Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 338

தற்கொலை தேசமா நம் இந்தியா ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

மீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா எனும் போட்டியாளர் தற்கொலை முயற்சி செய்ததாக போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகளை காணமுடிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் கேமராக்களுக்கு முன் தற்கொலை முயற்சி செய்ததால் தற்கொலை பற்றி பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தற்கொலை என்பது மிகவும் சாதாரணம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

♦ உலகில் தற்கொலை செய்து கொள்ளும் மூன்று பெண்களில் ஒருவர் இந்தியர்.
♦ தற்கொலை செய்து கொள்ளும் நான்கு ஆண்களுள் ஒருவர் இந்தியர்.
♦ வருடந்தோரும் 2.5 லட்சம் பேரை தற்கொலைக்கு இழக்கும் தேசம் இந்தியா.
♦ உலகில் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சதவிகிதம் 7 தான் என்றால் நம் நாட்டில் அது 15 சதவிகிதம்.

திருமணமான பெண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். காரணம் – வரதட்சணைக் கொடுமை, பெண் பிள்ளை பெற்றால் கொடுமை, பிள்ளை பிறக்காவிட்டால் கொடுமை. விதவை பெண்கள், திருமணமாகாத பெண்களிடம் தற்கொலை விகிதம் குறைவாக இருக்கிறது

♦ ஆண்களில் அதிகம் தற்கொலை செய்து கொள்பவர்கள் – குடிகாரர்கள் தான்.

உங்களுக்கு தெரிந்து யாருக்கேனும் குடிப்பழக்கம் இருந்தால் அவரை அதில் இருந்து வெளிக்கொண்டு வாருங்கள். காரணம் குடி போதையில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்கள் அதிகம்.

படிக்க:
“தற்கொலை செய்து கொண்டவர்களை விமர்சிக்கும் அருகதை உங்களுக்கு இல்லை !”
♦ வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !

♦ ஆண்களின் சராசரி தற்கொலை வயது 60 – 75

Senior Citizensமுதுமை தரும் தனிமை, மனத்தாழ்வு நிலை, யாரும் ஆதரவுக்கு இல்லாத நிலை போன்றவற்றால் தற்கொலை செய்கின்றனர்.

♦ பெண்களின் சராசரி தற்கொலை வயது 19 – 39

கடந்த பத்து வருடங்களில் மட்டும் 75,000 மாணவ – மாணவிகள் கல்வி காரணங்களுக்காக தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலைக்கு அதிகம் பயன்படுத்தும் முறைகள் – பூச்சி மருந்து உண்பது, மாத்திரைகளை அதிகம் உண்பது மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்தல்.

இந்தியாவில் தற்கொலையில் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள்

  • திரிபுரா
  • பாண்டிசேரி
  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
தற்கொலைகளை எப்படி தடுப்பது ?

♣ முதியவர்களை தனிமையில் விடுவது தவறு. அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் நாட்டில் முதியவர்கள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் நாம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் தற்கொலைகளை கணிசமாக குறைக்க முடியும்.

suicide-main♣ பெண்களுக்கு எதிரான குற்றங்களை அது வரதட்சணை ஆகட்டும் , பணியிடங்களில் ஏற்படும் வன்முறைகளாகட்டும், பாலியல் சீண்டல்களாகட்டும் உடனுக்குடன் கண்டு களையும் நிர்வாக முறை இருக்க வேண்டும்

♣ படிப்பு, பரீட்சை அதில் வாங்கும் மதிப்பெண்கள் தான் வாழ்க்கை முழுவதையும் தீர்மானிக்கும் என்ற மாயையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். ஒரு பரீட்சையில் தோல்வி அடைந்தால் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் பெற்றோர் விதைக்க வேண்டும்

♣ மது மற்றும் புகைப்பழக்கத்தை விட வேண்டும். அரசும் மதுவை தடை செய்ய ஆவண செய்ய வேண்டும். நாட்டில் ஆண் தற்கொலைகள் பெரும்பான்மை மது தரும் போதை மற்றும் அச்சமற்ற நிலையால் தான் நடக்கின்றன.

♣ தேசிய தற்கொலை தடுப்புக்கொள்கை வரைவு செய்யப்பட வேண்டும்.
உடனே அது நடைமுறைக்கு வரவேண்டும். வயது வாரியாக பாலின வாரியாக தனித்தனியாக தற்கொலை தடுப்பு வழிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகள் கல்வியில் தற்கொலை தடுப்பு கொள்கை இணைக்கப்பெற வேண்டும்.

♣ 2017-ம் ஆண்டு தேசிய மன நல சட்டம் மூலம் தற்கொலை முயற்சிகள் சட்டப்படி குற்றமாகாது என்று அறிவித்ததன் மூலம் பல மறைக்கப்படும் தற்கொலை முயற்சிகள் வெளியே வரும். நிச்சயம் இந்தியா வலுவான மனநல பற்றாக்குறையில் இருக்கிறது.

படிக்க:
மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !
♦ கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !

நம்மிடம் போதுமான மனநல மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் இல்லை. ஆனால் நாள்தோறும் மனப்பிரச்சனைகள் கொண்டவர்கள் அதிகமாகி வருகின்றனர்.

மனநலம் சார்ந்த முதுகலைப்படிப்பு இடங்களை அதிகமாக்க வேண்டும். மனநல ஆலோசகர்களுக்கான படிப்புகளை பலரும் படித்து மனநல ஆலோசகர்களாக வர வேண்டும்.

தற்கொலை தீர்வல்ல.
எதற்கும் முடிவும் அல்ல.
தற்கொலை வீரமும் அல்ல.
தற்கொலை இயற்கைக்கு எதிரானது.

வீட்டில் ஒருவரை தற்கொலைக்கு இழக்கும் முன் நாம் கண் விழிக்க வேண்டும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !

0

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் சிலையை சாதி வெறியர்கள் உடைத்ததைக்  கண்டித்து, இன்று (26.08.2019) காலையில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாதிவெறியர்களைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சாதி வெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், இனி இதுபோன்ற செயல்கள் நடக்காமல் போலீசு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மாணவர்கள் முழக்கம்  எழுப்பி கோரிக்கை விடுத்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றிம் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி 
கடலூர் மாவட்டம் : தொடர்புக்கு 9788808110.

தேசிய கல்விக் கொள்கை 2019 ஏன் நிராகரிக்க வேண்டும் ? கோவை அரங்கக்கூட்ட செய்தி

0

கோவையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 22.08.2019 அன்று “மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை 2019 ஏன் நிராகரிக்க வேண்டும்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

NEP-2019-Sliderஇக் கூட்டத்திற்கு தோழர் பாலமுரளி (சட்டக்கல்லூரி மாணவர், கோவை) தலைமை தாங்கினார்.

தேசிய கல்வி கொள்கை என்பது நவீன குலக்கல்வி முறையை வலியுறுத்துகிறது, நவீன அடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது, இது பாமர மக்களுக்கான கல்வி கொள்கை அல்ல. இது பாமர மக்களுக்கு எதிரான கல்விக் கொள்கையாகும். கல்வியை வணிக மயமாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது இந்த கல்விக் கொள்கை என்ற கருத்தினை பதிவு செய்தார்.

அடுத்துப் பேசிய மருத்துவர் பாலன், தேசிய கல்விக் கொள்கை என்பது “CCC என்று சொல்லலாம்” என்றார். “CCC என்பது commercialization (வணிகமயமாக்கல்), communalization (மதவாதம்), மற்றும் centralisation (அனைத்து அதிகாரமும் மத்தியில்)” என்பதை விளக்கிபேசத் தொடங்கினார்.

மருத்துவத்துறையில் MCI கலைத்து விட்டு NMC (National medical council) என்று கொண்டு வந்துள்ளனர். இது மருத்துவத் துறையை மத்திய அரசு தன் வசம் கொண்டு வரும் நோக்கமாகும். ஏற்கனவே இருந்த MCI-ல் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் இருப்பார்கள். ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 பேருக்கும் குறைவாகவே உள்ளனர்.

மருத்துவத் துறையை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் மருத்துவத்துறையில் சற்றும் சம்பந்தமில்லாத ஆர்.எஸ்.எஸ்.-காரர்களை அதில் நியமிக்கிறார்கள்.

பின்பு மருத்துவர் ஆக வேண்டுமென்றால் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் நீட் எழுத வேண்டும் என்றார்கள் இப்போது நீட் மட்டும் போதாது மருத்துவராகப் பதிவு செய்ய வேண்டுமென்றால் நெக்ஸ்ட் (next ) அதாவது எக்ஸிட் (exit exam) ஆகிய தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்கிறார்கள். இது ஆட்களை குறைக்கும் செயலாகும். யார் வேண்டுமானாலும் மருத்துவராக முடியாது, அதற்கென ஒரு குறிப்பிட்ட பணத் தகுதி வேண்டும் என்கிறது மத்திய அரசு.

படிக்க:
♦ தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரி அரங்கக்கூட்டம் !
♦ பாசிசத்தைத் தன்னந்தனியே எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம் !

அடுத்து சிறப்புரையாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தர்மபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அன்பு பேசுகையில்; “மத்திய அரசு கொண்டுவந்த இந்த கல்வி முறை கல்வி அறிவு ஆற்றல் உள்ள மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து முன்வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் கொண்டு வந்த கல்விமுறை என்பது அறிவியலுக்கு புறம்பானது. மாணவர்களை சிந்திக்க விடாமல் செய்யும் பழமைவாத கருத்துக்களை கொண்டதே ஆகும். நமது நாடு என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு ஆகும். பல மொழிகள் பல கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் மோடி அரசு மும்மொழி  என்ற பெயரில் இந்தி சமஸ்கிருதத்தை திணிக்கின்றது.

கார்ப்ரேட்டுகளுக்கும், காவிகளுக்கும் சேவை செய்கிற வகையில் இக்கல்விக் கொள்கை உள்ளது. இதற்கு எதிர்ப்பு தமிழகத்தில்தான் பலமாக உள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழகத்தில் ஏறத்தாழ 500 அரங்கக் கூட்டங்கள் நடைபெற்று உள்ளன. மற்ற மாநிலங்களில் இதைப் பற்றியான விழிப்புணர்வு மிக குறைந்த அளவே உள்ளது.

எனினும் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையை மாணவர்களாகிய நாம் அமைப்பாக ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். என்று உரையாற்றினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு : 94451 12675

தமிழகத்தை நாசமாக்காதே ! செக்காணூரணியில் பொதுக்கூட்டம் !

அணுக்கழிவு – நியூட்ரினோ – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிசாலை – தேதிய கல்விக் கொள்கை !

தமிழகத்தை நாசமாக்காதே !

கீழ் செக்காணூரணியில் பொதுக்கூட்டம்.

நாள் : ஆகஸ்டு 29, மாலை 6:00 மணி.
இடம் : செக்காணூரணி பேருந்து நிலையம்.

do-not-destroy-tamil-nadu-madurai-usilampatti-makkal-athikaram-madurai-hall-meeting

தலைமை :

தோழர் ஆசை,
மக்கள் அதிகாரம் உசிலை வட்ட ஒருங்கிணைப்பாளா்.

உரையாற்றுவோர் :

திரு. அய்யாக்கண்ணு. பா.சிவன்
ம.தி.மு.க.திருமங்கலம் ஒன்றிய செயலாளர்.

தோழர் ஜெயக்குமார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தோழர் குருசாமி
மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளா்.

மானமிகு சி. வெற்றிச்செல்வன்
பெரியார் சிந்தனையாளா், கிண்ணிமங்கலம்.

சிறப்புரை :

தோழர் நாகராஜ்
மக்கள் அதிகாரம், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.

நாட்டுப் பற்றாளர்களும் ஜனநாயக சக்திகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம், செக்காணூரணி பகுதி,
தொடர்பு :  97901 38075.


இதையும் பாருங்க :

பசுமை எங்கும் அழிகிறதே ! இனி பாலைவனமோ தமிழகமே | Kovan Song

பாசிசத்தைத் தன்னந்தனியே எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 02

மின்சார ரெயில் சக்கரங்கள் கடகடக்க, ஊதல் அலற, மாஸ்கோ நகர்புறத்தில் உற்சாகமாக விரைந்தோடிக் கொண்டிருந்தது. அலெக்ஸேய் மெரேஸ்யெவ் ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்தான். அவனைச் சுவரோடு சுவராக நெருக்கியவாறு பக்கத்தில் அமர்ந்திருந்தார் மழித்த முகமுள்ள ஒரு முதியவர். விளிம்பு அகன்ற தொப்பியும், தங்க வில் கண்ணாடியும் அணிந்திருந்தார் அவர். களை வெட்டும் மண்வெட்டியும், வறண்டியும் செய்தித்தாளில் பாங்காகச் சுற்றி நாடாவால் கட்டப்பட்டு அவரது முழங்கால்களுக்கு இடையே துருத்திக் கொண்டிருந்தன.

அந்தப் பயங்கர நாட்களில் மற்ற எல்லோரையும் போலவே இந்த முதியவரும் யுத்தத்தைப் பற்றியே சிந்தித்தவாறு காலங்கழித்து வந்தார். மெரேஸ்யெவின் முகத்துக்கு முன் வறண்ட உள்ளங்கையை ஆட்டியவாறு பொருள் பொதிந்த கீழ்குரலில் அவன் காதோடு கிசுகிசுத்தார் அவர்:

“நான் சிவில் உத்தியோகஸ்தன் ஆயிற்றே என்று பார்க்காதீர்கள். நமது திட்டத்தை நான் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டேன். பகைவனை வோல்காப் பிரதேச ஸ்தெப்பி வெளிகளுக்குக் கவர்ந்து இழுப்பது, ஆமாம், தனது போக்குவரத்து மார்க்கங்களை விரிவாக நீட்ட, இப்போது வழக்கமாகச் சொல்வது போல பிரதானத் தளத்திலிருந்து துண்டிக்கப்பட அவனுக்கு இடங்கொடுப்பது, பிறகு இதோ இங்கிருந்து, மேற்கிலும் வடக்கிலும் இருந்து பாய்ந்து தாக்கி, போக்குவரத்துத் தொடர்புகளைத் துண்டித்து, பகைவனைக் கூறுகளாக வகிர்ந்து விடுவது. ஆமாம்… இது மிகவும் புத்திசாலித்தனம். நமக்கு எதிராக ஒரு ஹிட்லர் மட்டும் இல்லையே. ஐரோப்பா முழுவதையும் அல்லவா தனது சாட்டையால் அடித்து நம் மீது ஏவிவிட்டிருக்கிறான் அவன். ஆறு நாடுகளின் சைனியங்களை எதிர்த்து நாம் தன்னந்தனியாகப் போராடுகிறோம். தனிப்போர் புரிகிறோம். விரிவான பரப்பையாவது அதிர்ச்சி தாங்கியாகப் பயன்படுத்தி இந்தக் கொடிய தாக்குதலின் உக்கிரத்தை மட்டுப்படுத்த வேண்டும். ஆமாம். அறிவுக்குகந்த ஒரே வழி இதுவே. பார்க்கப் போனால் நமது நேச நாடுகள் சும்மாதானே இருக்கின்றன!… இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“நான் நினைக்கிறேன், நீங்கள் சொல்வது வெறும் பிதற்றல் என்று. தாய்நாட்டின் நிலப்பரப்பு விலைமதிப்பற்றது. அதிர்ச்சி தாங்கியாக அதைப் பயன்படுத்துவது தகாது” என்று கடுகடுப்புடன் விடையளித்தான் மெரேஸ்யெவ்.

ஆனால் கிழவனாரோ அலெக்ஸேயின் காதோடு உதடுகளை அனேகமாக ஒட்டியவாறு தொணதொணத்துக் கொண்டே போனார். புகையிலை நெடியும் பார்லிக் காப்பி மணமும் அவரிடமிருந்து வந்தன.

