Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 390

நூல் அறிமுகம் : மதமும் சமூகமும் – தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா

தம் பற்றிய ஆய்வுகளுக்கான அடிப்படை நூல்களில் ஒன்றாக இது திகழ்கிறது. மார்க்சிய வழிமுறையைப் பின்பற்றி பொதுவாக மதங்களின் தோற்றத்தைப் பற்றியும் – குறிப்பாக, இந்து மதம் என்று நாம் இன்று அழைக்கும் மதம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றியுமான மிகச்சிறந்த நூல் இது.

அனாதிகாலம் தொட்டே இந்து மதம் உலகுக்கு ஆன்மீகத்தை அளித்தது என்ற புரட்டை – புனிதமுலாம் பூசப்பட்ட மடமையை – நமது பேராசிரியர் உடைத்து நொறுக்குகிறார். இந்திய ஆதி பொருள்முதல் வாதத்தில் இருந்து ஆன்மிகக் கற்பனைகள் எவ்வாறு தோன்றின? ஏன் தோன்றின? என்பன போன்ற கேள்விகளுக்கு வரலாற்றுப் பூர்வமாகவும் – தத்துவ அடிப்படையிலும் விளக்கி மதத்தின் முறிவு சமதர்ம சமூக உருவாக்கக் கட்டத்தில் சர்வ நிச்சயம் என உறுதிபட உரைக்கிறார்.

காலனி ஆட்சியாளர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியதை எதிர்த்த விடுதலைக்கான போர் இந்திய தேசியத்தை அனைத்துத் துறைகளிலும் கட்டமைக்க வேண்டிய பணியை தேசிய இயக்கத்துக்கு வழங்கியது. இந்திய தேசியத்தின் இருப்புக்கான நியாயங்களை அது வழங்க வேண்டி வந்தது. தத்துவத் துறையிலும், வரலாற்றுத் துறையிலும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இது பெரிதும் நிறைவேற்றப்பட்டது. இந்திய தேசியத்தின் பெருமிதங்களை முன்வைத்தபோது ஆன்மிகம் அதன் பெருமைகளில் ஒன்றாக முன்னிறுத்தப்பட்டது. சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா போன்ற அறிஞர்கள் தத்துவத் துறையில் இதனை நிலைநாட்டப் பாடுபட்டனர். இயல்பாகவே, அவர்களுடைய முயற்சிகள் இந்திய அறிவியல் மரபுக்கும், பொருள் முதல் வாத மரபுக்கும் (நாத்திக மரபு) எதிரானவையாகவே முடிந்தன. குடும்பம், ஒழுக்க நெறிகள், பண்பாடு போன்றவற்றில் காணப்படும் இந்தியத் தன்மைக்கு ஆன்மிகமே அடிப்படை எனவும், நாத்திகம் அவற்றுக்கெல்லாம் எதிரானது எனவும் மதவெறிக் கூச்சல் அதனையொட்டிப் பரப்பப்பட்டது.

இந்தியத் தத்துவஞானத்தின் வரலாற்றில் கருத்துமுதல் வாதத்துக்கும் – பொருள்முதல் வாதத்துக்கும் இடையிலான போர் – ஆன்மிகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையிலான ஓய்வறியாப் போர் நடந்துவந்த வரலாற்றை எடுத்துரைத்து இந்தியப் பொருள்முதல் வாதத்தின் மேன்மையை நிலைநாட்ட வேண்டிய அவசியம் எழுந்தது.

அதனைத் தத்துவஞானத் துறையில் பேராசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா தனியராய் நின்று சாதித்தார். இந்திய மார்க்சியத்தை வளப்படுத்தினார். இந்தியப் பகுத்தறிவு இயக்கத்துக்கு மகத்தான பங்களிப்பைச் செய்தார். வரலாற்றுத் துறையில் டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, இர்பான் ஹபீப் போன்ற மார்க்சிய அறிஞர்கள் அனைவரும் ஆற்றிய சாதனைகளுக்கு ஈடானது அது.

டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா (பிறப்பு: 19-11-1918; மறைவு: 8-5-1993) இந்திய அறிவியல் வரலாற்றுக்கும், தத்துவஞானத்துக்கும் அளித்த மேதமை மிகுந்த பங்களிப்பு இல்லாமல் முற்போக்கு இயக்கம் தனக்கான கருத்தியல் கருவியை வளப்படுத்திக்கொள்ள இயலாது…

… மதம் குறித்த மார்க்சியத்தின் அணுகுமுறை, இந்திய மதம் / மதங்கள் தோன்றியதற்கான சமூக – பொருளியல் மற்றும் கருத்தியல் அடிப்படைகள், வேத மதம் பற்றிய மாயை, ஆதி பொருள்முதல் வாதத்தின் அழிவுக்கும் – ஆன்மிகத்தின் எழுச்சிக்குமான பொருளாயத, வரலாற்றுக் காரணிகள், மீமாம்சம் / பௌத்தம் போன்றவை ஆன்மிக வாதத்துக்குள் கொண்டு வரப்பட்டதன் வரலாறு முதலிய பலவும் இந்த நூலில் மிக எளிமையாக – ஒரு சாதாரண வாசகன் புரிந்து கொள்ளும் வரையில் “உரையாடல்’ மொழியில் சொல்லப்படுகிறது.

இந்த நூலைப் பயில்வதற்கு உதவியாக சில குறிப்புகளை இங்குத் தரவேண்டிய அவசியம் உள்ளது. தத்துவம் மட்டுமல்லாது தொல்லியல், மானுடவியல் போன்ற துறைகளின் துணையோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளதால் அத்துறை சார்ந்த சொல் வழக்குகளை அத்துறைகளின் சொல் வழக்குகளாகப் புரிந்துகொண்டு பயில்வது அவசியமாகும். அதேபோல, மாயை, மாய வித்தை போன்ற சொற்களை அவற்றின் இன்றைய புரிதல் அடிப்படையில் அல்லாது குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் தத்துவப் புரிதல் அடிப்படையில் புரிந்துகொண்டு பயில்வது மிகவும் அவசியமாகும். இல்லையேல், மதம் குறித்த இந்த உரையாடலைக் கொச்சைப்படுத்திப் புரிந்துகொள்ளும் அபாயம் ஏற்படும். இந்தப் பொருளைப் பற்றி மேலும் பயில்வதற்கான நூல் பட்டியலாகவே கடைசியில் இணைக்கப்பட்டுள்ள நூல் பட்டியலைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நூல்களைப் பயில்வது மதம் குறித்த மார்க்சிய அறிதலுக்கு மேலும் துணை புரிவதாக அமையும். (நூலின் பதிப்புரையிலிருந்து)

படிக்க:
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?
இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

ஒரு காலத்தில் தவிர்க்கவியலாமல் தோன்றிய மதம் இறுதியில் மறைந்தே தீரவேண்டும். நமது விவாதத்துக்கு வசதியாக நாம் இதனை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். முதலாவதாக, மதத்திற்கு உறுதியான ஒரு துவக்கம் உள்ளது. இரண்டாவதாக, அது உதிர்வதைத் தவிர அதற்கு வேறு எதிர்காலம் இல்லை. முதலாவது அம்சத்தை நாம் இரு கட்டங்களாக விளக்கலாம். நாம் மதம் என்றழைப்பதை மனிதகுலம் அறியாத காலம் ஒன்று இருந்தது. அது வர்க்கங்களாகப் பிளவுபடுவதற்கு முந்திய தொல்குடி சமுதாயமாகும். காட்டுமிராண்டி மனிதர்கள் உலகின் சில பகுதிகளில் இன்னமும் வசித்து வருகின்றனர்.

வர்த்தகர்களும், தொண்டு நிறுவனங்களும் இல்லாது இருந்த இவர்களிடம் மதம் கிடையாது. மதத்திற்குப் பதிலாக இவர்கள் மாயவித்தைகளை கடைபிடித்து வந்தனர். வரலாற்றுக்கு முந்திய சமுதாயத்தை நாம் உள்நோக்கும்பொழுது அங்கு மதத்திற்குப் பதிலாக மாயவித்தை இருந்ததை நம்மால் அறிய முடிகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக, வர்க்கத்துக்கு முந்திய சமுதாயத்தில் மனிதன் இதே நிலையில்தான் இருந்து வந்தான். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மிகவும் தாழ்நிலையில் இருந்ததே இதற்குக் காரணமாகும். தமது குறைந்தபட்ச தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள மட்டுமே அதிகபட்சமாக உழைக்க வேண்டியிருந்தது.

டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா.

உபரி எதுவும் இல்லாததால்தான் சமுதாயத்தின் ஒரு பகுதி மக்கள், மற்றொரு பிரிவினரின் உழைப்பைக் கொண்டு வாழ்வது சாத்தியமில்லாமல் இருந்தது. இத்தகைய எளிமையான உற்பத்தித் திறனைச் சார்ந்து வாழவேண்டிய, ஆதரவற்ற கட்டத்தில் மனிதன் தனது உண்மையான தொழில்நுட்பத்துக்கு மாறாக, மாயையான ஒன்றின் தேவையை உணர்ந்தான். அதுவே மாயவித்தை ஆகும்…

… உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி காரணமாக மனிதன் தனது அடிப்படைத் தேவைகளுக்குக் கூடுதலாக ஒரு கட்டத்தில் உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றான். அதாவது உபரியாக உற்பத்தி செய்யத் தொடங்கினான். இது நடைபெற்றபொழுது மனிதன் நாகரிகத்தின் வாசற்படியை எட்டினான். ஆனால், இன்னும் முழுமையான நாகரிகத்துக்கு வரவில்லை…

… சமூக உபரியை ஆரம்ப நிலையிலுள்ள நகர மையங்களுக்குக் கொண்டு செல்ல சில கருவிகள் தேவைப்பட்டன. இதற்குத் தேவையான எல்லாவிதமான கருவிகளையும் பரிசீலித்த நாம், மிகவும் சாத்தியமான, சாத்வீகமான மதம் என்ற ஒரு சித்தாந்தக் கருவி உருவானதைக் கண்டறிந்தோம். வெற்றிடத்திலிருந்து இது உருவாகவில்லை. மாயத் தன்மையுடன் விளங்கிய  புராதன மாயவித்தையிலிருந்து திறம்பட உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது பல்வேறு தாய் தெய்வங்களும், கடவுள்களும் உருவாக வழிவகுத்தது…

… இத்தகைய தாய் தெய்வங்களும், கடவுள்களும் நேரடி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பொருட்களை அளித்ததாக அவர்கள் கருதினர். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்காகச் செயல்பட, அவர்களது விவகாரங்களைக் கவனிக்க இகலோக அல்லது பூவுலகப் பிரதிநிதிகள் அவர்களுக்குத் தேவைப்பட்டனர். எனவே, அவர்களிடமிருந்து மதகுருமார் வர்க்கம் என்ற சமூகப் பிரிவுத் தோன்றியது. அவர்கள் மட்டுமே வாழ்வின் ரகசியங்களை அறிந்திருந்தனர். இவ்வாறுதான் மதம் உருவாக்கப்பட்டது அல்லது செயல்பாட்டுக்கு வந்தது. (நூலிலிருந்து பக். 181-183)

நூல்: மதமும் சமூகமும்
தமிழில்: டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா
தமிழில்: இரா.சிசுபாலன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி: 044 – 2625 1968 | 2635 9906

பக்கங்கள்: 202
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam | panuval

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !

புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு அரசும், ராணுவமும் அடையும் பதட்டத்தை விட, இந்துத்துவ கும்பலுக்கு அடியாள் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களின் கூச்சல், பதட்டம் அதிகமாக இருக்கிறது. தாக்குதல் நடந்த அன்று அர்னாப் கோஸ்வாமி பாகிஸ்தானுடன் போரிட்டே ஆக வேண்டும் என குதித்தார்.

அர்னாப்பின் கதறலை மெல்லிய தொனியில் பேசும் நம்மூர் பத்திரிகையாளர் மாலன், இதுதான் சந்தர்ப்பம் பாகிஸ்தானை முற்றாக குண்டு போட்டு அழிக்க வேண்டும் என யோசனை சொன்னார்.

இரு தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் தீவிரவாத முகாம்களை அழித்ததாக  இந்தியா சொன்னபோது, மாலனுக்குள் இருந்த முழு சங்கியும் வெளிப்படுகிறார். அவர் எழுதிய முகநூல் பதிவில்,

“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! இன்று அதிகாலை நடந்த அதிரடித் தாக்குதலின் சிறப்பு என்ன?

போர் வியூகம் வகுக்கும் மாலன்…

புல்வாமாவில் தாக்குதல் நடத்திய உடனேயே பதிலடி இருக்கும் என்று ஜெய் ஷே முகமது எதிர்பார்ததது. அதனால் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் இருந்த முகாம்களை 100 கிலோமீட்டர் உள்ளே, அதாவது பாகிஸ்தான் எல்லைக்குள் மாற்றியது. அது பத்திரமான மலைப்பகுதி. எவ்வளவு பத்திரமாணது என்றால் அமெரிக்காவிற்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு ஒசாமா பின் லேடன் ஒளிந்திருந்த இடம் அது. அது 5 நட்சத்திர ஓட்டலின் வசதிகளோடு கூடிய இடம்.

தீவிரவாதிகள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பாகிஸ்தானில் இருக்கிறது. இந்தியா எல்லை தாண்டி வந்து தாக்காது என்று நினைத்தது. ஏனென்றால் 1971 -க்குப் பிறகு, 48 வருடங்களாக இந்தியா எல்லை தாண்டி சென்று தாக்கியதில்லை.

அதன் கணக்குகள் பொய்த்தன. அந்தக் காலங்கள் மலையேறிவிட்டன என்று அதற்குத் தெரியாது. இந்தியா தீவிரவாதிகள் பின்வாங்கக் காத்திருந்தது. அதே நேரம் வேறு பல வழிகளில் அழுத்தம் கொடுத்து வந்தது. தீவிரவாதிகள் இடம் மாறியதும் துணிந்து எல்லை தாண்டிப் போய் போட்டுத் தள்ளியது. இறந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை 400! (375 பயிற்சியாளர்கள்+25 பயிற்சி அளிப்பவர்கள்.)

40 -க்கு பதில் 400! இதுதான்(டா) இந்தியா!” என்கிறார்.

*****

ந்தியாவின் தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்து இந்திய அரசே இதுவரை உறுதியான எந்தத் தகவலையும் கூறவில்லை. வெடி சத்தம் கேட்டது உண்மைதான், ஒரே ஒருவருக்கு, அதுவும் அந்த மலைப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு காயம் என்பதாக பிபிசி ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது.  உண்மை இப்படியிருக்க, அக்மார்க் சங்கிபோல, மாலன் “40 -க்கு பதில் 400” என அவிழ்த்து விடுகிறார்.

புதன்கிழமை நடந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் வசம் அபிநந்தன் என்ற வீரர் சிக்கினார். அவரை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என சமூக ஊடகங்களில் இந்திய மக்களும் பாகிஸ்தானியர்களும்கூட வலியுறுத்திய நிலையில், கீ போர்டில் போர் புரியும் மாலன், “சிராய்ப்புக் கூட இல்லாமல் சண்டையில் ஜெயித்த ஹீரோக்கள் சினிமாவில் கூட இல்லை!” என அஞ்சா நெஞ்சனாக எழுதுகிறார்.

நல்லா கூவுற தம்பி….

மாலனைப் போல டிவி ஸ்டியோவில் உட்கார்ந்துகொண்டு  ‘போர் போர்’ என கத்திக்கொண்டிருக்கிறார் அர்னாப் கோஸ்வாமி. போர் வேண்டாம் என முழக்கங்கள் எழ ஆரம்பித்த நிலையில், போருக்கு போயாக வேண்டும் என அடம்பிடிக்கும் அர்னாபை தயவு செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வையுங்கள் என ட்விட்டரில் பலர் கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

“அன்புள்ள பாகிஸ்தானியர்களே இங்குள்ள அர்னாப் கோஸ்வாமியை அழைத்துக்கொண்டு, அபிநந்தனை திருப்பி அனுப்பி விடும்பம்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ரவிச்சந்திரன்.

முன்னாள் இராணுவ வீரரான சாவூர், “அபிநந்தனை மீட்க அர்னாப், கவுரவ் சாவந்த், நாவிகா குமார், ராகுல் கன்வால், ராகுல் சிவசங்கர் போன்றோரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்.

அதுபோல, மாலனையும் அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் முகநூல் பதிவர்கள் பலர் விரும்புகிறார்.

“மாலன் போன்ற போர் விரும்பிகள் தங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் சென்று எதிரிகளை சுட்டு வீழ்த்தி தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டும். இதுதான் பொருத்தமான நேரம். மாலன், கூச்சப்பட்டு அமைதியாக இருந்துவிடுவார் என்பதால் நாம் அவரை போர் முனைக்கு செல்வதற்கு உற்சாகப்படுத்த வேண்டும். தேசமே பதற்றத்தில் இருக்கும்போது தேசபக்தாளுக்கு ஃபேஸ்புக்கில் என்ன வேலை?” என்கிறார் பாரதி தம்பி.

***

“நமது ராணுவத்தில் நேரடியாக யுத்தத்தில் இறங்கும் சிப்பாய்கள் அனேகமாக பஞ்சமர்களும் சூத்திரர்களுமே. 10% இடஒதுக்கீட்டின்படி உயர்சாதியினரையும் அங்கே பணியமர்த்த வேண்டும். மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்குதான் முரட்டு குணம் வரும் என்று சங்கிகள் கூறுவதால் அவர்களும் அதை சாப்பிட வேண்டும். இந்த ஏற்பாட்டிற்கு பிறகு போருக்கு போனால் வெற்றி நிச்சயம். சரிதானே மாலன்..?” எனக் கேட்கிறார் பேராசிரியர் அருணன்.

***

இந்தியாவின் தாக்குதல் குறித்து தெலுங்கு செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ராணுவ உடையணிந்து செய்தியை வழங்கினார். அதைக் குறிப்பிட்டு, “இதுபோல இனி, திரு மாலன் நாரயணன் தொலைகாட்சிவிவாதங்களுக்கு மில்ட்ரி ட்ரஸில் வரவேண்டும். அதே வேகத்தோடு எல்லைக்குப் போய் பாகிஸ்தான் மண்ணில் குதித்து… படபடவென்று தன்னைத் தானே சுட்டுக் கொள்ள வேண்டும்…” என்கிறார் இரவிக்குமார்.

***

“இந்திய ராணுவ தளபதி அவர்களுக்கு..

தமிழ்நாட்டில் மாலன் என்றொரு ஸ்பார்ட்டன் வீரர் ஒருவர் போர் புரிய துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்.. தயவு செய்து வந்து அள்ளிட்டு போகவும்.. ” என்கிறார் கார்ட்டூனிஸ்ட் பாலா.

***

“போர் வேண்டும்” என்று தினம் தினம் சமூக வளைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் முதலில் தங்கள் குடும்பத்துடன் ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு சென்று குடியேற வேண்டும்.

மாலன், மாரிதாஸ் போன்ற பிஜேபி அயோக்கியர்கள் தங்கள் சுய லாபத்திற்காக, பாதுகாப்பான இடங்களில் அமர்ந்து கொண்டு போர் வேண்டும் என்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வருகிறார்கள்…” என காட்டமாகிறார் சந்திரசேகர்.

