அயல் நாட்டினர் வியாபாரப் போட்டியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். ஆங்கில நாட்டில் தொழில் வளர்ச்சி மிகுதிப்பட்டதால் பல பொருள்களை இந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது. அவர்களுடைய கப்பல் படை வலிமையும் அதிகரித்தது. தமிழ் நாட்டில் மத்திய அரசு பலவீனப்பட்டது. ஆர்க்காட்டில், நவாபு பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர் நாடு பிடிக்கத் தொடங்கினர். பாளையக்காரர்கள் பலர் பல சமயங்களில் எதிர்த்து நின்றனர். ஆயினும், வளர்ந்து வரும் தொழில் வளமுள்ள நாட்டினர் ஆனதாலும், கப்பற்படை மிகுதியும் உடையவர்களாதலாலும், புதுமுறைப் போர்க் கருவிகள் உடையவர்களாதலாலும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
அவர்களுடைய வியாபார முறைகளால் கிராம சமுதாயம் சீரழிந்தது. நிலச்சுவான்தாரி முறை அமுலாக்கப்பட்டது. பாளையக்காரர்கள் நிலச் சொந்தக்காரர்கள் ஆனார்கள். முன்பிருந்ததைவிடக் கிராமப் பகுதி மக்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். ஜாதிப் பிரிவினைகள் தூண்டி விடப்பட்டு மக்கள் பிரித்து வைக்கப்பட்டனர்.
ஆங்கில ஆட்சியில் மிகப் பெரிய சமுதாய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. நிலப்பிரபுத்துவ முறை வலுப்பெற்றது. பெரிய தொழில்கள் முதன் முதலில் துவங்கின. இயந்திரத் தொழிலாளர் வர்க்கம், ஒரு புதிய சக்தியாக இந்திய சமுதாயத்தில் தோன்றிற்று. தொழில்கள் வளர ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டிய தேசியத் தொழிலாளி வர்க்கமும் தோன்றிற்று. பெரு நிலச்சுவான்களைத் தவிர ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக எல்லா வர்க்கங்களும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தேசீய இயக்கம் வளர்ந்தது.
இந்த சமூகச் சரித்திரப் பின்னணியில் உழைப்பாளி மக்களது படைப்புக்களான நாட்டுப் பாடல்களையும், கதைகளையும், நாடகங்களையும், கூத்துக்களையும் நாம் நோக்க வேண்டும்.
நமது மக்களிடையே வழங்கிவரும் கதைப் பாடல்கள் எண்ணற்றவை. அவற்றை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
1. இதிகாசத் துணுக்குகள்
2. கிராம தேவதைகளின் கதைகள்
3. சமூகக் கதைகள்
4. வரலாற்றுக் கதைகள்.
இதிகாசங்கள்
இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டில், பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப் பொருளாகக் கொண்ட பல கதைப் பாடல்கள் இருக்கின்றன. இன்னும் கிராம மக்கள் இராமாயணத்தை விட பாரதத்தையே அதிகமாக விரும்பிக் கேட்கிறார்கள். அதற்குக் காரணம் பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனனும், பீமனும் மக்களுக்குத் தம்மோடு உறவுடைய வீரர்களாகத் தோன்று கிறார்கள். கண்ணன் உற்ற நண்பனாகவும், ஆபத்தில் உதவுபவனாகவும் மனிதப் பண்புகள் நிறைந்தவனாகவும் காணப்படுகிறான். கண்ணன் தனது சுயகாரியத்திற்காக எதனையும் செய்யவில்லை. தனது நண்பர்களுக்கு உதவவே கதையில் பங்கு பெறுகிறான். எனவே அவன் பாமர மக்களின் சிந்தனையைக் கவருகிறான்.
அல்லியரசாணி
பாரத கதாபாத்திரங்களைக் கொண்டு பாரதத்தில் காணப்படாத நிகழ்ச்சிகளைக் கதைகளாகப் பின்னிய நாட்டுப் பாடல்கள், அல்லியரசாணி மாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம், பொன்னுருவி மசக்கை முதலியன. பாரதக் கதையின் கதாபாத்திரங்கள் தமிழ்நாட்டின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவதாக இக்கதைகள் கூறுகின்றன. பாண்டியனின் மகள், அல்லி, பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் தலைவியாக வாழ்கிறாள். அருச்சுனன் தலைமறைவு வாழ்க்கையின் போது மதுரைக்கு வருகிறான். அல்லி மீது காதல் கொள்ளுகிறான். அல்லி அவனைக் காணவே மறுக்கிறாள். அவனைச் சிறைப்படுத்துகிறாள். கண்ணனது உதவியால் அருச்சுனன் மணம் புரிந்து கொள்ளுகிறான். இக்கதையில் இரு சமுதாயங்களின் உறவு உருவகமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு ஆதாரமெல்லாம் பாரதத்தில் வரும் அர்ச்சுனன் – சித்திராங்கதை சந்திப்பு மாத்திரமே.
பவளக்கொடி மாலை
இக்கதையின் தொடர்ச்சியே பவளக்கொடி மாலை, அல்லியோடு சிறிது நாள் தங்கியிருந்து விட்டு அருச்சுனன் பாரதப் போர் நடத்தப் போய் விடுகிறான். போர் முடிந்து வெற்றி பெற்றுச் சில ஆண்டுகளுக்குப் பின், அல்லியிடமிருந்து, குழந்தை புலந்திரனைப் பார்க்க வர வேண்டுமென்று அவனுக்கு அழைப்பு வருகிறது. அவன் குழந்தையைக் காண மதுரைக்கு வருகிறான். குழந்தை பவளத்தேர் வேண்டுமென்று அழுகிறான்.
அருச்சுனன் பவளம் தேடி பவளக்கொடி காட்டிற்குச் செல்லுகிறான். பவளக் காட்டின் ராணி பவளக்கொடியைப் பார்க்கிறான். காதல் கொள்ளுகிறான். பல இடையூறுகளைச் சமாளித்துப் பவளம் பெற்று வருகிறான். பின் அவளையும் மணந்து கொள்ளுகிறான். இப்படி ருசிகரமாகக் கதை செல்லுகின்றது. இடையில் பவளக்கொடியோடு போராடி விஜயன் இறந்து போகிறான். தருமரும், கிருஷ்ணனும் தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். பவளக் காட்டில் இறந்து கிடக்கும் விஜயனை உயிர்ப்பிக்கிறார்கள். கடைசியில் பவளக்கொடி விஜயனை மணந்து கொள்ளுகிறாள்.
மூன்றாவது கதை பொன்னுருவி மசக்கை. கருணனது மனைவிக்கும், கருணனுக்கும் நடக்கும் குடும்பச் சண்டையைப் பொருளாகக் கொண்டது. நிகழ்ச்சிகள் இந்திரப் பிரஸ்தத்திலும், தமிழ் நாட்டிலும் நடைபெறுகின்றன. கடைசியில் கருவங் கொண்ட மனைவியைக் கருணன் அடி உதையால் பணிய வைக்கிறான்.
ஏணி ஏற்றம்
நான்காவது கதை, ஏணியேற்றம். இது அஞ்ஞாத வாச காலத்து நிகழ்ச்சியொன்றைப் பொருளாகக் கொண்டது. அர்ச்சுனன் மனைவி சுபத்திரை மீது துரியோதனன் இச்சை கொள்ளுகிறான். அவனுடைய தீய எண்ணத்தை அறிந்த சுபத்திரை மதுரையிலுள்ள தனது சகமனைவி அல்லியிடம் சரண்புகுகிறாள். அவள் மதுரை சென்றதையறிந்து துரியோதனன் அங்கு வருகிறான். அவனைத் தண்டிக்க வேண்டுமென்ற முடிவில் அல்லி அவனை வரவேற்று சுபத்திரையிடம் அனுப்பி வைப்பதாகச் சொல்லுகிறாள்.
காமத்தால் மதியிழந்த துரியோதனன் அவளது சூழ்ச்சியை உணராமல் அவள் சொற்படி நடக்கச் சம்மதிக்கிறான். அல்லி தமிழ்நாட்டுத் தச்சர்களின் திறமையைப் பயன்படுத்தி ஏணி எந்திரமொன்று செய்யச் சொல்லுகிறாள். அந்த ஏணி ஏறுமாறு துரியோதனை வேண்டுகிறாள். ஏணியின் கடைசிப் படியில் சுபத்திரையைப் போலப் பதுமையொன்று பொருத்தப்பட்டிருந்தது. துரியோதனன் ஏணியில் ஏறியதும் ஆணிகள் அவன்மீது பாய்ந்தன. பிரம்புகள் அவனை அடித்தன. இறங்க முடியாதபடி சில கம்பிகள் அவனைப் பிணைத்தன.
அல்லி ஏணியை பாண்டியர்களிடம் செல்லுமாறு கட்டளையிட்டாள். அங்கே அவன் அவமதிக்கப்பட்டான். பின்பு அங்கிருந்து நாகலோகத்திற்கு ஏணியை அனுப்பினார்கள். ஆதிசேஷன் துரியோதனனை அவமதித்து, மேகராஜனிடம் அனுப்பினான். அங்கிருந்து பல உலகங்களைச் சுற்றிக் கடைசியில் கிருஷ்ணனிடம் ஏணி வந்து சேர்ந்தது. கண்ணன் அவனைப் போற்றுவது போல் தூற்றி ஏணியை ஐவரிடத்தில் அனுப்பி வைத்தான். ஐவர் அவனைக் கண்டபொழுது, பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அவனைக் கொல்ல வேண்டுமென்று சொல்லுகிறார்கள். தருமர் அவனுடைய தவறுக்கு உரிய தண்டனையை நம் நாட்டுப் பெண்களே கொடுத்து நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறிக் கதையின் நீதியை விளக்குகிறார்.
“இவன் பெண்ணை அழிக்க வந்தான் பெண்களால் சீர்குலைந்தான்
நெருப்புக்கு முன்னெதுவும் நில்லா விதம் போல
கற்புக் குறை சிறிதும் காசினியில் நேராது
கற்பே பெரு நெருப்பாம் கற்பே பெரும் புகழாம்
பெண்களிது செய்தார் பேருலகம் தன்னை வாழ்த்த
புருஷர் பழிதுடைக்க பூவையர்கள் செய்தார்கள்
கற்புடை நமது பெண்கள் பொற்புடனே செய்த இது
போது மிவனை இன்னும் என்ன செய்யப்போகின்றீர்”
என்று தருமர் கேட்கிறார்.
இவை அனைத்திலும், அல்லி ஏற்றம் பெறுகின்றாள். அல்லியைப் பற்றிய கதைகள், செவி வழியாகப் பல வழங்கியிருக்க வேண்டும். அவற்றிலிருந்து சிலவற்றைத் தொகுத்துப் பிற்காலப் பாடகர்கள், நாட்டுப் பாடல்களாக எழுதிவைத்திருக்க வேண்டும். இக்கதைகளில் மகாபாரத கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றனர் என்றாலும், கதையின் கருத்துக்கள் பழந்தமிழ்நாட்டில் நிலவியவைதாம்.
இவற்றைப் போன்று பாரதத்தோடு தொடர்புடைய கதைகள் சில நாட்டுப்பாடல் வடிவத்தில் வழங்கி வருகின்றன. அவை இக்கதா பாத்திரங்களின் தன்மைகளில் எவற்றை மக்கள் விரும்புகின்றார்கள். எவற்றை வெறுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. புராணக் கதாபாத்திரங்களை விட தமிழ் நாட்டுக் கற்பனைக் கதா பாத்திரங்களுக்கே இப்பாடல்களில் முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு கதைப் பாடல்களிலும், அல்லி ஒரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்கிறாள். புராணக் கதாபாத்திரங்களும் கதையில் உரிய இடம் பெறுகின்றன. ஆனால் புராணக் கதாபாத்திரங்கள் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றபடி தன்மை மாறி உருவாக்கப்பட்டுள்ளன.
“பண்டோரா ஆவணங்கள்” : கருப்புப் பண மாஃபியாக்களின் பிறப்பிடம் உலக முதலாளித்துவம்!
வாஷிங்டன் போஸ்ட், பி.பி.சி., தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலான உலகின் பிரபலமான 150 ஊடகங்களைச் சேர்ந்த 600−க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியிருக்கும் “சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு” (International Consortium of Investigative Journalists (ICIJ − ஐ.சி.ஐ.ஜே) வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை முதலீடு செய்து சொத்து குவித்துள்ள ‘பிரபலமானவர்களின்’ பட்டியலை அண்மையில் வெளியிட்டிருக்கிறது.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முன்னாள் − இந்நாள் அதிபர்கள், பிரதமர்கள், உயர் அதிகாரிகள், பெரும் கோடீஸ்வரர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் எவ்வாறு தாங்கள் சட்டவிரோதமாக கொள்ளையடித்துச் சேர்த்த கருப்புப் பணத்தை சொந்தப் பெயரிலும் பினாமி பெயரிலும் வெளிநாடுகளில் சொத்துக்களாக வாங்கிக் குவித்துள்ளார்கள் என்பதை அப்புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள “பண்டோரோ பேப்பர்ஸ்” அம்பலப்படுத்தியிருக்கிறது.
2016-ஆம் ஆண்டில் பனாமா பேப்பர்ஸ், 2017-ஆம் ஆண்டில் பாரடைஸ் பேப்பர்ஸ் என இதற்கு முன்னரும் இதேபோல சட்டவிரோதமாக சொத்து சேர்த்த கருப்புப் பண முதலைகளைப் பற்றிய ஆவணங்கள் வெளிவந்திருக்கின்றன என்றாலும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பண்டோரா ஆவணங்கள் அவற்றைவிட பலமடங்கு விரிவான விவரங்களை − மோசடிகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. சுமார் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.
“பண்டோரா” என்ற பெயரில் இந்த ஆவணங்கள் வெளியாகியிருக்கிறது. விவிலியத்தில் கூறப்படும் உலகின் முதல் பெண்ணான ஏவாளைப் போல கிரேக்க புராணங்களில் கூறப்படும் உலகின் முதல் பெண்ணின் பெயர்தான் பண்டோரா. சியூஸ் எனும் கடவுள் பண்டோராவுக்கு ஒரு ஜாடியை பரிசளித்து அதை எப்போதும் திறக்கக் கூடாதென்று சொல்கிறார். ஆனால் ஆர்வமிகுதியால் பண்டோரா அந்த ஜாடியைத் திறக்கிறாள். ஜாடிக்குள் அடைபட்டிருந்த தீமைகள் அனைத்தும் உலகில் பரவிவிடுகின்றன. இக்கதையை ஒட்டி, ஏதேனும் ஊழல் அல்லது இரகசியங்கள் வெளிப்படும் போது “பண்டோரா பெட்டி திறந்துவிட்டது” என்று சொல்லும் வழக்கம் தோன்றியது.
தற்போது “பண்டோரா” பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆவணங்கள் வெளிக்கொணர்ந்திருப்பது உலகப் பிரபலங்களின் ஊழல் மட்டுமல்ல. முதலாளித்துவத்தின் யோக்கியதையையும்தான். ஊழல், மோசடி, திருட்டு, கருப்புப்பணம் என அனைத்திற்கும் ஊற்றுக்கண் முதலாளித்துவம்தான் என்பதை பனாமா, பாரடைஸ் ஆகிய ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன. தற்போது பண்டோரா ஆவணங்களில் சம்பந்தப்பட்டிருக்கும் கருப்புப் பணப் பரிவர்த்தனைக்கான கட்டமைப்பே, முதலாளித்துவம் பெற்றெடுத்த கள்ளக் குழந்தைதான்.
ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
பண்டோரா ஆவணங்கள், இதுநாள் வரை ஊர்மெச்சும் உத்தமர்களாக பேசப்பட்ட ‘பிரபலங்களை’ ’அம்மணமாக்கி’யிருக்கிறது. முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களும் அரசு அதிகார வர்க்கமும் முதலாளிகளுக்குச் சேவை செய்து அவர்களிடம் கிம்பளம் பெறும் பேர்வழிகள்தான் என்ற உண்மையையும் வெளிக் கொணர்ந்திருக்கிறது.
“ஊழலை ஒழிப்பேன்”… “வெளிப்படையான ஆட்சியைக் கொண்டுவருவேன்” என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலின்ஸ்கி, கென்யா ஜனாதிபதி உகுறு கென்யாட்டா, செக் நாட்டு அதிபர் ஆண்ட்ரே பாபிஸ், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் முதலானோரை, வரியில்லா புகலிடங்களில் அவர்கள் சட்டவிரோதமாக குவித்துள்ள சொத்துக்களின் விவரங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தி இருக்கிறது பண்டோரா ஆவணங்கள். இவர்களுள் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், வரியில்லா புகலிடங்களை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி வாய்கிழியப் பேசி வந்தவர் என்பதுதான் இதில் உள்ள நகைமுரண்.
ஜோர்டான் மன்னர் அப்துல்லா, அஜர்பெய்ஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், கட்டார் சர்வாதிகாரியின் மனைவி மொஸா பின்ட் நாசர், உக்ரைன் நாட்டின் பெரும் பணக்காரர் இகோர் கொலோமொவ்ஸ்கி, மாபியா கும்பல் தலைவன் ரபேல் ஆமட்டோ, ஜெர்மனியைச் சேர்ந்த மாடலான கிளாடியா ஷிபர், கொலம்பியாவின் பெண் பாடகர் சகீரா, இலங்கை முன்னாள் பிரதமர் ராஜ பக்ஷேவின் மைத்துனர் நடேசனின் மனைவி − என இப்பட்டியல் நீண்டு செல்கிறது.
இப்பட்டியலில், இந்திய முதலைகளும் பஞ்சமில்லாமல் நிறைந்திருக்கிறார்கள். வங்கிகளில் வாங்கிய ரூ.2,672 கோடி கடனைக் கட்டாமல் ஏமாற்றிய தொழிலதிபர் நிலேஷ் பரேக், பஞ்சாப் தேசிய வங்கியில் தான் வாங்கிய கடனைத் திருப்பி கட்டாமல் நாட்டைவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி, மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள சில் ஆஸ்வால், ரூ.88,000 கோடி கடனை திருப்ப செலுத்தாமல் ஏமாற்றிய கபில் வதவான் மற்றும் தீரஜ் வதவான், வங்கிகளுக்கு மஞ்சள் நோட்டிஸ் கொடுத்த ‘ரஃபேல்’ இழிபுகழ் அனில் அம்பானி, கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் − என பலரும் வரியில்லா புகலிட நிறுவனங்களின் அதிபர்திகளாக உள்ளனர்.
அண்மையில், உலக வங்கி செய்துள்ள ஒரு மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் வரி ஏய்ப்புச் செய்யப்படுகிற தொகை சுமார் 6௦௦ பில்லியன் டாலர். இது, அமெரிக்க அரசின் மொத்த வரி வருமானத்தில், அந்த நாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தும் வரியைப்போல மூன்று மடங்கு. இந்திய மதிப்பில் சொன்னால், இது சுமார் ரூ.45 லட்சம் கோடிக்கு சமம். இந்திய அரசின் 202௦-ஆம் ஆண்டுக்கான ஒட்டு மொத்த வரி வருமானமே 23.61 லட்சம் கோடியாக உள்ள நிலையில், இது இந்தியாவின் வரி வருமானத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.
வரியில்லாச் சொர்க்கங்கள் எனும் உலகளாவிய கருந்துளைகள்
வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோதமான வழிகளில் சொத்து சேர்ப்பவர்கள் தங்கள் கருப்புப் பணத்தை பிற நாடுகளுக்கு பாதுகாப்பாக எப்படி கடத்துகிறார்கள் என்ற கேள்விக்கு வரியில்லா புகலிட நாடுகளே பதிலாக அமைகின்றன. உலகிலுள்ள இருநூறு நாடுகளைச் சேர்ந்த “முக்கியஸ்தர்கள்” சுமார் 29,000 நிறுவனங்கள் மூலம் தங்களது கருப்புப் பணத்தை வரியில்லா சொர்க்க நாடுகளில் பதுக்கியிருப்பதாக பண்டோரா ஆவணங்கள் கூறுகின்றன.
உலகின் சில நாடுகள் மற்றும் பல நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகள், தங்களது நாட்டில் / பகுதிகளில், பதிவு செய்துள்ள நிறுவனங்களின் வருமானத்திற்கோ, அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதிக்கோ, அவற்றின் பரிவர்த்தனைக்கோ வரி விதிப்பதில்லை அல்லது மிகவும் குறைவான வரியையே விதிக்கின்றன. மேலும், தங்களது நாட்டில் / பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்களையோ, அவர்களின் சொத்து மதிப்புகளையோ பிற நாடுகளுக்கு கொடுப்பதில்லை. இதுபோன்ற நாடுகள் / பகுதிகள் தான் “வரியில்லா புகலிடங்கள்” (Tax Havens) அல்லது “வரியில்லா சொர்க்கங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
“உலகின் பெரும் பணக்காரர்கள், அதிகாரமிக்கவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் வரி ஏய்ப்பின் மூலம் அடிக்கும் கருப்புப் பணத்தை எந்தவிதமான சட்டச் சிக்கல்களும் இல்லாமல் உள்வாங்கிக் கொள்ளும் உலகளாவிய கருந்துளைகளாக (Black holes) வரியில்லா புகலிடங்கள் இருக்கின்றன” என முதலாளித்துவ பத்திரிகைகளே வருணிக்கின்றன.
உதாரணத்திற்கு, பனாமா நாட்டில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் (offshore companies) தமது பன்னாட்டு நடவடிக்கைகளுக்கு வருமானவரி, விற்பனைவரி போன்றவற்றை பனாமா அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை. பனாமாவில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளராக உள்ள வெளிநாட்டவர் அல்லது தனிநபர்களின் விவரங்களை அரசுக்கு கொடுக்கத் தேவையில்லை; சர்வதேச வெளிப்படைத்தன்மை உடன்படிக்கையில் பனாமா கையொப்பமிடாததால், அது மற்ற நாடுகளுக்கு தனது நாட்டில் முதலீடு செய்துள்ளவர்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்வதுமில்லை.