“…இல்லை, நீங்கள் படைவீரர். நீங்கள் சொல்லுங்கள், இது சரிதானா? இதோ ஓர் ஆண்டுக்கு மேலாக நாம் பாசிஸத்தைத் தன்னந்தனியே எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம். ஊம்? ஆனால் நேச நாடுகள் விஷயமோ? இரண்டாம் போர்முனை விஷயமோ? உதாரணமாக இந்தக் காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். எதையும் சந்தேகிக்காமல் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதனைத் திருடர்கள் பாய்ந்து தாக்குகிறார்கள். அவன், அந்த மனிதன், மனங்கலங்காமல் திருடர்களை எதிர்த்துத் தாக்கிச் சண்டை போடுகிறான். குருதியைப் பெருக்கியவாறு போரிடுகிறான், கையில் கிடைத்ததைக் கொண்டு திருடர்களை அடித்துப் புடைக்கிறான். அவன் தனியாள், திருடர்களோ பலர். அவர்கள் ஆயுதபாணிகள். நெடுங்காலமாகவே அவனுக்காகப் பதி போட்டுக் காத்திருந்தவர்கள். ஆமாம். அண்டைவீட்டாரோ இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு தங்கள் வீடுகளின் அருகே நின்று அனுதாபம் தெரிவிக்கிறார்கள். ‘சபாஷ், அருமை, அப்பனே, அருமை! இந்தத் திருட்டுப் பயல்களை இப்படித்தான் மொத்த வேண்டும். அடி அவர்களை, நொறுக்கு!’ என்று உற்சாகப்படுத்துகிறார்கள். திருடர்களை அடித்து விரட்ட உதவுவதற்குப் பதிலாக, கற்களையும் இரும்புத் துண்டுகளையும் அந்த ஆளுக்கு நீட்டுகிறார்கள். ‘இந்தா, இவற்றால் இன்னும் கடுமையாகத் தாக்கு’ என்கிறார்கள். தாங்களோ எட்ட நிற்கிறார்கள். ஆமாம், ஆமாம், இப்போது நேசநாட்டினர் செய்வது இதுவேதான்…”

மெரேஸ்யெவ் அக்கறையுடன் முதியவரைத் திரும்பிப் பார்த்தான். எத்தனையோ பேர் இப்போது அவர்கள் பக்கம் நோக்கிக் கொண்டிருந்தார்கள். செம்மச்செம்ம நிறைந்திருந்த பெட்டியின் எல்லாப் புறங்களிலுமிருந்து குரல்கள் ஒலித்தன:

“அவர் சொல்வது சரிதானே. தன்னந்தனியாகவே போரிடுகிறோம். எங்கே இந்த இரண்டாம் போர்முனை?”

“பரவாயில்லை, ஆண்டவன் அருளால் தனியாகவே காரியத்தைச் சமாளித்து விடுவோம். எல்லாம் முடிந்து இறுதி வெற்றி கிடைக்கும் சமயத்தில் அவர்களும் சேர்ந்து கொள்வார்கள் அதில் பங்கு பெற, இரண்டாம் போர்முனையைத் திறந்துவிடுங்கள்.”

நகர்புறக் குடியிருப்பு ஒன்றின் பிளாட்பாரத்தருகே ரெயில் நின்றது. பைஜாமாக்கள் அணிந்த சில காயமுற்ற படை வீரர்கள் கவைக் கோல்களையும் கைத்தடிகளையும் ஊன்றியவாறு பெட்டியில் ஏறினார்கள். பெர்ரிப் பழங்களும் சூரியகாந்தி விதைகளும் நிறைந்த மூட்டைகள் அவர்கள் கைகளில் இருந்தன. உடம்பு தேறுபவர்களுக்கான மருத்துவமனை ஒன்றிலிருந்து இவ்வூர்ச் சந்தைக்கு அவர்கள் வந்தார்கள் போலும். முதியவர் சட்டென இருக்கைவிட்டு எழுந்தார். ”உட்காருங்கள், தம்பீ, உட்காருங்கள்” என்று கட்டுப்போட்டாலும் கவைக்கோல்களுமாக நின்ற செம்பட்டைத் தலை இளைஞன் ஒருவனை வலுக்கட்டாயமாகத் தமது இடத்தில் உட்கார்த்தினார். “பரவாயில்லை, பரவாயில்லை, உட்காருங்கள். கவலைப்படாதீர்கள், நான் இதோ இறங்க வேண்டியவன் தான்” என்றார்.

தாம் சொல்வது உண்மை என்று காட்டுவதற்காக முதியவர் தமது களைக் கொட்டிகளையும் வறண்டியையும் எடுத்துக் கொண்டு கதவு அருகே நகரக்கூடச் செய்தார். பால்காரிகள் பெஞ்சில் ஒதுங்கி, காயமடைந்தவர்களுக்கு இடம் கொடுக்கத் தலைபட்டார்கள். எங்கோ பின்னாலிருந்து ஒரு பெண்ணின் கண்டனக் குரல் அலெக்ஸேயின் காதுகளை எட்டியது.

“இந்த ஆளுக்கு வெட்கமாயில்லையே! அங்கவீனமடைந்த படைவீரன் பக்கத்தில் நிற்கின்றான், தவிக்கிறான், எல்லோரும் அவனை நெருக்கி இடித்துத் தள்ளுகிறார்கள், ஆனாலும் இந்த ஆள், ஆரோக்கியசாலி, கழுத்து போல உட்கார்ந்திருக்கிறானா, ஏறெடுத்தும் பார்க்காமல். ஏதோ குண்டு தன்னைத் தாக்கவே முடியாது போல. இந்த அழகில் கமாண்டர், விமானி!” என்றது அந்தக் குரல்.

அநியாயமான இந்தச் சுடு சொற்களால் அலெக்ஸேய் கடுஞ்சீற்றம் அடைந்தான். அவனுடைய மூக்குத்துளைகள் கோப மிகுதியால் துடித்தன. ஆனால் சட்டென முகத்தில் களி சுடர்விட அவன் இடத்தைவிட்டுத் துள்ளி எழுந்தான்.

“உட்கார் தம்பீ!” என்றான்.

காயமடைந்தவன் கூச்சமுற்று மறுத்தான்.

”நீங்கள் என்ன, தோழர் ஸீனியர் லெப்டினன்ட்! கவலைப்படாதீர்கள், நான் நிற்கிறேன். ரொம்ப தூரம் இல்லை. இரண்டு நிறுத்தங்கள்தாம் பாக்கி” என்று கூறினான்.

குறும்புத்தனம் கொண்ட குதூகலம் அலெக்ஸேயின் உள்ளத்தில் ஊற்றெடுத்தது. “உட்கார் என்கிறேன்!” என உரக்கக் கத்தினான்.

இந்தச் சமயத்தில் ரெயில் கண்டக்டர் மாது அவன் போக வேண்டிய இடத்தின் பெயரை அறிவித்தாள். ரெயில் மெதுவாக நிற்கலாயிற்று. கூட்டத்தில் புகுந்து விலக்கிக் கொண்டு முன்னேறிய அலெக்ஸேய் கதவருகே கண்ணாடிக்காரக் கிழவரை மறுபடி எதிர்ப்பட்டான். அவர் நெடுநாள் பழகியவர் போல அவனை நோக்கிக் கண் சிமிட்டினார்.

“என்ன நினைக்கிறீர்கள்? என்னவானாலும் இரண்டாவது போர்முனை திறக்கப்படுமா?” என்று கிசுகிசுத்தார்.

“திறக்கப்படவில்லை என்றால் நாமே சமாளித்துக் கொள்வோம்” என்று பதிலளித்துவிட்டு மரப் பிளாட்பாரத்தில் இறங்கினான் அலெக்ஸேய்.

ஆரோக்கிய நிலையம் போகும் வழி மாஸ்கோவில் அவனுக்கு விவரமாக விளக்கப்பட்டிருந்தது. தேர்ந்த படைவீரன் ஆதலால் அவன் ஒரு சில அடையாளங்களைக் கொண்டு ஆரோக்கிய நிலையம் போகும் வழியைச் சிரமமின்றி கண்டு கொண்டான். ரெயிலடியிலிருந்து பதினைந்து நிமிட நடைத் தொலைவில், அமைதியான சிறு ஏரியின் கரையில் இருந்தது ஆரோக்கிய நிலையம்.

சமாதான காலத்தில் விமானிகள் மனைவிமாருடனும் சில வேளைகளில் குடும்பத்தினர் அனைவருடனும் இங்கே தங்கினார்கள். போர்க்காலத்தில் மருத்துவமனைச் சிகிச்சைக்குப் பின் உடம்பைத் தேற்றிக் கொள்ள அவர்கள் இங்கு அனுப்பப்பட்டார்கள். இரு மருங்கிலும் பிர்ச் மரங்கள் வளர்ந்திருந்த விசாலமான தார் ரோடு சுற்றி வளைத்துக் கொண்டு ஆரோக்கிய நிலையத்துக்குச் சென்றது. ஆனால் அலெக்ஸேய் அதில் போகாமல் ரெயிலடியிலிருந்து காட்டின் ஊடாக ஏரிக்கு நேரே சென்ற ஒற்றையடிப் பாதையில் நடந்தான். ஒரு வகையில் சொன்னால் அவன் பின்புலத்திலிருந்து ஆரோக்கிய நிலையத்தை அடைந்தான். ஒருவரும் அவனைக் கவனிக்கவில்லை. பிரதான வாயிலருகே பிதுங்கப் பிதுங்க ஆட்களால் நிறைந்த இரண்டு பஸ்கள் நின்றன. அவற்றைச் சூழ்ந்திருந்த ஆட்கள் கூட்டத்தில் அலெக்ஸேய் கலந்துகொண்டான்.

படிக்க:
காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !
“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

ஆரோக்கிய நிலையத்திலிருந்து நேரே போர்முனை செல்லும் விமானிகளை வழியனுப்பவே ஆட்கள் கூடியிருக்கிறார்கள் என்பதை உரையாடல்கள், கேலிப் பேச்சுக்கள், வழியனுப்புக் கத்தல்கள், வாழ்த்துக்கள் ஆகியவற்றிலிருந்து அலெக்ஸேய் தெரிந்து கொண்டான். பிரயாணிகள் குதூகலமும் இன்பக் கிளர்ச்சியும் கொண்டிருந்தார்கள் – தாங்கள் போவது ஒவ்வொரு மேகத்துக்கும் பின்னே சாவு தங்களுக்காகப் பதிபோட்டிருக்கும் இடத்துக்கு அல்ல, அமைதி நிறைந்த சொந்தப் படைத்தளங்களுக்கு என்பது போல. வழியனுப்புவோரின் முகங்களில் பொறுமையின்மையும் ஏக்கமும் ததும்பின. அலெக்ஸேய் இதைப் புரிந்து கொண்டான். தெற்கே நடந்து கொண்டிருந்த புதிய பிரமாண்டமான போர் தொடங்கியது முதலே அடக்கமுடியாத இந்தக் கவர்ச்சியை அவனும் உணர்ந்து வந்தான். போர்முனையில் நிகழ்ச்சிகள் விரிவடைந்து கொண்டும் நிலைமை சிக்கலாகிக் கொண்டும் போகப் போக இந்தக் கவர்ச்சி அதிகரித்தது. இராணுவ வட்டாரங்களில், தணித்த குரலிலும் எச்சரிக்கையுடனுந்தான் என்றாலும், “ஸ்தாலின்கிராத்” என்ற சொல் உச்சரிக்கப்படத் தொடங்கியதுமோ, இந்தக் கவர்ச்சி வேதனை தரும் ஏக்கமாக வளர்ந்துவிட்டது. மருத்துவமனையில் கட்டாயம் காரணமாகச் செயலற்று இருப்பது சகிக்க முடியாதது ஆகிவிட்டது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

கேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன ?

கேள்வி : //ISO தரச்சான்றிதழ் என்பது என்ன காரணத்திற்காக? அதை வழங்குவது தனியார் நிறுவனமா? அதை அரசுத்துறையால் கொடுக்க இயலாதா? இத்தரச்சான்றிதழ் என்பது எந்த மாதிரியான தொழிற்சாலைகளுக்கு? இதுகுறித்து, முழுவதுமான விவரங்களைத் தாருங்கள்.//

-மா.பேச்சிமுத்து

ரு தொழிற்சாலை, ஒரு நாடு என்று ஆரம்பத்தில் இருந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சி – செயல்பாடு இன்று வல்லரசு நாடுகளின் கால கட்டத்தில் உலகளாவிய முறையில் பரவியிருக்கிறது. உற்பத்தி உலகமயமான பிறகு அதை ஒரே மாதிரி தரப்படுத்துவதன் தேவை எழுகிறது. இல்லையெனில் நுகர்வோர் வாங்கும் பொருள் ஒரே தரத்திலானதாக இருக்காது.

Iphoneசந்தையில் விளம்பரம் செய்யும் போது இந்த ஆப்பிள் ஃபோன் சீனாவில் தயாராகி அமெரிக்காவில் விற்பனையாகிறது என்று செய்ய மாட்டார்கள். மாறாக அதன் தரத்தை மட்டுமே பகிர்வார்கள். உலகமய காலகட்டத்தில் வல்லரசு நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது பொருளியல் உற்பத்தி (அதாவது சுரண்டல்) தரமானதாக இருக்கிறது என்று காட்டுவதற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் உதவுகிறது.

மேலும் பொறியியல், மின்னியல், மின்னணுவியல், தானியங்கி, கனிமவளம், கணினி மென்பொருள் போன்ற பல்வேறு துறைகளில் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான முறைகள் – அளவுகளை பின்பற்ற வேண்டிய தேவையும் இருக்கிறது. அதே போன்று நிதி, வங்கி, பங்குச் சந்தை போன்றவற்றிலும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான செயல்பாட்டு முறைகளை பின்பற்ற தேவை இருக்கிறது. இவற்றை விரிவாக பார்ப்போம்.

பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரே பொருள் அளவிலும், தரத்திலும், சொல்லப்போனால் அதன் பெயரிலும் கூட வெவ்வேறாக இருப்பதால் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்றொரு நாட்டில் பயன்படுத்தும் போது பல சிக்கல்களை உருவாக்கியது. உதாரணமாக, பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பற்சக்கரங்கள் (Gear) வெவ்வேறு பெயர்கள் மற்றும் அளவீட்டு அலகுகள் (units) கொண்டதாக இருந்ததால், ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் இயந்திரத்தை மற்றொரு நாட்டில் பயன்படுத்தும் போது அங்குள்ள பற்சக்கரத்தோடு இணைக்க முடியவில்லை.

இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, உலகம் முழுமைக்குமான பொதுவான நியமத்தை (standards) உருவாக்குவதற்கான தேவை உருவாகிறது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் சுவிட்சர்லாந்து – ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ISO – சர்வதேச தரநியம நிறுவனம் (International Organization for Standardization). இந்நிறுவனத்தை 1947-ம் ஆண்டில் – முதன் முதலாக காட் (GATT) ஒப்பந்தம் போடப்பட்ட அதே ஆண்டில் – 25 நாடுகளின் பிரதிநிதிகள் குழு உருவாக்கியது.

படிக்க:
கேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு !
♦ டெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. !

ISO (ISO) என்பது உலக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு தர மேலாண்மை முறைமையாகும் (Quality Management System). முதன் முதலாக தர மேலாண்மை முறைமை, இரண்டாம் உலகப்போர் கால இங்கிலாந்தில்தான் உருவானது. அங்கு ஆயுத உற்பத்தியகங்களிலேயே வெடிகுண்டுகள் வெடிக்க ஆரம்பித்தன, போர்க்களத்திற்குச் சென்ற குண்டுகள் சில வெடிக்காமல் போயின. இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு தர மேலாண்மை செயல்முறையை (BSD 5750) வகுத்தளித்தது. அதன்படி ஆயுத உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்பிற்கான செயல்முறைகளை வகுத்து ஆவணப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் அச்செயல்முறைகளை முறையாக பின்பற்றி உற்பத்தி செய்வதை இடையிடையே ஆய்வுசெய்வதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக இந்த மொத்த நடைமுறையையும் ஒரு அரசு ஆய்வாளர் பரிசோதித்து உறுதியளிக்க வேண்டும். இதன் மூலம் குண்டுகள் தொழிலகத்திலேயே வெடிப்பது தடுக்கப்பட்டது.

ISO Certifiedதர மேலாண்மை முறைமையென்பது ஒரு நிறுவனத்தின் தரக் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடைவதற்கான உற்பத்தி செயல்முறைகள், நடைமுறைகள், ஒவ்வொருவருக்குமான பாத்திரம் மற்றும் பொறுப்புகளை முறையாக ஆவணப்படுத்தும் ஒரு அமைப்பாகும். இது இன்னின்ன பொருள், இன்னின்ன தரத்தில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற நியமங்களை (standards) நிர்ணயம் செய்வதில்லை. மாறாக, அந்தக் குறிப்பிட்ட உற்பத்தித்துறையில் பின்பற்ற வேண்டிய மொத்த நடைமுறைகள் பற்றிய ஆவணத் தொகுப்பு. இது ISO-வுக்கும் பொருந்தும்.

இந்நிறுவனம் எந்த தரச்சான்றிதழையும் வழங்குவதில்லை. ஒவ்வொரு தொழில் மற்றும் சேவைத்துறைக்குமான பொதுவான வழிகாட்டல்கள் மற்றும் நெறிமுறைகளையே வழங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட சான்றளிக்கும் தனியார் நிறுவனங்களே (Certification Bodies) தரச்சான்றிதழை வழங்குகின்றன. Bureau Veritas, Tuv Nord, BSI, TuvSud போன்றவை இந்தியாவில் சான்றளிக்கும் நிறுவனங்களில் சில.

ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலை ISO சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முன் உற்பத்தி செயல்முறைகள், நடைமுறைகள், ஒவ்வொருக்குமான பாத்திரம், பொறுப்புகள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்கள் (Check Lists) போன்றவற்றை முறையாக வகுத்து ஆவணப்படுத்தியிருக்க வேண்டும். சான்றிதழ் வழங்கும் நிறுவனம் தனது முதல் தணிக்கையில் (First Audit) இவற்றை ஆய்வு செய்து அங்கீகரிக்கும். அதாவது, ஒவ்வொரு தொழிற்சாலையும் தனக்கான தனிப்பட்ட செயல்முறைகள், நடைமுறைகளை (process and procedures) வகுத்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு, சென்னையில் இயங்கும் ஃபோர்ட், ஹுண்டாய், ரெனால்ட் நிஸ்ஸான் போன்ற கார் கம்பெனிகள் தனக்கான தனித் தனியான செயல்முறைகள், நடைமுறைகளை வகுத்துக் கொள்ள முடியும்.

படிக்க:
கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ?
♦ கேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் !

அதுமட்டுமின்றி, தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ISO உட்குழுவைக் கொண்டு உள் தணிக்கை செய்துகொள்ள வேண்டும். சான்றளிக்கும் நிறுவனமும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தணிக்கை செய்து ISO சான்றிதழை உறுதிப்படுத்தும். சில இரண்டாந்தர சான்றளிக்கும் நிறுவனங்கள் வெறுமனே காசு வாங்கிக்கொண்டு எந்த தணிக்கையும் செய்யாமல் சான்றிதழ்களை வழங்குவதும் இருக்கிறது.

ISO தர மேலாண்மை முறைமையில் செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையையும் ஆவணப்படுத்த வேண்டிய நடைமுறைகள் மிகமிக சலிப்பூட்டக் கூடியதாகும். உற்பத்தி பொருளுடைய அல்லது சேவையின் தரத்தையும், விவர வரையறையையும் (specification) அந்த குறிப்பிட்ட தொழிற்சாலையில் இருக்க கூடிய தர உத்திரவாதத்துறை (QA) தான் பரிசோதித்து உறுதிப்படுத்தும். அதாவது, ISO சான்றிதழ் நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறதே அன்றி உற்பத்திப் பொருளின் தரத்திற்கு சான்றளிக்கப்படுவதில்லை.

1990-களில் காட் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின், உற்பத்தியும் சேவைகளும் குறுக்கும் நெடுக்குமாக உலகு தழுவிய அளவில் நடைபெறத் துவங்கியது. பல தொழில் மற்றும் சேவைத்துறைகள் அவுட்சோர்ஸிங் மூலம் மொத்தமாகவோ அல்லது பகுதியாக பிரித்தோ மலிவான கூலியுழைப்பு கிடைக்கும் நாடுகளை வந்தடைந்தன.

வளரும் நாடுகளில் இருந்து மேற்குலகிற்கு ஏற்றுமதியாகும் உற்பத்திப் பொருள் அல்லது சேவையின் தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. வெவ்வேறு நாடுகளில் நடக்கும் பகுதியளவில் உற்பத்தியாகும் உதிரிப் பொருட்களை ஒருங்கிணைக்க அவற்றுக்குள் ஒரே அளவிலான தரம், உற்பத்திச் செயல்முறை, நடைமுறைகள் (process and procedures) இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இதுதான் ISO மட்டுமின்றி பல்வேறு நியமங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளதன் பின்னணி.

இந்த அடிப்படையில் தான் 1990-களுக்குப் பிறகு ISO தரச் சான்றிதழ் எல்லா இடங்களையும் வந்தடைந்தது. உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமின்றி, சேவை வழங்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற எல்லா நிறுவனங்களும் தாங்கள் ISO தரச் சான்றிதழ் பெற்றுள்ளதாக விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.

உற்பத்தி உலகளாவியபடி மாறி விட்டதால் இந்திய அரசு நடத்தும் ISI ஐஎஸ்ஐ தர நிர்ணயம் போதுமானதாக இருப்பதில்லை. இந்நிறுவனம் இந்தியாவிற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதுவும் அதிகார வர்க்க ஊழலால் பெயருக்கு மட்டும் தரத்தை பேசுகிறது.

ISO தரச் சான்றிதழ் எப்படி பாகுபாட்டோடு இருக்கிறது என்பதற்கு தொழிலாளர் உரிமை பற்றி அது போதுமான அளவு பேசுவதில்லை என்பதே உதாரணம். ஹுண்டாய் நிறுவனம் கார்களை உற்பத்தி செய்யும் முறைகளை ISO படி செய்து கொண்டாலும் அங்கே தொழிற்சங்கம் இருக்கக் கூடாது என்பதையும் விதியாக வைத்திருக்கிறது. மற்றும் பல நிறுவனங்கள் நிரந்தரத் தொழிலாளிகளை குறைத்து ஒப்பந்த தொழிலாளர்களை அதிகம் வைத்து குறைந்த கூலி கொடுத்து செயல்படுகின்றன. அவ்வகையில் ISO-வின் செயல்பாட்டில் தொழிலாளர் நலன், உரிமை இல்லை என்றே சொல்லலாம். அல்லது தொழிலாளிகளுக்கு போதுமான அளவு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று மட்டும் தணிக்கையின் போது காட்டிக் கொள்வார்கள். அதே போன்று ISO ஒரு தனிப்பட்ட தொழிற்சாலை எப்படி செயல்படுகிறது என்பதை மட்டுமே பார்க்கிறது. அதனால் நாட்டளவில், சமூக அளவில் என்ன  பாதிப்பு என்பதை பார்ப்பதில்லை.

சான்றாக திருப்பூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனம் ISO தரச்சான்றிதழ் பெற்று தனது ஆயத்த ஆடைகளில் Eco Friendly என்று அச்சிட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்க வாடிக்கையாளரும் இந்த ஆடை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் தயாரானது என்று நம்பி வாங்குகிறார். ஆனால் சாயப்பட்டறை கழிவு நீரால் நொய்யல் ஆறு கழிவான சோகக் கதையை நாமறிவோம்.

முதலாளித்துவம் இருக்கும் வரை எதிலும் “தரம்” பார்ப்பது கடினம். சோசலிச உற்பத்தியில்தான் அனைத்தும் தழுவிய தரத்தை அடைய முடியும்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

நூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு

ங்கில ஆட்சி தென்னாட்டில் நிலைபெற்றபோது, பிராமணரல்லாதாரே முதன் முதலில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். கிழக்கு இந்தியக் கம்பெனியார் தென்னாட்டில் வர்த்தகசாலைகள் அமைத்தபோது, அவர்களிடம் முதன் முதல் அடுத்துப் பழகியவர் பிராமணரல்லாதாரே. துபாஷிகளாகவும், தரகர்களாகவும் அந்த வர்த்தகர்களின் நட்பைப் பெற்ற பிராமணரல்லாதாருக்கு நாட்டிலே செல்வாக்குப் பெருகலாயிற்று. வர்த்தகர்களாயிருந்த ஆங்கிலேயரின் தேச நிர்வாகத்தில் பிராமணர் அல்லாதாரே நிர்வாக உத்தியோகஸ்தர்களாய் இருந்தனர். ஆகவே, ஆதி காலத்தில் அரசியல் துறையில் முதலியார், நாயுடு, நாயக்கர், செட்டி, பிள்ளை போன்றவர்களே இடம் பெற்றிருந்தனர். அவ்வாறு இடம் பெற்றிருந்தவர்கள் பிற்காலத்துப் பல பிராமணச் சிறுவர்களுக்கு உதவி புரிந்து உயரிய நிலைமைக்குக் கொண்டு வந்து முள்ளார்கள்.

ஒரு நாயக்கரான தாசில்தார் உதவியால், காலஞ்சென்ற சர்.டி. முத்துசுவாமி அய்யர் உயரிய நிலைக்கு வந்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். பிராமணரல்லாதார் இயல்பாகவே நிர்வாகத் திறமை உடையவராகையினால், ஆங்கிலேயரின் நன் மதிப்பை வெகு எளிதில் பெற்றனர். இதுகாறும் ஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழி என்றும் கருதி ஒதுங்கி இருந்த பிராமணர்கள், அரசியலில் பிராமணரல்லாதார் ஆதிக்கமும் சமூக வாழ்வில் மதிப்பும் பெற்று வருவது கண்டு மேற்கொண்டு ஒதுங்கியிருந்தால், தமது சமூகம் வீழ்ச்சியடைவது உறுதியென உணர்ந்தனர்.

எனவே, ஆங்கிலங்கற்கவும், ஆங்கிலேயர் நட்பைப்பெறவும் அவர்கள் முன் வந்தனர். சென்னை ராஜாங்க கல்லூரிக்கு நூறு ஆண்டுகட்கு முன் அடிகோலப்பட்டது முதல் பிராமணர்கள் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடலாயினர். ஓதலையும் ஓதுவித்தலையும் குலத் தொழிலாகக் கொண்ட பிராமணர்கள் ஆங்கிலக் கல்விப் பயிற்சியில் வெகுவிரைவாக முன்னேற்றமடைந்ததனால், சர்க்காரும் அவர்களுக்குப் பல சலுகைகள் காட்டத் தொடங்கினார்கள். சென்னை மாகாண ராஜாங்கக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டபோது, பிராமணர்களே ஆதிக்கம் வகித்தனர். அதுமுதல் அரசியல் துறையிலும், பொது வாழ்விலும் பிராமண ஆதிக்கம் பெருகலாயிற்று. தமது சமூகநலனைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தமக்குச் சொந்தமாகப் பத்திரிகைகளும் தோற்றுவித்துக் கொண்டார்கள். பிராமணரல்லாதார் நிலைமை சீர்குலையத் தொடங்கிற்று.

அய்.சி.எஸ். உத்தியோகஸ்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஏக காலத்தில் பரீட்சைகள் நடத்த வேண்டுமென்று கிளர்ச்சி செய்தபோது, 1916-ல் சென்னை நிர்வாக சபை மெம்பராக இருந்த சர். அலெக்சாண்டர் கார்ட்யூ 1913-ல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன் சாட்சியம் கொடுக்கையில், அவ்வாறு ஏக காலத்தில் பரீட்சைகள் நடத்தினால், கடுமையான வகுப்புணர்ச்சியுடைய ஒருசிறு சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்களே அப்பரீட்சையில் அதிகமாக வெற்றிபெறுவார்கள்; சிவில் சர்வீஸ் பிராமணமயமாகி விடும் எனக் கூறினார். மற்றும் மாகாண சிவில் சர்வீஸுக்கு 1892 முதல் 1904 வரை நடத்திய போட்டிப் பரீட்சைகளில் வெற்றியடைந்த 16 பேரில் 15 பேர் பிராமணர் என்றும் கூறினார். அதே காலத்தில் அசிஸ்டெண்ட் இஞ்சீனியர் வேலைக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்ற 21 பேரில் 17 பேர் பிராமணர்கள், அம்மட்டோ ! அக்காலத்தில் உத்தியோகம் வகித்த 140 டிப்டி கலெக்டர்களில் 77 பேர் பிராமணர்கள், 30 பேர் பிராமணரல்லாத இந்துக்கள், பாக்கிப் பேர் முகம்மதியர், இந்தியக் கிறித்துவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர். நீதி இலாகாவிலும் நிலைமை இவ்வாறாகவே இருந்தது. 1913-ல் உத்தியோகம் நடத்திய 128 ஜில்லா முனிசீப்புகளில் 93 பேர் பிராமணர், 25 பேர் பிராமணரல்லாத இந்துக்கள், பாக்கிப் பேர் முகம்மதியர், இந்தியக் கிறித்துவர். அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர்கள், இவ்வாறு எல்லாத் துறைகளும் பிராமண மயமாகவே இருந்தன.(நூலிலிருந்து பக்.4-5)

ஹோம்ரூல் இயக்கத்தை எதிர்ப்பதேன்?

பிராமணரல்லாதாராகிய நாம் ஹோம்ரூல் இயக்கத்தை ஏன் எதிர்க்கிறோம்? நமக்கும் சீர்திருத்தத்தில் மிக்க அக்கறை உண்டு. ஹோம்ரூல் அல்லது சுயராஜ்யம் நமது லட்சியமாக இருக்க வேண்டுமென்றும், படிப்படியாக அதைப் பெற வேண்டுமென்றும் நாம் கூறுகிறோம். அந்த லட்சியத்தை முன்னிறுத்தி உழைக்க வேண்டுமென்று பிரிட்டிஷாரே நம்மைத் தூண்டி வருகிறார்கள். நாம் நம்பிக்கையோடும், பொறுமையோடும் இடைவிடாது உழைத்தால், நாம் சுயராஜ்யம் பெறுவது உறுதியே. இப்பொழுது சுயராஜ்யம் வழங்கப்பட்டால், பிராமணரல்லாதார் தமது பழைய ஆதரவற்ற அடிமை நிலையை அடையவும், பிரிட்டிஷார் ஸ்தானத்தில் நம்மை அடிமையாக்கிய கூட்டத்தார் அமர்ந்து நம்மை மேலும் நசுக்கவும் நேருமென்று அஞ்சியே நாம் ஹோம்ரூல் கிளர்ச்சியை இப்பொழுது எதிர்க்கிறோம்.

தர்மப் பாதுகாப்பு இயக்கம், மறுமலர்ச்சி இயக்கம், தேசியக் கல்வி இயக்கம் முதலியன ஹோம்ரூல் கிளர்ச்சியைத் தொடர்ந்து தோன்றியிருப்பது, பழைய வர்ணாச்சிரமத்துக்குப் புத்துயிர் அளித்துப் பிராமண ஆதிக்கத்தை வளர்ப்பதற்கே ஆகுமென நான் திட்டமாக நம்புகிறேன். சமய, சமூக, அரசியல் சீர்திருத்த சம்பந்தமாகப் பிராமணர் செய்துவரும் முயற்சிகள் பிராமணீயத்தை நிலைநாட்டுவதற்கே. இத்தருணத்தில் நாம் ஒன்றுபட்டுச் செயலாற்ற முன்வராவிட்டால், நமது செல்வாக்கும், மதிப்பும் ஒழிவது உறுதியென விவேகிகளான நமது தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.

மற்றும், ஹோம்ரூல் கிளர்ச்சியை எதிர்ப்பதற்கு வேறு காரணங்களும் உண்டு. காங்கிரஸ் ஆதிகாலத்தில் மதவாதிகள் ஸ்தாபனமாக இருந்தது. சத்தியாக்கிரகப் பூச்சாண்டி காட்டி அதிகாரிகளைப் பணிய வைக்க அது எண்ணவில்லை. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே காரியங்கள் நடத்தி வந்தது. தாதாபாய் நவுரோஜி, சர்வபிரோஜ்ஷா மேத்தா, கோகலே முதலிய தலைவர்கள் காங்கிரசை நேர்மையாகவே நடத்தி வந்தார்கள். அரசியல் முறைப்படி அது ஒரு பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனமில்லாவிட்டாலும் காங்கிரஸ் வேலைத் திட்டங்களை ஆதரிக்காதவர்களுங்கூட, காங்கிரஸ் நடவடிக்கைகளை வெகு ஆவலுடன் கவனித்தே வந்தார்கள், படிப்பாளிகளைப் பாதிக்கக்கூடிய விஷயங்களைப் பற்றியே காங்கிரஸ் விவாதித்து வந்தது. பாமர மக்களைப் பற்றிய விஷயங்ளையும், சமூக விஷயங்களையும் லட்சியம் செய்யவே இல்லை.  இந்தியா சுயராஜ்யம் பெற வேண்டுமானால் ஒடுக்கப்பட்டவர்களும் மற்றும் பின்னணியில் நிற்கும் சமூகங்களும் முன்னேற்றம் அடைந்தே தீரவேண்டும். ஆனால், காங்கிரஸ் இவ்வுண்மையை உணரவேயில்லை. ஆகவே, ஹோம்ரூல் இயக்கம் தோன்றியிருக்காவிட்டாலும், தேசியப் புனருத்தாரணத்துக்காக வேறுவிதமான கருத்துடையவர்களால் பிராமணரல்லாதார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும் தற்கால முறைப்படி முன்னேற்றமடைவது உண்மையான முன்னேற்றமே இல்லை, எல்லாச் சமூகங்களும் முன்னேற்றமடைவதே உண்மையான தேசிய முன்னேற்றம். இதை ஹோம்ரூல் கிளர்ச்சிக்காரர்கள் உணரவே இல்லை.

படிக்க:
சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?
காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !

எல்லாச் சமூகங்களும் சம அந்தஸ்து, சம சந்தர்ப்பங்களும் பெறவேண்டும். நமது இயக்கம் இந்த லட்சியத்தை முன் நிறுத்தியே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த லட்சியம் நிறைவேற வேண்டுமானால், நாம் புரோகிதர் பிடிப்பிலிருந்து விடுதலை அடையவேண்டும். நமது இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கு இதுவும் மற்றொரு காரணமாகும். (நூலிலிருந்து பக்.25-26)

சீர்திருத்தங்கள் :

பனகல் மந்திரி சபை காலத்துச் செய்யப்பெற்ற சீர்திருத்தங்கள் பல,  நமது மந்திரிமார் கவனம் செல்லாத இலாக்காக்களே இல்லையென்று சொல்லலாம். பனகல் ராஜா அவர்கள் நிறைவேற்றிய அறநிலையப் பாதுகாப்புச் சட்டமும், சர் பாத்ரோ நிறைவேற்றிய சென்னைச் சர்வ கலா சங்கச் சீர்திருத்தச் சட்டமும், ஆந்திர சர்வகலா சங்கச் சட்டமும் சர் கே வி ரெட்டி நாயுடு நிறைவேற்றிய கைத்தொழிலுக்குச் சர்க்கார் உதவிச் சட்டமும், எந்த மந்திரி சபைக்கும், பெருமையளிக்கக் கூடியனவேயாகும். உத்தியோக மண்டலத்தை இந்தியமயமாக்கவும், ஆயுர்வேத வைத்தியத்தை விருத்தி செய்யவும் பனகல் ராஜா பல ஏற்பாடுகள் செய்து வெற்றி பெற்றார். சென்னையிலே முதன் முதலாக ஓர் இந்திய வைத்தியக் கல்லூரியை ஸ்தாபித்தார். தொழிலாளர், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்துக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டார். சர் பாத்ரோ முயற்சியினால் ஆரம்பக் கல்வி மிகவும் வளர்ச்சியடைந்தது. சர்வ சாதி மாணவர்களுக்கும் கலாசாலைகளில் தடையின்றிப் பிரவேசம் பெறும் பொருட்டுச் செலக்ஷன் போர்டுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தியாவிலே இரட்டையாட்சியைத் திறம்பட நடத்திக் காட்டியதாக நமது எதிரிகளும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். கட்சி சம்பிரதாயப்படி நிர்வாகம் நடத்திய பெருமை ஜஸ்டிஸாருக்கே எனக் காலஞ்சென்ற மாஜி மந்திரி மவுலானா யாகூர்ஹாசன் சேட் கூட வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். (நூலிலிருந்து பக்.63)

நூல் : நீதிக்கட்சி வரலாறு
ஆசிரியர் : பண்டித எஸ். முத்துசாமிப்பிள்ளை

வெளியீடு : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு,
84/1, பெரியார் திடல், ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2661 8163
மின்னஞ்சல் : info@periyar.org

பக்கங்கள்: 72
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : periyarbooks

தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூரில் கருத்தரங்கம்

அணுக் கழிவுகள் – ஹைட்ரோ கார்பன் – எட்டு வழிச்சாலை –
நியூட்ரினோ !

தமிழகத்தை நாசமாக்காதே !

கடலூரில் கருத்தரங்கம்

நாள் : ஆகஸ்டு 26, மாலை 4:00 மணி.
இடம் : டவுன்ஹால், கடலூர்.

தலைமை :

தோழர் பாலு,
மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம். கடலூர்.

உரையாற்றுவோர் :

திரு அய்யநாதன்,
பத்திரிகையாளர், சென்னை.

திரு சக்காபு,
தலைவர், கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம், கிள்ளை.

தோழர் கு. பாலசுப்ரமணியன்,
ஒருங்கிணைப்பாளர், ஹைட்ரோகார்பன் – சாகர் மாலா எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு, கடலூர்.

திரு இளங்கீரன்,
தலைவர், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, சிதம்பரம்.

தோழர் மருது,
மாநில செய்தி தொடர்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

அனைவரும் வாருங்கள்! தமிழகத்தை நாசமாக்கும் பேரழிவு திட்டங்களைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!

***

டைபெற உள்ள கருத்தரங்கத்தினையொட்டி கடந்த 12.08.2019 அன்று ஊமங்கலம் கிராமத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தமிழகத்தை நாசமாக்காதே !என்ற தலைப்பில் மக்கள் அதிகாரத்தின் ஊமங்கலம் கிளை தலைவர் தோழர் ஆடியபாதம் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் உரையாற்றினார்.

அதன்பிறகு வட்டார குழு தோழர் அசோக் உரையாற்றினார். உடன் ஊமங்கலம் கிளைத் தோழர் கணேஷ், தோழர் தம்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தை நாசமாக்க கூடிய பல்வேறு அழிவுத் திட்டங்களை விளக்கி பேசப்பட்டது கிராம மக்கள் அனைவரும் கூடி இருந்து கவனித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம் – 81108 15963


இதையும் பாருங்க :

பசுமை எங்கும் அழிகிறதே ! இனி பாலைவனமோ தமிழகமே | Kovan Song

என் அன்புப் புத்தகமே ! உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 02

முதல் பாடநூல்களை உருவாக்கும் கோட்பாடு

ரே பாடத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கும்படி நான் குழந்தைகளுக்குச் சொல்லவில்லை. படிக்கும் பாடம் இடையறாது மாற்றப்படாவிடில் படிக்கும் பழக்கம் நன்கு வராது என்பது எனது உறுதியான நம்பிக்கை. பல்வேறு நூல்கள், கட்டுரைகளிலிருந்து வெவ்வேறு விதமான விஷயங்களை அறிந்து கொள்ளதான் படிப்பு தேவையே தவிர தேவையற்ற ஒரே வாசகத்தைத் திரும்பத் திரும்பப் படிப்பதற்காக அல்ல.

எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்த அனுபவம், ஆறு வயதுக் குழந்தைகளுக்கு முதல் பாடநூலை எப்படி சிறப்பாக உருவாக்குவது என்பது சம்பந்தமாக சில கருத்துகளை எனக்குச் சொல்லித் தந்தது. ஆறு வயதுக் குழந்தைக்கு ஒரே மாதிரியான பாடங்கள் அலுப்பு தட்டச் செய்யும், நீண்ட காலமாக – ஒரு கல்வியாண்டு பூராவும் – ஒரே நூலைப் பயன்படுத்தினால் அது அவனுக்குச் சலிப்பேற்படுத்தும். சிறுவர்களுக்கான தாய்மொழிப் பாடநூல் நான்கு நூல்களைக் கொண்டதாயிருந்தால் நல்லது. முதல் நூல் குழந்தையைப் பேச்சு யதார்த்த உலகிற்கு இட்டுச் செல்லும், இரண்டாவது நூல் படிப்பு ரகசியங்களைக் காட்டும், மூன்றாவது, நான்காவது நூல்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க உதவும். நான் முதல் நூலிலிருந்து துவங்குவேன். இதைக் கற்றுத் தேர்ந்ததும் “’பார்த்தீர்களா, நாம் வளர்ந்து விட்டோம், இப்போது இரண்டாவது நூலுக்குச் செல்வோம்” என்று கூறி இரண்டாவது நூலுக்குச் செல்வேன். இதே மாதிரி தொடரலாம். குழந்தையை இந்நூல்கள் சந்தோஷப்படுத்துமா? பெரும் சந்தோஷத்தைத் தரும். தான் எப்படி வளர்ச்சியடைகிறோம், எப்படி முன்னோக்கி நடைபோடுகிறோம் என்று குழந்தைக்குத் தெட்டத் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு முறையும் குழந்தையிடம் புதிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வளரும்.

புதியவற்றை அறியும் மகிழ்ச்சி எனும் கோட்பாடுதான் இந்த நூல்களின் அடிப்படையாகத் திகழ வேண்டும். ஆம், மகிழ்ச்சிக் கோட்பாடு! ஆறு வயதுக் குழந்தைகளுக்கான முதல் பாடநூல்களில் நிறைய நகைச்சுவையும், குழந்தை தனது நேரத்தை நன்கு செலவிடவல்ல பல சுவாரசியமான கேள்விகளும் பயன்மிகு ஆலோசனைகளும் (உதாரணமாக, சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாமான்களை எப்படிச் செய்வது, பெற்றோர்களை எப்படி சந்தோஷப்படுத்துவது, அம்மாவிற்கு எப்படி உதவுவது) அடங்கியிருக்க வேண்டுமென என் அனுபவம் காட்டுகிறது. ஓவிய ஒலியெழுத்துப் புதிர்கள், குறுக்கெழுத்து புதிர்கள், பல்வேறு விதமான விளையாட்டுகள், விடுகதைகள், கடகடவென சொல்லவல்ல வாசகங்கள் போன்றவை இவற்றில் இருக்கலாம். இதில் மகிழ்ச்சிகரமான, புத்திசாலித்தனமான கவிதைகளும் கதைகளும் இருக்க வேண்டும். பள்ளிக்கு வருவதற்கு முன்னரே படிக்கக் கற்றுக் கொண்ட அல்லது படிப்பு வேகத்தில் முன்னிற்கும் குழந்தைகளுக்கான பக்கங்களைச் சேர்க்க நான் அஞ்ச மாட்டேன்.

சுயமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை – இந்த அடிப்படையில் தான் புதியவற்றை அறிந்து கொள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள நாட்டத்தை வளர்க்க வேண்டும். இப்படிப்பட்ட பாடநூல் இருந்தால் குழந்தைகளுக்கு அடிக்கடி பின்வருமாறு சொல்லலாம்:

“விருப்பமான புதிரைப் போடுங்கள்… ஏதாவது ஒரு கவிதையைப் படியுங்கள். உங்களுக்கு விருப்பமான கதையைப் படியுங்கள். பின்னர் எல்லோரும் சேர்ந்து இதைப் பார்ப்போம்!” அப்போது வகுப்பில் காரியரீதியான பேச்சு நடக்கும்!

படிக்க:
உலக புத்தக தினம் : புத்தக வாசிப்பு – பலன்கள் பதினைந்து
ரோஹித் வெமுலா முதல் நஜீப் வரை : தீவிரமடையும் பார்ப்பன பாசிசம்

குழந்தைகள் படிப்படியாகப் படிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வழிகோலுவதே இந்நூல்களை உருவாக்குவதற்கான முக்கிய நிபந்தனையாகும்.

எழுத்துகளே! உமக்கு நன்றி!

“குழந்தைகளே, வணக்கம்!… நீங்கள் இன்று அலங்காரமாக ஆடையணிந்திருக்கின்றீர்களே! என்ன விஷயம்?”

“நீங்களும் தான் அழகாக ஆடையணிந்திருக்கின்றீர்கள்!”

“இன்று விழாவாயிற்றே!”

“நாம் எல்லா எழுத்துகளையும் கற்றுக் கொண்டு விட்டோம்!”

“இன்று விருந்தினர்கள் வருகின்றனர்!”

“தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் பாராட்டுதல் எழுதப்பட்டுள்ளதை நான் படித்தேன்…. நமக்குப் படிக்கவும் எழுதவும் தெரியும் என்பதற்காக நம்மைப் பாராட்டுகின்றனர்.”

“எனக்கு புத்தகம் படிக்கத் தெரியும்.”

“இன்று கடைசி எழுத்தைப் பார்ப்போம். கடைசி எழுத்துள்ள பக்கத்தைத் திறவுங்கள்!”

சின்னஞ்சிறு பாத்தா எல்லா எழுத்துகளையும் படித்த பின் மகிழ்ச்சியோடு வீட்டிற்கு ஓடிவந்து “பாட்டி, நான் உனக்குப் படிக்கச் சொல்லித் தரட்டுமா, இது மிகவும் சுலபம்!” என்று கூறியது பற்றிய கதையைக் குழந்தைகள் படிக்கின்றனர்.

“சரி, இப்போது அடுத்த கதையைப் படியுங்கள்!”

“இனி பக்கங்கள் இல்லை, தீர்ந்து விட்டது.”

“இல்லையா?”

“ஆம், நாங்கள் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டோம்.”

“முற்றிலுமாக முடித்து விட்டோம்…” மீண்டும் மகிழ்ச்சி ஆரவாரம்.

“அப்படியெனில் பாடநூலை மூடுங்கள்….. உங்களுக்கு என்ன தெரியுமென பார்ப்போம் வாருங்கள்!”

“இது எங்களுக்கு அழகிய தாய்மொழி எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்தது.”

“படிக்கவும் எழுதவும் சொல்லித் தந்தது!”

“தாய்மொழியில் சரியாகப் பேசக் கற்றுக் கொண்டோம்!”

“எங்களுக்கு அறிவைத் தந்தது!”

“அன்பாக இருக்கவும் நட்புக் கொள்ளவும் சொல்லித் தந்தது!”

“படிக்க விரும்பவும்… புத்தகங்களை நேசிக்கவும் சொல்லித் தந்தது!”

“பெற்றோர்கள் மீது மரியாதை செலுத்தச் சொல்லித் தந்தது!”

“நாகரிகமாகப் பழக சொல்லித் தந்தது!”

“நமது தாய் நாடு எப்படிப்பட்டதென சொல்லித் தந்தது!”

“அதில் நிறைய சிரிப்பான, மகிழ்ச்சியான படங்கள் உள்ளன.”

“பல்வேறு புதிர்களும் பாடல் வாசகங்களும் உள்ளன.”

“இப்புத்தகத்தின் மீது எனக்குப் பெரும் விருப்பம். இதை வீட்டிற்கு எடுத்துச் செல்ல நீங்கள் அனுமதித்த போது இதை நான் தலையணை அடியில் வைத்துக் கொண்டு தூங்கினேன்.”

“நான் இதை எல்லோருக்கும் காட்டினேன்.”

“இப்போது குனிந்து, கண்களை மூடுங்கள்” என்று நான் குரலைத் தாழ்த்திக் கூறுகிறேன். “உங்களுடைய முதல் புத்தகம் உங்களுக்குப் பிடித்துள்ளது. அப்படித்தானே!”

“ஆம்” என்று மெதுவாகச் சொல்கின்றனர் குழந்தைகள்.

“நீங்கள் இப்புத்தகத்திற்கு நன்றி சொல்ல விரும்புகின்றீர்களா?”

“ஆம்!” என்கின்றனர் குழந்தைகள்.

“உங்கள் நன்றியை எப்படிப்பட்ட ‘வார்த்தைகளின்’ மூலம் தெரிவிப்பீர்களென யோசியுங்கள்!”

ஒரு நிமிட மௌனம். குழந்தைகள் கரங்களை உயர்த்துகின்றனர்.

பல்வேறு நூல்கள், கட்டுரைகளிலிருந்து வெவ்வேறு விதமான விஷயங்களை அறிந்து கொள்ளதான் படிப்பு தேவையே தவிர தேவையற்ற ஒரே வாசகத்தைத் திரும்பத் திரும்பப் படிப்பதற்காக அல்ல.

மாரிக்கா: “ ‘என் அன்புப் புத்தகமே! உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என்று நான் சொல்வேன்.”

லேரி: புத்தகத்தை தலைக்கு மேலாக உயர்த்தியபடி “மிக, மிக, மிக நன்றி!”

தீத்தோ: “என் அன்பு நண்பனே! நான் உன்னை என்றுமே மறக்க மாட்டேன்! உனது அட்டையை நாசப்படுத்தியதற்கு, பக்கத்தைக் கிழித்ததற்கு மன்னித்து விடு! புத்தகங்களைக் கவனமாகப் பேணிக் காப்பேன் என்று உறுதி தருகிறேன். நீ உண்மையான மனிதனைப் போன்றவன்!”

கீயா: “நான் நிறைய படிப்பேன், நூல்களை நேசிப்பேன் என்று கூறி உனக்கு நன்றி சொல்கிறேன்.”

மாயா: “எங்கள் அன்பு முதல் புத்தகமே! நாங்கள் ஒருவேளை உன்னை இம்சித்திருக்கலாம், எங்களுக்குப் படிப்பது கடினமாக இருந்தது, நீ அனேகமாக எங்கள் மீது கோபம் கொண்டிருக்கலாம்! ஆனால் நீ அன்பான புத்தகம். நாங்கள் அனைவரும் உன்னை மிகவும் நேசிக்கின்றோம். எப்போதும் உன்னை மறக்க மாட்டோம்!”

நீயா:  “நீ சூரியன், நீ நூல்களின் ராணி! நீ என்றென்றும் நீடூழி வாழ்க!”

இலிக்கோ: “நான் பள்ளிக்கு வந்த போது தாய்மொழி எனக்கு நன்றாகத் தெரியாது. இந்தப் புத்தகம் தாய்மொழியில் நன்றாகப் படிக்கச் சொல்லித் தந்தது. எனவே, நான் இதை மிகவும் நேசிக்கிறேன்!”

