Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 166

கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்! | மக்கள் அதிகாரம்

11.12.2022

கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி!
போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்!

பத்திரிகைச் செய்தி

டந்த சில நாட்களாகவே பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் கொலைகார வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்தின் விளம்பரங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

“போராட்டம் என்பது அழிவை நோக்கி, தூத்துக்குடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, பசுமையான தூத்துக்குடி – 1.25 லட்சம் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன” என விளம்பரப்படுத்தப் பட்டிருக்கின்றன.

ஸ்டெர்லைட் வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனம் பல ஆண்டுகளாக அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது, அபாயகரமான கழிவுகளை நேரடியாக மண்ணில் புதைத்தது, பசுமை வளையத்தை குறிப்பிட்ட அளவில் உருவாக்காமல் இருந்தது என்பது போன்ற பல்வேறு குற்றங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டது ஆகியவை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் நடந்த வழக்கு விசாரணையின்போது வெளிவந்தன.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் லட்சம் பேர் திரண்டு நடத்திய போராட்டத்தில், ஸ்டெர்லைட் நிறுவனமும் தமிழ்நாடு போலீசும் இணைந்துதான் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கடும் அடக்குமுறையை நிகழ்த்தின.


படிக்க : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால் அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா? | மக்கள் அதிகாரம்


துப்பாக்கிச் சூடு நடந்து ஐந்து ஆண்டுகள் நெருங்கிய நிலையிலும், இப்போது வரை துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியும் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் விரோதிகள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆனால், இன்று வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று தடை விதித்து இருக்கிறது தூத்துக்குடி மாவட்ட போலீஸ். அண்மையில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து எதுவும் பேசக்கூடாது என்று தூத்துக்குடி போலீசு தெரிவித்திருந்தது. இவ்வாறு தூத்துக்குடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்பதை ஒரு நிபந்தனையாக வைத்திருக்கிறது போலீசு.

ஆனால், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தொடர் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. அதை போலீஸ் ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக அதை ஊக்குவிக்கிறது.

இந்த நிலையில் சிபிஐ விசாரணை இறுதி அறிக்கையின் முடிவின் படி செயல்படுவோம் என்கிறார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர். சிபிஐயின் குற்றப்பத்திரிகையில் போராடிய தியாகிகள் தான் தவறிழைத்தார்கள் என பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சிபிஐ-ன் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றுகூறி சிபிஐ-ன் குற்றப்பத்திரிகை கிழித்தெறிந்தனர் தூத்துக்குடி மக்கள்.

ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்திய கொலைகாரர்களை கைதுசெய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மக்கள் போராடி வருகின்ற இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் தொடர்ந்து விளம்பரங்கள் ஊடகங்களிலும் கொடுக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மக்களுக்கும் மண்ணிற்கும் தொடர்ந்து அநீதி இழைத்து வந்த வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் கம்பெனி விளம்பரத்தை பதிப்பித்து காசு பார்க்கும் மக்கள் விரோத ஊடகங்களை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்திய கொலைகாரர்களை கைது செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற 12-ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த விஜயக்குமார் என்று ஒருவர் கூறிக்கொண்டு பேராசிரியர் பாத்திமா பாபுவிடம் தகாத முறையில் பேசியுள்ளார். அந்தப் பேச்சில் மக்கள் அதிகாரம் மாவோயிஸ்ட் அமைப்புடன் இணைந்து வேலை செய்வதாகவும் பொய்யாக தெரிவித்திருக்கிறார்.

மக்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில்  இப்படி ஒரு நபரை ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனமே திட்டமிட்டு ஏற்பாடு செய்திருக்கிறது.


படிக்க : தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!


சில ஆண்டுகளுக்கு முன்பு பாத்திமா பாபுவை விமர்சிக்கும் வகையில் மக்கள் அதிகாரம் பெயரிலேயே ஸ்டெர்லைட் கைக்கூலிகள் போலியான பத்திரிகை செய்தி வெளியிட்டனர் வெளியிட்டனர். இதற்கு எதிராக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்மீது இப்போது வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் மக்களின் போராட்டங்களை சீர்குலைத்து மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவுவதற்கான முயற்சியே ஆகும். வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட்டின் இந்த முயற்சிக்கு அரசும் தமிழ்நாடு போலீசும் உதவி புரிகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் மீதும் அதன் ஆதரவாளர்கள் மீதும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தூத்துக்குடி மண்ணையும் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்த  வேதாந்தா  ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்!

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்நிகழ்வாகி வரும் பத்திரிகையாளர் படுகொலைகள்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்நிகழ்வாகி வருகிறது. தற்போது, பெர்சிவல் மபாசா என்ற பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தன்னுடைய காரில் வானொலி நிலையத்திற்கு செல்லும் போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவருக்கு வயது 63; பெர்சி லாபிட் என்ற பெயரில் வானொலியில் தன்னுடைய நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இவரை சமூக வலைதளங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பின்தொடர்கின்றனர்; அந்தளவுக்கு இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

மபாசா பிலிப்பைன்ஸில் கடந்த ஜூன் மாதம் ஃபெர்டினாண்ட் போங்பாங் மார்கோஸ் ஜூனியர் ஆட்சிக்குவந்த பிறகு, படுகொலை செய்யப்படும் இரண்டாவது பத்திரிகையாளர் ஆவார். கடந்த செப்டம்பர் மாதம் மத்திய பிலிப்பைன்ஸில் ரெனாடோ ரே பிளாங்கோ என்ற வானொலி ஒளிபரப்பாளர், மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தற்போது மபாசா படுகொலையில் இருந்து, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களை ஆளும் வர்க்க நபர்களே கூலிப்படைகளை வைத்து படுகொலை செய்வது அம்பலமாகி உள்ளது.

படிக்க: காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !

பிலிப்பைன்ஸ் சிறைத்தலைவரான ஜெரால்ட் பான்டாக், மபாசாவை சிறைக்கைதிகள் மூலம் கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளார். இதனால் ஜெரால்ட் பான்டாக் மற்றும் அவரது துணை பாதுகாப்பு அதிகாரி ரிக்கார்ட்டோ ஜூலியேட்டா ஆகியோர் மீது போலீசுத்துறை கொலைப்புகார்களை பதிவு செய்துள்ளது. கொலை உத்தரவை பான்டாக், சிறைக் கைதிகளில் ஒருவரான கிறிஸ்டிடோ வில்லமோர் பலனா மூலம், கொலையாளியான ஜோயல் எஸ்கோரியலுக்கு அனுப்பியுள்ளார். அவர் கொலையை 5,50,000 பெசோக்கள், அதாவது 9,900 டாலருக்கு செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்சதியானது போலீசுத்துறையில் ஜோயல் எஸ்கோரியல் சரணடைந்த பிறகுதான், உலகின் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசுத்துறையானது கொலை நடக்கும்போது தங்களுடைய கண்காணிப்பு புகைப்படக் கருவியில் பதிவான கொலையாளியான எஸ்கோரியலின் முகத்தை வெளியிட்டது; எனவே எஸ்கோரியல் தன் உயிருக்கு பான்டாக்-கால் ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்து போலீசில் சரணடைந்தார்.

அதன்பிறகு, பான்டாக் மற்றும் ஜூலியேட்டா, தாங்கள் இவ்வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கொலை உத்தரவை அனுப்பிய சிறைக்கைதியான வில்லமோர் பலனாவை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இவர்களின் தூண்டுதலால், அக்கொலை முயற்சியானது பலனா கும்பலைச் சேர்ந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது; ஆனால் வில்லமோர் பலனா அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பித்துவிட்டார்.

***

மேற்கூறியவாறு அரசாங்க செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்கள் தான், பான்டாக் போன்ற ஆளும் வர்க்க நபர்களால் கொலை செய்யப்படுகின்றனர். மபாசா அவருடைய வானொலி நிகழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளை தொடர்ச்சியாக விமர்சித்து வந்துள்ளார்.

குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே மற்றும் தற்போதைய ஜனாதிபதியான ஃபெர்டினாண்ட் போங்பாங் மார்கோஸ் ஜூனியரின் கொள்கைகள் மற்றும் அவருடைய உதவியாளர்களை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை கம்யூனிஸ்ட் அனுதாபி என்று குற்றம் சாட்டுகின்ற பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் “ரெட்–டேக்கிங்” முறையையும், ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் இராணுவச் சட்டத்தை ஆதரித்து மார்கோஸ் ஜூனியர் உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்ததையும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்துள்ளார்.

மபாசா சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, தனது இரவு நேர வானொலி நிகழ்ச்சியில் பான்டாக் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தினார். மபாசா அவருடைய வானொலி நிகழ்ச்சியில் பான்டாக்–ஐ தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததால் மபாசாவைக் பான்டாக் கொலை செய்ததாக தேசிய புலனாய்வுப் பணியகத்தின் யூஜின் ஜேவியர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

***

தற்போது இவ்விரு பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, காலங்காலமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்நிகழ்வாகி வருகிறது. 1986 ஆம் ஆண்டில் இருந்து மட்டும், இதுவரை 197 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டேவின் 2016 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய ஜூன் வரையிலான ஆட்சிக் காலத்தில் மட்டும் 26 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவருடைய ஆட்சியில் போதைப் பொருட்களை ஒழிப்பதாக கூறி சட்டவிரோத முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்தான் பான்டாக்-ஐ 2019-ல் சிறைத்தலைவராக நியமித்தார்.

படிக்க : உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!

2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எல்லைகளற்ற செய்தியாளர்களின் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின் பதிப்பில் பட்டியலிடப்பட்ட 180 நாடுகளில் 147-வது இடத்தைப் பிலிப்பைன்ஸ் பிடித்துள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு (cpj) வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, பத்திரிகையாளர்களை கொலை செய்யும் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.

இப்படுகொலைகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. குறிப்பாக, பான்டாக் படுகொலை செய்யப்பட்ட அடுத்த நாளே, பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைமையில், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன; இதில் மக்களும் கலந்துக்கொண்டனர். இப்போராட்டங்களை வளர்த்தெடுப்பதன் மூலமே, தொடர்ந்து அதிகரித்துவரும் படுகொலைகளை தடுக்க முடியும்; மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட முடியும்.

ஆயிஷா

தமிழ்நாடு போலீசின் தீவிரவாதத் தடுப்பு பிரிவு; பாசிஸ்டுகளின் இன்னொரு ஆயுதம்!

0

மிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு நகரங்களில் சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்குவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த அக்டோபர் மாதம் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படவேண்டும் என்று போலீசுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு போலீசுத்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உட்பட உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஏடிஸ் (Anti-Terrorism Squad) மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஆக்டோபஸ் (Organisation for Counter-Terrorist Operations) ஆகிய சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவுகளின் அலுவலகங்களை பார்வையிடச்சென்றது.

அம்மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்படும் விதம், அவா்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள், அவர்களுக்கான பயிற்சிமுறை, தேவையான கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்துள்ளதாகவும், அது குறித்த விரிவான அறிக்கையை மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் சைலேந்திரபாபு கூறினார்.

“அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்த பின்பு இந்த சிறப்பு பிரிவிற்கான பணிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே பணியில் இருக்கும் அதிகாரிகள் இப்பணியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். மத்திய அரசின் கீழ் செயல்படும் புலனாய்வு அமைப்புகளுடன் இந்த சிறப்பு பிரிவு ஒத்திசைவாக செயல்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) உடன் இணைந்து செயல்படப்போகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த தீவிரவாத தடுப்பு பிரிவு என்.ஐ.ஏ-வுடன்டன் இணைந்து சமூக ஆர்வலர்களையும் அரசை கேள்வி கேட்கும் அறிவுத் துறையினரையும் வேட்டையாடப் போகிறது. கடந்த செப்டம்பர் மாதம், குஜராத் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களை என்.ஐ.ஏ மற்றும் ஏ.டி.எஸ் ஆகியவை இணைந்து கைது செய்ததானது தமிழ்நாட்டில் என்ன நடக்கப் போகிறது என்பதற்கு ஒரு சான்று.


படிக்க: அம்பானி ஆலையில் தயாராகும் சிஎன்என் ஐபிஎன் செய்தி அறிக்கைகள்


இந்த சிறப்பு பிரிவுக்கு 18 முதல் 21 வயதிலான இளைஞர்களை தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு நவீன ஆயுதங்களை கையாளும் வகையில் இரண்டு ஆண்டுகள் ஆயுதப்பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கான பயிற்சி, பிற மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளாலும் இந்திய ராணுவ அதிகாரிகளாலும் அளிக்கப்படும். இதற்கென பிரத்தியேகமாக ஒரு பயிற்சி பள்ளியும் உருவாக்கப்படும். இப்படையை உருவாக்க அரசு முனைப்பாக இருக்கிறது; 2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இப்படைக்கான ஆட்சேர்ப்பு துவங்கப்பட உள்ளது” என்று போலீசு உயர் அதிகாரி தெரிவித்ததாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களில் இந்த சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்படும். இது ஒவ்வொரு நகரிலும் 40 – 50 பேரை கொண்டதாக இருக்கும். ஒட்டு மொத்தமாக இந்த பிரிவுக்கு ஏடிஜிபி அல்லது ஐஜி நிலையில் உள்ள ஒரு அதிகாரி தலைமை வகிப்பார். மற்ற நகரங்களில் தேவை ஏற்பட்டால் இவர்கள் அங்கேயும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சிறப்பு பிரிவு – சிஐடி-யில் (Special Branch-CID) புதியதொரு உளவுப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்டுகளை கண்காணிக்க சிறப்பு பிரிவு II – சிஐடி (SB II-CID) என்ற உளவுப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, பின்னர் ‘க்யூ’ பிரிவு (Q Branch) என்று பெயர் மாற்றம் இயங்கி வருகிறது. இந்த வரிசையில், தற்போது கோவை கார் வெடிப்பு சம்பவத்தை காரணம் காட்டி, தீவிரவாத தடுப்பு பிரிவு (Counter-Terrorism Squad) என்ற மேலும் ஒரு சிறப்பு போலீசுப்படையை உருவாக்கவுள்ளது தமிழக அரசு.


படிக்க: மோடியை பகடி செய்து பாடியதால் பிணை கிடையாதாம் || என்.ஐ.ஏ. அடாவடி !


இப்படி பல்வேறு காரணங்களைக்காட்டி உருவாக்கப்படும் போலீசு படைப்பிரிவுகள் அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்கவே பயன்படுத்தப்படும். மேலும், முஸ்லீம் மக்களின் மீதான வெறுப்பை தூண்டிவிட்டு கலவரம் செய்ய முயற்சிக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு பெரிதும் உதவக்கூடியதாக இவை அமையக்கூடும். அதாவது, அரசு எந்திரத்தின் அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் – சங் பரிவாரக் கும்பல் ஊடுருவி இருப்பதால், இந்த சிறப்பு பிரிவையும் பாசிஸ்ட்டுகள் பயன்படுத்திக் கொள்வது மிக எளிதாகிறது. எனவே, திமுக அரசு கொண்டுவரும் இந்த சிறப்பு காவல்படை பிரிவு போன்ற நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.

பொம்மி

செய்தி ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜுன் சம்பத்: ஓட ஓட விரட்டியடித்த தமிழ்நாடு!

டிசம்பர் 6, அம்பேத்கரின் சிலைக்கு மாலையிட வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை விரட்டியடித்ததன் மூலம் முன்னுதாரணமிக்க போராட்டத்தை நடத்திக்காட்டியிருக்கிறார்கள் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள். அதேநாளில் சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு மாலையிட வந்த அர்ஜுன் சம்பதுக்கு பலநூறு பேர் திரண்டு காட்டிய எதிர்ப்பு என்பது, அண்மைக்கால தமிழக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியதும், முன்னுதாரணமிக்க நடவடிக்கையுமாகும்.

0-0-0

டிசம்பர் 6, அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயில் அருகில், அனைத்து வழக்குரைஞர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவி பாசிச இருளை கிழிக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி முடிவுற்ற அரை மணிநேரத்தில், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் கும்பல், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட வந்தது. அப்போது அங்கிருந்த வி.சி.க. சார்பு மற்றும் ஜனநாயக உணர்வு கொண்ட வழக்குரைஞர்கள் அர்ஜுன் சம்பத்தை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி அம்பேத்கருக்கு மாலையிட முயன்ற அர்ஜுன் சம்பத்தை மாலையணிவிக்கவிடாமல் துரத்தியடித்தனர்.

இந்துமதவெறி பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி, அம்பேத்கர் நினைவுநாளுக்கு கும்பகோணத்தில் ஒட்டிய சுவரொட்டியில், அம்பேத்கரின் கொள்கைக்கு எதிராக, அவரது நெற்றியில் பட்டையும், காவி உடையும் அணிவித்து இழிவுபடுத்தியது. இந்து மக்கள் கட்சியின் இத்தகைய காலித்தனமான செயல்பாடுகள் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது.


படிக்க : மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !


இதற்காக, அர்ஜுன் சம்பத்தின் மீது போடப்பட்ட வழக்குகளின் விளைவாக, “அம்பேத்கர் சிலைக்கு பட்டை, காவித்துண்டு ஆகியவற்றை போடமாட்டேன்” என்று நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்து இக்காவி கும்பல்.

0-0-0

கும்பகோணத்தில் காவி உடை அணிவிக்கப்பட்ட அம்பேத்கரின் சுவரொட்டி; உயர் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் விரட்டியடிக்கப்பட்ட இந்நிகழ்வு; தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐனநாயக அமைப்புகளின் எதிர்ப்பை மீறி பா.ஜ.க.யினர் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டது போன்ற இந்துமதவெறி பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது.

