அடக்குமுறையின் புதிய வடிவங்களை கண்டுபிடிப்பதில் அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள் || பகத் சிங் || இக்பால் அகமது
கேள்:
என் சக பயணிகளே, நான் இங்கே ஒரு தற்காலிக விருந்தாளி, அவ்வளவுதான்,
வீசும் தென்றல் என் சிந்தனையின் சாரத்தை எங்கெங்கும் எடுத்துச்செல்லும்
நாட்டு மக்களே, மகிழ்ச்சியுடன் இருங்கள், பயணத்தை தொடங்கி விட்டேன்.
வணக்கம்.
வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி !
திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில், கடந்த ஜனவரி 15-ஆம் தேதி உயிரிழந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அமுதா என்பவரது உடலைப் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல முயன்றதற்காக, வன்னிய கவுண்டர் உள்ளிட்ட ஆதிக்கசாதி வெறியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு அருந்ததியர்களின் குடியிருப்புகளைச் சூறையாடி, அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவியது.
ஆண்டாண்டு காலமாக அப்பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சாதிய மக்கள், முட்புதர் மண்டிய, மலம் கழிக்கும் பாதை வழியாகத்தான் பிணத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். இதை எதிர்த்து பொதுவழியில் உடலை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் இரு தரப்பினரிடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போது, பூ மாலை, மேள தாளம் இல்லாமல் பிணத்தை பொதுவழியில் கொண்டுபோகலாம் என்ற அநீதியான நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த முடிவைக்கூட ஏற்காமல் ஆதிக்க சாதி வெறியர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
படிக்க :
♦ உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது
♦ சாதிவெறி : தாழ்த்தப்பட்ட பெண் சமைத்த உணவை புறக்கணிக்கும் பள்ளி மாணவர்கள்
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 15-ஆம் தேதி உயிரிழந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அமுதாவின் உடலைப் பொதுவழியின் மூலம் மயானத்துக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஜனவரி 16-ஆம் தேதி ஊர் பஞ்சாயத்து கூடவிருந்த நிலையில், 15-ஆம் தேதி இரவே ஆதிக்க சாதி வெறியர்கள் ஒன்றுகூடி அருந்ததியர் சாதிய மக்கள்மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டனர். குறிப்பாக, அருந்ததியர் சாதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராமன் என்பவரைக் கொலை செய்யவும் தீர்மானித்தனர். இக்கொலை வழக்கை நடத்தவும், இதற்காக கிணறு, மோட்டார் பம்பு செட் வைத்திருப்பவர்கள் தலா 10,000 ரூபாயும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான மணி ஒரு இலட்சம் ரூபாயும் கொடுப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி 16 அன்று ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, மாலை 4 மணியளவில் தொடங்கிய இக்கொலைவெறித் தாக்குதலானது சுமார் 2 மணிநேரம் நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் அருந்ததியர் சாதியினர் குடியிருக்கும் தெருவில் புகுந்து கட்டை, இரும்புக் கம்பிகள், கடப்பாரை, கருங்கற்கள் போன்றவற்றைக் கொண்டு அருந்ததியரைக் கொடூரமாகவும் சரமாரியாகவும் தாக்கியுள்ளனர். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் மிரண்டுபோன அம்மக்கள் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்ட போதிலும், அவர்களைத் தப்பியோட விடாமல் அவர்களின் வீடுகளில் புகுந்து தாக்கியுள்ளனர். அருந்ததியர் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் ரீதியாகச் சீண்டியும் ஆகக் கேடான வசவு சொற்களால் தாக்கியுமுள்ளனர்.
அவர்களின் வீடுகள், உடைமைகள், இரு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என அனைத்தையும் சாதிவெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர். ஓட்டு வீடுகளின்மீது பெரிய கற்களைத் தூக்கி வீசியுள்ளனர். “எங்களிடம் அடிமைகளாகக் குனிந்து கஞ்சி வாங்கிக் குடித்த சக்கிலியன் பிணத்தைப் பொதுவழியில் எடுத்துப் போகும் துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது” “சக்கிலியனுக்கு எதுக்கு புது உடை, செருப்பு, பைக்” “ஒரு மரக்கா சக்கிலியச்சி தாலியை அறுத்து எடுத்துட்டு வாங்கடா…” “ஜே.சி.பி. வச்சு சக்கிலியன் வீடு, தெருக்களை நெறவுங்கடா” என்றெல்லாம் சாதிவெறியோடு கூச்சலிட்டுக் கொண்டே நடந்துள்ளது, இத்தாக்குதல்.
அருந்ததியினர் வீடுகளுக்கு குடிநீர் வழங்கிடும் நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி சாதி வெறியர்கள் சிறுநீர் கழித்ததாகவும், அதில் நஞ்சு கலந்ததாகவும் அம்மக்கள் கூறுகின்றனர். அவர்களின் வீடுகளில் புகுந்து பல இலட்ச ரூபாய் பணம், நகைகளைத் திருடிச் சென்றதாகவும், குறிப்பாக முத்துராமனின் குடும்பத்தைக் குறிவைத்துத் தாக்கி 3 சவரன் நகையையும் ரூ.4 இலட்சம் பணத்தையும் திருடிச் சென்றதாகவும், அவர் அமைதிப் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்ததால் உயிர் தப்பினார் என்றும் கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
இக்கொலைவெறியாட்டம் நடைபெற இருப்பதை உளவுத்துறை மூலம் தெரிந்திருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்துள்ள போதிலும், அதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததோடு, தாக்குதலின் ஆரம்பம் முதல் இறுதிவரை கண்டும் காணாமல் இருந்து ஆதிக்க சாதி வெறியர்களுக்குத் துணையாக நின்றுள்ளது போலீசு. தாக்குதலின்போது வேடிக்கை பார்த்து படம் பிடிப்பதை மட்டுமே செய்த போலீசு, சாதி வெறியர்களின் தாக்குதலை அங்கீகரிக்கும் விதத்தில் “அடித்தது போதும் பா.. போங்க..” என்று கூறியுள்ளது.
தாக்குதலை முன்னிருந்து நடத்திய சாதிவெறியர்கள் அன்று இரவு தமது கிராமத்தின் அருகிலுள்ள மலையின் அடிவாரத்தின் காடுகளில் பதுங்கி இருந்து கொண்டு, கேக் வெட்டி கொண்டாடி “இது ஆரம்பம்தான், படையாட்சி (வன்னியர்) ஆட்டம் இனி தொடரும்” என்று வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் பகிர்ந்து கொண்டாடியதாகவும் அம்மக்கள் கூறியுள்ளனர். இதைப் பற்றி போலீசில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட அருந்ததியர்கள் ஜனவரி 17 அன்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் சிகிச்சை அளிக்காமல் விரட்டியடித்துள்ளனர்.
ஜனவரி 15-ஆம் தேதி இறந்த அமுதாவின் உடலை உறவினர்கள் பெறுவதற்குக்கூட போலீசு இழுத்தடித்து காலம் தாழ்த்தியுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி பிற்பகல் அவசர அவசரமாக சடலத்தை வீட்டுக்குக் கொண்டு வந்ததும் இறுதிச் சடங்கைக்கூட அனுமதிக்காமல் 10 நிமிடங்களில் உடலை எடுத்துச் செல்லுமாறு உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளது போலீசு.
தாக்குதலுக்கு மறுநாள் (ஜனவரி 17) அன்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக போலீசு நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் இருந்த பெயர்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பான விவரங்களைத் திருத்தி (அதாவது பாதிக்கப்பட்டவரகள் 230 பேர் என்பதை 36 பேர் என்று சுருக்கியும், பாதிப்பின் விவரங்களை நீக்கியும்) வாங்கியுள்ளது போலீசு. தாக்குதலை முன்னின்று நடத்தியவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டுமென கோட்டாட்சியரிடம் மனுவை அளித்த போதிலும், இன்றுவரை யாரும் கைது செய்யப்படவே இல்லை. மாறாக, ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டவர்கள் மீது இரண்டு பொய் வழக்குகளைக் கொடுத்துள்ளனர். அப்பொய் வழக்குகள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், அரசின் நிவாரணத்தை உடனே பெற்றுக் கொண்டு அமைதியாக வேண்டும் என்று மிரட்டியுள்ளனர் அதிகாரிகளும் போலீசும். மேலும், முன்பு எடுக்கப்பட்ட முடிவின்படி, பிணத்தை பொதுவழியில் எடுத்துச் செல்வதற்கு மாறாக, ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதரவாக நின்று கொண்டு முட்புதர் மண்டிய பாதையை சரி செய்து தருகிறோம் என்று அருந்ததியினரிடம் கூறியுள்ளனர்
இத்தாக்குதலை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான மணி என்பவராவார். மேலும், தாக்குதலுக்கு மறுநாளன்று அப்பகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.டி.சரவணன்., தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை இருவரும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆதிக்க சாதியினரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்துப் பேசக்கூட இல்லை. இவ்வாறாக அதிகாரிகள், போலீசு, ஆளும் கட்சி – என மொத்த அரசுக் கட்டமைப்பும் இத்தாக்குதலுக்குத் துணை நின்றுள்ளது. இன்றுவரை துணைநின்றும் வருகிறது. சமூக நீதியின் பெயரால் ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு, சாதிவெறியர்களுக்குத் துணையாய் நிற்கும் இந்த அயோக்கியத்தனத்தை மே 17 உள்ளிட்ட சில இயக்கங்களைத் தவிர யாரும் கேள்விக்குள்ளாக்கக்கூட இல்லை. ஊடகங்களும் இதை “இரு பிரிவினரிடையே மோதல்” என்று அயோக்கியத்தனமாக செய்தியை வெளியிட்டு அரசுக்கும் சாதி வெறியர்களுக்கும் சேவை செய்துள்ளன.
இத்தாக்குதலை அடுத்து அருந்ததியினர் மீதான சாதிய ஒடுக்குமுறை அன்றாட நிகழ்வாக மாறிவருகிறது. அருந்ததியின மக்களின் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்பவரை ஆதிக்க சாதியினர் தடுத்துள்ளதோடு, அம்மக்கள் வளர்க்கும் மாடுகளின் பாலை கிராம நிர்வாகம் பெற்றுக்கொள்ளவும் தடை விதித்துள்ளனர். மேலும், அம்மக்கள் தங்களது ஆடு, மாடுகளை மேய்க்கச் செல்லும் பாதைகளையும் வயல்களுக்குச் செல்லும் பாதைகளையும் சாதிவெறியர்கள் முள்வேலியிட்டு அடைத்துள்ளனர். பொதுவெளியில் அவர்களை சக்கிலியர் என்று இழிவாகப் பேசுவதும், இன்னும் கேடான வார்த்தைகளைச் சொல்லி அழைப்பதும் அன்றாட நிகழ்வாகி வருகிறது.
வீட்டுக்கு வீடு நிதி திரட்டி, கொலை செய்யவும் அதற்கான வழக்கை நடத்தவும் திட்டமிட்டு, குடிக்கும் நீர் தொட்டியில் சிறுநீரும் நஞ்சும் கலந்து, ஒன்றுதிரண்டு ஒரு தாக்குதலை நடத்துகிறார்கள் என்றால், இதைச் சாதாரணமாகப் பார்க்க முடியாது. சாதிவெறியாட்டம் தமிழகத்தில் முன்னிலும் கொடூரமானதாய் எண்ணிக்கையிலும் தன்மையிலும் வளர்ந்து வருவதையே இச்சம்பவம் நமக்குத் துலக்கமாகக் காட்டுக்கிறது. அண்மைக்காலமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாதி வெறித் தாக்குதல்கள் நடந்தும் வருகின்றன.
படிக்க :
♦ தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள் : என்ன செய்யப் போகிறது அரசு ?
♦ ரவிக்கையின் ‘பாரம்பரியமும்’ சாதிய வர்க்க பாகுபாட்டு வரலாறும் | சிந்துஜா
தானே ஒரு தனிவகைச் சாதியாக, ஒடுக்குமுறை நிறுவனமாக இருக்கும் அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை அடங்கிய அரசு எந்திரத்தைத் தகர்க்கும் திசையில் போராடாமல் இக்கட்டமைப்பிற்குள் சட்டங்களை இயற்றுவதையும் புதிய அமைப்புகளை, ஆணையங்களை உருவாக்குவதையும் முன்வைத்தே பல்வேறு ஓட்டுக் கட்சிகளும் இயக்கங்களும் போராடி வருகின்றன. உதாரணமாக பல்வேறு சாட்சியங்கள் இருந்தும், கண்ணுற்ற சாட்சியான கெளசல்யா உயிரோடிருந்தும் உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமியை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தபோது, இன்னும் கடுமையான சட்டங்கள் வேண்டுமென்றுதான் பேசினார் வி.சி.க. தலைவர் திருமாவளவன். ஆனால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், ஆணையங்கள், ஆதித்திராவிடர் நலத்துறை என அரசின் உறுப்புகள், சட்டங்கள் எவையும் சாதிவெறியைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் தோல்வியடைந்துள்ளதையே இச்சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு நிரூபித்துக் காட்டுகின்றன.
எல்லா சாதிவெறித் தாக்குதல்களையும் போலவே வீரளூர் விவகாரத்திலும் அரசும் போலீசும் ஆளும் கட்சியும் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நிற்கிறது என்பதே நாம் பெறும் அனுபவமாகும். இன்றைய அரசுக் கட்டமைப்பில் ஒடுக்கப்படும் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதே வெண்மணி முதல் உடுமலை சங்கர் படுகொலை வழக்கு வரை எல்லாவற்றிலும் நாம் கண்டுணரும் அனுபவமும் ஆகும்.
(குறிப்பு : வீரளூர் சாதிவெறித் தாக்குதல் தொடர்பாக மே 17 இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட உண்மையறியும் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

வினோத்
கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !
கடந்த ஓராண்டில் மட்டும் உலக அளவில் அதிகமான சொத்துக்களை சேர்ந்தவர்கள் வரிசையில் அதானி முதல் இடத்தில் இருப்பதாக ஆண்டுதோறும் உலக அளவில் பணக்கரர்களின் சொத்துக்களை மதிப்பிடும் M3M Hurun என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் உலகம் முழுவதும் கொரோனா பேரிடர் மற்றும் பிற காரணங்களால் பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் தொழிற்சாலைகள் மூடல், வேலையிழப்பு, பசி, பட்டினி போன்ற நிகழ்வுகள் அதிகரித்து இருந்தன. இதே ஆண்டில்தான் இந்தியாவின் இயற்கை வளங்களையும், இந்திய மக்களையும் சுரண்டி கொழுத்த ஒரு கூட்டத்தின் சொத்து மதிப்புகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டிற்கான உலக பணக்காரர்களுகன பட்டியலை M3M Hurun அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசியா மற்றும் இந்திய அளவில் அதிக பணக்காரர் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்திலும் அம்பானி முதல் இடத்திலும் உள்ளனர். உலக அளவில் எலோன் மஸ்க் முதல் இடத்திலும், ஜெஃப் பெசோஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும், அம்பானி எட்டாவது இடத்திலும் உள்ளனர் என்று அந்த நிறுவனத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க :
♦ அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 261 சதவிகிதம் உயர்வு !
♦ பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?
எண்ணெய் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி, 103 பில்லியன் டாலர் சொத்து மதிப்புகளுடன் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இருவருடைய சொத்து மத்திப்பு 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அதானி 81 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இவரின் சொத்து மதிப்பு 153 சதவீதம் அதிகரித்துள்ளது. துறைமுகம் மற்றும் எரிசக்தி சார்ந்த துறையில் இவரது நிறுவனம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அம்பானியின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 45 பில்லியன் டாலராகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு 20.5 பில்லியன் டாலராகவும் இருந்தது. அதானியின் மதிப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு 8.8 பில்லியன் டாலராகவும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 14 பில்லியன் டாலராகவும் இருந்தது.
அதானியின் சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டில் மட்டும் 1,830 சதவீதம் அதிகரித்து அம்பானியை பின்னுக்கு தள்ளி அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 400 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஹெச்.சி. எல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார் 28 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இந்தியாவில் மூன்றாவது இடத்திலும், சீரம் இன்ஸ்டியூட் சைரஸ் பொன்னவாலா 26 பில்லியன் டாலர் மற்றும் லட்சுமி மிட்டல் 25 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் நான்காவது மற்றும் 5 வது இடத்திலும் உள்ளனர்.