சட்ட விரோத நிதியை சட்டப்பூர்வ நிதியாக மாற்றுவதை பணச் சலவை (money laundering) செய்தல் என்பர். அதாவது கருப்பை வெள்ளையாக மாற்றுவது. சிறந்த வரியில்லாப் புகலிடமும் பணச்சலவை செய்யும் இடமுமான பனாமா, நிதி மோசடியாளர்களின் சொர்க்கமாகும். ஆகவேதான் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நாடாக பனாமா உள்ளது.
வருமான வரி ஏய்ப்பு தொடர்பாகவும், முதலாளித்துவம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நிதி சம்பந்தப்பட்ட சட்ட ஓட்டைகள் தொடர்பாகவும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கி கோடிகளைச் சுருட்டுவதற்கென்றே பல வல்லுனர்களை பணிக்கமர்த்தியிருக்கும் பல்வேறு நிறுவனங்கள் பனாமாவில் இயங்கிவருகின்றன.
பனாமா மட்டுமல்ல, பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேமன் தீவுகள், வெர்ஜின் தீவுகள், ஜெர்சி தீவுகள்; அமெரிக்காவின் டகோட்டா, டெக்சாஸ் முதலான மாகாணங்களின் சில பகுதிகள்; சுவிட்சர்லாந்து, துபாய் முதலான நாடுகளின் சில பகுதிகள் என உலகில் மொத்தம் 133 வரியில்லா புகலிடங்கள் செயல்படுவதாக 2020-ஆம் ஆண்டில் வரி நீதி வலையமைப்பு (Tax Justice Network − TJN) என்ற சர்வதேச அமைப்பு கணக்கிட்டுள்ளது.
வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை
சொந்த நாடுகளில் சட்டவிரோதமாக சேர்க்கப்படும் கருப்புப் பணம், வெளிநாடுகளில் சட்டப்பூர்வ சொத்துக்களாக மாற்றப்படுகிறது. இப்படி மாற்றப்படும் கருப்புப் பணத்தின் மதிப்பு 5.6 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களிலிருந்து 32 லட்சம் கோடி டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடுகிறது சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு. மேலும், இந்தக் கருப்புப் பணம், ஏதேனும் ஒரு வரியில்லா புகலிடங்களில் சொத்துக்களாக முடங்கிவிடுவதில்லை. சட்டப்பூர்வ மூலதனமாக உருமாற்றம் பெற்று வேறு நாடுகளுக்கோ அல்லது அவை கொள்ளையடிக்கப்பட்ட நாடுகளுக்கே கூட செல்லலாம். அந்த மூலதனம் அங்கு குட்டிபோட்டு தன்னை மீண்டும் கருப்புப் பணத்தை உருவாக்கி இந்த வரியில்லா புகலிடங்களை நோக்கி பாயும்.
உதாரணமாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் வரியில்லா புகலிட நாடுகளில் உள்ள தமது பினாமி நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்வர். வரியில்லா புகலிட நாடுகளில் இதற்கு இறக்குமதி வரி இருக்காது அல்லது மிகவும் குறைவு. பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அதிகரித்த விலைக்கு ஏற்றுமதி செய்வார்கள். இதனால், அந்த பினாமி நிறுவனம் பெரும் நிதியை இலாபமாகத் திரட்டும். பின்னர், இந்த நிதி வெளிநாட்டு முதலீடு என்ற முகமூடியுடன் இந்தியாவிற்குத் திரும்பும். அன்னிய முதலீடுகளுக்காக ஏங்கிக்கிடக்கும் நம் நாட்டு அரசோ அம்முதலீடுகளுக்கு வரிச்சலுகைகளை வாரிவழங்கும். வரியில்லா புகலிடங்களின் மூலமாக மோசடியும், வரி ஏய்ப்பும் செய்து கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று.
ஏப்ரல் 2010−ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2019−ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவிற்குள் பாய்ந்த அன்னிய முதலீடுகளில் 87 சதவிகிதம் உலகின் முன்னணியான பத்து வரியில்லா புகலிடங்களில் இருந்து வந்தவையே.
இப்படி, கருப்புப் பணத்தை சட்டப்பூர்வ மூலதனமாக மாற்றிக் கொடுப்பதன் மூலம் மிகப்பெரும் இலாபத்தை ஈட்டுபவர்கள் ஏதோ முகம் தெரியாத மாஃபியாக்கள் அல்ல; ஏற்கெனவே நாம் அறிந்த, உலகின் பிரபலமான பல்வேறு முன்னணி நிதி நிறுவனங்கள் தான். சரியாகச் சொல்லவேண்டுமெனில், நிதியாதிக்க மாஃபியா கும்பல்கள்.
ஹெச்.எஸ்.பி.சி. (HSBC), யூ.பி.எஸ். (UBS), சிட்டி குரூப் (Citigroup), பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America), ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு (Standard Chartered), ஐ.என்.ஜி. (ING), பி.என்.பி. பரிபாஸ் (BNP Paribas), மார்கன் ஸ்டான்லி (Morgan Stanley), கோல்டுமேன் சாக்ஸ் (Goldman Sachs) முதலான முன்னணி வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சொந்தமாகவே பல்வேறு வரியில்லா புகலிடங்களை உருவாக்கி வைத்துள்ளன.
அமெரிக்காவின் மார்கன் ஸ்டான்லி என்ற பிரபல நிதி நிறுவனம், வெர்ஜின் தீவுகளில் உள்ள ஆல்கொகல் எனும் நிதி தரகு நிறுவனத்தின் மூலம் மட்டும் 312 வாடிக்கையாளர்களுக்கு கருப்புப் பணத்தை ஒளித்து வைப்பதற்கான இரகசிய நிறுவனங்களை அமைத்துக் கொடுத்து கொழுத்த ஆதாயமடைந்துள்ளது.
கள்ளத்தனமாக ஆயுதங்களைக் கடத்துபவர்கள், போதைப் பொருள் விற்பனையாளர்கள், விபச்சாரத் தொழில் மாஃபியாக்கள் தமது சட்ட விரோத செல்வத்தை வரியில்லா புகலிட நாடுகளில் வைத்திருக்கின்றனர்.
ஒரு நாட்டின் அரசை தங்களுக்கு சாதகமாக வளைப்பதற்காக இலஞ்சம் கொடுக்க முயலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியில்லா புகலிடங்கள் வசதியானவையாக இருக்கின்றன. நைஜீரியாவின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்கு, உலக எரிபொருள் கார்ப்பரேட்டுகள் அந்நாட்டின் எரிபொருள் துறை அமைச்சருக்கு வரியில்லா புகலிடங்களில் ஏராளமான சொத்துக்களை இலஞ்சமாக வாங்கிக் கொடுத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு இதற்கு ஒரு சான்று.
இத்தகைய வரியில்லாச் சொர்க்கங்கள், ஏழை நாடுகளின் வளங்களையும், உழைக்கும் மக்களையும் ஏகாதிபத்தியங்கள் ஒட்டச் சுரண்டுவதற்கு ஏற்ற வகையில் ஆட்சியாளர்களையும் அந்நாடுகளின் அதிகாரிகளையும் இலஞ்சம் மூலம் குளிப்பாட்டுவதற்கு வசதியான தளங்களாகச் செயல்படுகின்றன.
முதலாளித்துவத்தை ஒழிக்காமல் கருப்புப் பண மாஃபியாக்களை ஒழிக்க முடியாது
நியாயமாக சமூகத்திற்கு சேரவேண்டிய சொத்துக்களை கருப்புப் பணமாக பதுக்கி ஒருசிலர் பருத்து கொழுத்துக் கொண்டிருக்கையில், உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களோ நாள்தோறும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 40,000 குழந்தைகள் உலகெங்கிலும் பட்டினியால் மடிகின்றன. 2015-ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வறிக்கையின்படி, 15 கோடி மக்கள் எந்தவகையான குடியிருப்பும் அற்ற பிளாட்பாரவாசிகளாகவும் 160 கோடி மக்கள் போதிய தங்குமிட வசதியற்றவர்களாகவும் உள்ளனர். உலக மக்கள் தொகையில் 9.2 சதவிகிதம் பேர் கொடுமையான வறுமை நிலையில் வாழ்கிறார்கள்.
இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சமீபத்தில் உலக பட்டினிக் குறியீட்டில், 116 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 101-ஆவது இடத்திற்கு சரிந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் தான் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பணக்காரர்களின் (பில்லினியர்களின்) எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது?
பணம் எங்கிருந்தும் காய்ப்பது இல்லை, உழைப்பிலிருந்து உற்பத்தியாகி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கிறது. அது எங்கிருந்து எடுக்கப்பட்டு, எங்கு குவிக்கப்பட வேண்டும் என்பதை இந்த சமூகக் கட்டமைப்புதான் தீர்மானிக்கிறது. முதலாளித்துவக் கட்டமைப்பு பணத்தை வரியாக, விலைவாசி உயர்வாக, அடிமாட்டுக் கூலிக்கான உழைப்பாக என பல்வேறு வழிகளில் ஏழைகளிடமிருந்து பறித்து முதலாளிகளுக்கு சலுகைகளாக, வங்கியின் வாராக் கடன்களாக அள்ளிக் கொடுக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பீடுதான் அதற்கு நிகழ்கால உதாரணம்.
இந்த ஏற்றத்தாழ்வை உற்பத்தி செய்வதுதான் முதலாளித்துவம். இந்த ஏற்றத்தாழ்வில்தான் முதலாளித்துவம் வாழ்கிறது. ஏழைநாடுகளின் அரசியல் தலைவர்களையும், அதிகாரிகளையும் ஊழல்படுத்தவும், அதன் மூலம் அந்த நாட்டை மொட்டையடிக்கவும் ஏகாதிபத்தியங்களுக்கு இந்தக் வரியில்லா சொர்க்கங்கள் அவசியப்படுகின்றன. இவை இல்லையெனில் அவை ஏகாதிபத்தியங்களாக நீடிப்பது கடினம்.
ஆகவே பனாமா, பாரடைஸ், பண்டோரா என இன்னும் எத்தனை ஆவணங்கள் கசிந்து வெளிவந்தாலும், எந்த நாட்டின் அரசும் இந்த வரியில்லாச் சொர்க்கங்களை கட்டுப்படுத்தவோ, மிரட்டி ஒடுக்கவோ போர் தொடுக்கவோ போவதில்லை. அவற்றால் செய்யவும் முடியாது. ஏனெனில் முதலாளித்துவத்தின் டிசைனே அப்படித்தான்.
முதலாளித்துவத்தை முறியடித்து உழைக்கும் மக்களின் தலைமையில் சோசலிசம் நிலைநாட்டப்பட்ட அன்றைய ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளிகள் கிடையாது. ஆகவே ஊழலும் கிடையாது, கருப்புப் பணமும் கிடையாது. ஏனெனில் அங்கு முதலாளித்துவம் கிடையாது.
சுரண்டலற்ற அத்தகைய சோஷலிச சமூகத்தை நிர்மாணிக்கும் திசையில், உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் நாடுகளில், புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுக்கும்போதுதான் கருப்புப் பண வரியில்லாச் சொர்க்கங்களின் ஊற்றான முதலாளித்துவத்தை முறியடித்து மக்களுக்கான நல்லரசை உருவாக்க முடியும். பண்டோரா ஆவணங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான்.
பண்டிகை நாட்களில் நமது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ‘பாரம்பரிய’ உடையை உடுத்துவதை ஒரு சடங்காக வைத்திருக்கிறோம். அப்படி பண்டிகை அல்லது குடும்ப நிகழ்வுகளில் நமது பாரம்பரியமாக போற்றப்பட்டு உடுத்தப்படும் உடை தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெண்களுக்குப் புடவையும், ஆண்களுக்கு வேஷ்டியும் தான்.
அத்தகைய கொண்டாட்ட நாட்களில் பெண்கள் சல்வார், ஃபிராக் அல்லது கவுன் போன்ற உடையை அணிந்தால் அது நமது கலாச்சாரத்தை கடைபிடிக்காத போக்காக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் அந்நாட்களில் பெண்கள் தமக்குப் பிடித்த சல்வாரோ அல்லது குட்டை சட்டையோ அணிந்து, ‘துப்பட்டா’வை போடவில்லை என்றால், அது பெண்ணின் நடத்தையையும் ஒழுக்கத்தையும், பாரம்பரிய ஒழுகுதலையும் (sanskari) கேள்விக்குட்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட இந்தப் பார்வை அனைத்து வர்க்கங்களிலும் ஒரே மாதிரியாக வெளிப்படுவதில்லை. இத்தகைய பாரம்பரியங்களின் வரலாறும் மிக நீண்டதாக இல்லை. அப்படியானால் இந்தியா முழுவதும் பெண்கள் தமது பாரம்பரியமாகக் கருதும் புடவையும், ரவிக்கையும் (Blouse) எவ்வளவு காலமாக நமது ‘பாரம்பரிய’ உடையாக இருந்து வந்திருக்கின்றன ? அவை யாருக்கெல்லாம் உடையாக அணிந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தன? என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கான பதிலை நோக்கி இனி பயணிப்போம்.
பண்டையகால இந்தியாவில், மௌரியர் மற்றும் சுங்கா காலத்தின் (கி.மு.300) சிற்பங்களில், ஆண்களும் பெண்களும் உடலின் கீழ் பகுதியிலும், மேல் பகுதியிலும் செவ்வக (rectangular) வடிவத் துண்டுகளை அணிந்திருந்தனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயிலின் (கி.மு.900 – 1050) சிற்பங்களின் ஒரு நிலையான அம்சம், பெண்களின் மார்பகங்கள் சித்தரிக்கப்பட்ட விதம்; பெண்கள் மேலாடையின்றி வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகிறது.
குப்தர்கள் காலத்து பெண்கள் மேலாடையின்றி இருந்து இருக்கிறார்கள் என்பது அவர்களது காலத்திய சிற்பங்களில் வெளிப்பட்டுள்ளது. அது அவர்களுக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது.அதற்கு பிந்தைய காலகட்டங்களில் பெண்கள் குறைந்த அளவு உடைகளையே பயன்படுத்தினர். ஆனால் அவை ஒழுக்கத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஜந்தா குகைகள் ஒரு புத்த குகை வளாகம்; கி.மு.2-ஆம் நூற்றாணடு முதல் 650 C.E. வரை இருந்த 29 குகைகளின் வரிசையாகும் யுனெஸ்கோ இதை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
ஜனக மன்னன் தன் மனைவியுடன், அஜந்தா குகைகள்
அஜந்தா குகைகள் அதன் பிரமிக்க வைக்கும் சுவரோவியங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்காக அறியப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை புத்தரின் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும். அதிலும் ஆடை பெண்களின் ஆடைகள் இடம்பெற்று இருக்கின்றன. அஜந்தா மற்றும் எல்லோராவின் குகைகள் பெண்களின் ஆரம்பகால ஓவியங்கள் குறைந்த ஆடைகளுடனே பிரதிபலிக்கின்றது.
பல்வேறு கலாச்சாரங்களுடனான இந்தியாவின் தொடர்பு வரலாறு முழுவதும் இருந்திருக்கிறது. இதில் கிரேக்கம், ரோமன், அரபு மற்றும் சீன தாக்கங்கள் இருந்ததால் – நாகரீகம் அது சார்ந்து மாறத் தொடங்கியது.
முகலாயர்கள் இந்தியாவைக் கைப்பற்றுவதற்கு முன்பு, இந்தியாவில் மேல்தட்டுப் பெண்கள் முழு ஆடைகள் அணிந்திருந்தாலும், மகாராஷ்டிரா மற்றும் கங்கைப் படுகை உட்பட வடஇந்தியாவின் பல பகுதிகளில் உழைக்கும் வர்க்கப் பெண்கள் மேலாடையின்றியே இருந்துள்ளனர். அன்று அது ஒழுக்கங்கெட்டதாகப் பார்க்கப்படவில்லை. மாறாக அது வர்க்கம் சார்ந்த உடை பழக்கமாக இருந்தது.
இந்தியாவில் முகலாயர்களின் வருகைக்குப் பின்தான் இந்திய பெண்களின் தலை மற்றும் மார்பகங்களை மறைப்பது போன்ற மாற்றங்கள் அனைத்துப் பிரிவு பெண்களிடமும் இடம்பெற்றிருக்கின்றன. 15-ம் நூற்றாண்டில், முஸ்லீம் மற்றும் இந்து பெண்கள் வெவ்வேறு ஆடைகளை அணிந்திருந்தனர். 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் முகலாயப் பேரரசின் செல்வாக்கு தீர்க்கமானதாக இருந்தது. அவர்கள் தற்போதைய இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெரும்பகுதியை ஆட்சி செய்தனர். முஸ்லீம் பெண்கள் பொதுவாக தங்களை முழுவதுமாக மூடும்விதமான உடைகளை அணிந்திருப்பார்கள். முகலாயர்கள் காலகட்டத்தில்தான் சல்வார் கமீஸ் போன்ற ஆடைகள் தோன்றின. இன்று அது இந்தியாவில் ‘தேசிய உடை’ போல அணியப்படுகிறது.
(Maurya & Sunga Sculpture) மௌரிய மற்றும் சுங்க சிற்பங்கள்
முகலாயர் காலகட்டத்திற்குப் பிறகு இங்கு நிலைநாட்டப்பட்ட காலனிய ஆட்சிக் காலகட்டம், இந்தியாவில் ஆடையில் புரட்சியை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர்களின் சந்தை நோக்கம் அதற்கு முக்கியக் காரணம். எனினும் இது இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நடைபெறவில்லை. இதிலுள்ள சாதிய பாகுபாடுகள் நெஞ்சை உலுக்குபவை.
இந்தியாவின் சில பகுதிகளில், மார்பகங்களை மூடுவது, அவர்களின் வர்க்க நிலையைக் கடந்து சாதியுடன் தொடர்புடையதாகவே இருந்தது.
உதாரணமாக, கேரளாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மார்பகங்களை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ரவிக்கை அணியும் உரிமையும், மார்பகங்களை மறைக்கும் உரிமையும் உயர்சாதி பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களது மார்பகங்களை மறைக்கும் உரிமைக்கும், மேலாடை அணியும் உரிமைக்காகவும் போராடிய வரலாறு கேரளாவுக்கும் இன்றைய தென் தமிழகத்தின் நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும் (அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம்) உண்டு.
வங்காளத்தில், விக்டோரியா காலத்தில், ஆதிக்க சாதிப் பெண்களில் பெரும்பாலானவர்கள் புடவையுடன் ரவிக்கைகளை அணியவில்லை – அவர்கள் ரவிக்கையின்றி வெறும் புடவையை மட்டுமே அணிந்தனர். இன்றும் பழம்பெரும் மூதாட்டிகள் வெறும் புடவையைமட்டுமே மேலாடையாக உடுத்தியிருப்பதைப் பார்க்கலாம்.
அப்படியென்றால் ரவிக்கையை யார் கொண்டு வந்தார்கள் ? இந்தியாவுக்கு ரவிக்கை எனும் உடை எப்படி அறிமுகமானது?
இதேபோன்று விக்டோரியன் காலத்தில், வங்காளம் போன்ற இடங்களில், சில பெண்கள் தங்கள் புடவைக்குள் பிளவுஸ் அணியவில்லை.
பிரபல வங்காளக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூரின் சகோதரர், சத்யேந்திரநாத் தாகூரின் மனைவியான ஞானதாநந்தினி தேவி (Jnanadanandini Devi) தான் ரவிக்கை, ஜாக்கெட்டுகள், கெமிஸ்கள் மற்றும் புடவையின் நவீன பாணியை இந்தியாவில் பிரபலப்படுத்தினார்.
பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் உள்ள சங்கங்கள் (Club) பெண்கள் வெறும் மார்பகங்களுக்கு மேல் புடவையை அணிந்த செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பிறகு, அவர் அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. இன்றைய நவ நாகரிக போக்குகளைப் போலவே, சட்டைகள், ஸ்வெட்டர்கள் மற்றும் உயர் கழுத்து கொண்ட விக்டோரியன் பிளவுஸ்கள், உயர் நாகரீகத்தின் ஒரு பகுதியாக புடவையின் கீழ் அணியப்பட்டன. அது மேல்தட்டு மக்களின் சமூக அந்தஸ்த்தைக் காட்டும் ஆடையாகவே இருந்தது.
“Raw Mango” போன்ற தர அடையாளம் (brand) கொண்ட புடவையுடன் அணியக் கூடியதாக பிளவுஸை கொண்டு வந்தது. அதற்கு காரணம் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்தியாவின் ஜவுளி சந்தையை கைப்பற்றுவதற்கான முயற்சியே. அதுமட்டுமின்றி, அது இந்திய சோலியுடன் விக்டோரியன் ஆடையுடனும் அதிக ஒற்றுமையைக் கொண்டு இருந்ததும் ஒரு காரணம்.
1947-க்கு பின் அதாவது இந்தியா சுதந்திரம் பெற்றதுடன் “பிளவுஸ் (Blouse)” மற்றும் “பெட்டிகோட்(Petticoat)” – இரண்டும் ஆங்கில ஆடைகள் – இந்திய ஆடைக் களஞ்சியத்தில் நுழைந்து நம்மிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த பிரிட்டிஷ் பாணி ஆடைகள், புடவையில் இருந்து பிரிக்க முடியாததாக ஆகிவிட்டன. இப்போது அவற்றை நமது பாரம்பரிய ஆடைகள் என்று கருதுகிறோம்.
