தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் மலைகளை ஒட்டி அமைந்துள்ளன கிருஷ்ணாபுரம், பூனைக்குண்டு, காட்டுக்கொள்ளை, போடூர் உள்ளிட்ட கிராமங்கள். அங்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கூடை பின்னும் கைத்தொழில்தான் அம்மக்களின் வாழ்வாதாரம்.
அவ்வாறு பின்னப்படும் கூடைகளை தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். ஆனால், இன்றைக்கு கொரோனா ஊரடங்கு மற்றும் பிளாஸ்டிக் கூடை பயன்பாட்டால் இத்தொழில் சரிந்துவிட்டதாக வேதனையுடன் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
மூங்கிலை பயன்படுத்தி ஆடு, மாடு வளர்ப்புக்கான பட்டி, கோழி வளர்ப்பு, காய்கறி கூடைகள், தானிய விதைப்பு கூடை, மீன் பிடிப்பதற்கான கூடைகள் என பல்வேறு கைவண்ணங்களில் கூடைகளை பின்னுகின்றனர் இந்த கைத்தொழில் கலைஞர்கள்.
இந்த கைத்தொழில் கலைஞர்களின் பின்னால் உள்ள வாழ்க்கை எத்தனை பேருக்கு தெரியும்? அதிகாலை 5 மணிக்கு மலைக்கு செல்லும் மக்கள் அந்தி பொழுதில்தான் வீடு திரும்புகின்றனர். சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மலையை கடப்பதற்கு சுமார் 4 முதல் 5 மணி நேரத்தில் கடந்து ஒரு கட்டு மூங்கிலை தலையில் சுமந்துபடி பென்னாகரத்தில் ரூ.500-க்கு விற்பனை செய்கின்றனர்.
“வரும் வழியில் வனத்துறையினரின் கண்களில் மாட்டிவிட்டால் ரூ.200 அபராதம் போட்டு கத்தியும் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும். யானை கண்ணில் மாட்டிவிட்டால் உயிரும் மிஞ்சாது. தினமும் பயந்து பயந்துதான் காட்டுக்குள் செல்வோம்” என்று வேதனையோடு கூறுகிறார் சரோஜா. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் இந்த தருவாயில் ஒருவர் மட்டும் சென்றால் வாழ முடியாது என்ற நிலையில் பெண்களும் இந்த காட்டிற்குள் சென்று வருகிறார்கள்.
இந்த கூடைகளின் பயன்பாடு என்பது விவசாயத்தோடும், சிறுதொழிலோடும் பாரம்பரியத்தோடும் காலம்காலமாக பின்னிபிணைந்ததாக இருக்கிறது.
இயற்கை முறையில் தயார்செய்யப்படும் மூங்கில் குச்சிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்காமல் பிளாஸ்டிக்கை அனுமதித்தன் விளைவாக சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, அத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் அழிந்து வருவது வேதனை அளிக்கிறது.
This slideshow requires JavaScript.
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பேன் என்று மாறி மாறி வரும் கட்சிகள் அறிவித்தாலும் பிளாஸ்டிக்கை ஒழிக்காமல், காடுகளை நம்பி பிழைப்பை நடத்தும் தொழிலாளர்களை ஒழித்துக்கட்டுகிறது.
காய்ந்த மூங்கில் குச்சிகளை வெட்டி பிழைப்பு நடத்தும் மக்களிடம் காடுகளை அழிக்கிறார்கள் என்று கூறி அபராதம் வசூலிக்கும் அரசு, ஈஷா யோகா நடத்தும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் சுமார் 2,000 ஏக்கர் வனப்பகுதியை வளைத்துப்போட்டு காடுகளை அழித்தால் அது கடவுள் பக்தி என்று வேடிக்கை பார்க்கிறது.
காடுகளை அழித்து கனிமவளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடித்தால் அதற்கு பெயர் நாட்டின் வளர்ச்சி, என்கிறார்கள். என்ன ஒரு ஜனநாயகம்? இதுதான் இன்றைய சுதந்திர இந்தியா? அடித்தட்டு மக்களுக்கு விடிவில்லாமல் சுதந்திரம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது.
எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியானது ரூ.5.70 லட்சம் கோடி கடனையும், ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பையும் தமிழகத்திற்கு உருவாக்கியதோடு, அதை தற்போதைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தலையில் சுமத்திவிட்டு சென்றதையும் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
அதிமுக 7 ஆண்டுகளில் உருவாக்கிய கடனையும் வருவாய் இழப்பையும், மக்கள் ஒத்துழைப்புடன் வரும் 5 ஆண்டுகளில் அடைத்து, கடன் இல்லா தமிழகத்தை உருவாக்கி விடுவோம் என்றும் உறுதி அளித்துள்ளார் நிதி அமைச்சர்.
தமிழகத்தின் நிதிநிலையை எப்படி உயர்த்துவார் என்பதையும் இந்த அறிவிப்பிலேயே தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர். “மக்கள் ஒத்துழைப்புடன்” இந்தக் கடனை அடைக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். அடிமை அதிமுக கும்பல் ஏற்றிவைத்த கடன்சுமை ஒன்றல்ல இரண்டல்ல சுமார் ரூ.5.70 லட்சம் கோடி. இக்கடனை அடைக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களாகிய எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுப்போட்ட உழைக்கும் மக்களாகிய உங்களுக்கும் தான் என சொல்லாமல் சொல்லிவிட்டார் பி.டி.ஆர்.
“தமிழகத்தில் 2 கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 238 குடும்பங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு குடுப்பத்தின் மீதும் ரூ.2,64,944 (2 லட்சத்து 64 ஆயிரத்து 946) கடன் உள்ளது” என்ற குறிப்பான கணக்கீடு, இன்னும் துலக்கமாக இந்தக் கடன்களுக்கு மக்களை பொறுப்பாக்குவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஒவ்வொரு கட்சிகளும் ஆளவரும்போது முந்தைய ஆட்சியாளர்கள் மீது “கஜானாவை காலி செய்துவிட்டார்கள்; கடனை ஏற்றிவிட்டார்கள்; ஊழல் செய்துவிட்டார்கள்; வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டார்கள்” என்று குறை கூறுவதும், அதை சரி செய்ய வரியை, கட்டணங்களை உயர்த்துவதும் காலங்காலமாக நடந்துவரும் ஒன்றுதான்.
கடந்த 2011-ம் ஆண்டு ஜெயா ஆட்சியில் அமர்ந்ததும், இதே பஞ்சப்பாட்டைப் பாடி, “இழந்த பொருளாதாரத்தை மீட்க கசப்பு மருந்தை சகித்துக் கொள்ளுமாறு” கூறி பேருந்து கட்டணத்தை தீயாக ஏற்றியது நினைவிருக்கலாம்.
கடந்த காலத்தில் அனைத்து ஆட்சியாளர்களும் மாநிலத்தின் நிதி நெருக்கடியை ‘இளிச்சவாயர்களாகிய’ நம் மீதுதான் சுமத்தி வந்த்கிருக்கின்றனர். இது மறுக்க முடியாத உண்மை.
திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பல்வேறு சலுகைகளையும் இலவசங்களையும் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தது. அதற்கான நிதியை நம்மிடமிருந்தே வசூலிப்பதற்கான ஒரு முன் தயாரிப்பு அறிக்கைதான் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த வெள்ளை அறிக்கை.
கடந்த காலங்களில் வெள்ளையறிக்கைகள் நிதிநிலைக்கு மட்டுமே வெளியிடப்படவில்லை. புயல்-வெள்ளம்-வரட்சி இவற்றிற்கான நிவாரணம், அத்தியாவசயப் பொருட்களின் விலையேற்றம், மத-இன-சாதி கலவரங்கள் இவைகளையொட்டி அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வெள்ளை அறிக்கை என்று சொல்லப்படும் கடந்த கால அறிக்கைகளில் உண்மை விவரங்களும் – தரவுகளும் முழுமையாக வெளியிடப்பட்டது இல்லை. அரசானது வெளிப்படையாக வருவதாக கூறிக்கொள்ளப்படும் வெள்ளை அறிக்கைகளில், எந்த அரசும் வெளிப்படையாக தங்களின் தவறுகளையும், குறைகளையும் முன்வைத்ததில்லை. அரசுக்குச் சாதகமான வகையில் தான் இந்த வெள்ளையறிக்கைகள் வெளியிடப்பட்டன.
அந்த வகையில் இந்த வெள்ளையறிக்கை உண்மைகளைக் கொண்டுள்ளது என நம்பலாம். ஏனெனில் திமுக அரசால் வெளியிடப்படும் இந்த வெள்ளையறிக்கை, கடந்த கால அடிமைகளின் ஆட்சியைப் பற்றியது அல்லவா ?
பொதுவாகவே ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியில் நடக்கும் விவகாரங்களுக்குத் தான் வெள்ளையறிக்கை கொடுப்பார்கள். இங்கு முந்தைய ஆட்சியின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் வெள்ளையறிக்கை வெளியாகியிருக்கிறது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளையறிக்கை முக்கியமாக 4 காரணங்களுக்காக வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
1. எதிர்கட்சியில் இருந்தபோது (வெள்ளை அறிக்கை வெளிப்படையாக) கேட்டதை, தாம் ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒளிவு மறைவின்றி வெளியிடுவதற்காகவும்
2. வெளிப்படை தன்மையான அரசாக இருக்க வேண்டுமென்பதற்காகவும்
3. நமது கடன், வருவாய், செலவினம், நிலுவைத்தொகை உள்ளிட்ட நிதிநிலையை தெரிவிப்பதற்காகவும்
4. மாநிலத்தின் வளர்ச்சி, வேலையின்மை, தனிநபர் வருமானம் எப்படி மாறியுள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்
இந்த வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த கால அதிமுக ஆட்சியின் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் இதனை வெள்ளையறிக்கை எனலாம். ஆனால், வெளிப்படையான அரசு என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? தன்னுடைய ஆட்சியினைப் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டால் வெளிப்படையான அரசு என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் முந்தைய ஆட்சியின் அவலங்களை வெளியிட்டதையெல்லாம் வெளிப்படைத்தன்மை என்று கூறிக் கொள்வது நகைக்கத் தக்கதே.
இத்துடன் கூடுதல் அறிவுரையாக, எந்த ஒரு மாநிலத்திற்கும் வருவாய் அடிப்படை; அடிப்படை வருமானம் மட்டுமே. வருவாய் இல்லாத அரசு கடன் செலவினத்தையும் குறைக்க இயலாது என்பதையும் கூறிச் சென்றிருக்கிறார்.
வருவாய் இல்லாமல் வாழ்வை நடத்த முடியாது என்பதையும், வருவாய்க்கு உட்பட்டுதான் வாழ்வை நடத்த வேண்டும் என்பதையும் மீறினால் கடன் வாங்க வேண்டியது வரும் என்பதையும் சொந்த வாழ்க்கையிலேயே உணர்ந்து இருக்கிற நம்மிடம் ஏன் இதனை வலியுறுத்திச் சொல்ல வேண்டும்? எல்லாம் காரியமாகத்தான்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வரிகள், நீர், மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றுக்கான கூடுதல் கட்டணத்தையும் நம் தலையில் சுமத்துவதற்கு முன்பான பீடிகைதான் இது.
ஆனால் இந்த வரிகளையும், கட்டண உயர்வையும் நாம் செலுத்துவதற்கு ஏற்றவகையில் நமது சம்பள உயர்வையோ, வேலை வாய்ப்பையோ உறுதி செய்வதற்கான எந்த முயற்சிகளைப் பற்றியும் வாய் திறக்கவில்லை.
அரசுத்துறையில், பொதுத்துறைகளின் நட்டத்திற்கும் வருவாய் இழப்புக்கும் நட்டத்திற்கும் கடனுக்கும் எந்த வகையிலும் மக்கள் காரணம் அல்ல. அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் ஆளும் வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து கல்லா கட்டுவதுதான் இவ்வளவு இழப்புகளுக்கும் காரணம்.
தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை நடைமுறைப்படுத்தி அதன் மூலம், பெருமுதலாளிகளையும், பன்னாட்டு முதலாளிகளையும் கொள்ளையடிக்க வழிவகுப்பதும், அதில் கமிசனாக பல கோடிகளை அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை பதுக்கிக் கொள்வதும்தான் இங்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளுக்குக் காரணம்.
இதற்கு மின்சாரத் துறை கொள்முதலில் நடந்திருக்கும் முறைகேடுகளும், சமீபத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை தேடுதல் வேட்டை நடத்திய வேலுமணி ஊழல் விவகாரமும் நல்ல உதாரணங்கள்.
உண்மை இப்படி இருக்க, அரசுக்கு ஏற்பட்ட நிதிச்சுமை, கடன்கள் ஆகியவற்றுக்கான அடிப்படைக் காரணமாக அதிமுக அடிமைகளின் ஊழல் முறைகேடுகளைக் காட்டுகிறது திமுக அரசு. ஊழல் முறைகேடுகளின் ஊற்றுக்கண்ணான தனியார்மயக் கொள்கைகளைப் பற்றி எங்கும் வாய் திறக்கவில்லை.
கடந்த ஆட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து இழப்புகளை மீட்டெடுப்பது மட்டுமின்றி ஊழலில் முக்கியப் பங்காற்றிய தனியார் நிறுவனங்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து இழப்புகளை மீட்டெடுப்பதுதானே நியாயமானது.
சரி அதற்கு வழக்கு நடத்த நாளாகும் என்றாலும், வரிவிதிப்பு ஒன்றுதான் வருவாயைப் பெருக்குவதற்கான தீர்வா ? தனியார் பெருநிறுவனங்களுக்குப் போட்டியாக அரசே நிறுவனங்களை நடத்தி நிதி திரட்டலாமே? மாநில நெடுஞ்சாலைகளின் டோல்கேட்டுகளில் கொள்ளை இலாபமடிக்கும் தனியார் நிறுவனங்களை விரட்டிவிட்டு, அரசே நியாயமான கட்டணத்தைப் பெற முடியாதா ? தூய்மைப் பணியாளர்களை பணிக்கமர்த்தும் தனியார் துப்புரவு நிறுவனங்களை விரட்டிவிட்டு அரசே அதில் ஈடுபட்டு, அந்த தனியார் நிறுவனங்களுக்குச் செய்யும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாதா ? ஆனால் இவை எதையும் திமுக அரசு செய்யப்போவதில்லை.
ஏனெனில், தனியார்மயம் தாராளமயம் உலகமயம் தான் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பளத்திற்கு மேலான ‘கிம்பளத்திற்கு’ ஆவன செய்கிறது. ஆகவே தமது ‘கிம்பள’ வருவாயை இழக்க ஒருபோதும் சம்மதிக்காத அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும், மொத்த சுமையையும் மக்களாகிய நமது முதுகில்தான் சுமத்துவர்.
சுருக்கமாகச் சொன்னால், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூடுதல் கட்டண, வரிவிதிப்புக்கான அறிவிப்புகளுக்கும், உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தபிறகு இரண்டாம்கட்ட கட்டண, வரிவிகித உயர்வுக்கும் தயாராக இருக்குமாறு நமக்கு முன்னறிவிப்பு விடுக்கிறது நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கை !
ஐ.நா.வால் கூட்டப்பட்ட முன்னணி விஞ்ஞானிகள் குழு கடந்த திங்களன்று ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை, மனிதகுலத்திற்கு ஒரு அப்பட்டமான எச்சரிக்கையை விடுக்கிறது. அது கூறுவதாவது : “பருவநிலை நெருக்கடி இங்கே உள்ளது; அதன் மிகவும் நாசகரமான விளைவுகளில் சில இப்போது தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. ஆக மிகப் பெருமளவிலும் விரைவாகவும் பசுமைக்குடில் வாயுக்கள் (Green house Gases) வெளியேற்றப்படுவதை குறைப்பதன் மூலம் மட்டுமே வரவிருக்கும் பேரழிவைக் கட்டுப்படுத்த முடியும்.”
பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச குழுவால் (ஐபிசிசி) கூட்டப்பட்ட 200 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஒன்றுகூடி ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை இது. இந்த புதிய அறிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஆய்வுகளின் ஒரு பரந்த பகுப்பாய்வை பிரதிபலிக்கிறது. ஏனெனில் உலகெங்கிலும் உள்ள மக்கள் வரலாறு காணாத வெப்பநிலை மற்றும் கொடிய தீவிர வானிலையால் – பேரழிவு காட்டுத்தீ முதல் மிதமிஞ்சிய பருவ மழை, தீவிர வறட்சி வரை – பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஞ்ஞானிகளின் ஆய்வுப் பணி என்பது மனித செயல்பாடு – குறிப்பாக புதைபடிவ எரிபொருள்களை எரிப்பது – பருவநிலையை எந்த அளவிற்கு மாற்றியமைத்துள்ளது என்பது பற்றிய ஒரு திடுக்கிடச் செய்யும் மதிப்பீடு ஆகும் . “இதுவரையில்லாத அளவு” புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்ட உயர்வு மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும், பேரழிவை ஏற்படுத்தும் பிற மாற்றங்களை இத்தகைய மனிதச் செயல்பாடுகள் உருவாக்குகின்றன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும், பெரும் பவளப் பாறைத் திட்டுகள் மற்றும் அமேசான் மழைக்காடுகள் போன்ற பல்லுயிரியல் சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆபத்தில் ஆழ்த்துவது, அனைத்து நகரங்களும் துடைத்தெறியப்படுவது உள்ளிட்ட மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதே போல, உலகின் அடர்ந்த மக்கள்தொகை கொண்ட பெரும் நிலப்பரப்புகளுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன.
பாரிஸ்-சாக்ளே பல்கலைக்கழகத்தின் பருவநிலை விஞ்ஞானியும் அறிக்கையை தயாரித்த குழுவின் இணைத் தலைவருமான வாலரி மாசன்-டெல்மோட் “இந்த அறிக்கையானது உண்மை நிலவரத்தை உணர்த்துகிறது” என்று கூறுகிறார். மேலும், “இப்போது எங்களிடம் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பருவநிலை பற்றிய தெளிவான சித்திரம் உள்ளது. இது (பருவநிலை மாற்றத்தில்) நாம் எதை நோக்கிச் செல்கிறோம், என்ன செய்ய முடியும், நாம் எப்படி தயார் செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ள இன்றியமையாதது.” என்கிறார்
புதிய பகுப்பாய்வின் ஒரு மையக் கண்டுபிடிப்பு என்னவென்றால், பாரிஸ் உடன்படிக்கையின் இலக்கான உலக வெப்பநிலை உயர்வை, தொழில்துறை உற்பத்திக்கு முந்தைய கட்டத்தை விட 1.5° செண்டிகிரேடுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு பேரபாயத்தில் உள்ளது. கொள்கை வகுப்பாளர்கள் (நாடுகளின் ஆட்சியாளர்கள்) பசுமைக்குடில் வாயு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர்.
அறிக்கையின்படி, 1850-ம் ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கடந்த நான்கு பத்தாண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டும், அதற்கு முந்தைய எந்த பத்தாண்டையும் விட தொடர்ந்து அதிக வெப்பமடைதல் நிகழ்ந்துள்ளது. வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவானது இரண்டு மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் தற்போதுள்ள “பசுமைக்குடில் வாயு உட்பட சுற்றுச் சூழலை மாசு படுத்தும் கழிவுகளின் வெளியேற்றத்தை வைத்துப் பார்க்கையில் புவியின் மேற்பரப்பு வெப்பமயமாவது குறைந்தபட்சம் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொடரும்”
மறுகாலனியாக்க காலகட்டத்தில் தீவிரமாக அதிகரித்திருக்கும் புவி வெப்பமயமாதல்
“வரவிருக்கும் பத்தாண்டுகளில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) மற்றும் பிற பசுமைக்குடில் வாயு வெளியேற்றப்படுவது தீவிரமாக குறைக்கப்படாவிட்டால் 21-ம் நூற்றாண்டில் புவி வெப்பமடைதல் 1.5°C(செண்டிகிரேடு) மற்றும் 2°C க்குள் இருக்க வேண்டும் என்ற இலக்கு மீறப்படும்” என்று ஐபிசிசி குழு எச்சரிக்கிறது.
“பருவநிலையில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களைப் பார்க்கும்போது, நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் இல்லாவிட்டாலும்கூட, இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுளில் முன்னெப்போதும் நடந்திராத மாற்றங்களாகும். ஏற்படப் போகும் இந்த மாற்றங்களில் சில ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இவை மீண்டும் தமது பழைய நிலைமைக்குத் திரும்ப முடியாதவை. உதாரணமாக கடல் மட்டம் உயரத் தொடங்கியிருப்பதானது இன்னும் நூறு ஆண்டுகளிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் வரை தொடர்ந்து மாற்றமின்றி உயர்ந்து கொண்டே இருக்கும்” என்று இந்த அறிக்கை கூறுகிறது. இது ஐபிசிசியின் 195 உறுப்பு நாடுகளால் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
“இருப்பினும், கரியமில வாயு மற்றும் பிற பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுவதை உறுதியாகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் குறைக்கும்போது அது பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும்” என்று அறிக்கை வலியுறுத்துகிறது.
