Tuesday, June 30, 2026
முகப்பு பதிவு பக்கம் 306

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மோடி- அமித்ஷா கும்பல் கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும்; அந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடிய ஜாமியா மிலியா, ஜே.என்.யு., அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டிச-19 அன்று தமிழகம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

இஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் !
டெல்லி மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் !
பா... – ஆர்.எஸ்.எஸ்.-ன் காவி பாசிசத்திற்கு எதிராக போராட்டத் தீ பரவட்டும் ! – என்ற மைய முழக்கத்தின் கீழ் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் போலீசின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

நாட்டை நாலாய் பிளந்து போட்டு
கார்ப்பரேட்டுக்கு விற்கத் துடிக்கும்
மோடியும் – அமித்ஷாவும்
இந்திய தேச பக்தர்களா?

கூறுபோட்டு விற்றுத் தின்ன
இந்தியா ஒன்றும் அமித் ஷாவின்
அப்பன் வீட்டுச் சொத்து இல்லை.

நாட்டை இந்து ராஷ்டிரம் ஆக்கும்
ஆர் எஸ்எஸ் சதித் திட்டத்தை
வீதியில் நின்று முறியடிப்போம்! – என்பது உள்ளிட்ட முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் எழுப்பினர்.

திருச்சி:

மதுரை :

பெரியார் கட்டபொம்மன் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை வகித்தார். புரட்சிகர மாணவர்  – இளைஞர் முன்னணியைச்  சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி தோழர் சினேகா ; சிவகங்கை மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர்  தோழர் நாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

விருத்தாசலம் :

விருத்தாசலம், பாலக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் :

விழுப்புரம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

கும்பகோணம் :

தஞ்சை மண்டல மக்கள் அதிகாரம் சார்பில், குடந்தையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், தஞ்சை – மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சண்முகசுந்தரம்; தஞ்சை – மாவட்ட ஒருங்கினைப்பார் தோழர் தேவா உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி :

தருமபுரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்களை, தருமபுரி B1 இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வாடா, போடா என ஒருமையிலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியும் வலுக்கட்டாயமாக கைது செய்தார்.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு: 99623 66321.

நடக்கும் வரை தான் நாம் வாழ்கிறோம் ! | ஃபரூக் அப்துல்லா

  • அடிக்கடி பேருந்துகளில் பல மணிநேரங்கள் தொலைதூரப்பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ?
  • மகிழ்வுந்தில் வீக்கெண்ட் சில நூறு கிலோமீட்டர்கள் லாங் ட்ரைவ் செல்பவரா நீங்கள்?
  • தொலைதூர விமானப்பயணங்களின் மூலம் காலை நியூயார்க்கில் காபி
    மாலை டோக்கியோவில் டின்னர் சாப்பிடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்?
  • குடும்பத்தைக்காக்க வருமானத்துக்காக சரக்கு லாரிகளை மாநிலம் விட்டு மாநிலம் ஓட்டும் லாரி ஓட்டுநர்கள் / அரசு விரைவுப்போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்கள் / தனியார் மொஃபசல் பேருந்து ஓட்டுனர்கள்

இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கானது தான்.

சமீபத்தில் புது டெல்லியை சேர்ந்த சவுரப் சர்மா எனும் முப்பது வயது இளைஞர்
வீக்கெண்ட் ஜாலி ட்ரைவாக ரிசிகேஷில் இருந்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார்

இவரது வண்டி ஒரு ஆட்டோமேட்டிக் வண்டி ஆதலால் இடது காலுக்கு வேலை இல்லை. வழக்கமான கியர் வண்டியில் இடது கால் க்ளட்ச்சில் எப்போதும் கால் இருக்க வேண்டும். ஆனால் ஆட்டோமேட்டிக்கில் ப்ரேக் ஆக்சிலேட்டர் இரண்டும் வலது காலால் இயக்கினால் போதும்.

மேலும் விலையுயர்ந்த கார்களில் “cruise” மோட் என்று இருக்கும். நாம் நெடுஞ்சாலையை அடைந்தவுடன் அடைய வேண்டிய வேகத்தை அடைந்து விட்டு க்ரூஸ் போட்டு விடலாம்.

இப்போது வலது காலுக்கும் வேலை இருக்காது.

சரி விசயத்துக்கு வருவோம். இந்த தம்பி சுமார் எட்டு மணிநேரம் நான் ஸ்டாப்பாக வண்டியை செலுத்தி தனது அலுவலகத்தை அடைந்துள்ளார்.

கூடவே நன்றாக டைட்டாக இருக்கும் படியான சாக்குத்துணியால் ஆன பேண்ட்டை அணிந்துள்ளார். என்னது சாக்குதுணியா? என்று கேட்காதீர்கள். நாம் உபயோகிக்கும் ஜீன்ஸ் பேண்ட் உருவாக்கப்படும் டெனிம் வகை துணி – சாக்குத்துணி தானே.

நமது சீதோஸ்ன நிலைக்கு சற்றும் பொருந்தாது என்றாலும் நாம் ஃபேசனுக்காக ரோசத்தை விடும் கூட்டமன்றோ?

இந்த ஜீன்ஸ்னால தான் உங்க விந்தணு குறையுதுடா… குழந்தை பாக்கியம் இல்லாம சந்ததி தழைக்காம.. சந்தி சிரிச்சுபோகுதுடா.. பேராண்டிகளா.. வேணாம்டா பேராண்டிகளா.. என்று டிவியில் வரும் சேலம் தாத்தா போன்று கூறினாலும் யூத்துகள் விடவதாக இல்லை.

படிக்க :
மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !
♦ ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் ! வீடியோ

சரி… இந்த டைட் டெனிம் பேண்ட் போட்டுக்கொண்டு எட்டு மணிநேரம் வண்டியை ஓட்டிக்கொண்டு போன அவருக்கு இடது கனுக்காலில் நன்றாக வலி இருந்துள்ளது.

முதல் அறிகுறிகளை புறக்கணிப்பது இந்திய நோயாளி கண்டிப்பாக கடைபிடிக்கும் எழுதப்படாத சட்டமன்றோ..?

தம்பியும் அந்த வலியை புறக்கணித்து இரண்டு நாட்கள் அலுவலகம் செல்கிறார். அங்கும் குத்த வைத்தபடியே பணி செய்யும் வொய்ட் காலர் வேலை தான்.

வலி அதிகமாகியிருக்கிறது. இரண்டாவது நாள் அலுவலகத்தில் நண்பர்களுடன் இருக்கும் போது தீடீரென்று கண்ணைக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறது.
இதை Black outs என்கிறோம். கூடவே மூச்சிரைப்பும் படபடப்பும் பிறகு மூர்ச்சை நிலைக்கு சென்று விட்டார்.

கொஞ்ச நேரம் கழித்து நினைவு வந்தாலும் மீண்டும் மயக்கத்துக்கு செல்ல, ஆபத்தில் உதவுபவர்கள் தானே நண்பர்கள். உடனே இவரை பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அங்கே நாடித்துடிப்பு மிக குறைவாக இருக்கவே இதயத்துடிப்பையும் சுவாசத்தையும் மீட்கும் நவீன மருத்துவத்துறையின் பிரம்மாஸ்திரமான cardio pulmonary resuscitation-ஐ செய்து உடலை விட்டு பிரிந்து சென்ற உயிரை மீண்டும் பிடித்து இழுத்து வந்து இரண்டுக்கும் கால்கட்டு போட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

இதெல்லாம் சரி.. இப்ப அவருக்கு என்ன தான் நடந்துச்சு.. அத சொல்லுங்க டாக்டர்..
நானும் வாரக்கடைசில சென்னைல இருந்து வண்டிய கெளப்பி நான்ஸ்டாப்பா மதுரைக்கு கார் ஓட்டிட்டு போய்ட்ருக்கேன், என்று நமது ஐடி துறை சகோதரர்கள் பதுறுவதும் அவர்கள் இதயத்துடிப்பு லபக்கு டபுக்கு என்று இங்கு வரை கேட்கிறது.

சொல்கிறேன் ..

ஒரு மனுசன் இவ்வளவு நேரம் தான் படுத்துருக்கணும்.. இவ்வளவு நேரம் தான் காலை தொங்க போட்டு வச்சுருக்கணும்.. இவ்வளவு நேரம் தான் தொடர்ந்து உக்கார்ந்துருக்கணும்னு விதி இருக்கு.

சாதாரண சிசேரியன் செய்தாலும் மருத்துவர் பிள்ளை பெற்ற அந்த பச்சை உடம்புக்காரியை வலியே இருந்தாலும் பரவாயில்லை எழுந்து நடந்தே ஆகணும் என்று வற்புறுத்துவது எதனால்?

காரணம் இருக்கிறது… நாம ஒரே இடத்தில் பல மணிநேரம் எந்த அசைவும் கொடுக்காம கால்கள தொங்க போட்டோ? அல்லது நீட்டியோ வைத்திருந்தால் நமது கால்களில் இருக்கும் ரத்த ஓட்டம் மொதுவாகும். மேலும் காலில் இருந்து மேலே செல்ல வேண்டிய ரத்தத்தில் சுழற்சியும் குறையும். இதனால் stasis எனும் ரத்த ஓட்ட மந்த நிலை ஏற்படும்.

இதனால் நமது கால்களில் உள்ள ஆழத்தில் இருக்கும் சிறைகளில் Deep vein thrombosis என்ற பிரச்சனை வரும். அதாவது அந்த சிறைகளில் ரத்தம் கட்டியாக மாறிவிடும்.

இந்த ரத்தக்கட்டி நாம் அடுத்து எழுந்து நடக்கும் போது நமது காலின் சிறைகள் வழியாக பயணித்து inferior vena ceva எனும் பெரிய சிறைதனில் நுழைந்து
இதயத்தில் உள்ள வலப்பக்க மேல்புற அறையான Right atrium அடைந்து அங்கிருந்து right ventricle வழியாக நுரையீரலுக்கு பம்ப் செய்யப்பட்டு நுரையீரலின் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதை pulmonary embolism என்கிறோம்.

Deep vein thrombosisஇது போய் மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தினால் அது பக்க வாதம் (stroke) வரவழைக்கும். இதை thrombo embolic stroke என்கிறோம். இதய ரத்த நாளங்களை அடைத்தால் அதற்கு பெயர் myocardial infarction.

ஏன் சார்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு ஒரு லாங்க் ட்ரைவ்ல நான்ஸ்டாப்பா ஓட்டி புது வொயஃப் கிட்ட சீன் போடலாம்னு பாத்தா… அதுலயும் இப்டி பயம்புருத்துறீங்களே? என்று கேட்கிறீர்களா

என்ன செய்வது?

நம் உடலின் இயற்கை அப்படி. நாம் நடந்து நடந்தே பழக்கப்பட்ட பிராணிகள். நாம் நடப்பதை நிறுத்தினால் மரணம் வரப்போகிறது என்று அர்த்தம். நமது கால்களின் கணுக்கால் பகுதியில் Soleus எனும் பிரத்யேகமான தசை உள்ளது. இதை இன்னொரு இதயம் என்றே அழைக்கலாம் . நாங்கள் இதை peripheral heart என்று செல்லமாக அழைக்கிறோம்.

இதன் வேலை கால்களில் ரத்த ஓட்டத்தை ஒரு இடத்தில் நிற்க விடாமல் ரத்த கட்டிகள் உருவாகிவிடாமல் இருக்க ஒரு விநாடிக்கு 9.8 மீட்டர் என்ற அளவில் இழுக்கும் பவர்ஃபுல் புவிஈர்ப்பு சக்தியை எதிர்த்து ரத்தத்தை பம்ப் செய்கிறது.
இது ஏறக்குறைய நம் அந்த கால அடிகுழாய் போன்று வேலை செய்கிறது.

ஒரு பக்கமாக ரத்தத்தை மேலே ஏற்றிவிட்டு, கீழே ரத்தம் இறங்காமல் பார்த்துகொள்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சோலியஸ் தசை கூட
நீரிழிவு, உடல் பருமன், முதுமை போன்றவைகளால் வலுகுறைகிறது.

கால்களுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தை நாம் டைட்டான பெல்ட்/ டைட்டான சாக்குத்துணி பேண்ட் அணிந்து தடுத்தால் என்ன நடக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

படிக்க :
“இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” – அருந்ததிராய்
♦ சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா

இந்த கட்டுரையின் கடைசி கட்டம்:

டேக் ஹோம் அட்வைசஸ்

1. வீக்கெண்ட் ட்ரிப் நிச்சயம் தேவை. லாங்க் ட்ரைவும் ஓகே. ஆனால் நான் ஸ்டாப்பாக பல மணிநேரம் பயணிக்க வேண்டியதில்லை. நம்மை நம்பி தானே நெடுஞ்சாலையோர டீக்கடைகள் இருக்கின்றன. இறங்கி இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும் ஒரு சாயா அடிக்கலாம் அல்லது சிறுநீர் கழிக்கலாம். இப்படி நின்று நிதானமாக செல்வது தான் நல்லது. நம் கூட பயணிக்கும் அனைவரும் ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் இறங்கி இரண்டு நிமிடம் நடந்து விட்டு பிறகு வந்து காரில் ஏறுவது சிறந்தது.

2. எந்த நெடுந்தூரப்பயணத்திற்கும் டெனிம் துணிகள் அணிய தகுதியானைவை அல்ல. பருத்தி துணிகள் சிறந்தவை. அளவுக்கு பொருந்தாத டைட் ஜீன்ஸ்கள் வேண்டாம். பேலியோவுக்கு மாறினால் அந்த டைட் ஜீன்ஸ்களும் லூசாக வாய்ப்பு உண்டு 😃

3. முதியோர் / நீரிழிவு நோயர்கள் / ரத்த அழுத்தம் இருந்து மாத்திரை எடுப்பவர்கள்
பேருந்துகளில் நெடுந்தூர பயணங்களில் இருக்கும் போது கட்டாயம் வண்டி நிற்கும் போது ஏறி இறங்குவது நல்லது. இடை நில்லாப்பேருந்தாக இருந்தால் குறைந்தபட்சம் எழுந்து கொஞ்ச நேரம் நின்று உட்காரலாம் அல்லது கால்களை தையல் மிசின் அமுக்குவது போல அமர்ந்த படியே செய்யலாம். இது கால்களின் ரத்த ஓட்டம் மந்தமாகாமல் தடுக்கும்.

4. லாரி ஓட்டுநர்கள்/ தொலை தூர வாகன ஓட்டிகள் கட்டாயம் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வண்டியை நிறுத்தி விட்டு ஒரு கிலோமீட்டராவது நடந்து விட்டு வண்டியில் ஏற வேண்டும். என்னை சந்திக்கும் பல பேருந்து ஓட்டுனர்களுக்கு நீரிழிவு / ரத்த கொதிப்பு இருக்கிறது.

5. விமானங்களில் நெடுந்தொலைவு பயணப்படும் மக்கள் வண்டி சீட் பெல்ட் அணியத்தேவையில்லாத உயரத்தை அடைந்ததும் கட்டாயம் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து சிறுநீர் வராவிட்டாலும் பரவாயில்லை. ஃப்ளைட்டில் டாய்லெட் எப்படி இருக்கிறது என்று பார்க்கவாவது எழுந்து நடங்கள்.
ஏர் ஹோஸ்டஸ் அம்மணிகள் என்ன நினைப்பார்களோ? அருகில் இருக்கும் கோட் சூட் போட்ட அங்கிள் என்ன நினைப்பாரோ? என்றெல்லாம் சங்கோஜப்படாதீர்கள்.

