Wednesday, October 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 422

காலை மதியம் டீ – நைட்ல மட்டும் சப்பாத்தி செய்வோம் !

வினவு புகைப்படச் செய்தியாளர்

சென்னை மாதவரம் – எர்ணாவூர் நெடுஞ்சாலையில் கண்ணில் பட்ட இடங்களில் எல்லாம் சிறு கடைகளை போட்டு பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் தொழிலாளிகளை பார்க்கும்போதே நிச்சயம் பல கேள்விகள் எழும்.  ஒரு கூரையின் கீழ் அனைத்தும் கிடைக்கும் வகையில் வானுயர வணிக மால்களைக் கட்டி மக்களை சுண்டி இழுக்கும் கார்ப்பரேட் பாணியிலான நிறுவனங்களுக்கு மத்தியில், இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? யார் இவர்களிடம் வாங்குவார்கள்.? அப்படியே வாங்கினாலும் இதில் வரும் வருமானத்தைக் கொண்டு எவ்வாறு வாழ்க்கையை நடத்துவார்கள்?

முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் நுகர்வு கலாச்சாரத்தை விடுத்து மிகச்சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கே குறைந்தபட்ச நிதி ஆதாரம் தேவை. அதை இவர்கள் எவ்வாறு ஈடுகட்டுகிறார்கள்? அந்த சிறு கடை மக்களிடமே கேட்டுப் பார்ப்போம்.

திருநாவுக்கரசு, துண்டு, கைக்குட்டை வியாபாரம்.

சொந்த ஊர் செஞ்சிக்கோட்டை. அங்க இருந்து இங்க வந்து முப்பது வருஷம் ஆகுது. ஊர்ல கொஞ்சம் நிலம் இருக்கு. அதுல ஒன்னும் லாபம் இல்ல. அங்க இருந்தா பொழக்க முடியாதுன்னு இங்க வந்தேன். இப்ப வரைக்கும் ஊருக்கு போறதில்ல. நான் இந்த தொழிலை ஒரு ஆறு மாசமா பண்ணிட்டு வரேன். இதுக்கு முன்னாடி மணலி மார்கெட்டுல சொந்தமா டி.டி.பி. சென்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை வச்சிருந்தேன். ஜெயலலிதா பீரியடுல அடிக்கடி ஏற்ப்ட்ட மின் தடையால தொழில் நிறைய பாதிக்கப்பட்டுடுச்சி.அந்த தொழிலை மூடிட்டு துணிக்கடை ஒன்னு வச்சேன். அதுவும் பெருத்த நஷ்டத்துல போயிடுச்சி. எந்த வேலையும் செய்யாம இருக்க முடியாது. மூனும் பொண்ணுங்க. கரை சேர்க்கணுமே.. இப்பதான் பெரிய பொண்ணுக்கு அஞ்சி லட்ச ரூபா கடன் வாங்கி கல்யாணத்த பண்ணேன். சும்மா இருக்க முடியுமா? வேற வழியில்லாம ஒரு ஏழாயிரபா முதலீடு போட்டு இந்த கடைய நடத்திட்டு வரேன்.

இந்த சரக்கு எல்லாம் வாரத்துக்கு இரண்டு முறை பாரீஸ் போயிட்டு வாங்கிட்டு வருவேன். இதுல ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா வருமானம் கிடைச்சிடும். ஒரு நாளைக்கு கிடக்காம கூட போயிடும். பெரும்பாலும் என்கிட்ட வாங்குறவங்க எல்லோரும் பாவப்பட்டு வாங்குவாங்க. நம்மள மாதிரி ஆளுங்க குறைவா இருக்கேன்னு வாங்குவாங்க. வர வருமானத்துல என்னோட எல்லாத் தேவையையும் குறைச்சிகிறேன். பொண்டாட்டி புள்ளைங்கள கூட வெளில எங்கயும் கூட்டிட்டு போறது கிடையாது. அப்படிதான் வாழ்க்கை போயிட்டு இருக்கு.

அப்துல் கபீர், டி-சர்ட் – பனியன் வியாபாரம்.

ங்க அப்பாவும் இந்த மாதிரி வியாபாரம் தான் பண்ணிட்டு இருந்தாரு. பிளாஸ்டிக் பொருள் விப்பாரு. நான் அஞ்சாவது படிக்கும்போது இறந்துட்டாரு. அதோட படிப்பை நிறுத்திட்டு சிம்னி விளக்கு தயாரிக்கிற கடையில வேலை செஞ்சிட்டு இருந்தேன்… எட்டு வருஷத்துக்கும் மேல அந்த வேலை பார்த்தேன். அங்கேயே இருந்தா முன்னேற முடியாதுன்னு எங்க மாமா கூட்டிட்டு வந்து அவரோட துணி கடையில வேலை செய்ய சொன்னாரு. சென்ட்ரல்’ல தான் வித்திட்டு இருந்தேன்.

அப்புறம் ஆடவர் துணி விற்பனை மையத்துல கொஞ்ச நாள் சேல்ஸ்மேனா வேலை பார்த்தேன். அங்கேயும் சம்பளம் பத்தல.. அப்புறம்தான் இந்த கடையை வச்சி ஓட்டிக்கிட்டு இருக்கேன். இதுவும் என்னோடது இல்ல.. எங்க மாமா மொத்தமா வாங்கிட்டு வந்து விக்க சொல்லி கொடுத்திருக்காரு. எவ்ளோ விக்குதோ அதுக்கான கணக்கை கொடுத்திட்டு ஒரு நாளைக்கு ஐநூரு ரூபா எடுத்துப்பேன்.. இந்த துணியெல்லாம் திருப்பூர்ல இருந்து வாங்கிட்டு வருவாரு.. நானே சொந்தமா வாங்கிட்டு வந்து விக்கலாம்னா கையில காசு இல்ல.. பசங்க தனியார் பள்ளிக்கூடத்துல படிக்கிறாங்க.. அவங்களுக்கு பீஸ் கட்டத்தான் சரியா இருக்கும்.பிள்ளைங்களோட வாழ்க்கை தானே முக்கியம்.

இந்த இடத்துலயே மூணு வருஷமா கடை போட்டிருக்கேன். முன்ன எல்லாம் போலீசு தொல்லை அதிகமா இருக்கும். பிளாட்பார்ம் கடைன்னு கேசு போட்டு பைன் போடுவாங்க. அப்புறம் மாநகராட்சிக்கு மாமூல் கட்டணும்.. இப்ப மாநகராட்சி கடை போடுறதுக்கு ஒரு கார்டு கொடுத்திருக்கான்.  அதனால் அந்த பிரச்சனை இல்ல. இந்த வியாபாரத்துல யாரும் நிக்கிறது கிடையாது. கொஞ்ச நாள்ல போயிடுவாங்க… எனக்கும் இந்த வேலை செய்யிரதுல விருப்பம் இருக்கோ, இல்லையோ வேற வழி இல்ல. இளைஞர்கள் வாங்குறாங்க. அவர்களால வாழ்க்கை ஓடுது!

சரவணன், குளிரூட்டும் கண்ணாடி விற்பவர்.

நான் இருபத்தி அஞ்சி வருஷமா இந்த மாதிரி தெருவுல தான் வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி பாரிஸ்ல கடை போட்டிருந்தேன்… அங்க இருந்து எங்கள காலி பண்ணிட்டாங்க…  இங்க வந்து பத்து வருஷம் ஆவுது… பெரம்பூர்ல வீடு வாடகை எடுத்து தங்கி இருக்கேன். மாசம் நாலாயிரத்து ஐநூறு ரூபா வாடக… பசங்க இப்ப தான்  7, 10 வது படிக்குதுங்க… இந்த வேலையே செஞ்சி எனக்கு பழகிடுச்சி…இதத் தவிர வேற வேலையும் தெரியாது. இப்ப இங்க இருந்தும் காலி பண்ண சொல்லுறாங்க.. மெட்ரோ ரயில் வருதாம்..

நாகு, சன்னல் கூடை விற்பவர்.

நாலு வருஷமா தான் இந்த வேலையை செய்யுறேன். இந்த பை வித்தாலும் விக்கலனாலும் ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா ஓனரு குடுத்துடுவாரு. இதுக்கு முன்னாடி நான் பேக் தயாரிக்கிற கடையில ஸ்டிச்சிங் வேலை பண்ணிட்டு இருந்தேன். பதினைந்து வருஷம்அந்த வேலை பார்த்தேன். எல்.கே.ஜி பேக்குக்கு 4 ரூபாவும், காலேஜி பேக்குக்கு 12 ரூபாவும் தருவாங்க… இப்ப அங்க வேலை இல்ல.. ஆர்டர் எதுவும் ஓனர் எடுக்கிறது இல்ல. அதான் இந்த வேலை. சொந்தமா நானே செய்யலாம்னா காசு இல்ல…. பத்தாயிரபா தேவைப்படும்.. அதுக்கு நான் எங்க போறது?

மனீஷ்: நெகிழி கூடை, நாற்காலி விற்பனையாளர்.

ன்னோட ஊர் மத்தியபிரதேசம். நாங்க முப்பது பேர் சேர்ந்து ஒரு ரூம்ல தங்கியிருக்கோம்.. நாக்பூர்.. ராஜஸ்தான்னு எல்லா ஊர்ல இருந்தும் வந்திருக்கோம். எல்லோருக்கும் இந்த வேலை தான்… காலையில பத்து மணிக்கு வந்திடுவோம். சாயந்திரம் 5 மணிக்கு போயிடுவோம். காலை, மதியம் சாப்பாடு கிடையாது. டீ, தண்ணி மட்டும்தான்.  நைட் மட்டும் சப்பாத்தி செஞ்சி சாப்பிட்டுக்குவோம். சம்பளம் எதுவும் கிடையாது. நாலு மாசத்துக்கு ஒரு முறை ஓனர் பத்தாயிரம் தருவார்.. அதைத்தான் வீட்டுக்கு அனுப்பிடுவோம்.

ராகேஷ், நெகிழி கூடை, நாற்காலி விற்பனையாளர்.

சொந்த ஊர் ராஜஸ்தான்….  ஒரு பொருளும் விக்கல…..

காலையிலிருந்து காத்துக்கிடந்த களைப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் ராகேஷ்

பாண்டியன், மழை நீர் புகா மேற்சட்டை வியாபாரம்.

ருபத்தி அஞ்சி வருசமா இந்த வேலைதான் செய்யுறேன்…. இதுக்கு முன்னாடி புரசைவாக்கத்துல கடை போட்டிருந்தேன்… சிங்கார சென்னையா மாத்தப் போறேன்னு எங்ளை எல்லாம் மொத்தமா காலி பண்ணி அனுப்பினாங்க… மொத்தம் ஆயிரம் பேர் இருக்கும்.. அதுல இருந்து இதை தெருத்தெருவா தூக்கிட்டு அலையுறேன்.. நிரந்தரமா இந்த இடம்தான்னு இல்ல… எங்க இடம் கிடைக்குதோ அங்க போட்டுடுவேன்… ஒரே இடத்துல போட்டாலும் வியாபாரம் நடக்காது அதனால எடத்த மாத்திகிட்டே இருப்பேன்.. இதை ஒவ்வொரு முறையும் ஆட்டோவுல வச்சி எடுத்துட்டு வரக்கூலி 100 ரூபா போயிடும். மிச்சம் இருக்கிறத வச்சி தான் குடும்பத்த நடத்தனும்…!

– வினவு களச் செய்தியாளர்கள்.

ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !

ரபிக் கடலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையில் இயற்கை எழில் கொஞ்சும் கொங்கன் பகுதியில் அமைந்துள்ளது மராட்டிய மாநிலத்தின் ரத்தினகிரி மாவட்டம். கடல் வளமும், மலை வளமும் ஒருங்கே பெற்ற இந்தப் பகுதியில், மீன்பிடித் தொழிலும், விவசாயமும் மக்களின் வாழ்வாதாரங்களாக உள்ளன.

புகழ்பெற்ற அல்போன்சா வகை மாம்பழங்கள் விளையும் மாந்தோட்டங்களையும், முந்திரித் தோட்டங்களையும், நெல் வயல்களையும் கொண்ட விவசாய கிராமங்களும், ஆண்டுக்கு 20 ஆயிரம் டன் மீன்களைப் பாரம்பரிய முறைப்படி பிடித்து வரும் மீனவ கிராமங்களும் இந்தப் பகுதியின் வளத்திற்குச் சாட்சியமாக உள்ளன.

இந்த இயற்கை வளத்தையும், அதனோடு இணைந்த இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையையும் அழித்து, ரத்தினகிரி மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கட்ட  மராட்டிய மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்கென ‘‘ரத்தினகிரி சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட்” என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனமும் (சவுதி அராம்கோ), அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமும் இதன் பங்குதாரர்கள்.

மொத்தம் 6 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தின் சரிபாதி பங்குகள் இந்த இரு அந்நிய நிறுவனங்களிடமும், மீதமுள்ள பாதிப் பங்குகள் இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஆகியவற்றின் கூட்டமைப்பின் வசமும் உள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இலக்குடன் கட்டப்படும் இந்தச் சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானப் பணி முடிவடைந்து இயங்க ஆரம்பித்தால், ஆண்டுக்கு 12 இலட்சம் பேரல் எண்ணெயைச் சுத்திகரிப்பு செய்வதுடன் 1.8 கோடி டன் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை உற்பத்தி செய்யும் பிரம்மாண்டமான சுத்திகரிப்பு ஆலையாக இயங்கும்.

இதற்கென 6000 ஹெக்டெர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 14 இலட்சம் மாமரங்களும், ஏழு இலட்சம் முந்திரி மரங்களும், 200 ஹெக்டெர் பரப்புகொண்ட நெல் வயல்களும் அழிக்கப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது. ரத்தினகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் உள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த 22,000 விவசாயிகளும், 5,000 மீனவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த மண்ணிலேயே அகதிகளாகத் துரத்தியடிக்கப்படும் நிலைமை ஏற்படவிருக்கிறது.

இந்தப் பகுதியில் வளமிக்க மண்ணும், விவசாயத் தேவைக்கேற்ற மழைப் பொழிவும் காணப்படுவதால், விவசாயம் ஓரளவிற்கு இலாபகரமானதாக நடைபெற்று வருகிறது. இதனால் இளைய தலைமுறையினர்கூட விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஆபூர்வத்தை இங்கு காணமுடியும். ரத்தினகிரி சுத்திகரிப்பு ஆலை ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடியது என்ற பொய்யை முன்னிறுத்தி, விவசாய நிலங்களைக் கையகப்படுத்த முனைகிறது, மகாராஷ்டிரா அரசு.