அடக்கம் (Modesty) என்பது காலப்போக்கில் வெவ்வொரு பகுதிகளிலும் சமூகங்களிலும் வெவ்வேறு வரையறைகளைக் கொண்டுள்ளது. ஆனால், அது எல்லா இடங்களிலும் முகத்தையும் உடலையும் மறைப்பதாக இல்லை. அதற்கு இந்திய வெப்பமான காலநிலையும் ரவிக்கை இல்லாமல் புடவை அணிவது அவர்களுக்கு ஏற்றவாறான ஆடை முறையாக நிலைப்பட்டிருக்கக்கூடும்.
ஐரோப்பாவில், கோர்செட் (corset) எனும் இறுக்கமான ஆடையிலிருந்து பெண்களை விடுவித்து அவர்களுக்கான நாகரிக உடையாக பிளவுஸ் (Blouse) அந்த இடத்தைக் கைப்பற்றியது. அதையே ஆங்கிலேயர்கள், இங்கும் நிறுவத் தொடங்கினர். பெண்களின் மார்பகங்களை மறைக்கச் சொல்லும் முன்பு வரை இந்திய பெண்கள் அவர்களின் மார்பகங்களை வெளிக்காட்டுவது சரியா தவறா என்பது பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. ஏனெனில் இங்கு அப்படி ஒரு அவசியமோ, ‘ஒழுக்கமோ’ நடைமுறையில் இல்லை.
காலங்காலமாக தேசியவாதிகள் என்றும் கலாச்சாரக் காவலர்கள் என்றும் தங்களைக் கருதிக் கொள்ளும் ஆதிக்கச் சக்தியினர், பெண்களின் ஆடை மீது ஒழுக்கத்தையும், சாதியரீதியான பாகுபாட்டையும், வர்க்க ரீதியான தரத்தையும், பொது அலங்காரத்தையும் திணித்தனர்.
பெண்ணின் ஒழுக்கத்தை பாரம்பரியத்திற்கு இணங்குவதன் மூலம் வரையறுக்க முடிவு செய்யும் பிற்போக்காளர்களின் கூற்று எந்த அளவிற்கு போலியானவை, கற்பனையானவை, மிகச் சமீபத்திய வரலாறு கொண்டவை என்பதை ரவிக்கையின் தோற்றம் பற்றிய கதை நமக்குக் காட்டுகிறது.
“யாரையும் சும்மா விடக்கூடாது ரித்தாவோட தாத்தா எலிசா சாருவோட அப்பா இந்த சார் தே*டியா பு*ட யாரையும் சும்மா விடக்கூடாது.”
– கோவை சின்மயா பள்ளி மாணவி மரணத்திற்கு முன் எழுதிய கடிதத்தில் மேற்கண்ட ஐந்தே வரிகள்தான் இருக்கின்றன. அந்த ஐந்து வரிகளில் அந்த மாணவியின் உள்ளத்தில் பொதிந்திருந்த ஆறாத ரணங்களும் ஆத்திரமும் வெளிப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் இந்தச் சமூகத்தின் இழிநிலையை தோலுறித்துத் தொங்கவிட்டிருக்கிறது.
கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியனாக பணியாற்றிய மிதுன் சக்கரவர்த்தி எனும் கிரிமினல் தன்னிடம் கல்வி கற்றுவந்த 12-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறான். அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து, மிதுன் சக்கரவர்த்தி மீது அவனது மனைவியிடமும் தலைமை ஆசிரியையிடமும் அந்த மாணவியும் அவரது நண்பனும் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சின்மயா பள்ளியின் தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன், பாதிக்கப்பட்ட மாணவியை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சிலிங் கொடுத்துவிட்டு, வீட்டில் இது பற்றி சொல்ல வேண்டாம் எனவும், பேருந்தில் யாரேனும் இடித்தால் அமைதியாக வந்துவிடுவது போல இதனையும் கடந்து போகும்படியும் “வழிகாட்டுதல்” கொடுத்துள்ளார்.
தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி
அதுமட்டுமல்லாமல், மிதுன் சக்கரவர்த்தியை பணியிலிருந்து நீக்காமல் இழுத்தடித்துள்ளது, பள்ளி நிர்வாகம். இதனைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து வெளியேறி மற்றொரு பள்ளியில் சேர்ந்துள்ளார் பாதிக்கப்பட்ட மாணவி.
அதன் பின்னரும் அந்தக் கிரிமினலின் பாலியல் தொல்லை அலைபேசி மூலமாக தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அந்த மாணவி. தனது தாயார் வெளியூருக்குச் சென்ற நாளில் தனது தந்தை வீட்டில் இல்லாத சமயத்தில் தனது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் மரணம் தொடர்பாக மாணவியின் தந்தை, மிதுன் சக்கரவர்த்தி, அந்தப் பள்ளி நிர்வாகம் ஆகியோர் மீது போலீசில் புகாரளித்தார். இந்நிலையில் அந்த புகாரின் மீது போலீசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்துத் தெரிந்ததும் களத்திற்கு வந்த முற்போக்கு ஜனநாயக சக்திகள் மிதுன் சக்கரவர்த்தியையும் பள்ளியின் தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன் உள்ளிட்ட நிர்வாகத்தாரையும் கைது செய்யுமாறு தொடர்ந்து போராடியுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகு மிதுன் சக்கரவர்த்தியைக் கைது செய்தது தமிழ்நாடு போலீசு. மாணவி புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், பாலியல் வன்முறை குறித்து வீட்டிற்குத் தெரிவிக்கக் கூடாது என்றும் தடுத்த பள்ளி தலைமைஅ ஆசிரியை மீதும் போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மாணவியின் குடும்பத்தினரும், அனைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராடின.
போலீசு பள்ளி நிர்வாகத்தின் மீதும், தலைமை ஆசிரியை மீதும் வழக்கு பதிய மறுத்ததோடு, மாணவியின் குடும்பத்தினரை ‘மென்மையாக’ மிரட்டவும் செய்தது. அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் போலீசின் இந்த யோக்கியதை அம்பலப்பட்டு திமுக-வின் ‘சமூக நீதி’ ஆட்சி கேள்விக்குள்ளாக்கப்பட்டவுடன் கடந்த 14-11-2021 அன்று ‘தப்பியோடிய’ மீரா ஜாக்சனை கைது செய்திருக்கிறது போலீசு.
000
கோவை மாணவியின் (தற்)கொலைக்குப் பின்னர் ஊடகங்களில் அந்த மாணவியின் நண்பனிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்கள் பல ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகின. அந்த மாணவி எழுதிய கடிதத்தின் புகைப்படமும் சமூக ஊடகங்களில் பரவின.
அந்தக் கடிதத்தில் அவர் தனது மனதை தொடர்ந்து ரணப்படுத்தியவர்களை அம்பலப்படுத்தி அந்த ஓநாய்கள் “யாரையும் சும்மா விடக்கூடாது” என்று இந்தச் சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கோவை சின்மயா வித்தியாலயா பள்ளியின் ஆசிரியன் மிதுன் சக்கரவர்த்தியை அந்தக் கடிதத்தில் குறிப்பிடுவதோடு, தனது தோழியர்களின் தந்தை, தாத்தா ஆகியோரையும் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த மாணவியின் நண்பன் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் மறைந்த தனது தோழி, ஆண்களைக் கண்டாலே தமக்கு வெறுப்பு ஏற்படுவதாகக் கூறியதை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதையும் மாணவியின் கடிதத்தையும் வைத்துப் பார்க்கும் போது, அந்த இளம் மாணவி சிறுவயதிலிருந்து தாம் அனுபவித்துவந்த பாலியல் சீண்டல்களை எல்லாம் எண்ணி மனம் வெதும்பி, பாதிக்கப்பட்டு அந்த விரக்தியின் முடிவில்தான் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளும், பாலியல் சீண்டல்களும் அவர்கள் தெளிவுறும் வயதுக்காக காத்திருப்பதில்லை. இந்தியாவில் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்களில் கணிசமானவை குழந்தை வயதில் இருந்தே நடத்தப்படுகின்றன. நெருங்கிய குடும்ப உறவுகள், குடும்ப நண்பர்கள், அருகாமை வீட்டினர் என பல ரூபங்களில் பாலியல் குற்றவாளிகளின் சீண்டல்களுக்குக் குழந்தைப் பருவம் முதல் ஒரு பெண் ஆளாகிறாள்.
அப்படி ஆளாகும் பெண் குழந்தைகளை அது உடல்ரீதியாக மட்டும் பாதிப்பது இல்லை. அதன் உள்ளரீதியான தாக்குதல் மிகவும் கொடூரமானது என்பதையும் மிகவும் ஆழமானது என்பதையும் உயிரிழந்த கோவை சின்மயா பள்ளி மாணவியின் கடிதமும் அம்மாணவி எடுத்த முடிவும் எடுத்துக் காட்டியுள்ளது.
அந்தக் கிரிமினல் மிதுன் சக்கரவர்த்தி மீது தலைமை ஆசிரியையிடம் மாணவி புகாரளித்த போது, “பேருந்தில் செல்லும்போது ஆண்கள் உரசுவதைக் கடந்து செல்வதைப் போன்று இவ்விவகாரத்தையும் மறந்து விடு” என்று ‘கீதோபதேசம்’ செய்திருக்கிறார் தலைமையாசிரியை மீரா ஜாக்சன்.
கேட்க அருவெறுக்கத்தக்க வசனமாக இருந்தாலும், இன்று பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெரும்பாலான பெண்கள் அதுகுறித்து தனது வீட்டிலோ, நண்பர்களிடமோ முறையிடும்போது மீரா ஜாக்சனின் வசனம்தான் வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு வண்ணத்தில் பதிலாக அப்பெண்களுக்கு அளிக்கப்படுகிறது.
பார்ப்பனிய சாதியப் படிநிலையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள இடம் மற்றும் தமது பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் இச்சமூகத்தால் தமக்கு மறுக்கப்பட்ட கவுரவத்தையும், மானத்தையும் தனது குடும்பத்துப் பெண்களின் உடலின் மீது கட்டமைத்துப் பெருமை கொள்ள நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறது, பார்ப்பனிய ஆணாதிக்கச் சிந்தனை நிறைந்த இந்தச் சமூகம்.
அந்தக் கவுரவத்தை பெண்ணின் உடல் மீது கட்டமைப்பதன் மூலம் இந்த சாதியக் கட்டுமானத்தைக் கட்டிக் காப்பாற்றுவதே பார்ப்பனியத்தின் முதன்மை நோக்கம். இவையே ஆணவப் படுகொலைகளாக, தற்கொலைகளாக, வெளிப்படுகின்றன. அடுத்ததாக, ஆண்களின் வாழ்நாள் அடிமையாக, மோகப் பொருளாக பெண்களை இருத்தி வைத்திருப்பதே இரண்டாவது நோக்கம். வெளிநாடுகளில் இரண்டாவது நோக்கமே பிரதானமாக இருக்கும் நிலையில், இந்தியாவின் தனிச்சிறப்பாக பார்ப்பனியம், பெண்ணின் மீதான ஆணின் ஆதிக்கத்தை உறுதி செய்வதன் மூலம் சாதியக் கட்டுமானத்தை இறுகச் செய்கிறது.
பெண்களின் உடலின் மீது தனி நபரின் கவுரவத்தையோ, ஒரு குடும்பத்தின் கவுரவத்தையே அது கட்டமைப்பது இல்லை. ஒரு சாதியின் கவுரவத்தை அங்கு வைக்கிறது இந்த பார்ப்பனிய சமூகம். பொருளாதாரத்தில் ஒப்பீட்டளவில் மேல் எழுந்த ஒடுக்கப்பட்ட சாதியை இழிவுபடுத்த ஆதிக்கச்சாதி கிரிமினல் கும்பல்கள் கையில் எடுக்கும் ஆயுதம் இன்றளவும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைதான். இதற்கு ஹத்ராஸ் பாலியல் வன்கொலையே சான்று.
சமூகத்தில் ஊற வைக்கப்பட்டிருக்கும் இந்த மனநிலைதான், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள், தங்களது குடும்பத்தில் கூட தான் சந்தித்த பிரச்சினையை பகிர்ந்துகொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை தனது குடும்பத்திற்கான அவமானமாகவும், தனது தவறாகவும் கருதச் செய்து துவண்டு போகச் செய்கிறது. தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது.
கோவை சின்மயா பள்ளி மாணவி மரணத்திலும், அந்த மாணவி தனது குடும்பத்தாரிடம் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை. தனது நண்பனிடம் மட்டும் மனங்குமுறி கூறியிருக்கிறாள். இவ்விவகாரம் தமது தாய் தந்தையருக்குத் தெரிந்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாம் என தாம் அஞ்சுவதாக தமது நண்பனிடம் தெரிவித்திருக்கிறாள்.
ஒரு இளம் குருத்து தூக்கில் தொங்கி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதற்கு சின்மயா வித்தியாலயாவும் மிதுன் சக்கரவர்த்தியும், ரித்தாவின் தாத்தாவும், எலிசா சாருவின் அப்பாவும் முதன்மைக் காரணம் என்றால், அந்த மாணவிக்கு விரக்தியை தவிர்த்து நம்பிக்கை தரும் சூழலை ஏற்படுத்தத் தவறிய நாம் அனைவரும் ஒரு சமூகமாக இரண்டாவது காரணமாக இருக்கிறோம்.
இப்படி பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பாதிப்பை வெளியே சொல்லக் கூட முடியாத சூழ்நிலை அடிமைச் சமூகத்தில் கூட கிடையாது. ஆனால் இங்கு ஜனநாயகம் கோலோச்சுவதாகச் சொல்லப்படும் முதலாளித்துவச் சமூகத்தில் இந்த அவலம் தொடர்கிறது. இந்த நிலைதான் மிதுன் சக்கரவர்த்திகளை ஒவ்வொரு நொடியும் உருவாக்குகிறது; அவர்களுக்கு தைரியமூட்டுகிறது.
000
கோவை சின்மயா பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு ஒரு பக்கம் சமூகச் செயற்பாட்டாளர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, மறுபக்கத்தில் மரணித்த அந்த மாணவியின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் வேலையைச் செய்து வருகிறது சங்க பரிவாரக் கும்பல். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளி ஆக்குவதற்கு ஆளும், அதிகார வர்க்கங்களுக்கும், பார்ப்பனியக் கும்பலுக்கும் இருக்கும் ஒரே ஆயுதம் “ஒழுங்கு” தான்.
ஒடுக்கப்பட்ட சமூக மக்களோ, ஒடுக்கப்பட்ட வர்க்கமோ தனது உரிமைக்காகப் போராடினால் “பொது ஒழுங்கு” கெட்டதாகத்தான் அதிகாரவர்க்கம் ஊளையிடும். அந்த “ஒழுங்கு கெட்டவர்களுக்கு” பாடம் புகட்ட லத்தியையும், துப்பாக்கி ரவைகளையும் பயன்படுத்தும்
சனாதன தர்மத்தினைக் கட்டிக்காக்கும் தமது பார்ப்பனிய ஆணாதிக்க “இயல்பு நிலை” உலுக்கப்படும்போது பார்ப்பனியம் தமது கையிலெடுக்கும் ஆயுதம், “ஒழுங்கு”தான். அது அந்தப் பெண்ணின் “ஒழுங்கு”. அந்தப் பெண்ணிற்கான நியாயத்தை மறுப்பதற்காக கூச்சமின்றி அந்தப் பெண்ணை “ஒழுங்கு கெட்டவளாக” சித்தரிப்பதுதான் காலங்காலமாக பயன்படுத்தப்படும் ஆயுதம்.
சின்மயா பள்ளி மாணவி தனது கடிதத்தில், மிதுன் சக்கரவர்த்தியை, “தேவ*யா புண்*” என்ற வார்த்தையால் சாடியிருப்பதை சுட்டிக் காட்டி “ இந்தக்காலத்தில் எட்டாம் வகுப்பிலேயே போர்ன் படங்களை பெண்கள் பார்க்கிறார்கள். கெட்டவார்த்தைகள் பேசுகிறார்கள்” என்று ஒழுக்க சிகாமணிகள் சமூக வலைத்தளங்களில் அங்கலாய்க்கிறார்கள்.
அந்த 17 வயது மாணவியும் மிதுன் சக்கரவர்த்தியும் பேசியதாகக் கூறி ஒரு ஆடியோவை மிதுன் சக்கரவர்த்தி – சின்மயா பள்ளி நிர்வாகத் தரப்பு உலாவிட்டுள்ளது. அதில் பேசப்படும் விசயங்களை முன் வைத்து, அந்த மாணவியின் சம்மதத்தோடுதான் மிதுன் சக்கரவர்த்தி அவரை பாலியல்ரீதியாக அணுகியதாகக் காட்டுகிறது. இதன் மூலம், அந்த மாணவியின் ஒழுக்கத்தை இழிவுபடுத்தி, இந்தக் கிரிமினல் கும்பலின் கடுங்குற்றத்தில் நியாயம் இருப்பதாகவும், அந்த மாணவியின் மரணத்திற்கு வேறு காரணம் இருப்பதாகவும் பரப்புகிறது சங்க பரிவார, வலதுசாரிக் கும்பல்.
அந்த சின்மயா பள்ளி மாணவி தனது நண்பனிடம் மனங்குமுறி தெரிவித்த விசயங்களில் முக்கியமானது, மிதுன் சக்கரவர்த்தியைப் பார்க்கும்போதெல்லாம் தாம் அவமானமாக உணர்வதாகக் கூறியதுதான்.
ஒரு மனிதன் தனது விருப்பமின்றி அதிகாரத்தாலோ, கும்பலின் வன்முறையாலோ ஒரு வேலையைச் செய்ய நிர்பந்திக்கப்படும் போதுதான் அவன் அவமான உணர்வை அடைவான். அந்தக் கையறு நிலைதான் அவனை அவமானத்தின் உச்சத்திற்கும் விரக்தியின் விளிம்பிற்கும் இட்டுச் செல்லும்.
அந்த விரக்தியின் விளிம்பில் இருந்து தப்பி வர ஒரு வடிகால் இல்லையெனில், அது தற்கொலையாக முடிகிறது. இங்கும் அந்த அவமானம் தான் தற்கொலையை நோக்கி அந்த மாணவியைத் தள்ளியிருக்கிறது. அதனால் தான் அத்தகைய அவமானங்களை தனக்கு அளித்த பிற இரண்டு கிரிமினல்களையும் மிதுன் சக்கரவர்த்தியோடு சேர்த்து அம்பலப்படுத்தியிருக்கிறார்.
சட்டப்படி அந்த மாணவி 18 வயதுக்குக் குறைவாக இருப்பதனால் தான் இந்த வலதுசாரி ஓநாய்க்கூட்டம் அடக்கி வாசிக்கிறது. அதிகாரவர்க்கமும் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஒருவேளை இந்த மாணவியின் வயது 18-ஐக் கடந்திருந்தால், அந்த மாணவியை “ஒழுக்கங்கெட்டவளாக” சித்தரித்து இந்த வழக்கை இழுத்து மூடியிருக்கும் இந்தக் கும்பல்.
000
ஒரு பச்சைப் படுகொலையை மிதுன் சக்கரவர்த்தி எனும் கிரிமினலோடு இணைந்து சின்மயா வித்யாலயா பள்ளி மேற்கொண்டிருக்கிறது. பெற்றோர்கள் பள்ளிக் கூடங்களை தங்களது குழந்தைகளுக்குக் கல்வி அறிவூட்டும் இடமாக நம்பித் தான் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் கல்வி நிறுவனங்களோ பாலியல் கிரிமினல் கும்பல்களின் கூடாரமாக விளங்குகின்றன.
இதற்கு சமீபத்திய உதாரணங்கள், கோவை சின்மயா மிஷன் ட்ரஸ்டுக்கு சொந்தமான சின்மயா வித்யாலயா, சென்னை ஒய்.ஜி.பீ. குடும்பத்திற்குச் சொந்தமான பி.எஸ்.பி.பி. பள்ளி, சென்னை சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுஷில் ஹரி பள்ளி ஆகியவை ஆகும். இவையெல்லாம் சமீபத்திய உதாரணங்கள் ஆகும். பாதிக்கப்படும் மாணவர்களை மிரட்டி அமைதிப்படுத்துவதன் மூலமாக, தங்களது பள்ளியின் யோக்கியப் பிம்பத்தை நிலைநாட்டி, பெற்றோர்களிடமிருந்து குறைவில்லாமல் கல்விக் கட்டணத்தைக் கல்லா கட்டி வருகின்றன இத்தகையப் பள்ளிகள்.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் செய்த தவறுக்காக பள்ளிகள் குற்றவாளியாக்கப்படுவதாகவும், குறிப்பான சமூகத்தினர் நடத்தும் கல்வி நிலையங்கள் மட்டும் குறிவைத்துத் தாக்கப்படுவதாகவும் இந்துத்துவைக் கும்பல்கள் கூவி வருகின்றன. இவர்கள் மறைமுகமாக, பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன அடிவருடிகளும் சங்க பரிவாரக் கும்பலைச் சேர்ந்தவர்களும் நடத்தும் பள்ளிகள் குறிவைத்துத் தாக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றன.
நமக்கும் இதே கேள்வி எழுகிறது – ஏன் இந்தப் பள்ளிகள் மட்டும் இத்தகைய பூதாகரமான பிரச்சினைகளில் மக்கள் மத்தியில் மாட்டுகின்றன. அதுவும் பார்ப்பனப் பின்னணி கொண்ட பள்ளிகளாகவே ஏன் அவை அமைகின்றன ?
அதிகார மட்டங்களின் உயர்நிலைகளில் இருக்கும் ‘அவாள்களின்’ ஆதரவு இருக்கின்ற தைரியத்தில், சட்டத்தை எந்த அளவிற்கேனும் வளைத்துக் கொள்ளலாம் என்ற நிலைமை இருக்கும் தைரியத்தில், பார்ப்பனிய ஆணாதிக்கச் சிந்தனை சமூகத்தில் நீக்கமற நிரம்பியிருக்கும் தைரியத்தில் தான் இந்த பார்ப்பனக் கல்விக் கொள்ளைக் கூடாரங்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களின் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையை மறைத்து, தங்களது நிறுவனத்தின் சந்தை மதிப்பு குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்கின்றன.
