Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 335

ஆளுநர் மாளிகை அழுத்தம் : சென்னைப் பல்கலை மாணவர் கிருபாமோகன் நீக்கம் !

1
Madras-University

ம்பேதகர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்டதால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் கிருபாமோகன் நீக்கம்! ஆளுநர் மாளிகை உத்தரவு!

மாணவர்களே, இளைஞர்களே!

  • சென்னைப் பல்கலைக் கழகத்தின் உத்தரவை திரும்பப் பெற குரல்கொடுப்போம்!
  • பாதிக்கப்பட்ட மாணவருக்கு துணைநிற்போம்!

சென்னைப் பல்கலையில் கடந்த ஆண்டு முதுகலை இதழியல் படிக்கும் மாணவர் த.கிருபாமோகன். அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்னும் ஒரு அமைப்பில் இணைந்து சமூகப் பிரச்சினைகளுக்காக கடந்த ஆண்டுகளில் போராடி வந்துள்ளார். குறிப்பாக பல்கலைக்கழக ஆசிரியர் வெளியிட்ட வரலாற்று நூலைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி காவிகள் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தபோது, மாணவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தி காவிக்கும்பலை புறமுதுகிட்டு ஓடச் செய்தனர் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள்.

இந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது கடும்  வெறுப்பில் இருந்த சங்க பரிவாரக் கும்பல், மாணவர் கிருபா மோகம் முதுகலை தத்துவத்தில் – புத்திசம் (Budhism) என்ற பிரிவில் இந்த ஆண்டு பல்கலையில் சேர்ந்துள்ளார். இந்த ஆண்டு சேர்ந்து படிக்கத் தொடங்கிய பின்னர், அம்மாணவரை உடனடியாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுனர் மாளிகையிலிருந்து கல்லூரி நிர்வாகத்திற்கு தொடர் அழுத்தம் தரப்பட்டு, இறுதியில் அவரை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்துவிட்டதாக கடிதம் அளித்தது நிர்வாகம். அதனைத் தொடர்ந்து, இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தி கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார் கிருபாமோகன். அவர் எழுதிய கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவரின் சேர்க்கை காவிகளுக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும், காவிகளுக்கு ஆளுனர் மாளிகையில் இருக்கும் செல்வாக்கையும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

***

DATE: 04/09/2019
PLACE: Chepauk

அனுப்புநர்:

த. கிருபாமோகன்,
முதுகலை முதலாமாண்டு புத்திசம்,
NO:2A, ஜமீன் ராயப்பேட்டை,
சுகுணா காலனி விரிவு,
குரோம்பேட்டை,
சென்னை – 44.

பெறுநர்:

Thiru. Mangat Ram Sharma,
Principal Secratery To Government,
Higher Education Department secretariat,
Chennai – 600009.

பொருள் : எனது அட்மிஷனை ரத்து செய்த சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரி.

திப்பிற்குரிய ஐயா, வணக்கம்.

நான் சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A (BUDDHISM) பயின்று வருகிறேன். நான் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழக இதழியல் (JOURNALISM) துறையில் பயின்றேன். கடந்த ஜூலை 31-ம் தேதி பல்கலைக்கழக விதிமுறையின் அடிப்படையில் தத்துவவியல் துறையில் முதுகலைக்கான பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து கடந்த ஒருமாத காலமாக வகுப்புகளுக்குச் சென்று வருகிறேன்.

Madras University
சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி தத்துவவியல் துறைத்தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி என்னை அழைத்து, “ஆளுநர் மாளிகையில் இருந்து தொடர்ந்து பிரஷ்ஷர் வருவதால் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி, உங்களது அட்மிஷனை ரத்து செய்ய சொல்லி வற்புறுத்துகிறார். மாணவரிடம் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரது சான்றிதழ்களும் சரியாக உள்ளது. எதைச் சொல்லி அவரது அட்மிஷனை ரத்து செய்வேன் என்று நான் துணைவேந்தரிடம் கூறினேன்” என்றார். இதைக் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். “எனது கல்வி சான்றிதழ்களிலோ, கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ எதாவது பிரச்சனை இருக்கிறதா, எதற்கு என்னுடைய அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள்” என்று கேட்டேன்.

அதற்கு துறைத்தலைவர் பேரா.வெங்கடாஜலபதி, “நீங்கள் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் ஏற்கனவே செயல்பட்டு இருக்கிறீர்களாமே. அதனால்தான், உங்களை நீக்கச் சொல்கிறார்கள். எதையாவது சொல்லி உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள். தினந்தோறும் துணைவேந்தரிடம் இருந்தும் ஆளூநர் மாளிகையில் இருந்தும் எனக்கு பிரஷ்ஷர் கொடுக்கிறார்கள். எனக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஏன் இவ்வாறு நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை” என்றார். அதன்பிறகு ஒருவாரகாலம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.

படிக்க:
கருத்துக் கணிப்பு : ஆளுநர் புரோகித்தின் எந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது ?
♦ அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தடை – ஆர்ப்பாட்டங்கள்

மீண்டும் கடந்த 29-ம் தேதி என்னை அழைத்த பேரா.வெங்கடாஜலபதி, “தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகை மற்றும் துணைவேந்தரிடமிருந்து உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி பிரஷ்ஷர் கொடுக்கின்றனர். எனது 20 ஆண்டுகால பணி அனுபவத்தில் இதுபோன்ற பிரஷ்ஷரை எதிர்கொண்டதில்லை. எனவே, உங்களது அட்மிஷனை ரத்து செய்துள்ளேன். அதற்கான கடிதத்தையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

வகுப்புகள் தொடங்கி ஒருமாத காலத்திற்கு பிறகு இவ்வாறு செய்வது நியாயமா..? என்று கேட்டேன். அதற்கு “நீங்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்கவில்லை, இதை முன்னிட்டு உங்கள் அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி துணைவேந்தர் கூறினார்” என்று புதிதாக ஒரு காரணத்தைக் கூறினார் பேரா.வெங்கடாஜலபதி. ஆனால், எனது அட்மிஷனின்போது “ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால், எலிஜிபிலிட்டி சான்றிதழ் தேவையில்லை, முதுகலை புரவீஷ்னல் சான்றிதழே போதுமானது என்று நீங்கள்தானே கூறினீர்கள்” என்றேன். அதற்கு அவர், “ஆளுநர் தரப்பில் இருந்து பிரஷ்ஷர், என்னால் ஒன்றும் செய்யமுடியாது” என்று கூறிவிட்டார். எனது அட்மிஷனையும் ரத்து செய்துள்ளார்.

Madras University Student kiruba mohan
மாணவர் கிருபாமோகன் நீக்கத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் வெளியிட்டுள்ள சுவரொட்டி.

சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, வேறு பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்தால்தான் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும். நான் ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாறு எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெறவேண்டும் என்றாலும், அந்தந்த துறைகள் மூலமாகத்தான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து சான்றிதழ் பெறமுடியும். தனிப்பட்ட ரீதியாக எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெற முடியாது.

மேலும், எனக்குப் பிறகு தத்துவவியல் துறையில் அட்மிஷனான இரண்டு மாணவர்கள் தற்போதுவரை எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காத நிலையில், என்னுடைய அட்மிஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காமல் உள்ளனர். பிரச்சினை எலிஜிபிலிட்டி சான்றிதழ் பற்றியது அல்ல. எந்தக் காரணத்தையாவது சொல்லி எனது அட்மிஷனை நீக்க வேண்டும் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது.

உரிய சான்றிதழ் கொடுத்து, கட்டணமும் செலுத்தி ஒருமாத காலம் வகுப்புகளுக்கும் சென்ற பிறகு சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்து பழிவாங்கியுள்ளது.

கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதல் தலைமுறையாக படிக்க வந்தவர்களில் நானும் ஒருவன். முறையான எவ்வித காரணங்களும் இல்லாமல், ஏற்கெனவே அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தில் இணைந்து செயல்பட்ட காரணத்திற்காக சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்துள்ளது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மறுக்கப்படும் எனது கல்வி வாய்ப்பை மீண்டும் பெறுவதற்கும், படிப்பை தொடர்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

(கிருபாமோகன்)

DATE: 04/09/2019
PLACE: Chepauk

COPY TO:
1. Higher Education Minister
2. Vice Chancellor, University Of Madras
3. Registrar, University Of Madras
4. HOD, Department Of Philosophy, University Of Madras

***

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

புதுவை சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் : தொழிற்சங்கப் பலகை திறப்பும் ! நிர்வாகம் – போலீசு – ரவுடி கூட்டணியும் !

புதுச்சேரியில் திருபுவனை பகுதியில் பிளாஸ்டிக் நாற்காலிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் கிளை கிளைச் சங்கமாக செயல்பட்டு வருகிறது.

சங்கம் துவங்கி மூன்று வருடங்களாகியும், சங்கத்தை அழைத்துப் பேசுவது என்ற நடைமுறையும் இல்லை. சங்கம் தரும் கடிதங்களை வாங்கும் வழிமுறையும் இல்லை. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட தொழிலாளர் பிரச்சினைகளைப் பேசுவதற்கு பலமுறைகளில் முயற்சி செய்தும் நிர்வாகம் முகம் கொடுக்கவே இல்லை.

supreme-industriesஇந்நிலையில் நமது சங்கம் ஆலையில் செயல்படுவதை நிர்வாகத்திற்கு உறைக்கும் விதமாக, 04.09.2019 அன்று ஆலைவாயிலில் பெயர்ப்பலகை வைத்து, கொடியேற்றுவது என தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதற்காக 26.08.2019 அன்றே, பகுதி போலிசு நிலையத்திலும், மாவட்ட கண்காணிப்பாளரிடமும் முறையாக அறிவிப்பு செய்து பாதுகாப்பு கோரி கடிதம் கொடுத்தனர். பொதுப்பணித் துறையிடமும் அனுமதிக் கடிதம் கொடுத்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இதற்கு முன் வரை சங்கத்தை ஒரு பொருட்டாக மதிக்காத நிர்வாகம், கொடியேற்று நிகழ்ச்சியை அறிவித்தவுடன், அதைத் தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் குட்டிக் கரணம் போட்டுப் பார்த்தது.

ஏற்கனவே, திருபுவனை பகுதி பிப்டிக் தொழிற்பேட்டையில் எந்த பெயர்ப்பலகையும் வைக்கக் கூடாது சங்கக்கொடியும் பறக்கக் கூடாது என்பதில் முதலாளிகள் குறியாக இருந்தனர். அதற்காக, உள்ளூர் ரவுடிகளை தங்களது நிறுவனத்தில் சில வேலைகளைக் கொடுத்து ஒப்பந்ததாரர் என்ற பெயரில் அடியாள்படையாக வைத்துக் கொண்டு அராஜகங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஒப்பந்ததார ரவுடிகளுக்கு எதிராக பிப்டிக் தொழிற்பேட்டையில் 2014 ஆகஸ்டு – 05 அன்று பேரணி ஆர்ப்பாட்டம் நடத்திய போது பேரணியில் புகுந்து தொழிலாளர்களை ஒப்பந்தாரர ரவுடிகள் தாக்க முற்பட்டனர். இது வரையில் தங்களைப் பார்த்து பயந்து ஓடிய தொழிலாளர்களைப் பார்த்திருந்த அந்த ரவுடிகள் முதன்முதலாக, திருப்பி அடிக்கும் தொழிலாளர்களைப் பார்த்தனர். தொழிலாளர்களிடமிருந்து வெளிப்பட்ட வர்க்க கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் அந்த ரவுடிகள் தெறித்து ஓடினர்.

ஆகஸ்டு 05-ல் நடந்த இந்த சம்பவம், தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதுவரையில் தொழிலாளர்களை மிரட்டி வந்த ரவுடிகள் கூட்டத்தை ஓட ஓட விரட்டியது தொழிலாளி வர்க்கம். அன்று முதல் புதுச்சேரியின் நம்பிக்கை பெற்ற சங்கமாகத் திகழ்ந்து வருகிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தற்போது இந்த கொடியேற்றம், பெயர்ப்பலகை நிகழ்ச்சியைத் தடுப்பதன் மூலம், மீண்டும் ஒப்பந்ததார ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், சுப்ரீம் ஆலை நிர்வாகம் இந்நிகழ்ச்சியைத் தடுக்க தீவிரம் காட்டி வந்தது.

இதனடிப்படையில் தான், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தோழர். மகேந்திரன் அவர்களின் மாமனாரிடம், நிர்வாகத்தின் கைக்கூலிகளைக் கொண்டு ஏற்கனவே ஒப்பந்ததார ரவுடிகளின் கோஷ்டி மோதலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வேலழகனைப் போல, உங்கள் மருமகனையும்  யாராவது வெட்டிப் போடப் போகிறார்கள் எனச் சொல்லி, மிரட்டியுள்ளது.

supreme-industries-ndlf (11)
போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்க நிர்வாகிகள்.

அதற்கு, தொழிலாளி வர்க்கத்திற்காகப் பாடுபடும் தனது மருமகனைப் பற்றித் தெரியும் எனவும், ஆறிலும் சாவு, அறுபதிலும் சாவு. ஒரு மனிதன் எப்படிச் செத்தான் என்பதைத் தான் மக்கள் பேச வேண்டும் என்றும் பதிலடி கொடுத்து வந்துவிட்டார்.

தனது மிரட்டல் பலிக்காமல் பல்லிளித்துப் போகவே, போலிசை ஏவி விட்டது நிர்வாகம். கொடியேற்ற நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புக் கேட்டு 10 நாட்களுக்கு முன்னரே கடிதம் கொடுத்தும் பேசாத, இன்ஸ்பெக்டர், நேற்று (03.09.2019) தோழர் மகேந்திரன் அவர்களை அழைத்து, கொடியேற்ற நிகழ்ச்சியை ஒருவாரம் தள்ளி வைத்து நடத்தச் சொல்லிக் கேட்டார். தோழர் காரணம் கேட்ட போது, ஒரு தரப்பில் பிரச்சினை வருகிறது என்று சொல்லியும், பிறகு யோசித்து, தனக்கு அனுமதிக் கடிதம் வரவில்லை என்றும் ஒரு காரணத்தை சேர்த்துக் கொண்டார்.

நாம் பத்து நாட்களுக்கு முன்னரே நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக அவரிடம் அறிவித்து பாதுகாப்பு கோரியுள்ளதை தோழர் நினைவூட்டினார். மேலும், பொதுப்பணித்துறையிடம் முறையாக அனுமதி பெற்றதையும் விளக்கினார். பின், சற்றே நிதானித்து, ஒரு வாரம்… பத்து நாள் தள்ளி வைத்து நடத்துமாறும், வேறு சில பிரச்சினைகள் தனது காதுக்கு வந்துள்ளது என்று கூறியும் நிகழ்ச்சியை நடத்த விடாத வகையில் போலிசு இன்ஸ்பெக்டர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், கடைசிவரை, அந்த ‘வேறு சில பிரச்சினைகள்’ பற்றி சொல்லவே இல்லை.

படிக்க:
தொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் ! புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் !
♦ கேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் !

ஏற்கனவே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், பிரச்சாரம், கொடி, பலகை வேலைகள் நடந்துள்ளது. சுவரொட்டி பரவலாக ஒட்டி பிரச்சாரங்கள் செய்யப்பட்டு விட்டது. இந்நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தாமல் இருக்க முடியாது என ஆணித்தரமாக சொல்லி விட்டு வந்து விட்டார், தோழர். மகேந்திரன்.

ரவுடிகளை விட்டு மிரட்டியும், போலிசை வைத்து நைச்சியமாகப் பேசியும் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. அதனால், சுப்ரீம் நிர்வாக அதிகாரிகள், நேற்று (03.09.2019) இரவு முதல் சங்க நிர்வாகிகளில் அகப்பட்டவர்களிடம் எல்லாம் பேசுவது, இல்லாதவர்களுக்கு மொபைலில் மெசேஜ்  அனுப்புவது என எப்படியாவது நிகழ்ச்சியைத் தடுத்து விட வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்தனர்.

மேலும், 04.09.2019 அன்று காலை முதல் சுப்ரீம் நிறுவனத்தின் அருகாமைப் பகுதியில் கிட்டத்தட்ட 10 பேர் ஒப்பந்ததாரர் என்ற பெயரில் (ரவுடிகள்) சுற்றி வந்த வண்ணம் இருந்தனர். மீண்டும் ஒரு ஆகஸ்டு – 05 சம்பவத்தை எதிர்கொள்வது பற்றி தொழிலாளர்களை ஒருங்கிணைத்து பேசிய போது, உள்ளூர் என்ற அடிப்படையில் தங்களது ஊர்க்காரர்கள் சொந்தக்காரர்களைத் திரட்டி அந்த ரவுடிகளை எதிர்கொள்ளத் தயாரானார்கள் தொழிலாளர்கள். தங்களுக்கு எதிராக மக்கள் திரளுவதை அறிந்த ரவுடிகள், சற்று நேரத்திற்கெல்லாம் இடத்தைக் காலி செய்தனர்.

மறுபுறம், காலை 06.00 மணிக்கெல்லாம் ஆலை வாயிலுக்கு வந்த நிர்வாக அதிகாரிகள், கொடி, பெயர்ப்பலகை அமைக்கும் சங்க நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும், நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் எனவும், நிறுவனத்தின் துணைத் தலைவரிடம் பேசச் சொல்வதாகவும் கூறி வந்தனர். ஒரு கட்டத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக செய்த செலவுகள் மொத்தமும் கொடுத்து விடுவதாகவும், நிகழ்ச்சியை நிறுத்தும் படியும் கோரி, அந்த பணத்தை நிர்வாகிகளின் பாக்கெட்டில் திணிக்க முயற்சித்தனர். ஆனால், தொழிலாளர்கள் இறுதி வரை விடாப்பிடியாக நின்று நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர்.

காலை 8.30 மணிக்கு திட்டமிட்டபடி ஆலைவாயிலில் சுப்ரீம் நிறுவனத் தொழிலாளர்களுடன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு மற்றும் கிளைச் சங்கத் தொழிலாளர்களின் பரவலான பங்கேற்புடன், நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் கிளைச் சங்கத்தின் தலைவர். தோழர். தனுசு அவர்கள் தலைமையேற்று, இந்நிகழ்ச்சி நடத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். கிளைச் சங்கச் செயலாளர் தோழர். முத்தையன் நிகழ்ச்சி பற்றி கருத்துரை வழங்கியும் நிறுவனத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் சுருக்கமாகப் பேசினார்.

பு.ஜ.தொ.மு.- புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர். சரவணன், தொழிற்சங்கம் துவங்கியதன் நோக்க்கத்தையும், நமது தொழிற்சங்கம் செயல்படும் முறை பற்றியும் விளக்கி, இன்றைய நிகழ்ச்சியை நடத்துவதற்கான அவசியத்தை நிர்வாகம் தான் ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்கினார்.

பு.ஜ.தொ.மு.– தமிழ்நாடு மாநில இணைச் செயலாளர் தோழர். பழனிசாமி, சங்கத்தின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து, தொழிற்சங்கம் தோன்றிய வரலாற்றுக் காரணிகளை விளக்கியும், தொழிலாளர்களை அரசியல்படுத்துதலும் சமூக ரீதியான செயல்பாடுகளும் தான் ஒரு போராட்டத்தை முழுமையடையச் செய்கிறது என்பதை தற்போதுள்ள பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்பு ஆகிய விசயங்களுடன் ஒப்பிட்டு பேசினார். எனவே, அரசியல் தான் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கிறது. இதை உணர்ந்து நமது போராட்ட முறையை கட்டியமைக்க வேண்டும் என்பதையும் விளக்கினார்.

