நான் ஒரு ஐடி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். தினமும் மாலை அந்நிறுவன ஊழியரை சேத்பட் பகுதியில் பிக்கப் செய்வது வாடிக்கை. இன்றும் அங்கு சென்றிருந்தேன். தொடர்ந்து மூன்றாண்டுகளாக செல்வதால் அங்கு அருகிலிருக்கும் பெட்டிக்கடைகாரர் பழக்கம்.
அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு ஐம்பது வயது மதிக்கக்கூடிய மனிதர் வந்தார் கடைக்காரரிடம், “அவசரமா ஒரு நம்பருக்கு கால் பண்ணனும் உங்க மொபைல் போன் குடுங்க” என்று கேட்டார். உடனே கடைக்காரர், “அய்யயோ என் போன் வீட்டிலேயே மறந்து வச்சிடேன்” என்றார்.
கடைக்காரர் என்னைப் பார்த்து, “சார் நமக்கு தெரிஞ்சவர்தான் கொஞ்சம் உங்க போனை குடுங்க” என்றார். நானும் பாவம் பார்த்து கைபேசியை கொடுத்தேன். அவர் அதை அவசரமாக வாங்கி ஒரு எண்ணை டயல் செய்து விட்டு எதுவும் பேசாமல் எதையோ குறித்து கொண்டு கைபேசியை தந்து விட்டு நகர்ந்தார்.
அவர் சென்றவுடன் எனது கைப்பேசியைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி அதில் பிஜேபியில் இணைந்ததற்கு நன்றி என குறுஞ்செய்தியும் அதில் ஒரு otp-யும் வந்திருந்தது அதைதான் அவன் குறித்துக் கொண்டு சென்றான் போல. எனக்கு நல்ல கோபம். கடைக்கராரிடம் காண்பித்தேன். ”அய்யோ எனக்கு ஏதும் தெரியாதுங்க என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறினார்.
என்ன ஒரு கேவலமான செயல். கோபத்துடன் அவனைத் தேடி தெருமுனைக்கு சென்று விசாரித்தேன். அங்கிருந்த டீக்கடைகாரரும் சில துப்புரவு தொழிலாளர்களும் இப்பதாங்க எங்ககிட்டையும் போன வாங்கி பேசினாருங்க என்றனர். பிஜேபி உறுப்பினர் என்பதை ரத்து செய்ய ஏதும் வழி உள்ளதா.?? தயவு செய்து இது குறித்து உங்களுக்கு ஏதும் தெரிந்தால் சொல்லுங்க அண்ணா… (பிஜேபி உறுப்பினர்) அந்த சொல்லை கேட்டாலே அருவருப்பாகவுள்ளது…
ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று மதம் மற்றும் இன அடிப்படையில் வேற்றுமை காட்டும் இந்திய குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் நடந்த போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக பின்லாந்து நாட்டின் மூன்று நகரங்களில் (Helsinki, Turku, Tampere) நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, நகரின் மத்தியில் ஒன்றுகூடி முழக்கங்களை எழுப்பினர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பை வாசித்து அதன் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பற்றிய பாடல்களும் கவிதைகளும் வாசிக்கப்பட்டன.
Amnesty International அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் CAA-விற்கு எதிராக போராடும் மக்களின் மீது அரசு காவல்துறையை கொண்டு கட்டவிழ்க்கும் வன்முறைகளை கண்டித்து பின்னிஷ் மொழியில் பேசினார்கள்.
28 நாடுகள் கொண்ட ஐக்கிய ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கும் சூழலில் ஐரோப்பா எங்கும் ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, பின்லாந்து என பல நாடுகளில் CAA மற்றும் NRC சட்டத்திற்கு எதிராக இந்தியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தியாயம் பதினொன்று | ஆடம் ஸ்மித்: பொருளாதார முறையை உருவாக்கியவர் | நாடுகளின் செல்வம்
அ.அனிக்கின்
1767-ம் வருடத்தின் வசந்த காலத்தின் போது ஸ்மித் ஓய்வுக்காக கெர்கால்டிக்கு சென்றார்; அடுத்த ஆறு வருட காலம் அங்கேயே அநேகமாகத் தொடர்ந்து இருந்தார். இந்தக் காலம் முழுவதையும் தன்னுடைய புத்தகத்தை எழுதுவதில் கழித்தார். ஒரே மாதிரியான வாழ்க்கை முறையும் தன்னுடைய காலத்தையும் சக்தியையும் ஒரே நோக்கத்துக்காக மிகவும் அதிகமாக ஒன்று திரட்டிச் செலவிடுவதும் தன்னுடைய உடல் நலத்தைப் பாதிக்கின்றன என்று தன்னுடைய கடிதங்களில் ஒன்றில் எழுதினார்.
1773-ம் வரு டத்தில் லண்டனுக்குப் புறப்படும் பொழுது தன் உடல் நிலை அதிக பலவீனமாக இருப்பதாக உணர்ந்த படியால், தனக்கு மரணம் ஏற்படுமானால் தன்னுடைய இலக்கிய பாரம்பரிய உரிமைகளை ஹியூம் பெற வேண்டும் என்று எழுதிவைத்தார். தன்னுடைய புத்தக வேலை முடிந்துவிட்டதாக அந்தப் பிரயாணத்தின் போது அவர் நினைத்தார். இதற்குப் பிறகு, அந்தப் புத்தகத்தை முடிப்பதற்கு இன்னும் மூன்று வருடங்கள் அவருக்குத் தேவைப்பட்டன. கிளாஸ்கோ சொற்பொழிவுகள் எனப்படுகிற அவருடைய தொடக்க நிலைப் பொருளாதார ஆராய்ச்சிகளுக்கும் நாடுகளின் செல்வம் புத்தகத்துக்கும் இடையில் கால்நூற்றாண்டுக்கால இடைவெளி இருக்கிறது. நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் உண்மையிலேயே அவருடைய வாழ்க்கையின் மகத்தான சாதனை என்று கூறவேண்டும்.
நாடுகளின் செல்வத்தின் இயல்பையும் காரணங்களையும் பற்றி ஓர் ஆராய்ச்சி என்ற நூல் 1776-ம் வருடம் மார்ச் மாதத்தில் லண்டனில் வெளியிடப்பட்டது. அந்த நூல் ஐந்து பாகங்களைக் கொண்டதாகும். முதல் இரண்டு பாகங்களில் ஸ்மித்தினுடைய தத்துவ அமைப்பின் அடிப்படையான கோட்பாடுகள் விளக்கப்படுகின்றன. அவருடைய அமைப்பு அதற்கு முந்திய நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில, பிரெஞ்சு பொருளியலாளர்களின் கருத்துக்களில் பலவற்றைப் பொதுமையாக்கி முழு நிறைவாக்குகிறது.
முதல் புத்தகம் சாராம்சத்தில் மதிப்பு, உபரி மதிப்பு பற்றிய ஆராய்ச்சியைக் கொண்டிருக்கிறது. உபரி மதிப்பு என்பதை லாபம், நிலக்குத்தகை என்ற ஸ்தூலமான வடிவங்களைக் கொண்டு ஸ்மித் ஆராய்கிறார். இரண்டாவது பாகம் மூலதனத்தின் தன்மையும், குவிப்பும் பயன்படுத்தலும் குறித்து என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. எஞ்சியுள்ள மூன்று பாகங்களிலும் ஸ்மித் தனது தத்துவத்தைப் பிரதானமாக பொருளாதாரக் கொள்கைக்கும் ஓரளவுக்கு வரலாற்றுக்கும் கையாள்கிறார். மூன்றாவது பாகம் அளவில் சிறியது; அது நிலப்பிரபுத்துவத்திலும் முதலாளித்துவ உருவாக்க சகாப்தத்திலும் ஐரோப்பியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆராய்கிறது. நான்காவது பாகம் விரிவானது; அது அரசியல் பொருளாதாரத்தின் வரலாறாகவும் விமர்சனமாகவும் இருக்கிறது. அதில் எட்டு அத்தியாயங்கள் வாணிப ஊக்கக் கொள்கையினருக்கும் ஒரு அத்தியாயம் பிஸியோகிராட்டுகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மிகவும் பெரியதாகவுள்ள ஐந்தாம் பாகம் நிதியைப் பற்றி, அரசு வருமானம், செலவுகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அடர்த்திமிக்க ஸ்தூலமான விவரங்களைக் கொண்ட இந்தப் புத்தகங்களில் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி ஸ்மித்தினுடைய மிகவும் குறிப்பிடத்தக்க கருத்துக்கள் இடம் பெறுகின்றன.
அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றிலேயே அதிக சுவாரசியமான புத்தகங்களில் ஒன்று நாடுகளின் செல்வம் என்பதில் சந்தேகமில்லை. வால்டர் பேஜ்காட் கூறியது போல, அது பொருளாதார ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, “பழைய காலத்தைப் பற்றி மிகவும் வேடிக்கையாக எழுதப்பட்ட புத்தகமாகும்”. கெனேயின் சுவையற்ற பகுப்பாராய்ச்சிகளுக்கும் டியுர்கோவின் தேற்றங்களுக்கும் ஆழமான சூக்குமப்படுத்தலைக் கொண்டிருக்கும் ரிக்கார்டோவின் நுட்பம் நிறைந்த கோட்பாடுகளுக்கும் ஸ்மித்தின் நூலுக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது. அதில் விரிவான புலமையும் நுட்பமான காட்சிப் பதிவும் தற்சிந்தனையான நகைச் சுவையும் இருக்கின்றன.
நாடுகளின் செல்வம் நூலைப் படிப்பவர்கள் குடியேற்றங்களையும் பல்கலைக் கழகங்களையும், யுத்தத்தையும் வங்கித் தொழிலையும், வெள்ளிச் சுரங்கங்களையும் கடத்தலையும் பற்றி, இன்னும் அதிகமான பொருள்களைப் பற்றி சுவாரசியமான பல விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். நவீனச் சிந்தனையின்படி பார்க்கும் பொழுது இவற்றில் பெரும்பாலானவைகளுக்கும் பொருளாதாரத் தத்துவத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் ஸ்மித் அரசியல் பொருளாதாரம் என்பது எல்லாவற்றையும் தழுவிய சமூக விஞ்ஞானம் என்று நினைத்தார்.
அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான ஆராய்ச்சி முறை தர்க்க ரீதியான சூக்குமப்படுத்தல் என்பதாகும். பொருளாதாரத்தில் அடிப்படையான ஆரம்ப இனங்களின் சில தொடர்வரிசைகளை நிறுவி ஆதாரமான சார்பு நிலைகளின் மூலம் அவற்றைத் தொடர்புபடுத்தினால், மென்மேலும் சிக்கலான, ஸ்தூலமான சமூக நிகழ்வுகளை ஆராய்வதை நோக்கி ஒருவர் முன்னேற முடியும். ஆடம் ஸ்மித் இந்த விஞ்ஞான முறையை வளர்த்துச் சென்றார். அவர் உழைப்புப் பிரிவினை, பரிவர்த்தனை, பரிவர்த்தனை மதிப்பு போன்ற இனங்களை ஆதாரமாகக் கொண்டு தன்னுடைய அமைப்பை நிறுவுவதற்கு முயற்சித்தார். பிறகு அவற்றிலிருந்து முக்கியமான வர்க்கங்களின் வருமானங்களுக்கு முன்னேறினார்.
அவருடைய நூலில் எண்ணற்ற வர்ணனைகளும் பிற செய்திகளை விரிவாகக் கூறுதலும் இடம் பெற்றுள்ளன. ஆனால் மேலே சொன்ன அர்த்தத்தில் பார்க்கும் பொழுது அவை குறிப்பிட்ட பிரத்யட்ச மதிப்பைக் கொண்ட பொருள் விளக்கங்கள் என்று கருதலாம். ஆனால் விஞ்ஞான ஆராய்ச்சியில் உயர்வான தரத்தை ஸ்மித் நெடுகிலும் கையாள முடியவில்லை. வர்ணனைகளும் மேலெழுந்த வாரியான கருத்துக்களும் அவரை உந்தித்தள்ளிக் கொண்டு சென்றபடியால் தனது ஆழமான பகுப்பாராய்ச்சி முறையை அவர் அடிக்கடி கைவிட்டார். இந்த இரு பக்கத்தன்மை புறநிலையில் அந்தக் காலத்தின் கூறுகளாலும் விஞ்ஞானத்தில் ஸ்மித்தின் இடத்தினாலும், அகநிலையில் அவருடைய அறிவின் தனிவகையினாலும் நிர்ணயிக்கப்பட்டது.
இதைப் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்:
“இடைவிடாத முரண்பாட்டில் அதிகமான எளிமையோடு ஸ்மித் முன்னேறுகிறார். ஒரு பக்கத்தில், அவர் பொருளாதார இனங்களுக்கு இடையே இருக்கும் உள்ளார்ந்த தொடர்பை அல்லது முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் தெளிவாகப் புலப்படாத கட்டமைப்பைத் தேடிக் கண்டு பிடிக்கிறார். மறுபக்கத்தில், அதே சமயத்தில் இந்தத் தொடர்பை அது போட்டி என்ற நிகழ்வில் தோன்றுகின்ற விதத்தில் அப்படியே எடுத்துரைக்கிறார்; விஞ்ஞான ரீதியான முறையைப் பின்பற்றாத சாதாரணமான பார்வையாளருக்கு எப்படித் தோன்றுமோ அப்படியும், முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுப் போக்கில் உண்மையிலேயே அக்கறை கொண்டவருக்கும் சம்பந்தப்பட்டவருக்கும் தோன்றுகின்ற விதத்திலும் அப்படியே எடுத்துரைக்கிறார். இக்கருதுகோள்களில் ஒன்று முதலாளித்துவ அமைப்பின் உள்தொடர்பை, அதன் உள்ளமைப்பைத் துருவி ஆராய்கிறது. மற்றொரு கருதுகோள் வாழ்க்கையின் வெளிப்புற நிகழ்வுகளை அவை தோன்றும் விதத்தில், தெரிகின்ற விதத்தில் எடுத்துக் கொண்டு அவற்றை மொட்டையாக வர்ணிக்கிறது, பட்டியல் கொடுக்கிறது, மறு கணக்கிடுகிறது, வடிவ ரீதியான வரையறைகளில் ஒழுங்குபடுத்துகிறது. ஸ்மித்திடம் இந்த இரண்டு விதமான அணுகுமுறைகளும் ஒன்றுக்குப் பக்கம் மற்றொன்று குதூகலமாகச் செல்வதோடு மட்டுமல்லாமல் அவை ஒன்றோடொன்று கலந்து பிணைந்து அடிக்கடி ஒன்றையொன்று மறுத்துக் கொள்ளவும் செய்கின்றன” (1)
இன்னும் மேலே எழுதுகிற பொழுது ஸ்மித்தின் கடமை இரட்டை அம்சத்தைக் கொண்டிருந்த படியால் அவருடைய இரு பக்கத்தன்மை நியாயமானதே என்று மார்க்ஸ் கூறுகிறார். பொருளாதார அறிவை ஒரு அமைப்பாக ஒழுங்குபடுத்த முயற்சிக்கும் பொழுது உள்ளார்ந்த தொடர்புகளைப் பற்றி சூக்குமமான பகுப்பாராய்ச்சியைக் கொடுக்க வேண்டியிருந்ததோடு மட்டுமல்லாமல், முதலாளித்துவ சமூகத்தை வர்ணிப்பதும் அதற்குரிய வரையறைகள், கருதுகோள்களைத் தேர்ந்தெடுப்பதும் அவசியமாக இருந்தது.
ஸ்மித்திடமிருந்த இரு பக்கத்தன்மை, அடிப்படையான விஞ்ஞானக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில் காணப்பட்ட பொருந்தாத்தன்மை அரசியல் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சியில் அதிகமான முக்கியத்துவம் உடையதாக இருந்தது. ஸ்மித்தை முதன் முதலாகக் குறை சொன்னவர் அநேகமாக டேவிட் ரிக்கார்டோவாகவே இருக்கும். அவர் ஸ்மித் என்ற பகுப்பாய்வாளரை ஸ்மித் என்ற வர்ணனையாளரிடமிருந்து பாதுகாத்தார். ஆனால் ரிக்கார்டோவிலிருந்து வேறுபட்ட பல எழுத்தாளர்களும் நாடுகளின் செல்வத்திலிருந்து மேற்கோள்களைக் கையாண்டார்கள். இவர்கள் ஸ்மித்தின் மேலெழுந்த வாரியான, கொச்சையான கருத்துக்களை வளர்த்துச் சென்றார்கள்.
விஞ்ஞானம் என்ற வகையில் அரசியல் பொருளாதாரத்தின் ஆராய்ச்சிப் பொருளைப் பற்றி ஸ்மித் மிகவும் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார்; அது இன்றைக்கும் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. அரசியல் பொருளாதாரத்துக்கு இரண்டு அம்சங்கள் உண்டு. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பொருளாயத வசதிகளின் உற்பத்தி, விநியோகம், பரிவர்த்தனை, நுகர்வு பற்றிய விதிகளை, மனிதனுடைய விருப்பத்துக்குச் சம்பந்தமில்லாத வகையில் இயங்குகின்ற விதிகளை ஆராய்கின்ற விஞ்ஞானமாகும். இது முதன்மையான அம்சமாகும்.
ஸ்மித் தன்னுடைய அறிமுகத்தில் முதல் இரண்டு புத்தகங்களிலும் எதைப் பற்றி எழுதப் போகிறேன் என்று எடுத்துக் கூறும் பொழுது அவர் உண்மையில் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய இந்த அறிவையே விளக்கிக் கூறுகிறார். அவர் சமூக உழைப்பின் உற்பத்தித்திறன் வளர்ச்சியின் காரணங்களை, சமூகத்திலுள்ள வெவ்வேறு வர்க்கங்களுக்கும் குழுவினருக்கும் இடையே உற்பத்திப் பொருளின் விநியோகத்தின் இயற்கையான வரிசைக்கிரமத்தை, மூலதனத்தின் தன்மையை, அதன் படிப்படியான திரட்டலின் சாதனங்களை ஆராய்வதற்கு உத்தேசிக்கிறார்.