சான்த்ரோ:  “நீ மிகவும் நல்ல, நேர்மையான, மிகவும் அன்பான புத்தகம். நீ எல்லோருக்கும் தாய்மொழியைச் சொல்லித் தருகிறாய், எனவே எல்லோரும் உன்னை நேசிக்கின்றனர். நானும் உன்னை நேசிக்கிறேன்!”

தாம்ரிக்கோ: “நீ புத்திசாலியான புத்தகம், எங்களுக்கும் நீ இதைச் சொல்லித் தந்தாய். உனக்கு நன்றி!”

சாஷா: (மெளனமாக புத்தகத்தைப் பார்த்தபடி நின்று, பின் மெதுவாகச் சொல்ல ஆரம்பிக்கின்றான்) “இந்தப் புத்தகம் எழுத்துகளைக் கற்பித்தது, படிக்கச் சொல்லித் தந்தது. ஒருவனுக்குப் படிக்கத் தெரிந்தால் அவன் ஏராளமானவற்றைக் கற்றுக் கொள்வான், ஏனெனில், புத்தகங்களில் எல்லா விஞ்ஞானங்களும் அடங்கியுள்ளன என்று என் அம்மா கூறியிருக்கின்றாள். இது ஆசிரியராகத் திகழும் புத்தகம். நானும் இதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், இதை நான் நேசிக்கிறேன்!”

“உங்களுடைய முதல் புத்தகத்தை விட்டுப் பிரிய வருத்தமாயுள்ளதா?”

ஒரே ஏகோபித்த குரலில்: “ஆமாம், மிகவும் வருத்தமாயுள்ளது!”

படிக்க:
நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?

“அனேகமாக நீங்கள் இல்லாமல் அதற்கும் வருத்தமாயிருக்கும். வேண்டுமானால் இதைப் பள்ளியின் பரிசாக வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்!”

ஒரே மகிழ்ச்சி! பலர் புத்தகத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்கின்றனர்,

இது மிக முக்கிய நூல்.

“ ‘என்னுடைய புத்தகம்!’ என்று மெதுவாகக் கூறுகிறாள் தேக்கா.

மாக்தா புத்தகத்திற்கு முத்தம் தருகிறாள்.

சூரிக்கோ புத்தகத்தைத் திறந்து, ஏதோ முதன் முதலாகப் பார்ப்பதைப் போல் புரட்டுகிறான்.

இராக்ளி கிழிந்த அட்டையைச் சரிசெய்து, பக்கங்களின் மூலைகளைத் தடவித் தருகிறான்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா ?

Moon-Slider

நிலவில் மனிதன் முதன்முதலாக கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் சந்திராயன்-2 இறங்கு கலம் ஜூலை 22 அன்று விண்ணில் ஏவப்பட்டது. ஒட்டுமொத்த அண்டவெளியில் நமது பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்பொருள் நிலா தான். ஆனால் நிலவைப் பற்றி நாம் அறிந்துள்ளவை மிகக் குறைவே. வேண்டுமானால், உங்கள் சுற்றத்தில் இந்த உரையாடலை நிகழ்த்திப் பாருங்கள்:

தரை தளத்திலிருந்து மொட்டை மாடியை எப்படிப் பார்ப்பீர்கள்?”

அன்னாந்து பார்ப்போம்

மொட்டை மாடியிலிருந்து தரைத் தளத்தை பார்க்கும் போது?”

குனிந்து பார்ப்போம்

இங்கிருந்து நிலவை எப்படிப் பார்ப்பீர்கள்?”

அன்னாந்து பார்ப்போம்

எனில் நிலவிலிருந்து பூமியை எப்படிப் பார்ப்பீர்கள்?”

Web-Earth-From-Moonஇந்தக் கேள்விக்கு “குனிந்து” என்று நம்மில் பெரும்பாலானோர் தவறாக பதிலளிப்போம். நிலா கோள வடிவிலானது என்று அறிந்திருந்தும் கூட நமது பார்வைக் கோணத்தில் வட்ட வடிவிலான தட்டாக மூளையில் பதிவுபெற்றிருப்பதே இதற்கு காரணம்.

நமது நிலா, ஒரு கால்பந்தைப் போல ஒரு முழுநிறைவான கோள வடிவிலில்லை. நிலவின் துருவங்களுக்கிடையேயான விட்டம் நிலநடுக்கோட்டு விட்டத்தை விட சிறிது குறைவு. நிலநடுக்கோட்டு விட்டம் 3,476 கிலோமீட்டர். துருவ விட்டம் 3,472 கிலோமீட்டர்.

நமது சூரியக் குடும்பத்தில் மொத்தம் 185 நிலாக்கள் (துணைக்கோள்களின்) உள்ளன. கோள்கள் சூரியனையும், துணைக் கோள்கள் கோள்களையும் சுற்றுகின்றன என்றறிவோம். செவ்வாய் கோளை 2 துணைக்கோள்களும் (நிலாக்கள்), வியாழன் கோளை 79 துணைக்கோள்களும், சனிக் கோளை 62 துணைக்கோள்களும்,  யுரேனஸ் கோளை 27 துணைக்கோள்களும், நெப்டியூன் கோளை 14 துணைக்கோள்களும் சுற்றி வருகின்றன. இந்து வேதங்கள், பைபிள், குரான் அல்லது சோதிடம், நவகிரக அமைப்புகள் இவை எதிலுமே நமது சந்திரனைத் தவிர மற்ற எவையும் குறிப்பிடப்படவில்லை.

படிக்க:
♦ பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் !
♦ தொலைதூர நட்சத்திரத்தின் நிறையை அளவிடுதல் – வானியலாளர்கள் வெற்றி

இவற்றில் நான்கு துணைக்கோள்கள் நமது நிலவை விடப் பெரியவை. சூரியக் குடும்பத்தில் இருப்பவற்றிலேயே மிகப் பெரிய நிலா (துணைக் கோள்) வியாழனின் நிலாக்களில் ஒன்றான கனிமீடு (Ganymede). இதன் விட்டம் 5268 கிலோ மீட்டர். இரண்டாவது இடத்திலுள்ள சனிக் கோளின் நிலாக்களில் ஒன்றான டைட்டனின்(Titan) விட்டம் 5150 கி.மீ. மூன்றாமிடத்தில் இருக்கும் வியாழனின் நிலா காலிஸ்டோ(Callisto) 4820 கி.மீ விட்டமுடையது. நான்காமிடத்தில் 3660 கி.மீ விட்டமுள்ள உள்ளது வியாழனின் நிலா ஐஓ(IO). ஐந்தாமிடத்தில் நமது நிலாவும், ஆறாமிடத்தில் 3122 கி.மீ விட்டம் கொண்ட வியாழனின் நிலாக்களில் ஒன்றான யுரோப்பாவும்(Europa) உள்ளன. இவற்றில் கனிமீடும் டைட்டனும் சூரியக் குடும்பத்தின் முதல் கோளான புதனை(Mercury) விடப் பெரியவை.

மனிதக் குரங்கிலிருந்து தோன்றிய ஆதி மனிதனிலிருந்து இன்று வரை நாம் அனைவருமே நிலாவின் ஒரு அரைக்கோளத்தை மட்டுமே பார்க்கிறோம். ஏனெனில் நிலா பூமியைச் சுற்றுவதும், தன்னைத் தானே சுற்றுவதும் ஒரு ஒத்திசைவான விகிதத்தில் இருக்கிறது. அதனால் எப்போதும் நிலவின் ஒரு முகத்தை மட்டுமே எப்போதும் பார்க்கிறோம்.

நிலவானது பூமியை வட்டப்பாதையில் சுற்றவில்லை; நீள்வட்ட பாதையில் சுற்றிவருகிறது. ஒருமுறை நமக்கு அருகிலும் மற்றொரு முறை தொலைவிலுமாக பூமியிலிருந்து அதன் தொலைவு மாறிக்கொண்டே இருக்கிறது. அதனாலேயே சில முழுநிலவு நாட்களில் நிலா பெரிதாகவும் சில நாட்களில் சிறிதாகவும் தெரிகிறது.

காஷ்மீர்-கார்கிலிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரு நேர்கோடு வரைந்தால் அதன் நீளம் 2945 கிலோமீட்டர் இருக்கும். இந்தியாவை எடுத்து நிலவில் வைத்தால், அதன் துருவ விட்டம் இந்தியாவின் நீளத்தை விட சுமார் 500 கிலோமீட்டர் அதிகமிருக்கும்.

ஆனால் இது ஒருவகையான ஒப்பீடு மட்டுமே. மேற்பரப்பளவை ஒப்பீட்டால், நிலவு மிக மிக பெரியது. இந்தியாவின் பரப்பளவு சுமார் 33 இலட்சம் சதுர கிலோமீட்டர். நிலவின் மேற்பரப்பளவு சுமார் 3 கோடியே 80 இலட்சம் சதுர கிலோமீட்டராகும். (பூமியின் மொத்த மேற்பரப்பளவு சுமார் 51 கோடி சதுர கிலோமீட்டரில் சுமார் 14 கோடியே 90 இலட்சம் கோடி சதுர கிலோமீட்டர் மட்டுமே நிலப்பகுதி)

நிலா பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது அதன் தொலைவு 3 இலட்சத்து 56 ஆயிரம் கிலோமீட்டராகவும் தொலைவிலிருக்கும் போது 4 இலட்சத்து 6 ஆயிரம் கிலோமீட்டராகவும், சராசரியாக 3 இலட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டராகவும் உள்ளது. இத்தொலைவுக்கு நாம் பயணம் சென்றால்?

படிக்க:
♦ “இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்
♦ “ போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !

கன்னியாகுமரிலிருந்து காஷ்மீர்-கார்கிலுக்கு கழுகு பறப்பதைப் போல் நேர்கோட்டுப் பாதையில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் சுமார் 30 மணிநேரம் பிடிக்கும். இதே100 கிலோமீட்டர் வேகத்தில் நிலவிற்கு சென்றால் 3840 மணிநேரம் அதாவது 160 நாட்கள் பிடிக்கும். அதாவது கன்னியாகுமரிலிருந்து காஷ்மீர் கார்கிலுக்கு 64 முறை போய் வரும் நேரம். ஆனால் அப்பல்லோ-11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங்கும், பஸ் ஆல்ட்ரினும் 3 நாட்கள் 4 மணிநேரத்தில் சென்றடைந்தனர். இதுவரை 12 மனிதர்கள் மட்டுமே நிலவில் கால் பதித்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே நிலவில் ஆய்வுக்கலத்தை இறக்கியுள்ளன. இந்தியாவின் சந்திராயன்-2, செப்டம்பர் 6 அன்று நிலவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலா எப்படி தோன்றியது என்பது பற்றி பல்வேறு கருதுகோள்கள் நிலவுகின்றன. பூமியைப் போலவே சந்திரன் சூரியனிலிருந்து தோன்றியிருக்கலாம், பூமியிலிருந்து பிரிந்து சென்றும் சந்திரன் உருவாகியிருக்கலாம், எங்கிருந்தோ வந்து பூமியின் ஈர்ப்புப் புலத்தில் சிக்கிக் கொண்ட சிறு கோள் போன்ற கோட்பாடுகள் தவறு என்று நிருபணமாகி விட்டன. “ஆரம்பகால குழந்தைப் பருவ பூமியின் மீது ஒரு கிரகம் மோதி அதன் விளைவாக ஏற்பட்ட சிதறல்கள் ஒன்றுதிரண்டு சந்திரனாக உருவெடுத்திருக்க வேண்டும்” என்பதே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும். ஆதி பூமியின் மீது மெதுவாக வந்து மோதியதாகக் கருதப்படும் (தோராயமாக செவ்வாய் கோள் அளவிலான) கோளுக்கு விஞ்ஞானிகள் தைய்யா (Theia) என்று பெயரிட்டுள்ளனர்.

நிலா ஒரு முறை பூமியை சுற்றி வருவதற்குள் பூமி தோராயமாக 28 முறை தன்னைத் தானே சுழன்றிருக்கும். அதாவது, 28 நாட்கள். நிலா சூரியனின் திசையில் இருக்கும் போது அது இரவில் தெரிவதில்லை. சூரியனுக்கு எதிர்த்திசையில் இருக்கும்போது இரவில் தெரிகிறது. இந்த சுழற்சியின் நிகழ்வுகளே புதுநிலவு (அமாவாசை), முழுநிலவு (பௌர்ணமி). கதிரவன், பூமி, நிலா இம்மூன்றும் ஒரே துல்லியமான நேர் கோட்டில் அமையும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. நிலா கதிரவனை மறைக்கும் போது சூரிய கிரகணமும், பூமியின் நிழல் சந்திரனில் படும் போது சந்திர கிரகணமும் ஏற்படுகின்றன. அதாவது அமாவாசையன்று சூரிய கிரகணமும், பௌணர்மியன்று சந்திர கிரகணமும் நடக்கும்.

solar-and-lunar-eclipses

ஆனால் இன்றும் கதிரவ மறைப்பு, சந்திர மறைப்பு (கிரகணங்கள்) இராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதால் ஏற்படுகின்றன என்ற அறிவியலுக்கு ஒவ்வாத கட்டுக்கதைகள் கோலோச்சுகின்றன.

பிரபஞ்சத்திலேயே உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழல் பூமியில் மட்டும் இருப்பதை நாம் அறிவோம். அதே போல வியத்தகு முறையிலானதோர் விகிதம் நமது பூமிக்கும் துணைக் கோளான நிலவிற்கும் உள்ளது.

கதிரவனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் 14.96 கோடி கிலோ மீட்டர். பூமிக்கும் நிலவிற்கும் இடையிலான தூரம் 3.84 இலட்சம் கி.மீட்டரை விட தோராயமாக 400 மடங்கு. சூரியனின் விட்டம் 14 இலட்சம் கி.மீட்டர். நிலவின் விட்டம் 3476 கி.மீட்டரை விட தோராயமாக 400 மடங்கு. இவ்விகித ஒற்றுமையால்தான் முழு நிறைவான சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நீல் ஆம்ஸ்ட்ராங்கும், பஸ் ஆல்ட்ரினும் நிலவில் காலடித் தடத்தை மட்டும் விட்டுவிட்டு வரவில்லை. எதிரொளிப்பான் ஒன்றையும் நிலவில் விட்டுவிட்டு வந்துள்ளனர். அந்த பிரதிபலிப்பானை குறிவைத்து ஒரு லேசர் ஒளிக்கற்றை அனுப்பப்படுகிறது. ஒளி கற்றை பிரதிபலிப்பானில் பட்டு திரும்பிவர எடுக்கும்  நேரத்தைக் கொண்டு பூமி-நிலவிற்கிடையிலான தொலைவு அளக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நிலா, பூமியை விட்டு 4மில்லி மீட்டர் – அதாவது நம் நகக்கண் அளவு விலகிச் செல்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு 4 மீட்டர். பத்து லட்சம் ஆண்டுகளுக்கு 4 கிலோ மீட்டர் நகரும்.

இதற்கு காரணம் நியூட்டனின் மூன்றாம் விதி. நிலவின் ஈர்ப்பு விசை பூமியிலுள்ள கடல் மற்றும் நீர்பரப்புகளில் அலைகள் ஏற்பட காரணமாக உள்ளது. இவ்வலைகள் நிலவின் மீது எதிர்விசையை – விலக்கு விசையை உண்டாக்குகின்றன.

இந்த விகிதத்தில் நிலா விலகிச் சென்றால் அது முழு நிறைவாக கதிரவனை மறைத்து – முழு நிறைவான சூரிய கிரகணம் ஏற்படாது; நமது கடல்கள் அலைகளின்றியும் போகலாம்; இது பூமியின் பல்லுயிர் சூழலை பாதிக்கும். ஆனால் இது ஏற்படுவதற்கு சுமார் 50 கோடி ஆண்டுகள் பிடிக்கும். அன்று நிலா சுமார் இரண்டாயிரம் கி.மீட்டர்கள் நகர்ந்திருக்கக் கூடும். அன்று நமது புதுநிலவு – முழுநிலவு (அமாவாசை-பௌணர்மி) இடையினான நாட்கள் அதிகரித்திருக்கவும் கூடும்.

Rahu Ketuகற்றல் என்பது ‘புதிதாக’ கருத்துக்களை அறிந்து கொள்வது என்பது மட்டுமோ அல்லது கற்றல் என்பது சரியான கருத்துக்களை தெரிந்து கொள்வதும், தவறானவற்றை நிராகரிப்பதும் மட்டுமோ அல்ல. புலனுணர்வின் மூலம் பெறப்பட்ட பல கருத்துக்களை ஒருங்கினைத்துப் புரிந்து கொள்வதுடன், ஏற்கனவே புலனுணர்வினாலும், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் மூலமும் பெற்றுள்ள தவறான கருத்துக்களை நமது மூளையிலிருந்து துடைத்தெறிவதன் மூலமே கற்றல் முழுமையடைகிறது.

