பரபரக்கும் கிண்டி இரயில் நிலையம்… தனது இறுதி மூச்சை நிறுத்தக் காத்திருக்கும் தொழிற்பேட்டை இது. தமிழ்நாட்டு மக்களிடம் “Goback Modi’ என்று தொடர் உதை வாங்கிய மோடி தற்போது கட்டிப்பிடி வைத்தியம் செய்யக் கிளம்பியிருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தேவையான நிலத்தைக் கையகப்படுத்தாமலேயே திருப்பூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். போதுமான நிதி, பட்ஜெட்டில் ஒதுக்காமல் மதுரையில் எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டினார். விளம்பரத்திற்காக மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்தார். இந்த கூத்துக்கள் அனைத்தையும் மீம்ஸ்-களாக்கி மோடியைப் பந்தாடுகிறார்கள் தமிழக இளைஞர்கள். நாமும் மோடி குறித்து தமிழக மக்களின் மனநிலையை அறிய சென்னையில் நகர்வலம் சென்றோம்.
ஆனந்தன்,ஆட்டோ டிரைவர்.
அய்யய்யோ! சார் மோடிக்கு ஓட்டா… கடந்த நாலரை வருசத்துல அவர் ஆட்சியில ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு… நாங்க அந்த விபத்துலேருந்து மயிரிழையில தப்பிச்சிட்டோம். இனிமே நாங்க செத்தாலும் பிஜேபி-க்கு ஓட்டு போட மாட்டோம். மத்தவங்க கதய விடுங்க..என் கதய கொஞ்சம் கேளுங்க…
அஞ்சு ஆண்டுக்கு முன்ன மன்மோகன்சிங் ஆட்சியில ஆட்டோ வெலை ஆன்ரோடு ரூ. 1,05,000/- தான். இப்ப எவ்ளோ தெரியுமா, ரூ.1,90,000/- அது மட்டுமில்ல, ஒவ்வொரு ரேட்டும் தலைகீழா மாறிப்போச்சு. இன்சூரன்சு ஆண்டுக்கு ரூ.3000/- இருந்தது, இப்ப ரூ. 8500 ஆயிடுச்சு. ஒரு வருசத்துக்கு எஃப்.சி கட்டணம் ரூ.500-ஆ இருந்தது, இப்ப ரூ.1600/ ஆயிடுச்சு. ஆட்டோ பர்மிட் ரெனிவல் பண்றது ( 5 வருசத்துக்கு ஒரு முறை) ரூ.2000/-மா இருந்தது, இப்ப ரூ.7500. இது மட்டுமில்ல, ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ்-ங்க இப்ப வாங்கவே முடியல, வண்டி திடீர்னு ரிப்பேர் ஆனா, உடனே எங்களால அத சரி பண்ண முடியல. அந்த காச ரெடி பண்றதுக்கு ரெண்டு நாளாகும்.
கிளட்சு வயரு , கியர் வயருன்னு எது எடுத்தாலும் விலைவாசி பல மடங்கு ஏறி போச்சு, 5 ரூபா இருந்ததெல்லாம் இப்ப 25ரூபா. 60 ரூபா இருந்த அவுட்டர் வயரு 190 ரூபா. என் வாய கெளராதீங்க.. நேத்து நைட்டு 9 மணிலேருந்து கண்ண முழிச்சி இன்னும் என் பாக்கெட்ல 500 ரூபா சேரல…. இப்ப காலை மணி பத்தாகுது…இன்னும் ஒரு சவாரி வரல…ஆனா, எனக்கு ஒரு நாள் செலவு ரூ.200. வண்டிக்கு பெட்ரோல் ஊத்தனும், மேற்கொண்டு வீட்டுக்கு எடுக்கனும் , வண்டிக்கு வாடகை கொடுக்கனும் , இத நெனச்சாலே தெனமும் தூங்க முடியல.
தண்டல் வாங்குன பணத்த திருப்பி கொடுக்க முடியல. அதுக்கே மாசம் வட்டி போகுது. இன்னொரு தடவ மோடி வந்தா நாங்க குடும்பத்தோட சாகனும் வேற வழியில்ல….
சுந்தர்,எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி மாணவர்.
மோடி-பிஜேபி இவுங்களுக்கு சவுத் இண்டியான்னா குறிப்பா தமிழ்நாடுன்னா வேப்பங்காயா கசக்குது. தமிழ்நாட்டு வளத்த எப்படி அழிக்கிறது, அதன் வளர்ச்சிய எப்படி தடுக்குறதுன்னு தீயா வேல செய்றாங்க…ஸ்டெர்லைட், மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச்சாலை, டிஃபென்ஸ் காரிடார் இப்படி எத எடுத்தாலும் அழிவுத்திட்டம் தான். அத வளர்ச்சித் திட்டம்னு ஏமாத்துறாங்க… இதுல எதுன்னா வளர்ச்சின்னா அது அவுங்களுக்குத் தான், ஆனா நமக்கில்ல…
திலீப், பாலக்காடு, கேரளா.
நான் 15 வருசத்துக்கு முன்னாலயே தமிழ்நாட்டுல குடியேறிட்டேன். சின்ன வயதில் 90-ம் ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-இல் ஷாகா உறுப்பினராக இருந்து தீவிரமாக வேலை செய்தேன். அதில் போலீசுடன் பிரச்சினை ஏற்பட்டு இங்கே வந்துவிட்டேன். இருந்தும் ஆர்.எஸ்.எஸ். செய்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய நிகழ்ச்சிகளின் போது குறிப்பிட்ட நபரிடம் கொடியை ஏன் கொடுத்தீர்கள். அவன் வேற என்பார்கள். ஏனென்று கேட்டால் அதெல்லாம் விளக்கமாக பொதுவில் சொல்ல முடியாது என்பார்கள். கடைசியில் தான் தெரிந்தது, தலித் – தாழ்த்தப்பட்டவர்களை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், அடிமைகள் மாதிரி நடத்துவார்கள், அதை நாசூக்காக செய்வார்கள். இது அங்கே எனக்குப் பிடிக்கவில்லை. இப்படி அங்கே ஆயிரம் குறை இருந்தாலும் நான் ஒரு இந்து இந்துத்துவவாதி என்பதில் எனக்கு பெருமையுண்டு. அதை விட்டுக்கொடுக்க மாட்டேன். நீங்கள் எல்லாரும் சொல்வது போன்று மோதி-ஜி எல்லாருக்கும் ரூ.15 இலட்சம் கொடுப்பதாகச் சொல்லவேயில்லை. அவர் சொன்னது வெளி நாட்டில் இருக்கும் கருப்புப் பனத்தைப் பிடித்தால் அவ்வளவு பணம் தேறும் என்பதுதான். நீங்கள் அதை பொய் பிரச்சாரமாக்கி மோதி-ஜியின் பேரைக் கெடுக்கிறீர்கள். இந்தத் தேர்தலிலும் மோடி தான் திரும்ப வரவேண்டும். ஆனால், நீங்கள் சொல்வது போன்று பசுவின் பெயரில் மனிதரைக் கொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. மாட்டையே கொல்வது தவறு எனும்போது மனிதனைக் கொல்வது எப்படி சரியாகும். இப்படி பிடிக்காத பிரச்சினைகள் ஆர்.எஸ்.எஸ்.-இல் இருக்கிறது. மற்றபடி பார்த்தால் பிஜேபி நல்ல ஆட்சிதான் கொடுத்துள்ளது. அது மீண்டும் வருவது நல்லதுதானே.
கல்யாணி,குடும்பத்தலைவி.
எனக்கு அவர சுத்தமா பிடிக்காது. அவருக்கு ஓட்டு போடமாட்டேன். கேசுக்கு மானியத்த பேங்குல அவர யாரு போடச்சொன்னது? அப்படி எதுவும் எந்த பணமும் ஒழுங்கா எங்களுக்கு வரல. இப்ப மட்டும் எலெக்சன் வருதுன்னு கேஸ் வெலய கொறச்சி கொடுக்குறாங்க…அத அப்பவே பண்ணிருக்கலாம்ல…இப்படி ஏமாத்துனா எங்களுக்குத் தெரியாதா….
சுரேஷ்,தனியார் நிறுவன ஊழியர். (புகைப்படம் தவிர்த்தார்)
தமிழ்நாட்டில் பிஜேபி வருவதற்கான வாய்ப்புக்களே இல்ல, டீமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி வந்ததுக்கப்புறம் பொருளாதார வளர்ச்சிங்குறதே இல்லாம போச்சு….
குமாரவேல்,சென்னைக் குடிநீர் வாரியம்.
அதிமுக-பாஜக கூட்டணி ஜெயிக்கிறது கஷ்டம் தான்… அந்தம்மா இருந்தப்ப பிஜேபி-காரங்க இவ்ளோ அராஜகம் பண்ணதில்ல…. கேஸ் சிலிண்டர் விலைய ஏத்துனாங்க, டிமானிட்டைசேஷன்-னு சொல்லி மக்கள அலைகழிச்சாங்க..பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து போச்சு, காய்கறி வெலையெல்லாம் ஏறிப்போச்சு, ஜிஎஸ்டி-ய கொண்டு வந்து தொழிலெல்லாம் முடங்கிப்போச்சு….இப்ப எத சொல்லி இந்த பிஜேபி காரங்க ஓட்டு கேட்டு வருவாங்கன்னு தெரியல…. மக்கள் இவுங்க விடுற கதையெல்லாம் நம்பமாட்டாங்க…..
ஜி… நான் பாமக சப்போர்ட்டர், ஆனா அதிமுக-பிஜேபி கூட பாமக கூட்டணி வெக்கிறது எனக்கு பிடிக்கல….ஒரு வேள பாமக அவுங்க கூட கூட்டணி வெச்சா நான் நோட்டாவுக்குத் தான் ஓட்டு போடுவேன்.
அன்பழகன்,தனியார் நிறுவன ஊழியர்.
வேலை நிமித்தமாக அவசர கதியில் சென்றுகொண்டிருந்தவரை இடைமறித்து கேள்வி கேட்டதும் புன்னகையுடன் பதிலளித்தார். பிஜேபி தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது சார். கேஸ் விலைய ஏத்திவிட்டது தான் எங்கள மாதிரி மக்கள ரொம்ப பாதிச்சிருச்சு, 400ரூபா இருந்த சிலிண்டர 800ரூபா ஆக்குனது மட்டுமில்லாம, நம்ம காசு கொடுத்து வாங்குனப்புறம் பணத்த பேங்குல போடுறேன்னு சொன்னாங்க…கையில அவ்ளோ காசு இருந்தாத்தானே சிலிண்டர வாங்கமுடியும்… ஆதார் கார்ட பேங்குல இணைக்கனும்னு சொல்லி எத்தன நாளு எங்கள அலக்கழிச்சாரு மோடி, மறந்துருவோமா?
சஜின், ராம்,லயோலா கல்லூரி மாணவர்கள்.
மோடிய பத்தி என்னத்த சொல்றது… டீமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி, நியூட்ரினோ, மீத்தேன் திட்டம் இதெல்லாத்தையும் மறந்துட்டவுங்க வேனா மோடிக்கு ஓட்டு போடலாம். வீதி விருது வழங்கும் விழா-ன்னு எங்க காலேஜ்-ல ஒரு ஈவண்ட் நடந்துச்சு. அதுல சில ஓவியங்கள் அவுங்கள அவமதிச்சதுன்னு எச்.ராஜா, தமிழிசை-யெல்லாம் என்ன சவுண்டு விட்டாங்க தெரியுமா…இத்தனைக்கும் அந்த ஓவியங்கள் எல்லாமே நிஜத்தில நடந்ததுதான். வரஞ்சதுல என்ன தப்ப கண்டாங்கன்னு தெரியல…எங்க ஃப்ரண்ட் மீம்ஸ்-ல பிஜேபி-ய வெச்சு செய்வான். இப்ப அவன் வரல… தாமரை மலரவே மலராது ப்ரோ….
எட்வின்,பேராசிரியர் – நூருல் இஸ்லாம் கல்லூரி – நாகர்கோவில்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி பிடிக்கலன்னாலும், அதிமுக-பிஜேபி-ன்னு பாக்குறப்ப இந்த நாலு பேத்த தவிர வேற யாராவது வந்தா பரவாயில்ல தான். சீமான், திருமா, வேல்முருகன் இவுங்கள்ல யாராவது வந்துட்டு போகட்டும். ஒருவேளை திமுக கூட வரலாமே தவிர பிஜேபி-யெல்லாம் வரவே கூடாது. பிஜேபி சாதி வெறி பிடித்தவுங்களுக்கான கட்சி. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல முதுநிலைப் பொறியியல் முதலாமாண்டு படிக்கும் போது என்னோட ரூம் மேட்டா திருச்சி ஸ்ரீரங்கத்துலேருந்து ஸ்ரீராம்-னு ஒருத்தன் இருந்தான். ரூம் மேட்டா இருந்த வரைக்கும் ஒன்னா சாப்பிட போவோம், வெளியில சுத்துவோம்; ஹாஸ்டல்ல இருக்குற வரைக்கும் நார்மலா தான் பழகுவோம்… கேம்பஸ்ச விட்டு வீட்டுக்குப் போனப்புறம் அவன் பிராமினா இருப்பான், நான் தலித்தா இருப்பேன்…. இந்தக் காலத்துல அந்த மாதிரி நெலம கூட இருக்க விடாம பண்ணுது பிஜேபி கட்சி… ஆர்.எஸ்.எஸ். சொல்றத தான் பி.ஜே.பி. செய்யுது, ஆர்.எஸ்.எஸ் யாருக்கானது? அதுல உயர்சாதி இந்துக்கள் தான் இருக்க முடியும், வருணாசிரமம் சரின்னு சொல்லுற கட்சிய எப்படி ஆதரிக்க முடியும்? இன்னொருமுறை பிஜேபி ஆட்சிக்கு வந்தா என்ன நடக்கும்னு நெனச்சி கூட பாக்கமுடியல…
நசுருதீன், அஜ்மல்,தனியார் நிறுவன ஊழியர்கள் – நசுருதீன் கேரள சிபிஎம் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.
எலெக்சன் நடக்கற நேரமா பாத்து தான் காஷ்மீர்ல குண்டுவெடிக்குது. ரஃபேல் ஊழல் பூதாகரமா வெடிக்கிற நேரத்துல இந்த மாதிரி திசை திருப்புறாங்களான்னு சந்தேகம் வருது. கேரளாவுல போன எலெக்சனப்ப காங்கிரஸ் வின் பண்ணுன இடத்துல தான் பிஜேபி ஜெயிச்சது. இந்த எலெக்சன்-ல கண்டிப்பா அது மாதிரி நடக்காது. நான் கேரளாவில இருந்தாலும், தமிழ்நாடு பிஜேபி-ய எதிர்க்கிறத வச்சு பாக்கும்போது ரெண்டு ஸ்டேட்டும் ஒரே மாதிரி தான் இருக்குறோம்னு தெரியுது. பிரிட்டிஷ் காரன் எப்படி டிவைட் அண்ட் ரூல்-னு நம்மள பிரிச்சி வச்சு கொள்ளையடிச்சானோ, அதே மாதிரி கொள்ளையடிக்கிற வேலயத்தான் பிஜேபி-யும் பண்ணுது…கேரளாவுல பிஜேபி ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பே இல்ல…தமிழ்நாட்டுல அப்படித்தான் நடக்கும்னு கேரளாகாரங்க நம்புறோம்.
“எட்டாம் வகுப்பு வரை All Pass என்பதால்தான் கல்வியின் தரம் பின்தங்கிவிட்டது, அதனால் தான் மோடி அரசு 5-ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு முறையை கொண்டுவந்துள்ளது இனி கடமைக்கு பள்ளிக்கூடம் போய் நோகாம பாஸ் ஆக முடியாது..!”
நன்கு படித்த சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள துறை ரீதியாக நண்பர்களாக இருக்கக்கூடிய ஒரு வாட்சப் குழுவில் வந்த மெசேஜ் இது. இதை பலரும் வரவேற்று கட்டை விரல் உயர்த்துகிற மற்றும் கை தட்டுகிற பொம்மைகளை பதிலாக தருகிறார்கள் .
இன்று நடுத்தர மற்றும் உயர் மட்ட வகுப்பினரை இரண்டு மூன்று வார்த்தைகள் பிடித்து ஆட்டுகின்றன :
தரம்,
இலவசம்,
Heavy competition போன்றவை அவைகளில் சில.
மேலோட்டமாக பார்த்தால் சிறார்களின் கல்வித்தரம் குறித்து வளர்ந்த பெரியவர்கள் அக்கறை காட்டுவதில் என்ன தவறு என்பது போலத்தானே தெரிகிறது?!
சரி, தரம் என்றால் என்ன? ஒரு மாணவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினால் அவர் தரமானவர் என்று சொல்லலாமா? ஆம் சொல்லலாம். ஆனால் இவர்கள் அப்படி கூட சொல்வதில்லையே.. ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களும் நூற்றுக்கு நூறு வாங்கினால் உடனே அது தரமற்ற தேர்வு என்கிறார்கள். சரி அப்படியென்றால் இவர்களின் வரையறைப்படி தரம் என்பதுதான் என்ன?
ஒரு ஊரில் நூறு குழந்தைகள் இருந்தால் அதில் 90 குழந்தைகள் படிக்க போகவேண்டும். அந்த 90-ல் பத்து பேர் மட்டும் தனி வகுப்பில் சேர்ந்து தனி பாடம் படிக்கவேண்டும். இல்லை 90 பேரும் ஒரே பாடத்தை படித்தால் கூட அதில் இருபது பேர் பெயிலாக வேண்டும், நாற்பது பேர் Just pass ஆகவேண்டும், பத்து பேர் நல்ல மதிப்பெண் பெறவேண்டும். 5 பேர் மட்டும் top rank வாங்கவேண்டும். அந்த 5 பேரில் தன் வீட்டு குழந்தையும் இருக்கவேண்டும். இப்படி நடந்தால் அது தரமான கல்வி.
தரம் என்பது இதுவல்ல. ஒரு ஊரில் உள்ள 5 குழந்தைகளை மட்டும் சீராட்டி வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்புவதல்ல ஒரு அரசாங்கத்தின் கடமை. மக்களுக்கான அரசாங்கம் என்பது ஊரிலுள்ள அனைத்து பிள்ளைகளையும் படிக்கவைத்து அவர்களை மேம்படச்செய்ய வைப்பதை கடமையாக கொள்ளவேண்டியது.
தரம் என கொக்கரிக்க ஆரம்பித்துள்ள இதே இந்தியத்திருநாடு தான் ஐந்தாம் வகுப்பு கூட படித்திராத / தாண்டியிராத சிறுவர்களை அதிகமாக கொண்ட தேசங்களில் ஒன்று . இந்தியாவில் 6.5 சதவீத குழந்தைகள் தங்களது ஆரம்பக்கல்வியை கூட அதாவது ஐந்தாம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்ற துயரத்தை கொடுமையை இவர்கள் உணர்வார்களா?
இந்திய மாநிலங்களில் கேரளா (ஆரம்பக் கல்வி முடிக்காதவர்கள் -0.08%), தமிழ்நாடுதான் (ஆரம்பக் கல்வி முடிக்காதவர்கள் -0.98%) தங்களது சிறுவர்களை முழுமையாக ஆரம்பக்கல்வியை முடிக்க வழிவகை செய்துள்ளன. குஜராத்திலே 3% பிள்ளைகள் ஆரம்பக்கல்வியைக் கூட தாண்டவில்லை. ஆந்திராவிலே 6%, மத்திய பிரதேசம் 8% ராஜஸ்தான் 11% உத்தரபிரதேசம் 12% அதிகபட்சமாக மேகாலயா அருணாச்சலபிரதேசத்தில் 15% சிறுவர்கள் ஐந்தாம் வகுப்பைக் கூட படிக்காமல் கல்வியறிவற்றவர்களாக உள்ளனர்.
ஏன் இந்த சிறுவர்கள் ஆரம்பக்கல்வியைக் கூட தாண்டவில்லை? அப்படியென்றால் பத்தாம் வகுப்பு கூட படித்திராத இந்திய சிறுவர்கள் எத்தனை பேர்? என்ன காரணம்?
