Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 384

மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !

மதிய உணவு

சில நாட்களுக்கு முன்னால் ஒரு நண்பர் இன்பாக்சில் வந்தார். தான் ஐடிஐ (தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனம்) ஒன்றில் ஆசிரியப்பணி செய்வதாக அறிமுகம் செய்து கொண்டார். கல்வி நிதிக்கு உதவ முடியுமா என்று கேட்டார். விவரம் அனுப்புங்கள், யோசிப்போம் என்று பதிலளித்தேன். சுமார் பத்து மாணவர்களின் ஒரு பட்டியலை அனுப்பினார். ஒவ்வொரு மாணவனின் பெயருக்கும் நேராக, ரூபாய் 2000 அல்லது 2500 அல்லது 3000, பெற்றோர் இல்லை / அப்பா இல்லை / குடிகாரத் தந்தை போன்ற விவரங்களை எழுதியிருந்தார்.

என்ன இது பொத்தாம்பொதுவாக எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டு தொலைபேசியில் உரையாடினேன். அப்போது தெரிய வந்த விவரம் இதுதான் :

“ஐடிஐக்கு படிக்க வருகிறவர்கள் பெரும்பாலும் ஏழைகள்தான். பத்தாவது அல்லது ப்ளஸ் டூவுடன் மேற்கல்வி கற்க முடியாதவர்கள், சில மாதங்கள் மட்டுமே பயிற்சி பெற்று, சம்பாதித்து குடும்பத்துக்கு ஆதரவளிக்க நினைப்பவர்கள்தான் ஐடிஐக்கு வருவார்கள்.

சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏழை மாணவர்கள் பலர் வருகிறார்கள். அது தனியார் ஐடிஐ. அரசு கட்டணம் செலுத்தி விடுகிறது என்றாலும், அவர்களில் பலர் மதியம் சாப்பிடக்கூட ஏதுமில்லாமல் பட்டினி கிடப்பார்கள். மதிய வகுப்புகளும் முடிந்து வீடு போக வேண்டும்.

சிலர் இரண்டு பஸ் மாறி வர வேண்டியிருக்கும். ஆனால், குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு பஸ்சுக்கு மட்டுமே பாஸ் கிடைக்கும். அதனால் வீட்டிலிருந்து 3-4 கிமீ நடந்து வந்து, பஸ் பிடித்து ஐடிஐ வந்து விட்டு, பஸ்சிலிருந்து இறங்கியபிறகு மீண்டும் நடந்து கிராமத்துக்குப் போக வேண்டும். பட்டினி வயிற்றோடு எப்படி இதெல்லாம் சாத்தியம்…”

மாதிரிப்படம்

பேசப்பேச உள்ளுக்குள் கலங்கியது. அதே நேரத்தில், கல்விநிதி என்பது கல்லூரிக் கட்டணம் போன்ற திட்டமான செலவுகளுக்கு மட்டுமே நாம் வழங்கி வருகிறோம் என்பதும் நினைவில் வந்தது. கல்லூரிக் கட்டணத்துக்கு நிதியுதவி செய்தபிறகு, கட்டிய ரசீதின் நகலை வாங்கி வைக்க முடியும். எந்தக் கணக்குக்கும் உட்படாத செலவை எப்படிச் செய்வது? நண்பர்களுக்கு எப்படி கணக்குக் காட்டுவது? அதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா ? நடந்து வரும் பையனுக்கு சைக்கிள் வாங்கித் தரலாமா? இதுபோல ஏதாவது யோசித்துவிட்டு, மீண்டும் வாருங்கள். நிச்சயமாக உதவி செய்வோம் என்றேன்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மதியம் சாப்பிடும்போதெல்லாம் பட்டினி கிடக்கும் மாணவர்களின் நினைவாகவே இருந்தது. சக மாணவர்கள் சாப்பிடும்போது தான் மட்டும் சாப்பிடாமல் இருப்பது, சாப்பிட ஏதும் இல்லாமல் இருப்பது எப்படிப்பட்ட சோதனை என்பதை நன்றாகவே அறிவேன். வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளி இருந்தால், நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வருகிறேன் என்று டிராமா காட்டிவிட்டு, வீடு போய் ஒரு செம்புத் தண்ணீர் குடித்துவிட்டு வந்து விடலாம். ஆனால் பள்ளி தூரமாக இருந்தால்…?

***

பாபாஜான் (அப்பா) ஒருமுறை சந்தைக்குப் போயிருந்தபோது, வழியில் பசி மயக்கத்தில் இருந்த வெளியூர் இளைஞன் ஒருவனைப் பார்த்தார். பரிதாபப்பட்டு, அவனை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். அவனுக்கு பசியாற சோறு போட்டு, படுக்க இடமும் பாயும் தலையணையும் கொடுத்தார். வீடு சிறியது என்பதால் திண்ணையில் படுக்க வைத்தார். அவன் பிழைப்புக்கு என்ன வழி செய்யலாம் என்று இரவு முழுக்க யோசித்துக்கொண்டிருந்தார்.

விடிந்து பார்த்தால், அவன் பாபாஜானின் சைக்கிளை திருடிக்கொண்டு போய்விட்டான். ஊர் எல்லைக்குப் போவதற்குள் ஒரு போலீஸ்காரர் பார்த்து விட்டார். அது சின்ன கிராமம் என்பதால், சைக்கிளைப் பார்த்ததுமே அது யாருடைய சைக்கிள் என்று புரிந்து விட்டது. அவனை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.

பாபாஜான் என்ன செய்தார் தெரியுமா? ‘பாவம் இளைஞன், பிழைத்துப் போகட்டும், அவன் மீது கேஸ் எதுவும் போடவேண்டாம்’ என்று சைக்கிளை மட்டும் வாங்கிக்கொண்டு அவனைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

***

ங்களாபுதூர், தூக்கநாயக்கன் பாளையத்தில் அப்பா ஆசிரியராகப் பணியாற்றியபோது நடந்த இந்தக் கதை அக்கா சொல்லித்தான் எனக்குத் தெரியும். அக்கா எழுதிய ‘அன்புள்ள அனீஸ்’ புத்தகத்திலும் இது இடம்பெற்றிருக்கிறது. நான் அப்போது பிறக்கவில்லை, அல்லது கைக்குழந்தை. அதன்பிறகு வெள்ளகோவில் சென்று பிறகு மடத்துக்குளத்தில் நிரந்தரமாகி விட்டோம். மடத்துக்குளத்துக்கு வந்த பிறகு எங்களிடம் ஒருகாலத்திலும் சைக்கிள் இருக்கவில்லை.

மடத்துக்குளத்தில் வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளி இருந்ததால் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்து விட்டுப்போவார் அப்பா. சில காலம் கழித்து ஒன்றரை மைல் மேற்கே கட்டிடம் கட்டப்பட்டு, பள்ளி அங்கே போய்விட்டது. (உடுமலையில் எம்.எல்.ஏ-வாக இருந்தவனும் என் வகுப்பின் சகமாணவனுமான மணிவாசகத்தின் தாத்தா இலவசமாகக் கொடுத்த இடத்தில்தான் பள்ளி கட்டப்பட்டது.)

நாங்கள் வெள்ளகோவிலில் இருந்த வரையில் பெரிய அளவுக்கு பட்டினியோ வறுமையோ அனுபவித்ததாக நினைவில்லை. ஆனால் மடத்துக்குளத்தில், மடக்கு சேர்கூட இருக்கவில்லை. ஒரு டியூப்லைட்கூட இருக்கவில்லை. ஃபேன் கிடையாது. ரேடியோ அல்லது டிரான்சிஸ்டர் கிடையாது. இந்த நிலையில் சைக்கிளுக்கு வழி ஏது?

நடந்தே சென்று நடந்தே திரும்புவோம். அது பெரிய விஷயமில்லைதான். பல நூறுபேர் ஊர்வலம்போல வெகுதூரத்திலிருந்தும் நடந்தே பள்ளிக்கு வந்து போவதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் மதியங்கள்தான் சோதனை. தினமும் மதியம் டிபன் கட்டிக்கொண்டு போக வழியிருக்காது. என்னைப்போன்ற மாணவர்களுக்கு பெரிய சோதனை இல்லை. சக மாணவனின் சைக்கிள் வாங்கிக்கொண்டு வீடுபோய் திரும்பலாம். அல்லது எல்லாருமாகச் சேர்ந்து இருந்ததை பகிர்ந்தும் தின்னலாம். 

படிக்க:
சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !

ஆனால் அப்பா…? டீச்சர்ஸ் ரூமில் மற்றவர்கள் சாப்பிடும்போது சும்மா உட்காரவும் முடியாது. டிபன் கட்டிக்கொண்டுவர வழியில்லை என்பது சக ஆசிரியர்களுக்குத் தெரிந்தே இருக்கும் என்றாலும் சாப்பிடாமல் ரூமில் உட்கார்ந்திருக்க முடியாது. வயிறு சரியில்லை என்று தினமும் பொய் சொல்ல முடியாது.

மதிய உணவு இடைவேளைக்குள் வீட்டுக்கு நடந்து வந்து திரும்பிச் செல்லவும் முடியாது. மேகாற்று வீசும் மாதங்களில் கிழக்கே போவது மிக எளிது. சைக்கிளில் உட்கார்ந்தால் போதும், காற்றே தள்ளிக்கொண்டுபோய் சேர்த்துவிடும். ஆனால் திரும்பிவரும்போது காற்றை எதிர்த்து பெடல் மிதித்து, மேடேற முடியாதபோது சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்து நாக்கு வறண்டுபோய் பள்ளிக்கு வந்து சேர்வதைவிட, சாப்பிடப் போகாமலே இருக்கலாம்.

அப்படியே போவதாக இருந்தாலும், சக ஆசிரியர்களிடம் தினமும் சைக்கிள் இரவல் கேட்பதும் தர்மசங்கடமான நிலை. மாணவர்களிடம் சில நாட்களில் இரவல் கேட்டு வாங்கிச் செல்லலாம். அதிலும் யாராவது என் சைக்கிள்ல காத்துப் போயிடுச்சு சார் என்று சொல்லி விட்டால் அதன் பொருளே வேறு. யாரிடம் இரவல் கேட்கலாம் என்று யோசிப்பதும்கூட அவலமான நிலைமைதான். அப்படியே வீட்டுக்குப் போனாலும் அங்கே சாப்பிட ஏதாவது இருக்குமா என்பதும் நிச்சயமில்லைதான். சில நாட்கள் ஸ்கூலை ஒட்டி சாலையின் மறுபக்கம் சின்னதாய் டீக்கடை வைத்திருந்த பியூன் கடையில் வடையும் டீயும் சாப்பிட்டு விட்டு வருவார்.

மேலே சொன்ன ஐடிஐ மாணவர்களின் மதிய உணவு விஷயம் கடந்தகால நினைவுகளை தோண்டிக் கிளறிப் போட்டுவிட்டது.

58 வயதில் ஓய்வுபெற்று அடுத்த இரண்டே ஆண்டுகள்தான் இருந்தார். 60 வயதில் விடைபெற்றுக்கொண்டார். 12-3-1979. இன்றோடு நாற்பது ஆண்டுகள் கழிந்து விட்டன.

அவருடைய மூன்றே மூன்று புகைப்படங்கள்தான் உண்டு. ஒன்று, இந்த குரூப் போட்டோ. மற்றொன்று, பென்ஷனுக்காக அம்மாவுடன் எடுத்த படம். கடைசி ஓரிரண்டு ஆண்டுகளில் தாடி வைத்திருந்தார். இருந்தாலும் தாடி வைத்த முகம் எனக்கு நினைவில் இருப்பதில்லை. யோசித்துப் பார்க்கிறேன்… இப்போது அப்பாவின் ஜாடை ரொம்பவே எனக்கு வந்துவிட்டது போலத் தெரிகிறது.

இத்தனை வறுமைக்கு இடையிலும் கம்பீரத்தை விடாதிருந்தவர் அப்பா. என்ன இருந்ததோ இல்லையோ, பிள்ளைகளுக்குக் கல்வியைத் தரத் தவறவில்லை. மகள்களை பர்தாக்களுக்குள் அடைக்கவில்லை. அதன் பயனை இப்போதும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

அன்று எதுவும் இல்லாதிருந்தோம். அப்பா இருந்தார். இன்று எல்லாம் இருக்கிறது. அப்பாதான் இல்லை.

***

அந்த ஐடிஐ ஆசிரியரும் இந்தப் பதிவைப் படிப்பார், அடுத்து என்ன செய்யலாம் எனத் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி : ஃபேஸ்புக்கில் ஷாஜகான்


இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா ? | காணொளி

“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று அ.மார்க்ஸ், கரு.பழனியப்பன் மற்றும் சுப.உதயகுமாரன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்.

தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியாது !
– கரு.பழனியப்பன் :

தமிழகத்தைக் கவ்வியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அபாயம்!
– அ.மார்க்ஸ் :

நாடார்களின் போராட்டம் நிறைந்த வரலாறு !
– சுப.உதயகுமாரன் :

பாருங்கள் ! பகிருங்கள் !

இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றியோர்களின் காணொளிகள்:
நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? வழக்கறிஞர் லஜபதி ராய் | இயக்குநர் அமீர்
சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் நிறம் கருப்புதான் | காணொளி


இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

நீரவ் மோடிக்கு நன்றி சொன்ன நரேந்திர மோடி ! எள்ளி நகையாடிய இணைய உலகம் !

பிரதமர் மோதியின் ட்விட்டர் அக்கவுண்டிலிருந்து #mainbhichowkidar (நானும் காவலன்) ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதாவது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து, ஏழ்மையிலிருந்து, அழுக்கிலிருந்து, ஊழலில் இருந்து காப்பாற்ற மேலே சொன்ன ஹாஷ்டாகுடன் நாம் டிவிட்டரில் பதிவுசெய்ய வேண்டுமாம்.

இந்த ஹாஷ்டாகுடன் பலரும் (பெரும்பாலும் ஐ.டி. விங் ஆட்கள்தான்) பிரதமரின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டை tag செய்து காலை முதல் டிவிட்டரில் பதிவிட்டு வந்தனர். பிற்பகலுக்கு மேல் யாருக்கு அந்த யோசனை தோன்றியதெனத் தெரியவில்லை.

யாரெல்லாம் அந்த ஹாஷ்டாகுடன், பிரதமரை Tag செய்கிறார்களோ அவர்களுக்கு தானியங்கி முறையில், “your participation makes the #mainbhiChowkidar movement stronger” என பதில் அனுப்ப முடிவுசெய்தனர்.
ஆனால், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவர்கள் கற்பனைகூட செய்திருக்கவில்லை.

உடனடியாக நாட்டைவிட்டு ஓடிப்போன நீரவ் மோடியின் கற்பனை அக்கவுண்டிலிருந்து (கேலிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட அக்கவுண்ட்) மோடியின் அக்கவுண்டை tag செய்து #mainbhichowkidar என்ற ஹாஷ்டாகுடன் எதையோ எழுதிவைக்க, அதற்கும் மேலேபடி பிரதமரின் அக்கவுண்டிலிருந்து பதில் வந்தது.