இது சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பைப் பற்றிய ஆக்க முறையான, பகுப்பாய்வு அணுகுமுறையாகும். அது யதார்த்தம் எப்படிப்பட்டது என்பதையும் இந்த யதார்த்தம் எப்படி ஏன் வளர்ச்சியடைகிறது என்பதையும் ஆராய்கிறது. ஸ்மித் அரசியல் பொருளாதாரத்தைப் பிரதானமாக சமூகப் பிரச்சினைகளின், சமூக வர்க்கங்களுக்கு இடையே உள்ள உறவுகளின் பகுப்பாய்வு எனப் பார்க்கிறார் என்பது முக்கியமானதாகும்.
ஆனால் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அரசியல் பொருளாதாரம் புற நிலையான ஆராய்ச்சியின் மூலம் செய்முறைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பது ஸ்மித்தின் கருத்தாகும். அது ஒரு பொருளாதாரக் கொள்கையை வலியுறுத்தி சிபார்சு செய்ய வேண்டும். அந்தக் கொள்கை “மக்களுக்கு அதிகமான வருமானத்தை அல்லது வாழ்க் கைக்குத் தேவையான வருமானத்தை ஏற்படுத்த வேண் டும்; அல்லது அவர்கள் தாங்களாகவே அத்தகைய தேவை யான வருமானத்தைப் பெறுவதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும் என்பது இன்னும் பொருத்தமானதாகும்.”(2) எனவே சமூகத்தில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு நிலவ வேண்டும் என்பதை அரசியல் பொருளாதாரம் ஆதரிக்க வேண்டும்.
இது இயல்பான செய்முறை அணு குமுறையாகும். இப்படிப்பட்ட அணுகுமுறையில் பொருளியலாளர் “செல்வம் வளர்ச்சியடைவதற்கு” என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை காண முயல்கிறார்.
இரண்டு அணுகுமுறைகளுமே பொதுவாக இடைத் தொடர்பு உடையவையாகும்; எந்த மாதிரியான பொருளாதாரக் கருதுகோளிலும் ஒன்று மற்றொன்றின் குறையை நிரப்புகிறது. எனினும் பிற்காலத்தில் பிரபலமான அறிஞர்கள் பலருக்கு முதல் அல்லது இரண்டாவது அணுகுமுறை குறியடையாளமாக இருந்தது என்பதை நாம் பின்னர் காண்போம். “ஸேய் மரபு” அதன் “நேர்க்காட்சிவாதத்தைப்” பற்றிப் பெருமை கொண்டு இயல்பான அணுகுமுறையை நிராகரிப்பதை வலியுறுத்தியது; ஆனால் ஸி ஸ்மான்டி பிரதானமாகத் தான் விரும்பிய வழியில் சமூகத்தை மாற்றியமைப்பது எப்படி என்று காட்டுகின்ற விஞ்ஞானமே அரசியல் பொருளாதாரம் என்று கருதினார். ஆனால் ஸ்மித் தனக்குரிய பன்முகத்தன்மையோடு இரண்டு அணுகுமுறைகளையும் அங்கக ரீதியாக இணைத்துக் கொண்டார்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் : (1) K. Marx, Theories of Surplus-Value, Part 11, Moscow, 1968, p. 165. (2) A. Smith, The Wealth of Nations, Vol. 1, London, 1950, p. 395.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
திருச்சி பாலக்கரை பகுதியின் பாஜக மண்டலச் செயலாளராகச் செயல்பட்டுவந்த விஜயரகு என்பவர், நேற்று (27-01-2020) காலை 6 மணியளவில் திருச்சி சந்தைப் பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்ற பாஜக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
திருச்சியில் (காந்தி மார்க்கெட் அருகில்) உப்புப்பாறை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு. இவர் அந்தப் பகுதியில் மார்க்கெட்டுக்குள் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் திருச்சி பாலக்கரைப் பகுதியின் பாஜக மண்டலச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும், இவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள மிட்டாய் பாபு என்பவருக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்திருக்கிறது. விஜயரகுவின் மகளை மிட்டாய் பாபு காதலித்ததாகவும், அதற்கு விஜயரகு குடும்பத்தினர் மறுத்துவிட்டதாகவும், இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே தகராறு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த முன் விரோதத்தைத் தீர்த்துக் கொள்ள நேற்று (27-01-2020) காலையில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மிட்டாய்பாபு விஜயரகுவை சந்தையில் ஓட ஓட வெட்டிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட விஜயரகு.
கடும் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்த விஜயரகுவை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் விஜயரகு. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முன் கூடிய பாஜக காலிகள் – எச்.ராஜா வரும்வரை பிணத்தை வாங்கமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி அருகில் உள்ள சாலையில் 10 பேர் அமர்ந்து கொண்டு ‘சாலை மறியல் போராட்டத்தையும்’ நடத்தியுள்ளனர்.
அதற்குள்ளாக கொலை நடந்த சமயத்தில் அங்கு இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலை செய்தது மிட்டாய் பாபுவும் அவரது கூட்டாளிகளும் என்பது வெளியில் அனைவருக்கும் தெரியவந்தது. கொலை செய்த மிட்டாய்பாபுவை போலீசு தேடி வந்தது. பலரது பார்வையில் நடந்த கொலையாதலால் மிட்டாய் பாபு பெயர் வந்தது. யாரென்று விவரம் தெரியாமல் இருந்திருந்தால், முசுலீம் ‘தீவிரவாதிகள்’தான் இந்தக் கொலையை செய்ததாக, பாஜகவும் – ஊடகங்களும் அறிவித்திருக்கும்.
இதற்குள்ளாகவே, செத்த பிணத்திலும் காசு திருடும் பாஜக தலைவர்கள் இசுலாமிய தீவிரவாதக் கதையை சமூக வலைத்தளங்களில் கட்டிப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர். இந்தக் கொலை குறித்து பாஜக-வின் தேசியச் செயலாளர்களான எச்.ராஜா -வும் முரளிதர் ராவும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தமது முசுலீம் வெறுப்பைக் கொட்டத் தொடங்கிவிட்டனர்.
எச்.ராஜா தனது டிவிட்டில், “பாஜக திருச்சி பாலக்கரை பகுதிச் செயலாளர் ரகு அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக திருச்சி பாலக்கரை பகுதிச் செயலாளர் ரகு அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
பாஜகவின் தேசியச் செயலாளர்களில் ஒருவரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் ஜிகாதி குண்டர்களால் திருச்சி பாலக்கரை பாஜக மண்டல செயலாளர் ரகு கொல்லப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Thiruchi palakkari BJP Mandal secretary Regu assassinated by Jihadi goons in Tamil Nadu! BJP condemns this heinous act and demands immediate action agaisnt the culprits. My condolences are with the bereaved family members.
போலீசு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னரே கொலை செய்த நபர் முசுலீம்தான் என்பதை இவர்கள் இருவரும் அடித்துக் கூறுகின்றனர். சொல்வது பாஜக ஐ.டி. விங்கில் போட்டோஷாப் வேலை செய்யும் ஏதேனும் சைபர் கூலியாக இருந்தால் கூடப் பரவாயில்லை, சொல்பவர்கள் பாஜக-வின் தேசியப் பொதுச் செயலாளர்கள்.
இவர்களாவது இசுலாமிய பயங்கரவாதிகள் கொலை செய்ததாகக் கூறுவதோடு நிறுத்திக் கொண்டனர். பாஜக-வின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்னும் தரம் தாழ்ந்து ஒரு ‘நாலாம்தர’ பொறுக்கியைப் போல பேசியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொன்னார், “தமிழகத்தில் ஒரு யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். எதற்கும் ஒரு எல்லை உண்டு. எல்லை மீறினால் எல்லோருக்கும் ஓர் உயிர்தான். எல்லாருக்கும் ஒரு சாவுதான். அதைப்பற்றி கவலைப்பட நாங்கள் தயாராக இல்லை. இதை தமிழ அரசும் காவல்துறையும் புரிந்து கொள்ள வேண்டும், என்றார். ” (செய்தி : தினகரன் 28-01-2020)
அதாவது இவர்கள் யாரையும் போட்டுத்தள்ளத் தயாராகத்தான் இருக்கிறார்களாம். சாவைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லையாம். இதை போலீசும் தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டுமாம்.
இவர்கள் மக்களைக் கொல்வதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லாதவர்கள் என்பது இவர்களது சித்தாந்த குருவான கோல்வால்கர், சாவர்க்கரின் நூல்களிலேயே காணக் கிடைக்கிறது. ரத யாத்திரை முதல் சமீபத்திய ஜே.என்.யூ. வன்முறை வரை சங்க பரிவாரத்தின் கொலைவெறியைப் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
அடுத்ததாக, சாவைப் பற்றியும் இவர்கள் கவலைப்பட மாட்டார்களாம். ஆம், களத்தில் பலியாவது அனைத்தும் இவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பணவசதியற்றவர்கள் தானே. ஆகையால் சாவைப் பற்றி பொன்னார்களுக்கும் எச்.ராஜாக்களுக்கும் கவலை ஏதும் கிடையாது என்பதும் உண்மைதான்.
கடைசியாக, தமிழக அரசும் போலீசும் இதைப் புரிந்து கொள்ளவேண்டும் என இருதரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பொன்னார். அதுதான் புதிதாக இருக்கிறது. தாங்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்று போலீசிடம் குறிப்பிடுவதன் மூலம் போலீசையே மிரட்டுகிறாரா பொன்னார்? தமிழகப் போலீசின் நிலை அந்த அளவுக்கா தரம் தாழ்ந்துவிட்டது?
பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த யாரேனும் சாதாரணமாக மரணமடைந்தாலேயே அதில் இசுலாமிய தீவிரவாதப் பின்னணி இருப்பதாக பாஜக கிளப்பிவிடுகிறது. பாஜக – இந்து அமைப்பு பிரமுகர்கள் இசுலாமிய பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளதாக சங்கிகள் அலறுகிறார்கள்.
தமிழகத்தில் இதுவரை கொலை செய்யப்பட்ட பல்வேறு பாஜக – சங்க பரிவாரப் பிரமுகர்களில் பெரும்பாலானவர்களின் மரணத்திற்கு கட்டப்பஞ்சாயத்து, முன் விரோதம், கள்ளக் காதல் போன்ற விவகாரங்கள்தான் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்கிற உண்மை போலீசு விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தக் கொலைப் பழியை இசுலாமியர்கள் மீதே போடுவதற்கு முயற்சித்து வருகிறது பாஜக கும்பல்.
கடந்த 2012-ம் ஆண்டு வேலூரில் பாஜக மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டபோது, இதே போல சவடால்களும், மிரட்டல்களும் சாலை மறியல்களும் நடத்தப்பட்டன. பின்னர் விசாரணையில் ஒரு பெண் விவகாரத்தில் பிரபல ரவுடி வசூர் ராஜா என்பவருடன் இருந்த முன்விரோதத்தின் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது என்பது தெரியவந்தது.
அதே ஆண்டு நாகபட்டிணத்தைச் சேர்ந்த அப்போதைய பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி ஜூலை மாதத்தில் காலையில் நடைபயிற்சியின் போது 4 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போதும் முசுலீம் தீவிரவாதம் எனக் குதித்தது பாஜக. இந்தப் புகழேந்தி அப்போதுதான் ஒரு ஆசிரியரின் வீட்டை அபகரித்த வழக்கில் பிணையில் வெளிவந்திருக்கிறார் என்பதும், கட்டப் பஞ்சாயத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகத்தான் முனீஸ்வரன் என்பவர் புகழேந்தியைக் கொன்றார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், திருப்பூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் மாரிமுத்து கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதை மறைத்து, இசுலாமிய ‘தீவிரவாதிகளால்’ அன்னார் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும், அருகில் மோடி படத்துடன் பாஜக கொடிக்கும் சேர்த்து செருப்பு மாலையெல்லாம் போட்டு செட்டப்பை தயாரித்து வைத்திருந்தனர் சங்கிகள். போஸ்ட் மார்டம் அறிக்கையும் உறவினர்களின் சாட்சியமும் சங்கிகளின் நாடகத்தின் மீது சேறை வாரியிறைத்தன.
பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பலின் நோக்கமே கலவரத்தைத் தூண்டுவதும், வாழ்வாதாரப் பிரச்சினைகளை நோக்கி மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்புவதும்தான். சமீபத்தில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை தொடங்கி, நேற்றைய விஜயரகு கொலை வரையிலும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறது பாஜக கும்பல்.
கலவரங்களின் மூலம் ஒன்றிரண்டு தொகுதியையாவது கைப்பற்றிவிடமாட்டோமா என பாஜக தலைவர்கள் ஏங்கும் அதே வேளையில், ஒன்றிரண்டு பிரியாணி அண்டாக்களாவது கிடைக்காதா என பாஜக – சங்க பரிவார தொண்டர்களும் ஏங்கிக் காத்துக் கொண்டுள்ளனர் !
தமிழக மக்களே! அண்டா திருடர்கள் வரத் தயாராகிவிட்டார்கள் ஜாக்கிரதை !
தமிழில் உலக சினிமாக்களும் பெருகிவிட்டன; உலக சினிமா ஆர்வலர்களும் பெருகிவிட்டார்கள். உலக சினிமாக்களை அப்படியே சுட்டு, வசனம் வரை மொழிபெயர்த்து உருவாக்கப்படும் ‘உலக சினிமாக்கள்’ உண்டு. உண்மையில் உலக சினிமாக்கள் என்று கொண்டாடப்படுபவை அந்தந்த நாடுகளின் தன்மையைப் பிரதிபலிக்கும் சினிமாக்கள். அவை அந்த மண்ணில் உருவாக்கப்பட்டு உலக சினிமாக்கள் ஆகின்றன. ஆனால் தமிழகத்தில் உலக சினிமா நோய் பீடித்தவர்களோ அந்த சினிமாக்களைப் போன்ற பாவனை சினிமாக்களை இங்கே உருவாக்குகின்றனர்.
தமிழ் மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்து உலகத்தர சினிமாக்கள் வழங்கியவர்கள் என்று பாரதிராஜா, மகேந்திரன், வெற்றிமாறன் போன்றவர்களைச் சொல்ல முடியும். ஆனால் சில நல்ல ஷாட்கள், கவித்துவமான சில காட்சிகள், ஆங்காங்கே இலக்கிய அடையாள உதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் ‘உலக சினிமா’வை உருவாக்கிவிட முடியும் என்று நம்புபவர் மிஷ்கின். எந்த நிலத்துக்கான சினிமா எடுக்கிறாரோ, அந்த நிலத்தின் மணல்துகள்கள் அவர் படங்களில் இருப்பதில்லை.
மிஷ்கினின் பெரும்பாலான படங்களின் கதைகள் சென்னையில்தான் நடக்கும். ஆனால் அதில் சென்னையின் உக்கிரமான வெயில் இருக்காது. மிஷ்கின் ஒவ்வொரு பார்வையாளருக்கும் கூலிங்கிளாஸ் மாட்டிவிட்டிருப்பார்; அவரும் மாட்டிக்கொள்வார். அவர் படங்களில் சென்னையின் நெரிசல் மிகுந்த, பரபரப்பான போக்குவரத்து இருக்காது. பெண்களைக் கடத்துவதற்கு வசதியாக, தெருக்கள் எல்லாம் காலியாக, இருபுறம் பச்சைநிற குப்பைத்தொட்டிகளுடன் காட்சியளிக்கும். அந்தப் பச்சைநிற குப்பைத்தொட்டிக்கான குறியீடு, ‘லாஜிக்கைத் தூக்கி குப்பையில் போடு’ என்பதே.
மிஷ்கின் படத்தில் பட்டப்பகலில் பிக்பாஸ் ஒளிபரப்பாகும். ஒரு பணக்கார குடும்பம், ஒரே ஒரு மகன், பார்வையற்றவன், அவனை சிங்கம்புலியிடம் அம்போ என்று விட்டுவிட்டு கனடாவில் பெற்றோர்கள் என்னதான் செய்வார்கள்? கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவனின் பெயர் அங்குலிமாலா, அவன் வைத்திருக்கும் பன்றிப்பண்ணையின் பெயர் ‘சாந்தி பன்றிப்பண்ணை’. ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
மிஷ்கினின் படங்கள் நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கத்தைத் தாண்டிக் கீழே இறங்கி வருவதில்லை. அந்த வர்க்கத்தின் வாழ்க்கையும் இயல்புடன் சித்திரிக்கப்படுவதில்லை. பிச்சைக்காரர்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலாளர்கள் கழிவிரக்கம் கோரி செயற்கை பாவனை செய்வார்கள். சைக்கோ கொலைகாரனை, எந்த க்ளூவும் கிடைக்காமல் காவல்துறை பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறைக்குக் கிடைக்கும் க்ளூ, ‘அவன் க்ளீன் ஷேவ் பண்ணியிருப்பான்’ என்பது. சிசிடிவி கேமராவே இல்லாத உலகம் மிஷ்கினின் படைப்புலகம்.
உலக சினிமாவில் தர்க்கம் பார்ப்பதா என்று பாப்கார்ன் அதிர சிலர் கோபிக்கக்கூடும். சரி தர்க்கம் வேண்டாம், வலுவான தத்துவமாவது இருக்கிறதா?
மிஷ்கின் படங்கள் மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களைக் காட்டுவதைப் போல பாவனை செய்பவை. ஆனால் அடிப்படையில் அவை நல்லவன், கெட்டவன், திருடன், போலீஸ், பிசாசு, தேவதை, ஓநாய், ஆட்டுக்குட்டி, எம்.ஜி.ஆர், நம்பியார் என்று இருமை எதிர்வுகளில் நிறுத்துபவைதான்.