உலகத்திலேயே கடந்த ஓராண்டில் மட்டும் அதிக சொத்துக்க்ளை சேர்த்தவர்கள் பட்டியலில் அதானி தான் முதல் இடத்தில் உள்ளார். (49 பில்லியன் அமெரிக்க டாலர்). இவர், உலகபணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை விட அதிகமான சொத்துக்களை கடந்த ஆண்டில் மட்டும் சேர்த்துள்ளார். 2021 ம் ஆண்டில் மட்டும் அதானி நிறுவனத்தின் சொத்து மதிப்பு அதிகரித்து தற்போது 81 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ், செர்ஜி பிரின் மற்றும் ஆடம்பர பொருட்களின் நிறுவனமான LVMH –ன் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் 39 பில்லியன் சொத்துக்களை சேர்த்து 2 வது இடத்தில் உள்ளனர். ஆனால் அம்பானி 2021 ம் ஆண்டில் 20 பில்லியன் டாலர் தான் சொத்து சேர்த்துள்ளார்.
படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
♦ அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !
உலகத்தில் உள்ள 3,381 பணக்காரர்கள் வெறும் 69 நாடுகளை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். கடந்த 10 ஆண்டில் மட்டும் இந்தியவை சேர்ந்த பணக்காரர்கள் சம்பாதித்த 700 பில்லியன் டாலர் என்பது சுவிட்சர்லாந்து நாட்டின் ஜி.டி.பி. க்கு இணையாகவும், ஐக்கிய அரபு அமிரகம் நாட்டின் ஜி.டி.பி. யின் இரண்டு மடங்குக்கு சமமாகும். இந்தியாவில் உள்ள 215 பணக்காரர்கள் சீனாவை சேர்ந்த 1,133 பணக்காரர்களுக்கும், 716 அமெரிக்க பணக்கரர்களின் சொத்துகளுக்கும் இணையாக தனது சொத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்களுக்கு வேலை செய்யவே மோடி தலைமையிலான இந்த காவி கும்பல் வேலை செய்து வருகிறது. இருந்தாலும் மோடியால் மிகப்பெரிய பணக்காரராக உருவாக்கப்பட்டவரும் அவரின் நெருங்கிய நண்பருமான அதானியின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு வேளை சோறு இல்லாமல் சாவு ஒரு பக்கம். உலக பணக்காரர்களுடன் போட்டிபோடும் இந்திய முதலாளிகளின் வளர்ச்சி ஒரு பக்கம். இந்த ஏற்றத்தாழ்வை அகற்றும் காலம் எப்போது..?கார்ப்பரேட்களின் வளர்ச்சியைதான் இந்தியாவின் வளர்ச்சி என வாய்சவடால் அடித்து வரும் இந்த காவி கும்பலை கருவருக்காமல் நமக்கு விடிவேதும் இல்லை.

வினோதன்
செய்தி ஆதாரம் : தி வயர்
ஹிஜாப் தீர்ப்பு : பின்னணி என்ன? | தோழர் சுரேசு சக்தி முருகன்
அயோத்தி – சபரி மலை தீர்ப்புகளை நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கிய நீதிமன்றம், ஹிஜாப் பிரச்சினையை மட்டும் சட்ட வரம்பிற்குள் வைத்து தீர்ப்பு வழக்குகிறது. மேலும் ஹிஜாப் பிரச்சினையில் காவி பாசிச கும்பல் துளியும் நேர்மையற்ற ஆதாரம் இல்லாத வகையில் காவி அரசியலை செய்து வருகிறது என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால் நீதிமன்றம் அதைகுறித்து பேசாமல் மௌனம் சாதிக்கிறது. தீர்ப்பை அரசியல் சாசனப்படிதானே இருக்கிறது எனறாலும் கூட இது சிறுபான்மையினரின் நம்பிக்கையின் மீதான தாக்ககுதலாக அமைகிறது. இப்பிரச்சினையை நாட்டில் உள்ள அனைத்து முற்போக்காளர்களும் இசுலாமிய அமைப்பிகளும் கண்டித்து பேசி வருகின்றனர். ஆனால் ‘பெரும்பான்மை’ இந்து சமூகம் இப்பிரச்சினையை பற்றி பேசுவதில்லை. ஏன் பேசுவதில்லை. காவி பாசிச கும்பல் இந்து சமூகத்தின் பெயரில்தான் இந்த ஹிஜாப் பிரச்சினையை செய்து வருகிறது. எனவே பெரும்பான்மை மக்கள் இந்த ஜனநாயக விரோத தீர்ப்பை பற்றி பேசவேண்டும் என்ற வகையில் ஹிஜாப் தீர்ப்பின் முழுபின்னணியை இக்காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.
காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் வரலாற்றை படிப்போம்! பாசிஸ்டுகளை வீழ்த்த தயாராவோம் ! | ராஜசங்கீதன்
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் ஏமாற்றம்தான். ஆனால் ஒன்று தெரியுமா? இந்த ஏமாற்றத்தைதான் கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் அடைந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் ஏதோவொரு மாநிலத் தேர்தல் நடக்கும்போது பாஜகவைத் தகர்க்கும் வெற்றி கிடைக்க வேண்டுமென விரும்பி காத்திருக்கிறோம். ஏமாறுகிறோம்.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, ராமர் கோவில், விலைவாசி உயர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் பிரிப்பு என ஒவ்வொரு விஷயத்தை பாஜக நடத்தி முடிக்கும்போதும் அதில் கிளம்பும் எதிர்ப்பைக் கண்டு, அடுத்து நடக்கும் மாநில தேர்தலில் பாஜக வீழ்ந்துவிடும் என மீண்டும் நம்பிக்கைக் கொண்டு காத்திருக்கிறோம். மீண்டும் ஏமாறுகிறோம்.
ஏமாறும் ஒவ்வொரு முறையும் ‘வடக்கன்கள்’, ‘வாக்கு இயந்திர முறைகேடுகள்’, ‘இந்துத்துவ வெறி’, ‘எதிர்க்கட்சிகளின் தோல்வி’ எனப் பலக் காரணங்களைச் சொல்லிக் கொள்கிறோம்.
பாஜக வெல்வதற்கு என்னதான் காரணம்?
திரிபுராவில் பாஜகவை வெற்றிபெறச் செய்தவர் இப்படிச் சொல்கிறார்: ‘கம்யூனிஸ்ட்டுகளை பணம் கொடுத்து வாங்க முடியாதென்பதால், அம்மண் சார்ந்த நாகர்களின் விடுதலைக்கு கம்யூனிஸ்டுகள் உழைத்த பணி தெரியாமலும் வாசிக்காமலும் வளர்ந்திருக்கும் தலைமுறையை மட்டும் கைகொள்ளும் வேலையைச் செய்து வெற்றி பெற்றோம்.’
படிக்க :
♦ நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!
♦ எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
உத்தரப்பிரதேசத்தில் யாதவர்களுக்குதான் ஆளும் கட்சிகள் ஆதரவாக இருந்திருக்கின்றன என்றும் பாஜக தலித்களுக்கு ஆதரவான கட்சி என்றும் ஒரு கருத்தை உருவாக்குவதற்காக உத்தரப்பிரதேச தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரைக் குடியரசுத் தலைவராக்குவது வரை சென்றதாகவும் சொல்கிறார். ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் உதவியுடன் ஒவ்வொரு வட்டாரத்திலும் நிதியுதவி பெற்றிருக்கின்றனர்.
மறுபக்கத்தில் வாக்கு இயந்திரங்கள்!
2010-ம் ஆண்டில் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்திய வாக்கு இயந்திரத்தை ‘ஹேக்’ செய்து செல்பேசியின் குறுந்தகவலைக் கொண்டு எண்ணிக்கையை மாற்ற முடியும் என செய்தே காட்டினார்கள். அமெரிக்க ஆய்வாளர்களுடன் அதைச் செய்து காட்டிய ஹரி பிரசாத் கைது கூட செய்யப்பட்டார். இதுபோல் எத்தனையோ demonstration-களை ஆம் ஆத்மி கட்சி சேர்ந்தவர் உட்பட பலரும் செய்து காட்டியிருக்கின்றனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் கடத்தப்படும் வாக்கு இயந்திரங்கள், குப்பையிலும் ஹோட்டல் அறைகளிலும் கிடக்கும் வாக்கு இயந்திரங்கள் என செய்திகள் வருகின்றனவே, அவற்றுக்கென்ன அர்த்தம்?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வென்றதே… அது மக்கள் ஓட்டுகளில் மட்டும்தான் நடந்ததென நிச்சயமாகவே நம்புகிறீர்களா என்ன? அந்தளவுக்கு பேராதரவு பெற்ற உலக மகா தலைவரா தேனியில் வென்ற அந்த அவர்?
இந்தியத் தேர்தலில் இதுவரை எல்லா கட்சிகளும் பயன்படுத்திய உத்திகளையும் தேர்தல்முறை கொண்டிருக்கும் பலவீனங்களையும் புது உத்திகளையும் புதிய வாய்ப்புகளுடன் இணைத்துதான் பாஜக ஒவ்வொரு தேர்தலையும் அணுகுகிறது. வெற்றி பெறுகிறது.
பிகார் சட்டமன்ற தேர்தலின்போது சுஷாந்த் சிங் என்கிற நடிகரின் தற்கொலையை வைத்துக் கொண்டு பிரசாரம் செய்தது பாஜக. ஜுன் 2020-ல் இறந்தவரை அக்டோபரில் நடந்த பிகார் தேர்தலுக்கு பயன்படுத்தியது அக்கட்சி. பாஜகவின் இணைய அணி சுஷாந்த் சிங் பற்றிய காணொளியை உருவாக்கி பரப்பியது. மும்பையில் ஆளும் சிவசேனை கூட்டணி அரசு சுஷாந்த் சிங் மரணத்தை முறையாக விசாரிக்கவில்லை என பிரசாரத்தை மாற்றியது. சிபிஐக்கு அந்த வழக்கை கொண்டு போய் முறையான நீதி கொடுத்தது பாஜகவின் ஒன்றிய அரசுதான் என அக்கட்சி பிரசாரம் செய்தது.
சாம, தான, பேத, தண்டம் எல்லாம் பாஜக தேர்தல் வெற்றியில் பார்ப்பதில்லை.
ஒரு தற்கொலை தொடங்கி, குடியரசுத் தலைவர் நியமனம், இராணுவ நடவடிக்கை வரை நீளும் அளவுக்கு பாஜக தேர்தலுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது.
பிற கட்சிகளில் தேர்தல் காலத்தில் தேர்தலை கவனிக்கவென ‘war room’ இருக்கும். பாஜகவில் அது தேர்தலல்லாத காலத்திலும் இயங்குகிறது.
பாஜக மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பது குறைவுதான். அல்லது குறைந்த அளவுதான். ஆனால் பிற அணிகளுக்குக் அக்கட்சிக் கொடுக்கும் பணம் அளப்பரியது. உதாரணமாக ஒரு தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.
தொகுதியில் A சாதி 40 சதவிகிதம் இருக்கிறது. B சாதி 30 சதவிகிதமும் C சாதி 20 சதவிகிதமும் D சாதி 10 சதவிகிதமும் இருக்கிறது. இதில் 40 சதவிகிதமும் 30 சதவிகிதமும் இருக்கும் சாதிகள் பாஜகவுக்கு ஓட்டு நிச்சயமாக போடாது எனத் தெரிகிறது. 20 சதவிகிதமான C சாதியிடம் பாஜக கடுமையாக வேலை பார்த்து தன் வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருக்கும். ஆனால் வெறும் 20 சதவிகிதத்தைக் கொண்டு எப்படி தேர்தலை வெல்வது? அதுதான் தேர்தல் முறையின் மகத்துவம்!
A சாதியில் ஒரு மூன்று பி டீம்களை பாஜக இருக்கும். மூன்று டீம்களும் மக்களுக்குக் கொடுக்கவென பல நூறு கோடிகளை பாஜக கொடுக்கும். 40 சதவிகித வாக்குகள் சிதறும். அது எத்தனை மடங்காகச் சிதறினாலும் பாஜகவுக்கு சாதகம்தான். போலவே B சாதியில் ஒரு மூன்று பி டீம்கள். பல கோடி பணம். 30 சதவிகிதமும் சிதறும். அடுத்து இருக்கும் 20 சதவிகிதம் சரியாக பாஜகவுக்கு வந்து சேர்ந்து விடும். அதற்கடுத்த 10 சதவிகிதம் ஒரு கட்சிக்குக் கொத்தாக சென்றாலும் பிரச்சினை இல்லை. இறுதியில் அத்தொகுதியில் 20 சதவிகிதமே வெல்லும்.
மேற்குறிப்பிட்ட சதவிகிதங்களுக்குள் மதம் பாலினம் போன்ற விஷயங்களையும் ஊடாடியும் கணக்குகள் உருவாக்கப்படும். உதாரணமாக கிறித்துவ நாடார்கள் 40 சதவிகிதம் என வைத்துக் கொண்டால் அவர்கள் நிச்சயம் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். எனவே இந்து நாடார்கள் பக்கமோ அல்லது நாடார்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சாதிக்கோ பாஜக வேலை செய்து வைத்திருக்கும்.
இத்தகைய social engineering-ம் கூட பாஜக கண்டுபிடித்ததில்லை. ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் நடந்து வரும் உத்திதான்.
உத்தரப்பிரதேச தேர்தலில் மோடி பயன்படுத்திய பிரச்சாரக் கருத்தாடல்களில் சிலவை:
‘என்னை வீழ்த்துவதற்காக என்னை கொலை செய்யும் நிலைக்கு எதிர்கட்சிகள் தரம் தாழ்ந்துவிட்டார்கள். ஆனால் என்னை கொலை செய்யக்கூட, அவர்கள் சாமி கும்பிட என் தொகுதி வாரணாசிக்குதான் அவர்கள் வந்தார்கள் என தெரிந்தபோது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்’
‘இந்திய நாட்டின் வளர்ச்சி பிடிக்காமல் இஸ்லாமிய நாடுகள் பெட்ரோலை அதிக விலைக்கு விற்பதால்தான் பெட்ரோல் விலை உயர்கிறது’
இத்தகைய கருத்தாடல்களை ஏன் அந்த முட்டாள்கள் நம்புகிறார்கள் என்றெல்லாம் இறுமாப்புடன் நாம் கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி நம் மனதில் தோன்றினால் பழநியில் கேம்ப் அடித்த தெற்கத்தி இளைஞர்களை சாரை சாரையாக ஈர்த்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் வகுப்புக்கு ஒருமுறை சென்று பார்க்கலாம்.
மேற்குறிப்பிட்டத் தகவல்களை தெரிந்துகொள்ள ஒருவர் அலைந்து திரிய வேண்டியது கூட இல்லை. எல்லாமே சுலபமாகக் கிடைக்கிறது.
பாஜகவுடன் இயங்கியவர்களும் இயங்கிய நிறுவனங்களும் சாட்சிகளாக இருந்து பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பாஜகவின் வளர்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.ஸும் கொண்டிருக்கும் பங்கைப் பற்றியும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எழுதிய பல புத்தகங்கள் உண்டு. இந்திய அரசை (State) ஆர்.எஸ்.எஸ் உள்ளிருந்து எப்படி கையகப்படுத்துகிறது என முன்னாள் அதிகாரிகளின் எழுத்துகளும் பல இருக்கின்றன. இந்துத்துவத்தை முதலாளித்துவம் பயன்படுத்தி இரண்டும் எப்படி வளர்கிறது என்பதற்கான புத்தகங்களும் இருக்கின்றன. இணையத்தை பாஜக எத்தனை வலிய ஆயுதமாக பயன்படுத்துகிறது என்பதைச் சொல்லவும் பல புத்தகங்கள் இருக்கின்றன.
தேவை அரசியல் உறுதி (political will) மட்டும்தான்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை!
படிக்க :
♦ தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : பாசிசத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது, எச்சரிக்கை !
♦ அன்றே சொன்னது புதிய ஜனநாயகம் : ஆம் ஆத்மி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகள் !