சுப்ரீம் கிளைச் சங்கத்தின் துணைத்தலைவர் தோழர். பாலசுப்ரமணியன் அவர்கள் நன்றியுரை கூறியும், தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

படிக்க:
கிருஷ்ணரும் சில பிய்ந்துபோன செருப்புகளும் !
♦ புதுச்சேரி வரலாற்றில் திருப்பம் – ரவுடிகளை வீழ்த்திய புஜதொமு

இந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் செய்து “தலையால் நின்று தண்ணி குடித்து”ப் பார்த்தும் முடியாமல் போகவே, அங்கு நின்றிருந்த போலீசை வைத்து, நிகழ்ச்சியை சீக்கிரம் முடிக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. எனினும், திட்டமிட்ட அடிப்படையில் நிகழ்ச்சி முறையாகவும், முழுமையாகவும் நடத்தி முடிக்கப்பட்டது.

தனது அத்தனை முயற்சிகளும் பலிக்காமல் போனதால் வெறுப்பான நிர்வாகம், சங்கத்தில் இல்லாத சில தொழிலாளர்களை அழைத்துப் பேசியுள்ளது. தற்போது நிறுவனத்தில் கொடியேற்றி, பெயர்ப் பலகை திறந்துள்ளதால், எங்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கையெழுத்துப் பெற்று, போலீசிடம் பெயர்ப்பலகையை அகற்ற வேண்டும் என புகார் கொடுக்க முயற்சித்து வருகிறது.

மற்றொருபுறம், வேலைக்கு உள்ளே வரும்போது கொடியேற்றம், பெயர்ப்பலகை நிகழ்ச்சி என்று சொல்லி சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எங்களை வேலைக்கு வராமல் தடுத்தனர் என்று சில தொழிலாளர்களை வைத்து நிர்வாகம் புகார் பெற்றுள்ளது. இந்த புகார் கடிதங்களைக் கொண்டு பெயர்ப்பலகையை எடுப்பதற்கும், தொழிற்சங்க நிர்வாகிகளை மிரட்டி முடக்குவதற்குமான வேலைகளில் இறங்கியுள்ளது.

தொழிலாளர்களுக்கு எதிராக தொழிலாளரை நிறுத்தியுள்ளது. வர்க்க உணர்வும், அரசியல் புரிதலும் இல்லாததால் அந்தத் தொழிலாளர்கள் நமது சங்கத்திற்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளனர். நமது போராட்டமென்பது புகார் கொடுத்துள்ள அந்தத் தொழிலாளர்களின் உரிமைகளையும் உள்ளடக்கியது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்காக தொழிலாளர்களை அரசியல்படுத்தும் வேலைகளை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து கொண்டு சென்று வருகிறது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801.

தமிழகத்தை நாசமாக்காதே – விழுப்புரம் கருத்தரங்கம் | செய்தி – படங்கள்

ணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச்சாலை – தமிழகத்தை நாசமாக்காதே !” என்ற தலைப்பில் கடந்த 30/8/2019 அன்று மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம் சார்பாக, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் அவர்கள் முதலில் தலைமை உரையாற்றினார். அவர் பேசுகையில் “அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை – தமிழகத்தை நாசமாக்கதே என்ற தலைப்பில் தெருமுனைக்கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த போலீசிடம் அனுமதி கேட்டு மனுக் கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து பேருந்துகள்ம் கடைகள் மற்றும் கிராமங்கள் என பல்வேறு வகைகளில் பிரச்சாரம் மேற்கொண்டோம். ஆனால் போலீசோ எங்களை பேருந்துகளிலும், கடைவீதிகளிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என தொடர்ந்து மிரட்டினார்கள்.

என்ன ஆனாலும் சரி நாங்கள் பிரச்சாரம் செய்வோம், கைது செய்தால் செய்துகொள்ளட்டும் என்று தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டோம். இறுதியாக பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை என மறுத்துவிட்டனர். எனவே அதே தலைப்பில் கருத்தரங்கமாக நடத்திக்கொண்டு இருக்கிறோம். இன்று மக்கள் அதிகாரம் என்றாலே நோட்டிஸ் கொடுக்கவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ எதற்கும் அனுமதி இல்லை. மாற்று அமைப்பினர் நடத்தும் கூட்டங்களில் கூட மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசக்கூடாது என அவர்களை மிரட்டுகின்றனர்” என போலீசின் இந்த ஜனநாயக விரோத போக்குக்கு கண்டனம் தெரிவித்து பேசி முடித்தார்.

படிக்க :
♦ தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019
♦ ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

வழக்குரைஞர் தோழர் தமிழ்குமரன் அவர்கள், “ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களை ஒடுக்கவே இன்று பல்வேறு ஒடுக்குமுறை சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. கர்ப்பரேட்டுகளின் பிடியில் நம் நாடு சிக்கி உள்ளது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

அடுத்து ஹைட்ரோகார்பன்-சாகர்மாலா எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர் கு.பாலசுப்ரமணியன் அவர்கள் பேசுகையில், “இன்று நமது நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த சூழலிலும் நம்மைப் பாதுகாப்பது விவசாயம்தான். ஆனால் அந்த விவசாயத்தைப் பாதுகாக்க எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. மாறாக விவசாயத்தை அழிப்பதற்காகவே பல்வேறு திட்டங்கள் கொண்டுவரபடுகிறது. விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யக்கோரி தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும்போது, அரசோ அம்பானி, அதானிகளுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்து முதலாளிகளுக்கு சேவைசெய்து கொண்டிருக்கிறது. அதேவேளையில் மக்கள் அதிகாரம் தான் தொடர்ச்சியாக விவசாயிகளுக்காக போராடி வருகிறது” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

அடுத்ததாக பேசிய மருதம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவிகார்த்திகேயன் அவர்கள் தனது உரையில், “ஆற்று மணல் கொள்ளை மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைந்து வருவதையும், மேலும் இது போன்று அழிவு திட்டங்களால் மிக கடுமையான குடிநீர் மற்றும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும் பேசினார்.

விழுப்புரம் பகுதி பு.மா.இ.மு அமைப்பாளர்  தோழர் ஞானவேல் அவர்கள் பேசுகையில், “இன்று மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நாசகார திட்டங்களை தமிழத்தில் கொண்டுவருவது மட்டுமல்லால், ஒட்டுமொத்த இந்திய மக்கள் மீதும் புதிய, புதிய கொள்கைகளையும், தங்களது அடக்குமுறைச் சட்டங்களையும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகின்றனர்” என்றார். மேலும் தற்போது கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கை பற்றியும் அதில் உள்ள அபாயங்களைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.

படிக்க :
♦ கேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் !
♦ ஜெர்மனி : வேற்றுமையில் ஒற்றுமை – ஆனால் பீஃப் கூடாது !

சிறப்புரையாக பத்திரிகையாளர் தோழர் அய்யநாதன் அவர்கள் தான் எழுதி வெளியிட்டுள்ள “ஹைட்ரோகார்பன் அபாயம்” என்ற புத்தகத்தில் உள்ளவற்றை மேற்கோள்காட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட இருக்கும் அபாயங்களை தெளிவாக விளக்கினர். மேலும் ஊடக விவாதங்களில் இந்த அழிவு திட்டங்களை ஆதரிப்பவர்கள், தங்களைப் போன்றவர்களை இந்த திட்டங்களால் ஏற்பட உள்ள  பாதிப்புகள் பற்றி மக்களிடம் விளக்குவதற்குகூட விடாமல் வேண்டுமென்றே குறுக்கீடு செய்வதையும் சுட்டிக்காட்டினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகையில், “இன்று நமது நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்தும், கடுமையான அடக்குமுறை சட்டங்கள் பற்றியும், தமிழகத்தின் மீது திணிக்கப்படும் நாசகார திட்டங்கள் பற்றியும் மக்கள் அதிகாரம் எங்கேயும் பேசி மக்களை விழிப்படைய செய்துவிட கூடாது என்பதற்காகவே நமக்குத் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கபடுகிறது. மேலும் மக்கள் ஆகிய நாம் போலீசின் அடக்குமுறைக்கோ, கைது சிறைக்கோ அஞ்சாமல் எதிர்த்து நின்று போராட வேண்டும்” என்று பேசினார்.

நிகழ்ச்சியின் இடையிடையேயும், நிகழ்ச்சியின் இறுதியிலும் பாடப்பட்ட மகஇக-வின் புரட்சிகர பாடல்கள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும், போராட அறைகூவும் வகையிலும் இருந்தது.


 மக்கள் அதிகாரம்
விழுப்புரம் மண்டலம்

என் அன்பே தியாகத்துக்கு அஞ்சுவது காதல் ஆகுமா ?

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 04

ஸீனா அலுவலகத்தின் தன் வேலையை முடித்ததுமே அவளுடைய சீடன் ஆளோடியில் அவளை எதிர்பார்த்துக் காத்திருப்பான். ஸீனா பெருமிதம் துலங்க அவனுக்குக் கை கொடுப்பாள். இருவரும் ஹாலுக்குச் செல்வார்கள். கோடைகாலம் ஆதலால் அது வெறுமையாக இருக்கும். ஈடுபாடு மிக்க சீடன் அங்கே சீட்டாட்ட மேஜைகளையும் பிங்-பாங் மேஜையையும் முன்னரே சுவரோரமாக நகர்த்தி இடம் செய்து வைத்திருப்பான். ஸீனா அவனுக்குப் புதிய ஜதிவரிசையை ஒயிலுடன் ஆடிக்காட்டுவாள். அவளுடைய எழிலார்ந்த சிறு கால்கள் தரையில் இடும் கோலங்களை அலெக்ஸேய் புருவங்களை நெரித்தவாறு உன்னிப்பாகக் கவனிப்பான். அப்புறம் ஸீனா ஆழ்ந்த முகத் தோற்றத்துடன் கைகளைக் கொட்டி தாளக்கணக்கை எண்ணத் தொடங்குவாள்:

“ஒன்று, இரண்டு, மூன்று, வலப்புறம் சறுக்கல்…. ஒன்று, இரண்டு, மூன்று, இடப்புறம் சறுக்கல்… திருப்பம். அப்படித்தான். ஒன்று, இரண்டு, மூன்று… இப்போது சேர்ந்து ஆடுவோம்.”

கால்கள் இல்லாதவனுக்கு நடனமாடக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு அவளுக்குக் கவர்ச்சி அளித்தது போலும். வெயிலில் பழுப்பேறிய நிறம், கரிய முடியும், பிடிவாதமும் “வெறியும்” சுடர் விட்ட விழிகளும் கொண்ட இந்தச் சீடனை அவளுக்குப் பிடித்து விட்டது போலும். அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டு உணர்ச்சிகளும் சேர்ந்து இருந்தனபோலும். என்னவாயினும் சரியே. தனது ஒய்வு நேரத்தை எல்லாம் ஈடுபடுத்தி உளப்பூர்வமாக அவள் அவனுக்குக் கற்பித்தாள்.

மாலை வேளைகளில், ஏரிக்கரையும் வாலிபால், போன்ற விளையாட்டுக்களுக்கான மைதானங்களும் காலியாகிவிடும் போது ஆரோக்கிய நிலையத்தினர் நடனத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவார்கள். அலெக்ஸேய் இந்த மாலை நிகழ்ச்சிகளில் கட்டாயமாகப் பங்கு கொள்வான், மோசமில்லாமல் நடனமாடினான். ஓர் ஆட்டத்தைக் கூட அவன் விடுவதில்லை. அவனுக்கு கடுமையான பயிற்சி நிபந்தனைகளை விதித்தது பற்றி அவனுடைய ஆசிரியை பல முறை பச்சாத்தாபப்பட்டாள். அக்கார்டியன் இசைக்கும், இணைகள் சுழன்று ஆடும் அலெக்ஸேயின் விழிகளில் கிளர்ச்சி சுடர்விட, உற்சாகம் பொங்க, சறுக்கல்கள், திருப்பங்கள், நிறுத்தங்கள் முதலியவற்றை எல்லாம் லாவகமாகச் செய்வான். தழல் வீசுவது போன்ற கூந்தல் கொண்ட மெல்லிய அழகியை அவன் சிரமமுன்றித் தன்னுடன் இட்டுச் செல்வது போல் இருக்கும். இந்த லாவகமுள்ள நர்த்தனைகளைப் பார்ப்பவர்கள் எவருக்கும், சில வேளைகளில் ஹாலிலிருந்து மறைந்து அவன் என்ன செய்கிறான் என்பதை அனுமானிக்கவே முடியாது.

குப்பென்று சிவந்த வதனத்தில் புன்னகை மிளிர, கைக்குட்டையை அலட்சியமாக வீசியவாறு அவன் வெளியில் வருவான். ஆனால் நிலைவாயிலைக் கடந்து இரவுக் காட்டின் இருட்டில் அடி வைத்ததுமே அவனது புன்னகை வேதனையால் ஏற்படும் சுளிப்பாக மாறிவிடும். அழியைப் பிடித்துக் கொண்டு வாயிற்படிகளில் முனகித் தள்ளாடியபடி இறங்கி, பனி பெய்து ஈரமாயிரக்கும் புல்லில் விழுவான். பகல் வெப்பத்தால் இன்னும் கதகதப்பாகயிருக்கும் ஈரத்தரையில் உடல் முழுவதும் படியும்படி அழுத்திக்கொண்டு, உழைத்துச் சோர்ந்து வார்களால் இறுக்கப்பட்ட கால்களில் ஏற்படும் காந்தும் வலி பொறுக்க மாட்டாமல் அழுவான்.

வார்களைத் தளர்த்திவிட்டுக் கால்கள் இளைப்பாற வசதி செய்வான். அப்புறம் பொய்க்கால்களை மறுபடி மாட்டி இறுக்கிக் கொண்டு துள்ளி எழுந்து விரைவாகக் கட்டிடத்துக்கு நடப்பான். யாரும் கவனிக்காதபடி ஹாலுக்குள் புகுவான். களைப்பாறிய அங்கவீனனான அக்கார்டியன் வாத்தியக்காரன் வியர்த்துக்கொட்ட அங்கே வாசித்துக் கொண்டிருப்பான். அலெக்ஸேய் தன்னைக் கூட்டத்தில் விழிகளால் தேடும் ஸீனாவை அணுகி, பீங்கான் போன்று வெண்மையான தன்வரிசையாக பற்கள் தெரியும் படி முகம் மலர முறுவலிப்பான். பிறகு, லாவகமும் வனப்பும் வாய்ந்த இருவரும் மறுபடி நடனத்தில் கலந்துகொள்வார்கள்.

கடினமான நடனப்பயிற்சியின் விளைவை விரைவிலேயே அலெக்ஸேய் கண்டான். பொய்க்கால்களின் தளைப்பூட்டும் பாதிப்பை வர வரக் குறைவாகவே அவன் உணரலானான். கொஞ்சங் கொஞ்சமாக அவை அவனுடைய அங்கங்கள் போல் ஆகிவிட்டன.

அலெக்ஸேய் மனநிறைவு கொண்டிருந்தான். இப்போது ஒரு விஷயம் மட்டுமே அவனுக்குக் கலவரம் ஊட்டியது. ஓல்காவிடமிருந்து கடிதமே வராததுதான் அந்த விஷயம். ஒரு மாதத்துக்கு முன் அவன் அவளுக்குக் கடிதம் எழுதியிருந்தான். அது முற்றிலும் அசட்டுத்தனமான கடிதம் என்று இப்போது அவனுக்குப் புலப்பட்டது. அதற்குப் பதில் இல்லை. தினந்தோறும் காலையில் உடற்பயிற்சியும் ஓட்டமும் (ஒவ்வொரு நாளும் ஓடும் தூரத்தை நூறு தாவடிகள் அதிகப்படுத்தி வந்தான்) முடிந்ததும் அவன் அலுவலகம் சென்று தபால் பெட்டியைப் பார்த்தான். “ம” என்ற முதலெழுத்துக்கு உரிய செருகு அறையில் எப்போதுமே மற்றவற்றைவிட அதிகக் கடிதங்கள் இருக்கும். ஆனால் இந்தக் கடிதக்கட்டை மறுபடி மறுபடி பிரித்துப் பார்த்ததும் வெறுங்கையுடனேயே திரும்புவான் அலெக்ஸேய்.

ஒருநாள் அவன் நடனத்தில் ஈடுபட்டிருக்கும் போது பயிற்சி அறை ஜன்னலுக்கு வெளியே புர்நாஸியானின் கரிய தலை தென்பட்டது. அவன் கைகளில் தடியும் ஒரு கடிதமும் இருந்தன. அவன் எதுவும் சொல்வதற்குள், பள்ளி மாணவனது போன்ற குண்டு குண்டான எழுத்துக்களில் முகவரி எழுதப்பட்டிருந்த உறையை அலெக்ஸேய் வெடுக்கென்று பிடுங்கி கொண்டு வெளியே ஓடிவிட்டான். புர்நாஸியான் வியப்புடன் ஜன்னலருகேயும் கோபமுற்ற ஸீனா அறை நடுவிலும் நின்று கொண்டிருந்தார்கள்.

உறை நைந்து மங்கியிருந்தது. முகவரிக்கு உரியவனைத் தேடி நாட்டில் நெடுந்தூரம் சுற்றி வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அலெக்ஸேய் பதபாகமாக உறையைப் பிரித்துப் பார்த்தான். “முத்தங்கள், அன்பா! ஓல்கா” என்று முடிந்திருந்தது கடிதம். அவன் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த சுமை இறங்கியது போல் இருந்தது. நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழித்து எழுதப்பட்ட காகிதங்களை நிம்மதியுடன் மடியில் பரப்பி வைத்துக் கொண்டான் அலெக்ஸேய். காகிதங்களை மண்ணும் ஏதோ கரிய பொருளும் என்ன காரணத்தாலோ கறைப் படுத்தியிருந்தன, வத்தி மெழுகு அவற்றில் கொட்டியிருந்தது. நறுவிசாகக் காரியம் செய்யும் ஓல்காவுக்கு என்ன வந்துவிட்டது? இவ்வாறு எண்ணியபடியே கடிதத்தைப் படித்தான். படிக்க படிக்க கர்வத்தாலும் கலவரத்தாலும் அவன் நெஞ்சு விம்மியது. ஓல்கா அப்போது ஒரு மாதமாகத் தொழிற்சாலை வேலையை விட்டுவிட்டு எங்கேயோ ஸ்தெப்பி வெளிகளில் வசிக்கிறாள். அங்கே “ஒரு பெரிய நகரைச் சுற்றிலும்” டாங்கித் தடைப் பள்ளங்கள் தோண்டுவதிலும் சுற்றுக் காப்பரண் நிறுவுவதிலும் கமிஷினைச் சேர்ந்த பெண்கள் முனைந்திருக்கிறார்கள். இவ்வாறு ஓல்கா எழுதியிருந்தாள். “ஸ்தாலின்கிராத்” என்ற சொல் எங்குமே குறிக்கப்படவில்லை. ஆனால் இந்த நகரைப் பற்றி கவலையும் அன்பும் ததும்ப, கலவரமும் எதிர்கால நம்பிக்கையும் தொனிக்க அவள் எழுதியிருந்த தோரணையிலிருந்து அவள் குறிப்பது ஸ்தாலின்கிராத் நகரமே என்பது தெளிவாயிருந்தது.

தன் விவகாரங்கள் ஓல்காவின் மனத்தை முழுமையாக ஆக்ரமித்திருந்தன என்பது நிச்சயம். ஏனெனில் அவற்றை விவரித்த பின்னரே அவள் அலெக்ஸேயின் கேள்விக்குப் பதில் அளித்திருந்தாள். அவனுடைய கடைசிக் கடிதம் இங்கே “காப்பகங்களில்” தனக்குக் கிடைத்தது என்றும், இந்தக் கடிதம் தன்னை அவமதித்து விட்டதாகவும் மட்டுமீறிய இறுக்கமும் பதற்றமும் உண்டாகும் போரில் அவன் ஈடுபட்டிராவிட்டால் இந்த அவமதிப்புக்கு தான் மன்னித்திருக்க முடியாது என்றும் எழுதியிருந்தாள் ஓல்கா.