தமிழகத்தில் வசிக்கும் ஒருவர் சாதி, மதம், பாலினம், வட்டாரம், வர்க்கம் எனப் பல அடையாளங்களில் சூழப்பட்டவர். அவருடைய வாழ்க்கைச் சிக்கல் பல பரிமாணங்கள் கொண்டது. ஆனால் மிஷ்கின் படத்திலோ மொன்னையான இரு தரப்புகள், இந்தத் தரப்பில் சில அன்பு, அந்தத் தரப்பில் சில அன்பு. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான யுத்தம், இறுதியில் நன்மையே வெல்லும். அவ்வளவுதான். உலக இலக்கியம் படித்து, உலக சினிமாக்கள் பார்த்து மிஷ்கின் மீண்டும் மீண்டும் படைப்பது தத்துவ பாவனை பூசப்பட்ட ஈசாப் நீதிக்கதைகளையே.
கமலாதாஸ், சில்வியா பிளாத் போன்ற இலக்கியப் பெயர்களைத் தூவிவிட்டால் புத்திசாலிப் பாவனை. போதாக்குறைக்கு சாரு நிவேதிதா, பவா செல்லத்துரை, ஷாஜி போன்றவர்களை சில உதிரிப்பாத்திரங்களில் நடிக்க வைத்துவிட்டால் இலக்கியப் பாவனை. சாதியச் சிக்கல்களையும் முரண்களையும் நேரடியாகப் பேசக்கூடிய படங்கள் வரும் காலத்தில், “சாதிவெறியில் கொலை செய்றவனும் சைக்கோதான்; மதவெறியில் கொலை செய்றவனும் சைக்கோதான்” என்று விஜயகாந்த் காலத்து வசனம் வைக்கிறார் மிஷ்கின். ஏனென்றால் அதை அவரால் சித்திரிக்க முடியாது.
எதார்த்தத்தில் காவல்துறை அடக்குமுறைக்கருவி, தந்திரங்கள் நிறைந்தது. ஆனால் மிஷ்கின் படங்களிலோ அது சாதுவான அப்பாவி மிருகம். அவரது எந்தப் படங்களிலும் காவல்துறை ஒடுக்குமுறை காட்சிப்படுத்தப்பட்டதில்லை. ‘சைக்கோ’வில் ஏ.எம்.ராஜா பாட்டுப்பாடியபடி தலை வெட்டுப்பட்டுச் சாகிறார் ஒரு போலீஸ் அதிகாரி.
அங்குலிமாலா, பௌத்தம், ஜென், கமலாதாஸ், கிறிஸ்துவ விக்டோரிய ஒழுக்கம் என்று விதவிதமான பாவனைகள் காட்டினாலும் அடிப்படையில் மிஷ்கின் படங்கள் எம்.ஜி.ஆர் படங்கள்தான். எம்.ஜி.ஆர் படங்களில் நாயகிகள் வில்லனிடம் ஆபத்தில் சிக்கியிருப்பார்கள். அவர்களை எம்.ஜி.ஆர் வந்து மீட்பார். ‘சைக்கோ’விலும் நாயகி, “கௌதம் வந்து மீட்பான்” என்று வில்லனிடம் புன்னகைக்கிறாள்.
‘பிசாசு’ படத்தில் பிசாசு தன் மனைவியை அடித்து உதைப்பவனை மாடிப்படியில் இருந்து உருட்டிவிடும்; தன் காதலனை பீர் அடிக்க விடாமல் பாட்டிலை உடைத்துவிடும்; அப்பா புகைபிடிக்கக்கூடாது என்று சிகரெட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு ஓடும். இதெல்லாம் எம்.ஜி.ஆர் படங்களில் அவர் வழக்கமாகச் செய்பவை. இதை ‘பிசாசு’ செய்தது மட்டும்தான் எம்.ஜி.ஆர் படத்துக்கும் மிஷ்கினின் உலக சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம். என்ன ஒன்று, மிஷ்கின் பட நாயகர்கள் பெண்களை மீட்டுவிட்டு, ‘நான் என் கடமையைத்தானே செஞ்சேன்’ என்று டயலாக் பேச மாட்டார்கள். அதற்குப் பதிலாக கொஞ்ச நேரம் குனிந்துநிற்பார்கள்.
படைப்பூக்கமுள்ள படைப்பாளிகள் பன்மைத்துவ பாத்திரங்களைப் படைத்து அதன் வழியாக வாழ்க்கையின் சிக்கலான முரணியக்கத்தைச் சித்திரிப்பார்கள். ஆனால் மிஷ்கினோ வெவ்வேறு உடல்களின் வெவ்வேறு உடல்மொழிகளை, பாவனைகளைக் கொன்றொழித்துவிட்டு ஒரேமாதிரியான உடல்மொழியை எல்லா உடல்களுக்குள்ளும் திணிப்பார். ஒரே அச்சில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிள்ளையார் சிலை செய்யும் தொழிலாளியைப் போல, திரைக்குப் பின்னால் நூலைப் பிடித்து தோற்பாவைகளை ஆட்டிவைக்கும் பொம்மலாட்டக்காரரைப் போன்றவர் மிஷ்கின்.
மனிதர்கள் குனிந்தபடி நிலம் நோக்குவார்கள். கிறுக்குப்பிடித்தாற்போல் திடீரென்று குறுக்கும் நெடுக்குமாக ஓடுவார்கள். இறந்தது மகள்தான் என்று தெரியும். இருந்தும் அரைகிலோ மீட்டர் நடந்துபோய், தரையில் விழுந்துதான் ‘கடவுளே’ என்று கதறுவாளா தாய்? இதிலே என்ன இழவு புதுமை இருக்கிறது? ‘அஞ்சாதே’ படத்தில் ‘குருவி’ என்று ஒரு பாத்திரம் வரும். சற்றே உரத்த குரலில் சின்ன எரிச்சலுடன் எப்போதும் பேசிக்கொண்டிருக்கும். அது அந்தப் பாத்திரத்தைப் பொறுத்தவரை சரி.
ஆனால் மிஷ்கினின் எல்லாப் படங்களிலும் ‘பழைய பிளேடால் பைல்ஸ் ஆபரேஷன்’ செய்த மனிதர்கள் எரிச்சலில் கத்திக்கொண்டேயிருக்கிறார்கள். கணியன் பூங்குன்றனாரின் பெயரைத் துப்பறிவாளனுக்கு வைத்து, ‘க்ரீன் டீயா இது, கழுதை மூத்திரம் மாதிரி இருக்கு’ என்று ஒரு பெண்ணிடம் எரிந்து விழுந்து, கையில் துடைப்பத்தைக் கொடுத்து, ‘கூட்டிப்பெருக்கு’ என்று ஆணையிட வைத்து கணியன் பூங்குன்றனை அவமானப்படுத்தினார். இந்தப் படத்தில் கமலாதாஸை அவமானப்படுத்தியிருக்கிறார் மிஷ்கின். ஏன் அவர் தன் தாய் உள்பட எல்லோரையும் அவமானப்படுத்தி, வசைகளைப் பொழிந்து, எரிந்துவிழ வேண்டும்? நமக்கு எரிச்சலாக இருக்கிறது.
வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு உடல்மொழிகள், வெவ்வேறு பாவனைகள், வெவ்வேறு மனநிலைகள் என பன்மைத்துவமே மனித வாழ்க்கையின் அழகு. பாசிசமோ பன்மைத்துவத்தை விரும்புவதில்லை. அது பன்மைத்துவத்தை அழித்து. வித்தியாசங்களைத் தகர்த்து ஒற்றைத்தன்மையை நிறுவ விரும்புகிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு என்று மதவாத பாசிசம் சொன்னால் ‘ஒரே உடல்; ஒரே உடல்மொழி’ என்கிறார் மிஷ்கின். மிஷ்கின் மற்றும் மணிரத்னத்தின் படங்கள் வித்தியாசத்தை அழித்து, ஒற்றைத்தன்மையைப் போலியாகப் பாத்திரங்களுக்குள் திணிக்கும் பாசிச மனநிலை கொண்டவை.
மிஷ்கின் படங்களில் இன்னோர் ஆபத்தும் உண்டு. பெண்கள் கல்வி கற்க வந்த தொடக்க காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர் படங்கள் ‘பொம்பளை சிரிச்சாப் போச்சு’, ‘இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை’ என்று பிற்போக்குப் பாடல்கள் பாடின. படித்த பெண்களை அகங்காரம் உள்ளவர்களாகக் காட்டின. மிஷ்கின் படங்களோ ‘நீ வீட்டைவிட்டு வெளியில் வந்தால் கடத்தப்படுவாய், கொல்லப்படுவாய்’ என்று மீண்டும் மீண்டும் பயமுறுத்துகின்றன.
பெண்களுக்குப் பாதுகாப்பு, பாலியல் அச்சுறுத்தல்கள் போன்ற பிரச்னைகள் இருப்பது உண்மைதான். ஆனால் பெண்கள் அதை எதிர்கொள்வது போன்றோ சமூக மாற்றங்கள் குறித்தோ மிஷ்கின் படங்கள் பேசுவதில்லை. எப்போதும் பெண்களை மீட்பது உடல் வலிமை அல்லது அறிவு வலிமையுள்ள ஆண்களின் கடமை. எந்தப் பெண்ணும் தன்னைத் தற்காத்துக்கொள்ள, ஆபத்தை எதிர்கொள்ள எந்தப் பிரயத்தனமும் செய்வதில்லை. இருக்கும் ஒரே ஒரு துணிச்சலான பெண்ணையும் படிக்கட்டிலிருந்து தள்ளி, சக்கர நாற்காலியில் முடக்கிப்போடுகிறார் மிஷ்கின். ஒருகட்டத்தில் சைக்கோ, நாயகியின் சங்கிலியை அவிழ்த்துவிட்டுச் சுதந்திரமாக நடமாட விட்டாலும் அவள் தப்பிப்பதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை. ‘கௌதம் வந்து காப்பாற்றுவான்’ என்று காத்திருக்கிறாள்.
கிறிஸ்துவ விக்டோரிய ஒழுக்க விதிகளைக் கேள்விக்குள்ளாவது நல்ல விஷயம்தான். ஆனால் சுய இன்பத்தைச் சொல்லிவிட்டால் அது புதுமையான உலக சினிமா என்று நினைத்துக்கொள்கிறார் மிஷ்கின். ஆனால் அந்தக் கலாச்சார அதிர்ச்சிகளை எல்லாம் தமிழ் சினிமா தாண்டிவந்துவிட்டது. குமாரசாமி தியாகராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ பாலியல் மீறல்களை விரிவாகப் பேசுகிறது. ஆனால் மிஷ்கினோ ‘பேண்ட் ஜிப் மாட்டிக்கிச்சு’ என்று நிற்கிறார். ‘சில்லுக்கருப்பட்டி’யில் ஓர் இளைஞனின் சுய இன்பம் குறித்து ஓர் இளம்பெண் பேசக்கூடிய காட்சிகளில் எவ்வளவு எதார்த்தமும் கலைத்தன்மையும் இருக்கிறது. ஆனால் ‘சைக்கோ’விலோ பாவனைகள் மட்டுமே இருக்கின்றன. பிளாஸ்டிக் பாவனைகள்.
எம்.ஜி.ஆர் படங்கள் எல்லாம் உருமாற்றப்பட்ட நீதிக்கதைகள். மிஷ்கின் படங்களோ உருமாற்றப்பட்ட எம்.ஜி.ஆர் படங்கள். ஆனால் எம்.ஜி.ஆர் படங்களில் இவ்வளவு அபத்தமான காதல் காட்சிகள் ஒருபோதும் இருந்ததில்லை.
கௌதம் வாசுதேவ் மேனனிடம்கூட அலுத்துப்போன காதல் கதை, உளுத்துப்போன போலீஸ் கதை என இரண்டு கதைகள் இருக்கின்றன. ஆனால் மிஷ்கினிடமோ பாவம், ஒரே ஒரு எம்.ஜி.ஆர் கதைதான் இருக்கிறது. அதுவும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர் கதை. மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர் கதை.
தீண்டாமைக்கு எதிராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போராடினார். அரசியலமைப்பும் 1950-ல் அதைத் தடைசெய்தது. ஆனால் தேசிய அவமானம் என்றும், பாவச்செயல் என்றும் ஏடுகளில் குறிப்பிடப்பட்டாலும் சாதித்தீண்டாமை இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்னும் பீடித்திருக்கிறது.
வட இந்தியாவில் 49 விழுக்காடு குடும்பங்கள் சாதித் தீண்டாமையை இன்னமும் கடைப்பிடிப்பதாக சமீபத்திய எக்கனாமிக் & பொலிடிகல் வீக்லி (EPW) இதழின் ஆய்வு கூறியிருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவில் 20 விழுக்காடு குடும்பத்தினர் மட்டுமே தீண்டாமையை கடைப்பிடிப்பதாக ஆய்வின் ஆசிரியர்களான அமித் தோரத் (Amit Thorat) மற்றும் ஓம்கர் ஜோஷி (Omkar Joshi) கூறுகின்றனர். இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பு -2 (IHDS) 2012 ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வினை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
தோரத், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பொருளாதாரப் பேராசிரியராகவும், ஜோஷி, மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் (University of Maryland) சமூகவியல் துறையில் அறிஞராகவும் பணிபுரிகின்றனர். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் தீண்டாமையின் பரவலை ஆய்வு செய்வதற்காக தகவல்களை பல்வேறு பகுதிகளாக அவர்கள் பிரித்தனர். IHDS – II இன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 42,000 வீடுகளில் தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு (National Council of Applied Economic Research) மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகமும் சேர்ந்து இந்த கணக்கெடுப்பை நடத்தின. ஆய்வின் சாராம்சமான விவரங்கள்;
30 விழுக்காட்டு கிராமப்புற குடும்பங்கள் தீண்டாமை பழக்கத்தை கடைப்பிடிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 20 விழுக்காடாக குறைந்துள்ளது. நகரங்கள் மக்களை ஓரிடத்தில் குவிப்பதுடன் அவர்களின் வாழ்நிலையை ஒன்று போலானதாக்குகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” போல பிரிவினைகள் போற்றும் பழைய பிற்போக்கு கலாச்சாரங்களை கைவிட்டு அந்த இடத்தில் அனைவரையும் உள்ளடக்கும் புதியதொரு கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள நகரச்சூழல் அவர்களை நெருக்குவதே இதற்கு முதன்மையான காரணமாக இந்த ஆய்வு கூறுகிறது.
மதரீதியான வேறுபாடு:
கணக்கெடுக்கப்பட்டவர்களில் அதிக அளவில் அதாவது 35 விழுக்காட்டு சமண குடும்பங்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றன. சமணர்கள் கண்டிப்பான மரக்கறி உணவுப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால் இறைச்சி உணவு உண்பவர்களை தங்களது சமையலறைக்குள் விடுவதில்லை. அடுத்ததாக 30 விழுக்காடு இந்துக்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றனர். புத்த சமயத்தைப் பின்பற்றும் 1 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இந்து மதத்தின் தீண்டாமையில் இருந்து தப்புவதற்காக புத்த மற்றும் சமண மதத்திற்கு மாறிவர்களும், இந்து மத்திலேயே இருக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினரும் இடஒதுக்கீடு மூலம் ஓரளவிற்கு பொருளாதார ரீதியில் முன்னேறியுள்ளனர். அதே சமயத்தில் தீண்டாமை கொடுமையிலிருந்து தப்புவதற்காக இசுலாம் மற்றும் கிருத்துவ சமயங்களுக்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடும் இல்லை. மதமாற்றமும் அவர்களது சாதி அடையாளத்தை சொல்லிக்கொள்ளும்படியாக அழிக்கவில்லை. அவர்கள் இன்னும் சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
கல்வியின் தாக்கம்:
கல்வியறிவற்ற சுமார் 30% மக்கள் இன்னும் தீண்டாமையை கடைப்பிடித்து வருகின்றனர். அதே நேரத்தில் பட்டப்படிப்போ அல்லது பட்டயப்படிப்போ படித்த இளைஞர்கள் இருக்கும் வீடுகளில் தீண்டாமை 6 விழுக்காடு குறைந்துள்ளது.
பார்ப்பனர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடி வகுப்பினரிடையே கல்வி உயர உயர தீண்டாமை கடைபிடிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவது ஆய்வில் தெரிய வந்தது. பள்ளிப்படிப்பிலிருந்து கல்லூரி படிப்பு என கல்வியின் மட்டம் உயரும் அதே நேரத்தில் பார்ப்பனர்களிடையே 69 விழுக்காட்டிலிருந்து 48 விழுக்காடாக தீண்டாமை குறைந்துள்ளது.
கல்வியின் நிலை உயர உயர தீண்டாமையின் அளவு குறைவதாக ஆய்வு கூறுகிறது. இதற்கு இடஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது. ஆனால் 1990 -களில் தனியார்மய கொள்கைகளை புகுத்திய பிறகு கல்விக்கான அரசு கட்டமைப்பு சிதைந்து வருவதால் இதில் ஒரு பெரும் தேக்கம் இருப்பதை நாம் பார்க்க முடியும்.
பொருளாதாரக் காரணி:
ஏழைகள், இரண்டாம் பிரிவினர், நடுத்தர பிரிவினர், நான்காம் பிரிவினர் மற்றும் பணக்காரர் என்று வருமானத்தின் அடிப்படையில் குடிமக்களை ஐந்து குழுக்களாக ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர். வரைப்படத்தில் ஏழைகளில் இருந்து பணக்காரர் நோக்கி செல்ல செல்ல தீண்டாமையின் அளவு குறைந்திருக்கிறது.