“இதனால் காற்றின் தரம் அதிகரிப்பது (காற்று சுத்தமடைவது) போன்றவை விரைவாக நடக்கும் என்றாலும் உலக வெப்பநிலை நிலைப்படுத்தப்படுவதைக் காண 20-30 ஆண்டுகள் ஆகலாம்” என்பதையும் அறிக்கை வலியுறுத்துகிறது.
ஐபிசிசி பணிக்குழுவின் மற்றொரு இணைத் தலைவரான பன்மாவோ ஜாய், “பருவநிலையை மாற்றமின்றி நிலைப்படுத்துவதற்கு பசுமை க்குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுவதை வலுவாகவும், விரைவாகவும் நீடித்தும் குறைக்க வேண்டும். மேலும் கரியமில வாயு வெளியேற்றப்படுவது நிகர-பூஜ்ஜிய நிலைக்கு, அதாவது முழுமுற்றாக நிறுத்தப்பட வேண்டும்.”
“மற்ற பசுமைக்குடில் வாயுக்கள் மற்றும் காற்று மாசுபாடுகளை, குறிப்பாக மீத்தேன் வாயு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, மக்கள் சுகாதாரம் மற்றும் பருவநிலை ஆகிய இரண்டிற்கும் நன்மைகளை ஏற்படுத்தும்,” என்று ஜாய் மேலும் கூறினார்.
“மற்ற பசுமைக் குடில் வாயுக்கள் மற்றும் காற்று மாசுபாடுகளை, குறிப்பாக மீத்தேன் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது, சுகாதாரம் மற்றும் பருவநிலை இரண்டிற்கும் நன்மைகளை ஏற்படுத்தும்,” என்று ஜாய் மேலும் கூறினார்.
இந்த அறிக்கை மூன்று தவணைகளில் வெளியிடப்பட உள்ளது. முதல் தவணையாக, 2021-ல் ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய மாநாட்டிற்காக கிளாஸ்கோவில் உலகத் தலைவர்கள் கூடுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய பருவநிலை போராட்டத்திற்கு ஒரு முக்கிய தருணமாக அமையும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
“கிளாஸ்கோவில் நடக்க உள்ள ஐநாவின் பருவநிலை மாற்றம் பற்றிய மாநாடு உலக வெப்பநிலை கட்டுப்பாட்டை மீறி ஸ்பைரலாக உயர்ந்து செல்வதைத் தடுக்க நமக்குக் கிடைத்த கடைசி, சிறந்த வாய்ப்பாகப் பலரும் பார்க்கிறார்கள்,” என்று குளோபல் ஜஸ்டிஸ் நவ் என்ற அமைப்பின் டோரதி கிரேஸ் குயெர்ரெரோ கடந்த மாதம் எழுதினார்.
“துரதிருஷ்டவசமாக, மிகவும் ஆபத்தான பருவநிலை தாக்கங்களைத் தடுப்பதற்கான ஒரு வழியாக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ள, உலக வெப்பமயமாதலை 1.5°C க்கு மட்டுப்படுத்துவதற்கான பாதையில் நாம் இன்னும் செல்லவில்லை. இந்த இலக்கை அடையத் தவறினால் மிகப்பெருமளவில் வகைதொகையில்லாத பாதிப்புகள் வளரும் நாடுகளுக்கு ஏற்படும்.” என்கிறார் டோரதி
ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், ஐபிசிசியின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் “மனிதகுலத்திற்கான அபாய எச்சரிக்கைக் குறியீடு” என்று கூறினார்.
“எச்சரிக்கை ஒலிகள் காதைச் செவிடாக்குகின்றன; ஆதாரங்கள் மறுக்க முடியாதவை; புதைபடிவ (கரிம) எரிபொருள் எரிப்பு மற்றும் காடழிப்பு ஆகியவற்றிலிருந்து பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் நமது கிரகத்தை மூச்சுத்திணறச் செய்து, பில்லியன்கணக்கான (ஒரு பில்லியன்=100 கோடி) மக்களை உடனடி ஆபத்தில் ஆழ்த்துகிறது,” என்றார் குட்டரெஸ். ” புவி வெப்பமடையும் நிகழ்வானது பூமியில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கிறது. இதன் விளைவாக ஏற்படும் பல மாற்றங்கள் (பாதிப்புகள்), பாதிப்புக்கு முந்தைய நிலைமையை மீட்டெடுக்க முடியாதவை” என்கிறார் குட்டரெஸ்.
“பருவநிலை நெருக்கடியால முதன்மையாகப் பாதிக்கப்பட இருப்பவர்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க ஒரு தெளிவான தார்மீக மற்றும் பொருளாதார அவசியம் இருக்கிறது.” என்று கூறும் குட்டரெஸ் தொடர்ந்து, “நாம் இப்போது நமது ஆற்றல்களை இணைத்தால், பருவநிலை பேரழிவைத் தவிர்க்க முடியும். ஆனால், இன்றைய அறிக்கை தெளிவுபடுத்துவது போல், தாமதத்திற்கு நேரம் இல்லை மற்றும் சாக்குபோக்குகளுக்கும் இடமில்லை. கிளாஸ்கோவில் நடக்க உள்ள ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய இந்த மாநாடு வெற்றி பெறுவதை உறுதி செய்ய அரசுத் தலைவர்கள் மற்றும் இவற்றுக்குப் பொறுப்பான அனைத்து பங்குதாரர்களையும் நான் நம்புகிறேன்” என்று கூறினார்.
கட்டுரையாளர் : ஜேக் ஜான்சன்
தமிழில்: நாகராசு
மூலக் கட்டுரை : Countercurrents
சம்மந்தம், சம்மந்தி போன்ற சொற்கள் அதிகளவில் தமிழர்களால் பயன்படுத்தப்படும் வட மொழிச் சொற்களாகும். இவை தமிழ்ச் சொற்கள் அல்ல என்பன மட்டுமல்லாமல், பண்பாட்டு முறையில் இழிவான சொற்களுமாகும். பொதுவாக அச் சொற்கள் சம்மந்தம், சம்மந்தி எனத் திரிபடைந்த நிலையிலேயே இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனைக் கிருபானந்த வாரியார் கூடத் தனது சொற்பொழிவுகளில் ஏளனம் செய்திருப்பார்; `சம்மந்தி` என்ற சொல்லில் `சம்` என்றால் `நல்ல` என்ற பொருள், `மந்தி` என்றால் குரங்கு என்ற பொருள், எனவே `நல்ல குரங்கு` என்பதே அதன் பொருள், அது சம்மந்தியல்ல `சம்பந்தி` என வாரியார் விளக்குவார். இத்தகைய திருந்திய வடிவமான சம்பந்தி, சம்பந்தம் என்பன கூட இழிவான சொற்களேயாகும். சம்பந்தம் ( Sambandham) என்ற சொல்லின் பண்பாட்டுப் பின்புலத்தினை விளங்கிக் கொள்ள நாம் கேரளாவுக்குத்தான் சென்று வர வேண்டும்.
“சம்பந்தம்” என்ற இச் சொல்லானது கேரளாவில் நம்பூதிரிப் பார்ப்னர்கள் ஏற்படுத்திய “தரவாடு” குடும்ப முறையுடன் தொடர்புடைய சொல்லாகும். கேரளா என்பது பழந் தமிழர்களின் நாடான சேர நாடேயாகும். சோழர்- பாண்டியர்களுக்குக் கூட இல்லாமல், சேரர்களை மட்டுமே பாடுவதற்காகப் “பதிற்றுப்பத்து” எனும் எட்டுத்தொகை நூலான ஒரு சங்க இலக்கியத் தொகுப்பு நூலொன்று கூட உண்டு.
முசிறிப் பட்டின அகழ்வாய்வும் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியலுக்குச் சான்றாகும். அதே போல அசோகர் கல்வெட்டுகள் கூட, அக் கால சேர நாட்டின் இருப்புக்குச் சான்றாகவுள்ளது. இவ்வளவு வரலாறுகள் இருந்த போதும், புராணங்களோ பரசுராமர் கோடரியினை எறிந்து, நிலத்தைப் பிரித்து கேரளாவினை உருவாக்கியதாகவும், அதனை நம்பூதிரிப் பார்ப்பனர்களிடம் (பிராமணர்களிடம்) கொடுத்ததாகவும் சொல்லுகின்றன.
பத்தாம் நூற்றாண்டுக்குப் (CE 10th century) பின்னரே நம்பூதிரிகளின் பரவலான குடியேற்றம் சேர நாட்டில் இடம் பெறுகின்றது. அதற்கும் பின்னரே மலையாள மொழி பேசுபவர்களாகச் சேர நாட்டினர் மாறுகின்றனர். அதுவரை இந்த “சம்பந்தம்” என்ற உறவு முறை சேர நாட்டிலிருந்திருக்கவில்லை. குடியேறிய பார்ப்பனர்கள் திட்டமிட்ட வகையில் தமிழில் வடமொழிச் சொற்களைக் கலந்து, படிப்படியாக அங்கிருந்த தமிழினை “மலையாளம்” என வேறொரு மொழியாக மாற்றிவிட்டார்கள்.
இவ்வாறு தமிழிலிருந்து மலையாளத்தினைப் பிரித்தெடுத்தனை உருவகப்படுத்தியே “பரசுராமர் கோடரி எறிந்து பிளந்த புராணக்கதை” தோற்றுவிக்கப்பட்டது. அதற்குப் பின்னரே நம்பூதிரிகள் ஆதிக்க சாதியாக உருவெடுத்தார்கள்.
“அந்தர்ஜன” நம்பூதிரி பெண்கள்
நம்பூதிரிகள் கேரளாவில் குடியேறும் போதே, இரண்டு திட்டங்களுடனேயே வந்திருந்தார்கள்; ஒன்று அரசர்களைக் கைக்குள் போட்டுக் கொள்ளல், இரண்டாவதாக அங்குள்ள ஏனையோரினை தமக்குக் கீழ் கொண்டுவருதல். அதற்காக நம்பூதிரிகளில் குடும்பத்தில் மூத்தவன் மட்டுமே திருமணம் செய்து கொள்வான் எனவும் ஏனையோர் அரசனுக்குச் சேவை செய்வதற்காகத் தமது குடும்ப வாழ்வினை துறப்பார்கள் எனவும் கூறி, அதனை நடைமுறைப்படுத்தி, அரசனின் நற்பெயரினைப் பெற்றுக் கொண்டார்கள்.
அடுத்ததாக, அரசனின் படை வீரர்களாகவிருந்த நாயர்களைக் குறி வைத்தார்கள். படை வீரர்கள் குடும்பத்தவர்களாகவிருந்தால், அவர்கள் எவ்வாறு பற்றுறுதியுடன் போரிடுவார்கள், குடும்பம் என்று ஒன்றில்லாவிடில் துணிவுடன் போரிடுவார்கள், எனச் சொல்லி அரசனின் மனதினை மாற்றி, நாயர்களின் திருமணம் செய்யும் உரிமையினைப் பறித்தார்கள். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உறவுமுறையே “சம்பந்தம்”, அதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வீட்டு முறையே “தரவாடு”.
நாயர் சாதி ஆண்களின் மண உரிமை பறிக்கப்பட்டதால் , நாயர் பெண்கள் துணையின்றியிருந்தார்கள். ஏற்கெனவே நம்பூதிரிச் சாதியில் மூத்த மகனுக்கு மட்டுமே நம்பூதிரிப் பெண்களை மணக்கும் உரிமையிருக்கின்றது எனப் பார்த்தோம். ஏனைய நம்பூதிரி ஆண்களுக்கு இப்போது இணையின்றியிருந்த நாயர்ப் பெண்களை முதலில் மணந்து உறவு கொள்வார்கள். அவ்வாறு நம்பூதிரிகளால் உறவு கொள்ளப்பட்ட பெண்களையே பின்பு நாயர் ஆண்கள் உறவு கொள்ள முடியும். இத்தகைய நாயர் பெண்களுடன் நம்பூதிரிப் பார்ப்பான்களுக்குச் செய்யப்படும் மணமே “சம்பந்தம்” எனவும், அவர்கள் தங்கியிருக்கும் வீட்டு முறையே “தரவாடு” எனவும் அழைக்கப்பட்டது.
நம்பூதிரி பெண்களின் ஒடுக்கப்பட்ட வாழ்நிலையை விளக்கும் அந்தர்ஜனம் நூல்
இத்தகைய “சம்பந்தம்” மூலம் இணையும் நாயர் பெண்கள் இரவில் மட்டுமே நம்பூதிரிக் கணவர்களுக்கருகில் செல்ல முடியும், பகலில் ஆறடி தள்ளி நின்றே பணிவிடை செய்ய வேண்டும். இங்கு பிறக்கும் குழந்தைகளும் சூத்திரர்களாகவே பார்ப்பனரால் கருதப்படுவார்கள். பார்ப்பனர் இவ்வாறு கருதினாலும் இவர்களோ தம்மைத் தாமே `ஆண்ட சாதி` எனவோ அல்லது `சத்திரியர்` எனவோ எண்ணிச் செயற்படுவார்கள்.
இங்குதான் மற்றொரு புராணக்கதையினையும் நினைவிற் கொள்ள வேண்டும். பரசுராமர் என்ற பார்ப்பனர் சத்திரியர்கள் எல்லோரையும் அழித்ததாகவும், பின்பு சத்திரியப் பெண்கள் துணையின்றிப் பார்ப்பனர்களுடன் புணர்ந்தே, அவர்களது தலைமுறை பெருகியது என்றும் செல்கின்றது அப் புராணக்கதை. அப் புராணக்கதையினை இங்கே பொருத்திப் பார்ப்பது நல்லது.
மேற்கூறியவாறு நம்பூதிரிகள் தரவாடு வீட்டு முறையில் நாயர்ப் பெண்களுடன் கொள்ளும் உறவுமுறையே “சம்பந்தம்” எனப்பட்டது. அதாவது நாயர் சாதிப் பெண்கள் நாயர் சாதி ஆண்களுடன் உறவு கொள்வதற்கு முன் நம்பூதிரிப் பார்ப்பானுடன் கொள்ளும் உறவே “சம்பந்தம்” எனப்பட்டது.
இந்த முறை பார்ப்பனப் பெண்களுக்குக் கூட கேடாகவே அமைந்தது; ஏனெனில் மூத்த பார்ப்பன ஆண்களை விடப் பெண்கள் அதிகமாக இருந்தமையால், பார்ப்பனப் பெண்கள் பல மனைவியரில் ஒருவராகவும் மூப்படைந்த பார்ப்பனர்களையே மணம் செய்ய வேண்டிய நிலையுள்ளவராகவும், காணப்பட்டார்கள். இங்கு பார்ப்பனப் பெண்கள் `அந்தர்ஜனம்` என்ற முறையில் வீட்டில் அடைபட்டே வாழ்ந்தார்கள். இது பற்றி எழுத்தாளர் தேவகி ( Devaki Nilayamgode ) எழுதிய “Antharjanam” எனும் நூல் பல செய்திகளைத் தரும்.
இந்த இடத்தில் “சம்பந்தம்” எனும் உறவு முறையின் உருவகப்படுத்தலாகவே திருமணங்களின் போது சொல்லப்படும் வடமொழி மந்திரம் ஒன்றினைக் கூட ஒப்பிட்டுப் பார்க்கலாம்; அந்த மந்திரம் “ஸோம: ப்ரதமோ…”(மந்திரத்தையும், அதற்கான விளக்கத்தினையும் படத்தில் காண்க).
இந்த மந்திரமானது ரிக் வேதத்தில் (Rig veda 10, 7:85) இருந்து தொகுக்கப்பட்டவையே. சூர்யா என்ற தேவப் பெண்ணிற்கு ஒன்றின் பின் ஒன்றாகப் பல தேவர்களுடன் திருமணம் நடாத்தி வைக்கப்பட்டது. அப்போது சொல்லப்பட்டவையே இத் திருமண மந்திரங்கள். இதனையே இன்றும் திருமணங்களில் பார்ப்பனர்கள் ஓதி வருகின்றார்கள். இதற்கு வேறு விளக்கங்கள் கொடுக்க அண்மைக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இராமானுசர், ஆளவந்தார் (யாமுனாசார்யர்) போன்ற வேத விற்பனர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளார்கள்.
இன்று வெறும் மந்திரங்களாகவே உள்ள இந்த இழிநிலையினைப் பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் நடைமுறைப்படுத்தவே முனைந்துள்ளார்கள். அந்த நடைமுறைப்படுத்தல்தான் “சம்பந்தம்” எனும் உறவு முறையாகும். மற்றொரு கேரளா முறை “கெட்டு கல்யாணம்” எனப்படும். (கெட்டு கல்யாணம் என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் உரிமை கொடுக்கப்படும்).
கேரளாவிற்கு ஏன் போகவேண்டும்! தமிழ்நாட்டிலேயே எமக்கு கடந்தகாலத்தில் ` இயற்பகை நாயனார்` என்ற எடுத்துக்காட்டு உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? சிவாச்சாரியார் ஒருவர் நாயனாரின் மனைவியினைக் கேட்டபோது, நாயனார் கூட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல், குறுக்கே வந்த உறவினர்களையும் வெட்டிச் சாய்த்தவர். சிலர், சிவனே பிராமணவேடத்தில் வந்ததாகவும் கூறுவார்கள். இவ்வாறு தெய்வத்தின் வடிவம், தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி ) வடிவம் தாமே என, வேதத்தினைக் காட்டி பார்ப்பனர்கள் தமிழ் மணப்பெண்களை புணர முனைந்திருந்தார்கள்.
இதனாலேயே பார்ப்பனர்கள் தமது சாதி தவிர்ந்த ஏனையோரினைச் சூத்திரர்கள் என அழைப்பார்கள். இங்கு “சூத்திரர்” என்பது “வைப்பாட்டி மக்கள்” என்றே பொருள் கொள்ளப்படும் என மறைமலை அடிகளார் தனது நூலான “தமிழர் மதம்” என்ற நூலின் 52-வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
கேரளாவில் நடைமுறையிலிருந்த “சம்பந்தம்”, “கெட்டு கல்யாணம்” என்பனவற்றில் தமது பெண்களை நம்பூதிரிகளுக்கு முதலில் உறவு வைக்கக் கொடுப்பதனைப் பெருமையாக அக் காலத்தில் கருதியவர்களுண்டு. அதைப் பெரும் விழாவாகக் கொண்டாடியவர்களுமுண்டு. அந்தளவுக்கு மதம் அவர்களின் மூளையினை மயக்கியிருந்தது.
பின்னர் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் இம் முறைகள் முடிவுக் கொண்டு வரப்பட்டன. எனினும் வடமொழியிலான திருமண மந்திரங்களும், “சம்பந்தம்” போன்ற சொல்லாடல்களும் அந்த கேட்டின் எச்சங்களாக இன்றும் தொடர்கின்றன.
எனவே வடமொழி மந்திரங்கள் ஓதித் திருமணங்கள் செய்வதனைத் தவிர்த்து, தமிழ் முறைப்படி மண விழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழில் வழிபாடு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தமிழில் மண விழாக்களையும் நடாத்த மானமுள்ள தமிழர்கள் முன்வர வேண்டும்.
“சம்பந்தம்”, “சம்பந்தி” என்பதற்கான தமிழ்ச் சொற்கள் :
“சம்பந்தம்” என்பதைத் திருமணம்/ மண விழா/ இணையேற்பு விழா எனத் தமிழில் அழைக்கலாம். அதே போன்று “சம்பந்தி” என்பதனைத் தமிழில் “உறவாடி” என அழைக்கலாம். அதே போன்று கொண்டான்/ கொடுத்தான் என்ற சொற்களுமுண்டு.
“சம்பந்தம்”, “சம்பந்தி” போன்ற சொற்களைத் தமிழாக்குவதன் மூலம் எமது மொழி வளர்ச்சியடைவது மட்டுமன்றி; எம் மீது திணிக்கப்பட்ட பண்பாட்டுக் கேடுகளையும் நீக்கிக் கொள்ளலாம். ஈழத்தில் ஒரு பழமொழி ஒன்றுண்டு: “தனக்கு எட்டாத சிங்களம், தன் பிடரிக்குச் சேதம்” என, அது வடமொழிக்கும் பொருந்தும். ஒரு கூடாத உறவு முறையினைக் குறித்த “சம்பந்தம்” எனும் சொல்லினை “நல்ல உறவு” என எம் மீது திணித்து விட்டார்களே !
அல் கொய்தா பயங்கரவாதிகள் அமெரிக்காவில் நடத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு புதிய எதிரியை உலகுக்கு அடையாளம் காட்டியது அமெரிக்கா. அந்த புது எதிரி, வேறு யாருமல்ல. அமெரிக்காவே உருவாக்கிய ’இசுலாமிய பயங்கரவாதம்’ தான் அந்த எதிரி.
