேதி மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது கல்லூரி நிர்வாகம், அதில் அனைத்து மாணவர்களும் வெளியேறும் படியும் கல்லூரி காலவரையற்று மூடப்படுகிறது என்று மிரட்டியது.
“ ஜனவரி 23-ம் தேதி விடுதியின் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை நிறுத்திவிட்டது கல்லூரி நிர்வாகம். உணவு தண்ணீர், வெளியில் இருந்து கைக்காசுகளைப் போட்டு சாப்பாடு வாங்கி வரச்சென்றார்கள். வாங்கி வந்த மாணவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை காவல்துறை. மிகுந்தப் போராட்டத்திற்கு பிறகு மாலை 4 மணிக்குதான் மதிய உணவு கிடைத்தது. அதற்குமுன் இரண்டு மருத்துவ மாணவர் மயங்கி விழுந்தார்கள். அவர்களுக்குப் போராட்டக்களத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. கணிசமான கர்ப்பிணி மாணவிகளும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தங்குமிடமும், கழிவறை வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள் ” என்று வருந்துகிறார் ஓர் மருத்துவ மாணவி.
எத்தைனை இடையூறுகள் செய்தாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம், நாங்கள் நிதி சுமையால் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டோம் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்காமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று மாணவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
“முதலாவதாக, வேலை செய்து கொண்டே போராட்டம் நடத்தினோம். அதன் பின் அவசர சிகிச்சை மட்டும் செய்து வந்தோம். யாரும் எமது போராட்டத்திற்கு செவிசாய்க்காததால் காலவரையற்றப் போராட்டத்தை அறிவித்தோம். அதன் பிறகு கல்லூரி மூடல், உணவு இல்லை, விடுதி மூடல் போன்ற நெருக்கடிகளை கொடுத்தனர்” என்கிறார்கள் மாணவர்கள்.
தொடர்ந்து போராட்டம் நடந்துவந்த நிலையில் கடந்த ஜனவரி 28-ம் தேதியன்று, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி தமிழக அரசின் சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இனி இது கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி என்று அழைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் கல்விக் கட்டணம் தொடர்பாக அரசாணையில் எதுவும் குறிப்பிடவில்லை. கல்விக்கட்டணம் தொடர்பாக அரசாணை வெளியிடப்படும் வரைப் போராட்டம் தொடரும் என அறிவித்துப் போராடி வருகிறார்கள் மாணவர்கள்.
“இது முழுமையான திருப்தி அளிக்கக்கூடிய ஒரு அரசாணையல்ல. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், ராஜா முத்தையா பல்மருத்துவக் கல்லூரியும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் எந்த தேதிக்குள் கொண்டுவரப்படும், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையோடு எப்போது இணைக்கப்படும் என்பதை அதில் கூறவில்லை.
இது உயர்கல்வி துறையில் இருந்து மாற்றுவதற்கான ஒரு அரசாணையாக இருக்கிறதே தவிர, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பதிவாளரும், தமிழ்நாடு சுகாதாரத்துறையும் இணைந்து இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, எந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற கால வரம்பும் இல்லை. கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்ற அறிவிப்பும் இல்லை. இது மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே, தமிழக முதல்வர் போராடும் மாணவர்களை அழைத்துப் பேச வேண்டும். உடனடியாகக் கட்டணத்தைக் குறைக்கிறேன் என்று அறிவிக்க வேண்டும். அதேபோல குறிப்பிட்டக் காலஅளவு வைத்து இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்ற உறுதி மொழியை தமிழக முதல்வர் வழக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் ரவீந்தர நாத்.
ஒரு அரசாணை வெளியிட்டு மாணவர்களை ஏய்த்துவிடலாம் என்ற மாநில அரசின் பகல் கனவு பலிக்கவில்லை. மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இவர்களது போராட்டத்திற்கு பிற அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஜனவரி 28ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.
இதே போன்று, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலும் கட்டணம் அதிகமாக உள்ளது என்று மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டிற்கு ரூ. 13,610 மட்டும் வசூலிக்கப்படுவதாகவும், தங்களிடம் கல்லூரி நிர்வாகம் 3 லட்சத்து 85ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாகவும் இம்மாணவர்கள் கூறுகின்றனர். இம்மாதத்தில் இருந்து தொடர் போராட்டம் நடத்தவிருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த மருத்துவக் கல்லூரி முதலில் அரசு போக்குவரத்து துறையில் கீழ் இருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இது அரசு கையகப்படுத்தி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது.
ஏற்கெனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள் கடந்த 2013-ம் ஆண்டு அம்பலமாகின. அதைத் தொடர்ந்து மாநில அரசு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமை ஆக்கியது.
MCI மற்றும் அண்ணாமலை யூனிவர்சிட்டி ACT பிரிவு 58,3,B,C-ன்படி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி சுயநிதிக் கல்லூரி அல்ல. பிற அரசு மருத்துவக் கல்லூரிகளை போல இதுவும் அரசு மருத்துவக் கல்லூரியே, என்று அந்த பிரிவுகள் கூறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு அரசாங்கம் நியமித்த கல்விக் கட்டணக் குழு முதுகலை மருத்துவக் கல்விக்கான கட்டணத்தை 9.6 லட்சமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த கல்விக் கட்டணக் குழுவில், மாணவர்களின் கல்விக்கான செலவினங்களை மட்டுமே கணக்கிட்டு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், பல்கலைக்கழக நிர்வாக சீர்கேட்டின் காரணமாக ஏற்படும் நஷ்டம் மற்றும் நிதி சுமையை மாணவர்கள் மீது திணித்துக் கல்விக் கட்டணம் என்று நிர்ணயத்துள்ளது அரசாங்கம் நியமித்த கல்விக் கட்டணக்குழு.
இந்த பல்கலைக்கழகத்தில் நோயாளிகளுக்கு ஏற்படும் செலவினம், மருத்துவனையில் பணிபுரியும் ஊழியர்கள், செவிலியர்கள் ஆகியவர்களின் ஊதியங்களை மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் வசூலிக்கிறார்கள்.
பெயருக்கு மட்டுமே இது அரசால் எடுத்துக் கொள்ளப்பட்ட கல்லூரியாக குறிப்பிடப்பட்டு வருகிறதே ஒழிய, கல்விக் கட்டணக் கொள்ளையில் தனியார் கல்லூரிகளுக்கு நிகராகவே மாணவர்களிடமிருந்து பறித்து வருகிறது.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு கையகப்படுத்தியதில் இருந்து இன்றுவரை கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மட்டுமே இத்தனை ஆண்டுகாலமாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடி வந்திருக்கின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ம் தேதி முதல் கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிறகு கடந்த 2017 செப்டம்பரில், கல்விக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தியுள்ளார்கள் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள். தற்போது 2020 டிசம்பரில் துவங்கிய போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஏதேனும் கண் துடைப்பு வித்தைகளைக் காட்டியும், மாணவர்களை அச்சுறுத்தியும் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்து வருகிறது தமிழக அரசும், கல்லூரி நிர்வாகமும்.
இந்த முறை மாணவர்கள் ஏமாறத் தயாராக இல்லை. போராட்டக்களத்தில் இரண்டில் ஒன்று பார்க்கத் தயாராக இருக்கின்றன. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகமெங்கும் அனைத்து மாணவர்களும், சமூக ஜனநாயக சக்திகளும் களத்தில் இறங்கினால் மட்டுமே, தமிழக அரசை பணியச் செய்ய முடியும்.
எல்.கே.அத்வானியின் தலைமையில் நாடு முழுவதையும் மனித ரத்தத்தால் நனைத்த ஒரு ரதயாத்திரையை நடத்தி ஆட்சியை பிடித்த பாஜக போன்ற ஒரு கட்சி, விவசாயிகளின் அமைதியான டிராக்டர் பேரணி டெல்லியில் சிறிய குழப்பத்தை ஏற்படுத்தியதை குற்றங்கூற முடியுமா?. அந்தப் பேரணியிலிருந்த சில உதிரிப் பிரிவினர் போலீசுடன் மோதியதும், செங்கோட்டை பகுதியில் நுழைந்ததும் உண்மைதான். அதே நேரத்தில், தேசிய கொடி எந்த இடத்திலும் யாராலும் கீழே இறக்கப்படவில்லை என்பதும், தேசியக் கொடிக் கம்பத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு கம்பத்தில்தான் விவசாயிகள் கொடி ஏற்றப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ரத யாத்திரையைத் தொடர்ந்து, ராமர் கோவில் கட்டவென்று வெறித்தனமான ழுழக்கங்களுடன் கிளம்பிய கும்பல் (ஆர்.எஸ்.எஸ்., வி.இ.பரிஷத், பஜ்ரங் தள்….) பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியது. இந்த இரண்டு யாத்திரைகளிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பரிசீலித்தால் எந்த யாத்திரை நாட்டுக்கு அதிக சேதத்தை உண்டாக்கியது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
பாபரி மசூதி தரைமட்டமாக்கப்பட்ட டிச. 6 1992-க்குப் பின்னர் நாடு முழுக்க பரவிய கலவரத்திற்கும் அதனால் கிட்டத்தட்ட 2000 பேர் கொல்லப்பட்டதற்கும் நேரடிக் காரணம் ரத யாத்திரையும், அது சென்ற வழியெங்கும் பரப்பிய வெறுப்புணர்வும்தான். அயோத்தியில் பாதுகாப்பு படைகளுக்கும் கரசேவகர்கள் என்ற பெயரில் இருந்த வி.இ.ப- வினருக்கும் முன்று நாட்கள் நீடித்த மோதலில் 20 பேர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன. பாபர் மசூதி தரை மட்டமாக்கப்பட்ட அந்த நிகழ்ச்சி நடந்த அன்று அயோத்தியில் பஜனை செய்கிறோம் என்ற பெயரில் கிட்டத்தட்ட 1,50,000 பேர் கூடியிருந்தனர்.
பாஜகவின் உயர்மட்டத்தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரும் அந்த வரலாற்று இழிநிகழ்வின் சாட்சிகளாக இருந்தனர். அங்குதான் உமாபாரதியின் புகழ்பெற்ற “இன்னும் ஒரே தள்ளு மசூதியை கீழே தள்ளு” என்று முழக்கம் கரசேவகர்களை வெறியூட்டியது.1998-1999 வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தபோது அத்வானி துணை பிரதமராகவும் மற்ற இருவரும் அமைச்சர்களாகவும் அமர்த்தப்பட்டனர்.
26-01-2021-ல் நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது ஒரே ஒருவர் மட்டுமே இறந்து போனார். 300 காவலர்கள் போராட்டக்காரர்களின் கல்வீச்சிலும் விவசாயிகளின் தடியடியாலும் காயமுற்றதாக அரசு தரப்பு செய்திகள் இருக்கின்றன. அன்றைக்கு டெல்லியில் 5000 டிராக்டர்களும் 1.5லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான மக்களும் விவசாயிகளும் கூடியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் நடந்திருக்கும் சேதத்தின் மதிப்பு தெரியாவிட்டாலும் ரதயாத்திரையை விட மிக மிக குறைந்தபட்சமானதாக இருப்பதை பார்க்கலாம். உணரலாம்.
விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியோடு பாஜக நடத்திய ரதயாத்திரையை ஒப்பிட்டுப் பாருங்கள்.