6. இதயத்தில் வால்வு ஆபரேசன் செய்யப்பட்டு அடைப்பு நீக்கம் / செயற்கை வால்வு பொருத்தப்பட்டவர்களுக்கு ரத்தம் உறையாமல் தடுக்க அசிட்ரோம் போன்ற மாத்திரைகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும். பயணத்தின் போது அந்த மாத்திரையை மறந்து விடாதீர்கள் சொந்தங்களே.

7. வீட்டில் நடக்கவே இயலாத நிலையில் இருக்கும் முதியோர் இருப்பார்கள். அவர்களுக்கு முழங்கால் முட்டிப்பகுதியில் காலை அவ்வப்போது மடக்கி நீட்டும் பிசியோதெரபி செய்ய வேண்டும். தையல் மிசினை அமுக்குவது போன்ற எக்சர்சைஸ் செய்ய வேண்டும்.

8. முதியவர்கள் / கர்ப்பிணிகள் / வேரிகோஸ் வெய்ன் பிரச்சனை இருப்பவர்கள் கால்களில் கம்ப்ரசன் ஸ்டாக்கிங்க்ஸ் அணிந்து கொண்டு பயணம் செய்யலாம்

9. கட்டாயம் தொலை தூரப்பயணத்தின் போது தண்ணீர் போதுமான அளவு அருந்த மறக்கக்கூடாது. காரணம் நீரிழப்பு ரத்தத்தை எளிதில் உறைய வைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் குடித்தால் யூரின் போக வேண்டி வரும் என்று முக்கியமாக பெண்கள் சரியாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அவர்களுக்கானது இந்த எச்சரிக்கை.

10. எந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும் சரி.. மருத்துவர் எழுந்து நடக்க சொல்லிவிட்டால் நடக்க வேண்டும். எத்தனை வலித்தாலும் பரவாயில்லை. எழுந்து நடக்க வேண்டும் எழுந்து நடக்கும் வரை தான் நாம் வாழ்கிறோம்.

நடை நின்று விட்டால்
ஒன்று நாம் அதை நெருங்கி விட்டோம்
அல்லது
அது நம்மை நெருங்கி விட்டது
என்று அர்த்தம்

பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

குழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 16 (இறுதி)

பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்புகளை ஆரம்பிப்பதை ஏதோ மூன்றாண்டு ஆரம்பக் கல்வி முறை சரிப்பட்டு வராததால், நான்காண்டு ஆரம்பக் கல்விக்குத் திரும்பி வருவதாகக் கருதக் கூடாது. இதை மூன்றாண்டு ஆரம்பக் கல்வியாகவும் (ஒவ்வொரு வகுப்பிலும் வயது வரம்பு ஓராண்டு குறைக்கப்பட்டுள்ளது) கருதக்கூடாது. உண்மையில் பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பு கல்வி முறையில் குணாம்ச ரீதியான மாற்றத்திற்கு வழிகோல வேண்டும். இது பிந்தைய வகுப்புகளுடன் ஒரே தொடர்ச்சியாக விளங்க வேண்டும்; அதே சமயம் குழந்தைகளின் விசேஷ வயதின் காரணமாக விசேஷ கடமைகளை ஏற்க வேண்டும், அதாவது மாணவன் எனும் சிக்கலான வேலைக்கு குழந்தையை மனவியல், தார்மீக, சமூக ரீதியாக, மூளை வளர்ச்சி ரீதியாக தயார்படுத்த வேண்டும். இந்த அம்சங்களும் ஆறு வயதுக் குழந்தைகளுடனான எனது பணியின் அடிப்படையாகத் திகழ்ந்தன.

பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பை அமல்படுத்துவதால் ஆரம்ப வகுப்புகளில் ஐந்து நாள் கல்வி வாரத்தை நிறைவேற்றுவது சாத்தியமாகிறது. ஐந்து நாள் கல்வி என்றால் வெறுமனே பாட நேரத்தைக் குறைக்க வேண்டுமென்றோ, இவற்றை ஐந்து நாட்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்க வேண்டுமென்றோ பொருளாகாது. ஐந்து நாள் கல்வி வாரத்தில் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரும் தரம் உயர வேண்டும். ஐந்து நாள் வாரம் என்பது கல்வி – வளர்ப்பு போக்கு, பாடத்திட்டங்கள், பாடநூல்கள், முறையியல் அம்சங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டின் விளைவாக இருக்க வேண்டும். பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் ஒருவேளை ஐந்து நாள் வாரத்தை அமல்படுத்துவதால் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கலாம்.

ஆனால் கல்வி – வளர்ப்புப் போக்கை குணாம்ச ரீதியாக மேம்படுத்தாமல் இருந்தால், பிந்தைய வகுப்புகளில் ஆசிரியருக்கு நேரம் பற்றாக்குறையாக இருக்கையில் குழந்தைகளின் தயாரிப்பு மட்டத்தை உரிய அளவில் வைப்பது கடினமானதாக இருக்கும். அதே சமயம் குடும்ப வளர்ப்பின் பயன் தன்மையை எப்படி மேம்படுத்துவது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். பெற்றோர்களுக்கு சில அடிப்படை விஷயங்களை சொல்லித் தருவதோடு கூட மேல் வகுப்பு மாணவர்கள் மற்றும் விசேஷ தொழில் நுட்பக் கல்லூரி, உயர் கல்விக்கூட மாணவர்கள் ஆகியோருக்குக் குடும்ப வளர்ப்பு அடிப்படைகளைச் சொல்லித் தருவது சிறந்ததாய் இருக்கும். இந்த ஞானத்திற்குச் சமுதாய முக்கியத்துவம் உண்டு. இதை நாடு தழுவிய அளவில் இளைஞர்களுக்கு ஊட்ட வேண்டும். இரண்டு நாள் விடுமுறையின் போது குழந்தைகளின் ஓய்வு, உழைப்பு, பொழுது போக்கிற்குச் சமுதாய ரீதியாக ஏற்பாடு செய்யும் பிரச்சினையும் தோன்றுகிறது.

பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் கல்வி போதனை எவ்வளவு வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பது வகுப்பறையில் உள்ள ஆசன இருக்கைகளைப் பெரிதும் பொறுத்துள்ளது. மற்ற சாதனங்கள், கருவிகளோடு சேர்ந்து இவையும் – கல்வி முறையின் இயல்பான அங்கமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் பன்முக வளர்ச்சிக்கு ஆசிரியருக்கு உதவ வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆரம்ப வகுப்புகளில் விசேஷ ஆசன இருக்கைகள் பிரச்சினை ஸ்தல விஷயமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆரம்ப வகுப்பிலும் (பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பு உட்பட) ஒரு சில நவீன, போதனை முறைக்கு ஏற்ற வசதியான கரும்பலகைகள், ஆசிரியருக்கு வசதியான மேசை, குழந்தைகளுக்குத் தனித்தனி சிறு அலமாரிகள் முதலியன தேவை.

டெஸ்க்குகள்? பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை நான்காண்டுகளுக்கு குழந்தை ஒரே டெஸ்கில் – அதுவும் முதலில் இதன் கால்கள் ஆடும், பின் இதன் மீது சாய வேண்டும் – உட்கார வேண்டும் என்பதை சகித்துக் கொள்ள இயலுமா? குழந்தைகளின் உயரத்திற்கேற்ப டெஸ்குகளைப் போடவும், வேறு வேலைகளின் போது இவற்றை மடித்து வைத்து இடமேற்படுத்தவும் என்னால் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? இந்த டெஸ்குகளை மேடைகளை அமைக்க, வீடுகள், கப்பல்களைக் கட்டி விளையாட குழந்தைகளால் பயன்படுத்த முடியும் என்றால் பள்ளி வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானதாக, உணர்ச்சிகரமானதாக மாறும்?

படிக்க :
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு | ராஜு – கருணானந்தன் – முத்துகிருஷ்ணன் உரை | காணொளி
பேராசிரியர் சாய்பாபாவை விடுவிக்கக் கோரி் கனடாவில் பேரணி !

பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் எப்படி செயல்பட வேண்டும் என்பது சம்பந்தமாக என் அனுபவம் பத்து கேள்விகளை என் முன் வைத்துள்ளது. இவற்றிற்கு என்னால் உறுதியாக ”வேண்டாம்” (“முடியாது”, “இல்லை”) என்றோ ”ஆம்” (”முடியும்”, “அவசியம்”) என்றோ பதில் சொல்ல முடியும்.

பின்வரும் கேள்விகளுக்கு நான் எதிர்மறையில் பதில் அளிப்பேன்:

    1. முதல் வகுப்புப் பணியின் அனுபவத்தை மாற்றமின்றி அப்படியே பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் பயன்படுத்தலாமா? – கூடாது.
    2. ஆசிரியரின் கட்டளைகள், ஏவல்களை உடனடியாக நிறைவேற்றுமாறு குழந்தைகளைக் கட்டாயப்படுத்தலாமா? – கூடாது.
    3. கட்டாய வீட்டுப் பாடங்களைக் குழந்தைகளுக்குத் தரலாமா? – கூடாது.
    4. குழந்தைகளுக்கு மதிப்பெண்களைப் போடலாமா? – கூடாது.
    5. வகுப்பில் யார் மற்றவரை விட நன்றாகப் படிக்கின்றனர் என்று சொல்லலாமா?
      – கூடாது.
    6. வகுப்பில் குழந்தைகள் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார வேண்டும் என்று கோரலாமா? – கூடாது.
    7. குழந்தை வகுப்புக்குக் கொண்டு வந்த விளையாட்டு சாமானைப் பிடுங்கலாமா?
      – கூடாது.
    8. குழந்தையைப் பெயில் செய்யலாமா? – கூடாது.
    9. சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டுமென குழந்தைகளிடம் சொல்லலாமா?
      – கூடாது.
    10. ஆறு வயதாக 2-3 மாதங்கள் உள்ள குழந்தைகளை பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாமா? – கூடாது.

பின்வரும் கேள்விகளுக்கு ‘ஆம்” என்று பதில் தருவேன்:

    1. பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பிற்கு விசேஷ முறை வேண்டுமா? – ஆம்.
    2. நர்சரிப் பள்ளியில் மூத்த வயது குழந்தை வளர்ப்புப் பணியில் கிடைத்த அனுபவத்தை பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் பயன்படுத்தலாமா? – ஆம்.
    3. பாடங்களைப் படிப்பதில் குழந்தைகள் ஆசிரியரை விஞ்ச அவர்களுக்கு ஊக்கம் தரலாமா? – ஆம்.
    4. குழந்தைகள் கண்டுபிடித்து, திருத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர் வேண்டுமென்றே தப்பு செய்யலாமா? – ஆம்.
    5. குழந்தைகளுடனான பணியில் ஆசிரியர் கலைத் திறமையை வெளிப்படுத்த வேண்டுமா? – ஆம்.
    6. குழந்தைகள் சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு விதமான வேலைகளைத் தரலாமா? – ஆம்.
    7. குழந்தைகளின் சுய வேலையை அதிகப்படுத்த வேண்டுமா? – ஆம்.
    8. குழந்தைகள் பாடங்களை மதிப்பிட வேண்டுமா? – ஆம்.
    9. குழந்தைகளைப் பற்றிய சான்றிதழ்களைப் பெற்றோர்களுக்கு வழங்க வேண்டுமா, குழந்தைகளின் வேலைகள் அடங்கிய பாக்கெட்டுகளைத் தயாரிக்க வேண்டுமா?
      – ஆம்.
    10. பெற்றோர்களுக்கான வெளிப்படையான பாடங்களை நடத்த வேண்டுமா? – ஆம்.

இந்த “ஆமாம்”, ‘கூடாது” எனும் பதில்களையும் குழந்தைகளுடனான வேலையின் போது தோன்றக் கூடிய இது போன்ற பிறவற்றையும் எனது கருத்துப்படி மிக முக்கியமான, ஒரே சரியான ஆசிரியரியல் நிலையிலிருந்து பெறுகிறேன். இதையே இனியும் தொடர்ந்து பின்பற்றுவேன்:

குழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும், இவர்களை இப்படி நேசிக்க, இந்த நேசத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டுமென இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளி நாளையும் ஒவ்வொரு பாடவேளையையும் ஆசிரியர் குழந்தைகளுக்கான பரிசாக யோசித்துச் செயல்பட வேண்டும். குழந்தை, ஆசிரியருடன் ஒவ்வொரு முறை கலந்து பழகும் போதும் இது மகிழ்ச்சியையும் எதிர்கால நம்பிக்கையையும் அவன் மனதில் ஊட்டவேண்டும்.

<< முற்றும் >>

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு ! கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0

ந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த மோடி அமித்ஷா கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் நாடெங்கிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக,  டெல்லி ஜாமியா மிலியா பல்கலை  தொடங்கி சென்னை பல்கலை வரையில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

டெல்லி ஜாமியா மிலியா, JNU, அலிகார் பல்கலையில் போராடிய மாணவர்கள் மீது மிருகத்தனமாக தாக்குதலை போலீசு கட்டவிழ்த்துவிட்டிருந்த நிலையிலும் இப்போராட்டங்கள் தொடர்கின்றன என்பது இங்கே கவனிக்கத்தக்கது. சென்னை பல்கலையில் இரண்டு நாட்களுக்கு மேலாக உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாக பல்கலைக்கு ஜன-2 வரை விடுமுறை அறிவித்திருப்பதோடு, விடுதி மாணவர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : டிவிட்டரில் திடீர் முசுலீமாக மாறிய காவிகள் !
சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! புதிய ஜனநாயகம் டிசம்பர் இதழ் !

சமூக அக்கறையின்றி வாட்சப் – பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது, மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள்.

கடலூர், பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக தங்களது கல்லூரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

முதல்நாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் :

”ஜாமியா மிலியா, JNU, அலிகார் பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய போலீஸ், ராணுவத்தை கண்டித்தும்; ஈழத்தமிழர்களை, இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும்; பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்”  என்ற கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக முன்வைத்துள்ளனர்.

♦ ♦ ♦

”குடியுரிமை திருத்த சட்டத்தை நிராகரிப்போம்” என்ற அறைகூவல் விடுத்து டிச-19 அன்று முதல் கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மற்றும் கோவை பகுதிகள்.

♦ ♦ ♦

மோடி அரசின் CAB-ஐ எதிர்த்து விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்!

ந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் தேசிய குடியுரிமை சட்டம் கொண்டுவந்த மோடி அமித்ஷா அரசுக்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா மிலியா, JNU, அலிகார் பல்கலைக்கழகம் என நாடு முழுக்க போராடக்கூடிய மாணவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய போலீஸ், ராணுவத்தை கண்டித்தும்.

ஈழத்தமிழர்களை, இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் இந்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். எனவும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று (19.12.2019) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CAB சட்டத்தை மோடி அரசு வாபஸ் பெறாவிட்டால் போராட்டங்களை மாணவர்கள் நாங்கள் தொடர்ந்து நடத்துவோம் என, மோடி எடப்பாடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

♦ ♦ ♦

திண்டிவனம்  அரசு கலைக் கல்லூரியில்  19.12.19 தேதி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், ஜாமியா, அலிகார் மற்றும் ஜே.என்.யூ பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும். மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 


தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம் : 91593 51158.

சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! புதிய ஜனநாயகம் டிசம்பர் இதழ் !

பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா!
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2019

1. குடியுரிமைச் சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல்!
இந்திய அரசு என்பது இந்து அரசுதான் என்பதை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சட்டபூர்வமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது, மோடி அரசு.
2. பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா!
பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் அளிக்கப்பட்டிருப்பதைப் போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது.
3. அயோத்தி, இராம ஜென்மபூமி: வரலாறும் புனைசுருட்டும்
அயோத்தியில் இராமர் வழிபாடு அனாதிகாலந்தொட்டே இருந்து வரவில்லை. 12ஆம் நூற்றாண்டில்தான் அவ்வழிபாடு அயோத்தியில் வேர்விடத் தொடங்கியது.
4. ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை!
பாபர் மசூதிக்குக் கீழேதான் இராமன் பிறந்தான் என்பது ஆர்.எஸ்.எஸ்., தனது அரசியல் நோக்கங்களுக்காக இந்துக்களிடம் திணித்த விஷக் கருத்தேயொழிய, அது மத நம்பிக்கை கிடையாது.
5. பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம்.
6. பாபர் மசூதி ராம ஜென்மபூமி: பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!
பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்த டி.என். ஜா – வின் நேர்காணல்.
7. மசூதிக்கு அடியில் கோயில்: மூலக்கதை ஆர்.எஸ்.எஸ். திரைக்கதை தொல்லியல் துறை!
2003 தொல்லியல் துறை அளித்த இந்த அறிக்கையும், அதன் அடிப்படையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் ஏன் தவறானவை என்று சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பில் ஆய்வை மேற்கொண்ட சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகிய இரு தொல்லியல் ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
8. பாபர் மசூதி இடிப்பு வழக்கு: மறுக்கப்படும் நீதி!
ஒன்றல்ல, இரண்டல்ல; இருபத்தேழு ஆண்டுகளாக பாபர் மசூதி இடிப்பு வழக்கு
நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்படுவதை நீதி மறுக்கப்படுவதாகக் கூற முடியாதா?
9. சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்
சட்ட வரம்புகளை மீறியும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் சபரிமலைத் தீர்ப்பை முடக்கிப் போட்டுவிட்டது, உச்ச நீதிமன்றம்.
10. அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா!
அதானி குழுமத்திற்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்காக பழவேற்காடு பகுதி அழிக்கப்பட்டால், அது சென்னையின் அழிவைத் துரிதப்படுத்தும்.
11. ஒப்பந்த சாகுபடிச் சட்டம்: விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி!
விளைபொருட்களுக்கு உத்தரவாதமான விலையை இச்சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவதாகக் கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வீழ்த்துகிறது, தமிழக அரசு.
12. பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு: அமெரிக்காவின் நாட்டாமை!
அதிபர் ஈவா மொரேலஸ் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கொள்ளைக்கு முட்டுக்கட்டை போட்டதாலேயே, அவரது ஆட்சியைச் சதிசெய்து கவிழ்த்துவிட்டது, அமெரிக்கா.
13. சிலியின் வசந்தம்!
மக்கள் விரோத அரசைப் பணிய வைக்க எப்படிப் போராட வேண்டும், எதை நோக்கிப் போராட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது சிலி மக்களின் எழுச்சி.
14. பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : முடிவல்ல, தொடக்கம்!

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

ஐந்து கால் மனிதன் | அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
டந்த வாரம், பனியால் மூடப்பட்ட ஒரு நாள், ரொறொன்ரோ மருத்துவமனை ஒன்றில் ஹெலன் என்ற பெண்மணியை சந்தித்தேன். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சுப்பர்மாக்கெட்டுக்கு வெளியே சந்தித்து இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இவர் முகத்தை மறந்துவிட்டேன். ஆனால் அவர் என்னை அடையாளம் கண்டுவிட்டார்.

முதுகு எலும்பு எக்ஸ்ரே எடுப்பதற்காக வந்திருந்தார். இவருடைய கணவர் கடந்த 5 வருடங்களாக படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். தீராத முதுகு வலியால் ஹெலன் 24 மணிநேரமும் வேதனை அனுபவிக்கிறார். அதே துப்புரவுத் தொழிலைத்தான் இப்பவும் செய்கிறார். எந்த நேரமும் வேலை போகக்கூடும். ஆனால் பழைய சிரிப்பு இன்னமும் போகவில்லை. இவரிடம் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.

இதோ அந்தக் கதை…

ஐந்து கால் மனிதன்

நான் அமர்ந்திருந்தேன். சுப்பர்மார்க்கெட்டின் வெளியே காணப்பட்ட பல இருக்கைகளில் ஒன்றில். அந்தப் பெண் வந்து பொத்தென்று பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தார். சீருடை அணிந்திருந்தார். கையிலே பேப்பர் குவளையில் கோப்பி. தான் செய்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருந்தார். துப்புரவுப் பணிப்பெண் என்பது பார்த்தவுடன் தெரிந்தது. வயது 50 க்கு மேலே இருக்கும். கறுப்பு முடி, நீலக் கண்கள். வெண்மையான சருமம். கிழக்கு ஐரோப்பிய பெண்ணாக இருக்கலாம். ஒருவேளை ரஸ்யப் பெண்ணாகவும் இருக்கலாம். கோப்பியை சத்தம் எழுப்பாமல் குடித்தபடி யோசனையை எங்கோ தூரத்தில் செலுத்திவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். அந்தக் கண்களில் வெளிப்பட்ட துயரம் போல ஒன்றை நான் முன்னர் கண்டதில்லை. அதுவே அவருடன் என்னைப் பேசத் தூண்டியது.

‘இன்றைய வேலையை முடித்துவிட்டீர்களா?’ என்று கேட்டேன். ‘இல்லை, இன்னும் பாதி வேலை இருக்கிறது. ஓய்வெடுக்கிறேன்’ என்றார். அவருடைய அலங்காரம், பேச்சு, நடக்கும் தோரணை, ஆங்கில உச்சரிப்பு இவற்றை வைத்து பார்த்தபோது அவர் நீண்ட காலமாக ரொறொன்ரோவில் வசிக்கிறார் என்பதை உணர முடிந்தது. துப்புரவுப் பணியில் அநேகமாக புதிதாக குடிவந்தவர்கள் அல்லது அகதிக் கோரிக்கையாளர்கள்தான் வேலை செய்வது வழக்கம். நீண்டகாலம் வசிப்பவர்கள் சீக்கிரத்தில் வேறு தொழிலுக்கு மாறிவிடுவார்கள். ஆகவே இந்தப் பெண் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

‘நீங்கள் கனடாவுக்கு எப்பொழுது குடிபெயர்ந்தீர்கள்?’ என்று கேட்டேன். அவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு 13 வயது நடந்தபோது தனியாக கனடாவுக்கு வந்தார். அவருடைய தகப்பன் அவருக்கு ஹெலென் என்று பெயர் சூட்டினார். ஹோமருடைய இதிகாசத்தில் வரும் பேரழகி ஹெலென். பிறந்தபோது அவர் அத்தனை அழகாக இருந்தாராம். புராணத்தில் வரும் ஹெலெனை பாரிஸ் என்ற வீரன் கடல் கடந்து அபகரித்துப் போனான். ஹெலென் என்ற பெயரைக்கொண்ட இந்தப் பெண்ணும் ஏறக்குறைய அம்மாதிரித்தான் கடத்தப்பட்டார். அவரே தன் மீதிக் கதையை கூறினார்.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஹெலன் உடன்.

‘எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஏழு பிள்ளைகள். நான் ஆறாவது. என் அப்பாவுக்கு ஒரு கால் கிடையாது. அவர் எப்பொழுதும் குதிரையில் ஆரோகணித்திருப்பார். படுக்கும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் அப்பாவை குதிரையின் மேல்தான் காணலாம். அவருடைய வேலை பிரபுக்களை வேட்டைக்கு அழைத்துப் போவது. அவரும் நன்றாக வேட்டையாடக் கூடியவர். குறிதவறாமல் சுடுவார். எங்கே எந்த நேரம் எந்த எடத்தில் என்ன பறவைகள் கிடைக்கும், என்ன மிருகங்கள் அகப்படும் என அவர் ஒருவருக்கே தெரியும். ஆகவே அப்பாவை தேடி பிரபுக்கள் வருவார்கள். அதிக வேட்டை கிடைத்தால் அப்பாவுக்கு அதிக பணம் கிடைக்கும். நான் பிறந்த பிறகு பிரபுக்கள் வேட்டையில் பெரிதாக முன்னர்போல ஆர்வம் காட்டவில்லை. படிப்படியாக அப்பாவின் வருமானம் குறைந்தது. அப்பாவுக்கு வேறு வேலை தெரியாது. அவராகவே ஆள் சேர்த்துக்கொண்டு வேட்டைக்கு போவார். அவரை எங்கள் கிராமத்தில் ‘ஐந்து கால் மனிதன்’ என்றே அழைப்பார்கள். எனக்கு 11, 12 வயது நடந்தபோது நிலைமை மோசமானது. வீட்டிலே நாங்கள் அடிக்கடி பட்டினி கிடக்க நேரிட்டது. அப்பா தொடர்ந்து குடும்பத்தை பராமரிப்பதற்கு பெரும் சிரமப் பட்டார்.

நான் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தேன். தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு. கிரேக்க காவியங்களும் என்னைக் கவர்ந்திருந்தன. பண்டைய கிரேக்க மொழியை படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் நிறையவிருந்தது. நவீன கிரேக்கம் வேறு, பண்டைய கிரேக்கம் வேறு. எழுத்துக்கள் ஒன்றாக இருந்தாலும் உச்சரிப்பு வேறு. பொருளும் வேறு. பண்டைய இலக்கியங்களை என்னால் வாசிக்க முடியும் ஆனால் பொருள் விளங்காது.

படிக்க:
நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு | அ முத்துலிங்கம்
♦ விழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

என் அம்மாவின் தங்கை கனடாவில் வசதியாக வாழ்ந்தார். அவர் என்னை அழைத்தார். கனடாவில் என்ன வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று ஆசை காட்டினார். ஏனோ நான் மகிழ்ச்சியில் குதித்தேன். அந்த வறுமையிலும் என் அம்மாவுக்கு நான் புறப்படுவதில் சம்மதம் இல்லை. ஆனால் என் அப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை. நான் கனடாவுக்கு படிக்கப் போகிறேன் என்பதை நாலு தடவை ஊர் முழுக்க குதிரையில் சுற்றியபடி அறிவித்தார். 1969 ம் ஆண்டு டிசம்பர் மாதக் குளிரில் நான் மொன்ரியல் வந்து சேர்ந்தேன். என்னுடைய சின்னம்மாவுக்கு இரண்டு பிள்ளைகள். நான் வந்த அன்றே என்னை அவர்கள் அறையில் தூங்க அனுமதித்தார். அவர்கள் கட்டிலில் படுத்தார்கள். நான் தரையில் படுத்தேன். அடுத்த நாள் காலையே எனக்கு உண்மை புரிந்துவிட்டது. நான் வேலைக்காரியாகத்தான் வந்திருந்தேன்.

கிரேக்க புராணத்தில் ஒரு கதையுண்டு. திரோய் அரசன் தன் நகரத்தைச் சுற்றி பிரம்மாண்டமான சுவர் எழுப்ப திட்டம் போட்டான். அதற்காக அதிவீரன் அப்பொல்லோவையும் கடல் கடவுளான போஸிடோனையும் நியமித்தான். சுவரைக் கட்டி முடித்தபிறகு அவர்களுக்கு தகுந்த சன்மானம் தருவதாக வாக்குக் கொடுத்தான். ஆனால் அவர்கள் சுவரைக் கட்டி முடித்த பிறகு அவர்கள் சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றினான். கிரேக்க புராணம் சொல்லும் ஏமாற்றுக்காரர்களில் இவனே அதிகம் சிறப்புவாய்ந்த ஏமாற்றுக்காரன். என் சின்னம்மாவும் அப்படித்தான். சிறு பெண்ணான என்னைத் திட்டமிட்டு ஏமாற்றினார். காலையில் அவர் வேலைக்கு போய்விடுவார். நான் இரண்டு பிள்ளைகளையும் பார்ப்பேன். சமைப்பேன். துவைப்பேன். தரையை கூட்டி சுத்தம் செய்வேன். பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று நான் கேட்டபோது பனிக்காலம் முடியட்டும் என்று சொன்னர். பனிக்காலம் முடிந்தபோது செப்டம்பரில்தான் பள்ளியில் புது ஆட்களைச் சேர்ப்பார்கள் என்றார். இப்படியே புதுப்புது விதமான சாட்டுகளை உருவாக்கினார். என்னைக் கடைசி வரை அவர் பள்ளிக்கு அனுப்பவில்லை.

நான் வீட்டுக்கு எழுதும் கடிதங்களை படித்து கிழித்துவிட்டு திரும்பவும் எழுதச் சொல்வார். அவரே என் கடிதத்தை உறையிலிட்டு தபால்தலை ஒட்டி அனுப்புவார். நான் கண்டது காலை, மதியம், மாலை, இரவு, அவ்வளவுதான். என்னை வெளியே கூட்டிப் போனது கிடையாது. எனக்கு பிரெஞ்சு மொழியும் தெரியாது. நான் ஓர் அடிமை வாழ்க்கை வாழ்ந்தேன். ஆனால் என் அப்பா நான் பெரிய படிப்பு படிக்கிறேன் என்ற ஆனந்தத்தில் இருந்தார். என்னுடைய சின்னம்மா கடிதத்தில் என்ன எழுதுவாரோ தெரியாது, ஆனால் அப்பா எனக்கு எழுதும் கடிதங்களில் ‘நல்லாகப் படி. அடுத்த சோதனையிலும் முதல் ஆளாக நீ வரவேண்டும்’ என்று எழுதியிருப்பார்.

என்னுடைய பல பிறந்த தினங்கள் வந்து போயின. அது என் ஒருத்திக்கு மட்டுமே தெரியும். யாரும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடவில்லை. ஒருநாள் இரவு எல்லோரும் உறங்கிய பின்னர் நான் கண்ணாடிக்கு முன் நின்று என்னைப் பார்த்தேன். நான் இளம் குமரியாக நின்றது எனக்கே ஆச்சரியமாக பட்டது. என்னையே பார்த்துக்கொண்டு நெடுநேரம் நின்றேன். அன்று மாலை சின்னம்மா அடித்ததில் கைவிரல்கள் பதிந்த அடையாளம் கண்ணாடியில் என் கன்னத்தின் பிழையான பக்கம் தெரிந்தது. அந்த வீட்டுத் தரைவிரிப்பை பாதி சுருட்டியபடி விட்டிருந்தேன். அதை மறுபடியும் விரிக்க மறந்துவிட்டேன். அதற்கான தண்டனைதான் என் கன்னத்தில் பதிந்து கிடந்தது. என் நிலையை எண்ணியபோது எனக்கே மிகவும் பரிதாபமாகப் பட்டது.

