நம் சமூகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினைகள் நம்மைக் கடந்து செல்கின்றன. அதில் பெண் சார்ந்த பாலியல் வன்முறைகள் கடக்க முடியாத ஒன்றாகின்றன. பெண் என்ற ஒரே காரணத்தாலேயே அவள் மேல் விழும் தாக்குதல்கள் இச்சமுகத்தின் தற்போதைய சீழ்பிடித்த நிலையை தெளிவாகக் காட்டுகிறது. இன்றைய சூழலில் போலீசு, ஊடகம் என அனைத்தும் பெண்ணின் உடலை சந்தைப் பொருளாக்கி தமது இறையாக்கியிருக்கின்றன.
நான் எனது பள்ளிக் கல்வி முதல் முதுகலைப்பட்டம் வரை மகளிர் கல்வி நிறுவனங்களில்தான் படித்து முடித்தேன். கல்லூரி முடித்து விட்டு இச்சமுகத்தை எதிர் கொள்வதில் பெரும் தயக்கமும், பயமும் எப்போதும் என்னில் உண்டு; அது இன்றுவரையிலும் தொடர்கிறது. ஆண் என்பவன் வேற்றுக்கிரகவாசி போன்று பலமுறை தோன்றியதுண்டு. இது வாழ்க்கையில் எனது விருப்பத்தை நான் தேர்வு செய்ய முடியாதவாறு என்னை முடக்கியது. கல்லூரியில் கூட எனக்கு பிடித்த துறையை எடுக்காமல் ஏதோ ஒரு துறையை எடுத்து படித்து ஆசிரியர் ஆகிவிட்டேன்.
ஆனால், இப்போதும் நினைப்பது உண்டு. என்னுடைய வாழ்க்கையில் ஆண் சகாக்கள் என்பதையே சமூக இயக்கங்கள்தான் அறிமுகம் செய்தன. ஆனால், அப்போதும் கூட இடைவெளி தேவை என கருதும் சாதாரணப் பெண்ணாகவே இருந்தேன். ஆண், பெண் என இருபாலருமின்றி அனைத்து உயிர்களுக்கும் இவ்வுலகம் சமமானதுதான். ஆனால் இச்சமூகம் அப்படி கட்டமைக்கப்படவில்லை. இச்சமுகத்தின் நான் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளில் எப்போதுமே எனது அண்ணன் அல்லது அப்பாவைச் சார்ந்தே கடந்து செல்கிறேன். இப்படி எல்லா நேரங்களிலும் பிறரை சார்ந்து பயணிப்பது மிகவும் கடினமானது.
அதாவது, “உன்னை போன்றுதான் நானும் ஆனால், நான் ஒரு பெண் என்பதால் என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்றுதான் கற்பிக்கப்படுகிறது. இந்த கற்பிதங்கள் பெண்களுக்கு மட்டுமே. ஆணின் நுகர்வு பொருளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்கப் பழகிக் கொடுத்த இச்சமூகம் இப்படித்தான் இயங்கும். பெண்ணின் உடலை ஒரு பொருளாய் உணரும் யாரும் மனித, மிருக இனத்தில் சேர்ந்தவர் இல்லை.
ஒருமுறை டில்லி சென்று இருந்தேன். வேலை முடிந்து ரயில் ஏற டில்லி ஸ்டேஷனில் இரவு 11.30 மணிக்கு தனி பெண்ணாய் நின்று கொண்டிருந்தேன். இப்போதும் நினைக்கையில் அவ்வளவு பயம். முதல்முறை தனியாக செய்த பயணம் அது. என்னைச் சுற்றிலும் குடும்பத்துடன் யாரும் தென்படவில்லை. தனிமையில் நிற்கையில் ஒருவன் இடையூறு செய்தவாரே நின்று கொண்டிருந்தான். அப்போது ரயில் இன்னும் இரண்டு மணிநேரம் தாமதம் என குறுஞ்செய்தி. கையில் பெரிய கனத்துடன் பையை வைத்துக்கொண்டு பயணிகள் ஓய்வறைக்குச் செல்ல சுமை தூக்குபவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். யாரும் தென்படவில்லை. போலீசும் இல்லை.
நேரம் செல்லச் செல்ல பயம் அதிகரித்தது. என்ன செய்ய என்றும் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் வந்துவிடக்கூடாது; அழக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டேயிருந்தேன். பேசக்கூட வாயில் வார்த்தைகள் இல்லை. அருகில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் டெல்லியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காக படுத்துக் கொண்டிருந்தனர். இரவு மணி 1.30 இருக்கும். அந்த என்.எஸ்.எஸ். மாணவர்களை எழுப்பி விட்டு இந்தியில் பிரச்சினையை சொன்னேன். அவர்கள் இடையூறு செய்த நபரை தட்டிக் கேட்டு அங்கிருந்து விரட்டி விட்டனர். இதை ஏன் சொல்கிறேனெனில், ”ஒரு பெண்ணாக தனியே செல்லக்கூடாது” என என்னையே மிரட்டுகிறது என் உடல். அது ஆண்களின் ஆயுதங்களாக மாறி எங்களையே கொலை செய்கிறது. இங்கு தவறு ஏதேனும் நிகழ்ந்தால் ஒரு பெண்ணாய் பல கேள்விகள் என்னை நோக்கியே பாய்ந்திருக்கும்.
இங்கு ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல. எனக்கு தெரிந்த சகாக்கள் பலர் பெண்ணை புரிதலுடன் பார்க்கத் தெரிந்தவர்கள். டில்லி இரயில்வே ஸ்டேஷனில் முன் பின் தெரியாத அந்த உறவுகள் உதவி செய்து என்னை நெகிழ வைத்தன. இங்கு ஆண் பெண் குறித்த புரிதலுடன் பிள்ளைகளை வளர்க்க மறந்து விட்டோம். ஆணை நெடிலாகவும், பெண்களை குறிலாக வளர்த்து வரும் சமூகம்தான், பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களின் மீதான தாக்குதலுக்கான அடிப்படை. இங்கே பாதிக்கப்பட்ட பெண்ணை சாடும் சமூகம் அதற்கான காரணத்தை அறிய முயல்வதில்லை. இப்போதுதான் கிராமத்துப் பெண்கள் வெளியே வருகின்றனர். அதற்குள் இப்படிப்பட்ட விசயங்கள் பெண்களை பாதுகாப்பு என்ற பெயரில் இருளுக்குள் வைத்திடும்.
பெண் என்பவள் அன்பு, நம்பிக்கை, பாசம் இவற்றை எதிர்பார்த்து காதல் கொள்கிறாள். ஒரு பெண் ஒருவனுடன் செல்ல அவன் அதை பயன்படுத்தி வல்லுணர்வு செய்வான் எனில் அவனைத்தான் சமூகம் தூற்ற வேண்டும். ஆனால் இங்கு பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். அதனை வைத்து ஊடகங்களும் பணம் சம்பாதிக்கின்றன. இந்தியா போன்ற நாடுகள்தான் கலாச்சாரம் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு மறுபுறம் AIDS-ல் முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டுதான் ஆசிபா என்ற 12 வயது சிறுமியின் மீதான பாலியல் வன்முறை நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் தேசிய குற்றவியல் ஆவண மையம் (National Crime Record Bureau) வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2017-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் மீதான தாக்குதல் 82 சதவிதம் அதிகரித்துள்ளது என்கிறது. இதில் 95% தெரிந்தவர்கள் மூலமே நடக்கிறது என்கிறது ஆய்வு. ஒரு பக்கம் பெண்கள் தெய்வம் என்ற போலித்தனத்தைக் கற்பித்துக் கொண்டே மறுபுறம் பெண்கள் மீது பாலியல் வன்முறையைச் செலுத்துகிறது இச்சமூகம். நாம் இன்று இதை சரி செய்ய வேண்டிய தருவாயில் நின்று கொண்டிருக்கிறோம். இதை சரி செய்ய கடுமையான சட்டங்கள் மட்டும் போதாது. மாறாக சமூகத்தில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வும் அவசியம் தேவை. சரி செய்ய பயணிப்போம் மாற்றங்களை நோக்கி …
கடந்த பிப்ரவரி 23, 2019 அன்று திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய ”கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் “ மாநாட்டில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் நிறுவனர் தோழர் தியாகு ஆகியோர் உரையாற்றினர்.
ஆளூர் ஷாநவாஸ் தனது உரையில் “சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை விசிக கடந்த ஜனவரி மாதம் நடத்தியது. பிப்ரவரியில் மக்கள் அதிகாரம், காவி கார்ப்பரேட் பாசிசம் என இந்தச் சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் அபாயத்தைப் பற்றி மாநாடு போட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பலரும் மோடி ஆட்சிக்கு வந்தால் முசுலீம்களுக்கு ஆபத்து என்றனர். மக்கள் கலை இலக்கியக் கழகம் மட்டும்தான், மோடி ஆட்சிக்கு வந்தால் பெரும்பான்மை இந்துக்களுக்கும் ஆபத்து என்று கூறியது.
மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீது பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. என தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுத்துள்ளது மோடி அரசு. பணமதிப்பழிப்பு சமயத்தில், அதானி , அம்பானி, முதல் சேகர் ரெட்டி ஓபிஎஸ் வரைக்கும் இவர்களிடத்தில் புதிய பணம் கட்டுக்கட்டாக குவிந்தது எப்படி?
விவசாயிகள் டெல்லியில் போராடிய போது, அவர்களைத் திரும்பிக் கூட பார்க்க மறுத்தார் மோடி. தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஒரு போராட்டத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதை தூத்துக்குடியில் மக்கள் அதிகாரம் சிறப்புறச் செய்திருக்கிறது. தூத்துக்குடியில் போராட்டத்தைத் தூண்டினார்கள் என்கிறார்கள். ஆம் தூண்டுவதுதான் எங்கள் வேலை. அது மக்களை விழிப்புணர்வு பெறச் செய்வதற்கு அவசியமானது.
இந்த கார்ப்பரேட் காவி பயங்கரவாத சூழலை எதிர்கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து காவிக் கும்பலை எதிர்க்க வேண்டும்.” என்றார். (முழுமையான உரையைக் காண )
இம்மாநாட்டில் பேசிய தோழர் தியாகு, தனது உரையில், சங்க பரிவாரத்தினர் எவ்வாறு புல்வாமா தாக்குதல்களை தங்களது தேர்தல் பிரச்சார யுத்தியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்பதை அம்பலப்படுத்தி பேசினார். மேலும் காஷ்மீர் சிறுமி ஆசிபாவை பாலியல் வன்முறை செய்து கொன்ற கயவர்களைக் காக்க பாஜக நேரடியாக களத்தில் இறங்கியதைக் குறிப்பிட்டு, காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறிக்க இத்தாக்குதலை ஆளும் பாஜக அரசு பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
காஷ்மீர் மக்களின் போராட்ட வரலாறு குறித்தும், இந்தியா சுதந்திரம் அடைந்த போது காஷ்மீர் அதன் தலையில் இல்லை என்பதையும் நினைவூட்டினார்.
காஷ்மீர் மக்களின் உரிமைகளை ஒடுக்குவதில் பாஜக, காங்கிரசு, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நிற்கின்றன என்றார். ஒடுக்கப்படும் மக்களின் உரிமையைக் காக்க நாம் அனைவரும் உயிர் பயம், சிறை பயமின்றி ஓரணியில் நிற்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். (முழு உரையைக் காண)
நாடு முழுவதும் ரயில்வே துறையில் 62, 907 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு குரூப் டி பிரிவில் எழுத்து தேர்வு நடைபெற்றது. 16 மண்டலங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இதில் தமிழகத்தில் மட்டும் 1,765 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடந்தது. தமிழகத்தில் எவ்வளவு பேர் இத்தேர்வை எழுதினர் எனும் தகவல் தெரியவில்லை. இத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் நான்காம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் உள்ள 1600 பணியிடங்களுக்கு தமிழகம் அல்லாத பிற இடங்களில் (வட மாநிலங்களில்) தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இம் முடிவுகளைக் கண்டு தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குளறுபடிகளிலும், பங்கு பிரிப்புச் சண்டைகளிலும் தீவிரமாக உள்ளதால் இந்த தேர்வு முறைகேடுகள் அவர்களின் கவனத்தைப் பெறும் தகுதியை அடையவில்லை. ஊடகங்கள் பார்ப்பனியத்தின் வளர்ப்பு விலங்குகளாக இருப்பதால் இலேசாக தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு, ஆழ்ந்த அமைதியை கடைப்பிடிக்கின்றன. அதேநேரம் இவைகள் தங்கள் தகுதியை உயர்த்தும் தேர்வுகள்(!) என நம்பி, ஆண்டுக் கணக்காக பல தேர்வுகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் முதிர் பட்டதாரிகளோ மூச்சுவிட நேரமின்றி அடுத்த தேர்வை துரத்த தொடங்கி விட்டார்கள்.
90 விழுக்காடு தேர்ச்சி வடமாநிலத்தவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பது எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் தமிழக பிரிவின் எழுத்துத் தேர்வு என்பது தமிழர்களின் பண்பாடு பழக்க வழக்கங்கள் புவியியல் சிறப்புத் தன்மைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இதில் வடமாநிலத்தவர்கள் 90 விழுக்காடு தேர்ச்சியடைவது என்பது நிச்சயம் இயல்பை மீறிய ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் இதை விட ஆபத்தான இன்னொன்று, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்குவது தான். அதாவது, போதிய கவனமின்றி தமிழக மாணவர்கள் இதில் கோட்டை விட்டுவிட்டார்கள் என போகிற போக்கில் எழுதிச் செல்கின்றனவே ஊடகங்கள். இதை என்னவென்பது? இதைவிட அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியுமா?
இந்த தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 100 தான். ஆனால் அகமதாபாத், சண்டிகர் போன்ற பகுதிகளிலிருந்து தேர்வெழுதியவர்களின் மதிப்பெண்களோ 105, 120, 138 என்று இருக்கின்றன. இது எப்படி சாத்தியம்? இப்படி மொத்த மதிப்பெண்களை மீறிய மதிப்பெண்கள் சமூக வலை தளங்களில் மீம்ஸ்களாகவும், இன்னும் பல வழிகளிலும் கிண்டலும், நக்கலுமாக பறந்த பிறகு இரயில்வே அமைச்சகம் விளக்கமளிக்க முன்வந்தது.
