தமிழகத்தில் தொடரும் அரசு நிர்வாகத்தின் அடக்குமுறைகள் மற்றும் கொட்டடிக் கொலைகள் !
மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது, விடியல் பிறந்துவிட்டது. மேலும் பாசிச மோடி ஆட்சியை எதிர்ப்பதற்கு திமுகவை ஒரு கேடயமாக நாம் பயன்படுத்த வேண்டும் என்ற ரீதியில் கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புரட்சிகர கம்யூனிஸ்ட்டு கட்சியில் உள்ள சிலர் மற்றும் ஜனநாயக சக்திகள் என பலரும் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அந்த அளவிற்கு இன்னல்களை கடந்த மோடியின் அடிமை எடப்பாடி ஆட்சியில் அனுபவித்து வந்தோம் என்றால் அது உண்மைதான். ஆனால், முதலாளித்துவ ஆட்சியாளர்கள் இருக்கும் வரை இன்னல்கள் தீராது, விடியல் பிறக்காது என்பதைத்தான் மீண்டும் ஒருமுறை தற்போதய திமுக ஆட்சி மக்களுக்கு உணர்த்தி வருகிறது.
திமுக அரசு கொடுத்து வரும் இலவசங்கள் மக்கள் வைத்த கோரிக்கைகள் அல்ல. அது தேர்தலில் வெற்றிபெற கட்சிகள் அறிவிக்கும் இலஞ்சம். ஆனால், டாஸ்மாக்கை மூடு, ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்பது மக்கள் இரத்தம் சிந்தி, உயிரை கொடுத்து நீண்ட காலமாக வைத்து வரும் போராட்ட கோரிக்கை.
டாஸ்மாக்கால் தமிழகம் பல ஆண்டுகளாக சீரழிந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் பள்ளி மாணவிகள் மது அருந்தும் கட்சிகள் வைரலாகி தமிழகத்தை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது. மதுவின் விளைவாக இன்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பெரும் கொடிய குற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த டாஸ்மாக்கிற்கு எதிராக கடந்த ஜெயாவின் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் ஸ்தம்பிக்கும் படியான போராட்டங்கள் நடந்தன. டாஸ்மாக் உடைப்பு போராட்டம், முற்றுகை போராட்டம், இதனால் பல்வேறு கைது நடவடிக்கைகள், வழக்குகள் என தொடர்ந்தது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடும் இழிந்த நிலைக்கு தமிழகம் சென்றது. பாசிச ஜெயாவையே படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவேன் என்று பேசவைக்கும் அளவிற்கு போராட்டம் வீச்சாக பற்றி படந்தது. பாசிச பாஜக உட்பட இந்த போராட்டத்திற்கு குரல் கொடுக்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள். அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த மு.க.ஸ்டாலின் இந்த எழுச்சியை வரித்துக்கொள்ளும் அளவிற்கு டாஸ்மாக்கிற்கு எதிராக கருப்பு கொடி பிடித்துக்கொண்டு, கருப்பு உடையணிந்து போராடினார்.
படிக்க :
♦ இருளர் மக்களை பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யும் போலீசு!
♦ டாஸ்மாக்கினால் பெருகிவரும் குற்றங்கள் : கடையை மூடாமல் கல்லாக் கட்டும் திமுக !
ஆகவே, திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்பு பொய்த்து போனது. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வரானதும் மக்கள் எதிர்பார்ப்பில் மண் அள்ளி போட்டார். மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தோருக்கு இது பேரிடியாக இருந்தது. திமுகவின் வாக்குறுதிகள் மீது இருந்த மாயை மெல்ல மெல்ல விலகியது.
அடுத்ததாக, எடப்பாடியின் ஆட்சியில் பெரும் துயரமாக நிகழ்ந்தது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு. அந்த ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக நயவஞ்சகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு துணைபோனது. இன்றும் அந்த பகுதி மக்கள் இதற்கு எதிராக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல் கெயில் எரிவாயு குழாய்க்கு எதிராகவும், பவர் கிரிடு நிறுவனத்திற்கு எதிராகவும் இப்போதும் விவசாயிகள் போராடுகின்றனர். ஆனால், திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் விருப்பத்தை மீறி பவர்கிரிட், கெயில் நிர்வாகங்களை நிலத்தில் இறங்க அனுமதிக்க மாட்டோம் என்று விவசாயிகளின் கூட்டங்களில் பச்சை துண்டை போட்டுக்கொண்டு பேசினார். ஆனால், ஏப்ரல் இறுதியில் திருப்பூர் காங்கேயத்தில் முறையாக சட்ட நடைமுறைகளை எதையும் பின்பற்றாமல் விளைநிலத்தில் இறங்கி சர்வே செய்யும் வேலைகள் செய்யமுயன்று விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம் பகுதிகளில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்றுவரை நடைமுறைபடுத்தாமல் உள்ளது மாவட்ட நிர்வாகம்.
கடந்த ஏப்ரல் 13-ம் தேதி கெயில் எரிவாயு குழாய் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் கணேசன்(45) என்ற விவசாயி தனது உயிரை மாய்த்துக்கொண்டார். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சுமார் 30 போலீசுடன் வந்து விவசாய நிலத்தில் இறங்கி சர்வே செய்யும் வேலையை செய்ய துவங்கியது கெயில் நிர்வாகம். இதற்கு எதிராக விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை துவங்கினர். விவசாயிகள் 6 பேர் சீமண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
அடுத்த நாள் சுமார் நூற்றுக்கணக்கான போலீசை குவித்து விவசாயிகளை கைது செய்யும் நோக்கோடு அதற்கான வேலைகளில் இறங்கியது போலீசு. இந்த இரு நாள் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி கணேசன், 13-ம் தேதி நிலத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணேசனுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். அவருக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தில் 30 சென்ட் பவர் கிரிட் நிர்வாகம் பறித்துக் கொண்டது. மீதி 30 சென்ட் நிலத்தையும் கெயில் நிர்வாகம் எடுக்க போலீசை குவித்து தீவிரமாக முயன்றது. தன் மகளோ திருமணம் செய்துகொடுத்த இடத்தில் கணவனால் கைவிடப்பட்டு வீட்டில் வந்திருக்கிறார். இந்த சூழ்நிலை அவரை வேறுவழியின்றி தற்கொலைக்கு தள்ளியுள்ளது. கணேசன் இறப்புக்கு முன்பும் அவரது உடலை நெடுஞ்சாலையில் போட்டு சாலை மறியல் போராட்டம் செய்து நீதி கேட்டு போராடிய போதும் போலீசை குவித்து விவசாயிகளுக்கு விரோதமாக இந்த அரசு செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது.
தொடரும் கொட்டடி கொலைகள்
அதிமுக ஆட்சியில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொட்டடி கொலை பெரிய அளவில் கொட்டடி கொலையாக பேசப்பட்டு நாடு முழுதும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. எடப்பாடி ஆட்சியை காரி உமிழ்ந்தனர் மக்கள். இதற்கு சற்றும் சளைக்காத வண்ணம் கொட்டடி கொலைகள் தற்போதய திமுக ஆட்சியில் நடந்த வண்ணம் உள்ளது.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் சேலத்தில் வாகன சோதனை என்ற பெயரில் முருகேசன்(45) என்ற இளைஞரை அடித்து கொலை செய்தது போலீசு. இதேபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதம், மாஸ்க் போடவில்லை என்று கூறி சட்ட கல்லூரி மாணவன் அப்துல் ரஹீமை(21) போலீசு நிலையம் அழைத்துச்சென்று லாக்கப்பில் வைத்து அடித்து சித்திரவதை செய்த போலீசுன் காட்டுமிராண்டிதனம் சமூக ஊடகங்களில் வைரலானது.
இம்மாதம் கடந்த ஏப்ரல் 18 அன்று மெரினா கடற்கறையில் கைதுசெய்யப்பட்ட சென்னை பட்டினம்பாக்கத்தை சேர்ந்த கடற்கரையில் குதிரை சவாரி விட்டு பிழைப்பு நடத்தும் தொழிலாளி விக்னேஷ்(25), போலீசு கொட்டடி கொலையில் இறந்தான். அவனது உடலை உறவினர்களை கூட பார்க்க அனுமதிக்காமல் நேரடியாக எரியூட்டும் சுடுகாட்டுக்கு போலீசு அனுப்பமுயன்றது. விக்னேஷின் அண்ணனை யாரிடமும் தகவல் கொடுக்கவிடாமல் காவலில் வைத்திருந்தனர். மறைமுகமாக பணத்தை கொடுத்து செய்தியை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது போலீசு.
படிக்க :
♦ வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !
♦ கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !
அது முடிந்து பத்து நாட்களுக்குள் ஏப்ரல் 26-ம் தேதி திருவண்ணாமலையை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த தங்கமணி(48) என்பவரை கள்ள சாராயம் விற்றதாக கூறி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தநாள் அவர் சிறையிலேயே வலிப்பு வந்து இறந்துவிட்டதாக போலீசு தெரிவித்தது. அவரது குடும்பத்தினரிடம் 6 லட்சம் வரை பணம் கொடுப்பதாக கூறி விசயத்தை பெரிது படுத்தவேண்டாம் என்று பேரம் பேசியுள்ளது போலீசு. முதலில் அவரை கைது செய்யாமல் இறுப்பதற்காக போலீசு ரூ.2 லட்சம் கேட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்படி அடக்குமுறைகளும், கொட்டடி கொலைகளும் அரசு ஓர் வன்முறை கருவி என்பதை நிரூபித்து வருகிறது.
இதேபோல் சாதிய படுகொலைகள், சாதிய தாக்குதல்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்ற தடை, தாழ்த்தப்பட்ட மக்கள் பஞ்சாயத்து தலைவரானும் நாற்காலியில் அமர முடியாமல் பொம்மையாக இருப்பது, அப்பாவி இருளர் இன மக்கள் தாக்கப்படுவது, சிறை கைதிகள் விடுதலையில் இஸ்லாமியர்களுக்கு பாகுபாடுகாட்டுதல், காவி பாசிசத்தை அனுமதிக்கும் இல்லம் தேடி கல்வி, புதிய கல்வி கொள்கை மெல்ல மெல்ல அனுமதித்தல், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கனிமவள கொள்ளை, கவுத்தி வேடியப்பன் மலையை ஜிண்டாலுக்கு கொடுக்க தீவிர முயற்சி, சமூக பிரச்சினைக்காக போராடுவோர் மீதி வழக்குகள் போன்ற அனைத்தும் காட்டுவது சாரம்சத்தில் எதுவும் மாறவில்லை, விடியல் பிறக்கவில்லை என்பதையே.
திராவிட மாடல் ஆட்சி, அடிமை ஆட்சி என்று பெயர்களில் மாற்றம் இருக்கலாம். அவை அனைத்தும் சாராம்சத்தில் கார்ப்பரேட்டிற்கு சேவை செய்து உழைக்கும் மக்களை கொல்லும் முதலாளித்துவ ஆட்சிமுறையே! இதில் ஏதும் மயக்கம் கொள்ள வேண்டியதில்லை.

முத்துக்குமார்
எல்.ஐ.சி.யின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் மோடி அரசு !
பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தின் 3.5 சதவீதப் பங்குகளை (அதாவது 22,13,74,920 பங்குகள்) விற்று 20550 கோடி திரட்ட உள்ளதாக மத்திய அரசு அறிவித்து மே 4 முதல் பங்கு விற்பனைகளை தொடங்கிவிட்டது.
ஒரு பங்கின் விலை ரூ.907 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்குகளில் 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கு, 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கு, 10% எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு, 5% எல்.ஐ.சி ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும், எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூ.40 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில்லறை முதலீட்டாளர்கள், எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு பங்குகளை வாங்க ரூ.2 லட்சம் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது மேற்கூறியவர்கள் அதிகபட்சமாக 14 லாட்டுகளை வாங்க முடியும். அதைத் தாண்டி பங்குகளை வாங்க முடியாது. முதலீட்டாளர்கள் என்ற வரம்புக்குள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வருவர். அவர்களுக்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் எல்.ஐ.சி.யில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தவே வழிவகுக்கும்.
***
காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு கிட்டதட்ட 20 ஆண்டுகள் கடந்த பின்பும், எல்.ஐ.சி.யானது 2021-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 66% சந்தைப் பங்குகளை கொண்டு முதலிடத்தை வகித்து வருகிறது.
படிக்க :
♦ எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -1
♦ எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -2
29 கோடி பாலிசிதாரர்கள், 13 லட்சம் எல்.ஐ.சி ஏஜெண்டுகள் என மிகப்பெரிய வலைப்பின்னலை எல்.ஐ.சி.யானது கொண்டுள்ளது. அரசு நிறுவனங்கள் எல்லாம் திவால் ஆகும் நிலைக்கு செல்லும்போது, எல்.ஐ.சி அந்நிறுவனங்களில் முதலீடு செய்து அவற்றை காப்பாற்றும். மக்களுக்கு மட்டுமில்லாமல் அரசுக்கும் அரணாக செயல்பட்டு வந்துள்ளது.
நாட்டில் உள்ள எல்லா மியூச்சூவல் பண்டுகளின் சந்தை முதலீட்டை ஒன்று சேர்த்து கணக்கிட்டாலும், எல்.ஐ.சி.யின் சந்தை முதலீட்டில் பாதித்தொகையை தான் தொட முடியும். எல்.ஐ.சி பாலிசிதாரர்களின் காப்பீடு பணம் மட்டுமே கிட்டதட்ட 50 லட்சம் கோடி.
இப்படி எல்.ஐ.சி.யானது பொன்முட்டையிடும் வாத்தாக காட்சியளிப்பதால், அதை அறுத்து சாப்பிட வேண்டும் என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் துடித்துக் கொண்டிருந்தனர்.
அதற்கேற்ப அரசானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியன்று பொதுக்காப்பீடு சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றியது. அதன்படி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் 51% பங்குகளை மத்திய அரசானது கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை இந்த மசோதா ரத்து செய்கிறது.
அதுமட்டுமில்லாமல் தற்போது மத்திய அரசானது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஐ.பி.ஒ.வில் நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் ஐ.பி.ஒ விதிகளை மாற்றியமைத்த பிறகுதான் பங்கு விற்பனையே தொடங்கியுள்ளது.
அகில இந்திய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் சென்னை மண்டல் செயலாளர் எஸ். ரமேஷ் குமார், “எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.1900-ல் இருந்து ரூ.2200 வரை விற்பனை செய்ய முன்பு முடிவு செய்யப்பட்டது. தற்போது பங்குகளின் மதிப்பைக் குறைத்து ஒரு பங்கு ரூ.907 முதல் ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மத்திய அரசானது 5 சதவீதப் பங்குகளை 8 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டதட்ட 60,000 கோடி) விற்க முன்பு முடிவு செய்தது. தற்போது அந்த முடிவை மாற்றி 3.5% மட்டும் விற்பனை செய்கிறது.
முன்னர் நிர்ணயித்த விலையின் படி பார்த்தால், 5% பங்குகள் – 60000 கோடி. அப்படியென்றால், 1% பங்குகள் – 12160 கோடி; 3.5% பங்குகள் – 42560 கோடி; இதன்படி பார்த்தால் ஒரு பங்கின் விலை ரூ.2000 அல்லது அதற்கு மேல் வருகிறது.
ஆனால் தற்போது மத்திய அரசானது அதே 3.5% பங்குகளை விற்று ரூ.20,550 கோடி மட்டும் திரட்ட முடிவு செய்துள்ளது. கிட்டதட்ட 22,000 கோடி அளவுக்கு முன்னர் நிர்ணயம் செய்த விலையில் இருந்து குறைத்துள்ளது.