சின்னம்மாவிடம் விலை மதிக்க முடியாத பொருள் ஒன்று இருந்தது. படிகக்கண்ணாடியால் செய்த ஏழு காம்புகள் கொண்ட மெழுகுதிரி தண்டு. அதை நான் துடைத்துக்கொண்டிருந்த போது அது கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. என்னுடைய சின்னம்மா எங்கிருந்தோ சத்தம் கேட்டு ‘உடைத்துவிட்டாயா?’ என்று கத்திக்கொண்டு கையை ஓங்கியபடி ஓடிவந்தார். அன்று எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் 18 வயது யுவதி. கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு அவரை நேருக்கு பார்த்து ‘அதற்கு என்ன இப்போ?’ என்று கேட்டேன். அவர் அப்படியே நின்றார். முகத்தில் முதல் தடவையாக ஒருவித அச்சத்தை கண்டேன். புகைப்படம் எடுக்க மெதுவாக பின்னுக்கு நகர்வது போல நகர்ந்தார். தரையில் இருந்து விளையாடிய கைக்குழந்தையை சட்டென்று தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். அன்றைக்கு உடைந்த கண்ணாடிச் சில்லுகளை நான் கூட்டி அள்ளவில்லை. அப்படியே போய் படுத்துவிட்டேன். என் வாழ்நாளில் அதுவே நீண்ட இரவு. அடுத்த நாள் அதிகாலை பஸ் கட்டணத்துக்கு வேண்டிய பணத்தை திருடிக்கொண்டு ரொறொன்ரோவுக்கு பஸ் பிடித்தேன்.’

ரொறொன்ரோவில் சந்தோஷமாக இருந்தீர்களா?

‘ரொறொன்ரோ வந்து இறங்கிய அன்றுதான் வசந்தம் தொடங்கியிருந்தது. வானம் தொடக்கூடிய தூரத்தில் தெரிந்தது. மரங்கள் துளிர்த்து புது ஆரம்பத்தை நினைவூட்டின. மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஒரு தொழிற்சாலையில் உடைகளில் பொத்தான் தைக்கும் வேலை கிடைத்தது. மிகவும் சுதந்திரமாக இருந்தேன். அங்கே வேலை செய்த ஒருவரை மண முடித்தேன். ஒரு மகன் பிறந்தான். எல்லாம் நல்லாகவே போனது. திடீரென்று ஒரு நாள் என் கணவர் உணவகம் ஒன்று திறக்கலாம் என்று யோசனை சொன்னார். சேமிப்பில் வைத்திருந்த அவ்வளவு பணத்தையும் போட்டு கிரேக்க உணவம் ஒன்றை தொடங்கினோம். சில வருடங்களுக்கு பின்னர் அது லாபத்தில் ஓடியது. ஆனால் என் கணவர் இறந்தபோது நான் அதை நட்டத்திற்கு விற்க நேர்ந்தது.

படிக்க:
குரல் மட்டுமே எஞ்சியிருக்கிறது | அ. முத்துலிங்கம்
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

‘நீங்கள் உங்கள் சின்னம்மாவை பிறகு சந்திக்கவே இல்லையா?’

நான் மொன்ரியலில் போய் இறங்கிய அன்று சின்னம்மா என் நாடியை பிடித்து இங்கும் அங்கும் திருப்பி ஒவ்வொரு கோணத்திலும் என்னை உற்றுப் பார்த்தார். நான் நினைத்தேன் சின்னம்மா என்மீது அன்பு காட்டுகிறார் என்று. அது அப்படியில்லை. அவர் என் விலையை தீர்மானித்தார் என இப்போது தோன்றுகிறது. என்னிடமிருந்து எவ்வளவு வேலை வாங்கலாம் என்றுதான் அவர் கவலைப்பட்டார். எத்தனை கொடூரமாக என்னை அவர் நடத்தியிருந்தாலும் அவர் சொன்ன ஒரு வாசகத்தை மாத்திரம் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ‘நீ எதற்காக படிக்கவேண்டும், படிக்கவேண்டும் என்று அலைகிறாய். துடைப்பக்கட்டையோடு நிற்கும்போது நீ நல்ல அழகாய்த்தானே தெரிகிறாய்.’ இதுதான் சின்னம்மா. இறக்கும் வரைக்கும் என் அப்பாவுக்கு நான் ஏமாற்றப் பட்டது தெரியாது. ரொறொன்ரோ வந்த பின்னர் நான் எழுதித்தான் அம்மாவுக்கு தெரியும். அவர் சின்னம்மாவை மன்னிக்கவே இல்லை. நான் மன்னித்துவிட்டேன், ஆனால் அந்தக் காயம் இன்னும் ஆறாமலே கிடக்கிறது.

எங்கள் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. சப்பாத்து விற்பனைக்காரன் முழங்காலில் உட்கார்ந்து ஆகவேண்டும். வேலைக்காரியாக என்னை சின்னம்மா ஆக்கிய பின்னர் நான் அவரிட்ட கட்டளையை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? சின்னம்மா தன்னைப் பெரிய அழகியாக நினைத்திருந்தார். அப்படியல்ல, அவர் தண்ணீரில் ஊறவைத்ததுபோல ஊதிப்போய் இருப்பார். ஆனால் திறமையான எசமானி. அவர் கண்கள் பூச்சியின் கண்கள் போல சுழன்றபடி இருக்கும். என்னுடைய வேலைகளில் குறைகண்டபடி இருப்பது அவர் பொழுதுபோக்கு. தவறுசெய்தால் வசவு கிடைக்கும். என்னிடம் சாதாரணமாக கிரேக்க மொழியில் பேசுவார் ஆனால் திட்டும்போது ஆங்கிலத்துக்கு மாறிவிடுவார். நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டது அப்படித்தான்.

உங்களுக்கு மகன் இருக்கிறான் அல்லவா? என்றேன்.

‘நான் படிக்க முடியாத பெரிய படிப்பை என் மகன் படிப்பான் என நினைத்தேன். ஆனால் அவன் பள்ளிக்கூட படிப்பைக்கூட முடிக்கவில்லை. பத்து நாள் பழக்கமான ஒரு பெண்ணை எனக்கு தெரியாமல் மணமுடித்தான். அந்தப் பெண் சிரிக்கும்போது சிகரெட் புகை வெளியே வரும். அவளைக் கூட்டிக்கொண்டு அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்துக்கு போய்விட்டான். ஏன் அங்கே போனான் என்ற காரணத்தை யாராவது கேட்டால் சிரிப்பார்கள். அங்கேதான் வாத்து சுடலாம் என்கிறான். ஏர்னெஸ்ட் ஹெமிங்வே என்ற எழுத்தாளர் வாத்து சுட்ட மாநிலமாம். நான் ஒரு வாத்திலும் கீழாகிவிட்டேன். தாயை விட்டு ஒரு மகன் பிரிவதற்கு இது நல்ல காரணமா? என்னோடு ஒருவித தொடர்பும் அவனுக்கு கிடையாது. எனக்கு ஒருவருமே இல்லை, நான் தனியாகத்தான் வாழ்கிறேன். அடிக்கடி என் அப்பாவை நினைத்துக்கொள்வேன். அவர் இறக்கும்வரை உழைப்பதை நிறுத்தியதே இல்லை. ஊரிலே ‘ஐந்து கால் மனிதன்’ என்று அவரை பழித்தபோது அவர் அதை பொருட்படுத்தவில்லை. சோர்ந்து போனதும் கிடையாது. ஒருநாள் குதிரையில் அமர்ந்தபடியே இறந்துபோனார். ஒரு கால் மட்டுமே இருந்தாலும் அவர் அயராமல் உழைத்தார். ஆனல் எனக்கு இரண்டு கால்கள் இருக்கின்றனவே’ என்று சொல்லி சிரித்தார்.

ஹெலென் என்று அருமையாக பெயர் சூட்டப்பட்ட கிரேக்கப் பெண் சட்டென்று எழுந்து நின்று தன் ஆடையை தட்டி சரி செய்தார். ஒரு காலத்தில் அவர் பேரழகியாய் இருந்திருப்பார் என்றுதான் தோன்றியது. கோப்பிக் குவளையை, சற்றுமுன் அவர் சுத்தமாக்கிய குப்பைத் தொட்டியில் எறிந்தார். துடைப்பக்கட்டை, தண்ணீர் கலம், சோப் வாளி, கிருமி நாசினி ஆகியவை நிறைந்த வண்டிலைத் தள்ளிக்கொண்டு புறப்பட்டார். புறப்படும் முன்னர் அவர் கடைசியாகச் சொன்ன வாசகம் ஒரு சிறுகதையின் முடிவுக்குரிய லட்சணத்தோடு வெளிவந்தது. ‘நான் 13 வயதில் துடைப்பத்தை கையிலெடுத்து சுத்தம் செய்தேன். இன்று 55 வயதிலும் அதையே செய்கிறேன், இன்னும் மோசமாக.’

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

அக்காக்கிய் – ஒரு அரசு எழுத்தனின் அறிமுகம் | மேல் கோட்டு | புதிய குறுநாவல் தொடர்

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறு நாவல் – பாகம் – 01

அறிமுக குறிப்பு: 1842-ல் எழுதப்பட்ட இந்த அவல நகைச்சுவை குறுநாவல் புரட்சிக்கு முந்தைய ஜாரிச ரஷ்யாவின் சமூகநிலையையும், அங்கு நிலவிய அவலமும் அற்பத்தனமும் நிறைந்த வாழ்க்கையை திரைவிரித்துக் காட்டுகிறது.

இன்றும் உலகம் முழுவதுமே அவலமும் அற்பத்தனமும் விரவிக் கிடக்கிறது. அதற்கு எந்த வர்க்கமும் விதிவிலக்கல்ல. இந்தக் குறு நாவலைப் படிப்பதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள அற்பத்தனங்கள் மட்டுமின்றி நமக்குள்ளேயே வீற்றிருக்கும் அற்பவாதியையும் அடையாளம் காணமுடிந்தால், அற்பவாதத்தில் இருந்து நாம் விடுபடுவது எளிது தானே!

நிக்கொலாய் கோகல் (1809-1852).

ஆசிரியர் குறிப்பு: நிக்கொலாய் கோகல் (1809-1852)- பெயர் பெற்ற யதார்த்தவாத எழுத்தாளர். ருஷ்ய இலக்கியத்தில் விமர்சன யதார்த்தவாதத்துக்கு அடிகோலியவர் கோகல். அவரது ‘தராஸ் புல்பா’, ‘உயிரற்ற ஆன்மாக்கள்’, ‘அரசு ஆய்வாளர்’ முதலிய படைப்புக்கள் பல அயல் மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. ‘மேல்கோட்டு’ (1839-1841) என்ற கதை கோகலின் ‘பீட்டர்ஸ்பர்க் கதைகள்’ என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

♥ ♥ ♥

… அந்தத் துறையில் – எந்தத் துறையில் என்று பெயர் குறிப்பிடாமலிருப்பதே நல்லது. துறைகள், ரெஜிமெண்டுகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை விட, ஒரு வார்த்தையில் சொன்னால் அதிகார நிறுவனங்கள் எல்லாவற்றையும் விட அதிக ரோசமுள்ளவை உலகிலே வேறு எவையுமே கிடையாது. இந்தக் காலத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு ஏற்படும் சொந்த அவமானத்தைச் சமூகம் முழுவதற்கும் இழைக்கப்பட்ட அவமானமாகக் கருதுகிறான். எதோ ஒரு நகரத்தின் போலீஸ் கமிஷனர் (எந்த நகரமோ, எனக்கு நினைவு இல்லை) சமீபத்தில் அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளித்ததாகவும், அரசு ஆணைகள் அனைத்தும் மீறப்பட்டு விட்டனவென்றும், தனது புனிதத் திருப்பெயர் வேண்டுமென்றே வீணாக இழுக்கப்பட்டிருக்கிறதென்றும் அதில் தெளிவாகக் குறிப்பிட்டதாகவும் கேள்விப்பட்டேன். தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவன் காதல் வருணனைகள் மிகுந்த நூல் ஒன்றின் பிரம்மாண்டமான தொகுப்பை (அந்த நூலில் அநேகமாகப் பத்து பக்கங்களுக்கு ஒரு தடவை எவனோ போலீஸ் கமிஷனர் – சில கட்டங்களில் குடிமயக்கத்துடன் இருக்கும் நிலையில் – வருணிக்கப்படுகிறான்) விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பினானாம். ஆகவே எல்லாவிதமான மனக் கசப்பையும் தவிர்க்கும் பொருட்டு நாம் இதை ஒரு துறை என மட்டுமே அழைப்போம்.

நல்லது. ஏதோ ஒரு துறையில் ஒரு எழுத்தன் வேலை செய்துவந்தான். அவன் வெகுவாகக் குறிப்பிடத்தக்க குணாம்சங்கள் வாய்ந்தவன் எனக் கூற முடியாது. கொஞ்சம் குட்டை, கொஞ்சம் அம்மைத் தழும்புள்ளவன், கொஞ்சம் செம்முடியன், கொஞ்சம் மந்தப் பார்வையன் போன்ற தோற்றமுள்ளவன், நெற்றி உச்சியில் சிறு வழுக்கையும் இரண்டு கன்னங்களிலும் சுருக்கங்களும் விழுந்தவன், மூல நோயாளி போன்ற சோகை பிடித்த நிறத்தினன்… அதற்கு நாமென்ன செய்வது? எல்லாம் பீட்டர்ஸ்பர்க் பருவ நிலையின் கோளாறு. அவனுடைய பதவியைப் பொருத்தவரை (நமக்குத்தான் எல்லாவற்றுக்கும் முன்பு பதவியைத் தெரிவித்து விடுவது அவசியமாயிற்றே), சாசுவதப் பட்டம் பெற்ற ஆலோசகன் என்று அழைக்கப்படும் பதவி அது.

நமது அரசாங்க நிர்வாகத் துறையிலுள்ள பதினான்கு பதவிகளில் ஒன்பதாவதான இந்தப் பதவியை, பதிலுக்குத்தாக்க முடியாதவர்கள் மேலெல்லாம் பாய்ந்து பிடுங்குவது என்ற பாராட்டுக்குரிய வழக்கம் கொண்ட பல வித எழுத்தாளர்கள் எள்ளி நகையாடியும் இகழ்ந்தும் வந்திருப்பது யாவரும் அறிந்ததே. இந்த எழுத்தனின் குலப்பெயர் பஷ்மாச்கின். இந்தப் பெயர் செருப்பு என்று பொருள்படும் பஷ்மாக் என்ற ருஷ்யச் சொல்லின் அடியாகப் பிறந்திருக்க வேண்டும் என்பது பெயரிலிருந்தே தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது; ஆனால் எந்தக் காலத்தில், எந்த வழியில் இப்பெயர் பஷ்மாக்கிலிருந்து கிளைத்தது என்பது ஒன்றுமே தெரியவில்லை.

படிக்க :
“போராட்டக்காரர்களை பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுங்கள்” : ரயில்வே அமைச்சர் !
மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !

அவனுடைய தகப்பன், பாட்டன் மட்டுமல்ல, மைத்துனன் உள்பட பஷ்மாச்கின்கள் அனைவருமே காலணிகள் அணிந்தே நடந்தார்கள், அதிகமாய்ப் போனால் ஆண்டுக்கு மூன்று தடவை மட்டுமே காலணி அடிகளைப் பழுதுபார்த்துக்கொண்டார்கள். அவன் பெயர் அக்காக்கிய் அக்காக்கியெவிச். இது கொஞ்சம் விசித்திரமான பெயர் என்றும் தேடிப் புனையப்பட்டதென்றும் வாசகர்கள் நினைக்கக் கூடும். ஆனால் நாம் இந்தப் பெயரைத் தேடவே இல்லை எனவும் தாமாகவே ஏற்பட்ட நிலைமைகளின் காரணமாக அவனுக்கு வேறு எந்தப் பெயரும் சூட்ட இயலாது போயிற்று எனவும் உறுதி கூறுகிறோம். நடந்தது இதுதான்:

அக்காக்கிய் அக்காக்கியெவிச் பிறந்தது, என் நினைவு சரியாக இருந்தால், மார்ச்சு 23-ம் தேதி இரவில். அவனது காலஞ்சென்ற தாய், ஒரு எழுத்தனின் மனைவி, மிக நல்லவள். குழந்தைக்குப் பெயரிடுவதற்கு வேண்டிய எல்லா ஆயத்தங்களையும் அவள் செய்தாள். கதவுக்கு எதிரே அவள் படுத்திருந்தாள். செனெட் துறை தலைமை எழுத்தன் இவான் யெரோஷ்கின் – மிக அருமையான மனிதர், குழந்தையின் ஞானத் தந்தை – அவளுக்கு வலப்புறம் நின்றிருந்தார். இடப்புறம் நின்றாள் ஞானத் தாய் அரீனா பேலப்ரூஷ்கவா, அபூர்வ குணவதி. குழந்தைக்கு இடுவதற்கு மூன்று பெயர்கள் தாய்க்கு முன் வைக்கப்பட்டன. மோக்கிய், ஸோஸ்ஸிய் என்பன அவற்றில் இரண்டு; இல்லாவிட்டால் தியாகி ஹோஸ்தஸாத்தின் பெயரைக் குழந்தைக்கு வைக்கலாம் எனச் சொல்லப்பட்டது. “ஊஹும்! எல்லாமே சரியில்லாத பெயர்கள்” என்று எண்ணினாள் தாயார்.

அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கட்டுமென்று நாள்காட்டியில் மற்றொரு பக்கம் திருப்பப்பட்டது; அதிலும் மூன்று பெயர்கள் இருந்தன: திரிபீலிய், தூலா, வரகாசிய என. “நல்ல கண்ணராவிதான் போ! பெயர்களைத்தான் பாரேன்! உண்மையில், இந்த மாதிரி நான் என்றைக்கும் கேள்விப்பட்டது கிடையாது! வரதாத் என்றோ வரூஹ் என்றோ இருந்தாலாவது பரவாயில்லை. இங்கேயோ, திரிபீலிய், வரகாசிய் என்றல்லவா இருக்கின்றன!” என முதிய தாய் அங்கலாய்த்தாள். இன்னொரு பக்கத்தைப் புரட்டினார்கள். பாவ்ஸிக்காகிய், வாஃத்தீஸிய் என்ற பெயர்கள் வந்தன. “ஊம், இப்போது தெரிந்து கொண்டேன் தலையெழுத்து இதுதான் என்று. அப்படியானால் அப்பாவின் பெயரே குழந்தைக்கும் இருந்துவிட்டுப் போகட்டும். அவன் அப்பா பெயர் அக்காக்கிய், ஆகவே மகனையும் அக்காக்கிய் என்றே அழைப்போம்” என்றாள் தாயார். இவ்வாறு வாய்த்ததே அக்காக்கிய் அக்காக்கியெவிச் என்னும் பெயர்.

குழந்தைக்கு ஞானஸ்தானம் செய்விக்கப்பட்டது. அப்போது அவன் அழுத அழுகையையும் முகத்தைக் கோணிக் கொண்டு வலித்த வலிப்பையும் பார்த்ததால், தான் ஒரு காலத்தில் பட்டம் பெற்ற ஆலோசகனாகப் பதவி வகிக்கப் போவதை அவன் முன்னரே உணர்ந்திருந்தது போலத் தோன்றியது. ஆக, இது இவ்விதமே நிகழ்ந்தது.

இந்தச் சேதியை நாம் இவ்வளவு விளக்கக் காரணம், இது இன்றியமையாத முறையில் நேர்ந்தது என்பதையும் குழந்தைக்கு வேறு பெயர் சூட்ட எவ்வகையாலும் முடிந்திராது என்பதையும் வாசகர்கள் தாமே கண்டு கொள்வதற்காகத்தான்.

(தொடரும்)

                                                                                                          அடுத்த பாகம் »

குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் வலுப் பெற்று வருகிறது. இது இசுலாமியர்களுக்கு எதிரானதாகவே காட்டப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. உண்மையில் இது ஒட்டுமொத்த நடுத்தர ஏழை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு !

பாருங்கள் ! பகிருங்கள் !

ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் !

0

பாகியா பிர்ஜியா ஒரு சிக்கலை சரி செய்ய வேண்டிய சூழலில் உள்ளார். 42 வயது விவசாய தொழிலாளியான இவருக்கு அந்தியோதயா அன்ன யோஜனாவின் (ஏழ்மையான இந்தியர்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கும் திட்டம்) கீழ் 35 கிலோ உணவு தானியங்கள் ஒவ்வொரு மாதமும் கிடைக்கின்றன. பாதிக்கப்படும் பழங்குடிப்பிரிவில் இருப்பதால் பிர்ஜியாவிற்கு இது வழங்கப்படுகிறது.

ஆனால் மாநில தலைநகரான ராஞ்சிக்கு மேற்கே 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லடேகர் மாவட்டத்தின் தொலைதூர மகுவாடாண் (Mahuadanr) தொகுதியில் வசிக்கும் அவருக்கு சற்று நடந்து செல்லும் தொலைவில் உள்ள சகோதரரின் குடும்பத்தின் ஏழு உறுப்பினர்களுடன் தானியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குடும்ப அட்டை இல்லாததால் அவரது சகோதரரர் குடும்பம் இந்தியாவின் பொது பகிர்மான அமைப்பிலிருந்து விலையில்லா உணவு தானியங்களைப் பெற முடிவதில்லை.

நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களில் ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் நடந்து டிசம்பர் 23-ம் தேதியில் முடிவு வெளியாகவுள்ளது. இந்நிலையில் 2014 மற்றும் 2018-க்கு இடையில் PDS-ல் உள்ள போலிப் பயனாளிகளை நீக்குவதற்காக நடத்தப்பட்ட செயல்முறையினால் உணவு தானியங்களைப் பெற முடியாத நிலையில் ஒரு பகுதி ஏழை மக்கள் உள்ளனர். தொழில்நுட்பத்தை சார்ந்துள்ள இந்த தீர்வானது சில நேரங்களில் பயனாளிகளுக்கான கதவை சட்டவிரோதமாக அடைத்துள்ளது.

புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன?

ஜார்கண்டின் நலிவடைந்த 3.3 கோடி மக்களில் 71% அல்லது 2.33 கோடி மக்களை பாதுகாப்பதில் PDS அமைப்பு தோல்வியடைந்துள்ளது. ஜார்கண்டில் 2015 மற்றும் 2019 -க்கு இடையில் பட்டினி மற்றும் மானிய விலை உணவு தானியங்கள் கிடைக்காததால் 23 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்பு குறித்து செயல்படும் உணவுக்கான உரிமை என்ற அமைப்பு கூறுகிறது.

நான்கு நாட்களாக பலமுறை இதுகுறித்து தொடர்பு கொண்ட போதும் உணவு, பொது பகிர்மானம் மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான மாநிலப் பொறுப்பாளரான அமிதாப் கவுசலை தொடர்பு கொள்ள இயலவில்லை.

PDS -ன் இயலாமை, ஜார்க்கண்டின் உயர் வறுமை விகிதம், தேசிய சராசரியான 7.4%, ஒப்பிடும் போது 9.2% வேலையின்மை விகிதம், தேசிய சராசரியான 75.4% ஒப்பிடும் போது 70.3% கல்வியறிவு விகிதம் மற்றும் நாட்டின் சில மோசமான ஊட்டச்சத்து குறியீடுகளுடன் இணைந்து கடுமையான ஊட்டச்சத்து நெருக்கடிக்கு வழி வகுத்திருக்கிறது.

குன்றிய வளர்ச்சி  பாதிப்பில் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் ஜார்கண்ட் உள்ளது என்றும் 15-49 வயது பெண்களிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை உள்ளது என்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2015-16 தெரிவித்துள்ளது. விளைவாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 29 இறப்புகள் என நாட்டிலேயே 14-வதாக இருக்கிறது.

பாரதிய ஜனதா தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்த நெருக்கடி கடுமையாக உள்ளது. பட்டினியால் இந்த மரணங்கள் நடக்கவில்லை என்று முதலமைச்சர் ரகுபார் தாஸ் முதலில் மறுத்தாலும் வேறு வழியில்லாமல் இந்த இறப்புகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு குழுவை நியமிக்க ஆணையிட்டார்.

ஆதாரின் தொடர்பு :

தினசரி கூலியாக ரூ. 150 -க்கு மாதம் 12-15 நாட்கள் வேலை தேடி சம்பாதிக்கும் கைம்பெண் பிரிஜா தனியாக வசிக்கிறார். அவரது சகோதரரின் குடும்பத்தின் ஏழு உறுப்பினர்களில் எவருக்கும் ஆதார் இல்லை என்பதால், விலையில்லா உணவு தானியங்களை பெறுவதற்கு குடும்ப அட்டை இல்லை.

நவம்பர் 30 வரை மாநில மக்கள்தொகையில் 91.3% பேர் ஆதார் ( தேசிய எண்ணிக்கை 89.6% ) பெற்றிருப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India) அறிக்கை கூறுகிறது.

பிரிஜாவின் சகோதரரின் குடும்பத்தைப் பொறுத்தவரை, ஆதார் அட்டைகளைப் பெற வேண்டுமென்றால் 120 கி.மீ தூரத்தில் உள்ள மாவட்ட தலைமையகத்திற்கு பயணிக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் ஆதாரில் சேர்க்க மறுக்கிறார்கள் – இதற்கு பணம் செலவாகும்.

ஆதாருக்கான செலவினங்களை பிரிஜா பட்டியலிட்டார்: ஒவ்வொருவருக்கும் பேருந்து கட்டணம் ரூ. 80 மற்றும் சேர்க்கைக்கு தலா ரூ. 300 – 400. ஆதார் பதிவு இலவசம் என்று விதிகள் கூறுகின்றன. ஆனால் முகவர்கள் மற்றும் தொகுதியில் உள்ள அரசாங்க அதிகாரிகள் கூட அந்த கட்டணத்தை கேட்டதாக பிர்ஜியா கூறினார்.

இது போன்ற பயணத்திற்கான செலவு என்பது கிட்டத்தட்ட அவர்களது ஒரு மாத வருமானத்தைக் குறிக்கும்.

“அவர்களால் சந்தையில் இருந்து எதையும் வாங்க முடியாது என்பதால், எனக்கு கிடைக்கும் உணவு தானியத்திலிருந்து கொடுத்து உதவி செய்கிறேன்” என்று அவர் கூறினார்.

அவரது சகோதரர் டிசம்பர் 2018-ல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மேலும் அவரது சகோதரரின் மனைவி உள்ளூர் சந்தையில் ஓரிரு உணவகங்களில் தட்டுக்கழுவி நாளைக்கு சுமார் ரூ. 100 சம்பாதித்தார். குடும்பம் உணவு இல்லாமல் அந்த மாதத்தில் ஓடியது.

புத்தாண்டன்று, அவரது சகோதரருடன் இருந்த அவரது தாயார் புத்னி இறந்தார். அவர் இறப்பதற்கு முன்பு பல நாட்கள் உணவு இல்லாமல் அந்த குடும்பம் எப்படி இருந்தது என்பதை விவரித்தார்.

மாண்டு போன அவரது தாயாரை கிராமவாசிகள் பார்க்கும்வரை அவர் பட்டினியால் வாடியுள்ளார். வேலை தேடுவதிலிருந்து உள்ளூர் பள்ளிக்கு செல்வதுவரை பல்வேறு காரணங்களுக்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் அப்போது வீட்டில் இல்லை.

படிக்க:
♦ உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா
♦ உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?

ஒவ்வொரு மாதமும் புத்னி போன்ற PVTG உறுப்பினர்களுக்கு நேரடியாக வீட்டு வாசலில் உணவுப்பொருள்கள் வழங்கப்படும், என்ற ஒரு பெயரளவிலான திட்டம் ஜார்கண்ட் அரசாங்கத்திடம் இருந்தாலும், அது அனைவரையும் சென்றடையவில்லை. ஒரு கிலோ மீட்டருக்கும் சற்று குறைவான தூரத்தில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று தனது உணவுப்பொருள்களுக்காக ஒவ்வொரு மாதமும் வரிசையில் நிற்க வேண்டும்.

அவரது தாயார் இறந்த போதிலும் அவருக்கான உணவு தானியங்களை உள்ளூர் நியாய விலை கடை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

“நான் அவர்களிடம் பல முறை சென்றிருக்கிறேன், ஆனால் எங்களுக்கு ஆதார் அட்டைகளையும் வழங்க முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்” என்று பிரிஜா கூறினார். சத்தீஸ்கரின் எல்லையில் தன்னுடய கிராமம் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், “நாங்கள் அந்த பக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இடத்தை சேர்ந்தவர்கள் அல்ல எனவே நாங்கள் வெளியாட்கள் என்று அவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள்” என்று மேலும் கூறினார். தனது குடும்பம் நான்கு பத்தாண்டுகளாக ஜார்க்கண்டில் வாக்களித்துள்ளது என “வெளியாட்கள்” என்ற குற்றச்சாட்டுகளுக்கு பிர்ஜியா பதிலளித்தார்.

மக்களிடம் சொந்த வீட்டு முகவரிக்கான ஆவணங்கள் இருந்தால் போதும், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எந்த நிலையிலும் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்க விதிகள் அனுமதிக்கின்றன.

ஜார்கண்ட் முழுவதும் பிர்ஜியாவின் கதையை காண முடிகிறது. ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 27,000 என்ற வறுமைகோடு வரையறையின் படி ஜார்கண்டின் மக்கள் தொகையில் 39.1% வறுமையில் வாழ்கின்றனர். சத்தீஸ்கருக்குப் பிறகு நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் ஜார்கண்டில் உள்ளனர்.

பாகியா பிரிஜாவின் குடும்பத்தைப் போலவே, ஜார்க்கண்டின் பல PDS சிக்கல்களுக்கு ஆதார் காரணமாக உள்ளது. போலிகளை உண்மையான பயனாளிகளிடமிருந்து பிரிக்க உதவும் என்ற மைய அரசின் நீண்டகால கூற்றுக்கு ஏற்ப, குடும்ப அட்டைக்கு ஆதாரை கட்டாயமாக்கிய மாநிலங்களில் ஜார்கண்டும் ஒன்றாகும்.

பிப்ரவரி 2018 -ல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட தரவுகளின்படி, 2013 மற்றும் 2017 -க்கு இடையில் நீக்கப்பட்ட 2.75 கோடி போலி குடும்ப அட்டைகளில் 4,53,000 குடும்ப அட்டைகள் ஜார்கண்டை சேர்ந்தவை. PDS பகிர்மானத்தை இன்னும் துல்லியமாகவும், பயனுள்ள முறையிலும் திறமையாகவும் கொண்டு சேர்ப்பதற்கு தான் இந்த செயல்முறை என்று அரசாங்கம் கூறியது.

உண்மையில், PDS -ஆதார் இணைப்பு என்பது பிரிஜா போன்ற பயனாளிகளுக்கு புதிய சிக்கல்களை தான் கொண்டு வந்துள்ளது.