கிரிக்கெட் வெறியர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத, இன்னும் நட்சத்திர விளையாட்டு வீரர்களால் கூட தெரிந்து கொள்ள முடியாத டக்வொர்த் லூயிஸ் என்றொரு விதி கிரிக்கெட்டில் உண்டு. மழையோ வேறு ஏதாவது காரணங்களினாலோ ஆட்டம் இடையில் தடைப்பட்டால் கூட்டிக் கழித்துப் பார்த்து கடைசி ஒரு பந்தில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்று கூறும் டக்வொர்த் லூயிஸ் விதியைப் போல ரயில்வே அமைச்சகமும் நார்மலைஷேசன் என்றொரு விதி முறையை கூறுகிறது.
அதாவது வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு மொழிகளில் நடக்கும் இத்தேர்வில் கடினமானதாகவும், எளிதாகவும் இருக்கும் வினாத்தாள்களின் இடையேயான வேறுபாட்டை நீக்குவதற்காக நார்மலைஷேசன் என்ற விதி கடைப்பிடிக்கப்படுவதாகவும், இந்த விதியின் அடிப்படையில் 100க்கு 126 மதிப்பெண்கள் வரை பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகிறது அந்த ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கை.
அது என்ன நார்மலைஷேசன் விதி என்று கேட்டால் தேர்வு எழுதிய ஒருவருக்கும் அந்த விதி குறித்தோ, அதில் எப்படி முடிவை வந்தடைகிறார்கள் என்பது குறித்தோ ஒன்றும் தெரியவில்லை. ரயில்வே அமைச்சகத்தின் அந்த அறிக்கையில் மேலும் இந்த விதியின்படி 126 மதிப்பெண்கள் வரை தான் பெற முடியும் அதற்கு மேல் பெறப்பட்டதாக உலவும் படங்கள் எல்லாம் போட்டோஷாப்பில் திருத்தப்பட்ட படங்கள். எனவே முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி கடந்த 19 ஆண்டுகளாக இந்த முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றும் திமிராக கொக்கரிக்கிறது அந்த அறிக்கை.
இந்த அறிக்கையைப் பார்த்ததும், அவர்கள் ஏதோ ஒரு விதிமுறை வைத்திருக்கிறார்கள். அது நமக்கு சரியாக புரியவில்லை. வேறென்ன செய்வது, அடுத்த நல்வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியது தான் என்பதாக விரக்தியுடன் கடந்து செல்கிறார்கள் மாணவர்கள். இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த பல ஆண்டுகளில் இப்படி முறைகேடுகள் நடந்திருக்கின்றன. வழக்குகளும் தொடரப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகள் சொகுசாக தூங்கிக் கொண்டிருக்க முறைகேடுகள் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
2014 நடந்த குரூப் டி தேர்வில், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும்போது போது அரசு அதிகாரிகளின் கையொப்பம் (அட்டஸ்டேசன்) பெற தேவையில்லை என தமிழில் வெளியான செய்திகளில் கூறப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் வெளியான செய்திகளில் இணைக்க வேண்டும் என கூறி இருந்தனர். இதனால், கையொப்பம் இன்றி விண்ணப்பித்த லட்சக்கணக்கான தமிழக விண்ணப்பங்கள் குப்பைக் கூடைக்குச் சென்றன.
இதே 2014 நவம்பரில் நடைபெற்ற தேர்வில் ஹால் டிக்கட்டுகளில் தேர்வர்களின் புகைப்படங்கள் இடம்பெறாமல் வெறும் பெயர் பதிவு எண் போன்ற விபரங்கள் மட்டும் இடம்பெற்று இருந்தது. இது விதிமுறைகளுக்கு முரணானது எனக் கூறி பன்னீர் செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை ஆனால் உயர் அதிகாரிகள் மட்டம் வரை தமிழே தெரியாதவர்கள் பணிகளில் அமர்ந்து விட்டார்கள்.
2016-ல் தபால் துறையின் தமிழ் தேர்வில் தமிழே தெரியாத ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த அதிசயம் நடந்தது.
இது போன்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே இப்போது கூறப்படும் நார்மலைஷேசன் என்பது விதிமுறைகளோடு தொடர்புடையது அல்ல, அது பார்ப்பனியத்தோடு தொடர்புடையது. பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வுகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பல மாநிலங்கள் அரசாணை நிறைவேற்றியுள்ளன. தமிழகத்தில் அப்படியான அரசாணை எதுவும் போடப்படவில்லை, போடவும் மாட்டார்கள். ஏன் என்பதை தனியே சொல்லவும் வேண்டுமோ.
அதேநேரம் இதை தமிழ் தேசியப் பிரச்சனையாக சுருக்கிக் கொள்ளவும் முடியாது. எவ்வாறென்றால் இது போன்ற முறைகேடுகளில் பலனடைந்தவர்கள் யார் என்பது குறித்து கணக்கெடுப்புகளோ, புள்ளிவிவரங்களோ அரசிடம் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் பார்ப்பனர்களும் ஆதிக்க ஜாதியினருமே அரசு வேலைகளில் அதிகம் அமர்கிறார்கள் என்பது கண்கூடு. இப்போது கூட கல்வி வேலை வாய்ப்புகளில் 10 விழுக்காடு சிறப்பு இடஒதுக்கீடு சட்டமாக்கப் பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்று கூறிக் கொண்டு ஆண்டு வருமானம் 8 லட்சம் என்றும் வரையறுத்துள்ளார்கள். இது யாருக்கானது என்பதில் மறைபொருள் எதுவும் மிச்சமிருக்கிறதா? எனவே, இதை தமிழ்நாடு எதிர் வடமாநிலங்கள் என்று பார்ப்பதை விட, அரசு தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிப்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன? என்பதைச் சிந்திப்பதே சரியானது.
காவிரி ஆற்றின் தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க விடக் கூடாது என்பதற்கு டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுப்பது எப்படி காரணமாக இருக்கிறதோ, ஒக்ஹி புயலில் கடற்படை மீனவர்களைக் காப்பாற்றாமல் விட்டதற்கு சாஹர்மாலா எப்படி காரணமாக இருக்கிறதோ, 600க்கும் அதிகமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், இன்றுவரை மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் தங்கள் படகுகளையும் அதன் மூலம் வாழ்வாதாரங்களை இழப்பதற்கும் அதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு அனுமதி எப்படி காரணமாய் இருக்கிறதோ அதேபோல தொடர்ச்சியாக அரசு வேலை வாய்ப்புகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கும் குறிப்பான காரணம் ஒன்று கண்டிப்பாக இருந்தாக வேண்டும்.
பொதுவாக பார்ப்பனிய எதிர்ப்பு மரபு என்பது தமிழகத்தின் அடையாளமாக, மதிப்பாக, அங்கீகாரமாக இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்கு இதுவே முதன்மையான காரணம். இது பார்ப்பனியத்தோடு தொடர்புடையது. அதேநேரம் கார்ப்பரேட்டுகளின் நலனும் இதில் அடங்கியிருக்கிறது. உலகின் அதிகமான பணியாளர்களை பெற்றிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையானது இந்திய இரயில்வே துறை. இந்த துறை முற்றுமுழுதாக தனியார் மயப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு நிலை வரும் போது அந்தத்துறையில் அதிக அளவில் தமிழர்கள் இருப்பது ஆபத்தானது என்பது கூட காரணமாக இருக்கலாம். அல்லது வேறொன்றாகவும் இருக்கலாம். ஆனால் அதை கண்டுணர்ந்து எதிர்த்து முறியடிப்பதற்கு இதை தமிழ்தேசியப் பிரச்சனையாக மாற்றுவது இடையூறாக இருக்கும் என்பது உணரப்பட வேண்டும்.
ஒரு தடவையில் எடுக்கப்படும் 1,765 பணியிடங்களில் 1,600 பேர் தமிழே தெரியாத வட மாநிலத்தவர்கள் என்பது எவ்வளவு கொடுமையானதோ அதைவிட இதில் முறைகேடு ஒன்றுமில்லை. 19 ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறை தான் இது என திமிராக பதில் கூறுவது கொடூரமானது. பொறியாளர்கள் முதல் முதுநிலை வரை படித்து பட்டம் பெற்று விட்ட பிறகு, பத்தாம் வகுப்புக் கேள்விக்கு பதில் எழுதுவது தனக்கான தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு என்று நம்ப வைக்கப்பட்டிருக்கும் வேலை தேடும் பட்டதாரிகளிடம் இந்தக் கொடூரத்தை புரிய வைக்க வேண்டும். அது தான் இது போன்ற முறைகேடுகளுக்கும், அதற்கு பின்புலமாக இருக்கும் பாசிசங்களுக்கும் வேட்டு வைக்கும்.
அதுவரை தனக்கு இருக்கும் நீரிழிவிற்கு சரியான மருந்து உட்கொண்டு சரியான உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவர், பக்கத்தில் ஒருவர் கூறினார் என மருந்துகளை எடுப்பதை நிறுத்திவிடுகிறார்.
நீரிழிவு முற்றுகிறது. காலில் புண் ஏற்பட்டு அது ஆறாமல் சீழ் வைக்கிறது. அடுத்த சில மாதங்களில் கால் அகற்றப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இறக்கிறார் அவர் இன்னும் ஒரு டைப் ஒன்று டயாபடிஸ் நோயாளி..
இருபது வருடங்களாக சரியாக இன்சுலின் போட்டு சக்கரை அளவுகளை ஓரளவு சரியாக வைத்திருக்கிறார். ஆனால் பக்கத்துல ஒருத்தர் சொன்னார் என்று மருந்தில்லாமல் வைத்தியம் செய்யும் போலியிடம் சென்று இன்சுலின் போடுவதை பதினைந்து நாட்கள் நிறுத்துகிறார். நண்பர் வீட்டு விசேசத்தில் வைத்த பாயாசத்தை குடிக்கிறார். வீட்டுக்கு வந்தால் வயிறு சரியில்லை.
அதற்காக அவருக்கு மருந்தாக பவண்டோ தரப்படுகிறது. மீளாக் கோமா நிலைக்கு செல்கிறார். அத்தோடு அவர் கண் விழிக்கவே இல்லை.
இன்னும் ஒருவர் தனக்குண்டான ரத்த கொதிப்பு நோய்க்கு சரியாகவே ஆறு வருடங்களாக என்னிடம் மருந்துகள் எடுத்து பிரதிமாதம் காட்டி வந்தார்.
ஆனால் திடீரென அவர் என்னிடம் வருவது இரண்டு வருடங்களாக நின்றுவிட்டது.
சரி வேறு சிறந்த மருத்துவர் என்று தான் எண்ணும் மருத்தவரிடம் சென்றிருப்பார் என்றே நானும் நினைத்தேன். ஆனால் மீண்டும் இரண்டு வருடங்கள் கழிந்த பின் கால்கள் முகம் வீங்கி வந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இது போன்று முகம் கால் வீங்கி மயக்கம் வந்து விட்டதாம். மதுரையில் பெரிய மருத்துவமனைக்கு சென்றால் கிட்னி செயலிழந்து விட்டது என்கிறார்களாம்.
நான் கேட்டேன் “ஏனய்யா நீங்கள் ரத்த கொதிப்புக்கு மருத்துவம் சரியாக பார்த்தீர்கள் தானே ?”
“இல்லை சார். ரத்த கொதிப்பு ஒரு நோயே இல்லை. அதற்கு மருத்துவம் தேவை இல்லனு பக்கத்துல ஒரு நண்பர் சொன்னாரு. அதோட உங்ககிட்ட வர்றத நிறுத்திட்டேன். வேற யாருகிட்டையும் போகல…”
அடுத்து இரண்டு வருடம் முன்பு இறந்த குழந்தையின் கதை.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வயது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வர அதை மருத்துவரிடம் காட்டாமல் வயிற்றம்மை என்று வீட்டிலேயே வைத்து சோறு தண்ணி கொடுக்காமல்.. குழந்தை தீபாவளி அன்று இறந்தது.
கேட்டால்.. வீட்டிற்கு பக்கத்தில் இருப்பவர்கள் இது அம்மை என்றும் இதற்கு வைத்தியம் பார்க்கக் கூடாது என்று கூறினார்களாம்.
இன்னும் பக்கத்து வீட்டு காரர்கள் கூறும் பல அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையை முடித்து விடக்கூடியதாகி விடும். ஆனால் எந்த கொலைக்கேசும் அந்த ஓசி அறிவுரை வழங்குவோர் மீது வருவதில்லை. ஆனால் இது போன்றவர்கள் தங்களால் இயன்றவரை மக்கள் தொகையை குறைத்து வருகிறார்கள்.
தங்களிடம் இருக்கும் முட்டாள்தனத்தை பிறரிடம் பரப்பிவிட்டு சமுதாயத்தை சிந்திக்கும் திராணியற்றதாக மாற்றுவதையே முழுநேர வேலையாக செய்து வருகிறார்கள்.
இவர்களிடம் இருந்து உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களது மருத்துவம் சார்ந்த முடிவுகளை உங்கள் குடும்ப நல மருத்துவரிடம் / உங்கள் சிறப்பு நிபுணரிடம் கேட்டு முடிவு செய்வதே பாதுகாப்பானது. அறிவுக்கு உகந்தது.
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
புத்தளம் குப்பைத் திட்டத்துக்கு எதிராக மார்ச் -19 நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு.
தோழர்களே,
புத்தளத்தை குப்பைக் கிடங்காக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆபத்துக்களை நன்குணர்ந்த மக்கள் பல மாதங்களாக அத்திட்டத்தை நிறுத்தக்கோரி அங்கே போராடி வருகிறார்கள். சீமெந்து தொழிற்சாலை, நுரைச்சோலை அனல் மின் நிலையம் என தொடர்ச்சியாக புத்தளம் மக்களுடைய சுற்றுச் சூழலும் ஆரோக்கியமும் அரசின் திட்டங்களால் சிதைக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது குப்பை கொட்டும் திட்டமும் அவர்கள் மீது அடாத்தாக திணிக்கப்படுகிறது.
புத்தளத்துக்குள்ளேயே போராடிக்கொண்டிருந்த மக்கள் எதிர்வரும் 19-ம் திகதி காலை 9:00 மணிக்கு கொழும்பில் காலிமுகத்திடலில் போராட்டமொன்றினை ஒழுங்கு செய்துள்ளார்கள்.
சமூக நீதிக்கான வெகுசன இயக்கம் இப்போராட்டத்தினை ஆதரித்து கலந்துகொள்கிறது.