இந்நிலையில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு அர்ஜுன் சம்பத் கும்பல் வரப்போகிறது என்ற செய்தி ஜனநாயக சக்திகள் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. அதனைத் தொடர்ந்து, அம்பேத்கர் மணிமண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மற்ற ஜனநாயக அமைப்பினர் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள் மிகக்குறுகிய நேரத்தில் குவியத் தொடங்கினர்.

இந்நிலையில், அர்ஜுன் சம்பத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் பொருட்டு அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசு குவிக்கப்பட்டனர். இருப்பினும் அங்கு குவிந்திருந்த மக்கள், அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் செல்லும் போது இந்துமத அடையாளங்களுடன் செல்லக் கூடாது எனவும் மாலை 5.45-6.00 மணிக்குள் சென்று மாலை அணிவிக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனையை மீறி, இந்து மத அடையாளங்களுடன் மாலை 6 மணிக்குப் பின்னர்தான் மணிமண்டபத்திற்கு இந்த கும்பல் வந்தது.

அர்ஜுன் சம்பத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போடப்பட்ட போராட்ட முழக்கங்கள் விண்ணைக் கிழித்தன. இதனைத் தொடர்ந்து, மக்களைத் தாக்க வேண்டும் என்று நன்கு திட்டமிட்டு வந்திருந்த போலீசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை அரங்கேற்றியது.

பல போலீசார் தமது பெயர் பட்டைகளை எடுத்து வைத்துக் கொண்டு போராடியவர்களைத் தாக்கினர். “பறையனே” என்று சாதி சொல்லி இழிவுப்படுத்தியும், ஆபாச வார்த்தைகளால் திட்டியும் தாக்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலரை குண்டுக்கட்டாகத் தூக்கி எறிவது, அவர்களின் பிறப்புறுப்பை நசுக்கி உதைப்பது போன்ற கேடுகெட்ட வன்முறைச் செயலில் ஈடுபட்டது போலீசு. வி.சி.க.வின் மாநில நிர்வாகிகளான வன்னியரசு, ரஜினிகாந்த், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மோகன், த.பெ.தி.க.வின் மாவட்டச் செயலாளர் குமரன் உள்ளிட்ட பலரை போலீசு கடுமையாகத்தாக்கி கைது செய்தது. பலத்த தடியடி நடத்தியதை அடுத்து பலரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பிறகே, போலீசின் பயங்கர பாதுகாப்புடன் அர்ஜுன் சம்பத் கும்பல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துள்ளது.

இதே காவி பாசிச கும்பல் சென்ற ஆண்டுகூட அம்பேத்கர் மணிமண்டப்பத்திற்கு வந்து மாலை அணிவித்துள்ளது. அப்போது எதிர்ப்புக் காட்டப்பட்டிருந்தாலும் இப்போது காட்டப்பட்ட எதிர்ப்பு என்பது முன்னுதாரணமிக்கதாகும். குறிப்பாக, அம்பேத்கரை காவியாக்கக்காட்டி தனது இந்துப் பரிவாரத்தில் அவரையும் ஒருவராகத் திரிக்கும் அயோக்கியத்தனத்தை செய்துவிட்டு, அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதாக நாடகமாடுவதை தமிழகம் சகித்துக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

இந்த அர்ஜுன் சம்பத் கும்பல் ஒருபக்கம், அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து சுவரொட்டி ஒட்டிவிட்டுது, மற்றொருபக்கம், உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுத்து, அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த  அனுமதியும் கோரி நாடகமாடுவது தெரிந்தாலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை என்று நீதிமன்றம் அனுமதி அளிப்பது, போலீசு பாதுகாப்புக் கொடுப்பது, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது போன்றவை எல்லாம் தமிழக போலீசும் காவிமயாகியிருப்பதை நமக்கு நன்கு உணர்த்துகின்றன.

0-0-0

ஆயிரத்திற்கும் அதிகமான போலீசு குவிக்கப்பட்டிருந்தும், போராடியவர்களை போலீசு தாக்கி கைது செய்த பின்னரும் அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதை போலீசால் தடுக்க இயலவில்லை. இரவு பயங்கர போலீசு பாதுகாப்புடன் மணிமண்டபத்திற்கு வந்திருந்த அர்ஜுன் சம்பத் மீது செருப்பை வீசி எதிர்ப்பைக் காட்டினர் தமிழக மக்கள்.

அர்ஜுன் சம்பத் உண்மையில் ஒரு கோழை. அதிகார வர்க்கத்தின் ஆதரவு, போலீசு புடைசூழ பாதுகாப்புடன்தான் இந்த கும்பல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தது.

சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசை எதிர்த்து ஒற்றை பெண்ணாக ஒரு கல்லூரி மாணவி எதிர்ப்புக் காட்டியதும், கர்நாடாகாவில் ஹுஜாப் அணிவிந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து காலிகள் சூழ்ந்து கொண்டு எதிர்ப்புக் காட்டிய போது அதனைக் கண்டு அஞ்சாமல், அல்லாஹு அக்பர் என்று மாணவி ஒருவர் தனித்து நின்று முழக்கமிட்டதும் வீரத்தின் அடையாளங்கள்!

அதைப் போன்று அம்பேத்கரை இழிவுப்படுத்திய அர்ஜுன் சம்பத்திற்கு காட்டிய இந்த எதிர்ப்பானது, தமிழகம் பார்ப்பனிய எதிர்ப்பை மரபுரிமையாகக் கொண்டிருப்பதை நமக்கு மீண்டும் உணர்த்துகிறது.


படிக்க : திரௌபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!


அன்று, ஈழ மக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசியும் செயல்பட்டும் வந்த சுப்ரமணிய சாமியை முட்டையால் அடித்து விரட்டிய தமிழக வழக்குரைஞர்கள் இன்று அர்ஜுன் சம்பத்தை ஓட ஒட விரட்டியடித்திருக்கின்றனர். வழக்கறிஞர் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் முன்மாதிரியான போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்பொழுது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் அர்ஜுன் சம்பத்தை ஓட ஓட விரட்டியடித்து முன்மாதிரியாக செயல்பட்டுள்ளனர்.

0-0-0

கடந்த செப்டம்ர் 5-ஆம் தேதி வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் அன்று, அவரது மணிமண்டபத்துக்கு வந்த பா.ஜ.க.வினர் வ.உ.சி.யின் சிலைக்கு காவித்துண்டு அணிவித்திருக்கின்றனர். சுதந்திரப் போராட்டவீரராக இருந்த வ.உ.சி. பார்ப்பனிய எதிர்ப்பாளராகவும் செயல்பட்டவர். இதைப்போலவே, மருது மாண்டியர், வேலுநாச்சியார், ஒண்டி வீரன், இமானுவேல் சேகரன், திருப்பூர் குமரன், சிங்காரவேலர் என பல தலைவர்கள், போராளிகள் மீதும் காவியைப்பூசியும், அவர்களது வரலாற்றைத் திரித்தும் வருகிறது காவி பாசிச கும்பல். அம்பேத்கரை காவிமயமாக்கும் முயற்சிக்கு எதிர்வினையாற்றிய நாம் மேற்சொன்ன தலைவர்களை காவிமயமாக்கும் முயற்சியையும் முறியடித்தாக வேண்டும்.

அண்மையில், மனுநீதியை அம்பலப்படுத்திய ஆ.ராசாவுக்கு ஆதரவாக நின்று காவி கும்பலுக்கு பதிலடி கொடுத்தது; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போராடி முறியடித்தது, இன்று அர்ஜுன் சம்பத்திற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்கள் தொடரும், தொடர வேண்டும்.

மருது

ஐரோப்பிய உணவு வங்கிகள்: ஏகாதிபத்திய உலகின் அவலம்

டந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (5-12-2022) Financial Times என்கிற ஆங்கில நாளிதழ், “ஐரோப்பிய மக்கள், வறுமையின் காரணமாக உணவு வங்கிகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது” (EU residents flock to food banks as poverty soars) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட ஐரோப்பாவில் உணவு வங்கிகளுக்கான தேவை 20 – 30% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக ஜெர்மனியில் 50% அதிகரித்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உணவு வங்கிகள் என்கிற முறை நமக்கு புதிதல்ல. தமிழ்நாட்டில், சென்னை, திருச்சி, மதுரை போன்ற ‘ஸ்மார்ட் சிட்டி’களில் (Helping Wall) என்ற பெயரில் நகரத்திற்கு ஒதுக்குப் புறமாக நகரத்தார் பயன்படுத்திய பழைய துணிகளைக் கொண்டு வந்து வைப்பதும் அதனை ஏழை எளிய மக்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்வதையும் நாம் பார்த்திருப்போம். அதன் அடுத்தகட்ட வடிவம்தான் இந்த உணவு வங்கிகள்.

உணவு வங்கிகள் என்பவை, வீடுகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் மீதமாகும் காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் ரொட்டிகள் ஆகியவற்றை சேகரித்து இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யும் இலாப நோக்கற்ற தனியார் தொண்டு நிறுவனங்களாகும். ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 1100 உணவு வங்கிகள் செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தங்களுக்கு கீழ் பல்வேறு கிளைகளைக் கொண்டு இயங்குகின்றன. இவை தேவைப்படும் குடும்பங்களுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு அல்லது ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன.

படிக்க : ஆரோக்கியமற்ற உணவு – ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் இந்திய உழைக்கும் மக்கள் !

உதாரணமாக, ஜெர்மனியில் உள்ள ஒரு உணவு வங்கி டாஃபெல் (TAFEL). இது ஜெர்மனி முழுவதும் 962 கிளைகளைக் கொண்டுள்ளது. 8.9 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில் உணவு வங்கிகளுக்கு சுமார் 20 இலட்சம் மக்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களாவர். மேலும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கப்போவதில்லை என்று ஒரு உணவு வங்கி நிர்வாகி தெரிவித்துள்ளார். ‘புதிதாக கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதென்றால் எங்கள் சேவையை இரட்டிப்பாக்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் விலைவாசி உயர்வுவானது விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வீட்டு வாடகை, எரிபொருள் செலவுகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஐரோப்பாவில் ஐந்தில் ஒரு பங்கு குடும்பங்கள் தங்கள் வீடுகளை சூடேற்றிக் கொள்ள முடியாமல் குளிர்காலத்தை எதிர்கொண்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. கொரோனா நெருக்கடி, உக்ரைன் ரஷ்யா போர், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் மீது ஐரோப்பா விதித்த பொருளாதாரத் தடைகள் இந்த நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நெருக்கடியால் அன்றாடம் வறுமை, வேலையின்மை, பசி, பஞ்சம், பட்டினியால் மாண்டு வரும் உழைக்கும் மக்களுக்கு முதலாளித்துவம் ‘கருணையுள்ளத்தோடு’ வழங்கியிருக்கும் தீர்வுகளில் ஒன்றுதான் இந்த உணவு வங்கிகள். இதற்கு ‘உணவு உதவி: ஒன்று சேர்ப்பதற்கான நுழைவாயில்’ (Food Aid, a gateway to inclusion) என்று முழக்கங்களை வைத்துள்ளது பிரான்சில் உள்ள ஒரு உணவு வங்கி. இந்த ஒன்று சேர்த்தல் எப்படி நடக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டியது. அதாவது, முதலாளித்துவ மேட்டுக் குடிகள், தங்களின் தேவைபோக வீசியெறியும் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து, சேகரித்து, பொட்டலம் போட்டு அதனை உழைக்கும் மக்களுக்கு விநியோகிக்கின்றனர். இதன் மூலமே இந்த ஒன்று சேர்ப்பு அதாவது, இந்த மாபெரும் ஏற்றத்தாழ்வு சீரமைக்கப்படுகிறது. இதற்கு ஐரோப்பா முழுவதும் மிகப்பெரிய வலைப்பின்னல் உருவாகி இருக்கிறது. அந்த அளவிற்கு உணவுப் பஞ்சமும் நெருக்கடியும் தீவிரமாகியுள்ளது. இந்த சேவையையும் ஏதோ முதலாளித்துவம் வேண்டி விரும்பி செய்வதல்ல. இதனையும் தடுத்துவிட்டால் முதலாளித்துவத்திற்கு எதிரான கிளர்ச்சிகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், தவிர்க்க முடியாமல் தனது குப்பைகளை கொண்டு இந்தக் ‘கீழ் மக்கள்’ உயிர்வாழ்வதை அனுமதிக்க வேண்டியிருக்கிறது.

முதலாளித்துவத்தை மீட்பதற்கான இத்தகைய நடவடிக்கைகள், அழுகி நாறிவரும் முதலாளித்துவத்தின் முடை நாற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. இதுதான் இந்த ஏகாதிபத்திய சொர்க்கபுரியின் அவலம்; ஏகாதிபத்திய மனிதாபிமானத்தின் கோர முகம். முதலாளித்துவம் தான் மனித நாகரீகத்தின் உச்சம் என்று கூச்சமின்றி மார்தட்டிக் கொள்ளும் முதலாளித்துவ அறிவுஜீவிகளோ இதைப் பற்றி பேசுவதும் இல்லை, பேச விரும்புவதும் இல்லை.

படிக்க: உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!

தற்போது முதலாளித்துவத்தின் இந்த கட்டாய காருண்ய நடவடிக்கைக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம், வணிக வளாகங்களும் பல்பொருள் அங்காடிகளும் உரிய தேதிக்குள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதில் மும்முரமாக ஈடுபடுவதால் உணவு வங்கிகளுக்கு உணவு பொருட்களின் வரத்துகள் குறைந்துள்ளது. இதனால், தற்போதைய வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கூட அவர்களால் பூர்த்தி செய்ய முடிவதில்லை. இன்னொருபுறம், விலைவாசி உயர்வு, பசி பட்டினியால் உணவு வங்கிகளுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

முதலாளித்துவ மேட்டுக் குடிகளின் குப்பைகளால் இவ்வளவு மக்களை உயிர் வாழவைக்க முடியும் என்றால், அவர்கள் சாப்பிட்டு போடும் எச்சில் சோற்றில் இன்னும் பல கோடி பேரை உயிர் வாழ வைக்க முடியும் என்றுகூட முதலாளித்துவவாதிகளின் ‘கருணையுள்ளம்’ விரிவடையக் கூடும். இதன் அடுத்தகட்டமாக, அதற்கும் ஏதாவது மாற்றுவழி கண்டுபிடித்து இந்த மேட்டுக் குடியினர் தின்று போட்ட எச்சில் சோற்றையும் நவீன முறையில் பேக்கிங் செய்து நம்மை சாப்பிடவும் பழக்கி அதனை நாகரீகமாகவும் மாற்றி விடுவார்கள். அத்தகைய கேடு கெட்ட நிலையை நாம் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

இசை

குஜராத்: பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!

1

குஜராத் தேர்தலில் யார் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற போகிறார்கள் என்பதை நாடே எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலால் இந்தியாவிற்கு முன்மாதிரியாக முன்நிறுத்தப்பட்ட குஜராத்தில், பாசிஸ்டுகள் தங்கள் 27 ஆண்டுகால ஆட்சியை தக்கவைப்பார்களா? அல்லது ஆட்சி மாற்றம் நிகழுமா? என்பதுதான் விவாதப் பொருளின் மையம்; அதற்கு இத்தேர்தலில் புதிதாக களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் அதற்கெதிரான பாஜகவின் நடவடிக்கைகள்தான் காரணம்.

டெல்லி மற்றும் பஞ்சாப்பில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியானது, தற்போது குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கவர்ச்சிவாத மற்றும் மிதவாத இந்துத்துவா அரசியலை தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது. இதற்கு எதிர்வினையாக பா.ஜ.க-வானது வேறுவழியில்லாமல் கவர்ச்சிவாத திட்டங்களை அறிவிக்கிறது; மக்கள் மத்தியில் சாதி அரசியலையும், இந்துமுனைவாக்கத்தையும் தீவிரப்படுத்துகிறது; அதிகார வர்க்கத்தின் உதவியுடன் தேர்தல் விதிகளை தனக்கு சாதகமாக மாற்றுவது என எல்லா வழிகளிலும் மூர்க்கமாக வேலை செய்கிறது.

மேலும் இத்தேர்தலின் வெற்றியானது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பாசிசக் கும்பல் உள்ளது. ஆம் ஆத்மியும் குஜராத்தில் பா.ஜ.க.வை தோற்கடித்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை தனது தலைமையில் திரட்ட முடியும்; தேசியக் கட்சியாக உருவாக முடியும் என்பதைக் கணக்கிட்டே, ஹிமாச்சலப்பிரதேசத்தை விட குஜராத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்து வருகிறது.

படிக்க : 2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்!

இரு கட்சிகளுக்கும் குஜராத் தேர்தல் வெற்றியானது இந்தளவுக்கு முக்கியமானது என்பதால்தான், தங்கள் ஒட்டுமொத்த சக்திகளையும் குவித்து வேலை செய்கிறார்கள். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நாய்ச்சண்டையை தவிர வேறொன்றுமில்லை.

மற்றபடி, யார் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

கவர்ச்சிவாத அரசியல் – பாசிஸ்டுகளின் பிரம்மாஸ்திரம்!

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான கெஜ்ரிவால் ஏப்ரல் மாதத்தில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்; வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை குஜராத்திற்கு சென்று பல்வேறு மக்கள் பிரிவினர் மற்றும் தொண்டர்களைச் சந்தித்தார்; இலவச – கவர்ச்சிவாத திட்டங்களை மையப்படுத்தியே அவருடைய தேர்தல் பிரச்சார உரைகள் பெரும்பாலும் இருந்தது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் மாதந்தோறும் 300 யூனிட் இலவசம்; விவசாயிகளுக்கு ஒரு நாளுக்கு 12 மணி நேரம் இலவச மின்சாரம்; வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் 3000 ரூபாய் ஊக்கத்தொகை; 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை; பசுக்களை பராமரிப்பதற்காக ஒவ்வொரு பசுவுக்கும் ஒரு நாளைக்கு 40 ரூபாய் ஊக்கத்தொகை; மாவட்டந்தோறும் பசு பாதுகாப்பு இல்லம்; பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாதம் 10000 ரூபாய்; வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதத்தில் (ஜனவரி 31 ஆம் தேதிக்குள்) பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் ஆகியவை கெஜ்ரிவாலின் இலவச – கவர்ச்சிவாத திட்டங்களில் முக்கியமானவை.