‘சமூக நீதி’ ஆட்சி – பெண்கள் பாதுகாப்பு எனப் பேசும் திமுகவின் ஆட்சியில் கூட தவறிழைத்த ஆசிரியனுக்கு துணை நின்ற பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்வதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் இருப்பதே இதற்கு எடுப்பான ஒரு உதாரணம்.
பார்ப்பனியத்தின் பிடியில் இருந்து இந்தியச் சமூகத்தை விடுவித்து, மக்களிடையே நாம் உண்மையான ஜனநாயக உணர்வை வளர்க்கத் தவறும் ஒவ்வொரு நொடியும் சில நூறு மிதுன் சக்கரவர்த்திகளும் மீரா ஜாக்சன்களும் நம்மிடையே தோன்றி செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறோம் ?
“யாரையும் சும்மா விடக்கூடாது” என்ற குரல் சின்மயா பள்ளி மாணவியின் குரல் மட்டுமல்ல ! நம் வீட்டுப் பெண்கள் தம் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் உளக்குமுறலின் குரலாகவும் அது நமக்குக் கேட்கவில்லையா ? களமிறங்குவோம் !
இயற்கையை சிதைத்து, ஜம்புக்கல் மலையை சல்லி கற்களாக, சல்லி மணலாக மாற்றத் துடிக்கும் மணல் கொள்ளையர்களையும் துணை போகும் அரசு நிர்வாகத்தையும் முறியடிக்க ஒன்றிணைவோம் !
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தாலுக்காவில் உள்ள அமராவதி அணை எதிரே பெரும்பள்ளம் என்ற ஊர் உள்ளது. அதன் அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் தொடர்மலை பகுதியின் அருகில் ஆண்டியகவுண்டனூர் கிராமத்தின் தெற்கு பகுதியில் ஒரு பகுதியாக சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2 கிலோமீட்டர் உயரமுள்ளதாக அமைந்துள்ள மலைகரடு ஜம்புக்கல் மலை பகுதியாகும். இம்மலைப் பகுதியினை ஒட்டியும் சேர்ந்தும் தம்புரான் கோவில் மலை, வரையாட்டு கரடு, துருவத்து கோட்டைமலை, சாத்துவார் ஓடை மலை, தேவகங்காடு என சுமார் 10-க்கும் மேற்பட்ட மலைக் கரடுகள், குன்றுகள் உள்ளன. இம்மலை கரடுகளிலிருந்து மழைகாலங்களில் பெய்யும் மழை தண்ணீர் அமராவதி ஆற்றுக்கு நீர்வரத்து ஓடையாக அமைந்துள்ளது. கோடை காலத்திலும் வற்றாத நீருற்றுகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இயற்கை வளம் நிறைந்த, பசுமை போர்த்திய அழகிய மலைப்பகுதிதான் மேற்சொன்னவை.
ஜம்புக்கல் மலையினை சுற்றியுள்ள ஏழ்மை நிலையில் வசித்து வரும் கிராம மக்களுக்கு விவசாயம் செய்துகொள்ள மட்டும் 1970-காலகட்டத்தில் அப்போதைய திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் சுமார் 350 பேர்களுக்கு 50 சென்ட் முதல் 2 ஏக்கர் வரை நிபந்தனைகளுடன் பட்டா வழங்கப்பட்டது. அருகிலுள்ள ஆண்டியகவுண்டனூர், எலையமுத்தூர், செல்வபுரம் என 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் மேற்கண்ட இடத்தில் ஆடு மாடுகள் மேய்த்து வருகின்றனர், ஏழை எளியோர் சுண்டைக்காய், அரப்பு தழை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவில் மலையிலுள்ள மரங்கள், சந்தன மரங்களை அழிக்க கூடாது; ஓடைகள், பாறைகள் மாமுல் வழித்தடத்தை சேதப்படுத்தகூடாது. சாகுபடி செய்யும் மரங்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடாது. மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று தான் மரங்கள் வெட்ட வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பகுதியில் சில ஆண்டுகள் தொடர்ந்து மழை இல்லாமையின் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் பட்டா பெற்றவர்கள் சரிவர பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது.
உடுமலைப்பேட்டை நகரில் வசித்து வரும் வசந்தகுமார் (முன்னால் அதிமுக மந்திரியின் பினாமியாக இருப்பதாகக் கூறுகிறார்கள்) என்பவர் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுக்கா, ஆண்டிப்பட்டி கிராமம் நாவல் ஓடை பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு, போலி மணல் தயாரித்து விற்பனை செய்வதாக ஊர்க்காரர்கள் புகார் செய்து அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டவர். ருசி கண்ட பூனையாக கனிம வளங்களை கொள்ளையடித்த வசந்தகுமார் இதுதான் சந்தர்ப்பம் என ஜம்புக்கல் மலைப்பகுதியின் அருகாமையில் சில தரகர்களை பிடித்து மிகவும் குறைந்த விலைக்கு விலைபேசி கிரயம் மற்றும் சுவாதீனத்துடன் கூடிய குத்தகை ஆவணங்கள் பெற்றுள்ளார்.
வாரிசு இல்லாத, இறந்து போனவர்களின் சில இடங்களை போலியான நபர்களை வைத்து கிரயமும் நோட்டரி வக்கீல் மூலம் சுவாதீனத்துடன் கூடிய குத்தகை ஆவணங்களும் தயார் செய்து 99 ஆண்டுகளுக்கு அனுபவித்து கொள்ள ஒப்பந்தமும் செய்துள்ளார். மேலும், மேற்கண்ட ஆவணங்களில் நிலம் கொடுத்தவர்களிடம் இவருக்கு சாதகமாக 16 நிபந்தனைகளை ஒப்பந்தம் செய்துள்ளார்.
மோசடி நிபந்தனைகள் :
மேற்படி பூமியில் முட்புதர்களை நீக்கவும், கற்களை அகற்றி, வடிகால் அமைத்து, மழைநீர் சேகரித்து, சமன்படுத்தி,உழுது, அதற்கு தேவையான நீர், மின்சாரம் மற்றும் இதர கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள ஆகும் செலவுகளை ஏற்று அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொள்ளுவதால் கெடுகாலம் முடியும் வரை எவ்வித ஆட்சேபனைகளும் தெரிவிக்ககூடாது, கெடுகாலத்திற்கு பின் அபிவிருத்தி செலவினங்கள் கணக்கிட்டு அன்றைய மதிப்பில் செய்த செலவினத் தொகையினை கொடுத்து பூமியை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும்; மேலும், மின் இணைப்பு பெறுவது, குடிநீர் , வாய்க்கால் பாசனம்,பைப்லைன் அமைத்து கொள்வது, கட்டிட அனுமதி, குவாரி அனுமதி செய்துகொள்ள வேண்டுமெனவும்; குத்தகை காலத்தில் உள் குத்தகைக்கு விடவும், வங்கி மூலம் கடன் பெறவும், அடமானக்கடன் பெறவும், கொலேட்டரல் செக்யூரிட்டியாக கொடுக்கவும், இந்த பூமியை பொருத்து அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் நஷ்ட ஈடு தொகை வந்தால் பெற்றுகொள்ளவும்;
குத்தகை காலம் முடியும்வரை நிலம் கொடுத்தவர்கள் எவ்வித உரிமையும் கொண்டாடி வரக்கூடாது எனவும்; இதுபோன்ற நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தில் நிலத்தை அபிவிருத்தி செய்யும் செலவுகளை பூமியை கொடுத்தவர்களே ஏற்றுகொள்ளவேண்டும் என்ற நிபந்தனை என்பது நிலம் கொடுத்தவர்களிடமோ, அவர்களின் வாரிசுகளிடமோ கோருவதற்கு வழிவகை செய்து ஒப்பந்தம்/ கிரயம் செய்யப்பட்டுள்ளது, நிலம் கொடுத்தவர்களின் தலைக்குமேல் கத்தி தொங்குவதாக உள்ளது.
ஜம்புக்கல் மலைகரடு –வசந்தகுமார் குடும்பத்தின் சூறையாடல் :
தரகர்கள் மூலம் ஒப்பந்தம் / பத்திரம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தொகையினை முழுமையாக வழங்காமல் நிலம் கொடுத்தவர்களுக்கு பெயரளவுக்கே தொகை வழங்கிய வசந்தகுமார் குறிப்பிட்ட அளவு நிலம் சேர்ந்தவுடன் ஜம்புக்கல் மலைக் கரடு மேல்பகுதிக்குச் செல்வதற்கு மலை பகுதியினை சிதைத்து மலை ஓரமாக சுமார் 30 அடி முதல் 80 அடி அகலத்துக்கு சாலை அமைத்துள்ளனர். சுமார் 10 ஜே.சீ.பி மற்றும் கிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் மலைகளை சிதைத்தும், மலை ஓரமுள்ள மண்ணை கொண்டு மண்சாலை அமைத்தும், பொதுமக்கள் பயன்படுத்திய பொதுப் பாதையை தடுத்தும் கேட் அமைத்து உள்ளார்.
விவசாய நிலங்களுக்கு செல்வோர் இந்த பாதையை பயன்படுத்த முடியாத படி உள்ளது. ஆறு மாதங்கள் சுமார் 1000 ஏக்கர் பரப்புள்ள இடத்தில் உள்ள முட்புதர்களை அழிப்பதாகக் கூறி மரங்களை வெட்டி கடத்தி லட்சக்கணக்கில் விற்பனை செய்துள்ளார். ஏராளமான பெரிய மரங்களின் வேர் பகுதி எரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்ட விரோதமாக 80 அடி ஆழத்திற்கு, 20 அடி அகலத்தில் வெடி வைத்து மலையினை உடைத்து கிணறு வெட்டியுள்ளார், நான்கு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளார், கட்டிடம் கட்டியுள்ளார். மேற்கண்ட பணிகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
மலை அடிவாரங்களில் உள்ள குளங்களுக்கு வரும் நீரை வழி மறித்தும் திசைமாற்றி அமைத்தும் மலையின் சுற்று சூழலை முழுமையான நாசமாக்கியுள்ளார்.
ஜம்புக்கல் மலையின் மரங்கள், முட்செடிகள் அழிக்கப்பட்டு போடபட்ட பாதை கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது, மலை அடிவாரத்தில் உள்ள பேச்சியாத்தாள் முடக்கு குட்டை, சில்லூத்து குளம் ஆகிய குளம் குட்டைகள் மண் அரிப்பால் சுமார் 20 அடி வரை மண் தேங்கி மூடப்பட்டுள்ளது. கன்னிமார் ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மண் மூடப்பட்டதால் மழைநீர் முழுவதும் வீணாகியுள்ளது.
மரங்கள் வெட்டபட்டு கடத்தலில் ஈடுபட்டதோடு மலைகளை அழித்து மணல்,மண், கல் கடத்தவும் மதிப்புமிக்க மலைகளையும், கனிம வளங்களையும் கொள்ளையடிக்கவும்,அபகரிக்கவும் திட்டமிட்டு செயல்படுவதாக பகுதி மக்கள் கூறுகின்றனர் . பழமையான மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டும் , பசுமையான மலை அழிக்கப்பட்டும், கனிம வளங்கள் சூறையாடப்பட்டுள்ளது.
மலைகளை காக்கும் நோக்கத்துடன் முன்னோர்கள் பல நூற்றண்டுகளுக்கு முன்பே ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், தம்புரான் கோவில் போன்றவற்றை உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். மலை உச்சி பகுதியில் விளக்கு மாடங்களுடன் கூடிய குளம் புராதான சிலைகள், சின்னங்கள் உள்ளன.
This slideshow requires JavaScript.
அமராவதி ஆற்றின் அருகே உள்ள துருவத்து கோட்டை மலையில் இந்து முஸ்லிம் ஒற்றுமையாக வழிபாடு செய்த தென்புறம் துருவத்து பெருமாள் கோவில், வடபுறம் துருவத்து பாவா தர்க்கா உள்ளது. திப்புசுல்தான் வழிபாடு செய்து வந்திருக்கிறார். செங்கலால் ஆன கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களுடன் போராடுவதற்காக மருந்து கிடங்கு, ஆயுத கிடங்கு சுண்ணாம்பு காரையால் கட்டப்பட்டுள்ளது. மலை உட்பகுதியில் நீருற்றும், தங்குவதற்கான வீடும், குளமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த துருவத்து மலை பகுதியில்தான் சுமார் 70 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது.
கில் சாந்து, குடையன் குண்டு, தாலி மடை திட்டு, தேக்கங்காடு பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்புக்கு காடுகளை அழித்துள்ளனர். பழைமை வாய்ந்த பல்வேறு தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்படும் வகையில் மலை சமன் செய்யப்பட்டு வருகிறது.
கண்டுகொள்ளாத அரசாங்கம் :
மலை சூறையாடப்படுவதை பகுதிவாழ் மக்கள் புகார் மனுக்களாக வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட இலவச சட்ட உதவி முகாம், மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், காவல்துறை என மலைகளை காப்பாற்ற வேண்டி கடந்த ஓராண்டு காலமாக புகார் அளித்து வருகின்றனர், ஜம்புக்கல் மலை சேதமுறுவதை எதிர்த்து ஒருமுறை மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சட்ட விதிமுறைகளை நடைமுறைபடுத்தி மலைகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டியவர்கள் இவற்றை அழித்துவரும், மரங்களை வெட்டி கடத்தி மலையின் இயற்கை தன்மையை சிதைக்க காரணமான வசந்தகுமார் மீது அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையை பாதுகாக்க தவறும் குற்றவாளிகளாக நீடிப்பார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. உடுமலை பகுதியில் மக்களின் போராட்டங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் செவி கொடுக்க மறுக்கும் அரசு இது போன்ற கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருக்கிறது.
போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், கண்காணிப்பதற்கும்தான் உளவுப் பிரிவு போலிசு என்பதால் கொள்ளைக்காரர்கள், சமூக விரோதிகள் சுதந்திரமாக நடமாடும் இடமாக உடுமலைப் பகுதி உள்ளது.
ஜம்புக்கல் மலை பகுதியில் கிராவல் தொழில் செய்ய எவருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. சட்ட விரோதமாக 99 ஆண்டுகளுக்கு வசந்தகுமார் கிரயம் செய்த, சுவாதீனத்துடன் கூடிய குத்தகை ஆவணங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முன்பு நிபந்தனைகளுடன் வழங்கிய பட்டாக்களை மறு ஆய்வு செய்து தற்போது அதில் இருப்பவர்களுக்கும், நிலமற்ற ஏழை மக்களுக்கும் பட்டா மற்றும் ஆவணங்கள் வழங்கவேண்டும் .
மலை பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்ட கிரிமினல் வசந்தகுமார் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும், பொது மக்கள் போக்குவரத்தை தடை செய்து வசந்தகுமார் என்பவரால் அமைக்கபட்ட கம்பி கதவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
வசந்தகுமார் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும். வாரிசு இல்லாதவர்களிடம் போலி கிரயம், ஒப்பந்தம் செய்ததை முழுமையாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலை வளம், மண் வளம், நுண்ணுயிர் வளம், இயற்கை வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.
நில அளவை செய்து எல்லையை நிர்ணயித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
சுற்று வட்டார பகுதி மக்கள் ஆடு -மாடு மேய்க்கவும், வளர்க்கவும் மலைபகுதியை பயன்படுத்த வழக்கம் போல் உரிமை வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பகுதி மக்கள் ஒன்றிணைந்து அமைப்பாகத் திரண்டு போராடுவது ஒன்றே முழுமையான தீர்வு கிடைக்கும் என பகுதி மக்கள் கருதுகின்றனர்.
இயற்கை எழில் மிகுந்த ஜம்புக்கல் மலை தனியாரின் கிராவலுக்குத் தாரை வார்க்கப்பட்டதோடு, பல ஆண்டுகளாக விவசாயம் செய்தும் மேய்ச்சல் நிலமாகவும் பயன்பட்டு வந்த மக்களின் வாழ்வாதரமான இந்த மலை தனியார் கிராவல் கொள்ளைக்காரர்களிடம் சிக்கி சின்னா பின்னமாக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங் கரையோரம் கிராவல்கள் அமைத்து மலையையும் ஆற்றையும் பெரும் நாசப்படுத்தி விட்டார்கள்.
தற்சமயம் அமராவதி ஆறும் அதை சுற்றியுள்ள மலைகளும் இக்கயவர்களின் கண்களை உறுத்துகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும், அதிகாரிகளும் இதையும் கண்டுகொள்ளப்போவதில்லை. எனவே, மக்கள் போராட்டம் ஒன்றே ஜம்புக்கல் மலை பாதுகாக்கப் படுவதற்கான வழி. அதனை முன்னெடுப்போம்! ஜம்புக்கல் மலையையும் இயற்கை சுற்றுச் சூழலையும் பாதுகாப்போம் !!
தகவல் : மக்கள் அதிகாரம்,
உடுமலை பகுதி, கோவைமண்டலம்
தொடர்புக்கு : 94889 02202
தமிழகம் முழுவதும் அக்டோபர் 25, வடகிழக்கு பருவமழை துவங்கியது.சென்னையில் மழை தொடங்கிய 5 நாட்களில் பெய்த அதீத மழையிலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் 24 மணிநேரம் தொடர்ச்சியாக பெய்த மழையாலும் மூழ்கி சென்னை நகரமே தத்தளிக்கிறது.
கடந்த 2019 ஆண்டு தமிழ்நாடும் குறிப்பாக சென்னை,குடிநீர் தட்டுப்பாட்டால் திண்டாடியது. தற்போது அதீத மழையால் தத்தளித்து கொண்டிருக்கிறது. நகரமே வெள்ளக் காடாகக் காட்சி அளிக்கிறது. ஒரு நாள் கனமழை பெய்தாலே சென்னையில் படகில் செல்லவேண்டிய பரிதாபநிலை தான் உள்ளது. மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும்பால் தட்டுபாடு உள்ளிட்டு மக்களுடய இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.
இதற்கு காரணம் ஏரிகள், கால்வாய்கள் நீர்வழிதடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், வடிகால் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், பாதாளச்சாக்கடை முறையாக இல்லை போன்றவை தான் காரணம் எனவும், இன்னொருபுறம் அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த பல கோடி ஊழல் தான் காரணம் என திமுக சொல்கிறது.
மழை வெள்ளத்தால் நிரம்பிய நீராதாரங்கள் கையாளப்பட்ட விதமும் வெள்ள வடிகால்களில் கைவிடபட்ட பாராமரிப்பு பணிகளும், நீர்நிலைகள், குப்பைகள் மற்றும் திடக்கழிவுகளால் சீரழிந்து கிடப்பது என்பது உண்மைதான், ஆனால் சென்னை வெள்ளத்திற்கு இது மட்டும்தான் காரணமா?
இங்கு கவனிக்க வேண்டிய பிரதான பிரச்னை, பருவநிலையில் கடந்த பத்தாண்டுகளுக்குள் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம் ஏன்? என்பது தான்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் தொடர்ச்சியான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி 2011 தானே புயல், நிலம் புயல், 2015 சென்னை பெரு வெள்ளம், 2016 வர்தா புயல், 2017 ஒக்கி புயல், 2018 கஜா புயல், 2019 சென்னையில் கடும் தண்ணீர் வறட்சி, 2020 நிவர் புயல்என அடுக்கு அடுக்காக பாதிப்புகளை சந்தித்திருக்கிறது தமிழகம். தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் இந்தப் பத்தாண்டுகளில் இத்தகைய பாதிப்புகள் அதிகரிக்கக் காரணம் என்ன ?
உலகமயமாக்கலின் காரணமாக உலகம்முழுக்கதொழிற்சாலைகளிருந்து வெளிவரும் கரியமில வாயு, கார்பன் வாயு அதிகரிப்பு, காடுகள் அழிப்பு, கடல் மாசுபாடு வாகன உற்பத்தி, இயற்கை வளங்களை வரைமுறை இன்றி வெட்டி எடுப்பது போன்றவை, ஏகாதிபத்தியங்கள், தரகுமுதலாளிகள், (கார்ப்பரேட்) லாபவெறிக்காக தினந்தோறும் நடத்தபட்டு வருகின்றன. இவற்றின் விளைவு தான் அனைத்திற்கும் காரணம். இன்னும் அதிகபடுத்தியிருக்கும் மீத்தேன்– ஹைட்ரோகார்பன்,திட்டங்கள், நிலக்கரி எடுப்பு திட்டங்கள், போன்றவற்றால் மேலும் நெருக்கடிகள் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கவே செய்யும்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஐ.நா சார்பாக ‘பருவநிலை மாற்ற உச்சி மாநாடு‘ (12.11.2021 வரை) நடந்துவருகிறது. இதில் 120 நாடுகள் பங்கேற்று “கரியமில வாயு உமிழ்வு பூஜ்ஜியமாக்கப்படுவது” பற்றி விவாதித்து வருகின்றன. ஏகாதிபத்திய நாடுகள், அதன் சார்பு நாடுகள், அவற்றால் சுரண்டப்படும் நாடுகள் என அனைத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கின்றன. இந்த நாடுகள் தத்தமது நாட்டின் கார்ப்பரேட்களின் நலனைப் பாதுகாத்துக் கொண்டே எப்படி சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது என்பது குறித்துப் பேசுகின்றன.
கரியமில வாயு அதிகரிப்பது கார்ப்பரேட்களின் லாபவெறிதான் எனும் போது, எப்படி அவர்களின் நலனைப் பாதுகாத்துக் கொண்டே புவி வெப்பமாவதிலிருந்து தடுத்து நிறுத்த முடியும். “பாம்புக்கும் நோகாமல், தடிக்கும் நோகாமல்” சுற்றுப்பபுறச் சூழலை பாதுகாக்கும் இவர்களின் திட்டங்கள் அனைத்தும் கண் துடைப்பு நாடகமே.