சமூக ஏகாதிபத்தியமாக மாறியிருந்த சோவியத் ரசியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தானை தனது சுரண்டலின் விளைநிலமாக மாற்ற அங்கு இசுலாமிய பயங்கரவாத கும்பல்களை திட்டமிட்டு உருவாக்கி வளர்த்துவிட்டது அமெரிக்கா. அந்த பயங்கரவாத கும்பலுக்கு ஆயுதங்கள் முதல் பண உதவி வரையில் அள்ளி இறைத்தது.
கடந்த 2001-ம் ஆண்டில், அதே இசுலாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதாகச் சொல்லி ஆப்கான் மேல் அமெரிக்கா படையெடுத்தது. ஆப்கான் மீதான படையெடுப்பைக் கண்டித்த அனைத்து நாடுகளும் மனித குல விரோதியாக சித்தரிக்கப்பட்டன.
2001-ம் ஆண்டு முதல் 2021 வரை சுமார் 20 ஆண்டுகளில் அமெரிக்கப் படைகள் நடத்திய ‘போரில்’ ஆப்கான் குடிமக்கள் எண்ணிலடங்காதோர் கொல்லப்பட்டனர். 2009-ம் ஆண்டு வரை மட்டுமே சுமார் 31,000 ஆப்கான் குடிமக்கள் இந்த ஆக்கிரமிப்புப் போரில் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க விமானப்படை கிரிமினல்கள், வீடியோ கேம் விளையாடுவது போல, வானில் பறந்தபடி கீழே இருந்த சாதாரணக் குடிமக்களை பொழுதுபோக்கிற்குச் சுட்டுக் கொன்றனர் என்ற விவகாரங்கள் எல்லாம் விக்கிலீக்ஸ் உள்ளிட்ட ‘விசில்ப்ளோயர்கள்’ வெளியிட்ட ஆவணங்களில் அம்பலமானது.
புஷ் துவங்கி வைத்த ஆப்கான் ஆக்கிரமிப்பில், ஓபாமா ஆட்சிக் காலத்தில் அல்-கொய்தா தலைவன் பின் லேடனைக் கொன்றதை மிகப் பெரிய வெற்றியாகக் கொண்டாடியது அமெரிக்கா. மொத்த இசுலாமிய பயங்கரவாதிகளையும் அல்கொய்தாவையும் ஒழித்துக் கட்டி விட்டதாக கதையளந்தது.
கம்யூனிச ‘அபாயத்தை’ ஒழிப்பதற்காக அமெரிக்கா உருவாக்கிய இசுலாமிய பயங்கரவாதத்தை அமெரிக்காவே ’ஒழித்துக்கட்டிய’ இலட்சணம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆப்கானிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்த பின்னர், தோஹாவில் தாலிபான்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அம்பலமானது.
அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்
தாலிபான்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பகுதிகள் அதிகரித்துவந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரச் சூழலையும் கணக்கில் கொண்டுதான் ஆப்கானிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது அமெரிக்கா. 2001-ம் ஆண்டில் ஆப்கானை ஆக்கிரமிக்கும் போது அது சொன்ன காரணமாகிய இசுலாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது ஆப்கானில் ஒரு கட்டத்திலும் நடக்கவில்லை. தற்போது வெளியேறும்போதும் அதே இசுலாமிய பயங்கரவாதிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அளவிற்கு இசுலாமிய பயங்கரவாதம் ஆப்கானில் வலுப்பெற்று விட்டது.
கடந்த 2021 ஏப்ரல்-இல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கப்படைகள் படிப்படியாக செப்டம்பர் 11-ம் தேதிக்குள் (அன்றுதான் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடமும் பெண்டகனும் தாக்கப்பட்ட நாள்) ஆப்கானில் இருந்து வெளியேறும் என்று தெரிவித்தார்.
தாலிபான்கள் கூற்றுப்படி நாட்டின் மூன்றில் இரண்டு பகுதிகள் தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில்! பிடெனின் இந்த அறிவிப்பின் பின்னணி இதுதான். தாலிபான்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் அமெரிக்கா வெளியேறியது என்ற செய்தி வெளியானால், தனது பெரியண்ணன் பாத்திரம் பறி போய்விடும் என்பதை உணர்ந்து கவுரவமான நிலையில் ஆப்கானிலிருந்து வெளியேறுவது என முடிவெடுத்து அமெரிக்கா வெளியேறுகிறது.
தாலிபான்களின் பயங்கரவாதத் தாக்குதலின் கீழ் ஆப்கானிஸ்தான் !
மே மாதத்திலிருந்து தாலிபான்களின் இராணுவ வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து ஹெராத் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களும் தாக்குதலுக்குள்ளாகின்றன. சமீபத்தில் கூட காபூலில் உள்ள ஆப்கான் இராணுவ அமைச்சர் பிஸ்மில்லா முகம்மதி மீது தாலிபான் தற்கொலைப் படையின் திட்டமிட்ட தாக்குதல் நடந்து, தற்செயலாக அவர் தப்பித்துக் கொண்டார்.
ஆப்கானுக்கான ஐநா தூதுவர், ’ஆப்கானில் ஒரு பேரவலத்தை தவிர்க்க முடியாது’ என எச்சரிக்கிறார். அமெரிக்காவோ ஆப்கானில் உள்ள அமெரிக்கர்கள் கிடைக்கும் விமானத்தில் ஏறி பாதுகாப்பாக வெளியேறிவிட வேண்டும் என அறிவிக்கிறது. இங்கிலாந்தும் தனது குடிமக்களுக்கு இவ்வாறே அறிவிதுள்ளது.
கிராமப் புறங்களைக் கைப்பற்றி வந்த தாலிபான்கள் தற்போது நகரங்களைத் தாக்கி கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். சாரஞ்ச், ஷெபர்கான், குண்டூஸ் என மூன்று மாகாண தலைநகரங்கள் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இங்கிலாந்தின் முன்னாள் இராணுவ தளபதி மேஜர் லார்ட் டேன்னட், கடந்த மே மாதமே “ஆப்கான் தேசிய இராணுவம் போரிடும் உத்வேகத்தை இழந்துவிட்டது. பல வீரர்கள் ராணுவத்தை விட்டு ஓடுகின்றனர். அனைத்துலக விமானப் படையானது, இனிமேலும் அவர்களுக்கு உதவும் வகையில் இல்லை”, ”ஆப்கான் ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்குவதுதான் நடக்கப் போகிறது” என பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார். அதுதான் தற்போது நடந்து கொண்டுள்ளது.
தாலிபான்களின் இராணுவ நடவடிக்கையும் சமாதானப் பேச்சு வார்த்தையும்!
அதே நேரம் மிச்சமுள்ள அமெரிக்க, நேட்டோ துருப்புகள் என சர்வதேச துருப்புகள் மீது தாக்குதல்கள் நடத்துவதை தற்போதைக்கு தாலிபான்கள் தவிர்த்து வருகின்றனர். இதை ஒரு உத்தியாக தாலிபான்கள் கையள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை உடனடியாக பெற வேண்டாம் என இப்படி கையாள்வதாகக் கூறுகின்றன.
இதையே 55 வயதில் 25 ஆண்டுகள் தாலிபான்களுடன் இராணுவ கமாண்டராகப் பணியாற்றிய முல்லா ஹமீதுல்லா என்பவர் வேறு வார்த்தைகளில் கூறுகிறார். அராஜகத்தை வெற்றி எனக் கூற முடியாது என்கிற இவர், “(தாலிபான்கள்) சொந்த இசுலாமிய சகோதரர்களுடன் இன்னொரு உள்நாட்டுப் போரில் இறங்குவது உறுதி. அராஜகமான வெற்றியை விட அமைதியான ஆப்கானிஸ்தான் பற்றி தாலிபான்கள் சிந்திக்க வேண்டும்” என்கிறார். ஒரு ஆப்கானியன் இன்னொரு ஆப்கானியனைக் கொல்வதை யாரும் கவனிக்க மாட்டார்கள், உலகின் கவனம் வேறு திசைக்கு சென்றுவிடும் என்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை, 2021-ல் அமெரிக்க பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது மீண்டும் மீண்டும் ஆப்கான் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெருகி வருவதை பெருமையுடன் குறிப்பிட்ட பைடன் ஆப்கான் பற்றிய கேள்விகளை முற்றாகத் தவிர்த்தார். அப்போது ‘மகிழ்ச்சியான விசயங்களை’ மட்டுமே பேச விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
ஆக பயங்கரவாத்தை ஒழிக்க 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து, பல்லாயிரம் அமெரிக்க துருப்புக்களை பலிகொடுத்து, லட்சக்கணக்கான அப்பாவி ஆப்கான் மக்களின் உயிரிழப்புக்குக் காரணமான ஒரு போரை நடத்திய அமெரிக்கா, அது பற்றி பேசக் கூட தயாராக இல்லை ! இதே பைடன் தான் ஒபாமா ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்த போது, ஆப்கான் போருக்கு (ஆக்கிரமிப்பு) அதிகப் படைகளை அனுப்ப வேண்டும் என மன்றாடிக் கேட்டு, கூடுதல் படைகளையும் அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாம் நினைத்தது போல ஆப்கானில் ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை என்ற தமது தோல்வியை ஒப்புக் கொள்ளவும் முடியாமல், தாம் வெளியே கூறிக் கொண்ட இசுலாமிய பயங்கரவாதம் முறியடிக்கப்படாமல் வளர்ந்துவிட்டதைப் பற்றியும் பேச முடியாமல்தான் பத்திரிகையாளர் சந்திப்பில் வாய் மூடிக் கொண்டார் ஜோ பைடன்.
தாலிபான்களின் சமூகப் பரவல் !
ஒரு சிறுபான்மை பஷ்டூன் இனக்குழுவாக இருந்த தாலிபான்கள் இன்று தமது செல்வாக்கை பரந்து விரிந்ததாக மாற்றிக் கொண்டுள்ளனர். தஜிக்குகள், உஸ்பெக்குகள், ஹஜாரஸ் உட்பட பல்வேறு இனக்குழுக்களும் இன்று தாலிபான்களுடன் இணைந்து வருகின்றனர். அதனால்தான் இவ்வளவு வேகமாக தாலிபான்களால் முன்னேற முடிகிறது. தாலிபான்களின் வளர்ச்சியில் இது முக்கியப் பங்காற்றுகிறது.
தோஹா பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் தாலிபான்கள்
அதுமட்டுமல்ல, அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆப்கான் மக்களின் எதிர்ப்புணர்வையும், அவர்களது மத நம்பிக்கைகளையும், கிராமப் புறங்களில் நிலவும் அறியாமையையும் பயன்படுத்தி தான் தாலிபான் என்ற இந்த மத அடிப்படைவாத காட்டுமிராண்டிக் கும்பலால் ஆதிக்கம் பெற முடிந்திருக்கிறது.
இது 21-ம் நூற்றாண்டில் நடைபெற்ற அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமல்ல, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இருபதாம் நூற்றாண்டில் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் ஆப்கான் மக்கள் காட்டிய எதிர்ப்பின் மரபும் இதில் அடங்கியிருக்கிறது. அதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது மத அடிப்படைவாத தாலிபான் கும்பல்.
இசுலாமிய சாம்ராஜ்யத்தின் பெயரால்…
தாலிபான்கள் மேற்கத்திய பாணி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். அதனாலேயே ஒரு கூட்டரசாங்கம் அமைவதை விரும்பாமல் இராணுவ ரீதியாக கணக்குத் தீர்த்துக் கொள்ள விரும்புகின்றனர். இவர்களின் இலக்கு ’இசுலாமிய சாம்ராஜ்யம்’.
இந்தியாவில் இராம ராஜ்ஜியத்தை இலக்காகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற பாசிசக் கும்பல்தான் என்பதை தாலிபான்கள் எனும் மத அடிப்படைவாதக் கும்பலோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. மக்களின் அறியாமையே இவர்களின் ஆயுதம்.
தாலிபான்களின் ‘இசுலாமிய சம்ராஜ்ஜிய’ ஆட்சி ஆப்கானில் வருவது என்பது அங்குள்ள பெண்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு முன்னர் ஆட்சியதிகாரத்தில் தாலிபான்கள் இருந்தபோது, அங்கு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக் கல்விக்கே அனுமதிக்கப்பட்டதில்லை. பெண்கள் வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டது. பெண்களின் மீதான ஒடுக்குமுறை உச்சத்தை அடைந்தது.
இன்றும் ஆப்கான் மக்கள் பரிதவிக்கின்றனர். இசுலாமிய ஆட்சி என்ற பெயரில் தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான கொடூரங்களை அனுபவித்த ஆப்கான் மக்கள் இன்று மீண்டும் அதே கொடுமைகளை எதிர் கொள்ள வேண்டிய அவலத்தில் உள்ளனர்.
தற்போது அவர்களது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் ஆப்கான் பகுதிகளில், பர்தா அணியாமல் பெண்கள் வெளியே வந்தால் கொல்லப்படும் காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளை தாலிபான்கள் தொடங்கி விட்டனர் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.
நம்பிய ஆப்கான் அரசைக் கைவிட்ட அமெரிக்கா !!
ஒருபுறம் இராணுவ நடவடிக்கை மூலம் பிரதேசங்களைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டே, மறுபுறத்தில் அரசியல் தீர்வையே தாங்கள் விரும்புவதாக தாலிபான் உச்ச மட்டத் தலைவர் ஹையதுல்லா ஹகிம்ஜடா பேச்சுவார்த்தைகளில் கூறுகிறார்.
தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளும் ஆப்கான் துருப்புகள் சண்டையிடாமல், சரணடைந்து, சமாதானமாக ஒப்படைத்தவையே என தாலிபான் தலைவர்களில் ஒருவரான ஷாகீன் கூறுகிறார். ஆனால் ஸ்பின் போல்டாக் எல்லைப் பகுதியில் நடந்த சண்டையின்போது செய்தி சேகரிக்கச் சென்ற இந்திய நாட்டை சேர்ந்த ராய்டர் புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்ட சம்பவம், தாலிபான்கள் கூறுவது பொய் என்பதை நிரூபிக்கிறது.
பொதுவெளியில் தங்களை அமைதியின் நாயகர்களாகக் காட்டிக் கொள்ள விளைகிறது தாலிபான் கும்பல். பல்வேறு நாடுகளுடனான தாலிபான்களின் பேச்சுவார்த்தை, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவருகின்றன.
ஜூலை மூன்றாவது வாரத்தில் தோகா சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, 7000 தாலிபான் கைதிகளை விடுவிக்கக் கோரியது தாலிபான் கும்பல். அதற்கு ஆப்கான் அரசு மறுத்துவிட்டது.
”….தற்போதைய சூழலைப் பயன்படுத்தி இசுலாமிய நடைமுறை, அமைதி, பாதுகாப்பை நிறுவுவதையே இசுலாமிய சாம்ராஜ்யம் விரும்புகிறது. எதிர் தரப்பினர் (ஆப்கான் அரசு) அன்னிய நாட்டினர் ஆப்கானில் அமைதியை நிலைநாட்டுவர் என நம்பி நேரத்தை வீணடிப்பதாக” ஹையதுல்லா குற்றம் சாட்டுகிறார்.
உண்மைதான், எந்த ஒரு அன்னிய நாடுகளும் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கான் அரசுக்கு உதவத் தயாராக இல்லை. பெரியண்ணன் அமெரிக்காவின் நிதிநிலையாலேயே தாக்குப் பிடிக்க முடியாத ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்ச் செலவை கொட்டும் அளவுக்கு பணபலம் கொண்ட நாடுகளுக்கும் தங்களது பணத்தை அள்ளி கடலில் கொட்ட மனமில்லை.
அஷ்ரஃப் கனி
தற்போதைய நிலையில் அமெரிக்கப் படைகளின் விலக்கத்தால் கதிகலங்கிப் போயிருக்கிறது ஆப்கான் அரசு. ஜூலை மத்தியில் ஆப்கான் நாட்டின் அதிபர் அஸ்ரப் கனி, சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலின் போது, “அமெரிக்கா கைவிட்டு விட்டதா?” என்ற குறிப்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “அப்படி இல்லை. அமெரிக்கா விட்டுச் சென்ற நவீன ஆயுதங்களும் பயிற்சியும் எங்களிடம் உள்ளன” என்றார். ஆனால் ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் ஆப்கானில் நடக்கும் வன்முறைகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், அமெரிக்க படைகளின் அவசரகதியிலான வெளியேற்றமே ஆப்கானில் நடக்கும் உள்நாட்டு வன்முறைகளுக்குக் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட்டில் நிலைமை படுமோசமாகப் போன பிறகுதான் உண்மை நிலைமையைப் பேசுகிறார் ஆப்கான் அதிபர் அஸ்ரப் கனி. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தமது பொருளாதார, இராணுவ நிலைமைகளையும் தங்களது அடுத்தகட்ட நகர்வுகளையும் மையப்படுத்தியே இந்த இராணுவ துருப்பு விலக்கத்தை நடைமுறைப்படுத்துகிறது. துளியளவும் கூட ஆப்கான் மக்களைப் பற்றியோ, ஆப்கான் அரசின் நிலைமையைப் பற்றியோ அது கவலைப்படவில்லை.
உதாரணத்திற்கு, கடந்த ஜூலை முதல் வாரத்தில் காபுலிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் உள்ள பக்ரம் என்ற இடத்தில் உள்ள இராணுவ தளத்திலிருந்து, அமெரிக்கா தனது துருப்புகளை யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் காலி செய்து விட்டது. ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கே இது தெரியாது. இதுதான் அமெரிக்கா அங்கு படைவிலக்கம் செய்து கொள்ளும் இலட்சணம். இவ்வளவு காலமும் தமக்குச் சாதகமாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆப்கான் அரசை கிட்டத்தட்ட அப்படியே கைகழுவி விட்டது அமெரிக்கா.
கடந்த ஒரு மாதமாக தாலிபான் படைகள் பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி ஆப்கான் முழுவதையும் கைப்பற்றுவதை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
அண்டை நாடுகளின் நிலை :
பொருளாதாரச் சுரண்டல், எண்ணெய் வளம் மற்றும் பூலோக அளவில் முக்கியமான இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது. ஆகவே இங்கு தமக்குச் சாதகமான அரசாங்கம் அமைவதையே அமெரிக்கா, ரசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. அமெரிக்காவைப் பொருத்தவரையில் மத்திய ஆசியாவில் சீனாவுக்கும் ரசியாவுக்கும் நெருக்கடி இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான நெருக்கடி கொடுக்க வாய்ப்பான இடமாக ஆப்கான் இருந்தது.
சீனா, ரசியாவைப் பொருத்தவரையில் , அங்கு அமெரிக்காவின் ஆதிக்கம் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். அதே நேரத்தில் தாலிபான் தலைமையிலான மதவாத பிற்போக்குக் கும்பலின் கடந்த கால ஆட்சி அனுபவங்களும் இனிப்பூட்டுவதாக இல்லை.
ஆகவே தாலிபான்கள் ஆட்சிக்கு வருவதை ரசியாவும் சீனாவும் விரும்பவில்லை. ஆப்கானில் சமாதான முறையில் ஆட்சிப் பங்கீடு நடக்க ரசியா நிற்கிறது. இதற்காக 4 மாதங்களுக்கு முன் சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகளைக் கூட்டி வைத்து ஒரு பேச்சு வார்த்தையையும் நடத்தியது, ரசியா.
தாலிபானைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர், ரசியா சென்று ஆப்கான் எல்லைக்கு வெளியே தமது இசுலாமிய சாம்ராஜ்ஜிய கருத்துக்களை பரப்பப் போவதில்லை என உறுதி கூறியுள்ளார். தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது சுஹைல் ஷாகீனும், ’ரத்தம் சிந்தி நகரங்களைக் கைப்பற்றுவது தாலிபான்களின் நோக்கமல்ல’ என மாஸ்கோவிற்கு உறுதி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைப் பொருத்தவரையில், அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் அங்கு தனது நாட்டு தரகு முதலாளிகளின் தொழிலுக்கு ஏதேனும் பாதகம் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றன. அதற்காக தாலிபான்களுடனும் தோஹாவில் இவ்விரு நாடுகளும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தாலிபான்கள் நகரங்களை தாக்கக் கூடாது என பாகிஸ்தான் கூறுகிறது.
அமெரிக்கா அங்கு ஆக்கிரமித்திருந்த வரை வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் இந்திய, பாகிஸ்தான் தரகு முதலாளிகள் ஆப்கனுக்குள் புகுந்து கிடைத்த வரை சுருட்டிக் கொண்டிருந்தனர். தற்போது சூழல் தலைகீழாக மாறிய நிலைமையில், ஆப்கான் சிக்கலுக்குள் எந்த வகையிலும் தலையிடும் சூழலில் இந்தியா இல்லை.