எல்.ஐ.சி நிறுவனமானது நஷ்டத்தில் இயங்கவில்லை, இலாபத்தில் தான் இயங்குகிறது. அப்படிப்பட்ட நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.2000 என்று விலை முன்னர் நிர்ணயித்ததே அடிமாட்டு விலைதான். தற்போது அதையும் குறைத்து ஒரு பங்கின் விலை ரூ.907 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்து, மக்களின் சேமிப்பை கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கி கொடுக்கும் இவர்களை நாம் என்ன செய்வது?
படிக்க :
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு
♦ மோசடியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட எல்.ஐ.சி மீண்டும் மோசடியாளர்கள் கையில் ?
2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கிட்டதட்ட 20 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 1.5 லட்சம் கோடி) பங்குச் சந்தையில் இருந்து வெளியே கொண்டு சென்றுள்ளனர். எல்.ஐ.சி.யின் செல்வாக்கும், நிலையான மதிப்பீடும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் என்று ஒன்றிய அரசு இவ்விலை குறைப்புக்கு நியாயம் கற்பிக்கிறது.
முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் துஹின் கண்டா பாண்டே,” நமக்கு கொஞ்சம் கட்டுப்பாடான சூழல் நிலவினாலும், முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்க்க முடியும்” என மும்பையில் கடந்த வாரம் கூறியுள்ளார்.
எல்.ஐ.சியின் காப்பீடு தொகை மற்றும் போனஸூக்கு மத்திய அரசே பொறுப்பு என எல்.ஐ.சி சட்டத்தின் 37 வது பிரிவு கூறுகிறது. மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்த விதி கிடையாது. எனவே, தொடர்ந்து பங்குகள் விற்பனை செய்யப்பட்டு எல்.ஐ.சி நிறுவனமானது, தனியார் நிறுவனங்களின் கைகளில் செல்லும்போது இவ்விதி நீர்த்துப்போகக்கூடும். அப்போது எல்.ஐ.சி.யில் இருக்கு மக்களின் காப்பீடு மற்றும் சேமிப்புகள் கபளீகரம் செய்யப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அமீர்
‘பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கும் அருகதை அரசுக்கு கிடையாது’ – மிரட்டல் விடும் மன்னார்குடி ஜீயர் !
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் தருமபுர ஆதினமாக யார் இருகிறார்களோ அவர்களை மனிதனர்கள் ஒரு அடிமைபோல் பல்லக்கில் தூக்கி செல்லும் ஒரு இழிசெயல் ஆண்டுதோறும் நடைபெருகிறது. மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதேபோல் கடந்த ஆண்டு திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் தூக்கி சென்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தருமபுர பட்டின பிரவேச நிகழ்வு வருகிற மே 22-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்லக் கூடாது என்றும், மனிதர்களை மனிதர்கள் சுமப்பது என்பது மனித உரிமை மீறல் என்றும் எனவே இந்த பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதின கர்த்தரை பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதிக்க வேண்டும், அவ்வாறு தடை விதிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் கழகம் உட்பட பல்வேறு திராவிட, இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள் கோரிக்கை விடுத்து இருந்தன.
இதன் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த ராஜ் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதாலும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டுருந்தார்.
படிக்க :
♦ கும்பகோணம் யாருக்குச் சொந்தம் ? சிறப்புக் கட்டுரை
♦ மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !
கோட்டாட்சியரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுமட்டுமில்லாமல் தமிழக அரசை மிரட்டும் தொனியுலும் பேசி வருகின்றனர். பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக் கூடிய ஒன்று. ஸ்ரீரங்கத்தில் கூட ஆச்சாரியருக்கு நடத்திய பிரவேசத்தை எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர். பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கக் கூடிய அருகதை இந்த அரசுக்கும் கிடையாது. எந்த இயக்கத்துக்கும் கிடையாது. பட்டினப் பிரவேசம் நிச்சயம் நடக்கும், அதை தடுக்க முடியாது. இந்து தருமத்துக்கு எதிரான துரோகிகளை தேசத் துரோகிகளாக கருதி எச்சரிக்கை விடுக்கிறேன். இந்து விரோதமான செயல்களை கடைபிடித்தால் ஆளுங்கட்சியின் எந்த ஒரு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சாலையில் நடமாட முடியாது என்று தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பூநூல் போட்ட மன்னார்குடி ஜீயர் மிரட்டல் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஆளும்கட்சியாக தி.மு.க.வினர் இந்த மிரட்டலுக்கு அடக்கி வாசிக்கின்றனர். ஒரு வேலை பூநூல் தனது கழுத்தை அறுத்துவிடும் என்ற பயமோ தெரியவில்லை.
இதேபோல் மதுரை ஆதினம், உயிரே போனாலும் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்துவோம் என்றும் நானே பல்லக்கை எனது தோளில் சுமப்பேன் என்றும் கூறியுள்ளார்.
“தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால், அரசின் தடையை மீறி பாஜக பட்டினப் பிரவேசத்தை முன்நின்று நடத்தும். நானும் அங்கே சென்று பல்லக்கை சுமக்க தயாராக இருக்கின்றேன்“ என்றும் கூறி தனது அடிமை புத்தியை சொறிந்து கொண்டார் பாஜக தலைவர் அண்ணாமலை.
சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி இந்திய அரசியலமைப்பு பிரிவு 25, 26-ன் படி வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை அடிப்படையில் தடை விதிக்க முடியாது. எனவே ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேபோல் ஜி.கே.மணி, பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் சட்ட மன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தருமபுர ஆதினத்துடன் தமிழக முதல்வர் பேசி சரியான முடிவை எடுப்பார் என்றும் இந்த விவகாரத்தில் தி.மு.க.வை இந்து விரோத கட்சி என்று முத்திரை குத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறினார். திராவிட கொள்கை பேசும் திமுக தன்னை பெரியாரின் வாரிசாக காட்டிகொள்ளும் இந்த திமுக ஆணித்தனமாக நாங்கள் எடுத்த முடிவு சரிதான் உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பல்லக்கில் சுமக்கும் விதிக்கப்பட்ட தடை சரியானதுதான் எனக் கூற திராணியற்று இருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இந்த விவகாரத்தில் சங்கிகளின் சத்தம் அதிகமாக இருப்பதைவிட அவர்களின் அடிமைகளின் கூப்பாடும் அதிகமாக இருக்கிறது.
சமுகநிதி ஆட்சி என்று சொல்லும் திமுக ஆதினங்களின் திமிரிதனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும், மன்னார்குடி ஜீயரின் திமீர் தனமான மிரட்டல் பேச்சுக்கு திமுக நடவடிக்கை எடுக்கப்போகிறதா என்ன? ஆதினங்களின் திமிர்தனங்களை உழைக்கும் மக்கள் வர்க்கமாக அணித்திரண்டு முறியடிப்பதை தவிர வேறென்ன தீர்வாக இருக்க முடியும்.

வினோதன்
பொதுவுடைமை பத்திரிகையின் முன்னுதாரணம் “பிராவ்தா” !
பொதுவுடைமை கட்சியின் பத்திரிகை மக்களுடன் இணைந்து செயல்படவேண்டும் என்பதற்கு “பிராவ்தா” ஓர் முன்னுதாரணமாக திகழ்ந்தது. கம்யூனிச ஆசான் கார்ல் மார்சின் பிறந்தநாளில் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை, தற்போது தனது 110-வது உதய நாளை நிறைவு செய்கிறது.
பொதுவுடைமை கட்சியின் பத்திரிகையானது, அக்கட்சியின் அமைப்பாளனாக செயல்பட்டு உழைக்கும் மக்களை, தொழிலாளர்களை புரட்சிக்கு அணிதிரட்டும் கடமையை செய்ய வேண்டும். இக்கடமையாற்றிய “பிராவ்தா”வை பற்றி போல்ஷ்விக் கட்சியின் வரலாறு நூலில் இடம்பெற்ற ஓர் பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.
–வினவு
போல்ஷ்விக் பத்திரிகை “பிராவ்தா”
நான்காவது அரசாங்க டூமாவில் போல்ஷ்விக் குழு
அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கும், தன் செல்வாக்கை மக்களிடையே பரப்புவதற்கும் போல்ஷ்விக் கட்சி உபயோகப்படுத்திய வலுமிக்க ஆயுதம் “பிராவ்தா” (உண்மை) என்ற தினசரி செய்திப் பத்திரிகை. இது, பீட்டர்ஸ்பர்கில் வெளியிடப்பட்டது. லெனின் கூறிய யோசனையின் பேரில் ஸ்டாலின், ஆல்மின்ஸ்கி, போல்டாயீவ் ஆகியோரின் முன்முயற்சியால் தொடங்கப்பட்டது. 1912-ம் வருடம், மே 5-ம் தேதியன்று இதனுடைய முதல் இதழ் வெளிவந்தது. இந்த நாள், தொழிலாளருக்கு ஒரு திருநாளாகும். “பிராவ்தா” வெளிவந்ததைக் கௌரவிப்பதற்காக அன்று முதல் ஒவ்வொரு வருடமும், மே மாதம் 5-ம் தேதி, “தொழிலாளர் பத்திரிகை தினமாக”க் கொண்டாடப்படுகிறது.
“பிராவ்தா” வெளிவருவதற்கு முன்பு, “ஸ்வெஸ்தா’ என்ற ஒரு வாரப் பத்திரிகையை போல்ஷ்விக்குகள் நடத்தி வந்தனர். அரசியலில் வளர்ச்சியடைந்த தொழிலாளருக்காக இது நடத்தப்பட்டது. லீனா தங்கவயல் நிகழ்ச்சிகளின் போது, “ஸ்வெஸ்தா” மிகவும் முக்கியமான பங்கு வகித்தது. லெனின், ஸ்டாலின் எழுதிய உணர்ச்சி மிகுந்த பல கட்டுரைகளைப் பிரசுரித்தது. போராட்டத்திற்காக அக்கட்டுரைகள் தொழிலாளி வர்க்கத்தை ஒன்று திரட்டின. ஆனால், புரட்சி இயக்கம் ஓங்கி வளர்ந்தபோது போல்ஷ்விக் கட்சியின் தேவைகளை ஒரு வாரப் பத்திரிகையினால் பூர்த்திசெய்ய முடியவில்லை. தொழிலாளி மக்களில் சகல பகுதியினருக்கும் எட்டக்கூடிய அளவு, ஒரு பெரிய தினசரிப் பத்திரிகை அவசியப்பட்டது. “பிராவ்தா” அத்தகைய பத்திரிகையாக தொண்டு செய்தது.
இந்தக் காலத்தில், ஈடு இணையற்ற முறையில் “பிராவ்தா” அபூர்வமாகப் பணி புரிந்தது. ஏராளமான தொழிலாளர்களிடமிருந்து போல்ஷ்விஸத்திற்கு ஆதரவு திரட்டிற்று. தணிக்கை அதிகாரிக்குப் பிடிக்காத கட்டுரைகள் பல வெளியிடப்பட்டதனால், அதை போலீஸ் விடாமல் தாக்கிக்கொண்டிருந்தது. ஏராளமாக தண்டனை விதித்தது; அச்சடிக்கப்பட்ட பல இதழ்களைப் பறிமுதல் செய்தது. ஆகவே, அரசியலில் வளர்ச்சியடைந்திருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அல்லும் பகலும் ஓயாது கொடுத்த ஆதரவினால்தான் பிராவ்தா உயிர் வாழ முடிந்தது. தொழிலாளரிடையே வசூலிக்கப்பட்ட பணத்தைக் கொண்டுதான் பெரும் தண்டனைத் தொகைகளைப் பிராவ்தாவினால் கட்ட முடிந்தது. இவ்விதம் அடக்கப்பட்டபோதிலும், போலீஸார் பறிமுதல் செய்த “பிராவ்தா” இதழ்கள், எப்படியாவது வாசகர்களுக்கு கிடைத்துவிடும். உணர்ச்சிமிக்க, சுறுசுறுப்பான தொழிலாளிகள் யாருக்கும் தெரியாமல் அச்சுக்கூடத்திற்கு வந்து, பத்திரிகைக் கட்டுகளை எடுத்துச் சென்று வினியோகிப்பார்கள்.
இரண்டரை வருடங்களில், பிராவ்தாவை எட்டுதடவை ஜார் அரசாங்கம் அடக்கிற்று. ஆனால் ஒவ்வொரு தடவையும் அது தொழிலாளரின் வற்றாத ஆதரவைக்கொண்டு, அதே போன்ற பெயர்களில் திரும்பவும் வெளிவந்தது. உதாரணமாக “ஜ-பிராவ்தா’ (உண்மைக்காக), “புட்-பிரவ்தி”(உண்மை வழி), “ட்ரூடோவ்யா – பிராவ்தா (தொழிலாளர் உண்மை என்ற பெயர்களில் வெளிவந்தது.
பிராவ்தா இதழ்கள் ஒவ்வொன்றும் தினசரி சராசரியாக 40 ஆயிரம் பிரதிகள் விற்பனையாயின. லச் (ஒளி) என்ற மென்ஷ்விக் பத்திரிகை 15 ஆயிரம் அல்லது 16 ஆயிரம் பிரதிகள் தான் சென்றது.
படிக்க :
♦ பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்? – தோழர் லெனின்
♦ என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !
பிராவ்தாவைத் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்தப் பத்திரிகையாகக் கருதினார்கள். அதன்மீது மகத்தான நம்பிக்கை வைத்திருந்தனர்: அது விடுத்த அறைகூவல் ஒவ்வொன்றிற்கும் செவி கொடுத்தனர். ஒவ்வொரு பிரதியும் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாறி, டஜன் கணக்கான தொழிலாளர்களால் வாசிக்கப்பட்டது. அது அவர்களுடைய வர்க்க உணர்ச்சியை உருவாக்கிற்று; அவர்களுக்கு அரசியலைப் போதித்தது; அவர்களை அமைப்புரீதியாக ஒன்றுபடுத்திற்று; போராட்டத்திற்கு அறைகூவி அழைத்தது.
பிராவ்தா எதைப்பற்றி எழுதிற்று?
டஜன் கணக்கில் தொழிலாளர் எழுதிய கடிதங்கள் அதன் ஒவ்வொரு இதழிலும் வெளியிடப்பட்டன. முதலாளிகளும், நிர்வாகிகளும், மேற்பார்வையாளர்களும் தங்களைக் கொடுமைப்படுத்தியதையும் தாங்கள் அனுபவித்த அவமானத்தையும், பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளையும், கொடூரத்தனமான சுரண்டலையும் அக்கடிதங்களில் தொழிலாளிகள் வர்ணித்தனர். இவை, முதலாளித்துவ நிலைமைகளைக் கண்டித்து அழுத்தந்திருத்தமாகக் கூறப்பட்ட தீர்ப்புகளாகும். வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கி, இனி வேலை கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கையை இழந்து தற்கொலை புரிந்து கொண்ட தொழிலாளிகளின் செய்திகளை பிராவ்தா அடிக்கடி வெளியிட்டது.