32.56 விழுக்காட்டு ஏழைக்குடும்பங்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் அதே நேரத்தில் பணக்காரர்களிடையே இந்த எண்ணிக்கை 23.35 விழுக்காடாக குறைந்திருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
வட்டார வேறுபாடு:
வட மாநிலங்களில் சுமார் 40 விழுக்காடு குடும்பங்கள் மற்றும் மைய மாநிலங்களில் சுமார் 49 விழுக்காடு குடும்பங்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றன. அதே நேரத்தில் மேற்கு மாநிலங்களில் 13 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே தீண்டாமை வழக்கத்தை பின்பற்றுகின்றன. கிழக்கு மாநிலங்களில் 17 விழுக்காடு மக்கள் இந்த வழக்கத்தை பின்பற்றுகின்றன.
“இந்த ஆய்வை 2015 முதல் நாங்கள் செய்து வருகிறோம். இந்த ஆய்வு பகுதி அளவிலாக இருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மேற்கோள் காட்டினார். சமூகத்தில் தீண்டாமை இன்னமும் எவ்வாறு நிலவுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவுகிறது” என்று ஆய்வாளர்களில் ஒருவரான அமித் தோரட் கூறினார்.
இன்றைக்கு யாரு சார் சாதி பார்க்கிறார்கள் என்று ஆங்காங்கே சிலர் முனகுவது நம்முடைய செவிகளில் விழத்தான் செய்கிறது. சாதியொழிப்பு தான் முதன்மையானது வர்க்க விடுதலையை அப்புறம் பார்த்துக்கொள்வோம் என்று தலித் விடுதலையை முன்னிறுத்துபவர்களும் கூறுகின்றனர். ஆனால் பொருளாதார விடுதலையின்றி சாதி விடுதலையோ, ஏன் பெண் விடுதலையும் கூட சாத்தியமன்று என்பதையே இந்த ஆய்வின் முடிவு காட்டுகிறது.
சிறு தொழில் நிறுவனங்கள், மத்திய மாநில அலுவலகங்கள், ஐ.டி வளாகங்கள், பல்துறை தொழிற்கல்விக் கூடங்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம், சென்னை கிண்டி தொழிற்பேட்டை.
இங்கு நடைபாதையில் தளர்ந்த வயதில் ஒரு மூதாட்டி, வயது 80-க்கும் நெருக்கம். குழந்தை போன்ற முகம், பார்ப்பவர்களை மனம் குளிரவைக்கும் சிரிப்பு. தனி ஒரு ஆளாக தள்ளுவண்டி பெட்டிக்கடையை அவர் நிர்வகித்துக்கொண்டிருந்தார். கோலி சோடா, பன்னீர் சோடா, லெமன் சோடா, கடலை உருண்டை, மிட்டாய், பட்டர் பிஸ்கெட், முறுக்கு, ரோஜா பாக்கு, கிரேன் பாக்கு, பிளாக் ஒயிட் என்று சில சிகரெட் பாக்கெட்டுகள், இப்படி அந்த தள்ளுவண்டியில் இருக்கும் மொத்த பொருட்களின் மதிப்பு ரூபாய் 3000-க்கும் குறைவாக இருக்கும். ஆனால் அந்த மூதாட்டி மிகப்பெரும் சங்கிலித்தொடர் அங்காடியை நிர்வகிக்கும் இளம் முதலாளியைப் போல, பொங்கி வழியும் உற்சாகத்தோடு வாடிக்கையாளர்களை அணுகுகிறார்.
நாங்கள் வெயிலுக்கு அவரிடம் கோலி சோடா வாங்கிக்கொண்டே உங்களைப் பார்த்தால் எங்களுக்குப் பொறாமையாக இருக்கிறது, எப்படி இந்த வயதில் உற்சாகமாக இருக்கிறீரகள் என்றோம்.
அவர் நம்மைப் பார்த்து தம்மை மறந்தபடி சிர்த்தார். வெட்கத்தில் முந்தானையால முகத்தை மூடியபடி திரும்பவும் முகம் நிறைய சிரித்தார். அவரது கடை வாடிக்கையாளர்கள், அம்மா, பாட்டி, ஆயா என்று அவரைப் பல சொந்தங்களில் அழைத்து, சிகரெட் – பாக்கு, கடலை உருண்டை என அடுத்தடுத்து கேட்டுக்கொண்டே இருந்தனர். வந்தவர்களில் பாதிபேர் வட நாட்டு இளைஞர்கள் (ஐ.டி ஊழியர்கள், மாணவர்கள்) அவர்களிடம் இந்தி, உருது, மராட்டி, தெலுங்கு என பல மொழிகளில் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வரிசையாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். கூடவே அவர்கள் மொழியிலேயே சரளமாகக் கிண்டலடித்து அவர்களைச் சீண்டிக்கொண்டிருந்தார்.
டேய் வந்துட்டீங்களா, ஒரு சிகரெட்ட வாங்கி மூனு பேரு ஊதுவானுங்க, இவனப்பாரு படிக்கச் சொல்லி காலேஜு-க்கு அனுப்புனா, அரியர் வெச்சு சுத்திக்கிட்டிருக்கான், படிப்ப முடிச்சிட்டு போயிட்டான்னு பாத்தா திரும்ப பரிச்சன்னு வந்துருக்கான். இப்பயாவது கட.. கடையா சுத்தாமா ஒழுங்கா படிடா என்று அவனைக் கலாயத்தார்.
பொங்கிவரும் சிரிப்பை அடக்க முயலும் பாட்டி.
நம்மிடம் திரும்பி, இந்த பிளாட்பாரத்துக்கு நான் வந்து 50 வருசம் ஆகுது. இந்த பசங்க தான் எனக்குப் பேராண்டிக. அவுங்க கிட்ட வாயாடுவேன், அவுங்க கோவிச்சுக்க மாட்டாங்க. ஒரு நாள் உடம்பு சரியில்லன்னு வரலன்னாலும், ஏன் ஆயா நேத்து வரலன்னு அக்கறயா விசாரிப்பாங்க என்று உருகினார்.
என்னோட 3 குழந்தைகள தூக்கிக்கினு 31 வயசுல் இந்த பிளாட்பாரத்துக்கு நிர்கதியா வந்தேன். அதுலேருந்து இங்க தான் என் பொழப்பு ஓடுது. ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு எந்த கொறையுமில்ல. 4 வயசு, 7 வயசு, 11 வயசுன்னு ஒரு ஆம்பள பயன், ரெண்டு பொம்பள பசங்க எல்லாத்தயும் கட்டி கொடுத்தேன். பேரன் பேத்தி எடுத்துட்டேன். ஒடம்பு சரியில்லாம சின்ன வயசுலேயே என் மவன் போயி சேந்துட்டான். அவனுக்குப் பொறந்த ரெண்டு பொட்ட பசங்க மருமகள இப்ப நாந்தான் காப்பாத்துறேன்.
பெரிய பேத்திக்கு 20 வயசு டெய்லர் வேலைக்குப் போகுது. சின்ன பேத்திக்கு 7 வயசு, படிக்கிது. நான் காலைல 9 மணிக்கு கடைக்கு வந்தா சாயங்காலம் 7 மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன். பேத்தி இந்தப்பக்கம் வேலைக்குப் போகும்போது என்கூட வந்து இருந்துட்டு சாப்பாடு கொடுத்துட்டு போகும். சில நேரம் மருமக சாப்பாட்ட எடுத்துன்னு வருவா… காலைல 4 இட்லி, மதியானம் சாம்பார் சோறு, நைட்டு சோறு சீரணமாகல அதனால டீ பன்னு சாப்புட்டு காலத்த தள்ளுறேன்.
தனது மகன் நினைவாக வைதிருக்கும் புகைப்படம்.
சைதாப்பேட்ட கொத்தவால்சாவடியில தான் சொந்தமா ஒரு குடிச இருக்குது, அந்த காலத்துல எப்படியோ அத வாங்கிட்டேன். அந்த குடிசய இன்னும் மாத்த முடியல, பொன்னுங்கள கட்டிக்குடுக்குறது, பையனுக்கு வைத்திய செலவு என செலவு மேல செலவு, என் பையன காப்பாத்த முடியல, அதான் எனக்கு தீராத துக்கம் என்று சோகமானார்.
அவன் எனக்குப் பையன் கிடையாது, ஃபிரண்டு தான், பெரியவனான பெறகு கூட என் தோள்மேல கைய போட்டுக்கிட்டு தான் என்கூட பேசுவான், குழந்தைகள் வளர்ப்பு, தண்டல் பிரச்சன, குடும்பப் பிரச்சன என எல்லாத்தையும் எங்கிட்ட மனசுவிட்டு பேசுவான். ஆட்டோ ஓட்டி பொழச்சான். அவன காப்பாத்த முடியலயே, அவன் என்கூட இல்லயேங்குறதுதான் என்னோட ஒரே கஷ்டம் இப்ப.
சின்ன வயசுலேயே என்னோட வீட்டுக்காரர நான் பிரிஞ்சிட்டேன். அவருக்கு சாவகாசம் சரியில்ல. மூணு புள்ளங்க இருந்தும் இன்னொருத்தி பின்னால போனாரு, லாரி டிரைவர் வேல, குடிகாரனாகி, அவர் போக்குல போயிட்டாரு. நான் குழந்தைகள காப்பாத்த அவர அறுத்துவிட்டுட்டேன். சுமைய கொறச்சுக்கினு சொந்தக் காலுல வாழத் துணிஞ்சேன். சின்னதா இங்கதான் 50 வருசத்துக்கும் முன்னாடி பிளாட்பாரத்துல அடுப்பு மூட்டி இட்லிகட போட்டேன். அப்போ கடைக்கு வந்த சில மகராசனுக என் நெலமய பாத்துட்டு, சின்ன சின்ன உதவின்னு 100 ரூவா தெரட்டி எங்கையில கொடுத்தாங்க. இத இட்லி கட முதலுக்கு வெச்சுக்கோ அப்படீன்னாங்க.
அத வெச்சு, விறகு அடுப்புலேருந்து ஸ்டவ்வு அடுப்புக்கு மாறுனேன். சில்வர் தட்டு, டம்ளர்னு வாங்கி போட்டு இன்னக்கி ஒரு ஆளா நிக்கிறேன். இப்ப வயசாகி கண்ணுல புரை விழுந்து கண்ணு மங்கிடுச்சு, பேத்திங்க பெரிய ஆளாயிடுச்சுங்க, இனிமே இட்லி நெருப்புல வேக முடியலன்னு இந்த தள்ளு வண்டியில ஒக்காந்துட்டேன். ஒடம்புக்கு முடியலன்னாலும் வீட்டுல ஒக்காரக் கூடாது. நீ செய், நான் செய்-னு சண்ட வரும், அதனால இப்படியே ஓடிக்கினே செத்துடனும். இதுவரைக்கும் எனக்கு பெருசா எந்த நோயும் வரல. முட்டி நோவு, கால் வலி அடிக்கடி வரும், நான் தைலம் தேச்சுப்பேன், முடியலன்னா ஒரு ஊசி போட்டு சரிபண்ணிக்குவேன். அதான் எனக்கு வைத்தியம். வெயில் மழைன்னா கொஞ்சம் ஓரமா ஒதுங்கிக்குவேன், வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழம லீவு எடுத்துக்குவேன், அன்னக்கி வெறுமனே இங்க உக்காந்துட்டு போவேன், அப்பதான் என் மனசு சந்தோசமாக இருக்கும் என்று நம்மிடம் குழந்தையாக சிரித்தார்.
ஒரு வர்க்கம் ஒரு குறிப்பிட்ட சமூக – பொருளாதார உற்பத்தி முறையில் உருவாகி, திடப்படுகிறது; அந்த உற்பத்திமுறை மாறும்போது அவ்வர்க்கமும் சிதைந்து, அழிகிறது; உருமாற்றம் அடைகிறது. தூய வர்க்கம், வர்க்கக்குழு என்பது எப்போதும் கிடையாது. காரணம் ஒருவர்க்கம் வட்டார, சாதி, மத, இன்னும் பல பண்பாட்டு அடையாளங்களைத் தாங்கி நிற்கவே செய்கிறது. வாழ்நிலைக்கான போராட்டத்தின் ஊடே தன் வர்க்கத்தின் சக உறுப்பினர்களையும், வர்க்க உணர்வையும் ஒரு தனி மனிதன் அடைகிறான். அதுவரை வட்டார, சாதி, மத இன்னும் பல பண்பாட்டு அடையாளங்களையே ‘தான்’ என்று அறிகிறான். இச்சிக்கலான நிலையை உணர்ந்து கொண்டாலன்றி சமூகமாற்ற இயக்கங்கள் எதிர்கொள்ளும் சமூகநிலைக்கு முகம் கொடுக்க இயலாது. மேற்கண்ட புரிதல் தேவையை இச்சிறுநூல் முன்னெடுத்துச் செல்கிறது. அந்த வகையில் மார்க்சியம் வர்க்கத்தையும், அடையாளத்தையும் எவ்வாறு அணுகுகிறது என்பதை இச்சிறு நூல் எடுத்துக்காட்டுகிறது. இந்நூலுடன் “வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்”‘ என்ற சிறு நூலையும் சேர்ந்து வாசிப்பது நற்பலனைத் தரும். (நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)
நவீன கால ஐரோப்பா இரண்டு விதமான அரசியல்களை நமக்குப் பரிச்சயப்படுத்தியது. முதலாவது, பூர்ஷ்வா (முதலாளிய) தாராளவாத அரசியல். தேசிய அரசு, அரசியல் சட்டம், அரசியல் கட்சிகள், பாராளுமன்றம், தேர்தல், நீதிமன்றம், காவல்துறை ஆகியவற்றை நிறுவனக்கூறுகளாகக் கொண்ட அரசியல் இது. தனிச்சொத்துரிமை, தனிமனிதன், மனித உரிமைகள் ஆகியவை இந்த வகையான அரசியல் கோட்பாட்டில் மையமான இடம் வகிக்கின்றன. இரண்டாவது, மார்க்சிய வர்க்க அரசியல். சமூகம் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது என்பது மார்க்சிய அரசியலின் கோட்பாடு. சுரண்டும் வர்க்கம் ஆளும் வர்க்கமாகவும், சுரண்டப்படும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவும் உள்ளன. எனவே வர்க்க முரண்பாடுகள் அரசியலாக வெளிப்படுகின்றன. தொழிற்சங்கங்கள், பொருளாதாரப் போராட்டங்கள், அவற்றோடு அரசியல் போராட்டங்கள், உழைக்கும் வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஆகியவை வர்க்க அரசியலின் கூறுகள்.
இவை இரண்டிலும் நேரடியாகச் சேராதது அடையாள அரசியல். தேசம், சாதி, மதம், மொழி, பிரதேசம், பண்பாடு, பாலினம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை மையமாகக் கொண்டு மக்களைத் திரட்டி நடத்தும் அரசியலை அடையாள அரசியல் என்கிறோம். இந்தியா போன்ற நாடுகளில், இன்னும் விரிவாக, மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடையாள அரசியல் கடந்த இரு நூற்றாண்டுகளில் வலுவான ஒன்றாக இடம்பெறுகிறது.
அடையாள அரசியலின் பண்புகள்
அடையாள அரசியல் என்பது பின்னை நவீனத்துவச் சூழலில் உருவான ஒருவகை அரசியல் என்று சில மேற்கத்திய சிந்தனையாளர்கள் எழுதி வருகின்றனர். மேலைநாடுகளின் நவீன அரசியல் லட்சியங்கள் பொய்த்துப் போன பின்னர், உலக அளவில் சோசலிசத்திலும் நெருக்கடிகள் எற்பட்ட பின்னர் அடையாள அரசியல் முன்னுக்கு வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். சமீப காலங்களின் அடையாள அரசியல் தீவிரப்பட்டு வருவதற்கும் அது கோட்பாட்டு ஆதரவைப் பெற்றமைக்கும் மேலே குறிப்பிட்ட சூழல்கள் காரணமாக இருக்கலாம். ஆயின் ஆசிய ஆப்பிரிக்க லத்தின் அமெரிக்க நாடுகளில், காலனியச் சூழல்களில், 19-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தொடர்ந்து ஓர் அரசியல் நடந்து வந்திருக்கிறது.
முதலாளியத்திற்கு முந்திய பழங்குடிச் சமூகங்களின் சமூகப் பிரிவுகளையும் சமூகத்திரட்சி முறைகளையும் கொண்டு இவ்வகை அரசியல் தன்னை வடிவமைத்து வந்துள்ளது. இந்தியச் சூழல்களில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் முதற்கொண்டு, இந்துக்கள், இஸ்லாமியர், சீக்கியர் போன்ற மதத்திரட்சிகளும், தமிழ்ச் சூழல்களில், வைகுண்டரின் அய்யாவழி இயக்கம், ஆறுமுக நாவலரின் சைவ மீட்டுருவாக்கம், கால்ட்வெல்லின் திராவிடம் பற்றிய கருத்தாக்கத்திற்குப் பிறகான அச்சு நூல்கள் பதிப்பு இயக்கம், அயோத்திதாச பண்டிதரின் பூர்வ பௌத்தம், நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் இயக்கம் பின்னர் பெரியாரின் நுழைவு தனித்தமிழ், தமிழிசை இயக்கங்கள், திராவிட அரசியல் கட்சிகள், இன்று பழங்குடிகள் என நீண்ட நெடிய ஓர் அரசியலைக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம் கண்டு வந்திருக்கிறோம். இவை காலனிய ஆட்சியின் பிரித்தாளும் உத்திகளால் உருவாக்கப்பட்டவை என்ற ஒரு கருத்து உள்ளது. ஆட்சியாளர்கள் பிரித்தாண்டனர் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. அவர்கள் பிரித்தாள முடியாதபடி நாம் ஒன்றுபட்டு வாழ்ந்து கொண்டிருந்தோம் என்பதும் வரலாற்றுரீதியாகத் தவறான கற்பிதம்.