அதுமட்டுமில்லாமல் ஆம் ஆத்மி கட்சியானது மக்கள் மத்தியில் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியலை மேற்கொண்டது. தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வானது  “ஸ்டாலின் தான் வாராரு; விடியல் தரப் போறாரு” என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதேபோல, “கெஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு; மாற்றம் சாத்தியம்” (one chance to kejriwal; change is possible) என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 7.30 ரூபாய் ஆக இருப்பது; கிராமங்களில் பள்ளிக்கூடம், சாலைகள் மற்றும் சுகாதார வசதிகள் முறையாக இல்லாமல் இருப்பது; தொடர்ந்து அதிகரிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம்; பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றின் காரணமாக மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அதை அறுவடை செய்யும் விதமாகவே, ஆம் ஆத்மியானது இம்முழக்கத்தை முன்னிறுத்தியது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் இலவச – கவர்ச்சிவாத திட்டங்களுக்கு எதிராக மோடி, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னாலேயே தன்னுடைய உரைகளில் இலவசங்களுக்கு எதிரான கருத்துகளை சேர்த்துக்கொண்டார். “நாட்டின் பொருளாதாரத்தை இலவசங்கள் அழிக்கின்றன” என்ற அவர் கூற்று அதற்கு சிறந்த சான்று. மோடி மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாசிசக் கும்பலும், அதிகார வர்க்கமும் இணைந்து இலவச – கவர்ச்சிவாத திட்டங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டன. மாநிலக் கட்சிகளான தி.மு.க, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் இலவச – கவர்ச்சிவாத திட்டங்கள் மூலம், மக்களின் வாக்குகளைக் கவருவதே அதற்கு முக்கிய காரணம்.

இப்படி இலவச – கவர்ச்சிவாத திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்ட பா.ஜ.க கும்பலானது, வேறுவழியில்லாமல் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக இலவச – கவர்ச்சிவாத திட்டங்களை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆம் ஆத்மிக்கு நிகராக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் இலவச – கவர்ச்சிவாத திட்டங்களை வாரி வழங்கி  இருப்பது அதன் விளைவுதான்.

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்; பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்; குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு இலவச எரிவாயு சிலிண்டர்; குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 4 முறை சமையல் எண்ணெய் மற்றும் மாதந்தோறும் ஒரு கிலோ கொண்டைக்கடலை இலவசம்; உயர்சாதி ஏழைக் குடும்ப கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் இலவச ஊட்டச்சத்து உணவுப்பொருள்; உயர்சாதி ஏழை குடும்பங்களுக்காக 110 கோடி செலவில் நோயறிதல் திட்டம்; பேருந்துகளில் வயதான பெண்களுக்கு இலவச பயணம் போன்றவை பா.ஜ.க கும்பலின் இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்களாகும்.

இலவச – கவர்ச்சிவாத திட்டங்கள் மட்டுமல்லாமல், பா.ஜ.க கும்பலானது தங்களுடைய முக்கியமான தலைவர்களை எல்லாம் மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ள செய்தது. இப்பிரச்சாரங்கள் அனைத்தும் மோடி, அமித்ஷா, நட்டா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரை சுற்றியே இருந்தது. குறிப்பாக, மோடிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

இத்தேர்தலுக்காக மோடி மட்டும் 31 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி உள்ளார். கிட்டதட்ட 160 உத்திரப்பிரதேச பா.ஜ.க தலைவர்கள் இத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அமித்ஷா மற்றும் நட்டா பொதுக்கூட்டங்களில் பேசியது மட்டுமல்லாமல், பா.ஜ.க ஆதரவு ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதன் மூலமும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.

சமூக வலைதளங்களிலும் பா.ஜ.க கும்பல் தீவிரமாக பிரச்சாரம் செய்தது. இதற்காக குஜராத் நான்காக பிரிக்கப்பட்டு நான்கு பகுதிகளிலும் மையக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த  மையக் குழுக்களுக்கு கீழ் உள்ள சமூக ஊடகக் பிரிவின் குழுக்களில் கிட்டதட்ட 10,000 கட்சித் தொண்டர்கள், பா.ஜ.க.வின் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் பணியில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க-வின் மேற்கூறிய நடவடிக்கைகளை விட முக்கியமானது, தங்களுடைய கவர்ச்சிவாத அரசியலைப் பயன்படுத்தி மோர்பி தொங்கு பால விபத்தை கையாண்ட விதம்தான். பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடித்தது மற்றும் வாழ்க்கையில் அரிதாகவே இப்படி ஒரு வேதனையை அனுபவித்து இருக்கிறேன் என்று கூறி நடித்தது ஒருபுறம் என்றால், மறுபுறம் தொங்கு பால விபத்தில்  மக்களைக் காப்பாற்றினார் என்று கூறி, பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான கந்திலால் அம்ருதியாவை மோர்பி தொகுதி வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது.

எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் மோர்பி தொங்கு பால விபத்தை பிரச்சாரம் செய்து வாக்குகளைக் கவரலாம் என்று கருதி இருந்த சமயத்தில், தங்கள் கவர்ச்சிவாத அரசியலின் மூலம் ஒட்டுமொத்த நிகழ்ச்சிப்போக்கையும் தலைகீழாக மாற்றியது பா.ஜ.க. கும்பல்.

சாதி அரசியலும் இந்துமுனைவாக்கமும்

சமீபத்தில் உச்சநீதிமன்றமானது கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பானது குஜராத் தேர்தலுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. 10 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குள் படிதார் சமுதாயத்தை சேர்ந்த மக்களும் வருகின்றனர். குஜராத்தில் இச்சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டங்களைக் கட்டியமைத்து வந்துள்ளனர்.

ஹர்திக் படேலும் இச்சமுதாயத்தை சேர்ந்தவரே ஆவார். இம்மக்கள் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். இம்மக்களின் போராட்டத்தின் காரணமாக பா.ஜ.க. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சௌராஷ்டிரா பகுதியில் தோல்வியைத் தழுவியது.

தற்போது இச்சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது மற்றும் ஹர்திக் படேலும் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து இருப்பது, பா.ஜ.க.வுக்கு இம்மக்களின் வாக்குகளைக் கவர வாய்ப்பாகவே அமையும். அதுமட்டுமில்லாமல் பா.ஜ.க.வால் இச்சமுதாயத்தை சேர்ந்த பூபேந்திர படேலே முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதும் பாசிஸ்டுகளுக்கு கூடுதல் பலம். மாநிலம் முழுவதும் இச்சமுதாயத்தை சேர்ந்த மக்கள் 15 சதவிகிதம் உள்ளதால், வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிப்பர்.

அதேபோல, கோலி சமூகத்தின் ஆதரவை பெறுவதற்காக “ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்டு” என்ற தனது கொள்கையை பா.ஜ.க. தளர்த்தியிருக்கிறது. கோலி சமூகத்தைச் சேர்ந்த பர்ஷோத்தம் சோலாங்கிக்கு பாவ் நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அவரது தம்பி ஹைரா சோலாங்கிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அச்சமுதாயத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சமுதாயத்தை சேர்ந்த மக்கள் 32 தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர். எனவே பா.ஜ.க. தனதுகொள்கையை தளர்த்தி அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது.

எல்லா தொகுதிகளிலும் யாரை வேட்பாளராக முன்னிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்பதைக் கணித்தே, பா.ஜ.க.வானது வேட்பாளர்களை நிறுத்துகிறது. அவ்வேட்பாளர்கள் பெரும்பாலும் சாதி அரசியலின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு பா.ஜ.க. சார்பாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதும் இதனடிப்படையில்தான்.

இதனால் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 6 பேர் உட்பட 30-க்கும் அதிகமானவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் விளைவாக, வாய்ப்பு வழங்கப்படாத பா.ஜ.க.வினர் அதிருப்தியாளர்களாக மாறி, சிலர் காங்கிரஸில் இணைந்துள்ளனர்; சிலர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். எனவே அவர்களை பா.ஜ.க.வானது கட்சியை விட்டு நீக்கியுள்ளது. இதுவரை 19 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுள்ளனர். அதில் 6 எம்.எல்.ஏ.க்களும் அடங்குவர்.

மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவர்களை பா.ஜ.க.வானது பேரம் பேசி தன் கட்சியில் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே பழங்குடி மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.க.வானது தன்னுடைய ஆதிக்கத்தை மேலும் விரிவுப்படுத்திக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பதற்கு, இந்து – முஸ்லிம் கலவரம் ஏற்பட்டால் பா.ஜ.க. கும்பலே தங்களை பாதுகாக்கும் என்ற மக்களின் மூடநம்பிக்கையே காரணமாக உள்ளது. “அடிக்கடி மதக்கலவரம் நடக்கும் பகுதிகளிலும் கூட பாஜக அமைதியை நிலைநாட்டி உள்ளது” என்று அமித்ஷா கூறியிருப்பதே அதற்கு சிறந்த சான்று. இவர்களே கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி, தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக மக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இதில்தான் பாசிஸ்டுகளின் யுக்தி அடங்கியுள்ளது.

மேலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியுள்ளார்கள். இதுவும் மக்கள் மத்தியில் இந்துமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி, இந்துக்களின் வாக்குகள் அனைத்தையும் கவர்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது தேர்தலுக்காக மட்டும் அறிவிக்கப்படவில்லை. பாசிஸ்டுகளின் இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலில் இத்திட்டம் ஓர் அங்கம். இதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகள் மேலும் பறிக்கப்படும்.

ஆம் ஆத்மி கட்சியும் சாதி அரசியலை முன்னிறுத்தி வேட்பாளர்களை களம் இறக்குகிறது. குறிப்பாக, படிதார் சமுதாயத்தை சேர்ந்தவர்களை முன்னிறுத்துகிறது. அதேபோல, கெஜ்ரிவால் பொதுக்கூட்ட மேடையில் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிடுவது, “குஜராத்தில் இருந்து அனைத்து மக்களுக்கும் அயோத்தி ராமர் கோவிலுக்கு இலவச பயண வசதி செய்யப்படும்” எனக் கூறுவதன் மூலம் தன்னையும் மக்கள் மத்தியில் இந்துவாக முன்னிறுத்திக் கொண்டாலும், பா.ஜ.க. அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அதிகார வர்க்கத்தின் துணை

ஹிமாச்சலப்பிரதேசத்துடன் சேர்ந்து நடத்தப்பட வேண்டிய குஜராத் தேர்தலானது, தேர்தல் ஆனையத்தால் திட்டமிட்டு தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்டது. பா.ஜ.க. கும்பல் இலவச – கவர்ச்சிவாத திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் தங்கள் ஆதரவை பெருக்கி கொள்வதற்காகவே இக்கால அவகாசம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. கும்பலின் செயல்பாடுகளே அதை நிருபிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தால் ஹிமாச்சலப்பிரதேசத்துடன் சேர்த்து குஜராத் தேர்தல் தேதி இரண்டு நாள் கழித்து, சிஎன்ஜி (Compressed Natural Gas) மீதான வாட் வரியை 10 சதவிகிதம் குறைப்பதாக குஜராத் அமைச்சர் ஜிது வாகஹ்னி அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம் எனவும் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து குஜராத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 15,670 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பிறகு நவம்பர் ஒன்றாம் தேதி பழங்குடி மக்களுக்கான 860 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

குறிப்பாக பழங்குடி மக்கள் மத்தியில், பழங்குடியினர் பகுதிகளில் பத்தாயிரம் புதிய பள்ளிகள், ஏகலைவா பள்ளிகள், ஆசிரமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பேசினார். பழங்குடியினருக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது பா.ஜ.க.தான்; ஆங்கிலேயர் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்த மூங்கில் வளர்ப்பு மற்றும் விற்பனையை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்ததும் பா.ஜ.க.தான்; பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடியின கவுரவ தினமாக அறிவித்ததும் பா.ஜ.க.தான் என பிரச்சாரம் செய்தார்.

இப்படி பா.ஜ.க கும்பல் தங்கள் கவர்ச்சிவாத திட்டங்களை செயல்படுத்திய பிறகே, தேர்தல் ஆணையம் குஜராத் தேர்தல் தேதியை அறிவித்தது. அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேரணியாக சென்று பிரதமர் மோடி வாக்குச்சாவடியில் வாக்களித்ததை, மக்கள் தானாக சேர்ந்து விட்டதாக கூறி, மோடிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியது.

பாசிசக் கும்பலானது ஒருபுறம் தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் விதிகளை தளர்த்தியது என்றால், மறுபுறம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற தன்னுடைய அதிகார வர்க்க அடியாட்படைகளைக் கொண்டு ஆம் ஆத்மி கட்சியை மிரட்டியது எல்லாம் நாம் அனைவரும் அறிந்தததுதான்.

ஒவைசி கட்சி பா.ஜ.க.வின் பீ டீமா?

குஜராத்தில் மொத்த மக்கள் தொகையான 6.4 கோடியில் 10 சதவிகிதம் இஸ்லாமியர்கள் ஆவர். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் கிட்டதட்ட 42 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளனர்.

இதற்கு முன்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் மட்டும் இருந்ததால் அவர்களுக்கு மட்டுமே முஸ்லிம் வாக்குகள் சென்றன. ஆனால் தற்போது ஆம் ஆத்மி மற்றும் ஒவைசி நிற்பதால் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிய வாய்ப்புகள் உள்ளன. ஒவைசி கட்சியானது 13 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

மஜ்லீஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில் விருப்பமில்லை. அவர்களே ஒவைசியை பா.ஜ.க.வின் பீ டீம் என விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.  அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஷம்ஷாத் கான்,  “இப்போது குஜராத்தில் எங்கும் மஜ்லீஸ் கட்சியால் வெல்ல முடியாது. இது நன்கு தெரிந்தே ஓவைசி வேட்பாளர்களை இறக்கியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குப் பாதகமாகவும், பா.ஜ.க.வுக்கு சாதகமாகவும் அமையும். இதில் இருந்தே அவர் பா.ஜ.க.வின் பீ டீமாக செயல்பட முயல்வது தெளிவாக தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

ஒவைசி பா.ஜ.க.வின் பீ டீமா செயல்படுகிறார் என்று நாம் கூறினால், அவரை பா.ஜ.க. மறைமுகமாக இயக்குவதாகவே பொருள்படுகிறது. அவர் பா.ஜ.க.வால்தான் இயக்கப்படுகிறாரா? இல்லையா? என்ற விவாதித்திற்குள் நாம் செல்லவில்லை. ஆனால் அவரின், குஜராத் தேர்தலில் போட்டியிடுவது போன்ற முடிவுகள், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே அமைகின்றன.

பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!

மேற்கூறியவற்றை நாம் தொகுத்துப் பார்க்கும் போது, குஜராத்தில் மீண்டும் பாசிசக் கும்பலே ஆட்சிக்கு வரும் என்பதை நம்மால் எளிமையாக புரிந்துக்கொள்ள முடியும். அதற்கு முக்கிய காரணம், பா.ஜ.க.வுக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகள், பா.ஜ.க.வின் இந்துத்துவா மற்றும் கவர்ச்சிவாத அரசியலை எதிர்த்து, வர்க்க அரசியலை முன்வைத்து மக்களை அணிதிரட்டாமல் அதற்கு அடிபணிந்ததே ஆகும்.

பா.ஜ.க. ஆட்சியில் குஜராத் மக்களின் வாழ்க்கைதரமானது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு தினமும், ஒவ்வொரு மணி நேரமும் வாழ்க்கையை நடத்துவதே பெரும் போராட்டமாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் என மக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதற்கெதிராக மக்களின் போராட்டங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

குஜராத்தில் 3.64 லட்சம் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளது; சமீபத்தில் 3,400 கிராம பஞ்சாயத்து செயலாளர் பணிக்கு நடந்த தேர்விற்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தது ஆகிய இரு நிகழ்வுகளின் மூலமே நாம் வேலைவாய்ப்பின்மையின் கொடூரத்தை புரிந்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக, குஜராத் வைர தொழிலாளர்கள் சங்கம் (Diamond Workers Union Gujarat) இத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடக்கூடாது என தன் சங்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. சங்கத்தில் 30 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். வைர தொழிலாளர்களின் நலன்களை காக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் மற்றும் தொழில்முறை வரியைக் குறைக்க வேண்டும் என இச்சங்கத்தின் கோரிக்கையானது 12 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசால் நிறைவேற்றப்படாததே அதற்கு காரணமாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்காதது; நெடுஞ்சாலை திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது ஆகியவற்றுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல பழங்குடி மக்களும் பர்-தாபி- நர்மதா நதி இணைப்பு திட்டம் மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் உருக்கு ஆலையை அமைப்பதற்கு எதிராகவும் போராடி வருகின்றனர்.

படிக்க : அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!

இப்போராட்டங்களை எல்லாம் அடுத்த கட்டத்திற்கு வளர்த்து மக்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை பூர்த்தி செய்து மக்கள் நல அரசை அமைக்க வேண்டும் என்ற சிந்தனை எதிர்க்கட்சிகளுக்கு கனவில் கூட இல்லை. அதற்கு மாறாக, மிதவாத இந்துத்துவா மற்றும் கவர்ச்சிவாத அரசியலையே முன்வைத்து மக்களின் வாக்குகளைக் கவர முயற்சி செய்கின்றன. எனவேதான் இவர்களால் பா.ஜ.க.வுக்கு மாற்றாக அமைய முடியவில்லை.