“என் அன்பே, தியாகத்துக்கு அஞ்சுவது காதல் ஆகுமா? அம்மாதிரிக் காதல் கிடையாது, அருமை அலெக்ஸேய். இருந்தால் என் கருத்தில் அது காதலே அல்ல. என்னையே எடுத்துக்கொள்வோமே. ஒரு வாரமாக நான் குளிக்கவில்லை. காற் சட்டைகளையும் நுனிகள் பிய்ந்து விரல்கள் எல்லாப் புறங்களிலும் துருத்தும் பூட்சுகளையும் போட்டுக் கொண்டு வளையவருகிறேன். வெயிலில் அடிபட்டு என் தோல் நார் நாராக உரிந்து விழுகிறது. அதற்கு அடியில் ஊதா நிறமாக ஏதோ தென்படுகிறது. களைத்து, அழுக்கேறி, மெலிந்து, அழகற்றுப் போய்விட்ட நான் இப்போது இங்கிருந்து உன்னிடம் வந்தால் நீ என்னை அருவருத்து ஒதுங்கியிருப்பாயா, அல்லது கடிந்து கொள்ளத்தான் செய்வாயா? வேடிக்கையான ஆள் நீ, உனக்கு என்ன நேர்ந்தாலும் சரியே, என்னிடம் வா. எப்போதும் எந்த நிலையிலும் உன்னை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்… நான் உன்னைப் பற்றி நிறைய நினைக்கிறேன். இங்கே “காப்பகங்கள் தோண்ட” வந்த பின் நாங்கள் எல்லோருமே படுத்ததுமே அடித்துப் போட்டாற் போல உறங்கி விடுகிறோம். அதற்கு முன் நான் அடிக்கடி உன்னைக் கனவில் கண்டு வந்தேன். நான் உயிரோடு இருக்கும்வரை உன்னை எதிர்பார்க்கிற, எப்போதும், எந்த நிலையிலும் எதிர்பார்க்கிற இடம் ஒன்று இருக்கும் என்பதை மனதில் இருத்திக் கொள்…” இவ்வாறு எழுதியிருந்தாள் ஓல்கா.

படிக்க:
கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !
வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !

“என்ன இது முன்னுணர்வா? ஊகத்திறனா?” என்று எண்ணமிட்டான் அலெக்ஸேய்.” ‘இதயம் முன்னுணர்வு உள்ளது’ என்று அம்மா எப்போதோ சொன்னாள். அது மெய்தானா? அல்லது காப்பகம் தோண்டும் வேலையின் கஷ்டங்களால் ஓல்காவின் அறிவு பக்குவம் அடைந்துவிட்டதோ? அவன் சொல்ல விரும்பாததை அவன் ”உய்த்து உணர்ந்து கொண்டாளோ?” – இப்படி நினைத்துக் கடிதத்தைப் பின்னும் ஒருமுறை படித்தான் அலெக்ஸேய். “அட, எவ்வித முன்னுணர்வும் இல்லை. எதைக் கொண்டு இப்படி எண்ணினேன்? என் சொற்களுக்கு அவள் பதில் அளித்திருக்கிறாள், அவ்வளவு தான். ஆனால் என்ன மாதிரி அளித்திருக்கிறாள் பதில்!”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !

1-Ganesha-Slider

போக்குவரத்து நெரிசல் மிக்க பல்லடம் சாலையிலிருந்து இடதுபுறம் குடியிருப்புப் பகுதிக்குத் திரும்புகிறது ஒரு குறுகிய சந்து. சந்தின் இடதுபுறத்தில் ஒரு பேக்கரி. வலதுபுற மூலையில் அந்தச் சந்தை மேலும் குறுகலாக்கும்படி எட்டுக்கெட்டு மேடையில் சகல அலங்காரங்களோடு அமர்ந்திருக்கரார் பிள்ளையார். ‘பிள்ளையார் பட்டி இறைவா போற்றி’ பாடல் ஆளுயர ஸ்பீக்கர்களில் இரைந்து கொண்டிருந்தது. நான் பேக்கரியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தேன்.

கையில் கயிறு, காவி வேட்டி, ருத்திராட்சை மாலை சகிதமாக இரண்டு பேர் கடைக்கு வந்தார்கள். பதினெட்டு பத்தொன்பது வயது இருக்கலாம்.

‘அண்ணன் சிகிரெட் வாங்கிட்டு வரச்சொன்னாரு..’

அரைப்பாக்கெட் கோல்ட் பில்டர் சிகெரெட்டை வாங்கிக்கொண்டு அவர்கள் பாட்டுக்கு இறங்கிச் சென்றதைப் பார்த்த கடைப் பையனுக்கு அதிர்ச்சி. அருகில் நின்றிருந்த கடை முதலாளியைத் திரும்பிப் பார்த்தான். ‘போகட்டும் விடு எதுவும் கேக்காத’ என்பதைப்போல தலையசைத்தார் முதலாளி. அவரது சகிப்புத்தன்மைக்கு இரண்டு காரணங்கள் இருந்தது. முதலாவது அவர் மலையாளி. உள்ளூர் ரவுடிகளைப் பகைத்துக்கொண்டு அங்கே தொழில் செய்ய முடியாது. இரண்டாவது அவர் இஸ்லாமியர். இதற்கு விளக்கம் தேவையில்லை.

ஆச்சா..

அந்தக் கார்னர் சைட் கடைக்கு இரண்டு பக்கமும் ஆங்கில எழுத்து ‘L’ வடிவில் படிக்கட்டுகள் இருக்கும். மூன்று படிகள். பிள்ளையாரைப் பார்த்தபடி இருந்த படிக்கட்டில் ஆறேழு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். பெரும்பாலும் போதை. ஒரு சுசுகி ஜிக்சர் வாகனத்தில் ஒருவன் வந்து மேடையின் முன்பாக நிறுத்திவிட்டு இவர்களோடு படியில் அமர்ந்தான்.

நரபோதையில் ஏற்கனவே தலை தொங்கிப்போயிருந்த ‘அண்ணன்’ வாயில் சிகரெட்டை வைத்து சில வினாடி போராட்டத்துக்குப் பிறகு பற்றவைத்தான். ஏற்கனவே ‘மட்டை’ கண்டிசனில் இருந்த அண்ணனின் நுரையீரலுக்குள் சென்ற நிகோடின் வஸ்து அலாசி விட்டிருக்க வேண்டும். காலி வயிற்றில் ஆல்கஹாலும் நிகோடினும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தால் எப்பேர்ப்பட்ட ஆளுக்கும் ‘தூக்கி’ விட்டுவிடும். இது இயற்கையின் விதி. எழுந்து சாக்கடையைத் தேடி தள்ளாடி நடந்தான். பிள்ளையார் மேடையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் வாந்தியெடுத்தான்.

படிக்க:
இந்து முன்னணி பிள்ளையார்களுடன் நேருக்கு நேர் !
♦ பிள்ளையார் சிலை பொறுப்பாளர் இந்து முன்னணி அய்யப்பன் நேர்காணல் !

ஒரு டாட்டா ஏஸ் வாகனம் அந்தச் சந்துக்குள் திரும்ப முற்பட்டது. பிள்ளையாருக்கு முன்பாக மூஞ்செலி போல நின்று பாதையை மேலும் குறுகலாக்கியபடி நின்றிருந்தது சுசூகி ஜிக்சர்.

“அண்ணே அந்த வண்டிய கொஞ்சம் நகட்டுங்கண்ணே..” கெஞ்சலாகக் கேட்ட ஆட்டோ டிரைவருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம்.

“டேய்.. வண்டியும் எடுக்க முடியாது ஒரு ..ண்டையும் எடுக்க முடியாது.. நீ ஒதுங்கிப்போடா..”

வண்டியை எடுப்பதற்காக எழுந்த இளைஞன் ‘அண்ண’னின் குரலைக்கேட்டு மீண்டும் அமர்ந்தான். ஆறடித் தொலைவைக் கடப்பதற்கு ஐந்து நிமிடம் போராடி வென்றார் டிரைவர்.

டீயைக் குடித்துவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். சில நிமிடங்களில் பேன்சி பொருட்கள், பொம்மைகளோடு ஒரு தள்ளுவண்டி வந்தது. இந்தமுறை அண்ணனுக்கு பதிலாய் தம்பியே சவுண்டு விட்டார்.

“ங்கொம்மா… வண்டிமேல பட்டுச்சு தள்ளுவண்டிய கவுத்து விட்ருவேன்..”

drunk-manசத்தமில்லாமல் திருப்பிக்கொண்டு வந்தவழியே சென்றார் தள்ளுவண்டிக்காரர். என்ன நிறமென்றே கணிக்க முடியாத விசித்திர நிறத்தில் வாயிலும் மூக்கிலும் ஒழுகிய திரவத்தைக் காவி வேட்டியில் துடைத்துக்கொண்டு திரும்பி வந்தான் அண்ணன். தள்ளாடியபடி நடந்துவந்த அண்ணனை இரண்டுபேர் தழுவியபடி கைத்தாங்கலாக அழைத்து வந்ததைப் பார்க்க பத்தாசா நடனத்தைப் பார்ப்பதுபோல இருந்தது. (பத்தாசா நடனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் யூ டியூபில் சொடுக்கவும்)

தாங்கிப்பிடித்தவர்களில் ஒருவனின் சட்டை ஜிக்சர் வண்டியின் ஹேண்டில் பாரில் சிக்கிக்கொண்டு இழுக்க அண்ணைக் கைவிட்டான். நிலைதடுமாறி விழுந்தான் அண்ணன். படிக்கட்டின் முனையில் ‘சத்த்’ என்று மோதியது தலை. உண்மையில் அந்தச் சத்தம் எனக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பலமாக இருந்தது. என் கணிப்பு சரியெனில் அவனுக்கு (head injuries) தலைக்காயம் ஏற்பட்டிருக்க 90 விழுக்காடு வாய்ப்புள்ளது. வெளியில் இரத்தக்கசிவு இல்லையென்றாலும் உள்ளுக்குள் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புண்டு. அவன் மயக்கமாகாமல் இருந்தது ஆச்சர்யம்தான். சிலர் ஓடிச்சென்று தூக்கி விட்டார்கள்.

‘டேய்.. விடுங்கடா ங்கொம்மா…க்கனுங்களா எனக்கு ஒண்ணும் ஆகாது..’ வந்த கூட்டம் விலகிச்சென்றது. அருகிலிருந்த யாருக்கும் நிலைமை புரியவில்லை. கூர்ந்து கவனித்தேன். வலது காதுக்கு மேல்பக்கம் ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்கு புடைத்திருந்தது. வலிக்காத மாதிரியே நடித்துக்கொண்டிருந்த அண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைந்துகொண்டு இருந்தான்.

சிகரெட் முடிந்துவிட்டது. கிளம்பும்போது பார்த்தேன். மேடையிலிருந்து வைத்த கண் மாறாமல் அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தார் பிள்ளையார். அண்ணனுக்கு ஒரு குடும்பம் இருக்கலாம். குழந்தைகள் இருக்கலாம். அவர்களின் அரூப உருவம் என் மனக் கண்ணில் உறுத்திக்கொண்டே இருக்கிறது.

நன்றி : ஃபேஸ்புக்கில் Samsu Deen Heera 

கேள்வி பதில் : சதுர்த்தி – குழந்தை திருமணம் – நினைத்ததை எழுதுவது எப்படி ?

QA-Slider

கேள்வி : //இந்து மதங்களையும் சாதாரண மக்களையும் எவ்வாறு பிரித்து பார்ப்பது… ஏன் என்றால்? விநாயகர் சதுர்த்தி முன் இருந்ததை விட இப்போது அதிக அளவில் கொண்டாடப்படுகிறது குறிப்பாக கிராமங்களில் எப்படி இது அதிக அளவில் பரவியது…//

– ஷாம்

ன்புள்ள ஷாம்,

இந்துமதத்தில் சாதாரண மக்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு மட்டுமே உரிமை பெற்றவர்கள். கருவறையில் நுழைந்து கடவுளைத் தொட்டு பூஜை செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று அவர்களது தாய் மொழியாம் தமிழை (சமஸ்கிருதம் அல்லாத மற்ற மொழிகளையும்) கருவறைக்குள் கொண்டு செல்ல முடியாது. இந்துமத தத்துவங்கள், புராணங்கள் அனைத்தும் சாதாரண மக்களை சூத்திரர்கள் – பஞ்சமர்கள் என்றே அழைக்கிறது.

Hindu-Munnani-vinayagar-07சூத்திரன் என்றால் வேசிமகன் என்கிறது வேதம். மேலும் பார்ப்பன, ஷத்திரிய, வைசிய பெண்கள் தமக்கு கீழே உள்ள வர்ண ஆண்களோடு சேர்ந்து பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் சூத்திரர்கள் என்று வேதம் கூறுகிறது. சாதாரண மக்களின் குல தெய்வங்களான மாரியம்மன், இசக்கி, சுடலைமாடன், காத்தவராயன், மதுரை வீரன் போன்ற நாட்டுப்புற கடவுள்களை சிறு தெய்வம் என்று இந்துமதம் இழிவுபடுத்துகிறது. நாட்டுப்புற தெய்வ வழிபாட்டில் விலங்கு பலி, கறி படையல், அனைத்தும் உண்டு. இதையும் இந்துமதம் இழிவுடனே பார்க்கிறது.

விநாயகர் சதுர்த்தி ஆரம்பத்தில் வீட்டுப் பண்டிகையாக ‘மேல்’ சாதி இந்துக்களால் கொண்டாடப்பட்டு சிறிய அளவிலான சிலைகள் ஊரின் கிணறுகள், குளத்தில் கரைக்கப்பட்டு வந்தன. 1980-களுக்குப் பிறகு இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் முயற்சியால் பொது இடங்களில் பிரம்மாண்டமாக சிலை வைத்து, அதைக் கரைக்கும் நாளில், மசூதி இருக்கும் தெரு வழியாகத்தான் போவோம் என கலவரம் செய்து வருகிறார்கள்.

பல இடங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வாழும் பகுதியில் பணமும், சிலையும் கொடுத்து வம்படியாக விநாயகர் சதுர்த்தியை அமல்படுத்தி வருகிறார்கள். இன்று கிராமங்களிலும் இந்தப் போக்கு பரவுவதற்கு இந்து மதவெறி அமைப்புகள்தான் பிராதன காரணம். ஆளும் அரசுகளும் மறைமுகமாக இதை பக்தி என்ற பெயரில் ஆதரிக்கின்றன. இன்று பாஜக நாடாளும் கட்சியாக இருக்கும் போது இன்னும் அதிகம் செய்கிறார்கள்.

♦ ♦ ♦

கேள்வி : //பருவ வயதை அடைந்தவுடன் பெண் தாய்மைக்கு தயாராகி விடுகின்றாள். அப்படி இருக்கும் போது எதுக்கு 18 வயது வரை காத்திருக்கணும் ?//

– அன்சாரி முகமது

ன்புள்ள அன்சாரி முகமது,

ஆண் 21 வயதிலும், பெண் 18 வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இந்திய சட்டம் வரையறுத்திருக்கிறது. பருவ வயதை எட்டிய உடன் ஒரு சிறுமி தாய்மைக்கு தயாராகிவிட்டாலும், சமூக ரீதியாக அவள் ஒரு குடும்ப வாழ்வை நடத்துமளவுக்கு முதிர்ச்சி அடைவதில்லை. இதில் உயிரியில் காரணத்தை விட சமூக காரணங்களே முக்கியம்.

child-marriageஇந்தியாவில் சட்டத்தை மீறி குழந்தைகள் திருமணம் நடைபெறுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் குழந்தை திருமணங்கள் குறைந்தாலும் இந்தி பேசும் மாநிலங்களில் இன்னும் செல்வாக்கோடு இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்திலேயே குழந்தைகள் திருமணம் தடை செய்யப்பட்டாலும் அது இன்னமும் தொடர்கிறது. பாஜக, காங்கிரசு போன்ற கட்சிகளே இந்தி பேசும் மாநிலங்களை ஆண்டு வருகின்றன. அங்கே இக்கட்சிகள் குழந்தைகள் திருமணத்தை தடை செய்ய போதிய முன்முயற்சி எடுப்பதில்லை. கூடவே கண்டுகொள்வதுமில்லை.

இந்தியாவில் குற்றவியல் சட்டப்படியும் 18 வயதுக்குட்பட்ட நபர் மைனர் என்றே நடத்தப்படுகிறார். குற்றங்கள் போக சொத்துரீதியான உரிமைகள் வரும்போது மைனர்களுக்கு ஒரு காப்பாளர் தேவைப்படுவார். இப்படி அனைத்து கோணங்களிலும் 18 வயது வரை காத்திருப்பது அவசியமாகிறது.

ஒரு பெண் இந்த சமூகத்தை புரிந்து கொண்டு ஓரளவு சுயேச்சையாக வாழ்வதற்கு இந்த காத்திருத்தல் அவசியம். சிறிய வயதிலேயே திருமணம் செய்து, குழந்தைகளை பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்துவதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் கொடுமையானது. இதனாலேயே உலகில் பல நாடுகள் பெண்ணுக்குரிய திருமண வயதாக 18-ஐ வைத்திருக்கின்றன.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : //புதிய தமிழகத்தின் புதிய அரசியல் சூட்சுமம் என்ன?//

– இராஜாராமசாமி

ன்புள்ள இராஜா ராமசாமி,

ஆர்.எஸ்.எஸ் – பாஜக உதவியுடன் கடையை நடத்துவதுதான் புதிய தமிழகத்தின் புதிய சூட்சுமம்.

♦ ♦ ♦

கேள்வி : //படிக்கின்ற விசயங்கள் மற்றும் தோன்றும் எண்ணங்களை வார்த்தை வடிவில் கொண்டுவர தடுமாற்றம் தோன்றுகிறது.. எழுத நினைக்கும் போது எண்ணங்கள் மறந்துவிடுகிறது ஏன்?//

– நவநீதன்

ன்புள்ள நவநீதன்,

எழுதுவதற்கு முன்னர் நாம் நிறைய படிக்க வேண்டும். அந்த படிப்பையும் ஏதேனும் ஒரு தேவையின் அடிப்படையில் குறிப்புகளோடு படிப்பது அவசியம். குறிப்பிட்ட நூலில் இருந்து நாம் என்ன புதிதாக கற்றுக் கொண்டோம், அந்த நூலில் நம் மனம் கவர்ந்தது எது – ஏன், கவராதது எது – ஏன்? என்பதை நம் சொந்த மொழியில் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தலைப்பில் நீங்கள் எழுத நினைக்கிறீர்கள். அந்த தலைப்பு குறித்து உங்கள் குறிப்புகளில் ஏதும் கருத்துக்கள் உள்ளதா என்று பார்த்து அதன் வழியில் சிந்திப்பதும், சிந்தனை துளிகளை குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டு ஓரிரு நாள் அசை போடுங்கள். பிறகு அந்த குறிப்புகளை திரைக்கதை போல சுருக்கமாக எழுதுங்கள். இப்போது அந்த குறிப்புகள் மூலம் படிப்பவர் ஏதேனும் ஒரு புதிய விசயத்தை படிக்க முடியும் என உங்களுக்குத் தோன்றுகிறதா, பாருங்கள். அப்படி இருப்பின் பிறகு திரைக்கதை குறிப்புகள் உதவியுடன் எழுதுங்கள். ஆரம்பத்தில் சில பல தயக்கம், தடுமாற்றம் இருந்தாலும் மனந்தளராமல் திரும்பத் திரும்ப எழுதுங்கள். எழுத்து வரும்.