பல்வேறு பாக்டரிகளிலும், தொழிற்சாலைக் கிளைகளிலும் வேலைபார்த்த தொழிலாளரின் கோரிக்கைகளைப் பற்றியும், தேவைகளைப் பற்றியும் பிராவ்தா விரிவாக எழுதிற்று. கோரிக்கைகளை அடைவதற்காக ஆங்காங்கே தொழிலாளர்கள் எவ்விதம் போராடுகிறார்கள் என்ற விபரத்தைக் கூறிற்று. பல்வேறு பாக்டரிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களைப் பற்றி அநேகமாக தினசரி பிராவ்தா செய்தி தந்தது. பெரிய வேலை நிறுத்தங்கள் நடந்தபோதும் நீண்ட நாட்களுக்கு நீடித்துக்கொண்டேபோன வேலை நிறுத்தங்களின் போதும், வேலை நிறுத்தக்காரர்களுக்கு உதவி செய்வற்காக மற்ற பாக்டரிகலிலும், தொழிற்சாலைகளிலும் வேலைபார்த்த தொழிலாளரிடையே பணம் வசூல் செய்வதற்கு பிராவ்தா உதவி செய்தது; வசூல் இயக்கத்தை நிறுத்தாமல் ஒழுங்காக நடத்துவதற்குத் துணைபுரிந்தது. அந்தக் காலத்தில் சாதாரணமாக தினசரி 70 அல்லது 80 கோபெக்குகளுக்கு (100 கோபெக்குகள் : 1 ரூபிள்) மேல் பெரும்பாலான தொழிலாளர்கள் கூலி பெறவில்லை. இத்தகைய நிலைமையில், சிலசமயம் மிகப் பெரிய தொகையை – ஆயிரக் கணக்கான ரூபிள்களை – வேலை நிறுத்த நிதிக்காக பிராவ்தா
வசூல் செய்தது இது. பாட்டாளி வர்க்க ஒற்றுமை மனோபாவத்தையும், சக தொழிலாளருடைய நலன்களும் ஒன்றுதான் என்ற உணர்வையும் தொழிலாளரிடையே வளர்த்தது.
ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியைப் பற்றியும், அதன் தோல்வியைப் பற்றியும் அல்லது வெற்றியைப் பற்றியும் பிராவ்தாவிற்கு கடிதங்கள் எழுதியோ அல்லது வாழ்த்துக்கள் அனுப்பியோ, அல்லது கண்டனங்களை அறிவித்தோ தொழிலாளர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர். நிகழ்ச்சிகளின் ஓசைக்கேற்றவாறு எதிரொலி செய்தனர். முரண்பாடுகள் எதுவுமில்லாத, நிலையான போல்ஷ்விக் கருத்துப்படி தொழிலாளிவர்க்க இயக்கம் செய்ய வேண்டியிருந்த வேலைகளைப் பற்றி பிராவ்தா தன் கட்டுரைகளில் விவாதித்தது. சட்டப்பூர்வமாக வெளியிடப்படும் பத்திரிகை, ஜார் ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்று பகிரங்கமாகக் கூறக்கூடாது. ஆகவே, அது குறிப்பு வார்த்தைகள் – சூசக மொழிகளை – உபயோகப்படுத்த வேண்டியிருந்தது. அவ்வார்த்தைகளை வர்க்க உணர்ச்சிமிகுந்த தொழிலாளிகள் மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டு பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர். உதாரணமாக, “ஐந்தாம் வருடத்தின் குறைவில்லா முழு கோரிக்கைகள்” என்று பிராவ்தா எழுதியபோது, அவை போல்ஷ் விக்குகளுடைய புரட்சி முழக்கங்கள் என்று தொழிலாளர்கள் புரிந்து கொண்டனர். அதாவது, “ஜார் ஆட்சி ஒழிக. ஜனநாயகக் குடியரசு ஓங்குக! நிலம் படைத்த பண்ணைகளைப் பறிமுதல் செய்! 8 மணி வேலை நேரம் வேண்டும்” என்ற முழக்கங்களைப் பற்றியே பிராவ்தா பேசுகிறது என்று தெரிந்து கொண்டனர்.
நான்காவது அரசாங்க டுமாவிற்கு தேர்தல் நடைபெறவிருந்த தருணத்தில், அரசியலில் வளர்ச்சியடைந்திருந்த, தொழிலாளர்கள் அனைவரையும் பிராவ்தா ஒன்று திரட்டிற்று. மிதவாத முதலாளிகளுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவேண்டுமென்று கூறிய “ஸ்டோலி பின் தொழிற்கட்சி” பிரச்சாரகர்களை, அதாவது மென்ஷ்விக்குகளை அம்பலப்படுத்திற்று. அவர்கள் செய்த துரோகத்தனமான காரியங்களை உடைத்துக் காட்டிற்று. “ஐந்தாம் வருடத்தின் குறைவில்லா முழு கோரிக்கைகளை” ஆதரித்தவர்களுக்கு – அதாவது, போல்ஷ்விக்குகளுக்கு – ஒட்டுப் போடும்படி தொழிலாளரை அறைகூவி அழைத்தது. தேர்தல்கள் நேர்முகமாக நடைபெறவில்லை; ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு பல கட்டங்களைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. முதலாவதாக, தொழிலாளர் கூட்டங்கள் சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தன; இந்தப் பிரதிநிதிகள், தங்களிடையே இருந்து வேறு சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர்; இந்தப் பிரதிநிதிகளைத்தான் டூமாவிற்கு தொழிலாளர் பிரதிநிதியை முடிவில் தேர்ந்தெடுக்கும்படியான தேர்தலில் பங்கெடுத்துக் கொண்டனர். இந்த மறைமுகமாக தேர்தல் தினத்தன்று, “பிராவ்தா” போல்ஷ்விக் வேட்பாளர் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் கண்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி தொழிலாளருக்கு சிபார்சு செய்தது. தேர்தலுக்கு முன்பே அந்தப் பட்டியலை வெளியிட முடியவில்லை. ஏனெனில், தேர்தலுக்கு முன்பாக அதை வெளியிட்டிருந்தால் அதில் கண்ட போல்ஷ்விக்குகள் கைது செய்யப்பட்டிருப்பர்.
ஆயிரம், பதினாயிரக் கணக்கில் பாட்டாளிகள் செயலில் இறங்கிப் போராடக்கூடிய விதத்தில் “பிராவ்தா” நடவடிக்கைகளை உருவாக்கிற்று. 1914-ம் வருடம் இளவேனிற் காலத்தில் ஒரு பெரிய கதவடைப்பு (Lock out) நடந்த சமயத்தில், இதற்காக பெரிய வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதென்பது அவ்வளவு உகந்ததாக இல்லாதிருந்தபோது, வேறுவிதமான போராட்ட முறைகளை மேற்கொள்ளும்படி ‘பிராவ்தா தொழிலாளருக்கு வழிகாட்டிற்று. அதாவது பாக்டரிகளில் பெரிய கூட்டங்களை நடத்த வேண்டுமென்றும் வீதிகளில் பெரிய ஊர்வலங்களை நடத்தி ஆர்ப்பாட்டம் செய்யவேண்டுமென்றும் அறைகூவி அழைத்தது. ஆனால் இதை பகிரங்கமாக பத்திரிகையில் கூறமுடியாது. இருந்தபோதிலும் “தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முறைகள்” என்ற பரம சாதுவான தலைப்பில் லெனின் எழுதிய கட்டுரையைப் படித்தபோது, என்ன செய்வதென்று அரசியலில் வளர்ச்சியடைந்த தொழிலாளிகள் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டனர். குறிப்பிட்ட சில சமயங்களில் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வேறு சில முறைகளைக் கையாள வேலை நிறுத்தங்கள் வழிவகுக்க வேண்டுமென்று அதில் லெனின் எழுதியிருந்தார். பொதுக்கூட்டங்களைக் கூட்டவேண்டுமென்றும் ஊர்வலம் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்யவேண்டுமென்றும் இதற்கு அர்த்தம்.
இவ்விதம் போல்ஷ்விக்குகள் செய்துவந்த சட்டவிரோதமான காரியங்கள்; தொழிலாளரை ஒன்றுதிரட்டி உருவாக்கக்கூடிய சட்டபூர்வ மான பிரச்சாரத்துடனும் சட்டபூர்வமான அமைப்புடனும் பிராவ்தா மூலம் இணைக்கப்பட்டன.
தொழிலாளர் வாழ்க்கை பற்றியும், வேலை நிறுத்தங்கள் பற்றியும், ஆர்ப்பாட்டங்கள் பற்றியும் எழுதியதோடு பிராவ்தா நின்று கொள்ளவில்லை. விவசாயிகள் வாழ்க்கை பற்றியும், அவர்களை வாட்டி வதக்கிய பஞ்சங்களைப் பற்றியும், நிலப்பிரபுத்துவ நிலச் சுவான்தார்களின் சுரண்டலால் அவர்களுற்ற அவதியைப் பற்றியும் பிராவ்தா வர்ணித்தெழுதிற்று. ஸ்டோலிபின் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் மூலம் எவ்விதம் விவசாயிகளின் நல்ல நிலங்களை யெல்லாம் குலாக்குகள் அபகரித்துக் கொண்டனர் என்பதை வர்ணித்தது. கிராமாந்திரங்களில் எங்கும் பரவியவாறு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த அதிருப்தியை, நகரங்களில் வர்க்க உணர்ச்சி மிகுந்திருந்த தொழிலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. 1905-ம் வருடப் புரட்சியின் லட்சியங்கள் இன்னும் ஈடேறவில்லை என்றும், இதனால் ஒரு புதிய புரட்சி வந்து கொண்டிருக்கிறது என்றும் பிராவ்தா பாட்டாளி வர்க்கத்துக்கு போதித்தது. இந்த இரண்டாவது புரட்சியில் பொதுமக்களுடைய உண்மையான தலைவனாகவும் வழிகாட்டியாகவும் பாட்டாளி வர்க்கம் பணி புரிய வேண்டுமென்றும், இப்புரட்சியில் வர்க்கம் போன்ற ஒரு மகத்தான வலுமிக்க கூட்டாளியைப் பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்கும் என்றும் போதித்தது.
மென்ஷ்விக்குகள் இதற்கு நேர்மாறாக வேலை செய்தனர். புரட்சி என்ற எண்ணத்தைப் பாட்டாளி வர்க்கம் கைவிடும்படி செய்வதற்கும், மக்களைப்பற்றி, பசியால் வாடிய விவசாயிகளைப் பற்றி, “கருப்பு நூற்றுவர் நிலச்சுவாந்தார்களின் ஆதிக்கத்தைப் பற்றி பாட்டாளி வர்க்கம் சிந்திப்பதை நிறுத்துவதற்கும் பாடுபட்டனர். “சங்கம் சேரும் உரிமை”க்காக மட்டும்தான் பாட்டாளி வர்க்கம்
போராடவேண்டுமென்றும், இவ்வுரிமையைக் கேட்டு ஜார் அரசனிடம் “மனுக்கள் போடவேண்டும்” என்று பிரச்சாரம் செய்தார்கள்.
“உழவன் வாழ்க்கை” என்ற பகுதியில் ‘பிராப்தா’ என்ன எழுதிற்று?
1913-ம் வருடத்தில் வெளியிடப்பட்ட பல கடிதங்களில் சிலவற்றை இங்கே உதாரணமாகக் கவனிப்போம்.
“தோழரே, புகுல்மா மாவட்டத்தைச் சேர்ந்த நவோகாஷ் புலட் என்ற கிராமத்தில் விவசாயிகள் கம்யூனை விட்டு வெளியேறினர். அவர்களுக்கு கம்யூன் நிலத்தைப் பகிர்ந்து கொடுத்த கிராமக் கணக்குப் பிள்ளையின் வேலையில் “தலையிட்டதற்காக”க் குற்றஞ்சாட்டப்பட்டு 45 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோருக்கு நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று சமாரா என்ற இடத்திலிருந்து “ஒரு விவசாய செய்தி” என்ற தலைப்பில் வந்த கடிதம் கூறுகிறது.
“ஐயா, பிஸிட்சா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கிராம போலீஸ்காரனை எதிர்த்து ஆயுதம் தாங்கி சண்டைபோட்டனர். பலருக்குக் காயம். விவசாயத் தகறாரே இதற்குக் காரணம். இப்போது அந்தக் கிராமத்திற்கு ஒரு பெரிய போலீஸ் படை அனுப்பப்பட்டிருக்கிறது. மேல் அதிகாரிகளும் சென்று கொண்டிருக்கின்றனர்” என்று பஸ்கோவ் மாநிலத்திலிருந்து வந்த ஒரு சிறு கடிதம் கூறுகிறது.
“விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்ட பங்கு நிலங்கள் நாளுக்குநாள் அதிகமாக விற்கப்படுகின்றன; பஞ்சமும், கம்யூன்களிலிருந்து வெளியேறுவது பற்றிய சட்டமும் ஏராளமான விவசாயிகளைத் தங்களுடைய பங்கு நிலங்களை இழக்கும்படி செய்கின்றன” என்று உபா மாகாணத்திலிருந்து வந்த ஒரு கடிதம் கூறுகிறது. போரிஷாவ்கா என்ற கிராமத்திலிருந்து வந்த கடிதத்தைக் கவனிப்போம். இங்கு மொத்தம் 27 விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றன. இவற்றிற்குச் சொந்தமாக மொத்தம் 543 டெஸ்ஸியாட்டின் (டெஸ்ஸியாட்டின் : சுமார் இரண்டரை ஏக்கர்) நிலமிருக்கிறது. பஞ்சம் வந்தபோது ஒரு டெஸ்ஸியாட்டின் விலை 25 ரூபிள் அல்லது 33 ரூபிள் வீதம் என்று மிகக் குறைவான விலைக்கு 31 டெஸ்ஸியாட்டியின் நிலத்தை 5 விவசாயிகள் விற்றுவிட்டனர். அந்த விலையைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக அந்த நிலம் மதிப்புள்ளது. இந்தக் கிராமத்தில் நூற்றுக்கு 12 வீதம் வட்டி தருவதாக எழுதிக்கொடுத்து, ஒரு டெஸ்ஸியாட்டினுக்கு 18 அல்லது 20 ரூபிள்கள் வீதம் மொத்தம் 171 டெஸ்ஸியாட்டின் நிலத்தை 7 விவசாயிகள் 6 வருடங்களுக்கு அடமானம் வைத்திருக்கின்றனர். மக்களின் வறுமையையும் அக்கிரம வட்டி விகிதத்தையும் கவனித்தால், 177 டெஸ்ஸியாட்டின் நிலத்தில் பாதிக்குமேல் வட்டிக்குக் கடன் கொடுத்த பேர்வழியின் கைக்குச் சென்றுவிடும் என்பதில் சந்தேகமே தோன்றாது. ஏனெனில் அவ்வளவு பெரிய தொகையை ஆறு வருடங்களுக்குள் கடன்வாங்கிய விவசாயிகளில் பாதிப்பேரால்கூட அடைக்கமுடியாது.
உறிஞ்சும் அட்டைபோன்ற நிலச்சுவான்தார்களுடைய கரங்களில் எவ்வளவு பிரம்மாண்டமான அளவில் நிலம் குவிந்துகிடக்கிறது என்பதை தொழிலாளரும் விவசாயிகளுக்கும் லெனின் அப்பட்டமாக எடுத்துக்காட்டினார். 30 ஆயிரம் நிலச்சுவான்தார்கள் மட்டும், தங்களுக்குள் 7 கோடி டெஸ்ஸியாட்டின் நிலத்தைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். அதே பரப்பளவு நிலம் 1 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு சொந்தமாக இருந்தது. சராசரியாக ஒவ்வொரு நிலச்சுவான்தாருக்கும் 2,300 டெஸ்ஸியாட்டின் நிலமிருந்தது. குலாக்குகள் உள்பட விவசாயக் குடும்பங்கள் அவ்வளவையும் எடுத்துக்கொண்டால், சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7 டெஸ்ஸியாட்டின்களே இருந்தது. இதுமட்டுமல்ல. சிறிய விவசாயிகளின் குடும்பங்களுக்கு, அதாவது 50 லட்சம் குடும்பங்களுக்கு, அதாவது, விவசாயி வர்க்கத்தில் பாதிப்பேருக்கு சராசரியாக ஒன்று அல்லது இரண்டு டெஸ்ஸியாட்டினுக்கு மேலில்லை. இந்தப் புள்ளி விவரங்கள் எதைக் காட்டின? விவசாய மக்களின் வறுமைக்குக் காரணமான மூலவேர், பஞ் சங்கள் மீண்டும் மீண்டும் வந்ததற்கு காரணமான மூலவேர், நிலம் படைத்த பண்ணைகளில் – பண்ணை அடிமைத் தனத்திலிருந்து மிஞ்சி நின்ற சின்னங்களில் – புதைந்து கிடந்தது; தொழிலாளிவர்க்கம் நடத்துகிற ஒரு புரட்சியின் மூலமே, அதை விவசாயிகளால் நிர்மூலமாக்க முடியும் என்று இந்தப் புள்ளி விவரங்கள் தெளிவாகக் காட்டின.