டிராக்டர் பேரணி நடத்தப்பட்டதற்கு என்ன காரணம்? சுமார் 65 நாட்கள் அரியானா, உ.பி-ஐ ஒட்டிய டெல்லி எல்லைப் புறங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் அடுத்த கட்டமாகும். இந்தப் போராட்டம் எதற்காக? செப்படம்பர் 2020-ல் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலைக்கு சாவுமணி அடிப்பதோடு விவசாய தொழிலை முழுதுமாக கார்ப்பரேட் கைகளில் ஓப்படைக்கும் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பபெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டமாகும்.
விவசாயிகள் இந்தப் பிரச்சினையை இந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக பார்த்தனர். இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டும் கடுங்குளிர் தாங்கமுடியாமலும் சரியான மருத்துவ வசதி கிடைக்காமலும் சுமார் 70 பேர் இறந்து போனார்கள். மோடியும் அவரது அரசும் போராட்டம் மற்றும் அதன் கோரிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளக்கூட அக்கறையில்லாமல் ஒரு எதிரியை அணுகும் முறையில் விவசாயிகளை அணுகியது.
அத்வானி நடத்திய ரதயாத்திரை எந்தவித மக்களின் பிரச்னைகளை முன்வைத்தோ பொருளாதார காரணங்களுக்காகவோ அல்லது நாட்டில் நிலவிய பணவீக்கம் அல்லது வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பசி, பட்டினிச் சாவுகள் குறித்த எதிர்ப்புணர்வோடோ நடத்தப்பட்டது அல்ல. அந்த யாத்திரை முழுதும் இவை சம்பந்தமான முழக்கங்கள் எங்கும் காணப்படவில்லை. காவிக்கொடிகள் மட்டும் பறந்து கொண்டிருந்தன.
பின்னர் எதற்கு ரதயாத்திரை? வி.பி.சிங் அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அரசு வேலைகளில் ஓபிசி மக்களுக்கு 27 சத இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியதன் மூலம் தங்களுக்கான ஓட்டு வங்கி சிதறிப் போய்விடுமோ என்ற பதட்டத்தில் இந்து ஓட்டு வங்கியை நிலை நிறுத்திக்கொள்ளும் ஒற்றை நோக்கத்துடன் நடத்தப்பட்டதே ரத யாத்திரையாகும்.
உயர்சாதியினருக்கு இந்த ஒதுக்கீடு மறுக்கப் பட்டிருந்தாலும் ஓபிசி பிரிவினரை எதிரிகளாக பார்க்கமுடியாத நிலையில் இந்து ஓட்டு வங்கியை நிலைநிறுத்த முஸ்லீம்களை எதிரிகளாக்க திட்டமிட்டுக் களமிறங்கியது. இந்த ரதயாத்திரை நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கத்தோடும் மதப் பிரிவினரிடையே பதட்டத்தை உண்டாக்கி கலவரத்தை தூண்டும் வகையிலும் முஸ்லீம் மன்னர், ‘ராமர் பிறந்த இடத்தில்’ கோவிலை இடித்து மசூதி கட்டி விட்டதாகவும் அது ‘தேசிய அவமானம்’ என்ற பிரச்சாரங்கள் மூலமும் ரதயாத்திரை சென்ற வழியெங்கும் பாஜக தலைவர்களால் வெறியூட்டப்பட்டது.
ரதயாத்திரையின் இறுதிநோக்கமென்பது, பாபரின் படைத்தளபதியால் கட்டப்பட்ட, முகலாய அதிகாரத்தின் அடையாளமாக இருக்கும் பாபர் மசூதியைத் தரை மட்டமாக்குவதாகவே இருந்தது. இந்த ரதயாத்திரை முழுவதும் மதரீதியானதாக, வெளிப்படையாக சிறுபான்மை மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் அவர்களை இழிவுபடுத்துவது மற்றும் தாக்குவது என்ற வகையிலும்தான் திட்டமிட்டு நடத்தப்பட்டது.
ஆனால் விவசாயிகள் போராட்டமோ ஒரு மதசார்பற்ற உழைக்கும் மக்களின் போராட்டமாகவே கடைசிவரை இருந்த்து. பேரணியில் இணைந்தவர்கள் சிலர் ‘நிசான் சாகிப்’ கொடியை ஏற்றிவிட்டதாலேயே இதை சிங் இனத்தவரின் போராட்டமாக சுருக்கி விடமுடியாது. இது அனைத்து விவசாயிகளின், உழைக்கும் மக்களின் போராட்டமாகவே கடைசிவரை நீடித்தது.
எந்த நிகழ்வென்றாலும் அடையாளத்தை தேடி அர்த்தம் கற்பிக்கும் பாஜக தங்களை எதிர்த்த போராட்டங்களை இந்துக்களுக்கு எதிரானது என்றும் ‘தேசவிரோத செயல்’ என்றும் முத்திரை குத்தி மடைமாற்றம் செய்து மக்களை ஏமாற்றுகிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகாவத் “இந்துக்கள் எப்போதும் தேசவிரோதிகளாகமாட்டார்கள்” என்று கூறியிருப்பது தேசவிரோத சிந்தனையெல்லாம் சிறுபான்மையினருக்கே உரியது என்ற கருத்தை வலிய இந்து மக்களிடம் திணித்து மதவெறியை ஊட்டி வெறுப்புணர்வை வளர்க்கத்தான்.
விவசாயிகள் போராட்டம், நாட்டின் ஒட்டு மொத்த விவசாயத்தை நாசமாக்கும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல. அதிகாரத் தோரணையில் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் சட்டங்களை எதேச்சதிகாரமான முறையில் போட்டு எவ்வித விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும் ஒரு அரசுக்கு எதிரான போராட்டமுமாகும்.
விவசாயிகளின் போராட்டமும் டிராக்டர் பேரணியும் நம்முன் ஒரு சமூக பிரச்சினையை எழுப்பியுள்ளது. ஆனால் ரத யாத்திரையோ அப்பாவி இந்துக்களிடம் மதவெறியை ஊட்டியது. மதம் சார்ந்த பிரச்சினைகள் மக்களை எப்படியிருந்தாலும் எதிரெதிராக பிளவுபடுத்தி நிறுத்திவிடும் என்பதைத்தான் நமது கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.
ஆனால் சமூக பிரச்னைகளோ மக்களை சாதி மதம் கடந்து ஓரணியில் நிற்க வைப்பவையாகும். இந்த அரசோ ஹிந்துத்வாவை அடிப்படையாக கொண்டது.எனவே பிரச்சினை என்று வந்தாலே அடையாள அரசியலைக் கொண்டு இந்துக்களுக்கும் மற்றவர்களுக்குமானதாக மாற்றி சமூக நோக்கத்தை சாகடித்து நீதி பற்றி கவலைப்படாமல் செயல்படும் அரசாக இருக்கிறது.
மாரச் 2020-ல் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மார்ச் 2020-ல் தொழிலாளர்கள் பிழைப்பு வாழ்வாதாரம் இழந்து தங்கள் வீட்டிற்கு ஆயிரக்கணக்கான மைல்களை நடந்தே கடந்து சென்றபோது போலீசாலும் அரசாங்கத்தாலும் சொல்லொணா துயரங்களை அடைந்தனர். மோடி அரசின் செயல்பாடு எந்தளவு மனித்தன்மையற்று இருந்த்து என்பதை நாம் ஒவ்வொருவரும் அப்போது உணர்ந்தோம்.
விவசாயிகள் போராட்டம், கடினமான பாதையில் பயணிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆட்சியில், ஜனநாயகம் சொல்லளவில் கூட இல்லை என்பதையும் தேர்தல் வாக்குறுதிகள் என்பது மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க ஒரு தந்திரம் மட்டுமே என்பதையும், உண்மையில் ஆட்சியாளர்களின் நோக்கம் ஒரு இந்துத்துவா பாசிசத்தை அரங்கேற்றுவதுதான் என்பதையும் விவசாயிகளின் போராட்டப் பாதை தெள்ளத்தெளிவாக மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மூலக் கட்டுரை :ரவி ஜோஷி தமிழாக்கம் :மணிவேல் நன்றி :The Wire
தி கிரேட் இந்தியன் கிச்சன் ஓரு பார்வை : ஆணாதிக்கமும் தான் சார்ந்த மதமும் பெண்களுக்கு எப்படியான உலகத்தையும் தருகிறது என்பதை துளியும் குறைவில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது இப்படம்.
எப்போதும் இந்திய சினிமாவில் மலையாளத்திற்கு என்று என் திரைப்பட்டியலில் தனியிடம் உண்டு. இயல்பை இயல்பான மனிதர்களின் உணர்ச்சிகளையும், அவர்கள் அரசியலையும் காட்சிப்படுத்துவதில் மலையாள சினிமாவிற்கு தனியிடம் உண்டு.
“தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்றவுடன் சமையலையும் சுவையையும் தரும் படம் என்றுதான் பார்க்கத் துவங்கினேன். ஆனால் அது சுவையை தாண்டி பெண்ணின் சுமையையும், எந்தவித வன்முறையின்றி ஆதிக்கம் செலுத்தும் ஆணாதிக்க வன்மத்தையும் கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்பதே உண்மை.
படத்தின் துவக்கம் சமையலறையில் குக்கரின் விசிலும்,காய்கறி துண்டுகளை நறுக்கல், இனிப்பு பண்டங்கள் என தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. கேரளத்தில் பெண் காணும் முறையைக் காட்டி அதன் பின் அடுத்தடுத்து காட்சிப்படுத்துகிறார் . இன்னொரு பக்கம் ஓரு பெண் அவளின் விருப்பமான நடனத்தை ரசித்து ஆடிக்கொண்டியிருக்கிறார் . பெண் காணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாப்பிள்ளையும் பெண்ணை பேசச் சொல்ல, என்ன பேசுவது என்று தொடங்கும் முன் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது.
வீட்டில் பார்க்கும் பல திருமணங்கள் இப்படிதான் முடிகிறது. நாம் யார் என்பதை கூட அறியாமல் உடன் பயணிக்க ஓருவர்; அதுவும் அதற்கு இருமணம் இணையும் விழாவென்று பெயர். திருமணம் முடிந்து முதல் நாள் காலை அவளின் கணவர் யோகா செய்து மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். அந்த பெண்ணின் மாமனார் பேப்பர் படித்திக் கொண்டே தனது மனைவி பேஸ்ட் தடவிய பிரஷ் எடுத்து வருவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு ஆங்கிலத்தில் ஆர்தோடக்ஸ் குடும்பம் என்று பெயருமுண்டு.
அந்த பெண்ணோ கனவர் யோகா செய்யும் நேரத்தில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து, குளித்து விட்டு விளக்கு வைத்து, பின் காலை உணவை செய்ய ஆயுத்தம் ஆகிறார். காலையில் முதலில் எழுந்து பின் இரவு கடைசியாக படுக்கைக்குச் செல்வது, இதுதான் அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கை.
“நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை, ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை” என்று கவிஞர் கந்தர்வன் தனது கவிதையில் அழகாக சொல்லியிருப்பார்.
வீட்டில் சுவையாக உணவு செய்யும் அம்மாவை பலமுறை புகழ்ந்து இருப்போம். ஆனால் சில சமயம் சரியாக செய்யாத ஒன்றை பலமுறை சுட்டிக் காட்டியபடியே அந்த உணவை நாம் சுவைத்திருக்கிறோம். அங்கு அவர்களுக்கு தேவை புகழ்ச்சியல்ல, புரிதல் என்பதை புரிய வைத்திருக்கிறது இந்தப் படம்.