தங்களது சித்தாந்தங்களையும் ‘கும்பகர்ண’ சோம்பலையும் கட்சிகள் கொஞ்சம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சி பற்றிய வரலாறுகளையும் புத்தகங்களையும் எழுத்துகளையும் படித்து உரையாடி கட்சிகளுக்குள் வகுப்புகள் எடுக்கத் தொடங்கலாம். நிலைமையின் தீவிரம் பற்றியப் புரிதலை கட்சிகளின் அனைத்து மட்டங்களிலும் உருவாக்க முயற்சிக்கலாம். விமர்சனங்களைக் காது கொடுத்து கேட்கத் தொடங்கலாம்.
Emptying cup is also a way to fill the cup (கோப்பையை காலி செய்தும் நிரப்ப முடியும்) என்கிற பேருண்மையைக் கண்டுபிடிக்கலாம்.
இந்தியச் சமூகம் மற்றும் அதன் அரசியல் ஆகியவற்றின் பிரத்தியேகதை என்னவென துலக்கமாக நமக்கு புரிபடலாம். பார்ப்பனீயமும் இந்துத்துவமும் இந்தியச் சமூகத்தின் நுண்ணிய இழைகளில் கூட ஊடுருவியிருப்பதை ஏற்றுக் கொள்வதிலிருந்து பாஜகவை வீழ்த்தத் தொடங்கலாம்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றான பிறகு பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஆடப்போவதுதான் உண்மையான ஆட்டமாக இருக்கும். இப்போது நடப்பதெல்லாம் வெறும் ட்ரெயிலர்தான்.
மூளைக் கிண்ணங்களில் ததும்பி வழியும், யதார்த்தம் மீறியக் கற்பனைகளை கொட்டிவிட்டுத் தேவையானவற்றை நிரப்பத் தொடங்குவோம்!
The night is still young!

முகநூலில் : ராஜசங்கீதன்
குழந்தைத் திருமணச் சட்டம் 2021 : சீர்திருத்தச் சட்டமல்ல, ஒடுக்குமுறை திட்டம் !
மோடியின் அரசு கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தில், நடைமுறையில் உள்ள குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தைத் திருத்த ஒரு முன்மொழிவை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, பெண்களுக்கு குறைந்தபட்சம் 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் அடைந்தால் மட்டுமே அவர்கள் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி செல்லும். அதற்கு குறைவான வயதில் திருமணம் நடைபெறும் பட்சத்தில் அது குழந்தை திருமணமாக கருதப்படும்.
ஆனால், மணமக்களில் எவரேனும் ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார் என்று நிரூபித்தால் மட்டுமே அத்தகைய திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும். அதேவேளை, இஸ்லாமிய சட்டத்தின்படி பெண்கள் பூப்படைந்து பதினாறு வயதானால் போதும் அவர் திருமணத்திற்கு தகுதி வாய்ந்தவர் என்பதும் தற்போதைய நிலை.
000
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட வரைவுக்கான முன்னுரை, வழக்கத்திற்கு மாறான வகையில் மிக நீண்ட விளக்கத்தைக் கொண்டுள்ளது. முதலாவதாக, நடைமுறையில் உள்ள இந்து, கிறித்தவ, இஸ்லாமிய, பார்சி, சிறப்புத் திருமண சட்டங்கள், வெளிநாட்டவர் திருமண சட்டங்கள் அனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறான அங்கீகரிக்கப்பட்ட திருமண வயதைக் கொண்டிருகின்றன. அதேவேளை, பல்வேறு இன, சமய மக்களுக்கும் வெவ்வேறு வயது குறிப்பிடப்பட்டுள்ளதால், பெண்களுக்கிடையே கூட சம உரிமை இல்லை எனவும் அதைப் போக்குவது இச்சட்டத்தின் முதல் நோக்கம் என்றும் தெரிவிக்கிறது.
படிக்க :
♦ குழந்தைத் திருமண தடுப்பு மசோதா : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின்னுள்ள நோக்கம்!
♦ திருமண வயது 21 மசோதா : பெண்களை மேலும் அடிமைப்படுத்தும் சதித் திட்டம் !
அடுத்ததாக, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள சம உரிமை இன்னமும் பெண்களுக்கு சென்று சேரவில்லை என்றும்; குறைவான வயதில் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதால் அவர்கள் அதிகப்படியாக உடல், மன, பொருளாதார ரீதியாக மிகுந்த துயரத்திற்கு உள்ளாவதை தடுக்க வேண்டும் என்றும்; இந்தியா கையொப்பம் இட்டுள்ள சர்வதேச எழுதாச் சட்டங்களையும் (International conventions), கடப்பாடுகளையும் (Obligations) நிறைவேற்றும் வண்ணம் அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கிறது.
கூடவே, இந்த சட்டம் ஒரு மதச் சார்பற்ற சட்டம் என்றும் இந்தியாவில் வாழும் அனைத்து இனங்கள், சமயங்கள், பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கும் பொதுவானதாக இருக்கும் என்பதை அழுத்தி கூறுகிறது. இந்த சட்டம் நிறைவேறும் பட்சத்தில் நடைபெறும் திருமணங்கள், இந்து திருமண சட்டம், இஸ்லாமிய தனி நபர் (ஷரியத்) சட்டம் என்று எந்தச் சட்டத்தின்கீழ் வந்தாலும் அனைவரையும் கட்டுப்படுத்தும் என்றும் குறிப்பிடுகிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை சந்தித்த பிறகு, இச்சட்ட முன்வரைவை நிலைக் குழுவுக்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிலைக்குழு அறிக்கை அளித்த பின்னர்தான் இச்சட்டம் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.
சமூகத்தில் குறுகிய காலத்தில் இச்சட்டம் பெறும் விவாதப் பொருளாகியிருக்கிறது. தற்போதைய சட்டத்தினை மீறியே ஆங்காங்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதை தடுக்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனால், பெரிய அளவில் சமூகத்தில் யாரும் அழுத்தம் கொடுக்காத ஒன்றை – பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவது – மோடி அரசு சட்டமாக கொண்டுவர முயல்கிறது. மோடி அரசு அமைத்த இந்திய சட்ட ஆணையம் கூட (Indian Law Commission of India 2018) அனைவருக்கும் உகந்த வயது 18 என்று சட்டம் இயற்றவே பரிந்துரை செய்திருந்தது.
கடைந்தெடுத்த பிற்போக்காளர்கள், பாசிச பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வினர் முற்போக்கு முகமுடி போர்த்திக் கொண்டு இச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கான உள்நோக்கம் முசுலீம்களை குறிவைத்தே.
பெண்கள் முன்னேற்றத்தில், சனாதனவாதிகளுக்கு என்ன பங்கு!
ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே, 1891-ம் ஆண்டு ஒப்புதல் வயது சட்டம் (Age of Consent Act 1891) என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. “உடல் உறவு கொள்ள ஏதுவான வயது 12; அதன் பின்னரே பெண்கள் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும்” என்றது அச்சட்டம். ஆர்.எஸ்.எஸ்-ன் மூதாதையர்களான இந்து சனாதனவாதிகளால் இது கடும் எதிர்ப்புக்குள்ளாக்கப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து அவர்கள் பல்வேறு கலவரங்களை நடத்தினார்கள்.
அதன்பிறகு 1929-ம் ஆண்டு “சாரதா சட்டம்” என்று அழைக்கப்படும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் (Prohibition of Child Marriage Act) கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பெண்ணின் திருமண வயது 14 எனவும் ஆணின் வயது 18 எனவும் வரையறை செய்யப்பட்டது. இச்சட்டமும் சனாதனவாதிகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. இச்சட்டத்தைக் கொண்டுவருவதில் பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்கள், சோசலிஸ்டுகள் மற்றும் காங்கிரசின் பங்கு இருந்தது.
சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் முகமாக குடும்பம் நடத்தும் அளவுக்கு மன நிறைவுள்ள பெற்றோரை உருவாக்கும் வயது வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சட்டம் 1979-ல் மீண்டும் திருத்தப்பட்டது. அதில், பெண்களுக்கு திருமண வயது 18 மற்றும் ஆண்களுக்கு 21 என்று மறுவரையறை செய்யப்பட்டது.
இப்படி நீண்ட போராட்டங்கள், விவாதங்களுக்கு இடையே உருவான இந்த சீர்திருத்தச் சட்டங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இச்சட்டங்கள் கொண்டுவரும்போது அதற்கு எதிராக இருந்தவர்கள் அவர்கள்.
தவறான நபர்கள் கொண்டு வந்த, சரியான சட்டமா?
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பிற்போக்குவாதிகளாக இருப்பதால் அவர்கள் என்ன கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டுமா என்று சில நண்பர்கள் கேட்கின்றனர். இதுபோன்ற முற்போக்கான சட்டங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவைப்படுகிறது தானே எனக் கருதுகின்றனர். சில விவரங்களை பரிசீலிப்பதிலிருந்து இதற்கு விடை காண்போம்.
கடந்த 1901 முதல் 2011 வரை கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விபரங்களின்படி, பெண்களின் சராசரி திருமண வயது இயல்பாகவே உயர்ந்துகொண்டுதான் வருகிறது. 1901-ல் இந்திய பெண்களின் சராசரி திருமண வயது 13-ஆக இருந்தது. ஆனால், இது படிப்படியாக உயர்ந்து கடந்த 2011-ம் 20-ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம் குழந்தைத் திருமணங்கள் ஒரேடியாக இல்லாமல் போய்விடவில்லை. 2015-2016-ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி (NFHS-5) 26.8% பெண்கள், அதாவது சுமார் நான்கில் ஒரு பெண், 18 வயது நிறைவுபெறும் முன் திருமணம் செய்துகொள்கிறார். 15 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்பவர்கள் பதினைந்தில் ஒரு பெண் மட்டுமே.
குறைந்த வயது திருமணத்தின் ஒரு பகுதி, மனமுதிர்ச்சியற்ற விடலைப் பருவ அவசரத் திருமணங்கள் என்று கணக்கில் கொண்டால், 18 வயதுக்கு குறைவான பெண்களின் திருமணங்கள் மிகவும் சொற்பமே.
இப்படி பெண்களின் திருமண வயது தொடர்ச்சியாக அதிகரித்துவருவதற்கு நடைமுறையில் உள்ள சட்டங்கள் மட்டும் காரணம் அல்ல. அதற்கான காரணம் சமூக பொருளாதார வளர்ச்சியில் இருக்கிறது. சான்றாக, இன்று நாட்டில் அதிக குழந்தைத் திருமணங்கள் நடக்கும் பகுதிகள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வடமாநிலங்கள்.
குறிப்பாக, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் குழந்தைத் திருமணங்களைக் காணமுடியும். எனவே வர்க்கப் பின்னணி இதில் முக்கியப் பங்காற்றுகிறது. தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காகவும் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை ஈடுசெய்து கொள்ளவுமே அல்லாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும் தன் பிள்ளைகளை வளர்ப்பதே பெரும்பாடுதான்.
ஆண் பிள்ளைகளாய் இருந்தால் சிறு வயதிலேயே கல்வியை இடைநிறுத்தி அவர்களை வேலைக்கு அனுப்பிடுவார்கள். பெண் பிள்ளைகளை திருமணம் செய்துகொடுத்து விடுவதுதான் ஒரேவழி. நிலவுகின்ற சமூகத்தில், பெண் பிள்ளைகளை காப்பாற்றுவது அடித்தட்டு வர்க்கத்திற்கு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதைப் போன்றது.
படிக்க :
♦ பெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு !
♦ உ.பி-யில் தொடரும் அவலம் : 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை !
இதிலிருந்து பெறப்படும் முடிவு என்னவெனில், மேலிருந்து சட்டம் போட்டுவிடுவதால் மட்டும் குழந்தைத் திருமணங்களை ஒழித்துவிட முடியாது. வயது வரம்பை உயர்த்திவிட முடியாது. குழந்தைத் தொழிலாளர் முறையும் கிட்டத்தட்ட இதே போலத்தான்.
இலவச கல்வி, அனைவருக்கும் வேலை, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க அளவில் ஒவ்வொரு குடும்பத்திற்கு போதுமான வருவாய் போன்ற ஆதாரங்களை மக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம்தான் சமூக வளர்ச்சியோடு பெண்கள் முன்னேற்றத்திற்கும் வழியேற்படுத்தி தர முடியும்.
அதனடிப்படையில் மோடியின் பாசிச நோக்கத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால்கூட, மேற்ச்சொன்ன மக்கள் நலப்பணிகளை அரசு செய்துதராமல் இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்றுவது எந்த வகையிலும் முற்போக்காக கொண்டாட முடியாது. அவை தன்னியல்பிலேயே மக்களை ஒடுக்கும் சட்டங்களாகத்தான் மாறும்.
(குறிப்பு: மார்ச் மாத பு.ஜ அச்சு நூலில் காணப்பட்ட இக்கட்டுரையின் பிழையை தற்போது சரிசெய்து வெளியிடுகிறோம்)

கிருஷ்ணராஜ்
நூல் அறிமுகம் : நேமிசந்த்ரா எழுதிய “யாத் வஷேம்” | தமிழ் இலக்கியா
“யாத் வஷேம்” – நினைவு இடம். நாஜிப்பிடியில் மரணமடைந்த ஆறு மில்லியன் யூதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம்.
“யாத் வஷேம்” கர்நாடக சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்நூலை நேமிசந்த்ரா எழுதியுள்ளார். கே.நல்லதம்பி மொழிபெயர்த்துள்ளார். கன்னட இலக்கியத்தில் மிகவும் அரிதான புத்தகம்.
ஒரு வெளிநாட்டுக் கதையைத் தேர்ந்தெடுத்து இந்தியாவிற்கு ஏற்ற கதைக்களத்தை அமைத்துள்ளார் ஆசிரியர். நாவலுக்கு வலுசேர்க்கும் விதமாக இந்நூலை எழுதுவதற்குமுன் பல ஆய்வுகளையும் பயணங்களையும் மேற்கொண்டுள்ளார். பன்னிரண்டு ஆண்டுகளில் தான் பார்த்த யூதர்களின் உலகை நாவலில் திறந்துகாட்ட முயன்றுள்ளார்.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : இப்போது உயிரோடிருக்கிறேன் || நமக்கு ஏன் இத்தனை எதிரிகள் ? || முரளிதரன்
♦ நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்
இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவிலிருந்து தப்பி பிரிட்டிஷ் இந்தியாவில் தஞ்சமடைந்த யூதக் குடும்பத்தைப் பற்றியது இப்புத்தகம். ஹிட்லரின் மண்ணிலிருந்து காந்தியின் மண்ணிற்கு வந்த குட்டி யூதச் சிறுமியின் கதை. பிரிட்டிஷ் கால பெங்களூர், யூதப் படுகொலைகள், நாஜிகளின் கொடுமைகள், இஸ்ரேலின் எழுச்சி மற்றும் பாலஸ்தீனத்துடனான மோதல்கள் பற்றிய பல தகவல்கள் இதில் உள்ளன.
ஹ்யானா மோசஸ், கதாநாயகி உங்களை பல உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டர் மூலம் அழைத்துச் செல்கிறார். இது இந்தியாவில் அனிதாவாக மாறிய ஹ்யானா வாழ்க்கை மற்றும் தொலைந்துபோன குடும்பத்திற்கான தேடலைப் பற்றியது. உயிரின் சங்கடங்களுக்கு ஒரு விடை வேண்டும் என்று அனிதா தன் அறுபதுகளில் தனது வேரைத்தேடி ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஜெரூசலம் போன்ற பல நாடுகளை அலைந்து திரிந்து கடைசியாக உயிருடன் இருக்கும் தன் 70 வயது அக்காவைத் தேடிக்கண்டுபிடிப்பதும், அக்கா இஸ்ரேலில் குடியேற அழைக்க அதை மறுத்து “நான் நானாகவும். அவர்கள் அவர்களாகவும் இருந்துகொண்டு, நாமாக வாழமுடியும்” என்று இந்தியாதான் தனது நாடு என்று இந்தியாவுக்குத் திரும்புவதுதான் கதை.
பல நூற்றாண்டுகளாக யுத்தம் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு அழித்தது என்பது பற்றிய செய்தியை ஆசிரியர் தெரிவிக்க முயற்சித்துள்ளார்.