பள்ளிக்கூடம் கூட அனுப்பமுடியாத அளவுக்கு வறுமை, பள்ளிகள் இல்லாமை, தேர்வில் தோல்வியடைந்தால் நிறுத்திவிட்டு குழந்தைத்தொழிலாளியாக வேலைக்கு அனுப்புதல், தேர்வில் தோல்வியடைவதால் தன்னை விட வயதில் குறைந்த பிள்ளைகளுடன் படிப்பதால் ஏற்படுகிற தாழ்வு மனப்பான்மை, போக இளவயது திருமணம் இவைகளால் இந்த சிறார்கள் கல்வியறிவற்றவர்களாக உருவாகின்றனர்.
எட்டாம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி தான் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களை பள்ளிப்படிப்பை முடிக்கவைக்கின்றன. பத்தாவது பாஸ் அல்லது பெயில் என்ற தகுதியுடன் அதன்பிறகு அவன் ஏதோ ஒரு வேலையை தேடிக்கொள்கிறான் . அதன்பிறகு அவர்கள் கல்லூரி மற்றும் உயர்கல்வி படிக்கவேண்டும் தான் ஆனால் குறைந்தபட்சம் பள்ளிப்படிப்பையாவது நம் சிறார்கள் தாண்ட வேண்டாமா?!
கலாச்சாரத்தில் சிறந்த நாடு என்று சொல்லப்படுகிற இந்தியா தான் உலகிலேயே வயது குறைந்த திருமணங்களை நடத்துவதில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு . நல்லவேளை இளவயது திருமணங்களை கட்டுப்படுத்துவதில் வழக்கம்போல தமிழ்நாடு கேரளா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. மக்கட்தொகையில் 7வது பெரிய மாநிலமான தமிழ்நாடு இளவயது திருமணங்கள் நடைபெறும் மாநிலங்களில் 17வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் சராசரியாக 19.12 வயதில் திருமணங்கள் நடக்கின்றன . கேரளாவில் சராசரி திருமண வயது 21.5 ஆக உள்ளது . அதுவே ஒட்டுமொத்த இந்தியாவில் சராசரி திருமண வயது 16தான். ராஜஸ்தான், உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் மிக இள வயதிலேயே திருமணம் நடத்திவைக்கப்படுகின்றன.
தேர்வுகளில் தோற்றுப்போனால் பெண் குழந்தைகள் திருமணத்திற்கும் ஆண் குழந்தைகள் வேலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதுதான் நம்முடைய இந்தியா. அதனால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கல்வி உரிமை பெறும் சட்டத்தை தந்துள்ளது . அதன்படி ஒவ்வொரு இந்திய சிறாரும் குறைந்தது 14 வயது வரை கல்வி கற்றே ஆகவேண்டும். மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ள ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையினால் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர் குலைப்பதாக அமையும்.
தரம் வளர்ச்சி என்பன ஊரிலுள்ள ஒன்றிரண்டு பேர் மட்டும் நல்ல வசதியான ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிக்கொண்டு விருந்துண்டு மகிழ, அதே வேளையில் வாய்ப்பு இல்லாத சிறுவர்கள் இருக்க இடமின்றி பசியும் பட்டினியுமாக இருப்பதல்ல. எல்லாருக்கும் உணவு கிடைக்கவேண்டும், எல்லாரும் கல்வி கற்க வேண்டும். இதுதான் தரம். இதுதான் வளர்ச்சி.
தங்கள் வீட்டுப்பிள்ளை ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தால் புத்திசாலிப்பிள்ளை என்று மகிழ்கிறவர்கள் ஊரிலுள்ள நிறைய பிள்ளைகள் அதிக மதிப்பெண்களை குவிக்கும்போது மட்டும், “ஐய்யய்யோ என்ன இப்படி ஆளாளுக்கு மதிப்பெண்களை அள்ளி வீசுகிறார்கள் கல்வியில் தரமே இல்லை, யாரைக்கேட்டாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் என்கிறார்கள் இது என்ன தரம்?” என்று புலம்புவது ஏன்?
குறிப்பு : மேற்கண்ட புள்ளிவிபரங்கள் இந்திய அரசின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
ஜார்கண்ட் மாநிலம் லடேகர் மாவட்டத்தில் உள்ள மஹுவதன் பகுதியில், இறந்து போன தனது தாய் குடியிருந்த வாடகை வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கிறார் பாக்யா பிர்ஜெய்ன். தனது கணவனை இழந்த பாக்யா திருமணத்திற்குப் பின்னர் அருகிலுள்ள பகுதியில் வாழ்ந்து வந்தார். ஜனவரி 1 அன்று இரவு வீட்டில் தனியாக இருந்த தனது 80 வயதுத் தாய் புத்தினி பிர்ஜெய்ன் மரணமடைந்த செய்தியைக் கேட்டு உடனடியாக வந்து சேர்ந்தார் பாக்யா.
கடந்த 2017-ம் ஆண்டு பட்டினிக்கு பலியான 11 வயது சிறுமி சந்தோஷி
“எனது தாய் மரணமடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை எந்த உணவையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவருக்கு உண்ண எதுவுமில்லை. இந்த கடுமையான பனியில் உண்ண உணவு ஏதும் இல்லாமல் அவர் பட்டினியால் இறந்துள்ளார்” என்று கூறுகிறார் பாக்யா. புத்தினியின் மரணம் ஜார்க்கண்டில் தொடரும் பட்டினிச் சாவுகள் பட்டியலின் சமீபத்திய சேர்க்கை. கடந்த ஆண்டு ஜார்கண்டின் சிம்டெகா பகுதிய்ல் வசித்து வந்த சந்தோஷி குமாரி என்ற பதினோரு வயது சிறுமியின் மரணத்திலிருந்து ஜார்கண்டின் பட்டினிச்சாவுகள் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன
புத்தினியின் நீண்ட நாள் பட்டினிக்கான காரணம், விசாரிக்க முடியாதது அல்ல. அவருக்கு ரேஷன் கார்டும் கிடையாது. ஆதார் அட்டையும் கிடையாது. உணவுப் பாதுகாப்பின்மை அவரை அச்சுறுத்தியது. புத்தினி பிரிஜியா பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர். இந்த பழங்குடி இனப் பிரிவு, ”குறிப்பாக அழியும் நிலையில் உள்ள பழங்குடியினப் பிரிவாக” மாநில அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 35 கிலோ இலவச அரிசியைப் பெறுவதற்கு தகுதியானவர் புத்தினி பிரிஜியா. அந்தியோதயா அன்ன யோஜனா எனும் திட்டத்தின் கீழ் ஏழைகளிலேயே மிகவும் ஏழையாக இருப்பவர்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் இது.
அவர்களது தொடர்ச்சியான வேண்டுகோளுக்குப் பின்னரும் கூட அவர்களால் ரேஷன் அட்டையை பெற முடியவில்லை என்று கூறுகிறார் பாக்யா. ”நாங்கள் ஆறுமுறை ரேஷன் கார்டு பெறுவதற்கு முயற்சித்து விட்டோம். ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி தவிர்த்து வந்தனர். இறுதிவரையில் எங்களால் இலவச ரேஷன் பொருட்களைப் பெற முடியவில்லை. ஒருமுறை ரேஷன் அட்டை கேட்டதற்கு அவர்கள் (அலுவலர்கள்) எங்களை நரேந்திர மோடியைப் பார்த்து பார்த்து மனு செய்யுமாறு கூறினர்” என்று நினைவுகூர்கிறார் பாக்யா.
புத்தினியின் வீட்டின் முகப்பு (படம் – நன்றி : த வயர்)
உணவு தானியங்களை அருகில் உள்ள உள்ளூர் சந்தையில் இருந்து வாங்குவது என்பது அவரது குடும்பத்திற்கு இயலாத ஒன்று. ஒரு வாடகை வீட்டில் தனது பேரனின் குடும்பத்தோடு இணைந்து வசிக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் தனது கால்கள் ஒடிந்த நிலையில் அவர் தனது பேரனின் வீட்டில் தங்கியிருந்தார்.
ஒரு நாளைக்கு வெறுமனே ரூ. 200 சம்பளம் பெறும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அருகிலுள்ள செங்கல் சூளையில் பணியாற்றுகிறார்கள். இவ்வளவு குறைவான வருமானத்தில் பல நாட்கள் அவர்கள் பட்டினியுடன் தான் இருந்திருக்கிறார்கள். புத்தினிக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 600 பெறுவதற்குத் தகுதி இருந்தும் அவரால் அதனைப் பெற முடியவில்லை. அவர் பலமுறை அதற்கான அலுவலகத்திற்கு சென்று முயற்சித்தும் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ”எப்போதுமே இதுதான் நடந்திருக்கிறது. எதுவும் என்றும் நடந்ததே இல்லை” என்கிறார் பாக்யா
வறுமையான நிலையில் புத்தினிக்கு உணவு பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. அவரது குடும்பத்தினர் வேலைக்குச் சென்று விட்ட பின், அவரால் சொந்தமாக சமைக்கக் கூட முடியாது. அவரது அண்டைவீட்டார் அவருக்கு தாம் தொடர்ச்சியாக உணவளித்து வந்ததாகக் கூறுகின்றனர். அவரது அண்டை வீட்டுக்காரரான மதினா பீபி, புத்தினி மரணமடைந்த அன்று அவரைத் தாம் காணமுடியவில்லை என்று கூறினார். மானிய விலையில் உணவு தானியங்கள் பெறும் திட்டத்தின் கீழ்தான் மதினா பீபியும் ரேசன் பொருட்களைப் பெற்று வருகிறார்.
சொல்லப்போனால், பல்வேறு அரசாங்க நலத்திட்டங்கள் புத்தினியின் குடும்பத்திற்கு போய்ச் சேரவில்லை. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அவரால் ஒரு வீடு கூட கட்ட முடியவில்லை. ஏனெனில் அவருக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. வறுமையானது அவர்கள் குழந்தைகள் உட்பட அவர்கள் அனைவரையும் கல்வியில் இருந்து வெகு தொலைவில் நிறுத்தி வைத்திருந்தது. அவரது பேரனின் ஒரு மாதமேயான குழந்தை அங்கன்வாடி வசதிகளைக்கூட பெற முடியாமல் இருக்கிறார். ஏனெனில் அங்கு கடந்த ஆறு மாதங்களாக அங்கன்வாடி செயல்படவில்லை.
கூடுதலாக அவர்களது குடும்பத்திற்கு வேலை அட்டைகள் இல்லை. அந்த கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. அவர்களது வாழ்வை உறுதிப்படுத்தக்கூடிய எவ்விதமான வேலைவாய்ப்பு ஆதாரமும் அங்கு அவர்களுக்கு இல்லை. மாநில அரசின் புதிய திட்டமான “கட்யான் கோஷ்”-ன் படி வறுமையின் காரணமாக பட்டினியால் தவிக்கும் குடும்பத்தினருக்கு அவசர உணவு தானியங்கள் வழங்குவதற்காக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் தலா ரூபாய் 10 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டமும்கூட புத்தினியை காப்பாற்ற பயன்படுத்தப்படவில்லை.
புந்தினியின் மகள் பாக்யா (படம் – நன்றி : த வயர்)
புத்தினியின் மரணம் குறித்து, உள்ளூர் பத்திரிகையாளர்கள் எழுதிய பிறகு அப்பகுதியை சேர்ந்த அலுவலர்கள் அக்கிராமத்தைப் பார்வையிட்டனர். அவர்கள் புத்தினியின் குடும்பத்தினருக்கு ரூ. 2000-ஐ அடக்கம் செய்வதற்காக இழப்பீடாக கொடுத்தனர். கூடுதலாக 50 கிலோ அரிசியும் கொடுத்துள்ளனர். இது குறித்து பாக்யா கூறுகையில், அவர்கள் பணம் தருவதற்கு முன்னர், அடக்கம் செய்வதற்குக் கூட தங்களிடம் பணம் இல்லை என்றும் அதன் காரணமாக அடக்கம் செய்யாமல் 3 நாட்களாக புத்தியின் உடலை வீட்டிலேயே வைத்திருந்ததாகக் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் உணவுத் துறை அமைச்சர், சர்-யூ-ராய், பட்டினிச் சாவு என சந்தேகம் ஏற்படும் மரணங்களுக்கு கண்டிப்பாக போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், புத்தினியின் மரணத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில் அலுவலர்கள் அவசர அவசரமாக, உடலை புதைக்குமாறு குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டதாக பாக்யா தெரிவிக்கிறார்.
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் மிகவும் அவசியமானது மற்றும் முதன்மையானது. பொது வினியோக முறையை சீர்செய்து அதன் மூலமாக எண்ணெய், தானிய வகைகள் போன்றவற்றை ஒவ்வொரு மாதமும் முறையாக வழங்கும் போதுதான் சத்தான உணவு கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்று சேருவது உறுதி செய்யப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதுபோன்ற தொடரும் பட்டினிச்சாவுகளும், அன்றாடப் பட்டினிகளும் இந்தியாவின் மக்கள் நல அரசு குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.
புத்தினியின் குடும்பத்தினர் இரங்கலுக்குக் கூட நேரம் ஒதுக்கும் நிலையில் இல்லை. புத்தினியின் மருமகள் சாஞ்சி, அவரது மரணத்திற்கு மறுநாளே பணிக்குச் சென்று விட்டார். ஏனெனில் ஒரு நாள் வேலைக்குச் செல்லாமல் இருப்பது என்பது அவருக்கு கட்டுப்படியாகாத ஒன்று. வெறும் ரூ. 2000 இழப்பீட்டைத் தாண்டி பார்க்கையில் அந்த குடும்பத்திற்கு வேறு எந்த உதவியும் கிடைக்கப்பெறவில்லை. இந்த அவல நிலையில் அவர்களது வாழ்வு தொடராமல் தடுப்பதற்கான எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரது மருமகள் சாஞ்சி கூறுகையில் தங்களுக்குப் போதுமான உணவை உறுதி செய்ய ரேஷன் அட்டை கிடைக்கவேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.
கட்டுரையாளர் : அபினாஷ் தாஷ் சவுத்ரி தமிழாக்கம் : நந்தன் செய்தி ஆதாரம் : தி வயர்
“பிரதமர் அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்” என்கிறார். விசுவ இந்து பரிசத்தின் ‘யுவ வாஹினி’ பெண்கள் குண்டர் படையை தலைமையேற்று நடத்திவரும் பிராச்சி, உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளராக களம் கண்டவர்.
“ராவல்பிண்டி மற்றும் கராச்சியை எரித்தால்தான் தீவிரவாதம் முடிவுக்கு வரும்” என்றும் அந்த வீடியோவில் பிரதமருக்கு ‘யோசனை’ சொல்கிறார் பிராச்சி.
2002 -ல் குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்று குவித்தது இந்துத்துவ கும்பல்.
அந்த வழக்கில் சில முசுலீம்கள் மீது வழக்கு பதியப்பட்டு, தீர்ப்பு வந்துவிட்டது. தொடக்கம் முதலே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், இந்துத்துவ காவிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என பலரும் சொல்லிவரும் நிலையில், நீதிமன்றம் பல்வேறு சாட்சியங்களை புறம்தள்ளிய நிலையில், படுகொலை நிகழ்த்திய கும்பலே தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளது.
படுகொலைகளை அவர்களே ஒப்புக் கொண்டாலும் ஜனநாயகத்தில் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி படுகொலையாளர்கள் சுதந்திரமாக உலவ முடிகிறது. குஜராத்தில் நான்காயிரத்துக்கும் அதிகமான முசுலீம்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர், அதன்பின் இரண்டு முறை முதல்வராகிறார், அதன் பின் நாட்டையே ஆளும் பிரதமராகிறார்.
கொடுமைகளைச்
சொல்வதற்கு
வார்த்தைகளை
தேடுவதை விட
கொடுமையானது
வேறில்லை.
ஒன்றா… இரண்டா
மொத்தக் கொடுமையும்
நாட்டை ஆள்கிறது!
மாட்டுக்கறிக்காக
ஒரு மனிதன் கொல்லப்படுகிறான்
நீட்டு தேர்வுக்காக
ஒரு பெண் சாகடிக்கப்படுகிறாள்
கோவிலில் – கூட்டு வல்லுறவில்
காவிக் கயவர்களால்
சிதைக்கப்படுகிறாள் ஆசிஃபா!
அறியாமைக்கு
காரணமானவர்களை
அடையாளம்
காட்டுவதாலும்,
அநீதியை
அநீதி என்று சொல்வதாலும்
பலர் கொல்லப்படுகிறார்கள்
கொலைகாரர்கள் கையில்
நீதியின் தராசு
ஜனநாயகத்தின் கழுத்தில்
தூக்குக் கயிறு
பிணங்களை நுகர்வதும்
சகஜமாகிப் போகும்
தேசத்தில்
அதைச் சொல்வதும் கூட
தேச விரோதமாகி விடுகிறது
வேடிக்கை பார்ப்பவர்களையும்
விடாது காவி
ஏனெனில்
இது கார்ப்பரேட் ஆவி!
மெல்ல மெல்ல
உனது நிலம், சிறுதொழில்,
உனது கடல், சிறுவணிகம்
உனது கல்வி, விவசாயம்
எங்கும்
கொலையின் விசம்
பரவுகிறது.
போலீசு, ராணுவம்
நீதித்துறை, சட்டம், ஊடகம்
எதற்காக என்று
‘சொல்லப்பட்டதோ’?
அதற்கு
நேர் எதிராக
நமது ரத்தத்தில்
விரைகிறது.
செத்துப்போவதை விடவும்
பிணங்களாய் வாழ்வது
பெரிய கொடுமை!
இந்த கட்டமைப்பே
நெருக்கடி
காவி திரைகளை
கிழித்தெறி!
உலக அளவில் உணவு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனாலும் இங்கு சுமார் 19.4 கோடி இந்தியர்கள் அன்றாடம் பட்டினியில் வாடுகிறார்கள். காரணம், நாம் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான டன்கள் தானியங்களை வீணடிக்கிறோம். இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்கில் சேமிக்கப்படும் உணவுப் பொருள்கள் மழை, வெயில் மற்றும் வெள்ளத்தால் அழுகியோ அல்லது பூச்சிகளாலும் எலிகளாலும் உட்கொள்ளப்பட்டோ வீணாவதை தடுப்பதற்கான கொள்கைகளை உருவாக்குவதாக மாறி மாறி வரும் அரசாங்கங்கள் வாக்களிக்கின்றனர். ஆனாலும் கோடிக்கணக்கான மக்களின் பட்டினியைப் போல் இந்த அவலமும் நீடிக்கத்தான் செய்கிறது. உலக பசிப் புள்ளிவிவரப் பட்டியலில் (Global Hunger Index) 119 இடங்களில் 100-வது இடத்தில் இருக்கும் ஒரு நாட்டில், இந்த புழுங்கி நாறிப்போன கல்நெஞ்ச நிலையை, நாம் வஞ்சனை என்றே விளிக்கலாம்.
நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் சி.ஆர்.சவுத்தரி கடந்த பிப்ரவரி 5, 2019 அன்று பாராளுமன்றத்தில் பேசுகையில், “ஜனவரி 1, 2019 கணக்குப்படி, வழங்கவியலாத / நாசமடைந்த நிலையில் 4,135.224 டன் தானியங்கள் இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்கில் இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டில் இத்தகைய வழங்கவியலாத தானியங்களின் அளவு ஏறக்குறைய 62,000 டன்கள் ஆகும். பின்னர் அவை கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டது.