விவசாயிகளை செக்யூரிட்டிகளாக நிறுத்தும் மோசடியைத் தவிர, வேறெந்த மாற்றத்தையும் இந்தத் திட்டம் பகுதி மக்களுக்குத் தரப் போவதில்லை. கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் வழியாக நாம் கண்டு உணர்ந்திருக்கும் பாடமிது.

சுத்திகரிப்பு ஆலை குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இந்தப் பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். ‘‘கொங்கன் சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு நடவடிக்கைக் குழு” என்ற போராட்டக் குழுவை உருவாக்கி, அதன் கீழ் அணிதிரண்டு போராடி வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள பல கிராமப் பஞ்சாயத்துக்களில் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தங்களது வாழ்க்கைக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் நிலத்தை விற்பதற்கு விவசாயிகள் யாரும் தயாராக இல்லை. ‘‘எங்களது வாழ்க்கையை முன்னேற்ற இதுவரை எந்த உதவியும் செய்யாத அரசு இன்று எங்களது நிலத்தைப் பறித்துவிட முனைகிறது. அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்தால், எங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு உதவி செய்யட்டும் என்று போராடும் விவசாயிகள் கோருகின்றனர்.

விவசாயிகள் நிலத்தை இழப்பார்கள் என்றால், நிலமற்ற மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடி மற்றும் கடலின் மீதான உரிமை இரண்டையும் இழந்து போவார்கள்.

இந்தப் பகுதி சுற்றுச்சூழல் அமைப்புப் பன்முகத் தன்மை கொண்ட பல்லுயிர் வாழ்நிலைப் பகுதியாகும். எனவே, இந்தப் பகுதியில் எவ்வித தொழிற்துறை முன்னெடுப்புகளும் செய்யக்கூடாது என்றும், இந்தப் பகுதியில் ஒட்டு மொத்தமாக எல்லா தொழிற்துறைகளும் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் பேராசிரியர் மாதவ் கட்கில் தலைமையில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக் குழு பரிந்துரைத்தது.

அதே சமயம் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம், ‘‘மாசுபாடற்ற” (zero pollution) திட்டம் என்று தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு கூறிவருகிறது. பெட்ரோலியத் துறையில் மாசுபாடற்ற ஆலை என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பது தெரிந்தும், மராட்டிய மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு அப்பட்டமான பொய்ப்பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆலையை எதிர்ப்பதுடன், போராடும் மக்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழக்கம் போல நாட்டின் வளர்ச்சிக்கு இந்த ஆலை மிகவும் அவசியம் என்று பேசிவருகிறார். ஆனால், கொங்கன் பகுதி மக்களுக்கு இது போன்ற பொய்மை குறித்தும் அதன் பின்னால் உள்ள கார்ப்பரேட் நலன் குறித்தும் யாரும் பாடமெடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், இப்பகுதி மக்களுக்குத் தங்களது வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவது புதிதல்ல.

1992-இல் என்ரான் நிறுவனத்திற்கு எதிராக இவர்கள் குறிப்பிடத்தக்க போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதே ஆண்டு தங்களது கடற்கரையில் மிகப்பெரிய உருக்காலையை அமைக்க வந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை விரட்டியும் அடித்தனர். அங்கிருந்து ஓடிவந்துதான் தூத்துக்குடியில் ஆலையைத் தொடங்கியது, ஸ்டெர்லைட்.

அதே சமயம் இந்த ஆலையை அமைத்தே தீருவது என்பதில் பா.ஜ.க. அரசு உறுதியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் பங்குதாரர்களாக இருக்கும் அரேபிய எண்ணெய் நிறுவனங்கள் ஸ்டெர்லைட்டைப் போன்றே பன்னாட்டு அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். தங்களின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் எதிர்கொண்டு வரும் அடக்குமுறையை எண்ணிப் பார்க்க வேண்டும். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் கட்டியமைத்த ஒற்றுமையையும் எதிர்த்து நிற்கும் துணிவையும் கொண்ட போராட்டத்தைப் போன்றதொரு போராட்டத்தை நடத்தினால் மட்டுமே கொங்கன் பகுதியிலிருந்து இந்தத் திட்டத்தைத் துரத்தியடிக்க முடியும்.

-அழகு
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !

மோடி அரசு ஆர்ப்பாட்டமாக அறிவித்த புல்லட் ரயில் திட்டத்தை குஜராத்தின் விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். தங்கள் ஒப்புதல் பெறாமலேயே நிலம் கையகப்படுத்தப்படுவதாக நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவித்தனர்.

புல்லட் ரயில் திட்டத்தால்  பாதிக்கப்பட்ட  1,000 -த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை (18.09.2018) அன்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

துட்டு ஆதாயம் ஜப்பானுக்கு, செல்பி விளம்பரம் மோடிக்கு, நிலத்தை இழப்பதோ விவசாயிகள்!

தலைமை நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி எம்.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு,  இந்த அதிவேக ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரும் ஐந்து மனுக்களை விசாரித்து வருகிறது.

இந்த மனுக்கள் போக, 1,000 விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தமது வாக்குமூலங்களை சமர்ப்பித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பல விவசாயிகள் மைய அரசின் லட்சிய திட்டமான ரூ. 1.10 லட்சம் கோடி புல்லட் ரயில் திட்டத்தை தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். புல்லட் ரயில் பாதை கடந்து செல்லும் இடங்களில், தமது நிலம் பறிக்கப்படுவதை விரும்பவில்லை என்று மனுவில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

புல்லட் ரயில் திட்டத்திற்கு கடன் வழங்குவது ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) ஆகும். ஜப்பான் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்திற்காக நடப்பில் இருக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013, மீறப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

புல்லட் ரயில் திட்டத்திற்காக ஜப்பான் நிறுவனம், செப்டம்பர் 2015 -ல் இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டது. இதற்காக குஜராத் அரசாங்கம் 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நீர்த்துப் போக வைத்துவிட்டது. மேலும் ஜப்பான் நிறுவனத்தோடு உள்ள ஒப்பந்த வழிகாட்டுதல்கள் படி கூட குஜராத் அரசு செய்திருக்கும் நிலம் தொடர்பான திருத்தங்கள் பகிரங்கமான மீறலாகும்.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமது அனுமதியோ, ஆலோசனைகளோ கேட்கப்படவில்லை என விவசாயிகள் நீதிமன்றத்தில் கூறினர்.

மாதிரிப் படம்

இந்த திட்டத்தின் பாதிப்பையொட்டி விவசாயிகளின் மறுவாழ்வு, மீள் குடியேற்றம் தொடர்பான எந்த ஒரு மதிப்பீட்டையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் அரசு நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும் இத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் எவையும் தமக்கு தெரியாது எனவும் கூறினர்.

இந்த விசாரணையின் போது தனது பதிலை அளிக்க இன்னும் அதிக நேரம் வேண்டும் என மத்திய அரசு கூறியது. இப்படி இழுத்து இழுத்து இறுதியில் எதிர்ப்பை அழிக்க நினைப்பது ஒரு அதிகார வர்க்க உத்தி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசுகளுக்கு நீதிமன்ற விசாரணைகளெல்லாம் ஒரு கண்துடைப்பே.

புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது?

கடந்த ஐந்து வாரங்களாக மத்திய அரசு நாளைக் கடத்துவதை உயர்நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை என விவசாயிகளது வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இப்படித்தான் மத்திய அரசும் நீதித்துறையும் பரஸ்பர புரிந்துணர்வோடு செயல்படுகின்றன.

“பாதிக்கப்பட்ட 1000 விவசாயிகளும், இந்த திட்டத்தை தடை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மன்றாடி வருகிறார்கள். புதன்கிழமை அன்று தாமதப்படுத்தும் மத்திய அரசின் பிரச்சினையை உச்சநீதிமன்றத்தில் அவசர விசாரணையாக கோருவோம்” எனவும் யாக்னிக் கூறினார். ஆனால் மக்களது அவசரம் ஆட்சியாளர்களுக்கோ நீதிமன்றத்திற்கோ எப்படிக் கேட்கும்?

விவசாயிகலின் வாழ்வை அழிக்க போகும் புல்லட் ரயில் திட்டம்.

புல்லட் ரயில் திட்டம் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களோடு தொடர்புடையதால் (குஜராத் மற்றும் மகாராஷ்டிரா) நிலம் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுதான் பொருத்தமான அரசு, என்று விவசாயிகள் தமது மனுவில் குறிப்பிடுகிறார்கள். குஜராத்தின் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த 5 விவசாயிகள் கடந்த ஜூலை மாதத்தில் தாக்கல் செய்த மனுவில் அப்படி தெரிவித்திருக்கிறார்கள்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 26-ன்படி நிலத்தின் சந்தை மதிப்பு தேவைப்பட்டால் திருத்தப்படவேண்டும் என்பதும் இங்கே பின்பற்றப்படவில்லை எனவும் மனுவில் விவசாயிகள் கூறியிருக்கின்றனர்.

குஜராத்தின் 2013-ம் ஆண்டு நிலம் தொடர்பான சட்டத்தை 2016-ல் அரசு திருத்தியது செல்லாது எனவும் அவர்கள் தமது மனுவில் கூறினர். ஒரு திட்டம் ஏற்படுத்தப் போகும் சமூக நல பாதிப்பில் இருந்து பொது மக்களின் நலனை விலக்குவதை இச்சட்ட திருத்தம் மாநில அரசிற்கு வழங்குகிறது. ஆக நிலம் கையகப்படுத்தும் சட்டம் வைத்திருந்த குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இங்கே பகிரங்கமாக மீறப்படுகிறது. இதுதான் மோடி கால ஜனநாயகம் வழங்கும் புதிய குடியாட்சி உரிமை.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முகமாக இத்திட்டத்திற்கான அனைத்து நிலங்களும் முறைப்படி பெறப்பட்டு விட்டன, தற்போது வெறும் 17.5 மீட்டர் நிலம் மட்டுமே தேவைப்படுவதால் இப்பிரச்சினை மிகச்சிறிய ஒன்று என குஜராத் மாநில அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அப்படிப் பார்த்தால் வழக்கு போட்ட ஆயிரம் விவசாயிகளுக்கும் சில பல சென்டி மீட்டர் நிலம் மட்டுமே சொந்தம் போலும்!

இத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில், பிரதமர் மோடி மற்றும் ஜப்பானின் பிரதமர் ஷன்சோ அபே-வால் துவங்கப்பட்டது.

மும்பை – அகமதாபாத் நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் பாதையின் நீளம் 500 கி.மீ. இதில் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். புல்லட் ரயிலின் வேகம் 320 – 350 கி.மீ. ஆகும்.

வளர்ச்சியின் பெயரால் நிலம் பிடுங்கப்படும் மக்கள். – எட்டு வழிச்சாலை போராட்டக் காட்சி!

இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிலம் சுமார் 1,400 ஹெக்டேர் ஆகும். அதில் 1,120 ஹெக்டேர்கள் அதாவது 2,767 ஏக்கர் நிலங்கள் மக்களுக்கு சொந்தமானவையாகும். அதன் படி சுமார் 6,000 நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

புல்லட் ரயில் திட்டத்தினால் இந்தியாவின் பொருளாதாரத்திற்கோ, போக்குவரத்திற்கோ எந்த பலனுமில்லை. நீண்ட கால கடன் என்ற முறையில் இதில் ஆதாயம் அடையும் ஜப்பான் தனது புல்லட் ரயிலை தேவையே இல்லாத இந்தியாவை வாங்க வைத்திருக்கிறது. மோடிக்கோ புல்லட் ரயில் கொண்டு வந்த தீரர் எனும் பட்டம் வரலாற்றில் தமக்கு இருக்க வேண்டும் என்பதால் இந்த ஆடம்பர திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கிறார்.

எட்டுவழிச்சாலையில் தமிழக அரசு என்னென்ன கூறியதோ அவற்றையே குஜராத்திலும் பார்க்கிறோம். பெரும்பான்மை விவசாயிகள் ஏற்றனர், சிலர்தான் ஏற்கவில்லை, பெரும்பான்மை நிலங்கள் சமூகமாக பெறப்பட்டது, ஓரிரண்டுதான் பிரச்சினை, அதிக நட்ட ஈடு கொடுக்கப்படும் என அடித்து விட்டார்களே அவைதான் இங்கும்.

மற்றபடி தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், கட்சியினர் கைது செய்யப்பட்டனர். குஜராத்தில் அப்படி போராட முடியாது என்பதால் மக்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர்.

வினவு செய்திப் பிரிவு

மேலும் :

கடலோர மேலாண்மை திட்டத்தை எதிர்க்கும் சென்னை மண்டல மீனவர்கள்

லைகளில் தொழிலாளர்களை சுரண்டும், வங்கிகளில் வட்டியை பிழிந்தெடுக்கும், விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிக்கும் மூலதனம், கடலோர பகுதிகளை குறிவைத்திருப்பதை எதிர்த்து மீனவர்கள் போராடி வருகின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் அடிப்படையிலான வரைவு கடலோர மேலாண்மை திட்டத்தின் மீது கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படவிருக்கும் “இந்தக் கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்கே என்றும் எட்டு ஆண்டுகளாக மீனவர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்புகளை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை” என்றும் குற்றம் சாட்டியிருக்கின்றனர், அந்த மீனவர்கள்.

கடல் அலை ஏற்றப் பகுதியிலிருந்து 500 மீட்டர் தூரம் வரையிலான பகுதியை கடலோர ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதி என்று வரையறுத்து அதில் கட்டிடங்கள் கட்டுவது, சாலை அமைப்பது போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை 1991-ம் ஆண்டு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்தப் பகுதியை 4 மண்டலங்களாக வகைப்படுத்தி அவற்றில் எந்தவிதமான பணிகளில் ஈடுபடலாம் என்று வரையறுக்கப்பட்டிருந்தது.

நமது நாடு 7500 கி.மீ நீள கடலோர பகுதிகளை கொண்டுள்ளது. பாரம்பரியமாக தமது வாழ்விடமாகவும், மீன்பிடித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி வரும் மீனவர்களிடமிருந்து இந்த இடங்களை கைப்பற்றி ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும், பெரிய தொழில்துறை முதலாளிகளுக்கும் தாரை வார்க்கும் நோக்கத்தில் இந்த விதிமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு நடவடிக்கையாக 2011-ல் வெளியிடப்பட்ட புதிய கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் 1991-ன் விதிமுறைகளை மீறிய முதலாளிகளின் கிரிமினல் குற்றங்களை அங்கீகரித்து அவர்களை விடுவிப்பதாக அமைந்தது.