கிராமாந்திரங்களுடன் தொடர்புவைத்து வேலை செய்த ஊழியர்கள் வழியாக ‘பிராவ்தா கிராமங்களுக்குச் சென்றது. புரட்சிப் போராட்டத்தில் சேர்ந்து பங்குகொள்ள வேண்டு மென்று அரசியலில் வளர்ச்சியடைந்திருந்த விவசாயிகளைத் தட்டி எழுப்பி உணர்ச்சி ஊட்டிற்று.
‘பிராவ்தா தொடங்கப்பட்ட சமயத்தில் சட்டவிரோதமான சமூக ஜனநாயக அமைப்பு யாவும் போல்ஷ்விக்குகளிடம் இருந்தன. ஆனால், மறுபுறத்தில், சட்டசபையிலிருந்த சமூக ஜனநாயக குழு, அச்சுக்கூடம், நோயாளி நலச்சங்கங்கள், தொழிற்சங்கங்கள் முதலிய சட்டபூர்வமான அமைப்புகள் முழுவதும் இன்னும் மென்ஷ்விக்குகளின் கரங்களிலிருந்து பரிபூரணமாகப் பிடுங்கப்படவில்லை. சட்டபூர்வமான தொழிலாளர் அமைப்புகளிலிருந்து ‘கலைப்பாளர்களை அடித்து விரட்டுவதற்கு ஒரு திடமான போராட்டத்தை போல்ஷ்விக்குகள் தொடுக்க வேண்டியிருந்தது. ‘பிராவ்தா செய்த சேவையால் இப்போராட்டம் வெற்றி பெற்றது.
படிக்க :
♦ உலகப் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவிற்கு 150-வது இடம் !
♦ ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
கட்சியின் கொள்கைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் மத்தியில் – ஏராளமானபேர் பங்குகொள்ளும் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் மத்தியில், ‘பிராவ்தா நடுநாயகமாக நின்றது. போல்ஷ்விக் கட்சியின் சட்ட விரோதமான மத்தியக் குழுவின் கொள்கையை ஆதரித்து, அக்குழுவிற்கு பக்கபலமாக நிற்கும் வண்ணம் சட்டபூர்வமான அமைப்புகளைத் திரட்டிற்று; ஒரே ஒரு உருப்படியான லட்சியத்தை நோக்கி – ”புரட்சிக்கு தயாரிப்பு செய்வது” என்ற லட்சியத்தை நோக்கி – தொழிலாளி வர்க்க இயக்கத்தை பிராவ்தா வழிகாட்டி நடத்திற்று.
‘பிராவ்தா’விற்கு செய்தி தர ஏராளமாக தொழிலாளி நிருபர்கள் இருந்தனர். அது, ஒரு வருடத்தில் மட்டும் தொழிலாளரிடமிருந்து வந்த பதினோராயிரம் கடிதங்களைப் பிரசுரித்தது. ஆனால், தொழிலாளி வர்க்க மக்களுடன் கடிதங்கள் மூலமாக மட்டும்தான் பிராவ்தா தொடர்பு வைத்துக் கொண்டிருந்தது என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு நாளும் அதனுடைய ஆசிரியர் செயலகத்திற்கு பாக்டரிகளிலிருந்து அநேக தொழிலாளிகள் வந்து போய்க்கொண்டிருந்தனர். கட்சியின் அமைப்பு ரீதியான வேலைகளில் ஒரு பெரும் பகுதி ‘பிராவ்தா’ ஆசிரியர் செயலகத்தில் கவனிக்கப்பட்டது. கட்சிக்கிளை களிலிருந்து வந்த பிரதிநிதிகளுடன் இங்கு கூட்டங்கள் நடத்தப் பட்டன. இங்கே பாக்டரிகளிலும் மில்களிலும் செய்யப்பட்ட கட்சி வேலைகளைப் பற்றிய அறிக்கைகள் வாங்கப்பட்டன; இங்கிருந்து தான் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கமிட்டியின் உத்திரவுகளும், மத்தியக் குழுவின் கட்டளைகளும் வெளியே அனுப்பப்பட்டன.
ஏராளமான பேர் பங்குகொள்ளும் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்டுவதற்காக இரண்டரை வருட காலம் விடா முயற்சியுடன் போராடியதன் பயனாய், 1914-ம் வருடம் கோடைகாலத் திற்குள் போல்ஷ்விக்குகள் பெரும் வெற்றியைக் கண்டனர்; ரஷ்யாவில் அரசியலில் வளர்ச்சியடைந்து சுறுசுறுப்புடன் அரசியல் வேலைகளில் ஈடுபட்டுவந்த மொத்தத் தொழிலாளிகளில் 5-ல் 4 பகுதியினருடைய ஆதரவை போல்ஷ்விக் கட்சிக்கும், பிராவ்தா போர்த் தந்திரங்களுக்கும் சாதகமாகப் பெற்றனர். கீழ்கண்ட விஷயத்தித்திலிருந்து இதை நன்கு தெரிந்து கொள்ளலாம். 1914-ம் வருடத்தில் தொழிலாளர் பத்திரிகை நிதிக்காக மொத்தம் 7000 தொழிலாளர் பிரிவுகள் தேசமெங்கும் பணம் வசூல் செய்தன. இப்பிரிவுகளில் 5,600 பிரிவுகள் போல்ஷ்விக் பத்திரிகைக்கு வசூலித்தன; 1,400 பிரிவுகள்தான் மென்ஷ்விக் பத்திரிகைக்கு வசூலித்தன. ஆனால் மறுபக்கத்தைக் கவனித்தால், மிதவாத பூர்ஷ் வாக்களுக்கிடையிலும், முதலாளித்துவப் படிப்பாளிகளுக்கிடையிலும் மென்ஷ்விக்குகளுக்கு அநேக “பணக்கார நண்பர்கள்” இருந்தனர். மென்ஷ்விக் பத்திரிகையை நடத்துவதற்குத் தேவைப்பட்ட பணத்தில் பாதிக்குமேல், இப் “பணக்கார நண்பர்கள்” கொடுத்தார்கள்.
அந்தக் காலத்தில் போல்ஷ்விக்குகள், “பிராவ்தாக்காரர்கள்” என்று கூப்பிடப்பட்டனர். புரட்சிகரமான பாட்டாளிகளின் தலைமுறைகளில், ஒரு தலைமுறை முழுவதுமே பிராவ்தாவின் போதனையால் வார்த்தெடுத்துப் பக்குவமாக்கப்பட்டது. இந்தத் தலைமுறைதான் பிற்காலத்தில் நவம்பர் சோஷியலிஸ்ட் புரட்சியைத் தலைமைதாங்கி நடத்திற்று. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, பதினாயிரக்கணக்கான தொழிலாளிகளால் ‘பிராவ்தா’ ஆதரிக்கப்பட்டது. ஏராளமான பேர் பங்குகொள்ளும் போல்ஷ்விக் கட்சியைக் கட்டுவதற்கு மிகவும் உறுதியான அடித்தளம் போடப்பட்டது. ஏகாதிபத்திய யுத்தக் காலத்தில் ஜார் ஆட்சி தொடுத்த எத்தகைய அடக்குமுறை பாணங்களாலும் அசைக்கமுடியாது போன அடித்தளம் போடப்பட்டது.!
“1912-ம் வருடத்தில் ‘பிராவ்தா’ உதயமானதானது, 1917-ம் வருடத்தில் போல்ஷ்விஸம் வெற்றிபெறுவதற்கு அஸ்திவாரக் கல் நாட்டப்பட்ட விழாவாக திகழ்ந்தது” – ஸ்டாலின்.
(போல்ஷ்விக் கட்சியின் வரலாறு நூலிலிருந்து…)
பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு
04.05.2022
பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை !
புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே !
பத்திரிகை செய்தி
6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு ஒரு சில நாட்களுக்குப் பிறகு ஆரம்பிக்க போகிறது தமிழக பள்ளி கல்வித்துறை.
இதற்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக வந்துள்ள சுற்றறிக்கையில் language, english, optional language போன்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. english என்பது குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தமிழ் என்பது எங்கே?
Language என்பதுதான் தமிழ் என்று குறிப்பிடுகிறார்களா? தமிழ் என்பதை குறிப்பிடாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? இல்ல இது மத்திய அரசும் வழிகாட்டுதல் படி நடக்கிறார்களா என்ற சந்தேகத்தை கல்வியாளர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர்.
இன்னொருபுறம் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் நடைமுறையில் உள்ளது. ஆனால் இதில் மூன்றாவதாக optional language என்ற ஒரு விஷயத்தையும் இணைத்துள்ளார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால் மூன்றாவது ஒரு மொழியையும் தேர்வு செய்யலாம் படிக்கலாம் என்பதுதான்.
மூன்றாவதாக ஒரு மொழியை தேர்வு செய்து படிக்கலாம் என்பது முடிவாகிவிட்டாள் இருமொழிக் கொள்கை என பேசுவது ஏமாற்று தான்.
கொஞ்ச நாளாகவே முதலமைச்சரும் கல்வித் துறை அமைச்சரும் பேசி வருவதெல்லாம் புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கொண்டு மாநிலத்துக்கு என்று ஒரு கல்விக் கொள்கை வகுப்போம் என்பதுதான்.
அதாவது காவிகளுக்காகவும் கார்ப்பரேடுகளுக்காகவும் வடிவமைக்கப்படும் புதிய கல்விக் கொள்கையில்(நரகலில்) நல்லரிசி தேடுவோம் என்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம் விடமாட்டோம் என பேசிய திமுக இப்போது புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
இதை தமிழக மக்களுக்கு திமுக செய்யும் துரோகம் என்று அழைக்காமல் வேற என்ன வார்த்தைகளில் அழைப்பது. காவிகளும் கார்ப்பரேட்டுகளும் தீர்மானிப்பது தான் சட்ட திட்டம் எல்லாம், என்றாகிவிட்ட போது இந்தத் தேர்தல் கட்சிகளை நம்பி என்ன ஆகப்போகிறது.
திராவிட மாடல் உட்பட எல்லாம் மாடல்களும் காவி – கார்ப்பரேட் மாடலுக்கு உட்பட்டது தான் என்பதை எதார்த்த உண்மை எடுத்துக் காட்டுகிறது. காவி – கார்ப்பரேட் பாசிசத்தை களப்போராட்டங்களின் மூலமே முறியடிக்க முடியும் என்பதுதான் எதார்த்தம்.
தமிழக அரசே !
♦ தமிழை புறக்கணித்து முன்று மொழி திணிக்கும் சுற்றறிக்கையை திரும்பி பெறு!
♦ புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே!

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
‘Oh My God’ செய்தியாளர் சந்திப்பு கண்டு அஞ்சும் பாசிச மோடி | கருத்துப்படம்
டென்மார்க் சென்ற மோடி பத்திரிகையாளர்களை கண்டதும் ஓ மைக் காட் (Oh My God) என்று அலறிய காணொலியை நாம் அனைவரும் பார்த்திருக்கக் கூடும்.
தான் பதவியேற்றதில் இருந்து பத்திரிகையாளர்களை சந்திக்காதவர் தான் மோடி. மக்களுக்கு பதில் சொல்வதை பற்றி கிஞ்சித்து அக்கறையற்ற பாசிச மோடி ஊடகங்களுக்கு பேசுவதை தவிர்ப்பதேன்?… உண்மைக்கு முகம்கொடுக்க பாசிஸ்டுகள் அஞ்சி நடுங்கத்தான் செய்வார்கள்!
செய்தியாளர் சந்திப்பு கண்டு அஞ்சும் பாசிச மோடி !
கருத்துப்படம் : மு.துரை
என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !
வருடம்தோறும் மார்க்ஸ் பிறந்தநாள் அன்று அவரின் ஆளுமை பற்றி, அவரது தத்துவ கோட்பாடுகள் பற்றி, பாட்டாளி வர்க்க விடுதலைக்கு அவர் செய்த பங்களிப்பு பற்றி அதிகம் கட்டுரைகள் எழுதப்படும்.
இவ்வளவு ஏன் மூலதனம் நூலில் முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் பகுப்பாய்வு செய்து சொன்னது எங்களுக்கு இன்று முதலாளித்துவ நெருக்கடிகளை புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கிறது என்று முதலாளித்துவவாதிகளே மார்க்ஸ் பற்றி பாராட்டுக் கட்டுரைகளை எழுதுகிறார்கள்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி மார்க்ஸ் என்னும் ஆசான், தனிப்பட்ட மனிதன் என்ற அளவில் என் சிந்தனையில், வாழ்க்கை முறையில் எப்படிப்பட்ட தாக்கம் செலுத்தியுள்ளார் என்பதை நான் பேச விரும்புகிறேன். நான் இங்கே மார்க்ஸ் பற்றியோ அவரது தத்துவம் பற்றியோ பருண்மையான பகுப்பாய்வை செய்யப்போவதில்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்வின் மீது அவர் செலுத்திய தாக்கம் பற்றி பேசுவதால் இதில் என்னுடைய தன்னிலை அனுபவங்களே அதிகம் இருக்கும் என்று முதலிலே சொல்லிக்கொள்கிறேன்.
இப்படி ஒரு தன்னிலை வயப்பட்ட கட்டுரையை ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயமானதே. தான் வாழும் சமூக சூழல் பற்றிய, வாழ்க்கை பற்றிய எவ்வித அனுபவ அறிவும் இல்லாத, ஊசலாட்டமுடைய ஒரு பதின்பருவ மாணவன் மீது மார்க்ஸ் என்னும் ஆளுமை செலுத்திய ஆக்கப்பூர்வமான தாக்கம் எப்படி பின்னாளில் அவனை புரட்சிகர அரசியலை நோக்கி இழுத்துச் சென்றது என்பதை இந்த கட்டுரை முடிவில் உங்களால் கண்டுகொள்ள முடியும். அதன் முக்கியத்துவம் உணர்ந்தே இந்த முற்றிலும் தன்னிலை வயப்பட்ட கட்டுரையை எழுதுகிறேன்.
படிக்க :
♦ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !
♦ நூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்
அப்போது நான் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்திருந்தேன். அதன் பிறகு மூன்று மாத கோடை விடுமுறை என்பதால் என்னை எனது மாமா ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் ஒரு தேர்தல் அரசியல் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் என்பதால் வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். அந்த வீட்டில் என்னைத் தவிர எல்லோரும் பெண் பிள்ளைகள் என்பதால் எனக்கு தனிமை உணர்வு அதிகம் ஏற்பட்டது. அதனை போக்கிக்கொள்ளவே ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டிருப்பேன். எதையும் முழுமையாக படிக்கமாட்டேன். நுனிப்புல் தான் மேய்வேன். அப்படி ஒரு நாள் ஒரு புத்தகத்தின் அறிமுக உரையை படிக்கக் நேர்ந்தது.