“இந்திய உணவுக் கழக மோசடிதான் இந்த நாடு இதுவரை சந்தித்ததிலேயே மிகப்பெரிய மோசடி” என்கிறார் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசியத் தலைவருமான வி.எம்.சிங். “இந்திய உணவுக் கழகம் தானியங்களை வாங்கி அவற்றை திறந்த வெளிகளில் வைத்து விடுகின்றது. நீங்கள் பஞ்சாப், அரியானா அல்லது பீகாருக்குச் சென்று பார்த்தால், அவர்கள் எவ்வாறு ஒரு கருப்புத் தார்ப்பாயை மட்டும் வைத்துக்கொண்டு தானியங்களை திறந்த வெளியில் வைக்கின்றனர் என்பதைப் பார்க்க முடியும். தானியங்களை பிரமிட் போல 50 அடுக்குகளுக்கு அடுக்கி வைத்திருப்பார்கள். நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் வந்து மூழ்கியிருந்தாலும், அதில் கீழே உள்ள நான்கு அல்லது ஐந்து அடுக்கு தானியங்கள்தான் பாழாகியிருக்கும். ஆனால், அவர்கள் மொத்த பிரமிட் அடுக்குகளிலுமுள்ள தானியங்களையும் (50 அடுக்குகளையும்) அடிமாட்டு விலைக்கு ஏலம் விட்டுவிடுவர். பெரும்பாலான மூட்டைகளில் பாதிப்படையாத சுத்தமான கோதுமையே இருந்தாலும் இவ்வாறுதான் நடக்கும். இவ்வாறுதான் இந்த மோசடி நடைபெறுகிறது” என்கிறார் சிங்.
நாடு முழுவதும் சேமிப்புக் கிடங்குகள் கட்டுவது சிக்கலாக இருக்கும் சூழலில், பிரச்சினைக்குரிய இடங்கள் என பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரியும் சூழலில் மாற்று தளங்களை அவர்கள் நிர்மாணிக்கலாம். “அவர்களுக்கு அந்தப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்பது தெரியும். அப்படியிருப்பினும் அவர்கள் அதே இடத்தைத்தான் சேமிக்க பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஏன் அங்கே தானியங்களை வைத்திருக்கிறார்கள்? ஏனென்றால், அவை கெட்டுப் போனவை என்று அறிவிக்கப்படவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதானே அவர்களால் அதனை விற்பனை செய்யமுடியும்! அழுகிப்போன நெல்லும், கோதுமையும் இல்லை என்றால் ஊழல்வாதிகள் என்ன செய்வார்கள்? ஊழல்வாதிகள் பணம் சம்பாதிக்க உதவுவதற்குப் பதிலாக தானியங்களை பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளில் வைக்க போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதற்கு முதலீடு செய்ய வேண்டும்.
பெயர் கூற விரும்பாத ஒரு இந்திய உணவுக் கழக அதிகாரி இது குறித்துக் கூறுகையில், வழிகாட்டுதல்கள் அனைத்தும் சரியாகப் பின்பற்றப்படுகின்றன என்றும், ஏலம் விட முடிவெடுக்கும் முன்னர் தானியங்களை தரம் பிரிக்க மூன்றடுக்கு முறை பின்பற்றப்படுவதுடன், ஊழல் தடுப்புப் பிரிவின் சோதனையும் நடைபெறுகிறது என்கிறார். “நீங்கள் நாசமான தானியங்களை வெளியில் வீசியெறிய முடியாது. ஒரு கிலோவாக இருந்தாலும் அல்லது ஒரு டன்னாக இருந்தாலும், ஏலத்திற்கு டெண்டர்கள் விடுக்கப்பட வேண்டும்” என்கிறார்.
தேசிய மின் கருவூலத்தின் கணக்கீட்டின்படி, ஆண்டுதோறும் இந்தியா 265 மில்லியன் டன்கள் தானியம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநியோகிக்கப்படும் மொத்த தானியங்களின் அளவை ஒப்பிடுகையில், பாதிப்படைந்த உணவு தானியங்களின் அளவு குறைவானதாக இருந்தாலும், வீணடிக்கப்படும் தானியங்களை வைத்து மொத்த கொல்கத்தாவுக்கும் ஒரு வாரத்திற்கு உணவுதானியங்கள் வழங்கலாம் (ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக எடுத்துக் கொள்ளும் தானியங்களின் அளவாக 3 அவுன்ஸுகள் எனக் கணக்கிட்டுக் கொண்டால்). 2019-ம் ஆண்டுக் கணக்கீட்டின் படி மாநில அளவில் வீணடிக்கப்படும் தானியங்களின் அளவில் பீகாரில் மட்டும், சுமார் 3,567.65 டன்கள் (தேசிய மொத்த அளவில் 86%) உணவு தானியங்கள் வீணாகியிருக்கின்றன. இதில் கோதுமை 1267.69 டன்களும், நெல் 2,299.97 டன்களும் அடங்கும். பஞ்சாப் மாநிலத்தில் 324.39 டன்கள் தானியங்கள் வீணாகியிருக்கின்றன.
“பஞ்சாபில் தானியங்கள் வீணாகுதல் பொதுவாக அதிகமாகவே இருக்கும். ஏனெனில், பஞ்சாபைப் பொறுத்தவரையில் பெருமளவிலான தானியங்கள் திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகளிலோ அல்லது தார்ப்பாயால் மூடப்படும் கிடங்குகளிலோதான் சேமிக்கப்படுகின்றன. இங்கு தானியங்கள் நாசமடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் மழை மற்றும் மோசமான போக்குவரத்து காரணமாகவும் தானியங்கள் நாசமடைகின்றன”, என்கிறார் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கான முன்னாள் ஒன்றியச் செயலர், சிராஜ் ஹுசைன்.
குறிப்பாக பிகாரைப் பொறுத்தவரையில், கடந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் தானியங்கள் வீணாவது குறித்த புள்ளிவிவர வரைபடமும் பிறழ்வாகவே உள்ளது. மராட்டியம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் அவர்களது பழைய நிலையிலிருந்து முன்னேறியிருக்கின்றன. பீகாரும் கடந்த 2017-ம் ஆண்டு வரை அவ்வாறு முன்னேறியிருக்கிறது. குறிப்பாக 2013-14-ம் ஆண்டில் பீகாரில் நாசமடைந்த தானியங்களின் அளவு 3909.41 டன்களாக இருந்தது. 2014-15 காலகட்டத்தில் 703.65 டன்களாக இருந்தது. 2015-16 காலகட்டத்தில் அது 46.931 டன்களாகக் குறைந்தது. பின்னர் 2016-17-ம் ஆண்டுகளில் வீணான தானியங்களின் இருப்பே இல்லை. தற்போது பீகாரில் இருக்கும் வீணான தானியங்களின் இருப்பு 2017-18 மற்றும் 2018-2019-க்கான இருப்பு ஆகும்.
“தானியங்கள் நாசமடைந்ததற்கு முக்கியக் காரணம், வெள்ளங்கள்தான். சில சேமிப்புக் கிடங்குகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இழப்பைக் குறைக்க அவற்றை அடுக்குவாரியாக ஆய்வு செய்வதற்கான நடைமுறை உள்ளது” என்கிறார் பீகாரின் இந்திய உணவுக் கழக அலுவலர். கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து எடுத்துக் கொண்டால் பீகார் 11 ஆண்டுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் மரணமடைந்துள்ளனர்.
கட்டுரையாளர் : சித்தார்த்தா மிஸ்ரா தமிழாக்கம் : நந்தன் நன்றி :அவுட்லுக்
“கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில்!” என்ற தலைப்பில், 2019, பிப் 23 சனிக்கிழமையன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்காக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் நான்கு பேரை நேற்று பிப்-20 மாலை சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர் அறந்தாங்கி போலீசார்.
இத்தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த DYFI, வி.சி.க, தி.மு.க, மே 17 இயக்கம் , தமுஎகச உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் மற்றும் வழக்கறிஞர்கள் அலாவுதீன், கார்த்திக், சேக் உள்ளிட்டோர் போலீசிடம் வாதிட்டனர். “உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று சட்டப்படி நடக்கும் ஒரு மாநாட்டிற்கான பிரச்சாரத்திற்காக கைது செய்தது தவறு, இது சட்டப்படி குற்றம்” என்பதைச் சுட்டிக் காட்டினர்.
“இது மேலிடத்து உத்தரவு எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்ற ஒற்றை பதிலை மட்டும் கூறி தோழர்களை ரிமாண்டு செய்வதற்கான வேலைகளில் இறங்கினார், அறந்தாங்கி போலீசு பொறுப்பு உதவி ஆய்வாளர். அதன்படி, அவசர அவசரமாக இரவு 8.00 மணிக்கு அறந்தாங்கி நீதித்துறை நடுவரிடம் தோழர்களை ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.
அறந்தாங்கி நீதித்துறை நடுவரிடம் போலீசாரின் சட்டவிரோத நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர், வழக்கறிஞர்கள். நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் மாநாட்டு பிரச்சாரத்தின் பொழுது, மக்களை இடையூறு செய்யும் விதமாக எந்த சம்பவமும் நடைபெறாத நிலையில் போலீசார் முதல் தகவல் அறிக்கையே பொய்யாக புனைந்திருப்பதையும் உணர்ந்த நீதித்துறை நடுவர் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை (FIR) நிராகரித்து தோழர்களை சிறையிலடைக்க மறுத்துவிட்டார். உரிய பிணையோடு இன்று (21/2/2019) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நான்கு தோழர்களையும் விடுவித்தார்.
இம்மாநாடு நடைபெறவிடாமல் தடுப்பதற்கான தமக்கு சாத்தியமான எல்லா வகையிலும் முயன்று வருகிறது போலீசு. தஞ்சை பேருந்து நிலையத்தில் பிரசுரம் கொடுத்ததற்காக 9 பேரை கைது செய்திருக்கிறது, தஞ்சை போலீசு. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் கடைவீதியில் வியாபாரிகளிடம் மாநாட்டு பிரசுரம் விநியோகித்த தோழர்களை கும்பலாகச் சென்று தாக்கியிருக்கிறது காவிக் கும்பல். போலீசின் பொய்வழக்கு, காவிக் கும்பலின் மிரட்டல்களையெல்லாம் எதிர்கொண்டு, மக்கள் ஆதரவோடு மாநாட்டு வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்குரிய வகையில் மிகவும் அவசரகதியில் நடந்து வருகிறது. இந்த தாக்குதல் பாகிஸ்தானை புகலிடமாக கொண்ட அமைப்புதான் நடத்தியது என்பதும், இதனால் பாகிஸ்தான் அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதிலும் இது மிகவும் கண்டத்துக்குரிய ஒன்று என்பதிலும் மாற்று கருத்து கிடையாது.
பொக்ரானில், இந்திய விமான படை நடத்திய போர் ஒத்திகை.
புல்வாமா தாக்குதலை நடத்தியதில் எப்படி பாகிஸ்தானுக்கு பங்கிருக்கிறதோ அதே போன்று தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியதில் இந்திய அரசுக்கும் பங்கிருக்கிறது. இதில் தன்னுடைய தவறை யாரும் சுட்டிக்காட்டி விடக்கூடாது என்பதில் இந்திய அரசு மிகவும் கவனமாக உள்ளது. மக்களின் கோவம் முழுவதும் பாகிஸ்தான் மீதே இருக்கும் வண்ணமும் அடுத்து போர்தான் தீர்வு என்பது போன்ற பிம்பத்தையும் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது.
ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக மோடி அறிவித்துள்ளார். ராணுவம் இது வரை எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையிலும் ஊடகங்கள் தொடர்ந்து போர் மேகம் சூழ்கிறது ஒத்திகைகள் நடக்கிறது என்று பொய்யுரைத்து வருகின்றன. நேற்று பொக்ரான் என்னும் இடத்தில் இந்திய விமான படை போர் நடத்திய ஒத்திகை, இந்த தாக்குதலுக்கு எதிர்வினை ஆற்றவே நடைபெற்றது போல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் உண்மை வேறு.
மூன்று ஆண்டுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு இந்திய விமானப்படையால் நடத்தப்பட்டு வரும் ஒன்றாகும். 2013-ம் ஆண்டு வாயு சக்தி என்ற பெயரிலும், 2016-ல் இரும்புக்கரம் என்ற பெயரிலும், இந்த ஆண்டு மீண்டும் வாயு சக்தி என்ற பெயரிலும் நடந்தேறியது.
கார்கில் போர். (கோப்புப் படம்)
தொடர்ந்து போர் வேண்டும், பழி வாங்க வேண்டும் என்ற வகையில் பேசி வரும் பெரும்பாலோனோருக்கு உண்மையில் போர் வந்தால் என்ன விளைவுகள் வரும் என்பதை பற்றிய சிறு புரிதல் கூட இருக்க வாய்ப்பு இல்லை. இதற்கு முன்பு 1999-ல் நடந்த கார்கில் போர் பற்றி இவர்களுக்கு தெரிந்திருக்காது. அப்படியே தெரிந்திருந்தாலும், அதில் இந்தியா வெற்றி பெற்றது, மலை உச்சியில் நான்கு வீரர்கள் தேசிய கொடியுடன் இருக்கும் படம் தவிர வேறு ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்த போரில் பாகிஸ்தானில் 700-க்கும் அதிகமான உயிரிழப்புகளும், இந்திய ராணுவத்தில் 453 வீரர்களும் இறந்தனர். பாகிஸ்தானில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று நமது தேசபக்தர்கள் கவலை பட மாட்டார்கள். இப்போதைய போர் வேண்டாம் என்பவர்களின் கவலை இந்த 453 உயிர்கள் மற்றும் இனி போர் வந்தால் போகப்போகும் உயிர்களின் மீதானது. ஆனால், போர் வேண்டும் என்பவர்களின் கணக்கு வேறு, நம் பக்கம் 453 தான், எதிரி தரப்பில் 700, நமக்குத்தான் வெற்றி என்பார்கள். நாட்டின் அமைதிக்கு நாம் குறிப்பிட்ட விலையை கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
கார்கில் போராகட்டும் அல்லது தீவிரவாத தாக்குதலில் இறந்த அல்லது காயம் பட்டு உடல் ஊனமுற்ற வீரர்களின் நிலையோ மற்றும் அவர்களின் குடும்பச் சூழ்நிலையோ மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. நமது தேசபக்தர்களின் வேலை என்பது இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்வதோடு நின்று விடுகிறது. அது மட்டுமல்லாது சில பக்தர்கள் யாரெல்லாம் தேசத்துரோகி என்பதைக் கண்டறியும் வேலைகளையும் சேர்த்துச் செய்து வருகிறார்கள். போர் வேண்டும், பழி தீர்த்தே ஆக வேண்டும் என்று முழங்கும் தேச பக்தர்களும், பாஜக-வும் இந்தப் போருக்கு பின்னான விளைவுகளைக் குறித்துச் சிறிதும் கண்டு கொள்வதில்லை.
மேஜர் தேவேந்திர பால் சிங்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு Zee தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஓய்வு பெற்ற மேஜர் தேவேந்திர பால் சிங் கூறிய சில தகவல்கள்: (இவர் 1999-ல் நடந்த கார்கில் போரில் தன் ஒரு காலை இழந்தவர். பின்னர் இழந்த காலுக்குப் பதிலாக செயற்கை கால் பொருத்தி ஓட்டப்பந்தயங்களில் கலந்து வருகிறார்).
• லான்ஸ் நாயக் நஷீர் வாணி (தீவிரவாதியாக இருந்து ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக உயிர் துறந்தவர்) போலப் பல காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரியும் வகையில் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து ஒருவன் என் வீட்டுக்குள் நுழைந்து என்னுடைய இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறான் என்றால், நான் அதைத் தடுக்கத் தவறி விட்டேன் என்று தான் அர்த்தம்.
• 40 குடும்பங்கள் இப்போது அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இனியும் சரியான தீர்வை நோக்கி சிந்திக்காமல் பழி தீர்த்தலை பற்றியே பேசிக்கொண்டு இருந்தால் இன்னும் பல குடும்பங்கள் அவலநிலைக்குத் தள்ளப்படும். பழி தீர்க்க வேண்டும் என்று முழங்கும் முன்பு ராணுவ வீரர்களின் குடும்பங்களைக் கேளுங்கள், உங்கள் வீட்டின் நாயகனை இழக்க விரும்புகிறீர்களா என்று.
• அடுத்தத் தலைமுறை சரியான திசையை நோக்கி சிந்திக்கத் தவறினால், தாக்குதல், பழி தீர்த்தல், அதற்கு எதிரியின் பழி தீர்த்தல், மீண்டும் நம்முடைய பழி தீர்த்தல் என்று சுழற்சியாகவே சென்று கொண்டு இருக்க வேண்டியதுதான்.
• நமக்காக நமது வீரர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால், இறந்த வீரரின் விதவை மனைவி தனக்குக் கிடைக்கவேண்டிய நிவாரணத் தொகைக்காக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் படி விட்டு விடுகிறோம். ஒரு சில வீரர்களின் உடல் கிடைக்காமல் போனதால் தனது கணவன் நாட்டுக்காக உயிர் விட்டவர் என்பதை நிரூபிக்க இறந்த உடலை கொண்டு வரும்படி நீதிமன்றம் கூறிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
• நானே இதற்கு ஒரு சாட்சி. நான் கார்கில் போரில் காயம் பட்டுக் கால்களை இழந்தவன் என்று 7 வருடங்கள் போராடி ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் நிரூபித்து, எனக்குச் சட்டப்படி கிடைக்கவேண்டிய ஓய்வூதியத்தைப் பெற வேண்டி இருந்தது.
• இது போல ஆயிரக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியக் காரணி. இந்த நிலை இன்று வரை நீடிக்கிறது.
• நமக்காக நமது வீரர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால், போரில் இறந்த, காயம் அடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற வீரர்களின் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த கல்வி சலுகைகள் குறைக்கப்படுவதைக் கண்டு கொள்ள மாட்டோம். (இந்திய பட்ஜெட்டில் இதற்கான செலவு வெறும் 3 கோடி மட்டுமே). தொடர் போராட்டங்களுக்குப் பிறகு இந்தச் சலுகைகள் மீண்டும் கிடைக்கப் பெற்றது.
இங்கு குறிப்பிட்ட அனைத்தும் முன்னாள் ராணுவ வீரரின் வார்த்தைகள். இன்றைய தேசபக்தர்கள் வருடம் தோறும் கொண்டாடும் விஜய் திவாஸ்க்காகத் தனது கால்களை இழந்தவர்.
1999-ல் கார்கில் போர் நடக்கும் போது வாஜ்பாய் அவர்களின் ஆட்சி. 2004 வரை அவருடைய ஆட்சிதான். ஆனால், போரில் காயம் பட்ட வீரர் ஏழு வருடங்கள் நிவாரணத் தொகைக்காக அலைய வேண்டி உள்ளது. 1971 -ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி போரில் இறந்த மற்றும் உடல் ஊனமுற்ற வீரர்களின் குழந்தைகள் முதல் பட்டம் பெறும் வரை முழுக் கல்வி செலவையும் அரசு ஏற்கும். 2010-ல் இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, கல்லூரி மற்றும் விடுதி செலவை மட்டும் அரசு ஏற்கும் மற்ற செலவுகளை ஏற்காது என்ற நிலை உருவானது. 2017 ஜூலை மாதம் நிர்மலா சீதாராமன் அவர்கள் மற்றொரு திருத்தத்தைக் கொண்டு வருகிறார். அதாவது முழுக் கல்வி செலவையும் அரசால் ஏற்க முடியாது, மாதம் ரூ.10,000 வரை மட்டுமே அரசு ஏற்கும் என்று. அதன் பிறகு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பணியில் உள்ள வீரர்களின் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2018 மே மாதம் இந்தத் திட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட 36 கோடி வரை மட்டுமே தேவைப்படும். படேல் சிலைக்கு 3,௦௦௦ கோடி, கங்கைக்கு 600 கோடி, அரசின் விளம்பரத்திற்கு 3000 கோடி என செலவு செய்யும் அரசு இந்த கல்வி சலுகையில் கை வைத்து 36 கோடி பணத்தை சேமிக்க எண்ணுகிறது.
ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ்.