***

“மாலன் என்ற ஆளுங்கட்சி ஜால்ரா பத்திரிகையாளர் அவருடைய 300 தீவிரவாதிகள் கதையை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதினார் என்று விளக்கம் கொடுப்பாரா? கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பற்றிய விவரங்களை உளவுத்துறை தெரிவிக்குமா? இந்த தாக்குதல் குறித்து இந்திய விமான படை நேரடியாக அறிக்கை அளிப்பார்களா?

ராணுவ தாக்குதல் குறித்து சந்தேகம் கொள்வதற்கு மிகவும் கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் பிஜேபி-யினர் அள்ளி விடும் கதைகளால் ராணுவத்தின் பொறுப்பு கேள்விக்குரிய விஷயமாக ஆக்கப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம்.” என்கிறார் அரசியல் நையாண்டி.

***

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது!
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
– என்ற நாமக்கல் கவிஞர் வழியிலேயே மாலனுக்குப் பதில் சொல்லத் தொடங்குகிறேன்.

போர் என்றால் நடுங்குகுறார்கள் புறநானுற்றின் புலிப் போத்துகள் என்று மாலன் பதிவிட்டத்தை நான் காண நேர்ந்தது. மாலன் வரிகளையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. பறநானூற்றின் புலிப் போத்துகள் என்று தமிழர்களை தான் குறிப்பிடுகிறார் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவ்வரியால் தான் தமிழ்ப் பேசினாலும் தான் ஒரு தமிழினில்லை என்று தன்னுடைய அடையாளத்தையும் அதே ஒற்றை வரியில் உறுதிப் படுத்தியிருக்கிறார். புலிப் போத்துகள் என்ற சொல்லை விடுதலைப் புலிகளை சிறுமைப் படுத்தவும் பயன்படுத்திக் கொள்வதை நான் உணர்கிறேன்.

அதிகாரத் திணிப்பை எதிர்த்து போராடிய புறநானூற்றின் புலிப் போத்துகள் தன் இனத்தின் ஒரு பகுதியை இழந்தே இருக்கிறோம். போரின் வலியை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதன் பாதிப்புகளையும் நிகழ் காலத்தில் கண்டிருக்கிறோம்.

இந்நாட்டிலும் ஆரிய திராவிடப் போரை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறோம். நாங்கள் கருத்தியல் போர் நடத்திக் கொண்டிருக்க, கல்வி கற்பதாலேயே எதிர்த்துப் பேசுகிறார்கள் என்றறிந்து படுகொலைகளை கல்வி நிறுவனங்களின் மூலமாகவும், தகுதித் தேர்வு என்ற பெயர் மூலமாகவும் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள் மாலன்.

உண்மையில் உங்கள் நெஞ்சில் உரமிருந்தால் அபிநந்தனின் குடும்பத்தைப் பார்த்து விட்டு வாருங்கள். போரினால் கைக்கால் இழந்த இராணுவ வீரர்களையும் அவர்கள் குடும்பத்தின் நிலையையும் பார்த்து விட்டு வருங்கள். போரினால் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களையும் சந்தித்து விட்டு வாருங்கள்.

இதற்கு மேலும் இறுதியாக ஒரு மாத காலம் காஷ்மீரில் இருக்கும் இசுலாமியர்களின் வீடுகளில் ஒரு மாதம் காலம் இருந்து விட்டு வாருங்கள்.

பின்னர் உங்கள் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் போருக்கு அனுப்பி வைத்துவிட்டு வாருங்கள்.

போலி தேசப் பக்தியால் ஓட்டுப் பொறுக்காதீர்கள் மாலன் அவர்களே!”  முரளிகிருட்டிணன் சின்னதுரையின் பதிவு இது.

***

“எல்லையில் காவல் காக்க மாலன் செல்ல இருப்பதாக செய்தி வருகிறது. உண்மையா?” எனக் கேட்கிறார் யோ. திருவள்ளுவர்.

***

மாலன், அர்னாப் வகையறா சங்கி பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், ஆளும் அரசுக்கு கூஜா தூக்கும் பல ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

“ தினந்தந்தி – தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு. அதிகபடியான தமிழர்களால் வாசிக்கப்படக் கூடிய தினசரி.

நேற்று : “பழி தீர்த்தது இந்தியா”.

இன்று : “பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட போது, சென்னை விமானி சிக்கினார். வீடியோ வெளியிட்டதுக்கு இந்தியா கண்டனம்”.

இவை இரண்டும் தான் தலைப்பு செய்திகள்.

இதை கொட்டை எழுத்தில் போட்டு விட்டு, பக்கத்தில் அபிநந்தனின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. வீடியோ வெளியிடக் கூடாது என்று இந்தியா சொன்னதை சொல்லிக் கொண்டே, புகைப்படங்களை வெளியிட்டு, “பார்த்தீங்களா மக்களே, இப்படி தான் பாகிஸ்தான் நம்முடைய வீரர்களை நடத்துகிறது” என்று சொல்லாமல் சொல்வது எந்த மாதிரியான நயத்தகு ஊடக தர்மம்? இதை ஊடக வேசித்தனம் என்று சொல்லாமல், வேறு எப்படி டிப்ளமேடிக்காக சொல்வது???

உள்ளே ஒரு பெட்டி செய்தியாய் ‘மசூத் அசார் ஒத்துக் கொண்டார்’ என்று ஒரு செய்தி வருகிறது. மசூத் அசார் இதற்கு முன் சொன்ன எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, இப்போது 300 – 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று சொன்ன பொய்யினை சமன் செய்ய, திடீரென என்ன மசூத் அசாரின் மீது அக்கறை? இதற்கு முன் மசூத் அசார் பேசியது அத்தனையும் பெரும் பிரசாரங்கள். பொய்கள். ஜிகாதி உளறல்கள். நேற்று சொன்னது மட்டும் சத்தியம். என்ன லாஜிக் இது?

மசூத் அசார் உருதுவில் சொன்னது பாகிஸ்தானிய உருது இதழ்களில் வெளியாகி இருக்கிறது. கூகிள் ட்ரான்ஸ்லேட் வைத்தால் ஒரளவிற்கு புரியும். அவர் சொன்னது “இந்திய விமானங்கள் அத்து மீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்திருக்கின்றன” என்பது மட்டுமே. ஆனால், தினந்தந்தி மசூத் அசார் முழுமையாக ஒத்துக் கொண்டார் என்று எழுதுகிறது.

பாகிஸ்தான் இரண்டு மிக் விமானங்களை வீழ்த்தியது என்று பாகிஸ்தான் பிரதமரே பகிரங்கமாக ட்வீட் போடுகிறார். ஆனால் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய சார்பு ஊடகங்கள், இந்திய நிலையினை எடுப்பதில் நமக்கு சிக்கலில்லை. ஆனால், நெடுசாண்கிடையாக இப்படி மோடிக்கு கால் கழுவி விட வேண்டிய அவசியமென்ன? பிறகு என்ன எம்-மிற்கு நடுநிலை நாளிதழ் என்கிற பெயர்? இதற்கு பேசாமல் ‘தினமலர்’ மாதிரியும், அதன் முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் மாதிரியும் இருந்து விட்டு போகலாமே? ஊடகங்களில் இருக்கும் “மாமாக்கள்” என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது ஊரறிந்தது. ஆனால் ஊடகமே “மாமா” வேலை பார்த்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது?

ஆதித்தனார் குடும்பம் என்பதால் தான் உங்களுக்கு தமிழகத்தில் மரியாதை. அதை நீங்களே கெடுத்துக் கொண்டால், நாளை மக்களை குறை சொல்லாதீர்கள்.” என்கிறார் நரேன் ராஜகோபாலன்.

“நாட்டில் நல்லது கெட்டது என்ன நடந்தாலும் அதனால் ஒரு மயிரைக்கூட இழக்காமல் லாபம் மட்டுமே பார்க்கும் மேட்டுக்குடிகளின் கொழுப்பெடுத்த வாய்கள் இப்படித்தான் பேசும்.

பார்ப்பனீயம் என்பது மனிதக் கறியை ருசி பார்க்கும் சிந்தனை, அதனால்தான் அது ஆடு போன்ற அல்ப இறைச்சியை புசிப்பதில்லை.” என்கிறார் வில்லவன் இராமதாஸ்.

ஐந்தாண்டு கால ஆட்சி, இந்தியாவின் பேரழிவாக அமைந்துவிட்ட நிலையில், பதவி போகக்கூடும் என்ற கணிப்பில் போர் என்ற பேரழிவு ஆயுதத்தை கையிலெடுத்துள்ளது மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு. இந்துத்துவ கும்பலைத் தவிர, பொது மக்கள் எவரும் போரையும் விரும்பவில்லை; மோடி நடத்தும் நாடகத்தையும் இனம் கண்டுவிட்டார்கள்.

மோடியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் பொய் பித்தலாட்டங்களை மறைக்க தேசபக்தியின் பெயரால் போர் வெறி பரப்புரை செய்கின்றனர். இந்துத்துவ கும்பலோடு, இந்த ஊதுகுழல்களையும் மக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும்.

தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

இந்த தேசியவெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது …!

இந்த தேசியவெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது …

♣ ரஃபேல் விமான பேர ஊழல்.
♣ செல்லாத நோட்டில் செத்து மடிந்த உயிர்கள்.
♣ பண மதிப்பு நீக்கத்தால் நொடித்துப்போன தொழில்கள், இழந்த வேலைவாய்ப்புகள்.
♣ ஜி.எஸ்.டி. எனும் வரிவிதிப்பால் நிர்மூலமாகிப்போன தொழில்துறை.
♣ வேலைவாய்ப்பு வீழ்ச்சியில்1970-களின் நிலைமைக்கு சென்றுவிட்ட இந்தியா.
♣ நீட் தேர்வு என்ற பெயரில் நொறுக்கப்பட்ட ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு.
♣ அனிதாவின் உயிர்.
♣ ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், சி.பி.ஐ., தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் காவி மயப்படுத்தியது.
♣ அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை அமித்ஷாவின் ஏவல்படையாக மாற்றியது.
♣ உச்சநீதிமன்ற நீதிபதிகளே பிரஸ் மீட் வைத்து கதறும் அளவுக்கு நீதித்துறையை சீரழித்தது.
♣ மாநிலக் கட்சிகளை மிரட்டி அடிபணிய செய்து, கடைசியில் கட்சியையே கபளிகரம் செய்து, அடுத்தவன் கட்சி ஆபீஸில் வெட்கமின்றி தன் கட்சி தலைவர் படத்தை வைத்துக்கொள்வது.
♣ எட்டு வயது பெண் குழந்தையை கோயிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்த கொடூரர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் போன பா.ஜ.க.வின் கேவலம்.
♣ மாட்டுக்கறி சாப்பிடுவதை கொலைக்குற்றம் போல சித்தரித்த மக்கள் விரோத நடவடிக்கை.
♣ அக்லக் உள்ளிட்ட மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சொல்லி நிகழ்த்தப்பட்ட இந்து வெறி கும்பல்களின் கொலைகள்.
♣ கவுரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் என எழுத்தின் வழியே சமூக மாற்றத்துக்காக உழைத்தவர்களை இந்துத்துவ கும்பல் சுட்டுக் கொன்றது.
♣ நீதிபதி லோயா சுட்டுக் கொல்லப்பட்டது.
♣ உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, அருண் பெரைரா, கன்சால்வேஸ், வரவரராவ் ஆகிய இந்தியாவின் முக்கியமான மாற்றுக் குரல்களை அப்பட்டமான போலி வழக்குகளில் urban naxal என்ற பெயரில் கைது செய்தது.
♣ ஆனந்த் டெல்டும்டே மீதான தொடரும் நெருக்குதல்கள்.
♣ பள்ளிக் கல்வித்துறை தொடங்கி உயர் கல்வித்துறை வரையிலும் அனைத்தும் காவிமயப்படுத்தப்பட்டுள்ளது.
♣ மினிமம் பேலன்ஸ் இல்லை என்று ஏழைகளின் வங்கிக்கணக்குகளில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பல நூறு கோடி ரூபாய்.
♣ மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய குஜராத் பனியா கும்பலுக்கு கொடுக்கப்பட்டு, வாராக்கடனாகிப்போன சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய்.
♣ 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு எனும் அநியாயம்.
♣ மக்களின் எதிர்ப்பையும் கடந்து மீண்டும், மீண்டும் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு வழங்கப்படும் புதிய உரிமங்கள்.
♣ காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழ்நாட்டை கழுத்தறுத்தது.
♣ தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக்கட்டியது.
♣ உயர்சாதி ஏழைகள் எனும் அரிய வகை ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது.
♣ இந்தியா முழுக்க பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஓர் இணை அரசாங்கத்தை நடத்த முயல்வது.
♣ அருவருப்பான, ஆபாசமான போலி செய்திகளையும் தப்பு தப்பான வரலாறுகளையும் எந்த கூச்சமும் இல்லாமல் தினம்தோறும் பேசுவது.
♣ சபரிமலை உள்பட பெண்களின் வழிபாட்டு உரிமையை, சுப்ரீம் கோர்ட்டே சொன்னாலும் கூட மதிக்காத திமிர்த்தனம்.
♣ 3000 கோடியில் படேல் சிலை, 15 லட்சத்தில் கோட் அணியும் ஏழைத்தாயின் மகன்

– இவை அனைத்தையும் போர்வெறியின் பின்னால் மறைத்துவிடலாம் என பா.ஜ.க நினைக்கிறது. நாம் மீண்டும் மீண்டும் இவற்றைப் பேசுவோம்.

நன்றி: முகநூலில், பாரதி தம்பி

விட்டுட்டு ஒரேடியா ஓடிட மாட்டான்னு நம்புறோம் – திருநங்கை அக்காவுடன் ஒரு பயணம் !

1

“இன்னாம்மா இப்படி ரோதன பண்ணினுக்குற ஏறும்மா சீக்கரம்.” கடுகடுப்பில் கத்தினார் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்.

“நீங்க போங்க நான் வேற வண்டியில போய்க்கிறேன்.” நானும் கோபத்துல சட்டுன்னு பேசிட்டேன்.

ஓட்டுநருக்கும் எனக்குமான பிரச்சனை முடிவுக்கு வருவதற்குள் கதவு படக்கென திறந்தது. “சண்ட போட்ற நேரமா இது. வா வா உள்ள வா. எங்க சிரிச்சிகினே ஏறு பாக்கலாம்”  என்றார் உள்ளே இருந்த திருநங்கை ஒருவர்.

அவர் முகம் நிறைய மஞ்சள். குளிச்சு நெத்தியல வைச்சிருந்த பெரிய வட்டப் பொட்டு, இறந்து போன என் பெரியம்மா கண் முன்னாடி வந்து போனாங்க. அவர் வண்டியில ஏறச் சொன்ன விதம் கன நேரத்துல கோபத்த குறைச்சுடுச்சு. உடனே ஆட்டோவுல ஏறிட்டேன்.

“ஏம்மா போலீசு ட்ராஃபிக் சரிபன்னினுக்கிறான். அந்த எடத்தாண்ட கைய நீட்டினு நிக்கிறே. போலீசு பாத்தான்னா வண்டிய ஓரங்கட்டுவான். 100 தண்டம் அழுவனும், இல்லாங்காட்டி மரியாத இல்லாம திட்டுவான். சம்பாரிக்கிற 100 – 200யும் இவனுங்க புடிங்கினு போனா வீட்டுக்கு இன்னாத்த எடுத்துனு போறது. அதான் சத்தம் போட்டுட்டேன் தப்பா எடுத்துக்காதம்மா.” என்றார் ஓட்டுநர்.

“சரி விடுங்க, நானும் போலீசு நின்னத பாக்கல. ஏதோ கவனத்துல இருந்துட்டேன். தப்புதாங்க.”

“கவனத்த வேற எங்கேயோ வச்சுட்டு ரோட்டுல நிக்கிறியே நியாயமா?” என்றார் எதிரிலிருந்த திருநங்கை.

“என்னக்கா பண்ண சொல்றீங்க மனுசனுக்கு ஆயிரத்தெட்டு கவலை. அதுல ஒன்னு ஏங்கவலை” என்றேன்.

“அக்கான்னா கூப்ட்ட!” அழுத்தமாக ஒரு தடவை சொல்லி விட்டு சிரித்தபடி கையால் என் முகத்தை வருடி முத்தமிட்டார். இந்த வெள்ளேந்தியான அன்பு திருநங்கைங்க  கிட்ட மட்டும்தான் பாக்க முடியும்.

“இன்னிக்கு நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தினர் ஒரு திருநங்கை. அவங்க மனசு புண்படும் படியும் வித்தியாசமாகவும் நடந்துக்க கூடாது. அவங்களும் நம்மளாட்டம் மனிதர்கள்தான்” – எங்க வீட்டுக்கு ஒரு திருநங்கை வரும்போது ஒரு தோழர் இப்படி வகுப்பெடுக்கும் நெலமையிலதான் என் பார்வை எட்டு வருசத்துக்கு முன்னாடி இருந்தது அவருக்கு தெரியாது.

“பொழுது விடிஞ்சு பொழுது போனா கவலைக்கா பஞ்சம். அதையெல்லாம் யோசன பண்ணினா வேலைக்காகுமா? அதுவா நாமளான்னு ஒரு கை பாத்துறனும். வீட்ட விட்டு கெளம்ப சொல்லோ கட்டிருந்த துணியோட சேத்து கவலையையும் அவுத்து போட்டுட்டு வந்துறனும். வெளிய வந்து நாலு பேர பாத்து முகம் மலர்ச்சியா இருக்கனும்.

காலையில தூங்கி எழுந்தா பால்காரன் வருவான். டிவிக்காரன் வருவான் அதுக்காக இதெல்லாம் ஒதுக்கிப்புட்டு வாழ முடியுமா சொல்லு. வரட்டும் வந்து பாத்துட்டு போகட்டும். இன்னைக்கி இல்லன்னா நாளைக்கி தரப் போறோம்.

யாருக்கு கவலையில்ல சொல்லு. இந்த இவளுக்கு (அருகிலிருந்த இளம் திருநங்கை) இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் வச்சுருக்கு. இன்னும் மூணு பவுனு வாங்கனும் என்ன செய்றதுன்னு தெரியல. இவ கண்ண கசக்கியே உயிர விட்டுடுவா போலருக்கு.”

அந்த அக்கா பக்கத்துல இருந்த அந்த இளம் திருநங்கை எந்த நேரத்துலயும் அழுகுற நிலையில இருந்தாங்க. இவங்க பேசினத கேட்டதும் அவங்க கலங்கிய கண்ணுல இருந்து கண்ணீரே வந்துடுச்சு.

அவங்க திருநங்கைங்கனு தெரிஞ்சுதான் பேசினேன். இருந்தாலும் திருமணம், நகைன்னு அந்த அக்கா சொன்னதும் ஒரு தடுமாற்றம் எனக்குள்ள.

“அக்கா தப்பா எடுத்துக்காதிங்க நீங்க திருநங்கை தானே? இல்ல கல்யாணம் நகநட்டுன்னு பேசிக்கிறீங்களே எப்படி என்னன்னு…….” அவங்க மனசு புண்படாமெ கேக்குறோமான்னு ஒரு பயத்துல அப்புடியே நிறுத்திட்டேன்.