தவறான கருத்துக்கள் அல்லது அரைக்காணி (1/160) அளவிலான உண்மைகளோடு கட்டமைக்கப்படும் கட்டுக்கதைகள் மத மூடநம்பிக்கைகளுடன் கலக்கும் போது அவை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகி விடுகிறது. அதனால் தான் இன்றும் கூட பூமி தட்டை, சோதிடம், கிரகப் பெயர்ச்சி போன்ற மூடநம்பிக்கைகளை நம்புவோரும் ‘நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தது பொய்’ என்பது போன்ற சதிகோட்பாடுகளை நம்பிப் பரப்புவோரும் இருக்கிறார்கள்.

அதனால் அறிவுக்கு ஒவ்வாத கட்டுக் கதைகளையும், கற்பிதங்களையும் நமது மூளையிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு இயற்கையின் வியத்தகு நிகழ்வுகளை இரசிப்போம், நமது கற்றலை விரிவு செய்வோம்.

– மார்ட்டின்

கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ?

Vinavu-Q&A-Slider

கேள்வி : //தனி மனித, சமூக, நல்ல –  கெட்ட நிகழ்வுகள் எல்லாவற்றிக்கும் உணர்ச்சி வசப்படுவதால் நிதானம் இழக்கிறேன். அறிவு பூர்வமாக யோசித்தால் யாரும் எப்படியோ போகட்டும் என்று தோன்றுகிறது. மனதுக்கும் அறிவிற்குமான இந்த போராட்டத்தை அடக்க முடியுமா? முடியுமெனில் விளக்கவும்.//

– ராதாகிருஷ்ணன் ரங்கராஜ்

ன்புள்ள ராதாகிருஷ்ணன் ரங்கராஜ்,

அறிவுப் பூர்வமாக யோசிக்கும் போது யாரும் எப்படியோ போகட்டும் என்று தோன்றுகிறதல்லவா? இது தொடரும் பட்சத்தில் காலப்போக்கில் சமூகரீதியான நிகழ்வுகளுக்கு உணர்ச்சிவசப்பட்டு நிதானம் இழப்பதே நின்று போகும். சுயநலமாய், காரியவாதியாகவும் உருப்பெறுவோம். அப்போது தன்னலம் சார்ந்து உணர்ச்சி வசப்படுவது மட்டும் இருக்கும்.

எனவே இப்போது நீங்கள் உணர்ச்சிவசப்படுவது உங்களிடம் இருக்கும் சமூக நலன்பாற்பட்ட சிந்தனைகளின் நல்ல அறிகுறி. அதே போன்று அறிவுப்பூர்வமாக யோசிக்கும் போது வழி ஒன்றுமில்லை என்று சிந்திப்பதன் காரணம் நீங்கள் இந்த இடத்தில் தனிநபராக சிந்திக்கிறீர்கள். இதை விடுத்து அதே இடத்தில் சக மனிதர்களோடு கூட்டாக கவலைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தெம்பாக யோசிக்க முடியுமல்லவா? மனித குலத்தின் வரலாறும் சரி, வளர்ச்சியும் சரி இத்தகைய கூட்டுத்துவமாய் சமூகமாய் செயல்பட்டதன் விளைவுகளே. அது அப்போது மட்டுமல்ல எப்போதும் பொருந்தக் கூடிய ஒன்று.

ஆய்வு ஒன்றின்படி தொழிற்சங்கம் இருக்கும் தொழிற்சாலை பகுதிகளில் தற்கொலை விகிதம் குறைவாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகள் இல்லாத பகுதிகளில் தற்கொலை விகிதம் அதிகமாகவும் இருக்கிறது. தனித் தொழிலாளியாக மட்டும் இருந்து, தன்னுடைய பணி சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாத போது  விரக்கியடைந்து; வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது. சங்கமாய் சேரும்போது நான் மட்டும் தனியாக இல்லை, இங்கே நாம் என்று பலரும் இருக்கிறோமென ஒரு கூட்டு மனப்பான்மை அந்த தனிப்பட்ட விரக்தியை ஒழிக்கிறது.

எனவே உங்களது உணர்ச்சிவசப்படல் சமூகநலன்பாற்பட்டும், உங்களது சிந்தனை தனிநபராக நின்று யோசிப்பதும் இருக்கிறது. இதன் முரண்பாட்டை களைய நீங்கள் ஏதாவது ஒரு முற்போக்கு அமைப்பு ஒன்றில் (ம.க.இ.க., மக்கள் அதிகாரம் போன்ற) இணைந்து கூட்டாய் சிந்திக்க முயலுங்கள். அப்போது உணர்ச்சிவசப்படல் குறைந்து சமூக அநீதிகளுக்கு நாம் இன்னதுதான் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சி தோன்றி உருப்பெறும்.

♦ ♦ ♦

கேள்வி : //சுபாஷ் சந்திர போஸ் (மற்றும் அவரின்) ராணுவத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து, ஒருவேளை இந்தியாவை வழிநடத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஹிட்லரைச் சந்தித்த சந்திரபோஸ் ஃபாசிசத்தின் வழியில் இந்தியாவை ஆண்டிருப்பாரா அல்லது சோசலிச வழியில் ஆண்டிருப்பாரா?உண்மையில் அவர் இடதா அல்லது வலதா?//

-மா.பேச்சிமுத்து

சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய அச்சு நாடுகளின் கூட்டணி ஆதரவுடன் பிரிட்டனை எதிர்த்து போர் புரிந்து விடுதலை அடைய அவர் விரும்பினார்.

Subhas Chandra Boseஇரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் கூட்டணி தோற்று அச்சு நாடுகள் வெற்றி பெற்றிருந்தால் உலகமே பாசிச, நாஜிக்களின் வசம் அடிமைப்பட்டிருக்கும். சோவியத் யூனியனின் அளப்பரிய தியாகத்தால் பாசிச ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனி வீழ்ந்தது. கிழக்கே ஜப்பானும் தோல்வியுற்றது. ஜப்பான் உதவியுடன் பர்மா வரை வந்த சுபாஷின் இந்திய தேசிய இராணுவம் பின்னர் பிரிட்டன் படைகளிடம் தோற்றுப் போனது.

எனவே சுபாஷின் வெற்றி தோல்வி என்பது பாசிச ஜெர்மனியோடு தொடர்புடையது. உள்நாட்டில் காந்தியின் அஹிம்சைப் போராட்ட முறையால் விடுதலை அடைய முடியாது, போர் புரிந்தே விடுதலை அடைய முடியும் என்ற அளவில் சுபாஷ் சந்திர போஸ் இடதாகவும், நாஜி – பாசிச ஜெர்மனி – ஜப்பானிடம் உதவி கேட்ட வகையில் அவர் வலதாகவும் இருக்கிறார்.

♦ ♦ ♦

கேள்வி : //நான் முதுகலை இதழியல் முதலாம் ஆண்டு படித்து வருகின்றேன். எனக்கு இம்மாதிரியான கட்டுரைகளை எழுதி என்னால் முடிந்தவற்றை; மாற்றங்களை செய்ய விரும்புகின்றேன். அதற்கு எனக்கு முறையான பயிற்சி தேவை என்பதை உணர்ந்துள்ளேன். அதற்கு வகுப்புகள் நீங்கள் நடத்துகிறீர்களா?//

-ராஜா

ன்புள்ள ராஜா,

வகுப்பு மற்றும் பயிற்சி அளித்து வருகிறோம். அது குறித்து மேலும் அறிய எங்களது மின்னஞ்சல் முகவரியில் ( vinavu@gmail.com ) தொடர்பு கொள்ளவும்.

♦ ♦ ♦

கேள்வி : //பல்வேறு திரைப்படங்களுக்கும் விமர்சனம் (நேர்மறை அல்லது எதிர்மறை) எழுதும் நீங்கள் அம்பேத்கர் படத்தை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதது ஏன்?//

-அம்பேத்கர் பிரியன்

ன்புள்ள அம்பேத்கர் பிரியன்,

பல திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுத நினைத்தாலும் உண்மையில் அப்படி எழுத முடியவில்லை. வினவு தளத்தின் ஆரம்ப வருடங்களில் அவ்வப்போது திரை விமர்சனங்கள் வரும். இப்போது வருவதில்லை. மற்றபடி அம்பேத்கர் படம் குறித்து விமர்சனம் எழுத தடையில்லை. அதை குறித்துக் கொள்கிறோம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் !

2
Periyar-book-Pen-yean-adimai-aanal

பெரியார் – பெண் விடுதலை – பெண் ஏன் அடிமையானாள் ? (PDF வடிவில் உங்களுக்கு)

நண்பர்களே…

பொ.வேல்சாமி

லகத்திலேயே பெண் விடுலையைப் பற்றி சிந்தித்தவர்கள் மிகவும் குறைவானவர்கள். அவர்களுள் தந்தைப் பெரியார் குறிப்பிடத்தக்கவர். பெண் ஏன் அடிமையானாள் என்ற தன்னுடைய சிறு நூலில் தன் கருத்துக்களை விளக்குகிறார். 10 தலைப்புகளில் வரலாற்றுக் காலங்களில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக மாறியதற்கான காரணங்களைத் தெளிவாக விளக்கி பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளையும் புரட்சிகரமாகவும் நடைமுறையில் சாத்தியம் உள்ளதாகவும் விவரிக்கிறார்.

இந்நூலை பெரும்பாலான தோழர்கள் படித்திருப்பார்கள். அந்தப் புத்தகத்தையும் கையில் வைத்திருப்பார்கள். அந்நூலின் PDF இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பெண் ஏன் அடிமையானாள் ?

அழியட்டும் ஆண்மை

( பிடிஎஃப் டவுண்லோடு செய்ய )

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

தமிழகத்தை நாசமாக்காதே ! மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்

“தமிழகத்தை நாசமாக்காதே!” என்கின்ற தலைப்பில் மக்கள அதிகாரம் சார்பில் 19.08.2019 அன்று மாலை மதுரையில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்திற்கு இறுதி நேரத்தில் போலீசு அனுமதி மறுத்ததால் அந்நிகழ்ச்சி அரங்கக்கூட்டமாக நடந்தது.

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மக்கள் அதிகாரத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார். அவர் தன்னுடைய தலைமையுரையில், “பொதுவாகவே மக்கள் அதிகாரம் கூட்டம் என்றாலே அனுமதி கொடுப்பதில்லை என்கின்ற முடிவோடுதான் அரசும் போலீசும் இருக்கிறது. ஆனால் ரூம் போட்டு உக்காந்து யோசித்து புதிய புதிய முறையில் அனுமதி மறுக்கின்றனர். இன்று போய் நாளை வா என்று தினமும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இழுத்தடித்துவிட்டு பொதுக்கூட்டத்திற்கு முதல்நாள் அனுமதி இல்லை என்பது. புதிதாக கேள்வியை கேட்டு மறுப்பது இப்படி ஜனநாயக அடிப்படையின்றி செயல்படுகிறார்கள்.

”இந்தியாவை நாசமாக்காதே” என்கின்ற தலைப்பு வைத்தால் கூட இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமானதுதான். அந்தளவிற்கு இன்று இந்திய மக்களையும் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது இந்த பாசிச கும்பல். இதில் குறிப்பாக தமிழகத்தை ஆரிய வன்மத்தோடு நாசமாக்க மீத்தேன், ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு மையம், எட்டு வழிச்சாலை, சாகர்மாலா என நாசகார திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்த திட்டமிடுகிறார்கள். இதனை எதிர்த்து இயக்கங்கள் மட்டுமா போராடுகிறார்கள்? பலதரப்பட்ட மக்களும் போராடுகிறார்கள்.

ஆனால் போராடிய அனைவரையும் ஒடுக்குகிறார்கள். கூடங்குளத்தில், நியூட்டிரினோவில், தேசிய கல்வி கொள்கை என அனைத்தையும் அமுல்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியமிருக்கின்றது. எனவேதான் அனைத்து மாற்று அமைப்பை சேர்ந்தவர்களையும் இந்த கூட்டத்திற்கு அழைத்துள்ளோம். எனவே தனித்தனியே பிரிந்து போராடி கொண்டிருந்த நம்மை எல்லாம் ஒன்றிணைத்த ஒரே ஒரு காரணத்திற்காக நாம் அவர்களுக்கு நன்றி சொல்லலாம்” எனப் பேசினார்.

அடுத்ததாக பேசிய தமிழ்தேச மக்கள் முன்னணி அமைப்பின் தலைவர், தோழர் மீ.த. பாண்டியன் பேசும் போது

“இது கார்பரேட் நிறுவனங்களின் வெளிப்படையான பன்முனைத்தாக்குதல். முன்னர் இத்தகைய திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட தற்போது இதனை புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாம் அணு உலையே வேண்டாம் என்றால் ஆறு அணு உலை வைத்து அணுவுலை பூங்கா அமைக்கப்போகிறோம் என்கிறார்கள். இப்போது அணு கழிவு மையம், மீத்தேன் என அதிகாரத்தை குவித்து வைத்து கொண்டு இதை நடைமுறப்படுத்துகிறார்கள்.

பொட்டிபுரத்தில் நம் சொந்தக்காரர்களைக் கூட நாம் பார்க்கச் செல்ல முடியாது. அந்தளவிற்கு கெடுபிடி. எல்லாவற்றிற்கும் காரணம் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல். முன்பெல்லாம் இவர்கள் நம்மை பார்த்து பதுங்கியிருந்தவர்கள், தற்போது நம்மிடம் நேரடியாக சண்டைக்கு வரும் அளவிற்கு அதிகாரத்தின் நிழலில் அவர்கள் பாசிசத்தை நம் கண்முன் காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

போலீசு, நீதிமன்றம், கார்ப்பரேட் எல்லாம் அரசோடு கூட்டணி அமைத்து நம் நாட்டை கொள்ளையிடுகிறார்கள். இவர்களுடைய இந்த கூட்டணியை முறியடிக்க ஒரு தனித்துவமான மக்கள் கூட்டணியை அமைக்க வேண்டும். அது செங்கொடியை கையில் ஏந்தியிருப்பவர்களாலேயே சாத்தியம்” என்று பேசினார்.

படிக்க:
♦ ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !
♦ ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 முதல் பாகம் | டவுண்லோடு

திராவிடர் விடுதலை கழகத்தின் மதுரை மாவட்ட செயலர் தோழர் மா.பா. மணி அமுதன் அவர்கள் பேசும்போது

“மதுரையில் தற்போதைய நிலையில் எந்த இயக்கத்திற்கும் எந்த கூட்டங்களுக்கும் அனுமதி மறுக்கும் காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பள்ளிகளில் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் தடை விதிப்பதில்லை. சத்தமில்லாமல் எல்லா பள்ளிகளிலும் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வேலையை செய்துகொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லை வட மாநிலத்தில் ஜெய்சிரீராம் சொல்ல சொல்லி முஸ்லிம் மக்களை கொல்வதை போல் இங்கே நீங்கள் செய்தால் உங்களை நாங்கள் அதே போல் தண்டிப்போம் என்று கூட்டத்தில் பேசியதற்கே அன்றிரவு 3 மணிக்கு வீட்டில் வந்து என்னை கைது செய்தார்கள்.

மாணவர்கள் சாதிக் கயிறு கட்டுவதை தடை செய்த விசயத்தில் எச்.ராஜா பேசிய உடனேயே மந்திரி செங்கோட்டையன் அந்த உத்தரவை ரத்து செய்கிறார் என்றால் இவர்கள் யாருடைய கையாட்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய செயலர் பேராசிரியர். முரளி தன்னுடைய உரையில் “இந்த நாட்டில் வளர்ச்சி என்றால் நிலங்களைப் பறிப்பது என்று அர்த்தம்” என்று கூறி வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவில் சமீபத்தில் திட்டமிடப்பட்ட ஓவ்வொரு துறையிலும் மக்களிடமிருந்து எத்தனை ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டன என்று புள்ளி விவரங்களோடு பட்டியலிட்டார். மேலும் மீத்தேன் திட்டம் என்றாலே உலக அளவில் ஒரு பெயரை பெற்றிருக்கிறது “நரகத்தின் கதவு” என்று. நமக்கு நரகத்தை இவர்கள் பரிசளிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் விச பாம்போடு படுத்து கொண்டிருப்பதாக உணருகிறேன்” என்று பேசினார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. தியாகராஜன் பேசும் போது உலகமெங்கும் கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக இயற்கையை சூறையாடுவதால் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதை எதிர்த்து போராடும் மக்களை நீதிமன்றங்கள் கூட அதிகாரத்தோடு சேர்ந்து கொண்டு எப்படி ஒடுக்குகிறது என்பதையும் பட்டியலிட்டார்.