இவ்விதிகளின் அடிப்படையில் இப்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்டங்கள் நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் பாரம்பரிய மீனவமக்களின் வாழ்வுரிமையை பறித்து, கடலையும், கடற்கரையையும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த வரைவுத் திட்டம் சுற்றுச் சூழல் பாதுகாப்பை விட கடலோர பகுதிகளை வணிக நலன்களுக்காக பயன்படுத்த முயற்சிக்கும் கார்ப்பரேட் நலன்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளது. “அரசு பேசும் அலை ஏற்ற பகுதி நிலாவினால் ஏற்படும் நீரோட்ட மாற்றங்களை கணக்கிடுவதை விட வணிக நிறுவனங்களின் நலனை உறுதி செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளது” என்கிறார் சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

அலை ஏற்றத்துக்கும் அலை இறக்கத்துக்கும் இடைப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியை ரியல் எஸ்டேட் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. அலை ஏற்றத்தால் பாதிக்கப்படும் நீர் நிலைகளிலிருந்து (ஆற்று கழிமுகங்கள், பின்நில ஏரிகள் போன்றவை) 100 மீட்டர் வரை பாதுகாக்கப்பட்ட பகுதி என்று வரையறுக்கப்பட்டிருந்தது இப்போது 50 மீட்டர் என்று குறைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கடலோர மண்டலம் III இப்போது இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தொகை அடர்த்தி அதிகமான பகுதிகளில் 50 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று மாற்றப்பட்டுள்ளது. (அடர்த்தி குறைவான பகுதிகள் முன்பு போல 200 மீட்டர் வரம்பு தொடரும்). மக்கள் தொகை அடர்த்தியை நிர்ணயிப்பதை தமது விருப்பம் போல வளைத்து கணிசமான கடலோர நிலங்களை ரியல் எஸ்டேட் முதலைகள் ஆட்டையை போடுவதற்கான வழிகளை இது உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல புதிய வரைபடத்தை எதிர்த்து கொசஸ்தலை ஆற்றில் இறங்கி போராடும் மீனவர்கள்

மேலும் கடலோர மண்டலம் I-ல் கூட ராணுவ, பாதுகாப்பு, போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த தேவைகள் மற்றும் பொது சேவைகளுக்காக சாலை அமைப்பதை புதிய வரைவு திட்டம் அனுமதிக்கிறது. போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனவே, எந்த ஒரு கார்ப்பரேட் திட்டத்தையும் அரசு தனது விருப்பம் போல பொது சேவை அல்லது போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த தேவை என்று அறிவித்து கடலோர பகுதியை சீரழிப்பதற்கு இது அச்சாரம் போட்டுத் தருகிறது.

மத்திய அரசால் 1996-ல் அங்கீகரிக்கப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தை அடிப்படையாக வைத்து புதிய கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

1:25000 அளவில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில் அபாயக்கோடு பொருத்தியிருக்க வேண்டும். கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் வரைபடம் மட்டுமில்லாமல் எழுத்துப்பூர்வமான திட்டமும் இருக்க வேண்டும். ஆனால் இது நாள் வரை எழுத்துப் பூர்வமான திட்டம் வெளியிடவில்லை. கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மீனவ மக்கள் எழுப்பிய தெளிவானகளுக்கு உரிய விளக்கத்தை இன்று வரை தராத அரசு இப்போது மீண்டும் கண்துடைப்பு கருத்துக் கேட்பு கூட்டஙளை நடத்துகிறது.

மேலும், “இந்த கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் குறித்து மீனவமக்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றும், அவர்களால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை” என்றும் உழைக்கும் மக்களை அவமதிக்கும் வகையில் அறிக்கை அனுப்பியிருக்கின்றனர் இந்த அதிகார வர்க்க ‘அறிவாளிகள்’.

தொழிலாளர், விவசாயிகள் வாழ்வாதாரங்களை பறிப்பது மட்டுமின்றி, கனிம வளங்களை கைப்பற்றுவது, கடற்கரை வளங்களை ஆக்கிரமிப்பது என்று நாட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் தனது ஆக்டபஸ் கரங்களை நீட்டி வருகிறது பன்னாட்டு மூலதனம். மிக விரைவில் மூச்சு விடுவதற்குக் கூட முடியாமல் உழைக்கும் மக்களை நெருக்கிக் கொல்லும் கொலை வெறியில் செயல்பட்டு வருகிறது மூலதனத்தின் ஆட்சி.

திருவள்ளூர் மாவட்டத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டால் புலிக்காட் பகுதி மீனவர்கள் அதை எதிர்த்து பொது அடைப்பும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தவிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர்கள் சங்கத் தலைவர் துரை மகேந்திரன் அறிவித்திருக்கிறார். தென்னிந்திய மீனவர்கள் நல சங்கத் தலைவர் கே பாரதி, இந்த வரைபடங்கள் மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் மீனவர்கள் கொடுத்த தகவல்கள் எதுவும் அவற்றில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இது மீனவர்களுக்கு மட்டும் தொடர்புடைய பிரச்சனை அல்ல. நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மறுகாலனியாக்கத்தின் ஒரு பகுதியே. எனவே, மறுகாலனியாக்கத்தால் சுரண்டப்படும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் இணைத்து மூலதனத்தின் ஆட்சியை எதிர்த்து வீழ்த்துவது முன்பு எப்போதையும் விட அவசியமானதாக மாறியிருக்கிறது.

– குமார்

நன்றி : new-democrats
புதிய தொழிலாளி – ஆகஸ்ட் 2018 இதழிலிருந்து

மூலக்கட்டுரை :

சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !

(கோப்புப்படம்)

“திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” என்ற தலைப்பில் ஆய்வாளர் ஆ.பத்மாவதி எழுதிய நூலை பதிப்பித்ததற்காக சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சரவணனை, எச்.ராஜா உள்ளிட்ட இந்துத்துவ பாசிஸ்டுகள் மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கே வந்து முற்றுகையிட முயன்றனர்.

நேற்று மதியம் 2:30 மணிக்கு சிவனடியார்கள் போர்வையில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கும்பலைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைய முற்பட்டனர். அவர்கள் நுழைவதற்கு வசதியாக பல்கலைக்கழக நிர்வாகமும் கேட்டை திறந்துவிட்டது. உள்ளே நுழைந்தவர்கள் சங்குஊதி போராட்டம் நடத்த முயன்றனர்.

மதவெறி கும்பல் வருவதை அறிந்த அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் நுழைவு வாயிலிலே அவர்களை தடுத்து நிறுத்தி ”மதவெறி கும்பலே வெளியேறு” என்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். மதவெறி கும்பலை தடுக்க வேண்டிய காவல்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களிடம் எகிறியது.

மாணவர்களின் உறுதியான எதிர்ப்பின் காரணமாக இந்துத்துவ கும்பல் பின்வாங்கியது, உடனடியாக சுதாரித்துக்கொண்ட காவல்துறை மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, மதவெறி கும்பலில் நான்கு பேரை தேர்வுசெய்து துணைவேந்தரை சந்திக்க அழைத்துச் சென்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதன் அடுத்தகட்டமாக மாணவர்கள் துணைவேந்தர் இருக்கும் நூற்றாண்டு கட்டிடத்தின் வாயில் கேட்டை மூடி, இந்துத்துவ பாசிஸ்டுகளை நுழையவிடாமல் போராட்டம் நடத்தினர் மாணவர்கள். இனி இந்துத்துவ கும்பல் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை என்றான நிலையில், மதிப்பிற்குரிய பல்கலைக்கழக பதிவாளர் அவர்களே கீழே இறங்கி வந்து பாசிஸ்டுகளிடம் மனுவைப் பெற்றுக் கொண்டார்.

மனு கொடுத்த பின்னரும் போராடுவதற்காக காத்திருந்த மதவெறி கும்பல், மாணவர்களின் பின்வாங்காத போராட்டத்தைக் கண்டு அஞ்சி வெளியேறியது. சங்கு ஊதி வந்த இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு, மாணவர்களின் போராட்டம் சங்காக அமைந்தது.

இந்த போராட்டத்தின் பின்னணியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் சில கேள்விகளையும் சந்தேககங்களையும் முன்வைக்க விரும்புகிறது.

1. மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு போராடினால் உடனடியாக தடுத்து நிறுத்தும் பல்கலைகழக நிர்வாகம், பேரா.சரவணணுக்கு எதிராக பல்கலைக்கழகத்தை முற்றுகையிடவந்த இந்து மதவெறி கும்பலுக்கு யார் உத்தரவின் பேரில் கதவை திறந்துவிட்டது…?

2. நாப்கின் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்காக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் போராடியபோது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து கைது செய்து, போராடிய மாணவிகள் மீது ”நைட்டு கேஸ்ல வழக்கு பதிவேன்” என்று மிரட்டும் D6-அண்ணா சதுக்க காவல்துறையினர், பேராசிரியரை மிரட்டவந்த மதவெறி கும்பலை கைது செய்யாதது ஏன்..?

3. போராட்டத்திற்கிடையே மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட
D6-காவல்நிலைய ஆய்வாளர் சபாபதி, “அந்த ஆளு ஏன் மதத்தை பற்றி தப்பா எழுதனும்? அவங்க போராடுறது சரிதான்!” என்று இந்துத்துவ பாசிச கும்பலுக்கு வக்காலத்து வாங்கியதன் பின்னணி என்ன..?

4. பலமுறை அடிப்படைவசதி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக பதிவாளரிடம் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் கடிதம் அளித்தும் அவர்களை அழைத்து பேசாத நிலையில், முகம் தெரியாத மதவெறி கும்பலுக்காக பதிவாளர் கீழே இறங்கிவந்து மனுவைப் பெற்றதன் காரணம் என்ன..?

5. மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு போராடுவதையே விரும்பாத பல்கலைக்கழக நிர்வாகம், யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்துமதவெறி கும்பலின் போராட்டத்தை அனுமதித்தது..?

6. சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தன்றே, இந்துமதவெறி கும்பல் முற்றுகையிட வந்ததன் சூட்சமம் என்ன..?

இவண்:
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC_UNOM),
சென்னைப் பல்கலைக்கழகம்.

டெல்டாவை அழிக்கும் மோடி எடப்பாடி அரசுகள் ! திருவாரூர் ஆர்ப்பாட்டம்

டெல்டா விவசாயத்தை திட்டமிட்டு அழிக்கும் எடப்பாடி, மோடி கும்பலைக் கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் !

காவிரி நீர்ப் பங்கீட்டில் கழுத்தறுப்பு, காவிரி தடுப்பணைகளை உரிய முறையில் பராமரிக்காதது, கால்வாய்களைத் தூர் வாராமல் விடுவது எனத் தொடர்ச்சியாக டெல்டா விவசாயத்தை சீரழிக்கும் நாசவேலையில் மத்திய மோடி அரசும் அடிமை எடப்பாடி அரசும் ஈடுபட்டுவருகின்றன. இவையனைத்தும் காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கி விவசாயிகளைக் கூண்டோடு விரட்டிவிட்டு, ஒட்டு மொத்த டெல்டா பகுதியையும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் படுகைகளாக மாற்றி வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்க்கும் சதித்திட்டமே.

இந்த மாபாதகச் செயலைச் செய்துவரும் மோடி, எடப்பாடி அரசுகளைக் கண்டித்து  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 20-09-2018 (வியாழக் கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர் இரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர் !

தகவல்: மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு: 96263 52829

*****

எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் !
மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம்!

பிள்ளையார் சதுர்த்தி நிகழ்ச்சிகளை ஒட்டி, தமிழகத்தில் வன்முறையையும் கலவரத்தையும் தூண்டும் வண்ணம் தொடர்ந்து பேசி வரும் பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா-வை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில், வன்முறையை தூண்டி கலவர பூமியாக மாற்றும் பயங்கரவாதி எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் !

தகவல்: மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்
தொடர்புக்கு: 81108 15963

பெரியாரை நமக்கு ஏன் பிடிக்கிறது ? துரை சண்முகம் | காணொளி

ருவருக்கு எதுவெல்லாம் பிடிக்காது என்பதிலிருந்து அவரை மதிப்பிடமுடியும் என்றார் காரல் மார்க்ஸ். தந்தை பெரியாருக்கு சாதி பிடிக்காது, மதம் பிடிக்காது, பெண்ணடிமைத்தனம் பிடிக்காது, சமத்துவமின்மை பிடிக்காது. அதனால்தான் அவரை சங்க பரிவாரத்துக்குப் பிடிக்காது. ஆனால், அதே காரணத்தால்தான் அவரை நம் அனைவருக்கும் பிடிக்கிறது.

சங்க பரிவாரக் கும்பல் கூறிவருவது போல, பெரியார் இந்துமதத்தை மட்டும்தான் எதிர்த்தாரா? பெரியார் கடவுள் மறுப்பு மட்டும்தான் போதித்தாரா? பெரியார் பார்ப்பனரல்லாதவர்களுக்காக மட்டும்தான் பாடுபட்டாரா ? இந்துமதப் பெண்கள் பணிக்குச் செல்வது குறித்து இந்துமதத்தின் ஆன்மிகச் சுடர் ‘மகா பெரியவா’ என்ன கூறினார்? நாத்திகப் பெரியார் என்ன கூறினார்?

பெரியார் குறித்த சங்க பரிவாரத்தின் புரட்டுகளை நொறுக்கி உண்மையான பெரியாரை அடையாளம் காட்டுகிறார், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை. சண்முகம்.

பாருங்கள் ! பகிருங்கள் !

– வினவு களச் செய்தியாளர்

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது !

ஜான்சன் (ஓட்டுனர் சீட்டில் இருப்பவர்), சுரேஷ் (நீல சட்டை அணிந்திருப்பவர்)

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் வரலாறு காணாத விலையேற்றத்தின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கடும் அதிருப்தியை சமாளிப்பது எப்படி என தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யையெல்லம் அள்ளி வீசி வருகிறது பா.ஜ க. அரசு.

விலையுயர்வை குறைப்பதற்கான சாத்தியமில்லை என்று ஜேட்லியும், விலையுயர்வுக்கு காரணம் அமெரிக்காதான் என்று அமித்ஷாவும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள். இவர்கள் எத்தனை அறிக்கை விட்டாலும், என்ன விளக்கம் கொடுத்தாலும் மக்கள் இவர்களை நம்புவதில்லை.