“ஆமாப்பா நாங்க திருநங்கையேதான். நாங்களும் ஒங்களப்போல ஆம்பளை ஆளுகள கல்யாணம் கட்டிக்கலான்னு சட்டமே வந்திருக்கு தெரியும்ல”

“தெரியும்கா. அப்புடின்னா அது காதல் கல்யாணமா தானே இருக்க முடியும். நீங்க நகைய பத்தியெல்லாம் பேசுறீங்களே!”

“காதல்தான். அது இவளுக்கு மட்டும் தான் வந்துருக்கு. ஆட்டோ ஓட்டுற பையனோட ஒரு தபா ஆட்டோவுல போயிருக்கா. பயல புடிச்சுப் போச்சு கட்டுனா அவனத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறா. அவனும் போனா போவுதுன்னு ஆறு பவுன் நகை வேணுங்கற கண்டிசனோட கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்.”

படிக்க:
பொட்டை!
♦ வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!

“எல்லாம் சரிதான் அதுக்காக நகைய முக்கியமா நெனைக்கிற ஆள கல்யாணம் பண்ணிக்கனுமா?.”

“அட பார்டா! எந்த உலகத்துல இருக்க நீ. எந்த கல்யாணம் நகை இல்லாம நடக்குது. நகை கேக்குற மாப்பிள்ள வேண்டான்னு கர்ப்பப் பையோட இருக்குற நீங்களே, புள்ள பெத்துக்க முடிஞ்ச நீங்களே, சொல்ல மாட்டிங்க. எங்களப் போல திருநங்கைங்க எப்படி சொல்ல முடியும்?

நாங்களும் ஒங்களாட்டம் பொம்பளைதான். கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டியா வாழனுமுன்னுதான் ஆசைதான், நடக்குமா சொல்லு. அப்பா ஆத்தான்னு குடும்பத்தோட இருக்குற பொண்ணுங்களே அத்தன செரமப்பட வேண்டிருக்கு. எங்க கதை நல்லதங்காளை விட சோகமானது.

உருவத்துல ஆணாவும் உள்ளத்துல பொண்ணாவும் ரெண்டுங் கெட்டான் வாழ்கை எங்களுக்கு. வீட்டுலயும் ஏத்துக்க மாட்டாங்க. வீட்டுக்கு வெளியேவும் ஏத்துக்க மாட்டாங்க. ஒன்னு பிச்சயெடுக்கனும் இல்ல அப்புடி இப்புடி பொழப்பு பொழைக்கனும். இவ ஒரு வாழ்க்கைய ஆசப்பட்டு அது அமையுது அப்ப கேட்டத குடுத்துதானே அவனும் வருவான்.”

“பையன் வீட்டு குடும்பத்துல ஏத்துக்கிட்டாங்களா”

“எப்புடி ஏத்துப்பாங்க. பிள்ள பெத்து தரமுடியாதவள எந்த குடும்பத்துல ஏத்துப்பாங்க. சொத்து கித்து இல்லேனாலும் ஏத்துக்குறவங்க பிள்ள வேணான்னு சொல்லுவாங்களா, சொல்லு பாப்போம். கொஞ்ச காலம் கழிச்சு வம்ச விருத்திக்கி அந்த பையனுக்கு வேற கல்யாணம் பன்னிப்போம்னு சொல்லிட்டுதான் நாளே குறிச்சாங்க.”

“அதுக்கு பிறகு எப்டிக்கா?”

“அதுக்கு பிறகு விட்டுட்டு ஒரேடியா ஓடிட மாட்டான்னு நம்புறோம். அப்பப்ப வந்து போவான். அசிங்கப்பட்ட வாழ்க்க இல்லாமெ ஒரு குடும்பம் புருச பொஞ்சாதிங்கற அந்தஸ்தோட இருப்பா. எங்க யாருக்கும் கிடைக்காத கவுரவம் அவளுக்கு வரப்போவுதுன்னு எங்களுக்கு சந்தோசம்” என்றவர் கல்யாணப் பொண்ணு கையை நம்பிக்கையோட அழுத்தி ஆறுதலா தலையை வருடி குடுத்தார்.

“கவலை படாதீங்க. சிவனும் பார்வதியும் சேந்துருக்கும் ஒடம்பு உங்களுக்கு. அதனால உங்களப் போல உள்ளவங்க எல்லாம் கடவுள் மாதிரி. நான் சொல்றேன் கல்யாணம் நல்லபடியா நடக்கும்.” என்றார் அருகில் அமர்ந்து இருந்த தெலுங்குக்கார அம்மா.

“நீ சொல்றத கேக்குறதுக்கு சந்தோசமா இருக்கும்மா. அதுக்காக வீட்டாண்ட உக்காந்திருந்தா காசு பணம் வந்துருமா. எங்களுக்கு தெரிஞ்ச எங்க ஆளுங்க கிட்ட கேட்ருக்கோம். விசயத்த கேள்விப் பட்டதும் சந்தோசமா தர்றதா சொல்லிருக்காங்க. அவங்க மட்டும் என்ன பேங்குல இருந்தா எடுத்து தரப் போறாங்க. எல்லாம் பிச்சதான்.”

“நீங்க எனக்கு சொன்னத நான் உங்களுக்கு சொல்றேன் கவலை படாதீங்கக்கா”

“அவளாவது நல்லா இருக்கட்டும்னு ஆசைதான் எங்க எல்லாருக்கும். நானும் இன்னைக்கி திருஷ்டி சுத்தி போடத்தான் போறேன். செவ்வாய் கிழமை வழக்கத்த விட பத்து ரூவா கூட கிடைக்கும்னு நம்பிதான் போறேன். கூட வாடின்னு கூட்டிட்டு அழுமூச்சியாட்டம் வர்ரா. அடுத்ததா கூட வந்து ஆட்டோவுல ஏறுன நீயும் கோபத்தோட வர்ற. இன்னைக்கி வசூல் மட்டும் கைய கடிச்சுது நீங்க ரெண்டு பேருந்தான் காரணம்.”

“கண்டிப்பா நல்லது நடக்கும். கல்யாணப் பொண்ணுக்கு முன்கூட்டியே வாழ்த்த சொல்லிக்கிறேன்”

“எதுக்கு அவசர அவசரமா வாழ்த்து சொல்லிட்ட, எறங்கப்போறீயா?”

“ஆமாக்கா” என்றபடி பலசரக்கு பையை நகத்தினேன். பையை கையில் வாங்கியவர் என்னை இறங்கச் சொல்லி கையில் கொடுத்து “பாத்துப் போடிம்மா என் செல்லம்” என்றார்.

இறங்குறதுக்கு முன்னாடி “நீங்க எம்பெரியம்மா மாதிரி இருக்கீங்கன்னு” சொல்லணும்னு நினைச்சேன், மறந்துட்டேன்.

சரசம்மா

#MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ‘கண்ணியத்துக்கான பேரணி’ !

0

சிலர் விசைப் பலகையை அழுத்தி தங்களுடைய ஒடுக்குமுறை கதைகளை சொல்லி விடுகின்றனர். சிலர் அதை சொல்ல 10 ஆயிரம் கி.மீ. பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் மீ டூ இயக்கத்தில் விடுபட்ட இந்தப் பெண்களின் கதைகள் நம்மை துயரமடைய செய்யக்கூடியவை.

பேருந்து அன்றைய நாளுக்கான கடைசி இலக்கை அடைந்துவிட்ட களைப்பில் இரைச்சலோடு ஓய்கிறது.  கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசத்தின் பெரும்பகுதியை கடந்து வந்த பிறகு, அது ராஜஸ்தானின் கிழக்கு முனையில் நுழைந்துள்ளது. தாஹோட் மாவட்டத்தின் தேவ்கத் பாரியா தாலுகாவின் அடிவாரத்தில் உள்ள பழங்குடிகளின் குடியிருப்பில் வாகனம் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறங்கி திறந்தவெளிக்கு வருகின்றனர். இவர்களில் பலர் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு அளவிலான பாதிப்புகளிலிருந்து மீண்டவர்கள், அவர்களுடைய பெற்றோர். அனைவரும் ஊரக தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

சுற்றியுள்ள சிறு வெளிச்சத்தின் ஊடே, அந்த நாளுக்காக கடைசி உணவை, ரொட்டி, பருப்பு மற்றும் வெங்காயத்தை அவர்களுக்கு பரிமாறுகிறார் உள்ளூர் பெண். மண்டபத்தில் உள்ள ஒரு அறையில் அவர்கள் அனைவரும் உறங்க பாய்கள் இடைவெளியில்லாமல் விரிக்கப்பட்டிருக்கின்றன.

34 வயதான அவருக்கு இது ஒரு நீண்ட நாள். இதுபோன்ற நாட்களை முன்பும் கடந்து வந்திருக்கிறார். பல ஆண்களால் துன்புறுத்தப்பட்டு, அதன் பின் விளைவுகளையும் நினைவு கூர்ந்தார் அவர். டைபாய்டால் கடுமையாக பாதிக்கபட்டு மீண்ட அவர், மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தை விட்டு மாநிலங்களை கடந்த இந்த யாத்திரையில் கலந்துகொண்டிருக்கிறார். 2018, டிசம்பர் 20-ம் தேதி மும்பையில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது.

நாள் முழுவதும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த அவருடைய தொண்டை, இரவில் பேசக்கூட முடியாத நிலைக்கு போய்விடுகிறது. ஆனால், அனைத்துக்கும் மேலாக, இவர் தன்னுடைய குரலை மீட்டதாக தெரிவிக்கிறார். “முன்பு அது பற்றி நான் பேசவே மாட்டேன். ஆனால், நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை. குற்றமிழைத்தவர்கள்தான் தவறு செய்தவர்கள், இந்த சமூகம் தவறானது. நாங்கள் இவர்களுடைய மனங்களை மாற்ற இந்த யாத்திரையை தொடங்கியிருக்கிறோம்”.

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் சார்பில் மும்பை முதல் டெல்லி வரையிலான பயணத்தின் ஒரு பகுதி.

சிலர் விசைப் பலகையை அழுத்தி ஒரு இயக்கத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சிலர் அவர்களது கதைகள் கேட்கப்பட வேண்டும் என விடாமுயற்சியுடன் நாடு தழுவிய அளவில் 10,000 கி.மீ. நடக்கிறார்கள்.  கும்பல் பாலியல் வன்முறையாலும், கடத்தலாலும், ஏலம் விடப்பட்டும், தலைமுறைகள் தலைமுறைகளாக பெண் குழந்தைகள் சாதி ஒடுக்குமுறை காரணமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டும், உயர் சாதி ஆண்களால் வன்முறைக்கு ஆட்பட்டும், வன்முறையால் குரல்களை நசுக்கிவிடுவேன் என மிரட்டப்பட்டும், சூனியக்காரிகள் என முத்திரை குத்தப்பட்டும், நிர்வாணமாக்கி பொதுவெளியில் நடக்கவிடப்பட்டும்… என, இப்படியான பல கொடுமைகளிலிருந்து  அவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

இப்படியான கொடுமைகளிலிருந்து உயிர்பிழைத்த நூற்றுக்கணக்கான பெண்கள் மௌனத்தை நொறுக்கவும், இந்த இழிவுக்கு முடிவு கட்டவும், ‘கண்ணியத்துக்கான பேரணி’யில் 65 -வது நாளில் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.  கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் பட்டியலின மக்களும் பழங்குடிகளும் ஆவர். அவர்களுடைய கதைகள் இந்தியாவின் மீ டூ இயக்கத்தில் கேட்கப்படாதவை.

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
♦ #MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !

கண்ணியத்துக்கான பேரணி சில நேரங்களில் நடை பயணமாகவும் சில நேரங்களில் வாகன பயணமாகவும் அமைந்திருக்கிறது. சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பணி செய்துகொண்டிருக்கும் ‘ராஷ்டிரிய கரிமா அபியான்’ என்ற அமைப்பு இந்த பேரணியை ஒருங்கிணைக்கிறது.

இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிறுத்ததிலும், இவர்களின் கதைகளைக் கேட்டு தூண்டுதல் பெற்ற  உள்ளூர் மக்களும் நூற்றுக்கணக்கில் இணைந்து கொண்டனர்; தங்களுடைய கதைகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர். 24 மாநிலங்களில் 200 மாவட்டங்களைக் கடந்திருக்கும் இந்தப் பேரணி பிப்ரவரி 22, 2019 டெல்லியில் முடிகிறது. இந்தப் பயணத்தின் பகுதியாக உள்ள 5,000 பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் ராம்லீலா மைதானத்தில் கூட உள்ளனர்.

*****

டுத்த நாள் காலையில் தன்னுடைய தொண்டைக்கு இதமாக டீயை உறிஞ்சியபடி, 34 வயதான அந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண், இந்தப்  பயணம் தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை, குற்றம் புரிந்தவரை அடையச் செய்யும் என்கிறார். தன் கணவரின் பழங்குடி கிராமத்திலிருந்து தன்னை இருவர் கடத்தி பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கடந்த நான்கு வருடங்களாக இந்த களங்கத்தை தான் சுமக்க மறுத்து வருவதாக அவர் கூறுகிறார். பின்னர் இவர் ஒரு நிலக்கிழாரிடம் விற்கப்பட்டு, அவரால் ஆறு மாதங்கள் கடுமையான வன்முறைக்கு ஆட்படுகிறார்.  அங்கிருந்து தப்பி காவல் நிலையம் சென்றபோது, காவலர்கள் புகாரை பதிய மறுக்கின்றனர். புகார் பதிய ஒப்புக்கொண்டபோது, தடை செய்யப்பட்ட இரு விரல் சோதனையை அவரிடம் செய்கின்றனர்.

“மருத்துவ பரிசோதனை காலதாமதமாவது என்னுடைய வழக்கில் உதவவில்லை. நீதிபதி என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என சொன்னபோது, நான் வேண்டுமானால் உடையை களைந்து காட்டுகிறேன். எங்கேயெல்லாம் காயம் ஆகியிருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள் என அவரிடம் சொன்னேன்” என நடந்ததை விவரிக்கிற அவர், வீட்டிற்கு திரும்பியபோது அவருடைய கணவரும் கணவரின் குடும்பத்தினரும் தான் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதாகக் கூறி, தன்னை ரத்தம் வரும்வரை அடித்ததாக கூறுகிறார். அவருடைய பிறந்த வீட்டிலும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. “எங்கும் போக வழியில்லாமல், எட்டு நாட்கள் ரயில் நிலையத்தில் படுத்து கிடந்தேன். ஒரு சமூக சேவகர் என்னை கண்டுபிடித்து, நான் வாழ ஒரு இடத்தை கண்டுபிடிக்க உதவினார்”.

இவர் தற்போது பலமுனை போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். தனக்கு குற்றமிழைத்தவர்களுக்கு எதிராகவும் தனது 10 வயது மகன் மற்றும் 13 வயது மகளுக்காக தனது கணவருக்கு எதிராகவும் போராடுகிறார்.  இந்த யாத்திரையின் போது, முதல் முறையாக தனது கதையை சொன்னபோது, மற்ற பெண்களைப் போல தானும் உடைந்துபோய் அழுதுவிட்டதாக சொல்கிறார். நாட்கள் கடந்த பிறகு, தனது துயரத்தை பேசுவதாலும் தன்னை போன்ற மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதாலும் தன்னுடைய மன உறுதி அதிகமாகியுள்ளதை குறிப்பிடுகிறார்.

ராஷ்டிரிய கரிமா அபியான் அமைப்பைச் சேர்ந்த கிராந்தி என்ற தன்னார்வலர், பல்வேறு மாநிலங்களில் சமூக குழுக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பெருந்திரளான ஆதரவை தந்ததாக குறிப்பிடுகிறார். அவர்களே உணவும் தங்குமிடமும் தந்ததாகவும் சொல்கிறார். “இந்தப் பயணத்தில் பங்கேற்றவர்கள் நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் கடுமையான அனுபவத்தைப் பெற்றவர்கள். தங்களுடைய குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து வருகிற அழுத்தங்களையும் கடந்து இப்படி வருவது பேசுவதும் மிகக் கடினமானது” என்கிறார் கிராந்தி.

தேசிய குற்ற ஆவண மையத்தின் (National Crime Record Bureau) 2016-ம் ஆண்டிற்கான அறிக்கையில் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் பழங்குடியின மற்றும் பட்டியலின பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை வழக்குகளே அதிகம். பெரும்பாலான வழக்குகளின் நிலைமை வெறும் வழக்குகளாகவே உள்ளன. பட்டியலின பெண்களுக்கு எதிரான 8,259 வன்கொடுமை வழக்குகளில் 3.7 % வழக்குகள் மட்டுமே விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, பழங்குடியின பெண்களுக்கு எதிரான 3,563 வன்முறை வழக்குகளில் 2.8 % வழக்குகளில் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சமூக சூழல் காரணமாகவும் மிரட்டல் காரணமாகவும் வழக்குகளாக பதியப்படாதவை எதுவும் இந்த கணக்குகளின் கீழ் வராது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

*****

ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய காரணத்தால் உயர்சாதிக்காரர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர். இவருடைய போராட்டம் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்த பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ‘விசாகா வழிகாட்டுதல்’களை ஏற்படுத்த உதவியது. ஆனால், 25 ஆண்டுகள் ஆன பின்னும் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை என்கிற பன்வாரி தேவி, இந்தப் பேரணி தனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்.

“என்னுடைய போராட்டத்தை சிறிய அளவில் முன்னேடுத்தேன், இப்போது மீ டூ என்ற பெயரில் பெரிய இயக்கமாக வளர்ந்துள்ளது. ஆனால், கிராமங்களிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல்களுக்கு நீதி கிடைப்பதே இல்லை. இப்படி பெரிய எண்ணிக்கையில் தெருவில் இறங்கி போராடுவது, அரசின் கவனத்தை ஈர்க்கும்” என்கிறார் பன்வாரி தேவி.

படிக்க:
போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் !
♦ #Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !

பேரணியை ஒருங்கிணைக்கும் அமைப்பைச் சேர்ந்த ஆசிஃப் ஷேக், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் முதலமைச்சர்கள் கமல் நாத்தும் பூபேஷ் பாகலும் இந்தப் பெண்களுக்கு உதவுவதாக சொல்லியிருப்பதாக தெரிவிக்கிறார். பாலியல் வன்முறைகளை தடுக்க சிறப்பு போலீசு குழுவையும் அத்தகைய வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களையும் அமைக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் அத்துமீறலுக்குரிய இரு விரல் சோதனை முறையையும் தடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தை அடையும் முன் மத்திய பிரதேசத்தின் ரட்லாம் பகுதியில் ‘கண்ணியத்துக்கான பேரணி’யினர் தங்கியிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பாக்சத்தா என்ற பழங்குடியின பெண்கள் தங்களுடைய வன்முறைகளை பகிர்ந்துகொண்டனர். இந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமிகள் நெடுஞ்சாலைகளில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் அவலமும் நடந்துவருகிறது.

கைகளில் குழந்தையை ஏந்திய ஒரு சிறுமி, அப்படியான வன்முறையால் பாதிக்கப்பட்டவள். முதல் முறையாக போலீசு அதிகாரியுடன் சமமாக மேடையை பகிர்ந்துகொண்டார். இந்த இனத்துக்கு இடஒதுக்கீடும் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்தால் பாரம்பரியமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் கொடுமைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் அவர்.