தமிழ் புலிகள் அமைப்பின் நிறுவனத்தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் பேசும் போது “ஆள், அம்பு, அதிகாரிகள், படை என்று இந்த நாடே உண்மையில் ஒரு கார்ப்பரேட் அதிகாரமாகத்தான் இருக்கிறது. ஆனால் பெயரில் நாம் மக்கள் அதிகாரம் என்று இருப்பதற்கே இவர்கள் பயப்படுகிறார்கள் என்றால் இதுதான் உண்மையாக நாம் பின்பற்ற வேண்டிய பாதை என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய ஒரு அமைப்பின் கூட்டத்திற்கு அவர்கள் தடை விதித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா? கூட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டால் மக்கள் அதிகாரம் என்கின்ற கருத்து மக்களிடம் பரவாமல் போய்விடுமா? என்று பேசி இவர்கள் கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் தமிழகத்திற்கு பேரழிவை தரக்கூடியவை என்பதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் பார்ப்பானியத்தின் சூழ்ச்சிகளை வரலாற்றுரீதியாக புரிந்து கொள்ள வேண்டும்” என எழுச்சிகரமாக உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

“மதுரையில் வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் பல்வேறு திட்டங்களிலும், சாலை விரிவாக்கத்திலும் எத்தனை எத்தனை மரங்களும், ஏரிகளும் அழிக்கப்பட்டன என்பதையும், மதுரை காளவாசல் பகுதியை காற்று மாசடைந்த பகுதி என்று சுற்றுச் சூழல் அலுவலகமே அறிவித்த ஆறு மாதத்தில் அதே பகுதியில் பாலம் கட்டுவதற்கு சுற்றுச் சூழல் அலுவலகம் எப்படி அனுமதி கொடுத்தது. அதே போல் விமான நிலைய விரிவாக்கம் என்கின்ற பெயரில் 4 கிராமத்திற்கு நிலங்களுக்கு பாசன நீர் கொடுக்கும் கண்மாயை ஆக்கிரமித்ததில் வேலம்மாள் மருத்துவமனைக்கும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கும் அந்த கண்மாயின் தண்ணீரை மடை மாற்றுவதற்காகத்தான் ” என்று தன்னுடைய கள அனுபவத்தை மக்களறிய பேசினார் நாணல் நண்பர்கள் குழிவின் தோழர் சிறிதர் நெடுஞ்சழியன்.

“தன் சொந்த மக்களை கையால் மலம் அள்ள வைத்து விட்டு நியூட்ரினோ ஆய்வு செய்வதுதான் இந்த நாட்டின் அரசாங்கம் என்றால் இது யாருக்கான அரசு? நாடு பிரிவினையின் போது நடந்த கலவரங்களுக்கு பிறகு பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகுதான் மீண்டும் மிகப்பெரிய மதக் கலவரங்கள் நடக்க ஆரம்பித்தன. ஆர்.எஸ்.எஸ். கும்பல் இந்த நாட்டை மிகப்பெரிய பிரிவினைவாதத்திற்கு கொண்டு போய் கொண்டிருக்கிறது. அத்வானி ஒரு முறை சொன்னார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் புத்தகங்களை தடை செய்வோம் என்று. இவர்களுக்கு அறிவை கண்டால் பயம் வருகிறது, கோபம் வருகிறது. இவர்களை வீழ்த்த வேண்டுமெனில் பகத்சிங்கை போன்ற ஒரு ஆளுமை தேவை. மக்கள் அதிகாரம் அந்த தேவையை நிறைவு செய்ய ஆற்றல் பெற்ற அமைப்பு” என்று வி.சி.க.-வின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் இன்குலாப் அவர்கள் உரையாற்றினார்.

அடுத்ததாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் விஜயராஜன் தன்னுடைய உரையில் “நம்முடைய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் என்னிடம் சொன்னார், பாராளுமன்றத்தில் உட்கார்ந்திருப்பது ஏதோ காசியில் சாமியார்களுக்கிடையே உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது என்று. அந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய காவி கொள்கையை நாடு முழுவதும் விரித்துள்ளது. அதே போல் அவர் சொன்ன இன்னொரு தகவல் பி.ஜே.பி -யின் வெறுப்புக் கொள்கையின் சாட்சியமாக உள்ளது. அதாவது மதுரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்டங்களை நிதி மந்திரி திருமதி நிர்மலா சீதாராமனிடம் கேட்கும் போது அவர் “நீங்கள் பி.ஜே.பி. -க்கு வாக்களிக்காத போது உங்களிடம் எதற்காக நான் அதை சொல்ல வேண்டும்” என்று பேசினாராம். எனவே இவர்களுடைய கொள்கையே வெறுப்பு கொள்கைதான் எனவே இவர்களை முறியடிக்க வேண்டுமெனில் ஒரு தத்துவார்த்த கொள்கையின் அடிப்படையில் நாம் ஒன்றிணைய வேண்டிய அவசியமிருக்கிறது” என்று பேசினார்.

படிக்க:
♦ மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி
♦ மோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா ?

மக்கள அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தன்னுடைய சிறப்புரையில் “மீத்தேன், எட்டு வழி சாலை, அணு உலை ஆகியவைகள் வேண்டாம் என்பது ஒரு புறமிருக்கட்டும் முதலில் அதை பற்றி பேச நமக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பதே முதல் கேள்வி. ஏனென்றால் இத்தகைய தமிழகத்தை பாதிக்க கூடிய மோசமான திட்டங்களை பற்றி பேச யாருக்குமே அனுமதி இல்லை. நிலைமை இப்படி இருக்கும்போது நாம் எப்படி இந்த ஆட்சியை, பிஜேபி கும்பலை முறியடிப்பது? அதுதான் இங்கே முதல் கேள்வி.

நாம் இவர்களை பார்த்து பயப்பட வேண்டியதில்லை ஏனென்றால் அவர்கள் மக்களை ஏமாற்றும் திருடர்கள். உழைத்து வாழும் நாம் ஒரு திருடனுக்கு ஏன் பயப்பட வேண்டும். சமீபத்தில் செய்திகளில் காட்டினார்களே, ஒரு முதிய இணையர்கள் சேர்ந்து கொள்ளையடிக்க வந்தவர்களை விரட்டியடித்தார்களே அவர்களை போல்தான் நாம் அதிகாரிகளை, போலீசை பார்க்க வேண்டும். நீ அனுமதி கொடுக்கவில்லை என்றால் என்ன? தடையை மீறி நாங்கள் கூட்டம் நடத்துவோம், உன்னால் ஆனதை செய், எதற்கும் நாங்கள் தயார் என்று செவிட்டில் அடித்தாற்போல் நம்முடைய நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

இன்னும் மனு கொடுப்பவர்களாகவே இருந்தோமென்றால், அனுமதி கேட்டுத்தான் போராடுவோம் என்றால் நம்மால் இந்த திட்டங்களை எல்லாம் தடுக்க முடியாது. எனவே தூத்துக்குடியில் அம்மக்கள் திரண்டதை போல திட்டமிட்ட வழியில் திரண்டு போராட வேண்டும்” என்று பேசினார்.

இறுதியில் மகஇக -வின் கலைக்குழு சார்பில் தோழர் கோவன் அவர்களின் தலைமையில் பாடப்பட்ட பாடல்கள் மக்களிடையே எழுச்சிகரமான உணர்வை உருவாக்கியது.

அதன்பின் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் சரவணன் நன்றியுரை வழங்க கூட்டம் நிறைவுற்றது.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு – 98438 73975
98943 12290

பொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 01

1942-ம் ஆண்டு கோடை உச்சத்தில் இருந்தபோது மாஸ்கோவின் ஒரு மருத்துவமனையின் கனத்த ஓக் மரக் கதவுகளின் பின்னிருந்து வலிய கருங்காலிக் கைத்தடியை ஊன்றியபடி வெளியே வந்தான் கட்டுக்குட்டான இளைஞன் ஒருவன். போர் விமானிக்குரிய கோட்டும் பூட்சுகளை மூடியிருந்த சீருடைக் காற்சட்டையும் அணிந்திருந்தான் அவன். சீனியர் லெப்டினன்ட் என்பதைக் காட்டும் குறிகள் அவனது நீலக் கழுத்துப் பட்டையின் மீது பொறிக்கப்பட்டிருந்தன. வெள்ளை நீளங்கி அணிந்த ஒரு மாது வாயில் வரை வந்து அவனை வழியனுப்பினாள். சென்ற உலகப் போரில் மருத்துவத்தாதிகள் அணிந்த செஞ்சிலுவை பொறித்த தலைக்குட்டை அவளுடைய நல்லியல்பு ததும்பிய இனிய முகத்துக்கு ஓரளவு கம்பீரத் தோற்றத்தை அளித்தது. வாயில் மேடையில் அவர்கள் நின்றிருந்தார்கள். விமானி சாயம்போன மென்மையான தொப்பியைக் கழற்றி மருத்துவத்தாதியின் கையை அசட்டுப் பிசட்டென்று உயர்த்தி முத்தமிட்டான். பிறகு சற்றே தள்ளாடியவாறு அவன் விரைவாகப் படிகளில் இறங்கி, மருத்துவமனையின் நீண்ட கட்டிடத்தின் அருகாக ஆற்றோரத் தார் ரோட்டில் திரும்பிப் பாராமல் நடந்தான்.

நீல, மஞ்சள், பழுப்புப் பைஜாமாக்கள் அணிந்த நோயாளிகள் ஜன்னல்கள் வழியே கைகளையும் கைத்தடிகளையும் கவைக்கோல்களையும் ஆட்டி அவனை வழியனுப்பினார்கள், ஏதோ கத்தினார்கள். அவனும் அவர்களை நோக்கிக் கையை ஆட்டினான். எனினும் இந்தப் பெரிய சாம்பல் நிறக் கட்டிடத்திலிருந்து கூடிய விரைவில் அப்பால் போய்விட அவன் முயன்றது தெளிவாகப் புலப்பட்டது. தனது உள்ளக் கிளர்ச்சியை மறைப்பதற்காக அவன் ஜன்னல்களின் பக்கத்திலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். விந்தையான, நிமிர்ந்த, துள்ளுநடையில் அவன் கைத்தடியை லேசாக ஊன்றியவாறு விரைவாகச் சென்றான். அவனது ஒவ்வொர் அடிவைப்பின் போதும் ஏற்பட்ட மெல்லிய கிரீச்சொலி இல்லாவிட்டால் வடிவான வலிய உடற்கட்டுள்ள இந்தத் துடிப்பான மனிதனுடைய கால்கள் வெட்டி அகற்றப்பட்டுவிட்டன என்று எவருமே எண்ணியிருக்க முடியாது.

மருத்துவமனையிலிருந்து அலெக்ஸேய் மெரேஸ்யெவ் உடம்பைத் தேற்றிக் கொள்வதற்காக மாஸ்கோவுக்கு அருகிலிருந்த விமானப்படை ஆரோக்கிய நிலையத்துக்கு அனுப்பப்பட்டான். மேஜர் ஸ்த்ருச்கோவும் அங்கேயே அனுப்பப்பட்டார். அவர்களை ஏற்றிப் போவதற்காக ஆரோக்கிய நிலையத்திலிருந்து மோட்டார் வருவதாக இருந்தது. ஆனால் மெரேஸ்யெவ் தனக்கு மாஸ்கோவில் உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களைப் பார்க்காமல் தன்னால் போக முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகிகள் நம்புமாறு செய்து விட்டான். தனது சாமான் பையை ஸ்த்ருச்கோவிடம் வைத்துவிட்டு, மாலையில் மின்சார ரெயிலில் ஆரோக்கிய நிலையம் போய்ச் சேர்ந்து விடுவதாக வாக்களித்து விட்டு, மருத்துவமனையிலிருந்து கால்நடையாகவே புறப்பட்டான்.

மாஸ்கோவில் அவனுக்கு உறவினர்கள் இல்லை. எனினும் தலைநகரைச் சுற்றிப் பார்க்க அவனுக்கு மிகவும் ஆசையாக இருந்தது. விட்டாற்றியாக நடந்து தன் பலத்தைச் சோதித்துப் பார்க்கவும் தன் விஷயத்தில் எவ்வித அக்கறையும் அற்ற, ஆரவாரம் நிறைந்த ஜனத்திரளில் இடித்துப் புகுந்து செல்லவும் அடங்கா ஆவல் உண்டாயிற்று. ஆகவே, சுருங்கற்சுவர்களுக்கு இடையே கட்டுண்ட மாட்சிமிக்க ஆற்றின் கரையோரச் சாலை வழியாக இப்போது அவன் நடந்தான். ஆற்றின் சிற்சிலைச் செதில்கள் வெயிலில் மினுமினுத்தன. ஏதோ நன்கு பழக்கமான, இனிய நறுமணம் வீசிய, வெதுவெதுப்பான கோடைக் காற்றை ஆர்வத்துடன் மூச்சிழுத்தான் அலெக்ஸேய்.
எங்கும் எவ்வளவு நன்றாயிருந்தது!

எல்லா மகளிரும் அவனுக்கு வனப்பு வாய்ந்தவர்களாகத் தோன்றினார்கள். மரங்களின் பசுமை தனது பளபளப்பால் அவனைப் பரவசப்படுத்தியது. போதையூட்டும் குளுமையான காற்று தலையைக் கிறுகிறுக்க வைத்தது. நன்றாகத் தெளிந்திருந்த காற்றில் தொலைவு பற்றிய உணர்வு மழுங்கிவிட்டது. தான் முன்பு ஒருபோதும் நேரில் கண்டிராத கிரெம்ளினின் நெடுங்காலக் கொத்தளச் சுவர்களையும் மாபெரும் இவானின் மாதாகோவில் கும்மட்டத்தையும் நீருக்குமேல் கனத்த வளைவாகத் தொங்கிய பாலத்தையும் கையை நீட்டினால் தொட்டுவிடாலாம் போலப் பிரமை உண்டாயிற்று.
இதற்கு முன் அலெக்ஸேய் தலைநகரை அறிந்திருந்ததெல்லாம் சஞ்சிகைகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியாகும் நிழற்படங்களிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும், அங்கு போய் வந்தவர்களின் வருணனைகள் மூலமாகவும், நள்ளிரவில் உறங்கத் தொடங்கிய உலகுக்கு மேலே ஒலித்துப் பரவும் பழங்காலக் கடிகார மணியின் நீட்டொலி, கொந்தளிக்கும் ஆர்பாட்ட ஊர்வலத்தின் பல்வகை இரைச்சல்கள் ஆகியவற்றை வானொலியில் கேட்டதன் வாயிலாகவுமே. அப்போதோ, பளிச்சிடும் கோடை வெயிலில் சோர்வுற்று எழிலுடன் நீண்டு பரந்திருந்த தலை நகரம் அவன் முன் காட்சியளித்தது.

படிக்க:
காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !
“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

ஓகோ, இதுதான் மாஸ்கோவா!

நான்கு மாதங்கள் மருத்துவமனையில் கடந்தபின் மாஸ்கோவின் கோடைகால மாட்சியால் அலெக்ஸேய் ஒரேயடியாகப் பரவசமடைந்திருந்தான். எனவேதான் அது போர்க்கோலம் பூண்டிருந்ததையும் எந்தக் கணமும் பகைவனை எதிர்த்துப் போரிட ஆயத்தமாக இருப்பதையும் அவன் உடனே கவனிக்கவில்லை. பாலத்தின் அருகில் இருந்த விசாலமான வீதியின் குறுக்கே விகாரமான பெரிய தடையரண் நிறுவப்பட்டிருந்தது. அது, பாலத்தின் கோடிகளில் நான்கு பீரங்கி வாய்கள் கொண்ட கன்க்ரீட் சதுர அரண்கள் நின்றன. அவை சிறுவன் மேஜை மீது மறந்துவிட்ட கனசதுரங்கள் போன்று இருந்தன. செஞ்சதுக்கத்தின் மழமழப்பான சாம்பல்நிற மேற்பரப்பில் கட்டிடங்களும் புல் தரைகளும் மரச்சாலைகளும் பல வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தன. கோர்க்கிய வீதிக் கடைகளின் ஜன்னல்கள் பலகைகளால் அடைத்து மூடப்பட்டு மணல் நிரப்பப்பட்டிருந்தன. சந்துகளிலும் கட்டுக்கு அடங்காப் பையன் ஒருவனால் மறந்து விடப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் போலத் தண்டவாளங்களைப் பற்றாக வைத்து இணைத்த துருபிடித்த தடையரண்கள் நின்றன.

