Saturday, July 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 391

அவர்கள் வேண்டுவது சத்தியமும் தர்மமும் நியாயமும் உள்ள வேறொரு வாழ்க்கை !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 29

மாக்சிம் கார்க்கி
யாரோ அவளது மார்பில் ஓங்கி அறைந்தார்கள்; தனது கண்ணில் படிந்திருந்த நீர்த்திரையின் வழியாக அவள் அந்தச் சிவந்து கனன்ற குட்டி அதிகாரியின் முகத்தைத் தன் எதிரே கண்டாள்.

“ஏ! பெண் பிள்ளை தூரப்போ” என்று அவன் கத்தினான்.

அவள் அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவனது காலடியில் கொடியின் கம்பு இரண்டாக முறிந்து கிடப்பதையும் அதன் ஒரு முனையில் சிவப்புத் துணித்துண்டு கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவள் குனிந்து அதை எடுத்தாள். அந்த அதிகாரி அவளது கையிலிருந்து அதைப் பிடுங்கி, தூரப் பிடித்துத் தள்ளி, பூமியில் ஓங்கி மிதித்தவாறு சத்தமிட்டான்.

“நான் சொல்கிறேன். போய்விடு!”

அந்தப் சிப்பாய்களின் மத்தியிலிருந்து அந்தப் பாட்டு ஒலித்தது:

துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

எல்லாமே சுற்றிச் சுழன்று நடுங்கி மிதந்தன. காற்றில் தந்திக் கம்பிகளின் இரைச்சலைப் போல, ஒரு முணுமுணுப்புச் சத்தம் நிரம் நின்றது. அதிகாரி விடுவிடென்று ஓடினான்.

”உங்கள் பாட்டை நிறுத்துங்கள்” என்று அவன் வெறிபிடித்துக் கூவினான், “ஸார்ஜெண்ட் மேஜர் கிராய்னவ்…”

கீழே போட்ட உடைந்து போன கொடிக்கம்பை நோக்கி, தாய் தட்டுத் தடுமாறிச் சென்றாள். மீண்டும் அதைக் கையில் எடுத்தாள்.

”அவர்களது வாயை மூடித் தொலை!”

அந்தப் பாட்டுக் குரல் திமிறியது, நடுங்கியது, உடைந்தது. பின் நின்றுவிட்டது. யாரோ ஒருவன் தாயின் தோளைப் பற்றிப் பிடித்துத் திரும்பிவிட்டு முதுகில் கைகொடுத்து முன்னே நெட்டித் தள்ளிக் கத்தினான்,

”போ, போய் விடு!”

“தெருவைக் காலி செய்யுங்கள்!” என்று அந்த அதிகாரி கத்தினான்.

சுமார் பத்தடிக்கு முன்னால் அவள் வேறொரு கூட்டத்தைப் பார்த்தாள். அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், திட்டிக்கொண்டும், சீட்டியடித்துக்கொண்டும் தெருவை விட்டு விலகிச் சென்று, வீட்டு முற்றங்களில் மறைந்து கொண்டிருந்தார்கள்.

“விலகிப்போ – ஏ , பொட்டைப் பிசாசே!” என்று அந்த மீசைக்காரக் குட்டிச் சிப்பாய் தாயின் காதிலேயே சத்தமிட்டு அவளைத் தெருவோரமாகப் பிடித்துத் தள்ளினான்.

தாய் கொடிக்கம்பின் பலத்தின் மீது சாய்ந்தவாறே நடந்து சென்றாள். ஏனெனில் அவளது பலமெல்லாம் காலை விட்டு ஓடிப்போய்விட்டது. மற்றொரு கையால் அவள் சுவர்களையும், வேலிகளையும் பிடித்துக்கொண்டு கீழே விழுந்து விடாதபடி நடந்தாள். அவளுக்கு முன்னால் நின்ற ஜனங்கள் அவள் மீது சாடிச் சாய்ந்தார்கள். அவளுக்குப் பின்னாலும், பக்கத்திலும் சிப்பாய்கள் நடந்து வந்தார்கள்.

“போங்க, சீக்கிரம் போங்கள்!”

அவள் அந்தச் சிப்பாய்கள் தன்னைக் கடந்து போக விட்டுவிட்டு நின்றாள், சுற்றுமுற்றும் பார்த்தாள். தெருக்கோடியில் மைதானத்துக்குச் செல்லும் வழியை மறித்துச் சிப்பாய்கள் நின்றுகொண்டிருந்தார்கள். மைதானமோ காலியாய் இருந்தது. சாம்பல் நிற உருவங்கள் அந்த ஜனங்களை நோக்கி மெது மெதுவாக முன்னேறி வரத்தொடங்கின.

அவள் திரும்பிப் போய்விட எண்ணினாள். ஆனால் தன்னையுமறியாமல் அவள் முன்னாலேயே போக நேர்ந்தது. கடைசியில் அவள் அப்படியே நடந்து நடந்து ஒரு வெறிச்சோடிப்போன குறுகிய சந்துப் பக்கமாக வந்து சேர்ந்தாள்.

அதனுள் நுழைந்தாள்.

மீண்டும் அவள் நின்றாள். ஆழ்ந்த பெருமூச்செறிந்தவாறே காது கொடுத்துக் கேட்டாள். எங்கிருந்தோ கூட்டத்தின் இரைச்சல் கேட்டது.

அந்தக் கம்பின் மீது சாய்ந்தவாறே. அவள் மீண்டும் நடந்தாள். அவளது உடம்பெல்லாம் வியர்த்துப் பொழிந்தது. அவளது புருவங்கள் நடுங்கின; உதடுகள் அசைந்தன; கை அசைந்தது. தீப்பொறிகளைப் போல் பளிச்சிடும் சில தொடர்பற்ற வார்த்தைகள் மனதில் வரவர வளர்ந்து பெருகி, ஒரு பிரம்மாண்டமான ஜோதிப் பிழம்பாக விரிந்து விம்மி, அந்த வார்த்தைகளை வெளியிட்டுச் சொல்லிக் கூக்குரலிடத் தூண்டுவது மாதிரி இருந்தது.

அந்தச் சந்து திடீரென இடதுபுறமாகத் திரும்பியது; அங்கு ஒரு கோடியில் ஜனங்கள் பெருந்திரளாக கூடி நிற்பதை அவள் கண்டாள்.

“என்னடா தம்பிகளா! துப்பாக்கிச் சனியன்களை எதிர்நோக்கிச் செல்வது என்ன, வேடிக்கையா, விளையாட்டா?” என்று பலத்த குரலில் ஒருவன் சொன்னான்.

“நீ அவர்களைப் பார்த்தாயா? அந்தச் சனியன்கள் அவர்களை நேருக்கு நேராக விரட்டியது. எனினும் அவர்கள் அசையாது நின்றார்கள். மலையைப்போல் நின்றார்கள். தம்பிகள்! கொஞ்சம் கூட அசையாமல் அஞ்சாமல் நின்றார்கள்!”

‘பாவெல் விலாசவை எண்ணிப்பார்!”

”அந்த ஹஹோலையும் தான்!’

”அவன் தன் கைகளைப் பின்னால் கோத்துக் கட்டியவாறு அப்போதும் புன்னகை செய்தான். அஞ்சாத பேய்ப் பிறவி அவன்”

”நண்பர்களே!” என்று அவர்கள் மத்தியிலே முண்டியடித்துச் சென்று கொண்டே, தாய் கத்தினாள். ஜனங்கள் அவளுக்கு மரியாதையுடன் வழிவிட்டு ஒதுங்கினார்கள். யாரோ சிரித்தார்கள்.

“பாரடா , அவள் கொடி வைத்திருக்கிறாள்: கொடி அவள் கையில் இருக்கிறது.”

”வாயை மூடு” என்றது ஒரு கரகரத்த குரல். தாய் தனது கரங்களை அகல விரித்தாள்.

“கேளுங்கள் – ஆண்டவனின் பெயரால், கேளுங்கள் ! நல்லவர்களான நீங்கள் எல்லாம், அன்பான நீங்கள் எல்லாம் என்ன நடந்தது என்பதைப் பயமின்றிப் பாருங்கள் நம்முடைய சொந்தப் பிள்ளைகள், நமது ரத்தத்தின் ரத்தமான குழந்தைகள், நியாயத்தின் பேரால் இந்த உலகில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நம் அனைவருக்கும் உரிய நியாயத்துக்காக உங்கள் அனைவரது நலத்துக்காக, உங்களது பிறவாத குழந்தைகளின் நலத்துக்காக, அவர்கள் இந்தச் சிலுவையைத் தாங்கி, ஒளி பொருந்திய எதிர்காலத்தைத் தேடிச் செல்லுகிறார்கள். அவர்கள் வேண்டுவது வேறொரு வாழ்க்கை – சத்தியமும் தர்மமும் நியாயமும் உள்ள வாழ்க்கை ! சகல மக்களுக்காகவும் அவர்கள் நன்மையை நாடுகிறார்கள்!”

அவளது இருதயம் நெஞ்சுக்குள் புடைத்து நின்றது; தொண்டை சூடேறி வறண்டது. அவளது நெஞ்சாழத்துக்குள்ளே பெரிய பெரிய, புதிய புதிய வார்த்தைகள் பிறந்தன. அந்த வார்த்தைகள், பரிபூரண அன்பு நிறைந்த அந்த வார்த்தைகள் அவளது நாக்குக்கு வந்து அவளை மேலும் அதிகமான உணர்ச்சியோடு, மேலும் அதிகமான சுதந்திரத்தோடு பேசுமாறு நிர்ப்பந்தித்தன.

எல்லோரும் தான் கூறுவதை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதை அவளால் காண முடிந்தது. அவளைச் சுற்றிலும் சகல மக்களும் நெருக்கமாகச் சூழ்ந்து, ஆவலும் சிந்தனையும் நிறைந்தவர்களாகக் குழுமி நின்றார்கள். அவளிடம் காணப்பட்ட ஆவலுணர்ச்சியானது அவளது மகனுக்குப் பின்னால், அந்திரேய்க்குப் பின்னால், சிப்பாய்களின் கையில் சிக்கிவிட்ட அத்தனைப் பேர்களுக்குப் பின்னால், நிராதரவாக விடப்பட்ட அந்த வாலிபர்களுக்குப் பின்னால் சகல மக்களும் ஓடிச் செல்ல வேண்டும் என்று தூண்டும் உணர்ச்சிதான் என்பதைத் தாய் கண்டு கொண்டாள்.

முகத்தைக் கழித்துக் கவன சிந்தையராக நிற்கும் அவர்களது முகங்களை ஒரு முறை பார்த்துவிட்டு, அவள் அமைதி நிறைந்த பலத்தோடு மேலும் பேசத் தொடங்கினாள்:

”நமது பிள்ளைகள் இன்பத்தைத் தேடி இந்த உலகுக்குள் புகுந்து விட்டார்கள். நம் அனைவரது நலத்துக்காக, கிறிஸ்து பெருமானின் சத்தியத்துக்காக, நம்முடைய முதுகில் அறைந்து, நமது கைகளைக் கட்டிப்போட்டு, நம்மை இறுக்கித் திணற வைத்த கொடுமையும், பொய்மையும் பேராசையும் கொண்ட பேர்களின் சகல சட்டதிட்டங்களுக்கும் எதிராக, அவர்கள் சென்றுவிட்டார்கள். அன்பான மக்களே! நம் அனைவருக்காகவும் சர்வ தேசங்களுக்காகவும், உலகின் எந்தெந்த மூலையிலோ இருக்கின்ற சகல தொழிலாளர் மக்களுக்காகவும்தான் நமது இளம்பிள்ளைகள், நமது வாலிபர்கள் எழுச்சி பெற்றுச் செல்கிறார்கள். அவர்களைப் புறக்கணிக்காதீர்கள். அவர்களை வெறுக்காதீர்கள். உங்கள் குழந்தைகளைத் தன்னந்தனியாகச் செல்லுமாறு செய்யாதீர்கள்! நீங்கள் உங்கள் மீதே அனுதாபம் கொள்ளுங்கள். உண்மைக்குப் பிறப்பளித்து, அந்த உண்மைக்காகத் தங்கள் உயிர்களையும் இழக்கத் தயாராயிருக்கும் உங்கள் குழந்தைகளின் இதயங்களின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்களை நம்புங்கள்!”

அவளது குரல் உடைபட்டுத் தடைப்பட்டது. அவள் ஆடியசைந்தாள். மயங்கி விழும் நிலையில் தடுமாறினாள். யாரோ அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டார்கள்.

“அவள் பேசுவது ஆண்டவனின் உண்மை; கடவுளின் சத்தியம்!” என்று யாரோ ஒருவன் உணர்ச்சி வேகத்தில் கத்தினான். ”கடவுளின் சத்தியம், ஜனங்களே! அதைக் கேளுங்கள்!”

”அவள் எப்படித் தன்னைத்தானே சித்ரவதை செய்து கொள்கிறாள் என்பதைப் பாருங்கள்” என்று இன்னொருவன் பரிவோடு பேசினான்.

“அவள் தன்னைத்தானே சித்ரவதை செய்யவில்லை” என்று மற்றொருவன் பேச ஆரம்பித்தான். ஆனால் – முட்டாள்களே! அவள் நம்மைத்தான் சித்ரவதைக்கு ஆளாக்குகிறாள். அதை நீங்கள் இன்னுமா அறியவில்லை?”

”உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள்!’ என்று ஒரு பெண் நடுநடுங்கும் உரத்த குரலில் கத்தினாள், “என் மீத்யா – அவன் ஒரு களங்கமற்ற புனித ஆத்மா அவன் என்ன தவறைச் செய்தான்? தான் நேசிக்கும் தோழர்களைத்தானே அவன் பின்பற்றினான். அவள் சொல்வது ரொம்ப சரி, நாம் ஏன் நமது பிள்ளைகளை நிராதரவாய் நிர்க்கதியாய் விட வேண்டும்? அவர்கள் ஏதாவது தவறு செய்தார்களா?”

இந்த வார்த்தைகளைக் கேட்ட தாய் நடுநடுங்கினாள். அமைதியாக அழுதாள்.

”வீட்டுக்குப்போ, பெலகேயா நீலவ்னா!” என்றான் சிஸோவ்; ”வீட்டுக்குப் போ, அம்மா. இன்று நீ மிகவும் களைத்துவிட்டாய்!”

அவனது முகம் வெளுத்து தாடி கலைந்து போயிருந்தது. திடீரென அவன் நிமிர்ந்து நின்று சுற்றுமுற்றும் ஒரு கடுமையான பார்வை பார்த்துவிட்டு அழுத்தமாகப் பேச ஆரம்பித்தான்.

“என் மகன் மத்வேய் எப்படித் தொழிற்சாலையிலே கொல்லப்பட்டான் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவன் மட்டும் உயிரோடிருந்தால். நானே அவனை அவர்களுக்குப் பின்னால் அனுப்பி வைப்பேன். நீயும் போ, மத்வேய்! அது ஒன்றுதான் சரியான சத்திய மார்க்கம், நேர்மையான மார்க்கம்!’ என்று நானே அவனிடம் சொல்வேன்.

அவனும் திடீரெனப் பேச்சை நிறுத்தி அமைதியில் ஆழ்ந்தான்; எல்லோருமே ஏதோ ஒரு புதிய, பெரிய உணர்ச்சியால், அந்த உணர்ச்சியைப் பற்றிய பயத்திலிருந்து விடுபட்ட உணர்ச்சியின் பிடியில் அகப்பட்டு, மோன சமாதியில் ஆழ்ந்து போனார்கள். சிஸோவ் தன் முஷ்டியை ஆட்டிக்கொண்டு மேலும் பேசத் தொடங்கினான்.

“கிழவனான நான் பேசுகிறேன். உங்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். ஐம்பத்தி மூன்று வருஷ காலமாக நான் இந்தப் பூமியில் வாழ்கிறேன். முப்பத்தொன்பது வருஷமாக இந்தத் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன். இன்றோ அவர்கள் என் மருமகனை மீண்டும் கைது செய்தார்கள். அவன் ஒரு நல்ல பையன்; புத்திசாலி. அவனும் பாவெலுக்குப் பக்கமாக, கொடிக்குப் பக்கமாக முன்னேறிச் சென்றான்…”

அவன் கையை உதறினான். பின் குறுகிப் போய் தாயின் கரத்தைப் பற்றிப் பிடித்தவாறு பேசினான்:

“இந்தப் பெண் பிள்ளை சொன்னதுதான் உண்மை. நமது குழந்தைகள் மானத்துடன் வாழ விரும்புகிறார்கள், அறிவோடு வாழ விரும்புகிறார்கள். ஆனால் நாம் தான் அவர்களை நிராதரவாய் நிர்க்கதியாய் விட்டுவிட்டோம்! சரி வீட்டுக்குப் போ, பெலகேயா நீலவ்னா.”

”நல்லவர்களே!” என்று அழுது சிவந்த கண்களால் சுற்றிப் பார்த்துவிட்டு அவள் சொன்னாள்: ”நமது குழந்தைகளுக்கு வாழ்வு உண்டு; இந்த உலகம் அவர்களுக்கே!”

”புறப்படு, பெலகேயா நீலவ்னா, இதோ, உன் கம்பு” என்று கூறிக்கொண்டே, முறிந்து போன அந்தக் கொடிக்கம்மை எடுத்து அவள் கையில் கொடுத்தான் சிஸோவ்.

அவர்கள் அவளை மரியாதையுடனும் துக்கத்துடனும் கவனித்தார்கள்; அனுதாபக் குரல்களில் கசமுசப்பின் மத்தியிலே அவள் அங்கிருந்து அகன்று சென்றாள். சிஸோவ் அவளுக்காக, கூட்டத்தினரை விலகச் செய்து வழியுண்டாக்கினான், ஜனங்கள் ஒன்றுமே பேசாது வழிவிட்டு ஒதுங்கினர். ஏதோ ஒரு இனந்தெரியாத சக்தியினால் அவர்கள் இழுக்கப்பட்டு, அவள் பின்னாலேயே சென்றார்கள்; செல்லும்போது தணிந்த குரலில் ஏதேதோ வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

படிக்க:
சென்னை மாநகராட்சி : தனியார் மயத்தை எதிர்த்து துப்புரவு தொழிலாளிகள் போராட்டம்
முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

அவளது வீட்டு வாசலை அடைந்ததும் அவள் அவர்கள் பக்கமாகத் திரும்பினாள்; தன் கைத்தடியின் மீது சாய்ந்தவாறே தலை வணங்கினாள். நன்றியுணர்வு தொனிக்கும் மெதுவான குரலில் சொன்னாள்:

”உங்கள் அனைவருக்கும் நன்றி!”

அந்தப் புதிய எண்ணம், அவள் இதயம் பெற்றெடுத்ததாகத் தோன்றிய அந்தப் புதிய எண்ணம் மீண்டும் நினைவு வந்தது. எனவே அவள் சொன்னாள்:

”கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாக்குவதற்காக, ஜனங்கள் தங்கள் உயிர்களை இழக்காதிருந்தால், கிறிஸ்துவே இருந்திருக்கமாட்டார்!”

ஜனக்கூட்டம் வாய் பேசாது அவளையே பார்த்தது.

அவள் மீண்டும் ஜனக்கூட்டத்துக்குத் தலை வணங்கிவிட்டு, வீட்டுக்குள் சென்றாள். சிஸோவ் தானும் தலை வணங்கியவாறு அவளைப் பின் தொடர்ந்தான்.

சிறிது நேரம் அந்த ஜனங்கள் அங்கேயே நின்றவாறு ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.

பிறகு அவர்களும் மெதுவாகச் செல்ல ஆரம்பித்தார்கள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

சென்னை மாநகராட்சி : தனியார் மயத்தை எதிர்த்து துப்புரவு தொழிலாளிகள் போராட்டம்

சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் அனைத்தையும் தனியாருக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். இதனைக் கண்டித்து இன்று முதல் (27.11.2018) வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர் துப்புரவுத் தொழிலாளர்கள்.

சென்னை மாநகராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மைத்துறையில் துப்புரவுப் பணியை மண்டலம் 3,6,8,9,10,13 ஆகியவற்றை ராம்கி  என்விரோ இந்துஸ்தான் லிமிடெட் என்ற தனியார் கொள்ளை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் எட்டு மண்டலங்களையும் தனியாருக்கு விடுவதற்கான டெண்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி வெளியிட்டது.  இந்த எட்டு மண்டலங்களுக்கும் சுமார் 8 வருடம் இரண்டு நாட்கள், அதாவது 2922 நாட்களுக்கு  ரூ.1546 கோடி வரை ஒதுக்கீடு செய்துள்ளது. சுருக்கமாக சொன்னால் தனியாருக்கு கொடுக்க வழிவகை செய்திருக்கிறது.

சென்னை மாகராட்சியில் மட்டுமல்ல நாடெங்கிலும் பல மாநகராட்சிகளை ‘குத்தகைக்கு’ எடுத்திருக்கிறது, ராம்கி என்விரோ.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 தொழிற்சங்கங்கள் இணைந்து  ஆகஸ்ட் 26-ம் தேதி ரிப்பன் மாளிகை முற்றுகைப் போராட்டமும்,  செப்டம்பமர் 11-ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டமும் நடத்தினர். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித்துறை செயலருடன் நடந்த பேச்சு வார்த்தையில் தனியாருக்கு கொடுப்பதை கைவிடுவதாக அறிவித்ததால் தொழிலாளர்களும் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர்.