அதேசமயம் இந்த விலையேற்றத்தையும் வேறு வழிதெரியாமல் சுமந்து கொண்டு அன்றாட பணியின் பொருட்டு மூலைமுடுக்கெங்கும் பயணிக்கிறார்கள். இந்த விலையேற்றம் எங்கள் முதுகின் மேல் வந்திறங்கிய கூடுதல் சுமை என்பதை விவரிக்கிறார்கள் சென்னை கோயம்பேட்டின் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் சுரேஷ், ஜான்சன், சேகர்.

ஜான்சன் (ஓட்டுனர் சீட்டில் இருப்பவர்), சுரேஷ் (நீல சட்டை அணிந்திருப்பவர்)

“நாங்க பதினைந்து வருஷத்துக்கு மேல ஆட்டோ ஓட்டுறோம். டீசல் விலை 38 ரூபாய் இருக்கும்போது வண்டி ஓட்ட ஆரம்பிச்சது. இப்ப டீசல் 78 ரூபாய்க்கு வந்து நிக்குது. ஆனா எங்க டிக்கெட் ரேட் மட்டும் இன்னும் ஏறல. ஒரு ஸ்டாப்புன்னா ஐந்து ரூபா. அதுக்கப்புறம் பத்து, இருபதுன்னுதான் இப்ப வரைக்கும் இருக்கு. இன்னும் கூடுதலா விலையை ஏத்தினா ஜனங்க ஏறாது.

இப்படி ஓட்டியே ஒரு நாளைக்கு 1200, 1500 பாக்குறதுக்குள்ள எங்களுக்கு மூச்சி முட்டிடும். அதுல 500 ரூபா வாடகை.. 500 ரூபா டீசலு, பெட்ரோல் ஆட்டோன்னா இன்னும் கூட ஆகும். இந்த செலவு போக கையில 200,300 தான் நிக்கும்.

ஜாக்பாட்டா வாரத்துல இரண்டு நாள் 2,000 ரூபா கிடைக்கும். அதை வச்சிக்கினு கலக்சன் வராத நாளை ஓட்டனும். அப்படி இல்லையா, காலைல ஆறு மணிக்கு எடுத்தா சாயங்காலம் ஆறு மணிக்கு நிறுத்துற வண்டிய நைட்டு ஒன்பது, பத்து மணி வரைக்கும் ஓட்டுவோம். அப்படி கூடுதலா ஒழச்சா 300 லிருந்து 500 ரூபா வரைக்கும்  வரும். அப்பதான் வீட்டுக்கு கொடுக்க முடியும்.

ஒரு நாளைக்கு கொறஞ்சது 300 ரூபா கொடுக்கனும் பொண்டாட்டி கிட்ட. இல்லனா வீட்டுல சண்ட வரும். தண்டலுக்கு தெனமும் 200 ரூபா எடுத்து வைக்கனும். எங்க செலவு பாக்கு, சிகரெட்டுன்னு கொறஞ்சது 100 ரூபா ஆகும்.  இதையெல்லாம் சாமளிக்கனும்னா, லீவு போடாம வண்டி ஓட்டனும்.

நாங்க சொந்த வண்டி ஓட்டுறோம். இதுவே வாடகை வண்டி ஓட்டுறவங்களுக்கு பெரும்பாடு. வண்டி நிக்காம ஓடிகிட்டே இருந்தாத்தான் சமாளிக்க முடியும். இல்லனா வர காச வாடகை கொடுத்துட்டு சும்மா பேருக்கு வேலை பார்த்துட்டு போக வேண்டியதுதான்.

இதெல்லாம் அன்னைக்கு பொழப்புக்குத்தான். இதுபோக வண்டிக்கு டியூவ் (தவணை)கட்றதுக்கு, புள்ளைங்க படிக்கிற பீசு, சொந்தகாரங்க விஷேஷம் இதுக்கெல்லாம் தண்டல்தான். தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது. அடிக்கடி தண்டல் வாங்குவோம். அதுதான் எங்களுக்கு இருக்க ஒரே விமோசனம்.

அது என்ன தண்டல்னு கேக்குறிங்களா…..?

இப்ப இருபதாயிரம் தண்டல் வாங்கினா 17,000 நம்ம கையில கொடுப்பன். நாம 20,000 க்கு  டெய்லியும் 200 ரூபா 100 நாள் கட்டணும். இது இல்லாத திடீர்னு பசங்களுக்கு உடம்பு சரியில்லனா வட்டிக்கு தான் வாங்குவோம். அதுவும் ஸ்பீடு வட்டி.

அதாவது, ஆயிரம் ரூபா நான் வட்டிக்கு வாங்குறேன்னு வையுங்க, அந்த அசல் பணம் ஆயிரபா கொடுக்கிர வரைக்கும், எனக்கு பணம் கொடுக்கிறவருக்கு நான் தினமும் நூறு ரூபா கொடுக்கனும். அஞ்சி நாள்னா ஐநூற், பத்து நாள்னா ஆயிரம்னு… போயிட்டே இருக்கும்.

அப்புறம் இன்னொரு கொடும இருக்கு…… கலக்சன் இல்லாத போது, இல்ல வந்த காசுக்கு வேற முக்கியமான செலவு வந்து இரண்டு மூனு நாள் வண்டி வாடகை கொடுக்க முடியாம போகும். அதுக்கும் வட்டி போட்டு தான் வாடகைய கொடுக்கனும். இப்படி வட்டி கொடுத்தே எங்க வாழ்க்கை அழிஞ்சி போயிடும்” என்கிறார் ஜான்சன்.

இதுக்கே டயர்ட் ஆனா எப்படி… இன்னும் இருக்கு என்று கிண்டால சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறார் சேகர், “சொந்த வண்டி ஓட்டினாலும் ஒரு முன்னேற்றமும் இல்ல. இந்த வண்டிக்கு எப்.சி பன்ன 30,000 இல்லாம நடக்காது. டிங்கரிங், பெயிண்டிங், ஆயில் சர்விஸ், டயர் மாத்துறது இப்படி செலவு இழுத்துக்குனே போவும். அறுபது ரூபா வித்த ஆயில் இப்ப  300 ரூபா விக்குது.  இன்னும் விலைவாசி எங்க போயி நிக்கும்னு தெரியல.

சேகர்

மாசம் முப்பது நாள், வருஷம் 365 நாள் நாங்க உழைக்கிறோம். ஆனாலும் கடன்ல இருந்து எங்களால மீள முடியல. உடம்பு சரியில்லானக் கூட நாங்க மாத்திரை போட்டுனு வண்டி ஓட்டுவோம். சொந்தகாரங்க யார்னா செத்தாதான் அரை நாள் லீவு போடுவோம். இப்படி உழச்சாலும், குழந்தைகளுக்கு அதுங்க கேக்குற நொறுக்கு தீனிகூட வாங்கி கொடுக்க முடியல. மிக்சர், கெஜரா, காராபூந்தின்னு எதாவது ஒன்னு கேட்பாங்க. பல நாள் நாங்க வெறும் கையோட தான் போயி நிப்போம்.

வாரத்துக்கு ஒரு நாள் கவிச்சி…… மீனோ, கோழியோ.. எதாவது வாங்கி போடலாம்னு நெனப்போம்…… பல நாள் அதுவும் முடியாது. இதனாலயே படுத்தா தூக்கம் வராது. ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் துங்குறதே அதிகம். இப்ப விலைவாசி உயர்வால சுத்தமா தூக்கம் இல்ல.

டீசல் விலையுயர்வுக்கு முன்னாடி 12 மணி நேரம் உழச்சோம். இப்ப 18 மணி நேரம் உழைக்கிறோம். அதிகமா உழைக்கிறதால அதிகமா பணம் வரும்னு நெனக்க வேணாம். பழைய வசூலுக்கே இப்ப ரெண்டு மடங்கு உழைக்க வேண்டியதா இருக்கு.

இப்ப நாங்க இரண்டு முறையில வண்டி ஓட்டிட்டு இருக்கோம். ஒன்னு லைன்ல போறோம். இன்னொன்னு டிரிப் அடிக்கிறோம். காலையில மாலையில ஆபிஸ் டைம்னு லைன்ல போறோம். விடிய காலை, மதிய நேரத்துல லைன்ல ஆளு இல்லாத போது ட்ரிப்பு அடிக்கிறோம்.

உடம்புக்கு ஓய்வு ஒழிச்சல் இல்ல. உடம்பு புண்ணா நோவுது. திரும்பவும்  வேலை செய்யனும்னா பாக்கு, சிகரெட்னு புடிக்கனும். எப்பனா தண்ணி அடிக்கனும். அந்த செலவு பன்றதா? பசங்க கேக்குறத வாங்கி கொடுக்கிறதா? தலையே வெடிச்சிடும் போல இருக்கு” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே  அந்தப் பக்கம் கடந்து சென்ற டாடா மேஜிக்கை காட்டி, “இந்த வெள்ள வண்டியால பொழப்பு போயிடுச்சி” என்றார்.

அங்கிருந்து அமைதியாக விடைபெறும் தருவாயில், சற்று தொலைவில்  சவாரிக்காக காத்திருந்தார் ஒரு டாடா மேஜிக் வண்டியின் ஓட்டுநரும், உரிமையாளருமான  சரவணன்.

“சார்……. நாங்க சொகுசு கார் ஓட்டுறோம்னு ஆட்டோகாரங்க எங்கள பார்த்தா எறிஞ்சி விழுறாங்க. எங்களால தான் அவுங்களுக்கு டிக்கெட் ஏறலன்னு. ஆனா எங்க லட்சணம் அதுக்கு மேல இருக்கு. நான் சொந்த வண்டிதான் வச்சிருக்கேன், வெத்தல, பாக்கு, பீடின்னு எந்த செலவும் செய்ய மாட்டேன். ஆனாலும் கடன்…. கடன்…. ஊரை சுத்தி கடன்..!

மாதிரிப் படம்

பெரிய வண்டி பெரிய செலவு. வருஷத்துக்கு எப்.சி பன்ன 80 ஆயிரம் இல்லாம வேலை நடக்காது. இன்சுரன்ஸ் 25,000, ரோடு டாக்ஸ் 12,000, டிங்கரிங் 6000, பெயிண்டிங் 6000, இஞ்சின் செலவு 5000, ஆர்.டி.ஓ – பிரேக் இன்ஸ்பெக்டர் செலவு 2500, ஸ்டிக்கர் 1500, பத்து நாள் வேலை இல்லாம அலையிறது, அதுக்காக கடன் வாங்குறதுன்னு ஒரு லட்சம் வரைக்கும் செலவு பன்னாதான் ரோட்டுல வண்டி ஓடும்.

சரி வண்டி ஓடினா இதையெல்லாம் சம்பாதிச்சிடலாமேன்னு நீங்க நெனக்கலாம். அதுதான் தப்பு… இந்த கடனை அடைக்கதான் வண்டியே ஓடும். அதுக்கப்புறம்தான் நம்ம செலவு.  ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சம்பாதிச்சா அது நல்ல நாள்னு அர்த்தம். அதுவும் 200 கிலோ மீட்டரு ஓட்டினா தான் கிடைக்கும். அதுக்கு  800 ரூபா டீசல் போடனும்.

டிராபிக்குல 15 கிலோ மீட்டர் போறதுக்கு ஒன்னரை மணி நேரம் ஆகும். கை எல்லாம் உட்டு போயி, கண்ணு பூத்து போயிடும். ஒவ்வொரு டிரிப்புக்கும் இறங்கி டீ, காபி சாப்பிட்டா தான் ஒரு தெம்பு வரும். இதுல சிகரெட், பான்பராக் போடுறவன் கதை மோசம். எனக்கு அந்த பழக்கம் இல்லாததால 700, 800 ரூபா நிக்கும். இல்லனா முதலுக்கு மோசமாயிடும்.

இதுல, டீசல் விலைய ஒரு நாளைக்கு ஒன்பது வாட்டி ஏத்துறானுங்க. நாங்க ஜனங்க கிட்ட இதை எப்படி சொல்லுறதுனு தெரியல. நாங்க இரண்டு ரூபா ஏத்தினாலும் ஜனங்க எங்கள புடிபுடின்னு புடிச்சிடுறாங்க. என்ன பன்றதுன்னு வழி தெரியல. இந்த தொழிலை விட்டு நாங்க இனிமே எங்க போறது? அத நெனச்சாதான் கலக்கமா இருக்கு!

-வினவு களச் செய்தியாளர்

மம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற குடியானவன் குடும்பத்த காப்பாத்துவானா ?

0

ப்பனும் மகனும் ஒன்னு சேந்து குடிச்சுட்டு அவுந்து விழுற வேட்டிய எடுத்துக் கட்டும் நிதானம் கூட தெரியாம அசிங்கப்படுத்தினா எப்பேர்ப்பட்ட அம்மாவுக்கும் அவமானமாதான் இருக்கும். வேலைக்கி போன கூலி காசுக்கு சாராயம் குடிக்கிறது பத்தாம வீட்டுல உள்ள காசையும், பொருளையும் திருடி குடிச்சா எப்புடி குடும்பம் பன்றது? இதெல்லாம் பொருக்க முடியாமெத்தான் சோலையம்மா வீட்ட விட்டு போனதும் நடந்தது.

அப்பனும் மகனும் குடிச்சுட்டு அசிங்கப்படுத்துறதும் அதுக்காக சோலையம்மா கோச்சுகிட்டு போறதும் புதுசில்ல, கோவங்கற பேருல  பத்துநாளு ஒருவாரம் எங்கனா தெரிஞ்ச எடத்துல தங்கி கூலி வேல பாத்துட்டு பெறவு தலவிதின்னு வீட்டுக்கு திரும்பி வாரதும் புதுசில்ல.

ஆனா இந்த மொற கோவம் தீந்து வீட்டுக்கு திரும்பி வரும் போது சோலையம்மாவுக்காக காத்திருந்தது மரண ஓலம்.

“என்னத்த சொல்ல எங்கதைய. செத்தப் பொணம் வீட்டுல கெடக்க எழவு வீட்டுப் பொம்பள நானு வயக்காட்டுல நின்னு வயிராற கஞ்சிகுடிச்சுட்டு வாயாற வெத்தலப் போட்டேன். எழவு விழுந்த சேதி என்ன வந்து சேர அஞ்சு நாளச்சு…

நா.. ஒன்னும் பத்து ஏக்கர் பண்ணையம் பண்ணி பணக்கார வாழ்க்க வாழனுமின்னு ஆசப்படல. கூலி பாடுபட்டு சோறு தின்றோம் அத புள்ள, புருசனோட சந்தோசமா சேந்து திங்கனுமுன்னு நெனச்சேன். அதுக்கு குடுப்பன இல்ல.