சீனா அமெரிக்காவுக்கு பிறகு இந்தியாதான் அதிகப்படியான கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.பிரிட்டன் ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான cop-26 உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக, பசுங்குடில் வாயு (Green House Gas) வெளியேற்றதை குறைக்கும் தனது திட்டதை இந்தியா அறிவித்தது. இதனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்ற கரியமில வாயு வெளியேற்றாத வாகனங்களை உருவாக்குவது, 2005ல் இருந்து 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு தீவிர இலக்கு 60%லிருந்து 35% சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக இந்தியா கூறியிருக்கிறது.
அறிவிப்புகள் பிரமாதமாக இருந்தாலும், அதற்கான குறிப்பான திட்டம் என்று ஏதும் இல்லை என்பதோடு, இந்தியாவில் பல சமூக, சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த சுற்றுச் சூழல் மசோதா, கடல் வள மசோதா ஆகியவற்றை நடைமுறைப் படுத்தத் துடிக்கும் மோடி அரசு, அந்த மாநாட்டில் அறிவித்திருப்பது வெரும் கண் துடைப்பு நாடகமே என்பதை உலகமே அறியும்.
அரசுகளுக்கிடையேயான பருவநிலை மாற்ற குழுவான ஐபிசிசி,நாடுகள் வெளியேற்றும் மொத்த பசுங்குடிகளின் வாயுக்களின் வெளியேற்றும் அளவை 2050-ம் ஆண்டிற்குள் பூஜ்ஜியமாக கொண்டுவந்தால் புவியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் கீழ் வைத்திருக்க உதவும் என்கிறது.
இந்த இலக்கை அடைவோம் என 130 நாடுகள் வெளிபடையாக உறுதி அளிதுள்ளன என்பதை, ஏற்கெனவே 2016-ல் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையழுத்திட்ட 190 நாடுகளும் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
புவி வெப்பமயமாதல் விளைவாக மழை பொழிவிலும் வானிலையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அறிவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் .தமிழநாட்டில் கடலோர பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு சுமார் 0.1முதல் 0.2 டிகிரி வரை எனும் வீதத்தில் வெப்பநிலை உயருகிறது.வட இந்தியாவின் சில பகுதிகளை விட இது குறைவாக இருந்தாலும்,இதே போக்கில் தொடர்ந்தால் சிக்கல் ஏற்படும்.
வட மாநிலங்களை போல தென் இந்தியாவில் இதுவரை கடும் வெப்ப அலைகள் வீசியதில்லை.ஆனால் பருவ நிலை மாற்றத்தின் விளைவாக 21-ம் நூற்றாண்டின் இறுதிக்குள் தென்னிந்தியாவிலும் கடும் வெப்ப அலைகள் வீசத்தொடங்கும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
உலகிலேயே வேகமாக கடலில் மூழ்கி வரும் நகரம், இந்தோனேசியா தலைநகர் ஜகார்தா. இந்நகரம் ஆண்டுக்கு சாசரியாக 10 செ.மீ கடலில் மூழ்கி வருகிறது. அதைப்போல் புவி வெப்பமயமாதலின் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி பறவை இனங்களும் அழிகின்றன.
இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஒன்பது ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என ஐ.நா பருவநிலை மாற்றத்திறக்கான குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. புவி வெப்பம் அடைவதால் மனிதகுலம் பேராபத்துகளை சந்திக்க இருக்கிறதுஎன ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, துருக்கி, பொலீவியா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் கட்டுக்கு அடங்காத காட்டுத் தீ, சீனாவில் பெருவெள்ளம்,வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் நாடுகள், பருவம் தவறிய மழை இப்படி உலக நாடுகளில் வழக்கதிற்கு மாறான இத்தகைய நிகழ்வுகளுக்கு புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாற்றமும் தான் காரணம் என்கிறனர் விஞ்ஞானிகள். பூமிப் பந்தையே தமது லாபவெறிக்காக முதலாளித்துவம் சூறையாடிக்கொண்டிருக்கின்றது.
பருவநிலை மாறுபாடுகளுக்கு காரணம் மனித செயல்பாடா? கார்ப்பரேட்டுகளின் செயல்பாடா?
பருவநிலை மாற்றத்திற்கான அடிப்படையான காரணமாக அமையும் கட்டுக்கடங்காத முதலாளித்துவ இலாபவெறியை மறைக்க, “மனிதச் செயல்பாடுகள் தான் இயற்கையை அழித்து பருவநிலை மாறுபாடுகள் ஏற்படக் காரணம்” என்று அனைத்து மக்களின் மீதும் பழி போடுகின்றனர், ஆளும் வர்க்கத்தின் எடுபிடி பத்திரிகைகளும், ஊடகங்களும்.
தமது லாபவெறிக்காக இயற்கை வளங்களை சூறையாடும் கார்ப்பரேட்களையும், இத்தகைய சூறையாடலை எதிர்த்து போராடும்– மீததேன் திட்ட எதிர்ப்பு போராட்டங்கள், மீன்வள மசோதா எதிர்ப்பு போராட்டங்கள்,ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள், சுரங்கங்கள், காடுகள் அழிப்புக்கு எதிரான பழங்குடிகள் போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. இதே போல உலகம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
முதலாளித்துவ இலாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போராடும் சாதாரண உழைக்கும் மக்களையும் ஒரு சேர இணைத்து. பருவநிலை மாற்றத்திற்கு “மனித செயல்பாடுகள்” தான் காரணம் என பொத்தாம் பொதுவாக பேசுவது, கார்ப்பரேட்டுகளை பழியிலிருந்து காப்பாற்றுவதற்குத் தானே தவிர வேறெதிற்கும் இல்லை.
உலக ஏகாதிபத்தியங்களும், அதன் சார்பு மற்றும் அதன் கீழுள்ள பிற நாடுகள் அனைத்தும் முதலாளிகளின் இலாபவெறிக்காக, பூமிப் பந்தை அழித்துக் கொண்டிருக்கின்றன. ஆளும் வர்க்கமான முதலாளித்துவ, நிதியாதிக்கக் கும்பலின் நலனுக்காகச் செயல்படும் அரசுகள், பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதாகக் கூறினால், அது கேப்பையில் நெய் வழிந்த கதைதான்.
முதலாளித்துவ இலாப வெறியை ஒழித்துக் கட்டி, உற்பத்தியை திட்டத்திற்குட்பட்டதாக்கி, அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிற உழைக்கும் மக்களின் அரசான சோசலிச, புதிய ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கப் போராடுவதே தீர்வு பருவநிலை மாற்றத்திற்கு நிரந்தரத் தீர்வு தர முடியும். அது மட்டுமே பூமிப் பந்தை காப்பதற்குக்கான ஒரே தீர்வு.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், 7வது மைல் கிராமத்தை சேர்ந்த நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மாது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் 10.11.2021 மாலை 5 மணிக்கு நடைப்பெற்றது.
நினைவஞ்சலி கூட்டத்திற்கு தோழர். அருண் தருமபுரி மண்டல குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம் தலைமை தாங்கினார். தருமபுரி மாவட்ட புமாஇமு அமைப்பாளர் தோழர்.சத்தியநாதன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கோபிநாத் ஆகியோர் புரட்சிகர இயக்கத்தில் தோழர் மாது ஆற்றிய பங்கு குறித்து நினைவேந்தல் உரையாற்றினர்.
This slideshow requires JavaScript.
தியாகத் தோழர் மாது அவர்களிடமிருந்து புரட்சிகர மாண்பையும், நக்சல்பாரி தியாக உணர்வையும், உழைக்கும் மக்கள் மீதான அன்பையும் நாமும் கற்றுக் கொண்டு கடைபிடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது.
தகவல் : மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலம் 97901 38614
‘‘கையில் தடியுடன் ஒரு போலீசையும் புகைப்படக்காரர் ஒருவரையும் துரத்திக் கொண்டு ஓடிவரும் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை, அருகாமையில் வைத்து காலிலும் நெஞ்சிலும் சுட்டுக் கொல்கிறது போலீசுப் படை. அந்த இளைஞர் சுருண்டு கீழே விழுந்த பின்னரும் பத்து பதினைந்து போலீசு மிருகங்கள், தடிக் கம்புகளால் அவரை தாக்குகின்றன. பேச்சு மூச்சின்றி கிடக்கும் அந்த இளைஞரின் நெஞ்சின் மீது உடன்வந்த புகைப்படக்காரன், ஓடிவந்து ஏறி மிதிக்கிறான்.’’ நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் இந்தக் காணொலிக் காட்சி, கடந்த செப்டம்பர் மாதம் 23−ம் தேதி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில் ‘ஆக்கிரமிப்பு’ குடியிருப்புகளை அகற்றும்போது போலீசு நடத்திய படுகொலைக் காட்சிதான் அது. அசாம் மாநிலம், தர்ரங் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையிலுள்ள தௌல்பூர் என்ற கிராமத்தில் 1970−களிலிருந்து அங்கு வசித்துவரும் அடித்தட்டு முசுலீம் மக்களைத்தான் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்றும், அவர்களது குடியிருப்புப் பகுதியை ‘ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி’ என்றும் கூறி அவர்களை வெளியேற்றும் நோக்கத்தோடு வன்முறையை ஏவியிருக்கிறது பா.ஜ.க. அரசு.
இந்த ‘‘ஆக்கிரமிப்பு’’ அகற்ற நடவடிக்கைக்கு, முந்தைய நாள் இரவுதான் அம்மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மறுநாள் காலையில் அம்மக்கள் அமைதியான முறையில் தங்களது போராட்டத்தைத் துவங்கியதும் பேச்சுவார்த்தைக்கு வந்து, ‘‘மாற்று ஏற்பாடு செய்துவிட்டுதான் வெளியேற்றம் செய்வோம்’’ என்று கூறியது மாவட்ட நிர்வாகம். செயற்பாட்டாளர்கள் அங்கிருந்து போனதும் அதிரடியாக ஜே.சி.பி−கள், மற்றும் பெரும் போலீசு படையுடன் அதிகாரிகள் ஊருக்குள் நுழைந்து குடிசைகளை இடிக்கத் துவங்கினர்.
மாற்றுக் குடியிருப்பும் தராமல், இருந்த குடிசையையும் இடித்துத் தள்ளியதைக் கண்டித்து அம்மக்கள் ஜே.சி.பி.க்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், எதனையும் பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டது பா.ஜ.க. அரசு. மக்கள் எதிர்ப்பு வலுப்பெறவே துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டது.
போலீசு வெறியாட்டத்தின் காரணமாக, 12 வயது சிறுவன் ஒருவன் அநியாயமாகக் கொல்லப்பட்டான். மற்றொரு 14 வயது சிறுமியைக் கடுமையாகத் தாக்கிய போதுதான் போலீசையும் அவனுடன் இருந்த புகைப்படக்காரனையும் தடியை எடுத்துக் கொண்டு துரத்தியடித்திருக்கிறார், மொயினூல் ஹக் என்ற 30 வயது இளைஞர். அப்படி கையில் தடியோடு ஓடி வந்தவரைத்தான் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது போலீசு. மேற்குறிப்பிட்ட காணொலியில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நபர்தான் மொயினூல் ஹக்.
இக்காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி பலரும் அரசு பயங்கரவாதத்தைக் கண்டித்த பின்னர்தான், புகைப்படக்காரன் பிஜய் பனியாவை மட்டும் கைது செய்துவிட்டு, மொத்த அரசு நிர்வாகமும் நல்லவர்கள் ஆகிவிட்டது.
பா.ஜ.க. அரசின் இந்த ‘ஆக்கிரமிப்பு’ அகற்ற நடவடிக்கையின் மூலம் 800−க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாழ்பவர்களில் மிகப் பெரும்பான்மையோர் வங்கமொழி பேசும் முஸ்லீம்கள் என்பதிலிருந்து இத்தகைய வன்முறையின் பின்னுள்ள காவிக் கும்பலின் வன்மத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
அசாமியர்களின் ‘அமைதி’ சொல்வது என்ன?
அசாமில் நடந்த இந்த ‘ஆக்கிரமிப்பு’ அகற்ற வன்முறையும், ஏழை முஸ்லீம்கள் இருவர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டதும் நாடு முழுக்க அனைவரையுமே கொந்தளிக்கச் செய்த தருணத்தில்தான், ‘‘சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். 4,500 பிகா (1,487 ஏக்கர்) நிலத்தை ஆக்கிரமித்திருந்த 800 குடியிருப்புகளையும் 4 சட்டவிரோத மதக் கட்டிடங்களையும் (மசூதிகளை) இடித்து அப்புறப்படுத்திய தர்ராங் மாவட்ட நிர்வாகம் மற்றும் அசாம் போலீசின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று தனது டிவிட்டரில் வக்கிரமாக பதிவிட்டிருந்தார், பா.ஜ.க. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.
அசாம் சட்டமன்றத் தேர்தலில் கடந்த 2016−ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமர்ந்த போது, ஹிமந்தா பிஸ்வா சர்மா கல்வித்துறை அமைச்சராக பதிவியேற்றிருந்தார். டிசம்பர் 2016−இல் மதரசா பள்ளிகளில், தொழுகை தினமான வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற நடைமுறையை அகற்றி, அனைத்து மதரசா பள்ளிகளும் ஞாயிறு மட்டும்தான் விடுமுறை விட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் 2020−ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அரசு நடத்திவந்த 509 மதரசாக்களை இழுத்து மூடினார். இதிலிருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மதவெறியைப் புரிந்துகொள்ளமுடியும். இத்தகைய நடவடிக்கைகள்தான் 2021−ம் ஆண்டு தேர்தலில் ஹிமந்தாவுக்கு முதலமைச்சர் பதவியை பாஜகவில் பெற்றுத் தந்தது.
தர்ரங் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாவட்ட போலீசு கண்காணிப்பாளரான சுஷாந்த் பிஸ்வா சர்மா, முதலமைச்சரின் சகோதரர் ஆவார். இந்தப் பின்னணியில் இப்படுகொலைகளின் காரணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
இவை ஒருபக்கம் இருந்தாலும், இந்தப் படுகொலைகளோ, ஹிமந்தாவின் வெறுப்பு பேச்சுக்களோ அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மற்ற பிரிவு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன என்பதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய விசயம்.
பா.ஜ.க.வின் இந்த முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகளை அசாமியர்கள் மவுனமாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைத்தான் அங்கு நிலவும் அமைதி காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தனது இந்துராஷ்டிர திட்டத்தை அசாம் மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
அசாமியர்களின் ‘அந்நியர்’ வெறுப்பு வரலாறு
‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்ற பெயரில் ஏழை முஸ்லீம்கள் அடித்து விரட்டப்படுவதை அசாமியர்கள் இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள். ‘‘முஸ்லீம் வெறுப்பு’’ என்ற ஒரு கோணத்தில் மட்டுமல்ல, அவர்கள் வங்காள மொழி பேசும் மக்கள், இங்கு குடியேறிய ’அந்நியர்கள்’ என்ற அடிப்படையிலான வெறுப்பு காலங்காலமாகவே அசாமியர்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது.
1970−களில் வங்கதேசத்தில் (அன்றைய கிழக்கு பாகிஸ்தானில்) நடந்த உள்நாட்டுப் போராலும், இந்தியா − பாகிஸ்தான் இடையில் நடந்த போராலும் பாதிக்கப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான அந்நாட்டு மக்கள் இந்தியாவின் மேற்கு வங்காளம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் தஞ்சம் புகுந்தார்கள். அதில் பெரும்பாலானோர் அசாம் மாநிலத்தில் குடியேறினார்கள்.
‘அத்துமீறி நுழைந்தவர்களால்’ தான் அசாமியர்களுக்கு வேலைவாய்ப்புகளும், கல்வி வாய்ப்புகளும் பறிபோனதாக பரப்பப்பட்ட பிரச்சாரங்கள், வங்கதேச குடியேறிகள் மீதான வெறுப்பை அசாமியர்களிடம் வலுவாக வேரூன்றச் செய்தது. அச்சமயத்தில், ‘‘வங்கதேச குடியேறிகளை அசாமை விட்டு வெளியேற்ற வேண்டும்’’ என்று அசாம் கண பரிஷத், அனைத்து அசாம் மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தன. இக்காலகட்டத்தில் பல இடங்களில் அசாமியர் அல்லாதவர்கள் அனைவரின் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.
1983−ஆம் ஆண்டு வங்கமொழி பேசும் மக்களுக்கும் தேர்தலில் வாக்குரிமை கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அசாமியர்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அது கலவரத்தில் சென்று முடிந்தது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். பத்துக்கும் அதிகமான கிராமங்கள் சூறையாடப்பட்டன. இவ்வாறு காலங்காலமாகவே அசாமில் ‘அந்நியர்கள்’ மீதான கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்கின்றன.
ஆர்.எஸ்.எஸ்.−இன் முஸ்லீம் எதிர்ப்பு முனைவாக்கம்
இங்கு ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என அசாம் மக்கள் குறிப்பிடுவது அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்து, முஸ்லீம், கிறித்துவர்கள், சீக்கியர்கள் − என அனைத்து மதத்தையும் சார்ந்தவர்களைத்தான். ஆனால் அசாமின் இந்த ‘அந்நியர்’ எதிர்ப்பு மனநிலையை சங்க பரிவாரக் கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. 2019−ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘‘வங்கதேசக் கரையான்களை வெளியேற்றுவோம்’’ என்று பகிரங்கமாகவே மேடையில் பேசினார் அமித்ஷா. அசாம் மக்களின் நீண்டகால கோரிக்கையான தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) நடைமுறைப்படுத்தி அந்நியர்களை வெளியேற்றுவோம் என்று பாஜக−வினர் பிரச்சாரம் செய்தனர். இத்தகைய பிரச்சாரங்கள்தான் பா.ஜ.க.வை அசாமில் வெற்றிபெற வைத்தன.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா
ஆனால் வெற்றிபெற்ற பின்னர், அசாமியர் அல்லாதவர்களின் மீதான அசாமியர்களுடைய வெறுப்பை முஸ்லீம் எதிர்ப்பாக மட்டும் முனைவாக்கம் செய்யும் வேலையை ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்து வருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். இதற்காக பல்வேறு விசமத்தனமான பிரச்சாரங்களை இந்துத்துவக் கும்பல்கள் அசாமில் முன்னெடுத்து வருகின்றன. உதாரணத்திற்கு, 2001−இல் இருந்து 2011 வரை இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அது 2021−இல் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என்ற ஒரு பொய்ப் பிரச்சாரத்தை பரப்பி வருகிறது காவிக் கும்பல்.
அசாமில் வங்கதேசத்தைச் சார்ந்த மக்களும் குறிப்பிட்ட வாக்கு வங்கியாக உள்ளதைப் புரிந்துகொண்ட பா.ஜ.க., அவர்களையும் தனது ஆதரவு சக்திகளாக மாற்றும் வேலையை திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறது. ஒருபக்கம் பூர்வகுடி அசாம் மக்களை தன் பக்கம் திரட்டுவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) அமல்படுத்திய பா.ஜ.க., அதனோடு கூடவே குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து முஸ்லீம்களைத் தவிர்த்து மற்ற மதத்தவர்களான இந்து, கிறித்துவர், பௌத்தர், சீக்கியர் ஆகியோருக்கு மதச்சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அவர்களது குடியுரிமையை அங்கீகரித்திருக்கிறது. தனது இந்துராஷ்டிர திட்டத்தை அசாமில் நிலைநாட்டுவதற்காக இத்தகைய இரட்டை அரசியலை முன்னெடுத்துவருகிறது பா.ஜ.க.
தர்ரங் மாவட்டத்தில் தற்போது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களும் கூட வங்கமொழி பேசும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் குடியிருப்புப் பகுதியில்தான் நடந்துள்ளது. இங்கு குடியேறிய வங்கதேச முசுலீம்களை எதிரியாகக் காட்டுவதற்கும், அதற்கு பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறுவதற்கும் ஏற்றவகையில் தனது செயல்திட்டத்தை தந்திரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது பாஜக அரசு. தௌல்பூர் கிராமத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்திவிட்டு, அந்நிலப்பகுதியைக் கொண்டு அசாமிலுள்ள படித்த வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு விவசாய வேலை வழங்கும் ‘‘கோருகுடி’’ (கூட்டுப் பண்ணை) என்ற திட்டத்தை அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது பா.ஜ.க. அரசு.
தௌல்பூர் பகுதி என்பது பிரம்மபுத்ரா நதியின் கிளைகளுக்கு இடையில் அமைந்துள்ள சமவெளிப்பகுதி. மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது இந்நிலப்பகுதி சுருங்கிவிடும், மற்ற சாதாரண காலங்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி, விரிந்து காணப்படும். இத்தகைய ஒரு பகுதியில் முறையாக வேளாண்மை செய்ய முடியுமா என்பதே கேள்விக்குறிதான். பெயரளவிற்குக்கூட மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துவைப்பது என்றுமே பாசிஸ்டுகளின் நோக்கமல்ல என்பதையும் முஸ்லீம் எதிர்ப்பே அதன் உண்மையான நோக்கம் என்பதையும் இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
ஆனாலும், இத்திட்டத்தின் மூலம் முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பது மட்டுமல்லாமல், அசாம் பூர்வகுடி இளைஞர்களுக்கு இத்திட்டம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் பூர்வகுடி அசாமியர்களையும் தன்பக்கம் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று கணக்குப் போடுகிறது.