இந்துத்துவச் சிந்தனையாளர்கள் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னால், இஸ்லாம் இந்தியாவில் பரவுவதற்கு முன்னர் இந்தியா ஒரு பொற்கால வாழ்வை வாழ்ந்து வந்ததாக எழுதுவதுண்டு. இது போன்ற ஒற்றைப்படையான மதிப்பீடுகளைக் கடந்து இந்திய சமூகத்தை நாம் அணுகிச் செல்லுவதே சரியாக இருக்கும். எனவே ஆட்சியாளர்கள் பிரித்தாளுவதற்கான சமூக அடிப்படைகள் நமது சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவாதம், அடையாள இயக்கங்களின் வரலாற்றுரீதியான சமூக அடிப்படைகளை நோக்கி நம்மை இட்டுச் செல்லவேண்டும். மூன்றாம் உலக நாடுகளின் பழஞ்சமுக அமைப்புகளிலிருந்த சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களும் உட்காலனியக் கூறுகளும் அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன என்றே இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. (நூலிலிருந்து 5-7)
… அடையாள அரசியலார் இந்தியச் சூழல்களிலும் சர்வதேசச் சூழல்களிலும் மார்க்சியத்தின் வர்க்க அணுகுமுறை குறித்து முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளை மனதில் இருத்தி இங்கு பேசமுனைவோம்.
வர்க்கம் என்பது ஒரு பொருளாதாரக் கருத்தாக்கம், அது மக்கட் கூட்டங்களிடையிலான பொருளாதாரச் சுரண்டலை (Exploitation) மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுகிறது. அது சாதிரீதியான, நிற அடிப்படையிலான அல்லது இன அடிப்படையிலான, பாலியல் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைக் (Oppressions) கணக்கில் கொள்ளுவது கிடையாது என்பது அடையாள அரசியல் நம்மீது வைக்கும் குற்றச்சாட்டாகும். சுரண்டல் என்பது, பொருளாதாரச் சுரண்டல் என்பது மார்க்சியத்தின் மிக வலுவான ஒரு கருத்தாக்கம். (நூலிலிருந்து பக்.12)
… இந்தியா போன்ற ஒரு பழைய சமூகத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர அசைவுகளின்றித் தேங்கிக்கிடந்த சமூகத்தில், சனநாயகப் புரட்சியின் செயல்பாடுகள் மிக வன்முறையாக நிகழ்த்தப்படவேண்டி வரலாம். எடுத்துக்காட்டாக சாதி ஒழிப்பு என்ற இலக்கு சோசலிசம் என்ற இலக்கை விட கடுமையானதாகக் கூட அமையலாம். இதற்குப் பொருள் வன்முறையை நாம் தூண்டிவிடப் போகிறோம் என்பதல்ல, இங்குள்ள சாதி மேலாக்கம் சாதி ஒழிப்பு என்ற இலக்கை மிகத் தீவிரமாக எதிர்த்தே தீரும். எனில் கம்யூனிஸ்டுகள் அதனை எதிர்கொண்டே தீரவேண்டும். இந்திய சனநாயகப் புரட்சி சாதாரணமானதாக இருக்கப்போவதில்லை.
உலகமயமாக்கச் சூழல்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள் உள்ளிட்ட கிராமப்புறப் பாட்டாளிகள், தேசிய இனங்கள், சமயச் சிறுபான்மையினர், கடற்கரை மற்றும் மலைவாழ் பழங்குடிகள், பெண்கள் எனப் பலவகைப்பட்ட மானுடக் கூட்டங்களின் சனநாயக உரிமைகள் மிகக் கொடூரமாகப் பறிக்கப்படுகின்றன. கம்யூனிஸ்டுகள் இம்மக்களின் வாழ்வுரிமைகளுக்கான பிரச்சினைகளைக் முந்திச் சென்று கையிலெடுக்கத் தயங்கினால், அவர்கள் தன்னிச்சையான, தம்மளவிலான இயக்கங்களைக் கட்டமைப்பார்கள். போராட்டங்களை வடிவமைப்பார்கள். இம்மாதிரியான நிலைமைகளை இன்று இந்தியாவில், தமிழ்ச் சூழல்களில் முன்னெப்போதுமில்லாத அளவில் மிக அதிகமாகச் சந்திக்கிறோம். சனநாயகப் புரட்சி பற்றி நம்மிடையிலான கூடுதலான வெளிப்படையான விவாதங்களும் நடைமுறை அரசியலுமே இச்சூழல்களில் நமக்குத் தேவைப்படுகின்றன. (நூலிலிருந்து பக்.21-22)
நூல் : மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும் ஆசிரியர் : ந.முத்துமோகன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098. தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410 மின்னஞ்சல் : info@ncbh.in
இந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத்
தமிழகத்தில் மட்டுமே காணமுடியும் !
♦ தருக்கத்தின் பிற்கால வளர்ச்சி என்னவாக இருந்தது?
இங்குத் தருக்கம் முறையாக வளர்ச்சி அடைந்திருந்தால் ஐரோப்பிய மறுமலர்ச்சி நிலை போன்ற ஒரு நிலையை நாம் எட்டியிருப்போம். தருக்கம் வளர்ச்சி அடையவில்லை; வளர்ச்சி அடையவும் விடவில்லை. தருக்கவாதிகளை வேதநெறியாளர்கள் எவ்வாறு இழிவுபடுத்தினார்கள்; ஒடுக்கினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சட்டோபாத்யாயா எழுதியுள்ளார். இங்குத் தருக்க முறைகூட சமயம் சார்ந்த விசயங்களை விவாதிப்பதற்குத் தானே தவிர, சமயத்திலிருந்து விடுபட்ட விஷயங்களை விவாதிப்பதற்கு அல்ல.
மாணிக்கவாசகர்.
மாணிக்கவாசகர் படித்து, தருக்கம் செய்கிறவர்களுடன் சேரக் கூடாது; விலகி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். தருக்கம் செய்தால், படித்தால் சந்தேகம் வரும், சந்தேகம் வந்தால் கடவுள் மீதான முழு நம்பிக்கையில் குறைவு ஏற்படும் என்று மாணிக்கவாசகர் கருதுகின்றார். வடமொழி வேதநெறியாளர்கள் போன்றே இங்கும் தருக்கம் அருவருப்பாகப் பார்க்கப்பட்டது; கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாகப் பார்க்கப்பட்டது.
இதன் விளைவாக, மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றில் காணப்பட்டதைப் போன்ற வளர்ச்சியடைந்த தருக்கத்தைப் பிற்காலங்களில் காண முடியவில்லை. பிற்காலத்தில் சிவஞான சித்தியார் பரபக்கம் பிற மதங்களை மறுத்துப் பேசுகிறது. ஆனால் சிவஞான சித்தியாரில் உள்ளதைத் தருக்கம் என்று சொல்வது சற்று சிரமமானது. ஏனென்றால் சித்தியார் தனக்கு எதிரான கொள்கைகளை அதுவே கட்டுரைத்து மறுக்கின்றது. அப்படிப் பிற கொள்கைகளைக் கட்டுரைக்கும்போது தனக்கு வசதியாக இருக்கும்படியே கட்டுரைக்கின்றது. மணிமேகலையிலும், நீலகேசியிலும் உள்ள தெளிவு, நுணுக்கம் சித்தியாரில் இல்லை. ஓர் உதாரணம். அஜீவகர்களைச் சித்தியார் சமணர்களுடன் சேர்த்துக் குழப்புகிறது. சமணம் பற்றிக் கூடத் தெளிவில்லை. அக்காலத்தில் தருக்கம் எதார்த்தமான நடைமுறையில் இங்கு இல்லை என்பது நமக்குத் தெரிகின்றது.
முன்பே கூறியபடி தருக்கம் இறையியல் சார்ந்ததாகவே இருந்தது. தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவியலை நோக்கி நாம் முன்னேறவில்லை. தருக்கம் இங்கு நம்பிக்கையை வலியுறுத்தியதே தவிர, ஆராய்ச்சியை வலியுறுத்தவில்லை. அதனால் இந்தியாவின் சிறந்த தருக்கவாதியான தர்மகீர்த்தி தமிழர் என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அதே நேரத்தில் தருக்க வளர்ச்சியின் வரலாற்றுப் பயனைத் தமிழர்கள் அடையவில்லை என்பதும் உண்மை.
♦ தருக்கத்தை மறுத்த பக்தி இயக்கம் எதனை முன்வைத்தது?
‘பக்தி இயக்கம்’ என்பது இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்கள் வைத்த பெயர். அதனை ஓர் இயக்கமாக நாம் பார்க்க முடியாது. அது சிவன் அல்லது திருமாலைப் போற்றிப் பரவிய இசைப்பாடல் மரபு மட்டுமே. இந்த இசைப்பாடல் மரபை ஓர் இயக்கமாக, அதாவது ஒரு‘movement’ ஆகக் கருதமுடியாது. இந்த இசைப் பாடல் மரபு நம்பிக்கையை வலி யுறுத்தியது; உணர்ச்சிமயமான பரவச நிலையை உருவாக்கியது.
சிவஞான சித்தியார்.
இந்த இசைப்பாடல் மரபின் தொடக்க காலம் மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றின் காலம். மணி மேகலை, நீலகேசி ஆகியவற்றில் ஒரு வளர்ச்சி யடைந்த தருக்கமுறையைப் பார்க்கிறோம். இந்தக் கேள்வி கேட்கும் தருக்கமுறையை மறுத்து நம்பிக் கையை முன்வைக்கிறது. வேறு மாதிரியாகச் சொன்னால் மக்கள் தன்னிலை ஆட்களாக இல்லாமல்,உணர்ச்சிப் பிரவாக நிலையில் பிறருடைய பேச்சுகளுக்குக் கீழ்ப்படும் தன்னிலை இழந்த ஆட்களாக மாறுகிறார்கள். தன்னிலை இழந்த உணர்ச்சிப் பிரவாக நிலையை உருவாக்கு வதற்கு இசைப்பாடல் முக்கியமாகப் பங்கு ஆற்று கின்றது. பரவசப்பட்ட மனிதர்களை உருவாக்கு கின்றது.
பரவசப்பட்ட மனிதர்கள் தமக்கு முன்னால் இருக்கும் மனிதர்கள் கூறுவதையெல்லாம் நம்பினார்கள்; அவர்களைத் தெய்வப் பிறவிகளாகக் கருதினார்கள். உதாரணமாக, திருஞான சம்பந்தர்தான் அம்மையின் முலைப்பால் அருந்தியதால் ஞானசம்பந்தன் என்று பெயர் பெற்றதாகக் கூறுகிறார். இந்தக் காலத்திற்கு முன் ஒரு மனிதரைப் பற்றிய அதீதக் கதைகளைப் பிறர் கூறக் கேட்கிறோம். இங்குக் கதையோடு சம்பந்தமுடைய மனிதரே கூறுகின்றார். இதைப் பற்றி வெள்ளைவாரணர் ஐயாவிடம் கேட்டேன். ”ஆமாம் தம்பி இதிலெல்லாம் ஏதோ பிரச்சினை இருக்கு” என்று அவர் கூறினார்.
ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களுக்கு வேதநெறிதான் அடிப்படை. அவர்கள் பல்லாயிரம் முறை வேதங்களைப் போற்றுகிறார்கள். நால்வருணக் கோட்பாட்டைப் போற்றுகிறார்கள். இதைப் பற்றியெல்லாம் “தேவார ஒளிநெறி” என்னும் நூலில் செங்கல்வராயப் பிள்ளை தெளிவாகக் கூறியுள்ளார். இப்படி இருக்கும்போது நமக்கு அடிப்படையான கேள்வியொன்று எழுகிறது. இந்த இசைப் பாடல் மரபு தமிழர்களைச் சைவர்களாக, வைணவர்களாக ஒன்றுதிரட்டியதா? இல்லை என்னும்போது எப்படி அதை ஓர் இயக்கமாகக் கருத முடியும். இயக்கம் என்பது முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமையை உருவாக்குவது. புதிய நிலைமைகளை உருவாக்குவது.
செங்கல்வராயப் பிள்ளை.
இந்த இசைப் பாடல் மரபு பற்றிச் சரியான புரிதலுக்குத் தேவையான ஆய்வுகளைச் செய்தவர்கள் ஸ்பென்சர் முதலான சில வெளிநாட்டவர்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய தலங்களை எல்லாம் காட்டும் ஒரு வரைபடம் தயாரித்தனர். அப்படிப் பார்க்கும்போது இந்த ஊர்கள் எல்லாம் நன்செய் ஊர்கள்; அதிக நெல் விளைச்சல் தருபவை. இப்போது ஒரு விசயம் தெளிவாகிறது. உபரி உற்பத்தி கிடைக்கும் பகுதிகளில் இருந்த கோயில் தலங்களைப் புனிதப்படுத்தவும், வலுவாக்கவுமே இந்த இசைப் பாடல் மரபு நடைபெற்றிருக்கிறது. நன்செய் நிலங்கள் எல்லாம் கோயில்களுடன் இணைக்கப்பட்டிருந்தன என்ற செய்தியும் முக்கியமானது. இன்னொரு வகையில் கோயில்கள் நிர்வாகத் தலங்களாகவும், நியாயத் தலங்களாகவும் விளங்கின என்பதும் முக்கியமானது. தமிழ் நாட்டில் வேளாண் வளர்ச்சியின் போது கிடைத்த உபரியைப் பகிர்ந்து கொண்ட வர்க்கங்களின் / சாதிகளின் இலக்கிய நடவடிக்கையே பக்தி இசைப் பாடல் மரபு.
♦ பக்தி இசைப் பாடல் மரபை அடிப்படையாகக் கொண்டெழுந்த விசிஷ்டாத்வைதம், சைவசித்தாந்தம் ஆகியவை தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு செயல்பட்டன?
இராமானுசர் ஆழ்வார்கள் பாடல்களைக் கொண்டே விசிஷ்டாத்வைதத்தை உருவாக்கினார். இராமானுசர் பற்றிய மரபுக் கதைகளிலிருந்து நமக்கு ஒரு விசயம் தெரியவருகிறது. அவர் சாதி, வருண முறையை எதிர்த்ததாகவும், அதனால் சோழப் பேரரசின் சினத்திற்காளாகி கர்நாடகத்திற்கு ஓடி விட்டதாகவும் அந்தக் கதை சொல்லுகிறது. தமிழக வரலாற்றில் முதன்முதலாக சாதி கடந்த மதரீதியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்த இராமானுசர் முயன்று உள்ளார் என்று தெரிய வருகிறது. இராமானுசரைத்தொடர்ந்து சைவத்திலிருந்து சாதிப் படிநிலையை எதிர்த்து வீர சைவம் கிளைத்து எழுகிறது.
இராமானுஜர்.
இந்தியாவிலேயே சாதி கடந்த மதம் சார்ந்த மக்களை ஒருங்கிணைக்க முயன்ற முதல் மனிதராக இராமானுசர் திகழ்கின்றார். இராமானுசர், வீர சைவத்தை நிறுவிய வசவர் பற்றிய கதைகளெல்லாம் நமக்கு ஒரு விஷயத்தைக் காட்டுகின்றன. அப்போது சாதி கடந்த ஒருங்கிணைப்பை வன்மையாக எதிர்த்த அரசுகள் இருந்திருக்கின்றன; ஆளுங்குழுக்கள் இருந்திருக்கின்றன. அரசுகளும், ஆளும் குழுக்களும் அவற்றை வன்முறையில் ஒடுக்கியிருக்கின்றன. அதனால் சாதி, வருண முறையை எதிர்த்த சித்தாந்தங்கள் சமரசம் செய்து கொண்டன. தமிழ் நாட்டில் நடந்த குகை இடி கலகங்கள் கூட இதையே நமக்குச் சொல்கின்றன. குகைகள் சைவ சூத்திரர்களின் சமயம் சார்ந்த இடங்கள் ஆகும். விசிஷ்டாத்வைதம் உருவான இருநூறு ஆண்டு களுக்குப் பின்புதான் சைவ சித்தாந்தம் உருவா கின்றது. சைவ சித்தாந்தம் பார்ப்பனர்களுக்குக் கிடைத்த சமயத் தலைமை சூத்திரர்களான வேளாளர்களுக்கு வேண்டுமென்று கோருகின்றது. இந்தப் பின்னணியில் சைவ, வைணவ நடைமுறைகளில் உள்ள சாதி, வருண நெகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும்.
விசிஷ்டாத்வைதம், சைவ சித்தாந்தம் இவ்வாறு எதிர்ப்புக்கு ஆளான போது,அவர்கள் சில சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது. அவர்கள் சொன்னார்கள் நாங்கள் பேசுவதும் வேதாந்தம் தான். சைவ சித்தாந்திகள் தாங்கள் சொல்வதே சுத்த வேதாந்தம் என்று சொன்னார்கள். அதனால் இக்காலத்தில் வேதாந்தம் பற்றித் தமிழில் ஏராள மான நூல்கள் வெளிவந்தன. கீதை மொழிபெயர்க்கப் பட்டது. ரிபுகீதை என்ற வேதாந்த நூல் 18-ஆம் நூற்றாண்டு வரை அதிகமான தமிழ் மாணவர் களால் பயிலப்பட்டது. கைவல்ய நவநீதம் சங்கர வேதாந்தத்திற்குப் பொழிவான மொழிபெயர்ப்பு. மறைமலையடிகள் வேதாந்தம் எங்கள் சொத்து என்றார். பார்ப்பனர்கள் சைவ சித்தாந்தத்தைச் சூத்திர வேதாந்தம் என்றார்கள்.
♦ இந்திய மெய்யியல் மரபுகளின் மையப் போக்குகளிலிருந்து விலகி நிற்கின்ற தமிழ்ச் சித்தர்கள் பற்றிக் கூறுங்கள்?