இது மட்டுமா, 2017 ஜனவரி மாதம் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அவர்களுக்குச் சரியான உணவு வழங்கப்படுவதில்லை என்று முகநூலில் ஒரு பதிவை மேற்கொள்கிறார். அடுத்த மூன்று மாதத்தில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த ஒரு வருடம் கழித்து 2018 ஏப்ரல் மாதம் ராணுவ வீரர்களுக்கு வாங்கப்படும் உணவின் தரம் குறித்துச் சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய DFRL (பாதுகாப்புத் துறை உணவு ஆராய்ச்சியகம்) பணிக்கப்படுகிறது. அந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதா, அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. கடந்த 2019 ஜனவரி மாதம், உணவு குறித்துக் குற்றம் சுமத்திய வீரரின் மகன் பூட்டிய வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே, இந்த வீரருக்கு மிரட்டல்கள் வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீட்டில் ஆயுத தளவாடங்களுக்கான தொகை எவ்வளவு, வீரர்களுக்கான தொகை எவ்வளவு என்று நமக்குத் தெரியவில்லை. ரஃபேல் ஊழல், மற்றும் ராணுவ வீரர்களின் கல்வித் தொகைப் பிரச்சினையை ஒப்பிட்டுப் பார்த்தால் தளவாடங்களுக்கு அதிகம் ஒதுக்கியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
மேலும், ராணுவ வீரர்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகள் மற்றும் தற்காப்பு உபகரணங்கள் கொள்முதலை நிறுத்தும் நிலைக்கு ராணுவம் தள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாது, 7-வது ஊதிய குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வையும் தர முடியாத நிலைக்கு ராணுவம் தள்ளப்பட்டது. அதன் பிறகு ராணுவ உயரதிகாரிகள் தரப்பில் இருந்து எழுந்த அதிருப்தியின் காரணமாக நிதி ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அந்த நிலை தவிர்க்கப்பட்டது.
பாதுகாப்புத் துறை வீரர்களின் தற்கொலைகள் மற்றுமொரு மிகப்பெரிய பிரச்சனை. அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின் படி மூன்று நாட்களுக்கு ஒரு வீரர் தற்கொலை செய்து கொள்கிறார். 2001 முதல் 2012 வரையில் 1362 பாதுகாப்புப் படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2013 முதல் 2017 வரை 434 தற்கொலைகள் நடந்துள்ளது. 2018-ம் ஆண்டில் மட்டும் 104 . இதில் 80 % க்கும் மேல் தரைப்படை இராணுவ வீரர்கள் (மீதம் விமானப்படை மற்றும் கப்பற்படை).
இப்படி அரசின் தரப்பில் நிர்வாகக் குறைபாடுகளை அடுக்கி கொண்டே போகலாம். இந்த நிர்வாகக் குறைபாடுகளை மறைக்கும் பொருட்டே அரசும், அதன் கைக்கூலிகளான ஊடகங்களும் தொடர்ந்து போர் ஒன்றே தீர்வு என்று மக்களை நம்ப வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றன. இது நேரடியாகத் தனது அரசியல் நலனுக்காக ஆயிரக்கணக்கான உயிர்களைப் பணயம் வைக்கும் செயலே.
இது ஒரு பக்கம் இருக்க, சங்க பரிவாரங்கள் தங்கள் பங்குக்கு இசுலாமிய எதிர்ப்பினை வெளிப்படையாக மக்கள் மத்தியில் விதைக்கத் துவங்கி உள்ளனர். பாகிஸ்தானை பழி வாங்க வேண்டும் என்று கூவிக் கொண்டு காஷ்மீர் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் வாழும் காஷ்மீர் மக்கள் குறிப்பாக இசுலாமியர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் எனபதுதான் எதார்த்தம். தங்கள் இசுலாமிய எதிர்ப்பினை காட்ட இந்த 42 வீரர்களின் தியாகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதைவிட இந்த வீரர்களின் தியாகத்தை யாரும் கொச்சைப்படுத்தி விட முடியாது.
இது ஒட்டுமொத்த பிரச்சனையின் ஒருபக்கம் மட்டுமே. ராணுவத்தால் காஷ்மீரில் நடந்த வன்முறைகள் மற்றொரு பக்கம். வன்முறை என்றால் தீவிரவாதிகளை ஒடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அல்ல. தனிநாடு கோரிக்கையை முன்னிறுத்தி போராடும் காஷ்மீர் மக்கள் மீது அரசால் ராணுவத்தின் உதவி கொண்டு நடத்தப்படும் வன்முறைகள். அரசானது பிரிவினை கோரும் காஷ்மீர் மக்களையும் தீவிரவாதிகளையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பிடுகிறது. அதாவது கையில் கல் கொண்டு எரிபவனையும், கையெறிக் குண்டால் அடிப்பவனையும் ஒரே ஆயுதத்தால் அடக்க நினைக்கிறது அரசு. தீவிரவாத குழுக்களால் ராணுவத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பிரிவினை கோரும் மக்களின் சனநாயக வழி போராட்டங்களையும் சேர்த்து மதிப்பிழக்கச் செய்கிறது.
காஷ்மீரைப் பொறுத்தவரை நமது பார்வை மேலோட்டமானது. அங்குக் களநிலவரம் என்பது இன்னும் சிக்கலான ஒன்றாகத்தான் உள்ளது. காஷ்மீர் மக்கள் இந்தத் தீவிரவாத குழுக்களுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் இருமுனை போராட்டங்களை நிகழ்த்தி வருகிறார்கள். உச்சநீதிமன்றமே காஷ்மீரில் ராணுவத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சில வழிமுறைகளை கொடுத்துள்ளது. ஆனால், இந்த வழிமுறைகள் நடைமுறையில் பின்பற்றப்படவில்லை என்பதும் உண்மை. இங்குக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால், போர் வந்தாலும் இறுதியில் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாவது இந்தக் காஷ்மீர் மக்கள்தான். ஆனால், இதுவரை நடந்த போர்களோ அல்லது தீவிரவாத ஒழிப்பு செயல்களோ காஷ்மீர் மக்களின் வாழ்க்கைத்தரத்தை எந்த வகையிலும் உயர்த்திடவில்லை என்பதுதான் எதார்த்தம்.
அரசின் நிர்வாகத் திறமையின்மை, தவறான கொள்கைகள் ராணுவத்தையும் காஷ்மீரையும் மட்டும் பாதிக்கவில்லை. மற்ற மாநிலங்களும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளன. சமூக மற்றும் பொருளாதர ரீதியில் மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து மக்களைப் பிளவுபடுத்தும் செயல்களை அரசும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் செய்து வந்த வண்ணமே உள்ளனர்.
தவறான பொருளாதார கொள்கைகள் வேலைவாய்ப்பின்மையை அதிகப்படுத்தியுள்ளது. ஏராளமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு, கல்வி கட்டணங்கள் உயர்வு, நீட் போன்ற புதிய நுழைவுத் தேர்வுகளின் அறிமுகம், மருத்துவத்துறையில் அரசின் செயல்பாடுகள் குறைக்கப்பட்டுத் தனியாரின் செயல்பாடுகளை அதிகரித்தல் என அரசின் பல கொள்கைகள் மக்களை அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளி கொண்டு இருக்கிறது. இவைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் நோக்கில்தான் அரசும் அதன் கைக்கூலி ஊடகங்களும் பொய்யான போர் மேகங்களை உருவாக்கி கொண்டு இருக்கின்றன.
காஷ்மீர் மக்களுக்கான தீர்வை அம்மக்களின் துணை கொண்டுதான் அடையமுடியும். அது தவிர்த்து போரின் மூலமோ பழி வாங்கும் செயலின் மூலமோ காஷ்மீர் மக்களுக்கான தீர்வையும் பெற முடியாது, தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியாது. இவற்றோடு சேர்த்து நாம் கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரம் இருக்கின்றது. அதற்கான பதிலை கொடுக்க வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது. இவர்களின் போர் முழக்கங்களில் நாம் கவனத்தைச் சிதற விடாமல் பதில் கிடைக்கும்வரை தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்போம்.
வாழ்க்கை நவீனமாக மாறிவிட்டாலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது மேலும் மேலும் கடினமாகி வருகிறது. அதிலும் பள்ளிகளை தெரிவு செய்வதும், தெரிவு செய்த பள்ளிகளில் ஆசிரியர்கள் நல்ல முறையில் கற்பிக்கிறார்களா என்பதும் பெற்றோர்களின் நிரந்தரக் கவலைகளாகி விட்டன. கல்வியில் தனியார்மயம் ஏற்படுத்திய தீங்குகள் ஒருபுறமிருக்க, கல்வி – பள்ளி – ஆசிரியர் போன்ற கல்வியியல் வார்த்தைகள் வெறுமனே தேர்வில் வெற்றி பெறுவதற்கான குறியீடுகளாக மாறிவிட்டன.
குழந்தைகள் உலகில் சோவியத் நிபுணர்கள் மிகப்பெரும் சாதனைகளை படைத்திருக்கின்றனர். ஆரம்பப் பள்ளி ஒன்றில் பதினைந்து ஆண்டுகளாக பணியாற்றிய அமனஷ்வீலியின் அனுபவங்கள் ஒரு இனிமையான இசை ராகமாக இங்கே மீட்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளை சொந்த முறையில் சிந்திக்க வைப்பதும், கற்றுக் கொடுப்பதும், சரி தவறுகளை இங்கிதமாக உணர வைப்பதும் இன்னபிற அசாத்தியமான விசயங்களை இலகுவாகச் செய்கிறார் இந்த ஆசிரியர். இந்த ஆசிரியரிடமிருந்து நாம் – பெற்றோர்களும், ஆசிரியர்களும் – கற்றுக் கொள்ளவதற்கு நிறைய இருக்கின்றது. தொடர்ந்து படியுங்கள். இந்த பாகத்தில் அணிந்துரையும், நூலாசிரியரின் முன்னுரையும் இடம் பெறுகின்றன. அடுத்த பாகத்தில் இருந்து நூலின் அத்தியாயங்கள் ஆரம்பமாகும்.
– வினவு
அணிந்துரை
ஷல்வா அலெக்சாந்தரவிச் அமனஷ்வீலியின் இந்நூலை ஒரு குறிப்பிட்ட வகையை மட்டும் சேர்ந்த நூலாகக் கருத முடியாது. எல்லாமே மிக எளிமையானதாகத் தோன்றக்கூடும் – நூலாசிரியர் தன் பல்லாண்டு நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். வாசகரைப் பொறுத்தமட்டில் ஷ. அமனஷ்வீலி சாதாரண ஆரம்பப் பள்ளியாசிரியர். உண்மையிலோ இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர், பேராசிரியர். ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்தரும் முறைகளும் வழிகளும் இந்நூலில் சுட்டிக் காட்டப்படுகின்றன.
எழுதப் படிக்கவும் ஆரம்பக் கணிதத்தையும் சொல்லித்தரும் ஏராளமான முறையியல் சாதனங்கள், படங்கள் மற்றும் வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளதானது இதற்கேற்றவாறு உள்ளது. நூலாசிரியரும் இவரது சகாக்களும் இவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்தி, குழந்தைகள் அந்தந்தப் பாடங்களின் அடிப்படைகளை நன்கு கிரகிக்குமாறு செய்கின்றனர். இதில் வாசகரும் (குறிப்பாக ஆரம்பப் பள்ளியாசிரியரும் குழந்தைகளுக்கான தோட்டப் பள்ளியின் ஆசிரியரும்) கல்வி கற்பிப்பதற்கான ஏராளமான முறையியல் சாதனங்களைக் காணலாம். இவற்றை உருவாக்கியதில் எல்.எஸ். விகோத்ஸ்கி, டி.என். உஸ்னாட்ஸே, எல்.வி. ஸான்கோவ், பி.இ. ஹச்சாபுரீட்ஸே, டி.பி. எல்கோனின், வி.வி. தவீதவ் மற்றும் பல சோவியத் மனோதத்துவ வல்லுநர்களின் மனவியல் – ஆசிரியர் பயிற்சிக் கருத்துக்கள் பெரும் பங்காற்றின.
அப்படியென்றால், இந்நூல் ஒரு முறையியல் பாடநூல், ஆரம்பப் பள்ளியாசிரியர்களுக்கான பாடப் புத்தகம் என்று பொருளாகுமா? கிடையவே, கிடையாது. இந்நூல் உண்மையிலேயே ஒரு முழு கல்வியியல் காவியமாகும். அ.எஸ். மக்கா ரென்கோ எழுதிய கல்வியியல் காவியம் என்ற பிரபல நூலிற்குப் பின் காவிய நடையிலான கல்வியியல் எனும் வரையறுப்பிற்கு இவ்வளவு தூரம் பொருந்தி வரும் நூலை நான் பார்க்கவில்லை. ஷ.அ. அமனஷ்வீலியைப் பொறுத்த மட்டிலும் கூட இந்தப் படைப்பு வெறும் கல்வியியல் காவியம் மட்டுமின்றி கல்வியியல் இன்னிசையும் ஆகும்.
குழந்தைகளுடன் நூலாசிரியர் அமனஷ்வீலி.
நூலாசிரியர் குழந்தைகளுடன் கலந்து பழகும் ஒவ்வொரு தருணத்திலும் நுண்ணிய இன்சுவை மிக்க இசைநயம் ஒலிக்கிறது. தன் சின்னஞ்சிறு மாணாக்கர்களுடனான ஒவ்வொரு சந்திப்பையும் நூலாசிரியர், ”எண்ணற்றவகை மாறுபாடுகளையுடைய கல்வி எனும் இசைவெள்ளமாகக்” கருதுவது தற்செயலானதல்ல. ”ஒவ்வொரு பள்ளி நாளின் இன்னிசையும் என் காதுகளில் குழந்தைகள் போடும் சத்தமாக ஒலிக்கிறது” என்று எழுதுகிறார் ஷ.அமனஷ்வீலி.
குழந்தைகளின் மீதான அன்பு, குழந்தைகளின் மென்மையான இதயத்தின் பாலான நுட்பமான அணுகுமுறை ஆகியனதான் இந்நூலை எழுதத் தூண்டிய முக்கியக் காரணிகளாகும். குழந்தைகளின் மென்மையான இதயத்தைப் புண்படுத்துவது, ஒரு கவனமற்ற வார்த்தையால் அல்லது செயலால் காயப்படுத்துவது எளிது. திபிலீசி நகரில் ஷ.அ. அமனஷ்வீலி ஒரு வகுப்பை நடத்திக் கொண்டிருந்ததை நான் பார்க்க நேர்ந்தது. அவர் வகுப்பில் உள்ளவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ஒரு சில குழந்தைகள் பதில் தெரியுமென கரங்களை உயர்த்தினர்.
தனக்கே உரித்தான பாணியில், மும்முரமாக நடந்து வந்த அமனஷ்வீலி ஒரு சிறுவனை அணுகி மெதுவாகச் சொல்கிறார்: ”தாத்தோ, மெதுவாக என் காதில் சொல்.” தாத்தோ உற்சாகமாக அவர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறான். ஷ. அ. அமனஷ்வீலி புன்முறுவலோடு கேட்டு, பின் அவனது தலையை அன்பாகக் கோதிவிட்டபடியே மிக மிக மெதுவாகக் கூறுகிறார்: ”தாத்தோ, எங்கே இன்னும் சிறிது யோசி, பார்க்கலாம்.” தாத்தோ தன் அடர்த்தியான கறுப்புப் புருவங்களை சுருக்கியபடியே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குகிறான். இந்த சமயத்தில் ஆசிரியர் இன்னொரு சிறுவனின் அருகே நிற்கிறார், அவனோ எழுந்து நின்று உரக்க, உறுதியோடு பதில் சொல்கிறான்.
சமீபத்தில் எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் தன் ஐந்து வயதுச் சிறுமியைப் பற்றிச் சொன்னார்: ”நான் அறையில் நுழைந்து பார்த்தால் என் மகள் தான்யா எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தாள், தன்னுள்ளேயே மிகவும் லயித்திருந்தாள். இரண்டு முறை நான் கூப்பிட்ட பின் தான் அவள் தன் நிலைக்கே வந்தாள். ‘என்ன யோசனை’ என்று நான் கேட்டேன். அவள் திடீரென பதில் சொன்னாள்: ’ஒன்றுமில்லை அம்மா, நான் என் விஷயமாக, குழந்தைகள் விஷயமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்’….”
சோவியத் பதிப்பில் குழந்தைகள் வாழ்க நூல்
ஆம், குழந்தைகள் தம் விஷயங்களை, குழந்தைகள் விவரங்களைப் பற்றி சிந்திக்கின்றனர். அது இவர்களின் சின்னஞ்சிறு உலகம், பெரியவர்களாகிய நாம் இந்த உலகத்தினுள் நுழைவதே கடினம். ஆனாலும் நாம் இந்த உலகத்தினுள் நுழைய வேண்டும். இல்லாவிடில் பெரியவர்களின் உலகத்தை இவர்களுக்கு நம்மால் காட்ட முடியாது, எனவே இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்க முடியாது. நமக்கு உகந்த வழியில் இவர்களை வளர்க்க இயலாது. கட்டளைகள், அச்சுறுத்தல், நிர்ப்பந்தம் மூலம் இதைச் செய்ய முயலலாம் அல்லது ஷ. அ. அமனஷ்வீலி செய்வதைப் போல் குழந்தையின் எண்ணங்களுக்குள், குழந்தையின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப்புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு, பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், எதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இதைச் செய்யலாம்.
இந்த விஷயத்தில் ”தனக்கே உரித்தான, குழந்தைகள் விஷயம்” சிறுவனுக்கு ஒரு மகிழ்ச்சியாக மாறுகிறது, இதை ஆசிரியருடன் கூடிய விரைவில் பகிர்ந்து கொள்ள அவன் துடிக்கிறான். தமக்கு சுவாரசியமானவையும், முக்கியமானவையுமான எல்லாமே ஆசிரியருக்கும் சுவாரசியமானவை, முக்கியமானவை என்று குழந்தைகளுக்குத் தெரியும். ஆசிரியரின் எல்லா முடிவுகளும் நடவடிக்கைகளும் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை என்று கூற முடியாவிட்டாலும் அவருடைய உள்ளத்தில் போதனை முறை சம்பந்தமான ஆக்கபூர்வமான அணுகுமுறை பொங்குகிறது. ஆசிரியரையும் குழந்தைகளையும் இணைக்கும் இழை, நூல் முழுவதும் ஓரிடத்தில் கூட அறுந்து போவதில்லை, நூலாசிரியரின் சிந்தனைகள் மற்றும் செயல்களின் பாலான வாசகரின் கவனம் ஒரு நிமிடம் கூடக் குறைவதில்லை.
ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தருதல் எனும் ஒரு மிக முக்கிய, கடினமான பிரச்சினைக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது சோவியத் நாட்டில், 1984 ஆம் ஆண்டு பொது மற்றும் தொழிற்கல்வி சீர்திருத்தத்தின்படி ஆறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கல்வி ஆரம்பமாகிறது. இதை எப்படி நடைமுறையில் செயல்படுத்துவது? இது குழந்தைகளுக்குப் பாதகமாக அமையாதா? இது அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து ஒராண்டைப் பிடுங்கி விடாதா? இப்பிரச்சினைத் தொடர்பாக சோவியத் நாட்டில் எழுபதாம் ஆண்டுகளில் பெரும் விவாதங்கள் நடைபெற்றன.
ஐந்து, ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தருவதன் நோக்கம் குழந்தையின் வளர்ச்சியை வேகப்படுத்தி, முடுக்கி விடுவது அல்ல, மாறாக விரிவுபடுத்துவதே, அதாவது குழந்தைகளின் ஆன்மிக உலகைச் செழுமைப்படுத்தி, அவர்களின் அறிவாற்றலுக்கு ஊக்கமளித்து, கண்ணோட்டங்களை விரிவுபடுத்துவது தான் இதன் நோக்கமென இப்பணிக்குத் தலைமை தாங்கும் பேரவை விஞ்ஞானி அ. வி. ஸப்பரோ ஷட்ஸ் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
அ. வி. பெத்ரோவ்ஸ்கி, சோவியத் யூனியன் ஆசிரியரியல் விஞ்ஞானப் பேரவை உறுப்பினர்.