இது மட்டுமல்ல, மோடியையும் பாஜக-வையும் கடுமையாக விமர்சிக்கும் பலரும் இந்த ஹாஷ்டாகுடன் பிரதமரை டாக் செய்து கன்னாபின்னாவென திட்டிவைக்க, அவர்களுக்கும் அன்புடன் பதில் வந்தது.

அவ்வளவுதான், ட்விட்டர் உலகில் ஓட்டித் தீர்த்துவிட்டார்கள். காவலனாக இருக்கச் சொல்லி நீரவ் மோடியை பிரதமரின் ட்விட்டரிலிருந்து கேட்டிருக்கிறார்களா என ஒமர் அப்துல்லாவும் சீரியஸாக கேள்வியெழுப்ப, என்ன செய்வதென தெரியாமல், அம்மாதிரி ட்வீட்களையெல்லாம் டெலீட் செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி, தனது ட்விட்டர் பதிவில் “மோதி தனது நண்பர்களுக்கு நன்றி சொல்கிறார்” என்று இதைக் கடுமையாகக் கேலிசெய்திருக்கிறது. உடனே பாஜக அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், என் பள்ளி நண்பர்கள் என்னைத் திட்டுவதுபோல திட்டிவைத்திருக்கிறார்கள்..

படிக்க:
மீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை
சுயமோகி மோடி – கேலிச்சித்திரங்கள் !

நாடு இருக்கும் நிலைமையில், இந்த வேலை நமக்குத் தேவையா?

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன் முகநூல் பதிவிலிருந்து…


அவசியம் இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம் | பாகம் – 4

காட்சி – 6
இடம் : வீதி

உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர், தர்மன்.

(தர்மன் வருகிறான்)

கேசவப்பட்டர் : யார், தர்மனா? சௌக்கியமாடா…?

தர்மன் : சுகந்தானுங்க. நீங்க சுகந்தானுங்களே! சுகமாத்தான் இருப்பீங்க; கேக்க வேணுமா? நம்ம ராஜ்யம் பூராவும் இப்ப சுகமாத்தானே இருக்கு.

பாலச்சந்திரப்பட்டர் : ஒய், பார்த்தீரா, பிரபஞ்ச மாறுதலை! தர்மன் ராஜ்யம் பூராவும் அறிந்தவனாகி விட்டான்.

தர்மன் : என்னங்கா கேவலமாகப் பேசறிங்க. என் மகன் இப்ப சிவாஜி மகாராஜா பட்டாளத்திலே சேர்ந்து ஊர் நாடெல்லாம் சுத்தி வரான்லே. அவன் சொல்லித்தான் ஊர் க்ஷேமங்கள் தெரியுது. நான் என்னத்தக் கண்டேனுங்க. நான் உண்டு. ஏர் உண்டுன்னு இருக்கிறவன் தானுங்களே.

கேசவப்பட்டர் : அது சரிடா தர்மா! உன் மகன் பட்டாளத்திலேயா இருக்கான்?

தர்மன் : ஆமாங்க!

பாலச்சந்திரப்பட்டர் : கர்மம் யாரை விட்டது?

தர்மன் :  ஏன் அப்படிச் சொல்றீங்க? அவன் பட்டாளத்திலே சேர்ந்து மராட்டிய ராஜ்யத்தை கீர்த்தி உள்ளதாக்கி வர்றான். நல்ல காரியந்தானே நடக்குது.

கேசவப்பட்டர் : என்ன மகா நல்ல காரியம்? ஏண்டா தர்மா! தேச சேவை, ராஜ சேவை, வீரம் என்று என்னதான் பெயர் வேண்டுமானாலும் வைக்கட்டும்; சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே… இல்லேன்னு சொல்லுவியா?

தர்மன் : அது சரிங்க!

கேசவப்பட்டர் : என்ன சரி! இல்லெ தர்மா! யோசித்துப் பேசு. நம்ம ராஜ்யம். நம்ம ராஜா, நம்ம கீர்த்தி இதெல்லாம் இருக்கட்டும் ஒரு புறம். சண்டேன்னா அங்கே மனுஷாளை மனுஷாள் மிருகங்கள் போல எதிர்த்துண்டு சாக அடிக்கிற காரியந்தானே நடக்கிறது. இல்லேம்பியா?

தர்மன் : ஆமா! எவ்வளவோ பேரு மடிஞ்சு போறாங்க.

கேசவப்பட்டர் : அப்படின்னா அது கொலைதானே?

தர்மன் : கொலைன்னாலும் நோக்கம் பாருங்க. அது . நல்லதுதானே.

கேசவப்பட்டர் : நோக்கம் இருக்கட்டும்டா தர்மா. கொலை நடக்கிறதா இல்லையா?

தர்மன் : ஆமாங்க!

கேசவப்பட்டர் : உன் மகன் பட்டாளத்திலே சேர்ந்து, இந்தப் படுகொலையிலே சம்பந்தப்பட்டிருக்கிறான். ஆகையினால் பாவ மூட்டையை உன் குடும்பத்துக்குச் சேர்த்திருக்கிறான். நான் சொல்றேன்னு வருத்தப்படாதே. தர்மா! நீ எவ்வளவோ நல்லவன். இருந்தாலும் உன் மகனாலே உனக்கு நரகவாசம் சம்பவிக்கும்.

தர்மன் : அய்யோ ! அப்படிங்களா?

கேசவப்பட்டர் : சாஸ்திரத்தைச் சொல்றேண்டா தர்மா. சாஸ்திரம்.

பாலச்சந்திரப்பட்டர் : ஏன், ஒய்! பிரமாதமாகப் பேசுகிறீரே! அதே சாஸ்திரத்திலே, அதே சாபத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லியிருக்கே.

கேசவப்பட்டர் : யார் இல்லேன்னா? ஏன் ஒய் நேக்கு அது தெரியாதுன்னு நினைத்தீரோ? நான் என்ன சாஸ்திரத்தை சாங்கோபங்கமாகத் தெரியாதவனா? இல்லை; என்ன உமது நினைப்பு? ஒய்! நான் சாமான்யாளிடம் சிட்சை கேட்டவனல்ல ஒய்! சாட்சாத் காகப்பட்டரிடம் பாடம் கேட்டவனாக்கும்.

பாலச்சந்திரப்பட்டர் : ஓய், கேசவப்பட்டர் சும்மா பேசாதேயும். நீர், மட்டுந்தானா காகப்பட்டரிடம் பாடம் கேட்டது. அவரிடம் பிரதம சிஷ்யராக இருப்பவர் யார் ? தெரியுமோ நோக்கு சொல்லும் பார்ப்போம்?

கேசவப்பட்டர் : இது தெரியாதோ? ரங்கு பட்டர்.

பாலச்சந்திரப்பட்டர் : அந்த ரங்குபட்டர் யார் தெரியுமோ?

கேசவப்பட்டர் : என்ன ஒய் இது? ரங்கு பட்டர் யார் என்றால் காகப்பட்டரின் சிஷ்யர்.

பாலச்சந்திரப்பட்டர் : ரங்கு பட்டர் காகப்பட்டரின் சிஷ்யர். காகப்பட்டர் ரங்கு பட்டரின் குரு. இது தெரியாமதான் கேட்டேனாக்கும். ரங்கு பட்டர் யார் என்று கேட்கிறேன் ஒய்!

கேசவப்பட்டர் : யார்? நீர்தான் சொல்லுமே…

பாலச்சந்திரப்பட்டர் : போகட்டும், என் அத்தை தெரியுமோ நோக்கு ?

கேசவப்பட்டர் : நோக்கு ரெண்டு பேருண்டே அத்தைமார். நீர் – யாரைக் கேட்கிறீர்?

பாலச்சந்திரப்பட்டர் : சிகப்பா ஒல்லியா இருப்பாள் ஒரு அத்தை.

கேசவப்பட்டர் : கொஞ்சம் வாயாடுதல்…

பாலச்சந்திரப்பட்டர் : ஒய் வாயாடுதல் இல்லை அவள். அவ எதிரே சொல்லியிருந்தா தெரிஞ்சு இருக்கும் உம் பாடு. அவளுடைய பெயர் அலமு . நான் சொல்றது அவ இல்லை. இன்னொரு அத்தை. கரப்பா நெட்டையா இருப்பாள். காமுண்ணு பெயர். அவ ஆத்துக்காரருக்கு ரங்கு பட்டர் நேர் தம்பிங்காணும்.

படிக்க:
மதுரை 1939-ம் ஆண்டு கோவில் நுழைவு : சாந்துப் பட்டருக்கு சாணி ஊற்றிய பார்ப்பனர்கள் !
வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் !

கேசவப்பட்டர் : அப்படிச் சொல்லும் ஒய்! ஒரு நாள் ரங்கு பட்டர் தூக்கத்திலே பிதற்ற ஆரம்பித்தார். காமு, காமுண்ணு கூவிக்கிட்டிருந்தார். கங்குபட்டர் கூட கோவிச்சிண்டு
என்னடா உளறிண்டிருக்கேன்னு கேட்டான்.

தர்மன் : என்னங்க இது. சாஸ்திரம் பிராயச்சித்தம்னு ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டிங்களே?

கேசவப்பட்டர் : போயிடலேடா தர்மா. சாஸ்திரத்திலே சொல்லியிருக்கிற பிராயச்சித்தப்படி உன் மகன் யுத்தத்திலே செய்திருக்கிற பாப கிருத்தியங்களுக்கு ஒரு சுத்தி ஹோமம் செய்தால் நோக்கு விமோசனம் உண்டு.

தர்மன் : செலவு நிறைய ஆகுமோ?

கேசவப்பட்டர் : பிரமாதமா ஆகாது. ஒரு அறநூறு வராகன் பிடிக்கும்.

தர்மன் : அடேயப்பா! ஆறு நூறு. அவ்வளவு ஏது எங்கிட்டே?

கேசவப்பட்டர் : தர்மா. அரை நூறு. அதாவது, ஐம்பது வராகன். ஆறு நூறு இல்லே.

தர்மன் : அப்படிச் சொல்லுங்க. நாள் பாருங்க.

கேசப்பட்டர் : ஏன், நாளைக்கே திவ்யமான நாள்.

பாலச்சந்திரப்பட்டர் : ஒய்! ரொம்ப லட்சணங்காணும்! நாளைக்குக் கரிநாள் தெரியாதோ?

கேசவப்பட்டர் : யாருங்காணும் சொன்னது நோக்கு ?

பாலச்சந்திரப்பட்டர் : தர்மா! நாளைக்குக் கரிநாள். கேசவப்பட்டர் அவசரப்பட்டு சொல்லிவிட்டார். நாளைக்கு மறுநாள் ஹோமம் நடத்திவிடலாம்.

தர்மன் : சரிங்க! நான் வர்றேனுங்க.
(நமஸ்கரித்துப் போகிறான் )

கேசவப்பட்டர் : ஓய் இதென்ன வலிய வர்ற சீதேவியை உதைத்துத் தள்ளுறீர்? கரிநாளும், கத்தரிக்கா நாளும்னு சொல்லி ….

பாலச்சந்திரப்பட்டர் : கேசவப்பட்டரே! உம்ம மூளை வரவர வரண்டுண்டே போறது. நாமெ ரெண்டு பேரும் நாளைக்கு அடுத்த கிராமத்திலே சிரார்த்தத்துக்குப் போகணுமே, அது கவனமில்லாமெ, நாளைக்கு ஹோமம்ணு சொன்னீரே?

கேசவப்பட்டர் : அடடா நான் மறந்தே போனேன். நல்ல வேளையா நோக்காவது கவனம் வந்ததே.

பாலச்சந்திரப்பட்டர் : வரவேதான் கரிநாள்னு ஒரு போடு போட்டேன். வாரும் போகலாம். (போகிறார்கள்)

♠ ♠ ♠

காட்சி – 7
இடம் : வீதி
உறுப்பினர்கள் : சாந்தாஜி, பாலாஜி.

(சாந்தாஜியும், பாலாஜியும், எதிர் எதிரே வந்து சந்திக்கின்றனர்.)

பாலாஜி : நமஸ்காரம், சாந்தாஜி , நமஸ்காரம்.

சாந்தாஜி : நமஸ்கார். நமஸ்கார்… (போகிறார்)

பாலாஜி : ஏது சாந்தாஜி கோபமாக இருக்கிறீர்கள்?

சாந்தாஜி : (கோபத்துடன்) நான் கோபமாக இருப்பதாக யார் சொன்னார்கள்? அந்தப் பயல்தான் சொல்லியிருப்பான். சந்திரமோகன்தானே சொன்னான்?

பாலாஜி : ஆமாம் என்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன்.

சாந்தாஜி : மகா யோக்கியன் போல் உன்னிடம் பஞ்சாயத்துக்கு வந்துவிட்டானா? அவன் யோக்கியதையைப் பார் நான் கிளிப்பிள்ளைக்குச் சொல்லுவதைப் போல் சொல்லுகிறேன். அடே, சுந்தர் என் பேச்சைக் கேளடா. இந்து என் ஒரே மகள். குழந்தையை நான் கண்ணைப் போல் காப்பாற்றுகிறேன். அவள் எப்படியோ உன்னிடம் மயங்கிவிட்டாள். நீ இந்தச் சண்டைக்கு மட்டும் போகாதே. நீ அவளைக் கல்யாணம் செய்து கொண்டு வீட்டோடு இரு என்று கெஞ்சுகிறேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? வீரத்தைப் பழிக்காதே. நாட்டுக்கு நான் அடிமை. என் நாயகியும் நாட்டுக்குப் பணிப்பெண்’ – என்று எதிர்த்துப் பேசினான். ஏழு லட்சம் வராகன் இருக்கிறது என்னிடம் அவன் என்னை எதிர்த்துப் பேசுகிறான்.

பாலாஜி : பேச்சோடு விட்டானேன்னு சந்தோஷப்படுங்க சாந்தாஜி. அவன் மகா கெட்டவன் ..

சாந்தாஜி : அவனா அவன் கெட்டவனில்லையே. அவனுக்கு ‘தேசம், தேசம்’ என்று ஒரே பைத்தியம். அது தவிர அவனிடம் குறையே கிடையாது. என்ன செய்வதென்று
தெரியவில்லை .

பாலாஜி : ஏன் தெரியவில்லை ? இந்துமதிக்கு வேறு ஒரு ஆள் பார்க்க வேண்டியதுதான். மகாராஷ்டிரத்திலே மாப்பிள்ளைக்கா பஞ்சம்?

சாந்தாஜி : மகாராஷ்டிரத்திலே ஒரே ஒரு சந்திரமோகன்தானே கிடைப்பான்.

பாலாஜி: தங்களுக்கு மோகன் மீது பற்று என்று சொல்லுங்கள்!

சாந்தாஜி : இல்லையென்றால்தான் தொல்லையில்லையே? விரட்டி
விட்டிருப்பேனே. அவன் இந்துவின் நெஞ்சிலேயும் புகுந்து கொண்டான். என் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு விட்டான்.