டிசம்பர் 2017-ல், ஜார்க்கண்டின் சிம்டேகா மாவட்டத்தில், ஆறு மாதங்களுக்கு நியாய விலைக்கடையில் தானியங்கள் மறுக்கப்பட்டதால் 11 வயது சந்தோஷி குமார் பட்டினியால் இறந்த செய்தியை ஊடக அறிக்கைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. அவரது குடும்ப அட்டை அரசாங்கத்தால் நீக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

உயிரியளவியல் சரிபார்ப்பு:
குடும்ப அட்டைகளை ஆதாரோடு கட்டாயமாக இணைப்பது மட்டுமல்லாமல் மின்னணு விற்பனை முனை (point-of-sale) கருவி மூலம் PDS பயனாளிகள் சரிபார்ப்பை 2016-ம் ஆண்டில் ஜார்கண்ட் அரசு தானியங்கிமயமாக்கியது. உணவுப் பொருள்களை வழங்கும் போது பயனாளிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த உயிரியளவியல் முறையை பயன்படுத்தும் படி ஒவ்வொரு நியாய விலைக் கடைகளும் வலியுறுத்தப்பட்டன.

இருப்பினும், இந்த ஆரவாரமான நடைமுறை குடும்பங்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடும்.

மகுவாடாண்டிற்கு (லாட்டிஹார் மாவட்டம்) வடக்கே 150 கி.மீ தொலைவில் உள்ள கார்வா மாவட்டத்திலுள்ள பெஷ்கா கிராமத்திலுள்ள 28 வயதான சகிலா பீபியின் குடும்பம், ஏப்ரல் 2018 -லிருந்து 20 மாதங்களில் 8 மாதங்களுக்கு உணவுப்பொருள்களை நியாய விலைக்கடையில் பெறவில்லை. மாநில தேர்தல்களை முன்னிட்டு ஆகஸ்ட் 2019 -க்குப் பிறகுதான் மீண்டும் நிலைமை சரியானது.

படத்திலுள்ளவாறு அவரது குடும்ப அட்டையில் உள்ள சில உள்ளீடுகளில் நீல நிற மை அடையாளம் உள்ளன.

28 வயதான ஷகிலா பீபி தனது குடும்ப அட்டையை காட்டுகிறார். இது ரேஷன் பொருள்கள் பகிர்மானத்தில் உள்ள இடைவெளிகளைக் காட்டுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் அட்டையை வைத்திருந்தாலும், உணவுப்பொருள்களை வாங்க அவை போதுமானதாக இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.

“ஒவ்வொரு முறையும் நான் நியாயவிலை கடைக்குச் செல்லும்போது, என் கட்டைவிரலை கருவி சரியாக அடையாளம் காட்டாது. கடைக்காரரும் திரும்பி மறுபடியும் வரும்படி என்னிடம் சொல்லுவார்” என்று அவர் கூறினார். அவர் மீண்டும் வருவார். மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்.

“உணவு தானியங்கள் முடிந்துவிட்டன, அடுத்த மாதம் நான் திரும்பி வர வேண்டும் என்று அவர் கூறுவார்” என்று கூறினார். ஆனால் அடுத்த மாதம் திரும்பிச் செல்லும்போது முந்தைய மாத பொருள்களை இனி கொடுக்க முடியாது என்று கடைக்காரர் கூறுவார்.

ஷகிலா பீபிக்கு நான்கு இளம் குழந்தைகள் உள்ளனர் – மூத்த குழந்தைக்கு 13 வயதாகிறது. இளைய குழந்தைக்கு எட்டு வயதாகிறது. ஆனால் அவரது கணவருக்கு நிலையான வேலை இல்லை என்பதால் அவரது குடும்பதிற்கும் நிலையான வருமானமும் கிடையாது.

அவரது குடும்பத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் அரிசி, சோளம் மற்றும் குளிர்காலத்தில் கடுகு ஆகியவற்றை அவர்கள் பயிரிடுகிறார்கள். ஆனால் நியாய விலைக்கடை பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் கடந்த ஆண்டு கையிருப்பில் இருந்து மிச்சமான அரிசியை கொண்டு சமாளிக்க வேண்டும்.

ஷகிலா பீபி நாளுக்கு இரண்டு முறை அரிசியைக் கொதிக்க வைத்து தனது குழந்தைகளுக்கு கஞ்சித் தண்ணியை பரிமாறுகிறார். சில நாட்களில், அவர் தனது குழந்தைகளுக்கு சிறிது உப்பு சேர்த்து உணவளிப்பார். மற்ற நாட்களில் சோறுடன் கடுகு இலை சட்னி செய்து கொடுப்பார்.

ஷகிலா பீபி அவரது குழந்தைகளுடன்.

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் (District Legal Services Authority) உறுப்பினரும் கிராமவாசியுமான கலாமுதீன் அன்சாரியிடம் செல்லும் வரை இது தொடர்ந்தது. ஏதோ தவறு இருப்பதை அன்சாரி உணர்ந்தார். அவர் ஷகிலா பீபியிடம் விதிகளை சுட்டிக்காட்டினார்: உயிரியளவியல் அடையாளம் பொருந்தவில்லை என்றால் பயனாளியை நேரில் சரி பார்தது பொருள்களை கடைக்காரர் கொடுக்க வேண்டும்.

“எந்தவொரு சூழ்நிலையிலும் பயனாளிகளுக்கு பொருள்களை நியாயவிலை கடைக்காரர்கள் மறுக்க முடியாது என்று விதிகள் தெளிவாகக் கூறுகின்றன” என்று அன்சாரி கூறினார். “உண்மையில், அடையாளம் பொருந்தாத நிலையில் ஒரு பதிவேட்டின் மூலம் பயனாளிகளின் விவரங்களை கவனித்து அவர்களுக்கு உரிய பொருளை கடைக்காரர் வழங்க வேண்டும்.”

புகார் கொடுத்தப்பின் குறைந்தது இரண்டு மாதங்களாவது உணவுப்பொருள்கள் ஷகிலா பீபிக்கு கிடைக்கவில்லை. கடைக்காரர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் ஜூன் மாதத்திலிருந்து அவர் தனது பொருட்களை தவறாமல் பெறத் தொடங்கினார். POS கருவி அவரது கட்டைவிரலை இன்னும் ஏற்கவில்லை. ஆனால் இப்போது ஒரு முறை கடவுச்சொல்லைப் பெற்று அடையாளத்தை சரிபார்த்து கொள்கிறார்.

படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
♦ ஜார்கண்ட் : ஆதாரை இணைக்கவில்லை என்றால் மரணம் !

தொழில்நுட்பம் ஒரு தீர்வல்ல :
ஷகிலா பீபியின் மண் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தூசி நிறைந்த, சீரற்ற சாலையின் புதர்களைத் தாண்டி ஹலிமா அன்சாரியின் வீடு உள்ளது.

POS கருவி 28 வயதான ஹலிமா அன்சாரியின் கட்டைவிரல் ரேகையை ஏற்காததால் நியாய விலைக்கடை பொருள்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒன்பது மாதங்கள் கிடைக்கவில்லை. அதே ஒரு முறை கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, ஷகிலா பீபிக்கு சில நாட்களுக்கு பிறகு பொருள்களை கடைக்காரர் மீண்டும் கொடுக்க தொடங்கினார்.

முதல் இரண்டு மாதங்களுக்கு உணவுப்பொருள்கள் சீராக கிடைத்ததில் ஹலிமா அன்சாரிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இது பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றியது” என்று அவர் கூறினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கல் ஒன்று இருப்பதை உணர்ந்தார்.

சரக்கு வண்டி ஓட்டுனரான அவரது கணவர் கைப்பேசியை வேலைக்கு எடுத்துச்செல்ல வேண்டும். வழக்கமாக ஜார்கண்டிலிருந்து ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களுக்கு சரக்குகளை ஓட்டி செல்கிறார். எனவே, அவர் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வேலையில் ஈடுபடுகிறார் என்று அவர் விளக்கினார்.

ஹலிமா அன்சாரி, சரக்கு வண்டி ஓட்டுனரான அவரது கணவர் தொடர்ந்து பல மாதங்களாக வேலையில் இருக்கும் போது பொருள்களை வாங்க முடியாது.

இதன் பொருள் அவரால் இனி OTP-ஐ பயன்படுத்த முடியாது. “எங்களால் இன்னொரு கைப்பேசியை வாங்க முடியவில்லை என்று கடைக்காரருக்கு நிலைமையை விளக்கினேன். ஆனால் அவர் செவிசாய்க்கவில்லை.” என்று ஹலிமா அன்சாரி கூறினார்.

ஒருமுறை கடவுச்சொல்லை சார்ந்து இருப்பது என்பது உணவு தானியங்களின் ஒதுக்கீட்டை பெறுவதில் மக்களுக்கு புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்று DLSA உறுப்பினர் கலாமுதீன் அன்சாரி கூறினர்.

“கார்வாவில் (Garhwa) மொபைல் போன் இணைப்பு இல்லாத சில கிராமங்கள் உள்ளதால் நெட்வொர்க்குடன் இணைக்க நெடுஞ்சாலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் கிராமவாசிகள் உள்ளனர் – சிலநேரங்களில் 5-6 கிமீ தூரம் சென்று கூட ஒருமுறை கடவுச்சொல்லிற்காக காத்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார். இந்த புகார்களுக்கு கருத்து தெரிவிக்க பெஷ்கா கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடை முகவரான வீரேந்திர துபே மறுத்துவிட்டார்.

ஆதாரும் பயனாளர் நீக்கமும் :
நவம்பர் 2019-ல், மும்பையைச் சேர்ந்த சமூக தாக்க அறிவுறுத்தல் குழுவான டால்பெர்க் (Dalberg) நடத்திய ஒரு கணக்கெடுப்பின் முடிவுகள் ஆதார் இணைப்பினால் ஏற்பட்ட பயனாளர் நீக்கங்களை சுட்டிக்காட்டின.

ஆதார் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள சேவைகளில் ஆதார்-பி.டி.எஸ் இணைப்பு சேவைதான் மிகவும் மோசமானது என்பது அனுபவபூர்வமாக மக்களுக்கு தெரிந்தது. ஆதார் இணைப்பினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சலுகைகள் பறிக்கப்பட்ட ஆறாவது மாநிலம் ஜார்கண்ட் (5.9%) என்று கணக்கெடுப்பு காட்டுகிறது.

நாடு தழுவிய அளவில், கடைசியாக PDS-ன் கீழ் உணவு தானியங்களைப் பெற முயற்சித்த 1.5% பயனர்களுக்கு உயிரியளவியல் அடையாள சோதனை தோல்வியையே தந்துள்ளது.

குறைபாடுகள் இருந்தாலும் ஆதாருக்கு அதிக வரவேற்பு இருப்பதாக அறிக்கை கூறியிருக்கிறது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் PDS, ஓய்வூதியம் மற்றும் ஊதியங்கள் போன்றவை ஆதார் முறையாக வழங்கியுள்ளதாக 80% பயனர்கள் கருதுகின்றனர். ஆதார் இணைப்பு சிக்கலால் பதிக்கப்பட்டவர்களில் 67 விழுக்கட்டினர் ஆதார் குறித்து மன நிறைவு கொண்டதாக கூறினர்.

“கிடைத்தால் போதும் என்று எண்ணுவதால் பல மாதங்களாக தவறவிட்டவர்கள் கூட ஆதார் அவர்களுக்கான சேவையை மறுப்பதாக உணரவில்லை” என்று அறிக்கை கூறியது. “நல்ல நோக்கங்களுடன் ஆதார் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது” என்ற நம்பிக்கையை பலர் வைத்திருந்தனர். எனவே, இதன் விளைவாக ஏற்படும் எந்தவொரு சிக்கலும் இறுதியில் தீர்க்கப்படும் என்றே அவர்கள் நம்புகின்றனர்.

ஊட்டச்சத்தில் சமரசம் :
திறனற்ற PDS நடைமுறை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊட்டச்சத்து நெருக்கடியை அதிகரிக்கும் என்று பிரச்சாரகர்கள் மத்தியில் இப்போது ஒரு அச்சம் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஒருபோதும் பழங்களை வாங்குவதில்லை, சிலர் மட்டுமே காய்கறிகளை தவறாமல் வாங்குகிறார்கள் என்று கார்வாவைச் சேர்ந்த DLSA உறுப்பினர் அன்சாரி கூறினார்.

மாதிரிப் படம்.

உலகளாவிய பட்டினி குறியீடு – 2018 ஆய்வு மற்றும் குடிமை சமூக அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி இந்தியாவில் “கடுமையான” பட்டினி சிக்கல் இருப்பதாகவும், அது அதன் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கையை விட மோசமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஜார்க்கண்டின் 59.3% மக்கள் மட்டுமே ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட முடியும் என்றும், 50.3% மக்களுக்கு போதுமான உணவு இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தீவிர வறுமை முதல் இரத்த சோகை பாதிப்புக்குள்ளான பகுதிகள் வரை – ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில் மோசமான ஊட்டச்சத்துக்கு பங்களிக்கும் உள்ளார்ந்த காரணிகள் உள்ளன, என்று உணவு உரிமை பிரச்சாரத்தின் மாநில அமைப்பாளாரும், ஜார்க்கண்ட் அரசாங்கத்தால் மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் பட்டினி சிக்கலை ஆய்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட குழுவின் உறுப்பினருமான அஸ்ரஃபி நந்த் பிரசாத் கூறினார்.

இதற்கிடையில், உணவு தானியங்கள் மறுக்கப்படுவதுடன் சேர்ந்து அரசின் மோசமான ஊட்டச்சத்து திட்டமும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. “கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் போன்ற அரசாங்கத்தின் திட்டங்கள், அதை செயல்படுத்துவதில் பல சிக்கல்களைக் கொண்டுள்ளன” என்று அவர் கூறினார். “பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு கூட சரியாக வழங்கப்படுவது இல்லை” என்றும் கூறினார்.


கட்டுரையாளர்  : Kunal Purohit
தமிழாக்கம்  : சுகுமார்
செய்தி : ஸ்க்ரால். 

குலக் கல்வித் திட்டம் :  ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் !

தராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி, 1953-ல் மாகாணத்தில் உள்ள கிராமப்புற துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, கிராமப்புற குழந்தைகள் பாதி நாளை பள்ளியிலும் மீதி நாளை தந்தையின் பாரம்பரிய தொழிலைக் கற்கவும் செலவழிக்க வேண்டும்.

அதாவது, கோவிலில் பணியாற்றுபவர் குழந்தை கோவிலிலும் விவசாயக் கூலியின் குழந்தை வயல்காட்டிலும் தோட்டியின் மகன் அந்தக் கலையைக் கற்பதிலும் மீதி நாளை செலவிடலாம்.

‘குலக்கல்வித் திட்டம்’ என இதனைப் பெயரிட்டு, தி.க., தி.மு.க. போன்ற கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்தனர். இது மிகப் பெரிய அரசியல் புயலாக உருவெடுத்தது. இந்தத் திட்டத்தை எதிர்த்து கடுமையான, மிகப் பெரிய போராட்டங்கள் மாகாணத்தில் நடக்க ஆரம்பித்தன.