வரலாற்றுக் கொடுமைகளைவிட நிகழ்காலத்து அழிவு என்னை வதைக்கிறது என்று பாலஸ்தீன் மீதான இஸ்ரேல் அடக்குமுறையை எதிர்த்துள்ளார். இது ஒரு ஹ்யானாவின் கதையாக மட்டும் இருக்கவில்லை. உலகின் உள்ள ஒவ்வொரு சிறுபான்மை மக்களின் கதை. மனிதர்களில்தான் மாற்றம். ஆனால் மாற்றமில்லாத அதே வலி, மரணம், பிரிவு, துன்பம்.
அன்று பற்றி எரிந்தது ஜெர்மனி, நின்று பார்த்தது உலகம். இன்று ஹிட்லர் எங்கே வேண்டுமென்றாலும் பிறக்கலாம். அமெரிக்காவில், ஜெர்மனியில், இஸ்ரேலில், ‘அகிம்சையே உயர்ந்த தர்மம்’ என்று முழங்கும் இந்தியாவில் கூட, ‘நம் நடுவில் எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கலாம்’, நமக்குள் பிறந்துவிடக் கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது’ என்ற நம்பிக்கையின் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
நூல் ஆசிரியர் : நேமிசந்த்ரா
தமிழில் : கே.நல்லதம்பி
வெளியீடு : எதிர் வெளியீடு
விலை : ரூ.399
நூல் அறிமுகம் : தமிழ் இலக்கியா
சமூகசெயற்பாட்டாளர்.
வருங்கால வைப்பு நிதி வட்டியை மோடி வெகுவாகக் குறைத்ததன் பின்னணி !
வருங்கால வைப்பு நிதிக்கான கொள்கை முடிவுகளை நிர்ணயிக்கும் மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம் டில்லியில் 12.3.2022 அன்று நடந்தது. அதில் 2021-2022 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 14.3.2022 அன்று நடந்த மக்களவை கூட்டத்தில் தி.மு.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டதற்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இப்படி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தபோதும் அவர்களுடைய எதிர்ப்பு எல்லாம் கண்டன அறிக்கைளை வெளியிடுவது, ட்விட்டரில் கருத்தை பதிவிடுவது, நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது என்பதுடன் அடங்கி விடுகிறது. அதைத் தாண்டி செல்வதில்லை. தங்களுடைய கட்சியின் தொழிற்சங்கங்களை வைத்து அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை நடத்தி வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று எல்லாம் இவர்கள் யோசிப்பதில்லை. அப்படிப்பட்ட எண்ணமும் இவர்களுக்கு கிடையாது.
வருங்கால வைப்பு நிதித் திட்டம் – ஒரு சுருக்கமான பார்வை
வருங்கால வைப்பு நிதி திட்டம் இந்தியாவில் 1952-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகி்றது. இத்திட்டத்தின்கீழ் ஊழியர்களின் மாத ஊதியத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனமும் அதே 12 சதவீத தொகையை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும்.
படிக்க :
♦ வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் !
♦ வருங்கால வைப்புநிதி மோசடி : அரசு – முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம் !
ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 12 சதவீதவுடன் நிறுவனத்தின் பங்காக செலுத்தப்பட்ட 12 சதவீதத்தில் இருந்து 3.67 சதவீதம் சேர்த்து 15.67 சதவீதம் இபிஎப் என்னும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேமித்து வைக்கப்படும்.
நிறுவனத்தின் பங்களிப்பாக அளிக்கப்பட்டதில் மீதம் உள்ள 8.33 சதவீதம் ஊழியர்களின் வருங்கால ஓய்வூதியத் திட்டத்தில் சேமித்து வைக்கப்படும். இந்த தொகை 58 வயதையை கடந்த பின்பே ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ஊழியர்களுக்கு கிடைக்கும்.
இபிஎப் என்னும் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் சார்பாக செலுத்தப்பட்ட 15.67 சதவீதத்திற்கே வட்டி கணக்கிடப்படுகிறது.
பி.எப் ஆணையம் ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்நிறுவனத்தின் மத்திய அறங்காவலர்கள் குழு கூடி வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கான வட்டியை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யும். மத்திய அரசின் நிதி அமைச்சகம் ஏற்றுக்கொண்ட பிறகே வட்டியானது இறுதி செய்யப்படும்.
வருங்கால வைப்பு நிதித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1952 – 1953 நிதியாண்டில் வட்டியானது 3 சதவீதம் அளிக்கப்பட்டது. 1989 – 1990 நிதியாண்டிலிருந்து 1999 – 2000 நிதியாண்டு வரை வட்டியானது 12 சதவீதம் அளிக்கப்பட்டது. தற்போதுதான் 2019 – 2020 நிதியாண்டில் அளிக்கப்பட்ட 8.5 சதவீத வட்டியானது 2021 – 2022 காலாண்டில் 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு மிகக் குறைந்த வட்டியாக 8 சதவீதம் 1977 – 1978 நிதியாண்டில் அளிக்கப்பட்டது. தற்போது 44 வருடம் கழித்து 8.1 சதவீதம் என்று மிகக் குறைந்த வட்டியை நிர்ணயம் செய்து இருப்பதாக அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன.
ஊழியர்கள் மற்றும் நிறுவனம் செலுத்தும் தொகையானது, வருங்கால வைப்பு நிதியாக வட்டியோடு பரிணமிக்கும். பணிக்காலம் முடிந்த பிறகு ஊழியர்கள் மொத்த தொகையையும் வட்டியோடு பெற்றுக்கொள்ள முடியும். தொழிலாளர்கள் அவசர தேவை அடிப்படையில் மருத்துவ செலவு, சுப செலவுகளுக்கு கூட வருங்கால வைப்பு நிதியில் இருந்து குறிப்பிட்ட அளவு நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.
கொரோனா காலத்தில் மத்திய அரசானது பி.எப் தொகையில் 75 சதவீதம் அல்லது 3 மாதங்களுக்குரிய அடிப்படை ஊதியம், அகவிலைப்படி இதில் எது குறைவோ அந்த அளவை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.
அதனடிப்படையில் ஏப்ரல் 17, 2020 புள்ளிவிவரப்படி, மத்திய அரசானது “கடந்த 15 நாட்களில் 946.41 கோடி பி.எப் பணத்தை பெற்ற 3.31 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தது.
2021 டிசம்பர் 31 நிலவரப்படி 14,310.21 கோடி மதிப்பிலான 56.79 இலட்சம் கோரிக்கைகளை தீர்த்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் கொரோனா காலத்திற்கு முன்பே 2018-ம் ஆண்டு மத்திய அரசானது, ஊழியர்கள் வேலையிலிருந்து நின்ற தேதியிலிருந்து இரண்டு மாதம் ஆன பிறகுதான் தங்களின் கணக்கிலிருந்து 75 சதவீதம் வரையிலும் பணத்தை எடுக்க முடியும் என்பதை தொழிலாளர்கள் அந்த இரண்டு மாதங்களில் கடன்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதால் ஒரு மாதமாக குறைத்தது.
இப்படி இந்த வருங்கால வைப்பு நிதியானது தொழிலாளர்கள் வேலையைவிட்டு நின்றவுடன் ஏற்படும் செலவுகளை சமாளிக்கவும், கொரோனா காலத்தில் தொழிலாளர்களின் மருத்துவ செலவுக்காகவும் பயன்பட்டது மேற்கூறிய புள்ளிவிவரங்களில் இருந்து பார்க்கும்போது தெரிய வருகிறது.
வருங்கால வைப்பு நிதி வாரியம், பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் செய்துள்ள முதலீடுகள் மீது 15 சதவீதம் வரை வருவாய் ஈட்டியுள்ளது. அத்தொகையிலிருந்து 8.5 சதவீதம் கூட வட்டி வழங்க மறுப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று தினகரன் நாளிதழ் 14.3.2022 அன்று தன்னுடைய தலையங்கத்தில் எழுதியுள்ளது. இதே கருத்தை பா.ம.க நிறுவனர் ராமதாஸும் கூறியுள்ளார்.
மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, 2015 முதல் 2018 பிப்ரவரி வரை வருங்கால வைப்பு நிதியிலிருந்து சேமித்து வைக்கப்பட்ட நிதியிலிருந்து சுமார் ரூ.44000 கோடியை பங்குச் சந்தையில் வர்த்தகப் பரிமாற்ற நிதித் திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. இதில் சுமார் ரூ.886 கோடி முதலீட்டை விற்ற வகையில் சுமார் ரூ.1054 கோடி வரையிலும் திரும்பக் கிடைத்துள்ளது.
மேற்கூறியதிலிருந்து பார்க்கும்போது, வருங்கால வைப்பு நிதி வாரியம் இலாபத்தில் இயங்குவது உறுதியாகிறது. ஆனால், அதிலிருந்து தொழிலாளர்களுக்கு பணத்தை கொடுக்கதான் அரசுக்கு விருப்பம் இல்லாமல் உள்ளது.
எந்த சேமிப்பும் இல்லாத தொழிலாளர்கள் தங்களுடைய மருத்துவ செலவுகள் போன்ற திடீர் செலவுகளுக்கு வருங்கால வைப்பு நிதியைதான் நம்பி உள்ளனர். ஆனால், அவர்களுடைய பணத்திலிருந்து வரும் வருவாயில் தன்னுடைய நிதி ஆதாரத்தை பெருக்கும் மத்திய அரசானது, பெரும் பணக்காரர்களான அம்பானி, அதானி போன்றவர்களுக்கு அரசின் நிதியை கார்ப்பரேட் சலுகை என்ற பெயரில் வாரிக் கொடுப்பதில் குறியாய் உள்ளது.
000
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு அரசு கொடுக்கும் எல்லாவித மானியங்களையும், சலுகைகளையும் படிப்படியாக குறைத்துக் கொண்டே வருகிறது. கேஸ் மானியம் குறைக்கப்பட்டது சிறந்த எடுத்துக்காட்டு.
2016 – 2017 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருங்கால வைப்பு நிதியின்மீது வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். 2016 ஏப்ரல் 1-க்கு பிறகு கணக்கில் சேரும் தொகையை திருப்பி எடுக்கும்போது 60 சதவீத தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும் என்றார்.
அதனைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பால், வருங்கால வைப்பு நிதியின்மீது வரி விதிக்கும் பட்ஜெட் அறிவிப்பை வாபஸ் பெறுவதாகவும், அதற்கு பதிலாக வேறுவழிகளில் நிதி ஆதாரத்தை பெருக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அருண் ஜெட்லி அறிவித்த வேறுவழிகளில் நிதி ஆதாரத்தை பெருக்குவதுதான் மோடி அரசு கையாண்டு வரும் படிப்படியாக வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைப்பது.
2014 – 2015 நிதியாண்டு – 8.5%
2015 – 2016 நிதியாண்டு – 8.8%
2016 – 2017 நிதியாண்டு – 8.65%
2017 – 2018 நிதியாண்டு – 8.55%
2018 – 2019 நிதியாண்டு – 8.65%
2019 – 2020 நிதியாண்டு – 8.5 %
2021 – 2022 நிதியாண்டு – 8.1%
2015 – 2016 நிதியாண்டில் 0.30% அதிகரித்தது, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு நல்லது பண்ணுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு அறிவிக்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதி வாரியம்தான் 0.30% அதிகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. மோடி அரசோ 0.30% அதிகரிக்க வேண்டாம், 0.20% அதிகரித்தாலே போதும் என்று போராடியது. மக்கள் மற்றும் தொழிற்சங்களின் தொடர் எதிர்ப்பால் 0.30% அதிகரிக்க மோடி அரசானது ஒத்துக் கொண்டது. 2018 – 2019 நிதியாண்டில் 0.1% அதிகரிக்கப்பட்டதும் தேர்தலை ஒட்டிதான்.
மற்ற நிதியாண்டுகளில் எல்லாம் மோடி அரசானது வட்டி விகிதத்தை 0.1% முதல் 0.15% குறைத்துக் கொண்டுதான் வந்துள்ளது.
இங்கே ஒரு கேள்வி? எல்லா நிதியாண்டுகளிலும் வட்டி விகிதத்தை 0.1% முதல் 0.15% குறைக்கும் மோடி அரசானது, தற்போது இந்த நிதியாண்டில் மட்டும் ஏன் வட்டி விகிதத்தை 0.4% குறைத்துள்ளது.
இதற்கான பதிலை நாம் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் இருந்துதான் புரிந்துகொள்ள முடியும். 2014 தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் முக்கியமானது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, ஸ்வச் பாரத் மற்றும் கருப்பு பணத்தை மீட்டெடுப்பது போன்ற மக்களின் தேவைகளை பொறுத்து வாக்குறுதிகளை அமைந்தன.
ஆனால், தற்போது நடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் குறிப்பாக உ.பி.யில் பிரச்சாரமே இந்துகளுக்கும், முஸ்லீம்களுக்குமான தேர்தல் என்றுதான் இருந்தது. யோகி ஆதித்தநாத் இது 80% இந்துக்களுக்கும் 20% முஸ்லீம்களுக்குமான தேர்தல் என்று கூறினார். பா.ஜ.க.வின் எல்லா தலைவர்களுடைய தற்போதைய பிரச்சாரமும் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய வாக்குறுதிகள் குறைந்து இந்து மதவெறியூட்டும் பேச்சுக்கள் அதிகரித்துள்ளன.
இந்தியாவில் தற்போது புதியசூழல் உருவாகி உள்ளது. காவி பாசிஸ்டுகளின் அடித்தளம் அதிகரித்து உள்ளது. நாள்தோறும் இந்துமுனைவாக்கம் செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மொத்த அரசுக்கட்டமைப்பும் பாசிச ஆட்சிக்கான செயற்கருவியாக படிப்படியாக மாறிக்கொண்டே வருகிறது.
காவி பாசிஸ்டுகள் இந்த பலத்திலிருந்துதான் தங்களின் கார்ப்பரேட் பாசிச சேவைகளை அமைத்துக் கொள்கிறார்கள்.
படிக்க :
♦ தொழிலாளர்களின் PF நிதியைத் திருடும் மோ(ச)டி அரசு
♦ இரண்டு ஆண்டுகள் சம்பளம் நிலுவை : தூய்மைப் பணியாளர் தற்கொலை !
தங்களது அடித்தளம் விரிவடைந்ததன் விளைவாகத்தான் எல்லா நிதியாண்டுகளிலும் வட்டி விகிதத்தை 0.1% முதல் 0.15% வரை குறைத்துவந்த மோடி அரசு, தற்போது இந்த நிதியாண்டில் 0.4% குறைத்துள்ளது. இது வெறும் தொடக்கம்தான். காவி பாசிஸ்டுகளின் அடித்தளம் விரிய விரிய தொழிலாளர் உரிமைகள் மேலும் மேலும் படுகுழியில் தள்ளப்படும்.
இந்த வட்டி விகிதம் குறைப்பை தொழிலாளர் பிரச்சினை என்று தனிப்பட்ட பிரச்சினையாக நாம் பார்க்கக் கூடாது. இந்த காலகட்டத்தில்தான் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு பகிரங்கமாக விற்பது, அதை பட்ஜெட்டிலே பகிரங்கமாக அறிவிப்பது, மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமாக அமல்படுத்துவது, எல்லா மானியங்களையும் மற்றும் சலுகைகளையும் வெட்டுவது, இப்படி எல்லா வர்க்கங்களின் மீதான கார்ப்பரேட் பாசிச தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
கார்ப்பரேட் பாசிசத்தை அமல்படுத்த வேண்டும் என்ற காவிகளின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதிதான் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு.
இவ்வட்டி விகித குறைப்பானது தொழிலாளர் பிரச்சினை, அவர்கள் போராடுவார்கள் என்று இல்லாமல், இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் காவி – கார்ப்பரேட் பாசிசம்தான் என்ற புரிதலிலிருந்து அதை வீழ்த்த எல்லா வர்க்கங்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அப்போதுதான் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழத்த முடியும். மக்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.

அமீர்
சிபிஎம் கருத்துக்கு மறுப்பு : பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் ! | மக்கள் அதிகாரம்
16.03.2022
திருவண்ணாமலை பாலியப்பட்டு உழைக்கும் மக்களின்
சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் !
திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின்
மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்கு மறுப்பு !