அந்த பெண்ணின் மாமனார் விறகு அடுப்பில் வைத்த சாதம், அம்மியில் அரைத்த சட்னி, கையால் துவைத்த உடுப்பு என கேட்கிறார். சட்னி கையால் அரைக்கும் பக்குவம் தனி சுவைதான். அதற்காக அவர்களின் விருப்பத்தையும் அம்மியில் வைத்து நசுக்குவதற்கு பெயர் என்ன? மின் சாதனங்கள் பெருகிய இக்காலத்திலும் விருப்பம் என்ற பெயரில் பிறரை கட்டாயப்படுத்தி செய்ய வைப்பது எது?
அதே சமயம் சமையலறை பைப்பில் தண்ணீர் கசிவால் தினந்தோறும் மன்றாடும் அந்த பெண்ணின் குரல் அவரின் கணவரின் காதுக்கு எட்டாது இருப்பதன் காரணம் என்ன? பிறர் வலியை தான் உணராதது மட்டுமல்ல, தண்ணீர் கசிவடைவதால் தனக்கு பெரும் பாதிப்பு ஏதும் இல்லாததாக நினைப்பது போலவே, தன் மனைவியின் வீட்டு வேலை இடர்பாடுகளை தனக்கான பாதிப்பாக கருதுவதில்லை.
யாரேனும் சாப்பிட்டுவிட்டு, மிச்ச எச்சத்தை அப்படியே சாப்பிட்ட தட்டிலேயே விட்டுச் சென்றால் அதை எடுக்க, பெற்ற தாயாக இருப்பினும் ஒருவித சங்கடம் இருக்கும். ஆனால் அதை பெரும்பாலான ஆண்கள் மனதில் கொள்வதில்லை. அவர்களுக்கு அது தங்களது வேலையல்ல என்பதாகவும், தனது தாயின் / மனைவியின் / சகோதரியின் வேலை என்பதாகவுமே மனதில் படுகிறதே ஏன்? ஓரு ஆண் தான் சாப்பிட்ட இடத்தையோ அல்லது சாப்பிட்ட தட்டையோ சுத்தம் செய்ய ஏன் துணிவதில்லை? சமையல் முதல் எச்சில் தட்டில் கழுவுவது வரை பெண்களின் வேலையாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவதுதான்.
சமையலறை வேலை தொடங்கி கழிவறை சுத்தம் செய்யும் வேலை வரை முடித்துவிட்டு, படுக்கையறை சென்றாலும் அங்கும் பல பெண்கள் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கு அவர்களின் ஓய்வுகூட காணாமல் போகிறது.
காமமும் கூட காதலோடு சேரும் போது தான் முழுமையடைகிறது. ஆனால் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு பல சமயங்களில் விருப்பமின்றி தீண்டுதலும், தனது விருப்பங்களைக் கூட சொல்ல முடியாத நிலைதான் நீடிக்கிறது. காமம் மெல்லியது. அதை கட்டாயத்தில் கட்டிலில் கிடத்துவது எது போன்றது? அதுவும் ஓரு வன்முறையே.
ஆண்களுடைய தேவையின் நீட்சி மட்டுமே பெண் என்பதுபோல் இந்த சமூகம் கட்டமைத்திருக்கிறது. இங்கு பாலியில் விருப்பம் பற்றி யார் பேச வேண்டும்? யார் கேட்க வேண்டும்? என்பதும் கூட ஆண்தான் நிர்ணயிக்கிறான்.
இங்கு ஆண் தனது தேவையையும் விருப்பத்தையும் பேச இடமிருக்கிறது. ஆனால் அதையே ஒரு பெண் பேசினால் அது வேறுவிதமாக புரிந்து கொள்ளப்படுகிறது. அந்தப் பெண் மட்டுமல்ல, பெரும்பாலான இல்லத்தரசிகளின் நாட்கள் இப்படித்தான் கழிகிறது.
இந்தப் படம் இந்தியக் குடும்பங்களின் பிரதிபலிப்பு என்பதால்தானோ என்னவோ, இந்த கதாபாத்திரங்களின் இடத்தில் எந்தக் குடும்பத்தையும் வைத்துப் பார்த்து இந்தக் காட்சிகளை நம் அன்றாட வாழ்வில் பொருத்திப் பார்க்க முடியும்.
குடும்பத்தின் அனைத்துப் பணிகளையும் செய்யும் பெண்ணுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் வரும் மாதவிடாயைத் தீட்டாகப் பார்ப்பதுதான் முட்டாள்தனத்தின் உச்சம். அதையும் கூட அந்த வேலைக்காரப் பெண், “அது தீட்டு என்றால் என் குழந்தைகளுக்கு யார் உணவளிப்பது?” என்று கேட்கும் கேள்வியே உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலையின் நிதர்சனம்.
அந்தப் பெண் அந்த மூன்று நாட்கள் தனிமையில் இருப்பது எப்படியான அசோகரியங்களை தருகிறது என்பதை கடந்து அது ஏதோ பெண்களுக்கான இழுக்காக பார்க்கும ‘தீட்டு’ எனும் பார்வை அவர்களை மேலும் பலவீனப்படுத்துகிறது.
நம் நாட்டில் அசாமில் உள்ள காமக்கியதேவி கோவிலில் ரத்தப்போக்குடன் பெண் கடவுள் காட்சியளிக்கிறார். ஆனால் சபரிமலை கடவுள் மாதவிடாயை தீட்டாகப் பார்க்கிறது. பெண்களை சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற பெண்களின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்துப் போடும் ஓரு முகநூல் பதிவுகூட, அந்தப் பெண்ணின் கணவரின் விருப்பத்தோடு மட்டுமேதான் பதிவிட முடிகிறது.
சமூக வலைத்தளத்தில் தனது கருத்தைத் தெரிவிக்கும் அடிப்படை உரிமையை முடக்குவது முதல், தான் கற்ற கலையை பிறருக்கு கற்றுத்தர விருப்பமிருந்தும் பிறரது கௌரவம் என்ற பெயரில் பெண்கள் மீது ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் வரை அனைத்தையும் மொழி எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த பெண்ணின் குரலாய் இயக்குனர் ஜூயோ பேபி படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
நிமிஷா சஜ்யன் இங்கே தனது நடிப்பை வளர்த்துக் கொண்டு ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை மெருகேற்றியிருக்கிறார். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, அவரது நரம்புகள் வழியாக பாய்ந்து பெயரிடப்படாத மனைவியின் ஒவ்வொரு களத்திலும் சுவாசிக்கிறார் நிமிஷா.
அவர் நடித்த முதல் படமான ”தோண்டிமுதலம் டிரிக்சஷிய”த்தின் மூத்த துணை நடிகரான சூரஜ் வெஞ்சராமுடு, “தி கிரேட் இந்தியன் கிச்சனி”ல் கணவராய் தனது நடிப்பின் மூலம் சிறப்பான கலை நுண்ணறிவைக் காட்டியிருக்கிறார்.
வெளிப்படையாக வெறுக்கத்தக்க மனிதராக அல்லாமல், ஒரு வித்தியாசமான – எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல நடத்தை கொண்ட வில்லன்கள் இருப்பதை அவரது கதப்பாத்திரம் வலியுறுத்துகிறது. அது நமது பக்கத்து வீட்டு வழக்கமான அத்தியாயமாகக் கூட இருக்கலாம்.
தி கிரேட் இந்தியன் கிச்சன், பாதிக்கப்பட்ட பெண்கள் முதல் பாதிப்பை உணராமல் இருக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் ஓரு பாடமாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் மாமியாராக வரும் கதாபாத்திரத்துக்கு தனி பாராட்டு. தான் முதுகலை படிப்பு படித்தும்கூட, “ஆடை, ஆண் கொடுத்த சுதந்திரம்” என்பதன் மூலம் எதார்த்தத்தை காட்டியிருப்பார். எனினும் மருமகளின் வலியை ஓரு சகமனிதியாக பார்ப்பதுதான் தேவை என்ற அவரது கதாபாத்திரம், சமூக மற்றும் சினிமா ஸ்டீரியோடைப்களுக்கு மாறாக, மாமியாரும் ஓரு பெண் என்ற பார்வையை மனதில் பதிய வைத்திருக்கிறது.
படத்தின் இன்னொரு சிறப்பம்சம் – ஒலி வடிவமைப்பாளரான டோனி பாபுவின் ஸ்விஷ், ட்ரிக்கிள்ஸ், கடுகின் கடுகல், எண்ணையை குமிழியின் சிரிப்பு, பாத்திரங்களின் பீயோனா , உணவை சுவைக்கும் இசை என எல்லாம் நம்மை படத்தோடு அழைத்து செல்கிறது.
ஓளி வடிவமைப்பில் டிஓபி சலு கே தாமஸ், அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கையை மங்கலான ஓளியுடன் பயணிப்பது போன்று காட்சிப்படுத்தி, பின் படத்தின் முடிவில் ஒளியை அதிகரித்து திருமண வாழ்க்கை என்ற சிறைச்சாலையிலிருந்து அவளை சிறகசைத்த பறவையைப்போல் காட்டுவதில் தொழில்நுட்ப யுத்தியை அழகாக கையாண்டுள்ளார்.
பெண்களை கடவுளாகப் பார்க்க வேண்டும் என யாரும் நினைக்கவில்லை. ஆனால் பெண்ணை ‘தேவி’ என்று சொல்லி தியாகம், வலி, பெருமை, கௌரவம் எல்லாம் அவளின் அங்கம் முழுக்க அணிகலன்களைப் பூட்டுவது விருப்பமற்ற வெற்று ஜோடனைப் பேச்சாகவே இருக்குமே ஒழிய உள்ளார்ந்த பொருளில் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.
இங்கே ஆண்கள் பற்றி எதிர்மறையான கருத்துகளை மட்டும் முன் வைப்பது எனது விருப்பமல்ல. அதைச் செய்யவும் இல்லை. ஏனெனில் என்னை வளர்த்தெடுத்த சமூகத்தில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற தோழர்களால் பெண் விடுதலை சாத்தியமானது என்பதை என் நினனவில் கொள்கிறேன்.
இப்போது எல்லாம் ஆண்கள் இப்படியில்லை என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால், சேர்ந்து உணவு சமைப்பது, வேலைகளை பகிர்ந்து செய்வது, வரதட்சணை வேண்டாம் எனக் கூறுவதெல்லாம், லட்சத்தில் ஓரு பகுதியே. அதுவும் கூட தேவையை சார்ந்து மட்டுமே இயக்குவிக்கப்படுகிறது. அதுவே ஆண்களின் புரிதலின் அடிப்படையில் இயங்குமாயின், கட்டாயம் அவர்களுக்கு எனது பாராட்டுகள். எனது பார்வையில் தவறு இருப்பின் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். கட்டாயம் பரிசிலிக்கிறேன். ஆனால் ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
“மாற வேண்டியது மனம் மட்டுமே… மாறக்கூடாது என்று தடுப்பது எதுவோ அதை தகர்த்து எறி ..”