பாலாஜி : புத்தி சொல்லிப் பார்ப்பதுதானே?

சாந்தாஜி : நான் ஏதாவது பேச ஆரம்பித்தால் அவன் அகோரக் கூச்சல் போட்டு அடக்கிவிடுகிறான்.

பாலாஜி : ஒரு யோசனை! இந்தக் காதல் இருக்கிறதே, அது ஒரு மாதிரியான வெறி வேறு ஒருவர் அந்தக் காதலைத் தட்டிப் பறித்து விடுவார்கள் என்று தோன்றினால் போதும், காதல் பித்துக் கொண்டவர்கள் காலடியில் விழுந்தாவது காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வார்கள்.

சாந்தாஜி : விளங்கச் சொல்லப்பா?

பாலாஜி : இந்துமதியை வேறு யாரேனும் காதலிப்பதாகத் தோன்றினால் போதும்; தானாக வழிக்கு வருவான்.

சாந்தாஜி : அது எப்படி சாத்தியமாகும்?

பாலாஜி : நான் ஏற்பாடு செய்கிறேன் ஒரு ஆளை. இந்துவைக் காதலிப்பது போல் நடந்து கொள்ளச் சொல்லுகிறேன்.

சாந்தாஜி : விளையாட்டு வினையாகிவிட்டால்?

பாலாஜி : ஆகாது; ஆகாது. நான் கவனித்துக் கொள்கிறேன்.

சாந்தாஜி : யாரை ஏற்பாடு செய்கிறாய்? அவன் யோக்கியனாய் இருக்க வேண்டும். சபலப் புத்தி கூடாது. இந்துவிடம் உண்மையாகவே காதல் கொண்டு விடக்கூடாது.

பாலாஜி : எனக்குத் தெரியாதா? உங்களுக்குப் பகதூரைத் தெரியுமா?

சாந்தாஜி : அவனா? சுத்தப் பயங்கொள்ளிப் பயலாச்சே! பெண்களிடம் பேசவே தெரியாதே.

பாலாஜி : அப்படிப்பட்டவனை நம்பித்தான் இந்தக் காரியத்தில் இறங்க வேண்டும். எப்படி நடந்து கொள்வது என்று நான் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். என் தந்திரத்தைப் பாரும். ஒரு வாரத்தில் அவனைக் காதலன் வேஷத்தில் உமது மாளிகைக்கு அனுப்பி வைக்கிறேன். ம்… செலவுக்கு மட்டும்… (பணத்தை மடியிலிருந்து எடுத்து )

சாந்தாஜி : ஒரு சல்லிகூடத் தர முடியாது. இந்த இருநூறு வராகனுக்குமேல்.

பாலாஜி : இதிலேயே முடித்து வைக்கிறேன். வெற்றி கிடைத்ததும் தாங்களாகவே இனாம் தராமலா போகப் போகிறீர்கள்.

சாந்தாஜி : பார்ப்போம் போய்வாரும் ஜெயத்துடன்.
(சாந்தாஜி போகிறார்)

பாலாஜி : சரியான வேலை கிடைத்தது. நம்ம சாமர்த்தியம் இப்படி இருக்கு அவ என்னடான்னா நம்ம முட்டாள்னு நெனைக்கிறா, நினைக்கிறாளா? சொல்லவே சொல்றா.. ஆசையிலே … ஆசையிலே… (போகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை
பகுதி 2 :
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !
பகுதி 3 : யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் ?


இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !

மார்க்ஸ் பிறந்தார் – 25
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

10. மேதையின் அருகில் மற்றொரு மேதை – 2

மார்க்ஸ் கூருணர்ச்சி உடையவர். எனினும் தன்னைக் காட்டிலும் எங்கெல்சைப் பற்றிய விமர்சனமே அவரை அதிகமாகப் பாதித்தது.

கூலிப் பத்திரிகையாளர்களின் தாக்குதலை அவர் அமைதியோடு சகித்துக் கொள்வார், அவற்றுக்குப் பதில் எழுத விரும்பமாட்டார். ஆனால் அது எங்கெல்சின் கெளரவத்தைப் பற்றிய பிரச்சினையாக இருந்தால் மார்க்ஸ் தயவு தாட்சண்ணியமின்றி நடந்து கொள்வார். அவர் உடனே சண்டைக்குக் கிளம்பிவிடுவார்.

1850-இல் முல்லர் – டெல்லெரிங் என்ற பெயர் கொண்ட யாரோ ஒருவர் தொழிலாளர் சங்கத்துக்கு எங்கெல்சை அவதூறு செய்து கடிதம் எழுதிய பொழுது மார்க்ஸ் ஆவேசமடைந்தார். தன்னுடைய ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த நபருக்குப் பின்வருமாறு எழுதினார்:

“நீங்கள் நேற்று தொழிலாளர் சங்கத்துக்கு எழுதிய கடிதத்திற்காக என்னுடன் சண்டைக்கு வரும்படி நான் உங்களுக்குச் சவால் விடுவேன் அதாவது எங்கெல்சைக் கேவலமான முறையில் அவதூறு செய்த பிறகு உங்களால் இன்னும் திருப்தியளிக்க முடியுமானால். உங்களுடைய அற்பமான அக்கறைகளை, உங்களுடைய பொறாமையை, உங்களுடைய அதிருப்தியுற்ற அகம்பாவத்தை, உங்களுடைய மாபெரும் மேதையை உலகம் அங்கீகரிக்கவில்லை என்ற அதிருப்தியில் ஊறிய ஆத்திரத்தை நீங்கள் புரட்சிகரமான வெறி என்ற போலித்தனமான முகமூடிக்குப் பின்னால் இதுவரை வெற்றிகரமாக மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த முகமூடியைக் கிழித்தெறிவதற்கு உங்களை வேறொரு களத்தில் சந்திக்கின்ற வாய்ப்பை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்…..”(6)

படிக்க :
மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
சோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை !

மார்க்சின் கெளரவத்தைப் பாதுகாக்கின்ற பிரச்சினை என்றால் எங்கெல்சும் இதைப் போலவே நடந்து கொள்வார். அ. லோரியா என்ற கொச்சையான பொருளியலாளர் மூலதனத்தின் கருத்துக்களைத் திரித்துக் கூறுவதை விசேஷமாகச் செய்து கொண்டிருந்தார். எங்கெல்ஸ் அவரை ஆத்திரத்தோடு கண்டனம் செய்தார்.

“கார்ல் மார்க்சைப் பற்றி உங்களுடைய கட்டுரை வந்து சேர்ந்தது. அவருடைய போதனையைப் பற்றி மிகவும் கூர்மையான முறையில் விமர்சனம் செய்வதற்கும் அதைத் தவறாகப் புரிந்து கொள்வதற்கும் கூட உங்களுக்கு உரிமையுண்டு. அவருடைய வாழ்க்கையைப் புனைகதை மாதிரி மாற்றிக் கூறுவதற்கும் உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் என்னுடைய காலஞ்சென்ற நண்பருடைய குணத்தை அவதூறு செய்வதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது, அப்படிச் செய்வதற்கு நான் யாரையும் அனுமதிக்கமாட்டேன்…..”(7)

எங்கெல்ஸ் லண்டனுக்குச் செல்கின்ற பொழுது இரு நண்பர்களும் நேரடியாகச் சந்தித்துக் கொள்வார்கள், மார்க்ஸ் குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். மார்க்சின் பெண் மக்கள் எங்கெல்சை சித்தப்பா என்று அழைப்பார்கள். எங்கெல்ஸ் தன்னலமின்றிப் பல வருடங்கள் உதவி செய்திருக்காவிட்டால் மார்க்சுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்பதைச் சொல்வது கடினம். அவர் தன்னுடைய நண்பரின் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய சொந்த விஞ்ஞான அக்கறைகளை ஒதுக்கி வைத்தார். மார்க்ஸ் இதை நினைத்து எப்பொழுதுமே வருத்தமடைவார்.

1867 ஆகஸ்ட் 16-ம் தேதியன்று அதிகாலையில் இரண்டு மணிக்கு மார்க்ஸ் மூலதனத்தின் முதல் தொகுதியின் அச்சுப்படிகளைத் திருத்தி முடித்தார். உடனே எங்கெல்சுக்குக் கடிதம் எழுதினார்: “இந்தத் தொகுதியின் வேலை முடிந்துவிட்டது. உங்கள் உதவியினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உங்களுடைய தியாகம் இல்லையென்றால் மூன்று தொகுதிகளையும் எழுதுவதற்கு அவசியமான ஏராளமான வேலையை என்னால் ஒருபோதும் செய்து முடித்திருக்க இயலாது. நன்றிப் பெருக்குடன் உங்களை நெஞ்சாரத் தழுவுகிறேன்.”(8)

ஆனால் எங்கெல்ஸ் ஒருபோதும் தன்னுடைய விதியைப் பற்றிப் புகார் செய்யவில்லை, வருத்தமடையவில்லை. அவர் தன்னுடைய அலுவலகத்தில் உற்சாகமாக வேலை செய்தார். உலகத்திலேயே அந்த வேலைதான் சிறப்பானது என்று தெரிவிப்பதைப் போல அமைதியாக வாழ்ந்தார்.

எங்கெல்ஸ் உண்மையில் எப்படிப்பட்ட வேதனையை அனுபவித்தார் என்பதை எலியனோர் மார்க்ஸ்-ஏவ்லிங் எழுதியுள்ள நினைவுக் கட்டுரையின் பின்வரும் பகுதியிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எங்கெல்சின் “கடுந்தண்டனை” முடிவுக்கு வந்து கொண்டிருந்த பொழுது அந்த அம்மையார் எங்கெல்ஸ் வீட்டுக்கு செல்வதுண்டு.

“அன்று காலையில் அவர் கடைசித் தடவையாக அலுவலகத்துக்குப் புறப்பட்ட பொழுது ‘கடைசித் தடவை!’ என்று சொல்லிக் கொண்டு காலணிகளை அணிந்த நேரத்தில் அவர் முகத்திலிருந்த பிரகாசத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

“அதற்குச் சில மணிநேரத்துக்குப் பிறகு நாங்கள் அவரை எதிர்பார்த்துக் கொண்டு வாயிலில் காத்திருந்தோம். வீட்டுக்கு எதிரிலிருந்த சிறிய வயிலைக் கடந்து அவர் வந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவர் கைத்தடியைக் காற்றில் சுழற்றிக் கொண்டும் பாடிக் கொண்டும் முகத்தில் பரவசத்துடன் வந்து கொண்டிருந்தார். நாங்கள் விருந்துக்கு ஏற்பாடுகளைச் செய்தோம். ஷாம்பேன் மது அருந்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.”

’’அன்று அதைப் புரிந்து கொள்ள முடியாத சின்னப் பெண்ணாக நான் இருந்தேன். இன்று அதை நினைத்துப் பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.”(9)

அதே தினத்தில் எங்கெல்ஸ் தன்னுடைய தாயாருக்குப் பின்வருமாறு எழுதினார். “நான் முற்றிலும் வேறு மனிதனாகிவிட்டேன், என் வயதில் பத்து வருடங்கள் குறைந்துவிட்டன.”(10)

எங்கெல்சிடம் நிறைந்திருந்த உற்சாகமும் உயிர்த்துடிப்பும் ஆற்றலும் தெளிவும் பாசமும் அவரை எல்லோரும் மிகவும் விரும்புகின்ற மனிதராக்கின. மார்க்சின் ஹாம்பர்க் பதிப்பாளர் எழுதிய கடிதம் ஒருநாள் மார்க்சுக்குக் கிடைத்தது. எங்கெல்ஸ் அவரைச் சந்தித்ததாகவும் தான் இதுவரையிலும் சந்தித்தவர்களில் அவர் மிகவும் சிறந்த பண்புடையவர் என்றும் அவர் எழுதியிருந்தார்.

மார்க்ஸ் கடிதத்தைப் படிப்பதை நிறுத்தி விட்டுப் பெருமிதத்தோடு கூறினார்: “பிரெட் (எங்கெல்ஸ் – பர்) எவ்வளவு அறிவாளியோ அவ்வளவு இனிமையானவர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத நபரை நான் பார்க்க விரும்புகிறேன்.”(11)

மார்க்சைப் போலவே எங்கெல்சிடமும் அதிகமான நகைச்சுவை உணர்ச்சி இருந்தது. அந்நிய நாட்டில் வாழ்க்கையின் துன்பங்களைச் சகித்துக் கொள்வதற்கு அது உதவியது.

மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதமொன்றில் தனக்கு நோய் ஏற்பட்ட பொழுது பட்ட கஷ்டங்களை வர்ணித்தார், ஆனால் மற்ற சந்தர்ப்பங்கள் எப்படி இருந்தாலும் நம்முடைய நட்பு எவ்வளவு மாபெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பதை முன்னெப்போதையும் காட்டிலும் மிகவும் அதிகமாக உணர்ந்ததாகவும் வேறு எந்த உறவையும் இவ்வளவு உயர்வானதாகத் தான் மதிக்கவில்லை என்றும் எழுதினார்.

எங்கெல்ஸ் தான் மிகவும் வெறுத்த வர்த்தக நுகத்தடியைத் தூக்கியெறிந்த பிறகு லண்டனுக்குச் சென்று மார்க்சின் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டில் குடியேறினார். நண்பர்கள் அநேகமாக நாள்தோறும் சந்தித்துக் கொண்டனர். எங்கெல்ஸ் பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்த இலக்கியப்படைப்புத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகின்ற வேலையில் இப்பொழுது கடுமையாக உழைத்தார்.

இயற்கை விஞ்ஞானங்களின் சாதனைகளை இயக்கவியல் ரீதியில் ஒன்றிணைக்கின்ற மாபெரும் திட்டம் அவற்றில் முக்கியமான ஒன்றாகும். 1878-இல் அவர் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு வெளியாயிற்று. இப்புத்தகம் தத்துவஞானம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானத் துறைகளில் மிகவும் முக்கியமான பிரச்சினைகளை ஆராய்கிறது என்று லெனின் எழுதினார்.

அவர் பூர்வீக சமூகத்தின் வரலாற்றையும் ஆராய்ந்தார். அவர் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற புத்தகம் 1884-இல் வெளியிடப்பட்டது.

எங்கெல்ஸ் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதுடன் கட்சி, அமைப்பு ரீதியான வேலைகளிலும் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டார். அவர் அகிலத்தின் பொதுக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பல நாடுகளுக்குத் தொடர்புச் செயலாளராக இருக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எங்கெல்ஸ் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் புரட்சிகரப் போராட்டத்தின் செய்முறை நோக்கங்களுக்குத் தகவமைப்பதற்கு எப்பொழுதும் முயற்சி செய்பவர். ஆகவே அவர் எதிர்காலத்தை முன்னறிந்து ஸ்லாவ் மொழிகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

மார்க்சும் எங்கெல்சும் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வெற்றிகளைத் தம் காலத்திலேயே கண்டார்கள். ஒவ்வொரு வெற்றியையும் தம்முடைய சொந்த வெற்றியாகக் கொண்டாடினார்கள். ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பொழுது எங்கெல்ஸ் முதுமைப் பருவத்திலிருந்தார். எனினும் அந்தச் சமயத்தில் தன்னுடைய வீட்டில் பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அவர் வீட்டில் விருந்து தயாரித்தார் (எங்கெல்ஸ் “சுவையான உணவு தயாரிக்கக் கூடியவர்”), விசேஷமான ஜெர்மன் பீர் ஒரு மிடா வாங்கினார், தன்னுடைய நெருங்கிய நண்பர்களை அழைத்தார் என்று எட்வார்டு ஏவ்லிங் எழுதினார்.