பத்திரிகைச் செய்தி
நேற்றைய தினம் (15.03.2022) விகடன் மற்றும் தினமலர் தமிழ் இந்து ஆகிய ஊடகங்களில் திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு மக்கள் ஏறத்தாழ 100 நாட்களில் நெருங்கும் வகையில் சிப்காட் எதிரான போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றார்கள். அந்தப் போராட்டத்தில் சி.பி.ஐ-எம் அமைப்பின் பங்களிப்பு இல்லை என்று கூறி இயக்குனர் லெனின் பாரதி, தனக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக அளிக்கப்பட்ட விருதினை திருப்பிக் கொடுக்க உள்ளதாக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டம் பற்றி சி.பி.ஐ-எம் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரிடம் ஊடகங்கள் கேட்டதற்கு, அவர் “மக்கள் அதிகாரம் அமைப்பினர் இப்போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுவதால் நாங்கள் ஈடுபடவில்லை. சிப்காட் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பில்லாத இடத்தில் சிப்காட் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிப்காட் அமைக்க தமிழக அரசு உறுதியான தகவல் இதுவரை வெளியிடவில்லை என்றும் அதுவரை அழுத்தமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட வேண்டியதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
படிக்க :
♦ கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
♦ தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : பாசிசத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது, எச்சரிக்கை !
பாலியப்பட்டில் சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை அப்பகுதி மக்களே நடத்தி வருகிறார்கள்.
இப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் மற்றும் வினவு ஆகிய ஊடகங்கள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளன.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அம்மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இப்போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தொடக்கம் முதல் இப்போது வரை துணை நிற்கிறது; எதிர்காலத்திலும் துணைநிற்கும்.
விவசாயம் செழிப்பாக உள்ள ஒரு பகுதியின் மக்கள் எங்களுக்கு சிப்காட் தேவையில்லை என்று கூறினார்கள் என்றால் அதைத்தான் ஒரு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அம்மக்களின் கோரிக்கைக்காகத்தான் எந்த ஒரு ஜனநாயக மற்றும் முற்போக்கு, இடதுசாரி அமைப்புகள் துணை நிற்க வேண்டும்.
பாலியப்பட்டு சிப்காட் பிரச்சினையை ஒட்டி கேள்விகள் கேட்கப்படும்போது, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் சிப்காட் அமைக்க வேண்டும் என்று கூறுவது தவறாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கூறிய இரண்டு கருத்துக்களும் மக்களின் கோரிக்கை அல்ல, அவர்களுக்கு எதிரானது ஆகும்.
பாலியப்பட்டில் அரசு சிப்காட்டுக்காக இடத்தை கையகப்படுத்த போகிறோம் என அரசு எதுவும் அறிவிக்கவில்லை என்றால் ஏன் பாலியப்பட்டு உழைக்கும் மக்கள் போராடுகிறார்கள்?
அவர்கள் அறியாமையில் இருக்கிறார்களா அல்லது அரசுக்கு எதிராக உள்நோக்கத்துடன் போராடுகிறார்களா என்பதையும் பாலியப்பட்டு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் போலீஸ் எதற்காக குவிக்கப்பட்டிருக்கிறது? வெளியாட்கள் நுழைவதற்கு ஏன் மறைமுகமாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது? என்பதையும் சி.பி.ஐ-எம் கட்சிதான் விளக்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி என்ற பெயரில் சமரசமாக இருந்து மக்கள் பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பதுதான் சி.பி.ஐ-எம் மாவட்ட செயலாளரின் அறிக்கையில் வெளிப்படுகின்ற கண்ணோட்டம். கூட்டணி தர்மத்துக்காக உழைக்கும் மக்களின் வாழ்வை பணயம் வைப்பது எந்த வகையில் நியாயம் என்பதை அக்கட்சிதான் விளக்க வேண்டும்.
தங்கள் பகுதிக்கு சிப்காட் வேண்டாம் என்று போராடும் திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு மக்களின் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் உடன் இருந்து தோள் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : பாசிசத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது, எச்சரிக்கை !
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூட்டணி பெற்ற வெற்றியை கொண்டாடி மகிழ்ந்ததைவிட உள்ளாட்சித் தேர்தல் வெற்றி கூடுதல் மகிழ்ச்சியை தி.மு.க ஆதரவு தரப்பினருக்கு வழங்கியுள்ளது. இது தி.மு.க அரசின் ஒன்பது மாத நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பேசி வருகின்றனர். “பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் இடமில்லை” என்றும் “அ.தி.மு.க-விற்கு இனி எதிர்காலம் இல்லை” என்றும் சிலர் ஆரூடம் சொல்லி வருகின்றனர்.
மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும், 138 நகராட்சிகளில் 132 இடங்களையும் 489 பேரூராட்சிகளில் 80 சதவிகித இடங்களையும் தி.மு.க கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க மிக பலவீனமாக இருந்த மேற்கு மண்டலத்தில், தற்போது அபார வெற்றியை சாதித்திருப்பது தி.மு.க.வினரின் அளவிடா மகிழ்ச்சிக்கு சிறப்புக் காரணம்.
தனித்து களம் கண்ட பா.ஜ.க தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளதாக அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேசிய அளவில் உள்ள ஆளுங்கட்சி ஆதரவு ஊடகங்களும் இதற்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து வருகின்றன. மற்றொரு பக்கம் இதை தி.மு.க ஆதரவாளர்கள், பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் அனைவரும் நக்கலடித்து பேசி வருகின்றனர்.
படிக்க :
♦ எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
♦ உள்ளாட்சித் தேர்தல்கள் : ஜனநாயக விரோதிகளால் நடத்தப்படும் ‘ஜனநாயக’ நாடகம் !
பத்தாண்டுகளுக்கு பிறகு நடைபெற்று முடிந்திருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் எந்தவகையில் உழைக்கும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை; தங்கள் கட்சி அதிவிரைவாக வளர்ந்துவருவதாக பாசிச பா.ஜ.க.வினர் கூறிவருவதை நக்கலடித்து கடந்து செல்வதா போன்ற கேள்விகளுக்கு விடைகாண நாமும் இத்தேர்தல் குறித்து பேச வேண்டியிருக்கிறது.
‘தேர்தலும்’ ‘ஜனநாயகமும்’ கொள்ளையர்களுக்காக…
சாலை, குடிநீர் வசதி, குடியிருப்பு வசதி என மக்கள் தங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதையும் தேர்தலைப் புறக்கணிப்பதையும் ஒவ்வொரு சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலின்போதும் நாம் பரவலாக காண முடியும். ஆனால், இந்தமுறை ஒன்றிரண்டு பகுதிகளைத் தவிர பரவலாக அத்தகைய கோரிக்கையுடன் கூடிய போராட்டங்களை பார்க்க முடியவில்லை.
மேலும், தற்போது முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் நகர்ப்புறத்திற்கானவை. இந்த நகரங்களில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்படுகிறது. மதுரை, நெல்லை, தஞ்சை போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாட்களுக்கு முன்னர்தான் சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் பெரும்பாலானவற்றை இடிக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களுக்குள் வீடுகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 25,000 வீடுகள் வரை ஒரே நேரத்தில் இடிக்கப்படுவதாக அறிவித்ததால், அடுத்து நம்முடைய வாழ்க்கை எண்ணாகுமோ என்ற பயத்தில் புலம்பிக் கொண்டிருந்தனர் மக்கள். இங்கெல்லாம் எந்த சலனமும் இல்லாமல் வாக்களிப்பு நடந்துள்ளது.
தங்கள் விளைநிலத்தை அழித்து நாசகார சிப்காட் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் திருவண்ணாமலை பாலியப்பட்டு கிராம மக்களின் போராட்டம் கண்டுகொள்ள நாதியற்று போனது. கொஞ்சமும் மன உறுத்தலின்றி வாக்களித்துள்ளனர் சுற்றுவட்டார கிராமத்தினர்.
தங்களது வாழ்வாதாரமும் உரிமைகளும் நேரடியாகப் பறிக்கப்படும் நிலையிலும் அதற்கும் இந்த தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; தேர்தல் வந்தால் ஓட்டுப் போட வேண்டும் என்ற சுரணையற்ற மனநிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டிகிறார்கள். “தேர்தல் வேறு, ஜனநாயக உரிமைகள் வேறு” என்ற கருத்தாக்கத்தை இத்தனை ஆண்டுகளில் ஆளும் வர்க்கமும் உழைக்கும் மக்களிடம் புகுத்தி பழக்கிவிட்டுள்ளது.

பிறகு யாருக்குத்தான் இந்த ‘வேர்மட்ட ஜனநாயகம்’; ஒவ்வொரு கட்சியிலும் வேர்மட்டத்திலுள்ள ‘குட்டி அலிபாபாக்கள்’ கொள்ளையடிப்பதற்கான ‘ஜனநாயக’ ஏற்பாடுதான் உள்ளாட்சித் தேர்தல். ஒவ்வொரு வார்டிலும் 10 இலட்சம் முதல் 40 இலட்சம் வரை வாரியிறைத்து செலவு செய்ய தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கட்சிகளில் சீட் வழங்கப்பட்டது. இத்தகையவர்களின் மக்கள் சேவை எப்படி இருக்கும்!
இந்த கூத்தெல்லாம் தெரிந்தபோதும்கூட தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு விதித்த செலவு வரம்பு என்ன தெரியுமா? பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் அதிகபட்சமாக ரூ.17,000, நகராட்சி வார்டு உறுப்பினர் என்றால் அதிகபட்சமாக ரூ.34,000, மாநகராட்சி பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.85,000 வரை செலவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்தது.
உள்ளாட்சியில் சந்தி சிரித்த ‘சமூகநீதி’!
தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லையென்று கூறி, அதி.மு.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாக தேர்தலை சந்தித்தது பா.ஜ.க; நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தத்தமது பணபலத்திற்கு ஏற்ப வேட்பாளர்களை நிறுத்தின.
கடந்த சட்ட மன்றத்தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்று தி.மு.க அறிவித்தாலும் கூட்டணிக் கட்சியினருக்கான பங்கீட்டை அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் மல்லுக்கட்டி, அவமானமடைந்தும் சோர்வடைந்தும் போயின தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள்.
கும்பகோணம் நகராட்சியில் ஒரே ஒரு வார்டு மட்டுமே சி.பி.எம்-க்கு ஒதுக்கப்பட்டது. அந்த வார்டிலும் தி.மு.க.வின் வட்டச்செயலாளர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். இது பற்றி பலமுறை முறையிட்டும் பலன் இல்லாததால் சி.பி.ஐ கட்சி சார்பில் போட்டியிட்ட பாரதி என்ற வேட்பாளர் வேட்புமனுவை திரும்பப்பெற்றார்.
கோவையில் வி.சி.க.விற்கு ஒரு வார்டு கூட அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அம்மாவட்டத்தில் எங்கும் திருமாவளவனின் பெயரோ, படமோ தி.மு.க.வினரால் பயன்படுத்தப்படவில்லை. கோவையைப் போலவே பல பகுதிகளிலும் திருமாவளவனின் படம் பயன்படுத்தப்படவில்லை. இது குறித்து வெளிப்படையாக அக்கட்சியினர் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டு தொண்டர்களை சமாதானப்படுத்த வேண்டிய சோகமும் நடந்தது.
ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் தி.மு.க.வினர் சுயேச்சையாக நின்றனர். தங்களது கட்சியினருக்கு சீட்டுகள் வழங்கப்படாததால், காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் சில பகுதிகளில் கூட்டணியை முறித்துக்கொண்டு தனியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டன.
கூட்டணிக் கட்சியினருக்கு சீட் ஒதுக்கியதால் (ஆங்காங்கு சில வார்டுகள்தான் என்ற போதிலும்) ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.வினர்; ஆளுங்கட்சியான தி.மு.க தங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை வழங்காததால் ஆர்ப்பாட்டம் செய்த கூட்டணிக் கட்சியினர் என ‘சமூக நீதி’ உள்ளாட்சியில் சந்தி சிரித்துவிட்டது.
இதுபோக ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தங்களுக்கு சீட் வழங்கவில்லை என்று உட்கட்சி பூசல் வேறு. காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் பி.வி. தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலேயே தர்ணா போராட்டம் நடத்தினார். முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், கூட்டணி தர்மத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என கட்சியினருக்கு வேண்டுகோள் வைத்தார்.

‘கூட்டணி தர்மம்’ குடைசாய்வது பற்றி பொதுவெளியில் நாறுவதைத் தடுப்பதற்காக தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலின், “கூட்டணிக் கட்சியினருக்கு எதிராக தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் தி.மு.க.வினர் உடனே மனுக்களை வாபஸ் பெற வேண்டும்; இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 56 பேரைத் தற்காலிக நீக்கம் செய்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக அமைந்தது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல். கட்சித் தலைமையால் கூட்டணிக் கட்சியினருக்காக ஒதுக்கப்பட்ட பல பேரூராட்சி, நகராட்சி தலைவர் பொறுப்புகளை ரவுடித்தனம் செய்து தி.மு.க.வினரே அராஜகமாக கைப்பற்றிக் கொண்டார்கள். மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை கடத்திய சம்பவங்களும் அரங்கேறின.
வி.சி.க.வினருக்கு ஒதுக்கப்பட்ட கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை தி.மு.க.வினரே கைப்பற்றிக் கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி மாவட்டம் அல்லிநகர் நகராட்சித் தலைவர் பதவியையும் கடைசி நேரத்தில் தி.மு.க உள்ளூர் கவுன்சிலரே கைப்பற்றிக் கொள்ள, அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது. சி.பி.ஐ-க்கு ஒதுக்கப்பட்ட கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியும் அதேபோல தி.மு.க கவுன்சிலரால் கைப்பற்றப்பட்டது.
சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சியில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சி.பி.எம் கட்சி வேட்பாளர் என். சிவராஜ் மீது தாக்குதல் நடத்தி தேர்தல் முடியும் வரை அவரை தனியொரு அறையில் அடைத்துள்ளனர். மேலும், உடன் வந்த கட்சித் தலைவர்களை தாக்கி விரட்டிவிட்டு அதிகாரிகள், போலீசுப் படை உதவியுடன் தலைவர் பதவியை தி.மு.க.வைச் சேர்ந்தவரே கைப்பற்றியுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளாளூர், மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் சொந்த கட்சியினரே கோஷ்டியாக பிரிந்து மோதிக்கொள்ளும் சூழல் உருவானதால், அப்பகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
தேர்தல் என்பதே ஒரு பிசினஸ் ஆகிவிட்ட பின், உள்ளாட்சி தேர்தல் போன்றவைதான் கீழ்மட்ட கட்சி ‘தலைவர்’களுக்கு முக்கிய பிழைப்பாதாரம். கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடக்காமல் ‘காய்ந்து போயிருந்த’ கீழ்மட்ட அணிகள் ‘கட்சிக் கட்டுப்பாட்டை’ மீறும் செயலை எந்தக் கட்சியால்தான் கட்டுப்படுத்த முடியும்; அதுவும் தனது கட்சி ஆட்சி நடக்கும்போது எளிதாக வென்றுவிட முடியும் எனத் தெரிந்தும் எந்த தொண்டன்தான் வேடிக்கை பார்ப்பான்.
இந்த இலட்சணத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதானது சமூகநீதி சாதனையாக பீற்றிக் கொள்ளப்பட்டது. நடைமுறையில், வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட பெண்கள் அனைவரும் உள்ளூர் தலைவர்களின் மனைவி, சகோதரி, மகள் ஆகியோரே. பிரச்சாரத்திலும் பேனரிலும் அத்தலைவர்களின் பெயரோடு இணைத்துதான் வேட்பாளர் பெயரையே பிரச்சாரம் செய்தார்கள். இதெல்லாம் ஊரறிந்த கூத்து!
இது திராவிடக் கொள்கையின் வெற்றியா?
ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் தி.மு.க.வின் தலைமைச் செயலாளராகவும் இருந்த கு.க. செல்வம் பா.ஜ.க.விற்குத் தாவி, தற்போது மீண்டும் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்பட்டதே அக்கட்சியின் ‘கொள்கை’ அரசியலுக்கு சரியான சான்று.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள கப்பியறையில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து வேட்பாளரை நியமிக்காமல் பா.ஜ.க.வை போட்டியின்றி வெற்றிபெற வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும், நாம் தமிழர் கட்சி மட்டுமே தனது வேட்பாளரை வாபஸ் பெறவில்லை.