இந்த பத்து வருசத்துக்குள்ள குடிச்ச குடியில கொடலே அழுகிருச்சுன்னு டாக்டருங்க சொல்றாங்க. கொடலு, கிட்னி, மஞ்சக்காமால இத்தனயும் ஒரு ஒடம்புல இருந்தா எதப்பாக்குறது?

அந்த மனுசன கெட்டவன்னு சொல்ல முடியாது. இந்த குடிதான் அவன கெடுத்துபுடுச்சி. குடிக்காதையா குடிக்காதையான்னு தலப்பாடா அடிச்சுகிட்டேன் கேக்காம இன்னைக்கி அனாதையா விட்டுட்டு போயிட்டான்.

நா.. கலைஞர் கச்சி அதனால எம்புள்ளைகளுக்கு தமிழ்லதான் பேரு வப்பேன்னு மூனு பிள்ளைக்கும் ஆசையா பேரு வச்சா..ன் அந்த மனுச… கதுரறுப்பு சீசன்ல ராத்திரி எத்தன மணிக்கி வீடு வந்தாலும் நெல்ல வித்து தீனி வாங்கிட்டுதான் வருவான். பிள்ளைங்க மேல உயிரையே வச்சுருந்தாரு.

வேலபாத்த அசதிக்காக சாரயத்த தேடிப் போயி குடிச்சப்ப பொண்டாட்டி பிள்ளையின்னு நிதானமா வீடு வந்தான். தடிக்கி விழுந்தா சாராயக் கடன்னு ஆன பொறவு எம்பொழப்பு சீரழிச்சி போச்சு.

பெரிய பொண்ண கட்டிக் குடுக்குற வறைக்கும் நிதானமாதான் இருந்தாரு. இந்த பத்து வருசத்துக்குள்ள குடிச்ச குடியில கொடலே அழுகிருச்சுன்னு டாக்டருங்க சொல்றாங்க. கொடலு, கிட்னி, மஞ்சக்காமால இத்தனயும் ஒரு ஒடம்புல இருந்தா எதப்பாக்குறது? மாசத்துக்கு ரெண்டு தரம் ஆஸ்பத்திரி கூட்டிப் போகனும் ஒருக்க பஸ்சுக்கு போக 200 செலவு ஆயிடும்.

மூனு வருசமா நாங்க ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு போறதும் டாக்டருங்க குடிக்காதிங்கன்னு சொல்றதும் பொழப்பா போச்சு. ஆஸ்பத்திரிலேருந்து திரும்பி வந்த மறு நாளே சாராய கடைக்கி போயிடுவான். நாத்து நட்டு, களப்பறிச்ச கூலிய ஏழு இடுக்குள பதுக்கி வச்சாலும் எடுத்துருவான். சாராயக் கட தூரமா இருந்தா போக முடியாது. காலடியில இருக்கதால தூங்கி முழிக்கிறதே அங்கதான்.

இப்பெல்லாம் எந்த வெவசாய வேலையும் சாராயம் இல்லாமெ நடக்குறதுல்ல. ஒரு மூட்ட நாத்தரிக்க, ஒரு ஏக்கர் நடவு நட, ஒரு ஏக்கர் கருதறுக்க கூலி இவ்வளவு, பாட்டுலுக்கு காசு தனி அப்புடிதான் ரேட்டே பேசுறானுங்க… ஈவுபாவா நல்லா வேல பாக்குற ஆளுக்கு வயக்காரங்க ரெண்டு பாட்டுலு சேத்தே வாங்கி தாராங்க.

எங்கூட்டாளு நாளைக்கி ஒங்களுக்கு வேலைக்கு வரேன்… இன்னைக்கி அவசரமா 100, 200 குடுங்கன்னு வாங்கியாந்து குடிச்சுருவாரு. காசு குடுத்தவங்க திட்டவும் செய்வாங்க சமயத்துல ரெண்டு அடியையும் போடுவாங்க. காசு குடுத்ததுக்காக முடியும் போது ஏதாச்சும் வேலைய வாங்கிப்பாங்க.

இந்தாள நம்பி ஒன்னுத்துக்கும் வேலைக்காதுன்னு ஆனபொறவு சின்ன பொண்ண துணிக்கடையில வேலப் பாக்க சென்னைக்கி அனுப்புனே. அது ஏதோ மூனு பவுன வாங்குச்சு துணிமணியெல்லாம் எடுத்து வச்சுருந்தா… அத போட்டு கல்யாணம் செஞ்சி வச்சோம்.

சின்னப்புள்ளைய கட்டிக்குடுத்து நாலு வருசமாச்சு. கல்யாணம் சீமந்தமுன்னு வாங்குன கடனுல அடைச்சது போக குழுக்கடனு 60 ஆயிரம் இருக்கு.  தலைய அடகு வச்சாவது மாசாமாசம் தவண பணம் கட்டியாகனும்.

வீட்டுக்குள்ள ஒரு பொருளுருக்கா பாத்தியளா… கரி படிஞ்ச குண்டானத் தவிர வேற எதுவும் இல்ல என் வீட்டுல. தண்ணி எடுக்குற கொடம் தவல, வீட்டுல இருந்த சைக்கெளு… எல்லாத்தையும் வச்சு குடிச்சுட்டான். அதவிட கொடுமெ ஒரு நாளு மம்பட்டிய(மண்வெட்டி) வித்துட்டு குடிச்சுட்டு வந்தான். மம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற எந்த குடியானவனும் குடும்பத்த காப்பாத்துவான்னு நம்ப முடியுமா..?

இந்த காலனி வீடு கட்டி எட்டு வருசம் ஆகப்போவுது. இருந்த இரும்பு கதவும் துரு..தின்னு சாத்த முடியாமெ போச்சு. வேற மாத்துக் கதவு போட முடியல. எங்கூட்டாளு ஒன்னும் வேல தெரியாத மனுசனில்ல. ஓங்கி வெட்டுன ஒரு கொட்டு மண்ணு ஒரு ஒடப்படையும் உழப்பாளி மனுசென்… சாராயம் எங்க வாழ்க்கைய மாத்திபுடிச்சு.

சாராயக் கட இல்லன்னா எங்கூட்டாளு நல்லவந்தான்னு சொல்லிட்டே இருந்தா கடன குடுத்தவங்க ஏத்துப்பாங்களா? ஆத்துல தண்ணி இல்லாம ஊருக்குள்ள வேலை நெரந்தரமா கெடைக்க மாட்டேங்குது. எப்புடி கடனடைக்க..?

நெனச்சு பாக்கையில ஆத்தரம் அதிகமா வரும். அப்பனும் மகனும் எப்படியாச்சும் ஆக்கி தின்னுங்கடான்னு விட்டுட்டு… போருங்க (ஆழ்துளை கிணறு) அதிகமா இருக்குற பட்டுக்கோட்ட, மன்னார்குடி பக்கம் போயிடுவேன். வாரம், பத்து நாளு தங்கியிருந்து வேலை செஞ்சுட்டு கூலிய கடங்குடுத்த குழுவுக்கு கட்டிட்டுதான் வீட்டுக்குள்ளேயே வருவேன்.

இந்த தடவையும் அப்புடிதான்……. சின்னமக புள்ளைக்கி முடியெடுக்க போறேன்னு சொல்லிச்சு. ஒரு சட்டதுணி வாங்கிப் போடலான்னு காசு வச்சுருந்தேன் அப்பா எடுத்தானோ மகன் எடுத்தானோ காச காணோம். கேட்டா ரெண்டு பேருமே அடுச்சுபுட்டாய்ங்க… போக்கத்தவளுக்கு ஏது எடம், வழக்கம் போல திரும்பவும் கோச்சுகிட்டு வேலை தேடி போயிட்டேன்.

பத்துநாளைக்கு பெறவு என் போட்டா போட்டு கடையில ஒரு போஸ்டரு ஒட்டிருந்துச்சு. என்னையா எழுதிருக்குன்னு விசாரிச்சேன். அவசரமா வீட்டுக்கு வரனுமின்னு எழுதிருக்குன்னாங்க. ஒரு தடவையும் நம்மள தேடுவாரில்லையே இது என்ன புதுசான்னு… அடிவயிற கலக்கிருச்சு.

எங்கூட்டாளு ஒன்னும் வேல தெரியாத மனுசனில்ல. ஓங்கி வெட்டுன ஒரு கொட்டு மண்ணு ஒரு ஒடப்படையும் உழப்பாளி மனுசென்… சாராயம் எங்க வாழ்க்கைய மாத்திபுடிச்சு.

அடிச்சுபுடிச்சு வீட்டுக்கு ஓடியாந்தா அப்பா செத்து அஞ்சு நாளாச்சு… எங்கம்மா போனேன்னு கத்துறா எம்பொண்ணு. வெளிக்கி போன எடத்துலேயே ரெத்த வாந்தி எடுத்து செத்துக் கெடந்துருக்காரு அந்த மனுசென்…வயசு 49 – தாண்டலை!

ஒரு வருசமா சரியா நடக்கக் கூட முடியல. ஆனா சாராயம் காலடியிலேயே கெடைக்கிறதால நிறுத்தாம குடிச்சுட்டு இருந்தாரு…

நா.. பொலம்பி அழுதா போன உசுறு திரும்பி வருமா? கலங்கி படுத்தா கடங்காறன் விடுவானா? நா என்ன செய்யப் போறேன்?

ஊரா இது, ஒரு கட்டுப்பாடு இல்லாமெ போச்சு. பக்கத்து ஊரு டாஸ்மார்குல சாராயத்த வாங்கி ஊருக்குள்ள வச்சுகிட்டு சில்றையா டம்ளர்ல ஊத்திக் கொடுத்து யாவாரம் பாக்குறாங்க. முழுசா பாட்டுல வாங்க காசில்லன்னு கலங்கி நிக்க தேவையில்ல. கையில இருக்குற காசுக்கு தக்கன.. வாங்கி குடிச்சிக்கிடலாம். வேல முடிச்சு பொழுதுக்கா கூலி வாங்குனதும் முழு பாட்டுலு வாங்க டாஸ்மார்க்கு போறாங்க.

விடியக்காத்தாலயே ஊருக்குள்ள டீக்கடப் போல சாராயத்த விக்கிறதால வயக்காட்டுக்கு போற அத்தன ஆம்பளையும் வந்து குடிச்சுட்டு போறானுங்க. இது சரியில்லன்னு கேக்க முடியுமா? ஈனச்சிறுக்கி, பறச்செரிக்கி நாங்க எப்புடி நடந்துக்கனுன்னு தெருவுக்குள்ள வந்து நீ சொல்லித்தரியான்னு ஏசுவானுக.

எங்க தெருக்காரங்க எல்லாம் சேந்து போயி ஊரு பெரிய மனுசங்கிட்ட சொல்லியும் ஒன்னும் நடக்கல. டாஸ்மார்கு இருக்க கூடாதுன்னு சொல்லி கடைக்கி முன்னாடி உக்காது போராட்டம் செஞ்சும் ஒன்னும் நடக்கல.

அப்பனப் பாத்து எம்மகனும் 14 வயசுலேயே குடிக்க ஆரம்பிச்சுட்டான். இப்ப 17 வயசு ஆவுது காளை போல இருக்கான் ஒரு குடும்பத்த தாங்கலாம். ஆனா எந்த வய வேலையும் தெரியாது. குடிக்க கையில காசு இல்லன்னா மட்டும் சித்தாளு வேலைக்கி போவான். அவன நம்பி வீட்டுல அஞ்சு பத்து வைக்க முடியாது. இந்த சாராயக்கடைங்கள எடுக்காம வச்சுருந்தா எம்புருசனப் போல பிள்ளையையும் எழந்துடுவேனோன்னு பயமாருக்கு”

சாராயத்தால ஊருக்கூரு இதே நெலமெதான். யார் வீட்டு எழவொ பாய் போட்டு தூங்குனு… யாரும் கண்டுக்க மாட்டேங்குறாக.

குறிப்பு: உண்மைச்சம்பவம், ஊர்,பெயர் அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

  • சரசம்மா

டிவிட்டர் டிரண்டிங்கில் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் !

ல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் தந்தை பெரியாரின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க. ஆட்சியின் ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழகத்தின் குரலுக்கு அடிநாதமாகத் திகழ்பவர் பெரியார்.

பெரியாரின் 140-வது பிறந்த நாளோடு பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளும் சேர்ந்து வந்தது (17.09.2018). தமிழக டிவிட்டர்வாசிகள் மட்டுமல்ல, இந்திய அளவிலான டிவிட்டர்வாசிகளும் பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவரது பணிகளை, அவரது கொள்கையை உரக்கக் கூறிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரை டிவிட்டர் டிரண்டிங்களில் மோடியை விட பெரியாரே முன்னணி வகித்தார்.

படிக்க:

யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார்
ஐயர் மனசுல பெரியார் !

இது சங்கிகளுக்கு வயிற்றெரிச்சலாகவே உள்ளது. இந்த சங்கிகளுக்கு பெரும்பான்மை இந்துக்கள் வாழும் தமிழகம், “கடவுள் இல்லை” என்று கூறிய இந்த ஈரோட்டுக் கிழவனை ஏன் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது என்று புரியவில்லை.

இந்துத்துவ அடிமைகளுக்கு சுயமரியாதையின் அவசியமும், மகத்துவமும் தெரியுமா என்ன?

டிவிட்டரில் பெரியாரைக் கொண்டாடும் பல்லாயிரம் பதிவுகளில் சிலவற்றை தொகுத்திருக்கிறோம்.

Prabha Raj

சங்கிகளால், கடவுளை வெளிப்படையாக மறுக்கிற ஒரு மனிதன், 87.58% ஹிந்துக்களைக் கொண்ட தமிழகத்தின் கனவு நாயகனாகத் திகழ்வதையும், பெரியார் மண்ணை ஏன் தங்களால் காவிமயமாக்க முடியவில்லை என்பதை அவர்கள் எப்போதும் அறிந்துகொள்ளப்போவது இல்லை. தமது மரணத்துக்குப் பின்னர் பல பத்தாண்டுகள் கடந்தாலும் சங்கிகளுக்கு கொடுங்கனவாக வாய்த்த ஒரே மனிதன் #HBDPeriyar140

carpe diem

இதற்கு சுட்டுரை எதுவும் தேவையில்லை.