“ஜெனரல்” ஒவ்வொரு தந்தியையும் பிரித்து அதன் வாசகத்தை உரக்கப் படித்தார்: “அது வெற்றி (தேர்தலில் சமூக-ஜனநாயகவாதிகளுக்கு – ஆசிரியர்) என்றால் நாங்கள் குடித்தோம். அது தோல்வி என்றாலும் நாங்கள் குடித்தோம்.”(12)

மார்க்ஸ் மரணமடைந்த பிறகு எங்கெல்ஸ் சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவரானார். அவரே முழுப் பொறுப்பையும் வகித்தபோதிலும் அவர் முன்பிருந்த மாதிரியே அடக்கமானவராக, ஆர்ப்பாட்டமில்லாதவராக இருந்தார். “என்னுடைய காலஞ்சென்ற சமகாலத்தவர்களுக்கு, எல்லோரையும் காட்டிலும் மார்க்சுக்குக் கிடைக்க வேண்டிய கெளரவம் கடைசியாக எஞ்சியவன் என்ற முறையில் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விதி முடிவு செய்திருக்கிறது”(13) என்று எங்கெல்ஸ் ஒரு சமயத்தில் கூறினார். எனக்குக் கிடைத்திருக்கும் கெளரவத்துக்குத் தகுதியுடையவன் என்று காட்டிக் கொள்வதற்காக எதிர்காலத்திலாவது பாட்டாளி வர்க்கத்தினுடைய சேவையில் என்னுடைய எஞ்சிய வாழ்க்கை முழுவதையும் கழிப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

மார்க்சும் எங்கெல்சும் தமது வாழ்க்கையின் இறுதியில் ருஷ்யா மீது கவனத்தைத் திருப்பினார்கள். எங்கெல்ஸ் பிளெஹானவ், ஸ்குலிச், லபாதின் மற்றும் இதரர்களான சிறந்த ருஷ்ய சோஷலிஸ்டுகளுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார்.

எங்கெல்ஸ் ருஷ்யப் புரட்சியாளர்களுடன் உரையாடுகின்ற பொழுது அவர்கள் மார்க்சின் எழுத்துக்களை மேற்கோள் காட்டினால் மட்டும் போதாது, அவர்களுடைய நிலையிலிருந்தால் மார்க்ஸ் எப்படிச் சிந்தித்திருப்பாரோ அப்படிச் சிந்திக்க முயல வேண்டும் என்று கூறினார். அப்படிச் செய்தால்தான் “மார்க்சியவாதி” என்ற சொல்லை உபயோகிப்பதற்குத் தகுதியுண்டு என்று அவர் நம்பினார். ருஷ்யாவில் ஏற்படப் போகின்ற புரட்சி உலக கம்யூனிஸ்ட் இயக்கம் முழுவதின் விதியில் மாபெரும் பாத்திரத்தை வகிக்கும் என்று அவர் கருதினார். அந்தக் கருத்து சரியாயிற்று.

படிக்க் :
அஜினோமோட்டோ: முதலாளித்துவம் கண்டுபிடித்த எமன்
இருக்கிறவனுக்கு முதலாளித்துவம், இல்லாதவனுக்கு கம்யூனிசமா?

தான் தேர்ந்தெடுத்த பாதை சரியானது, தானும் மார்க்சும் அனைத்துச் சக்தியையும் அர்ப்பணித்த இலட்சியத்துக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பிய எங்கெல்ஸ் வாழ்க்கையை மிகவும் நேசித்தது நியாயமானதே. அவர் ஏராளமான சுமைகளைத் தாங்கியபோதிலும் அவருடைய வாழ்க்கை அவரைப் போலவே ஒருங்கிணைந்ததாக, அழகு மிக்கதாகப் பொலிந்தது.

மார்க்ஸ் மரணமடைந்த பிறகு மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை முடிப்பது அவருடைய முக்கியமான பணியாயிற்று. அவர் எழுதிக் கொண்டிருந்த இயற்கையின் இயக்க இயல் என்ற புத்தகம் தொடர்பான வேலைகளை நிறுத்தி விட்டு – அந்தப் புத்தகம் முடிக்கப்படவே இல்லை – தன்னுடைய நண்பரின் புத்தகத்தைப் பிரசுரத்துக்குத் தயாரிக்கின்ற வேலையைத் தொடங்கினார். அவர் இந்த மாபெரும் பணியைத் தன்னுடைய மரணத்துக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் முடித்தார். அவருடைய ஆராய்ச்சியில் எப்பொழுதும் இருக்கின்ற கடும் உழைப்பு, கறாரான கவனம், பூரணத்துவம் இந்தப் பணியிலும் இருந்தன.

ஆகவே மூலதனம் இரண்டு மேதைகளின் சாதனையாகும். மனிதகுலம் இத்தகைய ஆன்மிக சக்தியைக் கொண்ட ஒரு நூலை, அதன் பிற்கால கதிப்போக்கு முழுவதிலும் மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கின்ற நூலை ஒருபோதும் அறிந்ததில்லை.

*****

மூலதனம் எப்படி, எந்த நிலைமைகளில் எழுதப்பட்டது என்பது இப்பொழுது நமக்குத் தெரியுமாதலால், இந்த மிகச் சிறப்பான புத்தகத்தைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் எழுதுவோம். கலப்பற்ற பொருளாதாரப் பிரச்சினைகளே ஒதுக்கிவிட்டு புதிய, உண்மையிலேயே விஞ்ஞான ரீதியான உலகக் கண்ணோட்டத்தின், இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத் தத்துவஞானத்தின் மிக முழுமையான வடிவமாக இப்புத்தகம் எப்படி இருக்கிறது என்பதை அறிய முயலுவோம்.

குறிப்புகள்:

(6) Marx, Engels, Werke, Bd. 27, Berlin, 1965, S. 526.
(7) Marx, Engels, Werke, Bd.36, S. 19.
(8) Marx, Engels,Selected Correspondence, p. 18.
(9) Reminiscences of Marx and Engels, pp. 185-86.
(10) Marx, Engels, Werke, Bd. 32, Berlin, 1965, S. 167.
(11) Reminiscences of Marx and Engels, p. 91.
(12) Reminiscences of Marx and Engels, p. 316.
(13) Marx, Engels, Werke, Bd. 37, Berlin, 1967, S. 513.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய 24 பாகங்களை படிக்க:

மார்க்ஸ் பிறந்தார் வரலாற்றுத் தொடர்


இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

தேர்வு எழுத அனுமதி மறுக்காதே | மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்கு | மாணவர் போராட்டம்

0

ரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பயிலும் இளங்கலை விலங்கியல் துறையை சேர்ந்த 7 மாணவர்களை, மார்ச் – 19 அன்று நடைபெற்ற வேதியியல் செய்முறைத் தேர்வை எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இந்த 7 மாணவர்களும் செய்முறைத் தேர்வுக்கான கட்டணம் ரூ. 2080 கட்டவில்லை என்பதற்காக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுள் பெரும்பாலோனோர் கூலித்தொழிலாளர்கள் வீட்டுப் பிள்ளைகளும் ஏழை மாணவர்களும்தான். தங்களது குடும்பச் சூழல்களைத் தாண்டி கல்லூரிக்கு வருவதே பெரும்பாடாக இருக்கும் சூழலில், செய்முறைத்தேர்வுக் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக தடுத்து நிறுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் பல்கலைக்கழக விதிகளிலோ, கல்லூரியின் விதிமுறைகளிலோ அத்தகைய உரிமையை கல்லூரி நிர்வாகத்திற்கு வழங்கப்படவில்லை என்றும் மாணவர்கள் வாதிட்டனர்.

இது ஏழு மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினையில்லை என்பதை உணர்ந்த சக மாணவர்கள் செய்முறைத்தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக திரண்டனர். மார்ச்-20 அன்று கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.

மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தை அலட்சியப்படுத்தியது கல்லூரி நிர்வாகம். இந்நிலையில் மதியம் 12.30 மணியளவில் கல்லூரிக்கு வந்த முதல்வரை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஏழு மாணவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் வகுப்புகளுக்குத் திரும்புவதில்லை என்று உறுதியாக அறிவித்தனர்.

மாணவர்களின் உறுதியான போராட்டத்தையடுத்து, துறை பேராசியர்களுடன் கலந்து பேசிய கல்லூரி முதல்வர், ”சிறப்புப் பிரிவில் 7 மாணவர்களும் செய்முறைத் தேர்வில் பங்கேற்க ஆவண செய்வதாக” உறுதியளித்தார். இதனையடுத்து உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர்.

”கல்விக்கட்டணம் செலுத்த முடியாத நிலை என்பது அந்த ஏழு மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; அது சமூகப் பிரச்சினை. நிர்வாகம் கெடுவிதிக்கும் நாட்களுக்குள் 2080 ரூபாய் கட்டவில்லையென்பதற்காக அவர்களின் கல்வி பெறும் உரிமையைப் பறிக்கும் செயலை அனுமதிக்க முடியாது” என்பதில் உறுதியாய் நின்று வென்றும் காட்டியிருக்கின்றனர், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்கள்.


தகவல்:
திருச்சி.
தொடர்புக்கு: 99431 76246.

♦ ♦ ♦ 

டலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து கடந்த இருநாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஒதுக்கீடு செய்யாத மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராகவும்; இக்கல்வி உதவித்தொகையைப் பெற்றுதருவதற்காக எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாத கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

முதல்தலைமுறை பட்டதாரி மாணவர்களான இவர்கள், இக்கல்வி உதவித்தொகையின் ஆதரவில்தான் கல்லூரி பயின்று வருகின்றனர். எதிர்வரும் பருவத்தேர்வுக்கான தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்குரிய காலக்கெடு முடிவடையும் தருவாயில் கல்வி உதவித்தொகை கிடைக்க ஆவண செய்தால் மட்டுமே தங்களால் கல்வியைத் தொடர முடியும் என்ற நிலையில் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர் இக்கல்லூரி மாணவர்கள்.

முதல்நாள் மாணவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த கல்லூரி நிர்வாகம் மறுநாளான மார்ச்-20 அன்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ”இரண்டுநாளில் கல்வி உதவித்தொகை வந்துவிடும். அதற்கு நான் பொறுப்பு. போராட்டதைக் கைவிடுங்கள்” என்றார் கல்லூரி (பொறுப்பு) முதல்வர்.

”இத்தனை நாள் செய்யாததை, இந்த இரண்டு நாளில் எவ்வாறு செய்து முடிப்பீர்கள்? அதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கேள்வியெழுப்பியதோடு, ” கல்வி உதவித்தொகை எப்போது கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கெடு தேதியை தள்ளி வைக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தனர்.

மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்த கல்லூரி (பொறுப்பு) முதல்வர், வெறுமனே தமது வெற்று வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

படிக்க:
ஏழை ‘இந்து’ மாணவருக்காக பணக்கார ‘இந்து கல்வி வள்ளல்களி’டம் போராடலாமே?
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !

”கல்வி உதவித்தொகை உடன் கிடைக்க வழி செய்ய வேண்டும்; அல்லது, கல்வி உதவித்தொகை கிடைக்கும் வரையில் பருவத்தேர்வுக்கான கட்டணம் செலுத்துவதற்கான கெடு தேதியை தள்ளி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் உறுதியான போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

எஸ்.சி. – எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை  பல ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் அவலம், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல. தமிழகமெங்கும் உள்ள கல்லூரிகளின் நிலை இதுதான்.

பல ஆண்டுகளாக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத செய்திகளும் அதற்கெதிரான மாணவர்களின் போராட்டங்களும், மக்கள் விரோத மோடி – எடப்பாடி அரசுகளின் வெற்றுச் சவடால் விளம்பரங்களின் இரைச்சலில் கவனம் பெறாமலே கடந்து போகின்றன.


தகவல்:
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி,
கடலூர்.

மீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை

0

த்திய கிழக்கு நாடுகளின் வெனீசு நகரம் என்றழைக்கப்படும் பஸ்ரா நகரம் தெற்கு ஈராக்கில் அமைந்துள்ளது. நதிகள், கால்வாய்கள் மற்றும் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் அமையப்பெற்ற இந்நகரம் இப்போது திறந்தவெளி குப்பைக்கிடங்காக மாறி மிக மோசமானதொரு சுகாதாரச் சீர்கேட்டை எதிர்கொண்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 1,18,000 பேர், காற்று மற்றும் நீர் மாசுபாட்டால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் நெருப்புக் காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை மோசமடைவதைக் கண்டு கொதித்தெழுந்த இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழலைக் கட்டுப்படுத்தத் தவறி, சுகாதாரமான குடிநீர் தராத அரசைக் கண்டித்து போராட்டங்களை வீதியில் நடத்தி வருகின்றனர்.
டைப்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகும் ஷாட்-அல்-அராப் நதிதான் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்ரா நகரின் மத்தியப்பகுதியில் ஓடும் இந்த நதியில் உப்புத்தன்மை சற்று அதிகமாக இருக்கும் நிலையில் வேதிப்பொருட்களும், நச்சுக்கழிவுகளும் கலப்பதால் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளது.

முகம் கழுவுவதற்குக் கூட லாயக்கற்றுப் போயிருக்கும் இந்த நதியில், மீன்களும், நண்டுகளும் செத்து மடிகின்றன. சுற்றுச்சூழல் மாறுபாட்டுக்குள்ளாகி ஒரு பேரழிவு நெருங்கி வரும் அபாயம் நிலவுகிறது என்கிறார் பஸ்ரா பல்கலைக்கழகத்தின் காற்று மற்றும் நீர் மாசுபாட்டு நிபுணர் செளக்ரி-அல்-ஹசான்.

ஈராக்கின் வளமான நகரங்களில் ஒன்றான பஸ்ரா, எண்ணெய் வளத்திற்குப் புகழ்பெற்றது. ஆனால் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் பணம் எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை என புலம்புகின்றனர் பொதுமக்கள்.
நோயால் பாதிக்கப்படும் மக்கள் சில சமயங்களில் மருத்துவரைப் பார்க்க மிகவும் அச்சப்படுகின்றனர். ஒரு வேளை மருத்துவ சோதனையின் போது புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டு கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம்தான் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வதைத் தடுக்கிறது என்கிறார் 27 வயதான சமூக ஆர்வலர் அலி காசிம்.