நாகர்கோயில் மாநகராட்சி தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலின்போது, பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நான்கு தி.மு.க கவுன்சிலர்களே வாக்களித்த செய்தி (அ.தி.மு.க மற்றும் சுயேட்சைகள் ஆதரவையும் சேர்த்து பா.ஜ.க.விற்கு 20 ஒட்டுகளே இருந்த நிலையில், 24 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார் பா.ஜ.க வேட்பாளர்) வெளியாகி நாறுகிறது. இதுதான் தி.மு.க அணிகளிடம் உள்ள ‘கொள்கைப் பிடிப்பு’.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அ.தி.மு.க – பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மேற்கு மண்டலத்திலேயே தி.மு.க மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பது குறித்து பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றனர். எனில், தி.மு.க.வின் வெற்றியை பா.ஜ.க.வின் தோல்வியாக எடுத்துக் கொள்ளலாமா? இவ்வாறு நினைப்பதும், அதன் அடிப்படையில் தி.மு.க.வின் மேற்கு மண்டல வெற்றியைப் பார்ப்பதும் ஆபத்தான புரிதலாகும்.
மற்ற ஓட்டுக் கட்சிகளைப்போல அல்ல பா.ஜ.க, அது பார்ப்பன இந்துமதவெறி சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட பாசிஸ்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் தேர்தல் கட்சி. மற்ற ஓட்டுக் கட்சிகளைப்போல பெயரளவில் கொள்கையையும் வெறும் கவர்ச்சிவாத அரசியலையும் மட்டுமே வைத்து மக்களை ஈர்க்க கூடிய அமைப்பு அல்ல.
பல ஆண்டுகாலம் கோவை பகுதியில் அது உருவாக்கி வைத்த இந்து முனைவாக்க அடித்தளமெல்லாம் தி.மு.க.வின் வெற்றியால் ஒரு நொடியில் காணாமல் போய்விட்டதாக கருதுவது அடிப்படையிலேயே பகுத்தறிவற்ற சிந்தனை. அப்படியானால் மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வின் வெற்றியை எப்படி பார்ப்பது என்ற கேள்வி எழலாம்.
கே.என். நேரு, செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் போன்றவற்றைகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து பணத்தை வாரியிறைத்தும் இதுநாள்வரை தான் மேற்கொண்டுவந்த கவர்ச்சிவாத திட்டங்கள் – விளம்பரங்கள் மூலமும் பெற்ற வெற்றியே தி.மு.க.வின் தேர்தல் வெற்றி.
இதில், செந்தில் பாலாஜியும் தோப்பு வெங்கடாச்சலமும் முன்னாள் அ.தி.மு.க பெருச்சாளிகள் என்பதால், அ.தி.மு.க செல்வாக்காக உள்ள மேற்கு மண்டலத்தில் எப்படி காய் நகர்த்தி காரியத்தை முடிக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்கள்.
மேலும், எந்த கட்சி ஆளும் கட்சியோ, எந்த கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளதோ அவர்களுக்கு பார்த்து வாக்களிப்பதுதான் பெரும்பான்மை வாக்காளர்களின் பொதுப்புத்தி. இந்த அம்சமும் சேர்வதால்தான் பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறக் கூடிய சூழல் உள்ளது. கூடுதலாக, தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் அ.தி.மு.க.வின் ஊழல்களை அடுக்கடுக்காக அம்பலப்படுத்தியதும் அதன் தலைவர்கள் வீட்டில் தொடர்ச்சியாக ரெய்டுகளை நடத்தி பொதுவெளியில் அவர்களை நாறடித்ததும் சேர்ந்து வினையாற்றியிருக்கிறது.

பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தனித்து நின்றது கணிசமாக வாக்கு வங்கியை பிரித்துள்ளதும் இக்கட்சிகளின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அப்படி இருந்தும்கூட கோவை மாவட்டப் பகுதிகளின் பெரும்பான்மை வார்டுகளில் பா.ஜ.க இரண்டாம் இடம், மூன்றாம் இடம் வந்திருக்கிறது. இதிலிருந்துதான் பா.ஜ.க.வின் பலத்தை பரிசீலிக்க வேண்டுமே ஒழிய, வெற்றி பெற்றதை மட்டும் வைத்தல்ல.
சுருக்கமாக, தி.மு.க.வின் வெற்றி கொள்கை ரீதியானது அல்ல. கோவையை பார்த்து பேசுபவர்கள் கன்னியாகுமரியை விட்டுவிடுகிறார்கள். 9 மாத ஆட்சி சாதனை கன்னியாகுமரி மாவட்ட மக்களை ஏன் ஈர்க்கவில்லை என பரிசீலிப்பதில்லை. மேற்கில் பா.ஜ.க வெற்றி பெறுவது தற்காலிகமாக தள்ளிப் போயிருக்கிறது என இளைப்பாறுதல் பெற்றுக் கொள்ளலாமே ஒழிய, பா.ஜ.க.வை வீழ்த்திவிட்டதாக மகிழ்வது பகுத்தறிவுக்கு முரணானது. நம்மை செயலின்மைக்கு தள்ளும் அபாயமிக்கது.
பா.ஜ.க.வின் வளர்ச்சியை நக்கலடிப்பதற்கு பின்…
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டு 308 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்த முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் பார்வை என்ன?
பா.ஜ.க.விற்கென்று சுயேட்சை பலமே இல்லை; அ.தி.மு.க.வின் முதுகில் சவாரி செய்ததன் மூலமே சட்டமன்றத் தேர்தலில்கூட நான்கு தொகுதிகளை வென்றது என்பதே அவர்களின் மதிப்பீடு. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க அறிவித்தபோது, “நோட்டா பொத்தான் இல்லை என்ற துணிச்சலில் பா.ஜ.க களமிறங்கியுள்ளது” என்று பகடி செய்தார்கள்.
தேர்தல் முடிவு வந்த பிறகு, “தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது. நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி” என பேசினார் அண்ணாமலை. அதன் மிகைப்படுத்தலை ஒதுக்கிவிட்டு, பாசிச பா.ஜ.க.வின் மதவெறி அரசியலுக்கு தமிழகத்திலும்கூட குறிப்பிட்ட பகுதிகளில் அடித்தளம் இருக்கிறது; இது ஒரு அபாயம்; பாசிச எதிர்ப்பாளர்கள் மக்களிடம் தீவிரமாக வேலைசெய்ய வேண்டிய தேவை உள்ளது என்று நாம் பரிசீலிப்பதில்லை. மாறாக, பா.ஜ.க.வின் வெற்றியை பகடிசெய்து ஆறுதலடைந்து கொண்டிருக்கிறார்கள் முற்போக்காளர்கள்.
“கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் பா.ஜ.க அதிக தொகுதிகளை வென்றிருக்கிறது. சென்னை 134-வது வார்டு பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு மாம்பலம் தொகுதி. பா.ஜ.க கோவை மாவட்டத்திலேயே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. 2011 தேர்தலில் பா.ஜ.க தனித்து களம் கண்டபோது 226 வார்டுகள் பெற்றது. தற்போதைய தேர்தலில் 308 வார்டுகள் பெற்றுள்ளது. இரண்டையும் ஒப்பிட்டால் பா.ஜ.க வளர்ச்சி சதவிகிதம் 0.63 சதவிகிதம்தான்” – இவையெல்லாம் பா.ஜ.க.வின் வெற்றியெல்லாம் ஒன்றுமேயில்லை அல்லது பெரிதுபடுத்த தேவையில்லை என்பதற்காக சொல்லப்படும் வாதங்கள்.

இதிலிருந்தே நாம் கேள்வியை எழுப்புவோம். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் தானே உள்ளது. இல்லை, அது நீங்கலாகத்தான் பெரியார் மண்ணை கணக்கெடுக்க வேண்டுமா. மேலும் 2011 தேர்தலுடன் ஒப்பிட்டு 0.63 சதவிகிதம்தான் வளர்ச்சி என்கிறார்கள். 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகுதான் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்டு மோடி கொண்டுவந்த பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து நாடு முழுக்கவும் குறிப்பாக தமிழகத்திலும் பா.ஜ.க எதிர்ப்பு தீவிரமானது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி நீட் எதிர்ப்பு போராட்டம், காவிரி உரிமை போராட்டம், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என பல போராட்டங்கள் 2011-க்கு பின்னர் நடைபெற்றவைதான்.
இந்த அடிப்படையில் பார்த்தால், 2011 தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெற்றாலேகூட பா.ஜ.க குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ந்து வருகிறது என்றுதான் பரிசீலிக்க முடியும். ஆனால், கூடுதலாக 0.63 சதவிகிதம் வளர்ச்சி வேறு பெற்றிருக்கிறது. “தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை” என்று நாம் பெருமை பேசுவது மிகைப்படுத்தல் இல்லை என்றால் இதை எப்படி பரிசீலிப்பது?
ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய நாயகனான இராமனை கொளுத்திய மண்ணில், காந்தியை சுட்டது கோட்சே என்று பேசுவதற்கு போலீசு தடை விதிக்கிறது. ஆனால், “நான் கோட்சேவின் சித்தாந்தப் பேத்தி” என்று பேசிய ஒரு பயங்கரவாதி தேர்தலில் நின்று பிரச்சாரம் செய்ய முடிகிறது. இது உ.பி-ல் நடக்கவில்லை. தமிழகத்தில் நடக்கிறது.
“நோட்டாவுடன் போட்டிபோடும் பா.ஜ.க; ஒத்த ஓட்டு பா.ஜ.க.” என்று ஒருபுறம் நக்கலடிப்பதும்; இன்னொருபுறம் “ஒரு மாவட்டத்தில் பெற்றதெல்லாம் பெரிய வெற்றியா? 0.63 சதவிகிதமெல்லாம் ஒரு வளர்ச்சியா?” என்று பேசுவதும் ஒருவகை கலாச்சாரம்.
விவகாரத்தை உள்ளபடியே பரிசீலிக்காமல், ஒருவரை/ஒன்றை பகடி செய்வதற்காகவே விசயத்தை தங்களுக்கேற்ப முறுக்கி, தேவைப்படுவதை மட்டும் பொறுக்கி எடுத்து பிரச்சாரம் செய்யும் மீம்ஸ் கலாச்சாரம். மீம்ஸ்-களை பொறுத்தவரை அதில் பரிசீலிப்பதற்கெல்லாம் ஒன்றுமில்லை; நக்கலடிப்பது ஒன்றே நோக்கம். ஆபத்தான பல விசயங்களைகூட வெறும் நகைத்துவிட்டு கடந்துசெல்ல நம்மை பழக்கப்படுத்துவது மீம்ஸ்-களின் எதிர்மறையான அம்சம்.
பா.ஜ.க.வை நக்கலடிக்கும் முற்போக்காளர்களுக்கு இதை ஒத்த சிந்தனைதான் உள்ளதே ஒழிய பரிசீலனை உணர்ச்சி அறவேயில்லை. பாசிஸ்டு கட்சியைப் பற்றிய இத்தகைய சிந்தனை போக்கு பாசிச எதிர்பாளர்களை சிந்தனை அளவிலும் செயல்பாட்டளவிலும் நிராயுதபாணியாக்கி அதன் வளர்ச்சிக்கு வழிகோலக்கூடிய அபாயமிக்கது.
தேர்தலுக்கு அப்பால்…
தி.மு.க.வுடன் ஒப்பிட்டால் பா.ஜ.க பெற்றிருப்பது மிக சொற்ப இடங்கள்தான், இதனால் எதையும் சாதித்துவிட முடியாது என்று கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
மேலும், இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒதுக்கும் சொற்ப இடங்களுக்குள் அடங்காமல் பா.ஜ.க தனித்து நின்று போட்டியிட முடிவு செய்தது என்பது, போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதால் அல்ல. இத்தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பரவலாக தனது மதவெறி அரசியலை பிரச்சாரம் செய்வதும், அ.தி.மு.க.வை மொத்தமாக ஓரங்கட்டிவிட்டு தி.மு.க.வை எதிர்க்கக்கூடிய திராணியுள்ள ஒரே கட்சி பா.ஜ.க மட்டுமே என ஒரு அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதும்தான் நோக்கம்.
படிக்க :
♦ NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !
♦ நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !
“தி.மு.க. எண்ணற்ற கோயில்களை இடித்துவிட்டது, லாவண்யா விசயத்தில் மதமாற்ற கும்பலுக்கு துணை நிற்கிறது, பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவது உள்ளிட்டு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது, சட்ட ஒழுங்கை சீர்குலைத்துவிட்டது – எங்கள் கட்சி அலுவலகத்தில் ஆளை வைத்து குண்டு போட்டுவிட்டது” போன்றவைதான் இத்தேர்தலில் பா.ஜ.க.வின் பிரச்சாரங்களாக இருந்தன. தி.மு.க-வை இவை ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளினார்கள் காவிகள்.
இதுபோன்ற உத்திகள்தான், நாளை தி.மு.க.வின் மீது மக்கள் அதிருப்தி கொள்ளும்போது அக்கட்சிக்கு எதிரான ஒரே மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கு பா.ஜ.க.விற்கு முன்தயாரிப்பாக அமையும். பா.ஜ.க.வின் தேர்தல் பங்கேற்பை இந்த கோணத்திலும் அணுக வேண்டும்.
மற்றபடி, ஒரே தேர்தல் பிரச்சாரத்தில் கொடி கட்டி பறக்க வேண்டும் என்ற நப்பாசையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு கிடையாது. தமிழகத்தில் வேரூன்றுவதற்காக அவர்கள் செய்யும் நீண்ட நெடிய முயற்சியில், இது ஒரு படி அவ்வளவுதான். படிப்படியான முன்னேற்றம் என்பதுதான் அவர்களது இலக்கு. இது புரியாமல் “ஒத்த ஓட்டு பா.ஜ.க” என நாம் கலாய்த்துக் கொண்டிருந்தால் நமக்கு எதார்த்தம் புரியவில்லை என்று பொருள்.
சுருக்கமாகச் சொன்னால், இந்த தேர்தல் களம் என்பது பாசிஸ்டுகள் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற துணைசெய்வதுதானே தவிர, பாசிச எதிர்பாளர்களுக்கான கருவியாக ஒருபோதும் பயன்படுத்த முடியாத ஒன்று.
பாசிச எதிர்ப்புக்கான களம் “தேர்தல்களுக்கு அப்பால்” உள்ளது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, ஷாகீன்பாக், டெல்லிச் சலோ என மக்கள் போராட்டங்களில் மையம் கொண்டுள்ளது.

மருது
தீட்சதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய் ! – சென்னை ஆர்ப்பாட்டம் !
“தில்லை இருப்பது தமிழ்நாடா? அல்லது அதற்குள் ஒரு தனிநாடா?
தில்லை நடராஜர் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் கொண்டுவர சிறப்பு சட்டம் இயற்று!
இலட்சுமி என்ற பெண் சிவபக்தையை ஜாதி சொல்லி இழிபடுத்திய தீட்சதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்! சிறையில் அடை!”
என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 11.03.2022 அன்று காலை 11 மணிக்கு மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம், மாநிலப் பொருளாளர், தோழர் அமிர்தா தலைமை தாங்கினார். கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகளின் தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
படிக்க :
♦ தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை ! – திருவாரூர் ஆர்ப்பாட்டம் !
♦ தில்லையில் தமிழுக்குத் தடை : நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தோழர் அமிர்தா தனது தலைமை உரையில், “தில்லை சிதம்பரம் கோயில் மக்கள் சொத்து, ஆனால் தீட்சத கும்பல் ஆக்கிரமித்து கொண்டு அட்டூழியம் செய்து வருகிறது. சிதம்பரத்தில் உள்ள போலீசு நிலையத்தில் பல வழக்குகள் தீட்சத கும்பல் மீது இருக்கிறது. சைக்கிள் திருடிய தீட்சதர், கொலை வழக்கில் தீட்சதர், தட்டில் விழும் காசுக்கு சண்டை போட்டு கொண்டு அடித்தடி என ரவுடி கும்பலாக இவர்கள் இருக்கின்றனர். பக்தர்களை அடிப்பது, சமீபத்தில் இலட்சுமி என்ற சிவபக்தை சிற்றம்பல மேடையில் ஏறி வழிப்பட சென்றபோது ‘பரச்சி’ என்று சொல்லி இழுவுப்படுத்தி அடிக்க முற்பட்டனர். இதை இணையத்தில் வீடியோவாக அனைவரும் பார்த்தோம். ஆனால், இலட்சுமி மீது சொம்பை திருடினார் என பொய் வழக்கு பதிந்துள்ளனர் திட்சதர்கள். இவர்களின் யோக்கியதை இது தான்.