இதன் விளைவாகவே, காங்கிரஸ் கட்சியானது மக்கள் மத்தியில் இருந்து படிப்படியாக துடைத்தொழிக்கப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியானது மக்களுக்கு புதிய கட்சியாகவும், கார்ப்பரேட் பாணியில் கவர்ச்சிவாத அரசியலை மூர்க்கத்தனமாக செயல்படுத்துவதாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றுள்ளது.

எனவே குஜராத்தில் ஆம் ஆத்மியானது, காங்கிரஸ் கட்சியின் இடத்தை அதாவது எதிர்க்கட்சியின் இடத்தைக் கைப்பற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தேர்தலானது பாசிஸ்டுகளுக்கு எதிராக, இத்தேர்தல் கட்டமைப்புக்குள் சாத்தியமான மாற்று இல்லை என்பதை மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

பிரவீன்

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அவலநிலை!

கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முக்கியமான ஒன்றுதான் பச்சையப்பன் கல்லூரி. மேலும் மாநில கல்லூரி, சட்ட கல்லூரி, நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரி, தியாகராய கல்லூரி என பல அரசு கல்லூரிகளும் அரசே எடுத்து நடத்தும் கல்லூரிகளும் பெரும்பான்மையாக உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளாக உள்ளன.

இக்கல்லூரிகளுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. 1800-களில் இருந்தே இதன் வரலாறு தொடங்குகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய காலத்தில் கட்டப்பட்டவை இவை. இதில் பச்சையப்பன் கல்லூரிக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட முதல் கல்வி அறக்கட்டளை  பச்சையப்பன் அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளைக்கு கீழ் பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் பச்சையப்பன் கல்லூரி ஆகும்.

எண்ணற்ற தலைவர்களை, கல்வியாளர்களை, விஞ்ஞானிகளை அரசு உயரதிகாரிகளை உருவாக்கிய பெருமை இப்பச்சையப்பன் கல்லூரிக்கு உண்டு. இந்திய விடுதலை போராட்டத்திலும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்திலும் இக்கல்லூரி மாணவர்களின் பங்கு முக்கியமானது.

மேலும், விவசாயிகள் வாழ்வுரிமை காக்கும் போராட்டம், தொழிலாளர்கள் நலன் காக்கும் போராட்டம், கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம், டாஸ்மாக்கை மூடும் போராட்டம் என உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் இவர்கள் போர்க்குணத்தோடு முன் நின்றுள்ளனர். இக்கல்லூரி மாணவர்களை போலவே பேராசிரியர்களும் பல்வேறு போராட்டங்களில் முன் நின்று போராடியுள்ளனர்.

படிக்க : பச்சையப்பன் கல்லூரி காக்க பேராசிரியர் – மாணவர் போராட்டம்

இத்தகைய பாரம்பரியத்திற்கு சொந்தமான கல்லூரி அறக்கட்டளை தான் சமீப ஆண்டுகளாக தி.மு.க – அ.தி.மு.க-வை சார்ந்த பிழைப்புவாத ஓட்டு பொறுக்கிகளின் பிடிக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கல்வியாளர்களைக் கொண்டு கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்பட வேண்டிய இந்த கல்லூரி அறக்கட்டளையின் சொத்துகள் இன்று ஓட்டுக் பொறுக்கி அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. பல புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கிய பள்ளி, கல்லூரிகள் இன்று பாழடைந்த பேய் பங்களாக்களை போல் உள்ளன. இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளோ கல்விப் பணியை செய்வதற்கு பதில் பிற அனைத்து ‘சட்டவிரோத’ கேடுகெட்ட வேலைகளையும் செய்கிறார்கள்.

பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு; கல்விக்கூடத்தை பராமரித்து இயக்குவதற்கு பதில் தனிப்பட்ட நலனுக்காக சொத்துக்களை விற்பது; கல்வியின் தரத்தை உயர்த்தி சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கு பதில் தனியாருக்கு இணையாக அதிக கட்டணத்திற்கான வகுப்புகள் உருவாக்கி கொள்ளையடிப்பது, கல்லூரி மைதானத்தை தனியாருக்கு வாடகைக்கு விட்டு நிர்வாகிகள் தங்கள் சொத்தை உயர்த்தி கொள்வது என லஞ்ச லாவண்யங்களும் முறைகேடுகளும் இவ்வறக்கட்டளையில் மண்டிக்கிடக்கின்றன.

கடந்த 2013-2015-ஆம் ஆண்டுகளில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆறு கல்லூரிகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் உரிய தகுதியுடையவர்கள் இல்லை எனக் கூறி அறக்கட்டளையை நிர்வகித்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், உதவிப் பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் “முறையாகத் தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது’’ என தீர்ப்பு வழங்கியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சொல்லப்போனால் இந்த ஊழலின் ஊற்றுகண்ணாக செயல்பட்டதே பச்சைப்பன் அறக்கட்டளை நிர்வாகியும் தற்போது திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் தான். அவருக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படவில்லை. ஆனால், நூற்றுக்கணக்கான பேராசியர்கள் வாழ்வாதாரமும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமும் தற்போது கேள்விகுறியாகி உள்ளது.

இதனை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நவம்பர் 18 அன்று கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 254 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்ததை கண்டித்தும் சரியான விசாரணை குழு அமைத்து ஊழலில் ஈடுபட்ட பேராசிரியர்களை மட்டும் வகை பிரித்து (spot out) பணி நீக்கம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும், ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருந்த பச்சையப்பன் கல்லூரி நிர்வாகி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் போராடினர்.

ஒருபுறம், சிங்கார சென்னை, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சென்னையின் உழைக்கும் மக்கள் நகரத்தை விட்டு வெளியே தூக்கியடிக்கப்படுகின்றனர். சென்னையை அழகுபடுத்துதல் என்ற பெயரில் சென்னை நகரத்தை உருவாக்கிய உழைக்கும் மக்கள் நகரத்தின் அழுக்குகளாக பார்க்க படுகின்றனர். இன்னொருபுறமோ அந்த உழைக்கும் மக்களின் பிள்ளைகள் கல்வி பறிக்கப்பட்டு அவர்களும் சமூகத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

அதனோடு இணைந்த நடவடிக்கைதான் இந்த பச்சையப்பன் அறக்கட்டளை கீழ் இயங்கும் பேராசிரியர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டதும். மொத்தம் 254 பேராசிரியர்களின் நியமனத்தில் 152 பேராசிரியர்களின் நியமனம் முறைகேடாக நடந்துள்ளது என்று தொடுக்கப்பட்ட வழக்கில், மொத்தமாக 254 பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது என்று தீர்ப்பு வழங்கவேண்டிய அவசியம் என்ன?

ஏனெனில் எப்படி உழைக்கும் மக்கள் ‘சிங்கார சென்னை’யின் அழுக்காக பார்க்கப்படுகின்றனரோ அப்படி தான் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நந்தனம் கல்லூரி, தியாகராய கல்லூரி உள்ளிட்ட அனைத்து அரசு கல்லூரி மாணவர்களும் பார்க்கப்படுகின்றனர்.

படிக்க : போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

அப்படிப்பட்டவர்களின் கல்லூரிகள் பெரிய முக்கியமான நிலபரப்பில் அமைந்திருப்பதையும் மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ள கல்வி இன்னும் இலவசமாக வழங்கப்படுவதையும் ஆளும் வரக்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது போதாதென்று, இந்த மாணவர்கள் ஒவ்வொரு சமூக அநீதிக்கு எதிராகவும் சாலையில் அமர்ந்து போராடுவதை ஆளும் வரக்கத்தால் கனவில் கூட சகித்துக்கொள்ள முடியாது.

இதனால்தான் இதற்கு முன்பே மெட்ரோ ரயில் போட உள்ளோம் என்று பச்சையப்பன் கல்லூரியை ஒழித்துகட்ட பார்த்தனர். மாணவர்களின் போராட்டத்தினால் அந்த திட்டம் கை விடப்பட்டது. அதே போல் தலைமை செயலகம் அருகில் இருந்த சட்டக் கல்லூரியும் மூலையில் வீசப்பட்டது. மாநிலக் கல்லூரி முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ரூட் பிரச்சினையை காரணம் காட்டி இக்கல்லூரி மாணவர்கள் சமூக விரோதிகளாக காட்டப்படுகின்றனர்.

எனவே ஏழை எளிய மக்களை கல்வியை விட்டு துரத்தியடிக்கும் ஆளும் வர்க்கங்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டுமானால், தனி தனியாக போராடி கொண்டிருக்கும் கௌரவ விரிவுரையாளர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக இந்த பிரச்சினையை மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கொண்டு சென்று அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு கட்டி போராட்டத்தை முன்னெடுப்போம்.

ஊமத்துரை

அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!

குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததன் மூலம் 53 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்தது. இந்த தொங்கு பாலத்தின் யோக்கியதையையும் இதில் நடந்துள்ள முறைகேடுகளையும் பல்வேறு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தியிருப்பதைப் பலரும் அறிவோம்.

ஆனால், இதனை வழமையான பெரிய விபத்து என்ற வகையிலோ, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் அலட்சியமான செயல்பாட்டின் வெளிப்பாடாகவோ பார்க்க முடியாது. நாட்டிற்கே முன்மாதிரியாக பாசிசக் கும்பலால் முன்னிறுத்தப்பட்ட குஜராத் மாடலின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது மோர்பி பாலம். மோர்பி பாலம் அறுந்து விழுந்த நிகழ்வானது அப்பட்டமான பயங்கரவாதச் செயலாகும். திட்டமிட்டு நிகழ்த்தப்படவில்லை என்றாலும் இது ஒரு படுகொலை குற்றமாகும்; எவ்வித வரைமுறையுமின்றி மொத்த குஜராத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருப்பதன் விளைவாகும்!

0-0-0

1879-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மச்சு நதியின் குறுக்கே திறக்கப்பட்ட தொங்கு பாலமானது மிகவும் பழமையானது. தற்போது மக்களின் போக்குவரத்திற்கு என்பதைத் தாண்டி, சுற்றுலாத் தளமாகவே ஆக்கப்பட்டுள்ளது. 2001 பூகம்பத்திற்குப் பின்னர் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத இந்த பாலமானது வலுவிழந்து இருந்ததால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீபாவளி மற்றும் சாத் பூஜையை ஒட்டி இந்தப் பாலம் மீண்டும் திறக்கப்பட்டபோது, பாலத்தைக் கடக்கும் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்ததால் பாலமானது அறுந்து விழுந்தது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

படிக்க: குஜராத்: அரசின் அலட்சியத்தால் மோர்பி தொங்கு பாலம் விபத்து ! 141 பேர் மரணம் !

ஆனால், பாலம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை; பல கம்பிகள் பழையவை; துருப்பிடித்தக் கம்பிகள் சரி செய்யப்படவில்லை; அவற்றிற்கு கிரீஸ் கூட பூசப்படவில்லை; தொங்குபாலத்தைத் தாங்கும் பிடிமானங்கள் இரண்டு பழுதடைந்திருந்தன; இரண்டு முக்கியமான ஆணிகள் (போல்டுகள்) கழன்று இருந்தன; இந்தப் பாலத்தில் இருந்த மரப்பலகைகள் நீக்கப்பட்டு அதனிடத்தில் அலுமினியத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பாலத்தின் எடை அதிகரித்துள்ளது. வழக்கமாக கட்டணம் வசூலித்து மக்கள் அனுப்பப்படும் இந்தப் பாலத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை; அதிக இலாபத்தைக் கணக்கில் கொண்டு நான்கு மடங்கு அதிகமான மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; பழுது பார்த்த பின்னர் அதன் உறுதித்தன்மையை சோதிக்காமல், அரசின் அனுமதியில்லாமல் திறந்துள்ளனர் – என்று தடயவியல் நிபுணர்களும், இப்பணி குறித்து விசாரிக்கும் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

பாலத்தைப் பராமரிப்பது மற்றும் சீரமைப்பது ஆகிய இரண்டு பணிகளை குஜராத்தைச் சேர்ந்த ஒரேவா (Oreva Group) என்ற கார்ப்பரேட் குழுமத்திற்கு வழங்கியிருந்தது குஜராத் அரசு. இக்குழுமம் உலகின் மிகப்பெரிய கடிகார உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். 2007-ஆம் ஆண்டு முதல் இக்குழுமமே பாலத்தைப் பராமரித்து வருகிறது; தற்போது மேலும் 15 ஆண்டுகளுக்கு இப்பாலத்தைப் பராமரிக்கும் பணியும் அண்மையில் ஒரேவா குழுமத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி நிறுவனமான ஒரேவா-வோ, பாலத்தைச் சீரமைக்கும் பணியை வேறு இரண்டு ஒப்பந்ததாரர்களிடம் கொடுத்துள்ளது. அந்த ஒப்பந்ததாரர்கள் யாரும் பாலம் குறித்த அறிவு பெற்ற பொறியாளர்கள் அல்ல; இந்த ஒப்பந்ததாரர்கள் பாலத்தில் வெல்டிங் மற்றும் மின் இணைப்பு வேலைகளை மட்டுமே செய்துள்ளனர். மேலும் ஒரேவா-உம் கட்டுமானப்பணிகளில் முன்அனுபவம் இல்லாத நிறுவனமாகும். அதுமட்டுமல்ல, பாலத்தை பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை, நகராட்சி அதிகாரிகள் ஏல அறிவிப்புக் கூட கொடுக்காமல் இந்த நிறுவனத்திற்கு நேரடியாக வழங்கியுள்ளனர் என்பதும், அந்த ஒப்பந்தப் படிவம் இரண்டு பக்கங்களை மட்டுமே கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் அதிர்ச்சியளிக்கின்றன.

மக்கள் உயிருடன் தொடர்புடைய முக்கியமான ஒப்பந்தம் என்ற கருத்துகூட இல்லாமல், இலஞ்ச-ஊழல்-முறைகேடுகளை பார்ப்பன பாசிஸ்டுகள் இயல்பாகக் கொண்டிருப்பதைத்தான் இந்த குஜராத் மாடல் நமக்கு உணர்த்துகின்றன.

முக்கியமாக, பாலத்தில் செல்வதற்கான கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தியது; சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ரூபாய் நிதியில், வெறும் 12 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்தது; மறுசீரமைப்புப் பணிகள் முடிக்காத நிலையில், பண்டிகையை ஒட்டி அவசர அவசரமாக பாலத்தைத் திறந்தது; 125 பேர் மட்டுமே தாங்கும் பாலத்தில் 500-க்கும் மேற்பட்டோரை அனுமதித்து கொள்ளையடித்தது போன்றவை இந்த ஒரேவா நிறுவனம் ஈவிரக்கமில்லாமல் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனம் என்பதையே காட்டுகின்றன.

இந்த மோர்பி தொங்கு பாலம் மட்டுமல்ல, குஜராத் அரசின் எல்லா துறைகளும் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன. குஜராத் மாடல் வளர்ச்சி என்றாலே எல்லா துறைகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதுதான்; அதாவது மக்கள் மீதான கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை நீக்கமற நிறுவுவதுதான். அவ்வாறு நிறுவப்பட்டிருப்பதன் விளைவும் வெளிப்பாடும்தான் ஏறத்தாழ 150 பேரை பலிகொண்ட கோர நிகழ்வு. எனவேதான் மோர்பி பாலம் அறுந்து விழுந்த நிகழ்வு ஒரு விபத்தல்ல, படுகொலை என்கிறோம்.

0-0-0

தொங்குபாலம் பராமரிப்பில் காட்டிய அலட்சியம், ஒரேவா-வின் இலாபவெறிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தொங்குபால விபத்து நடந்த பின்னர், பா.ஜ.க. மோடி கும்பலும் அவர்களது ஆதரவு ஊடகங்களும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாசிஸ்டுகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு பேசிய மோடி, “ஒரு பக்கம் இதயம் வலியால் கனக்கிறது; இன்னொரு பக்கம் கடமையின் பாதை அழைக்கிறது. நான் ஏக்தா நகரில் இருக்கிறேன். ஆனால் எனது எண்ணம் எல்லாம் மோர்பியில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே உள்ளது. எனது வாழ்க்கையில் அரிதாகவே இப்படி ஒரு வேதனையை அனுபவித்து இருப்பேன்” என்று மிகவும் தந்திரமாக நடித்தார். அன்று மாலையே, பனஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும்போது மேடையிலேயே முதலைக் கண்ணீர் வடித்தார். ஆனால், விபத்து ஏன் நடந்தது, விபத்துக்கான காரணம் என்ன என்று ஒருவார்த்தைக் கூட பேசவில்லை.

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெறுபவர்களை மருத்துவமனைக்குச் சென்று மோடி சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் விபத்துக்குள்ளானவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் யோக்கியதை வெளி உலகிற்குத் தெரியவந்தது. பிரதமர் மோடி மருத்துவமனைக்கு வருகிறார் என்பதால், பாழடைந்த மருத்துவமனையை அவசர அவசரமாகப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனையில் சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், உடைந்த தரைக்கற்களை மாற்றுதல், மேற்கூரையைப் புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அம்மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி மற்றும் போதிய அளவு படுக்கைகள், போர்வைகள் கூட இல்லை. மோடி வருகைக்காக 105 கி.மீ. தொலைவில் உள்ள ஜாம்நகர் அரசு மருத்துவமனையில் இருந்து போர்வைகள் கொண்டுவரப்பட்டன. குடிநீர் இணைப்பு இல்லாமலே தண்ணீர் குளிர்விப்பான் அமைக்கப்பட்டிருந்தது. மோடி வருகை காரணமாக, தொங்கு பால விபத்தினால் படுகாயமுற்ற 56 பேர் சிகிச்சை முடிவடையாத நிலையில் இரண்டே நாட்களில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் செய்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து குஜராத் மாடலின் கோர முகத்தைக் காட்டின. குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் இச்சூழலில், தனது வாக்கு வங்கி சரிவதைத் தடுப்பதற்காக பா.ஜ.க. மோடி கும்பல் பொய் பிரச்சாரங்களைத் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிட்டது. இத்தனைக்கும் பிறகு, கொஞ்சமும் வெட்கமில்லாமல் “நான் உருவாக்கிய குஜராத்” என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் மோடி.