தி கிரேட் இந்தியன் கிச்சன் என்பது ஒரு மிக மோசமான, ஆணாதிக்கத்தையும் அதற்கு ஆதாரமாக விளங்கும் மதத்தையும் கேள்வி கேட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இயக்குனர் ஜியோ பேபி மிகவும் எளிமையான தனது கதைக் களத்தால், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார். நம் வாழ்நாள் முழுவதும் எங்கோ ஏதோ ஒன்றில் அனுபவித்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் உணரும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது !
டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சமரசமின்றி போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரத் துடிக்கிறது மோடி அரசு. அதற்கு உறுதுணையாக தன்னுடைய சங்கப் பரிவார கும்பலையும், தன்னை தூக்கி நிறுத்தும் ஊடகங்களையும் களத்தில் இறக்கி விட்டுள்ளது.
அந்த வகையில், ”டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தால் தங்களது வர்த்தகம் பாதிக்கப்பட்டுவிட்டது எனவும், குடியரசு தின டிராக்டர் பேரணியில் தேசியக் கொடியை அவமானப்படுத்தியதால் போராட்டக் களத்தை காலி செய்ய வேண்டும்” எனவும் உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது ANI ஊடக நிறுவனம்.
இரண்டு மாதக் காலமாக அமைதியாக நடந்த போராட்டத்தில் அந்தப் பகுதி மக்கள் இதுவரை தங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை. திடீரென இப்போது அவர்கள் போராட்டத்தை கலைக்க வருவதாகக் கூறுவது பொய் என்பதும் இந்து சேனா அமைப்பை சேர்ந்த குண்டர்கள்தான் விவசாயிகள் மீது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
மேலும் பல கிராமங்களில் வீட்டிற்கு ஒருவர் போராட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்றும், செல்லாதவர்களுக்கு அபராதம் விதிப்பதாக கிராம தலைவர்கள் கூறியிருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது ANI. கிராம மக்கள் மிரட்டப்பட்டு போராட்டத்தில் பங்கேற்கச் செய்யப்படுவதாக ஒரு கருத்துருவாக்கத்தை இதன் மூலம் செய்திருக்க்கிறது ANI.
இதே வகையான செய்திகளைத்தான் தி இந்து, டைம்ஸ் நவ், இந்துஸ்தான் டைம்ஸ், சி.என்.என்., நியூஸ்18, இந்தியா டுடே உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
தமிழக ‘நடுநிலை’ ஊடகங்களும், தனது பங்கிற்கு போராடும் விவசாயிகளை வன்முறையாளர்களாகவும், ஈவு இரக்கமற்றவர்களாகவும் தன்னால் இயன்ற அளவிற்கு சித்தரித்து வருகின்றன.
நடுநிலை வகிப்பதாக கூறிக் கொள்ளும் தினகரன் நாளிதழும் தன் தலையங்கத்தில் போலீசின் அடாவடித்தனத்தை ஆதரித்து எழுதியுள்ளது.
”குடியரசு தினத்தில் விவசாயிகள் டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதியளித்தது தான் பிரச்சனை எனவும், விவசாயப் பேரணிக்கு போலீசார் ஒதுக்கிய பகல் 11.30 மணிக்கு முன்பாகவே விவசாயிகள் 9 மணிக்கே பேரணியை தொடங்கி விட்டார்கள்; யார் தடுத்தும் கேட்கவில்லை; அதனால் தான் வன்முறை மோதல் ஏற்பட்டது” எனவும், “போலீசார் பேரணிக்கு அனுமதியளித்த மூன்று பாதைகளை விட்டு செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டனர்” எனவும் பிரச்சினையை திசைத்திருப்பும் கண்ணோட்டத்தில் எழுதியுள்ளது.
மேலும், பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இருக்கும் தொடர்பை துண்டிக்கும் வகையில் காசிபூர், சிங்கு, திக்ரி விவசாயிகள் போராட்டம் நடைபெறும் எல்லைப் பகுதியில் 31-ம் தேதி நள்ளிரவு 11 மணிவரை இணைய சேவை முடக்கத்தை அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
இதுவரையில் ஊடகங்களின் பொய்யை, விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களின் சமூக வலைத்தளப்பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பையும் தற்போது பறித்துள்ளதன் மூலம், பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு நல் வாய்ப்பை வழங்கியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர், புதுடெல்லியின் இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே குண்டு வெடித்த சம்பவத்தைப் பயன்படுத்தி டெல்லியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மேலதிகமான படைகளை டெல்லியில் குவித்துள்ளது.
விவசாயிகள் போராடும் எல்லைப் பகுதிகளில் அரசு மூலம், தண்ணீரை நிறுத்துவது, மின்சாரத்தை நிறுத்துவது என்ற வகையில் பல இடர்பாடுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், சங்கபரிவாரக் கிரிமினல் கும்பல்களின் மூலம் கலவரத்தைத் தூண்டும் வேலையைச் செய்து வருகிறது மோடி அரசு.
போலீசும் ஊடகங்களும் அதற்கான அடியாள் வேலையைச் செவ்வனே செய்து வருகின்றன!!
வேளாண் துறை சட்டங்களுக்கு எதிராக கடந்த டிசம்பர் 26-ம் தேதி இந்தியா முழுவதும் டிராக்டர் பேரணிகளை நடத்த வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணிகள், வாகன பேரணிகள் நடைபெற்றன. அன்றைய தினம் மட்டும் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. தன்னை முதல்வராக கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி மோடிக்கு ஏற்ற ஜாடி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
டெல்லியிலே விவசாயிகள் பேரணிக்கு அனுமதி கொடுத்து விட்டு அதிலேயே போலீஸ் திட்டமிட்ட கலவரம் செய்தது போல, திருவாரூரிலும் அப்படிப்பட்ட முயற்சியை செய்தது போலீசு என்பதை அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல அப்படிப்பட்ட முயற்சியை தற்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
டிசம்பர் 25-ம் தேதி பேரணிக்கு அனுமதி கேட்க செல்லும் பொழுது அனுமதி மறுக்கப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு 50 டிராக்டர்களை மட்டும் ஓட்டிச் செல்லலாம் என்று அனுமதி கொடுக்கப்படுகிறது.
அன்றைய தினம் ஆயுதம் தாங்கிய போலீஸ் திருவாரூரில் நகர வீதிகளில் ஒத்திகை அணிவகுப்பு நடத்தி மக்களை அச்சுறுத்துகிறது. போலீசு ஒத்திகை அணிவகுப்பின் நோக்கமே விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு யாரும் வரக்கூடாது என்பதுதான்.
டிசம்பர் 26-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்த டிராக்டர் பேரணியை மறித்த போலீசு, வேண்டுமென்றே தகராறு செய்தது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாக்கைத் துருத்திக்கொண்டு விவசாயிகளை அடிக்கப் போவதும், அதனால் விவசாயிகளை ஆத்திரமடையச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. பின்னர் விவசாயிகள் அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
திருவாரூரிலே டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் போலீஸ் அனுமதி திடீரென்று மறுக்கிறது. பூண்டி கலைவாணன் எம்எல்ஏ டிராக்டரை ஓட்டி வருகிறார். உடன் சிபிஎம், AIKSCC, மாவட்ட பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். வேண்டுமென்றே அந்த ட்ராக்டர் முன்பு இரும்புத் தடுப்புகளை தூக்கி போலீஸ் வீசுகிறது.
ஓடிக்கொண்டிருக்கும் டிராக்டரை கையால் பிடிப்பதற்கு பெண் போலீசை ஏவி விடுகிறார்கள். டிராக்டர் ஓடும்போது வேண்டும் என்றே நடுவில் நின்று கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது ஒரு கலவரத்தை நடத்தி விட வேண்டும் என்று போலீஸ் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தது. அதையும் மீறி விவசாயிகள் வெற்றிகரமாக பேரணியை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
This slideshow requires JavaScript.
அன்றைய தினம் மீண்டும் ஆயுதம் தாங்கிய போலீஸ் மக்களை அச்சுறுத்தும் விதமாக திருவாரூர் நகர வீதிகளில் வலம் வந்திருக்கிறது. பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, அகில இந்திய விவசாயிகளின் போராட்டக் குழுவின் மாவட்ட பொறுப்பாளர் மாசிலாமணி, மற்றும் சிபிஎம் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட கொடூரமான பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஐந்து பேர் பயங்கரவாதிகளை கைது செய்யப்படுவது போல வீட்டில் புகுந்து அதிகாலை கைது செய்யப்படுகிறார்கள். மற்றவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது போலீஸ். கொலை முயற்சி வழக்கு என்பதற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம். ஆக விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினால் பேசினால் ஆயுள் தண்டனைதான் கிடைக்கும் என்பதை போலீசு பதிவு செய்கிறது.
விவசாயிகள் மீதும் விவசாய சங்கத் தலைவர்கள் மீதும் போடப்பட்ட பொய் வழக்குகளை கண்டித்து 31.1.2021 அன்று மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பு மேடைக்கு எதிரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசு கைகளில் லத்தியோடும் கலவரத்தை தடுப்பதற்கான எல்லா கவசங்களோடும் தயாராக இருந்தது. மேடைக்குப் பின்னே வஜ்ரா வாகனங்களும் அதிவிரைவு படை போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தது. எடப்பாடி போலிசின் எதிரி யார்? விவசாயிகளும் விவசாயிகளுக்கு ஆதரவானவர்களும்தான் என்பதைத்தான் இது நிரூபித்தது .
இதையெல்லாம் மீறி சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டம் முடிவடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னரே ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் அங்கிருந்த மக்களிடம் போலீஸ் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் விதமாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஒருவர், அன்று போலீசார் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தாங்கள் எல்லாம் விவசாயி வீட்டுப் பிள்ளைகள் என்றும் கதையளந்து கொண்டிருந்தார் .
ஒரு ஆர்ப்பாட்டம் முடிவதற்கு முன்னரே இப்படியெல்லாம் போலீசு வேண்டுமென்றே ஆத்திரத்தை தூண்டும் வகையில் மைக்கில் பிரச்சாரம் செய்வது எந்த சட்டத்தில் இருக்கின்றது ? போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பேசிய வண்டிக்கு கீழே இரண்டு டிஎஸ்பிக்கள் நின்று கொண்டிருந்தார்கள். இதிலிருந்தே உயரதிகாரிகளின் திட்டப்படி ஆர்ப்பாட்டம் முடிவதற்கு முன்பு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே போலீசு செயல்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ரவுடிகள் எல்லாம் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ்-ல் இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் ஒரு கலவரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்யத் துப்பில்லாத போலீஸ்தான் போராடுகின்ற விவசாயிகளையும் விவசாயிகளுக்கு ஆதரவானவர்களையும் கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு கைது செய்ய தேடிக் கொண்டிருக்கிறது.
This slideshow requires JavaScript.
ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் தேர்தலுக்கு வெளியே அரசு நிர்வாகம், போலீஸ், ரவுடிகள் என அனைத்து இடங்களிலும் தனக்கான ஆட்களைத் தெரிவு செய்து வைத்திருக்கிறது. கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அச்சத்தை கொடுப்பது, மக்களை அச்சத்திலே நிரந்தரமாக இருக்க வைப்பது என்பதுதான் அவர்கள் நோக்கம்.
தேர்தலுக்கான ஒரு கூட்டணியை அமைப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிராமல் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் கும்பலால் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினருக்கும் ஓரணியாக நிற்காமல் இந்த பாசிஸ்டுகளை வீழ்த்துவதைப் பற்றி ஒரு கணம் கூட யோசிக்க முடியாது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்,
திருவாரூர்-82207 16242.