எழுத்துக்கு திட்டமிட்ட செயல்பாடும், திட்டமிடாத கற்பனை வளம் இரண்டும் வேண்டும். அதற்கு இந்த செயல்முறை உதவுமென நம்புகிறோம். நீங்கள் குறிப்பாக இன்னதுதான் எழுதப் போகிறீர்கள் என்பதறியாமல் இந்த கருத்து பொதுவாக முன்வைக்கப்படுகிறது.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : //நான் தற்போது இதழியல் துறையில் முதுகலைப்பட்டம் பயின்று வருகிறேன்.. எனக்கு ஓர் செய்தி ஊடகத்தில் வேலை கிடைத்துள்ளது… நான் ஒரு திராவிட கட்சியில் அடிப்படை உறுப்பினராக உள்ளேன். அந்த கட்சியின் எதிரி கட்சியில், (எதிர் கட்சி அல்ல..) வேலை செய்ய போகிறேன்… ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்க நேருமா? நான் பின்பற்றி வரும் கொள்கைகளுக்கு பங்கம் நிகழுமா??//

– ரே

ன்புள்ள நண்பருக்கு,

பத்திரிகை துறையில் உள்ளவர்கள் முகநூலில் உணவு, ஆன்மீகம், ரசனை, சினிமா விமர்சனம், இலக்கியம், வீட்டு விலங்குகள், பண்டிகை தின வாழ்த்துக்கள் என்று பதிவுகள் போடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

சிலர் கட்சி சார்ந்த சானல்களில் பணியாற்றி அவர்களும் அதே கட்சிகளில் இருக்கும் போது அவர்கள் போடும் அரசியல் பதிவுகளுக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் முற்போக்காக, மோடி – அதிமுக ஆட்சியை எதிர்ப்போர், ஆதிக்க சாதிவெறியை கண்டிப்போர் இவர்கள் எந்த சானலில் வேலை பார்த்தாலும் எதாவது ஒரு தருணத்தில் கட்டம் கட்டப்படுகிறார்கள்.

அந்த வகையில் கருத்து சுதந்திரத்தைக் காக்க வேண்டிய பத்திரிகைத் துறையில் ஒரு பத்திரிகையாளருக்கே கருத்து சுதந்திரமில்லை. இதற்கு பத்திரிகையாளர்கள் வலிமையான தொழிற்சங்கமாக அணிதிரள்வதே தீர்வு.

♦ ♦ ♦

கேள்வி : //பெண்மை எதற்காக இன்னும் அடிமைப்பட்டுக்கிடக்க இந்த சமூகம் அளவிளா ஆவல் கொண்டு ஆடுகிறது.✍//

– சேஷாசலம்

ன்புள்ள சேஷாசலம்,

வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு போன்ற வேலைகளை பெண்கள் மட்டுமே செய்கிறார்கள். இதை இலவச உழைப்பாக சமூகம் குறிப்பாக ஆண்கள் கருதுகிறார்கள்.

இரண்டாவது வெளி வேலைக்கு பெண்கள் சென்றாலும் அந்த வருமானம் குடும்பத் தலைவர் என்ற முறையில் ஆண்களுக்கே வந்தாக வேண்டும். உழைக்கும் உதிரிப் பாட்டாளி வர்க்கத்திலோ பெண்கள் உழைப்பில் ஆண்கள் குடிக்கிறார்கள். எனவே பெண்கள் அடிமைப்பட்டு கிடப்பதை இந்த சமூகம் – ஆண்கள் விரும்பவே செய்கிறது.

♦ ♦ ♦

கேள்வி : //உத்திர பிரதேசத்தில் நடக்கின்ற யோகியின் ஆட்சி தான் பா.ஜ.க.-வின் ” செயல் விளக்க மாநில ஆட்சி ” என்பதற்கான மாதிரியா…?//

– எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

ஆமாம். உத்திரப்பிரதேசத்தில் நேரடியாக ஒரு சாமியார் அதுவும் ரவுடி சாமியார் முதல்வராக இருக்கிறார். ஊர் பெயர்கள் மாற்றப்படுகின்றன. கொலைக் குற்றவாளிகளான பசுக்குண்டர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு பகிரங்கமாக வரவேற்கப்படுகிறார்கள்.

நேரடியாக முசுலீம்களுக்கு மிரட்டல் விடுவிக்கப்படுகிறது. பீம் சேனாவின் தலைவர் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார். காவலைரைக் கொன்ற இந்துமதவெறியர்கள் கூட பிணையில் எளிதாக வெளியே வருகிறார்கள். இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரியாக உ.பி மாற்றப்பட்டு வருகிறது.

♦ ♦ ♦

கேள்வி : //சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் வாக்கு இயந்திரத்தின் பங்கு ஆளும்கட்சிக்கு சாதகமாக அமைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்பது எந்த அளவுக்கு உண்மை?//

– ஏ.பி.நடராசன்

ன்புள்ள நடராசன்,

பெரிய அளவுக்கு உண்மையில்லை. அதற்கு தமிழக, கேரள, தெலுங்கானா, ஆந்திர முடிவுகளே சாட்சி.

♦ ♦ ♦

கேள்வி : //உண்மையில் நம்முடைய முன்னோர்கள் யோகா செய்தார்களா ? யோகா செய்தால் உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியுமா? யோகாவால் எந்த நோயும் ஏற்படாது என அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளதா?//

– கா. அசோக் பால் ராஜன்

ன்புள்ள அசோக் பால் ராஜன்,

இன்றைக்கிருக்கின்ற யோகா ஒரு பேக்கேஜாக சென்ற நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் அதனுடைய வெவ்வேறு வடிவங்களை துறவறம் சார்ந்தவர்கள் செய்து வந்தார்கள். இன்றைக்கு முன்வைக்கப்படுகிற யோகா உடலை நீட்டி இழுத்து மடித்து செய்கின்ற ஒரு உடற்பயிற்சி மட்டுமே.

முழுமையான உடற்பயிற்சிக்கு கலோரிகளை எரிக்கின்ற நடை, சைக்கிள் இதர பயிற்சிகள், எடை தூக்கும் பயிற்சிகள் ஆகியவையும் அவசியம். யோகா என்றில்லை பொதுவில் உடற்பயிற்சிகள் செய்வது உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும் ஒரு முன் தயாரிப்பு மட்டுமே. அதனாலேயே நோய் ஏற்படாது என்பதில்லை.

நுண்ணுயிர் தொற்றிகள் மூலம் தொற்று நோயோ மற்ற நோய்களோ கூட ஏற்படலாம். சரியான உடற்பயிற்சி, சரியான சமவிகித உணவு, ஆரோக்கியத்தை உத்திரவாதப்படுத்தும் வாழ்க்கை சுகதாரா வசதிகள் ஆகியவையும் நோயிலிருந்து காக்கும் முன் எச்சரிக்கைக்கு அவசியம். அவை வசதி, வர்க்கம் சார்ந்தே பிரிந்து இருக்கின்றன.

கீழ்க்கண்ட கட்டுரை யோகாவைப் பற்றியும் விரிவாக விளக்குகிறது. படித்துப் பாருங்கள்!

♦ ♦ ♦

கேள்வி : //திராவிடர்களுக்கும், தமிழர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? பெரியார் திராவிட கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்து இருந்தார். ஆனால், தமிழர்கள் என்று மட்டும் தான் பேசினாரா?//

– சுரேஷ்குமார்

ன்புள்ள சுரேஷ்குமார்,

வட இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மொழிகள் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. தென்னிந்தியாவில் தமிழை உள்ளிட்ட பெரும்பான்மை மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அதில் தமிழ் மட்டும் சமஸ்கிருதமயமாகாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவை திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருப்பினும் வடமொழிக் கலப்பு அதிகம். ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பனிய எதிர்ப்பை சுட்டுவதற்காகவே திராவிடர், திராவிட இயக்கம், திராவிடர் கழகம் என்ற பெயர்கள் வைக்கப்பட்டன. அன்றைக்கு மதராஸ் மாகாணம் என்பது தென்னிந்தியாவை குறித்ததால் நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்களை அதாவது தென்னிந்திய மக்களின் நலனையும், அதற்கு எதிரான பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும் முன்வைத்தார்கள்.

திராவிட இயக்கத்தை சேர்ந்த சில அறிஞர்கள் திராவிடத்தை இனம் என்றும் கூறுகிறார்கள். அது சரியல்ல. திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதைத்தாண்டி தென்னிந்திய மக்கள் அனைவரும் ஒரே இனத்தை அதாவது தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. திராவிடர் கழகத்தின் முதன்மைச் செயல்பாடு தமிழகம் என்பதால் பெரியார் தமிழ் மக்களிடையே தனது கருத்துக்களை முன்வைத்தார்.

♦ ♦ ♦

கேள்வி : //ராஜராஜ சோழன் பற்றிய ரஞ்சித் கருத்திற்கு பலதரப்பட்ட கருத்துகள் பதில்களாக வந்திருக்கும் இந்த நேரத்தில் ராஜராஜ சோழன் காலத்து உற்பத்தி முறை, சமூகவியல் வரலாறைப் பற்றி மார்க்சியப் பார்வையில் கூறுங்களேன்..//

– மா பே மு

ன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கேள்விக்கு புதிய கலாச்சாரத்தின் கீழ்க்கண்ட கட்டுரை நேரடியாக பதிலளிக்கிறது. படித்துப் பாருங்கள். நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

கிருஷ்ணரும் சில பிய்ந்துபோன செருப்புகளும் !

கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பிறகும், சென்னை அயோத்தியா மண்டபமும் அதன் சுற்றுப் பகுதியும், ஜெயந்தியின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. சென்னையின் அக்மார்க் பார்ப்பன ஆண்களும், பெண்களும் பிளாஸ்டிக், பித்தளை பூக்கூடை, பேப்பர், மெட்டல், களிமண், பிளாஸ்ட் ஆஃப் பேரிஸ் இவற்றாலான கிருஷ்ணன் பொம்மைகளுடன் தங்கள் கலாச்சார உடையான கச்சம், மடிசார் பூண்டு குடும்பம் சகிதமாக குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண்டிருந்தனர்.

பரபரக்கும் சாலையின் நடைபாதையில் சாயம்போன, ’மூலியான’ கிருஷ்ணன் பொம்மைகள் யாரும் கவனிப்பாரின்றி கிடந்தன. அருகில் நடுத்தர வயதுள்ள ஒருவர் பிய்ந்துபோன செருப்புக் குவியல்களுக்கிடையே வாடிக்கையாளர்களை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணனுக்கு அருகே பிஞ்ச செருப்பா, என்று பக்தர்கள் வருந்தும் வண்ணம் அந்தக் கோலமிருந்தது. ஆனால், செருப்புத் தைக்கும் தொழிலாளி எந்தச் சலனமும் இல்லாமல், “என்ன வேண்டும்” என்று கண்களால் ஏறிட்டார்.

“என்ன இது கிருஷ்ணன் சிலையும் செருப்புகளும் ஒரே இடத்தில்?”

“ஓ… அதுவா… நான் பெயின்டர். ரியல் எஸ்டேட் – பில்டிங் படுத்ததிலேருந்து வேல இல்ல, இப்படி சீசனுக்கு ஏத்தத் தொழில செஞ்சிகிட்டிருக்கேன். மொதல்ல, செருப்புக் கட போடலாமுன்னு இதே எடத்துல பங்க் கட போட்டேன். போலீசு, அதிகாரிங்க வந்து, பப்ளிக் நியூசென்சுன்னு சொல்லி தூக்கிட்டாங்க. சரின்னு அப்படியே கோனிய விரிச்சு கீழே உக்காந்துட்டேன். இப்படி இருக்க எங்கிட்டே புது செருப்பு வாங்க வருவாங்களா? அதான் பழைய செருப்புகளை தைக்க ஆரம்பிச்சேன். எதுவாயிருந்தாலும் நமக்குத் தொழில்தான். கூடவே பக்கத்திலிருந்த பொம்மைக் கடைக்குப் போயி, ஒடஞ்சி போன புது பொம்மைகள பெவிக்கால், எம்சீல் போட்டு ஒட்டி, பெயிண்ட் அடிச்சு புதுசாக்கிடுவேன்.

குமார்.

கடைக்கு வர்றவங்க, இதப் பாத்துட்டு, ‘எங்கிட்டே பழய பொம்மை இருக்கு, சீர் பண்ணி தருவீயா?’ன்னாங்க. அதுலேருந்து இந்தத் தொழில் பிக்கப் ஆயிடுச்சு. பண்டிகைக் காலங்கள்ல நல்லா போகுது. இப்போ பழைய பொம்மைக்கு பெயிண்ட் அடிக்கிற வேலைக்கு ரெண்டு பெயின்டர கூட்டா சேத்துகிட்டேன்” என்றார் குமார்.

அவரிடம் பணிபுரியும் சேலத்தைச் சேர்ந்த பரமேஸ்வர்:

“ஊர்ல கொத்தனார் வேல பாத்தேன். பூசுவேல, கட்டு வேல எல்லாம் செய்வேன். அங்கே வேல இல்லாததனால சென்னை வந்தேன். இங்கே வீடுகளுக்கு சுண்ணாம்பு, பெயிண்ட் அடிக்கிறதுனு பல வேலங்க செஞ்சேன்.

பரமேஸ்வர்.

ஃப்ரெண்டு ஒருத்தரு சிலைக்கு பெயிண்ட் அடிக்கிறத பத்தி சொன்னாரு. பண்டிகை சீசனுல இங்கே வருவேன். கிருஷ்ண ஜெயந்திக்கு முன் வந்தா, கார்த்திகை தீபம் முடிஞ்சி போவேன். சாப்பாடு, தூக்கம் எல்லாம் இந்த பிளாட்பாரம்தான். குளிக்க பைசா கொடுத்து போற இடம்தான். செலவுன்னு பாத்தா, ஒரு நாளைக்கு 300 ரூபா ஆயிடும். மீதி இருந்தாத்தான் வீட்ட பத்தி நெனப்பு வரும். சில நாளு ஐநூறு, ஆயிரமுன்னு வேல வரும். பால நாளு அம்பது, நூறுதான் கெடைக்கும்.

வாடிக்கையாளர்கள்.

ஒரு பொம்மைய சீர் செய்ய 50, 100-ன்னு கேட்டா ரொம்ப படுத்துவாங்க. வர்றவங்க பெரும்பாலும் ஐயருங்கதான். முழம் நீள பொம்மைய எடுத்து வந்து, அதன் பெருமையப் பத்தி ஒரு கிலோ மீட்டர் நீளம் பேசுவாங்க. ‘எங்க தாத்தா வச்சிருந்தது, அத்திம்பேர் கொடுத்தது, ராசியான சிலெ. இது இல்லேன்னா எங்கக் குடும்பமே இல்ல, இத பழசுன்னு தூக்கிப் போட்டா எம் மாட்டுப் பொண்ணு கோச்சுக்கும்’ – இப்படி ஏதேதோ சொல்வாங்க.

அந்த இத்துப் போன பொம்மைய காமிச்சு, ‘கிருஷ்ணரோட சிரிப்பப் பாரு, அதோட முகத்துல களையைப் பாரு, இதே மாதிரி மாசு மரு இல்லாம – ரிப்பேர் பண்ணுனது தெரியாம இருக்கனு’முன்னு சொல்லிட்டு கடைசியில ‘கூலிய பாத்துக் கேளு’ன்னு முடிப்பாங்க.

வர்றவங்க எல்லாரும் சொல்லி வச்சாப்ல ஒரே மாதிரிதான் பேசுவாங்க. நாம பொம்மைக்கு ஏத்த மாதிரி இது மூனு அடி பொம்மை, நீங்க கேக்குற மாதிரி வேணுமுன்னா, 15, 20 ஷேடு அடிக்கணும், வேல அதிகம், 700 ரூபா ஆகுமுன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, ‘இத 200 ரூபாய்க்குத்தான் வாங்கினேன்’ என்று சொல்லி, அதன் மதிப்ப அவங்களே கொறைச்சிடுவாங்க. கடைசில 300 ரூபாய்க்கு ஒத்துக்க வைக்கிறதே பெரும்பாடு.

பெயின்டிங் செய்யிறத விட, அவங்ககிட்ட பேசுறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கும்; திரும்பவும் பொம்மைய வாங்கும் போதும் அதையே பேசுவாங்க; காதே வலிக்கும். அப்புறம் எதிர்பார்த்த ரிசல்ட் வரலன்னு கொற சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. ‘பொம்ம அப்படி இல்ல, இப்படி இல்ல, சொன்ன மாதிரி இல்ல, சிரிச்ச மூஞ்சி போயிடுச்சு, அந்தக் கொழந்த சிரிப்பே காணோமுன்னு’ மூடவுட்டாயிடுவாங்க. நமக்கோ பயமாயிடும். பணம் கொடுக்கலேன்னாகூட பரவாயில்ல, பொம்மைய எடுத்துப் போனாலே போதுமுன்னு எங்க சாமிகிட்டே வேண்டிப்போம்.

அதுக்கு நாங்க செஞ்ச வேல கொஞ்சமில்ல. மொதல்ல உப்புக் காகிதம் தேய்ச்சு, அழுக்கெடுப்போம். பிறகு வார்னிஷ் அடிச்சு மெருகேத்துவோம். ஒடஞ்ச மூஞ்சு, கையி எல்லாம் களிமண்ணோ, பேப்பரோ, எம்சீலோ எடத்துக்கு ஏத்தமாதிரி ஓட்டைய அடைப்போம். சிலையில ஒட்டி வச்சிருக்கிற மாலை மணி இத்துப் போயிருந்தா, அத பெவிக்கால் வச்சி ஒட்டுவோம். அதுக்கப்புறம் நல்லா வெயில்ல காயவைப்போம். கடைசில 15 கலர், 20 கலருன்னு உருவத்துக்கு ஏத்த மாதிரி கலர் கொடுப்போம்.

உப்பு காகிதம், தின்னரு, வார்னிஷ், எம்சீல், பெவிக்கால், பிரஷ், காட்டன் வேஸ்ட் இப்படி ஆயிரத்தெட்டு செலவு. நமக்குத் தேவையான அளவு மட்டுமே வாங்க முடியாது, சிலது மொத்தமாத்தான் கிடைக்கும். இந்த முடிச்சு கூலி வாங்குறதுக்குள்ள எங்களுக்கு மூச்சே முட்டிடும்.

என்ன இருந்தாலும் நிழலோடு வேல, உக்காந்த எடத்துல செய்யிறோம்” என்று சொல்லிவிட்டு, நம்மைப் பார்த்து ஒரு ஞானியைப் போல சிரித்தார்.

சிவலிங்கம்.

பக்கத்தில் இருந்த இன்னொரு ஆர்ட்டிஸ்ட் சிவலிங்கம், “சார் அவன் சொன்னது கொஞ்சம்தான். ஒரு நாள் நீங்க இங்கே உக்காந்து வர்ற கஷ்டமர் பேசுறத கவனிங்க, நாங்க எவ்வளவு வேதனைய அனுபவிக்கிறோமுன்னு தெரியும். வர்ற ஐய்யருங்க எத்தன விதவிதமா பேசினாலும் அவங்க சொல்ல வர்ற விசயம் சிம்பிள் சார். நாமதான் புரிஞ்சிக்கணும். ‘என் எடத்துக்கு நீ வர முடியாது, உன் இடத்துக்கு நான் வரமாட்டேன், அத நீ புரிஞ்சிக்கோ’. இதுக்குத்தான் சார் ஐயருங்க நம்மகிட்டே நீள நீளமா பேசுறாங்க. அதுக்குதான் சார் அவங்க படிக்கிறாங்க. அவங்க ஒழப்பும் பொழப்பும் அதுதான் சார். இத எவன் புரிஞ்சிகிட்டாலும் இங்கே குப்ப கொட்டலாம்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?
ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ?