தொங்கு பால விபத்தில் மக்களைக் காப்பாற்றினார் என்று கூறி, பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான கந்திலால் அம்ருதியாவை இத்தொகுதியில் நிறுத்தி பா.ஜ.க. வெற்றிபெற முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையமோ ஒருபடி மேலே போய், மோர்பி சம்பவத்துக்கு அடுத்து குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் ஒருவாரத்திற்கு நிறுத்தி வைத்தது. பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலை வடிந்த பின்னர்தான் குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தது.

ஒருபுறம் பிரதமர் மோடியின் புளுகுகளையும் நாடகத்தையும் ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போதே, இளைஞர்கள் பாலத்தை ஆட்டியதால்தான் பாலம் அறுந்து விழுந்தது என்று பொய்ச் செய்திகளைப் பரப்பின.

படிக்க: மோர்பி நகர் தொங்கு பாலம் விபத்து – அழுகி நாறுகிறது குஜராத் மாடல்!

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி, “மோர்பி பால விபத்து என்பது அர்பன் நக்சல்களின் திட்டமிட்ட சதியாக இருக்கும்” என்ற பொய்ப் பிரச்சாரத்தையும் பரப்பின. ஆனால், ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேல், இன்னும் கைது செய்யப்படாததைப் பற்றி இந்த ஊடகங்கள் மூச்சுக்கூட விடவில்லை.

வடநாட்டு பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் மட்டுமல்ல, விகடன் குழும நிறுவனங்கள் கூட, விபத்தில் தனியார் நிறுவனம்தான் தவறு செய்துவிட்டது போல சில விவரங்களைச் சொல்லிவிட்டு, நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தீவிர விசாரணைகள் நடப்பதாகவும் ‘புலனாய்வு’ச் செய்திகளை வெளியிட்டன. பா.ஜ.க. மோடி கும்பலின் அப்பட்டமான ஊழல்-முறைகேடுகள் குறித்து ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. மாறாக, மோடியின் நீலிக்கண்ணீர் நாடகத்தை மக்கள் மீதான அக்கறையைப் போல சித்தரித்தன.

மொத்தத்தில், மோர்பி பாலம் அறுந்து விழுந்ததானது, குஜராத் மாடல் வளர்ச்சியின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. குஜராத் மாடலானது குஜராத்தி-மார்வாடி-படேல்-பனியா போன்ற வடநாட்டு ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொர்க்கம், உழைக்கும் மக்களுக்கோ சவக்குழி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது.

டிச.6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் : அயோத்தியில் அராஜக வெறியாட்டம் போட்ட காவி பயங்கரவாதிகள்!

1992 டிசம்பரில் இந்து மதவெறியர்களால் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த சட்டவிரோத கரசேவை-க்கு இன்று வரை யாரும் தண்டிக்கப்படவில்லை. 2019-ஆம் ஆண்டில் ‘பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கே நிலம் சொந்தம்’ என்ற ஓர் அநீதி தீர்ப்பை வழங்கி கரசேவை புரிந்த அனைவரையும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். அதை தொடர்ந்து தற்போது ராமர் கோயிலை கட்டுவதற்கு களமிறங்கிவிட்டது இந்துமதவெறி கும்பல். அதை தொடர்ந்து காசி மதுரா, கியான்வாபி, தாஜ்மஹால் என அவர்களின் அடுத்தக்கட்ட இலக்குகள் கரசேவைக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நாடுமுழுவதும் பல்வேறு கலவரங்களை அரங்கேற்றினார்கள் இந்து மதவெறி பாசிஸ்டுகள். 2002-ல் குஜராத் கலவரத்தை அறங்கேற்றி குஜராத் மாடல் தான் இந்துராஷ்டிரம் என்று கொக்கரித்தார்கள். 2014-ல் மோடி தலைமையிலான பாஜக கட்சி மத்திய ஆட்சியை பிடித்த பிறகு, வட இந்தியாவில் உ.பி; தென்னிந்தியாவில் கர்நாடக உட்பட ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி உள்ளிட்ட சங் பரிவார கும்பல் நாடுமுழுவதும் தனது அடிதளத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, இந்துமதவெறியர்களின் கரசேவையை அம்பலப்படுத்தி எமது புதிய ஜனநாயகம் இதழில் கட்டுரை வெளியிடப்பட்டது. அதனை தற்போது பதிவிடுகிறோம்.

– வினவு

0-0-0

அயோத்தி நாசகார கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!

அயோத்தி பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியதோடு நாடு முழுவதும் மதவெறிப்படுகொலைக் கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் தங்களது நயவஞ்சகச் சதித் திட்டத்தை வெற்றிகரமாகத் துவக்கி விட்டார்கள், இந்துமதவெறி பார்ப்ன-பனியா பாசிசக் கூட்டத்தினர்.

பாபர் மசூதியை இடித்ததானது, “இந்துமத-வகுப்புவாதத் தீவிரவாதிகளது வெறிச்செயல்” “வக்கிரமான கோழைத்தனம்” “மத்திய கால மதவெறிக் குரூரம்” “தேசிய அவமானம்-துரோகம்” “மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றம்” – என்று சித்தரிப்பது எல்லாம் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நாசகரமான கடப்பாரைச் சேவையை மட்டும் குறிக்கின்றன.

ஆனால், இந்த இழிசெயல், இந்துமதவெறி பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவுவது என்கிற மிகவும் அபாயகரமான, நயவஞ்சகமான, கொடிய சதித்திட்டத்தைப் பகிரங்கமாக அரங்கேற்றுவதைத்தான் குறிக்கிறது.

பாபர் மசூதியின் கவிகைகளை உடைத்து நொறுக்கி வீழ்த்தியவுடன் இந்து மத “சந்நியாசினிகள்” என்று பட்டஞ் சூட்டிக் கொண்டுள்ள உமா பாரதியும், ரிதம்பராவும் ஒலிபெருக்கி மூலம் அலறினார்கள், “இதோ, இந்து ராஷ்டிரம் பிறக்கிறது!” – இதுதான் அவர்கள் இலட்சியம். இந்து மதவெறி பாசிச பயங்கரவாதம் – இதுதான் அவர்களின் இராம ராஜ்ஜியம்!

படிக்க : சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !

இந்து மதவெறியின் குருபீடமாகிய ஆர்.எஸ்.எஸ்ஸோ அதன் கள்ளக் குழந்தைகளான பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, பஜ்ரங்க தள், இந்து முன்னணி முதல் தமிழ்நாடு பிராமணம் சங்கம் வரை அவர்கள் யாருமோ, “இந்துராஷ்டிரம்”தான் தமது இலட்சியம் என்பதை மறைக்கவில்லை.

பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டுவது ஒரு மத நம்பிக்கையை நிறைவேற்றுவது என்பதெல்லாம் பாமர ராம பக்தர்களைத் திரட்டுவதற்க்காகச் செய்த பிரச்சாரம்தான்! “இசுலாமிய ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களால் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்; இந்துமதத் துறவிகள் கொல்லப்பட்டனர்; இந்த தேசிய அவமானத்தின் சின்னமாக விளங்குவதுதான் பாபர் மசூதி; அதை அகற்றி ராமன் பிறந்த பூமியில் ராமனுக்குக் கோவில் கட்டுவது அன்று நேர்ந்த அவமானங்களுக்குப் பழிவாங்குவது, இந்துக்களின் கௌரவத்தை நிலை நாட்டுவது” என்கிற விளக்கங்கள் கூட இந்துமதவெறி பாசிஸ்டுகள் தமது “இந்து ராஷ்டிரம்” என்கிற அரசியல்பேராசைக்கு மதச் சாயம் பூசுபவைதான்.

“இராமன் ஒரு மதத்தின் கடவுள் மட்டுமல்ல; தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். போலியான மதச்சார்பின்மை, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இந்துத்துவம், இராமராஜ்ஜியம், இந்து ராஷ்டிரம் அடிப்படையிலான தேசியத்தை நிர்மானிப்பது எங்கள் நோக்கம்” என்று இந்து மதவெறி பாசிஸ்டுகள் அனைவரும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.

ஆகவே, பாபர் மசூதியை இடித்த சம்பவம் உண்மையில் அரசியல் அதிகார ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையைப் போன்றது. பாரதீய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் ஆதாயம் மட்டும் அதன் குறிக்கோள் அல்ல. ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேர்தல்களையும் ஒரு வழியாக இந்துமதவெறி பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நாட்டின் நீதி-நிர்வாக-அரசியல் அமைப்புமுறை எதன் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது என்பதை நிரூபித்துவிட்டார்கள். மதவெறி பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இரத்த ஆறில் நீந்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்டுள்ள வழி. அதன் ஒரு பகுதிதான் அயோத்தியில் அவர்கள் புரிந்த அராஜக வெறியாட்டம்.

இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அயோத்தி நாசவேலையைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டுள்ள அராஜக வெறியாட்டத்தில் இப்போதைய, உடனடித் தாக்குதல் இலக்கு என்னவோ இசுலாமிய சமுதாயத்தினர்தான்! ஆனால், நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகளுக்கெதிராக அவர்கள் தமது தாக்குதலைத் திருப்பிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை. இன்றைய சம்பவங்கள் அதற்கான எச்சரிக்கை – முன்னறிவிப்புதான்!

ஜெர்மனியின் ஆரிய – நாஜிக்கள் ஆட்சியைப் பிடிப்பதற்குப் பின்பற்றிய தந்திரங்கள் பலவும் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளில் காணமுடிகிறது. தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது; தேசிய கௌரவத்தை நிலைநாட்டுவது; தேசிய ஒருமைப்பாட்டை காப்பது; நாட்டின் இழிநிலைக்குக் காரணமானவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட (யூத) சமுதாயத்தினர் மீது பழிபோட்டு அவர்களைக் கொன்று குவிப்பது; நாட்டின் வரலாற்றையே திரித்துப் புரட்டி மத-இன ரீதியில் நாட்டையே பிளவுபடுத்துவது – ஆகிய அதே தந்திரங்களை இந்துமதவெறி பாசிஸ்டுகளும் பின்பற்றுகிறார்கள்.

இப்போது பாபர் மசூதியை இடித்து ராமன் கோவிலைக் கட்டியதைப் போல காசியில் உள்ள மசூதியை இடித்துக் காசி விசுவநாதன் கோவிலையும், மதுரா மசூதியை இடித்து கிருஷ்ணன் கோவிலையும் கட்டும் திட்டத்தை நிறைவேற்றி அடுத்தடுத்து இசுலாமிய மதத்தினருக்கு ஆத்திரமூட்டுவது; சொல்லப்படும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து இசுலாமிய மதவாத – தீவிரவாத அமைப்புகளில் தஞ்சமடையும்படியும் எதிர் தாக்குதல் தொடுக்கும் படியும் இசுலாமியர்களைத் தள்ளுவது; அதற்கு எதிராக இந்து மதவெறியை நியாயப்படுத்துவதுடன் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாகத் தம்மை முன்னிறுத்தி மதவெறி – வகுப்புவாதக் கலவரங்களை மூட்டி இரத்த ஆறு ஓடச் செய்து பார்ப்பன-பனியா சாதிய ஆதிக்க அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் அமைப்பது – இதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அரசியல் பாதையாக உள்ளது.

முதலாவதாக, இவர்கள் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் பிரதிநிதிகளும் அல்ல; இரண்டாவதாக, தேசிய நலன்கள் எதுவும் இவர்களது குறிக்கோளாக இல்லை.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி, பஜரங் தள், சிவசேனா, இந்து முன்னணி போன்ற இந்த இந்து மதவெறி பாசிச அமைப்புகள் அனைத்திற்கும் தலைமையேற்று வழி நடத்துபவர்கள் பெரும் தரகு அதிகார முதலாளிகளின் குடும்பத்தினர். தொழில்முறை அரசியல்வாதிகளாகவும், சாமியார்களாகவும், முன்னாள் அதிகாரிகளாகவும் உள்ள பார்ப்பன – பனியா சாதியக் கும்பலைச் சேர்ந்தவர்கள். இந்தச் சாதிகளும் அமைப்புகளும் நாட்டின் பெரும்பான்மையான இந்துக்கள் எனச்சொல்லப்படும் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை ஒரு போதும் இந்துக்களாகவும் சமமான சமூக – மத உரிமை உடையவர்களாவும் நடத்தியதே கிடையாது. சதி முதலிய பெண்ண்டிமைத்தனமும், பார்ப்பனிய சநாதன வருணாசிரம – சாதிய தர்மமுமே இந்தக் கும்பலின் கண்ணோட்டமாக உள்ளது.

இந்து ராஷ்டிரம் எத்தகையாத இருக்கும் என்பதை இந்து மதவெறி பாசிஸ்டுகள் இப்போதே நிரூபித்துவிட்டார்கள். பத்திகையாளர்கள் மீதான தாக்குதலும் நாடு முழுவதும் சிறுமான்மையினர் உயிரோடு எரிப்புதும் சான்றுகளாக விளங்குகின்றன. ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் உண்மை என்று எழுதவும் பேசவும் முடியும்; அதுதான் இராமராஜ்ஜியத்தில் கருத்துச் சுதந்திரம். சிறுபான்மையினருக்கு சமூக, மத, பண்பாட்டு உரிமைகள் மட்டுமல்ல, வாழும் உரிமையே மறுக்கப்படும் என்று காட்டி விட்டார்கள்.

அது மட்டுமல்ல, இந்து மதவெறி பாசிச ஆட்சியை நிறுவி தங்களது ஆதிக்கம், சுரண்டல் நலன்களைத் தக்க வைத்துக் கொள்ள, நீடித்துக் கொள்ள தரகு அதிகார முதலாளிகளும் ஏகாதிபத்தியங்களும் பழைய – புதிய நிலப் பிரபுக்களும் ஊட்டி வளர்த்து வருகின்ற நச்சுப் பாம்புகளே இந்த பார்ப்பன – பனியா அமைப்புகள்.

ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறு அடகு வைக்கும் நரசிம்மராவ் அரசின் புதிய பொருளாதாராக் கொள்கைகளால், உழைக்கும் மக்கள் என்றும் இல்லாத அளவு சுரண்டலுக்கும், விலையேற்றத்திற்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் ஆளாகி ஆலையில் சிக்கிய கரும்பாக அவதிப்பட்டு வருகின்றனர். மதவெறியைத் தூண்டி இப்பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பி அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிப் படுகொலை செய்து கொள்ளும் பாதையில் தள்ளிவிடுவது; இதன் மூலம் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை உறுதிப்படுத்திக் கொள்ள ஏகாதிபத்தியங்கள், தரகு அதிகாரமுதலாளிகள் பழைய – புதிய நிலப்பிரபுக்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இதுதான் இந்த இந்து மதவெறி பாசிஸ்டுகளின் உடனடி நோக்கமாகும்.

இதுவரை தேசவிரோத – பயங்கரவாத – பிரிவினைவாத பீதியூட்டி நியாயமான தேசிய இன, ஜனநாயக உணர்வுடைய சக்திகளை அடக்கி ஒடுக்கும்படி கோரி அரசியல் ஆதாயம் அடைந்து வந்தது இந்த பார்ப்பன – பனியா பாசிச கும்பல். இப்போது இந்த நாட்டின் நீதி – நிர்வாகம், அரசியல் அமைப்பு, சட்டத்திட்டங்கள், மரபு – நியதிகள் எதையுமே மதியாத தமது வெறிச் செயல்கள் மூலம் இவர்கள் தாம் உண்மையான வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள், தேசதுரோகிகள், பிரிவினைவாதிகள், சமூகவிரோதிகள், தீவிரவாதிகள், வகுப்புவாதிகள் என்று நாட்டுக்குத் தம்மை அடையாளங் காட்டிக் கொண்டு விட்டனர்.

பாபர் மசூதியை இடித்து, நாடெங்கும் மதவெறிப் படுகொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் இசுலாமிய மக்களின் மத உணர்வைப் புண்படுத்தி ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்கள். இந்து – இசுலாமிய மக்களிடையே நிலவி வந்த சகோதரத்துவ உணர்வு – ஒருமைப்பாட்டின் மீது திரிசூலத்தைப் பாய்ச்சி அவநம்பிக்கையையும், பிளவையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

படிக்க : அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வரை மசூதியை இடிக்க மாட்டார்கள்; பிரச்சினையை உயிருள்ளதாக இழுத்தடித்து அரசியல் ஆதாயம் அடைய முயலுவார்கள் என்றுதான் நாம் உட்பட அரசியல் நோக்கர்கள் கருதினோம். இந்த முறையும் மசூதியை முற்றாக இடித்துவிடக் கூடாது; தடைகளை மீறி மசூதியை இடிக்கும்போது மத்திய போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தும்; கணிசமான கரவேகர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்; அவர்களுக்குத் தியாகிப் பட்டங்கட்டி, மீண்டும் அஸ்திகலச ஊர்வலங்கள் நடத்த அனுதாப அலையைக் கிளப்பி ஆதாயம் அடையலாம் என்பதுதான் ஒரு பிரிவினரது நோக்கம். ஆனால் பா.ஜ.க ஆளும் நான்கு மாநிலங்களிலும் லஞ்ச ஊழல் பதவிச் சண்டையிலும் கோஷடித் தகராறிலும் சிக்கியதால் அதன் ‘தூய்மை’ வேடம் கலைந்து அம்பலப்பட்டுப்போனது. அதோடு சமசரப் பேச்சு, நீதிமன்ற முடிவு ஆகிய எதையாவது ஏற்கும்படியான நிர்பந்தம் அதிகரித்து வருவதைக் கண்டார்கள். எனவே முந்திக் கொண்டு தமது சதித் திட்டத்தை அமலாக்கிவிட்டார்கள்.