குஜராத் எல்லையோரமாக உள்ள மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் அதிகாரம் மிக்க சாதிகளைச் சேர்ந்த ஆண்களால், அவர்களிடம் விவசாய கூலிகளாக பணியாற்றும் பில் சாதியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தெரிவித்தனர்.  குஜராத்தின் தாஹுட் மாவட்டத்தில் கணவனை இழந்த பெண்களை சூனியக்காரிகள் என முத்திரையிட்டு அவர்களுக்கு சொத்து மறுப்பதும், அவர்களுடைய மகள்களை ஏலத்தில் விடுவது நடைமுறையில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இந்த யாத்திரையில் இணைந்துகொண்டனர்.

தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை 2015-16-ல் சாதி மற்றும் பாலினம் ஆகிய இரண்டுவிதமான ஒடுக்குமுறைக்கு ஆளாவதும் அவர்கள்  15 வயதிலிருந்து உடல்ரீதியிலான வன்முறைக்கு ஆளாகி வருவது தெரிந்தது. பட்டியலின பெண்கள் 35.7 சதவீதமும் பழங்குடியின பெண்கள் 31 சதவீதமும் மற்ற பெண்கள் 21 சதவீதமும் இத்தகைய இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாவதைச் சொன்னது அந்த ஆய்வறிக்கை.

ஒவ்வொரு நாள் பயணத்தின் போது, உள்ளூர் மக்களுடன் பேரணியில் பங்கேற்றவர்கள் பேசினர், முழக்கங்களை எழுப்பினர். அகமதாபாத்தின் சபர்மதி ஆசிரமத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது பெண்ணின் பெற்றோர் உத்தரபிரதேசத்திலிருந்து வந்து தங்களுடைய வலியை பகிர்ந்துகொண்டனர்.

கட்டிடப் பணி செய்யும் அந்த தந்தை பேசினார். “இந்த சம்பவம் நடக்கும் முன், என் மகளை அந்த ஆள் பின் தொடர்ந்தபடியே இருந்ததோடு, நான்கு முறை அடித்தும் இருக்கிறார்.  ஆனால், நாங்கள் கொடுத்த எந்த புகாரையும் போலீசு தீவிரமாக எடுத்துக்கொள்ளவே இல்லை”.

தனது மகளின் படிப்பு முக்கியம் என கருதும் அவருடைய தாய், தினமும் பள்ளிக்கு போகும்போது கத்திரிக்கோலும் மிளகாய் பொடியை பாதுகாப்புக்கு தந்து அனுப்புவதாக சொல்கிறார். “போலீசிடமிருந்தோ நீதிமன்றத்திடமோ நாங்கள் எந்தவித மரியாதையும் பெறவில்லை. எங்களுடைய சொந்த மக்களே குற்றம் புரிந்தவனை நிராகரிப்பதற்கு பதிலாக எங்களை நிராகரித்துவிட்டார்கள்.  இந்த பேரணி நாங்கள் இழந்த மரியாதையும் நம்பிக்கையும் பெற்றுத்தரும் என நினைக்கிறோம்” என்கிறார் அவர்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணின் தாய், ஒரு மூத்த போலீசு அதிகாரி பெண்கள் சமூகத்தை குறை சொன்னதை விரும்பவில்லை. “தங்கள் மகள்களுக்கு சமூக மதிப்புகளை கற்றுத்தர வேண்டும் என அவர் சொன்னார். ஏன் அப்பாக்கள் கற்றுத்தரக்கூடாதா? அதுவும் மகள்களுக்குத்தான் கற்றுத்தர வேண்டுமா? ஏன் மகன்களுக்கு கற்றுத்தரக்கூடாதா?” என கேட்கிறார் அவர்.

பெடூலிலிருந்து வந்திருந்த 25 வயதான பெண் இப்படிச் சொன்னார், “பாலியல் வல்லுறவுகள் பெண்கள் அநாகரிகமாக உடையணிவதால்தான் ஏற்படுகிறது என இவர்கள் நினைக்கிறார்கள். நான் புடவைதான் உடுத்தியிருக்கிறேன். ஆனால், அது வல்லுறவிலிருந்து என்னைக் காப்பாற்றவில்லை” என்கிறார். இவர் சார்ந்த பழங்குடியின கிராமத்திலிருந்து இவர் உள்ளிட்ட பலர் கடத்தப்பட்டு, ரூ. 25 ஆயிரத்துக்கு உயர்சாதி ஆண்களுக்கு விற்கப்பட்டார்கள். மேலும், இந்த இனத்தில் பெண் சிசுக்கொலையும் அதிகமாக உள்ளது.

இந்த யாத்திரை முடிந்த பின், இந்தப் பெண்கள் மத்திய பிரதேசத்தின் தேவாஸ் நகரத்துக்கு இடம்பெயரப்போவதாக சொல்கிறார்கள். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது பெண், தையல் கடை ஒன்றை வைக்கப்போவதாகக் கூறுகிறார். 25 வயது பெண், பியூட்டி பார்லர் வைக்கப்போவதாகக் கூறுகிறார். இவர்கள் இருவரும் பள்ளிக்குச் சென்றதில்லை. படிப்பதையும் எழுதுவதையும் கற்கப்போவதாக இவர்கள் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு நாளின் முடிவிலும் பேருந்து இரவு தங்கலுக்காக நிற்கும்போது ஒலிக்கும் கடைசி பாடல் தோழிகளின் ஒன்றிணைவை பாடுவதாக முடிகிறது. ஒவ்வொரு நாளும் தங்களுடைய கஷ்டங்களை மறந்து இந்தப் பெண்கள் உற்சாக தாளமிட்டு, இந்தப் பாடலைப் பாடுகிறார்கள்.

இந்துத்துவ சக்திகள் ஓங்கியிருக்கிற குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்து சனாதனத்தின் முக்கிய கூறுகளான சாதியமும் பெண்ணடிமைத்தனமும் இன்னமும் உயிர்ப்போடு இருப்பதை அறிய முடிகிறது. அதிகாரத் திமிர் பிடித்த சாதி ஆண்களால் பட்டியலின-பழங்குடி பெண்கள் இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாவதும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. சாதியின் பெயரால் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளும் இழிவான இந்து மத ‘பாரம்பரியம்’ நடைமுறையில் இருப்பதையும் காண முடிகிறது. மத அடிப்படைவாதங்களில் மிகக் கேவலமானது இந்துமத அடிப்படைவாதமே என்பதும் தெளிவாகத் தெரிகிறது.


கட்டுரை: ஷாலினி நாயர்
தமிழாக்கம்: கலைமதி

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த வீதியில்தான் தீர்வு | இராஜு உரை | காணொளி

க்கள் அதிகாரம் பிப்ரவரி 23-ம் தேதி, ”அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் !’ மாநாட்டை திருச்சியில் நடத்தியது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பு பேச்சாளர்கள் எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் மருதையன், தோழர் ராஜு, தோழர் தியாகு, தோழர் ஆளூர் ஷாநவாஸ், வழக்கறிஞர் பாலன் ஆகியோரின் உரைகளைக் கேட்டனர்.

இம்மாநாட்டில் தலைமை உரையாற்றிய தோழர் ராஜு பேசுகையில், “ இந்த மாநாட்டிற்கு அனுமதி வழங்காமல் போலீசு இழுத்தடித்தது. மாநாட்டுக்கு பிரச்சாரம் செய்து நோட்டீசு வழங்கிய தோழர்களைக் கைது செய்தது போலீசு. காரணம் கேட்டபோது, அனுமதியின்றி நோட்டீசு கொடுத்தது தவறு என்று கூறியிருக்கிறது. நோட்டீசு கொடுக்க அனுமதி கேட்க வேண்டிய இந்த நிலையைத் தான் பாசிசம் என்கிறோம்.

மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கிறது இந்த கார்ப்பரேட் எடுபிடி அரசு. எதிர்த்துப் போராடுபவர்களைக் கைது செய்கிறது. நமது உரிமைகளைக் காக்க கார்ப்பரேட் காவி பாசிசத்தை வேரறுக்க மக்கள் ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராடுவதே தீர்வு.. ” என்றார். முழுமையான உரையைக் காண :

யூ-டியூப்:

முகநூல்:

பாருங்கள் ! பகிருங்கள் !

பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை

0

“பசி ஒரு வன்முறை” என்பார், உலக புகழ் பெற்ற முதலாளித்துவ பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென். ஒருபுறம் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களிடம் சொத்துக்கள் குவிந்திருக்க மறுபுறமோ ஏதுமற்றவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதை சென்ற ஆண்டின் இறுதியில் தாமஸ் பிக்கட்டி உள்ளிட்ட அறிஞர்கள் வெளியிட்ட ஐநா உலக வறுமை அறிக்கை அறுதியிட்டு கூறுகிறது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் மரணிப்பதற்கு வசிப்பிட அளவு, தாய்க்கு கிடைக்கும் கல்வியறிவு, குழந்தைகள் திருமணம், மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தான உணவு, சொத்துக்கள் அளவு, திறந்த வெளி கழிப்பிடம் உள்ளிட்ட சமூக ரீதியான பிரச்சினைகளை உலகளாவிய உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் தன்னுடைய 2018-ம் ஆண்டின் அறிக்கையில் கூறுகிறது.

படிக்க:
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !
♦ ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டில் (எண்ணிக்கை அடிப்படையில்) உலகளவில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் இந்தியா முழுதும் இது ஒன்று போலிருப்பதில்லை. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் முன்னணியில் இருக்கின்றன.

குறிப்பாக முட்டையுடன் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதன் வாயிலாக தமிழகம் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் இந்தியாவிற்கே முன்னோடியாக உள்ளது. மறுபுறம் இந்திய மாநிலங்களில் எங்கெல்லாம் பார்ப்பனிய ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அமர்த்தியா சென் கூறியவாறு பசி ஒரு வன்முறையாகவே உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம், பண்டல்கண்ட் பகுதியில் உடல் நலம் குன்றிய தன்னுடைய பேரனை பார்த்துக் கொள்கிறார் ஒரு மூதாட்டி. சமீபத்தில் வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி இந்தியாவில் 2.55 கோடி குழந்தைகள் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டல்கண்ட், லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் தன்னுடைய குழந்தையை வீட்டிற்கு வெளியே தூக்கி செல்கிறார். லலித்பூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளுமே ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தில் ஒரு சமூக நல மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஒரு குழந்தை. உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி உலக அளவில் மூன்றில் ஒருபங்கு குறை வளர்ச்சியுள்ள குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவதியுறும் இராஜஸ்தான் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தின் மற்றுமொரு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை.

உத்திரப்பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இராஜஸ்தான், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பாரன் மாவட்டத்தின் கேல்வாடா கிராமத்தை சேர்ந்த சகாரியா பழங்குடி குழந்தை. 2018-ம் ஆண்டு வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின்படி 4.66 கோடி எடை குறைவான குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக நல மருத்துவ கூடத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை.


தமிழாக்கம்: சுகுமார்
நன்றி:  அவுட்லுக்

துப்புரவுப் பணியாளர்கள் : நாடகமாடும் மோடி ! NSA-வைக் காட்டி மிரட்டும் போலீசு !

2

டந்த ஞாயிற்றுக்கிழமை (24-02-2019) கும்பமேளாவில் பாவங்களைக் கழுவ கங்கையில் மூழ்கி எழுந்த பிரதமர் மோடி, நேராகப் போய் கும்பமேளா குப்பைகளை அள்ளிக் கொட்டிய தூய்மை பணியாளர்கள் கால்களைக் கழுவினார். நாலாபுறமும் கேமராக்கள் அதை விதவிதமான கோணங்களில் படம்பிடிக்க, தனது ஆஸ்கர் நடிப்பை வெளிப்படுத்தினார் மோடி.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாத பூஜை !

வழக்கம்போல மோடியின் ஜால்ரா சங்கி கூட்டம், சமூக ஊடகங்களில் தூய்மை பணியாளர்களின் கால்களைக் கழுவும் மோடியின் படத்தை போட்டு இப்படியொரு பிரதமர் இந்தியா கண்டிருக்குமா என சவால் விட்டது. மோடியை பிரதமர் என்றும் பாராமல் வைத்து செய்யும் தென்னக மக்கள் சமூக ஊடகங்களில் இந்தப் படத்தை வைத்து சங்கிகளை நாறாய் கிழித்துவிட்டார்கள்.

ஆஸ்கர் விருதுகள் வெளியான நாளில் பிரதமர் மோடிக்கு ஒரு விருது பார்சல் என பகடி செய்தும் ஐந்தாண்டுகளாக கண்டுகொள்ளாத தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவினால் என்ன பயன் என விமர்சித்தும் சமூக ஊடகங்களில் எழுதினர்.

உண்மையில், கும்பமேளாவின் குப்பைகளை, கழிவுகளை சுத்தம் செய்வதற்கென்று அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தைக்கூட கொடுக்காமல் மோசடி செய்துள்ளது அம்மாநிலத்தை ஆளும் ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் அரசு. உச்சகட்டமாக, போராட்டத்தை ஒருங்கிணைத்த தலித் அமைப்பினரை ‘தேசிய பாதுகாப்பு சட்டத்தில்’ கைது செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளது.

படிக்க:
நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்
♦ அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்

ஜனவரியில் கும்பமேளா தொடங்கிய நேரத்திலிருந்து போதிய உபகரணங்கள் வழங்கக் கோரியும் சம்பள உயர்வு கேட்டும் தலித் சஃபாய் மஸ்தூர் சங்காதன் என்ற அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த அன்சு மால்வியா, தினேஷ் ஆகியோர்  தூய்மை பணியாளர்களை திரட்டி பல முறை போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து நிர்வாகத்துக்கு பல முறை கடிதங்களும் எழுதியிருக்கின்றனர்.

“எங்களுடைய முக்கியமான கோரிக்கை நாள் சம்பளமான ரூ. 295 -ஐ உயர்த்தி தர வேண்டும் என்பது. போராட்டத்துக்குப் பிறகு, ரூ. 15 உயர்த்தி ரூ. 310 -ஆக தருவதாக சொன்னார்கள். ஆனால், அந்தத் தொகையை தராமல், பழைய சம்பளத்தையே தருகிறார்கள்” என்கிறார் தினேஷ். தங்களுடைய மற்ற கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

தங்கள் உரிமைக்காக போராடும் துப்புரவுத் தொழிலாளர்கள்.

“ஜனவரி மாதம், போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தபோது மாவட்ட நிர்வாகம் எங்களை அழைத்து பேசியது. அப்போது, நாங்கள் தேசத்துக்கு கெடுதல் செய்துகொண்டிருக்கிறோம் என்றும் கும்பமேளா நாட்டின் பெருமைக்குரிய விசயம். இந்த நேரத்தில் போராடுவது தேசத்துக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும். என்று கூறினர். இதனால் உங்கள் மீது தேச துரோகம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் போடுவோம் எனவும் மிரட்டினார்கள்” என்கிறார் மால்வியா.

பிப்ரவரி 7-ம் தேதி அலகாபாத் போலீசு தங்கள் இருவரையும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்போதும் தேசத்துக்கு எதிரான நடவடிக்கை காரணமாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட இருப்பதாகவும் ஆதித்யநாத் போலீசு மிரட்டியதாகவும் தெரிவிக்கிறார்.

இவர்களின் கைதை கேள்விப்பட்டு நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் காவல் நிலையங்களுக்கு முன் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த போலீசு அவர்கள் இருவரையும் வழக்கு ஏதும் போடாமல் ஆறு மணி நேரத்துக்குப் பிறகு விடுவித்திருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் மட்டுமல்லாது பீகார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கும்பமேளா கழிவுகளை சுத்தம் செய்ய ஏஜெண்டுகள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலருக்கு தாங்கள் கழிவறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்கிற விவரம் தெரியப்படுத்தப்படவில்லை. “கழிப்பறைகளை கழுவ வேண்டும் என்று என்னிடம் ஏஜெண்ட் சொல்லவில்லை. என் கணவரிடம் ஆற்றில் விழும் பூக்களை எடுத்துப்போடும் வேலை எனக் கூறிக்கொண்டு என்னை அழைத்து வந்தார். ஆரம்ப நாட்களில் அழுதேன்… இந்த வேலையை நான் இதுவரை செய்யதில்லை” என இயலாமையுடன் சொல்கிறார் ஐம்பது வயதான குரியா.

“ஆயிரக்கணக்கான பணியாளர்களை, அதிக சம்பளம் தருவதாகக் கூறி ஏஜெண்டுகள் கிராமங்களிலிருந்து அழைத்து வந்துவிடுகிறார்கள். இங்கே வந்த பிறகுதான் அவர்களுக்கு நிலைமை தெரிகிறது. கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் 10-20 சதவீதத்தை ஏஜெண்டுகளுக்கு கமிசனாக தரவேண்டும். கும்பமேளா மூன்று மாதங்கள் நடக்கும் என்பதால் அவர்களால் திரும்பிப் போகவும் முடியாது” என்கிறார் தூய்மை பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த தினேஷ்.

கும்பமேளா கழிவுகளை சுத்தம் செய்ய 14 ஆயிரம் தூய்மை பணியாளர்கள், தின சம்பள அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இந்த சங்கம்.

“குறைவான சம்பளம் மட்டுமில்லாமல், எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக சில நேரங்களில் 14 மணி நேரம், பணியாளர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஓவர் டைம் பணிக்கு சம்பளமும் கிடையாது” என்கிறார் தினேஷ்.

தூய்மை பணியாளர்களில் 1% மட்டுமே பூட்ஸ், மாஸ்க், கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களை நிர்வாகம் வழங்கியிருக்கிறது என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.  மூன்று மாத காலம் என்பதால் குடும்பத்தோடு வந்துள்ள இவர்களுக்கு சொதசொதப்பான சேரும் சகதியும் மிக்க இடங்களில்தான் டெண்ட் அமைத்து தந்திருக்கிறார்கள்.

கும்பமேளாவில் அமைக்கப்பட்டுள்ள 1,24,000 கழிப்பறைகளில் உள்ள கழிவுகளை எந்திரங்கள் கொண்டு டேங்கில் இணைக்கும் பணிகளைச் செய்தாலும் சில சமயங்கள் அதிகப்படியான மக்கள் பெருக்கம் காரணமாக அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு அதை சரிசெய்யும் போது மலம், சிறுநீர் தூய்மை பணியாளர்கள் மீது படுகிறது எனவும் இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

“இப்போது கிட்டத்தட்ட மேளா முடியும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், எங்களுடைய கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக தூய்மை பணியாளர்களின் கால்களை மோடி கழுவுகிறார். ஒரு பிரதமர் இப்படியான நாடகத்தை நடத்துவது வேதனை அளிக்கிறது.  எங்களுடைய கால்களை கழுவதால் எங்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?” என கேட்கிறார் தினேஷ்.

கும்பமேளாவின் பொறுப்பாளராக உள்ள அதிகாரி, ஹைகிளாஸ் வசதிகளை தூய்மை பணியாளர்களுக்கு செய்து கொடுத்திருப்பதாக சொல்கிறார். தூய்மை பணியாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்துவதோடு, அதனால்தான் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போட இருந்ததாகவும் சொல்கிறார்.