Shabbir Ahmed

தமிழகத்தின் முதல் அர்பன் நக்சல் (நகர்ப்புற நக்சல்) #HBDPeriyar140

புத்தன்

இதுதான் இன்றைய புகைப்படம் #BleedBlack #HBDPeriyar140

Elite Naxal

என் கொள்ளுத்தாத்தாவுக்கு இதைவிட பொறுத்தமான புகைப்படம் இல்லை என்றே நான் கருதுகிறேன்  #HBDPeriyar140

THE ONE

எங்கும் கிடைக்காது #HBDPeriyar140

Amaranth

பாஜகவின் அதிகாரத்திற்கான பசி, பெரியாரின் கொள்கைகளுக்கு முன்னால் #HBDPeriyar140

Ashraf
#HBDPeriyar140 சங்கிகளின் கொடுங்கனவு

S.Prince Ennares Per

140 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாளில் ஒரு அஞ்சாத தைரியமான மனம் பிறந்தது. கட்டுக்கடங்காது ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவர். தனது இறுதி மூச்சுவரையிலும் எதற்கும் பணியாமல் நின்றவர். ஒரு சட்டகங்களுக்குள் அடைபடாத மனிதர். #HBDPeriyar140

Voice of RaavanaN

தமிழகம் பெரியாருக்கு சிறந்த பிறந்தநாள் பரிசைக் கொடுப்பதாக இருந்தால், இன்று @HRajaBJP-ஐ கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.

கமல்

#HBDPeriyar140 90-வது வயதில் 180 கூட்டம். 91-வது வயதில் 150 கூட்டம். 93-வது வயதில் 249 கூட்டம். 94-வது வயதில் 229 கூட்டம். வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம். மக்களுக்காக அவர்கள் சுயமரியாதைக்காக உரையாடினார்! அவர்தாம் பெரியார் ! இவருக்கு ஈடு இணை யார்?

Arunmozhi

சட்டகங்களுக்குள் அடைக்கமுடியாத ஒரு மனிதர். அவர் இல்லாத தமிழகத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இந்த மனிதர் இல்லையெனில் தமிழகத்தில் பல்வேறுதரப்பினரும், தங்களது பெயருக்குப் பின்னால் இந்தியாவின் பிற பகுதியினரைப் போல் சாதிப் பெயரோ, குடும்பப் பெயரோ இட்டுக் கொண்டிருப்பர்.

Chozhar parambarayil oru MLA

பெருந்திரளின் தலைவர், எனது விருப்பமிக்க தலைவர் #HBDPeriyar140. @narendramodi – நீங்களும் அவரது பிறந்தநாளில் பிறந்திருக்கிறீர்கள். இது எங்களுக்கு மிகபெரிய அவமானகரமானது. அவரது வயதில் கிட்டத்தட்ட பாதி வயதை அடைந்திருப்பீர்கள். அவருக்காக சிறிதேனும் நல்ல எண்ணங்களைக் கொண்டிருங்கள். உங்களது பிறந்தநாள் பரிசாக எதிர்வரும் தேர்தலில் தயவு செய்து பிரதமர் பதவிக்கு போட்டியிட்டுவிடாதீர்கள்.

Pirai Kannan

பார்த்துட்டு சாவுங்கடா………! #HBDPeriyar140 #Periyar140

Martin Joseph

#HBDPeriyar140 யோவ் கிழவா!! நானெல்லாம் படிக்கனும்தானே 93 வயசு வரைக்கும் கஷ்டப்பட்ட, படிச்சு நல்ல நிலைமைக்கு வந்துட்டேன் வந்து பாருய்யா..!! நன்றியோடு கடைசி வரைக்கும் இருப்பேன்யா.. Love you கிழவா!!

நித்யா

#HBDPeriyar140 #பெரியார்140 பெரியார் யார்? மானம் கெடுப்பாரை… அறிவைத் தடுப்பாரை… அடியோடு பெயர்த்த கடப்பாரை – அவர்தான் #பெரியார்

prem vendan

எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவர்கள் கடவுள் விரோதி, மத விரோதி, பார்ப்பனரை எதிர்கின்றார்கள். இப்படித்தான் கூறுவார்களே ஒழியே, எங்களால் என்ன கேடு என்று எவனும் கூற முடியாது. – தந்தை பெரியார். #Periyar #HBDPeriyar140

பைஜூ யுவன்

உன் இனத்தில் யார் பெயர் சொன்னால் எதிரி குலைநடுங்குகிறானோ அவனே உன் இனத்தின் தலைவன்! #தந்தைபெரியார் #HBDPeriyar #HBDPeriyar140

Dinesh

எங்கெல்லாம் ஏதாவது ஒரு இனம் ஒடுக்கபடுகிறதோ அங்கெல்லாம் அந்த பெருங்கிழவனின் பெயர் உச்சரிக்கபட்டே தீரும். #HBDPeriyar140

Surya Born To Win

காவிகள் திராவிடர்களை விழுங்க முற்படுகிறர்கள். ஆனால் தொண்டையில் சிக்கிய முள் போல் ‘பெரியார்’ இருக்கிறார், விடமாட்டார்! #HBDPeriyar140

SàãNàã

அரசியல் சாசனத்தை எரித்தீர்களா? ஆம் எரித்தேன் .. தெறிக்க விடலாமா !!! #HBDPeriyar140

Aravindhan Annadurai

உன் வெண் தாடியும் கருப்பு சட்டையும் இல்லையெனில்.. என்றோ காவி எங்களையும் காவு வாங்கி இருக்கும்..! #HBDPeriyar140

amutharasan‏

ஒரு மனிதன் இறந்து 45 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது கருத்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்கிறது எனில் அத்தகைய ஒரே தலைவர் தந்தை பெரியார் ஒருவர் தான். #HBDPeriyar140

 

– வினவு செய்திப் பிரிவு

வேலூர் – திருச்சியில் தந்தை பெரியார் 140-வது பிறந்த நாள் விழா

வேலூர்: பெரியார் பிறந்தநாளைக் கொண்டாட போலீசு கெடுபிடி

காவல்துறை அனுமதி மறுப்புக் கடிதம்

ந்தை பெரியாரின் 140–வது பிறந்தநாளை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மூலம் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஐந்து நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும், பேரணி நடத்தப்படும் நேரம் போக்குவரத்து அதிகம் உள்ள நேரம் என்பதாலும், பாதுகாப்பு தரவேண்டிய காவலர்கள் வேறு பணிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது என கடைசி நேரத்தில பேரணிக்கான அனுமதியை மறுத்துள்ளார் வேலூர் வடக்கு போலீசு நிலைய ஆய்வாளர். மோடியின் இரண்டு செருப்புகள் தமிழகத்தை ஆளும் போது, பெரியார் பிறந்த மண்ணில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட இத்தனை கெடுபிடிகள் நடப்பது இயல்புதானே!

வேலூர் – மகஇக பேரணி

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் ஒலிபெருக்கி இல்லாமல் வேலூர் மீன் மார்க்கெட்டிலிருந்து தலைமை அஞ்சலகம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலை வரை 17.09.2018 காலை 11.00 மணிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. பெரியார் சிலை அருகே ம.க.இ.க மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ம.க.இ.க தோழர் வாணி மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் தி.க.சின்னதுரை ஆகியோர் பெரியார் குறித்து கருத்துரை வழங்கினர். இறுதியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்ட பெண்கள் சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

ம.க.இ.க ஆர்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இடையிடையே தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிய-பெரியாரிய பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் சேண்பாக்கம் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செலுத்தப்பட்டது.

இவை தவிர பல்வேறு கட்சிகள் சார்பில் வேலூர் நகரெங்கும் பெரியார் பிறந்த நாள் விழா சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பார்ப்பனியத்தின் கொடுக்குகள் எஞ்சியிருக்கும் வரை தந்தை பெரியாரின் தடி சுழன்று கொண்டேதான் இருக்கும். வாழ்க பெரியார்!

தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்

திருச்சி: பெரியார் சிலைக்கு மாலை, முழக்கங்களுடன் பெரியார் பிறந்தநாள் விழா

ந்தை பெரியார் அவர்களின் 140-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் திருச்சியில் 17.09.2018 அன்று மாலை 5 மணியளவில் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள அவரது உருவச்சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வினை ம.க.இ.க-வின் மாவட்டச் செயலாளர் தோழர் ஜீவா தலைமை தாங்கி நடத்தினார்.

தோழர்கள் பெரியாரை வாழ்த்தியும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிராகவும் முழக்கங்களிட்டனர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் அவர்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ”மக்களின் உரிமையை பா.ஜ.க பறித்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் தந்தை பெரியாரின் தேவை முன்பைக் காட்டிலும் இப்போது அதிகரித்துள்ளது.

திருச்சி: பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிடும் ம.க.இ.க. தோழர்கள்

H.ராஜா பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறிய போது தமிழகத்தில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் இணையத்தில் பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். எனவே இவர்களது நடவடிக்கைகள் அவர்களுக்கே எதிர்மறையாகப் போகுமே ஒழிய தமிழகத்தில் அவர்களால் காலூன்றவே முடியாது. தந்தை பெரியாரின் தொண்டு, புகழ் ஒருபோதும் அழியாது. இவர்களது நடவடிக்கைகள் மக்களிடம் பெரியாரின் மதிப்பை மேலும் மேலும்  உயர்த்துமே ஒழிய ஒருபோதும் தாழ்த்தாது. அவருடைய பிறந்தநாளில் அவரது சமூகத்தொண்டை, பார்பனிய எதிர்ப்பை தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் செல்வோம்” என்றார்.

இந்நிகழ்வினை மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் நின்று ஆர்வத்துடன் கவனித்து சென்றனர். ஒரு வெளியூர் பயணி அனைத்து தோழர்களுக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்து தமது ஆதரவை தெரிவித்துச் சென்றார்.

தகவல்: ம.க.இ.க., திருச்சி.

சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்

சென்னை மாதவரம் பால்பண்ணை சாலையோரம் கடந்து சென்றபோது கண்ணில் பட்டது அமர்பிரசாத்தின் ஜூஸ் கடை. வாகை மரத்து நிழலில் ஒரு தள்ளுவண்டி, ரெண்டு மரப்பலகை. அதுதான் அவரது கடை. வெயிலுக்கு இதமாக அவர் கொடுத்த மோரின் குளுமையைவிட, அவரது தமிழ் பேசும் பாங்கு இனிமையாயிருந்தது. வடமாநிலத்தொழிலாளி என்று யூகிக்க முடியாத அளவிற்கு சரளமான பேச்சு. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த போது இருவிரல் துண்டாகிப்போன அவரது கை கண்ணில் பட்டது.அமர் பிரசாத்துக்கு வயது 30. திருமணமாகவில்லை. ஒரிசாவையடுத்த கட்டாக் சொந்த ஊர். திருமணமான ஒரு அண்ணன் கல்லூரி படிக்கும் இரண்டு தம்பிகள். சொந்த வீடிருந்தாலும் விவசாய நிலமில்லை. பிளஸ்டூ வரை படித்திருக்கும் அமர்பிரசாத், பிழைப்புக்காக சென்னைக்கு வந்தபோது அவரது வயது 19.

”11 வயசுல அம்மா இறந்துட்டாங்க. என் சின்ன தம்பிக்கு ரெண்டு வயசு. சொந்தக்காரங்க எவ்ளோ சொல்லியும் அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கல. சின்ன வயசில இருந்து நானே சமையல் பண்ணி சாப்ட்டு எல்லா கஷ்டமும் அனுபவச்சிட்டோம். ரெண்டு தம்பிங்க படிக்கணும்னு நான் வெளிய வந்துட்டேன். அப்பா கூட விவசாய வேலை செஞ்சி அந்தளவுக்கு வருமானம் வரல. சரி ரெண்டு தம்பிங்கள படிக்க வைக்கனும்ணு நான் இங்கெ வந்துட்டேன்.”

சென்னைக்கு எப்படி வந்தீங்க?

”இங்க சொந்தக்கார பசங்க இருந்தாங்க. கூப்டாங்க வந்துட்டேன். மெட்ராசுக்கு வந்து 12 வருசம் ஆகுது.”

இந்த 12 வருடத்தில் சொந்த உழைப்பில் தம்பிகளை படிக்க வைத்ததைத் தாண்டி, அமர்பிரசாத் சம்பாதித்தது சில தமிழ் உறவுகளை. இழந்தது, இரு விரல்களை.

கடைசியாக, 9,500 சம்பளத்தில் சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனியொன்றில் பணியாற்றிய அமர்பிரசாத், இரு விரல்களை இழக்க நேரிட்ட அந்த விபத்தைப் பற்றி பேசவே சங்கபடப்படுகிறார். அந்நினைவுகளை வலியோடு கடந்து போகிறார்.

”நடந்தது நடந்து போச்சு. அத மனசுல இருந்து நீக்கிட்டு நானும் முன்னேறி போயிட்டு இருக்கிறேன்.”

யாரு மேல தப்பு?

”வேலை செய்றப்போ. மிஷின்ல ப்ராப்ளம் இருந்திச்சி. ஆக்சிடன்ட் மாதிரி. நாமளே ரோட்ல போறோம் ஆக்ஸிடண்ட் ஆவுதில்லை.”

அது சரி… தலைக்கு ஹெல்மெட், காலுக்கு ஷூ, கைக்கு குளோவ்ஸ் எல்லாம் கம்பெனியில கொடுத்தாங்களா?

”நான் ஒன்னு சொல்லட்டுமா… கம்பெனி நடக்கிறவங்க.. எல்லா பெரிய பெரிய எடத்துல போயிட்டு… பணம் கொடுத்து சரி பண்றாங்க. ஆயிரம் சொன்னாலும் ஒன்னும் நடக்காது. அவங்கதான் பவர்ல இருக்கிறாங்க. கவர்மெண்டு சேப்டிக்கு ரூல்ஸ் போட்டுருக்கலாம். ஆனா, அந்த சேப்டி எல்லோரும் ஃபாலோ பன்றாங்களா? யாரும் பன்னமாட்டாங்க.”

”சின்ன கம்பெனி கூட லைசன்ஸ் வெச்சுகிட்டும் ஓட்றாங்க… இல்லாம ஓட்றாங்க. நாம சாப்டறதுக்கு வழியில்லனுதான் வேலைக்கு வந்திருக்கோம். சம்பாதிக்கிறோம். அவ்ளோதான். நாம அதெல்லாம் கவனிக்க முடியுமா?”

சரி.. கம்பெனில கவனிச்சாங்களா? காசு ஏதும் கொடுத்தாங்களா?