ஆதிக்கத்தை கைப்பற்றவும், அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் பஞ்சமா பாதகங்களைச் செய்வது குற்றமல்ல என்று இந்த இந்து மதவெறி பாசிஸ்டுகளின் மூதாதையர்களும் ஆசான்களுமான மனுவும், கௌடில்யனும் போதித்தார்கள். அதையே அவர்களின் சந்ததியினர் இப்போது கடைப்பிடித்துள்ளனர். நாட்டின் சட்டம் ஒழுங்கையும், நீதியையும் வழுவாது கடைப்படிப்போம் என்று வாக்களித்து, நாட்டையும் மக்களையும் நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள். வேறெதையும் விட இந்த நம்பிக்கைத் துரோகத்துக்காவது தண்டிக்கப்பட வேண்டிய இல்லை, இல்லை பழிவாங்கப்பட வேண்டிய கொடிய எதிரிகளாக இவர்களை நாடும் மக்களும் கருத வேண்டும்.

புதிய ஜனநாயகம், ஜனவரி – 1993

‘ஒழுங்குநெறி போலீசு’ படை கலைப்பு: ஈரான் மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

டந்த மூன்று மாதங்களாக ஈரானில் ஒழுக்கநெறி போலீஸ் படைக்கு (Morality Police) எதிராக ஈரானிய மக்கள், குறிப்பாக பெண்கள் போராடி வருகின்றனர். அதன் எதிரொலியாக நேற்று (05-12-2022) அந்நாட்டு அரசு ஒழுக்கநெறி போலீசை கலைத்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது ஜனநாயகத்திற்கான அம்மக்களின் போர்க்குணம்மிக்க போராட்டத்துக்கும் தியாகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஹிஜாப்பை சரியாக அணியாததாக கூறி ஈரானிய குண்டர் படையான ‘ஒழுக்கநெறி’ போலீசால் கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண் மாசா அமினி துன்புறுத்தி கொல்லப்பட்டத்தை தொடர்ந்து போராட்டங்கள் வெடித்ததை நாம் அனைவரும் அறிவோம். இப்போராட்டத்தில் பெண்கள் மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொண்டிருக்கும் ஈரான் அணியினர் தங்களது நாட்டு தேசிய கீதத்தை புறக்கணித்து பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். மேலும், பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்களும் ஈரான் மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

படிக்க : ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !

ஈரான் மக்களின் இப்போராட்டத்தில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் போலீசு மற்றும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இருப்பினும் அம்மக்களின் தளராத போராட்ட உறுதியின் காரணமாக தற்போது ‘ஒழுக்க நெறி’ போலீஸ் படை அந்நாட்டு அரசால் கலைக்கப்பட்டுள்ளது.

0-0-0

2006-ஆம் ஆண்டு ஈரானிய இஸ்லாமிய பிற்போக்கு அரசால், இஸ்லாமிய மத அடிப்படையில் மக்கள் உடை அணிவதைக் கண்காணிப்பதற்கு “காஸ்த் எர்ஷாத்” என்கிற ஒழுக்கநெறி போலீசு உருவாக்கப்பட்டது. இந்த ஒழுக்கநெறி போலீசு எந்நேரமும் தெருக்களில் ரோந்து சென்று கொண்டிருக்கும்; அப்போது, இஸ்லாமிய மத அடிப்படைக்கு மாறாக உடை அணிந்தவர்களைக் கைது செய்து, மத போதனை அளிக்கும் கூடங்களுக்கு அழைத்துச் சென்று கட்டாய மத போதனை வகுப்புகளில் கலந்து கொள்ளச் செய்யும்; அதன் பின்னர் இஸ்லாமிய மத அடிப்படையில் உடை அணிவதை ஏற்றுக்கொண்டு உடையை அங்கேயே மாற்றிக்கொண்டால் மட்டுமே அங்கிருந்து விடுவிக்கும்.

ஒன்பது வயது சிறுமி முதல் வயதானவர்கள் வரை அனைத்துப் பெண்களும் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்பது ஈரானிய சட்டம். ஆண் பெண் இருபாலருக்கும் உடைக் கட்டுப்பாடுகள் இருந்த போதும் இப்படை, நீண்டகாலமாக பெண்களையே கட்டுப்படுத்தி வந்தது. மேலும், உடைக் கட்டுப்பாடு என்று சொல்லப்பட்டாலும் ஹிஜாப்பை எந்த வகையில் அணிய வேண்டும் என்று தெளிவாக எந்த சட்டங்களிலும் வரையறுக்கப்படவில்லை. இதனால், ஒழுக்கநெறி போலீசாரின் ஆணாதிக்க மனோபாவத்திற்கேற்ப ஈரானிய பெண்கள் அனுதினமும் ஒடுக்குமுறைகளை சந்தித்து வந்தனர். இது ஈரானிய பெண்கள், மாணவர்கள், மாணிவிகளுக்கு கடுமையான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தி வந்தது.

மற்றொருபுறம், ஈரானில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பெட்ரோல் எரிவாயுப் பொருட்களின் விலையேற்றம், வேலையின்மை, உயர்ந்தக் கல்வி கட்டணம், வறுமை ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அந்நாட்டின் மக்கள் நடத்தி வருகின்றனர். இவ்வாறான பல போராட்டங்களை ஒடுக்கும் வகையில், ஈரானிய அரசு கடுமையான அடக்குமுறைகளை செலுத்தியுள்ளது; துப்பாக்கிச் சூடுகளை நடத்தி மக்களைக் கொன்று குவித்துள்ளது. இவையெல்லாம், இந்த அரசின் மீதான மக்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்து வந்தது.

இப்படி பல ஆண்டுகளாக ஈரானிய மக்களிடம் கனன்று கொண்டிருந்த எதிர்ப்பு உணர்வானது மாசா அமினியின் படுகொலையால் ஒடுக்குமுறையாளர்களை சுட்டெரிக்க களம் கண்டது. “எங்களின் ஹிஜாப்பிலும் முடியிலும் தான் உன் மத நம்பிக்கை புதைந்து இருக்கிறதென்றால் அதை நீயே வைத்துக் கொள்” என்று பெண்கள் மத குருமார்களின் முகத்தில் ஹிஜாபை வீசி எறிந்தனர். போலீசுக்கும் இராணுவத்திற்கும் எதிராக அச்சமின்றி போரிட்டனர். பல நூற்றுக்கணக்கானோர் தியாகியாகினர். அந்த மாபெரும் மக்கள் போராட்டமே, இன்று ஒழுக்கநெறி போலீசைக் கலைக்கப்பட்ட இந்த வெற்றியை சாதித்துள்ளது.

படிக்க : தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான மக்களின் உணர்வானது என்றைக்கும் மங்கிவிடாது. மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைத்து நீண்டகாலம் ஒடுக்க முடியாது என்பதற்கு ஈரானியப் பெண்களின் போராட்டமே சான்று. சில மாதங்களுக்கு முன்னதாக ஆப்கானிலும் பெண்கள் போராட்டத்தில் இறங்கினர்.

நமது நாட்டிலும், பசுப் பாதுகாவலர்கள், கலாச்சாரப் படை என்ற பெயரில் காவி பாசிச குண்டர் படைகள் செயல்பட்டு வருகின்றன. உ.பி., கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற காவி பயங்கரவாதிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்கள் மீது பல்வேறு கலாச்சார தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அம்பானி, அதானி, டாடா போன்ற கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு நாட்டை பட்டவர்த்தனமாக திறந்துவிட்டு, அதற்கெதிராகப் போராடும் மக்களைத் திசைதிருப்பும் நோக்கத்திலும் இந்துராஷ்டிரத்தை நிறுவும் நோக்கத்திலும் காவி பாசிஸ்டுகள் செயல்பட்டு வருகின்றனர்.

ஜனநாயத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடும் உழைக்கும் மக்களே, இதோ நம் சமகாலத்திய முன்னோடிகளாக ஈரானியப் பெண்கள் திகழ்கிறார்கள்! அவர்கள் ஏற்றிய நெருப்பை நாமும் ஏந்துவோம்! காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு எதிராக களம் காண்போம்!

இசை

தமிழ்நாடு போலீசின் இரண்டு நிமிட ஜனநாயகமும் மூச்சு விட மறந்த கதையும்!

திமுக ஏன் 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்? இப்படி ஒரு கேள்வியை கேட்டு அதற்கு பலரும் பலவாறு பதில் கூறினார்கள். பாசிசம் வரக் கூடாது என்றால் அதற்கு திமுகவை ஒரு தடுப்பரனாக பயன்படுத்த வேண்டும்.

திமுகவை வைத்துக்கொண்டு பாசிசத்தை நிறுத்த முடியாது என்றாலும் நமக்கு ஒரு மூச்சு விடக் கூடிய நேரம் அதாவது பிரீத்திங் ஸ்பேஸ் தேவை என்றார்கள். மானை துரத்திக் கொண்டு புலி ஓடுகிறது, புலிக்கு பிரீத்திங் ஸ்பேஸ் தேவை இல்லை. ஆனால் மானுக்கு பிரீத்திங் ஸ்பேஸ் தேவை. பாசிசம், பாசிசம் என்று பேசும் இவர்கள் பாசிசத்தை பற்றிய ஆழமான அறிவும் புரிதலும் அற்றவர்கள் அல்லது ஆழமான புரிதலும் அறிவும் இருந்தாலும் கூட, கடவுள் நம்பிக்கை போல ஒரு மூடநம்பிக்கையில் பாசிசத்தை தேர்தலைப் பயன்படுத்தி வீழ்த்தி விட முடியும் என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்.

எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் பிரீத்திங் ஸ்பேஸ் மிகவும் முக்கியம் என்றார்கள்.

0-0-0

சென்னை சேத்துப்பட்டில் பல ஆண்டுகளாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு நாள் மற்றும் பிறந்த நாளின் போது அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் மாலையிடுவதும் வழக்கமான செயல்தான்.

ஆனால், இந்த வருடம் அம்பேத்கர் சிலைக்கு மாலையிடுவதற்கு அனைத்து அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் போலீஸ் வழங்கி இருக்கும் ஜனநாயகத்தின் அளவு இரண்டே நிமிடம்.

படிக்க : அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் !

இதை எதிர்த்து கேள்வி கேட்பதற்கும் சீந்துவதற்கும் நாதியில்லை. அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் போலீஸ் ஒதுக்கும் இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே மாலையிட்டுவிட்டு வருகிறார்கள். மக்கள் அதிகாரம் தோழர்கள் முழக்கமிடத் தொடங்கிய உடனே போலீஸ் சூழ்ந்து கொள்கிறது. “ஒவ்வொரு கட்சிக்கும் இரண்டு நிமிடம்தான் அனைவரும் கேட்டுக் கொண்டு அமைதியாக போய்விட்டார்கள். உங்களுக்கு கூடுதல் நேரம் கொடுக்க முடியாது” என்கிறார்கள்.

சேத்துப்பட்டில் மக்கள் வைத்தது அந்த சிலை, ஒரு மனிதன் தங்கள் ஊரில் ஒரு தலைவரின் சிலைக்குதான் விருப்பப்பட்ட நேரம் போல மாலையிடவும் மரியாதை செலுத்தவும் முடியாது என்றால் இது எப்படிப்பட்ட ஜனநாயகம்?

அது என்ன ரெண்டு நிமிடம்?

ஜெயலலிதாவின் சமாதியில் ஒரு நாள் முழுக்க பலரும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். மரியாதை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு நிமிடத்தை இந்த போலீஸ் ஒதுக்குமா ?

இதுவரை அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டதிலிருந்து பி.ஜே.பி.க்கு மாலை அணிவிக்க சேத்துப்பட்டு மக்கள் அனுமதி கொடுத்தது இல்லை.

ஆனாலும் தடையை மீறி போலீஸ் பாதுகாப்புடன் கடந்த முறை மாலை அணிவித்து சென்றார்கள் பிஜேபியினர்.

அதுபோலவே இவ்வாண்டும் அம்பேத்கருக்கு மாலையிட வருகிறார்கள். அதனால்தான் மற்ற அனைத்து கட்சிகளுக்கும் இரண்டு நிமிட ஜனநாயகம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதுவரை போலீசு இப்படி இரண்டு நிமிடம் அனுமதி கொடுத்ததில்லையே என்று கேட்டால், “பழங்கதையை பேசாதே இப்போது நாங்கள் சொல்வதை செய்’ என்கிறது போலீசு.

கும்பகோணத்திலே அம்பேத்கருக்கு பட்டையிட்டு காவி உடை போட்டு சுவரொட்டி ஒட்டி இருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினர். அவர்களை யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனாலும் அம்பேத்கரின் கொள்கைகளைப் பற்றி பேசுவதற்கும் முழக்கமிடுதற்கும் இங்கே ஜனநாயகம் இல்லை. இதே நேரம் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த நேரமும் கிடைக்காமல் போயிருக்கும் என்று நம்மை நாமே தேற்றிக் கொள்வதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

0-0-0

சேத்துப்பட்டில் போலீசின் அராஜகமான நடவடிக்கைகளை கண்டு திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளும் திமுக ஆதரவு அமைப்புகளும் அமைதியாக இருக்கிறார்கள்.

இப்போது ஏதாவது நாம் பிரச்சினை செய்தால் அதை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி நுழைந்து விடுவானே என்பது அவர்களுடைய கவலை.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யும் இனியும் நுழைவதற்கு இடமில்லை. ஏற்கனவே அவர்கள் அரசுத் துறையிலும் போலீசிலும் நிரம்பி விட்டார்கள் என்பது தானே இந்த நடவடிக்கை.

தோழர்களே நீங்கள் கேட்ட பிரீத்திங் ஸ்பேஸ் வந்துவிட்டது. இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று நீங்கள் சொல்லுங்கள்.

கடந்த வருடம் மயிலாடுதுறையில் அம்பேத்கரின் போட்டோவுக்கு மாலையிட்டதால் கலவரம் ஏற்பட்டது. அதனையே காரணம் காட்டி இப்போது அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறது போலீசு.

இதற்கு பெயர் சமூக நீதியா? அம்பேத்கரின் போட்டோவுக்கு மாலையிட தடுப்பவர்களை தூக்கி சிறையில் வைத்து விட்டு, அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துபவர்களுக்கு அனுமதி அளிப்பதுதான் சமூக நீதி.

ஆதிக்க சாதியின் தாக்குதல் போது இரண்டு பேரும் அமைதியாக இருங்கள் என்று சொல்லக்கூடிய இந்த பிரீத்திங் ஸ்பேஸ்- ஐ வைத்துக்கொண்டு நம்மால் என்ன செய்ய முடியும் ?

பாசிசத்தை வீழ்த்துவதை கைவிட்டு எப்பாடுபட்டாவது திமுக ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவுதான் ரெண்டு நிமிட ஜனநாயகம்.

இன்று சந்தர்ப்பவாத சிந்தனை தான் தமிழ்நாட்டின் கோயில்களை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பொழுதும் வாயை மூடி அமைதியாக இருக்கவைக்கிறது.

எடுத்துக்காட்டாக வயலூர் முருகன் கோவில் பிரச்சினை எடுத்துக் கொள்வோம். இந்தக் கோயிலில் சட்ட விரோதமாக பார்ப்பனர்கள் எட்டு பேர் நுழைந்து வேலை செய்கிறார்கள் என்று பலரும் கூறுகிறார்கள். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அந்த கோயிலில் சட்டவிரோதமாக எட்டு பேர் வேலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் மீது ஏன் இன்னும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்வியை கேட்பதில்லை. இந்தக் கேள்வியைக் கூட கேட்பதற்கு நாதியில்லாமல் போவதற்கு தானா பிரீத்திங்ஸ் ஸ்பேஸ்?

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்துபோது, மூத்த வழக்குரைஞரை கூட நியமிக்காமல் சதி செய்தது அன்றைய அதிமுக அரசு. இதை அம்பலப்படுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இன்றைக்கு வயலூர் முருகன் கோவில் தொடர்பான மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற கூடிய வழக்கில், மூத்த வழக்கறிஞர் நியமிக்காமல் அதே வேலையை செய்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால் அதைப் பற்றி மூச்சு விடுவதில்லை. என்ன ஒரு முரண்பாடு பாருங்கள்? ப்ரீத்திங்ஸ் ஸ்பேஸ் என்பது மூச்சு விடுவதற்கான நேரம். திமுக செய்யக்கூடிய தவறை பற்றி பேசாமல் மூச்சு விடாமல் இருப்பதற்குமான நேரமா?

0-0-0

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை கட்டுப்பாட்டில் அடக்கு முறையின் கீழ் கொண்டுவர முடியும் என்பது பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி கோவிட்-19 முதலான எல்லா சம்பவங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

படிக்க : ஒடிசா : அம்பேத்கர் பிறந்த நாளில் தாக்குதல் தொடுத்த பஜரங் தள் !

அதுவே இப்பொழுது அரசியல் தளத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதன் சுவாசிப்பதற்கு தேவையானதற்கும் குறைவான அளவு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டால், அவனும் இறந்து தான் போவான். ஆனால் அவனது மரணம் மிகவும் கொடூரமானதாக இருக்கும். அதைப்போலவே தேவையானதற்கு மிகவும் குறைவாக கொடுக்கப்படும் ஜனநாயகம் மரணத்தை விட மிக மோசமானதாகும்.

பாசிசத்தை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியும் என்பதும் தேர்தலை பாசிசத்துக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பது போன்ற சிந்தனைகள் நம்மை அதிகார வர்க்க, பாசிசத்துக்கு அறியாமலேயே கீழ்படிய செய்து வருகின்றது.