இருந்தாலும் ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? தனியாருக்கு டெண்டர் விடுவதை கொல்லைப்புறமாக அமல்படுத்தும் முயற்சியை எடுத்து வந்துள்ளது மாநகராட்சி.

அதாவது, இந்த எட்டு மண்டலங்களிலும் துப்புரவு பணியை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் ஒரு அமைப்பைத் தேர்ந்தெடுக்க தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலம் கடந்த மாதம் 26-ம் தேதி டெண்டர் கோரியுள்ளது. இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் சீனுவாசலு, “மாநகராட்சியின் இந்த செயல் தொடர்ந்து தொழிலாளர்களை மன உளைச்சலுக்கு  ஆளாக்குகிறது. ஒவ்வொரு முறையும் போராட்டத்தின் போது வாக்குறுதியை கொடுத்து விட்டு அதனை மீறுகிறது. இந்த அலட்சியப் போக்கை கண்டித்தும், தொழிலாளர்கள் விரோத நடவடிக்கையை கைவிடக் கோரியும் கடந்த 12-ம் தேதி  மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு அளித்தோம். அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தொடர்ந்து துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினோம். அவரோ “பார்க்கலாம்” என்ற ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டார்.  பிறகு  ஆணையரையும், முதல்வரையும் சந்திக்க முயற்சித்தோம். தேதி கிடைக்கவில்லை.

வேறுவழியில்லாமல் 16-ம் தேதி நிர்வாகிகள் மட்டும் முதல்வர் வீட்டுக்கு சென்றோம்.  அப்பொழுது முதல்வர் இல்லை. அவருடைய உதவியாளர் மட்டுமே இருந்தார். அவரிடம் கேட்டதற்கு, “முதல்வரை சந்திக்க முடியாது. அவர் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

உண்மையில் எனக்கு இந்த அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இவர்கள் அனைவரும் தனியார்மயத்திற்கு ஆதரவானவர்கள் என்பது தெரியும்.  இருப்பினும் கூட்டமைப்பைச் சார்ந்த தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதால் அவர்களை சந்திக்க ஒத்துக்கொண்டு சென்றோம். ஆனால் அதிகாரிகளின் நடவடிக்கை தொழிலாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையின்மையை தோற்றுவித்திருக்கிறது இதனை தொழிலாளர்கள் நடைமுறையில் உணர்ந்திருக்கிறார்கள். உணர்த்தியிருக்கிறார்கள்.

எவ்வளவுதான் அலைய முடியும்..? எல்லா முயற்சிகளையும் எடுத்துப் பார்த்து விட்டோம். வேறு வழி இல்லாமல் கடந்த 20-ம் தேதி மண்டல ஆர்ப்பாட்டமும், 22-ம் தேதி ரிப்பன் மாளிகையில் உண்ணாவிரதமும் இருந்தோம். ஆனால் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட பாதிப்பேரை போலீசு கைது செய்து விட்டது. கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

படிக்க:
சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !
கஜா புயல் : தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பு

அப்பொழுது சுகாதாரத்துறை துணை ஆணையர் பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசினார். அப்பொழுதும் எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சரி நீங்கள் ஆணையரையாவது பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றோம். அதனடிப்படையில் இரண்டு நாள்  அவகாசம் கேட்டு 24-ம் தேதி சனிக்கிழமை ஆணையரை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

ஆணையரோ, “அரசாங்கம் ஒரு முடிவு எடுத்து விட்டது. அதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. தயவு செய்து தொழிற்சங்கம் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றார். சரி நீங்கள் சொல்வது இருக்கட்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்க மாட்டோம் என்பதற்காவது உத்தரவாதம் தாருங்கள் என்றோம். அதற்கு அவர் ஒன்றும் பேசவில்லை.

ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் தொழிலாளர்கள். (கோப்புப் படம்)

சம்பள உயர்வு, பதவி உயர்வு எதுவும் வேண்டாம். இருக்கும் வேலைக்கு உத்திரவாதம், பணிப்பாதுகாப்பு கோரும் அளவிற்கு நாங்கள் வந்துவிட்டோம். ஆனால் இதற்கும் நிர்வாகம் சம்மதிக்கவில்லை. தனியாரிடம் போனால் ஒப்பந்த தொழிலாளர்கள் ,9000-க்கும் மேற்பட்டோர் வேலையில் நீடிப்பார்கள் என்று சொல்ல முடியாது.  வேறு என்ன செய்ய முடியும்? இதுவரை இந்த அரசு எந்த விதத்திலும் எங்களுக்கு ஆதரவான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதால் நாளை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்த உள்ளோம்.

அரசியல் கட்சிகளின் ஆதரவு எந்த அளவில் இருக்கிறது.. இது குறித்து எந்த கட்சியும் உங்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட விடவில்லையே?

உண்மைதான். அதனால்தான் எங்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த மாதம் 28- ம் தேதி கலந்து ஆலோசித்து அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்பது என்று முடிவெடுத்து அனைவரையும் பார்த்தோம். அவர்களும் ஆதரவு தருவதாகச் சொன்னார்கள். ஆனால் தி.மு.க.வை மட்டும் சந்திக்கவில்லை. அவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பில் இருந்து விலகி விட்டார்கள்.

காரணம் என்னவென்று கேட்டோம். “அடுத்த ஆட்சி தி.மு.க. தான். அதனால் கொஞ்சம்  நெளிவு சுளிவோடு நடந்து கொள்ளுங்கள்” என்று அதிகாரி சொல்வதாக சொல்கிறார்கள். ஆனால் அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வேறு ஏதோ காரணம் இருப்பதாக நினைக்கிறோம். அது என்னவென்று தெரியவில்லை.

அடுத்த ஆட்சி தி.மு.க.தான். நாங்கள் வந்தால் பார்த்துகொள்வோம் என்றீர்களே, ஆனால் 3 மண்டலம் தனியாருக்கு விட்டு விட்டார்களே அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் என்று கேட்டால்., எந்தப் பதிலும் இல்லை.

இவர்கள் கூட்டமைப்பிற்கு வரும்போதே ஆர்வமில்லாமல்தான் வந்தார்கள். இருப்பினும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தோம். இருந்தும் அவர்கள் விலகியது ஏன் என்று தெரியவிலை. அ.தி.மு.க. செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது. கூட்டமைப்பில் இருந்து அ.தி.மு.க. தொழிற்சங்கம் விலகாமல் போராட்டத்தில் இருந்து வருவது ஆச்சர்யமளிக்கிறது.

தொழிலாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

தொழிலாளர்கள் மனம் தளர்ந்து விடக்கூடாது என்று அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறோம். அவர்களும் 80% வரை உறுதியாக இருக்கிறார்கள். நிர்வாகமும் அதனை ஒடுக்க பல வேலைகளை செய்து வருகிறது. விடுப்பு எடுக்கக் கூடாது என்று எச்சரிக்கிறது. பார்க்கலாம்! எப்படி இருந்தாலும் வேலை நிறுத்தம் நடக்கும்.

ஒருவேளை இந்த முறையும் உங்கள் போராட்டம் தோல்வி அடைந்தால் என்ன செய்வீர்கள்?

தோல்வி அடைந்தால் எங்கள் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதைத் தவிர வேறுவழி இல்லை. நிச்சயம் அதனை நோக்கி எங்கள் போராட்டம் நகரும். அதற்கான சூழலும் கனிந்து வருகிறது.

ஆம்..! துப்புரவு பணியாளர்கள் மீதான அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணிப் பாதுகாப்பின்மை, ஒப்பந்த முறை, அற்பகூலிக்கு அவர்களின் உழைப்பை சுரண்டுவது. டெங்கு மற்றும் பேரிடர் காலங்களில் விடுப்பு இல்லாமல் 24 மணி நேரமும் வேலை செய்யச்சொல்லி அவர்களை துன்புறுத்துவது என்று அரசின் அடக்குமுறை ஒருபுறமென்றால், சிவில் சமூகத்தின் புறக்கணிப்பும் அவர்களை உளவியல் ரீதியாக தாக்குகிறது. இவர்களது போராட்டத்திற்கு ஆதரவளிப்பது நமது கடமை!

திருவள்ளூர் : குழந்தைகள் பங்கேற்ற நவம்பர் புரட்சி தின விழா

சியப் புரட்சியின் 101-வது ஆண்டையொட்டிமக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு  – பாகம் 6

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் பட்டாபிராம் பகுதியிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் கடந்த நவம்பர் – 18 அன்று நவம்பர் புரட்சிதின விழா நடைபெற்றது. பு.ஜ.தொ.மு., கிளை – இணைப்புச் சங்க தொழிலாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என  300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட குடும்ப விழாவாக நடைபெற்றது.

விழாவிற்கு தலைமையேற்ற மாவட்ட பொருளாளர் தோழர் மு. சரவணன், ரசியப் புரட்சியின் சாதனைகளை, இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டு விளக்கினார். நிமிர் கலையகம் தோழர் பாரதி தலைமையிலான பறையிசை குழுவின் அரங்கம் அதிர்ந்த பறையிசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

விழாக்குழுவின் சார்பில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாறுவேடத்தில் வீரமங்கை ஜான்சிராணி, பாரதியார், பகத்சிங், பாரதிதாசன், நவீன ஒளவையார் போன்ற வேடங்களில் சிறுவர் – சிறுமியர் வந்து சமூக பிரச்சனைகளுக்கு எதிராக போராட அறைகூவினர். சுடிதார் அணிந்து வந்த நவீன ஔவையார் பெரியார் அறிவுச்சுவடியில் வெளிவந்த மூடநம்பிக்கைக்கு எதிரான விந்தனின் ஆத்திச்சூடியை மழலை மொழியில் எடுத்துரைத்தார். இரண்டாம் வகுப்பு பயிலும் செயலினி ம.க.இ.க -வின் ஜி.எஸ்.டி. பாடலை பாடினார். சிலம்பாட்டம், இயற்கையை அழிக்கும் எட்டுவழிச் சாலை என சமூக அவலங்களை மழலைகளுக்கே உரிய முறையில் அம்பலப்படுத்தினர்.

பு.ஜ.தொ.மு., இணைப்பு சங்கமான டி.ஐ. மெட்டல் பார்மிங் ஆலை தோழர்கள் நடத்திய நேருக்கு நேர் விவாத மேடையில் எச்.ராஜாவை நிருபர் கலங்கடித்தது சிறப்பாக இருந்தது. பு.ஜ.தொ.மு. தோழர்கள் இணைந்து “காவி – கார்ப்பரேட் கும்பலை விரட்டியடிப்போம்” என்ற  நாடகம் நிகழ்த்தினர்.  இதில் காவி கும்பல் தொழிலாளர் பிரச்சனையில் பஞ்சாயத்து செய்வதும், ஊர் பிரச்சனையில் தலையிடுவதை எதிர்த்து தொழிலாளர்களும், ஊர் மக்களும் இணைந்து காவிக் கும்பலை விரட்டியடிப்பதாக எளிமையாக விளக்கும் விதமாக இருந்தது.

மேலும் தூசன் கிளை பொதுச் செயலாளர் தங்களது போராட்ட அனுபவங்களை நேருரையாக விளக்கினார். டி.ஐ மெட்டல் தோழர் செந்தில் – மோடியின் நான்கரை ஆண்டு மோசடிகளை அம்பலப்படுத்தி பேசினார். எம்கீ கிளை தோழர் ராஜா தேர்தல் வாக்குறுதிகள் ஒரு ஏமாற்று என தானே பாடல் எழுதி பாடினார். தோழர் ரத்னா – சபரிமலைக்கு வந்தா தீட்டா? தீட்டா? என்ற பாடலை பாடியும், தோழர் நிலாஃபர் சோசலிச நாயகன் தோழர் லெனின் பெருமைகளை கவிதையாக வாசித்தார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் அவர்கள் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் நாம் ஏன் வீழ்த்த வேண்டும் என்று  சிறப்புரையாற்றினார்.

படிக்க:
கஜா புயல் : மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்
டிகிரி காஃபி டிஸ்கசனும் ஹீரோ அந்தர குருசாமி உருவாக்கமும்

இறுதியாக விழாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர்  தோழர். அ.முகுந்தன் பரிசளித்தார். தோழர் ஆ.கா. சிவா நன்றியுரையுரையோடு நவம்பர் தின விழா நிறைவுற்றது.

நூல் அறிமுகம் : தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

ந்த நூலில் வலங்கை, இடங்கை சாதிகள் பற்றிய பார்வைகள் விளக்கப்பட்டுள்ளது. சோழர்கள் ஆட்சியில் பெரும் நில உடைமை தோன்றிய 11ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டுகள் வரை தமிழகத்தில் வலங்கை இடங்கை சாதிகளின் மோதல் தொடர்ந்தும், பரவலாகவும் நடைபெற்றது. வரலாற்றாசிரியர் கே.கே. பிள்ளை அவர்கள் இம்மோதல்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஆனால் இந்த இடங்கை, வலங்கை சாதிகளின் மோதல்கள் எப்படி உருப்பெற்றன, எப்படி மறைந்தன என்ற வியப்போடுதான் தனது எழுத்தை முடித்துள்ளார். ஆனால், பேரா. நா.வா. அவர்கள் இப்புத்தகத்தில் இம்மோதல்களின் காரணத்தையும், உருவாக்கத்தையும், உற்பத்தி முறைகளின் வளர்ச்சியோடு இணைந்து வெளிப்படுவதை விவரித்துள்ளார்.

சோழர்காலத்திய நில உடமைகளும், அதனைச் சார்ந்த கைவினைஞர்கள் உருவாக்கமும் தோன்றியது. மறுபுறத்தில் பெரு வணிகம் தோன்றியது. இந்த இரு பிரிவினர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. ஆளும் நிலப்பிரபுத்துவ அரசு இம்மோதல்களைப் பயன்படுத்தியது. வளர்த்தெடுத்தது. சோழர்கள் நிலத்தில் சாதி அடிப்படையிலேயே சலுகைகள் கொடுப்பதும், வரிகள் விதிப்பதும் நடைபெற்றது. பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலேயே நடைபெற்றது. மன்னர்கள், நிலப்பிரபுக்கள் தங்களது நலனைப் பாதுகாக்க, இந்தப் பிரிவினையை கெட்டிப்படுத்தினர். “உடன் கூட்டம் ரத்து” என்ற சட்டத்தின் மூலம் இவர்கள் ஒன்று சேர்வதை தடுத்தனர்.

எனவே, வலங்கை, இடங்கை சாதிய மோதல்கள் வெறுமனே சாதிக்கலவரங்கள் அல்ல. வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடுகள். நிலவுடைமை வர்க்கமும் வணிக வர்க்கமும் தங்களுக்கு ஆதரவான மக்களை இணைத்துக்கொண்ட நிகழ்வுகளாகும். இப்புத்தகம் தமிழகம் சாதிய கட்டமைப்பை ஊடுருவிப் பார்க்கவல்ல பேராயுதம். வரலாற்றியல் பொருள் முதல்வாத கண்ணோட்டங்களை உள்ளடக்கியது.

  • நூலின் பதிப்புரையிலிருந்து…

தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

தமிழ் நாட்டின் சமூக வளர்ச்சியில் தொழிற் பிரிவினையால் தொழிலடிப்படைச் சாதிகள் தோன்றின! அவை பரம்பரைத் தொழில் முறையால் சாதிகளாயின. இவற்றைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் முன்னரே வடநாட்டில் தோன்றிய வருணாச்சிரமப் பிரிவுகளுக்குள் அடக்க உயர்ந்த வர்க்கங்கள் முயன்றன. ஆனால் இதுவோர் மேற்பூச்சாக (super imposition) இருந்ததேயன்றிச் சாதிகள் தொழிலடிப்படையிலேயே இருந்தன. ஆனால் தொழில் புரியும் வர்க்கங்களிடையே சமத்துவமில்லை.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

தொழில் செய்யாத சுரண்டல் வர்க்கத்தினர் இவர்களிடையே சாதி உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துத் தங்களை உயர்ந்தோரென்றும் உழைப்பாளிகளைத் தாழ்ந்தவரென்றும் கருதினர். தொழில் செய்வோர் ஒன்றுபடாமல் தடுத்து வைத்திருந்தனர். உயர்ந்த சாதியர்களின் நீதி நூல்களும் இதையே நிலை நாட்டின.

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

சாதிக் கொடுமைகளும் அநீதிகளும் சாதிக் கருவமும் மிகுந்திருந்த காலத்தில் அடக்கப்பட்டிருந்த சாதியினர் அவற்றை எதிர்த்துப் பல்வேறுவிதங்களில் போராடியுள்ளனர். இப்போராட்டங்களில் சாதி உயர்வு தாழ்வுகளை நிலை நாட்டப் பயன்படும் கருத்துக்களையும் தத்துவங்களையும் எதிர்த்துப் பல கருத்துக்களையும் தத்துவங்களையும் உருவாக்கினர்.

இக்கருத்துக்களில் சில பழமையான வேத நூல்களிலிருந்து எடுத்து மாற்றியமைக்கப்பட்டன. சில கருத்துக்கள் வரலாற்றின் மாறுதலுக்கேற்பப் புதுமையாகப் படைக்கப்பட்டன.

இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சாதி சமத்துவத்தை விளக்கும் பல நூல்கள் தோன்றின. சாதி அமைப்பு முறையில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களைப் பற்றி இவை எழுதப்பட்டன.

பிராமணர்கள் சாதி அமைப்பின் உச்சியிலிருந்ததாலும் அவர்கள் எல்லோரினும் மேம்பட்டவர்கள் என்ற கருத்துக் கொண்ட கதைகளும் புராணங்களும் மிகுந்திருந்ததாலும் ‘கீழ்ச் சாதியார்’ பிராமணர்களது சிறப்பைத் தாக்குவதன் மூலமும் அவர்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் என்பதை நிலை நாட்டிக்கொள்ள முயன்றனர்.’ (பக்-5)

தமிழ் மன்னரும் சாதிப் பிரிவினைகளும்

சோழ மன்னர்கள் காலத்தில் இரண்டு வகையான சாதிப் பிரிவினைகளைப் பற்றிக் கல்வெட்டுக்கள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். முதல் ராசராசன் காலத்தில் வலங்கை மேம்படைகளிலார், பெருந்தனத்து வலங்கைப் பெரும்படைகள், அழகிய சோழத் தெரிந்த வலங்கை வேளைக்காரர் படைகள், ராஜராஜன் தெரிந்த வலங்கை வேளைக்காரர் என்ற படைப் பிரிவுகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

ராசராசன் காலத்திற்குப் பிற்பட்ட கல்வெட்டுகளில் இடங்கை தொண்ணுாற்றாறு, இடங்கைத் தொண்ணுாற்று சமயத் தொடகை என்ற பெயர்கள் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர்கள் சிலரது கல்வெட்டுக்களில் மூன்று கை மகாசேனை, மூன்று கை திருவேளைக்காரர் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இம்மூன்று பிரிவினரும் சாதி அடிப்படையில் அமைந்த பிரிவினரா, அன்றி வர்க்க அமைப்பில் எழுந்த பிரிவினரா என்ற வினா எழுகிறது. இவ்வினாவிற்கு விடை கூற இம்மூன்று பிரிவுகளிலும் எந்தெந்தச் சாதியினர் அடங்கியிருந்தனர், அவர்கள் எத்தொழில்களைச் செய்து வந்தனர் என்பதையும் அவர்களிடையே நிலவிய உறவையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

படிக்க:
அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
சமபந்தி அரசியல் – நூல் அறிமுகம் : எச்சிலைக்குள்ளும் இருக்குதடா சாதி

வலங்கைப் பிரிவில் நிலம் உடையாரும் உழவர்களும் வண்ணான், நாவிதன் போன்ற தொழிலாளிகளும் பனை மரமேறும் தொழிலாளிகளும் வன்னியர் போன்ற தொழிலாளிகளும் இடையர் போன்ற கால்நடை பராமரிப்பவரும் அடங்கியிருந்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தெலுங்கும் கன்னடமும் வழங்கும் நாடுகளிலும் இப்பிரிவினர் உள்ளனர். இப்பிரிவிலுள்ள சாதிகளில் சிலவற்றை ஜார்ஜ் கோல்மன் என்னும் நீதிபதி 1809 ஆம் ஆண்டில் தாமளித்த தீர்ப்பொன்றில் குறிப்பிடுகிறார். அவையாவன: குசவன், மேளக்காரன், சாணான், அம்பட்டன், கன்னான், இடையன், வெள்ளாளன், பறையன், குறவன், ஒட்டன், இருளன், வேடன், வேட்டுவன் முதலியன.