சித்தர்கள் தமிழ்ப் புலமை மரபில் அண்மைக் காலம் வரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தமிழ் மக்கள் மரபில்தான் சித்தர்கள் பற்றிய செய்திகள் இருக்கின்றன. சித்தர் பாடல்களுக்கு நல்ல பதிப்புகள் எவையும் இல்லை. சித்தர்கள் பற்றிய பேச்சே இன்றைக்கும் நாட்டுப்புறக் கதைகள் போலத்தான் இருக்கின்றது.
(இடமிருந்து) திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர்.
சித்தர்கள் பாடல்கள் சமயத்திற்கு எதிரானதாக இருக்கின்றது. சாதிக்கு எதிரானதாக இருக்கின்றது. சமூக அவலங்கள் பற்றிய பேச்சாக இருக்கின்றது. நிறுவனமயப்பட்ட சமயங்கள், கொள்கைகள் போன்று சித்தர்கள் தம்மை நிறுவனமயப்படுத்திக் கொள்ளவில்லை. சித்தர்கள் பலர் ஒன்றுசேர்ந்து வேலைகள் செய்ததாகச் செய்திகள் இல்லை. சித்தர்கள் இன்னார் என்று இன்று வரை நம்மால் வரையறுக்க முடியவில்லை. சித்தர்களுடைய கொள்கைகளுக்கு இந்திய மெய்யியல் போக்குகளுக்கு உள்ள, குறிப்பாகத் தாந்திரிகத்திற்கும், சாங்கியத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு நமக்குப் போதுமான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை; பாடல்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. இவையெல்லாம் செய்தால் பேச முடியும். அதற்கு முன் சொல்லப்படுவதெல்லாம் வெறும் அபிப்பிராயங்களாக மட்டுமே இருக்கும்.
♦ மையப் போக்கிற்கு முற்றிலும் எதிரான பூத வாதிகள் / உலகாயதர்கள் தமிழ் மரபில் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறார்கள்?
பூதவாதிகள் / உலகாயதர்கள் எழுதிய நூல்கள் தமிழிலும் இல்லை. இவர்கள் பற்றிய முதல் குறிப்பு மணிமேகலையில் கிடைக்கிறது. அடுத்து நீலகேசியிலும் வருகின்றது. உலகாயதர்கள் பற்றித் தமிழ் மரபில் ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. கடவுள் பேரில் மக்களை மோசடி செய்தவர்களைத் தாக்குவதற்கு, தோலுரித்துக் காட்டுவதற்கு பூதவாதிகள் / உலகாயதர்கள் கடவுளையே மறுத்தார்கள். அவர்கள் பெரும்பாலும் திதி சடங்கைக் கிண்டல் செய்தார்கள். கடவுள் இருக்கிறது என்று சொல்பவர்கள் ஏராளமாகப் பொய் சொல்லுகிறார்கள் என்பதைக் காட்டினார்கள். கடவுள் இருக்கிறது என்பதையும் மெய்ப்பிக்க முடியாது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள் செய்யும் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டினார்கள்.
தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.
ஆனால் கடவுள் பற்றிய கருத்து உலகளாவியதாக இருக்கின்றது. பழங்குடி மக்களிடமும் கடவுள் உண்டு. ஆனால் நிறுவனமயப்பட்ட கடவுள்கள் போன்று இல்லை. அந்தக் கடவுள்கள் பழங்குடி மக்களுடன் வாழ்ந்தும், இணைந்து போராடியும், அவர்களுக்கு உதவும் பண்பு கொண்டவை. இன்னும் கூடத் தமிழக மக்களிடம் குலதெய்வ வழிபாடே மேலோங்கி இருக்கிறது.
தமிழக மக்கள் தம் வேண்டுதல்களைக் குல தெய்வங்களிடம்தான் கேட்பார்கள். அதற்கப்புறம் அம்மன்கள்; அதற்கப்புறம் முருகன். தமிழ்நாட்டின் பெருந்தெய்வங்களான சிவன், விஷ்ணு கோயில்களில் தம் வேண்டுதல்களைக் கேட்க மாட்டார்கள். இப்போது திருப்பதிக்குச் சென்று வேண்டும் பழக்கம் இங்கு உண்டு. இது அந்தக் காலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா பண்டைய இந்தியாவில் உலகாயதம் என்பது தொல்-தாந்திரிகம்தான் என்று கூறியுள்ளார். இன்றும் கூட இவ்வுலக வாழ்வு நலன் சார்ந்த சடங்குகள்,நடைமுறைகள் குல தெய்வ வழிபாட்டில்தான் இருக்கின்றன. அங்கு தான் கள், மாமிசம், ஆண்-பெண் இன்ப நுகர்வு எல்லாம் ஏற்கப்படுகின்றன.
ஒரு மெய்யியல் முறையாக இல்லையென்றாலும் தமிழக மக்களிடையே இவ்வுலகு சார்ந்த சிந்தனை குலதெய்வ வழிபாட்டில் வலிமையாக இடம்பெறுகிறது. சிவஞான சித்தியார் 26-ம் பாட்டில் உலகாயதத்தையும்,வாமத் தந்திரியையும் இணைத்துப் பார்க்கிறார் அருள் நந்தி சிவாச்சாரியார். இந்தப் பழங்குடிச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டதுதான் சாங்கியம். உலகாயதர்கள், சாங்கியர்கள் அமைப்பாகச் செயல்பட்டதாக எங்கும் செய்திகள் இல்லை. கடவுள் மறுப்பு என்னும் விஷயத்தை முதன்முதலாக அமைப்புரீதியாக மக்களிடையே எடுத்துச் சென்றவர் பெரியார் மட்டுமே.
உரையாடியவர் : க.காமராசன் நன்றி : (உங்கள் நூலகம், Friday, June 10, 2011)
மனிதர்களை அவ்வப்போது வைரஸ்கள் எனும் நுண்ணியிரிகள் தாக்கி சேதங்களை உருவாக்குவது வரலாற்று காலத்தில் இருந்து நடந்து வரும் விசயமாகும்.
இந்த வைரஸுகள் குறிப்பிட்ட சில விலங்குகளிடம் இருந்து தனது பாதையை மாற்றிக்கொண்டு வீரியமிக்கதாக மனிதனைத் தாக்கும்.. முதல் உலகப்போர் காலத்தின் போது ஐரோப்பாவை இன்ப்ளூயன்சா வைரஸ் தாக்கியது நினைவிருக்கலாம். பல கோடி உயிர்களைக் காவு வாங்கிய வைரஸ் அது.
மாதிரிப் படம்.
அந்த வைரஸ் ஒவ்வொரு நான்கு தசாப்தங்களுக்கு ஒருமுறை தன்னை தகவமைத்துக்கொண்டு வந்து தாக்கும். அதுபோலவே இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்த SARS படையெடுப்பு (Severe Acute Respiratory Syndrome) இதுவும் சீனாவில் இருந்து வந்ததுதான். பலரது உயிரைக்காவு வாங்கியது. சமீபத்தில் கேரளாவைத் தாக்கிய நிஃபா வைரஸ்
இப்போது சீனாவின் வூஹான் எனும் 1.1 கோடி பேர் வாழும் நமது சென்னைக்கு நிகரான ஊரில் இருந்து கிளம்பி இருக்கும் பூதம் தான் “கொரோனா” வைரஸ். இந்த பூதம் அங்கு உண்ணப்படும் பாம்பு வெரைட்டிகளில் இருந்து வந்திருப்பதாக கூறப்படுகிறது.
எப்போதும் மனிதனை தாக்கி சீக்கிரமே மரணம் உண்டாக்கும் வைரஸ்களில் ஒரு ஒற்றுமை உண்டு. அவை நமது சுவாசப் பாதையை தாக்குவது தான். கொரானா வைரசும் நம் சுவாசப்பாதையை தாக்குகிறது.
1. தொண்டை வலி
2. வரட்டு இருமல்
3. சளி
4. மூக்கடைப்பு
5. தும்மல்
6. காய்ச்சல்
7. மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும்.
சுவாசப்பாதையை தாக்குவதால் மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு எளிதில் இருமுவதாலும் தும்முவதாலும் பரவும்.
இந்த வைரஸ் தாக்கும் அனைவருக்கும் மரணம் நேருதில்லை. இருப்பினும் 37% முதல் 40% மரண சதவிகிதம் இருப்பதால் அதிகமான முன்னெச்சரிக்கை தேவைப்படுகிறது.
நுரையீரல் செயலிழப்பு மூலம் மரணத்தை உண்டாக்குகிறது இந்த வைரஸ். இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெறுவது முக்கியம்.
இந்த வைரஸால் ஏற்படும் நியூமோனியாவுக்கு வைரஸ் கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. செயற்கை சுவாசம் தேவைப்பட்டால் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நீரிழப்பை ஈடு செய்வது. உடல் உஷ்ணத்தை சரிசெய்வது போன்ற சிகிச்சைகள் இந்த நோய்க்கு உண்டு.
நமது மாநிலத்திற்குள் கடல் வழி / சாலைகள் வழி / நீர் வழி சீனர்கள்/ சீனாவில் வியாபாரம் செய்து திரும்புபவர்கள் வந்தார்களேயானால் அவர்களை நோயின் அறிகுறி தோன்றும் நாட்களான மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தி பிறகு பரிசோதனைகள் செய்து நமது மாநிலத்துக்குள் விடலாம்.
இதை Quarantine என்போம்.
சீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான சிங்கப்பூர் / மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் மக்களை ரேடாரில் வைக்க வேண்டும்.
நோய் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தலாம் ( Isolation ).
சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றை நாம் லேசாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை பார்க்கலாம்.
மெடிக்கல் சாப்பில் நமக்கு நாமே மருத்துவம் பார்த்துக்கொள்ளாமல் இருக்கலாம்
சளி இருமல் இருப்பவர்கள் கைகளில் கைக்குட்டை வைத்துக்கொண்டு அதில் இருமலாம். தும்மலாம்.
அதிகமாக தண்ணீர் பருகலாம். விட்டமின் சி நிரம்பிய ஆரஞ்சு / லெமன் போன்ற பழங்களை உண்ணலாம்.
தினமும் எட்டு மணிநேரம் உறக்கம். நல்ல சத்துணவு சாப்பாடு போன்றவை நமது எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்
நமது மாநிலத்தை விட்டு மிகத் தேவையான காரணமன்றி செல்லாமல் இருப்பது நல்லது
சீனா.. ஜப்பான்… தாய்லாந்து… இன்னும் சீனர்கள் அதிகம் இருக்கும் சிங்கப்பூர் / மலேசியா போன்ற நாடுகளுக்கு இப்போதைக்கு செல்வதை தவிர்க்கவும்.
சிங்கப்பூர் / மலேசியா நாடுகளில் இருக்கும் நம் உறவுகள் கூடுதல் அலர்ட்டாக இருக்கவும்.
கொரனா வைரஸிடம் அலர்ட்டாக இருக்க வேண்டியது நமது பொறுப்பு. எங்கோ சீனாவில் தானே என்று இருக்க முடியாது. இன்றைய உலகில்
காலை சீனாவில் காபி குடித்து விட்டு மாலை சென்னையில் நடக்கும் ரிசப்சனுக்கு வந்துவிடலாம்.
மேலும் சீனர்கள் அதிகமாக இருக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நமது மக்கள் அதிகம். சீனாவிற்கு மலேசியாவும் சிங்கப்பூரும் தலைவாசல் கொல்லை வாசல் போல…
சிங்கப்பூர் மலேசியா வாழ் தமிழ் சொந்தங்களுக்கு தமிழ்நாடும் மலேசிய தீபகற்பமும் தலைவாசல் கொல்லை வாசல் போல… இப்போது புரிகிறதா நாம் எவ்வளவு அலர்ட்டாக இருக்க வேண்டும் என்று…
மனிதர்கள் வேகமாக நாடுவிட்டு நாடு பறப்பது போல தொற்று நோய்களும் வேகமாக பரவிவிடும். எனவே அதிகமான எச்சரிக்கை உணர்வு தேவை. அச்சம் தேவையில்லை.
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
காவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் அங்கு வேலை பார்ப்பவர்களின் மனநிலை தான் காரணமா ?
அருண் கார்த்திக்சமுதாயத்தில் மிக வேகமாக மாற்றங்கள் நடைபெற்று வருவதால் முக்கியமான அடிப்படை விஷயங்களைப் பற்றி பேச, மூச்சு விடக்கூட நேரமோ சந்தர்ப்பமோ கிடைப்பதில்லை. ஒரு அடிப்படையான விஷயத்தை ஒரு அடிப்படை இல்லாத விஷயத்துடன் ஒப்பிட்டு பேசலாம் என்று நினைத்தால் அதற்குள் இன்னொரு அடிப்படையில்லாத விஷயத்துக்கு தாவி விடுகிறார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் நடப்பதை ஒரு விஷயத்துடன் ஒப்பிட்டு பேசலாம் என்று நினைத்தால் அதற்குள் அயோத்தி தீர்ப்பு வருகிறது. சரி அயோத்தியையாவது ஒப்பிட்டு பேசலாம் என்று நினைத்தால் அதற்குள் குடியுரிமை சட்டம் வருகிறது. இப்படி, இவ்வாறான விஷயங்களை ஒவ்வொன்றாக நடத்திக் கொண்டே இருப்பதன் மூலம் அடிப்படை விஷயங்களைப் பற்றி நாம் பேசாமல் பார்த்துக் கொள்ள இவர்களால் முடிகிறதோ என்றுகூட தோன்றுகிறது.
இவ்வாறு பேச நினைத்த ஒரு விஷயம் காவல்துறை பற்றியது. காவல்துறை எளிய மக்கள் மீதும் போராடும் மக்கள் மீதும் அடக்குமுறையை ஏவ ஆளும்வர்க்கத்தால் உபயோகப்படுத்துப்படும் ஒரு ஆயுதம். காவல்துறை ஒடுக்குமுறை பற்றி நமக்கு தெரியும். JNU மாணவர்கள் மீதும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் காவல்துறையின் அடக்குமுறையை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்த கட்டுரை காவல்துறை நடத்தும் அடக்குமுறை பற்றியது அல்ல, காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருக்கும் பிரச்சினைகள் பற்றியது.
நவம்பர் 2019-ல், டெல்லியில் நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர்களுக்கும் காவலர்களுக்கும் வாகனம் நிறுத்துவத்தில் நடந்த ஒரு வாக்குவாதம் வன்முறையாக மாறி காவலர்களை வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கினார்கள். காவல்துறையில் இருந்த பெண் IPS அதிகாரி ஒருவரையும் தாக்கி அவரது துப்பாக்கி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அதன் பிறகு காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை ஒட்டி NDTV Hindi சேனலில் முக்கிய நேர செய்தியை வழங்கும் ரவிஷ் குமார், நவம்பர் 7-ம் தேதி அன்று, இந்தியாவில் காவலர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றி பேசினார். பின்வரும் தகவல்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டவை.
நீதி பரிபாலன துறை
முதலில் நீதிமன்றம் பற்றி பார்ப்போம். இந்திய துணை நீதிமன்றங்களில் ஒரு வழக்குக்கு தீர்ப்பு வர சராசரியாக 5 ஆண்டுகள் ‘மட்டுமே’ ஆகிறது என்று செய்திகள் வந்தது. ஒரு சாதாரண குடிமகன் இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் நீதிக்காக 5 ஆண்டுகள் ’மட்டுமே’ காத்திருக்க வேண்டும். 26 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளில் 45% வழக்குகள் உபி, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்தவை. இது நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளை பற்றிய நிலவரம்தான்.
இது போக, வழக்குகளை நீதிமன்றம் வரை எடுத்து செல்லும் காவல்துறை இயந்திரத்திலும் நிறைய பிரச்சனைகள் உள்ளன – நிரப்பப்படாமல் காலியாக உள்ள பதவிகள், சில இடங்களில் பதவிகள் எண்ணிக்கை குறைப்பு என பல பிரச்சனைகள் உள்ளன.
இந்நிலையில், இந்திய நீதிமன்றங்கள் பற்றி India Justice Report என்ற ஆய்வு அறிக்கையை vidhi centre for legal research என்ற அமைப்பு நவம்பர் 7-ஆம் தேதி வெளியிட்டது. நீதி துறையின் அமைப்பு என்பது நான்கு தூண்களை கொண்டது, முறையே, சிறைச்சாலைகள், காவல்துறை, சட்ட உதவி மற்றும் நீதிமன்றங்கள். இவற்றின் 5 ஆண்டு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதி (பட்ஜெட்), இருக்கும் பணியிடங்கள், அவற்றில் காலியாக இருப்பவை, இருக்க வேண்டிய பணியிடங்கள் என பல தகவல்களை திரட்டி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை
அறிக்கையின்படி, இந்திய அரசு நாட்டின் மொத்த உற்பத்தியில் (GDP) 0.08% மட்டுமே நீதித்துறைக்கு செலவு செய்கிறது. மத்திய அமைச்சர் P.B. சவுத்ரி மக்களவையில் அளித்த தகவலின்படி, 2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி, துணை, உயர் மற்றும் உச்சநீதிமன்றங்களில் 10 லட்சம் மக்களுக்கு 20 நீதிபதிகள் என்ற அளவிலேயே நீதிபதிகள் உள்ளனர்.
இந்த அறிக்கையின்படி, ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் தொகை உள்ள மாநிலங்களில் 18 மாநிலங்களில் 50 ஆயிரம் மக்களுக்கு ஒரு நீதிபதியே உள்ளார். 2016-17 நிலவரப்படி நாட்டில் உள்ள அனைத்து துணை மற்றும் உயர்நீதிமன்றங்களில் ஒரு நீதிமன்றம் கூட அனைத்து நீதிபதிகளும் நியமிக்கப்பட்ட நீதிமன்றமாக இல்லை, அனைத்திலும் நீதிபதி பதவிகள் காலியாக இருந்தன. 18 மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் 25% நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. இந்தியாவில் மொத்தம் 23,754 நீதிபதி பதவிகள் உள்ளன, இவற்றில் 4300 பதவிகள் காலியாக உள்ளன. அனைத்து பதவிகளும் நிறப்பப்பட்டால், 4,071 புதிய நீதிமன்ற அறைகள் தேவைப்படும்.