தன்னுடைய இந்துராஷ்டிர நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தீவிரமாக வேலை செய்துவரும் சங்க பரிவாரக் கும்பல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றாற்போல தன்னுடைய நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அசாமில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு அடுத்தபடியாக, முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கையாக இத்தகைய ‘ஆக்கிரமிப்பு’ அகற்ற நடவடிக்கைகளையும், அசாமியர்களை குளிர்ச்சிப்படுத்தும் ‘கோருகுடி திட்டம்’ ஆகியவற்றையும் செயல்படுத்துகிறது பாஜக.
பெரும்பான்மை மக்களிடம், அவர்களின் ‘‘எதிரிகள்’’ என்று ஒருபிரிவு மக்களை முன்னிறுத்தி மோதவிடுவதுதான் பாசிஸ்டுகள் மக்களை வென்றெடுப்பதற்குக் கையாளும் வழிமுறை.
பாசிஸ்டுகளின் இந்த சூழ்ச்சிகளை அங்குள்ள புரட்சிகர − ஜனநாயக சக்திகள் அம்பலப்படுத்தி முறியடிக்காவிட்டால், குஜராத், உத்திரப் பிரதேசத்தைப் போல அசாமும் இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாறும் அபாயத்தை தவிர்க்க முடியாது.
1905-ன் ஒத்திகை இல்லாமல் போயிருந்தால் 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றி சாத்தியமாகி இருக்காது – லெனின்
எதிர்கால வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய பல நிகழ்வுகளுடன்தான் 1905-ம் வருடம் பிறந்தது. செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் புத்திலோவ் (Putilov) தொழிற்சாலையின் 13,000 தொழிலாளர்கள் ஜனவரி 3-ம் நாள் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். நகரில் இருந்த பிற தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் புத்திலோவ் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளித்தார்கள். 7-ம் நாள் இந்த வேலைநிறுத்தம் பொது வேலைநிறுத்தமாக மாறியது.
உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட இயக்கத்தை முறியடிக்க தன் கையில் இருந்த அனைத்து அதிகாரங்களையும் ஜார் அரசு பயன்படுத்தியது. போலீசும் இராணுவமும் இணைந்த 40,000-க்கும் மேற்பட்ட படை தலைநகரில் குவிக்கப்பட்டது. போராட்டம் மேலும் பரவாமல் தடுக்க தொழிலாளர்கள் மீது வன்முறையை ஏவி பெரும் ரத்தக் களரியை உருவாக்குவதே அரசின் நோக்கம். கூடவே அதிகார வர்க்கம் தனது தந்திரத்தை செய்தது – போலீசின் துணையுடன் போலியான தொழிலாளர்கள் அமைப்பை (Zubatov அமைப்புகள்) உருவாக்கி, அரசியல் நடவடிக்கைகள், புரட்சிகர போராட்டங்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களை திசைதிருப்புவது, பாட்டாளி வர்க்க போராட்ட இயக்கத்தை சீர்திருத்தவாத பாதையில் தள்ளுவது. குறிப்பாக, பீட்டர்ஸ்பர்க் நகரின் ரஷிய ஆலைத்தொழிலாளர்கள் சபை (Assembly of Russian Factory Workers) என்ற அமைப்பில் ஏறத்தாழ 9,000 உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த அமைப்பின் தலைவர் கபோன் என்ற கிறித்துவ பாதிரியார். உண்மையில் இவர் இரகசிய போலீஸ் ஏஜென்ட்.
கோரிக்கை மனுவை எழுதி ஊர்வலமாகச் சென்று ஜார் மன்னரிடம் சமர்ப்பித்தால் அவர் மனம் இரங்குவாரென்பது கபோனின் திட்டம். இதனை தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டனர். கருணை மனுவால் ஒரு பயனும் கிட்டாது என்று போல்சுவிக்குகள் எச்சரித்தார்கள். ஆனால் பாதிரியார் திரட்டும் ஊர்வலத்தை தடுக்க முடியாது என்று உணர்ந்த அவர்கள், தொழிலாளர்களுடன் ஊர்வலத்தில் பங்கு கொள்வது என்று முடிவுசெய்தார்கள்.
ஜனவரி 9, ஞாயிற்றுக்கிழமை அன்று பீட்டர்ஸ்பர்க் நகரின் தொழிலாளர்கள், தேவாலய பதாகைகள், சொரூபங்கள், ஜார் மன்னரின் உருவப்படங்களை கையில் ஏந்திய படி மன்னனின் குளிர்கால அரண்மனையை நோக்கி ஊர்வலமாக சென்றார்கள். பலர், தம் மனைவியர், குழந்தைகள், முதியவர்கள் என தம் குடும்பங்களையும் ஊர்வலத்தில் பங்குபெறச்செய்தார்கள். 1,40,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக சென்றார்கள். ஏற்கனவே முடிவு செய்தபடி, ஆயுதங்கள் ஏதும் இல்லாத அந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள், ஏறத்தாழ 5,000 பேர் காயமுற்றார்கள்.
“ஆயுதங்கள் இன்றி அமைதியாக சென்ற மக்கள் மீது கொடூரமாக நடத்தப்பட்ட ரத்தத்தை உறைய செய்யும் படுகொலை இது”. இத்தகைய படுகொலைகள் மூலம் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தி அவர்களின் போராட்ட உணர்வை ஒடுக்கிவிடலாம், பணிந்துபோகச் செய்துவிடலாம் என ஜார் அரசு கணக்குப்போட்டது. ஆனால் அரசின் கணக்கு தவறாக முடிந்தது. ஆயுதம் ஏதும் தாங்காத, கோரிக்கை பதாகைகளை மட்டுமே ஏந்தி அமைதியாக சென்ற தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டு, ஜார் மன்னர் அன்பும் கருணையும் நிறைந்தவர் என்று கண்மூடித்தனமாக இதுவரை நம்பிக்கொண்டு இருந்த மக்கள் அதிர்ச்சியுற்றனர்.
தானுண்டு தன் வேலையுண்டு என்று போராட்டங்களில் இருந்து ஒதுங்கி வாழும் கடைக்கோடி தொழிலாளியும் கூட இப்போது ஒரு உண்மையை உணர்ந்தான். அரசிடம் கெஞ்சிக் கேட்பதாலோ கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதாலோ மட்டுமே கசக்கிப் பிழியப்படும் இன்றைய கேடுகெட்ட பணிச்சூழலில் இருந்து தாங்கள் வெளியே வந்துவிட முடியாது. கையில் ஆயுதங்களை ஏந்தினால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்ற உண்மையை உணர்ந்தான்.
புரட்சிகரப் பாதையில் இருந்து பாட்டாளிவர்க்க இயக்கத்தை தடம் மாற்ற ஜார் அரசு எடுத்த முயற்சி இப்படி பரிதாபகரமான தோல்வியில் முடிந்தது. அன்று மாலைக்குள் பீட்டர்ஸ்பர்கின் தொழிலாளர்கள் நிரம்பிய வீதிகளில் போலீசாரால் நிறுவப்பட்டு இருந்த தடைகள் யாவும் தூக்கி எறியப்பட்டன. ஜார் மன்னனுக்கு எதிரான போரில் மக்கள் திரளத்தொடங்கினர்.
ஜனவரி 9 படுகொலையை கண்டித்து மறுநாள்10-ம் தேதி லெனின் மிகவும் உணர்ச்சிமிக்க விதத்தில் தன் எதிர்வினையை ஆற்றினார். நடந்து முடிந்த படுகொலைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் ஆவேசமிக்க போராட்டத்தை ரஷ்யாவில் புரட்சியின் தொடக்கம் என்று லெனின் கணித்தார்.
‘ரஷ்யாவில் புரட்சி’ (Revolution in Russia) என்ற கட்டுரையை அன்றே எழுதினார். புரட்சியின் மூச்சுக்காற்றின் வெப்பம் தகிக்கும் அக்கட்டுரை, பீட்டர்ஸ்பர்க் பாட்டாளி வர்க்கத்தின் ஜனவரி 9 வீரஞ்செறிந்த போராட்டத்தை தெளிவாகவும் விரிவாகவும் சித்தரித்தது. “தாக்குதலுக்கு எதிராக தாக்குதல். வீதிகளில் ஆவேசமிக்க சண்டைகள் நடக்கின்றன, தடுப்புக்கள் தூக்கி வீசப்படுகின்றன, துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்கள் சீரும் ஓசையும் பீரங்கிகளின் கர்ஜனையும் கேட்கின்றன. வீதிகளில் ரத்த ஆறு ஓடுகின்றது, விடுதலைக்கான மக்கள் போராட்டம் சூடு பிடிக்கின்றது. மாஸ்கோவும் தெற்கும், காக்கசாசும் போலந்தும் பீட்டர்ஸ்பர்க்கின் பாட்டாளிவர்க்கத்துடன் கைகோர்க்க ஆயத்தமாகி விட்டன. பாட்டாளி மக்களின் முழக்கம் இப்போது இதுதான் : “மரணம் அல்லது விடுதலை!”. லெனின் பிரகடனம் செய்தார், “புரட்சி நீடுழி வாழ்க! புரட்சியை முன்னெடுத்துள்ள பாட்டாளிவர்க்கம் நீடுழி வாழ்க!”
1905, ஜனவரி 5 அன்று நடத்திய வெகுமக்கள் போராட்டம், ரஷிய பாட்டாளி வர்க்கத்துக்கு உறுதியான பாடத்தை கற்றுக்கொடுத்தது; மிகப் பல நீண்ட வருடங்களாக அனுபவிக்கும் இழிந்த, சலிப்பான, கேடுகெட்ட இந்த வாழ்க்கை கற்றுத்தராத புரட்சிகரப் பாடத்தை இந்த ஒரே நாளில் கற்றுக்கொண்ட பாட்டாளி வர்க்கம் அவர்களை மேலும் முன்னேறத் தூண்டியது.
அரசியல் புலம்பெயர்ந்தவராக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த லெனின், ரஷ்யாவில் நடந்து வந்த நிகழ்வுகளுடன் தன்னை நெருக்கமாக பிணைத்துக் கொண்டார், ஒவ்வொரு புதிய நடவடிக்கையையும் நெருங்கிப் பார்த்து ஆய்வு செய்து அது பற்றி விளக்கினார். புரட்சி வெடிப்பதற்கு நீண்ட காலம் முன்பாகவே அப்படியான ஒரு புரட்சி தவிர்க்க இயலாதது என்பதையும் அப்புரட்சியில் ரஷிய மக்கள் அனைவரும் பங்கு பெறுவார்கள் என்பதையும் சரியாக கணித்து சொன்னார். எதிர்காலத்தில் வெடிக்கப்போகும் மக்கள்போராட்டக்களத்திற்கு ஆயத்தமாகும் வகையில் கட்சியை உயிர்ப்புடன் வைக்க ஓய்வு ஒழிச்சல் இன்றி பணியாற்றினார், இப்போருக்கு பாட்டாளிவர்க்கமே தலைமை ஏற்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.
ரஷிய பாட்டாளிவர்க்கத்தின் வீரஞ்செறிந்த இப்புரட்சி உலகளாவிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின்மீது ஏற்படுத்த உள்ள உறுதியான தாக்கத்தை லெனின் தீர்மானமாக வலியுறுத்தினார். “உலகப் பாட்டாளி வர்க்கம், ரஷிய பாட்டாளிவர்க்கம் என்ன செய்யப்போகின்றது என்று பேரார்வத்துடன் எதிர்பார்க்கின்றது” என்று எழுதினார்.
“ரஷ்ய பாட்டாளிவர்க்கம் உறுதியுடன் முன்னெடுத்து ரஷ்யாவின் ஜார் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்போது அந்த நிகழ்வு உலக நாடுகளின் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின், அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களின், உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள உழைக்கும் மக்களின் போராட்ட நடவடிக்கைகளை அது பற்றச் செய்யும்”. போல்ஷெவிக் செய்திஏடுகளிலும் கட்சி அமைப்புகளுக்கு அவர் எழுதிய கணக்கற்ற கடிதங்களும் ரஷ்யாவில் அவரை சந்தித்து உரையாடி வெளிநாடுகளுக்கு திரும்பும் அவரது தோழர்கள் சொல்லும் செய்திகளும் புரட்சியை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சிக்கு உதவின, வழிகாட்டின.
முதலாம் ரஷ்யப் புரட்சியின் குணாம்சத்தையும் அதன் வரலாற்று அம்சங்களையும் விளக்கி கூறியுள்ளார். அதன் குணாம்சத்திலும் இலட்சியத்திலும் இப்புரட்சி ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிதான்; ஜார் மன்னனின் அரசாட்சியை தகர்ப்பதும் தனியார் நிலவுடைமையையும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களையும் ஒழித்துக்கட்டுவதும் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவதும் இப்புரட்சியின் இலட்சியம். அது முதலாளித்துவ ஜனநாயக குணாசம்சத்தைக் கொண்ட புரட்சிதான், ஆனால் அப்புரட்சிக்கு தலைமை ஏற்றதும் வழி நடத்தியதில் முன்னால் நின்றதும் பாட்டாளிவர்க்கமே. விவசாயி வர்க்கமும் அவர்களின் நண்பர்களும், ரஷிய தேசிய இனம் அல்லாத எல்லைப்புற பிரதேசங்களின் பிற தேசிய இனங்களின் பாட்டாளிகளும் புரட்சிக்கு ஆதரவளித்தனர், இப்பெரும் மக்கள் திரள் இப்புரட்சியில் தங்களை இணைத்துக்கொண்டது.
லெனின் பின்னாட்களில் கூறியதுபோல் உண்மையில் சில அம்சங்களின் அடிப்படையில் அப்புரட்சி ஒரு பாட்டாளிவர்க்கப் புரட்சியே; எவ்வாறு? புரட்சிக்கு தலைமை ஏற்றது பாட்டாளிவர்க்க சக்தியே, புரட்சியை நடத்திய விதமும் பாட்டாளிவர்க்க அணுகுமுறையுடன்தான் இருந்தது, முக்கியமாக வேலை நிறுத்தங்கள், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி ஆகியவற்றை சொல்ல வேண்டும். பாட்டாளிவர்க்கம் தன் கொள்கை அளவிலும் நடைமுறையிலும் புரட்சிகரமானது, மன்னாராட்சிக்கு எதிரான தன் அணுகுமுறையில் மிக மிக உறுதியானது, சமரசம் செய்து கொள்ளாதது. அத்தகைய உறுதி கொண்ட பாட்டாளிவர்க்கமே ஜார் அரசை தூக்கி எறிந்து முழுமையான புரட்சியை நடத்திட முடியும்; அந்த வெற்றியை அடைய வேண்டும் எனில் பாட்டாளிவர்க்கத்தின் பின்னால் விவசாயவர்க்கம் அணிதிரள வேண்டும், இரண்டு வர்க்கங்களும் கைகோர்த்து இணைந்து புரட்சியை நடத்த வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் இதற்கு முன் நடந்த முதலாளித்துவ புரட்சிகளில் இருந்து ரஷ்யப்புரட்சி குறிப்பிடத்தக்க விதத்தில் எங்கே வேறுபடுகின்றது என லெனின் குறிப்பாக சொல்கின்றார். முதலாளித்துவம் ஏற்கனவே ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாக நிலைபெற்றுவிட்ட, ஜார் ஆட்சிக்கு எதிராக ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய வலிமையான தனிப்பட்ட அரசியல் சக்தியாக பாட்டாளிவர்க்கம் வளர்ந்துவிட்ட புதிய வரலாற்று சூழலில் பிறந்த முதல் மக்கள் புரட்சி இப்புரட்சி.
புரட்சியின் தொடக்க கட்டத்தில், பாட்டாளி வர்க்கத்தின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் இலக்குகளை லெனின் நிர்ணயித்தார். புரட்சியானது புதிய சூழ்நிலைகளில் கட்சியின் நடவடிக்கைகளை வரையறுக்க செய்தது, மக்களுக்கு புதிய வழிகளில் சமூகத்தைப் பற்றி கற்பிக்க வேண்டியிருந்தது. கட்சி அணிகளை பரந்த அளவில் திரட்டுவதற்கும், புரட்சிகர நடவடிக்கைகளை தொடங்குவதை ஊக்குவிப்பதற்கும், இளம் தலைமுறையினரை தயக்கமின்றி முன்னே கொண்டு வருவதற்கும் கட்சி அணிகள் பாடுபட வேண்டும்.
பாட்டாளிவர்க்கத்தின் முன்னணிப்படை என்னும் பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டும் எனில், இன்று பிறந்துள்ள புதிய, புரட்சிகர சூழலின் பின்னணியில் கட்சியின் வேலைகளையும் வெகுமக்களின் தலைமைப்பாத்திர அணுகுமுறைகளையும் மறு ஒழுங்கமைவு செய்ய வேண்டும். “எந்த அளவுக்கு வெகுமக்களின் இயக்கம் பரவுகின்றதோ அந்த அளவுக்கு பல்வேறுபட்ட வர்க்கங்களின் உண்மையான குணாம்சம் வெளியே தெரியும், பாட்டாளிவர்க்கத்தை அணி திரட்டி தலைமை தாங்கும் பொறுப்புள்ள அமைப்பு என்ற அடிப்படையில் கட்சியின் பொறுப்பு என்னும் சுமை அதிகரிக்கும்” என்று லெனின் எழுதுகின்றார்.
உழைப்பாளர்களின் கட்சி என்ற அடிப்படையில் கட்சி செய்ய வேண்டிய அடிப்படை வேலையும் கடமையும் எவை என்று லெனின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுவது என்ன? பாட்டாளிவர்க்க சக்திகளை அணித்திரட்டுவது, ஒருங்கிணைப்பது, வெளிப்படையான வெகுமக்கள் போராட்டத்திற்கு, சர்வாதிகாரம் பொருந்திய அரசை தகர்க்கும் பொருட்டு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு அவர்களை ஆயத்தம் செய்வது.
மக்களை அணித்திரட்டும் மகத்தான பணியில் போல்ஷெவிக் செய்தி நிறுவனமும், மிக முக்கியமாக லெனினை ஆசிரியராக கொண்ட விப்பர்யோத் (Vperyod) செய்தியேடும் பாராட்டத்தக்க பங்கை ஆற்றியுள்ளன.
லெனின் எழுதிய அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் அறிக்கைகளும் தொழிலாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. புரட்சியில் போல்ஷெவிக்குகளின் நடைமுறைத்தந்திரத்தை வரையறுக்கும் பணியில், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு திட்டமிடுவது, நடத்தி முடிப்பது ஆகியவற்றுக்கான தலைமைப் பாத்திரத்தை கட்சியே ஏற்க வேண்டியதன் அவசியத்தை லெனின் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
இந்த அவசியமான பணியில் ஈடுபட்டபோது, கோட்பாடு, உலகைப்பற்றிய அறிவியல் பூர்வமான பார்வை ஆகியவற்றில் கட்சியின் தலையாய கொள்கைகள், உறுதிப்பாடு ஆகியவற்றின் மீது லெனின் தனிப்பட்ட கவனம் செலுத்தினார். 1905 ஏப்ரல் மாதம் அவர் எழுதினார்: “புரட்சியின் இன்றைய சகாப்தத்தில், கோட்பாடு குறித்த கேள்விகளை சந்திக்காமல் நழுவுவதும் அல்லது அரைகுறை அறிவுடன் இருப்பதும் கோட்பாடு விசயத்தில் மிக மோசமாக வெறுங்கையுடன் இருப்பதையே குறிக்கும்; ஒரு சோசலிஸ்ட் ஆனவனுக்கு இதற்கு முன் எப்போதும் தேவைப்படாத அளவுக்கு தெளிவான சிந்தனையும் உலகம் குறித்த பார்வையும் அவசியமாகின்றது, அத்தகைய தகுதி இருந்தால் மட்டுமே சூழ்நிலைகளை அவரால் கட்டுப்படுத்த முடியும், சூழ்நிலைகள் அவரை கட்டுப்படுத்தக்கூடாது.”
புரட்சிக்காலத்தில், வெகுமக்களின் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி, கிளர்ச்சியை முறையாக ஒருங்கமைத்து நடத்துவது ஆகிய கேள்விகளின் மீது தனிக்கவனம் செலுத்தினார். க்ரூப்ஸ்காயா எழுதினார்: “மார்க்ஸும் எங்கெல்சும் புரட்சி, கிளர்ச்சி ஆகியன குறித்து எழுதிய அனைத்தையும் இலியிச் மீண்டும் வாசித்தார், ஊன்றி வாசித்தார், ஆழ்ந்து சிந்தித்தார், மட்டுமின்றி போர்க்கலை குறித்து எழுதப்பட்ட பல நூல்களை வாசித்தார், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியின் நுட்பங்கள், அதை ஒருங்கிணைப்பது ஆகியன குறித்து ஆழமாக வாசித்தார். மற்றவர்கள் ஊகிப்பதை விடவும் இந்த தளங்களில் அவர் மிக ஆழமான கவனம் செலுத்தினார்.”
பாரிஸ் கம்யூன் அனுபவம் லெனினை மிகவும் ஈர்த்த ஒன்று. இது குறித்த அறிவை சமூக ஜனநாயகவாதிகளுக்கும் முன்னணி பாட்டாளிகளுக்கும் புகட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
பாரிஸ் கம்யூனில் பங்கு வகித்த ஜெனரல் க்ளூசேரட் (Cluseret) பாரிஸ் கம்யூன் அனுபவங்கள் பற்றி எழுதிய தெருச்சண்டை (Street Fighting) என்ற நூலில், கம்யூன் வீரர்கள் அரசுப்படைகளுடன் தெருவில் நடத்திய சண்டைகள் குறித்து பொதுவாகவும் திரட்சியாகவும் எழுதியிருந்தார். இந்த நினைவுக்குறிப்புக்களின் ரஷிய மொழியாக்கத்தை அவர் தொகுத்தார், விப்பர்யோத்தில் வெளியானது. மட்டுமின்றி, கம்யூனின் புகழ்பெற்ற ஜெனரல் க்ளுசேரட்டின் நினைவுக் குறிப்புக்கள், சுருக்கமான வரலாறு ஆகியவற்றுக்கு ஒரு முன்னுரையும் எழுதினார். 1905 மார்ச் 5 (18) அன்று, ஜெனீவாவில் இருந்த ரஷ்ய அரசியல் குடிபெயர்ந்தோர் காலனியில் நடந்த ஒரு கூட்டத்தில், பாரிஸ் கம்யூன் பற்றி ஒரு குறிப்பை வாசித்தார். “இன்றைய கணத்தில் நாம் அனைவரும் கம்யூனின் தோள்களின் மீது நிற்கின்றோம்” என்று செவிமடுத்த அனைவருக்கும் நினைவூட்டினார்.