குடியரசு தினவிழா அன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையின் கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக தமிழகம் முழுவதும் கடந்த 30-01-2021 அன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருந்தது. இந்தப் போராட்டத்திற்கு எடப்பாடி அரசு அனுமதி மறுத்ததை கண்டித்தும் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் காஞ்சிபுரம் பகுதி தோழர்கள் கலந்துக் கொண்டனர்.
This slideshow requires JavaScript.
இதில் மக்கள் அதிகாரத்தின் சார்பாக பேசிய தோழர் திலகவதி, எடப்பாடியை மட்டுமல்ல, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசையும் நோக்கி “எடப்பாடி உண்பது சோறா? மலமா?” என்ற கேள்வியை எழுப்பினார். இது வெறும் அம்பானி, அதானிகளுக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல, கல்வி, மருத்துவம் போன்று அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிதி மூலதன கும்பல் இந்த விவசாயத் துறையும், குறிப்பாக கிராம பொருளாதாரத்தைச் சூறையாடி விவசாயிகளை நடுரோட்டில் நிற்க வைப்பதன் மூலம், சோற்றுக்குக் கூட அந்நிய நாடுகளை கையேந்தி நிற்கும் பிச்சைக்காரனாக நமது மக்களையும், விவசாயிகளையும் நிற்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக பேசினார்.
மேலும் அடையாள ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் மூலமாக இந்த அரசை நிர்பந்திக்க முடியாது, டெல்லியில் போராடும் விவசாயிகளை போல, உயிரேபோனாலும் பரவாயில்லை என்று அஞ்சாமல் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்த அரசுடன் நேருக்கு நேர் மோதும் போது மட்டும்தான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட முடியும். அதுவரை நமது போராட்டம் ஓயாமல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பேசினார்.
இந்தப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம், மக்கள் அதிகாரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த தோழர்களும் பொதுமக்களும் இணைந்து கலந்து கொண்டனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் .
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து, டெல்லியில் விவசாயிகள் ஜன.26 நடத்திய டிராக்டர் பேரணியில் போலிசின் தாக்குதலை கண்டித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 30.01.2021 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.
This slideshow requires JavaScript.
இதில், சென்னை பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்துக் கொண்டனர்.
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியை, “வன்முறையாக” சித்தரித்து அவர்களை ஜனநாயக விரோதிகளாகவும், தேசியக் கொடியை மதிக்காத ‘தேச துரோகிகளாகவும்’ காட்டியதன் மூலம் விவசாயிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து வரும் ஆதரவை சீர்குலைக்க முயற்சித்தது. அதையே முகாந்திரமாக வைத்துக் கொண்டு தற்போது, சங்க பரிவாரக் கிரிமினல்கள் விவசாயிகள் அமைதியாகப் போராடும் இடத்தில் மோதலுக்காக திட்டமிட்டுக் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் முதல், டெல்லி சிங்கு, திக்ரி எல்லைகளில் விவசாயிகள் போராடும் இடங்களில் தகராறு செய்யும் நோக்கத்தோடே சங்க பரிவாரக் கிரிமினல் கும்பல்கள் களமிறக்கிவிடப்பட்டுள்ளன.
இன்று மதியம் சிங்கு எல்லையில் விவசாயிகளின் போராட்டக் களத்திற்குள் நுழைந்த இந்து சேனா எனும் சங்க பரிவாரக் கும்பல், அங்கிருக்கும் விவசாயிகளின் கூடாரங்களை அகற்றத் துவங்கியது. அதனை ஒட்டி விவசாயிகளுக்கும் சங்க பரிவாரக் கும்பலுக்கும் மோதல் துவங்கியிருக்கிறது.
போலீசின் கட்டுப்பாட்டை மீறி விவசாயிகளின் போராட்டக் களத்திற்குள் தண்ணீர் லாரி கூட உள்ளே நுழைய முடியாத நிலையில் ஒரு பெரும் கும்பல் உள்ளே அனுமதிக்கப்பட்டிருப்பது என்பது போலீசின் ஒப்புதலின்றி நடந்திருப்பதற்குச் சாத்தியமில்லை.
இன்று மதியம் சுமார் 1.45 மணிக்கு சிங்கு எல்லையிலுள்ள விவசாயிகளின் போராட்டக் களத்திற்குள் இந்து சேனா கும்பல் நுழைந்துள்ளது. உள்ளூர் மக்கள் என்று தங்களை காட்டிக் கொண்ட இந்து சேனாவின் கொண்டையை பத்திரிகைகளும் ஊடகங்களும் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
முதலில் கையில் ஆயுதங்களின்றி நுழைந்த இந்து சேனா கும்பல், இரண்டாவது சுற்றில் ஆயுதங்களோடு நுழைந்து விவசாயிகளைத் தாக்கியுள்ளது. இந்தக் கும்பல் உள்ளே நுழைவதை அனுமதித்த போலீசு கிரிமினல் கும்பலும் தடியடி நடத்தி விவசாயிகளைத் தாக்கியிருக்கிறது. திக்ரி எல்லையிலும் முழுக்க முழுக்க படைகளைக் குவித்துள்ளது மோடி அரசு.
மேலும், காசியாபாத் எல்லையில் போராடி வரும் விவசாயிகள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று நேற்று இரவு. காசியாபாத் நகர நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. காசியாபாத் மாவட்ட ஆட்சியர் அஜய் ஷங்கர் பாண்டே போராடும் விவசாயிகளிடம் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் அல்லது அவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவார்கள் என்றும் மிரட்டி விட்டுச் சென்றுள்ளார்.
காசியாபாத் எல்லையில் விவசாயிகள் தங்கியுள்ள இடத்தில் நேற்று இரவே பலமுறை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசு துணை இராணுவப் படைகளை குவித்து வருகிறது யோகி அரசு. அதோடு விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து சமூக வலைத்தளங்களில் எழுதிய, சசி தரூர் மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக வழக்கு தொடுத்துள்ளது உத்தரப் பிரதேச அரசு.
இது ஒருபுறமிருக்க, காசியாபாத்தின் காசிப்பூர் எல்லையில் இருந்து விவசாயிகளை விரட்டியடிக்க யோகி அரசும், மோடி அரசும் செய்து வரும் சதியை அம்பலப்படுத்தி, அனைத்து உத்தரப் பிரதேச விவசாயிகளும் இந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமென்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் திகாயத் விடுத்த அறைகூவலை அடுத்து, உத்தரப் பிரதேச விவசாயிகள் நேற்று இரவே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காசிப்பூர் எல்லைக்கு விரைந்துள்ளனர். மேலும் பலரும் தற்போது வரை காசிப்பூருக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர் .
மேலும், பாஜக கிரிமினல் கும்பல் இதற்கு முன்னர் கலவரம் நடத்திய முசாபர் நகரில் உழவர்களின் மகா பஞ்சயத்து கூட்டப்பட்டு, அங்கிருக்கும் விவசாயிகள் அனைவரும் திகாயத்தின் அறைகூவலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சாதிய ரீதியாகவும், மத ரீதியாகவும் யாரை இதுவரை தமது அடியாள் படையாக பயன்படுத்தி வந்ததோ அதே மக்கள் இன்று விவசாயிகள் எனும் வர்க்கமாய் ஒன்று திரண்டு பாஜக கும்பலை எதிர்த்து நிற்கின்றனர்.
இந்தச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறாமல் இப்போராட்டக் களத்தில் இருந்து தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர். விவசாயிகளை வன்முறையாளர்கள் என முத்திரை குத்தி அவர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது மோடி அரசு.
அதற்காகவே வன்முறைக் கும்பல்களை களத்தில் இறக்கிவிட்டு, போலீசு காட்டுமிராண்டிக் கும்பலையும் முடுக்கி விட்டுள்ளது. விவசாயிகளின் மீது தாக்குதல் தொடுக்கக் காத்திருக்கும் சங்கப் பரிவாரக் கும்பலுக்கும், மோடி அரசுக்கும் எதிராக அனைத்து மாநிலங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதோடு, இந்த வெறியாட்டத்தை பின் நின்று இயக்கிவரும் கார்ப்பரேட் முதலாளிகளை புறக்கணிப்பதுதான் மூன்று வேளாண் மசோதாக்களையும் பின்வாங்கச் செய்வதற்கான ஒரே வழிமுறை
1950-ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி, உலகம் முழுவதும் காரல் மார்க்சின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது, கம்யூனிச தத்துவத்தின் படி வாழ்ந்தவனும், தஞ்சை மாவட்டத்தின் பண்ணை முதலாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவனுமான வெங்கடாச்சலம் என்ற வாட்டாக்குடி இரணியனும், அவனது தோழன் ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள வடசேரி என்ற கிராமத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
அவர்கள் ஏன்? எதற்காக? கொல்லப்பட்டார்கள் என்ற ஆவலை நமக்குள் ஏற்படுத்தி, இரணியனின் அப்பழுக்கற்ற, சுயநலக் கலப்பில்லாத, தியாகம் நிறைந்த வாழ்க்கையை சொல்லியிருக்கிறார் ச.சுபாஷ் சந்திர போஸ். இந்த நூல் சமூகத்திற்கு உரமாகிப்போன ஒரு மாமனிதனின் வரலாற்றைச் சொல்வதோடு மட்டுமல்லாமல் , அவனது தியாக வாழ்க்கையை நமக்குள் விதைத்து கனமான வேதனையையும் ஏற்படுத்துகிறது.
இரணியன் பிறப்பு
1920-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பிறந்த இரணியனுக்கு ஒரு அக்கா , தம்பி நாராயணன் , தங்கைகள் சிவபாக்கியம் மற்றும் மீனாட்சி ஆகியோர் உடன்பிறந்தவர்கள். இரணியனுன் இயற்பெயர் வெங்கடாச்சலம். தனது 14-வது வயதில் தனது அக்கா கணவருடன் சிங்கப்பூர் செல்லும் வெங்கடாச்சலம் அங்கு பணம் ஈட்டுவதற்கு புட்டு, இடியாப்பம் போன்ற உணவுப் பண்டங்களை விற்கும் சிறு வியாபாரியாக வாழ்கிறான். அந்த சூழ்நிலையில் தமிழர்களுக்கு, தீவிரத்தன்மை கொண்ட மலேசிய மற்றும் சீனர்களால் பல தொல்லைகள் ஏற்பட்டன . அவர்களையெல்லாம் அடித்து விரட்டி தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருந்தான். அதனால் இவனது பெயரும் புகழும் சிங்கப்பூரில் பிரபலமடையத் துவங்கியது. சில நாட்களுக்குப் பிறகு அவனது அக்கா கணவரின் தொடர்பும் துண்டிக்கப்படுகிறது. வெங்கடாசலம் சுயமாக வாழத் துவங்குகிறான்.
இந்த சமயத்தில் பிழைப்பிற்காக இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த தம்பிக்கோட்டையைச் சேர்ந்த மலேயா கணபதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணல்மேல்குடி கிராமத்திலிருந்து வந்த வீரசேனன் ஆகியோர்களின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்கள் மூலம் கம்யூனிசச் சித்தாந்தங்களையும் உலக, இந்திய, தமிழக வரலாறுகளையும் நன்கு படித்துத் தெரிந்து கொள்கிறான்.