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

கல்வெட்டுக்களிலும் செப்புப் பட்டயங்களிலும் காணப்பட்ட சான்றுகளின் அடிப்படையிலேயே, சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் தமது தீர்ப்பால் இம்முடிவுக்கு வந்திருக்கிறார். இந்தச் சான்றுகளனைத்தும் நிலமுடையவர்களையும் நிலத்தில் பயிர் செய்யும் வகுப்பினரையும் அவர்களுக்கு ஊழியம் செய்யும் வகுப்பினரையும் குறிப்பிடுவதைக் காணலாம்.

இடங்கைப் பிரிவில் அடங்கியுள்ள சாதியில் தொண்ணுாற்றாறு என்றும் தொண்ணுாற்றெட்டு என்றும் நிகழ்ச்சிகள் குறிப்பிடுகின்றன. வீரராசேந்திர சோழனது திருவெண்காட்டுக் கல்வெட்டு ஒன்று இடங்கைச் சாதியினரிடமிருந்து, மன்னன் கொண்ட வரியைக் கோயிலுக்கு அளித்ததாகக் கூறுகிறது. அக்கல்வெட்டில் இடங்கைப் பிரிவில் அடங்கியுள்ள சாதிகள் சில வற்றின் பெயர் குறிப்பிடப்படுகின்றன. அவற்றைக் கவனிக்கும் பொழுது, அவை வணிகம் செய்வோரையும் தச்சன், கருமான் போன்ற தொழிலாளரையும் குறிப்பிடுகின்றன. தர்ஸ்டன் என்னும் ஆராய்ச்சியாளர் கீழ்வரும் சாதிகளை இடங்கை சாதிகளென்று குறிப்பிடுகிறார். அவைகளாவன: செட்டி, வாணியன், தேவாங்கன், கொத்தன், தட்டான் , கன்னனான் , கொல்லன் , சக்கிலியன் முதலானவையாகும்.

(பக்.43-44)

நூல்: தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்
ஆசிரியர்: பேரா.நா.வானமாமலை

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
பேச: 044 – 24332424, 24332924
மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ.25.00

இணையத்தில் வாங்க: noolulagam | panuval

இதர மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

5

’கள்ள உறவு’ சரி என உச்சநீதிமன்றம் சொல்லி விட்டதா?

சே.வாஞ்சிநாதன்
ஜோசப் ஷைன் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்து உச்சநீதிமன்றம் செப்-28,2018-ல் வழங்கிய தீர்ப்பு சமூகத்தில் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் இத்தீர்ப்பை மிகத் தவறான முறையில் விவாதப்படுத்தின. கள்ள உறவு குற்றமல்ல என உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது, இனி யாரும், யாருடனும் இருக்கலாம்; இதனால் குடும்ப அமைப்பே சிதைவுறும் என்ற வகையில் ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதில் வருந்தத்தக்க உண்மை என்னவெனில் விமர்சித்த பலரும் தீர்ப்பைப் படிக்கவில்லை; அதன் சாரத்தைப் புரிந்து கொள்ளவில்லை. உண்மையில் சட்டமும், தீர்ப்பும் சொல்வதென்ன?

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497:

திருமணமான ஒரு பெண்ணுடன் அப்பெண்ணின் கணவர் அனுமதியின்றி அப்பெண் திருமணம் ஆனவர் எனத் தெரிந்தும் வேறொரு ஆண் உடலுறவு வைத்துக் கொண்டால் அது குற்றம். குற்றத்தைத் தூண்டியதாக அப்பெண்ணைத் தண்டிக்க முடியாது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 198 :

முறை பிறழ்ந்த உறவுக் குற்றம் குறித்து குற்றச் செயலில் ஈடுபட்ட பெண்ணின் கணவன் மற்றும் குற்றம் நடந்த சமயத்தில் அப்பெண் யார் பாதுகாப்பில் இருந்தாரோ அவர் புகார் தரமுடியும்.

இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 198 ஆகிய இரண்டும் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, பெண்களுக்கு எதிரான பாகுபாடு கொண்டது, பெண்களின் சமத்துவத்தை, கண்ணியத்தை மீறுவதாக உள்ளது என ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு..

இ.த.ச. பிரிவு 497 – குறித்த சமூகத்தின் புரிதல் என்ன?

திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ள கணவன் – மனைவி ஆகிய இருவருக்கும் தடை உள்ளது, ஒருவனுக்கு – ஒருத்தி என்பதை யார் மீறினாலும் குற்றம் என்று இ.த.ச. பிரிவு 497 சொல்கிறது என்பதே பொதுப் புரிதல். ஆனால் சட்டம் அவ்வாறு சொல்லவில்லை.

திருமணமான ஆணின் திருமணத்திற்கு வெளியிலான உறவை பிரிவு 497 தடுக்கிறதா?

இல்லை! திருமணமான ஒரு ஆண் வயது வந்த – திருமணமாகாத ஒரு பெண்ணுடனோ, ஒரு விதவையுடனோ, மணவிலக்குப் பெற்ற ஒரு பெண்ணுடனோ, ஒரு விலைமாதுடனோ, உடலுறவு வைத்துக் கொள்வது இ.த.ச. 497-ன்படி குற்றமல்ல. இன்னொருவர் மனைவியுடன் உறவு வைப்பது மட்டுமே குற்றம். சம்மந்தப்பட்ட பெண்ணின் கணவர் சம்மதித்தால் அதுவும் குற்றமல்ல. எனவே திருமணமான ஆணின் திருமணத்திற்கு வெளியிலான எல்லா முறை பிறழ்ந்த உறவையும் இ.த.ச. 497 தடுக்கவில்லை.

அதேசமயம் மேற்படி பிரிவு 497 – திருமணமான ஒரு பெண் தனது கணவனின் அனுமதியின்றி ஒரு திருமணம் ஆகாத – வயது வந்த இளைஞனுடனோ, மனைவியை இழந்த ஒரு ஆணுடனோ, மணவிலக்கு பெற்ற ஒரு ஆணுடனோ உடலுறவு வைத்துக் கொள்வது குற்றம் என்கிறது. இக்குற்றத்திற்கு முறைகேடான உறவில் ஈடுபட்ட ஆணைத் தண்டிக்க முடியும். எனவே இ.த.ச. 497 ஆணுக்குச் சார்பாக, பாகுபாட்டுடன் உள்ளது என்கிறது உச்சநீதிமன்றம்.

முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்து யார் புகார் அளிக்க முடியும்?

குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 198-ன் படி முறைபிறழ்ந்த உறவு வைத்துக் கொண்ட பெண்ணின் கணவன் புகார் கொடுக்கலாம் அல்லது அப்பெண் வேறு ஒருவரின் பாதுகாப்பில் இருக்கும் போது உறவு வைத்துக் கொண்டால் அப்பெண் அச்சமயத்தில் யார் பாதுகாப்பில் இருந்தாரோ அவர் புகார் கொடுக்கலாம். இதில் மிக முக்கியமாக ஒரு திருமணமான ஆண் முறைபிறழ்ந்த உறவுக் குற்றத்தில் ஈடுபட்டால் அவரின் மனைவி புகார் எதுவும் கொடுக்க முடியாது.

ஒரு எளிய உதாரணத்துடன் இதை விளக்கலாம். ராஜா என்கிற ஆணும் நர்மதா என்கிற பெண்ணும் கணவன் மனைவி. ரஞ்சித் என்கிற ஆணும் சர்மிளா என்கிற பெண்ணும் கணவன் மனைவி என்று வைத்துக் கொள்வோம். இதில் ராஜா என்கிற ஆண், சர்மிளா என்பவர் இன்னொருவர் மனைவி என்று தெரிந்தே உறவு கொண்டால் அது குற்றம். இக்குற்றச் செயலால் தான் பாதிக்கப்பட்டதாக ரஞ்சித் என்கிற ஆண்தான் புகார் தர முடியும். ஆனால், ராஜா என்கிற ஆண் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்தால் அது குற்றமல்ல. மிக முக்கியமாக, இப்பிரச்சனையில் நேரடியாக பாதிக்கப்படும் நர்மதா என்கிற மனைவி தவறு செய்யும் தன் கணவன் ராஜா மீது புகார் தர முடியாது. எனவே பிரிவு 198-ம் ஆணாதிக்கச் சார்பாக உள்ளது என்கிறது உச்சநீதிமன்றம்.

சட்டத்தின் ஒரு சார்பான பார்வைக்குக் காரணமாக உச்சநீதிமன்றம் சொல்வதென்ன?

திருமணமான ஒரு பெண் கணவனின் சொத்து. அச்சொத்தை அக்கணவன் அனுமதியின்றி யார் கவர்ந்தாலும் அது குற்றம். அந்தப் பெண் வேறு ஒருவர் பாதுகாப்பில் இருக்கும் போது அப்பெண் அவர்கள் பாதுகாப்பில் உள்ள ஒரு சொத்து. அப்பொழுது அப்பெண்ணை யாரேனும் கவர்ந்தால் அச்சொத்தை அந்நேரத்தில் பாதுகாத்தவர் புகார் அளிக்கலாம். குறிப்பாகச் சொத்தின் உரிமையாளரும், அல்லது உரிமையாளர் யார் பொறுப்பில் விட்டிருந்தாரோ அவரும் புகார் தர முடியும். இது பெண்களைச் சொத்தாகக் கருதும் ஆணாதிக்க சமூகத்தின் தொடர்ச்சி என்கிறது உச்சநீதிமன்றம்.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 378 அசையும் சொத்தை ஒருவர் திருடுவது குறித்துப் பேசுகிறது. பிரிவு 497- னை இதனோடு பொருத்திப் பார்த்தால், திருட்டு என்பது ஒருவரின் அசையும் பொருளை அவரின் அனுமதியின்றி, உள்நோக்கத்துடன் கவர்வது. அனுமதி இருந்தால் குற்றமல்ல. பிரிவு 497-ன்படி கணவன் அனுமதி கொடுத்தால், அவரின் மனைவியுடன் யாரும் உறவு வைத்துக் கொள்ளலாம். அனுமதி இல்லாவிட்டால் குற்றம். இங்கே மனைவி கணவனின் சொத்தாக மட்டுமே பார்க்கப்படுகிறாள். ஒரு பொருளுக்கு இருக்கும் மதிப்புதான் ஒரு பெண்ணுக்கு தரப்படுகிறது. எனவே கணவனின் சொத்தாக மனைவியைப் பாதுகாப்பதே சட்டப் பிரிவு 497.

பிரிவு 497 இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம் என்ன?

மனிதன் தாய்வழிச் சமூகத்தில் உருவானவன். தாய்வழிச் சமூகத்தில் ஒருவருக்கு தனது தாயைத்தான் தெரியும் தந்தையைத் தெரியாது. தாய் சொன்னால்தான் தந்தை யார் என்று தெரியும். இன்றும்கூட விலங்குகளுக்கு தந்தை யார் என்று தெரியாது. தாயைத்தான் தெரியும். தாய்வழிச் சமூகத்தைத் தொடர்ந்து வந்த சமுதாயத்தில் குழுத்தலைவன் சொத்துடையவனாகிறான். அவன் சொத்துக்களுக்கு வாரிசு தேவைப்படுகிறது. அந்த வாரிசைத் தெரிவு செய்ய வேண்டுமானால் அவன் ஒரு பெண்ணை தனக்கானவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அவனின் வாரிசாக ஆகமுடியும். ஆக, சொத்தை தனது வாரிசுகளுக்கு மட்டும் அளிக்கவே திருமண முறை தோன்றியது. இந்தக் கருத்தாக்கத்தின் தொடர்ச்சியே பிரிவு 497 மற்றும் 198.

முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்த வரலாறு

பண்டைய கால மதங்களும் நாகரீகங்களும் முறை பிறழ்ந்த உறவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதின. ஹமுராபி சட்டத் தொகுப்பு முறைபிறழ்ந்த உறவு மரண தண்டனைக்குரிய குற்றம் என்கிறது. இக்குற்றத்திற்காக சம்மந்தப்பட்டவர்களை நேரடியாகக் கொலை செய்யும் உரிமையை வழங்கின பண்டைய அய்ரோப்பிய சட்டங்கள். இங்கிலாந்தில் 1970 வரை குற்றத்தில் ஈடுபட்ட ஆண்களிடமிருந்து நட்ட ஈடு பெறுவது சட்ட உரிமையாக இருந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை இந்திய தண்டனைச் சட்டம் வரைவுச் சட்டமாக உருவான போது பிரிவு – 497 ஐ நீதிபதி மெக்காலே சேர்க்கவில்லை. ஆனால் இச்சட்டப் பிரிவு இந்தியாவுக்குத் தேவை என சட்ட ஆணையம் வலியுறுத்தியதால் பிரிவு 497 சேர்க்கப்பட்டது.

படிக்க:
#Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !
எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க நாங்க உயிரோட வந்துட்டோம் !

யூசுப் அப்துல் அஜிஸ் எதிர் பம்பாய் மாகாணம் (1954) என்ற வழக்கில் முறைபிறழ்ந்த உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு ஏன் தண்டனை இல்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 15(3) பெண்களுக்கு சிறப்புரிமை வழங்குவதை அங்கீகரிக்கிறது. எனவே இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 சரியானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெண்களின் அந்தரங்க உரிமையும் (right to privacy) கண்ணியமும் (dignity of women) இந்த வழக்கில் விவாதிக்கப்படவில்லை.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 ஒரு சார்பாக உள்ளது. இதை இரு தரப்பாருக்கும் பொருந்தும் வகையில் கணவன் மற்றும் மனைவி இருவரையும் தண்டிக்கும் வகையில் பொதுப்பாலாக (Gender neutral – SPOUSE) மாற்றக் கோரி 1985-ல் தொடுக்கப்பட்ட விஷ்ணு எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் இது நீதிமன்றத்தின் வேலையல்ல; சட்டம் இயற்றும் மன்றங்களின் வேலை என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. வி.ரேவதி – எதிர் – இந்திய அரசு வழக்கிலும் பிரிவு 497 உறுதிப்படுத்தப்பட்டது.

அமெரிக்கா, ரசியா, இங்கிலாந்து, சீனா, அய்ரோப்பிய நாடுகளில் முறை பிறழ்ந்த உறவு (Adultery) குற்றமல்ல. பாகிஸ்தான், சவுதி, இந்தோனேசியா நாடுகளில் குற்றம். தென் கொரியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்த பிரிவுகள் நீதிமன்றங்களால் நீக்கப்பட்டுள்ளன.

அரசியல் சட்ட அடிப்படை உரிமையான சமத்துவ உரிமை (Art.14), பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான உரிமை (Art.15(1)) மற்றும் தனிநபர் அந்தரங்கம் (Right to Privacy) – கண்ணிய உரிமையை (Right to Dignity) (Art.21) மீறுகிறதா? – இ.த.ச. பிரிவு 497 மற்றும் கு.வி.ந. சட்டப் பிரிவு 198?

முன்னொரு காலத்தில் குற்றம் என ஏற்றுக் கொள்ளப்பட்ட விசயங்கள், அடுத்து வரும் காலங்களில் முற்றிலும் பொருத்தமற்றவைகளாக உள்ளன. எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது என எந்த விசயமும் இல்லை. எல்லாமே மாறக்கூடியது. திருமண வாழ்க்கையும் இதற்குள் உள்ளடங்கியதே. மணவாழ்வில், ஆணும், பெண்ணும் சம பங்காளர்கள். மண வாழ்க்கை நீடிப்பதன் அடிப்படை சமத்துவமாக இருக்க வேண்டும். ஆண், பெண்ணை அடிமைப்படுத்தியல்ல.

ஆனால் பிரிவு 497, திருமணமான பெண்ணை, பொம்மையாக, சொத்தாக, ஆணுக்குக் கீழானவளாக – கட்டுப்பட்டவளாக, ஆணின் விருப்பத்திற்கேற்ப செயல்பட வேண்டியவளாகக் கருதுகிறது. பிரிவு 497 – மனைவியின் கற்புரிமையை அல்ல – கணவனின் சொத்துரிமையைப் பாதுகாக்கவே உள்ளது. இது பெண்களின் கண்ணியத்தை மீறும் செயல்.

இந்தியாவைப் பொருத்த வரை தனிநபர் அந்தரங்கம் (Right to Privacy) அடிப்படை உரிமையா என்கிற கேள்வி ஆதார் வழக்கிற்கு முன்பு எழுப்பப்படவில்லை. அதன் பின் புட்டசாமி வழக்கில் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 ன்படி தனிநபர் அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என்பதை 9 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது.

திருமணம், பாலுறவு விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது. ஒரு பெண்ணுக்கு தன் உடல் மீது முழு உரிமை உண்டு. நீங்கள், மிகுந்த அழகானவர், எல்லா வகையிலும் உயர்ந்தவர் எனச் சமூகம் கருதும் ஒருவரை ஒரு பெண் நிராகரிக்கலாம். தனி நபர் சுதந்திர உரிமை, திருமணத்தைப் புனிதமாகக் கருதும் குடும்பம் என்ற நிறுவன அமைப்பின் உரிமையை விட மேலானது. ஒரு பெண், ஆண் யாருடன் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது அவர்களது அந்தரங்க உரிமை. திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொண்டால் அது சமூகத் தவறு மட்டுமே (Civil wrong). இதற்கு விவாகரத்து பெறலாம். ஆனால் இதை ஒரு கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது. எல்லாத் தனிநபர்களையும் சமூகத்தின் பாலுறவு குறித்த கோட்பாட்டிற்கு இணக்கமாக இருக்கக் கோர முடியாது.

தனக்கான பாலியல் இணை யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்தத் தனிநபருக்குத்தான் உண்டு. முறைகேடான உறவு பிரச்சனையில் ஒரு கணவன் தனது மனைவியை தனக்கான சொத்தாகக் கருதி அவளுடன் வேறு ஒரு நபர் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பாகப் புகார் கொடுக்கும்போது அதைத் தொடர்ந்து வழக்கு – விசாரணை வரும். இந்நடவடிக்கைகள் ஒரு தனிநபரின் அந்தரங்கத்தில் அரசு, நீதிமன்றம் தலையிடுவதே. இதைத் தனிநபர் வழக்காகத்தான் தொடுக்க முடியும் என்றாலும், வேறு சில பிரிவுகள் சேர்க்கப்பட்டால் காவல்துறை தலையிடலாம். இவ்வாறான காவல்துறை – நீதிமன்றத்தின் தலையிடல் இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணானது. இது இந்திய அரசியல் சட்ட சரத்து 21-ன் கீழான கண்ணியமாக வாழும் ஒரு குடிமகன்/குடிமகளின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது.

அரசியல் சட்டம் சமூக மாற்றத்திற்கான சட்ட வழியைச் சொல்கிறது. சமூகத்தின் ஜனநாயக நெறிமுறைகளை உயர்த்துகிறது. சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே அரசியல் சட்டத்தின் நோக்கம். அச்சமூகமும், தனிமனித கண்ணியத்தை உறுதி செய்ய வேண்டும். எனவே இனியும் ஆணாதிக்க முறைகள் பெண்கள் உரிமையைத் தடை செய்ய முடியாது. பெண்கள் பலவீனமானவர்கள் அவர்களுக்கு சலுகை வழங்குகிறோம் எனச் சொல்லி உரிமையை மறுக்கக் கூடாது. ஆணும், பெண்ணும் சமம் எனக் கருதி நடந்தால்தான் அரசியல் சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

எனவே, அனைவருக்கும் சம உரிமை வழங்கும் பிரிவு 14, பாலினம் – மதம் – இனம் என்கிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் பிரிவு 15 (1) மற்றும் ஒவ்வொரு தனி நபரும் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டும் பிரிவு 21 ஆகிய இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 மற்றும் கு.வி.ந.ச. பிரிவு 498 – இருப்பதால் இரு பிரிவுகளையும் ரத்து செய்கிறோம் என்கிறது உச்சநீதிமன்றம்.

கேள்விகள்

பிரிவு 497 ஐ நீக்குவதால் சமூக ஒழுக்கமும் திருமண ஒழுக்கமும் சீர் குலையாதா? இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதுதானே சரி? அதற்கேற்ப சட்ட திருத்தம் செய்வதுதானே முறையானதாக இருக்க முடியும்? என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது.

இருவரையும் தண்டிக்கலாம் என்றால் அதைப் பாராளுமன்றம்தான் செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் வேலை ஒரு சட்டப் பிரிவு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? எனப் பார்ப்பது மட்டுமே.

முறைபிறழ்வு உறவைக் குற்றமாக்குவதால் திருமண வாழ்வைக் காப்பாற்ற முடியாது. முறைபிறழ்வுப் பிரச்சனை வந்து புகார் கொடுத்தாலே நிச்சயம் குடும்பம் சிதைவுறும். முறைபிறழ்வு உறவு குற்றமாக கருதப்படாத அமெரிக்கா, ரசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சமூக ஒழுக்கம் சீர்குலைந்து விட்டது என்பதற்குப் புள்ளி விவரங்கள் இல்லை. ஒழுக்கத்திற்கு மாறாக இருப்பதால் மட்டுமே ஒரு விசயத்தில் அரசு தலையிட முடியாது. குற்றவியல் சட்டத்தைப் பொருத்தவரையில் அறநெறிக்கு / ஒழுக்கத்திற்கு (morality) இடமேதுமில்லை.

சமூகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் குற்றமாகக் கருத முடியாது. ஒரு விபத்து நடக்கும் போது விபத்துக்குள்ளானவரைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்ப்பது ஒரு தவறாகத்தான் கருதப்படுமேயொழிய அதை ஒரு குற்றமாகக் கருத முடியாது. ஒரு அடிதடி, கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட நிகழ்வுகளிலும் பார்ப்பவர்கள் தடுக்கவில்லை என்றால் இதுதான் சட்டத்தின் நிலை. குற்றங்களைத் தடுக்கவில்லை என்பது ஒரு சமூகத் தவறு தானேயொழிய அதைக் கிரிமினல் குற்றம் என வரையறுக்க முடியாது.

எனவே முறைபிறழ்ந்த உறவு என்கிற பிரச்சனை வரும் வரும் போது அத்தவறு மணவிலக்கு கோருவதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது சரியல்ல என்கிறது உச்சநீதிமன்றம்.

பெண்களை அடிமைகளாக, வேட்டையாடி நுகரப்பட வேண்டிய கவர்ச்சிப் பொருளாகக் கருதும் இன்றைய சமூகச் சூழலில் வெளிவந்திருக்கும் இத்தீர்ப்பு பெண் சமூகத்திற்கு முழுமையான விடிவைத் தராது என்ற போதிலும், மனைவி கணவனின் சொத்து அல்ல என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இத்தீர்ப்பு அவசியம் வரவேற்கப்பட வேண்டிய, எல்லோரும் படித்து விவாதிக்க வேண்டிய ஒன்று.

(குறிப்பு:இக்கட்டுரைதீர்ப்பு குறித்த எனது சொந்தப் புரிதல் மட்டுமே.தவறு இருந்தால் நண்பர்கள் சுட்டிக் காட்டவும்.)

சே.வாஞ்சிநாதன்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகர். தூத்துக்குடி வைகுண்டராஜன் தாதுமணல் கொள்ளை, மதுரை பி.ஆர்.பி. கிரானைட் கொள்ளை ஆகியவற்றை அம்பலப்படுத்துவதில் பங்கு வகித்தவர்.

வருகிறேன் அம்மா ! போய் வருகிறேன் அன்பே !!

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 28

மாக்சிம் கார்க்கி
தெருக்கோடிக்கு அப்பாலுள்ள மைதானத்துக்குச் செல்ல முடியாதபடி, உணர்ச்சி பேதமே இல்லாத முகங்களே இல்லையென்று சொல்லத் தகுந்த ஒரு சாம்பல் நிற மனிதச் சுவர் வழியை அடைத்து மறித்துக் கொண்டு நின்றது. அந்த மனிதர்கள் ஒவ்வொருவரது தோளிலும் பளபளவென்று மின்னும் துப்பாக்கிச் சனியன்கள் தெரிந்தன. அசைவற்ற மோன சமாதியில் ஆழ்ந்து நின்ற அந்த மனிதச் சுவரிலிருந்து ஒரு குளிர்ச்சி கனகனத்தது. தாயின் இதயமும் குளிர்ந்து விறைத்தது.

அவள் அந்தக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு. கொடியின் பக்கமாக, அதன் அருகே நிற்கும் தனக்குத் தெரிந்த ஆட்களின் பக்கமாகச் சேர்ந்து நிற்பதற்காக, விறுவிறுவென்று முன்னேறினாள். அங்கு நிற்கும் தனக்கு தெரிந்த நபர்கள் தமக்குத் தெரியாத பிற நபர்களோடு கலந்து அவர்களிடம் ஏதோ உதவியை நாடித் தவிப்பது போல் நின்றார்கள். திடீரென்று அவள் ஒரு நெட்டையான மழுங்கச் சவரம் செய்த ஒற்றைக் கண் மனிதன் மீது பலமாக மோதிக் கொண்டாள். அவளைப் பார்ப்பதற்காக விருட்டென்று தலையைத் திருப்பி அவளைக் கேட்டான்:

”யார் நீ?”

”நான் பாவெல் விலாசவின் தாய் என்று சொன்னாள். இப்படிச் சொல்கையில் தனது கால்கள் குழவாடி நடுநடுங்குவதையும் வாயின் கீழுதடு நடுங்குவதையும் அவள் உணர்ந்தாள்.

“ஆஹா!” என்றான். அந்த ஒற்றைக் கண்ணன்.

“தோழர்களே! நமது வாழ்க்கை முழுவதிலுமே நாம் முன்னேறிக் கொண்டேதான் இருக்க வேண்டும் முன்னேறிச் செல்வதைத் தவிர நமக்கு வேறு வழியே கிடையாது” என்றான் பாவெல்.

அங்கு நிலவிய சூழ்நிலை அமைதியும் ஆர்வமும் நிறைந்ததாக இருந்தது. கொடி மேலே உயர்ந்து ஒரு கணம் அசைந்தது. பிறகு மக்கள் கூட்டத்தின் தலைகளுக்கு மேலாக, எதிராகத் தோன்றிய மனிதச் சுவரை நோக்கி நிதானமாக முன்னேறிச் செல்லச் செல்ல, காற்றில் மிதந்து வீசிப் பறந்தது. தாய் நடுநடுங்கிப் போய் மூச்சு முட்டித் திணறிக் கண்களை மூடிக்கொண்டாள். நாலு பேர், கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனியே முன்னே சென்றார்கள். அவர்கள் பாவெல், அந்திரேய், சமோய்லவ், மாசின் ஆகியோர் முன்னே சென்றார்கள்.

பியோதர் மாசினின் கணீரென்ற குரல் காற்றில் ஒலித்தது:

இணையும் ஈடும் இல்லாத
இந்தப் போரில் நீங்களெல்லாம்….

ஆழ்ந்த பெரு மூச்சைப்போல் தணிந்த குரல்களில் அடுத்த அடி ஒலித்தது.

பணயம் வைத்தே உம்முயிரைப்
பலியாய்க் கொடுத்தீர் தியாகிகளே!

அவர்கள் நால்வரும் பாட்டுக்குத் தகுந்தவாறு நடை போட்டு முன்னேறினர்.

பியோதர் மாசினுடைய குரல் பளபளப்பான பட்டு நாடாவைப் போல் சுருண்டு நெளிந்து ஒலித்தது. அந்தப் பாட்டில் தீர்மானமும் வைராக்கியமும் தொனித்தது:

வெற்றி பெறுமோர் லட்சியமாம்
விடுதலைக்காக நீங்களெல்லாம்…..

அவனது தோழர்கள் அவனோடு சேர்ந்து அடுத்த அடிகளைப் பாடினார்கள்:

உற்ற செல்வம் அனைத்தோடும்!
உயிரும் கொடுத்தீர்! கொடுத்தீரே!

“ஆஹா — ஹா!” என்று யாரோ ஒருவன் கரகரத்தான். “ஒப்பாரி பாடுகிறார்களடா!” நாய்க்குப் பிறந்த பயல்கள்!”

“கொடு ஒரு அறை!’ என்று ஒரு கோபக் குரல் கத்தியது.

தாய் தன் கைகளால் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தாள். சிறிது நேரத்துக்கு முன்பு அந்தத் தெரு முழுதும் நிரம்பித் ததும்பிய ஜனங்கள், இப்போது அந்த நால்வர் மட்டுமே கொடியைத் தூக்கிக் கொண்டு முன்னே செல்வதைக் கண்டதும் உள்ளம் கலங்கித் தடுமாறிப்போய் நின்றாள். சிலர் அந்த நால்வரையும் பின்பற்றிச் செல்லத் தொடங்கினார்கள். எனினும், அவர்கள் ஒவ்வொரு அடி முன்னேறும் போதும், ஒவ்வொருவனும் அந்தத் தெரு தனது உள்ளங்காலைக் சுட்டுப் பொசுக்குவது போல் உணர்ந்து பயந்து துள்ளி. பின்வாங்கி நின்றுவிட்டான்

முடிவில் ஒரு நாள் கொடுங்கோன்மை
மூட்டோடற்றுப் போகுமடா!

பியோதர் மாசின் உபதேசம் செய்வது போல் பாடினான். அவனது குரலுக்குப் பல உரத்த குரல்கள் தீர்மானமாகவும், கடுமையாகவும் பதிலளித்தன.

அடிமை மக்கள் விழித்தெழுவர்
அந்நாள், அந்நாள். அந்நாளே!

என்றாலும் அந்தப் பாட்டுக்கு மத்தியில் கசமுசப்புக் குரல்களும் கேட்டன:

”அவர்கள் இதோ உத்தரவு கொடுக்கப் போகிறார்கள்”

அதே சமயம் முன் புறத்திலிருந்து ஒரு கூரிய குரல் திடீரென்று ஒலித்தது.

“துப்பாக்கிகளை நீட்டுங்கள்!”

உடனே துப்பாக்கிச் சனியன்கள் முன்னோக்கித் தாழ்ந்து நின்றன; நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் அந்தக் கொடியை ஒரு வஞ்சகப் புன்னகையோடு வரவேற்றன.

”முன்னேறு!”

”இதோ வந்துவிட்டார்கள்!” என்று அந்த ஒற்றைக் கண் மனிதன் கூறிக்கொண்டே, தனது கைகளைப் பைக்குள் விட்டுக்கொண்டு ஒரு பக்கமாக நழுவிப் போக ஆரம்பித்தான்.

படிக்க:
எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க நாங்க உயிரோட வந்துட்டோம் !
நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் ? புரட்சிகர பாடல்கள்

தாய் கண்ணிமையே தட்டாமல் வெறித்துப் பார்த்தாள். அந்தத் தெருவின் அகலம் முழுவதையும் அடைத்துக் குறுக்காகத் தோன்றிய அந்தச் சிப்பாய்களின் சாம்பல் நிற முன்னணி ஒன்று போல் நிதானமாக, நிற்காமல் முன்னேறி வந்தது. அந்த அணிக்கு முன்னால் துப்பாக்கிச் சனியன்கள் வெள்ளிச் சீப்பின் பற்களைப்போல் மின்னிக் கொண்டு வந்தன. விடுவிடு என்று நடந்து, அவள் தன் மகனுக்கு அருகிலே போய்ச் சேர்ந்தாள். அந்திரேய் பாவெலுக்கு முன்னால் போய் நின்று தனது நெடிய உருவத்தால் பாவெலைப் பாதுகாத்து மறைத்து நிற்பதைக் கண்டாள்.

“உன் இடத்துக்குப் போ, தோழா!” என்று பாவெல் உரக்கக் கத்தினான். அந்திரேய் தனது கைகளைப் பின்னால் நீட்டியவாறு தலையைப் பின்னால் சாய்த்துக் கொண்டிருந்தான். பாவெல் அவனது தோளைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே மீண்டும் கத்தினான்.

“பின்னாலே போ! இப்படி செய்வதற்கு உனக்கு உரிமை கிடையாது கொடிதான் முதலில் போகவேண்டும்!”

“கலைந்து விடுங்கள்” என்று தனது வாளைச் சுழற்றியவாறே அந்தக் குட்டி அதிகாரி மெல்லிய குரலில் உத்தரவிட்டான். அவன் தனது கால்களை உயர்த்தி, முழங்கால்களைச் சிறிதும் வளைக்காமல், பூட்ஸ் காலால் தரையை ஓங்கி மிதித்து நடந்து வந்தான். தாய் அந்தப் பூட்ஸ்களின் பளபளப்பைக் கண்டாள்.

அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள், பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள். ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்தது போல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.

கட்டையாக வெட்டிவிடப்பட்ட கிராப்புத் தலையும் அடர்த்தியான நரைத்த நிற மீசையும் கொண்ட ஒரு நெட்டை மனிதன் அவனுக்கு புறத்தே பின்னால் நெருங்கி நடந்து வந்தான். அவன் ஒரு நீண்ட சாம்பல் நிறக்கோட்டு அணிந்திருந்தான்; கோட்டின் விளிம்புகளில் சிவப்பு வரிக்கோடுகள் காணப்பட்டன. அவனது கால் சராயின் மஞ்சள் கோடுகள் கீழ்நோக்கி ஓடின. ஹஹோலைப் போலவே அவனும் தன் கைகளைப் பின்னால் கோத்தவாறே நடந்து வந்தான். அடர்ந்த புருவங்கள் உயர்ந்து நிற்க, அவனது கண்கள் பாவெலின் மீது பதிந்து நிலைகுத்தி நின்றன.

தாயால் தான் பார்த்தவற்றை உணர்ந்தறிய முடியவில்லை. அவளது இதயத்துக்குள் ஒரு பயங்கர ஓலம் நிறைந்து விம்மி எந்த நிமிஷத்திலும் வெடித்து வெளிப் பாய்வது போல் முட்டி மோதும் அந்த ஓல உணர்ச்சியால் அவள் திக்குமுக்காடினாள். தன் மார்பை அழுத்திப் பிடித்து அதை உள்ளடக்கினாள். ஜனங்கள் அவளைத் தள்ளினார்கள். எனவே, அவள் தள்ளாடியபடி முன்னே நடந்தாள். ஞாபகமின்றி, அநேகமாக நினைவிழந்து நடந்தாள் அவள். தனக்குப் பின்னால் நின்ற கூட்டம் தம்மை எதிர்நோக்கி வரும் பேரலையால் கொஞ்சம் கொஞ்சமாக அடித்துச் செல்வது போல் அவள் உணர்ந்தாள்.

கொடியைத் தாங்கி நின்றவர்களும் இன்னும் நெருங்கிப் போனார்கள். அந்தச் சாம்பல் நிறச் சிப்பாய்கள் இறுக்கமான சங்கிலிக் கோர்வையாய் இன்னும் நெருங்கி வந்தனர். பற்பலவித வண்ணங்கள் பெற்ற கண்களோடு ஒழுங்கற்றுத் தெரியும் மஞ்சள் நிற வரிக்கோடுகளோடு, விகாரமாக குலைந்து போன அந்தச் சிப்பாய் முகம் தெரு முழுதும் அடைத்தவாறு முன்னேறி வருவதைப் பார்த்தாள். அதற்கு முன்னால், ஊர்வலம் வருபவர்களின் மார்புகளுக்கு நேராக ஏந்திப் பிடித்த துப்பாக்கிச் சனியன்களின் கொடிய முனைகள் பளபளத்தன; அந்தக் கூட்டத்தினரின் மார்புகளைத் தொடாமலேயே அந்தக் கூட்டத்தை ஒவ்வொருவராகப் பிரித்துக் கலைத்துவிட்டன.

தனக்குப் பின்னால் ஜனங்கள் ஓடுவதையும், கூக்குரலிடுவதையும் அவள் கேட்டாள்:

“கலையுங்களடா!”

“விலாசவ், ஓடிப்போ!”

“பின்னாலே வா, பாவெல்!”

“கொடியை இறக்கு. பாவெல்!” என்று நிகலாய் வெஸோவ்ஷிகோவ் மெதுவாகச் சொன்னான். “என்னிடம் கொடு. நான் அதை மறைத்து வைக்கிறேன்.”

அவன் கொடியின் காம்பைப் பற்றிப் பிடித்து இழுத்தான். கொடி பின்புறமாகச் சாய்ந்து ஆடியது.

“விடு அதை!” என்று கத்தினான் பாவெல்.

நிகலாய் சூடு பட்டது போலத் தன் கையை வெடுக்கென்று பிடுங்கினான். அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள், பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள். ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்தது போல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.

கொடியைச் சுற்றி நின்றவர்கள் சுமார் இருபது பேருக்கு அதிகமில்லை. எனினும் அவர்கள் அனைவரும் அசையாது உறுதியோடு நின்றார்கள். தாய் பயத்தோடும் அவர்களிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்று இனந்தெரியாத விருப்போடும் அவர்கள் பக்கமாக நெருங்கிச் சென்றாள்.

”லெப்டினெண்ட் அந்தப் பயலிடமிருந்து அதைப் பிடுங்கு என்று கொடியைச் சுட்டிக்காட்டியவாறு சொன்னான் அந்தக் கிழட்டு நெட்டை மனிதன்.

அந்தக் குட்டி அதிகாரி உடனே பாவெலிடம் ஓடிப்போய், கொடியைப் பற்றிப் பிடுங்கினான்.

”கொடு இதை!” என்று அவன் கீச்சிட்டுக் கத்தினான்.”

”எடு கையை!” என்று உரத்த குரலில் சொன்னான் பாவெல்.

கொடி வானில் பிரகாசத்தோடு நடுங்கியது. முன்னும் பின்னும் ஆடியது, பிறகு மீண்டும் நேராக நின்றது. அந்தக் குட்டி அதிகாரி தள்ளிப்போய் பின்னால் வந்து விழுந்தான். நிகலாய் தன் முஷ்டியை ஆட்டியவாறு தாயைக் கடந்து விரைந்து சென்றான்.

”இவர்களைக் கைது செய்” என்று தனது காலைப் பூமியில் ஓங்கியறைந்து கொண்டு சத்தமிட்டான், அந்தக் கிழட்டு நெட்டை மனிதன்.

தாய் தன் நெஞ்சுக்குள் புழுங்கித் தவித்த பயங்கர ஓலத்தை அடிபட்ட மிருகம் போல் அலறிக்கொண்டு வெளியிட்டாள். அந்தச் சிப்பாய்களுக்கு மத்தியிலிருந்து பாவெலின் தெளிவான குரல் ஒலித்தது: ”வருகிறேன், அம்மா! போய் வருகிறேன். அன்பே..”

பல சிப்பாய்கள் முன்னே ஓடினார்கள். அவர்களில் ஒருவன் துப்பாக்கியை மாற்றிப் பிடித்துச் சுழற்றி வீசினான் – கொடி நடுங்கியது. முன்னால் சாய்ந்து விழுந்தது. சிப்பாய்களின் கூட்டத்தில் மறைந்து போய்விட்டது.

“ஹா!” என்று யாரோ ஒருவன் அசந்து போய்க் கத்தினான்.

தாய் தன் நெஞ்சுக்குள் புழுங்கித் தவித்த பயங்கர ஓலத்தை அடிபட்ட மிருகம் போல் அலறிக்கொண்டு வெளியிட்டாள். அந்தச் சிப்பாய்களுக்கு மத்தியிலிருந்து பாவெலின் தெளிவான குரல் ஒலித்தது:

”வருகிறேன், அம்மா! போய் வருகிறேன். அன்பே..”

தாயின் மனத்தில் இரண்டு எண்ணங்கள் பளிச்சிட்டன், அவன் உயிரோடிருக்கிறான் அவன் என்னை நினைவு கூர்ந்தான்.

”போய் வருகிறேன். அம்மா’!”

அவர்களைப் பார்ப்பதற்காகத் தாய் குதியங்காலை உயர்த்தி எட்டிப் பார்க்க முயன்றாள். சிப்பாய்களின் தலைக் கூட்டத்துக்கு அப்பால், அந்திரேயின் முகத்தை அவள் பார்த்தாள். அவன் புன்னகை செய்து கொண்டே அவளுக்குத் தலை வணங்கினான்.

“ஆ!” என் கண்மணிகளே… அந்திரியூஷா! பாஷா!” என்று அவள் கத்தினாள்.

“போய் வருகிறோம். தோழர்களே!” என்று அவர்கள் சிப்பாய்களின் மத்தியிலிருந்து சொன்னார்கள்.

பல குரல்கள் அவர்களுக்கு எதிரொலியளித்தன. அந்த எதிரொலி ஜன்னல்களிலிருந்தும், எங்கோ மேலேயிருந்தும், கூரைகளிலிருந்தும் வந்து ஒலித்தன.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

தஞ்சை : புயல் வேகத்தில் சேதங்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழு !

ஜா புயல் பாதிப்பால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. சமீப ஆண்டுகளில் நடந்திராத இந்த பாதிப்பால் இலட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. அரசின் கணக்குப்படியே 63 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள், குடிசைகள் அழிந்து போயின.

தமிழக அரசு அறிவித்த ரூ.1000 கோடி தொகை டெல்டா மாவட்டங்களை அடைந்ததா, அடையவில்லையா என்பதை அங்கு நடக்கும் அன்றாட சாலை மறியல் போராட்டங்களில் இருந்தே அறியலாம். ஒரு வாரம் கடந்தும் குடிநீரோ,உணவோ, அடிப்படை வசதிகளோ அம்மக்களை எட்டவில்லை.

தேசியப் பேரிடர் மோடியிடம் நிவாரணம் கேட்கும் தமிழகப் பேரிடர் எடப்பாடி

புயல் வீசி மூன்று நாட்களுக்குப் பிறகே முதலமைச்சர் எடப்பாடி குழுவினர் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டு அதையும் பாதியில் முடித்துக் கொண்டு திரும்பினர். பிறகு தில்லி சென்ற முதல்வர் சேத அறிக்கையை பிரதமர் மோடியிடம் கொடுத்துவிட்டு, ரூ.15,000 கோடி கேட்டுள்ளார். முதற்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென கோரினார்.

சேதங்களை பார்வையிட பாஜக அரசு ’மனமிரங்கி’ அனுப்பிய மத்தியக் குழுவினர் கடந்த வெள்ளியன்று (23.11.2018) சென்னை வந்து முதலில் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தினர். மத்தியக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார்?