முன்னுரை
ஆரம்பப் பள்ளியின் தயாரிப்பு வகுப்பில் (பல சமயங்களில் இதை பூஜ்ஜிய வகுப்பு என்கின்றனர்) உள்ள ஆறு வயதுக் குழந்தைகளுடன் ஆசிரியர் எப்படிக் கலந்து பழக வேண்டும் என்பது பற்றிய நூலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இந்த ”அசாதாரண” மாணவர்களுடன் கடந்த 15 ஆண்டுகளாகக் கலந்து பழகிய அனுபவம் இந்நூலில் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெற்றோர்கள் சந்தேகப்பட்டனர் (”இந்த வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமா?” என்றனர் அவர்கள்), ஒரு சில விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்தனர் (”எதற்கு அவசரம்? குழந்தைகளின் மன நிலை இதற்குத் தயாராயில்லை!” என்றனர் இவர்கள்)… ஆண்டுகள் உருண்டோடின, தயாரிப்பு வகுப்பு பற்றிய பிரச்சினை அரசு முக்கியத்துவத்தைப் பெற்றது.
பள்ளியில், நர்சரிப் பள்ளியில் அல்லது வீட்டுச் சூழ்நிலையில் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தர முடியுமா, இது அவசியமா என்று இந்நூலில் நான் நிரூபிக்கப் போவதில்லை. விஞ்ஞான அடிப்படையில், வாழ்க்கையே முன் வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில், படிப்பதன் மீது குழந்தைகளுக்கே இருக்கும் நாட்டத்தின் அடிப்படையில் இப்பிரச்சினை ஏற்கெனவே தீர்க்கப்பட்டு விட்டது. ஆறு வயதுக் குழந்தைகளுக்கு என் கருத்துப்படி எப்படிப்பட்ட பள்ளி வாழ்க்கையை அளிக்கலாம் என்பது பற்றி இந்நூலில் கூற விழைகிறேன்.
தமிழகத்தின் அங்கன்வாடி ஒன்றில் குழந்தைகள்.
இந்நூலை எழுதும் போது கீழ்க்காணும் கடமைகளை என் முன் வைத்துக் கொண்டேன்: ஆரம்பப் பள்ளியின், இயன்ற அளவிற்கு செகன்டரி பள்ளியின் முழுமையான முறை எனும் படிகத்தின் ஊடாக தயாரிப்பு வகுப்பை புரிந்து கொள்வது; ஆறு வயதுக் குழந்தையைப் பள்ளிச் சிறுவனாக மட்டும் காட்டாமல் (உண்மையில் இவனைப் பள்ளிச் சிறுவன் என்று கூறுவதே கடினம்) முதலில் இவனை, தன் பன்முக வாழ்வைக் கொண்ட, சுற்றியுள்ளவர்களுடன் – சிக்கலான பரஸ்பர உறவுகளையுடைய ஒரு வளரும் மனிதனாகக் காட்டுவது; இதற்கேற்றபடி, ஒவ்வொரு குழந்தையின் உண்மையான வாழ்க்கை, இவனது மகிழ்ச்சி, அதிருப்தி, தேவைகள், நாட்டங்கள், திறமைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வதன் மூலமாக மட்டுமே இவனைப் புரிந்து கொண்டு ஒரு தனிநபர் என்ற வகையில் வளர்க்க முடியும் என்று காட்டுவது; ஆறு வயதுக் குழந்தைகள் ஒரு விசேஷப் பிரிவினர், முதல்வகுப்பு சிறுவர் சிறுமியருக்கு ஏற்ற அதே முறையை இயந்திரகதியாக இவர்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று தெட்டத் தெளிவாக நிரூபிப்பது என்பன தான் என் முன்நின்ற கடமைகளாகும். இது தவிர, பள்ளி வாழ்க்கையின் போதனை முறையில் மனிதாபிமான மற்றும் எதிர்கால நன்னம்பிக்கை அடிப்படைகளை ஊர்ஜிதப்படுத்தும் கடமையும் என் முன்நின்றது.
இக்கடமைகள் தான் இந்த ”பூஜ்ஜிய வகுப்பினருடனான” பணியின் நடைமுறை வடிவங்களை வரையறுத்தன. தன் செயல்முறை, தன் முயற்சிகள், கண்டுபிடிப்புகள், தோல்விகள் பற்றிய ஆசிரியரின் சிந்தனைகள் இவற்றிலடங்கும். நான் ஐந்து பாடநாட்களை சித்தரிக்கிறேன். இவற்றில் ஒவ்வொன்றும் குழந்தைகளுடைய பள்ளி வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டத்தோடு (பள்ளி வாழ்க்கையின் துவக்கம், எழுத்துகளைக் கற்றுக்கொள்வது இத்தியாதி) தொடர்புடையது. என் முன் தோன்றும் பாடக்கல்வி சம்பந்தமான கடமைகளை விளக்கும் போது, குழந்தைகளின் பாலான மனிதாபிமான அணுகுமுறையின் அடிப்படையில் இவற்றைத் தீர்க்கும் முறைகள், கோட்பாடுகளைப் பற்றி சிந்திக்கிறேன், இப்படிப்பட்ட கடமைகளை நிர்ப்பந்த நிலையிலிருந்து தீர்க்கும் முறைகளோடு இவற்றை ஒப்பிடுகிறேன்.
முதலாவது வகுப்பில் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு அந்தந்தப் பாடங்களைக் கற்பிக்கும் முறையியல் நூலை உருவாக்க நான் திட்டமிடவில்லை. முதலாவதாக, குழந்தைகளின் பள்ளி வாழ்வை ஒழுங்கமைக்கும் பொது அணுகுமுறையை விளக்குவதும், இரண்டாவதாக, மிகச்சிறு பள்ளி மாணவர்களை வளர்த்து, கல்வி கற்பிப்பதில் மேன்மேலும் புதிய கடமைகளைத் தீர்க்கும் ஆசிரியரின் ஆக்கபூர்வமான முறைகளை விளக்குவதும் தான் எனக்கு முக்கியமாக இருந்தன. பள்ளியாண்டு துவங்கும் முதல் நாளாகிய செப்டெம்பர் 1-ம் தேதிக்கு முந்தைய தருணத்தின் சிந்தனையிலிருந்து துவங்கும் இந்நூல் ஆறு வயதுக் குழந்தைகளின் நாளைய தினத்தைப் பற்றிய எண்ணங்களுடன் முடிவடைகிறது.
என்னுடைய இந்த அனுபவம் பரிசோதனை ரீதியானது; விசேஷமானது; பள்ளியின் எதார்த்த சூழ்நிலைகளிலிருந்து தள்ளி இருப்பது; பரிசோதனை ரீதியான தயாரிப்பு வகுப்பிற்காகக் குழந்தைகள் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; எனது ஆசிரியர் பணிக்கு ஒரு ஈடு இணையற்ற தனித்துவம் உண்டு என்றெல்லாம் ஒரு வேளை உங்களுக்குத் தோன்றக்கூடும். நிச்சயமாக, ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவருக்கே உரித்தான அம்சம் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் அதற்கே உரித்தான தன்மைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் ஆசிரியர் குழாமும் குழந்தைகளை வளர்த்து படிப்புச் சொல்லித் தருவதற்கான விசேஷ சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றன. இவையெல்லாம் உண்மை.
குழந்தைகளை கொண்டாடுவோம் தமிழில் …
ஆனால், இதனால் நான் கூறும் பரிசோதனைப் பணியின் அனுபவம் எங்கோ ஆகாயத்தில் மிதக்கிறது, இதற்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி அதிகம் என்று பொருளாகாது. சாதாரண பள்ளிச் சூழலில், விசேஷமாக குழந்தைகள் யாரையும் தேர்ந்தெடுக்காமலேயே தான் இந்த அனுபவம் கிடைக்கப்பெற்றது. என் பாணி என்று தனியாகக் கூற முடியாது; பல சோவியத் ஆசிரியர்களின் ஆசிரியர் பயிற்சி அம்சங்கள் இதில் கலந்துள்ளன. சிறு பள்ளி மாணவர்களுடன் கலந்து பழகுவது சம்பந்தமாக எம்மால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகள் சரியானவை என்று இவர்கள் மெய்ப்பித்துள்ளனர். சமீப ஆண்டுகளில் இவர்கள் தம் கூட்டு உழைப்பால் பல நல்ல முறையியல் வழிகளையும் வடிவங்களையும் முன்மொழிவுகளையும் கூறியுள்ளனர். குழந்தைகளின் மீதான உண்மையான அன்பு, இவர்களின் உறுதியான, செயல் முனைப்பான, ஆக்கபூர்வமான உழைப்பு ஆகியவற்றால் இவையனைத்தும் சாத்தியமாகியுள்ளன.
குழந்தைகளுடன் நான் கலந்து பழகிய அனுபவமும், பள்ளியில் இவர்களின் மகிழ்ச்சிகரமான, சுவாரசியமான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்வதற்கான வழிகளின் விஞ்ஞான பூர்வமான தேட்டமும், நீண்ட காலமாகப் பல பரிசோதனை வகுப்பு ஆசிரியர்களுடன் இருந்து வரும் ஆக்கபூர்வமான, விஞ்ஞான ஒத்துழைப்பும் ஒரு சில போதனைமுறை நம்பிக்கைகள் என்னிடம் உருவாக வழிகோலின.
குழந்தைகளை வளர்த்து, கல்வி கற்பிப்பது சம்பந்தமான மனிதாபிமானம் மிக்க, எதிர்கால நன்னம்பிக்கையுள்ள அடிப்படைகளிலிருந்து இந்நம்பிக்கைகள் வருகின்றன. அனேகமாக எனது கருத்துக்கள் எல்லாமே விவாதத்திற்கு அப்பாற்பட்டவையாக இல்லாமலிருக்கலாம். ஆனால், பள்ளிச் சூழலில் ஆறு வயதுக் குழந்தைகளை வளர்த்து படிப்புச் சொல்லித்தர ஒரு விசேஷ போதனை முறை வேண்டும், நவீன வாழ்க்கை மற்றும் சமுதாய வளர்ச்சி ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு ஆரம்பப் பள்ளியின் உள்ளடக்கத்தையும் முறையியலையும் மாற்றியமைக்க வேண்டும் எனும் முக்கிய அம்சத்தில் நாம் கருத்தொருமித்தவர்களாக இருந்தால் இந்நூலின் லட்சியம் அடையப்பட்டு விட்டதாக நான் கருதுவேன்.
சமீபத்தில் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி பங்களிப்புகளை முன்வைத்து காலச்சுவடு ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் எண்ணற்ற அறிஞர்கள் கலந்துகொண்டு கருத்துகள் பகிர்ந்துகொண்டார்கள். அதில் டி.எம்.கிருஷ்ணா முத்தான ஒரு விஷயத்தை பேசினார். அதாகப்பட்டது பெரியவாள் என்ன சொல்றார்னா… அவர் வாய்ஸிலேயே…
எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி பங்களிப்புகளை முன்வைத்து காலச்சுவடு நடத்திய கருத்தரங்கு.
”1960-ஸ் எடுத்துண்டீங்கன்னா… திராவிடியன் மூவ்மென்டுக்கு ஒரு பீக்னு சொல்லலாம். அண்ணாதுரை… அரசியல் வந்துடுத்து… கவர்னன்ஸ் வந்துடுத்து… பெரியாரும் இருந்தார்… பட் அதுக்கப்பறம் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்கோ… திராவிட இயக்கத்தின் ஆன்மா… அது மொத்தமாக போய்விட்டது. ஹைஜாக் செஞ்சுட்டாங்க… யாருமே அந்த இயக்கத்தின் உள்ளுணர்வு என்னனு பார்க்கவே இல்லை. ஆனால் நாம ரொம்ப அதிர்ஷ்டக்காரர்கள்… நல்ல வேளையாக திராவிட இயக்கத்தின் உள்ளுணர்வாக இருந்தது சலபதி… அவரைப் போன்றவர்கள்தான் திராவிட இயக்கத்தை மீட்டு கொண்டு வரணும். திராவிட இயக்கத்துக்கு கிடைத்த கிப்ட் சலபதி!”
பாட்டுக்காரர் கிருஷ்ணாவின் அரிய கருத்துகளை கேட்டதும் புல்லரித்துவிட்டது. “நல்லவேளை சலபதி இருந்தார் இல்லையென்றால் திராவிட இயக்கம் என்னாகியிருக்கும்…” என்று இரவெல்லாம் உறக்கமே கொள்ளவில்லை. ஏன்னா திராவிட இயக்கத்தில் இருந்துகொண்டே திராவிட இயக்கத்தை கேள்விகேட்ட ஒரே ஆள் அவர்தானாம் (கிருஷ்ணா சொன்னார்). ராப்போதில் சில கேள்விகள் ஓடிக்கொண்டேயிருந்தன.
1 – 1960க்கு பிறகு திராவிட இயக்கத்தை ஹைஜாக் பண்ணி அதை நாசம் பண்ணின கொள்ளைக்கூட்ட கும்பல் யாரு… என்பதையும் கிருஷ்ணா சொல்லியிருக்கலாம்.
2 – அதை ரீடிஸ்கவர் செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் என்ன செய்துகொண்டிருந்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்
3 – ‘இயக்க கான்ஸியெஸ்னெஸ்’ சலபதி அந்த திராவிட இயக்கத்திற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.
பாருங்க கிருஷ்ணா சார் நாட்ல என்னைப்போல முட்டாப்பயலுக அதிகமாகிட்டாங்க… கும்ஸா சொன்னா புரியுமா…
(பின்குறிப்பு – சர்வம் தாள மயம் படம் பற்றிய கட்டுரையில் டி.எம்.கிருஷ்ணாவை எதற்காக அடித்தீர்கள் என சிலர் கேட்டிருந்தார்கள். அதற்கு ‘நான்’ பதில் எழுதவேயில்லை.)
சென்ற பாகத்தில் உலோகத்தின் மீது அதுவும் தங்கம் எனும் “மஞ்சள் பிசாசின்” மேல் இருந்த மோகத்தை விளக்கி இருந்தார் ஆசிரியர். இந்த பாகத்தில் இலண்டனில் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகள் உருவான கதையை விவரிக்கிறார். கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றுவாயும், இங்கிலாந்து உலகம் முழுவதிலும் காலனி நாடுகளை உருவாக்கிய விதமும் பொருளாதாரத் துறையின் கோட்பாடுகளை உருவாக்க காரணமாக இருந்ததை விளக்குகிறார். அதில் தாமஸ் மான் எனும் அறிஞர் வாணிப ஊக்க கொள்கைகள் குறித்து எழுதிய இரண்டு முக்கியமான நூல்களை அறிமுகப்படுத்துகிறார், நூலாசிரியர்.
– வினவு
அ.அனிக்கின் ஆங்கிலேயர்கள் லண்டன் நகரத்தை மாபெரும் “வென்” என்று கூறினார்கள்; ”வென்” என்ற சொல்லுக்குக் கட்டி அல்லது வீக்கம் என்று அர்த்தம். உலகத்திலேயே மிகப் பெரிய நகரம் என்று பல நூற்றாண்டுகளாகப் பெருமை பெற்றிருந்த லண்டன் நகரம் நாடாத் துணியைப் போன்று தேம்ஸ் நதியின் மீது ஓங்கி உயர்ந்து நிற்கிறது. கண்ணுக்குப் புலனாகின்ற மற்றும் கண்ணுக்குப் புலனாகாத ஆயிரமாயிரம் இழைகள் அதிலிருந்து வருகின்றன.
அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றில் லண்டன் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. வர்த்தகத்திலும் நிதியிலும் அது உலகத்தின் மையமாக இருந்த காரணத்தால் இந்த விஞ்ஞானத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அது மிகப் பொருத்தமான இடமாக இருந்தது. பெட்டியின் கட்டுரைகள் லண்டனில் தான் அச்சிடப் பட்டன; அவருடைய வாழ்க்கை அயர்லாந்தைப் போலவே லண்டனோடும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் அங்கு தான் வெளியிடப்பட்டது. டேவிட் ரிக்கார்டோ லண்டன் நகரத்தின் அதன் கொந்தளிப்பான வியாபார, அரசியல், விஞ்ஞான வாழ்க்கையின் உண்மையான படைப்பாக இருந்தார். கார்ல் மார்க்ஸ் தன்னுடைய வாழ்க்கையில் பாதிக்கு மேல் அங்கே தான் கழித்தார்; அவருடைய அரிய புத்தகமான மூலதனம் அங்கேதான் எழுதப்பட்டது.
தாமஸ் மான் (1571-1641) ஆங்கில வாணிப ஊக்கக் கொள்கையின் குறிப்பிடத்தக்க பிரதிநிதி ஆவார். அவர் கைவினைஞர்களையும் வர்த்தகர்களையும் கொண்ட பழமையான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய பாட்டனார் லண்டன் நாணயச் சாலையில் அச்சுப்படம் செதுக்குபவராக இருந்தவர்; தகப்பனார் பட்டு, முதலிய உயர்ந்த வகைத் துணிகளை விற்பனை செய்தவர். தாமஸ் மான் தனக்குச் சமகாலத்தில் பிரான்சில் வாழ்ந்த மான் கிரெட்டியேனைப் போல சோக நாடகங்கள் எழுதவில்லை; வாட்சண்டை போடவில்லை; கலகங்களிலும் பங்கெடுக்கவில்லை. அவர் நேர்மையான வியாபாரி, அறிவு நிரம்பியவர் என்ற பெயரோடு அமைதியாக, கண்ணியமாக வாழ்க்கை நடத்தி வந்தார்.
தாமஸ் மான் தன்னுடைய சிறுவயதிலேயே தகப்பனாரை இழக்க நேரிட்டதால் அவருடைய சித்தப்பா அவரை வளர்த்து வந்தார். அவர் ஒரு பணக்கார வியாபாரி. மத்திய தரைக் கடல் நாடுகளோடு வர்த்தகம் செய்து வந்த பழமையான லெவாண்ட் கம்பெனியின் ஒரு கிளையாக 1600-ம் வருடத்தில் ஏற்பட்ட கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனியை நிறுவியவர்களில் அவரும் ஒருவர். தன்னுடைய சித்தப்பாவின் கடையிலும் அலுவலகத்திலும் பயிற்சி பெற்ற பிறகு மான் தனது பதினெட்டாவது அல்லது இருபதாவது வயதில் லெவாண்ட் கம்பெனியில் வேலை செய்யத் தொடங்கினார். சில வருடங்கள் இத்தாலியில் இருந்த பிறகு துருக்கிக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பயணம் சென்று திரும்பினார்.
மான் சீக்கிரத்தில் பணக்காரரானார். எல்லோரும் அவருக்கு மரியாதை செய்தனர். 1615-ம் வருடத்தில் அவர் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் குழுவுக்கு முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெகு சீக்கிரத்தில் அவர் பத்திரிகைகளிலும் நாடாளுமன்றத்திலும் கம்பெனியின் நலன்களை ஆதரித்துத் திறமையோடும் சுறுசுறுப்போடும் வாதாடினார். மான் ஜாக்கிரதையாக நடந்து கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்; அதிலும் அதிகமான ஆசைகள் அவருக்கு இல்லை. கம்பெனியின் துணைத் தலைவர் பதவி அவருக்குத் தரப்பட்ட பொழுது அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவில் கம்பெனியின் உற்பத்தி நிலையங்களை மேற்பார்வையிடுவதற்காக இந்தியாவுக்குப் போய் வருகின்ற வாய்ப்புத் தரப்பட்ட பொழுது அதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் இந்தியாவுக்குப் போய்ச் சேருவதற்கே மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகும். புயற்காற்று, நோய், கடற் கொள்ளைக்காரர்கள்… இப்படி அந்தப் பிரயாணம் மிகவும் ஆபத்தானது.
மான் லண்டன் நகரத்திலும் ஆங்கில நாடாளுமன்றத்திலும் மிகச் சிறப்பான ஒருவராக விளங்கினார். பொருளாதார விஷயங்களைப் பற்றி எழுதுகின்ற கட்டுரையாளரான எட்வர்டு மிஸ்ஸெல் டென் என்பவர் 1623 -ம் வருடத்தில் அவரைப் பின்வருமாறு வர்ணித்தார்.