மூலம்:Lenin: a biographyஎன்ற நூலின் 5ஆவது அத்தியாயம் The first assault on the Tsarist autocracy, Progress Publishers
பெகாசஸ் உளவுச் செயலி குறித்து ஒன்றிய அரசு பதில் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டிருந்த வேளையில், நாடாளுமன்ற விவாதமே இல்லாமல் பல்வேறு சட்டங்களை சத்தமின்றி நிறைவேற்றியது மோடி அரசு. அப்படி சத்தமின்றி நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் ஒன்றுதான், முன்தேதியிட்ட வருமான வரிச் சட்டத்தை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா.
ஒரு நிறுவனம் தன் சொத்து மற்றும் பங்குகளை விற்கும்போது, அதன் மூலம் ஈட்டப்படும் இலாபம் வருமானமாகக் கருதப்படும். அந்த வகையில் இலாப விகிதத்தைப் பொறுத்து இந்திய அரசிற்கு அந்நிறுவனம் வரி செலுத்த வேண்டும். இப்படி வரிகட்டுவதை தவிர்க்கும்விதமாக, வரியில்லா சொர்க்கங்களில் பினாமி நிறுவனங்கள் மூலம், சொத்து மற்றும் பங்கு விற்பனையை நடத்தி நிறுவனங்கள் வரி மோசடியில் ஈடுபடுகின்றன. இதனைத் தடுக்கும்விதமாக வருமானவரிச் சட்டம் (1961)−ல் ஒரு திருத்தத்தை 2012−ம் ஆண்டு மேற்கொண்டது மன்மோகன் சிங் அரசு.
அந்தச் சட்டத் திருத்தத்தை முன் தேதியிட்ட வரிச் சட்டமாகக் (Retrospective Tax) கொண்டுவந்தது. அதாவது 2012−க்கு முன்னர் 1961−க்குப் பிறகு நடந்த அனைத்து பரிவர்த்தனைக்கும் இந்தச் சட்டம் செல்லுபடியாகும்.
முன் தேதியிட்ட வருமானவரிச் சட்டம் கொண்டுவரப்பட்டது ஏன்?
கடந்த 2007−ம் ஆண்டு பிரிட்டனின் வோடோஃபோன் நிறுவனம் ஹாங்காங்கின் ஹட்ச் நிறுவனத்தின் 67% பங்குகளை 11.1 பில்லியன் டாலருக்கு (1110 கோடி டாலர்) வாங்கியது. இதன் மூலம் ஹட்ச் நிறுவனத்தின் இந்திய உரிமைகளையும் வோடோஃபோன் கைப்பற்றியது. இந்தப் பங்குகளை வாங்கியதன் மூலம் வோடோஃபோன் பெற்ற மறைமுக இலாபத்திற்கு வருமான வரியாக ரூ 7,990 கோடி விதிக்கப்பட்டது. இந்தப் பங்குகள் விற்பனையானது இந்தியாவிற்கு வெளியே நடந்ததால், இந்திய அரசிற்கு மூலதன ஆதாய வரி கட்டத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியதோடு, வழக்கில் வெற்றியும் பெற்றது வோடோஃபோன்.
இந்தப் பின்னணியில்தான், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிஏய்ப்பைத் தடுப்பதற்காக கடந்த 2012−ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்திய வருமான வரிச்சட்டம் (1961)−இல் திருத்தம் செய்து உரிய விதிமுறைகளின்படி ‘‘முன்தேதியிட்ட வருமான வரிச் சட்டம் (2012)’’−ஐ சட்டமாக்கியது. இந்தியாவில் உள்ள சொத்துக்களின் பங்கு விற்பனையை இந்தியாவிற்கு வெளியே செய்தாலும், இந்திய அரசிற்கு வரி கட்டவேண்டும் என்று இச்சட்டம் கூறியது. மேலும் 2012−ஆம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பங்கு விற்பனையின் மீதும் வரிவிதிக்கும் விதமாக இச்சட்டம் வடிவமைக்கப்பட்டது.
அன்றைய எதிர்க்கட்சியான பா.ஜ.க. இச்சட்டத்தை ‘‘வரி பயங்கரவாதம்’’ என்றது. இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவந்ததாலேயே, காங்கிரஸ் கட்சி கார்ப்பரேட்டுகளிடம் கறாராக நடந்துகொண்டது என்று பொருளல்ல. அப்போதைய நிலைமை என்னவென்றால், வோடோஃபோன், நோக்கியா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் நாடெங்கும் மிகப்பெரிய அளவில் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இவ்வாறான சூழலில்தான் காங்கிரஸ் இச்சட்டத்தைக் கொண்டுவந்தது.
இந்திய அரசின் இறையாண்மையைக் கேலிக்கூத்தாக்கிய கெய்ர்ன்
இச்சட்டம் குறிப்பாக வோடபோனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டாலும், 2012−க்கு முன்பு மூலதன ஆதாய வரியிலிருந்து தப்பித்துக்கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்களும் இதில் சிக்கின. அதில் ஒன்றுதான் பிரிட்டிஷ் எண்ணெய் மற்றும் எரிவாயு மேம்பாட்டு நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம். 1996−இல் தனது துணை நிறுவனமான கெய்ர்ன் யு.கே ஹோல்டிங்ஸ் லிமிடெட் (CUHL−சி.யு.எச்.எல்) மூலம் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா − கோதாவரி படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக இந்நிறுவனம் முதலீடு செய்தது.
2006−ல் கெய்ர்ன் யு.கே ஹோல்டிங்ஸ் நிறுவனம், ‘வரியில்லாச் சொர்க்கமான’ ஜெர்சி தீவிலுள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை இந்தியாவிலுள்ள தனது துணை நிறுவனமான கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு (தற்போது இந்நிறுவனத்தினை வேதாந்தா வாங்கிவிட்டது) மாற்றியதன் மூலம் அந்நிறுவனம் சுமார் 360 கோடி டாலர் மூலதன ஆதாயம் ஈட்டியது.
2012−இல் முன்தேதியிட்ட வருமான வரிச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, 2006−இல் கெய்ர்ன் நிறுவனம் பெற்ற இலாபத்திற்கு மூலதன ஆதாய வரியாக ரூ.10,247 கோடியை விதித்தது இந்திய வருமான வரித்துறை. இவ்வரிவிதிப்பை ரத்து செய்யக்கோரி கெய்ர்ன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அங்கு அரசிற்குச் சாதகமாக தீர்ப்பு வரவே 2015−இல் கெய்ர்ன் நிறுவனமானது, இந்தியா − இங்கிலாந்து இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் நெதர்லாந்தில் உள்ள ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
2020 டிசம்பரில் கெய்ர்ன் நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்ட ஹேக் சர்வதேச நீதிமன்றம், இந்த பரிவர்த்தனையில் வரி தவிர்ப்பு நோக்கமில்லை என்றும் இது முதலீடு சம்பந்தப்பட்ட பிரச்சினைதான் என்றும் இந்திய அரசு, இருதரப்பு ஒப்பந்தத்தின்படி கெய்ர்ன் நிறுவனத்தை நியாயமாகவும் சமமாகவும் நடத்தவில்லை என்றும் கூறி கெய்ர்ன் நிறுவனத்திடமிருந்து இந்திய அரசு வரியாக வசூலித்த 120 கோடி டாலரை வட்டி மற்றும் இழப்பீடு ஆகியவற்றோடு சேர்த்து 170 கோடி டாலராக திருப்பி வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து 2021−ல் இந்திய அரசு ஹேக் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும்போது, கடந்த மே மாதத்தில், தனக்கு உடனடியாக இழப்பீடு வழங்காததால், வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் சொத்துகளை (வங்கிக் கணக்கு, இந்திய கப்பல் கழகம், பொதுத்துறை நிறுவனங்களின் சரக்குப் பெட்டக வாகனங்கள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம்) கைப்பற்ற அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், மொரீஷியஸ் மற்றும் கனடா என பல்வேறு நாட்டு நீதிமன்றங்களில் கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடுத்தது.
ஜூலை 8, 2021−ல் 10 இலட்சம் பிரிட்டன் பவுண்டு மதிப்புள்ள இந்திய அரசின் சொத்துக்களை கையகப்படுத்த பிரான்ஸ் நீதிமன்றத்திடம் அனுமதியும் வாங்கியது. ‘‘சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பின்படி வரித் தொகையை இழப்பீட்டோடு திரும்ப வழங்கினால், நாங்கள் தொடுத்துள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்’’ என்று இந்திய அரசையே மிரட்டினார், கெய்ர்ன் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சைமன் தாம்சன்.
கார்ப்பரேட்டுக்கு சேவகம் புரியும் மோடி அரசோ, கெய்ர்ன் நிறுவனத்திற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, முன்தேதியிட்ட வருமான வரிச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதற்காக இந்திய வருமானவரி விதிப்புச் சட்டம் (1961) மற்றும் இந்திய நிதிச் சட்டம் (2012) ஆகியவற்றில் திருத்தம் செய்து, வருமான வரிச் சட்டங்கள் திருத்த மசோதா 2021−ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார், நிர்மலா சீதாராமன்.
இந்த புதிய மசோதாவால் கெய்ர்ன் உள்ளிட்ட 17 நிறுவனங்களிடம் வசூலித்த வரித் தொகையை, இந்திய அரசு திருப்பி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தான் செலுத்த வேண்டிய வரியை கட்ட மறுக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச நீதிமன்றம் வரை சென்று இந்திய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு பெறுகிறது, அரசின் சொத்துக்களையே முடக்கி வைக்கிறது என்று சொன்னால் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முன்னால், அரசுகளின் இறையாண்மை என்று சொல்லிக் கொள்வதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதைத்தான் இச்சம்பவம் காட்டுகிறது.
கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது ஒருபுறமிருக்க ‘‘தேசத்தின் கௌரவம்’’ குறித்து எப்போதும் வாய்கிழியப் பேசும் பா.ஜ.க. அரசு, தானே முன்வந்து கார்ப்பரேட்டுகளின் பாதங்களில் இந்தியாவின் இறையாண்மையை சமர்ப்பித்திருப்பதுதான் மோடி அரசின் வருமான வரிச்சட்டத் திருத்த நடவடிக்கை.
தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கிய 1990−களிலிருந்தே பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடலுக்கு ஏற்ப இந்தியச் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும், மறுவார்ப்பு செய்ய வேண்டும் என்ற உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளையைத்தான் எல்லா அரசுகளும் அமல்படுத்தி வந்தன – அமல்படுத்த வேண்டும். என்றாலும், அதை ஒரு விசுவாசமிக்க அடிமையைப் போல மிகத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது மோடி அரசு. ‘‘தேசபக்தி’’ வேடம் போடும் இந்த தேசவிரோத அடிமைக் கும்பலை விரட்டியடிப்பதுதான் உண்மையான தேசப் பற்றாளர்கள் நாம் செய்ய வேண்டிய பணி.
எச்சரிக்கை : சங்கிகளின் வெள்ள நிவாரண ‘போட்டோ ஷூட்’ || கருத்துப்படம்
முழங்காலளவு தண்ணீரில் கூட ‘போட்’டில் பயணம் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக போட்டோ சூட் எடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த “போட்டோ ஷூட்” வைபவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போஸ் கொடுக்கும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
இந்திய துணைக் கண்டத்தின் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறாக மனித நேயத்துக்கு எதிரான சாதியம், சாதி முறையின் தீண்டாமை கொடுங்கோன்மை இன்றும் தொடர்கிறது. சாதி சமூக அமைப்பின் தோற்றம் – சாதியத்தின் இருப்பு – சாதி எதிர்ப்புப் போராட்டக் களங்கள் – சாதி ஒழிப்பு – ஆகியவை குறித்த ஒரு ஆய்வு தேவைப்படுகிறது.
இந்திய சமூக அமைப்பில் வரலாற்றுக் களங்கமாக உள்ள சாதி சமூக அமைப்பை வேரறுத்து, சமத்துவ விடுதலை நோக்கி பயணிப்பதற்கான ஒரு சித்தாந்த உருவாக்கத்திற்கு இத்தகைய ஆய்வு முறைகள் இன்றைய தேவையாக இருக்கிறது.
இந்தியாவின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நீண்ட இன்றும் நம்மை அச்சுறுத்தி வருகின்ற சாதிய ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் தீண்டாமைக் கொடுமையையும் மிகவும் ஆழமாகவும் பொறுமையாகவும், பல்வேறு தரவுகள், சான்றாதாரங்களை முன்வைத்தும் இந்த நூலின் மூலம் ஒரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார் தோழர் சங்கையா.
♠ சாதியத்தின் தோற்றம்
♠ வேத காலமும் அதன் பின்னரும்
♠ சாதியும் மதமும்
♠ தீண்டாமை வன்கொடுமைகள்
♠ ஆலய நுழைவுப் போராட்டங்கள்
♠ சமூக நீதி போராளிகள்
♠ சாதி ஒழிப்பு
பல்வேறு தலைப்புகளில் 34 கட்டுரைகளாக சாதியத்தின் அனைத்து பரிமாணங்களையும், ஏராளமான வரலாற்று விவரங்களுடன், பல்வேறு சான்றாதாரங்கள் எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளை இந்த நூலில் தொகுத்து அளித்துள்ளார் தோழர் சங்கையா.
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்களை கொண்ட வர்ணாசிரம தர்மத்தில் முதல் மூன்று வருணத்தார் மார்பில் பூணூல் அணியும் உரிமை பெற்றவர்கள், இவர்கள் இரு பிறப்பாளர்கள் என்று கருதப்பட்டனர். சூத்திரர்களுக்கு பூணூல் அணியும் உரிமை இல்லை. இந்த வருணாசிரம முறைக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்ணர்கள் – பஞ்சமர்கள் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர். சாதியத்துக்கு உரிய அம்சங்களான பிறவியின் அடிப்படையில் தொழில், திருமண உறவுக் கட்டுப்பாடு, சாதிய படிநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய சனாதான கோட்பாடுதான் பார்ப்பனியத்தின் வெற்றி.
ஒவ்வொரு சாதியும் சாதிப் படிநிலை அமைப்பில் மேல் நிலைக்குச் செல்ல விரும்புகிறது. அதே நேரத்தில் தன் கீழ்உள்ள சாதிகளுக்கு உரிய நியாயமான விருப்பத்தை கடுமையாக மறுக்கிறது. ஏறி மிதிக்க தனக்கு கீழே ஒருவன் இருக்கிறான் என்பதுதான் சாதி ஆதிக்க உளவியல்.
சாதி அமைப்பு என்பது அடிமை முறையின் இந்திய வடிவமாகும். ரோமாபுரியின் அடிமை முறையை எதிர்த்து எழுந்த மாவீரன் ஸ்பார்ட்டகஸ் போல் இந்தியாவிலும் சூத்திர, பஞ்சம ‘ஸ்பார்ட்டகஸ்கள்’ பலர் இருந்திருக்க வேண்டும். சாதி அடிமை முறைக்கு எதிரான போராட்ட வரலாறுகள் பார்ப்பனியத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன.
இந்து மதம் என்ற பார்ப்பனிய மதம் பல்வேறு எதிரெதிரான கருத்துகளை ஏற்று ஜீரணித்து தன்வயம் ஆக்கிக் கொள்ளும் நெளிவு சுழிவு யுக்தி கொண்டதாக உள்ளது. சமூக ஏற்றத்தாழ்வு பார்ப்பனத் தலைமை ஆகிய அடிப்படைகளை விட்டுத் தராமல் சமத்துவத்தை மறுக்கும் பிராமண ஆளுமை இந்து மதத்தின் அடிப்படையாக உள்ளது. இந்து மதத்தின் ஆன்மா இறைநம்பிக்கை அல்ல, மாறாக சதுர்வர்ணம் சனாதன தர்மம் தான் இந்துமதத்தின் ஆன்மா.
சாதியத்தின் தோற்றம் – வேத காலமும் அதன் பின்னரும் – சாதியும் மதமும் – கிருத்துவத்தை தின்று செரிக்கும் சாதியம் – இஸ்லாமும் சாதியம் என்று மூன்று கட்டுரைகளில் இந்துமத சிறைக் கூடத்தில் இருந்து தப்பியோடி மதம் மாறியதற்கு பிறகும்கூட சாதிய இழிவு தொடர்கதையாக ஒடுக்கப்பட்ட மக்களை துரத்தும் அவலத்தை தோலுரித்துக் காட்டியுள்ளார்.
எளிய நடையில் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து தோழர் சங்கையா இந்நூலில் இதனை நிறுவுகிறார். “இவன் சாதி கிறிஸ்தவன்; இவன் சாதியில்லா கிறிஸ்தவன் இவர்களில் யாரை ரட்சிக்க இயேசு பிறந்தார்” என கிறிஸ்துவத்தை பார்த்து கேள்விக் கணைகளைத் தொடுத்தார் அயோத்திதாச பண்டிதர். கிறிஸ்துவ மதத்திலும் சாதி சமத்துவத்துக்காக நடைபெற்ற போராட்டக்களங்களை இந்த நூலின் ஆசிரியர் சிறப்பாகத் தொகுத்து அளித்துள்ளார்.
சாதிப் படிநிலை அமைப்பின் கோர வடிவமான தீண்டாமை வன்கொடுமைகள் பற்றிக் கடந்தகால நிகழ்கால மனிதநேயமற்ற கொடுமைகளை சான்றாதாரங்கள் முன்வைத்து சாதியத்தின் கோரமுகத்தை திரைகிழித்துக் காட்டியுள்ளார்.
கோயில்கள் தான் சாதியத்தின் கலங்கரை விளக்குகளாக திகழ்கின்றன. அதனால்தான் கோவில்களை மீட்போம் என இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். கும்பல் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகக் கூவி வருகின்றன. ஆண்டவனை வழிபட யாருக்கு என்னென்ன தகுதி? யார் யாருக்கு அனுமதி, யார் யாருக்கு அனுமதி இல்லை என சாதி அளவுகோல் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பார்ப்பனியத்தால், சாதி ஆதிக்க வெறியர்களால் மறுக்கப்பட்ட ஆலய வழிபாட்டு உரிமை அதற்கு எதிரான போராட்டக் களங்கள், இந்தக் கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
தில்லைவாழ் அந்தணர்களால் எரித்துக் கொல்லப்பட்ட நந்தன், கழுவேற்றி கொல்லப்பட்ட காத்தவராயன், மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட மதுரை வீரன், முத்துப்பட்டன் என அன்றிலிருந்து இன்றுவரை தொடரும் சாதி ஆதிக்க வெறியர்களின் கோரத்தாண்டவம். திருவரங்கம் கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் பற்றிய செய்திகளையும் இதில் தொகுத்து இருக்கலாம். கோயிலுக்குள் நுழையும் உரிமையை விட தீண்டத்தகாத மக்களுக்கு விடுதலையை கல்வி பொருளாதார மேம்பாட்டின் மூலமே தீர்மானிக்க முடியும். கல்வி – வேலை – பொருளாதாரம் முதலியவற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் மேன்மை அடையும் பொழுது ஆலயக் கதவுகள் தானாகவே திறக்கும் என்றார் அம்பேத்கர். இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் இதே கருத்தைக் கொண்டிருந்தார் என்ற விவரங்கள் இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மார்க்சிய அறிஞர் லியூஷோஷி, மனிதனின் வர்க்கப் பண்பு (Class Character of man) என்ற நூலை எழுதினார். இதைப் போலவே இந்திய துணை கண்டத்தில் மனிதனின் சாதி பண்புகள் (Caste Character of Man) குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுவுடமை சிந்தனையாளர் சிங்காரவேலர் தீண்டாமை ஒழிப்பு, ஆலய பிரவேசம், பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் உரிமை போன்றவற்றிற்கு விடுதலைக்குத் தரும் முக்கியத்துவத்தை தர வேண்டும் என்றார். கிராமத்து தீண்டப்படாத விவசாயக் கூலிகளும், நகர்ப்புற ஆலைத் தொழிலாளர்களும் சமத்துவத்துடன் சம நீதி பெற போராட வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகியவை இந்திய கம்யூனிஸ்டுகளின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்றார்.
சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போராட்ட வரலாற்றில் எண்ணிறந்த பொதுவுடமை புரட்சியாளர்கள் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். தலித் மக்கள் மீதான கந்துவட்டி கொடுமை, நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை, தனித்தனி நீர் குவளை ஒழிப்பு என பொதுவுடமை புரட்சியாளர்கள் நடத்திய போராட்டக்களங்கள் வரலாற்றில் போதுமான அளவில் பதிவு செய்யப்படவில்லை.
இந்திய துணைக் கண்டத்தின் சாதிய வர்க்க சமூகத்தில், சாதிய முரண்பாடுகளும், வர்க்க முரண்பாடுகளும் கலந்து இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், வர்க்கப் போராட்டத்திற்கு இணையாகவும் – துணையாகவும் – சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. சாதிய தளத்திலான ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களை வர்க்க தளத்திலான போராட்டங்களாக விரிவுபடுத்த வேண்டும்.
பார்ப்பனியம் பூனை போன்றது எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் நான்கு கால்களையும் ஊன்றி விழும் அதன் பாதங்களில் திண்டுகள் உள்ளன. சாதி எதிர்ப்பு தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களால் மட்டும் தனித்து நின்று போராடி ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது.