மத்திய உள்துறை இணை செயலாளர் (நீதித்துறை) டேனியல் ரிச்சர்டு, மத்திய நிதித்துறை ஆலோசகர் (செலவினங்கள்) கவுல், மத்திய வேளாண்மைத் துறையின் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் இயக்குனர் ஸ்ரீவஸ்தவா, மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித் துறையின் முதன்மை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர்வள ஆதாரத் துறை இயக்குனர் ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இளவரசன் ஆகியோர் மோடி அரசு அனுப்பிய குழுவில் இடம்பெற்றார்கள். பெயர்களை வைத்துப் பார்க்கும் போது ஒருவர் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். மற்றவர்களுக்கு தமிழகத்தைப் பற்றியோ, டெல்டா மாவட்டங்களைப் பற்றியோ என்ன தெரியும்?

முதல் நாளில் புதுக்கோட்டை மாவட்டம், இரண்டாம் நாள் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களை சென்று பார்த்தனர். கஜா புயல் எப்படி அதிவேகத்தில் கரையைக் கடந்ததோ அதே வேகத்தில் மத்தியக் குழுவினரும் ஒரு மாவட்டத்தில் ஓரிரண்டு இடங்களை மட்டுமே பார்த்தனர்.

புயலை விட வேகமாகப் பார்வையிடும் மத்தியக் குழு

மத்திய குழுவினர் தஞ்சை மாவட்டம் புலவன்காடு பகுதியில் பார்வையிட்ட போது சரோஜா என்ற பெண் மத்திய குழுவினரின் காலில் விழுந்து, தங்களுக்கு சொந்தமான அனைத்து தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் மீண்டு வர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி கதறி அழுததாக தந்தி முதலான ஊடகங்கள் செய்தி போடுகின்றன.

ஆனால் பல இடங்களில் மக்கள் மத்தியக் குழுவினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. சாலை ஓரங்களில் சென்ற குழுவினர், கிராமங்களுக்குள் ஏன் வரவில்லை என மக்கள் ஆங்காங்கே தமது எதிர்ப்புகளை தெரிவித்திருக்கின்றனர். காரில் சென்றபடியே பார்ப்பதால் சேதம் குறித்து என்ன தெரியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கற்பகநாதர் குளம் கிராமத்தின் நிவாரண முகாமில் இருந்த மக்கள் மத்தியக் குழுவினர் தங்களைச் சந்திக்காமல் சென்றதை எதிர்த்து சாலை மறியல் செய்தனர். இன்று திங்கட்கிழமை (26.11.2018) இக்குழுவினர் நாகை மாவட்டம் செல்கின்றனர்.

மத்தியக் குழுவைச் சேர்ந்த டேனியல் ரிச்சர்ட் கூறும்போது, புயல் காரணமாக தஞ்சாவூரில் தென்னை மரங்கள் அதிக சேதமடைந்துள்ளன, மத்திய அரசிடம் அறிக்கை அளித்த பிறகு அரசு நிதி வழங்கும் என தெரிவித்திருக்கிறார்.

குழுவினரோடு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இத்தனை பேர் இருந்தும் இவர்கள் எப்படி சேத விவரங்களை கணக்கீடு செய்கிறார்கள்? திருவாரூர் மாவட்டம் கூப்பாச்சிக்கோட்டையில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் சாய்ந்திருப்பதாக புதிய தலைமுறை செய்தி ஒன்று கூறுகிறது. ஒரு ஊரிலேயே இவ்வளவு பெரிய எண்ணிக்கை என்றால் எத்தனை ஊர்கள், கிராமங்கள், எத்தனை இலட்சம் தென்னை மரங்கள்? தென்னை மரங்களோடு தொடர்புடைய பல்வேறு தொழில்கள், முகவர்கள், வணிகர்கள், முன்பணம், கடன்கள், கூலித் தொழிலாளிகள் என்று இதன் பாதிப்பு பன்முக பரிமாணங்களோடு இருக்கிறது. ஒரு மரத்தை அகற்ற அரசு அறிவித்திருக்கும் ரூ.500 எந்த பயனுமளிக்காது என விவாயிகள் கூறுகின்றனர். 2019 துவக்கத்தில் வரும் இதுவரை இல்லாத முன்மாதிரியாக டெல்டா மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாது என்பதே விவசாயிகளின் சோகத்தை புரிந்து கொள்வதற்கு உதவும்.

காவிரி பிரச்சினை, அரசின் அலட்சியம் காரணமாக விவசாயிகள் பலர் தென்னை சாகுபடிக்கு மாறியிருந்தனர். அதன் மூலம் ஓரளவு நல்ல பணம் கிடைத்தது என்றாலும் இன்று அவர்கள் அத்தனை பேரும் ஒரே இரவில் ஏழைகளாக மாறிவிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான திருச்செல்வம். கஜா புயலால் இவருக்குச் சொந்தமான தேக்கு, தென்னை, சவுக்கு, வாழை உள்ளிட்ட மரங்கள் முற்றிலும் அழிந்து போனது. இதை நம்பி பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி விவசாயத்தை செய்து வந்தார். இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மரங்கள்தான் இவை.

இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமலும், வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்த இனி வழியில்லை என்று மனமுடைந்த திருச்செல்வம்  பூச்சி மருந்து அருந்தினார். இதையறிந்த அவரது குடும்பத்தார் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில்  மேல் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி 26-11-2018 அன்று உயிர் இழந்தார். இது இன்று வெளிவந்துள்ள செய்தி. இது போன்ற எண்ணற்ற உயிரிழப்புகள் டெல்டா முழுவது நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

“90 சதவீதம் பாதிப்பை சந்தித்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் புயலின் வேகமான தாக்குதலால் பல மரங்களின் தண்டு பகுதிகள் முறிந்துள்ளன. மேலும் இப்பகுதிகளில் மண் வளமும் குறைந்திருக்க வாய்ப்புள்ளது. சமூகவலைத்தளங்களில் பரவும் செய்தி போல உடைந்த மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது” என்கிறார் தமிழக அரசின் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரான கார்த்திகேயன்.

இறுதியில் டெல்டாவை மீத்தேன் திட்டங்களுக்காக தாரை வார்க்கும் சதியில் அரசுகள் உள்ளதோ என்று விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் சனி மாலையில் வந்த ஏழு பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் சடசடவென ஓரிரு பகுதிகளைப் பார்த்துவிட்டு இருட்டியதால் அன்றைய ‘ஆய்வை’ முடித்துக் கொண்டனர். ஒரு பகுதியில் அவர்கள் செலவிட்டது கால் மணிநேரம் கூட இல்லை.

இந்நிலையில் இந்த கனவான்கள் உள்பகுதிகளுக்கு வரமாட்டார்கள் என்று ஆங்காங்கே சாலையில் புகைப்படங்கள் வைத்து பாதிப்பை காட்டியிருக்கின்றனர். தில்லியிலிருந்து வந்தவர்கள் புகைப்படங்களை மட்டும் பார்க்கிறார்கள் என்றால் அதை தில்லியிலேயே பார்த்திருக்கலாமே?

நிவாரணம் பெற வேண்டுமென்றால் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை கேட்கிறது அரசு. வீடுகளையே இழந்த மக்களிடம் இழப்பீட்டுக்கு அடையாள அட்டை கேட்கிறது இந்த ‘பொறுப்பான’ அரசு!

சேதத்தை தாமதமாக பார்வையிட வந்த நிபுணர் குழு அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாது என்பது ஒரு யதார்த்தமென்றே வைப்போம். ஆனால் அனைத்து இடங்களின் பாதிப்பை அறிய இவர்களிடம் என்ன வழிமுறை உள்ளது? ஒரு கண்துடைப்பான இரக்கத்தை காட்டுவதற்கு நேரில் வந்தவர்கள், கண்துடைப்பான நிவாரணத் தொகையை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வதைத் தாண்டி இந்த மத்தியக் குழுவால் என்ன பயன்?

புயல் அன்று கொன்றது. அரசு நின்று கொல்கிறது.

எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க நாங்க உயிரோட வந்துட்டோம் !

(இடமிருந்து) ராஜேந்திரன் மற்றும் சந்திரன்.

ஜா புயலின் பேரழிவால் பல இலட்சக்கணக்கான விவசாயிகள்,  கூலித் தொழிலாளர்கள் வீடு இழந்து, வேலை இழந்து, தண்ணீர் – உணவின்றி  வீதிகளில் தன்னார்வலர்களை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் அவலம் ஊருக்கே சோறுபோட்ட டெல்டா மண்ணில் அரங்கேறி வருகிறது. அதன் உச்சகட்டமாக தங்களுடைய அவலத்தை உலகுக்கு தெரியபடுத்தும் விதமாக சுடுகாட்டில் சமைத்து சாப்பிட்டு அங்கேயே படுத்துறங்கும் கொடுமையும் நடந்து வருவது பார்ப்பவர்களின் மனதை உலுக்கி எடுக்கிறது. ஆனால் சொரணைகெட்ட இந்த அரசுக்கு மட்டும் உறைக்கவில்லை.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர், கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களுடைய வாழ்வாதரம் முழுவதும் இழந்து விட்ட நிலையில் ஊருக்கு அருகில் இருக்கும் சுடுகாட்டில் ஒரு டெண்ட் அமைத்து மதிய உணவு தயார் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் பெண்கள். ஊர் பெரியவர்கள்  அருகே இருந்த கடற்கரை சாலையில் நிவாரண வண்டியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை நெருங்கியதும் அனைவரின் பார்வையும் எங்களை நோக்கியே மையம் கொண்டது.

(இடமிருந்து) ராஜேந்திரன் மற்றும் சந்திரன்.

கூட்டத்திலிருந்து ராஜேந்திரனும், சந்திரனும் தங்களுடைய துயரத்தை கொட்டித் தீர்த்தனர். “கஜா புயல் பாதிப்பு, படுக்க இடம் இல்லாம உடுத்த துணி இல்லாம, வீட்டுக்கும் போக முடியாம இங்க வந்துட்டோம். ரோட்டுல வரும் தண்ணிய கொண்டும், போற – வரவங்க தரும் தண்ணி, சாமானை வச்சிதான் இத்தன நாளா சமச்சி சாப்பிட்டு இருக்கோம்.

எங்க ஊர்ல இருக்கவங்க எல்லாம் விவசாய கூலிங்க. நடவு இருக்க மூனு மாசத்துக்குத்தான் வேலை இருக்கும். அதுக்கப்புறம்  100 நாள் வேலைக்கு போவோம். அதுவும் முடிஞ்சா கேரளாவுக்கு கட்டிட வேலைக்கு போவோம்.

ஜீவா காலனியில மொத்தம் 46 குடும்பம் இருக்கு. யாருக்கும் சொந்த நிலமில்ல. இரண்டு பேருக்கு மட்டும் ஒரு ஏக்கர்ல நிலம் இருக்கு. அவ்ளோதான். 36 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 120 பேர் இருக்கும்.

புயல் வரும்னு சொன்னதுக்கு பிறகு எல்லோரையும் பள்ளிக்கூடத்துல தங்கிக்கச் சொன்னாங்க. ஆனா அங்க ஏற்கனவே வேற தெரு மக்க தங்கி இருக்காங்க. அதுல 40 குடும்பம் இருக்கு.  அதனால நாங்க இங்கேயே சமைத்து சாப்பிட்டு 6 நாளா இங்கயே இருக்கோம். படுக்க பாய், போர்வை, மாத்து துணி எதுவும் இல்லை. முகாம்ல இருக்கவங்களுக்கும் இதேதான் நெலம. நாங்க வாய்க்கு ருசியா சாப்பாடு கேக்கல. பொங்கித்தின்ன கொஞ்சம் அரிசி, மண்ணெண்ணெய், முக்கியமா கொசுவத்தி வேணும். ஒன்னும் முடியல, புடுங்கி எடுக்குது.

புயல்னு சொன்னப்ப பகல்ல இப்ப இருக்க மாதிரிதான் வெய்ய காஞ்சது. அதனால கொஞ்சம் நம்பிக்கை இழந்து இருந்துட்டோம். நைட்டு எல்லோரும் படுத்த பின்னாடிதான் காத்து பலமா வீச ஆரம்பிச்சிடுச்சி. தொறந்த கதவ மூட முடியல. ஓடு போட்ட வீட்ல ஒரு ஓடு பேத்துகிட்டதும் எல்லா ஓடும் தூக்கிட்டு போக ஆரம்பிச்சிடுச்சி.

எங்க எல்லாரோட வீடும் கூரைவீடு. கீத்து போட்டிருக்கும். கீத்து காத்து போவாத மாதிரி அடர்த்தியா இருந்ததால அதால உள்ள போக முடியல. மேல சிலிப்பிக்கிச்சி. ஆனா, அந்த காத்தால கீத்து கட்டியிருக்க பாலையை அறுக்க முடியல.  கூண்டோட வீட்ட தூக்குற மாதிரி இருந்துச்சி. வீட்டுல இருந்த எல்லோரும் வீட்டுக்கு உள்ள இருக்க கழிய புடிச்சி தொங்கிட்டே இருந்தோம். அந்த நேரம் நாங்க எல்லோரும் செத்துட்டோம்னுதான் நெனச்சோம். காத்து நின்ன பிறகுதான் உசுரு வந்துச்சி. இந்த நெலமையெல்லாம் பாக்கும்போதுதான் நெனக்கிறோம். அப்பவே செத்திருக்கலாம்னு” என்றார் ராஜேந்திரன்.

அந்த நேரம் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் காய்கறி போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்ததும் டெண்ட் கொட்டாயில் இருந்த பெண்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு பொருட்களை தனித்தனியாக பிரிக்க ஆரம்பித்தனர்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு அருகில் அமர்ந்திருந்த சந்திரன் பேச ஆரம்பித்தார். “அமைச்சர் காமராஜ் இந்த வழிதான் வந்தாரு. எங்களப் பார்த்து பேசி  10 கிலோ அரிசி, ஒரு புடவை ஒரு வேஷ்டி, ஆளுக்கு 1000 ரூபா பணம் கொடுக்க செல்றேன்னு சொன்னாரு. இன்னும் யாரும் எதுவும் கொண்டு வந்து தரல.  இப்பக்கூட நாங்க சொசையிட்டில போயிட்டு கேட்டோம். அதுக்கு அவரு இன்னும் அரசாங்கத்துல இருந்து எதுவும் வர்லன்னு சொல்லி அனுப்பிட்டாரு. அதேமாதிரி டி.டி.வி. தினகரன் வந்து பார்த்துட்டு, “வீட்டுக்கு போங்க, உங்களுக்கு வேண்டியத செய்ய சொல்றேன்னு” சொல்லிட்டு கெளம்பிட்டாரு. நாங்க எங்க போறது? வீடு இருந்தா எதுக்கு இங்க வந்து சமைக்க போறோம், சொல்லுங்க?

இதுவரைக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, மெட்ராசுன்னு எங்க எங்கயோ தொலைவுல இருந்து வரும் மக்கள்தான் எங்க நிலமைய பார்த்துட்டு பிஸ்கட், பால், ரொட்டின்னு இருக்கிறத கொடுத்துட்டு போறாங்க. வேற யாரும் எதுவும் செய்யிறது இல்ல.

நாங்க எங்ககிட்ட இருக்க அரிசிய போட்டு தினமும் இந்த உசிர புடிச்சிக்க எதோ புளி சாதம், பொங்க சாதம்னு செஞ்சி சாப்பிடுறோம். இந்த மாதிரி இன்னும் எத்தன நாளைக்கு இருக்க போறோமோன்னு தெரியல.

படிக்க:
பொன்னாரின் சன்னிதான அழுகை – என்ன மாதிரியான டிசைன் இது ?
அதிமுக குண்டர்களை விடுவித்த மோடியின் அடிமை அரசு எழுவர் விடுதலையை மறுப்பது ஏன் ?

எங்களுக்கு வேலை கொடுக்கிற முதலாளி சரியானாத்தான் அவரால வேலை கொடுக்க முடியும். இந்த பக்கம் எல்லாம் நெல்லுதான். தண்டு உருண்டு வர நேரத்துல அடிச்ச காத்துல எல்லாம் ஒடஞ்சி இருக்கும். இனிமே கதிர் வராது. வந்தாலும் பதரா தான் போவும். பொன்னி, கல்சர், சி.ஆர்.1009 போன்ற ரகம்தான் அதிகம் போட்டிருக்காங்க. இப்ப அவங்களுக்கும் பெரிய பாதிப்பு இருக்கும்போது எப்படி இந்த நெலமைய எங்களால் சரி செய்ய முடியும்?

ஊருல இருந்த ஆடு, மாடு எல்லாம் இறந்துடுச்சி. மிச்சமிருக்க ஆட்டு, மாட்டுக்கும் தீவனம் இல்ல. அதுவும் இன்னும் எத்தன நாளைக்கு இப்படியே இருக்கும்னு தெரியல. கட்டு இடம்கூட சரிஞ்சிடுச்சி.

செத்துபோன ஆட்டுக்கு இழப்பீடு தர்றேன்னு சொன்னாங்க. மனுசனுக்கே ஒன்னும் பண்ணாதவனுங்கதான் ஆட்டு மாட்டுக்கு கொடுக்கப் போறானுங்களா? இங்க ரோட்டுல நாங்க கெடக்குறோம். எங்கள வந்து பாக்காம மோடிய பாக்க போயிருக்காறாம் எடப்பாடி. மொதல்ல எங்களுக்கு எதாவது பண்ணிட்டு யாரயாது போயி பார்க்கட்டும்.

எடப்பாடிய விடுங்க. இந்த தொகுதி எம்.எல்.ஏ ஒருத்தன் ஆடலரசுன்னு இருக்கான். 6 நாளா சுடுகாட்டுல கெடக்கோம். இன்னும் என்னாச்சின்னு வந்து எட்டிப் பாக்கல. இவனுங்க எல்லாம் மனுஷனுங்களா? அமைச்சர மறிக்கிறோம்னு சொல்லுறாங்க. நாங்க எதுக்கு சும்மா இருக்கவன மறிக்கனும். எங்களுக்கு இந்த ஆபத்துல எதாவது உதவி செஞ்சா நாங்க எதுக்கு மறிக்க போறோம்?

எங்க ஊர்ல அஞ்சாவது வரைக்கும்தான் சார் இருக்கு. மேல படிக்கனும்னா நாச்சிக்குளம் வரைக்கும் போவனும். அப்படி படிச்சி இதுவரைக்கும் 6 பேர் பட்டதாரி, எஞ்சினியரிங் முடிச்சிருக்காங்க. ஆனா யாருக்கும் ஒழுங்கா வேலை கெடக்கல. எங்க ஏரியால இருந்து ஒருத்தவங்ககூட இது வரைக்கும் கவர்மெண்ட் வேலைக்கு போனவங்களே கிடையாது சார். ஏனோ எங்களுக்கு மட்டும் தர மாட்றாங்க.

என் பையனும் எஞ்சினியரிங் முடிச்சிட்டு மெட்ராசுக்கு போயிட்டான். வெறும் பதினொராயிரம் சார் அவனுக்கு சம்பளம். அவன் வாங்குற சம்பளத்த நாங்க எதிர் பாக்கல. இந்த வெலவாசில அவங்களுக்கே பத்தாது. அதால அவன் சம்பாதிக்கிறத கொண்டு அவன காப்பாத்திக்கிட்டா அதுவே போதும் சார் எங்களுக்கு.

இப்பக்கூட தீபாவளிக்கு பையன் வந்தான்… சுத்தமா காசி இல்லன்னு சொன்னான். இருக்கிறத பொரட்டிபோட்டு மூனாயிரம் கையில கொடுத்தனுப்சேன் சார். நாங்க எப்படி அவன் வருமானத்த எதிர்பார்க்க முடியும் சொல்லுங்க….

என்ன இந்த புயலுக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணி பேசினான். அதோட சரி. இப்ப வரைக்கும்  பேச முடியல சார்…  வீடு இடிஞ்சி சோத்துக்கு வழி இல்லாம போற வரவங்கள எதிர்பாத்து கெடக்கோம். இந்த நேரம் என் பையன் கூட இருந்திருந்தா தெம்பா இருந்திருந்திருக்கும். இப்பதான் சார் வருத்தப்படுறேன்’ னு சொல்லிக்கொண்டே இருந்தவரின் கண்களின் சாரை சாரையாக கண்ணீர் வழிந்ததை துடைத்துக்கொண்டே பேச முயற்சித்தார். தேம்பிய கண்கள் தொண்டையை அடைக்க அவரால் பேச முடியவில்லை. சுற்றி இருந்தவர்கள் மத்தியில் கனத்த மெளனம்..!

கொஞ்ச நேரம் கழித்து தோளில் இருந்த துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டு பேசினார் சந்திரன்…. “எங்க உடம்பு வைரம் பாய்ஞ்ச உடம்பு… எவ்ளோ வெய்ய, மழை குளிர வேணா தாங்கும். ஆனா இனிமே இந்த காத்து மட்டும் வரக்கூடாது சார். எல்லாரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க. நாங்க உயிரோடவே வந்து பார்த்துட்டோம்.” என்கிறார் பயம் கலந்த சோகத்துடன் !

நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் ? புரட்சிகர பாடல்கள்

வம்பர் 7 புரட்சி தினத்தை ம.க.இ.க, பு.மா.இ.மு, பெ.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து சென்னையில் நடத்தின.

அந்நிகழ்ச்சியில் புரட்சிகர அமைப்பைச் சேர்ந்த இளம்தோழர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். கலை நிகழ்ச்சிகள் காணொளியின் இரண்டாம் பாகம் இது.

இளம் தோழர்கள் பாடிய 3 பாடல்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.

1. நவம்பர் 7 என்ற தினமின்று – மக்கள் விடுதலைக்கான தினமொன்று !
2. தொட்டால் என்னடா .. கை பட்டால் என்னடா .. நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் .. தொட்டால் என்னாடா ?
3. நீரில்லா நெல் வயலும் வெம்பி அழுகுதம்மா !

பாருங்கள் – பகிருங்கள்

முகநூலில் பார்க்க:

 

மக்களைக் கொல்லும் மருத்துவ மூடநம்பிக்கைகள் | ஃபருக் அப்துல்லா

நோய் குறித்தும், அதற்கான மருத்துவம் குறித்தும் பல்வேறு மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. இது அனைத்து தரப்பு மக்களிடமும் வெவ்வேறு வகைகளின் நிலைபெற்றுள்ளன. அவற்றை களைய முயல்வதே இப்பதிவின் நோக்கம்.

*****

“வேலூர் வாணியம்பாடியை அடுத்த் ஆலங்காயம் கொட்டாவூரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சக்தி இளவரசி தம்பதியினரின் குழந்தை பிரித்திவிராஜ்.

ஒன்பது மாத குழந்தையான பிரித்விக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் இருந்துள்ளது. இது குறித்து இளவரசி தனது பெரியம்மாள் ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளார்.

அவர், ‘குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் உள்ள நாட்டு மருந்து வைத்தியசாலைக்கு குழந்தையை தூக்கிச்செல்’ என்றார். இளவரசி அவர் கணவருடன் அங்கு சென்றுள்ளார். அங்கு இருந்த நாட்டு வைத்தியர் குழந்தைக்கு ஒரு கயிறு கட்டிவிட்டு, மருந்தும் கொடுத்துள்ளார்.

ஆனால் சில நிமிடங்களில் குழந்தை மூர்ச்சையானதையடுத்து அத்தம்பதியினர் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடலை மடியில் ஏந்திப் பெற்றோர் கதறி அழுதனர்.

படம் – நன்றி : விகடன்

***

குழந்தை பிறந்த ஒரு வயது வரை மிக மிக முக்கிய காலக்கட்டம் அதை Infant period என்கிறோம்.

உடலில் ஒரு பாகத்தில் ஏற்படும் தொற்று மிக எளிதாக மொத்த உடலுக்கும் பரவி “அபாயகரமான நோய் தொற்றாக” மாறும் வாய்ப்பு உண்டு.

படிக்க :
டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !
மருத்துவத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு | ஃபருக் அப்துல்லா

குழந்தை பிறந்த முதல் ஒரு வருடத்திற்குள் இறக்கும் இறப்பு சதவிகிதத்தை Infant mortality rate என்கிறோம். இந்த காலத்தில் வரும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, சளி,  இருமல் போன்ற வியாதிகளை உடனே நவீன மருத்துவரிடம் சென்று காண்பிப்பதே சிறந்த விசயம்.

நாட்டு மருந்து கொடுக்கிறேன் என்று போலி மருத்துவர்களை நாடினால் உங்கள் குழந்தையை நீங்களே கொல்வதற்கு சமமாகும்

இந்த செய்தியில் ஒன்பது மாத குழந்தைக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு; மிக எளிதாக ஓ.ஆர்.எஸ் மற்றும் தகுந்த மருந்து கொடுத்தால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய உயிரை கொன்று விட்டனர்

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.

*****

96 படத்தில் ஒரு காட்சி ;

ராம் வீட்டில் ஜானு குளியலறைக்குள் செல்கிறாள். ஜானுவிற்கு ராம் டவல் மற்றும் சோப் எடுத்துக்கொண்டு செல்கிறான். அப்போது ஜானு கூறுகிறாள் “இங்க உள்ள டவல் சோப் இருக்கு ராம்”

ராம் “ஐயோ… அது நான் யூஸ் பண்ண டவல் மற்றும் சோப்” என்கிறான்.

ஜானு கிண்டலாக “பரவாயில்ல..உனக்கு சோரியாசிஸ் ஒன்னும் கிடையாதுல்ல?”

ராம் “இல்ல இல்ல” என்கிறான்

எப்போதும் பெரிய டைரக்டர்கள் கூட மருத்துவ விசயங்களை படத்தில் வைக்கும் போது ஃபெய்ல் ஆகி விடுவார்கள்.

உண்மையில், சோரியாசிஸ் என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நோய் அல்ல.

சோரியாசிஸ் என்பது சுய எதிர்ப்பு சக்தி தனது தோலையே பாதிக்கும் ஆட்டோ இம்யூன் வகை நோயாகும். இது தொற்றும் நோயல்ல. ஆகவே, இந்த படத்தில் அறியாமல் வைக்கப்பட்டிருக்கும் இந்த காட்சி பிழையாகும்.

சோரியாசிஸ் பாதிக்கப்பட்ட அனைவரும் அரவணைப்புக்கு உரியவர்கள். அருவருப்புக்கு உரியவர்கள் அன்று.

இந்த பதிவு மருத்துவராக எனது பொறுப்பு.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

அவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்

ஜா புயல் நிவாரண மையத்தில் இருந்த நான்கு பெண்கள், இருள் காரணமாக, சாலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, வாகனம் மோதி அந்த இடத்திலேயே மரணம்.

நாகை மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது  நீர்முலை கிராமம். கஜா புயலால் அடியோடு பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று. வீடிழந்த மக்கள் நீர்முலையில் நான்குக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கியுள்ளனர். அப்படி, இவ்வூரின் அரசு ஆரம்ப சுகாதார நிலைய முகாமில் தங்கியிருந்த சுமதி (40), அமுதா(60), ராஜகுமாரி(39), சரோஜா(38) ஆகிய நான்கு பேரும், நவம்பர் 22-ம் தேதி இரவு 9.30 மணி அளவில், இரவு உணவை முடித்துவிட்டு சுகாதார நிலைய வாயிலில் உள்ள, சாலையின் ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மின்சார வசதி இல்ல, வேறு எந்த வெளிச்சமும் இல்லை, நிவாரண உதவிகள் மூலம் கிடைக்கும் மெழுகுவர்த்திகள் எந்த மூலைக்கு? கடுமையான கொசுக்கடி வேறு. இதனால் நீர்முலை உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் சூழ்ந்திருக்கும் கும்மிருட்டுக்கு மத்தியில் மக்கள் சாலை ஓரங்களில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துதான் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் நேற்றும் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

அப்போது அந்த சாலை வழியே வேகமாக வந்த வேன் ஒன்று மோதியதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் இருவர் அந்த இடத்திலேயே இறந்துவிட, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்ற இருவரும், அங்கு சென்றதும் இறந்துவிட்டனர். மேலும் மணிகண்டன் என்ற 15 வயது சிறுவனுக்கு கால் முறிந்துவிட்டது.

கஜா புயலினால் ஏற்கனவே உயிரைத்தவிர அனைத்தையும் இழந்து விட்ட இந்த மக்கள் தற்போது உயிரையும் இழந்துவிட்டனர். ( புகைப்படம் மிகக் கோரமாக இருக்கிறது. அதனால் இணைக்கவில்லை). இது மற்றுமொரு விபத்து இல்லை. அன்றாடம் நிகழும் சாலை விபத்துகளின் பட்டியலில் இதை சேர்க்க முடியாது.

வாழ வழியில்லாமல் நடுரோட்டில் நிற்கும் அவர்கள் இந்த நான்கு உடல்களையும் எப்படி புதைப்பார்கள்? எப்படி எரியூட்டுவார்கள்? இந்த நான்கு பெண்களும் தனிமனிதர்கள் அல்ல… அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படிப் பிழைக்க போகிறார்கள்? அவர்களை யார் காப்பாற்றுவது?

♦♦♦

டெல்டா மாவட்டத்தின் எந்தத் தெருவில் நுழைந்தாலும் கஜா புயலால் பாதிக்கப் பட்டோர் முகாம் என்ற பெயர் பலகைகள் அரை கிலோமீட்டருக்கு ஒன்று தென்படுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் முகாம்கள்.. முகாம்கள்.. முகாம்கள்.

வரும் நிவாரண வண்டிகளின் கண்களில் தென்பட வேண்டும் என்பதற்காக; அவர்களின் இரக்கத்தை கோர வேண்டும் என்பதற்காக… உள்ளடங்கிய கிராமங்களை சேர்ந்தவர்கள் முதன்மை சாலை அருகே அகதிகளைப் போல காத்திருக்கின்றனர். சாலையோரத்தில் பாத்திரத்தை வைத்து சமையல் செய்கின்றனர். வாகனங்களை நோக்கி கைகளை நீட்டியபடி ஓடிவருகின்றனர். இந்தக் காட்சி ஒவ்வொன்றும் நெஞ்சை அறுக்கிறது.

கீழத்தஞ்சையின் விவசாயத் தொழிலாளர்கள் கடும் உழைப்புக்கு பெயர் போனவர்கள். நாளொன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக கடைமடையில் நின்ற கால்கள், இன்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டுக்காக ஏங்கி நிற்கிறது. அவர்கள் சாலையில் நின்று கையேந்துவதை கண்டு மனம் பொறுக்கவில்லை.

தஞ்சை: நிவாரண முகாம் ஒன்றில் உணவுக்காக நீண்ட வரிசையில்… (படம் மங்கலாக்கப்பட்டிருக்கிறது)

தன்மானத்தை ஒதுக்கி வைத்து தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவை போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போலவே இருக்கிறார்கள்

♦♦♦

குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்து செல்லும் பலநூறு நிவாரண வண்டிகள்… எண்ணற்ற ஊர்களில் இருந்து மக்கள் சேகரித்து அனுப்பும் பொருட்கள், ஏராளமான வெளிநாடுகளிலிருந்து வந்து சேரும் உதவித்தொகை… உண்மையில் சிவில் சமூகம் ஒரு இராணுவத்தை போல இணைந்து நின்று டெல்டா மக்களை அரணாக பாதுகாக்கிறது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை சரிசெய்யும் பணி மட்டுமே அரசுத் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. அதைத் தாண்டி அவர்கள் எதுவும் செய்வார்கள் என்ற நம்பிக்கைக் கூட இல்லை. இந்த அரசக் கட்டமைப்பின் பிரம்மாண்ட தோல்விக்கும், மனித மனதின் ஆதாரமான அறவுணர்ச்சிக்கும் இன்றைய டெல்டா மாவட்ட கிராமங்களே சாட்சி.

♦♦♦

ஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் குறித்து இரண்டு வதந்திகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

1 முதலில் நிவாரணப் பொருள் ஏற்றி வரும் வாகனங்களை மக்கள் மிரட்டி பொருட்களை வழிப்பறி செய்கின்றனர் என்பது. இது முற்றிலும் தவறானது; முழு பொய். இந்த மக்கள் யாரும் கொள்ளைக்காரர்கள் இல்லை; திருடர்கள் இல்லை.

நிவாரண வாகனங்களில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும், அரிசியையும், தண்ணீரையும் வைத்து அவர்கள் ஒன்றும் மாடி வீடு கட்டப் போவதில்லை. அவர்கள் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். இருந்த கடைசி குடிசையையும் புயலுக்கு பறிகொடுத்து விட்டு நடுரோட்டில் நிற்கிறார்கள். கையேந்தி நிற்பவர்களை கயவர்களாக சித்தரிக்க வேண்டாம்.

படிக்க:
பத்திரிகையாளர்களும் நடுநிலைமையும் – வீடியோ
ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

நான்கு நாட்களாக கடும் பசி. ஏதேனும் ஒரு வாகனம் வருமா என எதிர்பார்த்து காத்திருந்து; ஏற்கனவே காத்திருந்து கிடைத்த அனுபவத்தில்; இப்போது வரும் வாகனத்தைக் கூட விட்டுவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் அவர்கள் கேட்கிறார்கள். அந்த அவலத்தின் குரல் கோபமாகத்தான் வெளிப்படும். அதை மிரட்டல் என்றோ வழிப்பறி என்றோ அழைப்பது மோசமானது; தவறானது.

நாம் கொடுக்கும் இரண்டு கிலோ அரிசியையும் 4 மெழுகுவர்த்திகளையும் பெற்றுக்கொள்ள அவர்கள் ஆதார் அட்டையைக் காட்டி கையெழுத்துப் போட வேண்டும் என எதிர்பார்க்கும் மனநிலை தயவுசெய்து வேண்டாம்.

2 இரண்டாவது பிரச்சினை இன்னும் முக்கியமானது. நிவாரணப் பொருட்களை பங்கிட்டுக்கொள்வதில் சாதி பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கிராமங்களில் ஊர்த்தெரு முதலிலும் காலனி தெரு அதை தாண்டியும் இருக்கும். நிவாரண வண்டிகள் ஊரை நோக்கி வரும்போது முதலில் ஊர் தெரு இருப்பதால் அவர்கள் அதை முதலில் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் சேரிக்கு எதுவும் செய்வதில்லை என்றும் பல பதிவுகளை இங்கு கண்டேன். இது முற்று முழுதான உண்மையோ அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை என்பதோ இல்லை.

நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் கண்ட பெரும்பாலான ஊர்களில் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு அந்த ஊரில் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக புயலடித்த கணத்தில் இருந்து மக்களை காப்பாற்றி, பாதுகாத்து, நிவாரண வண்டிகளில் இருந்து பொருட்களைப் பெற்று பகிர்ந்தளித்து அந்த மக்களை உயிரோடு வைத்திருப்பது ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் இளைஞர் குழுக்கள்தான். சொல்லப்போனால் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள் என்ற அளவில் இந்த புயல் நேரத்தில் அவர்கள் ஒருங்கிணைந்து நிற்கிறார்கள். ஓரிரு இடங்களில் களநிலவரம் வேறாக இருக்கலாம். அதை பொதுமைப்படுத்த வேண்டாம்.

அரசாங்கம் கைவிட்டுவிட்ட நிலையில் சிவில் சமூகத்தின் அரவணைப்புடன் தற்போது உதவிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த சிவில் சமூகத்தின் பொது மனநிலையை; அறவுணர்ச்சியை எதிர் திசையில் செலுத்தும் இத்தகைய செய்திகளை நண்பர்கள்; தோழர்கள் பகிர வேண்டாம்.

எங்களுக்கு இவை போதும் மற்ற ஊர்களுக்கு கொடுங்கள் என்று சொன்னவர்களை நாங்கள் கண்டோம். காலையிலிருந்து சாப்பிடாத எங்கள் வாகனத்தின் ஓட்டுநர், மாலை தன் கைக்கு கிடைத்த ஒரு பொட்டலம் உணவை முகாமில் பசியில் வாடிய ஒரு குழந்தைக்கு தந்தார். அந்த முகாமில் சமைக்கப்பட்ட உப்புமாவை ஓட்டுனருக்கு மக்கள் தந்தார்கள். அது உழைக்கும் வர்க்கத்தின் ஆதார உணர்ச்சி. மதுரையில் இருந்து வந்துள்ள இளைஞர் குழு ஒன்று தலைஞாயிறு பகுதியில் தங்கி நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உணவு சமைத்து தருகின்றனர். அந்த நிவாரண முகாமில் தான் நேற்று நாங்கள் சாப்பிட்டோம். இதுவே கள நிலவரம். இது பிளவுகளை இணைக்க வேண்டிய தருணம். மேலும் அதிகப்படுத்த வேண்டிய தருணம் அல்ல.

முகநூலில்: பத்திரிகையாளர், பாரதி தம்பி

பொன்னாரின் சன்னிதான அழுகை – என்ன மாதிரியான டிசைன் இது ?

4

ருமுடி தாங்கி கெடுமதியோடு அய்யனை காண பரிவாரங்களோடு போனார் பொன்னார்.  சபரி மலை அய்யப்பன் கோயிலை ஆர்.எஸ்.எஸ்-ன் கலவர மேடையாக்கி வரும் காவிகள், எங்களையா தடுக்குற பாரு! அண்ணன கூப்புட்டு வரோம் என்று புடைசூழ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தாரு பொன்னார் என்று திட்டமிட்ட வேலையோடு பின்னால் வர, விதி வேறு மாதிரி  விளையாடிவிட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. யதீஷ் சந்திரா, நிலவும் தடை உத்தரவு விவரங்கள், அமலில் இருக்கும் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை கவனத்துக்கு உள்ளாக்கினார். அமைச்சர் காரில் செல்ல தடை இல்லை அனுமதி உண்டு போகலாம்! திரண்டு வந்திருக்கும் பா.ஜ.க. பரிவாரங்களுக்கு வாகனத்தை அணிவகுக்க அனுமதி இல்லை, மற்ற பக்தர்களைப் போல அரசுப் பேருந்தில் அவர்கள் செல்லத் தடையில்லை எனச் சட்டப்படியான விளக்கங்களை சுட்டிக் காட்டினார்.

இருமுடியும் பக்தியும் இல்லாதவர்களுக்கு அய்யப்பன் கோயிலில் என்ன வேலை என்று மற்றவர்களைப் பார்த்து கேட்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் அமைச்சரை சாக்கிட்டுக் கொண்டு அங்கே திரள்வது எந்த வகை மனுதர்ம நியாயமோ? தூத்துக்குடியில் ஒருவர் தும்மினால் கூட யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றும், சமூக விரோதிகளால் சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து என்றும் அடிக்கு ஒருதரம் கூவும் பொன்னார் வகையறாக்கள் தாங்களே பீத்திக் கொள்ளும் மதிக்கப்பட வேண்டியதாய் சொல்லும் சட்டம் ஒழுங்கின் படி நடக்கச் சொன்னதையே அமைச்சரை அவமரியாதை செய்து விட்டதாக புளுகாச்சி காவியத்தை அவிழ்த்து விடுகிறது காவிக் கும்பல்.

படிக்க:
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

சங்கிகளுக்கு சற்றும் குறையாமல் கடுமையான கட்டுப்பாடுகளால் சபரி மலையில் பத்தர்கள் வருகை குறைந்தது என்றும் சந்தடி சாக்கில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே சபரிமலைக் கோயிலுக்கு செல்ல பத்து முதல் அய்ம்பது வயது வரையிலான பெண்களுக்கு தடையிருந்தது. இது ஒரு பிரிட்டீஷ் ஆய்வறிக்கையில் தெரிய வந்தது என தமிழ் இந்து தடி எடுத்து கொடுக்கிறது.

யதீஷ் சந்திரா, ஐ.பி.எஸ்.

இப்படி பக்தர்கள் கூடுமிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அன்றாடம் சரண கோசம் பார்ப்பன மத வெறி போராட்டம், நாமா வளி பூசை, எங்களை மீறி யாராவது வந்தால் மரண கோசம் என அயோத்தி போல அட்டூழியம் செய்து அச்சுறுத்தும் காவிக் கும்பல்; அதன் அமைச்சர் பொன்னார்; சபரி மலை புனிதத்தை அழிக்கும் முயற்சி என கேரள அரசின் மீதே பழியை திருப்பி போடுகிறார்கள்.

மக்களால் கழுவி கழுவி ஊத்தப் படுவதை தவிர வேறு எந்த புனித தீர்த்தத்தாலும் பாவங்களை கழுவிக்கொள்ள முடியாத பா.ஜ.க. சபரி மலை விவகாரத்தை வைத்து புனிதம் தேடவும் அன்றாடம் தனக்கான நியூஸ் வேல்யூவ்வை ஏற்றிக் கொள்ளவும் சொகுசாக அரசு பாதுகாப்போடு கோயிலுக்கு போய் வந்ததைக் கூட ஒரு போராட்டம் போல சித்தரித்து, பொய் பிரச்சாரத்தின் மூலம் ஏதோ இந்துக்களின் பக்தி உரிமைக்கு கேரளா அரசால் பங்கம் வந்துவிட்டதைப் போல கள்ள ஆட்டம் ஆடுகிறது.

ஒவ்வொரு பா.ஜ.க. அமைச்சர்களும் தொகுதிக்குப் போய் மக்களைச் சந்திப்பதை விட சபரி மலைக்கு போவதிலேயே குறியாய் இருப்பதும் அங்கு வந்து சொகுசாக சாமி கும்பிட்டு விட்டு படியை விட்டு இறங்கியவுடன், படாத பாடு! சபரி மலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடு என்று பத்தர்களை படாத பாடு படுத்தும் இந்த காவிகள் டி.வி.க்கு பேட்டி தருவது ஒரு பிழைப்பாகவே இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்த சீன் தான் இப்போது பொன்னார் விவகாரம்.