ஷாட்-அல்-அராப் நதியில் கட்டிமுடிக்கப்பட்ட இத்தாலியன் மேம்பாலம்

ஆகஸ்டு 2017-ம் ஆண்டு ஷாட்-அல்-அராப் நதியில் கட்டிமுடிக்கப்பட்ட இத்தாலியன் மேம்பாலம். விவசாயம் அழிக்கப்பட்டு, குப்பைகளும், கழிவுகளும் இந்த நதியில் கொட்டப்படுவதால் உப்புநீர் பின்வாங்கி டைப்ரிஸ், யூப்ரடீஸ் நதிகளையும் பாழ்படுத்தி, கால்நடைகள், மீன் வளம் ஆகியவற்றை அழித்து வருகிறது

கடந்த சில மாதங்களில் மட்டும் 1,18,000 பேர் மாசு கலந்த நீரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அல்-அஷார் கால்வாயின் அவல நிலை.

அல்-அஷார் கால்வாயின் அவல நிலை. ஷாட்-அல்-அராப் நதியிலிருந்து பிரிந்து பஸ்ராவின் பழைய நகரப்பகுதியில் வலம்வந்த நதி இன்று குப்பைக்கூளங்களின் புகலிடமாய் மாறிவிட்டது.

ஈராக்கின் எண்ணெய் வளமிக்க நகரங்களில் ஒன்றான பஸ்ராவினால் கிடைக்கும் வருமானம் எங்கு செல்கிறதென்றே தெரியவில்லை; ஆனால் நோய்கள் மட்டும்தான் பிரதிபலனாகின்றன என்கின்றனர் நகரவாசிகள்

அப்துல் கரீம், காசிம் சதுக்கம்

காசிம் சதுக்கத்தில் அமர்ந்திருக்கும் நபர் அப்துல் கரீம். இங்குதான் அடிப்படை வசதிகள் கோரியும், ஊழலை ஒழித்து வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராடிய 20 இளைஞர்கள் ஈராக்கிய அரசால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்களின் புகைப்படங்கள் சதுக்கத்தைச் சுற்றி தொங்கவிடப்பட்டுள்ளன.

வளைகுடாப் பகுதியிலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீன்கள். பஸ்ரா நகரத்து நதிகள் போன்று இந்தக் கடல் பாழ்படுத்தப்படவில்லை எனவே மீன்கள் கிடைப்பது எளிதாகிறது.

ஷானாஷீல் உணவு விடுதி

ஷானாஷீல் என்றழைக்கப்படும் பஸ்ரா நகரத்தின் பாரம்பரியமிக்க ஹோட்டலை எதிர்நோக்கியிருக்கும் கால்வாய் ஒன்று. இசுலாமிய, கிறித்தவ, யூத பெரும் பணக்காரர்கள் வசித்து வந்த பகுதி இது.

அல்-அஷார் கால்வாயின் பழைய படம்

இதே கால்வாயின் பழைய தோற்றம் – ஷாட்-அல்-அராப் நதியிலிருந்து பிரிந்து பஸ்ரா நகரத்தின் ஊடாகச் செல்லும் கால்வாய் ஒன்றின் பழைய படம்.

2016-ம் ஆண்டு யுனெஸ்கோவால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மெசபடோமிய சதுப்பு நிலங்கள். வசந்தத்தின் புகலிடமாக இருந்த இடத்தில் இன்று வாழ முடியாத சூழ்நிலை நிலவுவதால் நிறைய பேர் குடிபெயர்ந்து விட்டனர். ஹூசேன் மட்டும் மீன்பிடி, சுற்றுலா என இன்னமும் இங்கேயே வாழ்ந்து வருகிறார்.

ஹூசேனின் மகனும், உறவினரின் பிள்ளையும் படகில் விளையாடுகின்றனர். இவர்கள் பள்ளியில் படிக்கின்றனர். ஆனால் பல குழந்தைகள் படிப்பை நிறுத்திவிட்டனர்.

இன்னொரு நபர் தன்னுடைய இரு மகன்களுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.


தமிழாக்கம்: வரதன்
நன்றி:  அல்ஜசீரா 

சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் நிறம் கருப்புதான் | காணொளி

“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்கோதை ஆலடி அருணா, எழுத்தாளர் சம்பத் சீனிவாசன், டாக்டர் அ. ரங்கநாதன் மற்றும் வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.

சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் நிறம் கருப்புதான் !
– பூங்கோதை ஆலடி அருணா :

ஜாதியை ஒழிக்க கலப்புத் திருமணம் ஒன்றுதான் வழி !
– எழுத்தாளர் சம்பத் சீனிவாசன், டாக்டர் அ. ரங்கநாதன் மற்றும் வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை :

பாருங்கள் ! பகிருங்கள் !

2-ம் வகை நீரிழிவு நோய் : சில கசப்பான  உண்மைகளும் மீளும் வழியும் !

னிதர்கள் பல்வேறு  சூழல்கள், கலாச்சாரங்கள்  நாடுகள், தேசங்கள் என பிரிந்து இருந்தாலும் சில தேவைகள், ரசனைகள் அவர்களை ஒன்றிணைக்கிறது. அதற்கு மிகச் சிறந்ததொரு சாதாரண உதாரணம்  நாளிதழ்கள், பத்திரிகைகள் படிப்பது, இலக்கியங்கள் ரசிப்பது,   சஞ்சிகைகள் வாசிப்பது. இவற்றுள் ஒருசில புகழ்பெற்ற  பத்திரிகைகள், சஞ்சிகைகள் தேச வர்த்தமான எல்லைகளைக் கடந்து பல்வேறு தரபட்ட மக்களாலும் விரும்பி வாசிக்கப்படும் ஜனரஞ்சமானவையாக இருக்கிறன.

இவைகள் சாதாரண படித்த பொது வாசகர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்படுபவை. அதுபோன்று உலக அளவில் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகக்கூடியவை. ஆனால் குறிப்பிட்ட ஒரு வாசகர் வட்டத்தை, துறைசார் படித்த மட்டத்தை நோக்காகக் கொண்டு வெளியிடப்படும் சில அறிவுசார் சஞ்சிகைகளும் உலக அளவில் பிரசித்தம் வாய்ந்தவை. இவைகள் ஆய்வுபூர்வமான, மற்றும் ஆழமான வாசிப்புக்களை கொண்டவர்களை மாத்திரமே இலக்காக கொண்டவை.

தமிழ் இலக்கிய வாசகர்களுக்காக வெளியிடப்படும் கனதி மிகு ஆக்கங்களை கொண்ட கணையாழி. கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவர்களுக்கு கட்டுரைகள் தாங்கிய IEEE. விஞ்ஞான ஆராய்ச்சி, அது தொடர்புடைய ஆய்வுகளை கொண்ட, இதில் தமது ஒரு கட்டுரை வெளிவருவது தான் தமது பிறவிப்பயன்  என ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் போற்றுகின்ற நேச்சர் (NATURE) போன்றவை  இவற்றிற்கான சில எடுத்துக்காட்டுகள். அதே போன்று மருத்துவத்துறையிலும் ஓர் இதழ்  உள்ளது. அதுதான் த லான்செட் The Lancet. இது உலகின் பழமையான, மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்தது என அறியப்பட்ட பொது மருத்துவ (General Medicine) இதழ்களில் ஒன்றாகும். இதன் அண்மைய பிரதி நமக்கு அதிர்ச்சி தரும் ஆய்வொன்றைத் தாங்கி வந்திருக்கிறது.

சமீபத்திய பத்தாண்டுகளில் தெற்காசியாவில் அதாவது பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சனையாக 2-ம் வகை நீரிழிவு (Type 2 Diabetes ) வேகமாக வளர்ந்திருக்கிறது என்ற பீடிகையுடன் அந்த கட்டுரை தொடங்குகிறது.

“இந்த நவீன காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம், தொழில்மயமாக்கல், நகர்ப்புறமயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றுடன் தொடர்புடைய பெரிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பன  இவ்வாறான  தொற்றா நோய்கள்(non communicable) அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாக இனம் காணப்பட்டிருக்கின்றன” என்று தொடர்ந்து செல்லும் கட்டுரை போகப்போக வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றுகிறது.

இதில் :

  1. ஊட்டச்சத்துமிக்க உணவுகளின்( nutritious food) பாவனையின் அளவும்  தரமும் குறைதல்.
  2. உடற்பயிற்சி (Exercise), உடல் உழைப்பு (Physical labor)  குறைதல்.
  3.  அதிகரித்து வரும்  சோம்பேறித்தனமான வாழ்கை முறை, தொழில்தன்மை. (Sedentary  lifestyle and Non active working environment).
  4. உடற்பருமன் , உடல்நிறை அதிகரிப்பு ஆகியவை இந்த நாடுகளில்  2-ம் வகை  நீரிழிவு மற்றும் அது தொடர்புடைய நோய்கள்  அதிகரிப்பதற்கான ஆபத்து மிக்க காரணிகளாக அடையாளப்படுத்திக் கட்டப்பட்டுள்ளன.

படிக்க:
♦ “பக்கத்துல ஒருத்தங்க சொன்னாங்க” | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் | மருத்துவர் B.R.J. கண்ணன்

2017-ம் ஆண்டில் நேபாளம் முதல் இந்தியா வரை  4% முதல் 8%  வரையில் (அண்ணளவாக பத்துப் பேரில் ஒருவர்) நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாக சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி இந்த நோயின் பரவ(ம்ப)லை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

அதே நேரத்தில் நேபாளத்தில் 16.7  சதவிகிதம் பேர் (நூற்றுக்கு பதினாறு பேரும் )  இலங்கையில் 26.1% ஆனோர் (நூற்றுக்கு இருபத்தாறு பேரும் )அதிகமான உடல் பருமனைக் கொண்டவர்களாக மாறி இருக்கின்றனர் என்பது நாம் கவனம் செலுத்த தவறிய ஒரு நோயாகவே மாறி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் குழந்தைகள், இளம்பருவ வாலிபர்கள் மற்றும் பெண்களில் அதிகரித்துவரும் அதிக உடற்பருமன் விகிதம் (obesity or BMI)  இந்த 2-ம் வகை நீரிழிவு நோய்த்தாக்க அபாயத்திற்கு வழிவகுக்கின்ற மிகப்பெரும் காரணியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேற் கூறியவைகள் எல்லாமே தவிர்க்க கூடிய, மாற்றம் செய்யக்கூடிய காரணிகள் (Modifiable Risk Factors) தான் என்பது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நாம் யாரும் தப்ப முடியாத, மாற்றம் செய்ய முடியாத(Non modifiable risk factor ), நம்மோடு ஒட்டிப் பிறந்த, நமது உடலமைப்பின் (body composition) மூலமாக வரக்கூடிய ஆபத்து தான் நாம் அதிகம் பயம் கொள்ள வேண்டிய, முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காரணியாக  இருக்கிறது. அது தான் the south Asian phenotype அதாவது தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்  என்கிற காரணி. (அரபிகள், வெள்ளைக்காரர்கள் எல்லாம் நம்மை விட  எவ்வளவோ அதிகமாக சாப்பிடுகின்றனர் ஆனால் அவர்களுக்கு இந்த மாதிரி வருத்தம் எல்லாம் வருவதில்லையே என்ற உங்களின் அங்கலாய்ப்பிற்கும் இதுதான் காரணம்.)

பிற இன குழுக்கள், பிற நாட்டு மக்களை காட்டிலும் தென் ஆசிய மக்களுக்கு இந்த 2ம் வகை நீரிழிவு பெரும்பாலும் இளவயதில் வருவதற்கும், மிக சிக்கலான நிலமைகள் உதாரணமாக சிறுநீரகக் கோளாறு (kidney failure ), மாரடைப்பு (heart attack ), ஆறாத நாட்பட்ட புண்களினால் கை, கால் வெட்டி அகற்றப்படுதல் (limb amputation ) போன்றவை  விரைவாக ஏற்படுவதற்கும் இந்த உடல் அமைப்பு (body composition) தான் ஆபத்துமிக்க காரணியாக அடிக்கோடிடப்பட்டிருக்கிறது. இதனால் தென்  ஆசிய மக்கள் இது தொடர்பில் மிக கரிசனத்துடன் இருக்க வேண்டும் என அந்த ஆய்வறிக்கை பரிந்துரை செய்கிறது. அது போல இந்த உகந்த ஒரு உடல் அமைப்பு காரணமாக இந்த நோய் தெற்காசியர்களிடம் அதிகரித்து செல்வதனால் தீவிரமாக நோய் தடுப்பு இலக்குகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்த கட்டுரை முற்றுப்பெறுகிறது.

ஆக மொத்தத்தில் இந்த இரண்டாம் வகை நீரிழிவு நம் எல்லோருக்கும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்கனவே நமது உடம்பில் இருக்கின்றன. நாம் தெற்காசியாவில் பிறந்தது  ஒன்றே போதும் நாம் ஒவ்வொருவரும் இந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காரணி.

அப்படியானால் என்ன செய்வது? நமக்கு முன்னால் சில தெரிவுகள் இருக்கின்றன.  அவைகளை கவனமாக கையாள்வது தான் இதிலிருந்து தப்பிப்பதற்கான புத்திசாலித்தனமான வழிமுறையாக இருக்கும். மாற்றக் கூடிய காரணிகளை (modifiable risk factors) முறையாக கட்டுப்படுத்தி வைப்பதில் நாம் இன்று அடைகின்ற வெற்றி தான் நாளைய நோயற்ற வாழ்க்கைக்கான அஸ்திவாரமாக அமையும்.

இதற்காக இன்றிலிருந்து சிறுவர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள்,  தாய்மார்கள்  உட்பட  வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் நமது உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள முயற்சிப்போம். ஆரோக்கிய சத்துணவுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ள பழகுவோம். உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் பேணுவதற்கு உறுதி கொள்வோம். அதிக உடல் பருமன் உள்ளவர்கள் தங்களது உயரத்திற்கு ஏற்றவாறு உடல் எடையை குறைத்துக் கொள்ள முயற்சிகள்  மேற்கொள்வோம்.
அதே போன்று நமது வாழ்க்கை முறைகளை முற்றாக மாற்றுவோம், ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரிரு கிலோமீட்டர்களாவது நடந்து செல்ல பழகுவோம். தொடரான உடற்பயிற்சிகள் செய்வதற்கு முயற்சி செய்வோம். ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது உடல் வியர்க்கும் அளவுக்கு ஏதாவது  வீட்டு வேலைகளையோ அல்லது வேறு எந்த வகையான வேலைகளையோ செய்வதற்கு பழகிக்கொள்வோம்.