சங்கிகள் கூறிக்கொள்வதைப் போல, இத்தனை கீழ்த்தரமான பிரதமரை நாடு இதுவரை கண்டிராது. சம்பள உயர்வு கேட்டு போராடியவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்திவிட்டு, இன்னொரு பக்கம் கேமராக்கள் முன்பு அவர்களுடைய கால்களை கழுவும் நாடகத்தை இந்துத்துவ கும்பலால் மட்டுமே அரங்கேற்ற முடியும்.


அனிதா
நன்றி: தி வயர்

மக்கள் அதிகாரம் மாநாடு மாஸ் ! | மாநாட்டில் பங்கேற்றவர்களின் முகநூல் பதிவுகள் !

க்கள் அதிகாரம் பிப்ரவரி 23-ம் தேதி  ‘அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் !’ மாநாட்டை திருச்சியில் நடத்தியது.  இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பு பேச்சாளர்கள் எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் மருதையன், தோழர் ராஜு, தோழர் தியாகு, தோழர் ஆளூர் ஷாநவாஸ், வழக்கறிஞர் பாலன் ஆகியோரின் உரைகளைக் கேட்டனர்.

மக்கள் பாடகர் கோவனின் உணர்ச்சி மிக்க பாடல்களை மக்களும் விருந்தினர்களும் ரசித்தனர். ‘எதிர்த்து நில்’ மாநாட்டில் கலந்துகொண்ட சிலர் முகநூலில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதனுடைய தொகுப்பு இங்கே…

*****

தி. லஜபதி ராய் :

மக்கள் அதிகாரத்திற்காக திருச்சியில் குரல் கொடுத்த  அருந்ததி ராய்

“நான் சற்று பதட்டமாக உணர்கின்றேன் , இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் உரையாற்றியதில்லை” எனத் தொடங்கிய எழுத்தாளர் அருந்ததி ராயின் கவலையும் மக்கள் மீதான அன்பும் அவரது உரையில் பிரதிபலித்தன.

போர் வெறி ஊட்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் திருவாளர் மோடிக்கு எதிரான அவரது உரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

இஸ்லாமியர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், கம்யூனிஸ்டுகள், அனைவரும் பிரிந்து கிடப்பதை சுட்டிக்காட்டிய ராய் தற்போதைய பாசிச ஆட்சியை வீழ்த்த அனைவரும் ஒருங்கிணைய வேண்டியதை வலியுறுத்தினார்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி , எண்கர சாலைகள் என மக்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி அவர்களது பொருளாதாரத்தை சிதைத்த பாஜக அரசின் ஆட்சியில் முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் 175 சதவிகிதம் உயர்ந்ததை ராய் சுட்டிக்காட்டினார்.

1980 -களில் மைய அரசு இரு பூட்டுக்களை திறந்தது முதலாவதாக பாபர் மசூதியை வழிபாட்டுக்காக திறந்தது , இரண்டாவதாக நாட்டை உலக நாடுகளின் கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்திற்கு திறந்தது இவ்விரு பூட்டுக்களை திறந்த நாள் முதல் மாவோயிஸ்ட் பயங்கரவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் என மக்களை திசை திருப்பும் அதே பொழுது இந்து மத பாசிசம் மக்களுக்குள் விதைக்கப்படுவதை ராய் குறிப்பிட்டார்.

அரசின் திட்டமிட்ட மோதல் படுகொலைகள், மதவெறி கும்பலின் கொலைகள், இவை நிகழும் அதே கால கட்டத்தில் சத்திஸ்காரில் போலிஸ் ஆட்சியும் கஷ்மீரில் ராணுவ ஆட்சியும் நடப்பது தற்செயலானதல்ல எனக் குறிப்பிட்ட ராய், புல்வாமா நிகழ்வுக்கு பின்னர் ராணுவத்தை காஷ்மீரில் குவிப்பது அம்மாநில மக்களை பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கும் என கவலை தெரிவித்தார்.

1950-ம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தை இந்நாட்டுக்கு அன்னியமானது, மனு ஸ்மிருதியே இந்தியாவிற்கானது எனக் கூக்குரலிட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைப்படியே இன்று இந்தியாவின் 75% சொத்துக்கள் 1% தனியார்களிடம் குவிந்திருப்பதையும், 9 பேர்கள் கையில் ஐம்பது கோடி இந்தியர்களின் சொத்துக்கள் இருப்பதையும் அவர்கள் அனைவரும் ஒரே சாதியினர் என்பதையும் ராய் பட்டியலிட்டார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானி பொதுமக்களின் பணத்தைப் பெற்று பயன்பெற்றதை சுட்டிய ராய், அம்பானியின் சொத்துக்களால் இந்தியாவிற்கு ஆண்டு முழுவதும் சுத்தமும், சுகாதாரமும், குடிநீரும் வழங்க முடியும் என்றார்.

வனவிலங்குகளுக்காக செயல்படும் வயில்ட் லைப் பர்ஸ்ட் என்ற வழக்கில் இருதினங்களுக்கு முன் காட்டினுள் வசிக்கும் 18 லட்சம் பழங்குடி மக்களை வெளியே தள்ளி காட்டைக் காப்பாற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அதே காடுகளை சுரங்கங்களும், பெரு வணிக நிறுவனங்களும் சூறையாடிய போது என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பினார்.

வடகிழக்கு மாநிலங்களில் 18 லட்சம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

வணிக நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு என கூறுவது தேவையற்றது ஏனெனில் மக்களுக்கு பிச்சை போட வேண்டாம் அவர்களுக்கு சேர வேண்டியதை கொடுத்தாலே போதுமென உறுதியுடன் உரைத்தார்.

பரம்பரை அரசியல் என மத்தியிலும், தமிழகத்திலும் குறை சொல்பவர்களை, பரம்பரை அரசியலில் கூட தேர்தலில் நின்று வெற்றி பெறத்தேவை. ஆனால் சாதி ஆதிக்க சொத்துரிமை வாரிசுரிமையாக தொடர்வதை விமரிசித்தார். நிலம், சொத்துரிமை பொதுவுடமையாக்கப்படுவதன் தேவையை வலியுறுத்திய ராய் வரும் தேர்தலில் மக்கள் பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

வேதாந்தா நிறுவனத்தின் குழந்தையான ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு துணை நின்ற மக்கள் அதிகாரத்தை குறிப்பிடத் தவறாத ராய் தோழர் கோவனின் ஆட்டத்துடன் கூடிய படேல் சிலை நையாண்டிப் பாடலை இரசிக்கத் தவறவில்லை.

தி. லஜபதி ராய்
23.02.2019
திருச்சி

ஆசிர் முகமது :

மகஇக நடத்திய ‘எதிர்த்து நில்’ பொதுக்கூட்டத்துக்கு சென்றிருந்தேன். உண்மையில் மார்க்சிய விமர்சனத்தை மக்கள்மயப்படுத்தியதில் மகஇக தோழர்களுக்கும் வினவு தளத்துக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. ஆரம்பத்தில் அவர்களது பாடல்கள் தான் எனக்கு அறிமுகம்.

சில முஸ்லிம் அமைப்புகளின் கூட்டங்களில் ‘சொல்லாத சோகம்…’, ‘சம்மதமா.. சம்மதமா…’ போன்ற பாடல்கள் ஒலிக்கும். ஆசிரியர் மார்க்ஸின் எழுத்துக்கள் மற்றும் இத்தகைய பாடல்கள் தான் ‘ஒடுக்குபவர்களின் அடையாளங்கள் சுமத்தப்பட்டிருப்பவர்கள் கூட விமர்சனப்பார்வையோடு ஒடுக்கப்படுபவர்களின் சார்பாக தீவிரமாக நிலையெடுக்க முடியும்’ என்பதை எனக்கு உணர்த்தின.

இந்தியாவில் முஸ்லிம் பிரச்சினை என்பது தனித்தவொரு பிரச்சினையில்லை, அது பிற பிரச்சினைகளோடு இணைந்ததே என்ற புரிதலும் எனக்குள் மெல்லப் படிந்தது. இதெல்லாம் தியரியாக அப்போது புரிந்திருக்காவிட்டாலும் அது எனக்குள் ஏற்படுத்திய பார்வைத் தாக்கம் அத்தகையதுதான்.

இதற்கு ஒரு முக்கியமான காரணம் மகஇக ‘தமிழ்நாட்டில்’ கம்யூனிஸ்ட் கட்சி வைத்து நடத்துவதால்தான். இந்தியாவில் கட்சி வைத்து நடத்துபவர்கள் ‘சம்மதமா.. சம்மதமா…’ போன்ற பாடல்களெல்லாம் போடவே முடியாது. அவர்கள் இன்னும் ‘வகுப்புவாத வன்முறை’ என்ற பழைய பல்லவியே பாடுகிறார்கள். அவர்களது universalism பம்பாய் படத்துக்கு விருது கொடுக்கும் universalism. ஏழை பிராமணர்களுக்கு 10% ஒதுக்கீடு கொடுக்கும் universalism.

ஆனால் மகஇக தோழர்களது universalism ஒடுக்கப்படுபவனோடு தீவிரமாக நிலையெடுக்கும் universalism. திராவிட, தலித், பகுஜன் விமர்சனங்களை ஆழமாக உள்வாங்கிய, அதை மக்கள் மயப்படுத்திய universalism. மேற்கண்ட தரப்புகள் இவர்களோடு எவ்வளவு வேண்டுமானாலும் முரண்படலாம். ஆனால் பெரியார்-அம்பேத்கரை வெறுமனே பெயருதிர்த்தலாக அல்லாது, அந்தப் புரிதலையும் மொழியையும் தன்னகப்படுத்திகொண்ட கம்யூனிஸ்டுகளாக இவர்கள் ஒரு போக்கை உருவாக்கினார்கள். அதனால் தான் அவர்கள் பேசும் மார்க்சியம் எல்லோருக்கும் புரிந்தது. இது கம்யூனிஸ்டுகளின் நடைமுறை பற்றிய மதிப்பீடு கிடையாது. அதை என்னால் செய்யவும் முடியாது. மாறாக தொண்ணூறுகளில் பிறந்த ஒரு நடுத்தர வர்க்கத்தின் முஸ்லிமாக, பகுஜனாக இடதுசாரி அரசியல் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைப்பதற்கு எவ்வாறு அவர்களும் ஒரு காரணமாக இருந்தார்கள் என்றே சொல்கிறேன்.

மேலும் பண்பாட்டுத்தளத்தில் வெகுஜன பாணியில் எல்லாவற்றையும் பற்றி சொல்வதற்கு அவர்களுக்கு எப்போதுமே ஒரு கருத்து இருந்தது. வெகுஜன சினிமா, கலை, இலக்கியம் என்று பண்பாட்டுத் தளத்தின் அத்தனை பரிமாணங்களையும் அக்குவேறு ஆணிவேறாகவும், அதேநேரத்தில் பல்வேறுபட்ட தரப்பினருக்கும் புரியும் வகையிலும் சுவாரசியமாகவும், ஒடுக்கும் தரப்புகளுக்கு எதிரான கோபத்தோடும் எழுதுவார்கள்.

இப்போது கூட பாருங்கள், ஆ. ரா. வேங்கடாசலபதி என்ற ‘பார்ப்பனருக்கு உகந்த வேஷ திராவிடர்’ திராவிடத்தை பார்ப்பன அறிவுக்காலனியத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கையை விமர்சித்து வினவு தளத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. இதெல்லாம் வினவு தளத்தில் தான் நடக்கும். இன்றும் தமிழ்ச்சூழலைப் பற்றிய இடதுசாரி விமர்சனம் என்றால் அதில் அவர்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.

திலகவதி திலோ :
மக்கள் அதிகாரம் மாநாடு !

இப்படி ஒரு மாநாட்டில் நான் கலந்து கொண்டதேயில்லை. எத்தனையோ அரசியல் கட்சிகளின் அமைப்புகளின் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறேன், ஆனால் இது மிகவும் வித்யாசமாக இருந்தது.

எந்த வித அரசியல் சடங்கும் இல்லை, நேரம் வீணடிக்கப்படவில்லை, சால்வை போற்றுதல், மரியாதை செலுத்துதல், நோட்டீஸில் உள்ள அனைவரின் பெயரையும் படித்து வணக்கம் சொல்லி அனைவரின் நேரத்தையும் வீணடித்தல், மரியாதை நிமித்தமாக சிலரை பேச வைத்து கண்டன்டே இல்லாமல் மொக்கை போட வைத்தல் போன்ற எந்தவித அரசியல் நிர்பந்தமும், பகுத்தறிவற்ற செயலும் இல்லாத மேடையாக மாநாடாக அது இருந்தது.

அங்கிருந்த தோழர்கள் அத்தனை நாகரிகமாக, இருக்கையில் அமர்ந்து ஒரு சிறு சலசலப்புமின்றி 6 மணி நேரம் அமர்நது கூர்மையாக கவனித்ததை எந்த இடத்திலும் நான் பார்க்கவேயில்லை, அரசியல் படுத்தப்பட்ட தோழர்களின் மத்தியில் தான் இப்படிபட்ட பண்பை பார்க்க முடியும்.

அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் இயக்கங்குளுக்கும் உள்ள வித்யாசம் அது. அமைப்பாதல் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அந்த மக்களை அரசியல் படுத்துதல். அதன் வெற்றியே இம்மாநாடு.

அத்தனை அறிவுப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான, ஆதாரப்பூர்வமான உரைகள் நிகழ்த்தப்பட்டன். கொஞ்சம் கூட கவனத்தை சிதறடிக்க முடியவில்லை, அவர்கள் பேசிய ஒவ்வொரு வரிகளும் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தன.

குறிப்பாக தோழர்கள் அருந்ததி ராய், ஷா நவாஸ், தியாகு, ராஜூ, மருதையன், வழக்கறிஞர்களின் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

காவிகளின் பாசிசத்தை தோலுரித்து மக்கள் முன் நிறுத்தினர் !

கோவன் தோழரின் கலை நிகழ்ச்சிகளும் மேடையில் ஒளிபரப்பப்பட்ட பல்வேறு பிரச்சனைகளின் காணொளிகளும் மாநாட்டினை அத்தனை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியது.

சட்டக் கல்லூரி தோழமைகளுடன் இதில் கலந்து கொண்டது மகிழ்ச்சி 😍
மக்கள் அதிகாரம் மாநாடு மாஸ்👌👌

-திலகவதி திலோ,
சட்டக்கல்லூரி மாணவி.

தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

ஒன்னு சாப்பிட்டதும்… அடுத்ததுன்னு மனசு கேட்கும் | சாட் உணவு சுவைஞர்கள் | புகைப்படக் கட்டுரை

மிழகத்தில் “ஸ்ட்ரீட் ஃபுட்” கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையின் எந்த சாலைகளில் பார்த்தாலும் தள்ளுவண்டி கடைகள்… குறிப்பாக மாலை நேர பானி பூரி கடைகள் புற்றீசல்போல பெருகியுள்ளன. இதுதான் வட இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரம். டீக்கடை தொடங்கி தெருக்கடை வரை வட இந்திய உணவான பானி பூரியும், சமோசாவும், வட இந்திய இளைஞர்களும்தான் இருக்கின்றனர். இந்த கடைகளில் எப்பொழுதும் கூட்டம்தான்.

பள்ளி மாணவர்கள் முதல் வேலை முடித்து விட்டு வரும் நடுத்தர வயதினர் வரை அனைவருக்கும் முதல் சிற்றுண்டி பாணிபூரிதான். தென்னிந்திய சிற்றுண்டிகள் எல்லாம் இருக்கும்போது, எப்படி இந்த உணவை அவர்கள் விரும்பினார்கள்…? என தெரிந்துகொள்ள சென்னை அயோத்தி மண்டபத்தில் ஒரு பானி பூரி கடையில் மொய்த்திருந்தவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ராமச்சந்திரன். சி.., ஆந்திரா. சென்னையில் நிரந்தரமாக குடியிருக்கிறார்.

இப்ப இருக்கிற வேலைக்கும், பாஸ்ட் லைப்புக்கும் கரெக்ட்டா மேட்ச் ஆகுற ஃபுட் இதுதான். இன்ஸ்டண்ட் உணவு. அதிகபட்சம் 3 மணிநேரம் பசி தாங்கற மினி மீல்ஸ் இது.  ஜஸ்ட் லைக் தட். வந்தம்மா…. நின்னம்மா….. சாப்பிட்டம்மா….. போனம்மா..ன்னு இருக்கனும். சாப்பாட்டுக்குன்னு ஸ்பெஷலா டைம் தேவையில்லை.

இட்டிலி, தோசை வேணும்னு ஓட்டலுக்கு போய் ஆர்டர் கொடுத்தா எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாது. அப்படியே வந்தாலும் சட்டினி சரியில்லை, சாம்பார் சரியில்ல, இட்டிலி சூடு இல்லனு எரிச்சலா வரும். இன்னும் இதுமாதிரி பல பிரச்சனை.

இன்னும் சொல்லப்போனா நம்ம சவுத் இன்டியன் புட்ல அரிசிதான் மெயின். அதை அதிகமா எடுக்கிறதாலதான் நமக்கு இல்லாத நோய் எல்லாம் வருது. ஒபிசிட்டி, டயாப்பட்டிஸ், ஹைப்பர் டென்சன், தைராய்டு இதெல்லாம் தட்டு நிறைய உள்ள போவுது. கட்டிட வேலை மாதிரி கஷ்டப்பட்டு வேலை செய்யிறவங்களுக்கு அரிசி சாப்பாடு ஓகே…! நம்மள மாதிரி காலை தொங்கப்போட்டு உட்கார்ந்து வேலை செய்யிறவங்களுக்கு அரிசி பாய்சன்.

இதப்பத்தி, உங்களுக்கு எவ்ளோ தெரியும்னு எனக்கு தெரியல! இந்த நாலேட்ஜ் இல்லாதவங்கதான் சவுத் இன்டியன் ஃபுட் பத்தி ரொம்ப அலட்டுவாங்க… நான் என் குழந்தையோடதான் இங்க வந்து சாப்பிடுவேன்.

சேகர், கிருபாகரன், எழில்மதி. ஆட்டோ ஓட்டுநர் குடும்பம்.

அய்யோ! இன்னிக்குத்தான் நாங்க இங்க அதிசயமா வந்தோம்! இது எங்களுக்கு இல்ல. வீட்டுக்குப்போனா எங்கப் பொண்ணு அடம்புடிப்பா, அவளுக்காகத்தான் இது. நம்மளுக்கு இது ஒத்து வராது. பசங்கக்கூட என்னிக்கினா ஒருநாள் டேஸ்ட் பாக்கிறதோட சரி. நம்ம பலகாரம் மாதிரி வராது. ஆனா அதெல்லாம் ஆற அமர செய்யிறது இப்ப நம்மளாள முடியலியே. பணமும் இல்ல, நேரமும் இல்ல. ஏதோ பசங்களுக்காக நம்ம வாழ்க்கை ஓடுது.

ரமேஷ், வங்கி ஊழியர்.

இங்க சாப்பிட வந்தாவே மனசே ரொம்ப கண்ட்ரோல் பண்ணிக்கிட்டுத்தான் வருவேன். ஒன்னு சாப்பிட்டதும்…அடுத்ததுனு மனசு கேட்கும். ஆனா வயிறு மக்கர் பண்ணுமே..! அதனாலே வாரத்துக்கு ஒரு தடவைதான் இந்தப்பக்கம் வருவேன். ஒரு சமோசா… இல்லனா ஒரு வடை சாப்பிட்டு திரும்பி பாக்காத போய்டுவேன். ஆனா ஜங்க் ஃபுட் மாதிரி ரொம்ப மோசமான உணவுன்னு இதை சொல்லமுடியாது.