”… கிழக்கு இந்தியக் கம்பெனியின் வர்த்தகத்தைப் பற்றி அவர் கொண்டிருக்கும் காட்சியறிவு, வர்த்தகத்தைப் பற்றி அவர் செய்கின்ற முடிவுகள், தாய்நாட்டில் அவருடைய சுறுசுறுப்பான உழைப்பு, அவருடைய வெளி நாட்டு அனுபவம் அவருக்குப் பல தகுதிகளைக் கொடுத்திருக்கின்றன. இந்தத் தகுதிகள் எல்லா வியாபாரிகளிடமும் இருக்குமானால் நல்லதே. ஆனால் இந்தக் காலத்தில் பல வியாபாரிகளிடம் இவற்றை சுலபமாகப் பார்க்க முடிவதில்லை.”
இதிலடங்கியிருக்கும் புகழ்ச்சியையும் மிகையுரையையும் ஒதுக்கிவிட்டால் கூட, தாமஸ் மான் நிச்சயமாக சாதாரணமான வியாபாரி அல்ல என்பது தெரியவரும். சமீப கால ஆராய்ச்சியாளர் ஒருவர் எழுதியிருப்பதைப் போல, அவர் வர்த்தகப் போர்த்திற வல்லுநர் (”வர்த்தகம்” என்ற சொல் 17, 18-ம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் ”பொருளாதாரம்” என்ற சொல்லுக்குத் தரப்பட்ட அதே அர்த்தத்தைக் கொண்டிருந்தது).
அவருடைய முதிர்ச்சியான வருடங்கள் ஸ்டூவர்ட் அரச மரபின் முதல் இரண்டு அரசர்களின் ஆட்சிக் காலத்தோடு பொருந்தியிருந்தது. 1603-ம் வருடத்தில் எலிசபெத் அரசி குழந்தைப் பேறு இல்லாமல், அரியணையில் சுமார் ஐம்பது ஆண்டுகள் இருந்தபிறகு மரணமடைந்தாள். எலிசபெத் அரசியான பொழுது இங்கிலாந்து அரசியல், மதச்சச்சரவுகளினால் ஒற்றுமையிழந்த ஒரு தீவாக இருந்தது. அரசி மரணமடைந்த பொழுது இங்கிலாந்து பிரம்மாண்டமான கடற்படையும் விரிவான வர்த்தகமும் கொண்ட உலகப் பேரரசாக மாறிவிட்டது.
எலிசபெத் காலத்தில் கலாச்சாரப் பேரெழுச்சி குறிப்பிடத்தக்க வகையில் ஏற்பட்டது. எலிசபெத்துக்குப் பிறகு ஸ்காட்லாந்தின் அரசியான, தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மேரியின் மகன் முதலாம் ஜேம்ஸ் ஆட்சிக்கு வந்தார். அவருக்கு லண்டன் நகரத்தின் செல்வம் தேவையாக இருந்தது. அதைக் கண்டு அவருக்கு பயமும் ஏற்பட்டது.
அவர் சர்வாதிகாரியாக ஆட்சி செய்ய விரும்பினார். ஆனால் நாடாளுமன்றத்திலும் லண்டன் நகர வர்த்தகர்களின் கைகளிலும் பணப்பை இருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் இருபதுக்களின் ஆரம்பத்தில் நிதித் துறையிலும் வர்த்தகத்திலும் ஏற்பட்ட நெருக்கடிகள் அரசரையும் அவருடைய அமைச்சர்களையும் லண்டனைச் சேர்ந்த பணக்கார நிபுணர்களிடம் ஆலோசனை கேட்குமாறு செய்தன. வர்த்தகம் பற்றி ஒரு விசேஷமான அரசாங்கக் குழு நியமிக்கப்பட்டது. 1622-ம் வருடத்தில் தாமஸ் மான் அதன் உறுப்பினராகச் சேர்ந்தார்.
இந்த ஆலோசனைக் குழுவில் சுறுசுறுப்பும் செல்வாக்குமுடைய உறுப்பினராக அவர் இருந்தார். – பதினேழாம் நூற்றாண்டின் இருபதுக்களில் வேகமாக வெளிவந்து கொண்டிருந்த பிரசுரங்களிலும் மனுக்களிலும், வர்த்தகத்தைப் பற்றிய குழுவின் விவாதங்களிலும் இங்கிலாந்தில் வாணிப ஊக்கக் கொள்கையின் முக்கியமான பொருளாதாரக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன; அவை அந்த நூற்றாண்டின் இறுதி வரையிலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டன. மூலப் பொருள்களை (குறிப்பாகக் கம்பளியை) ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டது; ஆனால் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி, சில சமயங்களில் அரசாங்க உதவியோடு, ஊக்குவிக்கப்பட்டது.
ஆங்கில வாணிப ஊக்கக் கொள்கையின் பிரதிநிதி – தாமஸ் மான் (1571-1641)
இங்கிலாந்து மேலும் மேலும் புதிய காலனிகளைப் பிடித்துக் கொண்டிருந்தது. இவை உற்பத்தியாளர்களுக்கு மலிவான மூலப் பொருள்களைக் கொடுத்தன; சீனி, பட்டு, வாசனைத் திரவியங்கள் மற்றும் புகையிலை ஆகிய பொருள்களைக் கொண்டு வருவதிலும் அவற்றின் இடை நிலை வர்த்தகத்திலும் வியாபாரிகளுக்கு லாபம் கிடைத்தது. அந்நிய நாட்டு உற்பத்திப் பொருள்களுக்கு அதிகமான சுங்க வரி விதித்ததன் மூலம் அவை இங்கிலாந்துக்குள் வருவது கட்டுப்படுத்தப்பட்டது. இது போட்டியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவித்தது (காப்பு வரிக் கொள்கை).
கப்பல் கட்டுவதில் அதிகமான கவனம் செலுத்தப்பட்டது. ஏனென்றால் சரக்குகளை உலகம் பூராவும் கொண்டு செல்வதற்கும் ஆங்கில வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கும் கப்பல்கள் தேவைப்பட்டன. நாட்டுக்குள் விலையுயர்ந்த உலோகங்கள் வருவதை அதிகரிக்க வேண்டுமென்பதே இந்த நடவடிக்கைகளின் முக்கியமான நோக்கம். ஸ்பெயின் நாடு தங்கத்தையும் வெள்ளியையும் அமெரிக்காவிலுள்ள சுரங்கங்களிலிருந்து நேரடியாக அடைந்து கொண்டிருந்தது. இங்கிலாந்து அத்தகைய நிலையில் இல்லை.
ஆனால் பணத்தைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றியதனால் தொழில் துறை, கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் முதலியவை வளர்ச்சியடைந்து இங்கிலாந்துக்கு நன்மை ஏற்பட்டது.
இதற்கிடையில் ஸ்டூவர்ட் முடியாட்சியைச் சுற்றி புயல் மேகங்கள் திரண்டன. முதலாம் ஜேம்ஸ் அரசரின் மகனான முதலாம் சார்ல்ஸ் முரட்டுப் பிடிவாதக்காரராக, முன்னறியும் திறமை இல்லாதவராக இருந்தார். அவர் முதலாளிகளை விரோதித்துக் கொண்டார்; அவர்கள் பெருந்திரளான மக்களிடம் நிலவிய அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். 1640-ம் வருடத்தில் தாமஸ் மான் மரண மடைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு நாடாளுமன்றம் கூடி அரசரை பகிரங்கமாகக் கண்டனம் செய்தது. பிறகு உள் நாட்டுப் போர் வெடித்தது; ஆங்கில முதலாளித்துவப் புரட்சி ஆரம்பமாயிற்று. இதற்கு ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சார்ல்ஸின் தலை துண்டிக்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது வயோதிகரான மான் எத்தகைய அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்பது நமக்குத் தெரியாது; இந்தப் புரட்சியின் முடிவைத் தெரிந்து கொள்வதற்கு அவர் உயிருடனிருக்கவில்லை. ஆனால் தம் காலத்தில் அவர் முழுமையான சர்வாதிகாரத்தைத் தாக்கியிருக்கிறார்; அரசரின் அதிகாரம் குறிப்பாக வரி விதிப்பதில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆதரித்திருக்கிறார்.
எனினும் அரசரை சிரச்சேதம் செய்ததை அவர் ஆதரித்திருக்க முடியாது. தம் வாழ்க்கையின் இறுதியில் அவர் பெருஞ் செல்வராக இருந்தார்; ஏராளமான நிலங்களை வாங்கினார்; லண்டன் நகரத்தில் பெருந்தொகைகளை ரொக்கப் பணமாகக் கடன் கொடுக்கக் கூடியவராக அவர் கருதப்பட்டார்.
தாமஸ் மான் எழுதிய A Discourse of Trade, from England into the East Indies Answering to Diverse Objections Which Are Usually Made Against the Same என்ற நூலின் முதல் பக்கம்.
மான் இரண்டு சிறிய புத்தகங்களை எழுதினார்; அவை பொருளாதார இலக்கியக் கருவூலம் என்று கருதப்படுகின்றன. அவை சாதாரணமாக வெளியிடப்படவில்லை என்பதைக் கூற வேண்டும். A Discourse of Trade, from England into the East Indies Answering to Diverse Objections Which Are Usually Made Against the Same என்ற தலைப்புடைய முதல் புத்தகம் 1621-ம் வருடத்தில் டி. எம். என்ற தலைப்பு எழுத்துக்களோடு வெளியிடப்பட்டது .
பழைய, பூர்வீக வாணிப ஊக்கக் கொள்கையை (பணவியல் முறையை) ஆதரித்தவர்கள், கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியப் பொருள்களை வாங்குவதற்காக வெள்ளியை ஏற்றுமதி செய்கிறது, இந்த வெள்ளியை இங்கிலாந்து நிரந்தரமாக இழந்து விடுகிறது, எனவே அந்தக் கம்பெனியின் நடவடிக்கைகள் இங்கிலாந்துக்குக் கேடு விளைவிப்பவை என்று குற்றம் சாட்டினார்கள். தாமஸ் மான் தமது புத்தகத்தில் இவர்களுக்குப் பதில் கொடுத்திருந்தார். அவர் இந்தக் குற்றச்சாட்டைத் தக்க ஆதாரங்களோடு, புள்ளி விவரங்களோடு திறமையாக மறுத்தார். வெள்ளி மறைந்து போய்விடவில்லை; அது பெரிய அளவில் அதிகரித்து இங்கிலாந்துக்கே திரும்ப வருகிறது என்று எடுத்துக் காட்டினார்.
கிழக்கிந்தியக் கம்பெனி தன்னுடைய கப்பல்களில் இந்தப் பொருள்களை இங்கிலாந்துக்குக் கொண்டு வரவில்லையென்றால் இவற்றை மும்மடங்கு அதிக விலை கொடுத்துத் துருக்கியிலிருந்தும் மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும் வாங்குகின்ற அவசியம் ஏற்படும். மேலும் இவற்றில் ஒரு கணிசமான பகுதி மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வெள்ளிக்கும் தங்கத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று மான் எடுத்துக் காட்டினார். பொருளாதாரச் சிந்தனையின் வரலாற்றில் – கிழக்கிந்தியக் கம்பெனியின் நலன்களை ஆதரித்ததற்காக இந்தப் பிரசுரம் முக்கியத்துவம் அடையவில்லை; முதிர்ந்த வாணிப ஊக்கக் கொள்கையின் வாதங்கள் இந்தப் பிரசுரத்தில் முதன் முறையாக விளக்கிக் கூறப்பட்டிருப்பதே அதன் முக்கியத்துவ மாகும்.
தாமஸ் மான் புகழ் இன்னும் அதிகமான அளவுக்கு அவருடைய இரண்டாவது புத்தகத்தில் அடங்கியிருக்கிறது.(1) ஆடம் ஸ்மித் எழுதியது போல அதனுடைய தலைப்பே அதன் முக்கியமான கருத்தை எடுத்துரைக்கிறது. England’s Treasure by Forraign Trade, or the Balance of Our Forraign Trade Is the Rule of Our Treasure என்பது அப்புத்தகத்தின் தலைப்பு. இப்புத்தகம் 1664-ம் வருடம் வரையிலும், அதாவது அவர் மரணமடைந்த பிறகு சுமார் கால் நூற்றாண்டுக் காலம் வரையிலும் வெளியிடப்படவில்லை.
தாமஸ் மான் எழுதிய England’s Treasure by Forraign Trade, or the Balance of Our Forraign Trade Is the Rule of Our Treasure என்ற நூலின் முகப்பு.
புரட்சி, உள்நாட்டுப் போர், குடியரசு இப்படிப் பல வருட காலம் இந்தக் கையெழுத்துப் பிரதி மற்ற காகிதங்கள், பத்திரங்களோடு ஒரு பெட்டியில் அடைபட்டிருந்தது. தாமஸ் மானுடைய மகன் கட்டிடங்கள், தட்டுமுட்டுச் சாமான்களோடு இந்தப் பெட்டியையும் அவருடைய வாரிசு என்ற முறையில் அடைந்தார். 1660-ம் வருடத்தில் ஸ்டுவர்ட்டுகளின் ஆட்சி மறுபடியும் ஏற்பட்டது; மறுபடியும் பொருளாதார விவாதங்கள் தொடங்கிய பொழுது அந்த ஐம்பது வயதான வியாபாரி, நில உடமையாளர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு அநேகமாக மறந்து போய் விட்ட தாமஸ் மான் பெயரைப் பொது மக்களுக்கும் ஆட்சியிலிருப்பவர்களுக்கும் நினைவூட்டினார்.
மார்க்ஸ் எழுதியது போல, ”அது அடுத்த நூறு ஆண்டுகளுக்கு வாணிப ஊகக் கொள்கையினரின் வேதப் புத்தகமாக இருந்தது. ‘நுழைவாசலில் தொங்கவிடப்படும் அறிவிப்பைப் போல’ (2) வாணிப ஊக்கக் கொள்கையினருக்கு…. வரலாற்றுச் சிறப்புக்குரிய புத்தகம் ஒன்று இருக்கிறதென்றால் அது இந்தப் புத்தகமே.” (3)
பல விதமான அத்தியாயங்களைக் கொண்ட இப்புத்தகம் 1625-30 ம் வருடங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அது வாணிப ஊக்கக் கொள்கையின் சாராம்சத்தைச் சுருங்கிய அளவில் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது. மான் அணி நலம் மிகுந்த உரை நடையில் எழுதவில்லை. அவர் புகழ்மிக்க புத்தகங்களிலிருந்து மேற்கோள்கள் கொடுக்கவில்லை; அதற்குப் பதிலாக வெகுஜன வாக்குகளையும், தொழில் கணக்குகளையும் பயன்படுத்துகிறார். ஒரே ஒரு இடத்தில் தான் அவர் ஒரு வரலாற்றுத் தலைவனைக் குறிப்பிடுகிறார் – மசிதோனியாவின் ஃபிலீப்பின் கருத்தை மேற்கோள் காட்டுகிறார். ஆயுதங்களால் பிடிக்க முடியாத நாட்டைப் பிடிப்பதற்குப் பணத்தை உபயோகிக்க வேண்டும் என்பது அந்தக்கருத்தாகும்.
உண்மையான வாணிப ஊக்கக் கொள்கைவாதி என்ற முறையில் மான் செல்வத்தை அதன் பண வடிவத்தில், குறிப்பாக தங்கம், வெள்ளியின் வடிவத்திலேயே முதன்மையாகப் பார்க்கிறார். அவருடைய சிந்தனையில் வர்த்தக மூலதனக் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற தனிப்பட்ட முதலாளி லாபத்தை எதிர்பார்த்துப் பணத்தை முதலீடு செய்வது போல, ஒரு நாடும் இறக்குமதிகளைக் காட்டிலும் ஏற்றுமதிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, வர்த்தகத்தின் மூலம் செல்வத்தைத் திரட்ட வேண்டும். உற்பத்தி வளர்ச்சியடைவது வர்த்தகத்தைப் பெருக்குவதற்குரிய வழி மட்டுமே என்ற அளவில் அதை அங்கீகரிக்கிறார்.
பொருளாதார நூல்கள் ஏதாவதொரு செய்முறை நோக்கத்திற்காக ஏதாவதொரு பொருளாதார நடவடிக்கையை, முறையை அல்லது கொள்கையை நியாயப்படுத்துவதற்காக எழுதப்படுகின்றன. ஆனால் வாணிப ஊக்கக் கொள்கையினரைப் பொறுத்த வரையிலும் இத்தகைய செய்முறைக் கடமைகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேலோங்கியிருந்தன. வாணிப ஊக்கக் கொள்கையைப் பற்றி எழுதிய பிற எழுத்தாளர்களைப் போல மான் எவ்விதமான பொருளாதார முறையையும் ஏற்படுத்தும் எண்ணம் கொண்டவரல்ல. எனினும் பொருளாதாரச் சிந்தனைக்கென ஒரு தர்க்கவியல் உண்டு. அதனால் அவர் யதார்த்தத்தைப் பிரதிபலித்த கருதுகோள்களையே உபயோகிக்க நேர்ந்தது. பண்டங்கள், பணம், லாபம், மூலதனம்…. இவற்றுக்கிடையே இருக்கும் காரண காரியத் தொடர்பைக் கண்டுபிடிப்பதற்கு அவர் முயற்சி செய்தார்.
(தொடரும்…)
அடிக்குறிப்பு:
(1) இந்தப் புத்தகம் முதன் முதலாக 1609 ம் வருடத்தில் வெளிவந்ததாக ஆங்கில அறிஞர்கள் நெடுங்காலம் கருதி வந்ததோடு அதன் பிரதியையும் தேடிக் கொண்டிருந்தனர். ஜான் ராம்ஸே மாக்குலோஹ் என்பவர் அரசியல் பொருளாதாரவாதி; பொருளாதார இலக்கியங்களின் பழைய பிரதிகளைச் சேகரிப்பவர். இவர் சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் இப்படி ஒரு பதிப்பு வெளிவந்திருப்பதாகக் கூறியிருந்தார். எனினும் அப்படி ஒரு பதிப்பு வெளிவரவில்லையென்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இத்தாலியரான ஸெர்ரா 1613 ம் வருடத்திலும் பிரெஞ்சுக்காரரான மான் கிரெட்டியேன் 1615ம் வருடத்திலும் வாணிப ஊக்கக் கொள்கையை விளக்கிப் பிரசுரங்கள் வெளியிட்டனர். எனவே இவர்கள் மானுக்கு முந்திச் செயலாற்றியவர்கள். இது அவருடைய புகழை ஒரு சிறிதும் குறைக்காது..
(2) மேற்கோள் குறிகளுக்குள் தரப்பட்டிருக்கும் வார்த் தைகளின் மூலமாக எ. டூரிங்கின் இலக்கிய நடையை மார்க்ஸ் இங்கே கிண்டல் செய்கிறார். மார்க்ஸ் டூரிங்கின் கருத்துக்களை விமரிசனம் செய்தது தெரிந்ததே. –
(3) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1979, பக்கம் 399 பார்க்க
கேள்விகள்:
இலண்டம் மாநகரம் பொருளாதார அறிஞர்களின் நகரமாக இருந்ததற்கு காரணம் என்ன?
கிழக்கிந்திய கம்பெனி – சிறு குறிப்பு தருக!
இலண்டனில் கப்பல் கட்டும் தொழில் வளர்ந்தது ஏன்?
தாமஸ் மான் எழுதிய இரண்டு நூல்கள் குறித்து சிறு அறிமுகம் தருக!
செல்வத்தின் வடிவத்தை பணம், தங்கம், வெள்ளியில் தாமஸ் மான் பார்த்ததற்கு காரணம் என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவன் நகரில் ஒரு அரசுப் பள்ளியில் அக்சய பாத்ரா என்.ஜி.ஓ-வின் மதிய உணவு திட்டத்தை கடந்த 11.02.2019 அன்று தொடங்கி வைத்தார் மோடி.
அங்கு தாம் உணவு வழங்கிய காட்சிகளையும், மாணவர்களிடம் தாம் ‘அளவளாவிய’ காணொளியையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பக்தாள்களின் லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்றுக் கொண்டார்.