நமக்கு முன்னாலே உள்ள மிகச் சிறந்த தெரிவு  இவைகள் மட்டும்தான். நாம் கொஞ்சம் சிரத்தை எடுத்து இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றால் இன்னும் சில மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ நாமும் இந்த கொடிய நீரிழிவு நோயினால் பாதிக்கப் படப்போவது வெள்ளிடை மலை. நம் மொத்த எதிர்கால சமூகமும்  நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

பின்குறிப்பு :

“நீரிழிவு என்ற நோயே கிடையாது, அவ்வாறு கூறுவது ஒரு பொய்; வைத்தியர்கள் மற்றும் மருந்து கம்பெனிகள் தங்கள் வியாபாரத்திற்காக சொல்லுகின்ற ஒரு மோசடி” என்று நம்புகின்ற, சொல்லுகின்ற கூகுள் விஞ்சானிகள், பேஸ்புக் போராளிகள், வாட்ஸ்-அப் சயாரிகள் யாராவது இருப்பீர்கள் என்றால்  நீங்களும் இந்த முறைகளை பயன்படுத்தி உங்களை தற்காத்துக் கொள்ள எந்த தடைகளும் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.

நீரிழிவு நோயை ஒரு மாதத்தில் முற்றாக குணப்படுத்துகிறேன் பேர்வழி இதோ மருந்துகள், இந்த கசாயத்தை, இந்த தண்ணியை குடியுங்கள்; இந்த வல்லப்பட்டை, இந்த கொட்டையை சாப்பிடுங்கள் என்று  கண்டதையெல்லாம்  பகிரும் (share ) அறிவுசீவிகள் ஒரே ஒரு நீரிழிவு நோயாளியை முற்றாக குணப்படுத்திக் காட்டுங்கள். அடுத்த வருட மருத்துவம், இரசாயனவியல் போன்றவற்றிக்கான இரண்டு நோபல் பரிசுகளும் உங்களுக்குதான்.

மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL)
Senior Registrar in Peadiatrics, 
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka


இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

தனியார் கல்லூரியிலிருந்து ஒரு உதவிப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை !

டந்த 06-12-2018 அன்று இந்து தமிழ் நாளிதழில் வெளியான, “தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் : நவீனக் கொத்தடிமைகளா?” என்ற கட்டுரை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கிடையில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அந்தக் கட்டுரையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (AICTE) விதிகளுக்குப் புறம்பாக தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களிடம் சான்றிதழ்களைப் பிணையாக வாங்கி வைத்துக்கொண்டதையும், வேறு பணிக்குச் செல்வதன் நிமித்தம் உதவிப் பேராசிரியர் ஒருவர் தனது அசல் சான்றிதழ்களைத் திரும்பக் கேட்டபோது, கல்லூரி நிர்வாகம் கொடுக்க மறுத்து அவரை அலைக்கழித்ததையும், விளைவாக அவர் தற்கொலை செய்துகொண்டதையும் கட்டுரை ஆசிரியர் பதிவுசெய்திருந்தார்.

தவிர, மற்றொரு பொறியியல் கல்லூரியில் ஊதியத்தைக் காரணமின்றிக் குறைத்தல்; முறையான காரணமும் முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்தல்; பணியிலிருந்து விலகிக்கொள்ள விரும்புவோருக்குச் சான்றிதழ்களை வழங்காமல் அலைக்கழித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக தனது சகபாடி ஆசிரியர்கள் சகிதம் போராட்டத்தில் இறங்கிய பேராசிரியர் ஒருவரை குண்டர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி அவர் உயிருக்குப் போராடி பின்னர் உயிர் பிழைத்ததையும் அவர் பதிவுசெய்திருந்தார்.

இந்தக் கட்டுரை பிரசுரமாகி சிறிது நாள்களிலேயே அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பணியில் சேரும் ஆசிரியர்கள் / ஆசிரியர் அல்லாதோரின் அசல் சான்றிதழ்களைத் தக்கவைத்துக்கொள்வது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும், தொடர் அறிவுறுத்தல்களுக்குப் பிறகும் அத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் பொறியியல் கல்லூரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தவிர, ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரிக்கும் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற முத்திரையுடன் சான்றிதழ்களைத் திருப்பி ஒப்படைக்குமாறு AICTE கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாகவும் வேறொரு தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் வாயிலாகத் தனிப்பட்ட முறையில் நான் அறிந்துகொண்டேன். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது?

கள யதார்த்தம் AICTE-க்குத் தெரியுமோ இல்லையோ மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். எல்லா தனியார் பொறியியல் கல்லூரிகளும் இந்தக் கறாரான விதிமுறையைப் பின்பற்றி ஒழுகுகின்றனவா? தங்கள் போக்கை அவை மாற்றிக்கொண்டனவா?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் தோராயமாக இரண்டு ஆண்டுகள் உதவிப் பேராசிரியராக நான் பணியாற்றிவந்தேன். கடந்த ஜனவரி 22 அன்று எனது பணியை நான் ராஜினாமா செய்தேன். நான் பணியில் சேருகிற சமயம், புதிதாய் பணியில் சேர வரும் ஏனைய நபர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களைப் பிணையாக வாங்கி வைத்துக்கொள்வதுபோல எனது சான்றிதழ்களையும் பிணையாகக் கேட்டார்கள். அப்பொழுதெல்லாம் இது சட்டவிரோதம், விதி மீறல், AICTE-ன் நியதிகளுக்குப் புறம்பானது என்பது எங்களுக்கு, குறைந்தபட்சம் புதிதாக இந்தப் பணியில் சேர்ந்த எனக்கு, தெரியாது. மாறாக, இவை எல்லாம் AICTE-ன் விதிமுறைகளுள் ஒன்றுதானோ என்கிற எண்ணமே என்னுள் நிழலாடியது. பணியில் சேர்ந்து வெகு நாள்கள் கழித்தே கல்லூரி நிர்வாகத்தின் இந்தச் செயல் அப்பட்டமான விதிமீறல் என்பதும், பணியில் இருப்பவர்கள் திடுதிப்பென்று ராஜினாமா செய்துவிடக் கூடாது, வேறு பணிகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் கைக்கொள்ளும் உத்தி என்பதும் தெரியவந்தது.

ஏதேனும் பேராசிரியர்கள் தன்னிச்சையாக வேலையைவிட்டு நின்றுவிட வேண்டுமென்றோ இதைவிட மேம்பட்ட பணிகளுக்கான நேர்காணல்களில் கலந்துகொள்ள வேண்டுமென்றோ விரும்பி, தங்கள் அசல் சான்றிதழ்களைத் திரும்பக் கேட்டால் மூன்று மாதச் சம்பளத்தைப் பகரமாக அவர்கள் ஒப்படைத்தாக வேண்டிய அவலநிலை இங்கே.

படிக்க:
நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? வழக்கறிஞர் லஜபதி ராய் | இயக்குநர் அமீர்
பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்

2019 ஜனவரி 22 அன்று எனது ராஜினாமா கடிதத்தை கேக்றான் மேக்றான் கல்லூரி நிர்வாகத்திடம் சமர்ப்பித்தேன். சேர்மேனின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அடுத்தகட்ட முறைமைகளைக் கூற முடியும் என்றார் நிர்வாக அலுவலர் (AO). காத்திருந்தேன். ஒரு வாரம் கழித்து, ஒப்புதல் கிடைத்துவிட்டது என்றார். சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு ஏனைய முறைமைகளையும் நேரில் வந்து முடித்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். இல்லை, மூன்று மாதச் சம்பளத்தை நீங்கள் கொடுத்தாக வேண்டும் என்றார். இதில் ஏதேனும் சலுகைப் பெற்றுக்கொள்ள விழைந்தால் சேர்மேனைத்தான் நீங்கள் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்றார்.

மூன்று நாள்கள் கழித்து, சேர்மேனைச் சந்தித்துப் பேசுவதற்காக கல்லூரி சென்றேன். அவரது அறை முன்பு காத்திருந்தேன். தனிப்பட்ட உதவியாளர் உள்ளே சென்று விவரத்தைக் கூறினார். இப்பொழுது அதற்கெல்லாம் நேரமில்லை, அவரைக் அகடமிக் டைரக்டரைச் சென்று சந்திக்கச் சொல்லுங்கள் என்று கூறி உதவியாளரை அனுப்பினார். அகடமிக் டைரக்டரைச் சந்தித்து விவரத்தைக் கூறினேன்.

கடின உழைப்பினூடாக நாங்கள் பெற்றுக்கொண்ட சான்றிதழ்களை மீண்டும் கேட்டால், மூன்று மாதச் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் என்கிறீர்களே, எங்கள் சான்றிதழ் எங்கள் உரிமை இல்லையா என்றேன். நீங்கள் கொடுக்கும் சம்பளம் எங்களைப் போன்றவர்களின் அன்றாடத் தேவைகளுக்கே சரியாய்ப் போய்விடுகிறது. அதுவும், என்போன்ற சாமானியர்களுக்கு மூன்று மாதச் சம்பளம் என்பது மிகப் பெரிய தொகை, அதை உங்களுக்குத் தந்துவிட்டால் எங்கள் குடும்பத்தை யார் கவனிப்பது என்று கேட்டேன். அவர், ‘இது நிர்வாக விதிமுறை சார், இதற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ என்றார்.

சார், ஓரிரு மாதங்கள் முன்புதான், ஆசிரியர்களின் சான்றிதழ்களைப் பிணையாக வாங்கி வைத்துக்கொள்வது விதிமீறல், தண்டனைக்கு உரிய குற்றம் என்ற கறாரான எச்சரிக்கை அறிவிக்கை ஒன்றை AICTE வெளியிட்டிருக்கிறது. அதையும் மீறி சான்றிதழ்களை இப்படி திருப்பித் தர மறுப்பதும், மூன்று மாதச் சம்பளத்தைப் பகரமாகக் கேட்டு அலைக்கழிப்பதும் சட்டவிரோதம் இல்லையா, விதிமீறல் இல்லையா என்றேன்.

இதையெல்லாம் நீங்கள் சேர்மேனிடம்தான் சார் பேச வேண்டும் என்றார். மீண்டும் சேர்மேனைப் பார்ப்பதற்காக அவர் அறைக்குச் சென்றேன். வெளியில் காத்திருந்தேன். பார்க்க முடியாது, அகடமிக் டைரக்டர் வழியாகத்தான் வர வேண்டும் என்கிற சமிக்ஞை வந்தது. மீண்டும் அக்கெடமிக் டைரக்டரைச் சென்று பார்த்தேன். நடந்ததைக் கூறினேன். இதற்கு என்னதான் சார் வழி என்று கேட்டேன்.

சேர்மேன் ஒருமுறை கூறிவிட்டார் அல்லவா, மூன்று மாதச் சம்பளம் வைத்தால்தான் சான்றிதழ் என்று. இதுகுறித்து திரும்பத் திரும்ப அவரிடம் சென்று பேசிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் வேண்டுமானால், ‘சம்பளத் தொகையைக் கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறேன் …’ என்று இன்னொரு கடிதம் ஒன்றை எழுதி கல்லூரி முதல்வரிடம் (Principal) கொடுங்கள். அவர் வழியாகச் சம்பிரதாயமாகவே வரட்டும். கடிதத்தில் உள்ள உங்கள் கோரிக்கையை வைத்து வேண்டுமானால் சேர்மேன் சாரிடம் பேசிப் பார்க்கலாம், என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்றார்.

அவ்வாறே கல்லூரி முதல்வரிடம் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்தேன். கடிதம் சேர்மேனின் பார்வைக்குச் சென்று அவர் பதில் கூறினால் அலுவலகத்திலிருந்து உங்களுக்குத் தெரியப்படுத்துவார்கள் என்றார் முதல்வர்.

பத்து நாள்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை. ஏறக்குறைய பன்னிரண்டு நாள்கள் கழித்து இதுகுறித்து கேட்பதற்காக நிர்வாக அலுவலரை (AO) அலைபேசியில் அழைத்தேன். சார் இது கிரிடிகல் சிட்டுவேஷன். மறுபடியும் சேர்மேன் சாரிடம் இதுகுறித்து எதுவும் கேட்க முடியாது. நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். சேர்மேன் சார் என்னைப் பார்க்க மறுக்கிறார்; அகடமிக் டைரக்டர்தான் கடிதம் கொடுங்கள், இப்போதைக்கு வேறு வழியில்லை என்றார் என்று சொன்னேன். சரி சார், நான் இந்தக் கடிதத்தை அவரிடமே ஒப்படைத்துவிடுகிறேன். அவர் சேர்மேனிடம் எடுத்துச் செல்லட்டும். ஏதேனும் மறுமொழி வந்தால் தெரியப்படுத்துகிறேன் என்றார். காத்திருந்தேன்.

படிக்க:
பேராசிரியர்கள் வேலை நீக்கம் – வேல்டெக் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!
விஜயகாந்த் கல்லூரி பேராசிரியர் மீது கொலைவெறி தாக்குதல்!

ராஜினாமா கடிதம் கொடுத்து அன்றுடன் 23 நாள்கள் கழிந்துவிட்டிருந்தன. எனது முந்தைய உதவிப் பேராசிரியர் பணியிடத்தில் இன்னொருவரையும் நியமித்துவிட்டாயிற்று. ஆனால்,  எனது சான்றிதழ்களை இன்னமும் கொடுத்தபாடு இல்லை.

ராஜினாமா செய்து ஏறக்குறைய ஒரு மாதகாலம் நெருங்கிவிட்டிருந்த நிலையில் AO திரும்பக் கூப்பிடுவார் என்று காத்திருந்தேன். கூப்பிடவில்லை. இந்நிலையில் அகடமிக் டைரக்டரை கடந்த பிப்ரவரி 19-ம் தேதியன்று அலைபேசியில் விளித்தேன். சான்றிதழ்களைத் திருப்பித் தருவதுகுறித்து கேட்டேன். சேர்மேன் சார் நல்ல மூடில் இருக்கும்போதுதான் சார் இந்த விவகாரத்தை எடுத்துச் சொல்ல முடியும் என்றார். அதுவரைக்குமெல்லாம் என்னால் எப்படி சார் காத்திருக்க முடியும். நானும் வேறு வேலை தேட வேண்டியிருக்கிறது. சான்றிதழ்கள் இல்லாமல் எதைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை. குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். தவிர, எனது ஐந்துநாள் சம்பளத்தைவேறு எந்தக் காரணமும் இல்லாமல் பிடித்தம் செய்திருக்கிறார்கள். அதுவும் எனக்கு வேண்டும். சேர்மேன் சார் முடிவாக என்னதான் சொல்கிறார் என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள் சார் என்றேன். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கொள்ளுங்கள் சார், சேர்மேனின் மறுமொழி என்ன என்பதை அதற்குள் தெரியப்படுத்துகிறேன் என்றார்.

ஒரு வாரம் கழித்து, அதாவது 26 பிப்ரவரி அன்று, தொடர்புகொண்டேன். தெளிவான பதில் இல்லை. தொடர்ந்துவந்த நாள்களில் இரண்டு, மூன்று முறை அலைபேசியில் அழைத்துப் பார்த்துவிட்டேன். அழைப்பைச் சட்டைசெய்தாரில்லை. இறுதியாக, வேறு வழி தெரியாமல், சான்றிதழ்கள் கிடைக்குமா கிடைக்காதா என்று தெளிவான ஒரு பதிலைச் சொல்லுமாறு அவரது வாட்சப் நம்பரில் குரல் தகவல் (Voice Message) ஒன்றைப் பதிவிட்டேன், ஆக்கபூர்வ மறுமொழியை எதிர்பார்த்தவனாக. பதிவிட்டு ஐந்து நாள்கள் ஆகியும் எந்த மறுமொழியும் இல்லை.