இப் போராட்டத்துக்கு இடதுசாரி முற்போக்கு சனநாயக அமைப்புகளும் மக்கள் அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும்.
தங்களையும் தங்கள் அமைப்பு சார்ந்த தோழர்களையும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு போராடும் மக்களுக்கு தோள்கொடுக்க வருமாறு தோழமையுடன் அழைக்கிறோம்.
சுத்தமான இலங்கைக்காக புத்தளம் மக்களுக்கு தோள் கொடுப்போம்!
தோழமையுடன்,
மு. மயூரன்,
சமூக நீதிக்கான வெகுசன இயக்கம்
இலங்கை எனும் குட்டித்தீவின் இயற்கை வளங்களையும் எதிர்கால சந்ததியையும் நேசிக்கும் தேசபக்தர்களே…
உண்மையில் உழைக்கும் எளிய மக்கள் தான் தேசபக்தர்கள்; அவர்களை தான் இயற்கை வளங்களை சூறையாடுவதில்லை; மிதமிஞ்சி நுகர்வதில்லை; அந்நிய சக்திகளுக்கு விலை பேசி விற்பதில்லை;
இவற்றையெல்லாம் செய்யும் நாசகார சக்திகளை எதிர்த்து அவர்கள் தான் போராடுகிறார்கள்.
அவ்வாறான தேசப்பற்று கொண்ட புத்தளம் மக்கள் கொழும்பு நோக்கி வருகிறார்கள். இதோ அவர்களின் அழைப்பு!!
சில உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதால், குப்பை பிரச்சனை ஓர் இனத்தின் பிரச்சினையாய் காட்ட முயற்சிக்கப்படுவதால்,
கொழும்பு Vs புத்தளம் என்ற மாகாண இடைவெளி வெட்டி சிலர் தன் வாக்கு வயிறுகளை நிரப்பிக்கொள்ளத் துடிப்பதால்…
இந்த அவசர அழைப்பு…
தோழர்களே… இந்த தாய் நாட்டை நேசிப்பவர்களே…
இது புத்தளப் பிரச்சினை அல்ல.. தேசியப் பிரச்சினை..! இந்த 200 நாளைத் தொடும் போராட்டம் இலங்கையின் ஒவ்வொரு உடன்பிறப்பினதும் உயிரோடு சம்பந்தப் பட்ட பிரச்சினை…!!
உண்மையில் உழைக்கும் எளிய மக்கள் தான் தேசபக்தர்கள்; அவர்களை தான் இயற்கை வளங்களை சூறையாடுவதில்லை; மிதமிஞ்சி நுகர்வதில்லை; அந்நிய சக்திகளுக்கு விலை பேசி விற்பதில்லை; இவற்றையெல்லாம் செய்யும் நாசகார சக்திகளை எதிர்த்து அவர்கள் தான் போராடுகிறார்கள்.
இந்தத் திட்டம் இவர்கள் சொல்வதுபோல், அருவக்காலு என்ற இடத்தில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா..?
அருவக்காலு என்ற இடத்தில் செய்ய முட்பட்டபோது, “காட்டு வன விலங்குகளுக்கு” ஆபத்தானது என நிராகரிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா..?
அக்காட்டு விலங்குகளைவிட மிக அண்மையில் மனிதர்கள் வாழும் “சேரக்குழி” என்னும் மனிதக் குடியிருப்பில் தான் இது இப்போது அரங்கேறுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா..?
அதிர்வில் வெடிக்கும் வீடுகளோடும்… பதறிக் கண்விழிக்கும் சிறார்களோடும்… அக்கிராமம் போலீசில் போட்டிருக்கின்ற புகார்கள் உங்களுக்குத் தெரியுமா..?
இத்திட்டத்திற்கு பணம் கொடுத்த உலக வாங்கி அதனை கோபத்துடன் திருப்பி வாங்கிக்கொண்ட கதை..!
எந்த முன் அனுபவமும் அற்ற, ஒரு Black listed கம்பெனி (China Harbour Eng.co) இதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்ற கதை..!
குப்பையை எடுத்துவர மட்டும் வருடாந்தரம், 1,572 மில்லியன் (2012 கணிப்பு) தொடர்ந்து செலவாகப்போகும் கதை..!
இதற்கான ரயில் பாதைக்கு மாத்திரம் 52,060 மில்லியன் ரூபாய் கரையப் போகும் கதை…!!
தூரம் அதிகம் என்பதால், இடையில் அமையப்போகும் களனி – கரவெலபிடி Transition Center க்கு எத்தனை பில்லியன் என இன்னும் சொல்லப்படாத கதை..!!
இவை அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான்…!! தூரம்..!!
பிணத்தை அங்கேயே அடக்கம் செய்யாமல் 170 Km தாண்டி மையவாடி அமைக்கும் கொடூரம்..!!
இத்திட்டத்தின் பின்னால், தேச நலனுமில்லை, தேசிக்கயுமில்லை..!! பணம்..!! ,
Project என்பது, இப்போது பணம் சுருட்டும் விஷேட வடிவம்…!!
பதவியும், ஒரு Black listed கம்பெனியும் கிடைத்துவிட்டால்… அனைத்தும் அங்கீகாரத்துடன் நடக்கும்..!!
பாவம், இந்தப் பணப்பசிக்கு பலிக்கடாவாகப்போகும் இலங்கையின் பரிதாப நிலம் தான் “புத்தளம் – சேரக்குழி”
கடலிலிருந்து 175 m ,
கல்பிட்டியிலிருந்து 4 km,
வில்பத்துவிலிருந்து 5.67 km,
காலா ஓயா ஆற்றிலிருந்து 5 km,
காரைதீவிலிருந்து 400m
சேரக்குளிய வீடுகளிலிருந்து வெறும் 250 மீட்டர்..!!
இவற்றுக்கு மத்தியில்தான், இந்த அணுகுண்டு புதைக்கப்படுகிறது…!!
இலங்கை வாழ் நல்லுள்ளங்களே, வந்து பாருங்கள்…!
நிலக்கீழ் நீரும், இயற்கை காடுகளும், உயிரோடு மனிதர்களும், உலகே மறுக்கின்ற (land fill அமைக்க) சுண்ணக்கல் நிலமும் உள்ள இடத்தில் தான் இத்திட்டத்தை திணிக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்..!!
இவைகள் வெளிச்சத்துக்கு வராது…!
கொழும்பிலே உச்சரிக்கப்படாது…! Media conference இல் பேசப்படாது…!!
உண்மைகளை மறைக்க உறக்கக் கத்துகிறார்கள்..!!
“மீதொட்ட முல்ல” மீதேன் வெடிப்புக்கும் – 31 உயிரிழப்புக்கும் அவர்களே காரணமாக இருப்பதும்..!!
“அதற்கு ஏன் ஹர்த்தால் நடத்தவில்லை” என அடுத்தவனைக் கேற்பதும்..!!
வருடங்கள் தாண்டி வழியப்போகும் “லீச்செட்” டை, சில வாரங்களில் வருகிறதா என வந்து பார்க்கச் சொல்வதும்..!!
இல்லாத பொய் இணைத்து animation காட்டுவதும்…! கடைசி ஆயுதமாய் இனவாதத்தை இயக்க முயற்சிப்பதும்…!!
இந்த மண்ணை நேசிக்காத மடையர்களிடம் மட்டுமே எடுபடும்..!!
தரம் கெட்ட தலைவர்களின் இருப்புக்காய்…! மக்கள் நரகத்தை சுவைக்க முடியாது…!!
இந்த நிஜங்களைச் சொல்ல கொழும்பு வருகிறோம்…!
இந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு ஆத்மாவினதும் ஆதரவை எதிர்பார்த்து வருகிறோம்..!
இனம், மதம், மொழி கடந்து சந்ததி காக்கும் ஓர் சரித்திரப்போரை சத்தமாகச் சொல்ல வருகிறோம்…!!
கொழும்பில் எம்மோடு நீங்களும் கரம் சேருங்கள்..!
எங்கோ ஒரு மூலையில் இருந்து எமக்காக பிரார்தித்தவர்கள்கூட 19-ம் திகதி பக்கத்தில் வந்து நில்லுங்கள்..!
புத்தளம், அரசியலால் அநாதை ஆனாலும்.. எமக்கு சகோதரர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை நிரூபியுங்கள்..!!
செவ்வாய் கிழமை 19.03.2019 காலை 9.30 மணியளவில் காலி முகத்திடலில் உங்களை எதிரபார்த்தவர்களாய்…
காலில் குத்திய முள்ளுக்கு கண்களும் அழும் என்ற எதிர்பார்ப்போடு,
புத்தளம் மக்கள்…
அதிமுகவின் பொல்லாத ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க முடியுமா ?
ஆட்சியாளர்களும் அதிகாரிகளும், கிரிமினல்களோடு கூட்டுக் களவாணிகளாக மாறி விட்டார்கள்!
சகோதரிகளே, பாலியல் குற்றவாளிகளை முச்சந்தியில் நிறுத்துங்கள்…
மக்கள் பார்த்துக்கொள்வார்கள்!
1 of 2
பொள்ளாச்சி கொடூரம் … ஒருத்தனையும் தப்ப விடாதே !
நேர்மையான நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை நடத்து !
உடனே தண்டனை வழங்கு!
பாலியல் வக்கிரங்களை உற்பத்தி செய்யும் ஆணாதிக்க பாலியல் நுகர்வு வெறி, ஆபாச இணைய தளங்களை தடுக்கமுடியாத அரசே குற்றவாளி !
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு தொடர்புக்கு : 9962366321
மதுரை :
“விட்டுடுங்கண்ணா…” நெஞ்சை அறுக்கிறது… நம் பிள்ளைகளின் கதறல். அதிமுக பொறுக்கிகளை பாதுகாக்கும் அரசு ஒழிக ! கிரிமினல் அரசிடம் நீதி கேட்டுக் கெஞ்சாதே! அதிகாரத்தை கையில் எடு.. !
அதிமுக பார் நாகராஜ், துணை சபாநாயகர் மகன்கள் பிரவீன், முகுந்தனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஏன் கைது செய்யவில்லை ? என்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 16.03.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான உழைக்கும் மக்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
1 of 10
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் ) தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர் :
பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக குற்றக் கும்பலை தூக்கிலேற்றவேண்டும் என்று கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 15.03.2019 அன்று (புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி) சார்பாக கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களையும், கையெழுத்தையும் பதிவு செய்தனர்.
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தொடர்புக்கு : 97888 08110
கும்பகோணம் :
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 of 2
முழக்கமிடும் மாணவர்கள்
மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம்
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
பொ. வேல்சாமி தமிழ் நூல்களில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள் நம்முடைய கல்விபுலத்தின் தகுதியை இழிவுபடுத்துகின்றது. இப்பொழுது நான் கொடுத்துள்ள இந்தப் பதிவில் திருபனந்தாள் காசிமடம் வெளியிட்ட திருக்குறள் உரைக்கொத்து மூன்று பாகங்களும் வை.மு.கோ வெளியீடான திருக்குறள் முழுமையும் சில மாற்றங்களுக்குள்ளாகி இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இதில் என்ன பிழை நிகழ்ந்து விட போகிறது என்று நீங்கள் கருதலாம்.
நண்பர்களே பல்கலைக் கழக வட்டாரங்களில் மேற்குறிப்பிட்ட நூல்களின் முதற்பதிப்புக்களைப் பற்றிய விழிப்புணர்வு பேராசிரியர்களில் பலருக்கு இல்லாமல் போனது. இதன் விளைவாக அண்மையில் வந்துள்ள புத்தகங்களை வைத்து தங்களுடைய ஆராய்ச்சி மாணவர்களை வழிநடத்தி விட்டனர். அவர்களில் பலர் பிற்காலங்களில் வந்த நூல்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து தங்களுடைய ஆய்வுகளை நிகழ்த்தி விட்டனர். பட்டங்களும் பெற்று விட்டனர் என்ற தகவல்களும் உலவுகின்றன.
1 of 4
அதாவது பட்டுச்சாமி ஓதுவார் பதிப்பித்த நூலினுள் கடுகளவு கூட மாற்றம் செய்யாமல் “மதுரகவி திருமுறைச்செம்மல் புலவர் பேராசிரியர் தா.ம. வெள்ளைவாரணம்” (செந்தமிழ்க் கல்லூரி, திருபனந்தாள்) அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு ஆய்வை நிகழ்த்தியுள்ளனர். நிகழ்த்தி வருகின்றனர். திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்க பதிப்பில் மிகச் சிறந்த நூலாகிய வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பில் 133 அதிகாரங்களில் அறத்துபாலுக்கும் பொருட்பாலில் இரண்டொரு அதிகாரங்கள் தவிர பிற எல்லாவற்றுக்கும் வை.மு. கிருஷ்ணமாச்சாரியாரின் உறவினர் சடகோப ராமானுஜாச்சாரியாரும் சே. கிருஷண்மாச்சாரியாரும் உரை விளக்கம் எழுதியுள்ளனர். காமத்துப் பாலுக்கு வை.மு.கோ. உரை எழுதியிருக்கிறார். இதனை வை.மு.கோ. தன்னுடைய முகவுரையில் தெளிவாக விளக்கி எழுதியும் உள்ளார்.
ஆனால், வை.மு.கோ வின் மகன் திரு நரசிம்மன் காலத்தில் வந்த பதிப்பில் திருக்குறள் முழுமைக்கும் உரை விளக்கம் எழுதியது வை.மு.கோ என்று பதிப்பித்து விட்டார். இதனை நம்பி வை.மு.கோ எழுதாத விளக்கத்தை அவர் எழுதியதாக ஆராய்ந்த நூல்களுக்கு M.Phil.,Ph.D., போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டு விட்டன என்றும் சொல்லப்படுகின்றது. இத்தகைய பிழையான நிகழ்வுகளுக்கு இடம் தருவது தமிழ்மொழியின் சிறப்பை உலகளவில் குறைத்து விடும். இத்தகைய கல்வித்துறை நிகழ்வுகளை அறிந்தால் உலகறிஞர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்….? என்பது தான் கவலையாக இருக்கிறது.
இருபது வருடங்களுக்கு முன்பு களைகட்டியிருக்கும் கிண்டி மடுவங்கரையில் உள்ள ஸ்டீல் மார்கெட், தற்போது ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.