அதில் 1999-ம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் (Millenium) அதாவது கடந்த பத்து நூற்றாண்டுகளில் தலை சிறந்த சிந்தனையாளர் யார் என்று நடத்திய கருத்துக்கணிப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை கார்ல் மார்க்ஸ் பிடித்துவிட்டார் என்பதை பற்றி எழுதியிருந்தது. இதைப்படிக்கும் போது எனக்கு வெறும் 17 வயதுதான். மேலும் எனக்கு அறிவியல் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்பதால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனக்கு மிகவும் அதர்ச்சமான மனிதர். அவரை விட யாரோ ஒருவர் சிறந்த சிந்தனையாளர் என்று அந்த முன்னுரையில் எழுதப்பட்டிருந்தது எனக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது.
நான் அந்த முன்னுரையை முழுமையாக படிக்காமலே புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். ஆனால் யார் இந்த கார்ல் மார்க்ஸ்? பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளிப்படிப்பில் ஒருமுறை கூட இவர் பெயரை கேள்விப்பட்டதில்லை. இவர் தலை சிறந்த சிந்தனையாளரா? என்ற கேள்வி மட்டும் அப்போது என்னுள் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு புத்தகத்தின் முன்னுரையில் கார்ல் மார்க்ஸ் என்னும் பெயரை நான் கண்டெடுத்தது என் வாழ்வின் ஒரு அதிசயமான தருணம் என்று அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. பின்பு அடுத்த மூன்று ஆண்டுகள் அந்த பெயரை நான் மீண்டும் கேட்கவோ வாசிக்கவோ இல்லை.
மூன்று ஆண்டுகள் கழித்து, கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்த போது, வகுப்பறை விவாதத்தில் கார்ல் மார்க்ஸ் பெயர் மீண்டும் அடிபட்டது. அவர் மூலதனம் என்னும் நூலின் ஆசிரியர் என்றும், ஏங்கெல்ஸ் என்பவரின் இணைபிரியா நண்பர் என்றும், உலக வரலாற்றில் அவர்கள் இருவரையும் “இரட்டையர்கள்” (Duo) என்று அழைப்பார்கள் என்றும் நண்பன் ஒருவன் சொல்லக் கேள்விபட்டேன்.
அதன் பிறகு தற்செயலாக என் மாமா வீட்டில் ஏங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோன்றும்” புத்தகம் இருப்பதை பார்த்தேன். அதைப்படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஏனென்றால் எப்போதும் ஒரு கேள்வி என்னை சுற்றிக்கொண்டே இருக்கும். அது என்னவென்றால், “இந்த உலகம் இயற்கையாகவே படைக்கப்பட்டிருந்தாலும் அல்லது கடவுள் நம்பிக்கையாளர்கள் நம்புவது போல் கடவுளால் படைக்கப்பட்டிருந்தாலும், இன்னாருக்கு இந்த நிலம் இந்த சொத்து சொந்தம் என்று பிரித்து படைக்கப்பட்டிருக்காது என்பது உறுதி. அப்படியானால் இந்த சொத்துப் பிரிவினையின் தோற்றம் என்ன?”. ” குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோன்றும்” என்னும் இந்த புத்தகத்தை படித்தால் இந்த கேள்விக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
அதனால் மூன்றாம் ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் அந்த புத்தகத்தை படித்தேன். அதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன் என்று சொல்லமுடியவிட்டாலும் சாராம்சமாக புரிந்து கொண்டேன். அந்த புரிதல் இந்த உலக வாழ்க்கை பற்றிய என் சிந்தனைகளையே தலைகீழாக மாற்றிவிட்டது.
இந்த புத்தகம் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் என்னும் “இரட்டையர்கள்” பற்றி தெரிந்து கொள்ள மேலும் உந்துதல் தந்தது. மாமா வீட்டின் புத்தக அலமாரியில் தேடி அருணன் எழுதிய “கார்ல் மார்க்ஸ்; வாழ்வும் சிந்தனையும்” என்ற புத்தகத்தை எடுத்தேன். முழு மூச்சாக மூன்றே நாளில் அந்த புத்தகத்தை படித்துவிட்டேன். நான் அந்த புத்தகத்தை வாசிக்கும் போது பலமுறை என்னையறியாமல் அழுது விட்டேன். அந்த புத்தகத்தை மூடி வைக்கும் போது மார்க்ஸ் என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டார்.
அப்போது எனக்கு வயது இருபது. அப்போதும் எனக்கு மார்க்ஸின் தத்துவம் முழுமையாக புரிந்துவிடவில்லை. ஆனால் மார்க்ஸிய தத்துவம் ஒரு கடல் என்று புரிந்தது. அருணன் எழுதிய “கார்ல் மார்க்ஸ்; வாழ்வும் சிந்தனையும்” புத்தகம் மார்க்ஸின் சிந்தனைகள் பற்றி மிகத்துல்லியமாக இல்லாவிட்டாலும் தெளிவாகவே சொல்லியிருந்தது. மார்க்ஸ் “கம்யூனிஸ்ட் லீக்” என்னும் அமைப்பில் வேலை செய்த போதும், சர்வதேச தொழிலாளர் நிறுவனமான முதல் அகிலத்தில் வேலை செய்த போதும் மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு அதற்கென ஒரு சொந்த நிறுவனம் வேண்டும் என்ற கோட்பாட்டில் ஊன்றி நின்றார் என்பது தெளிவாக தெரிகிறது.
மார்க்ஸ் தன்னை ஒருபோதும் “மண்டைவீங்கி சிந்தனையாளராக” கருதிக்கொண்டதில்லை. மனிதகுல வரலாற்றின் மிகச் சிறந்த அந்த சிந்தனையாளர் தான் சார்ந்திருக்கும் அமைப்புக்கு கட்டுப்பட்டுதான் இருந்தார். தன்னை ஒரு நிறுவனத்தின் ஒழுங்கிற்கு உட்படுத்தி அதன்கீழ் தான் தனது தத்துவத்தை வளர்த்தெடுத்தார். “கம்யூனிஸ்ட் லீக்”ல் வரலாற்று சிறப்புமிக்க ஆவணமான “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” சமர்ப்பிக்கும் போதும், முதல் அகிலத்திற்காக கொள்கை வரைவுகளை முன்வைக்கும் போதும் தன்னை ஒரு நிறுவனத்தின் பகுதி என்ற அளவில்தான் அவர் பார்த்தார்.
ஆனால் மார்க்ஸ் காலத்து “அராஜகவதிகள்” முதல் இன்றைய காலத்து “மண்டைவீங்கி சிந்தனையாளர்கள்” வரை தாங்கள் தான் கட்சி என்றும், அவர்கள் இல்லாமல் இந்த உலகத்தின் சிந்தனை இயக்கம் நின்றுவிடும் என்றும் எண்ணும் அளவிற்கு சுயமோகிகளாக (Narcissists), தன்புகழ் பாடும் தாசர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
ஆனால் மார்க்ஸ் ஒரு பன்பட்ட கோட்பாடுகள் உடைய நிறுவனத்திற்கு கட்டுப்பட்டவராக இருந்தார். இதற்கு சிறந்த உதாரணம் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” சமர்ப்பிக்கும் சம்பவத்தை சொல்லலாம். “கம்யூனிஸ்ட் லீக்” அறிவித்திருந்தபடி அடுத்த கூட்டத்தில் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவரும் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யை சம்பிக்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால் ஏங்கெல்ஸ் முக்கிய வேலையாக பாரிஸ் போய் விட்டதால் மொத்த வேலையும் மார்க்ஸ் மீது விழுந்தது. இதனால் அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனே “கம்யூனிஸ்ட் லீக்” மார்க்ஸ்க்கு ஒரு எச்சரிக்கை செய்தி அனுப்பியது.
“கடந்த மாநாட்டில் தான் ஒப்புக்கொண்டபடி கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை எழுதி பிப்ரவரி 1 செவ்வாய்க்கிழமைக்கு முன்பு லண்டனில் கிடைக்குமாறு பிரஜை மார்க்ஸ் அனுப்பாவிட்டால் அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவருக்கு தெரியப்படுத்துமாறு பிரஸ்ஸெல்ஸ் மாவட்டக் குழுவிற்கு மத்திய குழு உத்திரவிடுகிறது. பிரஜை மார்க்ஸ் அறிக்கையை எழுதாவிட்டால் மாநாட்டின் போது அவரிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களை அவர் உடனடியாக திரும்பியனுப்ப வேண்டும் என்றும் மத்திய குழு கேட்டுக்கொள்கிறது” என்ற செய்தி மார்க்ஸை வந்து சேரும்போது அந்த உலகப்புகழ் மிக்க கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, “கம்யூனிஸ்ட் லீக்”ன் தலைமை இருக்கும் லண்டனிற்கு கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தது.
அதாவது இந்த எச்சரிக்கை செய்தி மார்க்ஸை வந்து சேரும் முன்பே மார்க்ஸ் அறிக்கையை அமைப்புக்கு அனுப்பிவிட்டார். ஆனால் ஒருவேளை அவ்வாறு செய்ய முடியாமல் போயிருந்தால் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவரும் அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக்கு கட்டுப்பட்டிருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மார்க்ஸின் இப்படிப்பட்ட வாழ்வை தெரிந்துகொண்ட நொடியில் இருந்து நாமும் மார்க்ஸ் போல் சிறந்த கம்யூனிஸ்டாக ஒரு அமைப்பில் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் மாமா சார்ந்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியோ ஓட்டுப் பொறுக்கி தேர்தல் கட்சி. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதத்திற்கு பெயர்போன கட்சி அது. அதனால் அதில் சேர விரும்பவில்லை.
அப்போது தான் 2016-ம் ஆண்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை மூடும் போராட்டம் நடைபெற்றது. அதில் எனது உறவினர்கள் இரண்டு பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செய்தி ஊருக்கு தெரியவந்தது. அவர்களை சந்தித்து மக்கள் அதிகாரம் அமைப்பு எத்தகைய போர்க்குணம் மிக்கது, கொள்கைப்பிடிப்புள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.
ஆனால் நான் இருந்தது ஒரு குக்கிராமம் என்பதால் அவர்கள் இருவரை தவிர எனக்கு எந்த தோழர்களையும் தெரியாது. ஆனால் 2017-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புக்காக நகரத்திற்கு சென்றபோது தோழர்களின் அறிமுகம் கிடைத்து அமைப்பில் இணைந்து பயணிக்க தொடங்கினேன். அமைப்பில் இணைந்த சில நாட்களிலே சித்தாந்தப் பயிற்சி தொடங்கிவிட்டதால் மிக விரைவிலே நான் எப்பேர்ப்பட்ட “கற்றுக்குட்டி” என்பதையும், புத்தகங்கள் படிப்பதுடன் நடைமுறை பணி எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கற்றுக்கொண்டேன்.
இன்றளவும் நான் அமைப்பில் பயணிக்கிறேன். நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அப்போது 17 வயது பையனாக நான் கார்ல் மார்க்ஸ் பெயரை அந்த புத்தகத்தின் முன்னுரையில் படித்த அற்புத தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன். அது நடந்து 10 ஆண்டுகள் கழித்துவிட்டது. ஆனால் இன்றும் மார்க்ஸ் என்னும் மானசீக ஆசானின் வழிகாட்டுதலில் இருந்துதான் சமூக வாழ்க்கை, அமைப்பு வாழ்க்கையில் பயணிக்கிறேன். ஆனால் என் ஆசான் மார்க்ஸ் என்னிடம் கட்டைவிரலை குரு தட்சணையாக கேட்கவில்லை. என்னை புரட்சி செய்யச் சொன்னார்.
மார்க்ஸின் தத்துவம் அதன் இன்றைய காலகட்ட பொருத்தப்பாடு பற்றிய பருண்மையான ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதுவதில் இருந்து நழுவிக்கொண்டு, மார்க்ஸ் என்னும் ஆசான் பற்றிய என்னுடைய இந்த தன்னிலை வயப்பட்ட கட்டுரைக்கு என்ன நியாயம் இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம்.
பதில் மிக எளிமையானது. இன்றைய நவ தாராளவாத உலகில் நுகர்வு வெறிதான் கலாச்சாரமாக இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் மிக ஆரம்ப காலங்களிலே எல்லா வகையான நுகர்வு வெறிக்கும் ஆட்ப்பட்டு அவர்கள் வாழ்வை அதிலே தொலைத்து விடுகிறார்கள். இந்த நுகர்வு வெறி நிறுவனமயப்படுத்தப்பட்ட அளவில் மக்களின் அனைத்து தரப்பினர் மீது திணிக்கப்படுகிறது. அதிலிருந்து தப்பித்து சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சிலர் அரசியல் பயில வந்தாலும், அவர்களையும் பின் நவீனத்துவம், அமைப்பியல்வாதம், அடையாள அரசியல் என பல வண்ணக்கோட்பாடுகளை அவர்கள் மீது கொட்டி அவர்கள் அரசியல் உணர்வை காயடிக்கிறார்கள் (Political Castration). அதற்காகவே அரசு சாரா நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்து சமூகத்தை வெவ்வேறு கருத்தாக்கங்களின் கீழ் பிரித்து வைத்திருக்கிறது.
மார்க்ஸியத்தையே கூட மேலைநாட்டு மார்க்ஸியம், கிழக்கிந்திய மார்க்ஸியம், ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம், மண்ணுக்கு ஏற்ற மார்க்ஸியம் என்று பலவகைகளில் பிரித்து மார்க்ஸியத்தை திரிபு செய்கின்றனர். பல மார்க்ஸிசய இயக்கங்களும், கட்சிகளும் கூட இந்த அரசு சாரா நிறுவனங்களின் ஏகாதிபத்திய கைக்கூலிதனத்தை கண்டுகொள்ளாமல் அவற்றுடன் கூட்டுச் சேர்ந்து இயங்கும் அவலம் நடக்கிறது.
இப்படி மார்க்ஸியத்தை பல வண்ணங்களில் கூறுபோட்டு அரசியல் ஆர்வம் உள்ள இளைஞர்களையும், மார்க்ஸிய இயக்கங்களையும் திசை திருப்பிவிட ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் கூலி பெற்றுக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள் கல்விப்புல அறிவுஜீவிகள் மற்றும் கல்விப்புலம் சாராத அறிவுஜீவிகள்.
படிக்க :
♦ மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
♦ போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
ஆனால் நமது ஆசான் மார்க்ஸ் ஒரு கல்விப்புல அறிவுஜீவி அல்ல. இந்த உலகத்தை சுரண்டலற்றதாக மாற்றும் தத்துவத்தை வளர்த்தெடுத்தவர். அவர் உலகத்தை மாற்றும் நோக்கத்தில் உலகத்தை விவரிக்கும் மொழியைக்கூட மாற்றியமைத்தார். முதலாளிகள் லாபம் என்றதை மார்க்ஸ் சுரண்டல், உபரி மதிப்பு என்றார். அரசு என்பதை ஆளும் வர்க்கத்தின் வன்முறை கருவி என்றார். அதனால்தான் மார்க்ஸை கற்றுக்கொள்ள மார்க்ஸியத்தை எந்தவித திரிபுவாதமும் இன்றி உயர்த்திப் பிடிக்கும் அமைப்பின் நடைமுறை வேலைகளின் மூலமே கற்றுக்கொள்ள முடியும் என்று சொல்கிறேன்.