நாராயணன், ஸ்பிக் ஊழியர், ஓய்வு.

கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரை வாலி இதெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுதான். தெரியுது. என்ன பிரயோஜனம். நம்மளுக்கு கைக்கு எட்டற மாதிரி கிடைக்கிறது இதுதானே. நம்ம உடம்பு கிடைக்கிறத ஏத்துக்கும். எல்லாத்துக்கும் பழகிக்கும். எதனா புடிக்கலன்னா நம்ம உடம்பே நம்மக்கிட்ட சொல்லும். எனக்கு பாருங்கோ… இங்க ஒரு சமோசா சாப்பிட்டுட்டு போனா ஒன்னும் பண்ணாது. எக்ஸ்ட்ரா ஒண்ணு சாப்பிட்டா வயிறு உடனே அப்செட் ஆவும். பிரச்சனை அங்கதான் இருக்குது. அத தெரிஞ்சி  உடம்பு சொல்றத கேட்டு நாம நடந்தா ஒண்ணுமில்ல. லிமிட்ட தாண்டக்கூடாது.

சமோசாவ நீ சாப்பிடனும். சமோசா உன்ன தின்னா போச்சு… இப்ப காலம் மாறிப்போச்சு. அந்தக்காலத்தில ஊருநாட்டுக்கு போனா வழியில எதுவும் கிடைக்காது. தேவையானத வீட்டிலிருந்து கட்டிண்டு போனாத்தான் உண்டு. வழியில குழந்தைங்களுக்கு சோறு வேணும்னாலும் பெரியவங்களுக்கு காபி வேணும்னாலும் வீட்டிலிருந்து எடுத்துண்டு போவோம்.

ரயில் கூஜான்னு காபி எடுத்துண்டு போறதுக்கு ஒண்ணு தனியா இருக்கும். அது ஒரு காலம். இப்ப எதுன்னாலும் கடக்காரங்க வாயில ஊட்டிவிடாததுதான் பாக்கி. அதுவும் சீக்கிரம் வந்துடும். உபர், ஸ்விகி, மாதிரி வீடுதேடி வந்து தராங்க. இத யூசர் பிரண்ட்லீ, சர்வீஸ் ஓரியண்டட், வேல்யூ ஆடட்னு விதவிதமா சொல்றாங்க.

படிக்க:
லலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை !
♦ விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் – பாகம் 2

விக்னேஷ்.

இப்ப உங்களுக்கு என்னா பிரச்சனை? நான் எத சாப்பிட்ட உங்களுக்கு என்னா? சமோசா நார்த் இன்டியன் ஃபுட்னா அதுக்கு நான் இன்னா பன்றது? பெருசுங்கதானே எங்களுக்கு இதை அறிமுகப்படுத்தினாங்க! அவங்கதானே இந்த  அயிட்டத்த தமிழ்நாட்டுக்குள்ள உட்டது! அப்ப வேடிக்கை பாத்துக்கினு இருந்துட்டு இப்ப நாங்க சாப்பிட்டா கேள்வி கேட்கறீங்க?  அதிரசம், தேன்குழல், உப்பு உருண்டைனு எங்கள சுத்தி நின்னு இதுமாதிரி நீங்க வித்தா சாப்பிட போறோம். அதுக்கு வழியில்ல. அப்போ, எது சீப்பா கெடைக்குதோ அதத்தானே நாங்க சாப்பிட முடியும். எல்லாத்துக்கும் கதவு திறந்து வைச்சா இதுதான் நடக்கும்.

இப்ப காஷ்மீர பாருங்க… 350 கிலோ ஆர்.டி.எக்ஸ். கேட்பார் இல்லாம  உள்ள விட்டுட்டதால இப்ப 50 ராணுவ  வீரர் செத்துட்டான். அப்படின்னா அது யார் தப்பு? இவ்ளோ பெரிய ராணுவம், பெரிய உளவுத்துறை எல்லாம் என்ன வேடிக்கை காண்பிக்கிறதுக்கா வச்சிக்கிறாங்க! இதை, கேட்டா, எங்களையே கொலைகாரன் மாதிரி பாக்கிறானுங்கோ! இங்க எதுவும் சரியில்ல!

ஆனந்தன்

தோ… இந்தமாதிரி வட இந்தியாகாரனுங்கள உள்ள விட்டதால நம்ம உணவுக்கு மவுசு இல்லாம போயிடுச்சி. இருந்தாலும் இவங்களுக்கு இதுதான் வாழ்வாதாரமா இருக்கு. நான் அதை குறை சொல்லல. இதை வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டுற நாம அப்பவே நம்ம உணவுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்திருக்கலாம்னு  சொல்றேன். இன்னைக்கு அது பணக்காரங்க உணவா மாறிடுச்சி.

நம்ம தாத்தா-பாட்டிங்க சாப்ட உணவெல்லாம்  இப்ப பெரிய பெரிய ஹோட்டல்ல இருக்கு. அங்க யாரு போயிட்டு சாப்பிடுவா? பணக்காரன் மட்டும்தான். அப்ப நாம கண்டுக்காம விட்டுட்டதால இப்ப அது காஸ்ட்லி அயிட்டமா ஆயிடுச்சி. ஏழைங்க சாப்பிட முடியாது. ஏழைங்க சாப்பிடுற விலையில இந்த வட இந்திய உணவுதான் இருக்கு… அதுமட்டுமில்லாம இந்த டேஸ்ட் குழந்தைங்களுக்கும் புடிச்சி போயிடுச்சி…!

சுப்பிரமணி, அரசு ஊழியர்.ஓய்வு.

நீங்க எதப்பத்தி எழுதப்போறீங்க? இருக்கிறது சவுத் இன்டியா! சாப்பிடறது நார்த் இன்டியா ஃபுட் அப்படினு இதுக்கு தலைப்பு போடுவீங்களா? எப்படி எழுதுவீங்கனு சொல்லுங்க அதுக்கு ஏத்தமாதிரி நான் உங்களுக்கு சொல்றேன்! நீங்க வந்து கேள்வி கேட்கிற எடம் எதுனு உங்களுக்கு தெரியுதா? அய்யருங்க ஏரியா இது! அதுவும் மாம்..ம்பலம் அய்யருங்க..! அங்க, மயிலாப்பூர் அய்யருங்க வேற மாதிரி! நாங்க பசிக்கு மட்டும் சாப்பிடறது இல்ல! கூட எங்க ஸ்டேட்ஸையும்(status) சேர்த்து தட்டுல வைக்கிறவாகிட்டதான் நாங்க சாப்பிட முடியும். அது முக்கியம். அய்யருங்க அவங்களுக்குள்ள பேசிக்கும் போது நீங்க கவனிச்சிருந்தா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஜம்பலம் பத்தி, இந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? தெரிஞ்சவங்ககிட்ட கேளுங்க சொல்லுவாங்க! …நான் வர்றேன்.

நூல் அறிமுகம் : கடலடியில் தமிழர் நாகரிகம் !

மிழ்மாமணி தோழர் நந்திவர்மன் அவர்கள் எழுதியுள்ள கடலடியில் தமிழர் நாகரிகம் எனும் இந்த நூல் அளவில் சிறியதாக இருப்பினும் ஒன்பது தலைப்புகளில் அமைந்து, ஆழ்ந்த ஆய்வுச் சிந்தனைகளை எழுப்பக் கூடியதாக இருக்கிறது.

எண்ணிறந்த ஆண்டுகளுக்கு முன்பு உலகில் ஒரே ஒரு கண்டமே இருந்தது. பின் அது உடையத் தொடங்கியது. அடுத்தடுத்து உடைசல் ஏற்பட்டுத் தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பிரிந்தது. இன்றுள்ள ஆஸ்திரேலியா, அண்டார்ட்டிகா, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இந்தியா தென்னமெரிக்கா உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு ஒன்று இருந்தது என்றும் நிலவியல் அறிஞர்கள் அதற்குக் கோண்டுவானா எனப் பெயரிட்டனர் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். கண்டங்கள் இடப்பெயர்வு கொண்டன என்ற கருத்தை அல்ஃபெரடு லோதர் வெக்கனர் என்ற ஜெர்மானிய அறிஞர் 1912-ல் வெளியிட்டார்.

காலப்போக்கில் அட்லாண்டிக், இலெமூரியா என்ற இரு கண்டங்களிலும் வாழ்ந்த மனித குல முன்னோடிகள் தொழில் நுட்பங்களில் வல்லமை பெற்றிருந்தனர் எனப் பிராஸ் ஜோசப் கூறியுள்ளார்…

இப்படியாக உலகின் பல்வேறு அறிஞர்களின் அரிய கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு இந்நூலாசிரியர் தமிழர் நாகரிகங்களைக் கொண்ட நிலப் பகுதிகள் மாமல்லபுரம், பூம்புகார், குமரி போன்ற இடங்களில் கடல் அடியில் புதைந்து கிடக்கும் இடிபாடு கொண்ட கட்டிடங்கள் வழியே வரலாற்றை, மீட்டெடுக்கப்பட வேண்டிய வரலாறைத் தேடிக் கண்டறிந்து, தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் நாகரிகத்துக்கும் அடையாளச் சின்னங்களை உருவாக்கித் தர வேண்டும்; அதன் வழியாகத் தமிழ் ஆய்வுப் பணிகள் தொடர வேண்டும் எனும் உள்ளக் கிடக்கையை நூலாசிரியர் அரிய நூல்கள் வழியாகவும், செயற்கைக் கோள் படங்கள் வழியாகவும் ஆதாரங்கள் காட்டி, தான் கொண்ட கருத்தை இந்நூலில் நிறுவுகிறார்.
(உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் -2010- பேரா. முனைவர் கே.ஏ. குணசேகரன் எழுதியுள்ள இந்நூலுக்கான அறிமுக உரையிலிருந்து)

… 25 கோடி ஆண்டுகள் முன்னர் உலகின் நிலப்பகுதி ஒட்டு மொத்தமும் ஒரே கண்டமாக நிலவி, பின்னர் வட தென் பகுதிகளாக, தென்பகுதி கோண்டுவானாவாகப் பிரிந்து, பின்னரும் நெருங்கிச் சேர்ந்து பின்னரும் பிரிந்து இன்றைய கண்டங்களாக, இயற்கை உருவாக்கிய வரலாற்றில், எத்தனை எத்தனையோ கடற்பெருக்கு, நிலமீட்சி, கண்டங்கள் சேருதல், பிரிதல் எனத் தொடர்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் அமைந்தது மடகாஸ்கர் முதல் ஆஸ்திரேலியா வரை ஒட்டியிருந்த நிலப்பரப்பு. அதுவும் சில பல நிலப்பகுதிகளை இழந்த நிலையில் குமரிக்கண்டமாக அமைந்ததென்பர். குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியாக நிலவியது தான் இன்றைய இந்திய நாட்டின் தென்னகம் என்பர்.

அதுவே முதல் மாந்தன் பிறந்த நிலம், அவன் தமிழனாக உயர்ந்த நிலம் என்பர். அவர்களிடம் உருக்கொண்ட தமிழ்மொழியும், வளர்ந்த நாகரிகமும், உலக நாகரிகங்கட்கெல்லாம் ‘தாய்’ என்று கருதும் தரத்தது. உலகின் நிலநடுக்கோட்டின் தெற்கில் ஒரு பெரும் நிலப்பரப்பாக இருந்த கோண்ட்வானா, இன்றைய பசிபிக் கடல் பரப்பை மையமாகக் கொண்டிருந்தது என்றும், பின்னர் நிலத்தடிப் பாறைத் தட்டுக்களின் மோதுதலால் தெற்கு நோக்கி நகர்ந்ததென்றும், அதனால் அந்தப் பகுதியில் வளர்ந்திருந்த ஒரு சிறப்பான நாகரிகத்தில் எழுந்த கட்டுமானங்கள் மூழ்கின என்றும் அறியப்படுவதை ஆசிரியர் விளக்குகிறார்.

அதனால் கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக, பசிபிக் கடலின் அடி நிலம் மெல்லமெல்ல அமிழ்ந்து வருகிறது என்பதுடன். இலெமூரிய நாகரிகத்தின் பழைய தடயங்கள் அங்கு மூழ்கியிருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர் கருதுவதையும் எடுத்துக்காட்டுகிறார்,

அமெரிக்காவின் செவ்விந்தியரான தொல்குடி மக்கள் தலைவன் ‘மாயன்’ சுவடிகளை ஆராய்ந்த அறிஞர் ஒருவர், ‘மூ’ என்னும் பழம் பெருங் கண்டம் ஒன்று இருந்தது பற்றியும், அது மூழ்கியபோது தப்பி வந்தோர் ‘மாயன் நாகரிகத்தை உருவாக்கியதாகவும் கூறியுள்ளதை எடுத்துரைக்கின்றார். – குமரிக் கண்டமென நாம் கருதும் இலெமூரியாவே ‘மூ’ நாகரிகம் கொண்டவர்களாகக் கருதப்படும் ‘தமிழர்’ வாழ்ந்த நிலம் என்றும் கருதுகிறார். தொன்னாளில் நிலவிய குமரிக்கண்டம் என்பது ஒரு சிறந்த அறிவியல் அடிப்படையான கட்டுமானங்களைக் கொண்டதாக, கட்டடவியல் கணக்கியலின்படி கற்கள் இணைத்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதால், பசிபிக்கிலோ, சீனத்தின் கிழக்குக் கடலிலோ, ஆழ்கடல் ஆய்வு நடத்துவதன் மூலம், அந்த நாகரிகத்தைக் கண்டறிய முடியும் என்னும் நம்பிக்கையையும் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

திராவிடத் தமிழ் இனத்தின் நாகரிக வரலாறு, ஆரிய வைதிகச் சுனாமியால் மூழ்கடிக்கப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சி அமைந்த சூழலால், மறுபடியும் உண்மை வெளிப்படும் வாய்ப்பைப் பெற்று, அதன் மூலம் நிலைநாட்டப்பட்ட வரலாற்று உண்மைகளின் துணையால், இக்காலத்தில்தான் தமிழக ஆட்சியில் உள்ள முதல்வர் கலைஞரின் முயற்சியால் “தமிழ் ஒரு செம்மொழி’’ என்பதை நடுவண் அரசு ஏற்று அறிவிக்கும் நிலை பெற்றுள்ளோம்.

இன்று தமிழ் வழங்கும் நிலத்திலும், இந்தியக் கடற்கரை ஒட்டிய மறைந்த பட்டினங்களான பூம்புகார், கொற்கை, மாமல்லபுரம் ஆகியவற்றிலும், அருகன்மேடு, ஆதிச்சநல்லூர், அழகன்குளம். கொடுமணல் ஆகிய ஊர்களிலும் சிந்துவெளி நகரங்கள், துவாரகா முதலான இடங்களிலும் தொடங்கப்பட்டுத் தொய்வு நிலைக்கு ஆளாகியுள்ள அவற்றின் அகழ்வாராய்ச்சியை விரைவுபடுத்துவதாலேயே மேலும் பல அரிய வரலாற்றுச் செய்திகளை நாம் பெற முடியும்.
(க. அன்பழகன் எழுதியுள்ள அணிந்துரையிலிருந்து)

இந்நூலில்,
♣ உலகமே ஒரே கண்டம்: அதில் நாவலந் தீவைத் தேடுவோம்
♣ மறைக்கப்படும் வரலாறும் மீட்டெடுக்க வேண்டிய வரலாறும்
♣ தமிழகக் கடலடியில் கிடைத்ததும் தேட வேண்டிய பணிகளும்
♣ குமரிக்கண்டம் பற்றிய வரைபடங்களும் குற்றம் சுமத்தும் கூட்டமும்
♣ உலகத் தொன்மங்களில் பெருவெள்ளக் கதைகள்
♣ ஆப்பிரிக்கக் கண்டத்தில் வெள்ளக்கதைகள்
♣ ஆசியாவில் பெருவெள்ளக் கதைகள்
♣ உலகெலாம் தமிழன் பரவினான் எனும் உண்மை மெய்ப்பிக்க முனைக
♣ புதிய அறிவும் புத்துருவாக்கமும்
என ஒன்பது உட்தலைப்புகளில் தமிழர் நாகரிகத்தின் வரலாற்றை விவரிக்கிறார், நூலாசிரியர்.

***

நூல் : கடலடியில் தமிழர் நாகரிகம்

ஆசிரியர் : நந்திவர்மன்

வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600 113.

பக்கங்கள் : 128

விலை : ரூ.55.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் இந்நூலை வாங்க: marinabooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்

அறிமுகம்:

ரீஸ் பொலேவோய் புகழ்பெற்ற நூலாசிரியர், பத்திரிகையாளர். சோவியத் யூனியனில் மாபெரும் தேசபக்தப் போர் தொடங்கியது முதல் பொலெவோய் ‘பிராவ்தா’ செய்தித் தாளின் போர்முனை நிருபராகப் பணியாற்றினார். அப்போதுதான் உண்மை மனிதனின் கதையின் கதைமாந்தரான செஞ்சேனையின் வீரமிக்க விமானி அலெக்சேய் மெரேஸ்யெவைச் சந்திக்கிறார். போர்முனையில் மிகச்சிறந்த விமானி எனப் பெயர் வாங்கியிருப்பதைக் கேள்விப்பட்டு, பரீஸ் அவரை பேட்டி காண விரும்பினார்.

அலெக்சேய் மெரேஸ்யெவிற்கும் மாஸ்கோவிலிருந்து வந்துள்ள ‘பிராவ்தா’ செய்தியாளரிடம் நாட்டில் நடந்துவரும் நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை. எனவே இரவு தன்கூடவே தங்குமாறு கூறி அழைத்துச் செல்கிறான்….

….. அதன்பின்னர் அலெக்சேய் மெரேஸ்யெவ் தன் கதையை பரீஸிடம் கூற, அவர் கேட்டுப் பதிவு செய்து, நமக்கு அளித்துள்ள கதைதான் உண்மை மனிதனின் கதை.

உண்மை மனிதனின் கதையை நான்கு பாகங்களாக பரீஸ் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் ஜெர்மானியர்களுடன் நடந்திடும் சண்டையில் அலெக்சேய் மெரேஸ்யெவின் விமானம் சிதறிவிழுதல், அதிலிருந்து எப்படியோ தப்பிப்பிழைத்த அலெக்சேய், தங்கள் ஆட்கள் இருக்கும் திசைநோக்கி, பனிப்புயலினூடே 18 நாட்கள் தவழ்ந்து வந்தது.அவன் வருவதைக் கண்ணுற்ற இரு சிறுவர்கள், ஊருக்குள் அவனுக்கு உறுதுணையாக இருந்த மிஹாய்லா தாத்தா, கிராமத்துப் பெண்கள், ‘கொரில்லா’ கோழி சூப் வைத்துக்கொடுத்த கிழவி உட்பட அனைவரையும் மிகவும் உன்னிப்பாக முதல் பாகத்தில் வர்ணித்திருப்பார் பரீஸ்.

இரண்டாம் பாகத்தில் மருத்துவமனையில் அலெக்சேய்க்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும் அவன் அதனை எதிர்கொள்வதையும், அவனுக்கு உற்ற நண்பர்களாய், தோழர்களாய், செயல்பட்ட சக நோயாளிகள், மருத்துவத்தாதிகள் மற்றும் மருத்துவரை பரீஸ் பொலேவோய் அறிமுகப்படுத்தியிருக்கிறார் ….