படிக்கட்டு கைப்பிடிகள், பால்கனி தடுப்புகள், ரசாயனத் தொட்டிகள் மற்றும் மேசை – நாற்காலிகள் போன்றவை தயாரிக்கத் தேவையான SS ஸ்டீல், பைப், இரும்பு தகடுகளின் விற்பனைச் சந்தை, கிண்டி காந்தி மார்கெட்டில் உள்ளன.
இரும்பு, எஸ்.எஸ் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளிலிருந்து கழிவுகளைச் சேகரித்து, அதிலிருந்து நல்லவற்றைச் சேகரித்து, அதுகூடவே மேலும் சில புதிய பொருட்களையும் வாங்கி விற்பனை செய்து வந்தார்கள். ஜி.எஸ்.டி வரி அமுலாக்கத்திற்கு பிறகு தொழிலையே கைவிட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், சிறுவியாபாரிகள்.
கிண்டியில் கிருஷ்ணா ஸ்டீல்ஸ் கடையை நடத்திவரும் கிருஷ்ணசாமியை சந்தித்தோம்.
தொழில் எப்படி இருக்கு? என்று கேட்டதுமே “எங்க தொழில பத்தி என்னத்த சொல்லச் சொல்றீங்க, அந்தக் கேள்வியே எங்கள எரிச்சலூட்டுது. முன்னல்லாம் வந்தீங்கன்னா இப்படி உட்காந்து பேசிகிட்டிருக்க முடியாது. இப்போ சும்மா உக்காந்துகிட்டிருக்கோம். இதுதான் எங்களோட நிலைமை” – என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு, தொடர்ந்தார்.
திரு கிருஷ்ணசாமி
“படிக்கட்டுகளுக்குத் தேவையான SS கைப்பிடி, பைப்புன்னு விக்கிறோம். நம்மிடம் சின்ன சின்ன வியாபாரிகள் வாங்குவாங்க. அப்புறம் சொந்தத் தேவைகளுக்காக வீடு, கடைகளுக்கு நேரடியாகவும் வாங்கிப் போறாங்க.
ஒரு பொருள கம்பெனியிலிருந்து டீலர் மூலமாத்தான் வாங்க முடியும். இதுல கம்பெனிக்குத் தேவையான ஜி.எஸ்.டி வரிய டீலர்கிட்டே புடிச்சுக்குவான், டீலர் எங்ககிட்டே புடிச்சுக்குவாங்க. நாங்களும் நட்டத்துக்குக் கொடுக்க முடியாதே, அது சின்ன அளவில வாங்கக்கூடிய பொதுமக்கள் தலையிலதான் விடியுது. அதனால, எங்ககிட்டே நேரடியா வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களும் படிப்படியா கொறைஞ்சிட்டாங்க.
எந்த ஒரு தொழிற்கூடமும் கச்சாப்பொருட்களை வாங்கும்போது அதுக்கு ஜி.எஸ்.டி கட்டித்தான் வாங்க முடியும். உற்பத்தி செய்த ஒரு பொருளை விற்கும்போது, மொத்த கச்சாப் பொருளுக்கும் சேர்த்து வரி வாங்க முடியாது. காரணம், தொழிற் போட்டியினால் குறைவான விலை வைத்தால்தான் வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடியும். மீதமுள்ள கச்சாப் பொருளின் கழிவில் அதன் விலையும் ஜி.எஸ்.டி-யும் அடங்கியிருக்கு. அந்தக் கழிவை நாங்கள் எடுக்கும்போது, அது எங்க தலையிலதான் விடியுது.
இந்த நடைமுறையினால், சிறிய வியாபாரிகளான எங்களால் தாக்குபிடிக்க முடியல. சரி, அதையே கொஞ்சம் பெருசா செய்யலாமுன்னு நெனச்சா, கழிவ சேர்த்து வைக்க குடோன் வசதியும் கெடயாது. அதனால, வர்ற பொருள உடனே கைமாற்றிக் கொடுத்தாகணும். இதையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கிராப்பின் விலையை அதிகப்படுத்துகிறார்கள். குடும்பம் வாழனுமுன்னா வேறு வழியில்லாமல் அதிக வெலகொடுத்து வாங்க வேண்டியிருக்கு. ஆதலால், எங்கள மாதிரி சிறிய வியாபாரிகள் படிப்படியாக அழிஞ்சுகிட்டிருக்கோம்.
முன்னெல்லாம் கம்பெனிகாரங்க, அவங்க எடத்திலிருந்து ஸ்கிராப்ப எடுத்துப்போனா போதுமுன்னு தள்ளிவிடுவாங்க. ஆனா, இப்போ தொழில் போட்டி அதிகமானதுனால, ஸ்கிராப் போடுற கம்பெனிகாரனே ரேட்ட.. தீர்மானிக்கிறான்.
அதுமட்டுமல்ல, சேகரித்த இந்த உலோகக் கழிவுகளை நாங்கள் நேரடியாக உருக்காலைக்கு அனுப்ப முடியாது. முதலில் மும்பை மற்றும் வட இந்தியாவில் உள்ள மார்வாடி சேட்டுகளுக்கு கொடுப்போம். அதை அவர்கள் உருக்காலைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். காரணம் அவர்களுக்குத்தான் டை-அப் உள்ளது. மாதத்துக்கு 300 டன் அனுப்புனாத்தான் அவங்களுக்கு சர்வீஸ் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, முதல் பேமெண்டே 60 நாட்களுக்குப் பிறகுதான் நம்ம கைக்கு வரும். அதையும் தொடர்ச்சியா அனுப்பும்போதுதான் அதில் நீடிக்க முடியும். நம்மால செய்ய முடியுமா?
இனி, என்ன செய்யப் போறோமுன்னு எதுவும் புரியல. சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டேன் தம்பி. ஊருல மூட்ட தூக்குனேன். அப்புறம் நல்லா சம்பாதிக்கனுமுன்னு சென்னை மும்பைன்னு அலைஞ்சி ஸ்கிராப் எடுக்குற கடையில வேலைக்குச் சேர்ந்து படிப்படியா முன்னேறினேன்.
செழிப்பா வாழ்ந்த நேரம் அது. அப்பப்போ ஊருக்கு போயி வருவேன். கோயில்… கொளமுன்னு செலவு பண்ணுவேன். ஒரு அம்மன் கோயிலயே கட்டிக்கொடுத்திருக்கேன்னா பாருங்களேன். அப்படி சொந்த ஊருக்கு போகும்போது, சின்ன வயசுல என்கூடவே மூட்ட தூக்குன சொந்தக்காரன்தான் இப்போ ஞாபகத்துக்கு வர்றான். “நாம எவ்வளவோ முன்னேறி வந்திருக்கோம், இவன் பொழைக்க வழியில்லாம கிராமத்துல மூட்ட தூக்கியே செத்துடுவான்போலன்னு…” அவன நெனச்சி கவலப்பட்டிருக்கேன். ஆனா, இப்போ நான் அந்த மூட்டயக்கூட தூக்க முடியாது மூப்படைஞ்சி நிக்கிறேன்.” என்றார் சோகமாக…
பூமி தட்டையானது என்று நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கூகுள் காணொளி தளமான யூ-டியூப் முதன்மையான காரணங்களுள் ஒன்றாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வட கரோலினாவின் ரலாய் நகரில் 2017-ம் ஆண்டிலும் பின்னர் சென்ற ஆண்டில் கொலராடோவின் டென்வெர் நகரத்திலும் ஆண்டுதோறும் நடக்கும் “தட்டையான பூமி” கோட்பாட்டு நம்பிக்கையாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட போதுதான் ஆய்வாளர்களுக்கு இந்த சந்தேகம் எழுந்தது.
மாநாட்டில் கலந்து கொண்ட 30 நபர்களிடம் நேர்காணல் எடுக்கப்பட்டது. வானில் சுற்றிக்கொண்டிருக்கும் பெரிய கோள வடிவிலானது அல்ல மாறாக பூமி பெரிய தட்டை வடிவிலானதும், அதே சமயத்தில் வானில் சுற்றியும் வருகிறது என்பதை அவர்கள் எவ்வாறு நம்ப வைக்கப்பட்டார்கள் என்பதை அவர்கள் விளக்கினார்கள். அவர்களது விளக்கங்கள் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருந்தன.
பூமி தட்டையானது என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பவில்லை என்றும் யூ-டியூப் தளத்தில் வெளியான சதிக்கோட்பாடுகள் பற்றிய காணொளிகளை பார்த்த பிறகே தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகவும் 29 நபர்கள் கூறினார்கள். “மகள் மற்றும் மருமகனுடன் வந்திருந்த ஒருவர் மட்டும் மேற்சொன்ன கருத்தை கூறவில்லை. மாறாக, அவரது மகளும் மருமகனும் கூறக் கேட்டிருக்கிறார்” என்று டெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலையில் (Texas Tech University) இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆஸ்லே லேண்ரம் (Asheley Landrum) கூறினார்.
நேர்காணலில் பேசியவர்களில் பெரும்பாலானோர் 9/11 தாக்குதல், சாண்டி ஹூக் பள்ளி துப்பாக்கிச்சூடு மற்றும் நாசா உண்மையிலேயே நிலவுக்கு சென்றதா என்பது குறித்த சதிக்கோட்பாடுகளை யூ-டியூப்பில் பார்த்திருக்கின்றனர். தொடர்ந்து அதற்கு இணைப்பாக “தட்டையான பூமி” பற்றிய சதிக்கோட்பாடு காணொளிகளை யூ-டியூப் அவர்களுக்கு காட்டியுள்ளது.
அவர்களை அம்பலப்படுத்துவதற்காகவே காணொளிகளை பார்த்ததாகவும் ஆனால், விரைவில் அதில் கிடைத்த தர்க்க முறைகளால் தங்களது எண்ணம் மாறியதாகவும் சிலர் கூறினர்.
பூமி தட்டையானது எனக்கூறும் காணொளிகளில் “பூமி சுழலும் கோள் அல்ல என்பதற்கு 200 நிரூபணங்கள் (200 proofs Earth is not a spinning ball)” என்பது மிகவும் பிரபலமானது. விவிலிய இலக்கியவாதிகள், சதிக்கோட்பாட்டுவாதிகள் முதல் அறிவியல் புரட்டுவாதிகள் வரை அனைவருக்கும் அறிவியலை எதிர்த்து தர்க்கம் செய்வதற்கான வாய்ப்புகளை அது கொடுக்கிறது.
ஏதோ ஒரு வழியில் நேர்காணல் கொடுத்தவர்கள் இதில் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். முன்னதாகவே “எங்கே அந்த வளைவு?” மற்றும் “தொடுவானம் ஏன் கண்ணுக்கு அருகிலேயே இருக்கிறது?” போன்ற கேள்விகளையும் அவர்கள் கேட்டிருக்கின்றனர்.
வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க அறிவியல் முன்னேற்ற சங்க (American Association for the Advancement of Science) ஆண்டு மாநாட்டில் தன்னுடைய ஆய்வினை லேண்ரம் முன் வைத்துள்ளார். யூ-டியூப் தவறு எதுவும் செய்திருக்கும் என்று தான் நம்பவில்லை. ஆனால், அதனுடைய படிமுறைத்தேர்வு அல்லது அல்காரிதத்தில் மாற்றங்கள் செய்து இன்னும் துல்லியமான விவரங்களை தங்களால் கொடுக்க இயலும் என்று அவர் கூறினார்.
“தேவையான தகவல்கள் ஏராளமாக உள்ளது போல தவறான தகவல்களும் ஏராளமாக யூ-டியூப்பில் உள்ளன” என்று அவர் கூறினார். “முயல் வலைக்குள்ளே செல்வது போன்ற கடினமான விசயங்களை யூ-டியூப்பின் அல்காரிதம் எளிதில் வயப்படக்கூடிய நபர்களுக்கு எளிமையாக்குகிறது.” என்று அவர் கூறினார்.
“பூமி தட்டையானது என்று நம்புவது ஒன்றும் பெரிய பிரச்சினை அல்ல. ஆனால், நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்குவதும் அதில் சேர்ந்தே வருகிறது” என்று அவர் கூறினார். மக்களுக்கு கிடைக்கும் தகவல் மீது அவர்களுக்கு விமர்சனப் பார்வை வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும், அதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்” என்றார்.
இது போன்ற சதிக்கோட்பாட்டு காணொளிகளுக்கு தக்கப் பதிலடி கொடுக்க அறிவியலாளர்களும் ஏனையவர்களும் சொந்தமாக யூ-டியூப் காணொளிகளை தயாரிக்க வேண்டும் எனறு லேண்ரம் கேட்டுக்கொண்டுள்ளார். “இன்னின்ன காரணங்களால் பூமி தட்டையானது” எனக்கூறும் காணொளிகள் மட்டும் யூ-டியூப்பில் நிறைந்திருக்கக் கூடாது. ”இன்னின்ன காரணங்களால் பூமி தட்டையானது அல்ல” என்று சொல்வதற்கும் நமக்கு நிறைய காணொளிகள் வேண்டும். சொந்தமாக ஆய்வினை செய்வதற்கான வழிமுறைகளை கொடுப்பதற்கான ஏராளமான காணொளிகளும் நமக்கு வேண்டும்” என்று மேலும் கூறினார்.
ஆனால், பூமி தட்டையானது என்று நம்புபவர்களில் சிலரை விஞ்ஞானிகளின் விளக்கங்கள் மாற்றிவிடாது என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார். ஊர்ந்து செல்லும் உயிர்களுக்கு மிகப்பெரிய வளைவின் மேற்பரப்பின் ஒரு சிறிய பகுதி எப்படி தட்டையாக தெரிகிறது என்பதை அமெரிக்க வானியல் ஆய்வாளர் நீல் டெகிரீஸ் டைசன் (Neil deGrasse Tyson) விளக்கிய போது தட்டையான பூமி நம்பிக்கையாளர்களின் சிலர் அதை ஆதரித்தனர் சிலர் எதிர்த்தனர் என்று லேண்ரம் கூறினார்.
“விஞ்ஞானிகள் முன் வைக்கும் எதையும் நிராகரிப்பதற்கு என்றே ஒரு சிறு விழுக்காட்டினர் எப்போதுமே இருந்து கொண்டே இருப்பார்கள். ஆனால், அதில் ஒரு சிறு பகுதியினர் அதை எதிர்க்காமல் இருக்கக்கூடும். சிறந்த தகவல்களை கொடுக்க முயற்சிப்பதுதான் தவறான தகவலுக்கு பதிலடி கொடுப்பதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம்” என்று அவர் கூறினார்.