இன்றைய இந்திய அரசியல் சூழலில் மதவாதம் பாசிசத்தின் வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்திய அரசியல் வானில் சூழ்ந்திருக்கும் பாசிச மேகங்களை அகற்றி ஒளி பாய்ச்சும் சக்தி மார்க்ஸியத்திற்கு மட்டுமே உண்டு. நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் பெயரை ஒரு புத்தகத்தின் முன்னுரையில் கண்டுகொண்டதை போல நீங்களும் இந்த கட்டுரையின் வழி மார்க்ஸிய தத்துவம் பற்றி கண்டுகொண்டு பாசிசத்திற்கு எதிரான அணியில் மார்க்ஸியத்தின் பெயரால் நிற்பீர்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த கட்டுரையை முடிக்க நினைக்கிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த மார்க்ஸின் மேற்கோளுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன். இந்த வரிகள் மார்க்ஸ் வாலிபனாக இருந்தபோது எழுதியது. இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு இந்த வரிகள் பொறுத்தமாக இருக்கும். “மனிதகுலத்தின் பெரும்பான்மைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையை நாம் தீர்மானித்துக் கொண்டால் எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. காரணம், அவையெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப் போகிற மகிழ்ச்சியோ எல்லையற்றது. நமது மகிழ்ச்சி கோடான கோடி மக்களுக்கு சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும், என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். உன்னதமான மனிதர்கள் வடிக்கும் சூடான கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்”.
ராஜன்
மே 5, 2022 : பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ்-ன் 204-வது பிறந்த நாள் !
மே 5, 2022 : பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ் 204-வது பிறந்த நாள் !
உலக முதலாளித்துவம் உழைக்கும் மக்களைச் சுரண்டி, பல்வேறு நாடுகளின் மீது பொருளாதார தடை விதித்து, சந்தை பிடிக்கும் போட்டியும், போரையும் தீவிரப்படுத்தி வருகிறது.
உலக இயற்கை வளங்கள், கனிம வளங்கள் அழிக்கப்படுவதும், புவி வெப்பமயமாதல் மற்றும் புதிய காலநிலை மாற்றங்கள் போன்ற பேரழிவுகள் அதிகரிப்பதும் தொடர் நிகழ்வாக இருக்கிறது. இந்த பேரழிவிற்கு காரணமான முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்ட மார்க்சியம் எனும் ஆயுதத்தை உலக பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்து கையிலேந்த வேண்டிய சூழ்நிலையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
மார்க்ஸ் பிறந்து இரண்டு நூற்றாண்டுகளை கடந்து விட்ட நிலையிலும், தற்போதைய உலக பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு மார்க்சியம் மட்டுமே! ஏகாதிபத்தியங்களை வீழ்த்த மார்க்சிய போர்வாளை கையிலேந்துவோம்!
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் !

ஓவியம் : மு.துரை
***

ஓவியம் : தோழர் ரூபாவதி
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.
***
இந்தியாவில் முதல் மே தினம் கொண்டாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு !
இந்தியாவில் முதல் மே தினம் கொண்டாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு –
இந்திய பாட்டாளி வர்க்கத்தின் முன்னால் உள்ள கடமைகள் என்ன?
மே 1 என்றால் தொழிலாளர் தினம், சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள். அப்படிப்பட்ட மே தினம் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தான், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சென்னையில் தான் முதல்முறையாக 1923-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த வருட மே தினத்துடன் இந்தியாவில் மே தினம் கொண்டாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.
1923-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக மே தின விழாவை கொண்டாடியவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் தோழர் சிங்காரவேலு ஆவார்.
தோழர் சிங்காரவேலு 1923-ம் ஆண்டு மே தின விழாவை சென்னையில் இரண்டு இடங்களில் நடத்தினார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் வடசென்னை தொழிலாளர்கள் சார்பாக பெரும் ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தோழர் சிங்காரவேலுவும், தொழிலாளர் தலைவர் பி.நடேச முதலியாரும் பங்கேற்று பேசினர்.
தென்சென்னை தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலம் திருவல்லிக்கேணி கடற்கரையில் முடிவுற்று அங்கே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி சர்மா, எம்.பி.எஸ்.வேலாயுதம், சங்கர்லால் ஆகியோர் பங்கேற்று பேசினர். இவ்விரு கூட்டங்களிலும் தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர் என்று அன்றைய இந்து மற்றும் சுதேசமித்ரன் ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
படிக்க :
♦ அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் நடைபெற்ற மே தின விழா !
♦ உலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் !
”மே1 உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் புனிதமான நாள். இந்தியாவின் தொழிலாளர்கள் அனைவரும் மே தினத்தைக் கொண்டாடி நம் ஆதரவை உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல, உலகமெங்குமுள்ள துன்பப்படும் தொழிலாளர்களுக்கு பலமாக இன்னும் சில ஆண்டுகளில் மாறும் அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாக உருவாவதற்கான அடிக்கல்லை இன்று பதியுங்கள். அது அவர்களை நாம் எல்லாரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று உணர வைக்க வேண்டும்” என்பவை தோழர் சிங்காரவேலு மே 1 தின பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தைகள்.
அக்காலகட்டத்தில் இந்திய தொழிலாளி வர்க்கமானது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து முழுமையான அரசியல் விடுதலை எனும் முழக்கத்தோடும், பொருளாதார சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி எனும் கோரிக்கையோடும் தனது போராட்டங்களை முன்னெடுத்தது. (டி.கே.ரங்கராஜன், CPIM)
குறிப்பாக தமிழகத்தில் நாகை மற்றும் திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம், சென்னை, கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம், கிராமப்புறங்களில் நடைபெற்ற ஜமீன் ஒழிப்பு, இனாம் ஒழிப்பு, குத்தகைதாரர் உரிமை போராட்டங்கள், விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டங்கள், சென்னையில் டிராம்வே போராட்டம் என மாநிலம் முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் அன்றைய காலகட்டத்தில் வெடித்து எழுந்தன. தமிழகத்தை போல் இந்தியா முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் நடந்தன.
மேற்கூறிய சூழல் நிலவும் போது தான் தோழர் சிங்காரவேலு இந்திய தொழிலாளி வர்க்கம் ஒரு பலமான சக்தியாக மாற வேண்டும் என்பதையும், உலகத் தொழிலாளர்களோடு ஒரே வர்க்கமாக ஒன்றிணைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.
அன்று இந்தியாவானது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடி காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. உலக ஏகாதிபத்தியங்களுக்கிடையே பிரிட்டிஷ் கை மேலோங்கி, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் மூலம் உலகை மறுபங்கிட புதியதாக உருவாகிய ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஏகாதிபத்தியங்கள் போட்டி போட்டன. 1917 ரஷ்ய புரட்சிக்குப் பிறகு, உலகெங்கிலும் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றின. சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு ஆதரவாக ரஷ்யா தலைமையில் சோசலிச முகாம், முதலாளித்துவ நாடுகளுக்கு ஆதரவாக ஏகாதிபத்திய முகாம் என உலகம் இரு முகாம்களாக பிரிந்து இருந்தது.
அதன் பிறகு சோவியத் ரஷ்யாவானது சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து பல நாடாக உடைந்து சீரழிந்தது. ஆகையால் சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கமானது தலைமை தாங்கி செல்லக்கூடிய சோசலிச முகாம் இல்லாமல் பின்னடைவை சந்தித்தது. அமெரிக்க ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ் ஏகாதிபத்திய முகாமானது ஏறித் தாக்கும் நிலைமையில் இருந்தது. அதனால் அமெரிக்க தலைமையின் கீழ் இருந்த எல்லா நாடுகளிலும் புதிய தாராளவாதக் கொள்கைகள் என அழைக்கப்படும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன.
ஆனால் இன்று நிலைமை முற்றிலும் வேறானது. அமெரிக்க ஒற்றை துருவ மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமெரிக்க – ரஷ்யா மற்றும் அமெரிக்க – சீனா மேலாதிக்க போட்டியானது வளர்ந்து வருகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரானது அமெரிக்க – ரஷ்ய மேலாதிக்க போட்டிக்கு உதாரணம். இலங்கையில் பொருளாதார நெருக்கடியும், பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடியும் அமெரிக்க – சீன மேலாதிக்க போட்டிக்கு உதாரணம்.
இப்படிப்பட்ட உலக மேலாதிக்க போட்டி மற்றும் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக உலகம் முழுவதிலும் ஒரு பொதுப்போக்காக பாசிச இயக்கங்கள் எல்லா நாடுகளிலும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றன.
அப்படித்தான் இந்தியாவில் பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் தன்னுடைய நிகழ்ச்சி நிரலான காவி – கார்ப்பரேட் பாசிசத்தை அமல்படுத்தும் நோக்கில் வேகமாக முன்னேறி வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் மோடி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, முஸ்லீம் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி போன்ற கலவரம் ஏற்படுத்துவதற்கான பண்டிகைகள் என்பதை தாண்டி, இந்துக்கள் பண்டிகைகள் என்றாலே முஸ்லீம் மீதான தாக்குதல் என்ற புதுப்பண்பு உருவாகி உள்ளது. ராமநவமி கலவரம் இதற்கு சமீபத்திய உதாரணம்.
தலித்துகள் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் முன்பை விட பன்மடங்கு அதிகரித்த போதும், தலித்துகள் உட்பட பிற சாதிகள் மத்தியில் நாம் இந்துக்கள் என்ற உணர்வு முன்பை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு நாம் இந்துக்கள் என்ற உணர்வு தான் பிரதான காரணமாக அமைந்துள்ளது. இப்படி ஒருபுறம் பாஜக – ஆர்எஸ்எஸ் இந்துராஷ்டிரத்தை அமல்படுத்தும் நோக்கில் வேகமாக முன்னேறி வருகிறது.
படிக்க :
♦ மே நாள் அன்று சிவந்தது ஆவடி | வீடியோ
♦ மே தினம் : அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !
மறுபுறம் இந்தியாவானது உள்நாட்டு தரகு முதலாளிகள் மற்றும் அந்நிய நிதிமூலதனக் கும்பல்களின் வேட்டைக்காடாக மாற்றப்படுகிறது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு வளர்ச்சி என்ற பெயரில் விற்கப்படுவதும், கார்ப்பரேட்டுகள் வரிச்சலுகை, வாராக்கடன் தள்ளுபடி, மானியங்கள் என மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பதும், அதற்கு எதிர்மாறாக மக்களை பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் மற்றும் ஜி.எஸ்.டி என்ற பெயர்களில் வரியை போட்டு கசக்கி பிழிவதும் அன்றாட நிகழ்வாகி, மக்கள் மீதான வரிச்சுமை மேலும் மேலும் தீவிரமாகி வருகிறது.
மேற்கூறிய விதத்தில் பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் இந்தியாவில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல பிரிக்க முடியாத வகையில் தீவிரமாக அமல்படுத்துகிறது.
ஆகவே தற்போது இந்திய பாட்டாளி வர்க்கத்தின் முன்னால் உள்ள கடமை, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு விரோதமான காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதும், ஏகாதிபத்திய முதலாளித்துவதை முறியடித்து சோசலிச சமூகத்தை நிறுவ சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை நிறுவதும் ஆகும். இவற்றை நிறைவேற்ற தம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதே இந்தியாவில் மே தினம் கொண்டாடப்பட்டு 100-வது ஆண்டில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்.
இறுதியாக தோழர் சிங்காரவேலுவின் வார்த்தைகளிலே கூறுவதானால்,
“நம் நாட்டில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் இரக்கமற்ற அயல்நாட்டு ஆட்சியாளர்களின் விலங்குகளிலிருந்து மட்டிமின்றி, வர இருக்கும் இந்திய முதலாளிகளின் தளைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டால் தான் உண்மையான சுதந்திரத்தோடு இருக்க முடியும்”.

அமீர்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்கின்ற விதத்தில் 2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும், ஆகையால் 27 அமாவாசைதான் இந்த ஆட்சி என்று அடித்துப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி ஏதோ பூச்சாண்டி காட்டுகிறார் அல்லது ‘அருமையான நகைச்சுவை’ என்றுதான் நாம் அவற்றைக் கருதியிருப்போம். ஆனால் ஒரு அடிமைக்கு தனது எஜமானன் மேலுள்ள ஆழமான நம்பிக்கையையே அது பிரதிபலித்தது.
மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, தனது இந்துராஷ்டிர இலக்கை அடைவதற்காக பல்வேறு சட்டரீதியான ஆயத்தப் பணிகளை, பரிசோதானைகளை செய்துவருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமைச் சட்ட நீக்கம், பசுவதைத் தடுப்புச் சட்டம், லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம், மதமாற்றத் தடைச்சட்டம், புதிய கல்வி(காவி)க் கொள்கை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உஃபா), என்.ஐ.ஏ, சொத்துசேதத் தடுப்புச் சட்டம், ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது என பல்வேறு சட்டங்களை இதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டலாம்.
அதன் வரிசையில் தற்போது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டசபைகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்குமான தேர்தலை நடத்துவதுதான் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையாக சொல்லப்படுகிறது.
படிக்க :
♦ இந்து ராஷ்டிரத்தோடு இணைக்கப்பட்ட அசாம் !
♦ இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
இதைக் கொண்டுவருவதற்காக தொடக்கத்திலிருந்தே பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்திருக்கிறது. இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தில் பேசிய மோடி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது விவாதப் பொருள் அல்ல; அது இன்றைய காலக்கட்டத்திற்கான தேவை; அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் ‘வளர்ச்சிக்கு’ முட்டுக்கட்டையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
2014-ல் இருந்தே பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை முன்வைத்து வருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை 2017-ம் ஆண்டு நிதி ஆயோக் வகுத்துக் கொடுத்தது. 2018-ம் ஆண்டு சட்ட ஆணையம் இந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையுடன் இணைந்ததுதான் ஒரே வாக்காளர் பட்டியல் கொண்டுவரவேண்டும் என்பதும். இதை நடைமுறைப்படுத்துவதன் முதல்படியாகவே கடந்த ஆண்டு இறுதியில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட சீர்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மோடி அரசு.
000
இந்நிலையில் கடந்த மார்ச் 10-ம் தேதியன்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை. ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது” என கூறி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஏனெனில், மோடி அரசு இதை பிரச்சாரம் செய்யத் தொடங்கியபோதிலிருந்து, பா.ஜ.க. எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. எனவே மோடி அரசால் இதனை அமல்படுத்தவே முடியாது என்று அப்பாவித்தனமாக சொல்லிவந்தார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக இயங்கும் ஒரு அமைப்பு என்று சொல்லப்படுகிறது. ‘அப்படி ஒரு கற்பனையெல்லாம் தேவையில்லை’ என்று கருதச் செய்யும்படி தலைமைத் தேர்தல் ஆணையரின் பேச்சு அமைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தால் இன்னும் சட்டமாக்கப்படாத ஒரு திட்டத்தைப் பற்றி, ஒரு அரசின் உயர் அதிகாரி ஆளும்கட்சிக்கு சாதகமாக தனது கருத்தை தெரிப்பது ஜனநாயக அமைப்பு முறைக்கு விரோதமானதாகும்.
இதேபோல, கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி பிரதமரின் முதன்மைச் செயலாளர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இணையவழிக்கூட்டம் நடத்திப் பேசியதும் பெரும் விவாதப் பொருளானது. சி.பி.ஐ, அமலாக்கத்துறை போல தேர்தல் ஆணையமும் பா.ஜ.க.வின் கைப்பாவைதான் என வெளிப்படையாக தெரிந்திருப்பதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறினார்.
000
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை ஏன் கொண்டுவரவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வும் அதன் ஆதரவாளர்களும் பல காரணங்களைச் சொல்லிவருகிறார்கள். “நாட்டில் ஆண்டுதோறும் ஏதாவதொரு தேர்தல் நடந்துகொண்டே உள்ளது. இந்த தேர்தல்களை நடத்துவதற்கு அரசு அதிகளவு செலவழிக்கிறது. இதனால் நாட்டின் வளர்ச்சிப் பணிகளும் பாதிப்படைகிறது. அடிக்கடி தேர்தல் நடப்பதால்தான் தேர்தலில் மக்கள் பங்கேற்பு முழுமையாக இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தேர்தல் நடந்தால் மக்கள் அதிகளவில் வாக்களிப்பார்கள்” என நம்மை ஒப்புக்கொள்ள வைக்கும் அளவிற்கு பொய்களை அடுக்குகிறார்கள்.