இதவுட கொடுமை ஒன்னு இருக்கு சார். பல வருசத்துக்கு முன்னாடி ஒரு பொம்மைய சீர் பண்ணிகிட்டுப் போயிருப்பாங்க, அது ஒடஞ்சிருச்சின்னா, என்னதான் ரிப்பேர் பண்ணுனியோ, ஒழுங்காவா செஞ்சிருக்கேன்னு சொல்லி, நம்மளயே குற்றவாளியாக்குவாங்க. அதுமட்டுமல்ல, ஓசியில திரும்பவும் ரிப்பேர் பண்ணிகிட்டுப் போயிடுவாங்க.

நாம சத்தம் போட்டு நியாயம் கேட்டா, பொறுக்கி மாதிரி நம்மள காமிச்சுக்குவாங்க, போனாப் போகுதுன்னு விட்டுத் தொலைச்சிடுவோம்” என்று செருப்புகளை தைக்க ஆரம்பித்தார். அவரது கைகளின் இசைவிற்கேற்ப அழகிய வடிவம் பெற்றது, அந்தப் பிய்ந்துபோன செருப்புகள்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

அரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 33

அரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல்

அ.அனிக்கின்

டேனியல் டிஃபோ எழுதிய இராபின்சன் குரூசோ என்ற நாவலின் முதல் பதிப்பு 1719-ம் வருடத்தில் லண்டனில் வெளியானது. அந்தப் புத்தகம் அசாதாரணமான சிறப்பைப் பெற்றது. ஒரு பக்கத்தில், வீரசாகஸக் கதை என்ற வகையில் அது அங்கீகாரம் பெற்ற பேரிலக்கியம். மறுபக்கத்தில் இராபின்சன் குரூசோ என்ற நாவலைப் பற்றி தத்துவஞான ரீதியாகவும் கல்வித்துறையின் கோணத்திலும் அரசியல் பொருளாதார அடிப்படையிலும் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கின்ற நூல்கள் ஒரு நூலகத்தை நிரப்புகின்ற அளவுக்கு அதிகமாக இருக்கின்றன.

ஒரு தனி மனிதன் (சில சமயங்களில் மனிதர்கள் கோஷ்டி) சமூகத்துக்கு வெளியே வாழ்க்கை நடத்துகின்ற, உழைக்கின்ற நிலைமைகளை ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளர் கற்பனையாக எழுதுவதற்கு “இராபின்சனாதல்” என்று பெயர். அதுவும் ஒரு பொருளாதார மாதிரிப் படிவம் என்று கூறலாம். அதில் மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகள், அதாவது சமூக உறவுகள் விலக்கப்பட்டு, ஒதுங்கிவாழ்கின்ற தனிநபர் இயற்கையோடு கொண்டிருக்கும் உறவுகள் மட்டுமே இருக்கின்றன. அரசியல் பொருளாதாரம் இராபின்சனாதலை விரும்புகிறது என்று மார்க்ஸ் சொன்னார். இது மார்க்சுக்கு முந்திய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தைக் காட்டிலும் மார்க்சுக்குப் பிந்திய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்துக்கு அதிகம்மாகப் பொருந்துகின்றது என்று நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

டிஃபோ இராபின்சன் குரூசோ என்ற நாவலைத் தன்னுடைய அறுபதாவது வயதில் எழுதினார்; அதற்குப் பிறகும் சில நாவல்கள் எழுதினார். இந்த நாவல்கள் சிறப்பானவை என்று கருதப்பட்ட போதிலும் டிஃபோ தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் அவற்றை மிகச் சாதாரணமானவை என்று தான் கருதினார். தான் எழுதியிருக்கும் ஏராளமான அரசியல், பொருளாதார, வரலாற்றுப் புத்தகங்களே தன்னுடைய மறைவுக்குப் பிறகு தனக்குப் புகழ் தேடித்தரக் கூடியவை என்று அவர் கருதினார். கலாச்சார வரலாற்றில் இப்படிப்பட்ட கற்பனைகள் ஏற்படுவதுண்டு.

Political-Economy-Daniel-Defoe
டேனியல் டிஃபோ

அவருடைய சொந்த வாழ்க்கையே ஒரு வீரசாகஸக் கதையைப் போன்றதாகும். அவர் 1660-ம் வருடத்தில் (அவர் பிறந்த வருடம் நிச்சயமில்லை) லண்டனில் பிறந்தார்; 1731-ம் வருடத்தில் அங்கே மரணமடைந்தார். பரிசுத்தவாதியான சிறு கடைக்காரரின் மகனான டிஃபோ தன்னுடைய சொந்தத் திறமை, ஊக்கம், அறிவு ஆகியவற்றின் மூலமாக வாழ்க்கையில் முன்னேற்றமடைந்தார். இங்கிலாந்தின் அரசரான இரண்டாம் ஜேம்சுக்கு எதிராக 1685-ம் வருடத்தில் நடைபெற்ற மான்மு கலகத்தில் அவர் பங்கெடுத்துக் கொண்டார். அந்தக் கலகம் நசுக்கப்பட்டது; அதில் ஈடுபட்டவர்கள் சிரச் சேதம் செய்யப்பட்டனர் அல்லது காலனிகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஆனால் டிஃபோ அதிர்ஷ்டவசமாகத் தப்பிவிட்டார். முப்பது வயதாகும் பொழுது அவர் பணக்கார வணிகராக இருந்தார்; ஆனால் 1692-ம் வருடத்தில் அவர் நொடித்துப் போனார், 17,000 பவுன் கடன்கள் அவருக்கு ஏற்பட்டிருந்தன.

இந்த சமயத்தில் தான் அவர் அரசியல் பிரசுரங்கள் எழுத ஆரம்பித்திருக்க வேண்டும்; ஹாலந்தின் மூன்றாம் வில்ஹெல்ம் மற்றும் அவருடைய நெருக்கமான ஆலோசகர்களின் நம்பிக்கையைப் பெற்றார். 1698ம் வருடத்தில் அவர் திட்டங்களைப் பற்றி ஒரு கட்டுரை என்ற பொருளாதாரப் புத்தகத்தை எழுதினார்; அதில் துணிச்சலான பொருளாதார, நிர்வாகச் சீர்திருத்தங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

அவரை ஆதரித்த அரசர் மரணமடைந்த சிறிது காலத்துக்குப் பிறகு, 1703-ம் வருடத்தில் அவர் பரிசுத்தவாதிகளை ஆதரித்தும் ஆங்கிலத் திருச்சபையைக் கண்டித்தும் எழுதிய காரசாரமான பிரசுரத்துக்காக தண்டனைக் கட்டையில் மாட்டப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். டோரிக் கட்சியின் தலைவர் ராபர்ட் ஹார்லி அவரைச் சிறையிலிருந்து (18 மாதங்கள் சிறையிலிருந்த பொழுது அவர் ஏராளமாக எழுதிக் குவித்தார்) விடுதலை செய்தார். இந்த உதவிக்கு நன்றியாக டிஃபோ தன்னுடைய எழுத்துத் திறமையை அன்றைக்கிருந்த மிகச் சிறந்த பத்திரிகையாளரின் எழுத்துத் திறமையை – டோரிக் கட்சிக்கும் தனிப்பட்ட வகையில் ஹார்லிக்கும் அர்ப்பணித்தார். அவர் ஹார்லியின் சார்பில் இரகசியமான பிரதிநிதியாக ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளுக்கும் போய் அவர் ஒப்படைத்திருந்த முக்கியமான இரகசியப் பணிகளை நிறைவேற்றினார்.

ஆன் அரசியின் மரணமும் ஹார்லியின் வீழ்ச்சியும் அவ ருடைய பணிகளைத் திடீரென்று முடிவுக்குக் கொண்டுவந் தன. 1715-ம் வருடத்தில் அரசியல் அவதூறுக் குற்றம் சாட்டப்பட்டு அவர் மறுபடியும் சிறையிலடைக்கப்பட்டார். அவர் மறுபடியும் இரகசிய வேலைகளைச் செய்வதற்காக, புதிய அரசாங்கத்துக்கு விரோதமான பத்திரிகைகளை உள்ளேயிருந்து கவிழ்க்கும் வேலைக்காக விடுதலை செய்யப்பட்டார்.

படிக்க:
வாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் !
பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !

இராபின்சன் குரூசோவின் ஆசிரியர் ஏராளமான அனுபவச் செல்வத்தைக் கொண்டிருந்தார். யார்க் நகரத்திலிருந்து புறப்பட்ட மாலுமியின் வீரசாகஸங்களைப் பற்றிய கதைக்கு ஆழத்தைக் கொடுத்தது இதுவே. டிஃபோவுக்குத் தன்னுடைய கடைசி நேரம் வரையிலும் அமைதியுமில்லை, ஓய்வுமில்லை. ஒரு மனிதர் தன்னுடைய அறுபதாவது வயதுக்கும் எழுபதாவது வயதுக்குமிடையில் பல பெரிய நாவல்களையும் கிரேட் பிரிட்டனைப் பற்றி பொருளாதார, பூகோள ரீதியாக மிக விரிவான வர்ணனையையும் ஏராளமான வரலாற்றுக் கட்டுரைகளையும் (ருஷ்ய சக்கரவர்த்தியான முதலாம் பீட்டரைப் பற்றியும் ஒரு கட்டுரை உட்பட) பேய்கள், மந்திர தந்திரங்களைப் பற்றியும்(!) வரிசையாகப் பல புத்தகங்களையும் அதிகமான வித்தியாசத்தைக் கொண்ட பல தலைப்புகளில் ஏராளமான சிறு கட்டுரைகளையும் பிரசுரங்களையும் எழுதியது அரிய சாதனை, நம்ப முடியாத அளவுக்குப் பெரிய சாதனை. 1728-ம் வருடத்தில் இங்கிலாந்தின் வர்த்தகத்துக்கு ஒரு திட்டம் என்ற தலைப்புடைய பொருளாதார நூலையும் எழுதினார்.

“இராபின்சன்களை” நோக்கித் திரும்புவோம். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலச் சிறப்புடைய மரபுக்கு இயற்கையான மனிதனைப் பற்றிய கருத்து அடிப்படையாக இருந்தது. நிலப்பிரபுத்துவ சமூகம் பல வகையான ஒடுக்கும் உறவுகளாலும் கட்டுப்பாடுகளாலும் மனிதனைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது; இந்தச் “செயற்கையான நிலைக்குத்” தன்னையறியாமலே ஏற்பட்ட எதிர்ப்பாக “இயற்கையான மனிதனைப்” பற்றிய கருத்து தோன்றியது. ஆனால் புதிய முதலாளித்துவ சமூகத்தின் ”இயற்கையான” மனிதனை, இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமான போட்டி, சமமான வாய்ப்புக்களைக் கொண்ட உலகத்துக்குத் தயாராக்கப்பட்ட தனி மனிதவாதியை, -ஸ்மித்தும் ரிக்கார்டோவும் – அவர்களுக்கு முன் பிருந்தவர்களும் – ஒரு நீண்ட வரலாற்று ரீதியான வளர்ச்சியினுடைய விளைவாகக் கருதவில்லை; அதற்கு மாறாக, அதன் திருப்புமுனையாக, “மனித இயற்கையின்” கண் கூடான உருவமாகக் கண்டார்கள்.

முதலாளித்துவத்தின் கீழ் சமூக உற்பத்தியில் இந்தத் தனி மனிதவாதியின் நடத்தையை விளக்குவதற்கு முயற்சி செய்த பொழுது, அவர்கள் ”இயற்கைச் சட்டத்தின்” கருத்துக்களைத் தமக்கு ஆதாரமாகக் கொண்டார்கள்; சமூகத்தில் நடைமுறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் மீது தங்களுடைய கவனத்தைச் செலுத்தாமல், தன்னந்தனியான வேடன், மீன் பிடிப்பவன் ஆகியோரைப் பற்றிய கற்பனையான உருவத்தின் மீது கவனத்தைக் குவித்தார்கள். யாருமில்லாத தீவில் விடப்பட்டிருக்கும் ஸ்தூலமான இராபின்சன் குரூசோவை இந்த எழுத்தாளர்கள் சூக்குமமான தொடர் உருவகமாக, பெரும்பாலும் முற்றிலும் சம்பிரதாய பூர்வமான உருவகமாக மாற்றிக் கொண்டனர் என்பது இதன் பொருள்.

Political-economyRobinson-Crusoe-1ஆகவே இராபின்சனாதல் என்பது அவசியத்தின் காரணமாக எப்போதும் சமூகத் தன்மை கொண்டதும், வரலாற்று ரீதியான வளர்ச்சியில் ஸ்தூலமான ஒரு கட்டத்தோடு இணைக் கப்பட்டிருப்பதுமான உற்பத்தியின் விதிகளை, சமூகம் என்ற மிக முக்கியமான கூறை விலக்கியுள்ள சூக்குமமான மாதிரிப் படிவத்தைக் கொண்டு ஆராய்வதற்குச் செய்யப்பட்ட முயற்சியாகும். மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் இராபின்சனாதலை மார்க்ஸ் மிகவும் ஆழமாக விமரிசனம் செய்தார். இந்த விருப்பம் 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த “மிகவும் சமீபமான அரசியல் பொருளாதாரத்துக்கு” நகர்ந்து விட்டது என்று அவர் கூறினார்; அது தனக்குச் சாதகமான முறையில் ”இயற்கையான மனிதனின்” கற்பனை உலகத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்துக்கு உரித்தான பொருளாதார உறவுகளைப் பார்த்தது.

மார்க்சின் ஒரு வாக்கியத்தை மட்டும் இங்கே மேற்கோள் காட்டுவோம்: “சமூகத்துக்கு வெளியே தனித்து விடப்பட்ட நபரின் உற்பத்தி என்பது தற்செயலாக யாருமில்லாத தீவில் அகப்பட்டுக் கொள்கின்ற ஒரு நாகரிக முள்ள மனிதன் ஏற்கெனவே தன்னுள் சமூக சக்தியின் சுறுசுறுப்பைக் கொண்டிருக்கின்றபடியால் (அழுத்தம் என்னுடையது அ. அ.) அது அபூர்வமாக நடக்கக் கூடியதே. ஒன்று சேர்ந்து வாழ்கின்ற. பேசுகின்ற தனி நபர்கள் இல்லாமல் மொழி வளர்ச்சியடைவது போலவே இதுவும் அபத்தமானதாகும்.”(1)  

இந்த மேற்கோளில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும் பகுதி இராபின்சன் குரூசோவின் கதை அமைப்புத் தொடர்பாக சுவாரசியமானதாகும். இராபின்சன் எந்த அளவுக்கு சமூக சக்திகளைத் தன்னுள் கொண்டிருக்கிறார் என்பதைக் காண்போம். மாறியுள்ள சூழ்நிலையில் அவர் ”இயற்கையான மனிதன்” என்ற நிலையிலிருந்து வேகமாக மாறுகிறார்; முதலில் தந்தை வழி அடிமை உடைமையாளராக (வெள்ளிக் கிழமை என்ற உதவியாள்), பிறகு ஒரு நிலப்பிரபுத்துவப் பிரபுவாக (குடியேற்றத்தை ஏற்படுத்துகிறார்) மாறுகிறார். அவருடைய ”சமூகம்” தொடர்ந்து வளர்ச்சியடைந்திருந்தால் அவர் முதலாளியாகவும் மாறியிருப்பார்.

படிக்க:
காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்
♦ புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே ! பொதுக்கூட்ட செய்திகள் – படங்கள்

பொருளாதார நிகழ்வுகளைத் தனி நபர்களின் உணர்ச்சிகள், உளவியலின் அடிப்படையில் ஆராய்வதற்கு அரசியல் பொருளாதாரத்தின் அகநிலை மரபினோர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு இராபின்சனாதல் ஒரு உண்மையான கண்டு பிடிப்பாகப் பயன்பட்டது. 19ம் நூற்றாண்டின் எழுத்துக்களில் இந்தப் போக்கு ஆரம்பமாயிற்று; இவர்கள் “மிகச் சிறிய பகுதியான” தனி நபரின் மீது கவனத்தை ஒருமுனைப் படுத்தினர். அதற்கு இராபின்சன் குரூசோவைக் காட்டிலும் அதிகப் பொருத்தமான நபரை யாராலும் கற்பனை செய்யக் கூட முடியாது.

ஆஸ்திரியாவின் அகநிலை மரபைச் சேர்ந்த சிறப்புமிக்க பொருளியலாளரான பேம்-பவேர்க்கின் (1851-1914) இராபின்சனாதல் ஒரு சிறந்த உதாரணமாகும். இவர் தன்னுடைய வாதத்தில் மதிப்புத் தத்துவத்திலும் மூலதனத் திரட்சி பற்றிய தத்துவத்திலும் – இரண்டு சந்தர்ப்பங்களில் இராபின்சன் குரூசோவைத் திருப்புமுனையாகப் பயன்படுத்துகிறார். – 17, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கூட, மதிப்பு என்பது சமூக உறவு, பொருள்கள் பண்டங்களாக, சமூகத்துக்குள் பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்படும் பொழுது மட்டுமே அது இருக்கிறது என்பதை உணர்ந்து விட்டார்கள். மதிப்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு யாரும் நுழையாத காட்டில் எல்லா விதமான தொடர்புகளுக்கும் அப்பாற்பட்ட இடத்திலிருக்கும் மரக்கூட்டில் வசிக்கின்ற ஒரு “குடியேற்றவாதி” போதுமென்று பேம்-வேர்க் கூறுகிறார். இந்த இராபின்சனிடம் ஐந்து மூட்டை தானியம் இருக்கிறது; கடைசி தானிய மூட்டையின் உபயோகத்தைக் கொண்டு தானியத்தின் மதிப்பு அளவிடப்படுகிறது. 

மூலதனம் என்பது உற்பத்திச் சாதனங்களை உடைமையாகக் கொண்டிருப்பவர்களுக்கும் அவற்றை இழந்திருக்கின்ற, உழைப்பை விற்பனை செய்கின்ற, சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கும் இடையே உள்ள சமூக உறவு . அது சமூக வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தான் தோன்றுகிறது. ஆனால் பேம்-பவேர்க்கைப் பொறுத்தவரையிலும் பொருள் வடிவத்திலிருக்கின்ற உழைப்புக் கருவிகள் எவையும் மூலதனமே. எனவே இராபின்சன் காட்டில் விழுந்து கிடக்கும் பழங்களைப் பொறுக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் அவனிடம் மூலதனம் கிடையாது. ஆனால் அவன் தன்னுடைய உழைப்பு நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி ஒரு வில்லும் சில அம்புகளும் தயாரித்தவுடன் அவன் முதலாளியாகிவிடுகிறான்; ஏனென்றால் இது மூலதனத் திரட்சியின் முதல் நடவடிக்கை. இங்கே மூலதனம் என்பது சாதாரணச் சேமிப்பாகச் சுரண்டலின் எந்த வடிவத்தோடும் சம்பந்தமில்லாததாக இருக்கிறது என்பதை நாம் காணலாம்.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தில் இராபின்சன் மரபு அதிகமான பலமுடையதாக இருப்பதால் இராபின் சனைக் குறிப்பிடாமல் பொருளாதாரத் தத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகம் கூட எழுத முடிவதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த நவீன பொருளியலாளரான பி. சாமுவேல்சன் தன்னுடைய பாடபுத்தகத்தின் ஆரம்பத்தில் இராபின்சனை எதிர் நோக்கிய பொருளாதாரப் பிரச்சினைகள் ஒரு பெரிய சமூகத்தை எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து அடிப்படையில் மாறுபட்டிருக்கவில்லை என்று எழுதுகிறார். இது நம்ப முடியாத, தெளிவற்ற கருத்தாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)   K. Marx, Grundrisse der Kritik der Politischen Ökonomie, Moskau, 1939, p. 6..