இதுக்குறித்து கூகுளிடம் கேட்டதற்கு அந்நிறுவனம் பதிலேதும் அளிக்கவில்லை. வெறும் இலாப நோக்கம் மட்டுமே கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் அறிவியல்பூர்வமான தர்க்கவியலை மக்களுக்கு பயிற்றுவிப்பதிலிருந்து என்றோ தம்மை துண்டித்துக் கொண்டன.
நிரூபணங்கள் ஏதுமற்ற சதிக்கோட்பாடுகளுக்கு காதுகளும் கண்களும் மட்டுமே போதுமானது. ஏனெனில், அங்கே அவற்றுக்கு கட்டளை கொடுக்க மட்டுமே மூளை இயங்கினால் போதும். ஆனால், எதற்கும் நிரூபணங்கள் கோரும் அறிவியலுக்கு வெறும் கண்களும் காதுகளும் மட்டும் போதாது. தீர விசாரிப்பதுதான் நடைமுறை. அதற்கு நம்முடைய மூளையை நாம் சற்று கசக்கதான் வேண்டியிருக்கும்.
மார்க்ஸ் கூறுவது போல, “அறிவியலுக்கு இராஜபாட்டை ஏதுமில்லை: கடும் களைப்பினை ஏற்படுத்தும் அந்த செங்குத்தான பாதைகளில் துணிச்சலுடன் தீர்க்கமாக பயணிக்கிறவர்களுக்குத்தான், அதன் ஒளிமிகுந்த சிகரங்களை எட்ட முடியும்”.
நன்றி : தி கார்டியன் கட்டுரையாளர் : Ian Sample தமிழாக்கம் : சுகுமார்
இயற்கையாய் அமைந்த இவ்வுலகில் இப்பிரபஞ்சத்தில் மனிதன் தோன்றி 2-1 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. உயிர்கள் தோன்றி கிட்டத்தட்ட 2.5 பில்லியன் ஆண்டுகள் (அமிபா, பூஞ்சை ) இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், நம் உலகில் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு உள்ளாக தோன்றிய மதங்கள் உலகம் மற்றும் பிரபஞ்ச படைப்பை பற்றி கூறும் கதைகளை நினைத்தால் வேடிக்கையாகவும், அறியாமை நிறைந்ததாகவும் இருக்கிறது.
மதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாக செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி. விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்…
திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு இத்தகைய வீரமும், விவேகமும் நிறைந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் தங்களை வருத்தி ஒப்பற்ற சேவைதனை மக்களுக்கும் இயக்கத்துக்கும் செய்திருக்கிறார்கள். அன்று போதிய கல்வியறிவு அற்ற மக்களிடம் பகுத்தறிவு கருத்துக்களை கொண்டு சென்றதில் எஸ்.டி. விவேகி போன்றவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். இன்றைய கல்வி அறிவு பெற்ற சமூகமும் அன்றைய மக்களைப் போன்றுதான், இன்றும் விழிப்புணர்வற்று, அறிவியல் மனப்பான்மையற்று, அடிமை உள்ளம் கொண்டு மதமவுடீகத்தில் வீழ்ந்து அலைந்து திரிகிறார்கள்.
இன்றும் விவேகி போன்ற கருத்தாளர்களின் கருத்து தேவையானாதாகவே இருக்கிறது.
வேத மத புரோகிதத்தால் நாம் எவ்வளவு வீழ்ச்சிக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை எத்தனை ஆதாரங்களோடு சொல்லி இருக்கிறார். நமது இன்றைய நிலையிலும் அடிமையாய் வாழ்ந்து, அடிபடும் இனமாக இருப்பதை எண்ணி வேதனைப்படமால் இருக்கமுடியாது. பார்பனியத்தின் சூழ்ச்சி சோ, சுப்ரமணியசாமி வடிவில் இன்றும் சாணக்கியத்தனம் செய்து அழிக்கத்தானே நினைக்கிறது!
அன்றைய அடிமை அரசர்களைப்போல் தான், இன்றைய அடிமை அரசாங்கங்களும் செயல்படுகின்றன. ஆசிரியரின் சொற்கள் மத வாதிகளை கடுமையாகவும் வேறுபாடு இன்றியும் தாக்குவது அவரது நேர்மையையும், உண்மையையும் காட்டுகிறது. நம்மை தாழ்த்தியும் வேறுபடுத்தியும், கேவலப்படுத்தியும் வரும் மத புரோகிதத்தின் மீதான கோபமும், வேதனையும் அவரை கடுமையாக விமர்சிக்கும் சூழ்நிலைக்கு தள்ளியிருக்கிறது இதனை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்..
கேரளாவில் புழக்கத்தில் உள்ள சொல்லாடல்களில் ஒன்று “ஒரு தந்தைக்கு பிறக்காதவனே” என்று திட்டுவது, விபச்சாரி மகன் என்பதை எப்படி இலக்கிய வடிவில் சொல்வது போன்று சொல்கிறார்கள். அது போல் நமது மதங்களும் மனிதர்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் கேவலப்படுத்துவதில் தலைசிறந்து விளங்குகிறது.
அதன் மீதான கோபமே ஆசிரியரின் கடுமையான சொற்களுக்கு காரணமாகும்.
இந்நூல் பழைய தமிழகத்தை ஆண்ட அரசர்களின் மற்றும், இந்திய அரசர்களின் அடிமைப் புத்தியையும், ஐரோப்பிய மத புரோகிதத்தின் அறிவியல் மானிட எதிர்ப்பு சிந்தனைகளையும் வெட்டவெளிச்சமாகப் புரிந்து கொள்ள பெரிதும் உதவும் என நம்புகிறோம். (நூலின் பதிப்புரையிலிருந்து)
தோழர் எஸ்.டி. விவேகி அவர்கள் மிகச் சிறந்த நாத்திகர், தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலேயே தந்தை பெரியாருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கூட்டங்களில் பேசியவர்கள் இருவர். ஒருவர் திருவாரூர் தங்கராசு மற்றொருவர் எஸ்.டி. விவேகி.
சாகுல் அமீது என்ற தன் பெயரை விவேகம் நிறைந்தவர் என்ற பொருளில் விவேகி என்று மாற்றிக் கொண்டார்.
தமிழகத்தில் இஸ்லாமியர்களில் மசூதிக்கு போகாமல் வெளிப்படையாக நாத்திகம் பேசியவர்களில் ஒருவர் எஸ்.டி. விவேகி… எஸ்.டி. விவேகி அவர்கள் மிகச் சிறந்த மத ஆராய்ச்சியாளர். எல்லா மதங்களையும் நன்கு ஆராய்ந்து அறிந்தவர், குரான், பைபிள், இந்து புராணங்கள் என ஒன்று விடாமல் அலசி ஆராய்ந்து பேசியவர்- எழுதியவர்.
தந்தை பெரியாரின் பஞ்சசீலம் என்று 5 நாட்கள் தொடர்ந்து ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் ஒரே தலைப்பில் இருபது மணி நேரம் பல கூட்டங்களில் பேசியுள்ளார். தனியாகவும் பல மணி நேரம் பேசியுள்ளார். அவருடைய அறிவாற்றலை எண்ணி எண்ணி வியப்படைவேன்.
இன்னும் நாம் அறிந்து உயரவேண்டிய நல் அறிவும், பேரறிவாற்றலும் உள்ள மாபெரும் பகுத்தறிவு களஞ்சியத்தை, நமக்காக நம் தந்தை பெரியார் அவர்கள் விட்டுச்சென்றுள்ளார்கள். அவற்றிலிருந்து இயன்ற அளவு எடுத்தும், அறிவியல், புவியியல், வானியல், வரலாற்றியல் ஆதாரங்களோடு இணைத்தும் தோழர் S.D.விவேகி அவர்களால், ‘பைபிள்’ ‘குர்-ஆன்’, ‘ரிக்’ முதலான வேத வசனங்களோடு மோதவிட்டும் தொகுக்கப்பட்டுள்ள நூல்தான் இந்த ‘வேதமும் விஞ் ஞானமும்’ என்ற நூல்.
இந்த நூலில், உலக வரலாற்றின் உண்மை நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து, ஆதி முதல், இன்று வரையில் ஏற்பட்டுள்ள வேத – விஞ்ஞானப் போராட்டங்களுக்கு ஏற்பப் பொருத்தமாகக் குறித்துத் தரப்பட்டுள்ளன! மடமைக்கும் – அறிவுடைமைக்கும்
இடையே நீண்ட நெடுங்காலமாகத் நிகழ்ந்து வந்தப் பயங்கரக் கொலை பாதகக் கொடிய காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை படிப்போர் உள்ளம் பதைபதைக்கும்!!
கி.பி. 1619-ல் வானனி என்ற பெயருடைய தத்துவஞானி ஒருவரை, பிரஞ்சுக் கிறிஸ்துவப் பாதிரிகள், கொடுந்தீயிலிட்டுக் கொளுத்தப்போகும்போதும் அவர் அஞ்சாது கூறிய உண்மைகளை சகித்துக்கொள்ளாதுக் கோபப்பட்ட அக்கொடியோர். அத்தத்துவ ஞானியின் நாக்கை பலாத்காரமாகப் பிடுங்கித் தீயிலிட்டு எரித்துவிட்டுப் பிறகுதான், துடித்துடித்துத் தவித்து வாய்வழியே இரத்தம் கொட்ட வதைபட்டுக்கொண்டிருந்த அவ்வறிஞர் வானனியையும் அதே தீயிலிட்டு எரித்துச் சாம்பலாக்கினர், அந்த “அன்பே கடவுள்” (LOVE IS GOD) என்று பாசாங்காகப் பேசி பாமரமக்களை மயக்கும் அக்கொலைகாரப் பாதிரிமார்கள் என்றால், இதைப்படிக்கும் எவருள்ளந்தான் பதைபதைக்காமலிருக்கும்?
அதேபோல், நம் நாட்டிலும் “அன்பே சிவம்” என்று பாசாங்காகப் பேசி, பாமர மக்களை ஏமாற்றி, சைவசமயத்திற்கு ஆள் சேர்த்துக் கொண்டு அலைந்த கொலைகாரனாகிய வேதியக்கயவன் சம்பந்தன் மதுரையிலேயே எண்ணாயிரம் சமணத் தத்துவ ஞானிகளைப் பலாத்காரமாகப் பிடித்துக் கொண்டுவரச்செய்து கொஞ்சமும் ஈவிரக்கமே இல்லாமல், கழுவிலேற்றி சித்திரவதை செய்து சாகடித்த சண்டாளக்கொலை பாதகத்தைப் படிக்கும்போதும், யாருடைய உள்ளந்தான் பதைபதைக்காமலிருக்கும்?
கி.பி. 600-ல். “அலெக்ஸாண்டரியா பல்கலைக்கழகத்தின் மீது ஆத்திரம் கொண்டு, பாய்ந்து சென்ற இஸ்லாமிய மதவெறியன் அமீர் என்பவன் அப்பல்கலைக்கழகத்தின் மகத்தான அறிவியல், வானியல் களஞ்சியமாகிய மாபெரும் நூல் நிலையத்தில் இருந்த விஞ்ஞான தத்துவ விளக்கங்கள் நிறைந்த – நூல்களை எல்லாம் தீயை வைத்துக் கொளுத்தி எரித்துச் சாம்பலாக்கி விட்டான் என்றால், எந்த பகுத்தறிவாளரின் மனந்தான் பதை பதைக்காமலிருக்க இயலும்? (நூலின் முன்னுரையிலிருந்து)
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அரசும் அதிகார வர்க்கமும் மானம் வெட்கம் பாராமல் அரணாக நின்று பாதுகாத்து வருவதை தமிழகமே காறி உமிழ்கிறது.
கிரிமினல் குற்றக்கும்பலின் ஆட்சியான அதிமுக அரசும் அதிகார வர்க்கமும் குற்றவாளிகளுக்குத் தண்டனையை ஒரு போதும் பெற்றுத்தராது. அரசை நம்பிப் பயணில்லை மக்கள் நாமே தண்டனை வழங்குவோம் என்ற அறைகூவல் விடுக்கும் வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் மகஇக மையக் கலைக்குழுத் தோழர்கள்.
பாடல் வரிகள்:
விட்டுடுங்கண்ணா…
அண்ணா விட்டுடுங்கண்ணா…
நானே கழட்டிடுறேன் விட்டுடுங்கண்ணா…
ஒரு தங்கையின் கதறல்…
ஒரு மகளின் கதறல்…
பெண் இனத்தின் கதறல்…
ஏழு வருடம் இருநூறு அவலம்…
கேட்குது கேட்குது நீதி கேட்குது…
யார் கொடுப்பது தண்டனை?
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பாதுக்காக்கும் நடவடிக்கையில் போலீசு மற்றும் ஆளும்கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகின்றது.
இதுகுறித்து சென்னை மக்களிடையே கருத்து கேட்டோம். பலரும் குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் என்று சொல்கிறார்கள். “எப்படி தண்டிப்பது..? யார் தண்டிப்பார்கள்…?” என்றால் அமைதியாகிறார்கள். உங்கள் வீட்டுப் பெண்கள் பாதிக்கபட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு “கொலை செய்வேன்” என்று ஆவேசமாக சொல்கிறார்கள். “நீங்கள் இந்த பிரச்சனைக்கு என்ன செய்தீர்கள்…” என்று கேட்டாலும் அமைதியாகிறார்கள்……!
உண்மையில், கருத்துக்கூறியவர்கள் வக்கிர மனம் படைத்த பாலியல் குற்றவாளிகளிடம் மாட்டிக்கொண்ட பெண்கள் எப்படி ஒரு கையறு நிலையில் இருந்தார்களோ அதே போன்றுதான் இருக்கின்றார்கள். குற்றவாளிகளை இந்த சமூக அமைப்பு தண்டிப்பது குறித்து அவர்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. இதைத்தாண்டி அவர்களது வாழ்க்கையும் கடிவாளம் கட்டிய குதிரை போல ஒரே வழித்தடத்தில் சென்று கொண்டிருப்பதால் இத்தகைய பிரச்சினைகளுக்கு சமூக ரீதியாக சிந்திக்க வழியில்லாமலும் இருக்கிறார்கள்.