3000 பேர் கைலாயத்திலிருந்து வந்தோம் அதில் ஒருவரை காணவில்லை, தேடினால் அவர்தான் சிவன் அதனால் சிவன் வகையறா நாங்கள் என ஒரு புருடா கதையை சொல்லிதான் இவர்கள் இந்த கோயிலுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். நந்தன் நுழைந்த வாயிலை இடித்துதள்ள வேண்டிய கடமை முற்போக்காளர்களாகிய நம் தோள்களின்மேல் உள்ளது. தமிழக அரசு, சிதம்பரம் கோயிலை இந்துஅறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என்று பேசினார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தனது உரையில், “இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று ஹிஜாப் பிரச்சினை ; மற்றொன்று சிதம்பரம் தில்லை கோயில் பிரச்சினை.
தமிழ்நாட்டில் மட்டும்தான் தேர்தலில் ஈடுபடாத இயக்கங்கள் ஒரு முற்போக்கு செயல்திட்டத்தை முன்வைத்து மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி பார்க்க முடியாது. முற்போக்கு சிந்தனையுள்ள கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய இயக்கங்கள் இணைந்து இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது என்பதே தீட்சதர்களின் வாதம். இதை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது என்பதே அவர்களின் வலிமை. தமிழில் வழிபடும் உரிமையை தடுக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பானுமதி தீர்ப்பு கொடுத்தார். ஆனால், உச்சநீதிமன்றத்திற்கு சென்று சு.சாமி போன்றோர் தீட்சத கும்பலுக்கு ஆதரவான தீர்ப்பை வாங்கியுள்ளனர். இது தொடர்ச்சியான நீண்ட நெடிய போராட்டம். இன்றும் தொடர்கிறது.
இன்று தில்லையிலே பல அமைப்புகள் இதற்காக போராடுகிறார்கள். ஆனால் ஊடகங்கள் எதுவும் வெளியிடுவதில்லை. சமூக வலைதலங்களில்தான் செய்திகள் வருகிறது. மேலும் தில்லையில் தீண்டாமையை கடைப்பிடித்து சிவபக்தை இலட்சுமியை அடித்துள்ளனர். அதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தீட்சதர்கள்மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஏன் அவர்களை கைது செய்யவில்லை? காரணம் என்ன? உடனடியாக அவர்களை கைதுசெய்ய வேண்டும்” என்று பேசினார். மேலும், தில்லை கோயில் வரலாற்றை அம்பலப்படுத்தி பேசினார். தீட்சதர்களின் வரலாற்று புளுகுகளை அம்பலப்படுத்தி நீண்ட உரையாற்றினார்.
தமிழ்த் தேச மக்கள் முன்னணியை சேர்ந்த தோழர் செந்தில் அவர்கள் தனது உரையில், “எந்த ஆடை அணிய வேண்டும்? ஆடை அணிவது அவரவர் சொந்த உரிமை என்ற கருத்தைக் கொண்டவர்கள் நாங்கள் அதனால்தான் நாங்கள் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக நிற்கின்றோம். தில்லையிலே கனகசபையில் யார் ஏறி பாட வேண்டும் என்பதில்தான் தில்லை பிரச்சினை எழுகிறது. இந்திய அரசியலைப்பின் சட்டப்பிரிவு 25, 26 என்பது சாதியைப் பாதுகாக்கிறது. அதனால்தான் அதை நாங்கள் எறிக்கிறோம் என்று பெரியார் சிறை செல்லும் போராட்டத்தை நடத்தினார். கருவறை முதல் கல்லறை வரை எங்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போராடுவதை கொள்கையாகக் கொண்டவர்கள் நாங்கள். சாதியை சொல்லி இலட்சுமி பாட அனுமதிக்காததால் தீண்டாமைக்கு எதிரானப் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வோம்.” என்று பேசினார்.
தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் அவர்கள் தனது உறையில், “ஹிஜாப் அணியலாமா என்பது அந்தப் பெண்ணின் உரிமை. முஸ்லீம் பெண்களின் கல்வியை தடை செய்யவே ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் ஹிஜாப் அணிய கூடாது என்று தடை விதிக்கிறது. பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். இந்த ஆட்சியில் தீட்சிதர்களுக்கு முடிவு கட்டவில்லையென்றால் எந்த ஆட்சியில் முடிவு கட்ட முடியும்” என்று பேசினார்.
இ.க.கட்சி (மா-லெ) ரெட் ஸ்டார், அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர், தோழர் கார்க்கி வேலன் தனது உரையில், “தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதும் வணிக சிலிண்டரின் விலை ரூ.109 விலை உயர்த்தி உள்ளது ஒன்றிய அரசு. வாக்களித்த மக்களுக்கு கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பரிசாக வழங்கப்படும் சூழலில்தான் உள்ளோம். நாம் ஓட்டுபோட்டுதான் கட்சிகள் ஜெயிக்கிறது என நினைத்துக் கொள்கிறோம்.
முதலாளிகளுக்கு அடிவருடிகளாக யார் வேலை செய்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். முதலாளிகளின் அனைத்து திட்டங்களையும் பாஜக தங்குதடையின்றி அமல்படுத்தும் என்பதற்காகவே அவர்களுக்கு ஆட்சி வழங்கப்படுகிறது. தஞ்சாவூரில் லாவண்யா மரணத்தை மதக் கலவரமாக்க துடிக்கிறது பாஜக அரசு. தில்லை கோயில் 2008-ல் தீட்சிதர்களுக்கு சொந்தம் இல்லை என்று தீர்ப்பு வந்தது. அப்போது அங்கு உண்டியல் வைக்கப்பட்டபோது வருடத்திற்கு ஒன்றரை கோடி வருமானம் வந்தது.
பாஜகவிற்கும் பார்ப்பனியத்துக்கும் எதிராக தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில் எதிர்ப்பு வரும். நீண்ட நெடிய மக்கள் சொத்து தனி நபர்களால் சூரையாடப்படுவதை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடுவதன் மூலம் வெற்றி காண்போம்” என்று பேசினார்.
புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் சீராளன் அவர்கள் தனது உரையில், “பாபர் மசூதியை இடித்து பார்ப்பன கும்பல் தனது சொந்தம் மாற்றிக் கொண்டது. ஒரு காலத்தில் காளிக்கு சொந்தமானது நடராஜர் கோயில். நடனப் போட்டியில் காளியை தோற்கடித்து நடராஜன் வலதுகாலைத் தூக்கி காட்டியதால் காளி தலை குனிந்து தனது இடத்தை மாற்றிக் கொண்டு போய்விட்டார். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் விஷ்ணுவின் சிலையை அகற்றி நடராஜனை மட்டும் நிறுவினர்.
சட்டப்பிரிவு 26-ஐ வைத்துக்கொண்டு நாங்கள் தனித்த பிரிவினர் என்று கூறி தில்லையை தங்கள் சொத்தாக வைத்துக் கொண்டுள்ளனர் தீட்சதர்கள். சுப்ரமணியசுவாமி தில்லைக்கு யாரும் சொந்தம் கொண்டாடவரவில்லை இது தீட்சதர்கள் சொத்து என்கிறார். 8 கோடி மக்கள் கேட்கிறோம் இது எங்கள் சொத்து. நாங்கள் உரிமை கோருகிறோம். தில்லை தமிழகத்தின் 8 கோடி மக்களுக்கான சொத்து எனவே தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என்று பேசினார்.
தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தோழர் மகிழன் தில்லை கோயில் தமிழர்களின் சொத்து என்பதை வலியுறுத்தி பேசினார். மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் தோழர் சேல் முருகன் அவர்கள் தனது உரையில், “ஹிஜாப் அணியத் தடை தில்லையில் தமிழுக்கு தடை. ஒரு இடத்தில் மதத்தைப் பாதுகாக்கிறான்; மற்றொரு இடத்தில் மதத்தின் உரிமையை மறுக்கிறான். ஹிஜாப் வந்த பிறகுதான் முஸ்லீம் பெண்கள் கல்வி கற்க வருவதாக முதலாளித்துவ பத்திரிகைகளே கூறுகின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி இருக்கும்போது மக்களை தூண்டி மோதிக்கொள்ள செய்வதற்காகதான் ஹிஜாப் தடை என்ற பிரச்சினையை கிளப்புகிறார்கள்.
தீட்சதர்களுடைய சொத்து அவருடைய பயன்பாட்டிற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று சட்டம்போட்டு பாதுகாக்கப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி, கல்லூரிகள் வைத்து கார்ப்பரேட் இணையாக சம்பாதிக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் சேவைத்துறை நடத்தவில்லை. அரசமைப்புச் சட்டம் 25, 26 சிறுபான்மை மக்கள் உரிமைகளை முடக்குகிறது. ஹிஜாப்பில் இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சொன்ன நீதிமன்றம்தான் தில்லையில் தீட்சிதர்களை பாதுகாக்கிறது. ஆன்மீகத்தில் மொழி உரிமைக் காலங்காலமாக மறுக்கப்பட்டு வருகிறது. தமிழ் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம்தான் ஆதிக்கத்தில் உள்ளது. இதனை எதிர்த்துப் போராடி தமிழை அதிகாரத்திற்கு கொண்டுவர வேண்டும்” என்று பேசினார்.
படிக்க :
♦ கர்நாடகாவில் ஹிஜாப் தடை – தில்லை கோவிலில் தமிழுக்கு தடை || தர்மபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
♦ இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை! – தருமபுரி, கோவை, மதுரையில் ஆர்ப்பட்டம்!
மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் தனது உரையில், “தில்லை தீட்சிதர்களின் சொத்து என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று 2008-ல் உயர்நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. மன்னராட்சி காலத்தில் மக்களுடைய சொத்திலிருந்து கட்டப்பட்டதே தில்லைக் கோயில். இது அரசிற்கு சொந்தம். ஆர்.எஸ்.எஸ் – பாஜக கேட்கலாம் இந்து கோயில்கள் மட்டுமே ஏன் அரசுடமையாக்க வேண்டும் என்று? சர்ச், மசூதி போன்றவைகள் அவர்களே சொந்த செலவில் கட்டியது.
மன்னர் ஆட்சி முடிந்துவிட்டது. அந்த அடிப்படையில் அரசாங்கம்தான் இதனை நிர்வகிக்க வேண்டும். சிற்றம்பல மேடையில் பாடலாம் என சட்டம் போட்ட பின்பும் சிவனடியார் ஆறுமுகசாமி அங்கு பாடுவதற்கு தீட்சிதர்கள் தடையாக இருந்தனர். சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலையே பார்ப்பனர்களுக்கு உள்ளது. வக்கீல், வழக்கு தொடுத்தவர்கள், உழைக்கும் மக்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும்; ஆனால், பார்ப்பனர்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு கட்டுப்படமாட்டார்கள். அரசு கையில் எடுத்து நடத்த சட்டமியற்ற வேண்டும். அதனை மக்கள் நடைமுறைப்படுத்த நாம் துணை நிற்போம்” என்று பேசினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
9176801656
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
“எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள்; போராட்டமே எங்கள் வாழ்க்கையாகி விட்டது; ஜிண்டால் குழுமத்திற்கு எதிரான போராட்டம், எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், குப்பை கிடங்கிற்கு எதிரான போராட்டம் – எனத் தொடர்ந்து போராடியுள்ளோம். இப்போது எங்களது நிலங்களைப் பறித்து எங்களை ஊரைவிட்டே விரட்டிவிட்டு சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிராகப் போராடி வருகிறோம். நாங்கள் ஒருபோதும் எங்கள் நிலத்தை விட்டுகொடுக்க மாட்டோம். போராட்டத்தின்போது சாகவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்கிறார்கள் போராடும் மக்கள்.
திருவண்ணாமலையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட சின்ன பாலியப்பட்டு, பழைய காலனி, புதிய காலனி, செல்வபுரம், அண்ணா நகர், மாரியம்மன் நகர், சின்ன புனல்காடு, அருந்ததியர் காலனி, வாணியம்படி – என்று பாலியப்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில்தான் போராடும் மக்கள் குறிப்பிடும் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ளது. விளைநிலங்களையும், கவுத்தி – வேடியப்பன் மலையையும் அழித்து சுற்றுச்சூழலையும் அம்மக்களின் வாழ்வாதாரத்தையும் நாசமாக்கி சிப்காட் அமைக்கப்படவுள்ளது. 1,500 ஏக்கர் நிலத்தையும் 500 வீடுகளையும் அரசு கையகப்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக அமைக்கப்படவுள்ள இந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக 54 நாட்களுக்கும் மேலாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் 9 கிராம மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் வட்டாரமானது நெல், நிலக்கடலை, மலர்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான வேளாண் பொருட்கள் விளையும் பகுதியாகும். இங்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால், விளைநிலங்களும் பாரம்பரியமாக தாங்கள் வாழ்ந்துவந்த வீடுகளும் பறிக்கப்பட்டு சொந்த நாட்டில் அகதிகளாகத் திரியும் நிலைமை உருவாகும் என்பதை உணர்ந்த 9 கிராம மக்களும் உடனடியாக கிராமசபைக் கூட்டத்தை நடத்தி சிப்காட் தொழிற்பேட்டையை எதிர்க்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
படிக்க :
♦ திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
♦ வெள்ளாற்றை பாதுகாக்க திரள்கிறது மக்கள் படை
மேலும், பாலியப்பட்டு ஊராட்சியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சாதிய வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து “சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு போராட்ட அமைப்பையும் உருவாக்கினர். சிப்காட் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்தப்போவதாக பிரகடனப்படுத்தினர்.
தொடர் காத்திருப்புப் போராட்டத்தின் மூன்றாம் நாளன்று (24.12.2021) கிராமசபைக் கூட்டத்தைக் கூட்டி எங்கள் கிராமத்தின், கிராம மக்களின் நலனைக் காக்கும் விதத்தில் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படக் கூடாது என்று அரசை வலியுறுத்தி தீர்மானமும் இயற்றியுள்ளனர்.
சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கத்தின் சார்பில், காத்திருப்பு போராட்டம், வீடுகளில் கறுப்புக் கொடியேற்றும் போராட்டம், கஞ்சி காய்ச்சும் போராட்டம், பொங்கல் தினத்தைக் கறுப்பு தினமாக அறிவித்தது – என 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ, முதல்வரின் தனிப்பிரிவிற்குக் கூட மனுக்கள் அனுப்பியுள்ள இப்பகுதிவாழ் மக்களின் போராட்டத்தை கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் இப்போராட்டம் குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.
அதிகாரத் திமிரும்; அலட்சியப் போக்கும்
இது தொடர்பாக பி.பி.சி தமிழ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, பாலியப்பட்டு கிராமங்களைச் சுற்றி விவசாயம் சரியாக நடைபெறவில்லை; குடில்கள் அமைத்து வேறு விவகாரங்கள்தான் நடைபெறுகிறது; சிப்காட் தொழிற்பேட்டை வந்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கும், வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

போராட்டம் தொடங்கிய 5-ம் நாளன்று அமைச்சர் எ.வ. வேலு, செங்கம் கிழக்கு பகுதியில் “ஒரு சில போலி விவசாயிகள் பச்சை துண்டு போட்டுக் கொண்டு போலியான முறையில் காத்திருப்புப் போராட்டம் நடத்துகிறார்கள்; அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்; கண்டிப்பாக சிப்காட் தொழிற்பேட்டை அந்த பகுதியில் அமைந்தே தீரும்” என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
தொடர் போராட்டத்தின் 9-ம் நாளன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்புக் கூட்டத்திற்குச் சென்றிருந்த 250–க்கும் மேற்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்துகூடச் சந்திக்கவில்லை. 10 பேரை மட்டும் அவரின் பங்களாவுக்குத் தனியாக அழைத்து, அரசுக்கு எதிராக எதாவது செய்து கொண்டிருந்தால் உங்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூட தயங்க மாட்டோம் என்று அதிகார திமிரோடு பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைச் சொல்லி அதைப்போல ஆகிவிடும் என்றும் மக்களை மிரட்டியுள்ளார்.