இந்த சூழலில் துணை நீதிமன்ற நீதிபதிகள் மீது எவ்வளவு வேலை பளு இருக்க வேண்டும் என்று நாம் புரிந்துகொள்ளலாம். பீகார், குஜராத், ஜார்கண்ட் மற்றும் உபி மாநிலங்களில் உள்ள துணை நீதிமன்றங்களில் 30%க்கு அதிகமான பதவிகள் காலியாக உள்ளன. பீகார் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் சுமார் 40% வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனவை.
18 மாநிலங்களில் நீதி துறை எவ்வாறு உள்ளது என்று இந்த ஆய்வறிக்கை தரவரிசைப்பட்டியலிட்டுள்ளது. அதில் உத்தர பிரதேசம் கடைசி இடத்திலும், பீகார் 17-வது இடத்திலும், ஜார்கண்ட் 16-வது இடத்திலும் உள்ளன. மஹாராஷ்டிரா முதல் இடத்திலும், கேரளா இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு 3ஆவது மற்றும் பஞ்சாப் 4ஆவது இடங்களிலும் உள்ளன.
22% காவலர் பதவிகள் காலியாக உள்ளன. சிறை துறையில் 33% பதவிகள் காலியாக உள்ளன. இவை அனைத்தும் 2016-17 ஆண்டுக்கான நிலவரம்.
குஜராத் மாநிலத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல்துறை, நீதிமன்றம் மற்றும் சிறைத்துறையில் உள்ள பதவிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஜார்கண்டில் ஐந்து ஆண்டுகளில் காலியாக உள்ள இடங்கள் அதிகரித்துள்ளன. 68% கைதிகள் under-trail, அதாவது, அவர்களுடைய வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன. ஐந்து ஆண்டுகளில் 13 மாநிலங்களில் மட்டும் under-trail கைதிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. இந்த 18 மாநிலங்களிலும் ஒன்றில் கூட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கான இட ஒதுக்கீடு பதவிகள் முழுமையாக நிறப்பப்படவில்லை. கர்நாடகாவில் மட்டும் அனைத்து இட ஒதுக்கீட்டு இடங்களும் நிறப்பப்பட்டுள்ளன, அங்கும் பட்டியலின பிரிவுகளுக்கான இடங்களில் 4% நிறப்பப்படாமல் உள்ளன.
10 மாநிலங்களில் காவல்துறை பதவிகள் குறைக்கப்பட்டுள்ளன, மக்கள் தொகை அதிகரித்தும் இந்த குறைப்பு நடந்துள்ளது. 24 மாநிலங்களில் காவல்துறை அதிகாரிகள் பதவிகளில் 20% காலியாக உள்ளன.
1995-ல் இருந்து, 1.5கோடி மக்களுக்கு மட்டுமே சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 80% மக்கள்தொகை ஏழையாக இருப்பதால் சட்ட உதவியை நம்பி உள்ளனர்.
பட்ஜெட் ஒதுக்கீடு தான் காரணமா?
இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபொழுது, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் உடனிருந்தார். அவரிடம் நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியில் (GDP) சுமார் 0.8% மட்டுமே நீதித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது, இது அதிகரித்தால் ஏதாவது மாற்றம் வருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. “அதிகமான தொகை ஒத்துக்கப்பட்டாலும் அதை எப்படி செலவிடுவது என்ற திட்டம் வேண்டும், 13ஆம் நிதிக்குழு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கியது, அதில் 1,010 கோடி மட்டுமே செலவிடப்பட்டது, சுமார் 4,000 கோடியை நீதித்துறையால் செலவிட முடியவில்லை” என்று லோகுர் தெரிவித்தார்.
இந்த தகவல்களை எல்லாம் வைத்து பார்த்தால் இந்தியாவில் உள்ள காவல்துறை பெரும்பாலும் ‘சம்மட்டி’ முறையை ஏன் கையாள்கிறது என்பதற்கான ஒரு காரணம் புரியும். சம்மட்டி முறை என்பது, எல்லா பிரச்சனைகளுக்கு வன்முறையை பயன்படுத்துவது. எடுத்துக்காட்டாக, மக்கள் ஒரு பிரச்சனைக்காக போராடுகிறார்கள் என்றால் அவர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிவதற்கு முன்னரே அவர்களை தடியடி நடத்தியும், புகை குண்டு வீசியும் விரட்டி அடிப்பது.
ஒரு வன்புணர்வு நடந்தால் குற்றம் சுமத்தப்பட்டவர்களை பிடித்து வழக்கு நடத்தி தண்டனை வாங்கி கொடுக்காமல் அவர்களை சுட்டுதள்ளுவது. பொதுவாகவே காவல்துறை மக்களோடு சுமூகமாக நடந்துகொள்வது இல்லை. இரண்டு காவலர்கள் செய்யும் வேலையை ஒருவர் செய்தால் அவரால் நன்றாக எப்படி செயல்பட முடியும்.
காவல்துறை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பாரபட்சம் இல்லாமல் செயல்படுவது இல்லை. மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்த போராட்டத்தில் ஈடுபட்ட நாகை திருவள்ளுவனை அடிப்பார்கள் ஆனால் காவல்துறையை கேவலமாக திட்டிய H.ராஜாவிடம் கெஞ்சுவார்கள். இதற்கு மற்ற சமூக காரணங்கள் உள்ளன. ஆனால், பொதுவாகவே காவல்துறை ஒழுங்காக செயல்படாமல் இருக்க, புகார்களை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்க, அந்த அமைப்பில் இருக்கும் குறைகள் ஒரு முக்கிய காரணம்.
நீதிமன்றங்களில் நீதி தாமதம் ஆவதற்கும், காவல் துறையால் மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதற்கும் அரசியல் தலையீடும், நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்கிற நிலையும் (accountability) முக்கிய காரணங்கள். அரசியல் தலையீடும், கேள்வி கேட்க முடியும் என்கிற நிலை வந்தாலும் கூட இந்த கட்டமைப்பில் இருக்கின்ற நிரப்பப்படாமல் இருக்கின்ற காலி இடங்களும்; அதிகரிக்கப்படாத பணியிடங்களும் சரியான முறையில் நீதி பரிபாலனம் நடப்பதை தடுத்துவிடும்.
நாலு காவலர்கள் இருக்கும் ஒரு காவல்நிலையத்தில் ஒரே நேரத்தில் நாலு வன்புணர்வு புகார்கள் வந்தால் அந்த காவலர்கள் எவ்வளவு தான் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருந்தாலும் அவர்களால் அந்த புகார்களை ஒழுங்காக விசாரிக்க முடியாது, விசாரித்து வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லவும் முடியாது. ஆக, நீதிமன்றங்களில் நீதி கிடைக்காமல் இருப்பதற்கும் நீதி கிடைக்க மிக நீண்ட கால தாமதம் ஆவதற்கும் அந்த அமைப்பில் உள்ள பிரச்சனைகளும் ஒரு முக்கிய காரணம்.
இந்த குறைகளை புரிந்துகொள்ளாமல், அவற்றை நிவர்த்தி செய்யாமல், காவல்துறையிலோ, நீதித்துறையிலோ மக்களுக்கு சாதகமான மாற்றங்கள் வரவைக்க முடியாது.
“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
ஆனால் நமது ஆளும் வர்க்கம் என்ன சொல்கிறது, தண்டனைகளை அதிகப்படுத்துவதன் மூலம் குற்றங்களை குறைக்க முடியும் என்று சொல்கிறது. போராடுபவர்களை தேச விரோதிகள் என்று சொல்கிறது. அதற்கேற்றாற்போல் காவல்துறையில் செயல்படுகிறது. நமக்கும் அதை நம்ப எளிதாக இருக்கிறது.
நமது புரிதலிலும், அதன்மூலம் ஆளும் அமைப்பிலும் மாற்றங்கள் வரும் வரை நீதி பரிபாலன துறையும் மக்களுக்கு எதிரானதாகவே இருக்கும்.
மக்களை மூச்சுவிட முடியாதபடி – தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக யோசிக்க முடியாதபடி ஆர்.எஸ்.எஸ். – பார்ப்பன பயங்கரவாதம் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் ஒரு அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து, கொரோனோ வைரசைப் போல நாட்டு மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக தமிழக இளைஞர்கள் வீதியில் இறங்க வேண்டிய அவசியம் உள்ளது. நாம் இப்போது இறங்கத் தயங்கினால் நமது தெருக்களை ‘அவர்கள்’ ரத்தத்தால் நிரப்பி விடுவார்கள் !
இதையும் பாருங்க …
நெருங்குவது காவி இருளடா… | கோவன் பாடல் | Beware of Saffron Terror | PALA Kovan Song
இந்தி மொழி திணிப்பிற்கு எதிராகப் போராடி தமிழகத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவை அனுசரிக்கும் விதமாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புத்தோழர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.
ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர்.ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் மற்றும் தோழர் கோவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புத் தோழர்களும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் மாற்று கட்சி நண்பர்களும் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.
1 of 12
”தமிழ் மொழியின் மீதான இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு உயிர்நீத்த தாளமுத்து – நடராசன், கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளின் போர்க்குணத்தை நெஞ்சில் ஏந்துவோம்! தமிழ்மொழி மீது சமஸ்கிருதத்தை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் காவி பாசிசத்தை முறியடிப்போம்!!” என்ற முழக்கப் பதாகையுடன் பேரணியாகச் சென்ற தோழர்கள், மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடித்தும் இந்தியை திணிக்கும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ். கும்பலை அம்பலப்படுத்தும் வகையிலும் தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.
ஜனவரி-25 மொழிப்போர் தியாகிகள் நாளை நினைவு கூறும் விதமாக, ஜனவரி-24 அன்று மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மொழிப்போர் தியாகிகளின் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியும், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியும் தியாகிகளை நினைவு கூர்ந்தனர்.
1 of 4
அத்துடன் சம காலத்தில் மத்திய அரசின் நடவடிக்கையும் சமஸ்கிருதத் திணிப்பு, மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தியாகிகள் போராடிய வழியில் நாமும் போராடவேண்டும் என்று உறுதியேற்றனர்.
உயிர் பிழைப்பதற்கான மரண ஓட்டத்தில் ஐரோப்பாவை அடைவதற்குள் 12,000 ஆப்பிரிக்க அகதிகள் மத்தியத்தரைக்கடலில் மூழ்கிவிட்டனர். தப்பி ஓடிவரும் ஆப்பிரிக்க அகதிகளுக்கு முதன்மையான நுழைவாயிலாக லிபியா இருக்கிறது. அங்கு தற்போது 6,36,000 -க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அண்டை நாடுகள் மற்றும் சகாரா கீழமை ஆப்பிரிக்காவிலிருந்து (sub-Saharan Africa) வந்தவர்கள் என்று சர்வதேச அகதிகள் அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
இந்த அகதிகள் பெரும்பாலும் வறுமை, உள்நாட்டு போர், கட்டாய உழைப்பு மற்றும் உயிர் வாழ்வதற்கான அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்களது தாயகத்தை விட்டு வெளியேறுகிறார்கள். ஆட்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வன்முறைகளால் வரும் வழியிலேயே பாதிக்கப்படும் அவர்களுக்கு லிபியாவிற்குள் நுழைவது மட்டுமே தற்காலிகமான ஆறுதலாக தோன்றலாம். ஆனால் லிபியாவிலும் அவர்களுக்கு பாதுகாப்பில்லை.
“நீங்க இங்க பாருங்க” என்று செய்த வேலைக்கு கூலி கேட்ட போது ஒரு லிபியாக்காரர் அடித்ததால் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தை அல்ஜசீரா நிருபருக்கு காட்டினார் அகதியான கரிம். பின்னர் அவர் தனது வலது காலை சுட்டிக்காட்டினார். “திரிப்போலியில் வேலைக்காகக் காத்திருந்தபோது என்னுடைய காலில் சுட்டுவிட்டார்கள். அங்கே சட்டத்திற்கு வேலையில்லை. அனைவரிடமும் துப்பாக்கிகளும் கத்திகளும் உள்ளன. கத்தியால் குத்தப்பட்டாலோ, துப்பாக்கியால் சுடப்பட்டாலோ கறுப்பின மக்களுக்கு அங்கே எந்த உரிமையும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.
கேமரூனிலிருந்து உயிர்பிழைக்க லிபியா ஓடிவந்த புளோரண்ட் அங்கிருக்கும் கொடுமை தாளாமல் மீண்டும் அங்கிருந்து தப்பி மத்தியத்தரைக்கடலில் ஒரு ரப்பர் படகின் மூலம் காப்பாற்றப்பட்டார். “நான் இப்போது செத்துப் போனால் கூட எனக்கு எந்த வருத்தமும் இல்லை. லிபியாவிலிருந்து எப்படியோ தப்பி விட்டேன். நரகம் அது.” என்று அவர் கூறினார்.
நள்ளிரவில் படகுகளில் ஏறுமாறு மக்களிடம் கூறுகிறார்கள். “நீங்கள் எதையும் பார்க்க முடியாது. இங்கே இருட்டாகவும் பயமாகவும் இருக்கிறது. ஆனால் லிபியாவிலிருந்து வெளியேறவில்லை என்றால் இங்கேயே செத்துவிடுவீர்கள் என்று உங்களுக்குத் தெரியும்” என்று 17 வயதான சாருணா கூறினார். “நீங்கள் புறப்படுவதற்கு முன்பு குடும்பத்திடம் பேசிவிடுங்கள். நீங்கள் கடலில் பிழைப்பீர்களா என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் கடவுளிடம் வேண்டிக்கொண்டு புறப்படுங்கள்” என்று கூறினார்.
“வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டால், எதற்கும் நீங்கள் இனி பயப்பட மாட்டீர்கள்” என்று சாவ் கூறினார். இது கடைசிப் பயணமாக கூட இருக்கலாம் என்பதால் இப்படி அவர் கூறினார். செத்தது போக எஞ்சியவர்கள் கிட்டத்தட்ட 9,000 பேர் சென்ற ஆண்டு லிபிய கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்பு மையங்களில் அடைக்கப்பட்டனர்.
சென்ற ஆண்டு மட்டும் 1,10,000 க்கும் மேற்பட்ட அகதிகள் கடல் வழியாக ஐரோப்பாவிற்கு வந்தனர். ஆனால் வட ஆப்பிரிக்க அகதிகளில் 1,283 பேர் லிபியாவிலிருந்து ஒரு வழியாக தப்பினாலும் மத்தியத்தரைக்கடலில் மூழ்கி மடிந்து போயினர். “மத்தியத்தரைக்கடலில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது” என்று ஓஷன் வைக்கிங் (Ocean Viking) மீட்புக் கப்பலின் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் ரோமானியுக் (Nicholas Romaniuk) கூறினார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீட்பு பணியில் இல்லையென்றால் “மத்தியத்தரைக்கடலே இரத்தமயமாகியிருக்கும்” என்று ஐ.நா எச்சரித்துள்ளது. 1,100 க்கும் மேற்பட்டவர்களை ஆகஸ்ட் 2019-ம் ஆண்டு முதல் மீட்பு கப்பலான ஓஷன் வைக்கிங் மீட்க முடிந்தது. ஆனால் கடந்த காலங்களில், ஐரோப்பாவிற்கு ஆட்கடத்தல் செய்ததாக அந்த கப்பல் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகள் வரை இத்தாலியில் சிறைத்தண்டனை கிடைத்தது. கடத்தல்காரர்களுக்கும் சட்டத்திற்கு புறம்பான குடியேற்றத்திற்கும் உதவியதாக அவர்கள் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
லிபியாவில் தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியன பற்றிய கதைகளை லிபியாவிலிருந்து தப்பிய அகதிகள் அல்ஜசீராவிடம் பகிர்ந்து கொண்டனர். அதில் சிலர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வரை லிபியாவில் இருந்துள்ளனர். மின்சாரத் தாக்குதல், கத்தி வெட்டுகள், துப்பாக்கிச் சூடு, ரப்பர் மற்றும் உலோகக் குழாய்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர்களைப் பார்த்ததாக பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர். “நீங்கள் அலைகளைப் பார்க்க மாட்டீர்கள், ஒரு படகுக்காக மட்டுமே காத்திருப்பீர்கள். லிபியாவிலிருந்து வெகு தொலைவில் விடுதலையை மீண்டும் பெறுவதற்கான உங்களது வாய்ப்பு இதுதான்” என்று மத்திய ஆப்பிரிக்க குடியரசைச் சேர்ந்த சாவ் கூறினார்.
லிபியாவில் குடியேறியவர்களில் 10 விழுக்காடு பெண்கள் என்று IOM மதிப்பிடுகிறது. பாலியல் பலாத்காரம், உயிரிழப்புகள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அபாயங்கள் குறித்து லிபியாவிற்கு கடத்தப்பட்ட அகதிகள் புகார் அளித்ததாக அந்நிறுவனம் கூறியது. எட்டு மாத கர்ப்பிணியான (இரட்டை குழந்தை) கெல்லி (32 வயதாகிறது), லிபியாவிலிருந்து தப்பிப்பிழைக்க ஒரு ரப்பர் படகில் ஏறினார். “நீரில் இறங்க நான் விரும்பவில்லை. இது மிகவும் ஆபத்தானது. பயணம் முடியாவிட்டால் செத்து போய்விடுவேன் என்று நினைத்தேன்” என்று நவம்பரில் மீட்கப்பட்ட பின்னர் அவர் கூறினார்.