”கொடுத்தாங்கோ. சொல்றதெல்லாம் வேணாம். எல்லாம் முடிஞ்சி போச்சி. அவங்கிட்ட பெரிய பெரிய ஆளுங்கெ இருக்காங்க. நாம என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க. நம்ம உயிருக்கு ஆபத்து இருக்குன்னு எல்லாம் விட்டாச்சு. இதே மாதிரி லட்ச கணக்குல கம்பெனி ஓட்றாங்க. நீங்க எத்தன கம்பெனிய போயி இந்தமாதிரி கேட்க முடியும்.”

”எனக்கு இங்க யாருமே கிடையாது. நான் ஒரு ஆளுதான் இங்க இருக்கிறேன். நான் குடியிருக்கிற வீட்டுக்கு எதிரிலதான் அந்த கம்பெனி இருக்குது. வீட்டு ஓனரு கட்சி காரங்க மூலமா போயி கேசு பைனல் பன்னிட்டேன். இதுக்கு மேல பேசுனா எனக்கே ஆபத்து. எனக்கு மனசு கஷ்டம் ஆயிட்டதால உங்ககிட்ட சொல்லிடறேன். அவ்ளோதான்.”

தமிழ் ஆளுங்க உதவி செஞ்சாங்களா?

”ஆக்ஸிடன்ட் ஆனப்போ எல்லா வந்தாங்க உதவி செஞ்சாங்க அவ்ளோதான். ஹவுஸ் ஓனரு தமிழ் ஆளுங்க எல்லாம் சேர்ந்து கேட்டாங்க. என்னா ஒரு வருத்தம் வருதுன்னா கை கால் அடிபட்டிருது, நமக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப். இருந்தா ஒரு சேப்டியா இருக்கும் லைப்.

ஸ்டேன்லி ஆஸ்பிட்டல போயி சரிபன்னினேன். ஆறு மாசம் ஆச்சி. வேலைக்கு போவல. வீட்லதான் இருந்தேன். அதுலயே காசும் கரைஞ்சி போச்சி.”

இறுக்கமான அந்தத் தருணங்களை கடந்து வர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது.

இவ்வளவு சரளமா தமிழ் பேசுறீங்களே? எப்படி கத்துக்கிட்டீங்க?

”கம்பெனியிலதான் கத்துகிட்டேன். அப்போ இங்க உள்ள சாப்பாடு கூட பிடிக்கலை. பாசை பேசறதே புரியலை. தமிழு ஆளுங்க கூட வேலை செய்யிறப்போ, அவங்க சொல்றது புரியாது. ஏற்கெனவே இருக்கிற எங்க ஆளுங்க.. இத செய்ய சொல்றாருனு சொல்வாங்க. அப்டிதான் கத்துகிட்டேன். அவங்க சொல்றது புரியும். ஆனா, பதில் பேச முடியாது. அவங்ககிட்ட பதில் பேசனும்னு ஆசை வந்திச்சி. அந்த இன்ட்ரஸ்ட்ல கொஞ்ச கொஞ்சமா  கத்துகிட்டேன்.”

”என்னடா வாடா, போடா”னு பேசுவோம். லேடிஸ்ங்க கிட்ட கூட அப்போ வாடா, போடானு பேசினேன். லேடிஸ் வந்து புரிய வச்சி சொல்லிடுவாங்க. நம்மகிட்ட இதெல்லாம் பேசக்கூடாது. நம்மள அக்கானு கூப்டுனும் சொல்வாங்க. லேடிஸ்கிட்ட எப்படி பேசனும், ஜென்ட்ஸ்கிட்ட எப்படி பேசனும், சின்ன பசங்ககிட்ட எப்படி பேசனும் கத்துகிட்டேன்.”

பார்க், பீச், சினிமா எல்லாம் போவீங்களா?

”25 வயசு வரைக்கும் சினிமா போகலை. இங்க வந்து தண்டையார்பேட்டையில வேல செஞ்சப்போ தியேட்டர்ல போயி படம் பார்த்தேன்.”

”தமிழ் கத்துகிடனுனு இன்ட்ரஸ்ட் வந்துச்சினா அதுக்கு ஒரே காரணம் வடிவேல் சார். காமெடியன். அவங்க காமெடி வந்து எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்கூட இருக்கவங்களோட டி.வி. பார்க்கறப்ப அவங்களுக்கு தமிழ் புரியும். எனக்கு புரியாது. ஆனா, சிரிப்பு வரும்ல.

இப்ப மனசுக்கு கஷ்டமா இருந்தா கூட, அவங்க காமெடிய பாக்கனும்னு எனக்கு தோனும். அவங்கள ஒரே ஒருமுறை மீட் பண்ணலாமானு தோணும்… நானே ஊரு விட்டு வந்துருக்கிறேன், எப்படி பாக்கறது?”

பீடி, சிகரெட்..?

”அந்த பழக்கமில்லை. 6-வது 7-வது படிக்கிறப்பவே எல்லாரும் உட்கார வச்சி நம்ம லைப்ஃல எப்போவுமே இந்த போதை பொருள தொடக்கூடாதுனு காந்தி புஸ்தகத்தில சத்தியம் பண்ணி விட்டாங்க. அது மைண்ட்ல ஏறிடுச்சி. நியூஸ்-ல பார்ப்பேன், தண்ணிலாம் சாப்ட்டு குடும்பத்துல ஒரு ஹாப்பினெஸ் இருக்காது. போதை சாப்ட்டாலே உடம்பு கெட்டு போயிடும். இதெல்லாம் பார்த்து அதுமேல வெறுப்பு வந்திருச்சி.”

”பீர் மட்டும் குடிச்சிருக்கேன். உங்கிட்ட பொய் சொல்லமாட்டேன். பிரண்ட்ஸ் கூட சேர்ந்து. அதுவும் போதை இருக்காது, உடம்புக்கு நல்லதுனு சொல்லவும் குடிச்சிருக்கேன்.”

இதெல்லாம் எப்படி சாத்தியம். உங்க வயசு பசங்க எல்லாம் எப்படியெல்லாமோ லைஃப்ப என்ஜாய் பன்றாங்களே… சொல்லி முடிக்கும் முன்னரே தொடர்ந்தார், அமர்பிரசாத்.

”எல்லாம் சிச்சுவேசன்தான். 11 வயசில அம்மா இறந்தாங்க. அதில இருந்து எவ்ளோ கஷ்டம் பார்த்தாச்சு. 1999-ல சூப்பர் சைக்ளோன் (ஒரிசாவைத் தாக்கிய பெரும் புயல்) வந்தது. வெள்ளி, சனி, ஞாயிறு மூனு நாளக்கி ஒரே இடத்துல தண்ணிக்குள்ள உக்காந்து இருந்தோம். செத்துபோயிருவோம்னு நினைச்சினு இருந்தோம். உசிர் பொழச்சி வந்தோம். அதுல இருந்த வீடும் போயிருச்சி. அதுக்கப்புறம்… என் குடும்பத்து மேல உள்ள பாசத்துல நான் வாழ்ந்துட்டிருக்கேன். அதனாலதான் லவ்வு அதல்லாம் எனக்கு வரல. எனக்கு என் ரெண்டு தம்பிங்க படிச்சி நல்லா வேலையில சேரனும். அம்மா விட்டுட்டு போயிட்டாங்க. குடும்பம் நல்லா இருக்கனும். அந்த நினைப்பில கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை கூட படல நானு.”

தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு மோரும், பால் சர்பத்தும் கலக்கி கொடுத்து கொண்டேயிருந்தார்.

இந்த வியாபாரத்துக்கு எப்படி வந்தீங்க? வியாபாரம் பரவாயில்லியா?

”அடிபட்டதுக்கு அப்புறம் டெய்லர் மெஷின் மெக்கானிக் வேலை கத்துகினேன். சொந்தமா கடைகூட வச்சிருந்தேன். அந்தளவுக்கு வருமானம் வரலை. ரூம் வாடகை 2,500. கடை வாடகை 2,000. அப்புறம் சாப்பாடு செலவு. கணக்கு பார்த்தா 7,000 செலவு ஆகும். வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்துச்சு.”

”அடிபட்டதுக்கு அப்புறம் ஊருக்கு சரியா காசு அனுப்பலை. கம்பெனில இருந்தப்போ மாசம் 4,000 ரூபா, 5,000 ரூபா அனுப்புவேன். கம்பெனில ஓவர் டைம் இருக்கும். எக்ஸ்ட்ரா காசு வரும். என் குடும்பத்துக்கு எவ்வளோ சேப்டி பன்னனுமோ அவ்ளோ பன்னினேன்.”

”இப்போ, கடை போட்டு நாலு அஞ்சு மாசம்தான் ஆவுது. அதுல மூனு மாசம் வரைக்கும் அந்தளவுக்கு வருமானம் வரலை. போன மாசம்தான் ஜனங்க வர்ற ஆரம்பிச்சாங்க. டெய்லி முன்னூறு, நானுறுரூபா சம்பாதிக்கிறேன்.”

ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் வேலை செய்றீங்க?

”காலைல 5 மணிக்கு எழுந்திருச்சி, எல்லா ரெடி பண்ணிட்டு பத்து மணிக்கு வருவேன். சாந்திரம் 5 மணி வரைக்கும் இருப்பேன். இதெல்லாம் எடுத்து போயி கழுவி வைக்கனும். நாளைக்கு என்னென்ன வேணும்னு கடைக்கு போயி வாங்கனும். ரெஸ்ட் அந்த அளவுக்கு இருக்காது. ஏன்னா சொந்த தொழில் செய்யிறோம் அப்டிங்கிற சந்தோசம் இருக்கிது, அவ்ளோதான்.

இதுல ஒருநாளைக்கு வருமானம் வரும். வராது. நூறு ரூபா சம்பாதிச்சாலும் ஃஹேப்பியா இருக்கிறேன். அவ்ளோதான்.”

உங்களுக்கே உடம்பு சரியில்லாம கடை போட முடியலனா எப்படி சமாளிப்பீங்க?

”ஆமா ஒன்னும் பண்ண முடியாது. நடுவுல மூனு நாள் மழை பேஞ்சிச்சு. கடை போடல. அப்ப என்ன பண்ண முடியும். கடவுள் ஏதாவது ஒரு வழி காட்டுவாரு.”

ஊருக்கு கடைசியா எப்போ போனீங்க?

”ஊருக்கு… வருசத்துக்கு ஒருவாட்டி போயிட்டு ஒருமாசம் தங்கிட்டு வருவேன். மனசு சரியில்ல, ஒரு எமர்ஜென்சினா போவேன். போயிட்டு வர்றனும்னா கையில ஒரு பத்தாயிரம் இருந்தாதான் போயிட்டு வர முடியும். ட்ரெயின் டிக்கெட், நம்ம செலவு, துணிவாங்க, ஹாப்பியா இருக்கனும். தம்பிங்களுக்கு ஒரு பேண்ட் சர்ட் எடுக்கணும், அப்பாவுக்கு, அண்ணா, அண்ணிக்கு எதாவது எடுத்துட்டு போனும்.”

ஊர்ல திருவிழா நடந்தா கிளம்பி போவீங்களா?

”இதுவரைக்கும் திருவிழாவுக்கு போறதுக்கு ஒரு சான்ஸ் வரலை எனக்கு. இங்க ஆயுதபூஜை மாதிரி அங்க தசரானு விழா. ரொம்ப பேமஸ். ஆனா, 12 வருசம் ஆச்சி நான் தசரா பாக்க முடியல. தசரா போனும்னு ஆசை. ஆனா, சிச்சுவேசன் இருக்காது.

ஏன் போ முடியாதுனா. கம்பெனில தீபாளிக்கு போனஸ் தருவாங்க. வேலை செஞ்சா தருவாங்க. ஆயுத பூஜைக்கு 15 நாள் கழிச்சி போனஸ் தருவாங்க. அந்த நேரத்துல வேலை டைட்டா இருக்கும். அந்த நேரத்துக்கு ஊருக்கு போனாலே ஒரு மாசம் ஆயிரும்ல. ஓனரு என்ன நல்ல மனுசனா இருந்தாலும் கோவிச்சிப்பாரு.

ரெண்டு டைம் ஊருக்கு போயி ஓட்டு போட்டுட்டு வந்துட்டேன். ரெண்டு வாட்டி மிஸ் பண்ணிட்டேன். பக்கத்துல இருந்தா நைட் கிளம்பி போயிட்டு வரலாம். ட்ரையின் சீட்டு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். ஒரே எடத்துல நின்னுகிட்டே கூட மெட்ராசுக்கு வந்துருக்கேன்.

ஆயிரம் துயரங்களைக் கடந்து வாழ்வதற்காக கணந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் அமர்பிரசாத்திடம் விடைபெற்றோம். குடும்பம், மொழி, பண்பாடு, உணவு அனைத்தையும் துறந்து இங்கே அவர் தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கிறார். அவரிடம் குறைகள் ஒன்றுமில்லை. இரு விரல்களை இழந்தாலும், தசராவிற்கு போகவில்லை என்றாலும் பரவாயில்லை. இழப்பதற்கு ஏதுமற்றவர்கள் என்பதால் மட்டுமல்ல, போராட்டக் குணம் அதிகம் இருப்பதாலும் அமர் பிரசாத்தின் பயணம் தொடர்கிறது.

– வினவு களச்செய்தியாளர்கள்.

நீதிமன்றம் மயிரென துள்ளிய எச். ராஜா – பம்மிய போலீசு | கருத்துக் கணிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், கடந்த 15-ம் தேதி  (15.09.2018) அன்று தடையை மீறி நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பாஜக தேசியச் செயலாளரும் ஃசைபர் சைக்கோவுமான  ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது, போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த அவர், உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் இழிவான வார்த்தைகளில் பேசினார்.

நேற்று (16.09.2018) முதல் ஃசைபர் சைக்கோ எச்.ராஜா-வின் அந்த ஆக்ரோசமான பேச்சு  வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

அந்த வீடியோவில், உயர்நீதிமன்றத்தால் மேடையமைத்துப் பேச தடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் மேடை போட்டு பேசுவேன் என அடம்பிடிக்கிறார் எச்ச ராஜா.

தடுத்து சமாதானப்படுத்த கூனிக்குறுகி வரிக்கு வரி அண்ணாச்சி என கெஞ்சிக் கேட்கும் போலீசு அதிகாரிகளை  நாயை விட இழிவாக நடத்துகிறார் எச்.ராஜா. நொடிக்கு நொடி போலீசு அதிகாரிகளின் முகத்துக்கு நேரே கையை நீட்டி, “Police is Corrupt” எனக் கத்துகிறார். அந்த போலீசு அதிகாரியோ மானத்தை வீட்டிலேயே கழட்டி வைத்துவிட்டு வந்திருப்பார் போல. எச்.ராஜாவின் அழிச்சாட்டியத்துக்கு சமாதானம் கூற மீண்டும் முயல்கிறார். “அண்ணாச்சி, ஹை கோர்ட் ஆர்டர் அண்ணாச்சி” என காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார்.