இப்போதைய நிலைமையில் தாலிபான்கள் தாங்கள் முன் போல இல்லை என்றும் தாங்கள் மிதவாதிகள் என்றும் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். அதனாலேயே தோகா பேச்சுவார்த்தையில் பல்வேறு நாடுகளுடன் பங்கேற்கின்றனர்.
ஆப்கானிஸ்தானை அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு இன்றி ஒரே தலைமையின் கீழ் ஆள முடியாது என்ற புரிதலுக்கு தாலிபான்கள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால்தான் ரசியாவுடன் பேசுகிறது. சீனாவின் புதிய பட்டுப் பாதை (RPI) திட்டத்தில் பங்கேற்பதாக சீனாவிடம் உறுதி கூறுகிறது.
உள்நாட்டிலும் பல்வேறு இனக்குழுக்களையும் தமது அணியில் சேர்த்து, தமது அணியை பரந்து விரிந்ததாக தாலிபான்கள் மாற்றி வருகின்றனர். ஆனால், இசுலாமிய அடிப்படைவாதத்தில் இருந்து துளியும் அவர்கள் பின்வாங்கவில்லை என்பது தற்போதைய சம்பவங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
தாலிபான்களின் இத்தகைய நகர்விலிருந்து, ஒருவேளை அவர்கள் ஆட்சியதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், ரசியா, சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் சுரண்டலுக்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அனுமதிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது.
தற்போது கூடுதல் பிரச்சினையில் சிக்கியிருப்பது ஆப்கான் மக்கள் தான். மறுகாலனியாக்க சுரண்டலின் கொடுமையை அந்த மக்கள் ஏற்கெனவே அனுபவித்து வரும் சூழலில், தற்போது மத அடிப்படைவாதக் கும்பலின் சமூக ஒடுக்குமுறைகளையும் அவர்கள் சந்திக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்களை இப்படி ஒரு அபாய நிலைமையில் தள்ளிவிட்டு இன்னமும் கூச்சமில்லாமல் ஜனநாயகக் காப்பாளன் வேடம் போட்டுத் திரிகிறது அமெரிக்கா.
அமெரிக்க ஏகாதிபத்தியம் வாய்வைத்த இடங்களில் எல்லாம், அந்த மக்களின் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் புறமுதுகிட்டி “துண்டைக் காணோம்.. துணியைக் காணோம்” என பின்னங்கால் பிடரியில் பட ஓடிவந்ததே வரலாறு. தான் உள்ளே புகுந்த நாடுகளை கபளீகரம் செய்து அந்நாட்டை மீளமுடியாத நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு, தானும் செருப்படி வாங்கிவிட்டு அமெரிக்கா வெளியேறும்.
ஆப்கானில் நடந்த 20 ஆண்டு ஆக்கிரமிப்புப் போருக்குப் பின் அமெரிக்கா தற்போது வெளியேறிய கதையும் இந்த வரலாற்றின் தொடர்ச்சியே !
கொரோனா இரண்டாவது அலையின்போது நாடு முழுவதும் நடந்த மரணங்கள் பொது சுகாதார அமைப்பு ஒழிக்கப்பட்டு வருவதையும் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதையும் உணர்த்துகின்றன.
மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிந்ததால் ஆம்புலன்சிலேயே சிகிச்சையளிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள், நோயாளிகளுக்கு ரெம்டெசிவர், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்காக நெடும் வரிசையில் நின்றிருந்த நோயாளிகளின் உறவினர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்குகூட பல மணி நேரங்கள் காத்திருந்த கொடுமை, கங்கை நதி ஓரம் கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான பிணங்கள் என கொரோனா இரண்டாம் அலையின் மறக்க முடியாத காட்சிகள் எல்லாம் நமது பொது சுகாதாரக் கட்டமைப்பின் திவால் நிலையை அனைவருக்கும் உணர்த்திச் சென்றது.
கொரோனா இரண்டாம் அலை குறித்து பல மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்த பின்னரும் சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்தாமல், லட்சக்கணக்கான மக்களை வேண்டுமென்றே படுகொலை செய்தது மோடி அரசு. உள்நாட்டு − பன்னாட்டு ஊடகங்கள் அனைத்தும் மோடியின் செயலின்மையை விமர்சித்துக் கடுமையாக எழுதின.
இத்தனைக்கும் பிறகும், இதனை முட்டுக்கொடுக்கும் வகையில் ஜி−7 நாடுகளின் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘‘கடந்த 75 ஆண்டுகளாக இந்திய மருத்துவக் கட்டமைப்புக்குப் போதுமான அளவு முதலீடு செய்யவில்லை’’ என பொதுவாக பூசி மெழுகுகிறார். அதேபோல ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி மோடி ஆற்றிய உரையில் ‘‘கடந்த பல ஆண்டுகளாக நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை’’ என்று பேசுகிறார்.
பிரச்சனை தீவிரமான பிறகு தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக அரைகுறையாக உண்மையை ஒப்புக் கொள்வதும், அனைத்துக்கும் கடந்தகால காங்கிரஸ் ஆட்சியே காரணம் என்று சாடுவதும் காவி பாசிஸ்டுகளுக்கே உரிய அரசியல் சாணக்கியத்தனம்.
நிலைமை இப்படி இருக்கையில், ‘‘சுகாதார உள்கட்டமைப்புக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. முதல் அலையின்போது இதற்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.2 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார் மோடி.
அதையே கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவிகிதம் அதிக நிதியை (ரூ.2.23 லட்சம் கோடி) மருத்துவத் துறைக்கு ஒதுக்கியிருப்பதாக நிர்மலா சீத்தாராமன் 2021−22 பட்ஜெட் உரையில் சொல்கிறார்.
இப்படிச் சொல்வது அப்பட்டமானதொரு புள்ளிவிவரப் புளுகு. ஏனெனில், சுகாதாரத் துறைக்கு ஒதுக்கியதாக சொல்லப்பட்ட ரூ.2.23 இலட்சம் கோடியில் குடிநீர் மற்றும் வடிகால் துறைக்கான ரூ.60 ஆயிரம் கோடி, குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்காக நிதி ஆணையம் ஒதுக்கிய சுமார் ரூ.50 ஆயிரம் கோடி, தடுப்பூசிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடி ஆகியவற்றையெல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால் சுமார் ரூ.80 ஆயிரம் கோடிக்கும் குறைவே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிலும் சுகாதாரத் துறைக்கென்றே நேரடியாக ஒதுக்கப்பட்ட ரூ.73,932 கோடி மட்டுமே. இத்தோடு கூட பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.
இதேபோல, டிசம்பர் 2022−க்குள் 1.5 இலட்சம் சுகாதார மையங்களை நாடு முழுக்க அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் 17,788 கிராமப்புற மற்றும் 11,024 நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு ஊக்கமளிப்பதற்காகவும் புதிய நோய்களைக் கண்டறிந்து குணப்படுத்துவதற்காகவும் ‘‘பிரதமர் ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா’’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சரான அஷ்வினி குமார் சௌபே மாநிலங்களவையில் அறிவித்தார்.
இவை அனைத்துக்கும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்துதான் நிதி ஒதுக்கப்படும். அதாவது, யானைப் பசிக்கு சோளப்பொரி போடும் கதைதான்.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய நாடுகளெல்லாம் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகிதத்திற்கு மேலாக சுகாதாரத் துறைக்கு ஒதுக்கி வருகின்றன. ஏன், இலங்கை, ஜாம்பியா, கென்யா உள்ளிட்ட ஏழை நாடுகள் கூட இந்தியாவைக் காட்டிலும் அதிகத் தொகையை சுகாதாரக் கட்டமைப்புக்கு ஒதுக்கி வருகின்றன. ஆனால், இந்தியாவிலோ பல பத்தாண்டுகளாக ஒரு சதவிகித்திற்கும் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத்தான் ஜி−7 கூட்டத்தில் மோடி ‘‘கடந்த 75 ஆண்டுகளாக இந்திய மருத்துவக் கட்டமைப்புக்கு போதுமான அளவு முதலீடு செய்யவில்லை’’ என்று ஒப்புக்கொண்டார்.
இப்படி பல ஆண்டுகளாக சொற்பமான தொகைகளை ஒதுக்கி, மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தாமல் விட்டதன் விளைவுதான், லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு பலியாக நேர்ந்த கொடூரம்.
‘‘தேவை ஒரு அவசர சிகிச்சை’’ என்ற தலைப்பில் இந்திய மருத்துவக் கட்டமைப்பின் நிலைகுறித்து தலையங்கம் எழுதிய தினமணி, ‘‘பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், 2020 ஏப்ரல் மாதம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்திய மருத்துவமனைகளில் 19 லட்சம் படுக்கைகள் உள்ளன. அதில் 12 லட்சம் தனியார் மருத்துவமனையில் காணப்படுகின்றன. 10 ஆயிரம் பேருக்கு 16 மருத்துவமனைப் படுக்கைகள் என்கிற அளவில்தான் இந்தியா இருக்கிறது. சிறிய அண்டை நாடான இலங்கையில் கூட 10 ஆயிரம் பேருக்கு 42 மருத்துவமனைப் படுக்கைகள் காணப்படுகின்றன.’’
‘‘அதேபோல, இந்தியாவிலுள்ள அவசர சிகிச்சை படுக்கைகள் வெறும் 95 ஆயிரம் மட்டுமே. அதில் 59 ஆயிரம் தனியார் மருத்துவமனைகளில் காணப்படுகின்றன. வென்டிலேட்டர்களை எடுத்துக்கொண்டால், 47 ஆயிரம் வென்டிலேட்டர்களில் 29 ஆயிரம் தனியார் மருத்துவனைகளில்தான் காணப்படுகின்றன. முறையான திட்டமிடலும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல்போனதன் விளைவுதான் இது.
வீட்டில் இருக்கும் நகை – நட்டுகளையும், வங்கியில் இருக்கும் சேமிப்புகளையும் அசையாச் சொத்துகளையும் விற்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பொது மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், கிராமங்கள் வரை மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும் எந்த அளவுக்கு அத்தியாவசியம் என்பதை கொள்ளை நோய்த்தொற்று நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
இப்படி தனியார்மயக் கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தும் மோடியின் ஆதரவு ஊடகங்களே, பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை அரசு பலப்படுத்த வேண்டிய தேவையை எழுதுமளவிற்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.
நாடு முழுவதும் 718 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், 280 அரசு மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவமனைகளும்தான் இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி மாவட்ட மருத்துவமனைகள் வரை 37,725 மருத்துவ நிலையங்கள் மட்டுமே இருக்கின்றன. 135 கோடி மக்கள் தொகைக்கு சேவை செய்வதற்கு இவை போதுமா?
நவம்பர் 2020 கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 43,486 தனியார் மருத்துமனைகளில் 12 இலட்சம் படுக்கைகளும் 59,264 ஐ.சி.யூ படுக்கைகளும் 29,631 வெண்டிலேட்டர்களும் இருந்தன. ஜனவரி 28, 2021 நிலவரப்படி அரசு மருத்துவமனைகளிலோ 1,57,344 ஆக்சிஜன் இணைப்புள்ள படுக்கைகளும் 36,008 ஐ.சி.யூ படுக்கைகளும் 23,619 வெண்டிலேட்டர்களும் மட்டுமே இருந்தன. ஏப்ரல் மாதத்தில்தான் அவை முறையே 62,458, 27,360, 13,158−ஆக அதிகரிக்கப்பட்டது. இதுவும் கூட கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தால் செய்யப்பட்டது.
மேற்கண்டவை கூட எவ்வளவு உண்மை எனத் தெரியாது. ஏனெனில் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஆவணத்தில் சொல்லப்பட்டதில் பாதியளவு ஐ.சி.யூ படுக்கைகளே உண்மையில் இருந்தன. மோடி அரசு ரூ.2,000 கோடி செலவில் மாநிலங்களுக்கு அனுப்பிய பல்லாயிரம் வெண்டிலேட்டர்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத ஓட்டை உடைசல்களாக இருந்தன.
இந்த நிலைமைகளில், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம் என்று மோடி அரசு சொல்வதில் எள்ளவும் உண்மை இல்லை. அப்படியானால், தற்போதிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை அரசால் மேம்படுத்த முடியாதா எனக் கேள்வி எழலாம். நிச்சயமாக முடியும்.
இந்தியாவிலேயே அதிக செலவில் கட்டப்படுபவை எய்ம்ஸ் மருத்துவமனைகள்தான். இதற்காக ஒவ்வொரு மருத்துவ மனைகளுக்கும் ரூ.1,250 முதல் ரூ.2 ஆயிரம் கோடிகள் வரை செலவாகிறது. தற்போது வரை 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. ஆண்டொன்றுக்கு 10 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் துவங்குவதைத் திட்டமாக வைத்தால், மாநிலத்துக்கு இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஐந்தாண்டுகளில் உருவாக்க முடியும். இதற்கு ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் கோடிகள்தான் செலவாகும்.
மாவட்ட மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைக்கான கட்டமைப்பு செலவு, தமிழக அரசின் மதிப்பீட்டின்படி, ரூ.381 கோடி. ஆண்டுக்கு 100 புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட நிதி ஒதுக்கினால் ஆகும் செலவு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி. இதன் மூலம் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத சுமார் 470 மாவட்டங்களின் குறையை அடுத்த ஐந்தே ஆண்டுகளில் தீர்த்து விட முடியும்.
இவ்வாறு உருவாக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்க சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றால், அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் மருத்துவக் கல்வியிடங்களை புதிதாக உருவாக்க முடியும். இந்தக் கல்லூரிகளின் மூலம் கூடுதலாக பல இலட்சம் செவிலியர்களையும், சுகாதாரப் பணியாளர்களையும் உருவாக்க முடியும்.
அடுத்ததாக, மக்கள்தொகை கணக்கீட்டின்படி குறைந்தபட்சமாக 45 ஆயிரம் மற்றும் அதிகபட்சமாக 67,500 ஆரம்ப சுகாதார நிலையங்களும், குறைந்தபட்சமாக 2.75 இலட்சம் துணை சுகாதார நிலையங்கள் நாடு முழுவதும் இருந்தால்தான் நமது தேவைகளில் ஓரளவுக்கேனும் மருத்துவச் சேவைகளை வழங்க முடியும். ஆனால், தற்போது அவை முறையே 30 ஆயிரம் மற்றும் 1.60 இலட்சமாகவே இருக்கின்றன. இவற்றை உருவாக்குவதற்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடிகளை ஒதுக்கினால் கூட ஐந்தாண்டுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் நிறைவெய்த முடியும்.
மேலும், மருத்துவ ஆராய்ச்சி மையங்கள், உற்பத்தி மையங்கள் ஆகியவற்றை மாநிலந்தோறும் உருவாக்கி பராமரிக்க ரூ.25 ஆயிரம் கோடி என ஒதுக்கினால் ஐந்தாண்டுகளில் சொல்லிக் கொள்ளுமளவுக்கு முன்னேற்றம் இருக்கும்.
தொகுப்பாக, ஆண்டுக்கு ரூ.1.25 இலட்சம் கோடி இதற்காக ஒதுக்கி வேலை செய்தால் கூட அடுத்த ஐந்தாண்டுகளில் பரந்துவிரிந்த, ஓரளவு பலமான பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்கிட முடியும். நாம் கூறுவது ஒன்றும் பெரியதொகை இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகபட்சமாக ஒரு சதவிகிதம் மட்டுமே, அதாவது இதுவரை மன்மோகன் தொடங்கி மோடி அரசு உள்ளிட்டவை சுகாதாரத் தொகைக்கு ஒதுக்கிய அதே சதவிகிதத் தொகையே. அப்படியானால் இதுநாள் அவற்றை ஏன் செய்ய முடியவில்லை என்பதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால், தற்போது இருக்கும் மோடி அரசோ எந்த பிரச்சனையாக இருந்தாலும் காங்கிரசை மட்டுமே கைகாட்டி விடுகிறது. உண்மையில் காவி−கார்ப்பரேட் பாசிச மோடி அரசு தனது ஆட்சியில் பொதுச் சுகாதாரத்தைக் கை கழுவி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கே அரசு கஜானாவின் கதவுகளை அகலத் திறந்து விட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா கொள்ளை நோயால் உழைக்கும் மக்கள் பெரும் துயருற்றிருந்த காலத்தில்தான் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுக்கைகளை அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் இப்படி வரிச் சலுகை என்ற பெயரில் மட்டும் அரசுக்கு ஏற்படும் இழப்புத் தொகை சுமார் ரூ.1.45 இலட்சம் கோடி.
இவையன்றி, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக வாராக்கடன் என்ற பெயரில் கடந்த எட்டாண்டுகளில் ஒட்டுமொத்தமாக பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த தொகை சுமார் ரூ.6.33 இலட்சம் கோடி. இதில் ‘‘ஹேர் கட்’’ என்ற ஏலத் திட்டத்தின் மூலம் வசூலானது ரூ.1.8 இலட்சம் கோடி. மீதம் மொட்டையடிக்கப்பட்டது சுமார் ரூ.5.25 இலட்சம் கோடி.
இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை காட்டி வாரி வழங்குவதும், பொதுச் சுகாதரக் கட்டமைப்பை கண்டுகொள்ளாமல் விடுவதையும்தான் தனது ஆட்சிக் காலத்தில் மோடி அரசு செய்துள்ளது.
இவை ஒருபுறம் இருக்க, பொதுச் சுகாரத்தின் பெயரிலேயே கார்ப்பரேட்டுகளுக்கு அரசே அள்ளிக் கொடுப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.
மருத்துவக் காப்பீடு வைத்திருப்பவர்கள் தனியார் மருத்துவமனையில் ‘இலவசமாக’ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தனியாருக்கு பல நூறு கோடி வாரி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஆந்திர அரசு கடந்த மே மாதம் வரை சுமார் ரூ.309 கோடிகளையும், தமிழக அரசு 2021−2022-ம் ஆண்டுக்காக சுமார் ஆயிரம் கோடிகளையும் ஒத்துக்கியுள்ளன. இது, மக்களை தனியார் மருத்துமனைகளைக்கு விரட்டும் செயலாகும். மேலும், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றாலும் அவை காப்பீட்டு பணத்தையும் தாண்டி பில் போட்டு சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டுத்தான் விடுகின்றன. இப்படி ஒன்றிய, மாநில அரசுகள் அனைத்தும் கார்ப்பரேட் நலனிலேயே கருத்தாக உள்ளன.
தடுப்பூசி உள்பட மருத்துவப் பொருட்களின் உற்பத்தியிலும் கார்ப்பரேட்டுகளை வளர்த்து விடுவதற்கான கொள்கையைத்தான் மோடி அரசு பின்பற்றுகிறது. முக்கியமாக, கொரோனா தடுப்பூசிகளை அரசு நிறுவனங்களைக் கொண்டு தயாரிக்காமல் பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்து, இவர்களிடமிருந்து தடுப்பூசிகளை வாங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியது. இதில் பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஒத்துழைப்போடுதான் தடுப்பூசியை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கார்ப்பரேட் நிறுவனங்களோ மத்திய அரசிற்கு ரூ.150-க்கு விற்ற தடுப்பூசியை வெளிச்சந்தையில் ரூ.1,200 வரை விற்று கொள்ளையடித்தது. மோடி அரசோ 45 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு தடுப்பூசி வழங்கும், மற்றவர்களுக்கு மாநில அரசுதான் பொறுப்பு என்று தள்ளிவிட்டு, ஒன்றிய அரசு கொடுத்ததை விட கூடுதலான தொகைக்கு தடுப்பூசிகளை பெறவும் தனியார் மருத்துவமனைகளோடு போட்டி போடவும் வைத்தது.
ஆனால், தடுப்பூசி பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் மாநில அரசுகள் பல தடுப்பூசி நிறுவனங்களிடமே ஒப்பந்தம் போட முயற்சித்தபோது எந்த நிறுவனமும் தனியாக மாநில அரசுகளிடம் ஒப்பந்தம் போட முன்வரவில்லை. இதே காலத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி நிலைமை மோசமடைந்து கொண்டிருந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. கடைசியாக, மோடி அரசு உச்சபட்சமான ஒரு அழுத்தத்திற்கு ஆளான நிலையில்தான், அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசியை ஒன்றிய அரசே வழங்கும் என மோடி அறிவித்தார்.