பழந்தமிழ் பாடல்களில் உள்ள தமிழர்களின் வீரமும் மானத்தோடு வாழ்ந்த வாழ்க்கையும் அவனுக்கு மெய் சிலிர்ப்பைத் தருகிறது. உயிர் போனாலும் தான் மானத்துடன் வாழ வேண்டும் என்பதைத் தாரக மந்திரமாகவே ஏற்றுக் கொள்கிறான். மண்ணாக இருந்த என்னைக் குழைத்துக் கல் ஆக்கினார்கள் என்று அவர்களைப்பற்றி நன்றியுடன் குறிப்பிடுகிறான் . கார்ல் மார்க்சின் சித்தாந்தம் உறுதிமிக்க செங்கல் ஆக்கியது.
இந்திய தேசிய இராணுவத்தில் இரணியனின் பங்கு
அப்போது, இரண்டாவது உலகப் போருக்கான மேகங்கள் தெரிந்தன. உலகப்போர் மூளுமானால் வெள்ளையரோடு ஒத்துழைக்காமல் அவர்களோடு போரிட்டுக் கிழக்காசியாவை மீட்கக் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருந்தது. இளைஞர்களுக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை அழைத்துக் கொரில்லாப் பயற்சி கொடுத்தது. இராஷ் பிஹாரி போஸ் அமைந்து இருந்த இந்திய தேசிய லீக்கில் ஆயிரக்கணக்கான கம்யூனிசிய இளைஞர்கள் சேர்ந்து பயிற்சி பெற்றார்கள். அதில் வெங்கடாசலமும் சேர்ந்தான். அங்கே வெங்கடாசலம் என்ற பெயரில் இருவர் இருந்ததால் தன் பெயரை “இரணியன்” என்று மாற்றிக்கொண்டான். இதுவே சரித்திரத்தில் நிலைத்துப் போன பெயராகி விட்டது.
இந்நிலையில் 1943-ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனியிலிருந்து பல இடையூறுகளைத் தாண்டி சிங்கப்பூர் வருகின்றார். அவர் சிங்கப்பூர் வந்ததும் இந்திய மக்களிடையே ஒரு புதுத்தெம்பு பிறக்கின்றது. அவர் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இந்திய வம்சாவளி ஆண்களும் பெண்களும் சேர்ந்தார்கள். இரணியனும் “இந்திய தேசிய இராணுவத்தில்” சேர்ந்து இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபடுகிறான். ஏற்கனவே இருந்த பயிற்சியோடு கொரில்லா போர்முறையை இன்னும் நன்றாகக் கற்று தேர்ச்சி பெறுகிறான். இப்பயிற்சியே தஞ்சை மண்ணில் பண்ணையார்களுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தது வரலாற்று உண்மை.
நேதாஜி
இரணியன் தனது தோழர்கள் மலேயா கணபதி , வீரசேனன் ஆகியோருடன் சேர்ந்து ஒரு முறை சுபாஷ் சந்திர போஸை சந்தித்தாகவும் , கிழக்காசியாவை ஜப்பான் பிடித்து விட்டால் , போருக்குப் பிறகு மக்களிடம் ஆட்சியை ஒப்படைக்குமா ? , முதலையைப் போல பிடியைவிடாமல் இருக்குமா? போரில் இந்திய தேசிய இராணுவம் வெற்றி பெற்றால் ஜப்பான் இந்தியாவிலும் தன் மூக்கை நீட்டுமா ? என்ற கேள்விகளை எழுப்பி வாக்குவாதம் அவரிடம் செய்ததாகவும், அதற்கு, போர் முடிவிற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இன்முகத்தோடு கூறி சுபாஷ் சந்திர போஸ் இவர்களை அனுப்பி வைத்ததாகவும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்திய தேச விடுதலைக்காக நேதாஜி தலைமையின் கீழ் போரிட்ட “விடுதலைப் போராட்ட தியாகி” இரணியன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
பின்னர், அமெரிக்கா ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டை வீசியது. ஜப்பான் அரசாங்கம் நிலை குலைந்தது. ஜப்பான் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை . இதனால் இந்திய தேசிய இராணுவத்திற்குப் பயங்கரமான உயிர்ச்சேதம் ஏற்பட்டது. உணவு , உடைக்கு வழியில்லாமல் வீரர்கள் திண்டாடினார்கள். ஆங்கிலேய இராணுவத்தால் பலர் கைது செய்யப்பட்டனர். பலர் கைதாகாமல் தப்பி ஓடிவிட்டனர். இரணியனும் சில முக்கியமான தோழர்களும் ஆங்கில அரசின் பிடியில் சிக்காமல் தங்கள் பழைய இடத்திற்கு வந்தார்கள்.
சிங்கப்பூர் துறைமுகத் தொழிற்சங்கத் தலைவராக இரணியனின் பணிகள்:
இந்திய தேசிய இராணுவத்திலிருந்து திரும்பிய பிறகு , எண்ணிக்கையில் மூன்று லட்சம் தொழிலாளர்கள் இருந்த அகில மலேயா தொழிலாளர்களுக்குத் தலைவர் ஆகிறார் கணபதி. அதன் காரியதரிசி ஆகிறார் வீரசேனன். அப்போது எல்லாத் தொழிற்சங்கங்களும் ஓரளவு செயல்பட்டாலும் துறைமுகத் தொழிற்சங்கத்தை சிறப்பாக நடத்த முடியவில்லை. இந்தச் சங்கம் பலமாக இருந்தால் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கும் என ஆங்கிலேய அரசு இதை நசுக்குவதில் கவனமாக இருந்தது. ஏறத்தாழ 12000 தொழிலாளிகள் இருந்த அந்தச் சங்கத்தை வலுப்படுத்த அதன் தலைவர் பதவி இரணியனுக்கும், காரியதரிசி பதவி பட்டுராசுவிற்கும் கொடுக்கப்படுகிறது.
இரணியன் பொறுப்பிற்கு வந்தவுடன், குடியின் பிடியிலிருந்த துறைமுகத் தொழிலாளர்களை நெறிப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கிறான். தொழிலாளர்கள் யாரும் குடிக்கக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வருகிறான். மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.
அப்போது சிங்கப்பூரில் ரவுடிகளின் பிடி அதிகமாக இருந்தது . ஒவ்வொரு பகுதிக்கு ஒரு ரவுடி என்று அவர்களுக்குள் சிங்கப்பூரை பிரித்துக் கொண்டு மக்களை கசக்கிப் பிழிந்து வந்தார்கள். அதில் துறைமுகத் தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். அதனால் அவர்களுக்கு பாடம் புகட்டத் திட்டமிட்டான் இரணியன். அதனால் பிரபலமான ரவுடி ஒருவனை தேர்ந்தெடுத்து அவனை மக்கள் முன்னிலையில் அடித்து நொறுக்குகிறான் . அவன் உயிருக்கு பயந்து சிங்கப்பூரை விட்டு ஓடி விடுகிறான்.
மற்ற சிலரையும் அடக்க முடிவெடுத்த இரணியன் , அவர்களில் முக்கியமான நால்வரைத் தேர்ந்தெடுத்து ஒரு நாள் இரவு இரகசியமாக சுட்டுக் கொன்று விடுகிறான். சிங்கப்பூர் ஆடிப்போகிறது. இக்கொலைகளை யார் செய்தார்கள் என்று தெரியாவிட்டாலும் இரணியனின் பெயர் தான் சிங்கப்பூர் நகரம் முழுவதும் எதிரொலிக்கிறது. அதனால் குடியும் , ரவுடிகளின் தொல்லைகளும் குறைந்து துறைமுகத் தொழிலாளர்களின் வாழ்வு செழித்தது.
இரணியனின் தலைமையில் துறைமுக தொழிற்சங்கம் மிகச் சிறப்பாக செயலாற்றியது. பட்டுராசுவின் நேர்மையான நடவடிக்கையால் சந்தாத் தொகை லட்சக்கணக்கான வெள்ளிகள் சேர்ந்தன. ஆனாலும் இரணியனும் , பட்டுராசுவும் தொழிலாளர்கள் நிதியிலிருந்து ஒரு வெள்ளி கூட எடுத்து செலவு செய்யமாட்டார்கள். அத்தகைய நேர்மையாளர்களாக நடந்து கொண்டார்கள்.
ஒரு நாள், இரணியன் மனதில் தனது குடும்பத்தைப் பற்றிய சிந்தனை எழுகிறது . நாம் எதற்காக இந்த சிங்கப்பூர் வந்தோம்? . பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றத்தானே! . ஆனால், இது வரை தான் ஒரு வெள்ளி கூட தனது குடும்பத்திற்கு அனுப்பவில்லை என்ற நினைவு ஏற்படுகிறது. அவனது மனம் வேதனையில் வாடுகிறது. அதனால் இரணியன் இந்தியா திரும்ப நினைக்கிறான். அவனுக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க பட்டுராசு முன்வந்த போது , வேண்டாம் என்று மறுத்து விடுகிறான். இரணியன் இந்தியாவிற்குள் கிளம்பும் செய்தி எங்கும் பரவி விட்டது. வழியனுப்ப ஆயிரக்கணக்கானோர் கூடி விட்டார்கள் . சொந்த நிலக்காரன் அறுவடை நாளில் அடையும் மகிழ்ச்சியைப் போல் இரணியன் தன சேவையின் பலனைக் கண்டான். அந்த மாவீரனின் மனம் நெகிழ்ந்து போனது.
தனது 14 வயதில் சிங்கப்பூர் வந்த இரணியன் , 28 வயதில் இந்தியா திரும்புகிறான். தனது குடும்பத்தினருக்கு மட்டும் ஒரு பெட்டியில் சில துணிமணிகள் வாங்கிக் கொண்டான். எப்படி வெறுங்கையோடு சிங்கப்பூர் வந்தானோ , அதே வெறுங்கையோடு இந்தியா திரும்புகிறான். ஆனாலும், அந்தப் பெட்டிக்குள் ஒரு துப்பாக்கியும் இருந்தது. அதற்கு வேலையும் இந்தியாவில் காத்திருந்தது.
தஞ்சை மண்ணில் களப்பணி:
இரணியன் நாடு திரும்பியபோது இந்தியா சுதந்திரமடைந்திருந்தாலும் , கீழ்த்தஞ்சைப் பகுதியில் பண்ணையார்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் பண்ணைத் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வந்தார்கள். மரத்தில் கட்டி வைத்து அடிப்பது, மூங்கில் குழாயை வாயில் நுழைத்து சாணியைக் கரைத்து ஊற்றுவது மற்றும் அவன் மனைவியின் மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லி துன்புறுத்துவது போன்ற கொடுமைகளைச் செய்து வந்தார்கள்.
சாம்பவான் ஓடை சிவராமன்
அப்போது , 1948-ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலம் அது . கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தோழர் சீனிவாச ராவ் தலைமையில் இரகசியமாகவே தங்கள் பணியை செய்து வந்தார்கள். இரணியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறான். ஆங்காங்கே கட்சியின் கிளைகளும், விவசாய சங்கங்கள் நிறுவப்படுகின்றன.. அந்த வகையில் “தென்பறை”யில் தான் முதன் முதலில் விவசாயச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இரணியன் தன் பணியை தென்பறையிலிருந்து மீண்டும் துவங்குகிறான்.