முதலில், தேர்தல்களை நடத்துவதற்கு அதிகளவு செலவாகிறது என்று கூறுவது எப்படி அப்பட்டமான பொய் என்பதை பார்ப்போம்.
‘செண்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ்’ என்ற அமைப்பு தேர்தல் செலவுகளை பற்றி ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு மொத்தம் 30 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. இந்த செலவு என்பது அரசு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் என அனைவரும் இணைந்து செய்த மொத்த செலவு. இதில் அரசு செய்த செலவு வெறும் 3 ஆயிரத்து 500 கோடி. அதாவது மொத்த செலவில் 11 சதவிகிதம் மட்டுமே.
இது நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமானதுதான் என்றபோதும், இதிலிருந்து மொத்த தேர்தல் செலவில் அரசின் செலவு ஒப்பீட்டளவில் குறைவானதே என்பதை அறியலாம்.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன்களின் மொத்த தொகை 10 இலட்சத்து 72 ஆயிரம் கோடி. இவர்களுக்கு தேர்தல் நடத்துவதால்தான் கஜானா காலியாகிறதாம்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு மொத்தம் 60 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. இதில் 45 சதவிகிதம், அதாவது 27 ஆயிரம் கோடியை பா.ஜ.க. என்ற ஒரு கட்சி மட்டுமே செலவழித்துள்ளது. ஒருவேளை இதனால்தான் தேர்தல் அதிகம் செலவு பிடிக்கிறது என்று சொல்கிறார்களா தெரியவில்லை.
அடுத்து, ‘வளர்ச்சிப் பணிகள்’ பாதிக்கப்படுவதைப் பார்ப்போம். இந்த விசயத்தை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்குமுன் பா.ஜ.க. எதை ‘வளர்ச்சிப் பணிகள்’ என்று சொல்கிறது என்பதை நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும்.
கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை, 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம், சிறுதொழில் அழிப்பு என மோடி ஆட்சி உழைக்கும் மக்களுக்கு நரகமாகவே இருக்கிறது. ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு, பாரத்மாலா, சாகர்மாலா, மீத்தேன் எரிவாயுத் திட்டம், அணு உலை விரிவாக்கம், வேளாண் சட்டதிருத்தம், பொதுத்துறைகள் தனியார்மயமாக்கம், பல லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி, வரிச்சலுகைகள் என கார்ப்பரேட் முதலாளிகள் குதுகலிக்கும் வகையிலான பணிகளைத்தான் மோடி ஆட்சி சிரமேற்கொண்டு செய்துவருகிறது. இதைத்தான் அவர்கள் ‘வளர்ச்சிப் பணிகள்’ என்கிறார்கள்.
புள்ளிவிவரம் ஒன்றின்படி, 2020-2021-ல் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 261 சதவிகிதம் உயர்ந்தது. அதேபோல, இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 39 சதவிதமாக உயர்ந்துள்ளது. அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் இந்த ‘வளர்ச்சிப் பணிகளில்’ சீரான வளர்ச்சி இல்லாமல் போகலாம் என்பதுதான் பா.ஜ.க.வின் வருத்தம்.
சான்றாக வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதை எடுத்துக் கொள்வோம். கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்க, இந்திய விவசாயித்தை கூறுபோட்டு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டன வேளாண் சட்டங்கள். இதை எதிர்த்து விவாசாயிகள் ஓராண்டுகாலம் போராடினார்கள். இப்போராட்டத்தில் 750 விவசாயிகள் தியாகியானார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் பணியாத மோடி, ஐந்து மாநிலத் தேர்தல் வரவே (இது ஒரு காரணம் மட்டுமே என்றாலும்) வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கிறார். இதனால் அவரது நண்பர்கள் (அம்பானி, அதானி) மோடியிடம் செல்லமாக கோபித்துக் கொள்ளும் நிலைக்குச் சென்றது. எனவேதான் அடிக்கடி நடக்கும் தேர்தல்களை ஒழித்துக் கட்டுவது பா.ஜ.க.விற்கு தேவையாக இருக்கிறது.
000
அடிக்கடி நடக்கும் தேர்தல்கள், தங்கள் புரவலர்களான பார்ப்பன – பனியா கார்ப்பரேட் கும்பலின் நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்-இன் ‘பாரத தேசம்’ என்ற வரையறைக்கும் அது ஒத்திசைவானதாக இல்லை.
நம் நாட்டில் அதிகார மாற்றத்திற்குப் பிறகு, மொழி வரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மாநில அரசுகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்த ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அவர்களின் தலைவர் கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனை கொத்து’ என்ற நூலில் “நமது புனிதத் தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு, ஒரே நாடு – ஒரே சட்டமன்றம் – ஒரே நிர்வாக மையம்தான் தேவை” என்று கூறியுள்ளார்.
பல்வேறு தேசிய இனங்களை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய, தங்கள் கைகளில் வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்களை வைத்துள்ள மாநில அரசுகள் இந்துராஷ்டிர அதிகார மையத்திற்கு எதிரானதாகும். வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முன்பு, இந்நிலப்பரப்பு பல்வேறு சமஸ்தானங்களாக இருந்ததைப் போல மீண்டும் மாற வேண்டும்; கிராம அளவிலான உள்ளூர் அதிகாரம் நிலவ வேண்டும். அனைத்து கிராம அதிகாரங்களையும் கட்டுப்படுத்துகிற ஒரே பேரரசு இருக்க வேண்டும் என்பதுதான் இந்துராஷ்டிர அரசு வடிவம். இரண்டாயிரம் ஆண்டுகாலமாக பார்ப்பனிய சாதிக் கொடுங்கோன்மையும் நிலப்பிரபுத்துவ சுரண்டலும் இந்த வடிவத்தில்தான் பாதுக்காக்கப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்று கூறினாலும் மொத்தமாக தேர்தல்களையே ஒழித்துக்கட்டி தனது பாசிச சர்வாதிகாரத்தை – இந்துராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் இலக்கு. அதற்கான தொடக்கமாக அவர்களுக்குப் பயன்படப்போவதுதான் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’.
ஐ.டி.ஃப்.சி என்ற அமைப்பின் ஆய்வுப்படி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் 77 சதவிகிதம் ஒரே கட்சியே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறது. ஏனெனில் நாடு தழுவிய தேர்தலின்போது, தேசியப் பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப்படும். அதில் மட்டுமே மக்கள் தங்கள் கவனத்தை செலுத்துவார்கள் என்று பல அறிஞர்களும் கூறிவருகிறார்கள்.
56 இன்ச் மார்பு கொண்ட மோடி மட்டுமே, உள்நாட்டில் ‘முசுலீம் பயங்கரவாதிகளிடமிருந்தும்’ வெளியில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிடமிருந்தும் வரக்கூடிய தாக்குதல்களை முறியடித்து, நம்மை காப்பாற்றும் சக்தி படைத்தவர் என்ற கருத்தை தொடக்கம் முதலே தங்களது பிரச்சாரத்தின்மூலம் பெரும்பான்மையினரின் மனதில் ஆழமாக ஊன்றி வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.
படிக்க :
♦ அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் !
♦ சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !
மேலும், மோடிக்கு சவால்விடக்கூடிய ஒரு ‘மீட்பர்’ பிம்பம் தற்போதுவரை எந்த கட்சித் தலைவருக்கும் இல்லை. மேற்சொன்ன அதே காரணத்தால்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடி மீண்டும் வெற்றி பெற்றார். புல்வாமா தாக்குதல் அப்போது பா.ஜ.க.விற்கு நன்கு பயன்பட்டது. ஒவ்வொரு தேர்தலின்போதும் இதைப்போல ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கிளப்பிவிடும் தேசவெறி, மதவெறியை தேர்தலிற்குள்ளேயே நின்று முறியடிப்பது சாத்தியமில்லை.
சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமான வகையிலும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தனது கனவான இந்துராஷ்டிரக் கொடுங்கோன்மையை நிறுவுவதில் இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டுவருகிறது. அதில் சட்டப்பூர்வமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒரு அங்கம்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல்.
எப்பொழுது வேண்டுமானால் பாசிச சர்வாதிகாரம் நிறுவப்படலாம் என்ற அபாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ‘அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை எப்படி வீழ்த்தலாம்’ என்று வியூகம் வகுத்துக்கொண்டிருக்கும் தேர்தல் கட்சிகளும் ‘அரசமைப்புச் சட்டத்தை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது’ என்று போலி ஜனநாயகத்தை நிலையானது என கருதிக் கொண்டிருப்பவர்களும், கனவை உதறியெழ வேண்டிய தருணம் இது !

மதி
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – வஞ்சிக்கும் தமிழக அரசு !
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளை சேர்ந்த மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை கட்டச் சொல்வதை கண்டித்து கடந்த மார்ச் 31 அன்றிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
2020 – 2021-ம் ஆண்டுக்கு முன்பு சேர்ந்த மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிக்கான பழைய கட்டணத்தை மார்ச் 30-க்குள் செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. கட்டணத்தை செலுத்தாவிட்டால் வகுப்புகளுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்களை மிரட்டியுள்ளது.
இதைக் கண்டித்து மார்ச் 31, 2022 அன்று அனைத்து நிலை மருத்துவ மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயிலில், நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரம் அவகாசம் வழங்குவதாகவும், அரசுடன் கலந்து பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாகவும் நிர்வாகம் கூறியதால் மாணவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் கட்டணத்தை குறைக்காததால் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஏப்ரல் 10-ந்தேதி மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 11-ந்தேதி முதல் 20-ம் தேதி வரை அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவ கல்லூரி வளாகம், மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர்.
படிக்க :
♦ சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் !
♦ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சென்னை பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றி உணர்த்துவது என்ன ?
ஏப்ரல் 21 முதல் இன்று வரை மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 2,3,4-ம் ஆண்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர்.
***
2013-ம் ஆண்டு தமிழக அரசானது அண்ணாமலை பல்கலைக் கழகத்தை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்த பிறகும், தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்து அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணம் வசூலிக்க சொல்லி மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர்.
2016-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி முதல் கல்விக் கட்டணத்தை குறைக்க சொல்லி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் கல்விக் கட்டணத்தை குறைக்க சொல்லி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு 2020 டிசம்பர் 9 முதல் 57 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ மாணவர்களின் விடாப்பிடியான போராட்டத்தால் தமிழக அரசானது ஜனவரி 28, 2021 அன்று ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதாக அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையில் இக்கல்லூரியானது இனிமேல் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. கல்விக் கட்டணம் சம்மந்தமாக அரசாணையில் எதுவும் தெரிவிக்கவில்லை என்று மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பிப்ரவரி 4, 2021 அன்று தமிழக அரசானது கட்டணக் குறைப்பு சம்மந்தமாக அரசாணையை வெளியிட்டது.
பிப்ரவரி 4 அன்று தமிழக அரசானது வெளியிட்ட அரசாணையை அப்படியே நடைமுறைப்படுத்தி இருந்தால், தற்போது மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருக்காது.
ஆனால் பிப்ரவரி 26 அன்று அரசாணை 122-யை தமிழக அரசானது வெளியிட்டது. அதில் 2020 – 21-ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும்தான் அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அதற்கு முன்பாக சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அக்டோபர் 26-ம் தேதி மேலும் ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில் 2016 – 2018 ஆண்டுகளில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ 5.44 லட்சம், 2018 – 2020 ஆண்டுகளில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம், அதன் பிறகு சேர்ந்த மாணவர்களிக்கு அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டு இருந்தது. தற்போது மேற்கூறிய கட்டணத்தை கட்ட சொல்லிதான் நிர்வாகமானது மாணவர்களை நிர்பந்திக்கிறது. அதை எதிர்த்துதான் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியானது, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக கடந்த ஆண்டே மாற்றப்பட்டு விட்டது. ஆனாலும் 2020 – 2021 ஆண்டுக்கு பிறகு சேர்ந்தவர்கள்தான் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் மாணவர்களாக கருதப்படுவார்கள், அதற்கு முன் சேர்ந்தவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களாக கருதப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
அதாவது 2020 – 2021 முன்பு சேர்ந்தவர்கள் உயர்கல்வித் துறையின் கீழும், அதற்குப் பிறகு சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்வித்துறையின் கீழும் வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால்தான் மாணவர்களிடையே இந்த கட்டண வேறுபாடு.
“ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடித்துச் சென்றுவிட்டார்கள். 2020 – 2021 ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த மாணவர்களுக்கு அரசுக் கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும். அவர்களுக்குக் கூட அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மட்டும் இந்த சலுகையை வழங்க வேண்டியிருக்கும். இதற்காக அரசுக்கு பெரும் தொகை செலவாகாது” என்று அண்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2020 டிசம்பர் மாதத்தில் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக “ஆட்சி மாறியதும், கட்டணத்தை மாற்றுவோம்” என்று மாணவர்களுக்கு உறுதியளித்தது.
மேற்கூறியவாறு 2018, 2019-ம் ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டியிருந்தும், ஆட்சிக்கு வந்த திமுக அரசானது ஒரு மாதமாக மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களை கண்டுகொள்ளவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியானது 2016 முதல் கட்டணக் குறைப்புக்கான மாணவர்களின் தொடர் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல், 2021 சட்டமன்றத் தேர்தல் வந்தவுடன், தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கல்விக் கட்டணத்தை குறைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது.
திமுகவும் எதிர்க்கட்சியாக இருந்தபோது, தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, ஆட்சிக்கு வந்தால் கட்டணத்தை மாற்றுவோம் என்று கூறியது, ஆனால் தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டது.
மேற்கூறியவைதான் திமுக, அதிமுக போன்ற ஓட்டுக் கட்சிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே தங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறார்கள். மற்றபடி அவர்களுக்கு மாணவர்கள் மீது எல்லாம் அக்கறை கிடையாது. அதனால்தான் இரு கட்சிகளும் மாணவர்கள் போராட்டம் நடத்தினால் கண்டுகொள்வது இல்லை. நிர்வாகம் மற்றும் போலீசை வைத்து ஒடுக்கவே செய்கின்றனர்.
ஆனால் மாணவர்கள், நிர்வாகம் மற்றும் போலீஸ் ஒடுக்குமுறைக்கு எல்லாம் அஞ்சக் கூடியவர்கள் அல்ல என்பதை அவர்களின் போராட்ட பாரம்பரியமே நிருபிக்கிறது.
குறிப்பாக 2020 டிசம்பர் முதல் கிட்டதட்ட இரண்டு மாத காலமாக மாணவர்கள் கட்டணக் குறைப்பை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை சீர்குலைக்க நிர்வாகமானது முதலாம் ஆண்டு மாணவர்களிடம் மதிப்பெண்ணில் கைவைப்போம், ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டியது. ஆனால் அதை மீறி முதலாம் ஆண்டு மாணவர்கள், பிற கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.
படிக்க :
♦ விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் !
♦ ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
அதன்பிறகு நிர்வாகம் குடிநீர், உணவு, மின்சாரம் என அனைத்தையும் நிறுத்தியது, மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற சொல்லியது, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தது. ஆனால் அதை மீறியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். உணவு, தண்ணிரை மாணவர்கள் தங்கள் கைக்காசுகளை போட்டு வாங்கிய போதும், போலீசை வைத்து மாணவர்களை நிர்பந்தித்தது.