அதற்கு எச்.ராஜாவோ பார்ப்பனக் கொழுப்போடு “ ஹை கோர்ட்டாவது மயிராவது !” எனத்துடிக்கிறார். நீதிபதிகளுக்கும் மானம் இல்லை என நினைத்தார்களோ என்னவோ அந்த போலீசு அதிகாரிகள் மீண்டும் எச். ராஜாவிடம் கெஞ்சத் தொடங்கினர்.

இன்னும் ஒரு படி மேலே ஏறிப் பேசினார் எச்.ராஜா. “வெட்கமா இல்லையா டிஜிபி வீட்டில ரைடு நடக்கிறது. அன்னைக்கே நீங்கள்லாம் யூனிஃபார்மைக் கழட்டிப் போட்டுட்டு வீட்டுக்கு போயிருக்கனும்.”, ”லஞ்சம் வாங்குறீங்களேயா லஞ்சம் … கிறுஸ்தவன்ட்ட முசுலீம்கிட்ட வாங்குறதயெல்லாம் சேத்து நான் தர்றேன்யா லஞ்சம்.”எனக் கதறிக் கொண்டே தனது அடிபொடிகளுக்கு அங்கு மேடை போட உத்தரவிடுகிறார்.

எச்.ராஜாவின் நோக்கம் போலீசின் கிரிமினல் வேலைகளையோ, இல்லை லஞ்ச லாவண்யங்களையோ அம்பலப்படுத்துவது அல்ல! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி 13 பேர்களைக் கொன்ற போலீசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர் இந்த எச்ச ராஜா. அப்போது இந்த குட்கா ஊழல் போலீசு நினைவுக்கு வரவில்லை! இல்லை அமித்ஷா மகன் கோடி கோடியாக ‘சம்பாதித்த’ தொழில் குறித்து எந்த போலீசும் விசாரிக்கவில்லை என இவர் ‘எழுச்சி’ காட்டவில்லை!

ஸ்டெர்லைட் போராட்டமோ, எட்டுவழிச்சாலை போராட்டமோ கருத்து சொன்னவர்களையே தேடித்தேடி கைது செய்த போலீசு இங்கே ராஜா முன் பயந்து நடுங்குகிறது. நீங்கள் இப்படி பேசலாமா என்று கெஞ்சுகிறது. அவர் என்ன பெரிய புடுங்கியா என்று ஒரு போலீசுக்காரர் கூட கேட்கவில்லை. மத்திய அரசின் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ராயல் வமிச அரசர் போல கருதுகிறது போலீசு. தமிழகத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு கூடும் கூட்டம் கூட எச்.ராஜாவுக்கு கூடுவதில்லை. ஆனால் போலீசோ பயப்படுகிறது. அடிமை எடப்பாடி அரசு போல தமிழக போலீசும் ஆர்.எஸ்.எஸ்-க்கு அஞ்சி நடப்பது ஆச்சரியமானது அல்ல!

சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்த பிறகே பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின்கீழ் திருமயம் போலீசார் எச்.ராஜா மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அவர்களை கைது செய்ய திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப் பட்டிருந்தாலும் இதுவரை கைது செய்ய முடியவில்லை. மேலும் பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆ.. ஊ.. என்றால் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்துவிட்டார்கள் என்று கொதித்தெழும் நீதியரசர்களும் இந்த விவகாரத்தை தாமாகவே கையில் எடுத்து நீதிமன்ற வழக்கு தொடுக்குமாறு உத்திரவிடவில்லை. என்ன இருந்தாலும் ராஜா ‘தேசியக் கட்சியின் செயலாளர்’ அல்லவா?

திருவாளர் எச்ச ராஜா

இதுகுறித்து எச்.ராஜா மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ராஜசேகர் என்பவர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்ததோடு எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தொடர்ந்தால் அதுகுறித்து நீதிமன்றம் விசாரிக்க தயார் என்றும், தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர். அவர்களுக்கும் ஏதோ பயம் இருப்பது தெரிகிறது.

பிரச்சினை பெரிதான பிறகு அந்த வீடியோவில் பேசியது என் குரல் அல்ல என்று ‘அட்மின்’ புகழ் எச்.ராஜா பல்டி அடித்துள்ளார். இதிலிருந்தே அவர் ‘இந்து’வாக அந்த இடத்தில் பேசவில்லை. கூட இருந்த ‘இந்துக்களிடம்’ தான் ஒரு அப்பாடக்கர் என்று காட்டுவதற்காக ஜம்பமடித்துள்ளது தெரிகிறது. அதனால்தான் வீடியோவில் வாங்கிய காசுக்கு மேல் கூவும் முறையில் கத்தியுள்ளார் போலும்!

எச்.ராஜா உடன் எப்போதும் போலீசு பாதுகாப்பு உண்டு. அந்தப் போலீசாரை தமிழக போலீசுதான் ஷிப்ட் முறையில் அனுப்புகிறது. ஆக எச்ச எங்கே இருக்குமென்று தமிழக போலீசுக்கு தெரியாமல் இருக்காது. ஆனால் ராஜா இதுவரை கைது செய்யவில்லை. அவரைத் தேட போலீசு இரு படைகளை போட்டு அலைகிறதாம். எஸ்.வி.சேகர் போல ராஜாவும் இனி நீதிமன்றத்தில் முன்பிணை வாங்கும்வரை இப்படி போக்கு காட்டுவார்!

தமிழகத்தில் மதக்கலவரத்தை தோற்றுவிக்கும் முகமாக எப்போதும் ஊளையிடும் இந்த நபரை குண்டாசில் கைது செய்து ஐந்தாறு வருடங்கள் வெளியே வராதபடி செய்யும்வரை இந்த வெறியரை தடுக்க முடியாது! அடிமை அரசு இதை செய்யாது! அப்படி செய்ய வைக்க வேண்டுமென்றால் மக்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தையும், போலீசையும் எச்.ராஜா கடுமையாக திட்டி பேசியதற்கு என்ன காரணம்?

  • பார்ப்பனக் கொழுப்பு
  • பேசியது அட்மின்தான், அவரல்ல
  • இந்துக்கள் மீது இழைக்கப்படும் அநீதி
  • தன்னை மறந்த கைப்பிள்ளையின் வெத்துவேட்டு
  • ஒரு தேசபக்தனின் அஞ்சாத வீரம்
  • எவன் கைது செய்வான் எனும் திமிர்
    (பதில்களில் மூன்றை தெரிவு செய்யலாம்)

 

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

 வினவு செய்திப் பிரிவு

கேரள வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு நீர் காரணமல்ல : மத்திய நீர் ஆணையம்

“கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது தமிழ்நாடு நியாயமாக நடந்துகொண்டிருக்க வேண்டும். அணையின் நீரை முன்கூட்டியே திறந்துவிட்டிருக்க வேண்டும்” என்று கூறியவர்கள் எல்லாம் வரிசையாக வாருங்கள். கேரளாவில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளம் குறித்த மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கை வந்துவிட்டது. கேரளாவில் ஏற்பட்ட இந்த வெள்ளத்திற்கு அதீதமாகப் பெய்த பருவமழையே காரணமென்றும் அணைகளிலிருந்து திறந்தவிடப்பட்ட தண்ணீர், குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காரணமல்லவென்றும் அந்த அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது.

இந்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, இரண்டின் நீர்பிடிப்புப் பகுதிகள், பெரியாறில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து இந்த அறிக்கையில் உள்ளவற்றின் சுருக்கம் இதுதான்.

1. கேரளாவில் ஆண்டு தோறும் பெய்யும் மழையின் அளவு 3000 மி.மீ. இதில் 90 சதவீதம் 6 மாத காலத்தில் பெய்கிறது. இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதிவரை மிகக் கடுமையான மழை அங்கே பெய்தது. இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை 1649.5 தான். ஆனால், 2346.6 மி.மீ அளவுக்கு மழை பெய்துவிட்டது. வழக்கமான அளவைவிட 42 சதவீதம் அதிகம். ஆகஸ்ட்டில் மட்டும் 164 சதவீதம் அதிகம் பெய்தது. ஆகஸட் 8-9 தேதிகளில் பெய்த மழையை அடுத்து எல்லா அணைகளும் தங்கள் முழுக் கொள்ளளவை எட்டத் தொடங்கியிருந்தன. இதற்குப் பிறகு 14ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதிவரை மீண்டும் கடுமையான மழை பெய்தது. இதனால், மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 13ல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 1924க்குப் பிறகு ஆகஸ்ட் 15-17ல் அவ்வளவு மழை பெய்தது இப்போதுதான்.

2. ஆகஸ்ட் 15-17ல் ஏற்பட்ட மழை பீர்மேட்டை மையம் கொண்டு கேரளா முழுவதும் விளாசித் தள்ளியது. அணைகள் முழுமையாக நிரம்பியதால் மாநிலத்தில் உள்ள 35 அணைகள் திறக்கப்பட்டன. 26 ஆண்டுகளுக்குப் பிறகு முழுவதும் நிரம்பியதால், அதன் மதகுகளும் திறக்கப்பட்டன.

3. கேரளாவில் மொத்தம் 57 அணைகள் இருக்கின்றன. இதில் 4 அணைகள் தமிழகத்தால் இயக்கப்படுகின்றன. இந்த 57 அணைகளில் 7 அணைகள் மிகப் பெரியவை. கேரள அணைகளில் தேக்கப்படும் நீரில் 74 சதவீதம் இந்த அணைகளில்தான் தேக்கப்படுகின்றன. அவை, 1. இடுக்கி, 2. இடமலையாறு, 3. கல்லாடா, 4. காக்கி, 5. பரம்பிகுளம், 6. முல்லைப் பெரியாறு, 7. மலம்புழா.

4. இருநூற்றி நாற்பத்து நான்கு கிலோ மீட்டர் நீளத்திற்கு ஓடும் பெரியாறுதான் கேரளாவின் மிகப் பெரிய நதி. இதன் தண்ணீர் பாயும் பகுதிகளில் 98 சதவீதம் கேரளாவிலும் 2 சதவீதம் தமிழகத்திலும் உள்ளது. இந்த நதியின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள மூன்று பெரிய அணைகள் முல்லைப் பெரியாறு, இடமலையாறு, இடுக்கி ஆகியவை. முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதியின் பரப்பு 237 ச.கி.மீ. இடுக்கிக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் இடையில் உள்ள நீர்பிடிப்புப் பகுதியின் பரப்பு 605 ச.கி.மீ.

5. ஆகஸ்ட் 15 லிருந்து 17 வரை மூன்று நாட்களில் முல்லைப் பெரியாறு நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் அளவு மட்டும் 1147 மி.மீ. முல்லைப் பெரியாறு அணைக்கும் இடுக்கிக்கும் இடையில் உள்ள பரப்பில் பெய்த மழை 1445 மி.மீ.

6. இந்த பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீலேஸ்வரம் என்ற இடத்தில் வெள்ளத்தைக் கண்காணிக்கும் தளம் இருக்கிறது. அதன் பெயர் Neeleshwaram G&D stie. அந்த அளவீட்டின்படி,. ஆகஸட் 15-17ல் நதியில் பாய்ந்த நீரின் அளவு 1.93 பில்லியன் கன அடி. ஆகஸ்ட் 15-17 காலகட்டத்தில் இடுக்கி அணைக்கு வந்த நீர், அதில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர், இடுக்கி அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் எவ்வளவு என்பதை வரைபடம் ஒன்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதாவது இந்த மூன்று நாட்களில் இடுக்கி அணைக்கு வந்த நீரில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே முல்லைப் பெரியாறில் இருந்து வந்த நீர்.

7. இந்த அறிக்கையின் முக்கியப் பகுதி இங்கேதான் வருகிறது. அதாவது இடுக்கி அணைக்கு உச்சகட்டமாக நீர்வரத்து இருந்தபோது அணையிலிருந்து வினாடிக்கு 1500 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நீலேஸ்வரம் வெள்ள அளவீட்டு மையத்தில் ஓடிய வெள்ளத்தின் அளவு 8800 மில்லியன் கன அடி. இதில் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரான 1500 மில்லியன் கன அடியைக் கழித்தாலும் 7300 மில்லியன் கன அடி நீர் ஆற்றில் ஓடியிருக்கும். அது மழை நீர். இடுக்கி அணை திறப்புக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. வெள்ளத்திற்கும் மிகப் பெரிய இடுக்கி அணை திறப்புக்கும் சம்பந்தமில்லையென்றால், அதில் மூன்றில் ஒரு பங்கு நீரை இடுக்கிக்குத் திறந்த முல்லைப் பெரியாறு அணைக்கு என்ன தொடர்பு இருக்க முடியும்? பெரியாற்று வெள்ளத்தில் இடுக்கி அணையின் பங்கு மிக மிகக் குறைவு என்பதுதான் இதன் அர்த்தம்.

8. ஆகஸ்ட் 1-19 வரை பெய்த மொத்த மழையான 758.6 மி.மீ மழையில் 15-17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 414 மி.மீ மழை பெய்திருக்கிறது. இதுதான் வெள்ளத்திற்குக் காரணம்.

படம் 2

9. புள்ளி விவரங்களை வைத்து நீங்களே ஒரு முடிவுக்கு வந்தால் போதுமா? அறிக்கையில் எங்காவது இதைச் சொல்லியிருக்கிறார்களா என்றால், ஆம் என்பதுதான் பதில். “கேரளாவில் உள்ள அணைகளால் வெள்ளம் ஏற்படவில்லை. அதே சமயம் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் அவை உதவவில்லை. அணையின் நீர்மட்டத்தை குறைவாக வைத்திருந்தால், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று சொல்ல முடியாது. குறைவாக வைத்திருந்தாலும் முதல் நாள் மழையிலேயே அவை நிறைந்து, திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்” என்கிறது ஆணையம். (பார்க்க படம் -2.)

ஹிமான்ஷு தாக்கூர் தன் கட்டுரையில் சொன்னபடி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 147 அடியை எட்டியதாக ஒரு இடத்திலும் அறிக்கையில் சொல்லப்படவில்லை. இதைச் சுட்டிக்காட்டியதற்குத்தான் தமிழ்த் தேசியவாதிகளின் உளறல் என்றார்கள்.

நன்றி: Muralidharan Kasi Viswanathan