அவனது பணியில் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள சாம்பவான் ஓடை சிவராமனும், ஆம்பலாப்பட்டைச் சேர்ந்த ஆறுமுகமும் இணைந்து கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் முக்குலத்தோர் இனத்தில் அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது சாதியத்தை உடைத்து , உழைக்கும் ஏழை மக்களுக்காக அவர்களது உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு கம்யூனிச சித்தாந்தம் அவர்களை ஒன்றிணைத்திருந்தது கம்யூனிசத்தின் வெற்றியாகவே பார்க்க முடிகிறது. இவர்கள் பண்ணை முதலாளிகளுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் திகைப்பூட்டுவதாக இருக்கிறது.
ஆந்திராவில் இருந்த உத்திராபதி மடத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாட்டாக்குடி , முத்துப்பேட்டைப் பகுதிகளில் இருந்தது. அதை நிர்வகிக்கும் பொறுப்பு இராயர் என்ற பண்ணையாரின் கையில் இருந்தது. இரணியன் அவரது அடியாட்களை அடித்து நொறுக்கி அவருக்கு பயத்தை ஏற்படுத்துகிறான். அவர் தமது கொடுமைகளை அரங்கேற்ற முடியாமல் ஏழை கூலித் தொழிலாளிகளுக்கு சரியான கூலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
விவசாயச் சங்கம் ஊர் ஊருக்கு ஆரம்பித்துக் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகள் தீவிரமான போது பண்ணை முதலாளிகளும் தீவிரமானார்கள். அவர்களும் ஒரு சங்கம் அமைத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளை ஒழிக்க முனைந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் பரவாக்கோட்டையை சேர்ந்த நாயுடும் ஒருவர். இந்த நாயுடுவும் சளைக்காமல் பண்ணைத் தொழிலாளர்களை நசுக்குவார்.
அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய இரணியன் , அவரது வீட்டை தனது தோழர்கள் ரகுநாதன் , தங்கவேலு கோட்டூர் இராசு மற்றும் ரெத்தினம் ஆகியோர்களின் துணையுடன் கொள்ளையிட்டு அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு பிரித்துக் கொடுக்கிறான். இந்தக் கொள்ளை சம்பவத்தில் பாம்பு கடித்த ஒருவருக்கு மருந்து கட்ட செல்வது மற்றும் தென்னைமட்டையில் துப்பாக்கி செய்து பண்ணையாரின் அடியாட்களை மிரட்டுவது போன்ற இரணியனின் திட்டங்கள் அவனது புத்திசாலித்தனத்தை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. இதன் மூலம் இரணியனின் பெயர் போலீஸ் குறிப்புகளில் ஒரு தீவிரவாதியாக அடையாளப்படுத்தப் படுகிறது.
சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த இடங்களில் ஆம்பலாப்பட்டும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது . தென்பறையில் முதலாவது விவசாயத் சங்கம் ஆரம்பித்த பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாவதாக ஆரம்பித்த பெருமை உடையது . இந்த ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற துடிப்பான இளைஞன் இரணியனுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உகந்தவனாக இருக்கிறான். ஒரு தம்பியாக இருந்து அவனுக்கு வேண்டியதைச் செய்கிறான். ஆறுமுகத்திற்கு கம்யூனிச சித்தாந்தங்களை புரிய வைக்கிறான் இரணியன். அவன் இரணியனின் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிப்போகிறான். “அண்ணே நான் ஒங்களுக்காவச் சாகனும் ; இல்லாட்டி உங்களோட சாகனும்” என்று இரணியனிடம் சொன்னதோடு அவ்வாறே வாழ்ந்தவன்.
பொதுவாக அன்றைய பண்ணை முதலாளிகள் உழைக்கின்ற மக்களின் உழைப்பை மட்டும் சுரண்டுபவர்கள் என்பதில்லை. நூறு, ஐம்பது பணத்தை ஏழைத் தொழிலாளர்களிடம் கொடுத்து விட்டு ஆயிரக்கணக்கில் வட்டிகளைச் சேர்த்து எழுதி பிடுங்குவார்கள். கொஞ்சம் நிலம் வைத்து இருக்கும் குடியானவர்களிடமும் பணத்தைக் கொடுத்துக் கணக்கைக் கூட்டி எழுதிக் கடைசியில் நிலத்தை எழுதி வாங்கி விடுவார்கள்.
இந்த விஷயத்தில் செம்பாளுர் பண்ணையாரும் சளைத்தவர் இல்லை. இதற்கென்று ஒரு தனிக் கணக்குப்பிள்ளை போட்டு எழுதி வைத்து இருந்தார். கடன் வசூல் செய்கிறேன் என்று கணக்குப்பிள்ளை செய்த அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஒருநாள் ஆம்பலாப்பட்டுத் தோழர்கள் முருகையன், காசிநாதன் , ஆறுமுகம் , சுப்பையன் ஆகியோர்கள் கணக்குப்பிள்ளை வீட்டுக்குள் புகுந்து பிராம்சரி நோட்டுகள் இருந்த பெட்டியை வெளியே தூக்கி வந்து தீ வைத்துக் கொளுத்தினார்கள். ஆம்பலாப்பட்டு கிராமத்தில் ஒருவரை மிஞ்சி ஒருவர் கட்சிக்காக தங்களை அர்ப்பணிப்பதை எண்ணி இரணியன் மகிழ்ச்சியடைந்தான்.
இந்த வகையில் பண்ணை முதலாளிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்த இரணியன் தஞ்சை மாவட்டத்தின் வனப்பகுதிகளிலும் , வயல்களிலும் ஒளிந்து திரிந்து அலைந்தான் . அவனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள்; பிடிக்க முடியாவிட்டால் சுட்டுக் கொல்லவும் திட்டமிட்டு இருந்தனர். அதனால் இரணியனைப் பிடிப்பதற்காக அவன் தம்பி நாராயணனை பிடித்து அடித்து உதைக்கிறார்கள். அவனது அம்மா மற்றும் தங்கைகளுக்கு இடைவிடாத தொல்லைகள் தருகிறார்கள். இருந்தாலும் , பிறருக்காக வாழ்ந்த இரணியனுக்காக அவனது குடும்பம் மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்தது.
இரணியனின் குடும்ப வாழ்க்கை
இரணியனின் குடும்ப வாழ்க்கையானது மிகவும் வேதனைகள் நிறைந்தது. தனது தாயின் கண்ணீருக்காக தனது அக்காள் மகள் செல்லமணியை திருமணம் செய்துகொள்ள இரணியன் சம்மதிக்கிறான். ஆனால் , அவனது மைத்துனன் எதிர்ப்புத் தெரிவிக்க, அதை மறுத்து செல்லமணியை தூக்கி வந்து திருமணம் செய்து கொள்கிறான். திருமண செய்தியை அறிந்து கொண்ட போலீசார் இரணியனின் வீட்டை முற்றுகையிடுகின்றனர். இரணியன் தப்பி விடுகிறான். ஆனால் இரணியனின் அம்மாவையும் , மனைவி செல்லமணியையும் போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள்.
அவர்களை விடுவிக்க இரணியன் சரணடைய வேண்டும் , இல்லையென்றால் அவன் மனைவி செல்லமணிக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். இந்த வேதனையான நேரத்திலும் இரணியன் சரணடையவில்லை . அதனால் இரணியன் கட்டிய தாலியை போலீசார் அறுத்து, அவனது உறவுக்காரப் பையனிடம் கொடுத்து மறுபடியும் தாலி கட்டச் செய்கிறார்கள். அன்றைய போலீசு கொடுங்கோன்மைக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?
பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு முன்னால், குடும்பம் எல்லாம் இரண்டாம்பட்சம் தான் என தியாகமே உருவாக வாழ்ந்து காட்டியவன் இரணியன்.
இரணியனின் மரணம்:
இந்த சூழ்நிலையில் இரணியனின் தலையில் ஒரு பெரிய விஷப்பரு உருவாகிறது. அதற்கு மருந்து கட்ட இரணியனும், ஆறுமுகமும் மருத்துவரைப் பார்க்க வடசேரி கிராமத்தின் வழியாக வருகிறார்கள். அப்போது வடசேரி பட்டாமணியன் சம்பந்தமூர்த்தி கண்ணில் பட்டு, அவர் இரணியனின் துப்பாக்கியைப் பார்த்து பயந்து , திருடன் திருடன் என்று கத்தியவுடன் வடசேரி கிராம மக்கள் ஓடி வந்து இரணியனையும், ஆறுமுகத்தையும் பிடித்துக் கொள்கிறார்கள்.
ஆனால், தாங்கள் பிடித்து வைத்திருப்பது இரணியன் என்று அவர்களுக்கு தெரியாது; தெரிந்தவுடன் அவனை உடனே கிராமத்தை விட்டு போய்விடுமாறு கூறுகிறார்கள். இதற்கிடையில் இரணியனை பிடித்து வைத்திருக்கும் செய்தி பட்டாமணியன் மூலமாக போலீசிற்கு போய் சேருகிறது.
இரணியன்
போலீஸ் வரும்போது தான் இல்லையென்றால், தன்னை தப்ப விட்டதற்காக அவர்கள் வடசேரி கிராமத்தையே அழித்துவிடுவார்கள் என்பது இரணியனுக்குத் தெரியும். அதனால் அந்த கிராமத்தை காப்பாற்றும் பொருட்டு தான் சுடப்பட்டாலும் பரவாயில்லை என்ற முடிவை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்து விடுகிறான். ஆனால், ஆறுமுகத்தின் மீது போலீசில் எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாததால் அவனை தப்பிச் செல்லுமாறு கூறுகிறான். ஆறுமுகம் மறுத்து விடுகிறான். இரணியனோடு அவனும் மரணத்தைத் தழுவ தயாராகிறான்.
இரணியன் சுடப்படுவதற்கு முன்பு அவன் பேசுவதாக நூலாசிரியர் ச. சுபாஷ் சந்திர போஸ் பதிவு செய்திருக்கும் வார்த்தைகள் நம் மனதில் மிகுந்த கனத்தை ஏற்றுகிறது. இரணியன் இவ்வாறு கூறுகிறான்:
“சிங்கப்பூர் மக்கள் நிம்மதியாக வாழ, அந்த நாட்டையே நடுங்கச் செய்து கொண்டிருந்த நான்கு பேரைச் சுட்டுக் கொன்றேன். மற்றவர்கள் சிங்கப்பூரை விட்டே ஓடி விட்டார்கள். பொது மக்கள் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். அது என்னைத் தென்றலாக தழுவியது. துறைமுகத் தொழிற்சங்கத்தில் பேருக்குத் தலைவனாக இருந்தேன். ஆங்கில அரசால் சீரழிக்கப்பட்ட தொழிற்சங்கத்தைக் கட்டிக் காத்தேன் . தொழிலாளர்களின் குடும்பங்கள் நிம்மதியாக வாழப் பல வழிவகைகள் செய்தென். நான் நினைத்து இருந்தால் கிழக்காசிய ரவுடிகளுக்கே தலைவன் ஆகி இருப்பேன். கோடிக்கணக்கான வெள்ளிகள் என் காலடியில் கொட்டி இருக்கும்.