தற்போது லிபியாவில் கிட்டத்தட்ட 45,000 குழந்தை அகதிகள் உள்ளனர், அவர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் ஆதரவற்றவர்கள். தங்களது நாட்டை விட்டு வெளியேறும்போது தங்கள் குழந்தைகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் சில பதின்பருவ அகதிகளுக்கு ஏற்பட்டது. பயணத்தின்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சில பெண் அகதிகளுக்கு லிபியாவிலோ அல்லது செல்லும் வழியிலோ குழந்தை பிறக்கிறது.
ஐரோப்பாவை அடைந்து விடலாம் என்ற அகதிகளின் கனவுக்கு அருகில் அவர்களை எடுத்து செல்கிறது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன படகு. பயணம் இன்னும் முழுமையடையவில்லை. ஐரோப்பாவில் புகலிடமும் இன்னும் கிடைத்தபாடில்லை. எனினும், தாய்நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டதாக அவர்கள் கூறினார்கள். “லிபிய கடலோர காவல்படையினர் இப்போதே கப்பலில் வந்தால், என்னுடைய தலையை சுவரில் அடித்து நொறுக்குவேன், தொண்டையை அறுத்து தண்ணீரில் குதித்து விடுவேன். லிபியாவுக்கு திரும்பி செல்வதை விட இது நன்றாக இருக்கும்” என்று கேமரூனைச் சேர்ந்த புளோரண்ட் கூறினார்.
“துப்பாக்கிச் சூட்டு ஓசை கேட்டு கண்விழிக்க வேண்டிய பயமில்லாமல் தூங்க முடிகிறது. அல்லது கடத்தப்படுவோம் என்ற பயமின்றி இருப்பது ஒரு நற்பேறு” என்று மீட்கப்பட்ட அகதிகளில் ஒருவர் கூறினார். சூடான உணவுக்கும், குளிப்பதற்கும், மக்களுடன் பேசுவதற்கும் வாய்ப்பு கிடைத்ததால் நிம்மதியுடன் இருப்பதாக மற்றவர்கள் கூறினார்கள். எங்களை மீட்டவர்கள் அவர்கள் லிபியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று சொன்னபோது நான் அழ ஆரம்பித்தேன். நான் மீட்கப்படுவேன் என்றோ கடலில் சாகமாட்டேன் என்றோ என்னால் நம்ப முடியவில்லை.” என்று மேலும் கூறினார்.
நிலத்திலும் கடலிலும் கடுமையான பயணங்களினால் ஏற்பட்ட துன்பங்கள் “ஐரோப்பாவின் பாதுகாப்பினால்” மகிழ்ச்சியாக மாறும் என்றும் தங்களது குடும்பத்தினருக்கு வீடுகளும் அவர்கள் கொடுப்பார்கள் என்றும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் நம்புகிறார்கள். “என்னுடைய அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். இழப்பதற்கு எதுவுமே இல்லாததால் நானும் என்னுடைய மனைவியும் நைஜீரியாவை விட்டு வெளியேறிவிட்டடோம்” என்று 37 வயதான சோண்டி கூறினார்.
மீட்புப்பணி சூழலானது சில நொடிகளில் கொடியதாக மாறிவிடுவதால் மீட்பர்களின் வேலை அவ்வளவு எளிதல்ல. கரடுமுரடான கடல்கள், சோதனையான நிலைமைகள் மற்றும் சூழ்நிலையின் நெருக்கடி மற்றும் கணிக்க முடியாத தன்மை ஆகியவை சூழலை மேலும் கடினமாக்குகின்றன. “மக்களை மீட்பது அவர்களது உரிமை எனவே நாங்கள் அவர்களை மீட்கிறோம்.” என்று ருமேனியாவை சேர்ந்த மீட்பரான டிராகோஸ் கூறினார். “ஒரு குதிரையையோ அல்லது பசுவையோ நீரில் கண்டால் அவற்றை நீங்கள் கப்பாற்றுவீர்கள். ஏனெனில் அவற்றிற்கான இடமல்ல அது” என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு படகிலிருந்து புறப்படும் பெரும்பாலான அகதிகளுக்கு லிபியாவிலிருந்து இத்தாலிக்கு எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. கடக்க வேண்டியது ஒரு சிறிய ஆறு மட்டுமே என்று 100 கி.மீ (62 மைல்) தொலைவில் உள்ள கடல் எண்ணெய் கிணறுகளின் விளக்குகளை ஆட்கடத்தல்காரர்கள் சிலர் சுட்டிக்காட்டி அங்கு தான் செல்ல போவதாக கூறுகிறார்கள். கேள்விப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் தூரம் குறைவாக இருந்ததாகவும் ஆனால் பயணம் மிக நீண்டதாக இருந்ததாக தப்பிப்பிழைத்த அகதிகள் கூறினார்கள்.
“நான் ஒரு தீயணைப்பு வீரராக அல்லது மீட்புவீரராக இருந்தபோது, என்னுடைய வேலைக்குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. இப்போது நான் இன்னும் உயிர்களைக் காப்பாற்றி வருகிறேன் ஆனால் என்னுடைய வேலை கேள்விக்குள்ளாக்கப்படுவதுடன் குற்றமயமாக்கப்படுகிறது. உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு சாதரண மீட்புவீரன் நான்” என்கிறார் டங்குய். மீட்புப்பணியின் போது தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்தும், ஒரு ரப்பர் படகு தங்கள் கண் முன்னாலேயெ கவிழக்கூடும் என்ற அச்சத்தைப் பற்றியும் மீட்புவீரர்கள் பேசினர். “கடலில் ஏற்படும் அதிர்ச்சிகரமான அனுபவங்கள் எங்களிடம் ஒரு வடுவை விட்டுச்செல்கிறது” என்று தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் ரோமானியுக் கூறினார்.
சொந்த நாடுகளிலிருந்து கிளம்பும் சமயத்திலிருந்தே தங்களுக்கு ஏற்பட்ட உடல்ரீதியிலான பாலியல் துன்புறுத்தல் குறித்த கதைகளை காப்பாற்றப்பட்ட பெண் அகதிகள் கூறினார்கள். லிபியா செல்லும் வழியில் பலர் சித்திரவதைகளையும் பாலியல் பலாத்காரத்தையும் எதிர்கொண்டனர். லிபியாவுக்கு வந்த பிறகு, தெருக்களிலும், துப்புரவாளர்களாக அவர்கள் கட்டாயமாக வேலை வாங்கப்பட்ட போதும் எல்லா இடங்களிலும் பாலியல் வன்முறைகளை அவர்கள் சந்தித்தனர். சில பெண்கள் தங்கள் பிறப்புறுப்புகள் எரிக்கப்பட்டதாகக் கூறினர்.
ஐரோப்பாவில் இறங்கத் தயாராகும் அதே நேரத்தில் குடிவரவு அதிகாரிகளின் முன்னால் கடுமையான சோதனைகள் தங்களுக்கு காத்திருக்கின்றன என்பதையும், அவர்களின் பயணம் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் மீட்கப்பட்ட அகதிகள் உணர்கிறார்கள். இத்தாலியால் 2019-ம் ஆண்டில் 5,000-க்கும் மேற்பட்ட அகதிகள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர். இதை ஒப்பிடும்போது, முன்னர் பயணத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட வன்முறை, கொடுமைகள் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவையெல்லாம் ஒன்றுமே இல்லை.
மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 10
அன்றைய தினம் (வாழ்க்கையில் ஒரே தரம்) அவன் அலுவலகம் செல்லவில்லை. மறுநாள் முகமெல்லாம் வெளிறிப் போய், பழைய ‘கப்போத்தை’ மாட்டிக்கொண்டு அலுவலகம் சேர்ந்தான்; ‘கப்போத்தோ’ முன்னெப்போதையும்விடக் கேவலமாகக் காட்சியளித்தது. அவனுடைய மேல்கோட்டு பறிபோன செய்தியைக் கேட்டு (இந்தச் சந்தர்ப்பத்திலும் அக்காக்கியை நையாண்டி செய்யாமலிருக்கச் சிலரால் முடியவில்லை என்றாலும்) பெரும்பாலான சக எழுத்தர்களுக்கு இரக்கமாயிருந்தது. அவனுக்காக அப்போதே நிதி திரட்டுவதென்று நிச்சயித்தார்கள், ஆனால் மிக அற்பத் தொகையே வசூலானது. ஏனெனில் இயக்குநரின் உருவப்படத்திற்காகவும், ஏதோ ஒரு புத்தகத்தை அதன் ஆசிரியனின் நண்பனான துறைத் தலைவன் சொன்னதன் பேரில் வாங்குவதற்காகவும் நிதி கொடுத்ததால் எழுத்தர்கள் ஏற்கெனவே பெருந்தொகை செலவழித்து விட்டிருந்தார்கள்.
ஆக அக்காக்கியின் பொருட்டு வசூலான தொகை மிகச் சொற்பமே. எழுத்தன் ஒருவன் இரக்கங்கொண்டு அக்காக்கிய்க்கு உதவி செய்வோம் என்று தீர்மானித்து, அவன் இன்ஸ்பெக்டரிடம் போவதில் பயனில்லை என்றும், ஏனென்றால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்காக இன்ஸ்பெக்டர் ஒருக்கால் கோட்டைக் கண்டுபிடித்து விட்டாலுங்கூட, அக்காக்கிய் கோட்டு தன்னுடையது தான் என்று நிரூபிப்பதற்குச் சட்ட பூர்வமான அத்தாட்சிகளைக் காட்டாவிட்டால் கோட்டு போலீசார் வசமே தங்கிவிடுமென்றும், ஆகையினால் அவன் ஒரு முக்கிய நபரிடம் போவதே மேல் என்றும் அந்த முக்கிய நபர் சரியான ஆட்களுக்கு எழுதியும் அவர்களோடு பேசியும் விவகாரம் விரைவாக நடக்கும்படி செய்ய முடியுமென்றும் சொன்னான்.
அக்காக்கிய் வேறுவகையின்றி அந்த முக்கிய நபரிடம் போவது என முடிவு செய்தான். இம்முக்கிய நபர் என்ன வேலை பார்த்தார், அதன் தரம் என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை. இம்முக்கிய நபர் சமீபத்தில்தான் முக்கிய நபராக்கப்பட்டார் என்பதையும் அதற்கு முன் அவர் முக்கியமற்றவராகவே இருந்தார் என்பதையும் தெரிந்து கொண்டால் போதுமானது. தவிர, அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அவருடைய பதவி இப்பொழுது கூட அவ்வளவு முக்கியத்துவம் உள்ளதாகக் கருதப்படவில்லை. ஆனால் மற்றவர்கள் கண்களுக்கு முக்கியமற்றதாகப்படுவதை முக்கியமானதாக மதிப்பவர்கள் எப்போதுமே இருந்து வருவார்கள் அல்லவா? அதோடு கூட இந்த முக்கிய நபர் தமது முக்கியத்துவத்தை வேறு பலவகைகளில் அதிகரிக்க முயன்றுவந்தார்:
அதாவது, தாம் அலுவலகம் வந்து சேரும் பொழுது தம் கீழ் வேலை பார்ப்பவர்கள் எல்லாரும் மாடிப்படியில் தம்மை எதிர் கொள்ள வேண்டுமென்றும், பேட்டி காண்பதற்காக முன்கூட்டி மனுச் செய்துகொள்ளாதவன் எவனையும் தமது அலுவலகத்துக்குள் வரவிடக் கூடாதென்றும், எல்லாக் காரியங்களும் கண்டிப்பான வரிசைக் கிரமப்படி செய்யப்பட வேண்டுமென்றும், உதாரணமாக பிராந்தியச் செயலாளன் மண்டலச் செயலாளருக்கும், மண்டலச் செயலாளர் பட்டம் பெற்ற ஆலோசகருக்கோ அல்லது கிரமமான வேறு எவருக்கேனுமோ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த வழியாகவே விவகாரம் தம் பார்வைக்கு வர வேண்டும் என்றும் அவர் நியமப்படுத்தியிருந்தார்.
புனித ருஷ்யத் திருநாட்டிலோ, காப்பியடிப்பது தொற்று நோய் போல் பரவியிருக்கிறது, ஒவ்வொருவனும் தனக்கு மேல் பதவியிலிருப்பவனைப் போலவே செய்கிறான், அவன் தோரணையைக் காப்பியடிக்கிறான். ஒரு கதைகூடச் சொல்லுவார்கள்: எவனோ பட்டம் பெற்ற ஆலோசகன் இருந்தானாம்; ஒரு சிறிய அலுவலகத்துக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டதுமே அவன் தனக்காக ஒரு தனி அறை ஏற்படுத்திக் கொண்டு, “பேட்டி காணும் அறை” என அதற்குப் பெயரிட்டு, சிவப்புக் காலர்களும் டவாலிகளுமாக இரண்டு சேவகர்களை அதன் வாயிலில் நிறுத்தி, கதவுப்பிடியைப் பற்றிக் கொண்டிருக்கும் படியும் தன்னைக் காண வருபவர்களுக்குக் கதவைத் திறந்து விடும்படியும் அவர்களுக்கு உத்தரவிட்டானாம். இந்த லட்சணத்தில் “பேட்டி காணும் அறை”யிலோ, சாதாரண எழுது மேசை போடுவதற்குக் கூட இடம் பற்றாதாம்.
முக்கிய நபரின் தோரணைகளும் பழக்க வழக்கங்களும் கனமும் படாடோபமும் பொருந்தியவை ஆயினும் நய நுட்பமற்றவை. கண்டிப்புதான் அவருடைய முறையின் பிரதான அடிப்படை. “கண்டிப்பு, கண்டிப்பு, இன்னும் கண்டிப்பு!” என்று சொல்வதும் கடைசி வார்த்தையைச் சொல்கையில் கேட்டுக் கொண்டிருப்பவனது முகத்தை கூர்ந்த நோக்குவதும் அவர் வழக்கம். இந்தக் கண்டிப்புக்கு விசேடத் தேவை இருந்ததாகவும் தெரியவில்லை, ஏனெனில் அவருடைய அலுவலகத்தின் நிர்வாக எந்திரமாக விளங்கிய மொத்தம் பத்துப் பன்னிரண்டு எழுத்தர்கள் அது இல்லாமலே ஒரேயடியாகக் கிலியடித்துப் போயிருந்தார்கள். அவர் தூரத்தில் வரக் கண்டதுமே அவர்கள் எல்லாரும் வேலையை நிறுத்தி விட்டு எழுந்து நிமிர்ந்து நின்று, தலைவர் அறையைக் கடந்துசெல்லும் வரையில் அப்படியே இருப்பார்கள். தம்கீழ் வேலை செய்பவர்களிடம் அவரது வழக்கமான உரையாடலில் கண்டிப்பு தொனிக்கும்; பெரும்பாலும் அது மூன்றே வாக்கியங்கள் கொண்டிருக்கும்:
“எப்படி ஐயா உமக்குத் துணிச்சல் வந்தது? யாரோடு பேசுகிறோம் என்று தெரியுமா ஐயா உமக்கு? புரிகிறதா ஐயா உமக்கு முன்னே நிற்பது யார் என்று?” இவ்வளவிற்கும் அவர் நல்ல உள்ளம் படைத்தவர், கூட்டாளிகளுடன் கலகலப்பாயிருப்பார், உதவி செய்வார். ஜெனரல் பதவி கிடைத்ததுமே அவர் மூளை கிறுகிறுத்துப் போயிற்று, தடம் புரண்டுவிட்டது, எப்படி நடந்து கொள்வதென்று அவருக்குப் பிடிபடவேயில்லை. சம தகுதியுள்ளவர்களுடன் பழகும் போது அவர் சாதாரண மனிதராக, மிக ஒழுங்கான மனிதராக, பல விஷயங்களில் அறிவீனர் என்று சொல்ல முடியாதவராக விளங்கினார்; ஆனால் தம்மைவிட ஒருபடி மட்டுமே தாழ்ந்தவர்கள் இருக்கும் கூட்டங்களில் கூட அவர் திக்குத் திசை தெரியாதவர் போல விழிப்பார்; வாயிலிருந்து வார்த்தையே கிளம்பாது; அப்போது அவருடைய நிலைமை இரங்கத்தக்கதாக இருக்கும். நேரத்தை எவ்வளவோ இன்பமாகக் கழித்திருக்கலாமே என்று அவருக்கே தோன்றுமாதலால் நிலைமை விசேடப் பரிதாபத்துக்கு உரியதாயிருக்கும்.
சுவையான உரையாடல் எதிலேனும் பங்கு கொள்ளவோ, ரசமான பேர்வழிகளுடன் அளவளாவவோ பலத்த விருப்பம் அவர் மனத்தில் எழுவதைச் சில சமயம் அவரது விழிகள் காட்டும்; ஆயினும் தாம் அவ்வாறு செய்வது தவறாகக் கருதப்படுமோ, அனாவசியச் சொந்தம் பாராட்டுவதாகி விடுமோ, அதனால் தமது மதிப்பு தாழ்ந்து போய்விடுமோ என்ற எண்ணம் அவரைத் தடுத்து நிறுத்தி விடும். இந்தத் தர்க்கத்தின் பலனாக அவர் பேசாவாயராய், அபூர்வமாக எதேனும் ஓரசை ஒலியைக் கிளப்புவதுடன் நின்று கொள்ளும் நிலைமையிலேயே நிரந்தரமாக இருந்து வந்தார்; இந்தக் காரணத்தினாலேயே ‘படு போர்’ என்ற பட்டத்தையும் பெற்றிருந்தார்.
இத்தகைய முக்கிய நபர் முன்னிலையில்தான் நமது அக்காக்கிய் நின்றான், அதுவும் மிக மிக அனுகூலமற்ற நேரத்தில் – அதாவது தனக்கு, முக்கிய நபருக்கல்ல.