…. கதையின் மூன்றாம் பாகத்தில் மீண்டும் போர் விமானியாவதற்காக அலெக்சேய் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் அவனிடம் உள்ள அசாத்திய திறமையைக்கண்டு ஆச்சர்யப்படுவதும், இறுதியில் அவனுக்குக் கால்கள் கிடையாது என்று தெரியவருகிறபோது தங்கள் கையறுநிலையைத் தெரிவிப்பதும், எல்லாவற்றையும் வெற்றிகொண்டு அலெக்சேய் போர் விமானியாவதையும் மூன்றாவது பாகத்தில் நாம் பார்த்திடலாம்.

நான்காவது பாகத்தில் போர் விமானிகளிலேயே முன்னுதாரணமாகத் திகழும் அலெக்சேயை நாம் பார்க்கிறோம்.

இவ்வாறு உண்மை மனிதனின் கதையைப் படிக்கும் எவராக இருந்தாலும், படிப்பதற்கு முன்பிருந்ததைவிட படித்ததற்குப்பின் தன் உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் பொங்கிவழிவதை உணரமுடியும்…

நன்றி : தீக்கதிர்

(முதல் பாகம்)  அத்தியாயம் – 1

விண்மீன்கள் கூரிய குளிரொளியுடன் இன்னும் சுடர்ந்து கொண்டிருந்தன. எனினும் கீழ்த்திசையில் வானம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மரங்கள் இருளிலிருந்து சிறிது சிறிதாகப் புலப்படலாயின. திடீரென அவற்றின் முடிகள் மீது பலத்த குளிர் காற்று வீசியடித்தது. உடனேயே காடு உயிர்த்தெழுந்து முழுக்குரலுடன் கணீரென அரவமிட்டது. தணிந்த சீழ்க்கை ஒலியால் ஒன்றையொன்று கூவி அழைத்தன. நூறாண்டுப் பைன் மரங்கள், பனி அடர்கள் கலவரமுற்ற கிளைகளிலிருந்து மெல்லிய சரசரப்புடன் உதிர்ந்தன.

காற்று வீசத் தொடங்கியது போன்றே தீடீரென அடங்கிவிட்டது. மரங்கள் மீண்டும் குளிரில் விறைத்து உறைந்ததுபோயின. அக்கணமே தெளிவாகக் கேட்கலாயின புலர்வதற்கு முன் காட்டில் எழும் ஒலிகள்: பக்கத்துத் திறப்பு வெளியில் ஓநாய்களின் பேராசை நிறைந்த சச்சரவு, நரிகளின் உறுமல், உறக்கத்திலிருந்து மரங்கொத்தி இன்னும் தீர்மானமின்றி மரப்பட்டையைக் கொத்தும் ‘டொக்’ ஒலி முதலியன. மரங்கொத்தி அடிமரத்தை அல்ல, பிடிலின் வெற்று உடலைக் கொத்துவது போன்ற இன்னிசையுடன் காட்டின் ரிசப்தத்தில் கேட்டது அந்த டொக் ஒலி.

பைன் மரங்களின் முடிகள் மீது கனத்த – ஊசியிலைகளினூடே மீண்டும் குப்பென வீசியடித்தது காற்று. வர வர ஒளி மிகுந்து கொண்டுபோன வானத்தில் கடைசி விண்மீன்கள் அமைதியாக அவிந்தன. வானம் முன்னிலும் இறுகிக் குறுகிவிட்டது. இரவின் இருளை முற்றாக உதறி எறிந்து விட்டுக் காடு தன் பசிய மாண்பு முழுவதும் தோன்ற எழுந்தது. பைன் மரங்களின் சுருள் முடிகளும் பிர் மரங்களின் கூரிய கூம்பு முடிகளும் செம்மையுற்று ஒளிர்ந்ததைக் கொண்டு ஞாயிறு உதித்துவிட்டது என்பதையும் அன்றையப் பகல் தெளிவும் குளிரும் கதிர்வீச்சும் கொண்டிருக்கும் என்பதையும் அனுமானிக்க முடிந்தது.

பலபலவென்று விடிந்து விட்டது. ஓநாய்கள் இரவில் வேட்டையாடி உண்ட இரையைச் ஜீரணிக்கும் பொருட்டுக் காட்டுப்புதர்களுக்குள் போய்விட்டன. நரி, காட்டின் திறப்பு வெளியிலிருந்து அகன்று விட்டது. தந்திரத்துடன் தாறுமாறாக வைக்கப்பட்டிருந்த அதன் அடித்தடம் வெண்பனி மீது பூப்பின்னல் நாடாப் போலத் தோற்றம் அளித்தது. நெடுங்காலக் காடு ஒரு சீராக இடையீடின்றி இரையலாயிற்று. பட்சிகளின் ஆர்ப்பும் மரங்கொத்தியின் அலகொலியும் மரக்கிளைகளினூடே சிவ்வெனப் பறந்த மஞ்சள் சிட்டுக் குருவியின் கீச்சொலியும் வண்ணப் புள்ளியின் பேராசையைக் காட்டும் வறட்டுக் கத்தலும் மட்டுமே குழப்பலான கலவரமும் ஏக்கமும் நிறைந்த மெல்லிய அலைகளாகப் பரவிய இந்த அரவத்தில் வேறுபாடுகள் உண்டாக்கின.

ஆல்டர் மரக் கிளையில் கூரிய கரு அலகைத் தீட்டிக் கொண்டிருந்த கரிச்சான் பறவை திடீரெனத் தலையை ஒரு புறம் திருப்பி கூர்ந்து கேட்டுவிட்டு விர்ட்டென்று பறந்து போக ஆயத்தமாகக் குந்தியது. மரக்கிளைகள் கலவரம் மூட்டும் வகையில் சரசரத்தன. ஏதோ வலிய பெரியது ஒன்று கண்மூடித் தனமானக் காட்டினூடே நடந்தது. புதர்கள் சிலிர்த்தன. சிறு பைன் மரமுடிகள் அசைந்தாடின. இறுகிய வெண்பனிப் பாளம் ஆழ்ந்து போய்க் கறமுறத்தது. கரிச்சான் கத்திக் கூவிற்று, அம்பு இறகு போன்ற வாலை விரித்து நேராக அப்பால் பறந்து போயிற்று.

காலைப்பனி அடர்களால் வெண்பொடி தூவப்பட்ட ஊசியிலைக் கிளையிலிருந்து வெளித்துருத்தியது நீண்ட பழுப்பு மூஞ்சி. அதன் உச்சியில் கனத்து கிளைத்த கொம்புகள் இருந்தன. மிரண்ட விழிகள் விசால திறப்பு வெளிமீது கண்ணோட்டின. மதயானை ஒன்றின் ரோஜா நிற மூக்குத் துளைகள் பதற்றத்துடன் நடுங்கின. அவற்றின் வழியே கலவரம் நிறைந்த மூச்சுடன் வெப்ப நீராவி குப்குப்பென்று வெளி வந்தது.

முதிய மதயானை, பைன் மரங்களுக்கு நடுவே சிலை போன்று அசைவின்றி நிலைத்துவிட்டது. ரோமக் குச்சங்கள் அடர்ந்த அதன் தோல் மட்டுமே முதுகுப்புறம் சிலிர்த்தது.

எச்சரிக்கை அடைந்த அதன் செவிகள் ஒவ்வோர் ஒலியையும் விடாது பற்றி பதித்துக் கொண்டன. பட்டை தின்னிப்பூச்சி, பைன் மரக்கட்டையைக் கறவுவது கூடக் கேட்கும் அளவு கூர்மையாக இருந்தது அந்த யானையின் செவிப்புலன். ஆனால் இத்தகைய கூரான காதுகளுக்குக் கூடக்காட்டில் புட்களின் ஆர்ப்பும் மரங்கொத்தியின் அலகொலியும் பைன் மர முடிகளின் ஒரு சீரான ஓசையும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை .

மேலிருந்து கேட்ட ஒலி ஒன்று கடம்பையின் கவனத்தை ஈர்த்தது. மதயானை நடுங்கிற்று, அதன் முதுகுத் தோல் சிலிர்த்தது, பின்னங்கால் மேலும் அதிகமாக மடங்கின.

சில மேவண்டுகள் மந்தமாக ரீங்காரம் செய்தவாறு இருந்தன. பூத்த பிர்ச் மர இலைகளில் சுழல்வது போலிருந்தது அது. அவற்றின் ரீங்காரத்தின் நடுநடுவே சதுப்பு நிலத்தில் கார்ன்கிரேக் பட்சியின் கத்தலை ஒத்த சடசடப்பு சில வேளைகளில் கேட்டது.

இதோ அந்த வண்டுகள். இறக்கைகள் ஒளிர, குளிர் நீலக் காற்றில் அவை நர்த்தனம் செய்தன. மீண்டும் மீண்டும் உயரே ஒலித்தது சடசடப்பு. வண்டுகளில் ஒன்று தனது இறக்கைகளை மடிக்காமலே கீழ்நோக்கிப் பாய்ந்து வந்தது. மற்றவை விண்ணின் நீல வெளியில் மறுபடி நர்த்தனம் செய்யலாயின. அந்த மதயானை தனது இறுக்கமுற்ற தசைகளைத் தளர விட்டு, திறப்பு வெளிக்கு வந்து, வானைக் கடைக்கணித்த படியே வெண்பனிப் பாளத்தை நக்கிற்று. காற்றில் நடனமிட்ட திரளிலிருந்து இன்னும் ஒருவண்டு திடீரென விலக, பகட்டான, பெரிய வாலைப் பின்னே துருத்தியவாறு நேரே திறப்பு வெளியை நோக்கி வந்தது. அது படு விரைவாக அளவில் பெருத்துக் கொண்டு போயிற்று. யானை புதருக்குள் தாவிப் புகுந்ததும் புகாததுமாக, பிரமாண்டமான ஏதோ ஒன்று, கூதிர்காலப் புயற்காற்றின் திடீர் வீச்சை விடப் பயங்கரமான ஏதோ ஒன்று, பைன் மர உச்சிகளைத் தாக்கித் தரையில் தடாலென்று மோதி வீழ்ந்தது. அதன் மோதலால் காடு முழுவதும் அதிர்ந்து முனகிற்று. காட்டுக்குள் நாற்கால் பாய்ச்சலில் மிரண்டோடிய யானையை முந்திக் கொண்டு முழங்கிற்று அதன் எதிரொலி.

பசிய ஊசியிலை மரங்கள் அடர்ந்த காட்டுக்குள். எதிரொலி அடங்கிவிட்டது. விமானம் வீழ்ந்ததால் முறிந்த மர உச்சிகளிலிருந்து தீப்பொறிகள் போன்று சுடர் வீசிச் சிதறின பனி அடர்கள். மெதுவாகக் கம்பீரமாக நிசப்தம் காட்டில் குடி கொண்டது. ஒரு மனிதன் முனகுவதும், வழக்கத்துக்கு மாறான சந்தடியாலும் சடசடப்பாலும் ஈர்க்கப்பட்டுக் காட்டுக்கு உள்ளிருந்து திறப்பு வெளிக்கு வந்த கரடியின் கனத்த பாதங்களுக்கு அடியே வெண்பனிப் பாளம் நொறுங்குவதும் அந்த ஆழ்ந்த நிசப்தத்தில் தெளிவாகக் கேட்டன.

கரடி பெரியது, முதியது, மயிர் அடர்ந்தது. அழுக்கடைந்த பழுப்பு ரோமக் கற்றைகள் அதன் உட்குழிந்த விலாக்களிலிருந்து துருத்திக் கொண்டிருந்தன. மெலிந்த, தசை நாண் செறிந்த பின்புறத்தில் அவை பனிக்கம்பிகள் போலத் தொடங்கின. இலையுதிர் காலம் தொடங்கி இந்த வட்டாரங்களில் போர்ப் புயல் வீசிக் கொண்டிருந்தது. முன்பு காட்டுக் காவலர்களும் வேட்டைக்காரர்களும் மட்டுமே, அதுவும் எப்போதாவது தான், இந்தக் காட்டுக்குள் வருவது வழக்கம். இப்பொழுதோ இதன் உட்பகுதிக்குள் கூடப் புகுந்து விட்டது போர். அருகே நடந்த சண்டையின் பேரரவம் இலையுதிர் காலத்திலேயே கரடியின் குளிர் கால உறக்கத்தைக் கலைத்து குகையிலிருந்து அதை உசுப்பி விட்டது . இப்போது பட்டினியும் எரிச்சலுமாக, அமைதியின்றிக் காட்டில் அலைந்து திரிந்தது அது. திறப்பு வெளியில், சற்று முன்பு மதயானை நின்ற அதே இடத்தில் நின்றது கரடி. மதயானையின் புதுமை மாறாத, சுவையான மணத்த சுவடுகனை அது முகர்ந்தது. உட்குழிந்த விலாக்களை அசைத்தவாறு பேராசை தோன்றப் பெருமூச்செறிந்தது, உற்றுக்கேட்டது. மதயானை போய்விட்டது. ஆனால் உயிருள்ள, பலவீனமான பிராணி ஒன்றின் ஒலி அருகே கேட்டது. கரடியின் பிடர் மீது ரோமங்கள் குத்திட்டு நின்றன. அது முகத்தை முன்னே நீட்டியது. மறுபடியும் அந்த முறையீட்டொலி திறப்பு வெளியிலிருந்து லேசாகக் காதுக்கு எட்டிற்று.

வறண்ட, கெட்டியான பனிப்புறணி நெறுநெறுத்துத் தகர, மென்மையான பாதங்களை நிதானமாக, எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து, வெண்பனியில் புதைந்து அசையாது கிடந்த மனித உருவத்தை நோக்கி நடந்தது கரடி….

(தொடரும்)

விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் – பாகம் 2

அரை பெடல் போட்டு சைக்கிள் ஓட்டிப் பழகப் போகிறேன்…
இடம்: ஆலம்பறை கோட்டை தீவு, புதுச்சேரி.
படம்: எழில்

♣ ♣ ♣

சமணர் படுகையின் கீழ் இயற்கை நீரூற்றில் சறுக்கி விளையாடும் சிறுவர்கள்.
இடம்: சமணர் படுகை, கீழ குயில்குடி, மதுரை.
படம்: எழில்

♣ ♣ ♣

கஜா புயலுக்கு  குடிசைகளையும் உடைமைகளையும் பறிகொடுத்த போதும், புன்னகையைத் தொலைக்காத சிறுவர்கள்.
இடம்: கருவாக்குறிச்சி, திருவாரூர்.
படம்: வினவு களச்செய்தியாளர்

♣ ♣ ♣

வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும்வரை காத்திருக்க மனமில்லை… இதோ கிளம்பிவிட்டோம் வீதி உலா…
இடம்: செங்கனாச்சேரி, கேரளா.
படம்: வினவு களச்செய்தியாளர்

♣ ♣ ♣

தெருவில் ஓடும் மழைநீரில் கப்பல்விட்டு விளையாடிய எங்களை படகில் பயணிக்க வைத்த கேரள மழைவெள்ளம். எதிர்நீச்சல் இன்றி ஏது வாழ்க்கை?
இடம்: செங்கனாச்சேரி, கேரளா.
படம்: வினவு களச்செய்தியாளர்

♣ ♣ ♣

துள்ளித் திரிந்த எங்களை நிவாரண முகாமுக்குள் அடக்கினாலும் எங்கள் துள்ளலும் துடிப்பும் என்றும் மாறாது.
இடம் : செங்கனாச்சேரி, கேரளா.
படம்: வினவு களச்செய்தியாளர்

♣ ♣ ♣

ஆலமர விழுதை தாங்கியபடி, ஒர் ஊஞ்சல் பயணம்.
இடம் : செஞ்சிக்கோட்டை, விழுப்புரம்.
படம்: எழில்

♣ ♣ ♣

நண்பேன்டா…
இடம் : பெசன்ட்நகர் கடற்கரை
படம்: எழில்

♣ ♣ ♣

மழலைக்கும் மகிழ்ச்சிக்கும் மொழி ஒரு தடையேயில்லை என்கிறார்களோ இத்தாயும் குழந்தையும்.
இடம் : ஆரோவில், புதுச்சேரி.
படம்: எழில்

♣ ♣ ♣

கடல் அலையின் சாரல் தெறிக்கும் தூரத்தில் எங்கள் வீடுகள். விளையாட கடற்கரை ! வேறு என்ன கவலை ?
இடம் : பட்டினம்பாக்கம், சென்னை.
படம்: வினவு புகைப்படச் செய்தியாளர்

♣ ♣ ♣

என்ன போட்டா புடிக்காத… புடுச்சா அழுதுருவேன்…
இடம் : பட்டினம்பாக்கம், சென்னை.
படம்: வினவு புகைப்படச் செய்தியாளர்

♣ ♣ ♣

படிக்க:
நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்
உங்களால் தைரியமாக புகைப்படம் எடுத்துத் தர இயலுமா?

தொகுப்பு:


வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!

இன்னொரு முறை மோடி வந்தா நாட்டை விட்டு ஓடுறதுதான் ஒரே வழி ! அண்ணா பல்கலை மாணவர்கள்

ரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடந்துவரும் கூட்டணி பேரங்கள் குறித்து தமிழக மக்களின் மனநிலை என்ன, அதிமுக அணியில் பாஜக இடம்பிடித்து அதிக இடங்களில் போட்டியிடுவதற்காக மோடி, அமித்ஷா கும்பல் தமிழகத்தின் மீது காட்டிவரும் அளவற்ற அன்பு மற்றும் தமிழ்நாட்டு நலனில் மிகவும் அக்கறை கொண்டது போல் நிறைய திட்டங்களை அறிவித்தல், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருகை தருவது என்ற கூத்துக்கள் தினம் தினம் அரங்கேறி வருகின்றன.   இந்த நிலையில் மோடி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று தமிழக உயர்கல்வித்துறை மாணவர்களிடம் கேள்வி எழுப்பினோம்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கெளதம், இர்பான், அனில், ஷாரில் உட்பட நண்பர்கள் :

தயங்கியபடியே மாணவர்கள் ஒவ்வொருவரும் கேள்வியை உன்னிப்பாகக் கவனித்தனர். ஆனால், ஒருவரும் பேச தயாராக இல்லை என்பதை அவர்களின் உடல்மொழி உணர்த்தியது. “மச்சான், நீ சொல்லுடா, மச்சான் நீ சொல்லுடா…, சாரிங்க.. அரசியல் மேட்டர்-ல எக்ஸ்பேர்ட் ஒருத்தன்  இங்க இல்ல” என்று பதில் சொல்வதைத் தவிர்த்தனர். கேமரா ஏதும் வெச்சுருக்கிங்களா என்று இர்பான் கேட்டார். ஒரு இறுக்கமான சூழல் நிலவியது. நாங்கள் வீடியோ எதுவும் எடுக்கவில்லை என்பதை உத்திரவாதப்படுத்திய பிறகே மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தனர்.

” இங்க பாருங்க காலேஜ்-ல ஒரு ஃபங்சன் நடக்குது அதுக்கு பேரு குருஷேத்ரா-வாம்.  இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் துணைவேந்தர் சூரப்பாவையும் உள்ள திணிச்சிட்டாங்க… இன்னொரு முறை மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டை விட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை.”