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்

“காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலத்தை உடைத்துத் தள்ளி விட்டது இந்திய அரசு” என்கின்றனர் காஷ்மீரிகள். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் அரசியல் சாசன பிரிவு 370, 35A ஆகியவற்றை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தார் அமித்ஷா.

வரலாற்று ரீதியாக காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளும்போது கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது இந்திய அரசு.

இந்த அறிவிப்புக்கு முந்தைய நாளே, காஷ்மீரில் தொலைத்தொடர்பு, இணையம், போக்குவரத்து என அனைத்தையும் முடக்கி விட்டுக் கூடுதலான இராணுவத்தையும் குவித்திருந்தது இந்திய அரசு. மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகச் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டன.

இந்திய அரசின் துரோகத்தை எதிர்த்த காஷ்மீர் மக்களின் போராட்டம் பெல்லட் குண்டுகளாலும், தோட்டாக்களாலும், கைதுகளாலும் முடக்கப்பட்டன.

இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, காஷ்மீரில் அமைதி நிலவுவதாக, பெரும் பான்மை ஊடகங்கள் அரசுக்கு ஆதரவாக எழுதின. காஷ்மீரில் நிலவுவது மயான அமைதி. காஷ்மீர் மட்டுமல்ல, இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டும் காணாதவாறு, மொத்த நாடே அமைதியில்தான் இருக்கிறது.

காஷ்மீருக்கு வளர்ச்சியைக் கொண்டு வருவதற்காகத்தான் இந்நடவடிக்கை என்றார் அமித்ஷா. காஷ்மீரில் பிறர் சொத்து வாங்குவதைத் தடைசெய்யும் சட்டப்பிரிவு 35A நீக்கத்திற்குப் பின், சில நாட்களிலேயே முகேஷ் அம்பானி காஷ்மீரில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவிக்கிறார். எனில் இது கார்ப்பரேட்டுகளுக்கான வளர்ச்சி அன்றி வேறென்ன?

இது வெறுமனே காஷ்மீரோடு முடியக் கூடிய விசயமல்ல. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், சாகர்மாலா, எட்டுவழிச்சாலை, அதானி துறைமுகம் என ‘வளர்ச்சித் திட்டங்கள் வரிசைகட்டி நிற்க, காஷ்மீரில் பின்பற்றப்பட்ட அதே வழிமுறைகள் அரசால் இங்கும் பின்பற்றப்படுகின்றன.

இன்று நாம் காஷ்மீரின் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள மறந்தால், நாளை தமிழகமும் இராணுவ ஆட்சியின் கீழ்வரும். இந்திய அரசின் இராணுவ ஆட்சியில் காஷ்மீர் மக்கள் படும் துயரங்களையும் அதை எதிர்த்து நிற்கும் அவர்களது நிலைமையையும் போராட்டக் குரலையும் தொகுத்து அளிக்கிறது இந்நூல்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

“காஷ்மீர் : துயரமும் போராட்டமும்” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு
  • காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது!
  • தெருக்களே வகுப்பறை! கற்களே பாடநூல்கள்!!
  • காஷ்மீர் மக்களின் கண்களைப் பறிக்கும் இராணுவம்
  • காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?
  • டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் காஷ்மீரிகள் தேவையில்லை!
  • பிரிவு 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம்!
  • இந்திய இராணுவத்தால் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் காஷ்மீர்!!
  • காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி!
  • கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது!
  • ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம்!
  • இந்தியா தோற்றுவரும் யுத்தம்!
  • இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள்!
  • “தந்தையர் இல்லா காஷ்மீர்” – திரைப்படம் கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை!
  • இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த காஷ்மீர் மக்கள்!
  • காஷ்மீர் மக்களைக் கொன்ற இராணுவ அதிகாரி! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம்!
  • பயங்கரவாதத்தையும் போர்ச் சூழலையும் வளர்க்கும் இந்தியா!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மீ டு இயக்கம்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மனுநீதி 2.0
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் ! நூல் – PDF வடிவில் !

0

கரிச்சான் குஞ்சு நினைவுகளும் காணாமல் போன முன்னுரையும்…

நண்பர்களே…

பொ.வேல்சாமி

.மார்க்ஸ், பொதிய வெற்பன் ஆகியவர்களின் நட்பினால் கரிச்சான் குஞ்சுவுடன் பேசி, பழகி, மகிழும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்தத் தருணத்தில் கரிச்சான் குஞ்சு அவர்கள் என் வேண்டுகோளுக்கு இணங்கி, “தேவிபிரசாத் சட்டோபாத்யாய” ஆங்கிலத்தில் எழுதிய “இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்” என்ற புகழ்பெற்ற நூலை தமிழில் அழகாகவும் செறிவாகவும் மொழிபெயர்த்துக் கொடுத்தார். இது தொடர்பான தகவல்களை இந்த மாதம் வெளியான “புதிய புத்தகம் பேசுது” இதழில் வந்துள்ள என்னுடைய நேர்காணலில் விரிவாக பேசியுள்ளேன். அந்தப் பேச்சை நீங்கள் படிப்பதற்காக அந்தப் பக்கங்களைக் கொடுத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அந்தத் தகவல்களைக் கூறும் என்னுடைய பேட்டியில் கரிச்சான் குஞ்சு அவர்கள் அந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு ஒரு முன்னுரை எழுதியிருந்தார் என்று கேள்விபட்டேன். ஆனால் அது நூலில் இல்லை என்பதாகக் கூறியிருந்தேன். கரிச்சான் குஞ்சு இந்நூலின் மொழிபெயர்ப்பு சார்ந்த தகவல்களை உள்ளடக்கி ஒரு முகவுரை எழுதிக் கொடுத்ததாகவும் அந்த முகவுரையை நண்பர் மார்க்ஸ் சென்னை புக்ஸ் பொறுப்பாளர் தோழர் பாலாஜியிடம் கொடுத்ததாகவும் இன்று என்னிடம் சொன்னார். பின்னர் அந்த முகவுரை நூலில் ஏன் இடம் பெறவில்லை என்று நண்பர் மார்க்ஸ், தோழர் பாலாஜியிடம் கேட்டதாகவும் அதற்கு பாலாஜி அவர்கள் இந்த நூலின் கைப்பிரதியை சரிபார்த்து தரும்படி பேராசிரியர் வீ.அரசுவிடம் வேண்டி கொடுத்ததாகவும், அந்த வேலையை முடித்துக் கொடுத்த அரசு அவர்கள் முன்னுரையை மட்டும் கடைசிவரை தராததனால் முன்னுரை இல்லாமல் நூல் வெளிவந்து விட்டது என்று தோழர் பாலாஜி கூறியிருக்கிறார்.

உலக புகழ்பெற்ற இந்நூலின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பை நீங்கள் அனைவரும் படித்து சுவைப்பதற்கு அந்த நூலின் இணைப்பை இத்துடன் தந்துள்ளேன்.

குறிப்பு : இந்நூல் இந்திய தத்துவ ஆராய்ச்சியின் நுட்பமான பகுதிகளையும் சட்டோபாத்யாய காலம்வரை இந்திய தத்துவங்களைப் பற்றி பேசிய பேராசிரியர்கள் தொடாது விட்ட பகுதிகளையும் தன்னுடைய மார்க்சிய கண்ணோட்டத்தின் வழியாக பேராசிரியர் சட்டோபாத்யாய விளக்குகிறார். எனவே இந்நூலை ஒரே ஒரு வாசிப்பில் படித்து புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். எனவே நண்பர்கள் ஒருமுறைக்கு இருமுறை நூலில் உள்ள சில ஆழமான பகுதிகளை மூன்றுமுறை கூட படிக்க வேண்டி இருக்கும் என்பதை என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

( பிடிஎஃப் டவுண்லோடு செய்ய )

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

நூல் அறிமுகம் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?

சாதி ஒழிப்புப் பற்றி பல்வேறு தருணங்களில் தந்தை பெரியார் ஆற்றிய உரைகளை தொகுத்து சிறு நூலாக வெளியிட்டிருக்கிறது, திராவிடர் கழகம்.

சாதியின் கொடுமையால், நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப் படுகிறான். இது உண்மை , வாய்ப் பேச்சுக்காக நான் சொல்லவே இல்லை. எப்படி என்றால், மல உபாதைக்குச் சென்றவன் அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தைக் காலில் மிதித்துவிட்டால் அந்தக் காலைமட்டும் தண்ணீரை விட்டுக் கழுவிவிட்டால் அந்தக் குற்றம் போய்விடுகிறதாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட்டால் அவனைத் தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால்வரை குளிர, நனையக் குளித்தாலொழியப் போவதில்லை என்கிறார்கள். ஆகவே, மலத்தைவிட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதைப் பாருங்கள். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படுகிற கெடுதலென்ன? தோஷமென்ன? குற்றமென்ன ? எதுவுமில்லை. ஆனால், பிறகு ஏன் தோஷம் கூறப்படுகிறது? ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்வதற்காகவே கூறப்படுகிறது. இதைவிட வேறு இரகசியமில்லை .

… வேறு சிலர், செத்த மாட்டைத் தின்னுகிறார்களே என்கிறார்கள். இதனால் என்ன தீட்டு, எந்த உருவாக வந்து அவர்களிடம் ஒட்டிக்கொள்கிறது? பதறப் பதற, கதறக் கதறமாட்டை அறுத்துச் சாப்பிடுவது பாவமா; மாண்டு மடிந்து மண்ணுக்குள் போவதை இல்லாத கொடுமையால் வயிற்றுக்குள் போடுவது பாவமா? புழுத் தின்னும் கோழியையும், மலந்தின்னும் பன்றியையும்விடப் புல்லையும் பிண்ணாக்கையும் தின்னும் மாடு கேவலமானதா? (நூலிலிருந்து பக்.3-5)

… சாதி வித்தியாசத்தையே அழித்தாக வேண்டும். சாதி வித்தியாசத்தைப் போக்குவதற்கு எல்லாவிதமான தியாகத்தையும் செய்வதற்கு முன் வரவேண்டும். இந்த மாநாட்டில் செய்கிற தீர்மானங்களைச் செய்கையில் நிறைவேற்றி, அதன்படி நடக்க எல்லோரும் முன்வரவேண்டும். ‘பள்ளர்’ என்று அழைப்பதா, ‘வேளாளர்’ என்று அழைத்துக் கொள்ளுவதா என்பதில் காலத்தை விருதாவாக்கி, அடித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை; அது கூடவே கூடாது. மேல்நாட்டில் ஆராய்ச்சி செய்வதில் அடித்துக் கொள்கிறார்கள். நாம் பெயருக்காக அடித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் தேவேந்திர குலப்பிராமணர் என்று வைத்துக்கொண்டாலும் சரி, பிராமணர்கள் என்று தங்கள் சாதிப் பெயர்களை வைத்துக் கொண்டு திண்டாடுவோரின் யோக்கியதை எனக்குத் தெரியும், விஸ்வப் பிராமணர், தேவாங்கப் பிராமணர், சவுராஷ்டிரப்பிராமணர் என்று தங்களை அழைத்துக் கொள்வதால் அவர்களுக்குப் புதிதாக முளைத்திருக்கும் யோக்கியதையை நான் அறிவேன். ஆதித் திராவிடன் எல்லார் வீட்டிலும், எவ்வளவு பாடி (வைது) இட்டாலும் தின்றுவிடுகிறான்; எந்த இடத்தில் வைத்து ஊற்றினாலும் குடித்துவிடுகிறான். ஆனால் விஸ்வப்பிராமணர் என்னும் பிராமணர்கள் வீட்டில் பச்சைத் தண்ணீரைக் கூடத்தொட மறுக்கிறான், இதன் காரணமென்னவென்று கேட்டால், நாங்களெல்லாம் வலக்கையர்கள், விஸ்வப்பிராமணர்கள் இடக் கையர்கள்; என்கிறார்கள். இம் மாதிரிதான். பிராமணர் பட்டத்தைத் தாங்கியவர்களெல்லாம் இருக்கின்றனர்.

தேவேந்திர குலம் என்பதும் எனக்கு இழிவாகத்தான் தோன்றுகிறது. என்ன காரணத்தின் பொருட்டு இந்தப் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது எனக்குத் தெரியாது. ஆனால், ‘தேவேந்திரன்’ என்றால் எனக்குப் பெருத்த அசிங்கமாகயிருக்கிறது. ஏனென்றால், தேவேந்திரனைப் பற்றிக் கூறும் புராணக் கதைகள்  தேவேந்திரனை அவ்வளவு இழிவாகக் கூறுகின்றன. அவன் வேசி மகனிலும் இழிந்த ஜென்மம் என்பதாகவே அவைகள் உரைக்கின்றன. பல்வேறு பெயர்களைக் கொண்டு சாதி பிரிந்துபோவது கூடாது. நாயக்கரிலும் பல வித்தியாசம்; செட்டியிலும் வித்தியாசம்; பள்ளனும் பிள்ளை என்று வைத்துக்கொள்ளுகிறான் என்று சொல்லிப் பட்டணத்திற்குப் போகும் பிள்ளைகளும் அங்கு இருக்கும் பிள்ளைகளும் ஆகாயக் கப்பல் வேகத்தில் தங்கள் பெயர்களை முதலியார்களாக மாற்றி வருகின்றனர். எனவே, இந்த விதமான போக்கெல்லாம் கூடாது. சாதி வித்தியாசம் என்கிற எண்ணத்தையே அடியுடன் இடித்துத் தள்ள வேண்டும். நாம் பிறந்த சாதியை இழிவாக மதித்து இன்னொரு சாதியை உயர்வாக மதித்து, அதனிடம் அடைக்கலம் புகுவதைவிட இழிவு வேறொன்று மில்லை. இவ் வழியில் இறங்கவே கூடாது. (நூலிலிருந்து பக்.7-8)

‘பள்ளர்’ என்று அழைப்பதா, ‘வேளாளர்’ என்று அழைத்துக் கொள்ளுவதா என்பதில் காலத்தை விருதாவாக்கி, அடித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை… தேவேந்திர குலம் என்பதும் எனக்கு இழிவாகத்தான் தோன்றுகிறது… ‘தேவேந்திரன்’ என்றால் எனக்குப் பெருத்த அசிங்கமாகயிருக்கிறது.

சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள் 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் – ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தோம். அப்படி இருந்தும் இன்னும் நம்ம வரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை வேளாளர்’ என்று சொல்லுபவர்களில் ஒருசிலர் –  மேற்படி சாதிக் கிரமத்தை – அதாவது ஆதிசாதி என்பவைகளான பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக்கொண்டு – தங்களை மாத்திரம் சற்சூத்திரர்’ என்று அழைத்துக் கொண்டும், மற்றும் சிலர் அச் சாதிக் கிரமவார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு – அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து – அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே – அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும் ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய – அடிமையாய் இருக்க வேறுபல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் ‘பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்’ என்பது என்றும் ஒரு புதிய எற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.

அந்தப்படிக் கூறப்படும் ‘பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்’ என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணிசெய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் – இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டான், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.

ஆனால் இதே பதினெண் மக்களை ‘அபிதானகோசம்’ என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றதென்ன வெனில், ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர் திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர் அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர், எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

இவை ஒருபுறமிருக்க, வேளாளர்களிலும் பல பிரிவுகளைக் காட்டியிருப்பதென்ன வெனில் – சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினார்; அவருள்ளே முதலிகள் தலையாயினார்; இவர்களுக்கு  அடுத்தபடி வேளாஞ்செட்டிகள். இதற்கு அடுத்த படியிலுள்ளோர் கார்காத்தார்; அடுத்த வரிசையிலுள்ளோர் சோழிய வேளாளர் – இவர்கள் சைவர்களாவார்கள் – சம்பந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கு அடுத்த படியிலுள்ளவர்கள் சோழிய, துளுவ, கொடிக்கால் முதலிய பலவகை வேளாளர் களாவார்கள். இவரில் தாழ்ந்தோர் அகம்படியர்; அவரில் தாழ்ந்தோர் மறவர்; அவரில் தாழ்ந்தோர் கள்ளர்; அவரில் தாழ்ந்தோர் இடையர்; இவர்களுக்கடுத்தபடியிலுள்ளோர் – கவரைகள், கம்மவர்கள்.

படிக்க:
சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்
கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

இவற்றுள் எதிலும் பிராமணர்கள் விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும் தாழ்வுக் கிரமமும் சந்தேகமோ, ஆட்சேபணையோ சொல்லுவதற்கு இடமில்லாமல் செய்துகொள்ளப் பட்டிருப்பதைக் கவனித்தால் சாதியின் சூழ்ச்சித் தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றபடி க்ஷத்திரியர்களிலும் வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும், ஆட்சேபணைகளும் – க்ஷத்திரியர், வைசியர் என்று சொல்லிக்கொள்ளுவதில் எவ்வித உயர்வுத் தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக்கொண்டு, பொதுஜனங்களாலும் ஒப்புக்கொள்ளப்படாமல் ஒருவரை ஒருவர் இழித்துரைத்துக் குறைவுபடுத்தி வருவதும் அனேக இடங்களில் பிரத்தியட்சமாய்க் காண்கிறோம். மற்றும் ஒவ்வொரு சாதியாரும் தங்கள் தங்கள் சாதிகளைப் பற்றி எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக்கொண்டாலும் – கண்டுபிடித்தாலும், எந்தவிதத்திலும் பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்ப்பட்டவர்கள் தான் என்பதை நிலைநிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வாதாரங்கள் பயன்படுகின்றனவே தவிர, மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதாரங்கள் கற்பிக்கப்பட்டதோ – கண்டுபிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன்படுவதில்லை .

எனவே, இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத்தவிர மற்றவர்கள் தாழ்ந்த சாதியார்கள் – அதாவது பார்ப்பனனால் தொடவும், சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத சாதியார்கள் என்பதும்; அவனுக்கு அடிமையாய் இருக்கவும் விபச்சாரம்’, ‘கீழ் மேல் சாதிக் கலப்பு’ என்று சொல்லும்படியான இழிவுத் தன்மையில் பிறந்தவர்கள் என்பதும் இன்றைய நமது சாதித் தத்துவமாக இருக்கின்றது. (நூலிலிருந்து 10-13)

தோழர் காந்தியார் தீண்டாமையை ஒழித்துவிட வேண்டும் பெறு வரட்டுக் கத்து கத்திப்பார்த்து விட்டார்; பல இலட்ச ரூபாயும் வசூலித்து மேல் சாதிக்காரர், மேல் வருணக்காரர் என்பவர் கையில் ஒப்படைத்து விட்டாரே தவிர, மற்றபடி தீண்டாமையின் ஒரு சிறு தூசியைக்கூட அசைக்க முடியவில்லை. ஏனென்றால், அவர் மற்றொரு பக்கம் கீதையையும் மனுதர்ம சாஸ்திரத்தையும், வருணத்தையும், சாதிக் கிரமத்தையும் ஆதரித்து வருகிறார். இன்று தீண்டாமை விலக்க வேலையிலும், சாதி வித்தியாச ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்டிருப்பவர்களில் 100 -க்கு 100 பேரும் கீதை, மனுதர்ம சாஸ்திரம் ஆகியவற்றை நம்பும் – ஆதரிக்கும் சோணகிரிகளே ஆவார்கள். இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் – அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களே யாவார்கள். ஆகவே, தீண்டாமை ஒழிப்புக்கோ, சாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள்  மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க உங்களால் முடியவில்லையானால் மதத்தைவிட்டு நீங்களாவது விலகியாக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒரு நாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ, பறைத் தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது கல்லுப்போன்ற உறுதி. உதாரணம் வேண்டுமானால், இதுவரையில் தீண்டப்படாதவர்களாயிருந்து மனித சமூகத்தில் தீண்டக் கூடியவர்களாக ஆன எவரும் தீண்டப்படாதவர்களாய் இருந்த போது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மதத்தை உதறித் தள்ளிவிட்ட பின்புதான், தீண்டத்தக்கவர்கள் ஆகி இருக்கிறார்கள். இதற்குக் கோடிக்கணக்கான மக்களை ஊர், பெயருடன் புள்ளி விவரத்தோடு காட்டலாம்.