எனினும், தடுப்பூசி தட்டுப்பாடு தீரவில்லை. கொரோனா தடுப்பூசி தொழிநுட்பத்தைப் பெற்று அரசே தனது கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்; அங்கு குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மோடி அரசு காது கொடுத்து கேட்கத் தயாராக இல்லை. செங்கல்பட்டில் உள்ள HBL தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை தமிழக அரசு லீசுக்கு எடுத்து நடத்த விரும்பிய விவகாரத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு, தனியார் கார்ப்பரேட் சேவையைச் செவ்வனே ஆற்றிக் கொண்டிருக்கிறார் மோடி. இதன் மூலம் இதுவரை தனியார் நிறுவனங்களிடம் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கென்றே ரூ.50 ஆயிரம் கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசே கார்ப்பரேட்டுகளை ஊக்குவிப்பதன் மூலமும், அரசு சுகாதார கட்டமைப்பு போதாமையால் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு தள்ளப்படுவதாலும் ஆண்டுக்கும் ஐந்து இலட்சம் கோடிகள் மருத்துவத்திற்கு செலவானால் அதில் 60% மக்களே செலுத்தும் அவல நிலைமை உள்ளது.
ஆண்டுதோறும் பல இலட்சம் கோடிகளை இந்திய மக்களிடம் வரிவசூலாக பெற்று வரும் மோடி அரசு, அதனை பயன்படுத்தி பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகளை பலப்படுத்த முடியும் என்ற நிலையிலும் பல்வேறு திட்டங்களின் மூலம் மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படையலாக்குவதைத்தான் செய்து வருகிறது. இதைத்தான் தனியார்மய − தாராளமயக் கொள்கைகளும் கோருகின்றன. இதனை தீவிரமாக அமலாக்கி வரும் கார்ப்பரேட் − காவி பாசிச மோடி அரசை தூக்கியெறியாமல், இனி மக்கள் நலன் குறித்து பேசுவது வெறும் கனவாகவே இருக்கும்.
ஆரோக்கியம் நிறைந்த மனிதவள ஆற்றல் தான் ஒரு நாட்டின் உண்மையான செல்வாதாரம். விளையாட்டு என்பது மனிதர்களின் உடல் வலிமைக்கும் மன மகிழ்ச்சிக்கும் திறமைக்கும் அடிப்படையான ஒரு கலை. ஒரு நாட்டின் இளைஞர் பட்டாளத்தின் ஆற்றலின் மகத்துவத்தை அகிலம் அறிய பறைசாற்றும் அரிய வாய்ப்பு ஒலிம்பிக் போட்டிகள்.
உலக மக்களில் ஆறில் ஒருவர் இந்தியர்; சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே நமது நாட்டில் தான் இளைஞர் ஆற்றல் அதிகமாக உள்ளது. மனித வளத்தை பயன்படுத்துவதில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளது. கியூபா, அர்ஜென்டினா உள்ளிட்ட சின்னஞ் சிறிய நாடுகள் கூட ஒலிம்பிக் போட்டிகளில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ளன.
32-வது ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 22-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி நிறைவுற்றுள்ளது. இந்திய வரலாற்றில் முதன்முதலாக தடகளத்தில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கப் பட்டியல் தரவரிசையில் இந்திய துணை கண்டம் 48-வது இடத்தில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தங்கப் பதக்கம் இரண்டு வெள்ளிப் பதக்கம் நான்கு வெங்கல பதக்கத்தை இந்திய விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பின்தங்கியிருப்பதன் காரணம் என்ன ?
ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமல்ல, கிரிக்கெட் தவிர வேறு எந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா பின் தங்கியே இருப்பதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் சாதிய – வர்க்கப் பாகுபாடுகளே. அடுத்ததாக பிற எல்லா துறைகளைப் போலவே விளையாட்டுத்துறையிலும் ஊறிப் போயிருக்கும் இலஞ்ச ஊழல் முக்கியப் பங்காற்றுகிறது.
இங்கு நமது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி ஆதிக்க வக்கிர மனநிலை பல் திறன்மிக்க வீரர்களை பயிற்சித்தடங்களிலேயே குழிதோண்டி புதைத்துவிடுகிறது
வெற்றி பெறவும் சாதிக்கவும் திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஏழை எளிய தாழ்த்தப்பட்ட; பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிறந்தவர்கள் திறமைகள் பல பெற்றிருந்த போதும் புறக்கணிக்கப்படுகிறார்கள். சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும்; உதவியும் அளித்து சர்வதேச தரத்திற்கு நிகராக விளையாட்டு வீரர்களின் ஆற்றலை வளர்த்தெடுக்க நேர்மையான அமைப்புகள் இங்கு இல்லை.
தரமான பயிற்சியாளர்கள்; உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இந்தியாவில் கிடையாது. மீனவர் சமுதாயத்தில் அசுர வேகத்தில் நீச்சலில் ஈடுபடும் இளைஞர்கள் உள்ளனர். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க நாதியில்லை ஐந்து நட்சத்திர விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் பயிற்சி எடுத்த கோடீஸ்வரர் குலக்கொழுந்து நீச்சல் வீரர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். நல்ல உடற்கட்டும் வலிமையும் கொண்ட உள்ள கிராமப்புற இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வசதி வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
தலித் சமூகத்தை சார்ந்த வந்தனா கட்டாரியா பங்கேற்ற ஹாக்கிப் போட்டியின் தோல்வியை வெடி வைத்து கொண்டாடிய ஆதிக்க சாதிவெறியர்களின் குரூரம் !
ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் செல்வாக்கும்; சாதி ஆதிக்கமும் பிரதான பங்கை வகிக்கின்றன. இந்திய துணை கண்டத்தின் தலைசிறந்த ஹாக்கி விளையாட்டு வீராங்கனை வந்தனா கட்டாரியா உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் பகுதியை சேர்ந்தவர். இந்திய ஹாக்கி அணியின் அடையாளமாய் திகழ்பவர். ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் மூன்று கோல்களை போட்டு சாதனை படைத்த அற்புதமான ஹாக்கி விளையாட்டு வீராங்கனை. அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று அதன்மூலம் இந்திய மகளிர் அணியின் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய வீரமங்கை.
எவ்வித வசதிகளும் இல்லாத தலித் மக்கள் வாழ்கின்ற குடிசைப்பகுதியில் வந்தனா கட்டாரியா வசித்து வந்த கட்டாரியா தனது கடுமையான முயற்சியால் சாதனை படைத்தாலும், அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா நாட்டுடன் போட்டியிட்டு இந்திய அணி தோல்வியடைந்தது.
மொத்த இந்தியாவே இந்திய அணியின் தோல்வியைக் கண்டு வருந்தியதோடு, அணி வீரர்களின் கடும் உழைப்புக்குப் பாராட்டு தெரிவித்துக் கொண்டிருந்த வேளையில், விஜய்பால் என்கின்ற ஆதிக்க சாதி வெறியன் தலைமையில் ஒரு கும்பல், இந்திய ஹாக்கி அணியின் தோல்வியை, பட்டாசு வெடித்துக் கொண்டாடி சாதி வெறியில் கொக்கரித்துள்ளது.
வந்தனா கட்டாரியா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும்; அவரது தலைமையிலான ஹாக்கி அணியில் தலித் சமூகத்தவர்கள் இருப்பதாலும் ஒலிம்பிக்கில் தோல்வியடைந்ததாக கூறி; வந்தனா கட்டாரியா மற்றும் தலித் சமூகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் கூக்குரலிட்டு உள்ளனர்.
இந்திய துணை கண்டத்தின் மாபெரும் விளையாட்டு வீராங்கனை சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்பட்ட இந்த செயலை, ஒன்றிய அரசும் மாநில அரசும் கண்டுகொள்ளாமல் வாய் மூடி மௌனியாக இருக்கின்றனர். எல்லா விளையாட்டுகளில் இருந்தும் பட்டியல் இனத்தவரை வெளியேற்ற வேண்டும் என்று சாதிவெறியர்கள் கூச்சலிட்டு உள்ளனர்.
பாகிஸ்தானுடனான இந்திய கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியினரின் திறனை ஏதேனும் முசுலீம் ஒருவர் பாராட்டினாலோ, அல்லது பாகிஸ்தான் அணியின் வெற்றியை ஒரு முசுலீம் புகழ்ந்தாலோ, உடனேயே கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறது போலீசு. இங்கு இந்திய அணியின் சர்வதேசத் தோல்வியை ஒரு கிரிமினல் சாதிவெறிக் கும்பல் கொண்டாடியிருக்கிறது. இதில் வழக்கு பதிவு செய்வதற்கே பலர் போராட வேண்டியது இருக்கிறது.
சாதி ஆதிக்க வெறியர்களின் முகத்தில் காரி உமிழுவதைப்போல் வந்தனா கட்டாரியா “நான் தலித் சமூகத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன்” என்று நெஞ்சு நிமிர்த்தி கூறியிருக்கிறார். “ஒடுக்கப்பட்ட மக்களின் வீரம் நான், குரல் அற்ற மக்களின் நம்பிக்கை நான்” என்று கூறுகிறார். பாலின ஒடுக்குமுறை நிலவுகின்ற நாட்டில்; சாதி ஆதிக்க வெறி புரையோடிப்போயுள்ள நாட்டில்; வறுமை ஏழ்மை உள்ளிட்ட பல தடைகளை தாண்டி ஒரு பெண் வீராங்கனை இவ்வாறாக உருவாவது எளிதான காரியம் அல்ல.
கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பார்ப்பன சாதி ஆதிக்க கும்பல்தான் ஆக்கிரமித்துள்ளனர். கேவலமான தோல்வியை பல்வேறு விளையாட்டுகளில் இவர்கள் அடைந்தபோதும் யாரும் இவர்களுடைய பிறப்பு குறித்து; தோல்விக்கு காரணம் இவர்களுடைய சாதிதான் என்று யாரும் கருத்து சொல்லவில்லை. இந்திய துணை கண்டம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக புரையோடிக் கிடக்கும் சாதி ஆதிக்க உணர்வை இந்த சம்பவம் காட்டுகிறது.
சூதாட்டமயமாகும் விளையாட்டுத்துறை :
உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பு நேரம்போக எஞ்சிய ஒரு சில மணி நேரத்தில் தான்; விளையாட்டில் ஈடுபடுவது அல்லது அதை பார்த்து ரசிப்பது இயலும். மற்ற விளையாட்டுகளைப்போல் இல்லாமல் இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பார்ப்பன உயர் சாதி கும்பல்தான்; இவ்விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொலைக்காட்சி ஊடகத்தின் விளைவாய் சிற்றூர்களிலும் கூட மட்டைப் பந்து பார்ப்பது ஒரு நாகரிக செயல்பாடாக மக்கள் கருதுகிறார்கள். நாட்டுப்புற சிறுவர்கள் கூட மட்டைப் பந்து தவிர வேறு விளையாட்டில் ஈடுபடுவதில்லை.
விளையாட்டு மனித சமூகம் தொடர்புடைய எளிய உறவு என்ற நிலை இன்று மாறிவிட்டது. மக்கள் தங்கள் உழைப்பு சாதனங்களில் இருந்தும் ஏற்கனவே செய்து வந்த உற்பத்தி உறவுகளில் இருந்தும் இன்று அன்னியமயமாக்கப்பட்டு விட்டனர். விளையாட்டும் இன்று அந்நியமயம் ஆக்கப்பட்டுவிட்டது. கிரிக்கெட்டை தலையில் வைத்துக் கொண்டாடும் கார்ப்பரேட் நிறுவனங்களும்; நடுவண் – மாநில அரசுகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி உள்ள விளையாட்டு கலைகளை வளர்ப்பதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை.
கிரிக்கெட் விளையாட்டும் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களும் கார்ப்பரேட் ஏகபோக நிறுவனங்களின் விசுவாச அடிமைகளாகி விட்டனர். இத்தகைய விளையாட்டு வீரர்களின் சுதந்திரம் என்பது சந்தையின் சுதந்திரம்தான். சுயநலம் மிகுந்த தனிமனித வழிபாடுதான் அவனிடமிருந்து வெளிப்படுமே தவிர நாட்டுப்பற்றுக்கு இங்கே இடம் கிடையாது. சந்தைக்கு தான் அங்கே இடம் இருக்கிறது.
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள லஞ்ச ஊழல் முறைகேடுகள் ஒலிம்பிக் வீரர்களை தேர்வு செய்வதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. 2008-ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கு கையூட்டு வாங்கியதை; அஸ்தக் ஹாட் லைன் டுடே தொலைக்காட்சி அப்பட்டமாக ஒளிபரப்பியது.
கிரிக்கெட் ஏகபோக நிறுவனங்களின் வர்த்தக சூதாட்டக்களமாக மாறிவிட்டது. காலனிய ஆட்சியாளர்கள் உருவாக்கிய கிரிக்கெட் மோகம், இன்று சூதாட்டத்திற்கும், விளையாடுபவர்களின் ஏலத்திற்கும் வந்தடைந்து இருக்கிறது. கூட்டுழைப்பு சிந்தனையையும், உடல் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் விளையாட்டுக்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும் அதில் திறனுள்ள மாணவர்களை வளர்ப்பதும் மிகவும் அவசியமாகும். கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, இத்தகைய விளையாட்டுத்துறைக்கு கொடுத்து, சாதிய பாகுபாடுகளற்ற தேர்வுமுறை மற்றும் பயிற்றுவிக்கும் திட்டத்தையும் முன்னெடுக்கும் போதுதான், ஒலிம்பிக் தரப்பட்டியலில் கவுரவமான இடம கிடைக்கும்.
வருணாசிரம கொடுங்கோல் ஆட்சியை மீண்டும் புதிய வடிவத்தில், கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலின் நலன் ஒன்றையே குறிக்கோளாய் கொண்ட ஒரு பாசிச ஆட்சியை நிறுவ இந்திய ஆட்சியாளர்கள் முயலும் இந்த நேரத்தில் வர்க்கப் போராட்டத்திற்கு இணையாகவும் துணையாகவும் சாதி ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. வந்தனா கட்டாரியா எழுப்பிய உரிமைக்குரலை நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.
சமத்துவ சமூகம் உருவாக்குவதற்கான போராட்டத்தின் வாயிலாகத்தான் ஒலிம்பிக்கில் நாம் சாதனைகளை படைக்க முடியும்.
கரூரில் தையல் தொழில் செய்து வரும் நாகராஜ் என்பவர், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒருவரிடம் ரூபாய் 20,000 வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். அவர் வாங்கிய கடன் தொகையைவிட பல மடங்கு பணம் ரூபாய் 3,10,000 வட்டியாக செலுத்தியபோதும் கடன் அப்படியே இருப்பதாகக் கூறி நாகராஜை மிரட்டி வருகிறது கந்துவட்டி கும்பல். இவர் மட்டுமின்றி கரூரில் கந்துவட்டி கும்பலால் பலரும் மிரட்டி அச்சுறுத்தப்படுவதாகவும் இக்கும்பலுக்கு போலீசும் உடந்தையாக இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.
அதேபோல, கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி, சென்னை வேப்பேரி போலீசுத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சூளைமேடு பகுதியை சார்ந்த பாய் வியாபாரிகள் 10 பேர், திடீரென தம் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களை மீட்டு விசாரித்ததில் சூளைமேடு பகுதியில் தொடர்ந்து அரங்கேறும் கந்துவட்டி கொடுமை அம்பலமானது.
மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்ற கந்துவட்டிக்காரனிடம், சூளைமேடு பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். பணம் வாங்கியவர்கள் அசல் பணத்தை திருப்பித் தரும்போது “வேண்டாம்” என்று மறுத்து விட்டு வட்டிப் பணத்தை கட்டச் சொல்வது, கடன் வாங்கியவர்களை வியாபாரத்திற்கு போகும்போது வழியில் நிறுத்தி மிரட்டுவது, கத்தியால் குத்துவது, ஆட்களை அனுப்பி வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவது என சண்முகம் தொடர்ந்து பல அட்டூழியங்களைச் செய்து வருவதால் கடன் வாங்கியவர்கள் தினமும் உயிர் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
இதன் உச்சகட்டமாக ஒருநாள், சேகர் என்பவரைக் கடத்தி இரவு வரை அடித்து மிரட்டி குத்துயிரும் குலை உயிருமாக அனுப்பி வைத்துள்ளான் அந்த பணவெறி பிடித்த மிருகம். சேகரின் தந்தை 10 வருடத்திற்கு முன்பு சண்முகத்திடம் ரூபாய் 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வட்டியுடன் சேர்த்து ரூபாய் 19.6 லட்சம் திருப்பி தரவேண்டும் என்று சண்முகம் கூறியுள்ளான். சேகரின் தந்தை தொடர்ந்து வட்டி கட்டி வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் வட்டிகட்ட முடியாமல் அதனை நிறுத்திவிட்டார்.
எனவே அவரது மகனைக் கடத்தி நாள் முழுவதும் துன்பறுத்தி, அரிவாளால் மண்டையில் வெட்டி, இரும்பு கம்பிகளால் தாக்கி, சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்து ரூபாய் 2 லட்சம் பணம் தந்த பிறகு சேகரை அனுப்பி வைத்துள்ளான். தற்போது பத்துக்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டு சேகர் மருத்துவமனையில் உள்ளார்.
இதுகுறித்து புகார் எடுக்க போலீசுத்துறை மறுத்ததும் சேகர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததும் தெரியவந்துள்ளது. மேலும், நீதிகேட்டு வந்த உறவினரை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல், முதலமைச்சர் செல்லும் பிரதான சாலை என்று கூறி அவர்களைக் கைது செய்துள்ளது போலீசு.
இதேபோல, கடந்த ஜூன் மாதமும் கடன் வாங்கியவரின் வீட்டையே கந்துவட்டிக்காரன் அபகரித்த இன்னொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி சுரேஷ் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கந்துவட்டி சிகாமணி என்பவனிடம் தன் வீட்டு பத்திரத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ரூபாய் 22 லட்சம் பணத்தை கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஊரடங்கு காலம் என்பதால் தன் வயிற்றுப் பிழைப்பிற்கே வழி தேடிக் கொள்ள முடியாத அந்தோணி சுரேஷால் வட்டியைக் கட்ட முடியவில்லை.
மொத்தமாக ரூபாய் 38 லட்சம் கேட்ட சிகாமணி 20 பேருடன் அந்தோணியின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அடித்து வெளியே துரத்தி துணிமணி பாத்திரங்களை வெளியில் வீசிவிட்டு வீட்டை அபகரித்துள்ளான். இது குறித்து புகாரளிக்க போலீசாரிடம் போனால் அவர்கள் புகாரை எடுக்கவில்லை.
வீட்டை விற்று கடனை தருவதாக சுரேஷ் சொன்னபோது, ஏதோ தானே உழைத்து கட்டிய வீடுபோல் சிகாமணியும் அதற்கு சம்மதிக்காமல் அடவாடித்தனம் செய்துள்ளான். ஊரடங்கு காலத்தில், தன் சொந்த உழைப்பால் கட்டிய வீட்டை இழந்துவிட்டு மனைவி மக்களோடு செய்வதறியாது நடுத்தெருவில் நின்றார் அந்தோணி சுரேஷ்.
இப்படி கந்துவட்டிக் கொடுமையால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் தற்கொலைகள் நடப்பதும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இதேபோல சென்ற மே மாதமும் ஊரடங்கால் தொழில் முடங்கி சரவணன் என்ற நகை பழுது பார்க்கும் தொழிலாளி, நகை பாலிஷ் போடும் ஆசிட்டையே பாலில் கலந்து குடித்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது நமக்கு நினைவிருக்கும். ஊரடங்கு காலத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை சொல்லும் அரசுக்கும் ஊடகங்களுக்கும் வறுமையால் செத்தவர்களின் எண்ணிக்கையைப் பற்றி கண்டுகொள்ள நேரமில்லை. கொரோனா மக்களை கார்ப்பரேட் மருத்துவமனைகளிடம் துரத்தியதென்றால், அதற்கான பணத்தேவையும் பசியும் அவர்களை கந்து வட்டிக்காரர்களிடம் துரத்துகிறது.
கார்ப்பரேட்டுக்கு கோடிக்கணக்கில் கடனை அள்ளித் தந்துவிட்டு ஹேர்கட் (haircut) செய்து கொள்ளும் வங்கிகளோ, உழைக்கும் மக்கள் வங்கிக்கு வந்தால் அவர்களிடம் ஆயிரம் ஆவணங்களைக் கேட்கின்றது. ஏற்கனவே வேலை இழப்பு, விவசாய நசிவு, ஊரடங்கால் பட்டினி, பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி – ஆகியவற்றால் நசிந்துபோன மக்கள் இன்னும் வேகமாக கந்துவட்டி கும்பல்களை நோக்கித் துரத்தப்படுகின்றனர்.
2017-ம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இரு குழந்தைகளுடனும் மனைவியுடனும் துடிதுடிக்கத் தீயில் கருகி இறந்தது இசக்கிமுத்துவின் குடும்பம். அந்தக் கொடூர சம்பவத்துக்குப் பிறகாவது கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க இந்த அரசு ஏதேனும் சிறு நடவடிக்கை எடுத்ததா? அல்லது நீதிமன்றங்கள்தான் அதைக் கண்டுகொண்டதா? அதன்பிறகு, நாளுக்கு நாள் கந்துவட்டி மரணங்கள் பெருகிவருகிறதே ஒழிய குறைந்தபாடில்லை.
தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டே கந்துவட்டி தடுப்பு சட்டம் வந்துவிட்டது. “தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கக் கூடாது; அசையும் சொத்தையோ; அசையா சொத்தையோ அபகரிக்கக் கூடாது; இதனை மீறினால் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை ரூபாய் 30 ஆயிரம் அபராதம்” என இந்தச் சட்டம் கூறுகிறது. ஆனால், இச்சட்டத்தை கழிவறைக் காகிதமாகக் கூட இக்கும்பல்கள் மதிப்பதில்லை. மிகப் பெரும்பன்மையான போலீசு நிலையங்கள் இவர்கள் மீது வழக்குகளைக் கூடப் பதிவு செய்வதில்லை.
மேலும், சட்டத்தை அமுலாக்கும் அதிகாரம் கொண்ட உள்ளூர் அதிகாரிகள், போலீசுத்துறையுடனும் உள்ளூர் அரசியல்வாதிகளுடனும் இக்கும்பல்கள் நெருக்கமாக உள்ளன. வட்டிக்கு வாங்கியவர்களை அடிப்பது, உதைப்பது, கடத்திக் கொண்டுபோய் மிரட்டுவது, வீட்டுக்கு தனது அடியாட்களை அனுப்பி அவர்களை அவமானப்படுத்துவது, தற்கொலைக்குத் தூண்டும் வகையில் மானபங்கப்படுத்துவது – இவை அனைத்தும் இந்த அரசமைப்பின் குறிப்பாக போலீசின் துணையில்லாமல் நடைபெற சத்தியமே இல்லை.
மக்களைக் கந்துவட்டிக் கும்பல்களை நோக்கித் துரத்தும் இந்த தோல்வியடைந்த அரசு கட்டமைப்புதான், மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் கந்துவட்டிக் கும்பல்களுக்குப் பாதுகாப்பு அரணாகவும் இருந்து சேவை செய்கிறது.
கந்துவட்டிக் கும்பலோடு இணைந்து மக்களை வட்டியின் பெயரால் கொள்ளையிட்டு மிரட்டி சம்பாதிக்கும் போலீசுத் துறையினரையும், அதற்குத் துணைபோகும் பிற அதிகாரிகளையும் இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் அமைதிகாக்கும் நீதித்துறையையும், கந்து வட்டிக் கும்பலாக இருக்கும் பெரும்பான்மை அரசியல் கட்சியினரையும் உள்ளடக்கியதுதான் இந்த அரசுக் கட்டமைப்பு.
இந்த அரசுக் கட்டமைப்பு, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கானதாக இல்லை என்பதையும் இது ஒரு போலி ஜனநாயகம் என்பதையும் இது காட்டுகிறது.
கந்து வட்டிக் கொடுமைகளில் இருந்து மீள வேண்டுமெனில், கையில் மண்ணெண்ணெய் கேனை எடுப்பது தீர்வல்ல. கந்து வட்டிக் கும்பலையும் அதனுடன் இணைந்த அதிகாரவர்க்கத்தையும் அம்பலப்படுத்த உழைக்கும் மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவதே அதற்கான முதல்படி.
டெல்லியில் நங்கல் என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 1 அன்று சுடுகாட்டிற்கு தண்ணீர் எடுக்க சென்ற 9 வயது தலித் சிறுமியை ஒரு புரோகிதன் உள்ளிட்ட நான்கு பேர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்து, அச்சிறுமியின் உடலையும் எரித்துள்ளனர்.
தண்ணீர் எடுக்கச் சென்ற தனது மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தாய், சிறுமியை தேடிச் சென்றுள்ளார். இரவு 7.30 மணிக்கு, சுடுகாட்டிற்குச் சென்று தேடியபோது, அங்கிருந்த பூசாரி ராதே ஸ்யாம் (45) மற்றும் தகன மேடை ஊழியர்களான லட்சுமி நாராயணன், சலீம், குல்தீப் ஆகியோர், “உங்கள் மகள் தண்ணீர் தொட்டியில் இருந்த மின் வயரை தொட்டதால் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டாள்” என்று கூறியிருக்கின்றனர்.
ஆனால், சிறுமியின் உதட்டில் காயம் மற்றும் உதடு நீல நிறமாக மாறியிருப்பது, உடலில் காயங்கள் இருப்பது ஆகியவை தாய்க்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அது குறித்து தனது கணவரிடமும் பிறரிடமும் சொல்ல முயற்சித்த அந்தத் தாயை அமைதியாக இருக்கச் சொல்லி, குழந்தை மின்சாரம் மரணமடைந்தது வெளியே தெரிந்தால், போலீசு குழந்தையின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும். அங்கு குழந்தையின் உடல் உறுப்புகளை திருடி விடுவார்கள். ஆகையால் அப்போதே குழந்தை எரித்து விடலாம் என்று கூறியிருக்கின்றனர்.
குழந்தையை இழந்த தாய் கதறியபோதும், அவரது அனுமதி கேட்காமல் குழந்தையின் உடலை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து அச்சிறுமியின் உடலை எரிக்கத் துவங்கினர். வெளியே அழுகாமல் செல்லுமாறும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியிருக்கின்றனர்.
சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு நாடகம் ஆடுகிறார்கள் என்று உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார், அந்தத் தாய். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து 90 விழுக்காடு எரிந்த நிலையில் சிறுமியின் உடலை மீட்டு உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் உடனடியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் போக்குக் காட்டி வந்தது டெல்லி போலீசு. இந்நிலையில் இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவத் துவங்கி சமூக அழுத்தம் அதிகமான நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுத்து அந்தக் கிரிமினல் கும்பலைக் கைது செய்திருக்கிறது போலீசு.
ராகில், மானசா
அதே வாரத்தில், கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த பி.வி.மானசா எனும் பயிற்சி மருத்துவர், அவரது முன்னாள் காதலன் ராகில் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவத்தன்று ராகில் மானசாவின் வீட்டிற்குச் சென்றுள்ளான். மானசாவிடம் பேச வேண்டுமெனக் கூறி தனி அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளான். பேசிக் கொண்டிருக்கையில் மானசாவை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளான். அறையிலிருந்து அடுத்தடுத்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு மானசாவுடன் இருந்த மற்ற மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து அந்த அறையின் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.
ராகிலின் நடத்தை பிடிக்காததால் மானசா அவருடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகில் அடிக்கடி மானசாவிடம் தகராறு செய்து வந்துள்ளான். இந்நிலையில்தான் ராகில், மானசாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்கள் மீது நடக்கும் வன்முறைகள் தொடர்பான மேற்கண்ட இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வெளிவந்த செய்திகள்.
தன்னை காதலித்த பெண் தன்னுடனான காதலை முறித்துக் கொள்ளும்போது அந்தப் பெண்ணை கொலை செய்ய ராகிலைத் தூண்டியது எது? ஒரு பொருள் தனக்குக் கிடைக்கவில்லை எனில் அந்தப் பொருளை இல்லாமல் செய்வது என்பதே ஒரு பெரும் வக்கிரம். ஆனால், ஒரு உயிருள்ள – உணர்வுள்ள சக ஜீவியான ஒரு பெண் தன்னை விரும்ப மறுக்கிறாள் என்பதற்காக அவரைக் கொலை செய்யும் சிந்தனை எங்கிருந்து வருகிறது?
பெண் என்பவள் ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு கட்டுப்பட வேண்டிய ஒரு பிறவி என்ற எண்ணம் இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருப்பதன் வெளிப்பாடுதான் இது. அது தகப்பனாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும், காதலனாக இருந்தாலும், கணவனாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் பெண் என்பவள் இவர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும்.
இதைத்தான் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது. ஒரு பெண் என்பவள் சிறுவயதில் தந்தைக்குக் கட்டுப்பட்டவளாகவும், திருமணத்திற்குப் பின்னர் தனது கணவனுக்குக் கட்டுப்பட்டவளாகவும், முதியவளான பின்னர் தனது மகனுக்குக் கட்டுப்பட்டவளாகவும் இருக்க வேண்டும் என்கிறது மனு சாஸ்திரம்.
இங்கு ஒரு ஆண், அந்தப் பெண்ணைத் தான் காதலித்ததற்காக – தனது காதலை அப்பெண் ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொண்டதற்காகவே, அந்தப் பெண்ணை தனக்கு சொந்தமானவளாகக் கருதும் ஆணாதிக்க பார்ப்பனிய சிந்தனையின் விளைவுதான் இந்தப் படுகொலை.
டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இடுகாடு முன்பாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுமியின் குடியிருப்புப் பகுதி பெண்கள்
ஒரு 9 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுச் செய்து கொலை செய்யவும், அந்தச் சிறுமியின் தாயாரை மிரட்டி உடலை எரிக்கவும் அந்த சுடுகாட்டுப் புரோகிதனுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் எது தைரியம் கொடுத்தது?
ஒரு ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிறுமியிடமும் அவளது பெற்றோரிடமும் அந்தப் புரோகிதனாலும் அவனது கூட்டாளிகளாலும் கண்டிப்பாக இவ்வளவு தைரியமாக இத்தகைய கொடுங்குற்றத்தை செய்திருக்க முடியாது. ஆனால், ஒரு தலித் சிறுமியிடமும், அவளது குடும்பத்திடமும் இவ்வளவு வக்கிரமாக நடந்து கொள்ள அந்தக் கிரிமினல் கும்பலுக்கு எது தைரியம் கொடுத்தது?
தலித் மக்களின் குரலை அதிகார வர்க்கமே ஒடுக்குவது சமூக எதார்த்தமாக நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கையில், “தலித் சிறுமிதானே.. கேட்க நாதியா இருக்கப்போகிறது? கேட்டாலும் போலீசை வைத்து மிரட்டி, ஒடுக்கிவிடலாம் என்ற சாதிய மேட்டுக்குடித் திமிரும், சனாதன (அ)தர்மமே ஆட்சி செய்யும் இந்தச் சமூகக் கட்டமைப்பும்தான் இந்தக் கிரிமினல் கும்பலுக்கு தைரியத்தைக் கொடுத்திருக்கிறது.
பெண்களின் மீதான வன்முறை ஒரு சமூகப் பிரச்சனை. பார்ப்பனிய – ஆணாதிக்க சமூக கட்டமைப்பு, பாகுபாடான சமூகப் படிநிலை, பெண்களை போகப்பொருளாக முன்நிறுத்தும் நுகர்வு கலாச்சாரம் – ஆகிய சமூகக் காரணிகள்தான் இன்று பெண்கள் நடமாடத் தகுதியற்ற நாடாக இந்தியாவை மாற்றியுள்ளன.
ஆனால், இந்தக் கொடுமைகளுக்குத் தீர்வாக சட்டத்தை கடுமைப்படுத்த வேண்டியது குறித்தும், பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டியது குறித்தும்தான், பெரும்பாலான நடுத்தரவர்க்கத்தினர் முதல் நீதிபதிகள் வரை அனைவரும் முத்துக்களை உதிர்க்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் வித்தைதான் பார்ப்பனியம் இவ்வளவு நாளாக கடைபிடித்து வரும் தந்திரம். அதுதான் தற்போது நடைமுறையில்ம் இருக்கிறது.
சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறைகளையும் – பார்ப்பனிய ஆணாதிக்க மனநிலையையும் ஒழித்துக்கட்டாமல் சட்டங்கள் மூலமாகவோ, பாதிக்கப்படும் பெண்களுக்கான அறிவுரைகள் மூலமாகவோ இதற்குத் தீர்வு காண முடியாது.
கொரோனா பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்னரே, மோடி அரசின் முதல் ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது. அந்த உண்மையை மறைத்து 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘‘ஒளிரும் இந்தியா’’ உருவாகி வருவதாக இந்துவெறி கும்பல் புளுகியது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் கொரோனாவின் மேல் பழியைப்போட்டு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதை மறைக்க முடியாமல் ஒப்புக் கொண்டது.
கொரோனா பெருந்தொற்றின் முதலாவது அலைக்குப் பின்னால் பொருளாதாரம் மொத்தமாக ஸ்தம்பித்துப் போனது. இதன் பின்னர் பொதுமுடக்கம் ஓரளவிற்கு தளர்த்தப்பட்டிருந்தாலும், கொரோனா இரண்டாவது அலையின் போதிலிருந்து தொழிற்துறை வளர்ச்சி சரிவிலேயே சென்று கொண்டிருக்கிறது. இதுவரை ஒற்றை இலக்கில் இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் தற்போது எதிர் குறியீடுக்கு (மைனஸ்) சென்றுவிட்டது. அதாவது, தரைதட்டிக் கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம், பூமிக்குள் சென்று புதைந்துவிட்டது.
ஆனால் மோடி அரசோ, எந்த கார்ப்பரேட் − காவி பாசிசத் திட்டங்களை அமல்படுத்தியதால் பொருளாதாரம் இந்த நிலைக்கு ஆளானதோ, அதையே மீண்டும் மீண்டும் வெறித்தனமாகச் செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், சென்றமுறை புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்குக் கொண்டு வந்தது, சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், மூன்று வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல அடக்குமுறைகளை ஏவிய மோடி அரசு, இந்தமுறை இன்னும் பல புதிய தாக்குதல்களைத் தொடுக்கும் நோக்கத்தோடு நடக்கின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை அறிமுகம் செய்ய உள்ளது.
000
தேசப் பாதுகாப்பு குறித்து வாய்கிழியப் பேசும் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க. கும்பல், ஆவடி பீரங்கித் தொழிற்சாலை, திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களான 41 ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகளைத் தனியார்மயமாக்கும் நோக்கத்தின் முதல் நடவடிக்கையாக, அதனை ஏழு நிறுவனங்களாக இணைக்க இருக்கிறது. அரசின் இந்தச் சட்டத்திற்கு எதிராக பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிலாளர்கள் போராடி வருவதால், அவர்களை ஒடுக்குவதற்காக ‘‘அத்தியாவசியப் பாதுகாப்புச் சேவைகள் மசோதா’’ −வைக் கொண்டுவந்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான நோக்கத்தில் 98 பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள 172 சுயேட்சையான இயக்குநர் பதவிகளில் 86 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை புகுத்தியுள்ளது, மோடி அரசு. ஏற்கெனவே கார்ப்பரேட்டுகளுக்குக் கூலிப்படையாக செயல்படும் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மென்மேலும் இவ்விடங்களில் புகுத்தப்படுவதன் மூலம் பொதுத்துறைகளைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதை மேலும் தீவிரமாகச் செய்து வருகிறது.
இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் அரசின் மிகப்பெரிய பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யையும் நூறு சதவிகிதம் தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்துள்ளது, மோடி அரசு. கோடிக்கணக்கான மக்களின் சேமிப்பால் வளர்க்கப்பட்ட இந்த நிறுவனங்களின் மதிப்பு இன்று பல இலட்சம் கோடிகளாக வளர்ந்து, உயர்ந்தோங்கியுள்ளது. இதனைக் கார்ப்பரேட்டுகளுக்குக் கறி விருந்தாக்கும் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறது, மோடி அரசு.
மேலும், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தவும், பெறவும் உதவியாக இருக்கும் வகையில் 2008−ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமைப்பின் பெயர் ‘‘தேசிய நிதி செலுத்து வாரியம்’’ (National Payment Corporation of India). இந்த அமைப்பில் நாட்டின் 80−க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்த நிலையில், இதனை மேலும் பலப்படுத்துவதற்குப் பதிலாக இவ்வாரியத்தை முடக்கி வருகிறது, மோடி அரசு.
அதற்கு மாறாக, தனியார் மூலம் இத்தகைய பரிவர்த்தனைகளை நடத்தும் வகையில், சட்ட வாய்ப்புகள் குறைவாக உள்ள யு.என்.ஐ. என்ற அமைப்பை ரிசர்வ் வங்கி அவசர அவசரமாக உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் பணப் பரிவர்த்தனைகள் முழுவதும் தனியார் கைகளுக்குச் செல்வதற்கும், வங்கிகளில் உள்ள நிதிகள் அனைத்தும் சூறையாடப்படுவதற்கும் வழிவகை செய்துள்ளது மோடி அரசு.
இதேபோல, வருமான வரியை வசூலிப்பதற்கான அரசு நிறுவனக் கட்டமைப்பை ஒழித்துக் கட்டும் வகையில், வருமான வரித்துறைக்குப் புதிய இணைய தளம் ஒன்றை மோடி அரசு உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய இணைய தளத்தை இன்ஃபோசிஸ் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. நாட்டில் ஏற்கெனவே கார்ப்பரேட் நிறுவனங்களால் வருமான வரி மோசடிகள் சர்வசாதாரணமாக நடக்கும் நிலையில், வரி வசூலிக்கும் இணையப் பரிவர்த்தனையையும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடமே ஒப்படைத்துள்ளது, மோடி அரசு.
இவையன்றி, இலவச மின்சாரத்தை ஒழித்துக்கட்டி, மின்சாரத் துறையை முற்றிலும் தனியார்மயக்கும் ‘‘மின்சாரச் சட்டத் திருத்த மசோதா’’வையும் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்ற இருக்கிறது. மக்களின் பயன்பாட்டுக்கான மின்சாரத்துக்கு அரசாங்கம் வழங்கிவரும் மானியங்கள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்பது இம்மசோதாவின் முக்கியமான அம்சம்.
‘‘புதிய போக்குவரத்துச் சட்டத் திருத்தம்” அமலுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஓட்டுநர் உரிமம் வழங்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் பணியைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திருப்பிவிடும் வேலையை இதில் மோடி அரசு செய்துள்ளது. இதன் அடுத்தகட்டமாக, போக்குவரத்து வழித்தடங்களைக் கூட கார்ப்பரேட் நிறுவனங்களிடமே விட்டுவிடும் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிக்கிறது.
இதன்மூலம் அரசுப் பேருந்துகள் அரசு போட்ட சாலைகளில் செல்வதற்குக்கூட டோல்கேட் என்ற பெயரில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கட்டணம் கட்டுவது போல, நாளை பேருந்து விடுவதற்கே கார்ப்பரேட்டுகளின் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலைக்கு இச்சட்டம் கொண்டுசெல்லவிருக்கிறது.
பன்னாட்டுக் கம்பெனிகள் நம் கடல் வளத்தை வரைமுறையின்றிச் சுரண்டுவதற்கு வகைசெய்யும் ‘‘இந்திய மீன்வள வரைவு மசோதா”வையும் இக்கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தவுள்ளது, மோடி அரசு. 12 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியைச் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்து அப்பகுதியினைக் கார்ப்பரேட்டுகளின் ஏகபோக உரிமையாக்க உள்ளது. ஏற்கெனவே, இரட்டை மடிப்பு வலை, டீசல் விலை உயர்வு, கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம் முதலானவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை இம்மசோதா முற்றிலும் ஒழித்துக்கட்டி கடலிலிருந்தே அவர்களை விரட்டியடிக்கும்.
இவ்வாறு கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் அனைத்திலும் அதனை மீறுகின்ற சாமானிய மக்களுக்கு சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை விதிக்க வகை செய்துள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, மக்கள் நலனிலிருந்து அரசு முற்றுமுழுதாக விலகுவதோடு மட்டுமன்றி, அந்த இடத்தில் கார்ப்பரேட் கும்பல்களின் ஆட்சி நிலை நாட்டப்படும் அபாயம் நம் கண்முன் தெரிகிறது.
மேலும், இதுபோன்ற சட்டத்திருத்த மசோதாக்கள் எவற்றையும் நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றுவது என்ற சடங்கைக்கூட மோடி அரசு செய்யத் தயாராக இல்லை. 31 மசோதாக்களைத் தாக்கல் செய்யும் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் 19 நாட்கள் மட்டுமே நடக்கவிருக்கிறது. இதில் பாதி நேரம்கூட விவாதங்கள் நடக்கப் போவதில்லை. தனக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்து பலாத்காரமாக இச்சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றிவிடும். நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தைக் கட்டிக்காத்துவிடத் துடிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட யாரும் இதனைத் தடுத்து நிறுத்த முடியாது.
இவையல்லாது, மோடி அரசின் வரி பயங்கரவாதத்தால் நாளுக்கு நாள் உயர்ந்துவரும் பெட்ரோல் − டீசல் விலை உயர்வின் காரணமாக ஆட்டோ, லாரி, டாக்சி ஓட்டும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கும் பட்டினிச் சாவுக்கும் தள்ளப்படும் அபாய நிலையில் உள்ளனர்.
ஐ.டி. முதல் ஆட்டோமொபைல் தொழில்வரை அனைத்துத் துறைகளிலும் கொத்தாக வேலை பறிப்புகள் நடந்து வருகின்றன. இதுபோக, உலகளாவிய அளவில் புகுத்தப்படும் தானியங்கி எந்திர முறையால் 30 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
தொடரும் கொரோனா கால ஊரடங்காலும், அரசால் ஊக்குவிக்கப்படும் இணையவழிக் கல்வி முறையாலும் கல்வியை இழந்த லட்சக்கணக்கான ஏழை−எளிய குழந்தைகள் தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்வதற்காக குழந்தைத் தொழிலாளர்களாக்கப் படுகின்றனர்.