பிரதீப்
“யாரையும் யாரும் நம்ப முடியல… குறிப்பா போலீசுகிட்ட இந்த கேச விடக் கூடாது. பொதுமக்கள்தான் முடிவெடுக்கனும். ஏன்னா பாதிக்கப்பட்டவங்க அவங்கதான். பேருக்கு நாலு பேர காமிச்சிட்டு முடிக்க பாக்குறாங்க. இதுக்கு பின்னால் நெறைய பேர், பெரிய இடத்த சார்ந்தவங்க இருக்காங்க. அதை மறைக்க அரசியல்வாதிங்களுக்கு துணையா அதிகாரிகளும் போலீசும் வேலை செய்யிறாங்க.”
வின்செண்ட், ஐடிஊழியர்.
“சம நீதி- சம உரிமை என்பதெல்லாம் ஏமாத்து. பெரிய இடம்னாவே ஒரு மாதிரி விசாரணைய கமுக்கமா நடத்துறாங்க. சட்டமும் அவங்களுக்கு துணை போகுது. நீதிமன்றம் எத்தனையோ கேசுல உப்பு சப்பு இல்லாத தீர்ப்ப வழங்குது… இப்பவே இதுல தலையிடுற எஸ்.பி- லிருந்து டி.எஸ்.பி வரைக்கும் பொம்பள பொறுக்கிங்கதான். இதுக்கு பின்னாடி அரசியல்வாதிகள் இல்லன்னு போலீசு அதிகாரிங்க அவசரமா வாக்குமூலம் தராங்க. ஏன்?
மு.க.ஸ்டாலின் இப்போ தலையிடுகிறார். பரவாயில்ல.. ஆனா அவரு ஆட்சியில இருந்தா இதே மாதிரிதான் நியூசை அமுக்கப் பார்ப்பார். பணம்தான் எல்லா ஆட்சிக்காரங்களையும் சரிப்படுத்துது. இதுக்கு ஒரே தீர்வு ஜல்லிக்கட்டு மாதிரி நாம மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து அவர்களை தண்டிக்க போராடனும். குற்றவாளிங்கள மொத்தமா தண்டிக்கனும். எவ்ளோ பெண்களுடைய வாழ்க்கையை சீரழிச்சிருக்கானுங்க!”
தருமன்
“சட்டம், நீதிமன்றம் எல்லாம் இப்ப என்ன செய்யுதுன்னு தெரியல. ஹெல்மெட் போட்டுக்காதது பெரிய ஆபத்துன்னு சுவோ-மோட்டோ போட்டு தனியா வழக்க எடுத்தாங்க. இதுக்கு இவ்ளோ நாள் ஆவுது. கண்டுக்கவே இல்லை. இதுல இருந்து கோர்ட்டு எப்படி சரியான தீர்ப்பு சொல்லும்னு நம்பறது? இதுல என்ன விசாரணை வேண்டி இருக்கு. அவனுங்களே வீடியோ எடுத்து சொல்லுறானுங்க, நாங்கதான் செஞ்சோம்னு. அதுல எல்லா ஃப்ரூப்பும் இருக்கு.”
ராஜ்குமார், ஜி.எம். தனியார்கம்பனி.
“தப்பு நடந்திருக்கிறத விசாரிச்சு குற்றவாளிகளை கடுமையா தண்டிக்கனும். சிங்கப்பூர் துபாயில் எல்லாம் சட்டம் கடுமையா இருக்கு. அந்த மாதிரி இங்கேயும் இருக்கனும். எதுக்கெடுத்தாலும் தடை வாங்குறது, ஜாமீன்ல வெளியே விடுறதுன்னு விடக்கூடாது.. ஒரு மாசத்துல இத விசாரிச்சி தண்டனை வழங்கனும். ஆனா அப்படி நடக்கிறது இல்ல. திரும்பவும் மேல் விசாரணை, கீழ் விசாரணைன்னு இப்படியே மறச்சிடுவானுங்க. குற்றவாளிங்க திரும்ப வந்து இதே வேலைய செய்வானுங்க.”
கன்னிவேல், டர்னர்.
“பிடிச்ச ஆளுங்க எல்லாம் MLA சொந்தகாரனுங்க, தெரிஞ்சவனுங்க. அவனுங்க அப்பன் எல்லாம் பெரிய அதிகாரத்துல உள்ளவனுகன்னு சொல்லுறாங்க. சாதாரண மக்களால அவனுங்கள கடைசி வரைக்கும் எதிர்க்க முடியாது. அப்படியே எதிர்த்தாலும் வருஷம் முழுக்க அலைய தெம்பு இருக்காது. கடைசியில இதை அப்படியே மூடி மறைச்சிடுவானுங்க. போலிச இதுல நம்பக் கூடாது. நேரடியா மக்கள்தான் இதுக்கு தண்டனை வழங்கனும். இல்லேன்னா மாட்டினவன் எல்லாம் நாளைக்கு ‘நல்ல புள்ளையா’ வெளியில வெளியே வந்து 200 பொண்ணுங்களை கெடுத்துட்டு திரிவானுங்க.”
ஜெயச்சந்திரன், எஸ்.ஐ. ஓய்வு.
“குற்றவாளிகளை தண்டிக்கனும். அது சரிதான். ஆனா இது சம்பந்தப்பட்ட பொம்பள பசங்களும் சரியில்ல… உஷாராயில்ல… இவங்க ஏன் ஃபேஸ்புக், வாட்சப்புன்னு அவனோட தொடர்பு வச்சிக்கினு தெரியாதவனோட பழகிட்டு அவன் கூட போயிட்டு எல்லாத்தையும் பன்றாங்க. இப்போ போட்டோ எடுத்துட்டான். பிரச்சனை ஆகிடுச்சி அப்படின்னு சொன்னா இது சரியா? நேரடியா பழக்கம் இல்லாதவன்கிட்ட இவங்க எப்படி நெருக்கம் ஆகலாம்?
இது ஜனநாயக நாடு. பொதுவா போலீசுமேல குறை சொல்லலாம். ஆனா அவங்க சட்டத்தின்படிதான் நடக்க முடியும்னு புரிஞ்சிக்கனும். பெரிய பணக்காரனுக்கு சட்டம் உடந்தையா போகலாம்னு சொல்லாலாம். ஆனா எல்லா கேசும் அப்படித்தான் நடக்குதுன்னு நாம கண்ண மூடிக்கினு சொல்ல முடியாது.”
சுந்தர், தனியார்நிறுவனம்.
“சட்டம் கடுமையா இருந்தாலும் அதை யாரும் சரியா பயன்படுத்தறது இல்ல. இப்போ இந்த மாதிரி நேரத்துல மீடியாவும் இந்த விஷயங்களை ஊதிப் பெருக்குது. இந்தப் பிரச்சனை தீர விசாரிச்சி குற்றவாளியை தண்டிக்கணும். ஆளும் கட்சி ஒன்னு சொல்லுது. எதிர்கட்சி அப்படி இல்லன்னுது. போலீசு விசாரணை சரியா நடக்கும்னு நம்பிக்கை இல்ல. தனி ஆணையம் அமைக்கனும். என் வீட்டுல இதுமாதிரி ஒரு சம்பவம் நடந்தா என்னால ஒன்னும் பண்ண முடியாது.”
செல்வநாயகி–காயத்ரி, தாம்பரம்.
செல்வநாயகி-காயத்ரி
“அம்மா, அப்பா முன்ன பசங்கள கண்காணிச்ச மாதிரி இந்த காலத்துல கண்காணிக்கிறது இல்ல. எல்லோரும் வேலைக்கு ஓடிடுறாங்க. அவங்களுக்கும் நேரம் இல்ல. அதிகம் போனா பசங்க கையில ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்து பேசிக்கீறாங்க. இப்போ யார குறை சொல்றது. குடும்பம் நல்லா இருக்கனும்னா பெண்கள வேலைக்கு போகாம இருக்கனும். புருஷங்க சம்பாரிக்கனும். பொம்பளங்க வீட்டப் பாத்துகனும். அப்பதான் பசங்கள பாத்துக்க முடியும். சரியா நடக்கறாங்களான்னு சோதனை பண்ண முடியும்.”
“எல்லாத்துக்கும் பெரியவங்கள தான் காரணம் சொல்லனும். பெண்களை மட்டும்தான் அடக்க ஒடுக்கமா நடந்துக்கனும்னு சொல்றாங்க. பசங்ககிட்டயும் சொல்லனும். அதுவும் நம்ம வீட்ல இருக்க பெண்கள் மாதிரிதான் மத்த பெண்களும்னு சொல்லி வளக்கனும். ஆம்பள பசங்கன்னாவே தனியா அவங்களுக்கு செல்லம் கொடுத்து வளக்கிறது. எது செஞ்சாலும் கண்டுக்காம விட்டுடறது. இதுதான் இந்த மாதிரி செய்தியா வர்றதுக்கு காரணம்.
பொதுவா வெளில போற பொம்பள பசங்களப் பத்தி குறை சொல்றாங்க. அது மாறனும். போனுலயே பேசி போனுலயே நட்பு வச்சிக்கிறது இப்ப அதிகமா இருக்கு. அவங்க உஷாரா இருக்கனும். இதுக்கு விழிப்புணர்வு உருவாக்கணும்.
போலீச, கோர்ட்ட நம்ப முடியாது. எந்த விஷயத்துலயும் சரியா செய்யல. ஜனங்கதான் இதுக்கான தீர்வு சொல்லனும். ஆனா நான்-வயலன்ஸ் மூலமாதான் இந்த பிரச்சனைய தீர்க்கனும். வெட்டு குத்து பிரச்சனைய தீர்க்காது. புரிதல் இல்லாதவங்களுக்கு எஜுகேட் பண்ணனும்.”
“இப்டி நடக்கிறது சாதாரண விஷயம்தான். இந்த பொம்பள பசங்களே இப்படித்தான். பெரிய சிக்கல்ல மாட்டிக்கின பிறகுதான் பிரச்சனைய வெளியே சொல்லுவாங்க. லவ் பண்ணும்போதே உசாரா இருக்க மாட்டாங்க. கெடச்சவங்க கூட சுத்துவாங்க. அப்பால ஆயிரம் குறை சொல்லுவாங்க. எப்படியா இருந்தாலும் ஆம்பள திமிரு என்பது தனிதான். இவனுங்கள எல்லாம் கண்டிப்பா தண்டிக்கனும். இவனுங்களால எங்களுக்கெல்லாம் கெட்டப் பேர். பொண்ணுங்க எல்லாம் இப்ப எங்களையும் அதே மாதிரி பாக்குறங்க. எவனோ ஒரு மிருகம் அப்படி செஞ்சதால மொத்த ஆண்களுக்கும் கெட்ட பேர். அவனுங்களுக்கு சரியா பாடம் புகட்டனும். சாவர வரைக்கும் தண்டனை நினைப்பு இருக்கனும்.”
“வடக்க தான் இந்த மாதிரி நடந்தது. நிர்பயா கேசு எல்லாம் பார்த்தோம். இப்போ இங்கேயும் இந்த மாதிரி கொடூரங்கள் நடக்க ஆரம்பிச்சிடுச்சி. சினிமாவுல முன்ன எல்லாம் திராவிடத்த வளர்த்தாங்க. “அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை என்பது திராவிட உடமையடான்னு கத்துக் கொடுத்தாங்க. இப்போ இந்த சினிமாகாரனுங்க ஆபாசத்த கத்து கொடுக்கிறாங்க” அப்படின்னு எங்க அப்பா சொன்னாரு.. அது சரிதான். சினிமாவுல பெண்கள ஃபேன்சி பொருளா ஆக்குறானுங்க. நிஜ வாழ்க்கையிலும் அதே மாதிரி பாக்குறானுங்க. பொம்பள பசங்க நோ சொன்னா இந்த மாதிரி அசிங்கம் பன்றானுங்க. பொம்பள பசங்க நம்மை மாதிரி மனிதர்தான்னு யாரும் அவங்களுக்கு கத்துக் கொடுக்கல.
இப்போ நிர்மலாதேவி விவகாரத்துல ஜாமீன் வழங்கி இருக்காங்க. இதே மாதிரிதான் இந்த கேசும் நடக்கும். போலிசு கோர்ட் எதுலயும் நமக்கு சரியான நியாயம் கிடைக்காது. ஒரு நியாயமான ஆணையம் அமைக்கனும். நிரந்தமா கண்காணிப்பு இருக்கனும். தண்டனை கடைசி வரைக்கும் நியாபகம் இருக்க மாதிரி இருக்கனும். நடிகர் விக்ரம் பையன் தண்ணி அடிச்சி ஆக்சிடெண்ட் பண்ண விஷயத்தை தெரிய வெச்ச மாதிரி…. எம்.எல்.ஏ – எம்.பி பையனா இருந்தாலும் விடக்கூடாது. முக்கியமா அதிகாரத்துல இருக்கவங்க எப்போ பயப்படுவாங்கன்னா… தேர்ந்தெடுத்தவங்கள திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு வரும்போதுதான் பயப்படுவாங்க. அந்த மாதிரியான சிஸ்டம் கொண்டு வரனும்.
என் போட்டோ… எல்லாம் போடாதிங்க. அப்படிதான் ஒரு சூழல் இருக்குது. இதையும் சேர்த்து எழுதுங்க.”
“நம்மோட பிரண்ட்ஷிப் வந்து முதல்ல சரியா இருக்கனும். ஒருத்தன் நல்லவனா இருந்தா அந்த டீமே சரியா நடக்கும். இப்போ இந்த கேசுல மாட்டினவன் ஒருத்தன் கூட சரியில்லன்னு தோணுது. அதேமாதிரி சோசியல் மீடியாவுல இந்த விஷயத்த ஓயாது பரப்புறாங்க. ஆரம்பத்துலயே பிரச்சனைய சரி செய்யாததால பெரிய பிரச்சனையா மாறுது. எது எப்படியோ போலிசு ஒழுங்கா டீல் பண்ணும்னு நம்பக் கூடாது. ஜல்லிக்கட்டு மாதிரி போராடணும்.”
அரிகிருஷ்ணன், ஆட்டோஓட்டுநர்.
“இவனுங்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனைதான் கொடுக்கனும். மினிஸ்டர், எஸ்பி சொந்தக்காரன்னு சுதந்திரமா உலாத்துவானுங்க. இவனுங்கள நிக்க வெச்சி தோல உரிக்கனும். ஒரு பொண்ண இவ்ளோ இழிவா நடத்துறானுங்கன்னா அவனுங்க மனுஷனா இருப்பானுங்களா? சட்டப்படி எல்லாம் இவனுங்ககிட்ட பேசக்கூடாது. உயிரோட உடம்பு புல்லா பிளேடு போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நடக்க உடனும். அதைப் பார்த்தாதான் மத்தவன் திருந்துவான். போலிசுகிட்ட போனா… நம்மளயே குற்றம் சொல்லுவான். பொண்ணுங்க மேலயே கேசு போடுவான். நாம போராடினா நம்மளயே உள்ள தூக்கி போடுறானுங்க. இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு ஆதரவா இருக்க போலீசுக்கு எதிரா முதல்ல போராடணும்.