மேற்கூறிய கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசின் அடக்குமுறைகளை எல்லாம் மீறிதான், கல்லூரி மாணவர்கள் நெஞ்சுரமிக்க போராட்டம் நடத்தினர். அப்படிப்பட்ட போராட்ட பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் உரிமைக்காக, எவ்வளவு அடக்குமுறை வந்தாலும், நெஞ்சுரமிக்க போராட்ட பாரம்பரியத்தின் வழியில் விடாப்பிடியான போராட்டத்தை கட்டியமைக்க கூடியவர்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் நிச்சயம் வெற்றி அடைந்தே தீர்வார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள பிற மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக சக்திகள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் அவர்களுடன் கைகோர்த்து நிற்க வேண்டியது நம் கடமை.

அமீர்
டாஸ்மாக்கினால் பெருகிவரும் குற்றங்கள் : கடையை மூடாமல் கல்லாக் கட்டும் திமுக !
தீபாவளி, பொங்கல் பல்வேறு பண்டிகை நாட்களின்போது, செய்தித்தாளில் இரண்டு விஷயங்களை தவறாமல் காண முடியும். ஒன்று விடுமுறையின் முந்தைய நாள் கோடிக்கணக்கில் டாஸ்மாக் விற்பனை சாதனைகள். இரண்டாவது, போதையில் கணவன் மனைவியை கொன்றது, நண்பரையே வெட்டிக் கொன்றது போன்ற செய்திகள். இச்செய்தியைப் படித்துவிட்டு தனிநபர்களின் பிரச்சினை என்று நாம் கடந்து செல்வதும் உண்டு.
ஆனால், டாஸ்மாக்கினால் பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதும், பல தாய்மார்கள் தமது கணவரையும் பிள்ளைகளையும் இழந்து நிர்கதியாய் நிற்பதும், தனிநபர் பிரச்சினை அல்ல; இந்த சமூகத்தை பாதிக்கின்ற பிரச்சினை; இந்த அரசு மக்களை திட்டமிட்டே சீரழிக்கும் பிரச்சினை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
தமிழகம் முழுவதும் 5,380 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் தினந்தோறும் சுமார் 90 முதல் 100 கோடி வரை வருமானம் வருகிறது. பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் அதிக அளவில் மது விற்பனை நடப்பது வழக்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 1, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.52.2 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.46.72 கோடி வசூல் அடைந்துள்ளது. இதில் கள்ளத்தனமாக விற்பதற்கு பெட்டி பெட்டியாகவும், கோணிப் பைகளிலும் வாங்கி சென்று, போலீசுக்கு மாமுல் கொடுத்துவிட்டு அதிக விலைக்கு விற்போர் பட்டியல் தனிக்கதை.
படிக்க :
♦ பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
♦ மூடு டாஸ்மாக்கை ! வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்
டாஸ்மாக் வசூலைப் பற்றி பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். அந்த டாஸ்மாக்கினால் குடித்து சீரழிந்து தமது வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். கடந்த மே 2-ம் தேதி பத்திரிகையில் வந்த செய்திகளை சற்று கவனிப்போம்.
சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் என்கிற பாபு, அருண், அதே பகுதியை சேர்ந்த தினேஷ், குமார், கார்த்தி, லோகேஷ், பாபு ஆகியோர் நண்பர்கள். இவர்கள் தினமும் திருவான்மியூர் கடற்கரையில் குடிப்பது வழக்கம். அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடித்துக் கொண்டிருந்தபோது போதை தலைக்கு ஏறியதும் தினேஷ் மற்றும் அருணுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது சண்டையில் போய் முடிந்திருக்கிறது.
அதே கும்பல் மீண்டும் மே 1 அன்று குடித்துவிட்டு அவர்களுடைய செட்டில் உள்ள குமார் என்பவரது தாயாரின் 16-ம் நாள் காரிய நிகழ்விற்கு சென்றபோது குடிபோதையில் அருண் என்ற இளைஞன் தனது செருப்பை தூக்கி வீசியுள்ளார். அது தினேஷ்-ன் சாப்பாட்டு இலையில் வந்து விழுந்துள்ளது. இதில் இருவரும் போதையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது அருணுக்கு ஆதரவாக சதீஷ் குமார் என்ற இளைஞர் வந்து தினேஷை தாக்கியுள்ளான். இதனால் வேகவேகமாக வீட்டிற்கு சென்ற தினேஷ் தமக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிதீர்க்கும் விதமாக தமது சொந்த நண்பர்களையே கொல்வதற்காக தேடிச் சென்றுள்ளான்.
சதீஷ்குமார், அருணும் அவரது கண்ணில் பட்டனர். இதில் தினேஷ் கையில் கத்தியை பார்த்தவுடன் அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியுள்ளனர். அவர்களை விரட்டி மடக்கி பிடித்த தினேஷ் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான். அதில் இருவரும் இறந்துவிட்டனர்.
இதேபோல், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த முகிலன் என்ற இளைஞருக்கும் பிரதாப் என்ற இளைஞருக்கும் ஒரு ஆண்டிற்கு முன்பாகவே ஒரு நிகழ்சியில் சண்டை ஏற்பட்டுள்ளது.
தற்போது டி.எம்.எல் காலனியில் உள்ள ஒரு பெட்டிக் கடைக்கு போதையில் போன முகிலன், பிரதாப்புடன் சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரதாப்பும் அவரது உறவினரும் முகிலனை வெட்டியுள்ளனர். இவர்களிடமிருந்து முகிலன் தப்பித்து சென்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தபோது, பிரதாப்பின் அண்ணனும், அவரது உறவினர்களும் முகிலனை தேடிவந்து, சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகிலன் உயிரிழந்தார்.
இதேபோல் சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த தியாகராஜன் ஆட்டோ டிரைவர். இவர் ஒழுங்காக வேலைக்கு போகாமல் தினந்தோறும் குடித்துவிட்டு வந்ததால் இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட சண்டையில், அவரது மனைவியை சமையல் செய்ய பயன்படுத்தும் கத்தியால் குத்திக் கொண்டுள்ளார்.
இவ்வாறு நாள்தோறும் டாஸ்மாக் போதையினால், கனவன் – மனைவி, நண்பர்களுக்கு இடையே நடக்கும் படுகொலைகளும், சாலை விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. பெருவாரியான மக்களின் வாழ்வை சீரழிக்கும் இந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த கட்சிகளோ, இந்த டாஸ்மாக் வசூல் மூலம் கல்லாக் கட்டுகின்றன.
சில தினங்களுக்கு முன்பு நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வு துறை குறித்து பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில், டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுவோம் என்று வாக்குறுதி கொடுக்கவில்லை என்று திமிர்த்தனமாக பேசினார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட பெருவாரியான கட்சிகள் பூரண மதுவிலக்கு என்று முன்வைத்தனர். ‘மூடு டாஸ்மார்க்கை’ என்ற இயக்கம் சூராவளியாய் சுழன்றடித்த காலம் அது.
படிக்க :
♦ டாஸ்மாக்கை மூடிடு !! || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ
♦ ஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு ! || கருத்துப்படம்
மது ஒழிப்புப் போராளி, ஐயா சசிபெருமாள் மரணத்தை ஒட்டி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போர்க்குணமான போராட்டத்தை ஒடுக்கியது, மாணவ, மாணவிகளை கடுமையாக தாக்கியது போலீஸ். மாணவர் போராட்டங்களும், மக்கள் அதிகாரம் அமைப்பின் போராட்டங்களும் பெருவாரியான மக்களிடத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கருத்தை விதைத்தது.
மக்களிடம் ஓட்டு வாங்க இந்த கோரிக்கையை வைத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்துதான் பாசிஸ்ட் ஜெயலலிதா கூட படிப்படியாக நாங்கள் மதுக்கடைகளை மூடுவோம் என்று பேச வைத்தது மக்கள் போராட்டங்கள்.
அன்று அதிமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று பேசிய திமுக, இன்று நாங்கள் டாஸ்மாக்கை மூடுகிறோம் என சொல்லவில்லை என்று திமிராக பேசுகிறது. இனியும் அரசை நம்பி பயனில்லை, உழைக்கும் மக்களை அணிதிரட்டி போராடுவதன் மூலமே டாஸ்மாக் கடைகளுக்கு முடிவுகட்ட முடியும்.
இர.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புமாஇமு, தமிழ்நாடு.
9444836642.
சாதி வெறியைத் தூண்டி, மாணவர்களைக் காவு வாங்கும் சாதிக்கயிறு ! திமுக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது ! | புமாஇமு
02.05.2022
சாதி வெறியைத் தூண்டி, மாணவர்களைக் காவு வாங்கும் சாதிக்கயிறு!
திமுக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது!
பத்திரிகை செய்தி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடிப்படையாக கையில் சாதியைக் குறிப்பிடும் கயிறு கட்டி இருந்ததாக செய்திகள் வருகின்றன.
இந்தத் தகராறில் ஒருவரை ஒருவர் பெல்ட்டால் தாக்கிக் கொண்டனர். இதில் ஒரு மாணவன் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏப்ரல் 30 அன்று உயிரிழந்தான்.
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலகட்டத்தில் மாணவர்கள் தமது கைகளில் சாதிய அடையாளம் கொண்ட கயிறுகளைக் கட்டக் கூடாது என பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதை ஆசிரியர்களும் பேராசிரியர்களும், பல்வேறு முற்போக்காளர்களும் வரவேற்றபோது, சங்கி கும்பல் குறிப்பாக, இந்து மக்கள் கட்சி போன்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அடிவருடிகள் அனைவரும் ஒரே குரலில் அதை எதிர்த்தனர். உடனே அடிமை எடப்பாடி அரசு பின்வாங்கிக் கொண்டது.
அன்று தனது ட்விட்டர் பக்கத்தில், இது குறித்து கருத்து சொன்ன தி.மு.க எம்.பி கனிமொழி, கையில் கயிறு கட்டக் கூடாது என்ற பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பை வரவேற்பதாக பதிவிட்டிருந்தார்.
ஆனால் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க ஏன் மௌனம் காக்கிறது? இந்த மௌனம், சாதிய – மதவாத ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் நடவடிக்கைக்கு வழங்கப்படும் அங்கீகாரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
தமிழக அரசே!
♦ மாணவர்கள் மத்தியில் புழங்கும் சாதிக்கயிறுகள் உள்ளிட்ட அனைத்து சாதிய அடையாளங்களையும் தடை செய்!
♦ பள்ளி – கல்லூரிகளில் ஜனநாயக உணர்வை வளர்த்தெடுக்க, மாணவர் சங்கம் உள்ளிட்டவற்றுக்கு அங்கீகாரம் வழங்கு?

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
பாசிச இனப்படுகொலைகளுக்கு பக்குவப்பட்டுவிட்டது நாடு!
ஒட்டுமொத்த இசுலாமியர்களையும் படுகொலை செய்துவிட்டு, நாட்டை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று வெளிப்படையாக அறைகூவியது காவி பயங்கரவாதிகளின் உத்தரகாண்ட் தர்ம சன்சத் மாநாடு.
அப்போதே ஜனவரி மாத புதிய ஜனநாயகம் இதழில், “இவற்றையெல்லாம் ‘வெற்று மதவெறிப் பேச்சுக்கள்’ அல்லது ‘உளறல்கள்’, ‘வழக்கமாகப் பேசுவதுதான்’ என நாம் இருமாந்திருக்க முடியாது. பாசிஸ்டுகள் ஒவ்வொன்றையும் முன்னறிவித்து செய்பவர்கள் என்ற கடந்தகால உண்மைகள் நம்மை எச்சரிக்கை செய்கின்றன” என்று எழுதியிருந்தோம். இன்று ஆய்வாளர்களே அறுதியிட்டு கூறுகிறார்கள் நாடு பாசிச இனப்படுகொலைக்கு பக்குவப்பட்டுவிட்டது என்று.
“இனப்படுகொலைக்கான பாதையின் விளிம்பில் உள்ள இந்தியா” என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான இணையவழி உச்சி மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற்ற இம்மாநாட்டில் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த வல்லுநர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஜெர்மனியில் பல்லாயிரக்கணக்கான யூத மக்களை சரக்கு இரயில்களில் ஏற்றிச் சென்று, வதைமுகாம்களில் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்றான் பாசிசக் கொடூரன் ஹிட்லர். இசுலாமிய மக்களைக் குறிவைத்து, அத்தகையதொரு பாசிசப் படுகொலை நம் நாட்டிலும் ஆயுதமேந்திய அரசுப்படைகளாலோ அல்லது தனியார் படைகளாலோ நடத்தப்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச வல்லுநர்கள்.
படிக்க :
♦ இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
♦ நாடுமுழுவதும் ஐந்து ஆண்டுகளில் 3,399 மதக்கலவர வழக்குகள் !
கம்போடியாவில் உள்ள இனப்படுகொலைக்கான ஆவண மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மவுங் ஜர்னி, இனப்படுகொலைக்கான நிகழ்ச்சிப்போக்கு இந்தியாவில் தொடங்கிவிட்டதாகத் தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களின் மதத்திற்கு அச்சுறுத்தலானவர்களாக சித்தரிப்பது குறித்து குறிப்பிடும் அவர், இன்னும் வெளிப்படையானதொரு இனப்படுகொலை நடக்காவிட்டாலும் மனிதநேயத்தை இழக்கத்தொடங்கிவிட்டதே (Dehumanisation) இனப்படுகொலைக்கான நிகழ்ச்சிப் போக்குதான் என்கிறார்.
வெறுப்புப் பேச்சுகளிலும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதிலும் மியான்மர் மற்றும் எத்தியோப்பியாவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான குணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார் மனித உரிமை வழக்கறிஞர் மிதாலி ஜெயின்.
ஐ.நா சபையின் இனப்படுகொலைத் தடுப்பு சிறப்பு ஆலோசகரான அடாமா டியாங், நீண்ட மற்றும் போற்றத்தக்க சமாதான சகவாழ்வு வரலாறு கொண்ட இந்தியாவில், மதம் மற்றும் நம்பிக்கையின் பெயரால் சகிப்புத்தன்மையின்மையும் பாகுபாடும் அதிகரித்திருக்கிறது என்று தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உச்சி மாநாட்டில் பங்கேற்றவர்கள், நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் இசுலாமிய வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள். மேலும் இனப்படுகொலைக் குற்றவாளியாகவும் குற்றவாளிகளின் பாதுகாவலனாகவும் இருக்கிற இந்திய அரசால் இனப்படுகொலை அரங்கேறுவதை தடுக்க முடியாது என்கின்றனர்.
மோடி அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்தம் பாசிச ஜெர்மனியின் நுரெம்பர்க் சட்டத்திற்கு நிகரானது என்று அவர்கள் வரையறுக்கின்றனர்.
வெறுப்பு பேச்சுகள், பொய்ப் பிரச்சாரங்கள், சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினருக்கு அச்சுறுத்தலாக காட்டுவது, மனிதநேயத்தை இழந்துவரும் போக்கு ஆகியவைதான் இனப்படுகொலைக்கான அறிகுறிகள் என மேற்கூறிய அறிஞர்கள் கருதுகின்றனர்.
முசுலீம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியவர்கள், அந்நியர்கள், தேசவிரோதிகள் – தீவிரவாதிகள், சட்டவிரோத குடியேறிகள் என்று முசுலீம்களுக்கு எதிரான நச்சுப் பிரச்சாரத்தை கிட்டத்தட்ட நூற்றாண்டுகளாக பரப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பல். எந்தவொரு இனப்படுகொலையும் திடீரென நடந்துவிடுவதில்லை. இத்தகைய நிகழ்ச்சிப் போக்கின் வளர்ச்சியில்தான் நடந்தேறுகிறது.


