முன்னர் மாஸ்கோவைக் கண்டிராதவனும் போர்முனையிலிருந்து இங்கு வந்தவனுமான படைவீரனுக்கு இவை எல்லாம் வெகுவாகக் கண்ணில் படவில்லை.
பொய்க்கால்கள் கறுமுறுக்க, கைத்தடியை அழுத்தி ஊன்றியவாறு கோர்க்கிய வீதிகளில் மேலே சென்றான் பெரிதும் களைத்திருந்த அலெக்ஸேய். கிடங்குகளையும் வெடிப்புகளையும் வெடிகுண்டால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களையும் ஆவென்று வாய் பிளந்திருக்கும் ஆழ்பள்ளங்களையும் உடைந்த ஜன்னல்களையும் வியப்புடன் தேடினான் அவன். மேற்குக் கோடியிலிருந்த விமான நிலையத்தில் வாழ்ந்த அவன், ஜெர்மன் வெடி விமானங்கள் அணிக்குப்பின் அணியாக அனேகமாக ஒவ்வோர் இரவும் கிழக்கு நோக்கிப் பறந்து செல்வதைக் காப்பரணிகளிலிருந்து கேட்டிருந்தான்.

விமானங்களின் ஓர் அலை தொலைவில் ஓசை அடங்குவதற்குள் இன்னோர் அலை வரும். சில வேளைகளில் இரவு முழுவதும் வானம் விமானங்களின் இரைச்சலால் ஓயாது அதிரும். பாசிஸ்ட் விமானங்கள் மாஸ்கோவுக்குப் போகின்றன என்று சோவியத் விமானிகள் அறிந்திருந்தார்கள். அங்கே எப்பேர்பட்ட நகரமாயிருக்கும் என்று அவர்கள் கற்பனை செய்து கொள்வார்கள்.

இப்போது, போர்க்கால மாஸ்கோவைச் சுற்றிப் பார்க்கையில் மெரேஸ்யெவ் விமானத் தாக்குக்களின் அடையாளங்களை விழிகளால் துழாவித் தேடினான். அவனுக்கு அவை தென்படவில்லை. தார் ரோடுகள் சமமாக இருந்தன, ஒழுங்கு கலையாத வரிசைகளாக நின்றன வீடுகள். ஜன்னல் கண்ணாடிகள் கூட, வலைப் பின்னல் போலக் காகித நாடாக்கள் ஒட்டப் பட்டிருந்த போதிலும் அபூர்வமாக ஒரு சில தவிர மற்றவை எல்லாம் சேதமின்றி முழுமையாக இருந்தன. ஆனால் போர்முனை அருகாமையில் இருந்தது என்பதை நகரவாசிகளின் கவலை தேங்கிய முகங்களைக் கொண்டே அனுமானிக்க முடிந்தது. நகர மக்களில் பாதிப்பேர் படைவீரர்கள். புழுதி படிந்த ஜோடுகளும் வியர்வையில் நனைந்து தோள்களுடன் ஒட்டிக் கொள்ளும் சட்டைகளும் அணிந்து, சாமான் பைகளைத் தோள்களில் தொங்கவிட்டவாறு நடந்தார்கள் அவர்கள். ஒரு சந்திலிருந்து வெளிப்பட்டு வெயிலொளியில் முழுக்காடிய வீதியில் விரைந்தது புழுதி படிந்த லாரிகள் வரிசை. இந்த லாரிகளின் பக்கங்கள் நெளிந்திருந்தன., கேபின் கண்ணாடிகள் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தன. லாரிகளின் அற்றலைந்த மரப் பின்பகுதிகளில் உட்கார்ந்திருந்தார்கள் புழுதிபடிந்த படைவீரர்கள். அவர்கள் அணிந்திருந்த மழைக் கோட்டுக்கள் படபடத்துக் கொண்டிருந்தன. சுற்றிலும் உள்ளவற்றை எல்லாம் அவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள், டிராலி பஸ்களையும் கார்களையும் டிராம்பர்களையும் முந்திக்கொண்டு விரைந்து லாரி வரிசை. பகைவன் இங்கே தான் அருகில் இருக்கிறான் என்பதைத் தெளிவாக நினைவு படுத்தியது அது.

படிக்க:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?
சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?

ருஷ்ய மகாகவி பூஷ்கின் உருவச்சிலை வரையில் அலெக்ஸேய் அரும்பாடுபட்டு நடந்தான். இருகைகளாலும் கைத்தடியைப் பற்றிச் சாய்ந்து, தயாரிப்புச் சாமான் கடைகளின் தூசி படிந்த காட்சி ஜன்னல்களில் உள்ள எதையோ உற்றுப் பார்ப்பது போன்ற நடிப்புடன் வழியில் அவன் சில தடவைகள் ஓய்ந்து கொண்டான். உருவச் சிலைக்குச் சற்றுத் தூரத்தில் போடப்பட்டிருந்த, வெயிலில் காய்ந்து கதகதத்த பச்சை நிற பெஞ்சில் அப்பாடா என்று உட்கார்ந்தான்… இல்லை, இல்லை, உட்காரவில்லை, பொத்தென்று சாய்ந்தான்.

சாய்ந்தவன், இரத்தங்கட்டி, வார்களால் தேய்த்து வழற்றப் பட்டுக் கடுமையாக வலித்த கால்களை நீட்டிக் கொண்டான். களைப்பு மிகுதியாக இருந்தாலும் களிபொங்கும் மனநிலை அதனால் பாதிக்கப்படவில்லை. வெயிலொளி வீசிய பகல் மிக நேர்த்தியாக இருந்தது. வானம் எல்லையற்ற ஆழங்கொண்டதாக விளங்கியது. பூக்கள் பூத்துக் குலுங்கிய லிண்டன் மரங்களின் நறுமணத்தை உலாச்சாலையில் பரப்பியது மெல்லிளங்காற்று. டிராம் வண்டிகள் கணகணவென்று மணியடித்தவாறு கடகடத்து ஓடின. உருவச்சிலைகள் பாதபீடத்தருகே புழுதி மணலை ஒரே மும்மரமாகத் தோண்டிக் கொண்டிருந்த, வெளிறி ஒடிசலாயிருந்த மாஸ்கோச் சிறுவர் சிறுமியர் இனிமையாகக் கலகலவென்று சிரித்தார்கள். புன்னனகை பூத்த முகத்தை வெயில்படும்படி திருப்பிக் கொண்டு கண்களைச் சுருக்கிக் கொண்டான் மெரேஸ்யெவ்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

ஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா ?

போக்குவரத்தை அதிகரிக்க விட்டுவிட்டு ஹெல்மெட் போடுவதால் மட்டும் சாலை விபத்துகள் குறையுமா ?

அருண் கார்த்திக்
மது கருத்தியல் (ideology) என்ன என்பதே நமது சிந்தனையை முடிவு செய்கிறது. நாம் எந்த பிரச்சினையைப் பற்றி யோசித்தாலும், நமது யோசனையை நமது கருத்தியல் மட்டுமே வழி நடத்துகிறது. அதில் இருந்து தப்பிக்கவே முடியாது!

எடுத்துக்காட்டாக, சமீபத்தில் சாலை விபத்துகளை குறைப்பது சம்பந்தமாக நீதி மன்றங்களும் அரசாங்கமும் நிறைய விசயங்களை சொல்லி வருகிறார்கள்; நிறைய புதிய விதிமுறைகளை கொண்டுவருகிறார்கள். இவர்கள் சொல்லும் அனைத்து விதிமுறைகளின் பின்னும் விபத்துகள் நடப்பதற்கு ஒரே காரணம் வாகன ஓட்டிகள் மட்டும்தான் என்பது போன்ற ஒரு தோற்றம் உண்டுபண்ணப்படுகிறது. மறந்தும் கூட விபத்து நடப்பதில் அரசின் பங்கும் உள்ளது என்பதை சொல்லிவிட மாட்டார்கள்.

ஒழுங்கான சாலைகளும் போதுமான பேருந்துகளும், போக்குவரத்தில் பேருந்துகளுக்கு முதலிடமும் – இவை போன்ற சில விஷயங்களைச் செய்தாலே தனியார் போக்குவரத்தை மிகவும் குறைத்துவிட முடியும், விபத்துகளும் தானாகக் குறையும். ஆனால், ஆளும் வர்க்கம் இதை பற்றி எல்லாம் பேசாது, அதிகரிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்தாமல் ஹெல்மெட் அணிந்தால் மட்டும் விபத்துகள் குறைந்துவிடும் என்று நம்மை நம்பச்சொல்கிறது! நாமும் நம்புகிறோம்!

HELMETSஇது இவ்வாறு என்றால், நமது அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் இருக்கும் பிரச்சினைகளை அதிகப்படுத்துவதற்காகவே எடுப்பது போல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அதிகம் வருமான வரி கட்டுபவர்களுக்கு டோல் கேட்களில் முன்னுரிமை என்ற செய்தியை நாம் பார்த்திருப்போம். சக மனிதர்களை அடிப்படையில் சமமாக பார்க்க முடியாத ஒருவரால் மட்டுமே இது போல் ஒரு திட்டத்தை யோசிக்க முடியும்.

நியாயமாக என்ன விதி இருக்க வேண்டும்? டோல் கேட்களில் பேருந்துகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்றுதான் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 4 பேர் செல்லும் காருக்கு முன்னுரிமை, ஆனால் எப்படியும் 50 பேருக்கு மேல் ஏற்றி செல்லும் பேருந்துக்கு முன் உரிமை இல்லை! இது என்ன லாஜிக்? அதிகம் வரி கட்டுபவர் காரில் பொதுவாக 4 பேர் செல்ல மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.

நமது சமுதாயத்தில் ஒரு சில விஷயங்களை நாம் மாற்றவே முடியாது என்று ஏற்றுக்கொண்டு விட்டோம். மாற்ற முடியாதது என்பது கூட இல்லை, இவை மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணமே பல விஷயங்களை பற்றி நமக்கு வருவது இல்லை. எடுத்துக்காட்டாக கல்வி. உயர்நிலையை விட்டுவிடுவோம், மழலையர் கல்விக்கு ஏன் குழந்தைகள் வெகு தொலைவுக்கு செல்ல வேண்டும்? அனைத்து குழந்தைகளும் அவரவர் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் மட்டுமே படிக்க வேண்டும் என்று மாற்ற முடியாதா? இந்த ஒரு மாற்றம் எத்தனை சமூகப் பிரச்சினைகளை சரி செய்யும்.

படிக்க :
ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை

அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தரமான கல்வி என்பது மட்டுமல்ல, அனைத்து ஜாதி குழந்தைகளுக்கும் ஒரே கல்வி என்பது மட்டும் கூட இல்லை, இந்த நடவடிக்கை போக்குவரத்து பிரச்சினையையும் சரி செய்யும். போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்கள் எது என்று பார்த்தால், பள்ளி கல்லூரிகள் துவக்கம், முடியும் நேரங்களாகவே இருக்கும். ஏனென்றால், நமது குழந்தைகள் நிறைய பயணம் செய்து கல்வி கற்கிறார்கள். வீட்டருகில் உள்ள பள்ளி என்ற விதிமுறை வந்து விட்டால், நமது குழந்தைகள் பயணம் செய்யும் தூரம் குறையும், போக்குவரத்து குறையும், பள்ளி மாணவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் உள்ளே விட மாட்டோம் என்று சொல்ல தேவையும் இருக்காது, ஏனென்றால் மாணவர்களுக்கு வாகனங்களில் பயணம் செய்யும் தேவையே இருக்காது.

இதே போல்தான் மருத்துவமும். அனைவருக்கும் வீட்டுக்கு அருகிலேயே சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்றும், ஆரம்ப சிகிச்சைக்கு வீட்டருகில் உள்ள சுகாதார மையத்தைதான் நாட வேண்டும் என்று விதிமுறையும் வந்துவிட்டால், அனைவருக்கும் ஒரு தரத்தில், நல்ல தரத்தில் மருத்துவம் என்பது மட்டுமல்லாமல், நோயாளிகள் தேவையில்லாமல் பயணம் செய்வதும், பணம் செலவு செய்வதும் குறையும். போக்குவரத்து என்பது மட்டும் அல்ல, இதன் விளைவுகள் இன்னும் அதிகம்.

Schools

வீட்டருகில் உள்ள பள்ளி மட்டுமே, வீட்டருகில் உள்ள சுகாதார மையம் மட்டுமே என்று ஆகிவிட்டால், உள்ளூர் மக்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களும் தேவை இல்லாமல் பயணம் செய்து நேரத்தை வீணடித்து, போக்குவரத்தை அதிகரித்து, சுற்றுசூழலை மாசுபடுத்த மாட்டார்கள்.
ஆக, இது போன்ற சாதாரண நடவடிக்கைகளே நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பிரச்சினைகளை தீர்க்கும். சாதாரண நடவடிக்கை என்று சொல்லக் காரணம், இது ஒன்றும் நியூட்டன் சூத்திரம் இல்லை, அனைவருக்கும் புரியக்கூடிய விஷயம் தான்.

இவை இவ்வாறு இருக்க, நமது ஆளும் வர்க்கம் என்ன செய்கிறது, நேர் எதிர் திசையில் நம்மை நடத்தி செல்கிறது. ஊரக பள்ளிகளை மூடுகிறது, ஆயிரக்கணக்கானோர் பயிலக்கூடிய கல்வி நிறுவனங்களை அமைப்பதாக சொல்கிறது, அந்த நிறுவனங்களுக்கு நெடுந்தூரம் பயணம் செய்து வருபவர்களிடம் ஹெல்மெட் அணிய சொல்லி பின்பு சொல்லும், ஆரம்ப சுகாதார நிலையங்களை திட்டமிட்டு வலுவிழக்க செய்கிறது, பல்லாயிரம் பேர் சிகிச்சை பெறக்கூடிய எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளை கட்டப்போவதாக சொல்கிறது, அந்த மருத்துவமனைகளுக்கும் மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்துதான் செல்ல வேண்டும்.

அத்தனையும் செய்து போக்குவரத்தை அதிகப்படுத்திவிட்டு சுற்றுசூழல் மாசுபடுவதை குறைக்க எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி உபயோகப்படுத்துமாறு நம்மிடம் சொல்கிறது. ஒரு வேற்றுகிரகவாசி வந்து பார்த்தால் நம்மை கடைந்தெடுத்த முட்டாள்கள் என்று நினைப்பான்! ஆனால் நாம் அவ்வாறு நினைக்க மாட்டோம்!
காரணம், வேறு என்ன, கருத்தியல், ideology தான்!

படிக்க :
சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?
♦ குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !

நீங்கள் பொதுவான ஒருவரிடம் வீட்டருகில் பள்ளி அல்லது வீட்டருகில் மருத்துவம் என்பதை சொல்லிப்பாருங்கள், நீங்கள் எதோ ஆடை இல்லாமல் அம்மணமாக ரோட்டில் நடக்கச் சொல்வதை போல உங்களை பார்ப்பார்கள். இந்த தீர்வுகள் அவர்களுக்கு கற்பனை (fantasy) போலத் தெரியும். அதுதான் கருத்தியல் நமது சிந்தனை மீது வைத்திருக்கும் பிடி!

இந்த கட்டமைப்பில் இருக்கும் தர்க்கங்களை வைத்து யோசித்தால் நம்மால் இந்த பிரச்சினைகளில் இருந்து விலகிச் செல்ல முடியாது!

விபத்துகளுக்கு தீர்வு ஹெல்மெட் மட்டுமே என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருப்போம்!

நாம் நம்பும்வரை நீதிமன்றங்களும் அரசுகளும் இந்த கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகளைத் தேடும், அல்லது பிரச்சனைகளின் வீரியத்தை அதிகரிக்கும், பள்ளிகளை மூடி அதிகரிப்பதை போல. ஒரு விதத்தில் கட்டமைப்புக்குள் தீர்வு தேடுவதுதான் ஆளும்வர்க்கத்திற்கு பயனுள்ளதும் கூட. மக்கள் அதிகம் பயணம் செய்தால்தான் அதிக ரோடுகள் தேவைப்படும், அதிக வாகனங்கள் தேவைப்படும், இவை சம்மந்தமான தொழில்களும் அதிகரிக்கும், கூடவே அவர்கள் லாபமும் அதிகரிக்கும். வீட்டருகில் பள்ளி என்பன போன்ற திட்டங்கள் ஒரு விதத்தில் ஆளும் வர்கத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குவது ஆகும்!

நமக்கு சொல்லப்படும் தீர்வு உண்மையிலேயே தீர்வுதானா என்பதை எல்லாம் புரிந்துகொள்ள இந்த கட்டமைப்பு பற்றிய புரிதல் அவசியம்! அப்பொழுதுதான் சாலை விபத்துகளுக்கு ஹெல்மெட் தீர்வு அல்ல, சமூக மாற்றம்தான் தீர்வு என்று புரிந்துகொள்ள முடியும்!

ஹெல்மெட் கி ஜெய்!

அருண் கார்த்திக்