அமைச்சருக்கு ஏற்பட்ட அவமரியாதை என்று சங்கிகள் என்னதான் சவுண்டு கொடுத்து ‘இந்துக்களை’ உசிப்பி விடப் பார்த்தாலும், பொன்னாரின் ‘இருமுடிக்கு’ அவர் தலையை தாண்டும் சக்தி இல்லை. ஏத்தி விடப்பா! தூக்கி விடப்பா! என்று என்னதான் சங்கிகள் டெரர் காட்டினாலும் ‘ஒழுங்கா பஸ்சை பார்த்து போங்கப்பா, இல்லை கேச போடுவன் வாங்கப்பா’ என்ற எஸ்.பி.யின் உத்தரவுக்கு முன்பு பா.ஜ.க-வின் போங்காட்டம் அடங்கி விட்டது. திரும்பி வரும் போது போலீசின் வாகன சோதனையையும் ஒரு பிரச்சனையாக்கி பிலிம் காட்டலாம் என்ற பொன்னாரின் எண்ணமும் மண்ணாகிப் போனது. பாவம்! பச்ச மண்ணு கோயிலுக்கு போய் அழுதாராம், இருக்கலாம்! “நான் பாட்டுக்கு சாமி கும்பிட்டு போய் இருப்பேன்  என்ன ஒரு சந்துல இழுத்துவிட்டு இப்போ என் அண்ணன் கிட்ட பேசிப்பாருடானு கடைசில மூஞ்சில எதையோ பூசிகிட்ட அவமானம் அவருக்கு இருக்காதா? பின்னே!

இந்த இடத்தில் எச்சு ராஜாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. பிள்ளையார் ஊர்வலத்தில், தடையை மீறி போகாதீர்கள் என தயை கூர்ந்த தமிழகத்து காக்கியிடம், “இந்துக்கள்னா எளப்பமாங்குறன்? மானம் இல்ல!, பாதிரியார் கிட்ட காச வாங்கிட்டு தடுக்கிறிங்களே! குட்கா ஊழல் டி.ஜி.பி. வீட்டுல ரைடு நடக்கறது! உங்களுக்கு வெட்கமா இல்ல? ஆல் ஆர் கரப்சன்! கோர்ட்டாவது மயிராவது” என்ற சண்ட பிரசண்ட கோவம் எங்கே? பொன்னாரின் சன்னிதான அழுகை எங்கே? தங்கள் கைக் காசை செலவு பண்ணியாவது ஒவ்வொரு இந்து டேஷ் பக்தர்களும் எச்சு ராஜாவை யதீஸ் சந்திரா வழி பம்பைக்கு அனுப்ப வேண்டியது பக்தாளின் கடமை. சாதுவாகக் காட்டிக் கொள்வது, கோபமாக பேசுவது ஆர்.எஸ்.எஸ். மதவெறி கும்பல் வன்மத்தின்
வெவ்வேறு வடிவங்கள். உள்ளடக்கம் குரூரமும், இந்து பாசிசமும்தான்.

ஊரை இழந்து உறவை இழந்து உயிரையும் இழந்து தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் மக்கள், அரசின் அலட்சியத்திற்கு எதிராகப் போராடுவதைப் பார்த்து வன்முறை, போராட்டம் தேவையில்லை என புத்தி சொல்லும் பொன்னார், ஒரு கோயிலுக்கு சகல வசதிகளுடன் போய் வந்ததையே ஒரு பிரச்சனையாக்கி தன்னை அவமதித்து விட்டதாக அண்டப் புளுகை அவிழ்த்து விட்டு அதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு என்று வெறியாட்டம் ஆடுவதை விட ஒரு சமூக விரோத வன்முறை இருக்க முடியுமா?

படிக்க:
பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்
பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் நிலைகுலைந்து போய் உள்ள, அவர்கள் பாஷையில் அந்த இந்துக்களுக்கு இந்த இந்துத்துவ கும்பல் கிழித்தது என்ன? இந்துக்களின் சொத்து கோயில் என்று கூவும் இந்தக் கும்பல் வீடு வாசலை இழந்த டெல்டா மக்களுக்காக கோயிலை திறந்துவிட போராடத் தயாரா? கஜா புயலை யாரும் அரசியலாக்க கூடாது என்று மக்கள் உரிமைகளை ஒடுக்கும் இந்தக் கும்பல் சபரி மலையை அரசியலாக்குவது மட்டும் சரியாம்!

துரை. சண்முகம்
கண்ணுக்கு நேரே நமது தமிழக மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரான ஒருவர் தமது எடுபிடிகளுடன் போய் அங்கே தங்கி மக்களுக்கு வேலை செய்யாதது அவருக்கு  அவமானமாகப் படவில்லை, இருமுடி கட்டிக்கொண்டு கோயிலுக்கு போன இடத்தில் ரெண்டு கொசு கடித்துவிட்டதாம்! அதுதான் இப்போது அவமரியாதையாம்! அதற்காக முழு அடைப்பாம்! எவ்வளவு வக்கிரம் பிடித்த ஒரு பாசிச கட்சி இந்த பா.ஜ.க. என்பதை பொன்னாரை விட வேறு யார் இவ்வளவு பொருத்தமாக நமக்கு விளக்க முடியும்?

பட்டுக்கோட்டை : 52 கோழி பண்ணைகள் அழிவு ! என்ன கடன் வாங்குனாலும் மீள முடியாது !

ஜா புயல் ஏற்படுத்தி இருக்கும் அழிவு கணக்கிட முடியாதவையாக இருக்கிறது. விவசாயம், வீடு, வேலை என அனைத்தும் இழந்து தெருவில் நிற்கிறார்கள் மக்கள். அவர்களுக்கென இருந்த ஒரே வாய்ப்பு தென்னை விவசாயம் அல்லது வெளிநாடுதான். இனி வெளிநாடும் செல்ல முடியாது. விவசாயமும் செய்ய முடியாது என்ற நிலை டெல்டாவில் உருவாகி இருக்கிறது.

தம்பிக்கோட்டை – கிருஷ்ணாபுரம் மற்றும் அதனைச் சுற்றி தென்னையினூடாக கறிக்கோழி வளர்ப்பது என்ற அடிப்படையில் தோப்பில் கோழிப்பண்ணை அமைத்து வருமானம் ஈட்டி வந்தார்கள். தற்பொழுது அதற்கும் வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தோப்பில் இருந்த கோழி பண்ணைகள் அனைத்தும் சாய்ந்து சில கோழிகள் மட்டும் வெளியில் திரிந்து கொண்டிருந்தன. அருகில் இருந்த இன்னொரு தோப்பில் கோழிப் பண்ணைத் தொழிலாளர்கள் மிச்ச மீதியிருந்த கோழியை ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர். ஃபாமின் விற்பனை பிரதிநிதி அருணகிரியிடமும், பட்டுக்கோட்டை மேலாளர் ரமேஷிடமும் கேட்டோம். “தென்னந்தோப்புல கோழிப்பண்ணை அமைக்கிற பழக்கம் இருபது வருஷமாவே நடைமுறையில இருக்கு. இந்த பகுதி மக்களுக்கு தோப்பும், கோழிப்பண்ணையும் தான் ஆதாரம். இதுதான் அவர்களின் வாழ்க்கை. வீடு, பண்ணைனு தினந்தோறும் இதிலேயே உழலக்கூடியவர்கள். யாரும் எதிர்பாக்கல இப்படி நடக்கும்னு.

அருணகிரி மற்றும் ரமேஷ்.

72-ல ஒரு புயல் வந்தப்ப நெல்லு எல்லாம் வீணாகிடுச்சினுதான் தென்னைக்கு மாறினதா சொன்னாங்க. இப்ப தென்னையும் இப்படி ஆனதால என்ன பண்றதுன்னு தெரியாம ஒடிஞ்சிட்டாங்க. தோப்புல இடம் சும்மா இருக்கேன்னு கோழிப்பண்ணை அமைச்சாங்க. இப்ப அதுவும் நாசமாயிடுச்சி.  ஒரு பண்ணை அமைக்கிறது சாதாரண விஷயம் இல்ல.

இந்த ஏரியாவுல ஆர்.எம்.பி. பிரீடிங் ஃபாம், ஒய்.ஆர்.எஸ் பிராய்லர், மணீஸ் பிராய்லர், சாமி ஃபீட்ஸ் போன்ற கம்பெனி இருக்கு. டெல்டா மாவட்டம் முழுவதும் எங்களுடைய கம்பனியும், ஆர்.எம்.பி. பிரீடிங் ஃபாமும்தான் முன்னணியில இருக்கு. இந்த கம்பெனிகளோட வேலையே பண்ணை வச்சிருக்கவங்ககிட்ட கோழிகுஞ்சி கொடுத்துடுவோம். அதை வளர்த்து தரணும்.

இந்த பட்டுக்கோட்டை வட்டாரத்துல மட்டும் மொத்தம் 52 பண்ணைகள் இருக்கு. இதுல எங்களுக்கு கிருஷ்ணாபுரத்துல இருக்க 13 பண்ணையில மட்டும் 70,000 குஞ்சிகள் வளர்க்க கொடுத்தோம். அதுல மிஞ்சினது 22,000 மட்டும்தான். மிச்சமெல்லாம் செத்துடுச்சி. இந்த பண்ணையில மட்டும் 7000 கோழி இறந்துடுச்சி. இப்ப மிச்சமிருக்கிறதைத்தான் புடிக்கிறோம். இதே நிலமைதான் மத்த கம்பெனிக்கும். கறிக்கோழி வர சமயத்துல புயல் வந்து கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்திடுச்சி.

பத்தாயிரம் சதுர அடி பண்ணையில இருந்த கோழியோட அழிவால சுமார் இருபது இலட்சம் வரை  எங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கு. பண்ணை விவசாயிக்கு ஆறு – ஏழு இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொட்டாய் மற்றும் அதுல இருக்க எக்கியூப்மெண்ட் எல்லாம் விவசாயிங்களோடதுதான்.

அதாவது, பத்தாயிரம் சதுர அடியில ஒரு பண்ணை அமைக்க குறைந்தது ஐந்து – ஆறு இலட்சம் செலவு ஆகும். இந்த பத்தாயிரம் சதுர அடிக்கு 9000 கோழி குஞ்சி கொடுப்போம். அதை விவசாயிங்க வளர்த்துத் தரணும்.

ஒரு மூட்டை தீவனம் 2500 ரூபாய்.  மொத்தம் 9000 கோழி வளர்ந்து வருவதற்கு 400 மூட்டை தேவைப்படும். முப்பதாவது நாளில் இருந்து ஒரு நாளைக்கு இருபத்தி இரண்டு மூட்டை தேவைப்படும். கோழி ஏத்த இறக்க ஒரு நாள் கூலி ஒரு ஆளுக்கு 800 ரூபாய். அதற்கு பத்து ஆட்கள். மொத்தம் மூன்று நாட்கள் தேவைப்படும்.  அவர்களுக்கு கூலி ரூ 24,000. கோழி வளர்ப்பில் 45 நாட்களுக்கு மெடிசின் செலவு மட்டும் 12 ஆயிரம் ஆகும். லாரி ட்ரான்ஸ்போர்ட் செலவு தனி.

எங்களோட சூப்பர் வைசர் தினமும் விசிட் அடித்து அதன் வளர்ச்சியை கணக்கெடுப்பார்.  நாங்கள் கொடுக்கும் கோழிகளில் 500 கோழி நிச்சயம் இறந்துவிடும்.  கடைசியா 8500 கோழி ஏத்திடுவோம். ஒரு கிலோ கோழிக்கு 70 ரூபாய் வரை செலவு செய்யிறோம். அதற்கு மேல் வருவது எல்லாம் இலாபம்தான்.

இந்த பகுதியில மட்டும் 52 பண்ணைகள் இருக்கிறது.  அதிகபட்சமாக ஒருவர் 22 ஆயிரம் சதுர அடி அளவில் பண்ணை அமைத்துள்ளார். அதில் 18 ஆயிரம் கோழி வளர்க்க முடியும். டெல்டா முழுக்க 252 பண்ணைகள் இருக்கு. அதையெல்லாம் கணக்கிட்டு பார்த்தா மொத்தமும் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்கிறார்.

அடைக்கலம், கோழிப் பண்ணை உரிமையாளர்.

னக்கு மொத்தம் மூனு ஏக்கர். அதுல ஒரு ஏக்கர் தென்னை போட்டிருக்கேன். அதுக்குள்ளதான் 6000 சதுர அடில பண்ணை வச்சிருக்கேன். எதிர்பாராத இந்த புயலால பத்து இலட்சத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பதான்  96,000 – க்கு தகரம் வாங்கி போட்டேன். அதுக்கு  ஜி.எஸ்.டி. வரி மட்டும் 16,000.  220 கட்டு கீத்து வாங்கினேன். ஒரு கட்டுக்கு ஐம்பது கீத்து இருக்கும். ஒரு கட்டோட விலை முன்னூறு ரூபா, மொத்தம் ரூ 66,000.  ஒரு தூண் 1200 ரூபா. மொத்தம் 80 தூண் ரூ 96,000. பத்தாயிரம் லிட்டர்ல இரண்டு டேங்க் 16,000. பண்ணைய சுத்தி கட்ட வலை வாங்கனும். அது கிலோ 320. அதேமாதிரி ட்ரிங்கர், ஃபீடர்னு சொல்லுவாங்க.  தீனி போடுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் 50 குஞ்சிக்கு ஒன்னு தேவை.  இரண்டும் சேர்த்து 510 ரூபா. இதுவே கிட்டதட்ட இரண்டரை இலட்சம் வந்துடும்.

இதெல்லாம்  ஆறு வருஷத்துக்கு முன்னாடி வாங்கிட்டேன். விலை குறைவு. இன்னைக்கு இதோட விலை ரொம்ப அதிகம். அதுபோக கோழி சூடு ஆகாம இருக்க தேங்காய் பஞ்சு அடியில போடனும். அது ஒரு லோடு 6000 ரூபா. மொத்தம் மூனு லோடு அடிக்கனும். அது இப்பதான் அடிச்சேன். 18,000 ஆயிடுச்சி.  இன்னைக்கு இருக்க நிலமையில திரும்ப ஒரு பண்ணை அமைக்கனும்னா சாத்தியமே கிடையாது. கடன்மேல கடன் வாங்கனும். முன்னாடி கல்தூண் போட்டோம். இன்னைக்கு அதெல்லாம் கிடைக்காது. எல்லாம் ஸ்டீல்தான். விலை அதிகம். எவ்ளோ கடன் வாங்கினாலும் இனிமே மீள முடியாது.

படிக்க:
பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி
ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி – நெல்லை கருத்தரங்க செய்தி

பண்ணை அமைக்க எந்த பொருளும் ஈசியா முடியாது. இவ்ளோ செலவு பண்ணி இரவு – பகலா பண்ணையிலேயே கிடந்து ஒரு கோழிய வளர்த்து தர்றோம். ஆனா எங்களுக்கு கெடக்கிறது வெறும் 40,000 தான். இதுல வேலை செய்யிறவங்களுக்கு கூலி, பராமரிப்பு எல்லாம் கழிச்சிட்டு பார்த்தா வெறும் 10,000 தான் மிஞ்சும். இதுக்காகத்தான் இவ்ளோ பாடுபடுறோம். ஆனா மொத்தமும் வந்து வாரிக்கிட்டு போயிடுச்சி இந்தப் புயல்.

இதுவரைக்கும் எங்களுக்கு அரசாங்கம் எதுவும் அறிவிக்கல. நாங்க பண்ணை உரிமையாளர்களே எல்லாம் சேர்ந்து போயிட்டு கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். மனுவ வாங்கிட்டு சரி செய்யிறோம் ன்னு சொல்லி அனுப்பிட்டாரு…” என்று சொல்லிக்கொண்டே “நீங்கதான் எதையாவது சொல்லி எங்களுக்கு பண்ணனும்” என்கிறார் சோகமாக!

ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?

அம்பானி – அதானி – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி ஆக்கிரமிப்பில் ரிசர்வ் வங்கி : ரிசர்வ் வங்கியா, ரிலையன்ஸ் வங்கியா ?

பா.ஜ.க. கூட்டணி அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஊடல் குறித்து, “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவே ரிசர்வ் வங்கியோடு மோடி அரசு முரண்பட்டு நிற்பதாக’’க் கூறுகிறது, ஆர்.எஸ்.எஸ். “தனது நிறுவன சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாட்டின் எதிர்கால நலன் கருதியும்தான் மோடி அரசோடு ஒத்துப்போக மறுப்பதாக’’க் கூறி வருகிறது, ரிசர்வ் வங்கி.

இந்த இரண்டு விளக்கங்களிலும் இம்மியளவும் உண்மை இல்லை. எனினும், இப்பிரச்சினையில் மோடி அரசு அம்பானி, அதானி உள்ளிட்ட சில குறிப்பிட்ட அதிகாரவர்க்கத் தரகு முதலாளிகளின் ஏஜெண்டாக நடந்துகொள்வதும், ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்ற முயலுவதும்தான், ரிசர்வ் வங்கியின் வர்க்கச் சார்பைக் காட்டிலும் அபாயகரமானதாகும்.

வாராக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பது, கடன் வழங்குவதில் 11 பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது, ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரிக் கையிருப்பை அரசிற்கு மாற்றுவது, பணப் பட்டுவாடாவைக் கண்காணிக்கத் தனியொரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவி ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை வெட்டுவது – இவைதான் பா.ஜ.க. கூட்டணி அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே எழுந்துள்ள ஊடலுக்குப் பின்னுள்ள காரணங்கள்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல்

கடந்த பிப்ரவரி மாதம் வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையொன்றை வங்கிகளுக்கு அனுப்பியது. அதில், மார்ச் 1 ஆம் தேதிப்படி 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வாராக் கடன்களை வைத்திருக்கும் நிறுவனங்கள், அந்தத் தேதியிலிருந்து 180 நாட்களுக்குள் தமது கடன் நிலுவைகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அக்கெடு தவறும்பட்சத்தில், அந்நிறுவனங்கள் மீது அடுத்த பதினைந்து நாட்களுக்குள் திவால் சட்டத்தின் கீழ் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வழிகாட்டியிருந்தது. மேலும், வாராக் கடன் நிலுவைகளைத் திருப்பிச் செலுத்துவதற்குச் சலுகை அளிக்கக்கூடிய வகையில், அக்கடன்களை மறுசீரமைக்கக் கூடாது (restructure) என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்தச் சுற்றறிக்கை வங்கிகளுக்குக் கிடைத்த மாத்திரத்திலேயே, இதனை அமல்படுத்தக் கூடாதெனக் கோரித் தனியார் மின் உற்பத்தி நிறுவனச் சங்கங்கள், ஜவுளி ஆலை அதிபர் சங்கம், தமிழகத்தைச் சேர்ந்த தனியார் கரும்பாலை சங்கம், குஜராத்தைச் சேர்ந்த கப்பல் கட்டும் தொழில் அதிபர் சங்கம் ஆகியவை பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்தன. அவற்றுள், அலகாபாத் உயர் நீதிமன்றம் அச்சுற்றறிக்கையைத் தடை செய்ய மறுத்தாலும், “வங்கிகளிடம் பேசித் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்குமாறு” மோடி அரசிற்கு ஆலோசனை வழங்கியது.

இதனையடுத்துத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் சங்கம் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கில், இச்சுற்றறிக்கைக்கு எதிராகப் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தானே விசாரிக்கப் போவதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் தன்னிச்சையான இந்த உத்தரவு காரணமாக ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை மறைமுகமாக முடக்கப்பட்டு, வாராக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டன.

படிக்க:
♦ ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !
♦ தேர்தல் என்பது பணநாயகமே – ரிசர்வ் வங்கி ஒப்புதல் !

வங்கிகளிடம் நிலுவையாக உள்ள மொத்த வாராக் கடனில் (9.61 இலட்சம் கோடி ரூபாய்) கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மட்டும் 7.03 இலட்சம் கோடி ரூபாய் என்ற உண்மையை உடைத்திருக்கிறார், சி.ஏ.ஜி. தலைவர். இதில் 32 தனியார் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக உள்ள கடன் தொகை 1.74 இலட்சம் கோடி ரூபாய். இந்த 32 தனியார் மின் உற்பத்தி திட்டங்களுள் 14 திட்டங்கள் லான்கோ, ஜி.எம்.ஆர்., ஜே.பி., அதானி, எஸ்ஸார் ஆகிய ஐந்து குழுமங்களுக்குச் சொந்தமானவை.

ஒருபுறம் உச்ச நீதிமன்றம் என்றால், இன்னொருபுறத்தில் மோடி அரசு, “தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களைத் திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்குக் கொண்டுவரக் கூடாது; தனியார் மின் உற்பத்தியாளர்களின் கடன்களை மறுசீரமைக்க வேண்டும்” என ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததோடு, அச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுமாறும் நிர்பந்தித்து வருகிறது.