இப்படியாக, ஒருபுறம் கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதை நோக்கிச் சென்று கொண்டிருப்பதும், இதன் விளைவாக மக்கள் வாழவழியற்ற நிலைக்குத் தள்ளப்படுவதும் ஒருசேர நடக்கிறது.
இச்சூழலை முன்னுணர்ந்து வெடித்தெழக் காத்திருக்கும் மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்காக, புரட்சியாளர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் ஒடுக்குவதற்காக ஊபா, என்.ஐ.ஏ. உள்ளிட்ட புதிய ஆள்தூக்கிச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது கிரிமினல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப் படுகின்றன. கருத்தியல் தளத்தில் அடக்குமுறை செலுத்துவதற்காக, புதிய சமூக ஊடக வழிகாட்டு விதிமுறைகளும் திரைப்படத் தணிக்கைச் சட்டங்களும் கொண்டுவரப் படுகின்றன.
எத்தகைய எதிர்ப்புகள் வந்தபோதும் திட்டமிட்ட ரீதியில் தனது கார்ப்பரேட் − இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நிகழ்ச்சிநிரலை நோக்கி வேகமாக முன்னேறிவரும் மோடி கும்பலின் கார்ப்பரேட் − காவி பாசிசப் பேரிருளை கிழித்தெறிவதற்கான ஒரு மக்கள்திரள் எழுச்சியை நாம் உருவாக்காமல் போனால், எதிர் நோக்கும் பேரழிவை யாராலும் தடுக்க முடியாது என்பதையே நிலைமைகள் காட்டுகின்றன.
தனியார்மயம் : கார்ப்பரேட்டுகளுக்காக விரட்டியடிக்கப்படும் சென்னையின் தூய்மைப் பணியாளர்கள் !
சென்னை மாநகராட்சியின் மண்டலம் 8-ல் (அண்ணாநகர்) செனாய் நகர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த எட்டு மாத காலமாக ஈவிரக்கமின்றி வேலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 05/08/2021 தேதியிலிருந்து 08/08/2021 வரை தொடர்ச்சியாக போராடினார்கள். கடந்த எட்டு மாத காலமாகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறார்கள்.
தனியார் காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்து சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 12000 தொழிலாளர்களுக்கும் மாநகராட்சியின் கீழ் பணி நிரந்தரம் செய் அல்லது தொகுப்பூதிய முறையில் பணி நியமனம் செய் என்பது போராடுபவர்களின் கோரிக்கையாக உள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்கள் தனியார்மயமாக்கல் நடவடிக்கையின் கீழ் கார்ப்பரேட்டுகளுக்கு டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி நேரடியாக திடக் கழிவு மேலாண்மையில் இருந்து வெளியேறிவிட்டது.
இதுவரை சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (NULM) நேரடியாக மாநகராட்சியின் கீழ் வேலைக்கு எடுக்கப்பட்டார்கள். இதில் ஒன்றிய அரசு 60% நிதியும், மாநில அரசு 40% நிதியும் அளிக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. இதிலும் பணி பாதுகாப்பு என்ற உத்திரவாதம் எதுவும் இல்லை. போராடும் தூய்மைப் பணியாளரிடம் நாம் பேசியதிலிருந்து அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் எந்தவித PF/ESI, பணிக் கொடை ஆகிய பலன்கள் எதுவும் கிடைக்கப் பெற்றவர்களில்லை.
வறுமை ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் இதுவே ஒரு அரசின் திட்டமிடப்பட்ட சுரண்டல் முறைதான். ஆனாலும் பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாக ஏன் அதில் பணிபுரிந்தார்கள் எனில் எப்படியாவது வேலை நிரந்தரமாக்கப்படும் என்ற ஒரே நம்பிக்கையில்தான். புயல், வெள்ளம், மழை, பேரிடர் காலங்கள், சென்னை கடலில் எண்ணெய் கொட்டியபோது என்று இன்றைய உயிரை பறிக்கும் கொரோனா காலகட்டம் வரை எந்நேரமும் சென்னை நகர மனிதர்களின் கழிவுகளை சுத்தம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மாநகராட்சியின் கதவுகளைத் திறந்துவிட்ட ‘தியாகத் தலைவியின்’ கொள்ளைக் கூட்டம் கடந்த ஜனவரியில் ‘வேலை இல்லை வெளியே போ’ என்று எவ்வித முன்னறிவிப்புமின்றி தூய்மைப் பணியாளர்களின் கழுத்தை அறுத்துவிட்டது. அன்றிலிருந்து தொடர்கிறது, இந்த சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களின் உரிமைப் போராட்டம்.
இவ்வாறு தூய்மைப் பணியாளர்களின் வேலை பறித்தெடுப்பின் பின்னணி சென்னை மாநகரின் திடக்கழிவு மேலாண்மையை கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைப்பத்ததில், தனியார்மயமாக்களில் குடி கொண்டிருக்கிறது.
வருடத்திற்கு 447 கோடி மதிப்பீட்டில் எட்டு ஆண்டுகளுக்கு தேனாம்பேட்டை (மண்டலம் 9), கோடம்பாக்கம் (மண்டலம் 10), வளசரவாக்கம் (மண்டலம் 11), ஆலந்தூர் (மண்டலம் 12), அடையாறு (மண்டலம் 13), பெருங்குடி (மண்டலம் 14) மற்றும் சோழிங்கநல்லூர் (மண்டலம் 15) ஆகிய 7 மண்டலங்கள் 86 டிவிசன்களின் (divisions) குப்பை அள்ளும் பணியை மாநகராட்சி கைவிட்டு ஸ்பெயினின் உர்பெசெர் இந்திய நிறுவனமான சுமீட் இணைந்த உர்பெசெர் – சுமீட் (Urbaser – Sumeet) என்னும் பன்னாட்டு கார்ப்பரேட்டிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 1/2020-ல் டெண்டர் அளிக்கப்பட்டு எடப்பாடியால் கோலாகலமாக துவக்கவிழா கொண்டாடப்பட்டது.
அடுத்து ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட ராம்கி என்விரோ என்ஜினியர்ஸ் லிமிடெட் (Ramky Enviro Engineers Ltd) என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு திருவொற்றியூர் (மண்டலம் 1), மணலி (மண்டலம் 2), மாதவரம் (மண்டலம் 3) அம்பத்தூர் (மண்டலம் 7) ஆகிய நான்கு மண்டலங்களை இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ஆட்சி முடியும் தருவாயில் குப்பை அள்ளும் பணியின் டெண்டரை அளித்திருந்தார்.
இதில் கவனிக்கத்தக்கது இந்த ராம்கி நிறுவனம் ஏற்கனவே கையாண்ட அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததாலேயே இந்த மண்டலங்கள் உர்பெசெர் நிறுவனத்திற்கு அளித்திருந்தார்கள். ஆனால், அதற்குத்தான் மீண்டும் வடசென்னையை தாரை வார்த்தது அன்றைய எடப்பாடி அரசு.
இந்த தனியார் ஒப்பந்தமுறை வந்ததிலிருந்தே தூய்மைப் பணியாளர்களின் இன்னல்களும் மேலும் மேலும் மோசமாக அதிகரித்துள்ளது.
உர்பெசெர் – சுமீட் வந்த நேரத்திலேயே அது கையாளும் மண்டலங்களிலிருந்த நிரந்தரத் தொழிலாளர்களை அங்கிருந்து நீக்கி மாநகராட்சி கையாளும் மண்டலம் 4,5,6,8 ஆகியவற்றிற்கு மாற்றியது. இதன் மூலம் ஏற்கனவே இந்த மண்டலத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் சுமார் 5,000 பேர் தெருவுக்கு விரட்டியடிக்கப்பட்டார்கள்.
ஒரு தூய்மைப் பணியாளரின் மகன் இறந்ததற்காக விடுப்பு கேட்டதற்கு கூட இந்த ஒப்பந்த நிறுவனங்கள் தர மறுத்துள்ள கொடுமை அரங்கேறியிருக்கிறது. இதிலிருந்தே அவர்களின் பணிச் சூழலின் நிலையை புரிந்து கொள்ள முடியும். வார விடுமுறை எடுப்பதும் வலுக்கட்டாயமாக நிறுவனங்களால் தடுக்கப்படுகிறது. பணியாட்களை குறைத்து வேலை சுமையை தொழிலாளர் முதுகில் அதிகரித்துள்ளது.
மேலும், NULM திட்டத்தில் ரூ.12,000 வரை சம்பளம் பெற்றவர்கள் தற்போது ரூ.9,000 என்ற குறைந்த சம்பளத்தில் தற்போது வேலை செய்து வருகிறார்கள். அந்த தொகையும் முழுதாக கிடைக்காது; விடுப்பு என்ற பெயரில் சம்பளம் வெட்டப்பட்டு 8,000 அல்லது 7,000 என்றே கிடைக்கும் என்கிறார்கள் தொழிலாளர்கள். மேலும், பல நேரங்களில் பெண்கள் பாலியல் ரீதியிலான தொல்லைகளையும் அனுபவிக்கிறார்கள்.
ராம்கி, உர்பெசெர் – சுமீட்-ல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகமிக சொற்பமே, 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களை ஒருவர் கூட நம்மால் அடையாளம் காண முடியாது. இத்தனை காலம் பணியாற்றிய 50 வயது கொண்டவர்களை வேலையிலிருந்து தூக்கி எறிந்ததன் மூலம் அவர்களை மறைமுகமாக “தேவையற்றவர்களாக” நேரடி பொருளில் கூறுவதானால் “சாக வேண்டியவர்களாக” துரத்தியிருக்கிறது இந்த நிறுவனங்கள். தற்போது இதில் ஒப்பந்த பணிபுரியும் தொழிலாளர்களும், எட்டு ஆண்டுகள் முடிந்த பின்பு அவர்களும் வீதியில் தூக்கி எரியப்படுவார்கள்.
இன்னும் எண்ணற்ற சுரண்டல் கொடுமைகளை தொழிலாளர்கள் பட்டியலிடுகிறார்கள். அவர்களின் துயரக் கதைகள் ஏராளம். தனியார்மயத்தின் மிக மோசமான அறவுணர்ச்சியற்ற பக்கங்கள்தான் இவை. ஆகையால்தான் அவர்கள் காண்டிராக்ட் முறையை ஒழித்துக்கட்டி வேலை நிரந்தரத்தை கோருகிறார்கள்.
எடப்பாடி ஆட்சிக்காலத்தில் கொரோனாவிலும் உயிரை பணயம் வைத்த தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறித்து நடுத் தெருவில் நிறுத்தியபோது அன்றைய எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விடியல் ஆட்சியில் இரண்டே மாதங்களில் பணி இழந்தவர்கள் உட்பட 12,000 தொழிலாளர்களுக்கும் வேலை உறுதி செய்யப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். மேலும், இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூய்மை பணியாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, வேலை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்திருந்தார்.
தேர்தலுக்கு முன்பு திமுக வேலை நிரந்தரம் என்று முழக்கமிட்டு இம்மக்களின் ஓட்டுக்களை தேர்தலில் அறுவடை செய்து கொண்டு தற்போது எடப்பாடி புரிந்த அதே துரோகத்தையே செய்து வருகிறார்கள்.
போலிசை வைத்து போராடும் மக்களை அச்சுறுத்துவதும், மேலும் கடந்த 07/08/2021 அன்று “பெயர் முகவரிகளை எழுதித்தா” என தொடர்ந்து அவர்களை மிரட்டியிருக்கிறது அரசு. எடப்பாடி ஆட்சியில் காண்ட்ராக்ட் முறையை எதிர்த்த திமுக இன்று அதே காண்ட்ராக்டில் தூய்மைப் பணியாளர்களை வேலை செய்ய அறிவுறுத்துகிறது.
மேலும், தூய்மைப் பணியாளர்களிடம் பேசியதில் மு.க.ஸ்டாலின் தங்கை கனிமொழியும் (தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்) குப்பை அள்ளுவதில் காண்டிராக்ட் எடுக்கப்போவதாக கூறுகிறார்கள். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.
தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளால் அரசு நிறுவனப் பணிகள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்ப்பதும், அரசு சேவைகளிலிருந்து முற்றாக விலகி கார்ப்பரேட்டுகளுக்கு தளம் அமைத்து கொடுப்பது மட்டுமே அரசின் பணியாக மற்றப்பட்டு வருவதன் விளைவைத்தான் தற்போது நாம் அனுபவித்து வருகிறோம். இதை செவ்வனே செய்து முடிப்பதே மோடி முதல் மு.க.ஸ்டாலின் வரையிலான ஆட்சியாளர்களின் கடமை என்பது ஒவ்வொரு முறையும் நமக்கு நிரூபிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
நமது நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் குடும்பத்திற்கும்; சமுதாயத்திற்கும் ஒரு மதிப்புமிக்க சொத்தாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள், நாளைய நமது நாட்டின் தலைவர்களாக உருவாக வேண்டியவர்கள்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இளமைப் பருவம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நிலையாகும். ஆனால் நாட்டின் தேசிய குற்றப் பதிவேடு புள்ளிவிவரங்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக தெரிவிக்கின்றன. இது ஒரு அபாய அறிவிப்பாகும்.
இந்திய துணைக் கண்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு குற்றச் செயல்கள் பெருகி, இளம் குற்றவாளிகள் அதிகரித்து வருகிறார்கள். எந்தக் குழந்தையும் பிறக்கும்போது குற்றவாளியாக பிறப்பதில்லை. சமூகத்திலுள்ள குறிப்பிட்ட சூழல்களில், பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களால், அக மற்றும் புறச் சூழல்களின் காரணமாக குற்றவாளிகள் உருவாக்கப்படுகிறார்கள்.
தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளம் குற்றவாளிகள் 2005-ம் ஆண்டில் 18,939; இந்த எண்ணிக்கை உயர்ந்து 2015-ம் ஆண்டில் 31,396 ஆக உள்ளது. குற்றங்களின் எண்ணிக்கை 1.7 விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறார்களின் எண்ணிக்கை 18,22,602 இருந்து 29,49,499-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 38,256. இதில் ஆண் சிறார்களின் எண்ணிக்கை 37,984. குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கையில் 16 முதல் 18 வயதுடையவர்களின் எண்ணிக்கைதான் அதிகமானது. மொத்தம் 38,256 பேரில் 16-18 வயதுக்குள் இருப்பவர்கள். 28,867 பேர்.
வழிப்பறி, செயின் அறுப்பு, கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, பாலியல் சித்திரவதைகள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் இளங்குற்றவாளிகள் ஈடுபடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இளங்குற்றவாளிகள் உருவாகும் பின்புலம் என்ன ?
வீரம் என்பது யாரையும் தாக்கி அடிக்கும் துணிச்சல் என்று கருதுகிறார்கள். வன்முறையை தூண்டும் திரைப்படங்கள், ஆபாச திரைப்படங்கள், வீடியோ கேம் கம்ப்யூட்டர் கேம் ஆகியவற்றில் பெரும்பகுதி நேரத்தை செலவிடும் இளைஞர்கள் அங்கிருந்துதான் முதலில் தங்களது வன்முறை சிந்தனையை பெறுகிறார்கள். கூடுதலாக நுகர்வு வெறி அதிகமாக அதிகமாக, அதனை நிறைவேற்றுவதற்கான பணம் வீட்டில் கிடைக்காத போது, அதனை சாதித்துக் கொள்ள வெளியே திருடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நீதி குறைந்த சமுதாயமானது பல குழந்தைகளை தெருவிற்கு வரும் நிலைக்கு தள்ளிவிடுகிறது. சமத்துவமற்ற சமூக அமைப்பு சமூக வாழ்வில் ஒரு குற்றவியல் சார்ந்த தன்மையை உருவாக்குகிறது.
இந்திய சமூக அமைப்பில் ஆகப்பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் வாழ்வதற்காகவே ஒரு கடினமானப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.
நிலவும் வேலைவாய்ப்பு இன்மை சமூக அமைப்பில் மிகப் பெரிய நெருக்கடியை தோற்றுவித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி சமமான கல்வி – உடை – ஆரோக்கியமான உணவு ஆகப்பெரும்பான்மையான இந்திய குழந்தைகளுக்கு எட்டாக் கனியாக இருக்கிறது. நகரமயமாதலும், வேலையிழப்பும் பல இளமையான குற்றவாளிகளை உருவாக்குகிறது.
குடும்பம் என்பது சமூக அமைப்பில் ஒரு முக்கிய அலகு. இளம் குற்றவாளிகள் உருவாவதற்கும் குடும்பம் என்பது மற்றொரு முக்கிய காரணமாகும். குடிகார கணவன், குழந்தைப் பராமரிப்பின்மை, தாய் தந்தையரின் கட்டுப்பாட்டு குறைவு; சிதைந்த குடும்பம், குடும்பத்தில் நிலவும் வறுமை, வசதியின்மை, வேலையின்மை முறையான கல்வி வாய்ப்பு இன்மை, தனிமை போன்ற காரணங்கள் இளங்குற்றவாளிகள் உருவாவதற்கு மற்றொரு அடிப்படையாக இருக்கிறது.
குடும்ப சிதைவின் காரணமாக வெளியே வரும் இளைஞனை குற்றத்தை தொழிலாக கொண்ட கிரிமினல் கும்பல் தத்து எடுத்துக் கொள்கிறது. உணவு – உடை – இருப்பிடம் பொழுதுபோக்கு என அனைத்தையும் வழங்கி சமூக விரோதியாக அவனை உருவாக்கிவிடுகிறது.
யார்? யாருக்காக? எதற்காக? ஏன்? என்று எதைப் பற்றியும் சிந்திக்காமல் வில்லிலிருந்து புறப்பட்டு தாக்கும் அம்பை போன்று கொலை கருவிகளாக செயல்படுகிறார்கள். சமநீதி இல்லாத சமூக அமைப்பு பல குழந்தைகளை நாதியற்ற அனாதைகளாக்கி தெருவிற்கு வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. உழைப்புக் கருவிகளில் இருந்தும் உழைப்பு சாதனங்களில் இருந்தும் ஆகப்பெரும்பான்மையான உழைப்பாளிகள் இன்று அன்னியமாக்கப்பட்டுவிட்டனர்.
சமூக சிந்தனையற்ற திரைப்படங்கள்; வன்முறை வெறி இளைஞர்கள் மத்தியில் உருவாவதற்கு பிரதான காரணமாக அமைந்து விடுகிறது. பெண்களை போகப்பொருளாக காட்டும் ஆபாச திரைப்படங்கள் அவனது காம இச்சையை தூண்டி விடுகிறது. தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே நடத்துவதால் தமிழகம் தள்ளாட்டத்தில் உள்ளது.
மதுவின் போதை சமூகக் குற்றங்கள் செய்வதற்கு ஒரு துணிச்சலை தருகிறது. சின்னத்திரையிலும் வரம்பற்ற வன்முறை காட்சிகள், பெண்களை போகப் பொருளாகக் காட்டும் ஆபாச ஆடல் பாடல் குத்தாட்டம்; வசன அமைப்புகள், காட்சி ஊடகங்கள் சமூக குற்றவாளிகள் தழைத்தோங்கி வளர்வதற்கு உரமாகப் பயன்படுகின்றன.
தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் என்றால், வட இந்தியாவில் மதக் கலவரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு, குற்றவாளிகளாக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது. சிறு வயது முதலே சாதி வெறி, மத வெறி சூழலில் வளர்க்கப்படும் சிறுவர்கள் பெரும்பாலும் சிறார் குற்றவாளிகளாக பரிணமிக்கிறார்கள்.
ஆபாசச் சீரழிவுகள், வன்முறை ஆகியவற்றைக் கொண்ட திரைப்படங்கள், ஆபாசப் படங்கள், வன்முறையை ஊக்குவிக்கும் விளையாட்டுக்கள், இணைய விளையாட்டுக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். பெருகி வரும் இளம் குற்றவாளிகளை உருவாக்கும் சமூக அமைப்பை மாற்றாமல் இதற்கு விடிவு கிடையாது.
குழந்தைகள் என்றும் தங்கள் மீதான அன்புக்காகவும் கவனத்திற்காகவும் ஏங்குகின்றன. அவர்களுக்கான போதுமான அன்பையும் கவனத்தையும் பெற்றோர்கள் அளிக்கவியலாத சூழலுக்கு இந்த முதலாளித்துவ சுரண்டல் மொத்த சமூகத்தையும் தள்ளியிருக்கிறது.
அனைவருக்கும் கல்வி; சமமான கல்வி; ஆரோக்கியமான உணவு ஆகியவை இந்திய துணைக் கண்டத்தின் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. சாதி மத பேதங்களும், வெறியும் களைந்தெறியப் பட வேண்டியது இருக்கிறது. இவை மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கொடுக்க முடியும்.