படிக்க:
சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

ஆதலால், மதத்தைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள். தோழர் காந்தியார் ஒரு மதவாதியே யொழிய, மனித ஜீவ அபிமான வாதி’ அல்லவே அல்ல. அவர் தனது இந்து மதம் காப்பாற்றப்படுவதற்காகத்தான் தீண்டாமையை  அழிக்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கிறாரே ஒழிய தீண்டப்படாத மக்களின் கொடுமைகள் தீரவேண்டுமென்பதை முக்கியமாய்க் கொள்ள இல்லை.  (நூலிலிருந்து பக்.20-21)

நூல் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?
ஆசிரியர் : தந்தை பெரியார்

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
84/1, (50), பெரியார் திடல், ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8161
மின்னஞ்சல் : info@periyar.org

பக்கங்கள்: 32
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : dravidianbookhouse

தஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு !

தண்ணீர் வரத்தின்றி வறண்டு கிடக்கும் காட்டாறு.

தமிழக அரசே! டெல்டா விவசாயத்திற்கு 20,000 கன அடி நீரை
முறைவைக்காமல் திறந்துவிடு!

குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா தற்போது ஒரு போகம் கூட விளைவிக்க முடியாமல் அரசின் திட்டமிட்ட சதியால் சீரழிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு (2018) இதே சமயத்தில் சம்பா பயிரிட போதுமான உரம் இருப்பில் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. அரசு முன்னெச்சரிக்கையாக செயல்படாமல் வேண்டுமென்றே விவசாயிகளை இழுத்தடித்தது. தொடர் போராட்டங்கள் நடத்திய பிறகு உரம் இறக்குமதி செய்தனர். பிறகு அறுவடை சமயத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு என்று சொல்லி கொள்முதல் செய்யவில்லை. டெல்டா முழுக்க விவசாயிகள் மறியல் போராட்டங்கள் நடத்திய பிறகே வேறு வழியின்றி கொள்முதல் செய்தது. இவற்றையெல்லாம் மீறி விவசாயம் செய்தாலும் காவிரி மேலணையை பராமரிக்காததால் கதவணைகள் உடைத்துக்கொண்டு தண்ணீரெல்லாம் கொள்ளிடம் வழியாக கடலில் கலக்கவிட்டனர். மேலணையை புனரமைக்க  ரூ 387.60 கோடி ஒதுக்கி ஒராண்டு ஆகியும் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. இந்த சில உதாரணங்களே இந்த அரசு விவசாயிகள் மீது எவ்வளவு வன்மம் வைத்துள்ளது என்பதற்கு சான்று.

இந்த ஆண்டு ஆகஸ்டு 13-ம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 17-ம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டனர். கிட்டத்தட்ட மேட்டூரில் திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் இன்னும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகள் கடைமடைப் பகுதிகளாகும். கடைமடைப் பகுதிவரை பாசனம் செய்ய நொடிக்கு 20,000 கன அடியாவது திறக்க வேண்டும். ஆனால், அரசு இதுவரை 10,000 கன அடிக்கு மேல்திறக்கவில்லை. 20,000 கன அடி திறக்க வேண்டும் என்று டெல்டா முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர்.

திருவாரூர் பகுதிகளில் கூட இன்னும் பாசனத்திற்கான நீர் திறக்கவில்லை. தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணி நடப்பதால் தாமதம் ஏற்படுகிறது என்று அலட்சியமாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கிறார். இன்னும் பல்வேறு இடங்களில் பாசன வாய்க்கால்கள் புதர் மண்டி கிடக்கின்றன, கஜா புயலுக்கு விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கின்றன. தற்போது ஆமை வேகத்தில் தூர்வாருகின்றனர். அதுவும் கணக்கு காட்டுவதற்காகத்தான் என்று விவசாயிகள் அதிகாரிளைப் பற்றி புட்டு புட்டு வைக்கின்றனர்.

பெட்ரோ கெமிக்கல் மண்டலம், ஹைட்ரோகார்பன் மண்டலம் என்று அறிவித்துவிட்டு எப்படி அரசு விவசாயப் பணிகளை அனுமதிக்கும். முடிந்தவரை விவசாயிகளை அலைக்கழிப்பது, விவசாயத்திற்கு முட்டுக்கட்டைப் போடுவது, விவசாயிகள் போராட்டம் நடத்தினால் ‘விவசாயிகளின் நண்பனைப் போன்று’ நடிப்பது, அதை வைத்து கமிசன் அடிப்பது, இதுதான் அரசின் நிலை என்பதை விவசாயிகள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இவற்றின் விளைவே விவசாயிகளின் தொடர் போராட்டங்கள். இத்தகைய அரசின் மெத்தனப்போக்கை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசே!

♦ சம்பா சாகுபடிக்கு முறைவைக்காமல் 20,000 கன அடி நீரை உடனே திறந்துவிடு! கடைமடை வரை தண்ணீர் வரத்தை உத்தரவாதம் செய்!
♦ போர்க்கால அடிப்படையில் ஏரி, குளம், பாசன வாய்க்கால்களை தூர்வாரு! கதவணைகளை சரிசெய்!
♦ தேவையான உரம், இடுபொருட்களை இருப்பில் வை! தரமான விதைநெல்லை அரசே பொறுப்பேற்றுக்கொண்டு வழங்கு!
♦ 2018 – 19 காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனே வழங்கு! கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிபந்தனையின்றி விவசாய கடன் வழங்கு!
♦ நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வை!

விவசாயிகளே! பொதுமக்களே!

♦ டெல்டாவை ஹைட்ரோகார்பன் மண்டலமாக அறிவித்த அரசு, விவசாயத்தை பாதுகாக்காது என்பதை உணர்ந்து கொள்வோம்!
♦ அனைத்து தரப்பு மக்களும் விவசாயத்தை பாதுகாக்க களத்தில் இறங்குவோம்!

படிக்க:
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? நேரடி ரிப்போர்ட்

மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.
தொடர்புக்கு: 8220716242

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே ! பொதுக்கூட்ட செய்திகள் – படங்கள்

அணுக்கழிவை விட ஆபத்தான கழிவு மோடி – எடப்பாடி அரசு !

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்கும் அணுக்கழிவு – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை பேரழிவு திட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட்டம்.

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே! என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடந்த 01.09.2019 அன்று புதுச்சேரி மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் விளக்கப் பொதுக்கூட்டமும் – புரட்சிகர கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

இந்தியப் பொருளாதாரம் சரிந்து வீழ்ந்து கிடக்கிறது. அதை நட்டமாக நிமிர்த்தப் போவதாகவும், அந்நிய முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்காகவும், எடப்பாடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறிவருகின்றனர் அதிமுக அடிமைகள். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும், உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், இந்தியா ஸ்திரமான நிலையில் இருப்பதாக தனது பங்கிற்கு பொய்யை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால், தமிழகம் ஏற்கனவே பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் வேதாந்தா போன்ற சில கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காக, ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு, எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழக வளங்களும் அழிக்கப்படுகிறது.

இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் அடுத்த தலைமுறை வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறும். நமது மண்ணைக் காப்பதற்கு இந்த அழிவுத் திட்டங்களை எதிர்கொண்டு முறியடிக்க, வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை விளக்கும் வகையில் இப்பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இப்பொதுக்கூட்டத்தில், புதுச்சேரி மக்கள் அதிகாரத்தின் தோழர் E.K.சங்கர் தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில துணைச் செயலாளர் தோழர் திருநாவுக்கரசு, மக்கள் அதிகாரத்தின் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, மக்கள் அதிகாரத்தின் தமிழ்நாடு மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

PP Meeting Posterநிகழ்ச்சியில் பேசிய தோழர்கள், ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை, அணுக்கழிவு திட்டங்கள் ஏற்படுத்தப் போகும் பேரழிவுகளையும், இத்திட்டங்களின் பாதிப்புக்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுடுகாடாக மாற்றிவிடும் என்பதை விளக்கியும், இப்பேரழிவு திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் மக்களை ஒன்றுசேர விடாமல் சாதிவெறியையும், மதவெறியையும் தூண்டி எதிரிகளாக மாற்றும் வேலையைத்தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்து வருகிறது என்பதை விளக்கியும் உரையாற்றினர். சமீபத்திய அம்பேத்கர் சிலை உடைப்பும், விநாயகர் சிலை வைப்பது ஊர்வலம் நடத்துவது என்பது சமீபத்திய உதாரணங்களாகச் சுட்டிக் காட்டியும் விளக்கினர்.

படிக்க:
கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?
புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?

நிகழ்ச்சியின் இடையிடையேயும், நிகழ்ச்சியின் இறுதியிலும் பாடப்பட்ட மகஇக-வின் புரட்சிகர பாடல்கள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும், போராட அறைகூவும் வகையிலும் இருந்தது.

தகவல்:
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.
தொடர்புக்கு: 87542 05589

சிந்திக்கும்போது அழகாய் மாறிவிடும் குழந்தைகள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 05

ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள உரிமை

ழுதுவதற்கான தாள்கள் வினியோகிக்கப்பட்டு விட்டன, பேனாக்கள் சரிபார்க்கப்பட்டு விட்டன, வேலை விளக்கப்பட்டு விட்டது.

“எழுதத் தயாராகுங்கள்!”

அதாவது, நிமிர்ந்து நேராக உட்கார்ந்து, பேனாவை எடுத்துக் கொண்டு, “நான் தயார்” என்று வலது கரத்தை உயர்த்த வேண்டும்.

ஒருவனைத் தவிர எல்லோரும் எழுதுவார்கள். அவனை மட்டும் வரையச் சொல்லியிருக்கிறேன். எல்லாம் சரியாக உள்ளது.

“தொடங்குங்கள்!” என்று நான் மெதுவாகச் சொல்கிறேன்.

இக்கட்டளைக்குப் பின் சாதாரணமாக வகுப்பறையில் பரிபூரண நிசப்தம் நிலவும். எழுதும் போது வேறெந்த அசைவுகளும் கூடாது, சத்தம் போடக்கூடாது, நண்பர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களுக்கும் தனக்குத் தானேயும் தொந்தரவு செய்து கொள்ளக் கூடாது என்று சொல்லித் தந்திருக்கிறேன். யாருக்காவது எதையாவது கேட்க வேண்டுமானால் என்னிடம் வந்து மெதுவாகப் பேசட்டும் அல்லது கையை உயர்த்தினால் நானே அருகே வந்து பேசுவேன்.

குழந்தைகள் எழுதும்போது நான் பெஞ்சுகளிடையே நடக்க மாட்டேன், சத்தம் போட்டுப் பேச மாட்டேன், இன்னமும் எழுதி முடிக்காதவற்றைப் பார்க்க மாட்டேன். இதற்கு காரணம் என்ன என்பது தெளிவு. தாம் ஒரு முக்கியமான விஷயத்தில் ஈடுபட்டுள்ளோம், இதில் இடையூறு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்று குழந்தைகள் புரிந்து கொள்ளட்டும். மனிதன் சிந்திக்கும் போது, மூளையுழைப்பில் ஈடுபட்டுள்ள போது அவனுக்குத் தொந்தரவு தரக் கூடாது என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும். “எப்போது சிந்திக்கின்றீர்களோ, சிந்தனையில் மூழ்குகின்றீர்களோ, ஏதாவது நல்ல காரியத்தைச் செய்கின்றீர்களோ அப்போதுதான் நீங்கள் மிக அழகானவர்களாவீர்கள்” என்று என் ஆறு வயதுக் குழந்தைகளிடம் அடிக்கடி சொல்கிறேன்.

இவ்வார்த்தைகளின் உட்பொருளை அவர்களால் புரிந்து கொள்ள முடியுமா? ஒருவேளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமலிருக்கலாம். ஆனால் இவற்றில் உள்ள கருத்தாழத்தை அவர்கள் உணருவார்கள். சில நேரங்களில் ஏதாவதொரு குழந்தையைக் கூப்பிட்டு இரகசியம் பேசுவேன், எனது கருத்துகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வேன்: “ஏக்காவைப் பார், அவள் எப்படி சிந்தனையில் மூழ்கியிருக்கின்றாள்…. உலகில் எல்லாவற்றையுமே அவள் மறந்துவிட்டாள். அவளைப் பார்க்க, அவள் சிந்திப்பதை, கண்களைச் சுருக்கி கொண்டு அவள் எங்கோ நோக்குவதைக் காண எனக்கு எவ்வளவு பிடிக்கிறது! அற்புதமான காட்சி இல்லையா?”

வேலையிலிருந்து பிரித்ததற்காக மன்னிப்புக் கேட்டு விட்டு அவனை இடத்திற்கு அனுப்புகிறேன். அவன் மெதுவாக நடந்து சென்று கவனமாக இடத்தில் அமருகிறான், ஒரு நிமிடம் கழித்துப் பார்த்தால் அவனும் நெற்றியைச் சுருக்கியபடி கண்களால் எங்கோ பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறான். ஒவ்வொரு பாடமும் செல்லச் செல்ல, “நீ இப்போது எவ்வளவு அழகாய் இருக்கின்றாய்! நான் உன்னைப் பார்த்து மகிழ்கிறேன்!” என்ற எனது வெளிப்படையான, திருப்தியான கண்ணோட்டத்தை அவன் உணர ஆரம்பிக்கிறான்; வேலையில் ஈடுபட்டிருக்கும் போது விளையாட்டுத் தனத்தைக் கைவிட்டு, சிந்தனையில் மூழ்கி, சிந்திக்கும் மனிதனின் அழகைப் பெறும் முயற்சி அவனிடம் வலுப்பெற்று வருகிறது.

இந்த முறையால் குழந்தை சிந்திக்கக் கற்றுக்கொள்ளாது என்று எனக்குத் தெரியும். ஆனால், இப்படி நடந்து கொள்வதன் மூலம் குழந்தை சிந்திக்கும் மனிதனின் அழகை விரைவிலேயே பெறுகிறான், கவனத்தை ஒரு முனைப்படுத்தும் சக்தியைப் பெறுகிறான், ஒருவன் சிந்திக்கும் போது அவனைத் தொந்தரவு செய்ய யாருக்கும் உரிமையில்லை, அதே போல் தனக்கும் மற்றவர்கள் சிந்திக்கையில் இடையூறு செய்ய உரிமையில்லை என்று புரிந்து கொள்கிறான். எனது “முதுமொழி” பாடங்களில் தன்னிச்சையாக நான் நடந்து கொள்வதைத் தடை செய்கிறது. ஏனெனில், பாடங்கள் குழந்தைகளின் சொத்தே தவிர என் சொத்தல்ல. அந்த “முதுமொழி” இது தான்:

பாடவேளைகளின் போது தர்பார் நடத்தக் கூடாது, படிப்பில் புதியவற்றை அறியும் யோசனையில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் சிந்தனையைக் குலைக்கக் கூடாது. அமைதியாக வேலை செய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள உரிமையைப் பேணிக் காக்க வேண்டும்.

நான் என் மேசையில் உட்கார்ந்து, புத்தகத்தைத் திறந்து, படிப்பது போல் பாவனை செய்கிறேன். ஆனால், குழந்தைகளுக்குத் தெரியாமலேயே அவர்களைக் கவனிக்கிறேன். பலர் ஏற்கெனவே எழுத ஆரம்பித்து விட்டனர். ஆனால் நீயா தனது முதல் கட்டுரையில் என்ன எழுதுவது என்று இன்னமும் யோசிக்கிறாள். தாத்தோ பேனாவைச் சுற்றிக் கொண்டிருக்கிறான், இன்னமும் எழுதத் துவங்கவில்லை. மாயா உதட்டைக் கடிக்கிறாள், புருவங்களை நெறிக்கிறாள், கண்களைச் சுருக்குகிறாள், அவள் யோசிக்கிறாள்.

குழந்தைகள் பெஞ்சில் தலை குனிந்து அமர்ந்திருக்கின்றனர். சில தலைகள் மிகவும் கீழாக இருந்ததால் மூக்கு நுனி கிட்டத் தட்ட தாளைத் தொடுகிறது. இப்படி உட்காரக் கூடாது. என்ன செய்வது? எனது முதல் ஆசிரியையின் நினைவு எனக்கு வந்தது. இவரும் நாங்கள் இப்படி உட்காரக் கூடாது என்பதற்காகப் பாடுபட்டார், ஆனாலும் அவரால் நினைத்ததைச் செய்ய இயலவில்லை. அப்போது அவர் ஒரு அற்புதமான யோசனையைக் கண்டு பிடித்தார். இதன் உதவியால் நாங்கள் சரியாக உட்காரும் பிரச்சினையை வெகு விரைவில் தீர்த்தார்.

“பாருங்கள் என் முதுகை!” என்று சொன்ன அவர் தன் நீல நிற அங்கியைக் கழட்டிக் காட்டியபடி வரிசைகளின் ஊடாக நடந்தார்.

எங்களது அன்பு ஆசிரியையின் முதுகில் ஏதோ அசாதாரணமான ஒன்று உள்ளதை நாங்கள் தடவிப் பார்த்தோம். அவர் நேராக நிமிர்ந்து நின்ற போது, முதுகு ஒரு அசாதாரண வடிவத்தில் இருந்தது தெரிந்தது.

“இது கூன் விழுந்துள்ள இடம். இது இப்படியாகக் காரணம், நானும் சிறு வயதில் உங்களைப் போல் நேராக நிமிர்ந்து உட்காராமல் இருந்தது தான்” என்று சொன்ன அவர் தொடர்ந்தார்: “யாருக்கெல்லாம் முதுகில் கூன் விழ ஆசையில்லையோ அவர்கள் எல்லாம் நேராக நிமிர்ந்து உட்காரட்டும்!”

படிக்க:
வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !
ஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா ?

அவர் தன் நீல நிற மேலங்கியை அணிந்து கொண்டார், அது முதுகிலிருந்த கூனை மறைத்தது. “நேராக உட்காருங்கள்” என்று சொல்லும் அவசியம் அதற்குப் பின் அவருக்கு ஏற்படவே இல்லை. இதோ பல ஆண்டுகளுக்குப் பின் இன்று அவரை வருத்தத்தோடும் மகிழ்ச்சியோடும் நினைத்துக் கொள்கிறேன்.

எனது ஆறு வயதுக் குழந்தைகள் தோள்பட்டைகளைக் குறுக்கி, குனிந்தபடி எழுதுகின்றனர். எப்போதும் இவர்கள் நேராக உட்காரும்படி செய்யும் நம்பகரமான வழி இல்லாதது வரை நான் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தியாக வேண்டும். இதோ இப்போதும் அப்படித்தான்.

“குழந்தைகளே நிமிர்ந்து நேராக உட்காருங்கள்!” என்று நான் மெதுவாகச் சொல்கிறேன்.

உடனே எல்லோரும் நேராக உட்கார்ந்தனர்…..

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அல்லேலுயா…. ஒரு மாணவியின் கல்லூரி அனுபவம் !

College-Girl-Allaeluia

ரு வாரமா விநாயகர் சதுர்த்தி லீவுக்கு வீட்டுக்கு போறத பத்தி பேசி பேசி வார கடைசிநாளான வெள்ளிக்கிழமையும் வந்தது. எங்க வார்டன் சிஸ்டர் திடீர்னு ஒரு குண்ட தூக்கி போட்டாங்க.