“பொண்ணுங்க மட்டும் யோக்கியமான்னு?” சிலர் கேக்குறாங்க….. சாதரணமா ஒருத்தன் கிட்ட பேசுறதோ பழகுறதோ தப்பா இன்னா..? கிடையாது. பழகும்போதே நான் மிருகம்னு சொல்லியா பேசுறானுங்க…… நம்பி போன பொண்ண நாசம் பண்றாணுங்க.. அப்போ அவங்கள மிருகம் மாதிரிதான் ஹாண்டில் பண்ணனும்.”
“இப்ப இந்த கேசை திடீர்னு சிபிஐக்கு மத்துறானுவ. ஏற்கனவே சிபிஐ என்ன பன்னும்னு தெரியும். கட்சிகாரணுங்க இன்னா சொல்லுறானுவளோ அதைத்தான் செய்யப் போவுது. பாதிக்கப்பட்டவங்க பாதி பேர் வெளியே வர்ல. வெளியே சொல்ல அவங்க பயப்படுறாங்க. எலக்சன் டைம். இன்னும் எத்தன நாள் பேசுவானுங்கன்னு தெரியாது. அதுக்குள்ள ஒரு புதுப் பிரச்சனைய பேச ஆரம்பிச்சிடுவோம். எல்லா பிரச்சனையையும் ஒரு புது பிரச்சனை எடுத்துனு வந்து மறைச்சிடுவானுங்க.’
அபிப், ஐ.டிடேட்டாஎன்ட்ரிஊழியர்.
“தண்டனை கடுமையா இருக்கனும். அப்பதான் இதை எல்லாம் நிறுத்த முடியும். அவங்க சொந்தகாரங்க முதற்கொண்டு கவர்ன்மெண்ட் வேலையில இருந்தா அந்த வேலைய புடுங்கனும். அவங்க பெற்றொருக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கனும். இது எல்லாமே ஓப்பனா நடக்கனும். போலீசு என்னா செய்யுதுன்னே நமக்கு தெரியல. நாளைக்கு முக்கியமான ஆதாரம் இல்லன்னு விடுவிச்சிடுவானுங்க. இதுதான் வழக்கமா நடக்குது.”
போஸ்முத்து, மெட்ரோசப்–கான்ட்ராக்டர்.
“இந்த குற்றத்துல சம்பந்தபட்ட எல்லோரும் பெரிய பணக்கார இடத்து பசங்க. பணத்திமிர்ல அந்தமாதிரி பண்றாங்க. எங்களை மாதிரி வேலைக்கு போயிட்டு சம்பாதிச்சா அதோட அருமை தெரியும். பந்தபாசம் தெரியும். அந்த கவலை எல்லாம் அவனுங்களுக்கு இல்ல. அதனால இந்த திமிருக்கு காரணமான அவங்களோட சொத்துக்களை பறிமுதல் செய்யனும். அவர்கள் கடுமையா தண்டிக்கப்படனும். நீதிமன்றம் போலீசு மூலம் மூலம் இவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றால் பொதுமக்களின் போராட்டத்தின் மூலம் நீதியை பெற வேண்டும்.”
அஜித், ராம் – கூலித்தொழிலாளர்கள்
“நீங்க சொல்ற பிரச்சனை பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாது. காலையில வேலைக்கு போனோம்னா சாயங்காலம்தான் வருவோம். அதுக்குதான் நேரம் சரியா இருக்கும். ஆனா பேப்பர்ல போட்டிருந்தாங்கன்னு தெரியும். எங்களுக்கு படிக்கத் தெரியாது. விவரம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டோம். பட்டும்படாததுமா சொன்னாங்க. ஆனா நீங்க சொல்றத கேக்கும்போதே செம ஆத்திரம் வருது. அவங்களை விடக் கூடாது. இதுக்கு என்ன பன்றதுன்னே தெரியல…..”
பகதூர்தீன்.
“அந்த நியூஸ் கேட்டதுல இருந்து ஒரு புள்ளைக்கு அப்பனா என் ரத்தமும் கொதிக்குது. அந்த குழந்தைங்கள இன்னா சீரழிச்சிருக்கானுங்க. அதை கண் கொண்டு பாக்க முடியல. மனம் பதைக்குது. அதைப் பார்த்ததுல இருந்து சரியா தூக்கமும் இல்ல. மனசும் சரியில்ல. எவ்ளோ… கொடுமை அது.
இந்தமாதிரி அக்கிரமக்காரனுங்களுக்கு மதம், சாதி கிடையாது. அவனுங்க தனி மிருக ஜாதி. என்னோட சின்ன வயசுல இப்படி எல்லாம் ஒரு கதையும் கேட்டது இல்ல. நாங்க முசுலீமா இருந்தாலும் பொம்பள குழந்தைகள பாதுகாப்பா வெளியில அழைச்சினு போனதெல்லாம் எங்க ஊர்ல இருக்கும் இந்துக்கள்தான். அதுல ஆசாரி, செட்டியார்னு இருக்காங்க. உடம்பு சரியில்லனாக்கூட அவங்க வேலையா டவுனுக்கு போகும்போது அவங்க கூட அனுப்பி வைப்போம். அவங்க குழந்தைங்கள பத்திரமா வீட்டுல கொண்டு வந்து சேர்ப்பாங்க”
அவருடைய மனைவி….
“நாங்க சிறு வயசுல படிக்கும்போது கண்மாயில வந்து குளிக்கிறதுக்கு துணையா, பாதுகாப்பா இருந்தது இந்துக்கள்தான். அவ்ளோ பாசமா இருந்தாங்க. பிரிச்சி பார்க்க மாட்டாங்க. அதெல்லாம் இப்ப காணல…. மனுசங்க நெஞ்சு நஞ்சாகி போயிடுச்சி. இதை எப்படி போக்குறதுன்னு கவலையா இருக்கு. யாரை பார்த்தாலும் சந்தேகமா இருக்கு. குழந்தைங்கள வெளியில யாரையும் நம்பி அனுப்ப முடியல. இவனுங்களுக்கு கண்டிப்பா சரியான தண்டனைக் கொடுக்கனும். மத்தவங்க அதைப் பார்த்து திருந்தணும்.”
சண்டேஸ்வரா நிறுவனத்திற்காக வங்கிகள் முடி வெட்டிக் கொள்ளும் 65% தொகையும் – கஜா புயலுக்கான நிவாரண தொகையும் !
சாதாரணமாகவே நாமும் நமது பத்திரிக்கைகளும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி பேசுவது இல்லை. இப்போது தேர்தல் வேறு வந்து விட்டது, தொகுதி பங்கீடு, எந்த கட்சி யாருடன் கூட்டு சேருகிறார்கள். எந்த மக்கள் பிரதிநிதி எவ்வளவு லஞ்சம் வாங்கினார், எத்தனை கிரிமினல் வழக்குகள் அவர் மீது உள்ளன, போன்ற செய்திகள் மட்டுமே வந்து கொண்டு இருக்கும். இத்துடன் ‘நமது’ சங்கிகள் விடும் புருடாக்கள் இலவச இணைப்பு.
ஆனால் நாட்டின் முக்கியமான பிரச்சனைகள் திரைக்குப் பின்னால் நடந்து கொண்டே இருக்கின்றன, இருக்கும்… அதில் சிலவற்றின் பட்டியல்:
IL&FS என்ற நிறுவனம் கடனை கட்டமுடியாமல் பிரச்சனையில் உள்ளது என சில மாதங்களுக்கு முன் தொடர்ந்து செய்திகள் வந்தன. இப்போது அதைப் பற்றி அதிகமாக செய்திகளை பார்க்க முடிவதில்லை. இது போன்ற பெருநிறுவனங்கள் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் செய்வதையே இதற்கும் அரசு செய்தது. குழு ஒன்றை அமைத்து அந்தக் குழு இந்த நிறுவனத்தில் என்ன நடந்தது என்று விசாரிக்கும் என்று சொல்லி கடையை மூடியது. அவ்வளவுதான், அதற்குப் பிறகு அந்த நிறுவனம் பற்றி பெரிதாக எந்த செய்தியும் இல்லை. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள், அந்த நிறுவனத்தின் இன்றைய நிலைக்கு காரணமாக இருந்தவர்கள் என எவரும் தண்டிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. அந்த நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும் பெற்ற கடன் ஒரு லட்சம் கோடியை தாண்டும் என்று கூறுகிறார்கள்.
எஸ்ஸார் ஸ்டீல் (Essar Steel) என்ற நிறுவனம் வாங்கிய கடனை கட்டாமல் திவால் என்று அறிவிக்கப்பட்டு அந்த நிறுவனத்தை ஏலம் விடும் பணி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) நடந்து வந்தது. இந்த தீர்ப்பாயத்திற்கு வரும் இதுபோன்ற வழக்குகளை 270 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயம் என்று இழு-இழு என்று இழுத்து இரண்டு வருடங்களாக முடிவுக்கு வராமலேயே உள்ளது. ஒருவழியாக கடந்த வாரம் ஆர்சிலர் மிட்டல் (ArcellorMittal) என்ற நிறுவனம் ஏலத்தில் வென்றதாக தீர்ப்பாயம் அறிவித்தது.இந்த அறிவிப்பு வரும் முன்னரே கடன் முழுவதையும் தானே செலுத்தி விடுவதாக எஸ்ஸார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ருயா (Ruia) குழுமம் தெரிவித்தது. ஒரு நிறுவனம் திவால் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏலம் விடும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் பொழுது, தாய் நிறுவனம் கடன் முழுவதையும் திருப்பி செலுத்த முடியுமா… ? முடியாதா… ? என்பதுதான் இப்போது நீதிமன்றங்கள் முன் உள்ள பிரச்சினை. அவ்வாறு திருப்பி செலுத்த முடியாது, ஏலத்தில் வென்ற ஆரசிலர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் செல்லும் என்று கடந்த வெள்ளியன்று தீர்ப்பாயம் (NCLT) தீர்ப்பு கூறியது. ருயா குழுமம் இதை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு செல்லும், அதனால் இதில் எது சரி என்று தீர்ப்பு வரப்போகிறது, எப்போது வரப்போகிறது, என்று நமக்கு தெரியாது. தீர்ப்பே வந்தாலும் என்ன காரணத்திற்காக அந்த தீர்ப்பு வந்தது என்று நமக்குப் புரிய போவது இல்லை, யாரும் புரியவைக்கப் போவதும் இல்லை.
அதனால் நமக்கு புரியும் விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்வோம். ருயா குழுமம் மொத்த கடனையும் திருப்பி செலுத்தி விடுவதாக சொல்கிறது, அந்தத் மொத்த கடன் தொகை சுமார் 54,000 கோடி. ஆர்சிலர் நிறுவனம் வென்ற ஏலத்தொகை ரூ. 42,000 கோடி, அதாவது ஆர்சிலர் நிறுவனத்துக்கு எஸ்ஸார் ஸ்டீல் செல்லும் பட்சத்தில் கடன் கொடுத்தவர்களுக்கு கிடைக்கப்போகும் தொகை ரூ. 42,000 கோடி. ஆக கொடுத்த கடனில் 12,000 கோடி கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Zee தொலைக்காட்சி நிறுவனம் நம் அனைவருக்கும் தெரிந்த நிறுவனம்தான். அதன் தாய் நிறுவனத்தின் பெயர் எஸ்ஸெல் குழுமம் (essel group). எஸ்ஸெல் குழுமம் அதனுடைய ரூ. 13,500 கோடி கடனை கட்டுவதற்காக Zee தொலைக்காட்சி நிறுவனத்தை விற்கப்போவதாக அறிவிப்பு வந்தது. இதற்குப் பின்னாலும் என்ன நடக்கிறது என்று பெரிதாக செய்திகள் இல்லை.
இந்த நிறுவனங்கள் எல்லாம் நிதி சிக்கலில் மாட்டுவது என்பதையே நம்மால் நம்ப முடியவில்லை. இந்த நிறுவனங்களை எல்லாம் விட பிரபலமான நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் திவால் என்று அம்பானியே தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) போய் சொல்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?
அனில் அம்பானியின் அனைத்து நிறுவனங்களும் திவால் ஆகவில்லை, அவருடைய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என்ற நிறுவனம் மட்டுமே திவாலானதாக அனில் அம்பானி இந்த தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நமக்கு அனைவருக்கும் பரிச்சயமான நிறுவனம்தான்.
மொபைல் போன்கள் வெகுமக்களுக்கு மத்தியில் அதிகம் புழக்கத்தில் இல்லாத பொழுது ரிலையன்ஸ் நிறுவனம் 500 ரூபாய்க்கு செல்போன்களை விற்பனை செய்தது, பேச்சுவழக்கில் அதை ‘கொம்பு செட்’ என்று கூறி வந்தோம். அந்த கொம்பு செட்டை விற்ற நிறுவனம் தான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன். இப்போது அந்த நிறுவனம் திவால் ஆகி விட்டது.
மொபைல் போன் விஷயத்தில் இந்தியா ஒரு புரட்சியை செய்து விட்டது என்று புளகாங்கிதம் அடைவோருக்கு இந்த செய்திகள் ஒரு பொருட்டாக படுவதில்லை. சில நாட்களுக்கு முன்பு தான் ஏர்செல் என்ற நிறுவனமும் திவாலானது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கட்டவேண்டிய கடன் தொகை எவ்வளவு தெரியுமா, ரூ. 45,000 கோடி. அனில் அம்பானி அவர்களின் மற்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுவதாக தெரியவில்லை.