36-ம் நாளன்று மீண்டும் கிராமசபைக் கூட்டத்தில் சிப்காட் தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றவிருந்த நிலையில், அக்கூட்டத்தை அரசு ரத்து செய்துவிட்டது. 45-ம் நாளன்று 500-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சிப்காட் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக 25 கேள்விகள் அடங்கிய 424 மனுக்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்துள்ளனர், மக்களின் மனுக்களைக் கூட ஆட்சியர் நேரடியாக வாங்காமல், அவரின் உதவியாளர் மூலம் வாங்கச் சொல்லி அலட்சியப்படுத்தியுள்ளார்.
மக்களின் போராட்ட வரலாறு
ஏற்கனவே, 2006-ம் ஆண்டு கவுத்தி – வேடியப்பன் மலையிலிருந்து 23 ஹெக்டேர் பரப்பளவில் 10 ஆண்டுகளுக்கு இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க தமிழக அரசின் டிம்கோ நிறுவனத்துடன் இணைந்து ஜிண்டால் என்ற கார்ப்பரேட் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இவ்வாறு மண்ணில் இருந்து இரும்புத் தாது எடுக்கப்படுவதால் கவுத்தி மலையின் அருகில் உள்ள 55 கிராமங்களின் வாழ்வாதாரமும் நீராதாரமும் விவசாய நிலங்களும் முழுமையாக அழிக்கப்படும் அபாயம் உருவானது.
கவுத்தி – வேடியப்பன் மலையை அழித்து இரும்பு தாதுவை வெட்டியெடுக்க ஜிண்டால் நிறுவனத்திற்கு வழங்கிய இத்திட்டத்தை எதிர்த்து 2008-ம் ஆண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கவுத்தி – வேடியப்பன் மலைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு தொடங்கப்பட்டு பாலியப்பட்டு பகுதி உட்பட 55 கிராம மக்களும் ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, அப்போதைக்கு அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது. பின்னர், 2014-ம் ஆண்டு ஜிண்டால் நிறுவனத்துடன் மீண்டுமொரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதை எதிர்த்தும் இக்கூட்டமைப்பு சார்பாக தொடர் பிரச்சாரமும் உறுதியான போராட்டமும் நடத்தியதன் விளைவாக அது தடுத்து நிறுத்தப்பட்டது.
2018-ம் ஆண்டு அ.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியமைத்து போராட்டம் நடத்தியதன் விளைவாக அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
2022 ஜனவரி மாதம் நகர்ப்புறக் குப்பைகளை பெரிய புனல்காடு பகுதியில் கொட்டுவதைக் கண்டித்து பாலியப்பட்டு பஞ்சாயத்தின் 500-க்கும் மேற்ப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் தொடர் போராட்டத்தால் பெரிய புனல்காடு பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது அரசு. இவ்வாறாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல்வேறு நாசகரத் திட்டங்களுக்கெதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர் இப்பகுதிவாழ் மக்கள்.

நேரடியாக இரும்புத் தாதுவை வெட்டியெடுப்பதற்கான கார்ப்பரேட்டுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதால், தற்போது சிப்காட், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு இந்நிலத்தையும் கவுத்தி – வேடியப்பன் மலையையும் தாரைவார்க்கும் சதித்தனமான வழிமுறையைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. சிப்காட் என்ற முகமூடியை அணிந்துகொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களை உள்ளே நுழைத்து, பாலியப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களைத் துரத்துயடித்துவிட்டு கவுத்தி மலையைக் கொள்ளையிடுவதற்குத் தந்திரமாக சேவை செய்து வருகிறது. இதை முழுவீச்சில் செயல்படுத்தப்போவதைத்தான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலுவின் பேச்சும் வெளிப்படுத்துகிறது.
கார்ப்பரேட் நிலக்கொள்ளைதான் வளர்ச்சியா?
பாலியப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் முறையான பேருந்து மற்றும் சாலை வசதி கிடையாது. சில ஆண்டுகள் வந்து கொண்டிருந்த தனியார் மினி பேருந்தும் இப்போது வருவதில்லை. செல்வபுரம், புனல்காடு, அருந்ததியர் நகர், மாரியம்மன் நகர் போன்ற இடங்களில் சாலை அமைப்பதற்குக் கொட்டப்பட்ட கற்கள் அப்படியே இருக்கிறது. கரடுமுரடான மண் சாலையில்தான் தினம்தோறும் மக்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர். மாணவர்கள் தினமும் 3 கீலோ மீட்டர் பள்ளிக்குச் நடந்து செல்கின்றனர்.
அவசர உதவிக்குக் கூட மருத்துவமனைகள் கிடையாது. தமிழ்நாட்டிலிருந்து பிரிந்த தனித்தீவு போல இப்பகுதி காட்சியளிக்கிறது. அடிப்படை வசதிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
“ஆடு, மாடு வைத்துத்தான் எங்கள் வயிறைக் கழுவி வருகிறோம்; சிப்காட் வந்தால் நிலம் முழுவதும் அழிக்கப்படும்; நிலத்தடி நீர் அனைத்தையும் அவர்கள் உறிஞ்சி கொள்வார்கள்; குடிநீருக்கு எங்கள் குடும்பம் அலைய வேண்டியிருக்கும்; இந்த இடத்தைவிட்டு எங்களை விரட்டினால் நாங்கள் எங்கு சென்று, எப்படி வாழ முடியும்?” என்கிறார் போராட்டத்தில் கலந்து கொண்ட புனல்காட்டை சேர்ந்த ஒரு பெண்மணி.
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்திற்காக இத்தகைய விவசாயக் குடும்பங்களை அடித்து விரட்டிவிட்டு, அவர்களின் நிலங்களைப் பறித்து அமைக்கும் சிப்காட் தொழிற்பேட்டையை ‘வளர்ச்சி’ என்று கூறுகிறது தமிழக அரசு. பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே, ஆளும் கட்சி உதவியுடன் அரசு அதிகாரிகள் மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியப்பட்டு தீர்மானத்திற்கு எதிராக சிப்காட் தொழிற்பேட்டை எங்களுக்கு வேண்டுமென 10 கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்ற வைத்துள்ளனர். பாலியப்பட்டு மக்களை இரவும் பகலும் கண்காணிப்பதற்குப் போலீசாரையும் உளவுத்துறையையும் அரசு ஏவிவிட்டுள்ளது.
இதுபோன்ற தொழிற்பேட்டைகளை திருவண்ணாமலை மட்டுமின்றி, இன்னும் புதிதாக பத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் தொடங்கப்போவதாக 2021 சட்டசபைக் கூட்டத்தொடர் விவாதத்தின்போது தெரிவித்துள்ளது தி.மு.க அரசு.
படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
♦ விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியக் கொள்கைக்கு எதிராக தாங்கள் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது சவடால் அடிப்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதையே “வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு’’ என்ற பெயரில் மூர்க்கமாகச் செயல்படுத்துவதையுமே எல்லா ஓட்டுக் கட்சிகளும் நடைமுறையாகக் கொண்டுள்ளன. தி.மு.க அரசின் நடவடிக்கைகளிலிருந்து நாம் பெறும் அனுபவமும் இதுதான்.
கவுத்தி – வேடியப்பன் மலையைக் கொள்ளையடிப்பது என்பது ஏதோ அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. எட்டுவழிச் சாலை, சாகர்மாலா, பாரத்மாலா, கூடங்குளம் அணுஉலை, அணுக்கழிவு மையம், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் உள்ளிட்டு நாட்டின் மீதும் கோடானுகோடி மக்கள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் பாசிசத் தாக்குதலின் ஓர் அங்கம்தான் இது.
நாசகார ஜிண்டாலை எதிர்த்து ஒடிசா மாநிலத்தின் திங்கியா மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கனிம வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பாலியப்பட்டு உழைக்கும் மக்கள் அத்தகைய போராட்டங்களுடன் இணைந்து நிற்பதும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களைத் தொடுப்பதும்தான் இன்றைய அவசர, அவசியக் கடமையாக முன்னே நிற்கிறது.

பு.ஜ. களச் செய்தியாளர்
மார்க்சியம் : புகழ் பாடுதல் மட்டுமே ஒரு சித்தாந்தத்தை நிலைநாட்டி விடாது || ராஜசங்கீதன்
Young Karl Marx படத்தில் ஒரு காட்சி வரும். மார்க்ஸ் எழுதிய கட்டுரையை பிரசுரிக்கும் பத்திரிகை அலுவலக வாசலில் காவல்துறை நிற்கும். அவர்களை மார்க்ஸ் கடந்து அலுவலகத்துக்குள் செல்வார். அவர் எழுதியிருந்த கட்டுரை அன்று பிரசுரிக்கப்படும் நாள். பதிவேற்றப்போகும் கட்டுரையை மார்க்ஸ்ஸின் ஒப்புதலுக்காக படித்து பார்க்க கொடுப்பார்கள். அவர் படித்து முடித்துவிட்டு, அவர்களை பார்த்து புன்னகைப்பார். அவர் எழுதிய கட்டுரையில் பல முக்கியமான விஷயங்கள் அரசுக்கு பயந்து நீக்கப்பட்டிருக்கும்.
மார்க்ஸ்ஸின் சூடான எழுத்துகளால்தான் அலுவலகம் வரை காவல்துறை வந்து நிற்கிறது என குற்றம் சாட்டுவார்கள். அரசு கொடுக்கும் நெருக்கடியில் பத்திரிகையை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்கள். அரசுக்கு பயந்து, சென்சார் செய்து கட்டுரை வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுத்தப்படலாம் என்பார் மார்க்ஸ். பத்திரிகையாளர்கள் வெகுண்டு எழுவார்கள். இத்தனைக்கும் அதுவும் ஒரு சோஷலிச பத்திரிகைதான். பத்திரிகையை குறை சொல்வதா என கேட்டு, மார்க்ஸ்ஸின் வீரிய எழுத்துகளை குறை சொல்வார்கள்.
படிக்க :
♦ ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
♦ மார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் !
பொறுமையாக நின்றிருந்த மார்க்ஸ் திரும்ப கத்துவார். இலக்கற்ற, தக்கையான சோஷலிச கட்டுரைகளையும் விரைவில் புரட்சி வர வேண்டும் என பிரார்த்திக்கும் கட்டுரைகளையும் பிரசுரிக்கும் பத்திரிகை வர வேண்டியதே இல்லை என்பார். அதற்கு பிறகு அவர் சொல்லும் வசனம் முக்கியமானது. No point in writing without ideas and concepts என்பார்.
Ideas and concepts!
எந்தவொரு சித்தாந்தமும் சிறக்கவும் நிகழ்தொடர்பில் இருக்கவும் அதற்கான ideas மற்றும் conceptsகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
காலமாற்றத்தை அவதானிக்கும் கருதுகோள்களும் அவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். இவை எதையும் செய்யாத சித்தாந்தம் எதுவும் நீடித்ததற்கான சரித்திரம் இல்லை. புகழ் பாடுதல் மட்டும் ஒரு சித்தாந்தத்தை இருத்தி வைத்திடாது. எது ஒன்று சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கும் என நம்புகிறோமோ அதுவே அதை வீழ்த்தும் வாய்ப்பையும் கொண்டது என்பதுதான் இயங்கியல். மார்க்ஸியம் என்பார்கள்.
தோழியிடம் ஒருமுறை பேசும்போது கூட, மார்க்ஸ்ஸுக்கும் முன்னமே கம்யூனிசத்துக்கான சிந்தனை இருந்தது என்றார். உண்மைதான். கற்பானாவாத சோஷலிசமாக இருந்தது. அதைத்தான் Utopian World என்றார்கள். எல்லாருக்கும் எல்லாமும் எந்த குறையுமின்றி இருக்க கூடிய உலகத்தை கற்பனையாக இலக்கியம் பேசிக் கொண்டே இருந்தது. மார்க்ஸ்ஸுக்கு முன்னமே கம்யூனிசத்துக்கான சிந்தனைகள் இருந்ததுதான். பின் ஏன் மார்க்ஸ் முக்கியமாகிறார்?
Ideas and concepts!
கற்பனாவாத சோஷலிசமாக இருந்த விஷயத்தை, ஓர் அற்புதமான பொன்னுலகம் என பேசப்பட்ட கம்யூனிச சமுதாயத்தை படைப்பது நிஜத்திலேயே சாத்தியம் என்றார் மார்க்ஸ். அதற்கான சாத்தியங்கள், கருதுகோள்கள், திட்ட வரைவுகள் என அறிவியல் பூர்வமாக விளக்கினார். அப்படிதான் மார்க்ஸ் முக்கியமாகிறார்.
படிக்க :
♦ டெக்ஃபாக் : சங்க பரிவாரம் நடத்தும் கலவரங்களின் தொழில்நுட்ப ஊற்றுக்கண் !
♦ எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
மார்க்ஸ் கொடுத்த அணுகுமுறை முக்கியமானது. எந்தவொரு விஷயத்தையும் அதன் முரண்களை புரிந்து அணுகி பார்த்து எதிர்காலத்தையும் இயக்கத்தையும் அனுமானிப்பது. அந்த அணுகுமுறை எந்த இயங்கியலுக்குமே பிரதானம். எந்த சித்தாந்தமாக இருந்தாலும் இயங்கியல் என ஒன்று அவசியம். இவை ஏதுமின்றி இருக்கும் வரலாறை வேறாக மாற்றி பொருளாதாரம், வரலாறு என்றேல்லாம் நாம் பேசலாம். ஆனால் யதார்த்தம் முற்றிலும் வேறாகத்தான் இருக்கும்.
இன்று உலகை பாருங்கள். உலக மூலதனம் இயங்கும் பாணியை கவனியுங்கள். அது கொள்ளும் கலாசாரத்தையும் உற்பத்தி மாற்றங்களையும் நுட்பமாக்குங்கள். அங்கிருந்து தொடங்குவது மட்டும்தான் உங்களின் விடிவாக இருக்கும். அந்த விடிவில் நிச்ச்சயம் மார்க்ஸ் இருப்பார்.
– மீள்
முகநூலில் : ராஜசங்கீதன்
புதிய ஜனநாயகம் – மார்ச் 2022 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகத்தின் மார்ச் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – மார்ச் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பாசிசத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது, எச்சரிக்கை!
- தமிழகத்தில் காலூன்ற எத்தனிக்கும் காவி பாசிஸ்ட்டுகள்
- டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு!
- தில்லையில் தொடரும் தீட்சிதர் ஆதிக்கம் : தன்மானத் தமிழன் இனியும் சகிக்க மாட்டான்!
- கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
- குழந்தைத் திருமணச் சட்டம் 2021 : சீர்திருத்தச் சட்டமல்ல, ஒடுக்குமுறை திட்டம்!
- வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி!
தவறாமல் வாங்கிப் படியுங்கள் !! சந்தா செலுத்துங்கள் !
![]()
தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை ! – திருவாரூர் ஆர்ப்பாட்டம் !
இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை!
தில்லையில் தமிழனுக்கும் தமிழுக்கும் தடை!
தில்லை இருப்பது தமிழ்நாடா?
அதற்குள் ஒரு தனி நாடா?
தமிழக அரசே!
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர சிறப்புச் சட்டம் இயற்று”
என்ற முழக்கங்களின் கீழ் மார்ச் 11 அன்று காலை 11 மணியளவில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் த. சண்முகசுந்தரம் தலைமையேற்றார்.
ஆரூர் சீனிவாசன், மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ப. மோகன், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர், அருண் காந்தி திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர், புரட்சி நெப்போலியன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஷேக் அப்துல்லா மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர், முரளி மாவட்ட பொருளாளர் மக்கள் அதிகாரம், கிருஷ்ணமூர்த்தி வேதாரண்யம் பகுதி செயலாளர் மக்கள் அதிகாரம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
![]()
மக்கள் அதிகாரம்
திருவாரூர் – 6374741279
