இதற்கு ஒரு வருடத்திலேயே ராஜாஜியின் அரசு வீழ்ந்தது. அதற்குப் பிறகு அவர் அரசியல் அதிகாரத்தைப் பெறவே முடியவில்லை. ஆனால், இந்தச் சர்ச்சையை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பிராமணரல்லாதோர் எழுச்சிக்கான காலம் துவங்கியது. இதன் உச்சமாக காமராஜர், கட்சியின் தேசியத் தலைவராக, கிங் மேக்கராக உயர்ந்தார்.

ராஜாஜி ஜாதியைக் காப்பாற்றத்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாரா எனச் சிலர் கேட்கக்கூடும். அவர் என்ன நினைத்தார் என யாருக்குத் தெரியும்? அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை வைத்துத்தான் இது குலக்கல்வித் திட்டம் எனக் குறிப்பிடப்பட்டது.

படிக்க :
கர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் – ஆர்.எஸ்.எஸ். அபாயம் !
“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

பெரும் ஆதாரங்களைத் திரட்டி இந்த வரலாற்றை, ஒரு சிறிய புத்தகமாக முன்வைத்திருக்கிறார் டி. வீரராகவன். புத்தகத்தின் தலைப்பு Half a Day for Caste: Education and Politics in Tamilnadu (1952-55). நவீன தமிழ்நாட்டு அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. தமிழகத்தில் ஜாதி எதிர்ப்புப் போரில், கல்வியின் பங்கையும் லேசாக கோடிகாட்டுகிறது நூல்.

புத்தகத்தின் ஆசிரியர் டி. வீரராகவன் (1958-2009) சென்னை ஐஐடியில் பேராசிரியராக இருந்தவர். சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு என்ற அற்புதமான ஆய்வுநூலை எழுதியவர். வீரராகவன் ஒரு இடதுசாரி என்பதை மனதில் வைத்து, இந்த நூலை அணுக வேண்டும்.

இந்த நூலை எடிட் செய்திருப்பவர் வரலாற்றாசிரியர் ஏ.ஆர். வேங்கடாசலபதி. ஒரு விரிவான, அட்டகாசமான பதிப்புக் குறிப்பையும் எழுதியிருக்கிறார். முன்னுரை எழுதியிருப்பது கோபால்கிருஷ்ண காந்தி.

இவை எல்லாம் சேர்ந்தே 165 பக்கங்கள்தான். விலை ரூ. 250 ரூபாய். இப்போதே பதிவு செய்பவர்களுக்கு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து புத்தகங்களை அனுப்புவார்களாம்.

நூலை பதிவு செய்வதற்கான இணைப்பு : Half a Day for Caste: Education and Politics in Tamilnadu (1952-55)

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன் முகநூல் பதிவிலிருந்து…

குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் கிளந்தெழுந்து நடைபெறுகின்றன. அதிலும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல், இந்திய மாணவர் சமூகத்திடையே பெரும் கோபத்தை உருவாக்கியது.

இதன் தொடர் விளைவாக தமிழகத்திலும், போராட்டங்கள் பற்றிப் பரவ ஆரம்பித்துவிட்டன. தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மாணவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தடைகளைத் தாண்டி மாணவர் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த போராட்டங்களின் தொகுப்பை இங்கே தருகிறோம்…

***

சென்னை பல்கலையில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் !

மாணவர்கள் சென்னை பல்கலைக் கழக வளாகத்துக்குள்ளேயே நேற்று (17.12.2019) காலை முதல் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசு குவிக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மாணவர்கள் கார்த்திகேயன் மற்றும் சுப்பையா ஆகியோரை போலீசு கைது செய்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரியும், குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், இன்றும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பல்கலைக் கழக நுழைவு வாயிலில் முழக்க அட்டைகளுடன் போராடும் சென்னை பல்கலைக் கழக மாணவர்கள்.
மாணவர்களை ஒடுக்கவும் மிரட்டவும் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.
இரவிலும் தொடரும் மாணவர்கள் போராட்டம்.

 

***

திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி மாணவர் போராட்டம் !

திருச்சியில் 17.12.2019 அன்று பெரியார் ஈவெரா கல்லூரியில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பெரியார் ஈவெரா கல்லூரி  மாணவர் கூட்டமைப்பு சார்பாக வாயிற் கூட்டம் நடைபெற்றது.

சக மாணவர்கள் மத்தியில் போராட்ட நியாயத்தை விளக்குகின்றனர்
கல்லூரி வாயில் முன்பு முழக்கமிடும் மாணவர்கள்.

***

கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்கள், 17.12.2019 அன்று காலை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீதான எதிர்ப்பை, தங்களது நுண்கலைகள் மூலம் வெளிப்படுத்தினர்.

வண்ணங்களையும், தூரிகைகளையும் ஆயுதமாக்கிய மாணவர்கள்.

 

இந்துவா, கிருத்துவனா, இசுலாமியனா, சீக்கியனா என்பது முக்கியமில்லை. நான் மனிதன்.

 

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

மாநிலக் கல்லூரி மாணவர்கள் 17.12.2019 அன்று தங்களது கல்லூரி வளாகத்திற்குள் ஒன்று கூடி, குடியுரிமை திருத்தச் சட்டதின் மீதான தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

***

தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மோடி அரசு கொண்டுவந்த தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இன்று (18.12.2019) போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய போலீசை கண்டித்தும். மதரீதியாக இஸ்லாமியர்களையும், இனரீதியாக ஈழத்தமிழர்களை இந்தியாவில் இருந்து அகற்ற கூடாது எனவும். மத பிளவை ஏற்படுத்தும் CAA சட்டத்தை தடை செய்ய வேண்டும்! ஆகிய கோரிக்கைகளை தங்களது போராட்டத்தில் முன்வைத்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம் தொடர்புக்கு: 97888 08110.

***

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம், கலெக்டரிடம் மனு!

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 17.12.2019 அன்று திரண்டு, மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டிற்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, திருவள்ளூர் பேருந்து நிலையம் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

பின்னர் அங்கு நுழைவு வாயிலில் சுமார் 15 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்திய பின், மாணவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொகுப்பு :

காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்று – உடுமலை விவசாயிகள் !

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கிராம பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுத்து நிறுத்தக்கோரி டிசம்பர்-17 அன்று உடுமலை வனச்சரக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உடுமலை பகுதியின் மக்கள் அதிகாரம் அமைப்பு இப்போராட்டத்தில் பங்கேற்றது.

சின்னமனூர் தொடங்கி உடுமலை வரையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள வனவோரக் கிராமங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் விவசாய பாதிப்பு பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக நீடித்து வருகிறது.

”தொடர்ந்து நாங்கள் காட்டுப் பன்றிகளால் பெருத்த சேதத்தை சந்தித்து வருகிறோம். மாலை ஆறு மணி ஆனால் வயல்வெளிகளில் நூற்றுக்கணக்கான பன்றிகள் படையெடுத்து நிற்கின்றன. விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகிறோம். நாங்கள் எங்கள் பயிர்களை காப்பாற்ற ஏதாவது வேலி அமைத்தால், பன்றிகளைத் தாக்கினால் வனத்துறையினர் உடனடியாக எங்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். காட்டு பன்றிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என பலமுறை புகார் கொடுத்தும் வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.” என்கின்றனர், இப்பகுதி விவசாயிகள்.

படையெடுத்து வரும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த இரும்புக்கூண்டு.

விவசாயிகள் தொடர்ச்சியாக போராடும்பொழுது, நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளிப்பதும் பெயருக்கு ஒரு சில கூண்டுகளை வைத்து பன்றிகளைப் பிடிக்கிறோம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பதுமாகத்தான் வனத்துறை இப்பிரச்சினையை அணுகி வருகிறது. நிரந்தர தீர்வு காணும் நோக்கில் வனத்துறையோ அரசோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை என்பதுதான் விவசாயிகளின் மிக முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. ஏற்கெனவே, விவசாயம் நலிவடைந்து வரும் சூழலில் அதனையும் சமாளித்து விவசாயம் செய்ய முற்பட்டால் வனவிலங்குகளால் பயிர்செய்ய செலவிட்ட பணத்தைக்கூட திரும்ப எடுக்க முடியாமல் நட்டத்தை சந்திக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

வனப்பகுதியில் வேட்டை மிருகங்களான புலி, கழுதைப் புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற விலங்கினங்கள் அழிந்து போனதால், காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை பல்மடங்கு பெருகியிருப்பதாகவும்; பல்வேறு காரணங்களால் வனத்திலுள்ள இயற்கை வளங்கள் அழிந்துபோனதால், உணவுத்தேவைக்காக மலையடிவாரங்களிலுள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் படையெடுத்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

படிக்க:
மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !
முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !

காட்டுப்பன்றிகள் மட்டுமின்றி, பெருங்கூட்டமாக படையெடுத்துவரும் மயில் போன்ற வனவிலங்குகளாலும் மலையடிவாரத்தில் பயிரிடப்படும் நிலக்கடலை, சோளம், மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் பெருத்த நட்டத்தை சந்தித்து வருகின்றனர். வனவிலங்குகளால் விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டதை ஆதாரங்களுடன் முறையிட்டால், வனத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற நடைமுறை இருந்த போதிலும் பல்வேறு காரணங்களால் வனத்துறையினர் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் குற்றஞ்சுமத்துகின்றனர், விவசாயிகள்.

மிக முக்கியமாக, தமிழகத்தில் காட்டுப்பன்றிகள் வனவிலங்குகள் என்ற பட்டியலில் இடம்பெற்றிருப்பதால் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளிடமிருந்து தம்மை தற்காத்துக் கொள்ளும் நோக்கில்கூட அவற்றை விவசாயிகளால் தாக்கிவிட முடியாது. அவ்வாறு விவசாயிகளால் காட்டுப்பன்றிகள் தாக்கப்படும்பொழுது, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மீது வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் கொடுமையையும் சந்தித்து வருகின்றனர், வனவோர விவசாயிகள்.

மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால், அவற்றால் பிரச்சினை ஏற்படும் போது விவசாயிகள் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுகின்றனர். ஆனால், இங்கே அது சட்டவிரோதம்.

இந்நிலையில்தான், “வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாதவாறு வனத்துறையின் சார்பில் வேலி அமைக்க வேண்டும்; உணவுத் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறும் நிலையை மாற்றுவதற்கு வனச்சூழலை பராமரிக்க வேண்டும்; வனவிலங்குகள் பட்டியலிலிருந்து காட்டுப்பன்றிகளை நீக்கவேண்டும்” என்ற விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் ஓர் அங்கமாக, உடுமலை வனச்சரகர் அலுவலக முற்றுகைப்போராட்டத்தை உடுமலை வட்டார விவசாயிகள் நடத்தியிருக்கின்றனர்.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
உடுமலை.

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் | பொ.வேல்சாமி

0

சென்னை உயர்நீதிமன்றத்தை முன்வைத்து நீதித்துறையின் வரலாற்றை சுவைபடக் கூறும் புத்தகத்தின் PDF வடிவம்…

நண்பர்களே….

பொ.வேல்சாமி

”சாதிக்கு ஒரு நீதி” என்று வாழ்ந்து வந்த இந்திய – தமிழ்நாட்டு மக்களுக்கு பொதுவான “நீதி” என்பதை காலனியாதிக்கவாதிகள் தான் உருவாக்கிக் கொடுத்தனர் என்ற வரலாற்று நிகழ்வை யாவரும் பொதுவாக அறிந்துள்ளனர். அத்தகைய நீதி வழங்கும் போக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலங்களில் எப்படி படிப்படியாக உருவாக்கப்பட்டு நிலைபெற்றது என்பதை சுவைபடப் பேசும் ஒரு நல்ல நூல் இது.

படிப்பவர்களுக்கு வியப்பளிக்கும் பல செய்திகள் நூலில் உள்ளன. வாசிப்புச் சுவை குறையாமல் நூல் முழுமையும் எழுதி செல்கிறார் மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.சி.இராமகிருட்டிணன் அவர்கள். இத்தகைய நூலை நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உங்களுக்கு இந்நூலின் இணையதள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நூலை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !

பின்லாந்து நிறுவனமான நோக்கியா ஆலை கடந்த 2006-ம் ஆண்டில் ரூ 650 கோடி முதலீட்டில் திருபெரும்பதூர்-சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஆலையை அமைத்து உற்பத்தியை துவங்கியது 10,000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் பணிபுரிந்து வந்தார்கள்.

நாள் ஒன்றுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான மொபைல்கள் உற்பத்தி செய்யப்பட்டது. அப்படி உற்பத்தி செய்து குறிப்பிட்ட மொபைல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பூரண வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதற்காக மாநில அரசு வருடத்திற்கு ரூ-600 கோடி மானியம் அளித்தது இந்த மானியம் 2006-ல் துவங்கி, 2014-ம் ஆண்டு வரை, வரிசலுகையை பெற்று, கொள்ளை லாபம் ஈட்டியது அந்நிறுவனம்.

இதற்கிடையில் நிறுவனம் சார்பாக முறையாக கட்ட வேண்டிய வரியினை செலுத்தாமல் ஏய்த்து வந்தது. இதற்கு எதிராக, மத்திய அரசின் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது ஆலையில் உற்பத்தியை படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்த நிர்வாகம், தொழிலாளர்களை VRS-என்ற பெயரில் சட்டவிரோதமான முறையில் வெளியேற்றியது. இதற்கேற்ப, ஆலைக்குள் இருந்த சங்க நிர்வாகிகளை ஊழல்படுத்தி தனது கைப்பாவையாக மாற்றி, எல்லாம் சட்டப்படி நடத்துவதாக நாடகமாடியது.

குறிப்பாக 5000-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களை அதுவும் 22-25 வயது உள்ளோரை VRS-திட்டத்தில் வேலையை பறித்தது சட்டபடியும், நடைமுறைப்படியும் எதிரானதாகும் என்பதனை தொழிலாளர்களுக்கு உணர்த்தியது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. மாநிலக் குழுவின் வழிகாட்டுதலை, ஏற்று 102 தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் சட்ட விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கையை எதிர்த்து திருப்பெரும்புதூர் ACL(தொழிலாளர் உதவி ஆணையர்) முன்னிலையில் தொழிற்தாவா எழுப்பப்பட்டு, நிர்வாகம் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது.

படிக்க:
நோக்கியா தொழிலாளிகளுக்காக களமிறங்கிய பு.ஜ.தொ.மு
அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !

சட்டத்தையே மதிக்காத நிர்வாகம், சமரச பேச்சுவார்த்தைக்கு வந்து விடுமா? 4, 5 முறை வாய்தா போட்டும் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அதைக் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நடத்தி வந்தோம்.

தற்போது நோக்கியா ஆலையை சால்காம்ப் நிறுவனம் ரூ 215 கோடிக்கு வாங்க இருப்பதாகவும் 2019-2020 ஆண்டில் ரு-1,300 கோடி முதலீடு செய்து 10,000 பேருக்கு வேலை வழங்க இருப்பதாகவும், மேற்படி திருப்பெரும்புத்தூர் பகுதியை மின்னணு உற்பத்தியின் மண்டலமாக அறிவிக்க இருப்பதாகவும் தமிழக அரசின் தொழிற்துறை சார்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா நிர்வாகத்தின் சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்தும் மீண்டும் வேலை வழங்கக் கோரி வழக்கு நடத்திவரும் நிலையில், மேற்படி அறிவிப்பின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு, வேலையை உத்ரவாதப்படுத்துவது இயற்கை நியதிப்படியும், சட்டத்தின் படியும் அரசின் பொறுப்பாகும் என பு.ஜ.தொ.மு வழிகாட்டியது.