ராஜினாமா செய்ததிலிருந்து அன்றுவரை, ஏறக்குறைய முப்பத்தாறு நாள்களில், சான்றிதழ்களை வாங்குவது பற்றிப் பேச மூன்று முறை கல்லூரிக்குப் போய்வந்திருந்தேன். மூன்று முறையுமே எனது அலைச்சல் வீணாய்ப் போனதுதான் மிச்சம். தவிர, அலைபேசி, வாட்சப் உரையாடல்கள் இத்யாதி.

நேரமும் நாள்களும் விரயமாகிக்கொண்டிருந்தன. பேச்சுவார்த்தைகளைக் கொண்டு எந்தப் பலனும் இல்லை. எஞ்சியிருந்தவையெல்லாம் மன அழுத்தமும் அலைக்கழிப்புகளும் மட்டும்தான்.

இப்படிப்பட்டவர்களிடம் நமது உரிமைகளைக் கேட்க வேண்டிய முறையில்தான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். முதல் கட்டமாக, “கேக்றான் மேக்றான் பொறியியல் கல்லூரி: சான்றிதழ்களுக்காக ஆசிரியர்களை அலைக்கழிக்கும் படலம், நீதி கிடைக்குமா?!” என்ற தலைப்பில், எனது அலைக்கழிப்பு அனுபவங்களை எல்லாம் ஒரு கட்டுரையாக எழுதி எனது வலைப்பூவில் பதிவிட்டேன். சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வாட்சப்பில், அதிவேகமாகப் பரவிய அந்தக் கட்டுரையும் அதில் இருந்த உண்மைகளும் கல்லூரி நிர்வாகத்தின் சுயரூபம் அதில் தோலுரிக்கப்பட்டிருந்த விதமும் கேக்றான் மேக்றான் பொறியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு அவப்பெயரையும் நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கக்கூடும். உடனடியாக வந்து அசல் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்கள். சான்றிதழ்களைக் கொடுத்துவிடுகிறோம், பகரமாக உங்கள் வலைப்பூவில் நீங்கள் பதிவிட்டிருக்கும் கட்டுரையை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு கட்டுரையை அகற்றினேன்.

என்றாலும், அது என்னுடைய பிரச்சினை மட்டுமல்ல; பொதுப் பிரச்சினை; தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்களின் பிரச்சினை. கடந்த ஆண்டு சென்னையில் சம்பவித்த – கட்டுரையின் ஆரம்பப் பத்திகளில் நான் கோடிகாட்டியிருக்கும் – துணைப் பேராசிரியர் வசந்தவாணனின் தற்கொலைச் சமபவத்தை நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். கல்லூரி நிர்வாகம் அசல் சான்றிதழ்களை உரிய நேரத்தில் கொடுக்க மறுத்து அலைக்கழித்ததன் விளைவே அந்தத் தற்கொலை. அவ்வகையில், பெரும்பாலான  தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் ஏதோ ஒரு வகையில், பல்வேறு தருணங்களில் அனுபவித்துவருகிற அலைக்கழிப்பின் ஒரு பரிமாணத்தையே எனது அலைக்கழிப்பினூடாக அந்தக் கட்டுரையில் நான் பதிவுசெய்திருந்தேன். அதைத்தான் தேவைக்கேற்ப செப்பம்செய்து இந்தக் கட்டுரையிலும் பதிவுசெய்திருக்கிறேன்.

(கோப்புப் படம்)

எனக்கு ஏறக்குறைய ஒரு மாதம் முன்பு ராஜினாமா கடிதம் கொடுத்த எனது சகபாடி ஆசிரியைக்கும், எனக்கு மூன்று மாதங்கள் முன்பு ராஜினாமா கடிதம் கொடுத்த பிறிதொரு ஆசிரியருக்கும், ஒன்பது மாதங்கள் முன்பு ராஜினாமா செய்த இன்னொரு ஆசிரியைக்கும், எனக்குப் பிறகு ராஜினாமா செய்த மற்றுமொரு ஆசிரியைக்கும் காரணமே இல்லாமல் ஒரு மாதச் சம்பளத்தைப் பிடித்தம் செய்திருக்கிறார்கள். சான்றிதழ்களுக்காகப் பணம் கேட்டு அலைக்கழிக்கும் விதிமீறல் ஒரு புறம் இருக்கட்டும், எந்தக் காரணமும் இல்லாமல் வேலை பார்த்ததற்கான ஒரு மாதச் சம்பளத்தைப் பிடித்திருக்கிறீர்களே எதற்காக என்று கேட்டால் பதில் வராது. மிஞ்சிப்போனால் இது சேர்மேன் சார் உத்தரவு, அதை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று ஒரே வாக்கியத்தில் முடித்துக்கொள்வார்கள். உண்மையோ பொய்யோ இதைக் கேட்பவர்கள் நம்பியாக வேண்டும். இதுதான் அவர்களின் யதேச்சதிகாரக் கொள்கை.

அரசாங்க பணிகளுக்கான நேர்காணல்களுக்குச் செல்வதற்காக தங்கள் அசல் சான்றிதழ்களை நிர்வாகம் சொல்லும் தொகையைச் செலுத்தி மீளப் பெற்றுக்கொள்வதற்கும், திருப்பி அவற்றை ஒப்படைக்கும் நேரத்தில் பிணையாக அவர்கள் கொடுத்த தொகையை மீண்டும் வாங்கிக்கொள்வதற்கும் எவ்வளவு தூரம் எனது சகபாடி ஊழியர்கள் அலைக்கழிந்திருக்கிறார்கள் என்பதை எனது பணிக் காலத்தில் பலமுறை நான் பார்த்திருக்கிறேன்.

படிக்க:
இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?
சுயநிதிக் கல்லூரிகள்: கல்வியா? கொள்ளையா? மொட்டையா?

சாமானியர்கள், சமூகப் படிநிலையில் கடைநிலையில் இருப்பவர்கள் எத்தனையோ பேர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாக, உதவிப் பேராசிரியர்களாகப் பணியில் இருக்கின்றனர். பிணையாக வாங்கி வைத்துக்கொண்ட அவர்களது சான்றிதழ்களை மீண்டும் அவர்களிடம் கொடுப்பதற்காக இரண்டு மாதச் சம்பளத்தைத் தா, மூன்று மாதச் சம்பளத்தைத் தா, ஐந்தாயிரத்தைக் கொடு, பத்தாயிரத்தைக் கொடு என்று கேட்டால் வாழ்வாதாரத்துக்கான மாற்றுமுறை குறித்தெல்லாம் யோசிக்க முடியாமல், மேம்பட்ட, அரசாங்கப் பணிகளிலெல்லாம் சேர இயலாமல் கையறுநிலைக்குத் தள்ளப்படும் அத்தகையோரின் தற்கொலைச் சம்பவங்கள் இனிவரும் நாள்களிலும் தொடராது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

குறிப்பு: விவகாரத்தில் தொடர்புடைய கல்லூரியின் அசல் பெயரைத் தவிர்த்திருக்கிறேன். பகரமாக ‘கேக்றான் மேக்றான்’ என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

சம்மில்


இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

பட்டணத்து நாயும் கிராமத்து மாடும் | தோழர் துரை சண்முகம்

”எத்தனையோ கதைய சினிமாவுல, டி.வி.யில் பார்க்கிறோம். புத்தகத்தில் படிக்கிறோம். ஆனால், நாம பார்க்க முடியாத கதைகள் நாட்டில எவ்வளோ இருக்கு தெரியுங்களா?..” அன்றாட வாழ்வில் எதிர்படும் சம்பவங்களை கதைபோல விவரிக்கிறார் தோழர் துரை சண்முகம். ”கதைபோல தோணும்… ஆனா கதையுமில்ல” என்ற பகுதியில் தொடர்ந்து உரையாடவிருக்கிறார்…

இந்தப் பதிவில், தனக்காக உழைத்து உழைத்து ஓய்ந்து போன ஒரு மாட்டை தனது குடும்பத்தில் ஒரு உறவாகக் கருதும் ஒரு விவசாயிக்கும் அவரது பட்டணத்து மகனுக்கும் இடையிலான உறவை, இந்த சமூகம் எதிர்கொண்டுவரும் அவல நிலையை ஒரு கதை போல விவரிக்கிறார்  தோழர் துரை சண்முகம் … காணொளியைக் காண …

பாருங்கள்! பகிருங்கள்!!

இயற்கையைக் காக்க சுவீடன் பழங்குடியினரின் போராட்டம் ! – படக் கட்டுரை

0

ரு புகைப்படக் கலைஞராக தான் பிறந்த மண்ணின் அழகை ஆவணப்படுத்தும் அதே நேரத்தில், தன்னுடைய தாய் மண் எதிர்கொள்ளும் அபாயங்களையும் ஆவணப்படுத்துகிறார் டோர் டுவோர்டா.

இயற்கையின் கொடைகளால் சூழப்பட்ட பைன் மரக்காடுகள் அதில் வாழும் பறவைகள், மலைகளின் ஊடாகத் தவழ்ந்து வரும் இதமான காற்று போன்றவற்றுக்கும், தங்களுக்கும் இடையேயான நீண்ட உறவு இருப்பதாக எண்ணுகிறார்.

சுவீடன் நாட்டின் வடக்கு பகுதியில் லாப்லேண்ட் மாகாணத்தில் உலகப் பாரம்பரிய சின்னங்களைப் பெற்றுள்ள ரண்டிஜார் என்ற நகரத்தில் வசித்து வருகிறார் டோர் டுவோர்டா. தலைமுறை தலைமுறையாய் சாமி பழங்குடியினர் வசித்து வந்த பூர்வீக நிலங்களும் இதே நகரத்தில்தான் உள்ளது.

தொடக்கத்தில் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்து பிறகு வேட்டைத் தொழிலுக்கு மாறி, இறுதியாக கலைமான்கள் வளர்ப்பதையே பிரதான தொழிலாக மாற்றிக்கொண்டுள்ளனர் சாமி பழங்குடியினர்.

தான் ஒரு புகைப்படக் கலைஞராக இருப்பதால், தன்னைச் சுற்றியுள்ள மலைகள், அருவிகளைப் புகைப்படங்கள் எடுத்து வைப்பது, குறிப்பாக சில நூறு வருடங்கள் பழமை வாய்ந்த க்விக்ஜாக்ச் என்ற கிராமத்தில் உள்ள பைன் மரக்காடுகளைப் படம்பிடிப்பதென்றால் டோருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இந்தக் காடு கலைமான், கரடி, லிங்க்ஸ் எனப்படும் காட்டுப்பூனை, கடமான் போன்ற பல்வேறு உயிரினங்களின் புகலிடமாக இருக்கிறது.

இந்தப் பகுதியில் ஒவ்வொரு முறை நுழையும்போதும், ஒரு பிரம்மாண்டமான தேவாலயம் ஒன்றில் முதல் முறையாக நுழைந்தபோது ஏற்பட்ட அனுபவம் கிடைக்கும். அவ்வளவு அழகான, பிரம்மாண்டமான காடு இது என்கிறார் டோர்.

நாங்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்கிறோம். மீன், பெர்ரி பழங்கள், இறைச்சி போன்றவற்றை நாங்கள் சந்தையில் வாங்கியதேயில்லை. எனக்குத் தேவையான ஆற்றலனைத்தையும் இயற்கையே கொடுக்கிறது. இப்படி வாழ்க்கையானது இயற்கையுடன் ஒன்றிப்போகும் நிகழ்வு தான் என்னைப் பொருத்தவரை மிக முக்கியமான ஒன்று என எண்ணுகிறேன் என்கிறார் டோர்.

ஒரு புகைப்படக் கலைஞனாகத் தன் குடும்பம் இயற்கையால் அரவணைக்கப்பட்டு வருவதையும், இயற்கை மீது தான் கொண்ட காதலையும், ஆவணப்படுத்த நினைக்கிறார். ஏனென்றால் இவையனைத்தும் ஒரு மாபெரும்  பேரிடரை நோக்கிக் காத்திருக்கின்றன.

கலைமான் மேய்ச்சல்குழுவினர் பனியால் உறைந்துகிடக்கும் ராட்னாவ்ரே ஏரியைக் கடந்து காலோக் என்ற இடத்தை நோக்கிச் செல்கின்றனர். 51 வகையான சாமி பழங்குடியினர் தங்களுடைய கலைமான்களுடன் மேய்ச்சலுக்காக இடம் மாறிச் செல்கின்றனர்.

இயற்கையில் எழில் வனப்பு எப்படி சுற்றுலாப் பயணிகளை, சாமி பழங்குடியினரின் பூர்வீக பகுதிகளைச் சுண்டியிழுக்கிறதோ அதேபோன்று கார்ப்பரேட் பெரு நிறுவனங்களையும் தன்பால் ஈர்க்கிறது. எப்படி நியாம்கிரி மலையை போஸ்கோ நிறுவனம் குறிவைத்ததோ அதையொத்த ஒரு நிகழ்வும்தான் டோரின் பூர்வீக நிலத்திலும் நடக்கிறது. சாமி பழங்குடிகளின் பூர்வீக நிலங்களில் தாது வளங்களை வெட்டியெடுக்க சுவீடன் நாட்டு அரசு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.

2006-ம் பிரிட்டனைச் சேர்ந்த பியோவுல்ஃப் மைனிங் பி.எல்.சி என்ற  நிறுவனத்திடம், சாமி பழங்குடியினர் வசித்துவரும் மலைக்குன்றுகளில் கனிமவளங்கள் இருக்கின்றனவா என சோதித்தறியும் உரிமம் தரப்பட்டது. யாக்மாக் என்ற சிறு நகரத்திலிருந்து 50 கிமீ தொலைவில்  இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை தான் சாமி பழங்குடியினரை இரு தரப்பாகப் பிரித்துவிட்டது. ஒருபுறம் வளர்ச்சி வேலைவாய்ப்பு என்ற உத்திரவாதம் கிடைத்தாலும் மறுபுறத்தில் காடுகள் சூறையாடப்பட்டு அரியவகை உயிரினங்கள் அழியக்கூடிய அச்சுறுத்தலும் இருப்பதுதான் இப்பகுதியில் வசிக்கும் மக்களை இரு பிரிவாகப் பிரித்துள்ளது.

டோர் இயற்கை வளங்களைப் பாதுகாக்கப் போராடிவரும் குழுவில் இணைந்துள்ளார். தான் சார்ந்த சாமி பழங்குடியினக் குடும்பத்தின் இயற்பெயரான டுவோர்டா என்ற பெயரையே ஒரு அமைப்பாக்கியுள்ளார். சுரங்க வேலைகளைத் தடுத்து நிறுத்துவதே தன்னுடைய பிரதான நோக்கமென்றும் அதற்காகத் தன்னுடைய உயிரையும் துறக்கத் தயார் என்றும் கூறுகிறார் டோர்.