பிற சாதிகளில் உள்ள ஜனநாயக சக்திகளின் துணையோடு புரட்சிகர சக்தி இல்லாமல், வர்க்கமாக ஒன்று சேராமல் தலித் மக்களுக்கு விடுதலை என்பது இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்திரளாக பங்கேற்காமல் இந்திய நாட்டில் எத்தகைய சமூக மாற்றமும் புரட்சியும் வெற்றி பெற போவதுமில்லை என்ற கருதுகோளை நூலின் ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறார்.
இந்தியாவின் வர்க்க உருவாக்கமும் வர்க்க உணர்வின் வளர்ச்சியும் சாதிப் படிநிலை அமைப்பின் கட்டமைப்புக்குள்ளேயே நிகழ்ந்தது. அடித்தளத்தை மாற்ற வேண்டுமெனில் அதன் மேல் கட்டப்பட்டுள்ள, மேல் கட்டுமானத்தை இடித்து வீழ்த்த வேண்டும்; சமத்துவத்தை நோக்கமாகக் கொண்ட அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியில்தான் இது சாத்தியம்.
இந்த நூலின் இறுதி அத்தியாயத்தில் சாதி ஒழிப்பு எங்கிருந்து தொடங்குவது என்ற கட்டுரையின் மூலம் சமூகமாற்றம் நிகழ்வதற்கு முன் இடைக்காலமாக சில சீர்திருத்த நடவடிக்கைகளை கட்டுரையாளர் முன்மொழிந்துள்ளார். இவைகளும் விவாதத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியுள்ளது. சீர்திருத்த நடவடிக்கைகளை கூட வென்றெடுப்பதற்கு புரட்சிகர அரசியலை பெருந்திரளான மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் வாயிலாகதான், சமத்துவப் போராட்டத்தின் வழியில்தான் இவற்றை நாம் சாதிக்க முடியும்.
சனாதன சக்திகள் புதிய அவதாரம் எடுத்து கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலின் காவலர்களாக மாறி ஒரு கொடுங்கோல் ஆட்சியை நிறுவ எத்தனிக்கும் இந்த நேரத்தில், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்கொள்ளும் கூர்வாளாக இந்த நூல் வெளிவருகிறது.
தீவிரமான முயற்சி மேற்கொண்டு, கடின உழைப்பை நல்கி சிறப்பானதொரு கருத்து ஆயுதத்தை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியிருக்கிறார் தோழர் சங்கையா. புதிய முன்மொழிவுகளை துணிச்சலுடன் முன்வைத்துள்ள நூலாசிரியர் தோழர் சங்கையா அவர்கள் பாராட்டுக்குரியவர்.
நூல் அறிமுகம் : எஸ். காமராஜ்
நூல் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் நூலாசிரியர் : மு.சங்கையா பக்கம் : 288 விலை : ரூ 300 வெளியீடு : சிந்தன் புக்ஸ் எண் : 327 /1, திவான் சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14. தொடர்புக்கு : 94451 23164
ஒவ்வொரு மொழியிலும் எழுத்துத் தோன்றுவதற்கு முன்பு பாடல்களும், கதைகளும் தோன்றத் தொடங்கின. அவற்றில் சில கதை வடிவத்தில் பாடப்பட்டன. இவ்வாறுதான் கிரேக்கக் காவியங்கள் தோன்றின என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பாரதம், இராமாயணம் என்ற காவியங்களில் முடிவான எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பு இவ்வாறே பேச்சு வழக்கில் இருந்துவந்தன.
சிறு சிறு குழுவினருடைய நாட்டுப் பாடல்களாக வழங்கிவந்த கதைகள், அக்குழுக்கள் ஒன்றுபட்டு பெரிய இனமாக மாறும்போது இணைப்புப்பெற்று காவிய ரூபம் பெறுகின்றன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் பல நிகழ்ச்சிகளும் பல உபகதைகளும் காவிய காலத்திற்கு முன்பு செவி வழியாக வழங்கி வந்தன.
நாட்டுப் பாடல்கள் முன்பிருப்பவர்கள் கேட்கப் பாடுவது. கேட்பவர்கள் மனதில், மகிழ்ச்சி, சோகம், பெருமை, பணிவு, பெருமிதம், ஆர்வம், வியப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எழுப்பும் நிகழ்ச்சிகளையோ, கதைகளையோ சொல்வது வழக்கமாக இருந்தது. நாட்டுப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளவை.
கதைப் பாடல்கள் தவிர மற்றப் பாடல்கள் நாட்டுப்புற வாழ்க்கையின் அன்றாட சம்பவங்களையே பொருளாகக் கொண்டவை. இதனால்தான் வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான, பிறப்பு, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், காதல், பொருந்தா மணம், குடும்ப விவகாரங்கள், கிராமத் தொழில்கள், பஞ்சம், கிராம தேவதைகள் முதலியனவே நாட்டுப் பாடல்களின் பொருளாக அமைந்துள்ளன. ஆனால் இவற்றுள்ளும் சமூக அமைப்பின் தன்மையும், அதனால் தனி மனிதன் உணர்வில் ஏற்படும் சிந்தனைகளும் வெளியாகத்தான் செய்கின்றன.
சமூக வரலாறு
நமது கிராம வாழ்க்கையில் பன்னெடுங் காலமாக வேலைப் பிரிவுகள் முறைப்படுத்தப்பட்டு ஜாதிப் பிரிவினைக்குள் இறுக்கமாக அடைத்து வைக்கப்பட்டது. உற்பத்தி முறையும், கிராமப் பொருளாதாரத்திற்காகவே இருந்ததால், மத்திய அரசில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டாலும் கிராம சமுதாய வாழ்க்கை அதிகமாகப் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு கூறுவதால் கிராம சமுதாய அமைப்பு எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சோஷலிஸ சமுதாயமாக இருந்தது என்று நினைத்துவிடக் கூடாது. கிராம சமுதாயத்தில் உயர்வு தாழ்வுகள் அன்றுமிருந்தன.
ஊர்க்கோவில்களுக்கு, ஊரிலுள்ள நிலத்தில் பெரும்பாகம் சொந்தமாயிருந்தது அக்கோவிலை நிர்வகித்த மகாசபையாரும், வாரியத்தாரும், பரிசனங்களும், உழைக்காமல் உண்டவர் ஆவார்கள். அவர்கள், மேல் வர்க்கத்தையும் மேல் சாதியையும் சேர்ந்தவர்கள், இவர்களுக்குச் சொந்தமான உரிமையுடைய நிலங்களும் இருந்தன.
நிலங்களில் உழைக்கும் விவசாயிகளில் பெரும்பாலோருக்குச் சொந்த நிலம் இருக்கவில்லை. சிலருக்குக் கோவில் நிலங்கள் குத்தகையாகக் கிடைத்தன. இவர்களில் ஊர்வண்ணான், நாவிதன் முதலியவர்களும் தச்சன், கொல்லன் போன்ற கம்மாளர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கும், மான்ய நிலங்கள்தான் இருந்தன. உழைக்கும் மக்கள் கோவிலைச் சார்ந்து உழைக்காமல் உண்ணும் மக்களுக்குத் தம் உழைப்பினால் உணவளிக்க வேண்டும்.
வெள்ளையராட்சிக்குமுன் மத்திய அரசு நடப்பதற்கும், பல போர்கள் நடப்பதற்கும், அரசர்கள் கட்டும் கோவில்கள், மடங்கள், தண்ணீர் பந்தல்கள் முதலியவற்றிற்காகும் செலவையும் இக்கிராம அமைப்புத்தான் கொடுக்க வேண்டும். கிராம நிர்வாகம் மேல் வர்க்கத்தாருடைய கையிலிருந்தது. எனவே உழைக்கும் மக்களுக்கு அவர்கள் விளைக்கும் மகசூலில் ஒரு சிறிய பகுதியே ஊதியமாகக் கிடைக்கும். மற்றவை அவர்களிடமிருந்து பறிக்கப்படும். இவ்வமைப்பில் விவசாயிகள் கொடுமையாகச் சுரண்டப்பட்டனர்.
நெசவு முதலிய தொழில்களும் குடிசைத் தொழில்களாகவே நிகழ்ந்து வந்தன. அயலூர் வியாபாரிகள் தங்களுக்குள் போட்டியில்லாமல் இருப்பதற்காக வணிகர் குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம், மிகக் குறைந்த விலைக்குக் கைத்தொழிலினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்கினார்கள். இதனால் கைத் தொழிலாளிகளும் மிகுந்த ஏழ்மையில் உழன்றனர்.
மாதிரிப் படம்
ஏழ்மை நிலை பொறுமையின் எல்லையைத் தாண்டியபோது மக்கள் கிராம சமுதாய அமைப்பை எதிர்த்துப் போராடியுள்ளனர். இத்தகைய போராட்டங்களைப் பற்றி நாட்டுப் பாடல்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் அறிந்து கொள்கிறோம். இத்தகைய போராட்டங்கள் சிலவற்றைப் பற்றி இங்குக் குறிப்பிடுவோம்.
நாடார்களது சாதி வரலாற்றை ‘வலங்கையர் கதை’ என்ற நூல் கூறுகிறது. அச்சாதியினர் ஏழ்மையுற்று பஞ்சத்தால் வாடிய காலத்தில் காவிரி அணை கட்டக் கூலியில்லாமல் வேலை செய்யும்படி உத்திரவிடப்பட்டார்கள். அரசனுடைய ஆணைப்படி கூலியில்லாமல் வேலை செய்யும் முறைக்கு ‘வெட்டி’ என்று பெயர் வழங்கப் பெற்று வந்தது.
வெட்டி’ முறையை எதிர்த்து ஏழு சகோதரர்கள் போராடினார்கள், அரசன் கரிகால் வளவன் ஆறு சகோதரர்களின் தலைகளைத் துண்டித்து விட்டான். ஏழாவது சகோதரனும் கூடை எடுத்து மண் சுமக்க மறுத்தான். அவன் சிறுவனானதால் அரசன் அவனை நாடு கடத்தி விட்டான். அவன் தென்பாண்டி நாட்டிற்கு வந்து பனை மரத்தைப் பராமரித்துப் பெருஞ் செல்வம் அடைந்தான். இது நாட்டுக் கதைப் பாடல் ஒன்றில் காணப்படும் ஒரு போராட்ட நினைவு.
பிற்காலத்தில் ஏழ்மையால் வருந்திய மக்கள் பற்பல விடங்களில் தங்களது உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ள இயலாமல், கோவிற் சுவற்களை இடித்தும் பாத்திரங்களைத் தீக்கிரையாக்கவும் சுரண்டல் முறைக்கும் எதிராகத் தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள். ஏனெனில் கோயில் மதிற்சுவர்களில்தான் அவர்களைத் துன்ப நிலையில் வைத்திருந்த நிலமான்ய முறையின் பிரமாணப் பத்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. கோயில் சாசனங்களின் முகவுரையில் பின்வரும் குறிப்புக் காணப்படுகிறது. ‘மூன்றாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் ஐந்தாம் ஆண்டிலும் பரவிய கலகத்தில் ஊரில் உள்ளோருடைய நிலங்களின் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோக முறைப்படி நிர்ணயித்துப் புதிய பத்திரங்கள் வழங்க வேண்டி வந்ததென்று தஞ்சை ஜில்லா உடையாரூர் சாசனம் கூறுகிறது.’
அவனது ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்து போயினமையால் அனுபோகப் பற்றொழுகை ஒட்டி ஆதாரச் சீட்டுக்களைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது என்னும் செய்தி தலைச் செங்காடு மூன்றாம் ராஜராஜனது பத்தொன்பதாம் ஆண்டு கல்வெட்டொன்று கூறுகிறது. இவ்வாறு நடந்த கலகங்களை ஜாதிக் கலகங்கள் என்று காட்ட வரலாற்று ஆசிரியர்கள் முயன்றுள்ளார்கள். இக்கலகங்கள் இடங்கை, வலங்கை ஜாதியினரிடையே நடைபெற்றதென்று கூறுகிறார்கள். நிலத் தொடர்புடைய ஜாதியர்கள் வலங்கைப் பிரிவினர் என்றும், கொல்லர், தச்சர், தட்டார் முதலிய தொழிலாளர்களும், வாணியர், கொத்தர், சுண்ணாம்புக்காரன், வலையன் அளவர் முதலியோர் இடங்கைப் பிரிவினர் என்றும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன.
கிராமத்திலுள்ள மேல் வர்க்கத்தார், இவ்விரு ஜாதியினரையும், தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். தங்களுடைய கொடுமைகளால் ஏதாவது ஒரு வகைப் பிரிவினர் தங்களுக்கு எதிராகப் போராட முன்வந்தால், அடுத்த பிரிவினரைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு அவர்களை அடக்குவதே வழக்கமாயிருந்தது. பெரும்பாலும் இவர்கள் இடங்கைப் பிரிவினரோடு சேர்த்து கொண்டு வலங்கைப் பிரிவினரை எதிர்த்து வந்தார்கள். இடங்கைப் பிரிவினரில் மிகவும் ஏழ்மையில் உழன்றவர்கள் வலங்கைப் பிரிவினரது போராட்டங்களில் கலந்து கொண்டது முண்டு. அக்காலங்களில் இருவருக்கும் சில சலுகைகள் செய்து தங்களது ஆதிக்க அமைப்பு முறையை மேல் வர்க்கத்தார் காப்பாற்றிக் கொண்டனர்.
கோயில் சாசனங்களின் முகவுரையில், மேற்குறித்த உண்மைக்குச் சான்றாக ஒரு செய்தி காணப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்று அச்செய்தியைத் தெரிவிக்கிறது. ‘அரசாங்கம் அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளை இக்கல்வெட்டு கூறுகிறது. இதே போல இடங்கை வகுப்பார்; அக்காலத்தில் ஏற்க வேண்டி வந்த வரிச்சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கிடைத்துள்ளன.
ஆவணியிலிருந்து கிடைத்துள்ள ஓர் கல்வெட்டு’ அரசன் ஆணைக் கிணங்கக் கூடிய பெரிய சபையாரின் முடிவைத் தெரிவிக்கிறது. நிகரிலாச் சோழ மண்டலத்து 78 நாடுகளும் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வம்சம் தோன்றிய நாள் முதல் பசு, எருமை முதலியவைக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும். அதனால் அதிகாரிகள் சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரிகளைக் கொடுக்க வேண்டியதில்லை என்று முடிவு கட்டினார்கள். அன்றியும் 18 விஷயங்களிலுமுள்ள நிலப்பகுதி வரி விகிதங்களையும் நிர்ணயித்து நிச்சயித்தார்கள்.’ இக் கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளால் ஒவ்வொரு சமயம், நிலச் சுரண்டல் முறையையும், வரிச்சுமைகளையும், அதிகாரிகளின் கொடுமைகளையும், இடங்கை வலங்கைப் பிரிவினரில் ஏழை எளிய மக்கள் எதிர்த்து நின்று வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஊரின் வாழ்க்கை முழுவதும், சோழ வம்சம் வீழ்ச்சியடைந்த காலம் வரை கோயில்களைச் சார்ந்தும், உழவுத் தொழிலைச் சார்ந்தும், சிறு தொழில்களைச் சார்ந்துமே இருந்தன. கோயில் நிர்வாகத்தி லிருந்தவர்கள், ஊரிலுள்ள எல்லாப் பகுதி மக்களின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றிருந்தார்கள். இவ்வல்லமைக்குக் காரணம் கோயில் நிலங்களின் மீது அவர்களுக்கிருந்த ஆதிக்கமே. நிலவுடைமைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் கோவிலுக்குச் சொந்தமான மான்ய நிலங்களைப் பயிரிட்டே வாழ்க்கை நடத்தினர்.
சிற் சில சமயங்களில் இம்மான்ய நிலங்களை அதிகாரிகளின் உதவியோடு
பெரிய நிலச் சொந்தக்காரர்கள் கைப்பற்றிக் கொள்ள முயன்றனர். நிலத்தை இழந்தவர்கள் தங்களுடைய எதிர்ப்பை உயிர்த்தியாகம் செய்து காட்டிக் கொண்டனர். இதற்குச் சான்றாகப் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. தஞ்சாவூர் ஜில்லா, புஞ்சை என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டு ஒன்று சில நிலங்கள் கோயிலுக்கே உரியன என்று நிரூபிப்பதற்காகச் சில கோயில் வேலைக்காரர்கள் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்து கொண்டனர் என்று கூறுகிறது.
தங்கள் உரிமைகளை நிலை நாட்ட கோபுரத்தின் மீதேறிக் கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகளும் கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. கோயில் காரியங்கள் நடைபெறாமல் போனால் கோயில் வேலைக்காரர்களுக்கு ஊதியம் கிடைக்காது, அவ்வாறு கோயில் காரியங்களை நடத்தாமல் நிர்வாகிகள் வருமானத்தைத் தாங்களே சுவீகரித்துக் கொண்டபோது வேலைக்காரர்களது உரிமைகளை நிலைநாட்ட கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து அப்பாவு அய்யங்கார் என்பவர் உயிர் நீத்த செய்தியை இரண்டு கோயிற் சாசனங்கள் கூறுகின்றன.
இவ்வாறு கிராம நில அமைப்பு முறையை எதிர்த்துச் சிற்சில போராட்டங்கள் கடந்த ஆயிர வருஷ காலமாக நடைபெற்றிருந்த போதிலும், அயல்நாட்டு வியாபாரிகளின் வருகைக்கு முன்பு கிராம சமுதாய முறை பெரிய மாறுதல் எதுவுமின்றி நிலைத்திருந்தது. போர்த்துகீசியர் டச்சுக்காரர் வருகைக்குப் பின் கடற்கரைப் பகுதியிலுள்ள சமுதாய அமைப்பு மாறத் தொடங்கிற்று. வெளி நாட்டு வியாபாரத்திற்காகத் துணி, மீன், தானியங்கள், முதலியவற்றை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் அவர்கள் ஈடுபட்டனர். கடற்படை வலிமையால் கீழ்க் கடற்கரைத் துறைமுகங்களை ஐரோப்பியர்கள் பிடித்துக் கொண்டனர்.
இலங்கை, இந்தோனேஷ்யா முதலிய நாடுகள் அவர்கள் கைவசப்பட்டிருந்ததால் கடல் வியாபாரத்தில் அவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்தது. மதுரை நாயக்கர்களது அரசு உள் நாட்டில் அரசியல் ஆதிக்கம் பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் கடற்கரைப் பகுதிகளில் கிராம சமுதாய வாழ்க்கை அழிந்து போயிற்று, கிராமங்களை விட்டு மக்கள் துறைமுகங்களுக்குக் குடியேறினர். ஆனால் உள்நாட்டில் குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
மூழ்கியது சென்னை : வடிகால் பணிக்கு ஒதுக்கிய ரூ.5000 கோடி எங்கே?
சென்னையில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியான மழை இருந்துவரும் சூழலில், அடுத்து வரவிருக்கும் நாட்களில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் பொழியவிருக்கும் கடும் மழையைக் கையாளும் நிலையில் சென்னையும் இல்லை, சென்னை மக்களும் இல்லை.
ஏரிகள் முறையாகத் தூர்வாரப்படுவது, நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுதல் மற்றும் வடிகால் வாரிய பணி மேம்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை முந்தைய அதிமுக அரசு செய்யாமல் கைவிட்டதுதான் இதற்குக் காரணம்.
கடந்த 10 ஆண்டுகள் மராமத்து, வடிகால் பணி செய்யாமல் தமிழ்நாட்டை கொள்ளையடித்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட கிரிமினல் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகைக்கான பணத்தை அதிலிருந்து வழங்கவேண்டும்.
அடிமை அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட விழுப்புரம் தளவானூர் தடுப்பணை இன்று இடிந்துவிட்டது. இதுதான் இந்த கொல்லைக் கும்பல் பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய இலட்சணம். கடந்த ஆட்சிக் காலத்தில் மராமத்து பணிகளுக்காக ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படும் ரூ.5000 கோடிக்கு கணக்கு எங்கே ? முறையாக பராமரிப்புப் பணியை மேற்கொள்ளாமல் முறைகேடுகளை நடத்திய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் முதல் துறை சார்ந்த செயலர்கள் வரை அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது ஆற்றிய உரையின் காணொலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காணத் தவறாதீர்கள் ! பாருங்கள் ! பகிருங்கள் !
புதிய ஜனநாயகம் இதழ் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. கடும் நெருக்கடியிலும் புரட்சிகர அரசியலை சமரசமின்றி உழைக்கும் மக்கள் மத்தியில் எடுத்து வருவதில் புதிய ஜனநாயகம் தொடர்ந்து முன்னணியாக நின்று செயல்பட்டு வருகிறது.
தற்போது புதிய ஜனநாயகம் இதழுக்கான நன்கொடை மற்றும் சந்தாக்கள் சேகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். ஆண்டு சந்தா என்ற அடிப்படையில் ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா, ஐந்தாண்டு சந்தா என வாசகர்கள் பணம் செலுத்தலாம்.
அச்சிதழ் : சந்தா இல்லாமல் ஒரு இதழை அஞ்சல் மூலம் பெறுவதற்கான தொகை : ரூ.25 மின்னிதழ் : ஒரு இதழை பெறுவதற்கான தொகை (வாட்ஸ்-அப் மூலம்) : ரூ.20
அஞ்சல் மூலம் இதழ் கோருகின்ற வாசகர்கள், எமது அலுவலக எண்ணிற்கு ஜி−பே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்−ஐ) எமது அலுவலக எண்ணிற்கு (94446 32561) வாட்ஸ்−அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்:94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India Branch: Kodambakkam Account Name: PUTHIYA JANANAYAGAM Account No: 10710430715, IFS Code: SBIN0001444.