எங்க கல்லூரில “ரீடீரிட்”ங்குற (retreat) பேர்ல வருடத்துக்கு ஒருமுறை 3 நாள் ஆசிர்வாதம் சேனல் நிகழ்ச்சி நடத்துவாங்க. கிறித்தவர்கள் அல்லாதவர்களை கண்டிப்பா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. ஆனா இந்த வருஷம் கேரளாவில இருந்த வரப்போற பிரதர் உங்க எல்லாரையும் பாக்க ஆசப்பட்றாரு. அதனால முதல் நாள் எல்லாரும் இருந்து கடவுளோட நேரடி ஆசிர்வாதத்த வாங்கணும்னு ரொம்ப பவ்யமா சொன்னாங்க.

வெள்ளிக்கிழமை சாயங்காலம் எல்லாரையும் சாப்பிட்டு முடிச்ச உடனே  ஆடிட்டோரியத்துக்கு வரசொல்லிட்டாங்க…

ஆடிட்டோரியம் வெளிய ஒருத்தர் வெள்ளத் தோல்ல, வெள்ள ஜிப்பா போட்டுட்டு காலேஜ் சிஸ்டர்ங்க கூட பேசிட்டிருந்தாரு. என் ப்ரெண்டு, “யாருடி இந்த பஜன்ல்லால் சேட்டு?” னு கேக்க எல்லாரும் சிரிச்சிட்டே ஆடிட்டோரியம் மேல்பகுதில போய் உக்காந்தோம்…

brother Mario joseph psycho spiritual counsellor
பிரதர் மரியோ ஜோசப்

உள்ள பெருசா ஒரு பேனர் வெச்சிருந்தாங்க. அதுல  “பிரதர் மரியோ ஜோசப் சைகோ ஸ்பிரிட்வல் கவுன்சிலர்” னு (brother Mario joseph psycho spiritual counsellor) பெரிய எழுத்துல போட்டிருந்தாங்க. அவர்தான் எங்க எல்லாரையும் பாக்க ஆசப்பட்டவரு. நாங்க வெளிய பாத்த அதே வெள்ள ஜிப்பா சிரிச்சுக்கிட்டே மேடை  ஏறினாரு… மேடையில், அவர் எப்படி? முஸ்லீமா இருந்து கிறித்தவராக மாறினேன்னு பேச ஆரம்பிச்சாரு. இன்னொருத்தர் பாடுவதற்காக வந்திருந்தார். பேசறவரு ரெஸ்ட் எடுக்குற நேரத்துல இவரு பாடுவாரு இருவரும் மாறி மாறிப் பேசி, பாடுனாங்க.

பேச்சை துவக்கிய, ஜோசப் பிரதர் இருக்கிற எல்லா மதத்துலயும் ஒருத்தர் இன்னொருத்தர பாத்தா எப்படி வணக்கம் சொல்வாங்கனு கேட்டாரு. கிறித்தவர்கள், “தோத்திரம்”. முஸ்லீம்கள் “சலாம் அலே கும்”. இந்துக்கள் என்ன சொல்வாங்கனு யாருக்கும் தெரியல. அதுக்கு அவரு பெரும்பான்மையா இருந்த கிறித்தவ பசங்கள பாத்து, “உங்க பக்கத்து நாடு அரேபியால எப்படி பேசுவாங்கனு உங்களுக்கு தெரியுது, பக்கத்து வீடு எதிர் வீட்ல இருக்குற இந்துக்கள் என்ன சொல்லுவாங்கனு தெரியல…. உங்களுக்கு வெட்கமா இல்லையா” னு கேட்டாரு..

நான் உங்ககிட்ட பாசமா பேசுனா நான்சொல்லறத நீங்க மறந்துடுவீங்க… உங்கள கோபமாக திட்டி கேட்டா மறக்கவே மாட்டீங்க… அதுதான் மனித இயல்பு அதனால நான் பாசமா பேசமாட்டேன். உங்க கிட்ட கோபமாத்தான் பேசுவேன் என்றார். இந்துக்கள், “ஓம் சாந்தி ஹி” னு சொல்லுவாங்கனு  சொன்னாரு! இவை எல்லாவற்றையும் அவர் வெச்சிருந்த ஆப்பிள் ஐ-பேட்ல எழுதிஎழுதி ப்ரொஜக்டர்ல  பெரிசா காட்னாரு.

இவரு நிறுத்தனவுடனே, “அல்லேலுயா” “அல்லேலுயா” எல்லாரும் சொல்லுங்கனு அந்த பாடகர் ஆரம்பிச்சிராரு. அவர், அந்த சவுண்ட்க்கு ஏத்தமாதிரி சின்ன சின்ன ஸ்டெப்போட்டு மேடையில டான்ஸ் பண்ணாரு. கூடவே எங்க எல்லாரையும் எழுந்து நின்னு எங்களையும் ஸ்டெப்ஸ் போட சொன்னாரு. அவரு சொல்றதெல்லாம் எதுவும்கேக்காத மாதிரி உட்கார்ந்திருந்தாலும் திரும்ப, திரும்ப அதே பாட்ட பாடி எங்க நடு மண்டைல ஆணி அடிச்சா மாதிரி பதியவெச்சாரு.

படிக்க:
புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?
♦ தெரசா – நரகத்தின் தேவதை

என் அருகில் அமர்ந்திருந்த சக மாணவி ஒருத்தி, “என்ன ஸ்டடி ஹாலுக்கு கூட அனுப்ப சொல்லுடி, எனக்கு பிடிக்காத சப்ஜட்ட படிக்க தயாரா இருக்கேன் ஆனா இவர் பண்றத, பேசதற சகிக்க முடியல” என்றாள். அவர் பாட்டுக்கு, டான்ஸ்க்கு எழுந்துக்க சொல்லும்போது கொஞ்சம்பேர் எழுந்துக்கவே இல்ல. அவங்கள பார்த்து, அவருக்கு கோபம் வந்தது. “உங்களின் மனதில் சாத்தான் குடியிருக்கிறது” என்று அவங்கள பாத்து சொன்னாரு. அப்பவும் அவங்க எழுந்துக்கல.

பின்னாடி உட்கார்ந்திருந்தவள், “என்னடி இவரு பாடும்போதும், ஆடும்போதும் மானே தேனே பொன்மானே மாதிரி “அல்லேலுயா” “ஆமென்”னு அங்கங்க சேத்துக்குறாரு” என்றாள். எங்கள் அரட்டை அவரை கடுபேற்றியது. நேரம் ஆக ஆக அவரின் பாட்டு, டான்ஸ் வீரியம் அதிகமானது. கண்ணை மூடி கதறும் நிலைக்கு சென்றார். பக்கத்தில் இருந்தவள் துப்பட்டாவை எடுத்து காதை மூடி கொண்டாள். ஆனால் கீழே இருந்த கிறித்தவ மாணவர்கள் பக்தியில் திளைத்திருந்தார்கள். அவர்களிலும் சிலர்  விருப்பமில்லாமல் நெளிந்தார்கள். அவர் “அல்லேலுயா” “அல்லேலுயா” விடாமல் கத்த கத்த  தாளமுடியாத மனஅழுத்தத்தில் எங்களில் ஒருத்தி அழ, நிறுத்தாமல் அழுத அவளை சமாதானப் படுத்தவும் அவர் கத்தி முடிக்கவும் சரியாக இருந்தது.

பிறகு பிரதர் மரியோ ஜோசப் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை பேசி, நாளை காலை 6.30 மணிக்கு இங்கு இருக்கவேண்டும். இல்லைனா உங்களை சுட்ருவேன் என்று காமெடி பண்ணி அதற்கு அவரே சிரித்துவிட்டு சென்றார்.

எப்ப? விடுவாங்க என்று காத்திருந்த நாங்கள் வேகமாக விடுதி நோக்கி ஓடினோம். என் ரூமுக்கு போனால், அல்லேலூயா என்று அவர்களை ‘வெச்சு செய்துக் கொண்டிருந்தார்கள்.’ ஒரு கிறித்தவ மாணவியும் கூட அதில் சேர்ந்திருந்தாள். அடுத்த நாளை எப்படி கடப்போம் என்ற பயத்துடனே அன்றிரவு பாதி தூங்கினோம். மறுநாள், விடியற்காலை 5.30 மணிக்கெல்லாம் அனைவரையும் எழுப்பி விட்டார்கள்.

brother Mario joseph psycho spiritual counsellor
பிரதர் மரியோ ஜோசப் அவர் மனைவியுடன்

வார்டன்கள் எங்களை அவசரமாக குளிக்கவைத்து துரத்தினார்கள். அங்கு போனால், பிரதர் மரியோ ஜோசப் அவர் மனைவியுடன் தோட்டத்தில் இயற்கையை ரசித்து நடந்துக்கொண்டிருந்தார். அவரின் மனைவி கேரளத்துக்கே உரிய அழகுடன் இருந்தார். மாணவிகளுக்கு அவர் மனைவியை பிடித்துவிட்டது. நாங்கள் உள்ளே செல்வதற்கு முன்னரே பாடகர் “அல்லேலுயா” பாட ஆரம்பித்துவிட்டிருந்தார். மேடையில் பைபிள் வாசகத்தை ஒரு மாணவியை படிக்க வைத்து அதற்கு தன் கீபோர்டில் இசையமைத்து தனது நடனத்துடன் அதை எங்கள் மனதில் பதிய வைக்க பெரும் முயற்சி எடுத்தார் பாடகர்.

அப்போது, எங்கள் கல்லூரி முதல்வர் வந்து, “எல்லாரும் கடவுளின் ஆசிர்வாதத்தை முடிவில்லாமல் பெற என் வாழ்த்துக்கள்” என்று சொல்லிவிட்டு நழுவ பார்த்தார். எங்க வாடிய முகங்களை பார்த்த அவர், “how many are not feeling comfortable?” என்று கேட்டதுதான். ஆடிட்டோரியம் மேற்பகுதியில் இருந்த அனைவரும் கை தூக்கினர். அவர், “இன்று அவர் பொதுவாகதான் பேச உள்ளார் So, you will feel comfortable soon” என்று சொல்லி, சென்றார்.

ப்ரதர் மீண்டும் பேச ஆரம்பித்தார். பிடிக்கவில்லை என்று கை தூக்கியவர்களை மட்டும் பார்த்து, பார்த்து பேச ஆரம்பித்தார். கடவுளை பற்றி பேசுவதையே கேட்க உங்களுக்கு பொறுமை இல்லை என்றால், வாழ்க்கையை எப்படி பொறுமையாக கையாள்வீர்கள்? நான் உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றி  இப்போது சொல்லித்தருகிறேன் என்று எங்களிடம் நேசம் காட்டுபவர் போல் பேச ஆரம்பித்தார்.

SUCCESS என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லித்தரப்போகிறேன் என்று. S க்கு  set your goal என்றும், U க்கு  unlock your hidden potentialities என்றும், C க்கு commitment and concentration என்றும் அர்த்தம் சொன்னார். அதை நோட்டில் எழுதிவைத்துக்கொள்ள சொன்னார்.

எங்கள் கல்லூரியில் பெரும்பான்மையாக கிராமத்திலிருந்து வந்த ஏழை மாணவிகளே இருப்பர். அதை தெரிந்த அவர் நீங்கள் ஏழ்மையின் பிடியில் இருந்தாலும் கடவுள் உங்களை மீட்பார் என்று மிகவும் பாவப்படுவதுபோல் பேசினார். “உலகில் உள்ள பல இடங்களுக்கும் சென்று இதேபோல் வகுப்பு நடத்தியுள்ளேன்.  உலக புகழ் பெற்ற பல பணக்காரர்களுக்கு வகுப்பு நடத்தியிருக்கிறேன். பல கல்லூரி மாணவர்களிடையே பேசியிருக்கிறேன். அவர்கள் உங்களை விட பல மடங்கு வேகமாக மேலேமேலே வளர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை பார்க்கையில் எனக்கு பாவமாக இருக்கிறது. சிலர் எனக்குதான்  எல்லாம் தெரியும் என்பதுபோல் கர்வமாக அமர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், கடவுள் கிருபை இல்லாமல் வாழ்க்கையில் எதையும் செய்ய முடியாது.” என்று எங்கள் வளர்ச்சிக்கு திடீர் பாடம் எடுத்தார்.

வாழ்க்கை நிலையில்லாதது, எப்பொழுது எது நடக்கும்? யார் எதுவரை உயிரோடுருப்போம்? என்று யாருக்கும் தெரியாது. ஆகையால் சீக்கரமே கடவுளை ஏற்றுக்கொள்ளுங்கள்… பாவத்திலிருந்து தப்பிப்போம் என்றார்.

படிக்க:
யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !
♦ ஏசு நாதர் போராட மாட்டாரா ?

அவர், திடீரென “நான் பலவேலைகளுக்கு மத்தியில் மேகாலயாவிலிருந்து உங்களை பார்க்க  வந்தேன். 3 நாள் முடிந்ததும் கொச்சின் செல்வதற்காக விமானத்தில் பிஸ்னஸ் க்ளாஸில் டிக்கெட் புக் செய்துள்ளேன்… அதற்கு, 10,000 ரூபாய் டிக்கெட்டுக்கு, என் அக்கௌண்ட்டிலிருந்து ரூபாய் 11,200 போயிருந்தது. என்னவென்று அந்த ரசிதை படிக்கையில், அம்பானி ரிலையன்ஸ் கம்பெனிகாரன் அந்த வரி, இந்த வரி என்று எனக்கு தெரியாமலேயே பிடித்திருக்கிறான் என்றார்.

பிறகு, எல்லா மதமும் ஒன்றைதான் கூறுகிறது. இந்து மக்களிடம் எனக்கு பிடித்தது ஒன்று இருக்கிறது. கிறித்தவர்கள் கொஞ்சம் சுயநலம் மிகுந்தவர்கள். கிறித்துவர்களில் நிறைய டாக்டர்களும், இன்ஜினியர்களும் இருப்பார்கள். ஆனால், இந்துக்கள்தான், பொதுவேலைகளிலும், அரசியலிலும் அதிகம் இருப்பார்கள். இந்த விஷயத்தில் அவர்களை நான் பாராட்டுவேன் என்று கூறினார். பேச்சின் கடைசியில் அனைத்து மதத்தவர்களையும் பேலன்ஸ் செய்தார்.

நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, பாடகரும் இவரும் சேர்ந்து மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த மேடைக்கு வருமாறு அழைத்தனர். மாணவிகள் அவர்களை மிமிக்ரி செய்து “வெச்சு” செய்தார்கள். இதை எதிர்ப்பார்க்காத அவர்கள் நிஜமாகவே அதிர்ச்சி அடைந்தனர்.

College-Girl
மாதிரிப்படம்.

மேடையேறிய மாணவிகள், அல்லேலுயா… ஆஆ அல்லேலுயா.. ஆஆ என்று அடித்துகொண்டு புரண்டு அழுதார்கள். அரங்கம் கர ஓசையில் அதிர்ந்தது. இன்னொருத்தி “இப்ப நம்ம பிரதர் போல செய்துகாட்டுகிறேன்” ஒழுங்கா கவனிங்க இல்லன்னா சுட்ருவேன்… என்று கூறி, கீழே இருந்த கேமரா மேனிடம், “அஜ்மல் அந்த கேமராவ சரிப்பன்னுப்பா” என்று கீழே பார்த்து ஆரம்பித்து பிரதர் போல பேசி நடித்தாள். இரண்டு நாட்கள் எங்களை வாட்டிய பாதரை செமையாக கடுப்பேத்தினார்கள். இரண்டு நாள் இல்லாத அளவு அரங்கமே அதிர்ந்தது.

இதை எல்லாம் பார்த்து, உலகம் சுற்றிய பிரதர், “நான் பல நாட்டு பெண்களை பார்த்துள்ளேன். ஆனால், தமிழ்நாட்டு பெண்களை போல தைரியமுள்ள பெண்களை பார்த்ததில்லை” என்று கதறினார். நடுவில் தன் கடுப்பை மறைக்க மிமிக்கிரியை முடிக்க நினைத்தார். விசில் அடிக்க யாருக்கெல்லாம் தெரியும்? என்று அவர் திசைமாற்ற அதிலும் அவருக்கு ஆப்பு காத்திருந்தது. அவர், கேட்டு முடிப்பதற்குள்ளேயே அரங்கமே விசிலால் தெறித்தது. அவர் கீழே இருந்த சிஸ்டரை பார்த்து, “சிஸ்டர்… இது ஆண்கள் கல்லூரியா, பெண்கள் கல்லூரியா என்று எனக்கு தெரியவில்லை” என்று மிரண்டுபோனார்.

நடித்துகாட்டிய மாணவிகளுக்கும் வேறுவழியில்லாமல்  பரிசு வழங்கப்பட்டது. பரிசு, அவர் வைத்திருந்த பல வெளிநாட்டு டாலர்கள் மற்றும் விலையுயர்ந்த  வெளிநாட்டு பேனாக்கள் பரிசு வாங்கியவுடன் மாணவிகள், இரண்டு நாள் துக்கத்தை மறந்து புத்துணர்ச்சி பெற்றார்கள். அதே புத்துணர்ச்சியில், அவரும் திரும்பவும் கிறித்தவத்தை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு சாப்பிட பிரேக் விட்டார். பிரேக் முடிந்ததும் நீங்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் என் மனைவி பேச போகிறார். அவர் எங்கள் லவ் ஸ்டோரியையும் சொல்லுவார் என்று டிரெண்டிங்காக பேசி உசுப்பேத்தினார்.

அவர் மனைவி பேச ஆரம்பித்தார். “நான் சிறுவயதில் மிகவும் கவலைப்பட்டிருக்கிறேன். உடுத்த உடையில்லாமல், சாப்பிட உணவில்லாமல் எங்கள் வீட்டில் வறுமையில் வாடியிருந்தோம். கடவுளின் கிருபையால்தான் இந்த இடத்தில் இருக்கிறேன், நான் செவிலியருக்கு படித்துவிட்டு சென்னையில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். அங்கே ஒருவன்மீது காதல். வேற்று மதம் என்பதால் வீட்டில் பெரிய பிரச்சனை. என்னை வீட்டில் அடைத்து வைத்தனர். நான் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் கேரளாவிலுள்ள ஒரு கிறித்தவ  ரீடீரிட் சென்டருக்கு கவுன்சிலிங்குக்காக சென்றேன். அங்குதான் இவரை சந்தித்தேன்.”

அங்கு இருவருக்கும் காதல் மலர்ந்ததை சுவாரஸ்யமாக கூறினார். பிறகு, “உங்களை பற்றி பிறர்,பின்னாடி பேசுகிறார்கள் என்று கவலை படாதீர்கள் அவர்கள் பின்னாடி பேசுகிறார்கள் என்றால் நீங்கள் முன்னாடி இருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்” அப்படி கவலைப்பட்டிருந்தால், இன்று நான் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலையில் இருக்க மாட்டேன் எல்லாம் கடவுள் கொடுத்தது” என்றார்.

பக்கத்தில் இருந்த தோழி “நான், அரியர் இல்லாம கிரஜூவேஷன் வாங்குவேனான்னு தெரியல… இவருக்கு, ஒரு லட்சம் சம்பளமா கடவுள் கொடுத்தாராம்… நம்மள ரொம்ப கடுப்பேத்துறாங்க… டி” -னு அலுத்துக்கொண்டாள்.

பேசி முடித்ததும் பிரதர், இன்று பொதுவாக பேசி இந்த நாளை வீணடித்து விட்டோம். நாளை கிறித்தவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையான ரீடீரிட் (retreat) நடத்தப்படும் என்ற கூறி எங்களைப் போன்ற சாத்தான்களை வழியனுப்பிவைத்தார்..

நாங்கள் ஆளை விட்டால் போதுமென்று கிளம்பினோம். “நீங்க மட்டும் எஸ்கேப் ஆவுறீங்களேடி…” என்பது போல் பார்த்தார்கள் கிறித்தவ மாணவிகள். பாவம் அந்த தேவதூதர்கள் !

– அவந்திகா