புரட்சிக்கு குறைவான எதற்கு சம்மதித்தாலும் அது சந்தர்ப்பவாதத்தில் தொடங்கி மக்கள் பாதிக்கப்படும்போது வாயை மூடி அமைதியாக இருக்கும் சகுனித்தனத்தில் தான் போய் முடியும்.

மருது
மக்கள் அதிகாரம் 

பயிர்கள் விளைந்தாலும் அழிந்தாலும் விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசு!

ந்தியாவில் விவசாய தொழிலை நம்பி பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சொல்லி கொள்ளும் அளவிற்கு வருமானம் கிடைக்காதபோதும் தன்னுடைய நிலத்தில் வேலை செய்கிறார்கள்.

இலாபம் கிடைக்கவில்லை என்றாலும் கூட முதலீடு செய்த பணம் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படி செய்யப்படும் விவசாயம் நன்றாக விளைந்தாலும் அரசு கொள்முதல் செய்ய முன்வருவதில்லை. மழை, புயல் போன்ற இயற்கை சீற்றத்தால் அழிந்தாலும் அதற்கு இழப்பீடு தர அரசு தயாராக இல்லை. உற்பத்தி செய்த அனைத்தையும் விற்றால் கூட தாங்கள் செலவு செய்த பணம் கூட கிடைப்பதில்லை. போதாதற்கு கடன் பட்டு போன்டியாவதும் தற்கொலை செய்துகொள்வதும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

படிக்க : உத்தரப் பிரதேசம்: மீண்டுமொரு தில்லி போராட்டம் – மோடியை எச்சரிக்கும் விவசாயிகள்!

விசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதாக கூறிக்கொண்டு ஆட்சியமைத்த அரசியல் கட்சிகளும் அதற்காக ஒரு அடியை கூட எடுத்து வைக்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையை இன்று வரை உறுதி செய்யாமல் இருப்பது; விவசாயத்திற்கு தேவையான உரங்களை கூட்டுறவு மூலம் வழங்காமல் தனியார் கடைகளை நோக்கி திருப்பியடிப்பது; உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்யாதிருப்பது; இத்தனை தடைகளையும் தாண்டி பயிரிட்டாலும் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும்போது அரசு போதுமான இழப்பீடு வழங்காமல் இருப்பது; இப்படி தொடந்து கொண்டே போகிறது விவசாயிகளின் அவலநிலைமை.

வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை கொண்டாரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் சுமார் 5 ஏக்கரில் நெற்பயிர் விவசாயம் செய்து வந்தார். கடந்த  ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட போதும் பயீர் காப்பீடு நஷ்டஈடு என எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் ஐ.ஆர் 50 என்ற ரகத்தை பயிர் செய்துள்ளார். மேலும் வேளாண்மை துறை மூலம் 4 ஆயிரம் செலுத்தி பயிர் காப்பீடு செய்திருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையாலும் கடுமையான பனிப்பொழிவாலும் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காப்பீட்டு நிறுவனத்திடம் ஒருமாதமாக காப்பீடுநீதி வழங்கக்கோரி அலைந்து கொண்டு இருந்துள்ளார்.

இதற்காக நிலத்தை வேளாண்மை அதிகாரிகள் அளவீடு செய்து இழப்பீடு தர வேண்டும். ஆனால் வேளாண்மை துறையும் காப்பீட்டு நிறுவனமும் விவசாயி சிவக்குமாரை தொடர்ந்து அழைக்களித்ததாகக் கூறப்படுகிறது. அறுவடைக்கு தயாரான நெற்பயிரை பெட்ரோல் ஊற்றி எரித்த விவசாயி அப்பகுதி விவசாயிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தார். ஒரு சென்ட் அளவிற்கு நெற்பயிர்கள் நெருப்பில் கருகியது.

படிக்க : பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!

இதைப்போன்று பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் வெல்லம், ஏலம், முந்திரி, அரிசி உள்ளிட்ட 20 வகையான பொருட்களை தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சொந்த மாநில மக்களின் விவசாய பொருட்களை கொள்முதல் செய்யாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி என்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டமிட்ட சதி என்று விவசாயிகள் சங்கங்கள் குமுறுகின்றன.

விவசாயிகளை விவசாயத்தை விட்டு தூரத்த வேண்டும் அதை நேரடியாக செய்யமுடியாது. அதனால் இந்த மாதிரியான நெருக்கடி கொடுக்கும்போது ஒன்று தற்கொலை செய்து கொல்ல வேண்டும். இல்லையேல் நிலத்தை அரசிடமோ, கார்ப்ரேட் நிறுவனங்களிடமோ கொடுத்துவிட்டு அண்டை மாநிலங்களில் கூலி வேலைக்கு சென்று பிழைத்துக் கொள்ள வேண்டும். இதையே திட்டமாக செய்துவருகிறது மத்திய, மாநில அரசுகள். விவசாயத்தை பாதுகாக்கப் போராடும் விவசாயிகளுடன் கைகோர்ப்போம்!

டேவிட்
நன்றி: தினகரன் நாளிதழ்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

டிசம்பர் – 2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம்: அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!
♦ காசியில் ‘காவி தமிழ்ச்சங்கம்’?
♦ ‘சோசலிச’,‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!
♦ இந்தித் திணிப்பு: எச்சரிக்கை!
♦ ரிஷி சுனக்: பாசிசத்தின் வீரிய ஒட்டுரகம்!
♦ அரசுப் பணியிடங்களில் தனியார்மயம்!
♦ பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!
♦ டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!
♦ ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பன்முனை பயங்கரவாத தாக்குதல்கள்!
♦ தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!
♦ கோவை கார் வெடிப்புச் சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!
♦ மின் இணைப்புடன் ஆதார்: மானியத்தை வெட்டும் சதி முயற்சியே!
♦ நேர்காணல்: ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு: மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!
♦ நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ்-ஆழமும் அகலமும்

ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு: கார்ப்பரேட் கொள்ளைக்கான ஏற்பாடு!

ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பின்  தலைமை பொறுப்பு, அடுத்து ஆண்டு நவம்பர் மாதம் வரை ஏற்றுருப்பது, பெருமைக்குரிய விஷயம் எனவும், ஜனநாயகத்தின் தொட்டிலான இந்தியாவின் அனுபவங்கள் உலகை வழி நடத்த உதவும் என கார்ப்பரேட் கைக்கூலி மோடி ஆரவாரத்துடன் பேசி வருகின்றார்.

பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற முதலாளித்துவ நாடுகளும் ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும் ஜி-20-யில்  அங்கம் வகிக்கின்றன.

அடிப்படையில் மேற்கண்ட நாடுகள் ஏற்றத்தாழ்வுடன் இருக்கின்றன. பாசிச மோடியோ ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர் காலம் என தனது அகண்ட பாரத கனவை பரந்த உலகிற்கு விரிவுப்படுத்துகிறார். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் வேண்டுமானால் மகிழ்ச்சி அடையலாம் நாட்டு மக்களுக்கு ஒன்றும் ஆவப்போவதில்லை.

படிக்க : ஜி-20: கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு ! பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணமும் கொடு

இன்றைக்கு பெரும்பாலான நாடுகளில் மோடி போன்ற பாசிசஸ்டுகள் அதிகாரத்தில் இருப்பதால்தான் மேற்படி பேச்சுக்கு கண்டனங்கள் பெரிதாய் வரவில்லை. நாம் விசயத்திற்கு வருவோம். ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு ஏற்பதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சினை தீர்ந்து விடும்….?

இந்த நாடுகளின் மாநாடு யாருக்காக..? தத்தம் நாடுகளின் முதலாளித்துவ நிறுவனங்கள் பொருட்களை சந்தைப்படுத்துதல் இது தொடர்பான பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்வது நமது நாட்டின் அம்பானி, அதானி, டாடா இவர்களைப் போன்ற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் வர்த்தக அல்லது ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது, மக்களுக்காக வா..? ஏகாதிபத்தியத்தின் நாடு பிடிக்கும் நாய் சண்டைதான் முதல் உலகப்போர் என ஆசான் லெனின் அம்பலப்படுத்தினார்.

அதனை மறைக்கும் பொருட்டு பேசி தீர்த்துக் கொள்ள முயன்றாலும் ரசியா – உக்ரைன் போர் மூலம் மேலாதிக்கத்திற்கான நாய் சண்டை வெளிப்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு 1990-களுக்கு பிறகு உருவானது. இதன் நோக்கமே உலகமயமாக்கலை ஏகாதிபத்தியங்களின், கொள்ளைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த திட்டத்தோடுதான் இதுபோன்ற அலங்கார பேச்சும் சவடால் பேச்சும் பேசுகிறார் பாசிச மோடி.

ஒருபுறம் பணமதிப்பு இழப்பு, GST வரி விதிப்பு, பொதுத் துறைகள் தனியார்மயமாக்குவது தொழிலாளர் சட்டத் திருத்தம், மின்சார சட்டத்திருத்தம் உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்ளை. மறுபுறம் காவி பாசிசத்தின் தாக்குதல்கள் யாவும் ஜனநாயகத்தின் பேரில் மோடி அரங்கேற்றும் கொடுமைகளை மக்கள் சகித்துக் கொள்ள வேண்டும் அதைத்தான் ஜனநாயகத்தின் தொட்டில் என நாட்டு மக்களை இழிவு படுத்துகிறார்.

படிக்க : ஜி-20 மாநாடு: ஜெர்மனியில் துவங்கியது மக்கள் போர் !

முதலாளித்துவ கட்டமைப்பானது நொறுங்கி விழும் நிலையில் உள்ளதுதென்றால் அது மிகையில்லை. இதனை மறைக்கத்தான் மோடியின் சவடால் பேச்சுகள். எனவே இதுபோன்ற போலி பெருமிதங்களிலிருந்து நாம் விடுபட வேண்டும். இந்தியாவை போன்றே உலகின் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை விரிவுப்படுத்துவது, முன்னரே குறிப்பிட்டது போல ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பாக முடிவு செய்தல். தத்தம் நாடுகளின் உள்ள உழைக்கும் மக்களை சுரண்டுவது இயற்கை வளங்களை சூறையாடுவதையே ஜி-20 நாடுகளின் மாநாட்டின் நோக்கமாக கொண்டுருப்பதால் இதற்கெதிராக போராடுவோம். நமது போராட்டத்தின் வெளிச்சத்தில் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கத்திடமும், தொழிலாளி வர்க்கத்திடம் கைக்கோர்ப்போம். கார்ப்பரேட் கொள்ளைக்கு முடிவு கட்ட போராடுவோம்.


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு.

போபால் டிசம்பர் 2, 1984: மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…

போபால் விஷவாயு கசிவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட அந்த இரவு. சில மணிநேரங்களில் என்ன நடக்கிறது; எதனால் நாம் இறக்கிறோம் என்று தெரியாமல் அப்பாவி மக்கள் மரணித்த கடைசி நொடிகளை கண்முன்னே நிறுத்தி பாருங்கள்! அப்போதுதான் தெரியும் முதலாளித்துவத்தின் பயங்கரவாதம்.

வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள், இளம் வயதினர், பறவைகள், கால்நடைகள், செல்லப்பிராணிகள், மரம்-செடி-கொடிகள் என அனைத்தும் நிறைந்திருந்த ஒரு இடம் ஒரு நாள் இரவில் சின்னபின்னமானது. எங்கு திரும்பினாலும் மரண ஓலம், எங்கு பார்த்தாலும் பிணங்கள்.

இந்த கொலைபாதக செயலுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனம் இதுனால் வரை அரசு அதிகாரத்தின் துரோகத்தால் தண்டிக்கப்படவில்லை. இறந்த மக்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை. இந்த கொலைகார நிறுவனம் போல இன்று பல்வேறு கார்ப்பரேட் கழுக்குகள் நம்மீது வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

யூனியன் கார்பைடு என்ற கொலைகார நிறுவனத்தின் இலாபவெறியால் மாண்டுபோன மக்களை நினைவு கூர்ந்து கொலைகார பயங்கரவாத முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்ப சபதமேற்போம்!

போபால் விஷவாயு கசிவு – நீதிவேண்டுமா? புரட்சி ஒன்றுதான் தீர்வு!

– வினவு

மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…

1984-ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் நாள். நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. வரவிருக்கும் ஆபத்தை உணராத மக்கள், டிசம்பர் மாதத்துக் குளிருக்கு அஞ்சி வீட்டிற்குள் அடைபட்டு உறங்கிக் கொண்டிருந்தனர். வீடற்றவர்களோ சாலையோரம் ஒடுங்கிக் கிடந்தனர். போபாலின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில், திடீரென அபாயச் சங்கு ஒலித்தது. தொழிலாளர்கள் பரபரப்பானார்கள். நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தொழிற்சாலையின் உயரமான புகை போக்கியிலிருந்து கொடிய நச்சு வாயு கசிய ஆரம்பித்தது.

யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் பூச்சி மருந்து தயாரிக்க சேமித்து வைக்கப்பட்ட மெத்தில் ஐசோ சயனேட் (எம்.ஐ.சி) திரவம் தொட்டியைவிட்டு வெளியேறிக் காற்றில் கலக்க ஆரம்பித்து விட்டது. நிறமும், மணமும் இல்லாத இந்தக் கொடிய நஞ்சு கலந்த காற்றை சுவாசிக்கும் சிறிது நேரத்திற்குள் மரணம் நிச்சயம். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள், தமது மேலதிகாரிக்குத் தகவல் தெரிவித்தார்கள். அபாயச் சங்கை முதலில் ஒலிக்க விட்ட போது, நேரம் சரியாக நள்ளிரவு 12:30.

யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து சில அடிகள் தள்ளி வசித்துவந்த எம்.ஏ.கான் எனும் விவசாயி, பக்கத்தில் இருக்கும் பால் பண்ணையில் ஏதோ சத்தம் வருவதை அவதானித்தார். சிறிது நேரத்தில், தனது மாடுகள் கால்களைத் தரையில் ஓங்கி ஓங்கி உதைப்பதை உணர்ந்தார். வெளியே ஓடிவந்து தொழுவத்தில் கட்டியிருந்த தனது பசுமாடுகளைப் பார்த்தார். இரண்டு பசுக்கள் தரையில் செத்துக் கிடந்தன. மூன்றாவது மாடு ஓங்கிக் கத்திக் கொண்டு சாவதை நேரில் பார்க்கிறார். இனம் புரியாம ஒருவித மயக்கம் அவரைச் சுழற்றியது. அவரின் கண்களும் எரியத் தொடங்கின. ஓட ஆரம்பித்தார். அவரது கண்கள் இருளத் துவங்கின. மறுநாள், கண்கள் மூடிய நிலையில் போபாலில் ஹாமில் தியா மருத்துவமனையில் கிடந்தார். அந்தப் பயங்கர இரவில்தான் போபால் படுகொலை தொடங்கியது.


படிக்க : போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்


யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து பரவிய எம்.ஐ.சி. வாயு, வீசிக் கொண்டிருந்த காற்றினால் வழி நடத்தப்பட்டு மக்கள் நெருக்கமாய் வசிக்கும் குடியிருப்புப் பகுதியுனுள் ஊடுருவியது. அது சென்ற திசை யெங்கும் சிறியவர், பெரியவர், ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி, நாய், ஆடு, மாடு, மனிதன் என்ற பாகுபாடின்றி எதிர்ப்பட்ட அனைவரையும், அனைத்தையும் சித்திரவதை செய்து கொன்றொழித்தது.

அந்தத் தொழிற்சாலையை ஒட்டி வசித்த மக்களுக்கு இவ்வாயுகசிய நேரிடுகையில் என்னென்ன செய்ய வேண்டும் என்கிற பயிற்சி ஏதும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. குறைந்த பட்சம் இவ்வாறு நச்சு இரசாயன வாயு பரவும் போது ஈரத் துணியை முகத்தில் சுற்றிக் கொண்டு தரையில் தவழ்ந்து மெதுவாய் புகை பரவும் திசைக்கு எதிர் திசையில் நகர்ந்து சென்று விட்டாலே, மரணத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளலாம் என்கிற எளிய பயிற்சியைக் கூட அரசோ அல்லது யூனியன் கார்பைடு நிர்வாகமோ அளித்திருக்கவில்லை. தொழிற் சாலையிலிருந்து அபாயச் சங்கு ஒலிப்பதைக் கேட்ட மக்கள், தொழிற்சாலைக்குள் ஏதோ விபத்து என எண்ணி உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்ற தொழிற்சாலையை நோக்கி ஓடி வந்தனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

நச்சு வாயுவின் தாக்குதலால், தூக்கத்திலிருந்து உலுக்கியெழுப்பப்பட்ட மக்கள் முதலில் மிளகாய்ப் பொடியையை முகர்ந்தது போன்றதொரு உணர்வை அடைந்தனர். கண்ணில் நெருப்பைக் கொட்டியதைப் போன்று எரிந்தது; விழிகள் வெளியே வந்துவிடுவது போலப் பிதுங்கியது. தொடர்ந்து அவர்கள் நுரையீரலெங்கும் மிளகாய்ப் பொடியைக் கொட்டி நிறைத்ததைப் போன்ற நெஞ்செரிச்சல் ஏற்பட்டது. இரத்தமும் கோழையுமாக வாந்தியெடுத்தார்கள்.

அந்தப் படுகொலை நாளில் எப்படியோ உயிர் பிழைத்து, கண்கள் குருடாகிவிட்ட அசீசா சுல்தான், “நள்ளிரவு 12.30 மணி இருக்கும். என் குழந்தை கடுமையாக இருமத் தொடங்கியதை அடுத்து எழுந்து பார்த்தேன். எங்கள் அறை முழுக்க வெள்ளைப் புகை பரவி இருந்தது. வெளியே பல பேர் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டேன். ‘ஓடுங்க, ஒடுங்க’ என்றார்கள். எனக்கும் மூச்சு விடும்போதெல்லாம் தீயை சுவாசிப்பது போல இருந்தது. நெஞ்சுக்குலை வெளியே வந்துவிடுவதுபோல இடைவிடாமல் இருமல் என்னைத் தாக்கியது. தீயைக் கொட்டியது போல என் கண்களெல்லாம் எரிந்தது” என்று அந்த நாளின் துயரை நினைவு கூர்கிறார். போபால்வாசிகள் பலர் பார்வையை இழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பிணமானார்கள்.