‘இப்படியே நீங்க எல்லாரும் ஓடிட்டா நாட்ட யாரு பாத்துக்குவா?’

“எல்லாரும் போயிட்டா மீதி ஒரு 10, 15 பாஜககாரனுங்காதான் இருப்பானுங்க… எது வேணும்னாலும் பண்ணிகிட்டு போகட்டும்” என்றார் ஒரு மாணவர். மற்றொரு மாணவர் மெதுவாக, “எல்லாரும் வெளிநாடு போயிட்டா எப்படி?  வேற என்ன பண்றது, மோடிக்கு எதிரா ஓட்டுப்போட வேண்டியதுதான்” என்று கேள்வியும் பதிலுமாக விவாதிக்க ஆரம்பித்தனர்.

மாணவர் என்ற முறையில் உங்களுக்கு மோடி எந்தக் கெடுதலும் செய்தாரா? ஏன் மோடியை இந்தளவுக்கு வெறுக்கின்றீர்கள்?

“தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்ல… சரிதான்… ஆனா, எங்க எல்லாத்தோட குடும்பமும் மோடியால பாதிக்கப்பட்டிருக்கே… ஜிஎஸ்டி கொண்டு வந்ததுக்கப்புறம் எங்கப்பாவோட பிசினசே போச்சு… இந்த நிலைமையில பிஜேபி-க்கு யாராவது ஓட்டு போடுவாங்களா… என்னோட சாய்ஸ் திமுக தான். அவுங்க கிட்ட தான் கொஞ்சம் சரக்கு இருக்கு. பிராபப்லிட்டி படி பாத்தா திமுக-வுக்குத்தான் சான்ஸ் இருக்குது.

“ஜெயலலிதா இருந்தப்பயாவது பிஜேபி-ய ரெஸ்டிரிக்ட் பண்ணி வெச்சாங்க. இப்ப இருக்குற ஓபிஎஸ், இ.பி.எஸ் ரெண்டு பேரும் சுத்த வேஸ்ட். நீட் வந்துடுச்சு, சூரப்பா வந்தாரு, அவுங்க ஆளுங்கள எல்லா இடத்துலயும் நுழைச்சுட்டாங்க. ஜெயலலிதா இருந்தப்ப எலெக்சனுக்கு இத்தன சீட் கொடுன்னு பாஜக-வால ஆட்டம் போட்டுருக்க முடியுமா? தமிழ்நாட்ல இருக்குற கவர்மெண்ட் ஜாப்ல கூட நார்த் இண்டியன்ஸ் ஈசியா நுழைஞ்சிடுறாங்க.. இதுல ஆச்சரியம் என்னான்னா தமிழ் தேர்வுல தமிழ்நாட்டு மாணவர்கள் ஃபெயில் ஆகுறாங்க… ஆனா நார்த் இண்டியன்ஸ் நிறைய மார்க் எடுக்குறாங்க… இதெல்லாம் எப்படி சாத்தியமாகுது?” என்றார் ஒரு மாணவர்

தமிழ்நாட்டுல அரசியல் பேசுறதுக்குன்னு,  சரியான பொலிட்டிக்கல் பிளாட்பார்மே இல்ல. கேரளாவ எடுத்துக்கங்க….ஸ்கூல் லெவல்லயே ஸ்டூடன்ஸ் அரசியல் பேச ஆரம்பிச்சுடுவாங்க… அசோசியேஷன் இருக்கும்… போன வருசம் தமிழ்நாட்டுல பேருந்து கட்டணத்த உயர்த்துனப்ப நாங்க அது பெரிய அநீதின்னு நெனச்சோம். அண்ணா யுனிவர்சிட்டி-ல உள்ள ஸ்டூடன்ஸ்-ல 10 சதவீதம் பேரு பேருந்துகள்-ல வர்றவங்கதான். பேருந்துகள்ல வர்றவங்க எல்லாரும் புறக்கணிக்கணும், வேற ஏதாவது பண்ணி நம்மளோட கோவத்த காமிக்கணும்னு நெனச்சோம். ஆனா, மத்த 90 சதவீத மாணவர்கள், பஸ்ச புடிச்சி காலேஜுக்கு வந்துட்டாங்க… இதுல எப்படி போராட்டம் பண்றது-ன்னு தெரியல.

படிக்க:
எதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர் கைது
இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு !

இதே விசயம் கேரளாவுல நடந்துச்சுன்னா, ஒரு ஸ்கூல் ஸ்டூடண்டே என்ன பண்ணுவான் தெரியுமா… பஸ்சில ஏறி உக்காந்துக்குவான். ஆனா, டிக்கட் எடுக்க மாட்டேன்னு போராட்டம் நடத்துவான். அதனாலதான் சொல்றேன், இங்க உள்ள கட்சிகள் கிட்ட அந்த மாதிரியான அரசியல் இல்ல… ஒரு வேளை பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்திருந்தா இப்ப இருக்குற நெலம மாறியிருந்திருக்க வாய்ப்புண்டு.”

“நாங்கெல்லாம் திருச்செங்கோடு பள்ளிகள்-ல படிச்சி 100-க்கு 98 மார்க் வாங்கி வந்தவுங்க. ஸ்கூல்ல படிக்கிறப்ப டாப்பரா வரனும்கிறதுதான் ஒரே இலக்கா இருந்திச்சு. நல்லா படிச்சு, நல்ல மார்க் வாங்குனதுக்கப்புறம், நல்ல காலேஜ்-ல அட்மிஷன் வாங்க அல அலன்னு அலஞ்சோம். ஒரு வழியா காலேஜ்-ல செட்டில் ஆன பிறகு கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகனும்கிறதுக்காக, கடுமையா படிச்சோம். நல்ல மார்க் எடுத்தோம். ஆனா, நாங்க நெனக்கிற டாப் 10 கம்பெனிகள்ல வேல யாருக்கும் கிடைக்கல.”

“சரி, கிடைக்கிற வேலக்கு போறோம்னு வெச்சுக்கங்க, அங்க என்ன நடக்கும்? மினிமமா 9 மணி நேரம் எங்கள வேல வாங்காம விட மாட்டாங்க… வாரம் புல்லா வேல பாத்து சண்டே மட்டும் தான் ஃப்ரீயா இருப்போம். அதுவும் டிவி பாக்குறதுக்கே சரியா போயிடும். இதுல எங்க நாங்க இனிமே சொசைட்டிய பத்தி கவலப்பட முடியும்… இப்ப இருக்குற வேலை வாய்ப்பு நிலைமையெல்லாம் பாக்குறப்ப ஏண்டா கஷ்டப்பட்டு படிச்சோம்னு இருக்குது… ஸ்டூடன்ஸா இருக்கும்போதே  அரசியலுக்கு வந்தா இழப்பு வரும்னு சொல்றாங்க… உண்மையிலேயே, இழப்பு நமக்கில்ல, அரசியல்வாதிக்குத்தான்.. இது இப்பத்தான் நமக்குப் புரியுது…

“எங்க நிலைமை இப்படின்னா, அடித்தட்டு மக்களோட நிலைமையெல்லாம் இன்னும் மோசம். குறிப்பா வடநாட்டுல ஒரு நாளைக்கி 100 ரூபா சம்பளம், ஒரு வேள சாப்பாடும் கெடச்சதுன்னா அத மிகப்பெரிய சொர்க்கமா எடுத்துக்குவாங்க… இப்ப அதுக்கும் வழியில்லாம தமிழ்நாட்டுக்கு நார்த் இண்டியன்ஸ் நெறையா வராங்க… கூலி வேலை-ன்னு பல்வேறு காரணங்களுக்காக இங்க வர்றாங்க… தமிழ்நாட்டுல ரொம்ப சேஃபா, ஹேப்பியா இருக்குறதா நெனக்கிறாங்க… பிஜேபி ஆட்சியில இருக்குற நார்த் ஸ்டேட்ஸ்-லேருந்து தான் நெறையா பேர் வர்றாங்க… ஆனா பிஜேபி கவர்மெண்டுக்கு சவுத் இண்டியான்னா ஆகவே மாட்டேங்குது… ஒன்னு வேனும்னா பண்ணலாம், சவுத் இண்டியாவ மொத்தமா பிரிச்சி தனி நாடா அறிவிக்க சொல்லிட்டு உங்க உறவே வேணாம்னு நிம்மதியா இருக்கலாம்.”

“காஷ்மீர்ல வெடிகுண்டு வெடிச்சி 50 பேருகிட்ட இறந்து போயிருக்காங்க… அது ஏன் எலெக்சன் டைம்-ல மட்டும்  குண்டு வெடிக்கிது, தேசப் பற்று பொங்கி வழியுதுன்னு தெரியல. அவ்ளோ டைட் செக்யூரிட்டி இருக்குற எடத்துல எப்படி 350 கிலோ எடையுள்ள குண்ட அசாதாரணமா வெடிக்க வைக்க முடிஞ்சது. செத்துப்போனது அப்பாவி வீரர்கள்தானே.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போன வருசமே சொன்னாரு… இந்தியாவே படையெடுத்து வந்தாலும் நாங்க சண்டை போட தயாரா இல்லன்னு. ஆனா மோடி என்னடான்னா போர், போர்-ன்னு கத்திகிட்டிருக்காரு… மோடி பேசுறத பாத்தா இந்த மாதிரி ஏதோ நடக்கனும்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்ததுமாதிரியே தெரியுது… இன்னும் குறிப்பா சொல்லனும்னா நோ பாகிஸ்தான் நோ மோடி அவ்ளோ தான்” என்றார்கள் நெத்தியடியாக…

தொழுநோய் ஒழிப்பில் பின் தங்கிய இந்தியா !

2

டந்த 2017 -ம் ஆண்டு  தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் 2018-ம் ஆண்டுக்குள் தொழு நோயை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என மத்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் இலக்கை அடையவில்லை

கண்கூடாக காணக்கூடிய உருமாறுதலை ஏற்படுத்தும் தொழுநோயை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒழித்துவிடுவோம்  என மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை இயக்குனர் ஜெனரல் அனில் குமார் இதுகுறித்து கூறுகையில், “கண்கூடாக காணக்கூடிய உருமாறுதலை ஏற்படுத்தும் தொழுநோயை 2020-ம்  ஆண்டுக்குள் ஒழிக்க உலக சுகாதார நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஆனால் நாம் அதற்கு முன்னதாகவே அக்டோபர் 2, 2019-க்குள் அந்த இலக்கை அடைந்துவிடுவோம். தொழுநோயை முற்றிலுமாக ஒழித்து விடுவோம்” என்றார்.

தொழுநோயை முற்றிலுமாக ஒழித்தல் என்பது 10 இலட்சத்திற்கு ஒருவருக்கு மட்டுமே தொழுநோய் இருப்பது எனும் நிலையையே குறிக்கும். கண்கூடாக காணக்கூடிய உருமாறுதல்களை ஏற்படுத்தும் தொழுநோயை, “இரண்டாம் கட்ட முடக்கு நிலை” என குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஜனவரி 25, 2019-ல் தான் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலக அளவிலான  தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சம் என்றும், அதில் பாதிக்கும் மேலானோர் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது. இதுவும், 2018-ம் ஆண்டு இலக்கை எட்டமுடியாமல் போனதும் பொது சுகாதார பார்வையாளர்களின் அக்கறைக்குரிய பிரச்சினையாகும். ஒரு வேளை இந்தியா தனது இலக்கை எட்ட முடியவில்லை எனில், அது உலக அளவிலான தொழுநோயாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கும்.

படிக்க:
♦ கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !
♦ சரஸ்வதி மாமியை மனித மதத்திற்கு மாற்றிய ஹாஜீரா பீவி ! அவசியம் படிக்க !

தொழுநோய் பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த நோய் வெளியே தெரிவதற்கு மிக அதிகமான காலம் ஆகும் என்பதுதான். சராசரியாக ஆறு ஆண்டுகள் கழித்துதான் இந்த நோய் வெளியே இருப்பதற்கான அறிகுறி தெரியவரும். இணை இயக்குனர் ஜெனரல் குமார் இது குறித்து கூறுகையில், “நாங்கள் இந்த நோயை கண்டுபிடிப்பதற்காக சிறப்பான வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். இதன் காரணமாக நாங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய பாதிப்புகளை கண்டுபிடிக்க முடிகிறது. ஏனெனில் தொழுநோய் ஒரு நபருக்குள் பல ஆண்டுகள் மறைந்திருக்கக் கூடியது” என்றார். தொழு நோய் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குவதையும், பாரபட்சம் பார்ப்பதையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக சாசகவா இந்தியா தொழுநோய் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்

இந்தியாவில் தொழுநோய் தாக்குதல் குறித்த புள்ளி விவரங்கள் ஏற்றத் தாழ்வோடு இருக்கின்றன.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் மற்றும் அதன் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பது தேக்கத்தில் இருந்தது. 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் புதியதாக சுமார் 35 ஆயிரம் தொழு நோய் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இது ஊக்கம் அளிக்க கூடியதாக இருக்கலாம். ஆனால் நாம் கவலைப்பட வேண்டியது என்னவெனில், கண்கூடாக பார்க்கக்கூடிய உருமாறுதல் ஏற்பட்ட தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான்.  ஒவ்வொரு ஆண்டும் இது அதிகரித்துவருகிறது. இதனடிப்படையில் பார்க்கையில் இன்னும் வெளித்தெரியாத நிலையில் இருக்கும் தொழுநோய் பாதிப்பும்அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

படிக்க:
♦ வல்லரசு இந்தியாவின் சாதனை : உலகளவில் புதிய தொழு நோயாளிகளில் 60% இந்தியர்கள் !
♦ செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா ?

தொழுநோய் பாதிப்பு வெளிப்படுவதற்கு முன்னர் அதன் அதிகமான அடைகாப்புக்காலம் காரணமாக பல நோய் தாக்குதல்கள் வெளியில் தெரியாமலேயே இருக்கின்றன. மேலும் நோய்த் தாக்குதலின் எண்ணிக்கை திடீரென அதிகமாகவோ குறைவாகவோ மாறாது. முடக்கநிலை ஏற்படுவதைத் தவிர்க்கவும், தொழுநோய் பரவுவதைத் தடுக்கவும், இந்நோயை விரைவாக கண்டுபிடிப்பது முக்கியானது. ஏனெனில் முடக்கநிலை என்பது இந்நோய்த் தாக்குதலின் மிகத் தீவிரமான விளைவாகும்.

இதுகுறித்து குமார் கூறுகையில், “உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள இலக்கான 2020-ம் ஆண்டு என்பது மிகவும் நெருக்கமானது. பெரும்பாலான நாடுகள் இந்த இலக்கை அடைய முடியாமல் போகலாம். ஆனால் நாம் அந்த இலக்கை கண்டிப்பாக அடைந்துவிடுவோம். அதில் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார்.

எதிர்வரும் 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் தொழுநோயின்  இரண்டாம் கட்ட முடக்கு நிலையை ஒழித்து, தொழு நோய் பாதிப்பை 10 லட்சத்திற்கு ஒருவர் என்ற அளவுக்கு குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எதிர்பார்க்கிறது. இந்தியாவில் தற்போது இது 10 லட்சத்திற்கு 2.4 என்ற அளவில் இருக்கிறது. இதுகுறித்து குமார் கூறுகையில், “நாம் செயலூக்கமான பரப்புரையை 2016-ல் துவக்கும்போது இந்த அளவு 10 லட்சத்திற்கு 4.5 என்ற அளவில் இருந்தது. இதன் அடிப்படையில் பார்க்கையில் நாம் இரண்டு ஆண்டுக்குள் பிரச்சினையை சரி பாதியாக குறைத்திருக்கிறோம்.” என்றார்

ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால், தொழு நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்கள், மறுக்கப்படுகின்றன என்பதை கடந்த ஆண்டு தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியது. ஆதார் அட்டையை பொருத்தவரையில் அதற்கு கைரேகையும், கருவிழி பதிவும் அவசியமாக இருக்கிறது. தொழு நோய், நோயாளிகளின் கைகளை பாதித்துவிடுவதால், இத்தகைய உடல்கூறு தகவல்களை ஆதார் அட்டைக்காக கொடுக்க அவர்களுக்கு சாத்தியம் இல்லை. ஆகவே அவர்களால் ஆதார் அட்டை பெற முடிவதில்லை.

இந்தியாவில் பல்வேறு சுகாதார திட்டங்கள், நோயாளிகளுக்கான நலத்திட்டங்களை ஆதார் எண்ணோடு இணைக்க துவங்கிவிட்டன. உதாரணத்திற்கு காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரூ. 500 நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அப்பணம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து குமார் கூறுகையில், “தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவது இல்லை.” என்றார். மேலும், “தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் நாங்கள் இந்த சேவையை வழங்கி வருகிறோம் அவர்கள் ஆதார் அட்டை வைத்து இருக்கிறார்களா இல்லையா என்பது ஒரு பொருட்டில்லை. ஒவ்வொருவரும் இந்த சேவையை பெற்று வருகின்றனர்” என்றார்.

தொழுநோய் குணப்படுத்தக் கூடியதே எனினும், இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மீது பாரபட்சம் காட்டுவதும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதும் இன்னமும் நீடிக்கிறது. கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் பாராளுமன்றம், இந்திய தனிநபர் திருமணச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை மேற்கொண்டது. அதன்படி விவாகரத்து பெறுவதற்கு தொழுநோயை ஒரு காரணமாக சொல்லலாம் என்ற விதியை ரத்து செய்து, சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கவனம் கொடுக்கப்படாத வெப்ப மண்டல நோயாகவே தொழுநோய் கருதப்படுகிறது. இந்தியாவில் காசநோய் மற்றும் மலேரியாவிற்கு ஒதுக்கப்படும் ஆராய்ச்சி நிதி மற்றும் சிறப்புக் கவனமும் தொழுநோய்க்கு கொடுக்கப்படுவதில்லை. காசநோய் குறித்த ஆய்வுக்கு ரூ.147 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், தொழுநோய் குறித்த ஆய்வுக்கு வெறுமனே ரூ.39 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. உலக அளவிலும் கூட தொழுநோய் குறித்த ஆய்வுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. உலக அளவில், தொழுநோய்க்கான ஆய்வு நிதி குறைக்கப்பட்டு வருகையில், கடந்த 2017-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் முன்னெப்போதையும் விட மிக அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது

நோயை ஒழிப்பது குறித்த இந்தியாவின் இலக்குகள் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கின்றன. தொழுநோயை ஒழிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் 2020-ம் ஆண்டு இலக்கு வைக்கையில், அதற்கு முன்னதாகவே ஒழித்துவிட இலக்கு வைத்துள்ளது இந்தியா. அதே போல, காச நோயை ஒழிக்க உலக சுகாதார நி்றுவனம் 2030-ம் ஆண்டு இலக்கு வைத்திருக்கையில், வரும் 2025-ம் ஆண்டிலேயே  ஒழித்துவிட இலக்கு வைத்திருக்கிறது இந்தியா. ஆனால்,  உலகம் முழுவதும் புதியதாக பீடித்திருக்கும், ஒரு கோடியே நாலு லட்சம் காச நோய் தாக்குதல்களில் சுமார் 27% இந்தியாவில் நிகழ்கின்றன என்பதுதான் நிலைமை.


கட்டுரையாளர்     : அனு பூயன்
தமிழாக்கம்        : நந்தன்
செய்தி ஆதாரம் : தி வயர்