மேலும், வாராக் கடன்களை அதிகமாக வைத்திருக்கும் 11 பொதுத்துறை வங்கிகள் புதிய கடன்களை வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை ரிசர்வ் வங்கி விலக்கிக் கொள்ள வேண்டும். வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்குக் கடன் கிடைக்குமாறு செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் உபரிக் கையிருப்பாக உள்ள மூன்று இலட்சம் கோடி ரூபாயில் ஒரு இலட்சம் கோடி ரூபாயை மைய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அடுத்தடுத்துப் பல நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது, மைய அரசு.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் திணிக்கப்பட்டிருக்கும் சங்கிகளான குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோரைக் கொண்டும், ரிசர்வ் வங்கிச் சட்டம் மைய அரசிற்கு அளித்திருக்கும் அதிகாரத்தைக் கொண்டும் இந்த நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது, மோடி அரசு. இந்தியப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருந்த 1991, 2008 காலக்கட்டங்களில்கூட அப்பொழுதிருந்த காங்கிரசு அரசு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே அதிர்ந்துபோய்க் குறிப்பிடுமளவிற்கு மோடி அரசின் நடவடிக்கைகள் அசாதாரணமாக அமைந்துள்ளன.

***

மும்பய் நகரில் நடந்த கருத்தரங்கமொன்றில், ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மோடி அரசு தலையிடுவதை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய அவ்வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, “மைய வங்கிகளின் சுதந்திரத்தை மதிக்காத அரசாங்கங்கள் விரைவாகவோ தாமதமாகவோ நிதிச் சந்தையின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடுவதோடு, ஒரு முக்கியமான ஒழுங்கு நிறுவனத்தின் சுதந்திரத்தை மதிக்கத் தவறியதற்காக வருந்த நேரிடும்” எனக் குறிப்பிட்டு, மோடி அரசை மறைமுகமாக எச்சரிக்கவும் செய்தார்.

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா.

அவரது உரைக்குப் பிறகுதான் மோடி அரசு ரிசர்வ் வங்கியை ஆட்டிப் படைக்க முயலுவது வெளியுலகிற்குத் தெரியவந்தது.

இந்த உண்மை அம்பலமானதைச் சகித்துக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் ஒருபுறம் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அந்நிய நாட்டுக் கூலிகளாக வசைபாடிவிட்டு, இன்னொருபுறம் நாட்டின் நலனுக்காகவே மோடி அரசு ரிசர்வ் வங்கியோடு சட்டத்திற்கு உட்பட்டுக் கலந்துரையாடிவருவதாகக் கதை கட்டின.

மேலும், “முதலாளிமார்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதன் மூலம் பொருளாதாரம் ஊக்கம் பெறும். அதன் மூலம் புதிய கடன்களை மட்டுமல்ல, பழைய கடன் களை அடைப்பதற்கான வாய்ப்பும் உருவாகும்” எனக் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் முட்டாள்தனமான, நகைக்கத்தக்க யோசனையையும் அவிழ்த்துவிட்டன.

பொருளாதார முடக்கத்திலிருந்தும் ஊழலிலிருந்தும் நாட்டை மீட்க வந்த தேவதூதனாகக் காட்டப்பட்ட மோடியின் ஆட்சியில், நாட்டின் ஜி.டி.பி. உயரவில்லை; மாறாக, வங்கிகளின் வாராக்கடன்தான் ஊதிப் பெருத்தது. ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த மோடி, அதற்கு நேரெதிராகப் பொதுமக்களுக்கு ஏற்கெனவே கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளையும் தட்டிப் பறித்தார்.

கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிக்கப் போவதாகக் கூறிக் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், சரக்கு சேவை வரி விதிப்பும் விவசாயத்தையும், கைத்தொழிலையும் நாசப்படுத்திய சாதனையைச் செய்தன. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, திறன் மிகு இந்தியா என அடுத்தடுத்து மோடி அரசு அறிவித்த ஒவ்வொரு திட்டமும் வெறும் பஞ்ச் டயலாக்குகள் என்பதைத் தாண்டி வேறு எதையும் சாதிக்கவில்லை.

படிக்க:
♦ மோடியின் பணமதிப்பழிப்பு : எஸ்கேப் ஆகிறார் குருமூர்த்தி !
♦ மோடி – ஜிஎஸ்டி – பணமதிப்பழிப்பு – தீபாவளி : மாபெரும் சர்வே முடிவுகள்

ஊதிப் பெருக்கப்பட்ட 2ஜி ஊழலைவிட மிகப்பெரும் ஊழலாகப் பரிணமித்திருக்கிறது, வாராக் கடன் தள்ளுபடி. போஃபர்ஸ் ஊழலைவிட மிகப்பெரும் முறைகேடாக அம்பலமாகியிருக்கிறது ரஃபேல் போர் விமான பேர ஒப்பந்தம். “நானும் தின்ன மாட்டேன் மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என வசனம் பேசி ஆட்சிக்கு வந்த யோக்கியவான் மோடியின் இலட்சணம் இதுதான்.

கடந்த நான்காண்டுகளில் பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரிகளின் மூலம் மைய அரசு பொதுமக்களிடமிருந்து அடித்த கொள்ளை ஏறத்தாழ 7.5 இலட்சம் கோடி ரூபாய். இந்த ஆண்டுக்கான வருமானத்தையும் சேர்த்தால், அவ்வரிக் கொள்ளை மட்டும் 10 இலட்சம் கோடி ரூபாயை எட்டுகிறது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மாதமொன்றுக்கு 80,000 கோடி ரூபாய் முதல் ஒரு இலட்சம் கோடி ரூபாய் வரை மறைமுக வரியாக வருமானம் ஈட்டி வருகிறது, மோடி அரசு. நேர்முக வரியாக 10 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இவற்றுக்கு அப்பால் மைய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 50,000 கோடி ரூபாய் வரை இலாப ஈவாக அளிக்கின்றன.

வருடமொன்றில் சற்றொப்ப 20 இலட்சம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் மோடி அரசுக்கு, ரிசர்வ் வங்கியிடம் ஒரு இலட்சம் கோடி ரூபாயைக் கேட்க வேண்டிய தேவையென்ன? கடந்த நான்காண்டுகளில் வசூலிக்கப்பட்ட வரி வருமானம் – ஏறத்தாழ 80 இலட்சம் கோடி ரூபாய் எங்கே மாயமானது?

வரி வருமானத்தின் பெரும்பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவழிப்பதாகக் கணக்குக் காட்டுகிறார்கள், சங்கிகள். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றிய கூலித் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய கூலியைக்கூட ஒழுங்காகக் கொடுக்காமல் நிலுவை வைத்திருக்கும் மோடி அரசு, மக்கள் நலத் திட்டங்களில்தான் பணத்தைக் கொட்டுகிறதாம், அதை நாம் நம்ப வேண்டுமாம்!

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் திணிக்கப்பட்டிருக்கும் சங்கிகள் (இடமிருந்து) குருமூர்த்தி, சச்சின் சதுர்வேதி மற்றும் சதீஷ் மராத்தே.

மோடி ஆட்சியில் ஒருபுறம் மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்படுகின்றன. இன்னொருபுறமோ மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு வரிப் பணம் மொய்யாக எழுதப்படுகிறது. “பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப் பெரிய ஊழல்” எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், பத்திரிகையாளர் சாய்நாத்.

மகாராட்டிரத்தில் 2.8 இலட்சம் விவசாயிகள் சோயா பயிரிட்டுள்ளனர். இப்பயிர்க் காப்பீட்டிற்காக ஒரேயொரு மாவட்டத்தில் மட்டும் விவசாயிகளும் மத்திய மாநில அரசுகளும் இணைந்து ரிலையன்ஸ் இன்சூரன்சுக்கு செலுத்திய பிரிமியம் தொகை 173 கோடி. மாவட்டத்தில் மொத்த பயிரும் அழிந்துபோனாலும்கூட, விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் காப்பீடு நிறுவனம் 30 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாகத் தரும். எந்தவொரு முதலீடும் செய்யாமல் ரிலையன்சுக்குக் கிடைக்கும் இலாபம் 143 கோடி ரூபாய். ஒரு மாவட்டத்தின் கணக்கு இது. மாநிலம் முழுவதற்கும், நாடு முழுவதற்கும் கணக்குப் போட்டுப் பாருங்கள், இச்சட்டபூர்வ ஊழலின் பரிமாணம் தெரியும் என்கிறார் அவர்.

மோடி அரசு, இப்பொழுது, தேர்தலை முன்னிட்டு, மக்களின் பணத்தை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்கும் மானியமாக எழுத முயலுகிறது. ரிசர்வ் வங்கியிடமுள்ள உபரிக் கையிருப்பைத் தட்டிப் பறித்து, அந்தப் பணத்தைக் கொண்டு ஏதோவொரு கவர்ச்சித் திட்டத்தை அறிவித்து எதிர்வரும் தேர்தல்களில் தனது வெற்றியை உத்தரவாதப்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது. இந்த அயோக்கியத்தனத்தை எப்படி அனுமதிக்க முடியும்?

***

ங்கிகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன்களை வாரி வழங்க வேண்டும், அக்கடன்களை அவர்கள் திருப்பிச் செலுத்துவதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கக்கூடாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் கடன் கொள்கை!

கார்ப்பரேட் நிறுவனங்களின் கழுத்தில் துண்டைப் போட்டு, அக்கடன்களை வசூலிக்க முயற்சி செய்தார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் ரகுராம் ராஜனுக்குப் பதவி நீட்டிப்பு வழங்க மறுத்தது, மோடி அரசு.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.

பா.ஜ.க.வின் சமூக அடித்தளமான வணிகர்கள், சிறுதொழில் அதிபர்களைக் கவருவதற்காக அறிவிக்கப்பட்ட முத்ரா கடன் திட்டம், பொதுத்துறை வங்கிகளின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் இன்னொரு சுருக்குக் கயிறு என எச்சரித்திருக்கிறார், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் முன்பாக, வாராக் கடன் வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பட்டியல் இட்டு, அவை குறித்து ஒரு பல்நோக்கு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் மீது இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் மோடி, இப்பொழுது உர்ஜித் படேல் வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையையும் ரத்து செய்யுமாறு மிரட்டுகிறார். “மோடியோடு ஒத்துழைக்காவிட்டால் பதவி விலகிச் செல்” என உர்ஜித் படேலை வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறார்கள், சங்கிகள்.

தனியார்மய-தாராளமய காலக் கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் என்பது பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அன்றி வேறொன்றுமில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பட்ஜெட் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்தச் சுதந்திரம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மோடியின் ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் எந்த இலட்சணத்தில் இயங்கியது என்பதும் நாம் அறியாத இரகசியமல்ல.

உர்ஜித் படேல் குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதோடு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்ற காரணங்களுக்காகவே ரகுராம் ராஜனுக்கு அடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் மோடியின் ஆள் என நம்பப்பட்டதை நிரூபிக்கும் வண்ணம், மோடி அரசு இரவோடு இரவாக இந்திய மக்கள் மீது நடத்திய பணமதிப்பழிப்பு தாக்குதல் நடவடிக்கையை மறுபேச்சின்றி ஆதரித்தார்.

படிக்க:
♦ கார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ வங்கி
♦ நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது ?

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோர் நியமிக்கப்பட்டதையும், அக்கும்பல் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததை எதிர்த்துவந்த காரணத்திற்காக நாச்சிகேட் மோர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டதையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.

எனினும், வாராக் கடன்களை வசூலிப்பதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதிலும் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே உர்ஜித் படேல் மீது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆத்திரம் கொண்டிருப்பதோடு, அவரை மாற்றிவிட்டு வேறொரு தலையாட்டி பொம்மையை ஆளுநராக நியமித்து, ரிசர்வ் வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ரிசர்வ் வங்கியை, ரிலையன்ஸ் வங்கியாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். அத்திட்டம் நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகளும், அதிலுள்ள மக்களின் சேமிப்பும் கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக் களமாக மாற்றப்படும். பொதுத்துறை வங்கிகளைச் சட்டபூர்வமாகத் தனியார்மயப்படுத்தாமலேயே, அவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் கைகளில் ஒப்படைத்துவிடும் சதி அரங்கேற்றப்படும்.

– ரஹீம்
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

பகுத்தறிவாளரின் பகுத்தறியும் தன்மை கேள்விக்குள்ளாகும் போது … | அன்னா

4
அன்னா

னது நாத்திகப் பயணம் ஆரம்பத்தில் கடவுளின் இருப்பைக் கேள்வி கேட்பதில் தொடங்கவில்லை. ஏன் மதங்களை வலுவாகக் கடைப்பிடிக்கும் அநேகமான சமூகங்களில் பெண்களின் நிலை மிகக் கீழ்த்தரமாக இருக்கிறதென்ற தேடலே முதல் படியாக இருந்தது. பள்ளிக் காலத்தில்  இராமாயணத்தில் சீதையைத் தீக்குளிக்கச் சொல்வது எந்த வகையில் நியாயம், வன்புணர்ந்த இந்திரனுக்கு எதுவும் தண்டனை கொடுக்காமல் அகலிகையின் மேல் ஒரு தவறும் இல்லாத போது, அவளை ஏன் கல்லாக்க வேண்டும் போன்ற கேள்விகள் இருந்தும் மதங்களையோ மதப் புத்தகங்களையோ பள்ளிக் காலங்களில் ஆழமாகப்  படித்ததோ, சிந்தித்ததோ இல்லை, அதற்கு நேரமும் இருக்கவில்லை. அப்போது எனக்குப் பெரியாரைத் தெரிந்திருக்கவில்லை.

Dawkins

அவ்வாறான தேடலில் முதலில் வாசித்த புத்தகங்களில் ஒன்று Genocide of women in Hinduism (இந்துமதத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட பெண்கள்) என்ற சீதனத்திற்காகக் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரி எழுதிய புத்தகம்.  அதன் பின்னான தேடலிலேயே எனக்கு முதலில் Dawkins – டாவ்கின்ஸ் -ஜப் பற்றித் தெரிந்தது.  2011 வரை வந்த‌ Dawkins இன் எல்லா புத்தகமும் என்னிடம் உண்டு.  The God Delusion – டி காட் டிலியூசன் புத்தகமெல்லாம் ஒரு இரண்டு, மூன்று நாட்களிலேயே வாசித்து முடித்தது, அதன் பின்  The Greatest Show On Earth – தி கிரேட்டஸ்ட் ஷோ ஆஃப் எர்த் – பிரசுரித்த பின் நடந்த book tour (புத்தக சுற்றுலா)இல் நியூசிலாந்து வந்த போது போய்ப் புத்தகத்தில்  autograph (கையெழுத்து) வாங்கியது, பின் 8-12 வயதுச் சிறுவர்களுக்காக The Magic of Reality (தி மேஜிக் ஆஃப் ரியாலிட்டி) புத்தகம் வெளிவந்த போது என் மகனுக்கு மூன்றே வயதான போது, அவனுக்கு நானே வாசித்துக் காட்டலாம் என்று வாங்கியதும் நினைவில் உள்ளன. அந்தளவு பிடித்திருந்தது Dawkins இன் புத்தகங்கள்.

அதன் பின் 2011 ஆண்டே  Dawkins இன் பால்வாத, இன வாதக் கருத்துகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியது.  இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் எந்தளவுக்கு ஒடுக்கப்படுகிறார்கள் – இவர்கள் மேலைத்தேய நாடுகளில் சொகுசாக இருந்து கொண்டு தமது பாலியல் ஒடுக்குமுறையைக் கதைக்கிறார்கள் என்ற தொனியில் தொடங்கி, முஸ்லிம்களுக்கு நோபல் பரிசுகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கவில்லை, அதனால் வெள்ளையர்களே புத்திசாலிகள் என்ற தொனியில் கதைத்தது, சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள் எல்லாம் பெரியதாக அவர்களைப் பாதிக்காது என்றது, பாலியல் வன்முறையாளர் எனக் குற்றம் சாட்டப்பட்ட  தனது பிரபல நண்பர்களின் பக்கம் பேசியது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

படிக்க:
கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !
ஆரியபட்டரின் அறுபதாவது சீடர் ஸ்டீபன் ஹாக்கிங் !

முதலில் மிகுந்த அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. Oxford University (ஆக்ஸ்போர்டு பல்கலை) இல் Professor for public understanding of science (அறிவியலின் பொதுப்புரிதல் துறை பேராசிரியர்) ஆக இருந்து கொண்டு எப்படி இவ்வாறு சிந்திக்கலாம். ஒரு விஞ்ஞானிக்குத் தானும் மனிதன், தனக்கும் எத்தனையோ bias (பக்கச்சார்பு) இருக்கும். அதனால் கதைப்பதை, அதுவும் ஒரு பெரிய பதவியில் இருந்து கதைப்பதை சரியா எனச் சிந்தியாமல், கொஞ்சமும் பொறுப்பற்று நடப்பதை ஏற்றுக் கொள்ள கஷ்டமாகவே இருந்தது.  Dawkins ஆல் தான் நாத்திகரானேன் என்று சொல்ல முடியாது. ஆனால் Dawkins இன் எழுத்துகள் எனது சிந்தனையை, மதவாதக் கருத்துகளுடன் விவாதிக்கும் திறனை விருத்தியாக்க மிகவும் உதவியது என்றால் மிகையில்லை.. ஆனால் 2011-க்குப் பின் Dawkins இன் புத்தகங்கள் எதுவும் வாங்கியதில்லை.

Lawrence Krauss. Krauss

Dawkins இன் பின் அந்த லிஸ்டில் இப்ப பல விஞ்ஞானிகள் வந்தாயிற்று. தீவிர Dawkins ரசிகையாக இருந்த காலத்தில் தெரிய வந்த மற்ற ஒருவர் Lawrence Krauss (லாரன்ஸ் கிராஸ்). Krauss இன் A Universe from Nothing book tour க்கும் போயுள்ளேன். எத்தனையோ பாலியல் குற்றச்சாடுகளுக்குப் பின் இப்போ அண்மையிலேயே Krauss ஜ‌ப் பதவி நீக்கம் செய்துள்ளார்கள். பிரபல விஞ்ஞானிகளில் முதலில் தனது செய்கைகளுக்கு கொஞ்சமாவது விளைவுகளைச் சந்தித்தது Krauss தான் என நினைக்கிறேன்.

Richard Feynman (ரிச்சர்டு ஃபெய்ன்மென்) மற்றொரு பெண் வெறுப்புக் கருத்துகளை, பழக்க வழக்கங்களைக் கொண்ட‌ பிரபலமான இயற்பியலாளர். இப்போது உயிருடன் இல்லை. Feynman இன் கருத்துகளையும் பல தளங்களில் பகிர்ந்துள்ளேன். எனது வலைத்தளத்தில் இப்பவும் Feynman இன் Quotes (மேற்கோள்கள்) இருக்கிறதென்று நினைக்கிறேன். நீக்க வேண்டும்.

Richard Feynman

நான் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு செய்யும் காலங்களில் எனக்குப் மிகப் பிடித்த பொழுது போக்கு, மதவாதிகளுடன் அறிவியல் விவாதிப்பது. என் வலைப்பக்கத்திலேயே பல பதிவுகள் எழுதியுள்ளேன்.  In fact, பல சமயங்களில் அவர்களின் பக்கங்களில் எனது எதிர்க்கருத்துகளை வெளியிட மாட்டார்கள் என்பதால்தான் வலைப்பக்கமே தொடங்கினேன் என்று கூடச் சொல்லலாம். அப்பெல்லாம் இவர்களின் எழுத்துகள் எனது விவாத முறையை நெறிப்படுத்தி இருக்கின்றன. இவர்கள் இவ்வாறு பெண் வெறுப்பாளர்களாக, இனவாதிகளாக, பாலியல் வன்முறை செய்பவர்களாக இருப்பார்கள் எனத் துளி கூட எண்ணவில்லை.

அறிவு கொஞ்சம் முதிர்ச்சி அடையத் தான் விளங்கியது மதங்களைக் கடுமையாகப் பின்பற்றும் சமூகங்கள் மட்டுமல்ல எல்லா சமூகங்களிலும் எல்லா மனிதர்களிடையேயும் பால் ஒடுக்குமுறையாளர்களும் இனவாதிகளும் இருக்கிறார்கள் என்று. Charles Dawkin, Albert Einstein உட்பட‌விஞ்ஞானிகள் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

படிக்க:
அறிவியலா? இறையியலா? புதிய கலாச்சாரம் செப்டம்பர் வெளியீடு
சாகித்ய அகாடமி புகழ் ஆயிஷா நடராஜனின் உண்மை முகம்

சமுதாயத்தில் நாம் காணும் பல இன, பால், சாதி சமத்துவமின்மைகளுக்கு முக்கியக் காரணம் வரலாற்று ரீதியாக, ஆண்டாண்டு காலமாகத் தொடரும் பாகுபாடுகள் தானே ஒழிய‌, உயிரியல் அல்ல.

அன்னா
(கட்டுரையாளர் குறிப்பு :  மாதவிடாய், கருப்பை, கருத்தரித்தல் தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் மற்றும் பெண்ணியவாதி. கருத்தாடல் பக்கத்தில் “அறிவியல்-பெண்ணியம்-சமூகம்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்)