வெளியே ஓடிக்கொண்டிருப்பவர்களில் பலர் எங்கே ஓடுவது என்று தெரியாமல் இலக்கின்றி ஓடினார்கள். எந்தளவுக்கு வேகமாய் ஓடினார்களோ, அந்தளவுக்கு பிராணவாயுவைக் கோருகிறது நுரையீரல். எந்தளவுக்கு ஆழ்ந்து சுவாசித்தார்களோ, அந்தளவுக்கு அதிகமான எம்.ஐ.சி. வாயு உள்ளே நுழைகிறது. அதிக துடிப்புடன் ஓடியவர்களே முதலில் பலியாயினர். ஓடிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நெரிசலில் கீழேவிழுந்து நசுங்கியும் சிலர் மாண்டனர். உயிருக்குப் பயந்து ஓட்ட மெடுக்கும் அம்மக்களில் சிலர் உடுத்தியது உடுத்திய படி, சிலர் உள்ளாடைகளுடன் ஒடிக்கொண்டிருந்தனர். ஆடு, மாடுகளும் தன்னைக் காத்துக்கொள்ள மனிதர்களுடன் சேர்ந்து இலக்கின்றி ஓடின. மாடுகள் மிதித்துக் கீழே விழுந்து நசுங்கினர் சிலர். ஓடமுடியாமல் மூச்சுத் திணறிக் கீழே விழுந்தவர்களை தூக்கி விட்டு சரிந்து விழுந்தனர் சிலர். அவர்கள் மீண்டும் எழவே இல்லை.

வீடற்றுச் சாலையில் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத்தான் இந்த விசக் காற்று முதலில் தாக்கியது. பின்னர் வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தாக்கியது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை அணைத்தபடி தெருவில் உறங்கிக் கொண்டிருந்த தாய்மார்களும் குழந்தைகளும் துடி துடிக்க கொல்லப்பட்டனர். நச்சுவாயு மக்களைக் கொன்று கொண்டிருந்த அந்த இரவில் போலீசோ ஒலி பெருக்கி மூலம் “யாரும் பீதி அடைய வேண்டாம். வீட்டுக் கதவுகளை சாத்தியபடி உள்ளேயே இருங்கள்” என அறிவித்து வீட்டுக்குள்ளேயே செத்து விழச் செய்தது.

நச்சுவாயுவின் தாக்குதலால் உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனித மூளை இழந்திருந்தது. தன்னுணர்வின்றி ஆடையிலேயே பலர் மூத்திரம் பெய்தனர். பெண்களின் கருவறைக்குள் இருந்த இரண்டு-மூன்று மாத சிசுக்கள் அழிந்து இரத்தமும் சதையுமாக கருச்சிதைவடைந்து தாய்மார்கள் மூர்ச்சையடைந்து விழுந்தனர். அந்த நாளில் வயிற்றில் சிசுக்களைச் சுமந்திருந்த தாய்மார்களில் 50 சதவீதத்தினருக்கு உடனடி கருச்சிதைவு ஏற்பட்டது.

முதலில் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் இந்த நச்சு வாயு, பின்னர் கண் பார்வை நரம்புகளையும், சதைகளை யும் செயலிழக்கச் செய்து விடும். உடனே செத்தவர்கள் பாக்கியவான்கள் என்பதைப் போல, கொஞ்சம் உயிர் உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள், கண்கள் குருடாகி, என்ன நடக்கிறது என்றே புரியாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் பித்துப் பிடித்தது போல ஓடி துடிதுடிக்க உயிரை விட்டனர். ஓடமுடியாமல் விழுந்து விட்டவர்கள் பிணக் குவியலுக்கு நடுவே அசைவற்றுக் கிடந்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் தெருவெங்கும் பிணங்கள் குவிந்து கிடந்தன.

போபால் ரயில் நிலையத்தில், நிலைய அதிகாரியான துருவே, சிக்னல்மேனை நள்ளிரவில் வரவிருக்கும் லக்னௌ – மும்பை இரயிலுக்கான தந்தி எந்திர சமிக்ஞையை சரிபார்த்து அனுப்பச் சொல்லிவிட்டு, வெறிச்சோடிக் கிடந்த நடைமேடைக்கு வந்தார். காற்றில் அன்றைக்கு ஏதோ ஒரு மாற்றம் இருந்ததை அவரால் உணர முடிந்தது. தூரத்தில் வெள்ளையாய் மேகம் போல் ஏதோவொன்று கவிந்து வந்ததை பார்த்தார். அருகில் சுருண்டு படுத்திருந்த தெரு நாய் ஊளையிட்டது. அந்த நாயின் கண்களில் மரண பீதியைக் கண்டார். மிளகாய்ப் பொடி நெடியோடு காற்று அடர்ந்து கொண்டிருந்தது. அவரால் சுவாசிக்க முடியவில்லை. நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. துருவே பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாய் சுருண்டு விழுந்து செத்துப் போனது.

துருவேயின் கண்கள் வெளியே பிதுங்கிக் கொண்டு வந்தது. எதிர் நடைமேடையில், இரவில் வழக்கமாக ஒண்டிக் கொள்ள வரும் பிச்சைக்காரர்கள் சிலரும் இதே போன்ற நிலையில் தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

துருவேயின் உடலெங்கும் வலித்தது. இன்னும் சிறிது நேரத்துக்குள் வந்து சேர்ந்து விடும் லக்னெள – மும்பை விரைவு இரயிலில் வரும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனும் உணர்வில் சிக்னல் அறைக்கு ஓடினார். ஆனால் அந்த இரயில், வெகு நேரத்துக்கு முன்பே முந்தைய இரயில் நிலையத்திலிருந்து கிளம்பி விட்டதாகவும், இன்னும் சில நிமிடங்களில் போபாலுக்கு வந்து சேரும் என்பதாகவும் முந்தைய ரயில் நிலையத்திலிருந்து பதில் வந்தது. அடுத்த சில நிமிடத்திற்குள் இரயிலின் தடதடப்பு காதில் விழவே, நடுங்கும் கால்களோடு தள்ளாடி நடை மேடைக்கு விரைந்தார், துருவே. லக்னௌ – மும்பை விரைவு வண்டி போபால் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. என்ன நடக்கிறது என் பதை அறிந்துகொள்ளவதற்குள்ளாகவே, அவசரமாக இறங்கிய பயணிகளில் சிலர் சுருண்டு விழுந்தனர். அதைக் கண்ட மற்றவர்கள் விபரீதத்தை உணர்ந்து, உடனே அந்த இடத்தை விட்டு ஓடத் துவங்கினர். சிலர் குழந்தைகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வேகமாய் ஓடித் தப்ப முயன்றனர். கீழே சரிந்த தமது உறவினர்கள் மீது தண்ணீரைத் தெளித்து எழுப்பிக் கொண்டிருந்தனர், சிலர். திரும்பிய திசையெல்லாம் உடல்கள் கிடக்க, உறவினர்களின் ஒப்பாரிச் சத்தம் ரயில் நிலையம் முழுக்க எதிரொலித்தது.

அடுத்த ரயிலுக்காகக் காத்திருந்தவர்களும் இரவில் படுத்துறங்க அங்கு வந்திருந்த பிச்சைக்காரர்களும் சேர்த்து 191 பேர் அநாதைப் பிணங்களாக போபால் இரயில் நிலையத்தில் சிதறிக் கிடந்தனர். நெருங்கி விட்ட தனது மரணத்தை அறிந்த துருவே-வுக்கு மனைவியின் குழந்தைகளின் நினைவும் வந்து போனது. நேரத்தை வீணாக்காது அடுத்தடுத்து வரும் இரயில்களை எப்பாடுபட்டாவது நிறுத்தி விட வேண்டும் எனும் எண்ணத் தோடு அவர் சிக்னல் அறைக்கு விரைந்தார்.

அங்கே சிக்னல் மேன் வாயோரம் இரத்தமும் கோழையுமாக சரிந்திருந்தார். கண்கள், அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியது. கடும் வலியோடும், இருமலோடும் சிக்னல் மேனின் உடலை சுவரோரம் நகர்த்தி வைத்தார், துருவே. நடுங்கும் கரங்களால் தந்தி இயந்திரத்திலிருந்து போபால் இரயில் நிலையத்தோடு இணைந்திருந்த எல்லா இரயில் நிலையங்களுக்கும் செய்தி அனுப்பினார். அந்த இரவு முழுவதும் விழித்திருந்து தொடர்ந்து செய்தியை அனுப்பிக் கொண்டேயிருந்தார்.

அதைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்த எல்லா இரயில் நிலையங்களும் தங்கள் பாதை வழியே எந்த இரயிலும் போபாலுக்குச் செல்லாதவாறு தடுத்து நிறுத்தின. செய்தி கிடைக்காமல் கடந்து வந்துவிட்ட இரயில்களின் சன்னல்களை இழுத்து மூடியபடியே போபாலில் நிறுத்தாமல், வேகமாய்க் கடந்து போகு மாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார், துருவே. கடை நிலை ஊழியர்களைத் திரட்டி பின்னே வேகமாய் வரும் எந்த இரயிலும் ஏற்கெனவே நிற்கும் இரயிலோடு மோதிவிடாமல் தடுக்க, அதன் தண்டவாளத்தைத் திசை மாற்றும்படி கேட்டுக் கொண்டார்.

மறுநாள் காலை இரயில் நிலையத்துக்குள் வந்த போலீசு மீட்புப் படை, சிக்னல் அறையில் சுவரோர மாய் சிக்னல் மேனின் பிணத்தையும், மோர்ஸ் கோட் இயந்திரத்தை ஒரு கையால் விடாமல் இறுகப் பற்றிக் கொண்டு மேசை மேல் கவிழ்ந்தபடியே கிடந்த துருவேயின் உயிரற்ற உடலையும் கண்டனர். இரயில் பாதையை கடைசி நேரத்தில் மாற்ற முயன்ற கடை நிலை ஊழியர்களின் உயிரற்ற உடல்கள் தண்டவாளத்தின் ஓரத்தில் அந்த லீவரைப் பிடித்திருந்த வாக்கிலேயே சரிந்திருந்தன.

இவ்வாறு சாதாரண அரசு ஊழியர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து மக்களைக் காத்தபோது, அதிகாரிகளோ ஊரைவிட்டே ஓடிப் போயிருந்தனர். மக்கள் சொந்த முயற்சியிலேயே இப்பேரிடரை எதிர்கொண்டனர். அன்றைய ம.பி. முதல்வர் அர்ஜுன்சிங் (காங்கிரஸ்) போபால் நகரத்திலிருந்து தப்பித்து 14 கி.மீ. தொலைவில் உள்ள மாளிகையில் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொண்டார்.

மறுநாள் 1000 பேருந்துகளை அரசு இயக்கியது. அதில் எஞ்சி இருந்த மக்களை நகரிலிருந்து வெளியேற்றியது. கிடைத்த வாகனங்களில் ஏறி மக்கள் நகரைக் காலி செய்து கொண்டிருந்தனர். போபால் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் ரயில்களில் ஏறித் தப்பிச் செல்ல மக்கள் காத்து நின்றனர். ஆனால், நச்சு வாயுவுக்குப் பயந்து ரயிலுக்குள் இருக்கும் பயணிகள் கதவுகளையும் ஜன்னல்களையும் அவர்களுக்குத் திறக்கவே இல்லை. ஓங்கி ஓங்கிக் கதவைத் தட்டும் போபால் மக்களின் கையறு நிலை கல்லையும் கரைய வைப்பதாக இருந்தது. வலுவானவர்கள் ரயில்களின் கூரைகள் மீதேறி அகதிகளாக ஏதாவதொரு ஊருக்குப் போய்ச் சேர்ந்தனர். இன்னும் சில தொட்டிகளிலும் நச்சு வாயு வெடித்துப் பரவி விட்டது என வதந்திகள் உருவாகி, பல நாட்கள் மக்கள் பீதியில் ஒடுவதும் திரும்புவதுமாக இருந்தனர்.

போபாலின் மருத்துவமனைகள் அனைத்தும் பாதிக் கப்பட்டோரால் நிரம்பி விடவே, அவற்றின் தாழ்வாரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள வெட்டவெளிகளிலும் மக்கள் அடுத்தடுத்துக் கிடத்தப்பட்டனர். இரசாயனப் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க பயிற்றுவிக்கப்பட்டிராத மருத்துவர்கள் தம்மால் முடிந்த வரையில் போராடிக் கொண்டிருந்தனர். மக்களுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று வழிகாட்டுதல் தரப்படவில்லை. கண்களுக்கு சொட்டு மருந்தும், இருமல் மருந்தும் கொடுத்து ஆறுதல் கூறினர். நஞ்சை முறிக்க என்ன மருந்து கொடுப்பது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. யூனியன் கார்பைடு நிறுவனமும் சொல்லவே இல்லை. மிகவும் தாமதமாகத்தான் நஞ்சு முறிவுக்கு சோடியம் தயோ சல்பேட் தரப்பட்டது. பிறகு, அதனையும் தரக்கூடாது என்று ம.பி. அரசு கட்டளையிட்டது. மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கொத்துக் கொத்தாகச் செத்துக் கொண்டேயிருந்தனர்.

தப்பியவர்கள், பிரிந்து போன தமது சொந்தங்களை உயிரோடு எஞ்சிய மனிதர்களிடையே தேடிக் கொண்டிருந்தனர். பிணங்களையும் புரட்டிப் பார்த்தனர். மருத்துவமனை முழுக்க ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் பிணங்கள்தான் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பல பிணங்கள் இன்னாருடையதுதான் எனக் கண்டறிய முடியவில்லை.

ஏனென்றால், பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக மாண்டுபோயிருந்தன. பிணங்களின் மதங்களைக் கண்டறிய முடியாததால் புதைப்பதா, எரிப்பதா என்று தெரியவில்லை. பிணங்களுக்கு வெறுமனே எண்கள் மட்டும் கொடுக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டன. பல ஏக்கர் பரப்பளவுள்ள பொட்டலில் ஒட்டுமொத்த மாக எரியூட்டப்பட்டன. அல்லது பெரிய குழிகளாய்த் தோண்டி மொத்தமாய்ப் புதைத்தனர். அதற்கும் வாய்ப் பில்லாதவர்கள் தமது உறவினர்களின் சடலங்களை கனக்கும் இதயத்தோடு நர்மதை நதி வெள்ளத்தில் விட்டனர்.

மெத்தில் ஐசோ சயனேட் படிந்ததால் போபால் நகரில் மரங்களின் இலைகள் எல்லாம் பச்சை நிறத்திலிருந்து அடர் மஞ்சள் நிறத்துக்கும் கருநிறத்துக்கும் மாறியிருந்தன. பறவைகளெல்லாம் செத்து விழுந்திருந்தன.


படிக்க : போபால் – இராணிப்பேட்டை : முதலாளித்துவ கொலைகள் !


மக்களோடு கால்நடைகளும் தெருநாய்களும் மாண்டு போய் கவனிப்பாரின்றி சில நாட்களில் சிதைந்து அழுகத் தொடங்கின. தொற்று நோய் பரவிடும் நிலை வந்ததும் கிரேன்கள், புல்டோசர்கள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தி பிரம்மாண்டமான குழியொன்றில் ஒட்டுமொத்தமாகப் போட்டு அவற்றின் மீது டன் கணக்கிலான பிளீச்சிங் பவுடர் கொட்டி மூடினார்கள்.

இதற்கிடையில் தெருவெங்கும் வெட்டவெளியில் சிதறிக் கிடந்த மனிதர்களின் பிணங்களும் அழுகி நாறத் தொடங்கின. காலரா பரவும் அபாயம் வெகு அருகில் இருந்தது. அழுகிய பிணங்களைக் குதறிக் கொண்டிருந்த எலிகளால் ப்ளேக் நோய் பரவும் அபாயத்தில் போபால் இருந்தது. பல நாட்களாக வல்லூறுகளும் கழுகுகளும் நகரில் பிணங்களைக் குறிவைத்து வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

ஒரே இரவில் பத்தாயிரத்துக்கும் மேல் மரணங்கள். தொடர்ந்த மாதங்களில் முப்பதாயிரத்துக்கும் மேல் மரணங்கள். ஐந்து லட்சம் பேர்கள் வரை பாதிப்புக் குள்ளானதில், ஒன்றரை லட்சம் பேர்கள் பதினைந்து வயதுக்குட்பட்டோர். வெறும் எண்களாகக் கடந்து செல்லப்பார்க்கும் இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கிடையிலும், எழுத்துகளுக்கிடையிலும் வழிந்தோடும் வேதனையை, துரோகத்தை உங்களால் உணர முடிகிறதா? எத்தனை கனவுகள் கருகியிருக்குமோ? குழந்தைகள், செத்துப்போன தங்கள் பெற்றோரைத் தேடித் தேடி அலைந்து திரிந்த சோகத்தை உங்களால் உணர முடிகிறதா?

தப்பிப் பிழைத்த அந்நகரப் பெண்களின் கருவறையைக் கூட விட்டு வைக்காமல் நஞ்சூட்டியிருக்கும் அந்த கருணையற்ற முதலாளிகளின் இலாபவெறி, இந்த நிமிடம் வரை கேட்பாரில்லாமல் ஆணவமாய் எக்காளமிடுகிறது. இலாபத்தின் கொடூரத்தை விஞ்சுகின்ற துரோகத்தின் கொடூரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கதிர்
(புதிய ஜனநாயகம் தொகுதி:25 இதழ்:9 ஜூலை 2010)