டோர் டுவோர்டா

காலோக் பகுதியில் மேற்கொள்ளப்படும் மாபெரும் சுரங்கப் பணிகளுக்கெதிராக 2006-ம் ஆண்டு முதல் போராடி வரும் டோர்

வடக்கு சுவீடனின் அய்ட்டிக் பகுதியில் அமைந்துள்ள பெரிய தங்க மற்றும் செம்புச் சுரங்கம். 2013-ல் 13-ஆக இருந்த சுரங்கங்களின் எண்ணிக்கையை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 27-ஆக அதிகரிக்க முயற்சித்து வருவதாக சுவீடன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இயற்கையின் நளினம் சிதைக்கப்பட்டு வருகிறது, எங்கு பார்த்தாலும் வெடிச்சத்தம்தான் என்கிறார் டோர்.

பிரிட்டிஷ் நிறுவனமான பியோவுல்ஃப் மைனிங் பிஎல்சி ஆய்வு மேற்கொண்டிருக்கும் இடத்திற்கருகில் சாமி இனக்குழுவினருடன், சமூக ஆர்வலர்களும் முகாமிட்டுள்ளனர்.

2013-ல் நடந்த போராட்டத்தின் போது தாக்குதலுக்குள்ளான இளைஞரை அப்புறப்படுத்தும் போலீசு. இதுவரை ஆறுமுறை தாங்கள் போலிசை எதிர்த்து  நிற்க வேண்டியிருந்தது என்கிறார்.

ஜார்ஜ் ஸ்டென்பெர்க், பாரம்பரிய சாமி பாடகரான இவர் ஜாய்க்கர் என்றும் அழைக்கப்படுகிறார். சுற்றுலா வழிகாட்டியாக இருப்பது, மேடை நிகழ்ச்சிகள் நடத்துவது இந்த முகாமில் தங்கியிருப்பவர்களுக்குப் பரிச்சயமானது என்கிறார் டோர்.

ரண்டிஜார் ஏரி – பாழ்படுத்தப்படாத நிலங்களைப் பயன்படுத்துவதென்பது சாமி இனத்தின் கலாச்சாரத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். நிலம் சாமி இனத்தினரின் கைகளில் இருக்கும்போது, அங்கே கனிமச்சுரங்கம், காற்றாலை போன்ற எதுவுமே இருக்கமுடியாது என்கிறார் டோர்.

சுரங்கக் கம்பெனி தற்காலிகமாக வாபஸ் பெற்றாலும், 2017-ல் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் மேலும் ஒரு ஆய்வுப்பணியை மேற்கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

டோரின் மகள் ஆஸ்டிரிட்

டோரின் மகள் ஆஸ்டிரிட், அய்ட்டிக் பகுதியில் கழிவுகளை வெளியேற்றும் குட்டை ஒன்றில் நிற்கிறாள். அவள் அனுபவிக்கப்போகும் இயற்கைச் செல்வங்கள் இப்படி பாழ்பட்டுக் கிடக்கிறதே என்பதுதான் எனது பிரதான கவலை என்கிறார் டோரி.


தமிழாக்கம்: வரதன்
நன்றி:  அல்ஜசீரா 

பொள்ளாச்சி கொடூரம் : அணையா நெருப்பாய் தொடரும் மாணவர் போராட்டங்கள் !

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களை தேர்தல் பரபரப்புகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழகம் முழுக்க மாணவர்கள் இளைஞர்கள் தங்களது போராட்டத்தின் வீரியம் குறையாது தொடர்ந்து வருகின்றனர்.

*****

கோவையில்…

பொள்ளாச்சி பாலியல் வெறியாட்டத்தைக் கண்டித்து போராடிய கோவை சட்டக்கல்லூரி  மாணவர்கள் 167 பேர்  மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து, கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் 19.03.2019 அன்று உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

அனைத்து கல்லூரி மாணவர்களே !

மாணவர்களின்  போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்போம்!
கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான பொய் வழக்கு, அடக்குமுறையை முறியடிப்போம்!

இரவிலும் இடையறாது தொடர்ந்த உள்ளிருப்புப் போராட்டம்:

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை.

*****

பொள்ளாச்சி பாலியல் வன்முறை குற்றவாளிகளை தூக்கிலிடு ! ஆபாச இணையதளங்களை தடை செய்… ! என்ற முழக்கத்தை முன்வைத்து 19.03.2019 அன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் சென்னை பாரீஸ் கார்னர் அருகில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இம்மாணவர்களைக் கைது செய்த போலீசு, அவர்களை ரிமாண்ட் செய்யப் போவதாக மிரட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் இவ்விவகாரம் பரவியது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை விடுவித்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.


படிக்க:
பொள்ளாச்சி கொடூரம் : தெருவில் நிறுத்தி தண்டனை கொடு ! தீவிரமடையும் மாணவர் போராட்டம் !!
பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்
பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா

நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? வழக்கறிஞர் லஜபதி ராய் | இயக்குநர் அமீர்

“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.

மார்ச்-08 வெள்ளிக்கிழமையன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பூங்கோதை ஆலடி அருணா, சம்பத் சீனிவாசன், ச.ராஜசேகர், சுப.உதயகுமார், இயக்குனர் அமீர், கா.பிரபு ராஜதுரை, அ.மார்க்ஸ், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

இப்பதிவில் நூலாசிரியர் வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோரின் பேச்சு காணொளியாக இடம்பெறுகிறது. ஏனைய கருத்துரையாளர்களின் காணொளிகள் அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்.

”நாடார்கள் வரலாறு கருப்பா? காவியா? – வழக்கறிஞர் லஜபதிராய் :

சாதி மதம் தெரியாமத் தானே வளர்ந்தோம் – இயக்குநர் அமீர் :

மேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம் !

0

மோடியின் ஆட்சியில் மேல்தட்டுவர்க்கத்தின் செலவழிக்கும் திறன் மட்டும்தான்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறதாம் !

ரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பொருளாதாரம் சிக்கி சின்னாபின்னமானது. தொழிற்சாலை உற்பத்தி மிக மோசமான நிலைக்குப் போனது. முதலீடுகள் குறைந்தன, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவது கடந்த 45 ஆண்டுகாலத்தில் சந்தித்திராத வீழ்ச்சியை சந்தித்தது. கைவிடப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது.

இந்திய பொருளாதாரத்தின் பன்முகப்பட்ட வழிகளும் வீழ்ச்சியைக் கண்டுகொண்டிருக்க, ஒரே ஒரு வழியில் மட்டும் இந்தியப் பொருளாதாரம் ஏறுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அது மேல்தட்டு வர்க்கத்தின் நுகர்வு பொருளாதாரம்!

உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்துக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றால், அவர் இந்திய நுகர்வோருக்கும் தன்னுடைய அரசாங்கத்தின் செலவழிப்புக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறது குவார்ட்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை.

“கடந்த சில வருடங்களாக தனிநபர்களின் இறுதி நுகர்வு செலவழிப்பும் அரசின் இறுதி நுகர்வு செலவழிப்பும்  இந்திய பொருளாதாரத்தின் முதன்மையான வளர்ச்சி இயக்கிகளாக உள்ளன” என இந்த ஆண்டு வெளியான இந்திய தரவரிசை மற்றும் ஆய்வு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து எவரும் குறைகூறவில்லை என்றாலும்,  சுவற்றில் விழுந்த விரிசல்கள் இந்த அறிக்கையின் வாயிலாக வெளிப்படையாக தெரியத் துவங்கியுள்ளன.

விமானப் போக்குவரத்து:

இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறை வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து உலகின் வேகமாக வளர்ந்துவரும் சந்தையாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த இடத்தை பெற்றுள்ளது.  உண்மையில், 2025-ம் ஆண்டில் விமானப் போக்குவரத்தில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்திருக்கும்.

என்றாலும், இதில் எச்சரிக்கைகளும் உள்ளன. கச்சா எண்ணை விலை, ரூபாயின் மதிப்பு வீழ்வது, தீவிர போட்டி ஆகியவை இந்த சந்தையில் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் மூத்த தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், வான்வழியில் பறக்க திணறிக் கொண்டிருக்கிறது. சந்தை மதிப்பீட்டைப் பொறுத்தவரை முன்னணியில் இருக்கும் விமான நிறுவனமான  இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்துக் கொண்டிருப்பதை கடந்த சில காலாண்டு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வாகனங்கள்:

விமானப் போக்குவரத்தைப் போன்றே வாகன போக்குவரத்து துறையும் உள்ளது. 2021-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய மூன்றாவது பயணிகள் வாகன சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என இலண்டனைச் சேர்ந்த சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்தத் துறையின் வளர்ச்சி சமதளத்தை நோக்கியே உள்ளது. 2016-ம் ஆண்டின் பணமதிப்பு நீக்கமும், 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. அமலாக்கமும் 2017 ஏப்ரலிலிருந்து கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கான மாசு உமிழ்வு கட்டுப்பாடு நெறிமுறைகளும் இந்தத் துறையை பாதித்தன.

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களான மாருதி சுசூகி, அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் தங்களுடைய நிகர இலாபம் குறைந்துள்ளதாக அறிவித்தது. அதே காலாண்டில் இந்தத் துறையின் மற்றொரு முக்கிய நிறுவனமான டாடா மோட்டார்சும் நிகர இலாபம் குறைந்துள்ளதை அறிவித்தது.  கொள்கை நெறிமுறைகளில் மாற்றம், அதிகப்படியான எரிபொருள் விலை, ஓலா – உபேர் போன்றவற்றின் வருகை இந்தத் துறையை இழப்பை நோக்கித் தள்ளியது.

இரண்டு இலக்கங்களில் வளர்ச்சி பெற்றிருந்த இந்தத் துறை இப்போது 10%-க்கு கீழே குறையும் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஸ்மார்ட்போன்களின் விற்பனை:

இந்தியர்கள் மின்னணு சாதனங்களை வாங்கிக் குவிப்பதில் அதீத ஆர்வமுடையவர்கள். உலகில் விற்பனையாகும் பத்தில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்குபவர் இந்தியராக உள்ளார். கடந்த ஆண்டு இந்தத் துறையின் வளர்ச்சி 14.5%-ஆக இருந்தது. 142.3 அலகுகள் அனுப்பப்பட்டன.

ஆனால், இதனால் இந்திய நிறுவனங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. சீன போன் தயாரிப்பாளர்களான ஷிமோகி, விவோ, அப்போ, ஹூவாய் போன்ற நிறுவனங்கள்தான் பெரும் பயனைப் பெற்றன. சிறப்பான விலை, சலுகைகள் மூலம் சீன நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தன.

தொலைத் தொடர்பு சேவை வழங்கும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., உள்பட பல தனியார் நிறுவனங்களும் இந்தியாவின் பணக்கார மனிதரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவால் பாதிக்கப்பட்டன.  2018-ம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 90 ஆயிரம் பணியாளர்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.  கடுமையான போட்டி, குறைந்த விலை போன்றவை இந்தத் துறையை வீழ்த்தின.

இணைய வணிகம்:

இந்தியர்கள் மளிகை பொருட்களிலிருந்து நகைகள் வரை ஆன்லைனில் பெற விரும்புகிறார்கள்.  விளைவாக, மொத்த விற்பனை மதிப்பு (சந்தையில் விற்பனையாகும் பொருட்களின் மொத்த மதிப்பு) அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

இந்திய இணைய வணிகத்தின் விற்பனை தற்போதைய மதிப்பு 38.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.  2020 மார்சுக்குள் இந்த மதிப்பு 125 பில்லியன் டாலரிலிருந்து 150 பில்லியன் டாலருக்குள் உயரும் என கணிப்பு ஒன்று சொல்கிறது. ஆனால், கொள்கை நெறிமுறைகளில் மாற்றம் ஏற்படும்போது இதுவும் கூட மாறக்கூடும்.

புதிய இணைய வணிக நெறிமுறை சில்லறை வணிகர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அது பெரிய அடியாக இருக்கும்.  புதிய நேரடி அந்நிய முதலீட்டு நெறிகளின் விளைவாக, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டின் நட்டம் 35 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இது நிலையானது தானா?

தொழிற்சாலை மற்றும் முதலீடுகளின் வளர்ச்சி என்கிற துணையுடன் நுகர்வாலும் அரசின் செலவழிப்பாலும் நிகழும் பொருளாதார வளர்ச்சியே ஆரோக்கியமானது. “நுகர்வால் நிகழும் வளர்ச்சி, எதிர்காலத்தில் தேக்கத்தை சந்திக்கக்கூடும். ஏனெனில், திறனை உருவாக்குவதற்கான வரம்புகளும் கடன் சுமைகளால் குறிப்பாக குடும்பங்களில் உள்ள கடன் சுமைகளால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளாலும் அது தேக்கத்தை சந்திக்கக்கூடும்”என 2017-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

மிகப்பெரிய நுகர்வு சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி தவிர்க்க முடியாதது. ஆனால், அது முழுமையான வளர்ச்சியுடன் கூடியதாக இல்லாதபோது பிரச்சினைக்குரியதாகிறது என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

படிக்க:
சோறு, சப்பாத்தி, புரோட்டா, பூரி, தால் எல்லாத்துக்கும் ஒரே கரண்டிதான் | கும்ஹியா தொழிலாளிகள் படக்கட்டுரை
முறைகேடுகளே சகஜமாகிப் போன குரூப் டி தேர்வு | செங்கொடி

உண்மையில் 2030-ம் ஆண்டு இந்தியாவின் நுகர்வு நான்கு மடங்காக அதிகரித்திருக்கும் என உலக  பொருளாதார மன்றத்தின் அறிக்கை கூறியது. “அப்போது அது இந்த உலகின் இளம் நாடாக இருக்கும். ஒரு பில்லியனுக்கும் அதிகமான இணைய இணைப்பு பெற்ற வீடுகளைக் கொண்ட நாடாகவும் அது இருக்கும். புதிய இந்தியாவின் நுகர்வோர் பணக்காரர்களாக இருப்பார்கள்; பணத்தை செலவழிக்க விரும்புகிறவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய முன்னோடிகளைப் போல் அல்லாமல் ஒரு குறிப்பிட்ட தேர்வை விரும்புகிறவர்களாக அவர்கள் இருப்பார்கள்” என அந்த அறிக்கை கூறியது.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, மிகப் பெரும் நுகர்வு சந்தை என்பது உண்மைதான்.  ஆனால், மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் பறிபோன வேலைவாய்ப்புகள், பணிக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள், நலிவடைந்த தொழில்துறை, அழிந்துபோன சிறுதொழில்துறை, அதிகரித்து வரும் தனியார்மயம் இவை யாவும் பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளியவை. இவற்றை சரிசெய்யாமல், நுகர்வு பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்குமானால், அது மிகப் பெரும் சமூக சீர்கேட்டைத்தான் உருவாக்கும். அதுகுறித்து எந்த பொருளாதார நிபுணர்களும் கவலைப்படுவதில்லை.


அனிதா
நன்றி
: scroll