இலங்கையின் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள ஆசிரியர்களைப் போலவே அங்கிருக்கும் மாணவர்களுக்கும் நிகழ்நிலை கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான இணையத் தொடர்பாடங்களைப் பெற்றுக் கொள்ள பல கிலோமீட்டர்கள் நடந்து, உயரமான மலையுச்சிகளுக்கு ஏற வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இணையத் தொடர்பாடலுக்கான சிக்னலைப் பெற்றுக் கொள்ளவே அவர்கள் இவ்வாறு காட்டு யானைகளும், சிறுத்தைப் புலிகளும் நடமாடும் காட்டுப் பகுதிகளினூடாக பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
கொவிட்-19 தொற்று நோயின் காரணத்தினால் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதனால், மாணவர்களின் கல்வியை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் முகமாக கல்வி இணையத் தளங்களில் பதிவேற்றப்படும் பாடங்களைப் பதிவிறக்கிக் கொள்ளவே மாணவர்களும், ஆசிரியர்களும் இவ்வாறான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினியோ, இணைய வசதி கொண்ட தொலைபேசிகளோ இல்லாத காரணத்தால் ஐந்தாறு மாணவர்களுக்கு ஒரு கருவி என பகிர்ந்து கொண்டு பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த மாணவர்களோடு, விவசாயம் செய்து வரும் இவர்களது பெற்றோரும் தமது பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தப் பயணத்தில் இணைந்து கொள்கிறார்கள். ஆறாம் ஆண்டில் கல்வி கற்று வரும் தனது மகனுடன் தினந்தோறும் இரண்டு தடவைகள் மலையேறி இறங்கும் தாய் பத்மினி குமாரி, தற்காலத்தில் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் நிலவுவதால் தானும் கூடவே வருவதாகக் கூறுகிறார்.
இலங்கையின் மத்திய – கிழக்கு மாகாணங்களிடையே அமைந்திருக்கும் இவ்வாறான கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட காணப்படாததோடு பிள்ளைகள் கல்வி கற்கவும் பதினாறு கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள அரச பாடசாலைக்கே செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் கூட தற்போது மூடப்பட்டுள்ளது.
இவ்வாறாக போஹிட்டியாவ கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் என கிட்டத்தட்ட 45 பேர், கல்விக்கான இணையத் தொடர்பாடங்களைப் பெற்றுக் கொள்ள தினந்தோறும் மலையேறி வருகிறார்கள்.
அவ்வாறே, லுணுகலை கிராமத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளோடு காட்டின் மத்தியிலிருக்கும் மலையுச்சியில் ஒரு மரத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் ஒரு குடிலுக்கு கல்விக்காகச் செல்கிறார்கள். அது கிட்டத்தட்ட முப்பது அடிகள் உயரமான குடில் என்பதோடு மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காக அந்த இடத்துக்கு மாத்திரமே இணையத் தொடர்பு கிடைக்கிறது.
இலங்கையிலுள்ள அநேகமான பாடசாலைகள் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வியைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். எனினும், இலங்கையிலுள்ள 4.3 மில்லியன் மாணவர்களில் 40 சதவீதமான மாணவர்களுக்கு மட்டுமே இணையத்தள வகுப்புகளில் பங்குபெரும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார். ஏராளமான மாணவர்களுக்குத் தேவையான கருவிகளோ, இணைய வசதிகளோ இல்லை.
இலங்கையில் கல்வியைப் பெற்றுக் கொள்ளப் பாடுபடும் மாணவர்கள் பற்றிய இந்த விபரங்களுக்கு ஆதாரமாக அல்ஜஸீரா ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களை இத்துடன் காணலாம்.
பிபிலாவில் உள்ள தங்கள் கிராமத்தில் உள்ள ஒரு வனப்பகுதியிலிருந்து தங்கள் ஆன்லைன் பாடங்களை கற்பதற்காக மரக் கிளைகளில் அமர்ந்திருக்கிறார்கள் இலங்கைச் சிறுவர்கள்.லுனுகலாவில் உள்ள ஒரு ரிசர்வ் காட்டில் ஒரு மலை மீது சிக்னல் கிடைக்கும் இடத்தில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனது மகள் அருகில் ஸ்மார்ட்போனை வைத்திருக்கிறார் ஒரு தாய்.மீகஹகிவுலாவில் உள்ள போஹிதியாவா கிராமத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்ட பிறகு அருகிலுள்ள மலையில் இருந்து கீழே இறங்குகின்றனர் இலங்கை சிறுவர்கள்.சீரற்ற இணைய சேவை கொண்ட இலங்கையில் உள்ள ஆன்லைன் வகுப்பு, முறையான கல்வி முறையிலிருந்து பல மாணவர்களை வெளியேற்றியுள்ளது.தனது ஆன்லைன் வகுப்பிற்காக மரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக குடிலில் இலங்கை சிறுவர்கள்.போஹிதியாவா கிராமத்தில் உள்ள மலை உச்சியில், மொபைல் சிக்னல் கிடைக்கும் இடத்தில் தங்கள் குழந்தைகள் ஆன்லைன் பாடங்களைப் படிப்பதற்கு பாதுகாப்பிற்காகச் சென்ற இலங்கை பெற்றோர்கள் வகுப்பு முடியும் வரை கற்பாறைகளில் காத்திருக்கிறார்கள்போஹிட்டியாவா கிராமத்தில் மலை உச்சியில் தங்கள் ஆன்லைன் பாடங்களைப் படிக்க ஸ்மார்ட்போனைப் பகிர்ந்து கொள்ளும் இலங்கை சிறுவர்கள். ஆன்லை வகுப்பிற்காக மரக்கிளைகளில் அமர்ந்திருக்கிறார்கள் இலங்கை சிறுவர்கள்.தனது மகளின் புத்தகப் பையை முதுகில் வைக்க உதவுகிறார் ஒரு தந்தை. இவர்கள் அனைவரும் ஆன்லைனில் பாடங்களை கற்பதற்காக ஒரு மலையில் ஏறத் தயாராகிறார்கள்.மீகஹகிவுலாவில் உள்ள போஹித்தியாவா கிராமத்தில் வனப்பகுதியில் தங்கள் ஆன்லைன் பாடங்களில் கலந்து கொண்ட பிறகு இலங்கை குழந்தைகள் மலையில் இருந்து இறங்கி நடந்து செல்கின்றனர்.
நாட்றம்பாளையம் – அத்திமரத்தூர் தாழ்த்தப்பட்ட மக்களின் விடாப்பிடியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! மயான வசதி கோரிக்கைக்கான போராட்டம் வெற்றி !
ஒகேனக்கல் பகுதிலிருந்து அஞ்செட்டி பகுதிக்கு போகும் வழியில் உள்ள மலைக் கிராமம்தான் நாட்றாம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள அத்திமத்தூர் கிராமம். இங்கு சுமார் 200 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெங்களூர் சென்றுதான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த பஞ்சாயத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு கொடுத்த ஒரு ஏக்கர், அரை ஏக்கர் புறம்போக்கு நிலம்தான் சோறுபோடுகிறது. இந்த புறம்போக்கு நிலத்தில் கடலை, சாமை, கேழ்வரகு போன்றவற்றை பயிரிட்டு உணவுத் தேவையை ஈடுசெய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இம்மக்கள் இன்றுவரை ஒரே வீட்டில் இரண்டு குடும்பம், மூன்று குடும்பம் வசித்து வருவது என்பது கொடுமையிலும் கொடுமை. மேலும், இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இப்போராட்டத்திற்கு முன்னர் வரை மயானம் இல்லை. பல ஆண்டுகளாக மயான வசதி செய்து தரக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டு வந்துள்ளனர். எனினும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து ஊர் நுழைவுப் பகுதியில் பேனர் வைத்ததும் வட்டாட்சியர், போலிசு, வருவாய்துறையினர் என அதிகாரிகள் பட்டாளம் வந்து பேனரை அகற்றுமாறும் தேர்தலுக்கு பின்னர் நாங்கள் மயான வசதி செய்து தருகிறோம் என்று அதிகாரிகள் மன்றாடியும் மக்கள் ஏற்கவில்லை.
இந்நிலையில் பேனரை கிழித்து எடுத்துச் சென்றது போலிசு. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேனர் அந்த இடத்தில் திரும்ப வைக்கும் வரை மக்கள் போராடியதும், போலிசு அந்த பேனரை திரும்ப கொண்டு வந்து கொடுத்தது.
சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் மக்கள் மயான வசதி செய்துதரக் கோரி மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர், முதல்வர் செல், தேசிய மனித உரிமை ஆணையம் என புகார் அளித்தனர். ஆனால், அரசு அதிகாரிகள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை மயானத்திற்கு கையகப்படுத்தலாம் என்றனர். இதை மக்கள் ஏற்க மறுத்தனர்.
This slideshow requires JavaScript.
ஊரின் அருகில் நெடுஞ்சாலை அருகில் சர்வே எண் 112-ல் ஆதிக்க சாதியினர் இடுகாடாக பயன்படுத்தும் ஓடை புறம்போக்கு தரிசு நிலத்தில் தங்களுக்கும் மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று உறுதியாக முடிவு எடுத்து அந்த கோரிக்கையை முன்வைத்து, 06-08-2021 அன்று காலை பத்துமணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த சர்வே எண்ணில் 15 சென்ட் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயானம் வசதி செய்ய உத்தரவாதம் அளித்தனர். மக்களின் விடாப்பிடியான போராட்டம் வெற்றி பெற்றது. உறுதியாகவும், ஒற்றுமையோடும், விடாப்பிடியாகவும் போராடினால் மட்டுமே கோரிக்கை வெற்றிபெறும் என்பதற்கு இப்போராட்டம் ஓர் உதாரணம்.
தகவல் : மக்கள் அதிகாரம், நாட்றாம்பாளையம் அஞ்செட்டி வட்டம் கிருட்டிணகிரி மாவட்டம்.
திமுக அரசே வேலைகொடு ! சென்னை அண்ணா நகர் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் !
சென்னை அண்ணா நகர் மண்டலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கடந்த இரண்டு நாட்களாக மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் என்.யூ.எல்.எம். (National Urban Livelihoods Mission (NULM)) என்ற திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த சுமார் 12,000 தூய்மைப் பணியாளர்களை, கடந்த ஜனவரி 2021-ல் எந்தவித முன்னறிவுப்புமின்றி தீடீரென வெளியே தள்ளியது எடப்பாடி அரசு. சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, புயல், வெள்ளம், மழை, கொரோனா பேரிடர் என இக்கட்டான காலகட்டங்களில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து நகரைத் தூய்மைப்படுத்திய அவர்களை “உங்களை யாரென்றே தெரியாது” என்று கூறி விரட்டியடித்தது. ஒருபுறம் “துப்புரவுப் பணியாளர்கள்” என்பதை “தூய்மைப் பணியாளர்” என்று பெயரிட்டு அவர்களை ‘கெளரவித்த’ எடப்பாடி அரசு, மறுபுறம் ஈவிரக்கமின்றி 12,000 பேரின் குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்தியது.
இவர்களில் பெரும்பாலோர் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், குடும்ப ஆதரவு இல்லாதவர்கள் என மிகவும் அடித்தட்டுப் பிரிவினரே ஆவர். சுமார் 8 மாதங்களாக வேலை இல்லாததாலும், கொரோனா காரணமாக வேறு எந்த வேலையும் கிடைக்காததாலும் வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல், வாங்கிய கடனைக் கட்ட முடியாமல், குடும்ப செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அவர்கள் பரிதவித்து வருகின்றனர். போராடும் ஒவ்வொருவருக்குப் பின்னும் ஒரு துயரக்கதை இருக்கிறது.
ஒரு வயதான பெண்ணிடம் பேசும்போது, “நான் கடந்த 16 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். 6 ஆண்டுகளாக, மாநகராட்சியிலும் 10 ஆண்டுகள் என்.யூ.எல்.எம் திட்டத்தின் கீழும் வேலை செய்து வந்தேன். ஆனால், டிசம்பர் 2020-ல் என்னை திடீரென வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள். என்னால் வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. ஊரடங்கால் வேறெந்த வேலையும் கிடைப்பதில்லை. இந்த வேலை கிடைக்கவில்லையெனில், நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை. இக்கட்டான காலங்களில் எங்களைப் பயன்படுத்திவிட்டு, இப்போது எங்களைக் கறிவேப்பிலை போலத் தூக்கியெறிந்து விட்டனர்” என்கிறார்.
இன்னொருவர் பேசும்போது, “இத்தனை ஆண்டுகாலமாக இந்த வேலையே செய்து பழக்கப்பட்டு விட்டோம். நாங்கள் படித்தவர்களல்ல, தற்போது எங்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது. இதைவிட்டால் எங்களுக்கு வாழ வழி கிடையாது” என்கிறார்.
இப்படி வயதானவர்கள், நடுத்தர வயதினர் மட்டுமன்றி, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வரை வேலையிழந்த அனைவரும் இந்த வேலையை நம்பியே தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள். இந்த வேலை நிரந்தரமாகும் என்று நம்பி 30 வயது வரை திருமணம் செய்யாமல் இருப்பவர்களும் இதில் உள்ளனர். தற்போது 8 மாதங்களாக, அவர்களின் குடும்பமே நடுத் தெருவில் நிற்கின்றது.
சென்னை முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இவர்களின் வேலைப் பறிப்பும் நடந்துள்ளது. இவர்கள் வேலையை விட்டு விரட்டியடிக்கப்பட்ட பின்னர், அதாவது, பிப்ரவரி 2021-இல், ராம்கி என்விரோ எஞ்சினியர்ஸ் லிமிடட் (REEL) என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடம் சென்னையின் நான்கு மண்டலங்களை 7 ஆண்டுகளுக்கு திடக் கழிவு மேலாண்மைக்காக ஒப்பந்தம் செய்தது அப்போதைய எடப்பாடி அரசு. மேலும், உர்பேசர் சும்மீட் (urbaser summeet) என்ற கார்ப்பரேட் நிறுவனமும் அதற்குப் பின்னர்தான் திடக்கழிவு மேலாண்மையில் புகுந்தது.
என்.யூ.எல்.எம். என்ற திட்டத்தின் கீழிருந்த இவர்களின் வேலையைப் பறித்துவிட்டு, இத்தகைய தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் காண்டிராக்ட் முறையில் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியது அப்போதைய எடப்பாடி அரசு. அப்போதே சிலர் தங்கள் குடும்ப சூழ்நிலைமையைத் தாக்குப்பிடிக்க முடியாமல், வேறுவழியின்றி கான்ட்ராக்ட் வேலைக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும் பெரும்பாலோர், என்.யூ.எல்.எம் என்ற மாநகரட்சியின் கீழ்தான் நாங்கள் பணிபுரிவோம், அதுதான் எங்களுக்கு உத்திரவாதமானது என்று அப்போது இதற்கெதிரானப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இப்போது சுகாரத்துறை அமைச்சராக இருக்கும் மா. சுப்பிரமணியன், அப்போது இவர்களோடு சென்று ரிப்பன் மாளிகையில் மனுக் கொடுத்ததோடு, இவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் முழங்கினார். மேலும், அப்போது எதிர்க்கட்சித் தலைவாராக இருந்த ஸ்டாலின், இவர்களை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பிற்கு காத்திராமல் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாநகராட்சிக்குக் கடிதம் கொடுத்தார்.
மேலும், தேர்தல் பிரச்சாரங்களின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் இவர்களுக்கு வேலை தருவதோடு, பணி நிரந்தரமும் செய்து தருவோம் என்று வாக்குறுதியளித்தது திமுக. திமுக-வின் இந்த வாக்குறுதியை நம்பி இவர்களில் மிகப் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினர், உறவினர் உள்ளிட்ட பலரிடமும் பேசி திமுக-வுக்கு ஓட்டுப் போடுமாறு கூறியுள்ளனர்.
ஆனால், “ஆட்சிக்கு வந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் தங்களைக் கண்டுகொள்ளவில்லை, பலமுறை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். முன்பு எங்களை வீட்டுக்குள் அழைத்து டீ கொடுத்து பேசியவர் இன்று எங்களைப் பார்க்க கூட மறுக்கிறார். முதல்வர் ஸ்டாலினின் வீட்டுக்குச் சென்றால் ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே எங்களை விரட்டியடிக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்துவிட்டோம். நாங்கள் ஏறாத அலுவலகம் கிடையாது, சந்திக்காத அதிகாரிகள் கிடையாது. எந்த பலனும் இல்லை. 8 மாதங்களாக வேலையில்லாமல், நாங்கள் வாழ வழியற்று நிற்கிறோம்” என்று கூறி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற அறிவிப்பின் கீழ் இங்குள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஸ்டாலின் அப்போது கொடுத்தார். (கீழ்காணும் காணொலியில் 06:35 – 06:45 வரை)
ஆனால், அந்த அறிவிப்புகள் எல்லாம் தற்போது குப்பையில்தான் கிடக்கின்றன. நிலைமையோ இப்படியிருக்க, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” திட்டத்தில் எல்லா விசயங்களும் சரிசெய்யப்பட்டு வருவதாக ஊடகங்கள் வாய்கூசாமல் புளுகுகின்றன.
மேலும், இப்போது “நீங்கள் காண்டிராக்டிலேயே வேலை செய்யுங்கள்” என்று திமுக, குறிப்பாக, சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினும் அமைச்சர் மா.சுப்பிரமணியமும் கூறியதாக இத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். எடப்பாடி ஆட்சிக் காலத்தில், கழிவு மேலாண்மைக்காக கார்ப்பரேட்டுகளுடன் போட்ட ஒப்பந்தங்கள் அப்படியேதான் தொடர்கின்றன என்பது ஒருபுறமிருக்க, எடப்பாடி அரசு சொன்னதைப் போலவே திமுகவும் “காண்டிராக்டிலேயே வேலை செய்யுங்கள்” என்று கூறுகிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.
வேலை தருவதோடு, பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியெல்லாம் வாக்குப் பொறுக்குவதற்காக அன்றி வேறில்லை என்பதைத் தெளிவாக நமக்கு இச்சம்பவம் அம்பலப்படுத்துகிறது. எந்த ஆட்சிமாற்றம் வந்தால் தங்களின் வாழ்க்கையில் மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்தார்களோ, இன்று அவர்கள் ஏமாற்றப்பட்டு நடுத் தெருவில் நிறுத்தப்பட்டிருகின்றனர். வாக்குறுதி கொடுத்தவர்களோ, “தனியாரிடம் போங்கள்” என்று விரட்டுகிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்வதில் ஓட்டுக் கட்சிகளிடையே கொள்கை வேறுபாடில்லை என்பதை சமீபத்திய சம்பவங்கள் ஒவ்வொன்றும் அம்பலப்படுத்தி வருகிறது.
இவையொருபுறமிருக்க, போராடும் மக்களை நேரில் கூடச் சந்திக்காமல், அதிகாரிகளையும் காவல்துறையையும் விட்டு மிரட்டுகிறது திமுக அரசு. போராட்டக்களத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரி பேசுகையில் “எனக்கு இந்த விவரமே தெரியாது” என்கிறார். ஆனால், 8 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை இவர்கள் நடத்தி வந்ததையும் குறிப்பாக ரிப்பன் பில்டிங் மாளிகை அருகே சாலையை மறித்து போராடியதையும் தமிழகமே அறியும். இன்னொரு காவல்துறை அதிகாரி பேசுகையில், “சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், உங்கள் மேல் எப்.ஐ.ஆர். விழுந்தால் பிறகு வேலையே கிடைக்காது” என மிரட்டுகிறார்.
This slideshow requires JavaScript.
அவர்களது கோரிக்கையெல்லாம் “எங்களை மீண்டும் என்.யூ.எல்.எம். திட்டத்தின் கீழ் பணி அமர்த்த வேன்டும். எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்பதுதான். கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் திமுக, இதைச் செய்யப் போவதில்லை. ஏனெனில் எந்தக் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும், தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வேலை. அரசு நேரடிப் பணி முறையை ஒழித்து அனைத்தையும் தனியார் சேவைத்துறையாக மாற்றுவ்துதான் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளின் அடிப்படை.
அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை, மக்களின் துயரமெல்லாம் வாக்கு இயந்திரம் வரை மட்டுமே. ஆட்சியில் அமர்ந்த பிறகு, அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதுதான் அவர்களது நிரந்தரத் தொழில். மழை, புயல், பேரிடர் என எல்லாக் காலங்களிலும் தங்கள் உயிரையும் தங்கள் குடும்பத்தின் உயிரையும் பணயம் வைத்து நம்மையெல்லாம் காப்பாற்றியவர்களை நாமும் நடுத் தெருவில் விடப்போகிறோமா என்று நாம்தான் சிந்திக்க வேண்டும்.