எரிக்சன் என்ற நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு அளித்த சேவைக்காக கொடுக்க வேண்டிய சுமார் 500 கோடி ரூபாயை ஒப்புக்கொண்டபடி கொடுக்காத வழக்கில், அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த தொகையை எரிக்சன் நிறுவனத்திற்கு கொடுக்காவிட்டால் சிறைக்கு அனுப்பப்போவதாக உச்ச நீதிமன்றம் அம்பானியை மிரட்டியுள்ளது. 500 கோடி என்பது அம்பானியை பொருத்தவரை சொற்பமான தொகை, ஆனால் அதையே அவர் செலுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பை செய்கிறார் என்றால் நிலைமை எவ்வாறு உள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
‘ஏழைத் தாயின் மகன்’ இவ்வளவு குளறுபடிகளுக்கும் கேள்விகளுக்கும் மத்தியில் ரஃபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு சாதகமாக முடிப்பதில் ஏன் இவ்வளவு அக்கறையும் முனைப்பும் காட்டினார் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
இவைகள் எல்லாம் இவ்வாறு இருந்தாலும் இந்த கட்டுரை இவைகளை பற்றியது அல்ல. ‘ஏழைத்தாய் மகனி’ன் நெருங்கிய நண்பரான மெகுல் சோக்சி (Mehul Choksi) ‘யாருக்கும் தெரியாமல்’ நாட்டைவிட்டு தப்பியோடிய சமயத்தில் குஜராத்தை சேர்ந்த இன்னொரு தொழிலதிபரும் தப்பி ஓடினார்.
அவர் பெயர் நித்தின் சண்டேசரா. சண்டேசரா தப்பி ஓடி விட்டார் என்று அக்டோபர் 2018 -ல் செய்தி வந்தது. அவரது நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் கட்டாமல் இருக்கும் கடன் தொகை 5,000 கோடி ரூபாய் என்றும் செய்தி வந்தது.
அதற்குப் பிறகு இந்த வழக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு (NCLT) சென்றது. அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, எந்த செய்தியும் இல்லை.
Business Standard என்ற செய்தித்தாளில் 9 மார்ச், 2019 அன்று ‘Sterling Biotech: Lenders agree to 65% haircut’ என்ற தலைப்பிட்ட செய்தி வந்தது. இதன் தமிழாக்கம்: ‘ஸ்டெர்லிங் பயோடெக் விவகாரத்தில் கடன் கொடுத்தவர்கள் 65% முடிவெட்டிக் கொள்வதாக ஒப்புக்கொண்டார்கள்’.
அது என்ன ‘Haircut’ முடிவெட்டுவது, என்று நமக்கு தோன்றலாம். கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முழுதாக மொட்டை அடிப்பது என்பதை கேள்விப்பட்டு இருப்போம், அது ஒரு வகை. முழுதாக மொட்டை அடிக்காமல் கொஞ்சம் மட்டும் வழித்து எடுத்துக்கொள்வது என்பது தான் இந்த ‘haircut’. இங்கு மொட்டை அடிக்கப்படுவது வங்கிக்கு, மொட்டை அடிப்பவர் கடன் வாங்கியவர்.
இந்த செய்தியில் மேலும் உள்ள விவரங்களைப் பார்ப்போம். ஸ்டெர்லிங் பயோடெக் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் கடன் தொகை ரூபாய் 15,000 கோடி. செய்தி என்னவென்றால், இந்த நிறுவனத்தை கட்டுப்படுத்துபவர்களான சண்டேசரா குழுமம் இந்த கடன் தொகையில் 35% திருப்பி செலுத்த முடியும் என்று கூறுகின்றனர்.
இவர்கள் சொல்கிறார்கள் என்பது பெரிய செய்தி இல்லை, கடன் வாங்கியவர்கள் மிகக் குறைவான தொகையை திருப்பித் தருவதாக சொல்வது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. நம்மால் புரிந்து கொள்ள முடியாதது என்னவென்றால், கடன் கொடுத்தவர்களும் 35% மட்டுமே தந்தால் போதும் என்று ஒப்புக்கொள்வதுதான்.
இந்த 35 சதவீதத்தையே ஏன் திருப்பி தருகிறார்கள் என்று நமக்கு தோன்றலாம், அதற்கு காரணம் இருக்கிறது.
எந்த ஒரு நிறுவனமும் வாங்கிய கடனை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்த தவறினால் கடன் கொடுத்தவர்கள் அந்த நிறுவனத்தை திவால் என்று அறிவித்து ஏலத்தில் விட்டு கடனை வசூல் செய்து தரும்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) முறையிட முடியும்; அவ்வாறு கடன் தந்த வங்கிகள் செய்ய வேண்டும் என்பது தான் சட்டம் (IBC). மேலே சொன்ன எஸ்ஸார் வழக்கில் அவ்வாறு தான் நடந்தது.
ஆனால் இந்த ஸ்டெர்லிங் பயோடெக் விவகாரத்தில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வங்கிகள் வழக்குத் தொடுத்து இருந்தாலும், சண்டேசரா குழுமம் 35% கடனை திருப்பித் தருகிறோம் என்று சொன்னவுடன் அதற்கு ஒப்புக்கொண்டு இந்த வழக்கை கடன் தந்த வங்கிகள் திரும்பப் பெற்றுக் கொண்டன.
15,000 கோடி ரூபாய் கடன் கொடுத்து விட்டு அதில் 35% மட்டும் வந்தால் போதும் என்று இந்த வங்கிகள் கூறுகின்றன. அதாவது, சுமார் 5000 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறுகின்றன. மீதி 10,000 கோடி சுவாஹா தான்!
இவ்வளவு பெரிய தொகைகளை எந்தவித சத்தமும் இல்லாமல் ஸ்வாஹா செய்து கொண்டிருக்கும் பொழுது நமது செய்தி ஊடகங்கள் அதிமுக தேமுதிக-வுக்கு நான்கு தொகுதிகள் கொடுப்பது சரியா தவறா, மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தாமல் இருப்பது அரசியலா அரசியல் இல்லையா என்று பத்து பேரை வைத்து விவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நாமும், தேமுதிகவும் மூணு தொகுதியும் தான் உலகிலேயே முக்கியமான செய்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பக்கம் திரும்பினால், ஏழைத் தாயின் மகன் ஏற்கனவே உபயோகத்தில் உள்ள ரோடுகளை திறப்பதிலும், நிலமே கையகப் படுத்தப்படாத திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதிலும் முனைப்பாக உள்ளார். அதுபோக மோடியை கேள்வி கேட்பது இராணுவத்தை கேள்வி கேட்பதா இல்லை நாட்டையே கேள்வி கேட்பதா என்பது போன்ற எதற்கும் உதவாத கேள்விகளை கிளப்புகின்றனர்.
இங்கே 10,000 கோடிகள் சுவாஹா ஆவதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், வெகுமக்களுக்கு 100-களும், 1000-களும் அதிகம் போனால், லட்சம்களும் தான் பரிச்சயம். 10,000 கோடிக்கு எத்தனை பூஜ்யங்கள் வரும் என்று கணக்கிடவே நமக்கு சிறிது நேரம் தேவைப்படும். எத்தனை பூஜ்யங்கள் என்று கணக்கிட்டாலும், நம்மால் அந்த தொகையை புரிந்துகொள்ள முடியாது. ஆகையால் நமக்கு தெரிந்ததை வைத்து புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.
கொங்கு மண்டல மக்களின் பல நாள் கோரிக்கையை நிறைவேற்றியதாக இவர்கள் கூறிக்கொள்ளும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய தொகை ரூ. 1,800 கோடி தான்.
2019-20 ஆண்டுக்கு டெல்லி அரசு கல்விக்கு ஒதுக்கிய தொகை 15,000 கோடி.
மதிய உணவு திட்டத்துக்கு மத்திய அரசு 2016-17 ஆண்டுகளில் ஒதுக்கிய தொகை ரூ. 10,000 கோடி.
கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து கேட்ட நிவாரண தொகை 15,000 கோடி. இந்த தொகையையும் மத்திய அரசு கொடுக்கவில்லை என்பது நினைவில்கொள்ள வேண்டிய விஷயம்.
ஆக, கஜா புயல் நிவாரணத்திற்கு தேவைப்படும் தொகைக்கு இணையான ஒரு தொகையை சண்டேசரா குடும்பத்திற்காக வங்கிகள் முடி வெட்டிக் கொள்கின்றனர்!
இவை அனைத்துக்கும் தீர்வுகாண நாம் சொல்ல வேண்டியது :
நமும்கின் அப் மும்கின் ஹே! (‘Namumkin ab mumkin hai’ – Impossible is possible now)
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அனந்தநாக், காஷ்மீர் பிரச்சினையில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்ட பகுதி. பலர் தங்களுடைய கணவர்களை, மகன்களை, தந்தைகளை இழந்தவர்கள். மேலும், ஏறக்குறை 1500 அரை கைம்பெண்களுக்கு தங்களுடைய கணவர்கள் எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியாது.
“நான் நான்கு மகன்களை இழந்திருக்கிறேன். அதில் மூவர் கிளர்ச்சியாளர்கள். நான்காவது மகன், கிளர்ச்சியாளர்களுக்கு உணவு எடுத்துக்கொண்டு போனபோது, என்கவுண்டர் செய்யப்பட்டான்” என்கிறார் 83 வயதான நப்சா பானோ. தெற்கு காஷ்மீரில் உள்ள சோம்ப்ரைட் கிராமத்தில் சிறியதொரு வீட்டில் வசிக்கிறார் இவர்.
நப்சா தன்னுடைய மகன்கள் உயிரிழந்த நேரத்தை நினைவில் கொண்டுவருகிறார். சிறுநீரக பிரச்சினை காரணமாக தனது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது தனது நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டதாகச் சொல்கிறார் இவர்.
அணு ஆயுத நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் உள்ளது. இரு நாடுகளும் இந்தப் பகுதியை முன்வைத்து இரண்டு போர்களை நிகழ்த்திவிட்டன. கடந்த மூன்று பத்தாண்டுகளில் 70 ஆயிரம் மக்கள் தங்களுடைய வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள்.
மன்சூர் அகமதுவின் 85 வயதான தாய் குருஷி, அரை இருள் சூழ்ந்த அறையில் தனது மகன் இறந்ததைக்கூட அறியாமல் அமைதியாக இருக்கிறார். இந்திய இராணுவத்தில் பணியாற்றிய அகமது, ஜம்மு பகுதியில் 2018-ம் ஆண்டில் நடந்த சன்ஜுவான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
“அவர் திரும்பத் திரும்ப தன்னுடைய மகனைப் பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் உயிரோடு இல்லை என்பதை அவர் அறியவில்லை” என்கிறார் அகமதுவின் தங்கை. “தன்னுடைய மகனின் தொலைபேசி அழைப்புக்காக அவர் காத்திருக்கிறார்”.
மனநல மருத்துவரான ஆரிஃப் மக்ரிபி கான், ஸ்ரீநகர் பகுதியில் மனநல பிரச்சினைக்குள்ளான நோயாளிகளுக்கென்று தன்னார்வதொண்டு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு நோயாளிகளின் வருகை அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கிறார்.
“இவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை அதிர்ச்சியினால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சீர்கேடு (post-traumatic stress disorder – PTSD). ஒரு பெண் தன்னுடைய குடும்ப உறுப்பினரை இழக்கும்போது, பல மாதங்களுக்கு PTSD தவிர்க்க முடியாததாகிறது. அது இன்னும் மோசமான பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்று, அதிலிருந்து வெளிவர முடியாமல் போகிறது” என்கிறார் ஆரிஃப்.
முகப்புப் படத்துக்கான குறிப்பு: தெற்கு காஷ்மீரின் சோபியனில் ஒரு கிளர்ச்சியாளரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பெண்கள். 2016-ம் ஆண்டு ஆளுமைக்குரிய கிளர்ச்சியாளர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு பிறகு, சோபியன் மற்றும் புல்வாமா மாவட்டங்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
ஷகிலாவின் கணவர் ஒரு போலீசு அதிகாரி. ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு வெளியே அவரும் உடன் பணியாற்றியவர்களும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். “என்னுடைய குழந்தைகள் அவருடைய அப்பாவைப் பற்றி தொடர்ந்து கேட்டபடியே இருக்கிறார்கள். அவருக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. சில நேரங்களில் அவர்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடிவதில்லை” என்கிறார் ஷகிலா.
காஷ்மீரில் 1500-க்கும் மேற்பட்ட அரை கைம்பெண்கள், தங்களுடைய கணவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.
தெற்கு காஷ்மீரில் உள்ள குத்வானியில் என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து அதிச்சிக்குள்ளான ஒரு பெண்ணை ஒரு இளைஞர் அழைத்துச் செல்கிறார். கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதி அதிகப்படியான எதிர்த்தாக்குதல்களையும் என்கவுண்டர்களையும் எதிர்கொண்டு வருகிறது.
நான்கு மகன்களை இழந்த நப்சா பானோ.
தெற்கு காஷ்மீரில் கிளர்ச்சியாளர் ஆசிப் மாலிக்கின் தாய், அவருடைய இறுதி ஊர்வலத்தில் முழுக்கங்களை எழுப்புகிறார்.
16 ஆண்டுகளாக தனது கணவரின் வருகைக்காக காத்திருக்கிறார் நசீமா பானோ. காஷ்மீரில் காணாமல் போன 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் அவரும் ஒருவர்.
தெற்கு காஷ்மீரின் கொகெர்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளருக்கு அஞ்சலி செலுத்தும் பெண்கள்.
இந்திய பாதுகாப்புப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், குல்காமின் வானிகுந்த் பகுதியில் உள்ள வீட்டிலிருந்த யாஷ்மினாவின் மகள் முஸ்கானின் நெற்றியைத் துளைத்தது ஒரு துப்பாக்கிக் குண்டு.
இந்திய இராணுவத்தில் பணியாற்றிய மன்சூர் அகமதுவின் 85 வயதான தாய் குருஷி, தன் மகன் பலியானதை இன்னமும் அறியவில்லை.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் உள்ள ஒரு சன்னதிக்கு வெளியே வழிபடும் பெண்கள்.
காஷ்மீரி கிளர்ச்சியாளரின் தாய் இவர். எல்லை தாண்டிச் சென்ற 20-களில் இருந்த இவருடைய மகன் திரும்பவேயில்லை. 1990-களின் ஆரம்ப காலத்தில் காஷ்மீரில் கிளர்ச்சியாளர்கள் உருவாகத் தொடங்கியபோது, பல இளம் சிறார்கள் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீருக்குள் ஆயுத பயிற்சிக்காகவும் இந்தியாவின் ஆட்சியை எதிர்த்தும் போராடவும் எல்லைத் தாண்டிச் சென்றார்கள்.
தெற்கு காஷ்மீரின் அர்வானி கிராமத்தில் ஒரு கிளர்ச்சியாளரின் இறுதி சடங்கை பார்வையிடும் பெண்கள்.
தெற்கு காஷ்மீரில் உள்ள சூஃபி சன்னதியை வணங்கும் ஒரு பெண்.