குடும்ப வறுமையின் காரணமாகவே என் பெற்றோரால் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். நெற்றியில் ஒட்டி வைக்கக் கூட ஒரு கால் ரூபாய்க் காசை நான் ஊருக்கு அனுப்பியது இல்லை. சிங்கப்பூரில் தொழிற்சங்கப்பணமும் என் மனமும் எண்ணெயும் தண்ணீரும் போலவே இருந்தன . என் தோழர் தொழிற்சங்கக் காரியதரிசி பட்டுராசுக்கு மட்டுமில்லை சிங்கப்பூரில் எல்லோருக்கும் தெரியும்.என்னால் பணக்காரனாக ஆக முடியவில்லை. ஆனால் ஒரு புரட்சியாளனாக ஆக முடிந்தது. அதற்காக பெருமைப்படுகின்றேன்”.
1950-ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி வாட்டாக்குடி இரணியனும், அவனது தோழன் ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் போலீஸ் டி.எஸ்.பி சுப்பையாபிள்ளை என்பவரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். உண்மையில் வாட்டாக்குடி இரணியன் என்ற புரட்சியாளன் புதைக்கப்படவில்லை.. விதைக்கப்பட்டிருக்கிறான் என்றே கருதுகிறேன். ஆனாலும், அந்த மாவீரனுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுக்காமல் இந்தச் சமூகமும், அவன் நேசித்த கம்யூனிஸ்ட் இயக்கமும் அவனை மறந்து போனது வலி மிகுந்த துயரத்தைத் தருகிறது.
சாதி- மத வெறியர்களும் , கார்ப்பரேட் முதலாளிகளும் நம் நாட்டை சூழ்ந்திருக்கும் தற்போதைய சூழலில், அவர்களுக்கு எதிராக போராட நம் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இரணியனுக்கும், சாம்பவான் ஓடை சிவராமனுக்கும் உயிர் கொடுத்து உலாவ விட்டிருக்கிறார் நூலாசிரியர் ச. சுபாஷ் சந்திரபோஸ் என்றே கருதுகிறேன்.
உழைக்கும் மக்களும், கம்யூனிசமும் இருக்கும் வரை இரணியனும் வாழ்ந்து கொண்டிருப்பான்!
நூல் : வாட்டாக்குடி இரணியன் நூல் ஆசிரியர் : ச. சுபாஷ் சந்திரபோஸ் வெளியீடு : பாக்கியம் பதிப்பகம் , தஞ்சாவூர் விலை : ரூ.250.00
பக்கங்கள் : 374
பதிப்பு: முதல் பதிப்பு 2017 கிடைக்குமிடம் : பாக்கியம் பதிப்பகம், 22பி / 2739, தொப்புள் பிள்ளையார் தெரு, தஞ்சை – 1 தொடர்புக்கு : 99405 58934
நூல் அறிமுகம் : சு. கருப்பையா
குறிப்பு : தோழர் சு. கருப்பையா அவர்கள் பொதுத்துறை நிறுவனமான BSNL இல் முதன்மை கணக்கு அதிகாரியாக பணிபுரிந்து விருப்பஓய்வு பெற்றவர். இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர். BSNL அதிகாரிகள் சங்கமான AIBSNLEA சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலராகவும், மாநில அமைப்புச் செயலராகவும் மத்திய சங்க செயற்குழு உறுப்பினராகவும் பல பொறுப்புகளில் பணியாற்றியவர்.
தமிழகத்தின்தாய்ப் பல்கலைக் கழகமாகவிளங்கும்சென்னைப்பல்கலைக் கழகத்தில்பல்வேறுமாவட்டங்களைச்சேர்ந்தமாணவர்கள்தங்கிப்பயிலும்மெரினாவளாகமுதுகலைமாணவர்கள்விடுதியில்உணவகத்தைஇழுத்துமூடி விட்டு, மாணவர்களைபட்டினியில்தள்ளிஉணவகத்தொழிலாளர்களுக்கானசம்பளத்தையும்மாணவர்களையேகட்டச்சொல்லும்நிர்வாகத்தின்வழிப்பறிக்கொள்ளைஅரங்கேறி வருகிறது.
மேலும், 2020 மார்ச்மாதம்பாதியிலிருந்துகொரோனாஊரடங்கின்காரணமாகநாடுமுழுவதும்கல்லூரி, பல்கலைக்கழகங்கள்இழுத்துமூடப்பட்டுஇணையவழியில்கல்விநடந்துவந்தசூழலில், பல்கலைக்கழகவிடுதிமாணவர்கள்அனைவரும்சொந்தஊரில்இருந்தநிலையிலும்,ஏப்ரல்முதல்தற்போதையநவம்பர்2020 வரையிலானஉணவகதொழிலாளர்களுக்கானசம்பளத்தைமாணவர்களையேகட்டச்சொல்லி விடுதி நிர்வாகம் தொடர்ந்துவற்புறுத்திவருகிறது.
மேலும், ஜனவரி2020 – லேயேவிடுதியைகாலிசெய்துவிட்டுசென்றஒருமாணவரின்கணக்கில்ஜனவரி2020 முதல்ஜூன்2020 வரைரூபாய்8500 பில்போட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்விடுதியில்தண்ணீர்வரவில்லைஎன்றுகூறியபோது“ஃபீஸ்கட்டினால்சரிசெய்வோம்” என்கிறார். ஒருஅடிப்படைபிரச்சனைக்கும், ”பணத்தைகட்டு..தீர்க்கலாம்”என்றுநடைமுறையில்தனியார்நிர்வாகமாகவேமாறிநிற்கிறார்கள்.
இந்நிலையில்நேற்றுமதியம்2.30 மணியளவில்இருந்துகீழ்க்கண்டகோரிக்கைகள்அடிப்படையில்போராட்டத்தைதுவக்கினோம். ஆனால்,பதிவாளர்தரப்புமுறையாகபேச்சுவார்த்தையில்ஈடுபடவிரும்பாமல் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை துறைத் தலைவர்களை வைத்து மிரட்டுகிறார்கள்.தொடர்ந்து நாங்கள்பல்கலைக்கழகசேப்பாக்கவளாகத்திலேயேஉள்ளிருப்புபோராட்டம்நேற்றையஇரவைத்தொடர்ந்துதற்போதுஇரண்டாம்நாளாகதொடர்நது நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த கட்டணக் கொள்ளைஎன்பதுஎங்களுக்குமட்டுமல்லாமல்பொதுவாகவேஇந்தஊரடங்கில்அரசுபல்கலைக்கழகம், கல்லூரிநிர்வாகங்கள்வரவில்எத்தகையநெருக்கடியும்ஏற்படக்கூடாதுஎன்பதில்தெளிவாகவேஇருக்கிறார்கள். அதற்குமாணவர்களின்தலையைஉருட்டுகிறார்கள்.
எனவே எங்களின் கோரிக்கைகளுக்காக அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென்று இதன் வழியாக கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்படுத்தப்பட்ட போலீசுடனான மோதல்களைக் காரணம் காட்டி, விவசாயிகளுடனான வேளாண் சட்டத் திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் தனது கை ஓங்கியிருப்பதாகக் கருதுகிறது மோடி அரசு. மேலும் விவசாய சங்கங்கள் குறித்த அவதூறுகளையும் பாஜக மற்றும் தமது அடிவருடி ஊடகங்களின் மூலமும் செய்து வருகிறது.
கடந்த 26-01-2021 அன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் போலீசால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட மோதல் சம்பவங்களைத் தொடர்ந்து இதனை விவசாயிகளின் வன்முறையாக சித்தரிக்கத் துவங்கியது மோடி அரசு.
மோடி அரசுக்கு ஒத்து ஊதும் வண்ணம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் இதனை “விவசாயிகளின் வன்முறை” என்றே குறிப்பிட்டன. இதன் போக்கில் இது விவசாய சங்கங்களின் ஜனநாயக விழுமியங்களின் மீதான கேள்வியாக மாற்றப்பட்டது.
இதன் விளைவாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் கமிட்டியிலிருக்கும் ஒரு சில விவசாயிகள் சங்கங்கள், டெல்லியில் நடந்த மோதலில் பாஜக – சங்க பரிவாரக் கும்பலின் சதி குறித்தும் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டத்தில் ”வன்முறை” வெடித்ததற்கு காரணமாக ஒரு சில விவசாய சங்கங்களை, வேறு சில விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டின.
இந்தக் குற்றச்சாட்டுகளையே பெரும் பிளவாகக் காட்டும் வேலையை மோடி அரசு தற்போது துவங்கியிருக்கிறது. அதனை அரசாங்கத் தரப்பிலிருந்தும், பாஜக தரப்பிலிருந்து முன்னெடுத்திருக்கிறது. இப்படிக் காட்டுவதன் மூலம், விவசாயிகள் சங்கங்கள் மற்றும் போராட்டங்களின் மீதான மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் சீர்குலைத்துவிட முடியும் என்று நம்புகிறது.
விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருந்து வரும் குரல்கள்தான் விவசாயிகள் களத்தில் நிற்பதற்கான உத்வேகத்தை அவர்களுக்கு வழங்குகின்றன. இந்த அடித்தளத்தைக் கலைக்க விரும்புகிறது மோடி அரசு.
மேலும் விவசாய சங்கங்களின் இடையே உள்ள சிறு சிறு கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் கொடுத்த சலுகைகளை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது மோடி அரசு. இது குறித்து மோடி அரசின் பிரதிநிதிகள் சிலரிடம் பேசிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் விரிவாகக் கூறியிருக்கிறது.
“பேச்சுவார்த்தை மேஜையில் அரசாங்கத்தின் கை இப்போது ஓங்கியுள்ளது. எங்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளாண் சங்கத் தலைவர்கள், போராட்டக்காரர்கள் மீதான தங்களது பிடிப்பை இழந்துவிட்டனர். இந்த வாய்ப்பை கருணைமிக்க வெளியேறும் வழியாக கருதிக் கொண்டு அரசாங்கம் ஏற்கெனவே முன் வைத்தனவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பில் மாற்றுக் கருத்து கொண்டுள்ளோரையும் தனித்தனியாகப் பார்த்துப் பேசி அவர்களை போராட்டத்தில் இருந்து விலகச்செய்வதற்கான முயற்சிகளில் அரசுத் தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் தெரிவிக்கிறது.
அரசுத் தரப்பில் இருந்து இத்தகைய வேலைகளைச் செய்து கொண்டிருக்கையிலேயே அக்கம்பக்கமாக பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல், ஊடக விவாதங்களின் மூலமாகவும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் விவசாயிகள் சங்கத்தில் இருக்கும் சிறு சிறு சலசலப்புகளை பூதாகரமாக காட்டி பேசி வருவதோடு அவர்கள் பலமிழந்துவிட்டதாகவும் பேசி வருகிறது.
ஜனவரி 26, 2021 அன்று டெல்லியில் நடத்தப்பட்ட விவசாயிகளின் டிராக்டர் பேரணி, சரியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்த நாளாக வரலாற்றில் பதிவாக வேண்டுமே தவிர விவசாயிகளின் போராட்டங்கள் பின்வாங்க அடித்தளமிட்ட நாளாக அடையாளப்படுத்தப்பட்டு விடக் கூடாது. அதற்கு உடனடியான தேவை விவசாய சங்கங்களை அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து ஆதரித்து அவர்களுக்கு ஊக்கமளிப்பதுதான்.
பெரும்பான்மை மக்களாகிய நாம் விவசாயிகளுடன் இருக்கிறோம் என்பதை அவர்களிடம் உறுதியாகக் காட்டும்போது, உத்வேகமாக வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல முடியும்.