அதில் ஒரு காணொளியில், அங்கிருக்கும் ஒரு மாணவனிடம், “பிரதம மந்திரி வருவதற்காக 12 மணிக்கு சாப்பிட வேண்டிய நீங்கள் அனைவரும் வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டதா?” என்று கேட்கிறார். அதற்கு அருகில் இருக்கும் மாணவி, “இல்லை, நாங்கள் காலையிலேயே வீட்டில் சாப்பிட்டு விட்டோம்” என்கிறார். அங்கிருக்கும் அனைத்து மாணவர்களும் சிரிக்கிறார்கள். இப்படியாக அந்த காணொளி முடிகிறது. அந்தக் காணொளியின் பின்னூட்டத்தில் பக்தாள்கள் ‘கிரேட்’ என்றும் ‘கியூட்’ என்றும் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.
பலரும் இந்த காணொளியில் நடக்கும் நிகழ்வுகள் செட்டப் செய்யப்பட்டவை என்று கூறுகின்றனர். உண்மையோ, செட்டப்போ… ஆனால், இந்தியா முழுவதிலும் குழந்தைகள் அரசுப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் காலை உணவு உட்கொண்டுதான் வருகிறார்களா? புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?
பஞ்சாப் போன்ற வளம் மிக்க மாநிலத்திலும் கூட 40% குழந்தைகள் காலை உணவை உட்கொள்ளாமல் வெறும் வயிற்றோடு பள்ளி வருகின்றனர். இந்தியாவிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது உத்தரப் பிரதேசம். இங்கு பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைவளர்ச்சி கொண்டவையாக இருக்கின்றன.
இக்குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க உணவில் முட்டை சேர்ப்பது அவசியமானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அப்படியெனில் உத்தரப் பிரதேசத்தின் அந்தக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறிய மோடிஜி ஏன் முட்டை பரிமாறவில்லை?
ஏனெனில் இங்குதான் நாடு முழுவதும் வியாபித்துள்ள உணவு அரசியல் இருக்கிறது. நாடு முழுவதும் பாஜக ஆளும் 15 மாநிலங்களில் பள்ளிகளில் மதிய உணவில் குழந்தைகளுக்கு முட்டை மறுக்கப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசமும் அடக்கம். ஊட்டச்சத்துக் குறைபாடு தலைவிரித்தாடும் மத்தியப் பிரதேசத்திலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னரே முட்டை மதிய உணவிலிருந்து நீக்கபட்டுள்ளது.
பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த மாதத்திலிருந்து வாரம் 3 முட்டைகள் வழங்கப்படுவது 2-ஆக குறைக்கப்படும் என்று தெரிவித்தார் அம்மாநில பாஜக முதல்வர்.
காவிகள் ஆட்சியை விட்டுப் போனாலும், இந்நிலையைத் தொடரச் செய்ய, அட்சய பாத்ரா என்ற ஒரு என்.ஜி.ஓ-வை உருவாக்கி உள்ளது காவிக் கும்பல். பல மாநிலங்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குவதற்கு அரசோடு ஒப்பந்தம் போட்டுள்ளது அட்சய பாத்ரா. இந்துத்துவக் கும்பலான ‘இஸ்கான்’-ன் கீழ் செயல்படும் இந்த என்.ஜி.ஓ, சாத்விக உணவுகளையே மதிய உணவில் வழங்குவதைத் தமது ‘கொள்கையாக’ வைத்திருக்கிறது.
குழந்தைகளுக்கு வழங்கும் உணவில் வெங்காயம், பூண்டையே தவிர்க்கும் இந்தக் கும்பல், முட்டையை மட்டும் அனுமதிக்குமா என்ன? இதன் காரணமாகவே சமீபத்தில் கர்நாடக அரசு, குழந்தைகளுக்கான மதிய உணவில் வெங்காயத்தையும் முட்டையையும் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தியும் முடியாது என திமிராக அறிக்கைவிட்டது இந்த என்.ஜி.ஓ.
நடந்து முடிந்த 5 மாநில சட்ட மன்றத் தேர்தலுக்குப் பின்னர், சட்டீஸ்கரில் புதியதாக ஆட்சியமைத்த காங்கிரசு, பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் வாரத்திற்கு இரண்டு முட்டைகளைச் சேர்த்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் மத்தியப் பிரதேசத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ள காங்கிரசு அரசு மதிய உணவில் முட்டை வழங்குவதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. இந்துத்துவாவைப் பொறுத்தவரையில் மத்திய பிரதேசத்தில் பாஜக-வுக்கு சற்றும் இளைத்தது அல்ல காங்கிரசு.
டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு தனது வாக்குறுதியில் பள்ளியில் மதிய உணவில் முட்டை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் அதே அரசுதான் பள்ளிகளில் மதிய உணவு வழங்க அட்சய பாத்ரா நிறுவனத்தை நியமிப்பது குறித்து திட்டமிட்டு வருகிறது. எனில் பள்ளி மாணவர்களுக்கு முட்டையை எங்கிருந்து கொடுக்கப் போகிறது ஆம் ஆத்மி அரசு ?
முட்டையை அசைவமாகக் கருதும் தவறான போக்கு இந்தியாவில் நிலவும் சமஸ்கிருதமயப்பட்ட பார்ப்பனிய பண்பாட்டோடு பிணைந்துள்ளது. சாதி எதிர்ப்பு முற்போக்கு சமூக இயக்கங்கள் செயல்பட்ட தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள்தான் நாட்டிலேயே ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் குறைவாக உள்ள மாநிலங்களாக இருக்கின்றன.
ராஜஸ்தான், குஜராத், அரியானா, பஞ்சாப் ஆகிய மேற்கு மாநிலங்கள், பலவகைப்பட்ட உணவு பழக்கங்களைக் கொண்டிருந்தாலும், இவை இந்த கணக்கீட்டில் இருந்து விலகி நிற்கின்றன. இதற்கு பாரம்பரியமாக அங்கு நிலவும் சைவ உணவு வழக்கம் ஒரு முக்கியக் காரணமாகும். கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் முட்டை மற்றும் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாதவர்கள். இதைத் தாண்டி, அரியானாவும், இராஜஸ்தானும் பால் மற்றும் பஞ்சாப் கீர் போன்றவற்றை பள்ளி மாணவர்களுக்கு மாற்று உணவாக அளிக்கின்றன.
ஆனால் மோடியின் குஜராத் மாநிலம், வெண்மைப் புரட்சியில் சாதனை புரிந்திருந்தாலும், பள்ளி மாணவர்களுக்குப் பால் வழங்குவதில்லை. அம்மாநிலம் குழந்தைகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகம் உள்ள மாநிலமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு, பள்ளி மாணவர்களுக்கு பால் மற்றும் தேன் வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் எதுவும் காணப்படவில்லை. பாவம் அம்பானிக்கும் அதானிக்கும் ஒதுக்குவதற்கே பணம் பத்தவில்லை. இதில் எங்கு போய் ஏழை மாணவர்களுக்கும் பாலும் தேனும் வாங்குவது?
சில ஆய்வாளர்கள், சைவ உணவு உட்கொள்வோர் அதிகம் உள்ள மாநிலங்களில்தான் முட்டை வழங்குதல் குறைவாக உள்ளது என்று கூறுகின்றனர். இது உண்மையாக இருந்தாலும், தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 2015–16-ன் படி, இந்திய மக்களின் மிகப்பெரும்பான்மையினர், முட்டை மற்றும் பால் உணவுகளை எடுத்துக் கொள்பவர்கள்தான்.
முட்டை உணவு எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறபாடுள்ள குழந்தைகள் பற்றி தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு (2015–16) வெளியிட்டுள்ள வரைபடம்.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளை அதிகம் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் முட்டை உணவு உட்கொள்பவர்கள்தான். ஆனாலும் அங்கு பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படுவதில்லை. பணக்கார மாநிலமான மராட்டியமோ, பழங்குடியின மக்கள் அதிகம் இருக்கும் 16 மாவட்டங்களில் மட்டும் அப்துல்கலாம் அம்ருத் யோஜனா என்ற பெயரில் முட்டைகளை வழங்குகிறது. மாநிலத்தின் பிற பகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குவதில்லை.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரையில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. இங்கு பெரும்பான்மை மக்களின் உணவு அசைவமாக இருப்பினும், வெகு தொலைவுப் பகுதிகளுக்கு முட்டையை அனுப்புவது அதிக செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது என அருணாச்சலப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. கூடுதலான மத்திய அரசு உதவியும், கோழிப் பண்ணைகளை மாநிலத்தில் அதிகரித்தலுமே இதற்கான தீர்வைத் தரும்.
தமிழகத்தில் ரெய்டு இழிபுகழ் கிறிஸ்டி நிறுவனத்தின் துணை நிறுவனத்திலிருந்து முட்டை வாங்கிய ஜார்க்கண்ட் அரசின் உதாரணத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் முட்டை வாங்குதலையும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். மிகவும் மோசமான தரத்தில் முட்டைகள் வந்ததால், ஜார்க்கண்டில் இருக்கும் சிறு சுய உதவிக் குழுக்கள் மூலமாகவே தற்போது முட்டைகளை வாங்குவதற்கு அம்மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
மொத்தத்தில் மோடி தலைமையிலான ஆட்சியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நமது உணவு முதல் அந்தரங்கம் வரை அனைத்திலும் இந்துத்துவக் கும்பல் தலையிட்டு வருகிறது. வெறுமனே தலையீடு என்பதைத்தாண்டி, இது வருங்காலத் தலைமுறையினரின் உடல்நலத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
இதனை எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வாகப் பார்த்துவிட்டு கடந்து போனால், நாளைய சமூகம் நோஞ்சான்களின் சமூகமாகவே மாறிப் போகும் !
தூய்மை இந்தியா வரியை ஒழித்த பிறகும் ரூ.2,000 கோடிக்கும் மேல் வசூலித்த மோடி அரசு !
2017, ஏப்ரல் 1 முதல் 2018, மார்ச் 31 வரை தூய்மை இந்தியா பெயரில் ரூ. 4,242.07 கோடி வசூலிக்கப்பட்டதாக தலைமை செயலகம் (The Directorate General) கூறியுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த வரி வழக்கொழிக்கப்பட்ட ஜூலை 1 வரை ரூ. 2,357.14 கோடி வசூலிக்கப்பட்டதாகவும் அதன் பிறகு 2018, மார்ச் வரை ரூ. 1,884.93 கோடி வசூலிக்கப்பட்டதாகவும் நிதியமைச்சகம் பதிலளித்திருந்தது. அதேபோல 2018, ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரூ. 182.25 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா வரி முதன்முதலில் 2015-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பிறகு ஒவ்வொரு சேவைக்கும் 0.5% கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்தது. மேலும் 2015 மற்றும் 2018 -க்கு இடையில் ரூ. 20,632.91 கோடி தூய்மை இந்தியா வரியாக வசூலிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ரூ. 3,901.83 கோடியும் 2016-17-ம் நிதியாண்டில் ரூ. 12,306.76 கோடியும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 4,242.07 கோடியும், 2018-19-ம் நிதியாண்டில் ரூ. 182.25 கோடியும் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது…
… தலைமை தணிக்கையாளரின் அறிக்கையின் படி வசூலிக்கப்பட்ட ரூ. 16,401 கோடியில் ரூ. 12,400 கோடி (75%) மட்டுமே இந்திய தேசிய பாதுகாப்பு நிதி கணக்கிற்கு செலுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதி 4,000 கோடி ரூபாயின் கதி என்னவென்று தெரியவில்லை.
“ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் உரையாற்றினார். சனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு (CPDR – TN) சார்பில் கடந்த பிப்- 09 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.
அவர் பேசியதிலிருந்து சில பகுதிகள்…
”.. புதிதாக கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இருக்க முடியாது. பாராளுமன்றமோ, சட்டமன்றமோ எந்தவொரு சட்டமும் இயற்ற முடியாது. இதனையும் மீறி கொடுஞ்சட்டங்கள் இங்கே இயற்றப்படுகிறதென்றால் அதற்கு என்ன காரணம் என்றுதான் முதலில் யோசிக்க வேண்டும்.
நாம் ரௌலட் சட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நமது அரசமைப்புச் சட்டத்தின் கூறு 22 விசாரணையின்றி சிறையிலடைக்கும் சட்டங்களை சரி என்று சொல்கிறது. அதனால்தான், தூத்துக்குடி வழக்கில் அரிராகவனையும் வாஞ்சிநாதனையும் என்.எஸ்.ஏ.வில் கைது செய்ய முடிகிறது. குண்டர் சட்டம் போடப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளில் விசாரணையின்றி சிறைவைப்பதை அந்த அரசியலமைப்புச் சட்டமே இடம் அளிப்பதில்லை. நோய்நாடி நோய் முதல்நாடி என்ற வள்ளுவனின் குறளைப் போல காரணத்தை ஆராய வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் கூறு 22-ஐப் பற்றி பேசாமல் கொடுஞ்சட்டங்களைப் பற்றி மட்டும் பேசுவதில் பலன் இல்லை
அவரது பேச்சின் முழு காணொளியைக் காண …
பாருங்கள்! பகிருங்கள்!!
தகவல்:
வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
309/150, முதல் தளம், லிங்குச் செட்டித்தெரு,
பாரிமுனை, சென்னை-600 001 Ph: 9962366320, 9842812062 Email: chennaiprpc@gmail.com Facebook: People’s Right Protection Centre, Chennai
கலையரசன்தி இந்து தமிழ் பத்திரிகையில், “வாழும் போதே நரகமாகும் வெனிசுலா” என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் பல உண்மைக்கு புறம்பான தகவல்களை கற்பனையாக புனைந்து எழுதி உள்ளார். அரசியல் பிரச்சார நோக்கில் எழுதப்படும் இது போன்ற கட்டுரைகள் எந்த லாஜிக்கும் இல்லாமல், புனைவுகளையும், அரைவாசி உண்மைகளையும் கலந்து எழுதப் படுகின்றன. இவற்றை தி இந்து போன்ற தரமான பத்திரிகைகள் கூட பிரசுரிப்பதன் மூலம் அவற்றின் நன்மதிப்பை குறைத்துக் கொள்கின்றன.
ஜெ.சரவணன்: //ஒருகாலத்தில் லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக வெனிசுலா இருந்தது. அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு.//
எண்ணை வளம் மிக்க நாடுகள் எல்லாம் “பணம் கொழிக்கும் நாடு” என்று நினைத்துக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது. வெனிசுவேலா மட்டுமல்ல, அங்கோலா, நைஜீரியா, இந்தோனேசியா, என்று பல எண்ணெய் வளம் மிக்க நாடுகள் இன்னமும் ஏழை நாடுகளாக இருக்கின்றன.
எண்ணெய் விற்பனையால் கிடைக்கும் வருமானம் ஒரு சில பணக்காரர்களின் பைகளை மட்டுமே நிரப்புகின்றது. பெரும்பான்மை மக்களுக்கு அதனால் எந்த ஆதாயமும் கிடைப்பதில்லை. எண்ணை ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி உள்ளதா? குறைந்த பட்சம், அம்மக்களின் அத்தியாவசியத் தேவைகளையாவது பூர்த்தி செய்துள்ளதா? இதுவே நாம் கேட்க வேண்டிய கேள்வி.
ஒரு காலத்தில் வெனிசுவெலாவிலும் அந்த நிலைமை தான் இருந்தது. அதாவது, எண்ணை ஏற்றுமதியால் கிடைத்த வருமானம் ஒரு சில பணக்காரக் குடும்பங்களின் சொத்துக்களாக முடங்கிக் கிடந்தது. பெரும்பான்மை மக்கள் எண்ணையால் எந்த நன்மையையும் கிட்டாதவர்களாக வறுமையில் வாடினார்கள். அதனால் தான், எண்ணெய் வருமானம் மக்களுக்கு கிடைக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸை பெரும்பான்மை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
சாவேஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நேர்மையாக நிறைவேற்றினார். எண்ணெய் விற்பனையால் அரசுக்கு கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதி, அரசு மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டது. அப்போது தான் பிரச்சினை ஆரம்பமானது.
உண்மையில், வெனிசுவேலா எண்ணையின் பெரும் பகுதி அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதியானது. அதே நேரம், அந்தக் கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் எண்ணை விலை மிக அதிகமாக இருந்தது. இதனால் அரச கஜானா நிரம்பியதால், சாவேசின் மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவினத்திற்கும் இலகுவாக பணம் கிடைத்தது.
இதில் உள்ள ஆபத்துகளை உணராமல், சாவேஸ் உட்பட, வெனிசுவேலா ஆட்சியாளர்கள், அன்றைய பொருளாதார நிலைமையை குறைவாக மதிப்பிட்டமை தான் தவறு. பல தசாப்த காலமாக வெனிசுவேலா எண்ணையின் பெரும் பகுதியை வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, ஒரு காலத்தில் பொருளாதாரத் தடை கொண்டு வந்தால் என்ன நடக்கும்? திடீரென வேறு வாடிக்கையாளரை பிடிக்க முடியுமா?
அதே மாதிரி, சர்வதேச சந்தையில் எண்ணை விலை பாதியாக குறைந்தால் என்ன நடக்கும்? அதை மட்டுமே நம்பியிருந்த பொருளாதாரம் வீழ்ச்சி அடையாதா? இது தான் நடந்தது. இந்த உண்மைகளை மறைத்து விட்டு, எல்லாவற்றையும் சாவேஸ், மடூரோ தலையில் தூக்கிப் போடுவது ஒரு பக்கச் சார்பான அரசியல் பிரச்சாரம் அன்றி வேறென்ன?
//2010-ல் ஆரம்பித்தது வெனிசுலாவின் இருண்ட காலம். அப்போது அதிபராக இருந்த ஹியாகோ சாவேஸ் வெனிசுலா மக்களுக்காக சில முடிவுகளை எடுத்தார். அதாவது, அனைத்தையும் அரசு மயமாக்குவது.//
ஒரு சில பணக்காரர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருந்த எண்ணை வருமானத்தை கொண்டு, பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக செலவினத்தை ஈடுகட்டும் அரசின் திட்டம் எப்படி “இருண்ட காலம்” ஆகும்? மக்களைப் பொறுத்தவரையில் அது தான் பொற்காலம். ஆனால், தமது பண வருவாய் குறைவதை பொறுக்க முடியாத பணக்காரர்களுக்கு மட்டுமே அது இருண்ட காலம்.
மேலும், “அனைத்தையும் அரசு மயமாக்கியதாக” குறிப்பிடுவது ஒரு தவறான தகவல். இன்று வரையில், வெனிசுவேலா பொருளாதாரத்தின் பெரும் பகுதி தனியார் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கிறது. நாட்டிற்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தரும் பெட்ரோலிய நிறுவனம் சாவேஸ் காலத்திலேயே அரசு மயமாக்கப் பட்டது. அதைக் கூட செய்யா விட்டால், பெட்ரோல் முதலாளிகள் எப்போதோ வெனிசுவேலா பொருளாதாரத்தை முடக்கி இருப்பார்கள். அவர்கள் தக்க தருணத்திற்காக எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
//உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தார். உணவு உற்பத்தியை இராணுவத்திடம் கொடுத்தார். அவர் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது ஒன்று. சாவேஸ் திட்டமிட்ட கொள்கைகள் எதுவுமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.//
இந்தக் கட்டுரையாளர், எது ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்று அழுகிறார்? எத்தனயோ நட்டத்தில் இயங்கிய தொழிற்சாலைகளை தொழிலாளர்கள் பொறுப்பேற்று நடத்தினார்கள். அதற்கு அரசும் ஊக்கமளித்தது. இது ஜனநாயகம் இல்லையா?
வெனிசுலாவின் மறைந்த முன்னாள் அதிபர் ஹியாகோ சாவேஸ்
தனியார் வீட்டுமனை நிறுவனங்கள் வாடகைக்கு விடும் வீடுகளில், குடியிருப்பாளர்கள் மாதக் கணக்காக வாடகை கட்டா விட்டாலும், அவர்களை வெளியேற்றி தெருவில் விட முடியாது. இந்தச் சட்டம் சாவேஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இது ஜனநாயகம் இல்லையா?