அதன் அடிப்படையில் 09/12/2019 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வேலைகேட்டு போராடி வரும் நோக்கியா தொழிலாளர்களுக்கு, வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

ஆடம் ஸ்மித் : 18-ம் நூற்றாண்டு பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரம்

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 48

டியுர்கோ – மனிதர்

அ.அனிக்கின்

டியுர்கோவுக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லை. ஆனால் அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த வாதநோய் அதிகமான வேதனையை ஏற்படுத்தியது. அவர் இருபது மாதங்கள் பதவியிலிருந்தார். அவற்றில் ஏழு மாதங்களைப் படுக்கையில் கழித்தார். ஆனால் அவருடையய வேலை சிறிதும் தடைப்படவில்லை, ஒரு நாள் கூட நின்றுவிடவில்லை.

அவர் படுக்கையிலிருந்தபடியே நகல் சட்டங்களையும் அறிக்கைகளையும் கடிதங்களையும் சொல்ல மற்றவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர் படுக்கையறையிலேயே அதிகாரிகளுக்குப் பேட்டியளித்தார், உதவியாளர்களிடம் உத்தரவுகளைத் தெரிவித்தார். சில சமயங்களில் அரசரின் தனி அறைக்குள் அவரை சோபா நாற்காலியில் வைத்துத் தூக்கிக் கொண்டு போவார்கள்.

அவர் தன்னுடைய நோயை அலட்சியமாகக் கருதினார். ஆனால் நோய் அவரைப் பிடிவாதமாகத் துன்புறுத்தி வந்தது. சில சமயங்களில் அவர் முட்டுக் கட்டைகளைப் பயன்படுத்தியே நடமாட முடிந்தது; அவர் தமது முட்டுக் கட்டைகளைப் பற்றி கிண்டலாகக் ”கால்கள்” என்று சொல்வதுண்டு. அவர் பதவியிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுச் சரியாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு 1781 -ம் வருடம் மே மாதத்தில் ஈரல் நோயினால் மரணமடைந்தார்.

டியுர்கோ பதவியிலிருந்து கீழே இறக்கப்பட்டதையும் தம்முடைய சீர்திருத்தங்கள் கைவிடப்பட்டதையும் அமைதியோடு பொறுத்துக் கொண்டது அவருடைய நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடைய கடிதங்கள் தணிக்கையாவது பற்றிக் கூட அவர் கேலியாகப் பேசினார். பதவியிலிருந்து ஓய்வு கிடைத்தது ஒரு வகையில் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது போலும். அவர் சப்ளை அதிகாரியாகவும் அமைச்சராகவும் சுமார் பதினைந்து வருடங்களைக் கழித்துவிட்டார். இந்தக் காலமுழுவதும் படிக்கவோ, விஞ்ஞான ஆராய்ச்சி செய்யவோ நண்பர்களைச் சந்திக்கவோ அவருக்கு ஓய்வு கிடையாது. இப்பொழுது அவருக்கு நேரம் கிடைத்தது. டியுர்கோ தன்னுடைய கடிதங்களில் இலக்கியத்தையும் இசையையும் விவாதிக்கிறார், பௌதிகத்திலும், வான இயலிலும் தான் செய்துவரும் ஆராய்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார்.

1778 -ம் வருடத்தில் பிரெஞ்சு இலக்கியப் பேரவையின் தலைவர் என்ற முறையில் அவர் தன்னுடைய புதிய நண்பரான பெஞ்ஜமின் பிராங்க்ளினைப் பேரவையின் உறுப்பினராக்கி கௌரவித்தார். புரட்சி செய்த அமெரிக்கக் குடியேற்றங்களின் தூதராக வந்த பிராங்க்ளினுக்காக வரிவிதிப்பதைப் பற்றிய குறிப்புகள் என்ற தமது கடைசிப் பொருளாதார நூலை எழுதினார். பிரெஞ்சு சமூகத்தின் மற்ற பகுதியினரைப் போலவே அவரும் இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க விவகாரங்களில் தீவிரமான அக்கறை எடுத்துக் கொண்டார். அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பால் ஏற்பட்டிருக்கும் புதிய குடியரசு நலிவுற்ற நிலப்பிரபுத்துவ ஐரோப்பாவில் செய்யப்பட்ட தவறுகளையும் குறைகளையும் தவிர்க்கக் கூடும் என்று மனமார்ந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்.

டியுர்கோ.

அவருடைய பழைய நண்பரான ட அன்வில் கோமகள், திருமதி ஹெல்வெடியஸ் (காலஞ்சென்ற தத்துவஞானியின் விதவை) ஆகியோருடைய வரவேற்புக் கூடங்களுக்கு அவர் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தார். அங்கே அதிகமான சுதந்திரச் சிந்தனை கொண்டவர்களும் அறிவு இயக்கத்தினரும் கூடுவது வழக்கம். மனிதனின் பகுத்தறிவைப் போற்றிய இந்த மாமனிதரின் அறிவு கடைசிவரையிலும் கூர்மையாகவும் தெளிவாகவும் இருந்தது.

டியுர்கோ தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஓரளவுக்குக் கடுகடுப்பாகவும் கவர்ச்சியற்றவராகவும் இருந்தார். அவரிடம் நெகிழ்ச்சி இல்லை; அளவுக்கு மீறி ஒரே நோக்கமுடையவராக இருந்தார் என்று அவரைக் குறை சொல்வதுண்டு. இதனால் அவரோடு தனிமுறையில் பழகுவது அவருக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட கடினமாக இருந்தது; அவரை நன்கு அறியாதவர்களுக்கோ அது அச்சமூட்டுவதாக இருந்தது.

அவர் மனிதர்களிடமுள்ள இரட்டை வேடத்தையும் சிந்தனையின்மையையும் முரண்பாட்டையும் கண்டு ஆத்திரமடைந்தார். டியுர்கோ அரசவைக்குரிய வழக்க மரபுகளை ஒரு போதும் கற்றுக் கொள்ளவில்லை. வெர்சேய் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் அவருடைய ஊடுருவிப் பார்க்கின்ற பழுப்பு நிறக் கண்கள், அகன்ற நெற்றி, மாண்பார்ந்த உருவம், அவருடைய தலையின் சமநிலை, ரோமாபுரிச் சிலையைப் போன்ற அவருடைய “வீறமைதியான” தோற்றத்தைக் கண்டு தடுமாற்றமடைந்தார்கள், மிகவும் அதிகமாக பயந்தார்கள் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர் எழுதுகிறார்.

வெர்சேய் அரசவைச் சூழலுக்குள் அவர் பொருந்தவில்லை. அவரிடம் பல திறமைகள் இருந்தன, டாலைரான் வர்ணிக்கின்ற ஒரு திறமை அவரிடம் இல்லை. சிந்தனையை வெளிப்படுத்துவதற்கல்ல – அதை மறைப்பதற்கே மொழியை உபயோகிக்க வேண்டும் என்பது அந்தத் திறமை. அது அவரிடம் சிறிதும் கிடையாது.

படிக்க:
காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் – புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம் !
♦ “இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

***

அத்தியாயம் பத்து

ஆடம் ஸ்மித் : ஸ்காட்லாந்து அறிஞர்

ரசியல் பொருளாதாரத்தை நிறுவிய அறிஞர்களில் ஒருவரின் வாழ்க்கையோடு தொடர்புடைய இரண்டு விழாக்கள் சமீபத்தில் கொண்டாடப்பட்டன. 1973-ம் வருடத்தில் ஆடம் ஸ்மித்தின் 250வது பிறந்த தின விழாவும் 1976-ம் வருடத்தில் அவர் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற மாபெரும் புத்தகம் வெளியிடப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததும் கொண்டாடப்பட்டன. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அந்த மாபெரும் அறிஞர் மீதும் பொருளாதார விஞ்ஞானத்தில் அவர் வகித்த அதிகச் சிறப்பான பாத்திரத்தின் மீதும் உலகத்தின் கவனம் திருப்பப்பட்டது.

விக்டோரியா காலத்தைச் சேர்ந்த ஆங்கிலப் பொருளியலாளரும் கட்டுரையாளருமான வா. பேஜ்காட் 1876-ம் வருடத்தில் பின் வருமாறு எழுதினார்: ”ஆடம் ஸ்மித்தின் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி அநேகமாக முடிவில்லாத அளவுக்கு எழுதப்பட்டிருக்கிறது; ஆனால் ஆடம் ஸ்மித்தைப் பற்றி அநேகமாக எழுதப்படவில்லை. இத்தனைக்கும் அவர் மனிதப் பிறவிகளில் அதிகமான அளவுக்கு விசித்திரம் நிறைந்தவராக இருந்தார். மேலும், அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் அவருடைய புத்தகங்களை அநேகமாகப் புரிந்து கொள்ள முடியாது”.(1) 

இதற்குப் பிறகு ஆடம் ஸ்மித் பற்றிய ஆராய்ச்சி அதிகமாக வளர்ச்சியடைந்துவிட்டது என்பது உண்மையே. எனினும் 1948-ம் வருடத்தில் ஆங்கில நிபுணரான அ. கிரேய் பின்வருமாறு கூறினார்: “ஆடம் ஸ்மித் 18-ம் நூற்றாண்டின் ஒப்பற்ற மேதைகளில் தலை சிறந்தவர், 19-ம் நூற்றாண்டில் அவருடைய நாட்டிலும் அதற்கு வெளியேயுள்ள உலகத்திலும் வன்மையான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பதும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியதே. எனவே அவருடைய வாழ்க்கை விவரங்களைப் பற்றி நமக்கு மிகவும் குறைவான செய்திகளே தெரிந்திருப்பது ஓரளவுக்கு வியப்பைத் தருவதே…. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுபவருக்குச் செய்திகள் குறைவாகவே இருப்பதனால் ஆடம் ஸ்மித்தின் வாழ்க்கை என்ற பெயரில் அந்தக் காலத்தின் வரலாற்றை எழுத வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படுகிறது. (2) 

ஒவ்வொரு யுகமும் தன்னுடைய தேவைகளுக்கேற்ப மனிதனை உருவாக்குகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நடைமுறை வளர்ச்சியால் நிர்ணயிக்கப்பட்ட இங்கிலாந்தின் அரசியல் பொருளாதாரம் தன் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியிருந்தது. அந்தக் கட்டத்தில் பொருளாதார அறிவை முறைப்படுத்திப் பொதுமையாக்குவது. ஒரு பொருளாதார முறையை உருவாக்குவது அவசியமாயிற்று. இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு ஸ்மித் தனிப்பட்ட முறையிலும் அறிவுத்துறையிலும் மிகச் சிறந்த தகுதிகளைக் கொண்டிருந்தார்.

அவரிடம் சூக்குமமாகச் சிந்திக்கும் திறமையும் ஸ்தூலமான விஷயங்களைப் பற்றி கவர்ச்சிகரமாகப் பேசக் கூடிய ஆற்றலும் அதிர்ஷ்டவசமாக இணைந்திருந்தன; கலைக்களஞ்சியத்தைப் போன்ற விரிவான புலமையும் அறிவுத்துறையில் அதிகமான நேர்மையும் மனச்சான்றிலிருந்து இம்மியளவும் விலகாத தன்மையும் கொண்டிருந்தார்; மற்றவர்களுடைய கருத்துக்களை அதிகமான சுதந்திரத்தோடும் விமர்சனக் கண்ணோட்டத்தோடும் எடுத்தாள்கின்ற திறமையைக் கொண்டிருந்தார். அறிவுத்துறையிலும் பொது விவகாரங்களிலும் அவரிடமிருந்த ஒரு வகையான துணிச்சல் பேராசிரியர்களுக்குரிய நிதானம், ஒழுங்கு முறையோடு கலந்து வெளிப்பட்டது.

சாதாரணமாகவும் எளிமையாகவும் தோன்றுகின்ற ஆனால் மனிதனுக்கு மிகவும் அடிப்படையான நிகழ்வுகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதையும் விளக்குவதையும் பொருளாதார விஞ்ஞானம் சாத்தியமாக்குகிறது, அல்லது அவ்வாறு புரிந்து கொள்வதற்கு முயற்சிகளைச் செய்கிறது.

பணம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு ஆகும். அதைத் தன்னுடைய கைகளால் தொடாதவர்கள் அல்லது அது என்ன என்று தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் பணம் பல இரகசியங்களைக் கொண்டிருக்கிறது. பொருளியலாளர்களுக்கு இந்தப் பிரச்சினை முடிவில்லாத அளவுக்குப் பன்முகத் தன்மையைக் கொண்டதாகும்; இது இன்னும் பல வருடங்களுக்கு அவர்களுடைய கவனத்துக்கு உரியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆடம் ஸ்மித் அன்றாடம் நடைபெறுகின்ற பொருளாதார நிகழ்வுகளைப் புத்தார்வக் கற்பனையோடு பார்க்கின்ற குறிப்பிடத்தக்க உணர்ச்சியைக் கொண்டிருந்தார். வாங்குவதும் விற்பனை செய்வதும், நிலத்தைக் குத்தகைக்கு விடுவதும் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதும், வரிகளைக் கட்டுவதும் உறுதிச் சீட்டுகளைக் கழிவோடு பெற்றுக் கொள்கின்ற எல்லா நடவடிக்கைகளுமே அவருடைய பேனாவில் ஒருவித விசேஷமான அர்த்தத்தையும் அக்கறையையும் பெற்றன.

படிக்க:
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !
♦ அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !

அவற்றைப் புரிந்து கொள்ளாமல் ”கௌரவமான” மேல் வட்டாரங்களான அரசியல் மற்றும் அரசாங்கத் துறைகளில் நடப்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பது வெளிப்பட்டது. பைரனும் பூஷ்கினும் வாழ்ந்த காலத்தில் அரசியல் பொருளாதாரத்தின் மீது அதிகமான அக்கறை ஏற்பட்டதற்குக் காரணமே ஆடம் ஸ்மித் என்பது உண்மையாகும்.

ஸ்மித் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த தொழில்துறை முதலாளி வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்தினார், ஆனால் அவர் நிபந்தனையற்ற முறையில் அதற்காக ஒரு போதும் வாதாடவில்லை என்பது முக்கியமான அம்சமாகும். அவர் தன்னைப் பொறுத்தவரை, அறிவுத்துறையில் பாரபட்சமின்றி ஆராய்வதற்கும் சுதந்திரமான முடிவுகளுக்கு வருவதற்கும் முயற்சி செய்தார் என்பது மட்டுமல்லாமல், பெருமளவுக்கு அவற்றைச் சாதிக்கவும் செய்தார். இந்த குணாம்சங்களே அவர் ஒரு பொருளாதார முறையை உருவாக்குவதற்குத் துணை புரிந்தன. அவர் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை ஊடுருவிப் பார்க்க முயற்சி செய்தார் (3)

என்று மார்க்ஸ் ஆடம் ஸ்மித்தைப் பற்றி எழுதுகிறார். அவருடைய புத்தகம் மனிதகுலப் பண்பாட்டின் மகத்தான சாதனையாகும், 18-ம் நூற்றாண்டில் பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரமாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  Bageliot’s Historical Essays, N.-Y., 1966, p. 79.
 (2) A. Gray, Adam Smith, London, 1948, p. 3.
 (3)  K. Marx, Theories of Surplus-Value, Part 1/1, Moscow, 1968, P. 165.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983