அது சரி, உலகில் எந்த நாட்டில் தனியார் நிறுவனங்கள் ஜனநாயகத்தை பின்பற்றுகின்றன? எந்த நிறுவனத்தில் ஒரு நிர்வாகி அல்லது மானேஜர்கள், ஊழியர்களின் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? ஆனால், வெனிசுவேலாவில் சாவேஸ் அரசு கையகப் படுத்திய நிறுவனங்கள் யாவற்றிலும் ஜனநாயக ரீதியான பொது வாக்கெடுப்பு நடந்துள்ளது.
உற்பத்தி நிறுவனங்கள், உணவு உற்பத்தி எல்லாம் இன்றைக்கும் தனியாரிடம் தான் உள்ளன. அதனால் தான், தனியார் துறை முதலாளிகள் உற்பத்தியை குறைத்தும், பொருட்களைப் பதுக்கியும் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்க முடிந்தது. இது தனியார் துறையினர் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கிய பொருளாதார நெருக்கடி.
தி ஹிந்து கட்டுரையாளர் குறிப்பிட்ட மாதிரி, சாவேஸ் அனைத்தையும் அரசு மயமாக்கி இருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. அதைச் செய்யாமல் விட்டது தான் தவறு. எல்லோருக்கும், குறிப்பாக உற்பத்தியை கட்டுப்படுத்தும் சக்தி படைத்த தனியார் துறையினருக்கு சுதந்திரம் கொடுத்ததன் பலனை மக்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.
அரசு நிறுவனங்கள் எதுவும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கின்றன. ஒரு சிலவற்றை இராணுவ அதிகாரிகள் நிர்வகிப்பதும் உண்மை தான். ஆனால், வெனிசுவேலாவின் மொத்த பொருளாதார உற்பத்தியுடன் ஒப்பிட்டால் அந்த அரசு நிறுவனங்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவு. பத்து சதவீதம் கூட இருக்காது.
//அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டது.//
இது ஓர் உண்மைக்குப் புறம்பான கூற்று. வெனிசுவேலா நாட்டில் இன்று வரைக்கும் அந்நிய நிறுவனங்கள் முதலிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. பிரச்சினை அதுவல்ல. பணவீக்கம் அதிகரிப்பதாலும், நிச்சயமற்ற தன்மை காரணமாகவும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு வர்த்தகம் செய்வதற்கு தயங்குகின்றன. இருப்பினும் தவித்த முயல் அடிப்பது போன்று, இந்த நேரத்திலும் முதலிடும் காரியவாதிகள் இருக்கிறார்கள். அண்மையில் நெதர்லாந்தில் இருந்து சென்ற இளம் வணிகர் ஒருவர், அங்கு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, மிகக் குறைந்த விலைக்கு வீட்டு மனைகளை வாங்கி வைத்துள்ளார். ஒரு காலத்தில் நிலைமை சீரடைந்தால் அவற்றை நல்ல விலைக்கு விற்று விடுவது தான் திட்டம். (de Volkskrant, 30.01.2019)
தனியார் துறைக்கு சுதந்திரம் இருந்தாலும், வெளிநாட்டு மூலதனத்தை தாராளமாக அனுமதித்தாலும், தேசப் பாதுகாப்பு அல்லது பொது மக்களின் நன்மை கருதி சில அத்தியாவசிய துறைகளில் முதலிட அனுமதிக்கப் படுவதில்லை. உதாரணத்திற்கு, பெட்ரோலிய நிறுவனம், துறைமுகம், விமானநிலையம் போன்ற துறைகளில் தனியார் முதலீடு அனுமதிக்கப் படுவதில்லை. மற்றும் படி, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் முதலிடலாம், வணிகம் செய்யலாம்.
அதிகம் பேசுவானேன். எதிர்க்கட்சிகளுக்கான ஆதரவு எங்கிருந்து கிடைக்கிறது? தனியார் நிறுவனங்கள் நூறு சதவீத ஆதரவு வழங்குகின்றன. ஊடகங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தனியார் நிறுவனங்கள் நடத்தும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் அனைத்துமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரச்சார சாதனங்கள் தான். அவை அரசுக்கெதிரான செய்திகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போதிலும் தடைசெய்யப் படவில்லை. சுதந்திரமாக இயங்க விடப் பட்டுள்ளன.
//வெனிசுலாவின் கடன் 105 பில்லியன் டாலர். அதன் கையில் இருப்பது வெறும் 10 பில்லியன் டாலர்.//
பல வருட காலமாக பொருளாதாரத் தடைகளை விதித்து வந்த அமெரிக்கா, எதிர்க்கட்சித் தலைவரை ஜனாதிபதியாக அங்கீகரித்ததுடன் நில்லாது, எண்ணை வாங்கியதற்காக கொடுக்க வேண்டிய பணத்தையும் தர மாட்டேன் என அடம் பிடித்தது. அத்துடன் நில்லாது அமெரிக்க வங்கிகளில் இருந்த வெனிசுவேலா நாட்டின் அந்நிய செலாவணியும் பறிமுதல் செய்யப்பட்டது. பிரித்தானியாவில், Bank of England இல் வெனிசுவேலா வைத்திருந்த பில்லியன் டாலர் பெறுமதியான தங்கத்தை திருப்பித் தர முடியாது என்று அறிவித்தது.
நீங்கள் உங்களிடமிருந்த பணத்தையும், நகைகளையும் பாதுகாப்பதற்காக நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து வைக்க, அவர் அதையெல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு தர முடியாது என்று அடாவடித்தனம் பண்ணுவது அநீதி இல்லையா? இந்த அடாவடித்தனங்களை கண்டிக்காமல், “வெனிசுவேலாவின் கையில் இருப்பது வெறும் பத்து பில்லியன் டாலர்” என்று நையாண்டி செய்வது நியாயமா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போலுள்ளது இந்தக் கட்டுரையாளரின் வன்மம் நிறைந்த எழுத்துக்கள்.
//நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியிருக்கிறார்கள். வெளியேற நினைப்பவர்கள் பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.//
ஐயா! அவர்கள் பொருளாதார அகதிகள். பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாட்டில் யுத்தம் நடந்தால் மட்டும் தான் அகதிகள் வெளியேற வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாகவும் பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லலாம். அதிகம் பேசுவானேன். இலங்கை போன்ற யுத்தம் நடந்த நாடுகளில் இருந்து வந்தவர்களையும், “பொருளாதார அகதிகள்” என்று தான் மேற்கத்திய நாடுகளில் அழைக்கிறார்கள்.
வெனிசுவேலாவில் ஏன் பொருளாதார நெருக்கடி வந்தது? சாவேஸ் கொண்டு வந்த சோஷலிச திட்டங்கள் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை அடியொற்றி கொண்டு வரப்பட்டன! அதாவது, மேற்கு ஐரோப்பாவில் தனியார் துறை இயங்குவதற்கு தாராளமாக அனுமதிக்கிறார்கள்.
அதே நேரம், அரசுக்கு கிடைக்கும் வரிப் பணம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் படுகின்றது. அது வீட்டு வாடகை செலவை ஈடுகட்டுதல், உணவுப் பொருட்களுக்கு கொடுக்கும் மானியம் என்று பல வகைப் படும். அதே திட்டங்களை தான் வெனிசுவேலாவில் சாவேஸ் அரசு நடைமுறைப் படுத்தியது. அது தான் இங்கே பிரச்சினை.
தனியார் நிறுவனங்கள் வீட்டு வாடகையை உயர்த்த விடாமல் அரசு சட்டம் போட்டு தடுத்தது. அதனால், புதிய வீடுகள் கட்டப்படுவது நின்று விட்டன. குழந்தைகளுக்கான பால்மா போன்ற பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் கொடுத்தது. அதனால், உணவு உற்பத்தியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தனியார் நிறுவனங்கள் பொருட்களை பதுக்க ஆரம்பித்தன. இதற்குள் கடத்தல்காரர்களும் புகுந்து தமது கைவரிசையை காட்டினார்கள். வெனிசுவேலாவில் அரசு மானிய உதவியால் குறைந்த விலைக்கு வாங்கப்படும் பால்மா, அயல் நாடான கொலம்பியாவில் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இது ஓர் உதாரணம் மட்டுமே.
அதன் விளைவு தான் லட்சக்கணக்கானோரின் வெளியேற்றம். தனியார் துறையினரின் திட்டமிட்ட புறக்கணிப்பால், நாட்டில் அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக, பிரதானமான ஏற்றுமதிப் பொருளான பெட்ரோல் விற்பனையும் வீழ்ச்சி கண்டது. ஒரு நாட்டில் பொருளாதாரப் பிரச்சினையை உண்டாக்க இவ்வளவும் போதாதா?
ஒரு காலத்தில் அடித்தட்டு மக்கள் முழுவதும் ஒரு மனதாக அரசை ஆதரித்தார்கள். இன்று அவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. இருப்பினும், மடூரோ அரசு அம்மக்களின் ஆதரவை இழந்து விட்டது என்று கூற முடியாது. இன்றைக்கும் புலம்பெயர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் அரச எதிர்ப்பாளர்களாக உள்ளனர். இது ஒரு வகையில் புலம்பெயர்ந்தோரின் உளவியல். அது ஒரு வகை சுயநல அரசியல். அவர்கள் தமது சொந்த நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
ஐயா, பெரியவரே! லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகளவு குற்றங்கள் நடப்பது ஒன்றும் புதினம் அல்ல. வெனிசுவேலாவில் சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அதிகளவு குற்றங்கள் நடப்பதால் தலைநகர் கராகஸ் ஒரு பாதுகாப்பற்ற தலைநகரம் என்ற கெட்ட பெயரைப் பெற்றிருந்தது. அயல்நாடான கொலம்பியாவில் குற்றங்கள், திருடர்கள், தீவிரவாதிகள் மட்டுமல்லாது உலகளவில் போதைவஸ்து கடத்தும் மாபியா கும்பல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தென்படுவதில்லையா?
//அதிபர் சாவேஸ் மறைந்த பிறகு, நிகோலஸ் மதுரோ அதிபரானார். அவர் மீது மக்கள் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். கிட்டதட்ட வெனிசுலாவை மீட்பது என்பது, மணலைக் கயிறாகத் திரிக்கும் சவால்தான். ஆனால், தீவிர இடதுசாரி எனத் தன்னை முன்னிறுத்தும் மதுரோ ஆறு ஆண்டுகளாகியும் வெனிசுலாவை மீட்க எந்த முயற்சியையும் செய்யவில்லை.//
மடூரோ அதிபரான காலத்தில் தான், சர்வதேச சந்தையில் எண்ணை விலை பாதியாக குறைந்திருந்தது. அத்துடன், பெருமளவு எண்ணெயை வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா பல்வேறு வகையான பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தது. வெனிசுவேலாவில் வர்த்தகம் செய்து வந்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறின. தனியார் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.
வெனிசுலாவின் த்ற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ
முன்பு சாவேஸ், பின்னர் மடூரோ ஆகியோர் தம்மை “தீவிர இடதுசாரிகள்” என்று அறிவித்துக் கொண்ட போதிலும், தனியார் நிறுவனங்கள் இயங்க அனுமதித்திருந்தனர். அந்நிய மூலதனத்தையும் தடுக்கவில்லை. இது ஒரு காலத்தில் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. “எந்த முயற்சியும் செய்யவில்லை.” ஆம், பொருளாதாரத்தில் தனியார் துறையினரின் ஆதிக்கத்தை குறைத்து, நிறுவனங்களை அரசுமயமாக்கவில்லை. இது தவறு தான்.
//எதிர்கட்சிகள் இவரது ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றன. மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.//
ஏற்கனவே பொருளாதார நெருக்கடி காலத்தில் நடந்த தேர்தலில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. அதனால் ஜனாதிபதி மடூரோ கொண்டு வந்த பல திட்டங்களை நிறைவேற்ற விடாமல் முடக்கி உள்ளனர். மேலும், அண்மையில் தான், கடந்த இரண்டு வருடங்களுக்குள் பொதுத் தேர்தல் நடந்தது. மடூரோ கூட கடும் போட்டிக்கு பின்னர் தான் ஜனாதிபதியாக தெரிவானார். அப்படி இருக்கையில் குறுகிய காலத்திற்குள் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்தக் கோருவது ஜனநாயக விரோதம் அல்லவா?
“மக்கள் புரட்சியில் ஈடுபடுகின்றனர்” என்று, இந்தக் கட்டுரையாளர் எதை அடிப்படையாக வைத்துக் கூறுகின்றார்? எதிர்க்கட்சி கூட்டங்களுக்கு சேரும் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை வைத்தா? இந்தியாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், அல்லது தமிழகத்தில் திமுக கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் சேரும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கையை வைத்து, “இந்திய மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” என்று கூற முடியுமா?
//அதிபர் மதுரோ இதற்கெல்லாம் அமெரிக்காதான் காரணம் என்கிறார். வெனிசுலாவின் உள்விவகாரங்களில் தலையிட்டால் வெள்ளை மாளிகையிலிருந்து ரத்தக்கறையோடுதான் வெளியே வருவார் என்கிறார்.//
ஐயனே! அமெரிக்கா வெனிசுவேலா மீது படையெடுக்கக் காத்திருப்பது தான் இன்றைய பிரச்சினை. உள்விவகாரங்களில் தலையிடுவது காலங்காலமாக நடக்கிறது. ஆனால், ஒரு நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கப் போவதாக மிரட்டுவதை சாதாரணமான விடயமாக கடந்து போக முடியாது. அமெரிக்க இராணுவம் படையெடுத்து வந்தால், வெனிசுவேலா இராணுவம் புளியம்பழம் பறித்துக் கொண்டிருக்க வேண்டுமா? தகுந்த பதிலடி கொடுக்க வேண்டாமா?
//ரஷ்யாவும், சீனாவும் வெனிசுலாவுக்கு ஆதரவாக இருப்பதுபோல் பாவ்லா காட்டுகின்றன. ஆனால், உண்மையில் வெனிசுலாவுக்கு உதவ எந்த நாடோ அமைப்போ தயாராக இல்லை.//
அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்குப் பின்னர் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் எண்ணெய் விற்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆமாம், இந்தியாவும் தான்! அமெரிக்க பயமுறுத்தல்களுக்கு மத்தியிலும் இந்தியா வெனிசுவேலா எண்ணையை வாங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு எண்ணை விநியோகம் செய்யும் நாடுகளில் வெனிசுவேலா மூன்றாம் இடத்தில் உள்ளது.
ரஷ்யாவுடனான உறவு வித்தியாசமானது. ரஷ்யாவின் பன்னாட்டு எண்ணை நிறுவனமான Rosneft, வெனிசுவேலாவின் பல்வேறு அந்நிய கடன்களை அடைப்பதற்கு பணம் கொடுத்துள்ளது. அதற்குப் பதிலாக அரச எண்ணை நிறுவனமான PDVSA, ரஷ்யாவுக்கு, அதாவது Rosneft கம்பனிக்கு எண்ணெய் விற்க வேண்டும். இதுவும் நவகாலனித்துவம் தான். ஆனால், இன்றைய நிலையில், வெனிசுவேலாவுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை.
//வெனிசுலாவின் இன்றைய நிலை என்பது எந்த நாட்டுக்கும் ஏற்படக்கூடியதுதான். இன்றைய பணமய பொருளாதாரத்தில் போட்டி நாடுகள் எந்த சூழ்ச்சியையும் செய்யலாம்.//
கட்டுரையாளரே! நீங்கள் குறிப்பிடும் “பணமய பொருளாதாரம்” என்பதன் உண்மையான பெயர் நவ- லிபரலிச பொருளாதாரம். “போட்டி நாடுகள்” என்பதன் அர்த்தம் (மேற்கத்திய) ஏகாதிபத்திய நாடுகள். இந்த உண்மையை மூடி மறைப்பதற்கு எப்படி எல்லாம் மாய்மாலம் செய்கிறீர்கள்?
//இந்தியாவில் தற்போது நுகர்வு என்பது அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. நாலைந்து செல்போன் வைத்திருக்கிறோம். வீடு முழுக்க ஆடைகளால் நிறைந்திருக்கின்றன. நிறுத்த இடமில்லை என்றாலும் நாலைந்து கார்களை வாங்குகிறோம். இதனால் வேகமான பொருளாதாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறோம்.//
இதை நுகர்பொருள் கலாச்சாரம் என்று சொல்வார்கள். இன்றைய நவ- லிபரலிச முதலாளித்துவ அமைப்பு அதன் மேல் தான் கட்டப் பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமே உரிய விடயம் அல்ல. உலகம் முழுவதும், ஏன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கூட ஏற்கனவே பல தசாப்த காலமாக நடைமுறையில் உள்ளது. இதை இன்னொரு விதமாக கிரெடிட் கார்ட் பொருளாதாரம் என்றும் அழைக்கலாம். மக்கள் நுகர்வோர்களாக மட்டுமல்லாது, நிரந்தரக் கடன்காரர்களாக மாற்றப் பட்டுள்ளனர். இந்தக் கடன்களில் தான் பொருளாதாரம் வளர்கிறது.
//இந்தியா – வெனிசுலா: இந்தியா, தனியார் மய கொள்கையை தீவிரமாக்கி வருகிறது. இது நிறுவனங்களுக்கிடையே போட்டியை அதிகப்படுத்தும். இதனால் நாட்டின் வளங்கள் மீதும், மக்களின் மீதும் பெரும் சுரண்டலை நிகழ்த்தும். வெளிநாட்டு நிறுவனங்கள் எப்போது எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு கடையை காலி செய்வார்கள் என்று தெரியாது. அப்போது இந்தியாவின் கஜானா காலியாவதும் உறுதி.//
தனியார்மயத்தை தீவிரப் படுத்தும் பொழுதே இந்தியாவின் கஜானா காலியாகி விடும். ஏனெனில், அரசு நிர்வாகம், பாதுகாப்புத் துறை தவிர்ந்த அனைத்தையும் தனியார்மயமாக்குவது தான் நியோ லிபரலிச சித்தாந்தம். அதைத்தான் இந்தியாவுக்கு கடன் கொடுக்கும் நாடுகள், IMF, உலகவங்கி என்பன வலியுறுத்துகின்றன. அத்துடன் வரிகளையும் குறைக்குமாறு வற்புறுத்துகின்றன.
உதாரணத்திற்கு, இந்தியாவில் முதலிடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டப்படி மிகக்குறைந்த வரி கட்டுகின்றன. (அதைக் கூட ஒழுங்காக கட்டுவதில்லை.) இந்திய அரசு அந்த வரித் தொகையை கூட்டுவதற்கு தயங்குகிறது. அப்படி செய்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா வராமல் வேறு நாடுகளை தேடி ஓடி விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். அப்படியானால் எப்படி இந்திய கஜானா நிரம்பும்?
மேற்கு ஐரோப்பாவில் கார்ப்பரேட் வரித் தொகை மிக அதிகம். அதனால் தான் அந்த நாடுகளில் கஜானா நிரம்புகிறது. அரசு அந்தப் பணத்தை எடுத்து மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிட்டு வருகின்றது. வெனிசுவேலாவும் அதைத் தான் பின்பற்ற விரும்பியது. மேற்கு ஐரோப்பிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால், நடந்தது என்ன?
அமெரிக்கப் பொருளாதார தடை. தனியார் துறையினரின் பதுக்கல்கள், உற்பத்திக் குறைப்புகள். அதனால் எழுந்த அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு. அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகள், லட்சக்கணக்கான அகதிகளின் வெளியேற்றம்….
இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்கள், வெனிசுவேலாவின் உதாரணத்தை பின்பற்றி தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கனவு கூடக் காணக் கூடாது. மீறினால் வெனிசுவேலா நிலைமை தான் உங்களுக்கும் உண்டாகும். இது அந் நாடுகளுக்கு விடுக்கப் பட்டுள்ள எச்சரிக்கை.
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.